பிரதிபலிப்புகள் பலவாக இருந்தாலும் சூரியன் ஒருவரே .. மாதா அமிர்தானந்தா

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

பத்து மூட்டை பத்துமா?

சிறுவனும், பெரியவரும் இரண்டு பெரிய சாக்குப் பைகளைத் தோளில் போட்டுக் கொண்டு, வேகவதி நதிக் கரையில், (அப்போது இதில் நீர் நன்கு ஓடிய காலம்), வயல் வெளிகளில் சமித்துக்களைப் பொறுக்கி எடுத்து வந்து, சத்திர மண்டபத்தில் குவித்தனர். சாக்குகளை அவிழ்த்துக் கொட்டிய பிறகுதான் சிறுவன் பார்த்தான். சமித்துக்களின் கொள்ளளவு பத்து மூட்டைகளுக்கு மேல் தேறும் போல் இருந்தது! அனைத்தையும் தோளிலா சுமந்து வந்தோம்? சிறுவன் அசந்தே போனான்!

“என்ன இது, எதற்காக இவ்வளவு சமித்துக்கள்? ஏதாவது பிரம்மாண்டமான அகண்டகார ஹோமமா?”

ஆங்காங்கே சில எண்ணெய்க் கடைகளுக்குச் சென்று, செக்காலைகளையும் பார்த்து, இருவரும், பெரிய வட்டில்களில் சுத்தமான பசு நெய்யைக் கொண்டு வந்தார்கள். ஹோமம் என்றாலே மிகுந்த பவ்யத்துடன், வினயத்துடன், பக்தியுடன் வியாபாரிகளும், குடும்பத்தினரும், சமித்துகள், பசு நெய், ஹோம திரவியங்களைத் தாராளமாக வழங்கி, புனிதம் பீறிட்ட காலமது!

வேகவதி ஆறு
காஞ்சிபுரம்

மணி மூன்றில் மணியான ஹோமம்!

அவர்கள் தங்கி இருந்தது நல்ல பழமையான மடம்! காலையில் பிரம்ம முகூர்த்தத்திலேயே இருவரும் எழுந்து அருகில் உள்ள கச்சபேஸ்வரர் ஆலயக் குளத்தில் நீராடிட, பெரியவர் பஞ்ச கச்சத்துடன் சிவப் பழமாய் வந்து, சிறுவனுக்கும் ஒரு நார்ப் பட்டுத் துண்டைச் சுற்றி உடுத்தி விட…

அமைதி, ஆனந்தம் கொழிக்கும் பிரம்ம முகூர்த்த நேரத்தில், இருவரும் ஹோம குண்டத்தின் முன் அமர்ந்தார்கள். நல்ல பிரம்மாண்டமான ஹோமகுண்டம்! பெரியவர் அதில் 12 விதமான அக்னி லோகங்களை ஆங்கே அற்புதமான கிளை ஹோம குண்டங்களாக வடித்திருந்தார்!

பெரியவர் அமைத்திருந்த அற்புதமான அந்த ஹோம குண்டங்களின் அமைப்பை நன்கு கவனித்து வந்த சிறுவன்…

திடீரென்று திரும்பிப் பார்த்தால்…

பெரியவரைக் காணவில்லை! சிறுவன் சற்றே திகைத்து விட்டான்! அவனுக்கு ஒருவிதமான கிலி வந்து விட்டது!

‘இவ்வளவு சமித்து மலையை வைத்துத் தான் ஒருவனே ஹோமத்தை நடத்தியாக வேண்டும்!’ – என்று பெரியவர் ஆணையிட்டு விட்டால், அவனால் என்ன செய்ய முடியும்?

வாசலில் ஏதோ சப்தம் கேட்டிடவே… சிறுவன் எகிறிக் குதித்து ஓடினான்!

தலைமுறை தாண்டிய தகைமையான தணல்!

சிறுவன் வாசலுக்கு விரைந்தான்! அங்கே பெரியவர், ஒரு கண்ணாடிக் கூண்டுக்குள் அகல் தீபத்தை வைத்துக் கொண்டு, கரங்களில் பவ்யமாக ஏந்தி வந்தார்!

“சின்ன காஞ்சீவத்துல ஒரு குடும்பத்துல பல தலைமுறையா அக்னி ஹோத்ரம் தினமும் பண்ணிக் கிட்டு வராங்க! பல நூறு வருஷமா வீட்டுல, தினமும் அக்னி ஹோத்ர பூஜை பண்ற குடும்பம்! காலம், காலமா அதே அக்னியை போஷிச்சுக் கிட்டு வர்றாங்க! ரொம்ப ரொம்பப் பவித்ரமான அக்னி! கண்ணுல தொட்டுக் கும்பிட்டுக்கோடா!”

சிறுவனுக்குப் பரம சந்தோஷம்!

“இதை வச்சுத்தான் நாம இன்னிக்கு ஹோமம் பண்ணப் போறோம்! இந்த மாதிரி, காலம், காலமா வளர்ந்து வர்ற  அக்னியில ஹோம பூஜை செய்யறது ரொம்ப, ரொம்ப பாக்யம்! அதுவும் பிரம்மா யாகம் பண்ணின காஞ்சி பூமியாச்சே இது! ஒண்ணுக்கு ஆயிரமா ஹோம பலன்கள் வந்து சேரும்!”

ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம்

பிரம்ம யாக பூமியில் 60 நாழிகை ஹோமம்!

பிரம்ம முகூர்த்த நேரமான காலை மூன்றரை மணிக்கு ஹோமம் தொடங்கியது. வார்த்தார்கள், வார்த்தார்கள், சமித்துக்களையும், ஹோம சமூலங்களையும், பசு நெய்யையும் ஹோமாக்னியில் நாள் முழுதும், திறம்பட மந்திரங்களை ஓதியவாறு இருவரும் வார்த்துக் கொண்டே இருந்தார்கள். ஆம், சற்றும் இடைவெளி, ஓய்வு எதுவுமே இல்லாது, முதல் நாள் மூன்றரை மணிக்கு ஆரம்பித்த ஹோமமானது, மறுநாள் காலை நான்கு மணி வரை தொடர்ந்து நடந்தது.

வெளியிலோ ஹோமத்தை வரவேற்பது போல், நல்ல மழை பெய்தது! பெருமழைச் சாரல் பெருகி வந்து, உள்ளே சாய்ந்து வீழ்ந்தாலும், ஹோமத்தை இடைவிடாது தொடர்ந்தார் பெரியவர். நடுவில் யார் வந்தார்கள், சென்றார்கள், எதுவும் சிறுவனுக்குத் தெரியாது.

(இடைவெளி இல்லாத) அகண்டகார சமுதாயப் பணியான அக்னி ஹோமம் என்றதுமே பலரும் திரளாக வந்து, ஹோமத்திற்கான பொருட்களை, திரவியங்களை நிறைய அளித்துச் சென்றனர். நாள் முழுதும், எந்த இடைவெளியும் இல்லாது, நடுவில் எதற்கும் எழுந்து செல்லாது இருக்கின்றோம் என்ற எண்ணம் கூட அவனுக்குள் எழவில்லை!

அகண்டகார ஹோமத்தில் அருள்வர மழை!

மறுநாள் காலை நான்கு மணிக்கு ஹோமத்தைப் பூர்ணாஹூதி அளித்து நிறைவு செய்தார் பெரியவர்!

“இந்தக் காஞ்சீபுரம், சிவமஹா ருத்ர பூமியப்பா! பிரம்மாவே நேரா வந்து ஒரு மண்டல காலம் தொடர்ந்து யாகம் நடத்தின பூமி! ருத்ர பூமிங்கறதுனால இந்த காஞ்சீபுரத்துல ஒரு நாள் முழுக்க, 60 நாழிகையும் ஒரு நாள் முழுக்க, 60 நாழிகையும் ஹோமம் நடத்தறது ரொம்ப ரொம்ப விசேஷம்! அதுவும் பல வருஷமா, தலைமுறை, தலைமுறையா வளர்ந்து வர அக்னி ஹோத்ர அரணிக் (அரசங்) கட்டை நெருப்பை, மூலாதாரமா வச்சுப் பண்றது மகா விசேஷம்!” நூற்றுக் கணக்கானோர் அக்னி குண்டத்தை வலம் வந்து சேவித்தார்கள்!

“நாள் முழுக்க அறுபது நாழிகையும், பசுநெய் ஊத்தி ஹோமத் தீ வளர்க்கறது பெரிய புண்ய காரியமாச்சே! ஆயுள்ல ஒரு தடவையாவது இந்த மாதிரி எல்லாரும் அகண்டகார ஹோமமா காஞ்சிபுரத்துல ஒரு நாள் முழுக்க நடத்தியாகணும்!”

பெரியவர் சற்றே நிறுத்தினார்.

ஸ்ரீபோடாசித்தர்
காஞ்சிபுரம்

“யாருக்காவது இந்த அக்னிப் பிரசாதம் வேணும்னா, விளக்கைக் கொண்டு வந்து ஏத்திக் கிட்டுப் போகலாம்! காலம் காலமா வந்த அக்னி, அதுவும் 60 நாழிகை முழுவதுமா நடந்த ஹோம அக்னி!” என்று பெரியவர் உரைத்தவுடன் பலரும் வீட்டிற்குப் போய் விளக்குகளைக் கொண்டு வந்து அபூர்வமான “அக்னி பிரசாதத்தைப்” பரமானந்தத்துடன் எடுத்துச் சென்றார்கள்!

இதுவன்றோ சித்தர்கள் பாணி! தமக்கென்று எதுவும் வைத்துக் கொள்வதில்லை! தாம் செய்வது யாவும் பிற ஜீவன்களின் நலன்களுக்காகவே!

“ஆமாம், நேத்து ராத்திரி நீ கனவுல, அக்னி லோகமெல்லாம் போய்ட்டு வந்தியே, அதெல்லாம் உண்மையிலேயே அக்னி பகவான் வசிக்கிற அக்னி லோகம்தாண்டா!”

சிறுவன் வியப்பு மலர விழித்தான்!

“நீ பார்த்த அக்னி லோகத்தோட பலாபலன் தான் இந்த அறுபது நாழி அகண்டகார ஹோமத்துல நீ இன்னிக்கு உட்கார்ந்தது! இது எல்லாத்துக்கும் உனக்கு அனுகிரகம் பண்ணித் தந்தவர் அந்த அக்னி லோகத்துச் சித்தர் போடா சுவாமிகள் தான்! இதை முதல்ல நல்லாத் தெரிஞ்சுக்கோ! இப்படித்தான் சித்தர்களோட ஆசீர்வாதத்தைப் புரிஞ்சுக்கணும்! கூரையைப் பிய்ச்சுக்கிட்டு ஐஸ்வர்யம் கொட்டணும்னு நினைக்கக் கூடாது!”

“என்னே சக்தி வாய்ந்த வாக்கியங்கள்!” – சிறுவனின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் திரண்டது!

தப்பில்லாத தருணம் வருமா?

ஒரு முறை சிறுவன், பெரியவரிடம் மிகவும் சலித்துக் கொண்டான்.

“ஏன் வாத்தியாரே, இந்த ஜனங்க எல்லாம் தப்பு மேல தப்பு செஞ்சுகிட்டே இருக்காங்களே, இதை நிறுத்தறத்துக்கு வழியே கிடையாதா?”

பெரியவர் கலகலவென்று சிரித்தார்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“ஏண்டா, தப்பே நடக்காம புண்ணிய பூமியா இருந்தா, நாங்க எதுக்குடா இங்க வரணும்? தப்பு நடக்காட்டி எப்படிடா உலகம் இயங்கும்? இன்னைக்கு நல்லது பண்ற அதே மனுஷன் நாளைக்குத் தப்புப் பண்ணலாம்! இதுவரைக்கும் தப்புப் பண்ணினவன், நாளைக்கே திருந்தி, ஆயிரம் பேரைத் திருத்தறதுக்கும் வழி செய்யலாம்! நல்லது, கெட்டது, தப்பு, ரைட்டு எல்லாமே கடவுள் லீலைதான் கண்ணு! நாமெல்லாம் ஆண்டவன் ஆட்டி வைக்கறபடி ஆடறோம், அவ்வளவுதான்!”

கலியுகமாயிற்றே! சிறுவனுக்கு இந்த பதில் அவ்வளவாகத் திருப்தி அளிக்கவில்லை!

“இருந்தாலும் .. வாத்தியாரே! தப்பு செஞ்சுட்டு, இதுவும் கடவுள் செயல்னு சொல்லி இப்பத்தி மனுஷங்க தப்பிச்சுடுவாங்களே!” என்று சொல்லியவாறு சற்றே இழுத்தான்.

பெரியவர் மேலும் தொடர்ந்தார்..

“தவறு பண்ணாதவனே இந்த உலகத்துல கிடையாதுடா! இப்ப என்னையே எடுத்துக்கோயேன்! அடியேன் ஒரு சமயம் தப்பு செஞ்சுருக்கேன்!”

சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்!

“என்ன வாத்தியாரே சொல்றே நீ! முக்காலமும் அறிஞ்சவன் நீ! அடுத்து என்ன நடக்கப் போகுதுன்னு தெரியாததுனாலத்தான் மனுஷன் தப்புப் பண்றான்! நீயோ பல ஆயிரம் வருஷம் காலத்துக்கு முன்னாடியும், பின்னாடியுமாப் போற சித்தரு! நீ கூடவா தப்பு செஞ்சிருக்கே?”

பெரியவர் சிறுவன் சொல்வதைக் காதில் போட்டுக் கொள்ளாதவராய், விவரிக்க ஆரம்பித்தார்..

பசித்திரு! நடந்திரு!

பெரியவர்… ஒரு முறை…. திருஅண்ணாமலை கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.!

பச்சைத் தண்ணீர் கூடப் பல்லில் படாமல் உபவாசத்துடன், உண்ணாநோன்புடன் ஆன நிர்ஜல ஏகாதசி விரத கிரிவலம்! எப்போதும் வயிறு நிறைய உண்டு கிரிவலம் வருவதைச் சொல்லி வந்தவர் அறுபது ஆண்டுக்கு ஒரு முறை வருகின்ற “உவந்தபிரான் ஏகாதசி” ஆனதால் நிர்ஜல விரத கிரிவலம் கொண்டார். ஏகாதசி திதி நேரம் முழுதும் 60 நாழிகையும், உண்ணாமல், உறங்காமல் கிரிவலம் வந்து அண்ணாமலையார் ஆலய ஸ்ரீவேணுகோபாலப் பெருமாள் (ஸ்ரீகிருஷ்ணன்) சன்னதியில் நிறைவுறுவது!

மிகவும் களைப்புற்றார் பெரியவர், நல்ல சரியான பசி! தொண்டை வறண்டு விட்டது! நல்ல தாகம்! எங்கேயாவது சிறிது அமரலாம் என்றால் ஏகாதசியும் அதுவுமாய் 60 நாழிகையும் தொடர்ந்து கிரிவலம் வருவது விசேஷம் என்பதால் எங்கும் அமர மனம் வரவில்லை! களைப்பினால் அரையடி, அரையடியாய் நடந்து, வலி, பசி, தலை சுற்றலைப் பொருட்படுத்தாமல், பல்லைக் கடித்துக் கொண்டு மிகவும் மெதுவாக ஆமை போல் கிரிவலம் வந்து கொண்டிருந்தார்.

ஓரிடத்தில்.. கிரிவலப் பாதை ஓரத்தில் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். பெரியவரைப் பார்த்தவுடன், “தம்பி, தம்பி! இங்கே வாயேன்! ரொம்பக் கால் வலிக்குதுப்பா! கொஞ்சம் காலைப் பிடிச்சு அமுக்கி விடேன்!”

அந்த ஆள் வெளிப் பார்வைக்கு, ரொம்ப அழுக்காக, ஊர்சுற்றி மாதிரி இருந்தமையால், “இவனுக்கு நாம் கால் பிடித்து விட்டால், சிந்துபாத் கதை மாதிரி முதுகில் ஏறிக் கொள்வான்! நாமோ ஏற்கனவே ஆடிக் கிடக்கிறோம்!” என்று எண்ணிய பெரியவர்..

“அட போய்யா! நானே பாதி ரிப்பேராகிக் கிடக்கேன்! எனக்கே யாராவது கால் அமுக்கி விட்டாத் தேவலைதான்! இதுல நீ வேற! நேரம், காலம் தெரியாம உயிரை வாங்குறியே!” என்று ஆயாசத்தில் சொல்லி விட்டார்.

அவ்வளவுதான், அங்கே…. (ஆனந்தம் தொடரும்)

புனிதமான குடும்ப வாழ்க்கை

கலியுகத்தில் சிறப்புடையது உத்தம இல்ல தர்மம்! 

தற்காலத்தில் பலரும் தெய்வீகம், ஆஸ்ரம சேவைகள் என்றாலே இல்லறத்தை விட்டு விலகி வாழ்தல் என்று அஞ்சி ஒதுங்குகின்றனர். கலியுகத்தில் சந்நியாசியாக, பிரம்மச்சாரியாக, துறவற வாழ்க்கை கொள்வது மிக மிகக் கடினம். ஏனெனில் பிரம்மச்சரியம் என்பது உடல், மனம், உள்ளம் ஆகிய மூன்றாலும் காமத்தைத் தீண்டாது வாழ்வதாகும் காமம் என்றால் ஆசை, விருப்பம் என்றும் பொருளுண்டு.

ஸ்ரீசந்திர பகவான்
மானாமதுரை

எனவேதாம் கலியுகத்தில், கரணம் தவறினால் பிறவிச் சுழல் என்ற வகையாக உள்ள கடுமையான பிரம்மச்சரிய வாழ்வை விட, இல்லற தர்மமே, குடும்ப வாழ்க்கையே உத்தம தெய்வீக நிலைகளை அடைய, மிகவும் எளிமையானது, பாதுகாப்பானது, சிறப்புடையது என நம் பெரியோர்கள் பகன்றுள்ளனர். தக்க சற்குருவைப் பெறவும் இல்லற தர்மமே துணை புரியும்.

பணப் பிரச்னைகள், நோய்கள், கல்விச் செலவுகள், மனஸ்தாபங்கள், வீட்டு வாடகை, இதர செலவினங்கள் இவற்றின் ஊடே குடும்பத்தை நடத்திச் செல்வதுடன், தெய்வீகத்தோடு ஒட்டிய வாழ்க்கையையும் அடைய, இல்லற தர்மத்தில் தார்மீகமான வழிமுறைகள் நிறைய உண்டு.

கணவன் மனைவி புரிந்து வாழும் இல்லறம்!

முதலில் கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு வாழ வேண்டும். இதற்குக் குறைந்தது 25 வருடங்கள் ஆகும். நான்கைந்து ஆண்டுத் திருமண வாழ்விலேயே பரிபூரண மன ஒற்றுமை வந்து விடாது. கணவனே கண் கண்ட தெய்வம் என நன்கு உணர்த்தும் பாரதப் பண்பாட்டுக் குடும்ப வாழ்க்கை உலகிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகின்றது! மற்றும் உமையாள்புரம் குங்கும சுந்தரி, நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை அற்புதமான குடும்ப வாழ்க்கையை நல்கும் அம்பிகையர். அனைத்துப் பெண்களும் தம் வாழ்வில் ஒருமுறையேனும் கண்டிப்பாகத் தரிசிக்க வேண்டிய ஸ்ரீஅமிர்தாம்பிகை அம்பிகை!

ஸ்ரீவராஹி அம்மன்
சுவாமிமலை

கணவனிடம் எத்தகைய குறைபாடுகள் இருந்தாலும், கணவனே கண் கண்ட தெய்வம் என்ற பாரதப் பண்பாட்டிற்கு ஏற்ப, மனைவி வாழ்ந்திடில், இந்த ஆழ்ந்த நம்பிக்கையே கணவனை நன்கு திருந்தி வாழச் செய்யும், சதுர்த்தி திதி தோறும் அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகரை வழிபட்டு வர, எத்தகைய தீய வழக்கங்களும் அகல நல்வழி பிறக்கும்.

குடும்ப வழிபாடு ஒற்றுமை தரும்!

கணவனும், மனைவியிடம் உண்மையான புனிதமான அன்பைச் செலுத்திட வேண்டும். மாதம் ஒரு முறையேனும் குடும்பத்தோடு அருணாசல கிரிவலம், செவ்வாய், வெள்ளிதோறும் குடும்பத்தோடு அம்பிகை தரிசனம், மிருகசீரிஷ நட்சத்திர நாளில் குலதெய்வ, எல்லை தெய்வ வழிபாடு, அனுஷ, துவாதசி நாளில் ஸ்ரீமகாலக்ஷ்மி தரிசனம், ஏகாதசியில் பெருமாள் தரிசனம் போன்றவற்றை, குடும்ப சகிதம் ஆற்றி வர நல்ல மன ஒருமைப்பாடு ஏற்படும். சுவாமிமலை ஸ்ரீவரதராஜர் ஆலயத்தில் ஸ்ரீவராஹி அம்பிகையை வழிபட்டு வர, தம்பதியரிடையே நல்ல அன்புப் பரிணாமம் உண்டாகும்.

மனவேறுபாடு அகற்றும் சந்திர வழிபாடுகள்!

கணவன் மனைவி இடையே பலத்த மனவேறுபாடுகள் இருந்தால் திங்கள் தோறும், சந்திர ஹோரை அல்லது குருஹோரை நேரத்தில் ஆலயத் தல விருட்சத்திற்கு, மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு வழிபட்டு வருதல் வேண்டும். மானாமதுரை ஸ்ரீசோமநாதர் ஆலயத்தில் ரோஹிணி, கார்த்திகை தேவியர் சமேதராய் ஸ்ரீசந்திர பகவான், மிகவும் அபூர்வமாக, தனித்து விமானம் கொண்டு அருளும் சன்னதியில், திங்கள் அன்றும், ரோஹிணி , ஹஸ்தம், திருவோணம், கார்த்திகை நட்சத்திர நாட்களிலும் வழிபட்டு வர, கணவன், மனைவி இடையே எத்தகைய மன வேறுபாடுகள் இருப்பினும் மறைந்து, குடும்ப வாழ்வில் சாந்தம் ஏற்படும். அற்புதமான, பலரும் அறியாத சந்திர ஸ்தலம் இது!

மனைவி அதிகமாகப் பேசுவதால் பிரச்னைகள் வருமாயின், திங்கள் தோறும் மனைவி நாள் முழுவதும் மௌன விரதம் அல்லது குறைந்தது 12 மணி நேரமாவது மௌன விரதம் இருந்து, மௌன சக்திகள் நன்கு பரிமாணம் பெற, இதன் பிறகு குறைந்தது 12 மணி நேரமேனும், அன்று பேசும் வார்த்தைகளில் உண்மை, புனிதம், தெய்வீகம் உறையும்படி வாக்கியங்களை அமைத்துக் கொண்டு பேச வேண்டும். கணவன், அதிகமாகப் பேசி பிரச்னைகள் எழுமாயின், வியாழனன்று மௌன விரதம் பூண்டு குளிகை நேரத்தில் பைரவருக்கு பஞ்சுமாலை அணிவித்து வழிபட்டு வரவேண்டும்.

ஸ்ரீரோகிணி கார்த்திகை சமேத
சந்திரபகவான் சந்திரசேகரபுரம்

தீய வழக்கங்கள் அகல

புகை பிடித்தல், மது, சூதாடுதல் போன்ற தீய வழக்கங்கள் கணவனுக்கு இருந்தால் ஆலயங்களிலும், இல்லங்களிலும் திருவெள்ளறைச் சிவாலயத்திலும், அடிக்கடி சாம்பிராணி தூபம் இட்டு வழிபட வேண்டும். திருச்சி அருகே திருவெள்ளறைப் பெருமாள், ஆலயம் முழுதும் நிறைய சாம்பிராணி தூபமிட்டு, உத்தராயண, தட்சிணாயணப் படிக்கட்டுகளுக்குப் படி பூஜை செய்து வழிபடுதலால் குடும்பத்தில் சுமுகம் ஏற்படும். நல்ஒழுக்க நியதிகள் உண்டாகும்.

உறவினர்களால் பிரச்னைகள் ஏற்பட்டு, குடும்ப அமைதி பாதிக்கப்படுமானால், குலதெய்வ வழிபாடு நெடுங்காலமாகப் பாக்கியாக உள்ளது எனப் பொருள். ஆண்டிற்கு ஒருமுறையேனும் குலதெய்வ வழிபாட்டைக் குடும்ப சகிதம் முறையாக மேற்கொள்ள வேண்டும். மதுரை அருகே கள்ளிக்குடி கிராம ஸ்ரீகுலசேகரப் பெருமாள் வழிபாடு குலதெய்வ பிரார்த்தனைக் குறைபாடுகளை நீக்கும்.

பணப் பிரச்னைகள் குடும்ப அமைதியைப் பெரிதும் பாதிக்கக் கூடியவை. தினமும் எறும்புகளுக்கு உணவிடல், தினசரித் தர்ப்பணம், புனிதமான நாட்களில் பசு, கன்றினை நீராட்டி, மஞ்சள் ,குங்குமம், இட்டு வழிபடுதல், பசு, எருமைக்கு அகத்திக் கீரை அளித்தல், ஜாதி, இன பேதமின்றி ஏழைச் சுமங்கலிகளுக்கு மெட்டிகளைத் தானமாக அளித்தல், அனுஷ நட்சத்திரம், துவாதசி நாட்களில் விரதம் ஆகியவற்றைக் கடைபிடித்து வர, பணச் சுமை தணியும். திருச்சி அருகே திருநெடுங்களத்தில் அபூர்வமாக அமைந்துள்ள அமர்ந்த கோல ஸ்ரீவரதராஜரைப் புதன் தோறும் வழிபட்டு வர, நல்உதவிகள் கிட்டி நஷ்டங்கள் தீரும்.

கல்லூரிப் பருவப் பிள்ளைகள் தினமும் தியாக, யோகப் பயிற்சிகளில் ஈடுபடச் செய்திடுங்கள், பெரிய பிள்ளைகளுடன், திருவாதிரை, பௌர்ணமியில் திருக்கழுக்குன்றத்தில் கிரிவலம் வந்திட, இவர்கள் வாழ்க்கை நங்கு அமைய உதவும். இவை யாவும் இல்லறத்தை ஒட்டிய மிகவும் சக்தி வாய்ந்த இறை வழிபாடுகளாகும்.

திருப்பாற்கடல் அத்தி ரங்கர்

திருப்பாற்கடல் அத்தி ரங்கர்

திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!
ஓம் நமோ நாராயணாய ஸ்ரீமத் ராமானுஜாய நம:

விஷ்ணுபதி புண்யகாலத் தலம் மிகவும் அபூர்வமான அத்திமர ஸ்ரீரங்கநாத வடிவு திருப்பாற்கடல் அத்திர ரங்கர் ஸ்ரீரங்கநாயகி சமேத ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயம்

சென்னை – காவேரிப்பாக்கம் – திருப்பாற்கடல் – வேலூர் மார்கத்தில் காவேரிப்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் திருப்பாற்கடல் உள்ளது.

பொதுவாக, பூலோகத்தில் பன்னிரண்டாயிரம் ஸ்ரீரங்காநாத (கல்) விக்ரகங்களுக்கு மூத்ததாக ஓர் அத்தி (மரத்தாலான) ரங்கர் தோன்றுவார். 12000 அத்தி ரங்கர்களுக்கு ஒரு தாரு (அத்தி) ரங்கர் தோன்றுவார். தாரு என்பது பாவன வைகுண்ட நந்தவனத்தில் காணப் பெறும் தேவசுத ஸ்வர்ணப்ரகாச அத்தி விருட்சச் சிலாவாகும். அத்தி வரதர், அத்தி ரங்கர், அத்தி மாதவர் என அத்தி விருட்சச் சுடர்ப் பெருமாள் மூர்த்திகளும் உண்டு.

அத்தி ரங்கரில் ஆதி மூல ரங்கரே, காவேரிப்பாக்கம் அருகில் உள்ள திருப்பாற்கடல் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீரங்கநாதர்!

“அத்தியில் மூத்ததாய்
உத்தமத் தோத்தாத்ரியன்
எத்திசைத் திருமாலப்பர்
இத்தரைத் திருப்பாற் கடலமுதன்!”

இங்கு மூலவரான ஸ்ரீரங்கநாதப் பெருமாள் (ஸ்ரீக்ஷீராப்திநாதன்), அத்தி மர வடிவினராய், ஸ்ரீரங்கநாயகித் தாயாருடன் சேவை சாதிக்கின்றார். மிகவும் தொன்மையான ஆலயம்! விகனஸ மகரிஷி தந்த ஆகம முறையில் பூஜைகள் திளைக்கும் நல்ஆலயம்.

சக்தி வாய்ந்த சப்தக விமானம்

இவ்வாலயத்தின் சப்தக விமான தரிசனம் மிகவும் சக்தி வாய்ந்ததாம். ஓங்காரத்தில் சரத்சாரங்கம் என்ற ஒரு வகை விசேஷமான பீஜ சப்தங்கள் உண்டு. அத்தி மரச் சிலாவில் (பலகை) மட்டுமே எழும் ஓங்கார சப்தமிது! இவ்வகை சரத்சாரங்க ஓங்கார சக்திகள் நிறைந்த சப்தக விமானம் கொண்ட ஆலயம்! சற்குரு மூலம் பெற்ற மந்திர உபாசனைகட்குப் பரிபூரண சத்சித்திகளைத் தரவல்லதே சப்தக விமானமாம்! அதாவது இவ்விமான அந்தரத்துள் ஓங்காரத்தின் சரத்சாரங்க பீஜாட்சர வேத ஒலிகள் எப்போதும் பரிணமித்துக் கொண்டே இருப்பதால், பக்தர்கள் தமக்கு உபதேசிக்கப் பெற்ற மந்திரங்களை இங்கு ஓதுதலால் மந்திர சத்சித்திகள் நன்கு கனியும்.

சாமவேத கானத்தில் வல்லமை பெற்ற சாரங்கப் பறவைகளின் மந்திர ஓதலின் ஊடே, விஸ்வதாரர்கள், இவ்வகை சப்தக விமானங்களை, இறையாணையால் பூவுலகிற்குக் கொணர்கின்றனர். சப்தக விமான தரிசனப் பலன்களாக, வாக்சக்திகள் விருத்தியாகும். உபன்யாசம், சொற்பொழிவு, புனிதமான ஆசிரியப் பணி, பேச்சுத் துறையில் இருப்பவர்கள், சனிக்கிழமை தோறும், இவ்வாலயத்தில் சப்தக விமான தரிசனம் பெற்று, அத்தி ரங்கரை வழிபடுதலால், வாக்வன்மை நன்முறையில் விருத்தி ஆகும்.

சப்தரிஷிகளும், ஒரு யுகத்தில் சூறாவளியில் சிக்குண்டு, கரை ஏற முடியாது. நித்திய வேத மந்திரக் கடமைகளை ஆற்றும் பணிகளைச் செய்ய இயலாது தவித்த போது, இவ்வாலய சப்தக விமானத்தில் எழுந்த சரத்சாரங்க ஓங்கார சப்த நாளங்கள்தாம் அவர்களை ஈர்த்திடவே, அவர்கள் சப்தக விமான தரிசனம் பெற்றுக் கரை சேர்ந்தனர். சப்தரிஷிகளையும், ஒரு யுகத்தில் (மாயா) வெள்ளத்தில் இருந்து காத்துக் கரை சேர்த்தமையால், இவ்வூருக்குத் (திருக்)கரைபுரம் என்ற பெயரும் உண்டு. இது நிகழ்ந்ததும், ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தாம்!

திருப்பாற்கடல்

அன்றிலிருந்து அந்தந்த யுக சப்த ரிஷிகளும், சப்தமித் திதி தோறும் இங்கு வேதமோதி வழிபடும் திவ்யத் தலமாகத் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம் பொலிகின்றது! இரண்டு பட்சங்களின் (அமாவாசை, பௌர்ணமி) ஏழாம் திதி நாளாகிய சப்தமித் திதி நாட்களில் இங்கு,

“அத்தி ரங்க அத்தி ரங்க ஆதிமூல ஸ்வாமியாம்!
இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம்!”

“ரங்கபால ரங்கநாத ரங்கமன்ன பாவனம்
ரங்க ரங்க ரங்க ரங்க ரங்கபாஷ்ய ராகவம்!”

என்ற சப்த ரிஷிகள் அளித்துள்ள ஸ்ரீரங்க காருண்ய மாமந்திரத் துதியை ஓதியவாறு, ஆலயத்தை ஏழு முறை அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து, ஆலயத்தின் சப்தக விமான தரிசனத்துடன் வழிபடுவோர்க்கு, பழி, அவச்சொல், பொய்மையால் விளைந்த பெரும் துன்பங்கள் நீங்கிடும், தேவையற்ற அவச்சொல், வீண் பழித் துன்பங்களில் இருந்து காக்கப் பெறுவர். இழந்த சொத்து, மானம், கௌரவத்தை முறையாக மீட்டுத் தரவல்ல ஜீவப்ரகாசத் தலமே திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் ஆலயம்!

மார்கழி மாத வைகுண்ட ஏகாதசியில் நல்விரதம் பூண்டு, இங்கு வழிபட்டு, துளசித் தீர்த்தம் அருந்தி, விரத நிறைவு செய்வோர்க்குக் காரிய சித்திகள் நன்கு கனியும். பலவிதமான விரதங்களை மேற்கொண்டும் மன நிறைவைப் பெறாத ஸ்ரீகண்வ மகரிஷி, இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தோடு கூடி வந்த மார்கழி வைகுண்ட ஏகாதசி விரதத்தைக் கடைபிடித்து, பாற்கடற் பரந்தாமனின் திவ்ய தரிசனத்தை இங்கு அத்தி ரங்கராகப் பெற்று, சமஷ்டி விரத மகாபலன்களைப் பெற்றார். அதாவது அனைத்து விரதங்களின் மகாபலன்களைத் தரவல்ல அத்தி ரங்கத் தலமென அறிந்து இங்கு சகல (சமஷ்டி) விரத பலன்களையும் கண் கூடாக அடைந்து ஆனந்தமுற்று புண்ய விரத க்ஷேத்திரமாக அனைவர்க்கும் உணர்த்தினார். இது நிகழ்ந்ததும் ஒரு விஷ்ணுபதிப் புண்ய கால வைபவத்தில்தாம்!

சித்ரகுப்த மூர்த்தி கருணை பொழியும் தலம்

ஜீவன்களின் கர்ம வினைக் கணக்குகளைத் துல்லியமாக எழுதி வரும் சித்ரகுப்த மூர்த்திக்கு, யுகங்களில் உத்தம தர்மநிலைகள் மாற, மாற ஜீவன்களின் தீவினைக் கணக்குகளே பெருகியமையால், அவற்றை எழுத வேண்டிய நிலையில், அவருக்கு மிதமிஞ்சிய கபாலச் சூடு ஏற்பட்டு அல்லலுற்றார்.

அப்போது அவர் ஸ்ரீபிரம்மாவிடம் முறையிடவே, பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தில் கூடிய விஷ்ணுபதிப் புண்ய காலத்தில், பிரம்ம மூர்த்தியே அவரை இங்கு ஈர்த்து வந்து, ஸ்ரீரங்கநாதருக்கு இட்ட தைலவடியை, பிரசாதமாகச் சித்திர குப்தரின் சிரசில் இட்டார். இதனால் பரமானந்த அனுபூதி பெற்ற சித்திர குப்தர், இதற்கு நன்றி தெரிவிக்கும் முகத்தான், திருப்பாற்கடலில் ஸ்ரீரங்கநாதரை, உண்மையான பக்தி நிலையுடன் தரிசிப்போர்க்கு, கர்ம பரிபாலனத்தில் தார்மீக ரீதியான நன்மைப் பரல்களை இன்றும் அளித்து வருகின்றார். அவர்களுடைய தீவினைக் கர்மங்களும் சித்ரகுப்தரால் தணிக்கப்படுகின்றன. மேலும் கர்மவினைக் களைவு வழிமுறைகளும் அவர்களுக்குக் கிட்டுவதால் பலவிதமான பாவங்களும் எளிதில் இத்தலத்தில் அகல்கின்றன.

விதிமாறும் பெருமாள் கதித் தலம்!

இங்கு பக்தியுடன் அத்தி ரங்கரை தரிசித்தலால் சித்ரகுப்தர் தீவினைக் களைவிற்கு வழிவகுத்தல் கலியுகத்தில் பெறுதற்கரிய பாக்கியமன்றோ!

ஓவ்வொரு மாத ரேவதி நட்சத்திர நாளிலும், குறிப்பாக, பங்குனி மாத ரேவதி நட்சத்திரத்தில், ஸ்ரீரங்கநாதரைப் பக்தியுடன் கண்ணீர் மல்கச் சேவிப்பதால், அவரவர் விதிக் கணக்காய், சித்திரகுப்தர் எழுதி வைத்த பாவ உறைகள் கரைந்திட, சித்திர குப்த மூர்த்தியே விசேஷமாகப் பிரார்த்திக்கின்றார். இவ்வாறு திறம்பட அத்தி ரங்க பக்தி கூடிடின், கர்ம பரிபாலன நியதிகளையே, விதிகளையே மாற்றவல்ல அதியற்புதத் தலம்!

சத்தியம் கொழிக்கும் தலம் நீதித் துறைக்கான சீர்மிகு தலம்!

மகாராஜா அரிச்சந்திரன் இங்கு ஸ்ரீரங்கநாதப் பெருமாளை வழிபட்டு சத்தியத் தன்மையில் இருந்து தான் பிறழாதிருக்கப் பெரும் வரங்களையும், இங்கிருந்து விண்ணில் சித்தஜோதி நட்சத்திர தரிசனத்தையும் மூன்றாம் பிறை நாளில் பெற்றமையால், சத்யவ்ரதம் என்ற பண்டைய காலப் பெயரும் இந்த ஊருக்கு உண்டு!

அரிச்சந்திரனுக்கு ஸ்ரீரங்கநாதருடைய அருந்தைலத்தை, மெய்த்தைலமாக ஒரு விஷ்ணுபதிப் புண்யகாலத்தில், சத்யபாஷாட மகரிஷியே இத்தலத்தில் அருட்பிரசாதமாக வழங்கியமையால், அக்னியும் தீண்ட இயலாத ஜோதிப் பிரகாச சத்தியத் திருமேனியை அரிச்சந்திரன் பெற்று இன்றும் விண்ணுலகில் சத்திய லோகத்தில் பிரகாசிக்கின்றார். சித்ரகுப்த சக்தி பரிபூரணிக்கும் தலமாதலால், நீதி தேவதைகள் பூஜித்துப் பரிமளிக்கும் தலமாகவும் இது விளங்குகின்றது!

எனவே, சத்தியத் தன்மை பிரகாசிக்க வேண்டிய நீதித் துறையைச் சார்ந்த அனைவரும், குறிப்பாக நீதிபதிகளும், வக்கீல்களும் சனிக்கிழமை தோறும் இங்கு வழிபட்டு, நீதி தேவதைகளின் நல்வரங்களைப் பெற வேண்டிய தலம்!

எத்தகைய குற்றவாளிகளும், பாவ வினைகளைச் செய்தோரும் இங்கு மனமுருகித் திருந்தி வாழச் சங்கல்பித்து வேண்டிடில், நல்வழி காட்டும் அற்புதத் தலம்!

ஸ்ரீராமரின் ரவிகுல தெய்வ மூர்த்தியே ஸ்ரீரங்கநாதர்!

ஸ்ரீராமரின் சூரிய குலத்தார் பூஜித்த, (அவர்களுடைய) ரவி வம்ச குலதெய்வ மூர்த்தியே ஸ்ரீரங்கநாத மூர்த்தி ஆவார்! ஸ்ரீராமர் சிறுவயதிலேயே அனைத்துவிதமான தர்ம ராஜ்ய நெறிகளுடன், ராஜ்ய பரிபாலன அறவாழி நியதிகளுடன், ஞானப் பாடங்களையும் கற்றுத் தெளிந்தவர். வசிஷ்டரின் நேரடி யோகவழி முறைகளால், தம் மானுட சரீரத்திலேயே, இளவயதிலேயே பிரம்ம ஞான நிலையை அடைந்து, வசிஷ்டரிடம், “சற்குருநாதா! இவ்வளவு கலைகளையும் தாங்கள் எனக்கு அளித்து, பிரம்ம ஞானநிலையையும் பெறச் செய்து, ராஜ்ய பாரத்தையும் சுமக்கச் செய்தால் இது எவ்வாறு சாத்தியமாகும்? அடியேனால் ஜனகமகாராஜா போல விதேக முக்தி ஞானத்துடன் மானுட சரீரத்தைத் தரிக்க இயலுமா? அடியேன் தங்களுடைய ஆசியால் இப்போது கொண்டிருக்கும் அரிய (பிரம்ம) ஞான நிலையிலேயே இருந்து விடுகின்றேனே!” என உரைத்தார்.

பரபிரம்மமான ஸ்ரீராமர் அறியாதது ஏதும் உண்டா என்ன? எனினும் தாம் கொண்ட மானுட சரீர இலக்கணங்களுக்கு ஏற்ப ஸ்ரீராமர் நன்கு திறம்பட ஒழுகினாரன்றோ! அப்போது, வசிஷ்டரும் ஸ்ரீராமருக்கு அவருடைய அவதார மேன்மைகளையும், மானுட சரீரத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் எடுத்துக் கூறி, ஸ்ரீராமருக்கு ஞான வாசிஷ்டம் அல்லது யோக வாசிஷ்டம் எனப்படும் அற்புதமான, எளிமையான அற போதனைகளை அளித்திட்டார்.

ஸ்ரீராமர் பெற்றளித்த பிரம்ம ஞான நிலை!

வசிஷ்டர் அளித்த அறிவுரையின் படி, எளிய யோக வாசிஷ்ட நிலைகளை அடையும் முன், ஸ்ரீராமர், ஒரு முகூர்த்த காலம் தாமிருந்த பிரம்ம ஞான நிலையிலேயே திளைத்திட வேண்டி, தாம் வழிபட்டு வந்த, தம் குலதெய்வமான ஸ்ரீரங்கநாத மூர்த்தியிடம் பிரார்த்தித்தார். அதன்படி ஸ்ரீரங்கநாதரின் திருவருட்புலனில், அப்போது இளவயதில் திளைத்திருந்த ஸ்ரீராமரின் பிரம்ம ஞானத் திருவதனம், ரகு குல வம்ச குலதெய்வமான ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் பொதிந்தது.

அதாவது, ஒரு முகூர்த்த நேரம் ஸ்ரீரங்கநாதரின் திருப்பார்வையில் ஸ்ரீராமரே விரும்பியபடி, ஸ்ரீராமரின் பிரம்ம ஞான நிலைச் சாரல் ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் பதிவாகியது.

அவதாரத்துள் அவதார ஞானப் பொலிவு!

ஸ்ரீராமரும் பின்னர், தாம் ராஜ்ய பாரத்தை ஏற்க வேண்டிய நிலையில், ஒரு முகூர்த்த நேரம், தம் குலகுருவாம் ஸ்ரீவசிஷ்டரின் ஆக்ஞைப்படி, தாம் லயித்திருந்த அந்த பிரம்ம ஞான நிலையில் இருந்து பிரியாப் பிரிவு கொண்டார். இதனை அவதாரப் பெருநிலையில் தாமே ஆக்க இயலும்! ஸ்ரீராம அவதாரமே ஜீவன்களுக்கு பிரம்ம ஞானநிலை அளிக்கத் தோன்றியது தாமே!

எனினும் அரசாட்சி நிலைகளைக் காணும் முன், தாம் பெற்ற பிரம்ம ஞானநிலையை வருங்காலத்தில், வேண்டும் போது, ஸ்ரீரங்கநாதரிடம் இருந்தே மீண்டும் கண்டு ஆனந்திக்கும் பொருட்டு, ஸ்ரீராமர், ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் அத்தி இலைகளை பரப்பி, அதில் சரயு, கங்கை, மந்தாகினி, பாகீரதி, காவிரி, யமுனா, ஆகாச சரஸ்வதி (இதுவே வேகவதி ஆறு, திருப்பாற்கடல், காஞ்சியில் ஓடுகின்ற பாலாற்றின் உபநதி) ஆகிய ஏழு தீர்த்தங்களைத் தெளித்து, வெற்றிலையில் மஞ்சள் பதுமை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

இவ்வகையில், ஸ்ரீரங்கநாதரே போற்றும் வண்ணம், ஒரு முகூர்த்த நேரம், ஸ்ரீராமருடைய பிரம்ம ஞான நிலை அவருடைய மானுட ரூபத்தில் பிரகாசித்தது. இதில் திரண்ட பரம்பிரம்ம, பரமானந்த பரதத்துவ சக்திகளால், ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் ஸ்ரீராமர் பரப்பிய அத்தி இலைகளும், தண்டுகளும் பூரித்து, அதன் பல அம்சங்களும் வைகுண்டத்தில் இருந்த தர்பாஜன தாருக அத்தி மரச் சிலாவில் ஐக்கியமாயின! ஏனையவை பிரபஞ்சத்தின் பிரசித்தி பெற்ற தாரு வகை அத்தி மரங்களாயின! பிறகு, ஸ்ரீராமர் மரவுரி தரித்துக் கானகம் ஏகியபோது, முதலில் அத்தித் தழைகளையே மரவுரியாகக் கொண்டிட்டார்.

ஸ்ரீராமர் பரமானந்த பிரம்ம நிலை கொண்டிட்ட ஆனந்த சாகர நிலையை ஸ்ரீரங்கநாதரே தர்பாஜன தாருக அத்தியில் செறிவு பெறக் கொண்டார். மேலும் பிரபஞ்சத்தில் பல இடங்களில் தம் அத்தி அர்ச்சங்களையும் ரங்கநாதராக, வரதராஜராக, மாதவராக, சுயம்பாய் அர்ச்சப் பரிபாலனம் கொண்டிட்டார். இத்தகைய அற்புதமான வைபவங்களும் அந்த யுக விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் தாம் நிகழ்ந்தன!

அத்தி ரங்க தரிசனம் அனைத்தையும் தரும்!

திருப்பாற்கடலில் உள்ளது தர்பாஜன தாருக அத்தி ஸ்ரீரங்கநாத மூர்த்தியாகும். காஞ்சீபுரம் அத்தி வரதர் போல அத்தி ரங்கம் எனச் சித்தர்களால் போற்றப்படும் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாத மூர்த்தமானது, மானுடர்களுக்கும், சகல ஜீவன்களுக்கும், பக்தியுடன் கண்களால் தரிசித்தாலேயே பரப்பிரம்ம ஞான தரிசனப் பலன்களைத் தரவல்லது!

ஸ்ரீராமர் பெற்றிருந்த அற்புதத் தவ நிலைகளை நல்வரங்களாக, ஸ்ரீராம பக்திப் பிரசாதமாக அளிக்க வல்லது. சித்தர்களுக்கும், பிரம்ம ரிஷிகளுக்கும் கூட பிரம்ம ஞான நிலையைத் தரவல்லது!

பார்த்தால் (ஞானப்) பசி தீர்க்கும் பரந்தாமத் திருக்கோலம்! கண்டால் போதும் கலியுகத்தில் நல்வரங்களைப் பொழிந்திடும் திருத்தலம்! கலியுகத்தின் பிரத்யட்ச மூர்த்திக்கான அபிஷேக, ஆராதனைகளை சக்திகளுடன், அத்தி ரங்கனின் தரிசனக் கோலமே அனைத்து வழிபாட்டுப் பலன்களையும் தரவல்லது என ஸ்ரீஅகஸ்திய மாமுனியே அருளிச் செய்த அமுதனை, அரங்கநாதராக நமக்குத் தந்திருக்கும் திருத்தலம். அருளார்ந்த நல்வரங்களைத் தரிசனப் பலன்களாக பெற்றிடுவீர்!

பிரம்ம மூர்த்திகள் ஐக்கியமாகும் தாருகா அத்திச் சிலா!

பலகோடி பிரம்ம மூர்த்திகள் தோன்றி மறைந்துள்ளனர். அனைவர்க்கும் மூலமான ஆதிமூல பிரம்ம மூர்த்தியே பெருமாளின் நாபியில் உற்பவித்தார். பல கற்பங்களிலும் தோன்றுகின்ற பிரம்ம மூர்த்திகள், தம் அருட்பணி நிறைவேறிய பின், இறையருளால், திருமாலின் நாபியிலேயே ஐக்கியமாகும் முன் ஸ்ரீரங்கநாதரின் ஆணைப்படி தர்பாஜன தாருகம் எனப்படும் அத்தி விருட்ச ஸ்வர்ணப் படிவில் ஐக்கியமாகின்றனர்.

அனைத்துத் கோடி பிரம்ம மூர்த்திகளும் இந்த தர்பாஜன தாருகத்தில் ஐக்கியம் கொண்டமையில், இது கோடி சூர்ய ஸ்வர்ணப் பிரகாசத்துடன் ஜ்வலிக்கின்றது!

ஒரு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்,  ஸ்ரீமகாவிஷ்ணு இந்த தர்பாஜன தாருகத்தை, அத்தி அர்ச்சமாய் உற்பவித்து, இதில் ஸ்ரீரங்கநாதராய்ப் பரிமளித்தார்.

எனவே தற்போது திருப்பாற்கடலில் உறையும் ஸ்ரீரங்கநாதப் பெருமாள் தாரு அத்தியில் சுயம்புவாய் உற்பவித்தார். காணக் கிடைக்காத மூர்த்தி!

வைகுண்டத்தில் பலகோடி பிரம்ம மூர்த்திகள் ஐக்கியப் பிரகாசம் கொண்ட கற்பதாய தாரு அத்தி விருட்சங்கள் உண்டு. இதனைக் கண்டு தரிசிக்கவே அதியற்புதத் தவ சக்திகளைப் பூண்டிருக்க வேண்டும்.

வைகுண்டத்தை ஒட்டி விரஜா முக்தி நதிப் பிரவாக சமுத்திரம், ஜனமுக்திச் சமுத்திரம், விதேக முக்திச் சமுத்திரம், மந்த்ர முக்திச் சமுத்திரம், பிரபஞ்ச முக்திச் சமுத்திரம், பரமார்க முக்திச் சமுத்திரம் போன்ற மிகவும் முக்கியமான சில வகை முக்திச் சமுத்திரங்கள் உண்டு.

தாரு அத்தி மூர்த்தியைத் தரிசிப்போர்க்கே இம்முக்திச் சமுத்திரங்களின் தரிசனம் கிட்டிடும். பாற்கடல்களிலும் பஞ்சாக்னி க்ஷீர சமுத்திரம், பரமார்த்த க்ஷீர சமுத்திரம் போன்ற ஐவகைப் பாற்கடல்களின் சுயம்புத் திரட்சியாக மலர்வதே ஸ்ரீரங்கநாதர் உருக் கொண்டுள்ள தாரு அத்தி விருட்சம். பூமியில் இதனைக் காணுதல் மிகமிக அரிது.

அத்திரங்க தரிசனம் பெறுவோருடைய பாவவினைக் கணக்குகளைத் திருத்தி, சீரான வாழ்வு பெற சித்ரகுப்த மூர்த்தியே இங்கு அத்திமர சமித்துக்களால் ஆன அரிய ஹோமத்தை ஆற்றினார்.

எனவே இங்கு விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் அத்திமர சமித்துக்களைக் கொண்டு ஆஹுதி அளித்தலால் நற்சந்ததி தழைக்கும்.

“அத்தி ரங்க, அத்தி ரங்க ஆதிமூல ஸ்வாமியாம்!
இத்தரையில் ஏகி வந்த தாருசார மூர்த்தமாம்!”

 “ரங்கபால ரங்கநாத, ரங்கமன்ன பாவனம்
ரங்க ரங்க, ரங்க ரங்க, ரங்கபாஷ்ய ராகவம்!”

விஷ்ணுபதிப் புண்ய கால நேரத்தை, பூலோகத் திருப்பாற்கடல் ஸ்ரீரங்கநாதர் பெருமாள் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனைகள், ஹோமம், தர்ப்பணாதிகளுடன் கொண்டாடுவதால் அற்புதமான பலாபலன்கள் கிடைக்கக் காத்திருக்கின்றன. சகல மகரிஷிகளின், வாலகில்லிய மகரிஷிகளின், நித்யசூரிகளின் சூக்கும மேற்பார்வையில் நிகழும் விஷ்ணுபதி வைபவமிது!

ஆத்ம விசாரம்

பாமரர் முதல் படித்தவர் வரை யாவர்க்கும் உரித்தானதே ஆத்மவிசாரம் எனும் மனயோகம்!

அடியார்: குருவே! ஆத்ம விசாரம் என்பது என்ன?

சற்குரு : ஆத்மவிசாரம் என்பது தன்னை நோக்கிய உள் (மனப்) பயணம்! தன் நிலையை உணர்த்தவல்ல ஆன்ம சாதனம்! தன்னை உண்மையாகத் தானே அறிய வைக்க வல்ல ஆன்மப் பயிற்சி!

அடியார் : குருவே! எல்லோராலும் ஆத்மவிசாரத்தைக் கடைபிடித்திட இயலுமா?

சற்குரு : சித்தர்கள், யோகிகள், ஞானியர், மகரிஷிகள் என அனைவருமே ஞானப் பூர்வமாக, ஆத்மவிசாரம் பயில்கையில், சாதாரண மனிதர்களும், பாமரர்களும் அவரவர் அறிவு நிலைக்கு ஏற்ப தினமும் ஆத்மவிசாரம் செய்துதானே ஆக வேண்டும்! இது மிக மிக எளிமையான ஆரம்ப நிலை மனயோகப் பயிற்சிதானே! இதற்காக, அவரவருடைய மனோபாவன நிலைகளுக்கு ஏற்ப, ஆத்ம விசாரத்தில் உதவுபவரே சற்குரு ஆவார். சற்குரு கிட்டும் வரை சித்தர்கள் அளிக்கும் இத்தகைய அறவழி முறைகளைக் கடைபிடித்து வர வேண்டும்.

அடியார் : ஆத்மவிசாரம், தினந்தோறும் கடைபிடிக்கப்பட வேண்டிய யோக சாதனமா?

சற்குரு : ஆம், அனைவரும், தினந்தோறும் ஆத்மவிசாரத்தைக் கடைபிடித்தாக வேண்டும். எவ்வாறு தினசரி உடற்பயிற்சி என்பது ஆரோக்கியமான வாழ்விற்கு மிக மிக அவசியம் என அனைவரும் உணர்கின்றார்களோ, இதைப் போல, உள்ளத்தின், மனத்தின், உடலின் ஆரோக்கியத்திற்கும், ஆன்ம வளத்திற்கும் துணை புரிவதே ஆத்மவிசாரம் எனும் அருமருந்தாகும்!

இவ்வாறாக, ஆத்மவிசாரம் என்பது மனயோகம், மானசீக பூஜை, ஞானசக்திகளை உள்ளடக்கிய பல ஆன்மீக சாதனங்களின் யோகப் பெட்டகமும் ஆகும். மனத்தால், உள்ளத்தால் உடல் இயங்குவதால், இயக்கப்படுவதால், ஆத்மவிசாரம் எனும் மனயோகம் பாமரர் முதல் பண்டிதர், புனிதமான துறவியர் வரை யாவர்க்கும் உரித்தானதே! தேவையானதே! தினசரி கடைபிடிக்கப் பட வேண்டியதே!

ஆத்மம், ஆத்ம சக்தி, ஆத்ம விசாரம்!

அடியார் : ஆத்மவிசாரத்தில் ஒளிரும் ‘ஆத்மத்தின்’ பொருளென்னவோ, குருதேவா?

சற்குரு: ஆத்மம் என்பது ஒவ்வொரு ஜீவனின் உள்ளே ஒளிர்கின்ற கடவுள் சக்தியே! சரீரம் கலைந்தாலும், மறைந்தாலும், இறைமையாய் எப்போதும் சாசுவதமாக ஒளிர்வதே ஆத்மமாவது! ஒவ்வொருவருள்ளும் இறைஜோதியாகத் துலங்கும் ஆத்மசக்தியை, அவரவரே உணர்ந்து, வெளிப்படுத்தி, மனிதன், தனக்கும், சமுதாயத்திற்கும் ஆன்மப் பூர்வமாகப் பயன்படுத்த உதவும் சாதனங்களே பூஜைகள், தியானம், ஆலய தரிசனம், ஆத்மவிசாரம், யோகம் போன்றவையாம்.

அடியார்: அப்படியானால் ஆத்மம் தோன்றி வந்த பாதையை நோக்கிச் செல்வதே ஆத்மவிசாரமா?

சற்குரு : ஆம்! உண்மையில் இதுதான் ஒவ்வொருவருடைய பிறவி லட்சியமே! மனித வாழ்வின் லட்சியத்தையும், உலக வாழ்வின் மகிமையையும் உணர உதவும் எளிய ஆன்ம சாதனமுமே ஆத்மவிசாரம்! ஆத்ம விசாரம் ஆயிரமாயிரம் வழிகளில் செயல்படும். எனவே ஆத்மவிசார வழிமுறைகளை, பலன்களை வெறும் வார்த்தை விளக்கங்களால் உணர்த்த இயலாது! அப்பர் சுவாமிகள், ‘கண்டேன் அவன் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்!’ என உரைப்பது போல, ஆத்ம விசாரத்தில் நன்கு ஆழ்ந்த நம்பிக்கையுடன் இறங்குவோர்க்குத் தான் வெறும் கண்களால், கண்டறியாதன பலவும் உட்கண்ணுக்குப் புலனாகும். பாமரர் முதல் பெரும் பதவி பூண்டோர் வரை யாவர்க்கும் இந்த இனிய இறை அனுபூதிகள் கிட்டுவதாகும்!

அடியார் : தன் வாழ்க்கை லட்சியத்தை அறியவும், இப்பரந்த உலக வாழ்வின் மகிமையை உணரவும், அனைத்தையும் அறிய, ஆத்மவிசாரம் ஆரம்ப ஆதாரப் படியாக ஆகி உதவுமா?

சற்குரு: ஆம், நிச்சயமாக உதவும்! பலரும் கலியுகத்தில் தத்தம் வாழ்வின் மகிமையை அறியாது ஏனோதானோ என்று வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவரவருக்கான தெய்வீக வாழ்க்கைக் குறிக்கோளை, அவரவராகவே உணர வைப்பதே ஆத்மவிசாரம்!

அடியார்: ஆத்ம விசாரத்தில் மனம் என்ன செய்கின்றது? அறிவு என்ன செய்கின்றது?

சற்குரு: மனிதன் என்பவன் உள்ளம், புத்தி, மனம், உடலாக விரிந்து இருக்கும் வடிவினன். மனம், புத்தி, உள்ளம் இவற்றை வகை பிரிக்கும் பகுத்தறிவு சக்தியை அளிப்பதாகவும் ஆத்மவிசாரம் துலங்குகின்றது! வெறும் அறிவால் மனம், புத்தி, உள்ளத்தைப் பகுத்துக் காண முடியாது! ஆறறிவு கூடிய முழுமையான பகுத்தறிவு, ஆத்மவிசாரத்தில்தான் தோன்றி, எழுந்து அறிவு, மனம், உள்ளம் யாதென வகை பிரித்துப் பரிணமித்துக் காட்டும்! அது வரையில் உலகில் பெருமளவில் மனிதன் மூன்றறிவு, நாலறிவு போன்று அரைகுறைப் பகுத்தறிவுடன் தான் வாழ்கின்றான்!

அடியார்: ஆத்மவிசாரம் என்பது எவ்வாறு மன உடலுக்கான உடற்பயிற்சி ஆகின்றது?

சற்குரு: வெளி உடல் போல, மனிதனுக்கு உள்ளேயும் பல சரீரங்களும் உண்டு. வெளி உடல் கொண்டு உள் சரீரங்களுடன் உரையாடும் ஒரு வழியும், மார்கமுமே ஆத்மவிசாரமாகும். எவ்வாறு உடற்பயிற்சியானது உடலுக்கு வலுவும், ஆரோக்கியமும் தருகின்றதோ, இதே போல மன உடலுக்கும், புற (வெளி) உடலுக்கும் ஆரம்ப நிலையில், மனத்தூய்மை, புறத்தூய்மை, மனசாந்தம், மனோசக்தி, நல்ஆரோக்யம் போன்றவை கிட்டிட ஆத்மவிசாரம் உதவுகின்றது. ஏனெனில் மனமும், புத்தியும் தாமே கலியுக மனித உடலை இயக்குகின்றன! மனம் ஓரளவேனும் அமைதியாக இருந்தால்தானே உணர்ச்சி வசப்படுதல், கோபம், அவசரம், பழிவாங்கும் எண்ணம், பகைமை, விரோதம் இல்லாமல் எதனையும், எந்தத் துன்பத்தையும், உடல்பூர்வமாகவும், மனோரீதியாகவும் வாழ்வில் சந்திக்க முடியும்.

மனத்தெளிவு தரும் ஆத்ம விசாரம்

அடியார்: அப்படியானால், ஆத்மவிசாரம் என்பது முதலில் ஆரம்பக் கட்டத்தில் மனதை அமைதிப்படுத்த உதவுமா?

சற்குரு: ஆம், முதலில் ஆத்மவிசாரம் மனத் தெளிவிற்கு உதவும் மிகவும் எளிமையான யோக, தியான சாதனமுமாக ஆகின்றது!

அடியார்: மனிதர்களின் மனம், அறிவு பலவகைப்படுவதால், வேறு எவ்வகையில் எல்லாம் ஆத்ம விசாரம் பற்றித் தாங்கள் விளக்கி உரைக்க முடியும்? ஏனெனில் பெரிய அறிவாளி முதல் படிக்காத பாமரர் வரை அனைவரும் ஆத்ம விசாரம் செய்தாக வேண்டும் அல்லவா! அனைவரும் ஒவ்வொரு வகையில், தத்தம் அறிவு நிலைகளுக்கு ஏற்ப, தங்களிடம் அறிந்து இதனைப் புரிந்து கடைபிடிக்கலாம் அல்லவா!

சற்குரு : நல்ல கேள்வி! ஆத்மவிசாரம் என்பது வெறுமனே படித்து, கேட்டு மட்டும் வருவதல்ல! தினமும் பயிலப்பட்டுப் பலன்களை அடைய வேண்டும். பல திசைகளில் இருந்தும் பலவகைத் துன்பங்கள் வரும் இக்கலியுகத்தில், நிச்சயமாக அனைவரும் படித்தவரோ, பாமரரோ, ஏழையோ, பணக்காரரோ தினமும் யாவரும் ஆத்மவிசாரம் செய்தே ஆக வேண்டும்.

தியானமும், யோகமும் எடுத்த உடனேயே ஆழப் பயில்தல் கடினம்! இவ்விரண்டையும் எளிமைப் படுத்தித் தருவதே ஆத்மவிசாரம்!

ஆத்ம விசார வழிமுறைகள்

உறங்கும் முன்னர் சிறிது நேரம், பகலிலோ, மாலையிலோ ஓய்வெடுக்கும் போது சிறிது நேரம், விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரம், அபிஜித் முகூர்த்த நேரம் எனப்படும் பகல் உச்சிப் பொழுது, மாலை சந்தியா வேளை போன்றவை ஆத்ம விசாரம் நன்கு அமையும் புனிதமான நேரங்கள், குறித்த நேரத்தில் தினமும் ஆத்ம விசாரத்தைப் பழகுதல் விசேஷமானது!

ஆத்ம விசாரம் என்றால்,