அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ப்ளேக் நோய்க்கான பரிகாரம்

சாதுவான பாம்புகளை வதைத்தல், சுயநலம், வியாபாரத்திற்காக நாகங்களை வதைத்தல், போதைப் பொருட்களைத் தயாரித்தல், விற்றல் போன்ற கொடிய தீவினைகளின் பிரதிபலிப்பே கொடிய ப்ளேக் நோயாகும். நாக வழிபாடே ப்ளேக் நோய்க்கானத் தற்காப்பு (prevention) முறையாக சித்தர்கள் அருள்கின்றனர். நாகங்களைக் குறிப்பாக ‘நாகராஜ’ தெய்வமூர்த்திகளை (சிவலிங்கத்தைச் சுற்றியுள்ள நாகங்கள் நாகராஜாக்கள் எனப்படுவர்) பால், தேன், இவற்றால் அபிஷேகம் செய்து தேன் கலந்த பாலை ஏழைகட்கு அளிக்க வேண்டும். ப்ளேக் நோயிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், குணமடையவும், ‘ஸ்ரீசர்ப ஆபரண விநாயகரைத் தொழ வேண்டும்.

ஸ்ரீசர்ப்பாபரண விநாயகர்

ஸர்பாபரண விநாயக காயத்ரி
‘ஓம் தத்புருஷாய வித்மஹே ரோகாகு நாசாய தீமஹி
தந்நோ ஸர்பாபரண விநாயக ப்ரசோத்யாத்’
என்று காயத்ரி மந்திரத்தைத் துதித்து, ஸ்ரீஸர்பாபரண விநாயகரை முறையாகக் கூட்டுநாம ஜபமாக வழிபட ப்ளேக் நோய் அகலும். ப்ளேக் நோயைத் தீர்க்கும் தன்வந்த்ரி மூர்த்தி . ‘ஸ்ரீஸர்ப திரிபுரண்டர தன்வந்த்ரி’ மூர்த்தியாவார்.
ஸ்ரீஸர்ப திரிபுரண்டர தன்வந்த்ரி மூர்த்தியே நம : (or)
ஸ்ரீஸர்ப திரிபுரண்டர தன்வந்த்ரி மூர்த்தியே போற்றி!
என்று துதித்து ஸர்ப தன்வந்த்ரியை வழிபட ப்ளேக் நோயால் துன்புறுவோர்க்கு இது ரட்சையாக அமைந்து அவர்களைக் காக்கும். எனவே ஸ்ரீஸர்பாபரண விநாயகர் பூஜை, நாக வழிபாடு, ஸ்ரீசர்ப திரிபுரண்டர தன்வந்த்ரி மூர்த்தி பூஜை ஆகியவையே கொடிய ப்ளேக் நோய்க்கான பரிஹார முறைகளாக சித்தர்கள் அருள்கின்றனர். ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களிலிருந்து இவ்வான்மீக  இரகசியத்தை நமக்குத் தந்தருள்பவர் நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.

நவராத்திரி மகிமை

கலியுகத்தில் ஒன்பது விதமான பெரிய மதங்கள் நடைமுறையில் நிலவும். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது மறைந்து குறுகிய மனப்பான்மை பெருகும் ஆதலின் மதபேதங்களினால் ஒற்றுமை சீர்குலையும் என்பது கலியுக நியதியாகும். இதனை தீர்க்கதரிசனமாக அறிந்த மஹான்களும், சித்த புருஷர்களும் நவராத்திரி போன்ற அரிய பண்டிகை கோட்பாடுகளை அளித்துள்ளனர்.
மதப் பிரிவுகள் இறைவழி முறைகளே
இஸ்லாம், கிறித்தவம், சைவம், வைணவம் போன்ற ஒவ்வொரு பிரிவும் இறைவனை அடையும் வெவ்வேறு விதமான வழிமுறைகளைக் காட்டுகின்றன. இந்த மத ஒற்றுமையைப் பேணுவதற்காகவே 9 இரவுகளுக்கு உரித்தான நவராத்திரியாக சித்தர்கள் அருளியுள்ளனர். சென்ற இதழில் மாளய பக்ஷ தர்ப்பண பூஜைகள், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உரித்தான சிறந்த பூஜையென நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள், சித்தர்களின் அருள் மொழியாய் வழங்கியுள்ளார். பூர்வ ஜென்ம வாசனையினால் தான் இன்றைக்கும் பல அயல்நாட்டவர்கள் திருஅண்ணாமலை திருக்கோயில், தஞ்சை சிவன் கோயில்,  மதுரை ஸ்ரீமீனாக்ஷி, ஸ்ரீரங்கம் திருக்கோயில் போன்ற புனிதத் தலங்களுக்கு (சுற்றுலா என்ற பெயரில்) வந்து செல்கின்றனர்.

ஸ்ரீசர்ப்பாபரண விநாயகர்
நாகப்பட்டினம்

“இறைவா, எனக்கு மிகுந்த செல்வத்தையும், வளமான வாழ்க்கையையும் கொடு” என்று மனமுருக வேண்டி பூஜை செய்திட, அடுத்த பிறவியில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற செல்வங் கொழிக்கும் நாடுகளில் பிறவி கிட்டிட, அங்கிருந்து சுற்றுலாப் பயணியாக இங்கு வந்து எந்த தெய்வத்திடம் வளமான வாழ்வு கேட்டு வணங்கினார்களோ, அந்த தெய்வத்திரு மூர்த்திக்கு நன்றிக்கடனாக தரிசனம் செய்து திரும்புகின்றனர். இதுவே வாழ்க்கைச் சக்கரம்!.
முப்பிறவி இந்தியன் – மகத்தான பூஜை, இப்பிறவி அமெரிக்க நாட்டவர்!
ஆன்மீகம், பிறப்பின் ரகசியத்தை இவ்வாறு விளக்குகிறது. இடையில் நாடு, மத, இன வேறுபாடுகள் எவ்வாறு வந்தன? இறந்த நம் மூதாதையர்கட்கு நாம் அளிக்குந் தர்ப்பணம், அவர் மறுபிறவி பெற்றிருந்தால் கூட தர்ப்பணத்தின் பலனானது மறுபிறவி வாழ்க்கைக்கும், எதிர் வரும் பிறவிகட்கும் பயன்படும். இத்தகைய சிறந்த மாளய அமாவாசைத் தர்ப்பணத்திற்குப் பிறகு தொடங்குவதே நவராத்திரித் திருநாளாகும். பல்வேறு நாடுகளிலும், லோகங்களிலும் பலதரப்பட்ட மனிதர்களாய், வேறுவகை உயிரினங்களாய்ப் பிறப்பெடுத்து வாழும் நம் வம்சாவளியினருக்கான பூஜையே மாளய தர்ப்பண பூஜையாகும். இவ்வாறு அனைவருடைய நலனுக்காகப் பிரார்த்திக்கும் உயர்ந்த எண்ணங்களுடன் துவங்குவதே நவராத்திரி பூஜையாகும்.
கொலுவின் தத்துவம்

நவராத்திரி கொலு பூஜை

இன, மத, ஜாதி, உணர்வுகளைக் கடந்து கொலுவில் அனைத்து தெய்வமூர்த்திகள், புத்தர், மஹாவீரர், குருநானக், ஜீஸஸ் போன்ற பல்வேறு மதங்களில் ஜோதியாய்ப் பிரகாசித்த மகான்கள், யோகிகளின் உருவங்கள் மட்டுமல்லாது தாவரங்கள், கருவிகள், சாதனங்கள், அனைத்தும் ஒருங்கே அமைந்த ஒரு குட்டி பிரபஞ்சத்தையே வீட்டில் உருவாக்குகிறோம், எதற்காக...?    யாதும் இறைவனின் படைப்பே என்ற உணர்வை ஊட்டுவதற்காக! இதனால் வெறுப்பு, பகைமை போன்ற எதிர்வினை எண்ணங்கள் குறைந்து சகிப்புத் தன்மை பெருகி மத ஒற்றுமை ஓங்கும். கொலு பொம்மைகள் ஒவ்வொன்றிலும் இறைவனின் பரிபூரண அம்சம் நிறைந்து விளங்குகிறது. உண்மையில் ஒவ்வொரு பொம்மையும் உயிர் பெறுகிறது. அனைத்திலும் உயிரைப் படைக்கும் சக்தி பெற்றவன் இறைவன் ஒருவனே, அவன் படைத்த உயிர்களின் மேல் வெறுப்புக் கொள்ளலாமா?
‘உயிர்களிடத்து அன்பு வேண்டும் – தெய்வம்
உண்மையென்று தானறிதல் வேண்டும்’
என்ற சத்தியமான வாக்கே, கொலுபொம்மைகளின் மூலமாக ஒவ்வொரு வீட்டிலும் குட்டிப் பிரபஞ்சமாக உருவெடுத்து அனைவரும் உணர்கின்ற ஓர் உன்னத அறநெறியாகிறது. கோயிலில் அமைந்திருக்கும் தெய்வத் திருஉருவங்கள் போல் கொலு பொம்மை ஒவ்வொன்றும், எவ்வுருவமாயினும் சரி ஆடாமல் அசையாமல் யோக நிலையில் நின்று அனைத்து உயிர்களிடமும், அன்பைப் பொழிய வேண்டிய அருளை நமக்கு அளிக்கின்றன. இவ்வாறாக, ஒன்பது நாட்களும், கொலு அமைந்திருக்கும் ஒவ்வொரு இல்லத்திலும், விம்மிப்புடைக்கும் அன்புநெறி பூரித்து நிற்கிறது. இதன் ஆன்மீக சக்தி கொலுவைப் பார்க்க, வந்து செல்பவர்களிடமும் விரவி நின்று அன்பைப் பெருக்கி இன, மத ஒற்றுமையைப் பேணிக் காக்கிறது. எனவே சட்டதிட்டங்களை விட நவராத்திரிப் பண்டிகையை கொலு அமைத்து அனைவரும் கொண்டாடிட இதுவே மகத்தான மத ஒற்றுமைக்கு வழி கோலும்.
நவராத்திரியில் கொலுவைப்பது மிகவும் முக்கியமான பூஜை அம்சமாகும்.
சுமங்கலி பூஜை
இரண்டாவதாக ஜாதி, மத பேதமின்றி ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு புடவை, ரவிக்கை, வளையல், மஞ்சள், மருதாணி, குங்குமம் போன்ற மங்கள சக்தி நிறைந்த பொருட்களைத் தானமளிக்க வேண்டும். வருங்கால சந்ததியினர் இறை பக்தியுடன், நல்லொழுக்கத்துடன் இருந்தால் தான் எந்த நாடும் மத இன சச்சரவுகளின்றியும், வன்முறைகள் இன்றியும் சுபிக்ஷமாக இருக்கும். குழந்தைகளை நன்னெறிகளுடன் பேணுவதற்கு சுமங்கலிப் பெண்களின் பங்கு இன்றியமையாததாகும். இளம் பெண்களோ, வயதானவர்களோ, சுமங்கலிப் பெண்களே குழந்தைகளைப் பேணுவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். எனவே, அவர்கள் மனம் மகிழ்வுற அவர்கட்குத் தானமளித்து அவர்களையே பிறருக்கும் தானமளிக்கச் செய்தல் நவராத்திரிக்குரிய இரண்டாவது பூஜை முறையென சித்தர்கள் அருளியுள்ளனர்.

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

மூன்றாவது பூஜை முறை
நவராத்திரிப் பிரதமை நாளன்று 80 வயது நிறைந்த தம்பதியினருக்குப் பாத பூஜை செய்து அவர்களை வணங்கி அவர்கள் மூலமாக ஏழைக் குழந்தைகட்கு அன்னதானம், வஸ்த்ரதானம், நோட்டுப் புத்தக தானம் போன்றவை வழங்கச் செய்தல் சிறப்பானதாகும்.
(துவிதியை) 2வது நாளன்று, 6 குழந்தைகளைப் பெற்று நிறைவுடன் வாழும் தம்பதியினருக்குப் பாதபூஜை அவர்கள் மூலமாக ஏழைகட்குத் தானம் செய்தல்.
(திருதியை) 3வது நாளில், 4 குழந்தைகளைப் பெற்ற தம்பதியினருக்குப் பாதபூஜை செய்து அவர்கள் மூலமாக ஏழைகட்குத் தானம் செய்தல்
(சதுர்த்தி) 4வது நாளில், 3 பெண் குழந்தைகள் மட்டும் பெற்ற தம்பதியினரை பாதபூஜை செய்து ஏழைகட்கு அவர்கள் மூலமாக தானம் செய்வித்தல்
(பஞ்சமி) 5வது நாளில், 3 அல்லது 3 ஆண் குழந்தைகள் மட்டும் பெற்ற தம்பதியினரை பாதபூஜை செய்து அவர்கள் மூலமாக ஏழைகட்குத் தானமளிக்கச் செய்தல்
(சஷ்டி) 6வது நாளில், 2 ஆண் + 2 பெண் குழந்தைகள் மட்டும் பெற்று முருகனை குலதெய்வமாகக் கொண்ட தம்பதியினரை பாதபூஜை செய்து அவர்கள் மூலமாக ஏழைகட்குத் தானம் செய்வித்தல்.
(சப்தமி) 7வது தினம், 2 பெண் குழந்தைகளைப் பெற்று இரும்பு வியாபாரம் செய்யும் தம்பதியினரை பாதபூஜை செய்து ஏழைகட்குத் தானம் செய்தல்.
(அஷ்டமி) 8வது நாளில், வைணவ குடும்பத்தைச் சேர்ந்த ஒரே ஆண் குழந்தை உள்ள ஆசிரியை தம்பதியினரைப் பாதபூஜை செய்து ஏழைகளுக்குத் தானஞ் செய்வித்தல்.
(நவமி) 9வது தினத்தன்று, 2ஆண் + 3பெண் அல்லது 2பெண் + 3ஆண் குழந்தைகளுடைய தம்பதியினரைப் பாதபூஜை செய்து அவர்கள் மூலம் ஏழைகட்கு தானஞ் செய்தல்
தசமியன்று, பால்ய விவாகஞ் செய்து கொண்ட (பருவமடையுமுன் திருமணஞ் செய்து கொண்ட பெண்) 60வயது நிறைந்த தம்பதியினரைப் பாத பூஜை செய்து ஏழைகட்கு அவர்கள் மூலம் தானம் அளிக்கச் செய்தல்
மேற்கண்ட தம்பதியினர் எம்மதத்தினராயும் இருக்கலாம். பவ வருடத்திற்கான நவராத்திரிக்கு உரித்தான பூஜை முறையாக சித்த புருஷர்கள் இதனை அருள்கின்றனர். இத்தகைய நவராத்திரி பூஜைகளே உலகெங்கும் விஷ்க்காளானாய்ப் பெருகி வரும் இனக்கலவரங்கள், மதச் சண்டைகளைக் களைந்தெறியும் பரிகாரமாய் அமைந்து உவப்பான மஹேஸன் சேவையாக சித்த புருஷர்களால் போற்றப்படுகிறது.
துர்கை பூஜை
ஜாதி, மத, இன சச்சரவுகளை உருவாக்கும் எதிர்வினை சக்திகளை (Negative Force) முறியடிக்கும் தெய்வ அம்சமே, ஸ்ரீதுர்கா தேவி நான்காவது பூஜையாக ஸ்ரீதுர்கா தேவி வழிபாட்டினை சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

திதி

நாமம்

பலன்

பிரதமை

விஷ்ணு துர்கை

எடுத்த காரியம் நிறைவேறும், தடங்கல்கள் நீங்கும்.

துவிதியை

ஜல துர்கா

ஜலகண்டங்களின் ஆபத்துக்கள் நீங்கும். நீர்த்துறை, நீர் சம்பந்தமான வியாபாரம் அபிவிருத்தி

திருதியை

லவண துர்கை

சிதறிய குடும்பங்கள் சேரும்.

சதுர்த்தி

சூலினி துர்கை

அக்னி சம்பந்தமான கண்டங்கள் நீங்கும். நெருப்புத் துறையில் பணிபுரிவோர்கட்கு (Boilers) சிறந்த ரக்ஷை

பஞ்சமி

வனதுர்கை

நெற் பயிர்கள் போன்றவை பூச்சிகளால் பாதிக்கப்படாது

சஷ்டி

ஸ்வயம்ப்ரகாசினி துர்கை

மந்தபுத்தி அகலும் குழந்தைகள் நன்கு படிப்பர்

சப்தமி

ப்ராணேஸ்வர துர்கை

அபாய நிலையில் உள்ள நோயாளிகள், [I.C.U, Emergency, coma cases] அற்புத முறையில் குணமுறுவர் .

அஷ்டமி

கோண துர்கை

 திருஷ்டி, ப்ரேத  சாபங்கள் தீரும் [ ப்ரேதமாலைகளை மிதித்தல், த்ருஷ்டி பூசணி மிதித்தல் ]

நவமி

பிக்ஷாடன துர்கை

பிறர் மேல் பகைமை, வெறுப்புணர்ச்சி தணியும்.

மேற்கண்ட நான்கு விதமான பூஜைகளையும் சித்தர்கள் அருளியுள்ளனர். மாலையில் விளக்கேற்றியது முதல் இரவு 10 மணி வரை நவராத்திரி நேரமாகப் போற்றப்படுகிறது. மேற்கண்ட துர்கா தேவியர்களை த்ரிசதி துதிகளால் (லலிதா, லக்ஷ்மி, துர்கா) த்ரிசதி ஸ்லோகங்களினால் துதிக்க வேண்டும். த்ரிசதி நாமாவைத் துதி செய்கையில் 3, 6, 9, 12 என்ற எண்ணிக்கையில் நபர்கள் பாராயணம் செய்ய வேண்டும்.

மஹா நவமி
ஸ்ரீசரஸ்வதி தேவியின் குருவான ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளுக்கு உரித்தான நாளாகும். பெரும்பாலானோர் கலைவாணியின் குருவான ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளை மறந்து விடுகின்றனர். ஸ்ரீஹயக்ரீவரின் பூஜையின்றி ஸ்ரீசரஸ்வதி பூஜை நிறைவேறுவதில்லை. மஹாநவமியன்று அஸ்வ வதனம் (குதிரை முகம்) உடைய ஸ்ரீஹயக்ரீவருக்குப் ப்ரீதி அளிக்கும் பூஜையென சித்தர்கள் அருள்வது எது தெரியுமா? குதிரை இனத்திற்கு, குறிப்பாக வெள்ளை ஆண் குதிரைக்குச் சுத்தமான அவித்த கொள் தீனி அளித்தல் விசேஷமாகும்.
ஸ்ரீஹயக்ரீவருக்குச் சாமந்தி பூமாலை சாற்றுதல் மிகவும் சிறப்புடையதாகும். பொதுவாக புனர்பூச நக்ஷத்திரத்தன்று ஸ்ரீஹயக்ரீவருக்கு சாமந்தி பூமாலை சாற்றிவர குழந்தைகளின் மந்தபுத்தி நீங்கும். கல்வி அறிவு நன்கு (குறிப்பாகக் கணித அறிவு) வளரும். கல்வியில் எத்துறையாயினும் சரி, சிறந்தவர்களுக்குத் தானமளித்தல் இன்று விசேஷமானது.

சரசுவதி பூஜைமுறை
ஒரு பெரிய சந்தனக்கல்லின் மேல் சாமந்திப்பூ இதழ்களைப் பரப்பி அதன் மேல் மூன்று ஐந்து முக குத்து விளக்குகளை வைத்து  குத்துவிளக்குகளின் தண்டினைச் சுற்றி குறைந்தது 21 முழமாவது ஜாதிப்பூவைக் கீழிருந்து மேலாகவும், மேலிருந்து கீழாகவும் கொண்டு வந்து சுற்றிப் பின்னர் அதனைப் பிரித்து 3 விளக்குகளின் நடுவில் பாதத்தில் வருமாறு செய்ய வேண்டும் பின்னர் குத்து விளக்குகட்கு  இடையில் ஆறு விளக்குகளையும் ஏற்ற வேண்டும்.
15 முகம் + 6 அகல் = 21 முகம்
இவ்வாறு ஏற்றியவுடன் ஸ்ரீசரஸ்வதி தேவி இதில் ஆவாஹனம் ஆகிறாள். பின்னர் பூஜை செய்ய வேண்டும். ஒவ்வொரு புத்தகத்தின் உள்ளும் பூ வைத்து, குங்குமம் வைக்க வேண்டும். இது ஆத்மஸ்ரேயசை வளர்க்கும்.
தீபாவளித் திருநாள்
தீபாவளியன்று ஒவ்வொருவரும் குறைந்தது ஒரு ஏழையின் வீட்டில் விளக்கேற்றி வைப்பதற்கு வைராக்கியத்தை மேற்கொண்டு அதை நிறைவேற்றி வைக்க வேண்டும். வீட்டில் விளக்கேற்றுதல் என்றால் அந்த வீட்டில் அனைவருக்கும் உண்ண வயிறார உணவளித்து நம்மைப்போல் தீபாவளி கொண்டாடிட சிறிது கங்காஜலம், தகுந்த அளவில் நல்லெண்ணெய், சீயக்காய்த்தூள் ஆகியவற்றைத் தானமாக அளிக்க வேண்டும். இவற்றோடு இனிப்புகள், உணவுப் பண்டங்கள் அளித்து அவர்களை ஆனந்தப்படுத்த வேண்டும். இவ்வாறாக எவ்வளவு ஏழைகளை உண்மையான முறையில் நம்மைப்போல் தீபாவளி கொண்டாச் செய்கிறோமோ அந்த அளவிற்குத் தீபாவளியால் நாம் ஆனந்தப்படுகிறோம்.
இனியாவது நாம், நம் குடும்பம் என்ற அளவோடு எண்ணெய்  தேய்த்துக் குளித்தல், தீபம் ஏற்றுதல், இனிப்புகள், தின்பண்டங்கள் உண்ணுதல் என்ற சுயநல நிலை மாறிப் பலருக்கும் தீபாவளி தரும் ஆனந்தத்தைப் பரிமாறுவோமாக! நரகாரசுரன் இழைத்த கொடுமைகளுள் ஒன்று : பிறருடைய உணவுப் பொருட்களை அபகரித்து உணவுப் பற்றாக்குறையை உருவாக்கினான். ஸ்ரீகிருஷ்ணனால் அவன் சமஹரிக்கப்பட்ட போது. ‘நான் இழைத்த பாவங்களுள் மிகக் கொடுமையானது பிறருக்கு அன்னமின்றி நானே அனுபவித்ததாகும். எனவே மக்கள் இதை உணர்ந்து இப்பாவச் செயலை இனியாவது செய்யாதிருப்பார்களாக, எனக் கிருஷ்ண பரமாத்மாவை வேண்டினான்.

குடிப் பழக்கம் தீர

ஸ்ரீஆதிசங்கரர் ஒரு முறை கேரளாவில் பாதயாத்திரை சென்று கொண்டிருந்தார். அவரை ஒரு சிஷ்யர் குழாம் தொடர்ந்தது. வழியில்....... ஒரு கிராமத்தான் கள் அருந்திக் கொண்டிருக்க..... ஸ்ரீஆதிசங்கரரைக் கண்டதும் அனைத்தையும் உதறிவிட்டு எழுந்து அவரை நமஸ்கரித்தான். “சங்கர தேவோ, சங்கர தேவோ” என்று உடல் புளகாங்கிதம் அடைய வலம் வந்தான். ஆனந்தப் பெருக்கில் ஸ்ரீஆதிசங்கரருக்கு எதை அளிப்பது என்று புரியாமல் தயங்கித் தயங்கி, கள் பானையை  எடுத்து அவரிடம் நீட்டினான். பக்திப் பெருக்கில் எதைச் செய்கின்றோம் என்று அவன் அறியவில்லை. ஸ்ரீஆதிசங்கரர் அவனுடைய அன்பின் சக்தியை உணர்ந்தவராய் அப்பானையை வாங்கிக் கள்ளை அருந்தி அவனை ஆசிர்வதித்து வழக்கம் போல் தன் யாத்திரைத் தொடர்ந்தார்.

ஸ்ரீதன்வந்திரி மூர்த்தி மாத்தூர்

அவரைத் தொடர்ந்து சென்றவர்களில் ஒரு சிலர் முணு முணுத்தனர். “என்ன இது, சந்நியாசிக்குரிய செயலா இது?” ஆதிசங்கரர் பதில் கூறாது மௌனமாய் இருந்தார் ....
அடுத்து ஓரிடத்தில் ஈயம் காய்ச்சுபவன் தன் பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தான். ஸ்ரீஆதிசங்கரரைக் கண்டதும் உணர்ச்சிப் பெருவெள்ளத்தில் அனைத்தையும் போட்டு விட்டு ஸ்ரீஆதிசங்கரரின் காலில் வீழ்ந்தான். அவனை ஆசிர்வதித்து அறிவுரைகள் தந்து வாழ்த்தினார். அவனும் பக்திப் பெருக்கில் அந்த மகானுக்கு எதை அளிப்பது எனத் திணறி அவசரம் அவசரமாக உருகிய ஈயம் பொங்கி வழிந்த குவளையை அவரிடம் நீட்டினான். அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாள்!
கொதிக்கக் கொதிக்க ஈயம் அக்குவளையில் பாகாய் உருண்டு திரண்டு கொண்டிருந்தது. ஸ்ரீஆதிசங்கரர் கொதித்து வழிந்த ஈயத்தைக் குவளையோடு மடக்கென்று அருந்தி காலிக் குவளையை திருப்பித் தந்து தன் யாத்திரைத் தொடர்ந்தார். சந்நியாஸி, கள் அருந்தலாமா? என்று முணு முணுத்தவர்கள் வாயடைத்து நின்றனர். அனைத்தையும் கடந்த பிரம்மமான ஸ்ரீஆதிசங்கரருக்கு அமுதம், ஈயம், கள் அனைத்தும் ஒன்றல்லவா ....! ஸ்ரீஆதிசங்கரருக்குக் கள்ளை அளித்த அந்த விவசாயி வேகமாக ஓடிவந்து. “சுவாமி, நான் அபசாரம் செய்துவிட்டேன் ! ஒரு சிவனடியார்க்குக் கள்ளை அளித்தேன் என்பதற்காக என்னை ஊரார் தூற்றுகின்றார்கள். தாங்கள்தான் எனக்குக் கதி!” என்று அவர் பாதங்களில் சரணடைந்தான். இவையாவும் யாவரும் அறிந்ததே! இதன்பின் நிகழ்ந்தைச் சித்த புருஷர்கள் விளக்குகின்றனர். “அப்பனே, கவலைப்படாதே! இங்கிருந்துக் கிழக்கு நோக்கிப் பயணம் மேற் கொள்வாயாக! எந்தச் சிவன் கோயிலில் மூலவர் எதிரே ஆடு நிற்கின்றதோ, அத்திருக்கோயிலில் நீ தெளிவுறுவாய். கள்ளால் ஆடும் மனதை ஆடாது நிற்கும் சக்தியை அந்த ஆடினால் பெறுவாயாக!“ என்று அன்புடன் ஸ்ரீஆதிசங்கரர் மொழிந்தார்.
அவன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தை ஆரம்பித்தான்.... அந்த அழகிய சிவன் கோயிலினுள் அவன் நுழைந்தான்.. உள்ளே மூலவராம் சிவலிங்கப் பெருமானை வணங்கியவாறு ஓர் ஆடு நின்று கொண்டிருந்தது. இவனைக் கண்டதும் அவ்வாடு கனைத்தவாறே துர்க்கை சந்நிதி எதிரே உள்ள பள்ளியறையிடம் அவனை இழுத்துச் சென்றது. அங்கு ஒரு மகரிஷி சாம்பிராணித் தூபத்தை எழுப்பிக் கொண்டிருந்தார். பள்ளியறை மட்டுமின்றி ஆலயம் எங்கும் நறுமணப் புகை!
மணத்தில் லயித்து நின்ற அவன் மனம் பக்திப் பெருக்கால் இளகியது. சந்தனப் புகையினூடே ஸ்ரீஆதிசங்கரர் காட்சியளித்தார். ‘இங்கு இருக்கும் சுரங்கப் பாதை வழியாகவே மனதை நிலைநிறுத்த இத்திருக்கோயில் பள்ளியறையில் சாம்பிராணி நறுமணப் புகையிட்டு வர அத்தீய பழக்கம் மறையும். இன்றிலிருந்து இக்கோயில் பள்ளியறையில் சாம்பிராணித் தூபமிடும் கைங்கர்யத்தை நீ ஏற்பாயாக!“
“இக்கலியுகத்தில் குடிபழக்கத்தால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் வாடுகின்ற நிலை ஏற்படும். அதற்குப் பரிகாரமாக இங்குத் தூபமிடும் நற்காரியத்தை நீ மக்களுக்கு அறிவிப்பாயாக!”என்று ஸ்ரீஆதிசங்கரர் அருளினார். இத்திருக் கோயில்தான் சென்னை அருகே திருநின்ற ஊரில் உள்ள ஸ்ரீஹ்ருதயாலீஸ்வரர் திருக்கோயிலாகும். இக்கோயிலில் தற்போது ஸ்ரீநடராஜர் சந்நிதி அமைந்துள்ள இடத்தில் ஒரு நிலச்சுரங்கமுள்ளது. இதன் வழியேதான் ஸ்ரீஆதிசங்கரர் திருக்கைலாயம் சென்று வந்தார்.
இச்சுரங்கத்தினுள் நீர்த் தடாகம் ஒன்றுள்ளது. ஸ்ரீராமானுஜர் இதில் இறங்கி நீராடிய பின்னரே இக்கோயிலின் அருகே உள்ள 108 திருத்தலங்களுள் ஒன்றான ஸ்ரீபக்தவத்சலப் பெருமாளை தரிசனம் செய்தார்! இத்தடாக நீரின் மகிமையால் ஆயிரக்கானோரின் குடிப்பழக்கத்தை நிறுத்துவதற்கு அருள் புரிந்தார். ஆகவே தீவிரக் குடிப்பழக்கத்தை (alcoholism) நிறுத்த வேண்டுவோர் இத்திருக்கோயிலின் பள்ளியறையிலும், நிலச் சுரங்கம் உள்ள ஸ்ரீநடராஜர் சந்நிதியிலும் நறுமணங் கலந்த சாம்பிராணித் தூபமிடுதல் மிகவும் சிறந்ததாகும். தம் வாழ்க்கையில் எப்போதேனும் மது அருந்தியோர் அதற்குப் பரிகாரமாக இத்திருக்கோயிலில் தூபமிடுதல் இன்றியமையாதது.

துலா நீராடல்

துலா ஸ்நானம் – நீதிபதிகளுக்கு ஒரு வரப் பிரசாதம்
பண ஆசை, அரசியல் செல்வாக்கு, சந்தர்ப்ப சூழ்நிலைகள் போன்றவற்றால் அதர்ம முறையில் தீர்ப்புகளை வழங்க நேரிடில் அத்தகைய மாபெரும் பாவங்களுக்கு இத்துலா ஸ்நானம் தக்க பிராயச்சித்தமாக அமையும். ஆனால் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை மட்டுமே இப்பரிகாரம் சித்த புருஷர்களால் அளிக்கப்படுகின்றது. ஸ்ரீஜட்ஜ் சுவாமிகள் என்ற உத்தம மகா புருஷர் துலா ஸ்நானத்தின் மகிமையைத் தன் வாழ்க்கையில் உய்த்துணர்ந்து பிறருக்கும் எடுத்துரைத்த மகான் ஆவர். எனவே வழக்கறிஞர்கள், நீதிபதிகள். நீதிச் துறையைச் சார்ந்தோர் தங்களுடைய நீதி தவறிய பெரும் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாக இந்த ஐப்பசி மாதத்தில் துலா ஸ்நானமாக விடியற்காலையில் நதியில் ஸ்நானம் செய்து ஏழைகளுக்குத் தானம் செய்தல் வேண்டும். ஆனால் இம்முறையில் பரிகாரம் வாழ்க்கையில் ஒரே ஒரு முறை தான் என்று உணர்ந்து இவர்கள் துலா ஸ்நானம் முடிந்த பின்  தான, தர்மங்கள் செய்து பின் எப்போதும் நேர்மையாக வாழ்தல் வேண்டும். பிரதி வருடமும் துலா ஸ்நானம், தான தர்மங்கள் இவற்றைச் செய்தல் உத்தமமானது.
துலா ஸ்நானம்
நல்லோர், தீயோர், நோயாளி, கொடியவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் ஸ்நானத்தால் புனிதப்படுத்தும் உயர்ந்த பாங்கே நதியின் தன்மையாகும். விருப்பு, வெறுப்பு உணர்வுகளால் ஜாதி, மதங்களை உருவாக்கிச் சச்சரவுகளில் உழலும் மனிதனுக்குத் தக்க பாடம் புகட்டுவதே துலா ஸ்நானம் ஆகும். இம்மாதத்தில் (துலா மாதம் ஐப்பசி மாதம்) “இறைவா, இப் புனித நதியைப் போல் காழ்ப்புணர்ச்சிகளின்றி அனைவரையும் அன்புடன் பாலிக்கின்ற சம்நிலையைத் தருவாயாக” என்று நதியில் மூழ்கி ஸ்நானம் செய்தல் வேண்டும். வியாபாரிகள் இந்நாளில் காவேரி போன்ற புண்ணிய நதிதீரங்களில் தானங்கள் செய்திட, அதுவே எடைக் குறைவு போன்ற பாவச் செயல்களுக்குத் தக்க பரிகாரமாய் அமையும்.
விஜய தசமி
இன்று விஜய கணபதியைத் தொழுவது சாலச் சிறந்தது. கணபதி உபாசகர்கட்கு இன்று தக்க உதவிகள் செய்தல் நன்று. இன்று க்ஷிப்ர கணபதியின் பரிபூரண அம்ஸங்களைத் தாங்கித் தனக்குரித்தான வெற்றி, கீர்த்தி அம்ஸங்களுடன் பரிணமிக்கின்ற ஸ்ரீவிஜய கணபதியின் நாமந் துதித்து மோதகம், கரும்பு, பழங்கள் முதலானவற்றைப் பிள்ளையார் கோயிலில் தானமளித்தல் வேண்டும்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வாவின் பால பருவ குருகுலவாச அனுபூதிகள்
ரிசல்ட் போர்டில் சிறுவனின் பெயரைக் காணவில்லை! பெரியவர் அச்சிறு கூட்டத்தினிடையே எட்டி எட்டிப் பார்த்தும் பையனின் பெயரைக் காணவில்லை! சிறுவன் அழுது புலம்பினான், ‘வாத்யாரே! ஏமாத்திட்டியே! உன்னோட எவ்ளோ கோயில், குளம் சுத்தினேன், ஒரு நாளைக்கு அஞ்சாறு கோவில்ல திருப்பணி செஞ்சேனே! காசி, இராமேஸ்வரம் எல்லாம் சுற்றினேனே! கடைசியில் என்னை ஏமாத்திட்டியே! பெரியவர் க்ர்ஜித்தவாறே அனைவருடைய கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் கத்திப் பேசத் துவங்கினார். “கேவலம்! ஒரு பரீட்சையில் பாஸ் பண்ணறத்துக்கா உன்னை ஆளாக்கினேன்! ஆன்மீகத்தில் பெரிய காரியம் செஞ்சி ஒரு ஆயிரம் பேருக்கு நீ பிரயோஜனமா இருப்பேன்னு பார்த்தா ஒரு சின்ன விஷயத்திற்கு ஆடிப் போயிட்டியேம் உன்னோட சொந்த முயற்சில ஒரு 30 மார்க் கூட வாங்க முடியல, உன்ன மாதிரி ஒரு அடிமண்டுவை வைச்சி நான் என்னத்தைச் சாதிக்க முடியும்.......
பெரியவர் சரமாரியாக அடுக்கிக் கொண்டே போனார், சிறுவனுக்குத் தான் பெயில் ஆனதைவிட பெரியவரின் வசைகள் தாம் பெரிதாகத் தெரிந்தன! நாலு பேருக்கு எதிரில் அதுவும் தெரு சக மாணவர்களை வைத்து வசை மாரி பொழிந்தாரே! தந்தை காதில் விழுந்தால் தோலை உரித்து விடுவாரே சிறுவன் மென்று விழுங்கியவாறே பெரியவரின் பின்னால் மறைந்து கொண்டான். அவரும் இங்கும் அங்குமாக வேகமாகத் திரும்பி சிறுவனைச் சுட்டிக்காட்டியவாறே பேசுவராயினர். “மௌனம் ஸர்வார்த்த ஸாதகம்” , என்பதற்கேற்ப சிறுவன் மௌனம் பூண்டான். சிறிது நேரங்கழித்து . “எனக்கு நிறைய வேலை இருக்கு. அடுத்த வெள்ளிக்கிழமை வந்து என்னைப் பார்” – பெரியவர் வெகுவேகமாக எதிர்த்திசையில் சென்று மறைந்தார்..

ஸ்ரீஅகத்திய பிரான் மாத்தூர்

சிறுவன் அதிர்ச்சியுற்று நின்றான். எதையோ இழந்தவன் போல மனவேதனை கொண்டான். கடந்த இரண்டு மூன்று வருடங்களாகப் பெரியவரை விட்டு ஒரு நாள் பிரிந்ததில்லை, ”பாசோ, பெயிலோ அது கிடக்கட்டும். தன்னை ஒரு வாரம் கழித்துப் பார் என்று சொல்வானேன்? ஏதோ கொஞ்சம் பாஸ் போட்டு விடக்கூடாதா என்று தானே கேட்டோம்.....”     
சிறுவன் மிகுந்த மன உளைச்சலுடன் வீடு திரும்பினான். பெயில் ஆனதற்கு வீட்டில் என்ன தண்டனை தரப் போகிறார்களோ? எவ்வளளோ அடி உதை வாங்கியாகி விட்டது! பெரியவரிடம் வந்த பிறகும் அது அதிகமானதே தவிர ஒன்றும் குறையவில்லை! வருவது வரட்டும் என்ற (தற்காலிக) வைராக்கியத்துடன் சிறுவன் தன் வீட்டில் நுழைந்தான்.
வீட்டில்..... அற்புதமான அமைதி நிரவி நிற்பது கண்டு ஆச்சர்யம் அடைந்தான். “ஒரு வேளை தான் பெயில் ஆனது இன்னும் தெரியவில்லையோ? ஆனால் ஊருக்கு முன் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் தந்தை இதை அறியாமலா இருப்பார்? !” சிறுவன் மனக் கணக்குப் போட்டவாறே ஒன்றும் அறியாதவன் போல் வீட்டு வேலைகளில் ஈடுபட்டான். நேரம் கடந்து கொண்டிருந்தது. சிறுவன் எதிர்ப்பார்த்தபடி ஒன்றும் நடக்கவில்லை! மாலை வந்தது...... பூகம்பத்தை எதிர்பார்த்து ஏமாற்றமடைந்த் சிறுவன் சற்று தைரியமாகவே தந்தையிடம் நெருங்கினான். தானே முன் வந்து, பெயில் ஆனதைச் சொல்லி விட்டால் அடி உதையில் ஏதேனும் concession  (சலுகை) கிடைக்கும் அல்லவா! சிறுவன் வாய் திறப்பதற்குள் தந்தையே முந்திக் கொண்டார்ர்., அவருடைய சிம்மக் குரல் ஓங்கியது!
“இந்த வருஷம் ஏதோ பாஸ் போட்டதற்காக ஜாலியா சுத்தாதே. இப்பவே ஒழுங்காப் படிக்க ஆரம்பிச்சிடு. வெளியில் போனால் பிரம்படி தான்....” பாஸா! சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை அதற்குள் தெரு மாணவர்கள் நாலைந்து பேர் வீட்டில் நுழைந்தனர். சிறுவனைச் சுற்றி வளைத்துக் கொண்டு பாஸ் செய்ததற்காக வாழ்த்திக் கும்மாளமிட்டனர். சிறுவன் விழித்தான். அவன் எதிர்பார்த்ததற்கு மாறாக நிகழ்ச்சிகள் நடப்பதைக் கண்டு திகைப்படைந்தான். அவனுக்குத் தலை சுற்றியது.
சிறுவன் கண் விழித்தான்.. தான் எங்கிருக்கிறோம்? சற்றும் முற்றும் பார்த்தான்..... மதுரை வீரன்  சந்நிதி! காசி விசுவநாதர் சந்நிதி! இது அங்காளி கோயில் அல்லவா? கண்களை நன்கு கசக்கிப் பார்த்திட..... எதிரே கோவணாண்டிப் பெரியவர் மலர்ந்த முகத்துடன் நின்றார்! “என்ன இது!  அதற்குள் ஒரு வாரம் ஓடிவிட்டதா? அடுத்த வெள்ளி தானே வந்து பார் என்று சொன்னார். தான் எப்படி அங்காளி கோவிலுக்கு வந்தோம். நிச்சயமாக இது கனவல்ல.”
சிறுவன் எழுந்து நின்று ஓம்காரத்துடன் பெரியவரை வணங்கினான். “என்னடா! ரெண்டு மணி நேரத்துல இப்படி ஆடிப்போயிட்டே! உன்ன சுக்கான் (anchor) ஆக வைத்து எதிர்காலத்தில் பல சத்சங்கங்களை உருவாக்கணும்னு நினைச்சேன். ஆனா பாஸா, பெயிலான்னு ஒரு சின்ன விஷயத்துக்கு ஆடிப் போயிட்டியே. உன்னை நம்பி தைரியமாக எதிலும் இறங்க முடியாது போலிருக்கே......”
சிறுவன் தன்னையுமறியாமல் வாஞ்சையுடன் கேவிக் கேவி அழத் தொடங்கினான்! பெரியவர் இதனை சட்டை செய்யவில்லை.
“ஏண்டா உன்னை பாஸ் போடவா காசி, இராமேஸ்வரம் கோயில் திருப்பணின்னு அலைய வைச்சேன். என் பின்னாடி நீ ஒழுங்கா சுத்தினா உனக்கு நடக்க வேண்டியதெல்லாம் தானா நடக்கும்! ஆனா இதை நாங்க பப்ளிக்கா சொல்றது கிடையாது. ஏன்னா வாத்தியார் நமக்கு எல்லாத்தையும் கொடுப்பார் என்ற கர்வம் வந்தால் அது குருபத்தியைக் கெடுத்துடும். உனக்கு வேண்டியதை எல்லாம் நாங்க sanction  செய்யணும்னு அவசியம் கிடையாது.
உன்னை பெயில் ஆக்க வைச்சி நீ அனுபவிச்சதை  எல்லாம் யோசிச்சுப் பார். உன்னைச் சுற்றின உலகம் நீ பாஸ்னு நெனச்சி இயங்குது. நாங்களோ உன்னை பெயில் ஆக்கிப் பல அனுபவங்களாய் டீச் பண்றோம். காலச் சக்கரத்தை முன்னாலயோ, பின்னாலயோ நகர்த்துற சக்தி சித்தர்களுக்குத் தான் உண்டு. அது போல் இல்லாததை இருப்பது போலும், காட்டுவதே சித்தர்களின் வேலை.”
“பாஸ்போட்டுடு வாத்தியாரே அப்படீன்னு நீ வேண்டிக்கிற அளவுக்கு உன்னை விட்டுட மாட்டோம். ஆனா கேட்காமலேயே தரக் கூடியவர் சற்குரு அப்படின்னு நீ உணரனும். அதுக்குத் தான் இந்த பாஸா, பெயிலாங்கற திருவிளையாடலை அங்காளி நடத்திக் காமிச்சிட்டா. நீ பாஸானத்துக்கும் காரணம் இந்த அங்காளி தான். நீ பெயிலாகி நடந்த கூத்திற்கும் காரணம் அங்காளி தான். அவளே ஸர்வலோக நாயகி! அவளோட திருவிளையாடலை யாரும் புரிஞ்சுக்க முடியாது. அவ நடத்துற பரிட்சையில் நீ பாஸாயிட்டா நீ தான் சித்த புருஷன். அதுதான் என்னோட்ட பிரார்த்தனை. அதுக்கும் இந்த அங்காளி தான் கருணை புரியணும். இப்ப நீயே சொல்லு. எந்த பரீட்சையில் நீ பாஸாகணும்?” பெரியவரின் லாவண்யமான அருளுரையைக் கேட்டு சிறுவன் அழுகையினூடே சற்றுச் சிரித்தான். பெரியவரும் வழக்கம் போல் அங்காளியைப் பார்த்தவாறே அண்டமதிர சிரித்தார்! அடிமைகளின் ஆனந்தம் அன்றோ ஆண்டாளாம் அங்காளியின் ஆனந்தம்.
** **
“டேய், வாடா! ஒரு விசேஷமான தாத்தா, பாட்டியைக் கவனிச்சுட்டு வரலாம்!” கோவணாண்டிப் பெரியவர் குரல் கொடுத்ததுதான் தாமதம், பையன் அரை டிராயரைத் தூக்கி உயரப் பிடித்துக் கொண்டு குஷியாகக் கிளம்பினான்! ஆனான் அந்த சந்தோஷம் பையனிடம் ஒரு நிமிடம் கூடத் தங்கவில்லை. காரணம், இராயபுரம் அங்காளம்மன் கோயிலிருந்து சில தப்படிகள் வைத்ததுமே தார் ரோடு தகிக்க ஆரம்பித்து விட்டது! கால்கள் தரையில் பாவாது ‘உஸ், உஸ்’ என்று சீறியவாறு, காலில் உஷ்ணந் தாங்காது பையன் துடிக்க ஆரம்பித்து விட்டான்! பெரியவரோ ஹாய்யாகக் கைகளை வீசிய வண்ணம் படுவேகமாக நடந்து வெகுதொலைவு சென்று விட்டார்! பையனுக்கு அவரைப் பிடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது! .. ‘என்ன வாத்தியாரே! பொட்டை வெயிலில் தான் கிளம்பணுமா? – பையன் முணுமுணுத்தான்..  ‘ஆமாண்டா, உனக்குன்னு தர்மராஜா காத்துக்கிட்டா இருப்பான்!  சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெயிலாவது, மழையாவது! ரொம்பத் தொலைவு இல்லைடா ராஜா! பீச் ரோட்ல போய் மயிலாப்பூர் போகணும் அவ்வளோதான்!’
‘மயிலாப்பூரா அதுவும் பீச் தார் ரோட்லயா’ சிறுவனுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது!.. ஆனால் இதற்கு முன்னால் பல சமயங்களில் திருவொற்றியூரிலிருந்து திருவான்மியூருக்கு நடுப்பகல் வெயிலில் நடந்து களைத்துச் சாய்ந்த பொழுது அபூர்வமான சில சித்த புருஷர்களின் தரிசனங்களைப் பெற்றிருக்கிறான் அச்சிறுவன்! எனவே இந்தப் பெரியவர் மிகவும் கஷ்டங்களைக் கொடுத்தால் அதன் பின்னணியில் மகத்தான விசேஷங்களிருக்கும் என்பதை ஓரளவு உணர்ந்து தெளிந்தான். இருந்தாலும் 12 வயதுச் சிறுவனல்லவா! நடுவில் சோடா, இளநீர், பதநீர்க் கடைகள் தென்பட்டால் அவ்விடங்களைப் பெரியவர் வேகமாகக் கடந்து விடுவார்! சிறுவன் அவரைப் பிடித்துச் சேர்ந்து நடக்கும்போது வெறுந் தந்திக் கம்பங்களே கண்ணில் படும்! அங்கெல்லாம் பெரியவர் வேண்டுமென்றே மெதுவாக நடப்பார்! அப்பாடா! குருகுலவாசத்தில் என்ன கடுமையான சோதனைகள்! சிறுவன் என்று கூடப் பாராது நியதிகள், விதிகளைச் சிறிதுந் தளர்த்தாதுப் பலவிதக் கட்டுப்பாடுகளுடன் ஓர் அற்புதமான குருகுலவாசத்தை அமைத்துத் தந்தார் நம் சிவகுரு மங்களகந்தர்வராகிய ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகள்! ஒரு வழியாக மயிலாப்பூரும் வந்தது! சித்திரைக் குளம் அருகே சென்ற பெரியவர் ஒரு வீட்டினுள் நுழைந்தார். ஏதோ அங்கு பழக்கப்பட்டவர்போல் திண்ணை, தாழ்வாரம், முற்றத்தைக் கடந்து செல்ல சிறுவன் அதிசயித்தவாறே தொடர்ந்தான்!
ஹாலில் ஒரு வயதான பெரியவரும், பாட்டியும் சம்பாஷித்துக் கொண்டிருந்தனர்..., ‘ஏ! இன்னிக்கு விடியக்காலைல ஒரு கனா! நம்ப ரெண்டு பேரும் திருக்கடவூர் போய்...... பாட்டி  சொல்லி முடிப்பதற்குள் தாத்தா குறுக்கிட்டு.....’ திருக்கடவூர் போய் நம்ப ரெண்டு பேரும் மாலை மாத்திண்டு அப்படியே சுவாமி சன்னதிலே ஒண்ணா விழுந்து நமஸ்காரம் பண்றோம். அப்புறம் எழுந்திருக்கவே இல்லை! கனவும் கலைஞ்சிடுத்து....’
பாட்டி திகைத்தாள்! .. ‘ஏ! உங்களுக்கும் அதே கனவா!’ பெரியவர் அரைவட்ட வாயால் சிரித்தார்! என்ன அன்யோன்யமான தம்பதிகள்! அதிகமாகச் சிரித்ததினாலோ என்னவோ பெரியவருக்கு விக்கல் வந்துவிட்டது. ‘தெரியுமே! உங்களுக்கு விக்கும்னு....’  - பாட்டி டக்கென்று சொம்பு ஜலத்தை எடுத்து அவர் வாயில் ஊற்றினாள்... கணவன் மனமறிந்த பதிவிரதை! ஒருவரை ஒருவர் நன்கு அறிந்து வாழ்ந்த தம்பதிகளோ! ‘சிவசிவா!’ என்றவாறு செம்பு நீர் வழிய, தாத்தா சுவரில் சாய, ‘சிவசிவா’! என்றவாறே பாட்டியும் அதே சமயத்தில் அவர் மார்பில் சாய்ந்தாள்.
“அவங்க பெரிய தூக்கம் தூங்கிட்டாங்க”, என்றவாறே பெரியவர் சிறுவனைக் கூட்டிக்கொண்டு வெளியில் வர “வாத்தியாரே! யாரோ ராஜா மாதிரி ஒருத்தர் அந்தத் தாத்தா பாட்டிக் கால் மாட்டுல தாமரைப் பூ வைச்சு நமஸ்காரம் பண்ணின மாதிரி இருந்தது. வாத்தியாரே! “ சிறுவன் வேகமாக ஒப்புவித்தான்! அது வேறே உன் கண்ல பட்டுடுச்சா.... ‘என்றவாறே சிறுவனைக் கூட்டிக் கொண்டு அருகிலிருந்த வெள்ளீஸ்வரர் கோயிலுக்குள் சென்றார் பெரியவர்..., ‘யார் அந்த தேவ உருவில் வந்தவர்! ‘ சிறுவன் யோசித்தான்... அவன் மனக் கணக்குப் போடத் தொடங்கினான்!
பரபரப்பான அந்த இடத்தில் இவர் கோவணத்துடன் பரக்கப் பரக்க நடப்பது சிறுவனுக்கு என்னவோ போலிருந்தது! ‘எப்படி இதை அவருக்கு எடுத்துச் சொல்லுவது!’ பல இடங்களில் சிறுவனுக்கு இத்தகைய எண்ணங்கள் வந்து அதன் மூலம் பல அதிசயங்களையும் சந்தித்திருந்தான்! இவனுக்கு கோவாணாண்டியாய்த் தெரிகின்ற அவரது ரூபம், மற்றவர்களுக்கு வெவ்வேறு விதங்களில் இருப்பதாகப் பலர் கூறக்கேட்டு அவன் வியந்திருக்கிறான்! இவர் தாம் எதையும் சாதிக்கவல்லவராயிற்றே! எதையும் வெளிக்காட்டுவதும் இல்லை!
கோயிலில் ..... ஸ்ரீவெள்ளீஸ்வரரின் திருச்சந்நதியை ஆமையை விட மெதுவான வேகத்தில் வலம் வந்தார் பெரியவர்...”இங்கிருக்கும் ஸ்ரீகாமாட்சி அம்மனைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் வெள்ளீஸ்வரரை தரிசனம் பண்ணனும் அதுதான் முறை!........ காட்ராக்ட், க்ளூகோமா போன்ற கடுமையான கண் நோய்களுக்குக் கண்கண்ட சுவாமியே ஸ்ரீவெள்ளீஸ்வர மூர்த்தி! சகலவித கண் நோய்களுக்கு நிவாரணம் தரும் அற்புத சிவமூர்த்தி!
“..... பலிச்சக்ரவர்த்தி தான புராணத்தில் சுக்ராச்சார்யாருக்குக் கண் பார்வை போயிடுதில்லையா! அவர் இங்கு வந்து தபஸ் பண்ணி தன் கண் பார்வையைப் பெற்ற இடம் இது!” ....... கண் டாக்டர்களெல்லாம் இவரை வேண்டி இவருக்குத் திருப்பணி பண்ணினா எந்தக் கண் ஆபரேஷனும் நல்லபடியாக சுலபமா நடக்கும்.”
“.........ஸ்ரீவெள்ளீஸ்வரரைத் தரிசனம் பண்ணிட்டுத்தான் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்குப் போகணும். இந்தத் தரிசன முறைதான் ஸ்ரீகபாலீஸ்வரரின் பரிபூரண அருளைக் கொடுக்கும்.... இதெல்லாம் நமப ஜனங்களுக்குத் தெரியாது.... எடுத்துச் சொல்லு”! பத்தே நிமிடங்களில் ஸ்ரீவெள்ளீஸ்வரர் கோவிலைப் பற்றி ஒரு பெரிய சொற்பொழிவையே ஆற்றி விட்டார் பெரியவர்! சிறுவன் திகைத்தான்... இவ்வளவு விஷயங்களையும் தன் சிறிய மூளையில் எவ்வாறு ஏற்றிக் கொள்வது? ஆனால் பெரியவரின் ஆசியால் இதே கோயிலில் பல ஆன்மீகப் பேரூரைகளை வழங்கி அன்று சிறுவனாகவும், இன்று குருமங்களகந்தர்வராகவும் மலர்ந்து அரும்பெரும் இறைப்பணி ஆற்றிவருகின்ற ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சற்குருவின் பின்னாலன்றோ சுற்ற வேண்டும்! சுற்றினால் கிட்டுவதன்றோ சுந்தரானந்தம்!
பெரியவர் சிறுவனை அழைத்துக் கொண்டு மீண்டும் சித்திரைக் குளத்தருகே அந்த வீட்டுக்கு வந்தார். வாசலில் பெருங்கூட்டம்..
“புருஷனும் பெண்டாட்டியும் ஒண்ணாப் போய் சேர்ந்துட்டாங்க. விசேஷமான சாவு!”
“கடவுள் ரெண்டு பேரையும் சேர்ந்து ஒண்ணா அழைச்சிட்டார்”. இவ்வாறாகப் பலர் பேசிக் கொண்டிருந்தார்கள்.  சிறுவன் புரிந்து கொண்டான். “இதுவோ பெருந்துக்கம்! பெரும் பாக்கியமன்றோ! அந்தப் பாட்டியும் தாத்தாவும் பூலோகத்தை விட்டுக் கிளம்பிட்டாங்க!” சிறுவன் பெரியவரைப் பார்த்தான் . அவர் அமைதியாகக் கூறினார். “தம்பதிங்கன்னா இவங்களை மாதிரி அன்யோன்யமா இருக்கணும். ஒருத்தரை ஒருத்தர் நல்லா புரிஞ்சுண்டு வாழணும். கணவன் நினைக்கிறதை மனைவி மனோவேகத்தில் புரிஞ்சுண்டு உடனே அதைச் செய்யணும். மொத்தத்துல ரெண்டு பேரோட எண்ணங்களும், நினைவுகளும் ஒண்ணா இருக்கணும். இந்த நிலையை அடையறுக்குத்தான் கடவுள் ஒவ்வொரு தம்பதிக்கும் முப்பது, நாற்பது வருஷ நீண்ட தாம்பத்ய வாழ்க்கையைக் கொடுக்கிறார். இத்தனை வருஷங்களுக்குள்ள அவங்க ரெண்டு பேரும் தங்களோட மனக்குறைகளை நிறைவு செஞ்சுண்டு பரஸ்பர அன்போடு ஒருவரை ஒருவர் புரிஞ்சுண்டு வாழணும். இதுதான் உண்மையான அன்பு. இப்படி வாழ்ந்தா அவங்க ரெண்டு பேரையும் ஒரே டயத்துல கடவுள் தன்னிடம் அழைத்துக் கொள்கிறான்!”
“இந்த தாத்தா, பாட்டியோட வாழ்க்கையும் அப்படி அடைஞ்சதுதான்!” அறுபதுல திருமணம், எண்பதுல திருமணம் செய்ய வேண்டும் என்றால் இருவர் நினைவும் ஒன்றாக இருப்பதைக் குறிக்கிறது. இருவர் நினைவும் செயலும் ஒன்றாக இல்லாது சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் செய்தால் அது ஊருக்காகச் செய்யும் திருமணம் ஆகும்” என்றார் சிவகுருமங்கள கந்தர்வா. அங்குக் கூடிநின்றோர் பெரியவரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவர்கள் போல் அமைதியாகக் கேட்டு நின்றனர். இந்தத் தெய்வீக அருள் மொழிகள் அவர்களுக்கு மட்டுமா? இல்லை, இல்லை கலியுக மக்களுக்கு மகத்தான சித்த புருஷரின் இறையருள் பொங்கும் உரைபொருளன்றோ!
..... சிறுவன் மெதுவாகப் பெரியவரின் காதில் கேட்டான் “ராஜா மாதிரி ஒருத்தர் தாமரைப் பூவ அவங்க கால்மாட்டுல வெச்சாரே, அது யாரு வாத்தியாரே?” பெரியவர் மறுமொழி கூறாது அவ்விடத்தை விட்டு நகர்ந்து சித்திரைக் குளம் அருகே ஒரு மண்டபத்தில் அமர்ந்தார். அங்கிருந்தபடியே ஸ்ரீகேசவ பெருமாள் ஆலய கோபுரத்தைத் தரிசனம் செய்தவாறே “இதோ,பாருடா.” என்று தன் இடது உள்ளங்கையை விரித்துக் காட்டினார். ஆம்,  அவரது உள்ளங்கையே ஒரு பெரிய T.Vயாக பல தெய்வீக காட்சிகளை அளித்தது. அந்தத் தெய்வத் திருக்கரத்தில், சிறுவன் , பல உன்னத சித்புருஷர்கள், மஹான்கள், யோகிகளின் திருஉருவங்களைக் கண்டு தரிசித்திருக்கிறான்! அந்தத் திருக்கரத்தில் எத்தனைக் கோயில்கள், மூர்த்திகள், தீர்த்தங்களையுந் தரிசனம் செய்திருக்கிறான்! சத்யலோகம், ஸ்ரீராமசந்திரிணி லோகம், ஸ்ரீவருணா இஷ்ட திகம்பர லோகம், ஸ்ரீசங்கர லோகம் போன்ற அற்புதமான விண்ணுலக லோகங்களைக் கண்டு ஆனந்தித்திருக்கிறான்! தம் குருநாதர் பல தெய்வ மூர்த்திகளுடனும், பல சித்தர்ளுடனும் இனம் புரியாத பாஷைகளில் உரையாடுவதை அத்திருக்கரத்தில் காணும் பேறு பெற்று உய்வடைந்திருக்கிறான்! சொற்பொருள் கடந்த நிலைகளை அளித்த சற்குருநாதரின் தெய்வீகத் திருக்கரமல்லவா அது!
மேற்கண்ட மகிழ்வான சம்பவங்களை எண்ணித் தன் நிலை மறந்து நின்ற சிறுவனை, “அந்த ராஜா யாருன்னு கேட்டியே, இந்த TVல பார்த்துக்கோ, “என்ற பெரியவரின் குரல் ஈர்த்தது. சிறுவன் TVஐப் பார்த்தான். ஆங்கே பெரியவரின் இடது உள்ளகையில்...... அந்த தாத்தாவும் பாட்டியும் பேசுகின்ற காட்சியைக் கண்டான்! ஒரு மணி நேரத்துக்கு முன்னால் கண்ட தத்ரூபமான வாழ்க்கை நிகழ்ச்சி.
.... தாத்தா சுவரில் சாய்ந்திட, பாட்டியும் அவர் மார்பில் சாய... ஓர் அழகான தெய்வ உருவம் அங்குத் தோன்றி அவ்வயதான தம்பதிகளின் பாதங்களில் தாமரைப் புஷ்பங்கள் இட்டு நமஸ்கரித்து. “தெய்வீக வாழ்க்கை வாழ்ந்த தங்கள் இருவருடைய பூலோக வாழ்க்கை இந்நேரத்துடன் முடிவடைகிறது என்பதை இறையருளால் அறிவிக்கின்றோம். இது தாங்கள் அறிந்ததே” என்று கூறிட... இந்தத் தேவ உருவத்தையல்லவோ சிறுவன் முன்னர் கண்டான். அவ்விரு வயதான தம்பதியரும் புதுவடிவு பெற்று அந்தத் தெய்வ மூர்த்தியை நமஸ்கரித்து எழுந்து, ‘சிவ சிவ! அறக்கடவுளாம் ஸ்ரீகால மஹாப் பிரபுவாம் ஸ்ரீஎமதர்மராஜாவாகிய தாங்களே எங்களை நமஸ்கரித்தது கண்டு வருந்துகிறோம்’‘ என்று கூறி வணங்கிய, பெறும்பேறு பெற்ற அத்தெய்வத் தம்பதியினரை, “நமசிவாய ! தங்களைப் போன்ற இணைபிரியா அன்பு வாழ்க்கை வாழ்ந்தோரை அடியேனே அழைத்துவரும் பாக்கியம் பெற யாம் ஸ்ரீகாலபைரவ மூர்த்தியைத் தோத்திரம் செய்கின்றோம். இது பெறற்கரிய பாக்கியம் அல்லவா?“ என அறக்கடவுளாகிய தேவஉருக் கொண்ட ஸ்ரீஎமதர்மபகவான் போற்றி நின்றார்.
............சிறுவன் ‘ஆ’வென்று வாயைப் பிளந்த வண்ணம் பார்த்து நிற்க, பெரியவர் டக்கென்று தன் கையை இழுத்துக் கொண்டார். “இதுவரைக்கும் பார்ப்பதற்குத்தான் உனக்குப் ப்ராப்தம்” என்று சிரித்துக் கொண்டே எழுந்தார். “அந்த ராஜா மாதிரி தேவரூபம் யாருன்னு கேட்டியே. நான்தான் காலையிலேயே உனக்குச் சொன்னேனே...!! நீ சரியாப் புரிஞ்சுக்கலை. நீ சரியான களிமண்டு...!“ பெரியவர் நிற்காமல் விரைந்தார்! சிறுவனுக்கு மின்னலடித்தாற் போல் நினைவு வந்தது.. காலையில் அவர் என்ன சொன்னார்? “ஆமாண்டா, உனக்குன்னு தர்மராஜா காத்துகிட்டா இருப்பான் சந்தர்ப்பம் கிடைக்கும் போது வெய்யிலாவது.... மழையாவது! “
“என்ன தீர்க தரிசனத்துடன் பெரியவர் காலையிலேயே சொன்னார்! வெயிலுக்குப் பயந்திருந்தால் இந்த அற்புதமான தம்பதியினரைப் பார்க்க முடிந்திருக்குமா? எல்லாவற்றையும் விட மரணத்திற்கு அஞ்சி அஞ்சிப் பலகோடி மக்கள் வாழும்போது அறக்கடவுளாம்  சாட்சாத் ஸ்ரீஎமதர்மராஜாவின் அதியற்புத தெய்வீக ரூபத்தைக் காணும் பேறு கிடைப்பது குரு அருள் சத்தியினாலல்லவா! சற்குருவான இவரையல்லவா நாம் சிக்கெனப் பிடிக்க வேண்டும்!“
சிறுவன் இவ்வாறு எண்ணி முடிப்பதற்குள் பெரியவர் சித்திரைக் குளம் தாண்டி நெடுந்தூரம் சென்று விட்டார். வழக்கம் போல் சிறுவன் விரைந்தான். இறைத் திருவருளால் அவரைச் சிக்கெனப் பிடித்தான்....
“சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவது இனியே!”

ஆரோக்கிய வாழ்வு

ஆரோக்கிய வாழிற்கு ஆசான் அளிக்கும் அற்புத அருள் மருந்து.
மனிதன் தன்னுடைய தீவினைகளின், பாவங்களின் சம்பளமாக நோய்கள், பண, மனக்கவலைகள் போன்றவற்றைத் துன்பங்களாகப் பெறுகிறான். தொற்று நோய், விபத்துக்கள், உடல் தளர்ச்சி, சுற்றுபுறச் சூழ்நிலை, குடிதண்ணீர்க் கோளாறுகள் போன்றவற்றால் நோய்கள் ஏற்படுவதாக மனிதன் உணர்கிறான். உண்மையில் அவனுடைய முன் ஜென்மத் தீவினைகளும், தற்போதைய ஜென்மத்தின் தீச்செயல்களுமே அவனுக்கு நோய்களை அளிக்கின்றன. நோய்க்கான மருந்து என்பது புண்ணியத்தின் வடிவே. மருந்து, ஊசி, மாத்திரைகள், டாக்டர் பீஸ் போன்ற மருத்துவச் செலவிற்கு அவன் பணத்தைச் செலவழிக்க வேண்டியுள்ளது. பணம் என்பது மனிதனின் புண்ணியத்திற்கான வட்டியே ஆகும். இதனால் அவரவர் கர்ம வினைக்கேற்ப நோய்கள் வந்து சேருகின்றன. அவற்றைப் புண்ய சக்தியால் தான் தீர்க்க வேண்டும் என்பதை உணர வேண்டும். இதற்காகப் பிறரை நிந்திக்க கூடாது.
நோய்களுக்கான அடிப்படைக் காரணம்.
“எனக்கு நினைவு தெரிந்தவரை எவருக்கும் தீங்கு இழைத்ததில்லையே! அனைவருக்கும் இயன்றவரை உபகாரங்கள் செய்து வந்துள்ளேனே! எனக்கு ஏன் இத்தகையத் துன்பங்கள் வந்து சேருகின்றன ?” என்ற இறைவனிடம் மன்றாடுவோர் உண்டு. அவர்தம் பூர்வ ஜென்ம வினைகளே அத்தகைய துன்பங்கட்குக் காரணம். இப்பிறவியில் செய்த உதவிகளுக்கு இப்பிறவியிலேயோ, அல்லது எதிர்வரும் பிறவிகளிலோ நிச்சயமாக இறைவனின் பரிபூரண அருள் கிட்டும். செய்த குற்றங்கட்குத் தண்டனை அனுபவிப்பது தானே நியாயமானதாகும். எனவே நோய்கள் வரும் போதெல்லாம், “இறைவா! நான் செய்த இத்தீவினைகட்கான தண்டனையாக இந்த நோயை அளித்துள்ளாய்! இந்த நோயைத் தாங்கும் சக்தியை எனக்களித்து நல்வழி காட்டுவாயாக!“ என்று மனமாரப் பிரார்த்திக்க வேண்டும். ஆனால் இந்த மனோபாவம் எளிதில் வராது! இத்தகைய உன்னத ஆன்மீக நிலையைப் பெற்றால் துன்பங்களை மனதார ஏற்றவாறே இறைவனை எளிதில் அடையலாம். இந்த உயர்ந்த மனோபாவத்தைப் பெறும் வழி யாது ? இதற்கான அற்புதமான ஆன்மீக இரகசியங்களை நம்குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எடுத்தருளியுள்ளார்கள்.
நோய் வரும் முறை
நோய் நாடி, நோய் முதல் நாடும் தன்மைக்கு ஸ்ரீதன்வந்த்ரி வழிபாடு சித்தர்களால் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனுடைய கர்ம வினைகளையும் வகுத்து அவனுடைய பாவ, புண்ணிய காரியங்கட்குத் தக்க பலாபலனை அளிப்பதற்கும் பல தேவதைகள் உள்ளன. பாவங்கட்குரித்தானப் பயங்களாகவே பலவகை நோய்கள். மனோபீஷ்டங்கள், பணப்ரச்னைகள்,  குடும்பத்தில் பல பிரச்சினைகள் போன்றவை ஏற்படுகின்றன. இவற்றை பகுத்து அளிக்கும் தேவதைகளும் உண்டு. இவை தர்ம தேவதைகளின் ஆணைக்குட்பட்டவை.
நோய்களைத் தருவதால் இவை தீய தேவதைகள் ஆகா. தர்மத்தை நிலைநாட்டும் ஒரு உத்தம நீதிபதியைப் போல இத்தேவதைகள் செயல்படுகின்றன. இதேபோன்று ஒவ்வொரு நோயையும் குணமாக்கும் ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தியும் உண்டு. உலகில் எவ்வளவு நோய்கள் உள்ளனவோ அதற்குரித்தான அத்துணை தேவதைகளும் ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்திகளும் உண்டு. நோய் முதல் நாடும் பாங்காக ஸ்ரீஅகஸ்தியர், ஒவ்வொரு நோயும் வருவதற்கான கர்மவினை, அந்நோய்க்குரித்தான தேவதை, அந்நோயைக் குணமாக்கும் தன்வந்த்ரி மூர்த்தியையும் விளக்கியுள்ளார். ஆரோக்கிய வாழ்விற்கு ஆசான் அளிக்கும் ஆன்மீக அற்புத அருள்மருந்து என்ற தலைப்பில் கலியுக மக்களைப் பாதிக்கும் பொதுவான நோய்களுக்கான ஆன்மீகக் காரணங்கள், அதற்குரித்தான தேவதை, அந்நோயைக் குணமாக்கும் ஸ்ரீதன்வந்திரி ஆகியவை பற்றிய விளக்கங்களை நம் குருமங்கள கந்தர்வா இதில் நமக்கு எடுத்துரைக்கின்றார்.
நோய்க்குரித்தான தேவதையைத் துதித்திட, அந்நோய் வந்து அமைந்ததற்கான அவரவர் தீவினை பற்றிய அறிவு ஏற்படும். இதனால் அத்தீவினைகட்கு மனதார வருந்தி பரிகாரம் நாடும் நல்வழி கிட்டுகிறது. இந்த தேவதையைத் துதிப்பதால் அத்தகைய தீவினைகட்கு  மனிதன் மீண்டும் ஆட்படமாட்டான் என்பது உறுதி. அந்நோயைத் தீர்க்கும் ஸ்ரீதன்வந்திரியை வணங்கி தியானித்தே மருந்துகளை ஏற்க வேண்டும். இதனால் நேயைத் தாங்கும் சக்தியும், குணமும் விரைவில் ஏற்படும். மொத்தத்தில் நமக்கு வரும் துன்பங்களின் மூலம், கர்மயோகம் மார்க்கமாய் இறையவனைப் பற்றிய ஞானத்தை உய்த்துணரலாம். நோயும், ஞானம் தரும் வழியே! நோய் தரும் ஞானம் பிறவி நோயைத் தீர்க்கும்! இனி பொதுவான சில நோய்களைப் பற்றிய ஆன்மீக விளக்கங்களைக் காண்போமாக!
தலைவலி
இதில் பலவிதங்கள் உண்டு. சிறுவர்களாய் இருக்கும் போது இரைச்சல், விளையாட்டு, குழந்தைத்தனம் போன்ற காரணங்களால், பல பெரியோர்களை நச்சரித்து அவர்களுக்குத் தீராத தலைவலியை உண்டாக்கியிருப்போம். முதியோர்களுக்கு அமைதி தான் தேவை. அவர்களுடைய அமைதியைக் குலைக்கும் வண்ணம் கூச்சலிட்டால் ”போடா! உன்னோட பெரிய தலைவலியா இருக்கு“ என்று அவர்கள் சபித்திட அது தலைவலியாக மாறி பலிக்கும்..
இவ்வாறு காரணமற்ற தலைவலிக்கு மேற்கண்ட கர்மவினைகளே காரணமாகும். இத்தகைய வினைக்கான தலைவலியைத் தரும் தேவதை நித்யா கபாலிகா.
பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டில் ஒரு காரணமுமின்றி இவ்வாறு தலைவலி ஏற்பட்டால் உடனே தலைவலி தீர்க்கும் மாத்திரையை உண்பது வழக்கமாகிவிட்டது. இதற்கு மாறாகத் தலைவலியோடு தலைவலியாக “ஸ்ரீநித்ய கபாலிகா தேவ்யை நம:‘ (ஸ்ரீநித்ய கபாலிகா தேவியே போற்றி) என்று தியானித்திட நாம் சிறு வயதில் செய்த சிறு சிறு தீவினைக் கர்மங்கள் நினைவில் வந்து அவைகட்குப் பரிகாரங்கிட்டும்.
இந்நோயைத் தீர்க்கும் தன்வந்திரி ஸ்ரீபரிவர்த்தக தன்வந்திரி ஆவார். நோய்க்கான பரிகாரம், முதியோருக்கான அனாதை இல்லங்களில் சேவைபுரிதல், ஸ்ரீவிஜய கணபதி கோவிலில் வாழைப்பழம் அளித்தல்.. முதியோர் இல்லங்களில் வயதானோர்க்கு சேவை, மன ஆறுதல் அளித்தல், மருத்துவ உதவி போன்ற சேவைகளைப் புரிதல் போன்ற சேவைகளினால் அடிக்கடி தலைவலி வருவதை அறவே தடுக்கலாம்.
ஸ்ரீநித்ய கபாலிகா தேவி தியானம்
‘ஸ்ரீம் ஓம் நித்யா கபாலிகா ஹரி ஓம்! ஜய ஹரி ஸ்ரீஹரி ஓம்! இதுவே ஸ்ரீநித்ய கபாலிகா தேவிக்கான மந்திரம் ஆகும். தினமும் குறைந்தது 108 முறையேனும் துதிக்க வேண்டும். தலைவலி இருக்கும்போது  இந்த மந்திரத்தைத் துதித்திட, அடிக்கடி காரணம் இல்லாமல் ஏற்படுகின்ற தலைவலி நோய் தீரும். தலைவலிகளில் பலவிதம் உண்டு. ஒவ்வொன்றிற்கும் உரித்தான காரணங்கள், தேவதை, ஸ்ரீதன்வந்திரி முர்த்தி போன்றவற்றை விளக்கிட அது பெரும் நூலாக விரியும். மைக்ரயின் (MIGRAINE)  போன்ற கொடிய தலைவலி நோய் உள்ளவர்கள் மேற்கண்ட ஸ்ரீநித்ய கபாலிகா தேவியின் மந்திரத்தைத் தியானித்து முதியோர் இல்லங்களில் வயதானோர்க்கு சரீர சேவை புரிந்திட அற்புதமான முறையில் நிவாரணம் கிட்டும். ஏற்கனவே குறிபிட்டிருப்பது போல் ஸ்ரீநித்யா கபாலிகா தேவியின் தியானமானது தனக்கு நோய் வந்ததற்கான காரணங்களை உய்த்துணரச் செய்து ‘நம்முடைய தீவினைப் பயனாகவே இத்தலைவலி நோய் தன்னை வாட்டுகிறது. எனவே இத்தலைவலியைப் பொறுத்துக் கொள்வோமானால், பல தீவினைகளைக் கழித்து அவற்றிலிருந்து நிவாரணம் பெறலாம்’ என்ற நல்லெண்ணத்தை அளிக்கின்றது. இதனால் அசாத்தியப் பொறுமை, சகிப்புத் தன்மை, பிறரிடம் வெறுப்புணர்வு காட்டாமை போன்ற அரிய நற்குணங்களும் உருவாகின்றன.
அடுத்து, தலைவலிக்குரித்தான மாத்திரை, மருந்துகளை உண்ணும் போது, தலைவலியை குண்மாக்குகின்ற ஸ்ரீபரிவர்த்தக தன்வந்த்ரி மூர்த்தியைத் தியானித்து மருந்துகளை ஏற்க வேண்டும்.
‘பவ சிவ ஸ்ரீஜெய ஓம்! ஹரி ஹரிமங்கள ஹரி ஓம்!’ என்ற மந்திரமே ஸ்ரீபரிவர்த்தக தன்வந்த்ரி மூர்த்திக்கு உரித்தான மந்திரமாகும். இம்மந்திரத்தைத் துதித்தவாறே, ‘ஹே! ஸ்ரீவிஷ்ணு சொரூபரே, அடியேனின் சில தீவினைகளின் தன்மையாக இத்தலைவலிக்கு ஆட்பட்டுள்ளேன். இந்நோயின் துன்பங்களைத் தாங்கும் சக்தியைத் தந்து இதிலிருந்து நிவாரணம் பெற அருள்வாயாக!’ என்று தியானிக்க வேண்டும். நோய்க்குரித்தான தேவதை, நோயைக் குணமாக்கும் ஸ்ரீதன்வந்த்ரி ஆகியோரைப் பிரார்த்தித்தால் மட்டும் போதாதா? மருந்துகள் தேவைதானா என்ற எண்ணம் எழலாம்.
1. நம் முன்ஜென்ம, இப்பிறவியின் சில கர்மங்களின் விளைவே எந்நோயும் என்ற மனப்பான்மையை காலப்போக்கில் தான் பெறமுடியும்.
2. நோயின் உபாதைகளை முழுமையாகத் தாங்கும் பக்குவம், மனோதிடம், உடல்திறன், வைராக்கியம் போன்றவற்றைப் பெற பரிபூரண இறை நம்பிக்கை தேவை.
3. அவரவர் செயல்களின் விளைவுகளுக்கேற்ப நோயை அளிப்பவனும், தீர்ப்பவனும் இறைவனே என்ற சீரிய மனநிலையையும் பெற, குரு அருகில் இருந்து வழிகாட்டுதல் வேண்டும்.
மேற்கண்ட உன்னத நிலைகளை அடைவோர்க்கு எந்நோய்க்கும், எம்மருந்தும் தேவையில்லை! ஆனால், இந்த உத்தமமான தெய்வீக நிலையைப் பெறும் வரை மருந்துகள் தேவையே! மருந்துகளைத் தக்க இறைநாமத்துடன் உச்சரித்து ஏற்றிட நோய்விரைவில் குணமடையும்.
காய்ச்சல் (ஜுரம் – FEVER)
காய்ச்சல் வருவதற்கான காரணங்களாக ஸ்ரீஅகஸ்திய கிரந்தம் விளக்குவதாவது.
1. முதியோர்கள், உறவினர்கள், ஏழைகள் ஆகியோருக்கு ஆறிய, நீர்விட்ட உணவை அளித்தல்.
2. முதியோர், நோயாளிகளுக்குத் தேவையான போது வெந்நீர் அளிக்காது வருத்துதல்
பொதுவாக வயதானோர் சற்று சூடான நீரையும், உணவையுமே விரும்புவர். அவர்களை நிந்தித்து மனதை வருத்தித் தகாத முறையில் அவர்களை நடத்துதல், முப்பிறவியிலோ, இப்பிறவியிலோ, அறிந்தோ அறியாமலோ இவ்வாறு நடந்திடில் அடிக்கடி காய்ச்சல் நோய் ஏற்படுகிறது.
நோய்க்குரித்தான தேவதை :- ‘ஸ்ரீஅக்னி கணதீபிகா’ என்ற தேவதையே மேற்கண்ட வினைகளுக்கானக் காய்ச்சல் நோயை அளிக்கின்றார். அடிக்கடி காரணமின்றி காய்ச்சல் நோயால் அவதியுறுவோர், பால் சாதம் சமைத்து, 108 முறை காயத்ரி மந்திரம் ஜபித்து, அதனை இறைவனுக்குப் படைத்து நாய்க்கு அளித்தல் வேண்டும். இதுவே இந்நோய்க்குரிய பரிகாரமாகும். இதனுடன் ‘ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி’ எழுந்தருளியுள்ள கோயில்களில், அர்ச்சனை, அபிஷேகம், பால் சாத தானம், இயன்ற அளவு (உழவாரத்) திருப்பணி செய்திட அடிக்கடி காய்ச்சல், காங்கை நோய் ஏற்படுவது தீரும்.
கும்பகோணம் நாகேஸ்வரர் கோயில், தஞ்சை ஸ்ரீசங்கர நாராயணன் சிவன் கோயில் போன்ற கோயில்களில் ஸ்ரீஜுரஹரேஸ்வர மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இவர் ஸ்ரீசங்கர நாராயண மூர்த்தியின் அம்சங்களைப் பூண்டவர்.
ஸ்ரீஅக்னி கண தீபிகா தேவதைக்கான மந்திரம் :  -
‘மாலா ஜய அக்னி கண தீபிகா ஜெய ஓம்! ஸ்ரீசிவ ஹரிகண ஓம்’
காய்ச்சல் ஏற்படும் போது இந்த மந்திரத்தைத் தியானித்திட காய்ச்சல் நோய் ஏற்படுவதற்கான (ஆன்மீகக்) காரணங்களை உணரும் பக்குவம் கிட்டிடும். சாதாரண காய்ச்சலைத் தீர்க்கும் மூர்த்தியே ஸ்ரீபால சக்ர தன்வந்த்ரீ மூர்த்தியாவார். காய்ச்சலுக்கான மருந்தை உண்கையில், ‘ஸ்ரீஹரி சுதர்ஸன தேவதா வரிஇஷ்ட ஹரி ஓம்’ என்ற மந்திரத்தைத் துதித்து ஸ்ரீபால சக்ர தன்வந்த்ரீ மூர்த்தியை தியானித்து மருந்தை ஏற்க வேண்டும் . இதனால் காய்ச்சலிலிருந்து வெகு விரைவில் நிவாரணம் பெறலாம்.

குரு கிரக சம்பவம்

சமீபத்திய வியாழன் கிரஹ சம்பவம் – ஆன்மீக விளக்கங்கள்
வியாழன் (குரு) கிரஹத்தில் நற்குண சக்திகள் (Positive forces) மிகுந்திருப்பதால் இந்த கிரஹவாசிகளில் பெரும்பான்மையோர் வலிமை வாய்ந்த இறை சக்திகளாய்ப் பிரகாசித்து, பிரபஞ்சத்தின் பல லோகங்களில் குறிப்பாக பூலோகத்தில் உலவும் எண்ணற்ற எதிர் வினைகளை (negative forces) எதிர்த்துப் போராடுவதற்கான ஆற்றலை நல்லோர்க்கு அளிக்கின்றனர். எவ்வாறு? அன்னதானம், மருத்துவ சேவை, கோயில் (உழவாரத்) திருப்பணிகள் போன்ற உன்னதமான மக்கள் சேவைகளை பல சத்சங்கங்கள் மூலமாகக் கூட்டாக நிறைவேற்றுகையில் அபரிதமான புண்யசக்தி பெருகுகிறது. தனித்து நின்று ஆற்றும் நற்காரியங்களில் கிட்டும் புண்ய சக்தியால் அதன் பலன் அந்தத் தனியொருவருக்குத்தான் சேரும். அவர் தான் எதையும் எதிர்பாராமல் நற்காரியங்களைச் செய்து வருவதாக எண்ணக்கூடும். ஆனால் பலர் ஒன்று கூடின் மாபெரும் நற்காரியங்களை நிறைவேற்றலாமன்றோ! பத்தாயிரம் பேருக்கு அன்னமளித்தல், ஸ்ரீரங்கம் போன்ற பெரிய கோயில்களில் (உழவாரத்) திருப்பணி புரிதல், ஆயிரக்கணக்கானோருக்கு இலவச மருத்துவச் சேவை போன்ற மகத்தான நற்காரியங்களைத் தனி ஒருவரால் நிறைவேற்ற முடியுமா? ஆனால் சற்குரு நடத்தும் சத்சங்கங்களில் சேர்ந்தால் இத்தகைய நற்காரியங்கள் நடைபெறுதற்கு ஒரு சிறு கருவியாக அமையலாமன்றோ!
அதிசய சக்தி
குருகிரஹ வாசிகள் இத்தகைய சத்சங்கங்களுக்கு ஆன்மீக சக்தியளித்து நற்காரியங்களின் மூலம் இறைநெறியைப் பரப்பி, ஜாதி, மத பேதமில்லா அன்புலகைப் படைக்க உறுதுணை புரிகின்றனர். சத்சங்க நற்காரியங்களில், உதாரணமாக பெரிய கோயில் (உழவாரத்) திருப்பணியில் ஈடுபடும் சாதகன் தன்னை ஒரு பெரிய சக்தி ஊக்குவிப்பதை உணர்கிறான். சாதாரணமாக ஒரு சிறு அறையைக் கூட்டி மெழுகினால் கூட எளிதில் களைப்படையும் அவன், கோயில் திருப்பணியில் பெரிய பிரஹாரத்தையே பலருடன் சேர்ந்து சுத்தம் செய்தும் சிறிது கூடக் களைப்பை உணர்வதில்லை! இந்த அதிசய சக்தி எங்கிருந்து வந்தது. இதுவே குருகிரஹ ரிஷிபுருஷர்களின் திருவிளையாடல்! இதனை இலை மறை காய் அற்புததெய்வீகத் தன்மையுடன் நிகழ்த்தித் தருபவரே சற்குரு! அவர் தாமே குருகிரஹ சித்புருஷர்!
குருகிரஹ ரிஷிகள், தேவ, கந்தர்வ, பித்ரு தேவர்களின் ஆன்ம சக்தியை சத்சங்க அடியார்களுக்குப் பெற்றுத் தந்து அரும்பெரும் நற்காரியங்களை, தானதருமங்களை நிறைவேற்றும் உத்தமரே சற்குரு! என்வே இத்தகைய நற்காரியங்களை நிறைவேற்ற அடியாரின் உடலில், பித்ரு, தேவர்கள் சூட்சுமமாகப் புகுந்து அபரிதமித ஆற்றலை அளிக்கின்றனர். கோயில்களில் நிகழும் தீமிதித்தல், பறவைக் காவடி, அலகு குத்துதல், சாமியாடுதல் போன்றவற்றிலும், இவ்வாறான கூடுதல் ஆன்மீக சக்தியே பல திருவிளையாடல்களைப் புரிகின்றது. ஆனால் இதனை நற்காரியங்களுக்கும் இறைநெறிப் பிரச்சாரத்திற்கும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பணம் சம்பாதித்தல், பெருமை, பட்டம், கௌரவம், புகழ் இவற்றிற்காகத் தவறாகப் பயன்படுத்தினால் சாபங்கள் மிகும்.
குருகிரஹத்திற்கும் பகைமை!
கலியுக நியமப்படி தர்ம தேவதை ஒற்றைக் காலில் நின்றிட அதர்மச் செயல்களே மிகும். எல்லைப் போர்கள், வன்முறை, மதச் சண்டைகள் போன்றவை மிகுந்திட, எதிர்வினைகளிடையே நன்மக்கள் வாழ்ந்து, தர்மகாரியங்களைப் புரிந்து, ஏழைகளுக்குச் சேவைகள் பல ஆற்றி, நன்நெறி பரப்பி இறைப் பிரச்சாரம் செய்து வருகின்ற கடமையைப் பல துன்பங்களுக்கிடையே செய்து வருகின்றனர். இவர்களுக்கு சற்குருமார்கள் மூலமாக குருகங்கணர்கள் எனப்படும் மேற்கண்ட குருகிரஹ மகரிஷிகள் சூட்சுமமாக, பூலோகத்தில் பல உருவங்களெடுத்து அனைத்து உதவிகளையும் அளிக்கின்றனர்.
பூவுலகில் எதிர்வினைகள் உலவுவது போல விண்ணுலகங்களிலும் அவை குருகிரஹத்திலேயே வாழ்ந்து சஞ்சாரம் செய்வதுண்டு. கங்கை, காவிரி புண்ய ஸ்தலங்களில் கொள்ளையர்கள், தீவினையாளர்கள் திரிவது போல குருகிரஹம் தன் எல்லையில் இத்தீவினைகளை அனுமதிக்கின்றன காரணம்
1. இத்தீவினைகளை எதிர்க்கும் ஆன்மீக சக்தியை அதிகம் பெற்றிருப்பவர்கள் குருகங்கணர்களே! மற்ற கிரஹங்களில் இவைகளை அனுமதித்தால் அவற்றை அழித்து விடுவார்கள்.
2. தீயோர்களும் என்றேனும் மனம் திருந்தி இறைநெறியை அடைய வேண்டுமல்லவா? தங்களுக்குரித்தான தீவினைக் கர்மங்கள் கழியும் வரை அவர்கள் தீச்செயல்களில் தாமே உழண்டு மாள்வர்! எனவே பிறலோகங்களில் இவை வாழ்ந்திடில் துன்பங்கள் அபரிதமாகப் பெருகிவிடும். தம்முடைய நேரடிப் பார்வையில்  இவை அமைந்தால் அவற்றின் பெருக்கத்தை அவ்வப்போது குருகங்கணர்கள் கட்டுப்படுத்தலாம்.
3. தீவினைகளை முற்றும் ஒழிக்க இயலாதா? அழிக்க முடியாதா! தீய கர்மங்களை எரிக்கும் ஆன்மீக சக்தி சித்தர்களுக்கே உண்டு ! ஹிரண்யாட்சகன், ஹிரண்யகசிபு போன்றோர் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் நன்மக்களை, சாதுக்களை வதைத்து வந்தனர். இறுதியில் தத்தம் தீயகர்மங்களை அனுபவித்த பின்னரே மனம் தெளிந்து இறைவனால் ஆட்கொள்ளப்பட்டனர். எனவே தீவினை சக்திகளின் சக்தி தணியும் வரை குருகங்கணர்கள் அவற்றைத் தங்கள் பார்வையில் குருகிரஹத்திலேயே வாழவிடுகின்றனர்.
பூமியில் மக்களுக்காகச் சேவை புரியத் துடிக்கும் இறையடியார்களின் சில கர்மங்களைச் சித்தபுருஷர்கள் தாங்களே ஏற்பதுண்டு . விண்ணுலகத் தீவினை சக்திகள் குருகிரஹத்தையே தாக்குகின்றன. அதன் ஒரு பிரதிபலிப்பே ஜுலை 1994ல் குருகிரஹத்தில் மோதிய விண்கற்களாகும்.
விஞ்ஞான, மெய்ஞ்ஞான முடிவுகள்
குருகிரஹத்தில் ஜுலை 1994ல் நிகழ்ந்த சம்பவங்களைப் பற்றிய குறிப்புகள் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் காணப்படுகின்றன. தேவையற்ற ஆராயச்சியகளில் கோடிக்கணக்கான தொகையைச் செலவழித்து உபயோகமற்ற ஆராய்வுகளைத் தவிர்த்து ஆக்கபூர்வமான, மக்களுக்கு உபயோகரமான, மக்கள் சேவைக்குரித்தான விஞ்ஞான ஆராய்ச்சிகள் தான் தேவை. அணுத்துறையில் தேவையற்ற ஆராய்ச்சிகளின் கொடிய விளைவுகளைப் பாருங்கள்! நியூட்ரான் பாம், கண்ணிவெடிகள். MISSILES (ICBM) என்றவாறாக மனித இனத்தையே அழிக்கும் கண்டுபிடிப்புகள்! எனவே தான் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் காணப்படும் கலியுக ஆண்டுகளின் அத்துணை  சம்பவங்களும் ஆன்மீக, இரகசியங்களாகவே வைக்கப்படுகின்றன, காரணம்,விஞ்ஞான உலகம் அவற்றை அறிந்தால் தவறான வழிக்குப் பயன்படுத்தும் என்பதினால் தான்! ஜுலை 1994ல் குருகிரஹமானது பூலோகம் உள்ளிட்ட பல லோகங்களின் சார்பாகத் தீவினைகளின் பெரும் மோதலைத் தன்னகத்தே ஏற்றது. இல்லையெனில் அத்தகைய தாக்குதல்கலைத் தாங்க இயலாது பூமி பெரும் அழிவைக் கொண்டிருக்கும். எல்லாம் வல்ல குருகங்கணர்களே இதனை ஏற்றுப் பெருந்தியாகம் புரிந்துள்ளனர்.
நல்லோர்களின் கடமை
குருகிரஹ சம்பவத்தின் விளைவுகள் பூமியைப் பாதிக்குமா? ஆம் என்கின்றனர் சித்த புருஷர்கள். இதற்கு ஆன்மீக அடியாளர்கள் யாது செய்ய வேண்டும்?
.1 தினமும் தக்ஷிணாமூர்த்தி அஷ்டோத்திரம், சுலோகம், ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்தல் வேண்டும்.
2. வியாழக்கிழமைகளில், ‘கல்லாலின் புடையமர்ந்து நான்குங் கற்ற கேள்வி‘ போன்ற தமிழ், வடமொழியிலான ஸ்ரீதட்சிணாமூர்த்தித் துதிகளுடன் வேர்க்கடலை சேர்ந்த உணவினைக் கோயிலில் ஏழைகளுக்குத் தானம் செய்திடல் வேண்டும்.
3. தினமும் குருஹோரை அமையும் நேரங்களில் ஸ்ரீகுருவே நம: (ஸ்ரீகுருவே போற்றி) என்று துதிக்க வேண்டும்.
4. பிரதோஷ காலங்களில் மஞ்சள் நிற ஆடைகளை தானமளிக்க வேண்டும்.
5. தர்ம நெறிகளுக்கு உட்பட்டு மிகச் சிறந்த தான தர்மங்களைப் பரிபூரண இறையருளுடன் நிறைவேற்றி வரும் ஸ்ரீகுருமஹா சந்நிதானங்களுக்கு இயன்ற சேவைகளைப் புரிதல் உத்தமமானது.

நாடி ஜோதிடம்

ஓலைச் சுவடி நாடி ஜோதிடம் – சில ஆன்மீக விளக்கங்கள்
ஒவ்வோரு ஜீவனுடைய தலையெழுத்தும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டதொன்றே! இதன் பொருள் என்ன? மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியின்  இயக்கமும் இறைவனால் நிர்மாணிக்கப்பட்டு அதன்படியே இந்தப் பிரபஞ்சமே இயங்கி வருகிறது. அப்படியானால் ஒருவன் அடுத்தவனை ஓங்கி அறைந்து விட்டு (அறியாமையால்) இதுவும் முன்பே எழுதப்பட்ட  ஒன்றோ? என்று கேட்கலாம். “ஆம்” என்பதே பதில், அப்படியானால் எந்த மனிதனும் எப்படி வேண்டுமானாலும், நல்லதோ, கெட்டதோ செய்து இயங்கித் தன் மனம் போன போக்கின்படி நடந்தால்.... ‘இவ்வாறு தன் இஷ்டத்திற்கு வினைகளைப் புரிந்து பிறரை வதைத்தோரே அடுத்த பிறவியில் பைத்தியக்காரனாய்ப் பிறப்பெடுத்து அவதியுறுகின்றனர். இதுவும் விதியாய் இறைவனால் அமைக்கப் பெற்றதே. புராணங்களில் அசுரர்கள் இவ்வாறு நடந்து அவர்கள் அடைந்த கதியை நாம் அறிவோம்.
எதிர்காலம்
வருகின்ற நிகழ்ச்சிகளை ஒருவன் அறியும் பாங்கைப் பெற்றால்...? இந்த சக்தியை ஒருவன் பெற்றுவிட்டால் வாழ்கையே ஒர் அமைதிப் பூங்காதான்! எதிர்கால நிகழ்ச்சிகளில் அவன் இடையூறு செய்யாமலிருக்கும் வரையில்! தனக்குத் துன்பம் வரவிருக்கிறது என்பதை ஒருவன் அறிந்தால் அதனைப் பக்குவமாக, “தனக்கு வரவேண்டியது வருகிறது. அதனை அனுபவிப்போம்” என்று இயல்புடன் ஏற்க வேண்டும். மாறாகத் துன்பத்தை அகற்றும் இயக்கத்தில் ஈடுபட்டால்....! Total catastrophe தான்! அழிவுச் சக்திகள் பிறப்பெடுக்கும்! எனவே எதிர்காலத்தை உணரும் சக்தியை ஆண்டவன் அனைவருக்கும் அளிக்கவில்லை. சித்தர்கள், யோகிகள், மஹான்கள் போன்று வருவதை இயல்புடன் ஏற்கும் தீர்க்கதரிசிகளுக்கே இச்சக்தியை அளித்தான். சாதாரண மனிதர்கள் என் செய்வது? நற்காரியங்களை நிறைவேற்றி மக்கள் சேவையைச் செய்யத் துடிக்கும் நல்லோர்கள் என் செய்வது?
குருவின் மேற்பார்வையில்
குருஇயக்கும் சத்சங்கத்தில் இணைந்து அவரைப் பரிபூரணமாக நம்பி இயங்கும் ஆத்ம சாதகனுக்குக் குருவே வழிகாட்டியாகச் செயல்பட்டு இன்ப, துன்பங்களை சூட்சுமமாக முன்னரே சூசகமாக அறிவித்து அடியாளர்களைப் பேணுகின்றார். இதனால் எதுவரினும் ஏற்போம் என்ற மனப்பக்குவத்தை அடியார் பெறுகிறார். இதில் பல அற்புதங்கள் நிகழ்கின்றன. அவை யாவும் அற்புதஙகள் என அந்த அடியாரும் உணரா வண்ணம் சற்குரு வியக்கத்தகு அற்புதங்களை அவ்வடியாரின் வாழ்க்கையில் நிகழ்த்துகிறார். பல எதிர்கால ஜன்மங்களின் வினைகளை இப்பிறவியிலேயே இணைத்து விடுகிறார். அவ்வடியாரோ யாதும் அவன் செயல் என்று அனைத்தையும் தாங்கிச் செயல்படுகின்றார். இந்த (அசைக்க முடியாத) ஆழ்ந்த நம்பிக்கைக்கு மற்றுமோர் பரிசாக சத்குரு அவ்வடியாரின் பல ஜன்மங்களைத் தானே ஏற்பதுண்டு. மேலும் பல ஜன்ம வினைகளைத் தம்யோக சக்தியால் எரிப்பதும் உண்டு! என்னே குருமஹிமை!
 மற்றோர் நிலையாதோ!
குருவைத் தேடி அலையும் நல்லோர்களுக்கு! அவர்கள் உளமாறப் பிரார்த்தித்தால் இறைவனே அவர்களை சத்சங்கத்தை நாடுமாறு செய்கிறான். ”நாம் உண்டு, நம் வேலையுண்டு, என்னால் முடிந்த உபகாரங்களைச் செய்கிறேன். என்னால் முடிந்த அளவு நற்காரியம் செய்கிறேன். என்னால் யாருக்கும் துன்பம் கிடையாது” என்று உலகந்தோடு ஒட்ட வாழாதோரும் உண்டு! இதற்குரித்தான பலன்கள் உண்டெனினும் அவர்கள் சத்சங்கத்தை ஒட்டி வாழ்ந்தால் அவரால் முடியாத மாபெரும் உபகாரங்களை ஆயிரக்கணக்கானோருக்கு அன்னதானம், மருத்துவ் உதவி, கனவிலும் நினைத்திரா மாபெரும் ஆலங்களில் மகத்தான உழவாரப் பணி போன்றவற்றைக் குறுகிய வாழ்நாளில் நிறைவற்றலாமன்றோ!
இவர்கள் தவிர இறைவனுக்கு ஏதோ கும்பிடு போட்டுவிட்டு ஏனோதானோ என்று வாழ்பவர்களும் உண்டு! பூர்வ ஜன்ம புண்யத்தால் வசதியான வாழ்க்கை, நல்ல பிள்ளைகள், நல்ல சம்பளம்..... இத்யாதிகள் பெற்றோரும் ஏதோ செவ்வாய், வெள்ளி மட்டும் ஸ்வாமியை நினைப்பது என்ற எண்ணத்தில் வாழ்வோரும் உண்டு. இவர்களெல்லாம் தங்கள் பூர்வ ஜென்ம புண்யத்தை வெகு வேகமாகக் கரைத்து வருகிறார்கள்! இதை அவர்கள் உணர்வதில்லை., ஏதேனும் தான, தர்மங்கள் செய்து புண்ய சக்தியைச் சேர்த்தாலன்றோ எதிர்காலத்திற்குப் பயன்படும்? வசதியாகவே வாழ்ந்து மடிபவர்களும் உண்டு! இதுவும் பூர்வஜென்ம புண்ய சக்தியினால் தான்.. எனவே முற்பிறவியின் வினைப் பயன்கள் இப்பிறவி என்பதை தெள்ளத் தெளிவாக உணர வேண்டும்.
ஜோதிடம், நாடிகள்
சத்குருவைப் பெற்றவனுக்கு யாதும் அவர்செயல் என்ற பரிபூரண நம்பிக்கை கொண்டு வாழ்வதால் அவன் இன்ப, துன்பம் எதனையும் இயல்பாக ஏற்று வாழ்கிறான்! மற்றவர்கள் சந்ததியின்மை, வாழ்க்கைப் பிரச்சனைகள், நோய்த் துன்பங்கள், திருமணத் தடங்கல்கள், வியாபார நஷ்டம், வறுமை, கடன் தொல்லைகள் போன்றவை மிகுகின்ற போது  ஜோதிடம், நாடிகளை நாடி விளக்கம் பெறத் துடிக்கின்றனர். கலியுகத்தில் முழுமையான ஜோதிட அறிவு பெற்றவர்கள் மிகக் குறைவு! இறை நெறியில் திளைக்கும் ஒழுக்கம் தான தர்மங்கள், ஜோதிடத்தை ஒரு தெய்வீக கலையாக பாவித்தல், நல்ல சான்றோரை குருவாக ஏற்றல் போன்ற நற்பண்புகள் கூடியவரே உண்மையான ஜோதிடர்! ஜோதிடத்திற்கு எவ்விதக் கட்டணமும்  வசூலிக்கக்கூடாது!  தமிழகத்தில் இன்றைக்கும் சில உண்மையான, இறைநெறியில் பரிபூரணமாக வாழும் ஜோதிடர்கள் உள்ளனர். எவ்விதக் கட்டணமும் வாங்காமல் ஒவ்வொரு ஜாதகத்தையும் பரிசீலிக்கும் முன்னர் அதற்குரித்தான பூஜைகள், தான தர்மங்கள் செய்த பின்னரே எந்த ஒரு ஜாதகத்தையும் பரீட்சிப்பார்கள். அதுமட்டுமில்லாது அந்த ஜாதகத்தைத் தான் படிக்கலாமா என்ற இறைக் குறிப்பை அறிந்த பின்னரே இயங்குவர். மாதத்தில் குறிப்பிட்ட நாட்களில் குறித்த ஜாதகங்களை மட்டுமே எடுத்துக் கொள்வார்கள். குறிப்பிட்ட இறை சந்நிதிகளிலே, பூஜை அறையிலோ மட்டுமே ஜாதகங்களைப் பார்ப்பார்கள்! இவர்கள் வாக்கு பொய்க்காது!
சத்சங்கத்தில் கூட சத்குருவானவர் தன் அடியார்களை மேற்கொண்ட உத்தம ஜோதிடர்களிடம் அனுப்புவதுண்டு. காரணம் ஜோதிடத்தின் தன்மையை இறையருளின் தன்மையை, அடியார்கள் உய்த்துணர வேண்டும் என்பதே!  எனவே சத்சங்கமே உண்மையான, பக்தி மிக்க ஜோதிடர்களைக் காட்டும். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தலைவிதியை, இறந்த காலத் தன்மைகளை, நிகழ்காலத்தின் குணாதிசயங்களை, எதிர்கால விளக்கங்களை ஜோதிடம் , கைரேகை, நாடிகள் மூலம் விளக்கம் பெறுவதில் தவறில்லை.
ஆனால் உண்மையானவர்களை நாடவேண்டும். யாவையும் சூட்சுமமாகவே அறிவிக்கப் பெறும்! ஏனெனில் நடக்க வேண்டியது நடந்தே தீரும். ஆனால் மனித மனமோ நடக்கவிருப்பதை அறிந்தால் தனக்கு சாதகமாக அதனைத் தடுக்க முற்படும்! எனவே, எல்லாம் அவன்செயல் என்ற மனப்பான்மையைப் பெறும்வரை யாவையும் சூட்சுமமாகவே கிட்டும். ஸ்ரீரமண மஹரிஷி தமக்குத் தோளில் புற்றுநோய் ஏற்படும் என்பதை அறிந்தும் மனப்பூர்வமாக ஏற்று அத்துன்பங்களைத் தாங்கி அனைவருக்கும் அருள்வழி காட்டி வாழ்ந்தார். இதுவே மஹான்களின் நிலை! இந்நிலையை உணர்ந்தவர்கட்கே முக்காலமும் உணர்த்தப்படும். தம்முக்காலமும்  மட்டுமன்றி அவர்தம் அடியார்களின், ஏன், அனைவருடைய முக்காலமும் உணர்ந்த உன்னத புருஷர்களே அவர்கள்! அத்தகைய சத்குருமார்களைப் பரிபூர்ணமாக நம்பினால், கைரேகை, ஜாதகம், ஜோதிடம், நாடிகள் யாவையும் தேவையில்லை. அவர்களே நல்வழி காட்டுவர். ஏனெனில் அவர்கள் கூறுவதே நிகழ்காலமாக, சிந்திப்பதே எதிர்காலமாக அமையும். காலத்தைப் படைப்பவர்கள் அவர்களே!
நாடிகளின் விசேஷத் தன்மை
சமீப காலங்களில் ஓலைச் சுவடிகளிலுள்ள ஸ்ரீவசிஷ்டர் நாடி, ஸ்ரீஅகஸ்தியர் நாடி, ஸ்ரீபிருகு நாடி போன்றவை பிரபலம் அடைந்து வருகின்றன. ஆன்மீகத்தில் இதற்கு அனுமதி உண்டு. ஆனால் சொல்பவருக்கும், நாடி கேட்பவருக்கும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுட்டுள்ளன. குறிப்பிட்ட சில பூஜைகள், சில தேவதைகளின் வழிபாடுகள், தக்க தான தருமங்கள், குறித்த திதிகளுக்குரித்தான பல கடுமையான நியதிகள் நிறைந்த பூசனைகள் இவற்றால் சில அபூர்வமான ஓலைச் சுவடிகள் கிட்டுகின்றன. இவற்றைப் பெறும் இடம், பெற வேண்டிய நேரம் போன்றவை கனவிலோ, அந்தந்த ஓலைச்சுவடியிலோ குறிப்பிடப்படும்... “இதனை மாத சிவராத்திரியில் இன்ன கோயிலில் இன்ன எண்ணிக்கையில் பழைய சுவடிகளைக் கொடுத்து புதிய சுவடிகளைப் பெறுவாயாக!” என்ற கட்டளை அமையும். அதன்படி நாடி ஜோதிடர்கள், நாடிகளைப் பெறுகின்றனர். இவற்றைப் பலர் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என்பதால் இந்த ஆன்மீக இரகசியங்கள் வெளியிடப்படுவதில்லை.
நாடி ஜோதிடத்தில் தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டால் நாடி தேவதைகளின் கடும் சாபத்திற்கு உள்ளாக நேரிடும். பெரும் விபத்து, கொடிய நோய், துர்மரணம், கடுமையான மனனநோய், வியாபாரம், குடும்பத்தில் பேரிழப்பு போன்றவை இத்தகைய சாபங்களால் உண்டாகும். எனவே குறித்த நாடி ஜோதிடர்களைத் தவிர வேறு எவரும் பயனற்ற ஆராய்ச்சியை மேற்கொள்ளலாகாது. இது விஞ்ஞானத்திற்கும் அப்பாற்பட்ட மெய்ஞ்ஞானமாகும்.
நாடி ஜோதிடரின் தன்மைகள்
 பொதுவாக, நாடி ஜோதிடம் பாரம்பரியமாக அமையக் கூடும். நாடிஜோதிடருக்குரித்தான நியம, நிஷ்டைகள், பூஜை முறைகள், குரு ஆராதனை முறைகள் பல உண்டு. இவை அந்தந்த ஜோதிடருக்கான ஓலைச் சுவடிகளிலேயே விளக்கப்பட்டிருக்கும். சிறந்த ஒழுக்கம், சீரிய பக்தி, நிறைந்த குருஆசீர்வாதம் போன்றவை பூண்டிருந்தால் நாடி ஜோதிடத்தின் வாக்கு. சத்யமான தீர்க்க தரிசனமாய் அமையும். நாடி ஜோதிடருக்கான இறைநெறி முறைகளில் பங்கம் ஏற்படில், அதுநாடி ஜோதிடத்தின் ‘வாக்கு சக்தியை’ பாதிக்கும். இது நாடி ஜோதிடரின் தவறே தவிர உண்மையான நாடி ஜோதிடம் என்றும் பொய்க்காது. நாடி ஜோதிடத்தை நாடுபவர்கள், மேற்கண்ட நல்ல குணாதிசயங்களுடன் கூடிய நாடி ஜோதிடரை அணுகுதலே உத்தமமானது.
பூஜைகளில் பங்கம் ஏற்பட்டால்,, அதன் சாபமானது ஜோதிட மாயையாக மாறி, நாடி படிப்பில் அசத்திய வாக்கினை உருவாக்கும். இதனால் ஓலைச் சுவடிகளிலிருந்தும் படித்தால் கூட அசத்திய வாக்கே தென்படும். இதனால் நாடிகளில் குறிப்பிடப்பட்டவை பொய்த்துவிடும். குறித்த சில தேவதைகளின் உபாசனையால் ஓலைச் சுவடிகளிலுள்ள எழுத்துக்கள், நாடி ஜோதிடரின் கண்களுக்கே புலப்படும். இதனை இலவச சேவையாக ஆத்மார்த்தமாக்ச் செய்திடில், நாடி ஜோதிடம் சிறப்புப் பெறும். பணம் சேர்க்கும் தொழிலாக இதனை மாற்றிடில், பெரும் பாவச் செயலாக  மாறி நாடிப் படிப்பவரைப் பாதிக்கும்.
கர்ம மார்க்க முறையே......
நாடி ஜோதிடம் ‘கர்ம மார்க்க’ முறையைச் சேர்ந்தது, கடந்த கால நிகழ்ச்சிகள் பெரும்பாலும் சரியாக அறிவிக்கப் பெறும். எதிர்காலம் சூட்சுமமாக அறியப்பட வேண்டும் என்ற இறை நியதியால், நாடி வாக்கியங்களில பொதிந்துள்ள அர்த்தங்களைக் காண்பது மிகவும் சிரமமான காரியமாகும். உண்மை, ஒழுக்கம், பக்தி, குருஆசி நிறைந்து இருந்தால், நாடி வாக்கியங்கள் சரியாக உணர்த்தப் பெற்று எதிர்காலம் துல்லியமாகக் கணிக்கப்படும். இன்ன கர்மத்திற்கு இன்னது விளைந்தது என்று நாடிகளில் அறிவிக்கப்படும் இதனை மனம் ஏற்காது. இதனால் வாழ்க்கையில் பல விபரீதங்கள் ஏற்படுவது உண்டு. எனவே நாடி ஜோதிடத்தை கவனமாகக் கையாள வேண்டும்.
ஸ்ரீராம நாம சக்கரம்
ஸ்ரீராம நாமமானது முறையாக உச்சரித்தால் முறையற்ற காமத்தை நீக்கி, புத்திர பாக்கியத்தை அளித்து ஸ்ரீவிஷ்ணு லோக தரிசனத்தை அளிக்கும் அற்புத தாரக மந்திரமாகும். ஆனால் இப்பயன்களை எவரும் முழுமையாக உணர முடியவில்லையே, ஏன்? ஒவ்வொரு மனிதனுக்கும் தேகத்தோடு (Physical Body , மனோதேகமும் (Mental Body) உண்டு. இவை தவிர ஏனைய தேகங்களும் உண்டு. எனினும் தெளிவு பெறுவதற்கு மேற்கண்ட மனித தேகம், மனோதேகம் என்ற இரண்டையும் எடுத்துக் கொள்வோம். இவ்விரண்டையும் கூட்டுவதே ஜபம்.,  ‘ராம, ராம, ராம’‘ என்று ஜபிக்கும் போது சில சமயம் உச்சரித்தாலும் மனம் எங்கோ அலைபாங்கிறதல்லவா? இதன் பொருளென்ன?
1. மனித தேகம் உதட்டால் ராம நாமத்தை ஒலித்திட
2. மனோ தேகம , மனித தேகத்தோடு ஒத்துப் போகாமல் எண்ணங்களின் பால் சென்று தனித்துச் செயல் படுகிறது..
மனோ தேகம், மனித தேகம் இரண்டும் ஒன்றையொன்று சார்ந்திருப்பதால் இவ்விரண்டும் ஒன்றுபட்டு இயங்கினால் தான் முழுப்பலன்கள் கிட்டும். எனவேதான் ராம நாமத்தின் முழுச் சக்தியினை எவராலும் பெற இயலவில்லை. அப்படியானால் மனித தேகத்தையும், மனோதேகத்தையும் ஒன்றாக அமையச் செய்யும் வழிமுறை என்ன? இதுவே ராமநாம ஜபம்! மிகவும் எளிதான ராமநாமத்தின் பின்னணியில் இது அமைந்திடில் அது ஓர் அற்புதமான ஆன்மீக நிலைக்கு வழிகோலுமன்றோ! இவ்வரிய ஆன்மீக ரகசிய வழிமுறையை ஸ்ரீராம நாம சக்கரம் என்ற ஓர் அற்புத ஆன்மீக ரகசியத்தை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீவெங்கடராம சுவமிகள் அருளியுள்ளார்.
ஸ்ரீராமநாம மூலச்சக்கரமானது ராம நாமத்தின் இரு அட்சரங்களையும் நான்கு கட்டங்கள் கொண்ட ஒரு சதுரத்திற்குள் அமைப்பதாகும். இந்தச் சக்கரமே இறைவன் ஆட்சி செய்யும் பிரபஞ்சம் ஆகும். ராமநாமமே இந்த பிரபஞ்சத்தின் முழுபொருளையும் உணர்த்துவதாகும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நால்வருமே பிரபஞ்சத்தை அறிவதற்கான வழிகாட்டிகளாவர்.
1. குழந்தையை ஆளாக்கித் தக்க வயதில் குருவைத் தேடி சேர்க்குமாறு ஒரு மாதா தன் குழந்தையைப் பிதாவிடம் ஒப்படைக்கிறாள்.
2. ஞானத்தைப் புகட்டி குழந்தையை தெய்வத்திடம் சேர்க்குமாறு பிதா குருவை நாடி வேண்டுகிறார்.
3. குரு குழந்தையாகிய சீடனை தெய்வத்திடம் சேர்க்கிறார். இதுவே “குருஅருள் இல்லையேல் திருஅருள் இல்லை” என்ற வேதவாக்கின் பொருள்!

ராம நாம சக்கரம்

ஸ்ரீராம நாம மூலச் சக்கர ஜபம்
சித்தர்கள் அருளுகின்ற இந்த ஜபமுறையில்
1. மனித தேகத்திற்குரிய ஜபமாக வலது கையின் சுட்டுவிரவில் (குருவிரல்), நடுவிரல் (சனிவிரல்) இரண்டும் முழுதேகத்தின் சார்பாக இயங்குகின்றன. இதுவே தேகத்திற்கான பயிற்சி.

ஸ்ரீராம சக்கரம்

2. குருவிரல், சனிவிரல் இரண்டும் இராம நாம மூல சக்கரத்தில் இயங்கும் போது மனோதேகமானது ‘ராம ராம’‘ என்று உச்சரிக்கின்றது. அதாவது மானசீகமாக ‘ராம ராம’‘ என்று துதிக்க வேண்டும். இதுவே மனோதேகத்திற்கான பயிற்சி!
முதலில் வலதுகையின் குருவிரலைச் சக்கரத்தின் முதல் கட்டத்தின் மீது வைத்து ‘ரா’ என்று உச்சரிக்க வேண்டும். இரண்டாவதாகச் சனிவிரலை இரண்டாவது கட்டத்தின் மீது வைத்து ‘ம’ என்ற அட்சரத்தின் மேல் வைத்து ‘ம’ என்று மனதினுள் உச்சரிக்க வேண்டும். மூன்றாதாக்ச் சனிவிரலை நகர்த்தாமல் குருவிரலை மட்டும் நகர்த்தி இப்போது சக்கரத்தின் கீழ்பகுதியில் உள்ள ‘ரா’ என்ற அட்சரத்தின் மேல் வைத்து ‘ரா’ என்று மனதில் உச்சரிக்க வேண்டும்...., நான்காவதாக ‘ம‘ என்ற அட்சரத்தின் மேல் உள்ள சனிவிரலை எடுத்துவிட்டு மீண்டும் அதே அட்சரத்தின் மேல் வைத்து ‘ம’ என்று மனதிற்குள் துதிக்க வேண்டும்.
இவ்வாறாக ‘ராம நாம‘ என்று இருமுறை ஓதிட ராம நாம மூலச்சக்கரத்தின் பரிபூரண ஜப எண்ணிக்கை ஒன்றாகிறது. இந்த ஜபத்தை தினந்தோறும் குறித்த நேரத்தில் குறித்த இடத்தில் 2X108 முறை செய்தால் ராமநாம தாரக மந்திரத்தில் மனம் ஒருமைப்பட்டு தியான நிலையை உண்டாக்கும். இந்த ராம சக்கரத்தை அரசமரம், ஆலமரம், வேம்பு மரம் போன்ற ஹோம சமித்திற்குரிய பலகைகளிலும் இந்த மூலச்சக்கரத்தைப் பொறித்திடலாம். எளிமையான பயிற்சிக்காக முதலில் இந்தச் சக்கரத்தைக் காகிதத்தில் வரைந்து கொள்ளலாம். மனஅமைதி, சாந்தம், தேஜஸை அளிக்கவல்லது இந்த ராம நாம ஜபம்.

ஸ்ரீகன்னியாகுமரி அம்மன்

ஸ்ரீகன்னியாகுமரி அம்மனின் வைர மூக்குத்தியின் மகிமை சித்தர்களின் நடமாட்டம் உலகெங்கும் எப்போதும் உண்டு. இந்தியாவில் அதுவும் திருஅண்ணாமலையில் தான் பிரபஞ்சத்திலேயே எங்குமில்லாத அளவிற்கு அதிக அளவில் கோடிக்கணக்கான சித்தர்களின் சஞ்சாரம் உள்ளது. மாயா கன்மல சித்தர் என்பவர் அந்த ஆப்பிரிக்க வனத்தில் சஞ்சரித்து கொண்டிருந்தார்.., ஏன்?
பூர்வஜென்ம புதன் கிரஹவாசிகள்
அந்த ஆப்பிரிக்க வனவாசிகள் பூர்வ ஜென்மத்தில் புதங்கிரஹத்தில் வாழ்ந்தமையால் பிறப்பிலேயே ஓர் அபூர்வ மூலிகை ரசம் கொண்டு ஊதி துளையிட்டு பூமியின் எப்பகுதியையும் நிர்மலமாக்கும். அபூர்வ சக்தியைப் பெற்றிருந்தனர். கல்வி அறிவு சிறிதும் இல்லாதவர்கள். “கன்யாகு” என்ற தெய்வத்தை உள்ளன்போடு வழிபட்டனர். மாயா கன்மல சித்தர் அவர்களை ‘கன்யாகு‘ தேவியின் உபாசனையால் மேம்படச் செய்து அவர்கள் தம் பூர்வஜென்ம ‘நிர்மல சக்தியினை’ உலகின் பல்வேறு பகுதிகளிலும் அப்போது நிலவிய கொடியவர்களின் பில்லி, சூன்ய, ஏவல் மந்திரங்களை, அதன் தீய விளைவுகளை முறியடிப்பதற்குப் பயன்படச் செய்து நல்வழி காட்டினார். இதனால் உலகெங்கும்  கோடிக்கணக்கான ஜீவன்கள் தீவினைகளின் கொடிய விளைவுகளிலிருந்து மீண்டு நல்வாழ்வு பெற்றனர்.

கன்னியாகுமரி

தாந்திரிகன் தாஸ்கோ
அவர்கள் வாழ்ந்த அதே இடத்தில்  ‘தாஸ்கோ’ என்ற பெயரில் ஒரு தாந்திரிகன் பல மந்திர தந்திரக் கலைகளில் ஒப்பற்றவனாக வாழ்ந்து வந்தான். அவன் உயரமோ சுமார் 7½ அடி. குள்ளர் கூட்டத்திற்குத் தாந்திரிகன் தாஸ்கோவிடம் எப்போதும் ஒரு பயம் கலந்த மரியாதை உண்டு. தாஸ்கோ அவர்களை அழைத்தால் குள்ளர்கள் மகிழ்ச்சியுடன் ஓடி வந்து அவன் தோளிலும், காலிலும் அமர்ந்து அவனுடன் அளவளாவுவார்கள்..
அந்த யுக்காலத்தில் இன வேறுபாடு இல்லையெனினும் தாஸ்கோவின் அதிவுயர மனித தேகம் அவனை வேறுபடுத்திக்காட்டியது. மாயா கன்மல சித்தரின் அருட்கருணையால் உலகின் பல பகுதிகளிலும் தீய சூன்ய விளைவுகளை அழித்துப் பலகோடி ஜீவன்களைக் காத்து வருகின்ற சித்தபெருமானின் அருட்பார்வையால் கவரப்பெற்ற தாஸ்கோ அவருடன் சேர்ந்து கொண்டான். புதன் கிரஹத்திற்கு மிதுனம், கன்னி என்ற இரண்டு ராசி வீடுகள் உண்டு. குள்ளர்கள் மிதுன ராசி வீட்டுக்குரியோர். தாஸ்கோ கன்யா ராசி வீட்டுக்குரியவர். மாயா கன்மல சித்தர் தாஸ்கோவின் பூர்வ ஜென்ம சக்திகளாக, புதன் கிரஹவாசியாக அவன் பெற்றிருந்த அதி அற்புத தாந்த்ரீக, மாந்த்ரீக சக்திகளை அறிந்து அவற்றை நற்பணிகளுக்கு மட்டும் பயன்படுமாறு செய்தார்.
குள்ளர்களின் தலைவன் ‘காப்ளா காப்ளா‘
குள்ளர்களின் தலைவன் ‘காப்ளா காப்ளா‘ தன்னுடைய வியத்தகு பிராணாயாம சக்தியால் பூமியின் அடியில் உள்ள எப்பொருளையும் உறிஞ்சி மேல் இருக்கும் சக்தி பெற்றவன். மாயா கன்மல சித்தர், தாஸ்கோவின் மாந்த்ரீக சக்தியால் வைரச் சுரங்கங்கள் நிறைந்த ஆப்பிரிக்கப் பகுதியில் வைரங்கள் இருக்கும் நிலப்பகுதியைக் கண்டறிந்து காப்ளா காப்ளாவின் பிராணாயாம சக்தியால் அவற்றை மேலே கொணர்ந்து அவற்றைக் கன்யாகு தேவிக்கு ஆபரணங்களாக அர்ப்பணித்தார். இத்தகைய வைரங்களை ஆபரணங்களாக சுயநலத்திற்காகப் பயன்படுத்துவதை விட அவை தெய்வத் திருமேனிகளை அலங்கரிக்குமாயின் அதன் சக்தி லட்சக்கணக்கான மக்களுக்குச் சென்றடையும். இவ்வாறு ஆப்பிரிக்க வனவாசிகளின் துணையோடு மாயா கன்மலசித்தர் அளித்த வைர ஆபரணங்களே இன்று உலகெங்கும் உள்ள தெய்வமூர்த்திகளின் திருமேனிகளை அலங்கரிக்கின்றன.

காப்ளா காப்ளாவின் உன்னத ஆன்மீக நிலை
 வனவாசிகளின் தலைவனான காப்ளா காப்ளா ஒரு மஹரிஷிக்குரித்தான குணங்களைப் பூண்டவன். சாந்தம், அமைதி, மௌனம் இவற்றின் மொத்த உரு! பிராணாயாம யோகத்தில் கரை கண்டவன்! மாயா கன்மல சித்தரைச் சரணடைந்து யோகத்தில் தீர்க்கம் கண்டவன்! தன் யோக சித்திகளால் கொடிய பில்லி, சூன்ய , ஏவல் மந்திர துர்சக்திகளைப் போக்கிய இலட்சக்கணக்கான மக்களின் நல்வாழ்விற்கு உதவி புரிந்தவன். தன் யோக சக்திகளைத் தனக்கெனப் பயன்படுத்தாத தியாகி! மாயா கன்மல சித்தர் காப்ளா காப்ளாவின் அரிய பிராணாயாம சக்தி கொண்டு பூமியினுள் புதையுண்ட பல அபூர்வமான சக்திவாய்ந்த ஸ்வயம்பு லிங்கங்களை வெளிக் கொணர்ந்து அவற்றை உலகெங்கும் பிரதிஷ்டை செய்து மக்களின் நல்வாழ்விற்கென அர்ப்பணித்தார். அது மட்டுமில்லாது அதிக சக்தி வாய்ந்த இரத்தினக் கற்களையும் வைரங்களையும் பூமியிலிருந்து காப்ளா காப்ளாவின் யோக சக்தியால் வெளிக்கொணர்ந்து அவற்றைப் பல தெய்வாவதார மூர்த்திகளுக்கு ஆபரணமாக அர்ப்பணித்தார்.
குருஅருள்
காப்ளா காப்ளா இயற்கையிலேயே சாந்த வடிவினன். “கன்யாகு தேவியை” உபாசித்து அவள் தரிசனம் பெற்றவன். நாள்தோறும் காலை, மாலை சந்தி நேரங்களில் மூன்று மணி நேரம் பிராணாயாம யோக சக்தியில் நிலைத்துக் கன்யாகு தேவியை தியானிப்பான். மாயாகன்மல சித்தரிடம் சரணடைந்து தன் உடல், பொருள், ஆவிதனை அவரிடம் ஒப்படைத்தவன்.
காப்ளா காப்ளா தன் வனவாசி இனத்தவருடன் உலகெங்கும் பல இடங்களில் தங்கிக் கொடியவர்களின் பில்லி, சூனிய, ஏவல் மந்திர சக்திகளை தங்கள் சுவாச கலை யோகங்களால் பூமியிலிருந்து மேலெடுத்துப் பல இலட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றினான். இதனால் அந்தத் தீவினைகளின் சக்தி காப்ளா காப்ளாவையும் அவன் இனத்தவரையும் தாக்கிட அவர்களுக்கு வலிப்பு நோய், மனநோய் மற்றும் பல நோய்கள் ஏற்பட்டன. இதனைத் தியாகமாகவே ஏற்று மனந் தளராமல் காப்ளா காப்ளா தன் திருப்பணிகளைத் தொடர்ந்தான். அவன் உடல் பாதிக்கப்பட்ட போதும் அவன் சிறிதும் தயங்காது மாயா கன்மல சித்தர் காட்டிய நல்வழியைத் தொடர்ந்தான்..
“காப்ளா காப்ளா! கொடிய பில்லி, சூன்ய மந்திரங்களினால் எழும் தீவினைகளை உன் பிராணாயாம சக்தியால் அழிக்கும் போது பிறருடைய கர்மங்களை நீ தாங்கினால் தான் அவர்களுக்கு நல்வாழ்வு தர முடியும். இதுவே தியாகத்தின் ஆரம்ப நிலை மஹரிஷிகளும் சித்த புருஷர்களும் தங்களைச் சரணடையும் கோடிக் கணக்கான அடியவர்களின் கர்மங்களைத் தங்கள் தேகங்களில் தாங்கிப் பல நோய்களையும் துன்பங்களையும் ஏற்றுத் தங்களைச் சரணடைந்தவர்களைக் காத்தருள்கின்றனர். உன் குலத்தவரின் தலைவனாக, குருவாக விளங்கி சூன்ய துர்மந்திர துன்பங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்களை நீ காத்து நல்வழி காட்டிட அந்த துர்தேவதைகள் உன்னைத் தாக்கும். அவற்றைத் தியாக மனப்பான்மையுடன் அனுபவித்து இறைப்பெரு நிலையை அடைவாயாக” என்று மாயா கன்மல சித்தர் ஆசீர்வதித்தார்.
மாயா கன்மல சித்தர் தாம் விடைபெற வேண்டிய தருணம் வந்துவிட்டதை தீர்க்கதரிசனமாக அறிந்து காப்ளா காப்ளானுக்குப் பல நன்னெறிகளைப் புகட்டி, பல தீர்க்க மந்தர சக்திகளை யளித்து அவனுடைய நல்வழிப் பாதைக்கு மெருகூட்டினார்.

மாயம் களைவாள் ஸ்ரீமாயம்மா
கன்னியாகுமரி

‘தக்க காலத்தில் உன்னை ஒளி கூட்டும் பொருளாய்ச் சந்திப்போம்’, என்று சூசகமாகக் கூறி சித்தர் பெருமான் மறைந்தார். காப்ளா காப்ளா தாஸ்க்கோவின் திறமையுடன் தம் கூட்டத்தாருடன் பல நிலப்பரப்புகளில் தங்கள் நற்பணிகளைச் செய்து மீண்டும் ஆப்பிரிக்கக் கண்டப் பகுதிக்கு வந்து சேர்ந்தான். தம் அரும்பெரும் தியாகத்தால் சுயநலமற்ற சேவையால் பிறர் கர்மங்களைத் தாங்கியமையால் காப்ளா காப்ளா உடல் தளர்வுற்றுச் சக்தியைப் பெருமளவு இழந்தான். ஆனால் மெலிந்த உடலோ தேஜாமயமாய்ப் பிரகாசித்தது. அருட்பிரகாசம் பொலிந்தது.
அனைவரும் கன்யாகு தேவியை தரிசித்து மகத்தான பூஜைகளையும் தானதருமங்களையும் நிறைவேற்றி மாயா கன்மல சித்தர் ஜோதியாய் மறைந்த புனித இடத்தில் அமர்ந்து அவரை தியானித்து மௌனம் பூண்டனர்.
அரிய வைரம்
தாஸ்கோ தன் தாந்த்ரீக சக்தியால் சித்தர் மறைந்த அவ்விடத்தில் பூமியினுள் சக்தி வாய்ந்த வஸ்து ஒரு இருப்பதை உணர்ந்தான். மிகவும் ஆன்மீக சக்தி நிறைந்த பொருளாதலின் தாஸ்கோவினால் அது இருக்கும் இடத்தை உணர முடிந்ததே தவிர அது என்னவென்று அவனால் ஊகிக்க இயலவில்லை. தாஸ்கோ அனைவரிடமும் இந்த ஆன்மீக இரகசியத்தை வெளியிட்டான். அனைவரும் தங்கள் பிராணாயாம சக்தி கொண்டு மூலிகை ரசத்தைக் குழாயில் ஊற்றி அந்த பூமிப் பகுதியில் துவாரமிட்டு வாசிகலைகயால் வெளியிழுக்க முயற்சித்தனர். அவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. தாஸ்கோ அதிசயித்து நின்றான், “மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்த கனிமம் போலிருக்கிறதே! அளப்பரிய தெய்வானுக்ரஹம் பெற்ற இவர்களாலேயே அதனை வெளிக் கொணர இயலவில்லையே! காப்ளா காப்ளாவினால் இது கைகூடுமோ!! உடல் மெலிந்து வாரும் காப்ளா காப்ளாவிற்கு சிரமம் சிரமம் தரக்கூடாதே! என் செய்வது?
காப்ளா காப்ளா ஒளியாதல்
காப்ளா காப்ளா இவற்றைக் கண்ணுற்றவாறே எழுந்து வந்தான். “தாஸ்கோ! இப்பகுதியில் இருப்பது ஸ்வயம்பு லிங்கத்திற்கு ஈடான மூலசக்தி போலிருக்கிறதே ! இதனை எப்படியேனும் வெளியே ஈர்த்து கன்யாகு தேவிக்கு அர்பணித்து விட வேண்டும். தீயவர்கள் இதனை சுயநலத்திற்குப் பயன்படுத்தி பெருந்தீங்குகளை உண்டாக்குவர். என் உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாதே! மாயா கன்மல சித்தரின் அருளால் அனைத்தும் நன்கு நடைபெறும்., நடப்பவையெல்லாம் கன்யாகு தேவியின் சித்தமே...”
காப்ளா காப்ளா மாயா கன்மல சித்தரைத் தொழுதவாறே அவ்விடத்தில் தன் குல வனவாசிகள் ஏற்படுத்திய துவாரத்தில் தன் நாசியைப் பதித்து கன்யாகு தேவியின் தியானத்துடன் தன் வாசிகலையை சுழுமுனைக்குக் கொணர்ந்து கும்பகத்தின் விகிதாசாரத்தை அதிகப்படுத்தி பிருதிவி பூதத்தில் தன் வாசியை நிறுத்தி பூமியிலுள்ள அந்த விசேஷமான ‘பொருளை’ வெளியே இழுக்கப் பிரம்மப் பிரயத்தனம் செய்திட..’
‘கணீர் கணீர்‘ என்று மணி ஒலித்திட.... காப்ளா காப்ளாவின் தேகம் மெதுவாக பூமியினுள் மறையத் தொடங்கியது! அவன் நாசி ஒளியே கண்ணைப் பறிக்கும் ஒளியாய் வியாபித்தது! அவன் தேகம் முழுவதும் பூமியினுள் மறைந்தவுடன் அவ்விடத்தில் பல கோடி சூர்யன்கள் ஒன்றாகப் பிரகாசித்தது போல் ஒரு வைரக்கல் மிதந்து வெளிவந்தது! ஆம், அந்த ஈடு இணையற்ற வைரக் கல்லின் ஒளியில் காப்ளா காப்ளா ஐக்யமாகி விட்டான்!” தியாகத்தின் சிகரமாய் விளங்கிய காப்ளா காப்ளானுக்கு எத்தகைய அனுக்ரஹம் பார்த்தீர்களா? ஒளி வெள்ளமென ஜ்வலித்த அந்த சிறிய வைரக்கல் உஷ்ணத்தைக் கக்கியது. யார் அதன் அருகில் செல்வது ?
காப்ளா காப்ளாவின் விருப்பமோ அந்த ‘விசேஷமான வஸ்து’ கன்யாகு தேவியைச் சென்றடைய வேண்டும் என்பதே!

ஸ்ரீதன்வந்த்ரி மூர்த்தி

ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி அவதாரம் பெற்ற காலம் ஆதி மஹா பாற்கடலில், ஆலகாலவிடம் திரள்கையில், தம் திருக்கரங்களில் ‘ கணநாத அமிர்தக் ‘ கலசத்துடன் ஸ்ரீமஹாவிஷ்ணுனின் அவதாரமாக ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி அவதரித்தார். கேரளாவில் நெல்லுவாய்புரத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீஆதிமூல ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தயே, மூல மூர்த்தியாவார். ஒவ்வொரு நோயையும் குணமாக்கும் ஒவ்வொரு ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி உண்டு. இவ்வாறாக பல்லாயிரமாயிரம் உருவங்களில் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி தோன்றி அருள்பாலிக்கின்றார். இத்தகைய ஆன்மீக இரகசியங்களை அருளும் அற்புத சக்தி பெற்றவர்கள் சித்தபுருஷர்களே! அந்தந்த நோய்க்குரித்தான அந்தந்த ஸ்ரீதன்வந்த்ரீ  மூர்த்தியின் மஹிமைகளை அறிந்து பூஜை செய்திட புற்று நோய், எய்ட்ஸ் போன்ற எத்தகைய கொடிய நோயையும் இறையருளால் வென்றிடலாம். சற்குருவை நாடுங்கள்! சகலமும் அறிந்த சித்தபுருஷர் அவரே!

ஸ்ரீஅமிர்த தன்வந்திரி மூர்த்தி

யானையின் ஆன்ம பலம்
 யானை, கடல், சூரியன், சந்திரன் போன்றவை இறைவனுடைய படைப்புகளில் மனிதனை மிகவும் வசீகரிக்கக் கூடியதாகும். “ஆஹா! வெறும் இலை, தழை உண்டு வாழும் எத்தகைய மாபெரும் உருவம்! என்ன அற்புதமான படைப்பு! என்று வியக்கும் மனிதன் இத்தகைய அற்புதப் படைப்பை உருவாக்கிய இறைவனின் சக்தி எத்தகையது?” என்று வியந்து ஆத்ம விசாரம் செய்கிறான். தன் தரிசனத்தால் ஒரு சிறிய அளவிலாவது ஆத்மவிசாரத்திற்கு வித்திடும் யானை ஒரு புனிதப் படைப்பண்றோ!
அடியார் : சற்குருவே! யானையின் ஆன்மீக சக்தியை விவரிப்பதைக் கேட்கவே மிகவும் இனிமையாக உள்ளதே!
குரு : ஆம்! யானையின் ஆத்ம சக்தி, சொற்பொருளில் அடங்காது! விண்ணுலகங்களிலிருந்து குறிப்பாக குருகங்கணர்கள், மஹரிஷிகள், யோகிகள் பிரதோஷம், மாசிமகம், மாத சிவராத்திரி, விஷ்ணுபதி, மாதப் பிறப்பு போன்ற புண்ய நேரங்களில் பூலோகத்திற்கு வருகையில் அவர்கள் தம் ஒளிபொருந்திய சூட்சும தேகங்களோடு அரசு, ஆல், வேம்பு போன்ற ஸ்தல விருட்சங்கள், கோயில் கோபுரங்கள், பசு, யானை போன்ற ஜீவன்களில் தாம் தங்குகின்றனர். அவர்களுடைய ஒளிபொருந்திய வதனங்களைத் தாங்கும் ஆன்மீக சக்தியை யானை பெற்றுள்ளதென்றால் அதன் மஹிமையை என்னென்று சொல்வது?
அடியார் : சென்ற ஆண்டுவரை திருச்சி மலைக்கோட்டை ஸ்ரீதாயுமனசுவாமி திருக்கோயிலில் சேவை புரிந்த யானை உண்மையில் ஒரு பெரிய யோகியின் திருஉருவே என்று அருளினீர்கள் அல்லவா குருதேவா?
குரு : ஆம், ஸ்ரீகஜசாந்த யோகீஸ்வர மூர்த்தி என்பார் வைகுண்டத்தில் கஜேந்திர லோகத்தின் உன்னத யோக புருஷர் ஆவார். பிராணாயாம சக்திக்கு அவரே யோக சூத்திரங்களைப் படைத்தவர். அதே யானை வடிவில் சென்ற ஆண்டு வரை திருச்சி மலைக்கோட்டைக் கோயிலில் பூலோக வாசம் கொண்டார். சென்ற ஆண்டு அந்த யானை ஜீவசமாதி பூண்டது! இவ்வான்மீக இரகசியங்களை மனித மனம் விரைவில் ஏற்காது! நம்பிக்கையுடன் அந்த யோகீஸ்வர மூர்த்தியை வலம் வந்து ஒரு சிறிதேனும் உணவு அளித்தோர்க்கு உத்தமமான பலன்கள் கிட்டும்.!
அடியார் : நம் சபை சார்பில் எவ்விதப் பலனும் எதிர்பாராமல் அந்த யானைக்குச் சிறு சேவைகளைப் புரியும் வாய்ப்பு கிட்டியதே குருதேவா?
குரு:: பலன்களை எதிர்பாராமல் அந்த யானையைத் தரிசித்து உணவு அளித்தோர்க்கு கஜேந்திர லோகத்தில் உன்னத நிலை கிட்டுவதோடு இப்பிறவியில் உன்னதமான பதவி கிட்டும். அந்த யானையைத் தரிசிக்கும் பேறு பெற்றோர் தினமும் குறிப்பாக சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில், குருஹோரையில் ஸ்ரீகஜேந்திர சாந்த யோகேஸ்வர மூர்த்தியைத் துதித்து அந்த யானையின் உருவத்தைக் கண்முன் கொணர்ந்து தியானம் புரிந்திடில், தானாகவே சுழுமுனை சுவாசம் ஏற்பட்டு பிராணாயாம யோகசக்தி எளிதில் கைகூடும். இதற்கு மறைபொருளாய் நின்றி அருள் பாலிப்பவரே அந்த யோகேஸ்வர மூர்த்தி! நம்பினோர் என்றும் கெடுவதில்லை. இது நான்கு மறைத் தீர்ப்பு!
மேலும் அந்த யோகீஸ்வர மூர்த்தியே கலியுக மக்களின் நன்மைக்கென மீண்டும் தோன்ற இருக்கிறார். யானையாய் வாழ்ந்த அவரை வலம் வந்து தரிசித்து அன்போடு உணவு அளித்தவர்களுக்கு அவருடைய மற்றொரு அவதார உருவின் தரிசனமும் கிட்டும். இதைத் தக்க சமயத்தில் அறிவிப்போம்.
அடியார் : ஒரு யோகி அல்லது மஹரிஷியை நம்முடைய பிறவிகளில் இரு வெவ்வேறு அவதார நிலைகளில் தரிசனம் செய்வது மிகவும் அபூர்வமான பாக்யம் அல்லவா குருதேவா! தங்களைப் போன்ற சற்குருமார்களின் ஆன்மீக விளக்கத்தாலன்றோ இத்தகைய மஹான்களின் பிறப்பு, இரகசியங்கள் வெளிவருகின்றன.
குரு : இது சித்த புருஷர்களின் திருவிளையாடலே! ஆனால் இவற்றையெல்லாம் மனித மனம் எளிதில் ஏற்காது! சற்குருவின் வார்த்தைகளில் பரிபூர்ண நம்பிக்கை கொண்டு அதன்படி நடப்போர்க்கு பெறற்கரிய அனுக்ரஹங்கள் வான்மழையெனப் பொழியும். இதே போன்று திண்டுக்கல் அருகே கசவனம்பட்டிச் சித்தர் என்ற அவதார புருஷர் நெடுங்காலம் அருள்புரிந்து சில ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதி  கொண்டார். நம் அகஸ்திய விஜயம் மே 1994 இதழில் இதுவரை எவரும் அறிந்திரா அவருடைய பிறப்பு இரகசியங்களை ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் உள்ளவாறு அற்வித்துள்ளோம். அந்த கசவனம்பட்டிச் சித்தரே மீண்டும் தோன்றி வேறு உருவில் தமிழகத்தில் நடமாடி வருகிறார். இந்த ஆன்மீக ரகசியமும் தக்க தருணத்தில் வெளியிடப்படும்.

ஸ்ரீபன்றிமலை சுவாமிகள் ஜீவசமாதி

ஸ்ரீகசவனம்பட்டி சித்தரை தரிசித்து சேவைகள் செய்யும் பாக்கியம் பெற்றவர்கள் இதே பிறவியில் அவர்தம் மறு அவதாரத்தையும் தரிசித்துச் சேவைகள் புரிவாராயின் இது பெறற்கரிய பாக்கியமாக அமைந்து பலகோடி ஜென்மங்களின் கர்மவினைகளைக் கழித்துவிடும். இதுவே சித்தபுருஷர்களின் தரிசன மஹிமையாம்! உன்னத சித்தபுருஷராக நம்மிடையே வாழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன் ஜீவசமாதியடைந்த ஸ்ரீலஸ்ரீபன்றிமலை சுவாமிகள் பிறப்பு இறப்பு நிலை கடந்த அருட்பிரகாச சித்தராவார். இன்றைக்கும் பேசும் தெய்வமாய் தம் ஜீவசமாதியில் அருள் மழை பொழிந்து வருகிறார். ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களின்படி கலியுக மக்களைக் கரையேற்றுவதற்காக மீண்டும் அவர் இப்பூவுலகில் அவதரிக்க ஸ்ரீமுருகப் பெருமானின் திருவுளம் நிறைந்துள்ளது. தக்க சித்த புருஷர் மூலமாக தக்க தருணத்தில் இவை அருளப்பெறும். சற்குருவின் வார்த்தைகளில் பரிபூரணமாக நம்பிக்கை கொண்டவர்களுக்கே சதாசிவப் பரப்பிரம்மத்தின் அருள் தரிசனம் கிட்டும். பரப்பிரம்மத்தையும் துய்த்துணரும் ஞானமும் பெறுவர்..
மனம் மிகவும் சோர்வாக (frustrations) மனத் தளர்ச்சியுடன் இருந்தால் உடனே பூஜை அறையிலுள்ள அனைத்து உருவப் படங்களையும் ஈரத் துணியால் நன்கு துடைத்து, புதிதாக அரைத்த சந்தனத்தை இட்டுக் குங்குமமும் இடவேண்டும். இதனால் மனம் உடனே தெளிவு பெறும். காரணம் இறைப் படங்களின் மேலுள்ள தூசி அழுக்குகள் அனைத்தும் தீய சக்திகளின் பிரதிபலிப்பே! இவைதாம் மனச்சோர்வாக மாறுகின்றன! படங்களைத் துடைத்துச் சந்தனம், குங்குமமிட அவற்றில் சாந்நித்யம் பெருகி இறையருளாக மாறி நம் மனக் கவலைக்கு மாற்றாக அமைகின்றன.

விசேஷ தினங்கள்

அக்டோபர் மாத விசேஷ தினங்கள் 4-10-1994  - மஹாளய அமாவாசை – திருவிடைமருதூர் சக்கரப்படித்துறை மற்றும் திருவள்ளூர் போன்ற விஷ்ணுத் தலங்களில் தர்ப்பணம், அன்னதானம்
5.10.1994  - நவராத்திரி ஆரம்பம்
13-10-1994 – சரஸ்வதி பூஜை – ஸ்ரீஹயக்ரீவர் பூஜை
14 -10-1994 – விஜய தசமி – ஸ்ரீஆயுர்தேவி கலசபூஜை
18-10-1994 – துலாஸ்நானம் – புண்ய நதிஸ்நானம் (ஐப்பசி மாதம் முழுவதும் துலாஸ்நான நாட்கள்)
1.11.1994 – பின்னிரவு 2.11.1994 காலை தீபாவளி

ஸ்ரீஆயுர்தேவி
பலகோடி சதுர்யுகங்களுக்கு முன் ஆதிபராசக்தி, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியாம் ஸ்ரீஆயுர்தேவி பூஜை உன்னத நிலை பெற்றிருந்தது. காலப்போக்கில் மக்களின் அசிரத்தையால் ஸ்ரீஆயுர்தேவி வழிபாடு மறையலாயிற்று. நவகரங்களைத் தாங்கி அருள்பாலிக்கும் ஸ்ரீஆயுர்தேவி தம் ஏழுகரங்களில் உத்தம சித்தபுருஷர்களையும்/மஹரிஷிகளையும் தாங்கி எட்டாவது கரத்தில் அமிர்தகலசம் ஏற்று, ஒன்பதாவது கரமாக அபயஹஸ்தத்துடன் அருள்பாலிக்கிறாள்.
உடற்பிணி, வறுமை, சந்ததியின்மை, மனக்கவலைகள் இல்லறத் துன்பங்கள் போன்று வாழ்க்கையின் அனைத்துத் துன்பங்களையும் நீக்கி அற்புத இறைநிலையைத் தரும் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியே ஸ்ரீஆயுர்தேவி ஆவாள். கலியுக மக்களின் நல்வாழ்விற்கென நம்குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் 1992ம் ஆண்டு- அக்டோபர் மாதம் – நவராத்திரிப் பெருவிழாவில், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீவெள்ளீஸ்வரர் சிவாலயத்தில், ஸ்ரீஆயுர்தேவி மகிமை என்னும் தலைப்பில் ஒன்பது நாட்கள் அருளுரைகளாற்றினார். அப்போது,
1. கலியுகம் இதுவரை அறிந்திரா ஸ்ரீஆயுர்தேவியின் திருவுருவம்
2. ஸ்ரீஆயுர்தேவியின் பூஜைமுறைகள்.
3. ஸ்ரீஆயுதேவியின் மஹிமை
ஆகியவற்றைத் தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தரின் திருவருளால் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் உள்ளவாறு ஸ்ரீஆயுர்தேவி வழிபாட்டை மக்களுக்கென அர்ப்பணித்தார். ஸ்ரீஆயுர்தேவியின் திருவுருவம் அனைத்து இல்லங்களிலும் இடம்பெற வேண்டிய ஒன்றாகும்.
விஜய தசமியில் ஸ்ரீஆயுர்தேவி கலசபூஜை
நவராத்திரியில் விஜயதசமியன்று ஸ்ரீஆயுர்தேவியைக் கலசம் வைத்து வழிபடுதல் மிகவும் புனிதமானதாகும். ஜாதி, சமய, இன பேதமின்றி அனைவரும் விஜயதசமியன்று செய்ய வேண்டிய கலச பூஜை இது.
கலசம் : வெள்ளி, வெண்கலம், செப்பு ஆகியவற்றாலான செம்பு அல்லது, மா, பலா, மரத்திலான மரக் கலம்.
கலசநீர் :- சுத்தமான நீர் அல்லது காவிரி கங்கை போன்ற புனிதநீரை மூன்று முறை கொதிவந்ததும் ஆற வைத்துக் கலசத்தில் ஊற்ற வேண்டும். வெட்டிவேர், துளசி, கடுக்காய்த்தூள், ஏலம், சுக்கு, ஆகியவற்றைக் கலசநீரில் சேர்க்க வேண்டும்.
கலச ஸ்தாபனம் : நுனி வாழை இலையைக் கிழக்கு நோக்கி வைத்து அதில் பச்சரியைப் பரப்பி, அரிசியால் வலது மோதிர விரலால் (பிள்ளையார் சுழி), ஓம் என்ற பிரணவ மந்திரம் எழுதி அரிசியின் மேல் கலசத்தை வைக்க வேண்டும்.
கலச அலங்காரம் :  கலசச் செம்பிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், இட்டு முழுத் தேங்காயை மேலே வைத்து மாவிலை பூ, மஞ்சள் நிற வஸ்திரம், நார்ப்பட்டு என்றவாறு அவரவர் வசதிக்கேற்ப கலசத்தை அலங்கரிக்க வேண்டும். பட்டுவஸ்திரம் தவிர்க்கப்பட வேண்டும்.
ஸ்ரீஆயுர்தேவி பூஜை : ஸ்ரீவிநாயகரை ஆராதித்து ஸ்ரீஆயுர்தேவி பூஜையைத் தாம் அறிந்த வடமொழித் துதிகளால் பூஜிக்க வேண்டும். (ஸ்ரீஅபிராமி அந்தாதி, ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம், மஹிஷாசுரமர்த்தினி சுலோகம் etc.. )
நைவேத்யம் : சர்க்கரைப் பொங்கல், கேசரி போன்ற பொன் (மஞ்சள்) நிறப் பிரசாதங்கள் ஸ்ரீஆயுர்தேவிக்குப் ப்ரீதியானவையாகும். எளிமை கருதின் மஞ்சள் நிற பழங்களே போதுமானதாகும்.
ஸ்ரீஆயுர்தேவி மூல மந்த்ரம்
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் சுபாயை தேவ ஸேனாயை ஆயுர்தேவ்யை ஸ்வாஹா – இதுவே மூலமந்திரம்.
ஸ்ரீஆயுர்தேவி காயத்ரி மந்திரம்
ஓம் மஹா தேவ்யை ச வித்மஹே பராசக்த்யை ச தீமஹி
தந்நோ ஆயுர்தேவ்யை ப்ரசோதயாத்
மேற்கண்ட ஸ்ரீஆயுர்தேவி மூலமந்திரம், காயத்ரி மந்திரங்களை 108 முறையேனும் ஜபித்து ஸ்ரீஆயுர்தேவிக்கான கலசபூஜையை நிறைவேற்ற வேண்டும். ஸ்ரீஆயுர்தேவியை தினந்தோறும் வழிபடுதல் உத்தமமானதாகும்.  ஏனைய விளக்கங்களை எமது ஸ்ரீஆயுர்தேவி மஹிமை நூலில் காணலாம். குருவருளுடன் முறையாக நிறைவேற்றப்படும் விஜயதசமிக்குரித்தான ஸ்ரீஆயுர்தேவி கலசபூஜையின் மூலம் பல்லாயிரம் நவராத்திரி பூஜைகளை அனுஷ்டித்த பலன்கள் கிட்டும். இத்தகைய ஆன்மீக இரகசியங்களை நம் நல்வாழ்விற்கென எடுத்துரைத்து சாந்தமாக, அமைதியாக அருட்பணியாற்றி வரும் நம் குருமங்கள கந்தர்வாவிற்கு நாம் மிகவும் கடமைப்பட்டுள்ளோம்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam