ஆத்மாவின் தரிசனம் பெற்றவனே ஆன்மீகவாதி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

மழையில் நனைந்த மாமந்திரம்!

“வருஷத்துக்கு நாலஞ்சு தடவையாவது, கொட்டற மழையில வருண காயத்ரீ, சமஷ்டி காயத்ரீ சொல்லிக் கிட்டே நனைஞ்சு போகணும்டா! அப்பத்தான் வானத்துலேந்து மந்திர சக்திகள் கலந்து வர்ற மழைத் தண்ணீர்ல, நாம சொல்ற காயத்ரீ மந்திர சக்தியும் சேரும். ஆறு, கிணறு, குளம், ஏரி, கடலுக்குள்ள கலந்து, எல்லா ஜனங்களுக்கும் கிடைக்கும். இதுவே ஒரு பெரிய சமுதாய சேவை தெரியுமா! இந்த காயத்ரீ மந்திர சக்தி கலந்த ஜலம், ஊத்து நீரா, பூமியடி நீரோட்டமா திரும்பவும் நமக்கே வந்து சேரும்!” பெரியவரின் வாக்கு சிறுவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது!

வெளியில் நல்ல மழை! அப்போது பெரியவரும், சிறுவனும் திருஅண்ணாமலைக்குச் செல்லும் பஸ்ஸில் இருந்தார்கள்!

“சரிதான்! நடுவில் இறங்கி, நன்றாக மழையில் நனைய விடப் போகின்றார்!” என்று சிறுவன் எண்ணியவாறே, எதற்கும் ரெடியாகத்தான் இருந்தான்!

அக்காலத்து மாதம் மும்மாரி பெய்த மழை என்றால் கேட்கவா வேண்டும்! மழைத் துளி ஒவ்வொன்றும் கனமோ கனமாய்த் தலையில் ஓங்கி விழுமே! திருஅண்ணாமலை மழை என்றாலே, இன்றைக்கும் தனி விசேஷம் தான்!

அந்த பஸ், காஞ்சீபுரம், செய்யாறு வழியாகத் திருஅண்ணாமலை செல்வதாகும். ஆனால் காஞ்சீபுரம் வந்ததுமே பெரியவர் இறங்கி விட்டார். ஏனோ? யாரறிவார் சிவாபரமே! பெரியவர் எது செய்தாலும் அதில் ஆயிரத்தெட்டு காரண, காரியங்கள் இருக்கும் என அவனுடைய உள்மனது உரைத்தாலும், சிறுவனானதால், அவனால் பரிபூரணமாக அவரை அறிய இயலவில்லை! அல்லது அவர்தான் தன்னை உணர விடாது. இவனை அழுத்தி வைத்துள்ளாரா? ஆனால், அவர் யாரென அவன் உணரலான போது, அவர் ஒட்டு மொத்தமாகப் பூமியிலிருந்து தன்னை மறைத்து “மறைந்தே போனாரே!”!

அவர் பரிபூரணமாகத் தன்னை மறைத்துக் கொண்ட பின்தான், “ஏன் அவரை அறியலானோம், முன் போல அவரைச் சாதாரணப் பெரியவராகவே பார்த்திருக்கலாமே!” என ஏங்கினான்!

கண்டேன், கண்டேன், சித்தரைக் கவினுறக் கண்டேனே!

சிறுவனுடன் நேரே ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்துக்குச் சென்ற பெரியவர் அப்போது அங்கு ஆலய வளாகத்தில் உறைந்து வந்த “போடா சுவாமி சித்தரைத்” தரிசித்தார்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“சாமீ! நம்ம புள்ளையாண்டான்! நல்லா கவனிச்சுக்கங்க!” என வேண்டி, பெரியவர் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிச் சித்தரை வேண்டிட,

போடா சுவாமி சித்தரும், தமக்கே உரித்தான பொக்கை வாய்ப் புன்முறுவல் நிறைந்த, சுழித்த வாயால் ஏதோ சொல்லி, கைகளை அசைத்து ஆசீர்வதித்திட்டார். எப்போதும், தமக்கே உரித்தான பாணியில், “போடா” மொழியில் ஓரிரு வார்த்தைகளையே பேசும் சித்தர்பிரான், இன்றோ, பெரியவருடன் நன்கு சிரித்துப் பேசுவதைக் கண்டு சிறுவன் ஆச்சரியமடைந்தான்! சித்தர்களைச் சித்தர்கள் தாமே அறியலாகும்!

பல்லாண்டுகளுக்கு முன் நடந்த அனுபூதிகள் யாவும் இன்றும் படிக்க, கேட்க என்றென்றும் தித்திப்பவைதாமே!

அப்போதெல்லாம் போடா சுவாமி சித்தர் ஓரளவு நடந்து வருவார். கண்ணுக்குப் பட்ட ரிக்ஷாவில் ஏறி உட்கார்ந்து கொண்டு விடுவார். அவரை வைத்து ரிக்ஷாவை ஓட்டிச் செல்ல, பலரும் போடி போட்டுக் கொண்டு முன் வருவார்கள்.

அன்று சிறுவனுடன் மிகவும் அதிசயமாய்ச் சற்று நேரம் தங்கிய பெரியவர், போடா சுவாமி சித்தருடன் ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார். ஆனால் அவர்கள் பேசியது எதுவுமே சிறுவனுக்கோ, அருகில் இருந்த மற்றவர்களுக்கோ புரிபடவில்லை!

அவர் அங்கமெல்லாம் சிவ அசைவே!

பெரியவர் புறப்பட்டுப் போன பின், சிறுவன், சித்தரின் திருமேனி அசைவுகளை நன்கு உன்னித்துக் கவனிக்கலானான்! அவருக்கு இட்லி, டீ என்று ஏதாவது வாங்கி வந்து அளித்து, அவர் உண்டு மிஞ்சியதைச் சிவப் பிரசாதமாகத் தானும் உண்டு, கச்சிமயான சன்னதி (இது ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள மிகவும் சக்தி வாய்ந்த நான்கு மயானச் சிவ சன்னதிகளுள் ஒன்று எனப் பலரும் அறியாதது, தரிசிக்காது) ஓரத்தில் பயத்துடன் உட்கார்ந்து கொண்டு, அவரையே இடைவிடாது பார்த்துக் கொண்டே இருந்தான்.

நேரம் ஆக, ஆக, அவருடைய ஒவ்வொரு அசைவையும், வார்த்தையையும் மேலும் மேலும் சிறுவன் நன்கு உற்றுக் கவனிக்கலானான். இதற்கு முன் அவரைப் பலமுறை தரிசித்திருந்தாலும், இம்முறை அவனுக்கு “சித்தருக்குள்” பல அரிய விளக்கங்களும், தரிசனங்களும் கிட்டின! உள்ளொளிதானே உண்மையில் உய்விப்பது! அவை யாவும் சொன்னாலோ, எழுதினாலோ புரிய மாட்டாதவை! புனிதமான தெய்வீக உள்ளத்தால் மட்டுமே அறிய வல்லவை, உணரப் பெற வேண்டியவை!

“இங்கேயே உட்கார்ந்துக்கிட்டு அண்டசராசரத்தையும் ஆட்டி வைக்க வல்லவர்டா!” பெரியவர் போடா சுவாமி சித்தரைப் பற்றி ஊட்டிய வேத வாக்கியங்கள் அவனுக்கு நினைவுக்கு வந்தன! சித்தரைப் பற்றிய அவருடைய தேவாமிர்த வாக்கியங்கள் அவனுள் எதிரொலித்தன. சொல்லச் சொல்லத் தித்திக்குமே சித்தர்களின் அனுபூதி! இரவெல்லாம் சித்தர்பிரானின் அருகே உட்கார்ந்து அவரையே கவனித்துக் கொண்டே இருந்தான்.

சில சமயங்களில், தன் மடியில் மிகவும் தைரியமாக, அவருடைய தலையை வைத்துக் கொண்டு, அவருடைய வழுக்கைத் தலையையும், தாடியையும் கோதி, விசிறி விட்டான்!

சிக்கெனப் பிடித்தாயா சிறுவா?

பெரியவரோ, “அவரிடம் நிறைய விஷயம் இருக்குடா! நல்லா கிரகிச்சுக்கோ!” என்று வேறு சொல்லி விட்டுப் போய் விட்டார்! இங்கோ, இவர் ஏதாவது பேசினால்தானே, எதையாவது செய்யச் சொன்னால்தானே, எதையாவது கற்றுக் கொள்ள முடியும்! எங்கேனும் யானையைப் பார்த்தால் நாம் அதன் ஒவ்வொரு அங்க அசைவையும் கவனிப்பது, போல காலையிலிருந்து இரவு வரை, சற்றுத் தள்ளியே அமர்ந்து கொண்டு, அவன் சித்தரையே பார்த்துக் கொண்டிருந்தானே தவிர, அவரும் இவனைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை! அல்லது அவர் பாணியில் “உள்ளுள் உறைஞானமாய்” உணர்த்துகின்றாரா! ஒன்றுமே புரியவில்லையே!

ஸ்ரீபோடா சித்தர் காஞ்சிபுரம்

சித்தர்கள் எப்போதும் புதிராய் இருந்து, அருளை மட்டும் குதிராய்ப் பொழிவது ஏனோ? ஒரு வேளை அவனுக்கு “ஏதேனும்” உள்ளொளி மறையாய் அவர் கற்றுக் கொடுத்தாரோ? அவர் எழுந்து செல்லும் இடமெல்லாம், இவனும் பின்னாலேயே சென்று வந்தான்! ஏனென்றால் சித்தர்கள் தரிசனமே பெரிய ஞான அமுது ஆயிற்றே!

சித்தமெல்லாம் உனக்குச் சிவமயமே!

யார் யாரோ வருவார்கள், போவார்கள், அவரிடம் ஏதேதோ சொல்வார்கள்! அவர்களிடம் இவரும் ஏதேனும் சொன்னது போலவோ அல்லது ஒன்றுமே பேசாதது போலவோதான் இருக்கும். வேறு ஒன்றும் அவன் மனதில் உறைக்கவில்லை! காரணம், சித்தர்பிரானையே தன் சிந்தனையில் புகுத்தியதனால், சிறுவனுக்கு அங்கே, அருகே, சுற்றுப்புறத்தில் என்ன , ஏது நடக்கின்றது என்பதே தெரியாமல் போயிற்று!

அவருடைய நீண்ட நகங்கள், நெடுவிரல்களின் அசைவுகளையும் அவன் நன்கு கவனித்துக் கொண்டான். அவருடைய விரல் அசைவுகளில் அவன் பல முத்திரைகளையும் கண்டு அதிசயித்தான்! விதவிதமாக, அவர் கால்களை மாறி, மாறி வைத்துக் கொண்டு இருந்ததையும் பார்த்து, இவனும் அதே போல் செய்து பார்த்துக் கொண்டான்.

திடீரென்று அவர் வானத்தை நோக்குவார்! கை கால்கலை முறித்து, ஒருவிதக் கோல(ண)த்தில் திரும்பிப் பார்ப்பார். இதையெல்லாம் குழந்தை சேஷ்டை போல், சிறுவன் தானும் செய்து பார்த்துக் கொள்வான். சிலவற்றைச் செய்யும்போது, அவனால் மேலும் செய்ய முடியாது, வலியால் திணறும் போது, சித்தர் சற்றே சிரிப்பார்!

சித்தர் உறங்குவதில்லை!

அவர் எப்போதாவது உறங்கியது போலவே தெரியவில்லையே! சித்தர்களுக்கு எங்கே உறக்கம்? அவர்கள் கொள்வது எல்லாம் யோக நித்திரைதான்! சித்தர்கள் தூங்கி விட்டால் உலகப் பரிபாலனம் என்னாவது? அவர் சற்றே கண் அசந்தது போல் தெரிந்தாலும், திடீரென்று விழித்துக் கொண்டு உலாவத் தொடங்குவார்.

இரவில்…

அவர் யோக நித்திரை கொள்வதையே பார்த்துக் கொண்டிருந்தவன், அப்படியே தூங்கிப் போய் விட்டான். அன்று அவனுக்கு வந்த கனவோ மிகவும் அதிசயமாக, அற்புதமாக இருந்தது.

எங்கு பார்த்தாலும் மஞ்சள் நிற அக்னிப் பிரவாகம்! சுற்றிலும் எங்கு பார்த்தாலும் நெருப்பு.. ஆனால் குளுமையான, சாந்தமான அக்னியே!

அவன் சென்ற இடமெங்கும் எங்கும் அக்னி நிரவிட… இல்லை, இல்லை அக்னி நிரவிய இடமெங்கும் இவன் சென்றிட.. அவன் நடந்தான்,. நடந்து கொண்டே இருந்தான்!

காஞ்சிபுரம்

இருபுறமும் அக்னிச் சுடர்கள்! கற்பூரம் ஏற்றினாற் போல் இளகிய, இதமான மணம், ஓரளவே மிதமான சூடு.. கமகமவென்ற கற்பூர மணத்தின் ஊடே அவன் நடந்தான், நடந்து கொண்டே இருந்தான்! எப்போதும் நடந்து போய்க் கொண்டே இருப்பதாக எங்கேனும் ஒரு கனவு வருமா? ஆனால் அவனுக்கு வந்ததே! ஒரு வழியாய் நடந்து நடந்து களைத்துப் போய்… கண்களைத் திறந்து பார்த்தான்!

“அடடடா! கோயிலில் படுத்துத் தூங்கினால் மலைப் பாம்பாய்ப் பிறப்பு வந்திடுமே!” சிறுவன் பயந்து விட்டான்!

“நல்ல வேளை நாம் தூணில் சற்றுச் சாய்ந்தோம், அவ்வளவுதானே!” என்று கூறி அவன் தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான்.

மறையவர் மறைத்த மாமத யானை!

எழுந்து பார்த்தால்… கண்ணைக் கசக்கிப் பார்த்தால்… சித்தரைக் காணோம்! அவரோ கச்சி மயானச் சன்னதிப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தார். அப்போது ஆலயத்தில் யானைகள் இருந்தன!

அவருக்கு மிக, மிக அருகில் ஒரு யானை இருந்தது! ஒரு வேளை இவர்தான் அதனருகில் சென்று விட்டாரோ! சிறுவன் வெலவெலத்துச் சிலிர்த்துப் போய்த் தள்ளி உட்கார்ந்து கொண்டு விட்டான். ஏனென்றால் அன்றுதான் யாரோ ஒருவரை யானை, தன் துதிக்கையால் சுருட்டிட, எல்லோரும் பதறிட, சித்தர்பிரான் இங்கிருந்தவாறே யானையைப் பார்த்து குரல் கொடுத்து, “போடா!” என்று உரைத்திட, அதில் என்னதான் பீஜாட்சர மந்திரங்களைப் பதித்திருந்தாரோ, தெரியவில்லை, யானை மிகுந்த சாந்தத்துடன் மெதுவாக அவரை விடுவித்து, சித்தரை வணங்கிய காட்சி பலரையும் மெய் சிலிர்க்க வைத்திருந்தது!

ஆண்டுகள் பல ஆனாலும் இந்த அனுபூதி பசுமையாக இருக்கின்றதே! பிறகு அங்கும் அசதியால் சிறுவன் அயர்ந்து விட்டான். மீண்டும் அதே அக்னிக் கனவு! எங்கு பார்த்தாலும் அக்னிப் பிரவாகம் சிறுவன் நடந்தான், நடந்து கொண்டே இருந்தான்!

அதற்குள் மீண்டும் விழிப்பு வந்து விட்டது. சிறுவன் திடுக்கிட்டுக் கண்ணைத் திறந்து பார்த்தால்.. மீண்டும் சித்தரைக் காணோம், சுற்றிச் சுற்றி வந்தால்.. அவர் யானை அருகில் உட்கார்ந்து கொண்டிருப்பது கண்டு திகைத்தான்! இவற்றை நிகழ்த்தி அவனுக்கு என்னதான் புகட்டுகிறாரோ?

ஆனால் அவருடைய அசைவுகளை யோகப் பூர்வமாகக் கவனிப்பதில் அவனுக்குச் சற்றும் சலிப்பு ஏற்படவில்லை! தேவாமிர்தமும், பாற்கடல் அமிர்தமும் திகட்டுமா?

கண்டறியாதன கண்டான்!

ஏதோ ஓரிரு மணி நேரத் தூக்கம் தவிர, அவன் சற்றுத் தள்ளி அமர்ந்து அவரை நன்கு கவனித்ததைத் தவிர, வேறு ஒன்றும் அவனுக்குப் புலப்படவில்லை. புரிபடவில்லை! எவ்வளவு மணி நேரம்தான், இடைவிடாமல் அவர் செல்லும் இடமெல்லாம் சென்று, அவர் செய்கின்ற காரியங்களை எல்லாம் கவனிப்பது? அவர் எங்கே, காரியம் எதையும் செய்வது போலத் தோன்றவில்லையே! ஞானி போல், யோகி போல் எப்போதும் ஏதோ ஒரு லோகத்தில் இருப்பது போல் அல்லவா இருக்கின்றார்!

அந்த தள்ளாத வயதிலும், உடலில் சற்றும் நீர் படாமல் சென்று, கோயில் குள நடு மண்டபத்தில் அமர்ந்து கொள்தல், பெரும்பானோரிடம், “போடா, போடா!” என்ற ஒருமை பாணியில் பேசியது…. ஆங்காங்கே நடத்தல், ரிக்ஷாவில் அமர்ந்து சென்று வருதல்… அவருடைய விநோதமான செயல்கள் பற்றி முதலில் சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை!

மறுநாள்…

திடீரென்று அங்கே வந்த பெரியவர், நேரே போடா சுவாமிச் சித்தரிடம் வந்து, “பையனுக்கு எல்லாம் முடிஞ்சுதா சாமி?” என்று கேட்டிட, அவர் மகா மகா ஆனந்தத்துடன் தலையை அசைத்து, இரு கைகளையும் உயர்த்தி ஆசீர்வதித்திட… சிறுவன் வழக்கம் போல் எதையும் அறிந்தானில்லை!

பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சித்தாமிர்த அனுபூதிகள் எல்லாம், எவ்வளவு இனிப்பாக, சற்றும் திகட்டாமல் இருக்கின்றன!

“போடா” என்றால் பொசுங்கிடும் தீவினை!

“இருக்கும் இடத்திலிருந்தே அண்டசராசரத்தையும் ஆட்ட வல்லவர்! இவர் போடா என்றால் பொசுங்கிடும் தீவினைகள்! அப்பப்பா , பெரியவர் போடா சுவாமிச் சித்தரின் மகிமைகளாக எவ்வளவு அனுபூதிகளைச் சொன்னார்?

(பெரியவர் தந்த போடா சுவாமி மகிமை கிரந்தசாகர நாடிப் பாக்கள்தாம், நம் அகஸ்தியர் ஆஸ்ரமம் சார்பாக, பல ஆண்டுகளுக்கு முன், வெளியிடப்பெற்றது, இவ்வாறு மகா அவதூது பாபா, த்ரைலிங்க சுவாமிகள், கசவனம்பட்டி சித்தர், போடா சுவாமி – எனப் பெரியவர் சிறுவனுக்குப் பெற்றுத் தந்த சித்தர்கள், மகான்களின் தரிசன்ம் தான் எத்தனை, எத்தனை!)

போடா சுவாமி சித்தரிடம் புனிதமான சித்த குருகுல வாசம் கொண்டது போல, சித்தரிடம் “சிறந்து” உறைந்த காலமாக, அந்தப் புனிதமான் சில நாட்கள் முடிந்ததும், காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயம் அருகே, ஒரு பழமையான மடம் ஒன்றில் பெரியவர் தங்கினார். அன்று முழுதும் சிறுவன், தான் போடா சுவாமி சித்தரிடம் கண்ட தரிசனங்களை, அனுபூதிகளை ஒன்றொன்றாய் நன்றாக உரைத்திட, பெரியவரும், சித்தருடைய ஒவ்வொரு அங்க அசைவு, முத்திரை, வார்த்தைக்குமான விளக்கங்களைத் தரலானார். அவற்றை விரித்தால் பெரும் புராணமாகுமே!

அசைந்தது, அசைத்தது, அசைவது, அசையாதது…. அனைத்தும் அவர் வசமே!

இதன் பிறகே “போடா சுவாமி சித்தரின் ஒவ்வொரு அங்க அசைவும், ஆயிரமாயிரம் யோக சுவாச பந்தனங்களே!” என அவர் அதே பாணியில் செய்து காட்டி விளக்கிட,

“இவர் எப்படி கனகச்சிதமாக அப்படியே செய்து காண்பிக்கின்றார்!” என சிறுவன் வியந்து, வியந்து, வியந்தே போனாலும் பல அரிய தெய்வீக ரகசியங்களையும் நன்கு அறிந்து தெளிவுற்றான். அவற்றை எடுத்துச் சொன்னாலும் இப்பூவுலகம் நம்பிடாது! நம்பினவர்க்கே சிவராஜா!

போடாசுவாமி சித்தர் நடந்தது கடந்தது என்பது எல்லாம் அவருடைய பல லோக சஞ்சாரங்களையும் –

நீராழி மண்டபத்தில் அமர்ந்தது அவர் “இங்கிருந்தே” பல லோகங்களுக்கும் சென்று அனுகிரக சக்திகளை வழங்கியதையும் –

யானையின் அருகில் சென்றது, பல அரிய சுவாச பந்தன சக்திகளை அவர் உலகுக்காக அளித்ததையும் குறிப்பதாக –

இவ்வாறாக சித்தரின் ஒவ்வொரு சஞ்சாரத்திற்கும் பல அரிய தெய்வீக விளக்கங்களைப் பெரியவர் தந்திட,

ஏன் சொல்லவில்லை அய்யனே?

“வாத்யாரே! இதையெல்லாம் எனக்கு ஏன் முன்னாடியே நீ சொல்லவில்லை? தெரிஞ்சிருந்தா நான் அவரை இன்னும் நல்லா கவனிச்சு இருக்கலாம் தானே!” என்று சிறுவன் பெரியவரிடம் சற்றே உஷ்ணமாகக் கேட்டிட,

அவரும், “இப்படித் தெரிஞ்சுக்கறதுக்கு ஒரு குரு நிச்சயமாத் தேவைன்னு இப்பத்தாண்டா உனக்கும், இதைக் கேட்டவங்களுக்கும் நல்லாவே புரிய வரும்!” என்று அவரும் நல்ல சூடாக பதிலளித்திடவே, சிறுவன் அர்த்தமுடன் மௌனியானான்.

“எது எது எப்ப, எப்ப, எப்படித் தெரியணுமோ, அது அது, அப்ப, அப்ப அப்படித்தான் தெரிய வரும்! அதுக்கு முன்னாடி என்னதான் நீ குட்டிக் கரணம் போட்டாலும், எதையும் நாங்க சொல்ல மாட்டோம்! சொல்லணும்னு அவசியமும் எங்களுக்குக் கிடையாது! இந்த சித்த சாம்ராஜ்யத்துல எல்லாமே புதிராத் தாண்டா இருக்கும்! சித்தர்கள் சாம்ராஜ்யத்துல நம்பிக்கை, அதுவும் அசைக்க முடியாத, ஆடாத நம்பிக்கை தாண்டா வேலை செய்யும்!”

“இன்னும் முப்பது வருஷத்துக்கு இந்தத் திருமேனியில, பூமியில இந்த சித்தர்பிரான் உலா வருவாரு! எல்லா முக்தி, மோட்ச நிலைகளையும் கடந்த ஞானச் சித்தராச்சே! அவருக்கு மனித சரீரத்தை உகுக்கறது, சட்டையைக் கழட்டற மாதிரி அவர் நித்ய சிரஞ்சீவிச் சித்தர்! இதுக்கப்புறம் அவரு வேற, வேற குரு மண்டலங்களுக்குப் போய் அனுகிரகம்  பண்ணனும், முக்காலத்தையும், சகல அண்டங்களையும் அறிஞ்சவரு, எப்படி ரொம்ப, ரொம்ப சர்வ சாதாரணமா, எளிமையா இருக்காரு பார்த்தியா? நம்ப ஜனங்க இந்த மாதிரி சித்தர்களை நல்லாப் புரிஞ்சுக்கிட்டு, நல்ல ஆழ்ந்த நம்பிக்கையோட அனுகிரகம் வாங்கிக்கணுமே!” பெரியவர் ஆழ்ந்த சிந்தனையில் லயித்தார்.

“ஆமாம், நேத்தி ராத்திரி ஏதோ அக்னி மண்டலம் எல்லாம் போய்ட்டு வந்தியாமே”, பெரியவர் கலகலவென்று சிரித்துக் கொண்டே சொன்னார்.

சிறுவன் விழித்தான்!

“இவருக்கு எப்படி நாம் அக்னி மண்டலக் கனவு கண்டது தெரிய வந்தது?”

“சரி, சரி முழிச்சுக்கிட்டு நிக்காம ரெண்டு காலிச் சாக்கு எடுத்துக்க் கிட்டுக் கிளம்பு என்னோட..!”

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் மகிமை (புதுக்கோட்டை – திருமயம் – அரண்மனைப்பட்டி – கோட்டையூர் – காரைக்குடி பஸ் மார்க்கம்)

கொன்றை மரங்களில் பல வகைகள் உண்டு. பலவகைக் கொன்றை மர சக்திகள் நிறைந்த வேதபூஷணத் தலமே அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் வளாகமாகும். உப்பூர் விநாயகர் போல் தற்போது வெட்ட வெளியில், கொன்றை மர நிழலில் அருள்கின்ற மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி, சிவபெருமானே கொன்றை மாலை அணிந்து அருள் தருகின்ற கோலங்கள் யாவும் நோய் நிவாரண சக்திகளைத் தருபவையாம். கொன்றை பைரவ பூமியாய் அரண்மனைப்பட்டி விநாயகத் தலம் துலங்குவது நமக்குப் பெரும் பாக்யமே!

வேத மந்திரங்களை ஓதும் வாய்ப்பு தமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏங்குவோர், இங்கு கொன்றையடி விநாயகர் தலத்தில் ஒரு நாழிகையேனும் (24 நிமிடங்கள்) தொடர்ந்து கொன்றை மரத்தை அடிப்பிரதட்சிண வலம் வந்து வணங்குதலால், கொன்றை மரம் மூலமாக, பிள்ளையாரப்பன் பல வேத சக்திகளை நல்குகின்றார்.

அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்க வாசகர், திருமூலர், அருணகிரிநாதர், பன்னிரெண்டு ஆழ்வாராதியர் பாடிய அனைத்துமே நல்மறைகளேயாகும். வைணவமே பெருமாளின் உரையாக, நம்மாழ்வாரை “வேதம் தமிழ் செய்த சடகோபன்” என்று போற்றுகின்றதே!

கொன்றை மரங்கள் நிறைந்த கொன்றையடி விநாயகரை அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சணம் செய்து அனைத்து வகை வேத மறைகளையும் ஓதி வழிபடுதலால் மனசுத்தி உண்டாகி, வேத சக்திகள் உடல் நாளங்களில் நிரவும்.

இங்கு கொன்றை மர வேர்கள் பூமியடியில் காணாபத்ய வேத நீரோட்டங்களை உருவாக்குவதால், கொன்றையடி விநாயகரின் அருட்கிரண வேத சக்திகள், பல இடங்களுக்கும் பரவுகின்றன. பூமிக்கு மேல் பல லோகங்கள் இருப்பது போல, பூமிக்கு அடியிலும் பல பாதாள லோகங்கள் உள்ளன. பாதாள லோகங்களுக்கு வேத சக்திகளை நிரவுவதில் கொன்றை மரங்கள் பெரும் பணி ஆற்றுகின்றன. இதனால்தாம் கொன்றை மரத்திற்கு சகல வேத சமஷ்டி விருட்சம் என்று பெயர்.

அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் போலான வெட்ட வெளி மூர்த்திகள், வானுக்கும், பூமிக்கும், பூமியடிக்கும் வேதமயமான தெய்வீக சக்திகளை நிரவுகின்றனர். பிரபஞ்சத்தில், பல உலகங்களில், தான, தர்ம, வேத சக்திகள் நிலைபெற்றுச் சமுதாயத்தில் சாந்தம் விருத்தி அடைய கொன்றையடி விநாயகர் அருள்கின்றார்.

பஞ்சமித் திதி விநாயக பூஜை மகிமை!

பஞ்சமித் திதியானது வேத சக்திகள் பூரிக்கும் திதியாகும். எனவேதான் சுபமுகூர்த்த திதிகளுள் பஞ்சமி திதியும் வளம் தரும் திதியாகப் பொலிகின்றது. சித்தர்கள், பஞ்சமி திதியை விரத மங்கள நாளாகப் போற்றுகின்றனர். அதாவது, பல்வகை விரதங்களுக்கும் ஏற்ற திதியே பஞ்சமி திதியாம்.

பஞ்சமித் துழாதரர் எனச் சித்தர்கள் கொன்றையடி விநாயகர் மூர்த்தங்களைப் போற்றுகின்றனர். காரணம், அனைத்து மந்திரங்களுக்கும், மூலமுதல் பெருமானாக விளங்கும் விநாயகர், தம் திருமுகத்தில் இரு கண்கள் திருவாய், இரு தும்பிக்கைத் துழாய்கள் ஆகிய ஐந்து பஞ்சவர்த்தத் துழாய்கள் மூலம், சகல மந்திரங்களுக்கு கணாதிபதி ஆகின்றார். எந்த மந்திரங்களுக்கும் மூலச் சங்கற்ப மூர்த்தியாய்க் கணபதியை ஆக்குதற்கு சர்வேஸ்வரன் கொன்றை மாலை அணிந்தே அருளினார். எனவே கொன்றை மரத்தடி விநாயகர் சகல விதங்களிலும் நம்மைக் காப்பவர் ஆவார்.

விநாயகரின் ஐந்து துழாய்களிலும், மூல முதல் ஓங்காரம் முதல் மந்திரத்தின் நான்கு முக்கியமான பீஜாட்சர சக்திகளும் ஒ(லி)ளிபரப்பாகின்றன. ஆம், ஜீவன்களுக்காகத் தாமே ஈஸ்வர ஒளிப் பிரவாகம் ஒலி வடிவில் மந்திரங்களாகத் தோன்றுகின்றன. தேவாதி தேவ மூர்த்திகள், முதலில் ஒளி வடிவில்தாம் மந்திரங்களைப் படைக்கின்றனர். ஜீவன்கள் தம் புனிதத் தன்மையில் இருந்து பிறந்தமையால், ஒளி வடிவத்தை அவர்களால் உணர இயலாது, கேட்டு உணரும் வண்ணமும் ஒலி வடிவில் மந்திர சக்திகள் தோன்றின. பஞ்சமித் திதியன்று ஜீவ சக்திகள் ஜீவன்களுக்கு அருளும் வகையில் எளிமை வடிவம் அடைவதால் பஞ்சமித் திதியன்று கொன்றையடி விநாயகரை வழிபடுதலால் வேத சக்திகள் நிறைந்த கொன்றை மரத்தடியில் உறையும் அரண்மனைப்பட்டி விநாயகர், பஞ்சமித் துழாதரராக, பஞ்சமித் திதியில் பரிணமிப்பதால், பஞ்சமித் திதி நாள் தோறும் விரதமிருந்து இங்கு பிள்ளையாருக்கு ஐந்து வகைத் தைலங்களால் காப்பிட்டு, ஐந்து வகை வண்ண ஆடைகளைச் சார்த்தி, ஆரஞ்சு அல்லது நீல நிறப் பட்டு வஸ்திரத்தில் கிரீடம் அணிவித்து வழிபடுதல் வேண்டும். இதனால் துர்மரணம், மிருத்யு தோஷங்கள், இளவயது மரணம், கணவன் அல்லது மனைவியை இழத்தல் போன்றவற்றால் வாடுகின்ற குடும்பத்திற்கு நல்ல நிவாரண வழிகள் கிட்டும்.

விரதமிருந்து பஞ்சமித் திதி தோறும் கொன்றையடி விநாயகரை வழிபட்டு வருதலால் காரிய சித்திகள் கனியும் விநாயகர் கை வண்ணம் கண்டு மகிழலாம்.

நவநாத சித்தர்கள் மகிமை

பாணபாண நவநாத சித்தர் கிரிவலம் வரும் ஐப்பசி மாத சிவராத்திரி நாள் . பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான அருள் நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

பாணர் என்றால் இறைத் துதிகளைப் பாடுபவர். பாணம் என்றால் தொன்மையான தந்தி வகை வாத்தியக் கருவிகளுள் ஒன்று!

பாணபாண சித்தர், நடராஜப் பெருமானுடைய சாசுவதமான நித்திய நாட்டியத்தில் எழும் பல ஸ்வரங்களின் ஒலியில் தோன்றியவர். இவர் இசைக்கும் பாண வாத்தியம் இறைவனுடைய உடுக்கையிலிருந்து தோன்றிய ஒலி, ஒளிக் கிரண நாண்களால் ஆனதாகும். “பாணபாண சித்தர்” என ஆதிசிவனாலேயே அழைத்துப் போற்றுதல் ஆனவர்.

தாள் திறவாய்!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவையாறு

இவர் பல யுகங்களைக் கடந்து நின்ற சித்தர்பிரான்! இறையருளால், சுயம்பு மூர்த்தித் தலங்கள் பலவற்றிலும் இசையால் இறையைப் போற்றும் பாக்கியம் பெற்றவர். ஒரு கற்பத்தில், திருவையாறு ஸ்ரீஐயாறப்பன் ஆலயத்தில் பண்டைய காலத்தில், ஆறு வேளைப் பூஜைக் காலங்களிலும் பாண வாத்தியம் மீட்டி இறைவனைத் தொழுதவர். இவர் தன்னை மறந்த நிலையில், ஆலய ஆகம விதிகளுக்கு உட்பட்டு நடை சார்த்தலில், இவருடைய அற்புத யோக நிலைகளுக்கு எவ்வித இடையூறின்றி, ஆலயத்தினுள் இவரை யோக நிலையிலேயே அமர்த்திடுவர்! ஆனால் இவர் தன்னிலை மீண்டு உணர்வு பெறுகையில், ஆலய கதவுகள் தாமே திறந்து வழிகாட்டிய அற்புதம் திருவையாற்றுக் காவேரிப் புனித பூமியில் நிகழ்ந்துள்ளது.

இவருடைய பாண வாத்தியத்தின் ஒரு தந்தியை மீட்டினால், பாண நாதம் குறைந்தது மூன்று பர்லாங் தூரத்திற்குக் கேட்கும், மீட்டும் தந்திகளின் எண்ணிக்கையானது கூடக் கூட, இறைகானப் பேரொலி ஊரையே கூட்டுவிக்கும் சக்தியைக் கொண்டதாம்!

பாணபாண சித்தர், முறையாக இசை பயிலாதவர். இராகங்களைப் பண்பட அறிந்திலார். இசைப் பாடங்கள் எதையும் சுற்றிலர். ஆனால் இவரை நவநாத சித்தர்களுள் ஒருவராக இறைவன் தோற்றுவித்த போது, திருக்கயிலாயத்தில் தன்னுடைய நாட்டியத் திரு உருவத்திற்கு முன்னால் இவரை நிலை நிறுத்தி வைத்துக் கொண்டார்.

கண்டவர் விண்டு கண்ட கலை!

இறைவனால் அளிக்கப் பெற்ற வாசிக்கத் தெரியாத ஒரு தந்தி வாத்தியத்தை வைத்துக் கொண்டு இறைவனுடைய நாட்டிய அசைவுகளை மட்டுமே உன்னித்துக் கவனித்து, உய்த்து அதற்கேற்றாற் போல் தன் பாண வாத்தியத்தை இசைத்துப் பழகினார். காலம் செல்லச் செல்ல, இறைவனுடைய நாட்டிய அசைவுகளோ கோடிக் கோடியாய்ப் பெருகிட, இவரோ பசியறியாது, கண் துஞ்சாது, எப்போதும் நாட்டிய ஒலிக்கேற்ப வாத்தியத்தை இசைத்துக் கொண்டே இருந்தார்.

இடையில், காலச் சக்கரச் சுழற்சியில், எத்தனையோ பிரம்மாக்களும், தேவாதி தேவர்களும் வந்து சென்றாலும், எவரும் மிகவும் சாதாரணமாக இருந்த இவரைக் கண்டு கொள்ளவில்லை. எந்த நடனம், இசை ஒலி, ராகம், ஸ்வரங்கள், உலகின் எப்பகுதிக்கு, எத்தகைய சுபிட்சங்களை அளிக்கும் என்பதை அவரால் ஞானப் பூர்வமாக உணர முடிந்தது. பல கற்பங்களின் எழுச்சியையும், மறைவையும் காணும் பேறுகளையும் சித்தர்பிரான் பெற்றார்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

பாணவாத்யம் தந்த ஞானவான அறிவு!

இருந்த இடத்தில் இருந்தே, பிரபஞ்சத்தின் பல ஆலய தரிசனங்களையும் காணும் சக்திகளையும், பாணபாண நவநாதச் சித்தர் பெற்றார். அனைத்து ஜீவன்களுடைய கர்மப் பகுப்புகளும், இசை மூலமாகவே அவருக்குப் புலனாயின. இவ்வாறு காலம் கடந்த நிலையில், நடராஜப் பெருமான் நாட்டியக் கோலத்தின் முன் பாணபாண நவநாதச் சித்தர், பாண வாத்ய இசையில் மூழ்கினார். பிறகு இறைவன் அவரைப் பூமியின் பல இடங்களுக்கும் அனுப்பி அங்கிருந்தே தம் நடனங்களைக் காணும் பல சித்சக்திகளை அளித்தார்.

இவ்வாறு பல யுகங்கள், பல பூமிகளில், பல அண்டங்களில், இவர் அமர்ந்து பாண வாத்யம் வாசித்த சிறு சிறு பாறைகளே “பாணாந்துறை” எனப் பல நதித் தீரங்களிலும், இன்றளவும் காணப்படுகின்றன.

ஒரு முறை, ஒரு அண்டத்தின் முடிவு ஏற்பட்ட காலை… அந்த அண்டப் பிரளய காலம் முடிவுற்று, அதில் பூமி வடிவுகளும் மீண்டும் உதித்து, ஜீவன்கள் தோன்ற வேண்டிய சமயத்தில்…

வேதப் பிரம்பு ஸ்தம்பித்ததே!

அக்கால கட்டக் கற்ப கால பிரம்மா ஆங்கே தோன்றினார்! பிரம்ம மூர்த்திகள், “சுருள் ஓட்டக் கம்பு” என்ற வேதப் பிரம்பு (ஜீவ ரகஸ்ய சடாட்சரக் கழி) ஒன்றைத் தாங்கியிருப்பர். குறித்த பல மந்திரங்களை ஓதி, அந்த வேதப் பிரம்பை பிரம்மா சற்றே அசைத்திட, அதிலிருந்து வேத சக்திகள், கிரணவழி கொண்டு வெளி வந்து, சிருஷ்டிக் கலயத்தில் உள்ள ஜீவ அணுக்களுக்கு உயிரோட்டச் சக்தியை ஏற்படுத்தும். உடனேயே அங்கு ஜீவன்களுடைய தோற்றம் ஏற்பட்டுவிடும்.

ஆனால் இங்கோ, அக்கற்ப கால பிரம்ம மூர்த்தி, வேதப் பிரம்பை அசைத்தும் எந்த ஜீவன்களும் தோன்றிடவில்லை. குறித்த அந்த அண்டமும் வெளிப்படாமல் பிரளயத்தில் அமிழ்ந்தே கிடந்தது.

பிரளய நிலையில், எந்த ஜீவன்களும் தோன்றா நிலையில் இதற்கு “அண்ட விண்ட சண்டம்” என்று பெயர். ஜீவன்கள் இல்லாத வெற்றிட அண்டமாகும். இது, இந்த அண்டத்தில் ஜீவ கன(ள)ல ஏற்படும்போது, அது ஒரு வாழ்பூமியாகவோ, ஜீவலோகமாகவோ, கிரகமாகவோ மாறுகின்றது.

மேலே குறித்த வகையில், பிரம்ம மூர்த்தியால் சிருஷ்டிக்க இயலாத இக்குறித்த அண்டத்திற்கு சண்டிகத் துண்டம் என்று பெயர். இச்சண்டிகத் துண்டத்தில் உயிர்கள் எழாமையால் பிரம்மா பெரிதும் கவலையுற்றார். இந்த அனுபூதியில் இருந்துதாம், ஜீவன்கள் பலவிதமான துன்பங்களால் கஷ்டப்படும் போது, ஸ்ரீதுர்க்கையை வேண்டி “சண்டி ஹோமம்”  நிகழ்த்தப்படுகின்ற வழிபாடு பிறந்தது.

பிரம்மர்கள் போற்றிய பெருஞ்சித்தர்!

தன்னால் உயிர்களைச் சிருஷ்டிக்க இயலாமையால், தாம் ஏதாவது தவறு செய்து விட்டோமோ என்று பிரம்மா மனம் கலங்கி, மகரிஷிகளையும், சித்தர்களையும் தக்க தீர்வுகளைப் பெற்றுத் தருமாறு வேண்டிட, அனைவரும் சிருஷ்டி நிலைக்கு உரித்தான கனகஜோதி பாதசபாபதி நடராஜப் பெருமானை வழிபட்டனர்.

பிரம்ம மூர்த்திகள் பன்முறை அங்கு வந்து சென்றும், ஆங்கே மிகவும் சாதாரணமானவராகச் சித்தர்பிரான் பாணவாத்தியத்தை மீட்டிக் கொண்டிருந்ததைச் சற்றும் கண்டு கொள்ளவில்லை! அவரை நோக்கிக் கை காட்டிய சிவபெருமான், “உன்னைப் போல் நூறாயிரம் பிரம்மாக்களின் சக்திகளைக் கொண்டவரே இந்தச் சித்தர்! பாண வாத்திய ஒலியிலேயே பல அண்டங்களைச் சிருஷ்டிக்க வல்லவர்! இவரை நாடினால் இந்த “சண்டிகத் துண்டம்” அண்டத்தை எழ வைக்கவும், அதில் சிருஷ்டிகளையும் தோற்றுவிக்கவுமான கலையை அறிய முடியும்! இவர் துணையை நாடி, சண்டிகத் துண்டத்தில் ஜீவன்களை சிருஷ்டிப்பாயாக!” என்று பிரம்மாவிடம் கூறிட்டார்.

இறைவனே உரைத்த சித்தரின் பெருமைகளைக் கேட்டுப் புளங்காங்கிதமடைந்த பிரம்மாவும், தேவர்களும் பாணபாண சித்தரைப் போற்றினர்.

தன்னுடைய பாண யோக ஒலிப் பிரவாகத்திலிருந்து மீண்ட, பாணபாண சித்தர், தன்னைச் சுற்றிலும் பல கற்பகால பிரம்ம மூர்த்திகள் நிற்பது கண்டு திகைத்தார். அனைவரையும் நோக்கி, எட்டுத் திக்குகளிலும் வீழ்ந்து நமஸ்கரித்தார்.

இசையில் ஜீவசிருஷ்டி! அதுவே “அமிர்தபாண துந்துபி நாதபூதி”

அனைவரும் சித்தர்பிரானிடம், “பெருமானே! நாங்கள் பன்முறை இங்கு வந்தும், தங்களுடைய அருமை, பெருமை, தெரியாது மிகவும் அலட்சியத்துடன் இதுவரையில் உங்களைக் கவனிக்காது சென்று விட்டோம்! ஒரு பாண வாத்தியக் கருவியைக் கொண்டு, பலரும் காண முடியாத இறைவனுடைய, திருநாட்டிய அசைவுகளைப் பன்னெடுங்காலம் இசைத்து உணர்ந்த பெம்மானாகிய உங்களுடைய பெருமையை இன்றுதான் அறிந்தோம், தாங்கள்தாம் சண்டிகத் துண்ட அண்டத்தை மீண்டும் தோற்றுவிக்க உதவிட வேண்டும்!” என்று நெக்குருக வேண்டினர்.

மிகுந்த பணிவுடன் அவர்களை வணங்கிய சித்தர், தன்னுடைய பாண வாத்தியத்தை மீட்டி, அந்த அண்டத்தில் ஜீவன்களை உயிர்ப்பிக்கின்ற இரகசியத்தைப் போதித்தார். இதற்கு “அமிர்தபாண துந்துபி நாதபூதி” என்று பெயர்.

“அமிர்த கடாட்ச தரிசனம்”

அவருடைய நினைவெல்லாம் நடராஜருடைய நாட்டியமாக மாறியமையால், பாணவாத்யத்தின் நவநாதங்களிலேயே, நவகோடி அண்டசராசர இரகசியங்களை அறிந்தமையால் அமிர்த துந்துபி தேவ ரகசியத்தில் வல்லவராக பாணபாண சித்தர் என்றென்றும் விளங்குகின்றார்.

இவ்வாறு அவர் நடராஜப் பெருமானின் திருநடனக் காட்சிக்கு ஏற்ப பாணவாத்தியத்தை மீட்டும் முறைக்கு அமிர்தபான துந்துபி பீஜம் என்று பெயர். இந்த நல்வரத்தை, அவர் குறித்த யுகத்தின் சுபானு ஆண்டின் மாத சிவராத்திரி கிரிவலத்தில் திருஅண்ணாமலையில் தான் பெற்றார். இந்த அனுகிரகத்தை அவர் பெற்ற அருணாசல தரிசனப் பகுதிக்கு “அமிர்த கடாட்ச தரிசனம்” என்று பெயர். இப்பகுதியில் இன்றும் கடாட்சக் குஞ்சுமணி என்ற அமிர்த வகை மூலிகைச் செடி ஒன்று உண்டு. இச்செடியின் தளங்கள்தாம், குறித்த மாத சிவராத்திரி நாள், நடராஜ அபிஷேக தினங்களில் விண்ணிலிருந்தும், நடராஜ நாட்டிய ஒளியில் இருந்தும், அம்ருத லோகங்களில் இருந்தும், சந்திர மண்டலத்தில் இருந்தும் பூமிக்கு வரும் அமிர்த சக்திகளைத் தாங்குகின்றன.

எனவே இச்செடி இலையின் ஒவ்வொரு பாகமும் ஜீவன்களின் நல்வாழ்விற்குப் பயன்படும் முறைகளை நன்கு அறிந்து செயல்பட வேண்டும். இதன் ஒவ்வொரு அணுவும் ஜீவசக்திகள் நிறைந்தது! எனவே எதனையும் சிதறாது நன்கு அறிந்து செயல்பட வேண்டும். ஒரு அம்சம் கூட வீணாகுதல் கூடாது. இதன் ஒவ்வொரு துளியும் பூமிக்கு மகத்தான செழிப்பைத் தரவல்லதாகும்.

பாணபாண சித்தர் கிரிவலம் வருகின்றதாக இம்மாத சிவராத்திரி கிரிவலம் அமைகின்றது நமக்குப் பெரும் பாக்யமே! பல வருடங்களாக எதிரிகளால் துன்புற்று வருவோர் நிவாரணம் பெற உதவும் கிரிவலம்! கண் மருத்துவர்கள் தம் துறையில் சிறப்புப் பெற உதவும் கிரிவலம்! பெற்றோர்களுக்குச் சரிவர சேவை செய்யாது அவர்களுடைய சாபத்தால் துன்புறுவோர், தீர்வுப் பரிகாரம் பெற உதவும் நன்னாள்!

இந்த மாத திருஅண்ணாமலை சிவராத்திரி கிரிவலத்தில் புல்லங்குழல், மத்தளம், மிருதங்கம், வயலின், நாதஸ்வரம், மோர்சிங் போன்றவற்றை வாசிக்கின்ற ஏழை மற்றும் நடுத்தரக் குடும்ப இசைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வண்ணம், அவர்களுக்குத் தேவையான உணவு, ஆடைகள், புது வாத்யக் கருவிகள், சன்மானம் மற்றும் தேவையான உதவிகளை அளித்து, அருணாசல கிரிவலம் முழுதும், திருப்புகழ், தேவார, மறைகள், திவ்யப் பிரபந்தம், சத்குரு தியாகராஜ சுவாமிகள், முத்துஸ்வாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள், அருணாசல கவிராயர் போன்றோருடைய இறைப் பாக்களை ஓதி, இசைத்திடுதலால் ஸ்ரீபாணபாண சித்தரே தொடர்ந்து வந்து அனைவரையும் ஆசீர்வதிக்கின்றார். வருமானப் பற்றாக் குறையால் கூடுதல் வருமாணத்திற்கு வழி தேடுவோர், நியாயமான, தர்மமான, முறையான நல்வழிகளைப் பெற, நல்வேலைகள் கிட்ட இம்மாத கிரிவலம் உதவும்.

23.10.2003 வியாழன் பின் இரவு 12.49 மணி முதல் 24.10.2003 வெள்ளிக்கிழமை இரவு 9.44 – மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஐப்பசி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 23.10.2003 வியாழக்கிழமை இரவு!

அக்டோபர் 2003 பௌர்ணமி நாள்: 9.10.2003 வியாழக் கிழமை காலை 11.28 மணி முதல் 10.10.2003 வெள்ளிக் கிழமை மதியம் 12.57 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் : 9.10.2003 வியாழக் கிழமை இரவு!

திருமலை முருகன்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலத்தில் அடிக்கடி வழிபட வேண்டிய திருத்தலம் திருமலை முருகன் கோயில்! திருமலை என்ற பெயரில் பல ஊர்கள் உண்டு. திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டைக்கு அருகில் உள்ளதே இங்கு நாம் குறிப்பிடும் முருகன் தலமான திருமலை, இத்தலத்திற்கு பண்பொழி, பண்புளி என்ற பெயர்களும் உண்டு.

பொதுவாக, திருமலை என்ற பெயரில் பல தலங்கள் இருந்தாலும், திருமலை என்பது திருப்பதியைக் குறிப்பதாக, நாம் பொருள் கொண்டாலும், சபரிமலை ஐயப்பனின் சரிதத்தோடு தொடர்பு கொண்ட மிகவும் தொன்மையான முருகன் தலமாகி, திருமாலின் அனுகிரகத்தோடு மால்மருகன் குடிகொண்ட தலமே இத்திருமலையாம். சித்தர்கள் இதனை ஸ்ரீபரம் என்றும், ஸ்ரீதளம் என்றும் குறிப்பிடுகின்றார்கள்.

“ஓடவள்ளி” அற்புத மூலிகை உதிக்கும் தலம்!

சில அபூர்வமான வைத்ய மூலிகைகள் உள்ள, கிட்டும் தலமே திருமலை! விஷக்கடி நோய்கள், வினைகளையும் சக்திகள், விஷம் போன்ற தீவினைகளையும் மாய்க்க வல்ல “ஓடவள்ளி” என்ற அற்புதமான மூலிகை உண்டு. பண்டைய காலத்தில், நாகர்கோயில் பகுதியில் காணப் பெற்றது. இதன் ஒவ்வொரு, தளமும், ஒவ்வொரு நோயைப் போக்க வல்லது. நாகதோஷ நிவர்த்தித் தலங்களில் (நாகர்கோயில்), பண்டைய காலத்தில், “ஓடவள்ளி” மூலிகை இலையில் விபூதிப் பிரசாதம் அளிக்கும் முறை இருந்து வந்தது. தற்போது பன்னீர் இலையில் அளிக்கின்றனர்.

சக்தி வாய்ந்த “ஓடவள்ளி” மூலிகையைச் சரிவரப் பயன்படுத்தும் முறை வழக்கில் மறைந்தமையால், “ஓடவள்ளி” மூலிகை நாளடைவில் தானே மறைவுற்று, குறித்த தலங்களில், குறித்த நாட்களில், குறித்த விரதம் பூண்டோருக்கு மட்டும் தெரிவதாக இருக்கின்றது. இவ்வரிய மூலிகை கிட்டும் பகுதியாகத் தற்போது திருமலை துலங்குகின்றது!

ஸ்ரீதள மூலிகை சிறக்கும் தலம்!

சில அபூர்வமான ஸ்ரீதள வகை மூலிகைகளும் கிட்டுகின்ற தலம்! கிருத்திகை, விசாகம், உத்திரம் போன்ற முருக நட்சத்திர நாட்களிலும், வெள்ளி, அனுஷம், துவாதசி, போன்ற இலட்சுமிகரமான நாட்களிலும், ஸ்ரீதளம் எனப்படும் என்னும் அபூர்வமான திருமலைச் செடி மூலிகை கிடைக்கக் கூடிய தலம். இதனுடைய வேரை நன்முறையில் பூஜித்து, தனாகர்ஷண யந்திர சக்தி வழிபாட்டை மேற்கொண்டால், நல்ல செல்வ வளங்களைத் தரக் கூடிய தலம். இதனால்தாம் திருமலை என்ற பெயரும் வந்தது!

திருமலை

மேலும் ஸ்ரீதளமூலிகை, பலவிதமான கொடிய நோய்களையும் தீர்க்க வல்லதாம். குறித்த கட்டு மந்திரங்களோடு இன்றும் முறையாகத் தெய்வீகத்திற்காகப் பூஜித்துப் பயன்படுத்துவோருக்கும், வியாபார ரீதியாக அல்லாது தார்மீக ரீதியாக வைத்திய காரணங்களுக்காகக் கொள்வோர்க்கும் மட்டும் தென்படக் கூடிய முக்கியமான, அபூர்வமான மூலிகை இது. செருப்பட்டை வகை மூலிகைக் குணங்களைக் கொண்டது.

விமல, விபவ, விபுல சக்திகள்

சாகம்பரிய சக்திகள் தாம் பூவுலகில் ஜீவன்கள், ஜீவிக்க மூல காரணமாகின்றன. சாகம் என்பது 114 வகையான பீஜாட்சரங்களைக் கொண்ட ஜீவாத்ம சக்தியாகும். ஸ்ரீசாகம்பரி தேவி மூலமாகச் சிருஷ்டியின் போது அளிக்கப்படுவது! இதனுடன் விமலம், விபவம், விபுலம் ஆகிய மூன்று யோக பீஜாட்சர சக்திகள் சேரும்போது, இது “வி” வகை சாக ஜோதியாக, விசாக ஜோதிப் பூர்வமாகப் பரிமளிக்கும். அதாவது “வி” வகை ஜோதி சக்திகள் (விளக்கு, விளக்கெண்ணெய், விறகு, விராட்டியில்) எழும் அக்னி நிறைந்த தலம்!

வானில் பொலியும் விசாக நட்சத்திரம் இத்தகைய விமல சாகம், விபவ சாகம், விபுல சாகம் ஆகிய மூன்று வகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது. ஸ்ரீசாகம்பரி பூ மண்டலத்தைச் சேர்ந்த நட்சத்திர மண்டலங்களே, இவை யாவையுமாம். விசாக நட்சத்திர சக்திகள் நேரிடையாகத் தோன்றிப் பரிணமிக்கின்ற அபூர்வமான முருகன் தலங்களுள் ஒன்றே திருமலை ஆகும்.

சபரிமலை யாத்திரைத் தலங்களுள் ஒன்றான (செங்கோட்டையில் இருந்து) அச்சங்காடு செல்லும் பாதையில் அமைந்துள்ளதே திருமலை முருகன் கோயில்! சபரிமலையைச் சார்ந்த சப்த ஸ்தானத் தலங்களுள் திருமலையும் ஒன்றாகும். உண்மையில் திருமலைக்கென சூரிய பகவான், விமலாதித்ய ஸ்கந்த பூர்வ விசேஷக் கிரணங்களை தினந்தோறும் பொழிகின்றார். எனவே இங்கு பொழிகின்ற சூரியக் கதிர்கள் பலவிதமான தோல் நோய்களுக்கு நிவாரணம் தர வல்லவை ஆகும்.

ஜோதித் தலமாகப் பொலிவதால் விசாக நட்சத்திரத்தில் பிறந்தோர் இங்கு பலவிதமான ஜோதி வழிபாடுகளை மேற்கொள்தலால், அற்புதமான தீப பூஜா பலன்களைப் பெற்றிடலாம்.

திருமலைத் தைலம் பொருமலைச் சைலம்!

திருமலைத் தைலம் பொருமலைச் சைலம் என்பது சித்தர்கள் வாக்கு. அதாவது 12 ஜோதித் தலங்களுள் ஒன்றான (ஆந்திர மாநிலத்தில் உள்ள), ஸ்ரீசைலமாகிரீஸ்வர லிங்கத்தின் அனுகிரக சக்திகளுடன், பொருமலையாக, அதாவது சிவசைலத் துகள்கள் எனப்படும் சிவகுமாரக் கதிர்கள் திளைத்துப் பொரு(ந்)திப் பொழிகின்ற உத்தமத் தலமாகத் திருமலை பூரிக்கின்றது.

பொருமலை என்பது பூலோகம் போன்று பல மலைகளில் தோன்றுகின்ற பொருத்த ஜோதி திகழும் மலையான  திருமலை, நோய் நிவாரண விரத சக்திகள் நிறைந்த தலம். சித்தர்களுடைய கிரந்தங்களின்படி, ஸ்ரீசைல சக்தியும், பொருத்த ஜோதி சக்தியும் கூடிய நாட்களான செவ்வாய், சனி, ஆயில்யம், விசாகம், திருவோணம், சதயம் ஆகிய செவ்வாய் கிரக சக்தி நட்சத்திர நாட்களிலும், பரணி, கார்த்திக்கை, பூரம், உத்திரம், சித்திரை ஆகிய அக்னி பூபால நாட்களிலும் விரதம் இருந்து, நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், வேப்பெண்ணெய், நாராயணத் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம், மருதாணித் தைலம், செம்பருத்தி தைலம் போன்ற 32 விதமான தைலங்களைக் கொண்டு, இங்கு தைல தீபம், தைலக் காப்பு இட்டு வழிபடுதலால் எத்தகைய நோய்களுக்கும் நிவாரணம் கிட்டும். குறிப்பாக கர்பப்பை சுருங்குதல், கர்பப்பை நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும்.

இத்தகைய 32 விதத் தைல வழிபாடே துவிதீய ஷோடசத் தைல ஜோதி பூஜையாகும். 32 விதமான அறவாழிச் சக்திகளை அளிக்கவல்லதாம்.

தீபவலத் திருமலை!

திருமலை முருகன் ஆலயத்திலுள்ள சக்தி வாய்ந்த மருத்துவ தேவ தீர்த்தத்தில் நீராடி இங்கு, ஸ்ரீமுருகப் பெருமானைப் பன்முறை அகல் விளக்கு அல்லது குத்து விளக்கு ஜோதியுடன் அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து, முருகனுக்குத் தைல தீபத்தையும், தைலங்களையும் அர்ப்பணித்திட வேண்டும். இதனால் பல பிணிகள் தீர்வடையும்.

பொதுவாக, பல்லாண்டுகளாக பூர்வீகச் சொத்துக்கள், வழக்குகள், உறவுப் பகைமை காரணமாக எவருக்கும் பயன்படாது முடங்கிக் கிடக்குமேயானால், அவை நல்விதங்களில் பயன்படும்படி ஆகுதற்கு இத்திருமலை ஜோதி வழிபாடு துணைபுரியும்.

திருமலையின் படிக்கட்டுகள் யாவுமே ஸ்கந்த கோஷ்டப் பித்ருக்கள் உறையும் தேவப் படிக்கட்டுகள் ஆதலின், இங்கு மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் இடுதலால், ஸ்கந்த லோகப் பித்ருக்களின் ஆசியால் சந்ததி நன்கு தழைக்கும். விசாக ஜோதி சக்திகள் நிறைந்த மலைத் தலமாதலின் திருமலையில் விசாக நட்சத்திரக்காரர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும்.

வரந்தரும் வாரம்

ஒவ்வொரு நாளும், கிழமையும் ஒப்பற்ற நல்வரம் பூண்டவையே! தமிழ் வருடத்தின் ஒவ்வொரு கிழமைக்கும், ஒவ்வொரு பெயரும், விதவிதமான காரிய சித்திப் பலன்களும், விசேஷ அம்சங்களும் உண்டு!

வரந் தரும் வாரப்பெயர்கள்!

வேத வெள்ளி, வரஅமுத சதுர்த்தி, பாலேந்த்ர புதன், ரசகண செவ்வாய் என்றவாறாக, ஒவ்வொரு தமிழ் வருடத்தின், மாதத்தின், வாரத்தின் ஒவ்வொரு கிழமைக்கும், திதிக்கும் அந்தந்த நாள் தரும் அற்புதப் பலன்களுக்கு ஏற்ப, ஒவ்வொரு பெயர் உண்டு. இப்பலா பலன்களைப் பெறும் வழிமுறைகளை அருள வல்லவர் சற்குரு ஒருவரே!

நாளின் மகிமை அறியாது, ஒரு நாளை விட்டு விட்டால், அதன் பலாபலன்களை எத்தனை யுகமானாலும் மீண்டும் பெறுதல் இயலாது. இவ்வாறு நாள்வளம் அறியாது. அறியாமையால், தக்க இறைப் பகுத்த்றிவு இன்மையால், மனித சமுதாயம் இழந்த நாட்கள் கோடானு கோடியாம்!

புனிதமான வெள்ளிக் கிழமையை, மகத்தான இறைவழிபாட்டு நாளாக, அனைத்துச் சமயங்களிலும் உணர்ந்து, வெள்ளிக் கிழமை வழிபாட்டிற்கு உலகம் முழுதும், பல மதங்களும் ஒப்பற்ற மகத்துவம் அளிப்பதைக் கண்டே, ஆன்மப் பூர்வமாக நாள்வளத்தின் முக்கியத்வத்தை நாம் நன்கு உணர்ந்து தெளிந்திடலாம்.

பஞ்சாங்கம் ஒரு நாள்வளமுரை நல்ஏடே!

இன்றைக்குப் பல நாடுகளிலும் மனித சமுதாயத்தில் நிலவும் பல்லாயிரக்கணக்கான பிரச்னைகளைத் தீர்க்கும் சக்திகளை, ஒவ்வொரு நாளும் கொண்டுள்ளது! அந்தந்த நாட்டிற்கான நித்யக் கர்ம நிவாரணிகள் உண்டு. இவற்றை உணர்த்திடவே, நம் பெரியோர்கள் பஞ்சாங்கத்தை ‘நாள்வளமுரை நல்ஏடாக’ உருவாக்கித் தந்துள்ளனர்.

பஞ்சாங்க ஏட்டில் தினசரிக் குறிப்புகளாகக் காணப்படும் பல விரதங்களும் பண்டிகைகளும், கிரக சஞ்சார நிலைகளும், மனித சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் கணக்கற்ற இன்னல்களை, ஆன்மீக ரீதியாகத் தீர்க்க வல்ல நல்வழிகளை உணர்த்துபவையாம்!

குருதுரோகத்திற்கு மருந்தும், பரிகாரமும் இல்லவே இல்லை!

ஒவ்வொரு நாளின் தெய்வீக மகிமையை உணர்த்த வல்ல குருவிற்கே துரோகம் இழைக்கும் தீயவர்கள் தாமே கலியுகத்தில் பெருகுகின்றனர்! குரு துரோகிகள், ஜீவ சமுதாயத்திற்கு ஊறு விளைவிப்பவர்கள், இவர்களுக்குப் பிராயச்சித்தம் என்பது, எள்ளவும் கூடக் கிடையாது. நாட்டில் மழை வளம், தான்ய வளம் மங்கிடக் காரணமே குருதுரோகிகளின் செயல்பாடுகளே! நம்பியவரைக் கைவிடுதலும், நம்பியவரை ஏமாற்றுதலும், நம்பி ஒப்படைக்கப்பட்ட சொத்தை, பொருளை ஏமாற்றி, அபகரித்தலும் குருதுரோகச் செயல்களே, பிரம்மஹத்தி தோஷம் முதல் பிரேத தோஷங்கள் வரை அனைத்தையும் குருதுரோகிகள் அனுபவித்தாக வேண்டும்.

கசகசாம்ருத சோமவாரம்

நாள் தாத்பர்யங்களில் கசகசாம்ருத திங்கள் நாளானது (சோமவாரம்), குறித்த வருட நாளில் மட்டுமே வருவதாகும். 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வரும் இந்நாளில், விண்ணிலும், பூமியிலும் திரண்டு பொங்கும் கசகசாம்ருத சக்திகள், பல தலங்களில் திரவியங்களில், மூலிகைகளில் தங்கி, குறித்த முறைகளில் வழிபடுவோர்க்கு, அவ்வப்போது அளப்பரிய பலாபலன்களை நல்வரங்களாக அளிக்கின்றன. எனினும், முழுமையான, பரிபூரணமான பலன்களைக் குறித்த கசகசாம்ருதத் திங்கள் நாள் வரும் போது தான் பெற்றிட முடியும். இதனைச் சித்தர்கள் தக்க சற்குரு மூலமாகவே உரைப்பர்.

அபிராமி பட்டர், சோமவாரமாகிய திங்கள் தோறும், மௌன விரதம் பூண்டு கசகசாம்ருத தேவியை பூஜித்து வந்தமையால்தான், அமாவாசையிலும் கூட, பௌர்ணமிச் சந்திரனை, 16 கலைகளுடன், வானில் தோன்ற வைத்துப் பலரையும் தரிசிக்க வைக்கும் சோபன சோமவார வரபாக்யத்தைப் பெற்றார். அன்னை அபிராமியும், தம் பரிவாரமாம் கசகசாம்ருத தேவி பூஜாப் பலன்கள் மூலமே, அபிராமி பட்டருக்கு அருள்புரியும் வண்ணம், தம் தாடங்கத்தை விண்ணில் ஒளிர வைத்து, அபிராமி பட்டரின் திருவாக்கைக் காத்து, ஜீவன்களுக்கு அருள்புரிந்தனள்.

தட்சனுடைய புத்திரிகளான 27 நட்சத்திர தேவியரும், சந்திர பகவானை மணந்த போது, ஒவ்வொரு தேவியும், சந்திர மூர்த்தியை மணப்பதற்கான காரணங்களை, குக்குட மகரிஷியிடம் உரைத்து வந்தனர்.

ரோஹிணி தேவியின் முக்காலம் அறிந்த தீர்க தரிசனம்!

அப்போது 26 தேவியரும், சந்திர மூர்த்தியை, “பூரணச் சந்திரரென” விளித்திட, ரோஹினி தேவி மட்டும் அவரை, ஷோடசக் கலாரூபர் (ஷோடசம்=16) என்று அடைமொழியிடவே, ஏனைய 26 நட்சத்திர தேவியரும் விழித்தனர். ஏனெனில், அப்போது எவ்விதக் கலைப் புனல் பாகம் அல்லாது, பரிபூரண ஒளி அம்சங்களுடன், முழுமையான கலைகளுடன், சூரிய மூர்த்தி போல் தினமும் வானில் சந்திரர் ஒளிர்ந்த யுகமல்லவோ அது! ஆம், ஆரம்ப யுகக் காலத்தில், நித்தியப் பௌர்ணமிச் சந்திரனாய், வானில் சந்திர மூர்த்தி பவனி வந்தார், அமாவாசை தோன்றாத யுகமது!

ரோகிணி தேவியும், நல்ல தீர்க தரிசனத்துடன் பிற்காலத்தில், சந்திர பகவான் தம் பூரணக் கலைகளை இழக்கும் தருணத்தில், கடுந்தவம் பூண்டு, அக்கலைகளை மீட்டுத் தரவே– சந்திர பத்னியாய்த் தவம் பூண்டு, இறையருளால், தவத் துணை புரிந்திடும், ஒரு சாதகியாய், இறைக் கருவியாய்த் துலங்கிடவும், மற்றும் பல தேவ காரணங்களுக்காகவும், இறையருளால் தாம் சந்திரரை மணந்ததாக உரைத்தனள். இதைக் கேட்டு, மகரிஷிகளும், சித்தர்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் ரோகிணியின் தீர்க தரிசனத்தைப் போற்றினர்.

கலை வந்திடத் துணை புரிந்த சந்திர கலையாள்!

இவ்வகையில்தான் பின்னர், தட்சனுடைய சாபத்தினால், சந்திரனின் அனைத்து ஒளிக் கலைகளும் தேயலுற்ற போது, ரோகிணி தேவியே முன்னின்று, ஏனைய 26 நட்சத்திர தேவியரையும் வழி நடத்தி, கூட்டு யோகத் தவங்களைப் புரிந்து, சந்திர பகவானுக்குப் பதினாறு கலைகளையும் மீட்டுத் தந்து, ஔஷத மூர்த்தியாகவும் சந்திர பகவான் பொலிவு பெறத் துணை நின்றனள்.

தக்க பரவித்யா ஞானம் கொண்ட ரோகிணி தேவி, பிற தேவியருக்கும் முன்னின்று இறைவழிகளைப் புகட்டிட வேண்டும் எனச் சந்திர மூர்த்தி விரும்பினார். இதனையே அவர் ரோஹிணி தேவியிடம் கூடுதல் நேசம் கொண்டதாக, பிற தேவியரிடம் பலரும் தவறாகப் பகன்ற சரிதையை நாமறிவோம்!

கசம் நீக்கி அருள்புரியும் கசகசாம்ருத தேவி!

ஒவ்வொரு பொருளுக்கும் இரு புறங்கள் உண்டு. “கசகசா” என்றால் இருபுறமும் பேணி நிற்றல் என்று பொருள். பல அற்புதமான பீஜங்கள், பீஜ அட்சரங்கள், பீஜ அட்சங்கள், பீஜ அட்சாட்சரங்கள் ஆகிய வேதச் சதுர் பீஜகுணங்கள் நிறைந்த சொல் இது! தங்கத்தில் உள்ள அழுக்கையும், இல்லறத்தில் கணவன், மனைவி இடையே உள்ள மன வேறுபாடுகளையும் “கசம்” என்றும் சொல்வதும் உண்டு. பலத்த மனக் கசப்புகள், இல்லறப் பகைமையின் ஊடே பிறக்கும் குழந்தைக்கு இதனால்தாம் ‘கசமுத்து’ எனப் பெயரிட்டு, ‘கசம் நீக்கும்’ (வைத்ய) முத்தாய் வளரப் பெரியோர்கள் ஆசிர்வதிப்பர்.

இவ்வாறு மனக் கசத்தை அறுக்கும் முறையே கஷாயமாகின்றது. (வைத்யக்) கஷாயம் தானே நோய் நொடிகளையும், பிறவிப் பிணிகளையும் தீர்க்கின்றது!

கலியுக இல்லறத்தில், தம்பதியரிடையே மன வேறுபாடுகள் இன்றி, கசகசாம்ருத அன்பு (அமிர்த) சக்திகள் பெருகிட, ரோகிணி தேவியே கசகசாம்ருத தேவியை எந்நேரமும் பூஜித்து, அருட்பலன்களை நமக்கு நல்குகின்றாள்.

கசகசாம்ருத தேவி வழிபாடு!

அமிர்த யோகம் கூடும் திங்களன்று, மூலிகைத் திரவியங்களுள் ஒன்றான கசகசாவுடன், பால், வெல்லம், முந்திரி, திராட்சை சேர்த்து, கசகசாவினால் ஆன அல்வா செய்து, கசகசாம்ருத தேவிக்குப் படைக்க வேண்டும். ரோஹிணி தேவியுடன் சேர்ந்து அருளும் ஸ்ரீசந்திர பகவானை வழிபட்டு, கசகசா அல்வாவினை ஏழைகளுக்குத் தானமளித்து வர, இல்லற வாழ்வில் உள்ள கடுமையான மன வேறுபாடுகள் தணிந்து, அற்புதமான முறையில் குடுமபத்தில் ஒற்றுமை, சாந்தம் பெருகும்.

கசகசாம்ருத தேவியின் திருமேனித் தோற்றம், வருங்காலத்தில் தக்க சமயத்தில் வெளி வரும். அதுவரையில் ஸ்ரீசக்கர தேவியருள் ஒருவராக, அம்மனை மானசீகமாக எண்ணியும், பலாப் பலகையில் கலசம் வைத்து ஆவஹன்ம் செய்தும் வழிபட்டு வர வேண்டும்.

குடும்பத்தில் சாந்தம் பேண உதவும் கசகசாம்ருத தேவி பூஜை!

தற்காலக் குடும்ப வாழ்க்கையில் கணவன், மனைவி இடையே பலத்த மன வேறுபாடுகள் பெருகி வருகின்றன. விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, பரஸ்பர அன்பு, பணிவு, அடக்கம் போன்ற நற்குணங்களை கு(ம)றைந்து வருவதும், பக்தி நிறைந்த தக்க பூஜை, விரத வழிபாடுகளும் இல்லாமையுமே, இத்தகைய பலத்த மன வேறுபாடுகளுக்கு மூல காரணமாகின்றன. இதற்குத் தக்கப் பரிகாரமாக அமைந்து, குடும்ப நல்வாழ்விற்குத் துணைபுரிவதே ஸ்ரீகசகசாம்ருத தேவி வழிபாடாகும்.

ஸ்ரீகசகசாம்ருத தேவிக்கு உரிய தோற்றம், சக்ர, யந்திர, மந்திரத் துதிகள் தக்க சமயத்தில் சற்குரு மூலமாக, ஸ்ரீஆயுர்தேவி போன்று உதயமாகும் வரை, கசகசாம்ருத தேவ சக்திகள் பரிணமிக்கும் தலங்களில் பூஜித்து வருக!

கசகசாம்ருத சக்திகள் பூரிக்கும் தலங்கள்!

கசகசாம்ருத தேவ சக்திகள் திளைக்கும் தலங்களுள் ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர், ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீசந்திரசேகரர் போன்ற சோம, சந்திர நாமத்துடன் இறைவன் அருளும் தலங்களும் உண்டு. ஸ்ரீசந்திர பகவான் தனித்து அருளும் சன்னதிகள், சுக்கிரவார அம்மன், ஆடிப் பூர அம்மன் அருளும் தலங்கள், (சென்னை – பூந்தமல்லி அருகே உள்ள) நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை, திங்களூர், பட்டீஸ்வரம் அருகே சந்திரசேகரபுரம், பழையாறை, பேராவூரணி அருகே பெருமகளூர், முசிறி போன்றவையும் முக்கியமானவையே! இவற்றில் கீழ்க் குறித்த நாட்களில் அபிஷேக, ஆராதனைகள், தான, தர்மங்களுடன் வழிபடுதல் சிறப்புடையதாம்.

திங்களூர்

கசகசாம்ருத சக்திகள் பூரிக்கும் இத்தலங்களில், சந்திர கிரகத்திற்கான நட்சத்திர நாட்களான ரோஹிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திர நாட்கள், மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாள், திங்கள கிழமை, சந்திர கிரகண நாட்களில் சந்திர சேகராஷ்டகம், அபிராமி அந்தாதி மற்றும் சந்திரத் துதிகளை ஓதி, பக்தியுடன் வழிபட்டு வர, திருமணம் ஆகாதவர்களுக்குத் தோஷங்கள் நீங்கி நல்வரங்கள் அமைய உதவும். தம்பதியரிடையே ஒற்றுமை கிட்டும். அலுவல், தொழில், சச்சரவுகள் காரணமாகப் பிரிந்து வாழும் கணவன், மனைவி, குழந்தைகள், தம்பதியர் ஒன்று சேர நல்வழி பிறக்கும். மன உளைச்சல்கள் அடங்கி, மன நிம்மதி கிட்டும்.

எடுத்துச் சொல்வதும் ஏகாம்பர சேவையே!

விஷ்ணுபதி, கசகசாம்ருத சோமவாரம் போன்ற தொன்மையான மிகவும் சக்தி வாய்ந்த பல அபூர்வமான விரதங்கள், பண்டிகைகள் பஞ்சாங்கங்களில் கூட இடம் பெறாது ம(ற)றைந்து விட்டனவே. என் சொல்வது? அவ்வப்போது சற்குருமார்களால் இவ்வகையில்தாம் ஜீவசமுதாய நன்மைக்காகப் பல தெய்வீக ரகசியங்களும் எடுத்துரைக்கப்படுகின்றன. தாமும், பிறருக்கு எடுத்துச் சொல்லியும், கடைபிடித்துப் பயன் பெறுவது மனித சமுதாயத்தின் தலையாய கடமையாகும்.

தற்போதைய உலகின் அனைத்து வகைத் துன்பங்களுக்கும், ஆன்மீகத் துறையில்தாம் நல்ல, பரிபூரணமான தீர்வுகளைப் பெற முடியும் என்பதால் இத்தகைய தொன்மையான சக்தி வாய்ந்த எளிமையான விரதங்களை, பண்டிகைகளைச் சமுதாயப் பூஜைகளாக ஆலயங்களில் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலம் போலக் கண்டிப்பாகக் கடைபிடித்தல் வேண்டும்.

பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி

உத்தர அங்காரகத் தலம் – உத்தர வைதீஸ்வரன் கோயில் பூந்தமல்லி ஸ்ரீதைலநாயகி சமேத ஸ்ரீவைத்யநாத சுவாமி திருக்கோயில்!

திதி, நட்சத்திரம், அமிர்த யோகம், சித்த யோகம், மரண யோகம், தவிர, காலவகைகளில் விஷ்கம்பம் முதல் வைதிருதி யோகம் வரை 27 வகை யோகங்கள் உண்டு. இதில் வ்யதீபாதம், வைதிருதி ஆகிய இரண்டு யோக நாட்களும் ஷண்ணாவதி சிராத்த நாட்கள் எனப்படுவதான, ஒரு ஆண்டின் 96 வகைத் தர்ப்பண நாட்களில் இடம் பெறுகின்றன. மேலும் இதில் விஷ்கம்ப யோக நாள் நல்ல நோய் நிவாரண நாளாக அமைகின்றது.

குறிப்பாக மன வியாதிகள், ரத்த அழுத்தம், நரம்பு மற்றும் இருதயம், சம்பந்தமான நோய்களுக்கான நிவாரணம் பெற, பஞ்சாங்கம் மூலமாக விஷ்கம்ப யோக நாளை அறிந்து இந்நாளில் ஸ்ரீவைத்யநாத சுவாமியை வழிபடுதல் வேண்டும். கலியுகத்தில் மன வியாதி, மன பீதி, மனோபயம் மற்றும் பலவிதமான மன நடுக்கங்களுக்கும், உடல் நடுக்கங்களுக்கும் மனிதன் ஆளாகின்றான். இத்தகைய நடுக்கங்களைக் களைவதற்கு உதவும் வண்ணம் சரபேச சக்திகள் அமைந்துள்ளன. எனவேதாம் சித்தர்களின் அருளால் ஸ்ரீசரபேஸ்வர வழிபாடு தற்போது பைரவ வழிபாடு போல் மிகவும் பிராபல்யம் அடைந்து வருகின்றது.

சென்னை அருகே பூந்தமல்லியில், ஸ்ரீஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட மூன்று யந்திரங்கள் துலங்கும் உத்தர அங்காரகத் தலமான, பூந்தமல்லி ஸ்ரீதைலநாயகி சமேத ஸ்ரீவைத்யநாத சுவாமி ஆலயத்தில் நவகிரகம் அருகே உள்ள தூணில் ஸ்ரீருணஹர சரபேஸ்வரராக, சரப ரூபங் கொண்டு சுவாமி அருள்கின்றார். மனிதனுடைய கர்ம பரிபாலனத்திற்கு நன்முறையில் அருள்கின்ற ஆயுள்காரகரான ஸ்ரீவேதசார சனீஸ்வரர், இங்கு ஸ்ரீருணஹர சரபேஸ்வரரை விஷ்கம்ப யோக நாட்களில் தொழுது, பிருதிவிக் கும்பம் எனப்படும் (புதிய) மண் பானையைச் சுற்றித் தர்ப்பைப் புல்லால் காப்பிட்டு, இந்த விஷ்வ கும்பக் கலச தீர்த்தத்தால் அபிஷேகித்து வழிபட்டார். இங்குதாம் ஸ்ரீவேதசார சனீஸ்வரர் கிழக்கு நோக்கித் தனிச் சன்னதி கொண்டு அருள்கின்றார்.

இந்த ஆலயத்தில் விஷ்கும்ப யோக நாளில் கங்கை, காவிரி, கிருஷ்ணா போன்ற புண்யத் தீர்த்தத்தில் வில்வம், துளசி, ஜவ்வாது, புனுகு, வெண்மிளகு ஆகிய ஐந்து பஞ்ச ருணஹர திரவியங்களையும் சேர்த்து அபிஷேகித்து, ஸ்ரீருணஹர சரபேஸ்வரருக்கு தர்ப்பைப் புல்லால் வஸ்திர அலங்காரம் செய்து வழிபட்டு, மிளகு வடை படைத்து, இங்கு மற்றொரு தூணில் தோன்றியுள்ள ஸ்ரீரோகநிவர்த்தீச அவதூதுச் சித்தரையும் 12 முறை வலம் வந்து வணங்கி, மிளகு வடையை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால், எத்தகைய உடல் நடுக்கங்களும், மன பீதிகளும், மனோ வியாதிகளும், மனக் கஷ்டங்களும், வேதனைகளும் தணிவதற்கான நல்வழிகள் கிட்டும்.

காண்பதற்கு அபூர்வமான பாண லிங்கங்கள், ஸ்ரீஆதிசங்கரர் நிர்மாணித்த யந்திரங்கள், அங்காரக பாதம், நோய் நிவாரணத்திற்கு உதவும் ஸ்ரீரோகநிவர்த்தீச அவதூதுச் சித்தர் அருளும் அற்புத உத்தர வைதீஸ்வரத் தலமே பூந்தமல்லி ஸ்ரீதைலநாயகி சமேத ஸ்ரீவைத்யநாத சுவாமி சிவாலயம் ஆகும்.

கடன்

கடன் சுமை வரும் விதமும் தீர்க்கும் முறைகளும்

தற்காலத்தில் அனைத்து நாடுகளிலும், பெரும்பாலான மக்களுடைய பிரச்னையே, பணக் கடன் சுமையே ஆகும். நோய்த் துன்பங்களைக் கூடப் பல ஆண்டுகள் தாங்கும் மனிதன், கடன் சுமை தாளாது உயிரை மாய்த்துக் கொள்ளும் அவல நிலைக்குச் சென்று விடுகின்றான். தற்கொலை, பிறவிக் கடன்களையும் பெருக்கும், சந்ததிகளையும் வெகுவாகப் பாதிக்கும்.

தற்கொலை நடந்துள்ள குடும்பத்தார், தம் சந்ததிகளை நன்கு காப்பாற்றிட, மயிலாடுதுறை அருகே உள்ள திருக்கறிப்பறியலூர் ஸ்ரீகுற்றம் பொறுத்தநாதர் ஆலயத்தில் விளாம்பழம், வில்வப் பழம், மங்குஸ்தான் முதலிய ஓட்டு வகைக் கனிகளுடன் 12 விதமான பழங்களால் வளர்பிறைப் பிரதோஷம் மற்றும் அமாவாசை தோறும் சுவாமிக்கும், அம்பிகைக்கும் கனிக்காப்பு இட்டு, அபிஷேக, ஆராதனைகள் செய்து, தர்ப்பணக் காரியங்களை நிகழ்த்தி, பித்ரு சக்திகள் நிறைந்த புடலங்காய் வகை உணவினை அன்னதானமாக இட்டுத் தொடர்ந்து வழிபட்டு வந்தால், பிரேத சாபங்கள் சந்ததிகளைத் தாக்காது தற்காத்துக் கொள்ளப் பரிகார வழிகள் கிட்டும்.

ஆனால் தற்கொலைக்குப் பரிகாரப் பிராயச்சித்தமே கிடையாது என்பது நினைவிருக்கட்டும். தற்கொலை செய்து கொண்டோருடைய ஆன்ம சாந்திக்கும் வழிவகை காண்பது மிக மிகக் கடினமே!

கடன் சுமையும், பணச் சுமையும்!

மாதந்தோறும் அலுவலகங்களில் எத்தனையோ வகைக் கடன் பிடித்தங்களுடன், கைக்கும் வாய்க்குமாகச் சொற்பச் சம்பளத்தில் தற்போது பலரும் வாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதும் நாம் நன்கு அறிந்ததே!

ஒருவர் கடன் வாங்கினால், பண வளம் உள்ள மற்றொருவர் கடன் கொடுத்தால் தானே வாங்க முடியும்! இப்படிப் பார்த்தால், கடன் சுமை ஒரு சாராரிடம் இருப்பதாகவும், இதற்குச் சரியாக, அதிகப் பண வளம் (பணச் சுமை!?) உள்ளவர்களும் சமுதாயத்தில் இருப்பதாகத்தானே எண்ணத் தோன்றுகிறது! நன்கு சிந்தித்துப் பாருங்கள்!

ஆன்மீக ரீதியாக, முதலில் பணத்திற்கான, கடனுக்கான விளக்கங்களை நன்கு புரிந்து கொள்ளுங்கள். இவ்விளக்கங்கள் முதலில் தத்துவார்த்தமாகத் தோன்றினாலும், வாழ்நாளில் நன்கு ஆத்மவிசாரம் செய்து உணரப் பெற வேண்டியவை!

பணம் ஒரு மாயையே!

ஆம்! பணக்காரர்களோ, ஏழைகளோ, நடுத்தர வர்க்கமோ, பண மாயையில் தானே இன்றைய மனித குலம் மூழ்கித் தத்தளிக்கின்றது! ஆனால் மாயா சம்பந்தப்பட்ட உலகில், மாயையில் சிக்கி, மனித குலம் தம் மன நோக்குப்படி தற்போது வாழ்வதால் தான், மாயைப் பொருளான பணமும் ஒரு பொருட்டாகி, வாழ்க்கையின் முக்கியமான பொருள் போல் (மாயத்) தோற்றம் கொண்டு ஆட்டி விடுகின்றது.

மாறிக் கொண்டே இருப்பது மாயை! இறைப் பொருள் ஒன்றே மாறாமல், மறையாமல் சாசுவதமானது!

மாயையிலும், அதீத வகை மாயைப் பொருளே பணம் ஆகும். அதாவது செடி, மனித உடல், இரும்பு, மணல் போன்றவற்றின் உட்பொருள். வெளித் தோற்றம் எப்போதும் மாறி, இவற்றின் குணங்களும் மாறிக் கொண்டே இருப்பது போல், அவரவர் வினைகளுடனும் சம்பந்தம் உடையதாய் மாற்றம் தந்து கொண்டே இருப்பதே பணம் ஆகும்.

வினைப்பூர்வ விளைவாகவும் பணம் வரும். உங்கள் பை(க)யில் தற்போது இருக்கும் பணத்திற்கும், உங்கள் கர்ம வினைகளுக்கும் “ருண பந்தங்கள்” என்ற வகையான கெட்டியான தொடர்புகள் உண்டு. எனவே எண்ணற்ற மன மாற்றங்களை, கர்ம வினைகளின் சுழற்சியை, மாயச் சக்கரமாய் ஆட்டி, அளிக்க வல்லதும் பணமேயாம்.

பணத்தில் சேரும் சங்கட கர்ம தோஷம்

பணத்தை வெறுமனே பணமாகவே சேர்த்து அல்லது பதுக்கி வைத்தாலும், சங்கட கர்ம (எதற்கும் பயன்படுத்தாத) தோஷம் சேர்ந்து, பெட்டியில் அல்லது வேறு விதத்தில் பதுக்கப்பட்ட, வைக்கப்பட்ட பணமும், பலத்த தோஷங்களுக்கு, மாறுதல்களுக்கு உள்ளாகி வருகின்றது.

பண நோட்டு ஒரு வெறும் காகிதச் சீட்டே! இவ்வாறு பணத்தாளை சாதாரணக் காகிதமாக உணரலாகும் உத்தம ஆன்ம நிலை வரும் வரை, பணத்தாள் மாயைக் குழியில் யாவரும் சிக்குண்டே ஆக வேண்டும். ஆனால் இந்த உத்தம நிலை எளிதில் அடைய இயலாதது ஆயிற்றே!

இந்தப் பண மாயையில் இருந்து மீள, பணத்தை ஆன்மப் பூர்வமாக ஆக்கப்படுத்த வேண்டும். ஏனெனில் மாயை சம்பந்தப்பட்ட ஒரு பொருள், நல்வழியில் ஆக்கம் பெறும் போது, அதில் உள்ள மாயையின் ஒரு பகுதி ஆக்க சக்தியாக, புண்யசக்தியாக மாறுகின்றது.

அரிசி, தான்யம், நீர், கனி போன்ற ஜீவ சக்தி நிறைந்த பொருட்களில் மாயை சம்பந்தப்பட்டு இருந்தாலும், அவற்றில் உறைபயனாகப் புண்ணியம் தோய்ந்திருப்பதால், பணத்தை கவ்வும் மாயை அவ்வளவாக அவற்றைச் சூழ்வதில்லை! இவை யாவும் இயற்கையாக வருவதால் ஆன்ம குணங்கள் தோய்ந்து வரும். ஆனால் மனிதனால் உருவானதுதானே பணத் தாள் வடிவு! நாணயங்களில் உலோகக் கலவை இருப்பதால் அந்தந்த நல்உலோகக் கலப்பைப் பொறுத்து, மாயைத் தன்மைகளை ஓரளவு தணிக்கலாம்.!

பண்டமாற்று முறையே சிறப்புடையது!

அக்காலத்துப் பண்டமாற்று முறையில், தீவினைகளும், மாயா அம்சங்களும் அவ்வளவாகத் தோய்வதில்லை! வருங்காலத்தில் பணவகைப் பொருளாதார நெருக்கடி நிலை தாங்காது, உலகில் பண்டமாற்று முறை மீண்டும் சிறிது, சிறிதாக நடைமுறைக்கு வரும் என்பது சித்தர்களின் வாக்கு!

நீர், திரவியம், தானியம் போல் இயற்கையாக வந்ததாக அல்லாது, பணம் என்பது பண்டமாற்றை எளிமைப்படுத்த, மனிதன் தனக்குத் தானே செயற்கையாகப் படைத்துக் கொண்டதுதானே! பண்டமாற்று முறையானது, பண வடிவில் எளிமையானது போல் தோன்றினாலும், பணம் தன் மாயைத் தன்மையை ஒரு போதும் இழப்பதில்லை. ஏனெனில் அவரவருடைய கர்ம வினைகளின், நல்லவற்றின், தீயவற்றின் தன்மைகளுக்கு ஏற்பவே, ஒருவரிடம் பணம் சேருவதால் மாயை குணங்கள் பணத்தில் நன்கு தோய்ந்து விடுகின்றன. மக்களுடைய பேராசை, துராசை, நிராசை ஆகிய மூன்றுமே, பணத்தில் பதிந்துள்ள மாயா நிலைகளுக்குக் காரணமாகின்றன.

பூர்வ ஜன்மங்களில் தான, தர்மங்களை நன்கு ஆற்றியோருக்கு, அவற்றின் புண்ய சக்தியின் ஒரு பங்கு செல்வமாக வந்து சேரும். வெறும் பணக் குவிப்பு செல்வமாகாது, திருமகள் கடாட்சமும் ஆகாது!

கடன் சுமை, பணத்தால்தான் வர வேண்டும் என்பதில்லை, வினைப் பயன்களாலும் பணக்காரர்களுக்கும், வசதி படைத்தோர்க்கும் கூட பணமுடையாகக் கடன் வரும். வினைகளின் அழுத்தம் அதிகமாகி, மாயைகள் பெருகும் போது சிறு கடன், பெரும் கடன் சுமையாகின்றது.

முக்கடன் தீர்க்கில் எக்கடன் சேரும்!

பல வகைக் கடன்களில், தேவ கடன் , ரிஷி கடன், பித்ரு கடன் ஆகிய மூன்று முக்கியக் கடன்களின் பெருஞ்சுமை மிகவும் அதிகமாகச் சேர்ந்தால், அது பணக் கடனாகவும் வந்து சேரும்.

எனவே யாருக்குப் பணக் கடன் நிறையச் சேர்ந்து விட்டதோ, அவர்களுக்கு, தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன் மூன்றும் நிறையச் சேர்ந்து விட்டதாகவே பொருள், எனவே தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடனை முறையாகத் தீர்த்தால்தான், பணக் கடன் சுமையும் முழுமையாகத் தீரும்.

ஆனால் தேவ கடன், ரிஷி கடன், பித்ரு கடன்களைத் தீர்த்தல் என்றால் தக்க பூஜைகள், பிராயசித்தப் பரிகாரங்களைச் செய்தாக வேண்டும். இவற்றுக்கும் செலவாகுமே என்று பலரும் யோசிப்பர். பரிகாரங்கள் மூலமாகக் கடன் தீர்தல் என்றால் கடன் கொடுத்தவரிடம் எதையுமே திருப்பித் தராது, ஆன்மீக ரீதியாக, எங்கிருந்தோ பணம் வந்து கொட்டித் தீர்வாக வேண்டும் என்று எண்ணுவது மடைமை! இவ்வாறு எண்ணுவதும் தவறே, அதர்மமே!

பரிகாரச் செலவு ஒரு செலவு வகை அல்ல, புண்ணிய வரவே!

50,000 ரூபாய் ஒருவருக்குக் கடனாக உள்ளது, அவர் செய்யும் தான, தர்மப் பரிகாரப் பூஜை, முறைகளுக்கு, ரூபாய் 300 செலவாகின்றது எனில், பரிகார பூஜா பலன்களாக, பண வரவாக, நியாயமான முறையில், ரூபாய் 8,000 கூடுதலாகப் பண வரவு வந்தால், அதனை வைத்து அவர் தார்மீக ரீதியாகத் தன் கடனை ஓரளவு முதலில் அடைத்திட வேண்டும்.

ஆனால் நடைமுறையிலோ, கலியுகத்தில் கூடுதல் பணத்தைக் கண்டதும், கடனை அடைக்க வேண்டும் என்ற நல்ல புத்தி அடியோடு மாறி, வந்த பணத்தைத் தன் சொந்தச் செலவுக்குப் பயன்படுத்தும் அவல புத்தியே முன் வந்து நிற்கும்.

இதனால், அந்தப் பரிகார விளைவுகளே திருப்பம் கொண்டு மீண்டும் வினைகள், பெரு வினைகளாக மாறி, கடன்களாக முற்றி, பெரிய பணக் கடன்களாக வடிவெடுத்து அவர் மீது பாய்ந்து விடும் என்பதும் பரிகார விதி நியதிகளுள் ஒன்றே! இவ்வாறும் கடன் சுமை பெருகிடும். அதாவது சங்கல்பத்தின்படி, பூஜா பலன்களைக் கையாள வேண்டும் என்பது இதில் கிட்டும் பாடம் ஆகும். ஏனெனில் பரிகாரப் பூஜைக்கான முக்கியச் சங்கல்பமே, கடனை அடைப்பதற்கான பண வரவிற்கு எனும் போது, பரிகாரப் பலனாக வரும் ஓரளவு பணத்தைக் கண்டவுடன் புத்தி மாறலாகுமா?

பரிகாரப் பலன்களில் பாதை மாறலாகாது!

எனவே பரிகார நல்விளைவாக வந்த பணம் கடனடைக்கச் செல்ல வேண்டுமே தவிர, பொறுப்பின்றித் தன் சுயதேவைக்கு எனச் செலவிட்டால் அது எவ்வளவு அத்யாவசியமான செலவாக இருந்தாலும் சரி இந்தப் பரிகாரச் சங்கல்ப மீறுதலானது, பிரார்த்தனையை அவமதித்த தேவ குற்றமாக்கி, தேவ கடனைப் பெருக்கி விடும். இவ்வகையிலும் தற்போது பலருக்கும் பணக் கடன் சுமை பெருகி உள்ளது. ஆனால் இவர்கள் வெளியில் சொல்வதோ பரிகாரம் செய்தும் கடன் சுமை தணியவில்லை என்பதாம்.

மேலும் பரிகாரத்தால் கூடுதல் செலவுகளாகிக் கடன் பெருகி உள்ளது எனவும் பலர் தவறாக உரைப்பார்கள். இவ்வாறு தவறாக உரைப்பதும் வாக்குக் கடனாகி, இதுவும் பெரிய கடன் பாக்கிகளாக வந்து விடும்.

கடன் சேரும் விதமும் உடன் பாரும் அய்யா!

அடுத்ததாக, கடன் எவ்வாறு சேர்ந்தது என்பதும், பரிகாரம் பலிப்பதற்கு மிகவும் முக்கியமானதாகும். ஆடம்பரம், அநாவசியச் செலவுகள், கெட்ட வழக்கங்கள், வியாபாரத்தில் அகலக் கால் வைப்பு, மது, புகை போன்ற கெட்ட பழக்கங்கள், தீய திரவியத் தொழில், அளவுக்கு மீறி தொழிலில் risk எடுத்தல், சூதாட்டம், தீய சகவாசம், தீவினைகள், தீய செய்கைகள், ஆபாசமான கதைகள், நாவல்கள், பாடல்கள் எழுதல், ஆபாசமாக நடித்தல், தீய வழியிலான, தவறான பாத்திரங்கள் கூடிய நாடகம், சினிமா எடுத்தல், இயக்குதல், தயாரித்தல், நடித்தல் போன்ற வகைக் காரணமாகச் சேர்ந்த கடன்கள் என்றால் இதனைப் பரிகாரங்கள் மூலமாகத் தீர்த்தல் மிக மிகக் கடினம்.

தான தர்மங்கள் செய்தல், மருத்துவம், வீடு கட்டுதல், கல்வி, ஆலயப் பணிகள், சமுதாய இறைப் பணிகள் போன்ற முறையான நற்காரியங்களுக்காகக் கடன் சேர்ந்தது என்றால், இவற்றையே தக்க பரிகாரங்கள், பிராயச் சித்தங்கள், பூஜைகள் மூலம் ஓரளவு தீர்க்க முடியும்.

எண் சாண் உடம்பிற்குப் பணமா பிரதானம்? ஏனிந்த இழிநிலை?

தற்போது கலியுகத்தில் பணமே எதற்கும் பிரதானமாக ஆகி வருவது மிகவும் வேதனையானது. பணச் சண்டையால் பிரிந்த குடும்பங்கள், முறிந்த உறவுகள் எத்தனை, எத்தனை? பணம் இல்லாதோரைத் தற்போது சமுதாயத்திலும் மதிப்பதில்லை! பணம் மீது சேர்(த்)ந்த ஆசையால், பணத்தை அபகரிப்பதற்கான சதிகள், வியாபாரக் கூட்டு முறிவு, கொலை, கொள்ளை, கையாடல், வன்முறைச் சம்பவங்கள், உறவு, நட்பு முறிவுகளும் ஏற்பட்டு விடுகின்றன. எண் சாண் உடம்புக்குப் பணமே பிரதானம் என்பது போல பண ராஜ்யம் போன்ற மாயையான தோற்றம் ஏற்பட்டு விட்டது.

இதற்குக் காரணம் அனுஷ நட்சத்திரம், வெள்ளி நாள் விரதங்கள், திருமகள் பூஜைகள், சுக்ர கிரக பூஜைகள் போன்றவை கடைபிடிப்பார் இன்றி மங்கி விட்டதும் காரணம் ஆகும். ஒவ்வொருவருக்கும் வர வேண்டிய திருமகள் கடாட்ச சக்தி என உண்டு. பண தோஷங்களை மேற்கொண்ட வகையில் ஒருவர் பெருக்கிக் கொண்டால், லக்ஷ்மி கடாட்சத் தன்மை மறையலாகும்.

ஆலயங்களை ஒட்டிக் கழிப்பிடம் அமைந்து, திருக்குளத்தில் கழிவு நீர் சேர்ந்தாலும் அது சமுதாயத்தில் திருமகள் கடாட்சத்தைப் பெரிதும் பாதிக்கும் பண தோஷங்களைப் பெருக்கும்.

செய்ய வேண்டியதைச் செய்யாவிடிலும் கடனாய் வந்து சேரும்!

வினைப் பூர்வமாகவும் கடன்கள் வருவதுண்டு! அதாவது செய்ய வேண்டியதைச் செய்யாவிடில், செய்ய வேண்டிய வினைகளின் பாக்கிகள், சொத்துப் பூர்வமானக் கடன்களாக வந்து சேரும்!

கடவுள் தனக்கு அளித்த ஞானத்தை, அறிவை, திறமையை, வலிமையை, ஆற்றலை, திரவியங்களை, செல்வத்தைப் பிறருக்கு நல்முறைகளில் பயன்படும் வகையில், (தான, தர்மமாகச்) சிறிதளவேனும் அளித்து, சேவை செய்து வாழ வேண்டும். இல்லையெனில் தொழிலில், பணியில், நஷ்ட வடிவில் கடன்களாக மாறும்.

தன்னைப் போலவே பிறரும் நன்கு உண்டு வாழ வேண்டும், தன்னால் உண்ண முடியாததைப் பிறராவது உண்ணட்டும் என எண்ணுவதும் அன்னதானத்தின் ஆரம்ப நிலை! இரண்டு மாம்பழங்களைத் தானமாக அளிப்பதும் கூட அன்னதானமே! எனவே தன்னால் முடிந்த அளவு ஆனந்தைத் தினந்தோறும் அன்னதானமாக அளித்து வரவேண்டும்.

இது அவரவரிடம் இருக்கின்ற பணத்தை நன்முறையில் விருத்தி செய்யும். இருந்தும் தர மறுக்கும் மன நிலையால், திடீர் விபத்துகள், பொருள் நாசம், இயற்கைச் சீற்றங்களால் சொத்து இழப்பு போன்ற வகையில் நிர்மாண, நிவாரணச் செலவுகள் அதிகரித்துக் கடன்களாகும்.

தான, தர்மம் செலவாகாது, புண்ணிய வரவே!

ஏதேதோ செலவுகளில், தான தர்மச் செலவும் சேர்ந்தால், இதில் கிடைக்கும் புண்ணியம், இதர வீண் செலவுகளில் சேரும் கர்மச் சுமையைத் தணித்திடும் அல்லவா!

தான தர்மத்திற்காக ஆவதைச் செலவு என்று சொல்தல் கூடத் தவறானதே! உண்மையில் முறையாக வந்த பணத்தில் ஆகும் தான தர்மத்திற்கான பணச் செலவு, புண்ணிய வரவாகவே ஆகின்றது. இதனால்தான் தர்மம் தலை காக்கும் என்று பெரியோர்கள் உரைத்தனர். இந்த மூதுரையில் “தலை” என்பது குலத்தை, வழிவழியான குடும்ப சந்ததியையும் குறிப்பதாகும்.

நம் மூதாதையர்களின் தான, தர்மப் பண்பாடுகளினால்தான் நாம் இன்று வீடு, வாசல், நிலம், பிள்ளைகள், குடும்பம், பணி, தொழிலுடன் நிலைத்து இருக்கின்றோம் என்பதை நன்கு உணர்ந்திடுக!

கீழ்சூரிய மூலை

பாஸ்கர “கோ” ஷோடசப் பிரதோஷம்

கீழ்சூரியமூலை பாஸ்கர “கோ” ஷோடசப் பிரதோஷ பூஜை மகிமை! (கும்பகோணம் – கஞ்சனூருக்குச் சற்று முன்னர், துகிலி – திரைலோக்கி கிராமங்களின் அருகில் உள்ளதே கீழ்சூரியமூலை!

ஒரு யுகத்தில், ஆயிரம் கோடி சூரிய மூர்த்திகள், ததோயுக்த வியூகம் பூண்டு, ஸ்ரீசூரிய கோடீஸ்வர சிவமூர்த்தியை வழிபட்ட அதியற்புத பூமி!

ஆயிரம் கோடி சூர்ய மூர்த்திகள் வழிபட்டு, பல வழிகளில் களங்கமுற்ற தம் கிரணங்களுக்குப் பிராயச்சித்தம் நாடி, பாஸ்கர “கோ” பிரதோஷ முறையில் பிரதோஷ பூஜைகளை ஆற்றி வழிபட்ட தலமே கீழ்சூரியமூலை.

பொய் சொல்லியே வாழ்க்கை நடத்துவோரிடம் பணம் நிலைக்காது! இவர்களுக்குத் தீர முடியாத வகையில் கடன்கள் பெருகும். பிறருடைய மனதைக் கெடுக்கின்ற வகையிலே கதைகள், நாவல்கள், பாடல்கள், பத்திரிகைகள், புத்தகங்களை எழுதுவோர், தீய வழியில் கம்ப்யூட்டர் வெப்ஸைட் ஆக்குவோர், ஆபாசமான சினிமா, நாடகங்களில் நடிப்போர், இவற்றை இயக்குவோர், தயாரிப்பாளர்களுக்குக் கடும் பாவ வினைகள் தொற்றும்.

ஸ்ரீசூரிய கோடீஸ்வர மூர்த்தி
கீழ்சூரியமூலை

இவ்வாறு முறையற்ற வகையில் வந்த பணத்தில், விஷகுண தோஷங்கள் பெருகி, பெரும் கடன்கள் சூழ்ந்து, பலத்த மன பீதிகள், மனோ வியாதிகள் தொற்றும், சந்ததிகள் பலமான பாதிப்புகளுக்கு ஆளாவர். லட்சக்கணக்கான மக்களின் நல்மனதைச் சீரழித்தமைக்குப் பெரும் தண்டனையாக, இவர்கள் பல்லாயிரம் பிறவிகளிலும் தீர்க்க இயலாப் பைத்திய நிலைகளுடன், மன நோய்களால் தாக்குண்டு அவதியுறுவர்.

இத்தகைய வல்வினைகளுக்கு, கொடுமையான பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக, இவர்கள் நல்புத்தி வேண்டி, திருந்தி வாழச் சங்கல்பித்து, தினமும் சூரிய நமஸ்காரத்துடன் கதிரவனை வழிபட்டு வர வேண்டும்.

மேலும் கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்று சூரிய நட்சத்திர நாட்களிலும், சப்தமி, ஞாயிறு போன்ற அக்னி வகை நாட்களிலும், கீழ்சூரியமூலை கிராமத்தில் அருளும் ஸ்ரீசூரியகோடீஸ்வர சிவ மூர்த்தியை வழிபட்டு வருதல் வேண்டும்.

இங்கு, ஒரு யுகத்தில் கத்ரிக் காலமே பிரமோற்சவ காலமாகப் பொலிந்தது! இதனை மீண்டும் புனர வைத்தல் மகத்தான சமுதாய பூஜை ஆவதுடன், பல்வினைக் கடன்களையும் போக்க வல்லது. உலக க்ஷேமத்திற்குப் பெரிதும் துணை புரிவதாம்.

இத்தலம் பண்டைய யுகங்களில், பழவாற்றுப் பவித்ரத் தர்ப்பண மண்டலமாக, பித்ரு முக்தித் தலமாக, அதாவது பித்ருக்களுக்கும் முக்தி தர வல்ல தலமாகத் துலங்கியது. இதன் மேன்மையை மீண்டும் உலகிற்கு உணர்த்தும் வகையில் அன்பர்கள் இங்கு வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து உலகங்களுக்கும் ஒளி வழங்க வேண்டிய ஓய்வில்லாத நித்தியக் கடமையால், அரும் பெரும் பணியால், பிரதோஷ பூஜை ஆற்ற இயலாது ஆதி சூரிய பகவான் வருந்தினார். மேலும் அனைத்துக் கோடிப் பிரபஞ்ச ஜீவன்களின் நல்லது, நல்லது அல்லாதவை என அனைத்து செய்கைகளையும், எந்நேரமும் சூரிய, சந்திர மூர்த்திகள் விண்ணிலிருந்து நிரந்தர சாட்சியாகக் காண்பதால், தங்களுடைய கிரணங்களில் படியும் தோஷங்களுக்குத் தக்க தீர்வுகளைப் பெற்றுத் தருமாறும் வேண்டி இங்கு பைரவரை வழிபட்டனர்.

இப்புனித பூமியில், கத்ரி மண்டல கிருஷ்ண பட்ச அஷ்டமித் திதியில் உற்பவித்த, ஸ்ரீவித்ருமாகர்ஷண பைரவர் (ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கும் மூத்தவர்) தம் கழுத்தில் இருந்த பவள மணியால், பிரபஞ்சத்திற்குச் சில முகூர்த்த நேரம் சூரியப் பிரகாசம் தந்து, சூரிய மூர்த்திக்குச் சற்றே ஓய்வு தந்திட்டு, அவர் இங்கு பிரதோஷ பூஜை ஆற்றுவதற்கான நல்வாய்ப்புகளை அருளினார்.

கீழ்சூரியமூலை

மேலும் ஸ்ரீவித்ருமாகர்ஷண பைரவர், அனைத்துக் கோடி சூரிய மூர்த்திகளையும், கீழ்சூரிய மூலையில் குழுமச் செய்து, ஸ்ரீயாக்ஞவல்கிய மகரிஷி முன்னிலையில், இங்கு பாஸ்கர “கோ” ஷோடசப் பிரதோஷ பூஜையை விமரிசையாக நடத்திடவும் அருள்பாலித்தார்!

இங்கு, கீழ்சூரிய மூலையில்தாம், ஸ்ரீவித்மாகர்ஷண பைரவர், தம் குழுத்துப் பவள மணியின் ஏழு ஒளிக் கிரணங்களின் மூலம், அனைத்துக் கோடிச் சூரிய, சந்திர மூர்த்திகளின் ஒளிக் கிரணங்களில் ஏற்படும் களங்க தோஷங்களுக்கும் நிவர்த்தி தந்து அருளினார்.

ஸ்ரீவித்ருமாகர்ஷண பைரவருக்கான பஞ்சாத்ரேயக் காப்பு

எனவே பூலோகத்தில் எத்தகைய பாவம் இழைத்தோரும்,

  1. மனம் திருந்தி வாழ்ந்திட உறுதி பூண்டுச் சங்கல்பம் ஏற்பதுடன்,
  2. தம்மால் பாதிக்கப்பட்டோருக்கும் தக்க நிவாரணங்களைத் தந்திட ஆவன செய்து

கீழ்சூரிய மூலை ஸ்ரீசூரியகோடீஸ்வர சுவாமி ஆலயத்தில், தினந்தோறும், பைரவ பூஜா சக்திகள் அபரிமிதமாகச் சிறப்பாக மிளிரும் குளிகை நேரத்திலும், அஷ்டமித் திதி நாட்களிலும் ( சந்தனம் + ஜவ்வாது + கஸ்தூரி + புனுகு + கோரோஜனை ஆகிய ஐந்தும் கூடிய)  பஞ்சமாத்ரேயக் காப்பு இட்டு, ஸ்ரீவித்ருமாகர்ஷண பைரவரை வணங்கி வருதல் வேண்டும்.

ஆதிசூரிய பகவான் கடைபிடித்த வழியில், பாஸ்கர “கோ” ஷோடசப் பிரதோஷம் (கோ = பசு, ஷோடசம் = பதினாறு) என்ற முறையில், 16 பசுக்கள் கன்றுகளின் (காராம் பசுக்கள் மிகவும் விசேஷமானவை) முன்னிலையில், இங்கு  பிரதோஷ பூஜைகளை ஆற்றி வழிபடுதலால், பெரும் பாவங்களுக்கும், பண தோஷங்களுக்கும் தக்க நிவர்த்திகள் கிட்டிடும். தவறான நிலைகளில் பெரும் பணம் சேர்த்தோர், பண தோஷங்களை நிவர்த்தி செய்திட, இங்கு பிரதோஷ நாட்களில் வழிபட்டு, ஏழு விதமான உணவு வகைகளை அன்னதானம் செய்து வருதல் வேண்டும். எத்தகைய கண் நோய்களுக்கும் நிவர்த்தி தரும் அற்புதத் தலம்.

ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மந்த்ர உபதேசத் தலமே கீழ்சூரியமூலை!

சுக்ராச்சாரியார் தாமிழந்த கண் பார்வையை மீட்டிட ஆற்றிய பல தல பூஜைகளுள், ஸ்ரீஅகஸ்தியர் முன்னிலையில் “ஸ்ரீஆதித்ய ஹ்ருதய” மந்திர ஹோம பூஜைகளை ஆற்றிய அற்புதத் தலம் இதுவேயாம்!

ஸ்ரீராமருக்கு, ஸ்ரீஅகஸ்திய மாமுனி, ஆதித்ய ஹ்ருதய மந்திரத்தின் பல சுலோகங்களையும், இலங்கைப் போர்க்களத்தில் உபதேசித்தது மட்டுமன்றி, சீதாப் பிராட்டியை மீட்ட பின், ஸ்ரீராமர் வேண்டியபடி, சாந்தமான சுபஹோரை நேரங்களிலும் இம்மந்திரங்களைப் பல திருத்தலங்களிலும் ஸ்ரீராமருக்கு உபதேசித்து விளக்கினார். இத்தகைய ஆதித்ய ஹ்ருதய மந்த்ர உபதேசத் தலங்களுள் கீழ்சூரியமூலையும் ஒன்றாகும்.

ஸ்ரீவிநாயகர் கீழ்சூரியமூலை

தசரதருக்கு ஈமக் கடன்கள் ஆற்ற இயலாமற் போனமைக்குத் தக்க பரிகாரங்களாக, அகிர்புதன்ய மகரிஷி அருளியபடி, ஸ்ரீராமர் விருட்சகாரண்யத் தர்பணாதிகளாக, வடவிருட்சத் தர்ப்பணம் (ஆலமரத்தடி), ஆம்ர விருட்சத் தர்ப்பணம் (மாமரத்தடி) போன்று, 108 (சமித்து) புனித விருட்சகளின் கீழ், தர்ப்பண பூஜைகளை ஆற்றி வருகையில், இலுப்பை மரத்தின் கீழ் ஸ்ரீராமர் தர்ப்பணம் அளித்த அற்புதத் தலமாக மலர்ந்ததே கீழ்சூரியமூலை ஆகும்!

ஒரு மாதேஸ்வரக் கற்ப காலத்தில், அருகில் உள்ள திரைலோக்கிப் பெருமாள் ஆலயத்தில் விஷ்ணுபதி பூஜைகளை ஆற்றிய ஸ்ரீராமர், ரகு வம்சத்தவராக, சூரிய குலத்தைச் சார்ந்தவராதலின், இலுப்பை மரத்தடியில், கோடி, கோடி சூரிய சக்திகள் நிறைந்த கீழ்சூரிய மூலைத் தலத்திலும் தர்ப்பணப் பூஜைகளை இயற்றித் தசரதரை இங்கிருந்தே பித்ரு மண்டலத்தில் கண்டு பேரானந்தம் கொண்டார். முற்காலத்தில் இப்பகுதியே, ஆலயத்திற்குப் பின்னால் தசரத மேடையாகப் பொலிந்தது!

எனவே ஸ்ரீராமர், பித்ரு கடன் ஆற்றிய பித்ரு முக்தித் தலங்களுள், திலதைப்பதி, இடும்பாவனம் போன்று கீழ்சூரியமூலையும் ஒன்றாகும். மேலும் ஸ்ரீராமர் பெற்ற சாந்தகாரண்ய ஆதித்ய ஹ்ருதய மந்த்ர உபதேசத் தலங்களுள் திருமயிலை, திருப்புனவாசல் போன்று, கீழ்சூரிய மூலையும் ஒன்றாகப் பரிமளிப்பது நமக்குப் பெரும் பாக்யமே! ஆனால் இங்கு வந்து  வழிபட்டால் தாமே இறைப் பேரின்பத்தை உய்த்திட முடியும்! இங்கு ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களை ஓதி வழிபட்டு வருதலால் அற்புதமான வகையில் சாந்தம் நிரம்பும், மன நிம்மதியும் மலரும். என்னே கீழ்சூரிய மூலை சிவபூமியின் மகிமை!

பித்ரு கடன் நிவர்த்தி

தர்ப்பணப் பூஜைகளானவை மக்களுக்கு ஆன்ம வளம், பித்ருக்களுக்கான உத்தம நிலைகள், ஜீவன்களுக்குத் தேவையான, தார்மீகமான விருப்பப் பூர்த்திகள், பரவெளித் தூய்மை, காரியசித்திகள், பித்ரு சாந்தி, சமுதாய அமைதி போன்ற பலவற்றை அளிக்க வல்லதாம்.

இவற்றில், கலியுகத்தில் மக்களை வாட்டும் கடன் சுமைகளை நிவர்த்தி செய்திடப் பெரிதும் உதவும் தர்ப்பணப் பூஜைகளின் பாங்கை இனி அறிவோம்!

தேவ மூலிகையே தர்பை!

தர்ப்பணம் அளிக்கும்போது, நீரைத் தர்பையின் மேல் ஊற்றுகின்றோம் அல்லவா! தர்பை என்பது ஓர் அற்புதமான தேவமூலிகை ஆதலின், இதன் ஒவ்வொரு, அணுவும், பா(க)ளமும், நரம்பும் பல ஆத்ம சக்திக் கிரணங்களுடன் பொலிகின்றன.

தர்பைகளை, தர்ப்பணச் சட்டமாக, கூர்ச்சமாக, இணையாக வைக்கும் போதோ அல்லது பவித்ரமாக அணியும் போதோ, தர்பைகளுக்கு இடையே மிகவும் சக்தி வாய்ந்த, “சூக்குமமான வேதகுஸ ஆகர்ஷண சக்தி” (குஸம் = தர்பை) எழுகின்றது.

இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தர்பைகள், அருகருகே சேரும்போது, இதில் முதலில் தோன்றுவது தர்பாகர்ஷண சக்தி! இதில் அந்தந்தத் திதிகளுக்கு ஏற்ப எழுவதே விசேஷமான சூக்கும அக்னியாகிய தர்பாக்னி!

மேலும், இரண்டு தர்பைகள் உரசும் போது, அவற்றின் இடையே தர்ப காந்த சக்தியும் உதிக்கின்றது. விஷ்ணு தர்பை, சிவ தர்பை, ஜோதிபத தர்பை எனச் சில வகைகள் உண்டு! இவற்றில் எழும் பலவிதமான தர்பகாந்த சக்திகள் யாவுமே தர்பை மூலமே பெற வல்ல ஆன்ம சக்திகளாகும்!

ஸ்ரீகைலாசநாதர் நெடுங்குடி

தர்பையில் முகிழ்க்கும் தர்பாக்னி சக்தியும், இரண்டாவதாக தர்பைகள் ஒன்றையொன்று ஈர்த்துப் புவி ஈர்ப்பு சக்தியுடன் சேர்வதால் கிட்டும் தர்பாகர்ஷண சக்தியும், நான்காவதாக தர்பையிலிருந்து எப்போதும் எழுந்து கொண்டிருக்கும் தர்ப பூபால சக்தியும், சதுராக்னி சக்திகளாக, தர்ப்பணத்தில் வார்க்கும் நீருடன் சேரும் போது, அங்கு ஜல தர்பூசம் எனும் சக்தி சங்கமம் ஏற்படுகின்றது.

பொதுவாக, திரிவேணி சங்கமம் என மூன்று நதிகள் சங்கமமாகும் புனித நதித் தலங்கள் பல உண்டு. (அலாகாபாத் திரிவேணி சங்கமம், பவானி, அன்பில்) இவற்றில் தர்பை கொண்டு தர்ப்பணம் அளிக்கையில் ஆங்கே “தர்பாயச” நதிப் பிரவாகம் உண்டாகி, நான்காவதாகச் சேர்ந்து, அருள் கூட்டுவதால், பித்ரு கடன் நிவர்த்திக்கு இது மிகவும் துணை புரிகின்றது.

பித்ருக்களுடைய மண்டலம் நீர் மண்டலம் ஆகும். எனவே தர்பை சஞ்சாரத்திலும், தர்ப்பணத்தின் போது எழும் “தர்பாயச நதிப் பிரவாகத்திலும்” சக்தி சங்கமமாகத் தோன்றும் இந்த ஜலதர்பூச சக்தி, பித்ருக்களுக்கு மிகவும் ப்ரீதியானதாகும்.

மேலும், தர்பையில் ஆவாஹனம் ஆகின்ற பித்ருக்களுக்கும் தர்பாக்னி சக்திகள் கிட்டுவதால், அவர்கள் ஆனந்த முற்று, அருள்மிகு நலன்களை, நல்வரங்களை அருள்கின்றனர்.

மேற்கண்ட நான்கு வகை தர்பாக்னி வகைச் சக்திகளின் சங்கமத்தில் உற்பவிக்கும் இந்த ஜலதர்பூச சக்தியை, பித்ருக்கள், பூலோகமின்றி வேறு இடங்களில் பெறுதல் மிக மிகக் கடினம். எனவே பித்ருக்களே நேரில் வந்து ஜலதர்பூச சக்தியைப் பெறுவதால், அவர்களுடைய புனிதமான ஜோதி வடிவப் பிரகாசத்தால், “ஐவர்ஸ்யக்” கிரணங்கள் சந்ததிகளாகிய நம்மை அடைகின்றன. இவைதாம் கடன் பிணிகளைத் தீர்க்க வல்லவையாம்.

ஜலதர்பூச அமாவாசை மலைவலத் தலமே நெடுங்குடியாம்!

அமாவாசையன்று புதுக்கோட்டை – அரிமளம் – கீழாநல்லிக்கோட்டை அருகே உள்ள அபூர்வமான சிறு மண்மலைத் தலமான நெடுங்குடியில் கிரிவலம் வந்து, இங்கு நாக தீர்த்தம், சர்ப தீர்த்தம், (கயாவில் உள்ளது போலான) வடவிருட்சம் எனப்படும் ஆலய மரத்தடித் தர்ப்பணம், ஆலயத்தின் நீண்ட நெடிய பஞ்சபூரண (வெளிப்) பிரகாரத்திலுமாக நான்கு வகைத் தர்ப்பணங்களை அளித்து, பஞ்ச பூரணப் பிரகாரத்தை நமஸ்காரப் பிரதட்சிணம் செய்தும், அன்னதானமும் செய்துவர, மேற்கண்ட வகையில் கிட்டும் ஜலதர்பூச சக்தி அம்சங்கள் மூலமாகப் பல தீர்வுகளைத் தந்து, பலவிதமான துன்பங்கள், குறிப்பாக கடன் சுமைகள் தீரவும் அருள்புரிகின்றனர். கடன்களை நிவர்த்தி செய்யும் பித்ரு முக்தித் தலங்களுள் ஒன்றே நெடுங்குடியாகும்.

திருஅண்ணாமலை கிரிவலம்

சித்தர்கள் அளிக்கும் அற்புத விளக்கங்கள் – திருஅண்ணாமலை கிரிவல மஹிமை சித்தர்கள் அளிக்கும் அற்புத விளக்கங்கள்!

பத்தாயிரம் கிராம மக்களுடன், திருஅண்ணாமலையில், மார்கழி மாதத்தின் முப்பது நாளும் கிரிவலம் வந்திட்ட மாணிக்கவாசகர், அத்தனை லட்சம் மக்களுக்கும், அருணாசல மகிமையினை மிகவும் எளிமையாக எடுத்து உரைத்திட்டார். இவற்றை நாளடைவில் மக்கள் மறந்து போயினர்.

பக்தர்களின் அசிரத்தையால் கலியுகத்தில் மறைந்து போன, பல ஆலயத் தல புராணங்கள், ஆயுர்தேவி போன்ற சக்தி பூஜைகள், விஷ்ணுபதிப் பண்டிகை மகாத்மியங்கள், குளிகை கால பைரவ பூஜை, அருணாசல மாத சிவராத்திரி கிரிவல மகிமை போன்றவை, இவ்வகையில்தாம் சித்தர்களின் பெருங்கருணையால், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் போன்ற சற்குருமார்கள் மூலமாக, மீண்டும் கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அளிக்கப்படுகின்றன.

ஜாதி, மத, குல, இன பேதமின்றி யாவர்க்கும் இவற்றை உணர்த்தி, அனைவரையும் பயன்பெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு பாரதப் பிரஜையின் இறைலட்சியமும், கடமையுமாகும்.

அனைத்து ஜீவன்கலளுக்குமான அருணாசல கிரிவலம்

நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம வெளியீடான, அருணாசல மகிமைகளாக வந்துள்ள நான்கு தொகுதிகளிலும், கடந்த பல ஆண்டுகளில், நூற்றுக்கும் மேற்பட்ட ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களிலும் சித்தர்கள் அருள்கின்ற வகையிலான அருணாசல மகிமையைப் பரமானந்தத்துடன் அளித்து மகிழ்ந்துள்ளோம். மாதப் பௌர்ணமி, மாத சிவராத்திரி மட்டுமல்லாது எந்நாளிலும், எத்திதியிலும், எந்நேரத்திலும், அந்தந்த நாளுக்குரிய பலாபலன்களைப் பெறும் வண்ணம், அருணாசலமாகிய திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடலாம் என்பதையும் நாம் நன்கு விளக்கி உணர்த்தி வந்துள்ளோம்.

பாம்புகள், எறும்புகள், விலங்குகள், பறவைகளும் கூட அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றன என்பது உங்களுக்குக் கேட்பதற்கு வியப்பாக இருக்கும்! ஆனால் இது பரிபூரண உண்மையே!

காரடையான் கரட்டை எனும் எருமைகளின் குலகுருவான தேவலோக மகிஷமானது மாதந்தோறும், மக நட்சத்திர நாளில் தூல, சூக்கும வடிவில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றது.

கிரிவலம் வர இயலாதோர்க்கும் அருணாசலப் பெருங் கருணை!

தீராத கடும் நோயால் அவதியுறுவோர், ஒரு சில முறை heart attack வந்ததென அஞ்சி வாழ்வோரும், இவர்களால் இயலாதெனில், இவர்கள் சார்பாகக் குடும்பத்தினரும், அவரவர் உடல்நிலையைப் பொறுத்து, அகத்திக் கீரையைத் தாங்கியவாறு மக நட்சத்திர நாளில் கிரிவலம் வந்து, வழியில் கண்ணில் தென்படுகின்ற எருமைக்கு அகத்திக் கீரை அளித்து வந்திட, மரண பயம் அகலும், மிருத்யு தோஷங்களும் தணியும், பல்வகை நோய்ப் பிணிகளும் தீரும்.

எத்தகைய (காசநோய், புற்று நோய் போன்ற) கடுமையான நோய்களால் வாடுவோரும், தம் வாழ்வில் ஒரு முறையாவது சில நூறு கஜங்கள் தூரமாவது திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடல் வேண்டும். ஒரு வாரமேனும் இங்கு தங்கி அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப, தினமும் சிறிது, சிறிது தூரமாக நடந்து, மீண்டும் வாகனத்தில் திரும்பி வந்து, மறுநாள் விட்ட இடத்தில் இருந்து தொடங்கி, சிறிது தூரம் நடந்து மீண்டும் வாகனத்தில் திரும்பி வந்து, இவ்வாறாக, எவ்வகையிலேனும் கிரிவலத்தில் பங்கு கொண்டோம் என்ற நிறைவைப் பெற்றிடுக! நம்மால் முடியவில்லையே என்ற ஏக்கம் வேண்டாம், எல்லோருக்கும் இறைவன் வழிவகை செய்துள்ளான்!

எறும்புகளின் அண்ணாமலை கிரிவலம்!

பொதுவாக எறும்புகள், நதி தேவ மூர்த்திகள், தபஸ்விகள் மக நட்சத்திர நாளில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றனர். செவ்வாய்க் கிழமை மற்றும் மக நட்சத்திர நாளில், திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, கிரிவலப் பாதையில், 108 இடங்களில் அகல் தீபங்களை ஏற்றி, விளக்கைச் சுற்றி பாதுகாப்புடன் கற்களை வைத்து, மலையை நோக்கிச் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்துக் கிரிவலம் வந்திட, எத்தகைய கடுமையான நோய்கள் தீரவும், நற்பரிகாரங்கள் கிட்டும்.

மேலும் மக நட்சத்திர நாளில் சர்க்கரை + தான்ய ரவையைக் கலந்து, மலைவலப் பாதையில் எறும்புகளுக்கு இட்டு வர, வராத கடன்களைப் பெறவும் பல நல்வழிகள் பிறக்கும்.

பணக் கஷ்டம் கடும் தீவினைகளின் அறிகுறியே!

எறும்புகளுக்கும், பண வரவிற்கும் என்ன சம்பந்தம்? குறித்த சில அன்னதான சில அன்னதான தர்ம சக்திகளும், பெரியோர்களுடைய ஆசியும் தேவையாக இருக்கும் போது, இவை நோய் அறிகுறிகள் போல், பணக் கஷ்டமாக உணர்த்தப் பெறும்.

அதாவது, பணக் கஷ்டம் என்பது, சில கர்மப் பிணிகள் அறிகுறிகளாகவும், விதிப்பூர்வமாக உணர்த்தப்படுகின்றது. எறும்புகளில், பல உண்ணா நோன்புகளை மேற்கொண்டு, விரதம் முடிகையில், ஆலயத்தில் இடப்படும் பிரசாதத்தை ஏற்று, நோன்பை நிறைவு செய்யும். அப்போது  தனக்கு உணவு இடுபவர்களின் நலனுகாக, நன்றி உணர்வுடன், அவை கால்களை உயர்த்தி, வானை நோக்கி நின்று, வரகுண தேவதைகளை வேண்டி, தனக்கு உணவு இட்டவர்களை ஆசிர்வதிக்கும். இந்த ஆசிகள் ஆலயங்களில் மனப் பூர்வமாக, விரத முடிவில் எறும்புகளால் அளிக்கப்படுவதால், மிகவும் வரசக்தி நிறைந்தவையாகவும் விளங்குவதால் ஆலயங்களில் மதிற் சுவரோரம். மரங்களைச் சுற்றி எறும்புகளுக்கு உணவிடுவது பணக் கஷ்டத்தைப் போக்குகின்ற அறவழி ஆகின்றது!

எறும்புகள் காணும் அண்ணாமலை வடிவம் வேறு!

எறும்புகள் கிரிவலம் வருகையில், எறும்புகள் காண்கின்ற திருஅண்ணாமலையும், அவற்றின் கிரிவலப் பாதையும், மனிதர்களாகிய நாம் காண்பதை விட, வேறுபட்டதாக இருக்கும். முன் ஜன்மத்தில் மனிதனாக இருந்து, தற்போது எறும்பாகப் பிறந்து, பூர்வ ஜன்ம வாசனையால் மனிதப் பாதையிலேயே பல எறும்புகள் வலம் வருவதும் உண்டு!

எறும்புகளுக்குக் குலகுருவான பிப்பலாத மகரிஷி என்பார், எறும்புகளுக்கு அறவழிகாட்ட முன் நின்று, எறும்புகளுக்கு அருணாசல கிரிவலத்தில் வழிகாட்டி நடத்திச் செல்வதும், அருணாசலத்தில் நிகழும் கோடிக் கோடியான அற்புதங்களில் ஒன்றாம்!

தாவரங்களின் அருணாசல கிரிவலம்!

அருணாசல கிரிவலப் பாதையில் நாம் காண்கின்ற மரங்கள், செடி, கொடிகள் போன்ற தாவரங்கள் பலவும் உத்தம தெய்வீக நிலைகளை அடைந்தவையே! இவற்றில் பலவும் மகரிஷிகளின் வடிவங்களே! பொதுவாக, தாவரங்கள் இருக்கும் இடத்திலேயே இருப்பது போல் தோன்றினாலும், அவைகட்கு மானசீக சஞ்சார சக்தியும், மனோவள சக்திகளும் நிறைய உண்டு. வடிச் சுடர்வடி என்ற யோக முறையப்படி, தாவரங்கள், தம் ஆத்மசக்தி வடிவங்களைப் பகுத்து, ஏதேனும் ஒரு சூக்கும, தூல நிலையில், குறித்த சில வடிவங்களைப் பூண்டு, திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து, பிறகு தம்முடைய தாவர அணுக்களில் பிணைகின்றன. இதுவும் ஒரு வகை, கூடு விட்டுக் கூடு பாயும் கலையாகும்.

இவ்வாறு ஜடப் பொருட்களும், அசையா உயிர் ஜீவன்களின் நன்மைக்காகப் பல அறங்களைச் செய்து வருகின்றன. ஆனால் மனித குலமோ அருணாசல கிரிவலத்தை முறையாக மேற்கொள்வது கிடையாது! அப்படியே கிரிவலம் வந்திட்டாலும் சுயநலப் பிரார்த்தனைகளுடன் தான் கிரிவலம் வருகின்றனர்.

அறம் என்றால் தான, தருமம் மட்டுமல்ல! பிராணிகள் நலன் பேணுதல், ஜீவகாருண்யம், முதியோரை, நோயாளிகளை அனுசரித்து உதவுதல் போன்ற 32 விதமான அறங்களை, மானுட வடிவில் அம்பிகையே திருஅண்ணாமலை, காஞ்சீபுரம், திருவாரூர், திருவையாறு போன்ற தலங்களில் ஆற்றி நமக்கு வழிகாட்டி உள்ளாள்!

தியாகமய சேவைக்குப் பிரசித்தி பெற்ற வடிச்சுடர் வதனிகள்!

சில உத்தம நிலைகளைப் பெற்று, மீண்டும் பூமிக்கு வந்து, நல் இறைப் பணிகளை ஆற்றிடத் தம் வடிவை அளித்துத் தியாகசேவை புரியும் ஜீவன்களுக்கு வடிச்சுடர் வதனிகள் என்று பெயர்.

பொதுவாக, பொதுச் சேவையில் உண்மை, நியாயம், நேர்மை, தியாகம் பக்தியுடன் பணி ஆற்றுவோர், வடிச்சுடர் வதனிகள் என்று அரிய இறைநிலையை அடைகின்றனர். இவர்கள் சமுதாயத்தில் பல கோடி ஜீவன்களின் நல்வாழ்விற்காக மிகவும் சாதாரண வடிவில் வாழும் சித்தர்கள், மகரிஷிகளின் துன்பங்களை ஓரளவு தம் உடலில் தாங்கி அவர்கட்கு ஓய்வு, சாந்தம் அளிக்கின்றார்கள்.

நாட்டின் சதந்திரத்திற்கும், நாட்டைக் காப்பாற்றவும் உண்மையாகப் போரிடும் புனிதமான வீரர்கள், இத்தகைய வடிச்சுடர் வதனிகளாக ஆவதும் உண்டு. வடிச்சுடர் வதனிகள் அருணாசலத்தைக் கிரிவலம் வருகையில், ஆங்காங்கே கிரிவலத்திற்காக ஏங்கிடும் கற்கள், தாவரங்கள், அணுத்துகள்கள், ஜீவன்கள், நீர்வாழ், காற்றுவாழ் உயிரினங்களுக்குத் தம் சரீரத்தை முழுமையாக ஈந்து, அவர்களும் தம் சரீரத்தில் கிரிவலம் வந்திட அருட்சேவை புரிகின்றனர்.

தெய்வீகத்தில் உத்தம நிலையில் இருப்பவர்களும் எத்தகைய தியாகத்தில் ஈடுபடுகின்றார்கள் எனக் காண்கையில் மெய் சிலிர்க்கின்றது அல்லவா!

அன்பு பெருகிட உதவும் அர்க்ய பூஜை!

மனித சமுதாயத்தில் பலரும் ஆறாவது அறிவைத் தக்க முறையில் முழுமையாகப் பயன்படுத்துவது கிடையாது! இதனால்தான் ஜாதி, மதம், குலம், மரம், விலங்கு, ஆண், பெண், ஜடப்பொருள் என்று ஏதேதோ பாகுபாடு கொண்டு அனைவரிடமும், அனைத்திலும் நிரவும் உண்மையான அன்பு நேயத்தை அறியாமல், உணராமல் விட்டு விடுகின்றார்கள். அன்பு பெருகிட அர்க்ய பூஜையும் நல்லதொரு அறவழி முறையாம்.

அருணாசல கிரிவலத்தில் கையில் தீர்த்தம் கொண்டு சென்று ஆங்காங்கே கிரிவலப் பகுதியில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதியும், சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் அர்க்யம் அளித்திடுவதும் கிரிவலப் பலாபலன்களைப் பெருக்கும்.

மாமுனிகளுடன் அர்க்யம் அளிப்பீர்!

அர்க்யம் என்பது நீர்ச் சுடர் பூஜை! இருகைகளில் நீரை ஏந்தி நின்று, குதிகால்களை உயர்த்தி, மாமுனிகளை எண்ணித் துதித்து நீரை பூமியில் வார்த்தலாகும். மிக மிக எளிதானது, ஜாதி, மத, குல பேதமின்றி யாவரும் அளித்திடலாம்.

ஸ்ரீஅஷ்டவக்ரர், ஸ்ரீதௌம்யர், ஸ்ரீவசிஷ்ட மகரிஷி, ஸ்ரீகருடக் கொடிச் சித்தர் போன்ற மாமுனிகளும், சித்தர்களும், தம்முடைய சில சுப முகூர்த்த ஹோரை மற்றும் சந்தியாவந்தன அர்க்ய பூஜைகளுக்காக, இன்றும் அண்ணாமலையில் குறித்த சில தீர்த்த வாரிப் பகுதிக்குக் குறித்த பல நாட்களில் வருகின்றனர்.

எனவே அவர்கள் அர்க்யம் அளிக்கையில், நீங்களும் கிரிவலம் வந்து, அர்க்யம் அளித்திட்டால் பிரம்ம ரிஷியாம் ஸ்ரீவசிஷ்ட மகரிஷி போன்றோரோடு அர்க்யம் அளித்த மகா புண்யம் கிட்டும் அல்லவா! வாழ்வில் என்னே பாக்யம் இது!

தற்போதைய அபயமண்டபம்
திருஅண்ணாலை

காலதேவதைகளும் தினசரி கிரிவலம் வரும் திருஅண்ணாமலை!

நீங்கள் எந்த நாளில் கிரிவலம் செல்கின்றீர்களோ, அந்த நாள், கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம் போன்றவற்றை நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்! காரணம், அந்த நாளில் அந்தந்த வார, நட்சத்திர, யோக, கரண, சூல கால தேவதா மூர்த்திகள் யாவரும் அருணாசலத்தைக் கிரிவலம் வருவதால், பாக்யம் உள்ளோர்க்குக் கால தேவதா மூர்த்திகளின் தேவதா தரிசனமும், ஆசிகளும் நிச்சயமாகக் கிட்டும்.

உதாரணமாக, ஞாயிறோடு கூடும் திருவோண நட்சத்திரம், துவாதசித் திதியில், ஸ்ரீசூரியநாராயண லோகப் பரிவார மூர்த்திகள் அருணாசல கிரிவலம் வருதலால், அன்றைய தினம் மகா மகத்துவம் பெருகின்றது. இது மிகவும் அபூர்வமாகவே அமையும். எனவே நன்கு ஆழ்ந்த ஆத்ம விசாரத்துடன் இறைவனை வேண்டி கிரிவலம் வந்திடுக!

அபயமண்டபம் சீரமைப்பீர்!

அடிஅண்ணாமலையில் இருந்து காஞ்சி சாலை இணையும் இடத்தில், அபய மண்டபம் என்ற பழைய மண்டபம் தற்போது சிதைந்த நிலையில் உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இறைவனும், இறைவியும் கிரிவலப் பெருவழியில் இங்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த அபயமண்டபம் இதுவே!

மண்டபம் என்றால் பல கோடி லோகங்களில் இருந்து வருகின்ற தேவதா மூர்த்திகள் தங்கி இறைமாமலையைப் பூஜிக்கும் மண்டபம் என்றும் பொருளுண்டு. சித்தர்களும், மகரிஷிகளும் தவம் பூண்ட அற்புதமான பழமையான மண்டபம்! மிகவும் சக்தி வாய்ந்த மண்டபம் தற்போது பாதுகாப்பின்றி, இடிபாடுகளுடன் இருக்கின்றது! வசதி படைத்தோரும், சத்சங்கக் குழுவினர்களும் இந்தப் புனிதமான அபய மண்டபத்தைச் சீர்த்திருத்தி அமைத்திட முன் வருதல் வேண்டும். இதற்கு முன் உள்ளதே பித்ரு முக்தித் தீர்த்தம்!

கோடிக் கோடியாகப் பித்ருக்கள் ஒருங்கே நின்று பூஜிக்கும் தீர்த்த தரிசனப் பகுதி!  இங்கிருந்து கிட்டுவதே தசமுக தரிசனமாகும். அமாவாசையன்று பித்ருக்கள் அபயமண்டபப் பித்ரு மோட்ச தீர்த்தப் பகுதியில் இருந்து தசாவதார தரிசனங்களை அருணாசல மலையின் பால் பெறுகின்றனர். எனவே அபய மண்டபத்தைப் புனரமைப்புச் செய்திடில் இங்கு தூல, சூக்கும வடிவுகளில் யோகத் தவம் பூணும் சித்தர்களின், மகரிஷிகளின் ஆசிகள் கிட்டுவதுடன், நாட்டிற்கும், உலகிற்கும், பிரபஞ்சத்திற்கும் சுபிட்சம் தருவதாலும் மேலும் அனைத்துப் புண்ய சக்திகளும், பன்மங்காகப் பெருகி நல்வரங்கள் கிட்டும்.

தான ,தர்ம, புண்ய சக்திகள் ஆயிரமாயிரமாய்ப் பெருகும் அருணாசலத் தலத்தில் அபய மண்டபத்தைச் சீரமைக்கின்ற அரும்பணியானது சாசுவதமாக நின்று வருகின்ற சந்ததிகளுக்கும் புண்ய சக்தியை, தான தர்ம அருட்சக்தியாக பரப்பி, நிரவுகின்ற அதியற்புத இறைப்பணி!

கிரிவலம் வருகின்ற பல்லாயிரக்கணக்கான எறும்புகளும், பட்சிகளும் தங்கி இளைப்பாறிச் செல்கின்ற அருள்மண்டபமாகவும் அபய மண்டபம் துலங்குவதால், இவ்வரிய திருப்பணியை ஆற்றும் பாக்யம் எவருக்குளதோ அவர் பெரும் பாக்யசாலியே!

ஆத்மவிசாரம்

குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அடியார்களுக்கு அருளிய விளக்கங்களின் தொகுப்பு

அடியார் : குருவே! ஆத்மவிசாரம் என்றா என்ன? இதனை ஆரம்பிப்பவர்கள் எப்படித் தொடங்க வேண்டும்? ஆரம்ப நிலையில் ஆத்ம விசாரத்திற்கான முதல் கேள்வி எது?

சற்குரு : இப்படி உங்களுக்குள்ளேயே ஆன்ம வினாக்களை எழுப்பி, அனைவரின் உள்ளுள் உறையும் ஆத்மசக்தியை ஈர்த்து, விடையும், விளக்கமும், காண்பதே ஆத்ம விசாரம்! ஆத்ம விசாரம் என்றால் என்ன? சாதாரண மனித முயற்சியால் பெற இயலாத ஞானத்தை, மனோசக்தியின் மூலமாகப் பெறும் இறைநெறி முறையும் ஆத்ம விசாரமாகும். இதனைப் பல விதங்களில் தொடரலாம்.

வெறுமனே கேள்விகளை எழுப்புதலால் பயனில்லை! உள்ளிருந்து எழும் விளக்கங்களை உணரும் உட்செவியும் நன்கு புலனாதல் வேண்டும். இதற்கு தினசரிப் பயிற்சி அவசியம்!

ஆத்மவிசாரம் ஒரு மனயோகமே!

முதலில், இரவில் உறங்கும் முன், இறைத் துதிகளை ஓதிக் கடவுளை வணங்கிய பின், ஒவ்வொருவரும் அன்றைய நிகழ்ச்சிகளை, காலையில் எழுந்தது முதல்.. தன் மனக்கண் முன் ஒவ்வொன்றாகக் கொணர்தல் வேண்டும். அது தினசரி நிகழ்ச்சிகளாக, கடமையாக, பல் துலக்குதல், நீராடுதல், பேப்பர் படித்தல் போன்றவையாக இருந்தாலும் கூட அன்றைய நிகழ்ச்சிகளை மனக்கண் முன் தத்ரூபமாக அப்படியே கொணரும் போதுதான், அவரவர் உருவம், மனதினுள் நன்கு புலப்படலாகும். இந்த சுயதேவவள தரிசனப் பாங்கையே “மனக்கண்ணாடிப் படனம்” என்பர்.

ஒவ்வொருவரும் தன் உருவத்தைக் கண்ணாடி இன்றித் தன்னுள் நன்றாகப் பார்க்க வல்ல யோகசக்திகளைப் பெறவும் ஆத்ம விசாரம் உதவுகின்றது.

ஒருவர் தன்னுடைய அன்றாட நிகழ்ச்சிகளை மனக்கண் முன் கொணரும் போது, சில நிகழ்ச்சிகளில் மட்டும் மனம் நெடுநேரம் தங்குவதைக் காணலாம்! அந்த நிகழ்ச்சிக்கான காரணத்தை தன்னுள்ளேயே காணத் தொடங்குவதும் ஆத்ம விசாரமே! இவ்வாறு அன்றன்றைய நிகழ்ச்சிகளை அன்றே ஆராய்கையில்தாம், இறைச் சிந்தனையே இல்லாத இயந்திரமாக, அறிவுப் பாங்காய் இயங்காத இயந்திர கதியாக, அலைபாயும் மனத்துடன் இயங்கியதைக் கண்டு அவரவர் வியப்பர், வருந்துவர், திருந்த முயல்வர்.

ஆத்மவிசாரம் நல்ல மனோசக்தி தரும் தியானமே!

உறங்குவதற்கு முன் ஆத்மவிசாரம் செய்வதால் உறக்கம் பாதிப்படையும் எனத் தவறாக எண்ணாதீர்கள். பலரும் ஆத்ம விசாரம் செய்கையில், சில நிமிடங்கள் ஆன பின் அதனை முழுமை பெறச் செய்யாது களைப்பில் உறங்கி விடுகின்றார்கள் இது தவறு!

ஒரு நாள் காரியங்களை முழுமையாக அலச இயலாவிடில், ஒரு பகுதியையாவது எடுத்து முடிக்க வேண்டும். கால் மணி நேர ஆத்ம விசாரம். ஒரு மணி நேர உறக்க ஓய்வைத் தருவதால், ஆத்மவிசாரம் என்பது ஒரு வகை மனசாந்த, மன ஆரோக்ய சாதனமும் ஆகின்றது!

கடவுளின் அற்புதமான படைப்புகளைப் பற்றியும் பிற நேரங்களில் அடிக்கடி ஆத்ம விசாரம் செய்து வாருங்கள். இறைவனின் படைப்புக் காரணச் சிந்தனை ஆவதால், ஆத்மவிசாரமும் ஒரு வகை வழிபாடே! ஆத்மவிசாரம் என்பது மானசீக பூஜைகளில் ஒரு வகையாகும்.

உதாரணமாக, ஒரு மாம்பழத்தை நினைத்துப் பாருங்கள். அழகான உருவம், அழகிய வண்ணம், அற்புதமான இனிப்புக் கலவையை உள்ளடக்கி, அதற்கு ஓர் அழகிய தீர்கமான தோலை ஆடையாக்கி ஆண்டவன் அமைத்திருக்கின்ற இறையருளை எண்ணிப் பாருங்கள்! இதனை மனிதனால் தெய்வீகப் படைப்பான கனிகளை, மாமரமும், மனிதனைப் போல், தானே சுயநலமாக எடுத்துக் கொள்ளாது, பிற ஜீவன்களின் நன்மைக்காக அளிக்கின்ற தியாக மனப்பான்மையை எண்ணிப் பாருங்கள்!

இவ்வாறாக ஒரே ஒரு சிறு மாம்பழம் பற்றிய ஆத்ம விசாரமானது, கருத்தாழம் மிக்க எத்தனையோ ஞானப் பழங்களை, திகட்டல் இல்லாது , உங்களுக்கு ஊட்டி விடும். இதனால் உங்களுக்கு வாழ்க்கையில் தன்னம்பிக்கை, நல்ல மனோசக்தி, மனோதிடம், ஆழ்ந்த வலுவுள்ள இறை நம்பிக்கை நன்கு விருத்தியாகும். எனவே ஆத்மவிசாரம் என்பது தினந்தோறும் பயில வேண்டிய மனப் பயிற்சி, மன வழிபாடு, மன யோகமும் ஆகும்.

நல்லநேரம்

நல்ல நேரம் பார்த்துத் தானே திருமணம், நற்காரியங்கள் செய்தோம், நமக்கு ஏன் இவ்வளவு துன்பங்கள் வருகின்றன என எண்ணாதீர்கள்! நல்ல நேரம் பார்ப்பதிலும், தற்காலத்தில் பல தவறுகள் ஏற்படுகின்றன. நல்ல நேரம் சரியாகக் கணிக்கப்பட்டு அமைந்தால் நிச்சயம் அனைத்தும் நல்லதாகவே முடியும்!

பஞ்சாங்கத்தில் குறிப்பிடும் சுப முகூர்த்த நாட்கள் பொதுவானவையே! மாப்பிள்ளை, பெண்ணின், குடும்பத் தலைவர், தலைவியின் ஜாதக அம்சங்களைப் பொறுத்து, திருமண, கிரகப் பிரவேசம் போன்றவற்றிற்கு சுப முகூர்த்த நேரத்தைக் கணிக்க வேண்டும். பஞ்சாங்கத்தில் உள்ள பொதுப்படையான சுப முகூர்த்த நாட்கள், அனைவருக்கும் ஏற்புடையவை அல்ல! அதே நாளில் முகூர்த்த லக்னங்களும் அவரவர் ராசிக்கு ஏற்ப மாறக் கூடும்.

நல்ல நேரக் கணிப்பில் பிழை கூடாது!

மேலும் சுப முகூர்த்த நாளை, நேரத்தைக் கணிக்கையில், தற்காலத்தில், பிரபலாரிஷ்ட நாட்கள் (7 விதமான கூடா நாட்கள்), அர்த்தப் பிரகரணன், காலன் நேரங்கள், தியாஜ்ய காலங்கள் போன்றவற்றை விலக்காது. பலரும் இவற்றிலும் முகூர்த்த நேரத்தை வைத்து விடுகின்றார்கள். இது மிகவும் தவறானதாகும். இவை கெடுதலான விளைவுகளைத் தரக் கூடியவை. மேலும் தாரா பலன், சந்திர பலன்களையும் சரியாக எடுத்துக் கணிக்காது, பொதுவாகவே, அனைவர்க்கும் ஒரே முகூர்த்த நேரத்தை வைத்து விடும் பழக்கமும் நடைமுறையில் இருக்கின்றது. இதுவும் தவறானதே!

இவ்வாறு திருமண நாளைச் சரியாகக் கணிக்காது, அரைகுறையாகக் கணிப்பவர்கள், பலருடைய திருமண வாழ்க்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படுவதால், இவர்கள் பலத்த தோஷங்களுக்கும், கடுமையான பாவங்களுக்கும் தங்கள் வாழ்க்கையில் ஆளாகின்றனர். காரணம், கரணம் தவறினால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டுவிடும். சரியாகக் கணிக்கும் ஞானம் இல்லாமல் சுப முகூர்த்த நாளின் புனிதமான கணிப்பில் தவறுகள் இழைத்தல் மன்னிக்க முடியாத குற்றாகிடும். என்ன இது, பயமுறுத்தலாக இருக்கிறதே என்று எண்ணுதல் வேண்டாம். இது சத்தியமான உரையே!

(கால) ஜோதியில் பிறந்தது ஜோதிடம்!

ஜோதி (பொழியும்) இடத்திலிருந்து உற்பவித்ததால், இது ஜோதிடக் கலை ஆயிற்று! எனவே அக்னிப் பூர்வமான ஜோதிடக் கலையில், மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும். என்பதற்காகவே, இங்கு உண்மை நிலையை வெளிப்படையாக எடுத்துக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

ராகு காலம், எம கண்டம் போன்று அர்த்தப் பிரகரணன், காலன் நேரங்கள், கிழமைத் தியாஜ்யம், திதித் தியாஜ்யம், லக்னத் தியாஜ்ய வகை நேரங்களும் தினமும் வரும். இவற்றிலும் ராகு காலம், எம கண்டம் போல சுப காரியங்களை நடத்திடலாகாது. ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை ராகு கால, எமகண்ட, அர்த்தப்பிரகரண, காலன் வகை நேர அட்டவணையைப் பஞ்சாங்கங்களில் காண்க! இவற்றில் சுபமுகூர்த்த நேரம் அமைதலைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

சுபயோக, சுப கரணம் தேவையே!

நாள், வாரம், நட்சத்திரம், திதி போல, 27 வகை யோகங்களும், 11 கரண வகைகளும், உண்டு, இவற்றில் ப்ரீதி, ஆயுஷ்மான், சுபம், சுப்பிரம் போன்ற யோக நாட்களும், கரணத்தில் பவம், பாலவம் போன்ற சில கரண நேரங்களுமே சுப நேரத்திற்கு ஏற்புடையவை. கரணங்களைப் பயிர்த்தொழில் நேரக் கணிப்பிற்காகக் கொண்டாலும், சுப முகூர்த்தத்திற்கு 27 வகை யோக, 11 வகைக் கரண சுத்தியும் மிகவும் முக்கியமானதே!

இவை தவிர நேத்திர, ஜீவ அம்சங்களும் உண்டு. நேத்திர, ஜீவ அம்சங்கள் 2, 1 என அமைதலே முகூர்த்த நாளுக்கு மிகவும் சிறப்பானது. நேத்திர, ஜீவ அம்சங்கள் 0 அல்லது 1 ஆக இருத்தலைத் தவிர்க்கவும்.

தியாஜ்யம் கண்டு கணி!

மேலும் குருமூட, சுக்ர மூட நாட்களிலும் “விஷ காலம்” எனப்படும் நாள் தியாஜ்யம், லக்ன தியாஜ்யங்களிலும் சுப காரியங்களைத் தவிர்க்க வேண்டும். தியாஜ்யம் என்றால், ஒவ்வொரு நாளின் சூரிய உதய நேரத்தில் இருந்து அந்தந்த நாள், திதி, லக்னத்திற்கு ஏற்ப, குறித்த நேரம் வரை தியாஜ்ய நேரம் எனப்படுவதான விஷ காலம் தினமும் வருகின்றது. இந்தத் தியாஜ்ய நேரமும் சுப நேரம் ஆகாது. வளர்பிறையில் தாம் கல்யாண  முகூர்த்தத்தை வைக்க வேண்டும். தேய்பிறையில் கூடாது!

ஆனால் நடைமுறையில், இவற்றைப் பற்றிப் பலரும் அறியாமலேயே, பார்க்காமலேயே விட்டு விடுகின்றார்கள். இவற்றையெல்லாம் கல்யாண முகூர்த்தத்திற்குப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் சில சொல்வர்! இது ஏற்புடையதல்ல!

லக்ன த்யாஜ்யம்
(லக்ன நேரத்திலிருந்து)

மேஷம்

முதலில்

12 நிமிடங்கள்

ரிஷபம்

முதலில்

12 நிமிடங்கள்

மிதுனம்

நடுவில்

12 நிமிடங்கள்

கடகம்

கடைசியில்

12 நிமிடங்கள்

சிம்மம்

நடுவில்

12 நிமிடங்கள்

கன்னி

முதலில்

12 நிமிடங்கள்

துலாம்

நடுவில்

12 நிமிடங்கள்

விருச்சிகம்

கடைசியில்

12 நிமிடங்கள்

தனுசு

முதலில்

12 நிமிடங்கள்

மகரம்

கடைசியில்

12 நிமிடங்கள்

கும்பம்

நடுவில்

12 நிமிடங்கள்

மீனம்

கடைசியில்

12 நிமிடங்கள்

வார த்யாஜயம்
(சூரிய உதயம் முதல் மேற்படி நேரத்திற்கு மேல் 1½ மணி வரை த்யாஜ்யம்)

கிழமை

மணி -நிமிடம்

ஞாயிறு

12.48

திங்கள்

16.48

செவ்வாய்

12.24

புதன்

16.48

வியாழன்

12.24

வெள்ளி

6.24

சனி

5.36தாரா, சந்திர பலன்கள், ஹோரை சாத்திரம் அறிந்து செய்!

இதோடு தாரா பலன், சந்திர பலன்கள் நன்கு கூடிய நாட்களையே தேர்ந்தெடுக்க வேண்டும். முகூர்த்த நேரத்தில் பகை கிரக ஹோரைகள் அல்லாது வளர்பிறைச் சந்திர ஹோரை, புத ஹோரை, குரு ஹோரை, சுக்ர ஹோரை போன்ற சுப ஹோரை நேரமாக மட்டுமே அமைய வேண்டும். சுப ஹோரைகளும் ஒன்றுக்கொன்று நட்பாக இருக்க வேண்டும். உதாரணமாக, வியாழனுக்கு புத ஹோரை நேரம் ஏற்புடையது ஆகாது.

சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் என்ற வரிசையில் ஹோரை நேரங்கள் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு மணி நேரமாக, சூரிய உதய நேரத்தில், அந்தந்த நாளின் கிரக ஹோரையில் இருந்து தொடங்கும். உதாரணமாக ஞாயிறு சூரிய உதய நேரத்தில் சந்திர ஹோரையும் தொடங்கி, மேற்கண்ட வரிசையில் ஏனைய கிரக ஹோரை நேரம் தொடரும். பஞ்சாங்கத்தைப் பார்த்து நட்பு, பகை, சம ஹோரைகள் அறியவும்.

அல்லல் அகல அனைத்தையும் பார்த்தாக வேண்டும்!

இவ்வாறு சுப முகூர்த்த நேரம் காண, கடைபிடிக்கப்பட வேண்டிய பஞ்சாங்க நியதிகள் நிறைய உண்டு. இப்படியெல்லாம் பார்த்தால், வருடத்தில் ஓரிரண்டு சுப முகூர்த்த நாட்கள் தாமே தேறும் என்று எண்ணிடலாம். ஆம், உண்மையே! இதற்காகத்தான் அக்காலத்தில் திருமண சுபமுகூர்த்த நாளை ஒரு வருடத்திற்கு முன்னரேயே கணிக்கத் தொடங்குவர்.

தற்போதைய சுபானு வருடத்தில் சில பஞ்சாங்கங்களில் புரட்டாசி முதல் பங்குனி வரையான மாதங்களில் கல்யாண சுப முகூர்த்த நாட்கள் இல்லை என அறிவித்திருப்பதைக் காணலாம். இவ்வகையில் ஒரு வருடத்தில் சுப முகூர்த்த நாளே இல்லாமற் போகக் கூடும். தற்காலத்தில் அயல்நாட்டு வரனின் விடுமுறைக் காலம், சத்திரம் கிடைக்கும் நாளை ஒட்டி முகூர்த்த நேரத்தை வைக்கின்ற அவல நிலையையும் வேதனையுடன் காண்கின்றோம்!

இத்தகைய தொன்மையான பஞ்சாங்க சுப முகூர்த்த நேரக் கனித முறைகளை நன்கு அறியாது. அரைகுறையாகக் கணிப்பதால்தான், தற்காலத் திருமண வாழ்வில் பல இடர்கள் ஏற்படுகின்றன..!

நல்ல நேரம் பார்க்கும் போது ஏற்படும் மேற்கண்ட நியதிகளுக்கு விதிவிலக்கு, தீர்வுகள், பரிகாரங்கள், பிராயச் சித்தங்கள் கிடையாதா? நிச்சயமாக உண்டு! இப்பரிகாரங்களும் மாப்பிள்ளை, பெண்ணின், குடும்பத் தலைவரின் தலைவியின் ஜாதக அம்சங்களைப் பொறுத்தே அமையும்!

சித்தர்கள் காட்டும் அமிர்தக் கடிகை நேரமே அற்புதமான நல்ல நேரம்!

சற்குரு தரும், சித்தர்கள் காட்டும் “அமிர்தக் கடிகை நேரத்தில்” சற்குருவின் திருப்பார்வையில், முகூர்த்தம் வைத்தல், சுவாமி சன்னதியில் தாலி கட்டுதல், வளர்பிறை முகூர்த்தம், அன்னதானம், மாங்கல்யதானம், 12 வகை மாங்கல்ய பலதாரண ஹோமங்களில் 108 வகை சமூலங்களுடன் ஹோமாக்னி, மங்களப் புகை எழுதல் போன்றவை மிகவும் முக்கியமான கல்யாண தோஷ நிவர்த்தி முறைகளாகும்.

குருவருள்தான் திருவருளைக் கூட்டி வைக்கும், ஊழ்வினை காரணமாக, தனக்கு எத்தனை சோதனைகள் வந்தாலும், சற்குருவின்பால் தான் கொள்ளும் நம்பிக்கையிலும், அன்பிலும் எவருக்கும் எத்தகைய தளர்ச்சியும் வருதல் கூடாது! சற்குருவைச் சிக்கெனப் பற்ற வேண்டியது சீடர்களின் தலையாய கடமை!

நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை

நவராத்திரி, வெள்ளி, பூர நட்சத்திர நாட்களில் வளையல்கள் இட்டு வழிபட வேண்டிய தேவி! குங்குமப் பூவால் அர்ச்சித்திட, நற்காரிய சக்திகளை அளிக்கும் அம்பிகை! அமாவாசையில் பித்ரு லோகத்தார் யாவரும் வந்து வழிபடும் ஆலயம்!

நவராத்திரி நாயகியாகப் போற்றப்படும் தேவி நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் திருக்கோயில்!

பல கோடி யுகங்களாக இப்பூவுலகைத் தாங்கும் அஷ்டதிக்குப் பாலகர்களும், நேமம் திருக்குளத் தீர்த்தத்தில் நீராடித் தம் களைப்பை இமைப் பொழுதில் போக்கிக் கொள்ள உதவும் ஔஷதத் தீர்த்தத் தலமாக, பிணி தீர்க்கும் அருட்பெரும் ஆலய பூமியாக, நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் ஆலயம் விளங்குகின்றது!

பித்ரு மூர்த்திகள், பித்ருக்கள், பித்ரு பத்னிகள், பித்ரு தேவதைகள் மற்றும் பித்ரு லோகத்தார் யாவரும் ஷண்ணாவதித் தர்ப்பண நாட்கள் எனப்படும் வருடத்தின் 96 முக்கியமான தர்ப்பண நாட்களில் வழிபடும் பித்ரு மோட்சத் தலம். அமாவாசை தோறும் தர்ப்பணப் பூஜைகளுடன் வழிபட வேண்டிய திவ்யமான கோயிலைக் கொண்டதும், நெடுங்குடி, பூவாளூர் போன்று, சிறப்பான பித்ரு முக்தித் தலமும், பித்ரு பத்னியருக்கு உரிய, அரிய பராசக்தித் தலமுமே நேமம் ஆகும்.

பண்டைய காலத்தில் நவராத்திரி பூஜைகள், சங்காராந்தி (பொங்கல்) வழிபாடுகள், ஆடிப் பூர வளையல் சாற்று உற்சவங்கள் பிரம்மண்டமான முறையில் நடைபெற்ற நேமம் ஆலயமானது, தற்போது பக்தர்களின் அசிரத்தையால், சோபையின்றிக் காணப்படுகின்றது. ஆனால் பூவுலகில் மாந்தர்கள் கை விடும் பூஜைகளை தேவாதி தேவர்கள் ஏற்று நடத்துகின்றனர். ஆனால் இதனை இவ்வகையில் உணர்வார் யார்?

நேமம் திருத்தலத்தை, முன்பு இருந்தது போல, பிரசித்தி பெற்ற ஆலயமாகக் கொணர்வது பக்தர்களின் கடமையாகும்.

அமிர்த சக்தித் தலம்!

இறைவன் படைப்பில், உலகில் மூன்றுவிதமான அமிர்த சக்திகள் மிகவும் முக்கியமானவை. பாற்கடலில் சுரக்கும் அமிர்தம், குழந்தைகளுக்கு உயிர் காப்பாக விளங்கும் தாய்ப் பால், பசுவின் பால் ஆகிய இம்மூன்றுமே ஜீவன்களுக்கு அமிர்தாமிர்த ஜீவ சக்திகளை அளித்துக் காப்பவை. உலக ஜீவன்களின் நன்முறை ஜீவிதத்திற்குத் தேவையான மூலாதார அமிர்த சக்திகளைத் தரும் அம்பிகையான நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை, சிருஷ்டிக்கு முன்னரேயே, மூன்று சக்திகளையும் பூவுலகிற்காகப் பெற்றுத் தர வேண்டி, ஸ்ரீஆவுண்டீஸ்வரரின் திருவருளை நாடித் தவம் புரிந்து, பெற்று, ஈஸ்வரனை மணந்த திருத்தலமே நேமம் ஆகும்.

பகைமை களைந்து கருணை மலரும் தலம்!

காராம் பசுக் குலத்தை இறைவன் தோற்றுவித்த தலமாதலால், இங்கு கோபூஜை (பசுவிற்கான பூஜை) செய்வது அரிய பலாபலன்களைத் தருவதாகும்!

கோவர்தனக் கற்பக் காலத்தில், தினமும் 1008 காராம் பசுக்களின் பால் கொண்டு, இங்குதாம் ஸ்ரீஅமிர்தாம்பிகையை, ஸ்ரீஆவுண்டீஸ்வரரை, அபிஷேகித்து, இதன் பலாபலன்களை ஜீவன்களுக்கு அளித்திடவே, இங்கு பகைமையை வெல்லும்படியான, தவளையும், நாகமும் ஒன்றாய் சாந்த யோகம் பயில்வதான, பகைமை சக்திகள் மறைந்து அபூர்வமான அமிர்த பிரகாசப் பரவெளி தோன்றும் தலமே நேமம் ஆகும்! எனவே உறவுப் பகை, வியாபாரப் பகை, அலுவலகப் பகைகளால் மன அமைதி இன்றி, சொத்துக்களை இழந்து வாடுவோர் இங்கு அமாவாசை, பூர நட்சத்திர நாட்களில் அம்பிகைக்கு 1008 வளையல்கள் சார்த்தி வழிபட்டு, ஏழைச் சுமங்கலிகளுக்கு மெட்டிகள், வளையல்களைத் தானமாக அளித்து வர, பகைமை தணிந்து, நல்உறவு மேம்பட்டு அமைதி கிட்டும்!

பாறைத் தேன், புழைத் தேன் போன்ற பலவகை மூலிகைத் தேன் வகைகளில், ஆராவமுதத் தேன் சுரந்த திருத்தலம்! இதனால், இத்தலத்திற்கு அமிர்தப் பரல், அமிர்த நகரம், அமிர்தவெளி, அமிர்த சாகரம் போன்ற பெயர்களும் பண்டைய யுகங்களில் துலங்கின. அமிர்தமயக் கிரணங்கள் பரிமளிக்கும் தலமாதலின், இங்கு அமிர்த யோக நேரத்தில், ஸ்ரீஅமிர்தாம்பிகைக்குத் தேனபிஷேகம் செய்து, தேன் கலந்த சர்க்கரைப் பொங்கலைப் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால், பெற்றோர்கள், பிள்ளைகள், பெண்களிடையே நிலவும் கசப்பான எண்ணங்கள் மாறி, உறவுகள் சீரடைந்து, குடும்பம் ஒற்றுமைப்படும்.

ஒரு மன்வந்த்ர காலத்தில், பல அசுரர்களும் மனம் திருந்தி, நல்வழியில் வாழும் வழிவகைகளை நாடிய போது, மகா காருண்ய மூர்த்தியாக அவர்களை மன்னித்து, பல நல்வரங்களிய ஸ்ரீஅமிர்தாம்பிகையே அளித்த தலம்! எனவே மது, புகை, சூது போன்ற தீய வழக்கங்களுக்கு ஆளானோர், அசுர சக்திகளிடம் இருந்து விடுபட்டுத் திருந்தி வாழ, இங்கு அமாவாசை, திருவோணம், சனிக் கிழமைகளில் தர்ப்பணங்கள் இட்டு, தேனபிஷேகம் செய்து, ஏழைகளுக்குப் பாத்திரங்களைத் தானமாக அளித்து வர வேண்டும்.

காராம் பசு தோன்றிய தலமாதலின், இங்கு கோ பூஜை செய்வது சந்தான (குழந்தை பாக்ய) ப்ராப்திக்கும், சந்ததி தழைத்திடவும் நன்கு அருள்புரியும்! இங்கு ஆற்றப்படும் (மாதந்தோறுமான) பூர நட்சத்திர வளையல் சாற்று பூஜை, நவராத்திரி பூஜைகள், அமாவாசை பூஜைகள் யாவும், இத்தல விசேஷமாக, இங்கு உற்பவிக்கும் அமிர்த யோகக் காலசக்தியின் மகிமையால் வழிபாட்டுப் பலன்களைப் பன்மடங்காக்கி நற்காரியங்களை நிறைவேற்றித் தரும். குறிப்பாக, தன் பெண் பிள்ளைகளின் எதிர்காலத்தைப் பற்றிக் கவலையுறும் தாய்மார்கள் இங்கு வெள்ளிக் கிழமை மற்றும் பூர நட்சத்திர நாட்களில், அம்பிகைக்கு வளையல்கள் சார்த்தி வழிபட்டு, ஏழைகளுக்கும் வளையல்களைத் தானமாக அளித்து வர, அம்பிகையின் அருளால் அனைத்தும் நல்லபடியாக முடியும்.

இங்கு அருளும் பைரவரே அமிர்த யோக சக்திகளைப் பூவுலகிற்கு அளிப்பவராதலின், அமிர்தயோகீஸ்வர பைரவர் என்ற நாமத்தைப் பூண்டு அருள்கின்றார். அமிர்தயோக சக்திகள் உற்பவிக்கும் தலங்களுள் நேமமும் ஒன்றாகும்.

திருமண வாழ்க்கைத் துயர்களைத் துடைக்கும் அமிர்த சக்தித் தலம்!

அம்பிகை அமிர்த சக்தியுடன் தோன்றிய மூலாதாரத் தலமாதலின், கர்ம வினைகளின் சூழலால், இல்லறத்தில் எழும் சகல கஷ்டங்களுக்கும், இங்கு அம்பிகையே காருண்ய மூர்த்தியாக நல்ல நிவர்த்திகளைத் தருகின்றாள்.

நல்ல இடத்தில் திருமணம் முடி(ந்)த்தும், சூழ்நிலை சந்தர்ப்பங்களால் நல்ல அமைதியான மண வாழ்வை அடைய இயலாது தவிக்கும் நிலை, விவாகரத்தால் ஒதுங்கி வாழ்தல், சண்டை, சச்சரவுகளால்  தம்பதிகள் பிரிந்து வாழ்தல், மன ஒற்றுமையின்றி வாழ்தல் போன்ற சூழ்நிலைகளில் வாடுவோர்க்கு, இங்கு நிகழ்த்தப் பெறும் கோ பூஜை, காராம்பசு பால் அபிஷேகம், தர்ப்பணம், தீர்த்த நீராடல், பித்ரு ஹோமம், ஏழை சுமங்கலிகளுக்கு மங்களப் பொருட்களை அளித்தல் போன்றவை மேதவிதானப் பித்ருக்களின் ஆசிகள் மூலம் தக்க தீர்வுகளையும், மனசாந்தியையும் பெற்றுத் தந்திடும் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்க ஆண், பெண் சந்ததியின்றி வருந்துவோர், அமாவாசை தோறும் இங்கு தர்ப்பணப் பூஜைகளை நிகழ்த்துதலால், நன்முறையில் சந்ததி பரிபாலனமும் அமைய, தரணி பந்துப் பித்ருக்கள் துணை புரியும் தலம்!

இங்கு அமாவாசை, அமிர்த யோக நேரம், வெள்ளிக் கிழமைகள், நவராத்திரி, பூர நட்சத்திர தினங்களில் வழிபடுதலால், இல்லறத்தில் துன்பங்கள், மனவேதனைகள், தணிந்து மங்களம் பொங்கிச் சிறப்பான பலன்கள் கிட்டும். இங்கு அமாவாசை நாளில் ஸ்ரீஆவுண்டீஸ்வரருக்கு, ஆவுடைக்குச் சந்தனக் காப்பும், பாண லிங்கத்திற்கு வெண்ணெய்க் காப்பும் இட்டு, 21 பசு நெய் தீபங்கள் ஏற்றி வழிபட, கணவன், மனைவியிடம் அமிர்தமய சாந்தம் நிறைந்த ஒற்றுமை பெருகும். இதுவே தூய அன்பாய்ப் பரிணமிக்கும்.

நவராத்திரியில் ஒன்பது நாட்களும் இங்கு சத்சங்க விளக்குப் பூஜைகளை நிகழ்த்தி, மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வழிபடுவோர், பெரும் துன்பங்களிலிருந்து  மீள்வர். நஷ்டம், விபத்து, எதிர்பாராத ஆபத்து காரணமாக, தாங்க இயலாத கஷ்டங்களால் வாடுவோர், இங்கு நவராத்திரி நாட்களில் ஆலயம் முழுதும் அகண்டகார முறையில், நாள் முழுதும் தீபஜோதி தோன்றும் வகையில், பெரிய அகல் தீபங்களை ஏற்றி வழிபட்டு வர, அதியற்புத முறையில் தீர்வுகளைப் பெறுவர்.

நவராத்திரிக்கான வழிபாட்டு தேவி நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை – அட்டைப்பட விளக்கம்

சென்னை – பூந்தமல்லி – திருமழிசை – வெள்ளவேடு – திருவள்ளூர் மார்கத்தில், வெள்ளவேடு நிறுத்தத்தில் இறங்கி, இங்கிருந்து நான்கு கி.மீ தொலைவில் உள்ள நேமத்தை அடைய வேண்டும். சென்னை, பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதூரில் இருந்தும் நேமத்தை அடைந்திடலாம்.

அனைத்துப் பெண்களும் தரிசிக்க வேண்டிய நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை! கணவனுடைய நோய்களையும், தீய வழக்கங்களையும் தீர்த்து நல்வாழ்வு பெற உதவும் நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டீஸ்வரர் ஆலயம்! பித்ரு பத்னீகளால் தினந்தோறும் வழிபடப் பெறும் ஸ்ரீஅமிர்தாம்பிகை!

பிரபஞ்ச ஜீவன்கள் யாவும் தோன்றுகின்ற மூலாதாரமான சிருஷ்டிக் கும்ப கலசத்தின் மாவிலைத் தோரணத் தீர்த்தம் தெளிக்கப் பெற்றதாகவும், தேவர்களால் சுவாமிக்கும், அம்பிகைக்கும் அமிர்தக் காப்பு இடப் பெற்று வழிபடப் பெற்ற அமிர்த ஜன்ம பூமியாகவும் நேமம் திருத்தலம் விளங்குகின்றது.

பாற்கடலில் திரண்ட அமிர்தத்தை, தேவர்கள், மாவிலையில் வைத்து அம்பிகைக்குப் படைத்தளித்த திருத்தலங்களுள் நேமமும் ஒன்று. நேமம் என்ற பெயரில் துலங்கும் பல தலங்களும், அமிர்த யோக நேரத்தில், புனிதமான அமிர்த சக்தி திரளும் புண்ணிய பூமிகளாகும்.

மேலும், இங்குள்ள பித்ரு முக்தித் தீர்த்தம் பண்டைய காலத்தில், எட்டு பெரிய பித்ரு பரிபாலனக் குளத்துறைகளுடன், அஷ்ட விம்சத்வதித் தீர்த்த பாத பூஜா சக்திகளைத் தரும் தீர்த்தமாகப் பொலிந்தது.

பெறுதற்கரியதே புனிதமான பெண் பிறப்பு!

பெறுதற்கரியது மானுடப் பிறப்பு! இதனினும் பெரிதே பெண்ணாய்ப் பிறத்தல்! பூவுலகில் பெண்ணாய்ப் பிறப்பது அருந்தவப் பேறே!

பெண்கள் யாவரும், தாங்கள் பெறுதற்கரிய புனிதமன பெண்ணாய்ப் பிறக்கக் காரணமான க்ஷீராம்ருத சக்திகள் நிறைந்த சக்தித் தலமாகவும் நேமம் சிவபூமி விளங்குவதால், இப்பூவுலகில், பெண்களாய்ப் பிறந்த அனைவரும், தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் நிச்சயமாகத் தரிசிக்க வேண்டிய அம்பிகையே நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை தேவி என்று முன்னரேயே விளக்கியுள்ளோம்! உலகில் உள்ள அபூர்வமான க்ஷீர சக்தித் தலங்களில் இதுவும் ஒன்றாகும்! அதாவது பாற்கடலின் அமிர்தப் பிரசாதம் இறைவனுக்கும், இறைவிக்கும் படைக்கப்பட்ட தலங்களுள் இதுவும் ஒன்றாகத் துலங்குவதால், எத்தகைய பகைமை, விரோதம், குரோதம் யாவையும் தீர்க்கவல்ல தலம் இதுவே! எத்தகைய பகைவர்களும் நேருக்கு நேர் வந்திடினும், அமைதியை வேண்டி நிற்கும் சாந்தகார(ரு)ண்ய பூமியென நேமத்தைச் சித்தர்கள் போற்றுகின்றனர்.

இங்குள்ள பித்ரு முக்தி தீர்த்தத்தின் எட்டுத் துறைகளும் வசு நேமம் (வடக்கு), ருத்ர நேமம் (வடகிழக்கு), ஆதித்ய நேமம் (கிழக்கு), தரணி பந்து நேமம் (தென்கிழக்கு), ஜெய க்ஷீராஸ் நேமம் (வடமேற்கு), பவித்ர நேமம் (மேற்கு), திலாட்சர நேமம் (தென் மேற்கு), கோதர்ம நேமம் (தெற்கு) என்று அந்தந்த வகைப் பித்ருக்களின் நாமங்களைத் தாங்கி எண் திசைகளிலும் அருள்கின்றன! வசதி உள்ளோர் இவ்வாலயத்தையும், திருக்குளத்தையும் சீரமைத்துத் தந்திட, வாழையடி, வாழையாய் சந்ததித் தர்ம சக்திகள் பொங்கி அருள்வளம் தரும்.

தலையாலே தாள் வணங்கும் தலம்!

அமாவாசை, மாதப் பிறப்பு, கிரஹண நாட்கள், பித்ருக்களின் திதி நாட்கள், மாளயபட்ச நாட்கள், வ்யதீபாத யோக நாள் போன்ற பித்ரு சக்தி பெருகும் நாட்களில், இத்தீர்த்தத்தில் எண் முறை மூழ்கி எழுதல் அல்லது எண்முறை சிரசில் தீர்த்தம் தெளித்துத் தர்ப்பணம் அளித்தலால், பித்ரு ப்ரீதியும், பித்ருக்களின் நல்ஆசிகளும் கிட்டும். பித்ருக்கள், தங்கள் ஒளித் திருமேனி பூமியில் நன்கு படும்படியாகச் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரிக்கும் அபூர்வமான தலங்களில் ஒன்றாக நேமம் விளங்குவதால்தான், இங்குதாம் மகாபாரத  உத்தமப் பெம்மானாகிய அக்ரூரர், பல சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் பாத பூஜைகளை நிகழ்த்தி, பன்முறை வீழ்ந்து நமஸ்கரித்து அரும் பெரும் மோட்ச நிலைகளைப் பெற்றார்.

நவராத்திரி மற்றும் விசேஷமான தினங்களிலும், இங்கு ஸ்ரீஅமிர்தாம்பிகை அம்பிகைக்குக் காதோலை கருகமணி, நிறைய வளையல்கள் சார்த்தி, மஞ்சள் பட்டு வஸ்திரத்தால் அலங்கரித்து வழிபடுவோர், பித்ரு தோஷங்களிலிருந்து நிவர்த்தி பெறுவர். கன்னிப் பெண்கள் நன்முறையில் திருமண வாழ்வைப் பெற, நவராத்திரி தினங்களில் வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான சக்தித் தலம். ஒரு யுகத்தில் திருவானைக்காவல் போல சிறப்பாக நவராத்திரி பூஜைகள் திகழ்ந்த ஆலயம்!

அமுத தாரைகள்

கோஷ்ட மூர்த்திகள் என்றால் மூலவரின் கருவறை வெளிச் சுவற்றில் சுற்றிலும் உள்ள மூர்த்திகள் ஆவர். மூலவரை ஒட்டி இருப்பதால், பிரதம மூலசக்திக் கிரணங்களை நேரடியாக கிரகித்து அருளும் மூர்த்திகளாதலின், இவர்கள் காரிய சத்சித்திகளுக்கு நன்கு அருள்கின்றனர். அதாவது மூலவருடைய திருக்காதுகள் போல் இவர்கள் செயல்பட்டு அருள்பாலித்து காரியசித்திகளுக்கு அனுகிரகம் செய்கின்றனர். மாத சிவராத்திரி, தேய்பிறைப் பிரதோஷ நாட்களில், அனைத்து கோஷ்ட மூர்த்திகளுக்கும் தைலக் காப்பு சார்த்தி, அந்தந்த நாளுக்கு ஏற்ற வண்ணப் பட்டாடைகளைச் சார்த்தி எள் உருண்டைகளைத் தானமாக அளித்தலால், அடுத்து வரும் அமாவாசை அன்று தீர்த்த நீராடலுக்காக பூமிக்கு வரும் தீர்த்த கோடிப் பித்ருக்கள் மனம் மகிழ்ந்து அருள்கின்றனர்.!

இந்த நட்சத்திர ஆலயத் தொடரில் சுவாதி, திருவோணம், பூராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி தவிர ஏனைய 22 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கான ஆயுட்கால வழிபாட்டுத் தல விளக்கங்கள் இதுவரையில் அளிக்கப்பட்டுள்ளன! இவ்வரிய நட்சத்திரத் விளக்கங்களைத் தொகுத்து அற்புதமான ஆன்மீக நூலாக்கி மக்களுக்கு அர்ப்பணிக்கும் தொண்டிற்கு காலம் காலமாய் அருள்புரியும் அற்புத இறைப்பணிக்கு தக்க தகைமையாளர்கள் (sponsorship for publication of spiritual books) உதவிகளை நல்குவீர்களாக!

தானறிந்ததைப் பிறருக்குச் சொல்லித் தந்து, பிறரையும் நன்கு வாழ வைக்க வேண்டும். தன்னுள் பேராசையால் திறமையை, அறிவை மறைப்பதால் அநாவசியமான வழிகளில் பெரும் செலவு உண்டாகிக் கடன்கள் சேரும்.

43 கோடி ஸ்ரீவித்யா சக்கர தேவிகளில் ஒன்றாகத் துலங்கும் கசகசாம்ருத தேவியே, உத்தம ஸ்ரீவித்யா உபாசக மகரிஷிகளில் ஒருவரான பாஸ்கர ராயரால், கலியுகச் சுபானு ஆண்டு ஒன்றில், கசகசாம்ருத சோம வார நாளில், பூமியில், பல யுகங்களுக்குப் பின், ஆகமப் பூர்வமான கசகசா மூலிகா பந்தனத்தில், ஆவாஹனம் செய்து வழிபடப் பெற்ற தேவி! கச்சபீ வகையிலான நாதவேத சித்திகள் நிறைந்த உபாசனை இது! (கச்சபீ = கலைவாணியின் வீணை)

திருமண தேவதைகள்

மஞ்சள் வண்ணத் திருமணப் பத்திரிக்கையில், இரண்டு மாலைகளுடன் விண்ணில் பறந்து ஆசி தரும் தேவதைகள், கசகசாம்ருத லோகங்களைச் சார்ந்தவர்களே! இவர்கள் தாங்கி வரும் மாலைகளின் மலர்களில் கசகசாம்ருதத் துளிகள் நிறைந்திருக்கும். சித்தர்களே நன்கு அறிந்த “அமிர்த நேரக் கடிகை” நேரத்தில், ஆலயங்களில், சுவாமி சன்னதி முன், குருவருளால் தாலி கட்டுவோர்க்கு, இவர்கள் கசகசாம்ருத சக்திகளைப் பொழிந்து பரிபூரண ஆசிகளை அளிக்கின்றனர்.

இடையாற்று மங்கலத்தில் கசகாம்ருததேவி ஆற்றும் காருண்ய பூஜை

வாழ்க்கையின் எந்நிலையிலும், எத்தகைய பிரச்னைகளும் வந்தாலும், கணவனை விட்டுப் பிரியாது, அவருக்கும், அவருடைய நற்காரியங்களுக்கும் எந்நேரமும் உறுதுணையாக இருந்து உதவுதலே உத்தம மனைவிக்கு நல்ல இலக்கணமாகும். இதற்குரிய சுமங்கலித்வ சக்திகளைப் பெற்றுத் தர உதவுவதே கசகசாம்ருத தேவி வழிபாடு! திருச்சி வாளாடி அருகே உள்ள இடையாறுமங்கலம் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீமாங்கல்யேஸ்வரர் ஆலயத்தில் கோதூளி லக்ன நேரத்தில் தினமும் இங்கு அம்பிகையை கசகசாம்ருத தேவி சூக்கும, தூல வடிவில் வழிபட்டு இதன் பலாபலன்களை இங்கு வழிபடுவோர்க்கு அளிப்பதற்காக ஸ்ரீமாங்கல்ய மகரிஷியின் திருப்பாதங்களில் அர்ப்பணித்துச் செல்கின்றாள்!

ஸ்ரீமாற்றகலீஸ்வர பைரவர்
திருப்பாச்சேத்தி

கூவம் ஸ்ரீதிரிபுராந்தகர் சிவலிங்கம் - அனைத்துலகக் கர்ம பரிபாலன மெய்ஞான லிங்கம்!

அனைத்து நாடுகளின் இன்ப, துன்ப நிலைகளை உணர்த்த வல்ல சிவலிங்க சக்திகள் நிறைந்ததே கூவம் சிவபூமி! (சென்னை- அரக்கோணம் இடையே, மப்பேடு தக்கோலம் அருகில் உள்ள கூவம் தலத்தின் ஸ்ரீதிரிபுராந்தகி சமேத ஸ்ரீதிரிபுராந்தக  சிவலிங்கத்தின் “பாஹ்யவதன” அம்சங்கள் (வெளிவண்ண தாத்பர்யங்கள்) உலக நாடுகளின் லௌகீக  அம்சங்களை, இன்ப, துன்பங்களை வண்ண வடிவுகளில் காட்டி, தக்க தீர்வுகளையும் குருவருள் மூலமாகத் தரவல்லதாம்! சில காலம் முன்பு வரை இங்கு சிவலிங்கத்தின் மேல் தூலமாக நன்கு தெரிந்த மிகவும் அபூர்வமான பல வண்ண “பாஹ்யவதன” அம்சங்கள், தற்போது சூக்குமமாகவே, குருவருள் மூலமாக அறியற்பாலனவாம். இங்கு ஒரு யுகத்தில் பூரித்ததே மிக மிக புனிதமான கூவம் நதியாகும்! தற்போது கூவம் நதி (சென்னையை அடைந்து) மக்கட் சமுதாய அசிரத்தையால் மிகுந்த அவல நிலைக்கு ஆளாகி உள்ளது. இத்தகைய நதி சாபங்கள் தாம் மக்களுக்கு பிணி, வறுமை, நோய், நொடிகளாக வந்து வாட்டுகின்றன. நதிகளைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். மக நட்சத்திரம் தோறும் நதி தேவதைகளை ஆராதிக்க வேண்டும்.

அந்தந்த நாட்டிற்கும் ஜாதக வரைவு உண்டு!

இளவயது, இல்லற வாழ்வு முதல் மரணம் வரை, கடன் பிடியில், பின்னலில் சிக்கி வாழ்வோரும் உண்டு. ஏன், பல நாடுகளும் இன்று கடன் பிணியில் சிக்கித் திணறுகின்றனவே! ஒவ்வொரு நாட்டிற்கும் ஜாதக வரைவு உண்டு! ஒரு நாட்டின் பொருளாதாரத் துன்பங்களுக்கு ஒட்டு மொத்தமாக ஆன்மீகத் தீர்வு பெற, அந்தந்த நாட்டிற்கான அட்சாம்ச, தீர்க ரேகைகளைக் கொண்டும், வேறு பல அம்சங்களை வைத்தும் “பூம்யகுண ஜாதகம்” வரைந்து கணித்தல் வேண்டும். இதைஅறிந்தோர் ஒரு சிலரே! நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க வேண்டிய பெரும் பொறுப்பில் உள்ளோரும், ஜாதகத் துறையில் இவ்வம்சத்தில் சிறப்புற விரும்புவோரும், பொருளாதாரத் துறையில் பெரிய பதவியில் உள்ளோர் பணத்தின் அடிப்படை உண்மைகளை ஆன்மீக ரீதியாக அறிந்து விடை காணவும் காலசக்திகளில் தெளிவு பெற வேண்டி மதுரை அருகில் உள்ள திருப்பாச்சேத்தியில் குளிகை நேரம், அஷ்டமி திதிகளில் ஸ்ரீதிருமாற்றகளீஸ்வர பைரவரை வழிபட்டு வருதல் வேண்டும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
தீயத்தூர்

பெருந் தொழிலில் நஷ்டங்கள் அகல…

கடுமையான பொருளாதார நிலையில் உள்ள பெரிய கம்பெனி, கடைகளை நிர்வாகம் செய்ய இயலாது தவிப்போரும், பெரும் கடன்களால் திணறுவோரும் தக்க நிவாரணம் பெறவும் ஆவுடையார் கோயில் அருகே உள்ள ஸ்ரீராமர், சீதா தேவி, திருமகளால் வழிபடப் பெற்ற மிகவும் பழமையான தீயத்தூர் ஸ்ரீசஹஸ்ர லக்ஷ்மீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகள் தொடர்ந்து நிகழக் கட்டளைகளை ஏற்றும், குடும்பத்துடன் பங்கு பெற்றும், திருமகளுக்கு உரிய துவாதசி, அனுஷம், உத்திராட நட்சத்திர நாட்களில் வழிபட்டும் வர வேண்டும்.

வாங்கும் சம்பளம் நமக்கே போதவில்லையே, மாத பட்ஜெட்டில் துண்டு விழுகிறதே, பிறகு எங்கே தான, தர்மம் செய்து கடனைப் போக்குவது என எண்ணாதீர்கள். பீடி, சிகரெட், மது கூல்டிரிங்கஸ், காபி, டீ, சினிமா, பத்திரிகைகள், கேபிள் டீ.வி, டெலிபோன் என்று எதெதற்கோ மனிதன் அநாவசியமாகச் செலவு செய்யும்போது, தினமும் பத்து ரூபாய்க்கோ, ஐந்து ரூபாய்க்கோ, வாழைப் பழங்கள் கூடவா வாங்கி ஏழைகளுக்கு, பசுக்களுக்கு அளிக்க முடியாது? தனக்கே பல சிறு கடன்கள் தீரும் வழிமுறைகளைப் பெற பெருமாள் ஆலயங்களில் தாயார் சன்னதி கோமுகங்களை நன்கு கழுவி சுத்திகரித்து வருதல் வேண்டும்.

சம்பளப் பணத்தை முதலில் பெற்ற தாயிடம், மனைவியிடம் அளித்து உப்பு, புஷ்பம் போன்ற விருத்தி அடையும் பொருளை முதலில் வாங்க வேண்டும். வாங்கும் அரிசியில் முதல் பிடியை அல்லது படியை ஆலயத்திலும், அடுத்ததைக் குலதெய்வ பூஜைக்கும், மூன்றாவதை அன்னதானத்திற்கும் கொண்டிடுவதும் பண தோஷங்களைத் தடுக்கும். பணமும் நன்முறையில் விருத்தி ஆகும். கடனை அறவே தவிர்க்கும் நல்வழி முறைகளும் கிட்டும். வருடம் ஒரு முறையாவது தஞ்சை அருகே திருச்சோற்றுத்துறைச் சிவாலயத்தில் அன்னதானம் செய்திடில் உறவுமுறைக் கடன்கள் தீரும்.

ஸ்ரீஅன்னபூரணி அம்மன்
திருச்சோற்றுத்துறை

தன் சம்பளத்தில், குறித்த தொகையை, மாதந்தோறும், வாரந்தோறும், நற்காரியங்களுக்கு அதாவது பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஒதுக்கி வைத்துச் செலவிட வேண்டும். பத்தாயிரமோ, ஐந்தாயிரமோ சம்பளம் வந்தால் குறைந்த பட்சம் ரூ.100, ரூ50க்காவது தான தர்மம் செய்யும் மனப்பாங்கு வந்திடுதல் வேண்டும். அனைத்தும் தனக்கென வைத்து வாழ்வோர்க்கு திருடு, கொள்ளை, ஏமாற்றப்படுதல், ஏமாறுதல், எதிர்பாராத நஷ்டங்கள், வரிச் சுமைகள் போன்றவற்றால் அநாவசியமான பணப் போக்கு உண்டாகிக் கடன்கள் சேரும்.

செய்கின்ற, இயன்ற சிறு வகை அன்னதானத்திலும் தனக்கொன்று, பிறருக்கொன்று என்ற பாகுபாடு கூடாது! ஏனோதானோ என்று ஏதோ ஒரு பாயசத்தை (தண்ணீர் போல்) வைத்து நூறு பேருக்கு நிரவி அளிப்பதை விட, தான், தன் வீட்டில் நன்கு உண்பதைப் போல, நிறைய முந்திரி, திராட்சை, நெய் கூடிய, நல்ல சுவையான பாயசத்தை மாதம் ஒரு முறையாவது பத்து ஏழைகளுக்காவது அளித்தல் சிறப்பானது. பிறருக்கு மாதம் ஒரு முறையாவது பத்து ஏழைகளுக்காகவது அளித்தல் சிறப்பானது. பிறருக்கு ஈவதில் பாரபட்சம் காட்டுவதால், கொடுத்த பொருள் திரும்பி வராது. புதுக் கடன்கள் சேரலாகும். இதுவும் கடன் சேரும் வழியாகும். பொதுவாக ஆலயங்களில், கோசாலைகளில் பசுக்களை நீராட்டிப் போஷித்து வந்தால் நாள் பட்ட கடன் சுமை தணிய வழி பிறக்கும்.

ருண பாக்கியும் கடனாகும்மே!

பணக் கடனானது பல ருணங்களையும் ஏற்படுத்துகின்றது. “ருணம்” என்றால் ஒட்டுதல் என்று பொருள். வினைகளின் விளைவுகளால் ஏற்படுவது ருணம், வித்யா தானம், ஆடை தானம், மாங்கல்ய தானம் போன்ற பலவித தானங்களில் கிட்டும் பலவிதமான புண்ய சக்திகள் தாம் பலவித ருணங்களைப் போக்க வல்லவை. உங்களிடம் சேர்ந்துள்ள ருண வினைகளை நீக்க வல்ல நற்காரியங்களை உங்களால் ஆற்ற முடியாவிட்டாலும், இவற்றை இறைச் சமுதாயப் பணியாக, உலக நலன்களுக்காக நிகழ்த்துகின்ற திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமம் போன்ற தெய்வீக நிறுவனங்களின் நூல்கள், பூஜா திரவியங்களை வாங்குகையில் இவற்றின் தொகையாவும் வஸ்திர தானம், மாங்கல்ய தானம், நோய் நிவாரண மருந்துகள் தானம், வடமொழி, தமிழ் மறை ஓதி, ஹோம வழிபாடுகள், அக்னி பூஜைகள், இலவச மருத்துவ முகாம் போன்ற பல தான தர்ம காரியங்களைச் சென்றடைவதால், இவையும் ருணதீர்ப்பு முறைகளாக ஆகின்றன.

ஆத்மவிசாரம் ஒரு மனசுத்தி சாதனமே!

ஒவ்வொருவரும், பல விஷயங்களை எவரிடமும் பகிர்ந்து கொள்ள இயலாது. மனதிலேயே அடக்கும்போது, காலப் போக்கில், எண்ணங்கள் பாசம் பிடித்த கற்களாய் மனதில் ஆழமாகப் பதிந்து, நாளடைவில், இடிந்த சுவர்கள் போலும், பல எண்ணங்கள் பாறையாகவும் ஆகி, மன வீடு அலங்கோலமாக ஆகி விடும்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

ஆத்ம விசாரத்தில் இவை மெதுவாக ஆனால் உறுதியாகக் களையப் பெறுகின்றன. அந்தந்த நாள் மனப்பசியை அந்தந்த நாளில் சுத்தம் செய்து விட்டால் மனவீடு நாளடைவில் சுத்தமாகிவிடும். எனவே ஆரம்ப நிலையில் ஆத்மவிசாரம் ஒரு மன சுத்திகரிப்புச் சாதனமாகவும் அமைகின்றது! எனவே ஆத்ம விசாரம் எனும்போது மன சுத்தி, எண்ணப் பாசிகளை அகற்றுதல், பல்லாண்டுகள் பாறை போல் இறுகியுள்ள எண்ணக் கற்களை அகற்றுதல் போன்ற பல உப பலன்கள் கிட்டுவதால், ஆத்ம விசாரம் என்பது இறைமையை நோக்கி இயக்கும் இயக்கமும் ஆகின்றது!

பொருள் தொலையாதிருக்கப் பாதுகாப்பு சக்திகள்

தொலைந்த பொருள் கிட்டிட பொருட்கள் தொலைந்து போவதற்குக் காரணத்தைப் பற்றி என்றேனும் ஆத்ம விசாரம் செய்து பார்த்திருக்கின்றீர்களா? அஜாக்கிரதை, திருடு காரணமாகப் பொருள் தொலைவதாக நமக்குத் தோன்றும், உண்மை அதுவல்ல, நாம் தினந்தோறும் பல இறைவழிபாடுகளைச் செய்து ஓரளவு புண்ய சக்தியைத் திரட்டினால் தாம் நாம் கஷ்டங்களுக்கு இடையிலும் நன்கு மனதிடத்துடன் வாழ முடியும். உடலின் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஆன்ம வளம் எனப்படும் புண்ய சக்திகள் சேர்ந்திடல் வேண்டும். கபாலத்தில் மன ஓட்டங்களைப் பதிய வைக்கும் “மனபூதி” என்ற பெட்டக நாளம் ஒன்று உண்டு. தினசரி வாழ்வில் மனதிடம், மனோவளத்திற்குத் தேவையான புண்ய சக்திகள் குறையும் போது “மனபூதி” நாளங்கள் பலவீனம் அடைகின்றன. இந்த மனபூதி நாளங்கள்தாம் விண்ணுலக லோகங்களோடு தொடர்பு கொள்ளக் கூடியவை! இது பலவீனம் ஆகும் போதுதான் அஜாக்கிரதை, ஞாபக மறதி ஏற்படுவதுடன் மனபூதிப் புண்ய சக்திக் குறைவால் சிறு நஷ்டமாக, பொருள் தொலைவு ஏற்படும். தொலைந்த பொருள் கிட்டிட சிதறுகாய் உடைத்தல், இரட்டைப் பிள்ளையார் ஆலய வழிபாடு, ஹயக்ரீவ பூஜை, குலதெய்வ பூஜை போன்றவற்றை நிகழ்த்திட மனபூதி சக்திகள் நிறைவாகி தொலைந்த பொருள் கிட்டும். இப்புண்ய சக்திகள் நிறைவாகாவிடில் அவ்வினை விளைவுகள் தொடரும். பிரதமை, நவமி திதிகளிலும் புதன்கிழமை நாட்களிலும் ஸ்ரீசண்டிகேஸ்வரிக்கு வில்வ மாலை சார்த்தி வழிபட, பாதுகாப்பு சக்திகள் கிட்டும். தொலைந்த பொருள் கிட்ட வழி பிறக்கும்.

ஸ்ரீவெள்ளைவேம்பு மாரியம்மன்
ஆலயம் திருவாவடுதுறை

வெள்ளை வேம்பு மாரியம்மன் – பின்பக்க அட்டைப்பட விளக்கம்

மாரியம்மன், எல்லையம்மன் என்றாலே தேவதைகள் என்று பலரும் அலட்சியமாக இருந்து விடுகின்றனர்.  இது தவறு. ஆதிபராசக்தி அம்சங்களான இவர்கள் இயற்கை வளங்களைத் தந்து, இயற்கைச் சீற்றங்களைத் தணித்து மனிதகுலத்தின் பல குற்றங்களையும் மன்னித்தருளும் அற்புத மூர்த்திகளே, கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து தெற்கே ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. திருவாவடுதுறையிலிருந்து சுமார் 3 கி.மீ ஆடுதுறை மல்லார் பேட்டையிலிருந்து ஒரு கி.மீ மஞ்சளாற்றங்கரையில் அமைந்துள்ளதே வெள்ளை வேம்பு மாரியம்மன் ஆலயம்! அபூர்வமாக வேப்பமர இலைகள் பசுமையாக இல்லாது வெள்ளை நிறமுடையதாம். நிம்பசூதனி என்ற பராசக்தி மண்டலங்களுள் மட்டுமே அபூர்வமாக இருக்கும் இந்த வெள்ளை வேம்பு நம் புனிதத் தமிழ்நாட்டில் துலங்குவது நம் அதிர்ஷ்டமே! எத்தகைய நோய்களுக்கும் நிவர்த்தி தருகின்ற அம்பிகை. செவ்வாய்க்கிழமை ராகு கால நேரத்தில் வெண்ணெயில் மாதுளம் பழ முத்துக்கள் பதித்து வழிபடுதலும், வெள்ளிக் கிழமை சுக்ர ஹோரை நேரத்தில் பட்டாடைகள் சார்த்தி இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை போன்ற “ஆவியில் வேகும்” பண்டங்களை நைவேத்யம் செய்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்தல் நோய்களுக்கு நிவாரணம் தருவதுடன், திருமண தோஷ நிவர்த்திகளுக்கும் உதவும், மிகவும் சக்தி வாய்ந்த அம்மன், வெள்ளை வேம்பு விருட்சத்தை எந்த அளவிற்கு அடிப்பிரதட்சிணமாக வலம் வருகின்றார்களோ அந்த அளவிற்கு நோய்த் தடுப்பு சக்திகள் உடலில் சேரும்!

தொடரும் ஆனந்தம் ...

“நாங்கள் போடும் விதை இன்றைக்கே முளைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது எப்போது வேண்டுமானாலும் முளைக்கும். காரணம் உங்கள் மனதில் விதையைத் தெளிப்பதில்லை, உள்ளத்தில் விதையை விதைக்கிறோம், ஊன்றுகிறோம்” என்பதே நம் சற்குரு அடிக்கடி அருளும் ஆனந்த அமுதமாகும். சற்குரு விதைக்கும் இந்த “ஒரே ஒரு விதையை” நம் மனதில் தற்போதைக்கு பதித்துக் கொண்டால் போதும், விதைத்துக் கொண்டாலும் போதும், அது எப்போது வேண்டுமானாலும் வானளாவ வளர்ந்து கனி கொடுக்கட்டும். ஒரு முறை நம் சற்குருவின் தரிசனம் பெற ஒரு அடியார் வந்தார். அவருக்கு திருமணமாகி பல வருடங்கள் ஆகியும் வாரிசு ஒன்றும் தோன்றவில்லை. இருந்தாலும் அவர் அதைப்பற்றி ஒன்றும் கவலைப்படாமல் காஞ்சிப் பெரியவர் தமக்கு அளித்த பஞ்சாயதன பூஜையை தான் சரியாக நிறைவேற்ற முடியவில்லையே, அதற்கு என்ன செய்வது என்பது பற்றிய விளக்கத்தை நம் சற்குருவிடம் கேட்டார். அந்த அடியார் உடல் நலக் குறைவால் தரையில் உட்கார்ந்து வெகு நேரம் பூஜை செய்ய இயலவில்லை. இதைக் கேட்ட நம் சற்குரு வழக்கமான தெய்வீகப் புன்னகையுடன், “கீழே உட்காராவிட்டால் என்ன சார், மேலே, மேஜை ஒன்று போட்டு அதன் மேல் சுவாமிகளை வைத்து நீங்கள் நாற்காலியில் அமர்ந்து பூஜை செய்யலாமே. அதில் என்ன தவறு இருக்கிறது ? உங்களுக்கு அளிக்கப்பட்ட பூஜையோ மகா பெரியவாள் அளித்தது. அது கிடைத்ததே பெரும் பாக்கியம். அதை நிறைவேற்றுவதுதான் முக்கியமே தவிர, நீங்கள் நாற்காலியில் அமர்ந்து பெரியவர் அளித்த பூஜையைத் தொடர்வதால் எந்த வித தவறும் கிடையாது,” என்று தெளிவாகக் கூறினார். அந்த அடியாரும் நம் சற்குருவிடம் மனதார நன்றியைத் தெரிவித்து விட்டு சென்றார் என்றாலும் நாற்காலியில் உட்கார்ந்து பூஜை செய்யும் மனோபாவத்தை அவரால் மேற்கொள்ள முடியவில்லை, உயரமான இடத்தில் அமர்ந்து பூஜை செய்வதை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சுடர் சக்திகளே குரு சக்திகள்

ஆண்டுகள் பல கடந்தன ...
அந்த அடியாரின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்து அரசாங்க உத்தியோகத்தையும் விட்டு விட்டு வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டார். சில ஆண்டுகள் இவ்வாறு கழிந்த பின் நம் சற்குரு விதைத்த ஆன்மீக விதை முளைவிட்டு வளரவே அவர் நம் சற்குரு கூறிய முறையில் நாற்காலி ஒன்றின் மேல் அமர்ந்து கொண்டு பஞ்சாயதன பூஜைகளை நிறைவேற்ற ஆரம்பித்தார். “நாங்கள் போட்ட விதை ...” என்று கனிந்த கனியும் சித்த கனியும் போட்ட விதை எப்படி முளைத்தது பார்த்தீர்களா ? பிள்ளையார், தேவி, சிவபெருமான், மகாவிஷ்ணு, சூரியன் என்ற ஐந்து மூர்த்திகளையும் வழிபடுதலே பஞ்சாயதன பூஜையாகும். நம் சற்குரு அளித்த பஞ்சாயதன பூஜை முறையையும் இங்கு அளிக்கிறோம். துதிக்கைகளைத் தூக்கிய வடிவில் விளங்கும் இரண்டு மர யானைகள், லட்சுமி வடிவம் பதித்த தங்கம் அல்லது வெள்ளிக் காசு, தர்பைகள், சுத்தமான குங்குமம், மஞ்சள் பூசிய நுனி முறியாத பச்சரிசி மணிகள் இவைகளைத் ஒரு தட்டில் வைத்திருந்து இந்த ஐந்து மங்கலப் பொருட்களையும் ஒவ்வொரு சுமங்கலியும் காலையில் தொட்டு வணங்குவதே நம் சற்குரு அளித்த சர்வ சக்திகளை, மங்கல சுபிட்சத்தைத் தரவல்ல பஞ்சாயதன பூஜையாகும். எளிமையோ எளிமையென விளங்கும் இத்தகைய ஒரு பூஜை முறையைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுதான் உண்டா ? ஒரு நிமிடம் கூட கிடையாது, சில விநாடிகளே எடுத்துக் கொள்ளும் இந்த சாதாரண பஞ்சாயதன பூஜை நல்கும் பலன்களை விவரிக்க வார்த்தைகளே இல்லை எனலாம். நமக்கு ஓரிரு விநாடிகளே எடுத்துக் கொண்டாலும் இத்தகைய அனுகிரக சக்திகளை அளிக்க நம் சற்குரு எடுத்துக் கொண்ட முயற்சிகளை நினைத்தாலே நம் தலை சுற்றும். இதுவே காணக் கிடைக்காத குருவருள்.

தலவிருட்சம் இலுப்பை மரம் கீழ்சூரியமூலை

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam