எண்ணத்தை அழிப்பதே அக்னியின் வண்ணம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்

சித்தர்களும், மகான்களும் மீண்டும் மீண்டும் பூலோகத்தில் இறையாணையாகப் பல வடிவுகளில் சற்குருமார்களாகத் தோன்றி, தம்மை நம்பிச் சரண் அடைவோரைக் கரையேற்றுகின்றார்கள். யுகங்கள் மாற, மாற, மக்களுடைய ரசனைகளும், பக்தி நிலையும் மாறி வருவதால், இறைவனும் தம்முடைய இறைத் தூதுவர்களை விதவிதமான வடிவுகளில் அனுப்புகின்றார். எனவேதாம் இடியாப்ப சித்தர், படேசாஹிப், சதாசிவ பிரம்மேந்திரர், ஷிர்டி சாய்பாபா போன்ற மகான்களும், சித்தர்களும் விதவிதமான ரூபங்களில் வருகின்றனர். சித்தர்களிடம் நேரடியாகவே குருகுலவாசம் பெறுதல் என்பது மகாபாக்யமான இறைப் பெருங் கருணையாகும். இத்தொடரில் நீங்கள் உளமாற ஆனந்திக்கின்ற அனுபூதிகள் யாவும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருவாம் பிரபஞ்சத்தின் தலைசிறந்த சூக்கும வடிவுக் காரணச் சித்தர்களில் ஒருவராம் நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈசரிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகளாம்! எத்தனையோ யுகங்களாகத் தொடர்கின்ற குருசிஷ்யப் பிரபந்தங்களாம்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

வேண்டாமே வெறுநிழல்!

ராயபுரத்தில் ஒரு பழைய போட்டோக்காரர் ஒருவர் இருந்தார். அவர் அடிக்கடி பெரியவரைச் சந்திக்க ராயபுரம் கல்மண்டபம் அங்காளி ஆலயத்திற்கு வருவது உண்டு. ஒவ்வொரு முறையும், “ஒரே ஒரு போட்டோ எடுத்துக்கறேன் சாமி!” என்று கெஞ்சிக் கூத்தாடுவார்! ஊஹும், பெரியவர் சற்றும் அசைந்து கொடுத்ததில்லை!

அவர் கெஞ்சிக் கூத்தாடக் காரணம் என்ன? அவராகவே பெரியவருக்குத் தெரியாமல் ஒரு க்ளிக் அடித்து “போட்டோ” எடுத்து விடுவதுதானே! இவ்வாறு க்ளிக் செய்து பன்முறை நஷ்டத்தில் மாட்டிக் கொண்டு “பாடம்” பெற்றமையால்தான் இந்தக் “கெஞ்சல் படலமே” தொடங்கிற்று!

மேலும் அக்காலத்தில் தற்போது போல் ‘க்ளிக்’ வகைக் காமராக்கள் கிடையாது. ஒரு பல்பை ஒளிரவிட்டு போட்டா எடுப்பார்கள். ஒரே ஒரு முறைதான் அந்த பல்ப் எரியும்! பிறகு வேறு பல்புதான்!

அங்காளி ஆலயத்தில், திருவிழாக்களில் நிறைய ஜனங்கள் வந்திட, பெருங் கூட்டமாக இருக்கும். அல்லது பல சமயங்களில் பெரியவரைப் பார்க்க ஒரு கூட்டமே திரண்டு வரும்! மீனவர்கள்பால் பெரியவர் பெரும் அன்பு பூண்டிருந்தார். அவர்களிடையே சச்சரவுகள் வரும்போதெல்லாம் அவ்வப்போது பஞ்சாயத்து வைத்து சமுதாயத்தில் அமைதியை நிலை நாட்டி வந்தார் பெரியவர். இத்தகைய கூட்டமான தருணங்களில், இதுதான் சமயமென்று கூட்டத்தோடு கூட்டமாக அவரைப் போட்டோ எடுக்க முயன்றவர்கள் பலரும், பிலிமை கழுவும் போது, வெறுமனே அது கறுப்பாக இருந்தது கண்டு ஏமாந்து போய் ஆச்சரியம், அதிர்ச்சி அடைந்ததும் வெகு சகஜமாக நிகழ்ந்தது!

ஆவூர்

நிழல் நிஜமாகவில்லை!

இந்தப் பழைய போட்டாக்காரரும் அத்தகைய கூட்டம் நிறைந்த சமயங்களில் நைஸாக எத்தனையோ முறைகள் முயற்சித்தார். பல பிலிம் ரோல்கள்தாம் நஷ்டமாயின!

ஒருமுறை….  வெகு தைரியமாக அங்காளி சன்னதி முன் பெரியவரை போட்டோ எடுக்க அவர் முயற்சித்த போது பட்பட்டென்று பல்ப் வெடித்துப் படுநஷ்டமாயிற்று. பயன்படுத்துவதற்காகப் பக்கத்தில் வைத்திருந்த புது பல்புகளும் படபடவென்று வெடித்தன! அனைத்தும் வெளிநாட்டு பல்புகள்! போட்டா கிராபருக்குப் பலத்த நஷ்டம்!

இதையெல்லாம் கண்டும் காணாதிருந்த பெரியவர், கோயில் விழா முடிந்ததும், அந்த போட்டாக்காரரை அழைத்து, “என்ன நைனா, அங்காளி முன்னாடி ஏம்பா இந்த விஷப் பரீட்சை எல்லாம்? நீ ஏன் இப்படி நஷ்டப் படணும்? இந்த உடம்பு எதுலேயும் விழுகாதுடா கண்ணு! இந்தா முப்பது ரூபாய்! பல்ப் நஷ்டமானதுக்கு வச்சுக்கோ! இனிமே என்னைக் கேட்காம போட்டோ எடுக்கக் கூடாது, தெரிஞ்சுதா?”

கேட்டால் கிடைக்குமா?

ஒரு விதத்தில் போட்டாக்காரர் ஏமாற்றம் அடைந்தாலும் “என்னைக் கேட்காமல்” என்று பெரியவர் ஒரு Clause இட்டமையால் அன்றிலிருந்து பிள்ளைப் பூச்சியாய்ப் பெரியவரைக் “கேட்டுக் கேட்டு” நச்சரிக்க ஆரம்பித்து விட்டார்!

சிறுவனுக்கும் பெரியவருடைய போட்டோ ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்று துடிதுடிப்பு ஏற்பட்டு விட்டது. காரணம், தற்போது பெரியவர் எப்போதாவது வந்து போவதும், தான் ‘மறையும் நேரம் வந்து விடும்’ என்று அடிக்கடி பயமுறுத்திக் கொண்டிருப்பதும் பெரும் காரணமாயிற்று!

ஆனால் துறைமுகத்தில் கப்பலில் வந்திறங்கும் வெளிநாட்டுப் பயணிகளிடமோ லத்தீன், பிரெஞ்ச், ஜெர்மன் என்று பல மொழிகளில் பேசி அவர்களை அசத்திய பெரியவர், மிகவும் வற்புறுத்தினால் மட்டும் அவர்களுடன் சேர்ந்து குரூப் போட்டோ எடுத்துக் கொள்வார்!

“இதற்கு மட்டும் சரி என்று சொல்பவர், லோகலில் போட்டோ எடுத்துக் கொள்ள மறுப்பதேன்!” என்று புலம்புவான் சிறுவன்! ஒரு நாள் இதனை நேரடியாகவும் கேட்டு விட்டான்.

“அதுவா, அவங்களுக்கு நான் யாருன்னே தெரியாதுடா? ஏதோ வெத்து வேட்டு! ஒரு வேலையும் இல்லாதவன்! ஒரு டூரிஸ்ட் கைடுன்னு மட்டும் நெனக்கறதுனால அதுல எனக்கு ஒரு பிரச்னையும் இல்லையே! இங்க சும்மா இருக்க மாட்டாங்களே! போட்டோவை வச்சுக் கும்பிட்டுப் புலம்பித் தீர்த்துடுவாங்களே! இது மறையற கட்டையப்பா! இதை போட்டோ புடிச்சு வச்சு என்ன பண்றது?”

சிறுவனும் வெளிநாட்டுப் பயணிகளைத் துரத்தி, வலை போட்டு அலசி அவர்களுடைய குரூப் போட்டோவை எட்டி எட்டிப் பார்ப்பான்! பெரியவர் நின்ற இடம் பெரும்பாலும் blankஆக இருக்கும்! அல்லது ஒன்றிரண்டில் மட்டும் கோவணாண்டிப் பெரியவர் சூட்டும், கோட், டையுமாகப் பளிச் சென்று இருப்பார்! கோவணாண்டியாக போட்டோ எடுக்கும்போது நின்றவர் எப்படி சூட்டு, கோட்டில் நுழைந்தாரோ? யாரறிவார்?

‘எப்படியாவது ஒரு போட்டோவையாவது அவர்களிடம் இருந்து தள்ளிக் கொண்டு வந்து விட வேண்டும்’ என்ற திட்டம் போட்டான் சிறுவன்! ஒன்றும் பலிக்கவில்லை! பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டவர்கள் எடுத்த அத்தகைய போட்டாக்கள் இன்றும் பல நாடுகளின் துறைமுக archives galleryல் இருக்கின்றன. பாக்யம் உள்ளவர்களுக்குப் பெரியவரின் போட்டோ தரிசனம் கிட்டும்!

யாம் பெற்ற குருவருள் யாவரும் பெறுகவே!

ஒருநாள்… அந்தப் பழைய போட்டோகிராபர் ஒரு பெரிய கூட்டத்தையே தன்னுடன் அழைத்து வந்தார்! “பெரியவரே! இவங்களுக்குள்ளாற ரொம்ப வருஷமா ஏதோ பிரச்னையாம்! அம்பது, அறுபது வருஷமா கோர்ட்டு, தகராறு, கத்தி, கபடான்னு ஏதாச்சும் சண்டை வந்துக்கிட்டே இருக்காம்! நிறையப் பேருங்க ரெண்டு குரூப்லேயும் செத்துப் போயிட்டாங்க! இருக்கற தலைமுறையாவது ஒழுங்கா வாழட்டும்! இவங்களுக்கு ஏதாச்சும் நல்ல வழி சொல்லுங்க பெரியவரே!”

பெரியவர் அந்த போட்டாகிராபரின் நல்ல எண்ணம் கண்டு ரொம்பவும் சந்தோஷப்பட்டார்! “சுயநலமா இல்லாம இந்த மாதிரி சமுதாய ஒற்றுமைக்குன்னு உண்மையா பாடுபடணும்டா! இவங்க எல்லாம் மெட்ராஸுலேந்து ரொம்ப தூரம் தள்ளி நெல்லூர்ப் பக்கம் இருக்காங்க! அவங்களுக்கும் இந்த போட்டோ ஆளுக்கும் சம்பந்தமே இல்லை! ஆனா இந்த ஏழைங்க மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு அடிக்கடி வந்து காசைக் கரியாக்குறாங்களேன்னு அவனுக்கு பதைபதைப்பு! நேரே இங்கே அங்காளி கிட்டே கூட்டியாந்துட்டான்! சரி, சரி அவங்க சாப்பிடறதுக்குச் சொல்லி வச்சுட்டு வா! போ!” என்று சிறுவனிடம் கூறிய பெரியவர் ஸ்ரீஅங்காளியைப் பன்முறை வலம் வர வைத்து அவர்களை வயிறு நிறைய உண்ண வைத்தார்.

பிறகு அன்புடன் அங்காளி ஆலயக் கொடி மண்டபம் அருகே அமரச் செய்து அரைகுறைத் தெலுங்கில் “மாட்லாடி”, “கட்டைப் பஞ்சாயத்து” நடத்தி வைத்தார். உரிய வக்கீல் பீசையும் அவர்களிடம் கொடுத்து, “இப்பவே போய் நீங்க, ரெண்டு பார்ட்டியுமே கேஸை கோர்ட்லேந்து வாபஸ் வாங்கிடணும்! உடனே செய்யணும்! இல்லாட்டி மனசு மாறிடும்! இனிமே கோர்ட் பக்கமே யாருமே தலையெடுத்து வைக்கக் கூடாதுன்னு சத்தியம் செய்யணும்! தெரிஞ்சுதா சேதி?” என்றும் கூறி அறிவுறுத்தினார். அனைவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.

கொட்டையூர்

நிழல் நிஜமாயிற்றே!

பெரியவர் போட்டோக்காரரை அழைத்தார்.

“ஏண்டா கண்ணு! காமிரா கொண்டு வந்துருக்கியா, என்னை ஒரே ஒரு போட்டா எடுத்துடேன்!” போட்டோகிராபருக்கு உலக சந்தோஷம்! அவரால் நம்பவே முடியவில்லை! விழுந்தடித்துக் கொண்டு ஓடிப் போய், ரிக்ஷாவில் இரண்டு மூன்று முறை வந்து எதை எதையோ எடுத்து வந்தார். ஒரு வழியாய்ப் பெரியவரை போட்டோ எடுக்கும் படலமும் துவங்கிற்று!

“இத பாருப்பா, ஒரு வாட்டிதான் போட்டோ எடுக்கணும்! அதுக்கு மேலே கூடாது!”

“சரி, சரி!” என்ற போட்டோகிராபர் பல்பை எரிய வைத்துக் கொண்டு ஒரு போட்டோ எடுத்தார்!

“எதுக்கும் சந்தேகத்துக்கு இன்னொரு வாட்டி போட்டோ எடுக்கறேனே பெரியவரே!”

பெரியவர் எதையோ சொல்ல வந்தார். அதற்குள் போட்டோகிராபர் மற்றொரு போட்டோவை எடுக்க யத்தனித்திடவே…

படீரென்று பல்ப் வெடித்தது! பெரியவர் சிரித்தார்! போட்டோக்காரர் புரிந்து கொண்டார்!

திரும்பிப் பார்த்தால், பெரியவர் வேகமாக நடக்கலானார்! சிறுவன் பின்னால் ஓடினான்!

“ஏன் வாத்யாரே! திடீர்னு உனக்கு இன்னிக்கு நல்ல மனசு வந்துடுச்சு!”

“என்னடா பண்றது, இனிமே அந்த போட்டோக்கார ஆளைப் பார்ப்போமோ, இல்லையோ, யாருக்குத் தெரியும்?” சிறுவனுக்கு பகீரென்றது!

சொல்லும் போது பார் எனை!

மறுநாள் மாலை, யாரோ ஒரு பையன் ஒரு கவரைக் கொண்டு வந்து பெரியவரிடம் கொடுத்தான்..

“அந்த போட்டோக்காரர் நேத்தி சாய்ந்தரம் ரொம்பவும் அமைதியாக காலமாயிட்டாரு! காலையில் கடைசியா இந்த போட்டாவைத்தான் கழுவினாரு! “இதை பத்ரமா அங்காளி கோயில் பெரியவர் கிட்ட கொடுத்துடுன்னு சொல்லிட்டுப் போனாரு!”

பெரியவர் கவரைப் பிரிக்காமலேயே சிறுவனிடம் கொடுத்தார்!

“நீதானேடா போட்டோ போட்டோன்னு அலைஞ்சுக்கிட்டு இருந்தே! இந்தா வச்சுக்கோ! ஆனா…” பெரியவர் மேலே வானத்தைப் பார்த்தார்!

“நான் சொல்லும் போதுதான் இந்தக் கவரைப் பிரிச்சுப் பார்க்கணும், தெரிஞ்சுதா! அதுக்கு முன்னாடி முந்திரிக் கொட்டையாட்டம் பிரிச்சுடாதே!”

இப்படிச் சொன்ன பிறகு சிறுவன் அதைத் தொடுவானா என்ன? பிரித்து விட்டு அஞ்சு தலை நாகம் அதில் வந்து விட்டால்..!

ஆமாம், அதன் பிறகு அவன் என்ன செய்தான்? அவருடைய போட்டாவைப் பார்க்கும் பாக்யம் அவனுக்குக் கிட்டியதா?

சற்குருவின் குருகுல வாசம் என்றால் எத்தகைய அற்புதங்கள், லீலைகள் அனுபூதிகள் காணக் கிடைக்கின்றன!

ஆனால் ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள்! சில ஆண்டுகளுக்கு முன், அன்னதான சேவையில் இருந்த பல அடியார்களும் கோவணாண்டிப் பெரியவரை போட்டோ மூலமாகத் தரிசிக்கும் பேறு பெற்றார்கள்.. பிறகு..

தன்னைத் தானே அது மறைத்துக் கொண்டு விட்டதோ? யாரறிவார் குருபாதத் துளியன்றி!

சப்தங்கள்

பலவிதமான சப்தங்களின் இடையே வாழ்கின்ற மனித குலம்!

சப்தங்களின் ஊடே நாம் வாழ்வதால் நவதுவாரங்களும் நல்ல சப்த சக்திகளை அடைதல் முக்கியமானது! உணவு சக்திகளைப் போல சப்த சக்திகளும் நம்மை வாழ்விக்கின்றன! தலைவலி, தோல் நோய்கள் போன்றவை வரக் காரணமும் தீய சப்தங்களே!

நாம் பிறந்தது முதல் எத்தனையோ சப்தங்களை கேட்டுக் கொண்டே இருக்கின்றோம். ஒவ்வொரு விநாடியும் பலவகைப் பாடல்கள், இன்னிசை, கர்நாடக இசை, மேல் நாட்டு இசை, மின் விசிறி சப்தம், பறவைகளின் குரல், வாகனங்களின் சப்தங்கள், இடி, மின்னல் மற்றும் பிற வகையில் எழுகின்ற சப்தங்களும் நம்மை அடைந்து கொண்டே இருக்கின்றன!

எவ்வாறு ஒரு மனிதன் நல் வகையான உணவை உண்டு தன் உடலை ஆரோக்யமாக வைத்திருக்க வேண்டுமோ அதே போல, சப்த ரீதியாகவும் தன் நாடி, நாளங்களை வளமாக வைத்திருக்க வேண்டும். தான் பேசுகின்ற, கேட்கின்ற வார்த்தைகளால் இந்தப் பரவெளிக்கு நன்மையைக் கூட்ட வேண்டிய முக்கியமான கடமையும் ஆன்மீக ரீதியாக ஒவ்வொருவருக்கும் உண்டு. இதே போல ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும் அல்லது வார்த்தைகளைப் பேசும் போதும் மந்திரங்களை உச்சரிக்கும் போதும், சொற்களின் குணங்களைப் பொறுத்து, உங்கள் உடலுக்கு சப்த நாள வலிமையை ஊட்டுகின்றீர்கள் அல்லது ஊறு விளைவிக்கின்றீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!

வாய்மொழி, நன்மை பயக்கவே!

அநாவசியமான வார்த்தைகளை வெளி விட்டுப் பரவெளியின் புனிதத்தையும் பாழாக்கி, உங்கள் உடலில் சப்த நாளங்களின் ஆன்ம வலிமையையும் பாதித்திடக் கூடாது. ஒரு நாளில் ஒரு மனிதன் 25,000 வார்த்தைகளைப் பேசுகின்றான் என்றால் அவற்றில் எவ்வளவு அநாவசியமான வார்த்தைகளைப் பேசுகின்றான் என்பதைக் கழித்து, உண்மையாக, நன்மை பயக்கும்படிப் பேசிய வார்த்தைகளைக் கணக்கிட்டால்தான் எந்த அளவிற்கு அவன் பரவெளிக்கும், தன்னைச் சார்ந்த உலகிற்கும் பயன்படும் வகையில் வாழ்ந்து இருக்கின்றான் என்பது தெரிய வரும். ஒருவர் தம் ஆயுளளவும் உண்மையாக வாழ்வது கிடையாது! இறைப்பணிகள், சமுதாய இறைச்சேவைகள், சமுதாயப் பணிகளில் இருந்த காலமும், நன்மை தரப் பேசிய காலமும், உண்மையாக வாழ்ந்த ஆயுள்காலத்தை நிர்ணயிக்கும் அம்சங்களுள் அடங்கும்.

திங்கள் கிழமை மௌன விரதம் பூணுவீர்!

இதற்காகத்தான் அக்காலத்தில் மதிகாரகராகிய சந்திரனுக்கு உரித்தான திங்கட்கிழமை தோறும் மௌன விரதத்தைக் கடைபிடிப்பார்கள். அமாவாசையுடன் திங்கள் சேரும் நாளில் அரச மரத்தை 1008 முறை பிரதட்சிணம் வந்து இந்நாள் மௌன விரதம்  பூணுதலால் வாழ்நாளில் செய்த வாக்குக் குற்றங்கள், பொய்மை, வாக்குத் தவறுதல் போன்ற பாவ வினைகள் தீர நல்வழிகள் கிட்டும். சந்திர பகவான் ஆதிக்கம் செலுத்தும் நாள் ஆதலின், திங்களன்று மௌன விரதத்தை மேற்கொண்டால் உங்களுக்கு மன வலிமை அதிகமாகி நீங்கள் பேசுகின்ற வார்த்தைகளை அளந்தும் தெய்வீக சக்திகளை நிரவியும் பேசுகின்ற அளவிற்கு வாக்சக்தியைப் பெறுவீர்கள்! இதுவரையில் அநாவசியமாகப் பேசி காலத்தை விரயம் செய்ததற்கான பிராயச்சித்தம் கிட்டும். பேசுகின்ற வார்த்தைகளில் தெய்வீகம், பக்தி, இனிமை, கருணை, காருண்யம், நாணயம், பொ(ப)திந்திருக்க வேண்டும்.

தேர்த் திருவிழாவா, கிரிவலமா கூட்டமென ஒதுங்காதீர்!

பல்லாயிரக் கணக்கான மக்கள் கும்பாபிஷேகம், கிரிவலம், தேர்த் திருவிழா போன்றவற்றில் பங்கு கொள்ளும் போது அனைவரும் அண்ணாமலையானுக்கு அரோஹரா, ராமா, கிருஷ்ணா, சிவசிவா, கோவிந்தா கோவிந்தா என்றெல்லாம் குரல் கொடுக்கின்ற போதும் இறை நாமத்தை ஓதிப் பல்லாயிரத்தார் திரும்பவும் ஓதிடுவதால் சத்சங்க ஆன்ம சக்தி காரணமாக ஒவ்வொருவரும் பல்லாயிரக் கணக்கான முறை ஓதியதாக சித்ரகுப்த பகவான் இறை நாமக் கணக்கு எழுதுகின்றார். எனவே தேர்த் திருவிழாவோ, திருஅண்ணாமலை கிரிவலமோ, “கூட்டமாக இருக்கின்றதே, லட்சக்கணக்கான மக்கள் வருகின்றார்களே” என்று எண்ணி ஒதுங்கி விடாதீர்கள்! பல்லாயிரக் கணக்கான மக்களோடு ‘கோவிந்தா கோவிந்தா’, ‘அண்ணாமலையானுக்கு அரோஹரா’, ‘அண்ணாமலையானுக்கு அரோஹரா’ என்று சொல்லும்போது பல்லாயிரம் முறை இறைநாமம் ஓதிய புண்ணியம் கிட்டுகின்றது என்றால் கூட்டத்தைக் கண்டு விலகவா மனம் எண்ணும்! புண்ணியம் பல்லாயிரம் மடங்காய்ப் பெருகிட, பெறுதற்கு அரிய வாய்ப்புக்கள் நிறைந்த பாக்கியமல்லவா!

திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற போது, “அருணாசலா! அண்ணாமலையானுக்கு அரோகரா!” என்று ஒவ்வொரு முறையும் ஓதும்போது எத்தனை லட்சம் மக்கள் இதனை ஓதுகின்றார்களோ, அத்தனை லட்சம் முறை ஓதியதாகப் பலன்கள் பெருகி, இத்திருத்தலத்தின் மகிமை காரணமாகவும், சத்சங்க கிரிவல சக்திகள் காரணமாகவும், நீங்கள் அளப்பரிய புண்ய சக்திகளைப் பெறுகின்றீர்கள்!

இவ்வகையில் தாம் உண்மையில் திருஅண்ணாமலையை ஒரு முறை மிகவும் பக்தியுடன் கிரிவலம் வந்தாலே அதனுடைய பலாபலன்கள் பல கோடி ஜென்மங்களுக்கு விரிந்து பல கோடி தலைமுறைகளுக்கும் நன்மை பயப்பதாக இருக்கின்றது என்பதைக் கருத்தில் கொள்ளுங்கள்.

பசுமடத்துக் கோனார் சித்தர்

பசுமடத்துக் கோனார்ச் சித்தர் சிவராத்திரி

மாத சிவராத்திரி அருணாசல கிரிவலம். பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து, ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற சித்தர்களைக் காண இத்தொடரின் மூலம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

திருஅண்ணாமலையில், தற்போதைய கோசாலை, ஆடையூர் பகுதிகளில், ஒரு யுகத்தில், பல்லாயிரக் கணக்கான பசுமடங்கள் நிறைந்து விளங்கின. பால் மறத்த, கறவை நின்று போன பசுக்களை வதைத்திடாது, கோசாலைகளில் இட்டு அவற்றைப் பராமரிப்பதற்காக திரவியங்கள் நிலபுலன்கள், பொருட்களையும் தாராளமாகத் தந்திட்ட பண, மன குணவான்கள் அப்போது நிறைந்திருந்தமையால் மாதம் மும்மாரி பெய்து நாடு சுபிட்சமாக இருந்தது!

பசுதர்மம் பேணுதல் மக்கள் கடமையே!

பசுக்கள் அடிமாடாக வதைபட்டால், சமுதாயத்தில் துன்பங்கள்தான் பெருகும். மழை பொய்க்கும், நீர்வளம், நிலவளம் குறையும், எனவே பசு தர்மமே நாட்டிற்கு சுபிட்சம் தரும். இத்தகைய தெய்வீகமான பசு தர்மத்தை நிலை நாட்டிடவே, ஒரு சித்தர்பிரான் அருணாசலப் பகுதியில் தோன்றினார். கோசாலைகள் பல நிறுவி ஒவ்வொரு பசுவிடமும் மனமாரப் பேசி, அரவணைத்து, நீராட்டி, புல்லூட்டி, பால் கறந்து ஆலயத்திற்கு அளித்துப் பசுவளம் பேணிய அச்சித்தர்பிரானே பசுமடத்துக் கோனார் சித்தர் என அருட்காரணப் பெயர் பெற்றார்.

இவர் அமர்ந்து யோகம் புரிந்த இடத்தில் இனிய ஊற்று நீர் பெருகியது, நடந்த நிலத்தில் பயிர் வளம் கொழித்தது, தொட்ட பொருள் துலங்கியது! இவர் திருவிரல் பட்ட கல்லாப் பெட்டியில் பணம் கொழித்தது! பலரும் அவரைத் தத்தம் ஊர்களுக்கு, இல்லங்களுக்கு, நிலங்களுக்கு, வியாபாரத் தலங்களுக்கு அழைத்திட்டாலும், பசுமடமே தர்ம நற்கதியென நாள் முழுதும் அங்கேயே தங்கிக் கிடந்து பசுக்களைப் போஷித்தார்.

கோதூளித் திருநீறு கோடி தோஷம் தீர்க்குமே!

இவ்வாறு பல்லாயிரக் கணக்கான பசுக்கள் நிறைந்த இடமாகப் பொலிந்த தற்போதைய திருஅண்ணாமலை கோசாலைக் கிராமப் பகுதியே பல்லாயிரக்கணக்கான பசுக்களின் திருக்குளம்பு பதிந்த புண்ணிய பூமி! எனவே இன்றைக்கும் பலரும் கிரிவலப் பாதையில் கோசாலைப் பகுதி வந்தவுடன் (அடிஅண்ணாமலைக்கு முந்தைய கிராமம்) கோவாம்ருதப் பிரசாதமாக கோசாலை கிராமத் திருமண்ணை நெற்றியில் விபூதிப் பிரசாதமாக இட்டுக் கொள்வதும் உண்டு!

மகான்கள் உட்பட அனைவருக்கும் சோதனைகள் வருவதுண்டு அல்லவா! அப்பர் பெருமானும், சுந்தர் சுவாமிகளும் அடையாத சோதனைகளா என்ன? பசுமடத்துக் கோனார்ச் சித்தருக்கும் பல கடுமையான சோதனைகள் ஏற்பட்டன.

சோதனை மேல் சோதனைகளா?

பசுமடத்துக் கோனார்ச் சித்தர் நேரடியாகவே நடத்திய தர்மமிகு கோசாலைகளில் மாதந்தோறும் ஆயிரக் கணக்கான பசுக்கள் சேரச் சேர, பசுமடத்துக் கோனார்ச் சித்தரின் அற்புத நிர்வாகத்தில் பசுக்களின் எண்ணிக்கை பல்லாயிரமாய்ப் பெருகின! ஒவ்வொரு பசுவும் நூறு ஆண்டுகளுக்கு மேல் ஜீவிக்கலாயிற்று. எனவே உத்தமமான பசுப் பராமரிப்பால் நாட்டின் மழை வளம், நிலவளம், நீர்வளம், பயிர் வளம், நெய்வளம், தான்ய வளம் அனைத்தும் பெருகின., இதனைக் கண்டு பொறாமை கொண்ட பலரும் தம் பசுமடங்களில் பசுக்களின் எண்ணிக்கை குறைவது கண்டு கோபமுற்றுச் சித்தரைப் பற்றி அவதூறுகள் பேசி அவரை கோசாலை மடத்திலிருந்து வெளியேற்ற முனைந்தனர்.

தம்மேல் பொறாமையால் கசப்புணர்வு பெருகுவது கண்டு துயருற்ற பசுமடத்துக் கோனார்ச் சித்தர் தாமாகவே வெளி வந்து இதுவும் இறைச் சித்தம் போலும்! அருணாசலப் புனித பூமியில் ஓர் அற்புத கோசாலை இறையருளால் கிளைத்தது போலப் பிற இடங்களிலும் பசுதர்மம் பரவுதல் வேண்டும் என்பதும் இவ்வகையில் இறையாணை போலும்!” என எண்ணிப் பிற இடங்களுக்குச் சென்று பசுதர்மம் பற்றிப் பிரசாரம் செய்வராயினார்.

சித்தரின் பின்னால் சீர்மிகு ஆவினம்!

மன்னர் ஆட்சி நிலவிய காலமது! சித்தரின் அருப்பணியால்தாம் நாடெங்கும் பசுமடங்கள் பெருகின! பசுமடத்துக் கோனார்ச் சித்தர் கோசாலையை விட்டு வந்ததும், என்ன ஆச்சரியம்! அனைத்துப பசுக்களும், கன்றுகளும் அவரைத் தொடர்ந்து தேடி ஓடி வந்து விட்டன! சித்தர்பிரான் எங்கு சென்றாலும் அவர் பின்னால் சென்றன. இதைக் கண்டு அதிசயித்த பலரும் நாட்டு மன்னனிடம் எடுத்துரைத்தனர்.

மன்னரும் சித்தரை அழைத்து இவ்வாறு பசுக்குலமே அவர் பின் வரக் காரணம் கேட்டறிய, அவரும் “யாமறியோம் மன்னா! எனினும் அருணாசலத்தில் எமக்குக் காட்சியளித்த ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனின் வேய்ங்குழல் நாதம் இப்பசுக்களிடம் எப்போதும் உறைந்திருப்பதாக அடியேன் உணர்கின்றேன்! இதற்குரிய பொருளை ஸ்ரீகிருஷ்ணணே அளித்திடுவார்! அருணை வந்து தெளிவு பெறுவாய்!” என்றார். சித்தரைச் சோதிக்க விரும்பிய வேந்தன் அவரைத் தம் அரசாங்கப் பசுமடத்திற்கு இட்டுச் சென்றான். அரசனின் நிதிக் கட்டளையில் வரும் பசுமடம் அல்லவா! மேலும் அக்காலத்தில் ஒருவருடைய செல்வ வளம் அவரிடமிருக்கும் பசுக்களைக் கொண்டே நிர்ணயிக்கப்பட்டதால் பல கோசாலைகள் ஒன்று சேர்ந்தது போல் அரசப் பசுமடத்தில் பல்லாயிரம் பசுக்கள் நன்கு வளமுடன் பூரித்து இருந்தன.

பசுமடத்துக் கோனார்ச் சித்தர் தம் திருவாயால் வேணுகானம் எழுப்பிட, ராஜாங்க கோசாலையில் இருந்த அனைத்துப் பசுக்களும், ஆப்புகளையும், தளைகளையும் அறுத்துக் கொண்டு வந்து சித்தரின் பின்னால் ஆனந்தமாக வந்து நின்றன! அரசன் பக்தியுடன் பசுமடத்துக் கோனார்ச் சித்தரின் குருவடிகளில் வீழ்ந்து நமஸ்கரித்தான்!

சித்தரும், “வேந்தே! அடியேனைச் சோதிப்பதில் தவறில்லை! ஆனால் வேய்ங்குழலோன் வேணுகோபாலனை அல்லவா சோதித்து விட்டாய்! எனவே உன் நாட்டில் ஆநிறைவளம் மீண்டும் பெருக வேண்டுமானால், ஆட்சியைத் துறந்து திருஅண்ணாமலை ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவேணுகோபால சுவாமியைத் தொழுது, பன்முறை கிரிவலம் வந்து அருணாசல கோசாலைப் பசுமடங்களில் ஒரு மண்டலம் தங்கி, பசுக்களுக்கு நீராட்டி, உணவூட்டி, சாணி, கோமூத்திரம் கழுவி, பசுப் பராமரிப்பு செய்தால்தான் பசுதர்மத்தைக் குறைத்து மதிப்பிட்ட பாவங்கள் போகும்!” என்றிட மாமன்னனும் அவ்வாறே கோசாலையில் பசுதர்மப் பணிகள் புரிந்து உத்தம நிலைகளை அடைந்தார்! தவறிழைத்தோரும் சித்தரின் பெருமைகளை உணர்ந்து அவர்தம் திருவடிகளை நாடி, மீண்டும் அவரை கோசாலைக்கு அழைத்து வந்தனர்!

கோதுளியை நெற்றியில் திருமண்ணாக இட்டு கிரிவலம் வருவீர்!

இத்தகைய சிறப்புடைய வரும் மகாசிவராத்திரியானது பசுமடத்துக் கோனார்ச் சித்தர் பிரான் தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில் அருணாசல கிரிவலம் வரும் திருநாளாகும். பாக்யம் பெற்றோர் இன்று சித்தரின் தரிசனம் பெறுவர்!

இன்று பசுவின் திருவடிக் குளம்புகள் பட்ட மண்ணைச் சேகரித்து ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து நெற்றியில் திருநீறாக இட்டு, பசு, கன்றுடன் கிரிவலம் வருதல் (தோளில் கன்றினைச் சுமத்தல் விசேஷமானதாம்), பசுக்களுக்கு நீராட்டி உணவளித்தல், பசுவை வளர்ப்போர்க்கு உணவு, உடை, மற்றும் பல திரவியங்களைத் தானமாக அளித்தல், கோசாலைகளில் திருப்பணி செய்தல், ஆலயத்திற்குப் பசு, கன்று அளித்தல் போன்றவற்றோடு கோசூக்தம் ஓதியவாறு கிரிவலமும் வந்திட,

 1. பிறருடைய சொல்லால், செயலால் பாதிக்கப்பட்டு சொத்து, பதவி இழந்தோர் நன்னிலை பெறுவர்.
 2. பிறரால் சந்தேகம் கொண்டு பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர்.
 3. பதவி, தொழில் காரணமாகப் பிரிந்த பெற்றோர்கள், பிள்ளைகள் மீண்டும் குடும்பத்தில் இணைவர்.
 4. அடிக்கடி வயிறு வகை நோய் வாய்ப்படுகின்றவர்களும் தக்க குணம் பெறுவர்.
 5. சந்ததி விருத்திக்கு நல்வழி காட்டும்.

கோசூக்த மந்திரங்களை அறியாதோர் சம்பந்தர் பெருமானின் திருநீற்றுப் பதிகத்தை ஓதி கிரிவலம் வருதல் வேண்டும்.

அருணாசல மகாசிவராத்திரி மஹிமை

மகாசிவராத்திரியில் எத்தனையோ புராண சம்பவங்கள் அருணாசலத்தில் நிகழ்ந்து சிறப்படையச் செய்துள்ளன. இறைவன் திருஅருணையில் அழற்பிழம்பாய் ஆதி முதலில் காட்சி தந்தது, அம்பிகை இறையொரு பாகமாய் ஆனது, ஆயிரங் கோடி ருத்ர பைரவர்கள் உற்பவித்து அருணாசலத்தை வலம் வந்தது. ஸ்ரீபிரம்ம ஞானபுரீஸ்வரர் தோன்றியது, விநாயகரும், வியாசரும் காலத்தால் அழியாக் காவியமான மகாபாரதம் எழுதிட காலபைரவரின் அருள் பெற்றது என எத்தனை எத்தனை வைபவங்கள் மாசி மாத மகா சிவராத்திரியில் பல யுகங்களிலும் நிகழ்ந்துள்ளன. சகஸ்ர கோடி ருத்ர பைரவர்கள் (சஹஸ்ரம் – ஆயிரம்) சர்வேஸ்வரனிடம் இருந்து தோன்றிய புனித காலமுமே மகா சிவராத்திரி ஆகும். ஆயிரங் கோடி ருத்ர பைரவர்கள் உற்பவித்த காலமாகவும் மகாசிவராத்திரி அமைவதால் மகா சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் மிகமிக விசேஷமானதாகும்.

நவநாதச் சித்தர்கள்

நவநாதச் சித்தர்கள் என்றால் .. கோரக்கர் முதலாக … என்று வழக்கமாகக் குறிப்பிடப்படும் நவநாதச் சித்தர்கள் அன்று! இச்சித்தர்பிரான்களுக்கு எல்லாம் ஆதிமூலப் பீடமாக அமைகின்ற ஒன்பது சித்தர்களே நவநாதச் சித்தர்கள் ஆவர். இவர்கள் எப்பெயரையும் சூடுவது கிடையாது. ஆனால் அன்பு, பக்திக்குக் கட்டுப்பட்டு, எப்பெயரிலும், எவ்வுருவிலும் தோன்றுவர்!

எனவே நவநாத சித்தர்கள்தாம் அனைத்து லோகங்களிலும், அனைத்துப் புராணங்களிலும் சாட்சி பூதமாக விளங்குகின்றனர். இதனை மனதில் நன்றாக நிலை நிறுத்திக் கொண்டால்தான் பூலோக வாழ்வின் இறை ரகசியங்கள் புலப்பட வரும். ஸ்ரீவியாச மகரிஷியும், ஸ்ரீவால்மீகி மாமுனிவரும், திருவள்ளுவரும், திருமூலரும் நவநாத சித்தர்களின் பரிபூரண ஆசியைப் பெற்றவர்களே! நவநாத சித்தர்கள் சேர்ந்து வந்த திருத்தலங்கள் பல உண்டு. திருக்குறளை அளித்த திருவள்ளுவரும் அவர்தம் பத்தினியாம் வாசுகி தேவியாரும் ஒன்பது நவநாத சித்தர்களையும் ஒரு சேரத் தரிசித்த புனித பூமியில்தாம் தற்போது சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவருக்கு ஆலயம் அமைந்துள்ளது.

“மாத சிவராத்திரியில் சகஸ்ர கோடி பைரவ ருத்ரர்களின் அருணாசல கிரிவலம்”

“ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ர கோடீஸ்வரர்” எனும் மகா தேவ பைரவ தெய்வமூர்த்தி, பல கோடி யுகங்களுக்கு முன்னர் சித்ரபானு ஆண்டின் மகாசிவராத்திரி நாளில் திருஅண்ணாமலையை சகஸ்ர சதகோடி ருத்ர பைரவர்களுடன் (1000 x 100 x கோடி) சேர்ந்து திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து, “அருணாசல பைரவருத்ர மலை முகட்டில், ஸ்ரீருத்ர யோகத்தில் அமர்ந்திட …

… அனைத்து யுகங்களிலும் நிகழ்ந்த, நிகழ இருக்கின்ற, நிகழ்ந்து கொண்டிருக்கின்ற இறை லீலைகள், ஜீவகாரியங்கள், பிரபஞ்ச இயக்கங்கள் யாவற்றையும் அவர் இப்பூவுலகில் நடந்தது, நடப்பது, நிகழ இருப்பதாய், மூன்றாய்ப் பிரித்து அனைத்தையும் மொழியலானார். இதனைக் கேட்கும் பாக்கியத்தைப் பெற்றவரே ஸ்ரீபைரவரின் திருவடிக் கண்களில் இருந்து தோன்றிய ஒரு மாமகரிஷி ஆவார்.

இம்மகரிஷியும் தமக்கு “ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ர கோடீஸ்வரர்“ அளித்த நெல்லி மரக் கற்பக் கோலால், அரிய வாக்சக்தி பெற்று இறையருளால் தானிருக்கும் இடத்தில் இருந்து லோகத்தில் எங்கும் நிகழும் காரியங்களைப் பற்றி அறிந்து உரைக்கும் வல்லமையைப் பெற்றார். இவரே சஞ்சய மகரிஷி.

இவருடைய தீர்க தரிசனத்தைப் போற்றி, ஸ்ரீகிருஷ்ணரே விரும்பி வேண்டி சஞ்சய மகரிஷிக்கு மகாபாரதத்தில், திருதராஷ்டிரருக்கு யுத்த நிகழ்ச்சிகளை உரைவிக்கும் பாத்திரத்தை அளித்திட்டார்.

எனவேதாம் “ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ர கோடீஸ்வரர்” உரைத்த நம் அனைவருடைய ஜீவ ரகசியங்களும் பதிந்த அருணாசல ஜீவப் பாறைகளை தரிசிக்கவும் ஆன்மீக ரீதியான காரணமாக நாம் அருணாசல கிரிவலம் வருகின்றோம். இதனால்தாம் அருணாசலத்தில் அவரவருக்குப் பூர்வ ஜன்ம உணர்வுகள் உரைக்கப்பட்டு, கர்ம வினைகளுக்கான பரிகாரங்களும் கிட்டி ஒரே ஒரு முறையான, அருணாசல கிரிவலத்துடன் அபரிமிதமான பலன்களும் பலருக்கும் எளிதில் கிட்டிவிடுகின்றன. அருணையின் கருணையே கருணை!

பதிவிரதை காந்தாரி பெற்றுத் தந்த மாமுனி தரிசனம்!

பிறவிக் குருடராய் வாழ்ந்த திருதராஷ்டிரனுக்கு, அனைத்தையும் இருந்த இடத்தில் இருந்தே அறிவிக்கின்ற சஞ்சய மகரிஷியின் சேவையைப் பெறும் பாக்கியம் கிட்டியது எவ்வாறு? தன் கணவன் திருதராஷ்டிரன் குருடராய் இருப்பது கண்டு பதிவிரதையாம் காந்தாரி, தன் கணவன் பார்க்க இயலாதவற்றைத் தான் மட்டும் பெற்று வாழ்வது சரியாகாது என்று எண்ணினாள். உத்தம பத்தினியாய்த் தனக்கென நல்வைராக்ய விரதத்தை விதித்துத் தன் கண்களைத் துணியால் கட்டிக் கொண்டு பார்வை இருந்தும் பார்வையற்றப் பதிவிரதையாய் வாழ்ந்தனள். காந்தாரியின் பதிவிரதா சக்தியால் அவளுடைய சூரிய பூஜா பலன்கள் திருதராஷ்டிரனை அடைந்து சஞ்சய மகரிஷியின் சேவையைப் பெற வைத்தது, திருதராஷ்டிரருக்குப் போர் நிகழ்ச்சிகளை விவரித்தவர் என்ற குறித்த செயல் பகுதி மட்டுமே நாம் நடைமுறை மகாபாரதத்தில் சஞ்சயரைப் பற்றிக் கண்டுள்ளோம். மகாபாரதத்தில் சஞ்சய மகரிஷி மேலும் பல மகத்தான இறைப் பணிகளை ஆற்றி உள்ளார். இவையாவும் இருடிகளின் மகாபாரதத்தில் காணப் பெறுகின்றன.

பூஜ்ய ஞானம் தரும் சகஸ்ர சத கோடி ருத்ரர்கள்!

பெருந் துறவிகளைப் பூஜ்யஸ்ரீ என்று அடைமொழியிட்டு அழைப்பர். அனைத்து அறிவையும் கடந்து அறிவுக்கு அப்பாற்பட்ட பரம்பொருளை அடையும் ஞானமே பூஜ்ய ஞானமாகும். அதாவது இருந்தும் இல்லாது இருக்கின்ற ஞான நிலையே பூஜ்ய ஞான நிலை! எனவே ஆதி முதல் பூஜ்யஸ்ரீயாகப் போற்றப்பட்ட சஞ்சய மகரிஷி. பைரவ ருத்ரபூஜா பலன்களைப் பரிபூரணமாக அடைந்தவராய் மேன்மேலும் அருணாசலத்தை வலம் வந்ததுடன், சகஸ்ர சதகோடி ருத்ரர்களோடு அருணாசலத்தை மகாசிவராத்திரி நாட்களில் கிரிவலம் வரும் பாக்யமும் பெற்றவர்.

சதகோடி பைரவ ருத்ர மூர்த்திகளுமே கிரிவலம் வருகின்ற தெய்வீக பவனி என்றால் என்னே அற்புதமாக இருக்கும்! இந்த அற்புதக் காட்சியைக் காண சதகோடிச் சித்புருஷர்களும் மஹரிஷிகளும், யோகியரும் திருஅண்ணாமலையில் குழுமினர். இத்தகைய சதகோடி ருத்திர பைரவர்கள் கூடிய கிரிவல பூஜையை முன்னின்று நடத்தியவரே ஸ்ரீசஞ்சய பைரவருத்ர கோடீஸ்வரர் மூர்த்தியாவார். ஸ்ரீஅகோர வீரபத்ர பைரவ மூர்த்தியின் அம்சங்களைத் தழுவியவர்.

மகாசிவராத்திரியில் தோன்றும் காயகல்ப மூலிகைகள்!

சகஸ்ர சதகோடி ருத்ரர்கள் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற போது, திருஅண்ணாமலையில் 11 விதமான ஏகாதச ருத்ர மூலிகைகளும் தாமே, இறையருளால் பூமியிலிருந்து கிளர்ந்தெழுந்து தோன்றும். ஆம், வருகின்ற சித்ரபானு ஆண்டின் மகா சிவராத்திரியில் இந்த ஏகாதசி ருத்ர மூர்த்திகளும் ஒளி வடிவில் பலருக்கும் (பாக்கியமுள்ளோருக்கு) காட்சி தருவர். இந்த 11 ஏகாதச ருத்ர கோடி காயகல்ப மூலிகைகளின் நாமங்களும் இறை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. மஞ்சநாரிக் கொம்பு, கங்கை அஸ்வகந்தம், பத்ரய வெள்ளிக் கொம்பு மஞ்சள் ஆகிய மூன்று காயகல்ப மூலிகைகளின் நாமங்கள் மட்டுமே சித்தர்களின் பெருங்கருணையால் அளிக்கப்படுகின்றன.

பஞ்சவடி சக்திகள் நிறைந்த இம்மூன்று மூலிகைகளும் இந்நாளில் மட்டுமே திருஅண்ணாமலையில் காணக் கிடைக்கும். இன்று கிரிவலம் வருவோருக்கு சூக்குமமாக இம்மூலிகைச் சாரல் பலன்கள் கிட்டும். எனவே சித்த வைத்தியர்கள் மட்டுமின்றி அனைத்து மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களும், யுனானி, ஆயுர்வேதம் என அனைத்து இயற்கை மருத்துவர்களும், மற்றவர்களும், நோய்களால் வாடுவோரும் வரும் மகாசிவராத்திரியன்று திருஅண்ணாமலையைக் கண்டிப்பாகக் கிரிவலம் வருதல் வேண்டும்.

வன்முறை சக்திகளை பஸ்மமாக்கும் காயகல்ப த்ரிமூலிகா!

இந்த மூன்று மூலிகைகளின் தேவ சக்தியும் கலியுகத்தில் கிடைக்கப் பெறாமையால் தான் வன்முறைகளும், முறையற்றக் காமக் குற்றங்களும், பகைமையும் பெருத்து வருகின்றன. எந்த அளவிற்கு மக்கள் இதனை ஒரு சமுதாயப் பணியாக மேற்கொண்டு பக்தி சிரத்தையுடன் இந்த மாசி மாத சிவராத்திரியில் கிரிவலம் வருகின்றனரோ கிரிவலம் வருதலால் அந்த அளவிற்கு வன்முறையை ஆன்மீக ரீதியாகத் தணிக்க இயலும்.

ஸ்ரீவிநாயகப் பெருமான் வியாஸரை மகாபாரதத்தைப் பெரும் புராணமாக வடிக்குமாறு அருளியபோது, “சுவாமி! இறையருளின்றி இக்காரியம் கைகூடாதே! என்றும் நிலைத்து நிற்கும் இப்புராணத்தை இயற்றிடத் தாங்களே மூலமுதல்வராய் அருள்புரிய வேண்டும்!” என்றிட்ட போது விநாயகப் பெருமாளும், “வியாஸரே! தாங்கள் உரைத்திட அடியேன் எழுதிடல் வேண்டும் என்பது அம்மையப்பனின் அருளாணை!” என்றுரைத்தார்.

மகாபாரதம் படைக்க உதவிய பைரவ சக்தி!

வியாஸருக்கோ, ஒரு புறத்தில் பிள்ளையாரே முன் வந்து மகாபாரதப் புராணத்தை எழுதுகின்றார் என்பது பரமானந்தத்தை அளித்தாலும் இதற்கான தகுதி தனக்குள்ளதா என எண்ணி அஞ்சினார். எனவே வியாஸ மஹரிஷியும் மகாபாரதத்தை வடித்திடத் தக்க யோக சக்திகளைப் பெற்றிட இறையருள் வேண்டிப் பல தலங்களில் இறைவனை வழிபட்டார். சிவயோக ஞான தட்சிணாமூர்த்தி உறையும் அருணாசல பூமிக்கு வந்து மகாசிவராத்திரி நாளில் திருஅண்ணாமலையை வியாச மகரிஷி கிரிவலம் வந்திட, பைரவ ருத்ர தரிசனப் பகுதியில் ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ர கோடீஸ்வரரின் மகத்தான தரிசனம் கிட்டியது.

வியாஸ மஹரிஷி பெற்ற ஏகாதச ருத்திராட்சம்!

வியாஸ மஹரிஷி எதிர்காலத்தில் மகாபாரதத்தை உருவாக்க உள்ளார் என்பதை அறிந்து ஸ்ரீபைரவ மூர்த்தி, அவருக்கு ஏகாதச ருத்திராட்சம் ஒன்றை அவருக்கு அணிவித்தார். மேலும் மிகவும் சக்தி வாய்ந்த புருஷாய சரம் எனப்படும் விஷ்ணு தர்ப்பைப் புல்லால் ஆன தர்பைப் பாயை அளித்து இதில் அமர்ந்து மகாபாரத சுலோகங்களை ஓதிடுக!” என்று கூறி ஆசிர்வதித்தார்.

இந்த ஏகாதசமுக ருத்திராட்சமானது வியாஸ மகரிஷியின் தொண்டைக் குழியை அணைத்து நின்று ஒளிர்ந்தது. இதன் பின்பே மகாபாரத வைபவத்தை உரைக்கும் தீர்க தரிசன சக்தி வியாசருக்குத் தெய்வ கடாட்சமாகக் கிட்டியது.

விநாயகர் பெற்ற விசேஷ சாதனங்கள்!

விநாயகப் பெருமானும் மகாபாரதம் எழுதிடும் வகையில் தமக்குப் பரந்த ஞானம் வேண்டி அருணாசலத்தைக் கிரிவலம் வந்திட, அம்மையப்பனும் ஸ்ரீசகஸ்ர பைரவ ருத்ர கோடீஸ்வரராய்த் தோன்றி, “விநாயகா! நீ மகாபாரதம் எழுதிடத் தந்தாக்னியினாலான வளையச் சக்கரம் ஒன்றை அளிக்கின்றோம்! இதனை வலக் கரத்தில் அணிந்து மகாபாரதத்தை எழுதுவாயாக!” என்று ஆசி கூறி மேலும் தர்பை எனப்படும் புருஷாய சரத்தாலான கிரீடம் ஒன்றையும் அளித்து, “இதனையும் அணிந்து மகாபாரதம் எழுதுவாயாக!” என்றும் கூறி ஆசியளித்தார். மேலும் விநாயகர் தம்மை அர்ச்சித்தத் தாமரை மலர்களையே ஏடுகளாக்கியும் அவருக்கு அளித்திட்டார்.

இவ்வாறு விநாயகப் பெருமானுக்கும் அருளியவரே ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ர கோடீஸ்வர மூர்த்தி ஆவார்! இந்த இறைலீலை நிகழ்ந்த இடமே திருஅண்ணாமலையில் ருத்ர கோடி தரிசனப் பகுதி ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த தரிசனமிது! தற்போது எமலிங்கத்தை ஒட்டி அமைகின்ற தரிசனம்! காலங்காலமாய் அழியாப் பொருளாய் நின்று அருள்கின்ற புராணம் மகாபாரதம் ஆதலால் ஆதிமூல கால பைரவரின் அம்சங்களுடன் தோன்றிய ஸ்ரீசஞ்சய பைரவ ருத்ர மூர்த்தியே மகாபாரதமானது, சுவடி வடிவில் வரக் காரணமாக இருந்த விநாயகருக்கும் வியாசருக்கும் மகாசிவராத்திரி நாளில் நேரடியாகவே இவ்வாறாக அருள்புரிந்தார்.

மப்பேடு சிவாலயம்

மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் சிவாலயம்

நட்சத்திர ஆலயச் சிறப்புத் தொடர் – 15

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய அற்புதத் தலம்! இசைத் துறையினர் யாவரும், இசைபட வாழ்ந்திட, ஆயுள் முழுதும் தொழுது சிறக்க வேண்டிய மிகவும் முக்கியமான திருக்கோயில்! செந்தமிழின் ‘ங’ எழுத்து உற்பவித்த சிவத்தலம்! சுதபுத மகரிஷியின் ஆன்ம ஆலயம்!

இந்த நட்சத்திர ஆலயத் தொடரில், சித்தர்களின் ஞானபத்ர வாக்கியங்களில் உள்ளபடி, அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய ஆலயங்கள் பற்றி சித்தர்கள் அருள்கின்ற அபூர்வமான, அற்புதமான விளக்கங்களை அளிக்கின்றோம். இதுவரையில் அஸ்வினி, பரணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, அனுஷம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 14 நட்சத்திர ஆலய விளக்கங்கள் வெளிவந்துள்ளன.

‘ங’ என்ற தமிழ் அட்சரத்தை அகஸ்தியர் பிரான் மப்பேடு மூல மூர்த்தியாம் ஸ்ரீசிங்கீஸ்வர மூர்த்தியிடம் இருந்து பெற்று இவ்வாலயத்தின் ஆதிமூல மகரிஷியான சுதபுத மாமுனியிடம் ஓங்காரச் சக்கரத்தில் வைத்து அளித்திட, சுதபுத முனிவரும் ஹ்ரீங்காரச் சங்கு கொண்டு மப்பேடு நவவியாகரண பலிபீட மண்டபத்தில் வைத்து ஓதி ‘ங’ அட்சரத்தைத் தமிழ் உலகிற்கு அளித்திட்டார்.

பிரதோஷம், மாதசிவராத்திரி, மூல நட்சத்திரம், நவமி, புதன் நாட்களில் இத்தலத்தில்,

“ஓங்கார, ரீங்கார, ஹ்ரீங்கார ரூபா! ஷ்ரீங்கார, சங்கீத, சிங்கீஸ நாதா” என்று ஓதியவாறு, சங்கை ஒலித்திட்டு இத்தலத்தில் அடிப்பிரதட்சிணம் வருதலால் இசைத் துறையில் உன்னதம் பெற்றுப் பல விருதுகளுடன் சிறப்புகளை அடைய நல்வழி பிறக்கும். அனைத்து இசைக் கலைஞர்களும், வாத்ய வல்லுனர்களும் தம் வாழ்நாளில் அடிக்கடி வந்து, வழிபாட்டு இசை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டிய மிக முக்கியமான தலம்..!

இசைமறைத் துறையே மப்பேடு!

‘நவவியாகரண பண்டிதரான ஆஞ்சநேயப் பிரபு’ பாஷ்பவாரி பரிபூரண லோசனனாக இசைபாடும் இசைமறைத் துறையாக மப்பேடு பரிணமிப்பதால் இங்கு அனைத்துப் பாடகர்களும், வாத்ய வல்லுனர்களும் அடிக்கடி வந்து வழிபட்டு இசையில் மேன்மை பெற வேண்டித் துதித்தல் சிறப்புடையதாம். இசைவளம் நிறைந்த பூமி! சங்கீத பீஜாட்சரங்கள் ஜனிக்கும் பூமி!

சுதபுத மகரிஷிதாம் ஆஞ்சநேயரின் கீர்த்தனைகளை மனதில் வடித்து உலகிற்கு எடுத்துரைத்து சுதபுதம் என்ற அற்புதமான சங்கீத நூலைப் படைத்து நாரதருக்கு அர்ப்பணித்தார். சுதம் என்றால் ஙகர நாத சுதமாகும். புதம் என்றால் நாதத்திற்குப் பசுமை கூட்டுதல் என்று பொருள். அகர, உகர, மகர நாதங்கள் சேர்ந்ததே ஓங்கார ஒலி என நாமறிவோம். ஓங்காரத்திற்குப் பலவிதமான நாதங்கள் உண்டு. பலரையும் “ஓம்” என்று ஒலிக்கச் செய்தால் ஒவ்வொருவரும் ஓங்காரத்தை ஒவ்வொரு விதமாக நீட்டி, சுருக்கி, குறுக்கிப் பலவிதமாக ஒலிப்பார்கள். ஓங்காரத்தின் ரீங்கார அம்சங்கள் பல கூடியே தமிழ் மொழியின் ‘ங’ எனும் அற்புத அட்சரமாயிற்று. ‘ஓ’வின் ஒலிப்பிற்கும் ‘ங’வின் ஒலிப்பிற்கும் நிறைய இசையோகப் பிணைப்புகள் உண்டு. இதில் ‘ங’கரம் உள் தொண்டையில் எழும் சப்த த்வனிகளைக் கொண்டதாகும். இது மப்பேட்டில் நிறைந்துள்ளது.

‘ஙப்போல் வளை!” தொண்டையில் எழும் ‘ங வகை’ இசை ஒலிக்கு ‘ஙகர வளி’ என்று பெயர். இதில் ஜோதி தத்துவங்கள் பொதிந்துள்ளன. அக்னி ஜ்வாலையை விழுங்கும் ஜோதிப் பரல் யோகத்தில் ‘ஙகர வளியொளி’ மந்திரங்களை ஓதியே அக்னியை விழுங்குவர். உதடுகளின் அசைவில் எழும் ஒலிக்கு ‘புதவளி’ என்று பெயர். சுதபுத மகரிஷி ஓங்காரத்தின் ரீங்காரத்தில் லயித்து “ஙப்போல் வளை” எனப்படும்படியான சிரசும், பாதம் சேரும்படியான உடல் வளைந்த யோகத்தில் உன்னதம் பெற்றவராவர். முன்புறம் வளைந்து தலையால் பாதத்தைத் தொடுதல் சுதயோகம். பின்புறம் வளைந்து தலையால் பாதத்தின் பின்புறமாகிய குதிகாலைத் தொடுதல் புதயோகம். சுதயோகமும், புதயோகமும் இணையும் யோகமே ஙப்போல் யோகமாகும். இதனையே ஔவையார் “ஙப் போல் வளை!” என்றார்!

ஸ்ரீநந்தீஸ்வரர் மப்பேடு

ஒளிமிகு ஙகரக் கோயில்!

சங்கநாதம் சிங்கநாதம், ஹங்கநாதம் மூன்றும் சிறக்கும் மங்கள பூமியே மப்பேடு ஆகும். மப்பேடு என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. மங்கள ஒலியாகிய ங கரம் பீடு பெறும் தலமே மப்பேடு! மங்காப் பீடு என்பதே மப்பேடு ஆயிற்று, ஒருகாலத்தில் ‘ங’வடிவில் திகழ்ந்த ஆலயமிது. தீர்த்தக் குளமும் ‘ங’ வடிவில் இருந்தது. ஓங்காரத்தின் அகர, உகர, மகர, நாதங்களில் மகர நாதம்  ஙப்போல் யோக ஒளிப் பிரகாசம் பெரும் தலமுமே மப்பேடு. பறக்கும் தட்டு எனப்படும் விண்வெளிக் கலங்கள் ‘ங’ வடிவப் பாசறையில் தாம் வந்திறங்கும். எனவே பறக்கும் தட்டு வாகனங்களான விண்வெளிக் கலங்களில் தேவதைகள் வந்து வழிபடும் தேவ சாந்நித்யம் நிறைந்த பூமியே மப்பேடு! எனவே ஒரு யுகத்தில் ‘ஙகரக் கோயில்’ என மப்பேடு பெயர் பெற்றிருந்தது!

சுதங்கம், புதங்கம், மதங்கம் ஆகிய மூன்று ‘ங’கர சந்தங்களில் மதங்க ஒலியில் ஜனிக்கும் மாதங்க ஒளியில் இருந்து பிறந்த தலமே மப்பேறு! இதுவே திரிபடைந்து மப்பேடு ஆயிற்று! மக்கட்பேறு, மந்தாகாரம், மகரம், மஞ்சள் த்வனி, மந்திர பூஷணம், மறையொலிபாகம் போன்ற மதங்க நாதங்கள் பீடு பெறும் தலமே மப்பேடு!

புனிதமன தாழமங்கை அட்சரங்கள்!

அனைத்து மொழிகளிலும் தாழமங்கை அட்சரங்கள் (virgin letters) என்ற ஒரு வகை உண்டு! தாழமங்கை அட்சரம் என்றால் புனிதமான, எவராலும் அதிக அளவில், வேதிக்கப்படாத, அட்சயிக்கப்படாத ஆத்மாட்சர வேத சக்திகள் பூரித்து மறைந்து இருப்பவை என்று பொருள். தமிழில் நிறைய எழுத்துக்கள் இருந்தும் மிகவும் அதிகமாகப் பயன்படாத தாழமங்கை அட்சரமாக, தீண்டாத் திருமேனி அட்சரமாகப் பொலிவது ‘ங’ ஆகும்.

ஙா, ஙி , ஙீ, ஙு, ஙூ, ஙெ, ஙே, ஙை, ஙொ, ஙோ, ஙௌ போன்றவை ‘ங’ வகை எழுத்துக்கள் தாழமங்கை அட்சரங்களாகும். இவை யாவும் வழக்கில், இல்லாத அட்சரங்களாக நமக்குத் தோன்றுகின்றன. உண்மை அதுவல்ல! க, த, ம போன்று ‘ங’ அட்சரம் அடிக்கடி வழக்கில் பயன்படுவது இல்லை எனினும் இது பெரும்பாலும் ஒலி வடிவில் அல்லாது ஒளி வடிவில் திளைக்கும் அட்சரமாகும். ஒளி வகை அட்சரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை! எனவேதாம் பீஜாட்சரங்களில் இவை நிறைய பங்கு பெற்றுக் குடி கொண்டிருக்கும். ‘ங’கர வகை எழுத்துக்களில் அக்னி சக்திகள் நிறைய உண்டு. எனவேதாம் அக்னி பூஜையான ஹோம குண்டங்களில் அடித்தள மண்ணில் எழுதப்படும் பீஜாட்சரங்கள் ‘ங’ வடிவில் அமையும்.

ஒலியும், ஒளியும் ஙகர்வளியும்மே!

ஸ்ரீகலைமகள் வேதாரண்யம்

மேலும் ஹ்ரீம், ரீம் போன்ற மகர, ஙகர வகை பீஜாட்சர ஒலிகளில் ஙகரமானது ஒலியும் ஒளியுமாய் பிணைந்து மறைந்திருப்பதைக் காணலாம். சீதாதேவி அக்னிப்பிரவேசம் செய்தபோது அக்னிக் குழி ‘ங’ வடிவில் தான் அமைக்கப்பட்டது என்பதும் அனைத்து வகைச் சங்குகளுக்குள்ளும் ‘ஙகர’ சப்தம் ஆத்மார்த்தமாக உறைகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மப்பேடு திருத்தலத்தில் ஸ்ரீசிங்கீஸ்வரராக அருள்புரியும் மூலச் சுயம்பு லிங்க மூர்த்தி ஓங்காரத்தின் சிங்க நாதத்தை உற்பவித்தவர் ஆவார்! இரண்யனை வதம் புரிந்த ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சிங்கத் தலையுடன் ரீங்காரம் கொண்டு அக்னிக் கோளமாய்ப் பிரபஞ்சமெங்கும் வலம் வந்தபோது அவர்தம் பலவிதமான யோகாக்னிகளை ஓங்காரத்தின் சிங்க நாதத்தால் அரவணைத்துச் சாந்தப்படுத்தி ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் சிரசில் தம் திருக்கரங்களை வைத்து ‘ங’கர சக்தியை ஒளிர்வித்தவரே ஸ்ரீசிங்கீஸ்வரர் ஆவார். இதனை விளக்கும் வண்ணம் ஆலயத்தின் மத்ய மண்டபத்தில் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் உருவத்தைக் கண்டிடலாம்.

மூலத்தாரின் மூலக்கோயில்!

குங்குமம், தங்கம், சங்கு, கங்கு (தணல் – நெருப்பு), அங்குசம், ஐங்குரம், ஓங்காரம், மங்களம், வங்கம் போன்ற அனைத்து ஙகர வகைப் பொருட்களும், திரவியங்களும், அட்சர சக்திகளும் பிரபஞ்சத்தில் உற்பவித்த திருத்தலமே மப்பேடு ஆகும். மூல நட்சத்திர நாளில் பிறந்ததே ‘ங’ வகைத் தமிழ் அட்சர்மாகும். எனவே தாம் மூல நட்சத்திர கர்த்தாவான ஆஞ்சநேயருக்கு உரித்தான மூல மந்திரங்கள் ‘ங’ வகை பீஜாட்சரங்களைக் கொண்டிருக்கும். மூல நட்சத்திர பீஜாட்சரங்கள் உதிக்கும் தலமாதலின் மூல நட்சத்திரத்தில் பிறந்தோர் அடிக்கடி வழிபடவேண்டிய தலமாகவும் மப்பேடு பொலிகின்றது.

மப்பேடு சங்கீதத் தலைநகராகட்டும்!

திருவையாறு போல ஒரு யுகத்தில் இங்கு ‘சங்கீத விழாக்கள்’ எப்போதும் ஆண்டு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருந்தன. குறிப்பாக மார்கழி மாத மூல நட்சத்திர நாளில் ஸ்ரீசிங்கீஸ்வரர் சுயம்பாக உற்பவித்தத் திருநாள் ஆதலின் பண்டைய காலத்தில் இங்கு மார்கழி மாதம் முழுவதும் இன்னிசை உற்சவங்கள் நிறைய நிகழ்ந்தவாறு இருந்தன!

இங்கு அற்புதமான வடிவில் கொடிமரப் பகுதியில் மிகவும் அபூர்வமான கல்லால் ஆன நவவியாகரண பலிபீட மண்டபம் அமைந்திருக்கிறது. பண்டைய காலத்தில் இதனருகே மாபெரும் பந்தல் அமைத்து அனைத்துப் பாடகர்களும், வித்வான்களும் சங்கீதத்தை முழங்குவதாகப் பண்டைய இசையுகம் மலர்ந்தது! எனவே ஸ்ரீசிங்கீஸ்வரரே, சங்கீதநாதராகவும் பொலிகின்றார். பிரபஞ்சத்தின் அனைத்துப் பலீபட தேவதைகளும் வழிபடும் உத்தமத் தலம்.
கலைமகள் இசை கற்ற இன்னிசைத் தலம்!

கலைமகள், ஸ்ரீலலிதா பரமேஸ்வரியிடம் இசை ஞானம் பெற்ற தலமே மப்பேடு! வேதாரண்யத்தில் மலைமகளிடம் இசைகானம் பொழிய வந்த கலைமகள், அம்மையின் மதுரமொழி கேட்டு வெட்கத்தால் நாணித் தம் வீணையை உறையிலிட்டு மூடி, பல தலங்களிலும் வழிபட்டு, மப்பேடு சிவத்தலம் ஏகி, இங்கு ஸ்ரீலலிதா பரமேஸ்வரியாக அம்பிகைப் பொலியக் கண்டும், ஸ்ரீஆஞ்சனநேய மூர்த்தி எவரிடமும் கற்காது சுயம்பிரகாசராய் இனிய நாதம் எழுப்புவது கண்டும் ஆனந்தித்து அம்மையின் ஆணையாக உறையிலிட்ட வீணையைத் திறந்து இசைமழை பொழிந்தனள்.

இசைவித்வான்கள் யாவரும் மூல நட்சத்திர நாளில், அமிர்தயோகம் நேரத்தில் இங்கு இன்னிசை பொழிந்து குறிப்பாக அமிர்தவர்ஷிணி ராகத்தில் இசை ஒலித்திட நல்ல மழைப் பொழிவு ஏற்படும்.

பெயர் சூட்டும் முறை

அந்தந்த நட்சத்திர அட்சரம், எண்கணிதம் பார்த்தே பெயர் சூட்ட வேண்டும்! ‘Modern’ ஆக இருக்க வேண்டும் என்பதற்காக ‘க்ருஷ், ஷ்ருஷ்’ என இஷ்டத்திற்கு ஏதாவது ஒரு பெயரைக் குழந்தைக்குச் சூட்டி வாழ்நாள் முழுவதும் அவஸ்தைப்படச் செய்து விடாதீர்கள்! பெயர் சூட்டுவதற்கான அற்புதத் தலங்களும் உண்டு! இதுவரையில் வேறு பெயரைக் கொண்டாலும் இனியேனும் நட்சத்திரப் பெயர் சூட்டி, அர்ச்சனை, லட்சார்ச்சனை செய்து நாமதோஷங்களை நீக்கி, பெயருக்கு அருட்சக்தி கூட்டிடுங்கள் !

ஆயுள் முழுதும், அதற்குப் பிறகும் ஆன்மீக ரீதியாகப் பயன் பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் அவரவர் நட்சத்திர அட்சரங்களுக்கு ஏற்பப் பெயர் அமைவதே சிறப்பானதாம். கலியுகத்தில் மட்டுமல்லாது கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், என அனைத்து யுகங்களிலுமே ஒவ்வொருவருடைய பெயருக்கும் தெய்வீக மகத்துவம் நிறைந்து வந்துள்ளது. மகரிஷிகள், ஞானிகள், யாவருமே தெய்வீகத் தாத்பர்யப் பெயர்களையே பூண்டு வந்துள்ளனர். சித்தர்கள் விசேஷமான ஈஸ்வர ஆணையால் உற்பவிப்பவர்கள் ஆதலின் பெரும்பாலும் தனிப்பட்டதாக எவ்விதப் பெயரும் சூடாது, எவ்வடிவிலும் வந்திடுவர். மக்கள் புரிந்து கொள்வதற்காகப் பல சித்தர்களும், சங்கூதிச் சித்தர் போன்று காரணப் பெயர்களை அடைவதும் உண்டு.

பெயருள்ள அளவும்…

எனவே ஒருவருடைய ஆயுள் காலம் முழுவதும் அதற்கு பிறகும் கூட பென்ஷன், வீட்டுப் பத்திரம் எனக் கலியுகத்தில் அவர்தம் பெயரே நிலைத்து நின்று தர்ப்பணங்களிலும் கூட அந்தப் பெயரே பயனாகின்றது என்றால் ஒருவர் தம் வாழ்நாளில் சூடும் பெயர் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திடுங்கள்!

நட்சத்திரத்திற்கு ஒப்பவே உங்கள் பெயர்!

இதற்காகத்தான் ஆன்மீக ரீதியாக, நம் பெரியோர்களும், மூதாதையர்களும் அவரவர் நட்சத்திரத்திற்கு ஏற்ப முதல் மற்றும் துணை எழுத்துக்களை (அட்சரங்களை) அளித்துள்ளனர். எவ்வாறு ஒருவருடைய பிறந்த நட்சத்திரம் ஆயுள் முழுவதுமாக வருகின்றதோ, அதே போல அவருடைய பெயரும் ஆயுள் முழுவதும் அதற்குப் பிறகும் வருவதால் அவரவர் இஷ்டத்திற்கு modern ஆகப் பெயர் வைக்காது, பஞ்சாங்கத்தில் உள்ளபடி நட்சத்திர அட்சரப்படிப் பெயர்களை வைத்திட்டால் வாழ்க்கையில் கஷ்டங்களைப் பெருமளவு தவிர்த்திடலாம். இதிலும் நட்சத்திர அட்சரங்களுக்கு ஏற்பக் கடவுளர் பெயர் அமைவது சிறப்புடையதாம். சற்குருவிடமிருந்து பெறுகின்ற நாமங்களுக்கு விசேஷமான தெய்வீக சக்திகள் உண்டு.

பீஜாட்சரங்கள் கூடிய இறைநாமம் ஒலிக்கும் மந்திர அட்சரங்கள் உடைய பெயர் அமைந்தால் அவருடைய வாழ்க்கையில் கோடி முறையாவது இறைப்பெயர் சொல்லிப் பலரும் அழைத்து, எழுதி, பல இடங்களில் பயன்பட்டு அதுவே வாழ்வில் பல்லாயிர சகஸ்ர நாமப் பலன்களைத் தந்திடும். எனவே பெயர் சூட்டும் போது நட்சத்திரவாரி அட்சரங்களைக் கொள்வதே சிறப்புடையதாம்.

மேலும் பெயர்கள் பின்னமாகக் கூடாது, “கிருஷ்ணன்” என்று பரந்தாமனின் திவ்யமான பெயரை “கிருஷ்” என ஆக்கி நாம-பின்ன தோஷங்களுக்கு ஆளாகக் கூடாது.

திருவேடகம்

குருவருள் நிறையுமே!

ஒரு குருவின் திருவாயில் இருந்து அடைந்த பெயர் என்றால் எந்த லோகத்திற்குச் சென்றாலும் அதே பெயரிலேயே தேவாதி தேவதைகள் நேரில் வந்து ஆனந்தப்படுவர். பெயர் சூட்டும் வைபவங்களை நிகழ்த்த வேண்டிய அபூர்வமான தலங்கள் சில உண்டு. மதுரை அருகே திருவேடகம், கும்பகோணம் அருகே இன்னம்பூர், மதுரை அருகே கள்ளிக்குடி ஸ்ரீகுலசேகரப் பெருமாள், பேரளம் சுயம்புநாத சுவாமி போன்றவை குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் பெயர் சூ(ட்)ட வேண்டிய நாம சக்திகள் நிறைந்த திருத்தலங்களாகும்.

ஆமாம், இத்தகைய அபூர்வமான நாம சக்திகள் பற்றி இதுவரை அறியாது ஏதேதோ பெயரை வைத்திருந்தால் என்ன செய்வது? நட்சத்திர அட்சரப்படி பெயர் அமையாவிட்டாலும் அது கடவுள் பெயராக இருத்தல் நல்லதே! ஆனால் அதிகாரப் பூர்வமாக ஏதோ ஒரு பெயரானது மாற்ற முடியாத வகையில் அமைந்து விட்டால்…?

இனியேனும், எந்த வயதிலும் சரி, நாம அட்சரப்படி ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்துச் சங்கல்பம், அர்ச்சனைகள் போன்ற இறைப்பூர்வமான காரியங்களிலாவது புதுப் பெயரை, நாம அட்சரத்தைப் பயன்படுத்திடுங்கள். அர்ச்சனை செய்யும்போது உங்கள் புது நட்சத்திர அட்சரப் பெயருக்கு அது நடக்கட்டும். நாம அட்சர சக்திகள் கோடி, கோடியாய்ப் பெருகும் தலங்கள் மிகவும் அபூர்வமாக ஒரு சில இருக்கின்றன.

அட்சர சக்திகள் கோடியாய்ப் பெருகும் தலம்!

பஞ்ச பைரவர்கள் (ஐந்து பைரவ மூர்த்திகள் ஒரு சேர அருள்கின்ற) ஆவூர், உடையாளூர் போன்ற சிவத் தலங்கள், மாளாபுரம் முப்புரி விநாயகர் (மூன்று விநாயகர் சேர்ந்திருப்பது), நவகிரகங்கள் ஒரே திசையில் பார்க்கும் (பந்தணை நல்லூர், திருக்குவளை, வைதீஸ்வரன் கோயில்) போன்ற கோளிலித் தலங்கள், கும்பகோணம் அருகே கொட்டையூர், திருக்கோடிக்கா, 108 லிங்க மூர்த்திகளுக்கு மேல் உள்ள தலங்கள் (திருவான்மியூர், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர், பாபநாசம், ராமேஸ்வரம்), நின்ற நிலையில் உள்ள ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீஆக்ஞா கணபதி, ஞானபுரீஸ்வரர், ஞானாம்பிகை போன்ற நாமம் பூண்ட மூர்த்திகள், ஆத்ம நாதர், சுயம்புநாத போன்ற அபூர்வமான நாம மூர்த்தி உள்ள தலங்களில் அவரவர் தேர்ந்தெடுத்துள்ள நட்சத்திர அட்சரப் பெயர்களில் அர்ச்சனைகள் செய்து 108 பேர்களுக்குத் தாம்பூலம், வஸ்திர தானம், அன்னதானம் போன்றவற்றைச் செய்து வந்திட்டால் பெயர்களில் உள்ள அட்சர தோஷங்கள் ஓரளவு தீரும்.

நீதி தேவதை

நீதி தேவதையின் மூடப்பட்ட கண்கள் திறக்கப்படட்டும்!

பல நாடுகளிலும், நீதிமன்ற வளாகங்களில், கண்களில் கறுப்பு துணியைக் கட்டிக் கொண்டு ஒரு தராசைத் தூக்கி நிற்கும் பாவனையில் நீதி தேவதையின் சிலை வடிவு அமைந்திருப்பதைக் காணலாம். இது தவறான நிலையாகும். நீதி தேவதையின் கண்கள் திறந்திருக்க வேண்டுமே தவிர, துணியால் கட்டப்பட்டு அமைத்தல் கூடவே கூடாது.

எமபகவான் மற்றும் அறக்கடவுளாம் நந்தீஸ்வரர் தலைமையில் உள்ள, தர்ம லோகத்தைச் சார்ந்த தர்ம நீதியை நிலை நிறுத்தும் நீதி தேவதைகள், தேவதா மூர்த்திகள் நிறைய உண்டு. நீதிபுரீஸ்வரர் என்ற நாமம் பூண்டு அறத்தை நிலை நிறுத்துகின்ற தெய்வ மூர்த்திகளும் உண்டு. ராமராஜ்ய நீ(நிய)தியும், நீதி வழுவா சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் இறைவனுடன் நேருக்கு நேர் பேசும் இறைவளமும் கொண்ட பாரதத்தின் தமிழகப் புண்ணிய பூமியில், பரத மகரிஷி என்ற அற்புத மகரிஷிதாம், வேள்வி, யாகங்களில் அந்தந்த நீதி தேவதா மூர்த்தியை நிலை நிறுத்திடச் செய்து அறதேவதைகளின் பரிபாலனத்தை உலகிற்கு உணர்த்தியவராவார். பரத மகரிஷியின் அறிவுரை கொண்டே ஸ்ரீராமருக்குப் பிறகு பரதன், ராமராஜ்ய மகிமையை மேன்மேலும் நிலை பெறச்,செய்திட, உலகின் ஆன்ம மையமாகத் துலங்கும் நம் புனிதமான ஆன்மீக பூமியும் பரத பூமியாக, பாரத பூமியாக ஆயிற்று.

ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் செம்பியன்களரி
மேகளத்தூர்

பரத மகரிஷி தந்த பாரத தர்மம்!

கலியுகத்தின் வரும் சுபானு ஆண்டிலிருந்து, வேள்வி யாகங்களில் சித்திர வடிவில் தேவதா யக்ஞநீதி சக்திகள் நிறையத் தோன்றிடுமாறு செய்ய ஸ்ரீபரத மகரிஷி தக்க இறை ஆக்ஞையைப் பெற்றுள்ளார். எனவே கலியுகத்தில் நடக்கும் ஹோமங்களில் பூலோகத்திற்கு ஹோம வழிபாட்டைக் கொண்டு வந்த ஸ்ரீஆங்கிரஸ மஹரிஷிக்கும், ஸ்ரீபரத மகரிஷிக்கும் நிச்சயமாக அனைத்து வேள்விகளிலும் ஆஹூதி அளித்திட வேண்டும். தட்சனுடைய யாகத்தில் சிவனுக்கு ஆஹூதி அளித்தல் வேண்டும் என்று பரத மகரிஷி உரைத்ததைத் தட்சன் ஏற்காமையால்தான், ஸ்ரீபிரம்ம மூர்த்தியே யாக குண்டத் தலைமையை ஏற்றிருந்தும், அக்னி மூர்த்தியே தீயெழுப்பியும் எந்த ஒரு ஹோம குண்டத்திலும் எந்த மூர்த்தியின் வடிவும் பரிபூரணமாகத் தோன்றாது அக்னியும் அவ்வப்போது அவிந்தது! இவ்வாறு அறத்திற்கு அப்பாற்பட்டு நீதி நெறி தவறி நிகழ்ந்ததே தக்கனுடைய வேள்வி ஆதலால் தேவாதி தேவமூர்த்திகளும் தங்கள் தேவ சக்திகளை இழந்தனர்.

எனவே நீதி தவறாது நிலைத்திட நீதி தேவதைகளுக்குக் கண்களைத் திறந்த வடிவை அமைப்பதில் வக்கீல்களும், நீதிபதிகளும் பெருந் தொண்டு ஆற்றுதல் சிறப்புடையதாம்.

நீதிக்கோர் திருத்தலம் மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர்

நீதிபதிகளும், வக்கீல்களும் வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான தலங்களுள் ஒன்றே தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி அருகே செம்பியன்களரி திருத்தலத்தில் உள்ள மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் ஆலயமாகும். பூதலூர் வழியாகவும் சென்று இத்திருத்தலத்தை அடையலாம். அறலோகம், நீதிலோகம், சத்திய லோகம், தர்ம லோகங்களில் உறையும் கோடிக்கணக்கான தேவதைகள் தினந்தோறும் வந்து வழிபடுகின்ற சிவத்தலமே மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் கோயிலாம். நீதிபதிகளும், வக்கீல்களும் கண்ணாயிரமூர்த்தி, கண்ணாத்தாள், கண்ணாயிரம் உடையார்,  கண்ணுடையார், நேத்ரபதீஸ்வரர் போன்ற கண் சம்பந்தப்பட்ட பெயர்களை உடைய மூர்த்திகளை அடிக்கடி வழிபட்டு வர வேண்டும்.

எனவே வக்கீல்களும், நீதிபதிகளும் அடிக்கடி இங்கு வழிபடுவதுடன், தீர்ப்பு, கேஸ்களில், பயன்படும் பேனா, மை, காகிதம் போன்ற யாவும் புனிதமாக இருக்க வேண்டுமாதலின் இவற்றை மேகளத்தூர் சிவலிங்கத்தின் திருவடிகளில் சமப்பித்தும் வழிபடுதல் வேண்டும். நீதித் துறையில் இருப்போர் கூடிய வரையில் மாதம் ஒரு முறையேனும் விரதமிருந்து இங்கு வந்து வழிபடுதல் சிறப்புடையதாகும். மேலும் நீதி தேவதையின் கண்களை மூடிடாது திறந்து வைத்திட அருட்பணிகளை ஆற்றிடல் வேண்டும்.

ஸ்ரீகாமாட்சியம்மன் செம்பியன்களரி

மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் சிவாலயம் அற சக்திகள் சிறந்து விளங்கும் தலம்! யோக ரீதியாக இரு கண்களுக்கு இடையே இருப்பதே ஆக்ஞா சக்கரம் அல்லவா! இறைவனின் வலது கண் சூரியனாகவும், இடது கண் சந்திரனாகவும் விளங்குவதால் தியானத்தில் ஆக்ஞா சக்கரத்தை நோக்கிப் பார்வையை நிலை நிறுத்துவது சிறப்பானது. எனவே ஆக்ஞா யோக சக்திகள் நிறைந்த நீதி தேவதையின் கண்களை மூடலாமா?

இறைவனும் சூரிய, சந்திர நேத்திர வடிவுகளை இரு பருவங்களுக்கு இடையே நிலைநிறுத்திட, இத்தகைய யோக ரீதியான சூரிய, சந்திர சங்கமமே ஆக்ஞா சக்கரமாகி, அமாவாசைக் காலச் சக்கரமும் ஆயிற்று ! சூரிய சந்திர பார்வைகள் ஆக்ஞாவில் குவிந்திட இதுவே அமாவாசைத் தரிசனமும் ஆகும். ஆம், சூரிய சந்திரர்கள் சேர்வது தாமே அமாவாசை!

தர்ம தேவதையே காட்டும் தர்ம நிலை!

பாரதப் போரில் தர்மர் சற்றே தர்மத்திலிருந்து தடம் மாறியமையால், தர்மருடைய தேரும் தரையில் முதன் முதலாகப் பாவலாயிற்று. இதனைக் கண்டு மிகவும் வேதனையுற்றுப் போரில் இருந்து விலகிடச் சித்தமானார் தர்மர், அப்போது ஸ்ரீகிருஷ்ணன் அவரைத் தேற்றி, தர்மத்தைக் காத்திட சில ராஜதந்திரங்களைக் கையாள்வதில் தவறில்லை என்றும் இதன் முழு விளைவுகளைத் தாமே ஏற்பதாகவும் கூறிவிட்டார்.

தர்மருடைய தர்மம் பிறழ்ந்த கோலம் பற்றி வேதனையுற்ற தர்ம தேவதை, பசு வடிவத்தில் இரட்டைக் கால்களில் நின்று காட்சியளித்து துவாபர யுகத்தில் அப்போது நிலவிய தர்ம சக்தியின் நிலையைக் காட்டியது. தருமரும், துவாபர யுகத்தில் தர்ம தேவதையின் நிலை கண்டு மிகவும் கலங்கினார்.

“தர்மன் என்ற பெயரைக் கொண்ட அடியேனுக்கு தர்மத்தில் இருந்து தவறுகின்ற சோதனைகளைப் போரில் பொருத்தித் தந்து விட்டார்களே! எந்த தருமத்திற்காக வாழ்கின்றேனோ, அந்த தர்மத்தை நிலை நிறுத்தும் கடமையில் இருந்து தவறி விட்டேனே!” என்று கதறி அழுதுக் கண்ணீர் வடித்தார். தன் பக்தனின் நிலை கண்டு தர்ம தேவதையும் கண்ணீர் உகுத்திட, இதனைக் காணச் சகியாது பூமா தேவியும் ஆடையால் கண்களை மறைத்துக் கண்ணீர் வடித்தனள்.

வில்வமரம் செம்பியன்களரி

நீதி தேவதையின் கண்களை மறைத்தல் வேண்டாம்!

இதைக் கண்டு மனம் வெதும்பிய தர்மரும், தர்ம மூர்த்தியும் பூமாதேவியிடம் “அம்மா, பூமித் தாயே! தாங்கள் எக்காரணம் கொண்டும் இனி ஆடையால் முகத்தை மறைத்திடல் கூடாது. பூமா தேவியின் நேத்ர சக்தி மறைந்தால் அதர்மங்களும், அநீதிகளும் மேன்மேலும் பெருகும் அல்லவா! தர்ம சத்திவான்களாகப் பலரும் துவாபர கலியுகங்களில் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்கு உய்வு தரும் பொருட்டேனும், தாங்கள் முகமலர்ச்சியுடன் எப்போதும் துலங்கி தர்மத்தைப் பேணுதற்கு, அவர்களுக்குத் துணை புரிதல் வேண்டும்!” என்று கூறி வேண்டினர்.

அப்போதுதான் ஸ்ரீபூமாதேவி ஸ்ரீகிருஷ்ணனிடம் “எதிர்வரும் கலியுகத்தில் தர்ம மூர்த்தி ஒரு காலில் நிற்கின்ற அளவிற்கு அநீதிகள் பெருகும் போல் உள்ளதே! எனவே எக்காலத்தும் அதர்மத்தைக் கண்டு அடியேன் ஆடையால் கண்களைப் பொத்திய நிலை எவருக்கும் வரலாகாது. அதர்ம நிலை பெருகிடாது கலியுகத்தைக் காத்திட, கலியில் நல்லோரைக் காக்க, தானத்தில் விளையும் புண்ய சக்திகளுக்குத் தர்ம சக்திகளின் பலாபலன்களை அளித்திட வேண்டுகின்றேன். “தான தர்மமென்று,” தானமானது தர்மத்துடன் இணைந்து நிலைத்துப் பெயர் பெறட்டும்!” என ஆசி கூறி அருளினார். எனவே எக்காலத்தும் எவரும் தேவ மூர்த்திகளின் கண்களை வஸ்திரத்தால் மறைத்தல் கூடாது. எனவேதான் எவரும் கறுப்புக் கண்ணாடி அணிதலைக் கூடத் தவிர்த்தல் நலம். தேவையாயின், ஆரோக்ய ரீதியாகப் பிற வண்ணக் கண்ணாடியைப் பயன்படுத்திடலாம்.

பிற ஜீவன்கள் பெருக்கும் தர்ம சக்தி!

பிராணிகள் கூடத் தம் இனத்திற்கு உரிய தார்மீகத்தைக் கடைபிடிக்கும் உயர்ந்த தர்மவான்களாகவே திகழ்கின்றன. அவை தங்களுக்குள் சில விதிகளை அமைத்துக் கொண்டு செயல்படுகின்றன. மனிதனுக்கு உரிய போட்டி, பொறாமை மனப்பான்மைகள் அவற்றை அடைவதால் அவையும் பல சமயங்களில் மனித குணத்துடன் செயல்படுகின்றன என்பதைக் குறிக்கும் வகையில் தாம் இவ்வாறு நிகழ்கின்றன. அனைத்து விலங்கினங்களும் தங்களுக்கென சற்குருவை அமைத்துக் கொண்டு வாழ்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் செம்பியன்களரி

எனவே பூமா தேவியே வேண்டியபடி எவருக்கும் வஸ்திரத்தால் கண்களை மூடியபடிக் கண்ணீர் விடுகின்ற நிலை ஏற்படுதல் கூடாது என வேண்டுகின்றோம். மேலும் நீதி தேவதைகளின் நேத்திர தரிசனத் கதிர்கள் உலகின் மேல் பொழிந்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காகவும் நீதி தேவதைகளின் கண்கள் திறந்தே இருக்க வேண்டும்.

நீதியைக் கண்ணெனக் காக்கும் கண்ணான மூர்த்திகள்!

மன்னார்குடி – திருத்துறைப் பூண்டி அருகில் உள்ள திருக்காறவாசல் ஸ்ரீகண்ணாயிர மூர்த்தி, பட்டுக்கோட்டை மீமிசல் பஸ் தடத்தில், பேராவூரணி அருகில் ரெட்டவயலில் உள்ள ஸ்ரீகண்ணாயிர மூர்த்தி, நாட்டரசன் கோட்டை ஸ்ரீகண்ணாத்தாள், தஞ்சை அருகே மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் போன்ற தெய்வ மூர்த்திகளை வக்கீல்களும், நீதிபதிகளும், தர்மத்தையே நீதிதர்மத்தின் கண்ணாகப் போற்றி வழிபட்டு வருதல் வேண்டும். மேற்கண்ட கண் வகை நாமம் கொண்ட மூர்த்திகளுக்குக் கண்களை உடைய தேங்காய், நுங்கு, இளநீர் போன்றவற்றைக் கொண்டு நீதிபதிகளும், வக்கீல்களும் தர்மசக்தி நிறைந்த நாட்களான ஹஸ்தம், மகம், அஸ்வினி மற்றும் சூரிய, சந்திர நட்சத்திர நாட்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.

சமுதாயத்தின் கண்ணாக விளங்குவது நீதி தர்மமாகும். நீதி தர்மம் தவறிய மறுநொடியே தாமாக உயிரை நீத்த தர்மமிகு மாமன்னர்கள் வாழ்ந்த பாரதமிது! புறாவிற்காகத் தன் தசையைத் தராசில் அரிந்து கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி போன்ற பெரு வேந்தர்கள் வாழ்ந்த பாரதமிது! எனவே நீதிக் கண் திறந்த வகையில் நீதி தேவதைகளின் கண்கள் திறக்கப்பட்டு நேத்திர சக்திகள் பொங்கி சமுதாயத்தில் தர்ம சக்திகள் நிரவட்டும்!

கள்ளிக்குடி பெருமாள்

கள்ளிக்குடி ஸ்ரீகுலசேகரப் பெருமாள் ஆலயம்

பெருமாள், அச்சுதன், முரளீதரன், முரளி, குலசேகரன், நரசிம்மன், ரங்கநாதன், மாதவன், நாராயணன், மதுசூதனன், விக்ரமன், ஸ்ரீதரன், பத்மநாபன், தாமேதரன், வாசுதேவன், உபேந்திரன், ஜனார்த்தனன் போன்ற பெருமாள் பெயரைக் கொண்டவர்கள் தம் ஆயுள் முழுதும் அடிக்கடி வழிபட வேண்டிய தலம்!

மதுரை – கன்யாகுமரி சாலையில் மதுரையில் இருந்து 35 கி,மீ தொலைவில் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி உள்ளது. தற்போது சிதைந்த சுவர்களே உடைய இவ்வாலயம் ஒரு யுகத்தில் மிகவும் பிரசித்தி பெற்று இருந்தது ! தற்போதோ வாரமொரு முறையே பூஜை நடக்கும் இக்கோயிலை மீண்டும் புகழ் பெறச் செய்வது பக்த கோடிகளின், குறிப்பாக, பெருமாள் பெயரைப் பூண்டோரின் பெருங்கடமையாகும்!

பூர்வ ஜென்மங்களில் பெருமாளை நன்கு உபாசித்தவர்களே தற்காலத்தில் மேற்கண்ட வகையில் பெருமாள் குலவகைப் பெயர்களைப் பூண்டுள்ளனர். இத்தகைய பெயரைப் பூண்டோர்., தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபடவேண்டிய தலமே குலசேகரப் பெருமாள் ஆலயமாகும்.

ஸ்ரீசுயம்புநாதர் பேரளம்

குலசேகரர் என்றால் நாமகுல சக்திகள் அதாவது பெருமாளுடைய திருநாமங்கள் உற்பவிக்கும் திருத்தலம் என்று பொருள். எனவே அனைத்துப் பெருமாள் நாமங்களின் ஹரி பூஷண சக்திகள் நிரம்பிய தலம். சேகரம் என்றால் அழகு, மணம், சிரஞ்சீவித்வம் உடையது என்று பொருள். வாழ்க்கைக்கு இறைமணம் சேர்ப்பது ஸ்ரீவிஷ்ணு வழிபாடு ஆகும். வாழ்நாளில் எக்காலத்தும் சிவன் கோயிலுக்குச் செல்லேன், பெருமாள் கோயிலுக்குச் செல்லேன் என்று பிடிவாதம் கொண்டு சிவ, வைணவ பேதம் கொண்டிட்டால் அடுத்து வரும் ஜன்மங்களில் முறையே சிவனை, பெருமாளை வழிபட்டாக வேண்டும்.

இங்கு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகுலசேகரப் பெருமாள் மிகவும் பழமையான மூர்த்தி! பக்தர்களின் அசிரத்தையால் தற்போது முறையாகப் பூஜைகள் நடைபெறவில்லை! எனவே பக்த கோடிகள், குறிப்பாக, பெருமாள் நாமத்தைப் பூண்டோர் ஸ்ரீகுலசேகரப் பெருமாள் ஆலயத்தில் முறையாக ஆறுகால பூஜைகள் நடைபெறும் வண்ணம் ஆலயத் திருப்பணிகளை எடுத்தாற்றிட வேண்டும். பெருமாள் பெயரையுடையோர் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய தலமிது!

ஸ்ரீகுலசேகரப் பெருமாள்தாம் வைகுண்டத்தின் நித்ய சூரிகளுக்குத் தினமும் பல விஷ்ணு வடிவங்களில் காட்சி தந்து அருள்பாலிப்பவர். சூரிய பகவானின் தேரை ஒட்டிப் பறந்து அரிய வேதங்களை ஓதிடும் வாலகில்ய மகரிஷிகள் தினமும் வைகுண்டத்தில் ஸ்ரீகுலசேகரப் பெருமாளின் திருப்பாத தரிசனங்களைப் பெற்றே திரும்புகின்றனர்.

எனவே நாராயணன், கேசவன், கோவிந்தன், பார்த்தசாரதி, வரதராஜன், வீரராகவன் என்றவாறாகப் பலவிதமான பெருமாள் பெயரை உடைய யாவரும் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய தலமே ஸ்ரீகுலசேகரப் பெருமாள் ஆலயமாகும். ஸ்ரீகுலசேகரப் பெருமாளுக்கு மிகவும் ப்ரீதியான மஞ்சள் நிறப் பட்டாடைகளை அணிவித்து வழிபட்டு மஞ்சள் நிற ஆடைகளை ஏழைகளுக்கு அளித்தல் சிறப்பாகும். வஸ்திர தான சக்திகள் பன்மடங்காகப் பெருகும் தலம். தோல் வியாதிகளால் அவதியுறுவோர் இங்கு வஸ்திர தானம் செய்து வந்தால் தக்க நிவாரணம் பெறலாம்.

ஸ்ரீகுலசேகரப் பெருமாளுக்கு மஞ்சள் பட்டாடை வஸ்திரம் சார்த்தி, சாம்பிராணி தூபக் காப்பு இட்டு, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, வெண் பொங்கல், மூன்றையும் தாமரை இலை, மந்தாரை இலை, வாழை இலையில் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால்..

 1. வல்வினைகள், பில்லி, சூனியம், ஏவல் வேலைகளால் குலநாசம் ஆவதைத் தடுத்திடலாம். நல்ல முறையில் குலந்தழைக்க சந்தான பாக்யம் தரவல்ல ஆலயமிது.
 2. ஆண் வாரிசுக்காக ஏங்குவோர் இங்கு குலசேகரப் பெருமாளுக்கு நித்ய கல்யாண உற்சவம் செய்து, பவித்ரோத்சவ விழாவினைச் சத்சங்கமாக எடுத்து நடத்தி வருதல் வேண்டும்.
 3. ஒரே வாரிசையும் நோய், திடீர் மரணம், விபத்து, போரில் இழந்தோர் “குலசேகரா! என் குலந்தழைக்க நல்வரம் அளிப்பாய்!” என்று வேண்டி வர அவரவர் கர்ம வினைகளின் விளைவுகள் தணிந்து வாழ்வில் மனக் கொந்தளிப்புகள் அடங்கி, குலங்காக்கும் நல்வழிகளை அடையப் பெறுவர்.
 4. எத்தகைய வசதிகள் இருந்தும் பயங்கரமான குழப்பங்களால் அவதி அடைவோர்க்கும் மனசாந்தி அடையத் துணை புரியவரும் குலசேகரப் பெருமாள் ஆவார்.
 5. தர்ப்பணம், திவசம், படையல் போன்றவற்றை முறையாகச் செய்யாத குடும்பங்கள் பலவற்றிலும் எப்போதும் சோதனைகள் சூழ்ந்து இருக்கும். நன்முறையான குலவிருத்திக்கு அமாவாசை, சனிக்கிழமை, மாதப் பிறப்பு தர்ப்பணத் திதி பூஜைகளை முறையாகச் செய்து குலசேகரப் பெருமாளுக்கு எள் சாதம் படைத்து ஏழைகளுக்குத் தானமளித்து வர குலம் தழைக்க நல்வழி பிறக்கும்.
 6. பிள்ளைகள் வெளிநாட்டில் இருக்க நம் நாட்டில் தவிக்கின்ற பெற்றோர்கள், தம் பிள்ளைகள் வாழ்வின் இறுதி காலத்திலாவது தம்முடன் சேர்ந்து வாழ இப்பெருமாளை புதன்கிழமை தோறும் வழிபட வேண்டும். பெருமாளுக்கு மஞ்சள் பட்டு வஸ்திரம் சார்த்தி அடிபிரதட்சிணம் செய்துவர பிள்ளைகள், பெற்றோர் ஒன்று சேர்வர்.
சிசேரியன் ஆபரேஷன்

தற்காலத்தில் சிசேரியன் ஆபரேஷன் என்பது மிகவும் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. இயற்கையான யோனிவழிப் பிறப்பு முறையை விட, மருத்துவர்களும் சிசேரியன் ஆபரேஷன் முறையையே தேவையின்றி அணுகுவதாகப் பல முறையீடுகளும் உண்டு.

சீசர் எனும் அரசன் வயிற்றைக் கிழித்துச் செய்யப்படும் ஆபரேஷன் முறையில் முதன் முதலாகப் பிறந்ததாகவும் எனவே இதற்கு சிசேரியன் ஆபரேஷன் எனப் பெயர் வந்ததாகவும் மருத்துவ விஞ்ஞானத்தில் புகல்வர். உலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்திற்கும், ஒரு செடியின் இலையின் ஒவ்வொரு அசைவிற்கும் கூடக் காரண, காரியங்கள் உண்டு என்பதால் தெய்வீக விளக்கங்களை நாடியே உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிடமும் நீங்கள் ஆக்கமும் பெற வேண்டும்.

பலரும் வாழ்க்கையைக் “கழிப்பதாகவும்“, “பொழுது போகவில்லை போரடிக்கின்றது” என்றும் சொல்வர். பொன்னினும் மேன்மையான காலத்தின் அருமை தெரியாததால் வரும் வினையிது! உண்மையில் வாழ்க்கையைக் “கழிப்பதை விட”, ஒவ்வொரு நிமிடத்தையும் ஆக்கம் பெறுவதாகச் செய்திடலே சிறப்புடையது. உடலில் உள்ள 72000 நாளங்களிலும் மறைந்துள்ள ஆத்ம சக்தியை ஆக்கம் பெறச் செய்தலே வாழ்க்கையின் இறைலட்சியமாகும். வாழ்க்கையை வெறுமனே கழித்தவர்களும் பூர்வ ஜன்ம ரீதியாக சிசேரியன் ரணத்திற்கு ஆளாவர். எனவே ஸ்ரீகாலபைரவருக்கு அடிக்கடி, குறிப்பாக, ஞாயிறு தோறும் கையால் அரைத்த சந்தனக் காப்பு இட்டு வந்தால் ரண சிகிச்சையையே தவிர்த்து விடலாம்.

சிசேரியன் ஆபரேஷன் பற்றிய ஆன்மீக விளக்கங்கள் யாவை? இதனை ஒவ்வொரு மருத்துவரும் குறிப்பாக Gynaecologists, Obstetricians   நன்கு அறிந்து கொள்ள வேண்டும். இயன்றவரை சிசேரியன் வகை ஆபரேஷனைத் தவிர்க்க வேண்டும். முற்றிலும் தவிர்ப்பது சிறப்புடையது. யோனி வழிப் பிறப்பே சாலச் சிறந்தது.

ஸ்ரீநந்தீஸ்வர மூர்த்தி
செம்பியன்களரி

சிசேரியன் ஆபரேஷனை எவ்வளவு தவிர்ப்பது? இதற்காகவே, குறித்த மருத்துவரும், கர்பிணியும் தகுந்த வழிபாடுகளைத் தொடக்கத்தில் இருந்தே மேற்கொள்ள வேண்டும். கர்பமடைந்த மாதம் முதல் மாதந்தோறும் தகுந்த பூஜைகளைக் கர்பிணிகளும், மருத்துவர்களும் கடைபிடிக்க வேண்டும். இதற்கான விளக்கங்கள் நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம வெளியீடான “இல்லறப் பெண்களுக்கான வழிபாட்டு முறைகள்” என்ற நூலில் விளக்கமாகத் தரப்பட்டுள்ளன.

ஒரு குழந்தை பிறக்கும்போது தாய்க்கு ரண காயங்களை ஏற்படுத்தி உலகில் ஜனிப்பது சிறப்புடையதல்ல. பூர்வ ஜன்ம வினைகளின் பலன்களாகவே ரண காயங்களுடன் அறுவைச் சிகிச்சை மூலமாக வயிற்றுப் புறத்தில் துவாரமிட்டுக் குழந்தை வெளியே எடுக்கப்படுகின்றது என்பது ஆன்ம விளக்கமானாலும் ஏன் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்தால் சிசேரியன் முறையை மருத்துவர்களும் அறவே தவிர்த்து விடலாம்.

குருட்டு நாட்கள், தலையற்ற நாட்கள், காலற்ற நாட்கள் என நாட்களில் பல வகைகள் உண்டு. மரண யோகம், இரவு கால ராகு காலம், சூன்ய திதி, சந்திராஷ்டம நாட்கள், குருட்டு நாட்கள், தலையற்ற நாட்கள், காலற்ற நாட்கள், கூடா நாட்கள் போன்ற நாட்களில் தம்பதியர் சங்கமத்தை அறவே தவிர்த்தல் வேண்டும். சங்கமம் என்பது மிகவும் புனிதமானதாம். புனிதமான சந்ததி விருத்தி என்பது பித்ருக்களாகிய நம் மூதாதையர்களின் ஆசியால் கிட்டுவதாகும். இந்நாட்களிலும் அறுவை சிகிச்சையை அறவே தவிர்க்க வேண்டும். எம கண்டத்தில் கூட தற்காலத்தில் அறுவை சிகிச்சை நடப்பது வேதனைக்குரியது.

குருட்டு நாட்கள், தலையற்ற நாட்கள், காலற்ற நாட்களில் சங்கமித்தலால் நோயுள்ள, உடற்குறை, மனநலக் குறைக் குழந்தைகளே உண்டாகும். ரண அறுவை சிகிச்சைகள் செய்ய வேண்டிவரும். விந்து விரயம் ஒரு போதும் கூடாது. இதற்கான விளக்கங்களைத் தக்க பெரியோர்களிடம் பெற்றிடுக! ஆனால் இவ்வாறாக நாட்களைத் திறம்படக் கணித்து, அறிந்து நல்ல சந்ததியுடன் வாழ்வது கலியில் சாத்தியமாகுமா என்று எண்ணிடலாம். இவை பற்றி அறியாப் பலரும் நன்முறையில் குழந்தைகளை அடைந்துள்ளார்களே எனவும் எண்ணத் தோன்றும். நாம் செய்கின்ற பலவிதமான பூஜைகளும், சடங்குகளும் தாமாகவே பல சமயங்களில் நற்பலன்களைத் தரும் எனினும் மனித முயற்சியுடன் நன்கு சிர்பட வாழ்ந்திடலாம் அன்றோ!

பலவிதமான குறையுடன் சந்ததிகளை அடைந்து வாழ்நாள் முழுதும் துன்பப்படுவதை விட, இல்லற தர்மத்தை மிகவும் புனிதமானது என உணர்ந்து ஆன்மீக ரீதியாக அணுகுதலே வாழ்க்கையின் துன்பங்களுக்கு நல்ல நிவர்த்திகளைத் தரும்,

பூர்வ ஜன்மத்தில் பெற்றோர்களுக்கு முறையாகச் சேவை செய்யாதவர்கள், கொடுமைப்படுத்தியவர்கள், மன வேதனைகளுக்கு ஆளாக்கியவர்கள் போன்றோர் பல பிறவிகளில் – தாம் எவருக்குச் சேவை செய்யத் தவறினார்களோ அவர்களுக்கே பெற்றோர்களாகி, அவர்கள் பிள்ளைகளாகப் பிறந்திட விட்ட, குறைகள் தொடரும். இவ்வகையிலும் பெற்றோர் – பிள்ளைகள் பந்தங்கள் உண்டாகின்றன என உணர்க! தம் பெற்றோர்களைக் கரையேற்ற விரும்பி நற்காரியங்களைப் புரிந்து சேவை செய்தோரும், பெற்றோர்களைக் கரையேற்றப் பிள்ளைகளாகப் பிறப்பதுண்டு.

இரணங்கள் ஏற்பட ஆன்மீகக் காரணங்கள்

சாதாரணமாக ரண காயங்கள், ரண சிகிச்சைகள் ஏற்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. பிறர் சம்பாத்யத்தில், சொத்தில் வாழ்ந்தோர் பலவிதமான ரணங்களுக்கு ஆளாகின்றனர். நம்முடைய பழமையான வாழ்க்கை முறையில் உண்ணா நோன்பு, யோகம், தியானம் போன்றவற்றில் உடலை வருத்திச் செய்கின்ற பல ஆன்ம வழிமுறைகள் நிறையவே உள்ளன. எனவே தேகம், மனம் சம்பந்தப்பட்ட பல துன்பங்களையும் நம் பெரியோர்கள் அடக்கம், பணிவு, பொறுமையுடன் ஏற்றனர். ஆனால் சுக போகங்களையே நாடும்படிப் பலரும் தற்போதைய கலியுக வாழ்க்கை அமைத்துக் கொள்ள விரும்புவதால் சிறு முள் குத்தினால் கூடத் தாங்க முடியாதபடி உடல், மனக் கூறுகளையே கலியுக மனிதர்கள் அடைந்துள்ளனர். ஒரு சிறு காயம் பட்டு வலி ஏற்பட்டால் கூடப் பதறும் மனோநிலை கொண்ட சராசரி மனிதனையே நாம் காண்கிறோம்.

பிறர் மனம் நோகப் பேசியதும், பிறர் துடிதுடிக்கும்படி தவறான செயல்களை ஆற்றியதும், கர்ம வினை விளைவுகளாக ரண வேதனைகளைத்  தரும். பொதுவாக பத்து, பன்னிரெண்டு வயது வரை பெற்றோர்களின் கர்ம வினைகளை, பிள்ளைகள் பல வழிகளிலும் தாங்குவதால் தாம் ஒன்றுமறியாத இளம் பிஞ்சுக் குழந்தைகள், சிறு பிள்ளைகள் பல தடவைகளில் கீழே விழுந்து ரண காயங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவ்வகையில் குழந்தைப் பருவமானது, பெற்றோர்களின் கர்மவினை விளைவுகளைத் தாங்கும் தியாகமய வாழ்க்கைப் பருவமாகவே அமைகின்றது என்பதையும் அறிந்திடுக!

எனவே, சிசேரிய வகைப் பிறப்பிற்கும் பல காரணங்கள் உண்டு. அனைத்துக் காரணங்களையும் இங்கு விளக்கினாலும் மனித மனம் ஏற்காது, மனம் வேதனைப்படும் என்பதால்தான் பெரியோர்கள் மூலமாக அறிவதாகவே இத்தகைய ஆன்மீக ரகசியங்களைப் பூடகமாகவே வைத்துள்ளனர்.

ரணகுண வினைகள்

சிசேரியன் வகைப் பிறப்பிற்கன காரணங்களுள் மற்றொன்றே ரணகுண வினைகள் ஆகும். எத்தகைய கர்ம வினைகளை ரணப் பூர்வமாக, ருணப் பூர்வமாகக் கழிக்க வேண்டும் என்ற கர்ம பரிபாலனக் கணக்கும் உண்டு! சில சமயங்களில் மிகவும் நல்லவர்களாக வாழ்பவர்களுக்கும் சிசேரியன் வகை ஆபரேஷன் ஏற்படுவதும் உண்டு! இப்பிறவியில் நல்லவர்களாயினும் பூர்வ ஜன்ம வினை விளைவுகள் குறுக்கிடும் அல்லவா!

பூர்வ ஜன்மங்களில் பல சமயங்களில் கர்ப்பிணிகளுக்கு ஆற்ற வேண்டிய தர்மக் காரியங்களை வாய்ப்பு, ஆற்றல், வசதி இருந்தும் செய்யாதோர் சிசேரியன் வகை ஆபரேஷனுக்கு ஆளாகி ரண வேதனைகளை அடைவர். எனவே கர்ப்பிணியாக இருப்போர் வசதியற்ற ஏழை கர்ப்பிணிகளுக்கு உள் ஆடைகள், டானிக், மருந்துகள் போன்றவற்றைத் தானமாக அளித்து வரவேண்டும். மேலும் ரணகுண வினைகள் மிகுதியாக இருந்து அவற்றைக் கழிக்க வேண்டிய நேரம் வந்துள்ளதையும் சிசேரியன் ஆபரேஷன் குறிக்கும். எனவே சிசேரியன் ஆபரேஷன் நடந்திட்டால் குறிப்பாக தம்பதியினர் வயலட் நிற அல்வா, பீட்ரூட், நீல முட்டைக் கோல், நீலநிற வகை ஆடைகள் போன்றவற்றை சிசேரிய ஆபரேஷன் ரணம் ஆறும் வரையிலேனும் அளித்து வர வேண்டும்.

தம்பதிகள் கடைபிடிக்க வேண்டிய பூஜை

ஆனால் கர்பமான நாள் முதலே குறித்த ஹோமம், பூஜை முறைகள், தான தர்மங்களை ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்து வந்தால் நிச்சயமாக சிசேரியன் ஆபரேஷனை முழுவதுமாகத் தவிர்த்து விடலாம். மேலும் கர்பமான நாள் முதல் பத்து மாதம் பிள்ளைச் சுமப்பு என்றால் குறைந்தது 10x30 = 300 இடுப்பு வகை ஆடைகள், உள் ஆடைகள், பாவாடைகள், புடவைகள், பைஜாமா, இடுப்புக் கயிறு ஆகியவற்றை கர்ப ஆரம்பத்திலிருந்தே ஏழைச் சிறுமிகள், ஏழைக் குடும்பங்களுக்கு அளித்து வந்தால் சிசேரியன் ஆபரேஷனை முற்றிலுமாகத் தவிர்த்து விடலாம் என்பது உறுதி.

தான, தர்மங்களுக்கு நிறையச் செலவாகுமே என எண்ணாதீர்கள்! சிசேரியன் ஆபரேஷன் செலவில் இது மிகவும் சொற்பத் தொகையே ஆகும். கலியுக மனிதன் கடவுளுக்கு, தான தர்மங்களுக்கு என்றால் மூக்கால் அழுதிடுவான். ஆனால் ஆஸ்பத்திரிச் செலவு என்றால் பணத்தை அள்ளி, அள்ளிக் கொட்டுவான்! கலியில் மனிதனுக்கு தான, தர்மம் என்றால் கை சுருங்குவது இயல்பாகி விட்டது! ஆனால் காபி, ஹோட்டல், சினிமா, உல்லாசம் செலவுகளுக்கு அஞ்சுவதில்லை!

ஆயில்ய நட்சத்திரக் காப்பு சுகப் பிரசவம் அளிக்கும்

கர்பிணிகள் சனிக்கிழமை மற்றும் ஆயில்ய நட்சத்திர நாட்களில் ஸ்ரீவீரபத்ரருக்கு சந்தனக் காப்பு இட்டு, நெய் வகை இனிப்புகளைத் தானமாக அளித்து வந்தால் இயற்கையாகச் சுகப் பிரசவம் ஆகிடத் துணைபுரியும். பலரும் வீடு, தொழிற்சாலை, நிலங்களை அபிவிருத்தி செய்திட இளஞ் செடிகளையும், மரங்களையும் காருண்யமின்றி வெட்டிச் சாய்த்து விடுவார்கள் முறையாக விருட்ச பூஜைகளையும் செய்வதும் கிடையாது. இத்தகைய அஸ்த்ர தோஷங்களும் சிசேரியன் மற்றும் பல அறுவை சிகிச்சைகளுக்கும் காரணமாகின்றன. மகாபாரதம், ராமாயண காலங்களில் வாழ்ந்து பல போர்களில் பங்கு கொண்டு பிற வீரர்களுக்கும், எதிர்ப்படையினருக்கும் அதர்மமான முறையில் ரண காயங்களை ஆட்படுத்தியோரும் சிசேரியன் ஆபரேஷன் மற்றும் பல வகை உறுப்புகளில் ரண சிகிச்சைக்கும் ஆளாகின்றனர்.

அக்காலத்தில் நம் பெரியோர்கள் கர்பிணிகளை, கீரைகள், காய்கறிகளைக் கூட அரிவாள்மனையில் நறுக்க விட மாட்டார்கள்.. காரணம், இளஞ்செடிகளை, தாவரப் புழு, பூச்சிகளை, கர்பிணிகள் வதைத்து எக்கர்ம வினைகளையும் புதிதாகச் சேர்த்துக் கொள்ளல் ஆகாது என்பதே ஆகும். இத்தகைய ஜீவகாருண்யத்தால் தாம் நம் முன்னோர்கள் சுகப்ப் பிரசவம் அடைந்தனர்.

ஆட்டுக் கல்லும், அம்மியும் யோக சாதனங்களே!

மேலும் ஆட்டுக் கல், அம்மி, குடங்களைப் பயன்படுத்தும் பண்டைய யோக முறை மறைந்து மிக்ஸர், கிரைண்டர் என்று வந்து விட்டாலும், இவற்றில் நிறையும் பிராணாயாம யோக சக்திகள் இன்றி, எதற்கெடுத்தாலும் தண்ணீர்க் குழாயைத் திறந்து விடுதலாலும் இல்லறப் பெண்களுக்கு இயற்கையாக வீட்டுக் காரியங்களில் வந்தமைந்த இயல்பான யோக நிலைகளும் இல்லாமற் போய் விட்டன.

முதுகு வளைந்து குனிந்து விளக்குமாறு வைத்து நன்கு வீட்டைக் கூட்டும் வழக்கத்தில் முதுகுப் பகுதிக்கான யோக நிலைகள் கூடி இருந்தமையால் இடுப்பு வலி, முதுகுவலி, மூட்டுவலி போன்றவை இல்லாது அனைவரும் ஆரோக்யமாக, சுகப் பிரசவத்துடன் வாழ்ந்தனர். இவையெல்லாம் இல்லாது நவீன விஞ்ஞானமய வசதிகள் வந்து விட்டமையால் சுகப் பிரசவ நிலைகள் மறைந்து சிசேரியனே முழு நடைமுறைக்கு வந்தது போலாகி விட்டது.

குழந்தைப் பிறப்பு மருத்துவ நிபுணர்களும் தினசரி பல விசேஷமான பூஜைகளியக் கடைபிடித்து இயன்ற வரை சிசேரியன் ஆபரேஷனைத் தவிர்க்க முயற்சிக்க வேண்டும். தினமும் ஸ்டெதாஸ்கோப், தெர்மா மீட்டர் மற்றும் அனைத்து மருத்துவ சாதனங்களுக்கும் விபூதி, மஞ்சள், குங்குமம், சந்தனம், சிந்தூரம் ஆகிய பஞ்ச பூதச் சின்னங்களை இட்டு, “இறைவா! இயற்கையாகவே அனைத்தும் நடந்து கர்பிணிகள் சுகப்பிரசவம் காண நல்வழி காட்ட வேண்டும்!” என்று மனமார வேண்டி வர வேண்டும். தினமும் ஸ்ரீகருட காயத்ரீ, ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீமிருத்யுஞ்ஜய காயத்ரீ, மந்திரங்களை ஓதி வில்வ மரம், வேப்ப மரம், அரசு, ஆல் விருட்சங்களைச் சுற்றி வர வேண்டும். சிகிச்சையின்போது மருத்துவர்கள் தீனக் காப்பு எனும் மர வளையலை அணிதல் வேண்டும்.

தினமும் ஒவ்வொரு மருத்துவரும் மருத்துவ சக்திகள் நிறைந்த அரச மரம், ஆல மரம், வன்னி மரம், வில்வ மரம், வேப்ப மரம் ஆகிய ஐந்தையும் 24 முறை வலம் வந்து வணங்கி வந்து விருட்ச பூஜா பலன்களை நோயாளிகளின் ஆரோக்யத்திற்கு அர்ப்பணிக்க வேண்டும், ஸ்ரீதன்வந்த்ரீ காயத்ரீ, ஸ்ரீஅக்னி காயத்ரீ, ஸ்ரீகருட காயத்ரீ, போன்ற மருத்துவ சக்திகள் நிறைந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரங்களை தினமும் எப்போதும் ஓதி வர வேண்டும். இவ்வாறு வழிபட்டு வர சிசேரியன் போன்ற ரண சிகிச்சைகளை அறவே தவிர்த்து விடலாம்.

பாத சக்திகள்

(நல்லது) நடக்க வேண்டிய ஆண்டு இது! வரும் சுபானு ஆண்டில் பாத சக்திகள் பொங்கி நிறைவதால் பாத யாத்திரைகள் நிறைய நிகழ வேண்டிய ஆண்டு இது! இயன்றவரை வாகனங்களைத் தவிர்த்து, இறைத் துதிகளை ஓதியவாறு நடந்து… நடந்து… நடந்தே எங்கும் செல்லவும்!

கலியுலகில் வந்துள்ள விஞ்ஞான சாதனங்கள், மருந்துகள் யாவும் மனிதனுக்கு ஏகப்பட்ட சுக, போகங்களைத் தந்துள்ளது போல் தோன்றினாலும் இவற்றுள் பலவும் ஆபத்தான பக்க விளைவுகள் நிறைந்ததாக, சாதாரண மனிதனின் ஆரோக்யத்தையும் வெகுவாகப் பாதிக்கின்றன. மக்களுக்கு நன்மை பயக்கும் விஞ்ஞானம் மெய்ஞானத்தின்பால் பட்டதே! ஆனால் விஞ்ஞான தீமை தரலாகாத எந்த வசதியாக இருந்தாலும் கம்ப்யூட்டர், மின்சாரம், பெட்ரோல், விரைவுப் பயணம் என்று ஆபத்துகள் நிறைந்ததாகவே உள்ளது.

புண்ணியம் நிரவிடும் பல தலைமுறைகளுக்கு!

எனவே பக்க விளைவுகள் அற்ற விஞ்ஞான வசதி அல்லது மருந்துகளைக் காண்பதே அரிதிலும் அரிது என்றாகி விட்ட நிலையில், விஞ்ஞானம் படைத்த வசதிகள் இன்றி ஒரு நாள் கூட வாழ இயலாத போது, இவற்றில் நிறைந்துள்ள ஆபத்துகளில் தற்காத்துக் கொள்ள மனிதன் ஆன்மீக ரீதியாகப் பல கூடுதல் பூஜைகளை மேற்கொள்ள வேண்டியதாகிறது. இவைதாம் யோகங்கள், பிராணாயாம, தியானங்களாகின்றன! மனிதன் தனிப்பட்ட முறையில் இவற்றைக் கடைபிடிக்காத போது, அருணாசல கிரிவலப் பாதயாத்திரையில் தாம் யோக, தியான, பிராணாயாம, பூஜா பலன்கள் இணைந்து வருகின்றன. இதனால்தான் அருணாசல கிரிவல வழிபாடு பிரசித்தி பெற்று வருகிறது. எனவேதாம் நடப்பில் உள்ள வழிபாடுகளோடு ஸ்ரீசரபேஸ்வர பூஜை, பிரதான பிரதோஷ பூஜை, குளிகைக் கால பைரவ பூஜை போன்றவற்றையும் கடைபிடித்தாக வேண்டும். இவையாவும் புதியவை அன்று! பண்டைய காலத்தில் சமுதாயத்தில் நிலவி இருந்து காலப் போக்கில் மக்களால் மறக்கப்பட்டவையே! ஆபத்துகள் நிறைந்த சாதனங்கள் இல்லாத அக்காலத்திலேயே நம் மூதாதையர்கள் நிறைய பூஜைகளைக் கடைபிடித்தமையால் இதில் திரண்ட மலையளவு புண்ய சக்தியால்தாம் அவர்தம் சந்ததிகளாகிய நாம் ஓரளவேனும் நன்கு வாழ்ந்து கொண்டிருக்கிறோம்! நம் எதிர்கால சந்ததியினருக்கு…?

இறைமையைச் சார்ந்ததே மருத்துவம்!

இயற்கைத் திரவியங்கள், மனித நல் உள்ளம், திறமை, வழிபாடுகள், பக்தி, குருநம்பிக்கை, பெரியோர்களை மதித்தல் போன்றவற்றைக் கொண்டு ஆழ்ந்த இறை பக்தியை மூலமாக வைத்து நம் பண்டைய மருத்துவ முறையும், இதர வாழ்க்கைத் துறைகளும், முறைகளும் அமைந்ததால் அனைத்தும் நல்ல பாதுகாப்புடன் துலங்கின! தற்போதைய மருத்துவ முறையில் நோயாளிகளின் இயற்கையான நாடி உணர்வுகளை நம்புவதை விட scan reports, ecg போன்ற விஞ்ஞான வரைகோட்டுப் படங்களையே பெரிதும் நம்பி சிகிச்சை அளிக்கின்றனர். மனிதனைப் படைத்த கடவுளை நம்புவதை விட, மனிதனால் படைக்கப்பட்டதாகக் கருதப்படும் மருத்துவக் கருவிகள், சாதனங்களை நம்புவதே பெருகி விட்டது. மருத்துவ சாதனங்கள் முறையாக இயங்கித் தவறான தகவல்களைத் தராதிருக்கவும், பெரிய வியாதிகளில் சிக்கி அல்லற்படாது தற்காத்துக் கொள்ளவும் மனிதன்  விசேஷமான பூஜைகளைக் கடைபிடித்தாக வேண்டும். இதற்கு விசேஷமான பூஜைகள், நற்காரியங்கள், பித்ரு வழிபாடுகள், விருட்ச கிரிவலம் சமுதாய இறைப் பணிகளில் திரளும் புண்ய சக்தியே பெரிதும் தேவைப்படுகிறது.

ஆனால் காலத்திற்கேற்றபடி மருத்துவப் பூர்வமாகவும், சட்டப் பூர்வமாகவும் மனித சமுதாயத்தில் பல சமுதாய நியதிகளை ஒட்டி வாழ வேண்டி உள்ளமையால், தினசரி வாழ்க்கையில் வெளியில் இருந்து விபத்து, சேதங்கள், நஷ்டங்கள், ஏற்படாது தற்காத்துக் கொள்ள பலவிதமான சமுதாய பூஜைகளையும் ஆற்ற வேண்டிய கடமை பூலோகத்தில் ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பாக பாரதப் பிரஜைக்கு நிச்சயமாக உண்டு.

பாத யாத்திரை பல பூஜா பலன்களைத் தந்திடும்..!

கிரிவலம், ஹோமம், அன்னதானம், கும்பாபிஷேகம், ஆலய பூஜைகள் போன்றவை சமுதாய பூஜைகள் ஆகின்றன. இவற்றுள் ஒன்றாகவும் பாதயாத்திரை அமைகின்றது. நடத்தல் என்பது ஒரு வித யோகம்! காவடி, சபரிமலை, கிரிவலம், கோயில்களுக்கான பாத யாத்திரை, பால் குடமெடுத்தல் போன்றவை தனிப்பட்ட மனித வழிபாடாகத் தோன்றினாலும் பாதயோக சக்தி, பூம்ய சக்தி, திருவடி ரேகை சக்திகள் போன்றவை பூமியில் நிரவிப் பலருக்கும் அனுகிரகத்தை அளிப்பதால் கிரிவலம் போன்ற பாதயாத்திரைகள் மகத்தான சமுதாய பூஜைகள் அகின்றன.

உதாரணமாக பௌர்ணமி தோறும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற ஒருவர் தம்மையும் அறியாது சுமார் 50 சதுர மைல் அளவிற்கு நற்பாதக் கிரணங்களை நிரவும் சக்தியைப் பெறுகின்றார். இதனால்தாம் அக்காலத்தில் அருணாசல கிரிவலம் சென்று வந்தவருக்குப் பாத பூஜை செய்தோ அல்லது தொட்டோ வணங்கிடுவர்.

நடந்தால் வளம் பெறும் கால் ரேகைகள்!

மனிதன் என்று நடந்து செல்லும் நற்பழக்கத்தைக் கைவிட்டானோ அன்றிருந்தே நல் ஆரோக்யமும் மனித சமுதாயத்தில் இருந்து விடை பெறத் தொடங்கி விட்டது. எதற்கெடுத்தாலும் கார், ஸ்கூட்டர், சைக்கிள், ஆட்டோ எனத் துரித கதி வண்டிகளையே மனிதன் நம்புகின்றான். தினமும் குறைந்தது ஒரு மணி நேர பூஜை, மூன்று மைல் தூர நடை எனக் கொண்டால் தான் உடல் நாளங்கள் ஆரோக்யமாக இருப்பதோடு கை ரேகைகள் போல கால்களில் உள்ள கால் ரேகைகளும் தீர்க சக்திகளைப் பெறும். பூமியில் நிலவும் பூம்ய சக்திகளையும் நாம் பெற வேண்டுமானால் தினமும் நன்கு நடந்தாக வேண்டும்! இதற்காகவே ஆலயப் பிரதட்சிணங்கள், கிரிவலம், மலைக் கோயில் வழிபாடு தெய்வீக ரீதியாகத் தோன்றின! உங்கள் குழந்தைகளையும் ஆலயங்களில் நிறைய பிரதட்சிணங்களைச் செய்யப் பழக்குங்கள்.

ஸ்ரீபிரார்த்தனா தட்சிணா மூர்த்தி
நாகத்தி

நீர்வளம் பெருகிட, “நடந்தாய் வாழி காவேரி!” என்று ஓதிய சிலம்புப் புனித இறைமொழியும் உண்டு. இன்றைக்கும் ஆங்காங்கே மூன்று மைல், ஐந்து மைல் எனப் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஆற்றுப் படுகையிலும், நதி நீர்ப்பாதையிலும்

“அகத்தியக் கமண்டல அருள்நதி வாராய்! ஜகத்தருள் நிரந்தரப் புனல்நதி தாராய்!”
என்று பக்திப் பரவசத்துடன் அமிர்தவர்ஷிணி, காவேரி, மலயமாருத ராகங்களில் பாடி அனைத்து வாத்யங்களும், இசைக் கருவிகளும் வாசிக்கப்பட, குறிப்பாக மிகவும் அபூர்வமாக “பிரார்த்தனா தட்சிணா மூர்த்தி” எனப் பெயர் கொண்டு அருளும் (திருவையாறு அருகே உள்ள) நாகத்தி சிவாலயத்திற்குப் பாதயாத்திரை சென்று வணங்கி வர இறையருளால் காவிரி பொங்கிடக் காணலாம். காவிரி நடந்து வந்து கருணைக் கடலாய் அருள் வளமாய் நீர்வளம் தர நாகத்தித் திருத்தலப் புனித யாத்திரையானது பெரிதும் துணை புரியும்.

காவிரி நதியில் நீரைப் பெருக்கிட, கரிகால் சோழன், நதிக் கரையோரம் நதி தேவதையை வேண்டி, நாகத்தி ஸ்ரீபிரார்த்தனா தட்சிணா மூர்த்தியை தரிசித்து வழிபடுவதற்காக, 5 லட்சம் மக்களுடன் நாகத்தித் திருத்தலத்திற்கு புனிதப் பாத யாத்திரையை மேற்கொண்டிட மறு தினமே காவிரிப் புனல் பெருகியது! நதிவளம் பெருகிட மன்னர்கள், தம்மிடையே உள்ள பகைமையை மறந்து நாகத்தி சிவத்தலத்திற்குப் புனித யாத்திரை வந்து நீர்வளம் பெருக்கினார்கள்.

ஒவ்வொரு குடும்பத்திலிருந்து பலரும் பாத யாத்திரையில் குறைந்தது 5 மைல் தூரமேனும் பங்கு கொண்டு சங்கிலித் தொடர் போலப் பல ஊர் மக்களும் குடும்பம், குடும்பமாகப் புனித நடை யாத்திரையாக நடந்து வழியில் ஆலய, ஊர்க் குளங்களில் மீன்களுக்குப் பொரியிட்டு வருண, நதி மூர்த்திகளை வேண்டிப் பிரார்த்தித்திட காவிரி நிச்சயமாக அருள்வளம் கூட்டுவாள்.. மேலும் ஸ்ரீஅகஸ்தியர் பிரான் உள்ள தலங்களில் (திருவிடைமருதூர், கொறுக்கை, அகஸ்தியாம்பள்ளி, கணபதி அக்ரஹாரம்) அகத்திய மாமுனிக்கு புனுகு, ஜவ்வாது, கஸ்தூரி கலந்த கமண்டல நீரை மூன்று மணி நேரம் தொடர்ந்து ஊற்றி அபிஷேகித்து வர, நீர் தோஷங்கள், நிலத்தடி தோஷங்கள் கழிந்து, அகத்தியர் தந்த காவிரியில் அருள்வளமிகு நீர்வளம் கிட்டும்.

ஆலயத்தை ஒட்டிக் கழிவறை வேண்டாம்!

ஆலய மதிலோரம் கழிவறைகளை அமைத்து ஆலயத் தீர்த்தங்களை மாசுபடுத்துவதாலும் ஜல தேவதைகளின் சாபங்களுக்கு ஆளாகியும் நாட்டில் நதி வளம், நீர் வளமும், குறையலாகும். எனவே ஆலயத்தை மாசுபடுத்தும் வண்ணம் உள்ளனவற்றை அகற்றிப் புனர் பூஜை செய்து ஜல தேவதைகளைப் ப்ரீதி செய்திடல் வேண்டும். ஆலயத்தைச் சுற்றி பச்சரிசி மாக்கோலம் இடுதலும் ஜல தேவதா மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தரும்.

சுபானு ஆண்டில் அனைவரும் பலவிதமான தெய்வத் துதிகளை ஓதியவாறு ஜாதி, மத,  பேதமின்றி சத்சங்கமாக, பாத யாத்திரையை அவரவர் ஊர் ஆலயத்தில் தொடங்கி வீதிகளில் பஜனைகளுடன் நடை யாத்திரை வந்து ஆலயத்தில் நன்றிப் பிரார்த்தனை செய்து நிறைவு செய்திட்டால் பூமா தேவியே மனங் கனிந்து வருண பகவான் மற்றும் ஜல தேவதைகளை வேண்டி மழைவளம், நீர்வளம், ஆரோக்ய வளம் பெற்றுத் தருகின்றாள். அனைவரும் தல யாத்திரையாக, கிரிவலமாக நன்கு நடக்க வேண்டிய ஆண்டு இது. நடந்தாய் வாழி காவேரி! அருணையில் நடந்தாய் வாழி அடியார்கள்!

மூலிகா சக்திகள் பெருகும் அருணாசல மகாசிவராத்திரி கிரிவலம்

கிரிவலத்தில் கிட்டும் காயகல்ப மூலிகா சக்திகள்! பலவிதமான மூலிகைகளை நம் தினசரி வாழ்வில் ஏற்றாக வேண்டும். புதினா, கொத்துமல்லி, கருவேப்பிலை, முள்ளங்கி இலைகள், காரட் இலைகள் போன்ற யாவையுமே மூலிகை வகையைச் சார்ந்ததாகும். ருசியான உணவுப் பழக்கத்திற்கு நாம் ஆளாகி விட்டதால், இயற்கை உணவு சக்தியை நாம் இழந்து வருகின்றோம். இதுவரையில் நம் வாழ்வில் நாம் இழந்த பலவித மூலிகை சக்திகளை ஆன்மீக ரீதியாக முறையாகப் பெறவும் பதினொரு காயகல்ப மூலிகா சக்திகள் தோன்றும் சித்திரபானு ஆண்டின் வரும் மகாசிவராத்திரி அருணாசல கிரிவலக் காலம் பெரிதும் துணைபுரியும்.

வியாசர் வழிபட்ட வளர்ஒளிபுர ஈஸ்வரராம் ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ர மூர்த்தி!

வியாஸ மகரிஷி வளர்ஒளிபுரத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்ரரைத் தரிசித்து வலம் வந்து அங்கப் பிரதட்சிணம் செய்து அன்றும் இன்றுமாக மாத சிவராத்திரி தோறும் வழிபட்டு வருகின்றார். இத்தரிசனமே வியாசருக்கு அருணாசலத்தில் சகஸ்ர பைரவ தரிசனத்தைப் பெற உதவியது..!

ஸ்ரீஅகத்திய பிரான் அவளிவநல்லூர்

எனவே ஒவ்வொரு மாத அஷ்டமித் திதியிலும், மாத சிவராத்திரியிலும் வளர்ஒளிபுரம் ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவருத்ரரைத் தரிசித்து வந்தால் தேவகடன், பித்ரு கடன், ரிஷி கடன் ஆகிய மூன்று வகைப் பிறவிக் கடன்களைத் தீர்த்து அருள் பெறும் நிலை கிட்டும். மகா காவியங்களில் உரைத் திண்மை கிட்டும். அனைவரும் குறிப்பாக எழுத்தாளர்களும், அனைத்துப் பத்திரிகைத் துறையினரும் வழிபட வேண்டிய பைரவ மூர்த்தி! வாகனமில்லாது தாமே பைரவர் தோன்றிய அபூர்வமான ருத்ர பூமியாதலால் இங்கு அங்கப் பிரதட்சிணம் செய்தல் மிகவும் விசேஷமானதாகும்.

வியாஸ மகரிஷி உள்ளிட்ட எண்ணற்ற கோடி, கோடி மஹரிஷிகளும், சித்புருஷர்களும் சூட்சுமமாகவும், தூல வடிவிலும் அங்கப் பிரதட்சிணம் செய்கின்ற திருத்தலமாதலால், வளர்ஒளிபுரம் ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவருத்ரரை வழிபட்டு அடுத்து வரும் அமாவாசை நாளில் இங்கு அன்னதானம் செய்தலால் வாழ்வின் எத்தகையப் பிரச்னைகளையும் வென்றிடப் பெரிதும் துணை புரியும்.

நீர்வளம் பெருக்கும் மகா சிவாத்திரி கிரிவலம்

மாதம் மும்மாரி மழை பொழிந்து நீர் வளமும், நிலவளமும் நிறைந்த தமிழ்நாட்டில் தற்போது நீர்ப் பஞ்சம் ஏற்படக் காரணம் பக்தி குறைவேயாகும். பலவிதமான வழிபாடுகளில் நிலையான பங்கம் ஏற்பட்டுள்ளமையால் வான் வளமும், நிலவளமும் குறைந்துள்ளது. வரும் மகாசிவராத்திரி நாளில் மழை வளம் வேண்டி விவசாயிகள் அதிக அளவில் அருணாசலத்தில் கிரிவலம் வந்தால், இறையருளால் நிச்சயமாக மழை வளம், மண் வளம் பெருக ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவ ருத்திர கோடீஸ்வரர் பெரிதும் அருள்புரிவார்.

ஸ்ரீசாகம்பரி தேவி பல்லாயிரக்கணக்கான தான்ய வகைகளை உற்பவித்த தினமாக சித்திரபானு ஆண்டின் மகா சிவராத்திரி தினம் அமைவதால் தான்யங்கள் கோடி கோடியாய்ப் பல்கிப் பெருகி, நிலவளமும், மழை வளமும், தான்ய வளமும் பெற மகாசிவராத்திரி தினம் துணை புரிகின்றது. எனவே மக்கள் கூடிச் செய்வதான இதனை எளிமையானக் கூட்டுவல சிவராத்திரி என்று சித்தர்கள் போற்றுகின்றனர்.

அற்புத கோதூளி சக்தி தரும் அருணை மகாசிவராத்திரி கிரிவலம்!

திருஅண்ணாமலை கோசாலையில் பல பசுமடங்களைப் போஷித்த பசுமடச் சித்தர் பிரான் தம் கோசாலையில் உள்ள 10000க்கும் மேற்பட்ட பசுக்களுடன் கிரிவலம் வந்த நாள் இதுவேயாம். எனவே கோதூளி சக்தி நிறைந்த கிரிவலமாயும் இது விளங்குகின்றது! சித்தர்பிரான் ஒரு லட்சம் பசு, கன்றுகளுடன் கிரிவலம் செய்த நாள் என்றால் எத்தகைய கோதூளி சக்தியை இச்சிவராத்திரி தினம் பெற்றிருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.

கோதூளி என்றால் அனைத்துக் கோடி தேவாதி தெய்வ மூர்த்திகள் உறைகின்ற பசுவின் திருக்குளத்திலிருந்து தெளிக்கும் புனிதமான மண் துகள் என்று பொருள். அதாவது, பூமியின் மண் துகளானது பசுவின் குளம்பில் பட்டு தெறிக்கும்போது கோதூளிப் பிரசாதமாக மாறுகின்றது. திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் இருந்து ஸ்ரீவியாஸ பகவான் இக்கோதூளியைச் சேகரித்து கங்கை, காவிரி போன்ற ஒன்பது நதி தீர்த்தங்களில் கரைத்து, கோதூளி ஸ்நானம் செய்து விநாயக மூர்த்தியின் முன் அமர்ந்து மகா பாரதம் உரைத்தார்.

எனவே வரும் மகாசிவராத்திரி நாளில் இறையருளால், பசுவின் குளம்படிபட்ட கோதூளிப் பிரசாதத்தை நெற்றியில் இட்டு, ஒரு புரசை இலையில் கோதூளியை வைத்துத் தலையில், கரங்களில், சட்டைப் பையில் வைத்துக் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானதாகும். நீங்கள் மட்டும் இக்கோதூளித் திருமண்ணைச் சுயநலமாகத் தான் மட்டும் இட்டுக் கொள்ளாமல் உங்களுடன் கிரிவலம் வரும் ஏனையோருக்கும் கோதூளியைப் பிரசாதமாக அளித்து நெற்றிக்கு இடச் செய்து கிரிவலத்தின் பலாபலன்களைப் பல்கிப் பெருக்குங்கள்.!

மகாசிவராத்திரி கிரிவலப் பலாபலன்கள்! சொல்லவும் பெரிதே அருணாசல சிவராத்திரி கிரிவலப் பலாபலன்கள்! இருப்பினும் முக்கியமான சிலவற்றை இங்கு அளிக்கின்றோம்!

வீண் சச்சரவுகள் எதுவும் இன்றி, கணவன் மனைவியரிடையே மனம் கனிந்த நிலை பெற்றிட, வரும் அருணாசல மகாசிவராத்திரி பெரிதும் துணை புரியும்.

தம் பிள்ளைகள் முதுமைக் காலத்தில் தங்களைக் காப்பார்களோ, கைவிட்டு விடுவார்களோ என்ற அச்சத்துடன் வாழ்வோரும். நன்முறையில் தம் பிள்ளைகள், குடும்பத்தாருடன் இணைந்து வாழ இந்த மகாசிவராத்திரி கிரிவல சக்திகள் உதவும்.!

திருமணமாகிய உடனே ஆரம்பத்தில் இருந்தே மனவேறுபாடுகளுடன் வாழும் தம்பதிகள் நன்முறையில் வாழ்க்கையில் சீர்மை பெற இம்மகாசிவராத்திரி கிரிவலம் துணை புரிகின்றது.

பசு தர்மம் பேண வேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் கலியுக வாழ்க்கைச் சூழ்நிலைகளால் ஒவ்வொரு இல்லத்திலும் பசுவைப் பராமரிக்கும் பசு தர்மத்தைக் கடைபிடிக்க இயலாது போய் விடுகிறது! பசுதர்மம் என்றால் வீட்டில் பசுவை வளர்த்து கறவை நின்றால் கூட ஆயுள் முழுதும் அதனைப் பேணுதலாகும்.

பாரதப் பிரஜையாகப் பிறந்தும் பசுதர்ம சக்தியை நன்கு அறிந்தும் பசுதர்மம் பேணாமைக்காகப் பரிகாரம் தேடவும்., பசுதர்மம் நன்கு பேணுவோர் விருத்தி அடையவும்., பசுமடத்துக் கோனார்ச் சித்தர் கிரிவலம் வரும் இந்நாளில் அருணாசல கிரிவலம் வந்து கிரிவலப் பலாபலன்களை நாட்டில் பசுதர்மம் பேணிட அர்ப்பணிக்க வேண்டும். இதனால் பசுதர்மம் சீர்மை பெற ஒரு அருணாசல கிரிவலமாவது வந்தோம் என்று வாழ்வில் ஆத்மத் திருப்தியாவது கிட்டும் அல்லவா!

மஹா சிவராத்திரி நாள் : 1.3.2003 சனிக்கிழமை காலை 6.37மணி முதல் 2.3.2003 ஞாயிற்றுக்கிழமை காலை 7.8 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மாசி மாத மஹா சிவராத்திரி திதி அமைகிறது ! மஹா சிவராத்திரி கிரிவல நாள் : 1.3.2003 சனிக்கிழமை இரவு.!

பங்குனி மாத சிவராத்திரி நாள் : 30.3.2002 ஞாயிற்றுக்கிழமை இரவு 9.3 மணி முதல் 31.3.2003 திங்கட்கிழமை இரவு 10.45 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாத சிவராத்திரி திதி அமைகிறது. பங்குனி மாத சிவராத்திரி கிரிவல நாள் : 30.3.2003 ஞாயிற்றுக்கிழமை இரவு.!

பௌர்ணமி நாள் : 17.3.2003 திங்கட்கிழமை இரவு 7.20 மணி முதல் 18.3.2003 செவ்வாய்க்கிழமை மாலை 4.5 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 17.3.2003 திங்கட்கிழமை இரவு

மஞ்சள் மகிமை

கணவனுக்கு நல்ஆயுள் தரும் “லட்ச மஞ்சள் நேர்த்திப் பிரார்த்தனை”

“லட்ச மஞ்சள் பிரார்த்தனை” என்ற சிறப்பான நேர்த்தி முறை ஒன்றுண்டு! சந்ததி விருத்தி பெறவும்., குடும்பத்தில் துர்மரணங்கள் நிகழ்ந்து வந்தால் “ம்ருத்யு” தோஷங்களில் இருந்து விடுபடவும், மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள கணவன் மரணப் பிடியில் இருந்து மீளவும் இல்லறப் பெண்கள் “லட்ச மஞ்சள்” நேர்த்தியை மேற்கொள்வர்.

ஜாதி, குல, மத பேதமின்றி திருமணமான பெண்களுக்கு சுமங்கலிகட்கு ஒரு படி அல்லது ஒரு பிடி மஞ்சளாக, குறித்த காலத்திற்குள் மொத்தம் ஒரு லட்சம் மஞ்சள்களை அளிப்பதே “லட்ச மஞ்சள்” நேர்த்தியாகும். லட்ச மஞ்சள் போன்று ‘லட்ச வெற்றிலை, லட்சப் புஷ்பங்கள், லட்ச வஸ்திரம், லட்ச மெட்டிகள்’ என்ற வகையில் ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் எண்ணிக்கை வருமாறு பலருக்கும் தானமளிக்கும் நேர்த்திப் பிரார்த்தனையும் உண்டு. இந்த நேர்த்தியைத் துவக்க வேண்டிய மிக முக்கியமான தலங்களில் ஒன்றே வளர்ஒளிபுரம் ஸ்ரீசகஸ்ரசஞ்சய வைபரவ ருத்ரர் அருளும் சிவாலயமாகும்.

வரும் மகாசிவராத்திரி கிரிவலத்தில் திருஅண்ணாமலை ஆலயத்தினுள் ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் சன்னிதியில் “லட்ச மஞ்சள், “லட்ச வெற்றிலை”, “லட்ச வஸ்திரம்”, “லட்ச மெட்டிகள்” என்றவாறாக அவரவர் வசதிக்கு ஏற்ப சங்கல்ப நேர்த்தி எடுத்து ஒரு மண்டலத்திற்குள் (48 நாட்கள்) இதனை நிறைவேற்றிட, காரிய சித்தியைக் கண்கூடாகக் காணலாம். குறிப்பாக கணவனுடைய கடுமையான நோய்கள் நிவர்த்தியாகத் தக்க நல்வழிகளைக் காட்டும் அற்புத நேர்த்தி இது!

பல குடும்பங்களிலும் மரணப் படுக்கையில் கிடந்த கணவனை, நிமிர்த்தி நன்கு நடமாட, வைத்த “லட்ச மஞ்சள்” அற்புத நேர்த்தி விரதமிது! வசதி இல்லாதோர் பலருடன் சேர்ந்து சத்சங்கமாக இதனைச் செய்திடலாம்..!

திருச்சி-வாளாடியை அடுத்து, திருமாந்துறைக்கு அருகே இடையாற்றுமங்கலம் கிராமத்தை அடையலாம். இங்கு உள்ள ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் ஆலயத்தில் “லட்ச மஞ்சள், லட்ச வெற்றிலை, லட்ச வஸ்திரம், லட்ச மெட்டிகள்’ நேர்த்தி ஏற்று ஒரு மண்டலத்திற்கும் நடத்துதலால் அதியற்புதமான பலன்களைப் பெற்றிடலாம்.. நேர்த்தியின் நிறைவில் இங்கு வழிபடுவது சிறப்புடையது.. கடுமையான மாங்கல்ய தோஷங்களை நிவர்த்திக்கும் அற்புதச் சிவாலயமே இடையாத்துமங்கலம் ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் கோயிலாம்.. திருமணம் ஆகாது வருந்துவோர் இங்கு சுவாமிக்குத் திருக்கல்யாண உற்சவம் நிகழ்த்திட நன்முறையில் திருமண வாழ்வு அமையும்..!

மூன்றாம் பிறை

மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம்

கண்பார்வை நன்கு பிரகாசம் அடைய ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீசந்திரசேகரர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீசோமச்சந்திரர், ஸ்ரீசோமசுந்தர மூர்த்தி ஆலயங்களில் இருந்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்றிடுவீர்!

மாதந்தோறும் அமாவாசையில் இருந்து மூன்றாவது தினம் வானில் பறங்கிக் கீற்று போல் சில நிமிடங்களுக்கு மட்டுமே தென்படுவதே மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் என நாமறிவோம் அல்லவா! அறிந்து என்ன பயன்? எவரேனும் இதனை முறையாகக் கடைபிடிக்கின்றாரா?

உங்கள் குழந்தைகளுக்கு, ஒன்றுமறியாப் பாமரர்களுக்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசன மகிமையைப் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்! அவர்களேனும் முறையாகச் செய்யட்டும்!

கண்களில் சூக்குமமான, பாஸ்கரச் சந்திரப் பிலாகாச நாளம் என்ற ஒன்று உண்டு! இது சூரிய (பாஸ்கர), சந்திர லோகத்தோடு பிணைப்புடையது! கண் பார்வை நன்கு பிரகாசம் பெற மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தில் கிட்டும் கிரணங்கள் மூலமாகத்தான் கண்களில் உள்ள இந்த பாஸ்கர சந்திரப் பிலாகாச நாளம் தூய்மையும், ஆக்கமமும் பெறும். தூய்மை அடைவதெனில் அழுக்கைச் சுத்திகரிப்பது அல்ல! பாஸ்கர சந்திரப் பிலாகாச நாளம்தனை ஆக்கப்படுத்தும் அரிய நேத்ர யோக முறைகளை மனித குல அறியாததினால், மனிதன் காணக் கூடாத முறையற்ற காட்சிகளைக் காண்பதால் கண்களில் உண்டாகும் காமப்புறைகள் இந்த நாளத்தைக் காட்ராக்ட் செல்கள் போல மறைத்து விடும்.. இக்காமப்புறைகளை அகற்றிச் சுத்திகரிக்கும் விசேஷ தெய்வீக சக்திகளைப் பெற்றவையே மூன்றாம் பிறைச் சந்திரனில் உறையும் பாஸ்கர் சோமாங்க்ருத சக்திக் கிரணங்கள் ஆகும்.

ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர், ஸ்ரீசந்திரசேகர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீசோமச்சந்திரர், ஸ்ரீசோமசுந்தரம் போன்ற சந்திரநாமம் பூண்ட மூர்த்திகள் எழுந்தருளி உள்ள ஆலயத்தினுள் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெற்று பிறகு, குறிப்பாக, ஆறு நிமிடங்களுக்குள் ஆலயத்துள் எழுந்தருளி உள்ள சந்திர பகவானுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட, மகத்தான கண்ணொளிப் பிரகாசம் ஏற்படுவதுடன், “குசஸ்பதி” என்ற அபூர்வமான பித்ரு தேவ மூர்த்திகளின் ஆசியும் கிட்டிடும்.

மூன்றாம் பிறைச் சந்திர ஒளியைத் தரிசிப்பதற்காகவே எண்ணற்ற குசஸ்பதி பித்ரு மூர்த்திகள் பூலோகத்தில் அமாவாசையின் மூன்றாம் பிறை தரிசன நாளில் கூடுகின்றனர். ஏனென்றால் எத்தனையோ லோகங்களில் சந்திரன் ஒளிர்ந்தாலும், தரிசனம் கிட்டிடினும் பூலோகத்தில் காணப்படுகின்ற ஆதிமூல மூன்றாம் பிறைச் சந்திரனைத்தான் சிவபெருமான் தன்னுடைய சிரசிலே சூடி, சந்திர பகவானுக்குப் பெரும் பாக்கியத்தைத் தந்தார்., குசஸ்பதி பித்ருக்களே குருடு, செவிடு இன்றி நல்ல சந்ததிகளைத் தர வல்லவர்கள்! பித்ரு லோக தர்பை வனங்களில் யோகம் பூணூவோரே குசஸ்பதி பித்ருக்கள்!

எனவே மேற்கண்ட நாமங்களில் இறைவன் அருளும் சிவாலயங்களில் மூன்றாம் பிறைச் சந்திரனைத் தரிசித்தலும், தரிசித்த உடனேயே ஆங்கே தனித்து எழுந்தருளி அருள்பாலிகின்ற ஸ்ரீசந்திர பகவானுக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்து பால் பிரசாதம் அருந்துவதும், பிறருக்கும் அளிப்பதும் பிரகாசமான கண்ணொளி தந்து வம்சாவளியும் நன்கு பிரகாசித்திடவும் வழிவகுக்கும்.

கண்ணொளிப் பிரகாசம் பெறுவதற்கான ஆன்ம வழிமுறைகள்!

கண்களுக்கு அபூர்வமான நேத்ர குண சக்தியைத் தர வல்ல பல தெய்வீக வழிபாடுகள், சாதனங்கள் நிறைய உண்டு. ஆனால் தக்க சற்குருவை நாடினால்தானே இவை கிட்டும்!

பசுமையான மரங்கள், பசுமையான வயல் வெளிகள், பச்சைக் கிளிகளைத் தினந்தோறும் பார்த்து மகிழ்ந்திட வேண்டும். ஆனந்தம் பலவிதங்களில் ஏற்படும். இவ்வாறு பசுமையான பொருட்களில் திரளும் ஆனந்தம் “நேத்ரசார” ஆனந்தத்தைத் தருவதாக, முகத்தில் கண்களின் நாளங்களிலும் ஆனந்தத்தைப் பெருக்குவதாக அமைவதால் பசுமையில் விளையும் ஆனந்தம் கண்களுக்குப் பெரும் பலத்தைத் தருவதாகும்!

தினந்தோறும் குறைந்தது 21 கோபுர கலசங்களைத் தரிசித்தல், அரசு, ஆல், வேம்பு, புரசை, வில்வம், வாழை எனப் பன்னிரெண்டு விதமான தேவ விருட்சங்களைத் தரிசித்து வலம் வருதலும், கண்களுக்கு நேத்ர பலத்தை அபரிமிதமாகத்  தருவதாகும்!

திங்களூர் சிவாலயம்

சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல்பட்டு சூரிய பூஜை நிகழ்கின்ற தலங்களில் (திருநெடுங்களம், சென்னை – பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி கோயில் போன்றவை) தினமும் சூரிய ஹோரை நேரத்தில் குங்குமப் பூ கலந்த பசும் பாலால் அபிஷேகம் செய்து வருதலால் கண்களுக்கு நல்ல சக்தி கிட்டும். நித்திய சந்தியாவந்தன அனுஷ்டானங்கள், சூரிய நமஸ்கார யோகாசனங்கள் தீர்கமான சக்திகளைத் தருபவை!

எவ்வளவு தான் கண்களுக்கு நற்சக்தி கிட்டினாலும் முறையற்ற வழிகளில் கண்களை ஓட்டினால், தகாத காட்சிகளை சினிமாவிலும், தியேட்டரில், டீவி, கம்ப்யூட்டரில் கண்டால் கண்களுடைய நற்பார்வை குறைவதுடன் கண்களும் பலவீனம் அடையும்.!

கடுமையான கண் நோய்களால் அவதியுறுவோரும், நல்ல கண் பார்வையுடன் இருக்க வேண்டுவோரும் நல் ஒழுக்கத்தைக் கடைபிடித்து வர வேண்டும். கண்களால் பார்த்து உந்தப்பட்டுச் செய்கின்ற பாவ வினைகளே உலகில் அதிகம் என்பதால் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத் தலங்களே இவற்றிற்குப் பிராயச் சித்த வழிகளைத் தரவல்லவை! (பெருமகளூர், பட்டீஸ்வரம் அருகே சந்திரசேகரபுரம், முசிறி, சோம்நாத், திருவக்கரை, திருக்காறாயில், திங்களூர் போன்றவை).

ஸ்ரீபார்வதி கல்யாணம்

இறைவனுக்குத் திருமஞ்சன உற்சவம் (நன்னீராட்டுதல்) மற்றும் கல்யாண உற்சவங்கள் நிகழ்த்தப்படுவது ஏன்? ஆத்மார்த்தமாக நம்முள் இறைவன் உறைவதால் இதனை நாமாகத் தெளிந்து உணரும் வரை, இறைவனுக்கும் வடிவு கொடுத்து, திருமஞ்சன நீராட்டி நம் மனதையும் உள்ளத்தையும் சுத்தி செய்து கொள்கின்றோம். அதெப்படி வெளி உருவத்திற்கு நீராட்டிச் சுத்திகரித்தால் நம் உள்ளம் உள்ளே சுத்தமாகும்!

மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய நம்முடைய ஐந்து அம்சங்கள் வெளியில் உள்ளதை ஒட்டி எழுப்பும் உணர்வுகளால் தானே உடலும், மனமும் உள்ளமும் செயல்படுகின்றன. கண்களால் எதையும் வெளியில் நாம் பார்க்கும்போது நல்லதோ, கெட்டதோ மனிதனுள் உணர்ச்சிகள் எழுகின்றன அல்லவா? இதே போல்தான் வெளி உருவத்தை இறைவடிவமாக, பரிசுத்தமாக அமைத்து அதற்கு நற்காரியங்களை, அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்தி இதனை பக்தியுடன்  கண்டு ஆனந்தித்து நல் உணர்வுகளை நம்முள் எழச் செய்து நம்மைச் சிறிது சிறிதாகப் புனிதப்படுத்திக் கொள்கின்றோம்.

மனிதனின் உடலில் பிருத்வி எனப்படும் பூமி அம்சங்களால் தேகம் ஆக்கப்படுவதால், பூமி வளமும் பூம்ய சக்தியும் ஆன்மீக ரீதியாக மனிதனைப் பெரிதும் மேம்படுத்துகின்றன! மனிதன் எப்போதும் நின்று, நடந்து, அமர்ந்து, படுத்திருப்பதாக பூமியோடு தொடர்பு கொண்டவனாய், வாழ்நாள் முழுதுமாக எந்நேரமும் பூமிப் பிணைப்பு இருப்பதால் பூம்ய சக்திகளை நாம் விருத்தி செய்து கொண்டே இருக்க வேண்டும்.!

இதனால் ஆலயப் பிரதட்சிணமாக, கிரிவலமாக எந்த அளவிற்கு மக்கள் நடக்கின்றார்களோ அந்த அளவிற்கு மனித சமுதாயத்திற்கு பூம்ய சக்தி பெருகுகின்றது! உதாரணமாக மிகுந்த பக்தியுடன் சித்தர்கள் காட்டுகின்ற விரத முறையில் சபரிமலைக்குப் (விளக்கம் நம் அகஸ்தியர் ஆஸ்ரமப் பதியான “வா வா அய்யா அய்யப்பா!” எனும் நூலில் காண்க!) புனித யாத்திரை சென்று தம் ஊர் திரும்புவோர் தாம் நடக்கும் இடங்களில் எல்லாம் சபரிக் கிரணங்கள் நிரவி வருகின்றார். எனவே சபரியாத்திரை மகத்தான சமுதாய இறைப் பணியாக அமைகின்றது!

தமிழகத்தில் இருக்கின்ற லட்சக்கணக்கான ஆலயங்களில் சில ஆலயங்களில் பூஜைகளே இல்லாதும் பலவற்றில் ஒரு வேளை பூஜை மட்டும் நிகழ்கின்றன. இப்படி நிலைமை இருந்தால் பூம்ய சக்தி எவ்வாறு விருத்தி ஆகும்?

பல ஆண்டுகளுகளாகப் பூஜையற்று இருந்த ஒரு சுயம்பு லிங்கத்திற்குக் காஞ்சி பரமாச்சார்யாள் சுவாமிகள், பல குடங்களின் நீரால் அபிஷேகத்திட, பெருமழை பொழிந்து நீர்வளம் கூட்டியதைப் பலரும் அறிவர். இவ்வாறு சித்தர்களும் மகரிஷிகளும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக அளிக்கின்ற அருள்வழி முறைகளைக் கடைபிடித்து பூமிவளம், நீர்வளம், நிலவளத்தை எளிதில் பெற்றிடலாம்!

ஸ்ரீபூமிநாதர் ஆலயம்
மண்ணச்சநல்லூர்

ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீஜகதீஸ்வரர் போன்ற தெய்வ மூர்த்திகளுக்கு செவ்வாய், சனிக்கிழமைகளிலும், வாஸ்து நாட்களிலும் மஞ்சள் நீரால் அபிஷேகித்து, கிழங்கு வகை உணவுகளைப் படைத்துத் தானமாக அளித்துவர பூம்ய சக்திகளும், நீர்வளம் பெருகும், பலத்த பூமி தோஷங்களும் அகலும்..!

இவ்வாறாக இறைவன் இறைவியின் திருமண உற்சவங்கள் பூமி, வான், பரவெளியில் மங்கள சக்திகளை நிரவுகின்றன ! அம்பிகை சிரஞ்சீவித்வ, நித்ய சுமங்கலித்வ மங்களாம்பிகையாகப் பொலிவதால் இறைவனின் திருமண உற்சவங்கள் பெருகப் பெருகத்தான் நாட்டில் மங்கள சக்திகள் திரண்டு, வளம் பெற்று, விருத்தியாகி, சமுதாயத்தில், பரிபூரண அமைதி நிலவிடத் துணைபுரியும். கல்வி, சட்டம், காவல் துறை, பண பலம், ஆள்பலத்தால் சாதிக்க முடியாத சமுதாய அமைதியை இறைவனுடைய திருமண உற்சவங்களை அடிக்கடி நிகழ்த்துவதால் எளிதில் சாதிக்க முடியும்.!

இறைவனுடைய திருமண வைபவத்திற்கு ஆன்மீக தெய்வீகத் தத்வார்த்தங்கள் நிறைய உண்டு..! நாத்திகத்தனமாக, பகுத்தறிவின்றி இறைவனுக்கு எத்தனை திருமணங்கள் என்று எண்ணுவது அறிவின்மை ஆகும்..! ஒவ்வொரு ஜீவனுள்ளும் இறைவனின் கல்யாண உற்சவங்கள் நிகழ்வதானது ஆண், பெண் பேதமகற்றி, புனிதமான மனித நேயத்தைத் தோற்றுவிக்கும் அதியற்புத தேவ நிகழ்ச்சிகளாம்!

“மணம்” என்றால் ஒன்றிப் பரிணமித்தல் என்று பொருள். புனிதமான அன்புப் பரிமாற்றம் செய்யும் பாத்திரங்களே கணவன், மனைவிப் பிணைப்பான இல்லறம்! மனித அம்சங்களின் அன்பை விருத்தி செய்வதே சந்ததிகளாகும். எனவே மனித சமுதாயம் என்பது அன்பு வித்தில் இருந்து இறைபக்தியாக உற்பவிக்கும் அன்புத் தோட்டமாகும்..!

எனவே உங்கள் ஊர் ஆலயங்களில் மாதம் ஒரு முறையேனும் இறைவன், இறைவிக்குத் திருமண உற்சவம் நிகழ்ச்சி வந்தால் ஜாதி, மத, இன, குல சச்சரவுகள் இன்றிப் பரிபூரண இறையன்பு பூக்கும் மனித சமுதாயம் உருவாவதைக் கண்கூடாகக் காணலாம்..!

ஸ்ரீஅகத்தியபிரான் பெற்ற
திருமணக் காட்சி திருத்துறைப்பூண்டி

ஸ்ரீபார்வதி கல்யாணம்! பிரபஞ்சத்தில் அனைத்து லோகங்களுக்கும், பூமிகள் யாவைக்கும், எல்லா நாடுகளுக்கும், சகல ஜீவன்களுக்கும் உரித்தான திருமண உற்சவமான பார்வதி, பரமேஸ்வரித் திருக்கல்யாணத்தில் இறைஅன்பும், ஜீவன்களின் பக்தியும் ஐக்யமாகி, சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசன சக்தியைத் தருகின்றது.. எனவே பார்வதி கல்யாணம் என்பது சிவசக்தி ஐக்யத்தின் வெளிப்பாடு ஆகும்.. இதனை உணர்விப்பதே திருஅண்ணாமலையில் நம் அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் முன் கிட்டும் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப அருணாசல தரிசனமாகும்..!

திருஅண்ணாமலை சர்வலோகப் பொதுமறைமலை ஆனதால் இத்தரிசனக் காட்சியானது., பிரபஞ்சமெங்கும் எங்கிருந்தும் பக்தியுடன் காண வல்லதாகும்.! திருக்கயிலாயத்திலும் அருணாசலத்தின் சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனக் காட்சி தெரிந்திட, இதன் முன்னிலையில்தாம் பார்வதி, சிவபெருமான் திருக்கல்யாணம் நடைபெற்றது.. இச்சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்திலிருந்து தோன்றிய சுயம்பு லிங்கங்கள் இன்றும் பல ஆலயங்களில் சுயம்பு மூர்த்திகளாக அருள்கின்றனர்..!

இத்தகைய தலங்களில் எல்லாம் தென்திசை ஏகிய அகஸ்தியருக்கு இறைவனின் திருமணக் கோலக் காட்சி கிட்டியது! (உ.ம் திருவேற்காடு, திருவீழிமிழலை, திருநல்லம், வேதாரண்யம், காஞ்சீபுரம் ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் போன்றவை)

பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாளில் ஸ்ரீபார்வதி கல்யாணமும், சித்திரை உத்திரத்தன்று மதுரை ஸ்ரீமீனாட்சி கல்யாணமும் அமைகின்றன. எனவே பங்குனி உத்திர நாளில் இறைவனின் திருமணக் கோலக் காட்சி உள்ள தலங்களில் இறைவன் இறைவிக்குத் திருமண உற்சவம் நிகழ்த்தி ஏழைகளுக்குத் தங்க மாங்கல்யம், வெள்ளி மாங்கல்யம் மாங்கல்யச் சரடுகளைத் தானமாக அளித்திடுதல் சிறப்பான, புண்ய சக்திகள் நிறைந்த பூஜையாகின்றது..!

இதனால் முறைப்படிப் புனிதப்படுத்தாத தங்கத்தால் ஆன மாங்கல்யம், மாங்கல்யச் சரடுகளில் உள்ள மாங்கல்ய தோஷங்கள், சூதாட்ட மற்றும் வாஸ்து நில தோஷங்கள் உள்ள கல்யாணச் சத்திரம் போன்றவற்றில் உள்ள மாங்கல்ய தோஷங்கள் மற்றும் ஏனைய சாப வினைகள் நிவர்த்தி ஆகும். தற்போது பெரும்பான்மையான கல்யாணச் சத்திரங்களில் சீட்டு, மதுவகைகளுடன் சூதாட்டங்களும் பல தீய செயல்களும் நடைபெறுவதால் கல்யாணச் சத்திரத்தில் பலத்த தீய சக்திகளும், தோஷங்களும் கூடிவிடும்! இது தம்பதிகளுக்கு மாங்கல்ய தோஷமாக மாறி, அவர்களுடைய திருமண வாழ்வை வெகுவாகப் பாதிக்கும்!

எனவே கல்யாணத்தில் சீட்டு போன்ற எவ்விதச் சூதாட்டங்களும் நடைபெறா வண்ணம் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்! நல்ல நாளைச் சரியாகக் கணிக்காது தங்கத்தை உருக்கிச் செய்யப்பட்ட மாங்கல்யத்தில் உள்ள தோஷங்களையும், கல்யாணச் சத்திரத்தில் உள்ள தோஷங்களையும் அகற்றிடவே, திருமணச் சடங்குகளில் பல மந்திரங்கள் ஓதப்பட்டு, அக்னி ஹோமங்களும் நடைபெறுகின்றன! இப்புனிதமான சடங்குகள் யாவும் தற்போது குறைந்து வருவதாலும் மாங்கல்ய தோஷங்கள் அகற்றப்படாது அப்படியே தேங்கி வாழ்க்கையில் பெரும் பிரச்னைகளை உருவாக்குகின்றன..!

இதற்காகவே அக்காலத்தில் சத்திரங்களில் திருமணம் நடைபெற்றால் மாங்கல்ய தாரண வைபவம் (தாலி கட்டுதல்) மட்டுமேனும் ஆலயங்களில் இறைச் சன்னதியில் நிகழும்படி வைத்தார்கள்! சுவாமி சன்னதியில் நிகழும் திருமணத்தால் எளிதில் மாங்கல்ய தோஷங்களைக் களைந்திடலாம்.!

தற்காலத்துச் சத்திரங்கள் பலவும் சூதாட்ட இடங்களாக மாறி வருவதால் தயவு செய்து உங்கள் வீட்டுத் திருமணங்களை இனியேனு சத்திரத்தில் வைத்திடாதீர்கள்! அப்படி வைக்க வேண்டி நேர்ந்தால் முதல் நாளே சத்திரத்தில் குறைந்தது 12 மணி நேரம் ஹோம பூஜை செய்து, சத்திரப் பரவெளியை ஆன்மீக ரீதியாகத் தூய்மை செய்யுங்கள்!

பங்குனி உத்திரத்தன்று அம்பாள் சன்னதியில் இல்லறப் பெண்கள் மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்தல் மிகவும் விசேஷமானது! இதனால் கணவனுக்கு தீர்க்க ஆயுள் கிட்டும்..!

வருடந்தோறும், சித்திரை உத்திரத்தில்.. மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் ஆலயத்தில்.. ஸ்ரீமீனாட்சி கல்யாணம் நிகழ்கையில் ஆயிரக்கணக்கான இல்லறப் பெண்கள் ஸ்ரீமீனாட்சி கல்யாண முகூர்த்த நேரத்திலேயே ஆலயத்தினுள் மாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்கின்ற கண்கொள்ளா ஆனந்தக் காட்சியைக் கண்டு பரவசப்படுக! இதில் பங்கு பெறுதல் வாழ்வில் கிடைத்தற்கரிய பாக்கியமாகும்..!

அமுத தாரைகள்

பல குடும்பங்களிலும் இன்னமும் மாங்கல்யச் சரடு இல்லாது பெண்கள் பொன் சங்கிலியிலேயே மாங்கல்யத்தைக் கோர்த்து அணிந்து வருகின்றார்கள்.. மாங்கல்யச் சரடு பருத்தி நூலில் இருப்பதுதான் உத்தமமானது, பஞ்சபூத மூர்த்திகள் மங்களகரமான சுமங்கலித்வ சக்தியை மாங்கல்யச் சரடு மூலமாகத்தான் இல்லறப் பெண்களுக்கு பெற்றுத் தந்திடும் என்பதால் ஒவ்வொரு இல்லறப் பெண்மணியும் மாங்கல்யச் சரடை அணிந்திருத்தல் மிகமிக அவசியமானது..!

நெற்றியில் தனித்த நாமம் இட்டுத் திருமகளைப் பிரிக்காதீர்கள்! மூன்று நாமங்களையும் சேர்த்து இடுதலே ஏற்புடையது!:- வைணவர்களும் பெருமாள் பக்தர்களும் எப்போதும் திரிபுண்ட்ரம் அல்லது திருமண் எனப்படும் மூன்று நாமங்களை நெற்றியில் இட்டிருக்க வேண்டும். தற்போது பலரும் வெட்கம், சோம்பேறித்தனம், சங்கோஜத்தால் நடுச் சிகப்பை (ஸ்ரீசூர்ணம்) மட்டும் இட்டுக் கொள்கின்றார்கள். இது தவறானது. இது மகாலக்ஷ்மியைப் பெருமாளிடம் இருந்து பிரித்தது போலாகும். வைணவராய் இருந்தும் இதுவரையில் முறையாக மூன்று நாமங்களுடன் நெற்றித் திருமண் இடாதோர் இதற்குப் பிராயச்சித்தம் வேண்டி இன்றிலிருந்து நெற்றியில் முழுத் திருமண் இடுவதாகச் சங்கல்பித்து எப்போதும் நெற்றி நிறையத் திருமண்ணுடன் துலங்கிப் பூவுலகில் உறைந்த ஸ்ரீபசுமடத்துக் கோனார்ச் சித்தர்பிரானின் குருவருளை வேண்டி, இன்று மகா சிவராத்திரி நாளில் திருஅண்ணாமலைச் சிவாலயத்தில் ஸ்ரீவேணுகோபால ஸ்வாமி சன்னதியில் இருந்து அருணாசல கிரிவலத்தைத் துவங்கி ஸ்ரீபூதநாராயணன் சன்னதியில் நிறைவு செய்தல் வேண்டும். ஒவ்வொரு அருணாசல கிரிவலத்திலும் கோடிக்கணக்கான சமுதாயப் பிரச்னைகளுக்குத் தீர்வுகள் கிட்டுகின்ற அற்புதத்தை இவ்வாறாக அவரவர் உணர்தலே சிறப்புடையதாம்!

கண்களுக்குப் பிரகாசம் தரும் மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் :- மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளன்று மாலையில் தஞ்சாவூர் – திருக்காட்டுப்பள்ளி – ஒரத்தூர் அருகே உள்ள மேகளத்தூர் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்குச் செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, மருதாணி, நீலிபிருங்காதித் தைலங்களுடன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய். வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பெண்ணெய் கலந்த “தசாவனித் தைலக்” காப்பும், நிறைய சாம்பிராணி தூபமும் இட்டு அத்திப் பழ நைவேத்யமும் படைத்து வானில் மூன்றாம் பிறை தரிசனம் பெற்று ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர வேண்டும்..! இதனை முறையாகச் செய்து வந்தால் காட்ராக்ட் எனும் புறை நோயையும் அறவே தவிர்த்திடலாம். கண் துறை மருத்துவர்களும் (Opthalmologists) வழிபட வேண்டிய சிறப்பான தலம்..!

விளக்கெணெய், வேப்பெண்ணெய், கரிசலாங்கண்ணி, மருதாணி, நீலிபிருங்காதி, செம்பருத்தி, பசுநெய் போன்ற தைல வகைத் தீபங்களை வாரம் ஒரு முறையேனும் ஆலயங்களில் ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் ஏற்றி வழிபட்டால்தான் அனைத்துத் தைல வகைச் சக்திகளும் கிட்டும்.

கோபம் வருவதற்கு முதல் காரணம் பிறரை நன்கு புரிந்து கொள்ளாததுதான்.. ஸ்ரீதுர்வாச மாமுனி அடிக்கடி சினம் கொள்ளும் பண்புடையவர். ஆனால் முனிவரின் சினத்தால் நன்மைகளே விளையும் என்ற நல்வரங்களையும் பெற்றார். ஸ்ரீதுர்வாசர் அருகம்புல் உண்டே சிரஞ்சீவித்வம் பெற்றவர். ஆதலின் அருகம்புல் கஷாயம் அருந்தியும், பிள்ளையாருக்கு அருகம்புல் கிரீடம் அணிவித்தும் வந்தால் கோபத்தால் விளையும் கொடுவினைகள் தணியும்.

ஸ்ரீவீரபத்திரர் திருத்தலையூர்

ஸ்ரீவீரபத்ர சுவாமிக்குத் தினமும் புனுகுக் காப்பு இட்டு வந்தால் பக்கத்து வீட்டு நிலப் பகைமையை எளிதில் வென்று மனச் சாந்தியைப் பெற்றிடலாம்.

பால் வாங்கும் போதும், காய்ச்சும் போதும், காபி, டீ போன்ற பால் வகை உணவு வகைகளை அருந்தும்போது ஸ்ரீகாமதேனுவைத் துதித்து, பசு தர்மம் தழைத்து, பசுபதி அருள் பொங்கிட பசுவாய் வடிவு கொண்ட பந்தணையாளின் திருவடிகளைச் சரண் அடைகின்றோம் என்று ஓதி வந்தால் பல அரிய ஆலயங்களைத் தரிசிக்கும் அற்புத வாய்ப்புகள் கிட்டிடும்.!

ஞாபக சக்தி பெருகுவதற்கு உங்கள் குழந்தைகளைப் பல ஆலயங்களிலும் தினந்தோறும் குறைந்தது 108 விளக்கு, அகல் தீபங்களை (ஏற்றி) தரிசிக்கச் செய்து வாருங்கள்.!

குறைந்த சம்பளம், குறைந்த படிப்புத் தகுதியைப் பெற்று இருக்கிறோமே என்ற தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் ஸ்ரீஅருணகிரிநாதருக்கு பசுமையான மஞ்சள் கிழங்குகளால் ஆன மாலையைக் கழுத்து முதல் பாதம் வரையிலான நீண்ட மாலையைச் சார்த்தி வந்திட, தாழ்வு மனப்பான்மை அகலும், ஓரளவு நல்ல படிப்புத் தகுதி பெற்றிட  நல்வாய்ப்புகள் கிட்டும். மஞ்சளை ஏழைகளுக்கு தானமாக அளித்திடவும்.!

பைரவருக்குக் கறுப்புக் கயிறுகளைச் சார்த்தி மணிக்கட்டு, இடுப்பில் அணிவது போல உங்கள் வண்டிகளுக்கும் கறுப்புக் கயிறு சார்த்திடுங்கள் இது பலவிதமான ஆபத்துக்களிலிருந்து உங்களைக் காத்திடும்.!

கணவன், மனைவி இடையே மனஸ்தாபங்கள் தீர மனைவி தினமும் வில்வம், துளசி, வன்னி ஆகிய முத்தளங்களை மாலையாக்கி பைரவருக்குச் சார்த்தி வர வேண்டும்.. அகங்காரம் உள்ள மனைவி திருந்திட கணவன் தினமும் மூன்று ஆலயங்களில் குப்பைகளை அகற்றும் எளிய திருப்பணியை ஆற்றி வர வேண்டும்.!

நியூஸ் பேப்பர் படித்தல், காலண்டரைக் கிழித்தல், வீணாக டி.வி. பார்த்தல், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் வளவளவென்று உபயோகமற்றுப் பேசுதல் என்று தேவையற்ற விஷயங்களில் விடியற் காலத்தைச் செலவு செய்யாதீர்கள். காலையில் எழுந்தவுடன் கர தரிசனம், கைரேகை தரிசனம், கோபுர தரிசனம், கலச தரிசனம், துளசி தரிசனம், மா, பலா, வாழை, அரசு, ஆல், வேம்பு போன்ற விருட்ச தரிசனம், பசு, யானை தரிசனம் எனக் குறைந்தது 15 நிமிடங்களாவது சிறப்பான ஆன்மீக தரிசனங்களில் ஈடுபடுதலால் உறக்கத்தில் நல்ல லோகங்களுக்குச் சென்று வந்த புண்ய சக்திகள் தேக நாளங்களில் நன்கு நிலைக்கும். இல்லையெனில் விரயமாகி விடும்.

பெண்கள் புருவம், முன் வகிடு முடிகளைக் கத்தரிக்கக் கூடாது. இது கணவனின் ஆயுள் சக்தியை பாதிக்கும். தினமும் சம்பங்கிப் பூக்களைத் தொடுத்து ஆலயத்தில் புதஹோரை நேரத்தில் சுவாமிக்கு அர்ப்பணித்து தங்கள் பிள்ளைகளைப் பற்றிய பெருங் கவலைகள் மறையும்,

அந்தந்தக் கிழமைக்கு உரிய நிற ஆடைகளை உடுத்தினால் பல பிரச்னைகளை எளிதில் களைந்து விடலாம்.

காலத்தை ஒட்டியதே மனித வாழ்க்கை! எனவே காலத்தைக் காட்டும் கடிகாரத்திற்குத் தினசரி சந்தனம், குங்குமம் இட்டு வாருங்கள்! ஆலயத்தில் கை கடிகாரத்தை ஸ்ரீகாலபைரவரின் திருவடிகளில் வைத்து வழிபடுங்கள்.!

கண்ணாடி அணியும் வழக்கம் உள்ளோர் தினமும் காலையில் கண்ணாடியை வெற்றிலை, புரசு இலை, எருக்க இலையின் மேல் வைத்து சூரியத் துதிகளை ஓதி வர வேண்டும்.

ஒரு தம்ளர் நீரை அருந்தும்போது கூட, “வருண மூர்த்தியே! ஜல தேவதைகளே! இந்த நீரைப் புண்ய நீராகக் கருதி அருந்துகின்றேன்! இது நல்ல பக்தியை அளிக்கட்டும்!” என்று வேண்டி அருந்துங்கள்! எங்கும், எதிலும், எப்போதும் தெய்வீகம் சித்தர்களின் லட்சியம்!

வாரம் இரு முறையேனும் மரப் பாதணிகளை அணிந்து நடந்து பழகி வந்தால் உடல் நாளங்கள் சீரடையும். ரத்த, அழுத்த நோய்கள் ஏற்படாது.

இல்லற பெண்கள் தினமும் துளசிச் செடிக்கு மஞ்சள், குங்குமம் இட்டு 12 முறை வலம் வந்து வணங்கினால் கணவனுடன் ஏற்படும் சச்சரவுகள் மறைந்து வாழ்க்கையில் மன சாந்தியும், நிம்மதியும் ஏற்படும்.

சிதறுகாய் உடைக்கும் போது கண் உள்ள குடுமிப் பகுதியானது மேல் பக்கம் வானைப் பார்த்து இருக்குமாறு வைத்து அதே நிலையில் தேங்காயைத் தூக்கி வைத்துக் கொண்டு உடைப்பதே சிறப்புடையது.

மாதம் ஒரு முறையேனும் கிரிவலம், அங்கப் பிரதட்சிணம், அடிப்பிரதட்சிணம், அன்னதானம், மௌன விரதம், பாதயாத்திரை (குறைந்தது 5 மைல்), நதி நீராடல், ஆலய கோமுகத்தை (ஆபிஷேக நீர் வரும் வழி) சுத்தம் செய்தல், பெரியவர்களுக்குப் பாத பூஜை, பசுவைக் குளிப்பாட்டிப் பூஜித்தல், யானைக்கு முழுமையாக உணவளித்தல் போன்றவற்றை (சத்சங்கமாகப் பலரும்) கடைபிடித்து வந்தால் குடும்ப வாழ்வு கொந்தளிப்பின்றிச் சாந்தமாக அமையும்.

இரவில் தினமும் குறைந்தது அரை மணி நேரம் வானில் நட்சத்திரங்களைத் தரிசிக்கின்ற வழக்கத்தை நட்சத்திரப் பூஜையாகக் கடைபிடித்திடுங்கள்.

காலையில் எழுந்தவுடன் டூத்பேஸ்ட் போன்ற ரசாயனத்தை வாயில் அடைத்து வைக்காதீர்கள்! மூலிகை சக்திகளை உடைய பற்பொடியை முதலில் வாயில் வைத்து பற்களுக்கு உரிய தந்த தேவதைகள் மற்றும் மூலிகா தேவதைகளைப் பிரார்த்தனை செய்து, உங்கள் புனிதமான வாய்க்கு தினமும் காலையில் தெய்வீகச் சக்திகளைத் சேர்த்திடுங்கள் !

ஸ்ரீவைத்யநாதர் ஆயலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்

எப்போதும் நீலம் அல்லது பச்சை நிற இங்கையே பயன்படுத்துங்கள். இயன்றவரைக் கறுப்பு மையைப் பயன்படுத்தலாம். குறிப்பாக ஜாதகங்கள் நகல் எடுக்கையில் கறுப்பு மை கூடாது. கறுப்பு படிவதால் ஜாதகத்தை ஜெராக்ஸ் காப்பியும் எடுக்கக் கூடாது. கையால் நீலம் அல்லது பச்சை நிற மையினால்தான் நகல் ஜாதகத்தை எழுத வேண்டும்.

செவ்வாய்க் கிழமை தோறும் ஸ்ரீவைத்யநாதர், ஸ்ரீவைத்தீஸ்வரர், ஸ்ரீதன்வந்த்ரீ, ஸ்ரீமருந்தீஸ்வரர், ஸ்ரீஔஷதீஸ்வரர், ஸ்ரீதைலநாயகி போன்ற வைத்ய மூர்த்திகளுக்கு செம்பருத்தித் தைலக் காப்பு இட்டுத் துதித்து வந்தால் நோய்த் துன்பங்கள் தணியும்.

ஒவ்வொரு அமாவாசையிலும், பல புண்ய நதித் தீர்த்தங்கள், ஆலயத் தீர்த்தங்கள், மானசரோவர் தீர்த்தம், ராமேஸ்வரம், கோடிக்கரை போன்ற கடலடித் தவத் தீர்த்தங்கள், ஆலயக் கோமுக தீர்த்தம் போன்ற பலவகைத் தீர்த்தங்களால் பித்ருக்களுக்குத் தர்ப்பணம் அளித்திடுதலால் பித்ருக்கள் மிகவும் ஆனந்தம் கொள்கின்றனர்..!

வளர்ஒளி ஈஸ்வரராம் ஸ்ரீசகஸ்ர சஞ்சய பைரவ ருத்ரர் :- பைரவ பூமியாகிய சிவகங்கை மாவட்ட திருப்பத்தூர்ப்ப் பகுதியில், திருப்பத்தூரில் இருந்து ஏழு கி.மீ தொலைவில் – வளர்ஒளி ஈஸ்வரம் (பண்டைய திருமெய்ஞ்ஞானபுரம்) எனப்படும் T.வைரவன்பட்டி எனும் ஊரில் ஸ்ரீதிருமெய்ஞ்ஞானேஸ்வரர் சிவாலயத்தில் (அபூர்வமாக வாகனமில்லாதவராக) ஸ்ரீசகஸ்ரசஞ்சய பைரவருத்ரர் அருள்பாலிக்கின்றார். வியாச மகரிஷியால் வழிபடப்பட்ட இந்த பைரவர் மூர்த்தி உருவில் மிகவும் சிறியதானாலும் கீர்த்தி பல கோடி யுகங்களுக்கும் விரிந்ததாம். திருப்பத்தூர் – குன்றக்குடி மார்கத்தில் ஒரு வைரவன்பட்டி உள்ளது. இங்கு நாம் குறிப்பிடுவது திருப்பத்தூர் – சிவகங்கை வழியில் திருக்கோஷ்டியூர் அருகில் உள்ள T.வைரவன்பட்டி ஆகும். நன்கு விசாரித்துச் செல்லவும்.

பலிபீட ஆதிபீடமே மப்பேடு ஆலய நவவியாகரண பலிபீடம் :- ஸ்ரீஆஞ்சநேயருக்கு உரித்தானதாக மூல நட்சத்திரம் விளங்கக் காரணமே, ஸ்ரீஆஞ்சநேயர் பாஷ்பவாரி பரிபூரண லோசனராக மப்பேடு ஆலய நவவியாகரண பலிபீடத்தில் அமர்ந்து தம் திருவாய் மலர்ந்து முதன் முதலாக மூல நட்சத்திர நாளில் இறைவனை சிங்கநாத ஸ்வர இசை கொண்டு வழிபட்டதாகும். பலரும் அறியாத ஓர் இறைரகசியம் யாதெனில் கலைமகளே மூல நட்சத்திர தினத்தன்று பிரம்ம லோகத் திருமூல வெள்ளைத் தாமரைத் தண்டினால் ஆஞ்சநேயரின் திருநாக்கில் சிங்கநாத பீஜாட்சர சக்திகளைப் பொறித்தமையால்தான் நவவியாகரண பண்டிதராய் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி விளங்குகின்றார் என்பதாம். இசை, கல்வி, கேள்வி, வேள்வி, யாகம் என ஆயகலைகள் 64 துறைகளிலும் சிறப்புற்று விளங்குகின்ற ஆஞ்சநேயர், நாகஸ்வர சிங்கநாதத்தை பூவுலகிற்கு அர்ப்பணித்த திருத்தலமே மப்பேடு! ஆம், நாகஸ்வரம் பிறந்த தலமும் மப்பேடு சிவாலயமே! எனவே ஸ்ரீஆஞ்சநேய உபாசகர்கள் யாவருமே நாகஸ்வர இசை கூட்டி அடிக்கடி வழிபட வேண்டிய தலமுமே மப்பேடு ஆகும். பூலோக ஆலயங்களின் அனைத்து பலிபீடங்களுக்கும் எல்லாம் ஆதி மூலப் பீடமே மப்பேடு சிவாலய நவவியாகரண பலிபீடமாகும்.

ஸ்ரீமெய்ஞானபுரீஸ்வரர் ஆலயம்
வைரவன்பட்டி

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுளில் வழிபட வேண்டிய மிக முக்கியமான தலமான மப்பேடு ஸ்ரீசிருங்கீஸ்வரர் சிவாலயமானது விண்ணுலகத்தார் சூக்குமமாக வானியற்கலத்தில் (flying saucer) வந்திறங்கும் சிறப்பான தலமாகவும் விளங்குகிறது.. விண்வெளித் தேர்கள் வந்து செல்லும் அற்புத வானியல் தலமாக ஒரு யுகத்தில் பொலிந்த தலமிது! Astronomy துறையினரையே அதிசயிக்க வைக்கும் வானக் கோணங்களை உடையது! ‘சிங்கநாதம் கேட்குது’ என்று நடைமொழியாகச் சொல்கின்றோமே. இது ஆன்மீக ரீதியாகவும் தோன்றிய தலமிது! மகாகவி பாரதியார் தமக்கு அதியற்புத ஆன்ம வைராக்யம் புனைந்து கொண்ட சிவத்தலம். ஹிரண்யனை சம்கரித்து அதிஉஷ்ண சக்தியுடன் பிரபஞ்சமெங்கும் நடனமாடி வந்த நரசிம்மப் பெருமாளுடைய அதிஉஷ்ணத்தைத் தன் சிங்கநாதத்தால், தன்னுடைய மப்புமூல பீஜாட்சர நாத சக்தியால் தணித்தவரே மப்பேடு ஸ்ரீசிருங்கீஸ்வரர். சிங்கநாதத்தின் மூல பீஜாட்சர சக்தியே “ங” என்பதாகும். ஙகர யோகத் தலமே மப்பேடு!

தினந்தோறும் அல்லது செவ்வாய், சனி தோறும், ஒரு முறையேனும் அரசு, ஆல், வேம்பு, புரசு, வன்னி, இலுப்பை போன்ற ஆலய விருட்சங்களை 108 முறை வலம் வந்தால் முழங்கால் வியாதிகளை வர விடாது அறவே தடுத்து விடலாம்.

இரவில் உறங்குவதற்கு முன் தீனக் காப்பு எனப்படும் வாசி கலை (யோக) சக்திகள் நிறைந்த மர வளைத்தினை ஆண், பெண் இருபாலாரும் அணிந்து உறங்கிடில் அநாவசியமான பீதிகள், தீய கனவுகள் ஏற்படாது, நல்ல உறக்கம் கிட்டும். முறையற்ற எண்ணங்களும் அகலும்.

மக நட்சத்திர கிரிவலம் தரும் மகாபலாதி பலன்கள்

கும்பகோணம் மகாமகக் குளத்தில் மாதந்தோறும் மக நட்சத்திரத்தில் நீராடுவது மிகவும் புனிதமானதாகும். “மாக ஸ்நான” புராணத்தில், மக நட்சத்திர நாளில் புண்ணிய நதி நீராடலின் மகிமைகளை அம்பிகை சிறப்புற விளக்குகின்றாள். இதிலும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருகின்ற மாசி மகா மகம் மிக மிகச் சிறப்புடையதாம். ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திர நாளில் அருணாசலத்தைக் கிரிவலம் வருதலால் புனிதமான தீர்த்தங்களில் நீராடிய பலன்களைப் பெறலாம். காவிரி, கங்கை, கோதாவரி போன்ற நவநதி தேவதைகளும் மக நட்சத்திரம் தோறும் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து 360 தீர்த்தாதிகளைப் பெற்றுக் கொண்டு அவற்றைக் கும்பகோணம் மகாமகக் குளத்தில் சேர்த்து நீராடி மகாமகக் குளக் கரையில் குடிகொண்டுள்ள ஸ்ரீகாசி விஸ்வநாதரை வழிபடுகின்றனர்.!

நதிகளில் நீர் வளம் குறைந்தால் அக்காலத்தில் கிராம மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்து மக நட்சத்திர நாளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவர். தீராத தோல் வியாதிகள் தீர்வதற்கு மக நட்சத்திர நாளில் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து, ஏழைகளுக்குப் புது ஆடைகளைத் தானமாக அளித்து வருதல் வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் அந்தந்தத் திதி, நாள், கிழமைகளைப் பொறுத்து அருணாசல கிரிவலப் பலாபலன்கள் அமைகின்றன, எனவே எந்நாளிலும் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடலாம்.

பிள்ளைகள் படிப்பில், மந்தமாக இருப்பதற்குக் காரணம் பெற்றோர்களே! காலையிலும், மாலையிலும் கோயிலுக்குச் செல்வதை, வீட்டில் பூஜை செய்யும் வழக்கத்தைப் பெற்றோர்கள் கடைபிடித்தால் பிள்ளைகள் தாமே பூஜையில் லயிப்பார்கள் அல்லவா? நன்கு படிப்பதை விட நல்லொழுக்கத்துடன் திகழ்வதே இறைலட்சியமாக இருக்க வேண்டும்.

வெளிநாட்டு மோகம் அதிகரித்து வருவது மிகவும் வேதனைக்குரியது. வெளிநாட்டுப் படிப்பு, வெளிநாட்டு வேலை, என்று இராப்பகலாக மனம் அலை பாய்ந்து மிகவும் வேகமாக வேலை செய்கிறது. யோக பூமியான புனிதமான பாரதத்தை விட்டு “போக பூமி”யான அயல் நாடுகளில் நல்ஒழுக்கமாக வாழ்வதே பிரம்மப் பிரயத்தம் ஆகிடுமே! நடப்பு சமுதாயச் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு அயல்நாடுகளில் உள்ளோர் அவரவருடைய தாய்நாட்டிற்குத் திரும்புவது உத்தமமானது என 2002ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தி வருகின்றோம் என்பது குறிப்பிடத்தக்கது.

அனைத்துக் கோடி மேல் உலகங்களிலும் மகாபாரதம், இராமாயணம், பாகவதம் குறித்து நிறைய “சொல் மண்டபங்கள்” நிகழ்கின்றன. இது பெரிதா, அது பெரிதா, இது சிறந்ததா, அது சிறந்ததா என்று பூலோகம் போல் உபயோகமற்ற வீண் வாதம் செய்யாது, ஆத்ம விசார இறைச் சிந்தனைகளுடன், தெய்வீக பக்தியை மேம்படுத்துவதாகவே., பல மகரிஷிகளும் பங்கு கொள்வதாக, மேலுலகில் இவை அமைகின்றன. மகாபாரதம், ராமாயணம் அனைத்தையும் முற்றிலுமாக அறிந்தவர்களான நவநாதச் சித்தர்களே இவ்வாறான வேதாட்சர சதஸ்களில் பல அற்புதமான தெய்வீக ரகசியங்களை எடுத்துரைக்கின்றனர். இவ்வாறாக ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் நீங்கள் காண்பதே சற்குருமார்களால் உரைக்கப்படும் குருவாய்மொழி உரைகளாகும். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் உபந்யாசங்களில் இருடிகள் பாரதம், இருடிகள் ராமாயணத்தில் இருந்து பல அற்புதமான வைபவங்களை எடுத்தருளி உள்ளார்கள். இங்கு நீங்கள் காணும் மகாபாரத அனுபூதியும் இருடிகள் பாரதத்தில் உள்ளதேயாம். எழுதாக் கிளவியாய்த் துலங்கும் இவை சற்குருமார்களால் சித்தர்களின் ஞானபத்ர கிரந்தங்களில் இருந்து பெற்றுத் தரப்படுபவையாம்.

இருடிகள் ராமாயணம், இருடிகள் மகாபாரதமே முழுமையான தெய்வீகக் காவியங்கள்!

பலரும் அறியாததாக , ராமாயண, மகாபாரத, பாகவத புராணங்களில் பல்லாயிரக் கணக்கான இறைலீலைகள், அனுபூதிகள், சம்பவங்கள் நிறைந்துள்ளன. இவற்றை முற்றிலும் அறிந்து உணர்ந்து தெளிந்த உத்தமச் சித்தர்களே நவநாத சித்தர்கள் ஆவர். வியாசர் உரைக்க, பிள்ளையாரே எழுதிய மகாபாரதத்தின் மூலப் பிரதிகள் நவநாத சித்தர்களிடம் உள்ளவையே. இருடிகள் ராமாயணம், இருடிகள் மகாபாரதம் எனப்படுவதாம்., நமக்குக் கிட்டியுள்ள மகாபாரத சுலோகங்கள் மிகவும் சொற்பமே! சமயக்குரவர்கள் நால்வருடைய பரிபூரண தேவாரப் பதிகங்கள் சிதம்பரம் ஸ்ரீநடராஜர் ஆலயத்தில் ரகசியமாக, ஆன்மீக ரீதியாக மறைந்திருப்பது போல, முழுமையான மகா பாரத, ராமாயணப் பாசுரங்கள் நவநாத சித்தர்களுடைய லோகங்களில்தாம் காணக் கிடைக்கின்றன. தேவையானவை மட்டும் குறித்த காலத்தின் போது சத்குருமார்கள் மூலமாக உலகிற்கு உணர்த்தப்படும்.

ஸ்ரீகாலபைரவர் ஒழுகமங்கலம்

குறித்த நாட்களில் முடி வெட்டுதல், ஷேவ் செய்தல் வேண்டும். அநாவசியமாகப் புருவத்தைச் சிரைத்தல், நரை முடியைப் பிடுங்கி எறிதல், முன் முடியை அழகுக்காக கத்தரிக் கோலால் வெட்டுதல் போன்றவற்றைச் செய்து ரோம தோஷங்களுக்கு ஆளாகாதீர்கள்! மேலும் தலை வாரும்போது சிதறும் முடிகளைக் கண்ட இடங்களில் தூக்கி ஏறிந்திடாதீர்கள்! நீங்கள் எறியும் முடி பிணப்பூ, பிணவாடை, மலம், பில்லி, சூன்ய, ஏவல் பொருட்களின் மேல் பட்டால் அது உங்களை நிச்சயமாகப் பாதிக்கும்.

நோயுள்ளோரும் அனைத்து மருத்துவர்களும் குறிப்பாக, சித்த வைத்திய, ஆயுர்வேதம் போன்ற இயற்கைத் துறையைச் சார்ந்த வைத்தியர்கள் யாவருமே ஒழுகமங்கலம் ஸ்ரீஅகோர வீரபத்திர பைரவர் திருச்சன்னதியில் தங்கள் மருந்துகளை அர்ப்பணித்து, பூஜித்துப் பிறகு மருத்துவத்துறையில் பயன்படுத்தினால், நன்முறையில் கைராசியும், மருத்துவ குணமும் பெறலாம்.

காய்கறிகள் வாங்கி வரும்போது வழியில் பசுவிற்கு சிறிது பழங்கள், காய்கறிகளை அளிக்கும் புண்ய காரியத்தை தினசரிக் கைங்கர்யமாக வைத்துக் கொள்ளுங்கள். பசுவிற்கு அளிப்பதற்கான ஒரு அரைகிலோ காய்கறிகளை கூடுதலாக வாங்கி வைத்துக் கொள்ளலாமே!

ஹோம பலன்களைப் பெற்றிடவே பரலிச் சித்தர் (ஸ்ரீவைத்யநாத சுவாமியை உபாசிப்பவர்) பலவகை ஹோம, மூலிகா திரவியங்களைக் குறித்த திதிகளில், கரண நாட்களில் ஸ்புடம் செய்து சமூலங்களாக நமக்கு அளித்துள்ளார். இவைதாம் ‘ஹோம சமூலங்கள்” ஆகும். ஹோம பூஜைகளின் பலன்களை முறையாக, நிறைவாக, பரிபூரணமாகப் பெறுவதற்கும் இச்சமூலங்கள் பெரிதும் உதவுகின்றன. பரலிச் சித்தரே எந்த சமூலத்தை எதனுடன் (பசுநெய், தேன், பால் போன்றவை) சேர்த்து ஆஹூதியாக அளிக்க வேண்டும் என்ற ஹோமக் கட்டளை வகுப்பினை வகுத்துள்ளார். இவற்றைச் சற்குருமார்களே அறிவர். எனவே சமூலங்களை ஆஹூதிகளாக அளித்து ஹோம வழிபாட்டினை இயக்குதல் உத்தமப் பலன்களை அளிக்கும். எந்தெந்தப் பிரார்த்னைகளுக்காக ஹோமத்தில் எந்த சமூலம் அளிக்க வேண்டும் என்ற மூலிகா திரவிய வகைகளும் நிறைய உண்டு. சித்தர்கள் வ(ப)குத்துத் தந்துள்ள 32 சமூல வகைகள் யாவும் ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயம், ஸ்ரீரங்கம் ஜெய்விஜயாலாவிலும் கிடைக்கும்.

பித்ருக்களுக்கு உரிய திதி, திவசநாள், சனிக்கிழமை, அமாவாசை, உத்தராயணம், தட்சிணாயானம், கிரஹண நாட்களில் அனைவரும் கண்டிப்பாக ஸ்ரீகாசி விஸ்வநாதரைத் தரிசிக்க வேண்டும்.

“நடந்ததே, நடப்பவையாக நடந்து கொண்டிருக்கின்றன!” சித்த வேத சூக்த மாமந்திரம் (ALL PREDETERMINDED) சித்தர்களின் அருளுரைகளாக ஏற்கனவே பன்முறை எடுத்துரைத்து வருவது போல இப்போதும் எத்தனையோ உலகங்களில் பாரத, ராமாயண, பாகவத இதிகாசப் புராணங்கள் நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன. பிரபஞ்சத்தின் தத்துவமாகத் துலங்கும் நவநாத சித்தர்களுடைய சித்தோபநிஷத்தின் வேதமுத்தான சிரஞ்சீவித்வ வாக்கியங்களுள் ஒன்றே, “நடந்ததே நடப்பவையாக நடந்து கொண்டிருக்கின்றன!” என்பதாகும். இதற்கு “சஞ்சயநாத சித்த வேத வாக்கியம்!” என்று பெயர். பிரபஞ்ச அமைப்பு, பிறப்பு, இறப்பின் ரகசியம், பிரம்ம ஞானம் ஆகிய நான்கும் சதுர்வேதச் சாரமாக இந்த சஞ்சயநாத வேத சித்தோபநிஷத் வாக்கியத்தில் அடக்கமாகி ஒளிர்கின்றது. இதனையே ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் பகவத் கீதையின் சாரமாக அருளினார். “சஞ்சயநாத சித்த வேத சூக்த மாமந்திரத்தின்” பாஷ்யமாக பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அருளியதே பகவத் கீதையாகும்.

தொடரும் ஆனந்தம்...

ஸ்ரீஇடியாப்ப சித்தரின் போட்டோவை எடுப்பதற்காக ஒரு போட்டோகிராபர் என்ன பாடுபட்டார் என்பதை நாம் அடிமை கண்ட ஆனந்தத்தில் அறிந்தோம். இந்த ஆனந்தம் என்றோ ஆரம்பித்து என்றோ முடிந்து விட்டது என்று கிடையாது, இது இன்றும் தொடரும் இனிய வைபவமே. எப்படி ?
திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கேந்த்ராலயா அறையில் கோவணாண்டியின் போட்டா படத்தை ஒரு திருஅண்ணாமலை கார்த்திகை தீப வைபவத்தின்போது சுமார் பத்து நாட்கள் வைத்திருந்தார் நம் சற்குரு. விபூதி, குங்குமம், திருஷ்டி கண்டிகள், மிருதுள மணி கங்கண், தெய்வத் திருஉருவங்கள் போன்ற அனைத்து பூஜை பொருட்களும் கிரிவல பக்தர்களுக்கு விற்பனைக்காக சேகரித்து வைக்கப்படும் அறையே கேந்த்ராலயா அறையாகும். ஆனால், அங்கு வைக்கப்பட்டிருந்தது கோவணாண்டியின் திருவுருவமே என்பதை நம் சற்குரு யாருக்கும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை. பார்ப்பதற்கு யாரோ ஒரு பெரியவர் ஜல தம்பன யோகத்தில் நீரின் மேல் மிதப்பதாகத் தோன்றும். அது கேந்த்ராலயா பூஜை அறையில் வைக்கப்பட்டிருந்ததால் அந்த யோகி ஏதோ ஒரு உயர்ந்த நிலையை அடைந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் தாங்களாகவே யூகித்துக் கொள்வதற்காகவே இத்தகையே ஏற்பாடு நம் சற்குருவால் ஏற்படுத்தப்பட்டிருந்தது என்று கூறுவதும் மிகையாகாது. ஒரு சில அடியார்கள் மட்டுமே அது ஸ்ரீகோவணாண்டிப் பெரியவர் என்று சற்குருவின் வாக்கால் உணர்ந்தாலும் ஸ்ரீஇடியாப்ப சித்தரின் உருவப் படம் நம் ஆஸ்ரமத்தில் வைக்கப்பட்டது என்ற செய்தி மட்டும் நம் அடியார்கள் இடையே வெகு வேகமாகப் பரவி விட்டது. அதனால் கோவணாண்டிப் பெரியவரின் படம் பின்னர் நம் சற்குருவால் மறைக்கப்பட்டு விட்டதால் அதற்குப் பின் ஆஸ்ரமத்திற்கு வந்த பல அடியார்கள் அந்த போட்டாவை எப்படியாவது பார்த்து விட வேண்டும் என்று முயன்றாலும் அது முடியாமல் போயிற்று. கேந்த்ராலயா அறை என்பது பூஜை பொருட்களின் விநியோகத்திற்காக மட்டும் அமைக்கப்படவில்லை. பௌர்ணமி நாம சங்கீர்த்தனம், விசேஷமான பிரத்யேக அன்னதான கைங்கர்யங்கள், அடியார்களுடன் ஒலி பெருக்கியில் தொடர்பு கொள்ளுதல், ஒலி பெருக்கியில் இறை இன்னிசை போன்ற உலகத்தை, இந்த பிரபஞ்சத்தையே ஆட்கொள்ளும் தெய்வீகத் தொடர்பு மையமாக இருந்தது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. எனவே இத்தகைய ஒரு பிரபஞ்ச சாம்ராஜ்யத்தின் சிகரமாக நம் கோவணாண்டிப் பெரியவரின் போட்டோ வைக்கப்பட்டது நம் சற்குருவின் முன்னோக்குப் பார்வைக்கு சான்றாகும்.
சில மாதங்களுக்குப் பின் ஒரு முறை நம் சற்குரு கோவணாண்டியின் அந்த படத்தை எடுத்துக் கொண்டு வந்து நம் திருச்சி பூஜை வீட்டில் வைத்திருந்தார்கள். அப்போது ஒரு அடியார் நம் சற்குருவை தரிசிப்பதற்காக அங்கு வந்து காத்திருந்தார். நம் சற்குரு வெளியில் சென்றிருந்ததால் அந்த அடியார் சில மணி நேரம் அங்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்கிருந்த அடியாருக்கோ அங்கு வந்த திருச்சி அடியார் ஏற்கனவே திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு வந்தபோது நம் கோவணாண்டியின் போட்டோவைப் பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி விட்டார் என்பதை அறிந்து அவர் இப்போது அந்த வேண்டுகோளைப் புதுப்பித்தால் பெரிய வாத்யாரின் (கோவணாண்டியின்) படத்தை அவரிடம் காட்டலாம், ஆனால் கேட்காமல் எந்த தெய்வீக விஷயத்தையும் வெளியிடக் கூடாது என்பதால், அவர் மௌனமாக அந்த அடியாரின் வேண்டுகோளுக்காகக் காத்திருந்தார். ஆனால், விதி வலியது அல்லவா ? அந்த அடியாரால் நம் சற்குரு வரும் வரை காத்திருக்கவும் முடியவில்லை, நம் கோவணாண்டியின் போட்டோ பட தரிசனத்தையும் கேட்டுப் பெற முடியவில்லை.
சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை, அவை ஏனோதானோ என்றுதான் வரும் என்ற நம் சற்குருவின் வாக்கியம் எவ்வளவு பொருள் பொதிந்தது என்று புரிகின்றது அல்லவா ? ராமர் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோமா இல்லையா, அந்த அவதாரப் புருஷரை நாம் தரிசித்தோமா இல்லையா என்பது நமக்குத் தெரியாது. ஆனால், யாரெல்லாம் தம் தந்தையின் (பெரியோர், உத்தமர்) வாக்குப்படி நடக்கிறாரோ அவர் ராமரே, யாரெல்லாம் தன் மனைவியை மட்டும் ஏறெடுத்துப் பார்த்து வாழ்கிறாரோ அவர் ராமரே என்ற நம் சற்குருவின் வாக்குப்படி யாரெல்லாம் நம் சற்குருவின் கட்டளையை, கோவணாண்டிப் பெரியவரின் வாக்குகளை செயல்படுத்துகிறார்களோ அவர்களுக்கு நம் கோவணாண்டியின் தரிசனம் நிச்சயமாகக் கிடைக்கும் என்பது உண்மையே.

ஸ்ரீசெவ்வாய் பகவான் செருகுடி

ஆத்ம விசாரத்தைத் தொடங்குவதற்கோ தொடர்வதற்கோ வயது வரம்பில்லை !

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam