சரபம் ஒளி வீசும், இருள் நீக்கும் !

ஓம் ஸ்ரீ வல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம்ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

தஞ்சாவூர் மாவட்டத்தில் திருபுவனம் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள தெய்வ மூர்த்தியே ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆவார். கம்பம் என்றால் பயத்தால் தோன்றும் நடுக்கம். ஹரன் என்றால் களைபவர், நீக்குபவர் என்று பொருள். பயத்தால் தோன்றும் நடுக்கத்தைப் போக்கி வாழ்வில் ஒரு புத்துணர்ச்சியையும் பிடிப்பையும் ஏற்படுத்தும் தெய்வ மூர்த்தியே திருபுவன ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி ஆவார். ஒரு சிலர் தாங்கள் எதற்குமே பயப்படுவதில்லை என்று மார்தட்டிக் கொள்வார்கள். அப்போது அவர்கள் உடலைத் தொட்டுப் பார்த்தாலே அவர்கள் மனம் நடுங்குவது உடலில் பிரதிபலிப்பதைப் பார்க்கலாம். பயம் வந்தால் முதலில் அது நடுக்கமாகத்தான் உடலில் தோன்றும். இதைக் களைவதே திருபுவன ஈசனின் அனுகிரகம். சரப பறவை என்பது எட்டுக் கால்களுடன் விளங்கும் பிரம்மாண்டமான பறவை. 2020ம் ஆண்டு என்ற நான்கு எண் கணித சூத்திரத்தில் அமைந்த இந்த வருடத்தில் எட்டுக் கால்களுடன் திகழும் சரப பறவை உருவத்தில் துலங்கும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியை வணங்குவதே சிறப்பாகும் என்ற உண்மை பளிச்சிடுகின்றது அல்லவா ? 2000ம் ஆண்டு நம் சற்குரு இத்தலத்தில் எழுந்தருளி உழவாரப் பணிகள் நிறைவேற்றினார் என்றால் இது இந்த சரப ஆண்டில் மட்டுமல்ல, இந்த நூற்றாண்டிற்கே வணங்கப்பட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீசரபர் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சித்த பொக்கிஷமாகும்.

ஒரு சாதாரண மனிதனும் உணர்ந்து இன்புறக் கூடிய சிறப்பைத் தருவதே இங்குள்ள சரப வேத தூண்களாகும். பசு, முதலை, கருடன் போன்ற விலங்குகள் பறவைகளே வேதம் ஓதுகின்றன என்றால் மனிதர்கள் எந்த அளவிற்கு வேதங்களை பராமரிக்க வேண்டும் ? இன்றைய மனிதனுக்கோ வேதம் என்பதே ஒரு புரியாத புதிராக இருக்கிறது. முறையாக வேதம் ஓதும் சக்தி பெற்றவர்களும் அதை வியாபாரப் பொருளாக மாற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரியதே. இதற்கு ஓரளவு மாற்றாக அமைந்ததே திருபுவனம் திருத்தலத்தில் அமைந்துள்ள இந்த குடமுழுக்குத் தூண்கள் என்று அழைக்கப்படும் சரப வேத தூண்களாகும். ஆம், இந்த தூண்களைக் கழுவி சுத்தம் செய்தாலே எத்தனையோ திருத்தலங்களில் கும்பாபிஷேகம் செய்த பலன்கள் பொழியும் என்றால் இத்தகைய தூண்கள் மகிமையை விளக்கிய நம் சற்குருவிற்கு நாம் எப்படி நன்றி செலுத்த முடியும் ? சற்குருவின் கருணை கடாட்சத்தைப் பெறாமல் திருத்தலங்களில் உள்ள ஒரு தூணில் உள்ள இறை மூர்த்தியைக் கூட தொடக் கூடாது என்றால் இந்த சரப தூண்களை எப்படி தூய்மை செய்து பயன்பெறுவது என்ற சந்தேகம் தோன்றுவது நியாயமே. தற்போது நம் அடியார்கள் எவருமே இந்தத் தூண்களைத் தொட்டு உழவாரப் பணி செய்து பயன்பெற முடியாது என்றாலும் என்றோ நம் சற்குரு நமக்காக அரும்பாடுபட்டு இத்தலத்தில் நிரவிய சரப சக்திகளை நாம் சுலபமாகப் பெற்று விடலாமே. பல யுகங்கள் பஞ்சாக்னி நடுவில் தவம் இயற்றிய இரண்யாட்சனின் தவத்தை மெச்சி அவனுக்கு வரம் அருளிய சிவபெருமானின் அனுகிரக சக்திகளையும் மிஞ்சும் சக்தி உடைய இறை அவதாரம் மூலமே இரண்யாட்சனின் தவறான காரியங்களை ஒரு முடிவு கொண்டு வர முடியும். அதனால் மிகவும் சக்தி வாய்ந்த நரசிம்ம அவதாரத்தை பெருமாள் எடுத்து இரண்யாட்சனை சம்ஹாரம் செய்தார். அந்த அளவிற்கு உக்கிரம் பெற்ற நரசிம்ம மூர்த்தியை சாந்தப்படுத்துவது என்றால் அது இறைவன் ஒருவனால் மட்டும் நிகழக் கூடிய காரியம் அல்லவா ? பிரகலாதன் போன்ற பக்தர்களின் பக்தியில் சாந்தம் பெற்றாலும் நரசிம்ம மூர்த்தி எங்கும் பிரகாலாதன் போன்ற உத்தம பக்தர்களையே சந்தித்துக் கொண்டு இருக்க முடியுமா ?

அதற்காக எம்பெருமானே சரப பறவை வடிவில் நரசிம்ம மூர்த்தியையும் மிஞ்சம் அளவில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாக அவதாரம் கொண்ட திருத்தலமே திருபுவனம் திருத்தலமாகும். மனத்தளவில் இந்த இறை லீலைகளைப் புரிந்து கொள்ள பக்தர்கள் முதலில் நாட வேண்டிய தலம் திங்களூர் ஆகும். திங்களூர் திருத்தலத்தில் ஸ்ரீபெரிய நாயகி சமேத ஸ்ரீகைலாச நாதரை தரிசனம் செய்து வழிபடுதலால் ஓரளவு ஸ்ரீசரபேஸ்வரரின் அவதார லீலைகளைப் புரிந்து கொள்ள முடியும். இதற்காகவே நம் சற்குரு திங்களூர் திருத்தலத்திற்கு தம் அடியார்களுடன் எழுந்தருளி வேண்டிய மனோ பலத்தை அளித்தார் என்பதும் ஒரு சித்த இரகசியமே. மகான்கள், யோகிகள் மனம் கடந்து நின்றாலும் மனிதர்கள் மனம் உடையவர்களாய் இருப்பதால் மனம் மூலமாகவே அனைத்து இந்திரியங்களும் இயங்குவதால் மனம் மகிழும்படியான, மனம் புரிந்து கொள்வதற்கு ஏதுவான உணவு வகைகளை ஏற்பதே தெய்வீகத்தில் ஆரம்ப படிக்கட்டில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்கம், உடல் சுத்தி விதிமுறைகளாகும். திருபுவன திருத்தலத்தில் நடந்த உழவாரப் பணிகளின் போது நடந்த சுவையான நிகழ்ச்சிகள் பல, அவற்றில் ஒன்றாக அடியார்கள் பலர் இங்குள்ள சரபேஸ்வர தூண்களை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். மந்திரங்கள் ஜபித்து சுத்தமாக தாயரிக்கப்பட்ட எலுமிச்சை பழத் தோல், சீயக்காய் போன்றவற்றைக் கொண்டு இந்தத் தூண்களைத் தேய்த்துக் கழுவிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த நம் சற்குரு, “இந்தத் தூண்கள் ஒவ்வொன்றுமே நம் பூலோகத்தில் ஒரு திருத்தலத்தைக் குறிப்பது. அந்த திருத்தலத்தில் உள்ள சக்திகளை எல்லாம் கோபுரங்கள் வடிவில் இந்தத் தூண்களில் பதித்து வைத்துள்ளனர் நம் முன்னோர்கள், பெரியோர்கள். அதனால் இங்குள்ள ஏதாவது ஒரு தூணை வலம் வந்து வணங்கினாலே அந்த திருத்தலத்தையே வணங்கிய பலன் நமக்குக் கிட்டும். இங்குள்ள ஒரு தூணை முறையாகத் தூய்மை செய்தால் அந்தத் திருத்தலத்தையே தூய்மை செய்த பலன் அந்த அடியாருக்குக் கிட்டும். இங்குள்ள அடியார்களோ எத்தனையோ தூண்களை தூய்மை செய்து குடமுழுக்குப் புண்ணியத்தை தங்களுக்கும் தங்கள் சந்ததிகளுக்கும் பெருக்கிக் கொள்கிறார்கள். இதனால் விளையும் மலையளவு புண்ணியத்தை எப்படி இவர்கள் நல்ல முறையில் பயன்படுத்துவார்களோ என்று நினைக்கும்போது அடியேனுக்கு அச்சமாக இருக்கிறது. சரி சார், அடியேன் இவ்விஷயத்தில் என்ன செய்ய முடியும்? புண்ணியத்தை வாங்கித் தருவதோடு அடியேனுடைய கடமை முடிந்து விடுகிறது. அதை எப்படி நல்ல முறையில் வைத்துக் கொண்டு எஞ்சிய காலத்தில் பயன்படுத்துவது என்பது உங்கள் கையில்தானே உள்ளது,” என்று கூறினார்.

சந்திர தீர்த்தம் திங்களூர்

இந்த ராகவேந்திர வருடத்தில் இங்குள்ள வீடியோவில் காணும் கருப்பும் வெள்ளையும் கலந்த ராகவேந்திர நாரைகளை தரிசனம் செய்து காய்ச்சின பசும்பால், வறுத்த நிலக்கடலை தானம் அளிப்பது இவ்வருடம் முழுவதும் இயற்றக் கூடிய தானங்களில் ஒன்றாக மலர்கிறது. இதனால் எத்தகைய இடர் வரினும் குரு மேல் உள்ள நம்பிக்கை வலுப்படும். இந்த வருடம் முழுமைக்கும், ஏன் உங்கள் வாழ்க்கை முழுமைக்கும் உள்ள செய்தியே இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது என்றால் அது மிகையல்ல. மனம்தானே மனிதர்களை ஆட்டும், ஆளும் ஆயுதம். இதை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்தால் நீங்கள் சாதிக்க வேண்டியது வேறு என்ன ? திங்களூர் திருத்தலத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் நீராடி இறை மூர்த்திகளைத் தரிசனம் செய்தல், தான தர்மங்களை நிறைவேற்றுதல் சிறப்பாகும். நம் சற்குரு நல்ல வெயிலில் அலைந்து திரிந்து வந்து வியர்வை வழியும்போது சூடாக நீர் அருந்துவார், கன மழையின்போது குளிர்ந்த நீர் அருந்துவார். கேட்பதற்கு இந்தச் செயல்கள் விநோதமாகத் தோன்றினாலும் இதன் பின்னால் உள்ள உடல்கூறு இரகசியங்களைப் பற்றி விளக்குபவையே இவையாகும். நாம் வெயிலில் செல்லும்போது உடல் தேவையான குளிர்ச்சியைப் பெற வெளியில் தோலில் குளிர்ச்சி அதிகமாகிறது, இதைச் சமன்படுத்த உள்உறுப்புகள் வேகமாகச் செயல்படுகின்றன, இதற்கு சூடு நீர் அவசியம். குளிர்ச்சியில் உள்ளுறுப்புகள் மந்தமடைவதால் இதைச் சமன்படுத்த தண்ணீர் அவசியமாகிறது. அதுபோல சந்திர தலமான திங்களூர் திருத்தலத்தில் இறைவழிபாடு இயற்றும்போது இளநீர் அருந்துவதால் உடல் உறுப்புகள் தேவையான குளிர்ச்சியைப் பெற்று இறை விஷயங்களை, மறைப் பொருட்களை, தத்துவங்களை கிரகிக்க ஏதுவாகிறது. இந்த இரகசியங்கள் எல்லாவற்றையும் திங்களூர் திருத்தலத்தில் தெளிவுபடுத்தியவரே நம் சற்குரு ஆவார். அனல் பறக்கும் வெயிலில் கனல் பறக்கும் சித்த தத்துவங்களை ஆலமர நிழலில் குளிர் வீசும் தென்றலாய்ப் பொழிந்தவரே நம் சற்குரு. இந்த தத்துவங்களை எல்லாம் பக்தர்கள் கிரகிக்க அனைவருக்கும் சுவையான இளநீர் வழங்கப்பட்டதன் பின்னணியில் அமைந்த ஆன்மீக விளக்கங்களில் இதுவும் ஒன்று.

ஸ்ரீபெரியநாயகி சமேத ஸ்ரீகைலாசநாதர் திங்களூர்

ஒரு முறை லால்குடி அருகிலுள்ள திருமங்கலம் திருத்தலத்தில் உழவாரப் பணிகள் நிறைவேற்றிய போது அங்குள்ள சிறிய கேணி வடிவில் தோன்றிய ஒரு தீர்த்தத்திலிருந்து நீர் இறைத்து அந்த திருத்தலத்திலுள்ள சன்னதிகளை எல்லாம் நீர் விட்டு அலம்பி உழவாரப் பணி இயற்றினார்கள் நம் அடியார்கள். பல மணி நேரம் ஆகியும் அந்த நீர் ஊற்றில் ஒரு அங்குலம் கூட நீர் வற்றியதாகத் தெரியவில்லை. திருப்பணி நிறைவடைந்த பின்னரும் அந்தக் கிணற்றில் நீர் சற்றும் குறையாதது கண்டு அனைத்து அடியார்களும் அதியசமான இந்த சற்குருவின் செயலைப் புகழ்ந்து கூறினர். ஆனால், சற்குருவோ அனைத்தும் இறைவன் செயல், சாமவேதீஸ்வரரின் கருணை என்று ஒரே வரியில் கூறி விட்டார். இதே நினைப்பில் திருபுவனத்திற்குச் சென்று அங்குள்ள ஒரு பெரிய கிணற்றில் மோட்டார் அமைத்து நீர் இறைக்க ஆரம்பித்தனர் அடியார்கள். ஆனால் என்ன ஆச்சரியம், அரை மணி நேரம் கூட நீர் இறைக்க முடியவில்லை, திடீரென சேறும், சகதியும் அந்நீரில் கலந்து வர அந்தக் கிணற்றில் நீர் இறைக்கும் பணி நிறுத்தப்பட்டு வேறு நீரைத் தேடி அலைய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. அப்போது யாருக்கும் இந்த உழவாரத் திருப்பணியின் பின்னணியில் அமைந்த இரகசியம் புரியவில்லை என்றாலும் சற்குரு திருபுவன குடமுழக்குத் தூண்கள் மகிமையைப் பற்றி விளக்கியபோதுதான் ஏன் அந்தக் கிணற்றில் உள்ள நீர் அவ்வளவு விரைவில் வற்றி விட்டது என்ற உண்மை புரிய வந்தது. சில உண்மைகளை உடனுக்குடன் புரிய வைத்து தெய்வீகத்தில் சுவை கூட்டுபவரே நம் சற்குரு. திருபுவனத்தில் உள்ள ஒவ்வொரு தூணும் ஒரு திருத்தலத்தையே குறிக்கும் என்றால் அந்த ஒவ்வொரு தூணையும் அலம்ப ஒரு திருத்தலத்தை அலம்ப தேவையான நீர் செலவாகும் என்பதுதானே உண்மை. இதை நிரூபித்தவரே ஸ்ரீகம்பஹரேஸ்வரர், இல்லை நம் சற்குரு என்று நமக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி திருபுவனம்

ஒவ்வொரு வருடமும் பொங்கலை கொண்டாடி உத்தராயண திருநாளில் சர்க்கரைப் பொங்கலை திகட்டாமல் அனுபவிப்பது போல் எத்தனை தடவை சுவைத்தாலும் திகட்டாத சித்தாமிர்தத்தை மீண்டும் நம் அடியார்களுடன் நாம் பகிர்ந்து கொள்கிறோம். ஒரு பொங்கல் திருநாளை நம் சற்குருவுடன் கொண்டாடும் வாய்ப்பை சில அடியார்கள் பெற்றனர். பௌர்ணமி முடிந்து உடனேயே தை மாத சங்க்ரமணம் தோன்றியதால் விரும்பும் அடியார்கள் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திலேயே தங்கி குடும்பத்துடன் பொங்கல் திருநாளை கொண்டாடலாம் என்ற தேனினும் இனிய செய்தியை நம் சற்குரு தெரிவிக்க ஆஸ்ரம வாசலிலேயே புதுப் பானை வைத்து மூன்று கரும்புகளை கூம்பாக பொங்கல் பானையைச் சுற்றி வைத்து குரு சாட்சியாக திருஅண்ணாமலை சாட்சியாக காச்யப மகரிஷி வழித் தோன்றல்கள் சாட்சியாக சந்திர பகவானின் அமுத தாரைகள் சாட்சியாக அந்தப் பொங்கல் நன்னாள் இனிதே நிறைவேறியது. ஆம், அந்த தைப் பொங்கல் பொங்கிய போது திருஅண்ணாமலை ஆஸ்ரமப் பித்ரு படிக்கட்டுகளில் நம் சற்குரு குடும்ப சகிதமாக எழுந்தருள இந்த தவமுனிகளின் எதிரே திருஅண்ணாமலை தசமுகம் அருளாட்சி செய்ய, சிவசக்தி ஐக்ய தரிசனத்தின் வலது பக்கம் ஆதவன் எழுந்தருள, இடது பக்கம் முந்தைய இரவில் பொழிந்த பௌர்ணமி நிலா ஒளி வீச நிகழ்ந்த இந்த பொங்கல் திருநாளின் வார்த்தைகளால் வர்ணிக்கத்தான் இயலுமா ? சொற் சுவை கடந்த இந்த பொங்கல் திருநாளில் நிரவிய சித்தாமிர்தத்தை நம் சற்குரு தன் அடியார்களுக்கு என்று சிறிதும் வைத்துக் கொள்ளாது அனைத்து சர்க்கரைப் பொங்கலையும் பானையோடு அந்த உத்தராயணப் புண்ணிய தினத்தில் திருஅண்ணாமலையை கிரிவலமாக வந்த அடியார்களுக்கு விநியோகித்தார் என்றால் அந்தச் சிறப்பை எப்படி வர்ணிக்க முடியும் ? நால்வேத சாட்சியாக, நான்மாடக் கூடல் அமிர்தமாக வழங்கப்பட்ட அந்த பிரசாதத்தை பெற்றவர்களுக்கே வர்ணிக்க முடியாத அனுகிரகம் கிட்டும் என்றால் அந்தப் பொங்கலை தயார் செய்த நம் அடியார்களுக்கு கிட்டும் அனுகிரகம் எத்தனை தலை முறைகளைக் காக்கும் என்பதை நாம் நினைத்தால் அது நம்மை பிரமிப்பின் எல்லைக்கே கொண்டு செல்லும் அல்லவா ? இவ்வாறு பொங்கல் மட்டும் அல்ல திருபுவன கோபுரம் தாங்கித் தூண்களைத் தூய்மை செய்யும் பாக்கியம் கிட்டியதும் வானளவ துலங்கிய நம் பித்ருக்களின் கருணையே. இந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் நாம் குருவுடன் சேர்ந்து நற்பணியில் ஈடுபட முடியவில்லையே என்று பல அடியார்கள் இப்போது நினைத்தாலும் இந்த வரிகளைப் படிக்கும் அவர்களுக்கும் நிச்சயம் குருவருள் துணை நிற்கும் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சித்தப் பொக்கிஷமாகும்.
ஜபாகுசும சங்காசம் காஷ்யபேயம் மஹத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்நம் ப்ராணதோஸ்மி திவாகரம்
என்ற சூரிய துதியை 12 முறை ஓதி 12 முறை சாஷ்டாங்கமாக பொங்கல் பானை முன் நமஸ்கரித்து அந்த பொங்கலில் ஒரு பகுதியை திருத்தலங்களில் பக்தர்களுக்கு அளித்தலால் நம் சற்குரு அன்று அருளிய நான்மாடக் கூடல் அனுகிரகத்தில் ஒரு பகுதியையாவது இன்றைய அடியார்களும் பெறுவார்கள் என்பது உறுதி.

நந்தி கலம்பகம்

மூன்றாம் நந்தி வர்மன் என்ற பல்லவ அரசன் வேண்டுகோளுக்கிணங்க பாடப்பட்டதாக நந்தி கலம்பகம் அமைந்தாலும் இதன் பின்னணியில் அமைந்துள்ள வரலாறு சுவையானதே. “பொய்யடிமை இல்லாத புலவர்க்கடியேன் ...” என்று சுந்தர மூர்த்தி நாயனார் வாக்கிற்கிணங்க பாடப் பெற்றதே நந்தி கலம்பகமாகும். முற்காலத்தில் அறம் வைத்துப் பாடுதல் என்ற ஒரு வழக்கின் அடிப்படையில் அமைந்ததே இது. இதற்கு உதாரணமாக வார்த்தைகளைக் கூறுதல் கடினமே. சூரியன் கிழக்கில் உதிக்கிறது என்பது மேலோட்டமான உண்மையாக இருந்தாலும் சூரியன் அசையாமல் இருக்கிறது பூமியே அதைச் சுற்றி வருகிறது என்பதுதானே உண்மை. ஒரு உண்மையைக் கூறி அது உண்மை என்றால் இந்த செயல் நடக்க வேண்டும் என்று கூறுவதே கலம்பக சூத்திரமாகும். இவ்வாறு மேற்கண்ட புலவர் நந்திவர்மன் நாட்டிற்குச் சென்றபோது அங்கு கடைவீதியில் உள்ள ஒரு சங்கிலியை அனைவரும் தாண்டிச் செல்ல வேண்டும் என்ற விதி இருக்க இறைவனைத் தவிர வேறு எவரையும் வணங்காத மதியுடைய அந்த புலவரும் அறம் வைத்துப் பாடியதால் அந்த சங்கிலி அறுந்து போகவே புலவரும் அந்த இடத்தைத் தாண்டிச் சென்றார்.

ஸ்ரீதுர்காதேவி திருபுவனம்

விஷயமறிந்த காவலாளிகள் புலவரை அரசன் முன் கொண்டு நிறுத்த புலவரும் அறம் வைத்துப் பாடுதலின் பொருளை உணர்த்தினார். புலவரின் தரிசனத்தைப் பெற்ற மன்னனோ அந்தப் புலவனை சாட்சாத் சிவபெருமானாகவே கருதி அறத்தை, அறக் கடவுளான இறைவனை தனக்குக் காட்ட முடியுமா என்று கேட்கவே அந்தப் புலவரும் இறைவனான உண்மையை உணர மன்னருக்கு இருந்த ஆர்வத்தை மெச்சி நந்தி கலம்பகம் பாட தன்னுடைய கர்மங்கள் அனைத்தும் தீயில் மாய நந்திவர்மன் இறைவனை அடைந்தான். நந்திவர்மன் என்பது காரணப் பெயரே. நந்தி என்ற நாமம் கொண்ட இறைவனை, சிவப் பரம்பொருளை முறையாக அடைந்ததால் மன்னன் நந்திவர்மன் என்று அழைக்கப்பட்டது பொருத்தமான செயலே. நந்தி என்றால் சிவன், கலம்பகம் என்றால் சக்தி. நந்தி கலம்பகம் என்றால் சிவனும் சக்தியும் சேர்ந்த பரம்பொருள் என்பதே அனைவரும் புரிந்து கொள்ளக் கூடிய அருள் விளக்கம். இதைக் குறிப்பதாக அமைந்ததே திருஅண்ணாமலை சிவசக்தி ஐக்ய தரிசனமாகும். இந்த ஐக்யத்தைக் குறிக்கும் மற்றோர் விளக்கத்தையும் காண்போம். அக்பரின் அவைப் புலவராக இருந்தவரே தான்சன் என்ற கவி. சத்தியம், தர்மம், அன்பு என்ற வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் அன்னிய மொழிகளில் கிடையாது என்பதே தமிழ் மொழியின் தனிச் சிறப்பாகும். இவ்வாறு தர்மம் என்ற வார்த்தைக்கு இணையாகத் துலங்குவதே நந்தி என்ற சொல். அது போல சத்தியம் என்ற வார்த்தைக்கு எடுத்துக்காட்டாகத் துலங்கியவரே தான்சன். தான்சனை ஒருமுறை தீபக் என்ற ராகத்தில் பாட முடியுமா என்று அரசர் கேட்டபோது சத்தியசீலரான தான்சனோ அந்த ராகத்தில் பாடினால் அப்போது தோன்றும் தீயில் பாடுபவரைச் சுற்றியுள்ள அனைத்துப் பொருட்களுமே பஸ்மமாகி விடும் என்றாலும் சத்தியத்தையே மூச்சாகக் கொண்ட தான்சனும் அரசனின் வேண்டுகோளை ஏற்று தீபக் ராகத்தில் பாட ஆரம்பித்தார். சிறிது சிறிதாக அரசவையில் வெப்பம் கூடியது. ஆங்காங்கே ஒளிக் கீற்றுகள், அக்னிப் பிழம்புகள் தோன்றலாயின. இன்னும் சற்று நேரம் இந்நிலை நீடித்தால் அந்த அரச சபை மற்றும் தான்சன் உள்பட அனைத்துமே எரிந்து சாம்பலாகி விடும் என்பதை உணர்ந்தாள் தான்சனின் மனைவியான உச்சயினி. மனைவியின் கடமை கணவனைக் காப்பதே. அந்தத் தருணம் வரை உச்சயினிக்கு பாடத் தெரியும் என்பதை எவரும் அறிந்திலர். அதுவே உத்தம மனைவியின் பாங்கும் கூட அல்லவா ? மனைவியின் திறமை அனைத்தும் கணவனுக்காக, கணவனின் நலனுக்காக மட்டுமே. உச்சயினி பாடப் பாட நன்றாக வெளுத்திருந்த வானமும், தான்சனின் வெம்மை ராகத்தால் கொதித்த அரசவையும் குளிர்ச்சி அடைந்து அங்கே மழைப் பொழிவு ஏற்பட்டது. அது அமுத மழையே என்பதைச் சொல்லவும் வேண்டுமோ ? மேக மல்ஹர் ராகத்தில் பாடினால் அங்கே மழைப் பொழிவு உண்டாக வேண்டும் என்பது மட்டும் விதியல்ல, அந்த மழையில் ஒவ்வொரு துளியுமே அமிர்த சக்திகளுடன் துலங்க வேண்டும் என்பதும் இறை நியதியே. இன்று மக்கள் பாடி வெயிலையும் மழையையும் உருவாக்க முடிகிறதோ இல்லையோ நிச்சயமாக கணவன் மனைவி ஒற்றுமையாகத் திகழ்ந்தால் நிச்சயம் சமுதாயத்தில் அமுத மழைப் பொழிவு ஏற்படும் என்பதில் ஐயமில்லை. உடலால் ஒன்றுபட்டு வாழ முடியாவிட்டாலும் மனதை கணவன்பால் நிறுத்தி உத்தமியாக வாழ்ந்தவளே கண்ணகி. விதிவசத்தால் நிரந்தரமாக கணவனை விட்டுப் பிரியும் நிலை ஏற்பட்டபோது பெண்ணுக்கு இலக்கணமான தன் கொங்கையைப் பிய்த்து எறிந்து மதுரையை தீக்கு இரையாக்கி விட்டு இறைவனுடன் கலந்தாள் என்பது நீங்கள் அறிந்ததே. அந்நிலையிலும் தனம் என்ற அமுதசுரபியானது மக்களுக்குப் பயன்பட வேண்டும், மக்களின் தீய கர்மங்களைக் களைந்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற தர்மமே ஓங்கி நின்றதால் குழந்தைகள், வயதானவர்கள், அந்தணர், பசுக்கள் போன்றவற்றை அவள் பத்தினிக் கனல் தீண்டக் கூடாது என்ற இறை ஆணையையும் வேண்டிப் பெற்றாள் என்பதே நம்மை புனிதமாக்கும் வரலாறு. எனவே சிவ சக்தி ஐக்யம் என்பதே எக்காலத்தும் மாறாத நந்தி கலம்பக வார்த்தையாக இருப்பதால் நந்தி கலம்பகம் என்ற வார்த்தையை ஓதி வந்தாலே அந்த ஒன்பது எழுத்துக்களும் அக்னி சக்திகளை முழுமையாகப் பெற்று நம்மை இறைவனுடன் சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. நந்தி கலம்பகம் என்ற இரண்டு வார்த்தைகளும் ஒரு வார்த்தையாக இணைய அந்த ஒரு வார்த்தையும் மறையும் தருணத்தில் தியானம் சித்திக்கும் என்பதே நந்தி கலம்பகம் கூறும் உண்மையாகும். இது உண்மை என்று உணர்விப்பதே திருபுவனம் திருத்தலத்தில் மேற்கொள்ளும் தொடர்ந்த வழிபாடுகளாகும். நந்தி கலம்பகம் என்ற ஒன்பது அட்சரங்களை உருவ வடிவில் வழிபட நினைப்பவர்கள் திருபுவனம் ஸ்ரீதுர்கா தேவியை வணங்கி குறைந்தது ஒன்பது முறை பிரகாரத்தை வலம் வருதலும் பெண்களுக்கு ஒன்பது கஜ நூல் புடவைகளை தானமளித்தலும் நன்றே.

குச சக்தியா குசா சக்தியா ?

குச என்பது பெண்களின் தனத்தையும் குசம் என்பது நல்லதையே செய்யும் எண் சக்தியையும் குறிக்கும். ஒரு காலத்தில் தாய்ப்பாலில் நான்கு சதவீதம் பூச்சி மருந்து கலந்திருப்பதாக அறிந்த நாம் இன்று கற்பனைக்கு எட்டாத அளவிற்கு அது மிகுந்திருந்தாலும் இன்றும் தாய்ப்பாலுக்கு இணையான ஒன்று இந்த உலகத்தில் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எந்த நச்சுத் தன்மை பாலில் கலந்திருந்தாலும் தாயின் அன்பு என்பது கலப்படமில்லாத ஒரு தூய பொருளாக இருப்பதால் இந்த தாய் அன்பைப் பூரணமாகப் பொழியும் எண்ணம் உடையவர்கள் வணங்க வேண்டிய தேவியே திருபுவனம் ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள் ஆவாள். தங்கள் வலது காலையோ இடது காலையோ முன் வைத்து நிற்பதே குசா சக்தியைப் பெருக்கும் என்பது நாமறிந்ததே. இவ்வாறு பக்தர்களுக்கு நற்சக்திகளையே அனுகிரகமாக அளிப்பதற்கு கோயம்பேடு ஸ்ரீதர்மவர்த்தினியும், சுவாமி விவேகானந்தரும் முறையே தங்கள் இடது வலது காலை முன் வைத்த கோலத்தில் துலங்குகின்றனர்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி திருபுவனம்

ஈசனின் சக்திகள் எல்லையற்றவை என்பதை நாம் புரிந்து கொள்ள உறுதுணையாய் நிற்பவையே இத்தகைய கோலங்கள் என்பது மட்டும் அல்லாது இறை மூர்த்திகள் எழுந்தருளி இருக்கும் முறையும் இத்தகைய சக்திகளின் கூறுகளைப் புலப்படுத்துகின்றன. கோயம்பேடு திருத்தலத்தில் சுவாமியின் வலப்புறத்தில் அம்பாள் எழுந்தருளி இருப்பது போல் திருபுவனம் திருத்தலத்தில் இறைவி இறைவனின் இடப் புறத்தில் எழுந்தருளி கருணை வழங்குகிறாள். ஆனால், திருபுவனத்தில் இறைவியின் சன்னதியே இடது பக்கம் முன்னோக்கி நகர்ந்து இருப்பதே குசா சக்திகளின் தேரோட்டமாகும். தம்பதிகள் தங்கள் பாதங்களை முன் வைத்து நிற்பதிலேயே இத்தகைய சக்தி மாற்றங்கள் ஏற்படும் என்றால் சுவாமி அம்பாள் திருத்தலங்கள் இவ்வாறு எதிர் எதிராகவோ, இணையாகவோ, முன் பின்னாகவோ, மேல் கீழான தளங்களிலோ அமைவதால் என்னென்ன அற்புத சக்திகள் சங்கமிக்கும் என்பதை எல்லாம் பக்தர்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளுதலே சிறப்பாகும். திருபுவனத்தில் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திக்கு சித்தர்கள் சூட்டியுள்ள செல்லப் பெயரே, அன்பு நாமமே ஸ்ரீதட்சிண சரபேஸ்வர நடராஜ மூர்த்தி என்பதாகும். திருத்தலங்களில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியும் ஸ்ரீநடராஜ மூர்த்தியும் தென் திசை நோக்கி எழுந்தருளி இருப்பதைப் போல திருபுவனத்தில் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியும் சுவாமிக்கு இடது புறத்தில் தென் திசை நோக்கிய குரு சக்திகளுடன் திகழ்கிறார். இந்த ஒளி வருடத்தில் இருள் நீக்கும் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் அருளை அனுகிரகமாகப் பெற இத்தலத்தில் ஒவ்வொரு சன்னதியிலும் 108 தீபங்களை சரபேஸ்வர முகூர்த்தத்தில் ஏற்றி வழிபடுவது சிறப்பாகும். நான்காம் யாமத்தில் திகழும் இரண்டாம் முகூர்த்தமே சரபேஸ்வர முகூர்த்தம் என்று வழங்கப்படுகிறது. அதாவது விடியற்காலையில் நாலரை முதல் ஆறு மணி வரை துலங்கும் முகூர்த்தமும் மாலை நாலரை முதல் ஆறு மணி வரை துலங்கும் முகூர்த்தமும் சரபேஸ்வர முகூர்த்தமாகும். இத்தகைய முகூர்த்த நேரங்களை அந்தி சந்தி நேரங்கள் என்று அழைப்பதுண்டு. அதாவது சந்தி நேரத்தில் விளையும் எத்தகைய தீய சக்திகளையும் உத்தம வழிபாடுகளால் தகர்க்கும் அந்தி நேரம் என்பதே இதன் பொருள். இத்தகைய அந்தி நேர வழிபாட்டில் முதன்மையானதே சரபேஸ்வர முகூர்த்த வழிபாடாகும். 13 வில்வ தளங்களுடன் பொலியும் திருநல்லம் எனப்படும் கோனேரிராஜபுரமும் ஸ்ரீசாகாகோமளவல்லி என்ற அற்புத திருநாமத்துடன் எழுந்தருளி இருக்கும் அம்பாள் சுவாமிக்கு வலது புறம் முன் நகர்ந்து எழுந்தருளி இருக்கும் வைகல்மாடக் கோயிலும் இத்தகைய சரபேஸ்வர வழிபாடுகளுக்கு உகந்தவையே. ஸ்ரீவைகல்நாதர் திருத்தலம் திருநல்லம் அருகிலேயே அமைந்துள்ளது. பெண்களுக்கு அழகே தனம்தான். தனம் என்பது செல்வம் என்ற வழக்கைப் பெற்றது சமீப காலத்தில்தான். இவ்வாறு தனம் என்ற செல்வத்தை முறையாகப் பெறாத பெண்கள் வணங்க வேண்டிய அம்பாள் மூர்த்தியே ஸ்ரீதர்மசம்வர்த்தினி என்ற நாமத்துடன் துலங்கும் அம்பாள் மூர்த்திகள் ஆவர். இதன் பின்னணியில் அமைந்த காரணத்தை அத்தகைய பெண்கள் ஆத்ம விசாரம் செய்து அறிந்து கொள்ளுதலே சிறப்பாகும். மேலும் இத்தகைய சரபேஸ்வர ஒளி வழிபாடு இருள் கர்மங்கள் என்று அழைக்கப்படும் பகைமை, குரோதம், துரோகம், அவநம்பிக்கை, காட்டிக்கொடுத்தல், நன்றியின்மை போன்ற பலவிதமான துன்பங்களைத் தீர்க்கும் ஔஷதமே என்பதை நடைமுறையில் அறிந்து கொள்தலே சிறப்பாகும். ஒளி ஏற்றுங்கள், இருள் விலக்குங்கள்.

ஸ்ரீமுருகப் பெருமான் திருபுவனம்

பச்சை, சிவப்பு, மஞ்சள் என்னும் வண்ணங்கள் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகங்களைக் குறிக்கும் வண்ணங்களாகும். இந்த மூன்று வண்ணங்களில் அமைந்த மரிக்கொழுந்து, தவளம், விருட்சிப்பூ, செவ்வந்தி போன்ற மணமுள்ள மலர்களால் டைமண்ட் வடிவத்தை கால்கள் படாது அமைத்து இரண்டு டைமண்ட் வடிவங்களில் அமைந்த பூக்கொத்துக்களின் நடுவில் 30, 60, 90 என்ற எண்ணிக்கையில் தீபங்கள் ஏற்றி வழிபடுதலே இருள் நீக்கி, ஒளி கூட்டும், அருள் வீசும் சரபேஸ்வர வழிபாடு ஆகும். இந்த ஒளி வழிபாட்டை ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு திருபுவன சன்னதியில் நிறைவேற்றுவதும் ஏற்புடையதே. எத்தகைய பகைமையும் வேரறுப்பதே இத்தகைய வழிபாடு என்றாலும் இந்த ராகவேந்திர வருடத்தில் இந்த சரபேஸ்வர ஒளி வழிபாடு பன்மடங்கு சக்திகளை வர்ஷிக்கும். தீப வழிபாட்டின் நிறைவில் இந்த மலர்களுடன் குறைந்தது இரண்டு வாழைப் பழங்களையும் சேர்த்து தானம் அளிப்பது நன்று. குடும்ப ஒற்றுமையும் பெருகும். கடன் பெருகி விட்டது இதை அடைக்க முடியாது, கடன்காரர்களுக்கு பதில் சொல்வதை விட உயிரை விடுவதே மேல், வியாதி கட்டுக்கடங்காமல் போய் விட்டது, இனி உயிர் வாழ முடியாது, நம்மைக் காத்து நின்ற ஒரே துணையையும் இழந்து விட்டதால் இனி உயிர் வாழ முடியாது என்றெல்லாம் தலைக்கு வெள்ளம் போய்விட்டது என்று நம்பிக்கை இழந்து வாடும், வாழும் அனைவருக்கும் புத்துயிர் அளிப்பதே சரபேஸ்வர வழிபாடு ஆகும். நம் சற்குருவின் அனுகிரகமாக அளித்த ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியின் சித்திரப் படத்தைப் பார்த்தால் இந்த உண்மையை உணர்ந்து கொள்ளலாம். ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் கோபக் கனலை எவராலும் அடக்க முடியாமல் அது தன்னையே அழித்து விடும் என்ற நிலைக்கு உயர்ந்தபோது ஸ்ரீசிவபெருமானே ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தியாய் எழுந்தருளி பெருமாள் மூர்த்தியின் கோபக் கனலை இருள் நீக்கும் அருட்கனலாக மாற்றி அருள் புரிந்தார் என்பதே தன் தலைக்கு மேல் கூப்பிய கரங்களுடன் விளங்கும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் தோற்றம் நமக்கு அளிக்கும் உயரிய பாடமாகும். பூலோக மக்களுக்குப் பாடம் புகட்டுவதற்காக இறை மூர்த்திகள் என்னென்ன கோலத்தில் எல்லாம் எழுந்தருளி அவர்களைக் காக்கிறார்கள், வழிநடத்துகிறார்கள் என்ற கருணையையும் இது தெளிவாக்கும். நாம் திருத்தலங்களில் இறை மூர்த்திகளைத் தரிசிக்கும்போதும், சற்குருமார்கள், மகான்களைத் தரிசிக்கும்போதும் நம் தலைக்கு மேல் கைகளைக் கூப்பி தரிசனம் செய்கிறோம். இதன் பின்னணியாக அமைந்த தெய்வீக இரகசியங்கள் ஆயிரமாயிரமாக இருந்தாலும் அவைகளில் ஒன்றே தச வாயுக்களின் தூய்மை ஆகும். தச வாயுக்களின் சங்கமமாக அமைந்த மனித உடலானது இறந்த பின் உடலிலிருந்து பிரிந்து அவை வேறு பரிணாமத்தில் இறைவனுடன் கலப்பதே முறை. இறைவனுடன் ஒன்றும் அந்த இறுதி நிலையில் இது நிகழும் என்றாலும் சாதாரண மனிதர்களுக்கு இத்தகைய முறையான சங்கமம் நிகழ்வதில்லை என்பதால் நம் சிறு வயது முதலே பெரியோர்கள் காட்டும் வழிபாடுகளை நிறைவேற்றி வந்தால் அது நிச்சயமாக முறையான தச வாயுக்களின் சங்கத்திற்கு துணை புரியும். இதை உணர்த்துவதும் தசாவதார மூர்த்திகளின் வழிபாடு ஆகும்.

தசமுக அஸ்வமேத தரிசனம்
திருஅண்ணாமலை

இந்த தச வாயுக்களின் சக்திகளைப் பிரித்தே 32 தேவாரப் பதிகங்களில் நம் சற்குரு அமைத்துள்ளார் என்பதே சற்குருவிற்கு அடியார்களின் மீதுள்ள கருணையைப் பறைசாற்றும் இலக்கணமாகும். அதனால்தான் எந்த தேவாரப் பதிகத்தைப் பாடுவதாக இருந்தாலும் அந்தப் பதிகத்தில் உள்ள பத்து, பதினோரு பாடல்களையும் பாட வேண்டும் என்று நம் சற்குரு வலியுறுத்துவார்கள். 32 என்பது பஞ்ச பூதங்களைக் குறிக்கும் எண் இலக்கணமாகும். நாச்சியார்கோவில், பெருமாள்மலை போன்ற திருத்தலங்களில் எழுந்தருளி உள்ள தசாவதார மூர்த்திகளின் வழிபாட்டின் பின்னணியில் எத்தகைய தெய்வீக மாமறைகள் பொதிந்துள்ளன பார்த்தீர்களா ? இது போன்றதுதான் ஸ்ரீஆதிசங்கரர் அருளிய தசஸ்லோக்கியின் மகிமையும். கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். கங்கைக் கரையில் வருண் முதல் அசி வரையிலுள்ள அனைத்து தீர்த்த கட்டங்களிலும் நீராடிய பின் ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசித்தலே சிறப்பாகும். இதன் பின்னர் தசாஸ்வமேத காட் பகுதியில் குறைந்தது 10 மணி நேரம் நீராடுதல் இந்த சிறப்பிற்கு அணி சேர்ப்பதாகும். இத்தகைய அனுகிரகங்களை எல்லாம் தம் அடியார்களுக்கு பெற்றுத் தந்தவரே நம் மறைநாயகரான சற்குரு ஆவார். இன்றும் காசி செல்பவர்கள் இவ்வாறு அனைத்து தீர்த்தக் கட்டங்களிலும் நீராட முடியாவிட்டாலும் முடிந்த தீர்த்தக் கட்டங்களில் நீராடி தசாஸ்வமேத காட் தீர்த்தக் கட்டத்தில் குறைந்தது 10 மணி நேரம் நீராடுதலால் மனித உடலில் உள்ள தச வாயுக்களும் நன்னிலை அடையும் என்பதே சித்தர்கள் கூறும் தெளிவு. இவ்வாறு பத்து மணி நேரம் தொடர்ந்து நீராட இயலாதவர்கள் இந்த நேரத்தை ஒரு வார காலத்திற்கு கூட பிரித்து நிறைவேற்றுதலும் சிறப்பாகும். கங்கை தீர்த்த கட்டங்களின் சிறப்பை ஓரிரு வரிகளில் கூறுவது இயலாது என்றாலும் நம் பித்ருக்களின் மகிமையை ஒரு துளியாவது அறிய உதவுதே இந்த தீர்த்தக் கட்டங்களில் பத்து மணி நேரமாவது இயற்றும் நீராடலாகும். உயிர் பிரியும் அத்தருணத்தில் எந்த தெய்வ மூர்த்தியும் நம் கண்ணில் படுவது கிடையாது. நன்னிலை பெற்ற நம் மூதாதையர்களே நம் கண்ணில் தோன்றுவர் என்பதே சித்தர்கள் காட்டும் தெளிவு. இதற்கு உதாரணமாகத் திகழ்வதும் கங்கை நீராடலாகும். வடக்கில் முதலில் விளங்குவது வருண் தீர்த்தக் கட்டம், இதில் நிறைவாக அமைவது அஸ்ஸி தீர்த்தக் கட்டம். இது தெற்கில் அமைவது.

ஸ்ரீநடராஜ பெருமான் திருபுவனம்

இவ்வாறு தெற்கில் திகழும் நம் பித்ரு மண்டலத்தை நோக்கித்தானே இறந்தவரின் பயணம் அமையும். இத்தகைய சிறப்பு வாய்ந்த பித்ரு மண்டலத்திற்கு நாம் பயணம் செய்ய உறுதுணையாக நிற்பதே இந்த தீர்த்தக் கட்டங்களில் அமையும் நீராடலாகும். இவ்வாறு கங்கை தரிசன, நீராடலால் பெறும் அஸ்வமேத சக்திகளில் பெரும் பங்கைப் பெற உதவுவதே திருஅண்ணாமலை கிரிவலமாகும். தசமி திதிகளில் மூன்று முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து பத்து விதமான உயிரினங்களுக்கு அதாவது பசு, நாய், கழுதை, குதிரை, பன்றி போன்றவற்றிற்கு உணவிட்டு வழிபடுதலால் அஸ்வமேத யாகப் பலன்களைப் பெறலாம் என்பதும் ஒரு யாக முறையே. தங்கள் கிரிவலத்தின் போது அஸ்வமேத பிரகாச ஒளியுடன் திகழும் இங்கு அளித்துள்ள தசமுக தரிசனத்தைக் காண்பதும் சிறப்பே. இத்தகைய ஒளிப் பிரவாகத்தை எங்கு தரிசனம் செய்தாலும் அங்கு சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து வணங்குதலால் உடலில் உள்ள தச வாயுக்களும் சுத்தி பெறும். ஜாதகத்தில் லக்னத்திலிருந்து பத்தாமிடத்திலும் சூரியனிடமிருந்து ஒன்பதாம் இடத்திலும் மிளிரும் சந்திர பகவானைப் பெற்ற ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் போன்ற மகான்கள் இத்தகைய அஸ்வமேத யாகப் பலன்களை இத்தகைய பக்தர்களுக்கு அளிக்க திருவுள்ளம் கொண்டுள்ளதால் எத்தகைய திருமணத் தடங்கல்கள் நீங்குவதும் இத்தகைய கிரிவலப் பலனாக வந்தடையும் என்பதும் மணமானவர்கள் குடும்ப வாழ்வில் இத்தகைய தரிசனங்கள் ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதும் திருஅண்ணாமலை கிரிவலப் பலன்களில் ஒன்றாகும். அபூர்வமாக தென்கடம்பை திருத்தலத்தில் பிரதோஷ நாளில் கிட்டும் ஸ்ரீதசபுஜ ரிஷபாரூட தரிசனம் எப்படி தசவாயுக்களையும் சீரமைக்கும் சக்தி பெற்றதாகத் திகழ்கிறது என்பதும் இத்தருணத்தில் ஆத்ம விசார பலனாகப் புலப்படும் அல்லவா ? திருபுவனம் திருத்தலத்திலோ அல்லது எவ்விடத்திலும் சரபேஸ்வர வழிபாடுகளை இயற்றுவோர்கள் நம் சற்குரு அருளிய சரபேஸ்வர கவசத்தையோ, சரபேஸ்வர காயத்ரீ மந்திரத்தையோ, சரபேஸ்வர நாமாவளிகளையோ ஓதுதல் சிறப்பு. இது பற்றி எதுவும் அறியாதவர்கள் “சரபேசா வாழி” என்று ஓதி வருதலும் ஏற்புடையதே. இங்கு நீங்கள் திருஅண்ணாமலையைச் சுற்றி பிரகாசிப்பதாகக் காணும் சுப்பரதேசி என்னும் ஒளி வட்டமே உங்கள் பித்ரு மூர்த்திகள் உங்களுக்காக, உங்கள் வம்சாவளியினருக்காக அளிக்கும் அனுகிரகமாகும். இதன் உண்மையான பரிமாணத்தைக் காணும் சக்தியை பக்தர்கள் பெறாவிட்டாலும் அந்தந்த பக்தரின் பித்ருக்கள் தங்கள் அனுகிரக சக்தியாக வர்ஷிப்பதே பித்ரு தேவர்களுக்கு நம் மீதுள்ள கருணையைக் காட்டும். இந்த சுப்பரதேசி ஒளி வட்டத்தின் ஒரு அம்சமே இன்றும் ஸ்ரீவெள்ளை வேம்பு மாரியம்மனை தரிசிக்கும் பக்தர்களுக்கு அனுகிரகமாக அளிக்கப்படுகிறது என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியமாகும்.

திருபுவனம்

இந்த வெள்ளை வேம்பு அம்சத்தை “பதிப்பதற்காகவே” நம் சற்குரு இத்தலத்திற்கு எழுந்தருளிய இரகசியத்தை உணர்ந்தோரும் ஒரு சிலரே. ஒரு காலத்தில் ஸ்ரீஆதிசங்கரர் அருளிய தசசுலோகிக்கு அவையடக்கம் கருதி பொருள் கூற அஞ்சுவர். இன்றோ தாம் அறிந்ததை மற்றவரும் உணரட்டுமே என்ற நோக்கில்தானோ என்னவோ இதன் பொருளையும் பலரும் வெளியிட்டுள்ளனர். இதைப் போன்றதே ஸ்ரீசரபேஸ்வரரின் மகிமையும். எல்லையற்ற சக்தியுடன் விளங்கும் இறைவனை மனிதன் அறிய முற்படுவது இயலாது என்றாலும் ஸ்ரீநரசிம்ம மூர்த்தியைப் போல அவனருளாலே அவன் தாள் வணங்கினால் இறைவன் எதையும் அருள வல்லவன் என்பதை உணர்த்துவதே சரபேஸ்வர வழிபாடாகும். நம் சற்குரு திருபுவனத்தில் திருப்பணிகள் நிறைவேற்றியபோது ஸ்ரீசரபேஸ்வர ஆலயத்தின் முகப்பில் இருந்த பறவை எச்சங்களை அகற்றுவதில் பெருமளவு நேரத்தைக் கழித்தார்கள். பிரம்மாண்டமான திருபுவன திருத்தலத்தில் எத்தனையோ சந்நதிகள் உழவாரப் பணிகள் இன்றியே இருக்க நம் சற்குருவோ இத்தகைய திருப்பணியை மேற்கொண்டது ஆச்சரியம் அளித்ததில் வியப்பில்லைதான். ஆனால் இந்த திருப்பணிக்கு பின்னணியில் அமைந்த இரகசியங்களை அறிந்தால்தான் நம் சற்குருவின் மேன்மை புரியவரும். சரபப் பறவை ஏதோ ஒரு யுகத்தில் திகழ்ந்த பறவை கிடையாது. இன்றும் கொல்லிமலை, திருக்கோணமலை, திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களில் நாம் காணக் கூடிய சக்தி வாய்ந்த பறவையே என்றாலும் மகான்கள், சித்தர்கள் போன்றோரைத் தவிர இந்தப் புனிதமான பறவையைத் தரிசிக்கும் அளவிற்கு நாம் புண்ணிய சக்தியைப் பெருக்கிக் கொள்ளவில்லை என்பதே முக்கியம். கொல்லிமலையில் உலவும் சரப பறவைகளின் ஒரு இறகின் குறுக்களவு மட்டுமே எட்டு மைல் இருக்கும் என்றால் சரப பறவையின் முழுத் தோற்றம் எத்தகைய பிரம்மாண்டமானதாக இருக்கும். இத்தகைய சரப பறவைகள் தினமும் திருபுவனத்திற்கு வருகை தருதல் என்பது கலியுகத்திற்கு பொருந்தாத செயலாக இருப்பதால் பல மகான்களும் முனிவர்களும் புறாக்கள் வடிவில் இத்தகைய திருத்தலங்களை எல்லாம் தரிசனம் செய்து சரப சக்திகளை திருபுவன திருத்தலத்தில் தொடர்ந்து பதித்துச் செல்கின்றனர் என்பதே நம்மை வியக்க வைக்கும் பேருண்மை ஆகும். காக்கைகள், கிளிகள், குயில்கள் போன்ற பறவைகள் வேப்பம் பழம் போன்றவற்றை உண்டு விட்டு அதன் விதையை சற்றும் வீணாக்காது பூமியில் மேல் எச்சமாகப் பரப்புகின்றன. இவ்வாறு “ஊட்டச் சத்துக்களை” பெற்ற வேப்பங்கொட்டைகளே பிற்காலத்தில் நல்ல மரமாக வளர்ந்து மக்களுக்கு நற்பலன்களை வர்ஷிக்கின்றன. பறவைகளால் ஏற்படும் நூற்றுக் கணக்கான பலன்களில் இது ஒன்றையேனும் உணர்ந்தவர்கள் இன்றும் வேப்பங் கொட்டைகளைப் பொறுக்கி அதன் மேல் பசுஞ் சாணம், தூய களிமண் போன்றவற்றைத் தடவி வெயிலில் உணர்த்தி பல இடங்களிலிலும் பரப்பி விட்டு இயற்கை வளத்தைப் பாதுகாக்க பாடுபடுகின்றனர். இத்தகைய திருப்பணிக்கு இயற்கையாகவே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு புறாக்கள் வடிவில் திருபுவனத்தையும் மற்ற திருத்தலங்களையும் வலம் வரும் ரிஷிகளுக்கு கம்பு, சோளம், கோதுமை போன்ற தான்யங்களை உண்ண அளிப்பதும் தங்கள் வீடுகளின் மேற்பரப்பில் பறவைகள் தங்கி வாழ, அடைகாக்க ஏதுவான சாளரங்களை அமைப்பதும் அடியார்கள் ஆற்ற வேண்டிய திருப்பணிகளாகும். குறைந்த சிரமம், நிறைந்த பலன். நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அமைந்த இத்தகைய சாளரங்களைப் பற்றி அறிந்தோரும் ஒரு சிலரே.

ஸ்கந்தாக்னி வில்வம்

திருபுவனம் திருத்தலத்தில் சுவாமி, இறைவி இவர்களிடையே அபூர்வமாக எழுந்தருளி இருக்கும் தல விருட்சமே ஸ்கந்தாக்னி வில்வ மரமாகும். சோமாஸ்கந்த மூர்த்தியாய் இவ்வாறு குசா சக்தியுடன் எழுந்தருளி இருக்கும் வில்வ மரம் ஒது ஒன்றே. எத்தனை தலைமுறைகளாக குழந்தைப் பேறு இன்றி வருந்துவோர் கூட இந்த ஸ்கந்தாக்னி வில்வ மரத்தை வலம் வந்து வணங்குவதால் அற்புத பலன்களைப் பெறுவார்கள். தற்காலத்தில் பலரும் கர்ப்பம் தரித்தவுடன் ஸ்கேன் போன்ற முறைகளால் தங்கள் கருப்பையில் வளரும் குழந்தைகள் நல்ல முறையில் வளரவில்லை என்ற காரணத்தால் அதைக் கருச்சிதைவு முறையில் அழித்து விடுகிறார்கள். இதை நம் பெரியோர்களால் அங்கீகரிக்கப்படாத ஒன்றாகும். ஒருமுறை நம் சற்குரு ஒரு அடியார் திருமணத்திற்காக எழுந்தருளியபோது அங்கு ஒரு மூதாட்டி வந்து மண்டியிட்டு தன் முந்தானையைக் கையில் ஏந்திக் கொண்டு தன் மகனுக்கு நல்வழி காட்டுமாறு நம் சற்குருவிடம் வேண்டி அழுதாள். இதில் அதிசயம் என்னவென்றால் அந்த மூதாட்டி நம் சற்குருவை அதற்கு முன் பார்த்ததே கிடையாது.

ஸ்கந்தாக்னி வில்வமரம் திருபுவனம்

நம் சற்குருவோ அந்த மூதாட்டியை கூர்மையாகப் பார்த்து, “அம்மா, உன் மகனை கடவுள் பார்த்துக் கொள்வார். நீ உன் வழியைப் பார்த்துக் கொண்டு செல். கடவுள் உனக்கு, உனக்கு நல்ல வழியை காட்டும்படி வேண்டிக் கொள்...,” என்று கூறி அந்த மூதாட்டியை அனுப்பி விட்டார். அந்த அம்மை சென்ற பின் அருகில் இருந்த அடியார்களிடம், “இந்த அம்மாவின் மகன் நாளை காலையில் இந்த வயதான தாயை வீட்டை விட்டு வெளியே துரத்தப் போகிறான். ஆனால், இந்த அம்மாவோ அந்தப் பையனைக் காப்பாற்றும்படி மடிப் பிச்சை கேட்டு முறையிடுகிறாள், இதுதான் தாயன்பு,” என்று கூறினார். இவ்வாறு சந்தான பாக்கியம் பெற்றாலும் அந்த சந்தானம் உண்மையான செல்வமாக இருந்து தாய் தந்தையரை கடைசி வரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பை உடைய அனைவரும் வணங்கி வழிபட வேண்டியதே இந்த ஸ்கந்தாக்னி வில்வ விருட்சமாகும். சுவாமி அம்பாள் சரபேஸ்வர சன்னதிகள் அனைத்தையும் ஏழு முறை வலம் வந்து வணங்கி வெண்ணெய் தடவிய கோதுமை ரொட்டியை தானமாக சிறுவர் சிறுமிகளுக்குத் தானமாக அளித்தலால் குடும்பத்தில் ஸ்கந்தாக்னி சக்திகள் பெருகி குடும்ப ஒற்றுமை ஏற்படுவதுடன் நல்ல சந்ததிகள் உருவாக இந்த பிரதட்சிண முறை உறுதுணையாக நிற்கும் என்பதில் ஐயமில்லை. சஷ்டி திதியன்று சரியாக ஆறு வயது பூர்த்தி அடைந்த குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தானமே இத்தகைய ஸ்கந்தாக்னி சக்திகளை அளிக்கவல்லது என்றாலும் தொடர்ந்து எந்த வயது அடைந்த குழந்தைகளாக இருந்தாலும் அந்த குழந்தைகளுக்கு வெண்ணெய் கலந்த கோதுமை ரொட்டிகளை தானமாக அளித்து வந்தால் அது சரியான வயது உடைய குழந்தைகளைச் சென்றடைய நம் முன்னோர்கள் வழிகாட்டுவார்கள் என்பதே இந்த பிரதட்சிணம், தானம் அளிக்கும் சுவையாகும். அது ஒரு சஷ்டி திதியிலும் நிறைவேறலாம், நூறு சஷ்டி திதியிலும் நிறைவேறலாம். ஆனால் இறை வழிபாட்டில் செலவாகும் எந்த நேரமும், செல்வமும் வீணாவதில்லை என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சரபேச சுவையாகும். வர்த்தினி என்றால் வளர்ப்பவள், பெருக்குபவள் என்றெல்லாம் பொருளுண்டு. தர்மசம்வர்த்தினி என்றால் தர்மத்தை, உண்மையை, நட்பை நல்ல முறையில் பெருக்குபவள் என்று பொருள். தர்மசம்வர்த்தினியின் தர்ம நிழலில் தோன்றிய ஸ்கந்தாக்னி சுடரே நம் சற்குரு என்ற உண்மையை உணர்ந்தோர் ஒரு சிலரே. மகாபாரதப் போரில் பல வியூகங்கள் கையாளப்பட்டன. பத்ம வியூகம், நாக வியூகம், கருட வியூகம் போன்ற வியூகங்களில் சரப வியூகம் என்று சரப பறவை வடிவமைக்கப்படும் வியூகம் ஒன்று உண்டு. இத்தகைய வியூகங்களைப் பற்றி முழுமையாக உணர்ந்தவர்களுள் துரோணாச்சாரியாரும் ஒருவர். துரோணாச்சாரியார் இவ்வாறு சரப வியூகத்தை அமைக்கப்போகிறார் என்ற உணர்ந்தார் பகவான் ஸ்ரீகிருஷ்ணர். இந்த வியூகத்தை அமைக்க போதுமான அக்ரோணி படைகள் பாண்டவர் வசம் இல்லை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும். பகவான் கிருஷ்ணரின் படைகள் அனைத்தும் கௌரவர்கள் பக்கம் போரிடுவதற்காக துரியோதனனால் கேட்டுப் பெற்றுக் கொள்ளப்பட்டதால் இந்த சந்தர்ப்பத்தை தமக்கு சாதமாக்கி பாண்டவர்களை வெற்றி கொள்ள நினைத்தார் துரோணாச்சாரியார். துரோணரை வீழ்த்துவதற்காக பகவான் கிருஷ்ணர் தீட்டிய திட்டத்தின் பின்னணியாக அமைந்தது இந்தப் போர் வீரர்களின் பற்றாக் குறையும் ஒரு காரணமாகும். எது எப்படியிருந்தாலும் கீதை நாயகன் தர்மத்தை நிலை நாட்டித்தானே ஆக வேண்டும். துரோணாச்சாரியார் இவ்வாறு சரப வியூகத்தை அமைக்க திட்டம் தீட்டியுள்ளார் என்பதை பகவான் ஸ்ரீகிருஷ்ணர் எப்படி உணர்ந்தார் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகின்றதல்லவா ?

திருபுவனம்

இது காலம் கடந்து, யுகங்கள் தாண்டி ஒளிரும் சரபேஸ்வர அனுகிரகம். விஷ்ணு பகவானின் நரசிம்ம அவதாரத்தின்போது எவராலும் தணிக்க முடியாத கோபக் கனலை தணித்து சரப அருள் கூட்டினார் அல்லவா சரபேஸ்வர மூர்த்தி ? அப்போது நரசிம்ம அவதாரத் தோற்றத்தைத் தன் திருப்பாதங்களால் (கால் நகங்கள்) தீண்டிய போது ஸ்ரீநரசிம்ம மூர்த்தி பெற்ற அனுகிரகங்களில் ஒன்றே இந்த சரப வியூக சூத்திர நுணுக்கமாகும். துரோணாச்சாரியார் மிகுந்த கோபத்துடன் போர்க்களத்தில் போரிட்டு முன்னேறிக் கொண்டிருந்தபோது பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஆணைப்படி தர்ம புத்திரர் “அஸ்வத்த குஞ்சரஹ” என்று ஒலித்தபோது ஸ்ரீகிருஷ்ணரும் தன் சங்கை எடுத்து அஸ்வத்த குஞ்சர என்ற இருவார்த்தைகளின் நடுவில் கேட்குமாறு தன் சங்கிலிருந்து கிருத்தின நாதத்தை எழுப்பினார். இந்த கிருத்தின நாதம் என்பது மனிதனின் புத்தியை பேதலிப்பது மட்டும் அல்ல, எந்த மனிதனை நோக்கி இந்த சங்க நாதம் அல்லது சங்கு நாதம் எழுப்பப்படுகிறதோ அந்த மனிதன் மட்டுமே இந்த சங்கு ஒலி நாதத்தைக் கேட்கும் வல்லமை பெறுவான் என்பதும் இந்த சங்கு நாதத்தின் மகிமை ஆகும். தன் ஆருயிர் மைந்தன் சிரஞ்சீவி சக்திகளுடன் துலங்குபவன், அவனை யாராலும் வெல்ல முடியாது என்று தெளிவாக உணர்ந்திருந்தாலும் கிருத்தின நாதத்தின் மகிமையால் துரோணாச்சாரியாரின் கைகள் செயலற்றுப் போக அவர் அர்ச்சுனனின் (கௌஸ்துபனின் ?) பாணத்திற்குப் பலியானார். இவ்வாறு யுகங்கள் கடந்து நிற்கும் சரப சக்திகளை தன் அடியார்களுக்குப் பெற்றுத் தருவதற்காகவே 2000 என்ற “அட்சய” ஆண்டில் சற்குரு திருபுவன திருத்தலத்தில் எழுந்தருளி திருப்பணிகள் நிறைவேற்றினார் என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் பேருண்மையாகும். இன்று நாம் எந்த அளவிற்கு திருபுவனம் திருத்தலத்தில் வழிபாடுகளை நிகழ்த்துகிறோமோ அந்த அளவிற்கு சரப சக்திகளைப் பெறுவதற்கு நம் சற்குருவின் அருள் துணை நிற்கும்.

திருபுவனம்

ஒரு முறை நம் சற்குரு ஒரு சில அடியார்களுடன் திருபுவன ஈசனை தரிசிப்பதற்காகச் சென்றிருந்தார். கருவறையில் அப்போது யாரும் தரிசனத்திற்காக காத்திருக்கவில்லை. அதனால் வேகவேகமாக ஒரு கோயில் சிப்பந்தி ஓடி வந்து, “சார், யாரும் கருவறைக்குள் சென்று விடாதீர்கள், இங்கேயே நில்லுங்கள். அர்ச்சகர் வந்து விடுவார் ...”, என்று கூறவே நம் சற்குருவோ தமக்கே உரித்தான அமைதியுடன், “ஒன்றும் அவசரம் இல்லை, சுவாமி, நாங்கள் யாரும் உள்ளே போய் விட மாட்டோம், குருக்கள் வரும் வரை காத்திருக்கிறோம்,” என்று கூறவே அந்த சிப்பந்தியும் சமாதானம் அடைந்து சென்று விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஸ்ரீகம்பஹரேஸ்வரர் என்னும் இறை மூர்த்தி தொலைவில் இருந்தே தரிசனம் செய்ய வேண்டியவர். நாம் யார் என்று புரிந்து கொண்ட பின்னரே இறைவன் யார் என்று புரிந்து கொண்ட பின்னரே “அருகில்” சென்று தரிசனம் செய்ய வேண்டும். அந்த இறை தரிசனம்தான் உண்மையான பலனை வர்ஷிக்கும். இக்கருத்தை மாதா அமிர்தானந்தாவும் தமக்கே உரித்தான எளிய பாணியில் வர்ணிக்கிறார்கள். “சபரிமலை செல்லும் ஒருவன் அங்கு குளித்து ஒரு பாறையின் மேல் தன் ஆடையை காய வைத்து அணிந்து கொள்கிறான். அவன் சென்ற பின் அடுத்து வருபவனும் அவ்வாறே தன் ஆடையை அதே பாறையின் மேல் காய வைத்து அணிந்து கொள்கிறான். அடுத்து வருபவனும் அவ்வாறுதான் ஆடை அணிந்து கொள்கிறான். இதுவே நம் வாழ்க்கை முறை ஆகி விட்டது.” இதிலிருந்து என்ன தெரிகிறது ? ஆடை அணியும் எந்த பக்தரும் வேட்டியைப் பற்றியோ, கல்லைப் பற்றியோ, நீரைப் பற்றியோ முழுமையான அறிவைப் பெற்றிருக்கவில்லை. தான் அணியும் வேட்டிக்கும், அந்த வேட்டி போர்த்தியிருக்கும், உடம்புக்கும், சபரிமலை ஈசன் போர்த்தியிருக்கும் வேட்டிக்கும், அந்த வேட்டிக்குள்ளிருக்கும் ஈசனுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? நான் முப்பது தடவை சபரிமலை போயிருக்கிறேன், 40 முறை விரதமிருந்து 18 படி ஏறியிருக்கிறேன் என்றெல்லாம் கூறும் மனிதன் தன்னைப் பற்றியாவது சபரிமலை ஈசனைப் பற்றியாவது ஏதாவது அறிந்து கொண்டுள்ளானா என்பதே மகான்கள் கேட்கும் கேள்வி. இந்த கேள்விக்குரிய விடையைத் தெளிவாக அளிக்கும் பல திருத்தலங்களில் ஒன்றே திருபுவனமாகும். திருபுவனத்தில் உள்ள பிரகாரத்தையோ, தூண்களையோ பிரதட்சிணமாக சுற்றி, சுற்றி வந்து வணங்கி ஆத்ம விசாரம் செய்து வந்தால் என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு பிறவியில் தனக்கும் இறைவனுக்கும் உள்ள வித்தியாசத்தை மனிதன் உணர்வான். அப்போதுதான் புவனம் எங்கோ இல்லை இந்த உடலின் உள்ளேதான் இருக்கிறது என்ற உண்மை பளிச்சிடும். அப்போதுதான் இந்த உடம்பு திரு புவனம். இறைவன் திரு புவன ஈசன்.

பால் அன்னமா ?
பால் அன்னமா ?

ஒரு முறை நாரத முனி சில கடலைப் பருப்புகளை எடுத்து வந்து பராசக்தியிடம் அளித்து, “தாயே, இந்தக் கடலைகளை வறுத்து அடியேனுக்கு அளிக்க முடியுமா ?” என்று கேட்டார். கடலைகளைப் பார்த்த பராசக்திக்கு வந்ததே கோபம். காரணம் அந்தக் கடலைகள் எல்லாம் இரும்புக் கடலைகள். இரும்பை வறுக்க முடியுமா ? ஆனால், இங்கு தானே நாரதர் தன் லீலையைத் தொடங்குவார். பராசக்தி கோபத்துடன், “நாரதரே, இந்த இரும்புக் கடலைகளை யாராவது வறுக்க முடியுமா ? உங்களுக்கு புத்தி மழுங்கி விட்டதா ?” என்று ஏளனமாகக் கேட்கவே நாரதரும், “தாயே, உங்களால் முடியாவிட்டால் முடியவில்லை என்று சொல்லி விடுங்கள் ...”, என்று அமைதியுடன் கூறி விட்டு அந்தக் கடலைப் பருப்புகளைத் திரும்ப வாங்கிக் கொண்டு தன் லீலையைத் தொடர ஆரம்பித்தார். அடுத்து லட்சுமி தேவி, சரஸ்வதி தேவிகளிடமும் இதே விதமான கேள்விகளைக் கேட்டு, ஒரே விதமான பதில்களைப் பெற்றார் நாரதர். இறுதியில் அவர்களிடம், “நான் பூலோகம் சென்று இந்தக் கடலைகளை ஒரு உத்தமியிடம் அளித்து வறுத்து வாங்கிக் கொள்கிறேன். நீங்கள் வேண்டுமானால் நேரடியாக வந்து அந்தக் காட்சியைக் கண்டு களிக்கலாம்,” என்று கூறி விட்டு பூலோகம் வந்தடைந்தார். மூன்று தேவிகளுக்கும் ஒன்றும் புரியவில்லை. கயிலாயத்திலும் வைகுண்டத்திலும் வறுக்க முடியாத இரும்புக் கடலைகளை வறுக்கக் கூடிய சக்தி பெற்ற ஒரு தேவி பூலோகத்தில் இருக்கிறாள் என்பதை அவர்களால் நம்ப இயலாது அவர்களும் பூலோகத்தில் வந்திறங்கினர்.

ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஸ்ரீசரபேஸ்வர மூர்த்திகள் திருபுவனம்

நேராக நாரத மகரிஷி அத்ரி தம்பதிகள் வாசம் செய்த குடிசைக்கு சென்றார். அனுசூயா தேவியை வணங்கி அந்தக் கடலைகளைக் கொடுத்து வறுத்து தரும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொண்டார். அனுசூயாயும் சிரித்துக் கொண்டே, “முப்பெரும் தேவிகளே வறுத்துத் தர முடியாத கடலைகளை என்னிடம் கொடுத்து வறுத்துத் தரும்படி கேட்கிறீர்கள், முனிபுங்கவரே. இருந்தாலும் இது என்னுடைய கணவரின் பெருமையைப் பறைசாற்றும் என்பதால் இந்தக் கடலைகளை வறுத்துத் தருகிறேன்,” என்று கூறி தன் உள்ளங்கையில் வாங்கிப் பின்னர் திரும்ப நாரத முனிவரிடமே அளித்து விட்டார். ஒன்றும் புரியாமல் நாரதரும் அந்தக் கடலைகளை வாங்கிப் பார்த்தார். என்ன ஆச்சரியம், அனுசூயா தேவியின் உள்ளங்கையில் இருந்த அந்த இமைப் பொழுது நேரத்தில் அந்தக் கடலைகள் எல்லாம் சீராக, அருமையாக, பதமாக வறுக்கப்பட்டு இருந்தன. இது நாரதருக்கு மட்டும் ஆச்சரியத்தை அளிக்கவில்லை. வான் மார்கமாக வந்து இந்த சம்பவத்தை நேரில் பார்த்த முப்பெரும் தேவிகளுக்குமே ஆச்சரியத்தை அளித்தது என்பதை நீங்கள் இந்நேரம் புரிந்து கொண்டிருக்கலாம். தீயில் கொடுமையானது பொறாமைத் தீ அல்லவா ?

ஸ்ரீசப்தரிஷிகள் லால்குடி

முப்பெரும் தேவிகளும் தத்தம் லோகத்தை அடைந்து மும்மூர்த்திகளிடமும் நடந்த விஷயம் எதையும் கூறாது, அனுசூயா தேவியின் கற்பிற்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஏதாவது ஒரு லீலையைப் புரிய வேண்டும் என்று மும்மூர்த்திகளை வலியுறுத்தவே அவர்களும் அனுசூயா தேவியின் கற்பிற்கு களங்கம் விளைவிக்க முடியாது என்பதைப் புரிந்தவர்கள் ஆதலால் அந்த உத்தமியின் பதிவிரதா தன்மையை உலகம் அறியச் செய்யும் நேரம் கனிந்ததை எண்ணிக் களிப்புற்று பூலோகம் வந்தடைந்தனர். அத்ரி மகரிஷி தன்னுடைய குடிசையில் இல்லாத சமயத்தில் மும்மூர்த்திகளும் ரிஷிகள் வடிவில் அங்கு வந்தடையவே அனுசூயா தேவி அவர்களை வரவேற்று அதிதி போஜனம் அளிக்க சித்தமானாள். அந்த ரிஷிகளோ தாங்கள் தீவிர தபம் மேற்கொண்டுள்ளதால் ஆடை தோஷம் சற்றும் நிலவாத முறையில் அதாவது அனுசூயா தேவி ஆடையின்றி உணவு பரிமாறினால் தாங்கள் அந்த உணவை ஏற்றுக் கொள்வதாகக் கூறவே அனுசூயா தேவியும் சற்றும் சிந்திக்காது மும்மூர்த்திகளையும் பச்சிளங் குழந்தைகளாக்கி தான் ஆடைகள் ஏதுமின்றி மும்மூர்த்திகளுக்கும் வயிறார பால் புகட்டினாள். கேட்பதற்கு இது எளிமையாகத் தோன்றினாலும் இதன் பின்னணியில் அமைந்த தாத்பர்யங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும். மும்மூர்த்திகளையே குழந்தையாக்கும் சக்தி பெற்றவள் அனுசூயா தேவி என்றால் அவளுடைய பதிவிரதா தன்மையின் மாண்பு எத்தகைய சிறப்புடையதாக இருக்கும். வளர்ந்த ஒருவரை குழந்தையாக ஆக்குவது காலம் கடந்த செயல் என்பது ஒரு புறம் விந்தையாக இருந்தாலும் குழந்தைப் பேற்றை அடையாது கன்னி ஒருத்தி பால் சுரப்பது என்பது எவராலும், எந்த மானிடர்களாலும் சாதிக்க முடியாத விந்தையாகும். கன்னி ஒருத்தி பால் உருவாக்கி அளிக்கிறாள் என்றால் அது ஒரு பொருளை உண்டாக்குவதற்கு சமம். அதிலும் அமிர்த சக்திகள் நிறைந்த தாய்ப் பாலை உருவாக்குவது என்றால் இதற்கு ஈடான ஒரு அற்புத செயலை யாராலும் சாதிக்க முடியாது என்பதே உண்மை.

பாலிலிருந்து தண்ணீரைப் பிரிப்பதற்கே அன்னப்பறவையானது பிரம்மாவின் அனுகிரகத்தைப் பூர்ணமாகப் பெற்றிருக்க வேண்டும் என்றால் அந்தப் பாலையே ஒரு கன்னிப் பெண் உருவாக்குவது என்றால் அந்த அற்புதத்தை அத்ரி மகரிஷியின் தர்ம பத்தினியான அனுசூயா தேவியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் சாதிக்க முடியாது என்ற பத்தினி சக்தியை உலகெங்கும் பறை சாற்ற மும்மூர்த்திகளும், அவர்களின் தேவியரும் சேர்ந்து நடத்திய இறை லீலையே இது. இத்தகைய கணவன் மனைவி உறவை, இனிய நெருக்கத்தை அளிக்கக் கூடியதே திருபுவனத்தில் தம்பதிகள் மேற்கொள்ளும் வழிபாடாகும். தம்பதிகள் இத்திருத்தலத்தை ஏழுமுறை வலம் வந்து வணங்க வேண்டும் என்ற தாத்பர்யத்தின் பின்னணியாக அமைந்த ஒரு சிறு சுவையே எத்தகைய பிரம்மாண்ட வடிவத்தை ஏற்றுள்ளது ? பத்தினி தன்மையுடன் விளங்கும் சரபேஸ்வர பிரம்மாண்டத்தைப் புரிந்து கொண்டால்தான் சரபேஸ்வர மூர்த்தியின் அவதார அனுகிரகத்தைப் பற்றி ஒரு துளியாவது பக்தர்கள் புரிந்து கொள்ள முடியும் என்பதே சித்தர்கள் அளிக்கும் சுவை. சப்தரிஷிகள் வழிபாடுகளை மேற்கொண்டு லால்குடி, திருத்தலையூர், திருநாவலூர் போன்ற திருத்தலங்களை தரிசித்து இத்தலங்களில் எழுந்தருளி இருக்கும் சப்தரிஷிகளுக்கும் கரிசலாங்கண்ணி தைலம், புத்தாடைகள் சார்த்தி வழிபடுதலால் குடும்ப ஒற்றுமை பெருகும். பொதுவாக, சப்த ரிஷிகள் வழிபாடு, சப்தபதி என்று ஏழு அடிகளை தம்பதிகள் எடுத்து வைக்கும் திருமண வைபவம், ஏழு கிரகங்கள் வழிபாடு, ஏழு ஸ்வரங்களில் கீர்த்தனைகளை ஓதுதல் என்ற இவை அனைத்துமே குடும்ப ஒற்றுமையை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. பலரும் தாங்கள் ஏழு ஸ்வரங்களை கூட்டும் அளவிற்கு சங்கீதத்தில் தேர்ச்சி பெறவில்லை என்று நினைத்தாலும் ஸ்ரீஅகத்தியர் அருளிய தேவாரத் திரட்டுப் பதிகங்களை அவரவருக்குத் தெரிந்த ராகங்களில் ஓதி வந்தால் அதுவே சப்த ஸ்வர கீதமாக ஒலிக்கும் என்பதற்கு சித்தர்களே சான்று அளிக்கின்றனர். ஒரு முறை கடினமான தேவாரப் பாடல்களின் பொருள் தெரியவில்லையே என்று நம் சற்குருவிடம் ஒரு அடியார் முறையிட்டபோது, “சார், பாடினவனுக்கு அதன் பொருள் தெரியும், கேட்பவனுக்கும் (இறைவனுக்கும்) அதன் அர்த்தம் தெரியும். இடையில் இருக்கும் நீங்கள் ஒரு கருவி தானே. அர்த்தத்தைப் பற்றிக் கவலைப்படாமல் பாடிக் கொண்டே இருங்கள் அது போதும்...”, என்றார். இந்த “சப்த” வழிபாட்டில் எழுவது ஒரே சக்தியே. இந்த சக்திதான் தான்சன் அமுத மழையில் தீபங்களை ஏற்றியதும், ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் தண்ணீரில் தீபம் ஏற்றிய அற்புதமும் ஆகும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam