மண் குருவிகளின் மயக்கும் கானம் எண் குருவிகளை இணைக்குமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

குருவிடமா குறு, குறு?

சிறுவனுக்கு, பெரியவர் ‘அப்படி என்னதான் தவறு செய்திருப்பார்’ என்று தெரிந்து கொள்ள ஒரே ஆவல்! அவர் அடுத்து என்ன சொல்லப் போகின்றார் என்றே உலக மகா ஆவலுடன், அவர் வாய் வார்த்தையையே உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தான்!

“ஒண்ணு தெரிஞ்சுக்கடா கண்ணு! எப்பவுமே நல்லதையே பண்ணிக் கிட்டே இருக்க முடியுமா, என்ன? ஒரு சில தடவை தவறு பண்றதும் சகஜந்தான்! அது சரி, அடடா, இந்தக் கிழவன் அப்படி என்னதான் தப்புப் பண்ணி, இன்னொரு கிழவன் கிட்ட எப்படி மாட்டிக்கிட்டான்னு தெரிஞ்சுக்க, உனக்கு அவ்வளவு குறு, குறு குறுக்குப் புத்தி வந்துடுச்சுதானே?”

பெரியவர் அவன் காதைத் திருகிட… சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான்! தெய்வீகத்தில் அவன் சிறு தவறு செய்தாலும் கடுமையாகக் கோபித்து மிகக் கடுமையாகத் தண்டிக்கும் இவரா இப்படிச் சொல்கிறார்? அவனால் நம்பவே முடியவில்லையே!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“ம்… ம்… ம்.. அதுக்கப்புறம் என்னாச்சு வாத்யாரே?”

“இருடா கண்ணு! அதுக்கப்புறம்தானே முக்கியமான விஷயமே இருக்கு! நான் என்ன செஞ்சுருப்பேன், சொல்லு பார்க்கலாம்!”

“ம்… ம்…ம்..” அவருக்குக் காலைப் பிடிச்சு விட்டிருப்பே! அவ்வளவுதானே!”

“அந்த மாதிரி செஞ்சுருந்தா நான் இப்படியா உன்னோட அல்லல் பட்டுக்கிட்டு இருப்பேன்?”

சிவபெருமான் தோன்றினாரே!

“சரி, சரி, நடந்ததைச் சொல்றேன்! நேரம், காலம் தெரியாம உயிரை வாங்குறியேன்னு நான் ரொம்பவும் கடுப்போட சொன்ன உடனேயே.. அங்கே கொஞ்ச நேரம் சப்தத்தைக் காணோம்! அவ்வளவுதான் பதறிப் போய் அவர் பக்கத்துல போனா.. சொன்னா யாரும் நம்ப மாட்டாங்கடா… நிமிர்ந்து பார்த்தா… அங்கே கிழவனுக்கு பதிலா சாட்சாத் சிவபெருமானே நேர்ருல வந்து நிக்கறாரு! அவ்வளவுதான், சுவாமீ, தெரியாமச் சொல்லிட்டேன்னு அப்படியே அவரோட திருவடில விழுந்தேன் பாரு, அப்படியே அவரு கால்னால என்னை ஒரு எத்து எத்தினாரு பாரு!...

பெரியவர் நிறுத்தி விட்டார்!

சிறுவனுக்குப் புரியவில்லை!

“முதலில் அந்தக் கிழவன் கால் அமுக்கிவிடச் சொன்னான் என்றார். பிறகு அவரே சிவபெருமான் வடிவாகி நின்று காலால் உதைத்தார்!” என்கிறார்.

“வாத்தியாரே! நீ என்ன சொல்ல வர்ற?”

“ரொம்ப சிம்பிள்டா கண்ணு! வாழ்க்கையில எப்பயாவது, யாராவது, உன்னைக் கால் அமுக்கி விடச் சொன்னா தயங்காம உடனேயே செஞ்சுடு! எதுக்கும் யோசிக்காதே! எவ்வளவு களைப்பா இருந்தாலும் பரவாயில்லை! சும்மா கொஞ்ச நேரமாவது காலைப் பிடிச்சு மனசார சேவை செஞ்சுடு! வர்ற நல்ல வாய்ப்பை நழுவ விட்டுடாதே!” என்று பெரியவர் சடக்கென்று முடித்தும் விட்டார்.

ஏனிந்த சந்தேகம்?

ஊஹூம்.. சிறுவனுக்கு மனசு திருப்தி ஆகவில்லை! பெரியவர் எதையோ விட்டு விட்டுச் சொல்வதால் அதில் ஏதோ முழுமை ஆகாதது போல் த்வனித்தது. எனவே சிறுவனின் மனதில், ஒரு ஓரத்தில் இந்த நிகழ்ச்சி உரசிக் கொண்டே இருந்தது. இதை “கதை வர்ணனை” என்று சொல்லி உதறி விட முடியாதே!

எதை “இல்லை” என்று சொல்கின்றோமோ அதை நடத்திக் காட்ட வல்லவரிடம், எதை “இருக்கிறது” என்றால் அதை இல்லாமல் ஆக்க வல்ல சித்தரிடமா சந்தேகம் கேட்பது?”

“அவ்வளவு ஈசியா சிவபெருமான் தரிசனம் கிடைக்குமான்னுதானே உனக்கு சந்தேகம், சரியா?’

சிறுவன் விழித்தான், அசடு வழிந்தான், தலை குனிந்தான், வெட்கிப் போனான்.

அனைத்தும் இயங்கும், இயக்கப்படும், அருணாசல பூமி!

“இந்த அருணாசலத் தெய்வ பூமியில எதுவுமே நடக்குமப்பா? நிமிஷத்துக்கு, நிமிஷம் கோடி, கோடியா அற்புதங்கள் இங்கே யுகம் யுகமா நடந்துக் கிட்டுத்தான் இருக்கு? கண்ணுக்குத் தெரியாததுனால அதை எல்லாம் நடக்கவே இல்லைன்னு சொல்லிடுவியா? சித்தர்களுக்காகக் கடவுளே கனிஞ்சு கீழே வந்து திருவடி தீட்சை தர்ற புண்ணிய பூமியப்பா இது?”

ஓஹோ, இதுதான் திருவடி தீட்சை ரகசியமா? இதைத்தா ‘எட்டி உதைத்த ஏகாம்பரன்’ என ஓதினாரோ?

“வா வா அய்யா! நான் திருவடி தீட்சை தருகிறேன், இந்தா பெற்றுக் கொள்! என்றா ஆதிசிவன் நேரில் வந்துரைப்பார்?”

சிறுவன் தெளிந்தான்.

இதன் பிறகு பெரியவரை, ஆதிசிவன் காலணிக் காலால் பெரியவரை உதையும் அனுபூதியை, மனதினுள் படல் போட்டுப் பார்ப்பான்! அவனுக்கே சிரிப்பு வந்து விடும். பெரியவரிடம் சொன்னால், அவர் ஏதேனும் கோபமாகச் சொல்லி ஏதாவது பெரிய தண்டனை கொடுத்து விட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் இதைப் பற்றி மீண்டும் பெரியவரிடம் அவன் நெடுங்காலம் பேசவே இல்லை!

சில மாதங்கள் கழித்து, ஒரு நாள்… வழக்கம் போல் சிறுவனும், கோவணாண்டிப் பெரியவரும் அண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்தனர்.

முன் சென்றது, பின் சிறக்கவோ?

நல்ல கோடைக் காலத்து வெய்யில்! காலைப் பொசுக்கும் உச்சி நேரம்! பாதையில் நிறைய முட்கள்! சிறுவன் இரு கால்களிலும் முட்கள் குத்திய வலியாலும், வெயில் தாங்காமலும் மெதுவாக தத்தித் தத்தி வந்து கொண்டிருக்க, பெரியவரோ “ஜம்” மென்று முன்னே, படக் படக்கென்ற மிலிட்டரி பாணியில் வெகு வேகமாகப் போய்க் கொண்டிருந்தார். சிறுவனால் அவர் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் வேண்டுமென்றே எதையோ நடப்பதை எதிர்பார்த்து மிகவும் வேகமாக முன்னே விரைந்து நடப்பது போல் இருந்தது!

முடிந்த வரை வேகமாக அவரோடு நடந்தும் பார்த்தான். இருந்தாலும் நேரம் ஆக, ஆக அவன் நடையில் தானாகவே வேகம் குறைய ஆரம்பித்து விட்டது. வழக்கம் போல் பசி வேறு! கிரிவலம் முடியும் வரை பெரியவர் எதுவுமே வாங்கித் தர மாட்டார் என்பது அவன் பன்முறை பார்த்து, அனுபவித்தது தானே!

எனவே சோர்வாகவே சற்றுத் தள்ளாடியே பின்னால் வந்து கொண்டிருந்தான். கொஞ்ச தூரத்தில், முன்னே யாரோ ஒரு மூதாட்டி, தன் தலையில் விறகுச் சுமையுடன் மெதுவாகப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. சிறுவனும், “அந்தப் பாட்டியை எப்படியாவது பிடித்து விடுவோம். ஏதாவது பேச்சுக் கொடுத்துக் கொண்டே நடந்தால், கொஞ்சம் சிரமம் தெரியாது” என்று எண்ணிச் சற்று வேகம் பிடித்து வந்து சேர்ந்தான்..!

..ஆனந்தம் தொடரும்

நவநாத சித்தர்கள் மகிமை

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர்மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

பாணவாலை நவநாத சித்தர்

சுபானு ஆண்டின், மார்கழி மாத சிவராத்திரியில் கிரிவலம் வருபவரே ஸ்ரீபாணவாலை நவநாதச் சித்தர்பிரான்! சிவபெருமானின் வாலை யோக நாட்டியப் பீஜாட்சர ஜோதியில் இருந்து, மஹேஸ்வரனால் தோற்றுவிக்கப் பெற்றவர்.

வாலை யோகீஸ்வரியே மனோன்மணி அம்பிகை!

அம்பாளுடைய திவ்யமான அவதாரங்களுள் ஒன்றே மனோன்மணி தேவி அம்சமாகும். அம்பிகையே, மானுட வடிவில் வாலை யோகத்தைப் பயின்று, உத்தம தெய்வ நிலைகளை அடைந்து, இறைத் துணைவியாகும் அவதாரிகையே மனோன்மணி அம்சமாகும்.

தேவி உபாசனையில், பாணவாலைச் சித்தர், மனோன்மணிப் பராசக்தியை, ஸ்ரீவித்யையில் நிர்மாணித்து வித்யா பூஜைகள் ஆற்றிப் பரமானந்த நிலைகளை அடைந்து, உய்த்து உறைபவர். உத்தம வாலை யோகம் என்பது மானுட சரீரத்திலேயே, புனிதமான மனோபாவனங்களையும், தெய்வீக உளப்பாங்கையும் பெற்று, ஆத்ம சாட்சாத்காரம் அடைவதைக் குறிப்பதாகும்.

ஸ்ரீமனோன்மணி அம்பாள்
திருநாவலூர்

கலியுக மனித உடலை இயக்குவது மனமும், புத்தியும் தாமே! ஆனால் நாளடைவில், கர்மவினைச் சாரத்தால் மனமும், புத்தியும் உடலை ஒட்டியதாகி விடுகின்றன. மனதிற்குரிய சுதந்திரப் புனிதமும் காலப் போக்கில் இழக்கப்படுகிறது. நல்புத்தியும் கலக்கமும் அடைந்து அசுத்தமான மனதால் மறைவுபடுகின்றது.

சக்தி உபாசனையே வாலை யோகத்திற்கு முழு முதற்படி!

மனதை, யோகப் பூர்வமாக, தெய்வத்தின்பால் செலுத்தச் செலுத்தத்தான் மனமானது ஆன்ம சக்தியைப் பெற்றுத் தெளிவடைந்து உடலை ஆன்மப்பூர்வமாக இயக்க வல்லதாகின்றது. பராசக்தி உபாசனையுடன் கூடிய சிறப்பான யோக இயல்புகளைப் பூண்டதே வாலை யோகம்.

மனம், புத்தியில் ஒடுங்கி, புத்தி பகுத்தறிவில் தியானப் பூர்வமாக அடங்கி, அறிவு யோகப் பூர்வமாய் உள்ளத்தில் அடங்கி, உள்ளம் ஞானப் பூர்வமாய் ஆத்மத்தில் ஒடுங்குவதே வாலை யோகக் கலையாம். சொல்லில் வடிப்பது எளிது! அனுபூதியாக அடைதல் அரிதிலும் அரிதாம். ஆனால் இத்தகைய உத்தம தெய்வ நிலைகள் உள என்று உணர்ந்தால் தாமே, இறைலட்சியங்களை வகுத்திட முடியும்.

வாலை யோகக் கலை, அம்பிகையின் பரிபூரண அருளின்றிக் கிட்டாது. பயில்வதற்கு மிகவும் கடினமானது. திருமூலர் இக்கலையில் சிறந்தவர். பாணவாலைச் சித்தர்தாம் இதனைத் தற்போது பல லோகங்களிலும் போதித்து வருகின்றார். அம்பிகையே வாலை யோகத்தை மானுட ரூபத்தில் பயின்று, இறைத் துணைவியாய் ஆன அவதாரத் தோன்றலே மனோன்மணி அம்பிகை ரூபமாகும்.

அருணாசலத்தில் தட்சிணாமூர்த்தம்

திருஅண்ணாமலை உச்சியில், அருந்தவத்தால் அடைய வல்ல மனோன்மணீய கோசப் பாசத்துறையில் வாலையோக ஞானம் புகட்டுபவராய்த் தட்சிணா மூர்த்தி, மானுட வடிவில் பொலிகின்றார். இன்றும், முழு மானுட வடிவில், குறித்த கேதாம்ச ஞானகுண கரண நேரத்தில் வாலை யோகப் பரிமாணத்தில் தரிசிக்கப் பெறவல்லவர். இம்மூர்த்தி வாலை ஞானயோகம் பூணும் கல்லால மரத்தின் பெரிய இலை ஒன்றையே, பகவான் ரமண மகரிஷி தரிசிக்கும் பாக்யம் பெற்றார்.

வாலை யோகத்தில் யோக பாணம் எனப்படும் சித்த பக்தி கூடும் போது, பாணவாலை யோகமாக ஆகி, இதில் திறம் பெற்றவரே பாணவாலைச் சித்தர், இவரே வரும் மார்கழி மாத சிவராத்திரி நன்னாளில் அருணாசலத்தில் கிரிவலம் வருகின்றார்.

வாலை யோக அம்சம் திரளும் திரவியங்கள்

யோக அம்சங்கள் நிரவிய திரவியங்கள் கலியுகத்தில் பல உண்டு. எவ்வாறு இளநீரில் கண்படா தீர்த்தமாக மறைந்திருக்கும் இளநீரைப் பயன்படுத்த, மரமேறுவது முதல், இளங்காயைச் சீவிக் கண் திறந்து, இளநீரை அருந்துவது வரை சிறுவலிமையும், முயற்சியும், அறிவும், கருவியும் (அரிவாள், கயிறு, பணம்)  தேவைப்படுகின்றதோ இதே போல், வாலை யோக சக்திகள் நிறைந்த திரவியங்கள், பொருட்கள் சாதனங்கள் பல இருந்தாலும், அவற்றை நன்கு பயன்படுத்தும் முறைகளை அறிதல் வேண்டுமே!

ஸ்ரீவாலீஸ்வரர் வடகுரங்காடுதுறை

இளநீர், விபூதிப் பச்சிலை அல்லது திருநீற்றுப் பச்சிலை, குங்குமப்பூ, நார்ப்பட்டு (பட்டுப் புழு சேராதது) போன்றவை வாலையோக சித்திகள் நிறைந்தவை. இசைத் துறையில் ராகங்களில் சங்கராபரண ராகம் வாலை யோக சக்தியைப் பெற்றுள்ளது.

தாம்பூல ஆஹூதியில் நிரவும் வாலை யோக சக்தி

வடக்கு நோக்கி பத்மாசனத்தில் அமர்ந்து அமிர்த யோகம் அறுபது நாழிகையும் அமைந்து, திரிதினமாக உத்திர நட்சத்திரம் முழுமையாகத் திங்கள் நாளில் அமையும் பௌர்ணமித் திதியில், அகஸ்தியர் அளித்த தாம்பூலச் சுலோகம்தனை ஆயிரத்தெட்டு முறை ஓதி, 21 வெற்றிலைகள், 21பாக்குகள் வைத்து, 21 வெற்றிலைகளிலும் சுண்ணாம்பு தடவி ஆக்கப் பெறும் தாம்பூலத்தில், வாலையோக சக்தி சேர்வதால், இவற்றை பைரவ ஹோமத்தில் 21 வகைத் தாம்பூல ஆஹூதிகளாக அளித்தலால் 21 மைல்களுக்கு விண்ணில் வாலையோக சக்தி நிரவும்.

இதைக் கருத்தில் கொண்டே திருஅண்ணாமலையில், வாலையோகத் தரிசனம் பகுதியில் இருந்து, பல மைல் சுற்றளவில் வாழ்வோர்க்குத் திருஅண்ணாமலையாரே சற்குரு ஆகின்றார் என்ற உத்தம மொழி பிறந்தது எனில் அருணாசலப் புண்ணிய பூமியின் மகிமைதான் என்னே, என்னே!

வாலை + ஈஸ்வரன் = வாலீஸ்வரர்

வாலை யோக சக்திகள் நிறைந்த தலங்களும் உண்டு. சில தலங்களில் வாலையோக ஈஸ்வரர் (யோகீஸ்வரர்) என்பதே வாலீஸ்வரராக, வாலி வழிபட்ட தலமாக விளங்குகிறது. வாலை யோகத்தில் சிறந்து விளங்க முயற்சித்த வாலி, சகோதரப் பகைமை மாயையில் சிக்குண்டு, தான் பெற்றிருந்த சில அதியற்புத வாலையோக சித்சக்திகளும் மறையப் பெற்று சக்தி இழந்தான். வாலையோக சித்சக்தியின் மூலப் பாடமான, “மறைபொருளை, மறைபொருளே மறைக்கும்” வாலையோக சித்தாந்தத்தின்படி, மறைகளின் ஒருமித்த வாலையோகபாவனச் சரத்தினால் ஸ்ரீராமர் வாலியிடம் வலித்திருந்த சக்திகளைக் கிரகித்து மறைத்தார். அப்போது ஸ்ரீராமர் எய்தது சந்தனச் சர அம்சங்களைத் தராது, ஆனால் வாலை யோக சக்தியை மறைக்கும் வல்லமை கொண்டதாகும்.

இச்சந்தனச் சரமானது அழிவிலாத வாலையோக சக்திகளை வாலியிடம் இருந்து கிரகித்தது. எனவேதான் இச்சரத்தினால் வாலிக்கு அழிவு ஏற்படவில்லை. ஆனால் அழிவிலாத ஞானத்தைத் தந்தது. ஏனெனில் அம்பெய்த உடனேயே வாலி மாயவில்லை! அதன்பிறகு நெடுநேரம் ஸ்ரீராமரிடம் உரையாடி ஞானம் பெறுகின்றான். அவதாரத்தால் எவரும் அழிவு பெறவில்லை. வாலை யோகப் பலாபலன்களாக, அஞ்ஞானம் மறைந்து, ஆத்ம ஞானம் கிட்டுகின்றது.

இன்றைய கிரிவலத்தில் கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதியவாறு கிரிவலம் வருதலால், மூதாதையர்களின் முடங்கிக் கிடக்கும் சொத்துக்கள் நடைமுறைக்குப் பயன்படும்படியான நல்வாய்ப்புகள் கிட்டும். ஆனால் சுயநலமாய் அவை அனைத்தையும் வைத்துக் கொள்ளாது தர்மப்படி உரிய பங்கை உரியவர்க்கு அளித்து, தெய்வீகப் பணிகளுக்கும் உதவும் மனப்பாங்கைப் பெற வேண்டும்.

சாந்தா த்யெள : சாந்தா ப்ருதிவீ
சாந்தமிது முர்வந்தரிட்சம் |
சாந்தா உதன்வதீராப :
சாந்தா ந: ஸந்த்வோஷதீ: ||

அருணாசல கார்த்திகை தீபம்

பல கோத்ராதிபதி மகரிஷிகள் கிரிவலம் வருகின்ற அதியற்புத சுபானு ஆண்டின் கார்த்திகை தீப உற்சவம் சுபானு ஆண்டின் அருணாசல கார்த்திகை தீப கிரிவல மஹிமை 28.11.2003 முதல் 7.12.2003 கார்த்திகை தீப நாள் வரையிலான குலமாமுனிகளின் பத்து நாள் கிரிவல தாத்பர்ய உற்சவாதி மகிமை!

சுபானு ஆண்டின் அருணாசல கார்த்திகை தீப கிரிவல உற்சவத்தில், கொடியேற்ற நாள் முதல் அடுத்து வரும் பத்து நாட்களிலும், எண்ணற்ற கோத்ராதிபதி மகரிஷிகள் கிரிவலம் வருகின்றனர். இவர்களுள், சித்தர்கள், குறித்த சில மகரிஷிகளின் மகத்துவங்களை, அந்தந்தக் காலகட்டத்தில் உணர்த்துகின்றனர்.

நாம் பிறந்து வந்துள்ள கோத்ராதிபதி (மூல குலமாமுனி) மகரிஷிகளின் பாரம்பரியமும், திரண்ட ஆசியுமே நம்மை வாழ்விப்பவை என்பதை மறந்து விடாதீர்கள்!

கோத்ராதிபதி மகரிஷிகள், அருணாசலப் புனித பூமியில் நமக்குப் பெற்றுத் தருகின்ற நல்வரங்கள், பல தலைமுறைகளுக்கும் விரிந்து, நிறைந்து, பரந்து, சாசுவதமாக நின்று மக்களைக் காப்பதால், இக்கார்த்திகைத் தீபப் பெருவிழாவில், அர்க்யம் அளித்து, குருவணக்கம், குரு பூஜைகளை ஆற்றி, நமக்காகவும், உலக சமுதாயத்தின் சார்பாகவும், குலமாமுனிகளைப் பூஜிப்பது பாரத மக்களின் பெருங்கடமையாகும்.

ஒவ்வொரு அருணாசல மலை தரிசனத்திலும், சித்தர்களும், மகரிஷிகளும், யதீந்த்ரர்களும் இன்னோரன்னோரும் தவம் பூண்டு, தாம் பெறும் தபோ பலன்களை, நல்வரங்களை, ஜீவன்கள் பெற்று உய்வதற்காக அருணாசல மலை தரிசனங்களிலும், கிரிவலப் பாதையிலும், நிரவும் தெய்வீக அறப்பணிகள் பண்டைய காலத்தில் மட்டுமல்லாது, அனைத்து யுக காலங்களிலும், குறிப்பாக, நாம் வாழும் கலியுகத்திலும் நிகழ்பவையே!

குறைந்தது 108 பௌர்ணமித் திதிகளில் அல்லது 12 ஆண்டுகள், குறித்த நாட்களில், ஆழ்ந்த பக்தியுடன் தொடர்ந்து திருஅண்ணாமலையாம் அருணாசலத்தில் கிரிவலம் வருவோர்க்குப் பல அற்புத சித்சக்திகள், காரிய சித்திகள் கிட்டுவதைக் கண்ணாரக் கண்டிடலாம்! மெய்யாகவும் உணர்ந்திடலாம்!

எண்சாண் உடம்பிற்குச் சிரசே பிரதானம் ஆதலால், தலைமுடியில் தொடங்கி, ஆயிரக்கணக்கான கபால நாடி நாளங்களிலும், பல லட்சக்கணக்கான மூளைச் செல்களிலும், கேசாதி பாதமாக, அடிப் பாத ரேகைகள் வரை, அருணாசல கிரிவல சக்திக் கிரணங்களைப் பெறுவதற்குப் பல தெய்வீக வழிமுறைகள் உள்ளன.

இவ்வற்புதமான நற்பலன்களை, நாம் பெறுவதற்காக, ஆன்மப் பூர்வமாக நாம் கடைபிடிக்க வேண்டிய ஆத்ம சாதனங்களை, சாதனை முறைகளை அறிவதற்கு, சுபானு ஆண்டு கார்த்திகை தீப உற்சவத்தில் கோத்ராதிபதியர் வரும் (தரும்) கிரிவல முறைகள் உதவுகின்றன.

மூலிகை மந்த்ர சக்திகளைத் தரும் ஸ்ரீதர்ப்பவாஹ மகரிஷி

இன்றைய கிரிவலத்தில் தலைமை ஏற்று வருபவரே ஸ்ரீதர்ப்பவாஹ மகரிஷி! வேதோதய அகஸ்திய மாமுனி, தார்ட்டச்யுத மகரிஷி, விபூதி தர்ப்பவாஹ மகரிஷி ஆகிய தம் பிரவர மகரிஷிகளுடன் அருணாசல கிரிவலம் வருகின்றார். அகஸ்த்ய, தர்ப்பவாஹ வகை நாமம் பூண்டு வந்த மகரிஷிகள் எண்ணற்றோர்! தர்ப்பவாஹ மகரிஷிக்கு, துவஜஸ்தம்ப மகரிஷி, கொடிக் கம்பச் சித்தர் என்ற பெயர்களும் உண்டு.

இன்று ஆலயக் கொடிமரத்தில் கிரிவலத்தைத் தொடங்கி, இங்கு நிறைவு செய்தல் வேண்டும். இன்று கிரிவலத்தில் ஆங்காங்கே நந்தி, பிள்ளையார், தெய்வ மூர்த்திகளுக்கும் அரசு, ஆல், வேம்பு, நாவல், இலுப்பை, மா, பலா, வன்னி போன்ற புனிதமான மூலிகா விருட்சங்களுக்கும், செடிகளுக்கும் தர்பை சார்த்தி, அருகம்புல் கூடிய மாலை அணிவித்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி வலம் வர வேண்டும்.

ஓம் இதி ப்ரதமம்
ஆமிதி த்விதீயம்
ஹ்ரீமிதி த்ருதீயம்
க்ரோமிதி சதுர்த்தம்
ஏ ஹீதி ததேவ வதேத் தத்தாத்ரே
யேதி ஸ்வாஹேதி
மந்தர ராஜோயம் துவாத சாட்சரஹ

தமிழ் மந்திரம்

ஓம்மே முதலான்
ஆம் அது இரண்டாம்
ஹ்ரீம் அது மூன்றாம்
க்ரோம் அது நாலாம்
ஏகம் தத்தாத்ரேயம்
மந்திர ராஜ மாதவத் துதியாம்

தர்ப்பவாஹ மகரிஷி இன்று அருணாசல கிரிவலத்தை நிறைவேற்றுகின்ற வைபவத்தைத் சூக்கும ரீதியாக உணர்த்துவதே, காக்கை, குருவி, கிளி போன்றவை, தர்பை அல்லது சமித்துக் குச்சியினைத் தம் அலகில் தாங்கி இருக்கும் காட்சியை கிரிவலத்தில் இன்று காண்பதாகும். பாக்யம் உள்ளோருக்கு இவ்வரிய காட்சி கிரிவலத்தில் காணக் கிடைக்கும்.

தர்ப்பவாஹ மகரிஷியால் அருணாசலத்தில் பூஜிக்கப் பெற்ற, ஐஸ்வர்ய சக்திகள் நிறைந்த தர்பைகளைப் பல பட்சிகளும் நன்கு அறிந்து, தெளிந்து, உணர்ந்து, வணங்கி அவற்றைப் பல இடங்களுக்கும் எடுத்துச் சென்று, இன்று தர்பமஹா சக்திகளைப் பரப்பிடப் பெருந்துணை புரிகின்றன.

ஆலய தரிசனம் செய்பவர்கள் பலரும் கொடிக் கம்பத்தைச் சுற்றி வந்து கொடிக் கம்பத்தின் அருகே வீழ்ந்து நமஸ்கரித்தாலும், அதனை அண்ணாந்து பார்த்து, கொடி மரத்தை தரிசித்துப் பரிபூரணமான பலன்களைப் பெறுவதும் கிடையாது. கொடிமரம் என்பது நமது தூல உடலைக் குறிக்கின்ற ஆன்மத் தத்துவம் ஆகும். உடல், மனம், உள்ளத்தை இறைவனுக்கு அர்ப்பணிப்பதே மூன்று முறை கொடி, மரமருகே வீழ்ந்து நமஸ்கரிப்பதின் ஆன்மீக விளக்கமாகும்.

பொதுவாக, கொடிமரங்களின் உச்சிப் பகுதியில் நந்தீஸ்வரர் தியான நிலையில் அமர்ந்திருப்பார். நந்தி மூர்த்தியின் முன்னும், பின்னும், சுற்றிலும் வெண்கல மணி ஓசையின் தியானத்திலேயே அமர்ந்திருக்கும் நந்தீஸ்வரருக்கு சுதசுதாஸ்வர நந்தீஸ்வரர் என்று பெயர்.

பலவிதமான தீய சப்தங்கள், தீய வார்த்தைகள், அழுக்கடைந்த உரைகளைச் சொல்பவர்களுடைய எண்ணங்கள், வாக்கியங்கள் யாவும், பரவெளியில் அசுத்தங்களாக மிதந்து, ஆங்கே நிரவும் நற்கதிர்களை மிகவும் பாதிக்கும். சுதசுதாஸ்வர நந்தீஸ்வரர் இவற்றையெல்லாம் வெண்கல மணிகள் மூலம் ஈர்த்து, அந்த ஒலி மூலமாகவே, சுத்திகரித்து, புனிதப்படுத்தி, எவரெல்லாம் தீய எண்ணங்கள், தீய சொற்களுக்குக் காரணமாகிப் பரவெளியில் விடுவித்தார்களோ, அவர்களுக்கு ஓரளவுப் பிராயச்சித்தமும் பெற்றுத் தருகின்றார்.

“நாம் இந்த மாதிரித் தப்பாக நினைத்து விட்டோமே, பேசிவிட்டோமே, இறைவா! என்னை மன்னித்து விடு!” என்று மனப்பூர்வமாக உணர்ந்து வேண்டுகின்ற போது, சுதசுதாஸ்வர நந்தீஸ்வரர் தக்கப் பிராயச் சித்தங்களைப் பெற்றுத் தருகின்றார்.

வாக்குக் குற்றங்கள் அகல…

ஆனால் இப்பிராயச்சித்தப் பலாபலன்களைப் பெற்றிட, தினமும் ஆலயத்தில் கொடிக் கம்ப தரிசனம் பெற்றாக வேண்டும். அப்போதுதான் அன்றன்றைய வாக்குக் குற்றங்களுக்கு அன்றே பரிகாரம் பெற நல்வழிகள்  கிட்டும். இல்லையேல் முதலும் வட்டியுமாய்ச் சொற்குற்றங்கள் பல பிறவிகளில் பெருகிவிடும்.

தம் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ தீய வார்த்தைகளை, கெட்ட வார்த்தைகளைப் பேசியோரும், தம் வாக்குக் குற்றங்களால் பிறர் பற்பல வேதனைகளை அடையக் காரணமாக இருந்தோரும், இவற்றிற்கு உரித்தான பிராயச்சித்தங்களைப் பெறுவதற்காக, இந்நாளில் அருணாசல கிரிவலம் வந்திடுதல் வேண்டும்.

பண்டைய பனை ஓலைப் பட்டய வழிபாடு மீண்டும் சிறப்பதாக!

கீழ்க்கண்ட மந்திரத்தைப் பனை ஓலையில் எழுதி, அல்லது பனை ஓலையில் எழுத்தாணியால் பொறித்து, (எழுத்தாணியால் பொறிப்பது மிகவும் விசேஷமானது). மஞ்சள் கயிற்றால் நெற்றியில் பட்டயம் போல ஓலையைக் கட்டிக் கொண்டு, இந்த மந்திரத்தை ஓதியவாறு கிரிவலம் ஓதி வருவோர்க்கு, வர வேண்டிய சொத்து, தேவையான பதவி மாற்றம், இடமாற்றம், கோர்ட்டிலிருந்து வர வேண்டிய பத்திரங்கள், தொகைகள் ஆகியவை நன்முறையிலே வருவதற்கு, இந்த நெற்றிப் பட்டய நேர்த்தி வழிபாடு மிகவும் உதவுவதாகும்.

ஆத்மா ராமா மஹாத்மா னஸ்தே
மஹத்பத மாகதா:
ஜீவன் முக்தா ந மஜ்ஜந்தி
சுக துக்க ரஸஸ்த்திதே
ப்ராப்ய ஞான தசாமேதாம்
பசும் லேச்சாதயோபியே

தமிழ் மந்திரம்

ஆத்மா ராமம்
அனைத்தில் ராமம்
ஜீவன் முக்தம்
சுக வதம் இலையே
உடலது எதுவும் உணர்வது ஆகா
உத்தமப் பெருநிலை ஈண்டது காணே!

பனை ஓலைக்குக் காரிய சித்தியைத் தருகின்ற தெய்வீக ஆற்றல் நிறைய உண்டு. நெற்றியிலே பட்டயத்தைக் கட்டிக் கொண்டு கிரிவலம் வருகின்ற பொழுது, குறித்த மலை தரிசனங்களிலிருந்து எழுகின்ற கிரணங்களின் சக்தியால், பனை ஓலையில் உள்ள மிகவும் விசேஷமான தாளீஸ ஸ்ம்ருதி சக்திகளால், கபால நாளங்கள் நன்கு ஆக்கம் பெற்று நமக்கு வேண்டியதைப் பெற்றுத் தருகின்றன. இதற்காகத்தாம் ஓலைகளால் முடையப் பெற்ற குப்பித் தொப்பிகளை அணிவது ஆன்மீக சக்திகளை அளிப்பதாகும். இந்த நல்வழக்கம் இன்றும் மலைவாசிகளிடம் உள்ளது. மேற்கண்ட யாவுமே பீஜாட்சர சக்திகளைத் தரவல்ல வழிபாடுகளாகும்.

இன்றைய கிரிவலத்தில் இனிய இறைஉரை அல்லாது பிறிதொன்றும் பேசாது, இருத்தலே சிறப்புடையது. ராமா, கிருஷ்ணா, சிவா போன்ற இறை நாமங்களை ஒலித்தும், பஜனைப் பாடல்களைப் பாடியும் கிரிவலம் வந்திடலாம். சத்விஷயமாகப் பலருடன் அருணாசல கிரிவல மகிமை போன்று இறைப் புராணங்களை, ஆன்மீக விஷயங்களைச் சத்சங்கமாக உரையாடி வரலாம். இவ்வாறாக, அருணாசல கிரிவலம் வருகின்ற, கிட்டத்தட்ட 5 மணி நேரமும் இறை நாமமின்றி அல்லாது பிறிதொரு வாக்கின்றிக் கிரிவலம் வருதல் கிரிவலப் பலாபலன்களைப் பெருக்கும். பல அரிய பீஜாட்சர சக்திகளையும் பெற்றுத் தரும்.

கபால சக்திகளைத் தரும் ஸ்ரீகபோதரேதஸ மகரிஷி

ஸ்ரீகபர்தீஸ்வரர் திருவலஞ்சுழி

இன்றைக்குக் கிரிவலம் வருகின்ற கோத்ராதிபதி மகரிஷியே கபோதரேதஸ மகரிஷி! பலரும் அறியாப் பண்டைய யுக மகரிஷி! காலத்தை வென்று இன்றும் உய்பவர்! தற்போது பூவுலகில், கபோதரேதஸ் கோத்திரத்தைச் சார்ந்தவர்கள் மிகவும் அரிதாக உள்ளனர்.

சுபானு ஆண்டின் திருஅண்ணாமலைக் கார்த்திகை தீபப் பத்து நாள் கிரிவல உற்சவத்திலும், தினமும் முதலில் ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகரை வழிபடுதல் விசேஷமானது. இன்று ஸ்ரீகபர்தீஸ்வரரையும், ஸ்ரீகபாலீஸ்வரரையும் வழிபட்டு, விஸ்வாமித்ர மகரிஷி, மித்ர கபோதரேதஸ மகரிஷி ஆகிய தம் பிரவர ரிஷிகளுடன், கபோதரேதஸ மகரிஷி, இன்று கிரிவலம் வருகின்ற நன்னாளாகும்.

பல யுகங்களாகக் கொழிக்கும் சம்புட வகை ஜடாமுடியைச் சிரசில் தாங்கியவரே கபோதரேதஸ மகரிஷி! ரோமச மாமுனிவரின் தலையாய சீடர்! இவரே கிரிவல முறைகளில், தலை மூலம் தெய்வீக அனுகிரகங்களைப் பெறுவதற்கான யோக, தியான முறைகளை அளித்துள்ளவர்.

திருஅண்ணாமலையில் தினமும் நிறையச் சித்தர்கள், மாமுனிகள் கிரிவலம் வந்திடினும், சித்தர்கள் அளிக்கின்ற நாமங்கள் மட்டுமே, அவ்வப்போது பூவுலகில் கிரிவலம் வருகின்ற சற்குருமார்கள் மூலமாக அளிக்கப்படுகின்றது.

தலைக்குச் செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, மருதாணி, நெல்லித் தைலம், பொன்னாங்கண்ணி போன்ற சித்த மூலிகைத் தைலங்களைத் தலைக்குப் பூசியவாறு அருணாசல கிரிவலம் வருதலால், மூலிகை சக்திகள் பலவும், கபால நாடி, நாளங்களில் பரந்து, நிரவி, “சிரசாமிர்தம், சிரச்சுடர் பாவனம், கபாலகோடி, ரோமசோபனம், சுழிகாத்ரம்” போன்ற பல அபூர்வமான ஆதித்ய கிரண அருணாசல சக்திகளைக் கபாலத்திற்குப் பெற்றுத் தருகின்றன.

ஸ்ரீரோமச மகரிஷி
திருக்காட்டுப்பள்ளி

மூலிகை ரசங்கள் முடிக்கு அளிக்கும் மூல நாள சக்திகள்!

ஒவ்வொரு மூலிகைத் தைலமும் பற்பல கற்பக கபால சக்திகளைத் தருபவை ஆதலின், மூலிகை ரசங்களாகிய தைலங்கள் மூலமாக மட்டுமே பலவிதமான கபால சக்திகளை நாம் பெற முடியும். இவற்றை வேறு வழிகளில் பெற இயலாமையாலும், மூலிகைத் தைலத்தைப் பயன்படுத்தும் பண்டைய முறை, சமுதாயத்தில் அருகி வருவதாலும், தற்போது கலியுகச் சமுதாயத்தில் இவ்வரிய கபால சக்திகளைப் பலராலும் பெற இயலாமலேயே போய் விடுகின்றது. இதற்குப் பரிகாரமாக இனியேனும் எண்ணெய்த் தைல நீராடலை மேற்கொண்டு வர வேண்டும்.

முடி என்பது மிகவும் சக்திவாய்ந்த (ஆன்மீக தேக) சாதனமாகும். உடலில் ஒவ்வொரு முடியும் படைக்கப் பட்டிருப்பதற்கும் காரண, காரியங்கள் நிறைய உண்டு. ஆனால் முடியின் ஆன்மீக சக்திகளை உணர்ந்து, அவற்றைப் பயன்படுத்தும் மற்றும் பராமரிக்கும் முறைகளையும் அறிந்தால்தானே, முடியில் உள்ள ஆன்ம சக்திகளை, நல்வர சக்திகளை நாம் பெறுதல் கை கூடும்! எண்ணெய் நீராடல், அங்கப் பிரதட்சிணம், சிரசாசனம், தைல தானம் போன்றவை இதற்கு உதவுபவை!

ஏற்றம் தரும் எண்ணெய் நீராடல்

பெண்கள் தங்களுடைய கபால நாள நாடிகளை மேம்படுத்தவும், முடியின் ஆன்மீக சக்திகளை விருத்தி செய்யவும், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில், கண்டிப்பாக எண்ணெய்த் தைல நீராடலை மேற்கொள்ள வேண்டும். இது கணவனுக்கு ஆயுள் சக்தியை அளிப்பதுடன் தீர்க்க சுமங்கலித்வ சக்தியையும் பெண்களுக்குப் பெற்றுத் தருவதாகும். எண்ணெய் தேய்த்து நீராடும் நாட்களில், துருவிய தேங்காயில் சர்க்கரை கலந்து ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளிப்பதால், முரட்டுத் தனமாக வளரும் பிள்ளைகள் சாந்தம் பெற்று நல்ஒழுக்கம் பெறுவர். கபாலத்திற்கும், உடல் நாளங்களுக்கும் நன்மை பயக்கும் கபால பூஷண வரசக்திகள், எண்ணெய் நீராடல் மூலம் பெண்களுக்குக் கிட்டுகின்றன.

கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியிலே கபர்தீஸ்வரராக, செஞ்சடை விரிநாதராக சிவலிங்க மூர்த்தி அருள்கின்றார். திருவலஞ்சுழி ஸ்ரீகபர்தீஸ்வரர், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர், குடுமியான்மலை குடுமிநாதர், (திருச்சி) உய்யக்கொண்டான் மலை ஸ்ரீஉஜ்ஜீவநாதர் போன்ற மூர்த்திகள் நம் கபாலத்திற்குத் தேவையான தெய்வீக சக்திகளை அருளவல்ல தெய்வ மூர்த்திகள்!

ஸ்ரீஉஜ்ஜீவநாதர் சிவாலயம் உய்யக்கொண்டான்மலை

இத்தலங்களில், சூரிய, சந்திர நட்சத்திர நாட்களான – கார்த்திகை, உத்திரம், உத்திராடம், ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம் தினங்களில் சுவாமிக்குத் தைலக் காப்பு இட்டு, தலைக்கு எண்ணெய் கூடத் தடவ இயலாது வறுமையில் வாடும் ஏழைக் குடும்பங்களுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயுடன் பல்வகை மூலிகைத் தைலங்களையும் சேர்த்துத் தானமளித்தலால், கபாலம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளால், நோய்களால் வாடுவோர்க்குத் தக்க பரிகார வழிகள் கிட்டும்.

சிகை வகை சீர்மை தருமே!

தலையில் குடுமி வகைச் சிகை வைத்திட வெட்கப்படக் கூடாது! பாரதப் பண்பாட்டின்படி, ஆன்மீக ரீதியாக, யாவர்க்கும் உரித்தான சிகை முறை இது! இன்று, குடுமி வகையிலான சிகை தரித்துக் கிரிவலம் வருதல் அரிய பலன்களைத் தரும். அல்லது நன்கு குடுமி வைத்திருப்போர்க்குத் தக்க உதவிகளைச் செய்து, அவர்களுடன் வேத மந்திரங்கள், தமிழ் மறைகள், இறைத் துதிகளை ஓதியவாறு கிரிவலம் வந்திடுக! இதனால், பிறரால் ஏமாற்றப்பட்டு அடைந்த நஷ்டங்களால் வருந்துவோர் ஓரளவு நஷ்ட ஈடையேனும் பெறுவர்.

அக்காலத்தில் ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைத்து ஆண்களுமே குடுமி வகையிலே சிகை வைத்திருந்தமையால்தான், நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ்ந்ததுடன், பல்லாண்டுகள் நெடிதும் வாழ்ந்தனர். குடுமி வகைச் சிகை அமைப்பில், ego எனப்படும் ஆணவம், அகங்காரம் போன்றவை எளிதில் களையப்படுவதால், பணிவன்பு கூடிய நன்னடத்தை கூடி, சமுதாயத்தில் நல்மதிப்பும் கிட்டும்.

இன்று கிரிவலத்திலே ஏழைச் சிறுமிகளுக்குத் தேவையான ரிப்பன், ஹேர்பின், சீப்பு, தைலம் போன்றவற்றைத் தானமாக அளிப்பதும் நன்மை பயக்கும், சில குடும்ப உறுப்பினர்களின் தீய நடத்தையால், நன்முறையிலே சீர்மை பெற்று, முன்னிலைக்கு வருவதற்கு, இத்தான, தர்ம, புண்ய சக்திகள் துணை புரியும்.

இன்று கபோதரேதஸ மகரிஷிப் பரிவாரத்தினர், கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதியவாறு வருவதால் இவற்றை ஓதியவாறு நீங்களும் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும். கிரிவலத்தை நிறைவு செய்வதற்குள், குறைந்தது 1008 முறையாவது இம்மந்திரங்களை பக்தியுடன் ஓதிடல் சிறப்புடையதாம். இதனால் மனஅமைதி இல்லாது, நல்லுறக்கம் இல்லாது எப்போதும் வேதனைகளுடன் வாழ்வோர் தக்க தீர்வுகளைப் பெறுவர்.

அஸ்தீதி ப்ரத்யயோ
யச்ச நாஸ்தீதி வஸ்துனி

புத்திரேவ குணாவேதெள ந து
நித்யஸ்ய வஸ்துந:

ந நிரோதோ ந சோத் பத்திர்
ந பத்தோ ந ஸாதக:

தமிழ் மந்திரம்

நித்தியப் பொருளை
உண்டிலை என்பது
புத்தியின் குணமே
போதும் போதும்
ஆவதும் அழிவதும் அவன்கண்
ஏவங்குணத்தான் அவனே இறைவன்.

குருவைப் பழித்தோர், குருவைப் பற்றி அவதூறுகளான வார்த்தைகளைப் பேசியோர், தன்னை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்கள், ஆசிரியர்களை அவமதித்தோர் தம் தீயுரைக்குப் பிராயச்சித்தம் பெற்றால்தான் பிறவிப் பிணிகள் தொடராமல் இருக்கும். இல்லையேல் ஒரே ஒரு தகாத வார்த்தையும் கூட எண்ணற்ற பிறவிகளுக்கு வழிகோலி விடும். எனவே செல்லுரைக்கு நல்லுரைப் பரிகாரம் தருகின்ற உத்தமக் கலியுகக் கிரிவல நன்னாட்களில் இந்நாளும் ஒன்றாம்.

ஆசமன பூஜா பலன்களை அளிக்கும் ஸ்ரீஷடமர்ஷண மகரிஷி

இன்று கிரிவலம் வருகின்ற கோத்ராதிபதியே ஸ்ரீஷடமர்ஷண மகரிஷி ஆவார்.

எத்தகைய துன்பங்கள் வந்தாலும் சற்றும் கலங்காது, இறைநாமத்தையே எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கின்ற உத்தம மகரிஷிகளில் ஒருவரே ஷடமர்ஷண மகரிஷி! ஆங்கீரசர், த்ராஸதஸ்யவர், பௌருகுத்ஸர் ஆகிய தம் பிரவர மகரிஷிகளுடன் கிரிவலம் வருகின்றார். ஷடமர்ஷண மகரிஷியே ஸ்ரீஅப்பய்ய தீட்சிதருக்கு, பிரயோகங்கள் நிறைய உள்ள பூஜைகளில் துரிதாதீகமாக வழிகாட்டியவர்.

தன் தாயின் வயிற்றில், கருவறையில் சடமெனும் வாயுநீர்ப் பையில் சிசுவாக இருக்கும்போதே, இறைநாமாக்களை வெளியில் இருப்போருக்கும் கேட்கும் வண்ணம் உரைத்த உத்தம மகரிஷி! கருவில் திருஉரை அய்யன் எனச் சித்தர்களால் போற்றப்படுகின்ற மகரிஷி!

பிற ரிஷிகள் போல் தியானம், யோகத்திற்காக, காடு, வனம் புகாது, மக்கள் சமுதாயத்திலேயே உழன்று தவயோகங்களில் பொலிந்தவர்! இவருக்குக் கோப மூட்டி, எரிச்சலை வரவைத்து, இவருடைய தவத்தைக் கலைக்க வேண்டும் என்று பல அசுரர்களும் முயன்று தோற்றனர். ஜடபரதத் தத்துவராய், அமர்ந்த நிலை யோகமல்லாது எப்போதும் கோ பூஜை, கஜபூஜை, கலச பூஜை, தான தர்மங்கள் என்றவாறு சத்சங்க இறைக் காரியங்களை ஆற்றியவராய், தவம் புரிந்து சிறப்பைப் பெற்றவர்.

எத்தகைய அவதூறுகளையும், துன்பங்களையும் சகித்துக் கொண்டு, இறை நாமத்தில் திளைத்தவாறு தவத்தில் கொழித்தவரே ஷடமர்ஷண மகரிஷி ஆவார். ஷடமர்ஷண கோத்திரத்தைச் சேர்ந்தவர்களும், ஏனையோரும், இவரை வேண்டி, இன்று கண்டிப்பாக அருணாசல கிரிவலம் வந்திட, எத்தகைய சொல்லொணாத் துன்பங்களுக்கும் தீர்வுகளைப் பெறுவர்.

மஞ்சள், குங்குமம் இட்டு நூல் புரிகள் சுற்றப் பெற்ற ஒரு செம்பில், நல்ல தீர்த்தங்களை நிரப்பி, செம்பைத் தாங்கியவாறு இன்று அருணாசல கிரிவலம் வந்து, குறைந்தது 21 இடங்களில் ஆசமனம் என்று சொல்லிப்படுகின்ற தேக, சுத்தி பூஜைகளைக் கடைபிடித்தல் வேண்டும். தமக்குப் பிடித்தமான, குறைந்தது 21 சித்தர்களுக்கு, மகரிஷிகளுக்கு ஆங்காங்கே அர்க்யம் அளித்து வழிபட்டவாறு கிரிவலம் வருதல் வேண்டும்.

அர்க்யம் என்றால், மலையை நோக்கி நின்று, சித்தர் மகரிஷியின் நாமத்தைச் சொல்லி,

ஸ்ரீஅகஸ்த்ய மகரிஷியே போற்றி!
ஸ்ரீவசிஷ்ட மகரிஷியே போற்றி!
ஸ்ரீபாரத்வாஜ மகரிஷியே போற்றி!

என்றவாறு ஓதி, குதிகாலை உயர்த்தி, பூமியை நோக்கி மூன்று முறை தீர்த்தத்தை வார்ப்பதாகும்.

ஆசமன பூஜை

இரு கால்களுக்கும் இடையில் கரங்களை வைத்துக் குந்திய நிலையில் அமர்ந்து,

செம்பிலுள்ள, தீர்த்தத்தை உள்ளங்கையில் சிறிது ஊற்றி, ஓம் ஸ்ரீஅச்சுதாய நம: (ஓம் ஸ்ரீஅச்சுதா! உடல்சுத்தி தோயத் துதிக்கின்றேன்) என்று ஓதி அருந்திடுதல் வேண்டும்.

பிறகு இரண்டாம் முறை தீர்த்தத்தை உள்ளங்கையில் ஊற்றி, ஓம் ஸ்ரீஅனந்தாய நம: (ஓம் ஸ்ரீஅனந்தா! உள்ளத்தில் சுத்தி தோயத் துதிக்கின்றேன்) என்று ஓதி தீர்த்தத்தைப் பருகிடுதல் வேண்டும்.

மீண்டும் மூன்றாம் முறை தீர்த்தத்தை உள்ளங்கையில் ஊற்றி, ஓம் ஸ்ரீகோவிந்தாய நம: (ஓம் ஸ்ரீகோவிந்தா! மனசுத்தி தோயத் துதிக்கின்றேன்) என்று ஓதி அருந்திடுதல் வேண்டும்.

பிறகு நான்காம் முறை தீர்த்தத்தை உள்ளங்கையில் ஊற்றி, ஓம் ஸ்ரீநாராயணாய நம: (ஓம் ஸ்ரீநாராயணா! பரவெளிச் சுத்தி நாடி அர்க்யம் படைக்கின்றேன் பரந்தாமா!) என்று ஓதித் தீர்த்தத்தை உள்ளங்கை நுனி விரல்களின் வழியே பூமியில் அர்க்யமாக ஊற்றிடுதல் வேண்டும்.

இந்த எளிய நான்கு பிரயோக முறைகள் அடங்கியதே ஆசமனப் பூஜை ஆகும். சில சம்பிரதாயங்களில் மூன்று நாமாக்களுடன் மூன்று முறை தீர்த்தம் அருந்துவதோடு ஆசமனம் நிறைவுறும். சிலவற்றில் கேசவா, நாராயணா, மாதவா என்றவாறாக விஷ்ணு நாமாக்கள் மாறுவதும் உண்டு!

பூஜைகளின் நடுவே மனம் அலைபாயும் போது மனதை நிலை நிறுத்தவும், மன, தேக சுத்திக்காகவும், பிரயோகங்கள் மாறும் போதும், சிறுநீர், மலம் கழித்த பிறகு, தேக சுத்திக்காகவும் ஆசமனம் செய்யப்படும். ஒரு நாளில் ஒருவர் எவ்வளவு முறை வேண்டுமானாலும் ஆசமனம் செய்திடலாம். ஆண், பெண் இருபாலாருக்கும் ஆசமன பூஜை உண்டு.

எவ்வாறு இந்த எளிய ஆசமன பூஜையானது உடல், மனம், உள்ளத்தை சுத்திகரிக்க உதவுகிறது?

பலவிதமான கிரகங்கள், ரேகைகள், நட்சத்திரச் சின்னங்கள் மட்டுமல்லாது, வான மண்டலத்தில் நாம் காண்கின்ற பலவிதமான லோகங்களையும் நம் உள்ளங்கை தாங்கி உள்ளது. எனவேதாம் காலையில் எழுந்த உடன் உள்ளங்கையைப் பார்க்கும் கரதரிசன வழிபாட்டை நமக்குப் பெரியோர்கள் தந்துள்ளனர்.

இத்தகைய தெய்வீக சக்திகள் நிறைந்த உள்ளங்கையில், கங்கை, காவிரி போன்ற தீர்த்தத்தை சேர்த்திடும்போது, கங்கா தேவியும், புண்ய நதி தேவதைகளும் மிகவும் மகிழ்கின்றார்கள். எங்கோ பிறந்து, எங்கெங்கேயோ பாய்ந்து, எங்கோ கடலில் சேர்வதாக நாம் நினைக்கின்ற புனித நதித் தீர்த்தத்தின் சிறு துளிகளை நாம் உள்ளங்கையில் ஆசமன பூஜைக்காக ஏந்தும்போது, அந்தந்த நதி தேவதைகள் பரந்த மகிழ்ச்சி அடைகின்றார்கள் என்றால் ஆசமனம் என்பது எத்தகைய உன்னதமான, உத்தமமான பூஜை என்பதை இனியேனும் அறிந்து கொள்ளுங்கள். மேலும், உள்ளங்கைக் கீழ்ப் பகுதி பிரம்ம லோகமாகத் திகழ்வதால், அருந்துவதும் பிரம்ம தீர்த்தமாகவும் ஆகின்றது.

புனிதம் தரும் ஆசமன ப்ரயோக பூஜை!

பிரயோகம் என்றால் மந்திரங்களை ஓதியவாறு, மந்திர சக்திகள் உடலில் செறியும் வண்ணம், பல்வேறு அங்கங்களால் பல முத்திரைகளை, ஆன்மீக இயக்கங்களை ஆக்குதல் என்று பொருள்!

நற்காரியங்கள், பூஜைகளைத் துவங்கும் போதும், ஆலயத்திற்கு செல்வதற்கு முன்னும், உடலைச் சுத்திகரிப்பதற்காக ஆசமனம் செய்திடல் வேண்டும்.

அவரவருடைய சம்பிரதாய முறைகளுக்கேற்ப ஆசமன பூஜையை அச்சுத, அனந்தா, கோவிந்தா, நாராயணா என்றோ, கேசவா, மாதவா, நாராயணா, கோவிந்தா என்றோ ஓதி மூன்று முறை நீரை அருந்தி, நான்காவது முறை விரல்களின் நுனிகளால் நீரைப் பூமியில் ஊற்றி பூஜையை நிறைவு செய்திடல் வேண்டும். தமிழில் ஆசமன வழிபாட்டை “உடல் சுத்திப் பூர்வம்” என்று சித்புருஷர்கள் உரைக்கின்றனர்.

தமிழில் ஓத வேண்டிய மேலும் திவ்யமான ஆசமன மந்திரங்கள்…

  1. திருநீர்மலைச் சுடரே போற்றி!
  2. தென்திருப்பேரையான் போற்றி!
  3. திருவெள்ளறையானே போற்றி!
  4. திருத்தங்கல் நாதா போற்றி! போற்றி! போற்றி!!

கரத்துள் துலங்கும் இந்திரப் பித்ரு மண்டலம்!

வலது கட்டை விரல், ஆள்காட்டி விரல் இடையே அமைந்திருப்பது இந்திரப் பித்ரு மண்டலமாகும். இது பித்ரு லோகங்களுக்குச் செல்கின்ற வழிபாதை ஆவதால், இதன் வழியே நாம் பித்ருக்களுக்கு அளிக்கின்ற தர்ப்பணத் தீர்த்தமானது, முறையோடு பித்ரு லோகங்களுக்குச் சென்றடைவதற்கு இந்த இந்திரப் பித்ரு மார்க்கப் பாதை உதவுகின்றது.

திருக்கச்சூர்

இதே போல ஒவ்வொரு விரலும் எண்ணற்ற தேவலோக அம்சங்களைக் குறிக்கின்றன. உதாரணமாக நடுவிரலாகிய சனி விரலின் நுனிப் பகுதியானது ஆயுள்கார மார்கண்டேய மண்டலங்களைக் குறிக்கின்றது. இவை காரகத்துவ சக்திகள் நிறைந்தவை! மேலும் பரதீப சக்திகளைக் கொண்டவையாக விரல் நுனிகள் விளங்குவதால், விரல் நுனிகளின் வழியே தீர்த்தத்தை பூமியில் அர்க்யமாக அளிப்பது, எத்தனையோ அக்னி லோகங்களைச் சென்றடைகின்றது.

நாம் விரல் நுனிகள் மூலமாக பூமியை நோக்கி ஊற்றுகின்ற தீர்த்தமானது வான்வெளியில் உள்ள மண்டலங்களை எப்படிச் சென்றடையும்?

பூமாதேவி அளிக்கும் நன்றிமுகாந்த்ர அர்க்யம்!

பூமி சுழன்று கொண்டே இருப்பதால் நமக்கு தலைக்கு மேல் இருப்பதெல்லாம் வானம் என்று நினைக்காதீர்கள். ஒவ்வொரு வினாடியும், நம் தலைக்கு மேல் உள்ள வான்வெளிப்பகுதி மாறிக்கொண்டே இருக்கின்றது. எனவே இன்று அர்க்யம் என்று நீங்கள் பூமியில் நீரை வார்த்து அளிப்பதானது, பூமியைத் தாண்டி விண்வெளிக்குச் செல்லும் போது, நம் பாதத்தின் கீழ்ப் பகுதியில் உள்ள வான்வெளி மண்டலத்திற்குச் சென்றடையும் அல்லவா!

மேலும் நாமளிக்கும் அர்க்யத்தை பூமாதேவி, புவி ஈர்ப்பு சக்தியால் ஏற்றவுடன், தான் அர்க்யத்தைப் பெற்றதற்காக, நன்றிப் பிரார்த்தனையாக தம்முடைய வலது கரத்தால், வானை நோக்கி மேல் நோக்கியதாக, ஊர்த்வ அர்க்யமாக அளிக்கின்றாள். இதுவே விண்ணை அடைவதாகும்.

கேதார்நாத், பத்ரிநாத், கௌரீகுண்ட் போன்ற இமயமலைப் பகுதியில் உள்ள பல வென்னீர் ஊற்றுகள் பூமா தேவியின் ஆசமனாதீய சக்தியால் வெளிப்படுபவையே!

இன்று கிரிவலம் வருகையில், அருணாசல கிரிவலப் பாதையில், குறைந்தது 21 இடங்களிலாவது ஆசமன பூஜையைச் செய்திடல் வேண்டும். அஷ்ட லிங்க ஆலயங்கள், அஷ்ட நந்தி மூர்த்திகள், சமித்து விருட்சங்கள், அற்புதமான மலை தரிசனங்கள் தோன்றுகின்ற பகுதிகள் போன்று எந்த இடத்தில் உங்களுக்கு ஆசமனப் பூஜையை நிகழ்த்த வேண்டுமென்று தோன்றுகின்றதோ, அவ்விடத்தில் ஆசமனப் பூஜைகளை நிகழ்த்தி, உடல், மன, உள்ள சுத்திக்கு வழிவகை செய்து கொள்ளுங்கள்.

கிரிவலப் பலன்கள்

பிறருடைய உதவிகளை நம்பி, பெரும் காரியங்களில் இறங்கி, அவர்கள் உதவி செய்ய இயலாது என்று கை விரித்து விட்ட நிலையில், முடங்கிப் போயுள்ள நற்காரியங்கள், திருமணம், தொழில்கள், நன்முறையிலே நிறைவு பெறுவதற்கு, இன்றைய கிரிவலத்தின் பலாபலன்கள் கைகூடி வந்து நன்கு உதவும்.

தன்னுடைய துயரங்களுக்கும், நஷ்டங்களுக்கும் யார் காரணம் என்று தெரியாது திகைத்து வந்தோர், இத்தகைய ஆசமனப் பூஜைகள் நிறைந்த கிரிவலத்தால், தனக்குக் கேடு செய்தவர்களைப் பற்றி அறிய வந்து, தக்க தீர்வுகளும் கிட்டும்.

தான் “நிறைந்த அளவு தான, தர்மங்கள், பூஜைகள் செய்தும், உரிய பலன்களைப் பெறவில்லையே, துன்பங்கள் தாமே பெருகுகின்றன” என்று ஏங்கி வருந்துவோர், தானதர்மப் பலாபலன்களை நன்கு பெற்றுத் துன்பங்களுக்குத் தீர்வு காணவும், தக்க ஆன்ம விளக்கங்கள் பெறவும் இந்நாளின் ஆசமனப் பூஜைகள் நிறைந்த அருணாசல கிரிவலம் உதவும்.

முதல் வடம் பிடிக்கும் மூல மகரிஷி - ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி

இன்று, அகமர்ஷண கோத்திரத்தின் மூலமாமுனியாகிய ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி, அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற முக்கியமான திருநாளாகும். அகமர்ஷண மகரிஷியே அனைத்து பூஜைகளுக்குமான முதல் திருப்படியை ஆராதித்துத் தருகின்ற மூலமாமுனிகளுள் ஒருவர் ஆவார்.

அகமர்ஷண அருணாசல மலை தரிசனம்

ஸ்ரீஇரட்டைப் பிள்ளையார் ஆலயம்
திருஅண்ணாமலை

இன்றைய கிரிவலத்தை, ஆலயம் அருகே இரட்டைப் பிள்ளையார் சன்னதியில் தொடங்கி, பச்சரிசிக் கோல மாவினால் பிள்ளையார் சுழியும், அறிந்த கோலமும் இட்டு, வலது மோதிர விரலினால் கோலத்தின் நடுவில் பிள்ளையார் சுழியும், சுழியின் அடியில் பீடமாக அகமர்ஷண மகரிஷியை வேண்டி இரு கோடுகளும் (பீடங்கள்) இட்டு கிரிவலத்தைத் தொடங்கி இங்கேயே மீண்டும் கோலமிட்டு, கிரிவலத்தை நிறைவு செய்திட வேண்டும். பொதுவாக, தடங்கல்களால் நின்று போயுள்ள நற்காரியங்கள் நன்கு நிறைவு பெற இந்நாள் கிரிவலப் பலாபலன்கள் உதவும். இரட்டைப் பிள்ளையார் முன் பெறும் மலை தரிசனத்திற்கு அகமர்ஷண தரிசனம் என்று பெயர். அக்காலத்தில் ஆலயக் குளத்தில் நீராடும் போது அகமர்ஷண மந்திரங்களை ஓதி, நீராடிய பின் இரட்டைப் பிள்ளையார் சன்னதிக்கு வந்து அகமர்ஷண மலை தரிசனம் பெற்று, கிரிவலம் வந்து இங்கு நிறைவு செய்து, பிறகு ஆலய தரிசனம் செய்வர். இதனால் காரிய சித்தி நன்கு கனியும்.

தற்போது கட்டிட அமைப்புகளினால் இந்த அகமர்ஷண மலை தரிசனம் மறைவு கொண்டுள்ளமையால் கலியுகத்திற்கு இனி அகமர்ஷண மலை தரிசனப் பலாபலன்கள் கிட்டுவது அரிதாகி விட்டன.. இவ்வாறு எண்ணற்ற அண்ணாமலை தரிசனங்கள் மறைந்து விட்டமையால் கலியுக சமுதாயத்திற்கு இவற்றால் கிட்டவல்ல பலன்களும் மறைந்து போயினவே, என் செய்வது?

அக்காலத்திலும், தற்போதும், எக்காலத்தும், அனைத்து மகரிஷிகளும் கூடி சத்சங்க பூஜை, சத்சங்கத் திருவிழா, வேத குழுமம் போன்றவற்றை அமைக்கும் போது, முதல் அடியை எடுத்துத் தருபவர்தாம் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி ஆவார்.

ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி இன்று வைஸ்வாமித்திரர், பூஜித அகமர்ஷணர், கௌஸிகர் ஆகிய பிரவர ரிஷிகளுடன் கிரிவலம் வருகின்ற நன்னாளாகும்.

கும்பமேளா, மகாமகம் போன்ற பிரசித்தி பெற்ற தீர்த்த நீராடல்களில், அகஸ்தியர் உட்பட அனைத்து சித்தர்களும், மகரிஷிகளும் குழுமியிருக்க, முதன் முதலாக நதிக்குள் முதல் அடி எடுத்து வைத்துப் புனித நீராடலைத் துவக்குகின்ற பெரும்பாக்கியத்தை, இறையருளால் பெற்றவரே ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி ஆவார். இவர் முதல் அடி எடுத்து வைத்தவுடன் தான் வசிஷ்டர் உள்ளிட்ட அனைவரும் தொடர்வர்.

பூவுலகில், எங்கு ஆலயத் தேரோட்டம் நிகழ்ந்தாலும், முதலில் மூலவடம் பிடிப்பவரின் உடலில் தோய்ந்து ஆசியளிப்பவரும் அகமர்ஷண மகரிஷியே!

இன்றைய கிரிவலத்தை ஆலயத்தின் முன் தேரடியில் தேரைத் தொட்டுத் தரிசித்துக் கிரிவலம் தொடங்கி ஆலயத்தினுள் சுவாமி பிரகாரத்தில் உள்ள அகஸ்திய லிங்கத்திடம் நிறைவு செய்திட வேண்டும்.

ஸ்ரீஆதிசேஷன் திருநீர்மலை

அகமர்ஷண அடியே முதலடி!

எவ்வாறு நாம் பிள்ளையார் சுழியிட்டுக் குலதெய்வத்தை வேண்டி, எதனையும் எழுத அல்லது செய்யத் துவங்குகின்றோமோ, இதே போல் வியாசர், வால்மீகி உட்பட அனைத்து மகரிஷிகளும், தங்களுடைய கிரந்தங்களையும், புராணங்களையும், நல்தவங்களையும், நற்செயல்களையும் துவங்கும் போதும், முதலில் “அகமர்ஷண மாமுனி நாடும் ஆதி மூலா போற்றி!” என்று இவ்வுத்தம மகரிஷியைத் துதித்தே தம் பணியைத் துவங்குவர். பன்னெடுங்காலம் விநாயகரின் துதிக்கையினுள் உறைந்து பெறுதற்கரிய அஸ்வதப் பிராணயாம யோகத் தவங்களைப் பூண்டவர். அரச இலையில் தோன்றிய ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகரின் தோற்றத்தை ஸ்ரீகிருஷ்ண பராமாத்வாவோடு முதன் முதலில் கண்டு உய்த்து இவ்விநாயக பூஜைகளை உலகிற்கு அளித்த மகரிஷியே இவரே!

புதுக் கணக்கு எழுதும் போதோ அல்லது கடிதங்கள், தஸ்தாவேஜுகளை எழுத ஆரம்பிக்கையில், முதலில் பிள்ளையாரை வணங்கி, பிறகு அகமர்ஷண மகரிஷியை நினைந்து ஆசி பெறுதல் மிகவும் விசேஷமானதாகும்.

அகத்தை, அதாவது ஆத்மம் உறையும் சாசுவதப் பொருளை, ஆகர்ஷணம் செய்பவர் அதாவது உள்ளுள் உறைந்திருக்கும் ஆத்மம் குடியிருக்கின்ற இடத்தை ஆட்கொள்பவராய், இறைவனுடைய அகத்திலிருந்து தோன்றியவராய் எப்போதும் இறையகத்தில் குடியிருப்பவரே ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி ஆவார்.

மனித மனோபாவத்திற்கு ஏற்ப மகான்கள் பலவிதம்!

இன்றைக்கு நாம் புனித பாரதத்திலும், உலகில் பல இடங்களிலும் தரிசிக்கக் கிடைக்கின்ற எண்ணற்ற மகான்களும், இறைவனால் அனுப்பப்பட்டுப் பல மானுட வடிவுகளைக் கொள்கின்றார்கள். பண்டைய யுகங்கள் போல், அனைத்து மகான்களும் ஜடாமுடி தரித்துக் கமண்டலம் ஏந்தி, ஒரே மாதிரியாக இருப்பார்களேயானால் (மாறுபடும் குணமுடைய) கலியுக மனித மனம் ஏற்றிடுமா? எனவேதான், கலியுகத்தில் எந்த இரண்டு மகான்களும் ஒரே மாதிரி தோன்றுவதில்லை!

கலியுக மனித மனமானது ஒரே விஷயத்தில், ஒரே இடத்தில், ஒரே பொருளில் நிலைத்து நிற்பதும் கிடையாது. நிமிடத்துக்கு நிமிடம் மாறிக் கொண்டே, ஆடல் கொள்ளும் மனமாக மாறிவிட்டமையால், கலியுக மனிதப் பண்பிற்கு, ஏற்ப, பல வடிவுகளில் மகான்கள் தோன்றுவர்! ஆனால் இத்தகைய இறைத் தூதுவர்களிடம், நல்லறப் பெரியோர்களிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு, அவர்களுடைய அறவழிகளைக் கடைபிடிக்க வேண்டுமே!

அனைத்து இறைத் தத்துவங்களுக்கும் முதல் அடி எடுத்துத் தருபவராக, இன்றைக்கும் அகமர்ஷண மகரிஷி விளங்குகின்றார். ஆலயங்களில், கிரிவலத்தில் அடிப் பிரதட்சிணம் செய்யும் போது கூட “அகமர்ஷண மகரிஷி மூல அடிமுதலாய்க் காட்டும் ஆதியெம் பொருளே போற்றி!” என்று ஒவ்வொரு பாதத்தை எடுத்து வைக்கும் போதும் ஸ்ரீஅகமர்ஷண மகரிஷியின் குருவருளை வேண்டி அடிப் பிரதட்சிணம் செய்வது மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் இறைவனுடைய திருவடியையே தம்முடைய அகத்தினுள் வைத்திருப்பவரே அகமர்ஷண மகரிஷி ஆதலின், அவருடைய நாமம் பழுத்த குருபாத சக்திகளைக் கொண்டதாம்.

அடிப் பிரதட்சிணக் கிரிவலம்

குருபாத பூஜை என்று சொல்லப்படுகின்ற குருவடி பூஜையில் பிரசித்தி பெற்றவரே ஸ்ரீஅகமர்ஷண மகரிஷி ஆவார். எனவே, இன்றைய கிரிவலத்தில், ஸ்படிகத்தினால் ஆன குருபாதத்தைத் தாங்கியவாறு, அல்லது இல்லத்தில் பெரியோர்கள் பூஜித்து வரும் குருபாதுகைகளைத் தாங்கியவாறு, அருணாசலத்தில், இயன்றால், அடிப் பிரதட்சிணமாகக் கிரிவலம் வருவது மிகவும் விசேஷமானதாகும். குருபாதம் தாங்கி வருவோர் ஓத வேண்டிய மந்திரம்

நித்ய அந்தர்முக:
ஸ்வச்ச ஸ்வாத்மனாந்த ப்ரபூர்ணதீ:
ஜாக்ரத்யேவ ஸுஷூப்தஸ்த்த
குரு கர்மாணி வைத்விஜ

தமிழ் மந்திரம்

உள்ளம் நோக்கு
உள் விழி கொள்!
உறக்கம் போல
உட்பணி ஆற்று!
ஆத்ம சாட்சாத்காரம்
அதில் ஒளி தருமே!

இயலாதோர், ஆங்காங்கே, கிரிவலப் பாதையில் குறைந்தது ஆயிரம் அடிகளேனும் அடிப் பிரதட்சிணமாக வருவது சிறப்பானது.

திருஅண்ணாமலையில் அடிப்பிரதட்சிணமாக கிரிவலம் வருகின்ற மகிமையைப் பற்றி பலரும் அறியாதிருக்கின்றார்கள். சாதாரண முறையிலே கிரிவலம் வருவதற்கே நான்கு மணி நேரம் ஆகின்றதே. இதில் அடிப் பிரதட்சிணம் செய்து வந்தால் பத்து மணி நேரம் ஆகுமே என்று பலரும் காலக் கணக்குப் பற்றி யோசிப்பார்கள். ஆனால் அருணாசல பூமியில் உறையும் ஒவ்வொரு வினாடி நேரமும் பல பிறவிக் கர்மங்களைக் கழிக்கும் கால பைரவாள சக்திகளைக் கொண்டதாகும்.

அரைத்த சந்தனம் ஏந்தியவாறு அதியற்புதக் கிரிவலம்

இன்றைய அருணாசல கிரிவலத்தில், ஆங்காங்கே, கிரிவலப் பாதையெங்கும் உள்ள சன்னதிகளில் சந்தனம் பூசப் பெற்ற ஐந்து அகல் விளக்குகளில் பஞ்சக் கூட்டுத் தைலத்தால் (5 தைலங்கள் சேர்க்கை) தீபத்தை ஏற்றியவாறு, வலம் வருதல் வேண்டும். இதனால் கருத்து, கடமை இல்லாமல் இருக்கும் கணவன்மார்கள் குடும்பத்தில் பொறுப்பு உணர்ச்சி பெறுவர்.

இன்று வீட்டிலிருந்தே சந்தனக் கல்லில் நிறையச் சந்தனம் அரைத்து அரச இலையில் வைத்து எடுத்துச் சென்று, நேர்த்தி மொட்டை அடித்திருப்பவர்களுக்குத் தலையில் தடவுவதற்காகச் சந்தனத்தைத் தானமாக அளித்தல் மிகச் சிறந்த சந்தனத் தர்மவகை ஆகும். இதனால், பிறருடைய பழிச் சொற்கள், அவதூறுகளால் வாழ்வில் பாதிக்கப்பட்டோர், தகுந்த நிவாரணம் பெறுவதற்கு, இவ்வறப்பணிப் பலன்கள் பெரிதும் உதவும்.

இன்று, கிரிவலத்தில் நிறைய சந்தனத்தை அரைத்து, சந்தனம் (அரசு இலை), விபூதி (பன்னீர் இலை), குங்குமம் (தாமரை இலை), மஞ்சள் (புரசு இலை), செந்தூரம் (ஆல இலை) ஆகிய ஐந்தையும் மேற்கண்ட வகையான ஐந்து இலைகளில் வைத்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதியவாறு, கிரிவலப் பாதையில் அனைத்துச் சன்னதிகளிலும், கிரிவலப் பாதையில் தென்படுகின்ற அரசு, ஆல், வேம்பு, இலுப்பை போன்ற ஹோம சமித்து விருட்சங்களுக்கும் இட்டு, வலம் வந்து வணங்குதலால், பலவிதமான தடங்கல்களால் பாதிக்கப்பட்டுள்ள திருமணம், தொழில் முன்னேற்றம் போன்ற நற்காரியங்களில் உள்ள இன்னல்கள் நீங்கி, காரியங்கள் சித்தி ஆகும்.

ஹயக்ரீவ தைவத்யான்
மந்த்ரான் யோ வேத ஸ ச்ருதி
ஸம்ருதீ திஹாஸ புராணி வேத ஸ
ஸர்வைச் வர்யான் பவதி த ஏதே மந்த்ரா:

தமிழ் மந்திரம்

பரிமுகப் பெருமாள் பாதம்
மறை, ஸ்ருதி மாதவ வேதம்
ஹரி ஹரி திருமால் யாதும்
சகலம் அவரென ஓது! ஓது!

ஸ்ரீபூரண மகரிஷி

திருக்கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் இன்று, ஸ்ரீபூரண மகரிஷி, தம் பிரவர மகரிஷிகளான வைச்வாமித்ரர், தேவராதர், பௌர்ண மகரிஷிகள் ஆகிய பிரவர ரிஷிகளுடன் கிரிவலம் வரும் நன்னாள்.

எந்த ஒரு பூஜையினைத் துவங்கும் முன்னரும், குறித்த நற்காரியத்தை நிறைவேற்றும் பொருட்டு, “இப்பூஜையினை, இறைவா! அடியேன் நின்னருளால் செய்யத் துவங்குகின்றேன். கருணை கூர்ந்து இதை நன்முறையில் நடத்தித் தருவாயாக!” என வேண்டித் துவங்கும் சங்கல்ப சாதகத்தை அனைவரும் மேற்கொள்ள வேண்டும். சங்கல்ப மகரிஷி என்பவரே இவ்வாறு முறையாக வேண்டித் துவங்கும் வழிபாடுகளில் செய்யப்படும் சங்கல்பத்தை முறைப்படுத்தி நிறைவேற்ற அருள்புரிபவர். துவார பாலக மூர்த்திகளுக்கு மந்திர உபதேசங்களை அளிப்பவர்.

பூஜைக்குப் பூரணம் தரும் மகரிஷி

ஆனால் நல்ல முறையில் துவங்குகின்ற காரியம் நல்ல முறையில் முடிவடைந்தால் தானே எடுத்த காரியம் பூரணமடையும்? இதற்கு அருள்பவரே ஸ்ரீபூரண மகரிஷி. சுயநலமற்றப் பிரார்த்தனைகளோடு செய்யப்படுகின்ற ஹோமம், யாகம், வேள்வி, உழவாரத் திருப்பணி, அன்னதானம், ஆடைதானம், கோயில் கும்பாபிஷேகம் போன்ற எந்த நற்காரியமாக இருந்தாலும் சரி, அக்காரியம் முறையாக பூரணத்துவம் அடைய அவ்விடத்தில் ஏதேனும் ஓர் வடிவில் எழுந்தருளி, தம் தபோபலன்களைத் தாரை வார்த்து அளித்து, நிறைவடையச் செய்பவர்.

ஸ்ரீஅஸ்வத பத்ர ஸ்ரீவிநாயகப் பெருமானை இஷ்ட தெய்வமாகக் கொண்டு, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அரசமரத்தடிப் பிள்ளையாரையும் தினமும் வணங்கி வருகின்ற உத்தம மகரிஷி, அரச சமித்தால் ஹோம ஆஹூதிகள் அளிக்கையில் அருகில் இருந்து ஆசி அளிப்பவர்.

வாழ்வில் நாம் மேற்கொண்ட நற்காரியங்கள் அனைத்தும் தடங்கல்கள், துன்பங்கள் இன்றி நன்முறையில் நடந்து முடிய, இந்நாளில் திருஅண்ணாமலையில் ஸ்ரீபூரண மகரிஷியின் ஆசி வேண்டி, அவர் ஓதிய மந்திரங்களையும் ஓதியவாறே, தியானித்தவாறே கிரிவலம் வர வேண்டும்.

இவ்வாறு கிரிவலம் வருகையில் (வெல்லப் பூர்ணத்தால் ஆன இனிப்புப்) பூரணத்தால் ஆக்கப்படும் இனிப்பு உணவுப் பண்டங்களை – கொழுக்கட்டை, போளி, சூய்யம் – ஆகியவற்றை எடுத்து வந்து, கிரிவலத்தில் ஸ்ரீபூரண மகரிஷியே போற்றி என்று உரக்க ஓதியவாறே அவற்றை ஏழை, எளியோர், கிரிவல அடியார்களுக்குத் தானமாக அளித்திடல் வேண்டும்.

ஸ்ரீபூரண மகரிஷி தூல சூட்சும வடிகளோடு, மானுட வடிவிலும் அரசங் குச்சி ஏந்தி, திருஅண்ணாமலையாரை வலம் வந்து வணங்கும் திருநாள், அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறையே கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்தி ஸ்ரீபூரண மகரிஷியின் திருஅருளைப் பரிபூரணமாகப் பெற வேண்டுகின்றோம்.

நற்காரியங்கள் பூரணமடைய

இல்லம், தொழில், அலுவலகங்களில் நற்காரியங்கள் பூரணமடையாமல் அரைகுறையாக நிற்குமேயானால் இன்று ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகர் துதியுடன், ஆலயமருகே இரட்டைப் பிள்ளையார் சன்னதியில் கிரிவலத்தைத் துவங்கி, இவ்வாலயத்திலேயே கிரிவலத்தை நிறைவு செய்திட, காரியத் தடங்கல்கள் நீங்கிட வழி பிறக்கும்.

பல தவிர்க்க முடியாத காரணங்களால் கிரிவலம் வர இயலாத அடியார்கள், (காரணம் உண்மையாகவும், மனச்சாட்சிக்கு விரோதம் இல்லாமலும் இருக்க வேண்டும்) இன்று இல்லத்தில் கணபதி ஹோமம் இயற்றி, ஸ்ரீஅஸ்வதப் பத்ர விநாயகருக்கு மிகவும் ப்ரீதியான பூரணக் கொழுக்கட்டைகளை ஹோமத்தில் ஆஹூதியாகவும், பிறகு தானமாகவும் அளிக்க வேண்டும்.

மற்ற வழிபாடுகளை விட கிரிவலத்திலும், அங்கப் பிரதட்சிணத்திலும், உடல் அவயங்கள் பரிபூரணமாகப் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பதால்தான் இவற்றிற்கு விசேஷமான பலன்களை ஆண்டவன் நிர்ணயித்து உள்ளான். இதிலும் அருணாசல கிரிவலத்தில் 72,000 நாளங்களும் ஆக்கம் அடைந்து, இதில் ஆலய வழிபாடு, கோபுர தரிசனம், ஹோம பூஜை, மௌன விரதம், உண்ணா நோன்பு, நடைப் பிரதட்சிணம் போன்ற பல்வகை வழிபாடுகளின் பரிபூரணமான பலன்களைப் பெற்றுத் தருவதால் இதனைப் பூரண வழிபாடுகளில் ஒன்றாக ஸ்ரீபூரண மகரிஷி உரைக்கின்றார்.

பல்கலைச் சிறப்பிற்கு ஆசி தரும் பூரண மகரிஷி

ஆன்மீக ரீதியான நடன  அரங்கேற்றம், கவியரங்கம், உரை மன்றம் போன்றவற்றில் முதன் முதலாக அரங்கேற்றம் செய்வோர், ஸ்ரீபூரண மகரிஷியின் அனுகிரகத்தைப் பெற்றிட வேண்டும். இதற்காகவே, ஆலயத் திருவிழாக்களிலும் இல்லங்களில் நடைபெறும் திருமணம், உபநயனம் போன்றவற்றிலும் ஒரு அரச மரக் குச்சியை ஊன்றி, அதில் அரச இலைகள் கூடிய அரசங்கிளையை நுனியில் கட்டி முதல் பூஜையில் வைப்பதை இன்றும் நீங்கள் காணலாம். ஸ்ரீமன் நாராயண தேவதா மூர்த்தியின் அம்சங்களுடன் அரச மரம் விளங்குவதால், திருமாலே ஜீவன்களுக்குப் பூஜைகளின், அனைத்து வழிபாடுகளின் பரிபூரணத் தன்மையை அளிக்க வல்லவர் ஆதலால் அரச மரத்திற்குப் பரிபூரண விருட்சம் என்ற பெயரும் உண்டு.

அபய மண்டபம் திருஅண்ணாமலை

அரச மரத்தடியில் அருளும் விநாயகருக்குக் காரிய சித்தி அனுகிரகங்கள் பொலிந்திருக்கும். இதனால்தாம் பூரண மகரிஷி குறித்த தினங்களில், திதிகளில் அரச மரத்தடியில் தவம் புரிந்து கொண்டிருப்பார்.

சீட்டு, சூதாட்டம் போன்ற தீய சக்திகள் நடந்த சத்திரம், தீய காரியங்கள் நடந்த திருமண மண்டபம், முறையாக ஓதப் பெறாத மந்திரங்கள் போன்றவற்றால் மாங்கல்யத்தில் சேர்ந்திருக்கும் தோஷங்களால் கணவனுடைய ஆயுளுக்கு பங்கங்கள் ஏற்படும். இன்று பூரண மகரிஷியே அருணாசல கிரிவலத்தில் அபய மண்டபம் அருகில் மலையின் அனைத்து முகங்களும், முகடுகளும் பரிபூரணமாகத் தெரிகின்ற பரிபூரண பங்கஜ தரிசனப் பகுதியில் சூக்குமமாகத் தவம் புரிந்து தன்னுடைய தபோபலன்களை நிரவுவதால் இன்றைய கிரிவலத்தில் அபய மண்டபத்தின் அருகில் இருந்து கீழ்க்கண்ட ஆதிசங்கரருடைய ஸ்லோகத்தை 24 முறை ஓதி சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தலால் மகரிஷி அளிக்கும் தபோ பலன்களை அவரவருடைய ஆத்மீக சக்திக்கு ஏற்பப் பெற்றிடலாம்.

மிகவும் தொன்மையான அபய மண்டபத்தைத் திருப்பணி செய்து சீரமைப்போர்க்குச் சந்ததிகள் நன்கு தழைக்க பூரண மகரிஷியின் ஆசிகள் பரிபூரணமாக நிரவும்.

பூரணப் பிரகாச வஸ்திரப் பேரருள்!

ஸ்ரீபூரண மகரிஷி தம்முடைய இடுப்பில், எப்போதும் பூரணப் பிரகாச வஸ்திரத்தைத் தரித்திருப்பார். அதாவது, அருணாசல கிரிவலம், மதுரா கிரிவலம், மானசரோவர் கிரிவலம் போன்ற வாழ்க்கையில் பெறுதற்கரிய கிரிவலம் மற்றும் அங்கப் பிரதட்சிணங்களை மேற்கொள்வதற்காகவே நல்ல, புதிய, பெரிய நார்ப்பட்டால் ஆன (பட்டுப் புழுவை மாய்த்து ஆக்கப் பெறும் பட்டு வஸ்திரம் அல்லாது இயற்கையான நார்களால் ஆவது) வஸ்திரத்தை இதற்கெனவே வைத்துக் கொண்டு, எங்கெல்லாம் கிரிவலம் அல்லது நமஸ்காரம் செய்கின்றோமோ, அங்கு வஸ்திரத்தை கட்டிக் கொண்டு கிரிவலமும், அங்கப் பிரதட்சிணமும், நமஸ்காரமெனில் வஸ்திரத்தை நன்கு விரித்து அதன்மேல் சாஷ்டாங்கமாக, பரிபூரணமாக நமஸ்கரித்து, பின்னர் அதே வஸ்திரத்தை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு 36, 64, 108, 1008 தலங்களைக் கண்ட பல கிரிவலங்களை, அங்கப் பிரதட்சிணங்களைக் கண்ட, நமஸ்கார சக்திகள் நிறைந்த வஸ்திரத்தை பவித்திரமாகவும், வைத்திருந்து ஆசீர்வாதப் பொருளாக ஆசியளிக்கும் கிரணங்களை, உற்பவிக்கும் தெய்வீக சாதனமாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை அணிந்து பூஜித்தால் பலாபலன்கள் பெருகும்.

இவ்வாறு பல வஸ்திரங்களை வைத்திருந்த ஸ்ரீபூரண மகரிஷி பலருக்கும் இதனை ஆசீர்வாதமாக அளித்து அருள் புரிந்தார்.

பதினைந்து தேதிகளிலும் பரிபூரணமான திதிகளாகப் போற்றப்படுகின்றவை பஞ்சமியும், துவாதசியும் ஆகும். இதில் துவாதசி மங்கள சக்திகளை, அதாவது, பன்னிரெண்டு விதமான மங்கள கிரணங்களைக் கொண்டதாக விளங்குவதால், ஸ்ரீபூரண மகரிஷி இதனைத் தம்முடைய இஷ்ட பூஜா திதியாகக் கொண்டு வழிபடுகின்றார்.

பரிபூரணத் தத்துவப் பொருட்கள்

பூரண சக்திகள் நிறைந்தவையாகப் போற்றப்படுகின்ற பூரண வஸ்துக்கள், பூரணத் திரவியங்கள் பல உண்டு. இவற்றைக் கொண்டு பூஜைகள், ஹோமங்கள் நிகழ்த்தும் போது இவற்றில் பரிணமிக்கும் பூரணத் தத்துவத்தால் பல விசேஷமான பலன்களைப் பெறுகின்றோம். பரிகார, பிராயசித்த வழிபாடுகளின் சாராம்சங்கள் இவற்றில் அடங்கி உள்ளன.

விரளி மஞ்சள், தேங்காய், நுங்கு, ஏலக்காய், பஞ்சு மாலை, பசு நெய் போன்றவை இத்தகைய பரிபூரண தத்துவம் கொண்டவை. மேலும் பலவும் உண்டு. தக்க சற்குரு மூலமாக அறியவும்.

இன்றைய கிரிவலத்தில் கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி வரவும்.

ஓம் ஸ்ரீஅஸ்வத பத்ர கணபதி ஓம்
அவத்வம் மாம்
அவ வக்தாரம்
அவ ச்ரோதாரம்
அவ தாதாரம்
அவ தாதாரம்
அவானூசான மவ சிஷ்யம்
அவ பச்சாத்தாத்
அவ புரஸ்தாத்தாத்
அவோத்தராத்தாத்
அவ தட்சிணாத்தாத்
அவ சோர்த்வாத்தாத்
அவாதாராத்தாத்
ஸர்வதோ மாம் பாஹி ஸமந்தாத்

தமிழ் மந்திரம்

காத்தருள்வாய் அரசிலை விநாயகா!
ஓதல், கேட்டல், தாங்கல் யாவும்
ஆசான், சீடன், மக்களைக் காக்கும்
மேலும், கீழும், வடவும், தெற்கும்,
எங்கும் எதிலும் எம்மைக் காக்க
அரசிலை வடிவா ஆதவ கணபதி!

காரியத் தடங்கல்களை நிவர்த்தி செய்வதற்கானப் பூஜைகளில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. இன்று மேற்கண்ட திரவியங்கள், ஆன்ம சாதனங்கள் கூடிய வழிபாடுகளை கிரிவலத்தில் மேற்கொள்தலால் நெடுங்காலமாகத் தடைப்பட்டுள்ள நற்காரியங்கள் நிறைவேறத் துணைபுரியும்.

பருப்புத் தேங்காய் தானம், தேங்காய்ப் பூ நிறைந்த தேங்காய்ப் பூரணத்தில் (தேங்காய்த் துருவலில் சர்க்கரை சேர்த்தல்) ஏலக்காய், முந்திரி கூடிய இனிப்பு வகைகள், குறைந்தது ஆறு அடி நீளம் உள்ள தாமே தொடுத்த பஞ்சு மாலையை விருட்சங்களுக்குச் (மரங்கள்) சார்த்துதல், குறைந்தது 21 பசுநெய் தீபங்கள் ஏற்றுதல் போன்ற பூரண சக்தி வழிபாடுகளை இன்று மேற்கொள்தலால் ஸ்ரீபூரண மகரிஷியின் பரிபூரண ஆசியைப் பெற்றிடலாம்.

ஸ்ரீஅபிஜித மகரிஷி

இன்று அபிஜித மகரிஷி தம் பிரவர மகரிஷிகளான ஆங்கீரஸர், ப்ரபோ கௌதமர், சாரத்வதர் ஆகியோருடன் கிரிவலம் வரும் நன்னாள்!

தோஷமில்லா அபிஜித் முகூர்த்தம்

சூரிய கோளங்கள் எண்ணற்றவை! “ஆவர்தன சூரிய பகவான்” இன்று தம்முடைய ஆவர்தனக் கிரணங்களுடன் பூமியை வலம் வருகின்ற நன்னாள் இதுவே!

பல வகை முகூர்த்த நேரங்களில் சற்குரு அளிக்கும் அமிர்த நேரம், பிரம்ம முகூர்த்தம் (விடியற் காலை), கோதூளி லக்னம், அபிஜித் முகூர்த்தம் (பகல் உச்சி வேளை) போன்றவை எவ்வித தோஷங்களும் இல்லாத, தோஷங்களுக்கு அப்பாற்பட்ட முகூர்த்த வேளைகளாக, சித்த புருஷர்களால் அளிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய அபிஜித் முகூர்த்த பூஜைகளில் வல்லவரே ஸ்ரீஅபிஜித மகரிஷி ஆவார். அபிஜிதாமிர்த பூஷண காலம் என்றால் காலத்தாலேயே அழிக்கப்பட முடியாதது என்று பொருள். எனவே அபிஜித் முகூர்த்தம் என்பது சாசுவதமான, மிகவும் புனிதமான முகூர்த்த நேரமாகும். ஜிதேந்த்ரன் என்று போற்றப்படும் ஆஞ்சநேயர் தம் பூஜைகளை அபிஜித் முகூர்த்த நேரத்தில் ஆற்றுவதிலே பேரானந்தம் கொள்வார். உண்மையில் அனைத்து ஆலயங்களிலும் ஸ்ரீஆஞ்சநேயர் உச்சிக் கால (அபிஜித் முகூர்த்த) பூஜையை நிறைவேற்றிய பின்னரே ஆலய நடை சார்த்தப் பெறும், எனவே சாயந்திர பூஜைக்காக நடை திறக்கும் போது ஆலய தரிசனத்திற்கு வருவோர்க்கு மாருதிராய பூஜித மங்கள தரிசனம் எனும் அபூர்வமான மூலவர் தரிசன சக்திகள் கிட்டும்.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து விதமான பூஜைகளையும் அபிஜித் முகூர்த்தத்தில் நிகழ்த்தி மகாசக்தி வாய்ந்த ஜிதேந்த்ர தவ சக்திகளைப் பெற்றவரே ஸ்ரீஅபிஜித மகரிஷி  ஆவார். இவர் சூரிய லோகத்தைச் சேர்ந்தவர். சூரிய நாராயண மூர்த்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்டு அவரை உபாசித்து, அவருடைய திருநாபியில் எழும் பல கோடி சூரிய பிரகாசங்கள் நிறைந்த பிரகாச தீபத்தைத் தரிசித்தவர் ஆதலின் தேஜோமயமான, வர்ச்சஸ் மற்றும் தேஜஸ் நிறைந்த மேனியை உடையவர்.

பிரம்ம கற்ப காலத்தில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியின் நாபியிலிருந்து ஜிதேந்த்ர முகிலர் என்ற பிரம்மா தோன்றிய தரிசனத்தைப் பெற்றவரே ஸ்ரீஅபிஜித மகரிஷி ஆதலால் அனைத்து விதமான பூஜைகளையும் அபிஜித் முகூர்த்த நேரத்திலேயே கடைபிடித்து எண்ணற்ற அனுகிரகங்களைப் பெற்றவர்.

மகாதேஜஸ்வி அபிஜித மகரிஷி

பல்லாயிரம் யுகங்களில், குறிப்பாக, அபிஜித் முகூர்த்த நேரங்களில் இவர் ஆழ்ந்த பக்தியுடன், ஸ்ரீகாயத்ரீ தேவிக்கு ஆறு வேளைகளிலும் அளித்த அர்க்யத்தால், அம்பிகை பரமானந்தம் கொண்டு, மனமுவந்து இவருக்கு மென்மேலும் தேஜோமயமான சரீரத்தை அளித்தமையால், மானுட சரீரத்திலேயே அனைத்து தெய்வ மூர்த்திகளையும் தரிசிக்கும் தேவ வல்லமையையும் பெற்ற மகரிஷியே, இன்று தம் பிரவர மகரிஷிகளுடன் அருணாசலத்தை கிரிவலம் வருகின்ற நன்னாள்.

இன்று அபிஜித் முகூர்த்தமாகிய பகல் உச்சி நேரத்தில், சாலையின் உஷ்ணத்தையும், தலையிலும், காலிலும் ஏறும் வெப்பத்தையும் சகித்துக் கொண்டு, இன்று அருணாசல கிரிவலம் வருவோருக்கு, எண்ணற்ற கர்ம வினைகள் தாமே கழிவதுடன், இக்கர்ம வினைகளின் அழுத்தத்தால் தடைபட்டுள்ள நற்காரியங்களும் நிறைவு பெற, இக்கடுமையான கிரிவலம் உதவும். எனவே தக்க மனத் திண்மை இருப்பவர்கள் மட்டும் இன்று உச்சிப் பொழுது கிரிவலத்தைக் மேற்கொள்ளவும்., காலில் ஏற்படும் கொப்புளங்கள், வேதனையான கர்ம வினைகளின் எளிய கழிவு முறை என ஏற்கும் மனப்பக்குவம் அடைதல் மிக மிகக் கடினமே!

அவரவர் உடல் நிலையைப் பொறுத்து இன்றைய கிரிவல நேரத்தை அமைத்துக் கொள்ளவும். பக்தியுடன் வருவோரின் அபிஜித் முகூர்த்த நேரமாகிய உச்சிப் பொழுதில் கிரிவலம் வருவோருடைய உடல் துன்பங்களை அபிஜித மகரிஷியே ஏற்பதும் உண்டு. வெப்ப நிலையைக் குளுமையாக்கித் தருவதும் உண்டு.

கலியுகத்தில் உத்தம பூஜா பலன்கள் கிட்டிட….

திருஅண்ணாமலையில் பல யுகங்களில் பலவிதமான கிரிவலங்கள் மூலமாகவும், பிற யுகங்களில் பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் தவம் பூண்டும் பெற வேண்டிய தவசக்திகளை மிக எளிதில், கடும் வெயிலில் அல்லது கடுமையான மழையில் செய்கின்ற கிரிவலப் பலாபலன்களாக, இறைவன் மிக எளிதில் அளித்து விடுகின்றான். எனவே வெயிலோ, மழையோ, உடல் வருத்தம் பாராது ஆற்றப்படும் சபரி மலை விரத யாத்திரை, அருணாசல கிரிவல யாத்திரைக்கு மகத்தான பலன்கள் உண்டு.

தியாக உணர்வுகள் பெருகுவதற்கும், சற்குருவின் மேல் ஆழ்ந்த குரு நம்பிக்கை திரள்வதற்கும், அபிஜித் முகூர்த்த கிரிவலம் உதவும். ஆனால் கடைபிடிப்பதற்கு மிக மிகக் கடுமையானதாகும். அவரவர் ஆரோக்கிய நிலை, உடல் நிலை, மனோபாவத்தைக் கொண்டு முடிவு செய்து கொள்ளவும். பூரண பக்தியைப் பெறுவதற்கு உச்சிப் பொழுது கிரிவலம் உதவும்.

கரங்களில் பூரணிக்கும் இறை திரவியங்கள்!

இன்றைய கிரிவலத்தில், கைகளைத் தொங்க விட்டு வராது, இரண்டு கரங்களிலும் புஷ்பங்கள், தீர்த்தச் செம்பு, அன்னதானத்திற்கான உணவு வகைகள், சாம்பிராணி தூபம், விளக்கு போன்ற தெய்வீக சாதனங்களைச் சுமந்தவாறே, பரிபூரணமான கரங்களுடன் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும். பெண்கள் ஆங்காங்கே அமர்ந்து புஷ்பங்களைத் தொடுத்தவாறு கிரிவலம் வந்திடலாம். சாலையில் மிகுந்த கவனத்துடன் வரவும்.

கிரிவலம் வருதற்கு முன்னரேயே குறைந்தது 24 முழப் பூக்களைத் தம் கரங்களாலேயே எடுத்துத் தொடுத்து கிரிவலப் பாதையெங்கும் உள்ள தெய்வ மூர்த்திகளுக்கு, நந்தி மூர்த்திகளுக்கு, புனிதமான விருட்சங்களுக்குச் சார்த்தி வழிபடுவதுடன் ஏழைச் சுமங்கலிகளுக்கும், சிறுமியருக்கும் அளித்தலால் பலவிதமான மங்கள சக்திகளை முழுமையாகப் பெற அபிஜித மகரிஷி ஆசி அளிக்கின்றார்.

இன்றைய கிரிவலத்தில் கீழ்க் கண்ட மந்திரத்தை ஓதி வரவும்.

நாபி நந்ததி நைஷ்கர்ம்யம்
ந கர்மஸ்வனு ஷஜ்ஜதே
ஸு ஸமோய:
பரித்யாகீ ஸோ(அ)ஸம்ஸக்த
இதி ஸ்ம்ருத:

தமிழ் மந்திரம்

எதையும் சமமாய்
எப்பலன் துய்யா
எச்செயல் புரினும்
பற்றது அற்று
இல்லா திருப்பதே
அஸம்சக்தமாய்
ஆத்மாதி நிலையே!

ஸ்ரீகுக்கிலி மகரிஷி

இன்று ஸ்ரீகுக்கிலி மகரிஷியானவர் பங்கஜ வாஸிஷ்டர், மைத்ராவாருணர், கௌண்டின்யர் ஆகிய தம் குலப் பிரவர ரிஷிகளுடன் கிரிவலம் வருகின்ற விசேஷமான நாள்.

ஒவ்வொரு கற்ப காலத்திற்கும் சிருஷ்டி நேரமும், பிரளய காலமும் உண்டு. பிரளய காலத்தில் தோன்றுகின்ற மகரிஷிகளுள் ஒருவரே ஸ்ரீகுக்கிலி மகரிஷி ஆவார். நெல்லிச் சாறை, ஒரு சிறு மூங்கில் குவளையில் அருந்தியும், துவாதசி தோறும் ஒரே ஒரு நெல்லிக் கனியை மட்டுமே உண்டும், அன்றும் இன்றுமாய் “தாந்த்ரீய” யோக சக்தியில் திளைத்துப் பிரகாசிப்பவரே ஸ்ரீகுக்கிலி மகரிஷி.

சித்துக்காடு

குக்குடத் தாண்டவம்

குக்குடத் தாண்டவம் என்பது, நடராஜப் பெருமானுடைய கோழி பாவன நடனத் தாண்டவக் கோலங்களுள் ஒன்றாகும். ஒற்றைக் காலில், ஒவ்வொரு விரல் நுனியில் மட்டும் நின்றவாறே ஆடுகின்ற நாட்டியங்கள் குக்கிலியாகக் குக்குடத் தாண்டவம் ஆகும். இவ்வாறு வலது, இடது பாத விரல்களில் நின்று ஆடும் பத்து வகை நாட்டியங்கள் தசமால்ய கூடம் என்று அழைக்கப்படும். இன்றைக்கும் திருப்போரூர், சித்துக்காடு போன்ற பல ஆலயங்களின் மண்டபத் தூண்களில், குக்குடத் தாண்டவக் கோலங்கள் தூண்களில் பதிக்கப்பட்டு இருப்பதைக் காணலாம்.

சென்னை பூந்தமல்லி அருகே, சித்துக்காடு கிராமத்தில் உள்ள ஸ்ரீபிரசூன (அல்லது ஸ்ரீபிரசன்ன) குந்தளாம்பிகை சமேத ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் அருளும் ஆலயமானது, இறைவனுடைய குக்கிலிக் குடத் தாண்டவத் தலங்களுள் ஒன்றாகச் சித்புருஷர்களால் போற்றப்படுகின்றது. யோக சக்திகள் நிறைந்த, யோகியர்கள் அனைவரும் வழிபடுகின்ற தலம். தியானம், யோகத்தில் பயிற்சி கொள்கின்றவர்கள் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட வேண்டிய மிகவும் அமைதியான தலம். குக்குலி மகரிஷி கோத்திரத்தினரும், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோரும் வழிபட வேண்டிய தலம்.

குக்குலிப் பிரணவ சக்தி

இங்குள்ள நந்தீஸ்வரர், குக்குலிப் பிரணவ சக்திகளைக் கொண்டவர் ஆதலால் மூக்கில் பந்தனம் இல்லாது ஸ்தம்பன நிலையில், இறைவனுடைய பல யோகத் தாண்டவ நிலைகளை தரிசிக்கக் கூடிய அற்புதமான ஆலயம். எனவே இங்கு பிரதோஷ வழிபாடுகளுக்கு ஆவன செய்து வழிபட்டு வர, அற்புதமான யோக சக்திகளையும், இதன் மூலம் நோய் நிவாராண சக்திகளையும் பெற்றுத் தருவதாகும்.

“காலால் எழுப்பும் கருத்தறியும் யோகம்”

இவ்வாலயத்தில் வலது மற்றும் இடது பாதங்களின் கட்டை விரல்களை மட்டுமே, பூமியில் அழுத்தி நின்றவாறே, சுவாமியைத் தரிசிப்பதால் மிகவும் அபூர்வமாக யோக சக்திகளைப் பெற்றிடலாம். இதனையே ஔவையார் “காலாம் எழுப்பிக் கருத்தறிவித்தே” என்று போற்றுகின்றார். ஔவையாரும், வலது கட்டை விரலில் மட்டும் நிமிர்ந்து நின்று யோகமார்த்தாண்ட பாவனையில் இறைவனை வழிபட்ட தலம். ஔவை சொன்ன அருமொழியான, விநாயகர் அகவலின் ஒவ்வொரு வரியும், திருமூலரின் திருமந்திரம் போல, பல ஆலய தரிசன, யோக, தவங்களுக்குப் பின் தோன்றியதாகும்.

இதில் மேற்கண்ட “காலால் எழுப்பிக் கருத்தறிவித்தே” என்ற விநாயக அகவலின் யோகமார்த்தாண்ட வரி பிறந்த அதியற்புத யோகத் தலமே சித்துக்காடு!

குக்கிலியப்ப யோக நிலை அறிவீர்!

பலவிதமான யோக சாதனங்களை மனிதன் கலியுகத்தில் முறையாகப் பயிலா விட்டாலும், அறிந்தோ, அறியாமலோ ஒவ்வொரு மனிதனும், தினந்தோறும், பித்ருக்களின் ஆக்கப் பூர்வ ஆசியால், தினமும் பலவிதமான யோகங்களை ஆற்றித்தான் வருகின்றான்.

தன் உடலை மறந்து யோகப் பூர்வமாக வாழ்கின்ற நிலைக்கு யோக மொழியில் குக்கிலியப்பம் என்று பெயர். இந்த அற்புதமான யோக நிலையை உலக மனித சமுதாயமே உறக்கத்தின் மூலமாகப் பெறுகின்றது என்பது பலரும் அறியாத தெய்வீக இரகசியமாகும். ஆம், மரணத்தின் ஒத்திகையாக விளங்கும் உறக்கமும், குக்கிலியப்ப யோகத்தின் பாங்கேயாம். ஆப்ப வகை “ஆவியில் வேகும்” உணவு, யோகப் பூர்வ சக்திகளைத் தருவதாகும்.

உறங்கும் போது தான் மூச்சு விடுகின்றோம் என்ற உணர்ச்சி கூட இல்லாது இருக்கின்ற வயிற்று நிலைக்குக் குக்கிலியப்பக் குடம் என்று பெயர். இந்த அபூர்வமான யோக நிலைகளைத் தந்து அருள்கின்ற பெருமாளே, “அப்பக் குடத்தான்” என்ற திருநாமம் தாங்கி அருள்கின்றார். வயிறு சம்பந்தமான நோய்கள் தீர உதவும் பெருமாள் தலம்.

ஆலிலைக் கிருஷ்ணனும், அஸ்வதப் பத்ர விநாயகரை வணங்கியே பிரளய ஜல வெள்ளத்தில் சயனக் கோலம் பூண்கின்றார். அனைத்துப் பிரளயங்களுக்கும் சாட்சியாகத் தோன்றி இருப்பவரே ஸ்ரீகுக்கிலி மகரிஷி.

எனவே, இன்றைய கிரிவலத்தில், செம்பு நிறைய புனிதத் தீர்த்த நீரைத் தாங்கி, கீழ்க்கண்ட மந்திரத்தை ஜெபித்து, உலக ஜீவன்களின் நலன்களுக்காக, வானிலும், மூலிகை விருட்சங்களிலும் தெளித்து வருதல் வேண்டும். இதனை வான்தேவதைகளும், பூம்ய தேவதைகளும் பெற்று, உலகெங்கும் பரப்புகின்றனர்.

ஆலிலைக் கிருஷ்ணனின் அம்சமாக, திருஅண்ணாமலை ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீவேணுகோபால சுவாமி சன்னதியில் இன்றைய கிரிவலத்தைத் துவங்கி, ஸ்ரீபூத நாராயணர் சன்னதியில் நிறைவு செய்திட வேண்டும்.

மகத்தான மலர் கிரீட வழிபாடு!

இன்று செம்பருத்தி, மல்லிகை, சம்பங்கி மலர்களால் ஆன மலர் கிரீடங்களைத் தாமே தொடுத்து மலர்க் கிரீடமாக்கி, அல்லது பூக்கடைகளில் கிரீடமாக ஆக்கிப் பெற்று, கிரிவலப் பாதையில் உள்ள மூர்த்திகளுக்குச் சார்த்தி வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

குறிப்பாக, நந்தி மூர்த்திகளுக்குக் கிரீடம் அணிவித்து, கொம்புகளின் ஊடே அண்ணாமலையைத் தரிசனம் செய்வதால், வாழ்க்கையில் முன்னுக்கு வர இயலாது நெடுங்காலம் தவிப்போரும், பதவி உயர்வு, சிறிய கடையிலிருந்து பெரிய கடைக்கு மாறுதல் போன்ற முன்னேற்ற நிலைகளுக்காக ஏங்குவோரும், இவற்றை முறையாகப் பெறுவதற்கும் இந்த மலர் கிரீட வழிபாடு மிகவும் உதவும்.

இன்றைய கிரிவலத்தில் ஓதி வர வேண்டிய மந்திரமாவது:

மன ஏவ மனுஷ்யாணாம்
காரணம் பந்த மோட்சயோ:
பந்தாய விஷயா ஸக்தம்
முக்த்யை நிர் விஷயம் ஸ்ம்ருதம்

தமிழ் மந்திரம்

மனமது பற்றும்
மனமே பந்தம்
மனமது பற்றா
மனமே மோட்சம்
அறிதலும் பந்தம்
அறிதல் அரிதல்
அட்சய மோட்சம்

இன்றைய கிரிவலத்தின் பலாபலன்களாக

ஸ்ரீஅப்பக்குடத்தான் ஆலயம்
கோவிலடி

கடுமையான துன்பங்களில் உழல்வோர், தீர்வு பெறுவதற்கு நல்ல பரிகாரங்கள் கிட்டும்.

நீர் சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர், இன்றைய கிரிவலத்தில் இருந்து ஒரு மண்டலத்திற்குத் தொடர்ந்து இடைவிடாது தினந்தோறும் கலச பூஜை செய்தோ அல்லது ஆலய தீர்த்த நீராடலை மேற்கொண்டோ அல்லது தினந்தோறும் சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகமோ செய்து வந்தால் நல்ல நிவாரணம் கிட்டும்.

கால், பாதம் சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர் தம்முடைய துன்பங்கள் தீர்வதற்கு, இன்று இராமபாதம் மற்றும் லிங்கத்தின் ஆவுடைகளுக்குப் புனித தீர்த்தங்களால் அபிஷேகம் செய்து வழிபடுதல் மிகவும் நன்று.

வாழ்க்கை, பதவி, கல்வி, மாற்றல் காரணமாக பல இடங்களுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளோருக்கு, ஒரே இடத்தில் வாழும்படியான வாழ்க்கையும், வீடு வசதிகளும் கிட்ட வழி வகைகள் பிறக்கும்.

water treatment, purified water, mineral water போன்ற நீர்த் துறை சம்பந்தப்பட்ட தொழிலில் ஈடுபட்டிருப்போர் நல்ல முன்னேற்றத்தைப் பெறுவர்.

ஔஷத, அருமருந்து அருமொழி சக்திகளைத் தரும் ஔபமர்கட மகரிஷி

இன்று ஔபமர்கட மகரிஷி, ஆங்கீரஸர், ஆஜமீடர், கண்வ மகரிஷி ஆகிய தம் பிரவர மகரிஷிகளுடன் அருணாசல கிரிவலம் வரும் பெருநாள்.

ஔகார பீஜம் உலகில் மங்கலாகாது!

புதன் கிழமை தோறும் ஹயக்ரீவ லோகத்தில் பூஜித்து, ஔகார அட்சரப் பிரகாச சக்திகளைப் பெறுபவரே ஔபமர்கட மகரிஷி! மிகவும் சக்தி வாய்ந்த பீஜாட்சரமாகிய “ஔ” என்னும் அட்சர ஒலி வருகின்ற மொழிகளே உலகில் மிகவும் குறைவு. உலகின் அனைத்து மொழிகளில், (மானுட சமுதாய மொழிகள் மட்டும் அல்லாது விலங்கினங்களின், பட்சிகளின், தாவர மொழிகள் உட்பட) போன்று ஒரு சில மொழிகளில்தாம், ஔ என்னும் அட்சர ஒலி, முழுமையான ஒலி ப்ரவாகத்துடன் அமைகின்றது. இவை அனைத்திலும், சாட்சாத்கார, அட்சராகார சக்திகளைப் பெற்றவரே ஔபமர்கடர். பன்மொழிப் புலமை பெற உதவும் கிரிவல நன்னாள்.

மனிதனாய்ப் பிறந்த ஒவ்வொருவரும், தினந்தோறும், “ஔ, ஹம், லம்” போன்ற குறித்த சில தெய்வீக அட்சர சப்தங்கள் கூடிய வார்த்தைகளைத் தினமும் வாயால் நன்கு உரைத்து, ஓதி, ஒலித்து வந்தால்தாம் தக்க தெய்வாட்சர சக்திகளைப் பெற முடியும்.

நம் முன்னோர்கள் காலத்தில், ஜாதி, குல, இன பேதமின்றி யாவருமே, மகத்தான தெய்வீக சாதனமாகிய பூணூலை அணிந்து, ஸ்ரீகாயத்ரீ வழிபாடுகளை அனைவரும் மனமகிழ்ந்து, ஒற்றுமையுடன் இல்லற பூஜை, ஆலய வழிபாடுகளை ஆற்றி வந்தமையாலும், இவற்றில் தினசரி வாழ்விற்குத் தேவையான அட்சர  சப்த சக்திகள் நிறைந்திருப்பதாலும், சமுதாயத்தில் சாந்தம் பொங்கித் திளைத்து, சமுதாய ஒற்றுமையும் தழைத்தது.

பண்டைய காலத்தில் அசுரர்கள் ஜீவன்களை வதைத்து, பூஜைகளை ஆற்ற விடாது தடுத்த போது, மக்கள் பீதி அடைந்திட, ஔபமர்கடர் மகரிஷியே இத்தகைய பூஜைகளின் எளிய வழி முறைகளைப் பட்டி, தொட்டியெங்கும் பரப்பினார். இவ்வாறு பஞ்சம், போர், இயற்கைச் சீற்றங்களின் போது, சமுதாய நலன்களுக்கு அரும்பாடுபட்டவரே ஔபமர்கடர் மகரிஷி.

நித்திய வழிபாட்டில் நிறைந்துள்ள அட்சர சக்திகள்!

எவ்வித ஜாதி, குல வேறுபாடும் இன்றி, யாவரும் ஆற்ற வேண்டிய நித்திய பூஜைகளுள் ஒன்றான காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் நடத்த வேண்டிய சந்தியான வந்தன வழிபாடுகளில், ஒவ்வொரு மனிதனும் தினந்தோறும் உரைத்தாக வேண்டிய அட்சர ஒலிகளின் சாராம்சங்கள் நன்கு பதிந்துள்ளன.

இவற்றிற்கு ஈடான தமிழ் தேவார மறைப் பாக்கள், திருமந்திரம், திவ்யப் பிரபந்தம், திருவாசகம், விநாயகர் அகவல், திருப்புகழ் போன்றவற்றில், ஒவ்வொரு மனிதனும் நித்தியம் உரைக்க வேண்டிய அட்சரங்கள் நிறையவே பொதிந்துள்ளன. அந்தந்த நாளுக்குத் தேவையான தேவ சப்த சக்திகளை இப்பாக்களின் அட்சரங்களே எளிமையான முறையில் அளித்து விடுகின்றன. ஆனால் இவற்றைத் தினந்தோறும் பாராயணம் செய்தால் தானே, ஔ, ஹம், லம் போன்ற பீஜாட்சர சக்திகள் கிடைக்கும். தினசரி ஓதிப் பெறாத அட்சர சக்திகளுக்கு ஓரளவு ஈடுசெய்யவே, பீஜாவாபர் மகரிஷி, ஔபமர்கடர் போன்ற அட்சரப் பீட மகரிஷிகள் அருணாசல கிரிவலம் வரும் நாளில் நாமும் கிரிவலம் வருவதாகும்.

ஆறு கால பூஜையில் மலரும் அற்புத சக்திகள்!

ஆலயங்களில் ஆறு கால பூஜைகளும், மனித குலத்திற்குப் பொதுவான, மூன்று வேளை சந்தியா வந்தன வழிபாடுகளும், சமுதாய பூஜைகளாக மலர்ந்து, ஜீவன்களுக்குத் தேவையான அட்சர சக்திகளைப் பெற்றுத் தருவதற்கும் ஆகும். எனவேதான் தினசரி ஆலயந் தொழுவது சாலவும் நன்றாகும்.

இன்று, உலகில் பெரும்பாலோர் இத்தகைய நித்ய பூஜைகளை முறையாகக் கடைபிடிக்காவிடினும், ஒரு சிலர் முறையாக கடைபிடிக்கும் போது, உலக நன்மைக்காக, சந்தியா வந்தனப் பூஜைகளைப் ஆற்றிய, மறை ஓதிய மகத்தான புண்ணிய சக்திகளைப் பெறுகின்றனர். ஆனால் “நாம்தாம் சந்தியா வந்தன வழிபாடு செய்தோம், மறைத் துதிகளை ஓதினோம்” எனும் அகங்காரம் கொள்தல் கூடாது.

பூஜைகள், கோயில் தரிசனம் பிற ஜீவன்களின் நலன்களுக்கான சமுதாயப் பணியே!

சந்தியா வந்தனம் எனப்படும் காலசக்தி பூஜை, தனிப்பட்ட பூஜையாக இருந்தாலும், உலக நலன்களுக்கான, ஜீவ நன்மைகளுக்கான மந்திரங்கள் அதில் பதிந்திருப்பதால், உலக நன்மைகளுக்காக இறைப்பணி ஆற்றிய, சமுதாயப் பணி ஆற்றிய கூடுதல் புண்ணிய சக்தி சேரும். எனவே பாரதப் புனிதப் பிரஜைகளாகிய நாம் ஆற்றும் பூஜைகளின் ஒரு பங்கு, உலக ஜீவன்களின் நலன்களுக்காகச் சென்றடைகின்றது என்பதை இனியேனும் அறிந்திடுங்கள். பிறர் நன்கு வாழ நாம் தினசரி ஆலய வழிபாட்டைச் சமுதாய பூஜையாகக் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.

ஔபமர்கட மகரிஷி இத்தகைய நித்திய தேவாட்சர ஓதுதலில் வல்லவர். எந்நிலையிலும், மகாப் பிரளயத்திலும், நித்தியப் பூஜைகளைத் தவறாது ஆற்றியமையால், மரண தோஷங்களை வென்றவரானார். விதேஹ முக்தரான ஜனகருக்குப் பல ஔகார பீஜாட்சரங்களை உபதேசித்தவர். மிருத்யு தோஷங்களை, அட்சர அப்யாசங்கள், பீஜாட்சர பூஜைகள் மூலம் வென்றமையால், காலத்தையும் வென்றவராகி, ஸ்ரீசரபேஸ்வரர், ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீராமர், ஸ்ரீதத்தாத்ரேயர், ஸ்ரீகிருஷ்ணர் போன்ற அவதார வைபவங்களை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றார். அவதார மூர்த்திகளை தரிசித்த ஔபமர்கடர் கோத்ராதிபதி மகரிஷியே அருணாசல கிரிவலம் வரும் நாளில் பெரும் நாமும் கிரிவலம் வருவது என்னே பெரும் பாக்யம்! தண்டல மகரிஷி போன்றோர் இவர் உபதேசித்த மந்திரங்களைக் கொண்டே சரபேஸ்வரரின் திருவடிகளில் பூஜிக்கும் பாக்யத்தைப் பெற்றனர்.

சரபேஸ்வர அட்சரங்கள் பூரிக்கும் திருநாள்!

இன்று ஔபமர்கட மகரிஷி பல அற்புதமான சரபேஸ்வர பீஜாட்சர மந்திரங்களையும் ஓதியவாறு கிரிவலம் வருவதால், இன்று ஆழ்ந்த பக்தியுடன், சரபேஸ்வரர் படம், சரபேஸ்வர யந்திரத்துடன், சரபேஸ்வரத் துதிகளை ஓதியவாறு அருணாசல கிரிவலத்தை மேற்கொள்வோர், பெறுதற்கரிய சரபேஸ்வர பீஜாட்சர சக்திகளின் பல அம்சங்களைப் பெறுகின்றனர்.

உறவினர்கள், அக்கம் பக்கத்தார், வியாபாரக் கூட்டாளிகள், அலுவலகப் பகை, உறவினர் பகை போன்ற பலவிதமான பகைமையால் பாதிக்கப்பட்டிருப்போர், இன்று சரபேஸ்வரத் துதிகளுடன் கிரிவலம் வருவதால், பகைமையிலிருந்து காப்பதற்கான தற்காப்பு சக்திகளைப் பெறுகின்றனர்.

ஹோமத்தில் சிறக்கும் தர்பை அட்சர சக்திகள்!

 அட்சர சக்திகள் நிறைந்த ஓஷதீய மூலிகைகளுள் சிவ தர்பை மூலிகையும் ஒன்றாகும். இதில் சக்தி வாய்ந்த அட்சரப் பதிவுகள் நிறைந்திருக்கின்றன.

குறித்த சில தர்பைகளை, குறித்த மூலிகை வேர்களுடன் சேர்த்து, பூஜித்து, விளக்கெண்ணெய் தீப அக்னியில் கரியாக்கி, மலைத் தேனில் குழைத்து, பிரம்ம முகூர்த்த நேரத்தில், நாக்கில் தடவி வந்தால் திக்கு வாய் தணியும், வாக்கு சிறக்கும், ஸ்பஷ்டமான உச்சரிப்பு வரும் என்பது அக்கால சித்த வைத்ய முறை! எனவேதான் நடப்புச் சொல் வழக்கில் கூட, சரியாக வார்த்தைகளை உச்சரிக்காதோரை, பள்ளியில், “நாக்கில் தர்பையை வைத்து….” என்று வைவதும் உண்டு. எனவே தர்பையின் பலம் வாய்ந்த தேவ அட்சர சப்த சக்திகளையே இச்சொல் வழக்கும் குறிக்கின்றது.

தர்பையை ஹோமத்தில் ஆஹூதியாக அளிப்பது மிகவும் விசேஷமானதாம். தர்ப்பையை ஆஹூதியாக அளிக்கும்போது எழும் ஹோ௳ ஜோதிக்கு குசத்வத்ஸ ஜோதி என்று பெயர். இது பல நிற வண்ணங்களைக் கொண்டது. தர்ப்பையில் எழும் தேவ சக்தி நிறைந்த புகை மிகவும் புனிதமானது. உடல் நாளங்களைச் சுத்திகரிக்கக் கூடியது. தர்ப்பையை ஹோமத்தில் ஆஹூதியாக அளிக்கும் போது தர்பாகம தேவதை, தர்பூச தேவதை, தர்பாங்க தேவதை போன்ற பல தர்பை லோக தேவதைகள் ஆவாஹனம் அருள்புரிவதால், யாகத்தில், வேள்வியில் தர்பாஹூதி மிகவும் விசேஷமானவை. இன்று ஹோமத்தில் தர்பையை நிறைய ஆஹூதியாக அளிப்பதால், வாக்கு மேன்மை பெறும். வக்கீல்கள், நீதிபதிகள் இன்று தர்பை ஆஹூதி அளிக்கும் ஹோமம் இயற்றி, கிரிவலம் வருவதால் வாக்குக் குற்றங்கள் அகலும், வாக்சக்தி பெருகும்.

மேலும் தர்பை என்பதற்கு வெம்மை, புனிதம், சீர்மை, செழுமை, போன்ற வளப்பமான அர்த்தங்கள் பல உண்டு. தர்ப்பையால் அர்ச்சனை செய்வது மிகவும் விசேஷமானது. தர்ப்பையை, அருகம்புல்லுடன் சேர்த்து மாலையாக ஆக்கி, இன்று கிரிவலத்தில் விருட்சங்களுக்கு இடுதல் விசேஷமானதாகும். பில்லி, சூன்யம், ஏவல்களால் பாதிக்கப்பட்டிருப்போர், இன்று திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஆங்காங்கே நந்தி, பிள்ளையார், தெய்வ மூர்த்திகளுக்கும் அரசு, ஆல், வேம்பு, நாவல், இலுப்பை, மா, பலா, வன்னி போன்ற புனிதமான மூலிகா விருட்சங்களுக்கும்,  செடிகளுக்கும் தர்பை மாலை அணிவித்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி வலம் வர வேண்டும்.

யதா ஸர்வாணி பூதானி
ஸ்வாத்மன்யேவ ஹி பச்யதி
ஸர்வ பூதேஷு சாத்மானம்
ப்ரம்ஹ ஸம்பத்யதே ததா

தமிழ் மந்திரம்

அனைத்தில் நீயே
உன்னில் யாதும்
யாவும் யாதும் உன்னது போலே
அறிவது பிரம்மம் ஆனது பிரம்மம்

புனிதமான பொருட்கள், திரவியங்கள் தேவ தர்ப்பம் ஆகின்றன. தர்பை மிகவும் சக்தி வாய்ந்த தேவ மூலிகை ஆதலால், அனைத்துப் புனித வைபவங்களிலும் தர்பைக்குச் சிறப்பிடம் உண்டு. தர்பலிங்கச் சித்தர்பிரான் ஸ்ரீசுசரித சரஸ்வதி தேவியின் திருக்கரங்களில் உறையும் பாக்கியத்தைத் தர்ப்பைகளைக் கொண்டு பூஜைகளை ஆற்றிப் பெற்றார்.

இவர் தம்முடைய ஜடாமுடி, இடுப்பு, மணிக்கட்டுகளில், வலது மோதிர விரலில் தர்ப்பைகளை எப்போதும் தாங்கி இருப்பார். பல தெய்வ மூர்த்திகளுக்கும் அதிமந்திர சக்திகள் நிறைந்த தர்ப்பைப் பீடங்களையும், தர்பை ஆசனங்களையும், தர்ப்பைப் படுக்கைகளையும் உற்பவித்து அளிப்பவர்.

ஒரு தெய்வ மூர்த்திக்கான தர்ப்பாசனம் அளித்திட இவருக்குப் பல ஆண்டுகள் பிடிக்கும். அந்த அளவிற்குப் பவித்ரமான தர்ப்பைப் புற்களை வழிபட்டு, ஆய்ந்து, அருகி, தொடுத்து, பூஜித்து அழகிய ஆசனப் பீடங்களாக்கி அளித்திடப் பல்லாண்டுகள் ஆகுமே! மேலும், இறைமூர்த்திகளே, பெருங்கருணையுடன், ஆனந்தத்துடன் ஏற்கின்ற தர்ப்பைப் பீடம் எனில், எத்தகைய பக்தி அதில் மிளிரும் என்று ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்.

இது மட்டுமல்லாது பெறுதற்கரிய புனிதமான தர்பைச் சக்திகளை ஔபமர்கட மகரிஷி, சமுதாயத்தில் மக்கள் பயன்படுத்தும் பல பொருட்களிலும், தாவரங்களிலும் நிரவித் தந்து, தர்பை சக்தியை அன்றும், இன்றும், என்றுமாய் விருத்தி செய்து வருகின்றார்.

ஸ்ரீபீஜாவாப மகரிஷி பரணி தீபம்

ஔபமர்கடர் மகரிஷி அட்சர சக்திகளில் உத்தம நிலைகளை அடைந்தது போல, பீஜாட்சரங்களையே சதாசர்வ காலமும் ஓதித் தவம் புரிந்து உத்தம நிலைகளைப் பெற்ற பீஜாவாப மகரிஷி, கோத்ராதிபதி மகரிஷியாக அருணாசல கிரிவலம் வரும் முக்கியமான நாள்! பலரும் அறியாத, ஸ்ரீராமருக்கு முந்தைய கிருத யுக மகரிஷியே பீஜாவாபர்!

சனிப் பிரதோஷமும், பரணி தீபமும், ஹனுமத் விரதமும் கூடுகின்ற திருநாளாகிய இன்று ஸ்ரீஅஸ்வதப் பத்திர விநாயகரைத் தரிசித்து, ஸ்ரீபீஜாவாப மகரிஷி, தம் பிரவர மகரிஷிகளுடன் (ஆத்ரேய மகரிஷி, ஆர்ச்சநாநஸ மகரிஷி, காவிஷ்டிர மகரிஷி), ஆஞ்சநேயர் முன் செல்ல, அருணாசல கிரிவலம் வருகின்ற அற்புதத் திருநாள்.

அனைத்து வகையான திருவிளக்கு பூஜைகளையும் ஆற்றி, விளக்கில் பொங்கும் பீஜ ஜோதி சக்திகளின் மகிமைகளை நன்கு அறிந்தவரே பீஜாவாப மகரிஷி! எப்போதும் தம் கரங்களில் ஒரு தீபத்தை ஏந்தியவாறே யாத்திரையை, கிரிவலத்தைக் கொள்பவர். இது அணையா விளக்கு! இதிலிருந்து ஜோதியை எடுத்து உலகின் பல இடங்களிலும் பீஜ ஜோதியை நிரவி வருகின்றார்.

இவர் ஏற்றி அளிக்கும் விளக்கு ஜோதி மூலமாகவே, நாம் இன்று, கலியுலகில் “பம், வம்” போன்ற பல மூல பீஜ மந்திரங்களைப் பெறுகின்றோம். இவ்வாறு பீஜாட்சர சக்திகளை, அட்சராட்சர சக்திகளை மூலிகைகள், அருணாசல கிரிவலம், விளக்கு தீபம் போன்று பல்வகைகளில் நாம் பெற்றிடலாம்.

பொதுவாக, பரணி தீபத்தோடு சனிப் பிரதோஷமும் கூடுவது மிகவும் அபூர்வமே! பெறுதற்கரிய இத்தகைய விசேஷ தினங்கள், வாழ்க்கையில் கிட்டும் போது, நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எப்போதும் ஒளிரும் பஞ்சாட்சரப் பரணீய தீபம்!

பொதுவாக, கார்த்திகைத் தீபத் திருநாளில், காலையில், பரணி தீபமும் மாலையில் கார்த்திகைத் தீபமும் ஏற்றுகின்ற வழக்கம் நிலவுகின்றது. பரணி என்பது கார்த்திகை, பூரம், உத்திரம், சித்திரை, விசாகம் போன்ற அக்னி நட்சத்திரங்களுள் ஒன்றாகும்.

பாவை விளக்கு லால்குடி

பஞ்சாட்சரப் பரணீயம் என்பது சர்வேஸ்வரனுடைய லோகத்தில் எப்போதும் ஜ்வலித்துக் கொண்டிருக்கின்ற திருவிளக்காகும். சஞ்சீவத்வம் நிறைந்ததாய் எப்போதும் ஜோதி உள்ள அசல தீபமிது! மோகனூர் திருத்தலத்தில் ஸ்ரீஅசலதீபேஸ்வரர் ஆலயத்தில் பீஜாவாப மகரிஷி இன்று பரணீயத் திருவிளக்கை ஏற்றி, இங்கு வந்து அருணாசல கிரிவலத்தைத் துவங்குகின்றார். இவ்வாலயத்தில் பலரும் எளிதில் அறியா வண்ணம் பீஜவாப மகரிஷியின் உருவம் பொதிந்துள்ளது. தக்க சற்குரு மூலம் அறிந்திடவும்.

பூலோகத்தில், கணவனே கண் கண்ட தெய்வமென, உத்தம பக்தியுடன் பழுத்த சுமங்கலியாக, பிற ஜீவன்களின் நலம் பேணி சமுதாயத் தொண்டுகளையும் ஆற்றி வாழ்ந்து சிறப்படைந்தோர், பாவை விளக்குத் தேவதைகளாக, பல ஜோதி லோகங்களில், இத்தகைய பஞ்சாட்சரப் பரணீய தீபத்தைப் பேணும் திருப்பணிகளைப் பெறும் பாக்யத்தை அடைகின்றனர்.

பிரபஞ்சத்திற்கும், சகல லோகங்களுக்கும், நாடுகளுக்கும் சாசுவதமான அக்னி ஜோதிப் பிரவாகத்தைப் பொழியும் பஞ்சாட்சரப் பரணீய தீபத்திற்குத் தைலம், பசு நெய், திரி இட்டுப் பூஜித்துப் பேணுதல் பெறுதற்கரிய பாக்கியமன்றோ!

அருணாசலமாம் திருஅண்ணாமலையில், கார்த்திகை தீபமாக நாம் காண்பது இறைவனின் ஜோதி வடிவத்தையே! இதைப் பெற்றுத் தருகின்ற வகையில் நாமடைந்துள்ள மனிதப் பிறவியின் மகத்துவத்தை நன்கு உணர்ந்து, இம்மானுட வாழ்க்கையில் நன்முறையில் இறைவழியில் நின்று, முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அல்லவா!

எனவே இவ்வாறாக, திருக்கயிலாயத்தில், சர்வ தெய்வ மூர்த்திகளும், பஞ்சாட்சரப் பரணீய ஜோதி தரிசனத்தைப் பெறுகின்ற வைபவத்தைத்தாம் நாம் பரணி தீபத் திருவிழாவாக, பூலோகத்தில் கொண்டாடுகின்றோம்.

இறைவனே ஏந்தியாடும் பரணீய தீப நாட்டியம்!

இன்று பரணி தீப நாளில், சனிப் பிரதோஷம் கூடும் போது, நந்தியின் இரு கொம்புகளுக்கு இடையே சிவபெருமான், பஞ்சாட்சரப் பரணீய நாட்டிய யோக பாவனை கொண்டு, தன்னுடைய இரு கரங்களிலும் பஞ்சாட்சரப் பரணீய ஜோதியையே தாங்கி, திருநடனம் ஆடி அனைவரையும் ஆனந்தம் அடையச் செய்து, ஆனந்தத்தின் ஊடே அருளார்ந்த நல்வரங்களை அளிக்கின்றார்.

அடியாரைக் காக்க சனிதசை விளைவுகளைத் தெய்வ மூர்த்திகள் ஏற்றல்!

சனி தசை, சனி புத்தி என்பது ஜீவன்களுக்கு ஏற்பட்டது என்றாலும் தெய்வ மூர்த்திகளின் பல அவதாரங்களும், மானுட ரூபத்திலும், மகரிஷி வடிவில் அமைந்தமையாலும், பக்தர்களைக் காக்கும் பொருட்டு அவர்களுடைய துன்பங்களை ஏற்கையிலும் இறைநியதிப்படி, சனிப் பிடிப்புப் படலம் தொடர்வதுண்டு. பிள்ளையாரப்பனை, ஆஞ்சநேயரை சனீஸ்வரன் பீடித்திட்ட சில புராண சம்பவங்கள் உள்ளன.

பக்தர்களைக் காத்திட, ஸ்ரீவிநாயக மூர்த்தி, ஆஞ்சநேயர் போன்ற மூர்த்திகள் மகரிஷி வடிவிலோ, மானுட வடிவிலோ பூலோகத்திற்கு வருகின்ற பொழுதும், நவகிரகங்களுக்கும் அதிதேவதா, பிரத்யதி தேவதா மூர்த்திகளாக இருப்பதாலும், கலியுக நியதியாக ஜீவன்களின் கர்ம பரிபாலனத்தை நவகிரகாதிபதிகள் ஏற்பதாலும், சனி கிரகப் பீடிப்பை ஏற்று, தம் பக்தர்களின் தசாபுக்தி நியதிகளுக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்டு பக்தர்களைக் காக்கின்றனர்.

அடியார்களைக் காக்கும் பொருட்டு இறைவனே, பிட்டுக்கு மண் சுமந்து பெருவலி கொண்ட புராண வைபவத்தை நாம் நன்கு அறிவோம் அல்லவா!

பற்றுக பற்றற்றாரை!

ஒரு யுகத்தில்….

ஆஞ்சநேய மூர்த்தி மானுட ரூபத்திலே, ராமகாதையைக் கேட்டு இன்புற வேண்டும் என்பதற்காக, மானுட ரூபம் தரித்த போது, அம்மானுட வடிவிற்கான சனி தசைப் படல நேரம் வந்தமையால், சனீஸ்வர மூர்த்தி ஆஞ்சநேயரைப் பீடிக்க விழைந்தார். ஆனால் மற்ற ஜீவன்களைப் போல் அல்லாது, பக்தர்களைக் காக்க, பல வடிவங்களில் பூமிக்கு வருகின்ற மூர்த்திகளுக்கு, அவர்கள் விருப்பப்படுகின்றபோது சனி தசைப் பிடிப்புப் படலத்தை ஏற்கலாம் என்ற நியதி உள்ளமையால், இதற்காக, சனி மூர்த்தி ஆஞ்சநேயரை நாடினார்.

அப்போது, ஆஞ்சநேயர், திருஅண்ணாமலையிலே சனிப் பிரதோஷ நன்னாளிலே கிரிவலம் வந்து கொண்டிருந்தார். ஆம் உண்ணாமுலை சமேத அருணாசல மூர்த்தி உட்பட, அனைத்து தெய்வ மூர்த்திகளுமே பரப்பிரம்மத்தைக் கிரிவலம் வரும் புனித பூமியே திருஅண்ணாமலை ஆகும்.

“அடியேன் கிரிவலம் புரிந்து கொண்டிருப்பதால், கிரிவலம் முடிந்ததும், எந்த ஒரு நாழிகையிலும் என்னைப் பீடித்துக் கொண்டு, கிரகப் பீடிப்புக் கடமையை நிறைவேற்றிக் கொள்ளலாம்!” என்று ஆஞ்சநேயர் உரைத்திடவே, பக்தியுடன் இறை வழிபாடுகளை மேற்கொண்டிருப்பவர்களைப் பீடித்தலாகாது என்ற நியதிகளுக்கு உட்பட்டவராகவும், ஆஞ்சநேயர் தம்முடைய வழிபாட்டை முடிக்கும்வரையும் சனீஸ்வரர் காத்திருந்தார்.

பீஜாவாப மகரிஷிதான் ஆஞ்சநேயருக்குத் தக்க சிவபூஜை முறைகளைப் போதித்தவர். ஆஞ்சநேய மகாபிரபு தோன்றும் போதே பீஜாட்சர, யோகாக்னி சக்திகள் நிரம்பப் பெற்றவராகப் பொலிந்தார். ஆஞ்சநேய மகாபிரபு, சிவராம நாமத்தை ஓதியவாறே, பீஜாவாப மகரிஷி அளித்த பாங்கில், தம்முடைய சிரசில், 1008 ஸ்வர்ண ருத்திராட்ச மணிகள் பதிந்த ருத்ர மகாசி(வ)கா மணி மாலையையும் அணிந்து அருணாசல கிரிவலம் வந்திட்டார். எப்போதும் ராமநாம ஸ்மரணத்தையே ராம பூஜையாக ஆக்கி விட்டமையால், சதா சர்வ காலமும் பூஜையில் இருந்த ஆஞ்சநேயரை, சனீஸ்வரரால் பீடிக்க இயலாமல் போயிற்று.

திருஅண்ணாமலை

பாதபுஜங்க தரிசனம்

திருஅண்ணாமலையிலே பாதபுஜங்க தரிசனம் என்ற ஓர் அற்புதமான தரிசனப் பகுதி ஒன்று உண்டு. இதனைக் குறித்த விரதங்களுடன் தரிசித்தால், அனைத்து தெய்வ மூர்த்திகளுடைய திருவடிகளைத் தரிசித்த பலாபலன்களைப் பெற்றிடலாம். இராமர் பாதம் எனப்படும் திருவடிகள் கிரிவலப் பாதையில் அடிஅண்ணாமலைக்கு முன், சூரிய லிங்கம் அருகே அமைந்துள்ளது. இவ்விடத்தில்தான் ஆஞ்சநேய மகாபிரபு, தனக்குப் பலவிதமான வேத சக்திகளையும், பீஜாட்சர சித்திகளையும், சிந்தனா ஆற்றலையும் தந்திட்ட பீஜாவாப மகரிஷிக்குக் குருபாத பூஜை செய்திட்டார்.

குருபாத வணக்கத்தின் போது, அவருடைய சிந்தனை அனைத்தும் குருவின் திருவடிகளில் பதிந்திட, அப்போது சற்குரு தியானத்தில் அமர்ந்திருந்தமையால், அவருடைய ஆசிக்காக ஆஞ்சநேயர் காத்திருந்தார்.

சிக்கெனப் பீடித்தாரே!

“சிரசு முதல் பாதம் வரை பரமாத்ம சக்திகள் நிறைந்திருப்பதாக!” என்று குரு ஆசீர்வாதம் அளித்திடவே, இதனால் பரமானந்தம் கொண்ட ஆஞ்சநேய மகாபிரபு, தன்னுடைய வாலை மேலே உயர்த்தி, அஞ்சலி ஹஸ்த சகிதராக குருவை மீண்டும் நன்றிமுகமாக வணங்கிட்டார்.

இது போதாதா சனீஸ்வரருக்கு! “சிரசு முதல் பாதம் வரைதானே சற்குருவின் ஆசீர்வாத மகாத்மியங்கள் அவரிடம் நிரவும்! நாம் அவருடைய தலைக்கு மேல் உள்ள வால் பகுதியைப் பீடித்திடுவோம்!” என்பதாய், தலைக்கு மேல், அதாவது ஆஞ்சநேயருடைய சிரசிற்கு மேல் வளைந்து வந்த வால் பகுதியைப் பீடித்துக் கொண்டு சனீஸ்வரர் தன்னுடைய கிரக ரீதியான பீடிப்பை முடித்துக் கொண்டார்.

இதன்பிறகு, சனீஸ்வரர், ஆஞ்சநேயரைப் பீடிப்பதற்காகக் கால நியதிப்படி வாய்ப்புத் தந்தமைக்காக அவருடைய குருவின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கி, “காலநியதி வசத்தால் அடியேன் ஆஞ்சநேயரைப் பீடிக்க நேர்ந்தது, அவருடைய வாலில் சிறிது நேரம் ஒரு நாழிகை நேரம் இருந்து அடியேனுக்குரிய கிரக பீடிகையை முடித்துக் கொண்டு விட்டேன். ஆஞ்சநேய மூர்த்திக்கு எவ்வித பங்கமும் வந்து விடாமல் தாங்களே காத்திட வேண்டும்!” என்று வேண்டிட்டார். சனீஸ்வரரால் பீடிக்கப்பட்ட வால் பகுதியில்தான் ராவணன் சூழ்ச்சியால் அக்னிபட்டது.

பால ஆஞ்சநேயராய், சூரியனைப் பிடித்து, சர்வ லோகத்திலும் ஒளியின்றிச் சற்றே ஸ்தம்பித்தமையால், இந்த அக்னி தோஷமே ஆஞ்சநேயருக்குப் பிற்காலத்தில் சனி தசைப் பீடிப்பாகவும், இலங்கையில் வாலில் அக்னி பிடித்த வைபவமாகவும் நிகழ்ந்தது!

அஞ்சனம் காத்தது அஞ்சனை மைந்தனை!

பீஜாவாப மகரிஷி, தற்போதைய (ராமபாதம் அருகில் தென்படும்) அருணாசலப் பாதபுஜங்க தரிசனப் பகுதியில் இருந்து, கரிமாலாஞ்சனம் என்று ஒருவித அருமருந்து மூலிகையாலான அஞ்சனத்தை ஆக்கி, சனீஸ்வர பகவான் பீடித்திருந்த ஆஞ்சநேய சுவாமியின் வால் பகுதியில் பூசி, பீஜாட்சர மந்திரங்கள் ஓதி அதற்குச் சந்தனமிட்டு அவருக்குத் தக்கக் காப்பு ரட்சா சக்திகளை பாதுகாப்பை அளித்திட்டார்.

இந்த கரிமாலாஞ்சனத் தைலத்தில் இருந்துதாம் பண்டைய காலத்தில் பெண்களின் கண்களுக்குத் தேவையான கண் மை தயாரிக்கப்பட்டது. சனி பீடிப்பில் இருப்போர், ஆஞ்சநேயருடைய வாலில் தொடங்கி, திருமுகம் வரை சந்தனப் பொட்டு இடும் நேர்த்தி வழிபாடும் இதில் இருந்துதாம் தொடங்கிற்று!

ஆஞ்சநேயருக்கு அக்னிக் காப்புகள்!

இலங்கை அசோகவனத்தில், சீதாதேவியும் இந்த கரிமாலாஞ்சனத்தைத் தன் கண் இமைகளில் பூசி, தன் நேத்ர சீதள தீட்சண்யத்தால் ஆஞ்சநேயருக்குப் பாதுகாப்புச் சக்திகளை அளித்தனள். மேலும் ஆஞ்சநேயருக்குத் தீயினால் எவ்வித உஷ்ணமும் உண்டாகாதவாறு, அக்னி பகவானும் தன்னுடைய பங்கிற்கு, தடுத்துக் காப்பாற்றியதும், சனியும், பரணி தீபமும் கூடிய பிரதோஷ நாளில் ஆஞ்சநேயப் பிரபு கொண்டிருந்த அருணாசல கிரிவலப் பலாபன்களாகவே!

நமக்கெல்லாம் 14 கி.மீ சுற்றளவு உடையதாக இருக்கின்ற அருணாசல கிரிவலப் பரப்பானது, கண் இமைக்கும் நேரத்தில் பல்லாயிரம் மைல்கள் பறந்து செல்லும் ஆஞ்சநேயருக்கு, பன்மடங்கு விஸ்தீர்ணம் உள்ளதாகவும் தோன்றும். அதே சமயத்தில், மானுட வடிவில் ஆஞ்சநேயர் அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றபோது மானுடக் கண்களுக்கு தோன்றுகின்ற தொலைவே ஆகிடும். இன்றைய கிரிவலத்தில் ஆஞ்சநேயரும், சனீஸ்வரரும், பீஜாவாப மகரிஷியும் தம் கிரிவல பலாபலன்களையும் நல்குவதால் மகத்தான பலாபலன்களை இந்நாள் கொண்டுள்ளது.

கிரிவலப் பலாபலன்கள்

இரட்டைக் குழந்தைகளைப் பெற்றோர், இன்று அருணாசலத்தைக் கிரிவலம் வந்திட்டு, “ஜோடி” வகைப் பொருட்களைத் (காலணி, சீப்பு, கண்ணாடி, பாய், தலையணை) தானமாக அளித்திட, குழந்தைகளுக்கு நல்வாழ்வு அமைந்திட இது பெரிதும் துணை புரியும்.

பெற்றோர்களையோ, தாய் அல்லது தந்தையையோ இழந்து வாழ்கின்ற பெண், நன்முறையிலே திருமணமாகி, குடும்ப வாழ்வு நன்முறையிலே அமைவதற்கும் இந்நாளில் ஆற்றுகின்ற அருணாசல கிரிவலம் நலம் பயக்கும்.

பிறருடைய சந்தேகம், பழி, அவச்சொல், அவதூறுகளால் பெரிதும் மனம் துன்புற்று, வாடி வதங்கி வாழ்வோர், சனிப் பிரதோஷத்தோடு, பரணி தீபம் கூடுகின்ற இத்திருநாளில் அருணாசல கிரிவலம் வருதலால், துயரங்கள் மாய்ந்து வாழ்வில் நல்லொளி பிறக்க, ஈசன் துணை புரிகின்றான்.

பலரும் அறிந்திராத பீஜாவாப மகரிஷியின் நாமத்தைச் சொல்லி, அவருக்கு மிகவும் பிரியமான கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதியவாறு இன்று கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானது.

புத்திமதாம் பராம் கதிம் ஸ புத்திமான்
புத்திமதீத்ய திஷ்ட்ட தீத்யுபநிஷத்

தமிழ் மந்திரம்

ஓம் பொருள் ஆவது
எல்லாம் எல்லாம்  
ஆம் என அறிவது
புத்தியில் ஞானம்

ருத்ராட்சம், மணிகங்கண், திருவெண்டயம் அணிதல், தலையில் தைலம் தேய்த்து கிரிவலம் வருதல், ஏழைப் பிள்ளைகளுக்குத் தலைக்குத் தேவையான தைலம், சீப்பு அளித்தல் போன்றவை இன்றைய கிரிவலப் பலாபலன்களைப் பன்மடங்கு விருத்தி செய்து அளிப்பதாகும்.

ஸ்ரீசுமங்கள மகரிஷி மங்கள சக்திகளை அளிக்கும் கார்த்திகை தீபத் திருநாள்!

இன்று “அருணாசல கார்த்திகை தீபத் திருநாள்!” ஸ்ரீசுமங்கள மகரிஷி எனும் அற்புதத் தவச் சுடர்க் கோத்ராதிபதி (குலமாமுனி) மகரிஷி, தம் பிரவர மகரிஷிப் பரிவாரங்களுடன், (திண்டுக்கல் அருகே உள்ள) தவசிமடைத் திருத்தலத்தில் வணங்கிப் புறப்பட்டு, அருணாசலப் புனித பூமியை அடைந்து, கிரிவலம் வருகின்ற நன்னாள்!

சுபானு ஆண்டின் திருஅண்ணாமலைக் கார்த்திகை தீபத்தின் விசேஷ அம்சங்கள் யாதெனில், சுமங்கலித்வ மற்றும் மங்கள நல்வரங்களைத் தம் தபோ பலன்களாகப் பொழிய வல்ல ஸ்ரீமாங்கல்ய மகரிஷி, ஸ்ரீசுமங்கள மகரிஷி, போன்றோர், ஸ்ரீகுங்கும சௌந்தரி, ஸ்ரீகுங்கும வல்லி, ஸ்ரீகுங்கும சுந்தரி, ஸ்ரீசௌந்தர நாயகி, ஸ்ரீமங்களாம்பிகை போன்ற சௌபாக்கிய நாமங்களைப் பூண்ட ஆதிபராசக்தி அம்ச அம்பிகையருடன் சேர்ந்து வழிபாடு கொள்வதாகும். இவ்வம்பிகையரே இவ்வாண்டு அருணாசல தீபத்தைப் பிரபஞ்ச ஜீவன்களின் தரிசனத்திற்காக எடுத்தளிக்கின்றனர்.

ஸ்ரீசுமங்கள மகரிஷி, கடந்த 60 ஆண்டுகளாக ஸ்ரீவித்யா லோகத்தில் போஷித்து, பூஜித்து வந்த “மங்கள தூபிகை” அளிப்பதும் இத்தீப நாளின் மகத்துவங்களில் ஒன்றாகும். இந்த தீப தரிசனத்தைக் கண்களால் காணுதலே பெறுதற்கு அரிய பல மங்கள சக்திகளைப் பெற்றுத் தருகின்றது என்றால் என்னே அருணாசல தீப மகிமை!

எனவே, இன்று அருணாசல தீபத் திருநாளில் கிரிவலம் வருவோர், குறைந்தது 12 அகல் விளக்கு அல்லது உலோக விளக்குகளில், கிரிவலப் பாதையில் ஆங்காங்கே தீபங்களை ஏற்றி மலையை நோக்கி வணங்கி, சிறிது நேரம் தியானித்து, பிறகு மலர்களால் “ஓம் சாந்த ஸ்வரூபிண்யை நம:” என்று ஓதி விளக்கு ஜோதியைச் சாந்தப்படுத்தி, விளக்குகளைத் தீபப் பிரசாதமாக, இல்லத்துக்கு எடுத்துச் சென்று வீட்டில் மீண்டும் தீபம் ஏற்றுவதால் இதில் செறிந்துள்ள அருணாசல மங்கள சக்திகள் இல்லத்திற்குச் சுப மங்களத்தைக் கூட்டுகின்றன. இதற்கான அருள் வரங்களை நல்குபவரே ஸ்ரீசுமங்கள மகரிஷி ஆவார்.

சுமங்களர் ஸ்ருதி செய்யும் மங்கள சக்திகள்

மஞ்சள் நிற மேனியை உடைய ஸ்ரீசுமங்கள மகரிஷி, கிழக்கு ஆசியப் பகுதியில் இருந்து வானில் நன்கு தெரியும் மங்களப் பிரபாசம் என்னும் நட்சத்திர லோகத்தைச் சார்ந்தவர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிரபாசப் பட்டினம் என்னும் திருத்தலத்தில், ஸ்ரீகிருஷ்ணர் ஆலயத்தில் புதன்கிழமை மற்றும் ரோகிணி நட்சத்திரத் தினங்களில் வழிபாடு செய்கின்ற உத்தம மகரிஷி, இவர் திருவெண்டயம், மணிகங்கண், கபால மாலை, ருத்ராட்சம் போன்ற பல நட்சத்திர அணிகலன்களை அணிந்து எப்போதும் மங்கள வாக்கியங்களை உரைத்து, மங்கள சக்திகளைப் பரப்பிக் கொண்டிருப்பவர்.

இவருடைய இடுப்பில் எப்போதும் விரளி மஞ்சளால் ஆன ஜப மாலை ஒன்று இருக்கும், மங்களம் தரும் பல மந்திரங்களுக்கும் இவர்தான் மூல மகரிஷி ஆவார்.

சுமங்கலி பூஜை, சுவாசினி பூஜை, சௌபாக்கிய பூஜை, கேதார கௌரி விரதம் போன்ற  மங்களம் தரும் பண்டிகைகளிலும், விரதங்களிலும் பரிபூரண பலாபலன்களை அளிக்கின்ற சக்திகளைப் பெற்றவர். இவர் ஆற்றுகின்ற ஹோமத்தில் விரளி மஞ்சள், தாம்பூலம், மட்டைத் தேங்காய், மங்கள தூபிகை, குங்கிலியம் போன்ற மங்களப் பொருட்களை வைத்து ஆஹூதிகளை அளித்திடுவர். இவருடைய சுப மங்கள சாகர ஹோம குண்டத்தில் இருந்து எழும் ஹோமப் புகையானது நறுமணம் கூடிய மஞ்சள் நிறத்தில் இருக்கும்.

கிரகங்களின் களங்கம் தீர்க்கும் ஹோமப் புகை!

உலக ஜீவன்களுடைய கர்ம வினைக் காரியங்களில், எப்போதும் முக்கிய சாட்சியாக சூரிய, சந்திர கிரக மூர்த்திகள் காண்பதால், அவர்களுடைய கிரணங்களுக்குச் சிறிது களங்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதற்காக அவர்கள் மங்கள தீர்த்தம் உள்ள ஆலயங்களில் (சூரியனார் கோயில், திருவிடைமருதூர், இராமேஸ்வரம் போன்றவை) போன்றவற்றுடன் ஸ்ரீசுமங்கள மகரிஷி இயற்றுகின்ற புனிதமான ஹோமத்தில் எழுகின்ற ஸ்வர்ண மங்கள மஞ்சள் நிறப் புகையிலும் புனித நீராடித் தம் கிரணங்களைச் சுத்திகரித்துக் கொள்கின்றனர். இதற்காகவே ஸ்ரீசுமங்கள மகரிஷி வானில் சந்திர, சூரியர்கள் பிரகாசிக்கும் போது தம் ஹோம வழிபாட்டை மேற்கொண்டு, சந்திர உதயத்தில்  ஹோமத்தைத் தொடங்கி, சூரிய அஸ்தமனத்தில் நிறைவு செய்வார்.

இது மட்டுமல்லாது, உத்தராயண, தட்சிணாயன நாட்களில், மானுட வடிவில் ஸ்ரீசுமங்கள மகரிஷி, அக்னி மூர்த்தியே அரணிக் கட்டையில் (அரசமரக் குச்சி) ஏற்றித் தரும், எவருடைய (கைபடா) அக்னியில், ஹோம தீபத்தை ஏற்றி வழிபாடு செய்யும்போது, சூரிய, சந்திர மூர்த்திகள் மிகவும் மகிழ்கின்றனர்.

திருஅண்ணாமலையில் ஸ்ரீசுமங்கள மகரிஷி இன்று கார்த்திகைத் தீப நாளில், கார்த்திகை நட்சத்திரத்தில் தோன்றும் ஆறுவிதமான ஸ்கந்த லோக தீபாக்னியைக் கொண்டு வானில் மேகப் பீடத்தில் அமர்ந்து, ஹோமப் பூஜைகளை நிகழ்த்துகின்றார். இவருடைய ஹோமத்தின் மற்றொரு விசேஷமான அம்சம் என்னவென்றால், ஹோமத்தில் தாம்பூலத்தை ஆஹூதியாக அளிக்கின்ற ஹோமாகம நியதியை முதன்முதலாகக் கொணர்ந்தவரே ஸ்ரீசுமங்கள மகரிஷி ஆவார்.

அறிவுக் களஞ்சிய வரம் தரும் செம்பவள வித்யாவதி!

எனவே, இன்று எவ்வகையிலேனும் தீப நாளில் அண்ணாமலைத் திருத்தலத்தில் சமித்து மற்றும் ஹோமத் திரவியங்களுடன் தாம்பூலத்தையும் ஆஹூதியாக அளிப்போருக்குச் செம்பவள வித்யாவதி என்னும் சரஸ்வதி அம்பிகை விசேஷமான ஞானத்தை அளிப்பதால், இன்று எவ்வகையிலேனும் அருணாசல பூமியில் தாம்பூல ஆஹூதி ஹோமத்தை நிகழ்த்துவோர், குடும்பத்தில் கல்விச் செல்வம் விருத்தியாகும். இந்த அம்பிகையே காளிதாசனுக்கும், குமரகுருபரருக்கும், கம்பருக்கும் அருள்பாலித்த தேவி!

செம்பவள வித்யாவதி, வித்யாமங்கள காளியின் சாந்த, ஞான அம்சங்களைப் பெற்று, ஹயக்ரீவரை உபாசித்து, ஞான ப்ரபாசக் கிரணங்களைப் பரிசாகப் பெற்றாள். இக்காளிக்குத் தாம்பூலச் சாற்றினைப் பிழிந்து அபிஷேகம் செய்கின்ற விசேஷமான பூஜை முறைகளும் உண்டு. அனைத்துத் தாம்பூலங்களிலும் நிறைந்திருக்கும் சுபமங்கள தேவி!

தகைமை தரும் தாம்பூல தானம்

இன்றைய கிரிவலத்தில் நிறையத் தாம்பூலங்களை ஒரு மஞ்சள் நிறப் பை அல்லது தாம்பாளத்தில் ஏந்தியவாறு கிரிவலம் வந்து தீபங்களை ஏற்றி ஆங்காங்கே அன்னதானத்துடன் தாம்பூலத்தையும் தானமாக அளித்தலால் பிள்ளைகள் நன்கு படிப்பதற்கு ஸ்ரீவித்யா மங்கள காளியின் அனுகிரகத்தைச் செம்பவள வித்யாவதியே பெற்றுத் தருகின்றாள். இன்றைய அன்னதானத்தைப் பாக்கு மர இலைகளில், பாக்கு இலைமடக்குகளில் வைத்து வழங்குவது சிறப்பானது.

முறையான தாம்பூலம் ஆக்கல்

மூன்று வெற்றிலைகளை நன்றாக நீரில் கழுவித் துடைத்து, களிப்பாக்கினை உள்ளே வைத்து, சுண்ணாம்பு தடவி மடித்து, கிராம்பு கொண்டு செருகியே முறையான தாம்பூலம் தயாரிக்க வேண்டும். இவ்வாறு தாம்பூலம் தயாரிக்கும்போது ஸ்ரீஅகஸ்தியப் பெருமான் அருளிய மந்திரத்தை ஓதியவாறே தயாரிப்பது தாம்பூலத்தின் புனிதத்தன்மையை மேம்படுத்தும்.

இவ்வாறு முறையாகத் தயாரிக்கப்பட்ட தாம்பூலத்தில் மட்டுமே தாம்பூல தேவதைகள் எழுந்தருள்கின்றனர். மேலும் முறையாகவும், தூய்மையாகவும் தயாரிக்கப்பட்ட தாம்பூலத்தை இறைவனுக்குப் படைக்கும்போதும், தானமாக அளிக்கும்போதும் தான் தாம்பூலம் மற்றும் தான தேவதைகளின் பரிபூரண ஆசி நம்மை வந்து சேர்கின்றது.

கடைகளில் விற்கும் பாக்குப் பொடிப் பொட்டலங்கள், பீடா போன்றவற்றில் தாம்பூல சக்திகள் நிறைவதில்லை! நாக்கு ருசிக்காக வாசனைப் பாக்கு, சீவல், கலர் சுண்ணாம்பு போன்றவற்றில் செயற்கை ரசாயனக் கலவைகளைத் தாம்பூலத்தில் சேர்ப்பது தாம்பூல சக்திகளை மங்கச் செய்யும். குறித்த அகஸ்திய சுலோகம் ஓதி, நாமே தாம்பூலம் தயாரிப்பதே சிறப்பானதாம்.

இன்றைய கிரிவலத்தை, ஸ்ரீஅருணாசல மூர்த்தியின் சன்னதியில் தொடங்கி, ஸ்ரீஉண்ணாமுலை சன்னதியில் நிறைவு செய்தல் வேண்டும்.

கிரிவலத்தில் ஓத வேண்டிய துதி

வைராக்யஸ்ய பலம் போதோ
போதஸ்யோ பரதி பலம்
ஸ்வானந்தானு பவாத் சாந்தி
ரேஷை வோ பரதே பலம்

தமிழ் மந்திரம்

திட உளம் ஞானம் பிறக்கும்
ஞானம் கனிந்திட வந்திடும் சாந்தம்
சாந்தம் கனிந்திட ஆத்மம் காணீர்

திருஅண்ணாமலை கிரிவல மகாத்மியம்

சித்தர்களின் இறைப்பாசறை! மகரிஷிகளின் மாமறையகம்! இறையடியார்களின் அருட்கூடம்! அடியார்களின் தியானப் பரவெளி மண்டபம்! அத்தனையும் அருணாசலமே!!

பலகோடி யுகங்களாக, மனிதனால் பகுத்தறிய இயலா காலப்பாங்கு முதல், சித்தர்களும், மகரிஷிகளும் திருஅண்ணாமலைப் புனித வளாக பூமியில், உள்ளும், புறமும், அண்ட வெளியிலும், ஆகாசத்திலும் உறைந்து, கடும் தவம் புரிந்து, பெறுதற்கு அரிய இறையருளை, நேரடியாகவே இங்கு பரம்பொருளிடம் இருந்து பெற்று, தாம் அடைந்த தபோ பலன்களை, நல்வரங்களை, யோக சக்திகளை, அருணாசல மலைச் சுற்றுப் பிரகாரத்தில் (கிரிவலப் பாதையில்) பொதிந்துள்ள, எண்ணற்ற மலை தரிசனங்களில், தாவரங்களில், திரவியங்களில், புனிதப் பாதையில் பதித்து, நிறைத்து, நிரவுகின்றனர், அன்றும், இன்றும், என்றுமாய் நிகழும் சாசுவதமான, அற்புதத் தெய்வீகப் பணி இது! அருணாசலப் புனிதப் பாதையில் நடந்து வரும் அடியார்களின் புனிதமான பாதங்களைத் தாங்கிட, கிரிவலப் பாதை முழுதும், சடையப்பச் சித்தரும், ஜடாமுடி மகரிஷியும், படுக்கை ஜடைச் சித்தரும் தம் ஜடா முடியைக் கம்பளம் போல் விரித்துத் தவம் புரிந்து வருகின்றனர். என்னே தியாகமயத் திருத்தவம்!

இப்பூவுலகின் தெய்வீக மையமாக, பரிபூரணப் புனிதத்தின் சிகரமாகத் துலங்கும் அருணாசலத்தில், அன்றும், இன்றும் என்றுமாய், கோடிக்கணக்கான அருணாசல மலை தரிசனங்கள், பக்தர்களுக்கென அருள்வளங் கூட்டித் தரக் காத்துக் கிடக்கின்றன. இவற்றில் கிளைக்கும் தவஜோதிக் கிரணங்கள் யாவுமே நல்வர மாதவ, பரயோக, மாமறை யந்திரங்கள்! கேட்காமலேயே, கெழுமிய பலன்களை வாரித் தருபவை!

முற்பிறப்பு எச்சங்கட்கும் மூல அருள்புரியும் முக்தி மலையே திருஅண்ணாமலை!

எச்சம் என்றால் வினைச் சொச்சங்கள் என்று பொருள்! கரையாது பாக்கியாய் (வி)மிஞ்சுகின்ற வினைகளின் விளைவுகளாய் வருவது தாமே, அடுக்கடுக்காய்த் துன்பங்கள் தொக்கி நிற்கும் மாமலை போலான பிறவிகள்! பிறவிகளைக் களையும் மாமருந்தைத் தருபவையே அருணாசல மலை முகடுத் தரிசனப் பலாபலன்கள்! ஆங்காங்கே தவம் புரிந்த (புரியும்) சித்தர்கள், மகரிஷிகளின் தபோபல, நல்வர சக்திக் கிரணங்கள், ஒவ்வொரு அருணாசல மலை முகடுத் தரிசனத்திலும் இவ்வகையில் நிறையப் பதிந்து நிறைந்துள்ளன. இங்கு கிரிவலம் வருவோர் யாவர்க்கும், யாவைக்குமாய், தனிப்பட்ட முறையில், இயற்கையாகவும், இறைத் தூதவ அம்சங்கள் மூலமாகவும் இவையாவும் அவரவர் புண்யா வர்த நிலைகளுக்கு ஏற்ப விசேஷமாக அருளப்பெறுகின்றன. எவரெவர் எத்தகைய ஆன்மீக சாதனங்களையும் (விபூதி, குங்குமம், ருத்ராட்சம், மணி மாலைகள்), ஆத்ம சாதனங்களையும் (விரத, ஜபம், யோகம்), பக்தி நிலைகளையும், ஆழ்ந்த நம்பிக்கை அம்சங்களையும் தாங்கி வருகின்றார்களோ அவற்றிற்கேற்ப அருணாசல வரங்கள் திரளும்.

மேலும் இத்தகைய அருட்சுடர்ப் பலாபலன்கள் யாவும் அருணாசல கிரிவலம் வருகின்ற பக்தர்களின் உடல், மனம், உள்ளத்தைத் தூல, சூக்கும வடிவுகளில் அடைகின்றன. அவரவர் தம் முற்பிறவிகள் பலவற்றிலும் கொண்ட, “பூரித வடிவுகளுக்கும்”, இவ்வருட் கிரணங்கள் சூக்குமமாகச் சென்றடைந்து, ஆன்ம சுத்தியை அளிக்கின்றன.

உத்தம இறைநிலைகளைத் தரவல்ல ஆதிமூல சக்திக்கு ஆதாரமான ஆன்ம சுத்தியை இவ்வளவு எளிய வகையில், அருணாசலப் புனித பூமியில் கலியுகத்தில் மனிதர்களுக்குக் கிடைத்தல் மிகவும் அரிதாம். ஆனால் அருணாசலத்தில் திளைக்கின்ற, சித்தர்கள், யோகிகள், ஞானிகள், மாமுனிகளின் பெரு ஞானத்தின் எல்லையைத் தாண்டிய இத்தகைய தெய்வீக ரகசியங்களை, ஆண்டவனின் அற்புத லீலைகளை, தக்க சற்குரு மூலம் ஓரளவேனும் அறிந்து, அருணாசலத்தின் திரண்ட அருளைப் பெறுவோர், மிகச் சிலவே!

திருஅண்ணாமலையில், கிரிவலப் பாதையில், ஓரிடத்தில் கிட்டுகின்ற அருணாசல தரிசனகுணப் பூர்வமானது எப்போதும் மாறிக்கொண்டே இருப்பதாம்! ஒரு தரிசனம் கண்ட பின், ஒரு சிறு அங்குல தூரம் நகர்ந்து, மீண்டும் மேல் நோக்கிட, ஆங்கே வேறு தரிசனமாக மாறி மலர்கின்ற அற்புதம், ஈஸ்வரனே மலை வடிவு பூண்டுள்ள திருஅண்ணாமலையில் தாம் நிகழற்பாலது. இதை உணரவல்ல அரும்பெரும் மானுடப் பிறவியை நாம் பெற்றது மாபெரும் பாக்யம்தானே! எனவே அருணாசல கிரிவலத்தை, வாழ்க்கையின் லட்சியமாகக் கொண்டு, விடாமல் பற்றிக் கரை சேர்வோமாக!

டிசம்பர் 2003 பௌர்ணமி நாள்: 7.12.2003 ஞாயிற்றுக் கிழமை இரவு 11.29 மணி முதல் 8.12.2003 திங்கட்கிழமை நள்ளிரவு 2மணி ஏழு நிமிடம் வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

21.12.2003 ஞாயிற்றுக் கிழமை இரவு 10.24 மணி முதல் 22.12.2003 திங்கட்கிழமை மாலை 6.49மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்கழி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள்: 21.12.2003 ஞாயிற்றுக் கிழமை இரவு

அமுத தாரைகள்

ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகர்

அஸ்வத பத்ரமான அரச இலைகளால் ஸ்ரீமஹா விஷ்ணு வடித்துப் பூஜித்த மூர்த்தி. முதலில் தெய்வ மூர்த்திகளால் பூஜிக்கப் பெற்றுப் பிறகு ஜீவன்களின் வழிபாட்டிற்காக ஸ்ரீமன்நாராயண மூர்த்தியால் அளிக்கப் பெற்றது. தினமும் ஆறு வேளைகளிலும் தரிசித்தல் விசேஷமானது. கண்களுக்குள் இருத்தி தரிசித்தல் மகா விசேஷம்.

அருள்வளங் கொழிக்கும் அருணாசல மலை தரிசனங்கள்!

கோடிக்கணக்கான நல்வர தரிசன மலைமுகடுகளையும், அருள்வளம் கொழிக்கும் தரிசனங்களாகக் கொண்டதே அருணாசல கிரிவல வளாகமாம். இத்திரு பூமியில் உள்ள அனைத்து மலைமுகடுகளும், அதியற்புதத் தரிசனப் படலங்களாக, தெய்வீகப் பரல்களாகப் பொலிந்து, உலகெங்கும் உள்ள சுயம்பு மூர்த்திகளின், ஆலய கோபுரங்களின், கோயில் வடிவுகளின் அமைப்புகளையும் வெளிப்படுத்துகின்றன. ஆம், எந்த அளவிற்கு, பிரபஞ்சத்தில், நம் பூமியில் மட்டுமல்லாது, வேறு பல பூமிகளிலும், லோகங்களிலும் உள்ள லிங்க மூர்த்திகள், தெய்வ மூர்த்திகள் மற்றும் பல ஆலய தரிசனங்களைப் பெற்றவர்களும் ஆகின்றீர்கள்! இவ்வாறு பரந்த கிளைகளாகக் கொழிக்கும் அருணாசலக் கிரிவலப் பலன்கள் எண்ணற்றவை! மனிதப் பகுத்தறிவின் எல்லைக்கு அப்பாற்பட்ட மெய்ஞான சாதனங்கள்! இவ்வாறு பல வகையான பூஜா, தியான, யோக, ஜோதி வழிபாட்டுப் பலன்களுடன் கூடி வருவதே, அருணாசல கிரிவலப் பலாபலன்களாகும்.

பட்டுப் புழுக்களால் ஆக்கப் பெறும் பட்டு வஸ்திரங்களை அணிதல் கூடாது எனப் பன்முறை எடுத்துரைத்து வந்தும், பட்டாடைகளின் மீது உள்ள மோகம், மக்களுக்குத் தணியவில்லையே! தற்போதைய நவநாகரீகமான உலகில் மதிப்பு, அந்தஸ்தைத் தருவதாகப் பட்டாடை மோகம் வளர்ந்து விட்டமையால், இதனைச் சீர் திருத்துவது மிகவும் கடினமே! எனவே இருக்கின்ற பட்டாடைகளைத் தானமாக அளித்துப் பரிகாரம் தேடிடுக!

இறைவனுக்குப் பட்டாடைகளைச் சார்த்துவதால் அது உருவாவதற்குக் காரணமான பட்டுப் புழுக்கள் நன்னிலை அடைகின்றன. இன்று, அருணாசல கிரிவலத்தில் ஆங்காங்கே உள்ள மூர்த்திகளுக்கு, நந்திகளுக்குப் பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி, அவரவர் தங்களிடம் உள்ள மிகவும் உயர்ந்த ரகப் பட்டு வகைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்தல் விசேஷமானதாகும். வெட்டவெளி மூர்த்தியாக இருப்பதால், நந்திக்கு, பிள்ளையாருக்கு இட்ட வஸ்திரத்தை எவரேனும் எடுத்து விடுவார்களே என்று எண்ணாதீர்கள்! வஸ்திரம் சார்த்துவதோடு உங்கள் இறைப்பணி முடிந்தது! பிறகு நடப்பது இறைச் சங்கல்பமே! தானமாக அளிக்கையில், பட்டு வஸ்திரங்களில் உள்ள தோஷங்கள் அகல்கின்றன. பட்டு வஸ்திர தானப் பலன்களாக, தோல் சம்பந்தமான நோய்த் துன்பங்கள் தணியும். அதர்மமாகப் பிறர் முன் அவமானப்படுத்தப்பட்டோர் தாமிழந்த நன்னிலையை மீண்டும் பெற நல்வாய்ப்புகள் கூடி வரும்.

திருஅண்ணாமலையில் அடிப் பிரதட்சிணமாக கிரிவலம் வருகின்ற மகிமையைப் பற்றி பலரும் அறியாதிருக்கின்றார்கள். சாதாரண முறையிலே கிரிவலம் வருவதற்கே நான்கு மணி நேரம் ஆகின்றதே. இதில் அடிப்பிரதட்சிணம் செய்து வந்தால் பத்து மணி நேரம் ஆகுமே என்று பலரும் காலக் கணக்குப் பற்றி யோசிப்பார்கள்.

ஸ்ரீவைத்யநாதேஸ்வரர் ஆலயம்
ஸ்ரீவில்லிபுத்தூர்

வாழ்க்கையில் சினிமா, பஸ்ஸிற்காகக் காத்திருத்தல், டீ.வியின் முன் மணிக்கணக்காக அமர்ந்திருத்தல் என்று நாட்கணக்கில், மாதக் கணக்கில் பொழுதை வீணே கழிக்கின்ற மனிதனுக்கு, ஒரு பத்து மணி நேரத்தைத் தேர்ந்தெடுத்து அதில் அடிப் பிரதட்சிணமாக அருணாசலத்தை வலம் வருதல் என்றால் நிச்சயமாகக் கசக்கத்தான் செய்யும். ஆனால் இதைக் கடைபிடித்துப் பார்ப்பவர்களுக்குத் தான் இதனுடைய மகத்துவம் புரியலாகும். இவ்வாறு வீணாகக் கழித்த நேரத்திற்குக் கிரிவல நேரத்தில் பயன்படும் நேரமே பிராயசித்தம் தருவதாகும்.

கபால நோய்கள் தீர்வடைய…

தலையில் அடிபட்டு, கோமா மற்றும் பலவிதமான நரம்பு, நாளத் தேக்க இயக்கங்களால் சில அங்கங்கள் செயல் இழந்த நிலையில் வாடுவோர், மேற்கண்ட தலங்களிலும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீவைத்யநாதர் ஆலயத்திலும் சூரிய ஹோரை நேரத்தில் வழிபட்டு, நிறைந்த அளவில் எண்ணெய், தைல தானத்தை மேற்கொண்டு வருதல் வேண்டும். கபாலம் சம்பந்தப்பட்ட நோய்களால் அவதியுறுவோரும், அவர் சார்பாகவும் கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி, அங்காரக சதுர்த்தி நாளில் அருணாசல கிரிவலம் வருதல் நலம் பயக்கும்.

ஜீவலாம் ந வாரிஷாம் மா தே பத்னாம் யோஷதிம்

தமிழ் மந்திரம் : பாவம் தீர்க்கும் ஓஷதி போற்றி! போற்றி!

முடி நேர்த்திக்கு முத்தான அடிப்படை உதவி!

அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றவர்கள். ஆலயத்தில் நேர்த்திக்காக வந்திருக்கும் பக்தர்களுக்கு, மொட்டை அடித்துக் கொள்ளவும். அர்ச்சனை, ஆராதனைகளுடன் வழிபடுவதற்குமான செலவுகளை ஏற்றுக் கொண்டு உதவுதல் மிகவும் சிறப்பான அறப் பணியாகும். வாழ்க்கையில் பலவிதமான நஷ்டங்களையும், இழப்புகளையும் அடைந்தோரும், பிறரால் ஏமாற்றப்பட்டோரும், நன்முறையிலே நிவர்த்திகளைப் பெறுவதற்கு இந்த அறப்பணிப் பலாபலன்கள் உதவும்.

சிரசில் குடுமி வகையில் முடியை வைத்துப் பூஜைகள் செய்தல், அருணாசல கிரிவலம் போன்ற இறைப்பணிகளை ஆற்றுதல் மிகவும் சிறப்புடையதாகும். நம் முன்னோர்கள் ஜாதி, குல பேதமின்றிக் குடுமி வைத்திருந்ததை நாம் நன்கு அறிவோம்! குடுமியும், பூணூலும் ஜாதிச் சின்னமன்று! யாவருக்கும் உரித்தான, யாவர்க்கும் அருள்பாலிக்கும் அற்புத தெய்வீகச் சாதனங்களே! தற்காலத்தில் தலைமுடிக் குறைவு, வழுக்கை, நரை போன்றவற்றைக் கண்டு, உலகெங்கும் மனித சமுதாயம் மிகவும் வருந்துகின்றது. Hair Dye என்ற வகையிலே, வெள்ளை முடியை, இரசாயனக் கலவைகளால் கறுப்பாக்கும் நவீனமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. என்னதான் வெள்ளை முடியைச் செயற்கை இரசாயனக் கலவைகளைக் கொண்டு கறுப்பாக்கினாலும் ஒரே வாரத்தில் வெள்ளையும் இல்லாமல், கறுப்பும் ஏதோ வண்ணத்தில், முடியானது அவலமாகத் தோன்றுவதைக் காண்கின்றோம். இரசாயனக் கலவைகள் முடிகளுக்கு உள்ள இயற்கையான ஆன்மீக சக்திகளை அழிப்பதோடு மட்டுமல்லாமல், முடி நாளங்கள் வழியே கபாலத்தினுள் இறங்கி, அவற்றை அடைத்துப் பலவிதமான நாளக் குறைவுகளை ஏற்படுத்தி விடும். இறைவன் அளித்த முடியோடு, இயற்கையோடு வாழ்தலே சிறப்பானது. பெண்கள் அழகு முறை என்று கருதி, புருவத்தைச் சிரைத்தல், பலத்த பகைமைத் தோஷங்களைக் குடும்பத்தில் உண்டாக்கும். பெண்கள் ஒரு போதும் தலையின் முன் முடிகளைக் கத்தரித்தல் கூடாது. இதனால் தம்பதியரிடையே அடிக்கடிச் சச்சரவுகள் உண்டாகும்.

அறிவு சிறக்க உதவும் எண்ணெய் நீராடல்

கபாலச் செல்களை ஆன்மீக ரீதியாக ஆக்கப்படுத்திட, குறித்த நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்பது மிகவும் அற்புதமான சித்த வைத்திய ஆரோக்யம் மற்றும் பாதுகாப்பு முறையாகும். இதில் கிடைக்கும் பலாபலன்களை அளவிட்டுச் சொல்ல முடியாத அளவிற்கு, மூளை நலனுக்கும், அறிவு விருத்திக்கும், புத்தியைத் தீயவழிபால் செல்லாது தடுக்கும் ஆன்மீக ரட்சைக்கும், பூரண சக்திக்கும், உடல் சூட்டுத் தணிப்பிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் உதவி செய்கின்றன. ஆரம்ப முதலே கடைபிடித்து வர, எண்ணெய் நீராடல் பலன்கள் எத்தகைய சுவாச நோயையும் அண்டாது காக்க வல்லவை! ஆண்கள் கண்டிப்பாக புதன், சனிக்கிழமை தோறும் எண்ணெய் நீராடலுடன், ஏழைகளுக்கான தைல தானத்தையும் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் எண்ணெய் நீராடலைப் பழக்கி வைத்தால்தான் அவர்களுடைய அறிவு மங்காது. ஆன்ம சக்தி நிறைந்த ஆறறிவுடன் கூடிய முழுமையான பகுத்தறிவைப் பெறுவர். எண்ணெய் நீராடலால் கபால நாளங்கள் உறுதியும், மேன்மையும் பெறுவதால், முறையான எண்ணெய் நீராடல் மூலம் பிள்ளைகளின் அறிவு விருத்தி, ஆரோக்ய மேன்மைக்கு வழி காணுங்கள்!

தற்காலத்தில் உலகம் முழுதும், பல ஆண்களும் தலை வழுக்கையைப் பற்றி எண்ணி, எண்ணிப் பெரிதும் தாழ்வு மனப்பான்மை கொண்டு வாடுகின்றனர். முறையான தைல பராமரிப்பை மேற்கொள்ளாததும் இதற்கு மூல காரணமாகும். சிரசு பெரும் பங்கு வகிக்கும் காவடி, அங்கப் பிரதட்சிணம், தீர்த்த நீராடல்கள், சிரசாசனம் போன்றவற்றைக் கடைபிடிக்காமையும் இதற்கான காரணங்களாகும். மேலும் பல பூர்வ ஜன்ம காரணங்களும் உண்டு. பாரதப் பண்பாட்டின்படி பெண்கள் பிறந்ததிலிருந்தே, முடியைக் கத்தரிக்காது பின்புறம் வழித்து வாருவதால்தான், பலவிதமான கபால சக்திகளின் வளத்தை நிரம்பப் பெற்று, ஆண்களை விட, ஏழு மடங்கு மனோபலம் பெற்று விளங்குகின்றனர். இதனால் பெண்களுக்கு, ஆண்களைப் போல் பலவிதமான முடி, வழுக்கைப் பிரச்னைகள் ஏற்படுவதும் கிடையாது. இதற்காகத்தான் ஆண்களும், அக்காலத்தில் குடுமி வைத்துச் சிகையை ஆன்மீகமாகப் பராமரிக்கின்ற அற்புதமான ஆன்மீக வழிமுறைகளைக் கொண்டிருந்தனர். தலையில் முடி இல்லாவிட்டாலும், தலையில் மூலிகையைத் தடவி வர வேண்டும். இதனால் ஓரளவு தைல சக்தியைப் பெற்றிடலாம். முடிக் குறைவு அல்லது முடியின்மையைப் பற்றிக் கவலையுறுவோர், மனக் கவலைகளைத் தணிக்க, ரோமச மகரிஷி வழிபடும் கூந்தலூர், குடுமியான்மலை, மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் போன்ற தலங்களில், செவ்வாய், சனிக்கிழமைகளில் தைலக் காப்பிட்டு வழிபட்டு, ஏழைகளுக்குத் தேங்காயெண்ணெய் மற்றும் தலைமுடித் தைலத் தானம் அளித்து வர வேண்டும்.

ஆதிசங்கரருடைய அற்புதமான சிஷ்யர்களுள் ஒருவரான ஹஸ்தாமலகர், ஆசமனப் பிரயோக பூஜைகளில் தலை சிறந்தவராவர். பூலோகத்தில் உள்ள அனைத்துப் புனிதமான கடல்களிலும் ஆசமன பூஜை செய்து, தம் சற்குருநாதராம் ஆதிசங்கர பகவத் பாதாளின் விசேஷமான அனுகிரகத்தைப் பெற்றவராவார்.

ஹஸ்தாமலகரின் மகத்தான ஆசமனப் பூஜா சக்திகள் இன்றளவும் பூலோக ஜீவன்களுக்கு உதவி வருகின்றது. இவை யாவற்றையும் இவர் திருஅண்ணாமலையில் “ஆசார்யத் தரிசனப்” பகுதியில் ஹஸ்தாமலகரின் ஆசியும் திரண்டு வருவது பெரும் பாக்யம்தானே! இவர் வழிவந்த குறித்த உத்தம ஆச்சாரியார்கள், புனிதமான பூஜைகளுடன் இவற்றைத் தொடர்ந்து குருவருளுடன் மேற்கொண்டு இதன் பலாபலன்களை உலகுக்கு நல்குகின்றனர்.

எப்போதெல்லாம் தன்னுடைய மனம் அழுக்கடைந்து இருப்பதாக எண்ணம் வருகின்றதோ, அப்போதெல்லாம் ஆசமனம் செய்து கொள்ளலாம். அக்காலத்தில் சிறுநீர் அல்லது மலம் கழித்த பின், ஒவ்வொரு முறையும் ஆசமனம் செய்கின்ற நற்பழக்கம் இருந்தது. இதனை இனியேனும் அனைவரும் நடைமுறைக்குக் கொண்டு வருதல் வேண்டும். இவ்வாறாக உடல், மன, உள்ள சுத்திக்காக ஆசமன பூஜை துலங்குகின்றது.

நமது உள்ளங்கை என்பது ஒன்பது நவகிரகங்கள் அமைந்துள்ள உத்தம ஜீவப் பத்திரம் ஆகும். இதில் ஐந்து விரல்களும், ஐந்து கிரகங்களையும், உள்ளங்கையில் செவ்வாய் மேடு, சந்திர மேடு, ராகு பவனம், கேது ஸ்தானம் போன்ற ஒன்பதும் அமைந்துள்ளன. இதைத் தவிர ஆயுள் ரேகை, தீர்க்க ரேகை, வித்யா ரேகை போன்ற பலவிதமான ரேகைகளும் அமைந்து உள்ளமையால், நமது உள்ளங்கையே ஜீவசக்திகளும், தேவசக்திகளும் சங்கமிக்கின்ற ஹஸ்த லோகம் என்று சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.

அனைவருக்குமான எளிய ஆசமன பூஜை!

ஆசமனம் என்றால், மந்திர சக்திகள் நிறைந்த தீர்த்தத்தை உள்ளங்கையில் ஏந்தி, மந்திரமோதி மூன்று மூறை அருந்தி, உடல், உள்ளம், மனம் மூன்றையும் சுத்திகரித்துத் தருமாறு இறைவனை வேண்டுதல் ஆகும். பொதுவாக, விஷ்ணு நாமாக்களுக்கும், விஷ்ணுத் தீர்த்தத்திற்கும் உடல், மனம், உள்ளத்தை புனிதப்படுத்தும்  மகத்தான சக்திகள் உண்டு. இதனால்தான் ஆசமனப் பூஜையில், திருமாலின் நாமங்களை ஓதித் தீர்த்தத்தை மும்முறை அருந்துவர். ஆசமன பூஜை மிக, மிக எளிமையான பூஜை, ஜாதி, இன, குல பேதமின்றி யாவரும், எப்போதும் கடைபிடித்திடலாம்.

பிள்ளையார் சுழியிட்ட பின் அடியில் இரண்டு கோடுகள் இடுகின்றோமே, இவ்விரு கோடுகளும் அகமர்ஷண மகரிஷியையே குறிக்கின்றன. சத்தியமான பீடமாய், பிள்ளையாரைத் தாங்கும் பெரும் பீடாதிபதி! அனைத்துப் பீடாதிபதிகளும் தினமும் தம் பீடத்தில் அமரும் முன் வணங்கிப் போற்றும் அகமர்ஷண பீட மகரிஷி! நமக்கு ஆன்மீகப் புனித அடியை எடுத்துத் தந்த பெரும் மகரிஷியாக, நம்முடைய அகஸ்திய விஜய இதழிலும் அகமர்ஷணம், அகமர்ஷண அடி என்று இதழ் எண்களைப் பொறித்து வருகின்றோம்.

ஸ்ரீஅகமர்ஷண மந்திரம்

தீர்த்த நீராடல், தினசரி நீராடல், சிரசில் புனித நீர் தெளித்தலின் போது ஓத வேண்டிய மந்திரம்

ஆர்த்ரம் ஜ்வலதி ஜ்யோதிர் அஹமஸ்மி
ஜ்யோதிர் ஜ்வலதி ப்ரம்மா அஹமஸ்மி
யோ அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமஸ்மி ப்ரம்மா அஹமஸ்மி
அஹமே வாஹம் மாம் ஜுஹோமி ஸ்வாஹா||

தமிழ் மந்திரம்

ஐம்பூதாக்னி யதுவும் யாமே
ஐயுருவாக்னி யதுவும் யாமே
யாமில் யாவும் யாவையும் யாமே
யாமறிவாவது யாவும் யாமே
யாமறியாதது யாவும் யாமே
யாமில் யாமாய் யாமும் உளமே
யாமே பிரம்மம்! யாமுள் பிரம்மம்
யாமில் யாமே யாமா யானோம்!
யாமில் பிரம்மம் யாகம் பிரம்மம்
யாமில் ஓமம் யாமே யக்னி
யாமா யக்னி யானோம் ஜோதி
யாமே யாக்கம் யாமே யக்னி
யாக்கை யழியும் யாகத் தீயுள்
யாமும் பிரம்மம் யாமாய் பிரம்மம்
யாமே பிரம்மம் யாவும் யாமே

(மேலும் விளக்கங்கள் – டிசம்பர் 1998 இதழில்..)

 

தொடரும் ஆனந்தம் ...

மயன் புள்ளிகள் என்ற 16 புள்ளிகள் வசந்த மண்டபங்களில் அமைந்து பக்தர்களின் மாங்கல்ய தோஷங்களை நீக்க உறுதுணை புரிகின்றன என்பதை நீங்கள் அறிவீர்கள். இத்தகைய 16 புள்ளிகள் உலகின் மிகச் சிறந்த மணியான சிகண்டிபூர்ணம் என்ற சிதம்பர ஆலயமணியிலும் நிலவுகின்றன என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த இரகசியமாகும். மணி நடுவில் அமைந்துள்ள உள்நாக்கு (pendulam) ஒரு பக்கம் மோதும்போது எட்டு மயன் புள்ளிகளும் மறுபக்கம் மோதும்போது எட்டு மயன் புள்ளிகளும் இசைக்கப்படுகின்றன, ஒலிக்கப்படுகின்றன என்பதே இந்த மணிகளின் மகத்துவமாகும். 1+6=7 என்ற எண் இலக்க தத்துவத்தின்படி இந்த மணி ஓசையால் நிவர்த்தியாகும் பல தோஷங்களில் சடசீதி என்ற தோஷமும் ஒன்றாகும். சர ராசி மாதங்களான சித்திரை, ஆடி, ஐப்பசி, தை என்ற மாதங்களிலும், திர ராசி மாதங்களான வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி என்ற மாதங்களிலும், உபய ராசி மாதங்களான ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி என்ற மாதங்களிலும் தோராயமாக 7, 5, 9ம் நாட்கள் தோஷமுடைய நாட்களாகக் கொள்ளப்படுகின்றன.

சிகண்டிபூர்ணம்
சிதம்பர திருத்தல ஆலயமணி

இந்த தோஷங்களை பலரும் பகுள சக்திகள் என்று அழைப்பதுண்டு. தேய்பிறை சக்திகளும் பகுளம் என்றே அழைக்கப்படும். இவ்வாறு ஆவணி மாதம் திர மாதமாக அமைந்து பகுள சக்திகளுடன் துலங்குவதால் ராகு கால சக்திகளைப் போல் மக்களின் பலவித தோஷங்களை நீக்கும் நாளாக ஆவணி மாதம் ஏழாம் தேதி (23.8.2021) திங்கட் கிழமையை சித்தர்கள் அளித்துள்ளனர். இதற்கு முதல் நாள் ஞாயிற்றுக் கிழமை ஆவணி அவிட்டம் என்னும் பூநூல் அணியும் நாளாக அமைவதால் அன்று அடியார்கள் அனைவரும் பூநூலை அணிந்து கோதுமை அல்வாவை வயிறார உண்டு, மற்றவர்களுக்கும் இயன்ற தானத்தை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அடுத்த நாள் சிராவண பகுள நாளாக அமைவதால் இன்று முழுவதும் சிறிதளவே பாலை மட்டும் உண்டு காயத்ரீ ஜபத்தை வாய் விட்டு நன்கு ஒலிக்கும்படி ஜபித்தல் நலம். சூரிய பகவான் சுயம் பிரகாச சக்திகளுடன் துலங்குவதால் மற்றவர்கள் கூறும் வார்த்தைகளுக்குச் செவி சாய்க்காமல் தன்னுள் உறையும் இறைவனின் ஒலியைக் கேட்பதாக இந்த சிராவண பகுள சக்திகள் உதவும் என்பதே சித்தர்களின் நல்லுரை. நாள் முழுவதும் இத்தகைய ஜப தியானத்தில் முழுமையாகக் கழிப்பவர்கள் சிகண்டிபூர்ணம் சிதம்பர மணியின் ஒலியை ஈசன் அனுகிரகமாக பெறுவார்கள். இத்தகைய மணி ஓசை கேட்கும் அந்த பூர்ண ஓசையில் இலயித்தே தங்கள் தியானத்தைத் தொடரலாம். மணி ஓசைக்குப் பின் காயத்ரீ ஜபத்தை வாய்விட்டு ஒலிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்போது காயத்ரீ ஜப சக்திகள், ஒலி வடிவங்கள் சிகண்டிபூர்ண மணி ஓசையில் இலயித்து இதுவரை நாம் கேட்டிராத ஒரு அமிர்த சுவையை அளிக்கும். நம்முள் உறையும் ஈசனின் சிதம்பர ஒலியை, ஆத்ம ராக த்வனியைத் தான் நாம் திங்கட்கிழமை என்னும் அமிர்த சக்தி திரளும் நாளில் மந்திர ஒலி அலைகளாக கேட்கின்றோம், இரசிக்கின்றோம். முயன்று பாருங்கள், முன்னேற்றம் கொள்ளுங்கள் ! இத்தகைய அமிர்த சக்தியை உணர்ந்தவர்களுக்குத்தான் ஏன் சிதம்பர மணிகள் உடலும் உயிருமாய் இரண்டு மணிகளாய்த் தோன்றுகின்றன என்ற இரகசியம் புலப்படும்.

மாதா ஸ்ரீஅமிர்தானந்தா

ஒரு முறை நம் அடியார் ஒருவர் தன்னுடைய திருமணத்திற்காக ஒரு முகூர்த்த நாளைக் குறித்து தருமாறு கேட்க நம் சற்குருவும் ஒரு நல்ல முகூர்த்தத்தைக் குறித்து அந்த அடியாரிடம் கொடுத்தார். அந்த முகூர்த்த நாளைப் பார்த்த அடியார் அந்த நாள் தனக்கு ஒத்து வருமா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார். எல்லாம் குருவருள் என்று சொல்வது எளிது. தனக்கு என்று வரும்போது ஒவ்வொருவர் மனநிலை எப்படி எப்படியெல்லாம் மாறி விடுகிறது ?! அவர் தயக்கத்துடன், “வாத்யாரே, இந்த நாள் ஒத்துவரா விட்டால் வேறொரு நாளில் அடியேன் முகூர்த்த நாளை வைத்துக் கொள்ளலாமா ?” என்று கேட்கவே நம் சற்குருவோ சற்றும் தயக்கமின்றி “ஓ, தாராளமாக வைத்துக் கொள்ளலாமே. நீ கேட்டுத்தான் இந்த முகூர்த்த தினத்தை குறித்து கொடுத்தேன். இருந்தாலும் நீ இதை மதிக்கவில்லை என்றால் அதற்கு அடியேன் பொறுப்பாக முடியாது. நீ தாராளமாக உனக்கு பிடித்த தேதியில் முகூர்த்தத்தை வைத்துக் கொள்ளலாம்,” என்று கூறி விட்டார்கள். சற்று நேர அமைதிக்குப்பின் அந்த அடியார், “வாத்யாரே, ஏதாவது ஒரு நாளில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாங்கல்ய தாரண நிகழ்ச்சியை வைத்துக் கொள்ளலாமா ?” என்று கேட்கவே நம் சற்குரு, “தாராளமாக பிரம்ம முகூர்த்த நேரத்தில் மாங்கல்ய தாரணத்தை வைத்துக் கொள்ளலாம். அதன் பின்னணியில் உள்ள மகத்துவத்தை பலரும் புரிந்து கொள்வதில்லை. வார தோஷம், திதி தோஷம், ராகு காலம், எம கண்டம் போன்ற பல கால தோஷங்களைக் கடந்ததாக அமைந்துள்ளதே பிரம்ம முகூர்த்தம். அதனால்தான் விடியற்காலை மூன்றரை மணி முதல் ஐந்தரை மணி வரை அமையும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை இறைவனின் தியானத்திற்காக வைத்து நம் முன்னோர்கள் அனைத்து அனுகிரகங்களையும் பெற்றார்கள். தோஷங்கள் அற்ற இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை மாங்கல்ய தாரணத்திற்காக அமைக்கும்போது அதோடு திருமண நிகழ்ச்சிகள் முடிந்து விடுவது கிடையாது. அன்று இரவில் நடைபெறும் சாந்தி முகூர்த்தம் என்பது மிகவும் முக்கியமான வைபவம் அல்லவா ? எதிர்கால சந்ததிகளை உருவாக்கும் இந்த முகூர்த்தமும் சரியான முகூர்த்த நேரத்தில் அமைவது அவசியமே. அதனால்தான் நம் சற்குருமார்கள் மாங்கல்ய தாரணத்திற்கான முகூர்த்த நேரத்தைக் குறிக்கும்போது இந்த சாந்தி முகூர்த்த நேரத்தையும் அதில் உள்ளடக்கி வைத்து விடுவார்கள் என்பதே சற்குருமார்கள் அளிக்கும் முகூர்த்த நேரங்களின் மகத்துவங்களில் சிலவாகும். அன்னை அமிர்தானந்தா திருமண முகூர்த்தத்தில் இல்லறம் என்பது பூர்ணம் அடைந்து விடுகிறது. அந்நிகழ்ச்சிக்குப் பின் அவர்கள் அனைத்து அடியார்களையும் குழந்தைகளாகப் பாவித்து இன்றளவும் அருள்புரிந்து வருகிறார்கள். மாதா இருப்பது இல்லறத்திலா, துறவறத்திலா ? இத்தகைய மகான்கள் மட்டுமே பிரம்மமுகூர்த்த திருமணத்தை நிறைவேற்ற இயலும் என்பதே நம் சற்குரு அளிக்கும் இனிய உரை. திருஅண்ணாமலையில் சிவ சக்தி ஐக்ய தரிசனத்தின் எதிரே நம் சற்குரு ஆஸ்ரமத்தை நிர்மாணித்து தம்பதிகளுக்கெல்லாம் ஒற்றுமையை வளர்ப்பது போல அன்னையும் தம் விரல் சக்திகள் மூலம் இத்தகைய அனுகிரகத்தை தாயின் கருணையாக வர்ஷிக்கிறார்கள் என்பதே இங்கு நீங்கள் தரிசிக்கும் அமிர்தானந்த முத்திரையின் தத்துவமாகும்.

ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் துடையூர்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam