முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தீபம் தரும் ஆரோக்யம்

வெள்ளிக்கிழமை தோறும், பூவுலகில் புனிதமான தெய்வீக சக்திக் கதிர்கள் நன்கு பரிணமிக்கின்றன. குறிப்பாக, குத்து விளக்குத் தீபங்களில் இவை நன்கு பரிமாணம் கொள்கின்றன. மனித ஆயுள் கணக்கை வயதுப் பூர்வமாகவும், மரத்தின் ஆயுளை மரத் தண்டு வளையக் கணக்கு மூலமாகவும், ஆடு, மாடு, யானைகளின் வயதைக் கொம்புச் சுருக்கம் கொண்டு கணக்கிடுகின்றனர் அல்லவா. இவ்வகையில் விளக்குகளில் சுபசக்திகளை நன்கு விருத்தி செய்து தரும் தீபத்தின் ஒளிக்காலப் பரிமாணத்தைத் தீப சுதபுதம் என்ற ஒளிப் பிரகாச நேர மார்கச் சூத்திரமாகச் சித்தர்கள் விளக்குகின்றனர்.
சென்னை அருகே மப்பேடு ஸ்ரீசிங்கீஸ்வரர் சிவத்திருத்தலத்தில், தூல, சூக்கும வடிவுகளில் இன்றும் என்றுமாய் வழிபடும் சுதபுத மஹரிஷிதாம், தீபசுதபுத உபாசனகளில் கரைகண்டவர் ஆவர். ஆஞ்சநேய மூர்த்தி பூஜிக்கையில், அவர் எந்த லோகத்தில் இருந்து பூஜித்தாலும், அவருடைய பூஜைக்கான கண்டாமணியை ஒலிக்கும் பாக்யம் பெற்ற மாமுனி! பூஜைக்கு மணியை ஒலிக்கையில்,
சுதபுதநாதம் கணநாதம்!
கணசுதநாதம் சிவபோதம்
ஸ்ரீஹரிசிவசுத ஹரிஹரி ஹரிஹரி!
என்று ஓதுதல் சிறப்புடையது.
மருத்துவர்கள் இதனை ஓதி வருதலால் தம் துறையில் சிறப்படைவர். காது மந்தமாக உள்ளவர்கள் கண்டாமணியை ஒலித்தவாறே, மேற்கண்ட சந்த(ன) சுத மந்திரத்தை ஓதியவாறு, திருஅண்ணாமலையைச் சப்தமித் திதி மற்றும் புதன்கிழமைகளில் அருணாசலத்தை வலம் வருபவர்களுக்குச் சுதபுத மஹரிஷியின் அருளால், வாழ்வில் வியக்கத் தக்க நல்மாற்றங்கள் ஏற்படும்.

மப்பேடு சிவத்தலம்

எவ்வளவு நேரம் விளக்குகளில் தீபம் எரிகின்றதோ, அந்த அளவிற்கு அந்த விளக்கில் தீப சுத சக்திகள் விருத்தியாவதோடு, விளக்கின் ஆசியளிக்கும் அம்சங்களும் பல்கிப் பெருகும். 10000 நாழிகை, ஒரு லட்சம் நாழிகை தீபப் பிரகாசம் கொண்டவை என்பதாக விளக்குகளில் பல ஆண்டுகளாக தீபப் பிரகாசம் துலங்கிய காலத்தை வைத்துச் சுமங்கலி விளக்குகளாகப் போற்றி வழிபடும் விசேஷமான சுவாசினிப் பூஜை முறைகளும் உண்டு.
இவ்வாறாகத் தினமும் நெடு நேரம் தீபத்தை விளக்கில் பிரகாசிக்க வைத்தே விளக்கின் தீபப் புலன்கள் நிர்ணயம் பெறுகின்றன. ஒரு விளக்கு எவ்வளவு நேரம் ஒரு நாளில் தொடர்ந்து தீபத்தைத் தருகின்றதோ இதை வைத்து 100000 நாழிகை விளக்கு, 20000 நாழிகை விளக்கு என விருது விளக்குகளும் அமைகின்றன. வேதாரண்யத்தில் இவை நிறைய உண்டு.
விளக்கில் தீபம் எரியும் ஒவ்வொரு நிமிடமும் அதில் பன்மடங்காக ஒளிப் பிரகாச சக்திகள் நன்கு விருத்தியாகும். அதாவது, ஒவ்வொரு விளக்கிலும் ஏற்றப்படும் தீபமும், எவ்வளவு நேரம் அதில் தீபம் தொடர்ந்து எரிகின்றதோ அதற்கேற்ற தீப சுத சக்திகள் நன்கு இல்லத்தில், ஆலயத்தில் விருத்தியாகும். இதில் நவராத்திரி வெள்ளி விளக்கு வழிபாடு மிகவும் விசேஷமானது. காரணம் தீபப் பிரகாசராய்ப் பெருமாள், திருமகளுடன் தீப ஒளியில் பக்தர்களுக்குக் காட்சி தரும் நன்னாள் நவராத்திரி வெள்ளிக் கிழமையாகும்.   
எனவே, நவராத்திரி மற்றும் வெள்ளி மட்டுமல்லாமல் தினமுமே காலையிலும், மாலையிலும் குறைந்தது மூன்று மணி நேரமாவது தீபப் பிரகாசம் விளக்கில் தொடர்ந்து இருக்குமாறு, நன்கு கவனித்து பசு நெய் ஊற்றி தொடர்ந்து இருக்குமாறு நன்கு கவனித்துக் கொண்டு குடும்பத்தில் தீபப் பிரகாச வர சக்திகளை நன்கு பெருக்கிக் கொள்க! அதாவது எவ்வளவு நேரம் ஒரு விளக்கில் தொடர்ந்து தீபம் எரிகின்றதோ அந்த அளவிற்குத் தீபப் பிரகாச சாந்த சக்திகள் இல்லத்தில் நிரவி சண்டை, சச்சரவுகள் தணிந்து நல்லமைதிக் கதிர்கள் பூரிக்கும். சாந்த சக்திகளும் அந்தப் பகுதியில் நன்கு வளம் பெற்றுப் பிறருக்கும் நன்கு உதவும்.

ஸ்ரீவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம்

ஸ்ரீவேதஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்

இறைவனுடைய தெள்ளிய வடிவுகளில் தீபப் பிரகாசமும் ஒன்றாகும். சுக்ர வாரம் எனப் பெயர் கொண்ட வெள்ளிக் கிழமை நாளில், சுப்ர சுக்ர தீப சக்திகள் நன்கு பரிணமிக்கின்றன. இதனை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சுப்ர தீப சக்திகள் வாழ்கின்ற நாளில் தீர்கமான சுப வளத்தைத் தர வல்லவை. சுகம் வேண்டுமா? சுபம் வேண்டுமா? சுகம் எனில் செய்த நற்காரியங்களில் விளையும் புண்ணியத்தால் விளையும் நன்மைகளாகும். புண்ணியம் குறைந்தால் சுகம் குறையும். இது நிரந்தரமான நல் அமைதி ஆனந்தத்துடன் பூரிப்பதற்கு சுதபுத சுப சக்திகள் தேவை! சுபம் என்பது மங்களம், ஆனந்தம், புனிதம் மூன்றும் பூரித்து நிறைவதாகும். இதனால்தான் இறைவன் சுகவனேஸ்வரராகவும் (சேலம்) அருள்கின்றார்.
சுப்ர தீபம் என்பது மூன்று மணி நேரம் தொடர்ந்து தீபம் எரிவதால் உண்டாகும் தீப சக்திகள் ஆகும். சுப்ர தீபங்களிலும் பல வகைகள் உண்டு. ஐந்து மணி நேரம் தொடர்ந்து பிரகாசிக்கும் தீபத்திற்கு பஞ்ச சுப்ர பாவனம் என்று பெயர்.
சதுர்த்தி திதி அன்று குத்து விளக்கில் ஐந்து (முக)தீபங்களை இல்லத்திலும் மூன்று வேளைகளிலும் ஐந்து மணி நேரமாவது ஏற்றி, ஆலயத்திலும் பெரிய அகலில் நல்ல பெரிய திரியை வைத்து ஏற்றிடுக! ஜோதீஸ்வரர், சுகவனேஸ்வரர் என்ற பெயர் கொண்ட இறை மூர்த்திகளின், தேவிகளின் ஆலயத் தரிசனமும், இத்தலங்களில் 32 தீபங்களின் ஒளிப் பிரகாசத்தில் சுகவனேஸ்வரரைத் தரிசித்தலும் மிகவும் விசேஷமானதாகும். அபரிமிதமான நற்பலன்களைத் தர வல்லது. உறவினர்களின் தலையீடுகளால் ஏற்பட்டுள்ள முட்டுக் கட்டைகள் நீங்கி, நற்காரியம் நடைபெற உதவும்.

வீண் கோலம் நீக்கும் கோலம்

விபூதி என்றால் திருநீறு, மஹிமை, பெருமை என்று பல அர்த்தங்கள் உண்டு. நவராத்ரி தினங்களில் நல்ல விபூதியை, ஆலயங்களுக்கும் ஏழைகளுக்கும் தானமாக அளித்திடுக! விபூதிப் பிரசாதம் அளிக்கப் பெறும் தலமான சிதம்பரம் அருகே உள்ள ஆச்சாள்புரம் திருவெண்ணீற்றம்மை சன்னதியில் நவராத்திரி விரத நிறைவைக் கொள்வது சிறப்புடையதாகும்.
பூவுலகின் சகல ஜீவன்களுக்கும் காருண்ய நாயகியாக அருள் புரிவதற்காகவே. அம்பிகை சர்வேஸ்வரனையே சத்குருவாகக் கொண்டு, இறையாணையாக ஏற்ற மிகவும் சிறப்பான பராசக்தி அவதாரமே லலிதா பரமேஸ்வரி அவதாரிகை ஆகும்.
ஸ்ரீவித்யா சக்கரத்தில் இருந்து நேரடியாகவே ஆர்பவித்துத் தோன்றி எழுந்த ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, முதன் முதலில் ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்தியருக்கே அருட் காட்சி தந்து அருளினாள். இவ்வாறு ஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்தியர் மாமுனித் தம்பதிகளுக்கு ஸ்ரீலலிதா பரமேஸ்வரி, அருட்காட்சி தந்த தினமே உபாங்க லலிதா விரத நாளாக மலர்கின்றது.
லலிதாம்பிகை விரதம் எனில், லலிதம் என்பது நளினம் எனப் பொருள்பட, விரதங்களிலேயே மிகவும் நளினமான விரதம் என்று பொருளாகிறது. லலிதாம்பிகை நளினமான கோலத்தில் தாமாகவே பூரித்து காருண்யத்துடன் நிறைந்து வந்து அருட்கடாட்சம் நிரம்பும்படியான சத்தியமான விரதப் பாங்கு இந்நாளில் வந்தமைகிறது.

திருமீயச்சூர்

இல்லறப் பெண்கள் அனைவரும் தம் கணவனையே கண்கண்ட தெய்வமாக வரித்துப் போற்றி வாழ்தல் வேண்டும். கணவனிடம் எத்தகைய குறைகள், குற்றங்கள் இருந்தாலும், அவற்றுக்கு ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் அருளால் முறையாகத் தீர்வு பெற்று, கற்பிற் சிறந்தோராய், உத்தமியாய் வாழ்வதற்கு, லலிதா பரமேஸ்வரி பூஜை பெரிதும் உதவுகிறது.
ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளே ஸ்ரீலோபா மாதாவிற்கு மனமுவந்து அளித்த துதிகள் ஆதலின், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமத் துதிகள் மிக மிக சக்தி வாய்ந்தவையாகும். சித்தர்கள், மஹரிஷிகளால், மூன்று சந்தியா வேளைகளிலும் தினமுமே அனைத்து லோகங்களிலுமே ஓதப் பெறுபவை.
இந்நாளில் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும், லலிதா சகஸ்ர நாமத் துதிகளை ஓதுவதுடன், இவற்றைப் பற்றி அறியாத பாமர ஏழைப் பெண்களையும் அமர வைத்து, அவர்களுடைய காதில் அம்பிகையின் திருநாமங்கள் நன்கு கேட்கும்படி, லலிதா சகஸ்ரநாமம், லலிதா திரிசதி, லலிதாம்பிகைக்கான 1008 போற்றித் துதிகளை ஓதிடுதல் உத்தமான தர்மப் பணியாகும். அத்துடன் மூன்று வேளையும் பாயசம் படைத்து, முதலில் குறைந்தது 12 ஏழைப் பெண்களை, குழந்தைகளை அருந்தச் செய்து, அவர்கள் பரம சந்தோஷத்துடன் பாயசத்தை அருந்தும் அற்புதக் காட்சியைக் கண்ணாரக் கண்ட பிறகே, ஒரு வாய் பாயசம் அருந்தி, நாள் முழுதும் விரதம் இருத்தல் வேண்டும்.
இந்நாள் லலிதா சஹஸ்ர நாமம் ஓதுதல் மட்டுமன்றி, சஹஸ்ரநாமத் துதிகளைக் கையால் எழுதுவதும் விசேஷமான பூஜையாகும். குறைந்தது மூன்று வேளைகளிலும் மூன்று முறையோ அல்லது ஒரு முறையேனும் லலிதா சகஸ்ர நாமத் துதிகளை முழுதுமாக எழுதி, லலிதாம்பிகை, லோபாமாதா, அகஸ்தியரைச் சிந்தையில் இருத்திடுவது சிறப்புடையதாகும். மனக் களங்கங்கள் தீர வழி வகுக்கும் மார்கமிது.
ஆலயத்தில், அமர்ந்த கோலத்தில் உள்ள அம்பிகையை லலிதா பரமேஸ்வரியாக  பாவனை செய்து வழிபடுதல் விசேஷமானதாகும். லலிதா என்ற பெயரில் உள்ள ஏழைப் பெண்களுக்கு இயன்ற உதவிகளை ஆற்றிடுக.
பேரளம், அருகே திருமீயச்சூர், மப்பேடு ஆலயத்தில் அருளும் அம்பிகைகள் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி அம்சங்கள் ஆதலின், இவ்வாலயங்களில் நீர்க் கோலமிட்டு வழிபடுவது சிறப்புடையதாகும். (ஒரு மாதத்திற்கேனும் வரும்படி) தினமும் ஆலயத்தில் வீட்டில் கோலமிட, ஏழைகளுக்குப் பச்சரிசி மாவைப் புது முறங்களில் வைத்துத் தானமளித்திடுக! தன்னைப் பற்றி அவதூறு பரப்பும் உற்றம், சுற்றத்தின் பகைமைப் பிடிப்பில் இருந்து மீள இது உதவும். வீண் பழி அகல்வதற்கும் துணை புரியும்.

கல்வி தரும் பித்ருக்கள்

சரஸ்வதி நதி என்ற அந்தர்யாமி நதி அதாவது நதிகளில் உள்நீரோட்டமாக ஓடும் நதி என்று உண்டு. கண்ணால் காண இயலாதது. புராணப் பூர்வமாகப் பல புனித நதிகளின் அடியில் ஓடுவது. பிரயாக் எனும் அலகாபாத், அன்பில் காயத்ரீ, பல்குனி சங்கமத்துறை, பவானி முக்கூடல் போன்ற இடங்களில் சரஸ்வதி அந்தர்யாமியாகப் பிற நதிகளுக்குக் கீழ் ஓடிச் சங்கமம் கொள்கின்றது. இமயமலையில் இன்றும் சரஸ்வதீ நதி தொன்று தொட்டுக் கண்ணுக்குத் தெரியும் வகையில் ஓடுவதாக ஐதீகம் உண்டு. இமயமலையில் இதனைக் கண்டுபிடிப்பதற்காகவே, வேதமந்தரப் பூர்வமாக ஆய்வோரும், ஆங்கே அடிக்கடி பாத யாத்திரை கொள்வோரும் இன்றும் உண்டு.

ஸ்ரீஞானாம்பிகை திருச்சேறை

சரஸ்வதி பூஜைத் திருநாளாகிய நவராத்திரி நவமித் திதி அன்று, பால் நிறத்தில் சற்று உள்ளடங்கியதாக, புனித நதி நீரோட்டத்தின் மேலிருந்து பார்த்தால் தெரியுமாற் போல், சரஸ்வதி நதி தரிசனம் தருகின்றது. இது உண்மையே! இதனையே சரஸ்வதியின் ஆவாஹனப் பூஜையாகவும் கொள்கின்றனர். மூன்று நாள் கழித்து, சரஸ்வதிப் பூஜையின் நவமித் திதி நிறைவில் மீண்டும் இந்தத் தரிசனம் மறைந்து விடும். எனவே, சரஸ்வதி நதியைத் தரிசித்தலே பெரும் பூஜையாகின்றது.
சரஸ்வதி நதி ஏன் மறைந்து பொலிதல் வேண்டும்? தெய்வீகப் பூர்வமாக சரஸ்வதி நதி மறைந்தே திளைக்க வேண்டும் என்பது சரஸ்வதி நதி தேவதா மூர்த்தி பெற்ற வரமாகும்.
பலரும் வித்யா ஞானசக்திகள் மிகுந்த சரஸ்வதி நதி நீராடல், மந்திர ஜப சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தி அமானுஷ்ய வித்யைச் சக்திகளைப் பெற்றுச் சுயநலமாக, தாம் பெற்ற மந்திரத் தரிசன சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தி வாழ்தல் கூடாது என்பதற்காகவே, சரஸ்வதி நதி அந்தர்யாமியாக, புனித நதிகளின் அடியில், கலியில் வேதநதி (வேத) மறைபொருளாக ஓடி வருகின்றது.

ஸ்ரீசரஸ்வதி தேவி பரிதிநியமம்

மேலும், சரஸ்வதி தேவி, ஞான வித்யா சக்திகளின் இருப்பிடம் அன்றோ! பக்தியில் மூழ்கித் திளைத்தால்தான் ஞான வித்யா சக்தி புலப்படும். இதே போலவே, புனித நதிகளுக்குள் மூழ்கினால்தான் புனிதத் திறனும், ஞானம் பெரிதும் கொண்ட சரஸ்வதி நதியும் புலப்படுவதாக அமைந்துள்ளது.
ஞானம், என்பது கண்ணால் பார்ப்பதன்று. இறைவன் அளித்துள்ள ஆறறிவு முழுமையுடன் மேன்மை பெற்று, ஞானம் கை கூடுகையில்தான் சரஸ்வதி நதியின் ஞான வடிவமும் புலனாகும். ஞானத்தை அறிவுப் பூர்வமாக உணர்வது போல, சரஸ்வதி நதியும் கண்ணால் பார்க்க முடியாததாக, நதிகளுக்கு அடியில், கண்களை மூடிய நிலையில், (இறைப்) பகுத்தறிவுப் பூர்வமாக உணர்வதாக அமைந்துள்ளது.
முந்தையப் புராண வைபவங்களில் சரஸ்வதி நதி தேவி, எவராலும் காண இயலா வண்ணம், (ஆனால்) புனித நதிகளிலும், ஞானசக்தி திளைக்கும் தலங்களிலும், பொருட்களிலும் செழித்திருக்க வேண்டும் என்ற வகையில் பெருமாளிடம் பெருவரம் பெற்றாள். ஞானப் பூர்வமான இந்த நல்வரத்தைப் பெறவே கலைமகள், மிகவேமாக ஓடும் நதிகளின் கீழ், ஆடாது அசையாது பன்னெடுங் காலமாகத் தவம் புரிந்தாள்.
மற்றொரு புராண வைபவத்தில் கலைமகள், வேகவதி எனும் வேகப் பெரு நதியாகவும் பிரவேசம் கொண்டு, பெருமாளே பள்ளி கொண்டவராய்த் தடுத்தாட் கொள்ள, கலைமகளும் திவ்யப் பிரபந்த ஞானம் பெற்று அந்தர்யாமியாக, இறைபொருள் நதியாய்த் தோற்றம் கொண்டாள்.

பெருமாளே திரட்டி அளித்த திவ்ய ஞானம், பிரம்ம மூர்த்தி அளித்த பிரம்ம ஞானம், நவமித் திதியில் ஞானதுர்க்கையும், மேதா தட்சிணா மூர்த்தியும் அளித்த சிவஞானம் இவை அனைத்தும் சங்கமமாகித் திரண்டு, ஞான நதியாக அந்தர்யாமியாகவும், ஞான சரஸ்வதியாய் வீணை ஏந்திடா ஞான சரஸ்வதியாகவும் பொலிவதற்கான ஞான வைபவங்கள் புராண யுகங்களில் நிகழ்ந்தன.
சரஸ்வதி தேவியின் ஆவாஹனப் பூஜை நாளன்று கலைமகளை ஞான சரஸ்வதியாய், ஞானமதி நதிப் பிரவாகமாய் ஆவாஹனம் செய்து வழிபடுக! ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து நீரடியில் நன்கு நிலைக்குமாறு வெண் தாமரையை வைத்து சரஸ்வதியை ஞானசரஸ்வதியாய் ஆவாஹனம் செய்து நவமித் திதி வரை பூஜித்திடுக!
நவராத்திரி நவமி அன்று அனைத்து விதமான சரஸ்வதி மூர்த்திகளையும் வழிபடுக! வீணை ஏந்திய கலைமகள், வீணை ஏந்திடாக் கோலம், ஞான கணபதியுடன் அருள்பவள், நின்ற நிலை, அமர்ந்த நிலை என்றவாறு அனைத்து வகை சரஸ்வதி தேவிகளையும் தரிசித்திடுக. காலையில் ஆதித்ய ஹ்ருதய மந்திரமும், மூன்று வேளைகளிலும் மேதா சூக்தம், சரஸ்வதி சூக்தம், குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை போன்ற சரஸ்வதித் துதிகளை ஓதி வழிபடுக!
கேது மூர்த்தியும் ஞானகாரகராகப் போற்றப்படுகின்றார் அல்லவா! நவமி அன்று கேது மூர்த்தியே, சரஸ்வதி நதி பூரிக்கும் சங்கமத் துறைகளில் நீராடி அந்தர்யாமியாகிய சரஸ்வதி நதியைத் தரிசித்துப் பூஜிக்கிறார்.. எனவே சரஸ்வதி ஆவாஹன நாள் முதல் நவமித் திதியிலான சரஸ்வதி பூஜை நாள் வரைத் தினமும் கொள் தானியத்தை வேக வைத்துப் படைத்துக் குதிரைகளுக்கு அளித்து, கேது மூர்த்தி வழிபாடு, ஞான சரஸ்வதி, மேதா தட்சிணா மூர்த்தி, ஞானேஸ்வரர், ஞானாம்பிகை போன்ற ஞான சக்தி மூர்த்திகளை வழிபடுக!
மேதா சூக்தம், சரஸ்வதி சூக்தம், குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலை போன்ற சரஸ்வதித் துதிகளை ஒன்பது முறை ஓதி வர, பிள்ளைகள் நன்கு படிப்பதற்கான வித்யாதரப் பித்ருக்களின் ஆசிகளைப் பெறும் பாக்யமும் கிட்டும்.

பராக்ரமம் தரும் பரிக்ரமம்

பரிக்ரமம் என்பது அருணாசல கிரிவலம், சபரி மலை, கேதார்நாத் போன்ற நேர்த்திப் பாத யாத்திரையாகும். எவராலும் வெல்ல முடியாதவர்களைப் பராக்ரமசாலி என்று போற்றுவார்கள். பராக்ரமம் என்பது வீரத்தை ஒட்டியது மட்டுமல்ல. மனோ வைராக்யம், நல்நெறிகளில் திளைத்தல், எத்தகையத் துன்பங்கள் வரினும் மன உறுதியுடன் நற்காரியங்களைச் சாதித்தல் இவற்றிலும் பராக்ரம அம்சங்கள் உண்டு. ஏகலைவன் குருபக்தியில் பராக்ரமத்துடன் துலங்கியமையால் தான், இன்று பெரிதும் போற்றப்படுகின்றார். அரிச்சந்திரன் சத்ய நெறிகளில் பராக்ரமத்துடன் துலங்கினார்.

ஸ்ரீநந்த மூர்த்திகள் கொருக்கை

பராக்ரமம் என்பது நன்னெறிகள், நல்வித்தையில் எப்போதும் துலங்கித் திளைப்பதாகும். பரிக்ரமம் எனப்படும் நீண்ட பாதை யாத்திரைகளிலும் ஆழ்ந்த மெளனத்திலும் பராக்ரம சக்திகள் நன்கு விருத்தியாகும். இதனால்தான் கேதார்நாத், பத்ரிநாத், அமர்நாத், கங்கோத்ரீ, யமுனோத்ரீ மலைப் பகுதிகளில், கால் நடையாக பக்தர்கள் கடும் குளிர், மலைப் பாறைச் சரிவு, கடும் மலையேற்றம், பெரும் செலவு இவற்றைப் பொருட்படுத்தாமல், 60 வயது மூதாட்டி கூட, தடியைப் பிடித்துக் கொண்டு, பாதயாத்திரை கொண்டு மலையேறி, வாழ்வில் பராக்ரம சக்திகளைப் பல வகைகளிலும் பெறுகின்றார்கள்.
மெளனம் என்பதும் கடுமையான மனப்பாத யாத்திரையே! இதன் மூலம் பல வானவெளி லோகங்களுக்கும் செல்ல இயலும். மெளனம் என்றால் ஒன்றுமே பேசாது இருத்தல் என்று மட்டுமல்ல. ஒருவர் ஒரு நாள் முழுதும் "ஓம்'' என்ற சொல்லைத் தவிர வேறு எதையும் பேசாது இருந்து வருதலும், ஒருவகையில் சுலப காஷ்ட மெளன விரதம் ஆகும்.

ஸ்ரீசரஸ்வதிதேவி சாக்கோட்டை
காரைக்குடி

பத்தாயிரம் சிஷ்யர்களுக்கு மேல் கொண்டிருந்த துர்வாசர் மஹரிஷி, பர்ண சாலைகளை நிர்வகிக்கவும், அனைவரையும், யாகம், வேள்வி, பூஜைகள், ஜபம், தவம் எனப் பலவற்றிலும் எந்நேரமும் பயிற்றுவிக்கவும், நெடுந்தொலைவு பாதயாத்திரை கொள்ளும் போதும் மெளன விரதம் கொள்வது சாத்யமில்லை அல்லவா? எனவே "ஓம், கிருஷ்ணா, ஹரி, சிவராம்' என்ற வகையிலான ஒன்பது இறை நாமங்களை மட்டுமே பேசி, இதன் மூலம் கட்டளைகள், அறிவுரைகளைத் தந்து மெளன விரதத்தை மேற்கொண்டார். இதுவும் துர்க்கமாலய மெளன விரதமாகும். துர்க்கா தேவி சிவ மந்திரங்களை ஓதியேதான் தியானம் கொள்வாள், சிவ மந்திரங்களை ஓதியேதான் அசுரர்களை வென்றாள்.
திங்கட் கிழமை காஷ்ட மெளன சக்திகள் பரிமளிக்கும் தினம். நாள் முழுதும் மெளன விரதம் இருப்பதும், இயலாதோர், ""ஓம், சத்யம்'' என்ற வார்த்தைகளை மட்டும் பேசி காஷ்ட மெளன விரதம் இருந்தாலும் நன்று.
முழுமையாக மெளன விரதம் இருக்க இயலாதோர் 6 மணி நேரம், 10 மணி நேரமாவது மெளனமாக இருந்திடுக!
திங்கள் முழுவதும் பிற வார்த்தைகளை விட, இந்த இரண்டு வார்த்தைகளையும் நிறையப் பயன்படுத்துங்கள். அதாவது நிறையப் பேச வேண்டிய நிர்பந்தம் வந்தால், பேசிய உடனேயே ""ஓம், சத்யம்,", "ஓம், சத்யம்,", "ஓம், சத்யம்,", "ஓம், சத்யம்'' என்று 1008 முறை ஓதி, நாள் முழுதும் பேசிய பெரும் வார்த்தைகளாக ஓம், சத்யம்தனைத் துலங்கச் செய்யுங்கள்.
திங்களன்று, குறிப்பாக, அமாவாசை கூடும் மெளன சக்திகள் நிறைந்த திங்கட்கிழமை அன்று மெளன விரதத்திற்காக விடுமுறை எடுத்து, மெளன விரதம் பூண்க!

மயான தேவதா மூர்த்திகளுள் ஒருவராக துலங்கும் அரிச்சந்திரர், திங்கள் தோறும் மெளன விரதம் பூண்டவர். இந்நாள் அரிச்சந்திரருக்கு மஞ்சள் நிற ஆடைகள், மாலைகள், மஞ்சள் நிறப் பூக்களாலான கிரீடம் சார்த்தி வழிபடுவதால், தான் செய்த தவறுகள் வெளி வந்து விடுமோ என்ற வகையிலான மனதைக் கவ்விக் கொண்டிருக்கும் தேவையற்ற மன உளைச்சல்களை, பீதிகளை தணிக்க உதவும்.
கும்பகோணம் பட்டீஸ்வரம் மார்கத்தில் உள்ள கொறுக்கை ஸ்ரீபிரம்மஞானபுரீஸ்வரர் சிவாலயத்தின் இரட்டை நந்தி மூர்த்திகளிடமும்,
அருணாசலப் பரிக்ரமம் (கிரிவலம்) ஆற்றும் போதெல்லாம் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் எம லிங்கம் அருகே உள்ள அரிச்சந்திர மூர்த்தியிடமும்,
காரையூர் ஸ்ரீமுனிப் பெருமாள் பீடத்திலும் வாழ்வில் ஒரு முறையாவது, அல்லது அவ்வப்போதும் தான் செய்த அனைத்துத் தவறுகளையும் ஒப்புவித்தால்தான், இவற்றுக்கு எந்த ஜன்மத்திலாவது பரிகார வழிகள் கிட்டும்.
ஆனால் செய்த தவறுகளையே மீண்டும் செய்தால் (உதாரணம் புகை பிடித்தல், மது அருந்துதல், காம மோகம் போன்றவை), இவற்றுக்குப் பரிகாரமே கிடைக்காது போய் விடும்.

கம்ப்யூட்டர் வைரஸ்

கம்ப்யூட்டரை ஆக்கப் பூர்வமாக மட்டுமே பயன்படுத்திட வேண்டும். கம்ப்யூடரை நவீன விஞ்ஞானக் கண்டுபிடிப்பு என எண்ணாதீர்கள். கலியுகத்தில் இவை உண்டாகும் எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே சித்தர்கள் தீர்க தரிசனமாக உணர்ந்து சுசரித சரஸ்வதி, அனுராத க்ரமண சரஸ்வதி போன்ற விசேஷமான கலைமகள் அவதாரத் தோற்றங்களை அளித்துள்ளனர். இவை பிற பூமிகளில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே வழிபாட்டிற்கு வந்தவையாகும்.
பெறுதற்கரிய மானுடப் பிறவியில் மனிதன் தன்னைக் கம்ப்யூடர் துறைக்கு அடிமையாக்கிக் கொண்டு வருகின்றான். ஆக்கல் தொழிலில் அழிவு மார்கம் உண்டாகலாமா? ஐந்து வயதுச் சிறுவர், சிறுமியர் கூட கம்ப்யூட்டர் கேம் என்பதாக, கம்ப்யூடர் மானிடரில் பலரையும் சுட்டுக் கொல்லும், கத்தியால் வெட்டும் அதிபயங்கர கம்ப்யூட்டர் கேம்களை விளையாடுவதால், இது சிறு வயதிலேயே மனக்கேடுகளைப் புகுத்தி விடுகின்றன. இதனால்தான் கீழே கிடக்கும் புத்தகத்தை மிதித்தால் கூட உடனே சரஸ்வதி உறையும் புத்தகத்தைத் தொட்டுக் கும்பிடும் பண்பாடு பிள்ளைகளிடம் மறைந்து வருகிறது! இது ஆன்மீகக் கலாசாரச் சீரழிவுதானே!

ஸ்ரீஞானாம்பிகை குடவாசல்

இளைஞர்களைக் கெடுக்கும் அருவருக்கத்தக்க வெப்சைட்டுக்கள் இருப்பதும் பலருக்கும் தெரியும். இவற்றை அடியோடு களைய, உலகளாவிய ஆன்மீக இயக்கம், அனைத்து மதங்களிலும் ஒருங்கிணைந்தால்தான் இவற்றை வேரோடு பெயர்த்தெடுக்க முடியும். இதற்கான வழிபாடே அனுராதா க்ரமண சரஸ்வதி வழிபாடாகும்.
நம் பாரதத் திருநாட்டிலேயே பலநூறு ஆண்டுகளுக்கு முன்னேயே, கருவூர்ச் சித்தர்தாம் வெண்டைக் காயின் உள்ளமைப்பை,
"அனுராதனம் அணுராதனம் அனுராதனமே!''
என உரைத்து, வெண்டைக் காயின் அடிப் பகுதியைக் கிள்ளி வெண்திரையில் படங்களை நகர்த்தும் சாதனமாக்கி பல விஞ்ஞான முன்னேற்றச் சூத்திரங்களை, பரிபாஷைப் பாடல்களாக அளித்துள்ளார். இவை அனைத்தும் அகஸ்தியர் 1000, போகர் 1000 போன்று பரிபாஷைப் பாடல்களாகும். அதாவது தக்க சத்குரு மூலமே இவற்றை அறிய இயலும்.
இதுவரையில் அனைவரிடமும் இவ்வாறு நடந்து கபாலத்தில் பதிந்துள்ள நற்சிந்தனைச் சிதைவுகளை எவ்வாறு சீராக்குவது? மூளையுள் புகுந்து விட்ட இத்தகைய சீர் கேடான அழிவு மார்கச் செல்களை எவ்வாறு போக்குவது? இத்தகைய பயங்கரவாத விளையாட்டுகள் முதலில் கபாலச் சூட்டைக் கிளப்பி விடும். இதனால் பிள்ளைகள் அதிகமாகப் பேசுதல் அல்லது எதுவுமே பேசாது மூடியாகி விடுதல், செயல் மாற்றங்கள், மனப் போரட்டங்கள், பலத்த ஞாபக மறதி, பெற்றோர்களை எதிர்த்துப் பேசுதல், பணத்தை விரயமாக்கும் தேவையில்லா செலவுகள், எவ்வளவு படித்தாலும் மனதில் நிற்காத நிலை, ஞாபக மறதி போன்றவை ஏற்படும்.
இவற்றை முற்றிலும் களையவே சுசரித சரஸ்வதி வழிபாடு, அனுராதா க்ரமண சரஸ்வதி, ஞான சரஸ்வதி துதிகளைக் கம்ப்யூடர் முன் வைத்துத் தினமும் புத ஹோரை நேரத்தில் ஓதி வருவதுடன், ஸ்ரீஅனுராதா க்ரமண சரஸ்வதி, சுசரித சரஸ்வதி, திம்மண்ணப் பிள்ளையார், ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீஆர்த்ர கபாலீஸ்வர மூர்த்தி, வாலில் மணி கட்டிய ஸ்ரீஆஞ்சநேய மூர்த்திகளை நவமி, புதன், கேட்டை நட்சத்திர நாளில் வழிபட்டு வர வேண்டும். கபாலச் சூட்டைத் தணிக்கும் சீதளத் தன்மைகளை அளிக்க வல்லதே கேட்டை நட்சத்திர சக்திகள் ஆகும்.
எலெக்ட்ரானிக்ஸ் சம்பந்தப் பட்டத் துறைகளில் பயன்படுத்தப்படும் நுண்ணியக் கருவிகள், வெப்பத்தால் இணைக்கப் பெறுவதால், சீதளச் சந்திர காந்த சாளகிராம சக்திகள் நிறைந்த கேட்டை நட்சத்திர சக்திதான் தக்க சீதள சக்திகளை அளிக்க வல்லதாகும். சீதள நாயகி (திருமழிசை), குளிர்ந்த நாயகி என்ற பெயரில் அருளும் தெய்வ மூர்த்திகளை வழிபட்டு வருதலால், மூளைச் சூட்டு நோய்கள் தணியும். வராதும் காத்து ரட்சிக்கும்.

" வைத்தாய் பெண்ணைத் தென்பால் ..."

கம்ப்யூடரில் பயனாகும் நுண்ணியப் பொருட்களுக்கும் கேட்டைப் புலம் என்று பெயர்.
கேட்டைச் சுடரொளியின் கேண்மைத் தண்ஒளி தான்
பேட்டைச் சுழற்கதிபோம் பெண்ணைச் சீதளமாம்
-(பேட்டைச் சுழற்கதி = மூளைப் போராட்டம்)
என்ற சித்தர் பரிபாஷைப் பாடல் கேட்டை நட்சத்திரத்தின், பெண்ணை ஆற்றின் அதீதச் சீதளத் தன்மைகளைக் குறிப்பதாகும். இப்பரிபாஷைப் பாடலில் பெண்ணை என்பது மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் பெண்ணை நதியாகும்.
உலகில் பிற நதிகளின் நீரை விட, பெண்ணை ஆற்று நீர் இயற்கையிலேயே குளுமையானது. மூளைக்கு நன்கு குளிர்ச்சியைத் தருவது. சரஸ்வதி தேவி பெண்ணயாற்றுத் தலங்களில் தவம் புரிந்தே சரஸ்வதி நதியாக அந்தர்யாமியாக, காவிரி, கங்கை போன்ற பிற நதிகளுக்குக் கீழே ஞானப் புல நதியாகப் பாய்வதாக வரம் பெற்றாள்.
கேட்டை நட்சத்திரமாகிய ஜ்யேஷ்டம் என்பது வெப்பத்தில் குளுமை, குளுமையில் வெப்பத்தை தரும் சந்திர காந்த சக்திகளைக் கொண்டதாகும். கேட்டை நட்சத்திர மண்டலங்களில் சந்திர காந்தக் கோட்டைகள் உள்ளன. சந்திர மண்டலத்திலும், கேட்டை மண்டலங்களிலும், குளிர்ந்த நீருற்றும், வெந்நீர் நீருற்றும் அருகருகே இருக்கும். இவை மருத்துவ காந்த ரசாயன சக்திகளை உடையவை, தோல் நோய்களுக்குத் தக்க நிவர்த்திளைத் தருபவைகளாகும்.

ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி
கஞ்சனூர்

கம்ப்யூட்டர் கேம்களினால் பிள்ளைகளின் மனோநிலை பெரிதும் பாதிக்கப்படுவதால், கலைமகளுக்கு உரிய நவமித் திதி நாளிலும், வித்யா சக்திகள் நிறைந்த புதன் கிழமைகளிலும், கேட்டை நட்சத்திர நாளிலும் குழந்தைகளை நிறையச் சந்தனம் அரைக்க வைத்து, ஆலயங்களுக்கு அளிப்பதால் மூளைச் சூடு தணியும்.
கேட்டை நட்சத்திரத்திற்கான வழிபாட்டுத் தலங்களும் உண்டு. தஞ்சாவூர்- கும்பகோணம் இடையே அய்யம் பேட்டை அருகில் உள்ள பசுபதிப் பாளையம் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம், திருமழிசை சீதளநாயகி ஆலயம், சீதா தேவி புனித நீராடிய கூந்தலூர் ஜம்புகேஸ்வரர் ஆலயம் போன்றவை கேட்டை நட்சத்திர சக்திகள் நிறைந்தவை.
கும்பகோணம் அருகில் உள்ள கூந்தலூரில் சனீஸ்வரர் முருகனுக்கு முன் மிகவும் அபூர்வமாகச் சன்னதி கொண்டு அருள்கிறார். இங்கு சனீஸ்வரர் முருகனைப் பூஜித்தமையாலும், தசரதருடைய நாட்டின் வற்கடப் பஞ்சத்தைத் தீர்த்தமையாலும், கூந்தலூர் கலியுகத்திற்கான மிகவும் முக்கியமான வழிபாட்டுத் தலமாகிறது.
கூந்தலூர் ஆலயத்தில் ரோமச மஹரிஷியின் வடிவு தரிசனத்திற்கு உள்ளது. ராமாயண காலத்திற்கும் முந்தையவரான ரோமச மஹரிஷி, இங்கு கூந்தலூரில் சீதா தேவியை திருமகளின் வடிவினளாய்த் தரிசித்தமையால், இது ஐஸ்வர்ய சக்தித் தலமும் ஆகிறது. ரோமமாகிய தலைமுடி உணவில் இருந்தால் நம் பெரியோர்கள் தலைமுடி கிடக்கிறது என்று பலர் முன் சொல்லாது, மிகவும் பக்குவமாக, "இதோ ஐஸ்வர்யம்' என்று எடுத்து வைப்பது நினைவுக்கு வருகிறதா?
கூந்தலூரில் திருமகள் கடாட்ச ரூபிணியாய் சீதா தேவி நீராடுகையில், உதிர்ந்த ஏழு தலைமுடிகளையும் ஏழு ஐஸ்வர்ய நீரோட்டங்களாக மாற்றித் தந்து கூந்தலூர்த் தலத்தைக் குளுமைத் தலமாக ஆக்கித் தந்திட்டார். கூந்தலூர் வெப்ப நோய்களை தீர்க்க வல்ல தலம்.
இங்கு கூந்தலூரில் ஸ்ரீஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் ஏழைகளுக்கு நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் சேர்ந்த மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி, நெல்லித் தைலங்களை சீய்க்காய் மற்றும் புத்தாடைகளுடன் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் தானமளித்து, சனிக் கிழமை இங்கு நீராடி வழிபடுதலால் பணக் கஷ்டங்கள் தீர நல்வழி பிறக்கும்.
தலைமுடி குறைதல், உதிர்தல், இளநரைமுடி, வழுக்கையாதல் போன்றவற்றால் மனமும், திருமணமும், மணவாழ்வும் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு நல்ல தீர்வுகள், இத்தலத்தில் மேற்கண்ட வழிபாட்டுப் பலன்களாகக் கிட்டும். கபாலச் சூட்டு நோய்கள் தணிய உதவும் தலம். மூளைச் சூடு தணிவதால் பிள்ளைகளின் அறிவுத் திறனும் நன்கு விருத்தியாகும்.

ஆசீர்வாத அட்சதை

பரிமுக் கடவுளாம் ஸ்ரீஹயக்ரீவப் பெருமாளின் பரிபூரணச் சிஷ்ய தேவமூர்த்தியாக வெண் தாமரையில் மலர்பவளே கலைமகளாம் ஸ்ரீசரஸ்வதி தேவி!
இன்றளவும் கலைமகள், பரிமுகப்பெருமானிடம் பாடம் பயின்று வருகின்றாள் என்பதையே கலைமகள் (கற்றது) கையளவு என்பதாக உரைக்கும் வழக்கு உண்டு. இதன் உண்மைப் பொருள், ஞானத்திற்கு எல்லை இல்லை, தக்க சத்குருவே தேவையான ஞானத்தை, அறிவை அளிக்க வல்லார் என்பதாகும்.
இதனால் தாம், பெரியோர்கள் ஆசிர்வதிக்கையில் தலை மேல் கையை வைத்து, ஆசியளித்து, யாம் கற்றதின் தேவையான பங்கை நின் கபால அறிவு நாளத்தில் சேர்க்கின்றோம்! இதனைக் கொண்டு மென்மேலும் முன்னேறுவாயாக! யாம் மேலும் கற்கின்றோம்!  என்று சொல்லாமல் சொல்லி ஆசீர்வாதத்தை உரைக்கின்றார்கள். இங்கு கற்றல் என்பது கல்விப் பூர்வமானது மட்டும் அல்ல! பூர்வ ஜன்மப் புலத்தறிவு, அனுபவம், அனுபூதிகளும் பெரிதாக அடங்கும்.

ஸ்ரீஅரிச்சந்திரர்
திருஅண்ணாமலை

ஒருவருடைய கல்வி அறிவும், ஏனைய அறிவு வகைகளும், அறிவுப் பூர்வமான சக்திக் கிரணங்களாக, உள்ளங்கை ரேகைகள் மூலமாக நிரவுகின்றன. இதனால் தான் ஆசீர்வதிக்கையில், உள்ளங்கையில் அட்சதைகளை வைத்துக் கொண்டு, விரல் நுனிகளால் எடுத்து ஆசி அளிக்கின்றனர்.
அரிசி மணிகளுக்கு எதையும் நன்முறையில் விருத்தி செய்யும் சக்தி உண்டு. இதனால் தான், மணி மணியாய்ப் பொறுக்கி எடுத்தாற்போல்! என்று நல்லனவற்றின் உயர் தரமாகச் சொல்கிறோம்.
ஆசீர்வாத அரிசி அட்சதை மணிகள் நன்கு முழுமையாக இருக்க வேண்டும். அரையும், குறையுமாய், உடைந்த அரிசி மணிகள் கூடாது. அரிசி மணிகளில் மஞ்சளைத் தோய்க்கும் போது, அதற்கு மென்மேலும் சுபமங்கள் சக்திகள் உண்டாகின்றன. இயற்கையிலேயே மஞ்சள் நிறம் உடைய அனைத்துமே நன்கு கனிந்த முற்றிப் பரிபூரணக்கும் பரிணாமத்தைக் குறிப்பதாகும்.
மாம்பழமும், வாழையும், எலுமிச்சையும் கனிந்ததா என்பதற்கான குறிப்பு அவற்றின் மஞ்சள் வண்ணம் தானே! எனவே, 80 வயதிற்கு மேற்பட்ட வயதான தம்பதிகளின் ஆகி வந்த கரங்களால் திரட்டப் பெற்ற அட்சதைகளை எப்போதும் வைத்திருத்தல் இல்லத்தில் சுபசக்திகளை நிரவித் தரும்.

தாடிக்கொம்பு திருத்தலம்

முன்னரேயே சுபநாட்களில் அட்சதை மணிகளை மேற்கண்ட வகையில் தயாரித்து வைத்திருந்து, தேவையான போது மஞ்சள் சேர்த்துக் கொடுப்பதும் சிறப்பான அறப்பணிகளே. மாதுளை ஓட்டில் அட்சதை மணிகளை வைத்திருத்தல் நன்று. இதனால்தான் மாதுளங்க ரசாயனம் எனும் மூலிகைச் சத்துப் பொருள், கருச் சிசுவிற்கு மங்களகரமான சக்திகளை அளிக்க வல்லதாய் ஆயுர்வேத, சித்த மருந்துகளில் பயனாகிறது. இது மங்களகரமான பச்சரிசிப் பானையில், இயற்கைச் சூட்டில் சிறிது நேரம் வைத்துத் தயாரித்து அளிக்கப் பெறுவதாகும்.
திண்டுக்கல் அருகே உள்ள தாடிக்கொம்பு திருத்தலம் மாதுள சுபசக்திகள் நிறைந்தது. இங்கு மிகவும் அபூர்வமாக, பெருமாள் ஆலயத்தில் பைரவ பூஜை நிகழ்கின்றது. குடும்பத்தில் அடிக்கடி உற்றம், சுற்றத்தில் அகால மரணங்கள் வருவதான மாரக தோஷங்களால் அவதிப்படும் குடும்பங்கள், இங்கு பைரவ பூஜைகளை ஆற்றி வர, தக்க நிவர்த்திகள் கிட்டும்.
இத்தலத்தில் பைரவருக்குத் தேய்பிறை அஷ்டமியில் 108 மாதுளம் பழங்களால் ஆன மாலை சார்த்தி, முத்து வகைப் பொருட்களை, உணவு வகைளைத் தான, தர்மங்களை ஆற்றி வந்தால், நியாயமாக வர வேண்டிய தொகை மற்றும் சொத்துக்கள் வந்து சேர நல்வழி பிறக்கும். கற்கள் பதித்த ஆபரணங்கள், அரிசி மற்றும் பருப்புத் தானிய மணிகள், வெண்டைக்காய், சோளம், கம்பு, கேழ்வரகு மாதுளம்பழம், சீதாப் பழம் போன்றவை முத்து வகைப் பொருட்களாகும்.
பிள்ளைகளுக்குத் தோஷங்கள் அண்டாமல் இருக்கத் தினமும் காலையிலும், மாலையிலும் பிள்ளைகள், பெற்றோரை வணங்கி வருதல் வேண்டும். பெற்றோர்களும், பிள்ளைகளுக்கு அட்சதை இட்டு ஆசிர்வதிக்க வேண்டும். பிள்ளைகள் இந்த அட்சதை மணிகளை ஒன்று விடாமல் பொறுக்கி பத்திரப்படுத்திப் புத்தகங்கள், புத்தக அலமாரிகளில் வைத்துக் கொண்டு, நாளடைவில் விருட்சங்கள் அடியில் செலுத்திட வேண்டும்.
ஆயுத பூஜை என்பது உண்மையில் யந்திராயுத பூஜை ஆகும். அதாவது, கலியுக வாழ்வில் மக்கள் மிக்ஸி, ப்ரிட்ஜ், அலமாரி, வாகனம், கம்ப்யூட்டர் போன்ற யந்திர சக்தி சாதனங்களைப் பெரிதும் நம்பியே வாழ்கின்றனர் அல்லவா. ஒரு நிமிடம் மின்சக்தி இல்லை எனில் வாழ்க்கையே ஸ்தம்பித்தது போலாகி விடும் அளவிற்கு மனிதன் யந்திர சக்திகளை நம்பி வாழ வேண்டியதாகி உள்ளது. எனவே யந்த்ர சாதனங்களுக்கான ஆக்கப் பூர்வமான சக்திகளை அளிப்பதும் யந்த்ர ஆயுத பூஜையே!
யந்திர சாதனங்களோ மின் சக்தி, எரிபொருள் (டீசல், பெட்ரோல்) போன்றவற்றை நம்பி உள்ளன. யந்த்ர சக்திகளுக்கு ஆக்கம் தரும் எரிபொருள் சக்திகள், மின்சக்தி போன்றவை யாவும் தச (வாயு) சக்திகளை நம்பியே அமைகின்றன. இத்தகைய ஆக்கப் பூர்வ சக்திகளை அளிப்பதே ஆயுர்தேவிக் கலச பூஜையாகும்.
எனவே, பிள்ளைகள் காலையில் எழுந்ததும், கரதரிசனம் செய்த பின் கை, கால்களைக் கழுவிக் கொண்டு, நெற்றிச் சின்னம் இட்ட பின்,
வேதமந்த்ர யந்த்ர தந்த்ர வேத வேத நாயகி
தான, தர்ம வேதசார பிரம்ம ஞான சரஸ்வதி
என ஓதி, பிரம்ம ஞான சரஸ்வதியைத் துதிக்க வேண்டும். ஆம் கலியுகத்தில் தான, தர்ம சக்திகள்தாம் வேதசக்திகளைப் பூரணமாகத் தருவிக்கும்.

பூர்வ சொத்துப் பரிபாலனம்

முன்னோர்களான தாய், தந்தையரிடம் இருந்து வந்த வீடு, வாசல், தோட்டம் நிலத்தை அனுபவிப்பவர்கள், சுக்ர கிரக சக்தி நாளான வெள்ளிக் கிழமை தோறும், வெள்ளியங்கிரி, வெள்ளியூர், வடவெள்ளி, வெள்ளீஸ்வரர் போன்ற சுக்ர மூர்த்தி வழிபடும் தலங்களில் கண்டிப்பாக, தேங்காய் எண்ணெய் கலந்த இலுப்பை எண்ணெய்த் தீபம் ஏற்றி வழிபட்டு வருதல் வேண்டும். காரணம், என்னதான் பூர்வச் சொத்து ஆயினும், அது எந்த நல்ல முறையில் அதாவது நல்லது அல்லாத முறையில் சொத்து பெறப்பட்டு இருப்பின் அவையும் பூர்வச் சொத்துடன் உடன் வந்து சேரும் அல்லவா!
இதனால்தான், இவ்வாறு வந்தமையும் வீடு, நில, புலத் தோட்டங்களில் அறிந்தோ, அறியாமலோ வந்து கலந்துள்ள வினை விளைவுகளை, மாதந் தோறும் அன்னதானம், வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜைகள் போன்றவற்றைக் கண்டிப்பாக நடத்தியே சிறிது, சிறிதாக நிவர்த்தி செய்தாக வேண்டும்.

ஸ்ரீநடராஜ பெருமான்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீநடராஜ பெருமான்
சங்கரன்கோவில்

அன்னதானம் என்றால், வெளியில் ஆர்டர் செய்து அன்னதானம் செய்வது என்று இல்லாமல், இவ்வாறு பூர்வ புண்ய சக்தியாக வந்த இல்லத்தில், தோட்டத்தில், நிலத்தில் கண்டிப்பாக அடுப்பு வைத்துச் சமைத்து அன்னதான அக்னியை எழுப்பினால் தான் பூர்வ புண்ய சக்தி விரயமாகாது காக்கும். மேலும் தகாத முறையில் வந்தவற்றுக்குத் தக்கப் பரிகாரங்களும் ஓரளவேனும் கிட்டும். தகாத பொருளால் வீடு, நிலம் வாங்கி வந்து சேர்ந்தால், இதன் தோஷங்கள் ஓரளவு தணிய உதவும். ஆனால் இதுவே பரிகாரமாகாது.
கோயில் மற்றும் ஏழைகளுக்கான பூமி தானம் மூலமாகவே இக்குறைகளை முழுமையாக நிவர்த்தி செய்திட முடியும். கோயில் சன்னதிகளைப் புதுப்பித்தல், நன்முறையில் நற்காரியங்கள் நிகழும் அறஸ்தாபனங்களுக்கு உதவுதல், ஏழைகளின் குடிசை, சிறு வீடுகள் கட்ட உதவுதல் போன்றவையும் இதற்கு உதவும்.
முன்னோர் ஆஸ்தியாக வந்த வீடுகளில், செவ்வாய் தோறும் வாஸ்து பூஜையும், வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களில் வாஸ்து பூஜைகளும் நன்கு நடை பெற்றாக வேண்டும். தினமும், வாஸ்து படத்திற்குச் சந்தனம் அரைத்து இட்டு வர வேண்டும். இவ்வாறு பூர்வீகச் சொத்தாக வீடு அமைவதாலும், சொந்தமாக வீடு இல்லாதவர்களும், சொந்தமாக வீடு இருந்தும் அதில் குடி புகாத இயலாதோரும், அல்லது இருந்த வீட்டையும் விற்றவர்களும் சுக்ர சக்திகளை நனகு பரிபாலனம் செய்யாமைக்காக இனியேனும் வாஸ்து பலப் புண்ய சக்திகளைத் திரண்டு பெறுவதற்கான ஆவன பூஜைகளை ஆற்றி வர வேண்டும்.
வாஸ்து மூர்த்தியின் திருமண்டலத்திற்கு எட்டுத் திசை வாசல்கள் உண்டு. எனவே, பூர்வீகச் சொத்தாய் வீடு, நிலத்தைப் பெற்றோரும் மேற்கண்ட வகையில் சுக்ர சக்திகளை நனகு பரிபாலனம் செய்யாதோரும்,
தினமும் கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஆகிய நான்கு கோபுரங்கள் உள்ள ஒரே கோயில் அல்லது இவ்வாறு அமையாவிடில், வெவ்வேறு கோயில்களில் மொத்தத்தில் நான்கு திசை வழியாக உள்ளே சென்று எட்டுத் திக்குகளிலும் கை கூப்பி வணங்கி வழிபட்டு வர வேண்டும். சிறு ஊராயின், இவ்வாறு நான்கு திசைக் கோபுரங்கள் இல்லையாயின் என் செய்வது?

ஸ்ரீநடராஜ பெருமான்
உத்தரகோசமங்கை

தினமும் எட்டு வெவ்வேறு தல விருட்சங்களை அரசு, ஆல, மா, வேம்பு போன்ற ஆலய விருட்சங்களை வலம் வந்து,
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட பஞ்சாட்சர பிரபுதேவாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட திவ்யஸ்தல அமிர்தோபுஜாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட ப்ரகாசா கர்ஷண வித்யா குணாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்டாதி பஞ்சன ஆகாச சக்த்யாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட சஹஸ்ராதித்ய சத்பலகுணாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட விஸ்வ தனகுண வேதவேத்யாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட தனபூஷண க்ரீட ச்ருங்கஹாய நம :
ஓம் ஸ்ரீவாஸ்து அஷ்ட பித்ருசாகர தசஹரிவாசராய நம:
என்று ஓதி எட்டுத் திக்குகளிலும் வழிபடுக.

சொந்த வீடு அமையவில்லையா ?

வருடத்தில் ஆறு தினங்கள் நடராஜர் அபிஷேக தினங்களாக வந்தமையும். இவை தவிர தேவாபிஷேக தினங்களும் உண்டு. இவை மறைமுகமாக, குருமூலமாக அறிவதாகவே வைக்கப்பட்டுள்ளன. மிகவும் சக்தி வாய்ந்த நாட்கள். மனோதைரியத்தை அளிக்க வல்லவை! தினசரி வாழ்க்கையை நேருக்கு நேர் சந்திக்கத் திராணி இல்லாது அஞ்சி, அஞ்சி வாழ்வோர் நடராஜர் அபிஷேகம் முழுவதையும் அருகிருந்து தரிசித்து, வந்திடில் நல்ல மனமாற்றங்களைக் கண்டிடலாம்.

எப்போதும், எந்நேரமும், எக்காலத்தும், நடராஜப் பெம்மான் திருநடனம் புரிந்தவாறு உள்ளார். இதனால்தாம் உலகம் இயங்கிக் கொண்டு உள்ளது. இறைவனின் திருக் கண்களை உமையவள் ஒரு க்ஷணம் பொத்தியபோது, பிரபஞ்சமே ஸ்தம்பித்து நின்றது அல்லவா! பிரபஞ்சம் அப்படியே ஸ்தம்பித்தது எனில், இதில் கோடானு கோடி அர்த்தங்கள் உண்டு.
பிரபஞ்சம் ஸ்தம்பித்துப் போனதாக அனைவருக்கும் தோன்றியதே தவிர, இதிலும் நடராஜ நடனம் தொடர்ந்து பூரித்ததை , ஸ்ரீஅகஸ்தியர் மகரிஷி, பதஞ்சலி மாமுனி போன்ற சித்தர்களும், மகரிஷிகளும் கண்டு உய்த்தனர்.
நடராஜ அபிஷேக தினம் என்பது ருதுச் சுடர்ப் பரிமள நடனம் என்பதாக அடுத்து வருகின்ற கால கட்டத்திற்குத் தேவையான சிருஷ்டி பரிபாலன சக்திகளை அளிப்பதாகும். இதனை மிகவும் எளிமையாகக் குறிப்பிடுவதென்றால், இன்றைய உலகத்தில் ஒவ்வொரு விநாடியும் நிகழ்கின்ற அனைத்துமே ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டவைதாம்.  
நடராஜ அபிஷேக தினங்களில் தேவ லோகங்களில் பிரம்மா, விஷ்ணு, பிள்ளையார், அம்பிகை, முருகப் பெருமான் போன்ற தேவாதி தேவ மூர்த்திகளும் சித்தர்களும் மகரிஷிகளும், யோகியரும், ஞானியரும் நடராஜப் பெம்மானுக்கு சிவபாதப் பூஜை செய்து இதன் பலாபலன்களை பூவுலகில் உள்ள அனைத்துச் சுயம்புத் தல ஆலயங்களிலும் கோமுகங்களில் அபிஷேக நீர்த் தாரையாகப் பொழிய வைக்கின்றனர்.
இறை மூர்த்திகளே நடராஜ சிவனின் திருப்பாதங்களை அபிஷேகிப்பதால் இந்தப் பிரசாத நீரோட்டம், காவிரி, கங்கை, யமுனா, கோதாவரி, சரஸ்வதி, நர்மதை, சிந்து, கிருஷ்ணா, தாமிரபரணி, பாலாறு, மணிமுத்தாறு (நீவா நதி), தர்ப்பணா நதி, அர்ஜுனா நதி போன்ற சகலவிதமான புனித ஆறுகளிலும் நிரம்பி வழிகின்றது.
நடராஜ அபிஷேக நாட்களில் சம்பு நடன அஷ்டகம் என்ற விசேஷமானத் துதிகளை ஓதி நடனம் ஆடுதல் விசேஷமானதாகும். நடனத் துறையைச் சார்ந்த அனைத்துக் கலைஞர்களும், ஆறு நடராஜ அபிஷேகத் தினங்களிலும், பிரசித்தி பெற்றச் சுயம்புத் தலங்களில் மட்டுமல்லாது, பலரும் அறியாத பெருமகளூர் சோமநாதர் போன்ற சுயம்புத் தல ஆலயங்களிலும், 64 விதமான அபிஷேக ஆராதனைகளுடன் கண்டிப்பாக வழிபடுதல் வேண்டும்.



திருத்தவத்துறை ஊட்டத்தூர் திருவலஞ்சுழி ஆடலரசர்கள் வாழி வாழியவே !!

கல் வடிவில் நடராஜப் பெருமான் திருக்காட்சி தரும் ஊட்டத்தூர், வட குரங்காடுதுறை, இன்னம்பூர், திருவலஞ்சுழி போன்ற தலங்களில் அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதுடன், கோமுகத் தீர்த்தப் பிரசாதத்தை அன்னத்தில் சேர்த்து, ஏழைகளுக்கும் அன்னதானம் மூலமாக நடராஜ அபிஷேகப் பிரசாதத்தை ஜாதி, சமய பேதமின்றி யாவரும் பெற்றிடும் வண்ணம் சமுதாய இறைப் பணிகளை ஆற்றுதல் வேண்டும்.
கங்கை, காவிரி போன்ற புனித நீரில், ஜாதிக்காய், வில்வம், வெட்டி வேர், பச்சைக் கற்பூரம், புனுகு, ஜவ்வாது, கோரோசனை, சந்தனம், அத்தர், அரகஜா, ஏலக்காய், மரிக் கொழுந்து ஆகிய பன்னிரண்டையும் கலந்து அபிஷேகித்து அபிஷேகத் தீர்த்தத்தைக் கலசத்தில் ஏந்தி ஆலயம் முழுவதும் தெளித்து இல்லம், நிலம், அலுவலக அறை, தொழிற்சாலை போன்ற அனைத்து இடங்களிலும், தெளித்தல், எத்தனையோ விதமான தோஷங்களை நிவர்த்தி செய்ய உதவும்.
மார்கழி மாதத் திருவாதிரை தவிர வருடம் முழுவதும் சந்தனக் காப்பில் திளைக்கும் உத்தரகோச மங்கை நடராஜப் பெருமானை தரிசித்து, ஏழைச் சிறுமிகள் இனிமையான கொலுசுச் சப்தத்துடன் காலில் வெள்ளிக் கொலுசு அணிந்து செல்லும் வண்ணம், அவர்களுக்குக் கொலுசுகளைத் தானமாக அளித்தலால், சொந்த வீட்டில் குடிபோக இயலாதவர்கள் வேறு நல்ல இடம் செல்ல முயற்சித்தும் கை கூடி வராதவர்கள் நல்ல இடத்தில் குடி பெயர்வதற்கும், நல்ல வீடு வாங்கிச் செல்வதற்குமான உதவிகள் கை கூடி வரும். 64 விதமான நடராஜ மூர்த்திகளைத் தரிசித்தல் விசேஷமானது.

வயிற்று வலிக்கு நிவாரணம்

தூய்மைப் படுத்துவது, பழையனவற்றைக் கழிப்பது, புதுப்பித்தல், சீர்திருத்தம் செய்தல் என்று பல அர்த்தங்களைத் தாங்கி வரும் பகுள சக்திகள், நம் மனம், உடலுக்கு மிகவும் தேவையாகும்.
உண்மையில் நீரும், நெருப்பும் ஒன்றுக்கொன்று எதிரிடைக் குணங்கள் கொண்டதாக நாம் எண்ணினாலும், இவை இரண்டையும் (அடுப்பு, பாத்திரம் போன்ற) இணைப்புப் பொருட்களைக் கொண்டே, உணவு போன்ற அத்தியாவசியமானப் பொருட்களை மனித குலம் பெற்றுக் கொள்கின்றது. நீர் சக்திகளும், நெருப்பு சக்திகளும் நன்கு பக்குவப்படுத்தப் பெற்று இணைந்து வருவதும் பகுள சக்திகள் ஆகும்.
நெல் மணியானது, நீரும் நெருப்பும் இணைந்து பகுத்துப் பகுக்கப்படுவதால்தான், சோறு உண்டாகின்றது. இந்தப் பகுபத சக்திக்குத்தான் பகுளப் புலம் என்று பெயர். இது, வேதம், பூஜை, குணங்கள் என்று அனைத்துக்குமே நன்கு பொருந்தி வரும். மனிதனையும், மனித சக்திகளையும், மனிதன் பயன்படுத்தும் பொருட்களையும் தூய்மை செய்து தர, நீரும், நெருப்பும் இரண்மே மிகவும் முக்கியமான சாதனங்கள் ஆகும். நீரின்றி, அக்னி இன்றி அமையாதன்றோ இவ்வுலகம்!

ஸ்ரீஅக்னீஸ்வரர் திருக்காட்டுப்பள்ளி

செவ்வாய்க் கிழமை அக்னி சக்திகள் நிறைந்ததாகும். அங்காரக கிரகம், குஜ கிரகம் என்றெல்லாம் போற்றப் பெறும் செவ்வாய்க் கிரகம் அக்னிக் கோளமாகும். இது, பகுளத் திதி எனப்படும் பிரதமைத் திதியுடன் இன்று இணைந்து வருவதால், அக்னி சக்திகள் நன்கு விருத்தி செய்யப்படக் கூடிய நாளாகத் துலங்குகின்றது.
மக்கள் யாவரும் தம்முள் நீராடி வினைகளைக் களைந்து கொள்வதால், தாம் அடையும் தோஷங்களுக்கு நிவர்த்தியாகவே, புண்ணிய நதி தேவதைகள், மகாமகம் போன்ற தீர்த்த வாரிகளில் நீராடித் தம்மை புனிதப்படுத்திக் கொள்கின்றனர். உலக மக்கள் அனைவரும் அக்னியாகிய நெருப்பில் நல்லன அல்லாதவை, குப்பை, ரசாயனங்கள் போன்ற அனைத்தையும் வைத்து எரிப்பதால், பொசுக்குவதால், சமைப்பதால், பல பொருட்களை ஆக்குவதால், அக்னியும் புணிய நதிகளை போலப் பல தோஷங்களை அடைகின்றது. இதிலிருந்து தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்வதற்காகவும், அக்னி தேவதை பகுளப் பிரதமை நாளில், சிவப் பிரகாசம், ஹரிப் பிரகாசம், பிரம்மப் பிரகாசம் ஆகிய மூன்று வகை ஜோதி சக்திகளை நாடிச் செல்கின்றது. பூவுலகின் பல தலங்களிலும் இந்த மூன்று வகை அக்னி பிரகாசச் சக்திகள் துலங்குகின்றன. இவைதாம் அக்னியைப் பரிபூரணமாகத் தூய்மைப்படுத்த வல்லவை.
அக்னீஸ்வரராக இறைவன் அருளும் தலங்கள், அக்னித் தீர்த்தம் உள்ள இடங்கள், எப்போதும் அல்லது பன்னெடுங் காலமாக நெருப்பு போற்றிப் பாதுகாக்கப்படும், ஷீரடியில் உள்ள சாய்பாபா ஆலயத்தின் உதி நெருப்பு மண்டபம், கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள திரியுகி நாராயணன் கோயில் போன்ற தலங்களில் நீராடியும், வழிபட்டும், சகல விதமான பொருட்களும் நெருப்பில் எரிக்கப்படுவதால், தோஷ நிவர்த்திக்கு தக்க பரிகார நியதிகளைப் பெறுகின்றார். எனவே, நெருப்பைத் தூய்மைப்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு குடும்பத்தாருக்கும் உண்டு. இது மகத்தான இறைச் சமுதாயப் பணியாகும்.
விஷமுள்ள பொருட்கள், அழுகிய பொருட்கள், வதைக்கப்பட்டுக் கொல்லப்பட்ட ஜீவன்களின் உடலை எரித்தல் என்று பல வகைகளிலும் நெருப்பு தேவதைக்கு பலத்த அசுத்தத் தோஷங்கள் ஏற்பட்டு விடுகின்றன. இதனை நிவர்த்தி செய்யும் முகமாகப் பல வகை அக்னி வகைப் பூஜைகள் கடைபிடிக்கப்படுகின்றன. சாம்பிராணித் தூபம், ஊதுபர்த்தித் தூபம், வேதம், வேள்வி, ஹோமம் போன்ற அக்னி வகைப் பூஜைகள் அக்னியைச் சுத்தப்படுத்தும். நாமறியா வகையில், நம் கண்களுக்குப் புலனாகா வகையில் மேலும், பல அக்னி சக்தித் தலங்களில், அக்னி மறைவு பெற்றுள்ளது.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் திருமழபாடி

திருஅண்ணாமலை, தேனிமலை, செஞ்சி, திடியன்மலை போன்ற தலங்களில், சில பாறைகளுக்கு அடியில் அன்றும், இன்றும், என்றுமாய், எண்ணற்றச் சித்தர்களும், மாமுனிகளும், யோகிகளும் பாறைகளுக்கு இடுக்கிலும் அடியிலும் தமக்கென சூரிய, சந்திர ஒளிகளைப் பெற்றுக் கொண்டும், எப்போதும் நிரந்தரமான ஜோதியை ஏற்றியும், யோகத் தவம் புரிந்து வருகின்றார்கள். இவர்கள் வளர்க்கும் யாகமும், ஹோமமும், வேள்வியும் அக்னியைத் தூய்மைப் படுத்த வல்லவை! மேலும் பூமியடியிலும், வானத்திலும் ஏற்படும் மாசையும் போக்க வல்லவை! மனமாசைப் போக்குகின்றன. இதனால்தாம் இத்தலங்களில் கிரிவலமே மகத்தான பூஜையாகவும் ஆகின்றது.
ஹோம குண்டப் பூஜையை வளர்த்த பின், அந்த நெருப்பு தானாக, இயற்கையாகக் கனியும் வரை வைத்திருப்பது உண்டு. உடனடியாக ஹோம குண்ட நெருப்பை நீரூற்றிச் சாந்தப்படுத்துவது கிடையாது அல்லவா! எனவே, இயற்கையாகத் தோன்றும், இயற்கையாகவே மறையும் அக்னிக்குப் பலத்த தேவதா சக்திகள் உண்டு. இவற்றை வைத்துத்தாம் சித்தர்களும், மாமுனிகளும் வேள்விகளை ஆக்குகின்றனர். .

பகுளப் பிரதமைத் திதியில் அக்னித் தீர்த்தம், அக்னீஸ்வரர் உள்ள தலத்தில் நீராடி, அபிஷேக ஆராதனைகளை ஆற்றி, நீரும் நெருப்பும் கூடிய - விளக்கு பூஜை, அபிஷேகம் - போன்ற பூஜைகளை ஆற்றுதலானது, மனம், உடலில் உள்ள நெருப்புக் குணங்களைத் தூய்மையாக்கிட உதவும். மனித உடலின் வெப்பம் 98.4 என்பதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது அல்லவா? இது கூடினாலும் குறைந்தாலும் நோயாகி விடுகின்றது. இதனைச் சமனப்படுத்துவதும் பகுள சக்திகள்தாம்.
எனவே, பிரதமைத் திதியில், அக்னீஸ்வரர் மற்றும் ஜுரஹரேஸ்வரருக்குச் சந்தனக் காப்பிட்டு வழிபடுவதால் உஷ்ண வகை நோய்த் தன்மைகள் குறையும். மேலும், பிறரை உஷ்ணமாகப் பேசி, நோகச் செய்தமைக்குத் தக்கப் பரிகாரமும் பெற உதவும்.
பிறரால் வன்மையாக ஏசப் பெற்று பாதிப்பு அடைந்தோருக்கும் தக்க நிவாரணம் கிட்டும். பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில், ஸ்ரீஜுரஹரேஸ்வரருக்குப் பிரதமைத் திதித் தோறும் சந்தனக் காப்பிட்டு வழிபடுவது, உஷ்ண சம்பந்தமான நோய்களைத் தணிக்கும். வயிற்றுச் சூலை நோய்களுக்கும் நல்ல நிவர்த்தியைத் தரும்.

பத்துப் பொருத்தம் போதுமா ?

ஜாதகப் பொருத்தம் பார்க்கும்போது மிக முக்கியமானதாக எண்ணிக் கொண்டு, பத்துப் பொருத்தங்களை மட்டும் பார்ப்பவர்கள் உண்டு. ஸ்ரீராமருக்கும், சீதா தேவிக்கும் மட்டுமே 108 பொருத்தங்களும் நன்கு அமைந்து வந்தன. இதனால்தான் ஸ்ரீராமருடைய ஜாதகத்தைச் சிறு வயதிலிருந்தே பூஜித்து வந்தால், ஜாதகப் பொருத்தங்களைச் சரியாகப் பார்க்காமல் விடுகின்ற தோஷங்களுக்கு, நல்ல நிவர்த்திகளைப் பெற்று, நல்ல வரன்களை அடைய முடியும்.
ரஜ்ஜுப் பொருத்தம், வேதைப் பொருத்தம், யோனிப் பொருத்தம் ஆகிய மூன்றையும் கலியுகத்தில் கட்டாயமாகப் பார்த்தாக வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். இவை மூன்றும் நன்கு அமைவதைப் பொருத்துத்தான், மேற் கொண்டு தொடர வேண்டும். இதில் ரஜ்ஜு தட்டுதல் என்பது வரக் கூடாது. இது தட்டினால், வாழ்க்கையில் மாரக தோஷங்கள் வந்து, அந்தந்த உறுப்பில் ஏற்படும் விபத்துகளாக வந்து விடும்.

ஸ்ரீஜுரஹரேஸ்வரர் வைத்தீஸ்வரன்கோவில்

ஜாதகப் பொருத்தங்கள் நிறையப் பார்க்க, பார்க்க, திருமணம் தள்ளிக் கொண்டே போகின்றது என்று பலரும் எண்ணுவது உண்டு. பார்க்கும் ஜாதகங்களுக்கு ஒன்றும் குறைவில்லை, ஆனால் எதுவும் பொருந்தத்தான் மாட்டேன் என்கின்றது, என்று பலரும் சொல்வார்கள். இவ்வாறு இருந்தால், பலத்தத் திருமண தோஷங்கள் வந்து தொக்கி உள்ளன என்று அறிந்து கொள்ளவும்.

ஸ்ரீதுங்கபால ஸ்தனாம்பிகை
கஞ்சனாகரம்

ஜாதகம் பொருந்தாக் குறை கூட ஒரு பெரிய தோஷமே. இவற்றை நிவர்த்தி செய்து, நல்ல ஜாதகங்கள் கைக்கு வருவதற்கு, சென்னை அருகே நேமம் ஸ்ரீஅமிர்தாம்பிகை சமேத ஸ்ரீஆவுண்டேஸ்வரர் ஆலயத்திற்குச் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீகல்யாண வீரராகவப் பெருமாள் ஆலயத்திற்கு நடந்து சென்று தரிசித்தல் சிறப்பான பலன்களைத் தரும். சிதிலமடைந்த கோயில், நிறைய ஆக்கிரமிப்புகள் உள்ளன, ஒரே ஒரு சன்னதியே கோயிலாகத் தோன்றுகிறது, மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள். பண்டைய காலத்தில் தேரோடிய தலம்.
இது ஒரே ஒரு கதவுடன் ஒரே ஒரு பூஜையுடன் உள்ள தலம். ஜாதகம் பார்க்காது, மனப் பொருத்தத்தால் மணந்து கொண்டோர் கூட, இங்கு வந்து கிரக சஞ்சாரங்கள் நன்கு அமைய முற்காலத்தில் நன்கு வேண்டி, அங்கப் பிரதட்சணம் செய்து வழிபட்டத் தலத்தில் இன்று சுற்றி வலம் வர முடியாத நிலையில் இடிபாடுகளுடன் உள்ளது.
பக்த கோடிகள் இக்கோயில் வளாகத்திற்கான இறைத்திருப்பணிகளை மனமுவந்து செயலாற்றினால், திருமணத் தடங்கல்களால் பாதிக்கப்பட்டிருக்கும் பல்லாயிரக் கணக்கான குடும்பங்களில் திருமணம் பூரித்திட அருள் சுரக்கும்.
பொதுவாக, கார்த்திகை விரத நட்சத்திர நாளில் விரதம் இருக்கும் கன்னிப் பெண்களுக்குக் கார்த்திகைப் பெண்டியர் அறுவரின் திருவருளால் திருமணத் தோஷங்களை நிவர்த்தி செய்யும் தக்க தலங்களில் வழிபாடு செய்யும் பாக்கியம் கிட்டும். புதனும், கிருத்திகையும் சேரும் நாளில் தோன்றும் பெளம்ய பரிவர்த்தன சக்திகளால், கிரக சஞ்சாரப் பலன்கள் நன்முறையில் அமைய பித்ருக்களின் ஆசி சித்திக்கும்.
கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய தலமான மாயூரம் அருகில் உள்ள கஞ்சனாகரம் ஸ்ரீதுங்க ஸ்தனாம்பிகை சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில், அம்பிகை இடது தோளில் ஏந்தி இருக்கும் வேத சார சிர கிளிப் பட்சியின் தரிசனம் குறித்த பல வேத மந்திரங்களை ஓதிய சக்திகளை அளிப்பதால், கார்த்திகை நட்சத்திரம் தோறும் இங்கு அம்பாளுக்கு சந்தனம், புனுகு, ஜவ்வாது, அத்தர், பச்சைக் கற்பூரம் கலந்த சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வர, எத்தகைய நட்சத்திர தோஷங்களுக்கும் நிவர்த்தி கிட்டும்.
கிருத்திகை விரதம் பூண்டு மாதந் தோறும் இங்கு வழிபடுவது என்ற சங்கல்பத்தை மேற்கொள்வோருக்கு, பல்லாண்டுகளாகத் தேக்கமுற்று இருக்கும் நற்காரிய சித்தி கைகூடுவதை அவரவர் தாமே நன்கு உணரலாம்.

காக்கை சகுனம்

ககார சஹஸ்ர நாமாவளி என்ற ஒன்று உண்டு. விநாயகருக்கான கணபதி, கணேசன் என்றவாறாக "க'' வில் தொடங்கும் பெயர்களைக் கொண்டு அமையும் போற்றித் துதிகள் இவை. மிகவும் சக்தி வாய்ந்தவை. காக்கைகள் இவற்றின் மஹிமையை உணர்ந்துள்ளன.
காக்கைகளின் சத்குருப் பீடமான சனிப் பரணிச் சித்தர்தாம், ரோஹிணி கூடும் வெள்ளிக் கிழமையில், காக்கைகளுக்குக் ககார கணபதி மந்த்ர உபதேசம் தந்து, கரிநாள் கூடும் மறுநாள் சனிக் கிழமையில், ககார சஹஸ்ராட்சர ஹோமம் நிகழ்த்துகின்றார்.
ரோஹிணி, சதுர்த்தி நாட்களில் ககார சஹஸ்ரநாமத் துதிகளை ஓதி, அர்ச்சித்து காக்கைகளுக்கு நிறைய உணவு அளித்துப் பூஜிப்போர்க்குப் பித்ருக்களின் ஆசிகள் வந்து நிறைய அருள் சுரக்கும். சரியாகத் தர்ப்பணம், படையல்கள் மூலமாக, மூதாதையர்களை வழிபடாமையால் வந்துள்ள பித்ரு தோஷங்கள் அகலவும் வழி பிறக்கும்.

ஸ்ரீரோகிணி சந்திரன்
மானாமதுரை திருத்தலம்

ககார வகை சஹஸ்ரநாமத் துதிகளை ஓதிப் பூஜிக்கும் நாட்களில் நிறையக் காக்கைகள் இல்லத்திற்கும், ஆலயத்திற்கும் வந்து ஆசிர்வதித்துச் செல்வதை நன்கு காணலாம்.
ரோஹிணி நட்சத்திர தேவி சிறு வயதில் இருந்தே, குறிப்பாக வெள்ளி முதல் சனிவரை ககார பூஜை விரதம் இருந்து ககார சஹஸ்ரநாமப் பூஜையை, மாதங்க முனிவரிடம் இருந்து கற்றுக் கடைபிடித்து சந்திர மூர்த்தியை மணக்கும் பெரும் பாக்யத்தைப் பெற்றாள். மேலும் 16 கலைகளையும் இழந்த சந்திர கிரகத்திற்கு ஏற்பட்ட கருமையையும் போக்கிட, தன் பூஜைப் பலன்களால் உதவினாள்.
பாரத நாட்டில் முற்காலத்தில் தலை சிறந்து விளங்கிய காகங்களைக் கூட்டாக வரவழைத்து அனைத்திற்கும் உணவிடும் பூஜை வகையும், தர்ம மாண்பும், காகபல தர்மமாகும். தினமும் காக்கைக்கு அன்னம் இடுவதுடன், கூட்டாகக் காக்கைகளுக்கு உணவிடும் காகசத்சக்தித் தர்மத்தையும் முறையாகச் சனிக் கிழமை தோறும் ஆற்றி வருதலால், பிளவு பட்டுள்ள குடும்பம் ஒன்றாகி, சுமுகம் வந்தமைந்திட காகபூஜா பலன்கள் நன்கு உதவும்.
காக்கைகளில் தரிசனக் காக்கை, நூபூரக் காக்கை, பரிமளக் காக்கை எனப் பல வகைகள் உண்டு. பரிமளக் காக்கை வந்தால் நல்ல சுகந்தமய வாசனை வரும். இவை, காக்கை வகைகளில் யோக சக்திகளை உடையவையாகும். அண்டங் காக்கைகள், பற்பலப் பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வரும் சக்திகளைக் கொண்டவை.
காகம், பருந்து, சில வகை வண்டுகள், பஞ்ச வர்ணக் கிளிகள் போன்றவை, குறித்த சில நாட்களில் வான்வெளி மண்டலங்களுக்குச் சென்று வரும் தெய்வப் புலங்களைக் கொண்டவையாகும்.
வான்வெளியில்தான் நம் கண்களுக்கு எட்டிய வரை எங்ககேயுமே தங்கும் இடம் இல்லையே? பின் காகம், புறா போன்றவை எவ்வாறு பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வர முடியும் என்று எண்ணத் தோன்றும்.
நம் ஊனக் கண்களுக்குத்தான், வானில் தங்குமிடமே இல்லாதது போல் தோன்றுகிறது. நம் கண்களுக்குப் புலப்படாத வான்வெளி மண்டல தங்கும் மண்டபங்கள் நிறையவே உண்டு.
பூவுலகில் இருந்து தமக்குரிய பறவை வடிவங்களில் மட்டுமல்லாது, தேவசக்திகள் மூலமாகவும் வான்வெளி மண்டலங்களுக்கு செல்ல வல்ல யோக சக்திகளைப் பூண்டவையே காகங்களும், புறாக்களும், பட்சிகளுமாகும்.

இவை வான் மண்டல மண்டபங்களில் தங்கி, அங்கு வரும் பிற மண்டலத் தேவ புறாக்கள், தேவ கிளிகளைச் சந்தித்து அவை அளிக்கும் தேவ தரிசன அனுபூதிகள், தேவசெய்திகள் மற்றும் தேவானுகிரங்களையும் பெற்றுத் திரும்பி வருகின்றன. சில நாட்களில் அவை நேரடியாகவும் பித்ரு மண்டலங்களுக்குச் சென்று வருவதும் உண்டு.
இவ்வாறு தாம் பிற லோகங்களில் இருந்து பெற்று வரும் பித்ரு மண்டல தேவானுகிரகங்களை நமக்குத் தந்திடவே, காக்கைகள் நம் வீடு தேடி வருகின்றன. அவை வரும் போது அன்னமிடுகையில், அவை ஆசீர்வாதக் காகவேத சப்தங்கள் மூலமாகவும், தம் அலகு ஸ்பரிசத்தாலும், தீர்த்தத்தை உடலில் தெளித்துச் சிதறியும், நமக்குப் பல்வகைப் பித்ரு மண்டல ஆசிகளை அளிக்கின்றன.

எனவே, உங்கள் வீட்டு மாடியில், அகண்ட பகுதிகளில் காக்கைகள், பட்சிகள் நீரருந்தப் பாத்திரங்கள், மண் கலயங்கள், வட்டில்களை வைத்திடுக!
இவை மட்டுமன்றி, காக்கைகள், பறவைகள் நன்கு நின்று நீராடவுமாக, நீள் சதுர வடிவ அகலத் தட்டுகளில் நீரை நிரப்பி வைப்பதும் காக பூஜைகளின் ஒரு வகையாகும்.
உங்கள் வீட்டின் மச்சுக்களில் வைக்கோல், பருத்திப் பஞ்சு, சிறு சிறு குச்சிகள், சிறு கூடைகளை வைத்துக் காக்கைகளும், பிற பறவைகளும் கூடு கட்டி இன விருத்தி செய்யும்படி வைத்தலும், காக பூஜையில் ஒரு வகையாகும்.
காகங்களுக்கான வட்டில்கள் சுத்தமாக இருக்கட்டும். இவற்றில் அவ்வப்போது கரிசலாங்கண்ணி, அருகம்புல் போன்று சில வகை மூலிகை இலைகளையும் சிறு சிறு துண்டுகளாக இட்டு வையுங்கள். இவற்றைப் பறவைகள் உண்டு, நோய் நிவாரணம் பெறும்.
மனிதன் மூலிகைச் செடிகளை, மரங்களை அழித்து நிலத்தைச் சுயநலமாகத் தனக்ககாகப் பயன்படுத்தி வருவதால் பிராணிகளுக்கும் பட்சிகளுக்கும் கிட்டாமல் போகின்றன. சித்த, ஆயுர்வேத மருந்துகள் மற்றும் பக்க விளைவுகள் இல்லாத வகையில் ஆங்கில மருந்து, மாத்திரைகளையும் கூட எடுத்து வைத்தால் கூட, காக்கை, பூனை, பறவைகள் சரியாக எடுத்துச் சென்று நோய் நிவாரணம் பெறும் அதிசயமும் இன்றும் நிகழ்கிறது.
தனக்கெனப் பெரிய பிரம்மாண்டான ஸ்பீக்கர்களை வைத்து அலட்டிக் கொள்ளும் மனிதன், காக்கைகள் இனிய தேவகீதத்தைக் கேட்கும் வண்ணம், சமையலறை மற்றும் வீட்டின் வெளிப் பகுதிகளில், ஒரு சிறு ஸ்பீக்கரை வைத்துப் பறவைகளும் தெய்வ கானம் கேட்கும்படி வழிவகை செய்ய வேண்டும். இதுவும் மகத்தான தர்மமாகும்.
இவை எல்லாம் காக பூஜை வகைகளாகும். சந்ததிகள் நன்கு தழைக்கவும், பித்ரு தோஷங்கள் அகலவும் உதவும். பிள்ளைகள் நல்ஒழுக்கத்துடன் வாழத் துணை புரியும்.

சீதா ராமா கல்யாண வைபோகமே!

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam