கேள்வியிலேயே பதிலும் இருக்கிறது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்.!

பெரியவருடன் திருஅண்ணாமலைக்குச் செல்வதென்றாலே சிறுவனுக்குப் படுகுஷிதான்! காரணம் பல அற்புதமான அனுபூதிகளைப் பெற்றது மட்டுமல்லாது அவற்றின் பரமானந்தத்தையும் சுவைத்துள்ளான் அல்லவா! பரமானந்தச் சுவை என்பது, நிலையில்லா ஸ்வீட் போல நாக்கு வரை நின்று, தொண்டைக்குள் சென்றதும் மறைந்து விடுவதல்ல! என்றும் சாசுவதமாய் நிலை பெற்று அமிர்தமாய்க் கனிந்து திகட்டாது இனிப்பவையன்றோ பரமானந்த அனுபூதிகள்!

… இம்முறை திண்டிவனம் வரை சிறுவனை பஸ்ஸில் அழைத்துச் சென்ற பெரியவர், அங்கிருந்து நடக்கலானார். வழி நெடுக ஓயாமல், களைப்படையாமல் எத்தனையோ இறைவிஷயங்களைச் சிறுவனுக்கு உரைத்து வந்த பெரியவர், நடையிலும் சற்றும் அசராது, பேச்சிலும் தொய்வில்லாது, இனிமையான மலர்ச்சியுடன் திகழ்வது கண்டு சிறுவன் ஆச்சரியமடைந்தான்!

“தெய்வீகம் ஒண்ணு தாண்டா எப்பவுமே அலுக்காது! சலிக்காது! அதுவும் கடவுள் அருளால ஒரு குரு கிடைச்சுட்டார்னு வச்சுக்கோ முழுக்க முழுக்கத் தெய்வாமிர்தம் தான்!”

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

உள்ளுள் ஒளியாய் உள்ளேயே ….

அவர்கள் திருஅண்ணாமலையை அடைந்த போது காலை ஆறு மணி இருக்கும்.. கிழக்குக் கோபுர வாசலில் நின்று இறைவனை வணங்கிய பெரியவர், அப்படியே தெற்குக் கோபுரம் வழியே நடந்து நேரே மலையை நோக்கி உள்ளே செல்லலானார். அப்போது கோயிலைச் சுற்றிப் பெரிய கட்டடங்கள் எதுவும் கிடையாது.. மலையின் அடிவாரத்திற்குச் செல்ல, ஆங்காங்கே, கிரிவலப் பாதையில் இருந்து, நிறைய கிளைப் பாதைகள் நூற்றுக் கணக்கில் ஒற்றையடிப் பாதைகளாகவே இருக்கும்.. எங்கும் அடர்ந்த மரங்கள்.. செடி.., கொடிகள்.. பாதையெங்கும் நல்ல மூலிகை வாசம் வரும்! கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் ஒற்றையடிப் பாதையிலேயே நடந்தார் பெரியவர்..! “ஏன் வாத்யாரே, மலையை ஒட்டி இப்படி ரெண்டு மணி நேரம் நடந்து வந்துட்டோமே .. அப்ப கிரிவலத்துல முக்கால் சுத்து சுத்தி வந்திருக்க மாட்டோம்?” .. சிறுவனுக்குள் வேறு ஏதோ ஒரு Calculation! அவன் இன்னமும் பெரியவரின் wavelengthற்கு வந்தபாடில்லை!

இதுவரையில் கிரிவலப் பாதையிலேயே அருணாசல மலையைச் சுற்றி வந்திருந்தமையால் கிரிவலச் சுற்றில் எது எந்த இடம், எந்தத் தரிசனமென்று, பளிச்சென்று சொல்கின்ற அளவிற்கு முக்கியமான அண்ணாமலை தரிசனங்கள் பலவும் சிறுவனுக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தன. ஆனால் கடந்த சில சமயங்களில்தான், பெரியவர், சிறுவனை மலையை ஒட்டியே அழைத்துச் சென்று, பல அபூர்வமான சுனைகள், தீர்த்தங்கள், மூலிகைகள், ஒளிரும் பாறைகளைத் தரிசிக்கச் செய்தார்!

“ஏன் வாத்யாரே, ஹரித்வார், கங்கோத்ரி மாதிரி இங்கேயும் மலை குகைகள்ல மகரிஷிகள், யோகிகள் தபஸ்ல இருப்பாங்களோ?”

அவன் முதல் கேள்விக்கே பெரியவர் இன்னமும் பதில் தரவில்லை, அதற்குள் அடுத்த கேள்வியும் தயாராகி விட்டது!

கேட்டால் கிட்டுமா?

நெடு நேரம் பதிலே எதுவும் சொல்லாது மௌனமாய்ப் பல மூலிகைகளையும், அரிய பாறைகளையும் காண்பித்து வந்த பெரியவர். இப்போது ஒரு வழியாய் வாயைத் திறந்தார்!

“நான்தான் அடிக்கடி சொல்வேனேடா, கலியுகத்துல, மனுஷனுக்குக் கேள்வி ஒண்ணு தான் நல்லாக் கேட்கத் தெரியும்னு?”

சிறுவன் பதில் சொல்வதற்குள் திடீரென்று அவர், “உஷ், உஷ்!” என்று “உஷ்ஷைக்” கொட்டி அவனை மௌனமாக்கிடவே…

ஆங்கே பேரமைதி நிலவியது! மூலிகைச் செடிகளில் கால் படாமல் மிகவும் பவ்யமாகக் குனிந்து அவற்றைக் கைகளால் சற்றே தள்ளி, அகற்றிக் கொண்டு பெரியவர் நடந்திட… சுற்றுப் புறப் பேரமைதியால்… அவர்களுடைய பாதநடை ஒலி மட்டுமே அந்தப் பகுதியில் நன்றாகக் கேட்டது!

ஒளியில் ஒளி(ர்)ந்த ஒளியாளர்கள்!

சற்று தூரத்தில் நாலைந்து பேர் நடமாடுவது போல் தெரிந்தது. ஆனால் அவர்களுடைய உருவம் சிறுவனுக்கு மிகவும் மங்கலாகவே தெரிந்தது! என்னதான் கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்த்தாலும்.. ஏன், ஆர்வத்தால் சற்று தூரத்திலேயே நடமாடும் காட்சியே மேலும் தள்ளியே தெரிவது கண்டு அவனுக்கு மிகவும் ஆச்சரியமாகவே இருந்தது! நிறையப் பறக்கும் தட்டுகளில் பல விண்ணுலக லோகங்களில் இருந்து “ஒளியுடல் படைத்தோர்” அங்கு வந்து செல்வதாகப் பெரியவர் சொல்லி இருந்தமையால் அவன் ஆர்வமோ இப்போது பல்கிப் பெருகலாயிற்று! ஆனால் பெரியவரோ அவன் கேளாமலேயே சொல்லலானார்!

“உனக்கு எதுக்குடா அந்தப் பரிசோதனை எல்லாம்! அவங்க யாரா இருந்தா உனக்கு என்ன? அவங்க அடுத்த லோகத்துலேந்து அருணாசலப் பூஜைக்கு வந்திருக்காங்க! அவங்க பூஜை முறையே வேற மாதிரி! இப்ப கமகமன்னு வாசனை வருதே அது அவங்க கொண்டு வந்த தேவலோகத்துப் புஷ்ப வாசனைதான்! அவங்க உன் கண்ணுக்குத் தெரிஞ்சாத் தெரியறாங்க, தெரியாட்டிப் போறாங்கன்னு விட்டுட வேண்டியது தானே! அவங்களா சங்கல்பம் செஞ்சாத்தான் நம்ப கண்களுக்கு அவங்க தென்படுவாங்க, இதை முதல்ல நல்லா தெரிஞ்சுக்கோ!”

“அவங்களைப் பார்க்கணும்னா, கண்ணுக்குள்ள இளநீர்க் குழம்பு விடற மாதிரி, இந்த மூலிகை ரசத்தைப் பிழிஞ்சு ஊத்திப் பூஜை முறையோட பார்க்கணும்டா?” என்ற ஒரு மூலிகையைக் காண்பித்தார்.!

இப்போது “அவர்களைக்” கடந்து இருவரும் செல்ல வேண்டியதாயிற்று! பெரியவரோ எதையும் பார்க்காமல், சர்வ சாதாரணமாக அவர்களைக் கடந்து கொண்டு எதை, எதையோ சிறுவனுக்குச் சொல்லிக் கொண்டே சென்றார். “உஷ்ஷு’க் கொட்டி மௌனமாக்கினால் சிறுவன் “அவர்களையே” பார்ப்பான் என்பதால் வேண்டுமென்றே பேச்சுக் கொடுக்கிறாரோ?

எனினும் சிறுவனுடைய கவனமெல்லாம் அவர்கள் மேல் இருந்ததால், இடையில் பெரியவர் அள்ளி வார்த்த நிறைய இறைவிஷயங்களைக் “கோட்டை” விட்டு விட்டான்! கொட்டி விட்டதை அள்ளவா முடியும்? போனது போனதுதானே!

விட்டது விட்டதே , விட்டலா!

“இப்படி நான் சொல்றதைக் கவனிக்காம., பக்கத்துல வேடிக்கை பார்த்தே… நான் சொன்ன கோடி விஷயங்களைக் கோட்டை விட்டாச்சு! ஆனா நாங்களும் திருப்பிச் சொல்றதா இல்லை! சரி, சரி, ஆமாம், ஏதேதோ கேட்டியே?” என்றவாறு அவன் கவனத்தையும், பேச்சையும் மாற்றினார் பெரியவர்! இதுதான் அவருக்குக் கை வந்த கலை ஆயிற்றே!

“அண்ணாமலக்குக் கிரிவலம்னு வந்துட்டாலே, இந்த 10 மைல், 12 மைல் கணக்கு எல்லாம் ஒண்ணு செல்லுபடி ஆகாதுடா கண்ணா! ஏன்னா அண்ணாமலைன்னா எல்லாரும் நினைக்கற மாதிரி சாதாரணக் கல்பாறை மலை இல்லையப்பா! அவங்கவங்க பக்தி, நம்பிக்கை பிரார்த்தனை, மனோ நிலை, கர்மவினை, நிலைக்கு ஏத்த மாதிரி மலையோட அளவும், மாறிகிட்டே இருக்கும்! ஆனா கலியுகத்துல இதை எடுத்துச் சொன்னா யாரு நம்புவாங்க? யாருமே இதை ஏத்துக்க மாட்டாங்களே, என்ன பண்றது? இதுக்குத்தான் எல்லாத்துக்கும் ஒரு குருவேணும்னு சொல்றது!”

ஏதோ ஓரிடம் வந்ததும்… பெரியவர் டக்கென்று நின்றார்!

அன்னமாம்பொய்கை திருவாசி

… அங்கே கம கமவென்று மூலிகை வாசனை மூக்கைத் துளைத்தது! அருகில் நாலைந்து பெரிய குண்டுக் கற்கள் இருந்தன., அவற்றின் இடையே சம்வெளி போல் தோன்றிடவே.. பெரியவர் எதையோ தேடி வந்தவர் போல் அங்கே அமர்ந்தார். மிக அருகிலேயே மலை உயரமாக நெடிது வளர்ந்து இருந்தது..!

இவர்கள் அமர்ந்த இடத்திற்கு சற்றுத் தொலைவில்.. தேனிமலையின் மேல் ஸ்ரீபெருமானந்த சித்தர் தவத்தில் அமர்ந்த மலைப் பாறைக் குடை இடம் போல – மழை, வெயிலுக்குக் குடை விரித்தாற் போல … பத்துப் பேர் அமரும்படி குகை போல் ஒன்று இருந்தது! அருகில் ஒரு நீர்ச் சுனை! அதனருகே தரையில் பசுமையான மஞ்சள் நிறத்தில் தரைக் கொடி போல் மூலிகை வகைகள் வளர்ந்திருந்தன!

அன்னவளத்திற்கோர் அன்னபாலிகா மூலிகை!

“இதுதாண்டா அன்னமாம் பொய்கை! சுனைத் தண்ணீர்ல மட்டுமே வளர்ற மூலிகை! அன்னபாலிகான்னு பேரு” சிறுவனுக்கு இந்தப் பெயரை எங்கோ கேட்டது போலிருந்தது!”

“ஏண்டா, இந்தத் தீர்த்தப் பெயரை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை?”

நல்ல வேளை, சிறுவனுக்கு ஞாபகம் வந்து விட்டது!

“ஆமாம் வாத்யாரே! திருவாசியில் அம்பாளுக்கு முன்னாடி இருக்குமே ஒரு தீர்த்தம், அதுதானே!”

“ஆமாண்டா, அதுவேதான்! அந்தப் பொய்கை நீரோட்டத்துக்கும் இதுக்கும் பூமிக்கும் அடியில நீரோட்டத் தொடர்பு நெறைய உண்டு!  இந்தத் தீர்த்தத்தைத் திருவாசி சிவத்தலத்துல ஒழுங்காப் பராமரிச்சு, ஜலபூஜை, ஜலஹோமம் பண்ணினாலே போதும், நதியில ஜம்முனு தண்ணீர் வரும், விளைச்சலும் பெருகும்! இதுக்கெல்லாம் தான் அந்தக் காலத்துல ராஜகுருன்னு எல்லா ராஜாக்களுக்கும் ஒரு சற்குரு இருந்தாரு! ராஜாக்களும், எதையும் ராஜகுருவைக் கேட்டே பண்ணுவாங்க! ஆனா கலியுகத்துல சற்குருவை மதிக்கற பண்பாடே இல்லாமப் போயிருச்சே, என்ன பண்றது?”

“தஞ்சாவூர் பக்கத்துல திருச்சோற்றுத் துறைனு ஒரு சிவத்தலம் இருக்கு. பல நூறு வருஷத்துக்கு முன்னாடி.. ஒரு பெரிய பஞ்சம் வந்தப்போ.. அங்கே சுவாமி திருச்சோற்றுத் துறை நாதரே, காஞ்ச பயிர்ல நெல்லா விளையும்படி செஞ்சாரு! அம்பாளோ, “சுவாமி! மக்களோ பஞ்சத்தோட கொடுமையினாலே ரொம்ப வறுமையில இருக்காங்க! நெல்லா விளைய வச்சா, அறுவடை பண்ணி அரிசியாக்கி.. அடுப்பு வச்சு சமைச்சு… இதுக்கெல்லாம் கூலி கொடுக்கற மாதிரி, விறகு, கரி வாங்கற நிலையில மக்கள் இல்லையே!” என்று கூறிக் குறைப் பட்டுக் கொள்ளவே…

சிவபெருமானும் புன்சிரிப்புடன்., “நீதான் அன்னபூரணி ஆயிற்றே! உன் விருப்பம் போல் செய் அப்படீன்னு அம்பாள்கிட்ட சொல்லிட்டாரு!”

“அம்பாளும் சுவாமியை வேண்டி உடனே வயல் பயிர்கள்ல நெல்லுக்குப் பதிலா அரிசிச் சோறாகவே விளையும்படி செஞ்சுட்டா! மக்களுக்கு ஒரே சந்தோஷம்!”

“இந்த இறைலீலை நடந்தப்போ.. இதோ இருக்கே, இந்த அன்னபாலிகா மூலிகைதான் அம்பாளுக்கு உதவிச்சு!” என்று பெரியவர் சொல்லியவாறே அங்கிருந்த கல்லை அன்னபாலிகா மூலிகையால் தொட்டிட… என்ன ஆச்சரியம்! அங்கிருந்த பெரிய கல் சோற்றுக் குவியலாக மாறியது! கமகமவென நறுமணத்துடன் சுடச்சுடப் பச்சரிசிச் சோறு ஒரு நொடியில் உருவாகியது!”

வல்லம் திருத்தலம்

சிறுவன் வாயை பிளந்தான்!  … அனைத்தும் மூலிகா சக்தியே!

“இது மட்டுமில்லைடா… நான்தான் சொல்லி இருக்கேனே, எதையும் தங்கம், வெள்ளி, தானியங்களா மாத்தற மூலிகை எல்லாமே இந்த அக்னித் தலதத்துலதான் உருவாகுது.! இங்கேயே, எதையும் பொன்னாக்கும் மூலிகையும் இருக்கு! தஞ்சாவூர் பக்கத்துல வல்லம்கற இடத்துல வல்லச் சித்தர்னு ஒரு சித்தர் இருந்தாரு! அவருதான் இந்த ரசவாத மூலிகைக்கு அதிபதி!”

சிறுவனால் அந்த மூலிகையைப் பார்க்க முடியவில்லை! பெரியவரோ அதனை மறைத்துக் கொண்டாரே!

“நீ பார்த்து என்னடா தெரிஞ்சுக்கப் போறே? நமக்கு அந்த சித்து விளையாட்டே வேண்டாம்டா கண்ணு! அதுக்கெல்லாம் அந்த வல்லச் சித்தரோட கருணை வேணும்! அவர்தான் இந்த ரசவாதக் கலை அனுகிரகத்தைச் சொல்லித் தரக் கூடிய மகா சித்தர்! ஆனா, இறைவிதிப் பூர்வமா இந்த விஷயம் யாருக்குத் தெரியணும்னு விதி இருக்கோ அவங்க கண்களுக்குத் தான் இது தென்படும்.”

“.. கருவூர்ச் சித்தர் இந்தக் கலையில விசேஷமானவரு! அந்தக் காலத்துல கோயில்கள்ல சுவாமிக்கு நகை பண்றதுக்கு மட்டும் இந்த அபூர்வமான ரசவாதக் கலையைப் பயன்படுத்தினாங்க! இப்ப கலியுகத்துல மனுஷனுக்குத் தெரிஞ்சா, என்ன பண்ணுவான்? கொல்லைப்புறமா உட்கார்ந்துக் கிட்டு எல்லாத்தையும் தங்கமாக்கி, கொள்ளை கொள்ளையா சம்பாதிக்க நினைப்பான்! ஆனா இந்த, சுயநல எண்ணம் இருந்தா இந்த மூலிகை வேலையே செய்யாது! திருட்டுத் தனமா, சுயநலமாய்ப் பண்ணினா, இந்த மூலிகைக்குப் பாதுகாவலா இருக்கற நாகமே சீறிக்கிட்டு வந்து கொத்திடும்! இப்படித்தான் கடவுள் அங்கங்க “check” வச்சுருக்காரு” என்று சொல்லிப் பெரியவர் கடகடவென்று சிரித்தார்!

சித்தர்களுக்குத் தெரியாத கலைதான் எதுவும் உண்டா என்ன? தெரிவது கூடப் பெரிய விஷயமில்லை! ஆனால் தெரிந்தும் தெரியாவதவராய், அறிந்தும் அறியாதவராய், புரிந்தும் புரியாதவராய் இருப்பதுதானே பெரியவரின் DIVINE SPECIALITY!

“சரி வாத்யாரே! அந்தப் பொன் மூலிகை எல்லாம் நமக்கு வேண்டாம்! ஆனா இந்த அன்னபாலிகா மூலிகையை வச்சுக்கிட்டு நிறைய சாதம் பண்ணி அன்னதானம் பண்ணலாம் தானே! ஏன் கஷ்டப்பட்டு விறகு அடுப்பு வச்சு, புகைஞ்சு கஷ்டப்பட்டு..”

பெரியவர் சீறுவாரெனச் சிறுவன் எதிர்பார்த்தான்! அவரோ மிகவும் அமைதியாகக் கூறினார்!

Estimateக்கும் guestimateக்கும் அப்பற்பட்டவராய்ப் பொலிவதும் பிரஞ்சத்தின் அதியற்புதச் சித்தராம் பெரியவரின் divine specialityதானே!

ஸ்ரீஅன்னபூரணி திருசோற்றுத்துறை

மக்களின் பஞ்சம் தீர சோறாகவே வயலில் விளைவித்த அன்னபூரணித் தாய்!

“இந்த மாதிரி மூலிகை எல்லாம் கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் – இந்த மாதிரி – எந்த யுகத்துல எப்படி வேலை செய்யனும்னு கடவுளே நியதி வச்சுருக்கார்! பல நூறு வருஷங்களுக்கு முன்னாடி மக்கள் பஞ்சத்துல ரொம்ப ரொம்பக் கஷ்டப் பட்டபோது அன்னபூரணியான ஈஸ்வரியே அதுவும் மகேஸ்வரனைக் கெஞ்சிக் கூத்தாடி இந்த அன்னபாலிகா மூலிகையின் ஒரே ஒரு அம்சத்தையே பயன்படுத்தினாள். அப்பக்.. கூட.. அம்பாள் தெய்வ சங்கல்பத்துல திருச்சோற்றுத்துறை கோயில் வளாகம் முழுசாவே சோற்று மலையையே உருவாக்கி இருக்கலாமே! ஆனால் அப்படிப் பண்ணலையே! மனுஷ உடம்புன்னு ஒண்ணு இருக்கறப்போ ஏதாச்சும் மனுஷ முயற்சி எடுத்தாகனுமே! இதுக்குத்தான் அம்பாள் வயல்ல, நெல்லுச் செடியில, சாதமாவே விளைய வச்சு, மக்களை சத்சங்கமா ஒண்ணு சேர்த்து அறுவடையாக்க வச்சு ஒரு இறைலீலை பண்ணினா! அம்பாள் நினைச்சிருந்தாக்க மனோ சங்கல்பத்துலேயே ஒவ்வொருத்தர் வீட்டுலேயும், பல மாதங்களுக்கு வர்ற மாதிரி, வீடு நிறையற மாதிரி, தாழ்வாரம் புல்லா சோத்து மலையா ஆக்கி வச்சிருக்கலாமே! ஆனா மனுஷ முயற்சின்னு ஒண்ணு வேணும்னு காட்டறக்குத்தான் இந்தத் திருவிளையாடல்! அப்பத்தான் அதோட அருமை தெரிய வரும்! கடவுள்தான் நம்மை ஆட்டி வைக்கறான், நாம் ஒரு சிறு துரும்புதான்கற எண்ணத்தோட அந்த மனுஷ முயற்சியும் இருக்கறதுதான் சிறப்பானது!”

“அன்னபூரணி அம்பாளே இப்படி மனுஷ முயற்சிக்கு இடம் கொடுத்து அருட்பணி செய்யறப்போ, நாமெல்லாம் எந்த மூலைக்குடா கண்ணு? ஆனா, கலியுகத்துல இந்த அன்னபாலிகா மூலிகையைப் பத்தி தெரிஞ்சுக்கிட்ட பிறகு நம்ப கடமை என்னன்னு முதல்ல நல்லாத் தெரிஞ்சுக்கோ!”

“கல்லையும், மண்ணையும் சோறா ஆக்குற சக்தி உள்ள அன்னபாலிகா, மூலிகா தேவதையை நல்லா வேண்டி, நல்லபடியா அன்னதானம் நாடெங்கும், உலகமெல்லாம் சுபிட்சமா விருத்தியாகனும்னு மனசார வேண்டுறதுதான் மூலிகா பூஜா தர்மமாகுது! அண்ணாமலையில் இப்படி, இந்த அன்னபாலிகா மூலிகா தரிசனப் பகுதியில மனசாரப் பிரார்த்தனை பண்ணினா, இந்த அன்னபாலிகா மூலிகைச் சத்து கடல் மூலமா, மழை மூலமா பூமியெல்லாம் பரவி, நீர் வளம் பெருகி, ஜனங்கள் எல்லாருக்குமே எல்லாத் துறையிலேயும் முன்னேற்றம் வந்து அன்னதானப் பணி விருத்தியாக உதவும்! இப்படி நெனைச்சு சுவாமியை வேண்டறது தாண்டா அன்னபாலிகா மூலிகை தரிசனங் கிடைச்ச பக்தனுக்கு, குருவோட சிஷ்யனுக்கு அழகு!” பெரியவர் அமைதியாகவே விளாசினார்!

சிறுவன் வெட்கித் தலை குனிந்தான்..!

அவர் திருவடிகளில் வீழ்ந்து மன்னிப்புக் கேட்கலாமென்று நிமிர்ந்து பார்த்தால்.. பெரியவரைக் காணோம்! அது மட்டுமா அவர் கூட்டி வந்து காண்பித்த இடத்தின் சமவெளித் தன்மை, பாறை, கற்கள், குகை, அன்னபாலிகா மூலிகை… எல்லாமே மறைந்து, காட்சியே மாறி.. கல், முள், பாறையாகவே காட்சி தந்தது!

“இறைவன் நடத்தி வைக்கும் சிருஷ்டி நாடகத்தில் சித்தர்கள் இறைப்பூர்வமாக, எவ்வளவு அழகாக, விரைவாக, சீன், செட்டிங்குகளை மாற்றுகின்றார்கள்?” சிறுவன் அதிசயித்துப் போனான்!

தமிழ் வருடப் பிறப்பு

சுபானு புத்தாண்டுப் பிறப்பு!

கடந்த பல தமிழப் புத்தாண்டு ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் வந்துள்ளது போல, இன்று (14.4.2003) ஆண்டு, மாதம், தேதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம், யோகினி, நேத்ரம், சக்கரம், திதி, கிரகங்கள் என அனைத்துக் கால தேவதைகளின் நாமங்களை ஓதிப் பூஜித்திடுக! குறிப்பாக காலத்தின் அனைத்து அம்சங்களும் ஸ்ரீகால பைரவரிடம் தோன்றுவதாலும், நம் வாழ்வில் ஆயுள், நோய் நிவாரணம் முதல் அனைத்துமே காலம் சம்பந்தப்பட்டதாலும் இன்று ஸ்ரீகால பைரவருக்குப் புனுகு கலந்த சந்தனக் காப்பு இட்டு வழிபடுதல் பரவெளியில் பைரவ சக்திகளைப் பெருக்கும். குறிப்பாக கும்பகோணம் அருகே உடையாளூர், ஆவூர்த் தலங்களில் அபூர்வமாக அமைந்திருக்கும் பஞ்ச பைரவ மூர்த்திகளுக்கு (5 பைரவர்கள்) வெண்ணெய், சந்தனம், மஞ்சள், குங்குமம், விபூதிக் காப்பிட்டு வழிபடுவது சிறப்புடையதாகும்.

சுபானு ஆண்டிலிருந்து திதி தேவதா வழிபாடு முக்கியத்துவம் பெறுகின்றது.. அதாவது 16 திதிகளுக்கு உரிய திதி தேவதைகளை முறையாகப் பூஜித்து வர வேண்டும். பலி பீடங்கள் பல திக்குகளிலும் உள்ள ஆலயங்கள் (திருவானைக் கோயில், மயிலை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம்) யாவும் திதித் தேவதைகள் தினசரி வழிபடும் தலங்களாதலின் பலிபீடத்திற்குத் தைலக் காப்பு இட்டு புறா, காக்கை, மயில் போன்ற பட்சிகளுக்கு நீரும், உணவும், அளித்துவர திதி தேவதைகளின் அனுகிரகத்தால் திதி தேவதா வழிபாடு ஆற்றுவதற்கான நல்வழிகள் கிட்டும்.

ஆவூர் சிவாலயம்

ராகு காலம் போல் தினசரி குறித்த நேரத்தில் வரும் குளிகை நேரத்தில் ஸ்ரீகால பைரவரைப் பூஜை செய்து வாருங்கள். ஸ்ரீகால பைரவ பூஜை தான் கலியுகத்தில் பெருகி வரும் வன்முறை, திருட்டு, பிக்பாக்கெட் போன்ற தீவினைகளை அகற்றி, பயம், பீதி, அச்சங்களைப் போக்கித் துர்வினைகளில் இருந்து நம்மைக் காக்கும் எளிய பூஜையாகும். ஆலயங்களில் இரவில் நடக்கும் கடைபூஜையான ஸ்ரீகால பைரவ பூஜையில் பங்கு கொள்வதுடன், இரவு கால பைரவ பூஜை நடைபெறாத தலங்களில் இதனை மீண்டும் கொணரக் கடுமையாக உழைத்து நடைபெறச் செய்தலும் சந்ததிக்குச் சாசுவதமான அருளை நற்சொத்தாகப் பெற்றுத் தரும். இன்று தனி விமானம் உள்ள ஸ்ரீபைரவருக்கு (ஒழுகமங்கலம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்) மர தண்டம் சார்த்தி வழிபடுதலால் நிலையான உத்யோகம், வீடு அமையும்..!

வானில் தினமும் நட்சத்திர தரிசனம் செய்திடுக! இதனால் அறிந்தோ அறியாமலோ அவரவருக்கு உரிய நட்சத்திர மண்டல தரிசனம் கிட்டும். அவரவர் நட்சத்திர இருப்பிடத்தை அறிந்து கொண்டு, அந்தந்த நாளில் கிரகங்கள் இருக்கும் இடத்தையும் அறிந்து கொண்டு தரிசிப்பதால் பூலோக நவகிரஹ வழிபாடு போல், மிகவும் சக்தி வாய்ந்த வானுலக நவகிரக வழிபாடாக இது அமையும். ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர், ஸ்ரீசந்திரசேகரர் போன்ற நாமங்களை உடைய தலங்களில் சந்திர, நட்சத்திர தரிசனங்களைப் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும். பித்ருக்களை ப்ரீதி செய்கின்ற நட்சத்திர தரிசன பூஜை இது!

ஸ்ரீபைரவ மூர்த்தி ஒழுகமங்கலம்

அவரவர் நட்சத்திர ஆலயங்களில் அடிக்கடி வழிபடுக! அவரவர் நட்சத்திர ஆலயம் அறியாதோர் 27 நட்சத்திர லிங்கங்கள் உள்ள சென்னை -திருவொற்றியூர், திருவிடைமருதூர் போன்ற ஆலய நட்சத்திர லிங்கங்களையும், 27 நட்சத்திர மூர்த்திகளும் தினமும் வழிபடும் போளூர் அருகே உள்ள நட்சத்திர மலைக் கோயிலிலும் வழிபட்டு வர வேண்டும். அடிக்கடி ஆலய தரிசனம் செய்ய இயலாதோர் பஞ்சாசங்கத்தில் உள்ளபடி அவரவர் நட்சத்திரத்திற்கான விருட்சங்கள் உள்ள தலங்களிலாவது தல விருட்ச பூஜை செய்து வர வேண்டும்.. இதனால் பெரியோர்கள்.. பிள்ளைகள் இடையே நல்ல நேயம் உண்டாகும்..! வியாபாரப் பகைமை தணியும்.

வாரந்தோறும் ஒரு முறையேனும் அருகில் உள்ள கோயிலின் தலவிருட்சங்களுக்குத் தாமே அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம், புனுகு, ஜவ்வாது ஆகியவை கூடிய பஞ்சஜோதிக் காப்பு இட்டு வலம் வந்து வழிபடுக! இதனால் நிலையற்ற வருமானம் நன்கு நிலை பெறத் துணை புரியும்.

இவ்வாண்டில் மூன்று முறையேனும் எப்போதும் குங்கிலியப் புகை நறுமணமிட்டுக் கொண்டிருக்கும் திருவையாறு சிவாலயத்தில் ஸ்ரீஆட்கொண்டார் சன்னதியின் முன் இருக்கும் குங்கிலியக் குழியில் குறைந்தது, மூன்று கிலோ சாம்பிராணி தூபம் இட்டு, பலவிதமான தோஷங்களைப் போக்கிக் கொள்ளவும். இங்கு அடிக்கடி தூபம் இட்டு வந்தால் இதனால் தீய சகவாசங்களைப் போக்கிடலாம்.!

இவ்வாண்டில் மங்குஸ்தான், கோவைக்காய், பனங்கிழங்கு, பசலைக் கீரை, பொன்னாங் கண்ணிக் கீரை, ஈச்சம் பழம், சுரைக்காய், போன்ற பலரும் அதிக அளவில் பயன்படுத்திடாத காய்கறி, பழ வகைகளைத் தானமளித்து இவற்றைப் பயன்படுத்தாமல் இதுவரை மனித சமுதாயம் இழந்துள்ள தேவ சக்திகளை ஓரளவேனும் பெற்றிட முயற்சி செய்க!

பட்சம் (15 நாட்கள்) ஒரு முறையேனும், அனைத்துக் காய்கறிகள், கனிகளையும் குடும்ப உணவு முறையில் பயன்படுத்திடுக! வருடத்திற்கு ஒரு முறையாவது வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயத்தில் அதிதிகளாக (அறியா விருந்தினர்கள்) ஏழைகளை பாவித்து அறுசுவை உணவை முழுமையாக அளித்திடுக! இதனால் குடும்பத்தில் உள்ள மனக் கசப்புகள் அகலும்.

ருத்ராட்சம், மணிகங்கண், தீனக் காப்பு, (மரவளைக் காப்பு), கறுப்புக் கயிறு, கடுக்கன், இடுப்புக் கயிறு, பூணூல் போன்ற இறைச் சாதனங்களை அணிந்து ஆன்மீக ரீதியாகத் தற்காப்பு சக்திகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்! சுற்றிலும் பகைமையுடன் வாழ்வோர்க்கு இது நற்காப்பாக அமையும்!

ஸ்ரீவீரையா சித்தர்

மாத சிவராத்திரி அருணாசல கிரிவலம் பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து, ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற சித்தர்களைக் காண இத்தொடரின் மூலம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

“ஸ்ரீ (சுருட்டு) வீரையா சித்தர்” என்ற காரணப் பெயர் உங்களுக்கு ஆச்சரியத்தை அளித்திடலாம். ஆனால் இக்காரணப் பெயரைத் தவறாக எண்ணாதீர்கள்! கலியுகத்தில் புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்கள், சிகரெட், பீடி, சுருட்டு, மதுவகைகள், போதை திரவியங்கள் போன்றவை தீயவை என்று தெரிந்தும், மனிதர்கள் இவற்றின் வசப்பட்டுத் தானே பொன்னான காலத்தை தீமைச் சுமைகளை ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள்! யார் இவர்களை எப்படித் திருத்துவது? அனைத்திற்கும் வழிவகைகளைக் கடவுள் சற்குரு மூலமாகத் தந்துள்ளாரே!

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

புகைத்தால் பஸ்மமாகும் பூசல் தீவினைகள்!

சத்குருமார்களை கடவுள் ஒவ்வொரு யுகத்திலும், ஒவ்வொரு ஐம்பது ஆண்டுகளுக்கு ஒரு முறையும், கடவுளும், ஒவ்வொரு வடிவில் பூவுலகிற்கு அனுப்பிட, அவர்களும் இறையாணையாய் மானுட வடிவு கொண்டு மக்களுக்கு நற்குணங்களைப் போதித்துப் பக்தியை ஊட்டி வருகின்றார்கள்.!

மக்களை அடிமைப் படுத்திக் கொண்டிருக்கும் சிகரெட், பீடி, சுருட்டு, போன்ற “புகை மாயையில்” இருந்து விடுவிக்க, கலியுகத்தில் அக்னி லோகத்தைச் சார்ந்த சித்தர்களும், மகான்களும் உண்மையாகவே மனம் வருந்தித் திருந்துவோரின் கர்ம வினைகளைத் தம்முள் ஏற்று நல்வழி காட்டிட, அடியார்களின் புகைக் கர்ம விளைகளைத் தாமே “புகைத்து”, பஸ்மம் செய்து மக்களைக் கடைத்தேற்றி வருகின்றார்கள்.

இறைத் தூதுவர்களாகிய பல சித்தர்களும், மகான்களும், யோகியரும் வெளியுலகிற்குப் பீடி, சுருட்டு, சிகரெட் போன்றவற்றைப் புகைப்பது போல் தோன்றினாலும், இப்பழக்கத்திற்கு ஆளாகி விட்ட தம் அடியார்களை ஆன்ம ரீதியாக முன்னேற்றிடவே அவர்களுடைய புகைக் கர்மங்கள் பலவற்றையும் தம் உடலில் ஏற்றுப் “புகைத்துப்” பஸ்மமாக்கித் தம்மைச் சரணடைவோரைக் காக்கின்றார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்..!

ஆனால் மனித புத்தியானது தக்க இறைப் பகுத்தறிவின்றி நம்பிக்கை இன்மைக்கு அடிக்கடி ஆளாவதால், சிலரால் இந்த ஆன்ம விளக்கத்தை முழுவதுமாக ஜீரணிக்க இயலாது! ஆனால் ஒன்றை நினைவில் கொண்டிடுக! அனைத்து வகை நல்வரங்களையும், பல தலைமுறைகளாகக் காத்து, பதினாறு வகை அதியற்புத பொக்கிஷங்களையும் அருளாசிகளாக அளிக்கவல்ல இத்தகைய் சற்குருமார்கள் ஆசாபாசத்துக்கு ஆளாகும் சாதாரண மனிதனைப் போல் கேவலமான புகைப் பிடித்தலுக்கா ஆளாவார்கள் என்று உள்மனதைக் கேட்டு ஆத்ம விசாரத்துடன் சற்றே சிந்தித்துப் பாருங்கள், மகான்களின் தியாகம் புலப்படலாகும்.

மகான்களிடம் விளையாடாதீர்கள்!

பல ஆண்டுகளுக்கு முன் .. திருஅண்ணாமலையில் யோகி ராம்சூரத்குமார் சுவாமிகள், ரயில் நிலையம் அருகே வெட்ட வெளியில் தனித்து உலாவிய காலமது!

ஸ்ரீஆட்கொண்ட நாயகன்
திருவையாறு

பலரும் யோகி சுவாமிகளின் மகிமையைச் சொல்லக் கேட்டு, திருஅண்ணாமலைக்கு வந்த மிகவும் கடுமையாக சங்கிலித் தொடர் போல் புகை பிடிக்கும் வழக்கம் உள்ள ஒருவர், திருஅண்ணாமலை ஸ்ரீவிசிறி சுவாமிகளைக் கண்டார். ஆனால் அவரைக் கண்டதும் வெறுப்புக் கொண்டு, “தன்னைப் போலவேதான் இவரும்” என அறியாமையால் எண்ணி முகம் சுளித்தார். யோகி சுவாமிகளோ எதையும் அவரிடம் கேட்டிடாது, சைகைகளால் அவரை மறுநாள் குறித்த நேரத்தில் வரச் சொல்லிட, மறுநாள் இதுவரையில் அவர் தம் வாழ்நாளில் பிடித்த சிகரெட்டுகளின் எண்ணிக்கை அளவிற்கு வாங்கி வரச் செய்து அவற்றை மண் தரையில் அடுக்கச் செய்தார். நூற்றுக் கணக்கில் சிகரெட்டுகள் தரையில் கிடக்க, ஸ்ரீவிசிறி சுவாமிகள் அவற்றின் மேல் நிறைய  நீரை ஊற்றி “பூ” என்று ஊதிடவே… தாமாகவே அக்னி எழுந்து புஸ்ஸென்று.. ஒரே விநாடியில்.. கண் மூடித் திறப்பதற்குள் அவை அனைத்தும் எரிந்து சாம்பலாயின..!

அந்த அன்பர் திடுக்கிட்டு, “உலகில் அக்னியையே உருவாக்க வல்ல அருணாசல உத்தம யோகியையா நாம் வெறுத்தோம்?” என்று வேதனையுற்று சுவாமிகளின் திருவடிகளில் வீழ்ந்து, அன்றிலிருந்து அனைத்துக் கெட்ட வழக்கங்களையும் விலக்கிப் புது மனிதராக வாழ்வாராயினர். அனைவரையும் புனிதமாக்கும் அற்புதச் சித்தர்கள், யோகிகள், மகான்கள் கோடிக் கணக்கில் உலவும் புண்ணிய பூமியே திருஅண்ணாமலை!

ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள்
ஜீவாலயம்

அவதூதுச் சித்தர் கசவனம்பட்டி சுவாமிகள்!

திண்டுக்கல் அருகே கசவனம்பட்டியில், அவதூதராய்ச் சமீப காலம் வரை உலவிய கசவனம்பட்டிச் சித்தரும், பீடி பிடிப்பதாய் வெளித் தோற்றம் கொண்டாலும், மக்களின் கர்ம வினைகளைப் புகைத்துக் கரைக்கும் புனிதமான சித்த வித்தகராகவே விளங்கினார். இவர் டீ அருந்தும் போது “எப்போது இவர் தம்ளரில் கொஞ்சம் டீயை மிச்சம் வைப்பார், எப்போது நாம் அதனை தெய்வீகப் பிரசாதமாக் அருந்திடலாம்!” என்று எண்ணிப் பலரும் அவரருகில் காத்திருப்பார்கள்..!

தற்போது கசவனம்பட்டியில் சித்தர்பிரானின் ஜீவசமாதி உள்ளது..! மிகவும் சக்தி வாய்ந்த ஜீவாலயம்! தீய வழிகளில் செல்லும் கணவன், பிள்ளைகளைத் திருத்திட, இங்கு கசவனம்பட்டிச் சித்தரின் ஜீவ சமாதியில் சாம்பிராணி தூபத்தை மிகவும் அடர்த்தியாக மூன்று மணி நேரத்திற்குக் குறையாமல் இட்டு, மண் பானையில் பொங்கல் வடித்து, பொங்கும் சோற்றை அப்படியே சித்தருக்குப் படைத்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்து வரவேண்டும். பொதுவாக மக்களின் நியாயமான விருப்பங்களை நிறைவேற்றித் தரும் கருணாகரச் சித்தரே கசவனம்பட்டிச் சித்தர்!

தீய வழக்கங்களுக்கு ஆட்பட்டோரும் தாமாகவே திருந்திட, பௌர்ணமி, அமாவாசை, செவ்வாய், சனிக்கிழமை, அஸ்வினி, பரணி, கார்த்திகை, விசாகம் போன்ற அக்னி சம்பந்தமான நாட்களில் இங்கு சித்தரின் சிலா ரூபத்திற்குப் புனுகு கலந்த சந்தனக் காப்பும் ஊரே நிறையும் அளவு சாம்பிராணி நறுமண தூபமும் தொடர்ந்து இட்டு வழிபட்டு வந்து, ஆழ்ந்த நம்பிக்கையுடன் சித்தர்பிரானைச் சரணடைந்திட, புகை பிடித்தல் மற்றும் ஏனைய தீய வழக்கங்களும் தாமாகவே விலகும்.

தூபதீப அனுகிரகச் சித்தரே ஸ்ரீ(சுருட்டு) வீரையா சித்தர்!

இவ்வாறான அக்னிலோகச் சித்தர்பிரான்களில் ஒருவரான  ஸ்ரீ (சுருட்டு) வீரையா சித்தர் பிரான்  ஆந்திர மாநிலத்தில் தோன்றி, பாரதமெங்கும் கால் நடையாகப் புனித யாத்திரை செய்து, தூப சக்தி நிறைந்த எண்ணற்ற தலங்களில் விசேஷமாகப் பூஜித்து வந்தார். புகைபிடிக்கும் வழக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள அடியார்களை மீட்டிட, மானுட வடிவில் பல ஆண்டுகள் ஆன்மீக ரீதியாக அருள் வழிகாட்டியாகத் துணை புரிந்த உத்தமச் சித்தர், திருஅண்ணாமலையில் இத்தகைய சித்தர்களின் ஜீவ சமாதிகள் மக்களின் அசிரத்தையால் காலப்போக்கில் பூமியடியில் மறைந்துள்ளன. இவற்றுள் பலவும் தற்போது சாதாரண மயானங்களாகி பூமியில் ஆழ்ந்து விட்டன.

இவர் அருணாசலமாகிய திருஅண்ணாமலையை வந்தடைந்ததும் “சாயா தந்திர தரிசனப் பகுதியில்” எப்போதும் சாம்பிராணி தூபம் இட்டுக் கொண்டு யோகத்தில் திளைத்து இருப்பார். அக்னி, கரி, சாம்பிராணி இடாமலேயே சாம்பிராணி தூபம் தானாக எழுந்து நறுமணம் பரப்பும்.

புகை பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளான பலரும் நல்வழி கேட்டு இவரை நாடி வருவார்கள். எப்போதும், சுருட்டைத் தம்மிடம் வைத்திருந்தாலும் எப்போதாவது ஒரு சில முறைதாம் சுருட்டுப் பிடிப்பார். அவருடைய சுருட்டிலிருந்து நறுமணச் சாம்பிராணி வாசனையே எழும். இவரைத் தீய நோக்கோடு நாடி வருவோருக்குத் தீயவாடையே எழும்.

கொடியவர்களைத் திருத்திய கோமளச் சித்தர்!

ஒருமுறை… சில கொடியவர்கள் சித்தரை அவமதிக்கும் பொருட்டு அவர் முன்னரேயே பெரிய சுருட்டுக்களைப் பிடித்து நாற்றமான புகையைக் கிளப்பி அவரைக் கேலி செய்தனர். பலரும் ஸ்ரீவீரையா சித்தரிடம் புஷ்பம், கனிகளை மரியாதை நிமித்தம் அளித்திட, இக்கொடியவர்களோ, கிண்டலாக ஒரு தட்டு நிறையச் சுருட்டுக்களை வைத்து அளித்தனர். சித்தரும் புன்சிரிப்புடன் அவற்றை ஏற்று, ஒவ்வொன்றாகப் புகைத்தார். ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு விதமான நறுமணமே உண்டாயிற்று. இதனைக் கண்டு அவர் “வெறு சித்து செய்வதாக” எரிச்சல் கொண்ட கொடியவர்கள்.. அவர் முன்னரேயே சப்தம் போட்டுக் கலாட்டா செய்து, சுருட்டுகளைப் பிடித்து புகையை அவர் மேல் ஊதி, அவரை மிகவும் இம்சைப்படுத்தினார்கள்.. அவரோ மிகவும் அமைதியாகவும்.. பொறுமையாகவும் இருந்தார்.!

வெகுநேரம் கழித்து அக்கொடியவர்களே அலுத்துப் போய் வெளியே சென்று சுருட்டைப் பிடித்திட, சுருட்டின் இருபுறமும் பெரிய நெருப்புப் பற்றிக் கொண்டு நாக்கும், மூக்கும், நெஞ்சும், வாயும், உதடுகளும் வெந்து உடனடியாகப் பெரும் குழிப் புண்கள் ஆகிவிட்டன..!

சுருட்டின் இருபுறமும் அணையாத தீ பற்றியமையால் அவர்களுடைய வாயும், நாக்கும், தொண்டையும், வேக்காளமாயிற்று.. உணவு உண்ண இயலாது, நீரும் பருக இயலாது, உறக்கம் இல்லாது, தாங்க முடியாத எரிச்சலுடன் அவர்கள் வேதனையுற்றனர்.. ஒரு மாதம் முழுவதும் மருத்துவம் செய்தும் அவர்களால் ஒருவாய் நீர் கூட அருந்த முடியவில்லை.!

காருண்யக் கடலே இறைத் தூதுவர்களாகிய சித்தர்கள்!

காரணத்தை உணர்ந்த அவர்கள் சித்தரின் திருவடிகளில் வீழ்ந்து, கதறி அழுதனர்.. சித்தரும் தாம் புகை பிடித்த சுருட்டில் இருந்து ஒழுகிய (திரு)வாய் எச்சிலை அவர்களுடைய நாக்கிலும், தொண்டையிலும் உதடுகளிலும் தடவிட…

அடுத்த நொடியில் அனைத்து ரணங்களும் உடனே ஆறி விட்டனவே! குழித் தீப்புண்கள் இருந்த சுவடே சற்றும் தெரியவில்லை! சித்புருஷரின் திருவாயில் தெறித்த, திகட்டாத தீர்த்த குணவாரியை அருட்பிரசாதமாக ஸ்பரிசிப்பதென்றால் என்னே பெரும் பாக்யம் அவர்களுக்கு!

ஸ்ரீசுதபுத மகரிஷி
மப்பேடு சிவாலயம்

பிறகு அவர்களும் முற்றிலுமாக மனம் திருந்தி அவருடைய பக்தர்கள் ஆயினர். அதன் பிறகு வீரையா சித்தர் பூத உடலைத் துறக்கும் வரை அவருக்குத் தொண்டாற்றி ஆனந்தம் கொண்டு மறு பிறவியில் கசவனம்பட்டிச் சித்தரின் சரணாகதி அடிமைகளாகவும் ஆகித் தொண்டாற்றினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.!

பெருந்தவறுகளைக் கூட மன்னிக்கின்ற இறைவன், குருவிற்குத் துரோகம் செய்வோரை ஒருபோதும், மன்னிப்பதில்லை! அந்தந்த சற்குருவே மேற்கண்ட வகையில் மனம் கனிந்தால்தான், குருவைப் பழிப்போர்க்கும், குருவிற்குத் துரோகம் செய்வோர்க்கும் மன்னிப்பு கிட்டும்.

அருணையில் அருமணங் கொழிக்க அற்புத கிரிவலம்!

இவ்வாறு பல்லாயிரக்கணக்கானோரை சுருட்டு, சிகரெட், பீடி பிடிக்கும் தீய வழக்கத்திலிருந்து காப்பாற்றிய வீரையா சித்தரே, சுருட்டு வீரையா சித்தர் எனக் காரணப் பெயர் கொண்டார். இவருடைய அடியார்கள் எப்போதும் சாம்பிராணி தூபம் இட்டுத் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து கொண்டிருந்தமையால் அக்காலத்தில் அருணாசல கிரிவலப் பாதையில் எப்போதும் சாம்பிராணி தூப நறுமணம் கமழ்வதாயிற்று!

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இவருடைய காலத்தில் ஆயிரக்கணக்கான அடியார்கள் இரவு பகலாக சாம்பிராணி தூபம் இட்டு அருணாசல கிரிவலம் வருவது நித்தியத் திருவிழா போல் மலர்ந்திருந்தது!

பங்குனி மாதத்தின் சிவராத்திரி நாளே ஸ்ரீசுருட்டு வீரையா சித்தரே, தூல சூக்கும, காரண, காரீய வடிவுகளில் சாம்பிராணி தூபம் இட்டவாறு கிரிவலம் வருகின்ற புனிதமான நாளாகும். பாக்யம் உள்ளோருக்கு இவருடைய தரிசனம் கிட்டும் புகைபிடிக்கும் வழக்கம் இல்லாதோரும் எவ்விதத் தீய வழக்கமும் அண்டாதிருக்க, அயல்நாட்டில் இருக்கும் பிள்ளைகள் தீவினை வசப்படாதிருக்க, இன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் வேண்டும்..!

மாத சிவராத்திரி கிரிவல பலாபலன்கள்! இம்மாத சிவராத்திரியில் சிவராத்திரி தூபம், பசுநெய் விளக்கு, சாம்பிராணி தூபம், தாங்கி கிரிவலம் வருவோர்க்கு அளப்பரிய பலன்கள் கிட்டுகின்றன குறிப்பாக..

 1. புகைபிடிக்கும் வழக்கம் உள்ளோர் இதிலிருந்து விடுபடத் தக்க நல்வழிகளைப் பெறுவர்.
 2. இதுவரையில் அறிந்தோ, அறியாமலோ தம் வாழ்க்கையில் புகை பிடித்துப் பரவெளியில் விஷத்தைப் பாய்ச்சியோர், புகைக் கழிவினைகளில் இருந்து மீள நல்வழி பிறக்கும்.
 3. புனிதமான பரவெளியில் விஷமாக்கிய தீவினைகள் தம்மையும், தம் சந்ததிகளையும் பற்றாதிருக்கத் தக்கப் பரிகாராங்களையும் அருளப் பெறுவர்.
விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர்

சனீஸ்வர நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தம் ஆயுள் காலத்தில் வழிபட வேண்டிய விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயம் (தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் விளங்குளம் உள்ளது. புதுக்கோட்டை காரைக்குடி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூரில் இருந்தும் பேராவூரணிக்கு பஸ்கள் உண்டு.)

“பூசம் பதநேசம் தரும்” என்பது சித்தர்களின் ஆன்ம மொழி. பதன் என்பவரே சனீஸ்வரர். பாதத்தில் குறை ஏற்பட்டு ஊனமாகிய மந்த கதி பெற்ற சனீஸ்வர பாதமறையோனாம் இறைவனிடம் வேண்டி அருள் பெற்ற தலமே விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயமாகும்.

பூச ஞானவாவித் தீர்த்தம்!

சனி கிரகத்திற்கு உரிய பூச நட்சத்திர அம்சங்களில் சிறப்போரிடம் சனி பகவான் நேசம் கொண்டு அருள்கின்றார் என்பதே “பூசம், பதநேசம் தரும்” என்ற வாக்கியத்தின் உட்பொருளாம். சனீஸ்வரர், எமனால் காலடிபட்டு, கால் ஊன்றி நடந்து, நிவாரணம் தேடி, மானுட ரூபத்தில் சுரைக் குடுவையில் பிட்சை ஏந்திப் பெற்று, அதில் கிட்டிய அட்சய தானியங்களைச் சமைத்து அன்னதானமாய் அளித்து வந்திட,

ஓரிடத்தில். சனீஸ்வரர் “விளம்” எனும் விருட்சத்தின் வேரால் தடுக்கப்பட்டுக் கீழே பள்ளத்தில் வீழ்ந்திட, ஆங்கே.. திரிதியையும், பூச நட்சத்திர நாளும், சனிக் கிழமையும் சேர்ந்த அப்புனித நாளில்….

சனீஸ்வரர் மனித வடிவில் ஆற்றிய அன்னதான மகிமையால்… அப்பள்ளத்தில் பல கோடி  யுகங்களாக மறைந்திருந்த “பூச ஞானவாவி” எனும் கிணற்றில் ஞான தீர்த்தம் மீண்டும் சுரந்து சனீஸ்வரரை மேலெழுப்பிக் கரை சேர்த்திட…

… என்ன… ஆச்சரியம் … சனீஸ்வரரின் ஊனம் நிவர்த்தி ஆகியிருந்தது! விள வேர் சனீஸ்வரரைத் தடுத்து விழ்ந்து ஆகிய நீர்ப் பள்ளமே…. இறைவனால் தடுத்தாட் கொள்ள உதவிய பள்ளமாக இருந்த தலமே “விளங்குளம்” ஆயிற்று! இங்கு அன்றும், இன்றும், என்றுமாக சிவபபெருமானே அட்சயபுரீஸ்வரராகக் காட்சி தந்து சனீஸ்வரருக்குத் திருமண பிராப்தியாகிய நல்வரமும் தந்தார்.

ஸ்ரீஅபிவிருத்திநாயகி விளங்குளம்

பூசத்தாரிடம் பொங்கும் யோகவளம்!

எனவே, முறையான பூஜைகளை மேகொண்டால் மற்றவர்களை விட, மனத்தளவில், உள்ளத்தளவில் வைராக்யத் தன்மை அம்சங்களைத் தபோ பலன்களாக மிக எளிதில் பெற வல்லவர்களே பூச நட்சத்திரத்தில்  பிறக்கின்றார்கள் என்பதை உணர்த்தும் அற்புதத் தலமிது.!

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறப்போரும் சிறந்திட வல்ல துறைகள் பல உண்டு. தக்க சற்குருவை நாடி அவரவர் நட்சத்திர அம்சங்களுக்கு ஏற்ற துறையை நாடி அறிந்திட்டால் உலகில் அற்புதமான முறையில் ஐஸ்வர்ய வளம் பெருக்கிடலாம்! வேலையின்மைத் திண்டாட்டமும் அகலும்.. ஆனால் அனைவரும் சற்குருவின் திருவாக்கியங்களில் நம்பிக்கை கொண்டு செயலாற்றினால் தாமே இவ்வற்புதம் சித்திக்கலாகும்..!

தெய்வ நெறியில் திளைத்து, முக்தி நிலை கொண்ட நம் மன்னர்கள் யாவரும் முதலில் பூச நட்சத்திர லோகத்தில் உள்ள பூசஜோதித் தீர்த்தத்தில் நீராடியே பலமுக்தி லோகங்களை அடைகின்றார்கள்.. பூசலார் நாயனார் திட மௌன வைராக்யம் பூண்டது முறையாக சனிப் பூச நோன்பு நோற்றமையால்தாம்!

முக்கூட்டு நாள்!

சனிக்கிழமை, பூசம், அட்சய திரிதியை மூன்றும் சேர்ந்து வருவது மிகமிக அபூர்வமே! பல ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவதே இத்திருநாள்! இந்நாளை அறிந்து, கோடி கோடி மடங்காய்ப் பலன் பெறும் பூஜை முறைகளை அறிந்து செயல்படுக! இவ்வரிய நாள் கிட்டும் வரை, இம்மூன்றில் ஏதேனும் இரண்டும் சேரும் நாளிலும், தினமும் சனி ஹோரையிலும் இங்கு பூஜித்து வந்திடுக!

“பூசமருங்கர்” எனும் சித்தர்பிரான் பூச நட்சத்திர லோகத்தைச் சேர்ந்தவர்.. சனிப் பரணிச் சித்தரை சற்குருவாகக் கொண்டவர். தினந்தோறும் சனீஸ்வர லோகத்தில் வழிபட்டு அங்குள்ள சனிவாரித் தீர்த்தத்தை எடுத்து வந்து பல ஆலயச் சனித் தீர்த்தங்கள், நதிகளில் சேர்த்து உலகிற்கு நல்வரமாக அளித்து, பல ஆலய சனீஸ்வர ரூபங்களின் திருவடிகளிலும் நிரவிச் செல்கின்றார்.

சனிப் பரணிச் சித்தர் அண்டங் காக்கைகளுக்கு சற்குருவாய் மலர்ந்திட.., பூச மருங்கர் சித்தரோ பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி “பித்ரசாய்” வகைக் காக்கைகளுக்கு சற்குரு ஆகத் துலங்க, வசு, ருத்ர, ஆதித்யப் பித்ரு லோகங்களுக்குத் தினமும் சென்று வரும் அரிய தெய்வீகச் சக்திகளை உடைய “பித்ரசாய்க்” காக்கைகளுக்கு தினந்தோறும் அறவழிகளைப் புகட்டுபவரே பூசமருங்கர். இவர் அன்றும், இன்றுமாக, தூல, சூட்சும வடிவுகளில் வழிபடும் தலமே விளங்குளம் ஸ்ரீஅட்சயபுரீஸ்வரர் ஆலயமாகும்.. இதுவே பூச நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுளில் வழிபட வேண்டிய உத்தமத் தலமாகவும் விளங்குகின்றது..

பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனி ஆகிய மூன்று சனி தசைக் காலங்களிலும் அவரவர் கர்ம வினைகளின் பிரதி பலன்களால் விளையும் துன்பங்களை நிவர்த்திக்கும் அதிஅற்புதத்  தலமாகிய இச்சிவாலயத்தில் மிகச் சிறிய வடிவில் ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தம் இருபத்னியருடன் அருள்பாலித்தாலும் மகத்தான கீர்த்தி பூண்டவர். ஸ்ரீசனீஸ்வரர் என்றாலே துன்பங்களைத் தருபவர் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவி வருவது மிகவும் வருத்தத்திற்கு உரியதாகும்.. ஆயுள்காரகராக நல் ஆயுளைத் தந்திடும் – ஸ்ரீசனீஸ்வரருடைய அனுகிரகத்தால் தான் நாம் ஒவ்வொரு வினாடியும், உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்., என்பதை நாம் நன்கு உணர்ந்தால் தான் ஸ்ரீசனீஸ்வரருடைய ஆயுள்காரக மகத்துவம் புரிய வரும்..!

ஸ்ரீஆதிமூல ப்ருஹத் சனீஸ்வரர் இவரே!

மிருத்யு தோஷங்கள் அண்டாது, துர்மரணம் ஏற்படாது காத்து அருள்புரிபவரே விளங்குளம் ஸ்ரீஆதிமூல ப்ருஹத் சனீஸ்வரர் ஆவார். பிரயாணங்கள் மிகுந்த கலியுகச் சாலையில் தினமும் பத்திரமாகச் சென்று வீடு திரும்பி வருவதற்கும் விளங்குளம் சனீஸ்வர பூஜா பலன்கள் உதவுகின்றன.. விபத்துகள் நிறைந்த கலியுலகில் வெளியூர்ப் பிரயாணத்தில் பத்திரமாக வீடு திரும்புவதே பிரம்மப் பிரயத்னம் என்று ஆகி விட்ட நிலையில் விளங்குளம் ஸ்ரீஅபிவிருத்தி நாயகி சமேத ஸ்ரீஅட்சயபுரீஸ்வரராக சுவாமி அருள்பாலிக்கின்ற சிவாலயத்தின் ஸ்ரீஆதிமூல ப்ருஹத் சனீஸ்வரரே மகத்தான ஆயுளைத் தரும் உத்தம மூர்த்தி ஆவார்.. அடிக்கடிப் பிரயாணம் செய்வோர். கண்டிப்பாக வழிபட்டாக வேண்டிய தலம்.!

சனிதசை, புக்தி, அந்தரக் காலங்களில் அவரவர் கர்மச் சூழலால் ஏற்படும் துன்பங்களைத் தீர்த்துத் தருபவர். உண்மையில் சனீஸ்வரர் என்றாலே அபிவிருத்தியைத் தருவது என்றும் பொருளாகும். ஸ்ரீசனீஸ்வரர் இவ்வாறாக ஆயுள்காரகராக, ஆயுள் விருத்தி சக்தியை, அபிவிருத்தி சக்தியை அளித்துத் துன்பங்களிலிருந்து விடுவித்து ஆனந்த விருத்தி சக்தியைத் தருகின்ற விளங்குளம் எனும் இத்தலத்தில்தாம் ஸ்ரீஅபிவிருத்தி நாயகியையும், ஸ்ரீஅட்சய புரீஸ்வரரையும், ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி பல கோடி யுகங்களாகப் பூஜித்து வந்து ஆயுள்காரக அவதார சக்திகளைப் பெற்றார்.!

இவ்வாறு சனீஸ்வரர் ஆயுள் காரகத்துவ சக்திகளைப் பெற்ற நாளே பூசம், சனிக் கிழமை கூடிய அட்சய திருதியை நாளாகும்.. இவ்வாறு பூச நட்சத்திரமும், அட்சய திருதியையும் சனிக்கிழமையுடன் சேர்ந்து வருவது மிகமிக அபூர்வமானதாகும்.. இவ்வாறு சேர்ந்து வரும் நாளில் இப்போதும் ஸ்ரீசனீஸ்வரர் தூல வடிவில் யாவரும் காணும் வண்ணம் எழுந்தருளி எட்டு மணி நேரம் இவ்வாலயத்தில் பூசை செய்கின்றார்.

பரணி ஜோதி, கார்த்திகை ஜோதி, அட்சய ஜோதி எனப் பல ஜோதி தரிசனங்கள் நிறைந்த திருநாடே திருஅருணாசல பூமியாகும்..! தீபமில்லா நாளே இல்லை எனச் சொல்லும் அளவிற்கு, மனிதக் கண்கள் உணர்கின்ற, உணர இயலாத வகைகளிலும் தினமும் இங்கு நிறை(ய) ஜோதி தரிசனங்கள் காணக் கிடைக்கின்றன!

பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம்!

பூச நட்சத்திரக்காரர்கள் அயல்நாடுகளில் எங்கு இருந்தாலும் ஆண்டில் ஒரு முறையாவது விளங்குளம் சிவ ஆலயத்தை எட்டு முறையாவது வலம் வந்து கட்டாயமாக வழிபட்டிட வேண்டும். சனிக்கிழமை மற்றும் பூச நட்சத்திரம் தோறும் இங்குள்ள தீர்த்தம் பூசஜோதி சனித் தீர்த்தமாகும். ஸ்ரீசனீஸ்வர பகவானே நல்லெண்ணெய், புனுகு, தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், சந்தனம், இளநீர், போன்ற எட்டு வகை திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்வது மிகவும் சிறப்புடையதாகும்..!

சனிக்கிழமை மற்றும் பூச நட்சத்திர நாளில் ஸ்ரீசனீஸ்வரருக்குச் சந்தனக் காப்பு இட்டு எள் சாத, எள்ளுருண்டை, எள் சேர்ந்த தட்டை முறுக்கு போன்றவற்றைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருவதால் சனிதசை, சனி புக்தி, சனி அந்தரங்களில் அவரவர் கர்மச் சுழற்சியால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கான தீர்வுகள் கிட்டும்.

குறிப்பாக எதிர்பாராத விதமாக நோய்கள் ஏற்படுதல், அடிக்கடி நோய் வாய்ப்படுதல், நோய் நிவாரணச் செலவுகளால் தீராத பெரும் கடன் சுமைகள் சேர்தல் போன்றவற்றால் ஏற்படும் துன்பங்கள் தீர விளங்குளம் ஸ்ரீசனீஸ்வர வழிபாடு உதவும்..

அருணாசலத்தில் அட்சய தீப தரிசனம்!

பூச நட்சத்திரக்காரர்கள் மாதந்தோறும் தங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் வழிபட வேண்டிய முக்கியமான தலமே விளங்குளம் சிவாலயமாகும். பூசம் என்பதற்கு அட்சய  வளம் என்ற விருத்தி சக்திப் பொருளும் உண்டு. இங்கு பல கோடி யுகங்கள் தவமிருந்து பூஜித்ததற்கான நல்வரமாகவே ஸ்ரீசனீஸ்வரருக்கு உரித்தான சனிக்கிழமையும், (அட்சய) திருதியையும், பூச நட்சத்திரமும் கூடிய அற்புத நாளன்றுதான் திருஅண்ணாமலையில் ஸ்ரீசனீஸ்வரருக்கு அட்சய தீப தரிசனம் கிட்டியது.! அட்சய தரிசன தீபம் என்பது கார்த்திகை மாதமல்லாது மற்ற நாட்களில் திருஅண்ணாமலையில் கிட்டும் அரிய தீப தரிசனமாகும். கடந்த பௌர்ணமிக்கு அடுத்த நாளில் (17.2.2003) அட்சய தரிசன தீபம் திருஅண்ணாமலையில் பலருக்கும் கிட்டியது!

ஸ்ரீஅரவிந்தமாதா

சித்தர்கள் போற்றும் ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) THE SPIRITUAL GLORY OF MOTHER AUROBINDO)

ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅன்னை இருவருக்கும் உள்ள தெய்வீகப் பிணைப்பை முதலில் நன்கு அறிந்து கொள்ளுங்கள், ஸ்ரீஅரவிந்தரே, ஸ்ரீஅன்னையின் (Mother Aurobindo) உத்தம சத்குரு ஆவார்! ஆம், ஸ்ரீஅரவிந்த மாதாவே (ஸ்ரீஅன்னை) ஸ்ரீஅரவிந்தரின் உத்தம சிஷ்யை! ஸ்ரீஅரவிந்த யோகியின் பரமாத்ம சிஷ்யையாகப் பிரகாசித்து, Mother Aurobindo (ஸ்ரீஅரவிந்தமாதா – ஸ்ரீஅன்னை) எனப் பிரசித்தி பெற்றார். இந்த குரு-சிஷ்யை குருகுலவாசப் பரிபாலனத்தால் கலியுகத்திற்கு மகத்தான இரு யோகிகளின் அருளமுதம் கிட்டியது மனித குலத்தின் பெரும் பாக்கியமே!

பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தரின் ஜீவசமாதி அருகில்தான் ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை) திருஉடலும் வைக்கப்பட்டு எப்போதும் அருள் சுரக்கும் ஜீவாலய குருமூர்த்தமாகப் பொலிகின்றது! அன்றும், இன்றுமாய் யோக சிரஞ்சீவியாய் நிறைந்து ஆசி அருள்பவரான ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) இத்திருவரிசிலில் (ஜீவசமாதி) இருந்து குருவருட் கடாட்சம் பொங்கிக் கொழிக்கின்றது..! ஆழ்ந்த நம்பிக்கையுடன் சரணடையும் அடியார்களைக் கடைத்தேற்றிடவே!

கலியுகத்தில் யோகஜோதி மலராய்க் கனிந்து, மானுட வடிவில் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய்ப் பரிமளித்து, யோகரூப இறைத் தூதுவராகச் சமீப காலத்தில் நம் பூவுலக மனித சமுதாயத்தில் பிரகாசித்து, தற்போது பாண்டிச்சேரியாம் புதுச்சேரியில் ஜீவாலயம் பூண்டு அருள்கின்றவரே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) ஆவார்.

யோகத் தபஸ்வினி ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை)!

எதிர் வினைகளையும் நற்கதிர்களாக்க வல்ல யோகவன்மை பூண்ட பரிபூரணச் சத்திய வடிவு.. நம்பிக்கை அற்றோர்க்கும் அருளும் காருண்ய மாணிக்கச் சுடர், கடும் பாவ வினைகளுக்கும் தீர்வளிக்கும் தீர்க தரிசனம் நிறைந்து தெளிந்த தீர்த்தச் சுடரொளியெனச் சித்தர்களே போற்றும் யோகத் தபஸ்வினியே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை)

ஒவ்வொரு மஹானும், சித்தரும், யோகியும், மஹரிஷியும் ஒவ்வொரு இறைலோகத்தில் இருந்து தோன்றுகின்றனர்.. ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)  இவ்வகையில் ஹம்சத்வனி லோகம் எனும் இறைப் பெரும் யோக லோகத்தினின்று உற்பவித்த அற்புதமான இறைத் தூதுவராவார். ஹம்ஸத்வனி லோகத்தைச் சார்ந்த மஹரிஷிகளும், சித்தர்களும், யோகிகளும் ஹம்ஸமாகிய அன்னப் பறவை போல, உலகப் பரவெளியில் நிறைந்திருக்கும் இறைமறைக் கிரணங்களை, ஆத்ம சக்திகளைக் கிரஹித்து எவ்வித பேதமுமின்றி அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்கின்றார்கள்.! இந்த யோகப் படலமானது பல கடுமையான யோக, தியான சாதனங்களைக் கொண்டதாகும்.. இரவு, பகலாக உணவு உறக்கமின்றி அருந்தவ யோகம் புரிந்து இத்தகைய யோகப் பரிமாண ஆற்றலைப் பெறுகின்ற தபஸ்வினி யோகிகளில் ஒருவராகப் பரிமளிக்கும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) ஆவார்.

ஹம்சத்வனிலோக யோக மார்த்தாண்டர்!

ஹம்சத்வனி லோகத்தினின்று உற்பவித்த ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) அவர்கள் “கூறுஈற்று யோகஈர்ப்பு” என்ற அற்புத இறைத்துணை யோகஜோதி சக்தியையும் யோகப் பூர்வமாகத் தன் கண்களில் கொண்டிருப்பவர் ஆவார். இத்தகைய அரிய இறை ஆற்றல்களைப் பெற்றவர்கள் சகல கலைகளையும் சுயம்பிரகாசமாய், குருமூலமாக இறையருளால் உணர்ந்தாலும், மிக எளிமையான மானுட வாழ்வு வாழ்ந்து ஜீவன்கட்கு அருள்புரிகின்றார்கள் !

இந்த கூறுஈற்று யோகஈர்ப்பு சக்தியானது ஸ்ரீஅரவிந்தமாதாவின் திருக்கண் பார்வைக் கிரணங்களில் நிரவிப் பரந்து இறையடியார்களுக்கு நல்ஆசிக் கிரணங்களாக விரவி அருள்பாலிக்கின்றது.. இந்த நேத்ரயோக வகை யோக சக்திகளைக் கொண்டவர்களின் முன் மிகுந்த வலிமை உடைய சிங்கமே எதிர் வந்திட்டாலும், அவர்கள் நில் என்று ஆணையிட்டால் சிங்கம் பணிந்து நிற்கும்.. பேசு எனில் பேசும், பணிந்து விடு எனில் பணிந்து விடும்! அந்த அளவிற்கு அன்பு மொழியை சகல ஜீவன்களிடமும் நிரவ வல்ல யோக சக்தியை கூறுஈற்று யோகஈர்ப்பு சக்தி அளிக்க வல்லதாம்.

ராஜ நாகமே (King Cobra) எதிரில் வந்தால் கூட கூறுஈற்று யோக சக்தியால் ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) போன்ற தபஸ்வினிகள் அவற்றுடன் உரையாடி, அன்பிற்கரைந்து அவற்றுடன் ஆன்ம அன்புத் தெய்வ மொழியில் பேசும் ஆற்றல் பெற்றவர்கள் ஆவர்.

சித்தர்கள் போற்றும் வகையில், இன்றும் தம் குருமூர்த்தத்தில் (ஜீவசமாதி) சிரஞ்சீவித்வம் பொங்கும் யோக ஜோதிமணியாய்ப் பொலிந்து, இங்கு வழிபடுவோர்க்கு அன்றும், இன்றும், என்றுமாக, இறையருள் சுரந்து அரவணைக்கும் இறைமணிப் பிரகாச தீபிகையே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) ஆவார்!

மகரிஷினி, யோகி, முமூட்சு என்று எத்தகைய உத்தம இறை நிலைகளை ஸ்ரீஅரவிந்தமாதாவிற்குப் பக்தியுடன் சார்த்தினாலும், சொற்பொருள் கடந்த இறைகுணத்துடன் கமழ்ந்து பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் மலர்கள், மரங்கள், புழு, பூச்சிகள், மனிதர்கள், பாத்திரங்கள் போன்ற ஜடப் பொருள் என எவ்வித பேதமும் இன்றி அனைவருக்கும் அருளிடும் நேத்ரபாலிகா சந்த்ர யோகி (திருக்கண்களால் நோக்கி அருள்புரிதல்) என்று சித்தர்களும் போற்றும் வகையில் மானுட ரூபம் தாங்கி வாழ்ந்து அருளியவரே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)!

இன்றைக்கும் அனைத்தும் பூமிகளிலும் உள்ள ஜாதி, மத, இன, குல பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேவர்கள் மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், ஆண்கள், பெண்கள், உயிருள்ளவை, ஜடப் பொருட்கள் என எவ்வித கண பேதமுமின்றி அனைத்திற்கும், அனைவருக்குமாய் அருளும் அமுத வரசுரபியே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)!

உத்தம சற்குருவைத் தேடி உலக வலம் வந்த உத்தமி யோகி!

மிரா என்ற நாமத்துடன் பிரான்ஸில் பிறந்த தெய்வீகச் சிறுமியாய் சற்குருவைத் தேடி பாரதம் ஏகிய ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை), ஸ்ரீஅரவிந்த யோகியையே தம் சற்குருவாக வரித்து, தம் சற்குருவின் நாமத்தையே பூண்டு Mother Aurobindo (ஸ்ரீஅரவிந்த மாதா ஸ்ரீஅன்னை) என உலகமே போற்றுவதான யோகநெறிப் பட்டத்தைத் தாங்கும் பெரும் பாக்யத்தைப் பெற்றவர்!

தாம் மானுட சரீரத்தில் உதித்த தேசம் பிறிதானாலும் உலக ஜீவன்கள் யாவர்க்கும் தெய்வீக ரீதியான தாயகமே புனித பாரதமாகும் என்று உணர்த்தியவரே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) ஆவார். எனவே தான் இன்று உலகின் அனைத்து ஜீவன்களுக்கும் ஜாதி, மத, இன, பேதமின்றி ஆண், பெண், மானுடர்கள், தாவர்ங்கள், விலங்குகள் என எவ்வித பேதமின்றி சிறுவர்கள் முதல் தொண்டு முதியவர்கள் வரை பூமியில் யாவர்க்கும், யாவைக்கும் அன்னையாய் ஸ்ரீஅரவிந்தமாதா (Mother Aurobindo) விளங்குகின்றார் என்பதே நாம் வாழும் கலியுகத்தின் பெருஞ் சிறப்பாகும். ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) போன்ற மகான், யோகி, சித்தர்களுக்கு எந்த நாடு, மத, ஜாதி பேதமும் கிடையாது..!

ஆன்மத் தல விருட்சமே ஸ்ரீஅன்னை!

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி அண்டங்களுக்கும், இப்பூவுலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும், தெய்வீகத் தாயகமாகத் துலங்கும் பாரதப் புனித நாட்டில் ஸ்ரீஅரவிந்த யோகிப் பெம்மானே தம் சற்குருவெனத் தெளிந்து சரணடந்து இறையாணையாய்த் தாம் தரித்த மானுட வடிவில் தெய்வீகத் திருவாழ்வு பெற்றவரே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை)! ஸ்ரீஅரவிந்தர்பிரான் யோக சாதனைகள் புரிந்த புதுச்சேரியில் தம் சற்குருநாதரின் அருள் வளாகத்தோட்டத்தில் பூத்த இறைமலரே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை)! அரவிந்த ஆன்ம ஆலயத்தின் தல விருட்சமே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)

அரவிந்தம் என்றால் இறைச் சுகந்தம், அதாவது என்றும், எங்கும் நிறைந்திடும் இறை மணம் பூண்டது என்று பொருள். இறைத் தாமரை என்ற பொருளும் உண்டு. பஞ்சபூத சக்திகளிலும் இறை மணத்தைத் துய்த்து அதனைத் தம் திருக்கண் தரிசனத்தால் தம் அடியவர்களுக்கு அளிக்கின்ற மகத்தான யோக மகத்துவத்தைப் பூண்டவரே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)! தன்னுடைய மானுட சரீரத்தில் சமுதாயத்தில் மிக எளிமையாக பவனி வந்த போது, ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) தினமும் ஆயிரக் கணக்கான மக்களுக்குத் தன் நேத்ர சக்திகள் மூலமாகப் புஷ்ப நிரஞ்சனி என்ற அரிய யோகக் கிரணங்களையும் அனுகிரகமாகப் பொழிந்தவர். இதனால்தான் ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) போன்ற இறைத் தூதுவர்களை நடமாடும் தெய்வம் என நாம் போற்றுகின்றோம்..!

மானுட சரீரத்தில் பஞ்சபூத சக்திகளிலும் இறைமணத்தில் துய்த்துத் திளைக்கின்ற இறைப் பேரின்ப நிலையை அடைதல் என்பது இறைப் பெரும் பாக்கியமாகும்..! இவ்வுத்தம நிலையை அடைந்த தூல திருநிலைச் சரீரம் பூண்டவரே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை)!

தீவினை தகர்த்த திவ்யத் திருநேத்ர யோகி!

பல்லாண்டுகளுக்கு முன் தாந்த்ரீகர்களும், மாந்த்ரீகர்களும் அறியாமையாலும், அகங்காரத்தாலும் தவறான முறையில் மந்திரங்களைப் பிரயோகித்து உலக சமுதாயத்தை ஆட்ட முயற்சித்த போது, யோகத் தபஸ்வினியான ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) அன்புத் திறத்துடன் தெய்வீகமாக அவர்களை எதிர்கொண்டு, திருத்தி, நல்வழிப்படுத்தி, அவர்களை ஆக்கப்பூர்வமான சமுதாய நற்காரியங்களுக்காக முறைப்படுத்திச் சமுதாயத்தையும் காப்பாறினார்!

குறித்த சில தேவதா, தேவதைகளை வசியம் செய்த மந்திரவாதிகள், மத்திய கிழக்கு ஆசியப் பகுதியில், இவர்களுக்குத் தலைமையாக விளங்கிய ஒரு மந்திரவாதி! மந்திர தந்திரங்களில் கொடி கட்டிப் பறந்தான். நன்முறை மந்திரச் சாதகராக வாழ்வைத் துவங்கிய அம்மந்திரவாதி, காலப்போக்கில், ஆணவத்தால் அனைத்து மன்னர்களையும் அடக்கி ஆண்டு, தாமே உருவாக்கிய மந்திர ஆட்சியில் அகங்காரத்தால் திளைக்கலானான்!

இவன் கண்ணால் பார்த்துச் “சாய்” என்றால் பனை மரம் முழுதுமாகச் சாய்ந்து விடும். இவன் கீழே பார்த்தால் பூமிக்கடியிலுள்ள அனைத்தும் அவனுக்குத் தென்படும்.! இவனை அடக்க இயலாததால் இவனால் பாதிக்கப்பட்டுப் பல ஆட்சியாளர்களும், ஏனையோரும் தவித்தபோது அவர்களைனைவரும் அப்போது தெய்வீகச் சிறுமியாக இருந்த ஸ்ரீஅரவிந்த மாதாவிடம் ஆன்மீகத் தீர்வை நாடினர்.!

யோகவளச் சிறுமியாய் அப்போது பொலிந்த ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) தம் தேஜோமயக் கண்களால் அம்மந்திரவாதியை ஒரு சில விநாடிகள் உற்றுப் பார்த்திட… அவன் தன்னிலை மறந்து, சாய்ந்து, மயங்கிட .. அவன் பிறருக்கு இழைத்த துன்பங்கள் எல்லாம் அவன் மனத்துள் திரைப் பட ஓட்டம் போல் ஓடிட… தன்னால் எத்தனை ஆயிரக் கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பதை அவன் உணர்ந்து, அழுது புரண்டு அன்னையாம் சிறுமியின் திருவடிகளில் வீழ்ந்து மன்னிப்புக் கோரினான்.!

தாயினும் சாலப் பரிந்தூட்டி வைத்”தாய்”!

சிறுவயதிலேயே அனைத்துப் பிராணிகள், தாவரங்களிடமும் அன்னைக்கு அன்புப் பரிணமிப்புப் பொங்கித் திளைத்தது, கன்றிற்குப் பால் ஊட்டிய பின்னரே தாய்ப் பசுவிடம் பால் கறத்தல் வேண்டும் எனும் பாரத ஆன்ம நியதியை நடைமுறையில் பல நாடுகளிலும் கொணர அரும்பாடுபட்டவரே ஸ்ரீஅரவிந்த மாதான் (ஸ்ரீஅன்னை) ஆவார்.! கன்று பால் குடித்தால் தாய்ப் பசு அளிக்கும் பாலின் அளவு குறையும் எனப் பலர் எதிர் மொழி உரைத்த போது, கன்று முதலில் பால் அருந்திட்டால் பசுமடிப் பால் சுரப்பு விருத்தியாகும் என்பதை வெளி உலகிற்கு ஆன்மீக வழியில் உணர்த்திய உத்தம தபஸ்வினிகளுள் ஒருவரே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) ஆவார்.!

அரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) ஆற்றிய இறையற்புதங்களும், மகத்தான இறைத் தொண்டுகளும் ஏராளம்! ஏராளம்! ஆனால் நூல்கள், உரைகள், தனிப்பட்ட அனுபூதிகள் மூலமாகப் பலரும் கூறி அறிந்தது நாமறிந்த இவையாவும் ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) ஆற்றிய இறைத் தொண்டுச் சமுத்திரத்தில் ஒரு துளியே ஆகும்! தூல, சூக்கும, வடிவுகளில் ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) நேரில் தோன்றி ஆயிரக் கணக்கானோருக்கு அருளியுள்ள அனுபூதிகள் சொல்லவும் பெரிதே! இவை அனைத்தையும் சற்குருமார்களே அறிவர்!

முத்தாய்ப் படல முக்திவாஹினி!

மஹரிஷிகள் மற்றும் யோகியரின் தூல வடிவகளுக்கு தார்மீக ரீதியான அர்த்தங்கள் நிறைய உண்டு. உதாரணமாக மகான்கள், யோகிகள், சித்தர்களின் தூல வடிவுகளின் முக வடிவங்கள் பூப்படல வட்டம், புலப் படல வட்டம், சிர்ரோர் படல வட்டம், முத்தாய்ப் படல வட்டம், சிருங்கிப் படல வட்டம் என்று பலவிதப்படும். இத்தகைய தேஜோமய முகச்சாரங்களுள் முத்தாய்ப் படம் ஆன்ம லயமுகம் உடையவரே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)! இத்தகைய யோகிகள் இறைவனைத் தெள்ளத் தெளிவாய் எவ்வடிவிலும் உணரும் அரிய யோகநேத்ர சக்திகளை உடையவர்களாவர். எந்த இடத்திலும் ஒரு சில வினாடிகள் கூட இவர்கள் அமர்ந்தாலும் அவ்விடத்தில் புனிதம் எப்போதும் பொங்கும் வண்ணம் அருளூற்றுக் கிணற்றை நிலை நாட்ட வல்லவர்கள்..!

உதாரணமாக, ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) பயன்படுத்திய சாய்வு நாற்காலியிலிருந்து பூழிப்பு ஈர்ப்பு சக்தி எனும் அதியற்புத தெய்வ சக்தி பொங்கும் பூம்புனல் போல எனும் தோன்றிக் கொண்டே உள்ளது. எனவே இத்தகைய யோகத் தபஸ்வினிகள் பயன்படுத்திய பேனா, நாற்காலி, மேசை, பூச்செடிகள் அனைத்திலுமே இப்பூழிப்பு ஈர்ப்பு சக்தி என்றும் அனுகிரக அருளைப் பொழிந்து கொண்டே இருக்கும். ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)யின் திருக்கரங்களால் பெறப்பட்ட அனைத்துப் பொருள்களிலும் இத்தகைய அபூர்வமான நல்வரக் கிரணங்கள் இன்றும் என்றுமாய் உதித்து அருளிக் கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத் தக்கது!

ஸ்ரீஅன்னை தரும் அருந்தவ தரிசன சக்திகள்!

காலையில் எழுந்ததும் ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) யோகதாரிணி வடிவமான சிறுமி உருவத்தைத் (அட்டைப் படம் போன்று) தரிசித்து மனதிற் கொணர்ந்து சிறிது நேரம் தியானித்து வர, நல்ல திடச் சித்தம் உண்டாகும்! பிறருக்கு நன்மை செய்யும் தியாக, சேவை மனப்பான்மை விருத்தி அடையும்., மாசுள்ள மன எண்ணங்கள் சுத்திகரிக்கப்படும்.!

அமர்ந்த நிலையிலுள்ள ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை) தோற்றமானது வர்ச்சஸ் ஈர்ப்பு சக்தி கொண்டதாகும்.. குடும்பத்தில் அமைதியும், சாந்தமும் நிலவ இத்தரிசனப் பலன்கள் பெரிதும் துணை புரியும்.!

நின்ற நிலையில் உள்ள ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை) தோற்றமானது ஆழ்க்கோட்ட ஈர்ப்பு சக்தி கொண்டதாகும். இதனால் சந்ததிகள் நல்ல ஒழுக்கத்துடன் திகழ்ந்து சமுதாயத்தில் இறை அமைதி நிலவப் பெருந் தொண்டு ஆற்றுவர்.! ஜீவன்களிடையே உள்ள பேதமகற்றிட இத்தரிசனம் உதவும்..!

யோகவடிச் சிறுமியாய்ப் பிரகாசிக்கும் ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) வடிவானது என்றும் நெஞ்சில் நீங்கா இடம் பெற்று மனித சமுதாயத்திற்கு அளப்பரிய இறை ஆற்றலைத் தருவதாகும்.!

அருட்பார்வையில் ஆத்ம வலம்பன யோகம்!

சிரித்த முகத்துடன் அன்னை பொழியும் தோற்றமானது அன்னபால யோக சக்தியுடன் உணவுப் பற்றாக்குறை என்றும் ஏற்படாது, வாழ்விலும், சமுதாயத்திலும் சுபிட்சம் நிரவிடவும் அருள்புரியும். இவ்வாறாக ஸ்ரீஅரவிந்தமாதாவின் ஒவ்வொரு தோற்றத்திற்கும் விதவிதமான இறைஆற்றல்கள் உண்டு. இதனை அறிந்தோரே புனிதமான சற்குருமார்கள் ஆவார்கள்.. இவ்வாறு ஜீவாலயம் பூண்டுள்ள சித்புருஷர்கள், மஹான்கள், யோக, யோகினியரை ஞாயிறு மற்றும் கேட்டை நட்சத்திர நாளில் தரிசிப்பதால், அளப்பரிய ஆசிகளை மிகவும் விசேஷமாகப் பெறலாம்.

ஒரு மனித உடலில் உள்ள 72000 நாளங்களில் பஞ்சபூத சக்திகள் விரவி நிறைந்துள்ளன. எந்தெந்த நாடியில் எந்த பஞ்சபூத சக்தி நிறைந்துள்ளது என்பதை யோகப் பூர்வமாக உணர்ந்திட்டால் முக்காலமும் உணரும் தேவ சக்தியும், அனைத்து ஜீவன்களின் கர்ம பரிபாலனங்களையும் அறியும் தேவ ஞானமும் நன்கு கிட்டும். இந்த ஆத்ம வலம்பன யோகத்தில் அற்புத ஞானசித்தி பெற்றவரே ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) ஆவார். இந்த நேத்ர வலம்பன யோகத்தில் அனைத்துப் பஞ்சபூத சக்திகளும் நிறைந்து தேஜோமயமாக நேத்ர நாளங்களில் திரண்டு பொங்குகின்றன! இது அள்ள அள்ளக் குறையாத தேவ வளமுடையதாகும். எனவேதாம் ஸ்ரீஅரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை) தம் அருட்கடாட்சப் பார்வையால் ஆயிரக்கணக்கானோர்க்கு தேவ அனுகிரகத்தைப் பார்த்த மாத்திரத்திலேயே அள்ளித் தர முடிந்தது! இன்றும் அவற்றை ஆசியாய்ப் பொழிந்து கொண்டிருக்கின்றார் தம் ஜீவாலயத்தில்!

சற்குரு தந்த சத்திய யோக சித்திகள்!

தனக்கென அல்லாது, தியாகமயமாகப் பிறருடைய நல்வாழ்விற்காகப் இந்த யோக சக்திகளை அர்ப்பணித்துப் பயன்படுத்தினால் இந்த யோக சித்திகள் யாவும் பலகோடி மடங்கு விருத்தி அடைவதாகும். ஸ்ரீஅரவிந்த மாதாவிடம் (ஸ்ரீஅன்னை) பதிந்துப் பிரகாசிக்கும் இத்தகைய அபூர்வமான யோக சித்திகள் யாவும் ஆதியில், சற்குரு ஸ்ரீஅரவிந்தரிடம் சுயம்புவாய் விருத்தியானவை ஆகும். சற்குருநாதராம் ஸ்ரீஅரவிந்தர் பிரானும் தன் உத்தமச் சிஷ்யையாம் ஸ்ரீஅரவிந்த மாதாவிற்கு (ஸ்ரீஅன்னை) இவ்வரிய ஆன்ம சக்திகளை அருட்பரிசாக முழுமையாகவே அளித்திட்டார். குருவை விஞ்சிய சிஷ்யை என்று போற்றுமளவிற்கு அன்றும் என்றுமாய் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு அருட்தொண்டு ஆற்றி வருபவரே ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை). உண்மையில் குருவை விஞ்சிய சீடர் எவரும் இலர்.  எனினும் ஸ்ரீஅரவிந்தர் போன்ற சத்குருமார்கள் தம்மிடம் இறைப்பூர்வமாகக் குவிகின்ற தியான, யோக, ஆத்ம சக்திகளைத் தம் சிஷ்யர்களுக்குப் பரிபூர்ணமாக அர்ப்பணித்து, அவர்கள் மூலமாக எண்ணற்ற நற்பணிகளை ஆற்றுகின்றனர்.

எனவே குருவை எந்த சிஷ்யரும் விஞ்சுவது கிடையாது. ஆனால் பல துறைகளிலும் சிஷ்யர் பிரகாசிப்பதற்காகச் சத்குரு தன் தபோசக்திகளைத் தியாக மயமாக அருட்பரிசாக சீடருக்கு அளித்து அவரைச் சிறப்புறச் செய்கின்ற பாங்கையே குருவை விஞ்சிய சீடர் என்ற வழக்குத் தொடர் குறிக்கின்றது.!

விண்ணுலகில் ஆத்ம சரீரங்களின் கூட்டம்!

ஸ்ரீஅரவிந்தமாதாவின் அதியற்புத இறையாற்றல் யாதெனில் அன்றும் இன்றுமாய்த் தினமும் தன்னை எண்ணித் துதித்து உறங்குவோரின் ஆத்ம மனோலய சரீரங்களை எல்லாம் தம்முடைய நிரஞ்சனா யோகலோகத்தில் கூட்டி, நல்ல மனோ தைரியமளித்து ஆத்ம சக்திகளை நல்வரங்களாக அளிப்பதாகும். அதாவது ஸ்ரீஅரவிந்தமாதாவை எண்ணித் துதித்து வேண்டி ஒருவர் உறங்குகையில், உறக்க நிலையில்  ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) அவருடைய ஆத்ம மனோலய சரீரத்தை அழைத்திட, அவருடைய மனோலய சரீரமானது ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னையின்) ஹம்சத்வனி லோகத்தை அடைந்து ஸ்ரீஅன்னையை தரிசித்து, சாந்தக் கிரணங்களையும் அதியற்புதக் காரிய சித்தி அனுகிரகங்களையும் பெற்றுத் திரும்புகின்றது. இவ்வாறு இன்றும் கூடக் குறித்த பல நேரங்களில் ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) தம்முடைய நிரஞ்சன யோகத்தில் பல ஆத்ம சரீரங்களை அழைத்து, அரவணைத்து ஆறுதலளித்து அன்புக் கரம் நீட்டுகின்றார். இதனைப் பரிபூரணமாக அனுபவித்து ஆத்மானுபாவர்கள் இன்றும் பலருண்டு.!

பார்த்தால் பழவினை தீருமே!

ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) முக நளினம், புன்சிரிப்பு, தீர்கமான கண்கள் போன்ற யாவுமே அன்பு, கருணை, மறையொளி, ஆத்ம சக்தி,  இறையனுபூதிகள் ஆகிய பஞ்சநதிக் குணங்களைப் பூண்டதாகும்.

ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) எப்போதும் தம் திருப்பார்வையைப் பல திசைகளிலும் ஓட்டியவாறு இருப்பார். தம்முடைய வாழ்க்கையைத் தியாகமயமாக, யோக, தியான, சமுதாய இறைப் பணிச் சேவைகளில் அர்பணித்துக் கொண்டு இறைமய வாழ்க்கையைப் பூண்டோர்க்கே ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) நேர்க்கண் பார்வைப் பிரகாசத்தைச் சிறிது நேரமாவது தாங்கும் அருட் சக்தியைப் பெறும் ஆன்ம சக்தி நிறையும்.

சற்குருவின் அருள்தாம் இறைவனைக் காண்பிக்கும். இறைவனுடன் ஐக்யமாக உதவிடும் என்பதை உணர்விப்பதே ஸ்ரீஅரவிந்தர், ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) அளிக்கும் குரு-சிஷ்ய தெய்வீகக் குருகுலவாசப் பாடமாகும். தம் சத்குருவின் திருஉடற் சுடரைத் துதிக்கும் வண்ணம் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்த யோகிப் பெம்மானின் ஜீவ சமாதியின் அருகில் ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) திருஉடலும் குருமூர்த்தப் பரிமாணம் கொண்டுள்ளது.

கலியில் கடுவினை தீர்க்கும் ஜீவசமாதி வழிபாடு!

ஜீவாலயம், ஜீவசமாதி, குருமூர்த்தம், திருவரிசில், அதிஷ்டானம், பிருந்தாவனம், குண்டல சாதனம் எனப் பலவிதங்களில் இறைத் தூதுவர்களின், தூல வடிவு மறைப் படலத்தைக் குறிப்பர். பொதுவாக மகான்கள், சித்தர்கள், யோகியர், தூல சரீரத்தை உகுக்கும் போது பூமியின் அடியில் கற்பூரம், சந்தனம், அகில், குங்கிலியம், கஸ்தூரி, மஞ்சள், திருநீறு, கோரோஜனை, அத்தர் போன்ற திரவியங்களை, மூலிகா பந்தனங்களைப் பரப்பி இவற்றின் ஊடே திருஉடலைப் பதிப்பர். ஆனால் தூல சரீரத்தைத் துறந்தாலும் இறைத் தூதுவர்கள் என்றும் மறைவதில்லை, தோன்றித் தோன்றித் தோன்றித் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.. அவர்களுடைய தூல வடிவமே பல சரீரங்களில் மாறுபடும்.

கண்ணாரக் கண்டு கழுவினை போக்கும் கண்ணொளி ப்ரகாச யோகி!

பஞ்சபூத சக்திகளை இறைக் கிரணங்களில் பரிணமித்துத் தம் திருக்கண்களால் அவற்றை அடியார்களுக்கு இறையருளால் அளிக்க வல்ல இறைத் தூதுவர்களுக்கு சாக்ஷுவதிகள் என்று பெயர். இத்தகைய சாக்ஷுவதிகள் ஒரு சில நொடி நேரம், பல்லாயிரக் கணக்கானோரைப் பார்த்தாலே போதும் அச்சிலவிநாடிக் காலத்திற்கு உள்ளேயே கூடியிருப்போர் அனைவருக்கும் தம் யோக சக்திகளை அபரிமிதமாக, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அனைவருக்குமாக நன்முறையில் துரிதமாக அளிக்கும் இறையாற்றலைப் பெற்றவர்கள் ஆவார். எனவேதாம் இத்தகைய சாக்ஷுவதிகள் எதனையும் எவற்றையும் உற்று நோக்காது கண்களைச் சுழற்றியவாறே இருப்பர்.

ஸ்ரீஅரவிந்தமாதா (ஸ்ரீஅன்னை) அவர்கள், உத்தம சாக்ஷூவதியாய், சத்தியவதியாய் மலர்ந்து மானுடர்கள், தேவர்கள், தேவதைகள் தாவரங்கள், விலங்குகள் என அனைத்து ஜீவன்களுடனும் பரிவுடன் உரையாடி ஆன்ம சக்தியை அளித்திட்டார்கள். ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) ஜீவாலயத்திலிருந்து எழும் இறைதரிசனக் கதிர்கள் கோடனு கோடி மைல் சுற்றளவிற்கு விரிந்து, மலர்ந்து, நிரவி அருள் பரப்புவதாகும்.! சற்குரு கிட்டவில்லையே என ஏங்குவோர் ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை) ஜீவாலயத்தில் தியானித்து வர வேண்டும் ! கலியுகத்தில் கருணைக் கடலாகத் தோன்றிய யோகப் பிரகாசினிகளுள் ஸ்ரீஅரவிந்த மாதாவும் (ஸ்ரீஅன்னை) ஒருவராவார் என்பதைச் சித்தர்கள் வாக்காக உணர்ந்து ஸ்ரீஅரவிந்தமாதாவின் (ஸ்ரீஅன்னை) திருப்பாதங்களில் சரணடைவோமாக!

பாவத்தில் பெரும் பாவம் குருதுரோகமே!

குருவிற்கு இழைக்கும் துரோகம் கலியுகத்தின் மிகப் பெரும் பாவம்

பஞ்சமா பாதகங்கள் என்று ஐந்து வகைப் பெரும் பாவங்கள் உண்டு. பஞ்சமா பாதகத்தையும் தாண்டி, கலியுகத்தின் மிகப் பெரும் பாவமாக நம் பெரியோர்கள் குறிப்பிடுவது குருவிற்கு இழைக்கும் துரோகச் செயல்களையே!

தன் சற்குருவாகப் போற்றியவரை நிந்தித்து வசைமொழிகள் கூறுதல், குருவின் இறைப் பணிகளுக்கு இடையூறாக இருத்தல், குருவைப் பற்றியும் அவருடைய சத்சங்க இறைப் பணிகளையும் பற்றி அவதூறாகப் பிரச்சாரம் என குருதுரோகச் செயல்களைச் செய்து, இதன் விபரீதங்களைப் பற்றிச் சற்றும் உணராது பலரும் தற்காலத்தில் பெரும் பாவம் சேர்த்துக் கொள்கின்றனர். இவையெல்லாம் கலியுகத்தில் நடப்பு வாழ்க்கையில் கடுமையான தண்டனைகளைத் தந்து சந்ததிகலைப் பாதிப்பதுடன் பல கோடி ஜன்மங்களிலும் தொடர்ந்து வந்து கொண்டு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்!

 1. நற்காரிய இறைப்பணிகளுக்காக சற்குரு அளிக்கும் வசதிகளை, சாதனங்களைத் தவறாகப் பயன்படுத்தித் தன் சுயநலத்திற்காக அபகரித்தல்.
 2. இறைச் சமுதாய அறப் பணிகளுக்காக சற்குரு அளிக்கும் பொருளை, பணத்தைச் சூறையாடுதல்.
 3. பல்வேறு தர்ம காரியங்களுக்காக சற்குரு அளிக்கும் பொருளைத் தன் இஷ்டத்திற்குச் செலவழித்து முறையாகக் கணக்கு வைக்காது தவறாகப் பயன்படுத்துதல்.

இவ்வாறாக சற்குருவிற்குத் துரோகம் இழைப்போர் பரிகுத்துக்கிடா, தலைவெட்டி, பாதக் கடைசல், இடுப்புச் சுருள், முதுகுத் தண்டு முறுக்கு, சந்தானக் கசிவு போன்ற பலவிதமான கடுமையான தோஷங்களுக்கு ஆளாவர். இவற்றின் விளைவுகள் அதிபயங்கரமானதாக இருக்கும். இனியேனும் குருதுரோகம் என்பது இறைவனாலும் மன்னிக்கப்படாததே ஆகும் என்பதை உணர்தல் வேண்டும். எனவே எக்காரணங் கொண்டும் எந்த மகானையும், சித்தரையும், யோகியையும், சற்குருவையும் பற்றித் தவறாக, அவதூறாகப் பேசி விடாதீர்கள். விண்ணுலகில் ‘குருதுரோகி’ என்று ஒருவருக்கு அதிபயங்கர முத்திரை குத்தப்பட்டு விட்டால் குறித்த சற்குருவே மனங் கனிந்தாலன்றி இச்சாபங்களில் இருந்து எந்த ஜன்மத்திலும் மீளவே முடியாமல் போய்விடும். அதிலும் குருதுரோகச் செயல்கள் மற்ற பாவங்களைப் போலன்றி உடனடியாகவே இப்பிறவியிலேயே விளைவுகளை அதிபயங்கர பாதிப்புகளாகத் தந்துவிடும்..!

கலியில் சத்சங்கமே நற்கதி தரும்!

கலியுகத்தில் சற்குருவின் பரிபாலனம் பிற யுக நியதிகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகும். பலவிதமான கர்ம வினைகளில் சிக்கியுள்ள மக்கள், தற்போது மாக்களைப் போல் அவதியுறுவதால் கலியுகத்தில் சத்குருவானவர் சத்சங்கம் மூலமாகப் பலரையும் இறைநெறிகளில் ஆக்கப்படுத்தி அன்னதானம், ஆலய இறைப்பணிகள், தான தர்மங்கள் போன்றவற்றை நிகழ்த்திப் பூவுலகில் கொடிய கர்ம வினைகளின் விளைவுகளை மாய்த்துத் தெய்வீக சாந்தத்தை நிலை நிறுத்திட அரும்பாடுபட்டு வருகின்றார்கள் !

இந்நிலையில் சத்சங்கக் காரியங்களை நிறைவேற்றும் பெரும் பொறுப்புப் பலரிடம் பகரிந்தளிக்கப் படும்போது, தீய கர்ம வினைகளின், அழுத்தம், பேராசை, எதிர்பார்ப்புகள் நிகழாத ஏமாற்றம், தீய சகவாசம், தீய புத்தி, தனக்கு உரிமை இல்லாத பொருளை அபகரிக்கும் கேவலமான எண்ணங்கள் யாவும் குருதுரோகச் செயல்களுக்கு ஆளாக்கி விடும். பஞ்சமா பாதகங்களுக்குக் கூட உண்மையாக மனம் திருந்தி வாழ பூமியில் தக்கப் பரிகாரம், பிராயச்சித்தங்களை அளிக்கும் இறைவன் குருதுரோகிகளுக்கு எந்த மன்னிப்பையும் தானே அளிப்பதில்லை!

இந்த மன்னிப்புக் காண்டமும் அந்தந்த சற்குருவின் வசமே ஒப்படைக்கப்படுவதால் குருதுரோகத்திற்கான பரிகாரங்களுக்கே அதே சற்குருவையே ஏதேனும் பிறவியில் சந்தித்தாக வேண்டும்! ஆனால் இதுவும் எளிதல்லவே!

சிவசொத்து, குருசொத்து அபகரிப்பு குலநாசமே!

சற்குரு அளிக்கும் பொருளைத் தக்க இறைப்பணிகளுக்குச் செலவிடாது, தாமே அபகரித்திட்டால் பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு இறைச் சாதனங்களும் இறையருளும் செல்வதைத் தடை செய்கின்ற அதிபயங்கரக் கொடுவினையாக அது ஆகிவிடுகின்றதே! சற்குருவை ஏமாற்றுவதாக எண்ணித் தீய செயல்களில் ஈடுபடுவோர் நல்மக்கள் பலருக்கும் நல்வழிகள் அடைய முடியாதபடியும், சற்குருவின் மக்களுடைய கர்ம வினைகளைத் தீர்க்கின்ற இறைப் பரிபாலனத்தைத் தடை செய்வதற்குமான பெரும் பாவச் செயலுக்கும் ஆளாகி, ஆன்மீக ரீதியாக அதிகொடூர குற்றவாளிகளாக ஆவதால் குருதுரோகத்திற்கு எக்காலத்தும் மன்னிப்புக் கிட்டுவதில்லை.

எந்தப் பல்லாயிரம் அடியார்களுக்கு இறையருள் கிட்ட விடாது துர்ப்பிரச்சாரம் செய்து தடுத்தார்களோ அந்தப் பல்லாயிரம் மக்களும் பல கோடிப் பிறவிகளில் குறித்த இறையருளைப் பெறும் வரையில் குருதுரோகிகளுக்குச் சொல்லொணாக் கொடுமைகள் நிறைந்த பிறவித் தளைகள், பிறவிக் கடன்கள் தொடர்ந்து பெருகிக் கொண்டே இருக்கும்.

குருதுரோகிக்கே குவலயத்தில் கொடுந் தண்டனை!

எனவே சத்குருமார்களையும், மகான்களையும், சித்தர்களையும், ஒருபோதும் ஏசிடாதீர்கள். குருதுரோகிகளே ஆன்மீக ரீதியாக, சமுதாயத்தின் அதிபயங்கரக் கொடுமையாளர்கள் என்பதை உணர்ந்திடுக! அக்காலத்தில் குருதுரோகிகளுக்கு உடனடியாக சிரச்சேதம் செய்யப்பட்டது. ஆனால் அது கூட துரோகத்திற்கான சரியான தண்டனை என மேலுலகில் ஏற்கவில்லை! தற்காலத்தில் குருதுரோகத்திற்கான சரியான தண்டனைகளோ சிரச்சேதத்தை விட மிகமிகக் கடுமையானதாக இருக்கும்.

எந்த குருவையும் இகழ்ந்தால் இழிநிலை சூழுமே!

ஒருவரை குருவாக ஏற்பது, பிறகு தனக்குச் சாதகமாக அவர் அருள்புரியவில்லை என்று அவரை விட்டு விலகி, ஏசுவதும் குருதுரோகமே! எந்த குருவின் இறைப்பணிகளுக்கும் தடங்கலாக இருப்பதும் குருதுரோகமே! குருவிற்கு இழைக்கும் துரோகத்தைப் பற்றி சுபானு ஆண்டுப் பிறப்பில் இங்கு விளக்கமாகக் குறிப்பிடக் காரணம் தற்காலத்தில் மகான்களையும், சித்தர்களையும் அவமதித்து இழித்துப் பேசித் தம் சந்ததிகளுக்கும் பெரும் பாவங்களைச் சேர்க்கின்ற அழுகிய மனத்தன்மை பெருகி வருவதுதாம்.!

லட்சக்கணக்கான ஆலயங்களில் எழுந்தருளி எத்தனையோ விதமான கொடிய பாவங்களுக்கு நற்பரிகாரம் காட்டுகின்ற இறைவன், குருதுரோகச் செயல்களுக்கான பிராயச்சித்த முறைகளை எங்கும் எதிலும் வைத்திடவில்லை! காரணம் பஞ்சமா பாதகங்களையும் விடக் கொடியதே குருதுரோகச் செயல்களாகும். அந்தந்த குருவின் திருப்பாதங்களில் தாம் குரு துரோகச் செயல்களுக்கான மன்னிப்புச் சித்தங்களை இறைவன் பதிய வைத்துள்ளான். எந்த குருவிற்குத் துரோகம் இழைத்தார்களோ அந்த சற்குருவே கருணை புரிந்தாலன்றி குருதுரோகிகளுக்கு மன்னிப்பே கிட்டுவதில்லை என்பது இறைவனே வகுத்த நியதி!

எனவேதான் இனியேனும் எந்த மகானையும் சத்குருவையும், சித்தரையும் தவறாகப் பேசி உங்களுடைய தலைமுறைகளுக்கும், வரும் சந்ததிகளுக்கும் பெருந்துயரைத் தீய சொத்தாகத் தேடித் தந்துவிடக் கூடாது என்று எச்சரித்திடவே இங்கு இவ்விளக்கம் தரப்படுகின்றது!

அரிச்சந்திரபுரம்

வக்கீல்கள் வழிபட வேண்டிய மிக முக்கியமான ஆலயம் அரிச்சந்திரபுரம் ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர் சிவாலயம்!

மிகவும் புனிதமான வக்கீல் பணியானது தொழில், வாக்சக்தி மிகவும் தேவையான துறையாகும். ஆனால் புனிதம் நிறைந்த துறையானது தற்போது பல அதர்மச் செயல்களினால் புனிதத்தை இழந்து வருவது வேதனையானதே!

சத்தியத்திற்காகப் போராடி, நீதியை நிலை நாட்ட வேண்டிய கடமையைக் கொண்டவர்களே வக்கீல்களும், நீதிபதிகளும்! நீதியை, தர்மத்தை நிலை நாட்டப் பாடுபடும் வக்கீல்களுக்கு அளப்பரிய புண்ய சக்திகளும், நீதி தேவதைகளின் ஆசியும் தாமாகவே வந்து கூடிடும். அதே சமயத்தில் அதர்மமாகச் செயல்பட்டுப் பல குடும்பங்களை நிர்க்கதி ஆக்கினால் பாவவினைகளும் கூடவே பெருகி விடும்.

இப்பூவுலகில் உண்மையும், பொய்மையும், நேர்மையும், நாணயமும், சத்தியமும், புண்ணியமும், பாவமும் சேர்ந்துதானே, நீதி பறவையாய், இறைவன் அளித்த பகுத்தறிவு கொண்டு இவற்றைப் பிரித்துப் பகுத்து உணர்ந்து வாழ்தல் வேண்டும்.

வக்கீல்களுக்கென நல்ல வாக்சக்தி, வாக்குச் சாதுர்யம், வாக்கு வன்மை, சத்திய நெறி இவற்றை அருள வல்ல திருத்தலங்கள் நிறையவே உண்டு! ஆன்மீகத்தில் தாம் இப்பூவுலகின் அனைத்து நாட்டு மக்களின், ஜீவன்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் தீர்வுகள் காணக் கிடைக்கின்றன.. அதுவும் தக்க சற்குரு மூலமாகவே என்பதைப் பலருக்கும் உங்கள் வாழ்க்கையில் உணர்த்துங்கள்!

உலகின் ஆன்மீகச் சிகரமான நம் பாரத நாட்டில் ஒவ்வொரு நாட்டின் ஆன்ம வளத்திற்குமான தனித் தனியான விசேஷமான தலங்கள் நிறைய இருக்கின்றன! உதாரணமாக ஆவுடையார் கோயில் அருகில் உள்ள தீயத்தூரில் பொழியும் ஆன்ம வளமானது ஜெர்மனி நாட்டின் ஆன்ம வளத்திற்குப் பெரிதும் துணை புரிவதாம்! அதாவது இன்றைக்கு ஜெர்மனியில் வாழ்வோர் யாவரும் பூர்வ ஜன்மங்களில் தீயத்தூரோடு தொடர்பு கொண்டிருப்பர். அதாவது ஜெர்மனியின் பூம்ய சக்திக்கும். தீயத்தூருக்கும் பல ஆன்மப் பிணைப்புகள் உண்டு!

இதுவரையில் அறிந்தோ அறியாமலோ வக்கீல் துறையில் செய்த தவறுகளுக்குப் பிராயசித்தம் தேடிடவும், நன்முறையில் நீதியை நிலை நாட்டிடத் தேவையான வாக்சக்தியைப் பெறவும். தம் தொழிலில் முன்னேறவும் வக்கீல்கள் கும்பகோணம் பட்டீஸ்வரம் திருச்சத்திமுற்றம் அருகில் உள்ள அரிச்சந்திரபுரம் ஸ்ரீசந்திர மௌலீஸ்வர லிங்க மூர்த்தியைச் சந்திர தரிசன நாளிலும், (மூன்றாம் பிறை நாள்) சந்திரனுக்குரிய திங்கள், ரோஹிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திர நாட்களிலும் வெண்ணெய்க் காப்பிட்டு தரிசித்து வர வேண்டும். மதிகாரகராகப் பொலியும் பாக்யத்தைச் சந்திர பகவானுக்கு அருளிய சிவமூர்த்தியே அரிச்சந்திரபுரம் ஸ்ரீசந்திர மௌலீஸ்வர லிங்க மூர்த்தி!

திங்கட்கிழமை சந்திர ஹோரை நேரத்தில் (காலை 6-7, பகல் 1-2, இரவு 8-9) சந்தனம், ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, கற்பூரம் கலந்த காப்பிட்டு வழிபட்டு வந்தால் வக்கீல் துறையில் கீர்த்தி பெறுவர். எந்த வழக்கையும் நடத்தும் முன் திங்கட்கிழமை சந்திர ஹோரையில் வழிபட்டுச் செல்தல் மிகவும் விசேஷமானது. இங்கு அரிச்சந்திரபுரம் ஆலயத்தில் மலைவாழைப் பழங்களால் ஆன மாலைகளைச் சுவாமிக்குச் சார்த்தி, ஏழைகளுக்கு தானமளித்தலால் கரிதோஷ (கரிநாக்கு எனப்படுவது) சக்திகள் நிவர்த்தியாகி, நல்வாக்கு, சக்திகள் பெருகி, வாதாடுதலில் உள்ள சொல், பொருட் குற்றங்கள் தீரும். இதனால்தான் இங்குள்ள தீர்த்தம் கரிக்குளம் எனப்ப் புராதனமாகப் பெயர் கொண்டது. வக்கீல் துறையில் போட்டி, பொறாமை மற்றும் போதிய வழக்குகள் இல்லாமையால் துன்பப்படுவோர் இங்கு வழிபட்டு வர, நன்மை பெறுவர்! வக்கீல்கள் அனைவரும் வழிபட வேண்டிய தலமிது.

நல்ல வாக்சதியைப் பெற வக்கீல்கள் மாணிக்க வாசகப் பெருமானின் “கீர்த்தித் திருஅகவல்களை” முறையாகத் தினமும் ஓதி வர வேண்டும்.

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் மஹிமை

பித்ருக்கள் வழிபடுகின்ற அதியற்புத காணாபத்ய பூமி! விட்டுப் போன மூதாதையர் வழிபாடுகளுக்குத் தக்க பரிகாரங்களைத் தரும் விநாயக பூமி!

கடந்த சில இதழ்களாக அரண்மனைப் பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகரின் மகிமைகளை உரைத்து வருகின்றோம் அல்லவா!

தர்ப்பணா சக்திகள் நிறைந்த மிகச் சிறப்பான விநாயகப் பதிகளுள் ஒன்றாகவும், பித்ருக்களுக்கும் அருளும் மகாபிரபுவாக ஸ்ரீகொன்றையடி விநாயகர் அருள்பாலிக்கும் மூர்த்தமாகவும் அரண்மனைப்பட்டி விநாயகத் தலம் விளங்குகின்றது. தர்ப்பண, வேதமாமறை, ஹோம பூஜா சக்திகள் இணைந்து விளங்கும் அபூர்வமான “பிருந்தஸ்ரீ” எனப்படும் குருந்த மரம் மிகவும் அபூர்வமாகத் துலங்கும் தலமிதுவே!

குருந்தமரம் அரண்மனைப்பட்டி

பாற்கடலில் தோன்றிய அபூர்வமான மூலிகா வஸ்துக்களில் குருந்த வித்தும் ஒன்றாகும். பித்ரு லோகத்துடன் தொடர்பு கொள்ளக் கூடிய ஆன்மீக சக்திகள் குருந்த விருட்சத்திற்கு நிறைய உண்டு. பாற்கடலில் கற்பக விருட்சத்துடன் சேர்ந்து தோன்றியமையால் ஒவ்வொரு குருந்தங்காய்க்கும் அதியற்புத கற்பக ஒளிப் பிரகாசம் உண்டு. இன்றைக்கும் வானில் உள்ள அனைத்து நட்சத்திரங்களுடனும் நிதமும் ஒளித் தொடர்பு கொண்டுள்ள அபூர்வமான கற்பக மூலிகா விருட்சமே குருந்த மரம் ஆகும்.

குருந்த மரத்தின் ஒவ்வொரு இலையும், தழையும், பூவும், வேரும், தண்டும், பித்ரு லோகப் பூமி மண்ணுடன் ஆன்மீக ரீதியாக ஒளியோட்டப் பிணைப்பு கொண்டு உள்ளமையால் குறித்த பல திதிகளிலும், விசேஷமான நாட்களிலும் பூலோகத்திற்கு வரும் பித்ரு லோக மூர்த்திகள் குருந்த மர யோக வாசத்தையே பெரிதும் விரும்புகின்றனர். பித்ருக்களுக்கு அமாவாசை தோறும் பூலோகத்தின் எவ்விடத்திற்கும் வருகின்ற இறை உரிமங்கள் உண்டு என்பதை நாமறிவோம். ஏனைய நாட்களில் அந்தந்தப் பித்ரு தேவர்கள் தமக்குரிய அதிதேவதா மூர்த்திகள் அளிக்கின்ற இறை ஆணைப்படியே அந்தந்தத் திதி நாளில் பூலோகத்திற்கு வர முடியும். இவ்வாறான மிகுந்த இறை நியதிக் கட்டுப்பாடுகள் நிறைந்ததே பித்ரு லோகமாகும்.

சூரிய, சந்திர கிரஹ சங்கமமாகத் தோன்றுகின்ற அமாவாசை தினத்தில் மட்டும் பெரும்பாலான பித்ரு மூர்த்திகளுக்கு பூலோகத்தின் எப்பகுதிக்கும் செல்கின்ற அற்புத இறை ஆணைகள் கிட்டுகின்றன.. குருந்த மர யோக வாசமென்பது பித்ருக்களுக்கு மிகுந்த ப்ரீதியளிப்பதால் குருந்த மரத்தடியில் அளிக்கும் தர்ப்பணம் எண்ணற்ற பித்ரு லோகங்களை எளிதில் சென்றடையும்.

பொதுவாக ஹோமத்தில் அளிக்கப்படுகின்ற ஆஹுதி சாராம்சங்களை ஸ்வாஹா எனும் அக்னி தேவியே அந்தந்த தேவ, தெய்வ லோகத்திற்கு எடுத்துச் செல்கின்றார் என நாமறிவோம். அதே சமயம் ஹோம பூஜை செய்வோரின் அழ்ந்த நம்பிக்கையைப் பொறுத்து அந்தந்த தேவதா மூர்த்தியே கூட ஹோம குண்டத்திலேயே ஆவாஹனமாகி ஆஹுதிகளை நேரடியாகப் பெற்று மகிழ்ந்து ஆசிர்வதிப்பதும் உண்டு. நம் திருஅண்ணாமலை ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தில் சற்குருவின் மேற்பார்வையில் நிகழும் அபூர்வமான ஹோமங்களில் தேவாதி, தேவ, தெய்வ மூர்த்திகளே நேரில் ஹோம ஆஹுதிகளைப் பெற்றுச் செல்கின்ற அற்புதக் காட்சிகளைப் பலரும் உணர்ந்து ஆனந்தித்துள்ளனர்.

ஹோமத்திற்கு “ஸ்வாஹா” அக்னிமூர்த்தி உள்ளது போலவே ஒவ்வொரு தர்ப்பணாக்னி சக்தியையும் “ஸ்வதா” அக்னி தேவி என்ற தேவியே அந்தந்தப் பித்ரு லோகங்களுக்கு தர்ப்பணத் தீர்த்த சக்தியை எடுத்துச் செல்கின்றார். ஆனால் தர்ப்பணம் செய்பவரின் ஆழ்ந்த நம்பிக்கை, பக்தி நிலையைப் பொறுத்து தர்ப்பணம் செய்யும் தலத்திற்கே அந்தந்தப்ப் பித்ரு மூர்த்திகளும் நேரில் வந்து தர்ப்பணத் தீர்த்த சக்திகளை நேரடியாகவே பெறுவதும் உண்டு.

பொதுவாக, தர்ப்பைப் பாய், எள், பசுமடிக் காம்புச் சங்கு, மிண்டு ரங்க மூங்கில் குவளை, பிரண்டை, புடலை விதை ஆகியவற்றைக் கொண்டு குருவருள் நிறைந்திட, ஆழ்ந்த நம்பிக்கையுடன் செய்யப்படும் தர்ப்பணங்களில் பித்ருக்களே நேரில் வருகின்றனர். தீயத்தூர், பூவாளூர், திருப்புனவாசல், தீர்த்தாண்டதானம், நெடுங்குடி, திருவிடைமருதூர், திருமீயச்சூர், இராமேஸ்வரம் போன்ற பித்ரு சக்தித் தலங்களில் இவ்வாறு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியே நேரில் வந்து அளித்த தர்ப்பணத்தைத் தசரதரே குறித்த ரூபத்தில் நேரில் பெற்றுச் சென்ற வைபவங்களை, பித்ரு லீலைகளை நான் நன்கு அறிந்துள்ளோம் அல்லவா!

இதே போல் குருந்த மரத்தடியில் அளிக்கும் தர்ப்பணத்தையும் பித்ரு தேவர்களும் தம் பரிவாரங்களுடன் நேரில் வந்து பெற்று ஆசீர்வதித்துச் செல்கின்றனர்.!

வேதத் தர்ப்பண சக்திகளின் சாதனைத் தலம்!

அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகத் தலத்தின் மிகவும் அற்புதமான விசேஷ அம்சம் யாதெனில் கொன்றையடி விநாயகரின் நேரடிப் பார்வையில் இங்கு தர்ப்பணம் நிகழ்வதாலும், சுற்றிலும் வேத சக்திகள் நிறைந்த கொன்றை மரங்கள் சாட்சிப் பூர்வமாக நிற்பதாலும் அமாவாசை மட்டுமின்றியும் மாதப் பிறப்பு, கிரகணம் போன்ற குறித்த பல தர்ப்பண சக்தி நாட்களிலும் வஸூபலாதி, ருத்ரவிதானி, ஆதித்ய சம்புடத் தர்ப்பண சக்திகள் இங்கு கொன்றை மற்றும் குருந்த வேரோட்டத்தில் விருத்தியாகி ஊறிக் கொண்டே இருப்பதால் மகத்தான அமாவாசைத் தர்ப்பணத் தலமாகவும் இது விளங்குகின்றது. குருந்த மரத்தடியில் தர்ப்பணம் அளிக்கின்ற வாய்ப்புள்ள தலங்கள் மிகமிக அரிதானவையே! இவற்றுள் ஒன்றாக அரண்மனைப்பட்டி விநாயக பூமி விளங்குவது நமக்குப் பெரும் பாக்யமே!

எனவே இங்கு இவ்வகையில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் குருந்த மரத்தடியில் அமாவாசை மற்றும் சனிக் கிழமையில் அளிக்கப்படும் தர்ப்பண சக்திகளைப் பெற்றிட பல்லாயிரம் தலைமுறைகளுக்கும் நற்கதி தந்திட, எண்ணற்ற பித்ரு தேவர்கள் சூக்குமமாக இங்கு கூடுகின்றார்கள்! பித்ரு தேவ மூர்த்திகளும் பலவிதமான உத்தம தெய்வீக நிலைகளை அடைய வேண்டிய பல விசேஷமான பூஜைகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது அல்லவா! குருந்த மரத் தர்ப்பண சக்திகளோடு, குழந்தை பாக்யத்தை தரும் சந்தான விருத்தி சக்திகளும் வேதமாசக்திகளுடன் கூடிப் பொலியும் தலமாக அரண்மனைப்பட்டி விநாயக பூமி விளங்குவதும் நம் அதிர்ஷ்டமே! ஆகவே மிகச் சிறந்த அமாவாசைத் தலமாகவும், பித்ருக்களின் பூஜா பூமியாகவும் விளங்குவதே அரண்மனைப்பட்டி விநாயகத் தலம்!

பலரும் அறியா சிர்ரோர் பவ சக்திகள்!

“குருந்தாய பித்ருச்ருதபலம், சிர்ரோப்பணம், தர்ப்பணம், அர்ப்பணம், சமர்ப்பணம்” என்பது பித்ரு வேத் ஸூக்த மகாமந்த்ர வாக்கியமாகும். பலவிதமான தேவநேத்ர சக்தி வழிபாட்டுப் பலன்களி “சிர்ரோர் படல தரிசனம்” எனும் ஒரு வகை உண்டு. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, சிவபெருமான் போன்ற தெய்வ மூர்த்திகள் விஸ்வரூப தரிசனங்களை அளிக்கும் போது இந்த சிர்ரோர் நேத்ர சக்தியை முதலில் பார்ப்பவர்களுக்கு அளித்து விஸ்வ ரூப தரிசனத்தைக் காணும் நேத்ர பலத்தையும் சேர்த்துத் தந்து அருள்பாலிக்கின்றார்கள். இச்சிர்ரோர் நேத்ர சக்தியையும் மானுட ரூபத்தில் பிறருக்கு அளிக்கும் சக்தியைப் பெற்றவரே அருணாசல ஞான யோகியான சத்குரு ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள்! இந்த சிர்ரோர் நேத்ர சக்தியின் ஆசியைப் பெற்றோரே பீஷ்மர், அர்ஜுனன், அக்ரூரர், குசேலன் போன்றோர் ஆவர்.

இரட்டைப் பனைமரம் அரண்மனைப்பட்டி

பெரும்பாலும் குருந்த மரத்தடியில் இருந்தே அனைத்து தெய்வ மூர்த்திகளின்  விஸ்வரூப தரிசனம் எழுந்தருளும்! ஆவுடையார் கோயிலில் இறைப்பரம் பொருளே சற்குருவாய் வந்து மாணிக்கவாசகரை ஆட்கொண்டது குருந்த மரத்தடியில்தானே! எனவே, சிர்ரோர்பவம் என்பது அதியற்புத நேத்ர சக்தியாகும். கண்களால், கண்களுக்கு, கண்களுக்குள் கிட்டும் கண்ணுக்குக் கண்ணான தரிசனம்!

இங்கு தர்ப்பண வழிபாட்டை மேற்கொள்தல் மூலம் இதுவரை முறையாக அமாவாசைத் தர்ப்பணம், திவசம், படையல் வழிபாடுகளை மேற்கொள்ளாதோர் ஓரளவுப் பிராயச்சித்தம் பெற்று, இனியேனும் நன்முறையில் பித்ரு வழிபாடு மேற்கொண்டால் நல்வழி பெறுவர். குருந்தை மரம், இரட்டைப் பனை மரம், கொன்றை மரங்களினூடே ஸ்ரீகொன்றையடி விநாயக சந்நிதி வளாகத்தில் இத்தர்ப்பண வழிபாடு நிகழ்வதால், சுற்றிலும் வேத விருட்சங்களின் சாட்சிப் பிரமாணத்துடன் நிகழும் தர்ப்பண வழிபாட்டிற்கு மகத்தான சக்திகளை வேதவதிகளே மனமுவந்து அளிக்கின்றனர்.

கலியுகத்தில் மனித சமுதாயம் மறந்து விட்ட முக்கியமான பல வழிபாடுகளை மீண்டும் முறைப்படுத்துவதே சித்தர்களின் பெருங்கடமையாக விளங்குகின்றது. ஆனால் பண்டைய யுகங்களில் கிட்டிய ஹோம மூலிகா சமூலங்கள், திரவியங்கள், வழிபாட்டு முறைகள் பலவும் தற்போது கிடைக்காமல் போனமையால் இதற்கு ஈடுதருகின்ற பல முக்கிய வழிபாட்டு முறைகளையும் சித்புருஷர்கள் அளிக்கின்றார்கள்.

கராவலம்ப சக்தித் தர்ப்பணம்

முறையாக இதுவரையில்ல் பித்ரு வழிபாடுகளைக் கடைபிடிக்காதோருக்குத் தக்கப் பிராயச்சித்த வழிகளைத் தருவதாக “கராவலம்ப சூக்தத் தர்ப்பணம்” எனும் முறையில் தர்ப்பண வழிபாடு குருந்தை மரத்தடியில் நிகழ்த்தப்பட வேண்டும்! சூக்தம் என்றால் அற்புதமான மறைத் தோத்திரங்கள் என்று பொருள். குருந்த மரம் மறைப் பிரகாசம் கொண்டதால் இதன் இலை, தழை, காய் போன்று அனைத்து அம்சங்களிலும் சூக்த சக்திகள் பொதிந்துள்ளன! சூத்திரம் என்றால் மறைவாய்ப்பாடு என்று பொருள்! மறைத் தத்வார்த்தங்கள் மிகும்போது கணிதம் போல பல மறைத் துறைகளை உள்ளடக்கி எளிய சூத்திரங்களாக நம் பெரியோர்கள் நமக்கு அளிக்கின்றனர்.

கொடிய கர்ம வினைகளினால் நரக லோகங்களில் அவதியுறும் முன்னோர்கள், இத்தகைய “கராவலம்ப சூக்தத் தர்ப்பணப்” பூஜை மகிமையால் இத்தர்ப்பணத்தின் உத்தம சக்தியால் நற்பரிகாரங்களை அடைகின்றனர். ஜாதி, மத, இன, குல பேதமின்றி யாவர்க்கும் உரித்தானதே இத்தகைய “கராவலம்ப சூக்தத் தர்ப்பண” வழிபாடு.

கொன்றை மரம் மட்டுமன்றி ஆலமரத்தடி, பூவாளூர் ஸ்ரீபல்குனிச் சித்தரின் திருச்சன்னதி, இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம், திருவிடைமருதூர் திருக்குளம், சென்னை பூந்தமல்லி அருகிலுள்ள நேமம் போன்ற பித்ரு தோஷ நிவர்த்தித் தலங்களிலும் அமாவாசைத் தர்ப்பணம் அளிப்பதால் பித்ருக்கள் சாந்தமுறுவதோடு சந்ததிக்கும் மகத்தான நல்லாசி கிட்டும்.

பைரவ பூமி விநாயகர்!

ஸ்ரீகாலபைரவர் தோன்றிய பைரவ பூமியில் உற்பவித்தவரே கொன்றையடி விநாயகர் ஆதலால் இங்கு அமிர்த யோக பூஜை, குளிகை கால பூஜை, யோக பூஜை, கரண பூஜை என கால அம்சங்களுக்கு ஏற்ப செய்யப்படும் வழிபாட்டு முறைகளில் அபரிமிதமான பூஜாபலன்கள் கிட்டும். எந்தக் கிழமை, நட்சத்திரத்தில், யோக, கரணத்தில் எத்தகைய வழிபாடு நிகழ்த்தினால், எத்தகைய பலன்கள் கைகூடும் என்பது பற்றிய பிரம்மாண்டமான விளக்கங்கள் சித்புருஷர்களின் ஞானப் பத்ரக் கிரந்தத்தில் அளிக்கப்பட்டுள்ளன.!

வரும் கலியுக ஆண்டுகளில் பைரவ வழிபாடு மீண்டும் உன்னதம் பெற இருப்பதால் பைரவ பூமித் தலத்திலுள்ள தல விருட்ச வழிபாடுகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக விளங்குகின்றன. மேலும், சுபானு ஆண்டில் பாத யாத்திரையாக அடிப் பிரதட்சிணம் செய்யப்பட வேண்டிய, “நடந்து” நடத்தி வைக்கப்பட வேண்டிய பூஜைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகத் துலங்குவதால், வேத விருட்சங்கள் நிறைந்த பைரவ பூமியான அரண்மனைப் பட்டியில் ஸ்ரீகொன்றையடி விநாயகர் திருச்சன்னதி சுற்றிலும் கொன்றை மரங்களும், குருந்தை மரமும், பனை மரமும் நிறைந்திருப்பதால் இங்கு வேத நீரோட்டங்கள் பொலிவதாலும் இங்கு பாதயாத்திரையாக வந்து செய்யப்படும் பால்குடம், காவடி போன்ற வழிபாடுகளும் சிற்ப்படைகின்றன !

இங்கு தர்ப்பணம் அளிக்கும்போது வேத நீரோட்டத்துடன், தர்ப்பண நீரும் சேர்ந்து இரட்டைப் பலன்களாகப் பித்ருக்களைச் சென்றடைவதால் அவர்கள் ஆனந்தித்துத் தம் சந்ததியினரை ஆசீர்வதிக்கும் அற்புதத் திருத்தலமாகவும் கொன்றையடி விநாயகத் தலம் விளங்குகிறது. பல மஹான்கள், யோகிகள், சித்தர்களின் திருப்பாதம் பட்ட பூமி!

குறைவில்லா இறைசக்திகள் நிறைந்த பூமி!

மனிதனுக்கு ஏற்படுகின்ற பலவிதமான துன்பங்களை அக்னி சக்தி, ஹோம சக்தி, வேத சக்தி, மந்திர சக்தி, விருட்ச சக்தி, தல தரிசன சக்தி, புண்ணிய நதி சக்தி (தீர்த்த நீராடல்), பிராண சக்தி (அன்னதானம்) போன்ற பலவற்றின் மூலமாகவே தீர்க்க முடியும். கலியுகத்தில் வேத சக்திகள் மறைந்து வருவதாலும், தமிழ் மற்றும் தேவ மொழி வேதத்தை ஓதுவோர் அருகி வருவதாலும் கொன்றையடி விநாயக பூமி, திருக்கழுக்குன்றம், திருவேற்காடு போன்ற வேதபூமித் தல தரிசனங்கள் தாம் அவரவருக்குத் தேவையான வேத சக்திகளைப் பெற்றுத் தரும். எனவே பூலோக ஜீவன்கள் அனைத்திற்கும் ஆண், பெண், ஜாதி, மத, இன, மனிதன், விலங்குகள் பேதமின்றி வேதசக்திகளை அளிப்பவரே கொன்றையடி ஸ்ரீவிநாயக மூர்த்தி ஆவார்!

கொன்றை மரத்தின் வேரிலிருந்து கொன்றைப் பூ, காய் வரை அனைத்தும் வேதத்தின் பல அம்சங்களே ஆகும். கொன்றை வனமாக இருந்த இப்பைரவ பூமியில் சுயம்பாய்த் தோன்றிய கொன்றையடி விநாயகரே நம் பாரதப் புனித பூமி மற்றும் நாம் வாழும் இப்பூவுலகிற்கும் மட்டும் அல்லாது அனைத்து லோகங்களுக்கும் வேத சக்திகளைப் பூத்துப் பரிமளிக்கச் செய்பவர்.! விவசாயிகள், இறையடியார்கள், வணிகர்கள், சிறுவர், சிறுமியரின் வடிவில் எத்துணையோ சித்தர்கள், யோகியரின் திருக்கரங்களால் அபிஷேக ஆராதனை செய்து நல்வரம் கூட்டிய புண்ணிய பூமியாதலால், மாதம் ஒரு முறையேனும் ஸ்ரீகொன்றையடி விநாயகப் பெருமானை குறிப்பாக சதுர்த்தி, சதுர்த்தசி போன்ற நாட்களில் இங்கு வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

உப்பூர் விநாயகர், நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்சி வெக்காளி அம்மன் போன்ற தலைக் கூரை இல்லாது வானமே குடையாக, நிழலாக அமையும் வெட்ட வெளியில் அருள்பாலிக்கும் பிரபஞ்சநாத மூர்த்திகளுக்கு அதியற்புத சக்திகள் உண்டு. அரண்மனைப்பட்டியில் வான்வெளி மூர்த்தியாகவும், கொன்றை மரத்தடி நிழலிலுமாக அருளும் கொன்றையடி விநாயகர் மகா சக்தி வாய்ந்தவர்! கொன்றையடி விநாயகருக்கு ப்ரீதியான பூஜா திரவியங்கள் பூஜை முறைகளும் உண்டு.

பூஜை முறைகள்

 1. வில்வம், செம்பருத்தி, மகிழம்பூ திரவியப் பொடிகள் கலந்த சாம்பிராணி தூபம்.
 2. கையால் அரைத்த சந்தனக் காப்பில் மாதுளை முத்துக்களைப் பதித்துக் காப்பிடுதல்.
 3. முழு முந்திரிகள் கலந்த மோதகக் காப்பு.
 4. வேத சக்திகள் நிறைந்த புடலங்காய், பிரண்டை, வெண்டைக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, கலந்த உணவு படைத்து அன்னதானம் அளித்தல்.
 5. திங்களன்று வெள்ளை, நிறச் சங்குப் புஷ்ப மாலை சார்த்துதல், வெள்ளியன்று கருநீல நிறச் சங்குப் புஷ்ப மாலை சார்த்துதல்.
 6. புதனும், ஹஸ்தமும் சேரும் நாளில் (விநாயகர் மகாபாரதம் எழுதிய திருநாள்) பனை ஓலையில் எழுத்தாணியால், “ஓம்” மற்றும் “ஸ்வஸ்திக் சக்கரம்” வரைந்து பனை ஓலை மற்றும் பனை வெல்லக் கட்டிகளை மாலையாக்கி அணிவித்தல்!
 7. குறைந்தது 21 பெரிய செவ்வாழைப் பழங்களை மாலையாக்கி, செவ்வாயன்று சார்த்துதல்!
 8. குருவாரமாகிய வியாழனன்று மஞ்சள் நிற கேசரி காப்பு இட்டு வழிபடுதல்.!

இவ்வாறாக வேத சக்திகளை கிரகிக்கும் வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. அவரவர் வசதிக்கேற்ப நிறைவேற்றிடுக! கொன்றையடி நிழலே பல நோய்களுக்கு நிவாரணம் தர வல்லதாம். மன கிலேசங்களையும், மன பயங்களையும் அகற்றக் கூடியதாகும். சுற்றிலும் பகைமை, விரோதிகள், பொறாமை கொண்ட உறவினர்கள், பங்காளிகள், வியாபாரப் பகைமையுடன் வாழவேண்டி இருப்போர், எப்போதும் ஒருவித மனோ பயத்திலேயே வாழ்வோர் – இவர்கள் கொன்றையடி விநாயகரை 108 தாமரைப் பூக்களால் அலங்கரித்து, தர்பைப் பாயில் அமர்ந்து கொன்றையடி விநாயகரைப் பார்த்தவாறு கணபதிச் சிந்தனையில் லயித்து அமர, தாமரை இதழ்களின் வேத சக்திகள் மூலமாக மனோ பீதிகளை ஈர்த்துக் கரைத்துக் கணபதி நம்மைக் காப்பாற்றுகின்றார்.

இவ்வாறு உலகில் உள்ள பூக்கள் யாவும் ஜீவன்களுடைய கர்ம வினை அழுத்தங்களை காலை, மாலை வேளைகளில் ஈர்ப்பதால்தாம் அவை ஒரே நாளிலேயே வாடி விடுகின்றன. இத்தகைய தியாகமயப் பூக்கள் அருள்வளம் கொண்டு வாழ்வதால்தான் அவை இறைவனின் திருமேனியை அலங்கரிக்கும் பாக்யத்தைப் பெறுகின்றன!

தாழமங்கை

பரமேஸ்வரன், பரமேஸ்வரி, மகேஸ்வரி, மகேஸ்வரன், கோடீஸ்வரி, ஈஸ்வரன், ஈஸ்வரி, ராஜேஸ்வரி, காமேஸ்வரன், காமேஸ்வரி போன்ற “ஈஸ்வரப்” பெயருடையோர் அடிக்கடி வழிபட வேண்டிய தலம்!

சித்திரைச் சதய நட்சத்திரத் திருநாளில் தாழமங்கை ஸ்ரீசந்திரமௌளீஸ்வர சிவலிங்கத்திற்குக் காப்பிட குடும்பத்துடன் சந்தனம் அரைத்துத் தந்திடுவீர்!

சித்திரை மாத வழிபாட்டில் மங்களமான பலன்களைத் தரும் தாழமங்கை ஸ்ரீசந்தரமெளீஸ்வரர் சுபத்திற்கு சுபிட்சம் தரும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பிகை! தம்பதியர் மன சாந்தியுடன் நீண்ட ஆயுளுடன் வாழ உதவும் தாழங்கை ஸ்ரீசந்திரமெளீஸ்வரர் சிவலிங்க மூர்த்தி!

தஞ்சாவூர் கும்பகோணம் மார்கத்தில், தஞ்சாவூரிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுபதி கோயிலில் இறங்கித் தாழமங்கைக்குச் செல்ல வேண்டும் !

ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன்
தாழமங்கை

“சித்திரைச் சதயம், முக்தித் திறத் தழையம்” என்பது சித்தர்களின் பொய்யா வாக்கு! அதாவது சிறு எள்மணி வித்தில் மறைந்திருக்கும் மணமுள்ள தைலம் போல், சித்திரை சதய நாளில் தாழமங்கை சிவமூர்த்திக்கு இடும் சந்தனக் காப்புப் பலன்களானவை யோக, வேத, மந்த்ர வழிமுறைகளில் நல்முக்தித் திறத்துக்கு வித்தாகித் தழைத்து நன்கு விருத்தியாகி முந்தைய, வளரும், வருங்கால ஆகிய முச்சந்ததிகளின் சுபிட்ச வளத்திற்கும் தீர்கமாக நிலை பெற்று அருளும் என்பது பொருளாகும்.

ஆலய பூஜா பலன்கள் நன்கு சுபிட்சமாக விருத்தியாகிப் பல தலைமுறைகளுக்கும் பரந்து நிரவும் அபூர்வமான ஆலயங்களுள் ஒன்றே தாழமங்கை ஸ்ரீராஜராஜேஸ்வரி சமேத ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் சிவாலயமாகும்! காரணம், ஸ்ரீராஜராஜேஸ்வரி என்ற பெயரில் அம்பாள் வடிவுகளுக்கு எல்லாம் ஆதி மூல அம்பிகையாக, சர்வேஸ்வரியாக, ராஜஅம்பாள் மூர்த்தியாக அம்பாள் அனுகிரகிக்கும் அதியற்புதத் தலமே தாழமங்கையாகும்.!

தழையம் என்றால் எப்போதும் வளமாகப் பொழிந்து கொண்டிருப்பது என்று பொருள் ! எனவே எப்போதும் சுபவளம் தரும் “தாழமங்கை” சுபிட்ச பூமியில்தான். இறைப் பெருங் கருணையால் ஸ்ரீராஜராஜேஸ்வரியாக அம்பிகை அவதரித்தனள்! எனவே சுமங்கலிப் பிரார்த்தனை, திருமணம், சதாபிஷேகம் போன்ற மங்களகரமான வைபவங்கள் நன்கு நடைபெற்றிட வேண்டி வணங்க வேண்டிய தலங்களுள் ஒன்றே தாழமங்கை சிவாலயம் ஆகும்.!

பொங்கும் மங்களம் இங்கும் தங்கிடும்!

நாம் வாழும் பூமி மட்டும் அல்லாது, பிரபஞ்சத்தில் உள்ள எத்தனையோ பூமிகளுள் துலங்கும் மங்களப் பொருட்களில் பெரும்பான்மையானவை நம் பாரத மண்ணில் தாம் காணக் கிடைக்கின்றன. மங்களகரமான, சுபிட்சமான திரவியங்களான மஞ்சள், குங்குமம், சந்தனம் போன்றவற்றின் உற்பவிப்பிற்கு ஆதிமூல வித்தாக, சிருஷ்டிக் காலத்தில் துலங்கிய தலமே தாழமங்கை ஆகும்.!

ஆதியுகங்களில் தினமுமே பௌர்ணமி போல் முழுப் பிரகாசத்துடன் அனைத்துக் கலைகளுடனும் வானில் சந்திரன் திளைத்தார். ஆம், ஆதிகாலத்தில் பௌர்ணமிப் பிரகாசத்துடன் தினமும் வானில் நிலவொளி மிளிர்ந்தது. மூன்று சந்திரன்கள் பரிணமிக்கின்ற பூமிகள் இன்றும் உண்டு.

கர்த்தமப் பிரஜாபதியாம் தட்சனின் சாபத்தால் சந்திர பகவான் ஒளிப் பிரகாசத்தை இழந்து பதினாறு கலைகளும் தேய்ந்து, அவதியுற்று, ஈஸ்வரனிடம் ஒளி வளம் வேண்டிப் பல இடங்களிலும் தவங்கொண்டார். அப்போது சிவபெருமான் சந்திரனிடம் “சுபமங்களமாய் ஒளிப்பிரகாசம், சுபிட்சமாய் விருத்தியாகும் தலத்தில் அமுத ஒளி தழைக்கும் நிலை பெறுவாய்!” என வரமருளினார். இத்தலத்தில் சந்திரன் வழிபட்ட போது “மூன்றில் முழுதாக்கி முத்தொளியை முன்முடியில் முத்தாய்ப்பாய் முடிந்தோமே!” என ஓதி, ஆதிசிவன் தன் முன் சிரசில் மூன்றாம் பிறையை ஏற்றி அருளினார்.

இவ்வாறு ஆதிசிவன் மூன்றாம் பிறையை ஏற்ற அவதாரிகை நிகழ்ந்த தலங்களுள் சிறப்பானதே தாழமங்கை ஸ்ரீசந்திரமெளீஸ்வரர் ஆலயமாகும். முப்பத்து முக்கோடி தேவாதி தேவர்களும், மகரிஷிகளும் பல அரிய பூஜைகளின் பலாபலன்களை அறியாது திகைத்த போது இத்தலத்தில்தாம் ஸ்ரீராஜராஜேஸ்வரியைச் சரணடைந்து தங்களால் பெற இயலாத தாழமங்கை அட்சர மந்திர சக்திகளைத் தந்தருளுமாறு வேண்டினர்.

ஸ்ரீசந்திரமௌலீஸ்வரர்
தாழமங்கை

புனிதமான தாழமங்கை அட்சரத் தலம்!

உலகத்தின் அனைத்து மொழிகளிலும் தாழமங்கை அட்சரங்கள், தாழமங்கை, ஒலி த்வனிகள் என்று பல உண்டு. இவ்வரிய விளக்கங்களை ஸ்ரீஅகஸ்திய விஜயம் மார்ச் 2003 இதழில் அளித்துள்ளோம், அதாவது ஒவ்வொரு மொழியிலும் உள்ள உயிரெழுத்து, உயிர்மெய் எழுத்துக்களில் அனைத்துமே முழுமையாக வழக்கில் பயன்படுவது கிடையாது. பலவும் உரைநடையில் பயன்பட்டாலும், ஒலிப்பூர்வமாக மட்டுமே சில பயன்படும். பல அட்சரங்களும் வார்த்தையின் முதலில் வருவதும் கிடையாது. இவ்வாறு அந்தந்த அட்சரத்திற்கு உரிய ஒலிப்பீட இலக்கணங்களும் நிறைய உண்டு.

உதாரணமாக தமிழில் ழகர, ளகரங்கள் வார்த்தையின் முதலில் வருவது கிடையாது. இவ்வாறு வரலாகாது எனத் தமிழ் இலக்கணம் பகர்ந்தாலும் ஆன்மீக ரீதியாக இதற்கான விளக்கங்கள் மிகவும் சிறப்புடையவை!

தகை சார்ந்த “தாழச்சிவ சக்திகள்!”

உண்மையில் உலக மொழிகளின் அனைத்து அட்சரங்களிலும் சுபிட்ச சக்திகள் நிறைந்து பொலியும் அரிய அட்சரங்களுள் ஒன்றே செந்தமிழின் “ழ” எனும் எழுத்தாகும். “ழ”வில் பொதிந்துள்ள பீஜாட்சர சக்திகள், வேத குணங்கள், சப்த நாடிகள், லய த்வனிகள், மறைபொருள் தத்துவார்த்தங்கள், ஸ்வர லாவண்யம் போன்ற இவையாவும் மனிதனின் அறிவிற்கு அப்பாற்பட்டவை! இறையருளுடன் திளைக்கும் சற்குரு அளிக்கும் ஞானத்தால் மட்டுமே உணர வல்லவை! இவ்வாறு தெய்வ வளம் நிறைந்த “ழ”வின் அபூர்வமான அட்சர ஆத்ம சக்திக்கு “(தா)ழச்சிவத்தின்” இறைமறைப் பொருளை, பயனை நாம் உணர முடியும்.

“ழ”வின் (தா)ழச்சிவ ஆன்ம சக்தியை, தக்க சத்குருவின் அருளின்றி, எவராலும் உரைக்க, படிக்க, கேட்க, அறிய இயலாததால்தான், “ழ”விற்கு முன் உயிரெழுத்தையோ, உயிர்மெய் எழுத்தையோ சேர்த்து (உழவர், ஞானப்பழம்) இதன் அட்சர சக்திகளைக் “காப்பிட்டு” அரவணைக்கின்றோம். எனவே தாழமங்கை அட்சரம் என்பது தமிழ் மட்டுமன்றி, உலகின் பல மொழிகளிலும் அவ்வளவாக உரை நடையில், எழுத்தில் பயன்படா அட்சர சக்திகளைக் குறிக்கின்றது!

தரணியில் சக்தி வாய்ந்த தாழமங்கை அட்சரங்கள்!

ழோ, ழொ, ழீ, ழு, ஞே, ஞோ, ஞெ, ஞு, ஞௌ, ணெள போன்று பல தமிழ் எழுத்துக்களும் தமிழ் உரைநடை மற்றும் பேச்சு வழக்கில் அதிகமாகப் பயன்படா விட்டாலும், இவை தாழமங்கை அட்சரங்களாக, உரையா மொழி த்வனி, கேளா ஒலிப்பறை, உணரா ஒளிப் பொருள் ஆகிய பல அரிய சக்திகளைப் பெற்றுள்ளன. இத்தகைய தாழமங்கை அட்சரங்களின் ஒலிகளை நம் வாழ்வில் பல இடங்களில் கேட்டுக் கொண்டுதானே இருக்கின்றோம். எப்படி?

உதாரணமாக, ஒரு நாணயம் கீழே விழும் போதோ, தேனீ பறக்கும் போதோ “ங், ஙை  ஙோ, ஙெ’ என்று பல அட்சர ஒலிகள் எழுகின்றன அல்லவா! இதே போல நாம் செவியால் உணரும் ஒலிகளை எழுத்துப் பூர்வமாக விளக்க இயலாது பல தாழமங்கை அட்சரங்கள் பல வகைகளில் நமக்கு அருள் சுரந்து கொண்டிருக்கின்றன. மனிதனால் கேட்க முடியாத பல ஒலிகளை, நுகர முடியா பல வாசனைகளை மிருகங்களும், பறவைகளும், பெற வல்லவையாக விளங்குகின்றன..!

ஸ்ரீநந்தீஸ்வரர்
தாழமங்கை

“றகர” மாங்கமாம்!

இதே போல வல்லின “றகரம்” தமிழில் உரைநடைச் சொல்லின் முதலில் வராது என்றாலும் ஒரு கார் அல்லது மோட்டார்… சைக்கிள் புறப்படும்போது “ற்ற்ற்” என்று பல “றகர” ஒலிகள் முதலில் எழுகின்றன. உரைநடை வார்த்தையின் முதலில் வராத றகரம், ழகரம் போன்றவை இயற்கையான சப்தங்களில் முதலில் எழுகின்றன அல்லவா! இதிலும் பல ஆன்மீகத் தத்வார்த்தங்கள் உண்டு.

மேலும் ஒரு மல்லிகை அல்லது, பவழ மல்லிப் பூவைப் பறிக்கும் போது நமக்கு எந்த சப்தமும் கேட்கவில்லை என்று நாம் நினைக்கின்றோம். ஆனால் உண்மையில் பவழமல்லிப் புஷ்பங்களைப் பறிக்கும் போது “ழ, ளை, ல்” போன்ற ஒலிகள் தார்மீக ரீதியாக எழுகின்றன. எதிர்காலத்தில் இவை சப்தவழித் தமிழ் இலக்கணமாக, அகத்திய மாமுனியின் குருவருளால் இடம் பெறும்.

எழுத்தில் வரா எண்ணற்ற ஒலிகள்!

மற்றோர் உதாரணமாக, வானில் இடி முழக்கம், மழை பெய்தலின் போது கேட்கும் ஒலியினை ஆங்கிலத்திலோ, தமிழிலோ, வங்காள மொழியிலோ எந்த மொழியிலும் எழுதித்தான் பாருங்களேன்! எவ்வளவுதான் எழுதியும், சொல்லியும் பார்த்தாலும் இடி முழக்க சப்தத்தை எவராலும், எவ்வகையிலும், எந்த வாத்யக் கருவியாலும், எதனாலும் சரியாகக் கொண்டு வர இயலாது அல்லவா! இவ்வாறாக மனித சக்திக்கு அப்பாற்பட்ட ஆன்ம விளக்கங்கள் கொண்ட அட்சர சப்தங்களுடன் பூரிப்பவையே தாழமங்கை அட்சரங்களாகும்.!

நாம் கேட்கின்ற, ஆனால் உரையில் எழுத முடியா ஒலிப் பிரவாளங்கள் மற்றும் நம்மால் கேட்க முடியாத ஒலித்வனிகள் நிறையவே உலகில் உண்டு. இவற்றின் ஆன்ம சக்திகளையும் நாம் பெற, தாழமங்கை ஆலய வழிபாடு பெரிதும் துனை புரிகின்றது. எனவே தமிழறிஞர்கள் இவ்வாலயத்தில் சிறப்பான பூஜைகளையும், தமிழ் மறைகளை ஓதுதலையும் விருத்தி செய்ய வேண்டும்.

தாழமங்கையில் ஞானமன்றம் ஏற்றுவீர்!

தாழமங்கை அட்சரங்கள் அனைத்து மொழிகளிலும் உண்டு என்பதால் மொழி பேதமின்றி அனைத்து மொழி அறிஞர்களும் “அட்சர சதஸ்” போல் குழுமி, இறைமொழி ஞானமன்றம் ஒன்றைத் தாழமங்கையில் கூட்டி உலகின் அனைத்து மொழிகளின் தாழமங்கை அட்சரங்களின் ஆத்ம சக்திகளையும் மானுட சமுதாயம் பரிபூரணமாகப் பெற்றிட, மொழி வெறி, மொழி பேதமின்றி, இறைமொழி அன்பினை சுபிட்சமாக விருத்தி செய்து, மொழிவளம் பேணும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பிகையின் கருணைக் கடாட்சத்தைப் பெற்று இறையாக்கப் பூர்வமாகச் செயல்பட வேண்டும். ஏனென்றால் உலக மொழிகளில் அனைத்திலும் புதைந்திருக்கும் ஆன்ம சக்திகளை எழுப்ப வல்ல வாக்சக்தியைத் தமிழின் தேவார மறைகள் நிறையக் கொண்டுள்ளன! எனவே அட்சர சக்திகளால், அவற்றை முறையறிந்து பயன்படுத்திட, நாம் எந்த நற்காரியங்களையும் சாதித்திடலாம்.!

சித்திரைச் சதய நட்சத்திரத்தில்தாம் அகத்திய மாமுனி, தாழமங்கை அட்சரங்களால் ஆன அபூர்வமான நாமாவளிகளை, போற்றித் துதிகளை இங்கு தாழமங்கையில் வர்ஷித்து இறைவனை வழிபட்டார்.!

தாழமங்கை அட்சர சக்திகள் பிரபஞ்சத்தில் உற்பவிக்கும் அரிய தலங்களுள் ஒன்றாக விளங்குவதே தாழமங்கையாகும். இத்தகைய தாழமங்கை அட்சர சக்திகள் பொங்கிப் பொலியும் திருநாளில் ஒன்றே சித்திரை மாதத்தின் சதய நட்சத்திர நாளாகும். காரணம், சந்திர பகவான் சிவபெருமானின் சிரசில் பிறை வடிவில் பொலிந்து நித்தியச் சந்திரனாக சுபிட்சம் பெற சதய நட்சத்திர தேவியே ஸ்ரீராஜராஜேஸ்வரியை வேண்டி அருந்தவம் புரிந்த தலமே தாழமங்கை ஆகும்..!

சதய தேவி பூஜித்த சந்திரத் தலம்!

தாழைவனமாக ஒரு யுகத்தில் சிறந்த இத்தலத்தில், நாகங்கள் நிறைந்த தாழையடியில் கடுந்தவம் புரிந்த சந்திர பகவானின் பத்தினியாம் சதய நட்சத்திர தேவி, ஸ்ரீராஜ ராஜேஸ்வரியின் தரிசனத்தைப் பெற்று, தட்சனின் சாபத்தில் இருந்து சந்திர பகவான் விடுபடத் தக்க பரிகாரங்களைப் பெற்றுத் தந்த தலமாகும். சந்திர பகவான் தாமிழந்த பதினாறு கலைகளையும் பல திருத்தல வழிபாடுகள் மூலமாகவே பெற்றிட, 27 நட்சத்திர தேவியரும் பல திருத்தலங்களிலும் அருந்தவங்களையும், இறைப் பணிகளையும் ஆற்றினர் !

ஸ்ரீகருவூர் சித்தர்
தஞ்சை பெரிய கோயில்

தாழமங்கைத் திருத்தலத்தில் சந்திர பகவானும், சதய தேவியும் தம்பதியராகத் தம் கரங்களால் சந்தனம் அரைத்து, சிவலிங்கத்திற்குச் சார்த்திச் சிவதரிசனம் பெற்ற பெருநாளே சித்திரைச் சதயமாகும். தர்ம சீலனான மாமன்னன் ராஜராஜ சோழனும் மாதந்தோறும் சதய நட்சத்திர நாளில் தன் குடும்பத்துடன் இங்கு சந்தனம் அரைத்து சுவாமிக்குச் சந்தனக் காப்பு சார்த்திப் பேரருள் பெற்றான்.

நந்தியை நிலை நாட்டிய தாழமங்கைச் சந்தனக் கோளங்கள்!

தஞ்சாவூர் ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்தில் பெருநந்தியை முறையாகப் பிரதிஷ்டை செய்ய இயலாது ராஜராஜ சோழன் தவித்த போது கருவூர்ச் சித்தர், ராஜ குடும்பத்தாருடன் இங்கு வந்து அனைவரும் சந்தனம் அரைத்து சுவாமிக்கு, அம்பாளுக்குச் சார்த்திப் பதினாறு உருண்டைகளாக்கி, சந்திரனுக்குப் பதினாறு கலைகளைத் தந்ததன் உட்பொருளாக எடுத்துச் சென்று இறையாணையாகத் தம் உமிழ்த் தீர்த்தத்தால் பல மூலிகா பந்தனங்களுடன் கோளமாக்கித் தஞ்சைப் பெருநந்தியை நிலை பெறச் செய்யத் துணை புரிந்த அற்புதத் தலமே தாழமங்கை ஆகும்.

மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத் தலமே தாழமங்கை!

மாதந்தோறும் அமாவாசையில் இருந்து மூன்றாவது நாளாகிய சந்திர தரிசன நாளில் இங்கு தாழமங்கையில் இருந்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைப் பெறுதலால், தம்பதிகள் ஒற்றுமையாக வாழ்வர். சதாபிஷேக பாக்யமும் கிட்டும். கண்ணொளி பெருகவும். கண் புரை நோய்கள் தீர்வதற்கும் இங்கு சந்திர ஹோரை நேரத்தில் அபிஷேக, ஆராதனைகள் நிகழ்த்தி வழிபட வேண்டும். ஆயிரம் பிறைகளுக்கு மேல் தரிசித்த காஞ்சி மாமுனி பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தாழமங்கையில் இருந்து மூன்றாம் பிறை தரிசனத்தைத் தானும் பெற்றுப் பலருக்கும் இதன் மகத்துவத்தை விளக்கியுள்ளார்.

பொதுவாக கண் சம்பந்தமான நோய்கள் நிவர்த்தியாக – வலது கண்ணில் நோய் என்றால் ஞாயிறன்றும், இடது கண்ணில் நோய் என்றால் திங்களன்றும் – மௌன விரதமிருந்து அவரவர் குடும்பம், உற்றம், சுற்றம் சகிதம் இங்கு தாழமங்கைத் தலத்திற்கு வந்து சந்தனம் அரைத்துச் சுவாமிக்குச் சந்தனக் காப்பாக இட்டு (கரைத்த சந்தனப் பவுடர் கூடாது) அம்பிகையாம் ஸ்ரீராஜராஜேஸ்வரிக்குத் தாழம் பூக்களைக் கூந்தல் பட்டையாக அலங்கரித்துச் சார்த்தி, வழிபட்டு வர வேண்டும். மேலும் வெண் பொங்கல், தேங்காய் சாதம், இட்லி, கொழுக்கட்டை போன்ற வெண்மை நிற உணவு வகைகளைத் தானமாக அளித்து வரவேண்டும்.!

பல நூறு ஆண்டுகளுக்குப் பின் தொடர்கின்ற அற்புதச் சித்தரைச் சதயத் சந்தனக் காப்பு வைபவம்! பல நூற்றாண்டுகளின் சந்தனக் காப்புப் பூஜா பலன்களைத் திரட்டி அளிக்கும் பெறுதற்கரிய பூஜை! உற்றம், சுற்றத்துடன் நீங்களும் சந்தனம் அரைத்து, இந்த அரிய இறைப் பணியில் பலரையும் பங்கு பெற வைத்து அருள்வளத்தை அடைந்திடுக!

தாழமங்கை என்பது பல மொழிகளில் உள்ள தாழமங்கை வகை எழுத்துக்களுக்கு (அட்சரங்கள்) சுபிட்ச வளம் தந்து ஆன்ம சக்தியும் தந்திடும் அற்புதத் தலமாகும். வேறங்கும் பெற இயலா பல அரிய மங்கள சக்திகள், சுபரேகைகள், சுபகிரணங்கள், சுப ஒலிகள் கொழிக்கும் புண்ணிய பூமியும் தாழமங்கையே! ஆனால் தற்போது நலிவடைந்திருக்கும் இவ்வாலயத்தில் தக்க பூஜைகளைக் கடைபிடித்தால்தானே இங்கு திரளும் அபரிமிதமான மங்கள, சுபிட்ச சக்திகளை மனித சமுதாயம் பெற முடியும்.

செந்தமிழுக்கு இறைவளம் கூட்டும் தமிழ் மறைகளை ஓதுதலும் தற்காலத்தில் மறைந்து வருவதால், உலக மொழிகளுக்கெல்லாம் மூத்தான தெய்வத் தமிழ் மொழியின் ஆன்மீகச் சிறப்பு அம்சங்களைக் கட்டிக் காத்தருள வல்ல ஆலயங்களை அறிந்து தரிசித்து இறையருளை நாடுதல் வேண்டும்.

தாழமங்கை என்றாலே சுபிட்சத்திற்கும் சுபவளம் அளிப்பது என்று பொருள்! என்றும் சிரஞ்சீவித்வ சுமங்கலியாய், அகில உலகிற்கும் அன்னையாய், ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாய் விளங்கும் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பிகை அருளும் தாழமங்கைச் சிவத்தலமோ தற்போது மிகவும் சிதிலமடைந்து உள்ளது. ஒரு காலத்தில் ஆண்டு முழுதுமே திருவிழாக் கோலம் பூண்ட உத்தமத் திருத்தலம் இன்று இடிபாடுகளுடன் இருப்பது வேதனையாக உள்ளது. அற்புத சுபிட்ச வளம் நிறைந்த இப்புனித பூமியில் உறையும் தாழமங்கைச் சிவாலயத்தை, இனியேனும், பல நூறாண்டுகளுக்கு முன் திகழ்ந்தது போல், பிரம்மாண்டமான திருவிழாக்கள் நிகழ்ந்த சிவபூமியாக மீண்டும் ஆக்கிட வேண்டியது பக்த கோடிகளின் கடமையாம், குறிப்பாக, பூச நட்சத்திரத்தில் பிறந்தோர் இதனைத் தம் வாழ்வின் இறைலட்சியமாக ஏற்று நடத்துதல் வேண்டும்.!

பல மொழிகளில் உள்ள சில அட்சரங்கள், உரையில் அதிகம் பயன்படாததாக, ஒலி வடிவில் மட்டும் துலங்குவதாக, தாழமங்கை அட்சரங்களாக விளங்குகின்றன! தாம் இன்னம்பூரில் ஆதிசிவனிடம் இருந்து நேரடியாகவே பெற்ற ஒலி, ஒளி உரை, கவித் தமிழ் இலக்கண விரிவுகளை, அந்தந்த அட்சரத் தலங்களில் ஞானக் கிழியாகப் பல சித்தர்களுக்கும் ஸ்ரீஅகஸ்திய மாமுனி அளித்திட்டார். ழகர, ளகர, லகரத்தைத் தமிழ் உலகிற்குப் பெற்றுத் தந்த சித்தர்பிரானாகிய வழநாத வெளிப் பிரவாகச் சித்தர் ஸ்ரீஅகஸ்தியரைக் குருவாகக் கொண்டவர். அவர் இங்கு தாழமங்கையின் நறுமணம் கொழிக்கும் தாழை வனத்தில் பல யுகங்கள் கடுந்தவம் புரிந்து “ழ” அட்சரத்தின் பல அரிய சக்திகளையும், உத்தம அட்சர வடிவையும், ஆதித் தமிழுக்குப் பெற்றுத் தந்தார்.

“ங” எனும் அட்சரம் (சென்னை அருகே) மப்பேடு சிவத் தலத்தில் ஸ்ரீசுதபுத மகரிஷியால் ஆக்கம் பெற்றது போல், “ழகர” எழுத்து, ஸ்ரீவழநாத வெளிப் பிரவாகச் சித்தர் மூலமாக ஆதிமுதலில் உற்பவித்தத் திருத்தலமே தாழமங்கை ஆகும். ஒவ்வொரு அட்சரத்தின் பல இறை அம்சங்களும், இறைவனின் திருமேனியில் பல இறை அம்சங்களும், இறைவனின் திருமேனியில் பல இடங்களில் இருந்து உற்பவிக்கின்றன. இவையே பல இறையாட்சரத் தலங்களாகவும் பரிமளிக்கின்றன. இவ்வகையில், சிவபெருமானின் சிரசிலிருந்து உதித்த அட்சரமும், ஆதி சிவனின் சிரசில் ஒளிரும் சந்திர பகவானுக்கு ஒளிப் பீடமாக அமைந்து தாழச்சிவமெனும் ஒலிப் பிரவாக அட்சர சக்திகளைத் தோற்றுவிப்பதும் “ழ” எழுத்தே (அட்சரம்) ஆகும்! ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பிகை இங்கு உற்பவித்த போது அம்பிகையின் மகத்துவத்தையும், ஆதிசிவனின் சிரசில் சந்திரனுக்கு ஒளிப் பீடமாக அமையும் “ழகரத்தின்” இறைசக்தியையும், தாழமங்கைத் தலத்தின் உலகில் வேறெங்கும் காணக் கிடைக்கா சுபிட்ச குண வளத்தையும் ஸ்ரீஅகத்திய மாமுனி

“விழித்தழிக் கொழிச்சுழி உழிப்புழித் தழிப்பொழி” என்ற வகையில் ஓர் அற்புதச் சித்தர் பரிபாடற் சூத்திரமாகத் தந்துள்ளார். இதில் ஸ்ரீராஜராஜேஸ்வரி வடிவின் கல்ப சூத்திர விளக்கங்களும், தாழமங்கையின் மகத்துவமும் சூட்சுமமாக நன்கு விளக்கப்பட்டுள்ளன. எனவே சித்தர்களின் “ழகர” ஒளிச்சாகரத் துதி அம்சங்களுடன் தோன்றியவளே, மொழிச் சுடராளான ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பிகை!

ழகர அட்சரம் உற்பவித்த சிவத்தலம்!

இறைவனுடைய திருமேனியின் ஒவ்வொரு அம்சத்தில் இருந்தும் பிறந்தவையே அனைத்துத் தமிழ் அட்சரங்களும், இதில் இறைவனின் முன் சிரசில் பிறந்ததே “ழ” அட்சரமாகும். இந்த ழகர ஒளிப்ரகாசப் பீடத்தில் தாம் மூன்றாம் பிறைச் சந்திர மூர்த்தி அமர்ந்துள்ளார். “ழ”வை எழுத்து வடிவில் பொறிக்கும் போது தோன்றும் பீஜாட்சர முடிச்சிற்கு “ஞானக் கிழி” என்று பெயர். இத்தலத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபடுவோர்க்கு ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்பிகையால் தமிழறிஞர்களுக்கு ஞானப் பரிசாக அளிக்கப்படுவதே தாழமங்கை அட்சர சக்தியாகும்.

இத்தகைய ஞானக்கிழித் தலமாகத் தாழமங்கை விளங்குவதால், அக்காலத்தில் ஆயிரக்கணக்கானோர் ஜாதி, குல பேதமின்றி சத்சங்கமாக அமாவாசைக்குப் பிறகான, சந்திர தரிசன நாளில் கூடி, மூன்றாம் பிறைச் சந்திரனைத் தரிசிக்க கூடுவர். ஒருமுறை இத்தலத்தில் இருந்து மூன்றாம் பிறைச் சந்திரனை முறையான பூஜைகளுடன், குருவருளுடன் தரிசித்தால் பல தலைமுறைகளுக்கும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசன பூஜா பலன்கள் ஆத்ம சக்தியாகச் சென்றடையும்.

சந்தன விருட்சம் பிறந்தது சதய நட்சத்திரம் கூடிய மூன்றாம் பிறை நாளில்தான்! பரசுராமர் சந்தன நறுமணத்தை இங்கிருந்துதாம் பெற்றுச் சென்று சந்தன அம்சங்களில் பொருத்தினார். இதனால்தான் இன்றும் கேரளப் பகுதிகளில் சந்திரப் பிறை போல் நெற்றியில் சந்தனப் பொட்டை இடுவர்.

சந்தன நறுமணம் சந்திர மண்டலத்தில் பிறந்தது ஆதலின் தாழமங்கைத் தலத்தில் சிவபெருமானுக்குச் சித்திரைச் சதயத்தில் சந்தனக் காப்பு இட்டு வழிபடுவதால் மன அமைதியும், அபூர்வமான ஞானமும் கிட்டு. சந்திர மண்டலத்தோடு கிரண நீரோட்டத் தொடர்பு கொண்டதே தாழமங்கை ஸ்ரீசந்திரமெளளீஸ்வரர் திருத்தலமாகும்.!

மாதந்தோறும் இங்கு அடியார்கள் வந்து மூன்றாம் பிறை தரிசனத்தைப் பெற்று வழிபடுவதால் இல்லற மற்றும் சமுதாயக் கொந்தளிப்புகள் மறைந்து மனித சமுதாயத்தில், தேவையில்லாத பீதிகளும், வன்முறைகளும் அகன்று அன்பு நேயம் கூடிய சாந்தம் பெருகிடும்.

சித்திரைச் சதய்ச் சந்தனக் காப்புத் திருநாளில் தாழமங்கைச் சிவமூர்த்திக்குச் சந்தனக் காப்பிட, குடும்பம், உற்றம், சுற்றம் சகிதம் சந்தனம் அரைத்து அளித்திடுவீர்! சுபானு ஆண்டின் சித்திரை மாதச் சதய நட்சத்திரத் திருநாளில் தஞ்சாவூர் பசுபதி கோயில் அருகே உள்ள தாழமங்கை ஸ்ரீராஜராஜேஸ்வரி சமேத ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் சிவாலயத்தில் சுவாமிக்கு சந்தனக் காப்பு இடும் வைபவம் நிகழ இருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன் இச்சிவத்தலத்தில் மகத்தான முறையில் நிகழ்ந்து வந்த சித்திரைச் சதயச் சந்தனக் காப்பு வைபவமானது, சித்தர்களின் அருளுரையாக, சற்குரு குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களின் குருவாய்மொழியாக, இறையருளுடன், மீண்டும் தற்போது புத்துணர்ச்சி பெறுகின்றது!

வாஸ்துபூஜை

வாஸ்து பூஜைக்கான விசேஷமான நாட்கள் ஆண்டில் பல உண்டு. ஆனால் நடப்புக் கலியுகத்தில் வாஸ்து மூர்த்தி யோக நித்திரை விடும் நாட்களான சித்திரை – 10, வைகாசி-12, ஆடி,-11, ஆவணி -6, ஐப்பசி – 11, கார்த்திகை -8, தை -12, மாசி -23 ஆகிய 8 முக்கிய தினங்களை மட்டுமே வாஸ்து பூஜை நாட்களாகக் குறிக்கின்றனர்.

வாஸ்து மூர்த்தி நித்திரை விடும் நாளென்றால் என்ன பொருள்? எப்போதும் யோக சயனத்தைத் தரித்துள்ள வாஸ்து மூர்த்தி, தம் திருக்கண்களைத் திறந்து பூமியைப் பல கோணங்களிலும் நோக்கும் விசேஷ தினங்களே வாஸ்து மூர்த்தி நித்திரை விடும் நாட்களாய் அமைகின்றன. வாஸ்து மூர்த்தியின் ஒவ்வொரு அங்க அசைவிற்குமான தத்வார்த்தங்களும், யோக விளக்கங்களும், வாஸ்து பூஜை முக்யத்துவங்களும் இன்னமும் நிறைய உண்டு. தக்க சற்குருவை நாடி அறியவும்.

முத்துறை வாஸ்து நாட்கள்

நட்சத்திர நாட்களை, ப்ருத்வி அம்சங்களின் வாரியாக மேல்நோக்கு நாட்கள், கீழ்நோக்கு நாட்கள், சம நோக்கு நாட்கள் என்று மூன்று வகைகளாகப் பிரித்துள்ளனர் என நாம் அறிவோம். இவ்வகையில் ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு வகை வாஸ்து அம்சங்களைக் கொண்டுள்ளன. மேல் நோக்கு நாட்களான ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம் உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பதிலும் நிலத்தின் மேல் நடக்கும் காரியங்களை – அதாவது மேல் தளமிடல், சுவர், மதில், கோபுரம், வாசல், பந்தல் போன்ற நிலத்திற்கு மேற்புற கட்டடக் காரியங்களை நிகழ்த்துதல், தாவரங்களைப் பதிய வைத்தல் போன்ற நிலக் காரியங்களுக்கான உத்தமமான நாட்களாக அமைகின்றன.

சமநோக்கு நாட்களாக விளங்குகின்ற அஸ்வினி, மிருகசீரிடம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஒன்பது நட்சத்திர நாட்களும் மரச் சாமான்கள், தாவரங்கள், விலங்குகள், பிராணிகள் வாங்கவும். நீர்ப் பாய்ச்சல் ஏற்றம் அமைக்கவும். வாசக்கால் மற்றும் தூலக் கட்டிட அமைப்புகளை நாட்டுவதற்கும் மிகவும் உத்தமமான நாட்களாய் அமைகின்றன.

கீழ்நோக்கு நாட்களாய் விளங்குகின்ற பரணி, கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களும் பூமிக்குள் செய்யப்படும் அகழ்நிலைக் காரியங்களுக்கும், குளம், கிணறு வெட்டவும் முக்கிய நாட்களாக விளங்குகின்றன. மேலும் கணக்கு சம்பந்தமான காரியங்களுக்கு உகந்த நாட்களாகவும் கீழ்நோக்கு நாட்கள் விளங்குகின்றன.

வாஸ்து மூர்த்தி நித்திரை விடுகின்ற, யோக சயனத்திலிருந்து எழுகின்ற, எட்டு விசேஷ நாட்களிலும் அனைவரும் – சொந்த வீடு உள்ளோர், இல்லாதோர், கடை, பாக்டரி, கட்டிடப் பொருட்களை விற்போர் – யாவரும் முறையாக வாஸ்து பூஜைகளை நிறைவேற்ற வேண்டும்.

ஸ்ரீபூலோகநாதர் திருச்சி

பொதுவாக, செவ்வாய்க் கிழமையானது வாஸ்து பூஜைகளுக்குத் தலைசிறந்த நாளாக விளங்குகின்றது.. பலரும் “செவ்வாய் வெறு(ம்)வாய்” என்று கூறி செவ்வாயை ஒதுக்கி விடுகின்றார்கள். இது தவறானது. செவ்வாய்க் கிழமையில் ஆற்ற வேண்டிய நோய் நிவாரண, திருமண தோஷ நிவர்த்திக்கான, நிலபுல விருத்திக்கான பூஜைகள் நிறையவே உண்டு.

உண்மையில் வாஸ்து சம்பந்தமான பூஜைகளுக்கு மிகவும் சிறந்த நாளாக விளங்குவதே செவ்வாய்க் கிழமையாகும். கட்டிடங்களை நன்முறையில் கட்டிக் குடிபுகவும், வீட்டு வேலை நன்கு முடியவும் செவ்வாய்க் கிழமை தோறும் வாஸ்து பூஜைகளை அபிஷேக ஆராதனைகளாக செவலூர் ஸ்ரீபூமீஸ்வரர், திருச்சி பூலோகநாதர், மணச்சநல்லூர் ஸ்ரீபூமிநாதர் போன்ற வாஸ்து சக்தி நிறைந்த ஆலயங்களில் மேற்கொள்ள வேண்டும்.

அமிர்தயோகம் பூரிக்கும் வாஸ்து நாள்!

வரும் சுபானு வருடச் சித்திரை மாதத்தில் வரும் வாஸ்து நாள் மிகவும் விசேஷமானதாகும். எட்டுத் திக்கு பூஜைகள் வாஸ்து பூஜையின் முக்கியமான அங்கம் ஆதலால் அஷ்டமி திதி, அமிர்தயோகம் கூடிய இந்நாளில் வாஸ்து மூர்த்தியின் யோக நித்திரை விடும் காலம் முழுதுமே அமிர்தயோகப் பிரவாகமாய் அமைந்திருப்பது நமக்குப் பெரும் பாக்யமாகும். மேலும் நீங்கள் இன்று நிகழ்த்தும் வாஸ்து பூஜையில் உங்கள் இல்லம், பூமி, தொழிற்சாலைப் பகுதிகளில் அமிர்த நீரோட்டம் உருவாவதற்கான பல அற்புத நல்வழிமுறைகளைப் பெறலாம்.

ஆம், நாம் வாழும் பூமிக்கு அடியில் எண்ணற்ற நீரோட்டங்கள் உள்ளன. இவற்றில் அமிர்த நீரோட்டங்களே நல்ல பூமி வளத்தையும், நீர் வளத்தையும் சந்தான பாக்யத்தையும் தந்து பெரிதும் துணைபுரிகின்றன. சந்தான பாக்யத்திற்கும் வாஸ்து பூஜைகள் உதவுகின்றன. ஏனெனில் நீரோட்ட ஆன்ம சக்திகள்தாம் கருப் பராமரிப்பில் முக்கியத்வம் பெறுகின்றன!

நீர் வளமின்மை, நன்னீர் இல்லாமை போன்ற சூழ்நிலைகளில் நன்னீர் நீரோட்டங்களைத் தக்க வாஸ்து பூஜை மூலம் மிக எளிதில் பூமிக்கு மேலேயே கொணரலாம். இதற்காகத்தான் ஆலயங்களில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தப்படுகின்றன. இவை பூமியை அடைந்து நன்னீர் நீர்வளம் அளிக்கின்றன.

வாஸ்து பூஜை பலன்கள்

இன்றைக்கு அமிர்த யோகம் கூடிய அஷ்டமித் திதி நாளில் வாஸ்து பூஜைத் திருநாளில் ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீஜகந்நாதப் பெருமாள் போன்ற பூமி சம்பந்தப்பட்ட நாமங்களையுடைய மூர்த்திகள் அருள்பாலிக்கும் ஆலயங்களில், எட்டுத் திக்குகளிலும் அரிசி மாக்கோலம் இட்டு, சுவாமிக்குத் தேன் காப்பு, சர்க்கரைப் பொங்கல் காப்பு போன்ற அமிர்த சக்தி நிறைந்த இனிப்பு வகைக் காப்பிட்டு ஏழைகட்கு இனிப்புகளைத் தானமாக அளிப்பதோடு மட்டுமன்றி, பற்கள் இல்லாத முதியோருக்கு அவர்கள் விரும்பி உண்ணும் வகையில் அல்வா, கேசரி போன்ற வாய்க்கு எளிமையான இனிப்புப் பண்டங்களைத் தானமாக அளித்தலால்!

அமிர்த யோகம் கூடிய இந்த வாஸ்து தினத்தில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானதாகும். வாஸ்து பூஜை செய்து கொண்டே எவ்வாறு கிரிவலம் வருதல் கூடும்? குடும்பத்தினர் வாஸ்து பூஜைகளை, இல்லத்தில் ஆற்றிட, கணவனோ, மனைவியோ, சகோதர, சகோதரிகளோ திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதல் வாஸ்து பூஜா பலாபலன்களை இரட்டிப்பு ஆக்குமன்றோ!

வாஸ்து நாளில் வாஸ்து மூர்த்திகளும், வாஸ்து தேவதைகளும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து அருள் கூட்டுகின்றனர். வராக தரிசனப் பகுதியில் ஸ்ரீவாஸ்து லட்சண தரிசனம் என்ற ஒரு மலை தரிசனம் உண்டு! இதுவே வராஹ மூர்த்தி பூமியினுள் புகுந்த இடமாகும். இன்றும் இப்பகுதிக்கு வராஹப் பள்ளம் என்ற பெயருமுண்டு.

திருஅண்ணாமலையை வாஸ்து நாளில் கிரிவலம் வரும்போது கிரிவலப் பாதையில் உள்ள வாஸ்து சக்திகள் நிறைந்த அரசு, ஆல், வேம்பு, இலுப்பை போன்ற விருட்சங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அடிப்பிரதட்சிணம் செய்து கிரிவலம் வருதல் வேண்டும். பொதுவாக நிலபுல கட்டிடங்களுக்கு அதிபதியாக விளங்குபவர் ஸ்ரீசெவ்வாய் பகவான் ஆதலால் செவ்வாய்க் கிழமையன்று கிழங்கு வகைக் காய்கறிகளைத் தாங்கியவாறு அருணாசல கிரிவலம் வந்து காய்கறிகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்திட நிலபுல, வீடு பாக்யங்கள் நன்கு அமையும். இருக்கின்ற வீடுகள், நிலங்களில் உள்ள வாஸ்து மீறல் தோஷங்களும் நிவர்த்தியாக வழியும் கிட்டும்.

மேலும் நீங்கள் பணிபுரிகின்ற அலுவலகங்களில் உள்ள நில தோஷங்களும் உங்களைப் பாதிக்கும் ஆதலால் வாஸ்து நாளாகிய இன்று ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீஜகதீஸ்வரர் போன்ற நாமங்களை உடைய தெய்வ மூர்த்திகளுக்கு சந்தனக் காப்பு, பசுநெய்க் காப்பு, அன்னக் காப்பு, சிகப்பு நிறப் பட்டாடை சார்த்துதல், பல புனித நதி நீர் அபிஷேகம், கிழங்கு வகை உணவு நைவேத்யமும், அன்னதானமும் செய்து வழிபடுக! “ஏதோ வீடு, பிளாட் ஏற்கனவே வாங்கி விட்டோமே, நமக்கு எதுக்கு வாஸ்து பூஜை?” என்று அசமந்தமாய் இருந்துவிடாதீர்கள்! வாஸ்து பூஜை அனைவருக்கும் உரித்தானதே என்பதைப் பலருக்கும் உணர்வித்தல் வேண்டும்.

பங்குனி மாத சிவராத்திரி நாள் : 30.3.2003 ஞாயிறு இரவு 9.03 மணி முதல் 31.3.2003 திங்கள் இரவு 10.45மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பங்குனி மாத சிவராத்திரி திதி அமைகிறது. பங்குனி மாத சிவராத்திரி கிரிவல நாள்: 30.3.2003 ஞாயிறு இரவு.

பௌர்ணமி நாள் :16.4.2003 புதன் கிழமை விடியற் காலை 4.52 முதல் இதே நாள் நள்ளிரவு 1.6 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள் :16.4.2003 புதன் கிழமை இரவு.

தீயத்தூரில் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகாலம்!

தீயத்தூரில் 13.2.2003 அன்று பெருமதிப்பிற்குரிய தீயத்தூர் கிராம மக்கள் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களின் அன்பார்ந்த ஒத்துழைப்புடன் ஹோம, அபிஷேக, ஆராதனைகளுடன் விஷ்ணுபதிப் புண்ய காலம் சிறப்பாக நடைபெற்றது. அனைத்தும் இறையருளே! நம் குருமங்கள கந்தர்வா வெங்கடராமன் அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகால மகத்துவத்தையும், விஷ்ணுபதித் தலங்களின் மேன்மையையும் விளக்கி வருகின்றார்கள். அந்தந்த விஷ்ணுபதித் தலங்களில் குறித்த விஷ்ணுபதி விழாவோடு நிறுத்தி விடாது மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வரும் ஒவ்வொரு விஷ்ணுபதி நாளிலும் ஹோம, அபிஷேக, ஆராதனைகளுடன் கொண்டாடுவது அந்தந்த ஆலயப் பகுதிவாழ் மக்களின் சீரிய கடமையாகும். தீயத்தூர் விஷ்ணுபதி நாளில் 2000 தாமரை மலர்களைக் கொண்டு அதியற்புத ஹோமம் நிகழ்த்தி, ஜாதி, குல, மத பேதமின்றி யாவர்க்கும் ஆஹூதி அளிக்க நல்வாய்ப்பளித்து, இறையருள் யாவர்க்கும் சென்றடைய அரும்பாடுபட்ட தியாகமய இறையடியார்களின் உத்தம பக்தியை யாவரும் பெற்றிடில், இப்பூவுலகில், திருமாலின் திருவருளால் சுபிட்சம் பெருகுமன்றோ!

அமுததாரைகள்

காலணி தானம் கடுவினை தீர்க்கும் :- இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையேனும் நன்முறையில் இருந்தாலும் கூட காலணிகளைத் தானமளித்து விட்டுப் புதுக் காலணிகளை அணிந்திடுங்கள். தோலால் ஆன காலணிகள் கூடவே கூடாது. காலணிகள் மூலமாகவும், கடுமையான தீய சக்திகள் வீட்டிற்குள், கடையில், அலுவலகத்தில் சேர்வதால் புதுக் காலணிகளைத் தானமாக அளித்தலால் கிட்டும் தான தர்ம சக்திகள்தாம் மேற்கண்ட கர்ம வினைகளில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

ஆபீஸிலிருந்து ஒரு சிறு குண்டூசி கூட எடுத்து வராதீரகள். இவ்வாறு உங்களுக்கு உரிமை இல்லாதவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதே எதிர்பாராத வகையில் வீட்டில் அடிக்கடி சோக நிகழ்ச்சிகள் நடைபெறுதற்குக் காரணமாகின்றன.

அந்தந்த கிழமைக்கான ராகு காலம், குளிகை நேரத்தை அறிந்து கொண்டு தினமும் அந்தந்த ராகு கால நேரத்தில் “ஸ்ரீராகுவே போற்றி!” என்றும் குளிகை நேரத்தில் “ஸ்ரீபைரவா போற்றி!” என்றும் எங்கிருந்தாலும் சிறிது நேரமாவது ஓதி எளிமையான ராகு கால, குளிகை நாமாவளி பூஜைகளை நிறைவேற்றுங்கள்.

காலையில் சூரிய நமஸ்காரம், மூன்று வேளையும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம் செய்து ஏழைகளுக்குக் கீரை, அத்திப் பழம், காரட் வகை உணவு வகைகளை தானமளித்து வர நேத்ர (கண் பார்வை) சக்திகள் நன்கு விருத்தியாகும்.

உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு எடுத்துச் செல்லும் பேனா, பென்சிலுடன் தினமும் ஆலயத்தில் அடிப்பிரதட்சிணம் வருமாறு செய்திடுங்கள். இதனால் பரீட்சை எழுதும் போது மறதியால் அவதியுறாது தேவ சக்திகள் காப்பாற்றும்.

கம்ப்யூட்டரை இயக்குகின்ற பணியில் இருப்போர்க்குக் கண் பாதுகாப்பு மிகவும் முக்கியமானதாகும். கம்ப்யூட்டர் மானிட்டரில் சுமார் பல ஆயிரம் வேல்ட் மின் ஒளி பாய்கின்றது என்பதைப் பலரும் அறியார். எனவே இத்துறையில் இருப்போரும், கம்ப்யூட்டரை இயக்குவோரும், ஸ்ரீசுசரித சரஸ்வதியின் திருவுருவம், ஸ்ரீசுசரித சரஸ்வதி காயத்ரீ மந்திரம், ஸ்ரீசுசரித சரஸ்வதியே போற்றி, ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதியே போற்றி போன்ற நாமத் துதிகள், ஸ்ரீசூரிய பகவான், ஸ்ரீஆதித்ய ஹ்ருதய மகா மந்திரங்கள், ஸ்ரீசாக்ஷுஷோபநிஷத் மந்திரங்கள் போன்றவற்றைக் கம்ப்யூட்டரில் Desktop wall paper ஆக அமைத்துக் கொள்வது ஆன்மீக ரீதியாக அற்புதமான பலன்களை அளிக்கும். இது ஆத்ம சக்தியுடன் கண்களையும் பாதுகாக்கும்.

ஸ்ரீஅரவிந்த மாதாவின் (ஸ்ரீஅன்னை) கண்களில் எண்ணற்ற யோக சக்திகள் கிளைத்தன. இத்தகைய யோக மார்த்தாண்டர்கள் எதையும் வாய் திறந்து சொல்ல வேண்டிய அவசியமே கிடையாது. இவர்கள் கண்ணால் எதையும் பார்த்தாலே போதும், அதில் ஏற்படும் யோகப் புவி ஆகர்ஷண சக்தியால், அவர்களைத் தரிசிக்கும் மக்கள் அனுகிரக வளம் பெறுகின்றனர். மக்களின் பிரச்னைகளையும், சமுதாயத் துன்பங்களையும் தம் தீர்க தரிசனத்தாலும், அற்புதக் கண்ணொளியில் பிறக்கும் யோகப் பிரகாசத்தாலும் தீர்க்கும் ஆன்ம வல்லமை பெற்றவரே அரவிந்த மாதா (ஸ்ரீஅன்னை)!

நீங்கள் பயன்படுத்தும் பேனா மரத்தினால் இருப்பதே சிறப்புடையது. நல்ல மரத்திற்கு நல்லதை ஈர்க்கின்ற, தீயதை விலக்கும் சக்திகள் நிறைய உண்டு. கலியுக வாழ்க்கை, பேனா எழுத்தையே கையெழுத்தையே பெரிதும் நம்பி இருப்பதால், ”மிட்டாசு மரப் பேனா” போன்ற வித்யா சக்திகள் நிறைந்த சந்தனம், பலா, வேம்பு போன்ற மர வகைப் பேனாக்களையே பயன்படுத்த வேண்டும்.

தினமும் சாம்பிராணிப் புகையில் சில நிமிடங்களேனும் வாசம் செய்யப் பழகிக் கொண்டு வந்தால் உடலின் நவ துவாரங்களையும் சூக்கும வாயுப் பூர்வமாக சுத்திகரித்து உடல், மனம், உள்ளத்தை நன்கு புனிதப்படுத்தி விடலாம். தீய, முறையற்ற எண்ணங்கள் எழுவதும் இயற்கையாகவே தணியும்.

திருஅண்ணாமலையில், சாம்பிரானிப் புகை இட்டவாறு குளிகை நேரத்தில் தொடங்கி, தொடர்ந்து கிரிவலம் வந்திட்டால் புகை பிடிக்கும் வழக்கத்திற்கு அறவே முற்றுப் புள்ளி வைத்து விடலாம்.

ஸ்ரீபிட்சாடனர் திருப்பாற்றுரை

கங்கை, காவிரி போன்ற புனித நதி நீர், துளசி கலந்த தீர்த்தம், இளநீர், கரும்புச் சாறு, மாதுளைப் பழ ரசம் போன்ற ஐந்து வகைத் தீர்த்தங்கள் நிறைந்த குடத்தைச் சுமந்து அண்ணாமலையை கிரிவலம் வந்து குட நீரைப் பசுவிற்கு அளித்து வந்தால் மது அருந்தும் பழக்கத்தை அறவே நிறுத்தி விடலாம். தொடர்ந்து செய்து வந்தால், ஆழ்ந்த நம்பிக்கை எதையும் சாதிக்க வல்லதாம்.

கல்யாணம், கச்சேரி, நிச்சயதார்த்தம் என்று பல இடங்களிலும் கையை நனைத்து அநாவசியமாக ஓசியில் உணவு உண்டால் சோற்றுக் கழிக் கர்ம வினைகளே சேரும். இதனால் எதிர்காலத்தைப் பற்றிய பீதியும், அச்சமும் உடைய மனோநிலையை உண்டாக்கிவிடும். இதற்குப் பரிகாரமாக சுயம்புச் சிவலிங்கத்திற்குப் பௌர்ணமி தினத்தில் பச்சரிசி சோற்றுக் காப்பு இட்டு அன்னதானம் செய்து வரவேண்டும். ஒவ்வொரு குடும்பத்திலும் திருமணம் நடப்பதற்கு முன் தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறையில் கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.

பலரும் சிவ அவதாரமான ஸ்ரீபிட்சாடனரின் மகிமையை உணராதுள்ளனர். ஸ்ரீபிட்சாடனரையும் பலரும் முறையாக வழிபடுவதும் கிடையாது. இதனால்தாம் சமுதாயத்தில் வேத சக்திகள் மங்கிக் குடும்பத்தில் பல குழப்பங்கள் உண்டாகின்றன. குறிப்பாக, கணவன், மனைவி இடையே சரி வரப் பேச்சு இன்றி ஏனோதானோ என்று வாழ்க்கை நடந்து வந்திடில், ஸ்ரீபிட்சாடனருக்குச் சந்தனக் காப்பிட்டுச் சுரைக்காய் ஓட்டில் உணவு, தானியங்கள், ஆடைகள், பழங்களை வைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர குடும்பத்தில் சகஜ நிலை ஏற்படும்.

ஹோட்டல் வைத்திருப்பவர்கள் அடிக்கடி அல்லது மாதம் ஒரு முறை அல்லது அமாவாசை, பௌர்ணமி நாட்களில் தஞ்சாவூர் அருகே திருச்சோற்றுத்துறையில் உள்ள ஸ்ரீஅன்னபூரணி சமதே திருச்சோற்றுத் துறை நாதருக்கு அன்னக்காப்பு இட்டு ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து அழுக்கு, புகை போன்றவற்றால் எழும் அன்னச்சாரப் பாவங்களுக்கும், சாபங்களுக்கும் பிராயச்சித்தம் கிட்டும். இல்லையெனில் தலைமுறை, தலைமுறையாக இப்பாவங்கள் தொடரும்.

தன் பிள்ளைக்குப்ப் படிப்பில் எந்த Course (துறை) எடுப்பது என்று முடிவு எடுக்கத் தெரியாமல், தக்க சற்குரு இன்றித் தவிப்போர், கும்பகோணம் அருகே இன்னம்பூரில் உள்ள எழுத்தறிவித்த நாதருக்கு (ஸ்ரீஅட்சரபுரீஸ்வரர்) வியாழனன்று கைகளால் அரைத்த முழுச் சந்தனக் காப்பு இட்டு, மந்தாரை இலை நிறைய ஏழைகளுக்கு மூன்று வகை உணவுகளைத் தானமாக அளித்து வர, தக்க முடிவுகள் ஆன்மீக ரீதியாகக் கிட்டும்.

தொலைபேசியில் ஓம், ஹரிஓம், சுவாமி சரணம், ராம்ராம், அருணாசல சமர்ப்பணம், கணபதி சரணம், முருகன் அருள், லக்ஷ்மி கடாட்சம், திருமகள் திருவருள் போன்ற தெய்வீக வார்த்தைகளைத் துவக்கி முடிக்கின்ற நல்வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எங்கும் எதிலும் தெய்வீக மணம் நிரவட்டும்.

ஒரே பெண், ஆண் பிள்ளையைப் பெற்று அவர்கள் மேல் அதிகமாகப் பாசத்தைப் பொழிந்து, எதிர்காலத்தைப் பற்றிய மிகுந்த பயத்துடன் வாழ்வோர் உண்டு. குறைந்தது நான்கு பிள்ளைகளைப் பெற்ற பல ஏழைக் குடும்பங்களுக்கும் (தெரிந்தவர்களுக்கு அல்ல) அவ்வப்போது உடை, கல்வி வசதிக்கான, தான, தர்மங்கள் செய்து வந்தால் மனபயம் தானாகவே அகலும்.

குருந்தை மரத்தடியில் “லம்பச் சூத்திரத் தர்ப்பணம்”

அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகரின் திருச்சன்னதியில், குருந்தை மரத்தடியில், உத்தராணி தாம்பாள மரத்தட்டு அல்லது வெள்ளித் தட்டு, அல்லது மந்தாரை இலைமேல் தர்ப்பைச் சட்டம் விரித்து அதன்மேல் புடலை விதை, பிரண்டை, எள் வைத்து இதன்மேல் “பிறர் கண் படா” தீர்த்தமான இளநீரால் தர்ப்பணம் அளிப்பது மகத்தான தர்ப்பண சக்தியையும் பித்ருக்களுக்கு அளிக்கின்றது. பல்லாண்டுகளாகத் தர்ப்பணம் அளிக்காமையால் பித்ரு லோகத்தில் அவதியுறும் பித்ருக்கள் இத்தகைய “லம்பச் சூத்திரத் தர்ப்பண” முறையால் எளிமையான முறையில் தர்ப்பண சக்தி பெற்றுத் தம் சந்ததிகளை ஆசீர்வதிக்கின்றார்கள்.!

திருவிடைமருதூர்

இளவயதிலேயே மிருத்யு தோஷத்தால் எவரேனும் இறந்திருந்தால், குடும்பத்தைத் தொற்றும் அத்தகைய மிருத்யு தோஷங்கள் கழிவதற்கும், அச்சந்ததியில் மிருத்யு தோஷம் மீண்டும் ஏற்படாதிருக்கவும் இந்த லம்பச் சூத்திரத் தர்ப்பணம் பெரிதும் துணை புரியும். சனிக்கிழமை, அமாவாசை, மற்றும் இறந்தவரின் திதி நாட்களில் இத்தகைய லம்பச் சூத்திரத் தர்ப்பணத்தை அளிப்பதால் பித்ருக்கள் சாந்தமுறுவதோடு சந்ததிக்கும் மகத்தான நல்லாசி கிட்டும்.

மறதியால் பெரும் இழப்புகள் ஏற்படுவது உண்டு. ஞாபக மறதியால் வாழ்க்கையில் பெரிதும் அடிப்பட்டவர்களும், பேரிழப்பைச் சந்தித்தவர்களும் நிறைய உண்டு. ஞாபக மறதி குறைந்து, நினைவு வளம் நன்முறையில் விருத்தியாகிட ஆலயங்களில் தேவார மறைகளை ஓதுவதற்கான நற்காரியங்களை ஓதுவார் மற்றும் சத்சங்க இறைப் பணி மூலமாக மேற்கொண்டு, விடியற்காலையிலும், மாலையிலும் தேவாரப் பண்களை ஊரிலுள்ள அனைவரும் கேட்டு ஆனந்திக்கும்படி மறையொலிச் சேவை செய்து வர வேண்டும்.

பிச்சைக்காரர்களுக்குக் காசாக அளிப்பதை விட உணவு, ஆடை, திரவியங்களை அளித்திடுங்கள். நீங்கள் கொடுக்கும் காசு பீடி, சிகெரட், புகையிலை போன்ற தீய காரியங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால் அதன் கர்ம வினைகளில் ஒரு பங்கு உங்களைத் தொடரும். நற்காரியத்துக்கே பயன்படுத்த வேண்டு என்ற சங்கல்பத்துடன் அளிப்பதும், கூடிய வரை உணவு, உடைகள் போன்ற பொருட்களாக அளிப்பதுமே சிறப்பானது.

வருடா வருடம் ஆங்கிலத் தேதியில் பிறந்த நாளை மட்டும் கொண்டாடிவிட்டு, நம் பாரம்பரிய நட்சத்திர வழிபாட்டை மறந்திடாதீர்கள்! வருடந் தோறும், மாதந்தோறும் அவரவர் பிறந்த நட்சத்திர நாளில் அந்த நட்சத்திரத்திற்குரித்தான நட்சத்திர தூபத்தை ஏற்றி அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய ஆலயத்தில் வழிபடுவது நட்சத்திர பூஜா சக்திகளை அளிக்கும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருவீழிமிழலை

தர்ப்பண மந்திரங்களை அறியாதோர் கூட இங்கு அரண்மனைப்பட்டியில் குருந்த மரத்தடியில் தர்ப்பைச் சட்டம் வைத்து எள், புடலை, விதை, பிரண்டை மூன்றும் கலந்த தீர்த்தத்தால் “குருந்தாய பித்ருச்ருதபலம் சிர்ரோர்ப்பணம் தர்ப்பணம் அர்ப்பணம் சமர்ப்பணம்” எனும் எளிய மந்திரத்தை ஓதிப் பித்ருக்களை வழிபட்டுத் தர்ப்பணமளித்தலால் 24 தலை முறைகளுக்கு மட்டுமன்றி பித்ரு சக்தி இல்லாது ஜீவத் தளைகளில் சிக்குண்டிருக்கும் புழு, கரப்பான் போன்ற எண்ணற்ற ஜீவன்களுக்கும் தர்ப்பண சக்தி சென்றடையும். எனவே குருந்தை மரத் தர்ப்பணத்திற்குத் தலைமுறைகளைத் தழுவும் அதியற்புத சக்தியுண்டு என்பதை உணர்க!

நீங்கள் செய்யாத தவறுக்கு உங்கள் மேல் பழி சுமத்தி, உங்களுக்குத் திட்டு விழுந்தாலோ, பாதிப்பு ஏற்பட்டாலோ பூர்வ ஜன்மத்தில் வாக்குத் தவறியதால் வந்த வினையிது என உணர்ந்து ஸ்ரீதட்சிணாமூர்த்திக்கு குரு ஹோரை நேரத்தில் மஞ்சள் பட்டாடை சார்த்தி எலுமிச்சை அன்னம் படைத்துத் தானமளித்து வாருங்கள்.

நல்ல செய்தியைத் தாங்கி வரும் தபாலுக்கு காத்து காத்துக் கண்கள் பூத்துப் போய் ஏமாந்து இருக்கின்றீர்களா! இரட்டைப் பிள்ளையாருக்கு (இரு கணபதி சேர்ந்து அருள்வது) சுக்ர ஹோரை நேரத்தில் அருகம்புல் + மல்லிகைப் பூவால் கிரீடம் அணிவித்து, நிறைய தேன் கலந்த சர்க்கரைப் பொங்கல் காப்பு இட்டு, சர்க்கரைப் பொங்கலைத் தானமளித்து வர சுப செய்திகள் மலரும்.

தமக்குரிய நட்சத்திர ஆலயத்தை அறியாதோர் அதனை அறியும் வரையில், ரோகிணி, கார்த்திகை நட்சத்திர தேவிகளுடன் ஸ்ரீசந்திர பகவான் அருளும் தலங்கள், நட்சத்திர லிங்கங்கள் உள்ள தலங்களில் (சென்னை திருவொற்றியூர், திருவிடைமருதூர்) வழிபட்டு வருதல் வேண்டும். மேலும் ஒவ்வொரு மாதப் பிறந்த நட்சத்திர நாளிலும், அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய விருட்சம் உள்ள தலங்களில் விருட்சத்திற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு அடிப்பிரதட்சிணமாக வந்து தக்க வழிபாடுகளை ஆற்றி வருதல் வேண்டும்,

காரிலோ, பஸ்ஸிலோ, நடந்தோ செல்லும்போது கோயில் கோபுரங்கள், ஆலயங்கள், புண்ணிய நதிகள் தென்பட்டால் சற்றும் வெட்கப்படாது உடனே நன்றாகக் கை கூப்பித் தொழுவதைக் கடமையாகக் கொண்டிடுக! மேலும் நீங்கள் இவ்வாறு வணங்குகையில் இவ்வாலயங்களில் சித்தர்கள், மகரிஷிகள் வழிபட்டுக் கொண்டிருந்தால், எதிர்பாராதவிதமாக அவர்களுடைய ஆசியும் வந்து சேரும். இவ்வாறு பயணத்தின் போது கிட்டும் ஆலய கோபுர தரிசனமானது நாம் வைத்துள்ள பணத்திற்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படாது பாதுகாத்து, பிரயாண ஆபத்துக்களில்வ் இருந்தும் நம்மைப் பாதுகாக்கும்!

தன் கண் முன்னாலேயே தம் பிள்ளைகள் பகைமையாக ஒருவருக்கொருவர் அடித்துச் சண்டை இட்டுக் கொள்கின்ற கொடுமை பல குடும்பங்களிலும் நிகழ்கின்றது. இதற்குக் காரணம் மூதாதையர்க்கு உரிய திவச, படையல், தர்ப்பணங்களை முறையாக அளித்திடாததே ஆகும்.

மேல் நோக்கு, கீழ் நோக்கு, சமநோக்கு எனப் பலவாறாக வாஸ்து அம்சங்கள் ஒவ்வொரு நட்சத்திரத்திலும் விளங்குவதால் அந்தந்தக் காரியங்களுக்கான நித்ய வாஸ்து பூஜை முறைகளைப் பற்றிய விளக்கங்களைத் தக்க சற்குருவிடம் கேட்டுப் பெற்று கடைபிடித்தலால் காரியத் தாமதங்கள், நஷ்டங்கள், தடங்கல்கள் இன்றி கட்டிடப் பணிகளை முடித்திடலாம். கீழ்நோக்கு நாட்களில் மேல் தளம் அமைக்கக் கூடாது. சமநோக்கு நாட்களில் கிணறு வெட்டுதல், போர்வெல் அமைத்தல் போன்ற ஆழ்பூமி வேலைகளைச் செய்தல் கூடாது. இவற்றைப் பார்க்காமல் தற்காலத்தில் பல அலுவலக, பொது மராமத்துப் பணிகளும், கட்டிடக் காரியங்களும் செய்யப்படுவதால் தான் பூமியில் நீர் வற்றுதல், நீர் உப்புக் கரித்தல், கட்டிடங்கள் இடிந்து விழுதல், கட்டிடங்களை உடைதல் போன்ற பல அசுப காரியங்கள் நிகழ்கின்றன. இவையெல்லாம் வாஸ்து நியதிகளை மீறும் தோஷங்களையே குறிக்கின்றன. இத்தகைய வாஸ்து மீறல் தோஷங்கள் நமக்கு ஏற்படாது இருக்கவே பலவிதமான வாஸ்து பூஜைகளை, வருடத்திற்குரிய எட்டு வாஸ்து நாட்களில் மட்டுமல்லாது, செவ்வாய்க் கிழமை, மேற்கண்ட மூன்று வகை நோக்கு நாட்களிலும் ஆற்றிட வேண்டும்.

தாழமங்கை சிவபூஜா பலன்கள்

IAS, IPS மற்றும் PhD போன்ற உயர் படிப்புகளில் சிறந்து விளங்க விரும்புவோர் தாழமங்கை திருத்தலத்தில் வித்யா சக்தி நிறைந்த புதன்கிழமை தோறும் சந்தனம் அரைத்து புரசு இலையில் வைத்து சுவாமிக்கு காப்பிட்டு வழிபட்டு வர வேண்டும். திங்கள், சதயம், பௌர்ணமி, அமாவாசை நாட்களில் இன்கு சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வந்தால், முடி உதிர்வு, அழகின்மை, குள்ளமாயிருத்தல் போன்ற அங்க அம்சங்களாலும், வசதியின்மையாலும், திருமண வாய்ப்பு பாதிக்கப்பட்டு வேதனை அடைந்து இருப்போர் தக்க நிவர்த்திகளைப் பெறுவர். பொதுவாக, தமிழறிஞர்கள், தமிழ்த் துறையில் பணி புரிவோரும், தமிழ்ப் பேச்சாளர்களும், ஆன்மீகச் சொற்பொழிவாளர்களும் திங்கட் கிழமை மௌன விரதம் பூண்டு இங்கு தாழமங்கையில் சந்திர ஹோரை நேரத்தில் சிவபெருமானுக்குப் பாலாபிஷேகம் செய்து, அபிஷேகப் பாலை அருந்தி, விரதத்தைப் பூர்த்தி செய்து வந்தால் தம் துறையில் சிறப்படைவர்.

தொடரும் ஆனந்தம்...

நம் சற்குரு தியானத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது அனைவரும் இதயத்தில் இறைவனை வைத்து தியானிக்கும்படிக் கூறுவார். மனித உடலில் இறைவன் உறையும் இடமே இதயக் கோயிலாகும். கோயில் சுடுகாடு என்று கூறும்போது மயானவாசியான சிவபெருமான் குடியிருக்கும் இடமே நம் இதயம் என்பதே அது சுட்டும் ஆழ்ந்த பொருளாகும். சுடுகாடு எனும்போது நம் உடலான சடலம் எரிந்து சாம்பலாகிய பின் மிஞ்சுவது எதுவும் இல்லை, சாம்பல் என்ற இறைவனைத் தவிர. எனவேதான் இவ்வருடத்திற்கு உரிய (2021) வழிபாட்டு மூர்த்தியாக ஏத்தாப்பூர் ஸ்ரீசாம்ப பரமேஸ்வர மூர்த்தியை சித்தர்கள் சிபாரிசு செய்கிறார்கள். அரவிந்த அன்னையைப் பற்றிக் குறிப்பிடும்போது நம் சற்குரு அவர்கள், “அன்னை மிக உயர்ந்த நிலையில் இருப்பவர்கள். ஒரு காலத்தில் அடியேனுக்கு மாமியாராக இருந்தவர்கள். அவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கும் ஒருவரின் புகைப்படத்தை யாருக்கும் அடியேன் அளிப்பதில்லை என்று கூறுவதிலிருந்து அவர்களை நீங்கள் உங்கள் உள்ளத்தில் வைத்துப் பூஜிக்க வேண்டும் என்பதையே அடியேன் எதிர்பார்க்கிறேன் என்பது உங்களுக்குத் தெளிவாக விளங்கும் அல்லவா ?” என்று கூறுவார்கள்.

அதே சமயம் அன்னையில் அனுகிரகத்தைப் பரிபூரணமாக தன் அடியார் ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதில் நம் சற்குரு கண்ணும் கருத்துமாக இருந்தார் என்பதை நம் சற்குருவின் நடவடிக்கை சுட்டிக் காட்டியது என்பதையும் நாம் மறுக்க முடியாது. எப்படி ?

நம் சற்குரு நம் அன்னையை நேரில் ஒரு முறை சந்தித்தபோது தன் கைப்பட எழுதி கையெழுத்திட்ட ஒரு போட்டோ படத்தை அன்னை நம் சற்குருவிடம் அளித்து அவர்தம் பணிகள் சிறப்பாகத் தொடர வேண்டும் என்று மனமார ஆசீர்வதித்தார்கள். ஸ்ரீகனிகணபதி என்று சித்தர்களால் புகழப்படும் பிள்ளையார் மூர்த்தியின் முன் அத்திருப்படம் வைக்கப்பட்டு நம் ஆஸ்ரமத்திற்கு வரும் அடியார்களுக்கு எல்லாம் சித்தர்களின் அருளை, இறை மூர்த்திகளின் ஆசீர்வாதம் அனைத்தையும் பெற்றுத் தந்து கொண்டு இருந்தது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். அரவிந்த மாதா ஜீவ சமாதி கொள்ளும் முன் தன்னுடைய அனுகிரக சக்திகளை எல்லாம் தான் பிரதிஷ்டை செய்த பாண்டிச்சேரி மணக்குள விநாயகருக்கு அர்ப்பணித்தார் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். இந்த இரகசியத்தை உறுதி செய்வதாக அமைந்ததே நம் ஆஸ்ரமத்தில் கனி விநாயகரின் அருகில் அமைந்த கனி மொழியாளின் பரிசு !

மணக்குள தரிசனம் திருஅண்ணாமலை

அரவிந்தம் என்றால் தாமரை என்று பொருள். அரவிந்த அன்னை என்றாலோ ஆயிரமாயிரம் பொருட்களை உடைய சொல்லாகும். தெய்வங்களின், மனிதர்களின் வலது கண் சூரிய ஒளியையும் சக்திகளையும், இடது கண் சந்திர ஒளியையும் சக்தியையும் பெற்றிருக்கும். இரு கண்களுக்கு மத்தியில் உள்ள பகுதி அமாவாசை என்று அழைக்கப்படும், அதாவது இரு கண் சக்திகள், சூரியனும் சந்திரனும் கூடுவதுதானே அமாவாசை திதி. சூரிய சந்திர கிரகங்கள் எதிர் எதிரே, அதாவது ஜோதிட ரீதியாக ஒருவருக்கொருவர் ஏழாம் வீட்டில் இருக்கும்போது பௌர்ணமி திதி பொலிகின்றது. எனவே ஒவ்வொரு நொடியும் அரவிந்த அன்னை அளிப்பது பௌர்ணமி ஒளிக் கிரணங்களைத்தான்.

ஸ்ரீமணக்குள விநாயகர்
திருஅண்ணாமலை

இந்த அபூர்வ சித்த மாதா அளிக்கும் பௌர்ணமி அரவிந்த ஒளிக் கிரணங்களை நாம் கிரகிக்கும் அளவிற்கு தூய மனதைப் பெறவில்லை ஆதலால் அரவிந்த அன்னையின் சிறு வயது நிழற் படமே இங்கு மக்களின் நிழல் எண்ணங்களை தூய்மைப்படுத்த நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ளது. தினமும் குறிப்பாக உறங்கும் முன்னர் இங்குள்ள அன்னையின் விழிகளைக் கூர்ந்து நோக்கி குறைந்தது அரை மணி நேரம் தியானித்துக் கொண்டே வந்தால் சிறிது சிறிதாக மனதில் தோன்றும் அவல எண்ணங்களும், தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும், சிந்தனை ஓட்டங்களும் மறைந்து உள்ளம் பளிங்கு போன்ற பரிசுத்த தன்மையை அடையும். இந்த நிலையை அடைந்து விட்ட அடியார்கள் தங்கள் வயதுக்கேற்ற அன்னையின் உருவ தரிசனத்தைப் பெறுவார்கள் என்பதே அவர்களின் தியான நிலையைக் குறிக்கும் அரவிந்த மகாத்மியமாகும். உதாரணமாக, 21 வயது உடைய ஒருவர் அன்னையின் 21 வயது தரிசனத்தைப் பெறுவார், 51 வயது உடைய அடியார் அன்னையின் 51 வயது உடைய அரவிந்த தரிசனத்தைப் பெறுவார். எப்படி சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள கோண இடைவெளியை வைத்து அமாவாசை, பௌர்ணமி தோன்றுகிறது என்று கூறுகிறோமோ, அதே போல நம் மனது தூய்மை பெறும் நிலையை வைத்து அரவிந்த அமாவாசை தரிசனங்களும், அரவிந்த பௌர்ணமி தரிசனங்களும் அமையும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அன்னையின் அனுகிரகமாகும்.

நம் சற்குரு கூறிய முறையில் தியானத்தை ஆரம்பித்த ஒரு அடியார் ஒரு சில நாட்களிலேயே அவர் கண்கள் குடம் குடமாய் கண்ணீரைச் சொரிய அவர் மனம் தூய்மை அடைந்தது என்பதே அவர் அனுபவித்த ‘அன்னையின் அடிமை கண்ட’ ஒரு ஆனந்த நிகழ்ச்சியாகும்.


மக்களின் கர்மங்களை ஏற்பதால்தான் மணமுள்ள மலர்கள் ஒரே நாளில் வாடி விடுகின்றன !

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam