தியாகநாதன் தியாகராஜன் தியாகசீலன் சிவனே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தியாகராஜன் சிவனே

தியாகம் என்ற வார்த்தையை வாய் விட்டுக் கூறுவதை விட தியாகத்தை நடைமுறையில் நிகழ்த்திக் காட்டுவதே பெருமை. தியாகங்களுக்கு எல்லாம் தலைவனான சிவனே இத்தகைய அரிய செயலை நிகழ்த்தும் செயல் வீரனாக மலர்ந்திருப்பதே நாம் பெற்ற பேறு ஆகும். சிவபெருமானை நேரில் தரிசனம் செய்து அவன் கருணையை அனுபவிக்கும் அளவிற்கு நாம் தூய மனத்தை கொண்டவர்கள் இல்லையாதலால் எம்பெருமானே உத்தம சற்குருமார்கள் வடிவில் தோன்றி நம்மை அரவணைத்து இத்தகைய தியாக வைபவங்களை நமக்கு உணர்த்துகிறான். நம் சற்குரு, சேஷாத்ரி சுவாமிகள், மாதா அமிர்தானந்தா போன்ற மகான்களின் ஜாதகங்களில் தியாகத்தை உணர்த்தும் நவகிரகமான சனீஸ்வரன் லக்னத்தில் எழுந்தருளி இருப்பதே சாதாரண மனிதர்களும் இறைவனின் தியாகத்தை உணர வழிவகுப்பதாகும்.

ஸ்ரீவண்டார்குழலி அம்மன்
திருவாலங்காடு

சென்னை காஞ்சிபுரம் அருகிலுள்ள திருமால்பேறு சிவாலயம் இத்தகைய தியாகத் தலங்களுள் ஒன்றாக பிரகாசிப்பதாகும். சிவபெருமான் தன்னுடைய இட பாகத்தை பார்வதி தேவிக்கு அளித்தான், தன்னுடைய வல பாகத்தில் ஆயுதமாய் விளங்கிய சக்கராயுதத்தை பெருமாளுக்கு வழங்கினான், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து பெற்ற ஆலாலம் என்னும் கொடிய விஷத்தை அமுதமாக ஏற்று அருந்தி அதைத் தன் தொண்டையில் நிலை நிறுத்திக் கொண்டான். இந்த நஞ்சுண்டனின் தியாகத்திற்கு இணையாக வேறு எந்த தியாகச் செயலையாவது இணையாகக் கூற முடியுமா ?

இறைவனின் ஒரு அம்சமாக, ஒரு துளியாக பிரகாசிக்கும் நாம் கோடிக் கணக்கான உயிர்களுக்கு உதவி செய்யும் இறைவனாக மாற முடியாவிட்டாலும் ஒரு பத்துப் பேருக்காவது தினமும் ஏதோ நற்காரியம் செய்தோம் என்றும் மன நிறைவுடன் கூடிய வாழ்வை வாழ வழிகாட்டுபவரே நம் சற்குரு ஆவார். இதை குறிப்பால் உணர்த்துவதாகவே திருஅண்ணாமலை தசமுக தரிசனம் எதிரே ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தை நிறுவி கோடிக் கணக்கான கிரிவல அடியார்களுக்கு அன்னதான கைங்கர்யத்தை நிறைவேற்றி வந்தார் நம் சற்குரு. ஆனால், அன்னதானம் நடைபெறாத நாட்களில், தான் மட்டும் ஆஸ்ரமத்தில் தங்க வேண்டிய சூழ்நிலை வந்தால் அப்போது நம் சற்குரு ஏற்கும் உணவோ காலையில் பழைய சாதம் அல்லது ஓரிரண்டு ரொட்டித் துண்டுகள், மதியம் ஹோட்டலில் இருந்து பெறப்பட்ட சாதாரண சாப்பாடு, இரவில் மதியம் மீந்துபோன ஹோட்டல் சாப்பாட்டில் ஒரு பகுதி அல்லது இரண்டு வாழைப் பழங்கள் மட்டுமே.

இரவு உணவு ஏற்ற பின்னரும் மீதியாக சாதம் இருந்தால் அதைத் தூர எறிந்து விடுவது கிடையாது. அந்த சாதத்தில் நீர் ஊற்றி வைத்திருந்து மறுநாள் அதை ‘பழைய’ சாதமாக ஏற்பார் நம் சற்குரு. ஆனால், எந்த சாதத்தையும் சுவாமிக்கு நைவேத்யம் படைக்காமல் நம் சற்குரு ஏற்றதே கிடையாது, நைவேத்யம் என்பது நாம் சாப்பிடும் சாப்பாட்டை, அது எத்தனை நாட்களான பழைய பண்டமாக இருந்தாலும் சரி, இறைவனுக்குப் படைத்து நன்றி தெரிவிப்பதே ஆகும். ஒரு முறை சென்னையிலுள்ள சபை வீட்டிற்கு சென்றிருந்தார் ஒரு அடியார். அப்போது டீ தயாரித்து இறைவனுக்கு நைவேத்யம் படைக்காமல், அதை நம் சற்குருவிற்கு அளித்தார். அதைக் கண்ட நம் சற்குரு வெகுண்டெழுந்து, “யோவ், இது (சற்குரு) நாய்ய்யா...,” என்று தன்னைச் சுட்டிக் காட்டி, “இந்த நாய்க்கா டீ அளிக்கிறாய் ?” என்று கேட்டார். இறைவனுக்கு நைவேத்யம் அளித்தால் மட்டுமே சாதம், பிரசாதம் என்ற நற்குணத்தைப் பெறுகிறது. நைவேத்யம் செய்யப்படாத எந்த உணவும் வெறும் எச்சிலாகவே மதிக்கப்படுகிறது என்ற பேருண்மையை அந்த அடியார் நம் சற்குரு உபசேதமாக அன்று அறிந்து கொண்டார் என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ?

ஒரு சாதாரண நிகழ்ச்சி போல் தோன்றும் இந்த ‘பிரதோஷ’ பின்னணியில் அமைந்த குருவின் தியாகச் செயல் நம்மை மெய்சிலிர்க்க வைப்பதாகும். இங்கு அடியார் சுவாமிக்கு நைவேத்யம் படைக்காமல் தன் குருவிற்கு உணவை அளித்தார் என்றால் யாரைக் கடிந்து கொள்ள வேண்டும். தவறு செய்த அந்த அடியாரைத்தானே ? அதே சமயம் அந்த தவற்றை தான் ஒரு நாய் என்று கூறி அந்தத் தவற்றை தன் மேல் ஏற்றுக் கொள்வதால், சற்குருவே தன்னை நாய் என்று கூறுகிறார் என்றால் அந்த “நாய்க்கு” தேநீர் அளிக்கும் அந்த அடியார் யாரோ ? இதைத் தெளிவாக உள்ளத்தில் பதித்துக் கொண்டால் அந்த அடியார் அடுத்து பெற வேண்டிய எந்த தெய்வீக பாடமும் கிடையாது. இறை மார்கத்தில் முன்னேறும் அனைவரும் எளிதில் பெண்ணாசை, பொன்னாசையை விட்டு விடுவார்கள். ஆனால், இந்தத் தான் என்ற ஆசை அவர்களை விட்டுப் போவதற்கு எத்தனை பிறவிகள் தேவைப்படுமோ, அதை அந்த சற்குருவே அறிவார். இந்த ஆசையையும், அகம்பாவத்தையும் போக்கவல்லதே நம் சற்குருவின் மேலே குறிப்பிட்ட ’டீ போதனை’.

திருவாலங்காடு இறைவியின் திருநாமம் வண்டார்குழலி என்பதாகும். வண்டுகள் ஆர்ப்பரிக்கும் நறுமணமுடைய கூந்தலை உடைய நங்கை என்பது இந்த நாமத்தின் மேலோட்டமான பொருள். தேனைப் பெறுவதற்காக நறுமணமுடைய மலர்களைச் சுற்றித்தானே தேனீக்கள் ஆர்ப்பரிக்கும், அவ்வாறிருக்க அம்பாளின் கூந்தலைச் சுற்றி தேனீக்கள் ஆர்ப்பரிப்பதேன் ? சதா சர்வ காலமும் அம்பிகை இறைவனை தொழுது கொண்டே இருப்பதால் அம்பிகையின் குழலில் கமழும் நறுமணத்தை தாங்களும் ‘சுவைக்கவே’ தேனீக்கள் இவ்வாறு தேவியின் கூந்தலை மொய்க்கின்றன என்பதே வண்டார் குழலி அவதார இரகசியம். அகத்திய பிரான் போன்ற உத்தம ரிஷிகளே எம்பெருமானைச் சுற்றி சுற்றி வந்து தேனீக்கள் வடிவில் வழிபடும் சக்தி பெற்றவர்கள். உண்மையில் இத்தகைய மகரிஷிகள் ரீங்கார ஒலி பிரவாகத்துடன் இறைவனை வழிபடுகிறார்கள் என்பதை விட இறைவனிடமிருந்து சதாசர்வ காலமும் தோன்றிப் பிரகாசிக்கும் ரீங்கார ஒலிப் பிரவாகத்தை பிரபஞ்சம் முழுவதிற்கும் அளிக்கும் திருப்பணியை இத்தகைய உத்தமர்கள் ஆற்றிக் கொண்டு இருக்கிறார்கள் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் ஈங்கோய்மலை, வண்டார் குழலி இரகசியங்கள் ஆகும்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
திருவாலங்காடு

ஒரு முறை ரமண மகரிஷி சனிக் கிழமை அன்று எண்ணெய் தேய்த்து நீராடுவதற்காக ரமணாஸ்ரமம் அருகிலுள்ள ஒரு சுனைக்குச் சென்றார். அப்போது ஸ்ரீதட்சிணா மூர்த்தி மனித வடிவில் எழுந்தருளி உள்ள கல்லால மரத்திலிருந்து ஒரு பெரிய ஆல இலை அங்கு விழுந்து கிடப்பதைக் கண்டு தரிசித்த அவர், ஆல இலை கிடக்கிறது என்றால் கல்லால மரமும் இங்குதானே இருக்க வேண்டும், அந்த ஆலமரத்தைக் காண முடிந்தால் ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் நாம் தரிசிக்க முடியும் அல்லவா, என்ற எண்ணம் அவரை ஊக்குவிக்கவே அவர் தொடர்ந்து கல்லால மரத்தைத் தேடி விரைந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் கால் அருகிலுள்ள ஒரு தேனீக்கள் புற்றின் மேல் மோதி விடவே அந்தப் புற்றில் இருந்த தேனீக்கள் எல்லாம் வெளியே வந்து அவர் கால்களை ‘பதம்’ பார்த்து விட்டன. ஆனால், மகரிஷியோ சாதாரண மனிதனைப் போல் அங்கிருந்து ஓடி விடாமல் அனைத்து தேனீக்களும் தன்னைக் கடித்துக் களைப்படையும் வரை அங்கேயே அமர்ந்திருந்து விட்டு, பின்னரே மிகுந்த வலி, வேதனையுடன் தள்ளாடியவாறு ரமணாஸ்ரமம் அடைந்தார்.

இந்த நிகழ்ச்சியின் தொடர்பாக எத்தனையோ சித்த மகாத்மியங்கள் இருந்தாலும் இங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது இறை தரிசனத்திற்கு முன்னால் இறைவனின் ரீங்கார ஒலியாய் விளங்கும் வேத சக்திகளை குறைந்தது ஒரு லட்சம் அன்பர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டியதே என்பதாகும். இந்த திருப்பணியை தன் வாழ்நாளின் எஞ்சிய நாட்களில் சிறப்பாக நிறைவேற்றி அதன் பின்னரே திருஅண்ணாமலை ஸ்ரீதட்சிணா மூர்த்தி பெருமானின் தரிசனத்தைப் பெற்று மகிழ்ந்தார் ஸ்ரீரமண மகரிஷி என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் ரமண காதையாகும். இறைவனின் ரீங்கார வேத சக்திகளை பிரபஞ்சத்திற்கு அளிக்கும் திருப்பணியை வண்டார்குழலி, அகத்தியர் போன்றோர் நிறைவேற்றி வருகிறார்கள் என்பதையும் இந்த நிகழ்ச்சி சித்தரிக்கின்றது.

பூக்களில் உள்ள தேனை நேரிடையாக கிரகிக்கும் ஆற்றல் மனித உடலுறுப்புகளுக்கு கிடையாது. எனவே தேனீக்கள் பூக்களில் உள்ள தேனை உறிஞ்சி தங்கள் உமிழ் நீராலும், தங்கள் ஆறு கால்கள், இரண்டு இறக்கைகள் இவற்றில் தோன்றும் ரீங்கார சக்தியால் பதனப்படுத்தி மக்களுக்கு அளிக்கின்றன. இதேபோல்தான் மகரிஷிகள் என்போர் இறைவனிடமிருந்து தோன்றும் ரீங்கார சக்திகளை சாதாரண மக்களும் கிரகிக்கும் அளவிற்கு இவற்றை எளிமைப்படுத்தி அளிக்கின்றனர். திருவாலங்காடு, ஈங்கோய்மலை, திருஅண்ணாமலை போன்ற திருத்தலங்களில் இயற்றும் அனைத்து வழிபாடுகளுமே இத்தகைய ரீங்கார வேத சக்திகளை அவரவர் கிரகிக்கும் அளவிற்கு மாற்றித் தருகின்றன என்பதே நம்மை வியக்க வைக்கும் இரகசியங்களாகும்.

ஆழ்ந்த உறக்கமே ஆரோக்யம்

மனித ஆத்மாவுடன் நெருங்கிய தொடர்பு உடையது உணவு. உணவால் வளர்வது உடல், உணர்வால் வளர்வது ஆத்மா என்பது ஒரளவு உண்மை என்றாலும் உயர்ந்த எண்ணங்கள் உறைவதற்கு உடல் அவசியமே. எந்த அளவிற்கு எண்ணங்கள் ஆத்மாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொள்கின்றனவோ அந்த அளவிற்கு உடலும் வளரும். அதனால்தான் பெரியோர்கள் உடம்பை வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்கிறார்கள். இது பூத உடலை மட்டுமல்லாது சூக்கும சரீரங்கள் அனைத்தும் இணைந்து ஒன்பதாய் விளங்கும் மனித உடல் கூட்டைக் குறிக்கும். பகல் பொழுதில் எந்த அளவு ஒரு மனிதன் உடலை வருத்தி தன்னலமில்லாமல் உழைக்கின்றானோ அந்த அளவிற்கு இரவில் அவன் முழுமையான ஓய்வைப் பெற்று உடல் ஆத்மாவுடன் நெருங்கிய தொடர்பைக் கொள்ள ஏதுவாகிறது. இவ்வாறு உடலும் ஆத்மாவும் இணையும் இயற்கையான இணைப்பு தூக்க மாத்திரைகள் விழுங்கி தூங்க முயல்பவர்களுக்கு ஏற்படவே ஏற்படாது என்பதே உண்மை.

வானில் பொலியும் ஆலம்
கதிர்கள் திருவாலங்காடு

என்னதான் உணவு, உடற்பயிற்சி இவற்றால் உடலை வளர்த்தாலும் குறிப்பிட்ட வயதிற்கு மேல் உயரமும், பருமனும் அதிகமாகாது. அதே சமயம் சூட்சும சரீரத்தை மனிதன் எத்தனை ஆயிரம் மைல்களுக்கு வேண்டுமானாலும் பெருக்கி, பல உலகங்களையும் வியாபித்து நிற்கலாம். கௌதம புத்தருக்கு 30 மைல் விஸ்தீரணத்திற்கும், சத்ய சாய் பாபாவிற்கு ஒரு லட்சம் மைல்களுக்கும் இத்தகைய சூட்சும பிரவாகம் பெருகி இருந்தது. அதனால் சாய் பாபாவை விட புத்தரின் ஆன்மீக சக்தி குறைவாக இருந்தது என்ற குறுகிய கண்ணோட்டத்தில் இதை ஆராய்ந்து தவறான முடிவிற்கு வரக் கூடாது. இதற்காகவே மகான்கள் இத்தகைய புள்ளி விவரங்களை தருவது கிடையாது. மனித ஆத்மாவுடன் நெருங்கிய இந்த இரண்டு சேவைகளையும் நாற்பது ஆண்டுகளுக்கு மேல் நிறைவேற்றி அரும்பெருந் தொண்டு ஆற்றியவரே நம் சற்குரு ஆவார். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு சேவைக்கு வந்த அனைவரும் அனுபவித்த இந்த இரண்டு அற்புதமே, அதாவது தங்கள் வாழ்வில் சுவைத்திராத ஓர் அற்புத சாப்பாடு, தாங்கள் வாழ்வில் என்றுமே கண்டிராத ஒரு அமைதியான தூக்கம் இந்த இரண்டையும் எந்த தகுதியையும் பாராது வழங்கிய பெருமை நம் சற்குருவையே சாரும்.

ஒரு மனிதன் பல அரசாங்க சேவைகள் செய்து மரணம் அடைந்தால், அடுத்த பிறவியில் ஒரு நல்ல அரசு அதிகாரியாய் பிறப்பெடுப்பான். அந்த உயர்ந்த வேலையில் கிட்டும் மரியாதை, அந்தஸ்து இவற்றைத் தவறாக பயன்படுத்தினால் அதனால் பலவிதமான வேதனைகளை அவன் அதற்கு அடுத்த பிறவிகளில் அனுபவிக்க வேண்டி வரும், இதுவே மாயையால் விளையும் பிறவி தளைகள் ஆகும்.

அதே மனிதன் நம் சற்குருவின் ஆஸ்ரமத்தில் அன்னதானம் போன்ற திருப்பணிகளில் கலந்து கொண்டு தன் வாழ்நாளைக் கழித்திருந்தால் அவனுடைய புண்ணிய சக்திகள் அனைத்தையும் சற்குரு ஏற்று அவனுக்கு அடுத்த பிறவியில் ஒரு நல்ல வேலையை அளிப்பாரோ மாட்டாரோ என்பது தெரியாது என்றாலும் அவன் அடுத்த பிறவியில் உணவிற்கும், உடைக்கும், அதாவது எந்த அடிப்படைத் தேவைக்கும் பஞ்சமில்லாது வாழ்ந்து அவன் மேலும் மேலும் உயர்ந்த தெய்வீக நிலைகளை அடைவான் என்பது உறுதி. இதுவே ஆழ்ந்த உறக்கம் அளிக்கும் கர்மமில்லாப் பெருவாழ்வு. ஆழ்ந்த உறக்கத்தில் களையப்படும் கர்ம வினைகள் ஏராளம், ஏராளம், பெருகும் மன வளமும் உடல் வளமும் அதனினும் ஏராளம் ஏராளமே. அதனால் நகரங்களில் வாழும் அடியார்கள் குறைந்தது எட்டு மணி நேரமாவது ஆழ்ந்த உறக்கம் கொள்ள வேண்டும் என்று நம் சற்குரு சிபாரிசு செய்வார்கள்.

திருக்காரவாசல் திவ்யம்

தியாகராஜன் என்றாலே நம் நினைவிற்கு வருவது தியாகராஜ சபை அமைந்த திருவாரூர் திருத்தலம்தானே. இந்த திருச்சபைக்கு அருகில் அமைந்துள்ளதே திருக்காரவாசல் சிவத்தலமாகும். திருக்காறாயில் என்ற தேவாரப் பெயர் கொண்டது இத்திருத்தலம். இறைவன் சுயம்புநாதரான ஸ்ரீகண்ணாயிரநாதர், இறைவி ஸ்ரீகைலாச நாயகி. பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம் என்ற இரு தீர்த்தங்கள் அமைந்த அற்புத தலம். சேஷம் என்றால் சேடம், பாக்கி என்ற பொருட்கள் உண்டு. கர்ம வினை என்ற பாக்கியை முழுவதுமாக தீர்க்கக் கூடிய ஒரே தலம் திருக்காரவாசல் என்பதே இத்தலத்தின் பெருமையாகும்.

ஷோடச கங்கா
பள்ளி முக்கூடல்

இது சம்பந்தமான ஒரு சுவையான நிகழ்ச்சி. ஒரு முறை நம் சற்குரு ஒவ்வொருவரும் ஜபிக்க வேண்டிய சுயநாம ஜபம் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார். சுய நாமம் என்பது அவரவர் பெயரே என்றாலும் சிலருக்கு அவர்கள் தாய் தந்தையர் வைத்த பெயரைவிட அவர்கள் அன்புடன் செல்லமாக தங்கள் குழந்தைகளை அழைக்கும் பெயரே மிக்க சிறப்பு வாய்ந்தது என்பதால் அந்தப் பெயரையே தங்கள் சுயநாம ஜபமாக எடுத்துக் கொள்ளலாம் என்று அருளினார் சற்குரு. அப்போது ஒரு அடியார் தன்னுடைய பாக்கியநாதன் என்ற பெயரை சுருக்கி, பாக்கி பாக்கி என்று தன்னுடைய தாய் அழைப்பதாகவும் அதையே தன்னுடைய சுய நாமமாக எடுத்துக் கொள்ளலாமா என்று கேட்டார். நம் சற்குரு தனக்கே உரிய தெய்வீக புன்னகையுடன், “நீயே உன் அம்மா அப்பாவிற்கு பாக்கியாக வந்து தோன்றியவன்தானே, அப்படி இருக்கும்போது நீயும் பாக்கி பாக்கி என்று கூறி ஜபித்தால் எப்போது இந்த 'பாக்கியை' தீர்க்க முடியும் ?” என்று அர்த்தமுள்ள கேள்வியைக் கேட்டார். “நீ யாருக்கும் பாக்கியாக இருக்க வேண்டாம், நாதன் என்று இறைவனின் நாமத்தை எடுத்துக் கொள்,” என்று தொடர்ந்து அறிவுறுத்தினார் நம் சற்குரு. சேஷம், பாக்கி என்ற நாமங்களுக்கே இத்தகைய மகிமைகள் உண்டு என்றால் இந்த பாக்கியைத் தீர்க்கும் தீர்த்தத்தையே கொண்ட திருக்காரவாசல் திருத்தலம் எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். தீர்த்தம் என்றால் தூய்மை என்ற பொருளும் உண்டு. கண் ஆயிரம் என்றால் சேடம் போன்ற ஆயிரமாயிரம் தீர்த்த சக்திகளை உடைய சுயம்பு மூர்த்தியே திருக்காரவாசல் இறைவன் ஆவார்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
பள்ளி முக்கூடல்

என்னதான் ஒரு மருந்து உடலுக்கு ஊட்டம் தரக் கூடிய சிறப்புடன் திகழ்ந்தாலும் அதை உடல் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை என்றால் அந்த மருந்தால் எந்த பயனும் விளையப் போவதில்லை. இது பற்றியே ஆயுர்வேத வைத்தியர்கள் எந்த உடல் நோயாக இருந்தாலும் முதலில் உடல் உறுப்புகளை பேதி, வாந்தி போன்ற முறைகளால் சுத்தம் செய்து அதன் பின்னரே தேவையான மருந்துகளை அளிப்பார்கள். அதுபோல் ஒருவன் பிரம்ம ஞானத்தைப் பெற எவ்வளவு முயற்சிகள் எடுத்தாலும் உடலும் மனமும் உள்ளுமும் தூய்மை அடையவில்லை என்றால் அவனுக்கு எந்தவிதமான ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படாது என்பதைக் குறிப்பதே பிரம்ம தீர்த்தக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீகடுக்காய் விநாயகரின் தெய்வீக வழிகாட்டுதல் ஆகும். எனவே முதலில் திருக்காரவாசல் திருத்தலத்தில் நாம் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீகடுக்காய் விநாயகர் என்பது இப்போது தெளிவாகின்றது அல்லவா? உலகத்திலுள்ள அனைத்து அடியார்களும் பிரம்மஞானம் பெற அவர்களை ஊக்குவித்த நம் சற்குரு, காலை இஞ்சி, மதியம் சுக்கு, இரவு கடுக்காய் என்ற காய கல்ப சஞ்சீவி மருந்துகளை தொடர்ந்து ஏற்குமாறு கூறியதன் இரகசியம் இப்போது புலனாகின்றதே. கடுக்காய் உடல், மனம், உள்ளம் என்ற மூன்றிலும் படியும் அசுத்தங்களை நீக்கி தூய்மைப்படுத்தும் தெய்வீக இயல்பு உடையது. பிரம்ம தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டு, முடிந்தால் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இத்தீர்த்தத்தில் நீராடி பின்னர் ஸ்ரீகடுக்காய் விநாயகரை வழிபடுவது மிகவும் சிறப்புடையதே.

திருக்காரவாசல் அருகிலுள்ள தலமே திருப்பள்ளி முக்கூடல் என்பதாகும். இங்குள்ள தீர்த்தம் ஷோடச கங்கா என்று புகழப்படுவது. கங்கையை விட பதினாறு மடங்கு பலன் தர வல்லது என்பது இதன் பொருள். ஜடாயு முக்தி பெற்ற திருத்தலம். முதலில் திருப்பள்ளி முக்கூடல் ஷோடச கங்காவில் நீராடி, பின்னர் திருக்காரவாசல் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி இறுதியாக திருவாரூர் திருத்தலத்தில் திகழும் கமலாலயம் தீர்த்தத்தில் நீராடுவதையே பிரம்ம முக்கூடல் தீர்த்த நீராடல் என்றவாறு முற்காலத்தில் பல பெரியோர்களும் நிறைவேற்றி வந்தார்கள். குறிப்பாக ராம பிரான், மூர்க்க ரிஷி, சுந்தர மூர்த்தி நாயனார், முற்காலத்தில் ஜடாயு இத்தகைய நீராடலை இயற்றியே பல உன்னத நிலைகளை அடைந்தனர்.

திருவாரூர் திருத்தலத்தை அலங்கரிக்கும் தெப்பக்குளம் கமலாலயம் என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் திருத்தலம் மூலட்டானம் என்று புகழப்படுகிறது. இந்த இரண்டு நாமங்களை வைத்தே திருவாரூர் சிறப்பை சாதாரண மக்களும் உணர்ந்து கொள்ளலாமே. மூலாதாரம் என்ற சக்கரத்தில் துலங்கும் கனலால், ஆயிரம் இதழ்களை உடைய சக்தி கொண்ட இறைவனை நம் இதயத்தில் தரிசிக்க துணைபுரிவதே திருவாரூர், பள்ளி முக்கூடல், திருக்காரவாசல் போன்ற திருத்தலங்களில் இயற்றும் தீர்த்த வழிபாடு என்பதே இந்த திருத்தலங்களின் தீர்த்தங்கள் சுட்டும் தெய்வீக இரகசியங்கள் ஆகும்.

குக்குடாசனம்

கலைமகளும் மலைமகளும் காணா மலரடிகள் நிலமகள் தோய நடந்து சென்றான் என்று எம்பெருமான் சிவன் சுந்தர மூர்த்தி நாயனாருக்காக பரவை நாச்சியாரிடம் தூது சென்ற அழகை வர்ணிக்கின்றனர் பெரியோர். எம்பெருமானே பரவை நாச்சியாரிடம் தூது செல்லும் முகமாக திருவாரூர் வீதிகளில் திருநடனம் பயின்றார் என்றால் இது இங்குள்ள தீர்த்த சக்திகளை சாதாரண மக்களும் பெறும் பொருட்டும் இங்குள்ள வீதிகளில் தன் திருப்பாதங்களைப் பதித்து நடந்து சென்றார் இறைவன் என்பதே திருவாரூரைச் சுற்றியுள்ள தீர்த்தங்களின் சிறப்பாகும்.

திருக்காரவாசல் திருத்தலத்தில் நடராஜப் பெருமான் குக்குட நடனம் என்ற இறை நடனத்தை ஆடி உலக மக்களுக்கு அருள்புரிகின்றார். குக்குடாசனம் என்பது பூமியின் புவியீர்ப்பு சக்திக்கு எதிராக செயல்படுவது என்பது ஒரு மேலோட்டமான பலனாகும். குக்குடம் என்பது சேவல் கோழியைக் குறிக்கும். சேவல் காலையில் பிரம்ம முகூர்த்தத்தில் கொக்கரக்கோ என்று கூவி துயில் எழுப்புவதை நாம் அறிவோம். உண்மையில் கொக்கரக்கோ என்றால் வெற்றி உண்டாகட்டும் என்று பொருள். இவ்வாறு இரவில் தோன்றிய, பெருகிய எதிர்மறை சக்திகள் மறைந்து அனைவரும் விஜய சக்தியைப் பெறட்டும் என்று முருகப் பெருமானின் வாகனம் நமக்கு ஆசி அளிக்கிறது என்றால் இந்த ஆசியைப் பெற்று நம் உடல் நாளங்கள் அனைத்தும் வளமாக வேண்டும் என்றால் நாம் அதற்கு முன் நீராடி உடல் முழுவதும் விபூதி அணிந்து விளங்க வேண்டும் என்பதும் நமது நித்தியக் கடமைகளில் ஒன்றல்லவா.

காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் திருக்காரவாசல் பிரம்மதீர்த்தத்தில் நீராடி உடல் முழுவதும் 36 இடங்களில் விபூதி அணிந்து தீர்த்தக் கரையில் உள்ள ஸ்ரீகடுக்காய் பிள்ளையார் முன் குக்குடாசனம் இட்டு வணங்குதல் சிறப்பாகும். மூச்சை மெதுவாக உள்ளிழுத்து குக்குடாசனத்தில் அமர்ந்து ஓம் ஸ்ரீரவியே நமஹ என்று 12 முறை ஓதி சகஜ நிலைக்கு திரும்ப வேண்டும்.

ஸ்ரீபிரமோத விநாயகர்
திருக்காரவாசல்

மீண்டும் முன் போல் குக்குடாசனத்தில் அமர்ந்து மந்திர ஜபத்தை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு 12 சுற்றுகள் நிறைவேற்றுதலால் கண் பார்வை தீர்க்கம் பெறுவது மட்டுமல்லாது நம் கற்பனையைக் கடந்த பல ‘குக்குட சக்திகளை’ நாம் பெற முடியும். இத்தகைய ஆசன வழிபாடுகளை நிறைவேற்ற முடியாதவர்கள் பிரம்ம தீர்த்தத்தில் நீராடி திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை குறைந்தது 108 முறை வலம் வந்து வணங்குவதாலும் குக்குட சக்திகளைப் பெறலாம். தேனில் ஊறிய அத்திப் பழங்களை அடியார்களுக்கு தானம் அளித்தலாலும் இத்தகைய குக்குட சக்திகளைப் பெறலாம் என்பது நம் சற்குரு நமக்காகப் பரிந்துரைக்கும் ஒரு வழிபாட்டு முறையே.

ஒரு முறை திருச்சி தாயனூர் கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமிற்கு வருகை தந்த சற்குரு அங்கு மேய்ந்த சில கோழிகளைப் பார்த்துத்தான் மேற்கூறிய விஷயங்களை தம் அடியார்களுக்குத் தெரிவித்தார். கோழிகள் மேயும்போது தங்கள் மூன்று பாத விரல்களால் மண்ணை, சேற்று நிலங்களை கீறி அப்போது வெளியாகும் பல புழு பூச்சிகளைக் கொத்தி கொத்தி உண்ணுவதாக நமக்குத் தோன்றும். உண்மையில் அப்போது வெளி வரும் பூச்சிகளில், கிருமிகளில் ஒன்றே ஒன்று நம் சுவாசத்தில் கலந்தாலும் போதும், அது ஒரு மனிதனுடைய உயிரைப் போக்கி விடும் அளவிற்கு நச்சுத் தன்மை உள்ளது. எனவே ஒரு கோழி ஒரு நாளில் செய்யும் இந்த துப்புரவு பணியை ஒரு மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் கூட ஓடி ஓடி உழைத்தாலும் நிறைவேற்ற முடியாது என்று கோழிகளின் சுத்திகரிக்கும் பணியைப் புகழ்ந்து கூறுவார் நம் சற்குரு. சூரியனிடமிருந்து பெறப்படும் செஞ்சோலை கதிர்களால்தான் கோழிகள் இந்த நோய்க் கிருமிகளை இனங் கண்டு கொள்கின்றன என்பதும், அந்த செஞ்சோலை கதிர்களே கோழிகளுக்கு எந்த வியாதியும் அண்டாதவாறு பாதுகாக்கின்றன என்பதும் இறைவனின் படைப்பு இரகசியங்களில் ஒன்று. அதனால்தான் கோழிகளை அடைத்து வைக்காமல் அவை சூரிய செஞ்சோலை கதிர்களைப் பெறும் வகையில் திறந்த வெளியில் உலாவ விடுவார்கள். அதே சமயம் இத்தகைய கொடுமையான கிருமிகளை உண்ணும் கர்ம வினைக் காவலாளிகளாய்ப் படைக்கப்பட்டுள்ளதால் கோழி மாமிசத்தை நாம் உண்ணக் கூடாது என்பது முக்கியம் என்பார் நம் சற்குரு.

சிவராஜ குருராஜ யோக சங்கமம்

நவகிரக வழிபாடு என்பது புதன், குரு, சுக்கிரன் என்ற மூன்று சுப கிரகங்களை வழிபடுவதாக ஆதியில் அமைந்திருந்தது. பின்னர், இத்துடன் சனீஸ்வரன், செவ்வாய் கிரகங்கள் இணைய அது ஐந்து கிரக வழிபாடாக மலர்ந்து, அதன் பின்னர் இத்துடன் சூரியன், சந்திரன் என்ற கிரகங்கள் இணைய, அதைத் தொடர்ந்து ராகு, கேது என்ற சாயா கிரகங்கள் இந்த வழிபாட்டில் இணைய தற்போது நாம் அனுசரிக்கும் ஒன்பது கிரக, நவகிரக வழிபாடாக மாறி விட்டது. பல திருத்தலங்களிலும் நவகிரகங்கள் வழிபாட்டிற்கு எழுந்தருளாமல் இருப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமே. சுயம்பு சிவ மூர்த்தியான ஸ்ரீகண்ணாயிர நாதர் எழுந்தருளி இருக்கும் சிவத்தலத்தில் தோன்றிய ஸ்ரீகடுக்காய் விநாயகர் இவ்வாறு ஐந்து கிரகங்கள் வழிபாடு தோன்றிய காலத்தில் வழிபடப் பட்டவர் என்றால் இவருடைய தொன்மை எத்தகைய சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இக்காரணம் பற்றியே வரும் 28 பிப்ரவரி 2022 அன்று தோன்றும் ஐந்து கிரக சங்கமத்தில் வழிபட வேண்டிய மூர்த்தியாக சித்தர்கள் இவரை அருளியுள்ளனர்.

ஸ்ரீகண்ணாயிரநாதர்
திருக்காரவாசல்

பிப்ரவரி 28 திங்கட்கிழமை அன்று ஐந்து கிரகங்கள் மகர ராசியில் சங்கமிப்பதையே சித்தர்கள் சிவராஜ குருராஜ யோக சங்கமம் என்று அழைக்கின்றனர். சூரியனும் குருவும் கும்பராசியில் எழுந்தருள மற்ற சந்திரன், செவ்வாய், புதன், சுக்கிரன், சனீஸ்வரன் என்ற ஐந்து கிரகங்களும் மகர ராசியில் எழுந்தருள்கின்றனர். இந்த கிரக சங்கமத்தை சுபம், அசுபம் என்ற ஒரே வார்த்தையில் கூற முடியாது என்பதே இந்த கிரக சங்கமத்தின் தன்மையாகும். காரணம், மகர ராசியில் தோன்றும் இந்த ஐந்து கிரக சங்கமத்துடன் கும்ப ராசியில் உள்ள இரண்டு கிரகங்களுடன் சேர்ந்து இந்த ஏழு கிரகங்களுமே ராகு கேது என்ற கால சர்ப்ப யோகத்தின் ‘பிடியில்’ சிக்கிக் கொண்டு இருப்பதாகும். நமக்கு ஆறுதல் அளிக்கக் கூடிய ஒரே விஷயம் இந்த கிரக சங்கமம் சிவராஜ யோகத்தின் 12வது வீடான மகர ராசியில் நிகழ்வதால் சிவராஜ யோகத்தில் தோன்றிய பகவான் கிருஷ்ணரின் மாயா விநோத சக்திகள் நமக்கு நிச்சயம் நன்மையை அளிக்கும் என்பதே. பகவான் கிருஷ்ணர் பிறந்த குழந்தையாக இருக்கும்போதே அவரை கூடையில் வைத்து வசுதேவர் யமுனை ஆற்றின் வெள்ளப் பெருக்கைக் கடந்து சென்று கொண்டிருந்தபோது யமுனையைத் தன் திருப்பாதங்களால் தீண்டி யமுனா தேவிக்கு அளவில்லா ஆனந்தம் அளித்தான் அல்லவா ? அத்தகைய கருணைக் கடலான பகவான் தன்னுடைய அடியார்களுக்கு அருள் புரிய மாட்டாரா என்ன ?

நீர் ராசியான மகரத்தில் நீர் கிரகங்களான சந்திரன், சுக்கிரன், சனீஸ்வரன் எழுந்தருளி இருப்பதால் தீர்த்த வழிபாடு இந்த யோக சங்கமத்தில் முக்கியத்துவம் பெறுகின்றது. திருக்காரவாசல், திருப்பள்ளி முக்கூடல், திருவாரூர் என்ற மூன்று தலங்களுமே பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம், ஷோடச கங்கா, கமலாலயம் என்ற தீர்த்தங்கள் நிறைந்து விளங்குவதால் இந்த தீர்த்தங்களில் நீராடி நாம் எத்தகைய கிரக தோஷங்களையும், கர்ம வினைகளையும் இந்த யோக சங்கம நாட்களில் தீர்த்துக் கொள்ளலாம். எந்த வழிபாட்டிற்கு முன்னும் நாம் நீராடுவது வழக்கம் என்றாலும் ஒரு வருடத்தின் முக்கிய பண்டிகையாக வரும் சிவராத்திரி தினத்திற்கு முன் தினம் இத்தகைய தீர்த்த நீராடலை மேற்கொள்வதால் பெருகும் பலன்களை வாய்விட்டு வர்ணிக்கத்தான் இயலுமா ? ஆம், சிவராஜ குருராஜ யோக சங்கம தினமான 28 பிப்ரவரி திங்கட் கிழமைக்கு அடுத்த நாளான மார்ச் 1, செவ்வாய்க் கிழமை மகா சிவராத்திரி தினமாக அமைவது நம் பூலோக மக்கள் பெற்ற பெரும் பாக்கியமே. எனவே இந்த சிவராத்திரி திருநாளையும் திருக்காரவாசல் திருத்தலத்தில் கொண்டாடி மகிழ்வதால் கிட்டும் பலன்கள் அமோகமே.

பிரம்மதீர்த்தம்
திருக்காரவாசல்

தங்கம், வெள்ளி, பித்தனை, செம்பு என்று அவரவர் வசதிக்கு ஏற்ப தீர்த்தக் குடங்களில் மேற்கண்ட திருக்குளங்களில் கிட்டும் தீர்த்தத்தால் திருக்காரவாசல் ஸ்ரீகண்ணாயிர நாதருக்கு சிவராத்திரி தினத்தன்று அபிஷேகம் இயற்றுவது வாழ்வில் ஒரு முறையே கிடைக்கும் பாக்யம் ஆகும். கால சர்ப்ப யோகம் என்பது ஒரு புறம் இருக்க, சனி ராசிகளான மகர, கும்பத்தில் ஏழு கிரகங்களும் சங்கமித்து இருக்கும்போது ஸ்ரீகண்ணாயிர நாதருக்கு தீர்த்த அபிஷேகம் இயற்றுவது என்பது கற்பனைக்கு எட்டாத பல பலன்களை வர்ஷிக்க வல்லதாகும். இந்த வழிபாட்டில் திகழும், பூர்ணமாகும் நேத்ர சக்திகள் கோடி கோடியே. திருக்காரவாசல் ஈசன் ஸ்ரீகண்ணாயிர நாதர் என்றால் திருப்பள்ளி முக்கூடல் ஈசன் ஸ்ரீதிரிநேத்ர சுவாமி ஆவார். திருவாரூர் ஈசனோ புற்றிடங் கொண்டவன், அதாவது ஆயிரமாயிரம் புற்றுக் கண்களை உடையவன். நேத்ரம் என்பது முகத்தில் இருக்கும் கண் மட்டும் அன்று யோனிக் கண்ணும் கண்ணே. தவறான சிந்தனையுடன் அடுத்தவன் மனைவியை நினைத்த இந்திரன் யோனிக் கண்களைத்தானே ‘பரிசாக’ பெற்றான். எத்தகைய தவறான காமத் தவறுகளும், காம சிந்தனைகளும் பிராயசித்தம் பெற வழிவகுக்கும் சிவராத்திரி வழிபாடு இதுவாகும்.

ஸ்ரீகடுக்காய் விநாயகர்
திருக்காரவாசல்

மேலும் காமம் என்பது பெண்கள் மேல் உள்ள ஆசை மட்டும் அன்று, பொன், பொருள் என அடுத்தவர் உடைமை மேல் கொள்ளும் தகுதியற்ற அனைத்து ஆசைகளுமே காமம் ஆகும். இந்த தகுதிக்கு மீறிய, தகுதியற்ற ஆசைகளையும் களைந்து நன்னெறிப்படுத்துவதே வரும் சிவராத்திரி அன்று மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். காறாயில் என்றால் திட்டு திட்டாக படியும் கருமை என்று பொருள். மாயையால் விளையும் இத்தகைய வினைகள் எல்லாம் காறாயில் ஆகும். அத்தனை வினைகளுக்கும் காமம் என்பதே அடிப்படை காரணமாக அமைவதால் காறாயில் களையும் ஈசனே திருக்காரவாசல் ஸ்ரீகண்ணாயிர நாதர் ஆவார். பலரின் உடலின் மேல் திட்டு திட்டாக கருமைத் தோல் தோன்றும். இது எந்த மருத்துவத்திற்கும் கட்டுப்படாது. மனதில் படியும் ‘காறாயில்’ எண்ணங்களே இந்தக் கரிய நிறத்திற்கு காரணமாக அமைவதால் எந்த மருத்துவத்தாலும் இதைக் குணப்படுத்த முடியாது. இதைக் களையும் ஒரே வழிபாடே திருக்காரவாசல் திருத்தலத்தில் இவ்வருடம் சிவராத்திரி அன்று நிறைவேற்றும் அபிஷேக ஆராதனைகளாகும். மக்களைத் தொடரும், துன்புறுத்தும் தொற்றுநோய் பீதிகளும் காறாயில் எண்ணங்களே. இதைக் களைவதும் கண்ணாயிர நாதர் வழிபாடே.

கௌதம முனிவரால் சபிக்கப்பட்ட இந்திரன் முதலில் வழிபட்ட திருத்தலமே திருக்காரவாசல் ஆகும். சிவராத்திரி தினத்தன்று சப்தரிஷிகளை, வானத்தில் தெரியும் சப்தரிஷி மண்டலத்தை தரிசித்தவாறே இத்தலத்தை வலம் வருதல் அரிதிலும் அரிய பாக்யமே. சிவராத்திரி தினம் மட்டுமல்லாது மற்ற நாட்களிலும் இத்தகைய வழிபாடுகளை இயற்றி பலன் பெறலாம்.

திரிநேத்ரம் என்றால் முக்கண் சக்தி, வலது இடது கண்கள் மட்டுமல்லாது நெற்றியின் நடுவில் திகழும் மூன்றாம் கண் என்று நாம் சாதாரணமாக பொருள் கொள்வது. மூன்றாம் கண் என்பது நடந்தது, நடந்து கொண்டிருப்பது என்று அல்லாமல் நடக்கப் போவதையும் பார்க்கக் கூடியதாகும், தெரிவிப்பதாகும். அப்படியானால், கண்ணாயிரம், ஆயிரம் கண் சக்திகள் என்ன அருளும் ?

சேஷ தீர்த்தம்
திருக்காரவாசல்

நிகழ்காலம், கடந்தகாலம், எதிர்காலம் என்ற காலக் கோட்பாட்டை கடந்து நிற்பவையே இந்த கண்ணாயிர சக்திகள். தொடர்ந்து திருக்காரவாசல் திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றிக் கொண்டிருந்தால் இந்த காலம் கடந்த சக்திகளையும் நாம் பெற முடியும் என்பது உறுதி. தூய்மையே அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதால் இந்த அனைத்தையும் கடந்த தூய மனத்தை அளிப்பவரே ஸ்ரீகடுக்காய் விநாயகர். திருக்காரவாசல் திருத்தலத்தில் அருளும் ஸ்ரீகடுக்காய் விநாயகரே அனைத்து ‘கண்’ சக்திகளுக்கும் மூலப் பெருமானாக அமைகிறார்.

‘கடுக்காய் கொடுத்தல்’ என்றால் ஏமாற்றுதல் என்பது நாம் சாதாரணமாக கொள்ளும் பொருள். இவ்வாறு சனீஸ்வரனுக்கே ‘கடுக்காய் கொடுத்தவரே’ பிள்ளையார் என்பதால் ஸ்ரீகடுக்காய் விநாயகர் வழிபாட்டால் ஏழு கிரகங்களுக்கும், ஒன்பது கிரகங்களுக்குமே நாம் ‘கடுக்காய் கொடுக்க’ முடியும், தெய்வீக முறையில்.

திருக்காரவாசல் திருத்தலத்தைச் சுற்றி சப்த விடங்கத் தலங்கள் அமைந்துள்ளன. விடங்கம் என்றால் சூட்சுமம், மறைபொருள் என்று அர்த்தம்.

1. திருக்காரவாசல்
2. திருக்குவளை
3. திருவாய்மூர்
4. திருமறைக்காடு
5. திருவாரூர்
6. திருநள்ளாறு
7. திருநாகைக்காரோணம்
என்ற ஏழு திருத்தலங்களே நடராஜப் பெருமான் குக்குட நடனம் போன்ற நடனங்களை பிரபஞ்ச உயிர்களின் நன்மைக்காக ஆடி அருள்புரிந்த தலங்களாகும். இத்தலங்களில் எல்லாம் நடராஜப் பெருமான் அல்லாது தியாகராஜன் என்ற இறைவனின் நாட்டிய உருவமும் அமைந்திருக்கும். ஒரு சதுர்யுக காலத்திற்கு இத்தகைய விடங்கத் தலங்களில் வழிபட்டாலும் இந்த விடங்க இரகசியங்களை குருவருள் இன்றி ஒரு அணுவும் அறிய முடியாது என்பதே இந்த நாட்டியக் கோலங்களின் நற்சுவையாகும். இந்த நாட்டியத் தலங்களுக்கெல்லாம் ஆதி விடங்கத் தலமாக அமைந்ததே திருக்காரவாசல் திருத்தலமாகும். திரு கார் ஆ இல், திரு கார் ஆ வாசல் என்றெல்லாம் இத்தலத்தை பிரித்து கொள்வதால் இத்தலத்தில் மிளிரும் விடங்க சக்திகளை நாம் புரிந்து கொண்டு நல்லருள் பெற ஏதுவாகும்.

ஸ்ரீவிஷ்ணு துர்கை
திருக்காரவாசல்

பிரமோதம் என்றால் ஆனந்தம், மகிழ்ச்சி என்று பொருள். வளர்ந்த மனிதன் எதையாவது, எந்த சுகத்தையாவது, அதாவது பொருள், வசதி என்பதைப் பெற்றால்தான் மகிழ்ச்சி அடைவான். குழந்தையோ எந்த சுகத்தையும் பெறா விட்டாலும் எதைக் கண்டும் மகிழ்ச்சி அடையும் தன்மை உடையது. இந்த குழந்தைத்தனமான ஆனந்தமே பிரமோதம் என்பதாகும். இத்தகைய ஆனந்தத்தை ஒரு மனிதன் எந்த அளவிற்கு அனுபவிக்கின்றானோ அந்த அளவிற்கு அவனுக்கு ‘வயது’ ஆகாது, அதாவது உடல் முதிர்ச்சி அடையாமல் எப்போதும் ஆரோக்யமாகவே இருப்பான் என்பதையே ஸ்ரீபிரமோத விநாயகர் துதிக்கையில் உள்ள சுருக்கம் போன்று துலங்கும் அமிர்த ரேகைகள் நமக்குத் தெளிவுபடுத்துகின்றன. மனிதர்களுக்கோ அவர்கள் எந்த அளவிற்கு பிரச்னைகளை எதிர்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் நெற்றியில் சுருக்கம் விழும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் ஆயுள் இரகசியமாகும். நமது இலவச மருத்துவ முகாமில் பங்கு பெற்ற டாக்டர்கள் (வைத்தியர்கள்) சந்திக்கும், சந்தித்த உடல் ரீதியான, மன ரீதியான, ஆயுளைக் குறைக்கும் வேதனைகளை கோடிட்டுக் காட்டி அவர்களுக்கும் ‘வைத்திய சிகிச்சை’ அளித்தவரே நம் சற்குரு என்பதை சற்குருவின் அருகில் இருந்து இந்த வைத்தியநாத லீலைகளை இரசித்த அடியார்கள் இன்றும் நினைவு கூர்வர். நம் சற்குரு நம்முடன் தூல உடலில் இல்லாவிட்டாலும் வைத்தீஸ்வர லோகத்தைச் சேர்ந்த ஸ்ரீவைத்தியம்பெருமான் என்ற சித்தர் ஸ்ரீபிரமோத விநாயகர் அருகிலேயே எழுந்தருளி இருந்து பக்தர்களின் ஆரோக்கிய பிரச்னைகளை எல்லாம் சீர்செய்கிறார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் கார வைத்யநாத மகாத்மியமாகும்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருக்காரவாசல்

பொதுவாக இடது காலைத் தூக்கி ஆடும் நடராஜ கோலமே நாம் எங்கும் தரிசிப்பதாக இருந்தாலும் மதுரை திருத்தலத்தில் பாண்டிய மன்னனுக்காக வலது காலைத் தூக்கி ஆடிய நடராஜ கோலத்தையும் நாம் தரிசித்து உள்ளோம். இம்முறையில் அபூர்வமாக தன்னுடைய வலது இடது காலை மாற்றி மாற்றி ஆடும் நடராஜப் பெருமானின் கோலத்தை திருக்காரவாசல் திருத்தலத்தில் தரிசிக்கலாம். மார்கழி மாத திருவாதிரை ஆருத்ரா உற்சவத்தின் போது வலது காலையும், மாசி மாத பிரம்மோற்சவத்தில் இடது காலையும் தூக்கி ஆடும் நடராஜக் கோலத்தை பக்தர்கள் அபூர்வமாக தரிசிக்கக் கூடிய திருத்தலமே திருக்காரவாசல் ஆகும். இதன் பின்னணியில் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் இருந்தாலும் இந்த கால் மாற்றும் இரகசியங்கள் காற்று மாறும் இரகசியங்களைக் குறிப்பவையே. ஆகாத பெண்டாட்டி கால் பட்டால் குற்றம் என்று இந்தக் காற்று இரகசியத்தை பெரியோர்கள் வர்ணிப்பார்கள். நம் சற்குரு, மாதா அமிர்தானந்தா போன்ற மகான்களின் செய்கைகளைக் கூர்ந்து கவனித்தால் எப்படி கால் கட்டை விரல்களின் அசைவைக் கொண்டே தம்மை சந்திக்க வரும் பக்தர்களின் துயர்களைத் துடைக்க இந்த காற்று சேஷ்டையை பயன்படுத்துகிறார்கள் என்ற அதிசயத்தை நாம் தரிசிக்கலாம். வலது மூக்கில் சுவாசம் நிலை பெறுவதால் இது சூரிய கலையை திரப்படுத்தும். பெரும்பாலும் சூரிய கலையை திரப்படுத்தும் முகமாகவும் சாதாரண மனிதர்கள் இந்தக் கால் கட்டை விரல் குணப்பாடுகளை மேம்படுத்தி ஆரோக்ய சூழ்நிலைகளை உருவாக்கிக் கொள்ளலாம் என்பதும் ஒரு ‘காற்று’ இரகசியமே.

ஸ்ரீரங்கராஜன் இதயத்தில்
தியாகராஜன் திருக்காரவாசல்

எம்பெருமான் சதாசர்வ காலமும் விதவிதமான நடனங்களை ஆடிக் கொண்டே இருந்தாலும் தகுதி உள்ளவர்களே இத்தகைய நடனங்களை முதலில் தரிசனம் செய்யும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். இம்முறையில் திருக்காரவாசல் திருத்தலத்தில் எம்பெருமானின் குக்குட நடனத்தை முதன் முதலில் தரிசிக்கும் பேறு பெற்றவரே சிவபெருமானின் ஆதிபக்தனான பெருமாள் ஆவார். இவ்வாறு பெருமாள் தன் இதயத்தில் பெற்ற நடராஜ தரிசனத்தையே மதில் சித்திரமாக இத்திருத்தலத்தில் அடியார்கள் தரிசனம் செய்து பலன் பெறலாம். இதய நோய்களும், இரவில் தூக்கம் வராது படுக்கையில் புரண்டு கொண்டு இருப்போர்களும் இந்த தரிசனத்தைப் பெற்று சாரைப் பருப்பு, குங்குமப்பூ கலந்து காய்ச்சிய பசும்பாலை தானம் அளித்து வந்தால் இதய நோய்கள் தீர்வதுடன், இரவில் நல்ல உறக்கத்தையும் பெற முடியும். பெருமாள் தன் இதயத்தில் தரிசனம் செய்த எம்பெருமானின் குக்குட நடன தரிசனத்தை மற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்க, இந்த தரிசனத்தைப் பெற்ற ஆதிசேஷனின் கண்கள் குடம் குடமாய் ஆனந்தக் கண்ணீரைச் சொரிந்தனவாம். அந்த ஆனந்தக் கடலில் மூழ்கிய ஆதிசேஷன் எழுந்தருளிய தலமாதலால் இது சேஷ தீர்த்தம் பொலியும் தலமாக பிற்காலத்தில் பிரசித்தி பெற்றது.

திருக்காரவாசல் திருத்தல சேஷ, பிரம்ம தீர்த்தங்கள் விசேஷமான குணப்பாடுகளைக் கொண்டவை. இந்தத் தீர்த்தங்களின் சக்திகளை உணர விரும்பும் பக்தர்கள் சேஷ தீர்த்தத்தை ஒரு முறையும் அதன் குசா சக்தி பெருகும் வகையில் பிரம்ம தீர்த்தத்தையும் வலம் வருதல் சிறப்பாகும். ஒன்றின் குசா இரண்டு, மூன்றின் குசா ஆறு என்பது நீங்கள் அறிந்ததே. எனவே சேஷ தீர்த்தம் அமைந்துள்ள எம்பெருமான் திருக்கோயிலை ஒரு முறை வலம் வந்தால் கடுக்காய் விநாயகர் அமைந்துள்ள பிரம்ம தீர்த்தத்தை இருமுறை வலம் வர வேண்டும். ஸ்ரீபிரமோத விநாயகர், ஸ்ரீகடுக்காய் விநாயகர் என்ற இந்த இரண்டு விநாயக மூர்த்திகளுக்கு இடையே உள்ள தலவிருட்சமான பலா மரம் ஆயுள் விருத்தியை தருவதுடன் பிரம்ம தீர்த்தக் கரையில் தம்பதி சகிதமாக ஸ்ரீகடுக்காய் பிள்ளையார் எழுந்தருளி உள்ளதால் தம்பதிகளுக்கு இடையே உள்ள எத்தகைய பிரச்னைகளையும் இந்த பிரதட்சிணங்கள் சுமுகமாகத் தீர்த்து வைக்கும் என்பதே இந்த குசா பிரதட்சிணங்களின் சிறப்பாகும்.

ஆயுள் விருத்தி பலா
திருக்காரவாசல்

ஒவ்வொரு பலா மரத்திற்கும் ஒரு சிறப்பு இருப்பது போல் பிரம்ம தீர்த்தக் கரையில் உள்ள இந்தப் பலா ஆயுள் விருத்தி பலா என்ற சிறப்புப் பெயரைப் பெறுகிறது. இத்தகைய விருத்தி அனுகிரக சக்திகளை அளிப்பதே ஸ்ரீபிரமோத விநாயகர் துதிக்கையில் உள்ள அமிர்த ரேகைகளாகும். இந்த ஆயுள் விருத்தி பலாவை வலம் வந்து தேனில் ஊறிய அத்திப் பழங்களை தானமாக அளிப்பதால் நோய் நொடிகளற்ற நீண்ட ஆயுளைப் பெறலாம். இந்த வருடம் அடியார்கள் அளிக்க வேண்டிய தானத்திற்கு உரிய சிறப்பான தேன் பற்றிய விளக்கங்களை உரிய சற்குருவிடம் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளவும். ஆயுள் மட்டும் அல்லாது அக்கா, அண்ணன் போன்ற உறவுகளில் தோன்றும் பிளவுகளையும் சீர்செய்வது இந்தப் பலாவின் தனித்தன்மை ஆகும். ஔவைப் பிராட்டி இத்தலத்திற்கு ஸ்ரீபிரமோத விநாயகரைத் தரிசனம் செய்ய வந்தபோது இந்தப் பலாவை அக்கண்ணா பலா என்று வாழ்த்தி சிறப்பித்தாராம். அதுவே அக்கா அண்ணா பலாவாக பிற்காலத்தில் மாறியது.

ஆண் பெண் என்ற உடற்கூறு நிலைகள் மனிதப் பிறவி வரை மட்டுமே நிலைத்திருக்கும். அடுத்து வரும் நிலைகளில் எல்லாம் இவை தத்துவமாகவே பொலியும். இந்த தத்துவ நிலைகளை அறிய உதவி செய்யும் திருத்தலமே திருக்காரவாசல் ஆகும். இத்தல தியாகராஜப் பெருமான் மார்கழி மாதத்தில் வலது காலை உயர்த்தியும், வைகாசி மாதத்தில் இடது காலை உயர்த்தியும் ஆடும் நடனங்களில் இந்த தாத்பர்யங்கள் விளக்கப்படுகின்றன. மார்கழி மாதம் ஒற்றைப்படை மாதமாக ஆண் சக்தியுடன் விளங்குவதும், வைகாசி மாதம் இரட்டைப்படை மாதமாக பெண் சக்தியுடன் துலங்குவதும் இந்த தத்துவத்தை உறுதி செய்யும். இந்த தத்துவ இரகசியங்களை தெளிவாகப் புரிந்து கொண்டால்தான் இத்தல மகிமைகளைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும்.

ஸ்ரீசூரிய பகவான்
திருக்காரவாசல்

இதற்கு உறுதுணை செய்வதே ஆரம்பக் காலப் பயிற்சியாக இத்தலத்தில் உறையும் சூரிய பகவானையும் முக்காலங்களை உணர்த்தும் பைரவ மூர்த்திகளையும் முறைப்படி வழிபடுவதாகும். இத்தல ஈசனுக்கு வலப் புறத்தில் உறையும் சூரிய பகவானை முதலில் தரிசனம் செய்து, பின்னர் கோயில் வெளியில் திகழும் ஆயுர் விருத்தி பலாவை ஒன்பதின் மடங்காக வலம் வந்து வணங்கி, இறுதியாக ஸ்ரீகண்ணாயிர நாதரை தரிசனம் செய்வதே சித்தர்கள் பரிந்துரைக்கும் வழிபாட்டு முறையாகும். முக்காலத்தை உணர்த்தும், முக்காலங்களைக் கடந்து செல்லும் வழிபாட்டு முறையை பக்தர்கள் நிகழ்த்தி தீர்க்க தரிசன அறிவைப் பெருக்கிக் கொள்ளும் தலமே இது என்றாலும் இந்த அறிவை விருத்தி செய்து கொள்ள நிகழ்காலத்தில் துலங்கும் நவகிரகங்களின் அறிவு, வழிபாடு அவசியம் என்பதால் இந்த இரண்டு சக்திகளும் இந்த வழிபாட்டில் இணைவதே நம்மை பிரமிக்க வைப்பதாகும். பலா மரம் என்பது உத்திராட நட்சத்திரத்திற்கு உரியது என்பதும், உத்திராட நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரியது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய அடிப்படை ஜோதிட விளக்கங்களே.

ஸ்ரீநடராஜப் பெருமான்
திருக்காரவாசல்

இது தொடர்பான புராண விளக்கமும் சுவையானதே. நவகிரகங்கள் அனைத்தையும் தான் சிம்மாசனத்தில் அமரும் முன் மிதித்து செல்லும் படிகளாக்கி நவகிரகங்களை அவமதித்த ராவணனின் அடாத செய்கையைக் கண்டு வருந்திய நவகிரகங்கள் நாரத மகரிஷியிடம் தங்கள் வேதனையை எடுத்துக் கூறின. நாரதரும் நாராயண மூர்த்தி ராம அவதாரம் எடுத்து அவர்களுக்கு அனுகிரகம் புரிவார் என்பதை தீர்க தரிசனமாக உணர்ந்ததால் அந்த நல்ல காலம் கனியும் வரை ராவணன் தீய செயல்களைச் செய்து தன்னுடைய புண்ணிய சக்திகளை கரைப்பதற்கான ஒரு ‘நல்ல’ சந்தர்ப்பத்தை வழங்கினார். நாரதரின் அறிவுரைப்படி நவகிரகங்களை மல்லாக்க படுக்க வைத்து அவர்கள் மேல், அவர்கள் நெஞ்சை மிதித்து நடந்து சென்றான் ராவணன். இதனால் சனி கிரகத்தின் நேர் பார்வை ராவணனைத் தாக்க ராம பிரானின் பாணத்தால் உயிர் பறி போகும் நிலை பெற்றான் பின்னர் ராவணன்.

இவ்வாறு நவகிரகங்கள் அனைத்தும் சனி பகவானை நோக்கும் அபூர்வ நிலையில் எழுந்தருளி உள்ளதை பக்தர்கள் தரிசிக்கக் கூடிய திருத்தலமே நாகைக்காரோணம் என்னும் நாகப்பட்டினம் திருத்தலமாகும். இவ்வாறு நவகிரகங்கள் புடை சூழ நாகையை அடைந்த சனீஸ்வர மூர்த்தி இத்தலத்தில் அபூர்வமாக தன் திருப்பாதங்களை முன் நீட்டி அமர்ந்திருக்கும் திருமகளை செந்தாமரை மலர்களால் அர்ச்சித்து வணங்க திருமகளின் இதயத்தில் குடியிருக்கும் பெருமாள் ராமாவதாரம் ஏற்று ராவணனை சம்ஹாரம் செய்தார் என்பதே நாமறிந்த ராமாயண சுவையாகும். இவ்வாறு திருக்காரவாசலில் சூரிய பகவானை தரிசனம் செய்த பின்னர் நாகப்பட்டின திருத்தலத்தல் எழுந்தருளி உள்ள நவகிரகங்களையும், நவகிரக நாயகரான சனீஸ்வர பகவானையும் திருமகளையும் தரிசனம் செய்தலால் எத்தகைய நவகிரக வேதனைகளும் தாக்காமல் நல்வாழ்வு வாழலாம் என்பதே திருக்காரவாசல் திருத்தலமும் நாகைக்காரோணமும் இணைந்து வழங்கும் அனுகிரகமாகும். கார் ஓணம் என்றால் கார் வண்ணனுக்குரித்தான ஓணம் மாதமான தை என்பதும் ஒரு பொருளே.

ஸ்ரீகாலபைரவ மூர்த்திகள்
திருக்காரவாசல்

திருக்காரவாசல் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள மூன்று பைரவ மூர்த்திகள் நிகழ்காலம், கடந்த காலம், எதிர்காலம் என்ற மூன்று காலங்களுக்கு உரிய மூர்த்திகள் என்றாலும் கடந்த காலம், எதிர்காலம் என்ற காலத்தின் வினைகள் நிகழ்காலத்தில் சங்கமமாவதால் நம் சற்குரு போன்ற மகான்கள் அனைவரும் நிகழ்காலத்திற்கே முக்கியத்துவம் அளித்து நிகழ்காலம் பற்றிய சிந்தனைகளுக்கே, செயல்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும்படி வலியுறுத்துகிறார்கள். நிகழ்காலம் ஒன்றே சாஸ்வதம் என்பதே மகான்களின் அறிவுரை. கடந்த காலத்தில் ஒருவன் எவ்வளவு பணக்காரனாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒருவன் மிகப் பெரிய பணக்காரனாக மாறுவான் என்ற கனவாலும் சாதிக்கக் கூடியதுதான் என்ன ? கையில் இருக்கும் ஒரு காய்ந்த ரொட்டிதான் அவனுடைய தற்போதைய பசியை தீர்க்கக் கூடியது என்பதே மாதா அமிர்தானந்தாவின் அறிவுரை.

ஒரு முறை நம் சற்குருவின் அடியார் ஒருவர் தன்னுடைய குடும்பத்தைத் துறந்து செல்லத் துணிந்தார். அதை அறிந்த நம் சற்குரு, “நைனா, பாக்கி தீராமல் உன்னுடைய எந்த முயற்சியும் பலனளிக்காது ...”, என்று கூறி அவருடைய தவறான செயலைக் கடிந்து கொண்டார். ஒரு மனிதன் இந்தப் பிறவியில் உள்ள அனைத்து பாக்கிகளையும் தீர்க்க வழிகாட்டுவதே சேஷ தீர்த்தம் அமைந்துள்ள திருக்காரவாசல் ஆகும். பாக்கி தீர்ந்தால்தான் பிரம்ம ஞானம் சித்திக்கும், தித்திக்கும். இதுவே சேஷ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் இடையே அமைந்துள்ள மூன்று பைரவ மூர்த்திகளின் அனுகிரகங்களில் ஒன்றாகும். சேஷ பிரம்ம என்ற இரு தீர்த்த நாமங்களை கூட்டினால் அது இவ்வருடத்திற்கு உகந்த ஆறு எழுத்துக்களுடன் பொலிவது ஒரு யதேச்சையான இணைப்பு அல்ல என்பதும் அடியார்களுக்கு சுவையளிக்கும் ஒரு விஷயமே. மகான்களைப் பொறுத்தவரை எதிர்காலம், நிகழ்காலம், இறந்தகாலம் என்ற வேறுபாடு கிடையாது. இந்த வேறுபாடுகளைக் கண்டு மயங்குபவர்கள் மனிதர்களே. இந்த வேறுபாடுகள் நம்மை ‘பயமுறுத்தும்வரை’ நாம் நிச்சயமாக திருக்காரவாசல் திருத்தலத்தில் எழுந்தருளிய பைரவ மூர்த்திகளை வழிபட்டே ஆகவேண்டும்.

ஸ்ரீசர்ப்பாபரண கணபதி
நாகப்பட்டினம்

வரும் 28.2.2022 அன்று நிகழும் சிவராஜ குருராஜ சங்கம தினத்தன்று வழிபட வேண்டிய திருத்தலமாக திருக்காரவாசல் திகழ்ந்தாலும் இதன் பின்னணியாக வழிபட வேண்டிய திருத்தலங்களுள் ஒன்றே சப்தவிடங்கத் தலங்களுள் ஒன்றான நாகப்பட்டினம் ஆகும். நவகிரகங்கள் அனைவரும் சனீஸ்வரன் தலைமையில் நாகப்பட்டினம் திருத்தலத்தில் அருள்புரியும் திருமகள் தேவிக்கு பாதபூஜைகளை இயற்றினர் அல்லவா ? எந்த பூஜைக்கும் முன்னோடியாக திகழ்வது கணபதி பூஜை என்றாலும் நாகப்பட்டினம் திருத்தலத்தில் ஸ்ரீசர்ப்பாபரண கணபதி நாகங்கள் அணிந்து எழுந்தருளி இருப்பதால் ஸ்ரீநாகாபரண கணபதி மூர்த்தி தொற்று நோய்கள் பீடிப்பால் மனம் தளர்ந்து, உடல் வாடிக் கிடக்கும் கலியுக மக்களுக்கு எல்லாம் ஒரு வரப் பிரசாதமாக திகழ்கின்றார். ஸ்ரீநாக கணபதியின் உடல் வியாபகத்தில் மொத்தம் 20,45,253 நாக தேவதைகள் எழுந்தருளி இருப்பதாக சித்தர்கள் தெரிவிக்கின்றனர். இது என்ன கணக்கு என்று உங்களுக்குத் தோன்றும் அல்லவா ? ஒரு வருடத்திற்கு ஒரு தீபம் என்று ஏற்றினால் 2023 வருடங்களுக்கு வரக் கூடிய மொத்த தீபக் கணக்கே 2045253 என்பதாகும். இவ்வாறு ஒரு லட்சம் வருடத்திற்கு ஒரு தீபம் என்ற கணக்கில் 21 தீபங்களை ஏற்றி வழிபடும் முறையையே நம் சற்குரு நமக்காக தம் தபோ பலனால் சுருக்கி அளித்துள்ளார் என்பதே இந்த தீப வழிபாட்டின் பின்னணியில் அமைந்துள்ள குரு கருணையாகும். 1994ம் ஆண்டு உலகம் முழுவதும் உயிரைப் பறிக்கும் ப்ளேக் நோய் கண்டு வருந்தியபோது நம் சற்குரு நாகாபரண கணபதி வழிபாட்டை அளித்தார் என்பதை அடியார்கள் அறிந்திருக்கலாம். ப்ளேக் என்ற தொற்று நோய் மட்டுமல்ல, காலசர்ப்ப தோஷம் என்ற கடுமையான தோஷத்தால் உலகம் முழுவதும் தற்போது உள்ள நிலைபோல் பாதிக்கப்பட்டாலும் அந்நிலையிலும் இவ்வுலகை பீதி, அச்சம், நோய்களின் தாக்குதல்களிலிருந்து காக்கக் கூடியதே சர்ப்பாபரண கணபதி வழிபாடாகும். ‘வீங்கிள வேனில்’ காலமான மாலை நேரத்தில் ஸ்ரீசர்ப்பாபரண கணபதி மூர்த்தியை ஒன்பதின் மடங்காக வலம் வந்து வணங்குதலால் அற்புத நோய் நிவாரண சக்திகளை மக்கள் பெறலாம். வீங்கு இள வேனில் என்ற வார்த்தைகள் சுட்டும் பொருளை உணர முடிந்தால் எந்த நோயுமே மக்களைத் தீண்டாது என்பதே இத்தல விநாயகர் அளிக்கும் அனுகிரகங்களுள் ஒன்றாகும். நாம் சர்ப்பாபரண கணபதி மூர்த்தியை வலம் வரும் போது நமக்கும் சூரிய பகவானுக்கும் இடையே பிரகாசிக்கும் வேனில் சக்திகள் கணபதி மூர்த்தியின் பெருங்கருணையால் வீங்குகின்றன, பெருகுகின்றன. பெருகிய இந்த நோய் எதிர்ப்பு சக்திகளே நமக்கு அச்சம், பீதி போன்ற காரணமில்லாத மனக் கிலேசங்களையும் நம்மிடமிருந்து அகற்றுகின்றன. தொடர்ந்த வழிபாட்டால் மட்டுமே பக்தர்கள் இந்த அனுகிரகத்தை அனுபவிக்க முடியும்.

சிவராஜ யோக தீபம்

நாகப்பட்டிணம் சிவாலயம்
(கதை கூறும் தண்ணீர்)

வரும் சிவராஜ யோக தினத்தில் பக்தர்கள் வழிபாட்டிற்கு உதவும் முகமாக ஒரு தீப வழிபாட்டை நம் சற்குரு அளித்துள்ளார். ஒரு நல்ல பாம்பு தரையில் ஊர்ந்து செல்லும்போது தரைக்குக் கீழ் உள்ள நீரின் மட்டம் ஒரு அடிக்கு உயரும் என்பது நாக சாஸ்திரம். அதே போல் அமிர்த சக்திகளை ஈர்க்கவல்ல மகான்கள் ஓரிடத்தில் நிலைகொள்வதால் அங்கு வியாபிக்கும் அமிர்த சக்திகளின் வியாபகம் பற்றி அந்தந்த மகான்களே விவரிக்க இயலும் என்றாலும் நம் சற்குருவால் செறிவூட்டப்பட்ட இங்கு நீங்கள் காணும் துவாதச செந்தாமரை சக்கரம் எத்தனையோ வியாதிகளைத் தீர்க்கவல்ல ஔஷத சக்திகளை அளிக்கவல்லதாகும். இந்த சக்கரத்தை பச்சரிசி மாவால் வரைந்து கொண்டு அதில் உள்ள 12 தாமரை தளங்களையும், திருவாசியையும், மஞ்சள், சிவப்பு, நீலம் என்ற வண்ணப் பொடிகளால் அல்லது பொன் அரளி, விருட்சிப்பூ, நீலோத்பலம் மலர்களால் அலங்கரித்து 21 தீபங்களை ஏற்றி படத்தில் காட்டியபடி வைத்து அலங்கரித்து வழிபடுதல் நலம். வழிபாட்டிற்காக தீபசோதிக் கும்மி பாடலை ஓதுவதும் ஏற்புடையதே. நடுவில் உள்ள மூன்று தீபங்களும் கிழக்கு திசையை நோக்கிப் பிரகாசிக்க வேண்டும் என்பது முக்கியம். திருஅண்ணாமலையில் இத்தகைய சுயம்சோதி சக்கரங்களின் பின்னணியில் பல தீபங்கள் ஏற்றப்பட்டு பிரகாசித்தபோது அந்த தீபங்களின் மேலே விளங்கிய மின் விசிறிகள் மின்சாரம் இல்லாமல் தாமே சுழன்றதைக் கண்டு நேரில் அனுபவித்து பரவசம் அடைந்த அடியார்கள் இன்றும் நம்மிடையே பலர் உண்டு. நாம் நினைப்பது போல் வெறும் நூறு அடிகளை மட்டும் தாண்டிப் பிரகாசிப்பவை இந்த தீபக் கதிர்கள் அல்ல, எத்தனையோ லட்சம் மைல்கள் தாண்டி நோய் நிவாரண சக்திகளை செறிவூட்ட வல்லவையே இத்தகைய ‘நாகாபரண’ கதிர்கள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் சித்த மகாத்மியமாகும். ராமநாதபுரத்தில் திருப்புல்லாணி திருத்தலத்தில் ராமபிரான் தர்ப்பாசயனத்தில் ‘உறங்கி’ தர்ப்பண சக்திகளை எல்லாம் இப்பிரபஞ்சத்திற்கு தாரை வார்த்து அளித்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அதே போல் நீங்கள் இங்கு காணும் பத்ம தளங்கள் அமைந்த படுக்கையில் ஓரிரவு ‘உறங்கி’ நாகாபரண சக்திகளை உலக நன்மைக்காக தாரை வார்த்து அளித்தவர் நம் சற்குரு என்பதே நமக்குப் பெருமை ஊட்டும் செய்தியாகும்.


திருமகளுக்கு பாதபூஜை இயற்றும் நவகிரக மூர்த்திகள் நாகப்பட்டினம்

28.2.2022 அன்று ஏழு கிரகங்களும் கால சர்ப்ப யோகத்தில் சிக்கித் தடுமாறினாலும் மதியம் சுமார் ஒரு மணிக்கு திருக்காரவாசல் திருத்தலத்தில் மேற்கண்ட முறையில் தீபங்கள் ஏற்றியோ அல்லது அவரவர் இல்லத்தில் தீபங்கள் ஏற்றியோ இங்கு அளித்துள்ள தீபக்கும்மி பாடலை வாய்விட்டு இசைத்தலால் இந்த கிரகங்கள் அளிக்கும் நற்பலன்களை மட்டும் அடியார்கள் பெற ஏதுவாகும். அரிதிலும் அரிதாக திருக்காரவாசல் திருத்தலத்தில் மட்டுமே நடராஜப் பெருமான் வருடத்தில் இரு முறை தன் நடனக் கோலத்தை மாற்றுகிறார் என்பதை அறிவீர்கள். அதாவது வலது, இடது தூக்கிய பாதங்களை மாற்றி நடனமாடுவதையே குஞ்சித பாத குக்குட சக்திகள் அர்ப்பணம் என்று சித்தர்கள் கால் மாறும் இரகசிய அழகை வர்ணிக்கிறார்கள்.

குக்குட நடனத்தில்
ஸ்ரீதியாகராஜர் திருக்காரவாசல்

கால்களை மாற்றுவது மட்டுமல்லாமல் தன் கால்களில் திகழும் குருகார்ணவம் என்ற சிலம்புகளையும் மாற்றும்போது அவை அந்தரத்தே சில குக்குட அம்பல விநாடிகளுக்கு நிரவி நிற்கும். இந்த அபூர்வ குக்குட அம்பல விநாடிகள் மேற்கண்ட முகூர்த்த நேரத்தில் நிரவி நிற்பதால் இதை தமக்கும், தம் குடும்பத்தினருக்கும், சமுதாயத்திற்கும் நிரவும் அற்புத சேவையை நிறைவேற்றுவதற்காகவே மேற்கண்ட வழிபாட்டை நிறைவேற்றும்படி நம் சற்குரு தெரிவிக்கிறார்.

ஸ்ரீநடராஜப் பெருமான்
நாகப்பட்டினம்

அபூர்வமாக திருக்காரவாசல் திருத்தலத்தில் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்ற மூன்று காலத்தைக் குறிக்கும் பைரவ மூர்த்திகள் எழுந்தருளி இருப்பது மட்டுமல்லாமல் மூன்று நடராஜ மூர்த்திகளும் இத்தலத்தில் எழுந்தருளி இருப்பது என்றால் இது கலியுக மக்களின் பெரும் பேறுதானே. நடராஜப் பெருமான், தியாகராஜர், கல் நடராஜர் என்று மூன்று நடராஜ மூர்த்திகள் எழுந்தருளி உள்ள அற்புத திருத்தலமே திருக்காரவாசல் ஆகும். காலை கடம்பர் (குளித்தலை கடம்பர்கோயில்), மதியம் வாள்போக்கி (ஐயர்மலை ஈசன்), அந்தி ஈங்கோய்நாதர் (திருஈங்கோய்மலை ஈசன்) என்பதாக சிவ மூர்த்தங்களை தரிசித்தால் அவர்கள் முக்தி என்னும் பெருநிலையை அடைவார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. நம் சற்குருவோ இருந்த இடத்திலிருந்தே முக்தியைப் பெறும் எளிதான முறையை திருக்காரவாசல் திருத்தலத்தில் பெற்றுத் தரவல்லவர் என்றால் அவர்தம் பெருமைதான் என்னே ? ஆம், காலை நடராஜப் பெருமான், மதியம் தியாகராஜப் பெருமான், அந்தி கல் நடராஜர் என்ற சிவ மூர்த்தங்களை தரிசனம் செய்து உரிய வழிபாடுகளை இயற்றினால் கைமேல் முக்தி என்று முக்தியை உள்ளங்கையிலேயே வழங்குகிறார் எம் அண்ணல்.

தேங்காய் எண்ணெய், அதில் பாதி அளவு நல்லெண்ணெய், அதில் பாதி அளவு இலுப்பெண்ணெய் இவற்றுடன் மல்லிகை மணத்தை ஒரு சில துளிகள் சேர்த்து சூடு பறக்கும் வண்ணம் கல் நடராஜ சிலா மூர்த்திக்கு தேய்த்து அபிஷேகம் இயற்றி, மணமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபடுதலால் பக்தர்களின் குடும்ப வாழ்க்கை மணம் பெறும். பலருடைய வாழ்க்கையில் திகழும் குழப்பமான சூழ்நிலைகள் படிப்படியாக தீர்வடையும். அபூர்வமாக நாகப்பட்டினம் திருத்தலத்தில் அருள்புரியம் திருமகள் தேவியை இரண்டு யானைகள் அபிஷேகம் இயற்றும் வண்ணத்தில் தரிசிக்கிறோம் அல்லவா?

ஸ்ரீநீலநந்தி நாகப்பட்டினம்

ஸ்ரீநீலாயதாட்சி அம்பாள்
நாகப்பட்டினம்

இந்த யானைகளுக்கு உள்ள நான்கு தந்தங்கள் மோத தந்தங்கள் என்று அழைக்கப்படும். ஒவ்வொரு காரியத்திலும் மறைந்துள்ள பிரச்னைகளை உடனே கிரகிக்கும் சக்தியை அளிக்கவல்லவையே இந்த மோத தந்தங்கள் ஆகும். நாகப்பட்டினம் திருத்தலத்தில் திருமகளுக்கு வழிபாடுகளை இயற்றி தரிசித்த பின்னர் திருக்காரவாசல் திருத்தலத்தில் உள்ள கல்நடராஜ மூர்த்தியை தரிசித்தலால் இந்த மோத சக்திகள் பெருகி பக்தர்களின் வாழ்வில் வெற்றியைத் தேடித் தரும். திருமணம், வேலை வாய்ப்பு, ஆரோக்யம் என்ற எந்த பிரச்னையாக இருந்தாலும் அதில் உள்ள சிக்கல்களை மனித மனம் புரிந்து கொள்ளும் அளவிற்கு, கிரகிக்கும் அளவிற்கு எளிமைப்படுத்தி தருபவையே லட்சுமி கடாட்சமாக அருளப்படும் இந்த மோத சக்திகள் ஆகும்.

வரும் சிவராஜ யோக நாள் அன்று சர ராசியான மகர ராசியில் ஐந்து கிரகங்களும், திர ராசியான கும்பத்தில் இரண்டு கிரகங்களும் துலங்குவதால் இந்த நவகிரகங்கள் அருளும் நற்பலன்களைப் பெறுமுகமாக 28.2.2022 அன்று விடியற்காலை முதல் இரவு வரை சிவ சிவாயநம என்று ஜபித்துக் கொண்டே இருத்தல் நலம். வழிபாடுகள், உடல் சுத்தி நேரம் தவிர மற்ற நேரம் எல்லாம் இந்த மந்திரங்களை ஜபித்தலால் கிரக சஞ்சாரங்களால் தோன்றும் எத்தகைய எதிர்மறை சக்திகளையும் உடலும் உள்ளமும் ஏற்காது அவை பாதுகாக்கப்படும் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும்.

ஸ்ரீவேல்நெடுங்கண்ணி அம்மன்
சிக்கல்

குருகார்ணவம் என்ற ஏழெழுத்து சிலம்பு சக்திகள், சிவ சிவாயநம என்ற ஏழெழுத்து பீஜாட்சரங்களால் ஈர்க்கப்பட்டு ஏழு கிரகங்கள் கூட்டும் எதிர்மறை எண்ணங்களை முறியடித்து பக்தர்களுக்கு அனுகிரக கிரணங்களை வர்ஷிக்கும் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் குரு அனுகிரகமாகும். இதைக் குறிப்பதாகவே முக்கோண வடிவத்தில் மூன்று தீபங்கள் கிழக்கு திசையை நோக்கி அமைந்துள்ளன. இதுவே அடிப்படை ஸ்ரீசக்கரம், ஸ்ரீவித்யா வழிபாடும் ஆகும்.

நாகப்பட்டினம் சிவாலயத்தில் அம்பாள் ஸ்ரீநீலாயதாட்சி முன்னுள்ள நந்தியெம்பெருமான் இறைவியைப் பார்க்காது தன் கழுத்தை வலப் பக்கம் திருப்பி தரிசனம் அளிக்கும் காட்சியைக் காணலாம். அம்பிகையின் கருவண்டு போன்ற நீலக் கண்களின் பிரகாசம் தாங்க முடியாமல் சுவாமி தன் கண்களைத் திருப்பிக் கொள்கிறார் என்பது இத்தலத்தில் கூறப்படும் சுவையான ஒரு வரலாறே. அம்பிகை நீலாயதாட்சிக்கும், தன் பாதங்களை பாத பூஜை அனுகிரகத்திற்காக வைத்திருக்கும் திருமகளுக்கும் தன் தலையைத் திருப்பி சதா சர்வ காலமும் பாத பூஜை இயற்றுகிறார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியமாகும். வருங்காலத்தில் குழந்தைகள் தங்கள பெற்றோருக்கும், மனைவிமார்கள் தங்கள் கணவன்மார்களுக்கும், சீடர்கள் தங்கள் குருநாதர்களுக்கும் பாத பூஜை இயற்றுவது மறைந்து போகும் என்பதால் இதை ஈடுசெய்யும் முகமாகவே நந்தி மூர்த்தி இவ்விரு தேவிகளுக்கும் பாத பூஜை இயற்றி வருகிறார். பெற்றோர்களை, குறிப்பாக தங்கள் தாய்மார்களை உணவு, உடை இன்றி தவிக்க விட்டவர்கள், அநாதை விடுதிகள், முதியோர் காப்பகங்களுக்கு அனுப்பியவர்கள் இத்தல ஸ்ரீநீலாயதாட்சி அம்மனுக்கும், ஸ்ரீலட்சுமி தேவிக்கும் சுத்தமான குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுவதால் தங்கள் தவறுகளுக்கு உரித்தான தக்க பிராயசித்த வழிமுறைகள் குருவருளால் காட்டப் பெறும். பெற்றோர்களை தவிக்க விடுதல், குருவை அவமதித்தல் என்பதெல்லாம் எளிதில் பிராயசித்தம் கிட்டாத தவறுகள் என்றாலும் நம் சற்குருவால் மனம் கனிந்து அளிக்கப்படும் வழிகாட்டுதலே தவிர, இதுவே பிராயசித்தம் நல்காது என்பதை நினைவில் கொள்ளவும்.

பொதுவாக, ஆண்களின் கண்கள் செவ்வரி ஓடியும், பெண்களின் கண்கள் கருவண்டு என்று சொல்லத் தகும் அளவிற்கு கருமையாக, மீன் வடிவில் இருக்க வேண்டும் என்பது ஒரு சாமுத்ரிகா லட்சணம். இத்தகைய சாமுத்ரிகா லட்சணங்கள் அமையாததால் ஏற்படும் இன்னல்களை விவரிப்பதை விட இத்தகைய லட்சணங்கள் அமையாவிட்டாலும் அத்தகையோர் வழிபட வேண்டிய மூர்த்தியே நாகப்பட்டினம் நீலநந்தி ஆவார். ஸ்ரீநீலாயதாட்சி அம்மனுக்கு மயில்கழுத்து நிறத்தில் பட்டுப் புடவைகளைச் சார்த்தி, ஸ்ரீநீலநந்திக்கு வெண் பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுதலால் கண் சம்பந்தமான கோளாறுகள் படிப்படியாக நிவர்த்தி பெறும்.

குரு மங்கள சாரம்

வரும் 16.1.2022 ஞாயிற்றுக் கிழமை அன்று தனுசு ராசியில் பிரவேசிக்கும் செவ்வாய் பகவான் 26.6.2022 ஞாயிற்றுக் கிழமை வரை குரு மங்கள சாரம் கொள்கிறார். தனுசு ராசியும் மீன ராசியும் குரு பகவானின் ஆட்சி வீடுகள். இவ்வாறு தனுசு ராசி முதல் மீன ராசி வரை உள்ள நான்கு ராசிகளில் செவ்வாய் பகவான் சஞ்சரிப்பதே குரு மங்கள சாரம், குரு மங்கள சஞ்சாரம் என்று அழைக்கப்படும்.

ஸ்ரீகோலவாமனப் பெருமாள்
சிக்கல்

இதிலும் சிறப்பாக செவ்வாய் என்னும் மங்கள பகவான் சஞ்சரிக்கும் இந்த சாரத்தில் குரு பகவானும் இடம் பெறுவது என்பது அரிதிலும் அரிய பேறே. இந்த குரு மங்கள சாரமானது 162 நாட்கள் பரிணமித்து இருப்பதால், செவ்வாய் பகவானுக்குரிய ஒன்பது எண்ணுடன் இணைவது மேலும் ஒரு சிறப்பான மகத்துவமே. நம் சற்குரு குரு மங்கள கந்தர்வா என்று அழைக்கப்படுகிறார் அல்லவா ? இதைக் குறிக்கும் குரு, செவ்வாய், சுக்கிரன் என்ற மூன்று கிரகங்களும் இந்த குரு மங்கள சாரத்தில் இணைவது என்பது எத்தகைய ஒரு பேறு ?

கிரக சஞ்சார விளைவுகளால் தோன்றும் இத்தகைய குரு மங்கள சாரத்தை பிரதிபலிக்கும் திருத்தலங்கள் ஏதாவது உண்டா என்று உங்கள் மனம் நாடுவது இயற்கையே. இதற்கு விடை அளிப்பதாக மலர்வதே சிக்கல் சிங்காரவேலன் அருளும் திருத்தலமாகும். ஸ்ரீவேல்நெடுங்கண்ணி உடனாய ஸ்ரீநவநீத நாதர் அருளும் சிக்கல் சிவத்தலமே இத்தகைய குரு மங்கள சார நாட்களில் வழிபடப் வேண்டிய திருத்தலமாகும். வயலூர், பழநி போன்று பெருமானை விட தானே கீர்த்தி பெற்றவன் என்று பறைசாற்றும் முகமாக கீர்த்திவாசனாக, ஸ்ரீமுருகப் பெருமான் சிங்கார வேலனாக எழுந்தருளிய திருத்தலமே சிக்கல் ஆகும்.

சிக்கல் திருத்தலத்தில் அம்மன், இரண்டு முருகப் பெருமான் தோற்றங்கள், கோல வாமனப் பெருமாள் மூர்த்தி என்ற அனைவருமே இறைவனின் ‘சாரம்’ பெற்றுள்ளதே சிக்கல் திருத்தலத்தின் தனிச் சிறப்பாகும். இறைவனின் இடது பக்கமான ‘சாரத்தில்’ எழுந்தருளியவர்களே இம்மூர்த்திகள். இம்மூர்த்திகளிலும் சிங்கார வேலனும், வேல்நெடுங்கண்ணி அம்பிகையும் குரு மூர்த்தங்களாக தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ளது குரு கடாட்ச சக்திகளை மேலும் மேலும் வர்ஷிக்கும் முகமாக உள்ளது.

சிக்கல் திருத்தல தலவிருட்சம் சாரமல்லிகை என்பதாகும். ஸ்ரீஅகத்திய பெருமானால் நவநீத லோகத்திலிருந்து தருவிக்கப்பட்டு ஸ்ரீநவநீத நாதர் பூஜைக்காக பன்னெடுங்காலம் பயன்பாட்டில் இருந்த அபூர்வ மூலிகை விருட்சமே சாரமல்லிகை ஆகும். இன்றும் பொதியமலையிலிருந்து வரும் ஸ்ரீஅகத்திய பிரானின் சீடர்கள் இந்த சாரமல்லிகை மலர்களால் மட்டுமே இறைவனுக்கும் இறைவிக்கும் குறித்த தினங்களில் பூஜை ஆற்றுகிறார்கள் என்பதே நாம் அறியாத தெய்வீக இரகசியமாகும். மல்லிகை மணத்திற்கு மட்டும் தனிச் சிறப்பு என்பது கிடையாது, மல்லிகை பூக்கும் பருவம் என்று ஒன்று கிடையாது என்பதும் இதன் தனிச் சிறப்பாகும். இறைவனின் அருள் கனியாத இடம், காலம் என்று ஒன்று உண்டா ? இவ்வாறு இறைவனும் தானும் வேறு அல்ல என்று மக்களுக்கு தன் சிறப்பை ஊட்டுவதே மல்லிகையின் தனித் தன்மை ஆகும். சிக்கல் திருத்தலத்தில் மட்டும் மலரும் சாரமல்லிகையை இனம் பிரித்து சாதாரண மக்களால் அறிய முடியாது என்றாலும் அடுக்கு மல்லி, இருவாட்சி என்ற எந்த மல்லிகைப் பூவையும் இறை வழிபாட்டிற்காக, சுமங்கலிகள் தானத்திற்காக அளிக்கப்படும்போது அவை சாரமல்லிகை என்ற ‘சாரத்தை’ பெறுகின்றன என்பதே சித்தர்களின் அனுகிரகமாகும்.

ஸ்ரீபடிதாண்டா பாகவத மூர்த்திகள்
சிக்கல்

பக்தர்களே ஊகிக்கும் அனுகிரகத்தை அளிக்கவல்லவளே ஸ்ரீவேல்நெடுங்கண்ணி அம்பிகை ஆவாள். ஆம், வேல் வடிவத்தில் தீபங்களை ஏற்றி, அகல்களில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கரிசலாங்கண்ணி என்ற மூன்று தைலங்களை கலந்து ஊற்றி வழிபடுவதே அம்பிகையின் அருள் பெறும் வழிபாடாகும். வழிபாட்டின் நிறைவில் குறைந்தது மூன்று முழம் மல்லிகை பூக்களை சரமாகக் கட்டி சுமங்கலிகளுக்கு அளித்தல் சிறப்பாகும். எத்தகைய கண் திருஷ்டி நோய்களையும் தீர்க்கக் கூடிய அற்புத சர சார வழிபாடு இதுவாகும். எத்தகைய முரட்டுத் தனமுடைய ஆண்களும், கணவன்மார்களும் வெண்ணெய் போல் உருகி மனம் மாறுவர் என்பதே மேற்கண்ட வழிபாட்டின் மகிமைகளில் ஒன்றாகும். கடுமையான, கொடுமையான மேலதிகாரிகள், எஜமான்கள், முதலாளிகளைப் பெற்றோர் ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் அவர்கள் இத்தகைய வழிபாடுகளால் நலமடைவர்.

வேறு எந்த திருத்தலத்திலும் காண முடியா ஸ்ரீபடிதாண்டா பாகவத மூர்த்திகள் என்று சித்தர்களால் அழைக்கப்படும் இரு கணபதி மூர்த்திகளை சிக்கல் திருத்தலத்தில் தரிசிக்கலாம். பசு வெண்ணெயில் சர்க்கரை கலந்து வாழை தொன்னையில் வைத்து பக்தர்களுக்கு வியாழக் கிழமைகளில் தானம் அளித்தலால் எத்தகைய திருமணத் தடங்கல்களையும் நிவர்த்தி செய்வதே இந்த பிள்ளையார் மூர்த்திகள் அருளும் அனுகிரகங்களில் ஒன்றாகும். எவ்வளவு சிக்கலான குடும்பப் பிரச்னைகளையும் உறவுப் பிரச்னைகளையும், கணக்கு போன்ற பாடங்களில் வரும் சிக்கல்களையும் தீர்த்து வைப்பவர்களே இந்தப் பிள்ளையார் மூர்த்திகள். உறவுச் சிக்கல்களை எளிதில் தீர்த்து வைக்கக் கூடியவர்கள் ஆதலால் இவர்களை சிக்கல் பிள்ளையார் மூர்த்திகள் என்றும் அழைப்பதுண்டு. படிதாண்டா பத்தினி தெய்வங்களைப் பற்றி பக்தர்கள் கேள்விப்பட்டிருக்கலாம், படிதாண்டா பாகவதர்களின் தரிசனத்தை அளிப்பதே நம் சற்குருவின் அனுகிரகமாகும்.

திருமணத்திற்கு முன்னோ, பின்னரோ பல பெண்களுடன் தொடர்பு கொண்டவர்கள் இந்த பிள்ளையார் மூர்த்திகளை தொடர்ந்து வியாழக் கிழமைகளில் வழிபட்டு பசு வெண்ணையில் மைதா மாவு அல்லது கோதுமை மாவுடன் சர்க்கரை சேர்த்து சிறு சிறு உருண்டைகளை உருட்டி அந்த உருண்டைகளால் பிள்ளையார் மூர்த்திகளை அஷ்டோத்திரம் ஓதி அல்லது கீழ்க்கண்ட காயத்ரீ மந்திரம் ஓதி வழிபட்டு வழிபாட்டின் நிறைவில் அந்த உருண்டைகளை தானமளித்தல் நலம்.

ஸ்ரீமுருகப் பெருமான்
சிக்கல்

ஓம் தத் புருஷாய வித்மஹே
நவநீத ரூபாய தீமஹி
தந்நோ நவநீத ராஜா ப்ரசோதயாத்

திருத்தலங்களில் மட்டும் அல்லாது அவரவர் இல்லங்களிலும் மேற்கண்ட வேல்நெடுங்கண்ணி வழிபாட்டை தீபமேற்றி நிறைவேற்றலாம். ‘வேல்’ தீபங்கள் நடுவே லட்சுமி, சரஸ்வதி, ஆயுர்தேவி போன்ற பெண் தெய்வ மூர்த்திகளை வைத்து வழிபடுதல் சிறப்பாகும். சிக்கல் திருத்தலத்தில் வேல்தீபங்களை அமைக்கும்போது வேலின் நுனி வடக்கு திக்கை நோக்கி, அம்பாளை நோக்கி இருக்குமாறு அமைத்தால் அது புதன் கிரகத்திற்குரிய மண்டலமாக அமையும். இந்த புத மண்டலம் ஸ்ரீவேல்நெடுங்கண்ணியை நோக்கி இருக்குமாறு அமைவது ஒரு அற்புத அனுகிரகமே. மகர, கும்ப ராசிகள் சனி பகவானுக்குரிய ராசிகள் என்பதும், சனி பகவான் புதனுடன் நட்பு பாவத்தில் திகழ்பவர் என்பதும், மகர, கும்ப ராசி மண்டலங்கள் சூரிய மண்டலத்தில் வடக்கு திசையில் திகழ்பவை என்பதும் நாம் அறிந்த ஜோதிட நுணுக்கங்களே. இந்த இரண்டு நட்பு கிரகங்களுமே மேற்கூறிய குரு மங்கள சாரத்தில் இணைகின்றன என்பதும் ஒரு தெய்வீக சுவையே.

சுக்ர சுதபுத சங்கமம்

நம் சற்குருவின் பிறந்த தினம் 21 மே 1947 புதன் கிழமை காலை 10.30 மணி என்பதை நாம் அறிவோம். 10.30 மணி என்பது (30 x 100/60 = 50) 10.5 என்ற எண் கணித ரீதியாக (1+0+5 = 6) சுக்ர அம்சங்களுடன் பொழியும். இந்த சுக்ர சுதபுத சங்கமம் மேற்கூறிய குரு மங்கள சாரத்தில் இணைவதால் இந்த சுக்ர புத சங்கமத்தையும் நாம் தினமுமே இந்த வருடம் முழுவதும் தியானித்து பயன் பெறலாம் இந்த வருடம் அபூர்வமாக கிட்டும் சுக்ர சுதபுத சங்கமத்தின் அனுகிரகம் இதுவாகும். தினமும் காலையில் 10.30 மணிக்கு குறைந்தது மூன்று முறை

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
மெய்ஞானபுரி

சற்குருவின் அமிர்த ஓங்காரம்

ஸ்ரீநவநீதேஸ்வரர்
சிக்கல்

ஓம் ஸ்ரீ சர்வ ஸ்ரீ சாக்த பரப்ரம்ஹ
ஸ்ரீதேவி பக்தாய
ஸ்ரீவெங்கடராம சித்த ஈச மகராஜ் கீ ஜெய்
என்று கூறி தியானிப்பதால் தினமுமே நாம் நிறைவேற்றும் அனைத்து காரியங்களிலும் குரு மங்கள கந்தவர்வ அனுகிரக சக்திகள் பொங்கிப் பூரணித்து பெருகும் என்பதே இந்த சுக்ர சுதபுத சங்கம வழிபாட்டின் தன்மையாகும். எப்படி 21ந் தேதி என்பது எந்த மாதம் அமைந்தாலும் சித்த யோகம், மரண யோகம் என்ற பாகுபாடு இன்றி நம் சற்குருவின் குருமங்கள கந்தர்வ சக்திகளை அனுகிரக கதிர்களாகப் பெருக்கி வீசுகின்றதோ அது போல் காலை 10.30 என்ற நேரமும், ராகு காலம், எம கண்டம், ஹோரை என்ற காலப் பாகுபாடுகள் அனைத்தையும் கடந்து நிற்கும் சாசுவத குரு கடாட்ச சக்திகளை நல்கும் என்பது உண்மை. பிரம்ம முகூர்த்த நேரத்தைப் போல இந்த சுக்ர சுதபுத முகூர்த்த மங்கள நேரத்தையும் நாம் சூரிய உதய நேரத்திற்காக மாற்ற, திருத்த (adjust) வேண்டிய அவசியமில்லை, இது என்றும் சாஸ்வதமான, நிரந்தரமான முகூர்த்தமே. சர்க்கரை கலந்த வெண்ணெயை எவ்விடத்திலும் இந்த சுக்ர சுதபுத சங்கம நேரத்தில் தானமாக அளித்து நற்பலன் பெறலாம். திருமணம், புதுமனை புகுதல், வளைகாப்பு, நிச்சயதார்த்தம், புதுவேலை நியமனம், பிறந்த தினம், சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் என்ற எந்த விதமான மங்கள காரியங்களின் நிறைவிலும் சர்க்கரை வெண்ணெய் என்ற நவநீத பிரசாதத்தை அளித்து அடியார்கள் நற்பலன் பெறலாம்.

இது சுக்ர சக்திகள் நிறைந்த வருடமாக இருப்பதால் தன் விரல்களில் சுக்கிர முத்திரையை ஏந்தி அடியார்களுக்கெல்லாம், பக்தர்களுக்கெல்லாம் சுக்கிர சக்திகளை வழங்கிய நம் சற்குருவின் ஓங்கார நாதத்தை இங்குள்ள படத்தில் அளித்துள்ளோம்.

நம் சற்குரு வெறுமனே ஓங்கார நாதத்தை ஆறு விரல்களின் சுக்ர சங்கமத்தில் ஓதி அளித்ததோடு மட்டுமல்லாமல் கரவாரநிலை என்ற ஆறு சுக்ர எழுத்துக்கள் குறிக்கும் ஒரு கல் நடராஜ விக்ரஹத்தையும் தம் அடியார்களுக்காக திருக்காரவாசல் திருத்தலத்தில் இனங்காட்டி அருள்கின்றார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் குருநாதரின் வழிகாட்டுதலாகும். மேலே கூறியவாறு முக்கூட்டு தைல வழிபாட்டை கரவாரநிலை நடராஜ மூர்த்திக்கு நிறைவேற்றி வழிபடுதலே இந்த சுக்ர சக்திகளை முழுமையாக பெறும் முறையாகும்.

விமல என்றால் வி மல என்று பிரிந்து மலம் நீங்கிய நிலையைக் குறிக்கும். விஜயம் என்றால் வி ஜயம் என்று பிரிந்து அது பூரணமான, முழுமையான வெற்றியைக் குறிக்கும். “வி” என்ற ஒரே எழுத்து பிரிவையும் பூரணத்தையும் குறிப்பதால் நாம் நல்லதையே, பூரணத்தையே நினைப்போம் என்பதே திருக்காரவாசல் வழிபாட்டின் பூரணத்துவமாக நாம் அறிந்து உணர்ந்து கொள்ளும் தத்துவமாகும். இதுவே ஸ்ரீஅகஸ்திய விஜயம் குறிக்கும் தத்துவமுமாகும். ஸ்ரீ அகஸ்தியர் என்ற இரு சக்திகளும் இணைந்து அடியார்களுக்கு முழுமையான வெற்றியையே நல்கும். “எனக்கு ஸ்ரீஅகஸ்திய விஜயம் படிக்க நேரமே இல்லை,” என்று கூறுபவர்கள் இந்த பத்து எழுத்து கூட்டும் பரம மந்திரத்தை தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தாலே அவர்கள் ஸ்ரீ சேர்ந்த அகத்திய பெருமானாக மாறுவார்கள். இதுவே திருக்காரவாசல் திவ்யமாகும்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam