முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
ஒவ்வொரு நாளுக்கும் எண்ணற்ற விசேஷ தெய்வீகத் தன்மைகள் உண்டு. இவற்றை நாம் நன்கு பயன்படுத்திக் கொள்ள உதவுவதே,
வாழ்க்கையில் நாம் பெறும் தினசரி வாழ்க்கையின் ஒவ்வொரு நாள் கால கட்டங்களாகும். காலம் இன்றி ஜீவ வாழ்வு கிடையாது.
உலகில், ஒவ்வொரு மனிதனும் காலத்தின் மகிமையை அறிந்து வாழ்தலே நன்று. இல்லையேல் கர்ம வினைகளே பெருக்கெடுக்கும்.
காலத்தின் மகிமையை, தக்க சற்குரு மூலம் ஓரளவேனும் உணர்ந்தால்தான் வாழ்வும் சீர்மை பெறும்.
இதனால்தான் பல பூஜைகளும் - ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை, சங்கட ஹரச் சதுர்த்தி என்பதாக - காலத்தை ஒட்டியே அமைந்துள்ளன.
எனவே காலக் கிரணங்களில்தாம் நம் வாழ்க்கைச் சக்கரம் சுழல்கின்றது. காலமும் ஒரு தேவபூஷணச் சக்கரமே!
காலச் சக்கரத்தில் ஒவ்வாரு விநாடியும் ஓர் ஆரமேயாகும்.
இதைத்தான் சித்தர்களும், நடந்ததே நடப்பவையாக நடக்கின்றன
என்று முக்காலத்தையும் ஒரே வாக்கியச் சூத்திரத்தில் அமைத்துத் தந்துள்ளனர்.
இதையே ஸ்ரீகிருஷ்ண பகவானின் தெய்வ வாக்கியங்களாக பகவத் கீதையில் காணலாம்.
உண்மையில், காலத்தை அறிதல், கர்ம வினைத் தன்மைகளை அறிதல், பிற ஜீவன்களின் நலம் பேண தான, தர்மங்களை ஆற்றுதல்
போன்ற ஆன்மீகப் பணிகள் யாவுமே, காலத்தை ஒட்டிய வகையில், காலசக்தியை உணர்வித்து,
பரிபூரண இறை தரிசனத்திற்கே வழிகாட்டுகின்றன. இவ்வாறு காலக் கண்ணாடியைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை சீரமைத்துக் கொள்ள
ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அவர்களின் தெய்வ வாக்குப் பொக்கிஷங்களை இங்கே அளிக்கிறோம்.
வாகனங்களில் பயணம் செய்யும்போதோ அல்லது படுக்கையில் படுத்தவாறோ சற்குருவின் உபதேசங்களை கேட்டவாறே பொழுதைக் கழிக்க விரும்பும் அடியார்களுக்கு வசதியாக இங்கு நித்ய கர்ம நிவாரண ஒலி அலைகளாகவும் சற்குருவின் உபதேசங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

பிறந்த நாள்

பிறந்த நாள் என்று வரும்போது ஜனவரி முதல் டிசம்பர் வரை உள்ள மாதக் கணக்கு கணித முறை பிரிட்டிஷ் சாம்ராஜ்ய காலத்தில் இந்தியாவில் புகுந்ததாக எண்ணப்படுகின்றது. எண்களையும், எண் கணிதத்தையும் பூவுலகிற்குத் தந்ததே பண்டைய புனித பாரத வான சாஸ்திரமே! நம் புனிதமான பாரத நாட்டிற்கென அமைந்த பிராந்திய அந்தந்த மாநில மொழிக்கேற்ற பஞ்சாங்கக் காலக் கணித முறைகளும் பல உண்டு.
எனவே ஜனவரி - டிசம்பர் என்பதை ஆங்கிலக் காலக் கணித முறை என நாம் உரைத்தாலும், அனைத்தும் பாரதத்தில் மலர்ந்து, ஏனைய நாடுகளில் திரிபு கொண்டு மீண்டும் நமக்கு வந்துள்ளதேயாம். பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு தமிழ்த் தேதி முறையை ஏன் பலரும் பயன்படுத்துவது கிடையாது? சற்றே சிந்தித்துப் பாருங்கள். உலகளாவிய ஆங்கில முறைத் தேதி என வழக்கில் புரிந்து கொள்வதற்காகச் சொல்லிட்டாலும், இதுவும் தொன்மையான பாரதக் கணித வகையின் திரிபேயாம். இதனை நூதன முறை என உரைக்கின்றனர்.
உண்மையில், சித்திரை முதல் பங்குனி வரையிலான தமிழ் மாதத் தேதிகளே வழக்கில் உள்ள நூதன முறையிலான ஜனவரி - டிசம்பர் காலவகை முறைத் தேதிகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவை ஆகும். ஆனால், சமுதாயத்தில் அனைத்துத் துறைகளிலும், உலகளாவியதுமாக ஜனவரி-டிசம்பர் 12 மாத தேதிக் கணக்கு முறை உலகம் முழுதும் ஒருமித்த காலக் கணக்கை ஒட்டியதாக, நித்திய உலகியல் வாழ்வு முறையில் இருந்து பிரிக்க முடியாதபடி சமுதாயத்தில் ஒட்டிக் கொண்டு வந்துள்ளது.
உண்மையில் ஜனவரி-டிசம்பர் எண்ணை விடத் தமிழ்க் காலண்டர் எண் மிக மிகச் சக்தி வாய்ந்தவையேயாம். இதே போல, தமிழ் மாத நாளை விட, தமிழ் மாதத்தின் அஸ்வினி முதல் ரேவதி வரை உள்ள நட்சத்திரங்களே தேதிகளை விட மிகவும் சக்தி வாய்ந்தவை. இதனால்தாம் நம் முன்னோர்கள் பிறந்த நாளை விட, பிறந்த நட்சத்திர நாளையே பஞ்சாங்கத்தைப் பார்த்தறிந்து பிறந்த நாளாகக் கொண்டாடி வந்தார்கள்.
ஒவ்வொருவருடைய பிறந்த நட்சத்திரத்திற்கும், அந்தந்த நட்சத்திர லோக மண்டலத்திற்கும் இடையே வானியல் தொடர்புகள் ஒவ்வொரு நிமிடமுமே நிறைய நடந்து கொண்டே இருக்கும். ஆனால், இவற்றைக் கிரகிப்பதற்குத் தேவையான இறைப் பகுத்தறிவை மனிதச் சமுதாயம் பெற்றிடவில்லை. எனவே அவரவருக்கு உரிய நட்சத்திரத்திர சக்திகளைப் பெற்றிட, அந்தந்த நட்சத்திர நாளில் அந்தந்த நட்சத்திர வழிபாட்டை ஆற்றி வருதல் வேண்டும். எனவே, இனியேனும் வழக்கில் வந்து விட்ட ஜனவரி-டிசம்பர் முறையோடு, பிறந்த நாளுக்காக, தமிழ் நட்சத்திர நாளையும் சேர்த்துக் கொண்டாடுவீர்களாக! உதாரணமாக ஏப்ரல் மாதம் பிறந்தவர்கள் இதற்கான பங்குனி அல்லது சித்திரை மாதத்தில் எந்த நட்சத்திரத்தில் பிறந்தார்களோ அந்நாளில் தமக்குரிய நட்சத்திர ஆலயத்தில் பிரதானமான பிறந்த நாளாகக் கொண்டாடி இறைவனை வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
ஒருவர் இறந்தவுடன் அவருடைய சாயைச் சரீரம் பல கோடி மைல்களுக்கப்பால் விண்ணில் சென்றிட்டாலும், அதனுடைய சரீரப் பிரயாணம், அடுத்த வாழ்க்கை அமைப்பு போன்ற பலவற்றையும் கிரகிக்கக் கூடிய முழுமையான மனோ சக்தியைப் பலரும் பெற்றிடவில்லை.
ஒவ்வொருவருடைய உடலிலும் பல பகுதிகளிலும் விண்ணில் ஒளிரும் நட்சத்திரம் மற்றும் நவகிரக அம்சங்கள் பலவும் நிறைந்திருப்பதால் அவரவருடைய நட்சத்திரம் அவரவருடைய சரீரத்தில் எந்த அமைப்பில் நன்கு பதிந்து இருக்கின்றது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக மூல நட்சத்திரத்தின் நான்கு பாதங்களில் மூன்றாம் பாதம் கபாலத்தின் ஞானப் பரலில் நிறைந்திருக்கும். ஆனால் கோசாரப் பூர்வமாக மாதந்தோறும் அவரவர் இன்றைய நிலையில் இதிலும் பிறந்த நேர கிரக அமைப்பை ஒட்டிய மாதந்தோறும் பிறந்த நட்சத்திர நாளில் கபாலத்தில சில நூதனமான கதிர்கள் தென்படுகின்றன. ஒவ்வொருவரின் நட்சத்திரத்தின் இருப்பிடத்தைத் தெரிந்து கொண்டு தினமும் தரிசித்து வருதல் வேண்டும்.  தினமும் வீட்டில் நட்சத்திரக் கோலம் 27 வகைகளை இட்டு 27 முறை வீழ்ந்து வணங்கிடுதல் நட்சத்திர சக்திகளை உடலில் வியாபகப்படுத்தும் எளிய முறையாகும். இரவில் முடிந்த மட்டும் எவ்வளவு நேரம் நட்சத்திர தரிசனங்களைக் காண முடியுமோ அந்த அளவிற்கு நட்சத்திரங்களை தரிசித்தலால் நமது மூதாதையர்களுக்கும், சந்ததிகளுக்கும் பல்வகை முன்னேற்றங்கள் கிட்ட உதவும்.

கரிநாள் வழிபாடு

சனி கிரகம் வக்ர கதியில் இருக்கின்றபோது வருகின்ற கரிநாளுக்குப் பூஷணக் கரிநாள் என்று பெயர். கரி நாளில் ஆற்ற வேண்டிய விசேஷமான பூஜை முறைகள் பலவும் உண்டு. சனி தசை, சனி புக்தி, சனி அந்தரக் காலம் பற்றி வருந்துவோர், கரிநாளில் குறித்த சில வகையான பூஜைகளை முறையாக ஆற்றி வந்தால், சனி தசையில் ஏற்படுகின்ற துன்பங்களின் விளைவுகள் தணிய மிகவும் உதவும்.

ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
லால்குடி

வக்ர கதி என்பது கோள்களின் கதியில் திரும்பி வரும் கதியைக் குறிப்பதாகும். உண்மையில் வக்ர கதி காலத்தில் கிரகங்கள் பின்னோக்கி நகர்வது கிடையாது. பூமியின் சுழற்சி இயக்கத்தால்தான் குறித்த கோணத்தில் சனி, சுக்கிரன் போன்றவை வக்ர கதியில் இருப்பதாகத் தோன்றும்.  சனி மூர்த்தியும் நல்ல அனுகிரக மூர்த்தியே. பொதுவாக திரிதியைத் தினத்தில் கரிநாள் சேரும்போது அது வக்ர கதி சக்திகளை நன்கு வலுப்படுத்துகின்றது.
நவகிரகங்கள் இராவணேஸ்வரனிடம் வலுவிழந்து கிடந்த போது, அக்னீஸ்வரர் உட்படப் பல தேவாதி தேவ மூர்த்திகள் உலகத்தின் கர்ம பரிபாலன இயக்கங்களை ஏற்று நடத்தலாயினர். பிறகு கரிநாளில்தாம், மஹரிஷிகளின் கடுமையான தபோ பலத்தினால் நவகிரஹ மூர்த்திகள் மீண்டு தன்னிலை பெற்றனர். இதற்கு தட்சிணா மூர்த்தி வழிபாட்டு மந்திரங்களே பெரிதும் உதவின.
கரிநாளில் நின்ற கோலம் பூண்டிருக்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்திக்கு 16 வகையான தைலங்கள் நிறைந்த ஷோடச தைலம் ஏற்றி வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும்.   
நெருப்பு வகை தாரா சக்திகளை உடைய விசாக நட்சத்திர தினம், செவ்வாய்க் கிழமை போன்ற அக்னி சக்திகள் பெருகும் நாட்களில் பலவகைக் கர்ம வினைகள் தாமாகவே பஸ்மமாகி, பல தடங்கல்கள் களையப் பெற்றுக் காரிய சித்திகள் கனிகின்றன.
தேனி மலை போன்ற முருகனுடைய மலைத் தலங்களில் மூன்று வேளைகளிலும் கிரிவலம் வருதல் மிகுந்த நலம் பயக்கும் வழிபாடாகும்.  
கரிநாள் வழிபாடாக சனீஸ்வரருக்கு உரிய 8 என்ற எண் சக்திப்படி காலையில் அன்னம், தானியம், காய், கனிகள் என எட்டு வகை தானங்கள்  மதியம் தான் வேறு உடைகளை அணிந்து உடுத்தி இருக்கும் உடைகளைத் தானமாக அளித்தல், மாலையில் தேவபூர்வமாக மந்திரங்களை ஓதி, ஏழை இசைக் கலைஞர்களைக் கொண்டு பாட்டு, இசைக் கருவிகளை இசைத்து வலம் வருதல் ஆகிய மூன்று கால வழிபாடுகள் வயதான தாய், தந்தையர் நல்ல மன அமைதியைப் பெற உதவும்.

வைதிருதி யோகத் தர்ப்பண நாள்

ஒரு குடும்பத்தில் பித்ருக்களின் ஆசிகளை முறையாகப் பெற்று வந்தால், வாழ்க்கையின் பெரும்பான்மையான துன்பங்களுக்குத் தீர்வுகளை மிக மிக எளிதில் கண்டிடலாம். காரணம், தற்போது கலியுக மனிதன் பெற்றுள்ள வீடு, வாசல் பதவி, குழந்தைகள், செல்வம் போன்ற அனைத்து வகை வசதிகளும், ஆஸ்திகளும் மூதாதையர்களின் ஆசிகளால், பூஜா பலன்களால், தான, தர்ம சக்திகளால் விளைந்தவையேயாம். ஆனால் இதனை இவ்வகையில் கலியுக மனிதன் உணராமையால் நன்றி மறந்து வாழ்ந்து பித்ரு சாபங்களைத் தேடிக் கொள்கின்றான். தர்ப்பணம் மூலமே இவ்வகைச் சாபங்கள் பலவும் கழியலாகும்.
இவ்வளவு சக்தி வாய்ந்த, மிகவும் சாதாரண முறையில், ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அளிக்கப்படுகின்ற எள்ளும் நீரும் வார்க்கின்ற மிக எளிமையான தர்ப்பணத்தை கலியுக மக்கள் அவ்வப்போது ஆற்றிட மனம் வைப்பதில்லையே, என் செய்வது?

ஸ்ரீநடராஜ பெருமான்
திருவில்லிபுத்தூர்

ஸ்ரீநடராஜ பெருமான்
சங்கரன்கோவில்

வெறுமனே எள்ளுந் தண்ணீரும் வார்த்தலால் எவ்வாறு மூதாதையராகிய தென்புலத்தார் சாந்தி அடைவர்? எள்ளில் உள்ள பண்பணு அமைப்பு, அவரவர் உடலில் உள்ள பண்பணுவைப் போன்றதாகும்.ஒரு எள் மணியை ஆன்ம நெறியுடன் தொடுகையில் அல்லது தீண்டுகையில் உள்ளுடல் அணுக்கள் அதிர்வு பெறும். ரிப்பன் போலானதான எள்ளின் பண்பணுவில் அவரவர் கை விரல் நுனி பட்டாலே போதும் இதனுள் எண்ணற்ற பண்பணு மாற்றங்கள் தோன்றிப் பரவெளியை அடைகின்றன. சூக்கும ரீதியாக நிகழ்கின்ற இதனை ஆன்மப் பூர்வமாக நன்கு உணர்ந்திடலாம். இதனால்தான் எள்ளை விரல் நுனிகளாலேயே தொட வேண்டும், எள்ளை எந்தெந்த விரல் நுனிகளால் எடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளும் நிறைய உண்டு.
எள் என்பது ஒரு ஜீவிதத் தானியமணி. அதாவது எப்போதும் ஜீவ சக்திகளைக் கொண்டது. வருடங்கள் பல ஆனாலும் அப்படியே நிலைத்து இருப்பது. வீட்டில் எள் இருக்க, இருக்க மிகவும் சுபலட்சணமானது. இதனால்தான் பித்ருக்களுக்கு அதிபதியாகிய பெருமாளுக்கு, நல்லெண்ணெய் கூடிய புளியோதரை மிகவும் ப்ரீதி உடையதாகிறது. உண்மையில் எள்ளின் புனிதம் கருதியே இதனை தானியமாக அவ்வளவாகப் பயன்படுத்தாது, எண்ணெயாக்கி விளக்கேற்றத் தேவையான மங்களகரமான பொருளாக, நல்லெண்ணெயாக மங்களகரமாகத் துலங்குகின்றது. தினமும் எள் எண்ணெயான நல்லெண்ணெயால் தீபம் ஏற்றி வந்தால் (பித்ரு) கடன் அடையும், குலம் தழைக்கும், ஆரோக்யம் பெருகும், சுபம் விருத்தி ஆகும் என, தீப பூஜை மஹிமையில் சித்தர்கள் எள்ளின் சிறப்பைப் போற்றுகின்றனர்.
பித்ரு மண்டலம் என்பது நீரால் சூழப் பெற்றது. எள் செடிகள்தாம் இங்கு தல விருட்சமாகும். எள்ளுடன் நீர் சேர்த்துத் தர்ப்பணம் அளிக்கையில், சூட்சும மார்கமாக எள்ளில் உள்ள பண்பணு யந்திர சக்திகள், நீரோட்ட மார்கமாக, அந்தந்தப் பித்ருக்கள் பித்ரு லோகஙகளில் வழிபடும் எள் தல விருட்சத்தை அடைகின்றன. எனவே பித்ருக்களின் இணைப்பைத் தருவதே எள் தானியமாகும். எள் எண்ணெயாகிய நல்லெண்ணெய் தீபம் அனைத்து ஐஸ்வர்யங்களையும் தர வல்லதெனில் நல்லெண்ணெயின் மூலமாகிய எள்ளின் மஹிமையை என்னென்பது?
தர்ப்பணத்தில் கூட இரு விரல் நுனிகளுக்கு இடையேதான் எள்ளை எடுக்க வேண்டும் என்ற தேவ நியதியும் உண்டு. அதாவது இரு விரல் நுனிகளுக்கு இடையே பத்து, பதினைந்து எள் மணிகளே கொள்ளும். இதற்கே இவ்வளவு மஹிமை என்றால் என்னே எள்ளின் மஹிமை!
ஒவ்வொரு வருடமும் அமாவாசை தினம் மட்டும் அல்லாது விஷ்ணுபதி, மாதப்பிறப்பு, வைதிருதி யோக நாட்கள் என 96 நாட்களில் தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்பு. வைதிருதி யோகம் கூடும் நாளில் மந்தாரை இலை, புரசு இலை, தாமரை இலை ஆகிய மூன்றையும் சேர்த்தோ அல்லது ஏதேனும் ஒன்றிலோ எள், நீர் வைத்துத் தர்ப்பணம் அளிப்பதுடன், ஏதேனும் ஓர் ஏழை நோயாளிக்குத் தக்க சித்த வைத்ய மருந்துகளைப் பெற உதவுவது மிகவும் விசேஷமானது. குறைந்த பட்சம் நன்னாரி சர்பத், வேப்பிலைக் கட்டிப் பொடி சாதம் போன்ற மூலிகை சம்பந்தமானவற்றைத் தானமாக அளித்தல் நன்று. இதனால், கடுமையான நோய்களால் இறந்த வீட்டுப் பெரியோரின் சாயா சரீரம், மேலுலகில் நோய்ப் பிணி பந்தப் பிடியில் இருந்து விடுபட உதவும்.
இவ்வாறு முன்னோர் ஒருவர் சாயா சரீர பந்தப் பிடியில் இருந்து விடுபடுவதால், பித்ரு ஆசிக் குறைவால் மறைந்து தேங்கி இருக்கும் புண்ய சக்திகள் ஆக்கம் பெற்று, குடும்பத்தில் மள மளவென்று காரிய சித்தி பெறத் துணை புரியும். வ்யதீபாத யோக நாட்களிலும் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலம்.

ஆயுள் பெறும் சத்திய சக்தி

கண்ணகி சத்தியத்தை அக்னி வடிவில் தரிசித்தவள். மஹாத்மா காந்தி சத்தியத்தை ராமநாம சக்தி வடிவில் தரிசித்தவர். இவ்வாறு சத்தியம் பல்வகைகளில் பரிணமிக்கும்.
சப்தமி கூடும், மகத்தில்தாம் சத்திய லோகத்தில் சத்திய நதி ஜீவிக்கின்றது. எப்போதுமே நீரின் நடுப் பகுதி சத்தியப் பகுதி, அடிப் பகுதிக்கும் அடியில் உள்ள மறை(வு)ப் பகுதி சரஸ்வதி லோகப் பகுதி. இதனால்தான் முக்கூடலாம் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடங்களில் சரஸ்வதி அந்தர்யாமியாக, மறைநதியாக இருக்கும்.
ஒரு ஆற்று நீரைச் சிறு குவளையில் முகந்து ஊற்றுகையில், அதன் நடுப் பகுதி சத்திய சக்திகள் நிறைந்ததாய் விளங்கும். இதனால்தான் நம் பெரியோர்கள் தம்ளரில் நீர் அருந்துகையில் முதலில் சிறிது நீரைப் பூமியில் ஊற்றி விட்டு, மத்தியப் பகுதியை அருந்தி, நிறைப் பகுதியைத் தம்ளரில் சிறிது வைப்பர். அதாவது பிருத்வி லோகம், சத்திய லோகம், சாங்க்ருத லோகம் ஆகிய மூன்று பகுதிகள் நீரில் உண்டு. இதன் முப்புரிப் பகுதிகளும் காரியத் தன்மைகளுக்கு ஏற்ப மாறுபடும். இதனால்தான் புனித நீரைச் சிரசில் தெளித்துக் கொள்தல், ஆசமனம் எனப்படுவதான புண்ணிய நீரை மூன்று முறை அருந்துதல் போன்றவற்றில் மூன்று முறை நீரைத் தலையில் தெளித்துக் கொள்தல், மூன்று முறை அருந்துதல் போன்றவை மும்மூன்று முறை நிகழ்வதாகும்.

ஸ்ரீஉஜ்ஜீவநாதர் தெப்பக்குளம்
உய்யக்கொண்டான்மலை

ஆயுள் என்பதற்கு சத்தியம் என்றும் பொருளுண்டு. ஆயுளை விருத்தி செய்யும் மக நட்சத்திர தினம், ஆயுள் பலம் தரும் சப்தமிதித் திதி, பிராண சக்தியை மேம்படுத்தும் விஷ்கும்ப யோகம் போன்ற காலப் பரிமாணங்கள் ஆயுளின் சத்திய சக்தியை மேம்படுத்த உதவுகின்றன.
போட்டோ எடுத்தால் ஆயுள் குறையும் என்ற வாக்கு நியதியும் நிலவுகின்றது. இது சில வகைகளில் உணமையே! அதாவது புகைப் படம் என்பது நிழல் படமாக. உண்மையின் பிரதியாகவே இருப்பதால் சத்தியத் தன்மையை அது மங்கச் செய்கின்றது. இதற்காகத்தான் போட்டோ எடுக்கும் போது
காகுத்தாய நம: எனவும், தீர்க்காயுசு என்றும் சொல்லி போட்டோ எடுக்க வேண்டும். காகுத்தர் என்ற மாமுனி சனீஸ்வர லோகத்தில், மனக் கண்ணாலேயே பிரபஞ்ச சம்பவங்களைக் காண வல்லவர். வாயிலார் நாயனார், பூசலார் நாயனார் இந்த லோகத்தைச் சார்ந்தவர்களே!
உலகில் அனைத்தும் சூரிய, சந்திர சாட்சியாக நிகழ்வதென சத்தியப் பிரமாணம் ஒன்றுண்டு. இதனால்தான் அக்காலத்தில் மாமன்னர்கள் ஆலயங்களுக்குக் கொடையாக, நீர், நிலபுலன்களை அளிக்கையில், சூரிய, சந்திரன் உள்ள வரை இது செல்லுபடியாகும் என முத்திரை இடுவார்கள். முத்திரை சத்திய சம்பந்தமாக்கிட நீரில் நனைத்து இடுவர். சூரிய, சந்திர சாட்சியற்ற தேவாதி, தேவ, தெய்வீக அனுபூதிகளையும் காண வல்லாரே காகுத்த மாமுனி! எனவே. போட்டோ, வீடியோக்களைக் காமிராவில் எடுக்கும் போது,
ஓம் காகுத்தாய நம:

காகுத்த மாமுனியே போற்றி
என ஓதி எடுத்தலே சிறப்படையதாகும்.
நிறைய நீர் அருந்துதல், நீர் வகை உணவருந்துதல், பன்முறை பல நீர் நிலைகளில் (ஆறு, குளம், கேணி) நீராடுதல், இறைவனுக்குப் பல்வகை அபிஷேகங்கள் (குறைந்தது 8 வகைகள்), அப்பு சக்திகள் நிறைந்த தலங்களில் வழிபடுதல் (திருவானைக்காவல், ஆலயத்தினுள் குளங்கள், தீர்த்தங்கள் உள்ளவை, நீர் சுரக்கும் ஆலயங்கள்) பாயசம், பானகம், பழரசம் படைத்துத் தானமளித்தல், வீட்டில் ஒரு பாத்திரத்தில் நீர் வைத்து இதில் மிதக்கும் விளக்கில் தீபம் ஏற்றுதல் போன்று நீர் வகை வழிபாடுகளை ஆற்றி,
உஜ்ஜீவநாதாய ஜ்வால ஜல பராக்ரமாய நம:
அனல்வழி, அக்னி வழி ஆத்ம வழியெம்போதி
உஜ்ஜீவ உலகாளும் ஒருமறைச் சிவனே போற்றி, போற்றி, போற்றி
எனப் பன்முறை ஓதி வழிபடுதலால் நீர் வகை நோய்களால் அவதியுறுவோர் நலம் பெற வழி பிறக்கும்.

கால பைரவ அஷ்டமி

அட்டமத்தில் சனி என்ற மொழி வழக்கு ஒன்று உண்டு. அதாவது, ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து எட்டாமிடத்தில் சனிக் கோள் இருப்பதாகிய நிலை, ஜோதிடத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. எட்டாமிடக் கோள் இருப்பால், பல சம்பவங்களை வாழ்க்கையில் அனுபவிப்போர், தேய்பிறைக் காலபைரவ பூஜையை நன்கு பக்தியுடன் ஆற்றி வர, பூர்வ ஜன்ம கர்ம வினை அழுத்தங்கள் தணிந்து, கோள்களும் சாந்தமுறும் நல்வரநிலை தோன்றும்.
எனவே, அனைத்து வகை தோஷங்களையும், துன்பங்களையும் நீக்க வல்லதுடன், வாழ்க்கையைச் செம்மைப்படுத்த உதவுவதுமாகிய ஒருமித்த வழிபாடே குளிகை நேர ஸ்ரீபைரவ உபாசனையாம். துறவிகள் முதல் இல்லறத்தார், குழந்தைகள் வரை அனைவருக்கும் ஏற்றது.

ஸ்ரீபைரவமூர்த்தி
கரிவலம்வந்த நல்லூர்

தேய்பிறை அஷ்டமிக் குளிகை நேரமே ஸ்ரீமஹாகாலபைரவர் உதித்த நன்னாள். மிகவும் சக்தி வாய்ந்த பூஜைத் திருநாள். எனவே ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை போன்று, குளிகை கால பைரவர் பூஜை மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.
ஸ்ரீசனீஸ்வரர் பிரபஞ்ச ஜீவ நலன்களுக்காகத் தவம் புரிந்ததும், ஈஸ்வரப் பட்டம் பெறத் துணை புரிந்த நேரமும் குளிகை நேரமுமாகும். கும்பகோணம் அருகே சோழபுரத்தில் உள்ள ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயமே ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி அன்றும், இன்றும், என்றுமாய் ஸ்ரீமஹாபைரவேஸ்வரரை வழிபட்ட தலமாகும்.  
பூர நட்சத்திரத்திற்கு பக்தியால், அன்பால் இணைக்கும் தெய்வீகப் பண்பு உண்டு. அதாவது ஒன்றனுள் ஒன்றாக அமைவது பூரத்தின் மாண்பு. கற்பூரத்தினுள் அக்னியை ஜோதியாக வெளிப்படுத்தும் பூராக்னி சக்தியுள்ளது. எனவே பூர நட்சத்திர தினத்தன்று
இனிப்பு அல்லது காரத்தால் ஆகும் உணவுப் பண்டங்களை ஸ்ரீகாலபைரவருக்குப் படைத்து,
முதலில் காக்கைக்கு வைத்து, காக்கைகள் உண்ணும் ஆனந்தக் காட்சியைக் கண்ட பின்,
பலருக்கும் தானமளித்து, தானம் பெற்றவர் உண்ட காட்சியைக் கண்ட பின்,
தான் உணவேற்பது - பூரத்துடையவர் என்ற அரிய விரதமாகும். குடும்ப ஒற்றுமைக்காக, ஸ்ரீராமானுஜர் போதித்த பூரச் சுடர் பூஜைகளில் இதுவும் ஒன்று. பூரத்துடையவர் உணவெனில் கொழுக் கட்டை, சுய்யம், போளி, வடை போன்று ஒன்றினுள் ஒன்றை வைத்துப் பூரண உணவாக்குவதாகும். மேலும் ஸ்ரீகாலபைரவரைப் பூஜித்து, கால்கள் நன்கு வலிக்கும் வண்ணம் காலாற வெகு தூரம் அல்லது நீண்ட நேரம் ஆலயப் பிரதட்சிணம் செய்து வலம் வருதலும் நன்மை பயக்கும். இதனால் வெகுண்டவர் மனம் மாறி சாந்தமாகப் பழகவும் அருகருகே உள்ள பகைமை மாறவும் உதவும்.
இரவு கால காலபைரவர் பூஜை நேரத்தில் (பள்ளியறைப் பூஜைக்கு அடுத்தது) முழு முந்திரி கலந்த பால் தானம் அளிப்பதும், குடும்ப ஒற்றுமையைப் பேண உதவும். சரியாக முகம் கொடுத்துப் பேசாத கணவனும், மனைவியும், பெற்றோர்களும், மாமனார், மாமியாரும், உயர் அதிகாரிகளும் அன்புடன் உரையாட வழிவகுப்பதே பூரமும் அஷ்டமியும் இணையும் திருநாளாகும் !

கண்ணொளி சிறக்க ...

தற்காலத்தில் நாற்பத்தைந்து வயதைத் தாண்டிய உடனேயே, 99 சதவிகிதமான உலக மக்கள் கண்களுக்குக் கண்ணாடி அணியத் தொடங்கி விடுகின்றனர். இதிலும், சினிமா, தொலைக் காட்சியையே எந்நேரமும் கண்டு, கண்டு, தீயொழுக்கத்தில் சிக்கி, பள்ளி, கல்லூரிப் பருவத்திலேயே பிள்ளைகள் கண்ணாடி அணிகின்ற வேதனையையும் உலகெங்கும் காண்கின்றோம். இதற்கு ஆன்மீக ரீதியாகப் பல காரணங்கள் உண்டு.
நம் முன்னோர்கள் முறையான சூரிய நமஸ்கார யோகப் பயிற்சிகள், துவாதசி மற்றும் மகம் நாளில் அகத்திக் கீரை உணவு என்ற வகையிலான அந்தந்த நாளுக்கான சத்துள்ள உணவு வகைகள், ஒழுக்கமான மன உடல் உள்ளப் பாங்குகள் போன்றவற்றுடன் திகழ்ந்தமையால், கண்ணாடியின்றி 70 வயதிலும், நன்குப் படிக்கவும், தெம்பாக இருளிலும் தட்டுத் தடுமாற்றமின்றி நடக்கவும் செய்தனர். நிறையக் குழந்தைகளைப் பெற்று அவற்றைக் குடும்பப் பாங்குடன் வளர்த்து ஆளாக்கிய கடமைப் பூர்வமான வாழ்வும், கபால நாடிகளை நன்கு விருத்தி செய்தமையால், நல்ல கண் பார்வையுடன் அவர்கள் இறுதி வரை பொலிந்தனர். ஆனால் இவையெல்லாம் மறைந்து வருவதால் நடு வயதிலேயே கண் பார்வை பழுது பட்டுக் கண்ணாடியை நாட வேண்டியதாகின்றது.
மேலும் நடப்புக் கலியுகத்திலோ, மின் ஒளியிலேயே எப்போதும், குறிப்பாக இரவு முழுதும் பழகியிருத்தல், அலுவலகங்களில் எப்போதும் அதிப் பிரகாசமான டியூப் லைட் வெளிச்சத்தில் - பட்டப் பகலிலும் கூட - வெளிச்ச தோரணையிலே வேலை செய்தல் போன்றவை கலியுகத்தில் கண் பார்வையை மிகவும் பாதிக்கின்றன. மேலும் கம்ப்யூட்டர், சினிமா தியேட்டர், தொலைக் காட்சி இவற்றின் முன்தான் சிறு பிள்ளைகள் முதல் முதியோர்கள் வரை அனைவருடைய தினசரி வாழ்க்கையும் விரயமாகி, எவ்விதப் பயனுமின்றிக் கழிவதால், கண் நாளங்கள் மிகவும் பலவீனமடைகின்றன.
மேலும் கண் பார்வை மங்குவதற்கு மேலும் நிறையக் காரணங்கள் உண்டு. உண்மையில், ஆயிரக் கணக்கான கர்ம வினைக் காரணங்களும் இதற்கு உண்டு. அவற்றையெல்லாம் இங்குப் பட்டியல் இட முடியாது. குறித்த சிலவற்றை எடுத்துச் சொன்னாலும், நாமா இத்தகைய கர்ம வினைகளையா செய்து விட்டோம் என்று மனம் முதலில் நம்பாது, நம்பிடினும், மனம் பதறி, உள்ளம் சோர்ந்து, இப்போது இருக்கின்ற மனோ தைரியமும் ஓடிப் போய் விடும்.
மிகவும் நல்லவர்களாக வாழ்பவர்களுக்கும் கூட, குறைந்த, நடுத்தர வயதிலேயே கண்ணாடி அணிகின்ற நிலை ஏற்படுகின்றது. மிக மிக நல்லவர்களாக வாழ்பவர்கள், பொதுவாக, பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும், உற்றாரிடமும் மிகவும் வாஞ்சையாக இருப்பார்கள். எனவே, அவர்களுடைய துன்பங்களைக் கண்டு, இவர்கள் வேதனைப் பட்டுப் பூஜைகள் ஆற்றும் போது, அவர்களுடைய கர்ம வினைச் சுமையைத் தியாகமயமாக இவர்கள் தங்களையும் அறியாதும், வெளிச் சொல்லாதும் தாங்குவார்கள். இவ்வகையிலும் இவர்களுடைய உடலும், பார்வையும் பாதிப்படையும்.
பொதுவாக, மகான்கள், துறவிகள், சற்குருமார்கள் தம்மிடம் அன்பு மரியாதை, பக்தி, ஆழ்ந்த நம்பிக்கை பூண்டு, ஆசி பெற வீழ்ந்து வணங்குகையில், இத்தகைய உத்தமர்கள் தம்மை வணங்குபவர்களுடைய கர்ம வினைச் சுமைகளைத் தம்முள் ஏற்பதால், அவர்களுக்கும் சில வகைகளில் உடல், மன, உள்ள பாதிப்புகள் ஏற்படும். எனவே, இவ்வளவு பூஜை சக்திகள் நிறைந்த சற்குருவிற்கு ஏன் இவ்வளவு துன்பங்கள் ஏற்படுகின்றன என்று எண்ணுவது அறியாமையால்தாம்!
பூலோகத் தர்மச் சட்டம் யாதெனில், அவரவர் செய்த கர்ம வினைகளின் இன்ப துன்பங்களை, அவரவரோ அல்லது ஆன்மீகப் பூர்வமாக பிறரேனும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதே! இத்தகைய தர்மச் சட்டத்தை மதித்தே உத்தமர்கள் தாமே முன் வந்து, தம் அடியவர்களின் குற்ற வினை விளைவுகளைச் சுமந்து, ஏந்தி, அனுபவித்து நடக்கின்றனர்.
கலியுகத்தில் சூரிய வழிபாடு மங்கி வருவதாலும் கண் பார்வை மங்குதலும் ஏற்படுகின்றது.. ஒரு விதத்தில் பார்க்கப் போனால், கண்களால் பார்த்து ஏற்படுகின்ற (தவறான மன) உணர்வுகளால் செய்கின்ற குற்றங்களே மிக மிக அதிகமாகும். கண் பார்வை மங்குதலும் இறைச் செயலே, பூர்வ வினை விளைவானதே என ஆன்மீக ரீதியாக, ஏற்கக் காரணமே, வயதான பின் கண் பார்வை குறைவால் பாவ வினைகளைப் புரிதலும் பெருமளவில் தணிந்து, இறைவனை நோக்கிய உள்பார்வை வாழ்வு அமைய உதவுகின்றது அல்லவா! இளமை, வலிமை, பணபலம் இருக்கும் போதுதானே மனிதன் (தீ வினைகளில் புகுந்து) அகங்காரம், ஆணவத்தால் ஆட்டமாய் ஆடி, நோய், முதுமை என வரும் போது தானே சற்றே ஓயலாகின்றான்.

ஸ்ரீதழுவக்குழைந்த நாயகி
பழையாறை கும்பகோணம்

மனக் கண் சக்திகள் விளைகின்ற நேத்திர பல தினமே திங்கட் கிழமையாகும். சோம நேத்திரப் புழி என்ற ஒருவகை மூலிகையானது, சந்திர ஒளியில் மட்டுமே பூரித்துப் பூக்கும். இதனைப் பக்குவப் படுத்தி, காலை, மதியம், மாலை ஆகிய முன்று வேளைகளிலும் கண்களில் வைத்து வந்தால் காடராக்ட் சதை கரைதலும், வராமல் தடுத்தலும் எளிதாகும்.
சந்திர மண்டலமே மூலிகை மண்டலமாகும். எனவேதான் ஓஷத (மருந்து) சக்திகள் நிறைந்ததாய்ச் சந்திர மூர்த்தி வழிபாடும், பெளர்ணமி பூஜையும் போற்றப்படுகின்றன. ஒவ்வொரு பெளர்ணமியிலும் கோடிக் கணக்கான மூலிகைச் சக்திகள் பெளர்ணமிக் கிரணங்களில் பிரதிபலிக்கின்றன. எனவேதான் பெளர்ணமியில் அருணாசல கிரிவலம் மேன்மை கொண்டதாகின்றது. ஸ்ரீசோமநாதர், ஸ்ரீசோமேஸ்வரர், ஸ்ரீசந்திசேகரர், ஸ்ரீசந்திரமெளலீஸ்வரர் போன்ற சந்திர நாமங்கள் உடைய மூர்த்தித் தலங்களில் வழிபடுதலும் கண்களுக்கு நலந் தரும்.

குறிப்பாக, காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீநிலாத்துண்டப் பெருமாளுக்கு, கண்களில் வெண்ணிற நறுமணப் பூக்களைச் சார்த்தி பூஜித்து, வெண்ணிற ஆடைகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால், கண் சம்பந்தப் பட்ட நோய்கள் தணிய உதவும். திங்கட் கிழமை சந்திர ஹோரை நேரத்தில், ஒரு கட்டுத் தர்பையை வில்வம், துளசி, தேன் கலந்த தீர்த்தத்தில் நனைத்து வைத்து வலது கரத்தில் தர்பையைப் பிடித்துக் கொண்டு, கீழ்க்கண்ட துதியைத் தொடர்ந்து சந்திர ஹோரை நேரம் முழுதும் ஓதி,
நேத்ர பூஷண நிமலானந்தச் சக்கர வியாபி:
சந்த்ராத்மானந்த சங்கர நேத்ராலய தரிசனாம்போதி:
பாஸ்கர நேத்ரம், பவச் சந்த்ர நேத்ரம், மத்யாக்னி நேத்ரம்
த்ரைலோக்ய நேத்ராதி விபூதி மஹேஸ்வராம்பர:
கண்ணுதலைக் கடந்தான் கடம்பேசன் காரகமாம்
எண்ணுதலுக் கேகாத எழிலார்ந்த ஏரகத்தார்
பண்ணுதலில் படராத பரஞ்ஜோதி பாரப்பன்
உண்ணியே உண்! உளமாறவேயாக!
தர்பையையும், தீர்த்தத்தையும் தென்னை மரத்தடி பூமி மண்ணில் இட்டு, இளநீர் தேவதைகளின் திருவருளை வேண்டிப் பிரார்த்தித்தலால், கண் நோய்களால் ஏற்படுகின்ற கடுமை தணிய உதவும். இளநீர்க் குழம்பு எனப்படும் ஆயுர்வேத மருந்து கண் நோய்களுக்கான அருமருந்தாகும் என்பது குறிப்பிடத் தக்கது.
 

மனதையும் அடக்கலாம் !

பலருக்கும் தம் மனதை அடக்க முடியவில்லையே என்ற குறை நிறைய உண்டு. மனம் நிறைய கல்மிஷங்களையும், ஆசைகளையும் வைத்துக் கொண்டு மனமடங்க வேண்டும் மனமடங்க வேண்டும் எனில் எப்படி முடியும்?
மனமடங்கும் நாள், யோகசக்திகள் பொங்கும் நாள், காம சக்திகள் இல்லற தர்மத்தை ஒட்டி முறைப்படுத்தப்படும் நாள், பேராசைகள் தணியும் நாள் என அந்தந்த நாளுக்குரிய ஆன்மீகப் பலன்கள், லெளகீகப் பலன்கள் அதாவது வாழ்க்கையை ஒட்டித் தேவையானவற்றைப் பெறுதல் எனவும் உண்டு. எனவே அந்தந்த நாளில் குறித்த வழிபாடுகளை முறையாகக் கடைபிடித்திடில், அந்தந்தக் குறைபாடுகளை வாழ்க்கையில் அவ்வப்போது நிவர்த்தி செய்து வந்திடலாம். இல்லையேல் அந்தந்தக் குறைகள், வினைகளின் வீக்கமாக பலத்து வீங்கி கடுமையான கர்ம வினைகளாகப் பெருத்து அழுத்தும்.
பொதுவாக நெருப்புக்கு அழுக்கு, ஆசை, பற்று, பந்தம் போன்றவற்றையும் மற்றும் தன்னுள் இடப்படும் எதனையும் பஸ்மமாக்கும் யோகாக்னி சக்திகள் பல்வகைகளில் நிறையவே உண்டு. உணவு வகைகள், நெருப்பில் நேரடியாக உஷ்ணத்தைப் பெறாது, பாத்திரங்கள் மூலமாக சூடு பெறுதலும் அக்னி மார்கமாக சாராக்னி வகை ஆகும். சுவாசமும் உடலில் ஹோமாக்னிச் சுடரை எழுப்புவதேயாகும். மூச்சுக் காற்றில் உள்ள சூட்டை வைத்து அந்தந்த நாளின் கர்மச் சுமையை அறிதல் முடியும்.
சூரியனும், செவ்வாயும் நெருப்புக் கோளங்கள் ஆயினும் வெவ்வேறு அக்னி சக்திகளைப் பூண்டவை! ஸ்கந்தாஸ்ரீபுராக்னி என்பது கையைச் சுடாது, மிகவும் குளுமையாக இருக்கும் அக்னி வகை ஆகும். சீதளநாயகி (குளிர்ந்த நாயகி) என்ற பராசக்தி அம்ச அம்பிகை இதனைத் தோற்றுவிக்கின்றாள். சீதளநாயகி தவம் புரியும் தலங்களில் அருகருகே குளிர் நீர் மற்றும் வெந்நீர் ஊற்றமையும். செவ்வாயன்று இவற்றில் ஸ்ரீசீதளநாயகியின் கருணை வேண்டி நீராடிடில் கன்னிப் பெண்கள் நல்ல திருமண வாழ்வைப் பெற்று, நல்ல சுகப் பிரசவத்துடன் தக்க சந்ததிகள் தோன்றிட உதவும்.
கையில் கற்பூராக்னியைத் தாங்குதல், வயிற்றுக்குள் நெருப்பைச் செலுத்துதல் போன்ற அக்னி வகை சித்திகள் ஸ்கந்தாக்னி, மாருதவீராக்னி, புண்டரீகாட்ச அக்னி போன்ற யோக சக்திகளால் எழுபவையாகும்.
புனிதமான கற்பு என்பதும் சாக்தபுராதி தேவாக்னி வகையைச் சார்ந்தது. கண்ணகியும், சத்தியவான் சாவித்திரியும் நிலைநாட்டி வழிகாட்டும் கற்புத் தன்மையில் பொங்கும் அக்னி மிக மிக சக்தி வாய்ந்தது. அகிலத்தையே பஸ்மப் பிரளயத்தில் மறைத்துப் புனிதப்படுத்த வல்லது. அக்னிக் கோளமான செவ்வாய் (குஜன்) மங்களாக்னி வகை சக்திகளையும் பூண்டதாகும். எனவேதான் மங்கள வாரம் எனப் போற்றப் பெற்று, பெண்களுக்கான எண்ணெய் நீராட்டு நன்னாளாக வெள்ளி போலமைந்து, செவ்வாய்க் கிழமை பூஜையானது புனிதமான மங்கள, கற்பு, மாங்கல்யபல சக்திகளை அளிக்க வல்லதாகும்.
மேலும் செவ்வாய்க் கிழமைக்கான விசேஷமான ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜையில் எலுமிச்சை உறை தீப வழிபாடும் செவ்வாய்க் கிழமையில் உறையும் மங்களாக்னி சக்திகளை நன்கு உணர்விக்கின்றது.
ஆனால் செவ்வாய்க் கிழமை ராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜையைப் பரிபூரணமாக்கும் ஒரு நல்வழி முறையைப் பலரும் அறிவதில்லை! எலுமிச்சை உறை தீபம் சாந்தமாகும் வரை அருகிருந்து ஸ்ரீதுர்க்கை நாமங்களை ஓதி இறைச் சிந்தனையுடன் துலங்குவதுடன், ராகு காலம் முடிந்ததும் ஸ்ரீதுர்க்கை சன்னதியை நன்கு சுத்தப்படுத்தித் தருதலால், ஸ்ரீதுர்க்கை பூஜா பலன்களும் பல்கிப் பெருகி விருத்தி ஆகின்றன.
இத்தகைய மங்களாக்னி சக்திகள் நிறைந்த எத்தனையோ செவ்வாய்க் கிழமைகள் நம் வாழ்வில் வந்து சென்றுள்ளன. இவற்றுள் எத்தனை நாட்களை ஆன்மீகம் செறிந்த வகையில் ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளீர்கள் என நீங்களே மன ஆய்வு செய்து கொள்ளுங்கள்!
நம் கபாலத்தில் ஒளிப் பரல், ஒலிப் பரல், கணப் பரல், சுடர்ப் பரல், சாந்தப் பரல் என - 27 நட்சத்திரங்கள், 15 வளர்பிறைத் திதிகள், 15 தேய்பிறைத் திதிகள், 27 யோகங்கள், 11 கரணங்கள், 4 (சித்தயோக, அமிர்த யோக யோக வகைகள்) என்ற அளவில் அந்தந்த நாளுக்குரிய 5 வகைப் பஞ்சாங்கக் கால அமைப்பை ஒட்டி எண்ணற்ற வகையில் உள்ள அந்தந்தக் கபாலப் பரல்கள் ஆக்கம் பெறும். இவற்றின் விரிவுகள்தாம் அஷ்டாம்சங்கள், துவாதாம்சங்கள், நவாம்சங்களாக ஜோதிடத்திலும் விரிவு பெறுகின்றன. பரல்பரிச் சுடராக்னிகள் தசமித் திதி கூடும் தேய்பிறைச் செவ்வாயன்று நன்கு பூரிக்கும்.
இவை பொலியும் அக்னியாம்சங்கள் கரி அடுப்பு, விறகு அடுப்பு, (நீலிபிருங்காதி வகையிலான) நெல்லிக் காய்த் தைலம் மெழுகுவர்த்தி, மரிக்கொழுந்து மற்றும் மல்லிகை மண ஊதுபத்தி போன்றவையாகும். எனவே இவற்றைப் பயன்படுத்தி அமையும் தீபம், பூஜைகள், உணவு வகைப் படையல் மற்றும் தானம் பரல்பரிச் சுடராக்னி சக்திகளைப் பெற்றுத் தருவதாகும். இதனால் கிட்டும் பலன்கள் அளப்பரியன. திருஷ்டி தோஷங்களால் அடிக்கடி அடிபடும், நோய்வாய்ப் படும் தோஷ விளைவுகள் தீர உதவும்.
மேலும் பல பெற்றோர்கள் மெலிந்திருத்தல், அழகின்மை, கறுத்திருத்தல், தலைமுடி வளர்த்தி இன்மை - என்றவாறாக எதையேனும் தன் பிள்ளைகளின், பெண்களின் குறைகளாக அறியாமையால் எண்ணி நாள்தோறும் மனதினுள் புலம்பி உள்ளூர அழுது கிடப்பர். ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு அவயமும் அவரவருடைய பூர்வ ஜன்மப் பலாபன்களால் அமைவதே, இதில் வருந்துவதற்கு எதுவுமில்லை. பெறுதற்கரிய மானுடப் பிறவியையும், ஈடில்லாப் பிள்ளைச் செல்வத்தையும் தந்தமைக்காக இறைவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் நன்றி பிரார்த்தனை உருவாகிடில் இத்தகைய மனக் கவலைகள், கறைகளாகத் தோன்றா. தினமுமே செவ்வாய் ஹோரையில் மரிக் கொழுந்து, மல்லிகைப் பூக்கள், நறுமண தூபங்கள் கொண்டு வழிபட்டு வர, பெற்றோர்களின் மனதை ஆக்கிரமிக்கும் மேற்கண்ட வகையான தேக்க எண்ணங்கள் பஸ்மமாகி நல்ல சாந்த சக்திகள் நிரவிட உதவும்.

எண் பதினொன்றின் மகத்துவம்

பஞ்சாங்கம் கூறும் பஞ்சகால அங்கங்களுள் ஒன்றாகத் திதிகள் அமைகின்றன அல்லவா! இவ்வாறு திதிகள் தோன்றியதும் பல புராண அனுபூதிகளின் பயனாகவேயாம். பலரும் எண்ணுவது போல பதினாறு திதிகளும் ஒன்றாக ஒரே சமயத்தில் அமுலுக்கு வந்து விடவில்லை. மஹாப் பிரளயத்திற்குப் பின் பிரம்ம மூர்த்தி, சிருஷ்டிக்கு வித்திட்ட போது, சிருஷ்டிக்கு உகந்த காலமே ஏகாதசி எனப் பெயரிடப்பட்டுப் பலவிதமான ஏகாதசித் திதிகள் தோன்றிடவும் வித்திடப்பட்டன. இவ்வாறாகவே, ஒவ்வொரு ஏகாதசித் திதிக்கும் ஒவ்வொரு பெயரும் விதவிதமான பலன்களும் உண்டு.
உண்மையில் கடவுளை வணங்காதோர். நம்பாதோர் என்று உலகில் எவருமே கிடையாது. ஏனெனில் விழித்த நிலையில் எத்தகைய கொள்கைகளைப் பூண்டிருந்தாலும், உறக்கத்தின் போது நிலைகள் மாறுபடுகின்றன அல்லவா! எனவே மனிதன் ஒரே மனிதனாகவே எப்போதும் இருப்பதில்லை! உறக்க நிலையில் அனைவரும் கடவுளை வணங்குவோரே! மேலும் நம்பிக்கையற்ற நிலையின் தன்மைகளும் விநாடிக்கு விநாடி மாறிக் கொண்டே இருக்கும். சிறப்பாக ஏகாதசி திதி அன்று உலகின் அனைத்து ஜீவன்களும் இறைவனைப் பற்றி ஒரு விநாடியேனும் சிந்தித்தே ஆக வேண்டும் என்பது இறை நியதி. அவ்வாறு சிந்திக்கையில், ஏகாததம் என்ற மனக் கிரணக் கதிர்கள் எழுகின்றன. ஏகாதச ருத்ர மூர்த்திகள் இத்தகைய ஏகாதசக் கிரணங்களைப் பயன்படுத்திப் பதினோரு வகையான பதிக சக்திகளாக மாற்றித் தருகின்றனர். இதனால் தேவாரம், திவ்யப் பிரபந்தம் போன்றவற்றில் உள்ள பதிகம் எனப் பெறும் பத்துப் பாக்கள் தொகுதியை ஓதி, இறைவனை வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

பாணலிங்க மூர்த்தி
திருத்துறைப்பூண்டி

பதினொன்றாவதாக பதிகப் பலன் பாடல் அமையும்.
ஏகாதசத் துதி ஓதி எழுச்சியுறல் எம்பாவாய்
சாகாவர நிலையும் சத்தியமாய் ஆகுதப்பா
ஓங்கார வதிச்சாரம் ஓத குருவாய் மொழியாம்
ஏகாதச வாரம் எம் பெருமானடைவாரே !
இதனை ஓதி நிறைவு செய்தல் விசேஷமானதாம்
பதினொன்று என்ற எண் நல்ல நிறைவைத் தரும் சக்திகளைப் பூண்டதாகும். விரல்களை எண்ணுகையில் பதினொன்று என வருகையில் சுண்டு விரலில் புதியதாகத் தொடங்கி ஒரு நிறைவான ஆரம்பத்தைத் தருகின்றது அல்லவா! ஆசனங்களைப் பயிலும் போதும் பதினோரு ஆசனங்களுக்கு ஒரு முறை இடைவெளி தரப்படும். இடைவெளி எனில் இடம் விடுதல் அல்ல அடுத்ததானது முதல் பகுதியின் நிறைவாகத் தொடங்குதல் என்று பொருள். மெதுவாக சுகாசனம், பத்மாசனம் என்று பதினோரு ஆசனங்களை ஏகாதசி அன்று ஆரம்பித்துப் பழகி வருதல் நலம். அதிக சிரமமின்றிப் பயின்று வாருங்கள்.
வியாபாரத்திலும் பதினொன்று என்ற எண் நல்வரங்களைத் தருவதாகும். வியாபார இடத்தில், அலுவலகத்தில் நாற்காலிகள், டப்பாக்கள், ஜாடிகள், ஜன்னல்கள் போன்று 11 என்ற எண்ணில் வருமாறு வைத்திடில் வியாபாரத்தின் பல அம்சங்களில் நிறைவைப் பெற்றுத் தரும்.
நாள், திதி, நட்சத்திரம் போன்ற பஞ்ச (5) அங்கக் காலப் பகுதிகளில் பவம், பாலவம், கெளலவம் என்பதான பதினொரு வகைக் கரணங்கள் உண்டு. சுபமுகூர்த்த நாளைக் கணிக்கையில் - விவசாயத்திற்கு என்றில்லாது - கரணத்தையும் சேர்த்துப் பார்ப்பது மங்களத்திற்கு நல்ல நிறைவைத் தரும்.
சுவாசத்திற்கும் நிறைவு தருவதே 11 வகைச் சுவாசங்களாகும். சுவாசத்தில் கூட, முழுமையான நிறைவு வந்தது என்ற ஆனந்தப் பெருமூச்சே எப்போதும் 11 அங்குலத்திற்கு பிராணாயாம யோகக் கணக்கில் நீண்டு முன் வந்து நிற்பதாகும்.
ஏகாதச ருத்ர பாராயணம் என்ற முறையில், ஒரு முறை முழு ருத்ர மந்திரங்கள் - பிறகு சமக மந்திரத்தின் ஒரு அனுவாகம், பிறகு முழு ருத்ர பாராயணம் - பிறகு சமக மந்திரத்தின் இரண்டாவது அனுவாகம் என்பதாகப் பதினோரு முறை ருத்ர மந்திரங்கள் ஓதி, சமகம் ஓதுதலே ஏகாதச ருத்ர பாராயணமாகும்.
இவ்வாறு ஏகாதச திதி நாட்களில் ஏகாதச ருத்ரப் பாராயணம் ஓதுதலும்,
11 செங்கல் வைத்து ஹோமம் ஆற்றுதலும்,
11 முறை தேவாரத் திருத்தாண்டகப் பாடல்களைப் பாடுதலும் மிகுந்த புண்ய சக்திகளை அளிப்பதாகும். இதனால் வாழ்வில் எதில் மன நிறைவு இல்லையோ அதில் மனநிறைவுப் பெற உதவும். மேலும் ஏகாதச ருத்ர மூர்த்திகள், 11 பாண லிங்கங்களின் தரிசனத்தைப் பெற்று ஏதேனும் பதிகங்களைப் பாடிப் பரமனைத் தோத்துதலால் செய்து முடிக்க வேண்டிய நிறைவுநாள் நெருங்கியும் காரியம் முடியவில்லையே எனப் பதைபதைப்போர் மனம் சாந்தமுறும் வகையில் நற்காரியங்கள், நல்உதவிகள் கூட உதவும்.

குருவார பிரதோஷ மகிமை

வியாழனன்று பிரதோஷ வழிபாடு அமைதல் குருகுந்தள சக்திகளை, உத்தமர்களின் நல்ஆசி நிரம்பிய நல்வரங்களாகப் பெற்றுத் தருவதாகும். குந்தளம் எனில் முன்னும். இருப்பும், பின்னுமாகப் பொலிந்து நல்வரங்கள் நன்கு விருத்தி அடைய உதவுவதாகும். உதாரணமாக குருவாரப் பிரதோஷ பூஜா பலன்கள்,
முன்னுமாக - முன்னோர்களின் நன்னிலைகளுக்கும்,
இருப்பாக - அதாவது நடப்பு வாழ்வு வாழ்விற்கும்,
பின்னுமாக - வருங்காலச் சந்ததிகளுக்கும் நல்ல பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
பிரதோஷ பூஜையின் மகத்துவம் யாதெனில், இதில் திரள்வது புண்ய சக்திகள் மட்டுமல்ல, இறைவனே பிரதோஷ நேரத்தில் திருநடனக் காட்சி அளிப்பதால், நடராஜத் தத்துவமாகிய அனைத்தும் எப்போதும் இறையருளால் இயங்குவதே என்ற பேருண்மையை நன்கு உணர்த்துவதாகும்.
பிரதோஷ பூஜையில் பங்கு கொண்டேன் என்று பலரும் சொல்வார்கள். எவ்வகையில்? எவ்வகையில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகச் சில ஆன்ம சாதனங்கள் இங்கு அளிக்கப்படுகின்றன.
* வில்வம், புஷ்பம், கற்பூரம், அருகம்புல், தர்பை எடுத்துச் சென்று இறைவனுக்கு அளித்தல்.
* சுவாமியைப் பல்லாக்கில் தூக்கி வரக் கை கொடுத்து உதவுதல்.
* உடை மற்றும் ஏதேனும் உணவு, கனி பிரசாதத்தைத் தானமாக அளித்தல்.
* வேட்டி, சட்டை அல்லது வேட்டி, துண்டு அணிந்து வணங்குதல். பெண்கள் புனிதமான முறையில் சேலை அணிந்து வணங்குதல் நன்று.
* தமிழ் மறை, தேவ மொழி மறைகளை மாலை நான்கு மணிக்குத் துவங்கி இரவு ஏழு மணி வரை இடைவிடாது ஓதிக் கொண்டிருத்தல்.
* மாலை நான்கு மணி முதல் ஏழு மணிவரையேனும் - இறைத் துதி ஓதுதலைத் தவிர - ஏனைய வகையில் மெளனம் பூணுதல்.
* பிரதோஷப் பூஜைக்குக் குடும்பத்தாருடன் சென்று வணங்குதல்.
* அடிப் பிரதட்சிணம், உயரக் கை கூப்பிய நிலைப் பிரதட்சிணம், இயன்றால் அங்கப் பிரதட்சிணம் ஆற்றுதல்
- இவ்வாறாக, பல்வகைகளில் ஆன்ம சாதனங்களுடன் இறைவனை, பிரதோஷ நாளில் வழிபடுதல் வேண்டும்.
பிரதோஷ மூர்த்தி பவனி வருகையில் அவருடன் சேர்ந்து மறைத் துதிகளை ஓதிக் கொண்டே வலம் வருதல் சிறப்புடையது.
வியாழக் கிழமையில் கூடும் பிரதோஷம் குருசுதாயப் பிரதோஷமாகப் போற்றப்படுகின்றது. யாக்ஞவல்கியர் தம் குருவின் ஆணையாக குருகுல பர்ணசாலையில் இருந்து தலயாத்திரை பூண்ட போது, ஒவ்வொரு குருவாரப் பிரதோஷத்திலும், சூரியநாராயண மூர்த்தியே தோன்றி குருசுதாய சக்திகளை அளித்து அரவணைத்திட்டார். இதனால்தாம் இன்றும் சூரிய மண்டலத்தில் பிரதோஷ காலத்தில், யாக்ஞவல்கிய மஹரிஷி சிவபூஜை ஆற்றுகின்றார். இன்றையப் பிரதோஷ நேரத்தில், மாலைச் சூரியனையும் யாக்ஞவல்கிய மஹரிஷியின் நினைவோடு ஆலயத்தில் இருந்தவாறே தரிசித்து, சிவபூஜை ஆற்றுதல் மிகவும் விசேஷமானது. பிள்ளைகளிடம் கொண்டுள்ள கருத்து வேறுபாடுகள் அகல, குருவாரப் பிரதோஷ நாளில் ஆறு அல்லது ஒன்பது சுற்று முறுக்குகளைப் படைத்துத் தானமாக அளித்து சிவபூஜை ஆற்றிடுக!

நாபி கூறும் யோக வழி

தேய்பிறைச் சதுர்த்தசியே, அமாவாசைக்கு முந்தைய நாள் திதியே, மாத சிவராத்திரி எனப்படுவதைப் பலரும் அறியார். காரணம் என்ன?
மாசி மாதம் வருவது மஹாசிவராத்திரி! இதை மட்டும் ஆலயஙகளில் கொண்டாடினால் போதுமா? மாதந்தோறும் வருகின்ற மாதசிவராத்திரிப் பண்டிகையை, மனித சமுதாயம் முறையாகக் கொண்டாடாமையால் தற்போதைய மனித சமுதாயம் இதனை மறந்தே போனது. நஷ்டம், மனித சமுதாயத்திற்குத்தான்! ஏனெனில், மாத சிவராத்திரி அருணாசல கிரிவலம், மாதசிவராத்திரி ஆலய பூஜை போன்றவற்றை முறையாகக் கொண்டாடி வந்தால், கலியுகத்தில் இவ்வளவு இரவு நேரக் குற்றங்கள் நிகழுமா என்ன?
ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் எண்ணற்ற மகத்துவங்கள் உண்டு.  கதிரவனின் ஒளியில் மலரும் தாமரை பிறந்தது தாமரைச் சீர் சிவராத்திரி என்னும் ஒரு மாத சிவராத்திரியில்தாம்! பத்மநாபராகிய பெருமாளின் அருளுடன் ஸ்ரீமஹாலக்ஷ்மி வில்வ தளத்தால் ஈஸ்வரனைப் பூஜிக்கையில், ஸ்ரீசாகம்பரி தேவி இறையாணையாக, பாற்கடலில் வருமாறும், தாமரையைத் தோற்றுவித்தாள்.

ஸ்ரீசெவ்வந்தி விநாகர்
திருச்சி மலைக்கோட்டை

கமலம் என்றால் தாமரை, பத்மம் என்றும் பொருள் அல்லவா! நாபி என்றால் தொன்மையான மூலம் என்றும் பொருளுண்டு. பெருமாளின் நாபிக் கமலத்தில் தாமே பிரம்ம மூர்த்தி தோன்றினார். கமலத்திற்கு நாபி எது? தாமரைக் கொடிதாம் கமலநாபி! பொதுவாக, நாபி என்பது வயிற்றுத் தொப்புளின் மேற்புறம் அமையும் அல்லவா! தொப்புள் என்பது தாயை நினைவுறுத்தும் ஆத்மச் சின்னம்! ஆம், தொப்புளும் ஒரு மனித அவயமே! தாயின் வயிற்றில் கருவாய் இருக்கையில், தொப்புள் கொடி மூலமாகவே சிசுவிற்கு உணவு வந்தது அன்றோ! பிரசவத்திற்குப் பிறகு, தாயையும், சிசுவையும் இணைக்கும் தொப்புள் கொடி எடுக்கப்பட்டாலும், கருவில் உணவுப் பிரசாதம் பெற்ற வழித்துறையாக அனைத்து மனிதர்களுக்கும் வாழ்வின் இறுதி வரை தொப்புள் எவ்வித மாற்றமும் இன்றி நிலைக்கின்றது.
தொப்புள் ஒரு குழி போலிருக்கும். இதன் நடுவில் சுழிச் சக்கர வடிவில் தசை மேடுகள் இருக்கும். விநாயகர் சதுர்த்தியின் போது களிமண் பிள்ளையாருக்கு நாபியாம் தொப்புளில் காசு வைத்து, விநாயகரை விசர்ஜனம் செய்கையில் லக்ஷ்மி அம்சமாக எடுத்து வைத்துக் கொள்வார்கள். இவ்வகை விநாயகர் நாபிக் காசு (செல்வ) விருத்தி தருவதாகும். எனவே நாபி என்பது விருத்திச் சக்கரம் ஆகும்.
நாபிக் குழிக்குப் பத்மப் பிலாகாசம் என்று பெயர். தொப்புளுக்குள் உள்ள சக்கர வடிவத் தசை மேட்டிற்கு பத்மசுலமேடு என்று பெயர். அருந்ததி போன்று சுலமேடு என்ற பத்தினி நட்சத்திரமே உண்டு. தொந்தி, தொப்புள், நாபி என்று பல பெயர்களில் அழைக்கப் பெறும் நாபிச் சக்கரத்திற்குப் பல மகத்துவங்கள் உண்டு.
மோதிர விரலைத் தொப்புளில் வைத்து
நாபிக் கமல நாராயண பாதம்,
பத்மப் பிரிய பவசாகர போதம்!
என ஓதி, ஸ்ரீமஹாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா, ஸ்ரீவிநாயகர் ஆகிய மூவரையும் நினைந்து வணங்குதல் வேண்டும். இதனால் தாய்க்கு ஆற்றாத கடமைகளுக்குத் தக்க பரிகாரங்கள் கிட்ட பிரம்ம மூர்த்தி அருள்வார்.
ஒரு யுகத்தில், தாமரை மலரில் அமர்ந்து ஸ்ரீமஹா விநாயகர் தரிசனம் தந்து பிரம்ம மூர்த்திக்கு சிருஷ்டிக்கான பாடங்களை உபதேசித்தார். பெருமாளின் நாபியில் தோன்றிய பிரம்மாவும், பிரம்ம பத்னியாம் சரஸ்வதியும் தாமரையில் அமர்ந்து அருள்வோரே! எனவே சிவராத்திரி தினத்தன்று தாமரை மலர்களால் சிவனை அர்ச்சித்து, கிரிவலம் வருவதால் நன்கு பழகியவர்கள் மற்றும் நெருங்கிய உறவினில் விடுபட்டுப் போன மிக முக்கியமான உறவு மீண்டும் நன்கு மலர்ந்திட அருள் சுரக்கும்.
தாமரை மலரில் அருளும் கோலம் கொண்ட மூர்த்தியை வழிபடுவதால்,  தாழ்வு மனப்பான்மை அகலப் பரிகார வழிகள் தக்க உத்தமப் பெரியோர்கள் மூலமாகக் கிடைக்கும். கடுக்கன் அணிதல் தாழ்வு மனப்பான்மையை அகற்றிட உதவும்.

இருபாத அமாவாசை

சில நூறு ஆண்டுகளுக்கு முன் வரை நம் முன்னோர்கள் தினமுமே வருடம் முழுதும் 365 நாட்களும், தினமுமே நித்தியத் தர்ப்பணமாக அளித்து வந்தமையால் ஜாதி, மதச் சச்சரவுகளின்றி, சகல ஜீவன்களின் பித்ருக்களின் ஆசியால், சமுதாயமே, அமைதிப் பூங்காவாகத் துலங்கியது.
சூரிய உதயம் முதல் உச்சி பகல் பொழுது வரை எந்நேரத்திலும் தர்ப்பணம் அளித்திடலாம். இருந்த போதிலும், காலையில் காபி, பால் கூட அருந்தாது, வெறும் வயிற்றோடு அல்லது சிறிது நீர் மட்டும் அருந்தி தர்ப்பணம் அளிப்பது மிக மிக உத்தமமானது. தர்ப்பணம் எனில் மனதாரத் திருப்தி அளித்தல் எனப் பொருளாகும்.
விநாயகப் பெருமானுக்கும் சதுராவ்ருத்தித் தர்ப்பணம் என்ற மந்திர நீரளிப்புப் பூஜை ஒன்று உண்டு. எனவே தர்ப்பணம் என்றால் பித்ருக்களை அழைத்தல், பித்ருக்களுக்கான பூஜை மட்டுமே என எண்ணுதல் கூடாது.

ஸ்ரீநடராஜ பெருமான்
திருநறையூர் சித்தீச்சரம்

பொதுவாக அமாவாசை இரண்டு நாட்களுக்கு நிரவி வந்தால், இரண்டு நாட்களிலுமே தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானது. என்ன இது? அமாவாசைக்காக இரண்டு நாட்களிலும் தர்ப்பணம் அளிப்பதா? என்று பலரும் மலைத்து விடுவார்கள்.
எந்தப் பித்ருக்களாகிய உத்தம மூதாதையர்களின் ஆசியால், எந்த மூதாதையர்களின் சொத்துப் பரிமாற்றத்தால், ஆஸ்தி வரவால் ஒவ்வொரு விநாடியும் வாழ்கின்றோமோ, இதற்கான நன்றிப் பிரார்த்தனையாக, மாதத்திற்கு ஓரிரு முறைகள் தர்ப்பணம் மனதார அளிப்பது என்றால் ஏன் முடியவில்லை என்று தெரியவில்லையே!  
நம்மை ஒவ்வொரு விநாடியும் வாழ வைக்க ஆசிகளை வழங்கும் நம் பித்ருக்களிடமே நன்றி கெட்டவர்களக நடந்து கொண்டால், நம் குடும்பத்தைத் தானே இது பாதிக்கும். பித்ருக்கள் நம்மிடம் நன்றி அறிவிப்பையோ, நன்றிப் படையலையோ எதிர்பார்க்கவில்லைதான்.
ஆனால் நம்முடைய பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு, நாம் ஆற்ற வேண்டியவையாக, உணவிடுதல், கல்வி, திருமணம் போன்ற கடமைகள் இருக்கின்றன அல்லவா! இதே போல, நம் முன்னோர்களில், மூதாதையர்களின் அதாவது பித்ருக்களின் நிலையை அடைய முடியாமையாலும்,
பலவிதமான கர்ம வினைகளால் வேறு பிறவிகளை எடுக்க முடியாமலும், ஆவி வடிவிலேயே அலைந்து கிடக்கின்ற நம் முன்னோர்களின் சாயா சரீரத்தையும் - நன்னிலைப் படுத்த வேண்டியது நம்முடைய தலையாய கடமை அல்லவா!
நம் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது போல, புண்ணிய சக்தி இல்லாது இறந்து, வேறு சரீரம் எடுக்க இயலாது, இறந்த பின் வேறொரு சரீரக் கட்டினுள் சிறைப்பட்டு அவதியுறும் முன்னோர்களையும் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு.
இதனால்தான் இரண்டு நாட்களுக்கு அமாவாசை நிரவி வரும்போது, முதல் நாள் பித்ருக்களுக்கும், பிச்ச அமாவாசைத் திதி நாள் எனப்படும் இரண்டாவது நாளில், கர்ம வினைகளால் சரீரச் சிறைக் கட்டில் அவதியுறும் முன்னோர்களுக்கும் விசேஷமாகத் தர்ப்பணம் அளித்திட வேண்டும்.
உங்களுக்கே நன்றாகத் தெரியும், உங்களுடைய தாத்தா பாட்டிகளில் எவரெவர் உண்மையாக வாழ்ந்தார்கள், எவரெவர் தீயவொழுக்கத்துடன் பலரையும் துன்புறுத்தி, வதைத்து வாழ்ந்தார்கள் என்று! அவர்களுடைய தீவினைகளும் சந்ததிகளை வாட்டுமாதலால், அவர்களைக் கடைத்தேற்ற வேண்டிய பொறுப்பு சந்ததிகளுக்கும் உண்டு. எனவே இரண்டு நாள் அமாவாசைத் தர்ப்பணம் மிகவும் முக்கியமானதே!
அமாவாசைத் திதி நேரத்தில் ஆறு மாதுளைகளை சாட்சியாக வைத்துத் தர்ப்பணம் அளித்திடுக! அடுத்த நாள் இதே ஆறு மாதுளங் கனிகளை வைத்து மீண்டும் தர்ப்பணம் அளித்திடுக! தலைமுறைகளைத் தாண்டித் தர்ப்பண சக்திகளை எடுத்தளிக்கும் சக்தி, மாதுளங்க ஸ்வதா தேவதா மூர்த்திகளுக்கு உண்டு. இரு நாட்களும் குறைந்தது 5 ஏழைக் குடும்பத்தார்க்குத் தர்ப்பண பூஜை ஆற்ற உதவிடுதலால், தன்னை, குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, உற்றம், சுற்றத்திலோ ஒதுக்கி வைத்து விட்டார்களோ என்று பீதியுடன் வாழ்வோரின் அச்சம் தணியப் பித்ருக்கள் உதவுவர்.

கங்கோத்பத்தி

எப்போதாவது நம் உற்றம், சுற்றம், நட்பு அபிமானம் ஒருவருக்குத் துன்பம் வரும் போது மனம் வேதனை அடைவதுண்டு. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர், ஊனமுற்றவர் அல்லது அடிபட்டவரைச் சாலையில் கண்டாலும் மனம் நெகிழ்வதுண்டு. ஆனால் வெறுமனே மனம் நெகிழ்ந்தால், வருத்தமுற்றால் போதுமா? அட பாவமே என்று எண்ணி சில விநாடி நேரம் வருத்தமுற்றால் அவருடைய வலியும், வேதனைகளும், துன்பங்களும் போய் விடுமா? சுற்றுச் சூழ்நிலைகளால் ஒருவருக்கு அப்போது உதவ முடியாவிடில், அவருடைய துன்ப விளைவுகள் ஓரளவேனும் தணிய, விரைவில் குணமடைய, அவருடைய நல்வாழ்விற்காக அன்றையப் பொழுதில் 108 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுதல், ஆலய வழிபாடு என நல்ல சங்கல்பம் செய்து கொண்டு, நன்முறையில் ஆன்மீக ரீதியாக உதவலாம் அன்றோ!
ஆனால், இப்படி எடுத்துச் சொன்னால் உடலால், பொருளால் செய்ய முடிவதையுமே ஒழுங்காக எதையுமே ஆற்றாமல், இவ்வாறு பிரார்த்தனை செய்தல் பைசா செலவில்லாமல் முடிந்து விடுகிறதே என்று இந்த முறைக்குத் தாவி வந்து விடுவார்கள்! மேலும் பலரும் தாம் உலக சர்வ ஜீவ நலன்களுக்காக, இன்று என்ன, தினமுமே சிவபுராணம் படித்தேன், ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து வருகிறேன் என்று சொல்லி விடுவார்கள். உண்மையிலேயே உலக க்ஷேமத்திற்காக இவ்வாறு வழிபடுபர்கள், வெளியில் எதையும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை!

திருவலஞ்சுழி திருத்தலம்

வாடிய பயிரைக் கண்டு வாடிய வள்ளலாருடையது பெறுதற்கரிய உத்தமத் தெய்வீக நிலை என்றாலும், நாம் எந்தெந்த நிலைகளை எல்லாம் சற்குருவின் அருளால் காணுதல் கூடும் என்பதற்கு இது துணையாய், வழிகாட்டியாய் நிற்கின்றது. எல்லோருடைய துன்பங்களுக்காகவும் நாம் வேதனை அடைவதென்றால், நம் வாழ்வின் ஒவ்வொரு விநாடியும் அழுது கொண்டிருக்க வேண்டியதுதான் என்றே பலரும் எண்ணுதல் கூடும். ஆனால் இதில் நாம் பெறும் பாடம் இதுவன்று!
பிறர் துன்பங்களைக் குறைக்கும் அளவிற்குப் பொருள் வசதியும், அருட் புண்ணியமும் ஒருவரிடம் இல்லைதான் என்பது உண்மைதானா என்பதை அவரவரே முதலில் மனசாட்சிக்கு விரோதமின்றி நன்கு தெரிந்து அறிந்து கொள்ள வேண்டும். பொய் சொல்லித் தன்னைத் தானே ஏமாற்றிக் கொள்ளலாமா? எந்த அளவிற்கு பிறருக்கு உதவிட நாம் இன்று அறப் பணி புரிந்தோம், உடலால், மனதால், உள்ளத்தால் உதவினோம் என்று தினமுமே இரவில் அவரவர் அன்று வாழ்ந்த விதம் பற்றி ஒரு ஜீவாதாரக் கணக்கைப் போட்டுப் பார்க்க வேண்டும்.
நீங்கள் சாப்பிடும் அன்னத்தில் ஒரு சிறிதை எடுத்து வைத்துப் போட்டால் கூட, ஒரு பத்து எறும்புகளின் வயிறு நிரம்புமே, ஒரு அணிலின், காக்கையின் அரை வயிறாவது நிரம்புமே! நாய்க்கு அரைப் பசி தீருமே! புகை பிடித்தல், மது, புகையிலை அநாவசியமான பத்திரிகைகள் என அவரவர் செலவழிக்கும் மாதாந்திரத் தொகையில் பத்துப் பேருக்கு உணவிடலாமே! இன்றிலிருந்தேனும் ஒவ்வொரு பைசாவையும் நன்முறையில் மட்டுமே செலவழிப்பது எனச் சங்கல்பம் எடுத்துக் கொள்ளுங்கள்!  

திருவிசைநல்லூர் சிவாலயம்

இவ்வகையில்தான் ஆரம்பத்தில் சிறிது சிறிதாக பிறருடைய துன்பங்களை, உடல் சேவையால், பொருளால் பிறர் வேதனைகளைத் தணிக்கும் முறையைப் பழகி வருதல் வேண்டும். இத்தகைய தியாகமய உள்ளம் நன்கு ஆழ ஊன்றி விருத்தி அடையவே, தினந்தோறும் ஆலயத்தில், சங்கோஜம், வெட்கம் பாராது, குப்பைகளை எடுத்துத் தினமும் சுத்திகரித்து வர வேண்டும். பசி ஆற்றுதல் கடினமெனில், பசி ஆற்றிட முயல்தலேனும் இயலுமன்றோ! முயற்சியே திருவினையாக்கும். முயற்சி இல்லாமை சோம்பேறித்தனத்தை வளர்க்கும்.
கங்கோத்பத்தி என்னும் திருநாள் அன்றுதான் திருவிசநல்லூரில், ஏழைகளின் பசியைப் போக்க ஸ்ரீதர அய்யாவாள் எனும் மஹான் தம்முடைய மூதாதையர்களின் படையல் பூஜைக்காக ஆக்கி வைத்திருந்த பாயசம், அன்னம், வடை, எள்ளுருண்டை, பிரண்டைத் துவையல், அப்பளம், மிளகு ரசம், நாலைந்து வகைப் பொறியல்கள் என அனைத்தையுமே, திவசத்தைக் கூடச் செய்வதற்கு முன்னரேயே, இறைவனுக்குப் படைப்பதற்குள், பசியெனத் தம் வீட்டின் முன் வந்த ஏழைகளுக்கு அள்ளி எடுத்துக் கொடுத்து அவர்கள் பசியாற உண்பது கண்டு மனம் மகிழ்ந்தார். இதனைக் கண்டு மகிழ்ந்து கங்கையே வீட்டுக் கிணற்றில் பொங்கி எழுந்து ஊரெங்கும் ஓடி, உலகையே வியக்க வைத்தது! கலியுகத்தில் நடந்த கங்கோத்பத்தி உற்சவமிது!. இத்தகைய உத்தம மஹான்கள் வாழ்ந்த புனிதமான பாரத நாட்டில், அதிலும் மிக மிகப் புனிதமான தமிழ்நாட்டில் வாழும் நமக்கு, சித்தர்களின், மஹான்களின் துணை என்றுமே உண்டு! ஆனால் இவற்றை உணர்த்த வல்ல சத்குருவை நாடிச் சரணடைதல் வேண்டுமே!

மார்க சிர சுத்த தினம்

கருணை, சேவை மனப்பான்மை, தியாகம், அன்பு போன்ற நற்பண்புகள் பரிணமிக்கும் தினமே மார்க சிர சுத்த தினமாகும். இந்நாட்களில் வடை, பாயசம், அப்பளத்துடன் நல்ல விருந்தாக, குறைந்தது மூன்று ஏழைகளுக்காவது தலை வாழை இலை முழுதுமாக, வயிறார, மனமார இட்டு மகிழுங்கள்! வீட்டில் செய்ய வசதி இல்லையெனில் ஹோட்டலில் இருந்து எடுப்புச் சாப்பாட்டாக வாங்கி ஏழைகளுக்கு வாங்கிக் கொடுத்து, கங்கா தேவியை நாள் முழுதும் வணங்கிடுக! இத்தகைய வழிபாட்டால் உங்கள் மனதை நெருடிக் கொண்டிருக்கும் வேதனையைத் தணிக்க மஹான்கள் தக்க உத்தமர்கள் மூலம் நல்வழி காட்டுவார்கள்.

அடக்க சக்தி சந்திர தரிசனம்

கடவுள் நமக்கு நிறைய அனுக்கிரகங்களை, வசதிகளாக, நல்வரங்களாகத் தந்திருக்கின்றார். நன்றாக எழுந்து நடந்து பார்த்து, பேசி, கேட்டு, வீடு, அலுவலக வேலை, வியாபாரம், குடும்பத்துடன் .... அப்பப்பா... கடவுள்தான் எவ்வளவு வரங்களை அள்ளி அள்ளிக் கொடுத்திருக்கின்றார். ஆனால் வாயால் இன்னமும் போதவில்லை போதவில்லை என்ற குறைப்பாட்டையே மனித குலம் தினமும் இறைவனிடம் பாடி ஓதி வருகிறது. கடன் நெருக்கடி, நஷ்டங்கள், உடல் நோய்கள், ஏமாறுதல் என்று பல வகைத் துன்பங்கள் ..... இவையெல்லாம் அவரவராக இழுத்து விட்டுக் கொண்டது தானே. உடல் வலுவும், இளமையும், செல்வாக்கும், பதவியும் இவை இருக்கும் போது ஆடு ஆடு என்று ஆடி விட்டு .... இயலாமை என வரும் போது மட்டும் அடங்க முயல்வது ஏனோ?
ஆலய தரிசனம் கடவுள் வழிபாடு என்றாலே ... தினமுமே எதையாவது இறைவனிடம் கேட்டுக் கொண்டே ... ஆயுளில் எத்தனை வருடக் காலத்தைத்தான் போக்குவது? இதற்காகத்தான் தினமுமே அந்தந்த நாளின் விசேஷமான தெய்வாம்சங்கள், ஆன்ம சக்திளை அளிப்பதாகிய காலப்பகுதிகள், பண்டிகைகளாக, விரதங்களாக, பஞ்சாங்கத்தில் அளிக்கப்படுகின்றன. அந்தந்த நாளில் செய்ய வேண்டியதைச் செய்து வந்து விட்டால் அவ்வப்போது கர்ம வினைகள் கழிந்திட ... மலை போல் கர்ம வினைகள் சேரலாகாதே!

ஸ்ரீநடராஜ பெருமான் இன்னம்பர்

ஷட்மார்கம், ஷட மார்கம், ஷடதீய மார்கம், ஷடா பூர்வ மார்கம் - என்றவாறாக பூராட நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்குமான நான்கு வகை நட்சத்திர தரிசன பலன்கள் உண்டு. இவ்வாறு பூராட நட்சத்திரமும் இணையும் நாள் பூர்வ ஷட மார்க சந்திர தரிசன நாளாக, மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளாகச் சிறப்புடன் அமைகின்றது. பூராட தேவி எளிமையான பூஜைகளுடன் அடக்கமான வழிபாடுகளை அளிப்பவள். சந்திரனை மணக்கும் நிலை வரை தனக்கென எதையுமே கேட்டு இறைவனிடம் வேண்டியது கிடையாது. பிறகு நட்சத்திர தேவியாய்ப் பெருநிலை கொண்டனள்.
பூராட தேவிக்கு வைராக்கிய சித்த மஹா மந்திரங்களை உபதேசித்த மகரிஷியே உதீத மகரிஷி ஆவார். இவருடைய உபதேச மொழியால்தாம், பூராட நட்சத்திர தேவிக்கு அனைத்து தெய்வ மூர்த்திகளின் தரிசனமும், அமர்ந்த கோலத்திலேயே கிட்டியது. மேலும் தெய்வ மூர்த்திகளின் விஸ்வ ரூப தரிசனத்தையும் கூட, அமர்ந்த கோல நிலையிலேயே பெற்றிடும் பாக்யத்தை அடைந்தாள். தக்கோலம் ஆலயத்தில் பிரகாரச் சுவற்றின் மேல் உதீத மஹரிஷியின் தவக் கோலத் தரிசனம் கிட்டும்.

ஸ்ரீஉதீத மகரிஷி தக்கோலம்

உதீத மகரிஷியும் தரையில் அல்லாது, உயர்ந்த மண்டபங்கள், மரக் கிளைகள், இராஜ கோபுரம், மலை உச்சி, இவ்வாறு உயரமான இடங்களில் தாம் தவம் புரிவார். எனினும் பூராட நட்சத்திர தேவிக்காக தரை இறங்கி வந்து, தக்க மந்திரங்களை உபதேசித்து அருளாசி தந்திடுவார். இதற்குக் காரணம், பூராட தேவி மகரிஷியைத் தரிசிக்க வரும் போதெல்லாம், காராம் பசு, கன்றுகளுடன் வந்து, மகரிஷியை வணங்கி வந்ததாகும். தன்னைத் தேடி, அனைத்து தெய்வ மூர்த்திகளையும் தாங்கியுள்ள பசு வந்துள்ளது என்றவுடன் மாமுனி தரையிறங்கி வந்திடுவார்.
இத்தகைய மூன்றாம்பிறை நாட்களில் உதீத மகரிஷியுடன் சேர்ந்து மூன்றாம் பிறை சந்திர தரிசனத்தோடு அமர்ந்த கோல தெய்வ மூர்த்திகளைப் பூராட தேவியும் தரிசிக்கின்றாள். எனவே அந்நாட்களில் அமர்ந்த கோல தெய்வ மூர்த்திகளைத் தரிசிப்பது விசேஷமானது. அமர்ந்த கோல மூர்த்திகளின் சந்நிதியிலிருந்து சந்திர தரிசனம் பெற்று ஆலயத்தில் நன்கு நெடு நேரம் அமர்ந்து பல்வகை நட்சத்திர தரிசனங்களைப் பெற்று, குழந்தைகளுக்குப் பனங் கற்கண்டு கலந்த பாலைத் தானமாக அளித்தலால், அடக்கமின்றி எதிர்த்துப் பேசும் மனைவி, பிள்ளைகள், பணியாளர்கள் திருந்திட நற்பரிகார வழிகள் கிட்டும்.
சென்னை அருகே தக்கோலம் ஆலயத்தில் இருந்து மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் பெற்று, குழந்தைகளுக்குத் தேன், பனங்கற்கண்டு, முந்திரி கலந்த பாலைத் தானமாக அளிப்போர்க்கு, வாழ்வில், தொழிலில் முன்னேற வழிகள் கிட்டும்.

 
மூட்டு வலியை விரட்டுவது எப்படி ?

மனித உடலில், உயிர் ஜீவிப்பதற்குக் குறைந்தது ஏழு நாளங்கள் தேவை. இந்த ஏழும் குறைந்த பட்சமேனும் செயல்பட்டால்தான் உடலில் நாடித் துடிப்பு இருக்கும். பொதுவாக, வாதம், பித்தம், சிலேத்துமம் என மூவகை நாடிகள் இருந்தாலும், கலியுகத்திற்கான மனித குல வைத்யத்திற்கான மேலும் ஏழு வகை உள் நாடிப் பிரிவுகள் சிறப்பாக உண்டு. இவை ஜாதகப் பூர்வமாக வைத்ய சிகிச்சை குணம் உள்ளோர்க்கே உணர்த்தப் பெறுவதாகும்.
மனித உடலில் ஒன்பது துவாரங்கள் இருந்தாலும், இரண்டு வகைகள் மறைத் துளை அங்கங்களாகின்றன. இரு கண்களும், வாயும் மூட வல்லவை. காதுகள் திறந்திருக்கும். மூச்சை சற்றே இரு துவாரங்களில் அடக்கலாகும். இவ்வாறு ஒவ்வொரு துவாரமும் ஒவ்வொரு வகையில் செயல்படுகின்றன. நவதுவாரங்கள், நாடிகளை இணைத்து அமையும் வைத்ய சிகிச்சையே மிகவும் சிறப்புடையது.  

திருஅண்ணாமலையில்
காராம்பசு தரிசனம்

துன்பங்களால் ஆடும் மனதுக்கு, ஆன்மச் சிந்தனை ஓட்டமே மாமருந்து. மனித அவயவங்களைப் பற்றிய ஆத்ம விசாரமும் ஆன்மீக ரீதியானதே. மனம், உள்ளத்தில் உள்ள நோய்களைக் குணப்படுத்த உதவுவது. கைளால் கும்பிடுவது ஏன், சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குவது ஏன்? தோப்புக் கரணம் இடுவது ஏன்? இவ்வகையில் சிந்தித்துப் பாருங்கள். ஒவ்வொரு அவயவத்திலும் அங்க தேவதைகள் உறைவதால், அவரவர் உடல் அங்கத்தைப் பற்றிய நன்முறையிலான ஆத்ம விசாரமும் தேவதா சிந்தனை ஆகின்றது. அதாவது, கடவுள் நன்முறையில் கரங்களை, கால்களைக் கொடுத்தும் இவற்றால் கடவுளுக்கு என்ன செய்தோம்? காது மந்தமாக இருப்பதேன்? நமக்கு ஏன் சர்க்கரை நோய் வந்தது என உள்கேள்விகளை எழுப்பி வந்தால் நல்ல ஆன்ம விடை கிட்டும்.
செவ்வாய் கிரக அமைப்புகள் நோய்கள், நோய்த் தன்மைகள், நோய் நிவாரணம் மற்றும் மனித உடலமைப்பின் அம்சங்களைப் பற்றிய ஆத்ம விசாரத்தையும், சனி கிரகம் ஆயுள் பற்றிய ஆத்ம விசாரத்தையும் நன்கு விருத்தி செய்து தருவதாகும். மேலும், பூமிகாரக தத்துவங்களுடனும் செவ்வாய் கிரகம் பொலிவதால், வாஸ்து பூஜைக்கும் உரித்தான நாளாகவும் செவ்வாய் விளங்குகிறது.

ஸ்ரீநடராஜ பெருமான்
ஊட்டத்தூர்

தரையில் அமர்தலும் மங்களகரமானதே! அனைவருமே தினமும் தரையில் சற்று அமர்ந்து சுகாசனமோ, பத்மாசனமோ இட்டுப் பழகிடுதல் வேண்டும். பெரும்பாலானோர் வீட்டிலும், ஆபீசிலும் நாற்காலி, டைனிங் டேபிள், சோபா, ஈசி சேர், கார், இரண்டு சக்கர வாகனம் என்று பலவற்றிலும் அமர்ந்தே பழகியுள்ளமையால், ஒரு நாளில் பத்து நிமிடம் கூடத் தரையில் அமர்வது கிடையாது. தரையில் நன்கு சம்மணம் கூட்டி அமர்கையில், பூமியில் எழும் ஆகர்ஷண சக்தி, பூமியோடு உராய்வதால் ஏற்படும் சக்தி இவற்றால் உடல் நாளங்களுக்கு, குறிப்பாக, முழங்கால், முதுகுப் பகுதி, பீடப் பகுதி, பாதப் பகுதிகளுக்கு நல்ல எழுச்சி மிக்க சக்திகள் கிட்டுகின்றன.
இவ்வாறு கீழே அமர்ந்து பழகாமையால்தான் பலருக்கும் முழங்கால் வலி, இடுப்பு வலி, நடக்க இயலாமை போன்றவை ஏற்பட்டு விடுகின்றன. குதிரை எவ்வளவுதான் விரைவாக ஓடினாலும் தினமும் மாலையில், காலையில், இரண்டு, மூன்று நிமிடங்கள் தரையில் நன்கு வலப் புறமும், இடப் புறமும் புரண்டு எழுவதைப் பார்த்திருப்பீர்கள். இதனால் அதனுடைய உடல் களைப்பிற்கும், உடல் வலிக்கும் உடனடி யோக நிவாரணமாகி விடுகின்றது.
எனவே, நீங்களும், உங்கள் பிள்ளைகளுக்கும் தினமும் தரையில் அமர்ந்து, கீழே அமர்ந்து உண்டு பழக்கி வருதல் வேண்டும். நாற்காலி, கட்டில், சோபா இவற்றிலேயே கால்களை மடித்து, மடித்து அமர்ந்து பழகினால், முழங்காலில் மூட்டுச் சுரப்பிகள் வேலை செய்யாது போய்விடும். மேலும், அந்தந்த அவய தேவதைகள் பூமி தேவதைகளுடன் ஸ்பரிசம் படுதலும் வேண்டும். இதற்காகத்தான் காலையும், மாலையும் பத்மாசனம் இடுதல், தரையில் நமஸ்கரித்தல், 36, 72, 108 முறை தோப்புக் கரணம் இடுவதையே மிகச் சிறந்த யோகப் பூர்வமான பிள்ளையார் வழிபாடாகவும், யோக ஆசனப் பயிற்சியாகவும் நம் முன்னோர்கள் வைத்தார்கள்.
ஆடத்து அதி நட்சத்திரம், கூடத்துச் சிலையாமே,
கூடலையானே சிவச்சிதம்பரமே!
என்ற பரிமொழி வாக்கியப்படி, ஆட(ல்) வகை நட்சத்திரங்களான பூராடம், உத்திராடம் நட்சத்திர நாட்களில், எலும்புகளை ஆடி, அசைக்கும் வகையில் யோகாசனம் பயில்தல் வேண்டும். ஏனெனில் பூராட, உத்திராட நட்சத்திர நாட்களில் யோக, ஆசனக் கிரணங்கள், நாளங்கள் நன்கு ஆக்கம் பெறுகின்றன. இவ்வாறு பூராடம், உத்திராட நட்சத்திர நாளில் தொடங்கியாவது தினமும் ஒரு மணி நேரமாவது தரையில் அமர்கின்ற பழக்கத்தையும், தரையில் அமர்ந்து உண்ணும் வழக்கத்தையும் கைக் கொண்டிடுக! மேலும் நடராஜர், காளி, நர்தன விநாயகர் போன்ற ஆடல் மூர்த்தி தரிசனம் மிகவும் விசேஷமானது. ஏழ்மையில் வாழும் கழைக் கூத்து நடனக்காரர்களுக்கு நல்உணவும், இயன்ற வகையில் ஆடைகளையும் தானமாக அளித்திடுக! காலையும், மாலையும் அரை மணி நேரமாவது அமர்ந்து நடராஜ தரிசனத்தையே வழிபாடாகக் கொண்டிடில் (கவலைகளால்) ஆடும் மனதிற்கு அமைதி கூட வழி பிறக்கும்.
நடராஜப் பெருமானுக்கு நீண்ட அங்கிகளைச் சார்த்தி வழிபடுவது நல்ல உத்தமர்களைச் சந்திக்க உதவும். கல்லால் ஆன நடராஜரைத் தரிசித்தல் அதிவிசேஷமானது. (திருவலஞ்சுழி, நறையூர் சித்தீச்சரம், உடையாளூர், ஊட்டத்தூர், இன்னம்பர்)

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam