அடியார்
ஸ்ரீகிருஷ்ண பகவான் உபதேசம் செய்த பகவத் கீதையை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே, குருதேவா?
சற்குரு
உன்னுடைய கேள்வியிலேயே, கேள்விக்கான பதிலும் இருக்கிறதே.
எங்கும் நிறைந்திருக்கும் பரமாத்மாவான ஸ்ரீகிருஷ்ணனின் உபதேசம்தானே பகவத் கீதை. அதை வீட்டில் படிக்கக் கூடாது என்றால் அது சரியாகுமா? யுத்த களத்தில் உபதேசிக்கப்பட்டிருந்தாலும் பகவத் கீதையில் முழுக்க முழுக்க மக்களின் வாழ்க்கைப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான எளிமையான விளக்கங்களே அளிக்கப்பட்டுள்ளன. தற்கால மனிதர்களுக்குப் புரியும் வகையிலே எம் குருநாதர் அளித்த கீதை உரைகளை எடுத்துரைக்கிறேன். அவற்றைச் சிந்தனையில் நிலை நிறுத்தி கீதையைப் பற்றியும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்வைப் பற்றியும் நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
மகாபாரத யுத்த களமான குருக்ஷேத்திரத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ச்சுனனுக்கு ஒன்றரை நிமிடத்தில் பகவத் கீதையை உபதேசித்தார். அப்படியானால் அர்ச்சுனனுடைய மன ஆற்றல், உள்ள ஆற்றல் எத்தகைய வல்லமை படைத்ததாக இருக்கும்? அப்படிப்பட்ட மன ஆற்றல், உள்ள ஆற்றலில் ஒரு சிறு துளியே இன்றைய மனிதர்கள் பெற்றிருப்பதால் கீதையின் உண்மைப் பொருளை எளிமையாக்கித் தந்துள்ளனர் நம் திருக்கயிலாயப் பொதிய முனிச் சித்தர்கள்.
பதினெட்டு யோகப் பகுதிகளாக அர்ச்சுனனுக்கு உபதேசிக்கப்பட்ட கீதையை பதினெட்டே வாக்கியங்களில் பதித்து உங்கள் நலம் கருதி அளிக்கிறோம்.
1. வாழ்க்கை ஓர் அன்பு |
அன்பே சிவம். அன்பு இறை மயமானது. கடவுள் அன்பு மயமானவர். கடவுளும் அன்பும் வேறு வேறு அல்ல. ’அன்பு’ என்ற தமிழ்ச் சொல்லிற்கு வார்த்தைகளால் விளக்கம் கொடுக்க இயலாது. பொதுவாக, உலகத்தில் ஒருவர் மற்றவர் மீது வைக்கும் ஆசையை, பாசத்தையே அன்பு என்று சொல்லி விடுகிறோம். ஆசையும் பாசமும் நிலையில்லாதது, எப்போது வேண்டுமானாலும் மாறக் கூடியது, சுயநலம் உடையது. தாய் தன் குழந்தை மேல் பொழிவது பாசத்தைத்தான். அன்பு சுயநலம் அறியாதது. வேண்டியவர், வேண்டாதவர் என பாரபட்சம் கொள்ளாதது. துõய அன்பை நல்லோர்கள், மகான்களிடம் மட்டுமே காண முடியும். அன்பின் அடிப்படை தியாகம்.
அன்பு என்றால் என்ன என்பதை உலகிற்கு விளக்கிக் காட்ட கடவுள் எடுத்த அவதாரமே ஸ்ரீராமர் அவதாரம். முழுக்க முழுக்க தியாகத்தின் அடிப்படையில் அமைந்ததே ராமபிரானின் வாழ்க்கை. அகண்ட சாம்ராஜ்யத்தை தன் தம்பிக்காக விட்டுக் கொடுத்தது, தந்தை வாக்குறுதியை நிறைவேற்ற பதினான்கு ஆண்டுகள் காட்டில் வனவாசம் செய்தது, தன் குடிமக்கள் ராஜாவின் மேல் கொண்ட நம்பிக்கையைப் பலப்படுத்த நிறைமாத கர்ப்பிணியான தன் ஆருயிர் மனைவியைக் காட்டிற்கு அனுப்பியது என ஸ்ரீராமருடைய வாழ்க்கைக் கட்டிடம் முழுவதுமே தியாகச் செங்கற்களால் அமைக்கப்பட்டதே.
ஸ்ரீராமர் அன்புடன் அரவணைத்து மணலால் பிடித்த சிவலிங்கம் இன்றும் ஆழ்ந்த அன்பிற்கு எடுத்துக் காட்டாய் ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமசுவாமி லிங்க மூர்த்தியாய் அருளாட்சி செய்து வருகிறது. எத்தனையோ கோடிக் கணக்கான புயல், மழை, கடல் கொந்தளிப்புகளுக்கிடையே திரேதா யுகத்திலிருந்து லட்சக் கணக்கான ஆண்டுகளாக பூலோக மக்களுக்கெல்லாம் கருணை மழை பொழிந்து கொண்டிருக்கும் ராம சிவலிங்க மூர்த்தியை ஸ்ரீராமர் நிர்மாணித்துத் தந்துள்ளார் என்றால் அவருடைய அன்பின் ஆழம் எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
2. வாழ்க்கை ஓர் அழகு |
அழகு, அற்புதம், அதிசயமானது இந்த வாழ்க்கை. ஒரு சாதாரண விட்டில் பூச்சி, வெட்டுக் கிளி, கம்பளிப் புழு, யானை, சிங்கம் என உலகில் உள்ள இறைவனின் எந்தப் படைப்புப் பொருளை எடுத்துக் கொண்டாலும் அது அழகானது, அற்புதமானது, அதிசயமானது. உதாரணமாக திமிங்கலத்தை எடுத்துக் கொள்வோம். உலகத்திலேயே மிகவும் கடினமான சீன மொழியில் கூட ஒன்றிரண்டு எழுத்துக்கள் உடைய வார்த்தைகள் உண்டு. ஆனால், சுறு வகையைச் சேர்ந்த திமிங்கலங்கள் பேசும் பாஷையில் 27000 சங்கேத குறியிடுகளுக்குக் குறைந்த வார்த்தைகளே கிடையாது. மற்ற நட்சத்திர உலகிலிருந்து செய்திகளைப் பெற்று பூலோக மக்களின் நன்மைக்காக அளிக்கும் அற்புத ஆற்றல் படைத்தவையே கடல்வாழ் திமிங்கலங்கள் ஆகும்.
வாழ்க்கை ஓர் அழகு
அனைவரிடமும் அதிசயிப்போம்
திமிங்கலங்களின் பேச்சு ஒலி மிக நுண்ணிய மின்காந்த அலைவரிசையில் அமைந்திருப்பதால் அதை வேறு எந்த ஜீவ ராசியாலும் கிரகிக்க முடியாது. மற்றொரு கடல் வாழ் ஜீவராசியான டால்பின்கள் அவற்றைக் கிரகித்து, மக்களுக்குப் புரியம் வண்ணம் அந்தச் செய்திகளை மொழி பெயர்த்து, மக்கள் மனோரீதியாக கிரகிக்கும் காந்த அலைவரிசையில் பரவெளியில் அனுப்புகின்றன. டால்பின்களும் சுறா வகையைச் சேர்ந்தவையே. சித்தர்களால் ‘உதவி கைகாட்டி சுறா‘ என்றழைக்கப்படும் டால்பின் ஒரு நாளில் மக்கள் சமுதாயத்திற்கு ஆற்றும் தொண்டை ஒரு மனிதன் தான் வாழ்நாள் முழுதும் கூட நிறைவேற்ற முடியாது.
டால்பின்கள் கிரகிக்கும் செய்திகளையே மக்களின் நல்வாழ்விற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் யோகிகள், மகான்கள், மருத்துவ வல்லுநர்கள், கணித மேதைகள், விஞ்ஞானிகள் போன்றோர் கிரகித்து அவ்வப்போது மக்களுக்கு அறிவிக்கின்றனர். ஒட்டடை என்று நாம் சாதாரணமாக நினைக்கும் சிலந்திக் கூட்டைப் போன்ற ஒட்டுப் பொருள் உலகில் எந்த விஞ்ஞானத்தாலும் உருவாக்க முடியாத ஒன்று. அது மட்டுமல்லாமல் சிலந்திக் கூட்டில் எந்தப் பூச்சி பட்டாலும் ஒட்டிக் கொள்ளும். ஆனால் சிலந்தி மட்டும் தன் கால்கள் ஒட்டாமல், சிரமமில்லாமல் அந்த கூட்டில் நடை பழகிக் கொண்டிருக்கிறதே. இது எப்படி என்பது எந்த விஞ்ஞானியாலும் இன்று வரை விளக்க முடியாத ஒர் அற்புத யோகமாகும்.
3. வாழ்க்கை ஓர் ஆன்மா |
உடலில் உயிர் இருக்கிறதா? உயிரில் உடல் இருக்கிறதா?
உயிரில் உடல் இருக்கிறது என்பதே நாம் இதுவரை அறியாத உண்மை. உயிர் என்னும் பரந்த தத்துவத்தில் ஒரு பகுதியாக துலங்குவதே பஞ்ச பூதங்களால் ஆன மனித உடலாகும். இந்த உயிர்த் தத்துவத்தையே ஆன்மா என்கிறோம். ஒரு மனிதன் எந்த அளவிற்கு தன் உயிரான ஆன்மாவுடன் தொடர்பு கொள்கிறானோ அந்த அளவிற்கு அவன் இறைவனை நோக்கி முன்னேறுகிறான். ஏனென்றால், ஆன்மா எந்த மாயையாலும் பாதிக்கப்படாதது, தூய்மையானது, கர்ம வினைகளால் தாக்கப்படாதது, அறிவு பூர்வமானது.
உலகில் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ள இணையம் என்னும் இண்டர்நெட் வசதி உள்ளது போல மனித ஆன்மாவுடன் தொடர்பு கொள்ளும் கேந்திர மையமே நமது இதயமாகும். தினந்தோறும் இதயத்துடன் தொடர்பு கொண்டு உரையாடக் கற்றுக் கொள்ளுங்கள். எந்த அளவிற்கு உங்கள் இதயத்துடன் உரையாடுகிறீர்களோ அந்த அளவிற்கு உங்கள் ஆன்மாவுடன் நெருக்கம் ஏற்படும். ஆன்மாவுடன் நீங்கள் கொள்ளும் நெருக்கமே இறுதியில் கடவுளிடம் உங்களைக் கொண்டு சேர்க்கும். ஆரம்ப கட்டமாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் அமர்ந்து உங்கள் இதயத் துடிப்பைக் கவனமாகக் கேட்டுப் பழகுங்கள். மன ஒருமைப்பாட்டுடன் இதயத் துடிப்புடன் நீங்கள் கொள்ளும் உறவு, படிப்படியாக இதயத்துடன் தொடர்பு கொள்ளும் மார்கத்தைக் காட்டும். இவ்வாறு இதயத்துடன் தினமும் தொடர்பு கொண்டு தன் ஆத்மாவை வளப்படுத்திக் கொண்டவரே திருநாளைப் போவார் என்று அழைக்கப்படும் நந்தனார் மூர்த்தி ஆவார்.
4. வாழ்க்கை ஓர் இலக்கு |
‘மனித வாழ்க்கைக்கு அத்தியாவசியமானது எது, குருதேவா?’ என்று போகர் தன் ஆசான் அகத்தியரைப் பார்த்துக் கேட்கிறார். பணம், கல்வி, உற்றம், சுற்றம், நண்பர்கள் என இவை எல்லாம் மனித வாழ்க்கைக்குத் தேவையானவை என்று நாம் நினைத்திருக்க, ஆசான் அகத்தியரோ, ‘மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது குறிக்கோள். குறிக்கோள் இலாத மனிதன் அழிந்து போவது திண்ணம்’ என்று குறிக்கோளின் மகத்துவத்தைப் பறைசாற்றுகின்றார். பரீட்சையில் நூறு மார்க் எடுக்க வேண்டும், நோபள் பரிசு பெற வேண்டும், கோடி கோடியாகப் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பவை எல்லாம் நல்ல குறிக்கோள்கள் என்று கூற முடியாது. எந்த குறிக்கோள் உன்னை இறைவனை நோக்கி முன்னேற வைக்கிறதோ அதையே குறிக்கோள் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.
பன்னிரு ஆழ்வார்கள், 63 நாயன்மார்கள், திருக்கயிலாய பொதிய முனிப் பரம்பரையில் உதித்த அகத்தியர் முதலான சித்தர்கள், திருஅண்ணாமலையில் உறையும் கோடிக் கணக்கான சித்தர்கள் இவர்கள் வரலாறுகளை ஊன்றிப் படித்தீர்களானால் குறிக்கோள் என்ற வார்த்தைக்கு உண்மையான அர்த்தம் என்ன, எந்த குறிக்கோளை ஏற்று நிறைவேற்றினால் மனித வாழ்வு செம்மை அடையும் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். நல்ல குறிக்கோள்களை ஏற்று அதை உயிர் மூச்சாக நிறைவேற்றும் முதல் கட்டமாகத்தான் பெரியோர்கள் வைராக்யம் என்ற ஒன்றை நமக்கு ஏற்படுத்தித் தந்தார்கள். தினமும் எறும்பு, பறவைகள், மீன்களுக்கு உணவிடுவது, கோயில்களில் குப்பை பொறுக்குவது, மாதம் ஒரு முறை பசு மாட்டுத் தொழுவங்களைத் தூய்மைப் படுத்துவது, கோயில் நந்தவனங்களை சீர் அமைத்துத் தருவது, வருடம் ஒரு முறை காசி, ராமேஸ்வரம், அயோத்தியா போன்ற புனிதத் தலங்களுக்கு நல்ல இறையடியார்களை குடும்ப சகிதமாக பணம், உணவு, ஆடைகள் கொடுத்து அனுப்பி வைப்பது, ஏழைகளுக்கு இலவச திருமணங்களை நிறைவேற்றுவது என்றவாறாக தின வைராக்யம், மாத வைராக்யம், வருட வைராக்யம், ஆயுள் வைராக்யம் என வளமான வைராக்கியங்களை ஏற்று நிறைவேற்றி வாருங்கள். தினம் ஒரு நல்ல காரியம் செய்து அதைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதே எளிமையான தியான முறையாகும். எளிமையான இந்தத் தியானமே உங்களை இறுதியில் இறைவனிடம் கொண்டு சேர்க்கும் உத்தம மார்கமாகும்.
5. வாழ்க்கை ஓர் இரகசியம் |
ஒவ்வொரு மனிதனும் யாருக்கும் தெரியாது என்று நினைத்து செய்யும் எல்லாக் காரியங்களுக்கும் சூரியனும் சந்திரனும் சாட்சியாக நிற்கின்றனர். இந்த சாட்சி பூதங்களே மனிதன் தான் செய்த தவறுகளை உணர்ந்து, அதை களைந்தெறியும் வழிமுறைகளைத் தேடும்போது அவன் முன்னோர்கள் மூலமாக தகுந்த பரிகார முறைகளையும் தெரியப்படுத்த உறுதுணையாக நிற்கின்றனர். இதற்காகவே அமாவாசை, மாளய பட்சம், விஷ்ணுபதி போன்ற விசேஷ நாட்கள் தர்ப்பண பூஜை நாட்களாக அமைந்து முன்னோர்களின் அருளாசியைப் பெறும் வழிபாட்டு முறைகளாக பெரியோர்களால் வழங்கப்பட்டுள்ளன. எந்த இரகசியத்தையும் தன் மனதிற்குள் வைத்துப் பூட்டிக் கொள்ளாது உரியவரிடம் வெளிப்படுத்தும்போதுதான் மனித மனம் அமைதி அடையும். ஆனால், எல்லோரிடமும்
மரண பயத்தைப் போக்கும்
திருக்குற்றால நந்தீஸ்வர மூர்த்தி
எல்லா இரகசியங்களையும் பகிர்ந்து கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலைகளே பெரும்பாலும் அமைவதால் சிவாலயங்களில் நந்தீஸ்வர மூர்த்தியின் காதில் எல்லா இரகசிய செயல்களையும், எண்ணங்களையும் சொல்லி வருவதை தினமுமே நிறைவேற்றி வந்தால் மனிதன் இறுதி காலத்தில் உயிர் விடும்போது எந்த இரகசிய செயல், எண்ண மூட்டையையும் அடுத்த பிறவிக்குச் சுமந்து செல்ல வேண்டிய நிலையிலிருந்து காப்பாற்றப்படுவான்.
‘உற்றார் யார் உளரோ உயிர் கொண்டு போம்பொழுது
குற்றாலத்துறை கூத்தனல்லால் நமக்கு உற்றார் யாருளரோ’
என்று அப்பர் சுவாமிகளின் தேவாரத் துதியை இறக்கும் தறுவாயில் ஒரு மனிதன் ஓதினால் திருக்குற்றாலத் துறையில் உறையும் நந்தீஸ்வர மூர்த்தி அந்தத் துதியை இறைவனின் திருச்செவிகளில் ஓதி அம்மனிதனின் இப்பூவுலக வாழ்க்கை நன்முறையில் நிறைவேறி அவன் இனி வரும் பிறவிகளிலும் நன்மை அடைய பிரார்த்தனை செய்கிறார். வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த நந்தீஸ்வர மூர்த்தியைத் தரிசனம் செய்து தங்கள் வாழ்வில் வெளிப்படையாகத் தெரிவிக்க முடியாத இரகசியங்களை இவரிடமாவது தெரிவித்து நற்கதி அடைய வழி தேடிக் கொள்ளுங்கள்.
6. வாழ்க்கை ஓர் உறுதி மொழி |
அஸ்திவாரம் இல்லாமல் ஒரு கட்டிடம் நிற்குமா? அது போல மனித வாழ்க்கை என்னும் கட்டிடத்திற்கு உறுதுணையாக நிற்பவையே அவன் எடுக்கும் உறுதி மொழிகள். மேலும், ஒரு மாடிக் கட்டிடத்திற்கு அமைக்கப்படும் அஸ்திவாரத்தையே பத்து மாடிக் கட்டிடத்திற்கும் பயன்படுத்த முடியுமா? அவ்வாறே தன் தகுதிக்கு, சக்திக்கு ஏற்ற உறுதி மொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ண வடிவில் இருக்கும் ஒரு உறுதி மொழி அதை நிறைவேற்றும்போதுதான் சிறப்புப் பெறுகிறது. எண்ணங்கள் வெறும் எண்ணங்களாக இருப்பதால் யாதொரு பயனும் இல்லை. எண்ணங்கள் செயல்படுத்தப்படும்போதுதான் அதனால் மற்றவர்களுக்குப் பலன் ஏற்படும். ‘இன்று மாலை ஐந்து மணிக்கு உங்களைப் பார்க்கிறேன்’ என்று ஒருவரிடம் சொன்னால் சரியாக ஐந்து மணிக்கு அந்த வாக்குறுதியை நிறைவேற்றினால்தான் அவர் ஆன்மீகத்தில் முன்னேறி வருகிறார் என்று அர்த்தம். சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவது ஆன்மீகத்தில் ஒருவர் எந்த அளவிற்கு முன்னேறி உள்ளார் என்பதற்கு உரிய அளவு கோல் ஆகும்.
தினமும் படுக்கைக்குச் செல்லும் முன் அன்று நடந்த நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்க்க வேண்டும், தான் பேசிய வார்த்தைகள், பழகிய மனிதர்கள், நிறைவேற்றிய செயல்கள் இவைகளை மனதினுள் ஓட விட்டுப் பார்த்தால் எந்த அளவிற்கு தேவை இல்லாத வார்த்தைகளைப் பேசி உள்ளோம், தேவை இல்லாத விஷயங்களில் பொருளையும் சக்தியையும், நேரத்தையும் வீணாக்கி உள்ளோம் என்று தெரியவரும். நம்முடைய செயல்களைப் பற்றி நாம் செய்து கொள்ளும் சுய விமர்சனமே நமது செயல்களில் ஒரு உறுதிப் பாட்டையும், வார்த்தைகளில் தெளிவையும், இறைவனிடத்தில் நம்பிக்கையையும் வளர்க்கும்.
7. வாழ்க்கை ஓர் விளையாட்டு |
விளையாட்டு என்பது பொழுதைப் போக்குவதற்கான ஒரு செயல் என்ற எண்ணமே மக்களிடையே நிலவுகிறது. விளையாட்டு என்பது மனிதன் விட்டுக் கொடுக்கும் மனோ பாவத்தை வளர்ப்பதற்காக இறைவன் ஏற்படுத்திய ஒரு வாழ்க்கை முறை என்பதே சித்தர்களின் கூற்று. எம்பெருமான் நிகழ்த்திய 64 திருவிளையாடல்களுமே இந்தத் தத்துவத்தின் விளக்கமாகவே அமைந்துள்ளன. அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனான எம் ஈசன் உதிர்ந்த பிட்டுக்காக மண் சுமந்து ஒரு ராஜாவிடம் பிரம்படி படும் திருவிளையாட்டை நிகழ்த்தி எத்தனை கோடி ஜீவன்களுக்கும் பூமாதேவிக்கும் நன்மை தேடித் தந்தான் என்பது நீங்கள் அறிந்ததே. தற்காலத்தில் எப்படியாவது விளையாட்டில் வெற்றி கொள்ள வேண்டும் என்ற வெறியே தலை துõக்கி நிற்பதால் விளையாட்டு என்ற வாழ்க்கைத் தத்துவம் மறந்து, மண்ணிலிருந்து மறைந்து விட்ட நிலை மிகவும் வருத்தத்திற்குரியது. இனியாவது மக்கள் இந்நிலை மாற விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதில் பெரியவர்கள்தான் குழந்தைகளுக்கு வழிகாட்டிகளாகச் செயல்பட வேண்டும்.
உதாரணமாக, மூளையைக் கசக்கி விளையாடும் செஸ் என்னும் சதுரங்க ஆட்டத்தில் பல பெரியவர்கள் குழந்தைகளிடம் விளையாடி அவர்களை வெற்றி கொண்டு தாங்கள் ஒரு பெரிய காரியத்தைச் சாதித்து விட்டதாக பெருமைப்படுகிறார்கள். உண்மையில் குழந்தைகளின் மூளை வளர்ச்சி நன்முறையில் அமைய வேண்டுமானால் அவர்களிடம் விளையாடி இறுதியில் குழந்தைகள் வெற்றி பெறும் முறையில் விட்டுக் கொடுத்து விளையாடுவதே உண்மையான விளையாட்டாகும். இதனால் குழந்தைகள் ஆர்வமுடன் சிந்தித்து தங்கள் திறமையைக் காட்ட முயலும். அதனால் அவர்கள் மூளைத் திறன், சிந்திக்கும் ஆற்றல் நன்முறையில் பெருகும். எதிர்காலத்தில் தாங்கள் வெற்றி கொண்ட பெரியவர்களின் விட்டுக் கொடுக்கும் தன்மை புரிய வரும்போது தாங்களும் அத்தகைய உயர்ந்த நிலைக்குத் தங்களைத் தயார்படுத்தி சமுதாயத்தில் சாந்தம் நிலவ உறுதுணையாய் நிற்பார்கள்.
உங்கள் விளையாட்டில் தெய்வீகம் ஊடுருவி நிற்கும்போது அது திருவிளையாடலாக மாறி விடுகிறது. அது எப்படி?
ஞாயிற்றம்பலம்
ஒரு முறை ராமானுஜர் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். அவருடைய சீடர்களும், ஊர் மக்களும் உடன் வந்து கொண்டருந்தனர். மதிய நேரமாதலால் சித்திரை மாத வெயில் தகித்துக் கொண்டிருந்தது. அந்த வெயிலைப் பொருட்படுத்தாமல் புலிமண்டபம் அருகே நாலைந்து குழந்தைகள் மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். அதில் ஒரு குழந்தை கட்டிய வீட்டை மற்றொரு குழந்தை களைத்து விட்டதால் வீடிழந்த குழந்தை ஓவென்று கதறி அழுது கொண்டிருந்தது. இந்தக் காட்சியைக் கண்ட ராமானுஜர் அந்தக் குழந்தைகளின் அருகில் சென்று பழுதுபட்ட மணல் வீட்டை செப்பனிடும் பணியில் இறங்கினார். கிணறு, தோட்டம், மண்டபங்கள் வைத்து மிகவும் நேர்த்தியாக ராமானுஜர் வீட்டைக் கொண்டிருந்ததால் பல மணி நேரங்கள் கழிந்து விட்டன. உடன் வந்தவர்களுக்கு மனதில் ஒரே அங்கலாய்ப்பு. ‘மண்டையைப் பிளக்கும் உச்சி வெயிலில் நம்மை நிற்க வைத்து விட்டு இவர் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாட ஆரம்பித்து விட்டாரே,’ என்று உள்ளூர குமுறல். ஒரு வழியாய் வீடு கட்டும் பணி முடிந்தவுடன், அந்தக் குழந்தையைப் பார்த்து, ‘குழந்தாய், பெருமாள் கருணையால் வீடு தயாராகி விட்டது. இந்த வீட்டில் உங்களில் யார் வந்து குடி இருக்கப் போகிறீர்கள்?’ என்று கேட்டார். குழந்தை ஆச்சரியத்துடன் ராமானுஜரைப் பார்த்து, ‘நாங்கள் குடியிருப்பதற்காகவா வீடு கட்டிக் கொடுத்தாய். எங்கள் ரெங்கநாதர் குடி இருக்க அல்லவா நாங்கள் கோயில் கட்டிக் கொண்டிருந்தோம்,’ என்று சொல்லியது. இதைக் கேட்ட ராமானுஜருக்கு தூக்கிவாரிப் போட்டது. அவருடைய சப்தநாடிகளும் அடங்கி விட்டன.
‘ஆஹா, என்ன முட்டாள்தனமாக எண்ணி விட்டோம். குழந்தைகளின் தூய அன்பை நாம் புரிந்து கொள்ளவில்லையே. உலகம் முழுதும் துறவி என்று பாராட்டும் இந்த ராமானுஜன் மனிதன் வாழும் வீட்டைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறேன். இங்குள்ள பச்சிளம் குழந்தைகளோ கொளுத்தும் வெயிலையும் சட்டை செய்யாமல் எம்பெருமானுக்கு கோயில் அமைப்பதில் முனைந்துள்ளன. இதுவல்லவோ இறை பக்தி, இதுவல்லவோ உண்மையான துறவறம்,’ என்று வியந்து மகிழ்ந்து அந்தத் தெய்வக் குழந்தையின் காலில் அனைவர் முன்னிலையிலும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
8. வாழ்க்கை ஓர் வாய்ப்பு |
‘அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது’ என்று ஔவை மூதாட்டியின் கனிந்த சொற்கள் ஆழ்ந்த அர்த்தம் உடையவை. ஒரு கோடி வருடங்களுக்கு ஒரு முறையே ஒரு மனிதப் பிறவி கிட்டும் என்று சித்தர்களின் கிரந்தங்கள் உரைக்கின்றன. இவ்வாறு அரும்பாடு பட்டு பெற்ற மனிதப் பிறவியை நன்முறையில் பயன்படுத்தாவிட்டால் அதனால் வரும் இழப்பு எத்துணை கொடியது என்று சற்றே எண்ணிப் பாருங்கள். ‘சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை, ஏனோதானே என்று வரும்’ என்று எம் குருநாதர் அடிக்கடி சொல்வார். கிடைத்த இப்பிறவியை நன்முறையில் பயன்படுத்திக் கொள்வதே புத்திசாலித்தனம். உடல், மனம், உள்ளம் மூன்றையும் சற்குருவிடம் முழுமையாக அர்ப்பணம் செய்து அவர் கூறும் வழியில் திரும்பிப் பாராமல் செல்வதே கிடைத்த மனிதப் பிறவி என்னும் வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளும் முறையாகும். சற்குரு வாய்க்கப் பெறாதவர்கள் சற்குரு கிடைக்க இறைவனிடம் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொள்வதும், சற்குருவின் அருள் வாசகங்களை சிரமேற் கொண்டு அனைவருக்கும் தெரிவிக்க தன்னாலான முயற்சிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருவதும் இவ்வரிய வாய்ப்பை முறையாகப் பயன்படுத்தும் உன்னத மார்கமாகும்.
கையில் கிடைத்ததைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வதில் கரடிக்கு நிகர் எதுவுமில்லை. மனித வாய்ப்பை இப்படிக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள உறுதுணை செய்யும் தெய்வமே திருச்சி திருவாசி திருத்தலத்தில் உறையும் ஸ்ரீமாற்றுவாதீஸ்வரர் ஆவார். இத்திலத்தில் அமைந்துள்ள அற்புதமான அன்னமாம்பொய்கையில் தினமும் ஒரு குறிப்பிட்ட ஹோரை நேரத்தில் கரடி சித்தர் நீராடி ஸ்ரீபாலாம்பிகையையும், இறைவனையும் தொழுது செல்கிறார். திருதியை திதியில், குறிப்பாக அட்சய திருதியை அன்று அன்னமாம்பொய்கையில் நீராடி, இயன்ற தான, தர்மங்களைச் செய்து வந்தால் மனித வாழ்க்கையை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும் வழிமுறை உரியவர்கள் மூலம் தெரிய வரும்.
9. வாழ்க்கை ஓர் வெகுமதி |
கடவுள் மனிதனுக்கு அளித்துள்ள செல்வங்களுக்கு அளவே கிடையாது. கோடிக் கோடியாகக் கொட்டிக் கொடுத்தாலும் ஒரு கண்ணையோ, ஒரு விரலையோ மனிதன் கடையில் வாங்க முடியுமா? நம்முடைய கையை மட்டுமே உருவாக்குவதற்காக பிரம்மலோக சித்தர்கள் இரண்டரை கோடி சதுர்யுகங்கள் தவம் இருந்தார்கள் என்றால் மற்ற உடல் அங்கங்களுக்காக எத்தனை கோடி ஆண்டுகள் சித்தர்கள் தவம் இயற்றி இருப்பார்கள் என்பது நம் மனக் கணக்கிற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஒரு விந்தையாகும். உலகத்தில் உள்ள அனைத்து விஞ்ஞானிகளும் ஒன்று கூடினாலும் நம் தலை முடியில் ஒன்றை உருவாக்க முடியுமா? நம் தலையில் உள்ள முடியின் தன்மை வேறு, முகத்தில் வளரும் முடியின் தன்மை வேறு. இவ்வாறே மற்ற அங்கங்களிலும் உள்ள முடியின் தன்மை வெவ்வேறாகும். உயிரற்ற உடல் திசுக்கள் உயிருள்ள திசுக்களோடு சேர்ந்திருந்தால் உடல் அழுகி மனிதன் இறந்து விடுவான் என்று விஞ்ஞானம் கூறுகிறது. உயிர் அற்ற நகத்தை உயிருள்ள விரலோடு சேர்த்து வைக்கும் இறைவனின் விந்தையை யாராலும் விளக்க முடியுமா? ஒரு துண்டு முடி உங்கள் உடலுக்குள் சென்றால் வாந்தி, மயக்கம் ஏற்படுகிறது. கொத்து, கொத்தான முடியுடன் குழந்தை தாயின் கர்ப்பத்தில் உலவி வருகிறதே. இந்த இறை விந்தைக்கு யாராலும் விளக்கம் கூற முடியுமா? உடலில் எந்தப் பகுதியில் பூதினாலும் சிகப்பு வண்ணத்தைக் கொடுக்காத மருதாணி இலை உள்ளங்கையில் சிகப்பு நிறத்தைக் கொடுக்கிறதே, இதற்கு யாராவது விளக்கம் தர முன்வருவார்களா?
இறை அடியார்களாகிய நீங்கள் இதை எல்லாம் நன்றாக ஆத்ம விசாரம் செய்து பார்க்கவே உங்களுக்குத் தெரிவிக்கிறோம். அற்புதங்கள் கோடி கோடியாய் நிறைந்த இந்த மனித உடலை தற்கொலை என்ற பெயரில் அழிக்க நினைக்கலாமா? மனித உடல் என்பது இறைவன் மனிதனுக்கு அளித்த ஓர் ஒப்பற்ற, விலை மதிப்பில்லாத வெகுமதி. எனவே, தற்கொலை எண்ணத்தைக் கொள்ளாதீர்கள். மற்றவர்களுக்கும் இந்த அற்புதங்களை எடுத்துச் சொல்லி தற்கொலை எந்த விதமான பிரச்னைகளுக்கும் தீர்வைத் தராது என்பதை விளக்கிச் சொல்வதே உங்கள் கடமையாகும்.