ஒளியாகி வீசும் விஷம் ஒலியாவது எப்போது ?

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

வெள்ளை வேம்பு விருட்சம்

சென்ற இதழில் திருவோட்டுச் சித்தரைப்பற்றிய குறிப்புகளுடன் வெள்ளை வேம்புவிருட்சம் பற்றிய விளக்கத்தை அளித்திருந்திருந்தோம். ஏனையவை தற்போது தொடர்கின்றன

கும்பகோணம் அருகே திருவாவடுதுறையிலிருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மஞ்சள் ஆற்றங்கரையில் வெள்ளை வேம்பு விருட்சம் அம்பிகையின்  வடிவமாக அமைந்திருந்தது. இதை இம்மரப்படிவுகளிலிருந்தும் தற்போதும் அறியலாம்.

திருவோட்டு சித்தர்தன் திருவோட்டை பிட்சைக்காக எவரிடம் அளிப்பாரென்று எவருமே அறியார். பிட்சை எடுப்போருக்குரிய நியதிகள் என்னவென்றால் திருவோடு நிறைந்தவுடன் அதனைத் திருவோட்டுச் சித்தரிடம் அளித்து விட வேண்டும். அதிலிருந்து அவர் பருக்கையையோ அல்லது ஒரு பிடியையோ உண்ணுவார். மிச்சத்தை அப்படியே வைத்திடுவார். ஏதோ குறித்த ஒரு நேரத்தில்தான் கூட்டி வைத்துள்ள அன்னமலையில் சேர்த்திடுவார். அத்திருவோட்டிலிருந்து எவ்வளவு அன்னத்தை எடுத்தாலும் அது சற்று கூடக் குறைவதே கிடையாது. எப்போதும் திருவோடு நிரம்பியதாகவே இருக்கும். ஆனால் ஒரு முறை திருவோட்டில் உள்ள அன்னத்தை, அன்னமலையில் சேர்த்து விட்டு அதனைக் கவிழ்த்து வைத்தாரென்றால் அதன் பிறகு அன்று அவர் பிட்சை எடுப்பது கிடையாது, மறுநாள்தான் பிட்சை தொடரும். சித்புருஷர்களுடைய செயல்கள் எல்லாம் தெய்வச் செயல்கள் தாமே! எவரால்தான் அவற்றின் காரண காரியங்களை அறிய முடியும்?

வெள்ளை வேம்பு திருத்தலம்

சகல கோடி யுகங்களுக்கும் அன்றும் இன்றும் என்றும் இந்திர மூர்த்திகளுக்குத் தெய்வத் திருவாகனமாக விளங்க வேண்டும் என்ற வரத்தைப் பெற வேண்டி ஐராவத யானை திருஅண்ணாமலையை வந்தடைந்தது அல்லவா! இதன் விளக்கங்களையே சென்ற இதழில் அளித்துள்ளோம். குருவருளால் ஸ்ரீ இந்திர லிங்கத்தை முறையோடு பூஜித்து அருணாசலத்தை வலம் வந்த ஐராவத யானைக்கு ஒரு நாள் திருவோட்டுச் சித்தரின் தரிசனம் கிடைத்தது. அது மட்டுமா, அவரும் அதற்கு பெறற்கரிய பாக்கியம் ஒன்றை அளித்தார். அதுதான் திருவோட்டில் பிட்சை எடுப்பது!
கோடானுகோடி லோகங்களிலுமிருந்து யோகிகளும், மஹரிஷிகளும் அத்திருவோட்டில் பிட்சை எடுக்கக் காத்துக் கிடக்க, பூலோக ஜீவன்களும் ஒரு பக்கத்தில் குழுமி நிற்க ஐராவத யானைக்கு அடித்தது யோகம்! அதுவும் திருவோட்டைச் சுமந்து மலையெங்கும் வலம் வந்து ஆனந்தத்துடன் பிட்சையைத் திரட்டி அதனை திருவோட்டுச் சித்தரிடம் பரமானந்தம் கொண்டு அளித்து வந்தது!
ஐராவதமானது தினமும் திருவோட்டில் பிட்சை எடுத்து திருவோட்டுச் சித்தரிடம் அளித்தவுடன் அவரோ அதனை எடுத்துக் கொண்டு எங்கோ மறைந்து விடுவார். பிட்சை எடுக்கும் படலம் பரிபூரணமான பின் யானையும் அவர் அருளியபடியே திருஅண்ணாமலையை வலம் வரத் தொடங்கியது.
தம்முடைய தலைவரே அருணாசலத்தை வலம் வருகையில் ஏனைய கஜகேசரிகள் என் செய்வார்கள் ?அஷ்டதிக் கஜங்களும், கோடானு கோடி லோகங்களிலும் உள்ள யானைகளும் ஒன்று சேர்ந்து ஐராவதத்தைப் பின் பற்றி அருணாசலத்தைக் கிரிவலம் வந்தன, இதனை வியத்தகு காட்சியாக முப்பத்து முக்கோடி தேவர்களும் கண்டு களித்து ஆனந்தமுற்றனர். அந்நேரத்தில் அருணாசலத்தைச் சுற்றி ஒரே யானைகள் மயம்தான். காணக் கண்கொள்ளாக் காட்சி!

ஐராவதம் கிரிவலம் வந்த பாதையின் பரப்பு என்னவோ? நம்முடைய மனம் என்ன நினைக்குமென்றால் இன்றைக்கு நமது கண்களுக்குக் காட்சி அளிக்கின்ற 14 கிமீ தொலைவு உள்ள கிரிவலப் பாதைதான் தேவாதி தேவ மூர்த்திகளுக்கும் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றோம். அவ்வாறு அல்ல!

உதாரணமாக பித்ருக்கள் கிரிவலம் வருகின்றார்கள் என்றால் அவர்களுக்குரிய அருணாசலத்தின் கிரிவலப் பாதையின் விரிவு பல ஆயிரம் மைல்களாகும். முப்பத்து முக்கோடி தேவர்களும் பல்லாயிரம் மைல்களை ஒரு வினாடிப் பொழுதில் கடக்கக் கூடிய தெய்வீகச் சக்தியை பெற்றவர்களாதலின் அவர்களுக்குரித்தான அருணாசல கிரிவலப் பாதையும் வேறானதாகும். இவை எல்லாம் கேட்பதற்கு வியப்பாக இருக்கும். ஆனால் இவை அனைத்தும் உண்மையே! நமக்கு இறைவன் அளித்துள்ள ஒரு நியதி என்னவென்றால் இத்தகைய தெய்வீக உண்மைகளையும் இரகசியங்களையும் நாமாக இவ்வுடலில் அறிய வேண்டுமானால் சற்குருவின் அருள் கூட வேண்டும். அதற்குப் புனிதமான பக்தி வேண்டும்.

உயிர் உடலை விட்டுப் பிரியும்போது தான் இத்தகைய தெய்வீக இரகசியங்கள் எல்லாம் நமக்கும் சூட்சும உடலில் தெரிய வரும். அப்போது அவற்றைத் தெரிந்து கொண்டு நாம் என்ன செய்ய முடியும் ? நற்செயல்களை ஆற்றுவதற்கான மனித உடலை விட்டும் வெளி வந்திருப்போம். மீண்டும் மனிதப் பிறவி கிடைக்குமா என்று தெரியாது, எனவே கிடைத்தற்கரிய இம்மானிடப் பிறவியில் குரு வாக்கியங்களை மனப் பூர்வமாக நம்பி எவ்வித சந்தேகமும் கொள்ளாது அவற்றை முழுமையுடன் கடைபிடித்தோமேயானால் தான் நமக்குத் தெய்வீகம் புலப்படத் தொடங்கும். அதுவரையில் மாயையில் நாம் உழன்று கொண்டுதான் இருக்க வேண்டும்.

இப்புனிதமான வெள்ளை வேம்பு விருட்சமானது கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் திருவாலங்காட்டிலிருந்து தெற்கே 1 கி,மீ தொலைவில் உள்ளது. திருவாவடுதுறையிலிருந்து சுமார் 3 கி.மீ. ஆடுதுறை - மல்லார் பேட்டையிலிருந்து 1 கி.மீ. மஞ்சள் ஆற்றங்கரை- வெள்ளை வேம்பு மாரியம்மன் என்றால் மிகவும் பிரசித்தமானதாகும்.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் பாலபருவ குருகுலவாச அனுபூதிகள்)

வழக்கம் போல் அன்றும் ராயபுரம் அங்காளியம்மன் கோயிலில் சிறுவன் பெரியவருக்காகக் காத்துக் கிடந்தான். அவரும் அவனைச் சோதிப்பது போல நன்கு காக்க வைத்தார்.

“நீ இப்படி வெயிட் பண்ணும்போது மனுஷன் இப்படிக் காக்க வைக்கிறானேன்னு உன் உள் மனசு கொஞ்சும் நெனச்சாக் கூடப் போதும் உனக்கு குரு பக்தி வளரலைன்னு அர்த்தம். இதுதான் நாங்க குடுக்கற டெஸ்ட்!”

சிறுவனாக இருந்தாலும் உயர்ந்த இறைநிலைப் பாடங்களை மிகவும் பக்குவமாக எடுத்துரைப்பார்!

சிறுவனோ, “ஒன்றும் புரியவில்லை, மிகக் கடினமாக இருக்கிறதே அதெப்படி நினைக்காமல் இருக்க முடியும் ?”என்று எண்ணிட.

“இதோ பாருடா, இப்ப நீ சின்னப் பையன்தான்! ஒரு ஆளுக்கு நாப்பது ஐம்பது வயசுல, நல்ல பக்தி பூர்வமா இருக்கற நிலைல புரிஞ்சுக்க வேண்டியதை எல்லாம் இப்பவே உன் உடம்புக்குள்ள புகுத்திடறேன். ரொம்ப கஷ்டமான தெய்வீக விஷயங்களெல்லாம் அப்பப்ப சொல்லிடறேன்! கொஞ்ச காலம் தான் உன்னோட இருப்பேன். அப்புறம் நான் மறைஞ்சுட்டேன்னா, அப்பப்ப நானா நெனச்சாத்தான் உன்னோட சூட்சுமமாய்ப் பேசுவேன். இப்ப நான் சொல்ற Advanced Subject இருக்கு பாரு அதெல்லாம் உன்னோட சூட்சும உடம்புலே சேர்ந்துடும்! நீ பெரியவனா ஆனதுக்கப்புறம் அப்பப்ப சூட்சும சரீரத்துலேந்து இதெல்லாம் தேகத்துக்கு வரும்...” என்ற விளக்கங்களைத் தரலானார் பெரியவர்!

பல வருடங்களுக்கு முன்பு...

கோயில் தீர்த்தக் குளத்தில் நீர் நன்கு நிறைந்திருந்தது. கோயிலுக்கு முன் சாலையைத் தாண்டிக் கடற்கரை வரை வெட்ட வெளியாக இருந்தது. அவ்வளவாக வீடுகள், கட்டிடங்கள் கிடையாது!

சற்று நடந்தால் திருவொற்றியூர்க் கோபுர தரிசனம் கூட நன்றாகக் கிட்டும்! அன்று கோயில் தீர்த்தத்தில்... “இன்னிக்கு அமாவாசைடா, சோம வாரம் (திங்கட் கிழமை) சேர்ந்திருக்கு!  இதுக்கு பிரதட்சிண அமாவாசைன்னு பேரு! இன்னிக்கு அடிப்பிரதட்சிணம் பண்ணினா ரொம்ப விசேஷம்டா!”

சிறுவனுக்கு அடிவயிறு கலங்கியது! காரணம் எங்கே 1008 சுற்று சுற்றச் சொல்லி விடுவாரோ என்று! ஆனால் அவன் நினைத்தது நடந்தே விட்டது!

பெரியவர் சிறுவனுக்கு எத்தனையோ தர்ப்பண ரகசியங்களை இதுவரையில் தந்திருந்தாலும், “இன்னிக்கு சோம வார அமாவாசை - பிரதட்சிண அமாவாசைல...அதாவது அடிப் பிரதட்சிணம் செஞ்சு நடந்து  கிட்டே பித்ரு மந்திரங்களைச் சொல்லி கிட்டே வந்தா ரொம்ப விசேஷம்டா! திங்களோட சேர்ந்து வர இந்த  அமாவாசை அன்னிக்குக் கடற்கரையில் ராமேஸ்வரத்துல் அக்னி தீர்த்தத்துல நீராடி தர்ப்பணம் பண்ணிட்டு  ஈரம் சொட்ட சொட்ட அதே ஆடையோட அடிப்பிரதட்சிணம் பண்ணிகிட்டு பித்ருமந்திரம் சொல்லி  கோயிலுக்குள்ள இருக்கிற...22 தீர்த்தங்களில் நீராடினாக்க .... அப்பப்பா... பித்ருக்கள் எவ்வளவு சந்தோஷப்  படறாங்க தெரியுமா? சந்தோஷம்னா அவங்களுக்கு அவ்வளவு சந்தோஷம்டா, அதைச் சொல்லி மாளாது!”.

“சோமவார அமாவாசை அன்னிக்கு எல்லாருமே ராமேஸ்வரம் போக முடியாதே, வாத்யாரே!”

“ஏண்டா யார்கிட்டடா காது குத்தற! வருஷத்துக்கு ஒரு தடவையோ இல்லாட்டி ரெண்டு வருஷத்துக்கு  ஒண்ணு, ரெண்டு தடவை தான் சோமவார அமாவாசையே வருது! அதெப்படிடா அன்னிக்கு மட்டும்  ராமேஸ்வரம் போக முடியாதபடி பெரிய எங்கேஜ்மெண்ட். ஒருத்தன் மட்டும் தன் வாழ்க்கைல ஒரு தடவையாவது சோமவார பிரதட்சிண அமாவாசையன்னிக்கு  ராமேஸ்வரத்துல நல்லபடியா தர்ப்பணமும், அடிப்பிரதட்சிணமும் தான தருமமும் பண்ணினான்னா எத்தனையோ தலைமுறைக்கு அந்த புண்யம் சேரும், இதுல எத்தனையோ தெய்வ ரகசியமெல்லாம்  இருக்குடா! ஸ்ரீகிருஷ்ணன், ஸ்ரீராமன், பரசுராமர், வசிஷ்டர், அகஸ்தியர் இவங்களெல்லாம் தர்ப்பணம்  கொடுத்த இடமெல்லாம் இருக்குடா... இதெல்லாம், என்னிக்கு ஜனங்க தெரிஞ்சுக்கப் போறாங்களோ! இதை  எல்லாம் தெரிஞ்சுக்கறதுக்குன்னா ஒரு குரு இருக்கணும்பா!”

“கலியுகத்துல பத்து லட்சம் பேர்ல ஒரே ஒரு மனுஷன் தான் குருவை நாடுறான், என்ன செய்யறது? அடடா, நான் பேசிகிட்டு இருக்கேனே, இங்க பக்கத்துல வாயேன், ஒரு ரகசியம் சொல்றேன்...”

சிறுவன் தன் காதுகளை மடக்கிக் கொண்டு அவரருகில் சென்றான்!

“இன்னிக்கி சோமவார பிரதட்சிண அமாவாசைதானே.. இன்னிக்கு...”பெரியவர் சற்றே நிறுத்தினார்.

சிறுவன் காதுகளை நன்றாகத் தீட்டிக் கொண்டான்!

“இன்னிக்கி... ஆஸ்ட்ரல்ல (Astral Travel) போறது ரொம்ப விசேஷம்டா”,

“ஹையா!” சிறுவனுக்கு ஆனந்தம் கரை புரண்டது. குளத்துப் படிக்கட்டு என்று பார்க்காமல் குதித்தே விட்டான்.

ரிஸல்ட்... முட்டியில் காயம்!

“ஏண்டா அபிஷ்டு! திருஷ்டி பரிஹாரமாட்டம் அடிபட்டுட்டியே! ஆமாம், ஆஸ்ட்ரல்ல போறது அவ்வளவு ஈஸி இல்லைடா கண்ணு! சோமவார அமாவாசைல போறதுனால கொஞ்சம் கஷ்டம் குறையும்! அவ்வளவுதான்! சில பேரு தியானம் கூடிப் போவாங்க, இது நமக்குச் சரிப்பட்டு வராது. ஏன்னா முதுகு வலிக்கும். (சிரிக்கிறார்)”

“இல்லாட்டி ஞான யோகத்துல நெனச்ச உடனே போகலாம். நமக்கு இருக்கற ஞானத்துல சைதாப்பேட்டையைக் கூடத் தாண்ட முடியாது. இல்லாட்டி சகஜ யோகத்துல போகணும். அதுல ஏபிஸிடி கூட நமக்குத் தெரியாது! (சிரிக்கிறார்) ”

“.... நமக்குத் தெரிஞ்சதெல்லாம் பக்தியோட உண்மையா இந்த அங்காளி ஆத்தாவைச் சுத்தினாக்க போதும்டா,உலகத்துல எந்த மூலைக்கும் ஆஸ்ட்ரல்ல போயிடலாம்டா!...”, என்று கூறியவாறே விரைவாகச் சிறுவனை இழுத்துக் கொண்டு கோயிலுக்குள் சென்றார்!

''அமாவாசையில் அமிர்த நேரங் கூட உண்டுடா, அதுல புறப்பட்டா எல்லாம் நல்லபடியா முடியும், ஏன்னா இன்னிக்கு அமாவாசைல ஆகாயம் ஃபுல்லா பித்ருக்கள், தேவாதி தேவர்கள், நல்தேவதைகள் நடமாட்டம் ஜாஸ்திடா, அவங்களே இன்னிக்கி நமக்கு ஆகாயத்துல் ரூட்டைக் கிளியர் பண்ணிக் கொடுத்துடுவாங்க! மத்த நாள்னா எல்லாத்தையும் நம்மளே பண்ணனும்! அது ரொம்ப கஷ்டம், அதோட குறிப்பிட்ட டயத்துக்குள்ளாற ஆஸ்ட்ரல் பயணத்தை முடிச்சுட்டு இந்த உடம்புக்குத் திரும்பியாகணும். அதுக்குள்ள Soul இந்த உடம்புக்குள்ள சேரலைன்னா பயித்தியம் புடிச்சிடும் . இதுக்குத்தாண்டா ஒரு Guide கூட சேர்ந்து ஆஸ்ட்ரல்ல போகணும், அந்த கைடும் ஆஸ்ட்ரல் பயணத்துல மாஸ்டரா இருக்கணும்! இவ்வளவு விஷயங்கள் இருக்குடா!”

சிறுவன் முதலில் அடிப் பிரதட்சிணம் செய்யவே அஞ்சினான். ஏனெனில் தினந்தோறும் அங்காளியை 1008 முறை சுற்றி வந்த பின்னரே பெரியவரைச் சந்திக்க முடியும் என்று ஒரு சட்டத்தை வைத்திருந்தார் பெரியவர், அதனையும் கொஞ்ச நேரத்திற்கு முன்னர்தான் சிறுவன் முடித்திருந்தான்.

ஆனால் என்ன ஆச்சரியம்...! பெரியவர் சோமவார பிரதட்சிண அமாவாசையின் தாத்பர்யத்தை மிகவும் சுவாரசியமாகச் சொல்லி வந்ததாலோ என்னவோ அனைத்தும் சுலபமாக முடிந்து விட்டன, அடிப் பிரதட்சிணம் செய்த களைப்பே தெரியவில்லை!

சிறுவன் அங்காளிக்குத் தானே நன்றி சொல்ல வேண்டும்! அவனோ அமிர்த நேர தேவதைக்கு உள்ளம் உவக்க நன்றி சொன்னான். காரணம் அமிர்த நேரம் நெருங்கியதால் தான் பெரியவர் அதிகம் சுற்றாமல் அடிப் பிரதட்சிணத்தை விரைவில் முடித்து விட்டார் என்று அவன் எண்ணியதால்!

எதைத் தான் டக்கென்று பெரியவர், receive செய்யவில்லை ? பட்டென்று பதில் தந்தார்!

“ஏண்டா அடிமுட்டாள் ! அங்காள பரமேஸ்வரியை ஒரு முறை அடிப்பிரதட்சிணம் வந்தால் ஆயிரமாயிரம் கர்மம் தீருமேடா, உன்ன மாதிரி வடிகட்டின முட்டாள் தாண்டா கால் வலிக்குது, கை வலிக்குதுன்னு சொல்லி கர்மாவைக் கழிக்கக் கூடாதுன்னு அழிச்சாட்டியம் செய்யறது! என்ன பண்றது, இப்படித்தாண்டா உலகத்துல கர்ம மூட்டைகளைச் சேர்த்துகிட்டு, பிறவிகளைப் பெருக்கிக்கராங்க!” சிறுவன் விழித்தான்!

“ஏடா கூடமாக மாட்டிக் கொண்டு விட்டோமே! கோபத்தில் ஆஸ்ட்ரலும் வேண்டாம் கீஸ்ட்ரலும் வேண்டாம் என்று இவர் சொல்லி விட்டால் என்ன செய்வது?”

இவன் தன் மனதில் நினைத்தவுடன் வழக்கம் போல அவர் பதில் சொன்னார்.

“ஏண்டா எங்களை சாதாரண மனுஷனாட்டம் நெனைக்கறியே! கோபம், தாபம் அதோட ரியாக்ஷன் எல்லாம் சாதாரண மனுஷங்களுக்குத்தான் நாங்க இதையெல்லாம் தாண்டின நிலைல இருக்கோம்னு தெரிஞ்சுக்க, ஆனா வெளில காமிச்சுக்கறது கிடையாது! ஏன்னா நல்லவங்க, கெட்டவங்க, எங்களைப் பாராட்டறவங்க, திட்டறவங்க, யாரா இருந்தாலும் எல்லாரோட கர்மக் கணக்கைப் பாத்துதான் நாங்க முடிவு எடுப்போமே தவிர கோபத்துக்கும் வருத்தத்துக்கும் ஆளாகி எந்த முடிவும் எடுக்கறது கிடையாது!”

சிறுவன் சற்றுத் தைரியம் கொண்டான்.

“வாத்யாரே, ஒண்ணு சொன்னா தப்பா நெனச்சுக்காத, உண்மையைச் சொல்லிடறேன்! நான் எதையும் நெனக்கக் கூடாதுன்னு எண்ணினாக் கூட, மனசு அதுபாட்டுக்கு எதையாவது நெனச்சுடுது! நெனச்சதுக்கப்புறம் ஏன் இப்படி நெனச்சோம்னு புத்தி அடிச்சுக்குது! அதுக்குள்ளாற நீ எல்லாத்தையும் ரிஸீவ் பண்ணி ஏதாச்சும் சொன்னதுக்கப்புறம் அது வேற மனசுக்கு வருத்தமா இருக்கு!”

பெரியவர் உரக்கச் சிரித்தார்.

“நீ இப்படிக் கேட்கணும்னு தாண்டா நான் இத்தனை வருஷமா துடிச்சுக்கிட்டு இருக்கேன்! ஏதோ மனசைத் தெறந்து இன்னிக்காச்சும் கொட்டினியே!”

“இதுதாண்டா சோமவார அமாவாசைப் பிரதட்சிண மஹிமை! இன்னிக்கு அடிப்பிரதட்சிணம் பண்ணினா அதுவும் அரச மரத்தோட சேர்த்து சுத்தி வந்தாலே போதும் மனசு சுத்தியாகும்டா! மனசுக்குள்ளாற சாக்கடை மாதிரி எப்படி அழுக்கான, அருவருப்பான ஆசைகள், எண்ணங்கள் மனசுக்குள்ள இருக்கு தெரியுமா? ஒழுங்கா தியானம் பண்ணினா, தானா இதெல்லாம் வெளில போகும்! ஆனா எவன் ஒழுங்கா தியானம் பண்றான்? அதுக்குத்தான் ரொம்ப அபூர்வமா சோமவார அமாவாசைப் பிரதட்சிணம் மாதிரி, அம்பாளே ரொம்ப விசேஷமான பண்டிகையெல்லாம் நமக்குக் கொடுத்துருக்கா! ஒரு விஷயத்தை கவனிச்சியா, எப்பவுமே அங்காளி சந்நிதியை வலம் வர்றவன், இன்னிக்குப் பின்னாடி உள்ள அரச மரத்தையும் சேர்ந்து பிரதட்சிணம் வந்தேனே! காரணம் சோமவார அமாவாசை மஹிமைதான்! நம்பதான் இதோட மஹிமை தெரியாம விட்டுட்டோம். ”

“ம்..ம்... நீ சொல்ற சப்ஜெக்டுக்கு இப்ப வர்றேன்! உனக்குன்னு ஒரு குரு வந்ததுக்கப்புறம் உன்ன நெனக்க, பேச வக்கறது எல்லாமே நாங்கதான்! நீ இப்படி நெனச்சு நாங்க அதுக்கான பதிலைச் சொன்னாத்தான் நாளைக்கு உனக்குன்னு ஒரு ஆஸ்ரமத்தை வச்சு அதுல நிறைய புஸ்தகம் போட்டு அதுல நான் சொல்ற இதெயெல்லாம் நீ எழுதினாத்தானே ஒரு நூறு பேராவது படிச்சு குருவைத் தேடுவாங்க! (கண்ணைச் சிமிட்டுகிறார்)”

“... உனக்குன்னு மாஞ்சு மாஞ்சு என் தொண்டைத் தண்ணி வத்தி எத்தனையோ தெய்வீக விஷயங்களைச் சொல்லியிருக்கேனே! இதையே நூறு வருஷத்துக்குப் புஸ்தகமாப் போட்டு எத்தனையோ பேருங்க படிச்சு தெய்வீகத்துல் முன்னுக்கு வரதுக்கு வழிகாட்டணுமேடா! நான் சொல்றது உன்னோட மறஞ்சுடக் கூடாதுடா! அது அல்பத்தனமான சுயநலம்! என்னோட சுத்திக் கத்துக்கிட்டதெல்லாம் நாளைக்கு நீ எழுதித் தாண்டா ஆகணும். கலியுகத்துல பேச்சைவிட எழுத்துக்குப் பவர் ஜாஸ்தி. இந்த அங்காளியோட அடிமை கண்ட அனுபவங்கள் தாண்டா உனக்கு வழிகாட்டுதுன்னு ஞாபகம் வச்சுக்கோ!”

“..உனக்கு முக்தியோ மோட்சமோ தரது பெரிய விஷயமில்லை !... ஆனா நீயும் நல்ல சற்குருவாட்டம் தெய்வீக வாழ்க்கைல நிலைச்சு நின்னு சித்தர்கள் காட்டற முக்தி வழியை, மோட்சப் பாதையை தெரியப் படுத்தி நல்லா வழிகாட்டணும்னுதாண்டா ஆண்டவன் உனக்குப் பிறவி கொடுத்துருக்கான்! ஒவ்வொருத்தரும் தான் பிறந்த காரணமே தெரியாதபடி உலக மாயைல மாட்டிகிட்டு முழிக்கறாங்க! நீயோ பூர்வ ஜன்ம புண்யத்துனால சற்குருவோட கட்டுப்பாட்டுல வந்திருக்க இதுவே பெரிய பாக்யம்! இந்த பாக்யம் எல்லாருக்கும் கிடைக்கறதுக்கு நீதான் பாடுபடணும்”

அப்பப்பா! எத்தகைய பொக்கிஷமான வார்த்தைகள் உள்ளத்தை ஊக்குவிக்கும் உத்தம் உரையன்றோ இது!

“...ம்...ம்..ம்.. உன்னோட சப்ஜக்டுக்கே நாங்க இன்னும் வரலியே! ஏன் மனசு எதுக்கும் கட்டுப்படாம ஏதேதோ நினைக்குது? இதுதானே உன் கேள்வி புத்தி வேற, மனசு வேற, பொதுவா புத்தி நல்லதைத்தான் சொல்லும்! ஆனா மனசு இருக்கே, புத்தியை Overcome செஞ்சு அமுக்கிடும்! அதனாலத் தான் புத்தியைத் தீட்டி வச்சுக்கணும். அப்படீன்னா என்ன அர்த்தம் ? புத்தி ஸ்ட்ராங்கா இருக்கற மாதிரி நல்லதையே படிக்கணும், நல்லதையே செய்யணும். இதுக்கு ஒடம்பு ஒத்துழைக்கணுமே! அதுக்குத் தான் இந்த மாதிரி அடிப் பிரதட்சிணம், தான தருமம்னு நல்லது பண்ணினா அந்த புண்ய சக்திதான் ஸ்திரமான புத்தியைத் தரும். அதுதான் அசைக்க முடியாத ஆழ்ந்த நம்பிக்கையா மாறும். அதுக்கப்புறம் மனசு என்ன கெடுதலா நினைச்சாலும் நல்ல புத்தி ஒரே அமுக்கா அதை அமுக்கிடும்!”.

இவ்வாறு அற்புதமான விளக்கங்களைத் தந்தவாறே சிறுவனைக் குளக்கரைக்குக் கூட்டி வந்து விட்டார் பெரியவர்!

அப்போது....... அங்கு ஒரு முதியார் வந்தார். அவர் கையில்... ... விமுத்தி எனப்படும் நாற்கோண வடிவிலான இனிப்புகள் இருந்தன!

பெரியவருக்கும் சிறுவனுக்கும் மிகவும் பிடித்தமானதே அந்த விமுத்தி இனிப்புக் கட்டிகள்! வெள்ளைச் சர்க்கரைப் பாகு அவற்றில் செதில் செதிலாக சூரிய ஒளியில் மின்னிட, அவரோ சிறுவனிடம் நேராக வந்து, “தம்பி! பிரசாதம் எடுத்துக்கோ !” சிறுவனோ பெரியவரைப் பார்த்தான்!

அதுவரையில் அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த பெரியவரோ சடக்கென்று பார்வையைத் திரும்பி எங்கோ பார்ப்பது போலிருக்க... என்னே பெருஞ் சோதனை சிறுவனுக்குச் சங்கடமாகி விட்டது!

“வாங்கலாமா, கூடாதா?” சிறுவன் மனதிற்குள் ஒரு ஆத்ம விசாரம்!

“இப்போதுதானே அவர் மனம், புத்தியைப் பத்திச் சொன்னார். நாம் சற்று ஸ்திர புத்தியுடன் இருந்தால் அடுத்து என்ன செய்யலாம் என்று தீர்கமாகத் தெரிந்து விடும் அல்லவா!”

சிறுவன் தன் புத்தி என்ன சொல்கிறது, மனம் என்ன சொல்கிறது என்று ஆராயலானான்,

இதுதானோ Self Introspection! இதுதான் ஆத்ம விசாரத்தின் அடித்தளமோ! இதுதான் self-Self mergerக்கு வழி வகுக்குமோ !

“தம்பி! விமுத்தியால் தான் புத்தி விளங்கி முக்தி கிடைக்கும்!”

சிறுவன் இன்ப அதிர்ச்சியில் மீண்டான், என்னே வார்த்தைகள்!

அம்முதியவரோ சிரித்துக் கொண்டே கையை விரித்து நீட்டினார்.

கை நிறைய விமுத்தி! “வாங்கிடுவோம்!”- தீர்கமான முடிவிற்கு வந்தான் சிறுவன்!

விமுத்தி இனிப்புகளை முதியவரிடமிருந்து வாங்கிக் கொண்டான்! தெளிந்த முடிவு!

அவ்வாறு விமுத்திகளை அவருடைய கைகளிலிருந்துஎடுக்கும் போது ....  அவர் கை விரல் ஸ்பரிசம் சிறிது பட்டிட...

.......அவ்வளவுதான் பத்தாயிரம் வோல்ட் ஷாக் அடித்தாற் போலிருந்தது! டக்கென்று கைகளை எடுக்குமுன், அம்முதியவர் திரும்பி வெகு விரைவாகச் சென்று விட்டார்!

சிறுவன் தயக்கத்துடன் கை நிறைய விமுத்தியுடன் பெரியவரிடம் சென்றான்! அவன் பெரிய பூகம்பத்தை எதிர்பார்த்துச் சென்றிட... அவரோ மிகவும் ஆவலுடன் சர்வ சாதாரணமாக ஒவ்வொரு விமுத்தியாய்க் கடித்து மென்று தின்றிடவே.... சிறுவன் உஷாரானான்!.

இது நிச்சயமாகப் பெரியவரின் லீலைதான்!

யார் எதைக் கொடுத்தாலும் சாதாரணமாக இவ்வளவு ஈஸியாக உடனே எடுத்துத் தின்றிட மாட்டாரே! 

சிறுவன் இப்போதெல்லாம் தெய்வீகத்தில் நன்கு Develop ஆனவன் போல் மிகவும்‘Matured’ஆக நடக்கத் தலைப்பட்டான் அல்லது முயல்கின்றானோ!

சிறுவன் விமுக்தியை எடுத்துத் தின்றிடவில்லை , காரணம் Divine Command வரவில்லையே!

“எடுத்துத் திங்க வேண்டும்” என்ற எண்ணமும் வரவில்லை !

Perforce his buddhi reigns supreme !!

விமுத்தியுடன் நின்ற சிறுவனின் கோலத்தைக் கண்டு பெரியவர் பலமாக விழுந்து விழுந்து சிரித்தார்!

தீர்த்தக் குளமே எதிரொலிக்குமளவிற்கு வாய் கொள்ளா, வயிறு கொள்ளாச் சிரிப்பையா அது!

சிறுவனோ மிகவும் பிரயாசைப்பட்டு Utmost Sincerityயுடன் ஆத்ம விசாரஞ் செய்து நிற்க, அவரோ லாரல், ஹார்டி மூவியைப் பார்த்து ரசித்தவர் போல் குலுங்கி குலுங்கிச் சிரித்திட....

சிறுவனால் இதைத்தாங்க இயலவில்லை! (பெரியவர் இவ்வாறு செய்ததற்கான காரணங்களைப் பின்னர் ஆன்மீகச் செறிவுடன் விளக்கினார்!)

கண்களில் பொலபொலவென்று நீர் தாரை தாரையாக வழிந்திட “ஓ”வென்று கதறலானான் சிறுவன் !
ஏனென்றால் பெரியவருடைய செய்கைகளை அவனால் புரிந்து கொள்ள முடியாததுதான்! ஆனால் பெரியவரோ இதனைக் கண்டு கொள்ளவேயில்லை!

ஒரேயொரு விமுத்தியைத் தவிர எல்லாவற்றையும் தானே உண்ட பெரியவர், மிஞ்சிய அதனையும் இரண்டாக ஒடித்துக் குளத்திற்குள் விட்டு, மீதி அரைப் பகுதியை, (அழுது கொண்டிருந்த) சிறுவனின் வாயைத் திறந்து போட்டிட, அவனுடைய அழுகை டக்கென்று நின்றுவிட்டது! .

அப்பப்பா என்னே ருசி! தேவாமிர்தம் போல் இனிப்பு! வயிறார ஆனந்தமாக உண்டது போல் ஒரு நிறைவு! 

தலை முதல் கால் வரை ஜிவ்வென்று ஒரு புத்துணர்ச்சி! ஓர் இனம் புரியாத ஆனந்தம்! எப்படி இத்தகைய பொங்கியெழுகின்ற சந்தோஷம் சிறுவனைத் தழுவியது? புத்தி, உள்ளம், மனம், உடல் அனைத்திலுமே ஆனந்தப் பிரவாகம் கரை புரண்டு ஓடியது!

முதியவர் கூறியதுபோல் விமுத்தி தந்த முக்தியா?

ஆனந்தக் கண்ணீர் பல்கிப் பெரியவரின் எதிரில் நின்றான் சிறுவன். அவரும் அரவணைப்புத் தோரணையில், நின்ற நிலையில் தன் இரு கரங்களையும் நீட்டி, “பாதத்து மேல ஏறி நின்னுக்க! உன்னோட ரெண்டு கையையும் என் மேல கிராஸாப் போட்டுக்க!” , சிறுவன் அவ்வாறே செய்திட...

அடுத்த க்ஷணம் இருவரும் ஜிவ்வென்று மேலே பறக்கத் தொடங்கினார்கள்! உயரே... உயரே... உயரே!

கம்ப்யூட்டர் புதிதா ?

கம்ப்யூட்டர், அணுகுண்டு போன்றவை புதியனவா?

இன்றைக்கு அணுகுண்டு வெடிப்பு, செயற்கைக் கோள்கள், கிரஹங்களுக்கு ராக்கட் அனுப்புதல், நீர் முழ்கிக் கப்பல்கள், உயர்தர விமானங்கள் போன்றவை நவீன விஞ்ஞானமயக் கண்டுபிடிப்புகளாகத் தோன்றும்.  ஆனால் நாம் ஏற்கனவே எடுத்துரைத்துள்ளது போல, பல கோடி பூலோகங்கள் விண்ணுலகில் இருப்பதால் பல பூமிக் கோள்களிலும் இத்தகைய கண்டுபிடிப்புகள் ஏற்கனவே அவற்றில் வெளிவந்து விட்டன. நாம் வாழும் பூலோகத்திற்கு இப்போதே இவை வந்துள்ளன அவ்வளவே. இது ஏதோ கட்டுக் கதை போலவும்,  கற்பனைக் கதை என்றும் மேலெழுந்த வாரியாகத் தோன்றும்!

நான்கு யுகங்களும், சுழற்சியாகத் தான் வருகின்றன எவ்வாறு கிருத, திரேதா, துவாபர, கலியுகங்கள் மாறி மாறி வருகின்றனவோ, இப்போது நாம் காண்கின்ற அனைத்து விஞ்ஞானமயக் கண்டுபிடிப்புகளும் முந்தைய யுக காலச் சக்கரங்களில், ஏற்கனவே வந்து சென்ற கலியுகங்களில் இருந்த இவையே மீண்டும் மீண்டும் சுழன்று வருகின்றன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்படியானால் இப்போது நாம் காண்கின்ற பெண்டியம் II கம்ப்யூட்டர் எல்லாம் ஏற்கனவே இருந்ததா ?  ஆம் பல யுகங்களுக்கு முன்னரே இருந்த கலியுகங்களில் இவை எல்லாம் ஏற்கனவே இறைவனால் படைக்கப் பெற்றவையே. .

கலியுகம் தோன்றி 5100 ஆண்டுகளே ஆகின்றன. இன்னமும் கிட்டத்தட்ட 4,95,000, ஆண்டுகளுக்கு மேல் கலியுகம் நீடிக்கவிருக்கின்றது. அப்போது எத்தகைய கண்டுபிடிப்புகளெல்லாம் ஏற்படும்? அதற்குப் பிறகு கிருதயுகம் தானே மீண்டும் வருதல் வேண்டும். இதைச் சற்றுச் சிந்தித்துப் பார்ப்பீர்களேயானால் அனைத்துமே இறைவனால் படைக்கப்பட்டவையே. எதுவும் புதுமையானவை அல்ல என்பது நன்றாக புலனாகும். ஆனால் விஞ்ஞான பூர்வமாக நாம் எதையும் நிரூபணம் செய்தே பழகிவிட்டதால்  இவையெல்லாம் படிப்பதற்குச் சற்று மலைப்பாகத்தான் இருக்கும். தக்க குருவின் வழிகாட்டுதலைப் பெற்றால் இவை எல்லாம் ஆத்ம விசாரம் மூலம் எளிதாகப் புரிந்து விடும். அது வரையில் இவை மாயையாகவே விளங்கும்.

சூரிய கிரகணம்

கங்கண சூரிய கிரஹணம்

வரும் 22.8.1998 சனிக்கிழமையன்று சூரிய கிரஹணம் அமைகின்றது. சூரிய உதய நேரமான காலை 6.01 மணி முதல் காலை 06.43 மணி வரை சூரிய கிரஹண நேரமாகும். பொதுவாக அமாவாசையன்றுதான் சூரிய கிரஹணமானது வருவதால் பித்ரு பூஜைக்கு மிகவும் உத்தமமான நாள்!

வானவியல் விஞ்ஞானத்தின்படி சூரிய, பூமி, சந்திர - மூன்று கோளங்களும் ஒரே நேர் கோட்டில் அமைகையில், சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திர கிரஹணம் வந்து விடுவதால் நம்மால் சூரியனைக் காண இயலாமல் போய் விடுகிறது. அதாவது சந்திரனின் பிம்பம் சூரியனின் மேல் விழுகின்றது. இதில் சூரிய, சந்திர கோளங்கள் மிக மிக அருகில் இருக்கும் நிலையும் ஏற்படுவதுண்டு. இதுவே கிரஹணம் பற்றிய விஞ்ஞான விளக்கம்.  

நம் புராணத்தில் எத்தனையோ அறிவு பூர்வமான விளக்கங்கள் காணப்படுகின்றன. விஞ்ஞானத்திற்கும் தெய்வீகமயமான மெய் ஞானத்திற்கும் உள்ள அடிப்படை வித்யாசமே நம்பிக்கைதான். கண்ணால் கண்டு நிரூபணம் செய்யப்பட்டால் தான் விஞ்ஞானம் ஏற்கும். ஆன்மீகத்திலோ ஆழ்ந்த நம்பிக்கையைக் கொண்டு விட்டால், எவ்வித ஆராய்ச்சியுமின்றி, சோதனைச் சாலைகளுமின்றி அனைத்தும் தானே புலப்படும்!

தெய்வீகத்தில் சித்புருஷர்கள் கிரஹணங்களை “கோளங்களின் சங்கம பூஜை” என்று குறிப்பிடுகின்றார்கள். ஆனால் நாம் விஞ்ஞானத்தில் விசேஷமாகக் குறிப்பிடுவது சூரிய, சந்திர பூமிக் கோளங்களின் சங்கமமான சூரிய, சந்திர கிரஹணங்களை மட்டுமே!

இதுபோல வேறு சில கிரஹங்களின் சங்கம பூஜைகளும், கிரகணங்களும் உண்டு. இவை இன்றும் தெய்வீக இரகசியமாகவே விளங்குகின்றன. சூரிய, சந்திர கிரஹணங்களில் பல ஆன்மீக விளக்கங்கள் பொதிந்து கிடக்கின்றன, எத்தனையோ மஹான்கள் இவற்றைப் பற்றித் தெரிவித்தும் உய்த்து உணர்ந்தோர் ஒரு சிலரே. பெரியோரைத் தொடர்க!

காஞ்சி ஸ்ரீ பரமாச்சார்ய சுவாமிகள் பல சமயங்களில் தகிக்கும் வெயிலில், கல், முட்கள் நிறைந்த பாதையில் கடும் மழையைப் பாராது திடீரென்று விடுவிடு என்று எங்கோ போய் அமர்ந்து விடுவார்கள்! அவர் மேல் ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டு உடல்சிரமங்களைப் பாராது அவரைத் தொடர்வோருக்கு ஒரு பாக்யம் காத்திருக்கும். அது என்னவெனில் எந்த இடத்திலிருந்து எந்தக் கோணத்திலிருந்து பார்த்தால் மூன்றாம் பிறை தரிசனம் கிட்டுமோ அங்கு முன்னரேயே தங்கி சந்திர தரிசனத்தைப் பெற்றுத் தந்திடுவார்.
அப்பகுதியில் அதனை வேறு எங்கும் காண இயலாது!

உடல் வேதனைகளைப் பாராது, “மஹான் எதைச் செய்திடினும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் அதில் பொதிந்திருக்கும்” - என்று நம்பிப் பின்பற்றுவோர்க்கு அதற்குரிய அனுகிரஹம் நிச்சயமாகக் கிட்டிடும். இவ்வாறாக மஹான்களும் சித்புருஷர்களும் யோகியரும் காட்டுகின்ற அற்புதக் கோள வழிபாடுகள் ஏராளம், ஏராளம்!

ஏதோ சுழற்சி வேக நியதிகளின்படி கோள்களின் சங்கமம் ஏற்படுவதாக விஞ்ஞானம் பறை சாற்றினாலும் பூலோகத்தில் எவ்விதத் துன்பங்கள் ஏற்படுகின்றனவோ, எத்தகைய பாவச் செயல்கள் கூடுகின்றனவோ, கிரஹ சஞ்சார விளைவுகளினால் எத்தகைய விளைவுகள் கூடுமோ இவற்றிலிருந்து பூலோக ஜீவன்களைக் காப்பாற்றும் பொருட்டு சூரிய, சந்திர கிரஹமூர்த்திகள் தாமே சில கூட்டு (சங்கம்) பூஜைகளை மேற்கொள்கின்றனர்.

பலர் ஒன்று சேர்ந்து செய்கின்ற சத்சங்கக் கூட்டு வழிபாட்டிற்குப் பலாபலன்கள் அதிகமல்லவா, அதிலும் சூரிய, சந்திர பகவான் மூர்த்திகள் இணைந்து பூஜித்திடில் நாம் அதில் கலந்து கொண்டால் என்னே அதன் மஹிமை! இத்தேவாதி தேவ பூஜையில் நாமும் கூடிட என்னே நம் பாக்யம்! 

தெய்வமூர்த்திகளே நம்முடைய நலன்களுக்காக, நல்வாழ்விற்காகப் பூஜைகளில் ஈடுபட்டிருக்கையில் அப்பலன்களைப் பெற வேண்டிய மனிதர்களோ பீடி, சிகரெட் பிடித்துக் கொண்டோ, மது, சினிமா போன்ற கேளிக்கைகளில் ஈடுபட்டோ, டீவி பார்த்துக் கொண்டோ, சினிமா பத்திரிகைகள், நாவல்களையோ படித்துக் கொண்டிருந்தால் .... என்னே கேவலமான வாழ்க்கை இது!

“தேவாதி தேவமூர்த்திகளாகிய நாங்கள் இறைப் பரம் பொருளை வழிபடுகையில் நீங்களும் இதில் கலந்து கொள்ளுங்களேன்!” என்று நவகிரஹ மூர்த்திகளே நமக்கு அழைப்பு விடுக்கையில் நாம் சோம்பேறித்தனமாகத் தூங்கிக் கொண்டிருந்தால்...! சற்றே யோசித்துப் பாருங்கள், எத்தகைய தெய்வீக வாய்ப்புகளை இழந்து வருகிறோம் என்று!

1. மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் என்பது சாட்சாத் சிவபெருமானே தன் சிரசில் சந்திரனைச் சூடி அளிக்கின்ற சந்திர மெளளீச்வர தரிசனம்!

2. பிரதோஷ நேரமானது நந்தியெம் பெருமானோடு கோடானுகோடி தேவாதி தெய்வ மூர்த்திகள் இறைவனைத் தொழுகின்ற விசேஷமான, மிகவும் புனிதமான நேரமல்லவா!

3. மாதப் பிறப்பு, அமாவாசை போன்ற நாட்களில் கடல், நதி, மற்றும் பல கோயில் தீர்த்தங்களில் பித்ருக்கள் நீராடி இறைவனை வழிபடுவதால் அவர்களுடைய ஒளி மயமான தேகம் நீராடிய தீர்த்தத்தில் நாமும் நீராட என்னே பாக்யம் செய்திருக்க வேண்டும்! தினமும் கடலில் நீராடுதல் கூடாது, ஆனால் மேற்கண்ட விசேஷ தினங்களில் மட்டும் நீராடிடலாம்.

4. மாத சிவராத்திரியன்று (தேய்பிறை சதுர்த்தசி) திருஅண்ணாமலை, பர்வத மலை, சென்னை திருக்கச்சூர் போன்ற சிவத்தலங்களில் அம்பிகையுடன் சித்புருஷர்கள், யோகியர்கள் இன்றும் சிவராத்திரி இரவிற்கான பூஜைகளை மேற்கொள்கின்றனர். மாசி சிவராத்திரியான மஹா சிவராத்திரியைப் போல் மாதந்தோறும் சிவராத்திரி வருவதை எவ்வளவு பேர் அறிவார்கள்!

5. பெளர்ணமி தோறும் ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் (சென்னை), ஸ்ரீ தங்கால் சித்தர் (வேலூர் - தங்கால்), ஸ்ரீ படேசாஹிப் மஹான் (பாண்டிச்சேரி சின்னபாபு சமுத்திரம்), யோகியரின் ஜீவசமாதிகள் / ஆலயங்களிலும், திருஅண்ணாமலை, அய்யர் மலை (திருச்சி அருகே) போன்ற மலைத் தலங்களிலும் தெய்வீக சக்தி பொங்கி வழிகின்றது! இத்தகைய விசேஷ தினங்களின் மஹிமையை அறிந்தும் எத்தனை பேர் பயன்படுத்திக் கொள்கின்றோம், உள்ளத்தைத் தொட்டுச் சிந்தித்துப் பாருங்கள்!

கலியுகத்தில் மக்களுடைய பூஜைகளும் வழிபாடுகளும் மிகவும் குறைந்து பேராசை எண்ணங்களும் மிகுந்து வருவதால்தான் கிரஹமூர்த்திகளே ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பல பூஜை முறைகளுக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கித் தருவதோடு தாமும் பூஜைகளை மேற்கொண்டு இறையருளைப் பெற்றுத் தருகின்றனர். இவ்வாறு தெய்வ சங்கல்பத்தால் ஏற்படும் பூஜை வாய்ப்புகளே சூரிய, சந்திர கிரஹணங்கள் போன்றவையாகும்.

22.8.1998 அன்று காலை 6.01மணி) 06.43 வரை சூரிய கிரஹணமிருப்பதால் சூரிய, சந்திர சங்கம் பூஜையினால் கிரணங்களின் ஆகர்ஷண சக்தி மிகுகின்றது.  மேலும் சூரிய, சந்திர மூர்த்திகளே விசேஷமான பூஜைகளை மேற்கொள்வதால் நாமும் இன்று பூஜித்திடில் அவை தேவாதி தேவ மூர்த்திகளின் தெய்வீக பூஜைகளோடு சங்கமமாகி நமக்கு அபரிமிதமான பூஜா சக்திகள் கிட்டுகின்றன. இன்று சூரிய பகவானுக்குரிய தோத்திரங்களை ஓதி சூரிய கிரஹணத்திற்குரிய கோதுமை உணவினைப் படைத்து வழிபட வேண்டும்.

காலையில் சூரிய உதயத்திலிருந்தே ஸ்ரீ ஆதித்ய ஹிருதயம் (ஸ்ரீ அகஸ்தியரால் ஸ்ரீராமனுக்கு உபதேசிக்கப்பட்ட மந்திரத் துதி), ஸ்ரீ யாக்ஞவல்கியரால் இயற்றப்பட்ட சூரிய கவசம், சூரிய கிரஹத்திற்கான அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம், சூரிய நமஸ்கார மந்திரங்கள் போன்றவற்றைத் தொடர்ந்து ஜபித்து வந்தால் மிகுந்த அனுகிரஹங்களைப் பெற்றுத் தரும்.

இப்புனிதமான கிரஹண நேரத்தில் புண்ணிய நதிகளிலோ,  கோயில் தீர்த்தங்களிலோ, சமுத்திரத்திலோ,  கழுத்தளவு நீரில் நின்றோ அமர்ந்தோ கீழே குறிப்பிட்டுள்ள சூரிய துதிகளை ஓதி வருதல் அபரிமிதமான பலன்களைத் தரவல்லது! ஸ்ரீருத்ர, சமக மந்திரங்களை ஓதுதலும் சக்தி வாய்ந்ததாகும்.

ஸ்ரீ சூரிய காயத்ரி மந்திரங்கள் :

1. ஓம் பாஸ்கராய வித்மஹே மஹத் த்யுதிகராய தீமஹி
தந்நஸ் ஸூர்ய: ப்ரசோதயாத்

2. ஓம் பாஸ்கராய வித்மஹே மஹா தேஜாய தீமஹி
தந்நஸ் ஸுர்ய: ப்ரசோதயாத்

3. ஓம் ஆதித்யாய வித்மஹே மார்த்தாண்டாய தீமஹி
தந்நஸ் ஸுர்ய: ப்ரசோதயாத்

4. ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி
தந்தஸ்: ஸுர்ய: ப்ரசோதயாத்..

ஸ்ரீ சிவசூரியன், விஷ்ணு சூரியன், பிரம்ம சூரியன், பிரகத சூரியன், சூரிய நராயணன் போன்ற பலவிதமான சூரிய மூர்த்திகளுக்கான காயத்ரீ மந்திரங்களிவை! விதவிதமான பலன்களைத் தரவல்லவை!

பொதுவாக கண் சம்பந்தமான நோய்களுக்கான நிவர்த்திக்கும், மந்தமான மூளை நன்கு வளர்ச்சி பெறவும், தந்தை வழிப் பித்ருக்களின் சாபம் தீர்ந்து அவர்களுடைய நல்லாசிகளைப் பெறுவதற்கும், வெம்மை நோய் தீருவதற்கும், இல்லத்தில் சேர்கின்ற பலவிதமான பீடைகளை அகற்றுவதற்கும் சூர்ய கிரஹண வழிபாடு பெரிதும் உதவுகிறது. கிரஹண நேரத்தின் போது ஸ்ரீசூர்யபகவானுக்குரிய ஹோமத்தை நடத்துவதால் அபரிமிதமான பலன்களைப் பெறலாம். ஹோம வழிபாடு எளிதில் காரிய சித்தியைத் தருவதாகும்.

ஸ்ரீ சூர்ய பகவானுக்குரிய திருத்தலங்களை ஆடுதுறையிலுள்ள சூரியனார் கோயில், ஒரிசாவில் கொனார்க்கிலுள்ள சூரிய ஆலயம், சூரிய தீர்த்தங்கள் விளங்குகின்ற திருத்தலங்கள், சூரிய கிரணங்கள் படுகின்ற சுயம்பு மூர்த்திகள், திருச்சி மலைக்கோட்டை, ஐயர் மலை (திருச்சி அருகே), திருநெல்லிக்கா, சென்னை பூந்தமல்லி, ஸ்ரீவைதீஸ்வரன் ஆலயம் போன்ற இடங்களில் கிரஹண நேரத்தில் சூரியபகவானுக்குத் தேனபிஷேகம் செய்து தேனை ஏழைகளுக்குத் தானமளித்தால் பலவிதமான கண், தோல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

சூரிய கிரஹண நேரத்தில் ஸ்ரீசூர்யேஸ்வரர், ஸ்ரீசூர்யநாராயண ஸ்வாமி, ஸ்ரீ ஆதித்யன், ஸ்ரீசிவசூரியன் போன்ற சூரிய நாமங்களுடைய மூர்த்திகளுக்குப் பொன் நிற வஸ்திரங்களைச் சார்த்தி அபிஷேக ஆராதனைகளைச் செய்திட நல்ல நெடுங்காலப் பிரார்த்தனைகள் சித்தியாகும்! சூரிய கிரஹணத்தின் போது திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் இடையில் அடிஅண்ணாமலை அருகேயுள்ள சூரிய லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து மஞ்சள் நிறப்பட்டு வஸ்திரங்களைச் சார்த்தி வழிபட்டு ஏழைகளுக்குத் தானமாக அளித்திடில் கடுமையான தோல் நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். இங்கிருந்து கிட்டுகின்ற ஸ்ரீ அண்ணாமலையாரின் தரிசனமே ஸ்ரீ பாஸ்கர தரிசனமாகும்.

இராமேஸ்வரம், கன்யாகுமரி, திருச்செந்தூர் போன்ற கடற்கரையில் அமைந்துள்ள திருத்தலங்களுக்குச் சென்று கடலில் நீராடி கிரஹண நேரத்திலோ, கிரஹணம் விட்ட உடனேயோ பித்ரு தர்ப்பணங்கள் செய்திட, தந்தை வழிச் சொத்து சம்பந்தமான பிரச்னைகளுக்கும் பாகப்பிரிவினை போன்றவற்றால் வரும் உறவுத் துன்பங்களுக்கும் சிறந்த தீர்வு கிட்டும்.

பல ஆலயங்களிலும் சூரிய சந்திர மூர்த்திகள் நவகிரகஹங்களாக மட்டுமின்றி தனித்து எழுந்தருளியிருப்பினும் பக்தர்கள் சூரிய சந்திர மூர்த்திகளுக்கு அவர்களுக்குரித்தான ஞாயிறு, திங்கள் கிழமைகளில் எவ்வித வழிபாடும் செய்வதில்லை. குறிப்பாக அவரவர் பிறந்த நாட்களில் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வோர் தங்களுடைய நட்சத்திர தெய்வ மூர்த்தியின் நாயகராய் விளங்கும் ஸ்ரீ சந்திர பகவானை வழிபட மறந்து விடுகிறார்கள்! சூரிய கிரஹண நாளிலாவது, ஆலயத்தில் பொதுவாக முன் நுழைவு மண்டபத்தில் இரு புறங்களிலும் சுவாமியை நோக்கியவாறு அருள்பாலிக்கும் தனித்துள்ள சூரிய, சந்திர மூர்த்திக்கு மூலவரைப் போன்றே அனைத்து விதமான அபிஷேக ஆராதனைகளையும் செய்து வழிபடுதல் சிறப்புடையதாகும்.

இன்று (22.8.1998) சூரிய கிரஹண நேரத்தை வீணே கழித்திடாது நன்முறையில் ஜபத்தோடு வழிபட்டுப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்நேரத்தில் செய்யப்படும் ஜப, தப, ஹோமங்களுக்கும் பன்மடங்கு பலன்களுண்டு அல்லவா! இன்று புண்ணிய நதிதீரங்களிலோ, கடற்கரைகளிலோ, தர்பைப் பாய், மா, பலா மரப் பலகையிலோ கோசாலையிலோ (பசுமடம்) அமர்ந்து செய்யப்படும் பூஜைகளுக்கு / காயத்ரீ மந்திரத்திற்கோ அதிக சக்திகளுண்டு. ஏன், வாழ்கையில் பல காலங்களாக முறையாக செய்யத் தவறிய காயத்ரீ மந்திர ஜபத்திற்கு ஓரளவு ஈடு செய்யக் கூடியதாக இந்நேரத்தில் ஓதப்படும் மந்திரங்கள் அமைகின்றன. ஆகவே அனைவரும் இப்புனிதமான கிரஹண நேரத்தின் புனிதத்துவத்தை உய்த்துணர்ந்து பூரண பலன்களை அடைவோமாக.

சூரிய கிரஹணம் - சித்தர்களுடைய அற்புதமான விளக்கங்கள்

சூரிய கிரஹணத்தைப் பற்றி எத்தனையோ விஞ்ஞான விளக்கங்கள் இருப்பினும் சித்தர்கள் இதைப் பற்றி என்ன கூறுகின்றார்கள்? ஸ்ரீ அகஸ்தியருடைய கிரந்த நாடிகளில் பலவிதமான பரிபாஷைகளுடன் கூடிய நாடிகள் காணப்படுகின்றன.

“வட்டத்திற்குள்ளே முடிச்சுகள் உண்டு.
ஆதவன் வட்டம், அதனுள்ளே முடிச்சுகள்!
ஆதவன் சிக்குவான் மந்திரத்தால் மீள்வானே!”

இதுதான் கிரஹண பரிபாஷை மந்திரம்! இதனைச் சற்று விரித்துச் சொல்வோமானால் கதிரவனின் வட்டத்திற்குள்ளோ பல கிரஹ தாரண முடிச்சுகள் உண்டு. இதில் சூரியன் நுழையும் போது இம்முடிச்சுகளிலே அதன் வேகச் சக்கரங்கள் சிக்குவதுண்டு. தன்னுடைய மந்திர சக்தியால், இறை வழிபாட்டால் இதைக் கடந்து ஆதவன் மீள்கின்றான். இதுவே சூரிய கிரஹணம் என ஆன்மீக கிரந்த நாடிகள் விளக்குகின்றன.

இதற்குள் பலவிதமான அற்புத விளக்கங்கள் பொதிந்துள்ளன. இதைப் பற்றி ஒரு பெரிய ஆத்ம விசாரமே செய்து விடலாம், பல ஆராய்ச்சிகளையும் நிகழ்த்திடலாம். ஆமாம் கிரஹ தாரண முடிச்சுகள் என்றால் என்ன? கதிரவன் ஏன் மந்திர சக்திகள் மூலம் இம்முடிச்சுகளிலிருந்து மீள வேண்டும் ? இவையெல்லாம் நமக்குப் புரியாத பரிபாஷைக் குறிகள். ஏனென்றால் சாதாரண மனித நிலையில் இருக்கும் பொழுது இறைவனுடைய உத்தம நிலைகளைப் பற்றி நம்மால் உணர முடியாமல் போய் விடுகின்றது, காரணம் அதைத் துய்க்குமளவிற்கான தூய உடலையோ, புனிதமான மனதையோ நாம் பெறவில்லை. இறைவனை ஓரளவேனும் உணர்ந்து கொள்ள வேண்டுமானால் நல்ல ஒழுக்கமான வாழ்க்கையும், யோக சக்தி நிறைந்த ஆன்மீகப் பயிற்சிகளும், இறை வழிபாடுகளும் தெய்வீக சமூகப் பணிகளும் தொடர்ந்து கடைபிடிக்கப் பட வேண்டும்.

சித்தர்களுடைய பரிபாஷையில் , கிரஹணத்தைப் பற்றிய விளக்கத்தில் பீஜாட்சர ஒலி, ஒளி வடிவங்களால் பின்னப்பட்ட வளையங்களையே முடிச்சுகள் என்று கூறுகின்றார்கள். அவற்றை சூரிய பகவான் கடக்க முயற்சிக்கும் பொழுது ஏதேனும் ஒரு முடிச்சில் அதனுடைய வேகச் சக்கரம் தடைபடுகின்றது. அதிலிருந்து மீள்வதற்காக சூரியன் தம்முடைய அவதார, தெய்வீக சக்திகளைப் பிரயோகிக்கின்றார். முடிச்சுகளிலிருந்து மீள்வதற்காக சூரியன் மந்திரத் துதிகளை ஓதி இறைவனை வழிபடுகின்றார் என்று சொல்வதை விட இம்முடிச்சுகளெல்லாம் பூலோக ஜீவன்களுக்கு ஏற்படவிருக்கின்ற துன்பங்களையும், இடர்களையும் குறிக்கின்றன என்பதே இதன் மறை பொருளாகும்.

ஜீவன்களுடைய தினசரி வாழ்க்கையில் சம்பந்தப்பட்டவையே சூரிய, சந்திர கிரஹமூர்த்திகள் ஆகும். ஏனைய கிரஹ மூர்த்திகளும் நம்முடைய தினசரி வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவை என்றாலும், சூரியனுக்கும், சந்திரனுக்கும் இதில் பெரும் பங்கு உண்டு அல்லவா! இத்தகைய வட்ட முடிச்சுகளில் சூரிய பகவானுடைய சக்கரம் உழன்று நிற்கையில் சூரிய பகவானே பலவிதமான சக்தி வாய்ந்த மந்திர வழிபாடுகளைக் கடைபிடிக்கின்றார். அப்போது ஏற்படுகின்ற வாயு வடிவில் உள்ள ஒலிப் பிரவாகம் நிறைந்த, ஒளிப் பிரகாசம் கூடிய கதிர்கள் வியாபிக்கின்றன. இவை ஒலி அல்லது ஒளி வடிவில் இருப்பதால் இவற்றை கிரஹிக்கின்ற சக்தி நீருக்கு மட்டுமே உண்டு.

எனவே சூரிய கிரஹணத்தின் போது சூரிய பகவானும், சந்திர பகவானும் வெளிப்படுத்துகின்ற மந்திர சக்திகளையெல்லாம் ஆறு, குளம், கிணறு சமுத்திரத்தில் உள்ள நீர்த் திவலைகளே அவற்றை உறிஞ்சி ஜீவன்களுக்கு நற்கதிர்களாக மாற்றி அளிக்கின்றன. இதுவே சித்புருஷர்கள் சூரிய கிரஹணத்திற்கான அளிக்கின்ற விளக்கம். சூரிய பகவானே நாம் அறியாத பலவிதமான வேத மந்திரங்களை ஓதுவதால் இந்த கிரஹண நேரத்தில் நாம் நீரினுள் அமர்ந்து கொண்டு ஓதுகின்ற மந்திர உச்சாடனங்களுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. இத்தகைய வட்ட முடிச்சுகளைப் பற்றிய கூடுதல் தெய்வீக விளக்கங்களைச் சற்குருமார்களிடமோ தக்க பெரியோர்களிடமோ கேட்டுப் பெற்றிடுக!

சூரிய கிரஹணத்தைப் பற்றிய விளக்கத்தோடு இதுவரையில் நாம் அறியாத சில தெளிவுரைகளை இங்கு அளிக்கின்றோம். இவற்றை உணர்ந்து கொண்டால் தான் சூரிய கிரஹணம் பற்றிய பரிபாஷை நாடிகளை நன்கு புரிந்து கொள்ள முடியும். நாம் பன்முறை ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் எடுத்துரைத்து வருவது போல பூலோகம் ஒன்றல்ல, ஏராளமான பூலோகங்கள் உள்ளன. இதேபோன்று ஒரேயொரு சூரியன் மட்டுமே விண்ணுலகில் இருப்பதாக மட்டும் எண்ணாதீர்கள். கோடிக்கணக்கான சூர்ய, சந்திர மூர்த்திகள் உண்டு.

நமக்கு தினமும் ஒளி வழங்குகின்ற சூர்ய மூர்த்தி வேறு. நவக்கிரக மூர்த்திகளாக அருள்பாலிக்கின்ற சூர்ய மூர்த்தி வேறு. சூர்ய மண்டலத்தில் உறைகின்ற சூரிய நாராயண மூர்த்தி வேறு. ஸ்ரீஅகஸ்தியரால் ஸ்ரீ ராமருக்கு உபதேசிக்கப்பட்ட ஸ்ரீ அகஸ்திய ஹிருதயத்தில் போற்றப்படுகின்ற சூரிய மூர்த்தி வேறு. இவ்வாறாக சூரிய மூர்த்திகளிலேயே பலவிதமான அவதாரங்கள் உண்டு.  சாதாரணமாக, நாம் அனைத்து சிவாலயங்களிலும் காணுகின்ற நவக்கிரஹ மூர்த்தியராக விளங்குகின்ற சூரிய மூர்த்தியும், அதே ஆலயத்தில் தனித் தனியாகக் காணப்படுகின்ற சூரிய, சந்திர மூர்த்திகளும் கூட வெவ்வேறானவர்களே. இவர் நவக்கிரஹ நாயக மூர்த்தியாக விளங்குகின்றார்! அவரோ நமக்கு ஜீவசக்தியைத் தருகின்ற சூரிய மூர்த்தியாக விளங்குகின்றார்.

நவசாளர வழி சூரிய பூஜை
ஐயர்மலை

ஸ்ரீஇரத்தினகிரி ஈசன்
ஐயர்மலை

மேலும் பல ஆலயங்களில் லிங்கத்தின் மேல் படுகின்ற சூரிய ஒளியைப் பற்றியும், சூரிய பூஜையைப் பற்றியும் நாம் விளக்கி வருகின்றோம் அல்லவா! பல ஆலயங்களிலும் லிங்கத்தைத் தம் கிரணங்களால் பூஜை செய்கின்ற சூரிய பகவான் மூர்த்தியும் வெவ்வேறானவர்களே. எத்தனை பூலோகங்கள் உள்ளனவோ ஒவ்வொரு பூலோகத்திற்கும் தனிப்பட்ட சூரிய மூர்த்தி உண்டு. இதைப் போன்று எமன், யமுனா, சனீஸ்வர மூர்த்திகளுடைய தந்தையாய் விளங்குகின்ற சூரிய மூர்த்தியும் வேறானவரே! அப்படியானால் கோடிக் கணக்கான பூலோகங்களுக்கும், விண்ணுலகங்களுக்கும் கோடிக் கணக்கான சூரிய தேவர்கள் இருக்கின்றார்கள் என்பது உண்மையாகின்றது அல்லவா!
இறைப்பரம் பொருளின் வலது கண்ணாய் விளங்குகின்ற சூரிய பகவானும் வெவ்வேறு மூர்த்திகளுடைய வலது கண்ணாய் விளங்குகின்ற சூர்ய மூர்த்திகளும் வெவ்வேறானவர்களே! எவ்வாறு ஒரு நாட்டின் பலவிதமான மாவட்டங்களுக்கும் ஒவ்வொரு மாவட்டத் தலைவர் விளங்குகின்றாரோ அதேபோல பிரபஞ்ச பரிபாலனத்தில் ஆதித்யனுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ள பலவிதமான பணிகளையும் வெவ்வேறு சூரிய மூர்த்திகளே காப்பாளராக இருந்து அருள்பாலிக்கின்றனர். உதாரணமாக, வருகின்ற சூர்ய கிரஹணத்தில் பகுபல கங்கண சூர்யமூர்த்தி என்பவரே சூர்ய கிரகணத்தில் அமைகின்ற சூர்ய பகவானாகின்றார்.

இவையெல்லாம் படிப்பதற்கோ, கேட்பதற்கோ சற்றுக் குழப்பமாகத்தான் இருக்கும். இதைத்தான் நாம் முதலிலேயே சொன்னோம், சாதாரண மனித நிலையிலிருந்து இறைவனுடைய லீலைகளை நம்மால் புரிந்து கொள்ள இயலாது என்று! இறைவனுடைய ஒரு சூரிய அவதாரத்தை மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டுமானால் எத்தகைய புனிதமான மனதை நாம் பெற்றாக வேண்டும் என்பது புரிகின்றதா! 

சூர்ய, சந்திர கிரஹணங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு கிரகத்திற்கும் கிரஹணங்களும் உண்டு. இவ்வாறாக செவ்வாய் கிரஹணம், ராகு கிரஹணம், கேது கிரஹணம் போன்ற பல வேறு வகையான கிரஹணப் பிரிவுகளும் உண்டு. இவை எல்லாம் காலப்போக்கில் எஞ்சியுள்ள சுமார் 49,500 ஆண்டுக் கலியுகத்தில் மீண்டும் வெளிவரும்!

புளூட்ட , யுரேனஸ், நெப்டியூன் போன்றவை நவீன கால கிரஹங்களாக நமக்குத் தோன்றிடினும் ஸ்ரீ அகஸ்திய கிரந்தங்களில் எந்தெந்த கிரஹங்கள் எதிர் காலத்தில் தோன்றப்போகின்றன என்பதை முன் கூட்டியே எழுதி வைத்துள்ளார்கள். எனவே இவற்றைப் புதிதான கிரஹங்கள் என்றோ விஞ்ஞான பூர்வமாகக் கண்டுபிடிக்கப்பட்டவை என்றோ இவை பழங்காலத்தில் இல்லை என்றோ எண்ணாதீர்கள். ஏனென்றால் முதலில் ஏழு கிரஹங்களாய் இருந்தவை ராகு கேதுவுடன் ஒன்பதாயின! எதிர் காலத்தில் இன்னும் பல கிரஹங்கள் வருவதற்கு உள்ளன என்பதும் உண்மையே!

பெண் பார்த்தல்

பெண் பார்க்கும் படலத்தில் பெருங் கர்ம வினையை சேர்ப்பதா ?

தற்காலத்தில் பெண் பார்க்கின்ற வைபவத்தில், பையன் வீட்டிலிருந்து ஒரு படையே திரண்டு சென்று சொஜ்ஜி, பஜ்ஜி தின்று மகிழ்ந்து, பின்னர் ஏதேனும் ஒரு சாக்கைக் கொண்டு அப்பெண்ணை நிராகரிக்கின்ற அநாகரீகம் மிகுந்து வருவது மிகவும் வேதனைக்குரியதாகும்.

வருகின்றவன் தனக்குக் கணவனாகப் போகின்றானா, இல்லையா என்ற திகிலிலேயே ஒரு கன்னிப் பெண் எத்தனை ஆண்களை விழுந்து விழுந்து நமஸ்கரிக்க வேண்டிய துர்பாக்ய நிலை! இதனால் தான் அக்காலத்தில் காரண காரியமின்றி “இன்னொருவர் வீட்டில் கையை நனைத்தலாகாது” அதாவது வெறுமனே மற்றொருவர் வீட்டில் சாப்பிடலாகாது என்ற நியதியை வைத்திருந்தார்கள்!

குறைந்தது பத்து, பதினைந்து பெண்களைப் பார்த்து நன்றாக சொஜ்ஜி, பஜ்ஜி, காபி, சாப்பிட்டு விட்டுப் பெண்களை நிராகரித்துப் பெருஞ் சாபத்தைச் சம்பாதித்துக் கொள்கின்ற பேர்வழிகள் இன்றும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

நிச்சயதார்த்த நிலை வரை வந்து, மாரக தசை, செவ்வாய் தோஷம் என்று ஏதோ சொல்லி, தான் முடிவு செய்திருந்த பெண்களை அல்லது ஆண்களை நிராகரித்தால் அது பெரும் ஏக்க அசுர சக்தியாக மாறிப் பல ஜென்மங்களுக்கும் பாவம் தொடரும். எவருடைய சாபத்தைப் பெற்றாலும் கன்னிப் பெண்ணுடைய சாபத்தைக் கலியுகத்தில் பெறக் கூடாது! இந்நிலையில் எப்படித்தான் ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் செய்வது?

நம்முடைய மூதாதையர்கள் செய்ததைப் போல, முதலில்

1. பெண், பிள்ளையின் ஜாதகப் பொருத்தங்களைக் கை தேர்ந்த, நல்ல பக்தி நிறைந்த, ஒழுக்க நன்னடத்தைகள் மிகுந்த, பூஜை, புனஸ்காரங்களைக் கடைபிடிக்கின்ற ஜோதிடர் மூலமாகக் கணித்து அறிந்து கொண்டிடுக!

2, ஜாதகங்கள் பொருந்திடில் பெண் , பிள்ளையின் விருப்பத்தை போட்டோ மூலமாக அறிக!

3. பெண், பிள்ளையின் பெற்றோர்கள்/மூத்த உறவினர்கள் கூடிப் பேசி ஏனையவற்றை முடிவு செய்திடுக!

4. இறுதியில் பெண் பார்க்கும் படலத்தை வைத்துக் கொள்க!

சுவாமி படத்தை வைத்து, இறைவனை வீழ்ந்து வணங்குகின்ற நற்பழக்கமே போதுமானது! பஜ்ஜி,சொஜ்ஜியென அநாவசியச் செலவுகளைப் பெண் வீட்டாரின் தலையில் கட்டாதீர்கள்! இவ்வாறு தார்மீகமான முறையில் பிள்ளை /பெண் வீட்டார்கள் நடந்து கொண்டால் எவருக்கும் எவ்விதமான  வருத்தமுமின்றி நற்காரியம் நன்முறையில் நிறைவேறும்!

படிக்கட்டுப் பூஜை

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தின் படிக்கட்டுப் பூஜை

மாதந்தோறும் நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜையின் போது அன்னதானம் நிகழ்ந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இச்சமயத்தில் லட்சக்கணக்கான மக்கள் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்ற பொழுது சில ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே நம்மால் ஓரளவு அன்னப் பிரசாதம்தனை வழங்க முடிகின்றது. அவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் நீண்ட கியூ வரிசையில் ஆஸ்ரமத்தின் முன்னால் நிற்கும் பொழுது அனைவருக்கும் ஆஸ்ரமத்தின் படிக்கட்டுகளுக்குப் பூஜை செய்து தரிசனம் செய்ய வாய்ப்பளிப்பதென்றால் நெரிசல் ஏற்பட்டு விடுமல்லவா!

படிக்கட்டுத் தரிசனத்துடன் அன்னதானம் சேர்ந்து கொண்டால் ஒரே இடத்தில் அன்னதானமும் நன்கு நடைபெற முடியாமல் போய் விடும். கூட்ட நெருக்கடி அதிகமாகி விடும். எனவே அன்னதானத்தின் போது படிக்கட்டு தரிசனத்தையும், படிக்கட்டுப் பூஜையையும் சேர்த்து அனுமதிக்க முடியாமல் போகின்றது. மற்றும் ஆஸ்ரமக் கட்டிடத் திருப்பணிகள் இன்னமும் முடிவடையாமல் இருக்கின்ற காரணத்தினாலும் தற்போது பெளர்ணமி அன்று படிக்கட்டுத் தரிசனத்தை அனுமதிக்க இயலவில்லை .

எதிர்காலத்தில் அடியார்களுக்குப் படிக்கட்டுப் பூஜைக்கான விசேஷ தினங்களை அறிவிக்க உத்தேசித்துள்ளோம். இந்நாளில் அனவைரும் தாராளமாக வந்து நாங்கள் அறிவிக்கின்ற முறையில் படிக்கட்டுப் பூஜையை செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு முயற்சிக்கின்றோம். அதுவரையில் திருஅண்ணாமலையாரின் பக்தகோடிகள் எங்களைப் பொறுத்தருளுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம். அன்னதானத்திற்குப் பின்பாவது படிக்கட்டு தரிசனத்தை அனுமதிக்க இயலாதா என்று கேட்டுப் பலரும் கடிதங்கள் எழுதியுள்ளார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 4,000, 5,000 பேர்கள்தாம் திருஅண்ணாமலையைப் பெளர்ணமியன்று கிரிவலம் வந்து கொண்டு இருந்தார்கள். இறையருளால் தற்பொழுது 10 லட்சம் பேராவது மாதந்தோறும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து கொண்டிருப்பதனால் பெளர்ணமியின்போது படிக்கட்டு தரிசனத்தை அனுமதிப்பது கடினமானது! எனவே ஆஸ்ரமத்தின் சார்பில் எதிர்காலத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள படிக்கட்டு பூஜையை அறிவிக்கும் வரை எங்களைப் பொறுத்தருளுமாறு அன்பர்களை வேண்டுகின்றோம்.

ஆஸ்ரமத்திற்கான முகப்பு மண்டபம், முன்வாயில் இராஜ கோபுரம் போன்ற திருப்பணிகள் இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கின்ற நிலையில், மக்களுடைய சார்பில் சமுதாய நல்வாழ்விற்காக எங்களுடைய ஆஸ்ரம அடியார்களே பொது சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு மக்களுடைய நல்வாழ்விற்காக படிக்கட்டுப் பூஜையை நன்முறையில் கடைபிடித்து வருகின்றார்கள். எவ்வாறு திருத்தணியில் படிக்கட்டுப் பூஜை சிறப்பாக நடைபெறுகின்றதோ அதே வகையில் அனைவருக்கும் வாய்ப்பளிக்கும் வகையில் ஆஸ்ரமப் பணிகள் பரிபூர்ணமாக நன்கு முடிவடைந்த பிறகு படிக்கட்டு பூஜையைப் பற்றிய விளக்கங்களை அளிக்க உத்தேசித்துள்ளோம்.

அலுவலகத்தில் சேரும் கர்ம வினைகள்

ஒருபுறம் ஐயப்ப விரதம், காசி யாத்திரை, ஆலய, மஹான் தரிசனங்கள், மறுபுறமோ அலுவலகத்தில் மூட்டை,  மூட்டையாக தினந்தோறும் கர்மவினைகளைச் சேர்த்துக் கொள்வது! ஏனிந்த இரட்டை வேடம்? என்று தணியும் இந்த கர்மவினை சேர்க்கும் படலம்?

இது மட்டுமா, கண்களால், காதுகளால், வாயால் , கரங்களால், கால்களால் , எண்ணங்களால்

1, காண வேண்டாததைக் கண்டு கர்மவினைகளைப் பெருக்கியும்,
2. தகாதன பேசியும், ஏசியும்,
3. கேட்கக் கூடாதவற்றைக் கேட்டு அநாகரீகமான முறையில் களிப்படைந்தும்,
4. செல்லக் கூடாத இடங்களுக்குச் சென்றும்,
5. அங்கங்களால் தகாதன செய்தும்

மனிதன் நிமிடத்திற்கு நிமிடம் தீயவினைகளைத் தானே சம்பாதித்து வருகிறான். இடையிடையே கீழ்த்தரமான எண்ணங்களும் மனிதனை நாசப்படுத்துகின்றன. அவரவர் நெஞ்சைத் தொட்டுக் கேட்டுக் கொள்ளட்டும். மேற்கண்ட தீவினைகளில்தான் சிக்கித் தவித்திருக்கின்றோமா, இல்லையா என்று! ஒவ்வொரு அங்கத்தினாற் செய்த பல வகையான பாவங்களைத் தீர்த்திடத்தான் ஆயிரக்கணக்கான ஆலயங்களும் மூர்த்திகள், தீர்த்தங்கள் அனைத்தும் இறைவனால் ஏற்படுத்தப்பட்டுள்ளன!

இனியேனும் உங்களை நீங்கள் புரிந்துகொள்ள முயன்றிடுக! நேர்மையான வாழ்க்கையைப் பற்றித் தெளிவு பெறுக! இறைவன் அளித்துள்ளவற்றோடு மனநிறைவோடு இனிதே வாழ்ந்திடுக! வங்கியோ, அரசு அலுவலகமோ எதுவாயினும் சரி, பொதுவாக எங்குமே அலுவலக நேரத்தில் அரட்டை, செய்தித்தாள்/பத்திரிகைகள் படித்தல், சீட்டு, காரம்போர்டு என விளையாட்டுகள், அலட்சிய மனோபாவத்துடன் பொது மக்களை வாடிக்கையாளர்களை நடத்துதல், விரைவில் முடிக்க வேண்டிய வேலையை நாட்கணக்கில் இழுத்தல், லஞ்சம் பெற்றால்தான் பைல்களைப் பைசல் செய்தல், குதிரைக்குக்கு  கடி வாளம் போட்டது போல் தன் வேலைகளை மட்டும் செய்து வெறுமனே உட்கார்ந்து பொழுதைப் போக்குதல், Go Slow, pen down strike போன்று அதர்மமான முறையில் ஸ்டிரைக் செய்தல், காரண காரியமின்றி Mass Leaveல் சென்று பல்லாயிரக்கணக்கான ஜனங்களுக்குக் கஷ்டங்களை உண்டாக்குதல்

 - இவ்வாறாக எத்தனையோ வழிகளில் தீவினைகளைத்தான் அலுவலகத்தில் பெரும் பாலோனோர் சம்பாதித்துக் கொள்கின்றனர்.

ஒரு முறை நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் சிறுவனாகிய வெங்கடராமனை ஒரு பழைய கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றார்! அக்காலத்தில் அவ்வளவாக லஞ்ச, லாவண்யங்கள் கிடையாது, ஓரளவு நியாயமாகவே அனைத்தும் நடந்து வந்தன. “மிகவும் ராசியான மேஜை, ஆகிவந்த மேஜை”, என்று அங்கிருந்த ஒரு பழைய மேஜையைப் பற்றிப் பலரும் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.

“ரொம்ப வருஷமா இருக்கற மேஜையாம் வாத்யாரே!” - என்று சொல்லி அதில் ஏறி உட்கார்ந்து கொண்டான் சிறுவன்!

“அட சீ, இறங்குடா கழுதை!” - என்று திட்டிக் கீழே இறக்கி விட்டார் பெரியவர்!
“ஏண்டா, உனக்கு எத்தனை வாட்டி சொல்லி இருக்கேன், அநாவசியமா அங்க, இங்கன்னு உக்கார்ந்து, கண்டதைக் கண்ட இடங்களில் தின்னுட்டு எக்கச் சக்கமா கர்மத்தைச் சேர்க்கக் கூடாதுன்னு! இறைவன் ஒவ்வொன்னையும் ஏதோ காரண காரியத்தோடதான் படைச்சிருக்கான்.”

“இங்க இருக்கற ஒவ்வொரு மேஜை, நாற்காலி ஜன்னல், கதவு எல்லாமே இங்கதான், இப்படித் தான் இருக்கணும்னு காரண காரியங்கள் இருக்கு! இவங்க ரொம்ப ராசியான மேஜைன்னு சொல்றாங்களே, அதோட பூர்வ ஜென்ம கதை எங்களுக்குத் தாண்டா தெரியும் ..... இங்க வேலையே செய்யாம தண்ட சம்பளம் ரொம்ப வருஷமா வாங்கின ஆளுதான் இங்க மேஜையா ரொம்ப வருஷமா இருக்கான்! இதைச் சொன்னா, யாராச்சும் நம்புவாங்களா! ஏதோ இந்தக் கிழவன் கதை விடறான்னு சொல்லுவாங்க! இதுதாண்டா உலகம்! உண்மையை எடுத்துச் சொல்லி நீதி, நியாயத்தைச் சொன்னா அதைப் புரிஞ்சு ஏத்துக்கறவங்க ஒண்ணு ரெண்டு பேருங்ககூட இல்லங்கறதுனாலத்தான் மஹானுங்க, யோகிங்க எல்லாரும் ஒருத்தர், ஒருத்தரா பூமிய விட்டு மேல கிளம்பிகிட்டு இருக்காங்க!”

“எவனெவன் வேலைய ஒழுங்கா பாக்காம ஆபிஸ்ல சீட்டைத் தேச்சானோ, அவங்களெல்லாம் தூணாவும், ஜன்னலாவும் மேஜையாவும், மிதியடி கார்பெட்டாவும் திரும்பிப் பொறந்து அதே ஆபீஸ்ல கெடந்து தன் பாக்கியத் தீத்துக்கறான்!” இப்படியாக சற்குருநாதர் அருளிய எத்தனையோ அற்புத விளக்கங்கள் உண்டு!

பிறப்பின் ரகசியத்தை விளக்கும் சிறப்பான வேத வாக்கியங்கள்!

ஆபிஸில் உங்களுக்கான ஆறு/ஏழு மணி நேர வேலையை இரண்டு, மூன்று மணி நேரத்தில் முடித்து விட்டால் அடுத்த டேபிளில்/செக்ஷனில் உள்ள வேலையை எடுத்துச் செய்யுங்கள், அல்லது அவர்களுக்கு உதவி செய்யுங்களேன்! வேலை செய்து மீந்திடும் நேரங்களில் ஸ்ரீ காயத்ரீ போன்ற அற்புதமான மந்திரங்களை மனதிற்குள் ஓதிவந்தால்..

1. அலுவலகத்தில் மிதந்து கிடக்கும் லஞ்ச, லாவண்ய, தீவினை எண்ணக் குவியல்கள் பஸ்மமாகி வேலை பார்க்குமிடம் புனிதமாகும்.
2. அலுவலகத்தில் உள்ள துர்சக்திகள் விலகிடும்.
3. அலுவலர்கள் அதிகாரிகளிடையே சாந்தமான, சுமுகமான உறவு ஏற்படும்.
4, தான் பார்க்கின்ற வேலையில் மன திருப்தியும் சந்தோஷமும் உண்டாகும். ஏதோ கடனே என்று அலுவலகம் செல்வோர்க்கு, சம்பளத்திற்குத் தகுந்தவாறு உழைக்க வேண்டும் என்ற உறுதிப்பாடு ஏற்படும்.
வங்கி, தனியார் கம்பெனிகள், இன்ஷூரன்ஸ், மருத்துவம், அரசுத் துறை மற்றும் பல்வகைத் தரப்பு அலுவலர்கள்/அதிகாரிகள் இன்றும் நம் குருகுல மங்களகந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம் நல்வழி முறைகளைப் பெற்று வருகின்றார்கள். இதுவன்றி ஆயிரக் கணக்கான அன்பர்களும் பலவிதமான ஆத்ம விசார வினாக்களையும், பொது வாழ்க்கையில் ஏற்படும் பல பிரச்னைகளையும் சுவாமிகளிடம் எடுத்துரைத்துத் தக்க அருள்மொழி  விளக்கங்களையும் பெற்றுப் பயனடைந்து வருகின்றார்கள். அவற்றிற் சிலவற்றை ஈண்டு அளிக்கின்றோம்.

அடியார் : குருதேவா! நாங்கள் வேலை செய்யுமிடம் பாழடைந்ததாகப் பலவிதத் தொந்தரவுகளுடன் இருக்கின்றதே!

சற்குரு : இதற்காகத்தான் அலுவலர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பூமி, கட்டிட தோஷங்களை நீக்கக் கூடிய வாஸ்து பூஜையை எளிமையான முறையில் வாஸ்து நாளன்று செய்துவர வேண்டும். செவ்வாய், வெள்ளி தோறும், சாம்பிராணி தூபமிட்டுப் பூஜைகளை நடத்த வேண்டும். வாரந்தோறும் ஒரு முறையாவது ஜாதி, மத பேதமின்றி அனைவரும் ஒன்று கூடி கூட்டு வழிபாடு, கூட்டு தியானம் செய்திடல் வேண்டும். மாதம் ஒரு முறை எல்லோரும் சேர்ந்து அவரவர் வீட்டிலிருந்து இயன்ற அளவு உணவு/டிபன் கொண்டு வந்து சிறிய அளவிலாவது அன்னதானம் செய்திட வேண்டும். இவையெல்லாம் ஆபீஸ் கட்டிடம் எப்படியிருந்தாலும் அதனைப் புனிதப் படுத்தும் மார்கங்களாகும்.

அடியார் : செய்யுந்தொழிலே தெய்வம், Work is Worship என்கிறார்கள்! வெறுமனே நாள் முழுதும் அலுவலகப் பணி செய்து கொண்டிருந்தால் வேறு இறைவழிபாடுகளைச் செய்ய வேண்டாமா?

சற்குரு : இது விதண்டாவாதமான விளக்கமே! Work is Worship என்று சொல்கின்ற மனிதனே Serving the poor is the service to God என்றும் Man is the handiwork of God என்றும் சொல்கின்றான், உன் சம்பளத்திற்கேற்ப மனதார அபீஸில் உழைத்து விடு! மாய்ந்து மாய்ந்து ஆபிஸே கதி என்று கிடப்போர் தன் பிரமோஷனுக்கும் பரிசிற்காகவும் (Reward) தான் அவ்வாறு செய்துவிட்டு Work is worship என்பார்கள்! ஆனால் கிடைக்க வேண்டிய பிரமோஷன் கிடைக்காவிட்டால் அடுத்த நிமிடமே “எல்லாம் வேஸ்ட்” என்று ஒன்றும் செய்யாமல் சீட்டைத் தேய்க்க ஆரம்பித்து விடுவார்கள்! நாக்குதானே, எப்படி வேண்டுமானாலும் புரட்டிக் கொள்ளலாமே! நீ என்ன உழைத்தாலும் 60 வயதானால் அடுத்த நாள் உன்னை உள்ளே விடுவார்களா? நான் கடினமாக உழைக்கச் சித்தமாக இருக்கிறேன், சாகும் வரை வேலை கொடு என்று கேட்கத்தான் முடியுமா? உன் வாழ்க்கையை நடத்த உதவும் அலுவலகத்தில் உரிய உழைப்பைச் சலிப்பின்றி சந்தோஷமாகத் தந்து விடு! அதில் ஒரு குறையையும் வைத்திடாதே! உன் அலுவலக வாழ்க்கையைத் தந்தவன் ஆண்டவனாதலின் அவன் நினைவோடு அவனைத் துதித்தவாறு அலுவலகப் பணியைச் செய்யக் கற்றுக் கொள்! ஏனைய நேரத்தில் இறைவனுக்காகவே உழைக்க வேண்டும்! நீ உன்னை மற்றவர்களுடைய சேவைக்காக எவ்வகையில் உன்னைப் பயன்படுத்திக் கொள்கின்றாயோ அதுவே நீ இறைவனுக்கு ஆற்றும் தொண்டு! இதைப் பலருடன் சேர்ந்து செய்தால் அதன் பலன்கள் பல நூறு பேர்களுக்குச் சென்றடையும் அல்லவா! இதற்காகத்தான் கடவுள் உனக்குக் கூட்டு அலுவலக வாழ்க்கையைத் தந்திருக்கின்றார் என்பதைப் புரிந்துகொள்!

அடியார் : கூட்டாக எவற்றைச் செய்திடலாம் குருதேவா!

சற்குரு : கூட்டாகச் செய்து குவலயத்தையே குணக் குன்றாக மாற்றிடலாமே! வாரத்திற்கு ஒரு முறை எக்ஸ்ட்ராவா ஒரு டிபன் பாக்ஸில் கூடுதல் உணவைக் கொண்டு வந்து அனைவரும் சேர்ந்து மகத்தான அன்னதானத்தை நிறைவேற்றிடலாமே! ஆளுக்கு 10 அகல் விளக்குகள், எண்ணெய் எடுத்து வந்தால் அருகில் உள்ள கோயிலை ஜோதி மயமாக்கிடலாமே!

மாதமொரு முறை (நன்றாக உள்ள) பழைய ஆடைகள், புதிய ஆடைகளைச் சேர்த்து ஏழைகளுக்கு அளித்திடலாமே! அவரவர் வசதிக்கேற்ப பென்ஸில், பேனா, ரப்பர், பேப்பர், நோட்புக்குகளைச் சேர்த்து ஏழை மாணவ, மாணவியருக்கு அளித்தால் அந்த உண்மையான இருதய பூர்வமான சந்தோஷத்தை நாமும் அடைந்திடலாமே!

மாதம்/இருமாதத்திற்கு ஒரு முறை கூட்டாக திருஅண்ணாமலை கிரிவலம், சித்தர்களின் யோகியர்களின் ஜீவசமாதி மற்றும் ஆலய தரிசனங்களை மேற்கொண்டிடலாமே!

இதுதான் உண்மையான அலுவலக வாழ்வு! இதற்காகத்தான் கூட்டு அலுவலக வாழ்க்கையை இறைவன் அளித்துள்ளான். இவையெல்லாம்தான் அலுவலகத்தில் சேரும் கர்மவினைகளைத் தீர்க்கும் அற்புதமான ஆன்மீக மாமருந்து!

விஷ்ணுபதி புண்ய காலம்

மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தமிழ் மாதத்தின்மாதப் பிறப்பு அன்று ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம் அமைகின்றது. அல்லவா! இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் வருடத்திற்கும் நான்கு விஷ்ணுபதி புண்யகால விசேஷ தினங்கள் அமைகின்றன.

எவ்வாறு பிரதோஷ காலம் அற்புத மஹிமை வாய்ந்ததோ அதே போன்று விஷ்ணுபதி புண்ய காலமும் மிகவும் மகத்துவம் வாய்ந்தது ஆகும். கடந்த சில வருடங்களாகவே நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் விஷ்ணுபதி புண்யகால விசேஷ தினத்தின் மகிமையைப் பரப்பி வருகின்றார்கள். கிருத, திரேதா, துவாபர யுகங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய விஷ்ணுபதி புண்ய காலமானது காலப்போக்கில் தேவ இரகசியமாகவே அமைந்து கலியுகத்தில் இதனுடைய மகிமையைப் பலரும் அறியாத வண்ணம் இருந்து வருகின்றது.

தம்முடைய சற்குருவின் அருளாணையாக ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் விஷ்ணுபதி புண்யகாலத்தை அனைத்து வைணவத் தலங்களிலும் மிகவும் சிறப்புடன் கொண்டாடுவதற்காக மிகவும் பிரயாசைப்பட்டு இறைச் சொற்பொழிவுகளையும் மேற்கொண்டு இறைத் திருப்பணிகளையும் ஆற்றி வருகின்றார்கள்.

எவ்வாறு பிரதோஷம் தற்பொழுது மிகவும் முக்கியத்துவம் பெற்று அனைத்து சிவாலயங்களிலும் மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகின்றதோ இதேபோன்று மூன்று மாதங்களுக்கு ஒரு முறை (பெரும்பாலும் மாதப்பிறப்பன்று) அமைகின்ற விஷ்ணுபதி புண்ய காலமும், மக்களால் நன்கு உணரப் பெற்று அனைத்துப் பெருமாள் கோவில்களிலும் உலக ஜீவன்களின் நன்மைக்காகக் கடைபிடிக்கப்பட வேண்டி உத்தம வைணவப் பெரியோர்களையும், அன்பர்களையும், பக்தர்களையும் திருமால் அடியார்களையும் மிகவும் பணிவன்புடன் வேண்டிக் கொள்கின்றோம்,

கடந்த சில வருடங்களாகவே ஸ்ரீ அகஸ்திய விஜயம் மூலமாகவும் சுவாமிகளின் இறைப் பிரச்சாரங்கள் மூலமாகவும் மற்றும் பல பெரியோர்களின் அருளாசியாலும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகால மகிமையானது தமிழகமெங்கும், மற்றும் பல பகுதிகளிலும் பரப்பப்பட்டு வருகின்றதல்லவா!

தற்போது விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் போது ஐம்பதுக்கும் மேற்பட்ட வைணவத் தலங்களில் விஷ்ணுபதி புண்ய கால வழிபாடுகளும் பூஜைகளும், தான தர்மங்களும், தர்ப்பண பூஜைகளும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவதைக் கேட்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.

இத்தகைய தெய்வீக மகத்துவம் வாய்ந்த மிகப் புனிதமான தினங்களில் செய்யப்படுகின்ற பூஜைகளின் பலன்கள் பன்மடங்காகப் பல்கிப் பெருகுவதால்தான், நாம் மறந்து வருகின்ற சந்தியா வந்தனம், தர்ப்பணம், தினசரி பூஜா நியதிகள் போன்றவற்றை ஈடு செய்வதாக ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம்போன்றவை அமைகின்றன என்பதை நாம் மறந்து விடலாகாது.

இதைப் படிக்கின்ற அன்பர்கள் கிராமங்களெங்கும், நாடெங்கும் விஷ்ணுபதி புண்ய கால பூஜைகள் நிகழ்வதற்கான இறைத் திருப்பணிகளை மனமாரச் செய்து வந்தால் இதுவே மகத்தான புண்ணியத்தை அனைத்துக் குடும்பங்களுக்கும் பல தலைமுறைகளுக்கான இறையருளைப் பெற்றுத் தரும் என்பதில் ஐயமில்லை .

ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம் என்பது விடியற் காலை சுமார் 1.30 மணி முதல் பகல் சுமார் 10.30 வரை நிலவுகின்றது. இப்புண்ணிய காலத்தில் செய்யப்படுகின்ற அனைத்து விதமான அபிஷேக ஆராதனைகளுக்கும், தான தர்மங்களுக்கும், தர்ப்பண, சிராத்த பூஜைகளுக்கும் அபரிமிதமான பலன்கள் உண்டு. அரும்பெரும் மஹரிஷிகளாலும், யோகிகளாலும், சித்புருஷர்களாலும் பலகோடி லோகங்களிலும் விஷ்ணுபதி புண்ய காலம் அன்றும் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

வரும் விஷ்ணுபதி புண்யகாலமானது 17.8.1998 திங்கட் கிழமை விடியற்காலை சுமார் 1.30 மணி முதல் பகல் 10.30 மணி வரை அமைவதால் இவ்வற்புதமான நேரத்தில் வைணவத் திருத்தலங்களுக்குச் சென்று பெருமாளுக்கு அனைத்து விதமான அபிஷேக ஆராதனைகளும் செய்து தமிழ், வடமொழி வேத மந்திரங்களைப் பாராயணம் செய்து, நாம சங்கீர்த்தனம் நடத்தி, திவ்ய பிரபந்தம், விஷ்ணு சகஸ்ர நாமம் போன்ற திருமால் துதிகளை ஓதி ஏழைகளுக்கு அவரவர் வசதிக்கேற்ப தானதர்மங்களைச் செய்திட குடும்பப் பிரச்னைகள் தணிந்து சாந்தமான வாழ்க்கை அமைவதற்கு இப்பூஜை பெரிதும் உதவுவதோடு மேலும் பல அரிய பூஜா பலன்களையும் விஷ்ணுபதி புண்யகால வழிபாடுகள் பெற்றுத் தருகின்றன.

ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு பெண் குழந்தையாவது இருக்க வேண்டும் என்ற நியதியைப் பற்றிச் சொன்னோம் அல்லவா! இதனைக் கலியுக நியதியாகக் கொண்டு வந்தவளே ஸ்ரீமகாலஷ்மி தேவியாவாள். இத்தகைய வரத்தை ஸ்ரீமன் நாராயணனிடமே நேரிடையாகப் பெற்றுப் பெண் குலத்தின் பெருமையை உலகிற்கு உணர்த்தியுள்ளாள். ஆனால் பெருமாளோ அவ்வளவு எளிதாக இந்த வரத்தை மகாலஷ்மிக்குத் தந்து விடவில்லை. தானே இவ்வரத்தைத் தர வல்லவராய் இருந்தும் பெருமாள், திருமகளையே திருக்கையிலாயத்திற்குச் சென்று இத்தகைய வரத்தைப் பெற்று வருமாறு அருளாணையிட்டார்,

அம்பரீஷ மகாராஜாவைப் பற்றி நாம் நன்கு அறிவோம். அற்புதமான பெருந்திருமால் பக்தர்! அவருடைய பெருமாள் பக்திக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. பல மஹரிஷிகளும் அம்பரீஷனுடைய இறை பக்தியைக் கண்டு மெச்சி அவரைப் பலவிதமான சோதனைகளுக்கு உள்ளாக்கியும் அவற்றிலிருந்தும் மீண்டு ஒளிப் பிரகாசமாய்த் திகழ்ந்தவர். ஸ்ரீ துர்வாச மாமுனியே அம்பரீஷனின் பக்தியைச் சோதிக்க எண்ணித் தன்னைப் பாத்திரமாக்கி ஓர் அற்புதமான திருவிளையாடலை உருவாக்கி அதன் மூலம் அம்பரீஷனுடைய இறை பக்தியை உலகிற்குப் புலப்படுத்தினார் என்பதை நாமறிவோ மல்லவா!

பெண்குழந்தையை வெறுக்கும் அதர்மமான மனப்போக்கு மாறி மானுட உலகிற்கு நற்பண்புகளை அளித்திட எல்லாம் வல்ல பெருமாளையே பிரார்த்திக்கின்றோம்.

இத்தகைய நினைப்புகள் கலியுகத்தில் தோன்றும் என்பதை எண்ணித்தானோ என்னவோ ஸ்ரீ மகாலஷ்மியானவள் இவ்வுலகத்திலே பெண்ணாகப் பிறந்து சாதாரண மானிட வாழ்க்கையைப் பெற்றுத் திருமாலையே மணம் புரிய வேண்டி சிவபெருமானை வேண்டித் தவம் புரிந்தனள்.

அப்போது அம்பரீஷ மகாராஜாவும், தான் இறப்பிறப்பற்ற பெருநிலையை அடையத் தனக்குப் பெண் சந்ததி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற இறை நியதியால் சுவாமியை நோக்கிப் பெருந்தவம் கொள்ள விழைந்து முதலில் திருமகளைத் துதித்துப் பிரார்த்தித்தான், திருமகளுடைய தெய்வீகப் பிரார்த்தனையும் ஒன்றாக இருக்கவே அம்பிகையும் அம்பரீஷனிடம், “ஸ்ரீவிருந்தீஸ்வரர்” என்னும் பெயர் பூண்டு அருள் பாலிக்கின்ற சிவமூர்த்தியைப் பற்றிச் சர்வேஸ்வரனாம் நாராயண மூர்த்தி அடியேனுக்குப் பெரிதும் விளக்கிக் கூறியுள்ளார். எனவே நீ அங்கு சென்று பெண் சந்ததியைத் தரும்படி வேண்டிடுக”, என்று அருள்மொழி கூறிட்டாள்.

அம்பரீஷன் பூலோகமெங்கும் அலைந்து திரிந்து ஸ்ரீ விருந்தீஸ்வரராக, சிவலிங்க சுயம்பு மூர்த்தியாகக் காட்சியளிக்கின்ற தலத்திற்கு விரைந்தான். வாணியம்பாடியிலிருந்து பாலாற்றைக் கடந்தால் தேவஸ்தானம் என்ற சிற்றூர் வரும். அங்கு தான் சிவபெருமான் ஸ்ரீ விருந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார். பொதுவாக சந்தானப் பிராப்தியைத் தரவல்ல அதியற்புதமான மூர்த்தி! ஆழ்ந்த நம்பிக்கையோடு பிரார்த்தனை செய்தால் வேண்டிய ஆண் குழந்தையோ, பெண் குழந்தையோ அவரவர் கர்ம வினைப்படிப் பெற்றிடுவர். ஆனால் இச்சிவலிங்க மூர்த்தியிடம், “எனக்கு, ஆண் குழந்தை வேண்டும், பெண் குழந்தை வேண்டும் என்றெல்லாம் கேட்கக் கூடாது, பேரம் பேசக்கூடாது! எப்பொழுதுமே, எனக்குச் சந்தான பிராப்தியை நீ விரும்பியவாறு தந்திடுக”, என்றே வேண்டிட வேண்டும்.

அம்பரீஷனும் அவ்வாறே பிரார்த்தித்தான். அவனுக்குப் பெண் குழந்தையே பிறக்க வேண்டும் என்ற நியதி இருந்தமையால் அவனும் ஓர் அழகிய பெண் மகவைப் பெற்றான். அவள் தான் ஸ்ரீ மகாலஷ்மி தேவி! ஆம், திருமகளே தன்னுடைய பிரார்த்தனையின்படி, திருமால் அருளியபடி அம்பரீஷனுக்குப் பெண் குழந்தையாகப் பிறந்து வளர்ந்தாள். அப்போது ஸ்ரீ மகாலஷ்மியின் பூலோகப் பெயரே ஸ்ரீமதி என்று ஆயிற்று.

ஸ்ரீமதியோ நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக பக்திப் பெருக்கோடு வளர்ந்து எந்நேரமும் ஸ்ரீ மகா விஷ்ணுவையே துதித்துப் போற்றி வந்தாள். அவள் துயிலிலும் திருமாலின் நினைவாக இருந்ததைக் கண்டு அம்பரீஷன் எல்லையில்லாத மகிழ்ச்சியைக் கொண்டான். திருமால் பக்தியில் தந்தையையும் விஞ்சி உள்ளாள் என்ற நற்பெயரைப் பெற்றாள் ஸ்ரீமதி, ஆனால், தான் திருமாலையே மணந்து கொள்வேன் என்று பிடிவாதமாய் இருந்த ஸ்ரீமதியைக் கண்டு அம்பரீஷனுக்குக் கவலை ஏற்பட்டுவிட்டது. காரணம், ஸ்ரீமதிதான் திருமகளின் மானுட உருவம் என்பதை அவன் அப்போது அறியவில்லை! மேலும் தன்னுடைய மகளாக விளங்குகின்ற மானுடப் பெண் எவ்வாறு பரம்பொருள் தெய்வமூர்த்தியை மணமகனாக அடைய முடியும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனினும் அனைத்தும் இறைவனின் செயலே என்று தன் கடமையைச் செய்து வந்தான்.

ஒரு நாள் அம்பரீஷனின் அரச சபைக்கு இரு முனிவர்கள் விஜயம் செய்தார்கள், இறைத் திருவிளையாடலாக இருவருமே ஸ்ரீ மதியை மணம் புரிந்து கொள்வதாகச் சொல்ல அம்பரீஷனோ திகைத்து நின்றான், அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. எனினும் அவன் முனிவர்களுடைய சினத்திற்கு ஆளாகா வண்ணம், “என் அருமை மகள் ஸ்ரீமதி, திருமாலையே எண்ணி நெடுந்தவம் புரிந்து கொண்டிருக்கின்றாள். அவள் யாரை மணக்க விரும்புகின்றாளோ அவளை அவருக்கே மணம் முடித்து வைப்பேன்”, என்று கூறிச் சுயம்வரம் நடத்தினான்.

இரு முனிவர்களும் எங்கே ஸ்ரீமதியானவள் அடுத்த முனிவரை மணந்து கொண்டு விடுவாளோ என்று எண்ணி அவளுக்கு இவர் குரங்காகத் தெரிய வேண்டும் என்று மாறி மாறி இருவருமே பிரார்த்தித்துக் கொண்டு விட்டார்கள். அதாவது ஒரு முனிவரானவர், ஸ்ரீமதி அடுத்த முனிவரைப் பார்க்கும்பொழுது அவர், அவள் கண்களுக்குக் குரங்காகத் தோற்றம் அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வரம் பெற்றார். இவரை அறியாமல் அடுத்த முனிவரும் அதே வரத்தைப் பெற்றுவிட்டார். ஒருவருக்கொருவர் தாம் எந்த வரத்தைப் பெற்றோம் என்று சற்று கூட எண்ணாமல்! மொத்தத்தில் இதன் பலன் என்ன தெரியுமா? ஸ்ரீமதியினுடைய சுயம்வரத்தின் போது இருவருமே அவளுக்குக் குரங்காகத் தென்பட்டார்கள்!

இத்திருவிளையாடலை நடத்திய மகாவிஷ்ணுவோ இவர்களின் நடுவில் மணவாளனாக அமர்ந்து கொண்டுவிட்டார். ஸ்ரீமதி மணமாலையை எடுத்து வந்தாள். இரு குரங்குகளின் வடிவத்தில் தோற்றமளித்த முனிவர்களின் இடையே பொலிவுடன் வீற்றிருந்த மகாவிஷ்ணுவிற்கு மாலையை அணிவித்து விட்டாள். முனிவர்களின் கண்களுக்கு அவர் புலப்படவில்லை ! அம்பரீஷனின் கண்களுக்கும் தெரியவில்லை! மாலை மட்டும் அந்தரத்தில் மாட்டியது போல் ஆடியது! என்னே நாராயணின் லீலை!

நடந்ததை அறியாதிருந்த முனிவர்கள், “எங்களுக்கு மணமாலையை இடாது இருந்தாலும் பரவாயில்லை. கண்ணுக்குத் தெரியாத இருளாய்க் கிடக்கும் எவருக்கோ மாலையை இட்டு விட்டாய், எனவே உன் நாட்டை இருள் சூழட்டும்!”என்று சபித்து விட்டார்கள். முனிவர்களின் பெருந்தவம் கரைய வேண்டுமல்லவா! எங்கும் இருள் சூழ்ந்தது. அம்பரீஷன் பெருமாளைச் சரணடைந்தான்.

மகாவிஷ்ணுவோ தன்னுடைய சக்கராயுதத்தை ஏவினார். எதற்காக? இருளை அகற்றி ஒளியைக் கூட்டுவிப்பதற்காக! இவ்வாறு பல கோடி லோகங்களுக்கு ஒளிப்பிரகாசத்தைத் தந்த சக்கராயுதம் பூலோகத்தில் இறங்கிய இடம் எது தெரியுமா? அதுதான் இப்போது வாணியம்பாடியிலுள்ள ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் ஆலயம் ஆகும். இங்குதான் பெருமாள் சக்கரத்தைப் பிரயோக நிலையில் தம் திருக்கரத்தில் தரித்துள்ளார். இவ்வாறு பெருமாளின் சக்கராயுதம் பூலோக இருளை அகற்றி ஒளி தந்த திருநாள்தான் அந்த யுகத்தின் பகுதான்ய வருட வர்ஷ ருதுக் கால விஷ்ணுபதி புண்ய காலமாகும்.

அந்தத் திருநாள்தான், வரும் 17.8.1998 திங்கள் அன்று மகத்தான ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய காலமாக அமைகின்றது.

17.8.1998 அன்று விஷ்ணுபதி புண்யகால நேரத்தில் அதாவது விடியற்காலை 1.30 முதல் பகல் 10.30 வரை வாணியம்பாடி ஸ்ரீ சௌந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் ஏழைகளுக்கு மங்களப் பொருட்களை அளித்தல் விசேஷமானதாகும். எங்கெல்லாம் பிரயோகச் சக்கரத்தைத் தரித்தவாறு பெருமாள் அருள் பாலிக்கின்றாரோ அங்கெல்லாம் இவ்விஷ்ணுபதி புண்யகாலத்தைக் கொண்டாடுவது மிகவும் சிறப்புடையதாகும். ஏனைய வைணவத் தலங்களிலும் கொண்டாடிலாம்.

வரும் 17.8.1998 அன்று வாணியம் பாடியில் உள்ள ஸ்ரீ சௌந்தரராஜ பெருமாள் ஆலயத்தில் பெருமாளுக்கு ஆளுயர திண்டு மாலையைச் சாற்றி சர்க்கரைப் பொங்கலைப் படைத்து ஏழைகளுக்கு அளித்திடல் வேண்டும். ஜாதி, மத, இன பேதமின்றி ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு பச்சைப் புடவை மற்றும் பச்சை நிற ஆடைகள், மஞ்சள், குங்குமம், புஷ்பம், பொன் மாங்கல்யம், தாலிச் சரடு, மெட்டி, வளையல்கள் போன்ற சுப மங்களப் பொருட்களைத் தானமாக அளித்துவர

1. குழந்தைப் பேறு இல்லாதோர்க்குப் பெருமாள் நல்வழி காட்டுவார். 
2, நிறைய ஆண் குழந்தைகளைப் பெற்றுப் பெண் குழந்தைக்காக ஏங்குவோர் உண்டு, நிறையப் பெண் குழந்தைகளைப் பெற்று ஆண் குழந்தைக்காக ஏங்குவோரும் உண்டு. இவர்கள் வாணியம்பாடி அருகில் உள்ள தேவஸ்தானம் ஸ்ரீ விருந்தீஸ்வரரையும் இப்பெருமாளையும் முறைப்படி வழிபட்டு வந்தால் நல்வரங்கள் கிட்டும்.
3. பலவிதமான மாப்பிள்ளை வேடதாரிகள் வந்து பார்த்து நிராகரித்த ஒரு கன்னிப் பெண்ணின் ஏக்கங்கள் எப்படி இருக்கும் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

இறைவன் தருவதே பிள்ளை வரம்!

இன்றைக்கும் ஆண் சந்ததியைத் தருகின்ற அற்புதமான தெய்வ மூர்த்திகளும் உண்டு. பெண் சந்ததியைத் தருகின்ற மிகச் சிறப்பான இறை மூர்த்திகளும் உண்டு. ஆனால் இவை இன்றும் தெய்வீக பரம இரகசியங்களாகவே வைக்கப்பட்டுள்ளன. காரணம், எந்த இறைவனை வேண்டினால் பெண் சந்ததி கிட்டுமோ அந்த இடத்திற்கு எவருமே கலியுகத்தில் செல்ல மாட்டார்கள். பெண் பிள்ளை என்றாலே அஞ்சி நடுங்குகின்ற, வெறுக்கின்ற ஒரு கேவலமான மனப்பான்மை தற்போது கூடிவிட்டதுதான்! பெண் பிள்ளையை வெறுப்புடன் வளர்க்கின்ற இந்நிலை மிகவும் வேதனைக்குரியதாகும்.

தாய் என்பவள் தெய்வத்தின் பிரதிநிதி தானே. தாயின்றி நாம் பிறந்திருக்க முடியுமா? தெய்வீகக் குணங்கள் நிரம்பிய பெண்குலத்தை ஏன் வெறுக்க வேண்டும்? ஏன் கண்டு அஞ்சிட வேண்டும்? பெண்ணைப் பெறுதலே ஒரு Great Liability என்று எண்ணும் அளவிற்கு என்னதான் நடந்து விட்டது?

திருவக்கரை அம்பிகை, பவானி அம்மன், கோனியம்மன், பன்னாரி அம்மன், சமயபுரத்து மாரியம்மன், திருவேற்காடு கருமாரி அம்மன், மாங்காடு காமாட்சி அம்மன் என்று அற்புதமான தெய்வ மூர்த்திகளை சுற்றிச் சுற்றி வணங்கிப் பலவிதமான பிரார்த்தனைகளைச் செய்து கொண்டு ஆனால் பெண் குழந்தை என்றாலே முகத்தைச் சுளிப்பது ஏனோ தெரியவில்லையே? பல தாய்மார்கள் கூட ஆண் பிள்ளையே விரும்புகின்றார்கள்! ஆண், பெண் பேதம் ஜீவன்களிடையே தான்!

பார்வதி, மகாலஷ்மி, சரஸ்வதி, காயத்ரீ என்றவாறாக தெய்வ மூர்த்திகளிடையேயும் பெண் அம்சங்களையும் நாம் காண்கின்றோம். பெண் அம்சம் என்று சொல்லும் பொழுது மனிதர்களிடையே நாம் காண்கின்ற ஆண், பெண் பாகுபாடுகள் அல்ல இவை! இறை மூர்த்திகளிடம் உள்ள பெண் அம்சங்களுக்குப் பல அற்புதமான விளக்கங்கள் உண்டு. தயவு செய்து ஜீவன்களிடையே உள்ள ஆண், பெண் பேதத்தையே தெய்வ மூர்த்திகளிடையேயும் கண்டு குழப்பமடையாதீர்கள். தெய்வ மூர்த்திகளிடையே உள்ள ஆண், பெண் தெய்வீக அம்சங்களும் முற்றிலும் வேறானவை! நம் அறிவிற்கு அப்பாற்பட்ட புனித நெறிகளவை.

சிவபெருமானிடமிருந்து பார்வதி அம்பிகை தோன்றிய போதிலும் அதே அம்பிகையே சிவபெருமானிடம் இணைந்து மீண்டும் சர்வேஸ்வரனாகக் காட்சியளிக்கின்றாள். அந்த சர்வேஸ்வரனே லிங்க வடிவில் உருவமற்றவனாயத் தன்னைக் காட்டுகின்றார். எனவே இறைப் பரம்பொருளை எந்த ஒரு உருவத்திலோ, வடிவத்திலோ அடக்க முடியாது. நம்மைப் படைத்த இறைவனை நாம் இந்த தேகத்தின் மூலம் நன்கு புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இறைவனே பல வடிவுகளைத் தனக்குத் தானே அளித்துக் கொண்டு காட்சியளிக்கின்றான்! இவ்வடிவுகள் மூலம் தெய்வீக அருட்சக்தி வடிவங்களின் மகத்துவத்தை உணர்ந்து வடிவங்களைத் தந்தவனுக்கு எவ்வித வடிவமும் கிடையாது என்ற பேருண்மையை உணர வேண்டும் என்பதற்காகத்தான் உருவ வழிபாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. உத்தமமான இறைநிலைகளில் இறைவனுக்கு எவ்வித உருவமும் கிடையாது.

ஒவ்வொரு குடும்பமும் எவ்வாறு அமைய வேண்டும் என்ற விளக்கம் சித்புருஷர்கள் அளித்துள்ள ஸ்ரீ அகஸ்திய கிரந்த நாடிகளில் காணப்படுகின்றது. குடும்ப அமைப்பின் அம்சமானது ஒவ்வொரு யுகத்திற்கும் வெவ்வேறாக அமைகின்றது. கலியுகத்திற்குரியதாக ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தது ஒரு பெண் குழந்தையாவது இருக்க வேண்டும் என்ற நியதியுண்டு! எத்தனை ஆண் குழந்தைகள் இருந்தாலும் ஒரு பெண் குழந்தையாவது நிச்சயம் இருக்க வேண்டும். அப்போதுதான் ஜென்ம சாபல்யத்திற்கான இறைவழி முறைகள் எளிதாகின்றன,

குழந்தையைத் தத்து அளிப்பதை சித்தர்கள் ஏற்பதில்லை. எந்த தம்பதிக்குக் குழந்தை பிறந்துள்ளதோ அதனைக் கட்டிக் காத்து வளர்த்துப் பேணுகின்ற குடும்பப் பொறுப்பு அந்த தம்பதிக்கு உரித்தானதே தவிர தத்து என்று இன்னொரு குடும்பத்திற்கு அளித்து விடுவதால் அவர்களுடைய கடமைகள் முடிந்து விடுவதில்லை. சில விதமான தியாகங்களுக்காக குழந்தைகளைத் தத்து அளித்தாலும் அப்பிள்ளை பிறிதோர் இடத்தில் நன்கு வளர்கின்றதா என்று கண்காணிக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு உண்மையான பெற்றோர்களுக்கு எப்போதும் உண்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

வேலூர் அருகே வாணியம்பாடி நகரத்தில் பழைய வாணியம்பாடிப் பகுதியில் பாலாற்றங் கரையில் தான் தேவஸ்தானம் எனுமிடத்தில் ஸ்ரீ அதிதீஸ்வரரராக (விருந்தீஸ்வரர்) சிவபெருமானும், ஸ்ரீஅழகு பெருமாளாக (செளந்தரராஜப் பெருமாள்) ஸ்ரீ மஹா விஷ்ணுவும் அருள்பாலிக்கின்றனர். ஸ்ரீ அதிதீஸ்வர லிங்க மூர்த்தியின் மேல் காணுதற்கரிய மிகவும் அபூர்வமான ருத்ராட்சப் பந்தல் உள்ளது! வாணியாம் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு அதிதிகளாக, பார்வதி, பரமேஸ்வர மூர்த்திகள் தரிசனம் தந்தமையால் ஸ்ரீ அதிதீஸ்வரரானார்

விஷ்ணுபதி புண்ய கால பூஜா பலன்கள்

வருகின்ற விஷ்ணுபதி புண்யகாலத்தை. பிரயோக சக்கரத்தைத் தம் திருக்கரங்களில் தாங்கிய நிலையில் அருள்பாலிக்கின்ற பெருமாள் ஆலயத்தில் கொண்டாடுவது மிகவும் விசேஷமானதாகும், இத்தகைய விஷ்ணுபதி புண்ய காலங்களில் செய்யப்படுகின்ற தர்ப்பணங்கள், ஹோமம், அபிஷேக ஆராதனைகள்,சந்தனக் காப்பு, சர்க்கரைப் பொங்கல் படையல், சுவாமிக்குப் பட்டு வஸ்திரங்கள் சார்த்தி அவற்றை ஏழைகளுக்கு வினியோகித்தல் போன்ற வழிபாடுகள் மூலமாகப் பல அற்புதமான வரங்களைப் பெற்றிடலாம்.

பலவிதமான திருமணத் தடங்கல்கள் நீங்கவும் இவ்வழிபாடு பெரிதும் உதவுகின்றது. இன்றைக்கும் பல குடும்பங்களில் சம்பந்தி வீட்டாருடன் ஏற்பட்டுள்ள உறவுப் பிரச்னைகள் காரணமாக கணவன், மனைவியரிடையே தாம்பத்ய வாழ்க்கை பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. இத்தகைய துன்பங்கள் தீர்வதற்கும், மருமகளை ஏற்றுக் கொள்ளாத மாமனார், மாமியார்கள் மனம் திருந்தி மாட்டுப் பெண்ணை நன்முறையில் ஏற்று, நல்ல விதமான தாம்பத்ய வாழ்க்கை சுமூகமாகத் தொடரவும், மருமகளை வெறுத்து ஒதுக்கித் தங்களுடைய பெண்ணை இல்லற வாழ்க்கையில் இருந்து பிரித்த பெற்றோர்களும் மனம் திருந்தி தம்பதிகள் ஒன்று சேரவும் இப் பூஜா பலன்கள் உதவுகின்றன.

மேலும் இது மட்டுமல்லாது இன்னும் சில குடும்பங்களில் பகைமை பெருக்கெடுத்து ஆளை வைத்து அடிக்கின்ற அளவிற்குத் துணிந்த பிள்ளை வீட்டாரும், பெண் வீட்டாரும் உண்டு. எந்தப் பெரியோர்கள் மன ஒற்றுமையுடன் வாழ்ந்து, தங்களுடைய சந்ததிகளுக்கு நல்வழி காட்ட வேண்டுமோ, அவர்களே குரோதம், முன்பகை, விரோதம், பொறாமை காரணமாகத் தம்பதிகளைப் பிரிப்பதும் உண்டு. இத்தகையோரும் மனம் திருந்தி தங்களுடைய செயல்களுக்காக வருந்தி, சொல்லுதற்கரிய பாவமாகிய தம்பதிகளைப் பிரித்தமைக்காக, இப்பெருமாளிடம் மன்னிப்புக் கோரி, பிரிக்கப்பட்ட ஆணும், பெண்ணும் நன்முறையில் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு அனைத்து விதமான உதவிகளையும் செய்தாக வேண்டும்,

இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் தான் அதுவும் இந்த பெருமாளின் திருச்சன்னதியில்தான் இத்தகையக் கொடுமையான பாவத்திற்கு பிராயசித்தம் கிட்டும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். வேறெங்கும் பாவத்திற்கு இத்தகைய கொடிய தீவினைக்கு அவ்வளவு எளிதில் பிராயச்சித்தம் கிட்டாது!

மேலும் பணத்திற்காகவும், சொத்திற்காகவும் பலரையும் மிரட்டுகின்றவர்கள் பூமியில் உண்டு. அவர்களுடைய வன்முறைகளிடமிருந்தும், அச்சுறுத்தல்களிடமிருந்தும், மீண்டு அவர்களுக்கும் நல்ல புத்தியைத் தந்து, மிரட்டப்பட்டவர்களும் இருள் மயமான காலத்திலிருந்து விடுபட்டு அமைதியுடன் சாந்தமாக வாழ்வதற்கும் இவ்விஷ்ணுபதி வழிபாடு பெரிதும் உதவுகின்றது.

ஒரே பெண்ணை இருவர் உளமாற அன்புடன் நேசித்துப் பின் இருவருமே அப்பெண்ணை அடைய இயலாமல் போவதும் உண்டு; அல்லது எவரேனும் ஒருவருக்கு அக்காதல் திருமணமாக மலர்ந்துவிடும். இத்தகைய பிரச்சினைகளினால், பல விதமான இல்லறத் துன்பங்கள் இந்த மூன்று பேருடைய வாழ்விலும் ஏற்பட்டு மன அமைதியின்றி வாழ்கின்றனர். இதுவே இருள் சூழ்ந்த வாழ்க்கை ! நடப்பதும், நடந்ததும் நாராயணன் செயலே, என்று எண்ணி கடந்ததை மறந்து நடப்பு வாழ்க்கையில் நல்ல இறை பக்தியுடன் வாழ்ந்திடவும், பழைய நினைவுகளிலேயே காலத்தைக் கடத்தாமல், இருள் நீக்கி ஒளிதரும் பெருமாளின் கருணையால் நன் முறையில் வாழ்ந்திடவும் விஷ்ணுபதி வழிபாடுகள் பெரிதும் பயன்படுகின்றன,

மேற்கண்ட மிகவும் வேதனைக்குரிய துன்பங்களை எல்லாம் களைய வல்லதான விஷ்ணுபதி புண்ய காலமானது மிக மிக அபூர்வமாக அமைவதால் இந்நாளை சாதாரண நாளாகக் கருதிடாது நன்முறையில் பயன்படுத்திக் கொள்வதும் அறிவுடைய மானிடர்களின் கையில் தான் இருக்கின்றது. பரம்பொருளாம் சர்வேஸ்வரனாம். ஸ்ரீ நாராயணப் பெருமாள், சக்ராயுதத்தை ஏந்தி (மன) இருளைப் போக்கி ஜீவன்களுக்கு ஒளியைக் கூட்டிய நன்னாளாம் விஷ்ணுபதி புண்யத் திருநாளில் நாராயண நாமங்களையும், பெருமாள் ஸ்துதிகளையும் ஓதி நற்கதியை அடைவோமாக!

பலருக்கும் தான் பணிந்து வணங்கி எத்தனையோ பெண் பார்க்கும் படலங்களைச் சந்தித்த ஒரு பெண் எத்தகைய ஏக்கங்களுடனும், வேதனைகளுடனும், தன்னுடைய திருமண வாழ்வை எதிர்நோக்கி எத்தனை விதமான ஆசைகளைத் தன் மனதில் பூட்டி வைத்திருக்கின்றாள் என்பதை மனித சமுதாயம் என்றுதான் நன்கு புரிந்து கொள்ளப் போகின்றதோ தெரியவில்லை. தான் அழகாக இல்லை, ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்திருக்கின்றோம், தான் பலருடன் சேர்ந்து, பிறந்து பெரிய குடும்பத்திலே இருக்கின்றோம், தனக்கு எத்தகைய திருமண வாழ்வு அமையப் போகின்றதோ! தனக்கு சரியான அலுவலகப் பணிஅமையவில்லையே இவ்வாறாகப் பலவிதமான மன வருத்தங்களுடன் தான் ஏழை, மற்றும் நடுத்தர வர்க்க குடும்பப் பெண்கள் வாழ்ந்து கொண்டு வருகின்றார்கள்.

இத்தகைய பெண்களும், தங்களுடைய பெண்ணிற்கு நடுத்தர வயதைத் தாண்டியும் திருமணம் ஆகவில்லையே என்று ஏங்கித் தவிக்கின்ற பெற்றோர்களும் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலத்தில் வாணியம்பாடியிலுள்ள இப்பெருமாள் தலத்திற்கு யாத்திரை வந்து அடிப்பிரதட்சிணம் செய்து தங்களால் இயன்ற அளவிற்கு சிறிய பொன் மாங்கல்யத்தையாவது ஒரு ஏழைப்பெண்ணிற்கோ, அல்லது வெறும் தாலிச் சரடை மட்டும் அணிந்துள்ள ஏழைப் பெண்ணிற்கோ ஜாதி, மதபேதம் பாராது தானமாக அளித்துப் பெருமாள் வழிபாட்டைப் பரிபூரணம் செய்திட வேண்டும். இப்பெருமாளைத் தெடர்ந்துமேலும் வழிபட்டு வந்தால் நிச்சயமாக நன்முறையில் திருமணம் நடைபெறுவதற்கான நல்வழிகளை அருளிடுவார்!

தான தர்மங்களைப் பற்றியே இங்கு பெரிதும் வலியுறுத்தப்படுகிறது ஏன் என்றால் நமக்கு வருகின்ற துன்பங்களுக்கெல்லாம் காரணம்நாம் பலவிதமான நித்ய வழிபாடுகளையும், பூஜைகளையும், ஏகாதசி விரதம், பௌர்ணமி விரதம், அமாவாசைத் தர்ப்பணம், சஷ்டி விரதம் போன்ற பலவிதமான விரத பூஜா வழிபாடுகளையும் ஒழுங்காகக் கடைபிடிப்பதே கிடையாது. தான தர்மங்களே, விடுபட்ட பூஜைகளின் பலன்களைக் கலியுகத்தில் பெற்றுத் தரவல்லதாகும்.

நாம் ஒன்றுமே செய்யாது வாழ்ந்து நம்முடைய மூதாதையர்கள் விட்டுச் சென்ற சொத்துக்களை மட்டும் அல்லாது அவர்கள் நமக்காகச் சேர்த்து வைத்த புண்ணிய சக்திகளையும் நாம் செலவழித்துக் கொண்டே இருந்தால், என்றுதான் நாம் நன்கு வாழ்வதற்கானப் புண்ணிய சக்திகளைப் பெறுவது?

பூஜைகளையும் ஒழுங்காகச் செய்வதில்லை, பலவிதமான தீர்த்தங்களிலோ, புண்ணிய நதிகளிலோ நீராடுவதும் கிடையாது. ஆனால் வாழ்க்கை மட்டும் சுகமாக நடைபெற்றாக வேண்டும். இது எப்படி நடக்க முடியும் ? இவ்வாறு எண்ணுவது பேராசைதானே! இத்தகைய ஆத்ம விசாரங்களையும் தந்து, வாழ்க்கையில் நல்ல பிடிப்புடன் வாழ்வதற்கு இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தன்று ஸ்ரீசௌந்தரராஜ பெருமாள் அருள்புரிந்து பக்தர்களை அரவணைக்கின்றார்.

சில குடும்பங்களில் திருமணம் ஆகவில்லையே என்று பலரும் ஏங்கி இருக்க, பல குடும்பங்களிலும் நடந்து முடிந்த திருமணங்களிலேயே கணவனும், மனைவியும் பலவிதமான பிரச்சனைகளால் தனித்து வாழ வேண்டிய துர்பாக்கியமான நிலைகளும் ஏற்பட்டுள்ளன. ஆனால் இதைப்பற்றிக் கணவனோ, மனைவியோ கவலைப் படாதிருக்க, அவர்களைப் பெற்றவர்கள்தான் பெரும் மனச்சுமைகளுடன் வாழ்கின்றனர், தன்னுடைய பெண்ணிற்கு, பிள்ளைக்கு திருமணம் ஆகியும், கூடி வாழ்கின்ற நல்லவிதமான தாம்பத்யவாழ்க்கை அமையவில்லையே என்று இவர்கள் தினமும் கண்ணீர் வடித்துக் கதறி உள்ளூர அழுகின்றனர். இத்தகைய பெற்றோர்களும் இத்தலத்திற்கு வந்து தங்களுடைய குறைகளைப் பெருமாளிடம் சொல்லி தங்களால் இயன்ற அளவு இறைப் பணிகளையும், தான தர்மங்களையும் இங்கு செய்திடல் வேண்டும்.

சரபேஸ்வரர் மகிமை

கடந்த பல இதழ்களாக ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியைப் பற்றிய சித்தர்களின் அற்புதமான விளக்கங்களை நாம் அளித்து வருகின்றோம் அல்லவா? மேலும் பல விளக்கங்களைக் கேட்டு ஏராளமான கடிதங்கள் வந்துள்ளன. ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி என்ற அவதாரம் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியுடைய உக்கிரத்தைத் தணிப்பதற்காக மட்டும் ஏற்பட்டதல்ல. அதற்கு முன்னதாகவே சரபேஸ்வரர் அவதாரம் அன்றும் இன்றும் என்றும் பரம் பொருளிடம் ஐக்கியமாகவே இருந்துவந்துள்ளது. யுக நியதிகளுக்கேற்ப, அந்தந்த யுக தர்மங்களுக்கேற்ப அவதாரங்களின் ரட்சை முறைகள் மாறுபடும்.

கிருத யுகத்திலே தர்மம் செழித்து நின்றமையால் அங்கு அதர்மமோ, பொய்மையோ, வன்முறையோ இல்லாது உலகெங்கும் தர்ம நெறிகளே ஓங்கி நிறைந்தன. அப்போது சரபேஸ்வர மூர்த்தி அனுகிரஹ மூர்த்தியாக விளங்கினார். திரேதா யுகத்தில் சிறு தவறுகளைத் திருத்தித் தர்ம பரிபாலனத்தை நிலைநாட்டும் தண்ட மூர்த்தி. துவாபர யுகத்தில் தவறுகளை மாய்க்கும் உக்கிர மூர்த்தி! கலியுகத்திலோ தான தர்மங்களைக் கடைபிடித்து வாழ்கின்ற நல்லோரைக் கண்டு தீயோர்கள் அஞ்சி ஓடுமாறு செய்கின்ற, எதிரிகளிடமிருந்து நல்லோரைக் காக்கின்ற பிரபந்த மூர்த்தியாக அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்கு கம்பஹரேஸ்வர் என்று பெயர். கம்பத்திலே தோன்றியவர், தேவர்களுடைய நடுக்கத்தைத் தீர்த்தவர், தீயோர்களைக் கண்டு அஞ்சுகின்ற நல்லவர்களின் நடுக்கங்களைத் தணிப்பவர். அஞ்சேல், அஞ்சேல் என்று அபயக் கரம் நீட்டுபவர், வன்முறையையும், துரோகத்தையும் கண்டு அஞ்சுகின்ற நல்லோர்களுக்குத் துணிந்து அனைத்தையும் எதிர்த்து நின்று நல்வாழ்க்கை நடத்துவதற்கான தைரியத்தைத் தந்தருள்கின்ற கம்பஹரேஸ்வரரை நாம் ஒவ்வொருவரும் வழிபட்டாக வேண்டும்.

கலியுகத்தில் தீயவர்களுடைய ஆதிக்கம் ஓங்குவது போலத் தோன்றுகின்றது அல்லவா! எப்போதுமே Negative Forces என்று சொல்லப்படுகின்ற எதிர்வினை சக்திகளின் கை முதலில் ஓங்குவது போலத் தோன்றும். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இறைவனின் பாதங்களில் சரணடைந்து வாழ்கின்ற நல்ல சக்திகள் தான் இறுதியில் வெற்றி பெறும். நல்லோர்க்கும் அவ்வப்போது சோதனைகள் ஏற்படுவதுண்டு! பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதைப் போல, குருவருளுடன் அனைத்தையும் தாங்கித் துணிந்து, எதிர்த்து நின்று நற்காரியங்களைச் செய்து வருவோருக்கு மோட்ச கதியைத் தந்தருள்பவரே சரபேஸ்வரர் ஆவார்.

கலியுகத்தில் பகைவர்கள் அளிக்கின்ற துன்பங்கள் ஏராளம், ஏராளம்! உறவினர்களே, சக அலுவலர்களே அடுத்த வீட்டுக்காரர்களே, சக அலுவலர்களே எதிரிகளாக மாறி நம்முடைய அமைதியான வாழ்வைக் குலைக்கின்ற பதர்களாக மாறி வருகின்றார்கள், பில்லி, சூன்யம், ஏவல்களென அவர்கள் அனைத்து விதமான தீவினைகளையும் ஏவி நம்முடைய நல்வாழ்வைப் பாதிக்கும் வண்ணம் செயல்படுகின்றார்கள்.

சொத்து, பாகப் பிரிவினை, பதவி உயர்வு போன்ற பலவிதமான காரணங்களுக்காக எதிரிகளாக மாறுவோரும் பலருண்டு. இவர்களிடமிருந்து மீண்டு நாம் நல்வாழ்வு வாழ வேண்டுமானால் நாம் சரபேஸ்வரருடைய அருளைப் பெற்றாக வேண்டும்.

முருகன், பிள்ளையார், சிவபெருமான், பெருமாள் என்று பலவிதமான தெய்வ மூர்த்திகள் இருக்கும் பொழுது சரபேஸ்வரரை மட்டும் நாம் இதற்காக நாடுவது ஏன்?

இறைவன் ஒருவனே, இறைப் பரம் பொருள் ஒன்றே. ஆனால் மனித மனம் இதனை எளிதில் ஏற்றுக் கொள்கின்றதா? இறைவனுடைய திருவுருவாய் வந்து நிற்கின்ற சற்குருவை நம்பி வாழ்க்கையை நடத்து என்று சொன்னால் கூட, துன்பங்கள் மிகுகின்றபோது அந்த சற்குருவையே சந்தேகிக்கின்ற கேவலமான மனநிலையில் தானே மனிதன் வாழ்கின்றான்.

எந்த விதமான பிரச்சனைகளும் இன்றி வாழ்க்கை சுமுகமாகச் செல்லும் போது இறைவனை வழிபட மறக்கின்ற மனிதன், துயர்கள் மிகுகின்ற போதும் மட்டும், “இறைவா! உனக்கு அதைச் செய்தேனே, இதைச் செய்தேனே! எனக்கு இதைத் தந்து விட்டாயே!” என்று இறைவனையே ஏசுகின்ற அளவிற்குத் தான் மட்டமான மனநிலையைக் கொண்டுள்ளான்.

இன்பமோ, துன்பமோ நம்முடைய கர்மவினைகளுக்கேற்பத்தான் எதையும் இறைவன் அளிக்கின்றான் என்பதைப் படித்து ஓரளவுதான் ஒத்துக் கொள்கின்றானே தவிர அவனுக்கென்று துன்பம் வரும் போது இறைவனையே ஏசுகின்ற சாதாரண மனோ நிலையில் தான் அவன் வாழ்நாள் முழுதும் செயல்படுகின்றான்.

துன்பங்களோ, உடல் நோய்களோ மிகும் போது, முதன் முதலில் அடிபடுவது மனமே. அதாவது நோயில் மனம் தளர்ச்சியுற்று வலிமையை இழக்கத் துவங்குகின்றது. மனம் சற்று ஆடிப்போனால் உடனடியாகக் கடவுள் நம்பிக்கையும் ஆடிவிடும். குருமேல் கொண்டுள்ள நம்பிக்கையும் சற்றே அசைந்து விடும். எனவேதான் ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய உடலையும் மனதையும் ஆரோக்கியமான நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் எனச் சித்புருஷர்கள் வலியுறுத்தி வருகின்றார்கள். காரணம் உடல் ஆரோக்கியத்தில் ஒரு சிறு கோளாறு ஏற்பட்டால் கூட அது மன நிலையை பாதித்துக் கடவுள் நம்பிக்கையையே ஒரு ஆட்டு ஆட்டி விடும்.

அடித் தளமே ஆடி விட்டால் என் செய்வது?

இதற்காகத் தான் ஆயுர்வேதம் மற்றும் சித்த மருந்துகளை உடலில் ஏற்போமானால் அவற்றில் உள்ள மூலிகைச் சத்துகளின் காரணமாக மனோ சக்தி எந்த விதத்திலும் குறைவு படாது! எத்தகைய கடுமையான நோய் ஏற்பட்டாலும் மூலிகைச் சத்துக்களின் ஆன்மீக சக்தி காரணமாக மன ஆற்றல் அவ்வளவு எளிதில் பாதிக்கப்படுவது கிடையாது. ஆனால் அல்லோபதி எனப்படும் நவீன விஞ்ஞானமய மருத்துவத்தில் பல விதமான இரசாயனப் பொருட்கள் கலந்துள்ளமையால் இவை உடலை பாதிப்பதோடு முதலில் மன நிலையைத் தான் கடுமையாக பாதிக்கின்றது.

மனம் பலவீனமாக இருக்கும்போது தான் Negative Forces எனப்படும் எதிர்வினைச் சக்திகள் மிக எளிதில் மனதை ஆக்கிரமித்து அனைத்து விதமான, தீய எண்ணங்களையும், தீய சக்திகளையும் உடலில் புகுத்தி வாதனைகளையும் வேதனைகளையும் பெருக்கி விடுகின்றது. எனவே தான், ஒருவன் மிகுந்த காய்ச்சலில் படுத்திருக்கும் பொழுது, அவனால் எந்தவித மந்திரத்தையும் ஓத முடியாமல் தவிக்கின்றான்! அப்போது இறைநினைவே ஏற்படுவதில்லை! அவன் எண்ணமெல்லாம் உடலில் எங்கெங்கெல்லாம் வலி ஏற்பட்டுள்ளதோ அந்தந்த அங்கத்தின்மேல் தான் பாயும். எவ்வாறு கடினமாக முயன்றாலும் கூட மனம் எழும்பிப் பிரார்த்தனையையே மேற்கொள்ள மறுத்துவிடும்.

இத்தகைய நிலைகள் எல்லாம் ஏற்படாமல் இருப்பதற்காகத்தான் சரபேஸ்வரர் வழிபாடுவலியுறுத்தப்படுகின்றது.

ஏனெனில் சரபேஸ்வர வழிபாட்டில் நாம் முதன் முதலாகப் பெறுவது என்னவென்றால் எத்தகைய நோய் நொடிகள் வந்தாலும், எத்தகைய பகைவர்களின் தாக்குதல் இருந்தாலும் நம்முடைய மனோதிடத்தை இழக்க விடாமல் நம்மைக் காப்பது ஸ்ரீ சரபேஸ்வரரின் அருள் சக்தியாகும்.

ஸ்ரீகம்பஹரேஸ்வரர் ஆலயம்
திருபுவனம்

ஒரு முறை ஸ்ரீ சரபேஸ்வரரை முறையாக வழிபட்டால் கூட அதனால் நமக்கு ஏற்படுகின்ற மன ஆற்றலானது எத்தகைய நோய்நொடிகள் நம்மைத் தாக்கினாலும் நாம் சேர்த்து வைத்துள்ள ஆன்மீக, தெய்வீக மனோ சக்தியை இழக்காமல் நன்கு நிலை நிறுத்திக் கொள்ள பெரிதும் உதவுகின்றது!

இதற்காக நாம் ஆயிரம் ஆயிரமாகப் பணத்தைச் செலவழித்து ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட வேண்டும் என்பது இல்லை. எளிய வழிபாடு போதுமானதாகும். மேலும் எல்லா இடங்களிலும் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி வழிபாடு அமைந்திடவில்லை. ஏதோ இங்கும் அங்குமாக சில கோயில்களின் தூண்களில் மட்டுமே ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி எழுந்தருள்கின்றார், கும்பகோணம் அருகே தாராசுரம், திருபுவனம், காரைக்குடி, சென்னை மாடம்பாக்கம் ஆலயம், சென்னை கோயம்பேடு ஆலயம் மற்றும் சில ஆலயங்களில்தான் சரபேஸ்வரரின் சிலாரூப வழிபாடு எழுப்பப்பட்டுள்ளது. எவ்வாறு பிரதோஷ வழிபாட்டிற்குச் சிவாலயத்திற்குசென்று நாம் வழிபடுகின்றோமோ அதே போல சரபேஸ்வரர் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் பிரதோஷ வழிபாடும் மிகவும் சிறப்புடையதாகும். இதில் நாம் இரட்டிப்பான பலன்களை நாம் பெற்றிடலாம்.

அதிலும் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு உரித்தான ஞாயிற்றுக் கிழமையில் பிரதோஷம் சேருமானால் அதன் மகத்துவத்தைத் தான் விவரிக்க இயலுமா? அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த வழிபாடாக இது அமைகின்றது.

சந்தனம், மஞ்சள், வெண்ணை உருண்டைகளால் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு இந்த அஷ்டோத்திரங்களை ஓதி அர்ச்சனை செய்திட வேண்டும். வெண்ணை, தூய்மையுடன் நன்றாக இருக்க வேண்டும். பசு வெண்ணெயாக இருந்தால் மிகவும் சிறப்புடையது.

மஞ்சள், சந்தனம் போன்றவற்றை இறை மந்திரங்களைச் சொல்லி நாமே அரைத்து பூஜிப்பதுதான் சிறப்புடையது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம். எந்தவிதமான சூழ்நிலையிலும் மனோ திடத்தை இழக்காமல் எத்தகைய சந்தர்ப்பங்களையும் எதிர் நோக்குகின்ற மன வலிமையையும் தருபவரே ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியாவார். 15 நாட்களுக்கு ஒரு முறையேனும் அனைவரும் நிச்சயமாக ஸ்ரீ சரபேஸ்வரரை வழிபட்டால் தான் நல்ல தெய்வீகமான மன ஆற்றலைப் பெற முடியும். மனம் திடமாக இருந்தால்தானே எத்தகைய இடர்களையும் நம் வாழ்க்கையில் நாம் நேருக்கு நேர் சந்திக்க முடியும். இல்லையெனில் ஓவென்று ஒலமிட்டு அழுது, புலம்பி இருக்கின்ற இறை நம்பிக்கையையும் இழந்து நாமே நம்முடைய அல்லல்களைப் பெருக்கிக் கொண்டு விடுவோம்!

இதற்கெல்லாம் வழி வகுக்காமல் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையேனும் ஸ்ரீ சரபேஸ்வர வழிபாட்டைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். ஸ்ரீ சரபேஸ்வரர் படத்தை வீட்டில் வைத்தும் பூஜித்திடலாம். இதில் எவ்விதத் தவறும் கிடையாது.

பல குடும்பங்களில் இரவில் குழந்தைகள் வீறிட்டு அலறும்! படுக்கையிலேயே சிறுநீர் கழிக்கின்ற பிள்ளைகளும் உண்டு, இத்தகைய குழந்தைகளைக் கொண்டே சந்தனத்தை அரைக்கச் செய்து வீட்டில் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்திக்குச் சந்தனத்தைத் தினந்தோறும் இட்டுவரச் செய்தால் படுக்கையில் சிறுநீர் கழிப்பது, பயத்தால் வீறிட்டு அலறுவது, பயத்தால் ஏற்படும் ஜுரங்கள் போன்றவற்றை எளிதில் தவிர்த்திடலாம்.

தீய கனவுகளினால் பலரும் இரவில் பெருங்குரலை எழுப்பி அலறுவார்கள். திருடன், பாம்பு, பயங்கரமான காடுகள் எனக் கனவுகளில் வந்தால் பலரும் சப்தம் போட்டுக் கொண்டு எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். இரவில் படுக்கும்பொழுது ஸ்ரீ சரபேஸ்வர கவசத்தை ஓதியும், காலையிலும், மாலையிலும் ஸ்ரீ சரபேஸ்வர அஷ்டோத்திரத்தை ஓதி சந்தனம், மஞ்சள், வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சனை செய்து வந்தால் இத்தகைய பயம், பீதியால் ஏற்படுகின்ற துன்பங்கள்அகன்று விடும்.

ஸ்ரீஅம்ருத ம்ருத்யுஞ்ஜய மூர்த்தி

ஸ்ரீ மிருத்யுஞ்ஜெயமூர்த்தி வேறு. ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தி வேறு. ஸ்ரீ மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் பொதுவான வழிபாட்டினால் ஏற்படுகின்ற சிறப்பான பலன்களைப் பற்றிச் சென்ற இதழில் ஓரளவு விவரித்து உள்ளோம், ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் தெய்வ அவதாரம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கின்றது அல்லவா?

ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய வழிபாடு மிகவும் அரிதாகவே கலியுகத்தில் விளங்குகின்றது. இதுவரையில் தெய்வீக இரகசியமாக விளங்கி வந்த இதனைச் சித்புருஷர்களின் அருளால் கலியுக மக்களின் நல்வாழ்விற்காக ஜாதி, மதம் பேதமின்றி அனைவரும் நல்லருளுடன் வாழ்ந்திட திரு அருளாலும், குரு அருளாலும் இவற்றை வெளியிடுவதில் ஆனந்தமடைகின்றோம்.

இப்பூவுலகில் எதுவுமே நிரந்தரமாக இல்லை. இன்று சமவெளியாக இருப்பது நாளை சற்று மணல் மேடாக மாறுகின்றது. மலையில் உள்ள பாறைகள் உருண்டு கீழே கற்களாக, மணலாக மாறி வந்து விடுகின்றன. இன்று நாம் பார்க்கின்ற மலையில் நாளை தாவரங்கள் முளைத்து வேறுவிதமாகத் தோன்றுகின்றது. இவ்வாறாக இவ்வுலகில் எதுவுமே நிலையாக இருப்பதில்லை. நிலையற்ற இவ்வுலகில் நிலையாக இருப்பது இறைப் பரம் பொருளே! அவனே இந்த மாற்றங்களை உருவாக்கி என்றும் மாறாது சாசுவதமாக இருக்கின்றான். ஏன், நம் உடலிலேயே எத்தனை விதமான மாற்றங்களை நாம் பல வருடங்களாகக் கண்டு வருகின்றோமே! ஆனால் அன்றைக்குப் பார்த்த காசி விசுவநாதர், இராமேஸ்வர இராமநாதர், மயிலை கபாலீஸ்வரர், திருவேற்காடு கருமாரியம்மன், சமயபுரம ்மாரியம்மன் போன்ற இறை மூர்த்திகளின் அருட் பாங்கு மாறுபடவில்லையே. இதுதான் நிரந்தர இறைத் தத்துவம்!

ஸ்ரீஅமிர்த மிருத்யுஞ்சயர்

என்றும் நிலையாக இருக்கின்ற ஒரேயொரு பொருளைப் பற்றுக! மற்ற பொருட்களில் பற்றை விட்டு விடுக! இதை உணர்த்துபவர்தான் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ் ஜெய மூர்த்தி ஆவார்!

மரண பயத்தை நீக்கி நல்ல ஆயுளைத் தருகின்றவர் இவரே! மரண பயம் காரணமாகத் தான் மனிதன் பலவிதமான தவறுகளைச் செய்து விடுகின்றான். ஏராளமான பேராசைகளுக்கு ஆட்பட்டு, எக்கசக்கமான கர்மவினைகளை நாள் தோறும் சேர்த்துக் கொள்கின்றான்.

எது அமிர்தமயமானது எது நிரந்தரமான ஆனந்தம் என்ற தத்துவத்தை உணர்த்தி நிலையற்றவற்றின் மேல் உள்ள பற்றுகளை நீக்கி, மரண பயத்தைத் தவிர்த்து, நல்ல ஆயுளைத் தந்து நம்மைக் காப்பவரே ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தி ஆவார்.

ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் அவதார மகிமைகளைக் காண்போமா!

தேவாதி தேவர்கள் ஏன் அமிர்தத்தைப் பாற்கடலிலிருந்து கடைந்தெடுக்கப் பிரயத்தனப் பட்டார்கள் ? அசுரர்களால் தேவர்களுக்கு மரண பயமான அழிவு பயம் ஏற்பட்டுவிட்டது! அந்த மிருத்யு பயத்தைப் போக்குவதற்கு ஒரே வழி ஸ்ரீ மிருத்யுஞ்ஜெயரின் வழிபாடுதானே! மனிதனாக இருந்தாலும் தேவர்களாக இருந்தாலும் வழிபடும் மூர்த்தி ஒன்றுதானே! இதனை மறந்து அவர்கள் அமிர்தத்தை எடுக்கப் புறப்பட்டார்கள்!

அமிர்தம் நல்ல ஆயுளைத் தரும் என்பது உண்மையே. ஆனால் அதற்கு முன்பாக மரணபயம் தீர வேண்டும் அல்லவா! அமிர்தம் கிடைத்தால் நல்ல ஆயுள் கிடைக்கும் என்று எண்ணியவர்கள், அதனினும் மேன்மையானதாக மரண பயம் தீர வேண்டும் என்ற தெய்வீக உணர்வை ஏற்படுத்திக் கொள்ளவில்லையே, இதுவே தேவமாயை! தேவர்களுக்குரிய மாயக்குழி! இதுவும் இறைவனுடைய திருவிளையாடல்தான்!

அமிர்தம் வந்த புராணத்தை ஏற்கனவே நாம் நன்கு அறிவோம். அதனை விளக்க வேண்டியதில்லை அன்றோ? இதோ அமிர்த கலசம் வந்துவிட்டது! கலசத்தில் உள்ள அமிர்தத்தைக் காக்கின்ற ஸ்ரீ அமிர்தவல்லி தேவியும் தோன்றி விட்டாள்! இதோ ஆலகால விஷமும் நன்றாக உருண்டு, திரண்டு தேவர்களைத் துரத்தத் தொடங்கியது! இதன் பின்னர் இறைவன் ஆலகால விஷத்தை உண்ட புராணமும் நீங்கள் நன்கு அறிந்த ஒன்று அல்லவா! இறைவனும் ஆலகால விஷத்தை உண்டு விட்டான்!

“அப்பா, நம்மைத் துரத்திய ஆலகால விஷம் மறைந்து விட்டது! இனிமேல் நாம் அமிர்தத்தை அருந்திடலாம்”   என்று தேவர்கள் திரும்பிச் சென்றார்களே தவிர தாங்கள் பெற்ற அமிர்தத்தை இறைவனுக்குப் பிரசாதமாகப் படைப்போம் என்று சற்றும் எண்ணவில்லையே! தேவ மாயை தெளிவுடன் விளையாடுகின்றதோ, அந்த அளவிற்கு சுயநலம் அவர்களை ஆட்படுத்தி விட்டதோ!

இதை நன்கு எடுத்து உணர்த்தக் கூடியவரே திருமால்! ஆனால் மாயையில் எவ்வாறு தேவர்கள் சிக்குகின்றார்கள் என்பதை அவர்களே நன்கு உணர வேண்டும் என்பதற்காக அவரும் பரம்பொருளின் திருவிளையாடலில் பெரும் பங்குகொண்டார்!

தேவர்கள் ஆலகால விஷத்தைத் திருக்கயிலாயப் பெருமானிடம் தந்த மகிழ்ச்சியில் அமிர்தத்தை அருந்தும் பொருட்டு மிக வேகமாகத் திரும்பி வந்து கொண்டிருக்க... திருக்கையிலாயத்தைத் தாண்டியவுடன் ஓரிடத்தில்... விண்ணோ, மண்ணோ, விண்ணுலகமோ, வேறு எந்த ஒளி உலகமோ தெரியவில்லை ... .
அங்கே ஒரு சித் புருஷர் சாதாரணமான பத்மாசனத் தில் தவம் பூண்டிருக்க....... அவரைச் சுற்றி ஒளிப் பிழம்புகள்...

அவரோ ஜோதிர் மயமாக விளங்கினார்...

ஆமாம், இவர் எத்தனை லட்சம் ஆண்டுகளாக இவ்வாறான தவத்தில் ஆழ்ந்திருக்கின்றார்!

தேவர்களுக்குக் கலக்கம் ஏற்பட்டது! ஒருவேளை இவர் நம் அமிர்தத்தை உண்ண வந்திருக்கின்றாரோ?ஆனால் இவரைப் பார்த்தால் எத்தனையோ யுகங்களாகத் தவத்தை மேற்கொண்டது போல் தோன்றுகின்றதே! எவ்வாறு நாம் இவரை இதுகாறும் அறியாமல் விட்டு விட்டோம். ஒரு வேளை இவருடைய தேஜோமயமான ஒளிப் பிரகாசத்தை நம்மால் இத்தனை யுகங்களாகக் காண முடியாமல் போயிற்றோ . அவர் எந்த லோகத்தில் அமர்ந்திருக்கின்றார் என்றே கண்டு பிடிக்க இயலவில்லையே.

பூலோகமும் அல்ல, புவர் லோகமும் அல்ல, சுவர் லோகம் அல்ல, அதல, சுதல, பதினான்கு லோகங்களும் அல்ல! விண்ணுலகமும் அல்ல! திருக்கையிலாயத்தினருகே எந்த லோகத்தில் அவர் எத்தகைய ஆழ்ந்த தவத்தில் அமர்ந்திருக்கின்றார் என்பதே தெரியவில்லையே! நிஷ்டையா, தவமா, எதுவோ புரியவில்லையே!!

எதிரில் திரிலோக சஞ்சாரியான நாரதர் தெய்வீகப் புன்னகையுடன் வந்து கொண்டிருக்க... தேவர்கள் அவரை வணங்கி, “இந்த மகரிஷியோ சித்புருஷரோ யாரென்று அறிவீர்களா, பிரபு?”என்று கேட்டிட ஸ்ரீ நாரதரோ புன்னகையுடன் “நான் தோன்றிய காலம் என்ன, அதற்கு முன்னரேயே, இவர் இவ்வாறுதான் இருக்கின்றார்.” என்று தெய்வத் திருவிளையாடலை ஏற்படுத்தி விட்டுப் புறப்பட்டு விட்டார். இதுதானே நாரதருடைய வேலை!

தேவர்கள் அரண்டு, மிரண்டு விளக்கம் கேட்டு ஸ்ரீ பிரம்மாவை நாடினார்கள். பிரம்ம தேவருக்கும் ஒன்றும் புரியவில்லையோ! அவருடைய படைப்புத் தொழில் பட்டியலில் இவருடைய தோற்றத்தையே காணோமே. இறப்பு, பிறப்பிற்கு அப்பாற்பட்ட மஹரிஷிகளின் சித்புருஷர்களின், யோகியர்களின் பட்டியலிலும் இவர் பெயரைக் காணவில்லையே!'

பிரம்மாவே திகைத்துவிட்டார்!

இது பிரம்ம மாயையாக, விஷ்ணு மாயையாக இருக்குமா? ஆனால் மாயை என்றால் ஒளிப் பிரகாசத்தில் பல மாறுதல்கள் ஏற்படுமே! எல்லோருமே புற்றுகள் மூடும் அளவிற்குத் தவம் இருப்பார்கள். ஆனால் இவரைச் சுற்றி ஒளிக் குன்றுகளே தாமே கிடக்கின்றனவே. எத்தனையோ கோடி சூரியன்களுக்கும் விஞ்சிய ஒளிப்பிரவாகம் கொண்ட ஒளிக் குன்றுகள்தானே இவர் முன் தோன்றியுள்ளன! ஒளிப் பாறைகள் தாமே இவரைச் சூழ்ந்துள்ளன. பிரும்மா அருகில் சென்றார்! யாரிவரோ?

அவர்தான் ஒளர்வர்.

இவரை மஹரிஷி என்றும், சித்புருஷர் என்றும் யோகி என்றும் எப்படி வேண்டுமானாலும் அழைத்திடலாம். உத்தம சித்புருஷர் இவர்! ஆனால் அப்போதைக்கு பிரம்மருக்கு இவர் தான் ஒளர்வர் சித் புருஷர் என்று தெரியாதுதானே? அருகில் சென்று வணங்கிப் பல காலம் நின்றார். பல காலம் என்ன? பல யுகங்கள் நின்றும் அவர் நிஷ்டையிலிருந்து எழுந்தாரில்லை! அவருடைய தவத்தைக் கலைப்பதற்கு அஞ்சிய பிரம்மா தனது தந்தையாரை நாடினார். ஆனால் திருமாலோ யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கின்றார். அருகில் ஸ்ரீ லக்ஷ்மி தேவி வீற்றிருக்க தேவர்கள் திருமகளைச் சரணடைந்தனர்.

வந்த விஷயத்தைக் கேட்ட அம்பிகையும், “தேவர்களே! அசுர தபசு என்றால்தானே நீங்கள் எல்லாம் அச்சப்பட வேண்டும். இவரோ ஏதோ நற்காரியத்திற்குத் தானே யோக தவம் பூண்டிருக்கின்றார். பின் ஏன் நீங்கள் கவலைப்படுகின்றீர்கள் ?”என்று வினவிட தேவர்களும், “அம்மையே! அவருடைய தவத்தைப் பற்றி நாங்கள் பொறாமை கொள்ளவில்லை! இத்தகைய உயர்ந்த நிலையில் ஒருவர் தவம் புரிகின்றார் என்றால் அத்தகைய உயர் நிலையை நாங்களும் அடைய வேண்டும் என்று எண்ணுவதில் தவறொன்றுமில்லையே! அதை எவ்வாறு அடைவது என்பதற்காகத் தான் நாங்கள் திருமாலை நாடி வந்திருக்கின்றோம்”, என்று கூறினார்கள்.

ஸ்ரீலஷ்மி தேவியும், “நீங்கள் சொல்வது சரிதான்! ஆனால் யோக நித்திரையில் இருக்கின்ற ஹரி பகவானை எழுப்புவதென்றால் மிகவும் எளிதான காரியமா?”என்றிட தேவர்களோ, “தாங்கள்தான் எங்களுக்குக் கருணை புரிய வேண்டும்! எவ்வாறாயினும் நாங்கள் நாராயணப் பிரபுவிடம் விளக்கம் கேட்ட பின்புதான் இவ்விடத்தை விட்டுச் செல்வதாக உள்ளோம்”, என்றனர்.

அம்பிகையோ என்ன செய்வதென்று அறியாது திகைத்து நின்று பின் ஒரு வழியாகத் தன் மனதைத் தேற்றிக் கொண்டு ஸ்ரீ சீதளா தேவியாக உருப்பெற்று பெருமாளுடைய திருவடிகளைச் சற்றே வருடினார். தேவியின் மிகவும் குளிர்ந்த தன்மையினால் யோக நித்திரையிலிருந்து வெளிப்போந்த பெருமாள் தேவர்களைக் கண்டு ஆச்சரியமுற்றார். தேவர்களும் தங்களுடைய அபிலாட்சைகளைத் தெரிவித்திட திருமால் சற்றேநகைத்தார்.
“பிரபஞ்சத்தில் எவராயினும் உங்களைவிடக் கூடுதலாகச் சற்றுத் தவம் புரிந்தால் நீங்கள் ஓடோடி வந்து விடுகின்றீர்களே! நீங்கள் எல்லாரும் ஏன் சற்றே முயற்சி செய்து அதனை அறிந்து கொள்ளக் கூடாது?”
“இல்லை பிரபு! பிரம்ம தேவரே அங்கு சென்று பார்த்து விட்டு ஏதும் இயலாது என்று திரும்பி விட்டார். அதற்காகத்தான் தங்களை நாடி நாங்கள் வந்துள்ளோம்”.

திருமாலும், “பிரும்மாவிற்குத் தெரியாதது பிரபஞ்சத்தில் ஏதேனும் உண்டா ? அவரே சர்வமும் அறிந்த மூர்த்தி! நீங்கள் தான் அவர் தம் பெருமையை உணரவில்லை ! இதுவும் பிரம்மாவின் லீலையே! இருந்தாலும் ஒன்று சொல்லி அனுப்புகின்றேன். திருக்கையிலாயத்திலே சிவத்தொண்டு புரியும் ருத்திர பிரஜாபதியே உங்களுக்குரிய தக்க விளக்கங்களை அளிக்க வல்லவர். எனவே அவரைச் சென்று சரணடையுங்கள்.”என்று அருள்வழி காட்டிட, தேவர்களும் திருக்கையிலாயத்திற்கு விரைந்தார்கள். அங்கே ருத்திர பிரஜாபதியானவர் பரம்பொருளாம் பரமசிவனுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்

வெண்சாமரம் வீசுவது என்றால் இறைவனுக்குக் காற்று வருவதற்கு என்று பொருள் கொள்ளக் கூடாது. இறைவனுடைய திருமேனியிலிருந்து வேத மந்திரங்களும், பீஜாட்சரங்களும் ஒலிக் கதிர்களாக, ஒலி, ஒளிக் கிரணங்களாக எப்போதும் வெளி வந்து கொண்டிருக்கும். மிகவும் சக்தி வாய்ந்த அவற்றை பிரபஞ்சத்தின் பல லோகங்களுக்கும் திசை திருப்பி அனுப்ப வேண்டும் அல்லவா! அனைவராலும் இதனைச் செய்திட முடியாது. அதைத்தான் சாமரம் கொண்டு வீசுதல் என்று பொருள் கொள்கின்றோம். அதாவது வெண்சாமரமானது கவரிமானுடைய மயிரிழைகளால் ஆக்கப்பட்டிருக்கும். கோயிலில் பூஜையில் வெண்சாமரம் வீசுவது இதற்காகவே! கவரிமானுக்கு வேத மந்திரங்களை ஈர்க்கின்ற சக்தி உண்டு. அதனால்தான் சாதாரண மான்தோலை யோகத்திற்காகவும் பயன்படுத்துகின்றோம்.

ஸ்ரீ பிரம்ம மூர்த்தியே ஒளர்வரின் மஹிமையைப் பற்றித் தேவர்களுக்கு உணர்த்தியிருக்க முடியும். செருக்காலும் மறதியாலும் அவதியுற்ற தேவர்களுக்கு, திருக்கயிலாயத்தில் இறைவனுடன் உறைவோரின் பெருமையை உணர்விக்க அவர் விரும்பினார். ருத்திர பிரஜாபதியே பிரபஞ்சத்திலுள்ள அனைத்து ஜீவன்களை சிருஷ்டிக்கின்ற தொழிலில் பிரம்மாவிற்கு உறுதுணையாக இருப்பவர். அவரே எந்தெந்த ஜீவனுக்கு எவ்வகையான வேதமந்திர சக்திகள் தேவையானதாக இருக்கும் என்பதை உணர்ந்து அந்தந்த உலகத்திற்கு ஏற்றவாறு மந்திர சக்திகளைப் பிரித்து ஒதுக்கி அளித்து வருவார். இதனையே நாம் பரம் பொருளுக்கு வெண்சாமரம் வீசுதல் என்ற பூஜையாகக் கூறுகின்றோம்.

ருத்திர பிரஜாபதி தேவர்களைக் கண்டு மனமகிழ்ந்தார். “தேவர்களே! நானோ 1001வது ருத்திரப் பிரஜாபதி! என்னை உருவாக்கியவரே ஸ்ரீமன் நாராயணப் பெருமாள்தான்! அவரே ஒன்றும் அறியாதவர் போல் உங்களை அடியேனிடம் அனுப்பியுள்ளார். எனக்கு முன்னர் இருந்த ஆயிரம் ருத்திரப் பிரஜாபதிகளும் அடியேனிடம் இந்த சித்புருஷர் ஆனவர் முதல் பிரஜாபதியின் காலத்திலிருந்தே அருந்தவம் பூண்டு வருவதாகச் சொல்லிச் சென்றுள்ளார்கள்! இப்போது அடியேனுடைய அதாவது 1001 வது ருத்திரப் பிரஜாபதியின் காலம் நடந்து கொண்டிருக்கின்றது. அதுவரையில் ஒருவர் தவம் புரிந்து கொண்டிருக்கின்றார் என்றால் அவர் சாதாரண மகரிஷியோ, யோகியோ, சித்த புருஷரோ அல்ல. கோடானு கோடி சித்தர்களின், மஹரிஷிகளின்,  யோகியர்களின் ஒளிக்கூடாய்ப் பிரகாசிப்பவர். எனவே அம்பிகையாம் பார்வதி தேவியே உங்களுக்கு வேண்டிய விளக்கத்தை அளித்திடுவாள்”, என்று ஈஸ்வரியிடம் அவர்களை அனுப்பி வைத்தார்.

இவ்வாறு ஒரு சிறு தெய்வீக விளக்கத்தைப் பெறவே பலவிதமான தெய்வீக தரிசனப் பெற்றாக வேண்டும் என்பதை தேவர்கள் உணர்ந்தனர்.

தேவர்கள் இவ்வாறாக ஒவ்வொரு தெய்வத்திடமும் செல்வதன் காரணம் என்ன? எல்லாம் வல்ல பிரம்ம மூர்த்தியே இதற்குரிய விளக்கத்தைத் தரவல்லவர் என்றாலும் அடக்கம், கருணை காரணமாக ஒவ்வொரு மூர்த்தியும் பல் வேறு வகையான உத்தம இறைநிலைகளை அவர்களுக்கு உணர்த்தும் பொருட்டு ஒவ்வொரு தெய்வ லோகத்திற்கும் அவர்களை அனுப்புகின்றார்கள்.

இவ்வாறு வெவ்வேறு தெய்வ மூர்த்திகளின் லோகங்களின் தெய்வத் திருபூமியைத் தொட்டுச் சென்றால் தான் தேவர்களுக்கு ஞானத் தெளிவு உண்டாகும் என்பதைப் புலப்படுத்துவதற்காகத் தான் அவர்களைப் பல்வேறு ஒளி உலகங்களுக்கும் அனுப்புகின்றார்கள். இறுதியாக கெளரியாம் பார்வதி தேவியை அடைந்த தேவர்கள் அம்பிகையைச் சரணடைந்தார்கள். இதற்குள் பலகோடி யுகங்கள் உருண்டோடி விட்டன!

அம்பிகையானவள் தேவர்களிடம் அமிர்தம் பெறும் படலம் முடிந்து விட்டதா என்று கேட்டு முதலில் “அதை முடித்து வாருங்கள்”, என அனுப்பி விட்டாள். உண்மையிலேயே தேவர்கள் பரிபூர்ணமான ஞானத் தெளிவைப் பெற்றிருந்தார்களேயானால் முதலில் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியின் மகிமையைப் பற்றி அறிய வேண்டும் என்று கேட்டிருப்பார்கள். ஆனால் அசுரர்களை வென்றிட வேண்டும் என்ற வெறியினால் தேவர்கள் அமிர்தம் பெறும் படலத்தில் விரைந்து இறங்கினார்கள். மேலும் தேவர்களோ பாற்கடலில் கிட்டிய அமிர்தத்தைத் தாங்கள் உண்ண வேண்டும், அசுரர்களுக்கு ஒரு துளிக் கூட கிட்டக் கூடாது என்பதில் குறியாக இருந்தமையினால் அமிர்தத்தை இறைவனுக்குப் படைக்க வேண்டும் என்ற எண்ணத்தையோ பெறவில்லை! அந்த அமிர்தத்தின் பலன்கள் நல்ல ஜீவன்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றும் உணர்ந்தாரில்லை! ஆனால் இதற்கு அப்புறம் தானே தேவியின் திருவிளையாடலும் தொடர்ந்தது.

இதோ பலகோடி யுகங்களாக தவத்தில் ஆழ்ந்திருந்த ஒளர்வர் சித் புருஷர் யோகத்திலிருந்து மீண்டு திருக்கையிலாயத்தை நோக்கி விரைகின்றாரே! ஏனோ ?

ஆங்கே சிவபெருமான் ஆலகாலத்தை உண்டவராக திருநீலகண்டராகக் காட்சியளிக்கின்றார் ! எவருக்கும் கிட்டாத திருநீலகண்ட தரிசனம்!

அம்பிகையோ இறைவனுடைய தொண்டைக் குழலுக்கு மேல் ஆலகால விஷம் உள்ளே இரங்கல் ஆகாது என்பதற்காக அவருடைய திருக்கண்டத்திலே தம் சிறு விரல்களைப் பதித்து விஷத்தைக் கண்டத்திலேயே தேங்க வைத்து விட்டாள். சர்வேஸ்வரனையும், சர்வேஸ்வரியையும் மும்முறை வலம் வந்து ஒளர்வர் வணங்கினார்.

“சுவாமி! தங்களுடைய பூவுடல் நீல நிறம் ஆகிவிட்டதே! அம்பிகையோ தம் சிறுவிரல்களில் ஏற்பட்ட விஷத்தின் வெம்மையைத் தாங்க இயலாது தவிக்கின்றாள். சர்வேஸ்வரியின் வெம்மை தணிவதற்காகவும், தங்களுடைய திருநீலகண்ட மேனி நிறம் மாறி முன்பு போல பொன்னிறமாய் பிரகாசிக்க வேண்டியும் அடியேன் இத்தனை யுகங்களாகத் தங்களுடைய திருஅருளால் தீர்க தரிசனத் தவம் பூண்டிருந்தேன். இதற்கும் தங்கள் திருவிளையாடலே காரணமாகும்.

ஸ்ரீசோமகலாம்பாள் ஒன்பத்துவேலி

தேவர்களோ அமிர்தத்தைத் தாங்கள் மட்டும் பெறவேண்டும் என்ற ஒரே நோக்கோடு எங்கோ சென்று கொண்டிருக்கின்றார்கள். ஆனால் பாற்கடலில் விளைந்த அமிர்தமானது அனைத்து தேவாதி தேவர்களுக்கு மட்டும் உரித்தானதல்லவே. முதலில் சர்வேஸ்வரனாம் தங்களுக்கு அன்றோ அது படைக்கப்பட வேண்டும். பிறகு அம்பிகைக்கும், அனைத்து தேவ மூர்த்திக்கும் படைக்கப்பட்டுத் தேவர்களுக்கு மட்டும் அல்லாமல் பிரபஞ்சத்திலுள்ள பலகோடி ஜீவன்களுக்கும் அமிர்தத்தின் பலன்கள் சென்றடைய வேண்டும் அல்லவா!”
“அதற்காகத் தான் அடியேன் இங்கு ஓடோடி வந்துள்ளேன்! முதலில் தங்களுடைய திருநீலகண்ட மேனியின் கருநீல நிறத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். அதற்கு இந்த அமிர்தமே பிரசாதமாக ஆகட்டும்”, என்று சொல்லித் திருப்பாற் கடலில் விளைந்த அமிர்தத்தின் ஒரு பகுதியை எடுத்து அம்பிகையிடம் அளித்திட அம்பிகை அதனை சர்வேஸ்வரனாம் சிவபெருமானிடம் அளித்திட அவர் அதனைத் தன் திருக்கரங்களால் ஏந்தித் தன்னைத் தானே அபிஷேகித்துக் கொண்டார்.

இந்த அமிர்த அபிஷேக கோலத்தில் தான் பரம் பொருளே ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியாக காட்சியளித்தார்.

அம்பிகையே எதிர்பார்த்திடாத அதியற்புத அவதார தரிசனம் இது. சர்வேஸ்வரிக்கு முன்னால் ஒளர்வர் சித்புருஷருக்கே இத்தரிசனம் முதன் முதலாகக் கிடைத்தது!

நெடுஞ்சாண்கிடையாக வீழ்ந்து வணங்கிய ஒளர்வர் இறைவனுடைய திருமேனியிலிருந்து தெறித்த அமிர்தத் துளிகளைப் பிரசாதமாக ஏந்தி அம்பிகையிடம் அளித்து, “அகிலாண்டேஸ்வரி தாயே! இத்துளிகளை ஸ்ரீ அமிர்தவல்லி மூலமாகத் தாங்களே அனைத்து உலகங்களுக்கும் பிரசாதமாக அளிக்க வேண்டுகின்றேன். தாங்கள் தானே பூலோகத்திலுள்ள அனைத்து ஜீவன்களுக்கும் உணவு படைத்து அன்னபூரணியாக அருள்பாலிப்பவள். எனவே தங்களுடைய திருக்கரங்கள் மூலமாகத்தான் கோடானுகோடி அமிர்த கலசங்கள் அனைத்துக் கோடி பூலோகங்களில் உள்ள ஜீவன்களுக்கும் சென்றடையட்டும். இதுவே அடியேனுடைய பிரார்த்தனை!” தேவி உளம் மகிழ்ந்தாள். பாற்கடலில் திரண்ட அமிர்தம் இறைவனுக்கு முறையாகப் படைக்கப்பட்டு விட்டது. இதைத் தானே அம்பிகை எதிர்பார்த்திருந்தாள்.
எங்கே அமிர்தமானது இறைவனுக்குப் படைக்கப்படாது பிறருக்குச் சென்று விடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த ஸ்ரீ அமிர்தவல்லித் தாயானவள், இறைவனை வலம் வந்து வணங்கி தன்னுடைய பேரானந்தத்தைத் தெரிவித்துக் கொண்டு அம்பிகையின் அருளாணையுடன் கோடானு கோடி கோடி உலகங்களுக்கும் அளிப்பதற்காக க்ஷண நேரத்தில் பறந்து சென்றாள்.

ஒளர்வர் சித் புருஷர், ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தியாய்ப் பரிமளித்த சர்வேஸ்வரனைக் கண் குளிர தரிசித்தார். ஆம், இன்றும் அமிர்தம் அபிஷேகமாய் இறைவன் திருமேனியில் அருவியாய்ப் பொழிந்து கொண்டிருக்கிறது. இவர்தான் ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெய மூர்த்தி. 

மோகினி ரூபத்தில் இருந்த ஸ்ரீ மகாவிஷ்ணு அங்கிருந்தவாறே ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ்ஜெயரை வணங்கினார்!
இதன் பின்னர் ஸ்ரீ அகஸ்திய மாமுனியே தேவர்களுக்கு உணர்த்திட அவர்கள் அமிர்தத்தை இறைவனுக்குப் படைக்காததைப் பெரும் பிழையென உணர்ந்தவர்களாய்ப் பிராயச்சித்தம் வேண்டி சர்வேஸ்வரனையே சரணடைந்தனர். இதன் பின்னரே அமிர்தமானது நல்ல ஆயுளைத் தருவதோடு மரணபயத்தை நிவர்த்தி செய்து அமிர்தமய ஆயுளையும் அமிர்தத்தோடு தரவல்லதே ஸ்ரீ அமிர்த மிருத்யுஞ் ஜெய மூர்த்தி தரிசனம் என்பதையும் அப்போது தான் தேவர்கள் உணர்ந்து கொண்டனர்.

ஸ்ரீ ஐயப்பன் விரதம்

தற்போதைய ஸ்ரீ ஐயப்ப விரதத்தில் காணுகின்ற பெரும் பிழைகளையும், குறைபாடுகளையும் நாம் கடந்த பல இதழ்களில் சுட்டிக்காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளையும் அளித்து வருகின்றோம். பிரபஞ்சத்தின் பிரதான விரத நாயக தெய்வ மூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமியை நன்முறையில் விரதங்களைக் கடைபிடித்து வழிபடுவதால் தான் நாம் பரிபூரணமான பலன்களை அடையமுடியும்.

இறைப் பரம்பொருள் ஒன்றே. சர்வேஸ்வரனே நம்முடைய பலவிதமான அபிலாட்சைகளைத் தீர்ப்பதற்காகவும், துன்பங்களைத் துடைப்பதற்காகவும், பலவிதமான வரங்களை அருள்வதற்காகவும், முருகனாகவும், பிள்ளையாராகவும், உக்கிரப் பிரத்யங்கிரா காளியாகவும், பத்ர காளியாகவும், தத்தாத்ரேயராகவும், ஸ்ரீ அம்ருத மிருத்யுஞ்ஜயராகவும், ஸ்ரீ ஐயப்ப சுவாமியாகவும் பல்வேறு தெய்வ அம்சங்களுடன் அவதரித்துள்ளார். எனவே எந்த தெய்வ மூர்த்திக்கு எத்தகைய வழிபாடுகள் விசேஷமானவையோ அவற்றைக் கடைபிடித்தால்தான் அவ்வழிபாடு பரிபூரணமடையும் என்பதை நாம் நன்றாகத் தெளிவுடன் அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீவன்மீகநாதர் ஒன்பத்துவேலி

ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா, என்று பலரும் கேட்டுள்ளார்கள். நிச்சயமாக, தாராளமாக ஸ்ரீ ஐயப்பனின் எந்தப் படத்தையும் இல்லத்தில் வைத்து வழிபடலாம். ஸ்ரீசரபேஸ்வர மூர்த்தி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற தெய்வ மூர்த்திகளின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது பற்றிப் பலவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதில் எவ்வித சந்தேகமும் எழுவதற்கு இடமே இல்லை. அனைவரும் இம்மூர்த்திகளின் படங்களை வீட்டில் வைத்து நன்றாக வழிபடலாம். கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகே ஐயாவாடி கிராமத்தில் ஸ்ரீஉக்கிரப் பிரத்யங்கிராவின், ஆலயம் உள்ளது! ஸ்ரீ சரபேஸ்வரரை மணம் புரிந்த காளிதேவி! அனைத்து நல்வரங்களையும் தரவல்லவள்! ஐந்து வெவ்வேறு விதமான இலைகளை உடைய அற்புத விருட்சம் இங்குள்ளது!

ஸ்ரீ ஐயப்ப சுவாமியும் விதவிதமான தோற்றங்களில் காட்சி தந்து நம்மை ஆட்கொள் கின்றார் அல்லவா! புலியில் அமர்ந்த ஸ்ரீ ஐயப்பன், யோக பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன், பூர்ண புஷ்கலையுடன் காட்சி அளிக்கின்ற ஸ்ரீ ஐயப்பன், யோகப் பட்டை கூடிய தவத்திலேயே விதவிதமான கோலங்களுடன் உள்ள ஐயப்பன் என்று இவ்வாறாக ஐயப்பனுடைய திருக்கோலங்களே ஆனந்தம் அளிக்கும் வகையில் பல உள்ளன.

புலிமேல் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வருவதால், நோய் நிவர்த்தியும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பலவிதமான ரோகங்களினால் பல வருடங்களாக அவதிப்படுவோர் நிறைய உண்டு. சர்வ ரோக நிவாரணியாக விளங்குகின்ற புலிப்பாலை எடுத்து வந்த ஸ்ரீ ஐயப்ப கோலத்தில் உள்ள சாஸ்தாவின் உருவத்தைச் செவ்வாய் தோறும் மிகவும் சிரத்தையுடன் வழிபடுவதால் பலவிதமான நோய் நிவாரண நல்அனுபவங்கள் கண் கூடாகக் கிட்டுவதைக் காணலாம்.

செவ்வாய் தோறும் குறிப்பாக செவ்வாய் ஹோரை நேரத்தில் புலியை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டுச் சந்தனம் அரைத்து இட்டு இச்சந்தனத்தையே பிரசாதமாக தினந்தோறும் சிறிது உண்டு வந்தால் நோய் நிவாரணம் கிட்டும்.

யோக பட்டையுடன் அதாவது குத்திட்டு உட்கார்ந்து யோக நிலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பனை யோக பட்டம் தாங்கிய ஐயப்பன் என்று குறிப்பிடுவர். வறுமையில் இருந்து விடிவு பெற்று நல்ல செல்வத்தை அடையவும், இழந்த செல்வத்தைப் பெறவும் கல்வியில் நன்கு விருத்தி அடையவும், நியாயமான தார்மீகமான புகழைப் பெறவும் யோகபட்டை ஐயப்பனின் வழிபாடு மிகவும் உதவுகின்றது.

புதன், வியாழன் தோறும் குரு ஹோரையிலும், சுக்ர ஹோரையிலும், யோக மூர்த்தி ஐயப்பனை வழிபட்டு புதன் அன்று பச்சை நிற ஆடைகளையும், வியாழனன்று மஞ்சள் நிற உணவு வகைகளையும் படைத்துத் தானமாக அளித்து வந்தால் நியாயமான செல்வத்தையும், முறையான கல்வியையும், பெறவேண்டிய நற்புகழையும் நிச்சயமாகப் பெறுவர்.

பூரண புஷ்கலையுடன் காட்சி அளிக்கின்ற ஐயப்பனின் ஸ்வரூபம் மிகவும் விசேஷமானதாகும். திருமணத் தடங்கல்கள் தீர்வதற்கும், பில்லி, சூன்யம் போன்ற தீவினை மந்திரங்களின் துர் சக்திகளைப் போக்குவதற்கும் இம் மூர்த்தியின் வழிபாடு பெரிதும் உதவும்.

பூர்ண புஷ்கலை தேவியர்களுடன் சேர்ந்து காட்சி அளிக்கின்ற ஸ்ரீ ஐயப்பனுக்கு மிகவும் பீரீதியானது நாகலிங்க புஷ்பமாகும். புதன், வெள்ளிக் கிழமைகளில் பூர்ண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டு வருதலால் கணவன், மனைவியரிடையே புனிதமான அன்பு பெருகும்.

ஸ்ரீ ஐயப்பசுவாமிக்கு உரித்தான விசேஷமான புஷ்ப வழிபாடுகளும் உண்டு.

திங்கள் அன்று நாகலிங்க புஷ்பத்தால் ஸ்ரீஐயப்ப சுவாமியை அர்ச்சித்து வழிபட்டால் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும், பக்தி நிலையும் சிறப்புடன் மேம்படும். இன்று சுவாமிக்கு நாகலிங்க புஷ்பம் சார்த்தி அங்கப்பிரதட்சிணம் செய்தால் இல்லத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். குறிப்பாகக் கணவர், மனைவியரிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அகன்று சுமூகமான இல்லற வாழ்க்கை அமையும்.

பல வருடங்களாக நீடித்து வந்துள்ள உறவுப் பகையானது தீர்ந்து, பிரிந்த உறவினர்கள் சந்தோஷமாக மீண்டும் ஒன்று கூடி பழைய உறவுகள் நன்முறையில் தொடரும். அமாவாசை, பௌர்ணமி கூடுகின்ற திங்கள் அன்று மகிழம்பூ மாலை சார்த்தி ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வருவதால் பல விதமான குழப்பங்களுக்கும் முடிவு ஏற்பட்டு மன சாந்தி கிட்டும்.

குறிப்பாக வியாபாரத்தில் உள்ளவர்களும், பெரிய பதவியில் உள்ளவர்களும், நிரந்தரமில்லாத உத்யோகத்தில் இருப்பவர்களும் தினந்தோறும், “நித்ய கண்டம் பூர்ண ஆயுசு” என்பது போல பலவிதமான பிரச்னைகளுக்கு இடையேதான் இரவில் உறங்கச் செல்கின்றனர். மீண்டும் தூங்கி எழுந்தாலோ அதே பிரச்னைகள் தொடர்கின்றன. இத்தகையோர் திங்கள் அன்று பெளர்ணமி அல்லது அமாவாசை, மாத சிவராத்திரி கூடும் நாளில் மகிழம் பூவால் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை மேற்கண்டவாறு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மன சாந்திக்கு வழி பிறக்கும்.

அமிர்த தாரைகள்

ஆடிப்பெருக்கு

சபரிமலையின் பதினெட்டு படிகள், பதினெட்டு சித்தர்கள், கீதையில் 18 அத்யாயங்கள், 18 புராணங்கள், 18 உபபுராணங்கள், 18 கரங்களுடைய மஹா பத்ரகாளி (கும்பகோணம் அருகே திருவலஞ்சுழி), ஒன்பத்துவேலியில் 18 கரங்களுடன் திகழும் ஸ்ரீதுர்கை என்றாவாறாகப் பதினெட்டு என்ற புனிதமான எண் தெய்வீக மகத்வம் வாய்ந்ததாகும். ஆடிப் பெருக்கு எனப்படும் ஆடி மாத பதினெட்டாம் நாள் காவிரி நதிக்கே உரித்தான விசேஷ தினமாகும். பல அற்புதமான தெய்வீக சக்திகளும், மஹரிஷிகளின் தபோபல சக்திகளும் காவிரியில் பொங்கிப் புனலாய் வருகின்ற புனிதநாள். காவிரியின் இரு கரைகளிலும் குறித்த 18 இடங்களில் பதினெட்டு யோகியர்கள், மஹரிஷிகள், சித்புருஷர்கள் பூமியினடியில் பிருத்வியோகம் பூண்டு அதி அற்புதத் தவம் பூண்டிருக்கின்றனர். இவர்கள் ஆடிப் பெருக்கன்று யோகத்திலிருந்து மீண்டு, காவிரி நதியில் நீராடி தங்களுடைய தபோபலன்களைக் கலியுக ஜீவன்களின் சுபிட்சத்திற்காகக் காவிரித் தாயிடம் அர்ப்பணம் செய்கின்றனர்.

எனவே ஆடிப்பெருக்கன்று காவிரியில் எந்த இடத்திலும் புனித நீராடல், தர்ப்பணம், தாமரை இலையில் அகல் விளக்கேற்றி நீரில் விடுதல், பலவிதமான தானதர்மங்கள் செய்வோர்க்கு 18 உத்தம இறைத் தூதுவர்களின் அனுகிரஹம் கிடைக்கும். பலவிதமான கொடிய பாவங்களைத் தீர்க்கும் புனித பூஜை. இன்று காவிரிக் கரையில் தீர்த்த கண்டியினால் பூஜை செய்து உறவினர்க்குக் காவிரி நீர் நிறைந்த தீர்த்தகண்டியை அளிப்பது மிகச் சிறந்த புண்ணிய காரியமாகும். அஷ்ட வக்கரர், அணி ருத்ரர், அசலா முகீஸ்வரர், அம்பல தேசிகர், அருநந்தி கூபர், அறவான சித்தர், ஆருநாராயணர், அணிகல்பர், ஆசிதரர், அவுணரட்சகர், ஆடிண்யர், அர்க்யர், அசலர், ஆர்ப்பரித்தரர், ஆணிக்கர், ஆங்கீரஸர், அடலர், ஆரண்யர் - ஆகிய பதினெண்மரே அவ்விறைச் செல்வர்கள்!

ஆயுள் விருத்தியடைய

திருமீயச்சூர்

திருமீயச்சூர் மயிலாடுதுறையிலிருந்து 15 கிலோமீட்டரில் உள்ளது. இங்குள்ள மேகநாத சுவாமிக்குத் தாமரை இலையில் சங்கு புஷ்பம் வைத்து, அமிர்த யோக நேரத்தில் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் தானமும் செய்து வந்திடில் ஆயுள் விருத்தியடையும்.

மருமகன், மருமகள் திருந்திட

மரியாதை எல்லாம் மனசளவில் இருந்தால் போதும் என்கிற பேச்சோடு மாமியார், மாமனார் எதிரில் மருமகள்,  மருமகன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தால் மிகத் தவறாகும். இந்த தவறைத் திருத்தி ஒழுக்கத்தைக் கொண்டு வர வேண்டும் என்றால், மருமகன், மருமகள் திருந்தி வாழ வேண்டும் என்றால் ரங்க பஞ்சமி அன்று ஸ்ரீ ரெங்கநாதரின் பாதத்தில் 'குலால்' என்ற செந்தூரம் சார்த்தி வெள்ளை ரசகுல்லா தானம் செய்தால் இந்த நல்லொழுக்கமானது திருமணம் ஆன அன்றிலிருந்தே வந்து விடும்.

பெரியோர்கள் மதிப்பைப் பெற...

இளைஞர்களும் சகோதர சகோதரிகளும் வயதில் சிறியோரும் மனதில் வளர்த்துக் கொள்ள வேண்டிய முக்கிய மனப்பான்மை யாதெனில் வீட்டிலுள்ள பெரியவர்களுக்கு முதலில் உணவு அளிக்க வேண்டும். பெரியவர்கள் முன்பு நின்றுதான் பேச வேண்டும். சப்தம் போட்டுப் பேசக் கூடாது. அவரவர் கருத்தைத் தெரிவிக்க உரிமை உண்டு. ஆனால் முடிவு எடுக்கும் தகுதியைப் பெரியவர்களிடம்தான் விட்டுவிட வேண்டும். இளைஞர்கள் பெரியோர்களை மதிக்க வேண்டும் என்றால் வீட்டுப் பெரியவர்கள் எலுமிச்சை பழ சாதத்துடன் நல்லேரி வத்தலுடன் தத்தாத்ரேய கோயிலில் தானம் செய்திடில் பெரியோர் நலம் பெறலாம்.

நெருப்புத் துன்பங்கள்நீங்கிட....

18 கர துர்கை
ஒன்பத்துவேலி

சென்னை - கும்பகோணம் சாலையில் பூதங்குடி என்ற ஊரில் குடியிருக்கும் அன்னை மிகச் சக்தி வாய்ந்தவள். சாதாரண சமையலறை நிலையிலிருந்து பல நவநாகரீக அடுப்படியாக இருந்தாலும் அடுப்படி வேலை ஒன்றுதான். சமையலறையில் வேலை செய்கின்றவர்களுக்கும், கோயிலில் தீப்பந்தம்/காஸ் லைட், சமையல் செய்கின்றவர்களுக்கும். நெருப்பு சம்பந்தமான வேலைகளில் ஈடுபடுபவரும் எத்தகைய தீக்காயங்கள், தீ விபத்து ஏற்படாமல் இருக்க உதவும் அன்னையே “தீப்பாய்ந்த நாச்சியார் ஆவார்!” இந்த அன்னையை ஆண்டிற்கு ஒரு முறையாவது பக்தர்கள் தரிசித்து அன்னதானம் செய்து, பட்டு வஸ்திர தானம் செய்து வந்திடில் நலம் பெறுவர்.

நோய், நொடியின்றிக் கணவன்நன்கு வாழ்ந்திட

வாழ்க்கையில் பெண்கள் செய்யாத தியாகமே கிடையாது. தெய்வீகமான காதலுக்காக ஆருயிர்தனையே விடுகின்ற பெண்கள் ஏராளமாக உண்டு உலகம் பூராவும்! அப்படிக் காதலித்தவரே கணவராய்க் கிடைத்து விட்டால் அந்தக் கணவனுடைய நலனுக்காக எதையும் செய்யத் துணிந்த பெண்களும் உண்டு இந்த உலகத்தில்! இத்தகைய தியாகம் நிறைந்த பெண் குலம் இறைவனை வேண்டுவது எது தெரியுமா? தன் கணவன் ஆயுளோடு இருந்து நோய் நொடியில் விழாமல் ஆரோக்கியத்துடன் வாழ வரம் அருளும் ஆலயம் உண்டா என்று கேட்பவர்கள் நிறைய உண்டு. அவர்களுக்காக ஆன்மீகத்தில் அற்புத வழியும் உண்டு. இதற்கென்றே சிறப்பான ஆலயமும் உண்டு. விசேஷமான தெய்வ மூர்த்தியும் உண்டு! அதைக் கொஞ்சம் தேடிப் பிடியுங்களேன்....!

 மாமியார் - மருமகள் விரோதம் தீர....

புதிதாகத் திருமணம் செய்து கொண்ட கணவன், மனைவியைப் பார்த்துச் சொல்லித் தர வேண்டியது யாது எனில், “பெரியவங்களை நாம் தான் கொஞ்சம் அனுசரித்துப் போகணும். அம்மா கடகடன்னு பேசுவாள். மனதிலே சூது இருக்காது. நீ சின்னதா சொன்னாக்கூட பெரிசா போயிடும். ஆகவே கவனமாய் இரு!” என்று கணவன் சொல்ல வேண்டும். இவ்வாறு கணவன் சொன்னதை அப்படியே முழுக்க முழுக்க மனைவி ஏற்க வேண்டும் என்றால் அதற்குக் கணவன் செய்ய வேண்டிய தானம் உண்டு. வெங்காய அரிசிக் கஞ்சி மோர் தானம் தான் இது! அரச மரத்திற்கு கீழ் நாக ராஜாக்கள் அமர்ந்துள்ள கோயில்களில் இத்தானம்தனைக் கோடைகாலத்தில் செய்திடில் மாமியார், மருமகள் சண்டை வராமல் தடுக்கலாம்.

எவருக்கு எது முக்தி?

நிறைய பேர்கள் அவரவர் பிறந்த இடத்தைப் பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்வதுண்டு. இவை எல்லாம் நேரே போய்ப் பார்த்தால் தெரிந்து விடும். ஆனால் ஆன்மீகத்தில் மட்டும் நல்லெண்ணம், நற்செய்கை, நன்னடத்தை இந்நிலையை உடையவர்கள் மட்டும்தான் காசியில் இறந்தால் முக்தி, காஞ்சியில் இருந்தால் முக்தி, திருஅண்ணாமலையை நினைத்தால் முக்தி. இதையுணர்ந்து விட்டால் எத்தனை பேர் முக்தி அடைவார்கள் என்பதை ஆன்மீக உள்ளங்களே புரிந்து கொள்ளும்.

கயாவில் விட்டது எது?

காசி, கயா யாத்திரை செல்வோர், கயாவில் ஏதேனும் காய், கனி, இலையை இனி வாழ்நாள் முழுதும் உண்ண /பயன்படுத்த மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்து வருவார்கள். அதாவது மனோதிடம் நிறைந்த  வைராக்யமான வாழ்க்கையை வாழ இத்தகைய பிரதிக்ஞை உதவும். ஆனால் பெரும்பாலோர் கடனே என்று  ஏதோ ஒப்புக்காக அரச இலை, கிருணிப் பழம், நூல்கோல் என்று தனக்குப் பிடிக்காத, எப்போதாவது மட்டும்  கிட்டுகின்ற அவ்வளவாக வழக்கில் இல்லாதவற்றையெல்லாம் விட்டு வருவார்கள். அரச இலையை விடுவது மிகவும் வேதனைக்குரியது. தெய்வாம்சங்கள் நிறைந்த இத்தகைய சமித்து, இலையை எல்லாம் விடுதல் சாபத்திற்குரியது. மேலும் தனக்கு எது மிகவும் விருப்பமோ அதை விட்டால் தான் மன உறுதி பெருகும். வயதான பின், தின்றால் ஒரு பலாச் சுளையைக் கூட வயிறால் ஜீரணிக்க முடியாது  என்ற நிலையில் 60, 70 வயதுக்கு மேல் கயைக்குச் சென்று பலாப் பழத்தைவிட்டு விட்டேன் என்று சொல்வதால் என்ன பிரயோஜனம்! வாழைப்பழம், முருங்கை போன்றவற்றை விடுவதானால் வாழையிலை, தண்டு, பூ, முருங்கையிலை என அம்மரத்தின் பொருட்கள் முழுவதையுமே விட்டுவிட வேண்டும். மேலும் கணவன் கயையில் எந்தப் பொருட்களையெல்லாம் விட்டு விடுகின்றானோ அதையெல்லாம் மனைவியும் விட்டுவிட வேண்டும் என்பதே நியதி! இது பலரும் அறியா விஷயமாகும்.

நித்ய கர்ம நிவாரணம்

1.8.1998 – நல்ல மணம் (perfume) கலந்த சந்தனம் அரைத்துப் பெருமாளுக்கு புருவம், நாடி, இருதயத்தில் சாற்றினால், சந்தேகம் தீர்ந்து நலம் பெறுவர்.

2.8.1998 – வெள்ளைக் குதிரைக்குப் புல் அளித்தல் – முக்கிய பிரச்னைக்குத் தீர்வு பிறக்கும்.

3.8.1998 – ஆறு பெண், மூன்று பிள்ளைகளைப் பெற்ற தாய் தந்தையருக்குப் பாத பூஜை – பிரிந்த குடும்பம் ஒன்று சேரும்.

4.8.1998 – கேட்டை நட்சத்திர ஏழைப் பெண்களுக்கு மாங்கல்ய தானம் – செவ்வாய் தோஷம் தீரும்.

5.8.1998 – மூல நட்சத்திர பெண்களைத் திருமணம் செய்து கொள்ள முன்வரும் ஆண்களுக்குத் திருமணம் செய்து வைத்திடில் இறைவனின் அருட்புதையல் கிடைக்கும்.

6.8.1998 – குபேர பூஜை செய்திடில் இழந்த பெருஞ்சொத்து திரும்பி வர வழியுண்டு. இந்த நாளில் தொடர்ந்து பன்னிரெண்டு வருடங்கள் பூஜை செய்ய வேண்டும்.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

7.8.1998 – ஏழைத் தொழிலாளர்களுக்கு யூனிபார்ம் தைத்து அளித்திடில் மூடிய சிறு கம்பெனிகள் திறக்க வழியுண்டு.

8.8.1998 – சரபேஸ்வர பூஜையும், விரதமும், சுண்டல் தானமும் எதிரிகளிடமிருந்து விடுதலையைப் பெற்றுத் தரும்.

9.8.1998 – ஏழை செக்யூரிட்டிகாரர்களுக்கு டார்ச்லைட் தானம், நல்ல செய்தி வரும்.

10.8.1998 – ஏழை வைத்தியர்களுக்கு சோதனைக்காக சிறிய மின்விளக்கு தானம், பையனின் படிப்பு விருத்தியாகும்.

11.8.1998 – ஏழைகளுக்கு கண் பரிசோதனை செய்து கண்ணாடி தானம் செய்திடில் பெண் குழந்தையின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

12.8.1998 – கருங்குருவிகளுக்கு உணவு இடுதல் சனி பகவானின் ஆசியைப் பெறலாம்.

13.8.1998 – செஞ்சந்தனம் அரைத்து ஆஞ்சநேய சுவாமிக்கு மார்பில் சார்த்தி வெளிநாடு செல்கின்ற பையனுக்கோ, மகளுக்கோ கொடுத்து அனுப்பிடில் சந்தனம் தீரும் வரை துன்பம் வராது. அன்னதானம் மிக முக்கியம் (குறைந்தது 1000 பேருக்காவது!)

14.8.1998 – ஏழைத் தாய்மார்களுக்குப் பாலோடு பால் சங்கும் தானம்., நோயில் படுத்தவர் குணமடைய வழியுண்டு.

15.8.1998 – பல் செட்டுப் போடாத பெரியோர்களுக்கு பல்செட் வாங்கித் தருதல் – சிறந்த பேச்சாளராய் மாறலாம், தொடர்ந்து தானம் செய்து வந்திடில்..

16.8.1998 – திருமணம் ஆக வேண்டிய பெண்ணிற்கு அவள் விருப்பப்படி சிறிது சுவர்ண (தங்க) தானம் – தன் பெண்ணிற்கு வரன் தேடி வரும்.

17.8.1998 – கணிப்பொறி (Computer) படிக்க விரும்புகின்ற பையனுக்கு உதவி – மூளைக் குழப்பம் தீரும். முக்யமான பிரச்சனைகளுக்கு தீர்வு கிட்டும்.

18.8.1998 – சுவாமி திருவுலா வருகின்ற பழுதுபட்ட மர நந்தி எம்பெருமானைச் சீர் அமைத்து உலா எழுந்தருளச் செய்தல் – புளி வியாபாரிகளுக்கு வியாபார விருத்தி.

19.8.1998 – தெய்வத் திருப்பணிக்காக வண்ணப் பூச்சு (Paint) தானம் – உத்தியோக உயர்வு கிட்டும்.

20.8.1998 – சிவன் கோயிலில் உயர்ந்தவகை சாம்பிராணி தூப சேவை – பொருள் சேரும்.

21.8.1998 – ஊமைகளுக்கு உணவு தானம் – தாயினால் வரும் துன்பம் தீரும்.

22.8.1998 – வேறு எந்த இசையிலும் ஈடுபாடு கொள்ளாமல் கர்நாடக இன்னிசைப் பணியைச் செய்கின்றவர்களுக்கு உணவு, உடை தானம் – சொல்வன்மை பெருகும்.

23.8.1998 – நொண்டிக் குதிரைக்கு வைத்திய செலவு, இலவச பராமரிப்பு செய்திடில் அறிவு பெருகும்.

24.8.1998 – ஏழைகளுக்குத் துணி பெல்ட் தானம், தொழிலில் துணிவு தரும்.

25.8.1998 – இன்று ரேசர் செட் (Shaving Set) தானம் – சித்தப்பா, சித்தி சுகம் பெறுவர்.

26.8.1998 – சோப்பிற்கு பதிலாக பச்சைப் பயிறு மாவு , கடலை மாவு கலந்து தானமாக அளித்தல் – தோல் நோயைத் தடுத்த புண்ணிய சேரும்.

27.8.1998 – பஞ்சவர்ணக் கிளிகளுக்கு கொவ்வைப்பழம் அளித்தல் – உங்கள் கைக் குழந்தைகள் மேல் படுகின்ற திருஷ்டி தோஷங்கள் நீங்கும்.

28.8.1998 – இன்று மயில்கள்க்கு உணவிடுதல் – மானப் பிரச்னையிலிருந்து விடுதலை

29.8.1998 – மூன்றடிக்கு மூன்றடி யானைக்கால் வைத்து அமரும் மரப்பலகை தானம் – நித்ய வேதம் ஓதுகிறவர்களுக்கோ தேவி உபாசனை / நித்ய சிவபூஜை செய்கின்றவர்களுக்கோ தானம் – சந்ததி சுகம் அடையும்.

30.8.1998 – பொன்னாலான நவரத்ன மாலையை உண்மையான, நேர்மையான, நல்ல பக்தியை உடைய சிவனடியாருக்கு தானம் செய்திடில் கடன் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

31.8.1998 – நல்முத்து ஐம்பத்து ஒன்றைத் தங்கத்தில் கோர்த்து ஒரு முத்திரை முத்து வைத்து அன்பு பக்தி நிறைந்தவருக்கு அல்லது நல்ல தேவி உபாசகர்களுக்கு அளித்திடில் பெண் சந்ததியினர் நலம் பெறுவர்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam