முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

பொய் பேசாத பிள்ளைகள்

ஒவ்வொரு கரிநாளிலும் சனீஸ்வரர் பூவுலகில் பூஜிப்பது மட்டுமன்றி, விண்ணுலக லோகங்கள் பலவற்றிலும் விசேஷமான பூஜைகளை நிகழ்த்துகின்றார். தற்கால உலகில் மக்கள் புகை பிடித்தல், நெருப்பைத் தவறாகப் பயன்படுத்துதல் போன்ற பலவிதமான கரிதோஷங்களுக்கு ஆளாகின்றனர். பல நாடுகளிலும் நிகழும் நீரடி குண்டு வெடிப்பு, பூமியடி அணு, ஆயுத சோதனைகள், அவசியமற்ற விண்வெளிப் பயணங்களால் பரவெளியை மாசுபடுத்துதல், முறையற்றத் தீயெரிப்புப் போராட்டங்கள் போன்ற அதர்மமான சமுதாயக் குற்றங்களும் ஒட்டு மொத்தமாகச் சமுதாயத்தையே பாதிக்கின்றன.

சமீபத்தில் எரிநட்சத்திரத்தின் மீது வேண்டுமென்றே விண்கலத்தை மோத விட்டு வான்தேவதைகளின் சாபங்களுக்கும் ஆளாகி, பலத்த கரிதோஷங்கள் சம்பந்தப்பட்ட நாட்டு மக்களை அப்பி உள்ளன. இதற்குப் பரிகாரமாக, திருவையாறு அருகே உள்ள கடுவெளித் தலத்திலும், பேராவூரணி - பட்டுக்கோட்டை இடையே உள்ள விளங்குளம் அட்சயபுரீஸ்வரர் ஆலயத்தில் சனீஸ்வரருக்கும், லிங்க மூர்த்திக்கும், சனீஸ்வரப் ப்ரீதிக்காக, எள்காப்பு இட்டு, எள் உருண்டையாலான மாலைகளைச் சார்த்தி வழிபட்டு வர வேண்டும்.
தனிப்பட்ட மனிதனுக்கான கர்ம வினைகள் இருப்பது போல, ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு. இது அந்தந்த நாட்டு மக்களின் ஒட்டு மொத்தக் காரியங்களை வைத்து அமைவதாகும். எவ்வாறு தனி மனிதனின் கர்ம வினை விளைவுகளால் நோய்கள், துன்பங்கள் போன்றவை ஏற்படுகின்றனவோ, இதே போல அந்தந்த நாட்டுக்கான ஒட்டு மொத்த சமஷ்டிக் கர்ம வினை பரிபாலனத்திற்கான இன்ப, துன்பங்களாக நன்மழை, நல்ல தான்ய உற்பத்தி, சூறாவளி, கடல் கொந்தளிப்புகள், புயல், பூகம்பம் போன்றவையும் ஏற்படுகின்றன.

விளங்குளம் பேராவூரணி

தனித்த மனிதன், பூஜைகள், தான, தர்மங்கள், பரிகாரங்களை நிகழ்த்திக் கர்மத்தின் சுமைகளைத் தணித்துக் கொள்வது போல, அந்தந்த நாட்டுப் பகுதியில் நிகழும் ஆலய வழிபாடுகள், தான, தர்மங்கள், ஆலய உற்சவங்கள், ஹோம, யந்திர வழிபாடுகள்தாம் சமுதாய சமஷ்டிக் கர்ம வினைகளைத் தணிக்கின்றன.
கலியுகத்தில் சத்தியமாகிய உண்மைதான் பெரிதும் இழிநிலைக்கு ஆளாகி வருகிறது. சத்தியம் பூத்துக் குலுங்க வேண்டிய நீதித் துறையில், பொய் சாட்சிகள் மற்றும் அதர்மமான காரியங்களினால், வாய்மை ஆகிய புனிதமான சத்திய சக்திகள் வேதனையுறுவதை நாம் காண்கின்றோம்.
இதனால்தான், கலியுகத்தில், சத்யலோக மஹரிஷிகளுக்குத்தாம் பூவுலகைப் பற்றிய பலத்த வேதனைகள் நிறைந்துள்ளன. தன் சுயநலத்திற்காக, வாய்மையைப் புரட்டி எடுக்கும் மானுடர்கள், சத்தியத் தேவதைகளால் மிகவும் கடுமையாகத் தணடிக்கப்படுவர் என்பதை அறியாது பொய்மையில் புழுக்கின்றார்களே என வேதனையாக உள்ளது. அதற்காகவே, சத்திய லோக மஹரிஷிகள், கலி மக்களின் பொய்மை நிறைந்த வாக்கு, செய்கைகளினால் விளையும் கரிதோஷங்களைக் களைவதற்கான பூஜா பலன்களையும், பரிகார வழிமுறைகளையும் நல்கிட விழைகின்றனர். இதற்காகக் கரிநாள் தோறும் சத்யலோக மஹரிஷிகள் சத்திய சக்தித் தலங்களில் தேனபிஷேகம் நிகழ்த்தி வழிபடுகின்றனர்.
உலகில் எங்கேனும் எவரேனும் ஒரு சிறு பொய்யைச் சொன்னாலும், பொய்மையான காரியம் நிகழ்ந்தாலும், சத்தியம் மாசுபடுகிறது அல்லவா! இதனால் பூமியும் கருமை அடைகிறது. இதுவும் சமுதாயத்தை வருத்தும் ஒரு வகைக் கரிதோஷ வகையே! இதனால் தீக்காயங்கள், அடிபட்டு வடு ஏற்படுதல், திடீர் நஷ்டங்கள், பொய்ப் பழியால், பிறர் கோள் மூட்டுதலால் தவறான முறைகளில் தண்டிக்கப்படுதல் போன்றவையும் நிகழும்.

சத்திமுற்றம் சிவாலயம்

ஒவ்வொரு மனிதனும் தேவையற்ற வகையில் தினசரி நிறையப் பொய்களைச் சொல்லச் சொல்ல, குடும்பத்தில் தொடர் வினையாக இந்த அசத்ய வல்வினைகள் வந்து வருத்தும்.
எனவே, பொய் பேசுவதால் வந்து சேரும் வல்வினைகளைக் களைய, கரிநாளில் சத்யபுரீஸ்வரர், மெய்ப் பொருள்நாதர், சத்யகிரீஸ்வரர், சத்யவல்லி, சத்திமுற்றம், சத்தியமங்கலம் போன்ற சக்திநாமத் தலங்களில் வழிபடுதல் வேண்டும். வாய்மையிலேயே எப்போதும் உறையும் வசிஷ்ட மஹரிஷி, தம் பிள்ளைகளை அரக்கர்கள் கொன்ற போது மிகவும் மனம் கலங்கினார். இதன் பிறகு இறைவனே வசிஷ்டர் குலத்தைக் காக்கும் பெருந் தபோபலன்களைப் போற்றி, சக்தி மஹரிஷியைச் சந்ததியாக அருளினார். இவர் கரிநாளில்தாம் தோன்றி தீர்க ஆயுள்காரக சக்திகளைப் பெற்று வசிஷ்டரின் சந்ததிகளைக் காத்து ரட்சித்து, பூவுல மக்களுக்கும் அசத்தியத் தீவினைகளை மாய்ப்பதற்கான பூஜை முறைகளை அளித்தார். இவற்றுள் ஒன்றே கரிநாள் தோறும் எள் காப்பிட்டு, எள் உருண்டைகளாலான மாலை சார்த்தி ஆற்றும் சிவலிங்க பூஜையாகும் .இதனைக் கரிநாள் தோறும் ஆற்றி வந்தால் பிறருடைய பொய்களால், பொய் சாட்சியத்தால் ஏற்பட்ட இழப்புகள், நஷ்டங்களில் இருந்து மீள உதவும்.
அவரவர் தம் வாழ்வில் செய்த அதர்மமான, சத்தியத்திற்கு முரண்பாடான செய்கைகளைப் பற்றி ஆத்மவிசாரம் செய்து இவற்றில் பற்றி இருக்கும் கரிதோஷங்களைக் களைந்திட, சனிக் கிழமைகளில், கரிநாட்களில் சனீஸ்வரத் தோத்திரங்களை ஓதி, நேரடியாகத் தீயில் தயாராகும் உணவுப் பண்டங்களை அன்னத்துடன் சேர்த்துத் தானமாக அளித்திடுக! (அப்பளம், சோளம், பலாக் கொட்டை போன்றவை). இதனால் பிள்ளைகள் பொய் பேசுவது தணியும்.

விஸ்வரூப சக்திகள்

மனிதர்களுக்கான விசேஷமான பண்டிகை சக்திகள், ஒரு வருடத்தில் சில நாட்களில் நன்கு கூடி வருவது போல், தேவர்களுக்கான விரத, பண்டிகை சக்தி அம்சங்களும் சில நாட்களில் நன்கு ஒருங்கே கூடி வருவதுண்டு. இத்தகைய நாட்களில், பூவுலக ஆலயங்களில், முப்பத்து முக்கோடி தேவர்களும், தூல, சூக்கும வடிவுகளில் திரண்டு வந்து பூஜிக்கின்றனர். தேவர்மலை, பர்வதமலை, தேவகோட்டை, தேவபந்தலம் போன்றவை இத்தகைய தேவசக்திப் பூஜைத் திருத்தலங்களாகும்.
பணக் கஷ்டங்கள், நோய்த் துன்பங்களின் மிகுதியால், கனத்த மனதைச் சுமந்து, பூஜைகளில் கூட சற்றே மனதை லயிக்கச் செய்ய இயலாது இயந்திர கதியாய் வாழ்வோர் கலியுகத்தில் பலரும் உண்டு. இவர்களுடைய மனம் பஞ்சு போல மிகவும் லேசாகி வரும் அளவிற்குப் பெளர்ணமிக் கிரணங்கள் இத்தகையய தேவசக்தி நாளில் நன்கு பூரித்து வருகின்றன.

எனவே, பௌர்ணமி அன்று அனைவரும் குறைந்தது இரண்டு மணி நேரமேனும் பூஜையில் ஆழ்ந்த கவனத்துடன் அமர்தல் வேண்டும். மேலும், நல்ல உயரமான மூர்த்திகள், பிரும்மாண்டமான ராஜ கோபுரங்களைக் கண்கள் நிறைய நெடுநேரம் (குறைந்தது ஒரு நாழிகை = 24 நிமிடங்கள்) தரிசித்து, கண்களில் நீர் பனிக்க நன்கு வழிபட வேண்டும். காஞ்சிபுரம் பாண்டவ தூதப் பெருமாள் ஆலயம் போன்ற விஸ்வ ரூப தரிசனத் தல பூஜைகள் மிகவும் விசேஷமானவை! பிறருடைய தயவால், அனுமதியுடன் வாழ்வில், அலுவலகத்தில் வாழ வேண்டி இருப்போர், தக்க நல்வழி பெற உதவுவதே பௌர்ணமி பூஜைகளாகும்.
விண்ணுக்கும், மண்ணுக்கும் நிறைந்த இறைமூர்த்திகளுடைய பிரம்மாண்டமான தரிசனமே, விஸ்வரூப தரிசனமாகின்றது அல்லவா! அர்ஜுனன், பிரகலாதன், அக்ரூரர், பீஷ்மர், துருவன் போன்றோர் விஸ்வ ரூபத் தரிசனம் பெற்றவர்கள் ஆவர். இவ்வாறு விஸ்வரூப தரிசனத்தைப் பெற்றவர்கள் ஆற்ற வேண்டிய பிரம்மாண்டமான இறைலட்சியக் கடமை ஒன்று கண்டிப்பாக உண்டு. அது என்னவென்றால், தாம் பெற்ற விஸ்வரூப தரிசனப் பலன்களை இவர்கள் குறித்த இறைவழிபாடுகள், விரதங்கள் மூலம் உலக ஜீவன்களின் நலனுக்கென அவர்கள் வார்த்தளிக்க வேண்டும் என்பதே இந்த அற்புதமான இறைநியதியாகும்.

தென்காசி

பீஷ்மர், அர்ஜுனன் போன்றோர், தாம் பெற்ற விஸ்வரூபத் தரிசனக் காட்சிப் பலன்களை, ஏனையோரும் பெறுதற்கான பல அரிய இறைப் பூஜை முறைகளைக் கலியுக மக்களுக்கென அளித்துள்ளனர். இவை யாவும் இத்தகைய தேவபூஜை, விஸ்வரூப சக்தி நாளில் நன்கு பரிமளிக்கின்றன.
இத்தகைய விஸ்வரூப தரிசன நாட்களில் தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் / நந்தீஸ்வரர், திருவனந்தபுரம் / ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர், நாமக்கல் ஆஞ்சநேயர் போன்ற பெரிய வடிவ மூர்த்திகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானது. அனைத்து இறைவடிவுகளும் பொலியும் திருஅண்ணாமலையின் முழுத் தோற்றமும் நிறையும் வண்ணம் நெடுநேரம் அருணாசலத் தரிசனம் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும்.
ஒரே தமிழ் மாதத்தில் வரும் இரண்டு பெளர்ணமி வந்தமைந்து, இந்த இரண்டு பெளர்ணமி நாட்களுக்கு இடையே உள்ள நாட்கள் வரவீர்யவாதூலச் சந்த்ர சக்தி நாட்களாகும். இந்த நாட்களில் மன அழுத்தத்தைப் போக்குவதற்கான புனித நதி, திருக்குள நீராடலைத் தினமுமே மேற்கொள்தல் வேண்டும். அல்லது தினமுமே நீரில் கங்கை, காவிரி தீர்த்தங்களைச் சேர்த்து நீராடுதல் வேண்டும்.
உள்ளம், மனதில் உள்ள அழுக்குகளைப் போக்க வல்ல குறைந்தது ஐந்து எண்ணெய் வகைகள் சேர்ந்த கூட்டுத் தைலத் தீபப் பூஜைகளையும் பெண்கள் சத்சங்கமாக ஆற்றுவது நன்று.
கர்ம வினைகளின் பலத்த அழுக்குகளைப் போக்க வல்ல 32 வகையான தான, தர்மங்களை இந்த நாட்களில் சந்திர சக்தித் தலங்களிலும் ஆற்றுதல் நன்று.
பெளர்ணமியில் அருணாசலக் கிரிவலம் வந்து இதே மாதம் வரும் இரண்டாவது பெளர்ணமி அன்று இதே அருணாசலத்தில் கிரிவலத்தை ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். அருணாச்சல கிரிவலத்தை மேற்கொள்ள இயலாதோர் சந்திர சக்தித் தலங்களில் வழிபட்டுத் தினமும் ரோஹிணி சந்திர சக்கரத்தை வைத்து வழிபட்டு, இதே மாதத்தின் அடுத்த பெளர்ணமியிலும் அதே சந்திர சக்தித் தலத்தில் வழிபடுதல் நன்று.

திருக்கோயிலூர் ஸ்ரீஉலகளந்த பெருமாள் போன்ற விஸ்வ ரூப தரிசனத் தலங்களிலும் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.  
விஸ்வநாதர் என்பது விஸ்வ சிவ சக்திகளை அதாவது எங்கும் நிறைந்திருக்கும் சிவ நாதச் சக்திகளை, விண்ணுக்கும், மண்ணுக்கும் விரிந்து பரவச் செய்து பெறுவதாகும். இந்நாளில் ஸ்ரீவிஸ்வநாதர் ஆலயத்தில் சந்திர தரிசனம் பெற்று பாலாபிஷேகம் செய்து வழிபடுக.
விஸ்வநாத தரிசனத்தை, விஸ்வரூப தரிசனத்தைப் பெற விஸ்வாமித்திர மஹரிஷி காசித் திருத்தலத்தில் கழுத்து வரை நீரில் அமிழ்ந்து, ருத்ர காயத்ரீ ஜபித்து, நீரினுள் பெளர்ணமிச் சந்திரனைத் தரிசித்து விஸ்வரூப தரிசனம் பெற்றார். இவ்வாறு விஸ்வாமித்திர மகரிஷி தம் விஸ்வ யாத்திரையின் நிறைவாக, காசியில் விஸ்வ லிங்க விஸ்வரூப தரிசனம் பெற்ற விஸ்வாமித்திரரை இந்நாளில் தரிசித்திடுக அல்லது அவர் பெற்றுத் தந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை 1008 முறையாவது ஓதி, அவரைச் சிந்தையில் வைத்திடுக!

முதியோர்க்குப் பாதுகாப்பு

பிருஹத் என்றால் குவலயம், பிரபஞ்சம் என்று பொருள். பிருஹதீஸ்வரரே பிரபஞ்சத்திற்கு அருளொளிப் பிரகாசம் அளித்தருளும் மஹாசிவ மூர்த்தி! பிருஹத் சக்திகள் நிறைந்த நாளில் தஞ்சைப் பெருவுடையார், கங்கை கொண்ட சோழபுரம் போன்ற பெரிய மூர்த்தித் தலங்களில் வழிபடுதல் வேண்டும்.
நாம் வாழும் பூமியானது நிலைத்து இருப்பதற்கு, எத்தனையோ விண்ணுலக லோகங்களில், நட்சத்திர, பிற கோள மண்டலங்களில் இருந்து, ஒவ்வொரு விநாடியும் எண்ணற்ற ஒளி வகைச் சக்திகள் வந்த வண்ணம் உள்ளன. இவற்றைத் தாம் தாவரங்களும் கிரகித்து பக்குவப்படுத்தி, பூவுலக ஜீவன்களுக்குப் பயனாகும் வகையில் பகுத்தளிக்கின்றன.
மாமரம், வேப்ப மரம், துளசிச் செடி என ஒவ்வொரு செடியும், கொடியும், மரமும் இலை, தழை, வேர், காய், பூ, கனிகள் மூலம் நமக்குப் பல வகைகளில், இத்தகைய பிருஹத் சக்திகளை ஈர்த்து அளிக்கின்றன. இவ்வகையில் தாவரங்கள் மனிதர்களுக்கு உதவுவதைப் பலரும் அறிவதில்லை! வராஹி அம்பிகையே இத்தகைய பிருஹத் சக்திகளை ஜீவன்களுக்கென நன்கு பரிபாலித்து அருள்பவள் ஆவாள்.

ஸ்ரீவராகி அம்மன் சுவாமிமலை

இதனால்தான் தஞ்சைப் பெரிய கோயிலில் முதலில் வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக வராஹித் தாய் விளங்குகின்றாள். அண்ட சராசரத்திற்கும் பிருஹதீஸ்வரரிடம் இருந்து திருவருளைப் பெற்றளிக்கும் மிகவும் சக்தி வாய்ந்த தேவி! எந்தத் தொழிலையும், காரியத்தையும் தொடங்கும் முன் வழிபட வேண்டிய தேவி! வராஹி உபாசகரான கருவூர்ச் சித்தருக்கு அன்றும் இன்றும், என்றுமாய் அருள்பவள். தன் தாம்பூல எச்சிலை உமிழ்ந்து, கருவூர்ச் சித்தருக்கு அரிய மந்திரங்களை உபதேசித்தத் தேவி!
வராஹியின் தாம்பூலாமிர்தச் சிவச்சுவையைச் சுவைத்தவராய் தெய்வீகப் புன்னகையுடன், இவ்வாலயத்தில் கருவூர்ச் சித்தர் தரிசனம் தருகின்றார். தாம்பூல சக்தி நாளான ரேவதி நட்சத்திரமும், அஸ்வினி நட்சத்திர நாளும் கூடும் தினத்தில் கருவூர் சித்தர் விசேஷமான கல்வி விருத்தி சக்திகளை அருள்கின்றார்.

வட்ட ஆவுடை மேல் பொலியும்
வடிவழகு ஈசன் !

உலகம் என்றால் பொதுவாக, நாம் வாழும் பூமியை மட்டும் எண்ணிப் பொருள் கொள்கின்றார்கள். நம்முடையதைப் போன்ற பல பூமிகள் நிறையவே உள்ளன. ஆனால் இவற்றின் தன்மையும் நிலைகளும், குருவருட் பூர்வமாகவே உணர வல்லவையாகும். எந்த விஞ்ஞானப் புலனாலும் அறிய இயலாததாகும்.  
ஆலய மூலத்தானத்தில் மூலவருக்குப் பின் சூரியப் பிறை, சந்திரப் பிறை என்ற அரைவட்ட வளைவுகளை, அலங்காரமாக வைத்திருப்பார்கள் அல்லவா! இவைதாம் உலகைக் காக்கும் பிருஹத் சக்திகளை நமக்கு உணர்த்தி விளக்குபவை ஆகும்.
நம் பூமி நாம் வாழ்வதற்கேற்ற பிருகத் சக்திகளுடன் பரிமளிப்பதற்கு நாம் ஏனைய வான்வெளி லோகங்களில் இருந்தும் சூரிய, சந்திர ஏனைய கோள்களில் இருந்து தினமுமே எந்நேரமுமே பிருஹத் சக்திகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம். ஆனால், தறகாலத்தில் புகை பிடித்தல், தொழிற்சாலைகளின் நச்சுப் புகைகள், தேவையற்ற வகையிலான ராக்கெட் போக்குவரத்துகள், தீய வகை எண்ணங்கள், அதர்மமான செய்கைகளினால், வானியலில் ஓஸோன் போன்ற பல்லாயிரக் கணக்கான நற்கதிர்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை உணர்த்தி தக்க சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்த்துவற்தாக அவ்வப்போது சூரியப் பிறை தோன்றுதுண்டு.
எனவே, சூரியப் பிறை தோன்றினால் உடனே ஒரு மண்டலமேனும், சூரிய சகஸ்ரநாம (1008 போற்றி) அர்ச்சனைகள், வேள்விகள், ஹோமங்களில் எழும் மறையொளிக் கிரணங்கள், கும்பாபிஷேக உற்சவங்கள், அன்னதானங்கள் மூலம் வானத்தைச் சுத்திகரிக்கும் நல்வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

சூரியனைச் சுற்றியும், சந்திரனைச் சுற்றியும் தோன்றும் வட்டப் பிறைகளுக்குப் பரிகார வழிபாடுகளாக, வட்டமான ஆவுடை கூடிய சிவலிங்கம், வட்டப் பாறை, வட்ட வடிவுத் தீர்த்தங்களில் உள்ள தலங்களில் வழிபடுதலும் பிருஹத் சக்திகளை நன்கு விருத்தி செய்து தரும்.
தோசை, போண்டா, வடை, சப்பாத்தி போன்ற வட்ட வடிவான, கோள வடிவில் உள்ள பண்டங்களைத் தானமாக அளித்தல் - குறிப்பாக, பற்கள் இல்லாத முதியோர்களுக்கு நன்கு மென்று தின்னும்படி அளித்தல் மிகவும் விசேஷமான பலன்களை அளிக்கும். தக்கக் காப்பு இல்லாது அஞ்சி, அஞ்சி பீதியுடன் வாழ்வோர், நல்ல மனத் துணிவைப் பெற்றிட, மேற்கண்ட வகை முறைகளில் திருக்கோளக்குடி, பட்டுக்கோட்டை மதுக்கூர் அருகே உள்ள அண்டமி போன்ற பிருஹத் சக்தி நிறைந்திருக்கும் தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.

தேவையற்ற பீதிகள்

ஹர்ஷண யோக காலப் பூஜைகள், புனித நதிகளின் நீராடல் பலன்களைத் தருகின்றன.  ஹர்ஷண யோக நாட்களில் ஆற்றுக் கரையை ஒட்டி (பவானி) அமைந்துள்ள ஆலயங்களில் நீராடி, ஆறு, கிணற்று நீரில் உணவு சமைத்துப் படைத்துத் தாமரை இலையில் வைத்துத் தானமளித்தல் விசேஷமானதாகும்.
தாமரை இலையில் சமகம யோக சக்திகள் நிறைந்துள்ளமையால், தாமரை இலையை மேல்புறமும், கீழ்புறமும் வைத்து உணவு ஏற்கலாம் என்ற நியதி உண்டு. பல்வகை அன்ன துவேஷத் தீவினைகளையும், உணவை முழுமையாக உண்ண முடியாமல் இருக்கின்ற அன்ன துவேஷமும் தணியவும், தாமரை இலைப் பிரசாதம் நன்கு உதவும்.

கமல சமகம யோக சக்திகள் நிறைந்த ஹர்ஷண யோக நாளில் மூன்று வேளையும் தாமரை இலையில் இறைவனுக்கு உணவு படைத்தலும், தாமரை இலையில் உண்ணுதலும் அன்ன துவேஷங்களைப் பெரிதும் தணிக்கும். குழந்தைகள் சரியாகச் சாப்பிடாது மெலிந்து போகும் நிலை மாறும்.
இனிப்பு உணவு வகைகளை உண்ண முடியாதபடி ஏற்படும் சர்க்கரை வியாதி கூட ஒரு வகை அன்ன துவேஷத்தால் வருவதேயாகும். மதுர நாயகி, மதுராம்பாள், மதுவனேஸ்வரர் என இறைவனும், இறைவியும் அருளும் தலங்களில் சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தேன் நெல்லி, தேன், பலாச் சுளையுடன் பால் பாயாசம், தேன், முந்திரி கலந்த பால் போன்றவை விசேஷமானவையாகும். அதாவது மரண யோக நேரத்தில், உடலில் செயல்படாது சக்தியை இழந்து கிடக்கும் செல்களை ஆக்கப்படுத்தும் வகையில் ஆக்கபல உணவு வகைகளைத் தானமாக அளித்தல் விசேஷமானதாகும்.
ஹர்ஷண யோக நாளில், பிரம்ம முகூர்த்த அல்லது விடியற்காலை பூஜை, இரவு அர்த்த ஜாம பூஜை இரண்டு பூஜைகளையும் குடும்பத்தோடு தரிசித்து, இயற்கையிலேயே மதுர சக்திகள் நிறைந்த பசும் பால், தேன், சர்க்கரை வள்ளிக் கிழங்கு போன்றவற்றைத் தானமாக அளித்தலால்,
தான் இறந்து விடுவோமோ, தன் கணவன் / மனைவி இறந்துவிடுவாரோ என்ற வகையில் தன் மரணம், தான் அண்டி வாழ்பவரின் மரணம் பற்றிய பீதியில் உழல்வோர் தெளிவு பெற்றுத் தேவையற்ற பீதிகளில் இருந்து விடுபட உதவும்.

விடிவெள்ளி மாற்றங்கள்

சுக்கிர கிரகத்தை விடியற் காலையில் தரிசிக்கையில், கனகதாரா தோத்திரம் அல்லது மாணிக்கவாசகரின் பிடித்த பத்துத் தோத்திரங்களை ஓதி, சூரியோதய நேரத்தில் மொச்சைக் கடலை அல்லது ராஜ்மா தானியச் சுண்டலைத் தானமாக அளித்து வந்தால், கடன் பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெற நல்வழிகள் சுக்ர சக்திகளின் பாங்காய்க் கிட்டும்.
வெள்ளியங்கிரி, வெள்ளியூர், மதுரை போன்ற வெள்ளியம்பலம் என்பது ஜீவன்கள் தம்மைச் சீர்திருத்திச் செம்மைப்படுத்திக் கொள்ளும் பரிமள வளாகமாகும், அசுரர்களைச் சீர் திருத்தத் தானே சுக்ரர் எனப்படும் சுக்ராச்சாரியார், அசுரர்களுக்குத் தகக் குருவானார். நவகிரங்களில் சுக்ர கிரக வழிபாடானது, மது, புகை பிடித்தல் போன்ற அசுர குணங்களையும் அகற்றி, நல்ஒழுக்கத்தையும் நல்க வல்லதாகும்.

கெட்ட வழக்கங்களுக்கு ஆட்பட்டோர் நன்கு சீர்பட, வெள்ளிக் கிழமை தோறும் வெள்ளியம்பலத் தலங்களில், வெள்ளியம்பலத்தாரான ஆடல்வல்லானுக்கு, தியாகராஜருக்கு, அதாவது (சிலா வடிவ - கல் வடிவ) நடராஜருக்கு, 32 வகை அபிஷேக, ஆராதனைகளை நிகழ்த்திப் பூஜித்து வருதல் வேண்டும். ஆனால் ஒரு புறம் வழிபாடு, மறுபுறம் கெட்ட வழக்கங்கள் எனத் தொடரலாகாது. இவ்வாறு வாழ்வில் தினமுமே தவறுகளைச் செய்து கொண்டே போனால், நோய்ப் பிணிகள், கவலைகள், வேதனைகள், வறுமை நிறைந்த பிறவிகளே பெருந் தண்டனையாக வந்திடும்!
தண்டிப்பது மனிதன் செயல், மன்னிப்பது கடவுள் செயல் என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வாக்கியத்தை வைத்துக் கொண்டு, வாழ்க்கையில் பலரும் தினமுமே நிறையத் தவறுகளை வரம்பற்ற முறையில் செய்து கொண்டே வருகின்றனர். மேலும், தினமும் மீண்டும் மீண்டும் தவறுகளைச் செய்தே வாழ்க்கையை நடத்தினாலும், கடவுள், இவர்களை மன்னித்துக் கொண்டே இருப்பார் என்றே நம்புகின்றனர்.

ஸ்ரீநடராஜர் திருநரையூர் சித்தீச்சரம்

ஆனால், தெரிந்தே செய்யும் தவறுகளுக்கு மன்னிப்போ, பிராயச்சித்தமோ எங்கும் எவ்விடத்திலும் ஒரு போதும் கிடையவே கிடையாது. தெரிந்தே செய்யும் விளைவுகளை அவரவர் அனுபவித்தே கழித்தாக வேண்டும்.
ஒவ்வொருவரும் அவரவருடைய கர்மச் செயலுக்கு ஏற்பவே வினைகளை, விளைவுகளை இன்ப துன்பமாக, தண்டனையாக அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே சத்தியமானதாகும்.
உண்மை இப்படி இருக்கும்போது, மனிதன் தண்டிப்பதோ, கடவுளின் மன்னிப்பு என்பதோ எவ்வாறு பொருள்படும்? நாம் செய்த செயலுக்கான விளைவுகளை நாமே அனுபவித்துக் கழிக்க வேண்டும் என்பதே சத்தியமான, தர்மமான நிலைப்பாடு. இது ஒவ்வொருவருடைய மனதிலும் ஆழப் பதிந்தால்தான், குருவருளையோ, திருவருளையோ அடைவதற்கான ஆரம்ப, மூலாதார நல்வழிகள் தென்படும்.
இத்தகைய பரிகார வழிகளை ஓரளவேனும் அறிவதற்காகவே, வசதியற்ற பள்ளிகளுக்கு, ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையான பென்சில், நோட்டுப் புத்தகம், குண்டூசிகளை அவ்வப்போது அளித்து வருதல் வேண்டும் எனில், என்றுதான் முழுமையான வகையில் பரிகாரங்கள் கிட்டும். வாழ்வில் எப்போதுதான், எவ்வகையில்தான் இந்தக் குண்டூசியால் வந்த கர்ம வினைகள் பரிபூரணமாகத் தீரும்? நன்கு ஆத்ம விசாரம் செய்து பார்க்கவும்.
எனவே, கர்ம வினைக் கழிப்பு என்பது எளிதல்ல என்பதால், தினமும் கூடுதலாக எதிலும் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொள்ளாது மிகவும் கவனமாக இருத்தல் வேண்டும். சுக்ர வார வழிபாடாகிய வெள்ளிக் கிழமையானது எத்தகைய தீயவர்களுக்கும் ஒரு துளியேனும் புனிதமான எண்ணங்களைத் தருவிக்கும். வெள்ளிக் கிழமை தோறும் பூக்கள், வெள்ளி மெட்டி, மாங்கல்யம் போன்ற மங்களகரமான பொருட்களை ஒரு சிறிதேனும் தானமளித்து, வெள்ளீஸ்வரர் ஆலயம், மதுரையம்பதி, வடமதுரை, சுக்ர வார அம்மன் தலங்களிலும், சிலா வடிவ நடராஜரையும் தரிசித்து வந்தால், வாழ்வில் நல்ல மாற்றங்கள் விடிவெள்ளியாய் மலரும்.

இருதய சுத்திகரிப்பு

மகாபலிச் சக்கரவர்த்தி ஜோதிட ரீதியாக தமக்குச் சில கண்டங்கள் இருப்பதாக அறிந்தபோது, சனி வார விரதமிருந்தே, சனிக் கிழமை தினத்தில் சயனக் கோல ஆஞ்சநேயர் (பிரயாக் - அலாகாபாத்), வாலில் மணி தாங்கிய மாருதி, பால ஆஞ்சநேயர், ஆஞ்சநேயரும், விநாயக முர்த்தியும் சேர்ந்தருளும் அவதாரிகை போன்று எட்டு வகை அனுமார் மூர்த்திகளின் தரிசனத்தைப் பெற்றார்.
கரிநாள் பூஜை மட்டுமல்லாது சனிவாரப் பூஜையே பலவிதமான கரிதோஷங்களைப் போக்க வல்லதாகும். . எப்போதெல்லாம் தீய எண்ணம், தீய காரியத்தால் மனமும், உள்ளமும், புத்தியும் மாசடைந்து, உடலும் மாசு படிகின்றதோ, அப்போதெல்லாம் கரி தோஷங்கள் இந்த நான்கிலும் சேர்ந்து விடுகின்றன. ஓட்டும் வாகனம் உடலில் பட்டு சூட்டுக் காயம் ஏற்படுதல், பல வகைகளிலும் தீக்காயம் உண்டாகுதல், வீட்டில், துணியில் நெருப்பு பற்றிக் கொள்ளுதல் போன்றவை கரிதோஷங்கள் மிகுந்திருப்பதைக் காட்டும் சகுனங்கள் ஆகும். இவ்வாறு நேர்ந்தால் சனீஸ்வரருக்கு எட்டு விதமான அபிஷேகங்களுடன் அனுமாரின் எட்டு விதமான தரிசனங்களைப் பெறுதல் வேண்டும்.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
வடகுரங்காடுதுறை

கண்களுக்குக் கீழ் களைப்பால், நோயால், உடல் பலவீனத்தால் கரு வளையங்கள் ஏற்படுவதும் கரி தோஷத்தால்தான். முக்கியமான ரெகார்டுகள், பத்திரங்கள் தீயில் எரிபடுவதும் பலத்த கரி தோஷங்களைக் குறிக்கின்றன. பிறர் உள்ளத்தைச் சுட்டுப் புண்படும் வகையில் பேசினாலும் கரி தோஷங்கள் ஏற்படும்.

பதவி, செல்வம், வலிமை, செல்வாக்கு, ஆணவம், அகங்காரம் காரணமாக, தொழிலிலும், அலுவலகத்திலும் தன் கீழ் பணி புரிபவர்களை அலைக்கழித்து, அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்து மனதை நோகடித்தலும் கரிதோஷத்தில் ஒரு வகையே.
இவ்வாறு ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவரிடமும் எண்ணற்ற கரிதோஷங்கள் ஒட்டிக் கொண்டிருக்கும்.
கரிதோஷத்தின் மற்றொரு அடையாளம் திடீரென்று இருதயம் ஸ்தம்பித்து நின்றாற்போல் ஆவதும், தொண்டையில் அழுகையால் கேவுவதும் பலருக்கும் திடீரென ஆவதும் உண்டு. மேலும், படபடவென்று இருதயம் அடித்துக் கொள்வதும் கரிதோஷ வகையே ஆகும்.
விஞ்ஞானப் பூர்வமாக கரியமில வாயு என்பதுதானே உடலில் இருந்து வெளித் தள்ளப் படுகின்ற அசுத்தமான வாயுவாகின்றது. இந்த கரியமில வாயுவுடன் கரிதோஷப் படிவுகளும் இருதய சுத்திகரிப்பு மூலமாக நிகழ்கின்றது. எனவே, கரிதோஷ நிவர்த்திக்கு, கரிச் சட்டியில் உணவு சமைத்துப் படைத்து அன்னதானமளிப்பதும் இருதயச் சுத்திகரிப்பிற்கான ஒரு வழிமுறையாகும்.
இதனால்தான் ஆயுள் காரகராக, ஆயுள் சக்திகளை விருத்தி செய்பவராக, இருதய சுத்திக்கு உதவுபவராக சனீஸ்வர முர்த்தி விளங்குகின்றார். இருதயத்தை இறைவன் வீற்றிருக்கும் வ்யதீபாதமாகச் சித்தர்கள் உரைப்பதால், வ்யதீபாத நாளில் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றிய பின், சனீஸ்வரருக்கு எள்ளுருண்டை மாலை சார்த்தி வழிபடுவது இருதய சக்திகளை மேம்படுத்தும். .
பொங்கு சனிக் காலத்தில் அருள்புரிபவராகப் பிரகாசிப்பவரே கும்பகோணம் - திருவையாறு அருகில் உள்ள வடகுரங்காடுதுறைத் தல சனீஸ்வர மூர்த்தி. சனிக் கிழமை மற்றும் கரிநாள் தோறும் இத்தலத்தில் வழிபட்டு, ஜடாமகுடேஸ்வரிக்கு 24 நறுமணப் பூக்களால், (இலை) தளங்களால் ஆகிய மலர்க் கிரீடம் சார்த்தி, அடிப் பிரதட்சிணமாக ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு வருதலால், மேற்கண்ட வகைத் துன்பங்கள் தீர வழி பிறக்கும். மகன், மருமகளிடம் அவமானப்படும் நிலை மாறும்.

தர்ப்பண சந்தேகங்கள்

அடியார்: சத்குருவே! உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களுக்கும் குலமாமுனிகள் (கோத்ராதிபதிகள்) மற்றும் நீத்தார்களாகிய பித்ருக்களின் பரிபாலனம் உண்டா?
சத்குரு: நிச்சயமாக உண்டு. ஒவ்வொரு மனிதனும் ஒரு மஹரிஷியின் வழி வந்தவரே! இவரே குலமாமுனி (கோத்ராதிபதி) எனப்படுகிறார். இதில் ஜாதி, மத, இன வேறுபாடே கிடையாது. உலக மக்கள் அனைவருக்குமே குலமாமுனிகள் உண்டு. குலமாமுனிகள் அனைவருமே தெய்வ தரிசனம் பெற்றவர்கள். அவர்கள் ஒருவொருக்கொருவர் அன்புடனும், பண்புடனும், பரிபக்குவத்துடனும் நடந்து கொள்கின்றனர். அவர்களின் வம்சாவளியாக வந்து கொண்டிருக்கும் மானுடர்கள்தாம், ஜாதி, மத வேறுபாடுகளைக் கொண்டு வந்துள்ளனர்.
ஆதி யுகங்களில் சனாதன தர்மமே உலகின் ஒரே மதமாகத் துலங்கியது. உலகெங்கும் ஒரே நாடே! இதுவே தற்போது பல பிரிவுகளாக ஆகி உள்ளது. எனவே, மனித குலத்தினர் அனைவருக்கும் குலமாமுனிகள் உண்டு. அனைத்து உயிரினங்களுக்குமே சத்குருமார்களும் உண்டு. பூவுலகில் நேரடியாக வந்து அருள்வழி காட்டுபவர்கள் சத்குருமார்கள். பித்ரு லோகங்களில் இருந்து ஆசிகளை அளித்துத் துணை புரிபவர்கள் பித்ருக்கள் ஆவர்.

ஸ்ரீஜடாமகுடேஸ்வரி
வடகுரங்காடுதுறை

அடியார்: அனைவருக்குமே, அனைத்து உயிரினங்களுக்குமே மூதாதையர்களாகிய பித்ருக்கள் எனும் உத்தமத் தெய்வீக நிலைகளை அடைந்தோரின் அருள்வழி காட்டுதல் நிச்சயமாக உண்டு என அறிவது மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால், இறந்தோர் அனைவருமே பித்ருக்களாகி (உத்தம தெய்வீக நிலைகளை அடைந்த மூதாதையர்கள் ஆகி) விடுவது சாத்தியமில்லையே! அப்படியானால் உலகில் பலருக்கும் பித்ருக்களின் அருட்பரிபாலனம் கிட்டாமல் போய் விடுமே?
சத்குரு: இறைவன் அளித்திட்ட பெறுதற்கரிய மானுடப் பிறவியில் தியாகமயமாகப் பிற ஜீவன்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு அன்னதானம் போன்ற தான, தர்மங்களையும், நற்சேவைகளையும் ஆற்றி முறைபடத் தார்மீகமாக வாழ்ந்தோர், மறு பிறவிகள் அல்லாது உத்தம தெய்வீக நிலை அடைந்து பித்ருக்கள் ஆகின்றனர். இவர்களுடைய முழுமுதற் கடமை தம் வம்சாவளியினரை, அவரவர் குலமாமுனிகளின் ஆசியோடு நல்வழிப்படுத்துதல் ஆகும்.
ஆனால் பெறுதற்கரிய மானுடப் பிறவியில் முறையாக வாழாது, பேராசை, முறையற்ற காம இச்சைகளால் காமாந்தகர்களாக வாழ்வோர், காம இச்சை மிகுந்த மிருகங்களாகப் பிறக்கின்றனர். தன்னலமற்று, பிறருக்குக்குச் சேவை புரிந்து வாழாது, ஜடமாக ஒன்றுமே செய்யாது வீணே காலத்தைக் கழித்து வாழ்ந்தோர், புழுவாய் எண்ணற்றப் பிறவிகளை எடுக்கின்றனர். ஆனால், இதனை வைத்து, மிருகப் பிறவியையோ, புழுப் பிறவியையோ தாவரங்களையோ தவறாக எடை போடுதல் கூடாது. அறிவு நிலைகள் மாறுபாடு அடைவதையே இது குறிக்கின்றது.
தர்ப்பண மந்திரங்களிலும், புழுவாய், பூக்களாய், மிருகங்களாய், தாவரங்களாய்ப் பிறந்திருக்கும் முன்னோருக்கும் தர்ப்பண அர்க்ய வழிபாடு சென்று அடைவதாக, என்றே மந்திரார்த்தமாக உரைபொருள் கொண்டு அளிக்கப் படுகின்றது என்பது குறிப்பிடத் தக்கது. மாணிக்கவாசகரின் சிவபுராணத்தை வாசித்துப் பார்க்கவும். இதனை ஓதியும் தர்ப்பணம் அளிக்கலாம்.
அடியார்: உலகில் அனைவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம் இதுதான்! புழுவாய், மரமாய், மிருகமாய் அவரவருடைய முன்னோர் பிறந்திடுவதானால், தற்போது அவர்களை எவ்வாறு தர்ப்பண சக்தி சென்றடைகின்றது ?
சத்குரு: தர்ப்பண அர்க்யம் சென்றருளும் முறை மிகவும் அசாத்யமானது. ஆறறிவால் கூட முழுமையாகப் புரிந்து கொள்ள இயலாதது. அந்தந்த முன்னோருக்கு எள்ளும், நீரும் கொண்டுத் தர்ப்பணம் அளிக்கையில், ஸ்வதா எனப்படும் தர்ப்பண தேவதைகள், எவருக்காகத் தர்ப்பணம் அளிக்கப்படுகிறதோ அவருடைய சாயைச் சரீரத்தின் நலன்களுக்காகவும் அவர் எத்தகைய பிறவி எடுத்திருந்தாலும் அந்தப் பிறவியில் அவருக்குத் தேவையான நன்மைகளைப் பெறவும் உதவும். உதாரணமாக, கடன் சுமை, திருமண தோஷம், பிள்ளைப் பேறின்மை போன்றவை நிவர்த்தியாகவும் தர்ப்பண சக்திகள் மிகவும் உதவும்.
அடியார்: அமாவாசை, மூதாதையர்களுக்குரிய பரிபூரணப் பூஜை நாளாகக் கருதப்படுவதன் காரணம் என்ன ? எந்த நற்காரியத்திற்கும் அமாவாசை வரட்டும் என்று சொல்லக் காரணம் என்ன ?
சத்குரு: அமாவாசை அன்று உலகெங்கும் பலரும் தர்ப்பணம் அளித்தலால் அன்று பூவுலகிலும், விண்ணுலகிலும் தர்ப்பண சக்திகள் நன்கு விருத்தி ஆகின்றன. தர்ப்பணப் பூஜையின் மிவும் முக்கியமான மஹிமை யாதெனில், இதன் பலன்கள் மிக மிகத் துரிதமாகப் பயனளிப்பதாகும். இதனால் அமாவாசை நாளில், அன்னதானத்துடன் கூடிய அமாவாசைத் தர்ப்பணப் பூஜை சக்திகளில் திரளும் பலாபலன்களால், உடனடியாகக் காரியத் தடங்கல்களும் நீங்குகின்றன.
அடியார்: இன்னாருக்கு என ஒரு முன்னோருக்குத் தர்ப்பணம் அளித்தால் அது அவருக்குத் தான் போய்ச் சேருமா? இது பற்றி அறியாது உலகில் பலரும் உள்ளனரே! அவர்களுடைய முன்னோர்களுக்கு என் செய்வது?
சத்குரு: இதற்காகவே தர்ப்பணம் அளிக்கையில் காருண்யத் தர்ப்பணம் என்ற அற்புதமான முறை உள்ளது. அறிந்தோ அறியாமலோ தர்ப்பணம் அளிக்காதவர்களும், தர்ப்பண சக்திகளையே இதுவரைப் பெற்றிடா முன்னோர்களுக்கும் சென்றடையும் வண்ணம், ஒவ்வொருவரும் சமுதாய இறைப்பணியாக 12 முறை காருண்யத் தர்ப்பணம் அளிக்கும் முறையும் உள்ளது. நல்லோர்கள் உலகெங்கும் இன்றும் இதனைப் பிறருக்காக ஆற்றி வருகின்றனர். எனவே அதியற்புதமான உலக மனித சமுதாய நலவள பூஜையே தர்ப்பணமாகும். இதனைப் புனிதமான பாரத நாட்டில்தான் பெற முடியும். ஏனெனில், சனாதன தர்ம நாட்டின் தாயகமாக, உலகின் ஆன்மீக மையமாகப் பொலியும் நாடல்லவா!
ஒரு விதத்தில் உங்கள் முப்பாட்டனாருக்கும் அதற்கு முந்தைய தலைமுறையினரும், முன்னோர்களும், உங்கள் பெற்றோர்களாக, நீங்களாக, உங்கள் பிள்ளைகளாக, உங்கள் வீட்டுப் பசுக்களாக, மரங்களாகப் பிறந்திருப்பார்கள் அல்லவா! எனவே நீங்கள் அளிக்கும் தர்ப்பணம் உங்களுக்கும், உங்கள் பிள்ளையர்களின் நலனுக்காகவும் உங்கள் வீட்டைச் சார்ந்தோர்க்கும் அளிப்பதாகிறது அல்லவா! இவ்வாறு பல வகைகளிலும் துணை புரியும் தர்ப்பணத்தில் எண்ணற்றத் தெய்வீக ரகசியங்கள் உண்டு. தக்க சத்குரு மூலம் அறிவீர்களாக!

பித்ரு கடன் தீர்ப்பு

 சந்திரன் கடக ராசியில் பிரவேசிக்கும் நாட்களில் பட்டுக்கோட்டை - பேராவூரணி - பெருமகளூர் -மீமிசல் இடையே உள்ள பெருமகளூரில் தாமரைத் தண்டாலான அபூர்வமான சோமநாதர் சிவாலயத்தில் ஆலயம் முழுதும் கழுவி, நீர்க் கோலமிட்டு, வெண்மை நிற உணவுப் பண்டங்களை, குறிப்பாக, இடியாப்ப உணவு வகைகளைத் தானமாக அளித்து வர, சகோதர, சகோதரிகள், பெற்றோர்கள் இடையே உள்ள கடுமையான பகைமை தீர உதவும், கடன் பிரச்னைகளுக்கு நிவாரணம் தரும் பித்ரு கடன் தீர்ப்புத் தலம். அருகில் உள்ள இலக்குமித் தீர்தத்தில் நீராடித் தர்ப்பணம் அளித்து, இடியாப்ப உணவு தானம் பித்ரு கடன்கள் தீர வழி தந்து பணப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.

பெருமகளூர் சிவத்தலம்

கடகராசி சந்திர மூர்த்தியின் ஆட்சி வீடு அல்லவா! மாதந்தோறும் கடகத்திற்குச் சந்திர மூர்த்தி பிரவேசிக்கும் நாட்களைத் தெரிந்து கொள்ளுங்கள். கடகக் கபால சக்திகள்தாம் நல்எண்ணங்களைத் தரும். கடகத்தில் சந்திரன் பிரவேசிக்கும் நேரத்தில் தொடங்கி, சிம்ம ராசிக்கு அவர் இடம் பெயரும் வரை கபாலச் சந்திரப் புடம் விரதம் இருக்க வேண்டும்.
இந்தக் கபாலச் சந்திரப் புடம் விரதத்தில், முழுமையாகவே உண்ணாவிரதம் இருத்தல் நன்று. இயலாதோர், வெண்மை நிறமான வெறும் அன்னம் (சோறு), பால் சாதம், பாயாசம் போன்றவற்றை மட்டும் சிறிது ஏற்கவும். குழம்பு, ரசம் போன்ற உப்பு, காரத்தைத் தவிர்க்கவும். இரண்டே கால் நாள் கால விரதம் தானே! விரதம் இருந்துதான் பாருங்களேன், பலன்கள் நன்கு தெரியலாகும்!

கடகத்தில் சந்திர மூர்த்தி உறையும் இரண்டே கால் நாள் வரை இயன்றால், மெளன விரதம் பூண்டும் அல்லது மிக மிகக் குறைவாகவும், மிகவும் கவனமாகவும் பேசியும், பெரும்பாலான நேரத்தில் மெளனம் பூண்டும் விரதமிருந்து பழகிடுக! சந்திர மூர்த்தி சிம்மத்தில் பிரவேசிக்கும் நேரத்தில் ஆலயத்தில் அல்லது வீட்டில் விரதத்தை நிறைவு செய்து, வானில் சந்திர மூர்த்தியின் தரிசனத்தையும் வானில் பெற்று விரதத்தை முடிக்கவும்.
சந்திர கலாத் துதிகள் அல்லது அபிராமி அந்தாதித் துதிகளை ஓதுதல் விசேஷமானது. சந்திர சேகர், சந்திர மெளலீஸ்வரர் போன்ற சந்திர நாமம் உடைய மூர்த்திகளைக் கடகச் சந்திர நாளில் தரிசித்தல் நன்று. 
மிகவும் சக்தி வாய்ந்த விரதம். இழிவான சொற்களைப் பேசியதற்கு, இழிவான எண்ணங்களை ஏற்படுத்திக் கொண்டதற்குத் தக்கப் பிராயச் சித்த வழிகளைத் தரும் விரதம். வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்க! வாக்குப் பிரயோகத்தைக் கையாள வேண்டிய வக்கீல்கள் தாமரைத் தண்டு லிங்க தரிசனத்தையும், வழிபாட்டையும் அடிக்கடி மேற்கொள்தல் நன்று.
பலரும் அறியாத தாமரைத் தண்டாலாகிய லிங்கத் தலம். இதற்கான திருப்பணிகளை ஏற்று நடத்துவது, ஆண், பெண் இரு வகைகளிலும் சந்ததி நன்கு விருத்தியாக சோமசேகர வழிபாட்டுப் பலன்களைத் தரும்.

கணவனை இழந்தவர்களுக்கு மறுமலர்ச்சி

பதினொன்றாம் திதியான ஏகாதசி இரட்டைப் படையின் துவக்கமாகும். ஒன்பது என்ற எண், ஒன்று முதலான ஒன்பது வரையிலான ஒற்றைப் படையின் நிறைவைக் காட்டுகிறது அல்லவா! பத்து என்பது, ஒற்றைப் படைக்கும், இரட்டைப் படைக்கும் இடையில் அமைந்து வரும் பேரை சக்திகள் நிறைந்த மத்யார்ஜுன எண் ஆகும். பேரிகை வாத்தியத்தில் ஒவ்வொரு பத்தாம் பீட்டும் மாறுபடும். இதனால்தான் பத்து என்ற எண்ணிற்குப் பேரையம் என்ற பெயரும் உண்டு. பேரையூர் என வரும் தலங்கள் எண் சக்திகள் நிறைந்தவையாகும். மதுரை - உசிலம்பட்டி இடையில் உள்ள பேரையூர் மல்லிகார்ஜுன சிவலிங்க மலைத்தலம் எண் சக்திகள் நிறைந்த தலமாகும். பஞ்சாங்கம் கணிப்பவர்களும், ஜோதிடர்களும், எண் சக்திகளைப் பெற விழைபவர்களும் நிச்சயமாக வழிபட வேண்டிய தலம்.

ஸ்ரீசயனக்கோல ராமர்
புள்ளபூதங்குடி

பத்து என்ற எண் (1+0=1 சூரிய கிரக எண்) சூரிய சக்திகள் நிறைந்ததாகும். பாண்டவ அர்ஜுனன், பத்து என்ற எண்ணைத்தான் மிகவும் விரும்பினான். எண் பதினொன்று ( 1+1=2 சந்திர கிரக எண்) என்பது சந்திர சக்திகள் நிறைந்தாகும். பத்திற்கு ஆதாரம் பதினொன்று என அர்ஜுனன் நன்கறிந்து, ஏகாதசித் திதி விரதங்கள் மூலமாகமே தாம் கொண்டிருந்த ஆயிரக் கணக்கான அஸ்திரங்களில் எவற்றை எந்த நேரத்தில் எத்தகைய மந்திரங்களுடன் ஓதுதல் வேண்டும் என விரைவாக மனக் கணக்கைப் போடும் மனோசக்தியை, மன ஆற்றலைப் பெற்றான்.

திருவிடைமருதூர்

மூன்று மருதார்ஜுனத் தலங்களிலும் (மல்லிகார்ஜுனம், திருவிடைமருதூர், திருப்புடைமருதூர்) அர்ஜுனன் தசமித் திதியில் இருந்து ஏகாதசி வரை தங்கி விரதமிருந்து வழிபட்டுள்ளான். அர்ஜன மரம் எனப்படும் மருத மரத்தின் பத்தடி வேர் ஆழத்தில் எப்போதும் ஒரு சுயம்பு லிங்கம் திளைக்கும். அர்ஜுனன் தன் வனவாசத்திலும், இமய மலைத் தலத் தவக் காலத்திலும் தன் அம்புகளை பூமியினுள் செலுத்தி, சுயம்பு லிங்கத்தை அம்புச் சரத் தேர்களால், லிங்கத்திற்கு எவ்வித பங்கமும் இன்றியும், அதன் மேல் அம்புகள் படாமலும், பூமிக்கு மேல் கொணர்ந்து வழிபட்டு மக்களுக்கு அர்ப்பணித்தான். இத்தகைய லிங்கத் தலங்கள் பலவும் இன்று மருதமரத் தலங்களாக உள்ளன. மருதாநல்லூர், மருதமலை, திருவிடைமருதூர், மல்லிகார்ஜுனம், திருப்புடைமருதூர் போன்ற மருத சக்தித் தலங்களில் பாண லிங்கங்களாகவும் இவற்றைக் காணலாம். கணவனை இழந்து ஆதரவின்றிக் கஷ்டப்பட்டுக் குடும்பத்தை நடத்தி வருவோர், இத்தலங்களில் ஏகாதசி நாட்களில் விரதம் இருந்து வழிபடுதலால், நல்லவர்களின் உதவி கிட்டிவாழ்வில் நல்ல மறுமலர்ச்சி ஏற்படத் துணை புரியும்.
மருத மரத்தடியில் தர்ப்பணம் அளித்துப் பிறகு தியானம் புரிவது மனதுக்கு நல்ல மன உறுதி, மனோ வைராக்யம், மனோசக்திகளைத் தருவதாகும். இதனை அர்ஜுனன் கடைபிடித்துச் சிறப்படைந்தான். மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில், மருத மரத்தடியின் கீழ் நின்று, மூன்றாம் பிறைச் சந்திரத் தரிசனம் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும். கபாலம் சம்பந்தமான நோய்களால் வாடுவோர், மருத மரத்தடியில் தர்ப்பணம், படையல் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஸ்ரீராமர் அனைத்து வகை ஏகாதசித் திதி விரதங்களையும் நன்கு கடைபிடித்தவர். எனவே ஏகாதசியில் ராமநாம ஸ்மரணம் கூடுதல் பலன்களை அளிக்கும். இதிலும் ஸ்ரீராமரின் சயனக் கோல தரிசனம் (கும்பகோணம் அருகே புள்ளபூதங்குடி) மஹாவிசேஷமானது. ஏகாதசித் திதியானது நாள் முழுதும் 24 மணி நேரமும் பரந்து நிறைந்து வரும் நாளில், குடல் சுத்திக்கான ஆரோக்கிய கதிர்கள் நன்கு பரிபாலனம் கொள்கின்றது இந்தக் காலசக்தி ஆரோக்யப் பரல்களை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

இதனால்தான் ஏகாதசி தோறும் உண்ணா நோன்பு இருப்பது அறிவுறுத்தப்படுகின்றது. தசமியில் பத்துப் பெருமாள் மூர்த்திகளின் தரிசனமும், ஏகாதசியில் விரதமிருந்து பதினோரு பெருமாள் மூர்த்திகளின் தரிசனமும் மனதிற்குச் சாந்தத்தை அளிக்கும். பொதுவாக, ஏகாதசி நாளில், நின்று, இருந்து, கிடந்து, நடந்த நிலைப் பெருமாள் மூர்த்திகளின் தரிசனமும் மிகவும் விசேஷமானதாகும். இவை அனைத்தும் ஒருங்கே இருக்கின்ற சென்னை திருநீர்மலை போன்ற திருமால் தலம் கலியுகத்தில் அமைவதே மிக மிக அபூர்வமானதாகும்.
ஏகாதசித் திதி நாளில் அன்று முழுநாளும் விரதம் இருக்க முடியாவிட்டாலும், உப்பு, புளிப்பு சேராமை, மோர், தயிர் சேராமை, பழங்களை மட்டும் புசித்தல் என்று ஏதேனும் ஒரு வகையில் விரதமிருந்து பார்த்தால்தானே குடல் அமைதி பெறுவதை உணர முடியும். குடல் அமைதிதான் மனஅமைதியைத் தரும்.

உத்தமர்களின் ஆசியே உத்தமம்

உத்தம தெய்வீக நிலை என்பது தனித்து ஒருவரின் நலன்களுக்காக வந்தமைவது அல்ல! எவரொருவர் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தம்மை உளப்பூர்வமாக, தியாகமயமாகச் சமுதாய இறைப் பணிகளை ஆற்றித் தம்மைச் சுயநலமின்றி அர்ப்பணிக்கின்றாரோ, அவரே உத்தமப் புனித நிலைகளுக்கு ஆதார மூலாம்சத்தைக் கொண்டவர் ஆகின்றார்.
உண்மையில், தூய்மையான தர்மம் மிகுந்த வாழ்வினை வாழத் துடிப்பவர்கள், யது கோவிந்தர், யது கிருஷ்ணர் என்று இறைப் பெயரின் முன் "யது' எனச் சேர்த்து வழிபட்டு வருவார்கள். யது தீர்த்தங்கள் எனப்படுபவை மஹான்களின், ஜீவன்களின் ஜீவசமாதிகளில், குருமூர்த்தங்களில், அதிஷ்டானங்களில் அமைபவை ஆகும்.
காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி அம்மன், சென்னை - பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாதர் போன்ற யதீந்த்ர யந்த்ரச் சக்திகள் நிறைந்த திருத்தலங்களும் உண்டு. இன்றைக்கும் என்றைக்குமாய், யதீந்த்ர உத்தமத் தெய்வீக சக்திகள், பூவுலகில் திரளும் இடம், உண்மையில் மாமுனி, மகரிஷி, சித்தர், யோகி, ஞானி போன்ற தெய்வீக நிலைகளை அடைந்த சித்தர்களின் உறைவிடமான ஜீவசமாதிகளாகும்.
கலியுகத்தில் மந்திரங்களும், வழிபாடுகளும் மிகவும் மங்கி வருகின்றன. இவை நிகழும் இடங்களிலும், பெரும்பாலும் வேதசக்திப் பூஜைகள் தக்க சத்குருவின் அருள்வழி காட்டுதலோடு, அவ்வளவு சிரத்தையுடன் நிகழ்வதில்லை. இதற்குக் காரணம் சத்குருவை மதிக்கும் உத்தம மாண்பு மறைந்து வருவதாகும்.

ஸ்ரீஅகஸ்திய மகரிஷிம் தர்ப்பயாமி !

வேள்விகள், தீப வழிபாடுகள் போன்றவற்றை அற்புதமான இறைச் சமுதாயப் பொது வழிபாடுகளாகப் பக்தி சிரத்தையுடன் ஆற்றி வருவதும் கலியில் மங்கி வருவதால், இவற்றைக் குறித்த வகைத் தான தர்மங்களுடன் சேர்த்து நடத்துவதுதான் கணிசமான பலன்களைத் தர வல்லவையாம்.
உதாரணமாக, வேதமந்திரங்களை ஓதுதற்கு, ஹோம பூஜைகளை நடத்துவதற்கு, எந்தக் கட்டணத்தையும் நிர்ணயித்தல் கூடாது. அவ்வாறு நிர்ணயித்தால், வேத மந்திரங்களை விற்ற சாபம் வந்து சேரும். அவரவர் தாமாக மனமுவந்து அளிக்கும் தட்சிணையைப் பெறலாம் என்பதே வேதநியதி. இந்த தட்சிணையையும் குறித்த அளவு மீண்டும் தான, தர்ம, வழிபாடுகளுக்குப் பயன்படுத்திட வேண்டும், அனைத்தையும் தன் சொந்தச் செலவினங்களுக்கு வைத்துக் கொள்ளக் கூடாது என்ற நியதியும் உண்டு. இத்தகைய தோஷங்கள் தீரவும் தான, தர்மங்கள் கை கொடுத்துதவும்.
முந்திரி, பாதாம்பருப்பு, மஞ்சள், கரிசலாங்கண்ணி கீரைகள் போன்றவற்றை பக்திப் பூர்வமாகச் சமைத்துத் தானமாக அளித்தலால், சில வகை வேத மந்திரங்களை ஓதிய பலாபலன்களும், தானமளித்தோருக்கும், தானம் பெற்றோருக்கும் இரு வகைகளிலும் வந்து சேரும். எனவே, கலியுகத்தில் தான, தர்மப் பலன்களே பல்வகை வேதமஹா சக்திகளைத் தர வல்லைவையாகவும் விளங்குகின்றன.
மாளய பட்ச நாட்களில் நீங்கள் அறிந்த, புத்தகங்கள் மூலமாகத் தெரிந்த சித்தர்கள், மஹரிஷிகள், மகான்கள், யோகிகள், ஞானிகள் அனைவருக்கும் அர்க்யம் அளித்திடுக. இல்லத்தில், தனி வீட்டில் இருப்பவர்கள் தோட்டத்தில், நிலத்தில் அர்க்யம் அளித்திடலாம். மாடி வீடுகளில் இருப்பவர்கள் அர்க்யத்திற்கென உயரமான - ஆற்று மண் நிறைந்த பூத்தொட்டியை இதற்கென விசேஷமாக வைத்துக் கொண்டு -அர்க்யம் அளித்து வருதல் வேண்டும்.
இந்த பூத்தொட்டியை அர்க்ய மண்டபமாக வைத்து, ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யம், மஹரிஷிகள், சித்தர்களுக்கான அர்க்யத்தை இதில் அளித்து வாருங்கள். குறிப்பாக அயல் நாடுகளில், பல மாடிக் கட்டிட பிளாட் பகுதிகளில் வசிப்போர், நல்ல உயரத்தில் நின்ற நிலையில் அர்க்யம் அளிக்கும் வகையில் பூத்தொட்டிகளை வைத்து, இதில் மூன்று வேளைகளிலும் அர்க்யம் அளித்து வருதல் வேண்டும். பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, தொட்டி மண்ணை ஆற்றில், மரத்தடியில், ஆலய நந்தவனங்களில் சேர்த்திடல் வேண்டும்.
இவ்வாறாக, உலகறிந்து போற்றும் மஹான்களின், சித்தர்களுக்கு மட்டுமல்லாது, காரண மஹரிஷி, பாதராய மஹரிஷி, கொடுக்கு வால் குடுமிச் சித்தர் என நீங்கள் அறியா வண்ணம் உள்ள எண்ணற்ற சித்தர்களுக்கும், கோத்ராதிபதிகளுக்கும் - இவர்களைப் பற்றிக் கேட்டறிந்து அர்க்யப் பூஜைகளை ஆற்றி வருக! இதுவரையில் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் 500க்கும் மேற்பட்ட சித்தர்கள், மஹரிஷிகள், மஹான்களின் பெயர்களை அளித்துள்ளோம்.
நன்கு உயர்ந்து நிமிர்ந்து நின்று இது கைகளிலும் நீரைத் தாங்கி, குதிகால்களை உயர்த்தி நின்று,
ஸ்ரீஅகஸ்திய மஹரிஷிம் தர்ப்பயாமி
ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் தர்ப்பயாமி
ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தர்ப்பயாமி
என்று ஓதி உரைத்து, நீரை பூமியில் வார்த்தலே மிக, மிக எளிமையான, காசு, பணம் செலவில்லாத ஆனால் பக்திப் பூர்வமாக, ஜாதி, மத பேதமின்றி, யாவருமே அளிக்க வல்லத் தர்ப்பணப் பூஜையாகும். இவ்வாறு 108 அர்க்யங்களுக்கு மேல் அளித்தலானது, தன்னுள் பதிந்து இருக்கும் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, நல்ல மனோதைர்யத்தைப் பெற உதவும்.

வெட்டுக் காயங்களுக்கு நிவாரணம்

உலோக அம்சங்களுக்கு உரியவர் சனீஸ்வர கிரஹ மூர்த்தியும் ஆவார், ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய கனிமமும் (உலோகமும்) உண்டு. மாளய பட்சம் எனப்படும் 15 நாட்களிலும், பூவுலக மக்களின் வாழ்க்கையில் புழங்கும் அனைத்து அம்சங்களும், தன்மைகளும், குணங்களும் நன்கு பரிபாலனம் பெறுகின்றன. அதாவது மனிதனுடைய பெரும்பான்மையான வாழ்க்கைக் கூறுகளுக்கான நன்மைகளும் மாளய பட்ச நாட்களில் நன்கு விருத்தி ஆகின்றன. இதனால்தான் இந்த 15 நாட்களிலும், தினமுமே ஏதாவது தான, தர்மத்தை எளிமையான வகையிலாவது செய்து வர வேண்டும்.
மனிதர்கள், உலோகங்களைத் தன் வாழ்க்கையில் நிறையப் பயன்படுத்தி வாழ்வதால், உலோக தேவதைகளுக்கு மிகவும் நன்றியுடன்தான் வாழ்ந்தாக வேண்டும். ஆயுத பூஜையன்று மட்டும் உலோகச் சாதனங்களுக்குச் சந்தனம் இடுவது போதாது. இதற்காகவே ஆலயங்களுக்கும், அன்னதான நற்காரியங்களுக்கும் கண்டா மணி, சமையல் பாத்திரங்களை அவ்வப்போது வாங்கித் தானமாக அளித்து வர வேண்டும். பெற்றோரிடம் கொண்டுள்ள அல்லது கொண்டிருந்த மனக் கசப்புகள் ஓரளவேனும் நிவர்த்தி பெற, அகல இது உதவும். இக்கசப்புகள் தீரா விடில், பலத்த சந்ததிக் குற்றங்கள் ஏற்பட்டு இப்பிறவியிலும், பல ஜன்மங்களிலும் அவஸ்தைப் பட நேரிடும். பிள்ளைகளால் குடும்பத்திற்கு அவமானம் ஏற்பட இதுவே காரணமாகும்.வெட்டுக்காயங்களுக்கு நிவாரணம் அளிக்கும்
குணசீலம் சிவத்தலம்

மனிதனுடைய குணங்கள் அமைவது எவ்வாறு? பூர்வ ஜன்ம விளைவுகளாகச் சில குணங்கள் மனிதர்களுக்கு இயற்கையாகவே வந்தமைந்தாலும், உணவு, வாழும் முறை, கூடப் பழகுவோர்களின் தன்மைகள், உற்றம், சுற்றம், குணங்கள், செய்யும் காரியங்கள், வாழ்க்கையின் குறிக்கோள், சுற்றுப்புறச் சூழ்நிலைகள் போன்றவையும் மனித குலக் குணக் கூறுகளை ஆக்குகின்றன.
மாளயபட்ச மஹிமையால்,சனிக்கிழமையில், உலோக சக்திக் கூறுகள், கருமை சக்திகள், ஆயுள்கார சக்திகள் நன்கு விருத்தி பெறுகின்றன. கருமை சக்திகள் என்றால் நிறைய விஷயங்கள் இங்கு பொருள்படும். மனிதன் ஒவ்வொரு நிமிடமும் வெளிவிடும் கரியமில வாயு என்பது, உடலில் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அசுத்தங்களான எண்ண மாசுகளோடு, பூர்வ ஜன்மக் கரி தோஷங்களும், சிறிது சிறிதாக ஒவ்வொரு வெளிச் சுவாசத்திலும் சிறிது, சிறிதாக அகல்கின்றன.
அதாவது மனிதனிடம், வெளிச் சுவாசம் மூலமாகவும், ஒவ்வொரு நிமிடமும் கர்மக் கழிவுகள் நிகழ்ந்து கொண்டுதாம் இருக்கின்றன. இதைப் போலவே உட்சுவாசம் மூலமாகவும், நற்கிரணங்கள், நற்சக்திகளை ஈர்க்கும் சுவாச பந்தனங்களையும், யோக சக்திகளையும் பெறுதல் வேண்டும். இதற்காகவே, வேப்ப மர சுவாசம், மாமர சுவாசம், அருவிக் காற்று சுவாசம் என்று பல வகைகள் உண்டு.

ஸ்ரீவல்வில்ராமர் ஆலயம்
புள்ளபூதங்குடி

ஆனால் தீய வாயுவை சுவாசித்தல் கூடாது. தீயவர்கள் மற்றும் தீய செய்கைகள் நிகழும் இடங்களின் மத்தியில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகையில், காற்றில் தீயவிதமான, விஷமயமான எண்ணங்கள் கலந்திருக்கும். இதனை இயற்கைப் பூர்வமாகச் சீர்படுத்தவுமே, அவ்வப்போது வருண மூர்த்தி, மழையைத் தருவித்து ஜீவன்களின் நலன்களுக்கு வானைச் சுத்திகரித்துத் தருகின்றார். எனவே, மழை பெய்கையில், ஆரோக்யமாக உள்ளோர், நன்கு நனைந்தவாறே, ஸ்ரீகாயத்ரீ மந்திரம், திருமந்திர மந்திரங்கள் போன்றவற்றை ஓதி வந்தால் இவை மழை நீரில் கரைந்து பாமரருக்கும், இவற்றைப் பற்றி அறியாதோர்க்கும் நன்னீர், காற்று, மண், தாவரங்கள், மூலமாகச் சென்றடையும் அல்லவா!
ஒவ்வொரு உட் சுவாசத்திலும், வெளி சுவாசத்திலும் ராம், சிவ, சிவ என்றும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் போன்ற பிராண மந்திர சக்திகளையும் ஓதி வரும் முறையைப் பழக்கிக் கொண்டால், நற்சக்திகள் உள்ளே நன்கு பதியும் அல்லவா! உண்மையில் சுவாசம் என்பது, வானில் இருந்து காற்றைக் கிரகிப்பது மட்டுமல்ல, நல்யோக மந்திர ஈர்ப்பு சக்திப் படலம் என அறிக!
வானப் பரவெளியில் கோடானு கோடி வேத மந்திர சக்திகள் நிறைந்துள்ளன, இவற்றை மனிதன் யோக, தியானப் பயிற்சிகள் மூலமாகவும் அபிஷேக, ஆராதனை, வேள்விகள், விளக்கு பூஜை போன்ற வழிபாடுகள் மூலமாகவுமே பெறுதல் கூடும். ஆனால், இவற்றைக் கலியுக மனிதன் ஆழ்ந்த நம்பிகையுடன் ஏற்றுச் செய்வதில்லையே?
எனவே, எப்போதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்ற காரியமான சுவாச யோகம் மூலமாகவே, நாம் ஆன்ம சக்திகளை பெறும் நல்வழி முறைகளைப் பெறுதல் வேண்டும். இவ்வாறு எழுதிக் கொண்டிருக்கும் போதும், படித்துக் கொண்டிருக்கும் போதும் கூட, ஓம் ஓம், ராம் ராம் என ஓதிக் கொண்டே இருத்தல் மிகவும் சிறப்புடையது. இதனைச் சிறிது சிறிதாகப் பழகி வந்து சுவாசத்துடனும் "ஓம் ஓம்', "ராம் ராம்', "சிவ சிவ' எனச் சேர்த்து ஓதி வருதலையும் அடைதல் வேண்டும். எனவே, சுவாசத்தின் மூலமாக நிறைய ஆன்மீக சாதனங்களை நிச்சயமாக அடைய முடியும்.
ஒவ்வொரு மனிதனும் ஏதேனும் ஒரு வகையில் விழுதல், உராய்தல், தேய்தல் எனக் காயங்களுக்கு எவ்வகையிலேனும் ஆட்படுகின்றான். எந்த உறுப்பு, எந்த நேரத்தில் காயம் படுகின்றதோ அதைப் பொறுத்து, அதற்கான காரணங்களை அறிய முடியும். அடிபட்ட இடம், கண் அமைப்பு போன்று இருந்தால், கண் திருஷ்டியால் வந்தது என அறியலாம். காலில் அடிக்கடி அடிபட்டால், பாத யாத்திரை மூலம் அடைய வேண்டியப் புண்ய சக்திகள் குறைவு எனப் பொருள். உடனே ஆலயப் பிரதட்சிணம், நடைப் பிரதட்சிணம் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறையேனும் தொலைவில் உள்ள கோயிலுக்கு நடந்தே சென்று வழிபட்டு வருதல் என்ற வைராக்கியத்தைக் கொண்டிடுக!
பிறரால் அடிபடுதல், அடிக்கப்படுதல், வாகனத்தில் மோதப்படுதல் என்ற பல விதங்களிலும் பலருக்கும் அடி காயம், தோல் உரிக் காயம், வெட்டுக் காயம், குத்துக் காயங்கள் ஏற்படுகின்றன. ஆனால், உடற்காயத்தின் வலியைக் கண்டு கதறும், அழும், வேதனை அடையும் மனிதன் தன் வார்த்தைகளால், செயல்பாடுகளால் பிறர் மனதைக் காயப்படுத்தும் கொடுமையை உணர்வதில்லை ஏனோ?
சஸ்த்ர ஹத மாளயம் என்ற அபூர்வமான தினத்தன்று கத்தி, அரிவாள்மனையால் அரியப் பெறாது (அதாவது எதனாலும் வெட்டப் பெறாது) முழுமையாகச் சமையலில் பயனாகும் தானியங்கள், காய்கறிகள் கூடிய உணவை சமைத்துப் படைத்தல் விசேஷமானதாகும்.

வராக மணிகர்ணிக புஷ்கரிணி
திருநீர்மலை

பச்சை மிளகாய் (மிளகாய் பஜ்ஜி), காரமிளகாயைப் பயன்படுத்துவோர் இதில் அதனை அரியாது முழுமையாகவே பயன்படுத்திச் சமைக்க வேண்டும். அரைத்த பொடி வகை உணவு வகைகளைத் தவிர்க்கவும். பட்டாணி, கொத்துக் கடலை, பாசிப் பயிறு, கொள்ளு, பாதாம் பருப்பு, பிஸ்தா, கிஸ்முஸ் திராட்சை, முழு முந்திரி, மணத்தக்காளி, பன்னீர் திராட்சை, அவரைக்காய், சக்கரவள்ளிக் கிழங்கு இவ்வாறாக, ஆயுதத்தால் உராய்வுபடாமல் உள்ள பொருட்களைக் கொண்டு சமைக்கப் பெற்ற உணவை அன்னதானமாக அளித்துத் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது.
பிறரைத் தன் சொற்களால், செயல்களால் வதைத்தோர், தக்கப் பரிகார வழிகளைப் பெற, இத்தகையத் தர்ப்பண நாளில், திருவல்லிக்கேணி ஸ்ரீவெட்டீஸ்வரர், திருவெட்டுத் துறை, குணசீலம் தார்மீகநாதர், அய்யர்மலை ரத்னகிரீஸ்வரர் போன்ற புண்யத் தீர்த்தங்களில் நீராடி வழிபடுதல் விசேஷமானதாகும்.
மேலும் கீழே விழுதல், அடிபடுதலால் வெட்டுக் காயங்களால் தழும்புகளை அடைந்தோர், எலும்பு முறிவுகளை அடைந்தோர் இந்நாளில் பூசனிக்காய், பறங்கிக்காய் போன்ற பெரிய வகைக் காய்கறிகளை, ஏழைக் குடும்பங்களுக்கு ஒரு வாரமேனும் வரும் வகையில், அரிசி, பருப்பு போன்ற மளிகைச் சாமான்களுடன் ஒரு கருநீல நிறப் பையில் வைத்துத் தானமாக அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். செய்து தருவதாகச் சொல்லி செய்யாமல் விட்ட, பிறரை ஏமாற்றிய, நற்காரியங்களை விட்டு விடாமல் செய்ய மற்றொரு வாய்ப்பைப் பெற இது உதவும்.

நீத்தார் நிலை பித்ரு மூர்த்திகள்

திங்கட்கிழமை அன்று அமையும் அமாவாசை பிரதட்சிண அமாவாசையாகும்.   ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அளித்த வாக்கின்படி, எவரெல்லாம் திங்கட் கிழமையுடன் கூடி வரும் அமாவாசை மற்றும் கிரகண நாளன்று 32 வகைத் தான தர்மங்களுடனும் ஆலயத்தில் நடைப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணமாக வலம் வருகிறார்களோ, அவர்களுடன் சூரிய, சந்திர சக்திகளும் கூடவே வலம் வந்து அவர்களுக்கு அரிய பேற்றைத் தந்தருள வேண்டும் என்பதாகும். இந்த அரிய பேறு முதலில் பித்ருக்களுக்கு கூட அளிக்கப் பெறவில்லை என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
எனவே, திங்களன்று அமாவாசை கூடி வரும் சோமவார அமாவாசைப் பிரதட்சிண நாளில் அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், நடை பாதப் பிரதட்சிணமாக ஆலயத்தில் வலம் வருவோர்க்குச் சூரிய சந்திரர்கள் இணைந்து வந்து அருள்கின்ற பாங்கு நிகழும் பெறுதற்கரிய இந்நாளை வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
இத்தகைய வழிபாடுகளை தரையில் நிழல்படா ஆலயத் தலங்களில், ஆலய நிழல் அதன் மீதே செறிவதான திருத்தலங்களில் (திருவதிகை, தஞ்சாவூர்), அமாவாசைக் கிரண வழிபாடுகளை அன்னதானத்துடன் ஆற்றுவது மிக மிக விசேஷமானதாகும்.
மேலும் உய்யக் கொண்டான் மலை, திருவிடைமருதூர், திருவையாறு போன்ற பிரதட்சிணை சக்தித் தலங்களிலும் சோமவாரப் பிரதட்சிண அமாவாசையைக் கொண்டாடுதல் நன்று.

சூர்ய சந்திர மூர்த்திகள்
இணைந்தருளும் ஆவுர் திருத்தலம்

கருணாசங்கரி, கருணாகடாட்சி, காருண்ய வல்லி, காருண்யாம்பிகை, கருணாம்பிகை என காருண்ய நாமம் கொண்டு இறைவி அருளும் தலங்களில், கிரகண நாட்களிலும், சோமவாரப் பிரதட்சிண நாட்களிலும் தர்ப்பணப் பூஜைகளையும் அன்னதானத்தையும் நிகழ்த்திடுக.
முன்னோர்களில் பலரும் பித்ருக்களின் நிலைகளை அடையவில்லை எனில், அவ்வம்சாவழிக் குடும்பங்கள் நிறையப் பாதிப்புகளுக்கு ஆளாவர். எனவே, பாமாரர்களுக்கும், நடுத்தரக் குடும்பங்களுக்கும், ஏழைகளுக்கும் நன்கு உதவுவதே சோமவாரப் பிரதட்சிண சூரிய கிரண அமாவாசை வழிபாடுகள் ஆகும்.

ஒரு வருடத்தில் வரும் 12 அமாவாசைகளுக்கான துவாதச வழிபாட்டுத் தலங்கள், துவாதச தேவபுலச் சாதனங்கள் உண்டு. ஒரு வருடத்தின் 12 அமாவாசை நாட்களில் அல்லது போதாயன அமாவாசை நாட்களில், இந்த 12 தலங்களில் ஏதேனும் ஒன்றிலேனும் தர்ப்பண, அன்னதானத்தோடு வழிபட வேண்டும். இவ்வாறு அந்தந்த நாடு, மாநிலம் என்ற வகைகளில் அமாவாசைப் புஷ்கரத் தலங்கள் உண்டு. அந்தந்தப் பூகோளப் பகுதிக்கு என்று இவற்றைப் பகுத்துத் தருகின்றார்கள். தக்க சற்குருவை நாடி விளக்கங்களைப் பெறவும்.  
மாளய பட்சத்தில் பித்ருக்கள் பூவுலகிற்கு வருகின்ற மகிழ்ச்சி ஒரு புறம் இருக்க, பித்ரு மண்டலங்களிலும், ஸ்ரீமன் சூரிய நாராயணப் பூஜையும், பித்ரு மண்டலப் பிரம்மோத்சவமாக நிகழ்வது நாமறிந்ததே. பித்ருக்களுக்கும் பல விதமான கடமைகள் உண்டு. பித்ரு தேவதைகள், பித்ரு பத்னிகள், பித்ரு தேவதா மூர்த்திகள் இவற்றைப் பகிர்ந்து கொள்கின்றார்கள். ஒவ்வொரு பித்ருவும் எண்ணற்ற வடிவுகளைத் தாங்கி வர முடியும்.
தான தர்மங்களில் செறிந்து, சிறப்புற வாழ்ந்த முன்னோர்களே, மேலுலகங்களில் மேலும் பல தவங்கள் புரிந்து, நீத்தார் எனும் உத்தமப் பித்ரு நிலைகளை அடைகின்றனர். எனவே, பிறவிகள் பலவற்றிலும், முறையான தான தர்மங்களை ஆற்றியோரே நீத்தார் நிலையை அடைகின்றார்கள் என்பதால், மாளய பட்சத்திலும், மாளய அமாவாசையிலும் தான, தர்ம சக்திகள் நன்கு விருத்தி ஆகின்றன.
நீத்தார் எனில் உத்தம அர்த்தங்கள் நிறையவே உண்டு. பெரும்பாலானோர்க்கு மரணம் என்பது இறுதி நிலையாகவோ அல்லது எதிர்பாராத விதமாகவோ வந்தடைய, பித்ரு நிலையை அடையும் அளவிற்கு உத்தமமாக வாழ்வோர்க்கு, தமக்குரிய இறுதிக் காலம் வந்ததும் தாமாகவே, மனப் பூர்வமாக உடலை விட்டு உயிரை நீத்து விடுப்பதாய் நீத்தார் என்ற அரிய தேவநிலையை அடைகின்றார்கள்.
நீத்தாரப்பர் எனும் திருநாமம் பித்ருக்களின் நாயகராக ஸ்ரீமன் சூரிய நாராயண சுவாமியைக் குறிப்பதாகும். நீத்தாரப்பம் என்பது பித்ருக்களுக்கு ஸ்ரீமன் சூரிய நாராயண சுவாமி அளிக்கும் ஆசிகள் ஆகும். இவைதாம் பூவுலக வம்சவளிகளுக்குப் பித்ருக்களால் அளிக்கப் பெறுகின்றன. இப்பூவுலகில் பித்ருக்கள் அளிக்கும் ஆசிகள் யாவும் நன்கு பரிமாணம் பெறும் தலமே திருச்சி - கல்லணை வழியில் உள்ள கோயிலடி அப்பக்குடத்தான் பெருமாள் ஆலயமாகும்.

பித்ருக்களிலும் மிக உயர்ந்த தெய்வீகப் பேறுகளை அடைந்தவர்களே ஆதித்யப் பித்ருக்களாகிய நீத்தாரணர் என்பாரும், நீத்தாரிணிகளாகிய பித்ரு பத்னிகளும் ஆவர். நீறு பூத்த நெற்றி என்பது (திரு) நீற்றிடும் தெய்வப் புலன் அன்றோ! நீத்த நெடுநிலம் என்பது  நெடுங்குடி போன்ற பித்ருக்களுக்கும் முக்தி அளிக்கும் பித்ரு முக்தித் தலமாகும்.
நீத்த நீறு பூசி நீத்தாருக்கு நெடுஞ்சாண் கிடைத் தர்ப்பணம் என்பதில் விபூதியைக் குழைக்காது, அப்படியே நெற்றியில் பூசி நீத்தாருக்குத் தர்ப்பணம் அளித்தல் என்பது பொருளாகும்.
சடலத்தை நெருப்பில் தகனம் செய்த மறுநாள் அஸ்திச் சாம்பலை எடுத்துக் கரைக்கும் சடங்கு ஒன்று உண்டு அல்லவா. இவ்வாறு உடலை நீத்து சாம்பலாகிப் போனாலும், உயிர் சக்தி, ஜீவசக்தியால் ஏனைய நற்பிறவியாக அடையவுமே நற்பிறவி அமைய வேண்டுவதற்காக சடலத்திற்குக் கூட விபூதி இடப்படுகிறது. இதற்கான சடங்குகளில் ஹோமம் வளர்த்து தர்பையை நெருப்பில் இட்டுத் தர்பைச் சாம்பலை நெற்றியில் சந்ததியார்கள் இட்டுக் கொள்ளும் சடங்கும் நிகழ்கின்றது.
ஈந்து இசைபட வாழ்ந்த சான்றோர்களுக்கு மாளய பட்ச அமாவாசை மற்றும் கிரஹணத் தர்ப்பணங்களில் முதலில் தர்ப்பண அர்க்யம் அளித்திடுக!

பிடிவாத கணவனுக்கு ஸ்திர புத்தி

நவராத்திரியின் வியாழக் கிழமையில்தாம் நடராஜப் பெம்மான் தம் சிவஞானப் பிழம்பைக் கொண்டு, ஞானசக்தியாக அம்பிகையைத் தோற்றுவித்தார். எனவே, பூவுலகில் நவராத்திரி பூஜை தோன்றும் முன்னரேயே நவராத்திரியின் அம்சங்கள் சிவலோகத்தில் பொலிந்தன. நவராத்திரியில் அமையும் வியாழனுக்கு, விசேஷமான பலன்களை குருபீடதாரிணியாக அம்பிகையே மனமுவந்து தர வல்லச் சிறப்பு அம்சங்கள் பல உண்டு. அம்பிகை, பல ஸ்ரீவித்யா தேவதைகளுக்கு குருபீடமாய் அமர்ந்து உபதேசிக்கும் நன்னாளும் நவராத்திரி உற்சவ குரு வாரமாகும்.
சத்குருவின் கீழ் அமையும் சத்சங்க அடியார்களுக்கும் மிகவும் சிறப்பான நாள் இது. ஏனெனில் சாக்த உபாசனை எனப்படும் தேவி வழிபாடானது ஜாதி, சமய வேறுபாடின்றி சத்குரு பலரையும் ஒன்று கூட்டி அளிக்கும் சத்சங்கங்க அடியார்கள், தேவ உபாசனையிலும் சிறந்தோங்க உத்வேக சித்சக்திகளை அளிக்க வல்ல நாள். தேவி வழிபாடுதான் கலியுலகில் மிக எளிதில் காம, குரோத, விரோதத் தீய சக்திகளை மாய்த்து மனதைப் பண்படுத்தும்.
கலைக் கோட்டு மாமுனி (ரிஷ்யசிருங்க மஹரிஷி) ஸ்ரீவித்யா வழிபாட்டில் தலைசிறந்தவர். மான்கொம்பு பகவதி ஆலய வழிபாடு நவராத்திரி குருவாரத்தில் அபரிமிதமான நல்வரங்களைத் தரும்.


ஸ்ரீஉஜ்ஜீவநாதர் உய்யக்கொண்டான்மலை திருச்சி

ஸ்ரீபாலவித்யா பூஜைகளில் குருமண்டலாசனத்தில் மூன்று குருத்துவக் கோடுகளை வரைந்து, இறைவிக்கு, முதன் முதலில் பரம்பொருளிடம் இருந்து இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்றும் குருபூஜைப் பூர்வமாகவே வந்தமைவதாக உணர்த்துகின்றார்கள். இவ்வழிபாட்டில் சிறந்த பாஸ்கரராயருக்கு இந்நாளில் 21 முறை அர்க்யம் அளித்துப் பூஜித்திடுக!
கல் வடிவில் நடராஜர், சிவகாமி அம்பிகையர் அருளும் ஆலயங்களில் (வடகுரங்காடுதுறை, உடையாளூர், ஊட்டத்தூர்) இரு மூர்த்திகளுக்கும் 64 விதமான அபிஷேக ஆராதனைகளுடன் நவராத்திரி நாளில் குரு ஹோரை நேரத்தில் வழிபடுவது, பெண் பிள்ளைகளுக்கு நல்ல தற்காப்பு ரட்சா சக்திகளை அளிக்க வல்லதாகும். மிகப் பெரிய குடும்பச் சுமையைத் தாங்கி வேதனையுடன் இருக்கும் இல்லறப் பெண்களுக்கு இந்த வழிபாடு நல்ல மனோதிடத்தையும் தந்து காக்கும்.

சுவாமிக்கு முன், அம்பிகை சன்னதி உள்ள ஆலயங்களில் (திருக்கருகாவூர்) வழிபடுதல் மிகவும் விசேஷமானது. பொதுவாக, இரு அம்பிகை அருளும் தலங்களில் (திருபைஞ்ஞீலி, திண்டுக்கல், இன்னம்பூர்), ஒரு அம்பிகை ஞானாம்பிகையாக குருமூர்த்த சக்திகளுடன் அருள்வதுண்டு. இப்பாங்கில் இரு அம்பாள் மூர்த்திகள் அருளும் தலங்களில், இந்நாளில் இரு அம்பிகைக்கும் ஒரே வண்ணத்தில் ஆடைகள் சார்த்தி இரு அம்பிகையர்க்கும் ஒரே சமயத்தில் ஆராதனைகளுடன் வழிபடுதால், உள்ளத்திற்கு தேவானந்தம் நிறைந்த பூரிப்புச் சாந்தம் உண்டாகும். ஆனந்தி என்ற பெயரை உடைய ஏழைகளுக்கு இயன்ற தானங்களை அளித்திடுக! இது, சகோதர. சகோதரிகளிடம் ஏற்பட்டுள்ள மனபேதப் பகைமை அகல்வதற்கான அதியற்புதமானப் பலன்களைத் தந்தருள வல்லதாகும்.
தெய்வக் குடும்பப் பரிவாரக் கோயிலான ஊத்துக்கோட்டை அருகில் உள்ள சுரட்டப்பள்ளி சிவாலயத்தில், தெய்வ மூர்த்திகள், இறைவியுடன் அருள்தல் காணுதற்கரிய கோலமாகும். உங்கள் வாழ்வின் ஒரு பிரதோஷ வழிபாடாவது இங்கு அமைவது மிகவும் விசேஷமானதாகும். இங்கு தம் தேவியுடன் தட்சிணாமூர்த்தி மிகவும் அபூர்வமான கோலத்தில் அருள்கின்றார். பிள்ளைகளுக்கு நல்ல புத்தியையும் நன்முறையிலான நினைவாற்றலையும் அளிக்க வல்ல மேதாகுரு மூர்த்தி.ஸ்ரீநடராஜ பெருமான் ஊட்டத்தூர்

குருவாயூர், குரும்பூர், குருவித்துறை போன்ற குருநாம சக்தித் தலங்களிலும் நவராத்திரி நாளில் வழிபடுவது குருவின் மஹிமையை அறிவுப் பூர்வமாக உணர்த்த வல்ல ஆன்மீக வழிகாட்டியை வாழ்வில் தந்தருளும். எந்த சத்குருவுமே முதலில் ஆன்மீக வழிகாட்டியாகவே தோற்றம் கொள்வார். பின்னர் நம்பிக்கை நன்கு விருத்தி ஆகும் நிலையில்தாம் இவர்தாம் நம் சத்குரு என்ற திருவுளம் பிறக்கும்.
சென்னை பாடியில் உள்ள திருவலியதாயம் போன்ற வலியன் குருவி வழிபட்ட தலத்தில் நவராத்திரியில் வழிபடுவதால், பிறருடைய கோள் மூட்டுதலால் குடும்பங்களில் ஏற்படும் சச்சரவுகள் தீர வழி பிறக்கும். அத்தி மரத் தல வழிபாடு இக்குறைபாடுகளை எளிதில் தீர்க்க வல்லதாகும். இங்கு விசேஷமாக அமைந்துள்ள பரத்வாஜ முனிவர் வழிபட்ட சிவலிங்க வழிபாடு சிறப்பான பலன்களைத் தர வல்லது. குறிப்பாக, தந்தையிடம் மனம் விட்டுப் பேச மிகவும் உதவும்.
நவராத்திரியின் குருவாரத்தன்று, அமர்ந்த கோல அம்பிகைக்கும், குருமூர்த்த சக்திகள் தீர்கமாக ஜீவகாருண்ய சக்திகளாகக் கருணாகடாட்ச மூர்த்தியால் அளிக்கப்படுவதால், குரு, பரமகுரு, பரமார்த்த குரு, பரமேஷ்டி குரு என்று சத்குரு பாரம்பரிய வழிமுறை அமையும் குரு பீடங்களில் வழிபடுவது மேன்மை தரும்.

அம்பிகையே சத்குருவாக மாமுனிகளுக்கு (ஞானாம்பிகையாக காளஹஸ்தி) உபதேசித்த தலங்களிலும், முருகப் பெருமான் தந்தையாம் சிவனுக்கு உபதேசித்தத் தலங்களிலும் (சுவாமிமலை) ருத்ராட்ச மாலை சார்த்தி அம்பிகையை வழிபடுதல் நன்று. நெஞ்சை அழுத்தும் வண்ணம் கோரமான கர்ம வினைகளைச் செய்தவர்கள் கூட ஓரளவேனும் கடைத்தேற, நவராத்திரி குருவார வழிபாடுதான் நல்வகையிலான மீட்பு சக்திகளைத் தரும்.
பொதுவாக, ஒரு வேளை உணவைத் தவிர்த்து நவராத்திரி விரதம் பூணுவர். இத்தகைய நவராத்திரி விரதத்துடன், குருவார விரதப் பாங்கினையும் சேர்த்துக் கொண்டு, 12 முறை பவானி புஜங்கத் துதிகளை ஓதி வழிபடுக! நவராத்திரி குருவாரத்தில் ஸ்ரீராகவேந்திரர், பரமாச்சார்யாள், ராமலிங்க சுவாமிகள் என அவரவர் மனதில் எவர் சத்குருவாய் அமைகிறார்களோ, அவருடைய ஜீவ சமாதியிலோ, அதிஷ்டானத்திலோ, துளசி மாலையில் முழு முந்திரிகளைக் கோர்த்து, அந்தந்த மஹான் இயற்றிய துதிகளுடன் வழிபடுவதுடன், முழு முந்திரி கலந்த பண்டங்களை ஊனமுற்றோர்க்குத் தானமாக அளித்து வருதலானது, பிடிவாத குணமுடைய, அவசர கோலத்தில் முடிவெடுக்கும் கணவனுக்கு நல்ல ஸ்திரமான புத்தியைத் தரும். முடிவு எடுக்க முடியாத குடும்பப் பிரச்னைகளில் தீர்கமான முடிவை அடைய உதவும்.

மாதா :: அன்னை

நம் சற்குரு ஒருமுறை மாதா அமிர்தானந்தாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, “அன்னையின் ஆஸ்ரமம் நம்முடையதைப் போன்றதுதான். ஆனால், சற்றே பெரியது...”, என்றார். அது உண்மைதான் என்று விளக்குவதே இங்கு நீங்கள் காணும் அந்தூரியம் பூவின் படமாகும். இவ்வாறு நவராத்திரியில் அனுஷம், வளர்பிறை பஞ்சமி திதி, வெள்ளிக் கிழமை, சித்த யோகம் இத்துடன் குரு சக்திகளைப் பெருக்கும் மூன்றாம் எண் சக்திகள் (செப்டம்பர் 30) இணைவது வாழ்வில் மிகவும் அரிதான ஒரு பேறே. திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தின் நுழை வாயிலில் நாம வடிவில் அமைந்துள்ள 12 பித்ரு படிக்கட்டுகளைப் போல் அன்னை ஆஸ்ரமத்தில் அடியார்களை வரவேற்கும் அந்தூரியம் பூக்களும் அமைந்துள்ளன என்பதும் நம்மை உற்சாகப்படுத்தும் ஒரு ‘மணமாகும்.’

நவராத்திரியில் ஸ்ரீமதி அன்னை
லால்குடி

சுமங்கலி சக்தி ஒன்றே!

இத்தகைய நாட்களில் சுமங்கலிகள் தங்கள் மாங்கல்யச் சரடை மாற்றிக் கொள்வதுடன் மற்ற இல்லற சுமங்கலிகளுக்கும் இத்தகைய மாங்கல்ய சரடுகளை பூ, பழம், தேங்காய், வளையல், கண் மை போன்ற மாங்கல்யப் பொருட்களுடன் தானமளித்தல் என்பது கிடைத்தற்கரிய பேறே. சந்தர்ப்பங்கள் சிங்காரித்துக் கொண்டு வருவதில்லை. கிடைக்கும்போதே அதை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அரிதிலும் அரிய சுமங்கலி சக்திகள் பெருகும் நாளில் குறைந்தது 12 ரிஷி தம்பதிகளுக்கு அர்க்ய வழிபாடுகளை ஆற்றுதல் நலமே. உதாரணமாக,
1. ஸ்ரீலஸ்ரீலோபாமாதா சமேத அகஸ்தீஸ்வராய நமஹ அர்க்யம் சமர்ப்பயாமி
2. ஸ்ரீலஸ்ரீநற்பவி சமேத காகபுஜண்ட மகரிஷி நமஹ அர்க்யம் சமர்ப்பயாமி
3. ஸ்ரீலஸ்ரீஅருந்ததி சமேத வசிஷ்ட மகரிஷி நமஹ அர்க்யம் சமர்ப்பயாமி
என்றவாறு ஓதி அர்க்ய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலமே.

வரும் நவராத்திரியை அடுத்து வரும் ஸ்ரீஆயுர்தேவி பூஜை கூடா நாளில் அமையும் வாய்ப்பு உள்ளதால் இதைப் பற்றி சில அடியார்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பொதுவாக, பூஜை என்று கூறும்போது அதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் நிகழ்த்தலாம். ராகு கால துர்கா பூஜையை ராகுகால நேரத்தில்தானே நிகழ்த்துகிறோம். இத்தகைய பூஜைகள் கோயில்களில் நிகழ்வதால் இதில் எந்த விதமான குழப்பங்களும் தோன்றுவதற்கு வாய்ப்பில்லை. இதை முன்னோடியாக வைத்து ஸ்ரீஆயுர்தேவி பூஜையை நித்ய அனுஷ்டானமாக தங்கள் இல்லங்களில் நிறைவேற்றுபவர்கள் தாராளமாக ஸ்ரீஆயுர்தேவி பூஜையை அவர்கள் தினமும் நிறைவேற்றி வரும் அதே நேரத்தில் பூஜையை நிகழ்த்தி விடலாம். இதில் எந்தக் குழப்பத்தையும் கொள்ள வேண்டாம். ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை திதிப்பூர்வமாக நிறைவு செய்ய நினைப்பவர்கள் 3.10.2022 திங்கட்கிழமை அன்று மாலை இத்தகைய பூஜைகளை நிறைவேற்றுவதோ அல்லது கூடாநாளாக இருந்தாலும் 4.10.2022 செவ்வாய்க் கிழமை அன்று மாலை நிறைவேற்றுவதோ ஏற்புடையதே. இது அந்நாட்களில் சூரிய உதயத்தில் அமையும் திதிகள் அன்று நாள் முழுவதும் செயல்படுவதாக அமையும். ஸ்ரீஆயுர்தேவி பூஜை சுப காரியமாக அமைய வேண்டும், விஜய தசமி பலன்களை வர்ஷிப்பதாக அமைய வேண்டும் என்று நினைப்பவர்கள் 5.10.2022 புதன் கிழமை காலை சுக்ர, புத ஹோரை நேரத்தை அனுசரித்து காலை 6 மணி அளவில் ஆரம்பித்து நிறைவேற்றுதல் நலம்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam