ஏன் உத்தமன் ஓங்கி உலகளந்தான் ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்

எந்தச் சமயத்தில் பெரியவர் என்ன சொல்வாரோ, ஏது செய்வாரோ என்ற திகிலிலும் பயத்திலும் சிறுவன் குருகுலவாசத்தைக் கொண்டிருந்தாலும் இதில் பெற்ற தெய்வீகமான அன்பு, பரிவு, கருணையை அவனால் வேறு எங்கும் பெற முடியவில்லை! மேலும் குருகுலவாச அற்புதங்களிலும், அரிய தரிசனங்களிலும் அவன் பெற்ற தெய்வீகப் பரவசத்தை, பேரானந்தத்தை வேறு எங்கும் காண முடியவில்லை! அந்தப் பரவசத்திலிருந்து அவனால் மீளவும் முடியவில்லை! ஏன் மீள வேண்டும்? இப்படியே இருந்து விட்டால் என்ன?

“வாத்யாரே! சொன்னா தப்பா நெனச்சுக்க மாட்டியே! ஏன் இப்படி எனக்கு terror கொடுத்துக் கிட்டே இருக்கே! நல்ல தெய்வீகத்துல இருக்கோம்னு ஒரு புறம் சந்தோஷமா இருந்தாலும் இன்னொரு பக்கம் ஏதாச்சும் தப்பு செஞ்சுட்டா என்ன நடக்குமோன்னு பயம் இருந்துகிட்டே இருக்கு!”

பெரியவர் சிறுவனை வாரியணைத்துக் கொள்வார்! “ஏண்டா கண்ணு! அப்படி ஒரு பயம் காட்டிக் கிட்டா நான் இருக்கேன்! இந்தக் கெழவன் எது செஞ்சாலும் நல்லதுக்குனு நெனச்சுக்கோ! எந்த பயமும் தேவையில்லையே! எந்த சந்தேகமும் வராது! இரண்டாவது, தெய்வீகத்துல தப்புப் பண்ணினாக்க punishment ரொம்ப ஜாஸ்தின்னு தெரிஞ்சுக்கணும்டா! ஏன்னா நாளைக்கு லட்சக்கணக்கான பேருக்கு அன்னதானம் பண்ணி, அவங்களுக்கு தெய்வீகத்துல நல்ல வழி காட்டற பெரிய பெரிய பொறுப்பை ஒங்கிட்ட கொடுக்கப் போறேன்! அதுக்கு இப்பவே நல்லபடி டிரெயின் ஆகணும்டா, ராஜா! இங்க மட்டுமில்லடா, கோடி கோடி தேவலோகத்துக்குப் போனாக்கூட, இவன் இடியாப்ப சித்தன் கிட்ட வளர்ந்தவன், தெய்வீகத்துல பக்காவா டிரெயின் ஆனவன்னு, சித்தர் கூட்டத்துல வந்தவன்னு முத்திரையும் பேரும் வாங்கணும்டா! அதுக்குத் தாண்டா ராஜா இவ்வளவு கண்டிப்போட இருக்கேன்!“ உடனே சிறுவனுக்குத் தெம்பு பிறக்கும்! இப்படித்தான் ஒரு முறை.... இப்போது ஆஸ்ரமம் இருக்கும் இடத்திற்கு அருகில் அப்போது ஒரு சுமை தாங்கிக் கல் இருந்தது! நல்ல உச்சி வெயில் நேரம்! அண்ணாமலையின் கந்தக பூமித் தரையே கொதித்தது! கால் கொப்பளிக்க.... கொப்பளிக்க.... கொப்பளிக்கப் பெரியவருடன் சிறுவன் கிரிவலம் வந்து கொண்டிருக்க.....

ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர்
திண்டிவனம்

“ஏண்டா ரொம்பப் பசிக்குதுல்ல! கால் வேற வலிக்குதில்ல! கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறியா? சிறுவன் Yes or No சொல்வதா என்று புரியாமல்.... புரியாதது போல் நடித்தானோ! ஏனென்றால் எது சொன்னாலும் புலு புலு என்று பிடித்து விடுவாரே!

“என்னடா பதிலைக் காணோம்! ஏண்டா இந்தக் (சுமை தாங்கிக்) கல்லு மேல ஏறிப் படுத்துக்கறியா?”

“என்ன வாத்யாரே, கேலி பண்றியா? தரையே கொதி கொதின்னு கொதிக்குது! அதுவும் வானத்தைப் பார்த்த சும தாங்கிக் கல்லுன்னா எப்படிக் கொதிச்சுக்கிட்டு இருக்கும்?” அப்ப நீ கீழ உக்காந்துக்க! என்று சொல்லி விட்டு வெறும் உடலுடன் சுமைதாங்கிக் கல்லின் மேல் படுத்துக் கொண்டார் பெரியவர்! சிறுவன் வியப்புடன் கல்லைத் தொட்டுக் கூடப் பார்த்தான்! கல் கொதித்தது! வெறும் கோவணத்தைக் கட்டிக் கொண்டு இவரால் எப்படிக் கொதிக்கும் கல்லின் மேல் படுக்க முடிகிறது! சுடுகிறதே, ஆனால் அவரிடம் ஒரு அங்க அசைவைக் கூடக் காணோம்! கிரிவலம் வந்த பலரும் பெரியவரைப் பார்த்து அதிசயித்துச் சென்றார்கள்! ஒரு சிலர் அவர் பாதங்களைத் தொட்டு நமஸ்கரித்தனர்! (அவர்) கால் பிடித்தவர் பாக்யசாலிகளே!

சற்று நேரங் கழித்து எழுந்த பெரியவர்., “ஏண்டா கல்லு இப்படிச் சுடுதே, ஒரு துண்டை விரிச்சு வைக்கக் கூடாதா?” சிறுவன் அவரை விநோதமாகப் பார்த்தான்! தானாகச் செய்து விட்டு நம்மைப் பாடாய்ப் படுத்துகிறாரே!

“ஏண்டா அப்படிப் பார்த்துக்கிட்டு நிக்கற! இங்க தாண்டா தட்சிணா மூர்த்தி சுவாமிகள் கொஞ்ச நேரம் உக்காந்து தியானம் பண்ணினாரு! நாளைக்கே இங்க நீ ஆஸ்ரமம் கட்டறேன்னு வச்சுக்க, அது எப்படியிருக்கும்னு நெனச்சுக்கிட்டே தூங்கிட்டேண்டா!” சிறுவன் சிரித்தான்! ஓட்டைப் பையுடன் அரை டிராயரை மாட்டிக் கொண்டு திரிகின்ற நாமாவது ஆஸ்ரமம் கட்டுவதாவது! ஆனால் பெரியவர் நின்று ஆசிர்வதித்த அதே இடத்தில்தான் நீங்கள் இன்று ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தைத் தரிசித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்!!! அன்று பெரியவர் அங்கே சுமைதாங்கிக் கல்லில் தூங்கிக் கொண்டிருந்ததாக எண்ணிய சிறுவன்தான் .....  “பெரியவர் அன்று மானசீகமாக வாயிலார் நாயினார் போல் அஸ்திவாரம் தாங்கி ஆஸ்ரமத்தை செங்கல் செங்கலாகக் கட்டி ஆசியளித்துக் கட்டிக் கொடுத்ததை உணர்ந்து தெளிந்து குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்க்டராமனாக நிறைந்து இன்று நமக்கு சற்குருவாய் நல்வழி காட்டுகின்றார்!

மற்றொரு நாள்... இன்று ஆஸ்ரமம் எழுந்துள்ள அதே பகுதியில்.... சுமைதாங்கிக் கல் அருகே நின்று கொண்டு மரத்தில் பறவைகள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்த பெரியவர் அவைகளின் மொழிகளில் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்! குயில் என்றால்... “க்ர்லீங் ...... க்ர்லீங் ..“ என்ற குயில் மொழியில்! கிளி என்றால்.... கீ. ... கீ.... கீ என்று கிளி பாஷையில்! சிறுவன் சைகையிலேயே “அந்தக் குருவி என்ன சொன்னுச்சு” என்று கேட்டான்...

“ஒண்ணுமில்லைடா! ஒரு கட்டைப் பஞ்சாயத்து!”

சிறுவன் அர்த்தம் புரியாமல் விழித்தான்..! “அந்தக் குருவிக்கு அதோட புருஷன் சரியா பேசறது கெடயாதா ! வீட்டுக்கு ஒழுங்கா வர்றது இல்லையாம் ..”

ஸ்ரீசேனைமுதலியார்
திண்டிவனம் பெருமாள் ஆலயம்

“ அதுக்கு நீ என்ன சொன்ன வாத்யாரே?”
“மெட்ராஸ்ல பாடிங்கற எடத்துல ஒரு சிவன் கோயில் இருக்கு! உங்க பறவை குரூப்ல ஒரு மகான் முக்தி கொடுத்த இடம்! அங்க போய் தெனமும் 108 தடவை சுத்திட்டு வான்னு சொன்னேன்!” சிறுவன் வியப்புடன் பார்த்தான்!

“ஆமாண்டா யானை, நண்டு, கரிச்சான் குருவி பன்றின்னு ஒவ்வொரு பறவை, விலங்கு குரூப்புக்கு முக்தி தர்ற சித்தர்கள், மகான்களும் உண்டு தெரிஞ்சுக்க! மெட்ராஸ்ல அந்தக் கோயிலுக்கு திருவலியதாயம்னு (பாடி) பேரு! வலியன் குருவி முக்தி பெற்ற ஸ்தலம்!”

அப்போது சிறுவன் ஒன்றைப் புரிந்து கொண்டான்! சித்தர்கள் என்றால் ஈ, பறவை, எறும்பு முதல் மனிதர்கள், தேவர்கள் வரை... அனைவருக்கும் சொந்தமானவர்கள், நல்வழி காட்டுபவர்கள் என்று! இப்படித்தான் ஒரு முறை.... பாண்டிச்சேரி அருகே இரும்பூளை (ஸ்ரீமாகாளீஸ்வரர்) என்னுமிடத்தில் இருவரும் நள்ளிரவில் தங்க வேண்டி வந்தது! அவர்கள் சிவன் கோயில் வாசலில் அமர்ந்தபோது... திடீரென்று பெரிய பலத்த சப்தம்! Concorde விமானம் வந்து செல்வது போல்... பயத்தால் சிறுவன் பெரியவரைக் கட்டிப் பிடித்து கொண்டான்! அவரோ வானத்தைப் பார்த்து ஏதோ Signal செய்து கொண்டே.... “ஒண்ணுமில்லையடா! கழுவெளிச் சித்தரு ஒரு தேவலோகத்து ரிஷியைப் பிராயச்சித்தத்துக்காக இந்தக் கோயிலுக்கு அனுப்பியிருக்கார்டா! அவர் வந்த தேவ விமானம் பெரிசு! ஒளி சக்தி ஜாஸ்தி! எங்கேயும் land ஆக மாடேங்குது! எங்கிட்ட ரூட் கேட்டாங்க! அதுக்கு ஒரு solution சொன்னேன்! அவ்வளவு தாண்டா!”

“ என்ன சர்வ சாதாரணமாகச் சொல்கிறார், ஈ, எறும்பு, பறவை, மிருகம், மனிதன், தேவர் என சகல ஜீவன்களுக்கும் ஆன்ம சாந்தி அளிப்பவரிடமா தாம் குருகுலம் கொண்டிருக்கிறோம்!” சிறுவனுக்குப் பெருமிதமாக இருந்தது! “சரி வாத்யாரே அந்த கிளி என்ன சொன்னிச்சு?” 

“டேய் பசிக்குது, ஒரு டீ, பன் அடிச்சுட்டு வரலாமா?” பெரியவர் சிரித்துக் கொண்டே கேட்டார்! ஒரு தேவ விமானத்தையே பூமியில் இறக்குபவருக்கு டீ, காபி, பன் ஒரு பொருட்டா என்ன? கிளி, குருவியிடம் பேசுபவருக்கு இதெல்லாம் ஒரு சப்ஜெக்டா என்ன? ஏன் இப்படி நம்மைக் குழப்பி மண்டை காய வைக்கிறா?

சிறுவன் தலையைப் பிய்த்துக் கொண்டான்! “பேச்சை மாத்தாதே வாத்யாரே! அந்த கிளி என்ன சொல்லிச்சு!”

“சரி சரி சொல்லிடறேண்டா! இந்தக் கிளி அண்ணாமலை கிளி கோபுரத்துலேந்து வருதாம்! இன்னிக்குக் கோயிலுக்குப் பிரதோஷ டயத்துல தேனீ சித்தர்கள் வர்றாங்களாம்! தேனி மலைலேந்து வர்ற சித்தங்க! தேனி வடிவுலதான் இருப்பாங்க! போய் தரிசனம் பண்ணிக்கலாம்! ஒரு கிளிக்குத் தெரியுதுடா, சித்தர்கள் வர்றது போறதெல்லாம்! ஆனா பகுத்தறிவுள்ள மனுஷனுக்குத் தெரியலை! வா! வா! போகலாம்!”

பெருமாள் ஆலயம்
திண்டிவனம்

சுமை தாங்கிக் கல்லிருந்து சிறு பையன் போல் கீழே குதித்த பெரியவர் சிறுவனை இழுத்துக் கொண்டு விரைவாக நடக்கலானா! சிறுவன் வழக்கம் போல் புரியாத புதிராய் அவர் பின்னால் ஓடினான்! கோயிலிலோ.......... திடீரென்று ஒரு தேனீக் கூட்டம் வந்து அலை மோதி மொய்த்திட!!! எல்லோரும் அலறி அடித்துக் கொண்டு ஓடி விட.... பெரியவர் மட்டும் கும்பிட்ட கரங்களுடன் ஆயிரக்கணக்கானத் தேனீக்களுக்கு நடுவே செல்ல அவர் பின்னால் சிறுவன் நடுங்கிக் கொண்டே சென்றான்! அப்பப்பா! தெய்வீகத்தில்தான் எத்தனை எத்தனை இனிய இறை அனுபூதிகள்!

ஆமாம் சென்ற இதழில் கண்ட ஓட்டைச் செம்புப் படலத்தைத் தொடர்வோமா? ஓட்டை உடைசலான செம்பைத் தூக்கிக் கொண்டு வந்து சிறுவனைப் பார்த்துப் பெரியவர் சிரித்தார்! “ஏண்டா உன்ன இந்தச் சொம்பை விக்கத்தானே சொன்னேன், ஏதேதோ பண்ணிக்கிட்டு வந்திட்டியேன்னு கேப்பேன்னுதான நெனச்சுக்கிட்டு நடுங்கிக்கிட்டு இருக்கே!“

ஆம்! உண்மையிலேயே சிறுவன் வெலவெலத்துக் கொண்டுதானிருந்தான்! “பயப்படாதே ராஜா, உனக்கு ஒரு டெஸ்ட் வச்சேன் அவ்வளவுதான்! இந்தச் சொம்பு சாதாரணச் சொம்பு இல்லேடா! விபீஷணன் பிரம்ம லோகத்துலேந்து சுவாமியக் கொண்டு வந்தாரு பாரு... அதுக்கு முன்னாடியே பிரம்மலோகத்துல பிரம்மாவும் அவரோட புத்ரன் நாரதரும் நெறய மகரிஷிகளும் வச்சு பூஜை பண்ணின சொம்புடா... அதுதான் குபேரன் கிட்ட போயி இப்படி உருமாறி இப்ப நம்மகிட்ட வந்துருக்கு!”

சிறுவன் அப்பாவியாய்க் கேட்டான்! “இந்த தேவலோகச் சொம்பு எப்படி உன்கிட்ட வந்தது வாத்யாரே!”

“இப்படித்தாண்டா எத்தனையோ ஜன்மத்துக்கு முன்னாடி... அடியேனுக்கு இந்திர லோகம் போக வேண்டிய பாக்யம் கெடச்சுச்சு! அங்க அப்ப சுபிணந்து மகரிஷிகிட்ட ஒரு பாடம் கேட்கணும்! அடியேனுடைய குரு அனுக்ரகத்துல நேரே இந்திர லோகம் போனேன். அப்ப என் கைல ஒரு மணி இருந்துச்சு! அப்ப அவரு என்ன கேட்டாரு தெரியுமா? இது பூலோகத்து மணியாச்சே! உன்கிட்டே எப்படி வந்தது?” இதைச் சொல்லி விட்டுப் பெரியவர் கலகலவென்று அண்டம் அதிரச் சிரித்தார்... பெரியவரோட இந்த divine message-ல் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உள்ளன. நீங்கள் இதிலிருந்து என்ன புரிந்து கொண்டீர்கள்? It is impregnated with zillion inner divine realities! சிறுவனுக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை! அப்படியும் vague-ஆக ஏதோ புரிந்தது போலிருந்தது! இப்போது.... சிறுவனாய் குருகுலவாசத்தில் மொட்டு... மலராகி.. தற்போது குருமங்கள கந்தர்வா ஆகப் பூத்திருக்கும் வெங்கடராமனுக்கு இதில் எண்ணிறந்த இறையர்த்தங்கள் புரிகின்றன! ஆனால் பெரியவர் தன்னை இன்று சித்த தேவப் பேருலகில் மறைத்துக் கொண்டு விட்டாரே!

“குபேர லோகச் சொம்ப எங்கயாச்சும் விக்க முடியுமா? சும்மா உன்னை டெஸ்ட் செஞ்சு பார்த்தேண்டா! அதுக்குரித்தான divine courier – ல இந்தச் சொம்பை குபேர லோகத்துக்கு அனுப்பிச்சாகணும்டா...! சரி சரி... சொம்புக் காசை எண்ணி வச்சுக்கோ, தீபாவளிக்கப்புறம் குபேர பூஜை வரும், அப்ப குபேர சன்னதி எங்க இருக்குன்னு தேடிப் புடிச்சு அங்க போய் நான் சொல்றதச் செஞ்சிட்டு வா, மறந்துடாதே..!”

பெரியவர் கிளம்பினார்...! “..... ம் .. ம் வாத்யாரே, இந்த குபேர லோகச் சொம்பை என்ன பண்றது?“
“. ஆங் .. மறந்துட்டேனில்ல?“
பெரியவர் வடக்கு நோக்கி வீழ்ந்து வணங்கி பவ்யமாக, பயபக்தியுடன் சொம்பை வாங்கி வைத்துக் கொண்டு புறப்பட்டார்.. நெடுநாள் கழித்து.. .ஒரு நாள் ... திருஅண்ணாமலை கிரிவலத்தின் போது.. “ஏண்டா அந்த குபேர லோகத்துச் சொம்பப் பத்தி ஞாபகப்படுத்தச் சொன்னேனில்ல?” சிறுவன் அதனை அறவே மறந்து விட்டான்! தலையைச் சொறிந்து கொண்டான்! “உன்ன நம்பி இந்த பூமில நானிருந்தேன்னு வச்சுக்கோ, எனக்கு நெறய கர்மா பாக்கியச் சேர்த்துக் கொடுத்துடுவியே!  சரி .... வா ...வா,” என்றவாறே சிறுவனின் கையைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக் கொண்டு தற்போதைய குபேர தீர்த்தம் எதிரே மலையின் உட்பகுதியை நோக்கிச் சென்றார் பெரியவர்!

அப்போதெல்லாம் மரங்கள், செடிகள் நிறைந்து மலையை நோக்கிய உட்பகுதிகள் எல்லாம் அடர்ந்த காடாக இருக்கும். எங்கெங்கோ சுற்றி ஒரு நெல்லி மரத்தின் கீழ் நின்ற பெரியவர்..... “நெல்லி மரம் ரொம்ப விசேஷம்டா! மஹாலக்ஷ்மி வாசம் செய்யற விருட்சம்டா! இங்க தபஸ் பண்ணின குபேரனுக்குத்தான் மஹாலக்ஷ்மி காட்சி கொடுத்தா! இந்த நெல்லி மரம்தாண்டா நம்ப divine amla courier service! இது மூலமாகத்தான் இந்தக் குபேர லோகத்துச் சொம்பை அது வந்த இடத்துக்கே அனுப்பணும்!” பெரியவர் பெரிதாகச் சிரித்தார்..! அவர் கையில் அந்தச் சொம்பு இருந்தது கண்டு சிறுவன் வியப்புடன் அவரைப் பார்த்து நெடுநேரம் நின்றான்! எப்படி இவரிடம் செம்பு இப்போது வந்தது? அங்கும் ஏதோ தரிசனம் தருவதுபோல் கையில் சொம்புடன் ஏதோ யோக நிலையில் நின்றார்!

“டேய் நீ மரம் ஏறுவியா?”

“என்னடா பிரயோஜனம்... அமாவாசைச் சித்தர் தரிசனம் எல்லாம் பாத்துருக்க! உனக்கு மரம் ஏறத் தெரியலியே!“ பிறகு நெல்லி மரத்தின் கீழ் ஒரு குழியைத் தோண்டலானார் பெரியவர். சுமார் மூன்றடிக்கு மேல் ஒரு குழியைத் தோண்டி நெல்லி இலைகளை ஏதோ மந்திரம் சொல்லிப் பறித்து லட்சுமிவாசம் செய்கின்ற வில்வத்துடன் சேர்த்துக் குழியில் போட்டு விட்டுக் கிடுகிடுவென்று மரத்தில் ஏறினார்... “டேய் மரத்து மேலேந்து சொம்பைக் கீழே போடுவேன். நீ புடிச்சு அந்தக் குழில எறக்கிடணும்!” அதே போல அவர் மரத்திலிருந்து சொம்பைக் கீழே விட சிறுவன் பத்திரமாக அதைத் தாங்கிக் குழியில் சேர்த்தான்.. பெரியவர் வெகுவேகமாகக் கீழிறங்கினார்.. அப்போதுதான் அவர் கால் பாதங்களைப் பார்த்தான்... பளிச்சென்று வெள்ளையாக இருந்தது! ஒரு மண், சகதி துளிக்கூட ஒட்டவில்லை! கைகளும் சுத்தமாக வெள்ளை வெளேரென்றிருந்தன! அதெப்படி குழி தோண்டி, மண்ணைப் பறித்து எடுத்தவருக்குக் கைகளில் மண் ஒட்டியிருக்க வேண்டாமா? தேவாதி தேவர்களுக்குத்தானே கால்கள் தரையில் பாவாது!

“கண்ணா என்னை ஆராய்ச்சி செய்யாதேடா ராஜா! அது உன்னால முடியாத காரியம்! நடக்க வேண்டிய வேலயப் பாரு!” கிடுகிடுவென்று மரத்திலிருந்து கீழிறங்கிய பெரியவர் வேகவேகமாக மண்ணை எடுத்து மூடி அதன் மேல் ஏதோ சக்கரம் வரைந்து.. “இதாண்டா (சக்கரம்) குபேரனோட அட்ரஸ்! நம்ப டிவைன் ஆம்லா கூரியர்ஸ்ல இந்த சொம்பு குபேர லோகத்திற்குப் போயிடும்டா”, என்று சிரித்தவாறே சொல்லிக் கொண்டு புறப்பட்டு விட்டார்.. சிறுவனுக்கு எங்கே வழி புரிந்து விடப் போகிறது என்பதற்காக எங்கெங்கோ சுற்றிக் கொண்டு மீண்டும் குபேர லிங்க கிரிவலப் பாதையை அடைந்தார். சித்தருடைய குருகுலவாசம் என்றால் அப்பப்பா எவ்வளவு சோதனைகள்! ஆனால் இவற்றைக் கடந்தாலோ கிட்டுகின்ற பரவசமான குருகுலவாச அனுபூதிகள் தாம் எத்தனை எத்தனை! எனவே சற்குருவைத் தேடுங்கள்.. சற்குருவை அடைவதே உங்கள் வாழ்க்கை லட்சியமாக இருக்கட்டும்!

கீழ்சூரியமூலை

கோடி சூர்யப் பிரகாச லிங்க மூர்த்தி – கீழ்சூரியமூலை

தீர்கமான கண் பார்வை சக்தியைப் பெற வேண்டுமா? சந்ததிகள் கூன், குருடு, அங்கக் குறைவின்றி நல்ல உடல் ஆரோக்யத்தோடு திகழ வேண்டுமா? கலியுகத்தில் நாற்பது வயதைத் தாண்டினாலே கண் பார்வைக் குறைகள், கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து, காடராக்ட் (CATARACT) போன்றவை வந்து விடுகின்றனவே! கண் புரை, கண் புற்று நோய், Glaucoma போன்ற நோய்கள் கண்களைப் பாதிக்காமல் தற்காத்துக் கொள்ள வேண்டுமா? நம்மால் வேதம் ஓத முடியவில்லையே, வேத சக்தி நமக்குக் கிட்டவில்லையே என்று ஏங்குகின்றீர்களா? நான்மறையின் சக்தியை நீங்கள் உணர விரும்புகின்றீர்களா? வணங்கிடுவீர் சூர்ய கோடி ப்ரகாச சிவ மூர்த்தியை! கும்பகோணம் அருகே உள்ள (ஆடுதுறை) சூரியனார் கோயிலுக்குச் செல்பவர்கள் அருகிலேயே கீழ் சூரிய மூலை கிராமத்தில் உள்ள தீர்கமான நேத்ர சக்தியை அள்ளித் தருகின்ற, வேத சக்திகளைக் கொழிக்கின்ற, கண் பார்வைக் கோளாறுகளை நிவர்த்தி செய்கின்ற அற்புதச் சூர்ய கோடி ப்ரகாச சிவலிங்க மூர்த்தியின் மகிமையை உணராது, தரிசிக்காது வந்து விடுகின்றார்கள்!  

ஸ்ரீசூரியகோடீஸ்வரர் கீழ்சூரியமூலை

கோடி கோடி சூரிய மூர்த்திகள் வரிசையாக வந்து ஒரு யுகத்தில் வழிபட்டுப் பெறுதற்கரிய சதுராக்னி துர்க ஜோதியை நல்வரமாகப் பெற்ற சிவத்தலமிது! கோடிக்கணக்கான நட்சத்திர சூரிய மூர்த்திகளும், சூரிய கோளங்களும் இன்றும் சூட்சும ரூபத்தில் வந்து வழிபடுகின்ற தலம்! ஆனால் இடிபாடுகளுக்கிடையே மேற்கூரையின்றி, பாதுகாப்பிற்கான ஒரு சிறு கதவுமின்றி கண்ணீர் சிந்தும் காட்சியாக இவ்வாலயம் இன்று இருப்பினும் இங்கு அருள்பாலிக்கும் சூரிய கோடிப் பிரகாச லிங்க மூர்த்தியே தம் சக்தியை மறைத்துக் கொண்டு வெறும் அரைத் துண்டை அணிந்து கொண்டு நம்மை மாயையாக ஏமாற்றுகின்றாரோ! இல்லையில்லை, நாம்தான் மாயையால் ஏமாறுகின்றோம்! ஆம், கோடி கோடியாம் நட்சத்திர சூரிய மூர்த்திகளுக்கும் கோடானு கோடி சூரிய தேவ மூர்த்திகளுக்கும் ஒளிக் கிரணங்களை அள்ளி வழங்குபவர்தாம் இன்று அரைத் துண்டைச் சுற்றிக் கொண்டு பாதுகாப்பிற்குக் கூட மூலத்தானக் கதவுகள் கூட இல்லாது வானமே கூரையாக முள் செடிகளுக்கிடையே அருட் குடத்திலிட்ட சாம்பசிவ மூர்த்தியாய் அருட்பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றார். கோடி கோடி சூரிய மூர்த்திகள் இங்கு தவம் கிடந்து வழிபடுகின்ற அளவிற்கு இந்தச் சுயம்பு ஜோதி லிங்கத்தில் என்ன சயஞ் ஜோதிப் பிரகாசம் ஜ்வலிக்கின்றதோ! தினந்தோறும் சூர்ய மூர்த்தி ஒளிபெறும் பாஸ்கர கிரணச் சாலையே கீழ்சூரிய மூலை சிவாலய வளாகம் என்றால் ஆதித்ய ஜோதி பொங்கும் இறைச் சுரங்கம் தானே இது!

ஜீவன்களின் துன்பங்களைத் தாங்கும் நவகிரக தேவதைகள்! நவகிரக மூர்த்திகளைத் தம் அரியணையின் நிலைப் படிகளாக்கி நிதமும் மிதித்துச் சென்று அவர்களை அவமதித்தானன்றோ ராவணன்! நவகிரக மூர்த்திகளிலும் / தேவதைகளிலும் கோடானு கோடி உண்டு! தம் தவத்தின் அபரிமித சக்தியைக் கொண்டு திருக்கயிலாயத்தையே பன்முறை வலம் வந்த ராவணனுடைய பாதங்களில் தோய்ந்திருந்த திருக்கயிலாயக் கிரிவல பூமி மண் துளிகளைத் தொட்டுப் போற்றி வணங்கினர் படிகளாய்க் கிடந்த நவகிரக தேவதைகள்! பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி ஜீவன்களின் கர்ம வினைப் பரிமாணத்தை இயக்குகின்ற நவகிரக தேவதைகளுக்கு ராவணனைத் தூக்கி எறிந்து பந்தாடுவது எளிதான காரியம் தான்! ஆனால் அவனுடைய ஆழ்ந்த சிவத் தவப் பலன்களுக்கு மதிப்புத் தந்து எந்த தேவ, தேவாதி தேவ மூர்த்தியாலும் வெல்லப்படலாகாது என்று அவன் பெற்ற தேவ வரத்திற்கும் மாசு ஏற்படா வண்ணம் தம் தேவ சக்திகளை எல்லாம் வெளிக்காட்டாது நவகிரக தேவதைகள் ராவணனுக்கு வயப்பட்டாற் போல் அடக்கத்துடன் நடிக்க வேண்டியதாயிற்று! மேலும் நவகிரக தேவ சக்திகளையும், தேவாதி தேவ மூர்த்திகளையும் ராவணன் அவமதித்தமையால் அவனுடைய தபோபலன்களும் பெருமளவில் நிமிடத்திற்கு நிமிடம் குறையலாயின!

ராவணன் நவகிரக மூர்த்திகளோடு போர் புரிந்து அவர்களை சரணடையச் செய்தானென்று எண்ணுவது முற்றிலும் தவறானதாகும். எவ்வாறு நல் பக்தியோடு பூஜித்தால் நம் இல்லத்தில் திருமகளே வந்து வாசம் செய்து லட்சுமி கடாட்சம் ஏற்படுகின்றதோ, அதேபோல ராவணன் கடைபிடித்த அதி தீவிர பூஜைகளினால் அவன் அரண்மனையில் நவகிரக வாச சேவித சக்தி ஏற்பட்டது என்பதே உண்மையான விளக்கமாகும். மிகுந்த செல்வத்துடன் திகழ்கின்ற ஒரு சிலர் தன் செல்வத்தை முறையற்ற காமத் தீயொழுக்கத்தில் செல்வழித்தால் எவ்வாறு ஸ்ரீலட்சுமி அவ்விடத்தை விட்டு அகன்று விடுகின்றாளோ அதே போல ராவணனுடைய நவதேவ சக்தியை, பக்தியை, தன் கர்வத்தால் அவன் இழந்து துர்சக்தியின் வசப்பட்டமையால் நவகிரக தேவதைகளும் அத்தருணத்தில் அவனை விட்டு அகன்று விட்டனர்..

நவகிரக தேவதைகளை ராவணன் இம்சைப் படுத்தினான் தானே! இவற்றையெல்லாம் நவக்கிரக தேவதைகள் பொறுத்துக் கொண்டமைக்குக் காரணம் என்ன தெரியுமா? அவர்கள் மட்டும் ராவணன் தந்த அந்த அளப்பரிய கொடுந் துன்பங்களைத் தாங்கி இராவிட்டால் ராவணன் அக்கொடுமைகளை உலக ஜீவன்களின் மேல் பாய்ச்சி அவர்களை நன்கு வதைத்திருப்பான். எனவே, நவகிரக தேவதைகள் ராவணனுடைய துன்பங்களைத் தாமே ஏற்றுக் கரைத்துப் பிரபஞ்சதையே ராவணனுடைய கோரப் பிடிலிருந்து காப்பாற்றினார்கள்.

நவகிரகங்களுடைய / நவகிரக தேவதைகளுடைய மூல மூர்த்தியே ஸ்ரீசூரிய மூர்த்தியாவார். ராவணனிடம் துன்பமுற்ற நவகிரக தேவதைகள், சூரிய பகவானை வேண்டிட, அவர்களுடைய அதிபதியாக அப்போது இருந்த மூலப் பிரகாச ஆதித்ய சூரியனானவர். மிக அரிதான வேள்வி ஒன்றைக் கடைபிடித்து ராவணனிடம் வதைபட்டுக் கொண்டிருந்த நவக்கிரக தேவதைகளுக்கு விடுதலையைப் பெற்றுத் தந்தார். நம்முடைய பூலோக ஜோதிட அறிவுக்கு எட்டிய வரை முதலில் ஐந்தாகவும், பிறகு ஏழாகவும் தற்போது ஒன்பதாகவும் நவகிரகங்கள் உள்ளன. ஆனால் பிரபஞ்சத்திலிருக்கின்ற சூரிய மூர்த்திகளோ கோடானு கோடி! சந்திர மூர்த்திகளும் கோடானு கோடி! புத மூர்த்திகளும் கோடானு கோடி! இவ்வாறாக எண்ணற்ற நவகிரக மூர்த்திகள் உள்ளனர். ஒவ்வொரு கிரகத்திற்கும் மூல அதிபதியைத்தான் மூலச் சூரிய பகவான், மூலச் சந்திர பகவான், மூல குரு பகவான் என்று போற்றுகின்றோம். நாம் பஞ்சாங்கத்திலும், ஜோதிட கணிதத்திலும் பார்ப்பது, உலக வழக்கிற்கு, தற்போதைய  நிலைக்கு உரித்தான ஒன்பது கிரக மூர்த்திகளின் சஞ்சார நிலைகள் ஆகும். மனிதனுடைய பகுத்தறிவுக்கு எட்டாத முறையில் இருக்கின்ற கோடானு கோடி சூரிய சந்திர மூர்த்திகளுடைய கிரக சஞ்சார நிலைகளை வைத்துப் பார்ப்பது என்றால், அது மனிதனுடைய கணித அறிவிற்கு அப்பாற்பட்டதாகவே தான் இருக்கும் புரிவில்லையா? அதாவது இன்றைக்குக் காலை ஏழு மணிக்குத் திருஅண்ணாமலையில் ஒரு குழந்தை பிறந்தது என்றால், நம்முடைய தற்போதைய ஜோதிடக் கணிதத்திற்கேற்ப அக்குழந்தை பிறந்த நேரத்தில் திருஅண்ணாமலையின் இடத்திற்கேற்ற வகையில், ஒன்பது கிரகங்களுக்குடைய வானியல் இருப்பை ராசி, நவாம்ச சக்கரமாக நாம் குறிக்கின்றோம்.

ஆனால் சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களின்படி, பிரபஞ்சத்திலிருக்கின்ற சூரிய மூர்த்தங்களோ, சந்திர மூர்த்தங்களோ கோடானு கோடி என்றால், திருஅண்ணாமலையில் அக்குழந்தை பிறக்கும் போது இந்தக் கோடானு கோடி சூரிய மூர்த்திகளின் இருப்பிடத்தையும், இவ்வாறாக அனைத்துக் கோடி கிரக மூர்த்திகளின் சஞ்சார நிலைகளையும் குறிப்பதென்றால், அதனுடைய ஜோதிட வரைபடம், ராசிச் சக்கரம், நவாம்ச சக்கரம் எப்படி இருக்கும் என்ற் சற்றே சிந்தித்துப் பாருங்கள் இதற்காகத்தான் தேவாதி தேவர்களுடைய ஜோதிட கணிதத்தில் சூரிய மூலைச் சக்கரம் என்ற ஒன்றைக் குறித்து வைத்திருக்கின்றார்கள்.. தற்போதைய கம்ப்யூட்டர் துறையில் ஸிப்பிங் (zipping) என்ற வகையில் எவ்வாறு கம்ப்யூட்டர் பைல்கள் அனைத்தையும் சுருக்குகின்றார்களோ, இதே போல பிரபஞ்சத்தில் இருக்கின்ற கோடானுகோடி கிரக மூர்த்திகளின் கிரக சஞ்சார நிலைகளை சூரிய மூலைச் சக்கரத்தில் Divine Algorithm / Divine Zip முறையில் சுருக்கி வைத்திருப்பார்கள்.
இது பொதுவாக, பிரபஞ்சத்தில் கீழ்திசையில் அமைந்திருக்கும்! இது அமைந்திருக்கும் இடமே தற்போதைய கீழ் சூரிய மூலை பூகோளப் பகுதியாகும்! இப்போதாவது உங்களுக்கு நாம் சொல்ல வருகின்ற கீழ் சூரிய மூலை கிராமத்தில் அருள் பாலிக்கின்ற சூரிய கோடி பிரகாச லிங்க மூர்த்தியின் மகிமை புரிகின்றதா?

கோடிக் கோள் சக்கர மையமே கீழ் சூரிய மூலை சிவாலய வளாகம்! கலியுக விஞ்ஞானத்தின் பகுத்தறிவுக் கண்களுக்கு அப்பாற்பட்டதாக பிரபஞ்சத்தில் உள்ள கோடி கோடி கிரக மூர்த்திகளின் தொகுப்புப் பகுப்புச் சக்கர ஆரமாக / மையமாக விளங்குவது தான் கீழ் சூரிய மூலை கிராமமாகும். ஆம்! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி சூரிய கிரகங்களின் உதயம் ஆரம்பமாவது கீழ் சூரிய மூலைப் பூகோளப் பகுதியில் தான்! இன்றைக்கு பூமியிலே சஞ்சரித்துக் கொண்டிருக்கின்ற சூரியனுடைய கதிர்களும் ஆரம்பமாவது கீழ் சூரிய மூலை கிராம பூமி மையத்தில்தான்! இதனைத் தற்போதைய விஞ்ஞானம் ஆராய்ச்சி மூலமாகத்தான் ஏற்கும்! ஆனால் சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்த வாக்கியங்களின்படி இப்பூவுலகில் என்றேனும் இந்த சித்த வாக்கியத்தின் சத்தியத் தன்மையை உணரத்தான் செய்வார்கள். தற்போதைய விஞ்ஞானத்தால் பகரப்படுகின்ற ஒரே ஒரு சூரியனுடைய கதிர்கள் ஆரம்பமாவது கீழ்ச் சூரிய மூலைப் பூகோளப் பகுதியில் தான்.!

பூலோகச் சூரிய ஒளி தொடங்குவது கீழ் சூரிய மூலை கிராமத்தில் தான்! பூமி வட்ட வடிவில் இருப்பதால், பூமி சூரியனைச் சுற்றி வருவதால், எவ்வாறு சூரிய கிரகமானது உதயமாகிறது. அஸ்தமனமாகின்றது என்ற முடிவிற்கு வரமுடியும் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். ஆனால் தினந்தோறும் இரவு பகலானது பூமியின் சுழற்சிக்கு உட்பட்டதாக இருந்தாலும் பூமியின் நித்தியக் காலக் கணக்குப்படி தற்போதைய பூமிக்கு ஒளி தருகின்ற சூரியனுடைய உதய கிரணங்கள்/ ஆரம்பக் கிரணங்கள் தோன்றும் ‘பூ’மையப் பகுதியாக அமைவது இந்த உலகத்தில், பாரதத் திருநாட்டில் அதுவும் தெய்வீகத் தமிழ்திரு நாட்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ச் சூரிய மூலை கிராமமே!  வேண்டுமென்றால் பூகோள ஆராய்ச்சியாளர்களும், ஜோதிட வல்லுனர்களும் கீழ்ச் சூரிய மூலையின் பூகோள வரைபடத்தைக் கொண்டு ஆராய்ச்சி செய்து பார்க்கட்டும்..!

அறிவீர் சித்தர்கள் காட்டும் தேவ அறிவை! இன்றைக்கு இல்லாவிட்டாலும், என்றேனும் ஒருநாள் இந்த சித்தோபநிஷத் உண்மையை, அதாவது இந்த பூமிக்கு சூரிய கிரணங்கள் உருவாகின்ற மூலப்பகுதியாக விளங்குவது கீழ் சூரிய மூலைப் பகுதிதான் என்பதை விஞ்ஞானிகள் ஒத்துக் கொள்ளவேண்டிய காலம் வரும். அதுவரை இந்த மெய்ஞான விஞ்ஞானமானது ஆன்மீக இரகசியமாகவே, மனிதனுடைய பகுத்தறிவிற்கு எட்டாத சித்தப் பிரபந்தமாகவே விளங்கும்.. ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் இப்போது உரைக்கப் படுகின்ற சித்த வாக்கியங்கள் யாவும் எழுதாக் கிளவியாக, சித்தோபநிஷத் சத்திய வாக்கியங்களாக விஞ்ஞான நிரூபணங்களாக எதிர்காலத்தில் திகழும். இந்தப் பூமிக்கு ஒளி தருவது ஒரு சூரியன் தான் என்று நம் விஞ்ஞானம் சொல்லிக் கொண்டிருக்கின்றது... ஆனால் பிரபஞ்சத்தில் இதே போன்று நிறைய சூரிய கிரகங்கள் உண்டு என்று அறிய வேண்டிய காலமும் வரும் .இத்தகைய அற்புத சக்தி வாய்ந்த கீழ் சூரிய மூலைச் சிவாலய சூரிய கோடி பிரகாச லிங்க மூர்த்திதான் இன்றைக்கு சுவர்கள் இடிந்த நிலையிலே கதவுகள் கூட இல்லாமல் தக்க பாதுகாப்பின்றி உறைகின்றனர் என்று எண்ணும் போது மனம் வேதனை அடைகின்றது..

கண்களைக் காக்கின்ற, கண்புறை (Cataract) போன்ற கண் நோய்களுக்கு நிவர்த்தியளிக்கின்ற அதியற்புத மூர்த்தி, கோடி சூரிய பிரகாசம் கொண்ட சூரிய கோடிஸ்வர லிங்க மூர்த்தியை அறிவீர்களா? ஒரு சூரியனையே நம்மால் பார்க்க முடியவில்லையே! கோடி கோடி மூர்த்திகள் ஒன்று சேர்ந்து ஒரு சிவலிங்க மூர்த்தியைத் தரிசித்தனர் எனில் அந்த ஸ்வயம்பு சிவலிங்க மூர்த்தியின் மஹிமையும், ஜோதிப் பிரகாசமும், அருட்சக்தியும் தான் என்னே! எத்துணையோ கோடி யுகங்களுக்கு முன்னால் ஒரு கோடி சூரிய மூர்த்திகள், தம் சூரியப் பிரகாசத்தை விருத்தி செய்வதற்காக, ஒன்று கூடி நின்று தரிசித்து, அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்ட சூரிய கோடி லிங்க மூர்த்தியே இன்றைக்கு இடிந்த கோயில் சுவர்களிடையே எவ்விதப் பாதுகாப்புமின்றி , தனித்து இருக்கின்றார்.. கும்பகோணம் சூரியனார் கோயில் திரைலோக்கி அருகில் (கீழ்) சூரிய மூலை கிராமத்தில் இலுப்பைத் தோட்டத்தில் தற்சமயம் இடிபாடுகளுடன் உள்ளதே இந்த அற்புதச் சிவாலயம் ... இங்கு ஆலயத் திருப்பணிகளை எடுத்துச் செய்து கண் நோய்களுக்கு நிவர்த்தி காண்க! முக்கியமாகக் கண் டாக்ட்ர்கள் எடுத்துச் செய்ய வேண்டிய அதிஅற்புதத் திருப்பணி!

Glaucoma, கண்புறை நோய், Cataract போன்ற பலவித கண் நோய்களால் அவதியுறும் மனித குலத்திற்கு கண் நோய்களிலிருந்து, நிவர்த்தியளிக்கின்ற அற்புத மூர்த்தியாக விளங்கும் சூரிய கோடி லிங்க மூர்த்தி, இன்றைக்கு வெயிலிலும், மழையிலும், உடைந்த விமானத்துடன் இடிந்த செங்கற் கட்டிடத்தினூடே தனித்து இருக்கின்றார் எனில் இது கலியுகத்தில் மனித சமுதாயத்தின் கவனக் குறைவுதானே! லட்ச லட்சமாய் செலவழித்துத் தம் மருத்துவ மனைகளை விருத்தி செய்யும் கண் மருத்துவர்கள் இந்த சூரிய மூலை கிராமச் சிவமூர்த்தி ஆலயத்தை விருத்தி செய்தால் கைராசி பெருகுமே! எத்தகைய கொடிய கண் நோய்களுக்கும் நிவர்த்தி காணலாமே!

தேனிமலை மகிமை

தேனி மலை – சித்தர்கள் பாசறை – பூமியிலுள்ள ஜீவன்களுக்கு மட்டுமன்றி இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி அண்டங்கள் கோள்கள், நட்சத்திரங்களிலுமுள்ள ஜீவன்களுக்கும் தெய்வீக நல்வழி முறைகளைக் காட்டுபவர்களே சித்தர்கள் ஆவார்கள். சித்தர்கள் மிகவும் விரும்பி வந்து, தியானித்து, உறைகின்ற அற்புதத் தலங்கள் பலவற்றுள் ஒன்றே புதுக்கோட்டை பொன்னமராவதி செல்லும் வழியில் (காரையூர் மார்கம்) உள்ள தேனி மலையாகும் ..(மதுரை அருகே ஒரு தேனி உள்ளது, குழப்பம் வேண்டாம்) அது தேனி இங்கு நாம் குறிப்பிடுவது தேனிமலை! கொப்பனாம்பட்டி அருகிலுள்ள இந்தத் தேனிமலையில் ஆறுமுகனாக ஸ்ரீமுத்துக் குமார சுவாமியாகிய முருகப் பெருமான் வள்ளி தேவயானையுடன் அருள் கூட்டுகின்ற மிகவும் சக்தி வாய்ந்த தலம்! சித்தர்கள் சூட்சும வடிவில் தியானம் புரிகின்ற குகைகள் நிறைந்த சிறியமலை. ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளின் ஜீவாலயம் உள்ள அதிஅற்புத இறைத் தலமே தேனிமலை! மலைப் பாறையின் கீழ் 100 பேர் அமர்ந்து தியானிக்கின்ற அளவிற்கு இயற்கையே அளித்துள்ள இனிய தேவ மண்டபம் போல் தியானப் பாறை உள்ள இடம்! முருகனுக்கு உகந்த செவ்வாய், உத்திரம், விசாகம், கார்த்திகை தினங்களில் இங்கு கிரிவலம் வந்து ஸ்ரீபெருமானந்த சித்தர் சுவாமிகளின் ஜீவ சமாதியை தரிசித்து, ஸ்ரீமுத்துக்குமார சுவாமிக்குச் சந்தனக் காப்பிட்டு மலையில் உள்ள தியானப் பாறையின் கீழ் அமர்ந்து ஸ்ரீமுருகப் பெருமானை தியானித்து கிழங்கு வகை உணவுகளைத் தானமாக அளித்து வந்தால் சர்க்கரை வியாதி/ வயிற்று வியாதிகளால் அவதியுறுவோர் நலம் பெறுவர்.. இங்கு விளக்கு வசதி இல்லாமையால் இரவில் கிரிவலம் வருதல் கடினம்.. பகலில் நன்கு கிரிவலம் வந்திடலாம்! கிரிவல தூரம் சுமார் இரண்டு கி.மீ தான்! எனவே எளிதில் கிரிவலம் வந்திடலாம்! சித்தர்கள் வாசம் நிறைந்திருக்கின்ற தேனி மலையை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவதற்கான வசதிகளுடன் இறைத் திருப்பணிகளைச் செய்திடில் சந்ததி சந்ததியாக இந்த தர்மம் தலைகாத்து நிற்கும்.

தேனி மலை ஸ்ரீமுத்துக்குமார ஸ்வாமி. ஆறுமுகப் பெருமானாக வள்ளி தெய்வானையுடன் அருள்பாலிப்பதுடன் ஆறுவகையான முக்கியமான சித்தர் குழாத்தையும் இங்கு போற்றி இரட்சிக்கின்றார்.. இந்த ஆறு வகைகளில் சித்தர்களுமே மனிதனுடைய ஆறு முக்கியமான அங்கங்களில், தலை, முகம், மார்பு, வயிறு, இடுப்பு, கை கால்களில் ஏற்படுகின்ற நோய்களைத் தீர்ப்பதற்கான பாறை மூலிகை, பாறை நீர், பாறை மணல், பாறைக் காற்று, பாறை அக்னி, பாறை ஒளி போன்ற ஆறு வகைப் பாறைக் குணப்பாடுகளில் தேர்ச்சி பெற்றவர்கள்!

நோய் தீர்க்கும் கொப்புப் பாறை மகிமை!
தேனி மலையில் தியானம் புரிந்து குடகுப் பாறை தெய்வ ரகசியங்களில் தேர்ச்சி பெற்றவர்தாம் ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகள், தீராத நோய்களையெல்லாம் தீர்க்கின்ற கொப்புப் பாறைக் கஷாயம், கொப்பு பஸ்மம், கொப்பு குளிகை, கொப்பு லேகியம், கொப்பு வாடகம், கொப்பு மாத்திரை ஆகிய ஆறு வகைப் பாறை மூலிகைத் துறையில் முருகப் பெருமானிடமிருந்தே அருள் பெற்றுத் தீரா நோய்களைத் தீர்க்கும் சித்தியைப் பெற்றவர்! இன்றும் தேனி மலையில் ஜீவ சமாதி பூண்டு தம்மைச் சரணடைவோரின் தீராத நோய்களையெல்லாம் தீர்த்து வைப்பவர்! இவரே முக்தியானந்த பரல் மூர்த்தி சித்தர், கொடி நீர்க் காவடி சித்தர், கலம்பு மாடக் குடுவை சித்தர் போன்ற அதியற்புத சித்தர் குழாத்தை உருவாக்கியவர்..! இவர் உருவாக்கிய நூற்றுப் பத்து வைத்திய முனிகள் தாம் இன்றும் பாரதமெங்கும் இலை மறைக் கனியாய்க் கொப்புப் பாறை மருத்துவம் மூலமாக இறை பக்தியுடன் குரு அருளுடன் தம்மை அண்டுவோர்க்குக் கருணை புரிந்து நோய் நிவர்த்தி அளித்து வருகின்றார்கள்.!

ஸ்ரீபெருமானந்த சித்தர் தேனிமலை

தேனிமலையில் நாம் காண்கின்ற பலவகை அபூர்வமான மூலிகைப் பாறைகளுள் கொப்புப் பாறை, குடகுப் பாறை ரகசியம் பற்றி இங்கு காண்போம். இவை எல்லாம் சித்புருஷர்களுடைய ஞானபத்ரத்தில் காணப்படும் மலைத் தல தெய்வீக ரகசியங்களாகும்.. ஒவ்வொரு பாறைக்கும் ஆறுவகை முக்கிய குணப்பாடுகள் உண்டு. இதில் தேனி மலையில் காணப்படுகின்ற முக்கியமான மருத்துவ குணப் பாறைகளுள் ஒன்றே கொப்புப் பாறையாகும். குடம் போன்ற அமைப்பு, காற்று, வெய்யில் மழையிலிருந்து இயற்கை நிழல் அமைப்பு, அமர்ந்து இளைப்பாறும் வண்ணம் ஆசன அமைப்பு, மூலிகைப் பாறைக் கசிவு, பச்சிலைக்  கோட்டச் சித்திரம், தன்வந்த்ர வடிவுக் கோணம் இந்த ஆறும் நிறைந்ததே கொப்புப் பாறையாகும். இதன் அருகில் உள்ள நம்முடைய உடலின் ஆறு கூறுகளில் ஏற்படும் அனைத்து நோய்களையும் தீர்ப்பதற்கான அற்புத மூலிகை சஞ்சாரமே இதன் மகிமையைப் பறை சாற்றும்! இவை யாவுமே கொப்புப் பாறையின் தெய்வீக அம்சங்களாகும்! கொப்பு உடைய அம்மன் (அதாவது கொப்புடை அம்மன்) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள்! கொப்புப் பாறையிலிருந்து சுயம்பாகவோ, மானிடப் பிரதிஷ்டையாகவோ அம்பிகை தோன்றினால் அவளே கொப்புடை நாயகி! காரைக்குடியில் அருள்பாலிக்கிற சக்தி வாய்ந்த அம்பாள்! இந்தக் கொப்புப் பாறையின் வகைகளுள் ஒன்றே நாம் தேனி மலையில் காண்கின்ற தியானப் பாறையாம்!
பச்சிலைச் சாறு பதியும் பாறை – தேவ
எச்சிலில் தீரும் சதிகால் நோய்கள்,
உச்சிலைப் பேறு விதியும் மாறும்
அச்சிலைதானே ஆறுமுகத் தேனி !
என்பது தேனிமலை பற்றிய சித்தர்களுடைய பரிபாஷைப் பாடல்.. இந்த நான்கு வரி பரிபாஷையில் தேனி மலை முருகனைப் பற்றியும், கொப்புப் பாறை பற்றியும் நாற்பதாயிரத்திற்கும் மேலான அர்த்தங்கள் பொதிந்துள்ளன. இந்தக் கொப்புப் பாறையில் உயிரோட்ட வடிவக் கோட்டுகள் உண்டு எவ்வாறு நம் உடலில் நரம்புகள் திரட்சி பெற்று மேலெழும்பி நரம்போட்டமாகத் தெரிகின்றனவோ, எவ்வாறு வாழை இலையில் அதன் நரம்புகள் பட்டவர்த்தனமாகத் தெரிகின்றனவோ அதே போல இந்தக் கொப்புப் பாறையின் ஒளிக் கிரணங்களானவை வடிவுக் கோட்டுகளாக, பாறை நரம்புகளாகக் காட்சி தரும். இதனை நன்கு உன்னிப்பாக கவனித்துப் பார்ப்பவர்களுக்குத்தான் தேனி மலை கொப்புப் பாறையின் ஜீவாக்னி ரேகாப்யாச வடிவுக் கோட்டுகள் தென்படும்.. இதனைக் கொப்புப் பாறையின் நாடிகள் என்று சித்தர்கள் வர்ணிக்கின்றனர்..!

கொப்புப் பாறையின் அற்புத நீரோட்ட சக்தி!
இந்த அஸ்வ வடிவக் கோ(ட்)டுகளுக்கு சூர்ய, சந்திர, நட்சத்திர ஒளிக் கிரணங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. மேலும் எவ்வாறு பூமிக்கு அடியில் நீரோட்டம் இருக்கின்றதோ, அதே போல கொப்புப் பாறையின் உள்ளும் நிச்சயமாக நீரோட்டம் உண்டு.. இதனைப் பாறை ஆக்க நீர் என்று சித்தர்கள் விளிக்கின்றனர். பூமியின் புவி ஈர்ப்பு சக்தியைப் பற்றி நம்முடைய கலியுக விஞ்ஞானம் எதை எதையோ பகர்கின்றது! ஆனால் ஒரு தென்னை மரமானது பூமியின் கீழேயிருந்து எவ்வாறு நீரை 100 அடிக்கும் மேல் ஏற்றுகிறது என்பதைச் சரியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் கொப்புப் பாறையின் நீரோட்டமானது கீழிலிருந்து மேல், மேலிருந்து கீழ், பக்கவாட்டுப் பாதை என வட்டச் சுழற்சியில் 360 degreeக்கும் பாயும்.. இன்றைக்கு சித்தர் தியானப் பாறையாகக் காட்சி அளிக்கும் தேனி மலையில் கொப்புப் பாறைச் சுயம்புகள் நிறைய உண்டு. இன்றைக்கும் இத்தகைய அஸ்வ வடிவக் கோடுகள் வைரத்தின் நீரோட்டம் போல் பாறையில் தீர்க்கமாகச் செல்வதை நீங்களே காணலாம்.. ஒவ்வொரு வடிவக் கோட்டிற்கும் ஒரு முடிவு முடிச்சு உண்டு. இந்த முடிவிலிருந்துதான் பாறை நீர் கசியும்.. இந்தக் கொப்புப் பாறைக் கசிவு நீருக்கு மகத்தான மருத்துவ குணங்கள் உண்டு. ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகளும் அவருடைய சிஷ்யர்களும், பாறைக் கசிவு நீர்ப் பாதையில்தான் புரண்டு அங்கப் பிரதட்சிண யோகம் செய்து தங்களுடைய மருத்துவ சித்தியை விருத்தி செய்து கொண்டார்கள்.. இந்த யோக சித்திக்கு வாலைப் பூச்சர யோகம் என்று பெயர். கொப்புப் பாறைக் கசிவு நீருக்கு பிருகு நீர் என்றும் பெயர்.. இன்றைக்கும் தேனி மலையைச் சுற்றியுள்ள கிரிவலப் பகுதியில் பல இடங்களில் பாறைக் கசிவு நீரைக் காணலாம். ஏதோ மழை பெய்து ஒழுகிக் கீழே வருகின்றது என்று தற்போது காரணம் சொல்லப்பட்டாலும், உண்மையில் கொப்புப் பாறையின் உள்வடிவக் கோட்டுத் தீர்த்தம் தான் இது!

சகல நோய் தீர்க்கும் பிருகு நீர்!
இப்பாறைக் கசிவு நீர் (பிருகு நீர்) மகத்தான மருத்துவ குணங்களைக் கொண்டது. சகல வியாதிகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது! காரணம், கொப்புப் பாறையின் பாறை மூலிகை, பாறை நீர் , பாறை மணல், பாறைக் காற்று, பாறை அக்னி, பாறை ஒளி போன்ற ஆறு மருத்துவக் குணங்களையும் பாறைக் கசிவு நீர் கொண்டிருப்பதுதான்! தேனீக்களில் பல வகைகள் உண்டு. இதில் கொப்புப் பாறைத் தேனீயானது நிறைந்த தெய்வ சித்துக்களைக் கொண்டது! அற்புதமான நோய் தீர்க்கும் சக்தி உடையது.. காரணம் இவை அடிக்கடி பிருகு நீரைப் பருகுவதால்தான்! குறிப்பாக கொப்பு ராணித் தேனீயானது பிருகு நீரையே அருந்தி ஆயிரக்கணக்கான தேனீக்களைச் சிருஷ்டி செய்கின்றது. பாறை மூலிகை நீரான பிருகு நீரையே அடிக்கடி அருந்தி வருவதால், இதனுடைய இற்க்கைகளின் ரீங்காரத்திலும் கூட வேத மறைகளின் பீஜாட்சர மந்திர சப்தங்களை உணர்ந்திடலாம். இவ்வாறு, பிருகு நீரான பாறைக் கசிவு நீரை விரதமாய்ப் பூண்டு அருந்துகின்ற கொம்பு ராணித் தேனீக்களை சித்தர்களே அறிவர். ஸ்ரீபெருமானந்த சித்தர் ஸ்வாமிகள் கொப்பு ராணித் தேனீக்களை இனங்காணும் தெய்வீக ஆற்றலைப் பெற்றவர்.

தேனி மலையில் பூசநாங்கண்ணி என்ற ஓர் அற்புத மூலிகை உண்டு. இந்த மூலிகைச் செடியை நாடிக் கொப்பு ராணித் தேனீ தேடி வந்து, தான் அருந்திய பாறைக் கசிவு நீரை இதில் தெளிக்கும். பூசநாங்கண்ணி மூலிகைகளில் பட்டுத் தெளிக்கும் ஒரு துளி தீர்த்தம் கூட எத்தனையோ நோய்களைத் தீர்க்க வல்லதாகும். இந்தப் பாறைக் கசிவு நீரானது இன்றைக்கும் தேனி மலையில் குருவருளுடன் மட்டும் காணக் கிடைக்கின்றது.. மேலும் குளுந்துவ பிசின் என்ற பாறைப் பிசினானது தேமல், சொறி, சிரங்கு, பல வருடத் தோல் நோய்கள், யானைக் கால் நோய், psoriasis போன்ற படை மற்றும் புரையோடிய ரணங்களைத் தீர்க்கவல்லதாகும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் தேனிமலை ஸ்ரீமுத்துக் குமார சுவாமி முருகப் பெருமானை வணங்கி கிரிவலம் வந்து ஆங்காங்கே வழிந்து வருகின்ற பாறைக் கசிவு தீர்த்தத்தை சிறிதே பிரசாதமாக அருந்தி வந்தால், எத்தகைய தோல் வியாதிக்கும் நிவாரணம் பெற்றிடலாம். ஆனால் தொடர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வருதல் வேண்டும்.

பயண ரட்சைக்கு, காரிய சித்திக்கு!
கடல் பிரயாணம், விமானப் பிரயாணம் என்று நீண்ட நெடும் யாத்திரை செல்வோர் தேனி மலைக்கு வந்து கிரிவலம் செய்து நீர்ச் சத்துள்ள (பூசணி, பறங்கி, முள்ளங்கி, பேரிக்காய், சுரைக்காய், தர்பூசனி, பம்பளிமாஸ், கிருணி etc…) காய்கறி உணவு வகைகளைத் தானமாக அளித்து வந்தால் சபரிமலை போன்ற காட்டு நெடு வழிப் பயணம், கடல்/தரைப் பயணம், விமானப் பிரயாணம் நன்முறையில் அமைந்து காரிய சித்தி கிட்டும்!

திருமணத் தடங்கல்கள்/செவ்வாய் தோஷங்கள் நீங்கிட!
கிரிவலத்தின் போது இந்தப் பாறை கசிவு நீரின் தரிசனமே எத்தனையோ விதமான தோஷங்களைத் தீர்க்கும். குறிப்பாக திருமண தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரத்தில்/ இராகு காலத்தில் தேனி மலையை கிரிவலம் வந்து ஆறுமுகப் பெருமானைத் தரிசித்து , ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகளின் ஜீவாலயத்தில் செவ்வாய் பகவானுக்குரித்தான சிவப்பு நிற உணவு வகைகளை (தக்காளி சாதம், பீட்ரூட் சாதம் போன்றவை) அன்னதானமாக அளித்து வந்தால் திருமண தோஷங்கள் நீங்கித் திருமணங்கள் நன்கு கைகூடும்!

பாலில் குங்குமம் கரைத்துச் சிவப்பு நிற முழு அரிசி மணிகளைக் கலந்து முருகனுக்கு அபிஷேகம் செய்து வர எத்தகைய செவ்வாய் தோஷத்திற்கும் நிவர்த்தி ஏற்பட்டுத் திருமண பாக்கியம் கிட்டும்! குழந்தை பாக்கியம் இல்லாதோர், தம்பதி சகிதம் விசாகம், கிருத்திகை, செவ்வாய் நாட்களில் கிரிவலம் வந்து ஏழைத் தம்பதிகட்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்து வந்தால், குழந்தைப் பேறுக்கான நல்வழி பிறக்கும். இவ்வாறு எத்தனையோ தெய்வீக ரகசியங்களைக் கொண்டதே தேனி மலையாகும். இங்கு எந்நாளிலும், கிரிவலம் வந்திடலாம். குறிப்பாக செவ்வாய்க்கிழமை , செவ்வாய் ஹோரையில் கிரிவலம் வருதல் மிகச் சிறப்புடையதாகும்.

அமுத தாரைகள்

1. பிரிந்த உறவைப் பிணைக்கும் தீர்த்தக் கரை மூர்த்திகள்
குளம் / ஆற்றங்கரையில் (தீர்த்தக் கரையில்) அமைந்திருக்கின்ற ஆலயங்களுக்கு ஜலத்வீப சக்தி அதிகம். அதிலும் தீர்த்தத்தை நோக்கியவாறு உள்ள மூர்த்திக்கு வ்யாப்ய ஜலதேவ சக்தி மிகுந்திருப்பதால் சில விசேஷமான பலன்களை இவ்வாலயங்களிலிருந்து பெறலாம். இவ்வாறு தீர்த்தக் கரையில் அமைந்துள்ள ஆலயங்களில் நீராடி நல்ஆடைகளை அணிந்து, ஈர ஆடைகளைத் தானமாக அளித்து தீர்த்தக் கரையில் தர்ப்பணமிட்டு மீண்டும் நீராடி நல்லாடைகளை அணிந்து இரண்டாவது முறையாக மீண்டும் ஈர ஆடைகளை ஏழை எளியோருக்குத் தானமளித்து ஸ்வாமியை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து கொடி வகைக் காய்கறிகளை (உ.ம்) அவரை, புடலை தானமாக அளித்து வந்தால் காரண காரியமின்றி உறவை வெட்டிப் பிரிந்த கணவன், மனைவி, பெற்றோர்கள், பிள்ளைகள் தார்மீகமான முறையில் ஒன்று கூடுவர். நீரோட்ட நாட்களான விசாகம், ரோகிணி, திருவோணம் ஆகிய நட்சத்திர நாட்களில் செவ்வாய் ஹோரை நேரங்களில் இவ்வாறு வழிபடுவது அற்புதமான பலன்களைத் தரும் .. (உ.ம் வல்லக் கோட்டை, கும்பகோணம் திருவாலங்காடு அருகே வெள்ளை வேம்பு மாரியம்மன் கோயில், ராமேஸ்வரம்).

2. ஆண் வாரிசில்லா ஏக்கம் அகன்றிட..

பெண் குழந்தைகளாய்ப் பிறந்து விட்டனவே, ஆண் குழந்தை இல்லையே எனறு ஏங்கி மனம் வருத்தமடையாதீர்கள்! ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அனைத்துமே இறைவனின் விருப்பம் என்று ஏற்று நம்முடைய பூர்வ வினைகளின்படியே நமக்கு அனைத்தும் அமைகின்றன என்று உணருங்கள். இதெல்லாம் சொல்வதற்கு எளிதாக இருக்கும். ஆனால் உள்ளூர மனம் ஏங்கிக் கொண்டு தான் இருக்கும். இதற்காகத்தான் இறைவியே மானுடப் பெண்ணாக அவதரித்து கடுந்தவம் பூண்டு கலியுக மக்களிடையே ஏற்படுகின்ற இந்த ஏக்கங்களைச் சமநிலைப்படுத்திக் கிடைத்துள்ள பெண் செல்வம் நல்லொழுக்கத்துடன் நன்னெறியில் சிறந்து விளங்கி நல்லவிதமான திருமண வாழ்வைப் பெற்றிட விசேஷமாக அருள்பாலிக்கின்ற தலங்கள் உண்டு.

தன் மகள் பருவமடைகின்ற ஆண்டிலிருந்து தொடங்கி ஒவ்வொரு வருடமும் அவரவர் வசதிப்படி ஒரு சிறு பொன்மாங்கல்யச் சரடை வைத்துப் பெற்றோரும், மகளும் மூன்று வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து பூஜை செய்திட வேண்டும். அதாவது முதல் வெள்ளிக் கிழமையில் தொடங்கி மூன்றாம் வெள்ளிக் கிழமை வரை (எந்த மாதமானாலும் சரி, குறிப்பாக சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, தை, மாசி மாதங்கள் சிறப்புடையவை) 21 நாட்களுக்குப் பூஜையில் வைத்திருந்து மூன்று வெள்ளிக் கிழமைகளிலும்
சர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த சாதகே, சரண்யே த்ரயம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே
மங்களம் தந்திடும் குங்கும நாயகி எங்கும் பொங்கணும் உந்தன் மங்களம்
என்ற துதிகளை 1008 முறை ஓதி மாங்கல்யத்திற்குக் கற்பூர  தீபம் / பசு நெய் தீபம் காட்டிப் பொன் மாங்கல்யத்தை பத்திரமாக வைத்திருந்து நான்காம் வெள்ளிக்கிழமையில் திருச்சி மலைக் கோட்டை ஆலயத்தில் முதலில் கீழ்த்தளத்தில் இருக்கும் ஸ்ரீமாணிக்கப் பிள்ளையாரை வணங்கி, ஸ்ரீதாயுமான ஸ்வாமி, ஸ்ரீபாதாள ஐயனாரின் திருவடிகளில் சமர்ப்பித்து எடுத்து ஸ்ரீவண்டார்குழலி அம்மனுக்கு பொன் மாங்கல்யத்தைச் சார்த்தி வணங்கிட வேண்டும். இவ்வாறு வருடம் தோறும் செய்து வந்தால் மகளுக்கு நன்முறையில் திருமண வாழ்வு அமையும். சுமங்கலித்துவத்திற்கு ஸ்திரம், சிவம், ரட்சை, மங்களம் ஆகிய நான்கு சக்திகள் தேவை. இந்த நான்கு சக்திகளும் கூடிய அற்புதத் தலங்களுள் மலைக் கோட்டையும் ஒன்றாம்! வசதியுள்ளோர் இரண்டு மாங்கல்யத்தைச் சாற்றி மற்றொன்றை ஏழைச் சுமங்கலிக்கு அளித்திட இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறையேனும் பொன் மாங்கல்ய தானம் செய்து வந்தால் ஆண்வாரிசு இல்லா ஏக்க எண்ணங்களைத் தூய்மை செய்து பெண்வழி சம்பந்தங்கள் நன்முறையில் அமைவதற்கும் அன்பும் பண்பும் ஒழுக்கமும் பக்தியும் கூடிய மாப்பிள்ளைகள் வாய்ப்பதற்கும் அம்பிகையே குங்கும நாயகியாகத் துணைபுரிகின்றாள்!

3. ஹோம /வேள்வி சக்திகள் பெருகிட
ஸ்ரீப்ரும்ம மூர்த்தி, பல கோடி தேவ மூர்த்திகளுடன் மிகச் சிறப்பான முறையில் வேள்வி நடத்திய இடங்கள் பல உண்டு. அவற்றில் மிகவும் முக்கியமானது. கும்பகோணம் குத்தாலம் பந்தனைநல்லூர் அருகில் உள்ள வில்லியநல்லூர் ஸ்ரீகாளீச்வரர் ஆலயமாகும். ஸ்ரீநீலமேகப் பெருமாளும், ஸ்ரீகாளீச்வரரும் இணைந்து அருள் கூட்டிய வேள்வி அது! எனவே நன்முறையில் மகத்தான வேத சக்திகளுடன் வேள்வியை நடத்திட விரும்புவோர், ஸ்ரீகாளீச்வர லிங்கத்திற்கு, பசுநெய், சமித்து போன்றவற்றை அர்ப்பணித்து இங்கு ஹோமம் செய்து எஞ்சும் சமித்து பிரசாதங்களை எடுத்துச் சென்று இல்லத்தில், கடையில் நிலத்தில் ஹோமம் செய்து மகத்தான பலனடையலாம். எதிரிகளின், பகைவர்களின் கடும் பகைமையை வென்றிட இந்த ஹோம வழிபாடு உதவும்.

4. ஸ்ரீவித்யா பூஜா பலன்கள் பெருகிட ... புத்தி கூர்மை பெற...
ஸ்ரீவித்யா பூஜைகள் மூலமாக ஜகத் ஜோதிப் பிரகாசத்தைப் பெற்று அவற்றை எண்கோணக் கடுக்கன்களாக ஸ்ரீஅகஸ்தியருக்கு அணிவித்தமையால் தான் ஸ்ரீஅகஸ்திய பெருமானின் தரிசனமே ஸ்ரீ வித்யா பூஜைகளின் பலாபலன்களைப் பரிபூரணமாக நமக்கு தந்தருள்கின்றது. எனவே, தம்பதி, குடும்பம் சகிதமாக குருவருளுடன் வெள்ளியும், அனுஷ நட்சத்திரமும் கூடிய நாட்களில் குரு ஹோரை நேரத்தில் பவ கரணமும், சித்த யோகமும் கூடும் சுபநேரத்தில் ஸ்ரீலோபாமாதா சமேத ஸ்ரீஅகஸ்தியப் பெருமானை தரிசிப்போருக்கு ஸ்ரீலலிதா சஹஸ்ரநாம மந்திர பலன்களும், ஸ்ரீ வித்யா பூஜா பலன்களும் கிட்டிடும். எனவே கடுக்கன்களை அணிந்து ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ஓதுவது ஸ்ரீஅகஸ்திய ஸ்ரீலோபாமாதாவின் அனுக்கிரஹத்தைப் பெற்றுத் தரும். ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத்தை அறியாதோர், ஸ்ரீஅபிராமி அந்தாதி, ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அந்தாதித் திருப்பாக்களை ஓதிடுங்கள். மந்தபுத்தியால் அவதிப்படுவோர் இவ்வாறு வழிபட்டு வந்தால் புத்தி கூர்மை அடைவர்.

5. கீழ் சூரிய மூலை ஸ்ரீசூரிய கோடி பிரகாச சிவலிங்க மூர்த்தி

முப்பத்து முக்கோடி தேவாதி, தேவ மூர்த்திகளும், தேவதைகளும், தினந்தோறும், சூரிய, உதய, அஸ்தமன நேரத்தின் போது, வழிபடுகின்ற மூர்த்தியென்றால் இவர்தம் சுயஞ்ஜோதி சக்திதான் என்னே! ஆனால், இன்று இடிபாடுகளுக்கிடையே காட்சியளிக்கின்ற கோலம்தான் என்னே? ஆனால், இன்றைக்கும் கோடானுகோடி, பாஸ்கர லோக சித்தர்கள் வந்து வழிபட்டுச் செல்லுகின்ற மிக அற்புதத் தலமாக இது விளங்குகின்றதென்றால் இந்த சூரிய கோடி லிங்க சிவாலயத்தைச் சீரமைக்க வேண்டிய பொறுப்பு நம்முடையது தானே!

சூரியனார் கோயிலிருந்து, துகிலி கிராமத்திலிருந்து இடப்புறம் பிரிகின்ற திரைலோக்கி கிராமத்திற்கான சாலையில் (சர்க்கரை ஆலைக்குச் செல்லும் வழி), திரைலோக்கியிலிருந்து அரை கிலோமீட்டரில் இலுப்பைத் தோட்டம் என்று சொல்லப்படுகின்ற, மரங்களுக்கிடையே வாய்க்கால் ஓரத்தில் அமைந்துள்ள இச்சிறிய சிவாலயமானது எளிதில் கண்ணுக்குப் புலப்படாது, ஏனெனில் புதர்களுக்கிடையே, மரங்களுக்கிடையே, இடிபாடுகளுக்கிடையே இறைவன் தன்னை சுயம் ஜோதி பிரகாசமாய் மறைத்துக் கொண்டு இருப்பதால், சாலையினின்று இது தென்படுவது கிடையாது.. ஆனால் தேடி திருச்செல்வம் பெறுவதற்காகவோ, என்னவோ இறைவன் இங்கு சூரிய கோடி லிங்க மூர்த்தியாக கோடி சூரிய மூர்த்திகள் வணங்கிய அதியற்புத லிங்க மூர்த்தியாக, தன்னை மறைத்துக் கொண்டு இங்கு அருள்பாலிக்கிறார்.. எனவே பாடல் பெற்ற திரைலோக்கி ஆலயத்தைத் தரிசிப்போர் கோடி கோடி சூரியப் பிரகாசம் கொண்டு கதவுகள் கூட இல்லாது எளிமையாக தரிசனம் தரும் இந்த சுயம்பு லிங்கத்தை தரிசித்து ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு குறிப்பாக இங்கு பிரதோஷ வழிபாட்டையும் ஞாயிற்றுக்கிழமை காலை 6-7 சூரிய ஹோரை நேர பூஜைக்கும் ஆவன செய்து கண் நோய்களிலிருந்து தீர்வு பெறுவார்களாக!

ஸ்ரீகாயத்ரீ ஸ்ரீசாவித்ரி ஸ்ரீசரஸ்வதி
திருவெள்ளறை

6.  ஸ்ரீகாயத்ரீ மந்திரம் என்பது மனிதர்கள், தேவர்கள் மட்டுமன்றி அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான உத்தம மந்திரமாகும். ஜாதி, மத, இன, குலபேதமின்றி இந்தியர்கள், அயல்நாட்டினர் என்ற பேதமின்றி அனைத்து ஜீவன்களின் ஜீவ தேவ சக்திக்கான புனிதமான மந்திரம் இது. அயல் நாட்டவர்களுக்கு இம்மந்திரம் தெரியாதே என்று எண்ணாதீர்கள்.. ஏனென்றால் உலக மக்களின் நன்மைக்காக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு பாரத மக்களுக்கு, குறிப்பாக சுயம்பு தெய்வ மூர்த்திகள் நிறைந்த தமிழ் நாட்டு மக்களுக்கு உண்டு. ஏனென்றால் ஆலய கோபுரங்கள் யாவும் நாம் ஜபிக்கின்ற ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை, உலக மக்களுக்கு வான்வெளியாகப் பரப்புகின்ற DIVINE STATIC SATELLITES ஆகும். திருச்சி அருகே திருவெள்ளறைப் பெருமாள் ஆலயத்தில் சுதை ரூபங்களில் காட்சி தரும். ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி ஆகிய மூன்று காயத்ரீ வடிவ மூர்த்திகளைத் தரிசித்து உங்கள் காயத்ரீ மந்திர சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.

7. கண் டாக்டர்களுக்கு
கோடி கோடி சூரிய மூர்த்திகளே தினந்தோறும் சூட்சுமமாக வந்து பூஜிக்கின்ற தலமாகையால், தீர்க்கமான கண் பார்வையைத் தருகின்ற தலமாகையால், கண் மருத்துவர்கள் அனைவரும் இந்த கீழ் சூரிய மூலை கிராம சிவாலயத்தின் மேல் விசேஷ கவனம் கொண்டு இந்த ஆலயமானது எதிர்காலத்தில் மகத்தான சிவாலயமாக மீண்டும் பிரகாசிப்பதற்கான இறைத் திருப்பணிகளைச் செய்ய வேண்டுமாய் மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இன்றைக்கு இவ்வாலயத் திருப்பணிக்குச் செய்கின்ற இறைச் சேவையானது இன்னும் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பூகோள விஞ்ஞானத்தில் கீழ்சூரியமூலை கிராமம் சிறப்பான சூரிய சஞ்சார ஆரம்ப மார்கமாகத் திகழப் போகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, இந்த மகத்தான இறைப் பணிகளை மேற்கொள்ளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகிறோம்.

ஸ்படிக ரூப ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வரர் – அட்டைப் பட விளக்கம்

ஸ்ரீஆதிசங்கரர் ஜீவன்களுக்கு உணர்த்திய மிக அற்புதமான பூஜைமுறைகளில் ஒன்றே ஸ்ரீசந்திர மௌளீஸ்வர சிவலிங்க வழிபாடாகும். அதிலும் அவர்தம் குருவருள் மேன்மையால், அவதார மஹிமையால் நமக்குக் கிட்டிய ஸ்படிக லிங்க ரூப ஸ்ரீசந்திர மௌளீஸ்வர பூஜை மஹிமை நமக்குக் கிட்டியுள்ள பெரும் பாக்யமே! காஞ்சீபுரம், சிங்கேரி, திருவையாறு போன்ற இடங்களில் ஸ்படிக லிங்க பூஜை பிரசித்தி பெற்றதாகும் ஒவ்வொரு ராசிக்கும், பொதுவாக மாதத்திற்கு ஒருமுறை இரண்டேகால் தினங்களுக்குச் சந்திராஷ்டமம் அமையும், மனம் பேதலித்துத் தடங்கல்கள் ஏற்படுகின்ற இந்நாட்களில் ஸ்ரீஸ்படிக லிங்கத்தைத் தரிசனம் செய்து மனதிற்கு அதிபதியான சந்திர பகவானுக்கு உரித்தான உளுந்து வடையைப் படைத்து சந்திராஷ்டமம் தினங்களில் ஏற்படும் இடர்களுக்குத் தீர்வைப் பெறுங்கள். ஸ்படிகம் என்பது ஈஸ்வரனின் மூன்றாம் நேத்திரத்தில் பொங்கும் பரமானந்த அமிர்தத் துளியின்  திருவடிவாகும்! முசிறி, திருவக்கரை போன்ற இடங்களில் ஸ்ரீசந்த்ர மௌளீஸ்வரரை வழிபடுங்கள்!

திந்திரிணீச்வரம் விஷ்ணுபதி

ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலம்

வாயு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கு நிவர்த்தி தரும் தலத்தை அறிய வேண்டுமா? வாயு சுவாச பந்தத்தில் இயங்கும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்குத் தக்க நிவாரணம் பெற வேண்டுமா? ஸ்ரீபிரம்ம மூர்த்தி நடத்திய யாகசாலை தென் திசை வாசலாக அமைந்த திருத்தலத்தை அறிய வேண்டுமா? வறுமை, வசதியின்மை, பஞ்சம், நோய் நொடிகள் மெலிந்த உடலமைப்பைக் கொண்டோர் நல்ல ஆரோக்யத்தைப் பெற வேண்டுமா?  இவையனைத்திற்கும் தெய்வீக விடையைப் பெற நீங்கள் தரிசிக்க வேண்டிய திருத்தலமே திண்டிவனம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயமாகும். ஸ்ரீ ஆஞ்சனேய மூர்த்தி அதியற்புத விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் சங்கு சக்கரங்களைத் தெய்வாயுதங்களாகப் பெற்ற திருத்தலம் இதுவே. பிரதோஷம், கும்பமேளா, கிரஹண நேரம், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற மகத்தான பூஜைகளின் பலகோடி மடங்கு பூஜா சக்தியைப் பெற்றுத் தருவதே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமாகும்.

பெருமாள் ஆலயம்
திண்டிவனம்

மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாக வருடத்திற்கு நான்கு முறை மட்டுமே பொதுவாக மாதப் பிறப்பன்று அமைகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலத்தின் மஹிமையை ஜாதி மத இன குல பேதமின்றி அனைத்து மக்களும் அறிந்து உணர்ந்து வழிபடும் வண்ணம் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ R.V வெங்கடராமன் அவர்கள் அரும்பாடுபட்டு எடுத்துரைத்து வருகின்றார்கள். அதே போன்று வைணவப் பெரியோர்களும் பக்த கோடிகளும் ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத்தை அனைத்து வைணவத் தலங்களிலும் கொண்டாடிட ஆவன செய்யுமாறு வேண்டுகின்றோம். தற்போதைய திண்டிவனம் ஒரு காலத்தில் திந்திரிணீஸ்வரம் என்பதாகப் புளிய மரங்கள் நிறைந்த வனமாக விளங்கியது. அதிக அளவிலான புளி உடலுக்குக் கெடுதலே. இது சித்த ஆயுர்வேத மருந்துகளின் குணத்தை முறிப்பதால் இம் மருந்துகளுக்கு உப்பு மற்று புளி கட்டுப்பாடுகள் அதிகமாகும். தற்போது திண்டிவனம் எனத் திரிந்துள்ள திந்திரிணீஸ்வரத்தில் இப்போதும் கூடப் புளிய மரங்கள் அதிகமாகவே உள்ளன. ஆனால் திந்திரிணீஸ்வரமாக ஒரு யுகத்தில் திண்டிவனம் பரிமளித்த போது காயா மரம், உறங்காப் புளி, உதிராக் கனி, துளிரா விதையாகப் பலவிதமான தெய்வீக குணங்கள் நிறைந்த புளிய மரங்கள் கூடிய பகுதியாக இது விளங்கியது. அதாவது காய்க்காததும், இலைகள் வளைந்து, தணிந்து, மூடி உறங்காததும், புளியம் பழம் காய்ந்து தானாகக் கீழே விழாததும், நட்டால் முளைக்காததுமான கொட்டை கூடிய  அபூர்வமான புளியமரங்கள் நிறைந்த புளியவனமாக இது விளங்கிற்று.

பொதுவாக புளிக்கு எதிர்வினை சக்திகளை (Negative Forces) வெளிவிடுகின்ற தன்மை நிறைய உண்டு. காயாப் புளி, உறங்காப் புளிய மரங்களுக்கு (உதாரணம் கோவை பேரூர்) மகத்தான தெய்வீகச் சக்திகள் உண்டு. புளிய மரக் காற்று அவ்வளவாக உடலுக்கு ஏற்புடையது அல்ல. இதற்காக புளிய மரங்களை ஒதுக்கி வெட்டித் தள்ளி விடாதீர்கள். வேப்ப மரம், அரச மரம் போன்றவை அருகில் இருந்தால் இரண்டிலும் கஷாய பந்தனம் என்ற சித்த வாடக முறையில் அதற்கு மருத்துவக் கூட்டுக் காற்று குணம் உண்டாகிறது. குறைந்த அளவில் நிதானமாகப் பயன்படுத்தப்பட்டால் புளியானது ஜீரண நாளங்களை விருத்தி செய்கின்றது. பித்ரு/படிக்கட்டு பூஜைகளில், திவசக் காரியங்களில் 12 வகையான பித்ருக்களை வாழை இலைப் படையல் பூஜையில் உருவகிக்கும் போது முதல் மூன்று வரிசையில் வரிசையில்/ இலைகளில்/ படிகளில் உப்பு, சர்க்கரை, புளியை மூன்றையும் வைக்கின்ற நடைமுறை இன்றும் உண்டு. எனவேதான் பித்ருக்களின் நாயகரான ஸ்ரீபெருமாள் மூர்த்திக்குப் ப்ரீதி உடையதாகப் புளியோதரை சாதம் விளங்குகின்றது. குறிப்பாக புதன் மற்றும் சனிக்கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரத்தில் புளியோதரையைப் படைத்து தெற்கில் தலை வைத்து சயனிக்கும் பெருமாளுக்கு அன்னதானமாக அளித்து வந்தால் சில வகையான பித்ரு சாபங்களுக்கு நிவர்த்தி ஏற்பட்டுப் பேச்சுத் தடுமாற்றம், திக்குவாய், தொண்டைக் குழல் நோய்கள், தோல் நிறம் கருப்பாகி படை, சிரங்கு போல் பரவுதல் போன்றவற்றுக்கும் தக்க நிவாரணம் கிட்டும்.

பெருமாள் ஆலயம்
திண்டிவனம்

ஸ்ரீபிரம்மாவின் பிரம்மாண்டமான யாகம்!
ஸ்ரீபிரம்ம மூர்த்தி தம்முடைய சிருஷ்டித் தொழிலில் பலவிதமான துன்பங்களை எதிர் நோக்க வேண்டியிருந்தமையால் இவற்றிலிருந்து மீளவும், தடங்கல்களினால் தாம் இழைக்கின்ற தவறுகளுக்குப் பரிகாரங்களைப் பெறவும் ருத்ர கச்சி மயான பூமியான காஞ்சீபுரத்தில் மிகச் சிறப்பான யாகம் ஒன்றை நடத்த விழைந்தார். அசுரர்களிடமிருந்து ஏற்படுகின்ற இடர்களுக்குத் தக்க பாதுகாப்பு வேண்டி யாகசாலையின் எட்டுத் திக்குகளிலும் அஷ்ட த்ரைலோக்கிய மண்டப வாசல்களை ஸ்தாபித்தார். நான்கு பெரிய அரக்கர்கள் திந்திரிணி வனத்தில் அமைந்திருந்த சங்கர்ஷ்ண வியாச மண்டபத்தைத் தாக்கலாயினர். பிரம்ம மூர்த்தி யாகத்திலிருந்து எழுந்து வந்து அரக்கர்களிடம் போரிட முடியுமா? அசுரர்களோ பொங்கிப் பெருகும் ஆறுகள் வடிவத்திலும், கொழுந்து விட்டு எரியும் மரங்களாகவும், நர மாமிசத்தை உண்ணும் கொடிய விலங்குகளாகவும், ஏதேதோ உருவெடுத்து வந்திட எந்தத் திக்கில் எவ்விடத்தில் எவ்விதக் கொடுமைகள் விளையுமோ என்ற அச்சத்தில் பிரம்ம மூர்த்தி இருக்க வேண்டியதாயிற்று. தெய்வ மூர்த்திகளுக்கே இத்தகைய சோதனைகளாயின் மானுடர்களாகிய நாம் எம்மாத்திரம்?’

புண்ணியத்தை வணங்கும் புனித மூர்த்திகள்!
பிரம்ம மூர்த்தியால் அசுரர்களை வதம் செய்ய முடியாதா? நிச்சயமாக முடியும்! ஆனால் கடுந்தவங்களால் அசுரர்கள் சேர்த்துக் கொண்டுள்ள புண்ய சக்தியோ, தெய்வீக வரங்களோ அபரிமிதமானவை. இந்தப் புண்ய சக்திக்கு மதிப்புத் தரும் பொருட்டுத்தான் ஸ்ரீபிரம்ம மூர்த்தி அசுரர்களுடன் போர் புரிந்திடினும், அவர்களுடைய புண்ணிய சக்தியின் மேல் கை வைப்பதில்லை. மேலும் அசுரர்கள் தம்முடைய புண்ணிய சக்தியை மற்றவர்களிடம் செலுத்தி உலகையே ஆட்கொண்டு விடலாமல்லவா? பிறர் மேல் அசுர சக்தி பாய்ந்து அவர்கள் வதையுறுவதைவிடத் தேவாதி தேவ மூர்த்திகள் அவற்றைத் தம்முடைய அவதார லீலைகளாக ஏற்றுத் தாமே அனுபவித்துப் பிற ஜீவன்களைக் காப்பாற்றுகின்றார்கள். இவ்வாறாகத்தான் கலியுகத்திலும் மஹான்களும், சித்தர்களும் பெருந்துன்பங்களைத் தாங்கி, நமக்கு அருட்கருணை காட்டுகின்றனர். இதே போல்தான் மஹான்களும் தம்மை நாடி வருபவர்கள் தீயவர்களாக, சமுதாயக் குற்றங்களைப் புரிந்தவர்களாக இருந்தாலும், அவர்களும் தான தர்மங்கள், இறைப்பணிகள் மூலமாக அறிந்தோ அறியாமலோ சேர்த்து வைத்துள்ள புண்ணிய சக்திக்கு மதிப்பளித்து அவர்களுக்கும் சில பரிகாரங்களைத் தருகின்றார்கள். ஆனால் உண்மையாகவே மனம் திருந்தி தன்னால் பாதிக்கப்பட்டவர்க்கு நிவாரணம் அளித்தால்தான் எந்தப் பரிகாரமும் பரிபூரணமாகப் பலனளிக்கும் என்பதையும் உணர்த்துகின்றார்கள்.

சஞ்சீவிராய தீர்த்தம்
திண்டிவனம்

கலியுகத்தில் தீவினைக்கான தண்டனை நியதிகள்!
இன்றைக்கும் பலருக்கும் ஓர் எண்ணம் ஏற்படுவதுண்டு. தீயவர்களும், பிறரை ஏமாற்றிச் சம்பாதிப்பவர்களும் கோவிலுக்குச் சென்று வழிபட்டு நன்றாகத்தானே வாழ்கின்றார்கள். அவர்களை இறைவன் உடனேயே தண்டிக்கக் கூடாதா? தவறு செய்த உடனேயே தண்டனையென்பது கிருதயுகத்திலும், திரேதாயுகத்தின் முற்பகுதியிலும் இருந்த இறைப் பெரும் நியதியாகும்.. புனிதமான தர்மம் மாசுபட்டு அதர்மச் செயல்கள் பெருகிய பொழுதுதான் பல பிறவிகள் கூடிய ஜீவ வாழ்க்கைக் கோட்பாடு உலகில் பிற்பாடு ஏற்பட்டது. பிறர் தவறு செய்தால் அவர்கள் உடனேயே தண்டிக்கப் படவேண்டும் என்று எண்ணுகின்ற கலியுக மனித மனமானது. தான் தவறு செய்யும் போது அதே நியதியை ஏற்குமா? உதாரணமாக உங்கள் மனதில் ஒரு சிறு முறையற்ற காம உணர்வு ஏற்பட்டால் இதற்கு தண்டனையாக ஓர் உடல் உறுப்பு செயல் இழக்க வேண்டும் என்ற தர்ம நியதியிலிருந்து அது கலியுகத்தில் இயற்கையாகவே செயல்பட்டால்.....? சற்றே சிந்தித்துப் பாருங்கள். எனவே உங்கள் உள்ளத்தில் கிளர்ந்தெழுந்த அந்தச் சிறிய முறையற்ற காம உணர்ச்சிக்கும், சொல்லப்பட்ட / செய்யப்பட்ட பொய், லஞ்சம், சூது, வாதிற்கும் தண்டனையைப் பெறாது இப்போதைக்கு நீங்கள் தப்பிக்கின்றீர்கள் தானே! இதற்குக் காரணமே உங்களுடைய புண்ணியத் தல தரிசனமும், இறைப்பணிகளின் / பூஜைகளின் புண்ணிய சக்தியும், ஏனைய நற்காரியங்களின் நல் வரசக்திகளுமாகும். ஆனால் இந்தப் புன்ணிய சக்தியால் உங்களுக்கு வரவேண்டிய தண்டனை தள்ளிப் போடப்படுகின்றதே தவிர ஏதேனும் ஒரு பிறவியில் இதற்கான தண்டனையை நீங்கள் கண்டிப்பாக அனுபவித்தேயாக வேண்டும். ஆனால் உள்ளம் திருந்திப் பிறருக்கு உரிய நிவாரணமளித்தல் என்ற நிலையில்தான் இந்தப் பிறவித் தளைகள், பாவச் சுமைகள் கொஞ்ச கொஞ்சமாக அறுபடும்! அரக்கர்களின் அட்டகாசத்தால் யாகம் தடைபட்டு ஸ்ரீபிரம்ம மூர்த்தி என்ன செய்வதென்று அறியாது திகைத்துப் பெருமாளை வேண்டினார்.. யாகத்திற்கு இடையூறுகள் வருமென்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்து ஸ்ரீபிரம்மா அஷ்ட திக்குகளிலும் ரட்சா மந்திரத் தூபிகளை வைத்திருந்தும் அசுரர்களுடைய அருந்தவப் பலன்கள் அவற்றை மறைத்துவிடும் போலிருந்தது!

அஞ்சனை மைந்தனின் பஞ்ச லிங்க பூஜை! 

பார்த்தார் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி! எட்டுத் திக்குகளிலும் ஸ்ரீபிரம்மன் நிறுவிய வேத வாசல்களைக் காப்பதற்கான தக்க ரட்சா மூர்த்தியாக ஆஞ்சநேயரையே எண்ணினார். ஏனென்றால் எட்டுத் திக்குகளிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் சென்று வந்து காரியத்தை சித்தி செய்யக் கூடிய அபாரமான சிவ சக்தியையும் அதியற்புதமான ராமாமிர்த ஆசிகளையும் பெற்றவர்தாமே பஞ்ச பூத சக்திகள் நிறைந்த ஸ்ரீஆஞ்சநேயர்! அவருடைய நித்ய பூஜைகளுள் பஞ்சலிங்க பூஜையும் ஒன்றாகும். இந்தப் பிரபஞ்சத்தில் ஸ்ரீஆஞ்சநேய மஹா பிரபு பிரதிஷ்டை செய்த லிங்கங்களோ கோடானு கோடியாகும். அவர் தாம் பூஜித்து அனுபவித்து பூலோக வழிபாட்டிற்குக் கொணர்ந்த ஸ்வயம்பு லிங்க மூர்த்திகளும் கோடானு கோடியாகும். பஞ்ச லிங்க பூஜையில் லயித்திருந்த ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியைக் கண்டு ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் பரமானந்தம் கொண்டு தம்முடைய சங்குச் சக்கரத்தை அவருக்கு நல்வரத் திருபரிசுப் பொருளாக அளித்தார். ஆமாம், ஸ்ரீஆஞ்சநேயர் திந்திரிணீஸ்வரம் எனப்படும் திண்டிவனத் திருத்தலத்திற்கு வரக் காரணமென்ன?

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி கோயம்பேடு

ஆஞ்சநேயரின் அற்புத யோக வழிபாட்டுத் தலங்கள்!
நவ வியாகரண பண்டிதர் என்றும், மார்த்தாண்ட ராமவிஜய பராக்ரம சாலியாகவும், யோகப் பட்டதாரியாகவும், ஸ்வர பூஷண வியாசராகவும் பல திருப்பட்டங்களைப் பெற்ற ஸ்ரீஆஞ்சநேயர் ஆயகலைகள் அறுபத்து நான்கு மட்டுமில்லாது தேவர்களுக்குரித்தான தூய கலைகள் தொண்ணூறாயிரம் கோடியிலும் மஹரிஷிகளுக்குரித்தான மண்ணிற் பெரிதாம் மகத்தான மாமறையாயிரம் கோடிகளிலும் பாண்டித்யமும் கீர்த்தியும் பெற்றவர். ஒவ்வொரு கலைக்கும் உரித்தான அந்தந்தத் தலங்களில் குறித்த பூஜைகளை மானுட ரூபத்தில் இன்றைக்கும் இடைவிடாது செய்து வருபவர். உதாரணமாக யோகச் சாயைப் பூஜைகளை சூரிய ஹோரை நேரத்தில் சோளிங்கர் திருத்தலத்திலும், இறைப் பெரும் ஸ்வர(இசை) பந்தன வழிபாடுகளை சென்னை திருவூறல் சாலையில் மப்பேடு சிவத்தலத்தில் அபூர்வமான நவவியாகரண பலி பீடத்திலும் அன்றும், இன்றும், என்றும் கடைபிடித்து வருபவரே ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியாவார். வாகன பிராப்திக்கும், வாகனத் துன்பங்களிலிருந்து ரட்சிப்பதற்கும் சுக்ர பாத பீட யோகத்தில் ஆஞ்சநேயர் திளைத்திருக்கும் இடமே சென்னைக் கோயம்பேடு சிவாலயமாகும். இங்கு இருபாத பிரிவு யோக நிலையில் ஸ்ரீஆஞ்சநேயமூர்த்தி ஒரு தூணில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

தூண்களில் தோன்றி அருள்கின்ற தெய்வ மூர்த்திகளுக்கு தனி மகத்துவமுண்டு. ஏனென்றால் இன்றைக்கு நீங்கள் காண்கின்ற ஆலயத் தூண்கள் யாவுமே அரும்பெரும் மஹரிஷிகளின், சித்தர்களின், யோகியர்களின் உருவங்களாகும். இறைவனுடைய இல்லத்தில் (கோயிலில்) மரமாய், தூணாய், மண்டபமாய், மாடமாய், மஞ்சு விமானமாய், மரப்படியாய், மரச் சிலையாய், நிலை வாசலாய், நிலைப் படியாய், மேல் விதானமாய், நீண்ட நெடுந்தளமாய், ஆபரணமாய், வாகனமாய், கிரீடமாய், வஸ்திரமாய், ஆராதனைக்குரிய திவ்யப் பொருளாய், ஷோடசோபசார வஸ்துக்களாய், தீர்த்தமாய், நீர்த் தாரையாய், கோயிலில் உருவகம் கொண்டு மகான்களும், சித்தர்களும் மாதவம் கிடக்கின்றார்கள் தானே! திருக்கயிலாயத்தில் இறைவனுடைய மணக் கோலத்தை தரிசித்த ஸ்ரீஆஞ்சனேய மூர்த்தி காற்றினும் கடுகிச் சென்று ஈசனுடைய திருமணக் கோலங்களைப் பல இடங்களிலும் கண்டு களித்தார். ஸ்ரீஆஞ்சநேய மஹாபிரபு ருத்ர பூமியும், கச்சி மயானமும், ஹரிஹர சக்திகள் நிறைந்ததும், சக்தி அம்சம் பரிபூரணமாகப் பொலிவதுமாகிய காஞ்சீபுரம் தலத்திலும் ஈஸ்வரனுடைய திருமணக் கோலத்தை ஸ்ரீஅகஸ்தியப் பெருமானுடன் காணுதற்கு விழைந்தார். இதே போன்று பெருமாளுடைய பல திவ்யமான கல்யாணக் கோலங்களைக் காணும் பாக்யத்தையும் பிரம்மா வேள்வி நிகழ்த்திய போது அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பையும் பெற்றார்.

அனுமன் பெற்ற சங்கு சக்கர யோக நிலை!
பஞ்ச லிங்க பூஜா பலன்களாக நீண்ட நெடும் பவித்ர யோகத்தில் திளைத்துக் கிடந்த ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு அவருடைய யோக நிலையிலேயே அவரைத் தம் இருப்பிடத்திற்கே ஜோதி ரூபத்தில் வரவழைத்த ஸ்ரீலக்ஷ்மி நாராயண மூர்த்தி ஆஞ்சநேயருக்கு சங்கு, சக்கரத்தை அளித்து நான்முகனுடைய வேள்விக்கு ரட்சா பந்தனமாய்க் காத்து அருள்பாலித்திடத் திருவருளாணையிட்டார். இவ்வாறாக ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி திருமாலிடமிருந்து சங்கு, சக்கரத்தைப் பெற்ற திருத்தலமே திண்டிவனத்திலுள்ள ஸ்ரீலக்ஷ்மி நாராயண பெருமாளின் ஆலயப் புண்ணிய பூமியாம். அதாவது பலகோடி யுகங்களுக்கு முன் ஸ்ரீஆஞ்சநேயர் சங்குச் சக்கரத்தைப் பெற்ற காலமே அந்த யுகத்தின் விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். எவ்வாறு ஸ்ரீமுருகப் பெருமான் கும்பகோணமருகே அளகாபுத்தூரில் சங்கு சக்கரம் தாங்கிக் காட்சி தருகின்றாரோ, திண்டிவனம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் இன்றும் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி சங்கு சக்கர பாணியராய்க் காட்சியளித்து அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீமுருகப் பெருமான் அளகாபுத்தூர்

தடைபட்ட காரியங்கள் நிறைவேறிட .....
எனவே விஷ்ணுபதி தினமாம் இந்நாளில் திண்டிவனம் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் விடியற்காலை ஒன்றரை மணி முதல் பகல் பத்தரை மணி வரை அபிஷேக ஆராதனை, விசேஷமான ஸ்ரீஆஞ்சனேயர் ஹோமத்துடன், தான தருமங்களுடன் கொண்டாடுவது விசேஷமானதாகும்.. இன்று அனுமாருக்கு ஆயிரத்து எட்டு வடைகள் கொண்ட மாலை சார்த்தி ஏழைகளுக்குத் தானமாக அளித்தால் உறவினர்களின் எதிர்ப்பு, எதிரிகளின் பகைமையினால் தடைபட்டுள்ள நில புலப் பணிகள், விவசாயம், வியாபாரம் ஆலயத் திருப்பணிகள் ஆகியவை நன்முறையில் நிறைவேறும். பொதுவாக, கூட இருந்தே குழிபறிக்கின்ற உறவினர்களும், நண்பர்களும் சக ஊழியர்களும் நிறைய உண்டு.. இவர்கள் தாம் ஒவ்வொரு நற்காரியத்திற்கும் கலியுக அசுரர்களாய் அமைந்து தடை செய்கின்றார்கள்.. உதாரணமாக ஒரு கோயில் கும்பாபிஷேகத்தை எவரேனும் நடத்த முன்வந்தால், அந்தஸ்து, அதிகாரம், ஆணவம், கர்வம் காரணமாக இதனை நடக்க விடாமல் செய்பவரும் உண்டு. இவ்வாறு தடைபட்டு நிற்கின்ற சமுதாய நல் இறைப் பணிகள் நன்முறையில் நடத்திடப் பெறவேண்டுமாயின் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் சுவாமிக்கும், ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கும் தைல / சந்தனக் காப்பிட்டு சிகப்பு நிற ஆடைகளைச் சார்த்தி, வஸ்திரத்தோடு பானகத் தீர்த்தம் படைத்து சிறு குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் நற்காரியங்கள் சித்தி பெறும்.
பானகத்தின் தானவ மகிமை
பொதுவாக பானகம் என்பது நெஞ்சுக்கும் உள்ளத்திற்கும் இதத்தை அளிப்பதாகும். ஸ்ரீநரசிம்ம மூர்த்திக்கு உக்ரம் பெருகிய போது அவருக்குப் பானகத்தைப் படைத்திடவே ஆங்கே சாந்தம் உருவாகத் தொடங்கியது. எனவே பானகத் தானம் என்பது உறவினர்களுடைய பகைமை, பொறாமை, தோஷத்தால் ஏற்படுகின்ற எதிர்விளைவுகளுக்கான தக்க நிவாரணத்தைப் பெற்றுத் தருவதாகும்.  விஜயவாடாவில் (மங்களகிரி) அருள்பாலிக்கின்ற ஸ்ரீபானக நரசிம்மரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். காலையில் பகல் உச்சிப் பொழுதுவரை மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். பிறகு அனைவரும் மலையின் கீழிறங்கி வந்துவிடுவார்கள். ஏனென்றால் பகல் உச்சிப் பொழுதிற்குப் பிறகு தேவர்களுடைய பூஜை தொடங்குகிறது. ஆலயத்தில் அளிக்கப்படுகின்ற பானகத்தைக் குடம் குடமாக வாங்கி ஒரு சங்கின் மூலமாக ஸ்ரீநரசிம்மப் பெருமாளுடைய திருவாயில் ஊற்றுவார்கள். எந்தப் பாத்திரத்திலிருந்து பானகத்தை ஊற்றுகின்றோமோ அதில் பாதியளவு மட்டுமே நரசிம்மர் ஏற்பார். மீதிப் பாதியானது பிரசாதமாக அளித்தவருக்கே வந்துவிடும். பாத்திரம் சிறிதோ, பெரிதோ எப்படியிருந்தாலும் அதில் பாதியைத்தான் சங்கின் மூலம் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் திருவாயில் ஊற்ற முடியும். இன்றைக்கும் கலியுகத்தில் விஜயவாடாவில் ஸ்ரீபானக நரசிம்மர் ஆலயத்தில் நடக்கும் அற்புதமான இறைலீலையாகும் இது!

சிறிய திருவடி அனுமார்
உறையும் சோளிங்கர்

இறை ஆயுதங்கள் நன்மைக்கே!
ஆயுதங்கள் என்றாலே கலியுகத்தில் பகைவர்களை அழிப்பதற்கே எனும் எண்ணத்தில் தான் பலரும் அர்த்தம் கொள்கின்றனர். மனிதன் வைத்துள்ள ஆயுதமானது, அவனுடைய சுயநலத்திற்கும், பிற நாடுகளைக் கைக்கொள்ளவும், பிறரை வதைத்துப் பொருளை அபகரிக்கவுமே பயன்படுகிறது! ஒரு அரிவாள் இருக்கிறது என்றால் அதனைச் சமையலுக்குத் தேங்காய் உடைப்பதற்கோ, காய்ந்த மரங்களை வெட்டி விறகு எரிப்பதற்கோ நன்முறையில் சமுதாயப் பணிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். கெடுதலுக்கும் அது பயன்படலாம். எனவே எந்த ஒரு பொருளுமே நல்வகையிலோ அல்லது தீய வழியிலோ பயன்படுத்தக் காரணம், அந்தந்த மனிதனின் பகுத்தறிவுச் செயற்பாடாகும். மனிதன் தன் துயரங்களைக் களைந்து கொள்வதற்காக ஆலயங்களும், புண்ணிய நதி தீர்த்த நீராடல்களும், கிரிவல முறைகளும், வழிபாடுகளும், இறைத் துதிகளும் இருக்கின்ற போது, அவன் தன் பகுத்தறிவை முறையாகப் பயன்படுத்தாவிடில், அவன் அறிவானது முறையற்ற காமம், பகைமை குரோதத்தில் தானே செயல்படும். சித்தர்களின் ஞான, பத்ரகிரந்தங்களில் தான் இறைவனின் ஆயுதங்கள் எவ்வகையில் மனித சமுதாய்த்தில் நிறைந்திருக்கின்ற தீய சக்திகளையும், தீய வினைகளையும் அளிப்பதற்குப் பயன்படுகின்றன என்பதை நன்கு உணர்த்துகின்றன..

ஆபத்தை நீக்கும் ஆஞ்சநேயர்
சங்கு, சக்கரம் தாங்கிய ஆஞ்சநேயப் பெருமானை (திண்டிவனம்) புதன்கிழமை, சனிக் கிழமைகளில் பெருமாளுக்குரித்தான புதன், சனி ஹோரை நேரங்களில் புளியோதரை தானம் செய்து அடிப்பிரதட்சிணம் செய்து வழிபட்டு வந்திட, தீ விபத்து, கார், ரயில், ஆகாய விமான விபத்துகள், தற்கொலை போன்ற அகால மரணங்களால் இறந்தவரின் ஆவிகள் நன்னிலை அடையும்.. மேலும் விபத்துக்களால் பாதிக்கப்பட்டு இருப்போரும் மனத்திண்மையும் வாழ்வில் நல்லிறை ஆக்கமும் பெறுவர். கெட்ட ஆவிகளாக அலைவோருக்கு இறைவனின் சங்கு சக்ர ஆயுதங்களிலிருந்து எழுகின்ற ஜோதிக் கதிர்களே அந்த ஆவிகளிடம் நிறைந்திருக்கும் தோஷங்களையும், தீவினைச் சக்திகளையும் பஸ்மமாக்கி அந்த ஆவிகளுக்கு நற்கதி அளிக்கின்றன. இது மட்டுமின்றி மக்களின் மனதில் புகுகின்ற முறையற்ற காம எண்ணங்களையும், மது, போதை, சூதாட்டம், திருடு போன்ற தீயசக்திகளையும் அழிப்பதற்குச் சங்கு சக்கரம் தாங்கிய இறை மூர்த்தி தரிசனம் பெரிதும் உதவுகின்றது. வெறும் இறை ஆயுதமாக எதைக் கருதுகின்றோமோ, அந்த பாசாங்குசம், சங்கு, சக்கரம், வாள் போன்ற தெய்வீக ஆயுதங்களினின்று எழுகின்ற அஸ்திர சஸ்த்ர ஒளிக் கிரணங்களே மனிதனின் உடலிலும், உள்ளத்திலும் புகுந்து அங்குள்ள தீவினைப் படிமானங்களை அழித்து, நல்ல இறைவளத் திசுக்களை உருவாக்குகின்றன. மைக்ராஸ் கோப்பில் மனிதனின் திசுக்களை நீங்கள் உற்று நோக்கினால், அவை இறைவனின் சங்கு, சக்ர மற்றும் பலவிதமான ஆயுதங்களின் வடிவமைப்பாக இருப்பதை நீங்கள் காணலாம்.. இது உங்களுக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கும்... ஏனெனில் இறைவன் நம் உடலில் குடி கொண்டுள்ளான் என்பதை உணர்ச்சிப் பூர்வமாகப் புலப்படுவது இத்தகைய மெய்ஞான இறை லீலைகள்தாம்.

ஸ்ரீசங்கு சக்கரம் தாங்கிய
ஆஞ்சநேயர் திண்டிவனம்

சங்கு, சக்கர வடிவில் உள்ள மனிதத் திசுக்களில் நிறைந்துள்ள தீய குணங்களை பஸ்மமாக்குவதே சங்கு சக்கர ஆயுதங்களிலிருந்து எழுகின்ற ஜோதிக் கிரணங்கள் ஆகும். இதனை திசுச் சிதைச் சுதை மாற்றம் (Divine tissues transformation /transplantation) என்று சித்புருஷர்கள் பரிபாஷையில் வர்ணிக்கின்றார்கள் ! இதை அடிப்படையாகக் கொண்டுதான் பிரம்மாஸ்திரம், வஜ்ராயுதம், தனுசு போன்ற பல அற்புத தெய்வீக ஆயுதங்கள் தோன்றின... ஒரு பிரம்மாஸ்திரம் எய்தினால், கோடானு கோடி அசுரர்கள் மாய்ந்தனர் எனில், தீய சக்திகளை அழிக்கக் கூடிய எத்தகைய அபூர்வமான, அற்புதமான இறை சக்தியை பிரம்மாஸ்திரம் போன்ற அஸ்திரங்கள் தன்னுள் அடக்கியுள்ளன என்பதை அறிவீர்களாக! ஆனால் தற்காலத்தில் வானில், அணு ஆயுத, வெடிகுண்டுகள் என உயிர்களைக் கொல்லும் வதைபாடுகள் தான் மிகுந்துள்ளன என்பது மிகவும் வேதனைக்குரியதாகும்.. இறைவன் அளித்த உயிரை எவ்வகையிலும் கருச்சிதைவாகவோ, கொலையாகவோ, போர் முறையிலோ, அணுகுண்டு போன்ற வெடி முறைகளிலோ, euthanasia என்றவாறோ அழிப்பதற்கு எவருக்கும் உரிமை கிடையாது. இத்தகைய கொடுஞ்செயல்களில் ஈடுபடுவோரின் சந்ததிகள் பல கோடி ஆண்டுகளுக்குத் துன்பங்களை அனுபவித்தே தீர வேண்டும்.

இறைவன் ஏன் ஆயுதங்களை ஏந்தி இருக்கிறான்? ஆயுதங்கள் என்றால் பகைவர்களை அழிப்பது எனும் அர்த்தத்தையே மனித சமுதாயம் கொண்டிருப்பதால்தான், இறைவனின் இத்தெய்வீக ஆயுதமும் அவ்வகைப்பட்டது என்று எண்ணத் தோன்றுகிறது. இக்கலியுகத்திலும், ராட்சசர்களும், அரக்கர்களும் இல்லையா என்ன? நிச்சயமாக இருக்கின்றார்கள் எப்படி?

காம, குரோதர்களாகவும், திருடனாகவும், கொள்ளை, கொலைகாரனாகவும், பிக்பாக்கெட் அடிப்பவனாகவும், பொய் சொல்லி பிறரை ஏமாற்றுபவனாகவும், லஞ்ச லாவண்யங்களில் ஈடுபடுபவனாகவும், பிறர் சொத்தை அபகரிப்பவனாகவும் மனித உடலில் எத்தகைய தீய அரக்க சக்திகள் குடியிருக்கின்றன என யோசித்துப் பாருங்கள். எனவே கலியுகத்திலும் ராட்சசர்களும், அரக்க, அசுர குணங்களும் இல்லாமல் இல்லை, வெளிப்படையாகத் தோன்றவில்லை அவ்வளவே! எனவேதான் எந்தப் புராணங்களிலே இறைவனே ஆயுதம் தரித்து அரக்க குணங்களை வென்றான் என்று காண்கின்றோமோ, அந்த இறைவனே அதே ஆயுதங்களைக் கலியுகத்திலும் ஏந்தி, மனிதனின் உள்ளத்தில் ஊடுருவியிருக்கும் முறையற்ற காமம், பித்தலாட்டம், பொய்மை, குரோதம், பகைமை, பொறாமை மதுப்பழக்கம் போன்ற தீய அசுர குணங்களை அழிப்பதற்காக சங்கு, சக்கரதாரியாக, வில்லேந்திய வீரப் பெருமாளாக, வீர ஆஞ்சநேயராக வீற்றிருந்து நமக்கு அருள்பாலிக்கின்றார். மாடன், அய்யனார், கருப்பண்ண சுவாமி என்றவாறாக எத்துணையோ, இறை மூர்த்திகள், காவல் தெய்வங்களாகவும் பரம்பொருள் உருவங்களாகவும் தோன்றி மனிதனின் தீய எண்ணங்களை அழிக்கத் துணை புரிகின்றனர். இறைவனின் எத்தகைய ஆயுதத்தால் எவ்வித ராட்சஸ, அரக்க குணங்களை அழிக்க முடியும் என்ற சித்த விளக்கங்களும் உண்டு. எத்திசையில், எந்நாளில், எவ்வகை ஆயுதம்தனை இறைவன் தரிக்கின்றாரோ அதை பொறுத்துப் பலா பலன்களும் அமையும்.. திந்திரிணீஸ்வரம் என்று அழைக்கப்படுகின்ற திண்டிவனத்தில் ஸ்ரீமந்நாராயண மூர்த்தியிடமிருந்து ஸ்ரீஆஞ்சநேயர் ஏதோ ஒரு யுகத்தில் பெற்ற ஆயுதங்கள் தானே, அவை எவ்வாறு கலியுகத்தில் பயனுறும் என்று எண்ணாதீர்கள்.. எந்த ராட்சசர்களையும், அரக்கர்களையும் அழிப்பதற்காக சங்கு சக்கர ஆயுதங்கள் பயன்பட்டனவோ அவைதாம் இன்று கலியுக மனித சமுதாயத்தில் விஷக் கிருமி போல் பரவி வருகின்ற மதுப்பழக்கம், பொறாமை, குரோதம், பகைமை போன்ற தீய சக்திகளையும் அரக்கக் குணங்களையும் அழிப்பதற்குப் பயன்படுகின்றன என்று உணர்ந்திடுக!

சஞ்சீவிராய தீர்த்தம்
திண்டிவனம்

கோர்ட்டு வழக்குகள் தீர்ந்திட....
ஒரே தெய்வமூர்த்தி அந்தந்த யுக நியதிக்கேற்ப தம்முடைய ஆயுதங்களின் தன்மையை மாற்றிக் கொண்டு அந்தந்த யுக கிரக சஞ்சார நிலைகளுக்கு ஏற்பத் தீயசக்திகளை மாய்ப்பதற்குத் தம் ஆயுத குணப்பாடுகளை ஆக்கிக் கொள்கின்றார் என்பதே நாம் அறிய வேண்டிய பாடமாகும். இவ்வாறு திண்டிவனத்தில் பிறிதொரு யுகத்தில் விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் பெருமாளிடமிருந்து சங்கு, சக்கர ஆயுதங்களைப் பெற்ற ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே இன்று, உற்சவ மூர்த்தியாக, திண்டிவனத்தில் ஸ்ரீலக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயத்தில் தீய பழக்கவழக்கங்களை, தீய சக்திகளை மாய்த்திட கலியுகத்தின் கண்கண்ட மூர்த்தியாய் அருள்பாலிக்கின்றார்.. இங்கு சனிக்கிழமை தோறும், பெருமாளுக்குரித்தான புதன் மற்றும் சனி ஹோரை நேரங்களிலும், திருவோண நட்சத்திர நாளிலும், உற்சவ ஆஞ்சநேய விக்ரஹத்திற்கு அரைத்த சந்தனக் காப்பிட்டு வடை மாலை சாற்றிட மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர்கள், சிறிது சிறிதாக மதுப் பழக்கத்தினின்று விடுபட்டு நல்வழிபெறுவர்.. ஏனெனில் பிரம்ம வேள்வியின் போது மது அரக்கர்கள், மது வகைகளைக் கொட்டி வேள்வியின் புனிதத் தன்மையை அழிக்க முறப்பட்ட போது ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி சங்கு சக்கரங்களால் அவர்களின் தீய செயல்களைத் தடுத்து வெற்றி கொண்டார். எனவே இங்கு விஷ்ணுபதி நாளிலும் சங்கு சக்கரதாரியாக அபூர்வமாகக் காட்சிதரும் ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு 108 வடைமாலை சாற்றிப் படைத்து ஏழைகளுக்குத் தானம் அளித்து, மிருகசீரிஷம், புனர்பூசம், அனுஷம், உத்திராடம் நாட்களில் விளக்கேற்றி அடிப்பிரதட்சிணம் செய்து ஏழைகட்கு நீலநிற ஆடைகளை தானம் அளித்தலால் பாதியில் நிற்கும் / கோர்ட் வழக்குகளால் பாதிக்கப்பட்டிருக்கும் கட்டிடங்கள், வீடுகள் இறையருளால் சுமுகமாகத் தீர்ந்து நன்முறையில் நிறைவு பெறும். ஏனெனில் பிரம்ம யாகத்தின் போது, எட்டாவது வாயிலாக விளங்கிய ரஜத வாசலை அரக்கர்கள் அழிக்க முற்பட்ட போது, சங்கு சக்கரதாரியான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தியே அவ்வாயிலைக் காப்பாற்றி பிரம்ம யாக விருத்திக்கு நல்வழி ஏற்படுத்தினர்.

பிரிந்த தம்பதியர் சேர்ந்திட....
கோபித்துக் கொண்டு சென்ற மனைவி இல்லம் திரும்பி சுமுகமான முறையில் இல்லற வாழ்வு நடைபெற சங்கு சக்கர ஆஞ்சநேயப் பெருமானுக்கு பச்சை நிற வஸ்திரம் சாற்றி, இருபாகங்கள் கூடிய உணவுப் பண்டங்களை (முந்திரி, துவரம் பருப்பு, நிலக்கடலை, டபுள் பீன்ஸ், அவரை, மொச்சை) படைத்துத் தானம் அளித்தலால் இல்லறத்தில் சுமுகமும், சாந்தமும் நிலவும். பிரம்ம வேள்வியின் போது சரஸ்வதி தேவி கோபித்துச் சென்றதால் எவ்வித யாகமும் செய்ய இயலாது, பிரம்ம மூர்த்தி தவித்த போது, ஆஞ்சநேயமூர்த்தியே அவருக்கு துவித சோபித (மேற்குறித்த இருபாக உணவு) அன்னதான மஹிமையை எடுத்துரைத்தார். பூலோகத்தில் இறைவன் எங்கெல்லாம் இரு தேவியருடன் கூடிய மூர்த்தியாக ஆராதிக்கின்றோமோ (திருச்சி திருப்பைஞ்சீலி, உய்யக் கொண்டான் மலை), அங்கெல்லாம் பிரம்ம மூர்த்தியானவர் இவ்வித அன்னதானத்தைக் கடைபிடித்து வேகவதி ஆற்றில் நீராடி வழிபட்டு சரஸ்வதியுடன் இணைந்து தம் இறை வேள்வியை துவங்கினார். எனவே சங்கு சக்கரதாரியான ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திக்கு, இல்லறத்தில் சாந்தத்தைப் பொழியக் கூடிய அனுக்கிர சக்தி நிறைய உண்டு. இவ்வாறாக விஷ்ணுபதி புண்யகாலத்தில் சங்கு சக்கர ஆயுதங்களை ஸ்ரீவிஷ்ணுவிடமிருந்து ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி பெற்று திண்டிவனத்தில் நமக்காக கலியுக அருட்பிரசாதியாக அருள்பாலிக்கின்றார்.

பெருமாள் ஆலயம்
திண்டிவனம்

அஞ்சனை மைந்தன் அஞ்சாத அக்னி!
ஸ்ரீஆஞ்சநேயரின் அன்னையாம் அஞ்சனா தேவி திருஅண்ணாமலையில் சீரிய சிலம்பாக்னி சித்தரைத் தரிசித்து அவருடைய நல்லாசியுடன் பல மலை தரிசனங்களைப் பெற்றமையால்தான் ஸ்ரீஆஞ்சநேயருக்குக் கருவிலிருந்தே பல அக்னி யோக சக்திகள் கூடின. குழந்தைப் பருவத்திலேயே கதிரவனைக் கனியென எண்ணி சூரியனின் அருகிற் சென்றவர்! இலங்கையில் இராவணன் அவருடைய வாலுக்குத் தீயிட்ட போது அஞ்சனை பெற்ற கருவிலே திருவுடையானின் சிலம்பாக்னி மலை தரிசனப் பலன்கள் தாம் ஸ்ரீராமநாம ஜோதியாக அவருக்கு எவ்வித அக்னியையும் தாங்கக் கூடிய சக்தியைத் தந்தது. மேலும் ஆஞ்சநேயர் தாங்கியிருந்த சஞ்சீவி மலையில் அக்னி சக்திகள் மிகுந்த மூலிகைகள் பல உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த அக்னிப் பிரகாசத்தைக் கொண்ட பிரம்மாஸ்திரத்தின் தன்மையைத் தணிக்கக் கூடிய சக்தியை சஞ்சீவி மலை மூலிகைகள் பெற்றிருந்தன என்றால் அதைத் தாங்கி வருபவர் எத்தகைய மகத்தான அக்னி சக்தியையும் தாங்கக் கூடிய தேவ சக்தியைப் பெற்றிருக்க வேண்டும்? இதனை ஸ்ரீஆஞ்சநேயர் பெறுவதற்குக் காரணமே அஞ்சனா தேவியானவள் சீரியா சிலம்பாக்னி சித்தருடைய அருள்வழி முறையில் பல அக்னித் தரிசனங்களைத் திருஅண்ணாமலையில் பெற்றதே ஆகும். இவ்வாறாக, ஆஞ்சநேயரின் தோற்றத்திற்கும் முற்பட்டவர் என்றால் சீரியா சிலம்பாக்னி சித்தருடைய மிகைமையை என்னென்று சொல்வது? காலத்தின் வகைப்படாத என்றும் வாழும் ஏகாந்த ஜோதி இவர்!

ஸ்ரீசீரிய சிலம்பாக்னி சித்தர்

சாயா தேவியின் துயர் தீர்த்த அற்புத அருணைச் சிலம்பாக்னி மலை தரிசனங்கள்!

சூரியனின் பத்தினியான சாயாதேவி சூரிய மண்டலத்தின் அக்னி கோளச் சக்தியைத் தாங்க இயலாது சூரிய பகவானை விட்டுப் பிரிந்து பாஸ்கர மண்டலத்தின் வெப்பத்தைத் தாங்கவல்ல சக்தியைப் பெறுவதற்காகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தபோது சீரியா சிலம்பாக்னி சித்தரைத் தரிசனம் செய்து அவர் அளித்த அக்னி பூஜைகளைக் கடைபிடித்துப் பெற்தற்கரிய அருணாசலத்தின் பல அக்னி யோக மலை தரிசனங்களைப் பெற்றமையால்தான் சூரிய மண்டலத்தின் அக்னியைத் தாங்குகின்ற விசேஷமான சக்தியைச் சாயா தேவி பெற்று மீண்டும் சூர்ய லோகம் சென்று ஆதித்ய பகவானுடன் இணைந்தனள்! மேலும் உலக ஜீவன்களுடைய நல்லது கெட்டது என அனைத்து விதமான செயல்களுக்கும் சூரியனும் சந்திரனுமே நித்திய சாட்சியாக இருப்பதால் இவ்விரு கிரஹங்களுக்கும் சில சூன்ய களங்கங்கள் ஏற்பட்டுப் பாஸ்கரச் சந்திர சக்தியும் குறையலாயிற்று. அப்போது சூரிய பகவானே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சீரியா சிலம்பாக்னி சித்தர் காட்டிய நல்வழியின்படி அசூன்ய சயன விரதத்தை மேற்கொண்டு விரத முடிவில் இறைவனுடைய ருத்ர தாண்டவ தரிசனத்தைப் பெற்ற இடத்தில் தான் சூர்யலிங்கத் திருச்சன்னதி இன்றைக்கும் திருஅண்ணாமலையில் அமைந்துள்ளது.. இவ்விடத்திலிருந்துதான் திருஅண்ணாமலையின் பல அற்புதமான அக்னியோக மலைத் தரிசனங்கள் கிட்டத் தொடங்குகின்றன.. இவ்வாறாகப் பல கோடி யோக நிலை தரிசனங்களைக் கொண்டதே திருஅண்ணாமலையாகும்.

சிலம்பாக்னி தரிசன பலன்கள்!
இவ்வாறாகத் திருஅண்ணாமலை கிரிவலத்தில் சீரியா சிலம்பாக்னி சித்தர் ருத்ராக்னி யோகம் புரிந்த பகுதியிலிருந்து திருஅண்ணாமலையை தரிசிப்பது பெரும் பாக்கியமாகும். சிலம்பாக்னி தரிசனப் பலன்கள் கலியுக மக்களுடைய பலவிதமான துன்பங்களுக்குத் தக்க நிவாரணத்தைத் தருகின்றன.. குறிப்பாக குடல் அழற்சி, குடல் ரணம் (ulcer),  தொண்டைப் புற்று நோய், மூலம் போன்ற உஷ்ண சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவாரணத்தைத் தருவதாக சிலம்பாக்னி மலை தரிசனம் விளங்குகிறது.

இன்றைக்கும் அடிஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் அரிக்கேன் விளக்கு சித்தர், அங்கப் பிரதட்சிணம் அண்ணாமலை சுவாமிகள், சிலம்பாக்னி சித்தர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், அருணகிரி சித்தர், குகை நமச்சிவாயர், குரு நமச்சிவாயர், உத்தர கண்ட சித்தர் போன்ற மகான்களும், யோகிகளும், சித்தர்களும் அமர்ந்த பாலமேடை ஒன்று உண்டு. இங்கிருந்து பெறுகின்ற மலை தரிசனமே சிலம்பாக்னி மலை தரிசனம்... இங்கு அமர்ந்து சற்று நேரம் தியானித்து
ஓம் லாலீலாய வித்மஹே ருத்ராக்னி தேவாய தீமஹி
தந்நோ அக்னி ப்ரசோதயாத் என்ற ஸ்ரீஅக்னி காயத்ரீ மந்திரத்தையும்

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனதென்றவரரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே!

என்ற இறைத் துதிகளோடு நீங்கள் அறிந்த அக்னி பகவானுக்குரித்தான மந்திரங்களையும் ஓதிக் கற்பூர தீபம் அல்லது பசுநெய்  தீபத்தை மலையை நோக்கிக் காட்டித் திருஅண்ணாமலையை வணங்க வேண்டும்..

அட்டாலும் பால் சுவை குன்றாது
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்

என்பது போல அக்னிக்கு மிகவும் ப்ரீதியுடைய பசும்பால் மற்றும் பழங்களையும் பூஜைகளுக்கான சங்குகளை கோயில்களுக்கும், ஏழைகளுக்கும், நன்முறையில் பூஜை செய்பவர்களுக்கும் தானம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். மேலும் சிறு குழந்தைகளுக்குக் குறிப்பாகக் கன்னிப்பெண்களுக்கு கொலுசு, சிலம்பு, தண்டை போன்றவற்றையும் தானமாக அளித்து வருதலால் உஷ்ண சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். திருஅண்ணாமலையில் தான தர்மப் பொருட்களை வழங்கும்போது பொறுமையைக் கடைபிடியுங்கள். எவரும் வரவில்லையே என்று எண்ணி ஓடி அவசரம் அவசரமாகக் கிரிவலத்தை முடித்து விடாதீர்கள். ஏனென்றால் எவருக்கு தான தர்மப் பொருட்கள் அளிக்கப்பட வேண்டும் என்று பிரம்ம நியதியாகத் தலையில் எழுதப்பட்டுள்ளதோ அவருக்குத்தான் தான தர்மப் பொருட்கள் சென்றடையும். மேலும் தான தர்மங்களை அந்தந்த தரிசனப் பகுதிகளில் தானமாக அளிப்பதுதான் மிகவும் விசேஷமானதாகும். அந்தந்த தரிசனத்திற்கான தான தர்மப் பலன்களோ எவ்வளவோ உள்ளன! இதைப் பற்றிய விளக்கங்களைத் தக்க குருவிடம் பெறுதல்தான் சிறப்பானது!

மனிதன் இழைக்கின்ற அக்னிக் குற்றங்கள்!

பீடி, சிகரெட் பிடித்தலால் ஒருவன் அக்னியுயையும் பரவெளியையும் மாசுபடுத்துகின்றான். இதன் மூலம் காற்றில் பரவுகின்ற நஞ்சானது லட்சக்கணக்கான ஜீவன்களுக்குத் தீமை பயப்பதால் ஒருமுறை சிகரெட் பிடிக்கும்போதே உடனடியாக அவனுக்குச் சேர்கின்ற கர்ம வினைகள் ஏராளம் ஏராளம்! இதற்குத் தண்டனையாக தீ விபத்தில் சிக்கித் துன்புறுகின்ற அல்லது சொத்துக்கள் தீயில் நஷ்டமாகின்ற, தீ விபத்துகளில் உடல் ஊனமாகும்படியான பிறவிகள் வந்திடலாம்! பிறருடைய இருதயத்தையும் மாசுபடுத்துவதால் பீடி, சிகரெட், பிடிப்பவருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் நெஞ்சைச் சுடும் வாதனைகள்தான் பெருகும். இதிலுள்ள விஷத்தால் காற்று மண்டலத்திலுள்ள கோடிக்கணக்கான சூட்சும உயிரினங்கள் அழிவதால் இது கொடும் பாதகச் செயலாக விளங்குகின்றது என்பதைப் பலரும் உணர்ந்தாரில்லை. என்னே கலியுகக் கொடுமையிது! தன்னுடைய குழந்தைகளுக்கு முன்னாலேயே புகைபிடித்து அவர்களுடைய சுவாசக் குழல்களிலும் இருதயத்திலும் நஞ்சைப் புகுத்துவதென்றால்... இதைவிடக் கலியுகக் கொடுமை வேறு என்ன இருக்க முடியும்?

புகை பிடித்ததற்கு ஓரளவு பிரயச்சித்தம் எதுவோ?

 எனவே புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளானவர்கள் திருஅண்ணாமலையை செவ்வாய்க் கிழமை, அஸ்வினி, கிருத்திகை, உத்திரம் போன்ற அக்னி சக்தி நிறைந்த நாட்களில் கிரிவலம் வந்து அக்னி சக்தி நிறைந்த நாட்களில் கிரிவலம் வந்து சீரியா சிலம்பாக்னி மலை தரிசனம் பெற்று இங்கு நிறைய சாம்பிராணி தூபம் இடுவதுடன் தங்கள் ஊரில் உள்ள ஆலயங்களிலும் தினமும் சாம்பிராணி தூபமிடும் கட்டளை ஏற்று (தாமும் உடனிருந்து) நடத்தி வந்தால்தான் பரவெளியில் சாம்பிராணி தூப நறுமணம் நன்கு பரவி பரவெளியைத் தூய்மையாக்கித் தாம் செய்த பாவத்திற்கு ஓரளவேனும் பிராயசித்தத்தையும் பெற்றுத் தரும்! ஆனால் மீண்டும் புகை பிடிக்கக் கூடாது! பிராயச்சித்தம் என்பது வாழ்வில் ஒரு முறையே!

அடுப்பு பூஜையும் அக்னி வழிபாடே! எந்த உணவானது நமக்கு ஜீவித சக்தியையும், ஆரோக்கியத்தையும், தீர்க ஆயுளையும் தருகின்றதோ அவ்வுணவை நமக்கு ஆக்கித் தருகின்ற அடுப்பினை நாம் முறையாக வழிபடுவது கிடையாது. தினந்தோறும் சமையல் முடிந்தவுடன் அடுப்பினைக் கழுவிச் சுத்தம் செய்து மறுநாள் காலையில் மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு வழிபட்ட பின்னர் தான் அடுப்பைப் பயன்படுத்த வேண்டும். சமைக்கும் போது அக்னி பகவானுக்கு உரித்தான மந்திரங்களை ஓதியும், இறைத் துதிகளை, இறை நாமாக்களைத் துதித்தும் வந்தால்தான் உணவில் தெய்வீக சக்தி கூடும்.!

மின் விளக்குகளும் கூட அக்னியின் ஒரு வகையே ஆகும். எனவே மின் விளக்குகளையும், மூடிகளையும் நன்றாகச் சுத்தம் செய்து அதில் அக்னியாகிய வெளிச்சம் நன்றாக வந்து சேரும் வண்ணம் அதனைப் புனிதப்படுத்த வேண்டும். மின் விளக்குகள் அழுக்கடைந்து இருத்தல் கூடாது. காலையிலும் மாலையிலும் ஐந்து நிமிடங்கள் மட்டும் பூஜை அறையில் விளக்கை ஏற்றி வைப்பது போதாது. ஏனென்றால் எண்ணெய் தீப ஜோதியால்தான் வீட்டில் பரவியுள்ள பலவிதமான துர்சக்திகளையும் தீய சக்திகளையும் பஸ்மமாகி இல்லமும் புனிதமாகின்றது. எனவே ஏதோ கடனே என்று 5, 10 நிமிடங்களுக்கு மட்டும் பூஜை விளக்கை ஏற்றாது நம் இல்லத்தைத் தெய்வீகமாகத் தூய்மை செய்கின்ற அருள் ஜோதியாக பித்ருக்கள் ஜோதி வடிவில் வந்து அமர்ந்து ஆசியளிக்கின்ற தீபம் என்று உணர்ந்து வீட்டில் விளக்கை ஏற்றிடுக!

அறிவீர் நாம் செய்யும் சில அக்னிக் குற்றங்களை! அக்னி என்பது நற்காரிய சித்திக்காகத்தான் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர மது வகைகளைக் காய்ச்சுதல், வன்முறைக்கான ஆயுதங்களைச் செய்தல், புகை பிடித்தல் போன்ற தீயவற்றிற்காக அக்னியைத் தவறாகப் பயன்படுத்துதல் கூடாது. இதனால் பெருத்த சாபங்கள் ஏற்பட்டுக் குடும்பத்தையே நாசம் செய்து விடும்.. திருஷ்டிக் கழிப்பு என்ற வகையில் ரப்பர் டயரைக் கொள்ளுத்துதலானது காற்று மண்டலத்தில் நச்சுப் புகையைச் சேர்த்து மாசுபடுத்துவது கனத்த அக்னிக் குற்றமாக இருப்பதால் இதைச் செய்தவர்களின் குடும்பத்தில் இவையே எதிர்வினையாக மாறிப் பல கொடிய தீ விபத்துகளையும், பிரிவினைகளையும், திடீர் மரணங்களையும் உண்டாக்கும். குப்பைகளைக் கொளுத்துவது தீவினைக் கழிப்பின்பால் அமைகின்றது என்பது உண்மையே! ஆனால் குப்பையோடு ரசாயன விஷங்கள் நிறைந்த ரப்பர் போன்ற பொருட்களை எரித்தல் தகாது.. அநாவசியமாக gas அடுப்பை எரித்து அக்னி சக்தியை வீணாக்குதல், அளவுக்கு மீறி உணவைக் கொதிக்க/வேக வைத்தலும் அக்னிக் குற்றமே ஆகும்.. மயான தகனக் கிரியையில் பிரேதத்தின் மேல் விறகு/கரி அக்னிதான் ஏற்றப்பட வேண்டுமே தவிர பெட்ரோல், டயர், குப்பைகளை வைத்து ஒரு போதும் அக்னியை ஏற்றிப் பிரேதத்தை எரிக்கக் கூடாது.. பெறுதற்கரிய மானிடப் பிறவியைப் பெற்று உயிர் தங்கிய உத்தம உடலை நன்முறையில்தான் அக்னிக்கு இரையாக்க வேண்டும்.. இல்லாவிடில் இதுவும் பெருத்த அக்னிக் குற்றமாகும்.

ஹோம குண்டத்தில் குறிப்பிட்ட சில சமித்துக் குச்சிகளையே ஆஹூதியாக இட வேண்டும்.. ஆனால் தற்காலத்தில் ஆகம முறைப்படி கண்டிப்புடன் பூஜை செய்ய வேண்டிய ஆலயங்களில் கூட புளிய, விறகு, சவுக்கு போன்ற தகாத பொருட்களையெல்லாம் ஆஹூதியாக இட்டு அக்னியின் சாபத்தைத் தேடிக்கொள்கின்ற அவல நிலையைக் காண்கின்றோம். இவ்வாறு செய்வது அக்னிக்குச் செய்கின்ற அநீதியாதலால் இது பெரும் பாவத்தையே கூட்டித் தரும்... இதற்கெல்லாம் பரிகாரமே கிடையாது.. ஆமாம் ஒரேயடியாகத் தீவினைகளையே சுட்டிக் காட்டுகின்றீர்களே இவற்றிற்கு எல்லாம் பரிகாரமே கிடையாதா என்று நீங்கள் கேட்பது காதில் விழுகின்றதே!

கலியுகத்தில் மனிதன் செய்கின்ற பெருந்தவறுகளை, ஏன் சிறு பிழையைச் சுட்டிக் காட்டினால் கூட கோபம் வரும் என்பது தெரிந்த விஷயம்தானே! பெருத்த சாபம் என்றால் பரிகாரத்திற்கு மகரிஷிகளையும் சித்தர்களையும் தானே நாட வேண்டும் என்பதையாவது தெரிந்து கொள்க!

அக்னிக் குற்றங்களைக் களைய நல்வழி காட்டும் அற்புத சீரியா சிலம்பாக்னி சித்தர்!

நம் வாழ்க்கையில் எத்தகைய அக்னிக் குற்றங்களை நாம் செய்து வருகின்றோம் என்பதை ஓரளவேனும் அறிந்து கொண்டீர்களா? இன்னமும் எத்தனையோ வெளியில் சொல்ல முடியாதவாறாகப் புனித அக்னியை நாம் துஷ்பிரயோகம் செய்கின்றோம்.. லட்சக்கணக்கான ரூபாயைச் செலவழித்துத் திரைப்படம் எடுப்போர் அநாவசியமாக நிறையப் பெட்ரோலை ஊற்றி வீண் செய்து கார், வீடு, குடிசை எரிவது போலப் படத்தில் காட்டுகின்றார்கள்.. பணத்தை எப்படியேனும் சம்பாதிப்பதற்காகவா இவ்வாறு அக்னி சக்தியை துர்வினைகளுக்குப் பயன்படுத்துவது? இந்த அக்னிக் குற்றங்களுக்காக இதில் சம்பந்தப்பட்டோரெல்லாம் பல தீவினைக் கர்மங்களுக்கு உள்ளாகின்றனர்... இதுவே எதிர்வினைத் துன்பங்களாக மாறி அவர்களையும், அவர்களுடைய சந்ததிகளையும் வாட்டிவதைக்கும்... எனவே காரண காரியமின்றி தொட்டதெற்கெல்லாம் அக்னியை வைத்துக் கொளுத்தி விடாதீர்கள்..

அக்னி பகவானும் நாம் தினந்தோறும் வழிபட வேண்டிய மூர்த்தியே!

உணவில்லை என்றால் நாம் உயிர் வாழ முடியுமா? நமக்கு ஜீவித சக்தியைத் தருகின்ற உணவு வருவது அக்னி மூலமாகத்தானே! எவ்வாறு உணவை நாம் இறைவனுக்குப் படைக்கின்றோமோ அந்த உணவை நமக்குப் பெற்றுத் தந்த அக்னி மூர்த்திக்கும் அந்தப் படையல் உண்டுதானே! சூரிய, சந்திர மூர்த்திகள் நமக்கு அக்னி வகையைச் சார்ந்த ஒளியைத் தருவதால் தானே நமக்குப் பகல், இரவு வெளிச்சங்கள் உண்டாகின்றன சூரிய ஒளி இல்லாத பகல் நேரத்தை நம்மால் எண்ணிப் பார்க்க முடியுமா? ஆனால் அந்த சூரிய சந்திர மூர்த்திகளின் கண்ணெதிரேதானே பலரும் பல தீவினைகளையும் தீய காரியங்களையும் செய்து கொண்டிருக்கின்றார்கள்? இதுவும் நாம் அக்னிக்கு இழைக்கின்ற துன்பம்தானே!

இந்த பிரபஞ்சத்திற்கே அக்னித் தலமாக விளங்குகின்ற திருஅண்ணாமலையில்தான் அனைத்து விதமான அக்னிக் குற்றங்களுக்குமான நிவர்த்தியைப் பெற முடியும்.. ஆனால் ஒருமுறை கிரிவலம் வந்து விட்டு அனைத்து விதமான அக்னிக் குற்றங்களுக்குப் பிராயச்சித்தம் கிட்ட வேண்டும் என்று கேட்டால் நியாயமாகுமா? புனிதமான அக்னியை நம்முடைய மகரிஷிகளும், யோகிகளும் தெய்வமாய் போற்றி வணங்கி வந்தனர். அக்காலத்தில் குருகுல பர்ண சாலைகளில், குருகுலங்களில் எப்போதும் நிகழ்ந்து வந்த அக்னி ஹோம பூஜைகள் தாம் மக்களுடைய அக்னிக் குற்றங்களுக்குத் தக்க பிராயசித்தத்தைப் பெற்றுத் தந்தன.. ஆனால் கலியுகத்தில் ஹோம பூஜை என்பது மிகவும் அரிதாகி வருகின்றதே! எவ்விதக் கட்டணமும் பெறாது பக்தி சிரத்தையுடன் செய்வோர் ஒரு சிலரே! எளிமையாக இருப்பினும் உண்மையான பக்தியுடன் ஒரு சிறு ஹோமத்தை நிகழ்த்தினால் கூட அந்த ஹோமத்தின் தெய்வீகப் புகை பூண்டிருக்கும் அற்புத தேவ சக்தியால் ஆயிரக்கணக்கான மைல்களுக்கான விண்வெளிப் பரப்பினைப் பரிசுத்தமாக்கி விடுமே! ஹோமத்தில் மூலிகைப் பொருட்களும், தானியப் பொருட்களுமே அக்னியில் இடப்படுவதல் இந்தப் புகையானது உடலுக்கு ஆரோக்கியத்தையும் தந்து பரவெளியில் உள்ள தீவினைச் சக்திகளைக் களைந்து புனிதமாக்குகின்றது. எனவே ஒவ்வொரு இல்லத்திலும் மிக எளிமையான முறையிலாவது அவரவரே சிறுசிறு ஹோம பூஜைகளை அவ்வப்போது செய்து வந்தால்தான் சமுதாயம் சுபிட்சம் பெறும்.. இதனாலேயே அக்காலத்தில் பல பெரியோர்கள் மிகச் சிறந்த இறைப்பணியாக சாதி, மத, இன பேதமின்றி ஹோம வழிபாட்டின் பலன்கள் யாவருக்கும் சென்றடையும் வண்ணம் அக்னி ஹோத்ரம் எனப்படும் தினசரி அக்னி வழிபாட்டை மேற்கொண்டார்கள். இப்போது நீங்கள் கூட இதனை அரும்பெரும் சமுதாய இறைப்பணியாகக் கொண்டு மாதந்தோறும் சமுதாய ஹோம பூஜையையும் தினசரி அக்னி பூஜையையும் நிகழ்த்திடலாமே!

திருஅண்ணாமலையில் தம்முடைய அக்னி யோகத்தால் இன்றைக்கும் பூலோக ஜீவன்களுக்கு சூட்சுமமான அக்னி சக்திகளை அளிக்கின்ற சீரியா சிலம்பாக்னி சித்தர் தான் கலியுகத்தில் அக்னிக் குற்றங்கள் மிகுந்து விடும் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்து அதற்குரித்தான நிவாரண அறவழி முறைகளையும் தந்துள்ளார். இவற்றை முறையாகக் கடைபிடித்தால் எத்தகைய அக்னிக் குற்றங்களுக்கும் தக்க நிவாரணத்தைப் பெற்றிடலாம். ஆனால் செய்த தவறுகளையே மீண்டும் செய்தால் பூஜா பலன்களை இழப்பதுடன் குற்றங்களின் விளைவுகளும் அதிபயங்கரமாகப் பெருகி விடும்.. நெருப்பு சம்பந்தமான தொழிலில் இருப்போரும் (கருமான் பட்டறை, பாய்லர்கள், காஸ் கம்பெனி) அக்னிக் குற்றங்களைச் செய்தவர்களும் பௌர்ணமி தினங்கள், செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஹோரை நேரம், அக்னி நட்சத்திர நாட்கள், சூரியனுக்கு உரித்தான நட்சத்திரங்கள் ஆகிய நாட்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருதல் வேண்டும். அசூன்ய சயன விரதத்தையும் மேற்கொள்ள வேண்டும்..

ஜோதியுடன் கிரிவலம்!
அக்னி தாண்டவ கிரிவலம் என்ற முறையில் கையில் ஊதுபத்தி ஏந்தியோ சாம்பிராணி தூபம் இட்டவாறோ, இயன்றால் (காற்றைப் பொறுத்து) விளக்கை ஏற்றிக்கொண்டோ மிகுந்த கவனத்துடன் கிரிவலம் வந்திட வேண்டும்.. அதாவது சாம்பிராணி தூபம் போன்று கையில் ஏதேனும் ஒரு வகையிலேனும் அக்னியைத் தாங்கி மிகுந்த கவனத்துடன் மற்றவர்க்கு இடரின்றி கிரிவலம் வருதல் வேண்டும் ஏனென்றால் கிரிவலம் வருகின்ற போது பலவிதமான முறைகளில் கிரிவல தரிசனப் பலன்களை நாம் பெறுகின்றோம்.. அவற்றுள் ஒன்றுதான் ஜோதியைத் (ஊதுபத்தியாகவோ, சாம்பிராணி தூபமாகவோ, விளக்காகவோ) தாங்கிச் செல்லும் போது புனிதமான அண்ணாமலையின் தெய்வீகக் கிரணங்கள் அந்த ஜோதியில் பட்டு நம்மை அடைவதாகும். ஏனென்றால் அருணாசல மலைக் கிரணங்களுடைய தெய்வீக சக்தியை நேரடியாக நாம் பெறுவதற்கு நாமும் முழுமையான புனிதத்தைக் கொண்டிருக்க வேண்டும்.. .உள்ளக் கசப்புடன், மன அழுக்குடன் உழல்கின்ற மனிதர்களுக்கு ஜோதியின் மூலமாகத்தான் பலவிதமான அண்ணாமலை தரிசனப் பலன்களைப் பெற முடியும்.. எனவேதான் ஊதுபத்தியை ஏற்றியவாறு மலைவலம் செல்வது மிகவும் சிறப்புடையதாகும். சாம்பிராணி தூபம் இட்டுக் கிரிவலம் வருவதால் பன்மடங்கு பலன்களைப் பெறுவதோடு இதன் பலாபலன்கள் பல்லாயிரம் ஜீவன்களுக்கும் சென்றடையும்.

ஆக்கப்பூர்வத்திற்கே அக்னி அழிவிற்கல்ல! அக்னி சக்தி நிறைந்த உணவுப் பொருட்கள் (பப்பாளி, பைன் ஆப்பிள்) கோதுமையாலான உணவு, தக்காளி, அன்னம், வெண் பொங்கல் போன்றவற்றையும் கிழங்கு வகை உணவுகளையும் இக்கிரிவல நாட்களில் தானமளித்து வந்தால் அக்னி சம்பந்தப்பட்ட குற்றங்களுக்குத் தக்க பிராயச்சித்தம் கிட்டுவதோடு மேலும் பல உன்னதமான மலை தரிசனப் பலன்களையும் பெற்றிடலாம்.

குறிப்பாக ஹோட்டல் துறையில் இருப்பவர்களுக்கு சிலம்பாக்னி மலை தரிசனத்துடன் கூடிய அருணாசல கிரிவலம் சிறப்பான பலன்களைத் தரும். ஏனெனில் அளிக்கின்ற உணவு சுத்தமாக இல்லாவிடில் இத்துறையில் தீய கர்மவினைகள் மலைபோல் நாளுக்கு நாள் குவிந்து விடும். எரிபொருள், வெடிகுண்டு, துப்பாக்கி போன்ற தொழிலில்/வியாபாரத்தில். உள்ளோர் தீய செயல்களுக்கு அல்லாமல் கிணறு வெட்டுதல், விவசாய நிலப் பள்ளம் போன்ற ஆக்கப் பூர்வமான காரியங்களுக்காகவே வியாபாரம் செய்தல் வேண்டும் இல்லாவிடில் வேறு தொழிலுக்கு மாற்றிக் கொள்வது நல்லது... வன்முறை போன்ற தீவினைகளுக்காக இவற்றை விற்றால் பிரம்மஹத்தி தோஷத்திற்கு நிகரான தீர்க்க முடியாத பெரும் வினையுமாகி விடும்... தீயவை சேராத காரியங்களாகத்தான் நம் வாழ்க்கைச் செயல் எதுவுமே இருக்க வேண்டும்...

எக்ஸ்ரே, ரேடியம் போன்றவை மருத்துவத் துறையில் நோய் நீக்கும் வழிமுறைகளாக இருந்தாலும் இவையும் பரவெளியில் மனித குலத்தால் தாங்க முடியாத வெப்பக் கதிர்களைப் பாயச்சத்தான் செய்கின்றன.. இதற்கும் பரிகாரமாக எக்ஸ்ரே, ரேடியம் கருவிகள் உள்ள பகுதிகளில் அடிக்கடி சாம்பிராணி தூபம் இடுவதுடன் ஊதுபத்தியும் எப்போதும் பிரகாசித்து மணம் வீசிக் கொண்டிருக்க வேண்டும்

நமக்குப் பெரியோர்கள் தந்துள்ள புதன், சனிக்கிழமைகளில் எண்ணெய் நீராடல், துளசி, விபூதி பச்சிலை போன்ற மூலிகைகளாய் மென்னுதல், காலையில் இஞ்சி, மதியம் சுக்கு, இரவு கடுக்காய் போன்ற பல தினசரி நற்பழக்கங்களைக் கைக்கொண்டால்தான் உடலில் உஷ்ணம் சமநிலையில் இருக்கும்.. இவற்றை மனித சமுதாயம் மறந்து விட்டால்தான் உஷ்ண சம்பந்தமான நோய்கள் முளைக்கின்றன..

யோகாக்னியைப் பெறுவீரே! மேலும் பிராணாயாம யோக முறைகளையும் இளைஞர் சமுதாயத்திற்குப் பயிற்றுவிக்க வேண்டிய கல்வி முறையும் அமையாததால் கோடிக்கணக்கான இளைஞர்கள் அதி உஷ்ணம் காரணமாக, இள நரை, விந்து கழிதல், உடல் பலவீனமாதல், மனோபலமின்மை போன்ற பலவற்றிற்கு ஆளாகின்றனர். எனவே எவ்வித யோகப் பயிற்சிகள் இல்லாதோரும் குறிப்பாக இளைய சமுதாயத்தினர் திருஅண்ணாமலையில் வாரந்தோறும் கிரிவலம் வந்து சிலம்பாக்னி தரிசனம் பெற்று இவ்விடத்தில் பத்மாசனம் கொண்டு தியானித்துச் சில எளிமையான யோகப் பயிற்சிகளோடு திருஅண்ணாமலையாரை தரிசித்தால் நல்ல உடல் திறனும் திடமான மனோசக்தியும் ஆழ்ந்த நம்பிக்கையும் தெளிந்த பக்தியும் கிட்டும்.

காலிற் சிலம்பொலிக்க கிரிவலம் வாரீர்! நம்முடைய மூதாதையர்கள் சாதி, இன, மத பேதமின்றி அழகாகக் கட்டுக் குடுமி வைத்து, பூணூல் அணிந்து வளையல்கள், கடுக்கன்கள், மெட்டிகள், கால் சலங்கைகள் அணிந்து தெய்வீக அம்சங்களை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் மிளிருமாறு நிறைவு செய்தார்கள்.. காலில் சலங்கை, தண்டை, சிலம்பு அணிந்து கிரிவலம் வருதலால் இந்தச் சிலம்பொலியானது பல அற்புதமான பீஜாட்சர மந்திரங்களைப் பரவெளிலிருந்து கிரகித்துப் பூமியிலும் சேர்த்து  இதனுடைய பலாபலன்கள் மாதந்தோறும் கிரிவலம் வருகின்ற லட்சக்கணக்கான மக்களுக்கும் பெறுமாறு பெரிதும் உதவுகின்றது.

சீரிய சிலம்பாக்னி சித்தருக்கு மிகவும் ஆனந்தம் தருவது சிலம்பொலியாகும். இறைவன் நாட்டியன் ஆடாத நேரமே கிடையாது.. இறைவன் அசைவற்றுத் தியானம் புரியாத நேரமும் கிடையாது. இறைவன் சலனமின்றி யோகம் புரியாத காலமும் கிடையாது.. இவ்வாறு இறைவனுடைய எந்த நிலையிலும் அவருடைய காற்சிலம்புகளின் கணீர் கணீர் என்ற பீஜாட்சர ஒலிகளை எப்போதும் கேட்டுப் பரமானந்தத்தில் திளைத்திருப்பவர்தாமே சீரியா சிலம்பாக்னி சித்தராவார்.!

எனவே காலில் சலங்கை, சிலம்புகளுடன் கிரிவலம் வருதலால் இவருடைய மகத்தான ஆசிகளைப் பெறுவதுடன் உஷ்ண சம்பந்தமான நோய்களால் கர்ப்பம் நழுவிச் சந்ததியை விருத்தி செய்ய இயலாதோருக்கு நன்முறையில் வம்ச விருத்திக்கான பிராயசித்த முறைகள் கிட்டும்.. திருஅண்ணாமலை கிரிவலத்தின் போது கைகளில்/ மரக் கொம்புகளில் சிலம்புகளை, சதங்கைகளை, மணிகளை ஏந்தி/ கட்டி ஒலித்து வருதலும் கூட இறையினிமை நிறைந்த வாத்திய ஒலியாக அமைந்து நல்ல வகையிலான கிரிவல இறைவழிபாடாகவும் ஆகின்றது. மேலும் கிரிவலத்தின் போது வீணான பேச்சுகளையும் இது மட்டுப்படுத்தும்.. இதனால்தான் அக்காலத்தில் வண்டி மாடுகளுக்குச் சலங்கைகளையும், சங்குகளையும் கட்டி எப்போதும் பிரயாணம் செல்லும்போது கூட அதிலும் இறையொலி ஒலிக்கும் வண்ணம் தெய்வீக வாழ்க்கையை நம் முன்னோர்கள் அமைத்துக் கொண்டார்கள்.!

ஆனால் கலியுக மனிதனின் பிரயாணமோ தூக்கத்திலும் , போதையிலும், அரட்டையிலும் அல்லவோ தண்டமாக கழிகின்றது!

பசு, கன்றுடன் கிரிவலம் வாரீர்! அக்காலத்தில் வண்டி பாரத்தைச் சுமக்கின்ற மாடுகள் கூட தம் கழுத்தில் கட்டியிருக்கும் சதங்கை மணி ஒலிகளில் இலயித்துத் தம்முடைய பாரச் சுமையை லகுவாக்கித் தாமும் இறை தியானத்தில் ஒன்றியவாறே சுமையைத் தாங்கி இழுத்தன. இவற்றையெல்லாம் கலியுகத்தில் நினைத்துப் பார்க்க முடிகின்றதா? இதனால்தான் கன்றுடன் கூடிய பசுவிற்குக் கழுத்தில் சலங்கைகள், சங்குகள், சதங்கைகளையும் அணிவித்துப் பசுவிடம் அன்பாக, தெய்வீகமாகப் பேசியவாறே கிரிவலம் வந்தால் நன்முறையிலான சந்ததி விருத்திக்குச் சிலம்பாக்னி சித்தருடைய ஆசி கிட்டும்... இப்பசுவை ஏழைக் குடும்பத்திற்கு அல்லது கோயிலுக்கு தானமாக அளித்தலால் கிரிவலப் பலன்கள் பன்மடங்காக ஆகும். ஒரு மரக் கொம்பில் சில மரப் பட்டைகளைக் கட்டி (கோயில் கொடி மரம் போல) அதில் மணிகள், சங்குகள், சலங்கைகள், சிலம்புகளைக் கட்டி இவற்றை ஏந்திச் சிலம்பொலி,  மணிச் சத்தம் கேட்குமாறு அழகாக ஆட்டியவாறே, தேவாரம், திருவாசகம், திருப்புகழ், திவ்ய பிரபந்தம், வேத மந்திரங்கள், இறை நாம கீர்த்தனைகளுடன் சிலம்பொலி, மணி ஓசையுடன் கிரிவலம் வந்திடில் சிலம்பாக்னி சித்தருக்கும் அருணாசல ஈசனுக்கும் இது ஆனந்தத்தைத் தருகிறது.. இவ்வித இன்னிசை இறைவழிபாடுடன் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு தொடர்ந்து கிரிவலத்தை மேற்கொண்டு வந்தால் அவரவருடைய பித்ருகளின் ஆசிப்படி குழந்தையில்லாக் குறை தீர்வதற்கான உடல் உஷ்ணக் குறைகள் தீர்ந்து மழலைச் செல்வத்தின் மணியொலி கேட்டிட இறைவன் அருள்வழி தருவார்.

மின்சாரத் துறைக்கு
கிரிவலம் வருகையில் இந்த சங்கு, சலங்கை, மணிகளை எல்லாம் ஆங்காங்கே உள்ள ஏழைகளுக்கும் வண்டி மாடுகளுக்கும் அணிவதற்காக அளித்திட வேண்டும். சலங்கை, மணி தானங்கள் மகத்தான பலன்களைத் தரக் கூடியவை., எலக்ட்ரிக்கல் பிட்டிங்கஸ், எலெக்ட்ரீஷியன்ஸ் போன்று அக்னியின் ஒரு வகையான மின்சாரத் துறையில் இருப்போரும் விற்பனையாளர்களும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அக்னிக்குரித்தான நாட்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சிலம்பாக்னி தரிசனம் பெற்று, வசதியற்று விளங்கும் ஆலயங்களுக்கு அவரவர் வசதிக்கேற்றபடி குறைந்தது ஒரு டியூப் லைட்டையேனும் தானமாக அளித்து இலவசமாக மின்சார சம்பந்தமான சீர்திருத்தப் பணிகளைச் செய்து வந்தால் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவார்கள்.

பட்டாசுத் துறைக்கு
பட்டாசு, வெடிகள் போன்றவையும் அக்னி சம்பந்தப்பட்டது தானே? ஆனால் நடப்புலகில் பட்டாசினால் ஏற்படுகின்ற விபத்துகளையும், இத்தொழிலில் சிறு வயதிலேயே ஈடுபட்டு உடல் நலம் சீர்கேடாகியுள்ள இளஞ்சிறார்களையும் நாம் காண்கின்றோமல்லவா? வாண வேடிக்கைகள் என்பது மக்களுக்கு ஆனந்தத்தைத் தரக் கூடியது என்றாலும் அதில் எவ்வித ஆபத்துமின்றிப் பாதுகாப்புடன் செய்வது மட்டுமல்லாமல் வான வேடிக்கைகள் ஆலயத்திற்காக மட்டுமே என்று இருந்திடல் வேண்டும். தற்போதைய பட்டாசுகளில் இரசாயனச் சேர்க்கை மிகுந்திருப்பதால் ஆபத்து மிகுந்ததாக உள்ளது.. அக்காலத்தில் பனைச் சக்கை போன்ற நஞ்சற்ற, துன்பம் விளைவிக்காப் பொருட்களைக் கொண்டு வாண வெடிகளைச் செய்தனர். தற்போது இத்தொழிலில் சேர்கின்ற கர்ம வினைகளுக்கேற்ப ஓரளவேனும் பிராயசித்தமாக திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சிலம்பாக்னி தரிசனத்தைப் பெற்றிட வேண்டும்!

மறைய வேண்டிய மதுப்பழக்கம்!
மதுவகைத் தொழிற்சாலைகள் அனைத்துமே மக்களுக்குக் கேடு விளைவிக்கின்ற பல பொருட்களைத் தயாரித்து மனித சமுதாயத்திற்குப் பெரும் தீங்கினை விளைவிக்கின்றது.. மது அருந்துவதை ஒரு போதும் எங்கும் நியாயப்படுத்த முடியாது.. மேலை நாடுகளில் கூட குளிருக்காக அங்கு மதுப்பழக்கம் இருந்தால் அதையும் ஆன்மீகத்தில் ஏற்பது கிடையாது.. ஏனென்றால் குளிரைச் சமன்படுத்த இயற்கையிலேயே எத்தனையோ வழிமுறைகள் உள்ளன ! இதற்கு மது என்ற ஒன்று தேவையில்லையே! மனிதன் தன்னுடைய சுயநலத்திற்காகவும் பொழுதை வெறுமனே போக்குவதற்காகவும் போதையில் திளைத்துத் தற்காலிகமாகத் துன்பங்களை மறப்பதற்காகவும் மட்டுமே விளங்குகின்ற கேடான மதுப்பழக்கம் இவ்வுலகை விட்டு ஒழியத்தான் வேண்டும்.

வேண்டாம் இந்த வல்வினை!
இயன்ற வரை மது சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளிலோ, வியாபாரக் கடைகளிலோ, அலுவலகங்களிலோ எந்தப் பணியையும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்.. தற்போது இருந்தாலும் எப்படியேனும் தயவு செய்து ஒதுங்கி விடுங்கள். கோடிக் கணக்கான மக்களுடைய உடலைப் பாதிக்கின்ற தீவினைகளுக்குத் துணைபோய் பெரும் பாவத்தைச் சேர்த்துக் கொள்ளாதீர்கள்! மதுபானத் தொழிற்சாலைகளில் ஆயிரக்கணக்கானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கின்றதே என்று எண்ணிடலாம்! இதற்கும் ஆன்மீகத் தீர்வு இல்லாமலில்லை! மது சம்பந்தமில்லாத ஆனால் சமுதாயத்திற்கு உபயோகமான மற்ற பொருட்களை இந்த ஆலைகளில் தயாரிக்கலாமே! லாபம் முக்கியமானதா, மக்களுடைய நல்லொழுக்கம் முக்கியமானதா? எனவே இவ்விடங்களி பணி புரிவோர் இறைவனிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்து “இறைவா! இதுவரையில் என்னையும் அறியாமல் மக்களுக்குத் தீது விளைவிக்கின்ற துறையிலிருந்து கொண்டு தீய கர்ம வினைகளைச் சேர்த்துக் கொண்டு விட்டேன்.. இப்போது இதனைத் தவறு என்று உணர்கின்றேன்!”

உண்மையிலேயே மனதார வேண்டி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து சிலம்பாக்னி தரிசனத்தைப் பெற்றால்தான் இறையருளால் அவருக்கு வேறிடத்தில் தக்க வேலை கிட்டும். வசதியுள்ளோர் இவர்களுடைய மாற்று வேலைக்கு உதவுதல் கிடைத்தற்கரிய பெரும் புண்யத் தொண்டாகும்! எனவே பீடி, சிகரெட், மது, புகையிலை போன்ற மக்களுக்குத் தீமை பயக்கும் துறையில் ஒருபோதும் பணிபுரியாதீர்கள். நடைமுறையில் இது சாத்தியமா என்று கேட்டிடலாம்.. ஆனால் பெரும் கர்ம வினைகளைச் சேர்த்து எத்தனையோ பிறவிகளில் வதைபடுவதைவிட நல்ல வருமானம் இல்லாவிடினும் பரவாயில்லை என்று எண்ணிச் செயல்படுவீர்களேயானால் இறையருளால் இந்த தெய்வீகச் சங்கல்பமே மனிதப் பிறவியை மேம்படுத்தி உத்தம நிலைகளைப் பெற்றுத் தரும்.!

அர்த்தமுள்ள நார்த்தங்காய் தீர்க்கும் தீவினைகள்! தீய பழக்க வழக்கங்களிலிருந்து விடுபட்டு நல்வாழ்க்கையைப் பெற்றிடவும். இந்த சிலம்பாக்னி மலை தரிசனம் பெரிதும் துணை புரிகின்றது. தீய பழக்கங்களில், தீய ஒழுக்கங்களில் ஈடுபட்டோர் மேற்கண்ட அக்னி சக்தி நிறைந்த நாட்களில் அண்ணாமலையை கிரிவலம் வந்து நாரத்தங்காய் ஊறுகாயோடு அன்னத்தை, அன்னதானமாக அளித்து வந்தால் இறையருளால் நல்வழிக்கு மீள்வர்.. ஆனால் தொடர்ந்து ஆழ்ந்த நம்பிக்கையுடன்  செய்து வர வேண்டும். நாரத்தங்காய்க்குப் பல அற்புதமான மூலிகை குணங்கள் உண்டு.. நாரத்தை இலை பொடியை மிளகு, உப்பு, காரம் சேர்த்துப் பொடியாக்கி (வழக்கில் வேப்பிலைக்கட்டி எனப்படுவது, ஆனால் வேப்பிலையில் செய்யப்படுவது அல்ல!) ஜீரண சக்தியை மேம்படுத்துகின்ற சித்த வைத்திய முறைகளும் உண்டு.. அதிலும் காய்ச்சல் போன்ற உஷ்ண நோய்களின் போது நாரத்தங்காய் தான் மிகச் சிறந்த ஜுர நிவாரண, ஜீரண உபகரணமாக விளங்குகிறது.. எனவே நாரத்தை ஊறுகாயுடன் கூடிய அன்னதானம் குறித்த சில பலன்களைத் துரிதமாக அளிக்கவல்லதாகும்.!

மேலும் அக்காலத்தில் சிலம்பிசை நாட்டியக் கலைஞர்கள் தோட்டத்தில் நாரத்தை மரங்கள் நிறந்திருக்கும். நடனக் கலைஞர்களும் நடனத்திற்கு முன் நாரத்தை கூடிய சாதம் உண்டு உடல் பாரத்தை லகுவாக்கிக் கொள்வார்கள்!  எனவே “நாரத்தைச் சோறு, பாரத்தைக் குறைக்கும்” என்ற முதுமொழிக்குப்  வயிற்றுப் (பாரத்தை) பொருமலைத் தணிப்பதுடன் நாரத்தை ஊறுகாயுடன் கூடிய அன்னதானத்தின் பலன்களால் கர்ம வினைகளின் பாரம் தணியும் என்பதும் சத்திய வாக்கே!

ஸ்ரீஉத்தர கண்ட ருத்ரேஸ்வரர்

உத்தராயணப் புண்ணிய காலத்தை தந்த உத்தர கண்ட ருத்ரேஸ்வரர்!

மூதாதையர்களுக்கு நன்னிலை அளிக்கின்ற உத்தராயண மலை தரிசனம்! உத்தர கண்ட ருத்ரேஸ்வர சித்தர் கண்டெடுத்த அற்புத அண்ணாமலை தரிசனம்! ஆஞ்சநேயரின் அன்னை கண்ட அற்புத அண்ணாமலை தரிசனங்கள்! அனுமாரின் அன்னையாம் அஞ்சனா தேவி திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தபோது அற்புதமான பல சித்தர்களுடைய தரிசனத்தைப் பெற்றனள்.. அவர்களும் அஞ்சனைக்குப் பல கிரிவல முறைகளையும் எடுத்துரைத்து அவற்றின் பலாபலன்களையும் விளக்கினார்கள்.. சீரியா சிலம்பாக்னி சித்தர், உத்தர கண்ட சித்தேஸ்வரர், நிலாபுராந்தக வாசுமாமுனிச் சித்தர் போன்ற சித்தர்களை எந்த லோகத்திலும் அவ்வளவு எளிதாகக் காண முடியாது! அஞ்சனைக்கு இவர்களுடைய தரிசனம் கிட்டியதே பெரும் பேறாகும் !

ஆறில் ஆறாய்ப் பெருகிய அக்னி!
பிரபஞ்சத்திற்கே உத்தராயணப் புண்ணிய காலத்தைப் பெற்றுத் தந்த சித்த மகாபுருஷரே இவர் ஆவார்.. பலகோடி யுகங்களுக்கு முன்னால் பூமியின் விண்வெளியில் ஆறு சூரியன்கள் பிரகாசித்தன.. ஆறுமே ஒரே சமயத்தில் விண்ணில் உதயமாகும் அப்போது பூலோகம் எங்கும் இராப் பகலாக வழிபாடுகள் நிறைந்திருந்தன.. வேதம் ஒலிக்காத நேரமே கிடையாது. இருந்தாலும் வருகின்ற யுகங்களில் சூரியனுடைய சஞ்சார நிலைகள் மாறிவிடும் என்பதை உணர்ந்த ஒரு சித்தர் ஆறு சூரிய ஜோதிப் பிரகாசத்தை எப்போதும் தொர்ந்தவாறே தம் தவத்தைத் தொடர்ந்தார்.. சூரிய உதயத்தில் தொடங்குகின்ற இவர்தம் பாஸ்கர யாத்திரையானது அருணாசல மலையை கிரிவலமாக வந்து முடித்து சூரிய அஸ்தமனத்தில் நிறைவு பெறும்.. ஆறு சூரிய சஞ்சார மார்கங்களினால் பூமியின் சீதோஷ்ண நிலை பெரும் மாறுதலுக்கு உள்ளாகியது.. வருண பகவானும், சமுத்திர ராஜனும், பூமிக்குக் குளிரைத் தருகின்ற சீதள நாயகியும் மிகவும் கஷ்டப்பட்டு ஜீவன்களுக்குத் தேவையான தட்பவெப்ப நிலையை அடிக்கடி சரி செய்ய வேண்டியது ஆயிற்று... இவற்றையெல்லாம் முன்கூட்டியே தீர்க்க தரிசனமாக உணர்ந்த ஒரு சித்தர் பெருமான் இமாலயப் பகுதியில் உறைந்த பனிகளுக்கிடையே கொதித்து எழுகின்ற வென்னீர்க் குண்டத்தின் முக வாயிலில் கௌர்யாக்னி யோகம் கொண்டு சடாட்சர பாஸ்கர சக்தியைத் தணித்து ஜீவன்களுக்கு ஏற்ற வகையில் சூரியப் பிரகாசம் எழும்ப வேண்டிக் கடுந்தவம் பூண்டார். ஆறு சூரியக் கோளங்களின் அக்னி சக்தியைத் தம் உடலில் தாங்கும் சக்தியை அவர் பெற்றபோதுதான் ஈஸ்வரன் காட்சி தந்து, “ருத்ரகண்டா! நீ ஏற்கனவே ருத்ராக்னியைத் தாங்கியவன்தானே! எனவே ஆறென்ன, அறுபது கோடி சூரியக் கோளங்களை அரவணைக்கும் யோக சக்தியைப் பெற்றவன் நீ., எனவே அக்னி சம்பந்தப்பட்ட உன் யோக வேள்வியைப் பிரபஞ்சத்தின் பஞ்சபூத அக்னித் தலமான அருணாசல புனித பூமியில் தொடர்வாயாக!” என்று கூறி கேதாரபுரீஸ்வரராய் அருளுரை தந்தார்..

உறைபனி மிதக்கின்ற திருக்கயிலாயப் பகுதியின் உறைபனியின் ஊடே கிரிவலம் கொண்ட உத்தர கண்ட ருத்ரேஸ்வரர் இறைஅருள் ஆணைப்படி திருஅண்ணாமலைக்கு வந்து கிரிவலம் வரலானார். அப்போதுதான் ஆறு சூரிய மூர்த்திகளும் இச்சித்தரின் அக்னி யோக சக்தியை உணர்ந்தனர்.. ஆறு சூரிய யோகப் பாதையில் அக்னி பிரவாகம் எடுத்தமையால் அவர்களாலும் தினசரிக் காரியங்களைச் சிறப்புடன் நடத்த முடியவில்லை.. எனவே அறுவருமே உத்தர கண்ட ருத்ரேஸ்வரரை நாடித் தமக்குத் தக்க அறவழியைக் காட்டுமாறு வேண்டினர்..

சடாட்சர பாஸ்ராக்னி சித்தியைப் பெற்றவர் ஆதலின் சித்தரின் அறவழிப்படி அறுவருமே தம்முடைய சூரிய சக்திகளை ஒரு சுயம்பு லிங்க ஜோதியின் திருவடியில் பொருத்தி விட்டுப் பெரும் தவம் பூணச் சென்றனர்.. அதாவது ஆறு சூரிய மூர்த்திகளும் தங்களுடைய யோகத்தை நிறைவு செய்யும் வரை இந்த சுயஞ்ஜோதிப் பாஸ்கர லிங்கமே பூலோகத்திற்கான ஒளியை அளித்து வந்தது.. இதன் பிறகுதான் இச்சித்தர் பெருமானே ஸ்ரீஅஷ்ட காலபைரவ மூர்த்தியை வேண்டிச் சூரியப் பாதைக்கு இரு அயனங்களைப் பெற்றுத் தந்தனர்..

இவ்வாறாகத்தான் நமக்கு உத்தராயண புண்ணிய காலமும், தக்ஷிணாயன புண்யகாலமும் பூலோகத்தில் கிட்டின. இச்சித்தர் பெருமான் யோகத்தில் அமர்ந்து ஆறு சூரிய கோடிப் பிரகாசத்தைத் தாங்கி யோகம் பூண்ட இடம்தான் திருஅண்ணாமலை கிரிவலத்தில் இன்று நாம் காண்கின்ற சூரிய லிங்கப் பகுதியாகும்.. இங்கிருந்து மலையை நோக்கி தரிசித்தால் கிட்டும் தரிசனமே, உத்தராயண சகஸ்ர ஜோதி தரிசனமாகும்! இதன் பிறகே சடாட்சர பாஸ்கர சக்திகள் நிறைந்த ஏனைய சூரிய கோளங்கள் வெவ்வேறு பூமிக் கோளங்களுக்கு இறை ஆணையாகச் சென்று பரிமளித்தன.. இவ்வாறாக, திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் இன்று நாம் காண்கின்ற சூர்ய லிங்கமே ஆறு கோடி சூரியப் பிரகாசத்தைத் தாங்கி நிற்கும் சூரிய லிங்க மூர்த்தியாகும்.. ஒவ்வொரு யுகத்திலும் எத்தனையோ இறையனுபூதிகளைக் கொண்ட அதியற்புத சூர்ய லிங்கமூர்த்தி! இவ்விடத்தில்தான் இன்றைக்கும் உத்தர கண்ட ருத்ரேஸ்வரர் பாஸ்கர அக்னி யோகம் பூண்டு கிரிவலம் வருவோரை சூட்சுமமாக ஆசீர்வதிக்கின்றார். கணவன் / மனைவியை விட்டுப் பிரிந்து வாழ்வோர் ஒன்று சேர்ந்து வாழ்ந்திட இங்கிருந்து மலை தரிசனம் பெற்று துவித்யஜீவம் எனப்படும் இரட்டை நிலைப் பொருட்களைத் (முந்திரி, அவரை, சந்தனக் கல்-கட்டை, வயலின், மேளம், புடவை – ரவிக்கை – இரண்டாக இணை பிரியாது இருக்கும் பொருளை) தக்க ஏழைகளுக்கு தானமாக அளித்து சூர்ய லிங்கத்தை வணங்கி உத்தர கண்ட சித்தேஸ்வரரை நினைந்து கிரிவலம் வந்திட இறையருளால் தம்பதிகள் குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து வாழ்வர் !

குளவிக் கூட்டிலும் வாஸ்து

குளவிக் கூடு காட்டும் வாஸ்து சகுன சாஸ்திரம்!

குளவி கூட வாஸ்து சாஸ்திரத்தின்படியே கூடு கட்டுகிறது! தூக்கணாங் குருவியின் வாஸ்து சாஸ்திர ரீதியானக் கூட்டினைக் கலியுகத்தின் எந்த சிவில் இன்ஜினியராலும் கட்ட முடியாது! எறும்புகளின் வாஸ்து சாஸ்திரப் புற்று அமைப்பு மனித விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான விஞ்ஞானமாம்! வேடந்தாங்கல், சில்கா ஏரி, கிர் காடுகள் போன்றவற்றிற்கு வருகின்ற வெளிநாட்டுப் பறவை இனங்களின் இரகசியம் பற்றி நீங்கள் அறிவீர்களா? உலகத்தின் தெய்வீக மையமாக விளங்குகின்ற பாரத நாட்டில்தான் அதிலும் குறிப்பாக தெய்வத் தமிழ் நாட்டில்தான் சுயம்பு லிங்க மூர்த்திகளாகவும், அருள் வளம் மிக்க மலைகளாகவும், புண்ணிய ஜீவ நதிகளாகவும், தீர்த்தங்களாகவும் ஆலயங்களாகவும் தெய்வீக சக்தி நிறைந்து பரிணமிக்கின்றது ! விஞ்ஞான மோகத்திற்கும்., அநாகரீகத்திற்கும், மத , சூது கேளிக்கைகளுக்கும் ஆட்பட்டிருக்கும் மேலை நாடுகளில் குறைந்திருக்கின்ற தெய்வீக சக்தியை நிறைவு செய்வதற்காக அப்பறவை இனங்கள் இங்கு வந்து வேத சக்தியைப் பெற்று அந்தந்த நாடுகளில் அதனைப் பரப்பி வேத சக்தி இன்மையை ஓரளவு நிறைவு செய்கின்றன... எனவே பறவைச் சிறகடிப்புகளால் இப்பூவுலகம் பெறுகின்ற வேத சக்திகள் எத்தனை எத்தனை!!

அக்காலத்தில் புறா, காகம், அணில் போன்றவை தங்குவதற்காகப் பறவைகளைக் கூடுகளை, மாடங்களை வீட்டு மச்சுகளில் நம் பெரியோர்கள் அமைத்திருப்பார்கள்.. ஒரு புறம் இது ஜீவ காருண்யமாகவும் மறுபுறும் இப்பறவைகள் விண்வெளியிலிருந்து கொண்டு வருகின்ற வேத சக்திகளை ஆசீர்வாதமாகப் பெறும் வகையிலும் நம் பெரியோர்கள் பரந்த மனப்பான்மையுடன் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காகவும் அரும் பணி ஆற்றி வந்தார்கள். ஆனால் அனைத்து பறவைகளையுமா தற்காலத்தில் நம் வீட்டினுள் நுழைய விடுகின்றோம்? பல்வேறு பறவைகள் மூலமாக விண்வெளியில் நம் பூமியின் எல்லையில் நிலவுகின்ற வேத சக்தியை ஜாதி, இன எவ்விதப் பாரபட்சமுமின்றி ஒவ்வொரு வீட்டிற்கும் தேவ ஆசியாக அளிப்பதற்காகத்தான் குளவிகள், வண்டுகளை இறைவன் படைத்தான். இவற்றின் படைப்புக்கான காரண காரியங்களுள் ஒன்றே வேத சக்தியாகும்.. மேலும் வண்டுகள், குளவிகள், சிறகடித்து ரீங்காரம் இடுகின்ற போதுஅவை நாம் கேட்பதற்கரிய வேத கான ஒலிகளாக மலர்கின்றன.. எனவே வானில் நிறைந்திருக்கும் வேத சக்திகளை உங்கள் இல்லத்திற்குக் கொண்டு வருகின்ற தூதுவர்களாகவே வண்டினங்களும், குளவிகளும் விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் ! அக்காலத்தில் புது வீடோ பழைய வீடோ எதையும் வாங்குவதற்கு முன் அதில் கட்டப்பட்டுள்ள குளவிக் கூட்டின் அமைப்பைப் பொறுத்தும் அதன் வாஸ்து லட்சணங்களை அறிந்து கொள்வார்கள் ! கிழக்கு நோக்கிக் குளவிக் கூடு அமைந்திருப்பின் வாஸ்து சாஸ்திர நியதிகள் அந்த வீட்டிற்கு நன்கு பொருந்தியுள்ளன என்பது பொருள்.. பழைய குளவிக் கூடாக இருந்தால் அதிலுள்ள புழுக்களை வெளியேற்றுவதற்காகப் போடப்பட்டுள்ள துவாரங்களின்  எண்ணிக்கைகள், துவார வாயிலின் வெள்ளை வடிவமைப்பு போன்றவற்றைக் கொண்டும் வீட்டின் வாஸ்து அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.! குளவிகளுக்கென்று ஓங்கார, ரீங்காரப் பேச்சுகளும் உண்டு.. நாம் ஓம் என்று ஓங்காரத்தை ஓதி தியானிப்பது போலக் குளவிகளும் குறிப்பிட்ட திசையில் ஹெலிகாப்டர் போல் காற்றில் ஒரே இடத்திலேயே சிறகுகளை அசைத்தவாறு நின்று குறிப்பிட்ட பீஜாட்சர ஒலிகளை எழுப்புகின்றன.. நாமோ குளவிகளின் சிறகுகள் காற்றில் அசைவதால் ஏற்படுகின்ற சப்தம் என நினைத்து விடுகின்றோம்.

குளவிக் கூட்டு மண் புனிதமுடைத்து! பழைய வீடுகளை இடித்துக் கட்டும்போது அக்காலத்தில் குளவிக் கூடுகளில் எவ்விதப் புழுவும் இல்லாதிருந்தால் அந்தக் குளவிக் கூட்டினையும் வீட்டிற்குத் தேவையான மண்ணுடன் சேர்த்துக் கட்டிடத்திற்குப் பயன்படுத்திக் கொள்வார்கள்... இதனால் பலவிதமான வாஸ்து தோஷங்கள் தீர்வு பெறுகின்றன. ஆனால் இதற்கான பூஜை முறைகளை அறிந்து செய்தல் விசேஷமானதாகும்.. புழு உள்ள கூட்டை உடைக்க கூடாது. குளவிக் கூட்டின் வாயமைப்பு மூடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. குளவிக் கூட்டில் உள்ள வெண்மையான வச்சிரம் போன்ற பசைக்கு அற்புதமான மருத்துவ குணங்களும் உண்டு.. தோல் நோய்களைப் போக்கக் கூடிய சக்தியைக் கொண்டது..!

ஒரு குளவியானது தன்னுடைய அனைத்துக் கூடுகளையும் புழுக் கூட்டிற்காகப் பயன்படுத்துவது கிடையாது.. சில கூடுகளைப் பயன்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்று விடுவதும் உண்டு. இதையெல்லாம் உன்னிப்பாக க(வ)ணி(னி)த்துப் பார்த்து எந்தக் கூடு பயன்படுத்தப்படாமல் விடப்பட்டதோ அதற்குரிய காரணங்களைத் தெரிந்து கொண்டால் அந்த வீட்டில் ஏற்பட இருக்கின்ற இன்ப துன்பங்களை உணர்ந்து கொள்ளலாம்... கூட்டைக் கட்டிய குளவி இறந்து குளவிக் கூடு அப்படியே நின்று விடுமானால் குடும்பத் தலைவருக்குச் சில துன்பங்கள் ஏற்படும் என்பதை இது குறிக்கின்றது..

குளவி கொட்டின் விலகும் வினைகள்!! குளவி கொட்டுவதற்கும் காரண காரியங்கள் உண்டு. ஆனால் இறை நியதிப்படி நடப்பது எதுவும் நன்மைக்கே என்று நம் பெரியோர்கள் சொல்வார்கள் அல்லவா? நம் உடலில் உள்ள சில தீய சக்திகளைப் போக்குவதற்கு நாம் கடுமையான யோக, தியான நிலைகளை மேற்கொண்டாக வேண்டும்.. ஆனால் இவற்றை நாம் செய்வதில்லையே! குளவி கொட்டும்போது ஏற்படுகின்ற வீக்கம், வலி ஆகியவற்றால் பல ஊழ்வினைகள் கரைவதோடு குறிப்பிட்ட தீய சக்திகளும் வெடித்து வெளிச் சென்று விடுகின்றன. ஆனால் குளவி கொட்டும் போதெல்லாம் இவைதாம் காரணங்கள் என்று சொல்ல முடியாது.! ஒரு குளவிக் கூட்டில் புழு வைத்து நன்முறையில் அது உருவாகி வெளிச் சென்றால் அவ்விடத்தில் சுபிட்சமான காரியம் நடைபெற இருக்கிறது என்பது பொருளாகும்.. இவ்வாறாக ஒவ்வொரு சிறு குளவிக் கூட்டின் மூலமாக மனிதன் அறிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக இரகசியங்கள் எவ்வளவோ உள்ளன. இதற்கான விளக்கங்களைத் தக்க சற்குருவை நாடித்தெரிந்து கொள்ளவும்.

ஸ்ரீஇலஞ்சி முருகன்

தென்காசி மகாத்மியத் தொடர் – வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி

காசிக்கு நிகரான தென்காசி ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசிக்கும் முன்னர் நாம் வழிபட வேண்டிய பன்னிரெண்டு சிவத்தலங்களைப் பற்றிய சிறுவிளக்கங்களைக் கடந்த பல இதழ்களாக நாம் அளித்து வந்துள்ளோம் அல்லவா? அனைத்து விதமான பாவங்களையும் தீவினைக் கர்மங்களையும் நசித்து விடுகின்ற தெய்வீக சக்தி நிச்சயமாக வாரணாசி எனப்படும் காசியின் கங்கை தீர்த்தத்திற்கு உண்டு என்ற வேத வாக்கியத்தில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு யார் ஒருவர் வாரணாசி கங்கை நதியில் நீராடுகின்றாரோ நிச்சயமாக அதே விநாடியில் அவர் பாவத் தளைகளிலிருந்து விடுபடுகின்றார் என்பது உண்மையே.. ஆனால் எக்காரணம் கொண்டும் அவர் தம் வாழ்க்கையில் மீண்டும் எந்தச் சிறு பாவத்தையும் செய்யக் கூடாது.. அந்த அளவிற்குப் புனிதமாக வாழ வேண்டும் இது சாத்தியமா? அனைத்துவிதமான பாவங்களையும் தன்னுள் ஏற்று அந்த பாவச் சுமையைக் குறைக்கின்ற கங்காதேவி எதை உங்களிடம் எதிர்பார்க்கின்றாள்? இதுவரையில் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்களுக்கு உரித்தான பிராயசித்தத்தைத் தேடி தெற்கிலிருந்து காசியின் கங்கைக்கு வந்த உங்களுடைய விடாமுயற்சியையும், மனோ வைராக்யத்தையும் கருத்தில் கொண்டுதான் கங்காதேவியால் உங்களுக்கு பாவமன்னிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மீண்டும் தவறுகளை வாழ்க்கையில் செய்யத் தொடங்கினால்  பிராயசித்தத்திற்கு என்ன மதிப்பு? இதற்கும் கங்கா தேவி பொறுப்பேற்க வேண்டியதாகி விடுகிறதே! மீண்டும் தவறுகள் செய்தால் கிட்டிய பிராயசித்தமும் கரைந்து விடும்!

இப்பிறவிக்குள் அனைத்துப் பாவத் தளைகளிலிருந்து விடுதலை பெற முடியுமா!

ஆம் நிச்சயமாக! ஆனால் குருவின் திருவருள் கூடினால்தான்! இதன் ஒரு அங்கம்தான் காசி யாத்திரையாம்! அனைவருமா காசிக்குச் செல்லமுடிகின்றது? ஊனமுற்றோர், குருடர்கள், செவிடர்கள், ஊமைகள், ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்  இவ்வாறாகப் பலராலும் காசிக்குச் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது.. வசதி இருந்தாலும் கூடப் பலவிதமான காரணங்களால் காசியைத் தரிசிக்க முடியாமலும் போகின்றது.. அது சரி, உங்களால்தான் போக முடியவில்லை என்றாலும் சில ஏழைக் குடும்பங்கள் சென்று வருவதற்கான செலவுகளை ஏற்பதும் மகத்தான “தான முறை” ஆயிற்றே! இதையாவது செய்தீர்களா?

உண்மையான காரணங்களுக்காக காசி கங்கை நதி தீரத்திற்குச் செல்ல இயலாதவர்களுக்காக இறைவனே தென்காசித் திருத்தலத்தில் ஸ்ரீகாசி விஸ்வநாதராகக் குடிகொண்டு காசியின் பலாபலன்கள் அபரிமிதமாகப் பொழிந்து நம்மை உய்விக்கின்றார் ! தென்காசித் தலத்தைப் பற்றிய மூலத் திருவிளக்கங்களை நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருட்கருணையால் அவர்தம் அருட்பெரும் சிஷ்யராம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களிலிருந்து அரிய அபூர்வமான ஆன்ம ரகசியங்களாக இங்கு தொகுத்துத் தருகின்றார்கள்!

ஸ்ரீமுருகப் பெருமான் இலஞ்சி

இன்றைக்கும் சூட்சும ஜோதியாக, மனித சஞ்சாரமில்லாத திருக்குற்றால வனப்பகுதியில் தேவர்களால் பூஜித்து வழிபடப்பட்டு வருகின்ற முப்பூ சாளகிராம லிங்கம் பற்றிச் சித்புருஷர்கள் அருள்வதைக் கடந்த இதழில் கண்டோம் அல்லவா! சுயம்பு ஜோதிப் பாறையில் முகிழ்த்து மலர்ந்த சுயம்பு ஜோதி லிங்க மூர்த்தியான இது, தானாகவா மலர்ந்தது? இதனை மலர வைப்பதற்காக எத்தனை கோடி சித்தர்களும், மகரிஷிகளும், யோகியர்களும் தவம் பூண்டனர்! இந்த அருங்காட்சியைக் காண்பதற்க்குத்தான் எத்தனை கோடி தேவாதி தேவ மூர்த்திகள் எல்லாம் வலம் வந்து தவம் புரிந்து நிற்கின்றனர்! இவ்வரிய சுயஞ்ஜோதி லிங்கமூர்த்தியை தரிசிப்பதற்கே காணக் கண் கோடி வேண்டும்.. ஏனென்றால் அந்த அளவிற்கு மகத்தான ஒளிப் பிரகாசத்தைத் தன்னுள் கொண்டு நிறைந்திருப்பது!

இலஞ்சி வலஞ் சிவபால ஜோதி முருகன்! முப்பூ சுயம்பு ஜோதி லிங்கத்தில் இருந்து உருவான சுயம்பு லிங்க மூர்த்திகள் தாம் எத்தனை எத்தனை! அவற்றை எல்லாம் கணக்கிட்டு வடித்திட இயலாது. இதிலிருந்து தோன்றிய முதல் ஆதிமூல ஜோதி மூர்த்திதான் இலஞ்சி கிராமத் திருமுருகன் தோற்றமாகும். ஆம், இன்றைக்கும் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான ஜோதிகளையும் உதிக்கச் செய்கின்ற அரிய மூர்த்தியே இலஞ்சி முருகப் பெருமானாவார். ஏனென்றால் ஆறு ஜோதிகளிலிருந்து பிறந்த ஆறுமுகப் பெருமானன்றோ! உலக அன்னையாம் பார்வதி தேவியைவிடப் பலவிதமான சிவ ஜோதி தரிசனங்களை ஸ்கந்த யோக நிலையில் அருந் தவக் காட்சியாகப் பெற்றவரே இலஞ்சி முருகப் பெருமான் ஆவார்!

அனைத்துவிதமான ஜோதி உதயங்களையும் ஞானச் சுடராகக் காட்டுகின்றவர் இலஞ்சி முருகனே! காரணம் இம்முப்பூ சுயஞ்ஜோதி லிங்கத்திலிருந்து எழுந்த முதல் ஆதி மூல ஜோதித் தோற்றமே இலஞ்சி முருகப் பெருமானின் திருத்தோற்றமாகும்.. இலஞ்சி முருகனுடைய தேவ லீலைகளை எல்லாம் எழுத்தில் வடிக்க முடியாது.. அந்த அளவிற்கு எப்போதும் அருந்தெய்வீக லீலைகளைப் பல கோடி லோகங்களிலும் புரிந்த வண்ணம் அருள் பாலித்துக் கொண்டிருக்கின்றார் இலஞ்சி முருகன்! திருக்குறாலத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ள இலஞ்சி முருகன் ஆலயம் மகா சக்தி வாய்ந்ததாகும்... சர்வேஸ்வரன் தம் அம்சமான ஒவ்வொரு தேவதா மூர்த்திக்கும் விதவிதமான இறைப் பணிகளை அளித்துள்ளார்! இவ்வகையில் இலஞ்சித் திருமுருகனுக்கு ஈஸ்வரன் இட்டுள்ள சிவ கட்டளை யாது தெரியுமா?

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஆலயங்களுக்கான இறைப்பணிகளைச் செம்மையாக நடத்தித் தருவதற்காக மகரிஷிகள், சித்தர்கள், யோகியர்களுடைய தபோ பலன்களைத் திரட்டி அனுக்கிரக சக்தியாக மாற்றித் தருகின்ற பணியையும் சிறப்பாகத் தம்மிடம் இலஞ்சி முருகன் ஏற்றுள்ளார்.. இதனால்தான் இன்றைக்கும் இலஞ்சி முருகப் பெருமான் தென்காசி திருக்கோபுரத்தைத் தன் திருச்சந்நிதியிலிருந்து தினந்தோறும் தரிசித்துக் கொண்டிருக்கின்றார். சில வருடங்களுக்கு முன் எழுப்பப்பட்டதாக இந்த ராஜ கோபுரம் நமக்குத் தோன்றினாலும் உண்மையில் சூட்சுமமாக இந்த ராஜ கோபுரம் என்றும் எப்போழுதும் ஒளிர்கின்றது! தேவ லோகத்திலிருந்து தினமும் தேவர்களால் தரிசிக்கப்படுவது!

சித்தர்கள் திட்டம் முருகனின் சித்தம்! ஒரு கோயில் கும்பாபிஷேகத்திற்கான விமானங்கள், ராஜ கோபுரங்கள், பிரகாரங்கள் சீர்திருத்தப்பட வேண்டுமானால் இப்பணிகளைத் தெய்வீக ரீதியாகச் செய்யக் கூடிய பூமாங்க்ருத சித்தர்கள், விஷ்வ சம்பூக மகரிஷிகள் போன்றோர் ஒன்று கூடி இலஞ்சி முருகனிடம் தங்களுடைய தெய்வீகத் திட்டங்களைச் சமர்ப்பிக்கின்றார்கள்.. இலஞ்சி முருகன் தான் இந்த உலகத்தில் மட்டுமல்லாது பல கோடி தேவ லோகங்களிலும் உள்ள ஆலயங்களில் திருப்பணிகளைச் செய்வதற்கு உரித்தான அனுகிரகங்களை அளிக்கின்றார். யார் மூலமாக? இதற்குரித்தான சித்புருஷர்கள் மூலமாக!

இலஞ்சி முருகனே திருப்பணி வரம் நல்கும் சிவகுமரன்! ஒவ்வொரு ஆலயத்திற்கும் உரித்தான கும்பாபிஷேகப் பணிகளை தெய்வீக ரீதியாக ஆற்றித் தருவதற்கென்று அந்தந்த ஆலயத்திற்குரித்தான மகரிஷிகளும் சித்தர்களும் உண்டு.. இவர்கள் கோடானு கோடி யுகங்களுக்கு முன் அந்தந்த ஆலயத்துடன் தொடர்பு கொண்டிருப்பவர்களாக இருப்பார்கள்.. ஒவ்வொரு ஆலயத் தூணிலும் மகரிஷிகளின் வடிவங்களும் சித்தர்களின் ரூபங்களும் செதுக்கப்பட்டிருப்பதைக் காண்கின்றீர்கள் அல்லவா? இவர்கள் அனைவருமே அந்தந்தக் கோயிலோடு சம்பந்தப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் அந்த ஆலயத்திற்கான அற்புத இறைத் திருப்பணிகளையும் ஆற்றியவர்கள். இதனால் தான் இன்றைக்கும் ஆலயத் தூண்களில் காரண காரியங்களோடு எத்தனையோ சித்தர்களுடைய மகரிஷிகளுடைய ரூபங்கள் பதிக்கப் பெற்றுள்ளன..

திருமலைத் திருமால் மருகன்! கார்த்திகேயன், ஆறுமுகப் பெருமான், தண்டபாணி, பழநி, சுப்ரமணியன், முருகன், செந்தில் வேலன், செங்கல்வராயன் என்று எத்தனையோ நாமங்களைக் கொண்டுள்ள முருகப்பெருமான் ஒவ்வொரு அவதாரத்திலும் வெவ்வேறு விதமான அனுக்கிரகங்களை நமக்குத் தந்து அருள்கின்றார்.. இவ்வகையில் சூட்சுமச் சுடர் ஒளி ஜோதியாய் விளங்குபவர்தாம் செங்கோட்டை அருகில் உள்ள திருமலை முருகப் பெருமானாவார். மிகவும் அழகிய மலையின் மேல் அமைந்துள்ள முருகப் பெருமான்! மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! சூட்சுமச் சுடர் ஒளியை உலகெங்கும் எழுப்புபவர்!

காணாமல் உணர்கின்ற அக்னி ஜோதி வகைகள்! நம் கண்ணுக்குத் தெரிகின்ற ஜோதி மட்டும் அல்லாது கண்ணுக்குத் தெரியாமல் இருக்கின்ற பல அக்னி வகைகளும் உண்டு.. இன்றைக்கும் வானத்தில் உள்ள பலவகையான மின்னல் காட்சிகள் நம் கண்ணால் காண முடியாத அளவிற்கு மிகுந்த ஆன்ம நுணுக்கம் கொண்டதாக, மிகவும் பிரம்மாண்டமானதாக இருக்கின்றன. இதே போல் நம் வயிற்றில், நாடியில் உள்ள் அக்னியை நம்மால் காண முடியாது! திருமலை முருகன் தான் இந்த சூட்சுமமான அக்னி சக்திகளின் பலன்களை நமக்கு அளிக்கவல்லவர்.. இதனால்தான் இங்குள்ள சுனைத் தீர்த்த அக்னி சக்தியானது உடலின் 72000 நாளங்களிலும் துரித கதியில் நிரவுவதாக, மிகவும் சக்தி வாய்ந்த அக்னி தீர்த்தமாக விளங்குகின்றது..! திருமலையின் மலைப்பாங்கே எவ்வாறு அமைந்துள்ளது என்றால் இங்கிருந்து முருகப் பெருமான் செலுத்துகின்ற அருட்கிரணங்கள் யாவும் பிரபஞ்சமெங்கும் விண்ணில் பரவுகின்ற அளவிற்கு குறித்த மெய்ங்ஞான விஞ்ஞானமயக் கோணத்தில் அமைக்கப் பெற்றுள்ளது..!

எனவே ஒரு கோயில் தீர்த்தத் திருப்பணி என்றால் அந்தக் கோயில் தீர்த்தத் திருப்பணியை நடத்த வேண்டிய இறைஆணையைப் பெற்றிருக்கின்ற சித்தர்களும் மகரிஷிகளும் முதலில் திருமலை முருகனைத்தான் தொழுகின்றனர். திருமலை முருகப்பெருமானின் திருச்சந்நதிக்கு வந்து இங்கு சூட்சும சுடர் ஒளி ஜோதியின் தத்துவத்தை உணர்ந்து அதன் ஞானத்தைப் பெறுகின்றார்கள்.. திருமலையில் இருக்கின்ற முருகன் ஞானத்தை மிக எளிமையான முறையிலே தர வல்லவர், யோக சக்திகளையும், தபோ பலன்களையும், உண்மையான பக்தியுடன் தொழுவோர்க்குப் பெற்றுத் தருபவர்.. சூட்சும அக்னி ஜோதி தரிசன பலன்களைத் தந்தருள்பவர்.!

சித்தர்கள் கூட்டி வைப்பதே எந்த ஆலயத் திருப்பணியும்!
எவ்வாறு ஒரு குடும்பத்தில் இல்லறத் தலைவன் அலுவலகத்தில் ஒரு பதவியைக் கொண்டவராகவும், குடும்பத் தலைவனாகவும் பல கடமைகளுடன் பணியாற்றுகின்றாரோ இதே போல ஒரே மூர்த்தியாக இருந்தாலும் திருமலை முருகனுடைய அருள்பாலிக்கும் தன்மைகள் வேறு, இலஞ்சி முருகனின் அருட்குணங்கள் வேறு! சித்தர்களும் மகரிஷிகளும் இலஞ்சி முருகனின் ஆசியுடன் திருமலையை கிரிவலம் வந்து திருமலை முருகனைத் தரிசித்து சூட்சும கோபுர இரகசியங்களை உணர்ந்து இலஞ்சி முருகனிடம் தம் தேவ முறைகளைச் சமர்ப்பிக்கின்றனர்.! கருவறைச் சீரடியார்கள் என்று இத்தகைய திருப்பணிச் சித்தர்களை அழைக்கின்றார்கள், கருவறைச் சீரடியார், கோபுரச் சீரடியார் என்று பலவிதமான சித்தர்கள் உண்டு. Divine plumbers, Divine Planners, Divine Architects என்று கூட இவர்களைச் சொல்லலாம். இவர்கள் தாம் ஒவ்வொரு ராஜ கோபுரங்களின் அடுக்கிலும் அமர்ந்து ஜப, தப, தியான யோகம் புரிந்து ராஜ கோபுரத்திற்கான தெய்வீக சக்தியை ஊட்டுகின்றார்கள்.. சித்தர்கள்தாம் கலியுகத்தில் ஆலய தெய்வீக சக்தி ரகசியங்களை உணர்வித்து எங்கு எவ்வித ஆன்ம சக்திகள் நிறைந்துள்ளன என்பதையும் கலியுக மக்களின் துன்பங்களைத் களைந்திடக் கடைபிடிக்கவேண்டிய வழிபாட்டு முறைகளையும் சற்குருமார்கள் மூலமாக அளிக்கின்றார்கள்!

தெய்வீக வாழ்வு

தெய்வீகமாக வாழ்வது எப்படி?

நம்முடைய தினசரி வாழ்க்கையில் அனைத்துக் காரியங்களிலும் எவ்வாறு தெய்வீகத்தைப் பிணைத்துக் கொள்வது என்பதற்கான எளிய இறை நெறிமுறைகளை, சற்குருவாம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த தெய்வீகத்தைப் பிணைத்துக் கொள்வது என்பதற்கான எளிய இறை நெறிமுறைகளை, சற்குருவாம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த வாக்கியங்களாக, நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் இத்தொடரில், சித்தோபநிஷத் வேத வாக்கியங்களாக அளித்து வருகின்றார்கள்! கலியுகத்தில் மனித குலத்தில் மிக வேகமாக விஷக் கிருமி போல் பரவி வருவது காமத் தீயொழுக்கமாகும். காமத்தீக்கு ஆட்பட்ட மனிதன் தனக்கு மூதாதையர்கள் தந்துள்ள விசேஷமான பூஜை முறைகளையும், அறநெறிமுறைகளையும் கடைபிடிக்க மறந்து தன்னுடைய ஆத்ம சக்தியையும் இழந்து கொண்டிருக்கின்றான். நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி அவனுடைய உள்ளத்தில் முறையற்ற தீய காம எண்ணங்களாலும் பெருத்துக் கொண்டிருக்கின்றன.

யோகம் போய் போகம் வந்துவிட்டதே!
மேலை நாடுகளிலோ கேட்கவே வேண்டாம், வீதிக்கு வீதி கேளிக்கையாட்ட விடுதிகள் தாம் நிறைந்து மேல் நாட்டு மனித சமுதாயத்தையே பாதித்து வருகின்றது.. குறிப்பாக இளைஞர்கள், இளைஞிகள் தவறான தீயொழுக்கப் பாதையில் செல்லத் துவங்கி விட்டார்கள். இதற்குக் காரணம் என்னவென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் தேவையான தெய்வீக வைராக்கியம், மனத் துணிவு, உடல் உறுதியைத் தருகின்ற யோகாசனப் பிராணாயாம பூஜை வழிபாட்டு முறைகளை மனிதன் இழந்து விட்டதால்தான்! இன்றைய கலியுக சமுதாயத்தின் தீய ஒழுக்கத்திலிருந்து மக்கள் மீள வேண்டுமென்றால் அவர்களுக்கு உள்ள இறைநெறி வழிமுறைகளில் ஒன்றே ஸ்ரீகாயத்ரீ மந்திரத் துதியாம்! ஜாதி, மத, இன பேதமின்றி ஒவ்வொரு மனிதனும் விழிப்பு நிலையிலே இருக்கும்போதெல்லாம் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஜபித்துக் கொண்டு இருக்க வேண்டும்.. இது வடமொழியில் / வேறு மொழியில் இருக்கிறதே என்று யோசிக்காதீர்கள்.. எந்த மொழியில் இந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரம் இருக்கிறது என்பதைவிட அதனை உச்சரிக்கும் போது எழுகின்ற தெய்வீகக் கிரணங்கள் தாம் நமக்கு முக்கியமானதே தவிர மொழி பேதத்தை இதில் கொள்ளக் கூடாது.. பிரபஞ்சத்திலே வானவெளியிலே இருந்து கொண்டு முப்பத்து முக்கோடி தேவர்களுடைய அருள் சொத்தாகி விளங்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை எவ்வித வேறுபாடுமின்றி பூலோகத்தின் அனைத்து ஜீவன்களுக்கும் பெற்றுத் தந்தவர்தாம் ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷியாவார்.. எனவே பகல் இரவு பாராது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒவ்வொருவரும் துதித்து ஓதி வருதல் வேண்டும்.. தினந்தோறும் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் தர்பைப் பாய் மேல் அமர்ந்து ஜபிப்பது தான் மிகுந்த பலன்களைத் தரும். ஆனால் கலியுகத்திலே இயந்திர கதியான வாழ்க்கையில் வாகனத்தில் செல்லும் போதோ, அலுவலகத்தில் இருக்கும் போதோ, பிரயாணத்தின் போதோ எப்போதும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி வந்தால்தான் மனம் ஒடுங்கி, மன ஒழுக்கமும், உடல் ஒழுக்கமும் தானாகவே அமையும்.!

காமம் சேர்க்கும் வல்வினைகள்! முறையற்ற காமச் செயல்களினாலும், காம எண்ணங்களினாலும் என்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.. எவ்வாறு பிறருடைய பொருளையோ, பணத்தையோ நாம் தொடக்கூட விரும்புவதில்லையோ, பிறருடைய சொத்து நமக்கு உரித்தானது இல்லை என்று எண்ணுகின்றோமோ அதேபோல எந்த ஆடவரையும் / மகளிரையுமே இறைவனுடைய உத்தமப் படைப்பு, பிறருடைய கணவனாகவோ/பத்னியாகவோ ஆக வேண்டிய ஆத்ம ஸ்வரூபம் என்று நீங்கள் உணர்ந்தால்தான் முறையற்ற காம உணர்வு தணியும். எந்த ஆணும்/பெண்ணும் ஒரு தாய் வயிற்றில் பத்து மாதம் குடியிருந்து வந்த பிறப்புதானே! அந்த பிள்ளையையோ, பெண்ணையோ பெற்று வளர்த்திட அந்தத் தாய் எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாள் என்பதை மனதில் சற்றே யோசித்துப் பாருங்கள்!

முறையற்ற எண்ணங்கள் ஏற்படுவதற்குக் காரணமே, முறையற்ற பார்வைதான். கண்களால் பார்க்கும் போதே எந்தப் பொருளையுமே அதனின் ஆத்ம ஸ்வரூபத்தைக் காண முயல வேண்டும்.. ஒரு மரத்தையோ, ஒரு புல்லையோ, ஒரு சுவரையோ, ஒரு பறவையையோ பார்க்கும் போது ஏற்படாத முறையற்ற காம உணர்வுகள், ஒரு ஆடவரையோ, மகளிரையோ பார்க்கும் போது ஏற்படுவதற்குக் காரணம் நம் உடலிலும், மனதிலும் அமைந்திருக்கின்ற முன் அனுபவ திகச் சுழல் ஆகும்! (Pre- fabricated Nodal Experiences)  இந்த முறையற்ற காம எண்ணங்களினால், செயல்களினால் ஏற்படுகின்ற அனுபவமானது ஒரு சில வினாடிகளுக்கே நிலைத்து நிற்கும் ஆனால் விளைகின்ற பாவங்களோ எத்தனையோ கோடி ஜென்ம ஜென்மங்களாகப் பெருக்கெடுத்து உங்களுடைய வாழ்வையே பாதித்துவிடும்.!

இல்லறமே நல்மருந்து! முறையற்ற காம உணர்ச்சிகளைத் தணிப்பதற்குத் தான் புனிதமான இல்லறம் என்ற ஒரு நல்மருந்தை இறைவன் நமக்குத் தந்திருக்கின்றான். முறைப்படுத்தப்பட்ட காமமானது நல்ல இல்லறத்தைத் தந்து, சந்ததிகளை விருத்தி செய்து தெய்வீக நெறிகளை இப்பூவுலகில் பரப்புவதற்குப் பெரும் துணை புரிகின்றது... ஒரு பெண்ணையோ, ஆணையோ முறையற்ற காம உணர்ச்சிகளோடு நோக்கினால், எத்தகைய பாவச் சுமைகள் குவிந்து விடுகின்றன தெரியுமா? ஒரு ஆணின், பெண்ணின் மானத்தைக் காப்பது ஆடைகள், எனவேதான் ஆடைகள் மிகுந்த புனிதப் பொருட்களுள் ஒன்றாக விளங்குகின்றன.. இதற்காகத் தான் அன்னதானம் போலவே, ஏழைகளுக்கு ஆடைகளைத் தானமான அளிப்பது மிகச் சிறந்த தானங்களுள் ஒன்றாக விளங்குகின்றது.

ஆடை தானமே காம வினை போக்கும்!

மானத்தைக் காக்கின்ற மகத்தான அறப்பொருளாக விளங்குகின்றன ஆடைகளுக்குப் பஞ்ச பூத சக்திகள் நிறைய உண்டு.. உணவின்றி ஒரு மனிதன் வாழ்ந்திடலாம்.. உடையின்றி இருந்தால் என்ன ஆகும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.. எனவே எப்போது முறையற்ற காம உணர்வுகள் உங்கள் உள்ளத்தில் எழுகின்றதோ, எத்தகைய ஆடைகளால் மானம் காக்கப் படுகின்றதோ, அந்த ஆடைகளையே உங்களுடைய வாழ்க்கைக் கர்ம பாக்கியாக ஒவ்வொரு முறையும் நீங்கள் சேர்த்துக் கொள்கின்றீர்கள். உதாரணமாக ஒரு ஆணை/ பெண்ணை முறையற்ற காம எண்ணங்களோடு நோக்கினால், அந்த மானத்தைத் காப்பதற்கான ஆடைகளை நீங்கள் தானமாகத் தந்தால் தான் அப்போது சேர்கின்ற பாவத்திற்கு ஓரளவ் பரிகாரமாக இது அமையும். இவ்வாறாக உங்கள் வாழ்க்கையில் எத்தனை முறை முறையற்ற காம எண்ணங்கள் எழுந்தனவோ அந்த அளவிற்கான மானம் காக்கும் ஆடைகளை நீங்கள் தானமாகத் தந்தால் தான் நீங்கள் பெருக்கியுள்ள மானக் கர்மச் சுமைகளுக்கு ஓரளவேனும் பிராயச்சித்தம் கிட்டும்.. இவ்வகையில் உங்களுடைய காமக் கர்மவினைக் கணக்குகளைக் கணக்கிட்டுப் பார்த்தால், உங்கள் வாழ்வின் முடிவில் கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் கஜம் அளவுள்ள ஆடைகளை நீங்கள் தானமாகத் தந்தால் தான் உங்கள் காமப் பாவப் பிறவிப் பெருந்தளைகளை நீங்கள் நீக்க முடியும்.. எனவே முறையற்ற காம எண்ண உணர்வுகளை நீங்கள் தணிக்க வேண்டுமானால், நிறைய ஆடைகளை தானம் செய்து வருதல் வேண்டும்.. எந்த அளவிற்கு நீங்கள் ஆடைகளை ஏழைகளுக்கு தானமாக அளிக்கின்றீர்களோ, அந்த அளவிற்கு உங்களுடைய முறையற்ற காம உணர்ச்சிகள் படிப்படியாகத் தணியும். ஏனென்றால் ஜீவன்களுடைய மானத்தைக் காப்பதற்காக நீங்கள் ஆடைகளை தானமாக அளிக்கும் போது, இந்த மானத்தைக் காக்கின்ற தார்மீகப் பொறுப்பு உங்கள் மனதில் கொஞ்சம் கொஞ்சமாக, வைராக்கிய சித்தியாக மலர்ந்து, பிற ஜீவன்களுடைய கற்பை, நல்லொழுக்கத்தை, மானத்தைக் காக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பையும் உணர்ந்து கொள்கின்றீர்கள்... இந்த ஆன்ம சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக விரிந்து, பிற ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக நாம் அரும்பாடுபடவேண்டும் என்ற ஆன்மத் தியாக உணர்வையும் ஊட்டுகின்றது. எனவே நீங்கள் ஆடைகளை உங்கள் வசதிக்கேற்ப அடிக்கடி தானம் செய்து வந்தால் தான் உங்களுடைய முறையற்ற காம உணர்ச்சிகளைத் தணிக்க முடியும்... ஸ்படிக லிங்க தரிசனம் புனிதமான எண்ணங்களைப் பெருக்கும்.!

விபத்தைக் களையும் ஆன்மீகம்

விபத்துகளைத் தவிர்த்திட – சில ஆன்மீக வழிமுறைகள்

இன்றைக்கும், நாடெங்கிலுமுள்ள சாலைகளில் குறித்த சில இடங்களில் அடிக்கடி விபத்துகள் ஏற்படும், மாதத்திற்கு, வாரத்திற்கு, வருடத்திற்கு ஒரு முறையேனும் இக்குறிப்பிட்ட இடத்தில் ஏதேனும் உயிர் பலியோ, வாகனங்கள் புரண்டு விடுதலோ, கவிழ்தலோ, எவரேனும் அடிபட்டுக் காயமடைதலோ துர் ஆவிகளின் சேஷ்டையாக ஏற்பட்டு விடுகின்றது.. காரணம் ஏனெனில் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நிகழும் இடத்தில் தீய சக்திகள் துர் ஆவிகளாகப் பெருக்கெடுத்து அலைந்து கொண்டிருக்கும். இவ்விடங்களில் படிந்துள்ள தீய சக்திகளை விரட்ட சில இறைவழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். எனவே, எந்த இடத்தில் விபத்துகள் அதிகம் நிகழ்கின்றனவோ, அவ்விடத்திலுள்ள வேப்பமரம், அரச மரம், வில்வ மரம் போன்ற சமித்து மரங்களுக்கும், மஞ்சள் குங்குமமிட்டுக் கற்பூர தீபம் காட்டி அவ்வழியே செல்வோர் கட்டாயம் வழிபட வேண்டும்.. அவ்விடத்தருகில் காவல் தெய்வங்கள் இருக்குமாயின் அதற்கு வேண்டிய அபிஷேக ஆராதனைகளைச் செய்வதோடு, பசுநெய் தீபம் ஏற்றித் தேங்காய் உடைத்து வழிபடுதலால் துர் ஆவிகளின் அக்கிரமம் அவ்விடத்தினின்று விலகும்.. மேலும் இடி விழுந்த மரங்கள் தாக்கப்பட்ட இடங்களில் பல துர் ஆவிகள் சங்கமம் ஆவதால் இவ்விடத்திலும் விபத்துகள் நிகழ்வதுண்டு.. எனவே இந்த இடி விழுந்த மரங்களைத் தக்க அனுமதியுடன் வேருடன் பெர்யர்த்தெடுத்து, விறகுக்குக் கூடப் பயன்படுத்தாமல் பூமியில் புதைத்து விடவேண்டும்.. இதுவும் விபத்துகளைக் களைவதற்கான ஆன்மீக வழிகளில் ஒன்றாகும்.. இவ்விடங்களில் வேம்பு, அரசு, ஆல், வில்வம் போன்ற சமித்து மரங்களை நட்டு வழிபடுதல் மிகவும் நன்மை பயக்கும்.

விபத்துகள் நிகழும் இடத்தில் ஆற்று நீரோட்டம் இருக்குமானால், இவ்விடங்களில் தினந்தோறும் முக்கியமாக வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில், வாழை இலையில், அகல் விளக்குகளில் பசுநெய் தீபமேற்றி நீரோட்டத்தில் விட்டு ஜோதி வழிபாடுதனை மேற்கொள்ள வேண்டும்.. இதற்கு ஜல சீருஷ கங்கா தீபம் என்று பெயர்.. இதனால், இவ்விடங்களிலுள்ள துர் ஆவிகள் சாந்தமடைந்து அவ்விடத்தை விட்டு நகர்வது மட்டுமல்லாமல், அதற்குரித்தான நற்கதி பெறுதற்கும் இந்த நீரோட்ட ஜோதி வழிபாடு பெரிதும் உதவுகிறது. இத்தகைய நல்வழிபாட்டு முறைகளையெல்லாம் விபத்து நடக்கும் இடத்திலுள்ள பொது ஜனங்களும், மற்றும் அவ்வழியே  செல்கின்ற வாகனங்களின் உரிமையாளர்களும், வாகன நிறுவனங்களும், கூட்டாக மேற்கொள்வதால் விபத்துகள் நிறைந்துள்ள பகுதிகளில் சாந்தமயமான பரவெளி நற்கிரணங்களை எளிதில் கூட்டுவிக்கும். மேலும், எப்பாலங்களில் அடிக்கடி விபத்து நிகழ்கிறதோ, அப்பாலத்திற்கு அடிக்கடி சுண்ணாம்பு, காவிப் பட்டை அடித்து, கங்கை, காவிரி, கோதாவரி, கிருஷ்ணா, தாமிரபரணி, கோமேயம் போன்ற புனித தீர்த்தங்களைத் தெளித்து வருதல் வேண்டும்.

மேலும், ‘வேல், வேல் வெற்றி வேல், சுற்றி வந்து எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!’ என்ற சக்தி வாய்ந்த ஆறுமுக கவச மந்திரத்தை, பிரயாணத்தின்போது எப்போதும் ஓதிவருதலும் குறிப்பாக விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்ற இடங்களில் டிரைவர்களும், கண்டக்டர்களும் மட்டுமின்றி அனைத்துப் பயணிகளும் துதித்து ஓதி வருவதால் விபத்துகளை அறவே தடுக்கலாம். மேலும், டிரைவர்களும், கண்டக்டர்களும், வாகன ஓட்டுனர்களும், கண்டிப்பாக வலது மணிக்கட்டில் காசிக் கயிறு எனப்படும் கறுப்புக் கயிறையும், இடுப்பில் அரைஞாண் கயிற்றையும் ரட்சையாகக் கண்டிப்பாக அணிதல் வேண்டும்.. இவையெல்லாம் துர் ஆவிகளிடம் சிக்காவண்ணம், நம் உடல், உள்ளம், மனதைக் காக்கின்ற இயற்கையின் இறை இரட்சைப் பரிசுகளாகும்..!

அன்னதான பாக்யம்

ஆஸ்ரமத்தின் விக்ரம ஆண்டு அருணாசல தீப அன்னதான பிரமோற்சவம்

திருஅண்ணாமலையில் அன்னதானமிடுவது வாழ்வில் பெறுதற்கரிய பாக்யமாகும். அன்னதானப் புண்ய சக்தியே சற்குருவைப் பெற்றுத் தரும், குருவருளைக் கூட்டித் தரும். அன்னதானப் புண்ணியமே கலியுகத்தின் பெரும் பாவங்களுக்குத் தக்க பிராயசித்தத்தைத் தேடித் தரும். சித்தர்கள் எப்போதும் நிறைந்து வாசம் செய்து என்றும் எந்நேரமும் கிரிவலம் வருகின்ற தலமாக விளங்குவதால் திருஅண்ணாமலையில் செய்யப்படுகின்ற அன்னதான வைபவத்தில் சித்தர்களும் பங்கேற்று, அன்னம் பெற்று ஆசியளித்து இறை பக்தியைச் செம்மையாக்குகின்றார்கள் ! இறைவனை நம்புவது மட்டும் போதாது, நிமிடத்திற்கு நிமிடம் இறை நம்பிக்கை வலுத்து உண்மையான பக்தியாக உருப்பெற்றால்தான் சற்குருவைப் பெற முடியும். இதற்குப் பெருந்துணை புரிவது திருஅண்ணாமலை கிரிவலமும், அன்னதானமும் ஆகும். இப்பூவுலகில் மிகவும் பிரம்மாண்டமான அக்னி லிங்கம் திருஅண்ணாமலையே! இப்பிரபஞ்சத்தில், அனைத்துக் கோடி லோகங்களுக்கும் அண்டங்களுக்கும், கோளங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும், ஜீவன்களுக்கும் ஜோதிப் பிரகாசத்தையும் பரவசத்தையும் ஜீவ சக்தியையும் அளிப்பதே திருஅண்ணாமலை அருணாசல புனித பூமி! ஆம், எங்கள் ஆஸ்ரமத்தின் பிரமோற்சவமாக, ஸ்ரீஉண்ணாமுலை உடனுறை ஸ்ரீஅண்ணாமலையாரின் இறைத் திருவருளுடன், சற்குருவாம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருளுடன் அவர்தம் சிஷ்யத் தோன்றலாம் சித்த மஹா குருபாரம்பர்ய வழி வந்த நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீ R.V வெங்கடராமன் அவர்களால் சித்த நெறி வழி முறையில் ஆஸ்ரம அன்னதானம் மகத்தான முறையில் தெய்வீக வைபவமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் குருவருளாணையாக ஏழைகளுக்கான இலவச மருத்துவ உதவி, திருமணங்களுக்கான உதவி, பொன் மாங்கல்யம் அளித்தல், வறிய மாணவர்களுகுப் படிப்புதவி, மாளய அமாவாசை, மாசி மகம், நவராத்திரி, திருஅண்ணாமலை தீபம் போன்ற விசேஷமான நாட்களிலும் அன்னதானம் நடத்துதல் போன்ற அரிய பல இறைப் பணிகளை அடக்கத்துடன் எளிமையுடனும் எவ்வித படாடோபமோ, விளம்பரமோ, இன்றித் தம்மை வெளி உலகிற்கு விளம்பரம் செய்து கொள்ளாமல் குருவருளாணையாக ஆற்றி வருகின்றார்கள். நடப்பு ஆண்டு விக்ரம ஆண்டின் திருஅண்ணாமலை கார்த்திகை தீபப் பெருவிழாவின் போது ஆஸ்ரமத்தின் அன்னதான பிரமோற்சவம் சிறப்பான அன்னவகைகளுடன் அன்னதானப் பெரு வைபவமாக நடக்க இருக்கிறது.. இந்தத் தெய்வீகக் கையங்கர்யத்தில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் காணிக்கையை வங்கி D.D- யாகவோ, காசோலையாகவோ (cheques) – மணி ஆர்டராகவோ அனுப்பி புண்ய சக்தியை நல்வரமாகப் பெற்றிடப் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

ஸ்ரீஅகஸ்திய விஜயம் – Chamber No: 7, Sagas Complex, Post Box No : 6303, No: 4, Sri Kapaleeswarar South Mada Street, Chennai – 606004. Phone : 4957276.

பௌர்ணமி கிரிவல நாள் : 11.11.2000 சனிக்கிழமை விடியற்காலை 4.38 முதல் இதே நாள் பின் இரவு 2.45 வரை திருக்கணித பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகின்றது... கிரிவல நாள்: 11.11.2000

நித்ய கர்ம நிவாரணம்

1.11.2000 – இன்று கணவனுக்குப் பாத பூஜை செய்திடில் குடும்பத்தில் அமைதி நிலவும்.

2.11.2000 – இரண்டாம் தாரமாய் வாக்கைப்பட்டவர்கள் மூத்த தாரத்தின் குழந்தைகளுக்குப் புது ஆடைகளைத் தருவதால் கணவனுக்கு உத்தியோகத்தில் வரும் பிரச்சனைகள் தீரும்.

3.11.2000 – கோணி தைக்கின்றவர்களுக்கு உணவு, ஆடை தானம் – நீண்ட நாள் மறைத்து வைத்த செய்தியால் வருகின்ற துன்பம் தீரும்..

4.11.2000 – ஏகாந்தமாய் இருக்கின்ற சிவன் கோயிலுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்து, தேன் கூடிய நைவேத்யமும் தானம் செய்திட நீண்ட நாள் தொல்லைக்குத் தீர்வு பெறுவர்.

5.11.2000 – இன்று ஹயக்ரீவப் பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, படிக்கும் குழந்தைகளுக்கு இலவசப் புத்தகங்கள் வாங்கித் தருவதால் உத்தியோக உயர்வுக்காக எழுதுகின்ற தேர்வுகளில் வெற்றி பெறலாம்.
6.11.2000 – சொர்ணபுரீஸ்வரர் என்ற நாமம் பூண்ட சிவனுக்கு அபிஷேக ஆராதனை செய்து அன்னதானம் செய்திடில் தங்க நகை வியாபாரிகள் நலம் பெறுவர்.

ஸ்ரீஉலகளந்த பெருமாள் காஞ்சிபுரம்

7.11.2000 – நின்ற நிலைப் பெருமாளுக்குத் தேங்காய் எண்ணெய்த் தைலக்காப்புச் சார்த்தி, தேங்காய் சாதம் படைத்து அன்னதானம் செய்திடில் வக்கீல்களுடைய வாதத்திற்கு நல்ல பாயிண்டுகள் கிடைக்கும்.

8.11.2000 – உலகளந்த பெருமாளுக்குத் (திருக்கோவிலூர், காஞ்சீபுரம், சென்னை திருநீர்மலை) திருமஞ்சனம் செய்து, அன்னதானம் செய்திடில் நிலப்பட்டா வழங்குபவர்கள், பத்திரம் எழுதுபவர்கள் (document writers) உத்தியோகத்தில் நல்ல திருப்பம் பெறுவர்.

9.11.2000 – மீனாட்சி என்ற நாமம் பூண்ட அம்பாளுக்குப் புது வஸ்திரம் சார்த்தி, அன்னதானம் செய்திடில் உத்தியோகம் செய்யும் மனைவிக்கு நல்ல மாற்றம் காணலாம்.

10.11.2000 – இன்று கோயில் யானைகளுக்கு நல்ல உணவிட்டு வணங்கி வந்தால் நம்பினவர்களால் மோசம் போக மாட்டார்கள்.

11.11.2000 – அனாதை இல்லத்தில் இருக்கின்ற பேரிளம் பெண்களுக்கு ஓராண்டு காப்புத் தொகையை அன்பளிப்பாய் அளித்திடில் வீட்டில் மருத்துவச் செலவுகள் குறையும்.

12.11.2000 – தையல் தொழிலாளர்களுக்கு அவர்கள் கையாலேயே அவர்களுக்கு ஆடை தைக்கும்படிச் சொல்லி, தைத்து வந்த துணியை அவர்களுக்கே தானமாய் அளித்திடில் வெட்டிப் பிரிந்தவர் ஒட்டி இணைவர்.

13.11.2000 – சந்திரமௌலீஸ்வரர் என்ற பெயருடைய சிவனுக்கு (உ.ம் முசிறி, திருவக்கரை) அபிஷேக ஆராதனை செய்து, சந்திரனுக்குரிய பால், தேன், தயிர் சாதம், அன்னதானம் அளித்திடில் சொன்ன வாக்கைக் காப்பாற்றும் சக்தியைப் பெறுவர்.

14.11.2000 – கூண்டில் அடைக்கப்படாமல் இயற்கையாய்ச் சுற்றித் திரியும் பச்சைக் கிளிகளுக்கு இன்று உணவளித்து அருளாசி பெறுவதால் சுகப் பிரசவம் ஏற்படும்.

15.11.2000 – இன்று குட்டி யானைகளை யானைப் பாகன் உதவியுடன் குளிப்பாட்டி, பஞ்சாட்சரம் ஓதி ஜபித்த திருநீற்றைக் குழைத்து அந்தக் குட்டி யானைக்கு நெற்றியில் இடும்படிச் செய்து கரும்பை உணவாக அளித்திடில் சுரங்க வேலை செய்பவர்கள்.. இரும்புத் தாதுப் பொருட்கள் தோண்டி எடுக்கின்ற பணியில் உள்ளோர் நலம் பெறுவர்.

16.11.2000 – இன்று இராமர் கோயிலில் சுவாமிக்குச் சந்தனக் காப்பு இட்டு அனைத்து அன்பர்களுக்கும் அந்தச் சந்தனத்தை வினியோகம் செய்திடில் எதிர்பாராது வருகின்ற செய்தியால் ஏற்படுகின்ற மாரடைப்பிலிருந்து (heart attack) விடுதலை பெறலாம்.

ஸ்ரீஉலகளந்த பெருமாள் திருநீர்மலை

17.11.2000 – இன்று (sky blue) வெளிர் நீலவண்ண ஆடை அணிந்து, சுக்கிர பகவான் வழிபட்ட முருகன் கோயிலுக்குச் சென்று தான தர்மங்களும், பூஜைகளும் செய்திடில் வாழ்க்கையில் சொகுசுக் கார் பயணம் கிடைக்க சந்தர்ப்பங்கள் நிறைய வரும்.

18.11.2000 – மேய்ச்சலுக்குச் சென்ற பசுக்கள் மாலை இல்லம் திரும்பி வரும்போது ஏற்படுகின்ற கோதூளி (பசுபாதத் துளிமண்) எடுத்து இன்று தேய்த்துக் குளித்திடில் சிற்றன்னையால் வர இருக்கின்ற ஆபத்துக்கள் விலகும்.

19.11.2000 – இன்று தர்மராஜா இருக்கின்ற கோயில்களில் தண்ணீர் கலக்காத எருமைப்பால் தானம் செய்வதால் வேலை செய்யும் இடத்தில் திடீரென்று ஏற்படுகின்ற ஆபத்திலிருந்து தப்பிக்கலாம்.

20.11.2000 – இன்று மஞ்சள் புடவையில் சிவப்பு பார்டர், மஞ்சள் வேஷ்டியில் சிவப்பு பார்டர் உள்ள ஆடையை அணிந்து ராகு காலத்தில் துர்கை அம்மனை வலம் வந்து வணங்கி, அன்னதானம் செய்திடில் அன்பு உள்ளங்கள் பிரிந்திருந்தால் மீண்டும் சேரும்.

21.11.2000 – குடும்பத்தோடு ஆறு, குளம், ஏரி, நதியில் நீராடும் போது அதில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டால் உடன் சென்றவர்கள் அவர் இறந்ததாக நினைத்துப் பல இடங்களில் நீர்க்கடன் (தர்ப்பணம்) செய்வதுண்டு., ஆனால் அவ்வாறு அடித்துச் செல்லப்பட்டவர்கள் இறக்காமல் வேறு எங்காவது ஒதுங்கி உயிரோடு வாழலாம். அவ்வாறு குடும்பத்தில் ஏற்பட்டிருந்தால் அவர்கள் இன்று (21.11.2000) (கும்பகோணம் அருகே) ஸ்ரீவாஞ்சிநாதரை அபிஷேகித்து அன்னதானம் செய்திடில் காணாமல் போனவரைப் பற்றி செய்தி வர வாய்ப்பு உண்டு.

22.11.2000 – முதல் தாரம், இரண்டாம் தாரம் மூலமாகக் குழந்தையின்றிப் பணிப்பெண் மூலமாகத் தகாத முறையில் குழந்தையைப் பெற்று அப்பணிப் பெண்ணை நிராகரித்து விட்டுப் பெரும் பாவம் புரிவோர் உண்டு. அக்குழந்தை பெரிதாகித் தன் பிறப்பு ரகசியம் உணர்ந்து தன்னுடைய தந்தையின் பாவந் தீர்க்க ஓரளவு பிராயச்சித்தம் கிட்டும் நாள். இன்று ஆண் ஆடு, பெண் ஆடு இரண்டையும் வாங்கி அவற்றிற்குத் திருமணம் செய்வித்து, ஏழை ஆடுமேய்க்கும் குடும்பத்திற்கு தானமாய் அளித்து, அந்த ஆடுகள் குட்டிகள் பெருகி வளர்ந்தவுடன் தாய், தந்தை ஆடுகளைக் கோயில்களுக்குப் பக்தியுடன் தானமாய் அளித்திடில் ஓரளவுப் பிராயச்சித்தம் பெறலாம்.

23.11.2000 – முதலாளியை மணந்து பணியாளரை / தொழிலாளரை கணவனாக வரித்துச் செய்கின்ற பாவத்தால் / துரோகத்தால் விளைகின்ற கர்ப்ப உரு எதிர்காலத்தில் தீயவராய் மாற வாய்ப்புண்டு. இவ்வாறு தகாத உறவில் பிறந்தவர்கள் தங்கள் இரகசியத்தால் இந்த நாளில் பாதிப்படைவர். தக்க பிராயச்சித்தமுறைகளை அறிய பெரியோர்களை / குருவை நாடவும்.

24.11.2000 – மனோ வசியக் (hypnotism) கலைகளைக் கற்றவர்கள் தவறான வழியில் தங்கள் சக்திகளைப் பயன்படுத்திடில் ஏற்படுகின்ற ஆபத்திற்குப் பல கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் தவறுகளைத் தொடர்ந்து செய்யாமல் இருப்பதற்கு அபூர்வமாக இந்நாள் மட்டும் ஒரு வழிகாட்டும் நாளாக அமைகின்றது, ஸ்ரீஅகோரேஸ்வரர் சன்னதி இருக்கும் இடத்தில் (உ.ம் திருவெண்காடு) சத்திய சங்கல்பம் செய்து மீண்டும் தவறு செய்ய மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து,, இன்று (24.11.2000) இந்த ஆலயத்தில், அன்னதானம் செய்திடில் தாங்கள் செய்த தவற்றிற்கான தண்டனைச் சிறிதளவேனும் குறையும் நாளிது!

25.11.2000 – இன்று சுவாமி மேற்கே பார்த்திருக்கும் முருகன் கோயிலில் அன்னதானம் செய்து முருகனை வணங்கிடில் அரசாங்கத்திலிருந்து வரவேண்டிய நிலுவைத் தொகை வந்து சேர வழி பிறக்கும்.

26.11.2000 – துப்புறவப் பணி செய்வோர் இன்று கவனமாய் இருத்தல் நலம் தரும்.. வேலை செய்யும் போது விளையாட்டாக ஆபத்தைச் சந்திக்க நேரிடும்.. குல தெய்வத்தை வணங்கி தர்மம் செய்திடில் நலம் தரும்.

27.11.2000 – மோட்டார் சைக்கிள் போன்ற இரு சக்கர வாகனங்களை ஓட்டுகின்றவர்கள் ஓட்டும் போது அடிக்கடி காலைத் தரையில் ஊன்றிக் கொண்டு ஓட்டுவார்கள். அவ்வாறு ஓட்டும் போது பக்கத்தில் வருகின்ற வாகனங்கள் காலை நசுக்க சந்தர்ப்பம் ஏற்படும் நாளிது. பாதங்களைப் பாதுகாக்க காலணிகள் தானமளித்து (வேதாந்த தேசிகருடைய ஸ்ரீபாதுகா துதி) ஸ்ரீபாதுகா துதியைத் தோத்தரித்து வெளியே சென்றிடில் நலம் பெறலாம்.

28.11.2000 – இன்று குழந்தைகள் சேட்டை செய்தால் அடிக்காமல் இருப்பது நலம். அவர்களுக்கு பால வினாயகர் துதியைச் சொல்லித் தரவும். இன்று குழந்தைகளை அடித்தால் இந்த அடியின் பாதிப்பு உள் மனதில் ஆழத்தில் பதிந்து பாதிப்பைத் தரும்.

29.11.2000 – இன்று செல்வ கணபதி பூஜை நலம் தரும். கொழுக்கட்டை தானம் புதிய கடன்களை உருவாக்காது.

30.11.2000 – வட்ட ஒலி ஈர்ப்புக் கைப்பெட்டி (cell phone) வைத்திருப்பவர்கள் இன்று அதிகமாகப் பயன்படுத்த வேண்டாம். அக்கருவி மூலம் கேட்கின்ற செய்திகளால் உடல் பாதிப்படையும்.

ஸ்ரீமருவார்குழலி சமேத ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் செம்பொனார்கோவில்

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam