கடவுளின் கருணைக்கு உருவம் கொடுக்க முடிந்தால் அதுவே சற்குரு !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கொரோனா கடும் சுரம்

நமது பாரத கண்டம் மட்டும் அல்லாது உலகம் அனைத்திலும் உள்ள மக்களையும் மிரட்டிக் கொண்டிருக்கும் கடும் சுரமே கொரோனா என்பதாகும். நமக்கு எதிர்பாராத தாக்குதலாக, மனித சமுதாயத்தையே உலுக்கி அச்சுறுத்துவதாக அமைந்த இந்த காய்ச்சல் வியாதி என்பது சித்தர்கள் அறியாத ஒன்றா என்ன. இறைவனின் எந்த செயலுக்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள், இரகசியங்கள் இருப்பதால் இந்த கொரோனா காய்ச்சல் வியாதிக்கும் உரிய காரண காரியங்களை சித்தர்களும், மகான்களும் நன்கு உணர்ந்து இருந்தாலும் அவற்றைப் பற்றி எதுவும் வெளிப்படையாக கூறவில்லை. ஆனால், தம்மை அண்டியிருக்கும் அடியார்களுக்கு அவர்கள் முன்கூட்டியே மறைமுகமாக பல்வேறு வழிபாட்டு முறைகளை அளித்து அந்த நல்லோர்கள் மூலம் இந்தச் சமுதாயத்தைக் காக்க அரும்பாடு பட்டு வருகிறார்கள் என்பதை நாம் மறுக்க முடியாது. இவ்வாறு கொரோனா காய்ச்சலுக்கு உரிய மூல காரணத்தை அறிவித்தால் அதை மனித சமுதாயம் நிச்சயம் ஏற்காது என்பதால்தான் மாதா அமிர்தானந்தா போன்ற நடமாடும் தெய்வ மூர்த்திகள் கூட கொரோனா காய்ச்சலுக்கு மூல காரணத்தை வெளிவிடவில்லை. அதே சமயத்தில் சுமார் 20 வருடங்களுக்கு முன்பிருந்தே இத்தகைய ஒரு கொடிய வியாதி சமுதாயத்தைத் தாக்கும் என்பதை தம் தீர்க தரிசனத்தால் அறிந்த அவர்கள் எதிர்பாராத இருட்டு, மிகுந்த அச்சுறுத்தல், புரியாத புதிர் என்றவாறு எல்லாம் இந்த நோய்க்கு அடைமொழியாகப் பல பதங்களைக் கூறி இத்தகைய மகான்களை நம்பி இருக்கும் அனைத்து உலக மக்களுக்கும் அவர்கள் நல்வழி காட்டி வருகின்றனர்.

சூரியன் (வியாதிகள்) மறையும்
வெள்ளியங்கிரி

காய்ச்சல் வியாதி என்று உடல் சூடு அதிகமாகும் நோயை நாம் விவரித்தாலும் இந்த காய்ச்சல் வியாதியில் மட்டும் 2000 வகைகள் இருப்பதாக சித்தர்கள் தெரிவிக்கின்றனர். இந்த காய்ச்சல் வியாதிகள் அனைத்தையுமே, காய்ச்சலின் 2000 விதமான பரிமாணத்தையுமே தீர்க்கவல்லதுதான் திருஞானசம்பந்த மூர்த்தி அருளிய மந்திரமாவது நீறு என்று ஆரம்பிக்கும் திருநீற்றுப் பதிகமாகும். என்னதான் பதிகம், மந்திரம் என்று தெளிவாக எடுத்துரைத்தாலும் மனித மனத்தின் தன்மையை உணர்ந்த சித்தர்கள் கொரோனா காய்ச்சலுக்கு உரிய மூலிகை மருத்துவம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ஆனந்தகனியின் கனி, உலர்ந்த பிரம்ம தண்டு சமூலம், சருகு வேப்ப இலைகள் என்ற இவை மூன்றும் சேர்ந்ததே அந்த மூலிகை மருத்துவமாகும். கொப்பு கொண்ட மலையில் திகழும் பிரம்மதண்டு மூலிகையின் படத்தை ஏற்கனவே வெளியிட்டு இதன் மகத்துவத்தை அடியார்கள் உணர இவ்வருடப் பிறப்பு வழிசெய்யும் என்பதை மறைமுகமாக அறிவித்த சித்தர்களின் கருணைக்கு எல்லைதான் உண்டோ ?

தழுவக் குழைந்த நாயகி
சத்திமுற்றம்

இந்த மூன்று மூலிகைகளையும் சமஅளவில் எடுத்துக் கொண்டு பொடி செய்து அந்த கூட்டுக் கலவையில் மூன்று கிராம் முதல் ஐந்து கிராம் அளவு வரை எடுத்து ஒரு புதிய மண் சட்டியில் போட்டு நீரூற்றி சுமார் 100 மிலி நீர் 50 மிலி அளவு ஆகும் வரை கொதிக்க விட்டு, நன்கு ஆறிய பின்னர் அதை ஒரு வெள்ளைத் துணியில் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் அருந்துவதே சித்தர்கள் அளிக்கும் அற்புத நோய் நிவாரண மருத்துவமாகும். மூன்றே மூன்று நாட்கள் இந்த கஷாயத்தை குடித்து விட்டால் போதுமானது. அவர்கள் இந்த காய்ச்சல் நோயிலிருந்து குறைந்தது ஆறு மாத காலத்திற்கு நிவாரணம் பெறுவர் என்பதே சித்தர்கள் அளிக்கும் உத்தரவாதம். மாதவிலக்காக இருக்கும் பெண்கள் மாதவிடாய் முடிந்து ஐந்து நாட்கள் சென்ற பின்னர் இந்த மருத்துவத்தைக் கடை பிடிக்கலாம். ஐந்து வயதிற்குக் குறைந்த குழந்தைகள் இந்தக் கஷாயத்தை ஏற்றல் ஏற்புடையது அல்ல.

மேற்கூறிய மூலிகை பற்றிய அதிகப்படியான விவரங்கள் நம் சற்குருவால் அருளப்படாததால் இந்த மருத்துவம் அளிக்கும் நிவாரண சக்திகளை தான தர்மங்கள் மூலமாகவும் பெறலாம் என்பதே சித்தர்கள் அளிக்கும் ஆறுதல் முறையாகும். இத்தகைய நோய் நிவாரண சக்திகள் மிகுந்திருக்கும் இடமே கோயம்புத்தூர் அருகில் இருக்கும் வெள்ளியங்கிரி மலை ஆகும். அங்குள்ள ஒரு குறிப்பட்ட இன மக்களை இந்த வியாதி நெருங்கவே நெருங்காது என்றும் அத்தகைய நிவாரண சக்திகளுக்குக் காரணம் அவர்கள் பரம்பரையில் பெருகி உள்ள மாங்கல்ய சக்திகளே ஆகும் என்பதே சித்தர்கள் அளிக்கும் தெளிவுரை ஆகும். இத்தகைய குணப்பாடுகள் நிறைந்த சமூகத்தினரிடையே இருந்து பெற்றுதான் பல வருடங்களுக்கு முன் மண் தாலி நம் ஆஸ்ரமத்தில் பல பக்தர்களுக்கும் விநியோகிக்கப்பட்டது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த சுவை. இன்றும் அத்தகைய மண் தாலி அணிந்து 48 நாட்கள் முறையாக பூஜித்து வந்தால் அந்த குடும்பத்தைச் சார்ந்த எவரையுமே இத்தகைய கொரோனா காய்ச்சல் மட்டும் அல்லாது எத்தகைய ஆயுள்பங்க நோய்களுமே அண்டாது என்பதே இந்த பூஜைகளின் பின்னணியில் அமைந்த தெய்வீக தாத்பர்யமாகும். வெள்ளியங்கிரி யாத்திரை செல்வதற்கு முன்னோடியாக நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ள கடுமையான நியதிகளை நிறைவேற்றும் புனிதத்துவத்தை எவருமே பெற்றிருக்கவில்லை என்பது உண்மை. இந்த யாத்திரையின் முதல் கட்டமாக இறைவனுக்கு ஒரு அடியார் பிரசாதத்தை அளிக்க அந்த இறை மூர்த்தியே நேரில் எழுந்தருளி அந்த பிரசாதத்தின் ஒரு பகுதியை ஏற்க (உண்ண) வேண்டும் என்பதும் அவ்வாறு இறை மூர்த்தி ஏற்ற பிரசாதத்தின் மிச்சத்தையே அந்த அடியார் ஏற்று வெள்ளியங்கிரி யாத்திரையை தொடங்க வேண்டும் என்பதே முதல் விதி. ஆனால், வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உள்ள சிவத்தலத்தை தரிசனம் செய்து அங்கு தான தர்மங்கள் நிறைவேற்றுதல் என்பது சித்தர்களால் ஏற்றுக் கொள்ளக் கூடிய வழிபாடே. இம்முறையில் நம் ஆஸ்ரம சார்பில் சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பே முந்திரிப் பருப்பு, உலர் திராட்சை கனிகள், குங்குமப்பூ போன்ற திரவியங்கள் சேர்ந்த காய்ச்சிய பசும்பால் தானம் நிறைவேற்றப்பட்டது. வெள்ளியங்கிரியின் உச்சியில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானை தரிசனம் செய்வதற்கு சாதாரண மக்கள், அடியார்களுக்கு பல விதிமுறைகள் சித்தர்களால் ஏற்படுத்தப்பட்டு இருந்தாலும் மகான்கள், யோகிகள் போன்ற பெருமக்கள் இன்றும் சாதாரண மனித உருவில் இம்மலைத் தலத்திற்கு யாத்திரை புரிந்த வண்ணமாகவே உள்ளனர். அவர்களுக்கு விதிக்கப்பட்ட நெறி முறைகள், யாத்திரை விதிகள் வேறாக இருந்தாலும் அவர்கள் மனித வடிவை ஏற்று மலை மேல் காலாற நடந்து சென்றுதான் வெள்ளியங்கிரி ஈசனை தரிசனம் செய்கிறார்கள். அத்தகைய தரிசனத்திற்காக வெள்ளியங்கிரி அடையும் அந்த உத்தமர்களுக்கு நாம் மேற்கூறிய வகையில் பசும்பால் தானம் அளிக்கும்போது, சிறப்பாக பௌர்ணமி திதிகளில், செவ்வாய்க் கிழமைகளில் இயற்றப்படும் இத்தகைய தான தர்மங்கள் நோய் நிவாரண சக்திகளை பக்தர்களுக்கும் சமுதாயத்திற்கும் அளிக்கின்றன என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீசிவக்கொழுந்தீசர்
சத்திமுற்றம்

நம் சற்குரு எந்தக் காரியத்தைச் செய்தாலும் அதில் மற்றவர்களுக்குப் பயன்படக் கூடிய ஒரு பாடம் என்ன, எத்தனையோ சுவையான பாடங்கள் நிறைந்திருக்கும். நம் சற்குருவின் காரில் ரிவர்ஸ் ஹார்ன் (reverse horn) வைத்திருப்பார். அது கூட சத்யசாய் பாபா ஆஸ்ரமத்தில் ஒலிக்கும் ஆரத்தி பாடலாக அமைந்திருந்தது. இதற்கு ஆயிரமாயிரம் தெய்வீக காரணங்கள் இருந்தாலும் கார் ரிவர்ஸில் பின்நோக்கி செல்லும்போது மெதுவாகத்தான் செல்லும், செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் கார் முன்னோக்கி வேகமாகப் பாய்ந்து செல்லப் போகின்றது என்பதையும் அவ்வாறு வேகமாகச் செல்வதற்குத் தேவையான சக்தியை அது தற்போதைக்கு சேமித்து வைத்துக் கொள்கிறது என்பதையும் குறிக்கிறது. ஆரத்தி பாட்டு என்பது நாமசங்கீர்த்தனத்தின் இறுதியில் இசைக்கப்படும் ஒரு பாடலாக இருந்தாலும் அது அடுத்து நடக்க வேண்டிய நாமசங்கீர்த்தனுக்கு உரித்தான சக்தியை சேமித்து வைக்கும் பாடலாகவும் இருக்கிறது என்பதே உண்மை. இதை உணர்ந்து கொண்டால் எந்த நோய் நொடியும் நம்மை பாதிக்காது.

சித்தர்களின் சுவடிகள் கொரோனா காய்ச்சலை சுழல் சுரம் என்று அழைக்கின்றன. சுழல் சுரம் என்றால் நோயின் முற்றிய நிலையில் மனிதர்களின் சுயநினைவு மறைந்து விடும் என்பதும் இந்நோய் குறித்து வழங்கப்படும் அறிகுறியாகும். பொதுவாக, மனிதர்களைப் பொறுத்த வரையில் எந்நிலையிலும் சுயநினைவு என்பது மறையக் கூடாது, கடைசி வரையில் சுய நினைவு, உடல் நினைவு முழுமையாக இருக்கும் முறையில் உயிர் பிரிந்தால்தான் இறை நினைவுடனே மனிதன் உயிர்விட முடியும் என்பதால் பெரும்பாலான உத்தமர்கள் சீதபேதி, காலரா என்ற முறையில் உயிர் துறத்தலையே விரும்புவார்கள். அப்போதுதான் உடலை விட்டு உயிர் பிரியும் அந்தக் கடைசி தருணம், நொடி வரை உடலில் உணர்வு, கடவுள் நினைவு பரிபூரணமாக நிறைந்திருக்கும். அதே சமயம் நிர்விகல்ப சமாதி முறையில் தியானம் பயிலும்போது தான் ஆண் என்றோ, பெண் என்றோ, தான் ஒரு உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன் என்ற நினைவோ கடைசி வரை இருக்கக் கூடும் ஆதலால் இந்த நினைவைக் களைய சாராயம் போன்ற போதைப் பொருட்களை ஜனகர் போன்ற உத்தம நிலையில் நிலைத்தவர்கள் பயன்படுத்தினார்கள். காலப் போக்கில் இந்த உத்தம நிலையும் மாசுபடக் கூடும் என்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற மகான்களும் அதற்குப் பின் வந்த நம் சற்குருவைப் போன்ற உத்தம நிலை அடைந்தவர்களும் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கோட்பாட்டை கோட்டை விடாமலோ, போதை வஸ்துக்களைப் பயன்படுத்தாமலோ தான் இறை தியானத்தில் பரிபூரணம் கண்டார்கள்.

சதி முத்தம்
பதி முத்தம்

கும்பகோணம் அருகிலுள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமே சத்திமுற்றமாகும். இறை சக்தியாகிய சத்தி தன் ஆருயிர் கணவனாகிய பதி என்னும் சிவபெருமானுடன் இரண்டறக் கலந்த தலம் என்பது மேலோட்டமான பொருள். இங்கு பெருமான் ஸ்ரீசிவக்கொழுந்தீசர் என்றும் இறைவி ஸ்ரீபெரிய நாயகி என்றும் அருள் வழங்குகின்றனர். இறைவனும் இறைவியும் தழுவக் குழைந்த கோலத்தில் காட்சி அளிக்கும் அற்புதத்தை இத்திருத்தலத்தில் பக்தர்கள் தரிசனம் செய்து மகிழலாம். சற்றே கூர்ந்து நோக்கினாலும் சசி, சதி, சத்தி, சக்தி என்ற இந்த அனைத்துப் பதங்களுமே மனைவி என்ற பொருளைக் குறிக்கும். கணவனின் பிரதிபலிப்பாக இருப்பவளே, இருக்க வேண்டியவளே மனைவி ஆவாள். இத்தகைய ஒற்றுமையைக் குறிப்பதே கணவன் மனைவி என்ற பந்தமாகும். இதுவே தழுவக் குழைந்த நாயகி என்று ஈருடல் ஓருயிராக இருக்கும் கணவன் மனைவியின் உறவைக் குறிக்கும் நிலையாகும்.

காதலன் காதலியைப் பார்க்கும்போது அவளை முத்தமிட வேண்டும் என்று நினைப்பது இயற்கையே. இதன் காரணம் என்ன ? மனம் ஒத்த காதலி காதலனின் பிரதிபலிப்பு அல்லவா ? இதை தன்னை அறியாமல் உணரும் காதலியோ காதலனோ ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி முத்தமிடத் துடிப்பதில் தவறென்ன ? இதுதான் தழுவக் குழைந்த கோலத்தில் இறை சன்னதியில் பரிணமிக்கிறது. அவ்வாறு காதலன் காதலி இடையே மிளிரும் அன்பானது குழந்தை என்ற முத்தாக மலரும்போது அதைக் கட்டி அனைத்து முத்தமிடத் தோன்றுவதன் காரணத்தை இப்போது உங்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த அன்புப் பரிமாற்றமானது தன்னுடைய சொந்தக் குழந்தையிடம் மட்டுமே காண முடியும் என்றாலும் இதை சிறிது சிறிதாக மற்ற உயிர்களுக்கும் மாற்றும் வித்தையை உலகிற்கு அளிப்பவர்களே மகான்கள், மாதா அமிர்தானந்தா போன்ற உத்தமர்கள் ஆவர். இவ்வாறு மனிதர்கள் மட்டும் அல்லாது நாய், யானை, கருநாகங்கள் போன்ற அச்சுறுத்தும் பல விலங்குகளையும் ஆரத்தழுவி முத்தமிடும் அன்னையே மாதா அமிர்தானந்த மயி ஆவார்.

ஸ்ரீஉச்சிஷ்ட கணபதி
சத்திமுற்றம்

சத்தி முற்றம் என்றால் சத்தியான பார்வதி தேவி தன் அன்பை இறைவனுக்கு முத்தம் மூலம் அளித்தது மட்டுமல்ல, இதை உலகறியச் செய்த இடமே, தலமே திருச்சத்தி முற்றமாகும். மனிதனின் காமக் காட்சிகள் நான்கு சுவற்றிற்குள் மறைந்திருக்க வேண்டும் என்பது உலக நியதியாக இருந்தாலும் இறைவனின் எத்தகைய உறவும் மக்களுக்காக இருப்பதால் இந்த முத்தக் காட்சியும் மக்களின் நல்வாழ்விற்காக, ஆரோக்ய இரகசியமாக மலர்ந்துள்ள திருத்தலமே சத்திமுற்றமாகும். தாய் தந்தையர் அன்புப் பரிமாற்றத்தில் சிறந்திருந்தால்தான் அன்புடைய பூஞ்சோலை அங்கு மலரும் என்பதற்கு எடுத்துக் காட்டாக சத்தி முற்றத்தில் ஸ்ரீகணபதி மூர்த்தியும் உச்சிஷ்ட கணபதி மூர்த்தியாக எழுந்தருளி உள்ளது கலியுக மக்கள் பெற்ற பேரும் பேறே. அன்பின் இமயமாக விளங்கும் இந்த சத்திமுற்ற திருத்தலத்தில் பெருகாத குடும்ப ஒற்றுமை, கணவன் மனைவி அன்யோன்யம் வேறு எந்த தலத்தில் பெருகக் கூடும் ?

பார்வதி தேவி சிவனைப் பிரிந்து சென்றபோது தானே சிவ சக்தியால் உலகை ஆள முடியும் என்று எம்பெருமான் சூழுரைக்க அது கண்டு தேவர்கள் அனைவரும் நடுங்கி எம்பெருமானிடம் சரணடைந்து இது சுவாமிக்கு மெத்தவே சாத்தியம் என்றாலும் இதனால் துன்புறுவது உலக உயிர்கள் என்ற காரணத்தால் இறைவன் தன்னுடைய இந்த “சவாலை” திரும்பப் பெற்றுக் கொண்டு சக்தியுடன் சிவசக்தி சமேதராய் மீண்டும் அருள வேண்டும் என்று பிரார்த்திக் கொண்டனர். அப்போது இறைவன் தேவர்கள், அனைத்து உயிர்களின் வேண்டுகோளை ஏற்று தன்னுடைய ஒரு பாதியை சக்திக்கு அளித்து சிவசக்தி சமேதராய் எழுந்தருளிய திருத்தலமே சத்திமுற்றம் ஆகும். மேலும் சக்தி தன்னைப் பிரிந்து போனதுபோல் உலகத்தவர் கண்களுக்குத் தோன்றினாலும் அவள் என்றும் தன்னை விட்டுப் பிரியாத சக்தியே என்று முருகப் பெருமானின் உருவத்தில் விளங்கும் சக்தி என்ற பெண் சக்தியை உலகத்திற்கு, முற்றத்திற்கு கொண்டு வந்து அருளிய இடமும் திருச்சத்தி முற்றமாகும். நெற்றிக் கண்ணின் ஒளிப் பிழம்பிலிருந்து தோன்றியதால் முருகப் பெருமான் முழுக்க முழுக்க ஆண் சக்தியில் விளைந்த அருள் முத்தே என்பது மனிதர்களின் கண்ணோட்டமாக இருந்தாலும் அந்த முருக சக்தியிலும் சக்தி என்ற பெண் சக்தி மிளிர்ந்துள்ள திருத்தலமே திருச்சத்தி முற்றமாகும். சத்தி தன்னுடைய அன்பை முத்தத்தின் மூலம் சிவனுக்கு வெளிப்படுத்தும்போது சிவன் மட்டும் அந்த புனித தியாகத்திற்கு “பதில்” தியாகம் புரிய மாட்டாரா என்ன ? இவ்வாறு பசுவான உலகத்து உயிர்களுக்கெல்லாம் பதியான பசுபதி உறையும் திருநல்லூர் திருத்தலத்தில்தான் இறைவன் தன்னுடைய பதி முத்தத்தை அருளினார் என்பதே சித்தர்கள் அளிக்கும் இனிய சுவை. இக்காரணம் குறித்தே திருநாவுக்கரசு சுவாமிகள் சத்தி முற்றத்தில் எழுந்தருளி இறைவனின் சத்தி முத்தக் காட்சியை தரிசிக்கும் பேறு பெற்றாலும் அந்த உத்தம நாயகர் பதி முத்தத்தை தானே அனுபவிக்க அப்பெருமானை திருநல்லூர் திருத்தலத்திற்கு வருதை தருமாறு பணித்தவரே சிவபெருமான் ஆவார்.

ஸ்ரீஅப்பர் பெற்ற திருவடி தீட்சை
திருநல்லூர்

திருநல்லூர் சிவத்தலத்தை அடைந்த அப்பர் பெருமான் அங்கு கோயிலின் ஒரு ஓரத்தில் சற்றே அயர்ந்து கண்ணயர அவர் அருகில் ஒரு முதியவர் ஆழ்ந்த உறக்கத்தில் தன்னுடைய பாதங்களை அப்பர் தலைமேல் வைக்கவே அப்பர் பெருமான் திடுக்கிட்டு எழுந்து அவர் முதியவர் என்பதால் அவரிடம் கோபம் கொள்ளாது தான் வேறு ஒரு இடத்திற்கு சென்று அங்கு உறங்கச் சென்றார். அங்கும் அந்த முதியவர் அவர் அருகில் துயில் கொண்டு தன் பாதத்தை அப்பர் தலை மேல் வைக்கவே சற்றே கோபம் கொண்ட அப்பர் அந்த முதியவரின் தகாத செயலைக் கடிந்து கொள்ளவே முதியவர் உருவத்தில் வந்த சிவபெருமான் ஒரு அன்புப் புன்னகையை உதிர்த்து விட்டு மறைந்து விட்டார். இதுவே பதி அளித்த பாச முத்தம். இவ்வாறு பசுபதி அளித்த பாச முத்தத்தை ஒரு உத்தம அடியார் பெற்ற திரு நல்லூர் திருத்தலத்தை விட சிறந்த நல்லூர் ஒன்று இருக்க முடியுமா என்ன ? இவ்வாறு உயிருள்ள ஜீவன்களிடையே மட்டும்தான் முத்தம் பாரிமாறப்படுகின்றது என்பது கிடையாது. நாம் உயிரற்ற பொருள்களாக நினைக்கும் வானும் கடலும் கூட இந்த பாச முத்தத்தில் பந்தப்பட்டுத் திளைப்பதைத்தானே பாரதியாரும் “மாலைப் பொழுதில் ஒரு மேடை மிசையே ...” என்று இறைவனின் திருவிளையாடலாக இயற்கையின் விளையாட்டை இரசிக்கிறார்.

நம் சற்குருவோ சிவ சக்தி ஐக்ய தரிசனம் எதிரே ஆஸ்ரமத்தை நிறுவி தம்பதிகள் இடையே நிலவ வேண்டிய ஒற்றுமை சக்திகளை சமுதாய நலனுக்காக அர்ப்பணிக்கும் அரும்பணியை ஆற்றி வந்தார்கள்.

சுழல் சுரத்தின் உட்சுழற்சி

கொரோனா காய்ச்சல் நம் பூவுலகில் தோன்றி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அதன் தோற்றம், விளைவுகள், பரவும் விதம் போன்ற எந்த குணாதிசயமும் விஞ்ஞானத்திற்கு புலனாகாத வழியில் உள்ளது அல்லவா ? இதற்கு முக்கிய காரணமே இந்த காய்ச்சல் வியாதியின் அடிப்படையான சுழல் தத்துவமாகும். இதையே சித்தர்கள் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் சுழல் சுரம் என்று பெயரிட்டு அழைக்கின்றனர். “உட்சுழற்சி” என்ற இவ்வார்த்தையை அடியார்கள் எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறதா ? ஆம், இதுவே மின்சாரம் பற்றி சித்தர்கள் அளிக்கும் விளக்கமாகும். நமது மூச்சுக் காற்று, மின்சாரம், ஆஸ்ட்ரல் பயணம் என்ற நுண் இழை ஆவி பயணம் போன்ற துறைகளில் இத்தகைய இயக்கங்கள் தோன்றினாலும் இவை அனைத்துமே விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான விளக்கங்களாகத் துலங்குவதால் சித்தர்கள் போன்ற உயர்ந்த நிலையில் உள்ள உத்தமர்களே இத்துறைகளில் மனிதர்கள் புரிந்து கொள்ளக் கூடிய முறையில் மனத் தெளிவை அளிக்க முடியும். கொரோனா காய்ச்சலில் பிராணன் இத்தகைய மிதமிஞ்சிய “வேகத்தில்” சுழல்வதால் அது மருந்துகளுக்கு கட்டுப்படாத முறையில் சுழன்று உடலை விட்டு வெளியேறுகிறது என்பதே சித்தர்கள் கொரோனா குறித்து அளிக்கும் விளக்கமாகும். இந்த வார்த்தைகளை முழு நம்பிக்கையுடன் குறைந்தது 12 முறை படித்து ஆத்ம விசாரம் செய்து வந்தால்தான் கொரோனா காய்ச்சல் பற்றிய விளக்கத்தை ஓரளவு புரிந்து கொள்ளலாம். இந்த அறிவை, ஞானத்தை வேறு எவரும் எவருக்கும் ஏட்டுக் கல்வியாக ஊட்ட இயலாது என்பதே சித்தர்கள் அளிக்கும் விளக்கமாகும்.

பிரம்ம தண்டில் உட்சுழற்சி

சித்தர்கள் அளிக்கும் ஆனந்தகனி என்ற மருந்து சாதாரண மக்கள் விஷயத்தில் ஒரு போதை பொருள் என்று மட்டுமே கருதப்படுவதால் சித்தர்கள் இது குறித்த எந்த விஷயத்தையும் மக்கள் நலன் கருதி வெளியிடவில்லை. உண்மையில் இரசாயனம், ஆன்மீகம், மருத்துவம், காயகல்பம் போன்ற பல துறைகளில் சிறப்பு பெற்றுள்ள ஆனந்தகனி மூலிகை தற்போது பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இதற்கு மனிதனின் சுயநலப் போக்கும் குறுகிய எண்ணமுமே முக்கிய காரணமாகும். எது எப்படி இருந்தாலும் ஆனந்தகனியின் மருத்துவ குணம் நம்மை பிரமிக்க வைக்கக் கூடிய செயல்பாடு கொண்டதாகும். ஆனந்தகனியின் கனிகள் இந்த மூலிகையின் சுழல் வேகத்தை மனிதர்கள் ஏற்கக் கூடிய அளவில் குறைத்து விடுகின்றன. மேலும் இந்த சுழல் வேகம் பிரம்ம தண்டு என்ற மூலிகையைச் சுற்றி வர, அந்த வேகமும் சருகு வேப்பிலையின் சக்திகளால் மட்டுப்படுத்தப்படுகிறது அல்லது கட்டுப்படுத்தப்படுகிறது என்பதே சித்தர்கள் அளிக்கும் மூலிகை விளக்கமாகும். இந்த அனைத்து விளக்கங்களும் விஞ்ஞானம் கடந்த விஷயமாக இருந்தாலும் சித்தர்களை நம்பி வெள்ளியங்கிரி அடிவாரத்தில் உலர் திராட்சை கனிகள், முந்திரி, குங்குமப்பூ இவை சேர்ந்த பாயசத்தை தானமாக அளிக்கும்போது அங்கு தூல வடிவிலோ, சூட்சும வடிவிலோ எழுந்தருளும் மகான்கள் இந்த இறை பிரசாதத்தை ஏற்று அதை கொரோனா காய்ச்சலுக்கு ஏற்ற நிவாரணியாகவோ, மருந்தாகவோ, குளிகையாகவோ மாற்றி அருள்புரிகின்றார்கள் என்பதே வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் நிகழ்த்தும் தான தர்மத்தின் மகாத்மியமாகும். சித்தர்கள் அளிக்கும் மூலிகை மருத்துவத்திற்கும் தான தர்மத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆயிரமாயிரம் டன் கணக்கில் ஒரு அணையில் நீரைச் சேமித்து அந்த நீரைக் கொண்டு ஒரு இயந்திரத்தைச் சுழற்றி அந்த சுழல் சக்தியிலிருந்து நாம் மின்சார சக்தியைப் பெறுகிறோம். ஆனால், சித்தர்கள் கணக்கில் உள்ளங்கை அளவு உள்ள நீரில் திகழும் சுழல் சக்தியைக் கொண்டு நாம் சென்னை மாநகருக்கே ஒரு நாளைக்குத் தேவையான மின்சாரம் அனைத்தையும் அளிக்க முடியும் என்றால் கடவுள் ஒவ்வொரு பொருளிலும் எந்த அளவு சக்தியைச் சேமித்து வைத்துள்ளார். அப்படியானால் சதா சர்வ காலமும் கடவுளின் உள்ளத்தில் குடியிருக்கும் சித்தர்களால் ஒரு டம்ளர் பாலில் உள்ள சக்தியைக் கொண்டு ஒரு நோய்க்கு நிவாரணம் அளிக்க முடியாதா என்ன ?

மேற்கண்ட விஞ்ஞான மெய்ஞ்ஞான விளக்கங்களை ஓரளவு புரிந்து கொண்டால்தான் மெய்ஞ்ஞானத்தின் சிகரமாகத் திகழும் சதி முத்தம் பதி முத்தம் அளிக்கும் ஆன்மீக சுவையை அணு அளவாவது உணர்ந்து அனுபவிக்க முடியும்.

தீக்குள் விரலை வைத்தால் ...

இறைவனை நேருக்கு நேர் தரிசித்து அந்த அற்புத தரிசன பலன்களை எல்லாம் தம்முடைய பாடல்கள் மூலமாய் மக்களுக்கு அருள் விருந்தாய் அளித்தது ஆதிசங்கரர், நால்வர் பெருமக்கள் போன்றோர் மட்டுமல்ல, பாரதியார் போன்ற புரட்சிக் கவிஞர்களும்தான். இவ்வாறு இறைவனின் தரிசன இன்பம் நெருப்பைத் தொட்டது போல் இருக்கும் என்றால் இதை மனித மனம் ஏற்குமா ? 30, 40 ஆண்டுகள் அன்யோன்யமாய் குடும்ப வாழ்க்கை நடத்தி, டஜன் கணக்கில் குழந்தைச் செல்வங்களைப் பெற்றவர்கள்கூட தங்கள் குழந்தைகளை முத்தமிடும்போது அதை தீக்குள் விரலை வைக்கும் சுகமாக எண்ணி மயங்கிட முடியாதே. கடவுள் பக்தி ஒன்றே எத்தகைய தீயையும் குளிர வைக்கும் தன்மை உடையது என்பதே பிரகலாதன், அப்பர் பெருமான், சம்பந்தப் பெருமான் போன்ற இறையடியார்களின் வரலாறு சுட்டிக் காட்டும் உண்மை. இதே “குளிர்ச்சியை” மணவாளன் மேல் கொண்ட அணையா அன்பும் பெருக்கும் என்று நமக்கு உணர்த்துவதே சீதாப் பிராட்டி, நளாயினி போன்ற உத்தமர்களின் வரலாறு ஆகும்.

நொய்யல் ஆறு பேரூர்

வரன்களின் ஜாதகங்களை திருமணத்திற்காக பொருத்திப் பார்க்கும்போது அவர்கள் ஜாதகங்களின் 1, 2, 7, 8, 12ம் வீடுகள் இருவர் ஜாதகங்களிலும் ஒத்துப் போகிறதா என்று பார்ப்பார்கள். நம் சற்குருவைப் போன்ற மகான்கள் மட்டுமே இத்தகைய உயர்ந்த நிலைப் பொருத்தங்களை முறையாகப் பரிசீலனை செய்ய முடியும். இந்தப் பரிசீலனையில் மட்டுமே எப்படி மனைவி கணவனின் “பிரதிபலிப்பாக” விளங்குவாள் என்ற நெருக்கம் தெரிய வரும். மனிதன் என்பவன் இறைவனின் பிரதிபலிப்பு. இறைவன் மட்டுமே உண்மை, நித்திய சூரியன். மற்ற ஜீவன்கள் எல்லாம், மண் பாத்திரங்களில் தெரியும் சூரிய பகவானின் பிரதிபலிப்பே என்ற கடவுள் தத்துவ விளக்கத்தை வெறுமனே படித்துப் புரிந்து கொள்வதை விட அதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டியவர்களே, இன்றும் தியாகத்தின் உண்மை சொரூபத்தைக் காட்டிக் கொண்டு இருப்பவர்களே மகான்கள், யோகிகள், சித்தர்கள் ஆவர். இந்த தியாக பிம்ப இரகசியங்களை உணர்ந்து கொள்ள முயற்சி செய்வதும் வெள்ளியங்கிரியில் அளிக்கும் “சுழல்” பாயச தானம் எப்படி சுழல் சுரத்திற்கு மருந்தாக மாறும் என்ற இரகசியத்தை உணர வழி வகுக்கும். பல திருத்தலங்களிலும் இரண்டு பாம்புகளின் அசைவைக் குறிப்பதாக விக்ரஹங்களையும் படங்களையும் பார்த்திருக்கலாம். உண்மையில் இவை மனிதர்களின் முதுகுத் தண்டில் திகழும் சூரிய சந்திர சுவாசங்களின் அசைவையே குறிக்கின்றன. இந்த அசைவுகளின் அம்சங்களைப் பற்றி பக்தர்கள் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் கடும் காய்ச்சல், சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல் போன்ற துன்பங்களால் அவதிப்படுவோர் இந்த உருவங்களுக்கு தங்கள் கையால் அரைத்த சந்தனப் பொட்டிட்டு வணங்கி வருதலால் நன்னிலை பெறுவர்.

நொய்யல் ஆறு சென்னிமலை

பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்து இத்தகைய துன்பங்களிலிருந்து முழுமையான நிவாரணமும் பெற முடியும். குண்டலினி யோகத்தில் திகழும் சுவாசங்களின் அசைவுகளை இத்தகைய பாம்புகளின் அசைவுகளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதால் குண்டலினி யோகப் பயிற்சிகளை மேற்கொள்வோருக்கு இத்தகைய பாம்புகளின் வழிபாடு படிப்படியான முன்னேற்றத்தை நல்கும். “சுழல் பாயச” தானத்தை வெள்ளியங்கிரியில் மட்டும்தான் அளிக்க வேண்டுமா என்று ஒரு சில அடியார்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். நாம் ஏற்கனவே தெரிவித்தது போல் இந்தக் கட்டுரையை குறைந்தது 12 முறை வாசித்தால்தான் இந்த “சுழல்” இரகசியங்கள் புரியவரும். அப்போதுதான் வெள்ளியங்கிரி திருத்தலத்திற்கும் சுழல் சுரத்திற்கும் உள்ள தொடர்பு தெரிய வரும். கோயம்புத்தூரின் பல பகுதிகளிலும், சென்னிமலை போன்ற திருத்தலத்திலும் பொலியும் நொய்யல் ஆறு இத்தகைய சக்திகளுடன் பொலிவதால் ஆடி மாதப் பிறப்பு, 18ம் பெருக்கு திருநாள் போன்ற நாட்களில் நொய்யல் ஆறு தீர்த்தம் கலந்த பால் தானம் அளிப்பதும் இத்தகைய சுழல் சக்தியைப் பற்றிய அறிவை, ஞானத்தை விருத்தி செய்யும் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம் ஆகும். நம் புனித பாரதத்தில் ஒவ்வொரு தீர்த்தத்தில் பொலியும் நீருக்கும், திருக்குளம், கங்கை, காவிரி போன்ற தீர்த்தங்களும் உள்ள சிறப்புகளை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. இம்முறையில் எப்படி ஆரியங்காவு திருத்தல கல்லடா தீர்த்தம் தம்பன சக்திகளுடன் பொலிகின்றதோ அதுபோல வெள்ளியங்கிரி தீர்த்தமும் அபூர்வமான சுழல் சக்திகளுடன் பொலிகின்றது. பால் கொதிக்கும்போது அதில் தீவிரமடையும் சுழல் சக்திகள் பால் குளிர்ந்து பக்தர்களுக்குத் தானமாக அளிக்கப்படும்போது மனிதர்களின் காய்ச்சல் நோயைத் தீர்க்கும் அற்புத ஔஷத சக்திகளைப் பெறுகிறது என்பதே இந்த தீர்த்தப் பின்னணியில் அமைந்த சுழல் சக்தியின் மகத்துவமாகும். கொரோனா என்ற காய்ச்சல் நோய் மனித சமுதாயத்திற்கு புதிது போல் தோன்றினாலும் இது யுக யுகமாய் பூமியில் அவ்வப்போது தோன்றும் நோயே என்பது பகவான் ரஜனீஷ் போன்ற மகான்கள் உணர்த்தும் உண்மையாகும். இந்த நோய்க்கு மருந்தாக பகவான் அருளிய யோகமே அசலன சலன யோகம் என்பதாகும்.

உள்ள சட்டை உதிர்

இந்த யோக முறை ஆரம்பத்தில் பெண்ணும் ஆணும் இணைந்து பயிலும் யோகம் போல் தோன்றினாலும் இந்த யோகத்தின் தீவிர நிலையில் பெண்ணோ ஆணோ ஒருவர் விரல் கூட மற்றவர் மேல் படக் கூடாது என்பதே இந்த யோகத்தின் தாத்பர்யமாகும். ஆனால், கலியுலகில் இந்த யோகம் முற்றிலும் ஒத்துவராது என்பதால்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற உத்தமர்கள் ஆணோ பெண்ணோ தனியாகவே இந்த யோகத்தை பயிலும் முறையை போதித்தார்கள். இந்த யோகம் இன்றைய கலியில் ஒத்து வராது என்பதை உணர்ந்த பகவான் ரஜனீஷ் இதை நிரூபணம் செய்வதாகவே தன்னுடைய லோகத்தை அடைந்தார் என்பதே சித்தர்கள் பகவானின் அவதாரம் குறித்து வெளியிடும் இரகசியம் ஆகும். தற்போது குண்டலினி யோகம் பயிலும் நம் சற்குரு போன்ற உத்தமர்கள் தங்கள் ஆடை, பூணூலைக் கூட கழற்றி வைத்து விட்டு இந்த உத்தம தவத்தில் ஈடுபடுகிறார்கள்.

ஸ்ரீஆயுர்தேவி

காரணம் தான் ஆண் என்றோ பெண் என்றோ நினைக்கும் அந்த நினைவு கூட உத்தம நிலையில் மனத்தில் சலனத்தை தோற்றுவிக்கும் என்பதே காரணமாகும். நம் சற்குரு உடலுறவைப் பற்றிக் கூறும்போது, “காய்ந்த மாடு கம்பு பயிரில் புகுந்தால் போன்ற ... மன நிலையைக் களைய வேண்டும்,” என்பார்கள். இதுவே அசலன சலன யோகத்தின் மறைமுகமான தெளிவுரை. இந்த அசலன சலன யோக முறை பற்றிய மேலும் விளக்கங்களைப் பெற விரும்புவோர் வெள்ளிக் கிழமைகளில் ஸ்ரீஆயுர்தேவி கலச பூஜையை மேற்கொள்வது சிறப்பாகும். வெள்ளிக்கிழமைக்கு உரித்தான எண் ஆறு, ஸ்ரீஆயுர்தேவியோ ஒன்பது கரங்களுடன் விளங்குபவள். இந்த விளக்கங்களைக் குறித்து ஆத்ம விசாரம் செய்து வருவதும் தொடர்ந்த ஸ்ரீஆயுர்தேவி பூஜையும் குடும்ப ஒற்றுமையைப் பெருக்குவதுடன் எந்த வித காய்ச்சல் நோய்க்கும் பரிகாரமாக விளங்கும். மேலும் இவ்வாறு தொடரும் வழிபாடு அசலன சலன யோகத்தில் தம்பதிகளை நிலைநிறுத்தும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.
உள்ளம் திருக்கோயில் ஊனுடம்பே ஆலயம்
தெள்ளத் தெளிவதற்கு உள்ளச் சட்டை உதிர்
என்பது சட்டை பட்டன்களை அடியார்கள் அணியும்போது சொல்ல வேண்டிய துதி. கிழக்கு நோக்கி நின்று கொண்டு சட்டையின் வலது கையை முதலில் அணிந்து கொண்டு, பட்டன்களை கீழிருந்து மேலாக அணிந்து கொள்தல் என்பதே இந்த வழிபாட்டை நிறைவேற்றும் முறையாகும். கற்பனை செய்ய முடியாத அத்துணை எளிதான இந்த வழிபாட்டின் பின்னணியில் பொலியும் பலன்களோ பிரமிப்பானவையே. தான் ஆண் என்றோ பெண் என்றோ “உள்ளத்தில்” அணியும் “சட்டையானது” காலம் செல்லச் செல்ல மறையும் என்பதே இந்த உள்ள சட்டை துதியின் உட்பொருளாகும். உள்ள சட்டை, உள்ளச் சட்டை இதுவே பிரமிப்பின் உச்ச கட்டம். 1993ம் ஆண்டே பூமிவாழ் மக்களுக்கு ஆயுர்தேவி வழிபாட்டை அறிவித்த நம் சற்குரு அப்போதே கொரோனா போன்ற பலவிதமான காய்ச்சல் நோய்களைத் தீர்க்கும் நிவாரண சக்திகளையும் இவ்வுலகில் நிலைநாட்டினார் என்பதும் ஒரு சித்த இரகசியமே. கீழ்பெண்ணாத்தூர் திருத்தலத்தில் சூட்சுமமாக அருளும் ஸ்ரீகடும்பாடு சித்தர் அருளும் நோய் நிவாரண சக்திகள் அவ்வாலயத்தின் தல விருட்சமான வேப்ப மரத்தில் நிறைந்து பொலிவதால் மக்களுக்கு நோய் நிவாரண சக்திகளை அளிக்க கடும்பாடு சித்தரின் காயத்ரீ மந்திரத்தை ஓதி வருமாறு பணித்த நம் சற்குருவின் தனிப் பெருங்கருணையை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது ? ஆயுர்தேவியின் வாகனமான அன்னப்பறவை பாலிலிருந்து தண்ணீரைப் பிரிக்கும் சக்தி பெற்றது என்பதே நாம் அறிந்த சுவை. உண்மையில் தேவியின் இந்த அன்னவாகனமானது சுழல் சக்திகளை மனிதனைத் தாக்கும் எந்த வித நோயின் கொடுமைகளிலிருந்தும் பிரித்து மனிதனைக் காக்க வல்லதாகும்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவசேனாயை
ஆயுர்தேவ்யை ஸ்வாஹா
என்ற 21 எழுத்துக்கள் கொண்ட சித்தோபநிஷத் மந்திரம் எந்த நோயையும் தீர்க்கவல்ல நிவாரண சக்தி கொண்டது என்பது இப்போது புரிகின்றது அல்லவா ?

கடும்பாடு நீக்கும் கடும்பாடு

ஆனந்தகனியின் மூலிகை சக்திகள் எத்தகைய காய்ச்சல் நோயின் சுழல் தன்மையையும் அன்னத்தைப் போல் பிரித்து மக்களைக் காக்கும் வல்லமை கொண்டது என்பதே இங்கு நீங்கள் காணும் சித்திரத்தின் மகத்துவம் ஆகும். செவ்விந்திய தலைவன் ஒருவனுக்கு ஆனந்தகனியின் மூலிகையை அளித்து அதை ஹோமத்தில் ஆஹூதியாக அளிக்கும் முறை பற்றி சாட்சாத் சிவபெருமானே விளக்குவதாக அமைந்த இந்த சித்திரம் ஆனந்தகனி எவ்வாறு சுழல் சக்திகளைக் கட்டுப்படுத்தும் என்ற மூலிகை இரகசியங்களை விளக்குவதாக உள்ளது. இடது கை என்பது தேய்பிறை சக்திகளைக் குறிப்பதால் எம்பெருமான் நோய்கள் தீர்வதற்காக இத்தகைய உபதேச மூலிகையை இடது கையால் அளிக்கிறார். மற்றவர்களுக்கு இந்த நோய் நிவாரண சக்திகளை அருளாமல் ஏன் செவ்விந்தியர்களுக்கு நீலகண்டன் அருளினான் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். செவ்விந்தியர்கள் தங்கள் சிகை அலங்காரத்திற்காக பலவித பறவைகளின் வண்ண வண்ண இறகுகளைப் பயன்படுத்துவார்கள். இந்த ஒவ்வொரு நிறத்திற்கும் உரிய ககுதி, நிலைகள், ஆண் பால், பெண்பால் இலக்கணங்கள் உண்டு. இதில் வெள்ளையும் கருப்பும் சேர்ந்த நெருப்புக்கோழிகளின் இறகுகளை வைத்தியர்கள் ஹோமம் நிகழ்த்தும்போது அணிவதுண்டு. இந்த இரகசிய நுணுக்கங்களும் சிவபெருமானின் உபசேதத்தில் அடங்கும் என்பதே சித்தர்களின் நல்லுரை ஆகும்.

தன்வந்த்ரீ உபதேசம்

இத்தகைய முறைகள் எதையுமே இன்றைய சூழ்நிலையில் பக்தர்கள் நோய் நிவாரணத்திற்காக நிறைவேற்ற முடியாதே என்பது சித்தர்கள் அறியாத ஒன்றா என்ன ? இதற்காகவே சித்தர்கள் ஒரு மாற்று முறையை அருளியுள்ளார்கள். ஆறு செங்கற்களைக் கொண்டு ஹோம குண்டம் அமைத்து அதில் ஸ்ரீஹேரம்ப கணபதியை ஆவாஹனம் செய்து வழக்கமான ஆஹூதிகளுடன் வலம்புரி இடம்புரி என்ற இரண்டு மூலிகைகளையும் ஆஹூதிகளாக இட்டு ஹோமத்தை நிறைவு செய்தலால் நோய் நிவாரண சக்திகள் புவியெங்கும் நிரவும். சதுர்த்தி அல்லது சதுர்த்தசி திதியில் இத்தகைய “தன்வந்த்ரி ஹோமங்களை” நிறைவேற்றுதல் சிறப்பு. நோய் நிவாரணத்திற்காக மேற்கூறிய ஸ்ரீஆயுர்தேவி மூல மந்திரத்தையும் குறைந்தது 32 முறை ஓதி ஆஹூதி இடுவதும் சிறப்பே. அசலன சலனம் என்ற யோக சக்திகள் உத்தம சற்குரு மூலமாகவே அறியப்பட வேண்டிய நுணுக்கங்கள் நிறைந்துள்ளதால் சற்குரு அமையப் பெறாதவர்கள் இத்தகைய யோகத்தில் பிரவேசிக்கவே முடியாது என்றாலும் இத்தகைய சற்குருவைப் பெற முசிறி காருகுடி திருத்தலம் உதவி புரியும். லால்குடி அருகே திருமாந்துறையில் பம்பரம்சுத்தி ஸ்ரீவிஸ்வநாதர் திருத்தலமும் இத்தகைய சுழல் சக்தி அனுகிரகங்களை அளிக்கவல்லதே. மனிதர்கள் ஆஸ்ட்ரல் பயணத்தில் பிறலோகங்களுக்குச் செல்லும்போது அவர்களின் சூக்கும உடல் பம்பரத்தைப் போன்று சுழன்று செல்வதால் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் இத்தகைய மனோவெளிப் பயணங்களுக்கு உறுதுணையாக அமையும். இத்தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் கொரோனா போன்ற சுழல் சுரங்களை எளிதில் தீர்க்கும் என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய உண்மைதானே. கொரோனா சுரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பல கடுமையான மருந்துகளை ஏற்றோ அல்லது கடுமையான பத்திய முறைகளை மேற்கொண்டோ உடல் நலிவடைந்து பலவீனமாக இருக்கும் வாய்ப்புகள் உண்டு. அத்தகையோர் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி முந்திரி, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு போன்ற சத்துள்ள பருப்புகள் நிறைந்த உணவுகளை அதிக அளவில் தானமளிப்பதால் நற்பலன் பெறுவார்கள். திருமணம் ஆகாதவர்களுக்கு ‘டு டி பார்வை’, திருமணம் ஆனவர்களுக்கோ ‘த்ரி டி பார்வை’ என்று விளையாட்டாகக் கூறுவதுண்டு.

உண்மையில் இத்தகைய பார்வை சுழல் சக்திகளைக் கொண்டதே பம்பரம்சுத்தி திருத்தலமாகும். பொதுவாக, மனிதர்கள் அனைவருமே இந்தப் பிறவியில் உத்தமர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு பிறவியிலோ அல்லது பல பிறவிகளிலோ இத்தகைய பார்வைக் கோணங்களால் தவறுகள் இழைக்கும் சந்தர்ப்பம் ஏராளமாக உண்டு என்பதால் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் இத்தகைய “பார்வைக் கோளாறுகளை” சரி செய்யும் சக்தி உடையன என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய இரகசியங்களாகும். அஷ்ட நமஸ்காரம் என்ற வழிபாட்டு முறை ஒன்று உண்டு. அதாவது கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு, தென் கிழக்கு, தென்மேற்கு, வடமேற்கு, வடகிழக்கு திசைகளை நோக்கி எட்டு நமஸ்காரங்களை அஷ்டாங்க நமஸ்காரமாகவோ அல்லது ஸ்வஸ்தி நமஸ்காரமாகவோ இயற்றுதலே அஷ்ட நமஸ்கார பத்ததி ஆகும். இம்முறையில் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் நமஸ்காரங்களை இயற்றி வழிபடுதலால் இது எத்தகைய சுழல் சுரங்களுக்கும் நற்பலன்களை அளிப்பதுடன் படிப்படியாக ஆன்மீக முன்னேற்றத்தையும் அளிக்கும் என்பதில் ஐயமில்லை.

ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீவிஸ்வநாதர் பம்பரம்சுத்தி லால்குடி

இவ்வாறு பல முறை அஷ்ட நமஸ்காரங்களை பம்பரம்சுத்தியில் இயற்றி வழிபடுதலும் ஏற்புடையதே. இந்த ஒவ்வொரு அஷ்ட நமஸ்கார பத்ததியும் ஒன்றின் மேல் பல அடுக்குகளாக, பல மாடிக் கட்டிட அமைப்புகள் போல் அமைந்து இறை மார்கத்தில் உத்தம நிலையைத் தேடித் தரும் என்பதே பம்பரம்சுத்தி திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் அஷ்டநமஸ்கார பத்ததியின் சிறப்பம்சமாகும். வேறு எந்த திருத்தலத்திலும் இத்தகைய நமஸ்கார பத்ததியை நாம் கைக்கொண்டு பலனடைய முடியாது என்பதையும் நினைவில் கொள்க. பம்பரம்சுத்தி திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் இத்தகைய நமஸ்கார பத்ததியில் ஈசான்ய மூலையில் வேப்பமரமும் அத்தி மரமும் இணைவது ஏதோ தற்செயலாக நிகழும் நோய் நிவாரண சக்திகள் அல்ல என்பதும் நம்மை பிரமிக்க வைக்கும் உண்மையே.

பம்பரம்சுத்தி திருமாந்துறை

பம்பரம்சுத்தி திருத்தலம் அருளும் மற்றோர் அபூர்வ அனுகிரகம் எட்டாமிட ஆயுள்பங்க நிவர்த்தியாகும். மனிதர்களின் ஜாதகங்களில் எட்டாமிடமும், எட்டாமிட அதிபதியும், சனீஸ்வர பகவானும் ஆயுளை நிர்ணயம் செய்கின்றனர். இந்த ஜோதிட அம்சங்களில் ஏதாவது ஒரு அம்சம் பாதிக்கப்பட்டாலும் அந்த ஜாதகரின் ஆயுள் பலம் குறையும். அத்தகையோர் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் அஷ்ட நமஸ்கார பத்ததியில் வழிபடுவதால் நற்பலன் பெறுவார்கள். 60, 80 வயது ஆயுள்நிறைவைக் கொண்டாடும் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் போன்ற வழிபாடுகளுக்கும் பம்பரம்சுத்தி திருத்தலம் உகந்ததே. ப ம் ப ர ம் சு த் தி என்ற திருத்தலம் எட்டு அட்சரங்களுடன் பொலிவதும், மூன்று மெய்யெழுத்துக்களுடன் விளங்குவதும் மேலோட்டமாக நாம் இரசிக்கக் கூடிய காரணங்களே. ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி தினமும் வழிபாடு இயற்றும் தலங்களுள் பம்பரம்சுத்தி திருத்தலமும் அடங்கும். இத்திருத்தலத்தில் நிரவப்படும் அஷ்டவக்ர சக்திகளே எத்தகைய ஆயுள்பங்கத்தையும் நிவர்த்தி செய்வதுடன் உடல், மன ஊனங்களால் ஏற்படும் தாழ்வு மனப்பான்மையையும் சரி செய்து ஊனமுற்றோருக்கு வாழ்வில் தன்னம்பிக்கையை அளிக்கவல்லவை ஆகும். கால வர்த்தமான சூழ்நிலைகளால் இத்தலத்தில் அஷ்டநமஸ்காரம் இயற்றுவது சற்றே கடினம் போல் தோன்றினாலும் இத்தகைய “மேடு பள்ள” தலங்களே மனித வாழ்வில் பக்தர்கள் சந்திக்கும் பல்வேறு ஏற்றத் தாழ்வுகளைக் களைந்து பக்தர்களுக்கு நல்வழி காட்டுகின்றன என்பதே இந்த பிரதட்சிண நமஸ்காரங்களின் பின்னணியில் அமைந்த மற்றோர் சுவையாகும். தாழ்வு மனப்பான்மையுடன் திருமணம், வேலை வாய்ப்பின்றி வாடுவோர்கள் தேனில் ஊறிய அத்திப்பழங்களை இங்கு தானமாக அளித்தல் நலம். பம்பரம்சுத்தி திருத்தலத்தில் நிறைவேற்றப்படும் பிரதோஷ வழிபாட்டில் இன்றும் ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி ஏதாவது ஒரு வடிவில் தோன்றி அனைவரையும் ஆசீர்வதிக்கிறார் என்பதே சித்தர்கள் உரைக்கும் மறை வேதம். திருக்கழிப்பாலை திருத்தலத்தில் கஞ்சலங்கை என்னும் தவளை பா ... பு... என்ற ‘ப’ வகை பீஜாட்சரங்களை ஓதி தன்னைத் தூய்மை செய்து கொண்டு இஷ்ட பரிமாண நாக தேவதைக்கு பிரசாதமாக தன்னை அர்ப்பணித்து அந்த தியாகத்தின் பலன்களை எல்லாம் பக்தர்களுக்கு அனுகிரகமாக வாரி வழங்குகின்றது என்பதை கடுக்கன் மகிமை என்னும் ஆஸ்ரம நூலிலிருந்து நீங்கள் அறிவீர்கள்.

ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி

வல்லின எழுத்துக்களில் ஐந்தாவதாக மலரும் ‘ப’ வகை பீஜாட்சரங்கள் தோன்றிய திருத்தலமே பம்பரம்சுத்தி ஆகும். திருப்பைஞ்ஞீலி, திருப்பராய்த்துறை, பந்தனைநல்லூர் போன்ற பல திருத்தலங்களும் இத்தகைய ‘ப’ அட்சரங்களில் தோன்றும் தெய்வீக சக்திகளைக் கொண்டே குதிரை வலிப்பு, புற்றுநோய், மேகநோய் போன்ற மருத்துவத்திற்குக் கட்டுப்படாத பல கொடிய நோய்களைத் தீர்க்கவல்லவையாக அமைகின்றன. நம் சற்குரு சுமார் பத்து கோடி இறையடியார்களுக்கு மேல் அன்னதானம் இட்டு இறைவனின் அருள் பெற்றார் என்பது நீங்கள் அறிந்ததே. இதன் பின்னணியில் அமைந்த ஆயிரமாயிரம் இரகசியங்களுள் ஒன்றே வேத சக்திகளை முழுமையாக்கும் சித்தர்களின் கற்பனைக்கெட்டா கருணை களஞ்சியமாகும். உதாரணமாக, நம் அடியார்களை அழைத்துக் கொண்டு காசி கயா கேதார்நாத் போன்ற திருத்தலங்களுக்கு யாத்திரை சென்ற நம் சற்குரு ஒரு நாள் காலை கங்கையில் தம் அடியார்களுடன் சேர்ந்து நீராடினார். பல மணி நேரம் நிகழ்ந்த இந்த அஸ்வமேத யாகத்திற்குப் பின் பக்தர்களுக்கு கங்கைக் கரையில் ரசகுல்லாவும் சம்சாவும் தேநீர், பாலுடன் வழங்கப்பட்டன. தசாஸ்வமேதகாட் என்னும் பிரம்மா பத்து அஸ்வமேத யாகங்கள் நிகழ்த்திய புனிதமான கங்கைக் கரையில் நீராடிய பலன்களை எல்லாம் அடியார்கள் முழுமையாகப் பெற வேண்டுமானால் இந்த உணவுப் பரார்த்தங்களை பிரசாதமாக ஏற்பதே சாலச் சிறந்தது என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும். அதுபோலவே ஹோமம், வேள்வி,வேதபாராயணம் போன்ற யக்ஞங்களுக்குப் பின் பக்தர்கள் குறித்த பிரசாதங்களை ஏற்றால்தான் அந்த வேள்விகள் முழுமை அடையும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும். இவ்வாறு ஆனந்தகனி பழங்களை ஹோமத்தில் ஆஹூதியாக இட்டு யாகம், வேள்வி நிறைவேற்றியவர்களுக்கு உரிய இறை பிரசாதமாகவும் நம் சற்குரு நிறைவேற்றிய அன்னதானம் அமைந்தது என்றால் கொரோனா என்ற கடும் சுரம் தோன்றுவதற்கு எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நம் சற்குருவின் சேவை நிறைவேறியது என்பதை நாம் உணர முடிகின்றது அல்லவா ?

தேன்கூடு செம்பியன்களரி

எனவேதான் நம் அடியார்கள் இந்த ஆனந்தகனி மூலிகைகளைக் கொண்டு ஹோமம் நிகழ்த்த முடியாவிட்டாலும் இன்றும் அமெரிக்காவில் வசிக்கும், செவ்விந்தியர்களின் வழித்தோன்றல்களாய் அங்கு பிரகாசிக்கும் நம் அடியார்கள்
ஓம் சாம்ப பரமேஸ்வராய வித்மஹே
சௌம்ய தேவாய தீமஹி
தந்நோ கடும்பாடு சித்த ப்ரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதி வருதலால் இத்தகைய காயத்ரீ மந்திரங்கள் இன்றும் நோய் நிவாரண சக்திகளை புவியில் நிலைநிறுத்தும் என்பதே நாம் உணர வேண்டிய சித்த சுவை. சருகு வேப்பிலை என்பது கையால் கொய்யப்படாமலோ, கொம்பு கொண்டு உதிர்க்கப்படாமலோ தானே பழுத்து தரையில் விழும் வேப்ப இலைகளாகும். பல இடங்களிலும் காடுகளின் பல பகுதிகளிலும் ஆனந்தகனி மூலிகைகள் தீப்பற்றி எரிவதால் அந்த மூலிகைச் சார பஸ்மங்கள் எல்லாம் உரிய மகான்களால் ஆஹூதிகளாக அளிக்கப்பட்டு அவை தீர்க்க முடியாத பல காய்ச்சல் நோய்களுக்கு மருந்தாக அமைகின்றன. எனவே வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் சருகு வேப்பிலைகளை தங்கள் தோட்டத்தில், காலி இடங்களில் சேர்த்து பாதுகாப்பாக தீயில் இடுவதும், மேற்கண்ட காயத்ரீ மந்திரத்தை முடிந்த வரை ஓதுவதும் மிகச் சிறந்த சமுதாய சேவையாக அமையும். ஸ்ரீஹேரம்ப கணபதி ஹோமத்தில் வலம்புரி இடம்புரி மூலிகைகளுடன் இத்தகைய சருகு வேப்பிலைகளை ஆஹூதியாக இடுவதும் சிறப்பே. தானே கீழே விழுந்த வேப்பிலைக் குச்சிகளையும் ஹோமத்தில் ஆஹூதியாக இடுவதில் தவறில்லை. ஹோமம் நிகழ்த்தும்போதோ அல்லது சருகு வேப்பிலைகளை தீயில் இடும்போதோ இங்கு சிவபெருமான் அருளியுள்ள ஆனந்த ஆசனமாகிய வலது இடது கால் அடிப்பகுதிகளை மூலாதார சக்கரத்திற்கு இடையே அமைத்துக் கொள்தல் சிறப்பாகும். இதனால் பிரம்ம தண்டு மூலிகையின் சக்திகள் சூட்சுமமாக இந்த ஆஹூதியில் நிரவும்.

அட்டவக்கிர அருட்சோலை

ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி தன் உடலின் எட்டு இடங்களிலும் கோணல் மானலான அமைப்பைக் கொண்டிருந்ததால் அவர் இவ்வாறு அழைக்கப்பட்டார் என்பது ஒரு மேலோட்டமான காரணமே. உண்மையில் அட்ட கணிதம் என்றவாறாக 2x2x2 என்னும்போது அது எட்டு வித கோணங்களை உடையதாக இருக்கும் என்பதே அம்மகரிஷியின் வரலாறு உணர்த்தும் பாடமாகும். 8x8x8 என்று எட்டு எட்டாக மலரும் கணிதத்தையும் இது குறிப்பதாகும். மேலெழுந்தவாரியாக இந்த சூத்திரங்களின் பலன்களை உணர்தல் கடினம் என்றாலும் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் தொடர்ந்து அஷ்ட நமஸ்காரத்தை இயற்றி வழிபாடுகளைத் தொடர்ந்தால் இந்த அட்ட கணிதத்தின் மகிமையால் எத்தகைய வியாதிகளையும் தீர்க்கும் அருட் சக்தியைப் பெறலாம் என்பதும் அட்ட கணிதத்தின் ஒரு பலனாகும்.

ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் செம்பியன்களரி
மேகளத்தூர்

ஆனந்தகனி மூலிகை ஆஹூதியாக அளிக்கப்படுவது ஒரு காலம், பிரம்ம தண்டு மூலிகை சக்திகள் அளிக்கப்படுவது ஒரு யோக ஆசன வடிவத்தில், சருகு வேப்பிலை சக்திகளோ அக்னி வடிவில் பூரிக்கின்றன. இந்த மூன்று சக்திகளையும் ஒன்றாக இணைத்து அதை கடுமையான ஒரு சுரத்திற்கு ஔஷதமாக, குளிகையாக மாற்றி அருளவல்லதே அட்ட கணித முறையாகும். இந்த சூத்திரங்கள் அனைத்தும் நமக்கு சற்றும் புரியாத கோணத்தில் இருந்தாலும் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் பொலியும் ஸ்ரீஅஷ்டவக்ர பைரவ மூர்த்தி இந்த சூத்திரங்களின் பலன்களாக பல வியாதிகளைத் தீர்க்கும் மருந்தை பக்தர்களுக்கு அஷ்ட நமஸ்காரத்தின் பலன்களாக வர்ஷிக்கிறார் என்பதே நாம் உணர்ந்து தெளிய வேண்டிய பைரவ மகிமையாகும். இத்தல பைரவர் எழுந்தருளிய கோணமே அட்டவக்கிரம் என்னும் கோணத்தைக் குறிக்கும் ஈசான்ய மூலையாகும். ஆனால், கால தேச மாற்றத்தால் இந்த தலத்தில் பைரவர் எந்த இடத்தில், எந்த கோணத்தில் எழுந்தருளினாலும் பம்பரம்சுத்தி திருத்தலத்தில் பைரவ மூர்த்தியின் சக்திகள் ஈசான்ய திக்கில் அமையும் என்பதே ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி எம்பெருமானை வழிபட்டு பெற்ற பேறாகும். இந்த அபூர்வ அனுகிரகத்தை ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி சிவபெருமானிடமிருந்து பெற்ற அற்புத தலமே சுவாமிமலை அருகில் உள்ள கூனன்சேரி ஆகும். ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி இவ்வாறு பக்தர்களுக்கு அளிக்கும் பிரசாதமே அட்டவக்கிர அருட்சோலை அல்லது அட்டவக்கிர அருட்கனி என்பதாகும். இந்த பிரசாதத்தின் பலனை அனுபவிக்கும் எண்ணம் உடையோர் 8x8x8 என்பதின் விளைவாக வரும் 512 என்பதைக் குறிக்கும் வகையில் 512 சமுசா அல்லது 512 முக்கோண வடிவ பால் இனிப்புகளை பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்குதலால் எத்தகைய கொடுமையான நோயின் பிடியிலிருந்தும் மீள்வர். சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி போன்ற ஆயுள்வளர்ப்பு பூஜைகளின் நிறைவாக எத்தலத்திலும் ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷியின் தியானத்துடன் இத்தகைய அருட்சோலை தானத்தை நிறைவேற்றலாம். அவரவர் பிறந்த நாள், திருமண நாள் போன்ற புண்ணிய தினங்களிலும் இத்தகைய தான தர்மங்களை நிறைவேற்றி பலன் பெறலாம். ஆயுளை வளர்த்து சித்தர்களின் அருட்புனலில் நீராடலாம்.

ஸ்ரீகாமாட்சி அம்மன் செம்பியன்களரி

பீஷ்மர் நைஷ்டிக பிரம்மச்சர்ய விரதம் ஏற்றபோது தேவர்கள் அனைவரும் விண்ணிலிருந்து பூமாரி பொழிந்து தேவவிரதன் என்று மும்முறை அழைத்துப் போற்றிய வரலாறு நீங்கள் உணர்ந்தே. ஒரு விரதத்திற்கா இத்தனை வரவேற்பு என்று நீங்கள் நினைக்கலாம். பீஷ்மாச்சாரியார் தன் சிற்றன்னையை மகிழ்விக்க, தானோ தன் வாரிசுகள் எவருமே சந்தனுவின் சிம்மாசனத்தில் அமர மாட்டோம் என்பதை உறுதி செய்ய ஏற்ற தேவவிரதம் என்று நாம் நினைத்தாலும் உண்மையில் லட்சக் கணக்கான, கோடிக் கணக்கான மக்களின் பிரம்மச்சரிய விரதத்தை உறுதி செய்வதாகவே பீஷ்மர் ஏற்ற தேவவிரதம் அமைந்தது என்பதே சித்தர்கள் உரைக்கும் மகாத்மியமாகும். அதை உணர்ந்தே, அந்த அற்புத விரதத்தை பாராட்டுவதாகவே தேவர்கள் பூமாரி பொழிந்தனர் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் வரலாறு ஆகும். இது எந்த யுகத்திலோ நிகழ்ந்த நிகழ்ச்சி போல் நமக்குத் தோன்றினாலும் இன்றும் இத்தகைய தேவவிரதத்தின் பலன்களை மக்கள் அனைவரும் பெற வழிவகுப்பதே தஞ்சை பூதலூர் அருகில் மேகளத்தூர் செம்பியன்களரி திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீகாமாட்சி அம்மன் சமேத ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் சிவாலயமாகும். தேவர்கள் கந்தர்வர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கிட்டும் புண்ணிய சக்திகளை அப்படியே எடுத்துச் சென்று விட முடியாது. பூமியில் திருஅண்ணாமலை அமைந்திருப்பதால் இங்குள்ள ஜீவன்களுக்கும் கிரிவல புண்ணிய சக்தியை பங்கிட்டுத் தர வேண்டும் என்பது அருணாசல கிரிவல நியதி. அதுபோலவே பீஷ்மர் பெற்ற பிரம்மச்சர்ய விரத பலன்களையும் எம்பெருமானின் திருவடிகளில் சமர்ப்பித்துத்தானே செல்ல வேண்டும். பீஷ்மர் அளித்த அத்தகைய அனுகிரக சக்திகளே பீஷ்ம பஞ்சகம் போன்ற விரதங்களை அனுஷ்டிக்கும் பக்தர்களுக்கு பீஷ்ம பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இத்தகைய பீஷ்ம பிரசாதத்தின் ஒரு பகுதியும் செம்பியன்களரி திருத்தலத்தில் நிகழ்த்தும் வழிபாடுகளில் பக்தர்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்பதே இதுவரை நாமறியா இரகசியமாகும். சோலை என்றால் பல கனிகள், மலர்கள் பூத்துக் குலுங்கும் மரங்கள் அடர்ந்த வனம் என்றுதானே பொருள். பீஷ்மரோ, அஷ்டவக்ர மகரிஷி போன்ற உத்தமர்களோ தங்கள் அனுகிரக சக்திகளை இவ்வாறு மனித சமுதாயம் முழுமைக்கும் அளிப்பதால் அவர்கள் வர்ஷிக்கும் அனுகிரகம் சோலை என்றே வழங்கப்படுகிறது. கௌதம மகரிஷியின் தர்மபத்தினியான அகலிகை மேல் மையல் கொண்டு இந்திரன் தன் உடல் முழுவதும் யோனிக் கண்களைப் பெற்ற வரலாறு நீங்கள் அறிந்ததே. அவ்வாறு யோனிக் கண்களைப் பெற்ற இந்திரன் பல இடங்களில் மறைந்து தவமியற்றி, தன்னுடைய தவறுக்குப் பிராயச்சித்தம் தேடினான். அத்தகைய திருத்தலங்களுள் ஒன்றே செம்பியன்களரி திருத்தலமாகும். இத்தலத்தில் உள்ள தல விருட்சத்தின் மேல் அமைந்துள்ள தேன் கூடு ஆயிரமாயிரம் தேனீக்களுடன் திகழ்வது போல் தோன்றும். உண்மையில் இத்திருத்தலத்தை செவ்வாய்க் கிழமைகளில் வலம் வந்து வணங்குவதால் இந்த வில்வ மரத்தில் பொலியும் தேனீக்கள் அவரவர் வாழ்க்கையில் நிகழ்ந்த காமத் தவறுகளை படம் போட்டுக் காட்டுவதாக அமையும் என்பதே சித்தர்கள் கூறும் தெளிவுரை.

தலவிருட்சம் வில்வம் செம்பியன்களரி

ஒன்பது முறைக்குக் குறையாமல் இந்த கோயில் பிரகாரத்தையோ அல்லது இந்த தலவிருட்சத்தையோ வலம் வந்து வணங்குதல் சிறப்பாகும். இந்த தேன்கூடு மறைந்து வில்வ மரம் மட்டுமே தோன்றும் வரை பிரதட்சணமாக வலம் வர வேண்டும் என்பது விதி. சிலருக்கு தேன் கூட்டின் தரிசனமே கிட்டாமல் போகலாம். அப்படியானால் அவர்கள் காமத் தவறுகளே புரியாத உத்தமர்களா ? நிச்சயமாகக் கிடையாது. அத்தகையோர் இந்த வில்வமரத்தை தொடர்ந்து வலம் வருவதால் இந்த மரம் முழுவதுமே தேனீக்களாகத் தோன்றும் என்பதே இத்தலத்தின் மகிமையாகும். ஆனால், அத்தகைய பக்தர்கள் இதை வெளியே சொல்லாமல் தொடர்ந்து இந்த அற்புத வில்வ மரத்தை வலம் வந்து வணங்குதலால் தகுந்த பிராயசித்தங்கள் நிறைவேற்றும் சந்தர்ப்பங்களையும் பெறுவார்கள் என்பதே இத்தல அன்னை தன் அன்புக் குழந்தைகளுக்கு அளிக்கும் பிராயசித்த பரிசு.

பலருக்கும் தங்கள் கணவன்மார்கள் தங்களை மதிப்பதில்லை, தங்களிடம் உரிய அன்பைச் செலுத்துவதில்லை என்று நினைப்பதுண்டு. சொல்லப்போனால் இந்த குறைபாடு தங்கள் வாழ்வில் ஏதாவது ஒரு கட்டத்தில் தோன்றாத தம்பதிகளே இல்லை எனலாம். நேத்ராபதி என்றால் தன் மனைவியை கண் மணிபோல் வைத்துக் காப்பாற்றும் இமை போன்ற கணவனையும் குறிப்பதால் இத்தகையோர் வெள்ளிக் கிழமைகளில் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்றுதல் நலம். செம்பியன்களரி திருத்தலத்தில் ஸ்ரீகாமாட்சி அம்மன் இருகரங்களிலும் இரு தாமரை மலர்களை ஏந்திய வண்ணம் காட்சி அளிக்கிறாள். இது கணவனும் மனைவியும் இரு கண்களாய் இணைந்து ஒன்றுக்கொன்று இணையாய் மலர வேண்டியவர்களே என்ற ஒற்றுமைக்கு சான்றாகத் திகழ்வதாகும். காமாக்ஷி என்றால் கணவனைத் தவிர வேறு ஒருவரையும் மனதினாலும் தீண்டாத நேத்ரங்களை உடையவள் என்ற பொருளையும் குறிப்பவளே காமாட்சி அம்மன். தன் விழியோரப் பார்வையால் பக்தர்களின் எத்தகைய பிரார்த்தனைகளையும் நிறைவேற்றுபவளே காமாட்சி. இத்தல வழிபாடுகளின்போது,
ஓம் தத் புருஷாய வித்மஹே
காமாட்சி சமேதாய தீமஹி
தந்நோ நேத்ரபதீஸ்வர பிரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதிய வண்ணம் வழிபாடுகள் இயற்றுவதும், இத்தலத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வருதலும் நலம். தங்கள் இளமையில் தாறுமாறாக வாழ்ந்து பல காமத் தவறுகள் புரிந்து தங்கள் வாழ்வையே சீரழித்துக் கொண்ட பலரையும் இத்தலத்தில் வழிபாடுகளை இயற்ற வைத்து அவர்களுக்கு நல்வழி காட்டியவரே நம் சற்குரு. இன்றும் காமத் தவறுகளால் விளைந்த நோய் நொடிகளால் வருந்தும் பலரும், தங்கள் தவறுகளை வெளியில் கூற முடியால் இருந்தாலும் அவர்கள் மேற்கண்ட காயத்ரீ மந்திரத்தை தினமும் ஓதி வருதல் நலம்.

ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் செம்பியன்களரி

இவர்கள் எங்கிருந்தாலும் நாவல் கனிகளையோ, துளையிட்ட வடை, இட்லி, தேன் கலந்த பலாச் சுளை போன்ற பதார்த்தங்களை தானமாக அளித்தலால் நல்ல நிவாரணம் பெறுவார்கள். ஆமாம், பம்பரம்சுத்தி தலத்திற்கும் செம்பியன்களரி தலத்திற்கும் என்ன தெய்வீக சம்பந்தம் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றகிறது அல்லவா ? இத்தலங்கள் இரண்டும் அஷ்டாட்சரத் தலங்கள், எட்டு அட்சரங்களை உடைய தலங்கள் என்பது மேலோட்டமான காரணமாக இருந்தாலும் நேத்ர பதி என்றால் இரண்டு கண்களுக்கு உகந்ததலம் என்ற பொருளில் (512+512=1024) என்று விளங்குவதும் 1024 என்பது இரண்டின் பதியாக, அதாவது பத்தாவது வர்க்கமாகத் திகழ்வதும் ஆழ்ந்து சிந்தித்து பொருள் கொள்ள வேண்டிய அனுகிரக சக்திகளாகும். எண்கள் சுட்டும் உண்மைப் பொருளை நாம் அறிவது கடினம் என்பதால் திரிதின அமாவாசையாகத் திகழும் நாட்கள் உள்பார்வைக்கு உகந்த நாட்களாகத் திகழ்வதால் இத்தகைய நாட்களில் உதாரணமாக வரும் 9.7.2021 வெள்ளிக்கிழமை அன்று (3x2=6, அதாவது விதி எண்ணும் குருவின் இருபாதமான வார எண்) ஸ்ரீஆயுர்தேவி அம்பிகைக்கு தம்பதி சமேதராய் கலச பூஜை இயற்றி அந்த கலச பூஜை தீர்த்தத்தை செம்பியன்களரி போன்ற தேன்கூடுகள் அமைந்த ஆலய மரங்களுக்கு வர்ஷித்தல் வாழ்வில் கிடைத்தற்கரிய பெரும் பேறாகும். ஆலயத்தின் ஏதாவது ஒரு பகுதியில் கும்பகோணம் அருகில் ஆண்டான்கோயில் போன்று தேன்கூடுகள் இருந்தாலும், அல்லது திருக்கோளக்குடி போல் தீர்த்தத்தின் மேல் பொலியும் தேன்கூடுகள் அமைந்திருந்தாலும் அவை இத்தகைய விருட்ச பூஜைக்கு ஏற்றவையே. இத்தகைய தம்பதி பூஜைகளை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் ஸ்ரீஆயுர்தேவி படம், செம்பு கலசம், பூஜை பொருட்கள் போன்றவற்றை தகுதி உடைய தம்பதிகளுக்கு தானமாக அளித்து அவர்கள் மூலம் இத்தகைய பூஜைகளை நிறைவேற்றுவதும் வாழ்வில் பல துக்கங்களை, துயரங்களை தீர்க்கக் கூடிய அபூர்வ வழிபாட்டு முறையாகும். திரிதின அமாவாசை என்றால் அமாவாசையில் ஒரே ஒரு முறை நிறைவேற்றும் இத்தகைய பூஜைகளே மூன்று நாட்களுக்கும் நிரவி பலன் கொடுக்கும் என்பதே இத்தகைய பூஜைகளின் மகத்துவங்களில் ஒன்றாகும். பூஜை நிறைவில் திடவஜ்ரம் என்று பெயர் பெற்ற வைரம் பதித்த ஆபரணங்களை பல அடியார்கள் ஒன்று சேர்த்து தானமாக அளிப்பதால் தம்பதிகள் இடையே உள்ள ஒற்றுமை, குடும்ப ஒற்றுமை, சமுதாய ஒற்றுமை பெருகும், வைரம்போல் திடமாக ஜொலித்து பிரகாசிக்கும் என்பதில் ஐயமில்லை.

இருபாத முச்சுடர் யோகம்

ஏதோ புதிதாக கேள்விப்படும் ஒரு யோகம் போல் இந்த இருபாத முச்சுடர் யோகம் தோன்றினாலும் தம்பதிகளுக்கு நன்கு பரிச்சயமான ஒரு யோகமே அமாவாசை திரிபாதமாக, திரிதினமாக ஆதிரை நட்சித்திரத்துடன் இணையும்போது இத்தகைய சிறப்புப் பெயரைப் பெறுகின்றது. தம்பதிகள் பத்மாசனத்தில் அமர்ந்து கொண்டு ஒருவரையொருவர் நோக்கிய வண்ணம் குறைந்தது ஒரு மணி நேரமாவது இத்தகைய யோகத்தில் நிலைத்திருப்பதே முச்சுடர் யோகமாகும். இதுவரை இந்த யோகத்தை மேற்கொள்ளாதவர்களும், ஒரு வேளை இத்தகைய யோகத்தை நிறைவேற்றி மனம் சலித்து பாதியில் நிறுத்தியவர்களும் மீண்டும் தொடர உதவுவதே வரும் 9.7.2021 வெள்ளிக் கிழமை அன்று திகழும் இத்தகைய யோக நாள் ஆகும்.

ஸ்ரீநந்தீஸ்வரர் செம்பியன்களரி

எப்படி ராகுகாலம் நற்காரியங்களுக்கு உகந்ததாகக் கருதப்படுவது கிடையாது என்றாலும் துர்கை போன்ற தெய்வங்களை வழிபட சிறப்பான நேரமாக அமைகின்றதோ அது போன்றதே இந்த அபூர்வ யோக நாளும் ஆகும். திருமணம், சீமந்தம், கிரஹப்ரவேசம் போன்ற சுப முகூர்த்த நாட்களில் நேத்திரமும் ஜீவனும் பூரணமாக அதாவது 2, 1 என்ற முறையில் அமைவது சிறப்பே என்றாலும் இந்த முச்சுடர் யோக நாளில் மறைந்து இருப்பது அதாவது நேத்திர சக்திகளும் ஜீவ சக்திகளும் 0, 0 என்ற கணக்கில் வியாபித்து இருப்பதே இத்தகைய இருபாத முச்சுடர் யோகம் என்ற அபூர்வ யோக சக்திகளைக் கூட்டுவிக்கும் சிறப்பான நாளாகும். இந்த அபூர்வ யோக சக்திகளைக் குறித்து ஸ்ரீஅகத்திய கிரந்தம்
வெள்ளி ஆதிரை விடியல் தரும்
பள்ளி ஆதிரை பரசிவம் தானே
என்று விளிக்கிறது. ‘பள்ளி ஆதிரை’ என்ற இரு பதங்களே முச்சுடர் யோகத்தின் சக்தியை விளக்குவதாகும். தம்பதிகள் ஒருவரையொருவர் பார்த்த வண்ணம் அதாவது ஒருவர் விழிப் பார்வைக்குள் மற்றவர் பார்வை ஊடுருவும் வண்ணம் அமர்ந்து இந்த துதியை வாய்விட்டோ அல்லது மனதிற்குள்ளோ ஓதி வருதலே இந்த யோகத்தின் பலனை பூர்ணமாக அனுபவிக்கும் மார்கமாகும். குறைந்தது ஒரு மணி நேரமோ அல்லது அதற்கு மேலோ இந்த யோகத்தில் திளைத்தால்தான் கண் கூடான பலன்களைப் பெற முடியும். சிறிது சிறிதாக கண்கள் என்ற தூலப் பொருள் மறைந்து, சூட்சும விழிகள் திறக்க, பின்னர் அந்த சூட்சுமப் பார்வை விழிகளும் மறைந்து ஒருவர் சோதிக்குள் மற்றவர் சோதி ஐக்கியமாகி பிரகாசிப்பதே முச்சுடர் யோகப் பரிமாணமாகும். இந்த யோகத்தை மேற்கூறிய நாளில் மட்டும் அவரவர் இல்லங்களில் ஆரம்பிப்பது என்பது ஏற்புடையதே. இந்த நாளில் இத்தகைய யோகத்தைத் தொடங்க முடியாதவர்கள் கசவனம்பட்டி திருத்தலத்தில் எந்நாளில் வேண்டுமானாலும் நிறைவேற்றி பலன் பெறலாம். கசவனம்பட்டி என்ற அஷ்டாட்சர தலம் முச்சுடர் யோகத் தலமும் கூட என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள் இடது காலை வலது கால் மேல் இணைத்து அமர்ந்திருப்பதே இத்தகைய முச்சுடர் யோக சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு அளிக்கும் யோகக் கோலமாகும். தம்பதிகள் பலரும் ஒரே இடத்தில் பத்மாசனத்தில் அமர்வதை மிகவும் சிரமமான காரியமாக நினைக்கலாம். அத்தகையோர் கசவனம்பட்டி தலத்தில் மேற்கண்ட மந்திரத்தை எட்டு பகுதியாகப் பிரித்து அஷ்ட நமஸ்காரமாக தம்பதி சகிதம் இயற்றி வருவதாலும் இத்தகைய முச்சுடர் யோக சக்திகளைப் பெறும் ஒரு மார்கமாகும்.
வெள்ளி .. கிழக்கு
ஆதிரை .. தெற்கு
விடியல் .. வடக்கு
தரும் .. மேற்கு

பள்ளி .. தென்கிழக்கு
ஆதிரை .. தென்மேற்கு
பரசிவம் .. வடமேற்கு
தானே .. வடகிழக்கு
இறைவன் சோதி வடிவானவன் என்று இறை தரிசனம் பெற்ற மகான்கள் உரைப்பதை நாம் அறிவோம். இந்த சோதியிலும் கோடி பரிமாணங்கள் உண்டு என்பதே சித்தர்களின் தெளிவு. சோதி வடிவம், சுடர் வடிவம், ஆதி வடிவம், அண்ட வடிவம், முப்பாதி வடிவம் என்ற பலதரப்பட்ட இறை சோதி வடிவங்கள் இருந்தாலும் இதில் எந்த சோதி வடிவமும் எந்த சோதியிலும் உயர்ந்ததோ தாழ்ந்ததோ கிடையாது என்பதே இந்த இறை சோதி வடிவங்கள் உணர்த்தும் தத்துவமாகும். இதில் சித்தர்கள் குறிக்கும் சுடர் வடிவ இறைவனை தம்பதிகள் உணர்ந்து கொள்ள வழிவகுப்பதே மேற்கண்ட வழிபாடாகும். இந்த அகத்திய நாடியின் பொருளை ஓரளவு உணர முடிந்தாலே அகத்திய நாடிகள் எத்தகைய இறைவளத்துடன், சொல் வளத்துடன் பொலிகின்றன என்ற இரகசியம் புலனாகும். ஜோதிட ரீதியாக கடக ராசியில் நீசம் பெற்ற செவ்வாய் பகவான் ஆட்சி பெற்று வக்ர கதியில் அமைந்த சனி பகவானின் பார்வையைப் பெறுவதால் இது எத்தகைய சுழல் சுரங்களையும் மாய்க்கும் சக்தி கொண்டதாகத் திகழும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ‘சுழல்’ இரகசியமாகும். கடகம் என்பது எட்டு திசைகளிலும் சுழலக் கூடிய பார்வை சக்தியைக் கொண்ட நண்டைக் குறிப்பதுதானே.

வைத்தீஸ்வரன் கோயில்

இத்தகைய முச்சுடர் யோக சக்திகளை நம் அடியார்கள் பெரும் பொருட்டு ஒரு எளிமையான பூஜையை நம் சற்குரு பல ஆண்டுகளுக்கு முன்னரே அடியார்களுக்கு அளித்தார். இது மிகவும் எளிமையாக இருந்ததால் என்னவோ இதன் மகிமையை பலரும் சட்டை செய்யாது விட்டு விட்டது போல் தோன்றுகிறது. உண்மையில் நம் சற்குரு அளித்த அந்தக் கால கட்டத்தில் இந்த பூஜையை ஆரம்பித்து தினமும் நிறைவேற்றி வந்திருந்தால் நிச்சயம் அந்தக் குடும்பத்தில் இன்று நாம் கேள்விப்படும் கொரோனாவின் பாதிப்பு ஏற்பட்டே இருக்காது. இருந்தாலும் காலம் கடந்த இந்த சூழ்நிலையில் இனியாவது இந்த பூஜையை தொடர்ந்து ஆற்றி கொரோனா போன்ற தொற்று நோய்களின் பிடியிலிருந்து விடுபட்டு நற்பலன் பெற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறோம். நம் சற்குரு போன்ற மகான்கள் ஆற்றும் உன்னத சேவையை இங்குள்ள வீடியோ படம் சித்தரிக்கிறது. வெள்ளியங்கிரி அடிவாரத்தில் நம் அடியார்கள் அளித்த பால் பாயசத்தைப் பெற்ற இந்த குரங்கு குட்டிக்குத் தராமல் பாயசத்தை தான் மட்டுமே பருகுவது போல் தோன்றுகிறது அல்லவா ? இதுவே நம் சற்குரு அளித்த பஞ்சாயதன பூஜையின் மகிமை. குறைந்தது ஒரு மணி நேரம், மிகுந்த பொருள் செலவு தேவைப்படும் இந்த பஞ்சாயதன பூஜையை தாமே இயற்றி அதன் பலனை மட்டும் வெறுமனே தொட்டால் போதும் என்ற நிலையில் பக்தர்களுக்கு ஒரு சற்குரு அளிக்கிறார் என்றால் அவர்தம் பெருமைதான் என்ன ? படத்தில் உள்ள குரங்கும் அதைத்தானே செய்கிறது ? குங்குமப்பூ கலந்த பாலை தான் பருகி விட்டு அதன் நோய் எதிர்ப்பு சக்திகளை மட்டும் பால் வடிவில் தன் குழந்தைக்கு அளிக்கும் ஆனந்த காட்சியை நினைவூட்டுவதே இங்கு நீங்கள் பெறும் வெள்ளியங்கிரி ஈசன் மகிமை.

செவ்வாய் வேந்தன்
ஸ்ரீஇலஞ்சி குமரன்

இங்கு அடியார்கள் மற்றோர் உண்மையையும் உணர்ந்து கொள்தல் நலம். பலருடைய வரன்களின் ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் இருப்பதால் செவ்வாய் தோஷம் இருப்பவர்களுக்கே செவ்வாய் தோஷம் உள்ள வரன்களைப் பொருத்த வேண்டும் என்பதே உண்மை என்றாலும் இந்த “பொருத்தும்” விஷயத்தில்தான் பலவித குழப்பங்கள் தோன்றுகின்றன. லக்னத்திலிருந்து 2, 4, 7, 8, 12 என்ற இடங்களில் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகம் செவ்வாய் தோஷம் உடைய ஜாதகமாகும். நம் சற்குருவோ இதில் களத்திர தானமான ஏழாம் இடத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிப்பார்கள். இந்த செவ்வாய் தோஷமானது கடக ராசி, சிம்ம ராசி ஜனனம் போன்ற பல்வேறு அம்சங்களால் சாம்யமாகும், அதாவது செவ்வாய் தோஷம் தன் சக்தியை இழந்து விடும். சில ஜாதகங்களில் இத்தகைய சாம்ய நிலை எந்த விதத்திலும் தோன்றாமலே இருப்பது உண்டு. எனவே செவ்வாய் தோஷம் உடைய வரன்களின் ஜாதகங்களைப் பொருத்திப் பார்க்கும்போது செவ்வாய் தோஷம் உடைய ஜாதகங்களை செவ்வாய் தோஷம் உடைய ஜாதகங்களுடன் மட்டுமே பொருத்திப் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷம் இருந்து தோஷ சாம்யம் பெற்ற ஜாதகங்களை அத்தகைய சாம்யம் பெற்ற ஜாதகங்களுக்கு மட்டுமே பொருத்திப் பார்க்க வேண்டும். செவ்வாய் தோஷம் இல்லாத சுத்த ஜாதகங்களை சுத்த ஜாதகங்களுக்கு மட்டுமே பொருத்த வேண்டும். இத்தகைய ஜோதிட விதிகளை அறிந்தும் காசு வாங்காத ஜோதிடர்களை விரல் விட்டு எண்ணிடலாம். எனவே தங்கள் குழந்தைகளின் எதிர்கால வாழ்வை நல்ல முறையில் நிர்ணயம் செய்ய விரும்பும் அடியார்கள் அனைவரும் மேற்குறித்த நாளில் முக்கோண வடிவ பால்கோவா போன்ற பால் இனிப்புகளை தானம் அளித்தல் நலம். முக்கோண வடிவ பால் இனிப்புகளை தானம் அளிக்கும்போது ஒரு பால்கோவாவின் மேல் மற்றோர் பால்கோவாவை மறுதலையாக, திருப்பி வைத்து தானம் அளிப்பதால் இது அம்ருத சரவணபவ சக்கரமாக அமைந்து தம்பதிகள் இடையே விளங்கும் எத்தகைய உடல்பேதங்களையும், மன பேதங்களையும் களையும் வல்லமையைப் பெறுகிறது. இத்தகைய பால்கோவாக்கள் இடையே அமையும் இலஞ்சிபவ என்ற தெய்வீக வெப்ப சக்திகள் எத்தகைய பகைமை சக்திகளையும் களையக் கூடிய கௌமார சக்திகளுடன் துலங்கும். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இதுவரையில் தாங்கள் திருமணமாகி இருந்தாலும், இல்லாவிட்டாலும் பால் இனிப்புகளை ஒவ்வொரு செவ்வாய் அன்றும் தானமாக அளித்து வருதலால் நோய் நிவர்த்தி சக்திகளை, குடும்ப ஒற்றுமையை, மன தைர்யத்தைப் பெறுவார்கள். தொடர்ந்து நிறைவேற்றும் இத்தகைய தானம் இறைவன் திருவடிகளிலேயே கொண்டு சேர்க்கும் என்பதே செவ்வாய் பகவானின் பூரண அனுகிரகம் பெற்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகளின் வரலாறு சுட்டிக் காட்டும் உண்மையாகும்.

இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்படலாம். மேற்கண்ட படத்தில் சிவபெருமான் செவ்விந்திய தலைவனுக்கு ஆனந்தகனி மூலிகையை தன் இடது கையால் அளிக்கிறார் அல்லவா ? இதுபோல் அடியார்களும் மேற்கூறிய பால்கோவா தானத்தை இடது கையால் அளிக்கலாமா, அதனால் வியாதி தேய்ந்து நன்மை ஏற்படுமா என்று கேட்கலாம். இறைவன் அல்லது இறைவனின் அடியார்களைத் தவிர மற்ற எவருமே நடைமுறை வழக்கத்தை மீறலாகாது என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணமாக, கனிந்தகனி காஞ்சி பரமாச்சாரியர் சுவாமிகள் தன் இடது கையால் ஆசி அளிப்பார். இது சுவாமிகள் அம்பாள் சொரூபமாக ஆசி அளிப்பதாக, சக்தி அனுகிரகத்தை வழங்குவதாக சித்தர்களால் உறுதி செய்யப்படுகிறது. சாதாரண மக்கள் இந்த அணுகுமுறையை மேற்கொள்வது சிறப்பாகாது. ஒருமுறை ஒரு அடியார் நம் சற்குருவின் இல்லத்திற்கு சென்றிருந்தார். அன்றிரவை அங்கேயே கழித்தார். அந்த அடியார் படுத்துக் கொள்வதற்காக தரையில் ஒரு பாயை விரித்தார் நம் சற்குரு. அந்தப் பாயின் ஒரு நுனி சுருண்டிருந்ததால் அதை நேர் செய்ய தன் இடது காலை உபயோகித்தார். ஜடப் பொருளையும் இறைவனாக மதிக்கும் நம் சற்குருவின் இந்த “ஒவ்வாத” செயல் அந்த அடியாரின் மனதிற்கு ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் காலம் கனிவதற்காகக் காத்திருந்தார். அந்த இனிய காலமும் கனிந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகே அந்த அடியாரிடம் இருந்த நீண்ட கால உடல் குறைபாடு ஒன்றைக் களைவதற்காக சற்குரு தன்னுடைய இடது கால் கட்டை விரல் சக்திகளை பிரயோகம் செய்தார் என்ற இரகசியம் தெரிய வந்தது.

பொதுவாக, மனிதர்களின் வலது பகுதி உஷ்ண சக்தியையும், இடப் பகுதி குளிர் சக்தியையும் நீர் சக்தியையும் குறிக்கும். பல மகரிஷிகளும் தீர்த்தம் நிறைந்த கமண்டலங்களை தங்கள் இடது கையில் ஏந்தி அருள்புரிவதன் மகத்துவம் இப்போது புரிகின்றது அல்லவா ? அந்த அடியாரின் நீர் சம்பந்தப்பட்ட குறையை நிவர்த்தி செய்வதான குருவருளைத் திரட்டித் தரும் மகத்தான சேவையாக அமைந்ததே சற்குருவின் இடது கட்டை விரல் கணு அசைவு. சர்க்கரை வியாதி என்னும் நீரிழிவு நோய், மேகநோய்கள், மாதவிடாய் பிரச்னைகள், சிறுநீரகக் கோளாறுகள் போன்ற நீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால் வருந்துவோர் திருத்தலங்களின் மேற்புரம் தீர்த்தக் குளங்கள் அமைந்த லால்குடி, தஞ்சை மாவட்டம் திருஆலம்பொழில் போன்ற திருத்தலங்களில் மேற்கூறிய பால் தானங்களை நிறைவேற்றுவதால் துரித பலன்களைப் பெறலாம். குரங்கிலிருந்து தோன்றியவன் மனிதன் என்பது சிலர் கருத்து. இது உண்மையல்ல என்றாலும் குரங்குகளின் சில குணாதிசயங்கள் சாதாரண மனிதர்களையும் விஞ்சும் அளவிற்கு சிறப்புடன் திகழ்கின்றன என்பது இங்கு நீங்கள் காணும் வீடியோ படம் சுட்டிக் காட்டுவதாகும். மனிதர்கள் எத்தனையோ பேர் உண்ணும் முன் தனக்கு உணவு அளித்த இறைவனை நினைவு கூறாது இருக்க இங்குள்ள குரங்கோ தங்கள் வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்களுக்கு நன்றி கூறும் முகமாக மூன்று முறை தரையில் பால் பாயசத்தை அர்ப்பணிக்கும் காட்சியை கண்டு இரசிக்கலாம். தான் உண்ட பாயசத்தை மற்றவர்களுக்கு இரவலாக அளிப்பதுபோல் இந்தக் குரங்கின் செய்கைத் தோன்றினாலும் மிருகங்களின், பறவைகளின் செய்கைகளைக் கவனித்தால் அவர்களின் இடையே உள்ள இந்த “தியாக” உணர்வு நம்மைப் பிரமிக்க வைக்கும். நீங்கள் பிரசாதமாக வைக்கும் எந்த உணவையும் காக்கை, கிளி, அணில், நாய், பூனை என்ற எதுவுமே முழுமையாக உண்டு விடுவது கிடையாது. தங்களுக்குப் பின் அந்த உணவை ஏற்கும் மற்ற பிராணிகளுக்கும் உதவுவதற்காகவே அந்த உணவின் சில பகுதிகளை உண்ணாமல் விட்டு விடுகின்றன என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய மிருக தியாகமாகும். இத்தகைய மிருக தியானத்தை புரிந்து கொண்டாலே எந்த தொற்று நோயும் நம்மை அண்டாது என்பதே சித்தர்களின் வழிகாட்டுதல்.

பரநாரி முறுக்கு

பரநாரி முறுக்கு என்பது கிட்டத்தட்ட 300 ஆண்டுகளுக்கு முன் பிரபலமாக இருந்த ஒரு முறுக்கு வகை. தற்போது ஏதோ சில இடங்களில் இதை சிலர் நினைவு கூறலாம். வட மாநிலங்களில் பர்நாரி என்று இது அழைக்கப்படுகிறது. திருமணமான பெண்களுக்கு பசு, கன்று, இரட்டை மாட்டு வண்டி, பித்தளை வெள்ளி சாமான்கள், குத்து விளக்கு போன்ற பல பொருட்களை ஸ்ரீதனமாக அளிக்கும்போது இந்த பரநாரி முறுக்கு என்பது அதில் கட்டாயம் இடம் பெற்றிருக்கும். மற்ற பலகாரங்களை யார் வேண்டுமானாலும் தயாரிக்கலாம் என்றாலும் இந்த பரநாரி முறுக்கை மணப் பெண் மட்டும்தான் தயாரிப்பாள். சாந்தி முகூர்த்தத்தின்போது மணமகனுக்கு அளிக்கப்படும் மனைவியின் அன்புக் காணிக்கை இதுவாகும். பர என்றால் ஆண் என்ற சிவ சக்தியைக் குறிக்கும், நாரி என்றால் பெண் என்ற சக்தி தத்துவத்தைக் குறிக்கும்.

விதான ராசி மண்டலம்
ஊட்டத்தூர்

இவ்வாறு அர்த்தநாரீஸ்வர தெய்வீக சக்தியுடன் துலங்கும் இந்த அன்புப் பிரசாதத்தைத் தவிர வேறு எதையும் மணப் பெண் தன் மணாளனுக்கு அளிக்க முடியுமா என்ன ? முற்காலத்தில் மாங்கல்ய தாரணத்திற்கு மட்டுமல்லாமல் சாந்தி முகூர்த்தத்திற்கும் தனியான முகூர்த்த நேரத்தைக் குறித்துத் தந்தார்கள். பொதுவாக, இரவில் இரண்டாம் யாமத்தில், அதாவது கிட்டத்தட்ட இரவு 9 மணி முதல் 12 மணி வரை தோராயமாக அமையும் இந்த முகூர்த்த நேரத்தில் தம்பதிகள் சங்கமிப்பார்கள். சாந்தி முகூர்த்தம் மட்டும் அல்லாமல் அதற்குப் பின் தங்கள் குடும்ப வாழ்வில் இத்தகைய நேரம் காலம் அனுசரிக்கப்படாததாலும் பலவிதமான உடல், மன, உள்ள நோய்கள் தற்போது சமுதாயத்தை வாட்டுகின்றன என்பது உண்மை. உறவினரிடையே, நண்பர்களிடையே இத்தகைய, “உன்னுடைய ஆசை எல்லாம் தீர்ந்ததா ?” என்ற பொருள் தொனிக்கும்படியான ஒரு உஷ்ணமான ஒரு கேள்விப் பரிமாற்றத்தை நீங்கள் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கலாம். இந்த ஒரு கேள்வியின் உண்மையான பொருளை உணர்ந்து நிறைவேற்றினாலே சமுதாயத்தில் எந்த நோயும் அண்டாது, ஒற்றுமையும் மறையாது. தம்பதிகள், உறவினர்கள், நண்பர்கள், முதலாளி தொழிலாளி இடையே ஏற்படும் நிறைவேறாத ஆசைகளே நோய்களுக்குக் காரணமாக அமைவதால் பரநாரி முறுக்கு தானம் இத்தகைய ஆசைகளை ஓரளவிற்கு இறையருளால் தீர்த்து சமுதாயத்தில் ஒற்றுமையை ஏற்படுத்தும். ஒன்றுபட்ட வாழ்வில் நோய்க்கு இடமெங்கே ? கிழமை, திதி, நட்சத்திரம் போன்ற கால அம்சங்களைக் குறிக்கும் பஞ்சாங்க தேவதைகளைப் பற்றி நீங்கள் ஓரளவிற்கு அறிவீர்கள். இவர்கள் போன்றே யோகினி தேவதைகள் என்ற தேவதைகளும் உண்டு. இடத்தையும் காலத்தையும் மக்கள் நல்வாழ்விற்கு இணைத்து அருள்வது இவர்கள் பணி. பொதுவாக, பிரயாணம் மேற்கொள்ளும்போது யோகினி நிற்கும் திசையை நோக்கி நாம் செல்லலாகாது என்பது ஜோதிட விதி. இந்த விதியைப் பலரும் மதிப்பதில்லை. அவ்வாறு யோகினி பற்றி சிந்திப்போரும் அப்படி பிரயாணம் செய்யக் கூடாத திசையில் பிரயாணம் மேற்கொள்ள வேண்டி வந்தால் குறிப்பிட்ட பரிகார பதார்த்தங்களை உண்டு பிரயாணங்களை மேற்கொள்கிறார்கள். “யோகினி நிற்கும் திசையில் பிரயாணம் செய்யக் கூடாது என்ற விதியை எந்த பரிகாரத்தாலும் நீக்க முடியாது, அந்த திசையில் நாம் பயணம் செய்யாமல் இருப்பதே உகந்தது,” என்பதே இவ்விஷயத்தில் நம் சற்குரு அளிக்கும் வழிகாட்டுதல்.

ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர்
திருநறையூர்சித்தீச்சரம்

இது ஒரு புறம் இருக்க இவ்வாறு விதானத்தில் அமைந்த நவகிரக கோள்களை வணங்கி பரநாரி முறுக்கை தானமளித்தலால் பலவிதமான நோய் நொடிகளிலிருந்து நாம் நிவாரணம் பெறுவோம் என்பதே சற்குரு அளிக்கும் இனிப்பான செய்தி. ஊட்டத்தூர், திருஅதிகை, திருகோகர்ணம் போன்ற பல திருத்தலங்களிலும் மேல்விதானத்தில் நவகிரக மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். திருத்தலங்களில் பூமியில் அதாவது தரையில் உள்ள நவகிரக மூர்த்திகள் நிறைவேற்றும் பணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டதே விதானங்களில் அமைந்த நவகிரகங்களின் பணியாகும். ஆகாய திசையில் யோகினிகள் நிற்கும் நாள், தேய்பிறை அஷ்டமி, செவ்வாய் கிழமை என்ற அமைப்புகள் கூடி வரும் நாட்களில் இத்தகைய விதான நவகிரகங்களை வணங்கி அதாவது தலைக்கு மேல் கைகளைத் தூக்கி வணங்கி, தன்னைத் தானே குறைந்தது ஒன்பது முறை வலப் புறம், ஒன்பது முறை இடப் புறம் வலம் வந்து வணங்கி வழிபட்டு பரநாரி முறுக்கு தானம் நிறைவேற்றுதலால் எத்தகைய கொடுமையான தொற்று நோயிலிருந்தும் விடுதலை பெறலாம். மேற்கண்ட கால அமைப்பில் கிழமை அல்லது திதி மட்டுமாவது ஆகாய யோகினி திசையுடன் இணைந்திருத்தல் நலம். இவ்வாறு செவ்வாய்க் கிழமையுடன் ஆகாய யோகினிகள் இணையும் நாளாக வரும் 27.7.2021 அமைவதால் இந்த நாளில் ஸ்ரீஹேரம்ப கணபதியை ஆவாஹனம் செய்து சங்கடஹர சதுர்த்தி ஹோமத்தை நிறைவேற்றி அதில் ஒன்பது வலஞ்சுருட்டி, ஒன்பது இடஞ்சுருட்டி மூலிகைகளுடன் பரநாரி முறுக்கு ஒன்பதையும் ஆஹூதியாக இட்டு, இத்தகைய முறுக்குகளை மேற்கூறிய தலங்களில் தானமாக அளித்தலால் கிட்டும் பலன்களை நீங்களே உணர்ந்து கொள்ளலாம். ஹோமம் அல்லது முறுக்கு தானம் இவற்றில் ஏதாவது ஒன்று இத்தகைய நவகிரக விதானக் கோயில்களில் நிகழ்வதும் ஏற்புடையதே. இத்தகைய தான தர்மங்களினால் நேரம் காலம் பார்க்காமல் விமானப் பயணங்களை மேற்கொள்வோர், வானியல், செயற்கைக் கோள் துறைகளில் பணிபுரிவோர், தொலைதொடர்பு துறை பணியாளர்கள் நற்பலன் பெறுவார்கள். இண்டர்நெட் என்பது தற்போது தவிர்க்க முடியாத ஒரு சாதனமாக ஆகி விட்டதால் மனதைப் பாழ்படுத்தும் காட்சிகளால் தங்கள் குழந்தைகளின் மனமும் உடலும் பாதிக்கப்படக் கூடாது என்று விரும்பும் பெற்றோர்கள் அவசியம் மேற்கண்ட தான தர்மங்களை நிறைவேற்றி தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஸ்ரீசீதாதேவி ஜாதகம்

பரநாரி முறுக்கின் மற்றோர் சிறப்பம்சம் என்னவென்றால் இந்த முறுக்கைப் பிழியும் பெண்களின் கற்பு நிலை குறித்து அவர்கள் பிழியும் முறுக்கே சாட்சி சொல்லும் என்பதே. பெண்கள் ஜாதகத்தில் நான்காம் இடம் கற்பு நிலையைக் குறிப்பதால் நான்கு திசைகளைக் குறிக்கும் பரநாரி முறுக்கு பெண்களின் கற்பிற்கு சாட்சி பூதமாய் நிற்கும் என்பது வராகமிகிரர் கூறும் தத்துவமாகும். பூமா தேவி என்பவள் தாய்மையின் பொறுமை இலக்கணம், பூமியின் சூட்சும வடிவம். பூமா தேவியின் புதல்வியான சீதையே இந்த பரநாரி தத்துவத்திற்கும் நாயகியாக விளங்கினாள் என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் சிறப்பாகும். அன்னையின் கற்புக் கனலை விமர்சிக்கும் தகுதி மானிடர்களாகிய நமக்கு எவ்விதத்திலும் கிடையாது என்றாலும் அன்னைக்கு ஏற்பட்ட களங்கம் மற்ற பூலோக பெண்களுக்கும் ஏற்படக் கூடுமாதலால் அன்னையின் ஜாதக அம்சங்களை இங்கு தரிசனம் செய்து இவை சுட்டும் நிவாரண சக்திகளை பூலோகப் பெண்கள் மேற்கண்ட தானத்தின் மூலம் பெற்று உரிய பாதுகாப்பைப் பெறும்படிக் கேட்டுக் கொள்கிறோம். அன்னை சீதையின் கற்பைக் குறிக்கும் நான்காம் இடம் ஒன்பது கிரகங்கள், லக்ன தேவதை எனப் பத்து விதமான பாதுகாப்பைப் பெற்றிருந்தது என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் உண்மையாகும். இத்தகைய ஒரு பாதுகாப்பை சாதாரண பெண்களும் பெற அவர்களுக்கு உறுதுணையாக அமைவதே பரநாரி முறுக்கு தானமாகும். மேலும், பரநாரி முறுக்கு என்பது வாஸ்து பகவான் சயனம் கொள்ளும் திசைகளைக் குறிப்பதாக அமைவதாலும் வாஸ்து பகவான் துயிலிலிருந்து மீளும் வாஸ்து நாட்களில் இத்தகைய பரநாரி முறுக்குகளை தானம் அளிப்பதால் இது பலவிதமான வாஸ்து தோஷங்களுக்கு குறிப்பாக மேற்கூரை சரியாக, பாதுகாப்பாக அமையாத இல்லங்களில் நிலவும் தோஷங்களுக்கு பரிகாரமாக அமையும். திருத்தலங்களில் இத்தகைய பரநாரி முறுக்குகளை காக்கை, குருவி, புறா போன்ற ஜீவன்களுக்குத் தானமாய் அளிக்கையில் அந்தப் பறவைகள் பரநாரி தத்துவ சக்திகளை வானத்தில், ஆகாய மார்கத்தில் விரவுவதாலும், மற்ற லோகங்களுக்கு செல்லக் கூடிய அண்டங் காக்கைகள், புறாக்கள் போன்ற பித்ரு மண்டல தூதுவர்களால் மற்ற லோகங்களிலும் இத்தகைய பரநாரி சக்திகள் பெருகி நம் மூதாதையர் அருளால் நோய் நொடிகளற்ற ஓர் இனிய சமுதாயம் உருவாகும் என்பதே இந்த பரநாரி தத்துவத்தின் பின்னணியில் அமைந்த நோய் நிவாரணத் தத்துவமாகும்.

பரநாரி முறுக்கை கை முறுக்காகவோ, குழாய் கொண்டோ பிழியும் வடிவத்தை இங்குள்ள வீடியோ படத்தில் அளித்துள்ளோம். ஒரு சுற்று முறுக்கின் மேல் மற்றோர் சுற்றை அமைத்து பலப்படுத்துவதும் நன்றே. சீதா தேவி மிதிலையில் இத்தகைய முறுக்குகளைப் பிழிந்து ராமருக்கு அளிக்க அதனால் பெரிதும் மகிழ்ந்த ராமர் எதிர்காலத்தில் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக அமையும்படியான புத்திரர்களைப் பெறுவாள் சீதை என்று வரமளித்தாராம். குசா என்பது லவனின் பிரதிபலிப்பாக அமைந்த தெய்வீக சீதாராம சக்திகள் தாமே. எனவே பரநாரி முறுக்கில் இரண்டு வலஞ்சுழி சுற்றுகளும் இரண்டு இடஞ்சுழி சக்திகளும் பிரகாசிப்பதில் வியப்பென்ன ? மேலும் வல்லினம், மெல்லினம், இடையினம் என்ற மூன்று சக்திகளாலும் உருவானது சீதாராமா என்ற தெய்வீக அட்சர சக்திகள் மட்டுமல்ல பரநாரி என்ற தமிழ்ப் பதமும்தான்.

ஸ்ரீசீதாராமர் இந்தலூர்

பரநாரி என்றால் அடுத்தவன் மனைவி, முறுக்கு என்றால் திருப்பிக் கொள்ளுதல், பரநாரி முறுக்கு என்றால் அடுத்தவன் மனைவியை, அடுத்தவன் உடமையைக் கண்டு இரசிக்காமல் முகத்தை திருப்பிக் கொள்ளுதல் என்றும் பொருள் உண்டு. பலரிடம் உள்ள தவறான கண்ணோட்டத்தைக் களைய வல்லதும் பரநாரி முறுக்கு தானத்தின் ஒரு பலனாகும். தேய்பிறையோ வளர்பிறையோ ஒரே பட்சத்தில் வரும் சதுர்த்தி, அஷ்டமி திதிகளில் இத்தகைய பரநாரி முறுக்குகளை எந்த திருத்தலத்திலும் தானமாக அளித்து வருதலால் சிறிது சிறிதாக தவறான இந்த பழக்கம் மறைந்து இறைவன்பால் பக்தி பெருகும். இந்த பக்தி மூலம் கிடைக்கும் ஆற்றலை கணக்கிட்டால் நாம் பிரமிப்படைவோம். அகில உலகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த நெப்போலியன் தன் மனைவி மீது நீங்காத காதல் கொண்டவன். இந்த ஒரே குணாதிசயமே அவனுக்கு கற்பனை செய்து பார்க்க முடியாத நினைவாற்றலையும் உடல்பலத்தையும் தந்தது எனலாம். தன் படையில் உள்ள ஒரு லட்சம் வீரர்களையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவிற்கு அவர்கள் பெயரை அறிந்து வைத்திருந்ததுடன் அவர்கள் குடும்பத்தில் யார் யார் இருக்கிறார்கள் அவர்களைப் பற்றியும் நலம் விசாரிக்கும் அளவிற்கு ஒரு சக்கரவர்த்தி விளங்கினான் என்றால் அதன் மூல காரணம் இந்த ஏக பத்தினி விரத தத்துவமே. மனிதர்களின் ஜாதகக் கட்டத்தில் நான்காமிடம் இத்தகைய கற்பு நிலையைக் குறிக்கும் என்றாலும் அதோடு மட்டுமல்லாமல் கல்வி, வித்தை போன்ற நற்குணங்களுக்கும் இருப்பிடமாக இருப்பது இந்த நாலாமிடமாக விளங்குவதால் அந்த நான்காமிடத்தை சிறப்புப் பெற வைப்பதும் இத்தகைய பரநாரி தானமாகும். சீதை மேல் மையல் கொண்ட இராவணன் அவளை எப்படியாவது அடைந்து விட வேண்டும் என்ற தவறான நோக்கத்தோடு மயக்கும் பல கந்தர்வ உருவங்களை எடுத்து சீதையை அணுகியபோதும் அவன் தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. நெருங்கிய நண்பர்களை இவ்விஷயத்தில் அணுகியபோது, “நீங்கள் ஏன் ராமனின் உருவத்தை எடுத்துக் கொண்டு சீதையிடம் செல்லக் கூடாது ?” என்று கேட்டபோது இராவணன் பெரிதாக சிரித்து, “உனக்கு தோன்றும் இந்த சாதாரண எண்ணம் எனக்குத் தோன்றாதா ? நான் முதலில் ராமன் உருவத்தை எடுத்துக் கொண்டுதான் சீதையை நெருங்க நினைத்தேன். ஆனால், ராமபிரானின் உருவத்தை எடுத்த மறுகணமே என்னுள் முளைத்த அடுத்தவன் மனைவியை நோக்க வேண்டும் என்ற எண்ணமே அடியோடு மறைந்து விட்டது ...”, என்றானாம். அந்த அளவிற்கு சக்தி பெற்றது சக்கரவர்த்தி திருமகனின் திருவுருவம், ராம தாரக மந்திரம், பரநாரி முறுக்கு தானம் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதல்.

சந்திரசேகரபுரம்

கடுமையான தொற்றுநோய் ஒன்று சமுதாயத்தை எதிர்காலத்தில் தாக்கும் என்பதை உணர்ந்த நம் சற்குரு, மாதா அமிர்தானந்தா போன்ற உத்தமர்கள் இவ்வுலகைக் காக்க பலவிதமான தான தர்ம முறைகளை எடுத்துரைத்தனர். சுமார் பத்து வருடங்களுக்கு முன்னரே வெண்ணிய பூவை தியானித்து அந்த வெண்ணிற பூக்களால் நாம், நம் குடும்பம், சமுதாயம், மரம் செடிகள், விலங்குகள் என அனைத்துமே நிறைவதாக தியானத்து வரும்படிக் கூறினார்கள் அன்னை. இந்த வெண்ணிற மலர் தியானமே எத்தகைய தொற்றுநோயையும் நீக்க வல்ல அருமருந்தாகும் என்பது அம்மாவின் அருளுரை. நம் சற்குருவோ வெண்ணிறத்தில் அமைந்த பச்சரிசி, உளுந்து இவை அடங்கிய எட்டு திசைகள், இரு இயக்கங்களுடன் கூடிய பரநாரி முறுக்கு தானத்தை வலியுறுத்துகிறார்கள். பரநாரி முறுக்கு தானத்தை எந்த திருத்தலத்திலும் நிறைவேற்றி பயன்பெறலாம் என்றாலும் மாயவரம் இந்தலூர், வாலிகண்டபுரம் போன்று சீதாராமர் திருவுருவங்களுடன் விளங்கும் திருத்தலங்களில் தானமளித்தல் சிறப்பாகும். கௌரவர்கள் அரண்மனையில் துரோபதையை துகிலுரிந்தபோது பெரும்பாலானோர் தங்கள் பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர், ஒரு சிலர் கண்களை மூடிக் கொண்டனர் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிதாமகர் பீஷ்மரோ தன் கண்களை சற்றும் மூடாது அந்தக் காட்சியை கண்டவாறே இருந்தார் என்பதே சித்தர்கள் வர்ணிக்கும் காட்சி ஆகும். சித்தர்கள் போன்ற உத்தமர்களே பீஷ்மரின் இந்த “அடாத” செயலுக்கான தெய்வீக காரணத்தை விளக்க இயலும். துரோபதையின் துகில் களைந்த காட்சியில் நிகழ்ந்த பீஷ்மரின் பங்கை மட்டுமே விவரிக்க ஒரு யுகம் ஆகும் என்றால் மகாபாரதத்தின் தெய்வீக தாத்பர்யத்தை உணர்ந்து கொள்ள ஒரு மனித வாழ்க்கை போதுமா ? இருந்தாலும் ஓரளவே இந்த தெய்வீக விளக்கங்களை அளிக்கிறோம். சாட்சாத் எம்பெருமானைத் தவிர வேறு எவருக்குமே miracles என்னும் அற்புதச் செயல்களை செய்யும் தகுதியோ, உரிமையோ கிடையாது என்பார் நம் சற்குரு. துரோபதை எதிர்காலத்தில் இவ்வாறு துரியோதனனால் அவமானம் அடைய நேரிடும் என்பதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா இதைத் தடுத்து துரோபதைக்கு வேண்டுமளவு வஸ்திரங்களை அளிப்பதற்காக திருஅண்ணாமலையை வலம் வந்தார். எப்படி ? ஒரு எட்டு முழ வேட்டியை தரையில் விரித்து அதன் மேல் நடந்து வந்து அந்த வேட்டி முடியும் தருணத்தில் அதைத் தொடர்ந்து மற்றோர் வேட்டியை விரித்து இவ்வாறு இரண்டு வேட்டிகளை அடுத்து அடுத்து கிரிவலப் பாதை முழுவதும் விரித்து திருஅண்ணாமலை கிரிவலம் வந்து, கிரிவலம் நிறைவில் அந்த இரு வேட்டிகளையும் துவைத்து, தூய்மை செய்து திருஅண்ணாமலையில் தானம் அளித்தலால் எத்தகைய வறுமை நிலையும் மாறும் என்பதே திருஅண்ணாமலை கிரிவல மகிமையாகும். இதை உணர்ந்த கிருஷ்ண பரமாத்மா அவ்வாறே கிரிவலம் வந்து அந்த கிரிவலப் பலனையே துரோபதைக்கு மலையளவு ஆடை தானமாக திருஅண்ணாமலையார் பிரசாதமாக அளித்தார் என்பதே சித்தர்கள் அறிவிக்கும் திருஅண்ணாமலை கிரிவலச் சுவை. இவ்வாறு பல வண்ணங்களில் அமைந்த ஆடைகளை, சீலைகள் அனைத்தையும் ஒன்றாக்கினால் உருவாவது வெண்ணிறம்தானே, இதைக் குறிப்பதே அம்மாவின் வெண்ணிற மலர் தியானம், நம் சற்குருவின் வெண்ணிற முறுக்கு தானம். மனம் எத்தகைய மாசு பெற்றாலும் அதைக் களைய வல்லதே வெண்ணிற சந்திரக் கதிர்களாகும்.

லிங்க வடிவ நவகிரகங்கள்
தஞ்சை பெரிய கோயில்

நைஷ்டிக பிரம்மாச்சாரி கிருஷ்ண பகவான் மட்டுமல்ல, பீஷ்மாச்சாரியும் நைஷ்டிக பிரம்மச்சாரிதானே. கிருஷ்ண பரமாத்மா அளிக்கும் திருஅண்ணாமலையார் பிரசாதத்தை பெறும் தகுதி மற்றோர் பிரம்மச்சாரிக்கு மட்டுமே சம்பவிப்பது அல்லவா ? அதனால் கிருஷ்ண பரமாத்மா அளித்த அருணகிரி ஆடை பிரசாதத்தை பீஷ்மாச்சாரியார் பெற்று, துச்சாதனன் அந்த ஆடைகளைத் தொடும் முன்னர் அதை உலகத்தவர் அனைவருக்கும் தன் பார்வையால் பகிர்ந்தளித்த உத்தமரே பீஷ்மாச்சாரியார். இந்த உத்தம காரியத்திற்காக பீஷ்மாச்சாரியார் மூன்றாம் கண் சக்திகளைப் பெற்ற தலமே சந்திரசேகரபுரம் என்னும் திருத்தலமாகும். கும்பகோணத்திலிருந்து சுமார் 12 கிமீ தொலையில் பட்டீஸ்வரம் அருகில் உள்ளதே சந்திரசேகரபுரமாகும். கோலத்தின் சக்தி அதன் அடியில் மறைந்திருக்கும், நீரின் சக்தி அதன் மேல்தளத்தில் படியும், இறைவனின் சக்தி பின்புறத்தில் பதியும் என்பதே சக்திகள் பரிணாமம் குறித்து நாம் அறிய வேண்டிய தத்துவமாகும். இவ்வகையில் இறைவனின் பின் புறத்தில் படியும் சக்திகளைப் பற்றி அடியார்கள் அறிந்து கொள்ள துணை புரிவதே சந்திரசேகரபுரம் திருத்தலமாகும். இந்த சக்தி மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்வதால் யாது பலன் என்று கேட்கத் தோன்றலாம். உதாரணமாக, நீங்கள் இரண்டு மணி நேரம் செலவழித்து, பல பல வண்ணங்களை உபயோகித்து வாசலில் ஒரு கோலமிட்டு வீட்டிற்குள்ளே சென்ற மறுநொடியே அந்தக் கோலத்தை பக்கத்து விட்டுக் குழந்தை களைத்து விடலாம், அந்த கோலத்தின் மேல் ஒரு காரோ சைக்கிளோ ஊர்ந்து செல்லலாம். உங்கள் மனம் என்ன பாடுபடும் ? ஆனால், அந்த கோலத்தின் மேற்புறத்தில் நிகழும் எந்த மாற்றங்களும் அந்தக் கோலத்தின் சக்தியை மாற்றுவதில்லை, அந்த கோலத்தில் ஆவாஹனம் ஆகும் தேவதைகளின் சக்தி சிறிதளவும் மாறுபடுவதில்லை என்று தெரிந்தால், உங்களுக்கு அந்தக் கோலத்தின் மூலம் கிடைக்கக் கூடிய அனுகிரகத்தில் எந்தக் குறைவும் ஏற்படாது என்று தெளிவாகத் தெரிந்தால்தானே உங்கள் மனம் சமாதானம் கொள்ளும்.

கிருத்திகை ரோகிணி சமேத
சந்திரபகவான் சந்திரசேகரபுரம்

அடுத்து, உங்கள் நண்பரின் வீட்டிற்கு நீங்கள் செல்லும்போது அவர் உங்களை நண்பர் என்று நினைக்காது உங்களை ஒழிக்க திட்டம் தீட்டிக் கொண்டு இருக்கலாம். அவருடைய வஞ்சக எண்ணங்கள் அவர் உங்களுக்கு குடிக்க அளிக்கும் நீரில் மேற்புறத்தில் படிவதால் பெரியோர்கள் மேற்கொள்ளும் வழக்கமாய் நீரை சற்றே கீழே ஊற்றி விட்டு குடிப்பதை நீங்களும் கடைபிடித்து அவ்வாறு நீர் அருந்தினால் உங்கள் நண்பரின் வஞ்சகமான எண்ணங்கள் உங்களைப் பாதிக்காது. இதே போல பல திருத்தலங்களிலும் பக்தர்கள் இறை விக்ரஹங்களையோ, சன்னதிகளையோ பின் புறத்தில் தொட்டு வணங்குவது உண்டு. இறைவனின் சக்தி இவ்வாறு சன்னதிகள், விக்ரஹங்களின் பின்புறத்தில் படிவதால் அந்த மூர்த்திகளின் முழுமையான அனுகிரகத்தை நாம் மேற்கொள்ள இந்த முறை நமக்கு கைகொடுக்கின்றது. இம்முறையில் இறைமூர்த்திகளின் பின்புற சக்திகளை பக்தர்கள் பெற வழிவகுப்பதே சந்திரசேகரபுர திருத்தலமாகும். பொதுவாக, திருக்கோயிலின் முன்பக்க வாசலை நோக்கியவாறு அருள்புரியும் மூலமூர்த்தியான ஈஸ்வரர் சந்திரசேகரபுரத்தில் பின்பக்கமாகத் திரும்பி அருள்புரிகிறார். திருக்கோயிலின் முன் வாசல் மேற்கு நோக்கி இருக்க இறைவனோ கிழக்கு நோக்கி அருளாட்சி செய்கிறார். சந்திரன் என்பவர் மனதிற்கு அதிபதியாக விளங்குவதால் சந்திர பகவானின் பூரண சக்திகளைப் பெற அருள்புரியும் முதன்மையான தலமே சந்திரசேகரபுரம் திருத்தலமாகும். தஞ்சாவூர் பெரிய கோயிலின் நிருதி மூலை என்னும் தென்மேற்கு மூலையில் அபூர்வமாக நவகிரக மூர்த்திகள் லிங்க வடிவில் அருள்புரிகின்றனர். இந்த லிங்க மூர்த்திகளிலும் அனைத்திலும் உயர்ந்த நெடிய பாணத்துடன் சந்திர பகவான் எழுந்தருளி உள்ளார். பிரதட்சிணம் செய்து அனுகிரகம் பெற முடியாத இந்த அலாதியான அபூர்வமான பிரம்மாண்டமான மூர்த்தியின் அனுகிரகத்தைப் பெற வழிவகுப்பதே சந்திரசேகரபுரமாகும். தஞ்சை பெரிய கோயில் என்பது மனிதனின் வரலாற்றில் சந்திரசேகரபுரத்திற்கு பன்னெடுங்காலத்திற்குப் பின்னரே தோன்றியது என்றாலும் சந்திர சக்திகள் என்பவை இறைவன் தோன்றிய அந்த கால கட்டத்தில் பக்தர்களின் வழிபாட்டிற்காக தோன்றிய சக்திகள்தானே ? எனவே தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தில் நவகிரக மூர்த்திகளை தரிசனம் செய்து அதே நாளில் சந்திரசேகரபுரத்தில் ஸ்ரீகார்த்திகை ரோகிணி சமேதராய் விளங்கும் சந்திர பகவானை வணங்குவதால் சந்திர சக்திகளை பூரணமாய்ப் பெறலாம் என்பதே சித்தர்களின் அமோக வழிகாட்டுதலாகும்.

ஸ்ரீபிரகதீஸ்வர உத்தமி
தஞ்சை பெரிய கோவில்

முன்புறமும் பின்புறமும் ஒரே புறம்தான் என்ற நிலையை பக்தர்கள் அடைவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, இத்தகைய நிலையை அடையவல்லவர்களை, அடைந்தவர்களை எந்த தொற்றுநோயும், காய்ச்சல் நோயும் அண்டாது, அண்ட முடியாது. இதற்கு உதாரணமாகத் திகழ்வதே தஞ்சை பெரிய கோவிலில் ஸ்ரீகருவூர் சித்தர் ஜீவாலயத்தில் பின்புறத்தில் எழுந்தருளியுள்ள உத்தமியின் திருக்கோலமாகும்.

குழந்தையின் பின்புறம் மனிதன் மனதில் எந்தவித சலனத்தையோ சஞ்சலத்தையோ தோற்றுவிப்பதில்லை, ஆனால் ஒரு வளர்ந்த மனிதனின் முன்புறக் காட்சியோ ... ?

இரு தோற்றங்களையும் சமமாகக் காணவல்லவர்களே தஞ்சையில் அருள்புரியும் திருநெல்வேலியைச் சேர்ந்த இந்த தொள்ளைக் காது ஆச்சி சாதித்த சாதனையை நிறைவேற்ற இயலும், ஆம், அப்படி என்ன ஒரு சாதனையை இந்த உத்தமி ஆற்றினாள். ஸ்ரீபிரகதீஸ்வர ஈசனை நிர்மாணிப்பதற்காக 64 ரசமணி உருண்டைகளை உருட்டி வைக்க அந்த ரசமணி மேடையில் ஸ்ரீபிரகதீஸ்வரர் எழுந்தருள வேண்டும் என்பது ஸ்ரீகருவூரார் முதலான சித்தர்கள் வகுத்த நியதி. தளதளவென்று எண்ணெய்க் கொப்பரையில் கொதிக்கும் மூலிகைகளை உருண்டையாக உருட்ட வேண்டும் என்றால் அது அந்த காலகட்டத்தில் திருநெல்வேலியில் உறையும் இந்த தொள்ளைக்காது உத்தமியால் மட்டுமே முடியும் என்று ஸ்ரீகருவூர் சித்தர் அருளவே ராஜராஜ சோழன் இந்த உத்தமியை அழைத்து வந்து ஸ்ரீபிரகதீஸ்வர ஈசனை பிரதிஷ்டை செய்தான் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் பிரதிஷ்டை இரகசியமாகும்.

ஏன் இத்தகைய ஒரு ரசமணி யந்திரத்தில் சுவாமி எழுந்தருள வேண்டும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். அனைத்து இறை இரகசியங்களின் பின்னணியிலும் சித்தர்களின் தியாகம், அனுகிரகம் மறைந்திருக்கும் என்பதை தஞ்சை பெரிய கோயில் மட்டும் உலகத்தவர்க்கு சுட்டிக் காட்டாதா என்ன ? பொதுவாக, ஒரு ஆலயத்தின் ராஜகோபுரம் என்னும் முன்வாசல் கோபுரம்தான் அனைத்துக் கோபுரங்களையும் விட உயரமாக வானளாவி நிற்கும். இதற்கு விதி விலக்காக பிரம்மாண்டமான உருவத்துடன் விண்ணைத் தொட்டு நிற்பதே தஞ்சை பெரிய கோயில் இறைவனின் மூலத்தான கோபுரமாகும். இந்தக் கோபுரத்தின் கலசமாக அமைந்த “அருள் சித்தக் கூடு” என்ற 80 டன் எடையுள்ள கல்லே அனைத்து சித்தர்கள் உறையும் பெட்டகமாகத் திகழ்கின்றது. மகான்களுக்கு மனித உருவம் கிடையாது, நிழல் தரையில் படியாது என்னும்போது மகான்களில் மிக மிக உயர்ந்த நிலையை அடைந்தவர்களே சித்தர்கள் என்னும் பட்டத்தை இறைவனால் அளிக்கப்படுகிறார்கள் என்றால் அத்தகைய உயர்ந்த உத்தமர்கள் ஒன்று கூடித் திகழும் இந்த சித்தக் கூட்டின் நிழல் தரையில் எப்படி விழ முடியும் ? தூசுக்கு 300 கோடி சித்தர்கள் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உறைகின்றார்கள் என்றால் 80 டன் எடையுள்ள இந்த சித்தக் கூட்டில் உறையும் சித்தர்களை கணக்கிட்டுக் கூற முடியுமா ?

ஸ்ரீபிரகதீஸ்வரர் தரிசனத்தில் பக்தர்கள் பெறும் சித்த அனுகிரகத்தை மட்டும் நினைத்துப் பார்த்தாலே மெய் சிலிர்க்கும். இந்த அனுகிரகத்தை தான் ஒருவன் மட்டும் அனுபவித்தால் அது சுயநலமாகும் என்பதால் உலகத்தவர்க்கு பகிர்ந்தளித்தவன்தானே ராஜராஜ சோழன். அம்முறையில் இந்த சித்த அனுகிரகத்தை சமுதாயத்திற்கு பகிர்ந்தளிக்கும் ஒரு முறையே இந்த தொள்ளைக் காது ஆச்சியை வழிபடுவதாகும். 12 கிலோ மஞ்சளை சுமங்கலிகள் ஒன்று கூடி கையால் பொடி செய்து அதில் தாமிரபரணி அல்லது கங்கை தீர்த்தத்துடன் காவிரி தீர்த்தத்தை கலந்து ஆச்சிக்கு அபிஷேகம் இயற்றி ஒன்பது கஜ சிவப்பு நிறப் புடவை சார்த்தி வழிபடுவதால் சமுதாயத்தில் தோன்றக் கூடிய அனைத்து காய்ச்சல் நோய்களுக்கும் இது அருமருந்தாக அமையும் என்பதே சித்தர்களின் வழிகாட்டுதலாகும்.

ஸ்ரீகருவூர் சித்தர்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோயில் ராஜகோபுரத்தின் உச்சியில் திகழும் 80 டன் எடையுள்ள சித்த கூட்டை மேலே அமைப்பதற்கு வெகு தொலைவிற்கு ஒரு சறுக்குப் பாதை கட்டி அதன் மேல் இந்தக் கூட்டை உருட்டி வந்ததாக நாம் வரலாறு வழியாக தெரிந்து கொண்டாலும் உண்மையில் ஸ்ரீகருவூர் சித்தர் தன் கையில் விஞ்ஞை விசுத்தி விருட்சம் என்ற மூலிகையை வைத்துக் கொண்டு அதை பிறர் அறியாமல் அசைத்தே மெதுவாக அந்த சித்தக் கூட்டை கோபுரத்தின் மேல் அமைத்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். விஞ்ஞை விசுத்தி விருட்சம் என்ற மூலிகையை கையில் வைத்துக் கொண்டால் ஆயிரம் டன் எடையுள்ள கல்லையும் வானில் அந்தரத்தில் நிறுத்தலாம் என்றால் இந்த மூலிகையின் மகிமைதான் என்ன ? விஞ்ஞை விசுத்தி விருட்சம் என்ற நாமமே 3, 4, 5 என்ற அட்சரங்களுடன் பொலிகின்றது அல்லவா ? இந்த முக்கோண அளவுகள் தங்க முக்கோணத்தைக் (Golden triangle) குறிப்பதுதானே ? எவ்வளவு எடையுள்ள, எத்தகைய துன்பந்தரும் மனச் சுமையையும் குருவருளால் தாங்க முடியும் என்பதே இந்த அளவுகள் சுட்டிக் காட்டும் உண்மையாகும். சுயநாம ஜபம் என்று தங்கள் நாமத்தை ஜபிப்பதால் தங்கள் மனோ பலத்தை பன் மடங்கு பெருக்கலாம். இத்தகையோர் ஸ்ரீகருவூர் சித்தர் ஜீவாலயத்தில் அமர்ந்து கொண்டு விஞ்ஞை விசுத்தி விருட்சம் என்ற குரு நாம ஜபத்தையே சுய நாம ஜபமாக ஜபிப்பதாலும் பல பிறவிகளில் தாங்கள் சேர்த்துக் கொண்ட மனச் சுமையைக் களையலாம். கரு ஊர் என்ற சொற்களே கருவூர் சித்தராக உருவெடுத்து மக்களைக் காக்க வந்துள்ளது. விஞ்ஞை விசுத்தி விருட்ச மூலிகையை உள்ளங்கையில் வைத்துக் கொண்டால் நாம் கூட எவ்வளவு எடையுள்ள கல்லையும் அந்தரத்தில் நிறுத்தலாமே என்று மக்கள் நினைத்து மனப்பால் குடிக்கலாம். உண்மை அதுவல்ல. எப்படி ஒரு மேஜையை கண்ணால் தூக்கும் ஒரு மனிதன் அந்த மேஜையின் எடையை தன் உடலில் தாங்க வேண்டுமோ அது போலவே விஞ்ஞை விசுத்தி மூலிகையை நாம் கையில் வைத்துக் கொண்டு கல்லைத் தூக்கினாலும் அந்தக் கல்லின் எடையை நாம் தாங்கித்தான் ஆக வேண்டும். இது அனைவருக்கும் சாத்தியமா ?

ஸ்ரீகருவூர் சித்தர் போன்று பூர்ணரேகா என்ற சிரஞ்சீவி ஆயுள்ரேகையை தங்கள் கையில் பெற்றிருப்பவர்களே இத்தகைய கனமுள்ள எந்தப் பொருளின் எடையையும் தங்கள் உடலில் தாங்கலாம். நீங்கள் அறியாத ஒரு இரகசியம். ஸ்ரீகருவூர் சித்தர் மட்டுமே இத்தகைய பூர்ணரேகா என்ற சிரஞ்சீவி ரேகையை தன் கையில் பெற்றிருந்தார் என்பது கிடையாது நம் சற்குருவும் இத்தகைய பூர்ணரேகை அம்சங்களுடன் பூரணித்தவரே. நம் அடியார் ஒருவர் தன் உள்ளங்கையில் ஐந்து செமீ நீளமே உள்ள ஆயுள்ரேகையைப் பெற்றிருந்தும் இன்றுவரை நம்மிடையே உலவி சற்குருவின் மகத்தான காரியங்களை ஆற்றி வருகின்றார் என்றால் இது நம் சற்குருவின் பூர்ண ரேகா அனுகிரகம் என்பதை சொல்லவும் வேண்டுமோ ?

வம்சோதர நந்தி மூர்த்தி

தஞ்சை பெரிய கோயிலில் அருளும் மிகப் பெரிய நந்தி மூர்த்தியாகத் துலங்கும் ஸ்ரீவம்சோதர நந்தி மூர்த்தியைப் பற்றி நம் சற்குரு அருளிய சித்த பொக்கிஷங்களை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். பஞ்சாட்சரத்தை ஓதியே பல பக்தர்களாலும் சாதிக்க முடியாத உயர்ந்த நிலையைப் பெற்றவரே வம்சோதர நந்தி மூர்த்தி. வம்சோதர மூர்த்தி தன் பூத உடலை விட்டு கைலாயம் சென்றபோது அவர் விரும்பியதை அளிக்க எம்பெருமான் திருவுள்ளம் கொண்டு அம்மகானை வினவியபோது, “சுவாமி, இறைவன் உறையும் கோபுரத்தின் நிழல் விழாத திருத்தலத்தில் அடியேன் தொண்டு நிறைவேற்ற தாங்கள் அருள்புரிய வேண்டும்,” என்று பணிவுடன் தெரிவித்துக் கொண்டார். நிழல் என்பது கர்ம வினையின் படிவே என்பதை தெளிவாக உணர்ந்து கொண்ட சித்தர்களே வம்சோதரனின் வேண்டுகோளைப் பற்றி பூரணமாகத் தெரிந்து கொள்ள இயலும் என்றாலும் இவ்வாறு ஒரு நிழல் விழாத கோபுரத்தின் இறை மகாத்மியத்தை சாதாரண மக்களும் அறிந்து கொள்ள வழிவகுத்ததே வம்சோதர மூர்த்தியின் கருணைக் கடாட்சமாகும்.

ஸ்ரீவம்சோதர நந்தி மூர்த்தி
தஞ்சை பெரிய கோவில்

நம் சற்குரு அடியார்களுடன் வம்சோதர நந்தி மூர்த்திக்கு திருப்பணிகள் மூன்று நாட்கள் நிறைவேற்றியபோது ஒவ்வொரு நாள் மாலையும் திருப்பணி நிறைவில் பெருமளவில் மழைப் பொழிவு ஏற்பட்டு இறை மூர்த்திகளின் மகிழ்வைத் தெரிவித்தனர். பொதுவாக, ஒவ்வொரு முறை மழைப் பொழிவு நிகழும்போதும் அதில் விழும் ஆயிரம் மழைத் துளிகளில் ஒரு துளி அமிர்த சக்திகளுடன் துலங்கும் என்பது விதி. ஆனால், திருத்தலங்களிலும் திருஅண்ணாமலை, பர்வதமலை போன்ற கிரிவலப் பாதைகளிலும் விழும் ஒவ்வொரு மழைத் துளியும் அமிர்த சக்திகளுடன் மிளிரும் என்பதே மழைத் துளியில் நிறையும் அமிர்த சக்திகள் பற்றி சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். இவ்வாறு திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் விழும் மழைத் துளிகளை அங்கு உறையும் ரிஷிகள் பன்மடங்காகப் பெருக்கி கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதால் விடாது மழை பொழிந்தாலும் அடாது அண்ணாமலையில் கிரிவலம் வந்து இந்த அபூர்வ அமிர்த சக்திகளைப் பெறுமாறு சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள். மழைத் துளிகளில் பலவித இரகசியங்கள் உண்டு. கோத்த முத்து, குருவி முத்து, ஆதித்ய முத்து, சசி முத்து என்பது போல பிரகதி முத்து என்ற ஒரு வித அபூர்வ அமிர்த சக்திகள் இவ்வாறு 80 டன் எடையுள்ள சித்தக் கூடு பொலியும் இடத்தில் பொழியும். இந்த அபூர்வ அனுகிரகத்தை வம்சோதர நந்தி மூர்த்திக்கு அருளி அவர் பக்தியை மெச்சி கௌரவித்தார் எம்பெருமான் என்றால் அவர்தம் கருணைதான் என்னே என்னே !? பிரகதி என்ற நான்கு எழுத்தின் குசாவாக வம்சோதர நந்தி என்ற எழுத்துக்கள் திகழ்வதால் எட்டின் மடங்காக தஞ்சை பெரிய கோயிலை வலம் வந்து வணங்குவதால் இந்த பிரகதி குசா சக்திகளை மழைப் பொழிவு இல்லாத போதும் பக்தர்கள் பெற ஏதுவாகும் என்பதே வம்சோதர நந்தி மூர்த்தி அருளும் அனுகிரகங்களில் ஒன்றாகும். வம்சோதரம் என்றால் வழி வழியாக இரத்த சம்பந்தம் பெற்ற அடியார்கள், வாரிசுகள் என்ற பொருள் அமைவதால் வாரிசு, பாரம்பரியம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்னைகளும், நோய் உட்பட பல பிரச்னைகளும் சீர்பெறும் என்பதே இந்த அட்டாட்சர வலத்தின் மகிமையாகும். வ ம் சோ த ர ந ந் தி என்று ஒவ்வொரு வலத்திற்கும் ஒரு அட்சரத்தை அளித்து வலம் வந்து வணங்குவது சிறப்பாகும். இத்தகைய அட்சர சக்திகளை இன்றும் தன்னுடைய வலங்களுக்கு அளித்து அடியார்களுக்கு அருள்பவரே ராஜராஜ சோழன் ஆவார் என்று அவர்தம் வழிபாட்டை உலகத்திற்கு உணர்த்துபவரே நம் சற்குரு ஆவார்.

சந்திரசேகரபுரம் சிவாலயம்

சில ஆண்டுகள் முன் வரை நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் சசி முத்து என்ற ஒருவகை முத்து நம் அடியார்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த முத்துக்களை வைத்திருப்போர் இன்றும் திருஅண்ணாமலை, தஞ்சை பெரிய கோயில், மூன்றாம் பிறை தரிசனம் சிறப்பாகப் பொலியும் முசிறி, சந்திரசேகரபுரம் போன்ற திருத்தலங்களை மூன்றாம் பிறை தரிசன நாட்களில் வலம் வந்து வணங்குதலால் சசி முத்து என்னும் அபூர்வமான அமிர்த சக்திகளைப் பெறுவார்கள். எத்தகைய நோய்களுக்கும் நிலைத்த நிவாரண சக்தியை அளிக்கக் கூடியதே சசி முத்து என்பதாகும். நீங்கள் இங்கு காணும் தஞ்சை பெரிய கோயில், சந்திரசேகரபுரம், முசிறி என்ற திருத்தலங்களின் படங்கள் வீடியோக்கள் யாவையுமே சந்திர பகவானின் மூன்றாம் பிறை தரிசன நாட்களில் எடுக்கப்பட்டவையே என்பதே நம் சற்குரு தம் பக்தர்களுக்காக வர்ஷிக்கும் அருள் மழையாகும்.

ஸ்ரீவம்சோதர நந்தி மூர்த்தி
தஞ்சை பெரிய கோவில்

வம்சோதர நந்தி மூர்த்திக்கு திருப்பணி ஆற்றுகையில் இறைவனின் திருமேனியைத் தீண்டுவதால் அனைவரும் மிகவும் பயபக்தியுடன், தவறான எண்ணங்களுக்கு இடமளிக்காத வகையில் திருப்பணியை மேற்கொள்ளுமாறு சற்குரு கேட்டுக் கொண்டார். இருந்தாலும் மனித முயற்சி என்பது ஒரு எல்லைக்குள் செயல்படக் கூடியது என்பதை நன்கு நம் சற்குரு உணர்ந்திருந்ததால் திருப்பணி நிறைவில் வம்சோதர நந்தி மூர்த்தி முன்பு கொடிமரத்தில் இருந்த நான்கு நந்திகளுக்கும் வாசனை திரவியங்கள் கலந்த தைலத்தை பூசுமாறு கூறினார். சம்பந்தமில்லாத அந்த நந்திகளுக்கும் தைலம் பூசப்பட வேண்டிய அவசியத்தை அடியார்கள் தங்கள் மனதில் நினைத்தபோது அந்த எண்ணத்தை சிக்கெனப் பிடித்த நம் சற்குரு, “இந்த மூன்று நாட்களிலும் வம்சோதர நந்தி மூர்த்தியின் சக்திகளை இந்த நந்தி மூர்த்திகளே தங்களிடம் பத்திரப்படுத்தி வைத்திருந்து அதை இப்போது அடியேனின் வேண்டுகோளின் பேரில் மீண்டும் வம்சோதர நந்தி மூர்த்திக்கே அளித்து விட்டனர். அவர்களுடைய பெருந்தன்மைக்கு நன்றி கூறும் வகையில்தான் அந்த இறை வாகனங்களுக்கும் நறுமணம் கமழும் தைலக் காப்பை நிகழ்த்தும்படிக் கேட்டுக் கொள்கிறேன்,” என்று தன்னுடைய செயலுக்கான காரணத்தை விவரித்தார்கள் நம் சற்குரு. இந்த சித்த வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறார் வம்சோதர நந்தி மூர்த்தி என்றால் இவர்களின் தியாகத்திற்கு எல்லைதான் உண்டோ ? வம்சோதரனின் சீடர்களாய் பல பக்தர்கள் அமைந்து அவருக்கு அருந்தொண்டாற்றிக் கொண்டு வந்தனர். அவர்களுள் முக்கியமானவராகத் திகழ்ந்தவரே தாமரைப்பூ சாவடிக் கண் சித்தராவார். இவர் பூமியில் கிடைக்காத தேவலோக மலர்களை பறித்து வந்து அந்த மலர்களிலிருந்து வாசனை திரவியத்தைப் பெற்று, தன் அருமைக் குருவாம் வம்சோதர நந்தி மூர்த்திக்கு அபிஷேகம் இயற்றி மகிழ்ந்தார். இந்த உத்தமரின் அருந்தொண்டால் மகிழ்ந்த இறைவன் தாமரைப்பூ சாவடிக் கண் சித்தரையும் வம்சோதரன் அருளும் இடது பக்கத் தூண் ஒன்றில் ஏற்று அருள்புரிந்தான். வம்சோதர நந்தி மூர்த்திக்கு திருப்பணிகள் நிறைவேற்றிய மூன்றாம் நாள் இத்தகைய அரிய பூக்களிடமிருந்து பெற்ற வாசனைத் திரவியங்களைக் கொண்டே அபிஷேகம் நிறைவேற்றப்பட்டது என்பதே நம் சற்குரு நமக்காக பல்லாண்டுகளுக்கு முன்னரே ஆற்றிய திருப்பணியின் மகத்துவமாகும். இத்தகைய மணமுள்ள வாசனைத் திரவிங்களை இனம் கண்டும் கொள்ளும் சக்தி நமக்கு இல்லை என்றாலும் நாமறிந்த ரோஜா, சம்பங்கி, தாமரை போன்ற மலர் மாலைகளை குறைந்தது 12 அடிக்கு தயாரித்து அம்மாலையை வம்சோதர நந்தி மூர்த்திக்கு சூட்டி மகிழ்தலால் இன்றும் தாமரைப்பூ சாவடிக் கண் சித்தர் அளிக்கும் அனுகிரக சக்திகளைப் பூரணமாகப் பெறலாம்.

ஸ்ரீதாமரைப்பூ சாவடிக்கண் சித்தர்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவிலில் நூற்றுக் கணக்கான சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்திருப்பதை அடியார்கள் தரிசனம் செய்திருக்கலாம். நம் பெரிய வாத்யார் நம் சற்குருவுடன் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது இந்த சிவலிங்கங்கள் அனைத்தின் மகிமையையும் ஒன்றுவிடாமல் விளக்கிக் கூறினாராம். கோயிலின் நிருதி மூலையில் நிலவும் நவகிரக சிவ லிங்க மூர்த்திகளுக்கே ஒவ்வொரு பெயர் உண்டு. அது மட்டுமல்லாமல் இந்த நவகிரக மூர்த்திகள் அருகே துலங்கும் ஒவவொரு சிவலிங்கத்தின் மகிமையையும் திருநாமத்துடன் தெரிந்து கொள்வது என்றால் ஒன்பது வயதே அடைந்த பாலகனான நம் சின்ன வாத்யார் சிறுவனுக்கு சாத்தியமா என்ன ? இதை வாய்விட்டு நம் கோவணாண்டியிடம் கேட்டும் விட்டான். அவரோ சிரித்துக் கொண்டே, “ஒன்ன யார் நைனா, இந்தப் பேரு எல்லாத்தையும் ஞாபகம் வச்சுக்க சொன்னது, நீ பாட்டுக்கு இந்தப் பேரு எல்லாத்தையும் கேட்டு வச்சுக்கோ, அதது அந்த சந்தர்ப்பத்தில் உனக்கு ஞாபகம் வரும் கவலைப்படாதே ...”, என்று தைரியம் அளித்தார். கோவணாண்டியின் சித்த உபதேசம் பலிக்கத்தான் செய்தது. எப்போது ? நம் சற்குரு தம் அடியார்களுடன் தஞ்சை பெரிய கோவிலில் திருப்பணி ஆற்றியபோது மடை திறந்த வெள்ளமாய் இந்த திருத்தலத்தில் எழுந்தருளிய அனைத்து சிவலிங்க மூர்த்திகளின் மகிமைகளையும் நாம விளக்கத்துடன் அளித்தார்கள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அடிமை கண்ட ஆனந்த நிகழ்ச்சியாகும். இத்தகைய விளக்கங்களை அளித்துக் கொண்டிருந்தபோது, “இங்கு ஒரு மூர்த்தி உள்ளார். அவரைக் கேட்டால் அந்தந்த நாளில் சுவாமி பிரகதீஸ்வரருக்கு ஒவ்வொரு காலத்திலும் என்ன நைவேத்யம் படைக்க வேண்டும் என்பதைக் கூறுவார் ...”, என்றார். அப்போது ஒரு அடியார் முன்வந்து, “வாத்யாரே, அந்த மூர்த்தி எங்கே இருக்கிறார் ?” என்று கேட்டார். நம் சற்குருவோ அவரை நன்கு உற்றுப் பார்த்து விட்டு, “நீ இதைத் தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறாய் ? நீ நிச்சயமாய் தினமும் அந்த மூர்த்திக்கு உகந்த நைவேத்ய பிரசாதத்தைப் படைக்கப் போவதில்லை. ஒரு வேளை நீ உரியவர்களிடம் கூறி அவர்களைப் பிரசாதம் தயார் செய்யக் கூறினாலும் அதை எவரும் கேட்கப் போவதும் இல்லை...”, என்றார். நம் சற்குருவின் கூற்று உண்மைதானே. சற்குரு தொடர்ந்து, “நீங்கள் ஒன்று செய்யலாம் ஒவ்வொரு முறை உணவு உண்பதற்கு முன்னும், காபி டீ போன்றவை அருந்துவதற்கு முன்னும், ஒரு சிறு அனுகிரகத்தை நீங்கள் இறைவனிடமிருந்து பெறும்போதும் நீங்கள் இறைவனுக்கு நன்றி கூறினால் போதுமே. அந்த “நைவேத்ய” மூர்த்தியின் அருளைப் பெற்றதாக ஆகி விடும்,” என்றார். என்ன எளிய சித்த உரை ? உங்கள் நெஞ்சை தொட்டுச் சொல்லுங்கள். நம் சற்குருவின் இந்த ஒரு வழிகாட்டுதலையாவது நாம் முழுமையாகப் பின்பற்றுகிறோமா ? ஸ்ரீஅரவிந்த மாதா, நம் சற்குரு போன்ற உத்தமர்கள் மட்டுமல்லாது நாம் சாதாரணமாக நினைக்கும் தும்பைப்பூ, தாமரை போன்ற மலர்களும் பரவெளியிலிருந்து ஓங்கார சக்தியைக் கிரகித்து அதை ஓங்கார ஒலிப் பிரவாகமாகவும் ஒளிப் பிரவாகமாகவும் மாற்றி பூலோக ஜீவன்களுக்கு அளிக்கிறார்கள். இவ்வாறு தேவலோகத்திலிருந்து பெற்ற தெய்வீக மலர்களிலிருந்து வாசனை திரவியங்களைத் தயாரித்து ஸ்ரீவம்சோதர நந்தி மூர்த்திக்கு அளிக்க அந்த ஓங்கார ஒளி ஒலி சக்திகளை இறை மூர்த்தி ஸ்ரீபிரகதீஸ்வரருக்கு அளிக்க அந்த ஓங்கார சக்திகள் அனைத்தும் இந்த அண்ட சராசரத்தையே வலம் வந்து உயிர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ற சிரஞ்சீவி சக்திகளாய் அளிக்கிறது என்பதே தாமரைப்பூ சாவடிக் கண் சித்தர் ஆற்றும் அருந் தொண்டின் மகாத்மியமாகும்.

மேற்கூறிய முறையில் 12 அடிக்குக் குறையாமல் வாசமுள்ள மலர்கள் கூடிய மாலையை ஸ்ரீவம்சோதர நந்தி மூர்த்திக்கு சாற்றி வழிபடுதலால் தாமரைப்பூ சாவடிக்கண் சித்தரின் அரிய திருப்பணியில் நாமும் பங்கு பெற்றோர் ஆவோம். தாமரைப்பூ சாவடிக்கண் என்றால் என்றும் மாறாத ஓங்கார சக்திகளைக் கிரகித்து, நிலை நிறுத்தி, அவற்றை உயிர்கள் கிரகிக்கும் நிலைக்கு மாற்றி அமைக்கும் கலைக் கூடம் என்று பொருள். சித்தர்கள் சூடும் நாமங்கள் அனைத்தும் காரணப் பெயர்களே, அனைத்தும் பொருள் பொதிந்த பொக்கிஷங்களே.
தஞ்சை சிவாலயத்தில் நவகிரக மூர்த்திகளுள் பிரதானமாக விளங்கும் சந்திர பகவான் மூன்றாம் பிறை நாட்களில் மேற்கு திசையில் துலங்கும் சூரிய பகவானின் பிரகத் கிரணங்களை சந்திர ஔஷத ஒளிக் கிரணங்களாக மாற்றி ஸ்ரீசந்திசேகர சுவாமிக்கு அபிஷேகிக்க இந்த அருட்கிரணங்களையே சுவாமியின் அருட்பிரசாதமாக நாம் சந்திரசேகரபுரத்தில் அமிர்த சஞ்சீவ பிரசாதமாகப் பெறுகிறோம் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் அமிர்த இரகசியமாகும். இத்தகைய ஒளி பரிபாலனத்தை சாதாரண மக்களும் தரிசிக்கும் வண்ணம் அமைந்துள்ளதே இங்குள்ள வீடியோவாகும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
சந்திரசேகரபுரம்

சந்திர எண் சக்திகள் துலங்கும் 11.7.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று அமைந்த இந்த மூன்றாம் பிறை தரிசன மகிமையையோ இந்த தரிசனத்தில் அமைந்த சற்குருவின் தியாகத்தையோ வர்ணிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். ஞாயிற்றுக் கிழமை அன்று சூரிய சக்திகள் பெருகும் அல்லவா ? இந்த பெருகிய சூரிய சக்திகளை பலம் பெற்ற தஞ்சை நவகிரக மூர்த்தியான சந்திர பகவான் பிரகத் சக்திகளாக பிரதிபலிக்க அதை சந்திரசேகரபுரத்தில் சூரிய பாத சாரம் பெற்ற கிருத்திகை தேவியும், சந்திர பாத சாரம் பெற்ற ரோகிணி தேவிகளும் சந்திர மூர்த்திக்கு அளிக்க இந்த சந்திர சக்திகளை மூன்றாம் பிறைச் சந்திரனாக சந்திரசேகரபுரத்தில் ஸ்ரீசந்திரசேகர ஈசனுக்கு அபிஷேகம் நிறைவேற்றுகின்றார் என்றால் இந்த கண்கொள்ளாக் காட்சியை அடியார்கள் தரிசிக்க அருள்புரிந்த நம் சற்குருவின் கருணையை நினைத்தால் கண்களில் நீர் வழியாமல் போகுமா ? மேற்கண்ட நாளில் இந்த அபூர்வ தரிசனத்தைப் பெறா விட்டாலும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாட்களிலோ, கிருத்திகை, ரோஹிணி நட்சத்திர நாட்களிலோ சந்திரசேகரபுரத்தில் அருள்புரியும் கிருத்திகை ரோகிணி சமேத சந்திர பகவானுக்கு தாமே கையால் அரைத்த சந்தனத்தை சாற்றி வழிபடுதலால் மனம் சம்பந்தமான பிரச்னைகளும் உறவுப் பிரச்னைகளும் தீர்வடையும். பெண் உறவு முறைகளில் ஆண்கள் சந்திக்கும் இடர்களும், ஆண் உறவு சம்பந்தங்களில் பெண்கள் அடையும் வேதனைகளும் விடிவு பெறும். குறிப்பாக உயர் பெண் அதிகாரிகளால் ஆண்கள் அடையும் துன்பங்களும், ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளும் தணியும். துளசி, மல்லிகை வாசனை திரவியங்களை (e.g. perfumes ashik, kachikali) சந்தனத்தில் குழைத்து காப்பிடுதல் நலம். சந்திரசேகரபுரத்தில் சந்திர பகவான் முருகப் பெருமான் அருளும் இடத்தில் சுவாமிக்கு இடதுபுறமாக அமர்ந்த கோலத்தில் ரோஹிணி கிருத்திகை என்ற இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார். முருகப் பெருமானும் அமர்ந்த கோலத்தில் இரு தேவியருடன் எழுந்தருளி உள்ளார். இத்தகைய இரு மூர்த்திகளின் பரிவர்த்தனை அமர்ந்த கோல அம்சங்கள் எத்தகைய அலைபாயும் மனத்தையும், கொந்தளிப்பான மனோநிலையையும், மன சஞ்சலங்களையும், மனக் குழப்பங்களையும் தீர்க்கவல்லது என்பதால் சந்திரசேகரபுரத்தில் கிட்டாத ஒரு மன அமைதி எந்த தலத்திலும் கிட்டாது என்று உறுதியாகக் கூறலாம். இத்தகைய ஒரு அனுகிரகத்தைப் பெறவே பிதாமகர் பல்லாயிரம் ஆண்டுகள் முன்னரே சந்திரசேகரபுர தலத்திற்கு வந்து வழிபாடுகள் இயற்றி திடமான மனோ நிலையைப் பெற்றார், கண்ணால் காணும் காட்சிகளை இறை அனுகிரக கிரணங்களாக மாற்றி பரவெளியில் பரப்பும் தெய்வீக சக்திகளைப் பெற்றார் என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கக் கூடிய சந்திர அனுகிரகம்தானே.

கடும்பாடு குரு தத்துவம்

தத்துவங்கள் என்றும் மாறுவதில்லை. கடவுள் தத்துவம், குரு தத்துவம் என்பவையோ நிச்சயமாக மாறுவதில்லை. ஆனால், ஒருவர் போதுமான அளவு ஞானம் என்னும் உண்மையான அறிவைப் பெருக்கிக் கொள்ளாதபோது அவரவர் நிலைக்குத் தோன்றும் கடவுளையே உண்மையானதாக, சத்தியமானதாக ஏற்கிறார்கள். ஏன் ஒரு பொருளை அப்படியே பார்க்காமல் தத்துவ நிலையிலிருந்து பார்க்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். அனைத்து தத்துவங்களையும் அரவணைக்கும் ஒரே தத்துவம் அன்பு என்பதுதான். ஆனால், இந்த அன்பை ஆராய்ச்சி கோணத்தில், ஆராயும் முறையில் பார்க்கும்போது அப்போது தத்துவம் என்ற உண்மை நிலையிலிருந்து ஆராய்ந்தால் அன்பு சுவைக்கும், உறுதி பெறும், எந்த விவாதத்திற்கும் அப்பாற்பட்டு நின்று பிரகாசிக்கும்.

ஸ்ரீவில்லேந்திய வேலவன்
ஆவூர்

குரு தத்துவமே அனைத்திலும் உயர்ந்த தத்துவமாக விளங்குவதால் குருவைச் சுட்டும் Golden Triangle என்னும் தங்க முக்கோணத்தை எடுத்துக் கொள்வோம். எகிப்து நாட்டில் பாயும் நைல் நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது அதன் அருகில் இருந்த பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் வரப்புகள் அடித்துச் செல்லப்பட்டு அந்த நிலங்களின் சொந்தக்காரர்கள் இடையில் ஏகப்பட்ட தகராறுகள் தோன்றின. இந்த பூமி முழுவதற்குமே சக்கரவர்த்தி ஸ்ரீராமர்தானே. ராமபிரான் எகிப்திற்குச் சென்றபோது அவரிடம் இந்த பிரச்னைகள் முன்வைக்கப்பட்டன. அவர் தன்னுடன் வந்த குஞ்சரா குரங்குகளை அழைத்து இந்த நிலப் பிரச்னைக்கு தீர்வு கூறுமாறு பணிக்கவே அந்த குரங்குகள் தங்கள் வாலை நீட்டி தங்க முக்கோண அளவுகளால் எகிப்து நாட்டு நதியோர நிலத்தை அளந்து சீர்செய்து கொடுத்தன. அன்று முதல் நைல் நதியின் வெள்ளப்பெருக்கு கட்டுப்பாட்டுக்குள் அமைந்ததால் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். மூன்று, நான்கு, ஐந்து என்ற அலகுகள் அமைந்த அளவைக் கொண்ட முக்கோணமே தங்க முக்கோணமாகும். இவ்வாறு நான்கு முக்கோணங்களை அமைக்கும்போது (3+4=7 x 4 = 28) என்ற சூத்திரத்தின்படி இந்த நான்கு செங்கோண முக்கோணங்களுக்கு இடையே ஐந்து அலகுகளை பக்கங்களாகக் கொண்ட ஒரு சதுரம் அமையும். இந்த சதுரம், செங்கோண முக்கோணங்கள் இடையே அமைந்த ஒரு நாற்கரம் என்பதால் இது எல்லைக்கோடாக அமைந்து மக்களுக்கு பாதுகாப்பை, அமைதியை அளிக்கும் என்பதே இந்த முக்கோணங்கள், நாற்கரம் சுட்டிக் காட்டும் இறை அனுகிரகமாகும். இந்த அமைப்பில் சூரியன், குரு, புதன் என்ற கிரகங்களின் பாதுகாப்பு அம்சங்கள் கூடியிருப்பதையும் நாம் உணரலாம்.

அண்டமி திருத்தல அமைப்பு

இந்த செங்கோண முக்கோண சக்திகளை 13 முடிச்சுகள் உடைய ஒரு கயிற்றில் சம இடைவெளி விட்டு தயாரித்து அதை ஸ்ரீகடும்பாடு சித்தர் காயத்ரீ மந்திரத்தைக் கூறி கையில் கட்டிக் கொள்வதால் இது எத்தகைய தொற்றுநோய்களுக்கும் அருமருந்தாக, பாதுகாப்பு கவசமாக அமையும் என்பதே கீழ்பெண்ணாத்தூரில் அருள்புரியும் ஸ்ரீகடும்பாடு சித்தரின் ஜீவாலயத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடுகள் உணர்த்தும் உண்மையாகும். ஆண்கள் தங்கள் வலது கையிலும் பெண்கள் இடது கையிலும் இந்த கவசக் கயிற்றைக் கட்டிக் கொள்தல் நலம். மூன்று, நான்கு, ஐந்தின் கூட்டுத் தொகை குரு எண்ணான மூன்றாக மிளிர்வதால் இந்த குரு தத்துவமே எத்தகைய தொற்றுநோய்களையும் தீர்க்கவல்லது என்றால் சற்குருவின் மகிமைதான் என்னே ? ராமபிரானின் படைவீரர்கள் இனம் புரியாத காய்ச்சல் நோயால் திடீரென தாக்கப்பட்டு துன்பம் அடைந்தபோது ஜாம்பவான் அளித்த ஆலோசனையின் பேரில் ஆஞ்சநேய மூர்த்தி கீழ்பெண்ணாத்தூர் திருத்தலத்திற்கு வானில் பறந்து வந்து ஸ்ரீகடும்பாடு சித்தரை தரிசனம் செய்து ராமபிரானின் படைவீரர்களுக்கு எல்லாம் நோய் நிவாரணம் பெற்றுத் தந்தார் என்பது நீங்கள் அறிந்ததே. எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய இத்தகைய காய்ச்சல் நோய்களுக்கு இன்றும் நிவாரணம் அளிக்கக் கூடியதே ஸ்ரீகடும்பாடு சித்தர் வழிபாடாகும். எரிபொருள், தீயணைப்பு படை, ராணுவம், மின்சாரம் போன்ற விபத்துக்கள் அதிகம் நடைபெறக் கூடிய துறைகளில் பணிபுரிவோர் கும்பகோணம் அருகிலுள்ள ஆவூர் திருத்தலத்தில் அருளும் ஸ்ரீவில்லேந்திய வேலனை வழிபடுவதாலும் மேற்கூறிய பாதுகாப்பு சக்திகள் சூக்குமமாக அமைந்து அவர்களைக் காக்கும். ஸ்ரீகடும்பாடு சித்தர் அருளிய பாதுகாப்பு சக்திகளுடன் எழுந்தருளிய திருத்தலங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை திருவாரூர் மன்னார்குடி இடையே அமைந்த அண்டமி திருத்தலமும், தஞ்சை பெரிய கோயிலுமாகும். அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் திருஅண்ணாமலை உச்சியில் திகழும் கல்லால மரத்தின் இலையும், திருஅண்ணாமலையில் நம் கண்களுக்குப் புலப்படும் சிவசக்தி ஐக்ய தரிசனமும், அதன் எதிரில் அமைந்துள்ள நம் ஆஸ்ரமத்தின் பரகாய பிரவேச கோபுரமும் இத்தகைய தங்க முக்கோண சக்திகளுடன்தான், அளவுகளுடன்தான் பொலிகின்றன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் தங்க முக்கோண இரகசியங்களாகும். “கல்லாலின் புடை அமர்ந்து ...” என்ற பாடலில் இடம்பெறும் புடை என்ற பாதுகாப்பு சக்திகளே தங்க முக்கோண சக்திகளாகும். திருஅண்ணாமலையை வலம் வரும் அடியார்கள் அனைவருமே தாங்கள் அறிந்தோ அறியாமலோ தட்சிணா மூர்த்தியின் இந்த “புடை” அனுகிரகத்தைப் பெறுகிறார்கள் என்பதே நம் சற்குரு அருளும் புடை அனுகிரகம். இந்த குரு துதியை முழுமையாக ஓத முடியாதவர்கள் கூட, கல்லாலின் புடை அமர்ந்து என்ற குரு சக்தி வார்த்தைகளை மட்டுமே ஓதி திருஅண்ணாமலையை வலம் வந்தால் போதும் அவர்கள் அனைத்து பாதுகாப்பு சக்திகளையும் பெறுவார்கள் என்றால் என்னே குரு கருணை ?!

நாச்சியார் கோவில்
உறையூர் திருச்சி

குஞ்சரா குரங்குகள் திருப்பதி

நான்கு செங்கோண முக்கோணங்களால் சூழப்பட்டு நடுவில் அமையும் மண்டபம் மயன் மண்டபம் என்றும் அழைக்கப்படும். ஒரு முக்கோணத்திற்கு நான்கு புள்ளிகள் என்ற கணக்கில் அமைய இத்துடன் நடுவில் உள்ள மண்டபத்தின் நான்கு புள்ளிகளைச் சேர்க்க 16 புள்ளிகள் உருவாகும் அல்லவா ? இத்தகைய 16 புள்ளிகளே வசந்த சக்தி புள்ளிகள் எனப்படும். திருத்தலங்களில் உள்ள வசந்த மண்டபங்கள் இத்தகைய 16 மயன் புள்ளிகளை உடையதாகவே துலங்கும். பெண்கள் வசந்த ருதுவில் அதாவது சித்திரை, வைகாசி மாதங்களில் பருவம் அடைவது ஒரு சிறந்த பேறே. நம் சற்குரு தான் உழவாரம் நிறைவேற்றிய திருத்தலங்களில் எல்லாம் அங்குள்ள வசந்த மண்டபங்களின் சக்திகளையும் புனருத்தாரணம் செய்து திருப்பணிகளை நிறைவேற்றினார். குறிப்பாக திருச்சி நாச்சியார்கோயிலில் உள்ள வசந்த மண்டபம் நம் சற்குருவால் இவ்வாறு சித்சக்திகளுடன் புதுப்பிக்கப்பட்டதே. இந்த வசந்த மண்டபங்களில் திருமணமாகாத பெண்கள் பலர் சேர்ந்து அரிசி மாவால் புள்ளிக் கோலங்கள் இட்டு இறைவனை வழிபட்டு வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பதே நம் சற்குரு அளிக்கும் நல்லாசி. பாடல் பெற்ற தலங்கள், நம் சற்குரு அருளிய திருத்தலங்கள், மங்களசாசனம் செய்யப்பெற்ற கோயில்களில் மூலத்தானத்திலிருந்து 12 அடிக்குள் திருமணங்களை நிகழ்த்துதலால் இத்தகைய மயன் அமைக்கும் வசந்த மண்டபப் புள்ளிகளால், சக்திகளால் திருமணத் தம்பதிகள் நல்லருள் பெறுவர். இதில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவை ஒன்று உண்டு. உதாரணமாக, ஒரு பெண்ணின் தாயார் திருமணம் நடக்கும் இடத்திலிருந்து வெகுதொலையில் அதாவது கிட்டத்தட்ட 100 அடி தூரத்திற்கு மேல் உள்ள ஒரு இடத்தில் நிற்கிறார். மணப் பெண்ணின் அருகில் நிற்கும் அவருடைய உறவுக்காரரோ திருமணமாகி வேறு ஊரில் வசிக்கும் தன்னுடைய பெண்ணைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார் என்றால் திருமண வைபவத்தில் தாயார் என்னும் உறவுப் புள்ளி மயன் மண்டபத்தில் நிலைபெறும், அந்த உறவுக்காரப் பெண்ணின் மயன் புள்ளியோ குறித்த இந்த 12 அடி தூரத்தைக் கடந்து வேறு ஒரு ஊரில் நிலை கொண்டிருப்பதால் அது இறை அனுகிரக சக்திகளைப் பெறாமலே இருந்து விடும். இந்த மயன் புள்ளிகளின் அமைப்பிற்கு நம் மூதாதையர்கள் அளிக்கும் புண்ணிய சக்தியே காரணமாகின்றது எனலாம். தஞ்சை பெரிய கோயிலில் வம்சோதர நந்தி மூர்த்திக்கு திருப்பணிகள் நிறைவேற்றியபோது அந்த நந்தியின் சக்திகளை எல்லாம் முன்னே கொடி மரத்தில் நிலவிய நான்கு நந்தி மூர்த்திகளுக்கு மாற்றி விட்டார் நம் சற்குரு என தெரிவித்திருந்தோம் அல்லவா ? இது போல பல சந்தர்ப்பங்களிலும் இவ்வாறு தெய்வ மூர்த்திகளின் சக்தியை வேறு ஒரு இடத்திற்கு மாற்றும் திருப்பணியை நிறைவேற்றுவதற்காகவே காலவிதான தேவதைகள் என்ற ஒருவித சக்தி வாய்ந்த தேவதைகள் கோயில் முழுவதும் வலம் வந்த வண்ணம் இருப்பார்கள். ராஜகோபுரக் கலச தேவதைகளைப் போல் இவர்கள் சக்திகளும் 12 வருடங்களுக்கு ஒரு முறை புனருத்தாரணம் பெறுவதாகும். திருத்தலங்களில் ஒரு சிறுவனோ வயது முதிர்ந்தவரோ தெரியாமல் ஒரு சுவற்றில் அல்லது தூணில் காலை வைத்து விடுவதுண்டு.

லிங்க மூர்த்திகள்
தஞ்சை பெரிய கோயில்

அதனால் அந்த இடத்தில் நிலைகொள்ளும் தெய்வ சக்திகளின் சாபத்தை அந்த மனிதன் பெற வேண்டியிருக்கும் அல்லவா ? அத்தகையோர் மூதாதையர்களின் உரிய சக்தியை பெற்றிருந்தால் அந்த மூதாதையர்களே அவர்கள் காலை தூணில் வைத்து விடாதபடி அவர்களின் எண்ணத்தை மாற்றி அவர்களைக் காப்பாற்றி விடுவார்கள். ஒருவேளை அத்தகைய சக்தி வாய்ந்த மூதாதையர்களை அவர்கள் பெறா விட்டால் திருத்தலங்களை வலம் வரும் காலவிதான மூர்த்திகள் அங்குள்ள தெய்வ மூர்த்தியின் சக்தியை வேறு ஒரு இடத்திற்கு மாற்றி அந்த மனிதனை பெரும் பாவத்திலிருந்து காப்பாற்றி, பின்னர் அந்த நிகழ்ச்சிக்குப் பின் ஒரு மனிதனின் கால் பட்ட இடத்தை தெய்வீகமாக சுத்தி செய்து மீண்டும் அந்த தெய்வ மூர்த்தி எழுந்தருளும்படி செய்து விடுவார்கள். இதற்கும் ஓரளவிற்கு நாம் புண்ணிய சக்தியைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். அதற்காகவே எந்த புண்ணிய சக்தியும் நம் கணக்கில் இல்லாவிட்டாலும் நாம் ஏதாவது இறை மந்திரங்களை வாய் விட்டு ஓதிய வண்ணம் திருத்தல மூர்த்திகளை தரிசனம் செய்து கொண்டிருந்தால் காலவிதான தேவதைகளின் குறுக்கீட்டால், அரும்பணியால் நாம் காப்பாற்றப்படுவோம் என்பதும் திருத்தல வழிபாட்டு இரகசியங்களில் ஒன்றாகும். ஜபமாலைகளில் பலவித எண்ணிக்கை கொண்ட மணிகளுடன் துலங்கும் மாலைகள் உண்டு. அவரவர் விருப்பத்தைப் பொறுத்து எந்தவித மாலைகளையும் ஏற்று மந்திரங்களை ஜபிப்பது அனைத்து மதங்களிலும் பின்பற்றக் கூடிய ஒரு சிறப்பான வழிபாட்டு முறையே. காரிய சித்திக்கு மட்டும் அல்லாது நோய் நிவர்த்தி, இறை பக்தி, தினசரி வழிபாடு போன்ற பல காரியங்களுக்கும் ஜபமாலையை பயன்படுத்தி மந்திரம் ஜபிப்பது ஏற்புடையதே. இம்முறையில் ஸ்ரீகடும்பாடு சித்தர் அருளிய 13 முடிச்சுகள் கொண்ட கயிற்றின் முதல் முடிச்சையும் கடைசி 13வது முடிச்சையும் சேர்த்துக் கட்டி இவ்வாறு அமையும் 12 முடிச்சுகளில் கடும்பாடு சித்த காயத்ரீ மந்திரத்தையோ, தாங்கள் குரு உபதேசமாகப் பெற்ற மந்திரங்களையோ அல்லது தாங்கள் விரும்பும் எந்த மந்திரத்தையும் ஜபிக்கலாம்.

ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
ஆவுடையார்கோயில்

நோய் நிவாரணத்திற்காக காப்பாக கைகளில் அணியும்போது மட்டுமே கருப்பு கயிற்றில் முடி போட்டு பயன்படுத்த வேண்டுமே தவிர மந்திர ஜபத்திற்காக பயன்படுத்தும் ஜபமாலைகளை மஞ்சள், சிவப்பு அல்லது பச்சை நிறத்தில் அமைத்துக் கொள்வது தவறு கிடையாது. தஞ்சை பெரிய கோயிலில் எழுந்தருளிய ஸ்ரீகருவூர் சித்தரைப் போல இரு கைகளிலும் இரு மாலைகளை ஏந்தி மந்திரம் ஜபிப்பதும் நன்றே. வலது கையில் ஜபமாலையை முன்புறமாகவும் மாற்றியும் இரு சுற்றுகள் ஜபித்த பின்னர் இடது கையில் உள்ள ஜபமாலையில் ஒரு மணியை உருட்ட வேண்டும். தஞ்சை பெரிய கோயிலில் உள்ள ராஜ கோபுரமும், தூண்களும், விக்ரகங்களும், நிலைக் கதவுகளும், ஜன்னல் சாளரங்களும், ஆலயமணிகள் என்ற அனைத்துமே ஸ்ரீகருவூர் சித்தரின் மந்திர ஒலிகளால் நிறைந்திருப்பவையே. இன்றும் பேறு பெற்றோர் ஸ்ரீகருவூர் சித்தர் அருளும் அருமையான மந்திர ஒலிகளைக் கேட்டு இன்புறலாம், அமுத மழையில் நனையலாம். மந்திரங்களை ஜபிப்பதற்கு வசதியாக முடிச்சுகளை அருகருகேயும் அமைத்துக் கொள்ளலாம். ஒரு சுற்று ஜப எண்ணிக்கை என்பது (24 x 24) 576 என்ற எண் கணக்கில் அமைவதால் இது கடும்பாடு சுழல் தீட்சை என்று அழைக்கப்படுகிறது. இது போல் அவரவர் சூழ்நிலைகளைப் பொறுத்து எத்தனை சுழல் தீட்சைகளை வேண்டுமானாலும் நிறைவேற்றலாம். நோய் நிவர்த்தி என்று மட்டும் அல்லாது தொலை நோக்குப் பார்வை, செயல் திறன், சரியான முடிவுகளை எடுக்கும் திறமை இவற்றை வளர்க்கக் கூடியதே கடும்பாடு மந்திர ஜப விதானமாகும். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். தன்னுடைய கணவனுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடு ஒரு பெண்மணி சப்தரிஷிகள் அருள்புரியும் ஒரு தலத்திற்கு வந்தாள். மழை சற்றே தூரலாகப் பொழிந்து கொண்டிருந்தது. தன்னுடைய நான்கு வயது குழந்தை நனைந்து விடும் என்பதற்காக ஒரு குடையை எடுத்து வந்திருந்தாள். அப்பிரதட்சிணமாக ஆஞ்சநேயர் சன்னதியை அடைந்த அந்த பெண் தான் விளக்கேற்ற தீப்பெட்டி எடுத்து வரவில்லை என்று தெரிய வரவே, யாரோ முன்னேரே பயன்படுத்திய ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்ற எண்ணையை நிறைய ஊற்றி அதை ஏற்றுவதற்காக அந்த எண்ணெய் நிறைந்த அகலை ஏந்தி மற்றோர் சன்னதிக்கு சென்று வரவே இதனால் தரை முழுவதும் எண்ணெய் சிந்தி அங்கு வருவோர் போவோர் அனைவரும் வழுக்கி விழும்படியான ஒரு சூழ்நிலையும் உருவானது.

சந்திரசேகரபுரம்

சுவாமியின் தீப அலங்காரத்திற்காக பயன்படுத்தப் படவேண்டிய எண்ணெய் மற்றவர் கால்களில் மிதிபட்டு வீணாகியது ஒருபுறம் இருக்க பலரும் வழுக்கி விழும் ஒரு சந்தர்ப்பத்தை தன்னுடைய அஜாக்கிரதையான காரியத்தால் நிறைவேற்றினாள் அந்தப் பெண். சாதாரணமாக நினைக்கும் இந்தக் காரியத்தில் பல தவறுகள் இருந்தாலும் அதைச் சுட்டிக் காட்டுவது சித்தர்கள் வேலை கிடையாது. அடியார்கள் இந்த நிகழ்ச்சியைத் தங்கள் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி அவர்கள் இந்தச் சூழ்நிலையை எப்படி தன்னுடைய பிரார்த்தனை நிறைவேற சாதகமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும், மற்றவர்களுக்கு இதனால் விளையும் இடையூறுகள் தங்கள் பிரார்த்தனை பலனை பெருமளவில் பாதிக்கும் என்பதையும் உணர்ந்து கொள்க. இவ்வாறு மனிதர்கள் நிறைவேற்றக் கூடிய ஒவ்வொரு செயலிலும் செயல் திறனைக் கூட்டக் கூடியதே கடும்பாடு சித்த காயத்ரீ ஆகும். திருப்பெருந்துறை என்னும் ஆவுடையார் கோவிலில் ஸ்ரீவீணாதட்சிணா மூர்த்தி எழுந்தருளி உள்ளார் அல்லவா ? இவரை வணங்கும் நிலையில் சப்தரிஷிகளும் அங்கு தோன்றியிருப்பதை பலரும் சுவாமியின் தலைக்கு மேல் இருப்பதாக எண்ணி வியக்கக் கூடும். உண்மையில் சுவாமியின் திருவாசியை (aura) அலங்கரிப்பவர்களே சப்தரிஷிகள். ஞாயிற்றுக் கிழமையும் மூன்றாம் பிறையும் இணையும் நாளில் தகுதியுள்ளோர் இவர்களைத் தரிசிக்கவும் கூடும். மேற்கண்ட வீடியோவில் தஞ்சைப் பெரிய கோயிலில் பொலியும் சூரிய கிரணங்களில் பொலியும் சப்தரிஷிகளின் உருவங்களை நாம் தரிசிக்க முடியாவிட்டாலும் இந்த படத்தைப் பார்த்து சப்தரிஷிகளைத் தியானிப்பதால் இவர்கள் அனுகிரகம் நிச்சயம் நம்மீது வர்ஷிக்குமே. 576 என்னும் கடும்பாடு தீட்சையில் சப்தரிஷிகளைச் சுட்டும் ஏழு என்ற எண் அமைந்திருப்பது எதேச்சையாக தோன்றிய ஒரு சித்த அனுகிரகம் அல்ல என்பதையும் உணர்ந்தால் சித்தர்களின் கருணை மழையில் நாம் நனையலாம், நனைந்து கொண்டே இருக்கலாம்.

நீர் நெருப்பு காற்று

தற்போது பலரும் ஜாதகப் பொருத்தம் பார்க்காமலே திருமணங்களை நிகழ்த்தி விடுகிறார்கள். இது சம்பந்தமாக நம் சற்குரு கூறுவது, குருமார்களின் ஆசியுடன்தான், முறையாக ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் திருமணங்களை நிகழ்த்த வேண்டும். இவ்வாறு தகுதி வாய்ந்த ஜோதிடர்கள், சற்குருமார்களின் வழிகாட்டுதல் அமையாதபோது வரன்கள் ஒருவருக்கொருவர் இயற்கையான மனப் பிணைப்பால் ஈர்க்கப்படும்போது, இரு குடும்பங்களும் தகுதி அடிப்படையில் ஒத்து வந்தால் அத்தகைய வரன்களுக்குத் தாராளமாக மாங்கல்ய தாரணத்தை நிறைவேற்றி விடலாம் என்பதுதான். நம் சற்குரு ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது யோனி பொருத்தம், ரஜ்ஜூ பொருத்தம் என்ற இரண்டு அடிப்படை பொருத்தங்களுக்கே முக்கியத்துவம் அளிப்பார்கள். ஆனால், இத்தகைய பொருத்தங்கள் கூட தற்போது முறையாக கணிக்கப்படாது புறக்கணிக்கப்படுகின்றன. இதனால் தம்பதிகளுக்கிடையே உடல் மன சம்பந்தமான இயற்கையான ஈர்ப்பு அமையாது, சந்தானங்களும் பாதிக்கப்படுகின்றன. இதை அறியாதவர்களா சித்தர்கள் ? இத்தகைய குறைபாடுகளுக்கு ஓரளவு பிராய சித்தம் அளிப்பதாக தாம்பூலப் பையில் மற்ற மாங்கல்ய பொருட்களுடன் இரண்டு மண் குருவிகளையும் தானமாக அளித்தல நலம். இந்த தானத்தின் பின்னணியாக அமையும் சக்திகள் நம்மை பிரமிக்க வைப்பது என்றாலும் இதை ஓரளவு விளக்குகிறோம்.

மண் குருவிகள்

இங்குள்ள படத்தில் உள்ள மண் குருவிகளைக் கூர்ந்து கவனித்தாலே பல அற்புதங்களை நாம் கிரகிக்கலாம். இந்த மண் குருவிகள் தஞ்சாவூரில் உள்ள கபிஸ்தலம் என்னும் திருத்திலத்தில் கிட்டும் அபூர்வ பிருத்வி சக்திகள் நிறைந்த களிமண்ணில் இருந்து தயாரிக்கப்பட்டவை. இந்த குருவிகளில் நீரை ஊற்றி அதை குழந்தைகள் விசிலாக உபயோகித்து ஊதினால் ஒரு குருவி கூவுவதைப் போன்ற ஒலி எழும். இந்த ஒலியைக் கேட்டு மற்ற குருவிகள் தங்கள் சப்தத்தால் பதில் அளிப்பதும் உண்டு. நாம் நினைப்பதுபோல் நாம் ஒரு மண் வடிவத்தில் எழுப்பும் ஒலியைக் கேட்டு அதைக் குருவியின் ஒலி என்று நினைத்து குருவிகள் பதில் எழுப்புவதாக நினைத்தால் நாம் ஏமாந்தவர்கள். பதில் அளிக்கும் அந்தக் குருவிக்கு நிச்சயமாகத் தெரியும் நாம் மண் பொம்மையில் நிரப்பிய நீரின் வழியாகத்தான் ஒலி எழுப்புகிறோம் என்று. ஆனால், அவ்வாறு ஒலி எழுப்பும் மனிதனுக்கும் எத்தனையோ பிரச்னைகள் இருக்கும் அல்லவா ? அந்த பிரச்னைகளுக்கான தீர்வையே தங்கள் பதிலாக அனுப்புகின்றன என்பதே மனிதர்கள் பெறவேண்டிய பகுத்தறிவு. ஒரு முறை நம் சற்குரு தம் இல்லத்தில் அமர்ந்திருக்கும்போது அங்குள்ள ஜன்னலில் இரண்டு சிட்டுக்குருவிகள் அமர்ந்து தங்களுக்குள் அளவளாவிக் கொண்டிருந்தன. அவைகள் (அவர்கள்?) என்ன பேசிக் கொண்டிருந்தன என்று கேட்டபோது இன்னும் ஒரு வாரத்தில் நம் சற்குருவின் வீட்டிலிருந்து மூன்று வீடுகள் தள்ளி உள்ள ஒரு வீட்டின் நபர் விபத்து ஒன்றில் மரண அடையப் போகிறார் என்பது நம் சற்குருவிற்குத் தெரிய வந்தது. அனைத்து பிராணிகள், பட்சிகள் மொழி அறிந்தவர் அல்லவா நம் சற்குரு ? இவ்வாறு குருவிகளின் பகுத்தறிவைப் பற்றி ஆராய்ந்தால் அது ஒரு புராணமாக விரியும். மனிதர்கள் அனுபவிக்கும் இனம் புரியாத காய்ச்சல் நோய்கள், பொருத்தம் இல்லா ஜாதகத்தால் இணைந்த தம்பதிகள் இடையே உண்டாகும் பிரச்னை அனைத்திற்கும் மேலாக இறைவனிடம் ஒன்றும் பாக்கியம் இவை அனைத்தையும் அளிக்க வல்லதே மேற்கூறிய குருவி தானமாகும். மனிதர்கள் தங்கள் கடைசி பிறவியில்தான் குயவன் என்ற மண் பாண்டங்கள், மண் பொருட்களை உருவாக்கும் பிறவியைப் பெறுகிறார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் பிறவி இரகசியம். எனவே மேற்கூறிய ஜோடிக் குருவிகள் தானம் இப்பிறவியில் நம் அனுபவிக்கும் காய்ச்சல் போன்ற துன்பங்களைக் களைந்து நம்மை இறைவனுடன் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. கடைசி பிறவியான மனிதப் பிறவியைப் பெறும் மனிதன் “திருநீலகண்டத்து குயவனார்க்கு அடியேன் ...” என்று சுந்தர மூர்த்தி நாயனாரால் 63 நாயன்மார்களில் முதன்மையாக வைத்துப் பாடப்பட்டதன் முக்கியத்துவம் இப்போது உங்களுக்குப் புரிகின்றது அல்லவா ?

கபிஸ்தலம் பெருமாள் ஆலயம்

ஏன் கபிஸ்தலம் திருத்தலத்திலிருந்து பெறப்பட்ட மண்ணிற்கு இத்தகைய முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். கபிஸ்தலம், நத்தம் போன்ற திருத்தலங்களில் கஜேந்திரன் என்ற யானை முதலை ஒன்றின் பிடியில் சிக்கி ஆதிமூலமே என்று பெருமாளை அழைத்து முக்தி பெற்றது. ஒரு நொடியில் தன் காலைக் கவ்விய முதலையை தன் தும்பிக்கையால் எடுத்து எறியும் எல்லமை பெற்ற யானையே கஜேந்திரன் என்றாலும் லட்சுமி பூஜைக்காக எடுத்துச் செல்ல தன் துதிக்கையில் தாமரை மலரை ஏந்தி இருந்ததால் அந்த மலரைக் கீழே விட மனமில்லாமல் தன் பலம் கொண்ட மட்டும் முதலையுடன் போராடியது என்பது ஒரு காரணம். மேலும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் நிறைவேறிய இடத்தில்தான் ஒரு தாமரைப் பொய்கை உருவாகும் என்பதால் அவ்வாறு உருவான தாமரைப் பொய்கையின் தெய்வீகத்தை மேலும் புனிதப்படுத்த அந்தப் பொய்கையிலும், பொய்கை நிலை பெற்ற மண்ணிலும் எப்போதும் தான் நிலைகொள்ளும் சுழுமுனை சுவாசத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு நிரவியதே கஜேந்திரன் ஆகும். இத்தகைய பிருத்வி சக்திகள், நீர், அக்னி சக்திகள் நீக்க முடியாத தோஷம் என்று ஏதாவது இருக்க முடியுமா ?

லால்குடி அருகே நத்தம் பெருமாள் ஆலயம்

யானையுடன் அசுர வடிவில் வந்த முதலையும் போரிட்டது என்று நாம் நினைத்தாலும் உண்மையில் இந்த அசுர வடிவில் வந்த முதலையும் மக்களின் ஆயிரக் கணக்கான தோஷங்களை களைவதற்காக நடத்திய “போட்டியே” இது என்தே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக உண்மையாகும். தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றியுள்ள அகழிகளில் முற்காலத்தில் நிறைய முதலைகளை விட்டிருந்தார்கள். கோயிலைப் பாதுகாக்கவே இந்த முதலைகள் விடப்பட்டிருந்தன என்று நாம் நினைக்கலாம். உண்மையில் இந்த முதலைகள் ஆழ நீரில் மூழ்கும்போது வருணபாசம் அல்லது வருணவாசம் என்று அழைக்கப்படும் வேத சக்திகளை நீரில் உருவாக்குகின்றன. வருண பாச யோக சுவாசம் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத பல தெய்வீக சக்திகளை உடையது. தம்பதிகளுக்கு இடையே அமையும் மாறுபாடான சூட்டு நிலைகளைத் தணிப்பது, மழையை பொழிவிப்பது, வறுமையை நீக்குவது என்பவை வருணவாச தம்பன சக்திகள் அளிக்கும் ஒரு சில அனுகிரக சக்திகளாகும். நம் தமிழ்நாட்டில் கடுமையான நீர்ப் பஞ்சம் ஏற்பட்டபோது நம் ஆஸ்ரம அடியார்கள் பலரும் முதலைகளுக்கு ஆட்டு இறைச்சியை தானமாக அளித்து மழைப் பொழிவிற்கு உறுதுணை புரிந்தனர் என்பதை ஒரு சிலர் அறிந்திருக்கலாம். இன்றும் இத்தகைய ஆட்டிறைச்சி தானங்களால் இனம் புரியாத காய்ச்சல் நோய்கள் நிவர்த்தி பெறுவதுடன், ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் நிறைவேற்றுகின்ற திருமணங்களில் நிகழும் களத்திர தோஷங்களும் நயம் பெறும்.

மாந்துறை லால்குடி

லால்குடி அருகே உள்ள மாந்துறை திருத்தலத்தில் வழிபட்டு ஸ்ரீமிருகண்டு முனிவர் அருளால் கூடா காமத் தவறுகள் புரிந்த அரசன் நன்னிலை பெற்றான் என்பதை இத்தல வரலாறு உணர்த்துகின்றது. புது மணத் தம்பதியர் தேனிலவு கொண்டாட்டத்திற்காக செல்ல வேண்டிய திருத்தலமே மாந்துறை என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும். இரும்பு, தங்கம் போன்ற எத்தகைய உலோகங்களையும் மண் கலங்களில்தான் உருக்குகிறார்கள் என்றால் மண் கலத்தின் சூட்டைப் பரிமாற்றம் செய்யும் தன்மை பற்றி நாம் என்ன கூற முடியும் ? கபிஸ்தலம் திருத்தலத்தில் கிட்டிய மண்ணால் தயாரிக்கப்பட்ட ஜோடிக் குருவிகள் தானத்தால் பல திருமண தோஷங்கள் தீர்வடையும். ஆனால், நாம் வாங்கும் குருவிகள் இத்தகைய மண்ணால்தான் உருவானவை என்று நம்மால் அறிய முடியாது அல்லவா ? இதற்காக சித்தர்கள் அளிக்கும் தீர்வு என்னவென்றால் தஞ்சை, கும்பகோணம், திருமாந்துறை என்று எந்த இடத்தில் வேண்டுமானாலும் இங்கு கூறியுள்ள சிட்டுக் குருவி பொம்மைகளை வாங்கலாம். அவ்வாறு வாங்கப்பட்ட பொம்மைகளை புனர்பூசம், ரோகிணி நட்சத்திர நாட்கள், மூன்றாம் பிறை நாட்கள் அல்லது வளர் சப்தமி திதி நாட்களில் கபிஸ்தலம், தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயம், லால்குடி அருகே நத்தம், திருமாந்துறை திருத்தலங்கள், மூன்றாம் பிறை தரிசனக் கோயில்களான சந்திரசேகரபுரம், திருவக்கரை போன்ற திருத்தலங்களில் வைத்து இறைபிரசாதமாகப் பெற்று அவற்றை தானமாக அளித்தலால் நோய் நிவாரண சக்திகளையும் குறைபாடுகளற்ற சந்ததிகளையும் பக்தர்கள் பெறுவார்கள் என்பதே சித்தர்களின் பரிந்துரை. முதலைப் பண்ணைகளிலும் காவிரி நதியோரங்களில் குறிப்பாக கல்லணை, புள்ளம்பாடி, திருமழபாடி போன்ற இடங்களில் உள்ள முதலைகளுக்கும் கவனமாக ஆட்டு இறைச்சிகளை தானமாக அளித்தல் நலம். பலரும் தற்காலத்தில் test tube baby என்பதான முறையில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இது ஆன்மீகத்திற்கு ஏற்புடையது அல்ல என்பதே சித்தர்களின் கூற்று. ஆனால், இவ்வாறு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டவர்கள் என்ன செய்வது ? அறியாமல் இத்தகைய தவறு செய்தவர்கள் மேற்கூறிய முறையில் 576, 1008 ஜோடி மண் குருவிகளை தானம் அளித்தலால் இத்தகைய தவறுகளுக்கு உரிய பிராயசித்தம் உரியவர்களால் தக்க சமயத்தில் காட்டப்பெறும். எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிமூலமே என்று கஜேந்திரன் எழுப்பிய ஓலம் வானில் நிறைந்திருப்பதால் அது நாம் அளிக்கும் குருவி மண் பொம்மை என்ற பிருத்வி தத்துவத்தில் நிலைபெற்று பக்தர்களுக்கு நல்வழி காட்டும்.

முதலை சுவாசம்

பல காய்ச்சல் நோய்களிலும், ஆஸ்துமா போன்ற வியாதிகளிலும் மூச்சிரைப்பு பலமாக ஏற்படும். இத்தகைய வியாதிகளுக்கு அருமருந்தாக அமைவதே முதலைகளுக்கு ஆட்டிறைச்சியை தானமாக அளிப்பதாகும். Sphinx pose என்பதாக குப்புறப்படுத்துக் கொண்டு கைகளால் கீழ்த்தாடையை தாங்கியவாறு குறைந்தது 20 நிமிடங்கள் அமைதியாக சுவாசித்துக் கொண்டு

ஓம் தாந்த்ரீஸ்வராய வித்மஹே கருவூர் சித்த தேவாய தீமஹி
தந்நோ வம்சோதர பிரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை மௌனமாக ஓதிக் கொண்டே இருந்தால் எத்தகைய மூச்சுக் கோளாறு பிரச்னைகளும் உடனடியாக நிவர்த்தி பெறும். இவ்வாறு நிவாரணம் பெற்ற பின்னர் முதலைகளுக்கு குறைந்தது மூன்று கிலோ ஆட்டிறைச்சி தானமளித்தல் நலம். ஸ்ரீகருவூர் சித்தர் தஞ்சை சிவாலயத்தில் தன் இரு கைகளிலும் உள்ள ஜபமாலைகளை முன்னும் பின்னுமாக உருட்டி மந்திரங்களை ஓதும்போது அப்போது உருவாகும் அக்னி சக்திகளே இவ்வாறு முதலைகள் இல்லாத அகழிகளிலும் வருணபாச சக்தியை உருவாக்கி மக்களுக்கு நல்லருள் புரியும் என்பதே சித்தர்களின் வழிபாட்டின் பின்னணியில் அமையும் இரகசியங்களாகும். காய்ச்சல் நோய்களால் துன்பமடையாமல் இருக்க வேண்டும் என்று வருமுன் காக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு உறுதுணையாக நிற்பதே திருச்சி வயலூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். வருணபாச சக்திகளை ஆண் மயில்கள் தங்கள் தோகைகளில் உள்ள கிருஷ்ண பிங்களம் என்ற “நேத்திரங்கள்” வழியே ஈர்த்து பக்தர்களுக்கு அணுகிரகமாக அளிக்கின்றன என்பதால் மழை பொழிந்த ஒரு முகூர்த்த நேரத்திற்குள் அதாவது ஒன்றரை மணி நேரத்திற்குள் மயில்களுக்கு பாசிப் பயறு, பிஸ்தா போன்ற பச்சை நிற பருப்பு வகைகளை தானம் அளித்தலால் குடும்ப ஒற்றுமை ஓங்கும், வரன்களின் ஜாதகங்களில் மறைந்திருக்கும் நாமறியாத பல தோஷங்களின் வேகங்களும் குறையும். திருஅண்ணாமலை, பர்வதமலை, கருங்குழி போன்ற தலங்களில் இத்தகைய தானங்கள் விசேஷமான பலன்களை வர்ஷிக்கின்றன. நீலமேகசியாமளா என்று ஸ்ரீகிருஷ்ண பகவானை தோத்தரிக்கும்போது அந்த வார்த்தையிலேயே இத்தகைய கிருஷ்ண பிங்கள சக்திகள் தோன்றுகின்றன என்றால் கிருஷ்ண கானத்தின் மகிமைதான் என்னே ?

இருபாத கூம்பு தரிசனம்

திருஅண்ணாமலையில் இருபாத கூம்பு தரிசனம் என்ற தரிசனப் பகுதி உண்டு. பொதுவாக, இடது காலை மடக்கி வலது காலை முன் நீட்டிய கோலத்தில் துலங்கும் பசு மாடுகள் காயத்ரீ மந்திரத்தை ஜபித்த வண்ணம் இருக்கும். இத்தகைய பசு மாடுகளை தரிசனம் செய்வது என்பது 12 வருடங்கள் தொடர்ந்து காயத்ரீ மந்திரம் ஜபித்த ஒரு பிரம்மச்சர்ய அடியாரை தரிசனம் செய்த பலனைக் கொடுக்கும் என்றால் இத்தரிசன பலனை என்னவென்று சொல்வது ? இது இவ்வாறு இருக்க இத்தகைய தரிசனங்களை திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் பெற்றால் அதன் பலன்களை மனிதர்களால் வர்ணிக்கத்தான் இயலுமா ?

இதுவே பிரம்மாண்டம் என்றால் இரு பசுமாடுகள் காயத்ரீ ஜபித்த நிலையில் தரிசனம் தருகின்றன என்றால் அந்த பலன்களை வர்ணிக்க வார்த்தைகள்தான் ஏது ? இத்தகைய ஒரு பலனை பக்தர்களுக்கு இங்கு வீடியோ மூலம் பெற நம் சற்குரு கருணை புரிகின்றார் என்றால் இது எதை விளக்குகிறது ? நாம் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் நம்மை நோக்கி கடவுள் பத்து அடி எடுத்து வைப்பார், சற்குருவோ ஆயிரம் அடி எடுத்து வைப்பார் என்பார்கள். இது வெறும் கூற்று அல்ல என்பதே இங்கு உங்களுக்கு சற்குரு அளிக்கும் அனுகிரகம். இந்த அனுகிரகத்தைப் பெறும் பக்தர்கள் அனைவரும் குறைந்தது பத்து படி வேர்க்கடலையை ஏதாவது ஒரு தலத்தில் ஏதாவது ஒரு ரூபத்தில் தானமாக அளிப்பதே நாம் பெற்ற குரு கருணைக்கு நன்றி கூறும் செயலாகும். இத்தகைய தானத்தால் நிவர்த்தியாகாத நோய்களோ, பிரச்னைகளோ இல்லை எனலாம்.

வயலூர் திருத்தலம்

இருபாத கூம்பு தரிசனம் என்று இத்தரிசனம் வழங்கப்படுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்றே இறை சன்னதிகளில் துலங்கும் சக்திகளை பல மார்க்கங்களிலும் மக்களைச் சென்று அடையுமாறு செய்யவல்ல தரிசனம் என்ற பொருளும் உண்டு. உதாரணமாக, திருச்சி வயலூர் திருத்தலத்தில் நம் சற்குரு உழவாரப் பணி நிறைவேற்றும்போது அங்குள்ள அக்னி தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து கோயில் முழுவதையும் அலம்பி விட்டார்கள். இதனால் எதிர்காலத்தில் தோன்றக் கூடிய எத்தனையோ காய்ச்சல் வியாதிகளுக்கு இத்திருப்பணி அருமருந்தாக அமையும். பெரும்பாலும் இறைமூர்த்திகளுக்கு அபிஷேகம் நிறைவேற்றும் தீர்த்தங்கள் எல்லாம் கோயில் தெப்பக்குளத்திலேயே சென்றடையும்படிதான் நம் திருக்கோயில்கள் அனைத்துமே கட்டப்பட்டுள்ளன. என்றாலும் பலவித மாற்றங்களால் இத்தகைய அமைப்பில் ஏதாவது கோளாறுகள் ஏற்பட்டால் சுவாமியின் அபிஷேகத் தீர்த்தம் திருக்குளத்தை சென்றடைய முடியாததால் அங்கு நீராடும் பக்தர்கள் இறைவனின் அனுகிரக சக்திகள் பலவற்றையும் இழந்து விடும் சந்தர்ப்பம் உண்டு அல்லவா ? கோயில் தலவிருட்சம் போன்ற இறை சாதனங்கள் இந்த சக்திகளை ஈர்த்து தெப்பக்குளத்தில் நிரவி பக்தர்களுக்கு அருள்புரிகின்றன என்பதும் இருபாத கூம்பு தரிசனம் உணர்த்தும் உண்மையாகும். இதற்காகவே நாம் வயலூர் திருத்தல தலவிருட்சமான வன்னி மரத்தை 27, 36, 54 என்றவாறு ஒன்பதின் மடங்காக வலம் வருமாறு குரு அனுகிரகத்தை தெரிவிக்கிறோம். பல திருத்தலங்களில் இத்தகைய சக்தி பெற்ற தலவிருட்சங்களும் அமையாமல் போவதுண்டு அச்சமயங்களில் அத்திருத்தலத்தில் அருள்புரியும் ஒரு இறை மூர்த்தி இத்தகைய சக்திகளை திருஅண்ணாமலை இருபாத கூம்பு தரிசனத்திலிருந்து பெற்று பக்தர்களுக்கு அருள்வார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் மகாத்மியமாகும். வயலூர் திருத்தலத்தில் அருள்புரியும் தலவிருட்சம் வன்னி மரம் மட்டுமல்லாது சூரிய பகவானின் இரு பத்னி தெய்வங்களும் இந்த அற்புத திருப்பணியை நிறைவேற்றும் தேவிகள் ஆவர்.

நிழல் விழாத கோபுரத்தின் கீழ் தஞ்சை நந்தீஸ்வரர் அருள் புரிவது பலவித நோய் நொடிகளைத் தீர்க்கவல்ல அருமருந்தாக அமையும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கம் தெய்வீக இரகசியமாகும். சற்றே பக்தர்கள் ஆழ்ந்து சிந்தித்தால் சற்குரு ராசலீலா தத்துவங்களாக அளித்த இந்த இரகசியங்களின் மகிமையை உணர்ந்து கொள்ளலாம். கோபுரத்தின் நிழல் விழுமாறு அமையும் இல்லங்களில் மக்கள் குடியிருக்க வேண்டாம் என்று கூறுவதற்கு கோபுரத்தை தரிசனம் செய்யும் பக்தர்களின் கர்மவினைகள் நிழல் வடிவத்தில் அத்தகைய குடியிருப்புகளின்மேல் படிவதே முக்கிய காரணமாகும்.

இருபத்தினிகளுடன் சூரிய தேவர் வயலூர்

சட்டியில் இருந்தால்தான் ஆப்பையில் வரும் என்பது போல நிழல் விழாத கோபுரத்தின் அடியில் வாசம் செய்யும் அனுகிரகத்தைப் பெற விரும்பும் வம்சோதர மூர்த்தி அத்தகைய அனுகிரகத்தைப் பெறும் தகுதி உடையவராய் விளங்கினாரா என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவைதானே ? தினைவனம் காக்கும் காவலாளியாகப் பணி புரிந்தவரே வம்சோதர மூர்த்தி. தான் காவல் காத்த வனத்தில் ஒரு உயர்ந்த பரண் அமைத்து அதில் அமர்ந்து கொண்டு பகல் பொழுது முழுவதும் பஞ்சாட்சரம் ஜபித்த வண்ணம் இருப்பார். அவ்வப்போது அந்த வனத்தில் அமரும் குருவிகளைத் துரத்துவதற்காக கவண் மூலம் கூழாங்கற்களை வீசுவார். ஆனால், அந்த கூழாங்கற்கள் அங்கு பயிர்களில் வந்து அமரும் குருவிகள் மேல் பட்டு விடாதபடி மிகவும் கவனத்துடன் செயல்பட்டார், பறவைகளை விரட்டவே மட்டும் அந்தக் கற்கள் என்பதே வம்சோதரனின் தெளிவான எண்ணம். கூழாங்கற்கள் என்பவை ஒளி வடிவ வேதங்களை ஈர்க்கும் வல்லமை பெற்றவை. சூரிய கிரணங்களும் வாலகில்ய மகரிஷிகளால் இத்தகைய அபூர்வ சக்தி பெற்றிருப்பதால் தன்னலம் கருதாது வம்சோதர மூர்த்தி ஜபித்த பஞ்சாட்சர வேத சக்திகளை ரிஷிகள் பல லோகங்களுக்கும் எடுத்துச் சென்றனர். ஆரம்பத்தில் அந்த வனத்தில் உள்ள பயிர்களை உண்ண வந்த சிட்டுக்குருவிகள் குறைந்து வம்சோதர மூர்த்தியின் தேவ ஒலி ஒளி கிரணங்களை பெறுவதற்காக பல லோகங்களிலிருந்தும் யோகிகள், தேவதைகள், கந்தர்வர்கள் குருவி வடிவம் எடுத்து அந்த வனத்திற்கு வர ஆரம்பித்தனர். வம்சோதரனுக்கு தினக் கூலியாக ஒரு படி தினை அளிக்கப்பட்டது. அதை மாவாக மாற்றி அத்துடன் வெல்லம் சேர்த்து தினை உருண்டையாக திருத்தலங்களில் பக்தர்களுக்கு அளித்து விட்டு எஞ்சிய சிவ பிரசாதத்தை தான் உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் வம்சோதரன்.

வம்சோதரனின் தபோசக்தி பெருகியதால் அவர் காத்த தினைப் பயிரில் அமரும் அளவிற்கு தகுதியைப் பெற முடியாத தேவர்கள் அனைவரும் வம்சோதரன் அளிக்கும் தினை உருண்டைகளையாவது பெறலாம் என்ற எண்ணத்துடன் திருக்கோயிலுக்கு பக்தர்கள் வடிவில் வரத் தொடங்கினர். ஒரு கட்டத்தில் வம்சோதர மூர்த்தியின் தினைப் பிரசாதத்தை அவர் திருக்கரங்களால் பெறுவதே ஒரு உயர்ந்த அனுகிரகமாக இருந்ததால் பல தேவர்களும் இந்தப் பிரசாதத்தைப் பெற கூட்டம் கூட்டமாக திருத்தலத்திற்கு வரத் தொடங்கியதால் வம்சோதரனுக்கு சிறிது பிரசாதம் கூட மிஞ்சாமல் போயிற்று. அதைப் பற்றி சற்றும் கவலை கொள்ளாமல் தன் ஊனுடம்பை பராமரிப்பது பற்றி சிறிதும் கவனம் கொள்ளாமல் இருந்ததால் அந்த ஊனுடம்பிலிருந்து பல நாட்கள் உணவு இல்லாத காரணத்தால் உயிர் பிரிந்தது. தன்னலமின்றி சிவ பஞ்சாட்சரம் ஜபித்த காரணத்தால் வம்சோதரனின் உயிரைச் சுமந்து செல்ல திருக்கயிலையிருந்து தேவ விமானம் ஒன்று வரவே அதில் மிகுந்த பயபக்தியுடன் ஏறி சிவலோகம் சென்றடைந்தார் வம்சோதரன். திருக்கயிலையில்தான் இவ்வாறு நிழல் இல்லாத கோபுரம் ஒன்றின் அடியில் இறைவனைச் சுமக்கும் அனுகிரகத்தை எம்பெருமானிடமிருந்து பெற்றார் ஸ்ரீவம்சோதர நந்தி மூர்த்தி. அதனால்தான் வம்சோதர நந்தி மூர்த்தி தரிசனத்தில் கழியாத கர்ம வினைகளே இல்லை என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

தற்காலத்தில் வம்சோதரனை ஒத்த பக்தி உடைய அடியார்கள் அமைவது அரிது என்றாலும் வம்சோதரனுடைய சேவையை ஓரளவு நிறைவேற்றும் முகமாகவே ராமேஸ்வரம் வில்லூண்டி தீர்த்தக் கடற்கரையில் கவண் கொண்டு சீடை உருண்டைகளை கடலில் வீசும் திருப்பணியை நம் அடியார்கள் நிறைவேற்றினார்கள் என்பதை நீங்கள் நினைவு கூறலாம். ‘ம்’ என்ற அட்சரம் மகரம் எனப்படும். மகரம் என்பது முதலையையும் குறிக்கும். இந்த மகரத்தை இரண்டாவது அட்சரமாகப் பெற்ற வம்சோதர மூர்த்தி எழுந்தருளிய திருத்தலத்தில் முதலைகளும் உலாவுகின்றன என்றால் வம்சோதர மூரத்தி வழிபாடு சந்ததிகள் தழைப்பதற்கு எந்த அளவிற்கு உறுதுணையாக நிற்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாமே ? மண் குருவிகள் தானத்தில் வம்சோதர மூர்த்தியின் அனுகிரகம் இணைவதால்தான் அது எத்தகைய திருமண தோஷங்களையும் களையவல்லதாக அமைகிறது என்பதை இப்போது புலனாகின்றது அல்லவா ?

தலவிருட்சம் வன்னி வயலூர்

16 தூண்கள் உடைய வசந்த மண்டபங்கள் துலங்கும் வட்டமலை போன்ற திருத்தலங்களில் மட்டும்தான் மயன்புள்ளிகள் நிலவுகின்றன என்று கிடையாது. திருஅண்ணாமலையிலும் இத்தகைய மயன்புள்ளிகள் துலங்கும் புள்ளிமான்கள் தரிசனம் கிடைப்பது அதிசயமே. புள்ளிமான்களில் பல வகை உண்டு என்றாலும் இத்தகைய மயன்புள்ளிகள் அமைந்த புள்ளிமான்களை திருஅண்ணாமலையில் மட்டுமே தரிசிக்க இயலும். சதாஸ்து தேவதைகள் என்ற ஒரு வகை தேவதைகள் வானத்தில் சஞ்சரித்துக் கொண்டே இருப்பர்.

நாம் குழந்தைகளை கோபத்தால் திட்டி விட்டால் வானத்தில் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சதாஸ்து தேவதைகள், “சதாஸ்து (அதாவது அப்படியே ஆகட்டும்)” என்று கூறி விட்டால் நம்முடைய சாபங்கள் பலித்து விடுவதால் பெற்றோர்கள், குறிப்பாக தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை எக்காரணம் கொண்டு தவறான வார்த்தைகளால் திட்டக் கூடாது என்று பெரியோர்கள் வலியுறுத்துவது இக்காரணம் பற்றியே. இங்கு நீங்கள் காணும் வீடியோ சதாஸ்து தரிசனத்தில் எடுக்கப்பட்டதே. திருமணப் பத்திரிகைளில் முகூர்த்த தேவதைகளை அச்சடித்து அவர்கள் ஆசியைப் பெறாதவர்களும், கோயிலில் திருமணங்களை நிகழ்த்தாதவர்களும் திருஅண்ணாமலையில் செங்கம் செல்லும் கூட்டு ரோட்டில் இவ்வாறு வறுத்த நிலக்கடலையை மான்களுக்கு தானமாக அளித்தலால் சதாஸ்து தேவதைகளின் அருளைப் பெறுவர். மான்கள் தரிசனம் கிட்டாவிட்டாலும் இத்தரிசனப் பகுதியில் சதாஸ்து தேவதைகளை பிரார்த்தித்து வேர்க்கடலைகளை தானமாக அளித்தால் போதும். தன் வாழ்நாளில் ஒரு லட்சம் முறைக்குக் குறையாமல் திருஅண்ணாமலையை வலம் வந்தவரே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள். அவர் இவ்வாறு வலம் வருகையில் கிட்டத்தட்ட 50000 வலங்கள் நிறைவேறிய நிலையில் ஒரு அடியார் சுவாமிகளை நோக்கி, “சுவாமி, நீங்கள் தினமும் பல முறை இந்த மலையைச் சுற்றி வருவதை பல ஆண்டுகளாக பார்த்துக் கொண்டு வருகிறேன். இத்தனை முறை சுற்றி வருவதற்கு அப்படி இந்த மலையில் என்னதான் அதிசயம் இருக்கிறது ?” என்று மிகவும் வினயத்துடன் கேட்டாராம்.

கடகடவென்று உரக்கச் சிரித்த சுவாமிகளோ அந்த அடியார் போட்டிருந்த மேல் துண்டால் அவர் கண்களையும் முகத்தையும் மூடி, “இப்போது திருஅண்ணாமலையைப் பார் ...” என்றாராம். அவ்வளவுதான், அந்த அடியார் தான் கண்ட காட்சியைக் கண்டு வாயே திறக்க முடியவில்லையாம். அப்படி என்ன ஒரு அற்புதத்தை அவர் கண்டார் ? திருஅண்ணாமலை எங்கும் ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் நட்சத்திரங்கள் தோன்றிப் பிரகாசித்துக் கொண்டே இருந்தனவாம். சற்று நேரம் அந்த அடியார் இந்த அற்புத காட்சியைக் காண்பதை இரசித்த சுவாமிகள் உடனே அவர் முகத்தில் போர்த்திய துண்டை எடுத்து விடவே அவருக்கு அந்த திவ்ய காட்சியும் மறைந்து போயிற்று. இந்த அற்புத அண்ணாமலை தரிசனத்தை அந்த அடியார் பெற உறுதுணை புரிந்தவர்களே சதாஸ்து தேவதைகள். அவர்களை நேரில் பார்த்தால் கண்கள் குருடாகிவிடும் என்பதால்தான் தாயினும் சாலப் பரிந்து ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் அவர்கள் தரிசனத்தை துண்டு மூலம் மறைத்து விட்டார் என்பதே நாம் அறிய வேண்டிய சித்த சுவை, சதாஸ்து சுவை.

ஜடபரத முகூர்த்தம்

சாதாரணமாக முகூர்த்தம் என்றால் ஒன்றரை மணி நேரம் நீடித்திருக்கும் கால அளவாகும். சித்தர்கள் அமைக்கும் அமிர்த நேர முகூர்த்தமோ ஒரே ஒரு நிமிடம் மட்டுமே நிலவக் கூடியது, பிரம்ம முகூர்த்தம் இரண்டு மணி நேரம் பிரகாசிப்பது. இத்தகைய கால வரையறை இல்லாதது கோதூளி முகூர்த்தமாகும். ஒரு இல்லத்தில் ஒருவர் அமர்ந்திருக்கும்போது அவ்வீட்டின் எதிரே செல்லும் பசுமாடுகளின் குளம்புகளிலிருந்து தெறிக்கும் மண் துகள்கள் அந்த நபரின் தலைமேல் பொலிய எடுத்துக் கொள்ளும் நேரமே கோதூளி முகூர்த்தம் ஆகும். இது மாலை சுமார் 6.12 மணிக்கு நிகழ்வதாக வைத்துக் கொள்வோம். அதே பசுமாட்டுக் கூட்டம் நடந்து சென்று கொண்டிருக்கும்போது சில வீடுகள் தள்ளி சாலை அருகே இருக்கும் ஒருவர் இந்த முகூர்த்தத்தை 6.21க்கு அனுபவித்தாலும் அந்த முகூர்த்தத்தின் கால அளவு சற்றே குறையும் அல்லவா ?

பிருத்வி நந்தி திருஅண்ணாமலை

இவ்வாறு எந்த வித வரையறையும் இல்லாததே கோதூளி முகூர்த்தம். ஒரு முறை நம் கனிந்த கனி அடியார்களுக்கு தரிசனம் வழங்கிக் கொண்டிருந்த கோசாலையில் இருந்த ஒரு பசு மாடு கோமேயம் பொழியத் தொடங்கியது. உடனே அருகில் இருந்த காஞ்சி பெரியவர் அந்த கோமேயம் அனைத்தையும் தன் தலையில் தாங்கி அந்த லட்சுமி கடாட்ச சக்திகளை எல்லாம், நோய் நிவாரண சக்திகளை எல்லாம் உலக மக்களுக்கு தாரை வார்த்து அளித்து விட்டார்கள். அனைத்து உலக மக்களுக்கும் தான் சற்குருவே என்று நிரூபித்த பல நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று. இதுவும் சித்தர்கள் அளிக்கும் கோதூளி முகூர்த்தமே. திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் ஒரு அடியார் பிரசாதம் பெறுகின்றார் என்றால் அந்தப் பிரசாதத்தைப் பெறும் அடியாரின் மூதாதையர்கள் க்ஷண நேரம் அந்த பிரசாதத்தில் ஆவாஹனமாகி அந்தப் பிரசாதத்தைப் பெற்று அவ்வாறு பிரசாதம் அளிக்கும் அடியாருக்கு தங்கள் ஆசீர்வாதத்தை அளித்துச் சென்று விடுவர். ஒரு வினாடிக்கும் குறைவாகவே இந்த பரிமாற்றம் நிகழ்ந்தாலும் அது மங்கள சாசுவத முகூர்த்தம் என்றழைக்கப்படும். இத்தகைய முகூர்த்தங்களில் ஒன்றே ஜடபரத முகூர்த்தமாகும். சக்கரவர்த்தியாகத் திகழ்ந்து பல போரில் பங்கேற்ற ஒரு அரசர் தம்முடைய அரச பதவியைத் துறந்து ஒரு சன்னியாசியாக காட்டில் தவமியற்றத் தொடங்கினார். ஒரு நாள் நதியில் நீராடிய பின் தேவதைகளுக்கு அர்க்ய பூஜைகள் நிகழ்த்திக் கொண்டிருந்தபோது புலிக்குப் பயந்த நிறைமாத கர்ப்பிணியான மான் ஒன்று ஆற்று வெள்ளத்தில் உயிர் பிழைக்க தாவியது. அவ்வாறு தாவும்போது அதன் வயிற்றில் இருந்த மான் குட்டி அந்த அரசரின் கையில் விழுந்தது, மானோ ஆற்று நீரில் விழுந்து உயிரை விட்டது. அன்று முதல் தன்னுடைய தவ வாழ்க்கையை மறந்து அந்த மான் குட்டிக்கு பாலூட்டி சீராட்டி வளர்ப்பதிலேயே தன்னுடைய எஞ்சிய காலத்தைக் கழித்த அந்த முனிவர் உயிர் விடும்போது அந்த மான் குட்டியை பார்த்து தன் தவறை உணர்ந்து இனி என்ன நடந்தாலும் தன்னுடைய தவ வாழ்க்கைக்கு தடைகள் ஏற்படாமல் இருக்கும் வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டும் என்ற வைராக்யத்துடன் தன் உயிரை விட்டார். மிகவும் உறுதியான வைராக்கியத்துடன் உயிரை விட்டதால் அவருடைய வைராக்யம் ஒரு மான் வாழ்க்கையைப் பெற்ற பின்னும் நீடித்து அந்த மான் வாழ்க்கை முடிவடைந்த பின் இறை நினைவு மங்காத குழந்தையாக அடுத்த பிறவி பெற்று தன்னுடைய தவ வாழ்க்கையை மீண்டும் புதுப்பித்துக் கொண்டது. அந்த குழந்தையே ஜடபரதர் என்னும் திருநாமத்துடன் பக்தி உலகில் அழியா இடத்தைப் பிடித்துக் கொண்டது. இவ்வாறு பல பிறவிகளில் தொடர்ந்த முகூர்த்த நேரமே ஜடபரதர் முகூர்த்தமாகும்.

பரத அமிர்த தரிசனம்
திருஅண்ணாமலை

பிருத்வி நந்தி அருகே செங்கம் முக்கூட்டு சாலைப் பிரிவே ஜடபரத முகூர்த்த தரிசனமாகும். திருஅண்ணாமலை கிரிவலம் வரும் போதெல்லாம் இந்த தரிசனத்தைக் கண்டு வேர்க்கடலைகளை தானமளித்து வந்தால் விரைவில் ஜடபரத வைராக்யம் என்னும் உத்தம வைராக்யம் ஏற்படும். பரத அமிர்த தரிசனம் என்று வழங்கப்படும் இத்தரிசனமே திருஅண்ணாமலையில் மிக அதிக முகடுகளுடன், அதாவது 16 முகங்களுடன் தரிசிக்கக் கூடிய தசரத ஷோடச தரிசனமாகும். தசரத மகாராஜா தன்னுடைய திருமகன் பட்டாபிஷேகத்தைக் காணாமல் உயிரைத் துறக்க நேரிடும் என்பதை தீர்க்கதரிசனமாக அறிந்து தன் துயரத்தை தீர்த்து ஆறுதல் பெற உதவிய அற்புத தரிசனம் இதுவே. தற்போது மரங்கள் வளர்ந்து திருஅண்ணாமலையாரின் பல முகங்கள் மனிதப் பார்வையிலிருந்து மறைந்து விட்டாலும் இந்த ஷோடச அமிர்த சக்திகள் என்றும் நிலைத்திருப்பவையே.

ஜடபரத முகூர்த்தம் போன்று சாதாரண மனிதர்களின் கணிப்பிற்கு அப்பாற்பட்டதே அபிஜித் முகூர்த்தமாகும். உதாரணமாக, ஒரு நாள் காலை 6.40 சூரியன் உதயமாகி அன்று மாலை 7.00 மணிக்கு அஸ்தமனம் ஆவதாக கொண்டால் அன்றைய பகல் பொழுது 5.20+7.00 = 12.20 என்பதாக அமையும் அல்லவா ? இதில் பாதி அளவான 6 மணி 10 நிமிட நேரத்தை உதய நேரமான 6.40 உடன் கூட்ட 12.50 என்பதே அபிஜித் முகூர்த்தமாகும். ஆனால், இந்த அபிஜித் முகூர்த்த நேரம் எவ்வளவு நேரம் வியாபித்து இருக்கும் என்பதை நம் சற்குருவைப் போன்ற உத்தமர்களைத் தவிர வேறு யாரும் கணிக்க இயலாது. அப்படியானால் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தின் பயன் என்ன ? காணாமல், கோணாமல், கண்டு தினசரி மூன்று வேளை சந்தியா வந்தன வழிபாடு இயற்ற வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். இதில் நண்பகல் சந்தியாவந்தனத்தை சூரியன் தலைக்கு மேல் “கோணாமல்” இருக்கும்போது, அதாவது தலைக்கு மேல் உச்சியில் இருக்கும் நேரத்தில் மேற்கண்ட உதாரணத்தில் 12.50 மணிக்கு ஆரம்பித்து மதிய சந்தியா வந்தன வழிபாட்டை நிறைவேற்ற உதவுவதே அபிஜித் முகூர்தத்தின் பயன்களில் ஒன்றாகும்.

இந்த முகூர்த்த நேரத்தின் வியாபகம் பயன்பாட்டைப் பொறுத்தது. ஒருவர் 12 நிமிடங்கள் சந்தியாவந்தன வழிபாட்டை நிறைவேற்றுவதாக வைத்துக் கொண்டால் அவரைப் பொறுத்தவரை அபிஜித் முகூர்த்தத்தின் வியாபகம் 12.50 முதல் 1.02 வரை இருக்கும். ஒருவர் 25 நிமிடங்கள் சந்தியாவந்தனத்தை நிகழ்த்தினால் அவரைப் பொறுத்தவரை அன்றைய அபிஜித் முகூர்த்தம் 12.50 முதல் 1.15 வரை வியாபித்து இருக்கும். இங்கு கோணாமல் என்பது குறையாமல், மாறுபாடு அடையாமல் இருக்கும் முகூர்த்த சக்திகளைக் குறிக்கும். சூரியன் கோணலாம், ஆனால் சக்தி குறையாது, மாறாது, இதுவே சந்தியாவந்தனம் தரும் அற்புத அனுகிரகம். அபூர்வமாக சற்குருமார்கள் இந்த அபிஜித் முகூர்த்தத்தை மாங்கல்ய தாரணம் போன்ற வைபவங்களுக்கும் அளிப்பது உண்டு. அப்போது அந்த முகூர்த்தத்தை அளிக்கும் உத்தமரே அபிஜித் முகூர்த்தத்தின் வரையறையை நிர்ணயம் செய்து விடுவார்.

ஸ்ரீராமபிரான்
செங்கம் கூட்டு ரோடு

திருஅண்ணாமலையில் சிவசக்திஐக்ய தரிசனமே தசமுக தரிசனம், தீர்க தரிசனம் என்று அழைக்கப்டுவதைப் போல பரத அமிர்த தரிசனமே, தசரத சோக நிவர்த்தி தரிசனம், நெற்றி சுட்டி தரிசனம் என்றும் அழைக்கப்படும். வெள்ளிக் கிழமைகளில் அதிகாலை கணவன் மனைவியின் நெற்றியிலும், திருமாங்கல்யத்திலும், முன் வகிட்டிலும் குங்குமப் பொட்டிட வேண்டும். இதனால் அந்த வாரம் முழுவதும் கணவன் இயற்றிய மந்திர ஜபம், திருத்தல யாத்திரைகள், தான தர்ம பலன்கள் அனைத்தும் மனைவியை அடைய மனைவியின் மாங்கல்ய பலம் பெருகுவதால் கணவனின் ஆயுளும் இதன் மூலம் விருத்தியாகும். இத்தகைய மாங்கல்ய மங்கள சக்திகளை மற்றவர்களுக்கும் சுமங்கலித்துவ அனுகிரகமாக அளிக்கவே இந்த முன்வகிடு குங்குமப் பொட்டை மறைத்தவாறு நெற்றி சுட்டியை பெண்கள் அணிந்து கொள்வது. இதனால் மற்ற ஆண்களின் காமப் பார்வைகளும், தவறான எண்ணங்களும் அந்தப் பெண்ணை அணுகாது அவள் காப்பாற்றப்படுவாள் என்பதும் நெற்றி சுட்டியின் தெய்வீக அனுகிரகங்களில் ஒன்றாகும். இத்தகைய வழிபாடுகளுக்கு வசதி இல்லாதவர்களும், வசதி இருந்தும் நிறைவேற்ற முடியாதவர்களும் திருஅண்ணாமலை செங்கம் ரோடு கூட்டு ரோட்டில் அமையும் தரிசனத்தில் தம்பதி சகிதமாக நமஸ்காரம் செய்து திருஅண்ணாமலையாரை வணங்குவதால் இதுவரை நிறைவேற்றாத நெற்றி சுட்டி வழிபாடுகளுக்கு இது பிராயசித்தமாக அமையும். ராமபிரான் பட்டாபிஷேகத்திற்குப் பின் சீதாதேவியுடன் கிரிவலம் வந்து இந்த தரிசனம் பெற்று சர்வ அங்கங்களும் தரையில் படிய தன் மூதாதையர்களை நினைத்து வணங்கிய போது தசரத மகாராஜா தன் மூதாதையர்களின் பரிவாரத்துடன் வானில் தோன்றி அந்த உத்தம தம்பதியரை ஆசீர்வதித்தாராம். அந்த திவ்ய காட்சியை நினைவு கூறுவதாக இங்கு நீங்கள் காண்பதே ஸ்ரீராமபிரானின் திருவுருவம். பிருத்வி நந்திக்கு அருகில் உள்ள இந்த ராமச்சந்திர மூர்த்திக்கு செம்பருத்தி, மருதாணி போன்ற ஏழு மூலிகை தைலங்களால் காப்பிட்டு வணங்குதல் நலம்.

மனமகிடு தரிசனம் திருஅண்ணாமலை

ஸ்ரீராமபிரானுக்கு எண்ணெய்க் காப்பு நிறைவேறிய பின்னர் ஸ்ரீபிருத்வி நந்தி மூர்த்திக்கும் இதே மூலிகை தைலத்தால் காப்பிட்டு குறைந்தது 21 தீபங்களை நந்தியெம்பெருமானைச் சுற்றி ஏற்றி வைத்து
ஸ்ரீராம ராம ராமேத்தி ரமே ராமே மனோரமே
சஹஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வரானனே
என்ற பஞ்சராம மந்திரத்தை தீபங்கள் குளிரும் வரை ஓதி ராம தியானத்தில் திளைப்பதால் கிட்டும் பலன்கள் அமோகம். பிருத்வி என்பது மண் தத்துவத்தைக் குறிப்பது. சிறுவனாக இருந்த ராமபிரான் களிமண் உருண்டைகளை வில்லில் வைத்து ராமபாணமாக கூனியின் வளைந்த முதுகை நிமிர்த்தும் அனுகிரகமாக அளிக்க கூனியோ அதைத் தவறாகப் புரிந்து கொண்டு ராமபிரானை காட்டிற்கு வனவாசமாக அனுப்பிய வரலாறு நீங்கள் அறிந்ததே. கர்ம வினையால் ஏற்படும் எத்தகைய கொடுமையான காய்ச்சல் நோய்களும், மூல நோய்களும், தலைமுடி உதிர்தல் போன்ற குறைபாடுகளும் மேற்கண்ட வழிபாட்டால் நிவர்த்தி ஆகும். சிறப்பாக பதினாறு நலன்களும் குறையாமல் பொலியும் உன்னத வழிபாடு இது. ஜாதகப் பொருத்தம் பார்க்காமல் சற்குருவை நம்பி திருமண சம்பந்தங்களில் ஈடுபடுவோர் திருமணத்திற்கு முன் மேற்கூறிய வழிபாட்டை நிறைவேற்றுவதால் நற்பலன் பெறுவார்கள். வழிபாட்டின் போதோ, வழிபாட்டின் நிறைவிலோ பிருத்வி நந்தி மண்டபத்திலிருந்து ஆரம்பித்து கிரிவலப் பாதையில் 108 ஜோடிகளுக்குக் குறையாமல் மண் குருவிகளை தானமாக அளித்தல் சிறப்பு.

ஸ்ரீஹரதத்த சிவாச்சாரியார்
மங்களக்குடி

இந்த பூமியைக் காக்க பெருமாள் எடுத்த அவதாரங்கள் எத்தனை எத்தனையோ ? வாமன அவதாரத்தில் மூன்றடி மண் கேட்டு நிலம் அளந்ததும், யமுனா நதியைத் தீண்டி அருள் புரிந்ததும், கோகுல பாலனாய் மண்ணை உண்டு உலகைக் காட்டியதும் மட்டுமல்லாமல் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி திதி அன்றும் மனித உருவில் திருஅண்ணாமலையை வலம் வந்து பிருத்வி நந்தி தரிசனம் பெற்று இங்கு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்கி திருஅண்ணாமலையாரின் அருளைப் பெற்று அதை தரணி எங்கும் வர்ஷிப்பவரே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா. கிருஷ்ண பரமாத்மாவின் பூரண அனுகிரகத்தைப் பெற்றவரே ஹரதத்த சிவாச்சாரியார் என்ற உத்தமர் ஆவார். முற்காலத்தில் குழந்தைகளை சுவீகாரமாக அளிக்கும்போதோ, நிலம் போன்றவற்றை பிறருக்குத் தானமாக அளிக்கும்போதோ வெற்றிலை பாக்குடன் ஒரு தங்க நாணயத்தையும் அளித்து நிலத்தில் நீர் ஊற்றி தங்களது “தத்தம்” அளிக்கும் தானத்தை உறுதி செய்வார்கள். இவ்வாறு எம்பெருமானால் உலகத்தவர் நன்மைக்காக “தத்தம்” அளிக்கப்பட்டவரே ஹரதத்த சிவாச்சாரியார் ஆவார். ரோஹிணி நட்சரத்திர நாட்களிலோ, தேய்பிறை அஷ்டமி திதிகளிலோ மேற்கூறிய வகையில் வெற்றிலை பாக்குடன் அவரவர் சக்திக்கு ஏற்ற வகையில் தங்க நாணயத்தை தானமாக அளித்தலால் திருப்பித் தருகிறேன் என்று சொல்லி திருப்பித் தராமல் ஏமாற்றிய நெடுநாள் கடன்கள் வசூலாகும். திருமண சம்பந்தங்கள் குறைவின்றி நிறைவுபெறும். ஸ்ரீஹரதத்தர், அக்னீஸ்வரன் முதலாக மீனாட்சி ஈறாக எட்டுக் குழந்தைகளைப் பெற்றார். இவை எட்டுக் குழந்தைகள் என்று சொல்வதை விட ஸ்ரீகிருஷ்ண பகவானின் அனுகிரகத்தை அளிக்கும் எண் திசைகளாகத் துலங்குகின்றன என்பதே பொருந்தும். திருஅண்ணாமலையை கிரிவலம் வரும்போது எட்டு லிங்கங்களையும் வணங்கி வழிபடும்போது நாம் அறிந்தோ அறியாமலோ ஹரதத்தர் அளிக்கும் இந்த எட்டு வரசக்திகளையும் அனுகிரகமாகப் பெறுகின்றோம். ஒரே ஒரு கிரிவலத்தில் நாம் பெறும் புண்ணியம் எத்துணை பிரமிப்பைத் தருவதாக அமைகின்றது பார்த்தீர்களா ?

அட்ட வக்கிர அருட்சோலையாகத் திகழ்ந்த ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் எட்டு கோண சக்திகளையே எட்டு குழந்தைகளாகப் பெற்றார் ஸ்ரீஹரதத்தர். இதை உலகத்தவர்க்கு அறிவிக்கும் முகமாகவே எட்டு எண் சக்திகள் கூடிய 1997ம் ஆண்டு செங்கற்பட்டு அருகே கூவத்தூரில் நிகழ்ந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஸ்ரீஹரதத்தரின் மகிமை பக்தர்களுக்கு நம் சற்குருவால் அருளப்பட்டன என்பதே நாம் அறிந்து இன்புற வேண்டிய சித்த சுவை.

பல்லி தஞ்சாவூர்

வரும் ஆடிப் பெருக்கு பண்டிகை ரோஹிணி நட்சத்திரம் இணையும் செவ்வாய்க் கிழமையில் கூடுவது நமது பாக்கியமே. பொதுவாக, 18ம் பெருக்கு என்பது நோய் நிவர்த்தி தரும் எண் சக்திகள் பெருகும் நாள் என்றாலும் இது செவ்வாய்க் கிழமையுடன் இணைந்து ஆகஸ்டு 3ம் தேதியாகவும் அமைவதால் இந்நாள் குரு சக்திகள் பூரிக்கும் பண்டிகையாகத் துலங்குவதால் இந்த அற்புத குரு அனுகிரகத்தை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ளும் முகமாக 18 உணவு வகைகளை ஒரு வாழை இலை நிறைய வைத்து குறைந்தது 18 பக்தர்களுக்கு தானமளித்தல் சிறப்பாகும். ஊறுகாய், வற்றல், வெங்காய தயிர் பச்சடி போன்றவை இந்த பதினெட்டில் அடங்கும். அஷ்ட வக்ரர் ஆதியாக ஆரண்யர் ஈறான 18 ரிஷிகளும் ஆடிப் பெருக்கு தினத்தன்று நீர் சக்தி அனுகிரகங்களைப் பொழிவதோடு மட்டுமன்றி அபூர்வமான வண்ண அனுகிரகங்களையும் இந்த பிலவ ஆண்டு ஆடிப் பெருக்கு பண்டிகையின் போது வர்ஷிக்கிறார்கள் என்பதே நாம் அறிய வேண்டிய சுவையாகும். Numbers and patterns make this world என்பார் சாக்ரடீஸ் என்ற தத்துவ ஞானி. இந்த தத்துவத்தை உணர்ந்த உயிரினங்களில் பல்லியும் ஒன்று என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்தர்கள் கூறும் இரகசியமாகும். இதற்காகவே காஞ்சிபுரம், வாலிகண்டபுரம் போன்ற பல திருத்தலங்களிலும் பல்லியின் வழிபாடு பக்தர்களுக்கு ஸ்ரீசுத்தோதக மகரிஷியின் அருளைப் பெற்றுத் தருவதாக அமைகின்றது. சிறப்பாக பச்சோந்தி என்ற பல்லி வகைகள் தாங்கள் இருக்கும் மரம், செடி, கொடி போன்ற தாவரங்களின் வண்ணத்திற்கு ஏற்ப தங்கள் உடல் வண்ணங்களை மாற்றிக் கொள்கின்றன என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த தாவரங்களின் வடிவமைப்பையும் பல்லிகள் சற்றும் மாறாமல் ஏற்று அதை பிரதிபலிக்கின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் அதிசயமாகும்.

ஒரு முறை விவேகானந்தரைச் சுற்றி ஏகப்பட்ட இளம்பெண்கள் அளவளாவுவதைக் கண்ட ஒரு பெண்மணி அவர்மேல் கொண்ட அன்பால் இவ்வாறு பல பெண்கள் இடையே அவர் இருப்பதால் அவருடைய ஆன்மீக எண்ணங்களுக்கு இடையூறு விளையுமா என்று ஐயம் மேலிடக் கேட்டபோது விவேகானந்தர் சிரித்துக் கொண்டே, “அம்மா, என்னை இச்சையுடன் பார்க்கும் எவளும் பச்சைத் தவளை ஆகி விடுவாள் ...”, என்றாராம். ஆமாம், ஏன் விவேகானந்தர் தவளை என்று கூறாமல் “பச்சை” தவளை என்று கூறினார். இதை ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் சமுதாயத்தில் நிலவும் மக்களின் எண்ணங்களுக்கும் செடி, கொடி, விலங்குகள், தாவரங்களின் உடலில் விளையும் வண்ணங்களுக்கும், மாற்றங்களுக்கும் உள்ள தொடர்பு புரிய வரும். அப்போதுதான் மகான்கள் அளிக்கும் வார வண்ண ஆடைகளின் மகத்துவமும் இறைவனுக்கு பிரசாதமாகப் படைக்கும் உணவுகளின் வண்ணத்திற்கும் உள்ள தொடர்பு புரிய வரும். காதலனைப் பிரிந்த காதலி பசலை நோயால் வாடுவதாக திருவள்ளுவர் குறிப்பிடும் ஏக்கங்களும் இத்தகைய வாழை இலை உணவுகளால் தீரக் கூடியது என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய உண்மைதானே.

ஆடிப் பெருக்கு தினத்தன்று பகலில் 18 வகை உணவு வகைகளை தானமாக அளித்த பின்னர் மாலையில் இருள்சூழும் நேரத்தில் வாழை இலை அல்லது பூவரசு இலையில் பஞ்ச கவ்யம், தேங்காய் எண்ணெய் கலந்த அகல் தீபங்களை ஏற்றி காவிரி போன்ற நதிகளில் மிதக்க விடுவதால் கிட்டும் பலன்கள் அமோகம். குறிப்பாக இரத்த சோகை நோய்கள், இரத்த அணுக் குறைவு (excess platelets), எலும்பு மஜ்ஜை புற்று நோய் (osteosarcoma) போன்ற நோய்களுக்கு துரித நிவாரணம் கிட்டும். கும்ப ராசியில் நிலைத்திருக்கும் வக்ரகதி கொண்ட குருவின் பார்வையால், குரு மங்கள கந்தர்வ அம்சங்கள் பெருகும் இந்த கோணத்தால் தீர்வடையாத நோய்களே இல்லை எனலாம். இந்த அற்புத குருமங்கள கந்தர்வ கிரக சங்கமத்தை எந்த அளவிற்கு பக்தர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதே அவர்கள் எதிர்கால ஆரோக்யத்தை நிர்ணயிக்கும் என்பதில் ஐயமில்லை. துரோன் கேமரா பயன்படுத்துவோர்கள் (Drone camera operators) அடையக் கூடிய இன்னல்களுக்கு இது தீர்வளிக்கும். ஒரு முறையாவது தஞ்சை பெரிய கோயிலில் வீற்றிருக்கும் வம்சோதர நந்தி மூர்த்தியை தரிசனம் செய்து வழிபடுவதால் போட்டோ துறையில் இருப்போர் நலம் பெறுவர். நிழல் இல்லா விட்டால் போட்டோ ஏது ?

இரட்டை வானவில்

வானவில்லை ராம தனுசு, ராம பாணம் என்று சொல்வதுண்டு. வானவில்லைப் பார்த்தால் வைத்த பொருள் மறந்து விடும் என்ற கூற்று ஒன்று உண்டு என்பதால் பலரும் வானவில்லை உற்றுப் பார்ப்பதில்லை. அவதாரங்களில் மனிதனுக்கு மிகவும் அதிகமான அனுகிரகங்களை அளிக்கக் கூடிய இறை அவதாரத்துடன் தொடர்புடைய ஒரு பொருள் மனிதனுக்கு ஞாபக மறதியை உண்டு பண்ணுமா என்பது ஆத்ம விசாரத்திற்கு உரிய ஒரு விஷயமே. வைத்த இடம் மறந்து விடும் என்றால் தேவையில்லாத, லௌகீகமான விஷயங்கள் மறந்து விடும் என்பதே ராம பாணம் சுட்டும் மகத்துவம். இதே திசையில் பார்த்தால் ராம பாணம் தேவையான விஷயத்தை, அதாவது தெய்வீக விஷயங்களில் ஈடுபாட்டை அதிகப்படுத்தும் என்பதுதானே பொருள். ஒரு ஆகாய விமானம் பறக்கும்போது அது செல்லும் இடங்களில் எல்லாம் காற்றை மாசுப்படுத்தி, சப்தத்தால் எல்லா உயிர்களுக்கும் தொல்லை ஏற்படுத்திக் கொண்டே செல்வது என்பது மனித சக்தியால் உருவாவது. ஆனால், விரல் அசைவில் கோடி உயிர்களுக்கு நன்மை பயப்பதே தெய்வீகம். இம்முறையில் ராமர் ஒரு ராம பாணத்தை எய்யும்போது அது இலக்கை மட்டும் வீழ்த்துவது கிடையாது. அந்த பாணம் செல்லும் இடங்களில் எல்லாம் எதிர்மறை சக்திகளை கிரகித்து பஸ்மமாக்கிக் கொண்டே செல்லும். இலக்கை வீழ்த்தியபின் ராமபாணம் கங்கைக்குச் சென்று அந்தப் புனித நீரில் மூழ்கித் திரும்பி வந்து ராமபிரானின் அம்பாரத் துணியில் அமர்ந்து கொள்ளும். கங்கையில் நீராடியதால் புனிதமடைந்த ராம பாணம் திரும்பி வரும் இடங்களில் எல்லாம் விளங்கும் சுயம்பு சிவ மூர்த்திகளை, சிவ லிங்கங்களை எல்லாம் தரிசனம் செய்து தன்னை மேலும் மேலும் புனிதப்படுத்திக் கொள்ளும். இதுவே மனிதர்களின் கற்பனைக்கு எட்டாத சித்தர்கள் மட்டுமே அறிந்த தெய்வீக இரகசியமாகும். இதே தன்மைகளுடன் விளங்குவதே மழை நேரத்தில் வானத்தில் துலங்கும் வானவில்லுமாகும். சாதாரணமாக மழை பொழியும்போது ஆயிரம் துளிகளுக்கு ஒரு துளி அமிர்த சக்திகளுடன் விளங்கும்.

திருஅண்ணாமலை, திருக்கழுக்குன்றம் போன்ற மலைத் தலங்களிலோ, கிரிவலப் பாதைகளிலோ பொழியும் ஒவ்வொரு மழைத்துளியுமே அமிர்த சக்தியுடன் விளங்கும். அதே போல ராம பாணத்தின் வழியாக நாம் மழைத் துளிகளை தரிசிக்கும்போது அந்த மழைத்துளிகள் அனைத்துமே அமிர்த சக்திகளை, சிரஞ்சீவி சக்திகளைப் பெறுகின்றன என்பதே பலரும் அறியாத ராம பாண இரகசியமாகும். இவ்வாறு நாம் தரிசனம் செய்யும் இரு வான வில்கள் எதிர்மறை சக்திகளை விலக்குவதாகவும், தெய்வீக புண்ணிய சக்திகளை பெருக்குவதாகவும் அமையும் என்பதே இந்த இரு வானவில்கள் வானத்தில் தோன்றுவதன் பின்னணியில் அமையும் சித்த விளக்கமாகும். இத்தகைய வானவில்கள் வானில் ஒரு சில விநாடிகளே பிரகாசிப்பதால் அவதார மூர்த்திகள் இந்த அபூர்வ வானவில்களின் சக்தியை பக்தர்கள் எந்நாளும் பெறும் முகமாக ஒரு அனுகிரகத்தை அளித்து உள்ளார்கள். ஆம், அதுவே ஆஞ்சநேய மூர்த்திக்கு சங்கு சக்கரம் ஆயுதங்களை அளித்து, சஞ்சீவராய தீர்த்தம் என்ற தீர்த்தக் கரையில் சுவாமி உலகத்தவர்க்கு எல்லாம் தம் அருளை வாரி வழங்கும் வண்ணம் எழுந்தருளியுள்ள வைபவமாகும்.

ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன்
தாழமங்கை

செவ்வாய், புதன், சனிக் கிழமைகளிலும், திருவோண நட்சத்திர நாட்களிலும், வானவில்களை தரிசித்த உடனேயோ திண்டிவனம் சஞ்சீவராய தீர்த்தத்தில் நீராடி, சங்கு சக்கர ஆஞ்சநேய மூர்த்தியின் தரிசனம் பெற்று, நிலக்கடலை கலந்த புளியோதரை, வட்ட வடிவில் நறுக்கிய பெரிய வெங்காய தயிர் பச்சடி தானம் அளித்தலால் கொடிய நோய்கள், உயிர் போகும் அளவிலான மானப் பிரச்னைகள், திடீரென வேலை இழத்தல் போன்ற பிரச்னகள் தீர்வடையும். பொதுவாக, பெருமாள் தலங்களில் பெருமாளைப் பார்த்த வண்ணம் அருள்புரியும் ஸ்ரீசஞ்சீவிராய ஆஞ்சநேயர் திண்டிவனம் திருத்தலத்தில் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாளின் பின்பகுதியில் உள்ள சஞ்சீவிராய தீர்த்தக் கரையில் அருள்புரிகிறார். இது “காவல்” ஆஞ்சநேய தத்துவத்தை விளக்கும் முகமாக அமைந்துள்ளதால் பக்தர்களின் எந்த வித பாதுகாப்பிற்கும், அதாவது உயிர் பாதுகாப்பு, உடைமை பாதுகாப்பு, மானப் பாதுகாப்பு, வறுமை பாதுகாப்பு என நாம் சந்திக்கக் கூடிய அனைத்து பாதுகாப்பு பிரச்னைகளையும் களையக் கூடியவரே சஞ்சீவராய ஆஞ்சநேய மூர்த்தியாவார். சுவாமியின் சங்கு சக்கரத்தில் உள்ள பாதுகாப்பு சக்திகள் ஏதோ ஒரு யுகத்தில் நான்முகன் இயற்றிய யாகத்தைக் காக்க அளிக்கப்பட்டதாக நாம் நினைத்தாலும் இந்த ஆயுத சக்திகள் ஒவ்வொரு நொடியும் திண்டிவனம் பெருமாள் மூர்த்திகளால் புணருத்தாரனம் பெறுகின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் தெய்வீக அனுபூதியாகும்.

காய்ச்சல் நோய் என்றாலே உடலின் உஷ்ணம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக ஆவதுதான். ஒரு குறிப்பிட்ட எல்லை வரை இந்த அதீத உஷ்ணமானது நமது கர்ம வினைகளைக் குறைக்க வழிகோலும் என்றாலும் இவ்வாறு உண்டாகும் அதிக உஷ்ணநிலையை உடல் உறுப்புகள் தாங்க முடியாதபோது மரணம் சம்பவிக்கின்றது. இத்தகைய அதீத உஷ்ணநிலையை குறித்த அளவிலேயே இருக்கும் வண்ணம் அமைத்துக் கொள்ளும் அனுகிரகத்தை அருளவல்லதே மந்திரமாவது நீறு பதிகமாகும். கர்ம வினைகளே நமக்கு ஏற்படும் வியாதிகளாக உருவாவதால் நம்முடைய கர்ம வினைகளைக் குறைக்கும் வண்ணம் தொடர்ந்து இந்த திருநீற்றுப் பதிகத்தை ஓதி வரும்படி பெரியோர்கள் சிபாரிசு செய்கிறார்கள். எப்படி நீரும் சந்தனமும் உடல் சூட்டைக் குளிர்விக்கும் இயல்புடையது என்றாலும் நீரை நாம் பயன்படுத்தும் அளவிற்கு சந்தனத்தைப் பயன்படுத்தாது குறித்த சில சூழ்நிலைகளில் சந்தனத்தை சுவாமிக்கு இட்டு அதை பிரசாதமாக மட்டும் நாம் பயன்படுத்துகிறோமோ அது போல நம் உடல் உஷ்ணநிலையை குளிர்விக்க சம்பந்த மூர்த்தி நாயனாரால் அருளப்பட்டதே தாழமங்கை அட்சரங்களும் கும்பகோணம் அருகிலுள்ள தாழமங்கை ஈசன் ஸ்ரீசந்திரமௌலீஸ்வர வழிபாடும், புண்ணிய விருட்ச வழிபாடும் ஆகும். விபத்து, பூகம்பம், தொற்றுநோய்கள் போன்ற காரணங்களால் இறந்த உடலுக்கு உத்தர கிரியைகள் என்ற இறுதிச் சடங்குகளை முறையாக செய்யாவிடில் அந்த ஆன்மா நல்ல நிலையை அடையாது அல்லல்பட நேரிடும் அல்லவா ? அபூர்வமாக பிலவ வருடம் ஆடி 18 தினத்தன்று மேற்கூறிய முறையில் வழிபாடுகளை இயற்றி வழிபடுவதால், பஞ்சகவ்ய தீபங்களை ஏற்றி ஆற்றில் விடுவதால் இந்த தீபங்கள் பசுபதி பரம தீபங்கள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்று இறுதிச் சடங்குகள் நிறைவுறாத சடலங்களுக்கும் நற்கதி அளிக்கும். இதை ஒரு சமுதாயப் பணியாக ஏற்று அடியார்கள் அவரவரால் இயன்ற அளவு தீபங்களை ஏற்றி ஆற்றில் விடுதல் சிறப்பாகும். பாக்கு மரத் தட்டுகளில் இலைகளை வைத்து அதன் மேல் தீபங்களை ஏற்றி மிதக்க விடுதலும் ஏற்புடையதே.

ஸ்ரீபச்சைநாயகி அம்மன்
பேரூர் திருத்தலம்

தாழ அட்சரங்கள் மேள ஒலியை வாசிக்கும்
மேள ஒலி மேனிலையைக் காட்டுமே
என்று ஒலிப்பது அகத்திய நாடி (மேள ஒலி என்பது இங்கு பஞ்சகவ்ய ஒளிப் பரல், மேனிலை என்பது மேனி, உடல் பெறக் கூடிய உயர்ந்த நிலை). தீபங்களை ஏற்றும்போதும் ஆற்றில் விடும்போதும் சம்பந்தப் பெருமானின் பந்துசேர் விரலாள் என்று தொடங்கும் பதிகத்தை அடியார்கள் ஒன்று கூடி உரக்க ஓதுதல் சிறப்பே. ஓடும் நதிகளில் எந்த நதியில் வேண்டுமானாலும் தீபங்களை ஏற்றி மிதக்க விட்டு அருள் பெறலாம் என்றாலும் பேரூர் திருத்தலத்தில் பொலியும் நொய்யல் ஆற்றின் மகிமை பற்றி அகத்திய கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன. தனதருமைச் சீடர் போகருக்கு தெளிவு புகட்டும் முகமாக ஸ்ரீஅகத்திய பிரானால் அளிக்கப்பட்ட இந்த நாடிப் பாடல் நொய்யல் ஆற்றில் பொலியும் “தீபப் பிரகாச” சக்திகளை தெளிவுபடுத்துகின்றன.
நொய்யல் சோதி கையில் விளங்குமே
கையில் விளங்குவதைக் கவினுறக் காத்தால்
மையலார்தம் மயக்கம் தீர்ந்து
மெய்யில் புணரும் வினை தீர்த்தறிவாயே
என உரைப்பது நாடிப் பாடல். இந்த நாடியில் கூறியுள்ளபடி வரிசைக்கு ஐந்து தீபங்கள் இருக்கும்படியாக தீபங்களை ஏற்றி நதியில் மிதக்க விடுவதால் இத்தகைய வழிபாடு இறைவனுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தும் என்பது உண்மையே. நொய்யல் ஆற்றில் ஆடிப் பெருக்கு தினத்தன்று தீபங்களை மிதக்க விட்ட சாதாரண பக்தர் தமிழ்நாடே வியக்கும் வண்ணம் ஒரு பிரமுகர் ஆனார் என்றால் நொய்யல் ஆற்றின் மகிமைதான் என்னே ?!

நாம் ஏற்கனவே பல முறை எடுத்துரைத்து வந்ததைப் போல கொரோனா காய்ச்சல் தொற்றுநோய் ஏற்படுத்தும் உடல் பாதிப்பை விட பயம், அச்சம், பீதி போன்ற இயற்கைக்கு முரண்பாடான காரணங்களே மக்களை முடமாக்குகின்றன. இதை உணர்த்துவதே இங்கு கருப்பு உடல், சிறிய பகுதி வெள்ளை வாலுடன் திகழும் நாயாகும். கும்பகோணம் அருகிலுள்ள ஸ்ரீபைரவேஸ்வரர் திருத்தலத்தில் அஷ்டமி திதியில் நாம் காணும் இத்தகைய தரிசனம் இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்த அளவிற்கு சிறுபான்மையினராக இருந்தாலும், நாயின் வெள்ளை வாலைப் போல, அவர்கள் நிச்சயம் இவ்வுலக சுகத்தைப் பெற்று இறையருளுக்கும் பாத்திரமாவார்கள் என்ற நிதர்சனமான உண்மைக்கு சான்றாகும்.

நாகபிருந்தம்

பிருந்தம் என்றால் குழு, கூட்டம் என்று பொருள் உண்டு. பிருந்தாவனம் என்னும் மலர்ச் சோலையில் கிருஷ்ண பரமாத்மா புரிந்த லிலைகள்தாம் எத்தனை எத்தனை. ஏதோ ஒரு யுகத்தில், ஒரு காலகட்டத்தில் இந்த லீலைகள் நிகழ்ந்திருந்தாலும் இந்த லீலைகளின் பலன்களை இன்றும் மக்கள் அனுபவிக்க வழிகோலும் பல திருத்தலங்களில் ஒன்றே செங்கல்பட்டு மதுராந்தகம் வழியே சென்றடையக் கூடிய கூவத்தூர் திருத்தலமாகும். பிருந்தம் என்றால் துளசி என்ற பொருளும் உண்டு. எட்டு நாகங்கள் காவல் காக்கும் ஒரு பீடத்தில் துளசி இங்கு பிருந்தாவன நாயகனை அலங்கரிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். கூவம் என்றால் நீர் சக்திகள் நிறைந்த, செறிந்த படுகை என்று பொருள். இவ்வாறு நன்முறையில் செறிந்த சக்திகளே ஊராய் திரண்டிருந்தால் அதன் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? அதுவே கூவத்தூர் திருத்தலம் சுட்டிக் காட்டும் மகிமையாகும்.

பிறை தரிசனத்தில் இரட்டை
வானவில் திருஅண்ணாமலை

இங்கு ஏழு புண்ணிய நதிகளும் தனித் தனி கிணறுகளில் ஆவாஹனம் ஆகி இருக்கும் அதிசயத்தை நாம் இன்றும் தரிசித்து மகிழலாம். வாசுகி, அனந்தன், தட்சகன் முதலான எட்டு நாகங்களின் சக்திகள் இந்த பிருந்த பீடத்தில் நிரவி உள்ளதால் இது நாகபிருந்தம் என்று அழைக்கப்படுகிறது. குந்தி தேவி வருங்கால பெண்களின் வேதனைகளை ஏற்கத் துணிந்த போது அதற்கு வேண்டிய திடசக்தியை அளித்ததே இந்த நாகபிருந்தம் ஆதலால் இந்த நாகபிருந்தத்தை வலம் வந்து வணங்குதலால் கிடைக்காத மன உறுதி வேறு எங்குமே கிட்டாது எனலாம். காளிங்கன் என்ற கொடிய நாகத்தின் மீது கிருஷ்ண பகவான் நடனம் புரிந்தபோது காளிங்கனின் விஷ சக்திகளை பல இடங்களில் மாற்றி அருள்புரிந்தார் என்பது நீங்கள் அறிந்ததே. அதில் பிரதான பீடமாகத் திகழ்வதே இந்த நாகபிருந்தம் என்பதால் எத்தகைய மன வியாதி, உடல் வியாதிகளால் பீடிக்கப்பட்டவர்களும் இந்த துளசி பீடத்தை பிரதட்சிணம் செய்து வணங்குவதால் நற்பலன் பெறுவார்கள். கூவத்தூர் திருத்தலத்தில் உள்ள ஏழு கூவ சக்திகளையும் ஒருங்கிணைத்து தரும் சக்கர பீடமாக இது அருள்வதால் அனைவரும், சிறப்பாக திருமணமாகாத கன்னிப் பெண்கள் இந்த பிருந்த பீடத்தை வலம் வந்து வணங்குதலால் நற்பலன் பெறுவர். ஜனன ஜாதகங்கள் பலவும் நாக தோஷத்தால் பீடிக்கப்பட்டிருப்பது உண்மையே. பெரும்பாலும் இத்தகைய நாக தோஷங்களை நீக்குவது மிக மிகக் கடினம் என்றாலும் அத்தகைய தோஷங்களை களையும் மார்க்கம் இத்தலத்தில் தொடரும் வழிபாட்டால் கிட்டும் என்பது உண்மையே. உதாரணமாக, ஒரு வேலைக்காரனுக்கு சம்பளம் கொடுக்காமல் அவனைக் கசக்கிப் பிழிந்து வேலை வாங்கினால், எத்தனை பிறவிகள் ஆனாலும் அது நாக தோஷமாக அந்த முதலாளியைத் தொடரும். எத்தனை பரிகாரங்கள் எத்தனை பிறவிகளில் இயற்றினாலும் அதன் கொடிய விளைவுகள் மாறாது. ஆனால், சற்குரு ஒருவர் மனம் வைத்தால் அந்த வேலைக்காரனுக்குப் போய்ச் சேர வேண்டிய சம்பள பாக்கியை ஏதோ ஒரு வடிவில் சென்றடைய தன் அடியார்களுக்கு வழிகாட்டுவார். திருஅண்ணாமலையில் நாம் காணும் இரட்டை வானவில் தரிசனம் மதயானைபிறை தரிசனம் அல்லது சங்கரநாராயணபீலி தரிசனம் என்று வழங்கப்படும். சிவபெருமான் தன் தலையில் அணிந்திருக்கும் மூன்றாம் பிறைக்கு மறுதலையாக (complement) அமைவதே கோகுல கிருஷ்ணனின் மயிற்பீலி என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். எட்டு யானைகள், 16 தாமரை தளங்களுடன் பொலியும் இந்த நாகபிருந்த தூபியைத் தரிசிப்பதற்கே நாம் நம் மூதாதையர்களின் அனுகிரகத்தைப் பெற்றிருந்தால் மட்டுமே சாத்தியமாகும். சங்கர நாராயண கோமதி அன்னையின் சக்திகள்தான் நாகபிருந்தத்திலும் மிக மிக எளிமையாக நம் சற்குரு அளித்துள்ள கரதரிசனத்திலும் பொலிகின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் சித்த சுவையாகும்.

இரண்டு வேட்டிகளை அடுத்தடுத்து விரித்து திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் வலம் வந்த கிருஷ்ண பரமாத்மா இத்தகைய நாகபிருந்த சக்திகளையும் துரோபதைக்கு அளித்தார் என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய உண்மைதானே. கொல்லிமலை போன்ற தலங்களில் ஸ்ரீஅகத்திய பெருமான் தன் சீடர்களை வெளி உலகத்திற்குக் காட்டாமல் கோடாலி, தலைப்பாகை, கமண்டலம், பாதணிகள் என்ற வடிவில் தன் உடனேயே அழைத்து வருவது உண்டு. ஆனால், ஸ்ரீஹரதத்தப் பெருமானின் பிரார்த்தனையின்படி அனைத்து குருமார்களும் தங்கள் சீடர்களை அவர்களின் உண்மை வடிவிலேயே அழைத்துக் கொண்டு வந்து கூவத்தூரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஆதிகேசவ பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர். இதை உணர்த்துவே இங்குள்ள ஆழ்வார்கள் பிருந்தம் உணர்த்தும் சுவையாகும். கூவத்தூரில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஅஷ்டபுஜ துர்கையே இங்குள்ள எட்டு நாகங்களின் சக்தியை அனுகிரகமாக பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிக்கும் சக்தி பெற்றிருப்பதால் இங்குள்ள ஏழு கூவங்களிலிருந்து (தீர்த்தக் கிணறுகளிலிருந்து) நீர் இறைத்து துர்கை தேவிக்கு அபிஷேகம் அளித்து அந்த வாளியை திருத்தலத்திலேயே விட்டு விட்டு வருதலால் கிட்டும் பலன்கள் அமோகம்.

ஒவ்வொரு அடியாரும் ஒரு புது வாளியால் நீர் இறைத்தல் அவசியம், அது துத்தநாக வாளியாக இருத்தல் நலமே. துத்தநாக சக்திகள் அஷ்டபுஜ துர்கை மேல் அபிஷேகமாகப் பொலியும்போது அதனால் கிட்டும் அனுகிரக சக்திகள் இந்த உலகையே தீய சக்திகளிலிருந்து காக்கும் வல்லமை உடையது. இந்த இரகசியத்தையும் நமக்காக பரிந்து அளிப்பவரே ஸ்ரீஅரதத்தப் பெருமான் ஆவார். வாழ்க அரதத்தர் திருவடிகள் !!

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை கூவத்தூர்

கூவத்தூர் திருத்தலத்தில் உள்ள புனித தீர்த்தங்களில் நீர் இறைக்கும்போது புதிய வாளியுடன் ஒரு புதிய தேங்காய் நார் கயிற்றையே பயன்படுத்தும்படி அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காரணம் தேங்காய் நாருக்கு மட்டுமே பித்ரு லோகங்களுடன் தொடர்பு கொள்ளும் சக்தி உண்டு. அதனால் இங்குள்ள அஷ்டபுஜ துர்கைக்கு நீர் இறைத்து அபிஷேகம் இயற்றும்போது இந்த அபிஷேகத்தில் உங்களுடைய பித்ரு மூர்த்திகளும் பித்ரு பத்னிகளும் சேர்ந்து கொள்கிறார்கள் என்பதே நம் கண்ணுக்குத் தெரியாமல் நிகழும் அற்புதமாகும். இவர்கள் எளிதில் ஆவாஹனமாகி பக்தர்களுக்கு அருள்புரியும் சாதனமே தேங்காய் நார். எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் குந்திதேவி தீர்த்தம் இறைத்த அதே தீர்த்தக் கிணறுகளில் நீங்கள் இன்று நீர் இறைத்து துர்கை அம்மனுக்கு அபிஷேகம் நிறைவேற்றுகிறீர்கள் என்றால் இதற்கு நீங்கள் என்ன கைமாறு நம் சற்குரு தேவருக்கு அளிக்க முடியும் ? கூவத்தூர் திருத்தலத்தில் நாம் காண்பது ஏழு தீர்த்தங்கள் என்றாலும் அவரவர் மேற்கொள்ளும் நம்பிக்கையைப் பொறுத்து இந்த ஏழே கிணறுகளில் 70, 700, 7000 தீர்த்தங்களின் சக்தியைக் கூட நம் சற்குருவால் கொண்டு வர இயலும் என்பதை பக்தர்கள் மறந்து விட வேண்டாம். ஸ்ரீதர அய்யாவாள் திருவிசைநல்லூரில் தன் வீட்டுக் கிணற்றில் கங்கையைக் கொண்டு வந்த மகாத்மியத்தை நினைவு கூர்ந்தால் உங்களுக்கு அனைத்தும் புரிந்து விடுமே. இந்த தீர்த்தங்களில் ஊறவைத்த மஞ்சள் கிழங்குகள் ஒன்றிரண்டை இங்குள்ள அம்மியில் அரைத்து பொடியாக்கி துர்கை அபிஷேகத்திற்கு அளிப்பதும் ஏற்புடையதே. முற்றிய தேங்காய்களில் மஞ்சள் தடவி இதை கூவத்தூர் ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வ மூர்த்திகளுக்கும் அர்ப்பணித்து பின்னர் இந்த தேங்காய்களை உடைத்து அந்த தீர்த்தத்தை துர்கை தேவியின் அபிஷேகத்திற்கு அளித்தபின் அந்த தேங்காய் மூடிகளில் பசு நெய் நிரப்பி பஞ்சு திரியிட்டு துர்கை சன்னதியில் விளக்கேற்றி வைத்து வழிபடுதலால் கிட்டும் பலன்கள் அமோகம். நாரிகேள தீபம் என்று கூவத்தூரில் மட்டும் ஏற்றக் கூடிய இந்த அபூர்வ தீபமானது இங்குள்ள அனைத்து தீர்த்த சக்திகளையும் ஈர்த்து அதை பக்தர்களுக்கு மட்டும் அல்லாது இந்த பிரபஞ்சத்திற்கே உரிய சுக்ர பிரவாள சக்திகளாக அருளும் என்பதே நாம் அறியா இரகசியம் ஆகும். சுக்ர பிரவாள சக்திகள் என்பவை பூலோகத்தில் தொடர்ந்து நிகழும் கிரக சஞ்சாரங்களால் ஏற்படும் தீய விளைவுகளை களையக் கூடிய தெய்வீக சக்திகளைக் கொண்டிருப்பதால் எதிர்காலத்தில் வரப் போகும் பல தொற்றுநோய்களுக்கு இந்த சுக்ர சக்திகள் தீர்வாக அமையும். இந்த பிலவ வருடத்தில் குறிப்பாக ஆவணி மாதத்தில் நிலவும் பகுள சக்திகள் பல தொற்றுநோய்களை எளிதில் தீர்க்கும் சக்தி பெற்றிருப்பதால் இதன் முன்னோடியாக கூவத்தூர் திருத்தலத்தில் அஷ்டபுஜ துர்கை தேவிக்கு இயற்றும் அபிஷேக ஆராதனைகள் அற்புத நோய் நிவர்த்தி சக்திகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை. கூவம் என்றால் நற்சக்திகள் செறிந்துள்ள, பெருகியுள்ள, அடர்ந்திருக்கும் திருத்தலம் என்ற பொருள் உண்டு. இந்த பிரபஞ்சம் அனைத்திற்கும் நற்சக்திகளைத் தரவல்லது குசா சக்திகள் என்பதில் எந்த ஐயப்பாடும் கிடையாது. இந்த குசா சக்திகள் செறிந்துள்ளதே கூவத்தூர் திருத்தலமாகும்.

ஏரகத்தில் எழுகூற்றிருக்கை

எட்டின் குசா எண் ஏழு அல்லவா ? எட்டு யானைகள், எட்டு அரவ சக்திகள் அடங்கிய துளசி மாடம் ஏழு எழுத்து உள்ள நாகபிருந்தம் எனப் பொலிகிறது. அஷ்டபுஜ துர்கை என்ற எட்டெழுத்து தேவிக்கு ஏழு கூவங்களிலிருந்து பெற்ற தீர்த்தத்தால் அபிஷேகம் நிகழ்த்துகிறோம். நா, ம் என்ற மெல்லின அட்சரங்கள் இடையே துலங்கும் பீடமானது ரு என்ற இடையின எழுத்தை மையமாகக் கொண்டு ருத்ரம் இடையில் துலங்கும் பஞ்சாட்சர சக்திகளுடன் விளங்குகின்றது. ஏழு புள்ளிகள் உடைய எட்டு கோலங்களை நாகபிருந்த துளசி மாடத்தின் எதிரே இட்டு ஒவ்வொரு கோலத்திலும் வெண்தாமரை, செந்தாமரை அல்லது வெள்ளல்லி, செவ்வல்லி மலர்களை ஜோடியாக ஒரு தாமரை இலை அல்லது அல்லி இலை மேல் வைக்கவும். ஸ்ரீஅஷ்டபுஜ துர்கைக்கு அபிஷேகம் நிறைவு அடையும் வரையில் இந்த நாகபிருந்தத்தை வலம் வந்து அபிஷேகம் நிறைவில் இந்த மலர்களுடன் உரிய மங்கலப் பொருட்களை சுமங்கலிகளுக்கு அளித்தலால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அஷ்டாட்சரன் (ஸ்ரீஆதிகேசவ பெருமாள்), நவவியாகரன் (ஸ்ரீஆஞ்சநேயர்) இவர்களுக்கு இடையே துலங்கும் நவராத்திரி நாயகி துர்கைக்கு அபிஷேகிப்பதால் கிட்டும் பலன்களை வர்ணிக்க யாரால்தான் இயலும் ?!

ஸ்ரீஆஞ்சநேயர் கூவத்தூர்

ஒரு முறை வைரம் போன்ற இயற்கை இரத்தினக் கற்களின் மகிமையைப் பற்றி நம் சற்குரு விவரித்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு அடியார், “வாத்யாரே, நான் ஒரு கடைக்கு சென்றிருந்தபோது அங்கு இருந்தவர் ஒரு ஜாதிக்கல்லின் மேல் தலை முடியைச் சுற்றி அந்த கல்லை நெருப்புக் குச்சியால் எரித்தபோது அந்த முடி சற்றும் கருகாமல் இருந்ததே ? இது சாத்தியமா ?” என்று கேட்டார். நம் சற்குரு, “இது ஒன்றும் அதிசயமல்ல. விலையுயர்ந்த கற்கள் பெரும்பாலும் நம் உடல் சூட்டை ஈர்த்துக் கொள்வதால்தான் ஜாதிக் கற்களுக்கு இணையான ஒரு பொருளை நாம் உலகில் எங்கும் காண முடியாது என்று சொல்கிறோம். இதற்காகத்தான் இத்தகைய விலையுயர்ந்த வைரங்களை தாங்களோ தங்கள் குழந்தைகள், மனைவிக்கோ போட்டு அழகு பார்ப்பதை விடுத்து அந்த வைரக் கற்களால் அமைந்த வைரக் கிரீடங்களை திருப்பதி வெங்கடசாலபதி போன்ற இறை மூர்த்திகளுக்கு சூட்டி அழகு பார்க்கின்றனர் அடியார்கள். சுவாமி இந்த வைரங்களால் ஒன்றும் மகிழ்ந்து விடுவதில்லை என்பது உண்மை ஆயினும் வைர நகைகள் அணிய முடியாத பலரின் ஆசைக் கனவுகள் தீர இத்தகைய வழிபாடுகள் துணைபுரிகின்றன. இத்தகைய ஆசைகள் முறைமுகமாக தீர்க்கப்படுவதால் சமுதாயத்தில் நிலவக் கூடிய வன்முறைகள் தடுக்கப்படுகின்றன. நெருப்பு படுவதால் பவளம் போன்ற கற்கள் அதிகப்படியான உஷ்ணத்தை ஈர்த்துக் கொள்கின்றன என்பதை விட இத்தகைய குளிர்ச்சியை ஜாதிக் கற்களிலிருந்து பெறும் தலைமுடி கருகாமல் குளிர்ச்சியாக இருக்கிறது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியம். இதை உணர்ந்தால்தான் தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் பழக்கத்தையும், வாரம் இருமுறை தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கும் தெய்வீக வழக்கத்தையும் மேற்கொண்டிருந்த நம் முன்னோர்களின் மேன்மை நமக்கு புரியவரும். இதை உணர்த்துவதே ஸ்ரீஆதிகேசவப் பெருமாளின் வழிபாட்டு மகிமைகளில் ஒன்றாகும். கூவத்தூரில் அஷ்டபுஜ துர்கைக்கு அபிஷேகம் இயற்றும்போது அல்லது இத்தலத்தை வலம் வரும்போது இங்கு அளித்துள்ள அருணகிரிநாதரின் ஓருருவாகிய என்று தொடங்கும் எழுகூற்றிருக்கை பாடலைப் பாடுதல் நலமே. ஏர் என்றால் அழகு, திருஏரகம் என்ற சுவாமிமலையில் அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் மந்திரத்தை கூவத்தூர் திருத்தலத்தில் பாடி கேச சக்திகளைப் பெருக்கிக் கொள்வதால் முகமும் அகமும் மலரும் வழிபாடாக இது புலரும் என்பதில் ஐயமில்லை.

ஒரு முறை நம் சற்குரு பௌர்ணமி அன்னதானத்திற்காக ஓரிரு நாட்கள் முன்னதாகவே வந்து விட்டார். அப்போது ஒரு அடியாரும் அங்கு இருந்தார். சென்னையிலிருந்து வந்த களைப்பில் சற்குருவின் தர்மபத்தினி ஹாலில் வெறுந்தரையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். அன்னதானத்த்திற்கான ஏற்பாடுகளில் ஒன்றாக ஹால் முழுவதும் சுத்தமாக அலம்பி விடப்பட்டிருந்தது. சுத்தமான சூழ்நிலை துலங்கிய அந்த சுற்றுப்புறத்தை நினைத்துக் கொண்டிருந்தபோது திடீரென்று நம் சற்குரு எழுந்து நம் அடியார் ஆஸ்ரமத்தின் உள்ளே கழ்ற்றி வைத்திருந்த ஒரு செருப்பை எடுத்துக் கொண்டு வேகமாக தன் மனைவியை நோக்கிச் சென்றார். அந்த அடியாருக்கும் ஒன்றும் புரியவில்லை. வேகமாகச் சென்ற நம் சற்குரு தன் மனைவியில் அருகில் சென்று ஓங்கி தரையில் செருப்பால் அடித்தார். அப்போதுதான் அங்கு அருகில் வந்த அடியாருக்கு நம் சற்குரு ஒரு தேளை அடித்தார் என்பது தெரிய வந்தது. இந்த களேபரத்தில் நம் சற்குருவின் மனைவியும் சப்தம் கேட்டு பாதித் தூக்கத்தில் எழுந்து கையில் செருப்புடன் இருக்கும் தம் கணவரையும், செருப்படியால் இறந்து கிடந்த அந்தத் தேளையும் பார்த்து பதறிப் போய் விட்டார்கள். ஒரு வேளை தூங்கிக் கொண்டிருக்கும் நம்மை அந்தத் தேள் கொட்டியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே அவரால் முடியவில்லை. காரணம் திருஅண்ணாமலை என்பதால் தேளின் உருவமும் மலையளவு பெரியதாக இருந்தது. நம் சற்குருவோ அன்புடன், “ஏனம்மா, இப்படி பயப்படுகிறாய். அடியேன்தான் அந்தத் தேளைக் கவனித்து விட்டேனே, நீ பயப்படாதே ...”, என்று கூறி ஆறுதல் அளித்தார்கள். எத்தனையோ வருடங்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் ஒரு தேளுக்கு முக்தி அளிக்கும் அதே தருணத்தில் தன் அன்பு மனைவி, ஒரு அடியார், அந்த அடியார் போட்டிருந்த ஒரு செருப்பு இவை அனைத்திற்கும் அருள் வழங்கிய நம் சற்குருவின் கருணையை எப்படிப் புகழ்வது ? இமயத்தின் உச்சியில் இருக்கும் நம் சற்குரு ஒரு சாதாரண அடியாரின் செருப்பைத் தொட்ட அந்த நிகழ்ச்சியை நினைத்தால் இன்றும் அந்த அடியாரின் கண்களில் கண்ணீர் திரள்கின்றதாம். இத்தகைய ஒரு “கூவத்தை” உருவாக்க நம் சற்குருவைத் தவிர வேறு யாரால் இயலும் ?!

அமிர்தம் பொங்கும் நேரம்

17.8.2021 செவ்வாய்க் கிழமை அன்று அமையும் விஷ்ணுபதி புண்ணிய காலம் பல மகத்துவங்களைக் கொண்டது. இவற்றுள் தற்போதைய சூழ்நிலைக்கு பேரருளை அள்ளித் தருவதாக அமைவதே சூரியன் ஆட்சி கொள்ளும் இந்த ஆவணி மாதத்தில் அமையும் புண்ணிய காலமாகும். இத்தகைய ஒரு மகத்தான புண்ணிய காலத்தில்தான் சப்த ரிஷிகளும் திருத்தவத்துறை லால்குடியில் அருள்புரியும் சுயம்பு லிங்க மூர்த்தியிடம் அடைக்கலம் கொண்டு மறைந்தனர். மறைந்தனர் என்றால் சப்தரிஷிகளின் அருட் சக்திகள் இனி யாவருக்கும் நேரடியாகப் பயன்படாது என்று பொருள் கொள்வதை விட, சப்தரிஷிகளின் திருஅருள் சூட்சுமமாக இப்பிரபஞ்சம் அனைத்திற்கும் அருள் தரும் சிவப் பெட்டகத்தை சென்று சேர்ந்தது என்பதே சித்தர்கள் சுட்டிக் காட்டும் இரகசியமாகும்.

அமிர்தத்தில் ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர்
லால்குடி

இன்று உலகம் அனைத்தையும் பயமுறுத்தும் தொற்று நோய்கள் என்பவை அமிர்த சக்திகளின் குறைபாட்டால் ஏற்படுவதாகும். அமிர்த சக்திகள் பல்கிப் பெருகும் திருத்தலம், அமிர்த சக்திகளுக்கெல்லாம் தலைமைப் பீடம், அமிர்த சக்திகளின் பிறப்பிடமே லால்குடி என்றால் மிகையாகாது. இத்தகைய ஓர் அற்புதத் தலம் நம் பூலோகத்தில் இருக்கும்போது எந்த உடல் வியாதியோ, மன வியாதியோ நம்மை மிரட்ட முடியுமா ? வியாதிகளைக் கண்டு நாம் நடுங்குகிறோம் என்றால் லால்குடி திருத்தலத்தின் மகத்துவத்தைப் பற்றியோ அங்கு எக்காலமும் சுரக்கும், பல்கிப் பெருகும் அமிர்த சக்திகளைப் பற்றியோ நாம் சிறிதேனும் தெரிந்து கொள்ளவில்லை என்பதே பொருள். லால்குடியின் தீர்த்தமான சிவகங்கை சிவபெருமானின் ஜடாமுடியிலிருந்து தோன்றியதே. சிவபெருமான் பூலோக வாசம் கொண்டபோது இறைவனுடன் தோன்றிய தீர்த்தங்களே திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இவ்வாறு சிவகங்கை என்னும் அரிய நாமத்தைக் கொண்டு விளங்குகின்றன. முற்காலத்தில் தர்ப்பண வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்ற இத்தீர்த்தம் தற்போது பக்தர்களின் அசிரத்தையால் மறக்கப்பட்டு விட்டது என்றே சொல்லலாம். இங்கு தர்ப்பண வழிபாடுகளை மீண்டும் தொடர்தலால் பல தலைமுறைகளுக்கு விட்டுப் போன பித்ரு வழிபாட்டுப் பலன்களையும் எளிதில் பெறலாம். சப்தரிஷிகளுக்கு தர்ப்பணம் அவசியமா என்ன ? பல லோகங்களை சங்கல்ப மாத்திரத்தில் உருவாக்க வல்லவர்களே சப்தரிஷிகள். இருப்பினும் வரும் தலைமுறையினருக்கு ஒரு முன்னோடியாக இருக்கும் வண்ணம் சப்தரிஷிகளே இந்த சிவகங்கையில் தர்ப்பண வழிபாடுகளை ஒரு மண்டல காலத்திற்கு இயற்றி அதன் பின்னரே சுயம்புலிங்க மூர்த்தியிடம் ஐக்யம் அடைந்தனர் என்றால் இந்த உத்தமர்கள் அமர்ந்து தர்ப்பணம் இயற்றிய இந்த குளக்கரையில் மனிதர்களாகிய நாமும் அமர்ந்து நம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளித்தல் எத்தகைய கிடைத்தற்கரிய பேறு ? லால்குடி திருத்தலத்தின் மகிமையைப் பறை சாற்றுவது சிவகங்கை தீர்த்தம் மட்டுமல்ல, இங்கு பொலியும் காயத்ரீ ஆறும்தான்.

ஸ்ரீவீணாதர தட்சிணாமூர்த்தி
லால்குடி

சிவகங்கையில் தற்போது நீர் வறண்டிருப்பதுபோல் தோன்றினாலும், காயத்ரீ ஆறு கழிவு நீர் நிறைந்த சாக்கடையாக மாறிவிட்டாலும் இத்தல ஈசன் தன் அருளை வாரி வழங்கிக் கொண்டுதானே இருக்கின்றார். எனவே சிவகங்கையில் நீர் இல்லாவிட்டாலும் அவரவர் இல்லங்களிலிருந்து கங்கை, காவிரி போன்ற புனித தீர்த்தங்களைக் கொண்டு வந்து இங்கு தம் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது சிறப்பே. விஷ்ணுபதி புண்ணிய காலம், ஷன்னவதி தர்ப்பண நாட்கள், அமாவாசை, செவ்வாய்க் கிழமை போன்ற நாட்களில் இக்குளக்கரையில் அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் புருஷசூக்தம் போன்ற சூக்த மந்திரங்களை ஓதுதல் சிறப்பாகும். சூக்த மந்திரங்கள் அறியாதோர்
ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்த்தனம்
உர்வாருகமிக பந்தனான் ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்ற ம்ருத்யுஞ்சய மந்திரத்தை ஓதுதலும் சிறப்புடையதே. இத்தகைய வழிபாடுகளின் நிறைவாக ஏழு அமிர்த சக்திகள் நிறைந்த உணவுப் பொருட்கள் கலந்த அமிர்த பாயசத்தை இங்கு தானமளித்தல் சிறப்பாகும். பசும்பால், வெல்லம், தேன், குங்குமப்பூ, ஏலக்காய், பாதம்பருப்பு, சுக்கு என்ற ஏழு அமிர்த சக்திகளுக்கும் வெவ்வேறு பலன்கள் உண்டு. இத்தகைய அமிர்த சிரஞ்சீவ சக்திகள் ஸ்ரீசப்தரிஷி ஈசனுக்கு நைவேத்யமாக அளிக்கப்பட்டு பக்தர்களுக்கு தானமாக அளிக்கப்படும்போது அதன் மகிமையை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஒரே ஒரு வாய் சிவகங்கை தீர்த்தம் பருகிய மன்னன் ஒருவனைப் பீடித்திருந்த குஷ்டரோகமே ஒரு நொடியில் மறைந்து விட்டது என்றால் இத்தகைய குளக்கரையில் அளிக்கும் தானத்தின் மகிமை எப்படி இருக்கும் ? லால் என்றால் சிவப்பு நிறம், குடி என்றால் பருகு எனப் பொருள். லால்குடி என்றால் சிவப்பு நிறத்தில் பொலியும் அமிர்தத்தை அருந்து என்று பொருள். இத்தகைய ஒரு நிலையான, சாஸ்வத அமிர்த சக்திகளை அனுகிரகமாக அளிக்கக் கூடியவரே இங்கு அருள்புரியும் ஸ்ரீவீணாதட்சிணா மூர்த்தி.
திருமணங்களின்போது நிறைவேறும் சப்தபதி என்ற நிகழ்ச்சிக்கு அதீதமான சக்திகள் உண்டு. அதனால்தான் ஒரு இந்து திருமணம் என்பது மாங்கல்ய தாரணத்தில் நிறைவு பெறுவதில்லை, அது சப்தபதி நிறைவேறிய பின்னர்தான் பூரணம் அடைகின்றது என்ற சட்டைத்தையே ஏற்படுத்தினார்கள். அந்த அளவிற்கு திருமணத் தம்பதிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வைபவமாக இது அமைகின்றது. இந்த வைபவத்தில் மங்கை கையை மணாளன் பற்றி தம்பதிகள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் ஒவ்வொரு கணபதி மூர்த்தியின் இறைசக்தியே அவர்களை அடைந்து கவசமாய்க் காக்கின்றது. அந்த சப்தபதி கணபதி மூர்த்திகளை லால்குடி அன்றி வேறு எந்த தலத்திலும் காண இயலாது என்பதே இந்த சப்த கணபதி மூர்த்திகளின் மகாத்மியமாகும். அவ்வாறு திருமண வைபவங்களில் சப்தபதி நிகழ்ச்சியை நிறைவேற்றாத தம்பதிகளுக்கும் அருள்புரியும் முகமாகவே இங்கு சப்தகணபதி மூர்த்திகளை நோக்கியவாறு கோஷ்டத்தில் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி உள்ளார். இவ்வாறு பெருமாள், அபூர்வமாய் இரு தட்சிணா மூர்த்திகள் என்றவாறு குறைந்தது 19 மூர்த்திகள் எழுந்தருளிய கோஷ்டத்தின் கோட்டமாகவே லால்குடி துலங்குவதால் இதன் மகிமையை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். அடிப் பிரதட்சிணம், கிரிவலம், சோமசூக்த பிரதட்சிணம் என்றவாறெல்லாம் வழிபாட்டு முறைகள் இருப்பது போல் லால்குடி திருத்தலத்தில் திகழும் அபூர்வ அமிர்த சக்திகளை பக்தர்கள் பெறுமாறு அமைந்த அமிர்த கோட்ட வலம் என்ற முறையை சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். கொடி மரத்தின் அருகிலுள்ள நந்தி மூர்த்தியை வணங்கிய பின்னர் திருக்கோயிலின் உள்ளே நுழைந்து ஸ்ரீஆதிரை கணபதி மூர்த்தியை வணங்கி, பின்னர் அனைத்து கோஷ்ட மூர்த்திகளையும் வணங்கி, இரண்டாவது சுற்றில் ஸ்ரீகன்னி மூலை கணபதியை வணங்கி, மூன்றாம் சுற்றில் உள்ளே நுழைந்து ஸ்ரீசப்தரிஷி ஈசனை வணங்கி, பின்னர் நான்காம் சுற்றில் சண்டிகேஸ்வரருக்கு இந்த வழிபாட்டு பலன்களை எல்லாம் அர்ப்பணித்து, பின்னர் ஐந்தாம் சுற்றில் சப்தரிஷிகளை வணங்கி நன்றி தெரிவித்தலே லால்குடியில் இயற்றக் கூடிய அரிய அமிர்த கோட்ட வலமாகும்.

ஸ்ரீகௌதம புத்தர்

கோடி கோடியாய்ப் பெருகும் இந்த கோட்ட வலத்தின் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது எனினும் ஓரளவே இதன் மகிமைகளை இங்கு அளிக்கிறோம். வாசி என்பது இறைமூர்த்திகள், தேவதைகள், மனிதர்களைச் சுற்றி தலையில் ஒளி வீசும் அருள் வட்டமாகும். இந்த ஒளி வட்டத்தைப் பெருக்க மனிதர்களுக்கு உதவி புரிவதே வாசியோகமாகும். ஆரம்பத்தில் மூச்சை அடக்கி வாசி கலையின் மூலம் இந்த ஒளி வட்டத்தைப் பெருக்க முயற்சி செய்தாலும், இயற்கையாகவே வாசி அடங்குவதே இந்த ஆரா (aura) என்னும் ஒளிவட்டத்தை எல்லையில்லாமல் பெருக்கும் தெய்வீக வழிபாடாகும். இவ்வாறு இயற்கையாகவே தங்கள் ஒளி வட்டத்தைப் பெருக்கிக் கொண்ட உத்தமர்களே தற்காலத்தில் நாமறிந்த கௌதம புத்தரும், வள்ளலார் சுவாமிகளும் ஆவர். இந்த உத்தமர்கள் தங்களுடைய ஒளி வட்டத்தை முற்பிறவிகளில் பெருக்கிக் கொள்ள உதவிபுரிந்த தலமே லால்குடி என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கக் கூடிய உண்மைதானே. கௌதம புத்தரின் ஒளி வட்டம் 30 மைல் தூரத்திற்கு பரவியிருந்ததாம். இதை விடவும் அதிகமாகப் பெருக்குவது லால்குடி திருத்தல வழிபாட்டில் சாத்தியமே என்றாலும் தான் இவ்வாறு ஒளி வட்டத்தைப் பெருக்குவதை விட மற்ற மானிடர்களும் தங்கள் ஒளி வட்டத்தைப் பெருக்கிக் கொள்ள தன்னுடைய உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்தவரே கௌதம புத்தராவார். வாசி என்பதன் மறுதலை சிவா. இதை உணர்த்துவதே அனைத்து மதங்களின் அடிப்படைத் தத்துவம், லால்குடி திருத்தலத்தில் அமையும் வழிபாடுகளின் மகிமையும் இதுவேதான். வாசி என்பது ஒடுங்க வேண்டியது, ஆத்மாவில் இலயம் ஆக வேண்டியது, வாசி ஒடுங்கிய ஆன்ம சக்தியே சிவ சக்தியாக, திருவாசி ஒளிப் பிழம்பாக ஒளிவிடும், பிரகாசிக்கும். இதுவே சித்தர்கள் சுட்டும் மரணமில்லாப் பெருவாழ்வு.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam