அழற்பிழம்பின் அடியில் நிழற்பிழம்பாய்த் தங்கும் நாள் என்றோ !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

அறியக் கூடாதது யாதென அறிக!

‘இவரிடம் எதையும் மறைக்க முடியாது!’ என்ற முடிவுக்கு சிறுவன் ஆயிரத்தெட்டாவது முறையாக வந்தான்! முடிவில்லாத தலைப்பு தானே பெரியவரும், அவருடைய சித்த(ர்) லீலைகளும்! எத்தனை முறை அவன் இந்த முடிவுக்கு வந்தாலும், அவரிடம் வாயாரப் பேசுவது போல, நெஞ்சாரப் பேச முடியாதது ஏனோ தெரியவில்லையே? என அவனுக்குள்ளே கேள்விகளை அவ்வப்போது எழுப்பிக் கொண்டான்!

பெரியவர் எதைத்தான் அவனிடம் விட்டு வைத்தார்? இதையும் அவனிடமிருந்து “பிடித்த” பெரியவர், ‘அது எப்படிடா கலியுகத்துல நெஞ்சாரப் பேச முடியும்?” என்று அவனை “மனதார” அடக்கிய பெரியவர், அவனை முதுகில் நன்கு தட்டிக் கொடுத்து, “நாங்க மட்டும் யாருன்னு உனக்குத் தெரிஞ்சா, எங்களை விட்டு உன்னால ஒரு வினாடி கூடப் பிரிஞ்சு இருக்க முடியாதுடா ராஜா!” என்று சொல்லும் போது, அவருடைய கண்கள் பனித்தன.

ஆனால் அடுத்த விநாடியே இந்த சாந்த குண முக பாவத்தை மாற்றிக் கொண்டு, “அப்படி எங்க கிட்டேயே நீ ஒட்டிக் கிட்டா, யாருடா ஸ்கூலுக்குப் போறதாம்? கணக்குல முப்பத்தஞ்சு மார்க் வாங்கி, வாத்யார் கிட்ட யாருதான் உதை படறதாம்?” என்று கூறியவாறே சில்லறையைக் கொட்டியது போல் சிரித்திடவே, சிறுவன், “இவரை மட்டும் எந்தக் கணக்கில் சேர்ப்பதாம்?” என்று தன்னுள் கேட்டுக் கொண்டான்! கணிதத்தில் அடங்காப் புனிதராயிற்றே!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

“சிக்கெனப் பிடித்த பிடி”

‘சரி, சரி வேகமா நட! உன்னோட மனக் கேள்விக்குப் பதில் சொல்லியே குருகுலவாசக் காலம் ஓடிப் போயிடுச்சு! மிச்சத்துல என்னத்தைப் புடிச்சுக்கப் போறியோ, தெரியலையே? எல்லாம் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்! இந்தா, முதல்ல இந்த லாந்தர் வெளிச்சத்தைப் புடி பார்க்கலாம்!”

முதலில் அந்தக் கனமான மண்ணெண்ணெய் டின்னைச் சிறுவனிடம் பெரியவர் கொடுத்து விடவே, சிறுவன் சிறிது கூட விருப்பமில்லாமல் அதைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு அவர் பின்னால் நடந்து வர...

பெரியவர் லாந்தர் விளக்கைத் தூக்கிப் பிடித்த வண்ணம் முன்னே சற்று பெரிய தப்படிகளுடன் சென்று கொண்டிருந்தார்.

வழியெல்லாம் “என்னால் தூக்க முடியவில்லையே, ஒரேயடியா கனம் தோளை அழுத்துதே! பூமியில புடிச்சுப் புடிச்சு இழுக்குது! காலெல்லாம் வலிக்குது” என்று அடம் பிடித்துப் புலம்பிக் கொண்டே, வேண்டுமென்றே அவர் பின்னால் ஆமையை விட மிகவும் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தான் சிறுவன்.

என்ன கழற்றினாயப்பா?

ஆனால், ஒரு பர்லாங் கூட இப்படி நடந்திருக்க மாட்டான், மனதினுள் ஒரு சின்ன டிராமா ஆடி அவரிடம் அந்த “டின்னைக்” கழட்டி விட முடிவு செய்தான்!

“இந்த வாத்யார் எப்பவுமே இப்படித்தான்! எல்லா வெயிட்டையும் நம்ப தலையில கட்டிடுவார்! சின்னப் பையனாச்சேன்னு ஒரு இது கூடக் கிடையாது!”

சிறுவனுடைய வாய்ப் புலம்பல்கள், மனப் புலம்பல்கள் இரண்டின் “ஜுகல்பந்தி” இதுதானே!

தற்போது பெரியவரும் ஒரு வழியாய்ச் சற்றே மனம் இளகினார்.

“தெய்வீகத்துல அடம் பிடிக்காதேடா கண்ணு!” என்று சொல்லிப் பெரியவர், தான் வாங்கிய இரண்டு நீளமான தடிகளில், ஒரு தடியின் ஒரு நுனியில் ஒரு ஐந்து லிட்டரையும், இன்னொரு நுனியில் ஒரு ஐந்து லிட்டரையும் காவடி போல் டின்களைக் கட்டி, அவரே தோளில் தூக்கி வைத்துக் கொண்டார்.

“இப்பனாச்சும் லாந்தரையாவது தூக்கிக் கிட்டு வாடா கண்ணு!” என்று லாந்தர் விளக்கை அவனிடமே கொடுத்து விட்டார். லாந்தரைத் தொட்டுப் பார்த்தான் சிறுவன், நன்றாகச் சூடு ஏறி இருந்தது.

சுட்டதும் சுடாததும்!

பத்து அடிதான் அதனைத் தூக்கிக் கொண்டு நடந்திருப்பான், திடீரென்று லாந்தரைக் கீழே வைத்து விட்டு, “ஆ! சுட்டுடுச்சு, சுட்டுடுச்சு!” என்று கத்த ஆரம்பித்தான்.

ஆம், சிறுவனுடைய அடுத்த டிராமா அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது. “இந்த ஏழு மலையிலேயும் இந்த லாந்தர் லைட்டைத் தூக்க வச்சிட்டார்னா என்ன பண்றது? எப்படியாச்சும் இதையும் அவர் தலையிலேயே கட்டிட்டா, ஜாலியா நடந்து வரலாமே!” என்று நினைத்து விட்டான்!

“என்னடா கண்ணு இது உன்னோட பெரிய ரோதனையாப் போச்சு!” என்று சொல்லிக் கொண்டே, பெரியவர் அந்த லாந்தரையும் வாங்கி ஒரு வழியாகத் தன் கொம்பில் கட்டிக் கொண்டார். சிறுவனுக்குப் படு குஷியாகி விட்டது!

என்ன இது, ஆச்சரியமோ, ஆச்சரியம்!

“என்ன இது? தான் போடும் திட்டம் எல்லாம் இன்று, பழுத்து வருகின்றதே! ஒரு வேளை ஒட்டு மொத்தமாகக் கடைசியில் “பிரப்பம் பழம்” கதை ஆகி விட்டால்!” சிறுவனுக்குப் பயம் வந்து விட்டது.

“எல்லாம் நம்ப தலையெழுத்து! ஒத்தைக்கு ரெட்டையாய் நம் வாழ்க்கையில் ரெண்டு வாத்யாரிடம் பெரப்பம் பழம் வாங்க வேண்டியாகி விட்டதே!” சிறுவன் அழுத்துக் கொள்வான்.

சிறுவனிடம் அடிக்கடி மலரும் மனப் புலம்பல் வாக்கியங்கள் இவை!

பெரியவரிடம் லாந்தர் விளக்கையும் ஒரு வழியாய்த் தள்ளி விட்ட சிறுவன், “ஹாயாக நடக்கலாம்” என்றுதானே எண்ணினான். ஆனால் உண்மையில் என்ன நடந்தது தெரியுமா?

ஒரு தடியில் இரு புறமும், எண்ணெய் டின்களைக் கட்டிக் கொண்டு, கையில் லாந்தரை எடுத்துக் கொண்டு பெரியவர் வெகு வேகமாக மேலேறி நடக்கத் தொடங்கினார். சிறுவனோ, பெரியவரின் கோவணத்தில் தொங்கும் விசிறி மடிப்பைப் பிடித்துக் கொண்டே அவர் பின்னால் ஓடி வர வேண்டியதாயிற்று!

“பேசாமல் ஒழுங்காக எதையாவது தூக்கிக் கொண்டு அவர் பின்னால் மெதுவாகவே நடந்து வந்து இருக்கலாமே!” அவன் மனம் வழக்கம் போலக் கணக்குப் போட ஆரம்பித்தது.

மலை ஏறும் போது வண்டு, பூச்சிகள் எல்லாம் அந்த லாந்தர் லைட்டைச் சுற்ற ஆரம்பித்தன.

“என்ன வாத்யாரே! வண்டு, பூச்சி எல்லாம் வந்து பட்டு, பட்டு ஒரேயடியா நமச்சல் எடுக்குது, அங்கங்க உடம்புல புடுங்குது!”

“கவலைப் படாதே ராஜா! அது ஒண்ணும் நம்மளைப் புடுங்கலை! நாமதான் அவங்க ஏரியாவுக்கு வந்து அதுங்களோட நிம்மதியைப் புடுங்கறோம்! எல்லாமே காரண, காரியத்தோடதான்டா கண்ணு நடக்குது!”

இருந்தாலும் சின்னஞ் சிறுவனாய் அவனால் எவ்வளவுதான் தாங்க முடியும்?

“தங்குவதும் தாங்குவதும் இறைவன் சித்தம்” என்று பதில் கூறினார் பெரியவர்.

தவளைப் படுக்கை சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் தவளைப் படுக்கைச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

தவளை இனத்திற்கும் தக்க குரு உண்டு!

“தவளைப் படுக்கைச் சித்தர்” என்ற பெயர் வரக் காரணமும் அநாதிப் பூர்வமான பல அனுபூதிகள் ஆகும். தம் குலத்தைக் காத்த கட்டை விரல் அளவே உள்ள சித்தர் பிரானை ஆனந்தப் பெருக்கில் தவளைகள் தம் முதுகில் சுமந்து அருணாசலப் புனித பூமியில் வலம் வந்தமையால் “தவளை படுக்கைச் சித்தர்” ஆனார். அருணாசல கிரிவல அனுபூதி ஒன்றின் மூலமாகவே தவளைகள் தம் குலகுருவை அறிந்த அனுபூதியே வரும் மாத சிவராத்திரி நாளாக மலர்கின்றது.

மனிதனைத் தவிர, ஏனைய உயிரினங்கள் யாவுமே, மனிதனை (இறைப்) பகுத்தறிவு செறிந்த நிலை கொண்ட உத்தம நிலையராகப் போற்றி மதிக்கின்றன என்பதே உண்மை. ஆனால் விலங்குகளும், தாவரங்களும் போற்றுமளவிற்கு மனிதன் முழுமையான ஆறறிவு மனிதனாக வாழவில்லை என்பதும் வேதனையான உண்மையே!

தவமிகு தவளை நாதங்கள்

இவ்வகையில், நீரிலும் நிலத்திலும் வாழ வல்ல அரிய தன்மைகளைப் பெற்ற தவளை இனமானது, ஆமைகளைப் போல் அளப்பரிய அற்புத யோக சக்திகளைக் கொண்டவையாம். தவளைகளில் இருந்து மனித குலம் கற்றுக் கொள்ள வேண்டிய தெய்வீகப் பாடங்கள் நிறையவே உண்டு. தவளைகளின் குரல் நமக்குக் “கர காரா, கொரா கொரா” போன்று இருந்தாலும், இசைத் துறையில், அவற்றின் நாளங்கள் வாயுநாத வளநாத யோக சக்திகளைக் கொண்டவை.

தவளைகளின் இயற்கைக் குரல் வள ஸ்வரங்களுக்குக் “கரகூபம்” என்று பெயர். ஆயிரக் கணக்கான தவளைகள் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து, ஒரு வகை வருண பூத நாத ஒலிகளை எழுப்பினால், அங்கு ஏழு நாழிகைகளில் நிச்சயமாக நல்ல மழைப் பொழிவு ஏற்படும். அதாவது கரகூப வருண பூதநாத ஒலிகள் வருண மூர்த்திக்கு மிகவும் ப்ரீதி அளிப்பதாகும். வருண ஹோமத்தில் தவளைகளை ப்ரீதி செய்வதற்கான அதிமந்திரங்கள் பல உள, இவற்றை நன்கு அறிந்து, முறையாக வருணஜபம் ஆற்றிடில், நிச்சயமாக நல்மழை பெய்யும்.

ருசி கண்டார், ருசியே கண்டார்!

கலியுக ஆரம்பத்தில், திருஅண்ணாமலையாம் அருணாசலத்தில், காளிங்க நாகத்தின் வம்சமான பூத்தலையான் எனும் நாகமானது, தினந்தோறும் பத்தாயிரம் பெரிய வகைத் தவளைகளைப் பகல் பொழுதில் உண்டு வந்தது. ஊர்கின்ற பிராணிகளே இயற்கைப் பூர்வமாகப் பாம்பிற்கு உணவு என்றாலும், ருசி காரணமாக, அளவுக்கு மிஞ்சி ஒரு பிராணிக் குலத்தையே உண்டு தீர்ப்பது நியாயமாகுமா? இதனால் பெரிதும் கவலையுற்ற தவளை இனமானது பல இடங்களிலும் இருந்து திரண்டு வந்து அருணாசலத்தில் கிரிவலம் புரிந்து இறைவனிடம் முறையிட்டன.

தவளைகள் சேர்ந்து வந்து கூட்டம், கூட்டமாய்க் கிரிவலம் வருதலானது, பூத்தலையான் நாகத்தின் பசி வேட்டையை இன்னமும் மிகவும் எளிதாக்கி விட்டது. இவ்வாறு, நாட்கள் ஆக, ஆக பூத்தலையான் நாகத்தின் அகங்காரமும் ஆணவமும் பெருகி, “தன்னைக் கேள்வி கேட்பார் யாரும் இல்லை!” என்ற திமிறும் அதிகமாகி நாககுல தர்ம நியதிகளை மீறி, நாக குலத்திற்கே பலத்த சாபங்களைப் பெற்றுத் தந்து விட்டது.

மஹாபாகவதத்தில், ஜனமேஜயன் மஹாராஜா, தன்னுடைய தந்தையை நாகம் தீண்டியமையால், நாகக் குலத்தையே அழிக்கும் பொருட்டு, சர்ப ஹரப் புற யாகத்தைத் தொடங்கிட, சர்ப மந்திரத்திற்குக் கட்டுப்பட்டு, அனைத்து லோகங்களில் இருந்து, லட்சக் கணக்கான பாம்புகள் வேள்வித் தீயில் புகுந்து மாண்டன அல்லவா!

தக்க நேரத்தில் வந்தருளும் தகைமைசார் சத்குரு

அப்போது, நாக குலத்தின் தலைமைப் பீட குருவான ஸ்ரீஅஸ்தீக சித்தர் முன் வந்து, ஜனமேஜயனுக்கு அறிவுரை தந்து, வேள்வித் தீயில் அக்னியிற் கரைந்த நாகங்களை மீட்டு, நாக குலத்தையே காப்பாற்றினார்தாமே! இதனால்தான் உலகில் எங்கும், எவ்விடத்திலும், எதிலும் நாகத்தைக் கண்டாலும், “அஸ்தீக சித்தரே போற்றி!” என ஓதிடில், அனைத்து நாகங்களும் பணிந்து வழிவிடும், ஒதுங்கித் தன் வழியே சென்றிடும்.

இதே நிலை தற்போது தவளை குலத்திற்கு வந்து விட்டது போலும்! பூத்தலையான் நாகம் நாக குலத்திற்கே சாபங்களை ஆக்கிக் கொண்டிருந்தமையால், நாக குலத்தையும் காப்பாற்றிடவும், அஸ்தீகர் தம்முடன், தவளைப் படுக்கைச் சித்தர் எனப் பின்னர் பிரசித்தி பெற்ற ஓர் அற்புதச் சித்தருடன் அங்கே தோன்றி, பூத்தலையான் நாகத்திற்குப் புத்திமதி கூறினார்.

பூத்தலையான் நாகமும், தான் அசுர நாகமாதலின் தனக்குப் பெருந் தீனி தேவை எனக் கூறிடவே, அஸ்தீக சித்தருடன் வந்த சித்தர்பிரானும், பூத்தலையான் நாகத்திடம் தன்னை விழுங்கிப் பசியாறி, தவளைக் குலத்தைக் காக்கும்படி அறிவுரை கூறினார். வந்தவர் வையம் புகழும் வைராக்யச் சித்தர் என அறியாத நாகமும், சற்றும் சுணங்காது அச்சித்தர்பிரானை உடனேயே விழுங்கி விட்டது.

ஆனால் அவரை விழுங்கிய உடனோ, அந்நாகத்தால் ஒரு விநாடி கூட அமைதியாக இருக்க முடியவில்லை. ஏதோ அடிவயிற்றை அதிஉஷ்ணமாக, நெருடுவது போல, தன்னுடைய பிரம்மாண்டமான உடலை உருட்டி, உருட்டி, நகர்ந்து, நகர்ந்து அருணாசலத்தையே கிட்டத்தட்ட கிரிவலமே வந்து விட்டது.

தவளைக் குலங்காத்த தவப்புனற் சித்தர்

ஜோதிப் பிரகாசராய், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் அச்சித்தர்பிரான் நாகத்தின் வயிற்றினுள் அக்னிப் புராந்தக யோகம் பயின்றிடவே, அத்தனை ஆண்டுகளாக அந்நாகம் உண்ட அனைத்து வகையான பிராணிகளும் எலி, கீரி, தவளை, பறவைகள், மீன்கள் என அத்தனையும் லட்சக் கணக்கில் மகிழ்ச்சியுடன் அதனுடைய வாயிலிருந்து வெளி வந்து குதூகுலத்துடன் திருஅண்ணாமலையின் அடர்ந்த காட்டிற்குள் விரைந்தோடின.

ஆம், அத்தனை கோடிப் பிராணிகளுக்கும் தம் அக்னி யோகத் தவத்திறத்தால் சடாம்பர சுத்தி புத்தி நிலையை அளித்தவரே இப்பெருஞ்சித்தர் பிரானாகிய தவளைப் படுக்கைச் சித்தர் ஆவார்.

தம் இனத்தில் கோடிக் கணக்கான தவளைகள் அழிந்தனவே என வருந்தி அருணாசல கிரிவலம் வந்த தவளைக் குலத்தின் கண் முன்னரேயே, பூத்தலையான் நாகத்தின் வயிற்றில் இருந்து அத்தனை லட்சாதி லட்சம் தவளைகளும் உயிர்த்தெழுந்து ஊர்வது கண்டு அனைத்துத் தவளைகளுமே மகிழ்வு கொண்டு ஆனந்தக் கூத்தாடின.

பூதாகாரமாய்ப் பெருத்து இருந்த பூத்தலையான் நாகமும், மெலிந்திட, அதன் வயிற்றில் அக்னிப் புராந்தக யோகம் பூண்டிருந்த சித்தர்பிரான் தாமே அதன் வயிற்றில் இருந்து விலகி அதன் திறந்த வாய் மூலமாக, அமைதியாக வெளிக் கிளைத்து நடந்து வந்தார். பூத்தலையான் நாகத்திற்கும் தம்முடைய பூர்வ ஜன்ம நினைவுகள் ஏற்பட்டு, அருணாசல வாசம் புரிந்த புண்ய சக்தியாலும் சித்தர் பிரானைத் தன் வயிற்றில் தாங்கிய வசத்தாலும் அவரிடமே தன் ஜன்ம சாபல்யத்திற்கு வழிவகை தேடிக் கொண்டது.

தவளைப் படுக்கை கண்டாரே!

உயிர்த்தெழுந்த அத்தனை லட்சம் தவளைகளும் வரிசையாக, யோகப் பூர்வமாகக் கிரிவலப் பாதையில் அமர்ந்து, தம் மீது சித்தர்பிரானை சிம்மாசனம் போல் அமரவும், யோக சயனத்தில் படுக்கவும் செய்து, கோலாகலமாக அவரைத் தம் முதுகில் சுமந்து கொண்டே அருணாசலத்தைக் கிரிவலம் வந்திட, அவரும் இவ்வாறாகவே “தவளைப் படுக்கைச் சித்தர்” என்ற காரணப் பெயரைப் பூண்டார்.

தவளைகளுக்கு நீரிலும் நிலத்திலும் வாழ்கின்ற அபூர்வமான த்விசாகரப் பிராணாயாம சக்திகள் நன்கு பரிமளித்துத் துலங்குவதால், ஏனைய பூவுலகின் ஜீவன்களுக்காக அவை இதனை ஆக்கப் பூர்வமாகப் பயன்படுத்தும் முறைகளைத் தவளை படுக்கைச் சித்தர் தவளைக் குலத்திற்கு போதித்து, அவற்றின் சற்குருவாகவும் விளங்குகின்றார்.

நீரிலும் நெருப்பு உண்டு!

உதாரணமாக, “நீரிலும் நெருப்பு உண்டு!” என்பது சித்தர்களின் நீராக்னி மறைக் கோட்பாடு, தவளைகள் தம் நீரடி சுவாசத்தால் நீரில் மறைந்திருக்கும் மிகவும் அபூர்வமான யோகாக்னி சக்திகளைத் தம் யோக சுவாசப் பிரமாணத்தால் கிரகித்து, நிலத்தில் உறைகையில் பிராணாயாம சுவாச வகுப்பு, கராகம சப்தம், மாண்டூக சதபூரி, இடைவெளித் தாண்டல் போன்ற தாரண யோகச் சுழல்பதங்கள் மூலமாக பூமிக்கு நல்குகின்றன.

தவளைகள் எழுப்பும் சப்தங்களுக்கும் பலவிதமான அர்த்தங்களும், பலாபலன்களும் உண்டு. தவளை சப்தத்தைக் கொண்டு அளிக்கப்படும் சகுன சாஸ்திர நியதிகளும் உண்டு. சத்துவ ஸ்வரங்களை கொண்டவையே தவளை சப்தமாகும். தவளைகள் தன் சப்தத்தால் தாம் இருக்கும் இடத்தைக் காட்டிக் கொண்டு பாம்பிற்கு இரையாகின்றன என்று எண்ணாதீர்கள், பாம்பிற்கும் யோகச் செவி உண்டு. தவளை எழுப்புகின்ற “பாத்திர கீதை, மாண்டூகசுதம், தவளாம்ருதப்பரி” போன்ற வகை நாதங்கள் ஆதிசிவன், யோகரங்கர், வருண மூர்த்திக்கு மிகவும் ப்ரீதியானதாகும்.

தவளையில் தவழும் தத்துவ நாதங்கள்

தவளை நாதத்தில் பல வாஸ்து ரகசியங்களும் பொதிந்துள்ளன. எந்த நிலத்தில் தவளைகள் எவ்வாறு ஒலி எழுப்புகின்றன என்பதைப் பொறுத்து அந்நிலத்தின் உரத் தன்மை, விளைச்சல் தன்மை, விளையும் பயிர் வகைகள் போன்றவற்றை நம் முன்னோர்கள் நிர்ணயித்து, இதனைத் “தவளையம்பதி” பூகோளப் பாடமாக நன்கு அறிந்திருந்தனர்.

தவளையின் குரல், ஈசனை மிகவும் மகிழ்விப்பதாகும். குறிப்பாக, மாலைப் பிரதோஷ நேரத்திற்குப் பின், மழைக் காலத்தில் தவளைகள் எழுப்பும் விசேஷ சுக்ரதாள நாதத்தை, வெள்ளீஸ்வர மூர்த்தி மிகவும் மகிழ்ந்து ஏற்கின்றார். தவளைகளின் நாதத்திற்கு ஏற்ப ஈஸ்வரன் தம் கட்டை விரலை ஆட்டுகின்றார். நடராஜப் பெருமானின் கட்டை விரலின் ஒவ்வொரு அசைவிற்கும் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. ஆக்குவித்து ஆக்குதல், ஆட்டுவித்து ஆட்டுதல், ஆக்குவித்து ஆகுதல், ஆட்டுவித்து ஆடுதல் போன்ற – 1008 விதமான – தவளை நாதத்திற்கு ஏற்ப ஈஸ்வரனின் கால் கட்டை விரல் அசைவு நர்த்தன முறைகள் உண்டு.

பொதுவாக தவளை சப்தம் அடிக்கடி நிலத்தில் கேட்பதானது மூன்று போக விளைச்சல் ஏற்படுவதைக் குறிக்கும் நல்ல சகுனமாகும். கிழக்கில் தலை வைத்து, மேற்கில் உடலைச் சற்றே தூக்கி இருக்கும் தவளையை கண்டால் அன்று நிச்சயமாகப் பணவரவு ஏற்படும். தவளை நாதமானது மானுட உடலில் உள்ளே எத்தனையோ நாளங்களை ஆக்கப்படுத்த வல்லவையாம்.

தேவமொழி மற்றும் தமிழ் மாமறை தினமும் ஓதுதல், கேட்டல், பாராயணம் செய்தல், எண்ணெய் நீராடல், புனித நதி நீராடல், குறித்த ஹோரை நேர மழையில் நனைதல், கர்நாடக சங்கீதக் கீர்த்தனைகள் பாடுதல், கேட்டல், ஸ்ரீகபாலீஸ்வர வழிபாடு, சில வகை விருட்சங்களின் தரிசனம் போன்றவை பல கபாலச் செல்களை ஆக்கப்படுத்த வல்லவையாகும். தீர்கமான முடிவெடுத்தல், புத்தி கூர்மை, நாதமய ஞானம் பெற இவை உதவும்.

லட்சக் கணக்கான மூளை செல்களையும் ஒவ்வொரு விநாடியும் உபயோகப்படுத்துகின்றவர்களே ஞானிகள் ஆவர்.

தவளை நாதத்தை எல்லோரும் வாரம் ஒருமுறையேனும் கேட்டாக வேண்டும். இதற்காகத்தான் மாத சிவராத்திரி போன்ற இரவு நேர கிரிவலம், ஆலய வழிபாடுகளை நமக்குத் தந்துள்ளார்கள். ஒருமுறை நீங்கள் தவளையின் நாதத்தைக் கேட்டால், உடனடியாகப் பல்வகை கபால மூளை செல்கள் ஆக்கம் பெறுவதால், எத்தனையோ துன்பங்களைத் துடைக்கும் தீர்க தரிசனமான முடிவுகளை நீங்கள் எடுத்திட முடியும்.

எனவே கிராமப் புறங்களில், வயல், குளம் எனும் இடங்களில் தவளையின் நாதத்தை ஒரு நாழிகை நேரமாவது இருந்து கேட்டிடப் பழகுங்கள். இதனால் நல்ல, நினைவுத் திறனும், நல்ல ஞாபக சக்தியும் உண்டாகும்.

ஜவ்வரிசியில் பொலியும் தவளைக்கண் பாயசம்

“ஜவ்வரிசிப் பாயசத்தை தவளைக் கண் பாயசம்” என்று வேடிக்கையாகச் சொல் வது உண்டு, ஆனால் இதில் நிறைய ஆன்மீக அர்த்தங்கள் உண்டு. நீரினுள்ளும் நன்கு காண வல்லதே தவளையின் கண்கள். 180 டிகிரிக்கும் அப்பாற்பட்டதையும் காண வல்லவையே தவளைக் கண்கள். ஜவ்வரிசி தவளை நாதத்தின் சக்திகளை கிரகித்து அளிக்கின்ற தேவசக்திகளைக் கொண்டவையாகும். இதனால்தான் மழைக் காலங்களில் நல்ல சூடான ஜவ்வரிசிப் பாயசம்., பஜ்ஜி உணவைப் பெரியோர்கள் ஏற்று தவளையின் நாத சக்திகளை நன்கு பயன்படுத்திக் கொண்டார்கள்.

தவளைக் குலத்திற்குத் தவளைப் படுக்கைச் சித்தர் புனர்ஜென்மம் அளித்த பிறிதொரு யுகத்தின் யோகப்புரி நன்னாளே, தற்போது தாரண வருட கார்த்திகை மாத சிவராத்திரி தினமாக வந்தமைகின்றது. வரும் மாத சிவராத்திரி நாளே, கட்டை விரல் அளவே உள்ள தவளைப் படுக்கைச் சித்தர் கிரிவலம் வரும் நாளாகும்.

கேட்கும் சக்தி விருத்தி அடைய உதவும் கிரிவல சக்தி

காது மந்தமாக உள்ளோர், காது கேளாதோர், ஒரு காது மட்டும் கேட்பவர்கள், காதில் அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், பாம்புக் கடி, தேள் கொட்டுப்பட்டவர்கள், குடும்பத்தில் எவரேனும் செவிடு ஆனவர்கள், பாடகர்கள், நல்ல பாடகர்கள் குடும்பத்தில் வந்தவர்கள், குரல் வளத்தைக் கொண்டு தொழில் செய்பவர்கள், பேச்சாளர்கள், பிரசங்கிகள், உபன்யாசக் கர்த்தாக்கள், சொற்பொழிவாளர்கள், அதிகமான சப்தம் உடைய இயந்திர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் போன்றோர் இன்றைய மாத சிவராத்திரியில் ஜவ்வரிசி வடாம், ஜவ்வரிசிப் பாயசம் தானம் தந்து கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானது.

குறிப்பாக நாதயோக உபாசனையில் ஈடுபாடு உள்ளோர் இதில் நன்கு மேன்மை பெற இம்மாத கிரிவலம் மிகவும் உதவும்.

திருக்கார்த்திகை தீபம்

ஸ்ரீசனத்சுஜாத மஹரிஷிக் குழுவினர் கிரிவலம் வருகின்ற தாரண வருடத் திருக்கார்த்திகை பிரம்மோற்சவம்!

உலகத்தின் தெய்வீக மையமாக விளங்குவதே நம் புனிதமான பாரத நாடு, பாரதத்தில் பிறத்தல், இதிலும் “தென்னாடுடைய சிவனே போற்றி!” என்பதாக, உலகாளும் சர்வேஸ்வரன் ,லட்சக் கணக்கான ஆலயங்களில் சுயம்பு மூர்த்திகளாய்த் தோன்றி, பிரபஞ்சத்திற்கே அருள்பாலிக்கும் தென்னாட்டில், பிறத்தல் அருட் பெரும் பேறாகும். இதிலும் தெய்வத் தமிழ் கூறும் நல்உலகாம் தமிழ்நாட்டுப் புண்ணிய பூமியில் பிறந்திருப்பது என்னே இறைப் பெரும் பாக்யம்! இங்கு மானுடராய்ப் பிறப்பெடுத்தலே பேரானந்தப் பெருநிலை எனில், இனியேனும் இதனை நன்கு உணர்ந்து செயலாற்றுவீர்களாக! எவ்வகையிலோ?

பெறுதற்கரிய இம்மனித வாழ்வில், சாதி, மத, குல, இன, ஆண்கள், பெண்கள், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என எவ்வித பேதமுமின்றி, பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஒவ்வொரு விநாடியும் மனத்தாலும், உடலாலும், உள்ளத்தாலும், தக்க சற்குரு காட்டுகின்ற நல்வழியில்  வாழ்வதே உத்தம மானுட வாழ்க்கையாகும். சற்குருவை அடைய வல்ல தலையாய ஆன்மீக வழிமுறை ஆவதே திருஅண்ணாமலையின் அருணாசல கிரிவலமும், இங்கு ஆற்றும் அன்னதான இறைப்பணியும் ஆகும்.

இங்கு, அருணாசலத்தில், கார்த்திகை தீப நாளில் நாம் அருணாசல மலையில் காணும் ஜோதியே நம் மானுடக் கண்களால் நாம் காண வல்ல ஆண்டவனின் எளிய இறை வடிவாகும். ஆனால் இறைவனை, நல்ஜோதியாக, இவ்வாறாக எளிமையாக நாம் காணும் பாக்கியத்தை, திருஅண்ணாமலை மூலம் பெற்றிருப்பது, ஆக்கித் தந்திருப்பது, சித்தர்களின், மகரிஷிகளின், தபோ பலன்களாகவே, பித்ருக்களின் ஆசிகளாகவே என உணர்தலே உண்மையானதாம்.

அருணாசலமாம் திருஅண்ணாமலையில், ஒவ்வொரு நாளின், ஒவ்வொரு மணி நேரத்தின், ஒவ்வொரு விநாடியின் கிரிவலமுமே, எண்ணற்ற அதியற்புதமான பலன்களைத் தர வல்லவை, சொல்லில் அடங்கா, சொக்கன் ஜோதி மஹிமையிது!

ஒவ்வொரு ஆண்டின் திருக்கார்த்திகைத் தீபத்திலும், மனித குலத்திற்குச் சிறப்பான முறையில் தீப ஜோதி சக்திகளை எளிமையாகப் பெற்று அருளும் வகையில், சித்தர்கள், மகரிஷிகள் அருணாசலத் திருத்தலத்திற்கு வந்து செல்கின்ற அனுபூதிகள் கலியுகத்தில் நிகழ்வது நமக்குப் பெரும் பாக்கியமே! தினந்தோறுமே, கோடானு கோடிச் சித்தர்களும், மகரிஷிகளும் அருணாசலத்தில் கிரிவலம் வந்திட்டாலும், மானுடர்களாகிய நாம் சாதாரணமான முறையில் காணும் வகையில், நன்கு அறியும் பாங்கில், திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவில், அவர்களைப் பல வடிவுகளில் தரிசிக்கின்ற நல்வாய்ப்புகள், இங்கு தீபோற்சவத்தில் பத்து நாட்களிலும் கிரிவலம் வருகின்ற அனைவருக்குமே நிச்சயமாகக் கிட்டுகின்றன.

அருணாசலத் திருக்கார்த்திகை, தீப கிரிவல பிரம்மோற்சவத்தை ஒவ்வொரு ஆண்டும், ஒவ்வொரு சித்தர், மகரிஷிகளின் குழாம், தேவபூர்வமாக ஏற்று நடத்துகின்றார்கள் அல்லவா! இவ்வகையில், நடப்பு தாரண ஆண்டில் அருணாசல தீப கிரிவல உற்சவத்தை நடத்தித் தருபவர்களே சனத்சுஜாதர் மகரிஷி குழாம் ஆகும்.

சனத்சுஜாத மஹரிஷி, தென்முகக் கடவுளின் திருவடிப் பொடி மாமுனி!

கலியுகத்தில் மக்கள் இவ்வாறு சித்தர்களின், மகரிஷிகளின் தரிசனத்திற்காக ஏங்குவார்கள் என்பதால்தான், தட்சிணா மூர்த்தியின் திருவடிகளில் வீற்றிருக்கும் மகரிஷிகளுள் ஒருவராகிய சனத்சுஜாதர் மகரிஷி, சித்தரையும், மாமுனியையும் தரிசிக்க வேண்டித் திரியும் சாதாரண மனிதர்களுடைய அபிலாட்சைகளை, நியாயமான விருப்பங்களையும், வேண்டுதல்களையும், நிறைவேற்றிடவும், தாரண ஆண்டில், இவ்வருட் பெரும் மகரிஷி, தாமே பத்து நாட்களிலும், பல வடிவுகளில் அருணாசல கிரிவலம் வந்து, தம் தபோ பலன்களை, சித்த தரிசன அனுபூதிகளாகவும் அர்ப்பணிக்கின்றார்.

திருஅண்ணாமலை திருக்கார்த்திகை உற்சவமானது பிரம்மோற்சவக் கொடி ஏற்றும் முதல் பத்து நாட்களுக்கு மேல் நடைபெறுகின்றது. இந்தப் பத்து தினங்களிலுமே, தினந்தோறுமே ஆழ்ந்த குருபக்தியுடன் வேண்டி கிரிவலம் வருவோர்க்கு சித்தரின், மகரிஷியின் தரிசனம் நிச்சயமாகக் கிட்டிடும்.

17.11.2004 புதன் கிழமை கொடியேற்றம்

இன்று அருணாசல திருக்கார்த்திகைக் கொடியேற்றப் பெருவிழாவில் துவங்கி, தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில் தேவ பூர்வமாக கிரிவல உற்சவாதிகளை நிகழ்த்தித் தருகின்ற உத்தமப் பெருந்தகையே சனத்சுஜாதர் மகரிஷி!

“கொடியேற்றம்” என்பது இப்பிரஞ்சத்தின் மூலாதாரமான அருணாசல பூமியில், பிரபஞ்சத்தின் தூலசரீரமாகத் துலங்குகின்ற கொடிக் கம்பத்தின் பாதத்தில் இருந்து சஹஸ்ராரத்திற்குச் சென்று பரஞ்ஜோதியைத் தரிசிக்கின்ற ஜோதிப் பாதையை உணர்த்துவதாகும்.

இத்தாரண ஆண்டின் திருக்கார்த்திகை ஜோதியைக் காட்டுகின்ற மாமுனித்ரய ஜோதியே, சனத் சுஜாதீய ஜோதி மார்கமாகப் பிரகாசிக்கின்றது.

இவ்வாண்டின் கார்த்திகை பிரம்மோற்சவப் பத்து நாட்களிலும், சனகாதி மாமுனிவர்கள் பலரும் சேர்ந்தும், தனித்தும், கூட்டாகவும், தினந்தோறும், எப்போதும், எந்நேரமும் கிரிவலம் புரிந்து கொண்டிருப்பதால், இந்தப் பத்து நாட்களிலும் தொடர்ந்து அருணாசல கிரிவலம் ஆற்றுவோர், உத்தம மஹரிஷியாம் “சனத்சுஜாத மகரிஷியோடு கிரிவலம் வந்தோம்!” என்ற உன்னத பாக்ய நிலையும் பெற்றோம் எனப் பரமானந்தம் கொண்டிடலாம்.

இன்று அருணாசலேஸ்வரர் ஆலயத்தின் கொடிக் கம்பத்தருகே நின்று, தரிசித்து,

“சனத்சுஜாதீய க்ருத ஜோதி
சனத்சுஜாத க்ருதமாலா,
சனத்சுஜாதக் க்ருத ப்ரம்மம்!”

-என்று 108 முறை ஓதி கொடிக் கம்பத்தருகே விளக்கேற்றி, கொடிக் கம்பத்தையும், கொடியையும் தரிசித்து, அருணாசலக் கிரிவலத்தைத் தொடங்கி, அருணாசல மலையை வலம் வந்து, இவ்விடத்திலேயே கிரிவலத்தை முடித்துப் பூரணம் செய்வது சஜாதசுகானந்த கிரிவலம் ஆகும். இந்நாளில் ஸ்கந்த சஷ்டித் திதியும் கலந்து பரிமளிக்கின்றது.

சோமாஸ்கந்த தரிசனம்

கிரிவலத்தில், ஸ்ரீரமணாஸ்ரமத்திற்கு முன் வரும், அஷ்ட லிங்கங்களுள் ஒன்றான தென் கிழக்கு திசைக்கு உரிய அக்னி லிங்கத்திற்கு அருகில் உள்ள இந்திர தீர்த்தக் கரையில் இருந்து மலையைப் பார்த்திட, இருபுறமும் சிவனும், பார்வதியும் நடுவில் முருகனும் இருக்கின்ற நிலையிலான சோமாஸ்கந்த தரிசனம் கிட்டும்.

இங்கு ஆறு விதமான தைலங்கள் கூடிய சஷ்டித் தைலத்தால் 6 முதல் 64 தீபங்கள் வரையும், இதற்கு மேலும் ஏற்றி வழிபடுதல் ஸ்கந்த லோகத்து தேவதா மூர்த்திகளின், பித்ரு பத்னியரின் அளப்பரிய அனுகிரகத்தைப் பெற்றுத் தரும்.

பிறர் தன்னுடைய குடும்பத்திற்கு, தொழிலுக்கு, வியாபாரத்திற்கு, சுய கௌரவத்திற்கு, அந்தஸ்திற்கு ஆற்றிய துன்பங்கள், பங்கங்கள், கொடுமைகளைத் தாங்க இயலாது பரிதவிப்போரின் மனம் சாந்தம் அடையும்படி நல்ல சம்பவங்கள் நிகழ இன்றைய கிரிவலப் பலன்கள் உதவும்.

ஆன்மீக ரீதியாக, வாழ்க்கையில் தெய்வீகமாக ஒரு நற்காரியத்தையேனும் ஏற்று, சந்ததி, சந்ததியாகத் தொடர்ந்து நிகழ்த்தி வருவதற்கான நல்அனுகிரகத்தைப் பெற்றிட, இன்றைய கிரிவலம் உதவும்.!

இன்றைய கிரிவலத்தில் ஓத வேண்டிய மந்திரமாவது:

யஸ்ய தேவே பராபக்திர் யதா தேவே ததா குரௌ
தஸ்யைதே கதிதா ஹ்யர்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மன:

தமிழ் மந்திரம்

“குருபாற் செறியும் குருபர அன்பு
இறைபாறி செறியும் அரபரகுணமே
ஆத்மம் ஆத்மம் இவைதாம் உம்மே!”

ஸ்ரீசாமுண்டேஸ்வரி திருஅண்ணாமலை

18.11.2004 – வியாழக் கிழமை

நட்சத்திரங்களில் திருவோணமும், திதிகளில் ஏகாதசியும், நாட்களில் செவ்வாயும், வியாழனும், பல்வகையான வழிபாடுகளுள், உண்ணா விரதப் பூஜா சக்திகளைக் கொண்டவை ஆகும். இந்நாட்களில் உண்ணா நோன்பு ஏற்றுப் பூஜிப்பது மகத்தான காரிய சத்திகளை அளிப்பதாகும்.

ஒரு ஏகாதசித் திதியின் ஆரம்பம் முதல் முடிவு வரை, முழுமைக்குமாக, பக்திப் பூர்வமாக ஏகாதசி விரதம் இருந்து, முறையாக அருணாசல கிரிவலம் வருதலால் கிட்டும் பலன்களை உடனடியாகவே வாழ்வில் கண் கூடாகக் கண்டிடலாம்.

இன்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் சுமங்கலித்வ சக்திகள் பெருகி அருளும் சிவலிங்க வளாகமான ஸ்ரீகல்யாண சுந்தரேஸ்வரர் சன்னதியில் கிரிவலத்தைத் தொடங்கிட வேண்டும். கிரிவல நிறைவாக, ஆலயத்தின் கிழக்கு நுழை வாயிலை ஒட்டி அமைந்துள்ள சுமங்கலித்துவ சக்திகளைக் காப்பாற்றி ரட்சிக்கும் ஸ்ரீசாமுண்டீஸ்வரியிடம் கிரிவலப் பலாபலன்களை அர்ப்பணித்து கிரிவலத்தை நிறைவு செய்தல் இல்லறப் பெண்களுக்கு அளப்பரிய நன்மைகளைத் தருவதாகும்.

சனத்சுஜாத மகரிஷி, திருவோண நட்சத்திரத் தின விரதம் பூண்டு, அருணாசலக் கிரிவலத்தைக் கடைபிடித்து, திருவோண உபவாச பலாபலன்களை இன்று சுமங்கலித்வ சக்தி நிரவும் திரவியங்களில் பதித்து அர்ப்பணிக்கின்றார். இவை கணவனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீணட ஆயுளையும் தரவல்லவை. மஞ்சள், குங்குமம், தேங்காய், மாங்கல்யச் சரடு, மெட்டிகள், புடவை, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, கண் மை போன்ற மங்கள சக்திப் பொருட்களை ஏழைச் சுமங்கலிகளுக்கு இன்று அளிப்பதால், மாங்கல்ய சக்தி நன்கு வளம் பெற்றுக் கணவனைக் காப்பாற்றும்.

திருவோண நட்சத்திரத்தில் உண்ணாவிரதம் இருக்க இயலாதவர்களும், உண்ணாவிரதம் பூண்டு எவ்வாறு 14 கி.மீ கிரிவலச் சுற்றளவை முடிப்பது என்று எண்ணுவோரும்

-இல்லத்தில் எவரையேனும் சிராவண நட்சத்திரம் எனப்படும் திருவோண நட்சத்திர நாளில் உண்ணா நோன்பு (உபவாசம்) பூணச் செய்தும் அல்லது தாம் பழங்களையோ ஒரு வேளை மட்டும் புசித்தோ எவ்வகையிலேனும் விரதம் பூண்டு கிரிவலம் வருதலும் விசேஷமானதாகும்.

சுமங்கலித்துவ சக்திகள் நிறைந்தவற்றுள் மல்லிகைப் புஷ்பமும் ஒன்றாகும். இன்றைய கிரிவலத்தில், நிறைய உதிரி மல்லிகைப் புஷ்பங்களை வாங்கிக் கொண்டு, கிரிவலத்தில் ஆங்காங்கே தெய்வ மூர்த்திகளுக்குச் சார்த்தி வழிபடுதல் விசேஷமானது. கிரிவலப் பாதையில் வாகனங்கள் நிறைய வருமாதலால் மல்லிகையைத் தொடுத்துக் கொண்டே நடக்காமல் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

திருவோண நட்சத்திரத்திற்குரிய தாவரமான எருக்கம்பூ மாலையை ஆங்காங்கே விநாயகருக்குச் சார்த்துதல் விசேஷமானது.

திருவோண நட்சத்திர மிருகமாக அமையும் பெண் குரங்குகளைக் கிரிவலப் பாதையில் கண்டால் அவற்றிற்கு பழம், பட்சணங்களை அளித்தல் சுப சகுனங்களாகும். குறிப்பாக, கருவுற்றோ, பிள்ளைத் தாய்ச்சியாகவோ இருக்கின்ற கருங்குரங்கு தரிசனம் நல்வாழ்க்கைக்கு நல்ல சகுனமாகும். குரங்குகளுக்கு நிறைய பிஸ்கட்டுகள், தண்ணீர், பழங்கள் கொடுத்தவாறு கிரிவலம் வருதல் விசேஷமானது.

திருஓண நட்சத்திரத்திற்கான பறவை நாரையாக விளங்குவதால், தம்பதி சகிதமாக வரும் வெள்ளை நாரைகளைக் கிரிவலத்தில் காண்பது இல்லறப் பெண்களுக்கு மனம் மகிழும்படியான நல்ல அனுபூதிகளை ஆக்கித் தரும். சனத்சுஜாத மஹரிஷி இவ்வாறாக ஒவ்வொரு நட்சத்திர நாளிலும் கிரிவலம் வருவதன் மகிமைகளை நன்கு விளக்கியுள்ளார்.

கேளாமலே தரும் கெழுமிய கிரிவல சக்திகள் இன்று பூரிக்கின்றன. இன்று கிரிவலத்தின் போது ஓத வேண்டிய மந்திரமாவது:

கோபாலா! கோபாலா !

“உத்காடயேத் கவாடம் து
யதாகுஞ்சிகயா ஹ்ருஹம்
குண்டலின்யா ததாயோகீ
மோட்சத்வாரம் ப்ரபேதயேத்”

தமிழ் மந்திரம்

“யோகப் புலத்தால் யோகச் சாயை
யோகச்சயமாய் யோகச் சாவி
மோகமறுத்துப் போகத் துரியல்
மோட்சக் கதவு மேபரமாமே!”

19.11.2004 வெள்ளிக் கிழமை

தேய்பிறை அஷ்டமியானது, கால பைரவருக்கு மிகவும் விசேஷமாக விளங்குவது போல, வளர்பிறை அஷ்டமி திதியானது, பித்ருக்களின் உத்தம நிலைக்கும்., பசுக்கள் முக்தி அடைவதற்கும், பித்ரு பத்னியர் மென்மேலும் பல உன்னத தெய்வீக நிலைகளை அடைவதற்கும், துறவிகளாக வாழ்ந்து மறைந்தோர் நன்னிலை பெறுவதற்கும் மிகவும் விசேஷமான நாளாகும்.

வளர்பிறை அஷ்டமியில், கோபாலனாகிய ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே தம்முடைய திருக்கரங்களால் பசுக்களுக்கு நீராட்டி, உணவூட்டி, கோ பூஜைகளை நிகழ்த்துகின்றார். சனத்சுஜாத மகரிஷி இன்று தூல, சூக்கும வடிவுகளில் கோ பூஜை ஆற்றி, பசு கன்றுடன் கிரிவலம் வருதலால், இன்று கிரிவலம் வருவோர் கோ பூஜை நிகழ்த்தி, கன்றுடன் கூடிய பசுவிற்கு உணவளித்து, கோ சூக்த மந்திரங்களை ஓதியவாறு பசு, கன்றுடன் கிரிவலம் வருதல் குடும்பத்திற்கு நல்ல க்ஷேமத்தைத் தரும். சந்ததி விருத்திக்குப் பித்ருக்களின் ஆசிகளையும் பெற்றுத் தரும்.

வீட்டில் பெரியோர்கள் இல்லையே என ஏங்குவோரின் மனக் கவலைகள் தீரும் வண்ணம் தக்க சான்றோர்களின் அறிவுரை கிடைக்க இந்தப் பசு, கன்றுடன் கூடிய கிரிவலம் உதவும்.

இன்றைய கிரிவலத்தை ஆலயத்தில் மூலவருக்குப் பின்னால் உள்ள ஸ்ரீவேணுகோபால சுவாமி சன்னதியில் வேண்டி பசு, கன்றுடன் கிரிவலத்தைத் தொடங்கி, நிறைவில் கிழக்குக் கோபுர வாயிலில் தென்படும் மற்றொரு பசுவிற்கு மஞ்சள் குங்குமம் இட்டுப் பழங்கள் கொடுத்து நிறைவு செய்தலால், சனத்சுஜாத மகரிஷி ஓதும் கோ சூக்த மந்திரத்தின் ஓரனுவாக மந்திர ஜபத்தை முறையாக ஓதிய பலா பலன்களைப் பெற்றிடலாம் இது பித்ருக்களுக்கு உய்வு தருவதாகும்.

இன்றைய கிரிவலத்திற்கான மஹாமந்திரமாவது:

ப்ரம்மாம்ருதம் பிபேத்பைட்ச
மாசரேத் தேஹ ரட்சணே
வஸதே காந்திகோ பூத்வா சைகாந்தே
த்வைத – வர்ஜிதோ
இத்யேவ – மாசரேத் தீமான் ஸ ஏவம்
முக்திமாப்னுயாத்

தமிழ் மந்திரம்

உண்ணும் உணவாம் உடல் கா பிட்சை
மண்ணும் இடமோ தனியாதிருத்தல்
பண்ணும் இதுவே பர ஆறறிவே!

20.11.2004 சனிக் கிழமை கிரிவலம்

சனத்சுஜாத மகரிஷி சிவ, வைணவ பூஜைகளில் வல்லவர். சிவ வைணவ பேதங்களைக் கடந்தவராய் அனைத்திலும் ஈஸ்வர தரிசனத்தைப் பெற்ற உத்தம மகரிஷி.

உலகில் எல்லா இடங்களிலும் இரவும், பகலும் சமகாலமாக இருப்பதில்லை. விஞ்ஞானத்தில் சூரிய கதியை நிர்ணயித்துப் பகல் நேரத்தை வைத்தாலும், உலக ஜீவன்களின் இரவு நேர காரியப் பலன்களே பகல் நேரத்தை நிர்ணயிப்பதாகவும், பகல் நேர காரிய விளைவுகளே இரவு நேரத்தை நிர்ணயிப்பதாகவும் சித்தர்கள் உரைக்கின்றார்கள்.

சனத்சுஜாத மகரிஷி பகலும், இரவும் சேரும் சந்தியா சாந்த சத்ய குண நேரத்திலும், இரவும் பகலும் சேரும் சாந்த சந்த்யா வித்ய குண நேரத்திலும் பல அரிய பூஜைகளைக் கடைபிடித்து, இதன் உத்தம பலன்களை, இன்று அருணாசல கிரிவலப் பகுதியில், 64 திக்குகளிலும், மலை முகடுகளில் நிரவுகின்றார்.

கிருத யுகத்திலும், திரேதா யுகத்திலும் இரவு நேரப் பகல் அம்சங்கள் மாறுபடும். உதாரணமாக, இன்று முதல், விஷ்ணு த்ரிராத்ரி விரத பூஜை தொடங்குகின்றது அல்லவா! விஷ்ணு த்ரிராத்ரி விரத பூஜை என்றால், கிருத யுகத்தில் மூன்று இரவு நேரக் காலங்கள் தொடர்ந்து வருவதாக, இடையில் பகல் நேரமின்றிச் சில பூமிகளில் நீடித்திருக்கும். விஷ்ணு த்ரிராத்ரி விரத பூஜைக்காக விசேஷமாகச் சூரிய மூர்த்தியே தக்க கிரக கதியை மாற்றிக் கொள்வார்.

இன்றைய கிரிவலத்தை ஸ்ரீகாலபைரவர் சன்னதியில் தொடங்கி, கிரிவலம் வந்து ஸ்ரீபூதநாராயணப் பெருமாளை தரிசித்து, பிரளய சக்திகள் நிறைந்த வடக்குக் கோபுரத்தில் நிறைவு செய்தல் மிகவும் விசேஷமானதாகும்.

இன்றைய கிரிவலத்தில் ஓத வேண்டிய துதி:-

“யதா சிவமயயோ விஷ்ணுரேவம்
விஷ்ணுமய: சிவ:
யதாந்தரம் ந பச்யாமி ததா மே ஸ்வஸ்தி –
ராயுஷி”

தமிழ் மந்திரம்

அரனுறையாவும் அரிமளமாமே
அரயுளதாவும் அரத்துறையாகும்
அரிஅரனெம்முள் ஒருபரமாத
கண்டும் விண்டும் பெருமங்களமாம்!

சனத்சுஜாத மஹரிஷி இன்றைய விஷ்ணு த்ரிராத்திரி விரதத்தைப் பல விஷ்ணு லோகங்களிலும் கடைபிடித்து, இதன் பலாபலன்களை திருஅண்ணாமலையில் இன்று ஸ்ரீபூதநாராயண சுவாமியிடம் அர்ப்பணிப்பதால், இதன் பலாபலன்கள் நம்முடைய சகோதர மக்களாக வாழ்கின்ற ஆர்க்டிக், அண்டார்டிக், நார்வே போன்ற நாட்டு மக்களுக்கும், ஜீவன்களுக்கும் தேவையான இரவு நேர பூஜா சக்திகளைப் பெற்றுத் தரவும் மிகவும் உதவுவதாகும்.

அலுவல், வியாபாரம் காரணமாக கணவன் மனைவி, பிள்ளைகள் பிரிந்து வாழும் குடும்பங்களில் அனைவரும் ஒன்று சேரவும்,

பெற்றோர்கள், பிள்ளைகள் இடையே உள்ள மனஸ்தாபம் தணியவும் இன்றைய கிரிவலம் உதவும்.

21.11.2004 ஞாயிறு கிரிவலம்

வாலகில்ய மகரிஷிகளின் தலைமையில் தாரண ஆண்டு கார்த்திகை பிரம்மோற்சவ நாளில் அமையும் ஆதிவாரம், பானு வாரம் எனப்படுவதான பாஸ்கரராகிய சூரியருக்கு உரித்தான ஞாயிற்றுக் கிழமையன்று சூரிய மூர்த்தியே கிரிவலம் வருகின்ற பாக்யத்தை நாம் இன்று பெறுகின்றோம்.

சூரிய மூர்த்தி தாரண ஆண்டின் கார்த்திகை தீப உற்சவத்தில் தம் பத்னி மூர்த்திகளாம் சாயா, ஸ்வர்ச்சலாம்பா சமேதராய் கிரிவலம் வந்து, சனத்சுஜாத மகரிஷி போன்ற எண்ணற்ற மகரிஷிகள், சித்தர்களிடம் வேதோபதேச மந்திரங்களைப் பெற்று, தம் சூரிய கிரணங்களில் பதித்து, உலக ஜீவன்களுக்கு அளிக்கின்றார்.

பொதுவாக வாழ்க்கையில் தர்மம், சத்தியம், வாய்மை, நேர்மை, நாணயம் ஆகிய ஐந்தையும் கடைபிடிப்போர்க்கு, பக்தி நிலையின் ஆரம்ப நிலை தானாகவே பூர்வ ஜன்மப் புண்ணியமாக வந்தடையும், இத்தகைய அரிய மூலாதார ஆரம்பப் படியிலிருந்து அடுத்த உத்தம நிலைகளுக்கு மேன்மை பெற, சத்திய லோகத்தைச் சார்ந்த சத்திய வர மகரிஷி துணை புரிகின்றார்.

சத்திய லோகத்தில் பூக்கின்ற ஒரு வகைத் தேவபுஷ்பமானது தும்பைப் பூவை விட, வெண்ணிறச் சந்திரனை விட, மிகவும் தூய்மையான வெண்ணிறம் உடையதாகும். இத்தகைய வேதநித்ய சத்தியப் புஷ்பங்களைச் சுமந்து வரும் வாலகில்ய மகரிஷிகளுடன், சனத்சுஜாத மகரிஷியும் சேர்ந்து புஷ்பக் காவடி சுமந்து கிரிவலம் வருகின்ற அற்புத நாள் இது. இன்று எந்த அளவிற்கு வெண்மை மற்றும் ஆரஞ்சு நிறப் புஷ்பங்களைக் கிரிவலத்தில் சுமந்து வர முடியுமோ அந்த அளவிற்கு மூங்கில் கூடையில் சுமந்து வந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி கிரிவலம் வருதல் விசேஷமானது;

“விஸ்வரூபம் ஹரிணம் ஜாதவேதஸம் பராயணம்
ஜ்யோதிரேகம் தபந்தம் ஸஹஸ்ர ரச்மி:
சததாவர்தமான: ப்ராண: ப்ரஜானா முதத்யேஷ சூர்ய:”

தமிழ் மந்திரம்

“எங்கும் நிரவிடும் ஏதனக் கிரணங்கள்
எல்லாம் அறிதல் எங்கும் உறைதல்
எல்லா வடிவாய் எதிலுறை ஞானம் சொல்லாம் ஆதவ அருஞ்சுடராமே!”

தினமும் சூரிய மூர்த்தியின் தேருக்கு முன் வேதமந்திரங்களை ஓதியவாறு சூரியத் தேரின் விரைவுக்கு ஈடு கொடுத்து விரைந்து வரும் கட்டை விரல் அளவே உள்ள வாலகில்ய மகரிஷிகளை சனத்சுஜாதர் பூவுலகில் அருணாசலப் புண்ணிய பூமியில் வரவேற்று, பூவுலக ஜீவன்களுக்கு அருள்பாலிக்க வேண்டுகின்றார்.

சனத்சுஜாத மகரிஷி வாலகில்ய மஹரிஷிகளோடு கீழ்க்கண்ட வகையில் ஸ்ரீகாயத்ரீ முத்திரையை இட்டு கிரிவலம் வருதலால், இதே போன்று இன்று அருணாசல கிரிவலம் வருபவர்களும் ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை இட்டு இதன் ஊடே அருணாசல மலை தரிசனங்களை ஆங்காங்கே பெற்று வருதல் விசேஷமானது.

இன்றைய கிரிவலத்தை கிழக்கு கோபுரத்தில் தொடங்கி, தெற்கு, மேற்கு, வடக்கு மீண்டும் கிழக்கு கோபுர தரிசனங்களை ஸ்ரீகாயத்ரீ கோபுர தரிசன முத்திரை மூலம் தரிசித்து, கிரிவலத்தைத் தொடர்ந்து, பூதநாராயணப் பெருமாள் – இரட்டைப் பிள்ளையார் இடையில் உள்ள ஸ்ரீவீரபத்ரர் சன்னதியில் நிறைவு செய்திட வேண்டும்.

பொதுவாக, வெளியில் சொல்ல முடியாத பல விஷயங்களை மனத் தாங்கல்களாக சுமந்து, பெரும் மனபாரத்தால் அவதியுறுகின்ற இல்லறப் பெண்மணிகளுக்கு, இன்றைய கிரிவலம் நற்சாந்தி பெற்றிட மிகவும் உதவும்.

22.11.2004 திங்கட் கிழமை

இன்று சனத்சுஜாத மகரிஷி வேத சக்திகளைப் பலவிதமான வேதநிதி சக்திகளாக, வேத மந்த்ர, யந்த்ர, தந்த்ர, சக்திபாடப் பூர்வமாக மாற்றி பூவுலக ஜீவன்களுக்கு அருளும் வண்ணம் அளித்து நிரவிக் கிரிவலம் வருகின்ற திருநாள்.

வேதநிதி என்பது வேத சக்திகளின் மூலம் பெறுகின்ற புனிதமான தன கடாட்சம் ஆகும். இன்று ஏழ்மை நிலை மற்றும் நடுத்தரக் குடும்பத்தைச் சார்ந்த தேவமொழி வேதம் ஓதுபவர்கள், அருந்தமிழ் மறை ஓதுபவர்கள், ஓதுவார்கள் போன்றோரை அழைத்து வந்து அவர்களோடு காலாற கிரிவலத்தில் நடந்து, பக்தியுடன் அவர்களை தேவார, திருவாசக, திருப்புகழ், திருமந்திரங்கள், பட்டினத்தார் பாடல்கள், வள்ளலார் சுவாமிகளின் அருட்பா, அருணாசல கவிராயர் பாடல்கள், சற்குரு தியாகராஜ சுவாமிகள், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் போன்றோருடைய பக்திக் கீர்த்தனைகள் போன்றவற்றை ஓத வைத்து, பாடியவாறே இன்று அருணாசல கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையது.

இவ்வகையில்தாம் சனத்சுஜாதரின் சங்கல்ப சக்திகளால் இன்று பல்வகை வேத சக்திகளும், வேதநிதி சக்திகளாகின்றன. இதன் பலாபலன்களாகக் கிட்டுகின்ற தனமாகிய செல்வ சக்திகளே செல்வம் நிலைத்து நிற்கவும் பெரிதும் உதவும். செல்வம் பெறு முன் அதனை “(விட்டுச்) செல்லா (வீட்டுச்) செல்வமாக” ஆக்கிட வல்ல தனஸ்திர செல்வ சக்திகளை முறையாகப் பெற வேண்டும். வருகின்ற பணமும் நன்முறையில் செலவாகுதலும் மிகவும் முக்கியமானது.

இன்று சனீஸ்வர மூர்த்தி சர்வ உத்தாண ஏகாதசி விரதம் பூண்டு வேத லோகங்களில் தாம் இன்று பெற்ற வேதநிதிப் புஷ்பங்களால் அண்ணாமலையாரை அர்ச்சித்து வழிபடுகின்ற கரிநாளும் ஆகும்.

கலியுகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் திருமணம் ஆகும் வரை நல்ல புனிதமான பிரம்மச்சர்யப் பாதையைக் கைக்கொள்ள வேண்டும். பிறகு திருமணம் புரிந்து இல்லற தர்மத்தைப் பேணுதல் வேண்டும். திருமணம் ஆகும் வரை உடல், மன சக்திகளைக் காமத்தில் விரயம் செய்தல் கூடாது. முறையற்ற காம எண்ணங்களில் புண்ய சக்தியை விரயம் செய்தலால் எதிர்கால வாழ்க்கை சூன்யமாகி விடும்.

இளைஞர்கள் தினந்தோறும் பிதாமகர் பீஷ்மரை நினைந்து போற்றி, காலையிலும் மாலையிலும் 24 முறை வைராக்ய சாதகர் பீஷ்மத் துரீயருக்கு அர்ப்பணம், தர்ப்பணம், சமர்ப்பணம் என்றும்,

“ஸ்ரீபீஷ்மசுதம் தர்ப்பயாமி
ஸ்ரீபீஷ்மதனம் தர்ப்பயாமி
ஸ்ரீபீஷ்மகுணம் தர்ப்பயாமி
ஸ்ரீபீஷ்மஸ்புடம் தர்ப்பயாமி
ஸ்ரீபீஷ்மதரம் தர்ப்பயாமி“

-என்ற வகையில் பீஷ பஞ்சகத் தர்ப்பணம் அளித்தல் இளைஞர்களின் மனதை நன்கு வைராக்யப்படுத்தும், அநாவசியமாகக் காமத்தின்பால் மனம் அலை பாயாது தடுக்கும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் அர்க்ய மந்திரமிது!

நன்கு நிமிர்ந்து நின்று, இரு உள்ளங்கைகளிலும் நீரைச் சுமந்து விரல் நுனிகளின் வழியாக முப்பத்து மூன்று தடவை அர்க்யம் விடுதலே பீஷ்மார்க்யமாகும்.

சிவகங்கை தீர்த்தம்
திருஅண்ணாமலை

கங்கையின் புதல்வர் ஆதலால் கங்கை நீரில் அர்க்யம் அளிப்பது அர்க்யப் பலன்களைப் பன்மடங்காக்கி மனதை இளமையிலேயே நன்னெறிப்படுத்தும், இளைஞர்கள் பீஷ்மாச்சார்யாரை குருவாக ஏற்றுச் செயல்படுதல் நன்னெறிகளைத் தரும். தான் பரிசுத்தமான பிரம்மச்சரியத்தில் துய்த்தாலும், கலியுகத்தில் பிரம்மச்சரிய நியதிகள் மிகவும் கடினம் என்பதால் அனைவருக்கும் திருமண வாழ்க்கை கூடிய இல்லற தர்மத்தை வலியுறுத்தியவரே பீஷ்மாச்சாரியார் ஆவார்.

தீய வழக்கங்கள் சற்றும் அண்டாது, மனதை இறைவன்பால் செலுத்த வல்ல மாமந்திரச் சாதனங்களுள் பீஷ்மார்க்ய வழிபாடும் ஒன்றாகும்.

இன்றைய அருணாசல கிரிவலத்தை ஆலயத்தில் சிவகங்கைத் தீர்த்தத்தில் தொடங்கி, தெற்குக் கோபுரத்தில் நிறைவு செய்தல் வேண்டும்.

“ஹகாரேண பஹிர்யாதி ஸகாரேண விசேத்புன:
ஹம்ஸ ஹம்சேத்யமும் மந்த்ரம் ஜீவோ ஜபதி ஸர்வதா“

தமிழ் மந்திரம்

ஹகாரத்தவராய் வெளி யுலகாகி
ஸகாரத்தவராய் உள்பரிவாரே
ஹம்ச சிவ ஹம்ச ஹர ஹம்ச புலப் பரமே!
ஹம்ச பர ஹம்ச பரி ஹம்ச சிவ தளமே

-மேற்கண்ட மந்திரத்தை ஓதியவாறே குறைந்தது 36 இடங்களில் ஸ்ரீபீஷ்மாச்சாரியாருக்கு அர்க்யம் அளித்தலால், முறையற்ற காம மன இச்சைகளும், தீய வழக்கங்களும் அகல உதவும்.

இன்று கரிநாளும் கூடுவதால் சனத்சுஜாத மகரிஷி நல்ஒழுக்கந் தரும் வேதமறைச் சக்திகளை, கருவேப்பிலை, அகத்தி, புதினா, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி போன்ற மூலிகைத் தளங்களில் பதித்து வைக்கின்றார். ஆகையால் இன்று கருவேப்பிலைத் துவையல், கருவேப்பிலை கலந்த அன்னத்தையும், இம்மூலிகைத் தைலங்களையும் தானமாக அளிப்பதால், வாழ்க்கையில் பலரையும் பற்றியுள்ள கரிதோஷங்கள் அகல உதவும், கரிநாளில் தாம் பல்வகையான கரிதோஷங்களை அகற்ற முடியும்.

விபரீதமான எண்ணங்கள் ஏற்படுதல், செய்யாத தவறுகளுக்குத் தண்டனை, வீண்பழி சுமத்தல், தேவையில்லாத சச்சரவுகளில் சிக்குதல் போன்றவை கரிதோஷங்கள் ஆகும்.

23.11.2004 செவ்வாய்க் கிழமை

இன்று சனத்சுஜாத மகரிஷி துளசி தேவதா மூர்த்திக்குக் கல்யாண உற்சவத்தை நிகழ்த்தி, கிரிவலத்தைத் தொடங்குகின்றார். இன்றைய கிரிவலத்தை, பூத நாராயணப் பெருமாளுக்குத் துளசி மாலை சார்த்தி கிரிவலத்தைத் தொடங்கி, மீண்டும் துளசி மாலை சார்த்தி, பூத நாராயணப் பெருமாள் சன்னதியிலேயே கிரிவலத்தை நிறைவு செய்தல் விசேஷமானது.

இன்று, கையில் அல்லது மஞ்சள் நிறப் பையில், பெரிய வகை நெல்லிக் கனிகளைத் தாங்கி, (குறைந்தது 36),

“யத்ர யத்ர மனோயாதி ப்ரம்ஹணஸ் தத்ர தர்சனாத்
மனஸா தாரணஞ்சைவ தாரணா ஸா பரா மதா!”

தமிழ் மந்திரம்

செல்லும் மனமோடு செல்!
சென்றவிடமெங்கும்
அல்லும் பகலுமாய் சிவபாதங் கண்டு செல்!
கல்லாத மனமும் கள்ளுண்ட மனமும்
அல்லல் ஆகாதே காண்!

-என்ற மந்திரத்தை ஓதியவாறு கிரிவலம் வந்து ஆங்காங்கே கண்களில் தென்படும் துளசிச் செடிகளுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை, வசதி இருப்பின் புடவையும் சார்த்தி கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும். புடவை, ரவிக்கையை எவரேனும் எடுத்து விடுவார்களோ என்று எண்ணாதீர்கள். துளசிச் செடிக்கு ரவிக்கை அல்லது புடவையோடு கூடிய ரவிக்கை சார்த்துவதுடன் உங்கள் பணி முடிந்தது. அதன் பிறகு எவருக்கு இவை கிட்ட வேண்டும் என்று இருக்கிறதோ அவரை அது சென்றடையும் என்பதில் உறுதியாக இருங்கள் அல்லது துளசிக்குச் சார்த்திய புடவை, ரவிக்கையை நீங்களே தானம் செய்திடுங்கள்.

கிரிவலம் முடிந்த பின் வீட்டில் நெல்லிக் கனிகளை ஊறுகாயாக ஆக்கி, தயிர் சாதத்துடன் அன்னதானமாக அளித்திடுவதால், திருமண தோஷங்கள் பலவும் நிவர்த்தி ஆவதற்கு இந்த அருணாசல கிரிவலம் உதவும். இன்றைய செவ்வாயில் கூடும் லட்சுமி கடாட்சம் நிறைந்த துவாதசித் திதியில், விஷ்ணுபதியான மஹாலக்ஷ்மி அம்சங்கள் நிறைந்த நெல்லிக் கனிகளைத் தானமாக அளித்தலும் விசேஷமானதே!

24.11.2004 புதன் கிழமை – பிரதோஷத் திருநாள்

பிரதோஷ நாளில் அருணாசலத்தை கிரிவலம் வருகின்ற பாக்யம், இதிலும் அருணாசலத் திருக்கார்த்திகை உற்சவ காலத்தில் அமைவது மிகவும் விசேஷமானதாகும். எல்லாம் வல்ல பரம்பொருளே அருணாசல மலையில் வீற்றிருப்பதால், பிரதோஷ நேரத்தில் அருணாசல கிரிவலம் வருவதால், 64 தேவ திசைகளில் இருந்தும் பரமேஸ்வரனை வழிபட்ட அனுகிரகத்தைப் பெற இது உதவுகின்றது.

அன்றும், இன்றும், என்றுமாய் அருணாசல மலையின் மீது பரிபூரண மானுட வடிவில் துலங்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, பிரதோஷ நாட்களில் ஞானப் பிரகாசப் பொன்னிற மானுட வடிவில் அருள்கின்றார். பாக்யம் உள்ளோர்க்கு பிரதோஷ நேர மாலை சந்த்யா காலத்தில் அருணாசல மலை மீது பொன்னிறக் கதிர்கள் பிரகாசிப்பதைத் தரிசித்திடலாம்.

இறைவனே, இதிலும் ஞானகுரு மூர்த்தியாய் சர்வேஸ்வரனே முழு மனித வடிவத்தில் தரிசிப்பதெனில் என்னே பெரும் பாக்யம். இன்று பிரதோஷத்திற்கு முன்னும் பின்னும் அருணாசல மலை மேல் ஸ்ரீதட்சிணாமூர்த்தியைத் தரிசிக்கின்ற சனத்சுஜாத மகரிஷி, இன்று ஆழ்ந்த பக்தியுடன் தென்முகக் கடவுளின் துதிகளை ஓதி கிரிவலம் வருவோர்க்கு ஞான தரிசனப் பலன்களை அளிக்கின்றார். குறிப்பாக புத்தி கூர்மை, நல்ல நினைவாற்றல், நல்ல கல்வி அறிவைப் பெற இன்றைய கிரிவலம் மிகவும் உதவும்.

பொதுவாக, நல்ல வேலையில் சேர எந்தக் கல்வி அறிவு தேவை என அறியாது திகைப்பவர்கள், குறித்த அலுவலகத் தேர்வுகளை எழுதித் தேர்வு பெற்றால்தான் சம்பள உயர்வு, பதவி உயர்வு என்ற நிலையில் தேர்வில் வெற்றி பெற இயலாதோர், பிள்ளைகள் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துக் கல்வியில் பின்னடைந்து இருக்கின்றார்களே என்று ஏங்குவோர்,

 - போன்றோரின் குறைகள் தீர்ந்து நன்னிலைகளைப் பெற இன்றைய கிரிவலப் பலாபலன்கள் உதவும். இன்று கிரிவலத்தில் ஓத வேண்டிய மாமந்திரத் துதியாவது:-

பஸ்மாவ்யா பாண்டு ராங்க:
சசிகலதரோ ஜ்ஞான முத்ராட்சமாலா
வீணா புஸ்தைர் – விராஜத்
கரகமலதரோ யோக பட்டாபிராம:
வ்யாக்யா பீடே நிஷ்ண்ணோ முனிவர
நிகரை: ஸேவ்யமான: ப்ரஸன்ன:
ஸவ்யால: க்ருத்திவாஸா: ஸததமவது
நோ தட்சிணாமூர்த்திரீச:

தமிழ் மந்திரம்

நீறென நெடிய மேனி நெற்றியில் பிறையாளத்தான்
யாரென ஞானமோதம் யாழ், நூல் எனப் பரிவாகம்
தேரென யோகராமன் தெள்ளியர் தோத்தும் வாரன்
பேறெனத் தென்முகச் சிவனே பேரென ஓதுவாரே!

இன்றைய கிரிவலத்தை தட்சிணா மூர்த்தி சன்னதியில் தொடங்கி வடக்குக் கோபுர தரிசனத்துடன் மலையைப் பார்த்து முடிக்க வேண்டும்.

25.10.2004 வியாழன் கரிநாள்

நவகிரக மூர்த்திகளில், சனீஸ்வரர்தான் கலியுகத்தில் பலராலும் அச்சத்துடன் வணங்கப்படுபவர் ஆவார். ஆனால் ஈஸ்வரப் பட்டம் பெற்று ஆயுள்காரகராக விளங்கும் மஹாகாருண்ய மூர்த்தியான சனீஸ்வர மூர்த்தியைக் கண்டா அஞ்சுவது? என்னே அறியாமை! சனீஸ்வர மூர்த்தி அருள்வளக் காருண்ய மூர்த்தியே!

 பிறந்த நேர ஜாதகக் கட்டத்திலும், அந்தந்த நாளின் கிரக அமைப்பான கோசார ரீதியாகவும் வந்தமர்ந்து ஒவ்வொரு ஜீவனின் கர்ம பரிபாவத்தை அவரவருடைய பூர்வ ஜன்மங்களின் வினைகள், நடப்பு கர்ம வினைகளின் பலாபலன்களுக்கு ஏற்ப அளிக்கின்றார். இவை அனைத்தும் தானாக நிகழாதா, இதற்கு எதற்காக நவகிரக மூர்த்திகள் என எண்ணிடலாம்.

இன்று கரிநாளும் கூடிய அருணாசல கிரிவல நாளில், சனத்சுஜாத மஹரிஷி நவகிரக மூர்த்திகளின் அனுகிரகங்களை மக்கள் தம் கர்மவினைகளுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அனுபவிக்க வேண்டிய நிலையை விளக்கி உணர வல்லதாக, கிரிவல தரிசனப் பலன்களாக அளிக்க வேண்டித் தம் தபோ பலன்களை அர்ப்பணிக்கின்றார்.

சனீஸ்வரர் ஈஸ்வரப் பட்டம் பெற்று ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை வைகுண்டத்தில் தரிசித்த திருநாளும் ஒரு யுகத்தின் தாரண வருடக் கரிநாள் தினமாகவே பொலிகின்றது.

சனி மூலை என்ற ஒன்றுண்டு. அருணாசல கிரிவலத்தில் இது சூக்குமமாகப் பொலிந்து, கரிநாள் கிரிவலப் பலன்களாக, கரிதோஷங்களை அகற்றுவதாக நல்வர சக்திகளை அளிக்கின்றது.

இன்றைய கிரிவலத்தை நவகிரக மூர்த்திகளிடம் துவங்கி கிழக்கு வாயிலில் நின்று மலையைத் தரிசித்து இங்கு அருளும் விநாயகரிடம் அர்ப்பணித்து நிறைவு செய்தல் வேண்டும்.

இன்றைய கிரிவலத்திற்கான மாமந்திரம்:

தேஹஸ்ய பஞ்சதோஷா பவந்தி காமக்ரோத
நி:ச்வாஸ பய நித்ரா: தந்திரா ஸஸ்துநி:
ஸங்கல்ப-க்ஷமா-லக்வாஹார
அப்ரமாததா தத்வஸேவனம்

தமிழ் மந்திரம்

ஐவழி தோஷம்தாமே அனைவரை மாய்க்கும் மாயை
காமம், கோபம், பயமது உறக்கம் தீவழி
நாசி திருந்திய வழியே
ஆவது ஆகும் அருணை கிரியால்
அருணாசலத் துறை ஆருயிர் ஈசன்
அண்ணாமலையாய் அமர்வது காணே!

26.11.2004 வெள்ளிக்கிழமை சர்வாலயக் கார்த்திகை தீபம் ஜோதித் திருநாள்

பொதுவாக, கார்த்திகை மாதத்தின் கார்த்திகை நட்சத்திர நாளில், பிரபஞ்சத்தின் அண்ட சராசரங்களிலும் அக்னித் தலமாக விளங்குகின்ற அருணாசல மலையில் ஏற்றப்படும் கார்த்திகை தீபம், சர்வாலய தீபத் திருநாளாக பூவுலகில் மட்டுமல்லாது அனைத்து லோகங்களிலும் துதித்துப் போற்றப்படுகின்றது.

காரணம், இங்கு அருணாசல மலையில் ஏற்றப்படும் தீபமானது பிரபஞ்சத்தில் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என அனைத்துக் கோடி லோகங்களிலும் உள்ள ஆலயங்களில் ஏற்றப்படும் தீபத்திலும் உறைந்து ஜோதிப் பிரகாசத்தை யாங்கணும் நிரவச் செய்கின்றது. அதாவது இன்றையப் பொழுதில் அருணாசல மலையில் தீபம் ஏற்றுதலானது, தமிழகத்தில், பாரதத்தில், அனைத்து நாடுகளில் மட்டுமல்லாது பிரபஞ்சத்தின் அண்டசராசர கோடானு கோடி லோகங்களில் உள்ள அனைத்துக் கோடி ஆலயங்களிலும் தீப சக்தியை அளிக்கின்றது.

இன்று தமிழகமெங்கும் அருணாசல தீபம் பார்த்தே மாலையில் வீட்டில் விளக்கேற்றுவார்கள். தற்காலத்தில் வானொலி, டெலிவிஷன் மூலமாக அருணாசல கார்த்திகை தீபப் பெருவிழாவின் நேரடி வர்ணனையை ஒலி, ஒளி பரப்புவதால், இதைக் கேட்டபின் மலையில் ஏற்றிய பின் வீட்டில் ஆலயங்களில் விளக்கேற்றுவதால், கண் இமைக்கும் நேரத்தினும் கருக்கில் அருணாசல தீபப் பிரகாசம் அதில் வந்து சேர்ந்து அருள்கின்றது. மேலும் எதுவுமே அறியாது இன்று மாலையில் விளக்கேற்றுபவர்களின் தீபங்களிலும் அருணாசல தீப சக்திகள் தாமே வந்தடையும்.

கார்த்திகை தீபத்திற்கு முன்னரேயே 16 வகையான தைலங்கள் கலந்து ஷோடச தீபத் தைலக் கலவையைத் தயாரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தத் தைலத்தை மண் குடுவை, வெள்ளி/பித்தளைக் கிண்ணம், பீங்கான் ஜாடி, மரத் தம்ளர், கண்ணாடி பாட்டிலில் (பிளாஸ்டிக், இரும்பைத் தவிர்க்கவும்) வைத்துத் தினமும்,

ஸ்ரீஞானகுரு தட்சிணாமூர்த்தி
திடியன்மலை

“இல்லக விளக்கது இருள்கெடுப்பது
சொல்லக விளக்கது ஜோதியுள்ளது
பல்லக விளக்கது பலருங் காண்பது
நல்லக விளக்கது நமசிவாயவே!”

-போன்ற தைல விருத்தித் துதிகளை ஓதி, காலையிலும், மாலையிலும் தீபத்திற்கு இரு வாரம் முன்னராகவே பூஜித்து வரவும். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய், செம்பருத்தித் தைலம், நீலிப் பிருங்காதி தைலம், மருதாணி தைலம், இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய், கரிசலாங்கண்ணித் தைலம், வேப்பெண்ணெய், பொன்னாங்கண்ணித் தைலம், வெட்டிவேர் தைலம், கற்பூரத் தைலம் போன்ற 16 வகை கூட்டுத் தைலங்களை வைத்து பூஜிப்பதும் வாழ்க்கையில் கிட்டும் பெரும் பாக்யமாகும்.

மதுரை –உசிலம்பட்டி சாலையில் உள்ள திடியன்மலை ஸ்ரீகைலாசநாதர் ஆலயத்தில் தியான யோகம், கர்ம யோகம், விஜய யோகம், பக்தி யோகம் போன்ற 14 வகை ஞான சிவயோக சக்தியைப் பூண்டு தவமிருக்கும் சதுர்த்தச (பதினான்கு) சனத்மகரிஷிகள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு வகைத் தைலத்தில் ஸ்ரீஞானகுரு தட்சிணா மூர்த்திக்கு தூல, சூக்கும, காரண, தர்ம வடிவுகளால் பூஜிக்கும் நன்னாள் இதுவேயாம்.

கார்த்திகை தீபத்தை ஏற்றும் போதும், அண்ணாமலையில் தீபத்தை தரிசிக்கும் போதும் ஓத வேண்டிய மாமந்திரங்கள் பல உண்டு!

இன்று உங்களுக்காக உங்கள் குடும்பத்திற்காக, உங்கள் உற்றம், சுற்றம், மாநிலம், நாட்டிற்காக மட்டுமல்லாது சகல நாடுகளின், லோகங்களின் சகல உலக ஜீவன்களின் நலன்களுக்காக, அவரவர் வசதிக்கேற்ப சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்து, 1008, 3000 என்ற வகையில் தியாகமய உள்ளத்துடன் அளவில்லா அகல் விளக்குத் தீபங்கள் ஏற்றுவது உத்தம உலக வளச் சமுதாய இறைப்பணியும் ஆகின்றது.

அருணாசலத் தீப தரிசனத் துதி

“வைராக்யத் தைல சம்பூர்ணே பக்திவர்த்தி சமன்விதே
ப்ரபோத பூரண பாத்ரேது ஜ்ஞப்தி தீபம் விலோகயேத்!
( தட்சிணாமூர்த்தி உபநிஷத் வாக்யம்)

(ஆழ்ந்த வைராக்யமே தீபத் தைலம்; நல்வகைத் திரியே அன்பான பக்தி; இவை இரண்டும் சேர்ந்து கிட்டுவதே பிரபோத பாத்திரமாகிய அகல்; இதில் ஒளிரும் ஞானதீபத்தை தரிசிக்கின்றேன்!)

தமிழ் மந்திரம்

1. “மனப்பரி சாதக மேதகு தைலம்
அன்புடை இழையே அதில் சேர் திரியாம்
இருஉறைக் கழலே எந்துறை அகலாம்
அதிலொளி அரஹர அருணாசலமே!
அரஹர அரஹர அருணாசலமே!”

2. “கவிம் புராணம் புருஷோத்தம மோத்தமம்
ஸர்வேச்வரம் ஸர்வதேவை ருபாஸ்யம்
அனாதி மத்யாந்த அனந்தமவ்யயம்
சிவாஸ்யுதாம் போருஹ கர்ப்ப பூதரம்“

தமிழ் மந்திரம்

எல்லாங் காணும் ஆதி முதலவன்
ஈசம் தேவம் யாவரும் துதிமே
அடி நடு முடியிலை அளவிலை காணே
ஓருருவத்தான் உள்பரி பூமி
சிவஅரிபிரம்ம சீர்மிகு சோதி
அம்பல ஜோதி ஆளுடை ஜோதி!
அருணாசலத்துறை ஆனந்த ஜோதி!

இவ்வாறு 16 வகைத் தைலங்களால் காப்பிட்டு விளக்கேற்றிப் பூஜிப்பதற்கு ஷோடசத் தைலத் தீப பூஜை என்று பெயர். அதியற்புதமான பலாபலன்களைத் தரவல்லதாம். வசதி, வாய்ப்பு, தைல வகைகள் கிட்டுதல், மூலிகைத் தைலம் தயாரிக்கும் முறை போன்றவை கூடிடில் 21, 24, 36 என்று கூடுதல் வகைத் தைலங்களாலும் தீபங்கள் ஏற்றுவது மிக மிக விசேஷமான அருள் பொழிவுகளைப் பெற்றுத் தரும்.

சனத்சுஜாத மகரிஷி, இன்று எங்கெல்லாம் 16 வகைத் தைல தீபங்கள் ஏற்றப்படுகின்றனவோ, அவற்றில் விசேஷமான அருணாசல மந்திர தீப சக்திகள் சேர்ந்து அருளுமாறு வழிவகை செய்கின்ற வேதஜோதி மந்திரங்களை ஓதுகின்றார்.

எனவே. இன்று எவரெல்லாம் 16 வகை ஷோடசத் தைல தீபங்களை ஏற்றுகின்றார்களோ, அவர்களுடைய சந்ததிகளுக்கும் தீப பலாபலன்கள் வர்ஷித்து வரவளம் தரும் நாளிதுவே!

இன்று அருணாசலத்தில் கிரிவலம் வருவோர், 16 திக்குப் பகுதிகளிலும் ஷோடச தைல தீபத்தை ஏற்றி வழிபடுவது விசேஷமானது. அருணாசலப் புண்ணிய பூமியில் ஏற்றப்பட்ட இந்த ஷோடசத் தைல தீபத்தில் இருந்து தைலப் பிரசாதமாக சிறிது தைலத்தை வீட்டிற்குக் கொண்டு வந்து, தினசரி தீபம் ஏற்றும் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், பசு நெய் இவற்றுடன் சேர்த்து அடுத்த கார்த்திகை தீபம் வரை ஏற்றி வழிபடலாம்.

இந்த தீப வழிபாடானது, சதுர்த்தச மற்றும் ஷோடச சனத் மகரிஷிகளின் அற்புத யோக தீப சக்திகளைப் பெற்றுத் தரவல்லதாகும். வசதி இல்லாதோரும், ஏனையோருடன் சேர்ந்து சத்சங்கமாக ஷோடசத் தைலத்தை நிறையத் தயாரித்து, பூஜித்து, ஆலயத்திலும், பலருக்கும் அளித்திடலாம். ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயங்களில் அருணாசல தீப ஷோடசத் தைலம் கிடைக்கும்.

ஜோதிமயமான திருநாள், எங்கு வேண்டுமானாலும் அருணாசல கிரிவலம் தொடங்கி அதே இடத்தில் முடித்திடலாம்.

27.11.2004 சனிக்கிழமை விஷ்ணு தீபம்

கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் விஷ்ணு தீபமாக, ஸ்ரீமஹா விஷ்ணுவே தேவ ஜோதி தீபம்தனை தேவசூக்கும ரீதியாக ஏற்றி, சர்வேஸ்வரனை ஜோதிப் பிரகாச வடிவத்தில், பூஜிக்கும் ஐதீகத்தைக் குறிக்கின்றது.

கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் வரும் விஷ்ணு தீப நாளிலும் கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானது. பலரும் கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் வருகின்ற பெருமாள் தீபம் எனப்படும் விஷ்ணு தீபத்தின் மகத்துவத்தை அறியாமல் இருக்கின்றனர். திருமால் திருவிளக்கு ரோஹிணித் திருநாள் என்று சித்தர்கள் இதனை போற்றுகின்றனர். ரோஹிணி நட்சத்திர ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் தீபமேற்றி வழிபடும் திருநாள்! இதனை உணர்த்திடவே ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மூலவருக்குப் பின்புறப் பிரகாரத்தில் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணன் சன்னிதி உள்ளது. இன்றைய கிரிவலத்தை இங்கு தொடங்கி பூதநாராயண சன்னதியில் நிறைவு செய்தல் விசேஷமானது.

இந்நாளில் சனத் சுஜாத மகரிஷி ஸ்ரீமகாவிஷ்ணு ஈஸ்வரனைப் போற்றி வழிபடுகின்ற காட்சியைத் தரிசித்து இதன் பலாபலன்களைப் பூவுலக ஜீவன்களுக்கு அளிக்கின்றார். பத்ரிநாத்தில் இன்று நதிக்கரையில் தாமரை இலையில் தீபம் ஏற்றி,

“மஹா விஷ்ணு ரூபாய சர்வேஸ்வர தீபப் பிரகாசாய சர்வதோமுக:”

என்று ஓதித் தாமரை இலைத் தீபத்தை நதியில் இட்டு சனத்சுஜாத மஹரிஷி வழிபட்டு, இங்கு அருணாசல கிரிவலத்திற்கு வருகின்றார். விஷ்ணு தீபத் திருநாளில் இன்றும் அருணாசல தீபோற்சவ நிறைவாகக் கிரிவலம் வருதல் மகா விசேஷமானதாகும்.

விஷ்ணு தீபம் என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. பரமாத்ம ஸ்வரூப ஸ்ரீமஹா விஷ்ணுவே ஷோடசத் தைல தீபம் ஏற்றி சர்வேஸ்வரனை தரிசிக்கின்ற திருக்காட்சியை ஜீவன்களாகிய நாம் காணுதல், ஸ்ரீமஹாவிஷ்ணுவின் தரிசனத்தையே ஈஸ்வர ரூபமாகத் தரிசித்தல், ஹரிஹர ஜோதி தரிசனம் என்றவாறாக இதற்குப் பல அர்த்தங்கள் உண்டு.

இன்றைய கிருஷ்ண விழாத் தீப நாளாகிய, விஷ்ணு தீபத் திருநாளில், திருஅண்ணாமலை ஆலயத்தில் ஸ்ரீவேணுகோபால் ஸ்ரீகிருஷ்ணனுடைய சன்னதியில் இருந்து கிரிவலத்தைத் தொடங்குதல் வேண்டும்.

க்ருஷ்ண பிங்கல மூர்த்வரேதம்
விரூபாட்சம் சங்கரம் நீலலோஹித
உமாபதிம், பசுபதிம்

-என்ற மந்திரத்தை ஓதியவாறு ஆலயத்தின் கிழக்குப் புற வாயிலுக்கு இடது புறம் திரும்பி ஸ்ரீபூதநாராயணப் பெருமாளைத் தரிசித்து இங்கிருந்து அஷ்டாட்சர மந்திரமான “ஓம் நமோ நாராயணாய!” என ஓதி இந்திர லிங்கம் வழியாக கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்.

அஷ்ட திக்குப் பாலகர்களும் இன்று விஷ்ணு தீபத்தைத் தரிசிப்பதால் இந்திர மூர்த்தியிடம், “சுவாமி! தேவாதி தேவர்களின் மூலப் பீடமான தாங்கள் எங்களுக்கு விஷ்ணு தீபத் தரிசனப் பலாபலன்களை அடைவதற்குத் துணை புரிவீர்களாக!” என்று வேண்டி,

“சிவாய விஷ்ணு ரூபாய சிவரூபாய விஷ்ணவே
சிவஸ்ய விஷ்ணுர் ஹ்ருதயம்
விஷ்ணோஷ்ச ஹ்ருதயம் சிவ:
யதா சிவமயோ விஷ்ணுரேவம்
விஷ்ணுமய: சிவ:

தமிழ் மந்திரம்
சிவனே அரியாம் அரியே அரனாம்
சிவஉளம் அரியே! அரியுளம் சிவனே!
சிவனுள் அரியே! அரியுள் சிவனே!
அனைத்துளதாகும் ஹரிஹர ஈசா!”

என்ற மந்திரத்தையும், தாங்கள் அறிந்த அனைத்து மந்திரங்களையும் ஓதியவாறு அருணாசல கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும்.

கையில் நிறைய துளசி தளங்களைச் சுமந்து ஆங்காங்கே உள்ள மூர்த்திகளுக்கும் மேற்கண்ட மந்திரத்தை ஓதி சார்த்தி வழிபடுதல் வேண்டும்.

விஷ்ணுவின் திருமார்பில் சந்தன பிம்பமாகத் திருமகள் உறைகின்றாள் அல்லவா! இந்த அரிய பாக்யத்தைத் திருமகள், வில்வத்தால் சர்வேஸ்வரனாம் சிவனைப் பூஜித்துப் பெற்றாளன்றோ! இதைக் குறிக்கும் வகையில் இன்று கையில் சந்தனக் கல், கட்டை, தீர்த்தத்துடன் சுமந்து ஆங்காங்கே சந்தனம் அரைத்து அரசு, ஆல், வேம்பு போன்ற விருட்சங்களுக்கும் இட்டவாறே வணங்கி கிரிவலம் வருதல் வேண்டும். ஆங்காங்கே நன்கு அமர்ந்து கெட்டியாக சந்தனம் அரைத்து சிறு உருண்டைகளாக ஆக்கி அல்லது ஆங்காங்கே சன்னதியில் அரைத்து அளித்தும், விருட்சங்களுக்கு இட்டும் கிரிவலம் வர வேண்டும்.

உண்மையில் பிரம்மா, விஷ்ணு, சிவன், பார்வதி, திருமகள், கலைமகள் என்பதெல்லாம் மனிதன் முழுமையாக இறைப் பகுத்தறிவைப் பெறும் வரை கடவுளை உணர்விப்பதற்கான இறை வடிவு இலக்கணங்களாகும். உத்தம இறைநிலைகளை அடைய, அடைய “ஒன்றே இறைவன், அனைத்தும் அவனே, ஒவ்வொன்றிலும் உறைவது இறைமையே!” போன்ற பலவும் புலனாகும்.

மனித வாழ்க்கையோடு ஒட்டிய இறைவழிபாடுகள்தாம் ஜீவன்களுக்கு நன்கு புரியும்படி கடைத்தேற்றிச் சிறப்படைவதால், கலியுகத்தில் உருவ வழிபாடுதான் உருவமற்ற இறைவனை அடைவதற்கான உத்தமமான, சிறப்பான வழிபாடு ஆகும். இதனால் தான் இறைவனே தன் தூதுவர்களை மனித வடிவில் சற்குருமார்களாகத் தோற்றுவிக்கின்றார். இவ்வாறு கடவுள் தரிசனங் கண்டவர்களே இறைவனை அடைய வைக்கும் இறைப்புலம் செறிந்தவர்கள்.

இன்றைய விஷ்ணு தீபத் திருநாளில் அருணாசலத்தில் கிரிவலம் வர இயலாதோர், வீட்டில் 24 தீபங்களை ஏற்றி, ஸ்ரீமகாவிஷ்ணுவே அருணாசல தீபத்தை ஏற்றுவதைப் பாவனையாக மனதில் கொண்டு வந்து 24 தீபங்களுக்கும் சந்தனம், குங்குமம் இட்டு பூஜித்திட வேண்டும்.

கலியுகத்தில் கண் எதிரே நடக்கும் அதர்மம், அசத்தியம், அக்கிரமங்களைக் கண்டு அச்சம் கொள்ளாது நல்ல மன தைரியம் பெற்று நல்ல இறைபக்தியுடன் வாழ இதனுடைய பலாபலன்கள் உதவும். எப்போது பயம், பீதி, அச்சம் உண்டாகின்றதோ இதற்குக் காரணம் பக்திக் குறைபாடே என்பதை இனியேனும் நன்கு உணர்ந்து ஆத்மப் பூர்வமாக இறை வழியில் செயல்படுவீர்களாக! இதனை அருணாசல கிரிவலம் மூலம் உணர்த்திட உதவும் சனத்சுஜாத மஹரிஷியின் திருப்பாதங்களைப் பணிவோமாக!

பொன்னகரம் விஷ்ணுபதி

ஓம் நமோநாராயணாய நம: ஸ்ரீமத் ராமானுஜாய நம:
திருமால் நெறி வாழி! திருத்தொண்டர் செயல் வாழி!

பொன்னகரம் (மணமேல்குடி) ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம்!

தாரண வருட கார்த்திகை மாத விஷ்ணுபதிப் புண்ய காலப் பெருமாள் தலம்! (பஸ் மார்கம்: புதுக்கோட்டை – அறந்தாங்கி – மணமேல்குடி – பொன்னகரம் – மீமிசல்)

குடும்ப ஒற்றுமைக்கு நல்வரங்களை அருளும் தலம், வாஸ்து சக்திகள் நிறைந்த புண்ணிய பூமி! சக்தி வாய்ந்த அரசு, ஆல், வேம்பு த்ரயம்ப விருட்ச பாரதீ அருளும் தலம், மன அழுக்கைப் போக்கி மனசுத்தியைத் தரும் தலம்!

தாரண வருடத்தில் வரும் கார்த்திகை மாத விஷ்ணுபதிப் புண்யகாலத் தலமாகச் சித்தர்கள் போற்றி அருள்வது பொன்னகரம் (மணமேல்குடி) ஸ்ரீதேவி, ஸ்ரீபூதேவி சமேத ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயமாகும். பரந்த பெருவெளியில், பரந்தாமனாகிய ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் நின்ற கோலத்தில் அருளும் விமலப் பரவெளித் திருத்தலமே மணமேல்குடியாம் பொன்னகரம்.

சனீஸ்வர மூர்த்தி, வைகுண்டத்தில் பெருமாளின் திருவடிகளைப் பூஜிக்கின்ற கரிநாள் கூடியதாகவும், திரேதா யுகாந்திர நாளாகவும், திரேதா யுகத்து ஸ்வர்ண கால சக்திகள் பரிமளிக்கும் தினமுமாகவும் வரும் விஷ்ணுபதித் திருநாள் பரிமளிப்பது நமக்குக் கிட்டி உள்ள பெரும் பாக்யமே!

ஒரு யுகத்தில் கிடந்த கோலத்தில் –அதாவது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் போல சயனக் கோலத்தில் பொலிந்த திருமால்பிரான், மண்ணுள் மறைந்து பொன் விளையும் பூமியில் மீண்டும் நின்ற கோலத்தில் தோன்றி தற்போது ஸ்ரீஆதிகேசவப் பெருமாளாக அருள்கின்ற தலம்.

பொன்னகரம் விண்ணகரம்
பொலிந்த மா தன்னகரம்
என்னகரார் எம்புயத்தார்
எழுந்த மண்குடியில்
சொன்னபடிக் காத்தருளும்
சொக்கப் பெருமாளாம்!
சொல்லிய வண்ணமாய்
செவ்விய உலகாளும்
சொக்கத் திருமாலே
சொக்கேசவ னாரப்பா!

(சொக்கம் = மாசற்ற சொக்கத் தங்கம், கேசவன் – பொன் கேசத் திருமேனிப் பெருமாள்!)

-என்ற சித்தர்களின் பெருமாளப்ப வாக்கியப் பரிபாஷைக் கட்டுத் துதி அளப்பரிய அர்த்தங்களைக் கொண்டதாகும். பொற்றேர் (பொன்னாலாகிய தேர்) ஆலய வளாகத்தினுள் பரந்த வெளியில், பரந்து உருண்டு வந்து உற்சவாதிகள் பல யுகங்களில் நிறையப் பொலிந்த திருத்தலம். இன்றோ, பரந்த பரப்பில் மிகவும் எளிமையான சிறு சந்நிதியுடன் சொக்கத் தங்க பூமிப் பிரகாசக் கோயிலாகப் பொலிகின்றது.

திரேதா யுகத்தில், கிடந்த பிரானாய், கடலை நோக்கிச் சயனக் கோலம் பூண்ட திருமாலப்பர், கலியுகத்தில் நின்ற திருக்கோலம் பூண்டு ஸ்ரீஆதிகேசவப் பெருமாளாய் அருள்கின்றார். ஆம், பூமா தேவி, பூமியைத் தம் கேசப் பகுதியில் தாங்கி நிற்கும் கோலத்தில், நம் பூவுலகின் தேவகேசப் பகுதியாய் அமைவது இந்த பொன்னகர (மணமேல்குடி) பூமியே!

மணமேல்குடி (பொன்னகரம்) – ஆதிசேது பூமித் தலங்கள்

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து நாகுடி கட்டுமாவடி வழியாக மீமிசல் செல்லும் பஸ் மார்கத்தில், கட்டுமாவடியை அடுத்து வருவது மணமேல்குடி ஆகும். தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை – பேராவூரணி – பெருமகளூர் – கட்டுமாவடி – மீமிசல் வழித்தடமாக மணமேல்குடிக்கு மற்றொரு பஸ் மார்கமும் உண்டு. அறந்தாங்கியில் இருந்து, மணமேல்குடி – பொன்னகரம், சுமார் 35 கி.மீ தொலைவில் உள்ளது. வழி நெடுக நூற்றுக்கணக்கான, மிகவும் பழமையான ஆலமரங்கள் நிறைந்த மார்கம். இவ்வகை ஆலமரச் சமித்துகள் மிகவும் சக்தி வாய்ந்த ஹோமப் பலாபலன்களைத் தரவல்லவை! இயற்கையாகத் தானே உதிர்ந்து விழுகின்ற சமித்துக்களே ஹோமத்திற்கு ஏற்றவை! சமித்திற்காகக் கிளைகளை ஒடித்தல், வெட்டுதல் கூடாது, இது பாபகரமானது.

மணமேல்குடியில் குலச்சிறை நாயனார் வழிபட்ட ஸ்ரீஜெகதீஸ்வரர் சிவாலயத்தில் இறங்கிக் கொள்ள வேண்டும். இங்கிருந்து ஒரு கி.மீ தொலைவில் கீழ்திசையில் உட்புறமாகப் பொன்னகரம் உள்ளது. பின்புற அட்டைப் படத்தில் உள்ளது போன்று மணமேல்குடி – மீமிசல் சாலையில், குலச்சிறை நாயனார் தோன்றிய மணமேல்குடியின் ஸ்ரீஜெகத்ரட்சகி சமேத ஸ்ரீஜெகதீஸ்வரர் ஆலயத்தின் முன் சற்று தூரத்தில், சாலையோரம் ஸ்ரீரங்கநாதர் திருஉருவுடன் பெரிய வளைவு தென்படும். இதனுள் ஒரு கி.மீ தொலைவு சென்றால் பொன்னகரம் ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது.

பன்னெடுங்காலமாக, இங்கு மணல்மேல் இயற்கையாகவே குடி கொண்ட பெருமாள், மணமேல்குடியில் பொது பஸ் நிறுத்தத்தில் இறங்கி ஆட்டோ மூலம் பொன்னகரத்தை அடைந்திடலாம். மணமேல்குடியின் கீழ்திசைக் கடற்கரைப் பகுதியே பொன்னகரம். மணமேல்குடி என்றால்தான் இங்கு நன்றாகத் தெரியும்.

இவையாவும் புனித பாரதத்தின் கீழ்திசைக் கடற்கரையைச் சார்ந்த மிக மிக அமைதியான கடற்கரைத் தலங்கள்.

ஸ்ரீராமர் தம் பரிவாரங்களுடன் சேது பூமியாம் ராமேஸ்வரம், தனுஷ்கோடிக்கு நடந்து சென்ற மார்கத்தில் இத்தகைய பண்டைய சேதுத் தலங்கள் ஸ்ரீராமரின் பொற்பாதங்கள் படிந்த அருட்பெருந் திருத்தலங்களாக அமைகின்றன. அமாவாசைத் தர்ப்பணத் தலமாகவும், வாஸ்து நாள் பூஜைத் தலமாகவும், மாதப் பிறப்பு வழிபாட்டுத் தலமாகவும் பொன்னகரம் பெருமாள் பதி விளங்குவதால், இதற்கு முன்னரேயே சென்று பார்த்து வருவது பலருக்கும் தெளிவாக நல்வழிகாட்டிட உதவும்.

பொன்னப்பர் நின்றாரப்பா!

பொன்முடியுடன் பொற்பாதம் தாங்கியபடி, கிடந்த கோலத்தை ஸ்ரீரங்கநாதர் போல அனந்த சயனக் கோலத்தை திரேதா யுகத்தில் பூண்ட பெருமாள்! இப்போது ஸ்வேதாகாரக் கேசத்துடன் பொன்னருள் தாங்கிப் பூரித்து எழுந்து நின்று கலியுகத்தில் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளாய் அருள்கின்றார். இதனால்தானோ என்னவோ, ஆலயத்தைச் சுற்றிலும் உள்ள பரந்த மண்வெளியானது மினுமினுப்புடன் இன்றும் பொலிகின்றது.

பிற யுகங்களில், தங்கக் கிரணங்கள் ஆழ்பூமியில் பதிந்த ஸ்வேத மாநகரமாகப் பொலிந்ததெனச் சித்தர்கள் இதனைப் போற்றுகின்றனர். பொதுவாக, கடற் பகுதியில் கிட்டும் தங்கக் கனிமத்திற்கு மாற்று சக்தி அதிகம். 100 பொன் மாற்றைப் புலர வைக்கும் அற்புதத் தங்க சக்திகள் நிறைந்த பொன் பூமி இது! பூவுலகிற்கு உரித்தானது 100 வரையான பொன் மாற்று, ஆனால் கலியுலகில் காஞ்சன மாயையாகிய பொன் மேல் மக்கள் பித்து கொண்டிருப்பதால், மனித குலத்தால் பத்தரை மாற்று வரையே தங்கத்தைக் காண முடியும். இதுவும் கூட பூர்வ ஜன்ம ஸ்வேத வேத சக்திகளால் கை கூடி அமைவதாகும். பத்தரை மாற்று வரையே பொன்துறை வித்தகர்களாலும் மாற்றுரைக்கலாகும். தேவ லோகங்களுக்கு உரியதே 500 மாற்றுப் பொன். எனவே, பொன்னேர் திருவருளாய் இறையருளைப் பொழியும் சதசத்சம்பத் ஸ்வேதாம்பர சேது பூமி இது!

குறித்ததொரு பராதீய பாரதீபுல யுகத்தில், இத்தலத்தில் கடலை நோக்கி, மல்லைப் பெருமாளாய் அனந்த சயன யோகம் பூண்டு நீண்ட நெடுந் தூரத்திற்குப் பொன்னொளி அருட்கிரணங்களைப் பரப்பியவாரய்க் கிடந்த கோலப் பெருமாளப்பர், இன்று நின்ற பொன்வேதக் கேசப் பரிமள, ஆதிகேசவப் பெருமாளாய், பொன்னகரத்தில் அருள்கின்றார்.

பொற்றாளப் பொன்னகரே!

திரேதா யுகத்தில் பிரம்மாண்டமான தங்கத் தேர் திரண்டோடிய பூமி இது. இதனால் தான் இன்றும் இந்த ஆலயத்தின் பெருவளாக பெரிய மணற் பரப்புடன் பொலிகின்றது. தங்க பஸ்ம வைத்ய வாலைகள், பொன் கனிம உருக்கு சாலைகள் ஏனைய யுகங்களில் நன்கு பரிமளித்த தலம். அன்றும், இன்றுமாய் ஸ்வேத வேத மந்திர சக்திகள் பரிபூரணிக்கும் திருத்தலம்.

சித்த வைத்தியத்தில் தங்க பஸ்மம் ஆக்குவது என்பது அற்புத வைத்திய மருந்துகளின் கூட்டாகும். தங்க பஸ்ம வைத்திய சாலைகள் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய தலமே பொன்னகரம். இங்கு வீசும் கடற்கரை உப்புக் காற்றில் ஸ்வேதலவண வாயு சக்திகள் நிறைந்துள்ளன.

கேசவத் தீர்த்தம்
பொன்னகரம்

எத்தகைய தோல் வியாதிகளுக்கும் நிவாரணம் தரவல்ல அற்புதமான வாயு சக்திகளைக் கொண்டது. தங்க உருக்குப் பட்டறைகள் விண்ணளாவ மஞ்சள் நிறப் பொன் புகையை எழுப்பிய திரேதா யுகக் காலப் பகுதி இது! இதனால்தான் தாரண வருட விஷ்ணுபதி. திரேதா யுகாந்த நாளில், அதுவும் கரிநாளில் அமைகின்றது. காக்கைப் பொன் எனப்படும் சனிப் பொன் சக்திகள் நிறைந்த தலமாதலின், தோல் நோய் நிவாரண இந்துப்புத் தைல வைத்யசாலைகள் முந்தைய யுகத்தில் பரிமளித்த தலம்.

கடற் பகுதியில் அபூர்வமாகவே மூலிகைகள் தென்படும். இன்றும் இங்கு அபூர்வமான சிலவகைத் தங்க பஸ்ம மூலிகைக் கூட்டுத் தாவரங்கள் தோன்றுவது உண்டு. ஆனால், காலப்போக்கில் பொன் சம்பந்தப்பட்ட திரவியங்கள், தாவரங்கள், நீரூற்றுகள், நீர்ப்பாசனங்கள், அனைத்துமே இப்பகுதியில் எதிர்காலத்தில் தக்க தருணத்தில் பொற்கனிமத் துறைகளாக இங்கு உருவாகும்.

அற்புத வாஸ்துத் தீர்த்தத் தலம்!

இந்த ஆலயத் தீர்த்தம் மகத்தான வாஸ்து சக்திகள் நிறைந்ததாகும். அக்காலத்தில் எட்டுத் துறைகளுடன் அஷ்ட வாதூல வாஸ்துத் தீர்த்தமாக வழிபடப் பெற்றுப் போற்றப்பட்டது. இன்றும் ஒரு பகுதியில் நான்கு கரைகள் இருந்த சுவடுகள் நன்கு தெரியலாகின்றது. வருடத்தின் எட்டு வாஸ்து நாட்களில், ஸ்ரீவாஸ்து மூர்த்தி சயன யோகத்திலிருந்து மீண்டு தரிசனம் தருகின்ற அஷ்டாஷ்டாங்க வாஸ்து தீர்த்தத் தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

அஷ்ட வாதூல சக்தித் தீர்த்தப் பொலிவுடன், எண் திசைக் கதவுகளுடன் எழிலார்ந்து பொலிந்த கோயில் வளாகத் திருத்தலம். ஆலயத்திற்கு முன் உள்ள அஷ்ட வாதூல வாஸ்து தீர்த்தக் கரையின் ஈசான்யப் பகுதியில் அரசு, ஆல், வேம்பு இணைந்ததாக மிகவும் தொன்மையான த்ரயம்பக பாரதீ விருட்ச தரிசனம் (மூன்று வேத விருட்சங்களின் கூட்டுத் தரிசனம்) கிட்டுகின்றது.

பொதுவாக, பாரதி நதி, பாரதி விருட்சம், பாரதித் தீர்த்தம், பாரதி பீடம் எனில் மூன்று நதிகள், மூன்று தீர்த்தங்கள், மூன்று பீட சக்திகள் நிறைவதாகும். பாரதீ எனில் பாவனம், ரட்சகம், தீர்கம் ஆகிய மூன்று சக்திகளைக் குறிக்கும். இவை மூன்றையும் அடைந்தால்தான் ஆத்ம பாரதீ சக்தி புலப்படும். இதனால்தான் நல்ல கலைமகள் கடாட்சம் பெற்றவர்களை “பாரதீ, சரஸ்வதி” என கடைமொழி இட்டும் பட்டம் கொடுத்தும் முற்காலத்தில் போற்றுவர்.

“விருட்ச பாரதீ” இன்றும் பொன்னகரம் ஸ்ரீவாஸ்துத் தீர்த்தக் கரைக் கோடியில் இங்கு தரிசனத்திற்கு உள்ளது. அரசு, ஆல், வேம்பு மூன்றும் கூடிய “விருட்ச பாரதீ” மிகவும் சக்தி வாய்ந்த பன்னெடுங் கால மரங்கள் ஆகும். பல்லாயிரம் விருட்ச தேவதா மூர்த்திகளும், விருட்ச மூர்த்திகளும் ஆவாஹனம், ஆகி ரட்சா சக்திகள், பாவன சக்திகள், தீர்க சக்திகளுடன் நல்வரங்களை அருள வல்ல விருட்ச பாரதீ!

அஷ்டாட்சர அட்ட பந்தாதிப் பிரதட்சிணம்

1. “ஓம் நமோ நாராயணாய!” நாராயணப் பரம்பொருளின் நாமமே நற்றுணையாமே! என ஓதியவாறு, ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தை எட்டு முறை வலம் வருதல்.,

2. “ஓம் நமோ ஸ்ரீரங்க நாராயணாய நம:” – ரங்கநாதத் திருமாலப்பா, நாராயணா விஷ்ணுதேவா! என ஓதியவாறு அஷ்ட வாதூல வாஸ்து தீர்த்தக் குளத்தை எட்டு முறை வலம் வருதல்.,

3. “ஓம் நமோ ஸ்ரீஅஸ்வத நாராயணாய நம:” அரசுடை ஆத்மஜோதி அப்பக்குடப் பெருமாளப்பா! – என ஓதியவாறு “விருட்ச பாரதீயாகிய” மூன்று திவ்யமான விருட்சங்களை எட்டு முறை வலம் வருதல்.,

4. “ஓம் நமோ ஸ்ரீஆதிகேசவ நாராயணாய நம:” – ஆதியில் ஆதியான கேசவா ஹரி நாராயணா! என ஓதியவாறு ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தையும், அஷ்ட வாதூல வாஸ்து தீர்த்தக் குளத்தையும் சேர்த்து எட்டு முறை வலம் வருதல்.,

5. “ஓம் ஸ்ரீஆதிகேசவ ரங்கநாதாய நம:” – கேசவா, ரங்கநாதா கேண்மின் உம் வேதமோதி! – என ஓதியவாறு அஸ்வத விருட்ச பாரதீ, அஷ்ட வாதூல வாஸ்துத் தீர்த்தம், ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம் மூன்றையும் சேர்த்து எட்டு முறை வலம் வருதல்.,

6. “ஓம் ஸ்ரீஅஸ்வத ரங்கநாத ஹரி ஸ்ரீமன் நாராயணாய நம:” – கிடந்தவாறுடைய மூர்த்தி, அரசுடை அரிநாராயணா! – என ஓதியவாறு அஷ்ட வாதூல வாஸ்து தீர்த்தக் குளத்தையும், “விருட்ச பாரதீயையும்” சேர்த்து எட்டு முறை வலம் வருதல்.,

7. “ஓம் ஸ்ரீமதே ஸ்ரீமன் நாராயணாய நம:” – அத்தனை தேவம் பொலியும் திருமதாம் ஸ்ரீதளபாதம் நாராயணத் திண்பொருளாய பாதமே போற்றி! போற்றி! – என ஓதியவாறு அஷ்டவாதூல வாஸ்துத் தீர்த்தம், ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம் இரண்டையும் சேர்த்து எட்டு முறை வலம் வருதல்.,

8. ஸ்ரீஆதிகேசவப் பெருமால் ஆலயம் முன் தொடங்கி, பெருமாள் ஆலயத்தை வலம் வந்து வணங்குதல் முதலெட்டு அட்சாட்சர வழிபாடு இது எட்டு என்ற எண்ணின் மேல் வட்டப் பகுதியாகும்.

பிறகு பெருமாள் ஆலய வாயிலில் இருந்து தொடங்கி வாஸ்து தீர்த்த வடக்குக் கரை வழியே, விருட்ச பாரதீ, குளத்தின் கீழ்க் கரை, தெற்குக் கரை வழியாக மீண்டும் ஆலயத்தின் வாயிலை வந்தடைந்து வணங்குதல் –

இது கடையெட்டு அட்சாட்சர வழிபாடு., இது எட்டு என்ற எண்ணின் கீழ்வட்டப் பகுதி போன்றதாகும். இதில் ஓத வேண்டிய துதி,
“கேசவா, மாதவா, ராமா
ஸ்ரீகிருஷ்ண ஸ்ரீபரந்தாமா
நாராயண வாசுதேவா
அட்டாட்சரம் ஆனவாறே!”

 இவ்வாரும் எட்டு என்ற எண் வடிவில் வலம் வருதலே அஷ்ட ரூபப் பரலிப் பிரதட்சிணமாகும். மிகவும் சக்தி வாய்ந்தது. குடும்ப ஒற்றுமைக்குப் பெருமாளின் அனுகிரகத்தைப் பெற்றுத் தருவது. இத்தகைய எட்டுத் திவ்யப் பிரதட்சிண அம்சங்கங்களாக எட்டு வழிமுறைகளில் வலம் வருதல் அட்ட பந்தாதிப் பிரதட்சணம் எனப்படுவதாகும்.

அமாவாசை, பௌர்ணமி, விஷ்ணுபதி, புதன் கிழமை, சனிக்கிழமை, திருவோண நட்சத்திர நாட்கள், எட்டு வாஸ்து நாட்கள் – இங்கு இவ்வாறு எட்டு முறை பிரதட்சிணம் வருதல், அட்ட கிரிவல பிரதட்சணப் பலன்களாக எட்டு மலைகள் சேர்ந்த திவ்ய ஸ்தலத்தை வலம் வந்த பலாபலன்களைத் தருவதாகும்.

மூதாதையர்களாம் பித்ருக்களுக்கும் முக்தி அளிக்க வல்ல பித்ரு மோட்சத் தலம்! சிறப்பான அமாவாசைத் தர்ப்பணத் தலம், மச்சாவதார மூர்த்தி ஆதிகேசவப் பெருமாளால் வேதசக்திகளை நிலநீர், நீர்நில, நல்லோடையாய் பூவுலகிற்கு நிரவும் தலம். வேதசக்திகள் பெருமாளின் பொற்பாதமாய்ப் பொழியும் திருத்தலம், புராதன ரீதியாக ஐநூறு மாற்றுப் பொன் பரிமளித்த பொன்னகரத் தலம், அட்ட தரித்திர நிலையைப் போக்க வல்ல பொன்னம்பலப் பெருமாள் தலம், அற்புத வாஸ்து சக்திகள் நிறைந்த வாஸ்துத் தீர்த்தப் பெருமாள் தலமே பொன்னகரம் (மணமேல்குடி) ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம்.!

மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக, தமிழ் மாதப் பிறப்பன்று செறியும் விஷ்ணுபதிப் புண்ய காலம், திருமாலின் மகத்தான பல அவதார லீலைகள் நிகழ்ந்த திருநாளாகும்.

விஷ்ணுவிடம் அபார பக்தி கொண்ட விஷ்ணு பக்தர்களுக்கும், இறை அடியார்களுக்கும் மேன்மேலும் விஷ்ணு பக்தியைப் பரிமளிக்கச் செய்யும் அற்புதத் திருநாளுமே விஷ்ணுபதிப் புண்யகாலமாகும். பித்ருக்களின் நாயகரான ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்தி, மூதாதையர்களின் உத்தம நிலைகளை ஒட்டி, அவர்கட்கு வசு ருத்ர, ஆதித்யர் என்பதாக உத்தமப் பித்ரு நிலைகளை அருள்கின்ற காலமும் விஷ்ணுபதியாக அமைகின்றது. எனவேதான் ஒரு வருடத்தில் தர்ப்பண பூஜைகளை ஆற்றுவதற்காக அமைந்து வரும் மிகவும் முக்கியமான அமாவாசை போன்ற 96 வகை ஷண்ணாவதித் தர்ப்பண நாட்களில் ஒன்றாகவும் இது சிறந்து விளங்குகின்றது!

கடந்த பல ஆண்டுகளாக, சித்தர்களின் அதியற்புத ஆன்மீக வழிமுறைகளாக, பிரவசனம், உபந்யாசம், தெய்வீக நூல்கள், இறையடியார்களுடன் ஆத்ம விசாரக் கலந்துரையாடல்கள் மற்றும் அரிய நல்வழிமுறைகள் எனப் பல வழிகளிலும் விஷ்ணுபதிப் புண்யகால மஹிமைகளை உலகெங்கும் பரப்பிட அரும்பணி ஆற்றி வரும் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய மகத்தான குருபாரம்பரிய அனுகிரகத்தைக் கலியுகத்தில் இப்பூவுலகு பெற்றுள்ளது பெரும் பாக்கியமே! நல்ல பாக்கியமாக அமைந்துள்ள இப்பிறவியில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பெருமதிப்பிற்குரிய வைணவப் பீடாதிபதிகளும், வைணவ பக்த கோடிகளும் சகல விஷ்ணு ஆலயங்களிலும் விஷ்ணுபதிப் புண்யகாலத் திருநாளை, பெருமாளுக்கான மகத்தான ஆராதனை உற்சவமாக, பண்டையக் காலம் போல் நன்கு மிளிர்ந்திட ஆவன செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

விஷ்ணுபதி மஹாதிமியப் பலாதி பலா மூர்த்திகளாகத் துலங்குபவர்கள் திருமகளாகிய ஸ்ரீலக்ஷ்மி, ஸ்ரீபூ தேவி, ஸ்ரீதேவி, நீளாதேவி, கருடாழ்வார், ஆஞ்சநேயர் ஆவர். பொன்னகராம் மணமேல்குடியில் நீளா தேவியின் மகாத்மியங்கள் பொங்கி அருள்கின்ற அற்புதத் திருநாளே நடப்பு தாரண ஆண்டின் கார்த்திகை மாதப் பிறப்பில் அமைகின்ற விஷ்ணுபதிப் புண்ய காலமாகும். நீளா தேவி பொற்சுடராய், ஸ்ரீதேவி, பூதேவி அம்சங்களில் பொலிந்தருளும் தலம்.

இந்த விஷ்ணுபதிப் புண்யகாலமானது, சனீஸ்வர மூர்த்தி, பெருமாளின் திருவடிகளைப் பூஜிக்கும் கரிநாளாகவும் அமைகின்றது. திரேதா யுகாந்த நாளாகவும், திரேதா யுகத்து ஸ்வர்ண கால சக்திகள் பரிமளிக்கும் தினமும் இதுவேயாம். துலா நீராடல் எனப்படும் ஐப்பசி மாதத்தில் காவேரி நதிப் புனித நீராடலுக்காகப் பல மைல்கள் கடந்து, ஊர்ந்து, நகர்ந்து வந்த முடவர் ஒருவர், தாம் காவேரி நதித் தீர்த்தத்தை அடைந்த போது, துலா மாதமாகிய ஐப்பசி மாதம் முடிந்து விட்ட்தை அறிந்து மனமுருகி அழுது வேண்டிய போது, அவருடைய பக்தியை மெச்சி, இறைவனே முன் தோன்றினார். ஐப்பசி மாதம் முடிந்து விட்ட போதும், கார்த்திகை மாதப் பிறப்பு நாளில் துலா மாதக் காவேரி நீராடலின் பலன்களை அவருக்கு அளித்து, “முடவன் முழுக்கு” என்ற புனிதமான வைபவத் திருநாளையும் இறை லீலையாக, காவிரி மகாத்மியமாகத் தோற்றுவித்தார்.

இந்த அனுபூதி மயிலாடுதுறையில் நிகழ்ந்ததும் ஒரு தாரண ஆண்டு விஷ்ணுபதிப் புண்ய காலத் திருநாளில்தான்! இதுவும் இந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் காவிரிக் கிளை கடலில் கலக்கும் சேது வளாக பூமியில் அறந்தாங்கி – மீமிசல் இடையில் மணமேல்குடியில் அமையுமாறு சேர்ந்து வருவது நம் வாழ்வில் கிட்டும் பெரும் பாக்கியமே!

கிருத்திகை நட்சத்திர லிங்கம்

பெண்களுடைய சொல்லொணாத் துன்பங்களைத் தீர்க்க வல்ல கார்த்திகை நட்சத்திர லிங்க பூஜை! ஒவ்வொரு நட்சத்திரத்தாரும் ஏனைய நட்சத்திர வழிபாடுகளையும் கடைபிடிக்க வேண்டும்.

ஸ்ரீகாத்ரசுந்தரேஸ்வரர்
கஞ்சனாகரம்

அட்டைப் படத்தில் நாம் தரிசிப்பது கிருத்திகை நட்சத்திர லிங்கம் எனப்படும் கார்த்திகை நட்சத்திர லிங்க வடிவாகும். பதினான்கு முக்கியமான சனக மகரிஷிகளில், சனத்சுஜாதீயர் மஹரிஷி அருளிய சனத்சுஜாதீய சாங்கிய தேவ இலக்கணச் சூத்திரப் பாங்கிற் பொலியும் புஷ்ப குந்தள வாதூல நியதிப்படி, கார்த்திகை நட்சத்திர லிங்க வடிவு அட்டைப் படத்தில் அளிக்கப்பட்டுள்ளது. இத்தகைய நட்சத்திர லிங்க வடிவுகள் இன்றும் ஒரு சில ஆலயங்களில் வழிபாட்டில் உள்ளன!

முருகப் பெருமானை வளர்க்கும் பேறு பெற்ற ஆறு கார்த்திகைப் பெண்டியரும், இவ்வரிய தெய்வீகப் பேற்றைப் பெறுதற்காக ஆற்றிய சிவ வழிபாடுகளுள் ஒன்றே கிருத்திகா லிங்க வழிபாடு ஆகும்.

மேலும் கார்த்திகை நட்சத்திர தேவி, விண்ணில், கிருத்திகா நட்சத்திர மண்டலத்தில் கடுந்தவம் புரிந்து, கிருத்திகா லிங்கத்தைப் பூஜிக்கும் அரிய நல்வரத்தைப் பெற்று சந்திர மூர்த்திக்குப் பத்தினியாகும் பெறும் பாக்யத்தைப் பெற்றனள்.

சிவசக்திகளும், கார்த்திகேய சக்திகளும் இணைந்து பரிமளிக்கும் சிவஸ்கந்த மூலாதார சக்திகள், சுயம்பாகத் தாமே கிருத்திகா லிங்கமாக உற்பவித்து, கிருத்திகா தேவியின் சிவலிங்க பூஜைக்குப் பெரிதும் துணை புரிந்த திருநாளே தாரண வருட, கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத் திருநாளாகும்.

எந்தப் புனித தினத்தில், கிருத்திகா மண்டலத்தில், கிருத்திகா லிங்கம் உற்பவித்ததோ, அதே நாளில் நீங்களும் இதனைத் தரிசித்திட, வரும் தாரணக் கார்த்திகை மாத அருணாசல சர்வாலயக் கார்த்திகை தீப நாளில், திருஅண்ணாமலையில், அருணாசல கிரிவலம் வந்திடும் பாக்யத்தைப் பெற்றிடுவீர்களாக! இதற்கான அரிய ஆன்மீக, காரண, காரிய விளக்கங்களை, சித்தர்கள் அருளிய வகையில், சற்குருவின் திருவாய் மொழிகளாக இங்கு அளிக்கின்றோம்.

ஸ்ரீரங்கநாதர், கிடந்த கோல மூர்த்தியாக, பல அனந்த யோக சயனக் கோலங்களைக் கொண்டு, வித விதமான யோக சக்திகளை ஜீவன்களுக்கு அருள்கின்றார். மனித ஜீவ வாழ்க்கைக்கு இன்றியமையாத இயற்கையான உறக்க நிலையும் ஒரு வகை யோக நிலையே! மாத்திரை, மருந்து, மதுவால் ஏற்படும் உறக்கம், உண்மையான உறக்கம் ஆகாது. இவ்வகைச் செயற்கை உறக்கம், கபாலச் செல்களை மிகவும் பாதிக்கும்.

ஸ்ரீதுங்கஸ்தனாம்பிகை
கஞ்சநாகரம்

உண்மையான உறக்கம் ஓர் உன்னத யோகநிலையே!

ஒவ்வொரு மனிதனும், தினமும் இரவில்தான் உறங்க வேண்டும், பகலில் உறங்குவது கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். பௌர்ணமி பூஜைகள், அன்னதானம், இரவு நேரக் கிரிவலம் போன்ற இறைக் காரியங்களில், இரவில் மிகவும் கடினமான உழைப்புடன் ஈடுபடுவோர்க்கு மட்டுமே இறை நியதியாகப் பகல் நேர ஓய்வு பெறுவது அனுமதிக்கப்படுகின்றது.

மனிதனுக்கு, உறக்கம் என்பது வெறும் ஓய்விற்காக மட்டும் அல்ல, பெரும்பாலானோர் கலியுகத்தில் கடுமையாக உழைப்பதும் கிடையாது அல்லவா! White Collar Job என்பதாக, கலியுலகில் நாற்காலியில் அமர்ந்த கோல, சுகவாசியாகப் பரிமளிக்கும் வண்ணம் எளிய பணிகளையே, உழைப்பின்றி சம்பாதிப்பதற்காகப் பலரும், குறிப்பாக இளைய சமுதாயத்தினர் பெரிதும் விரும்புகின்றனர், இது தவறான அணுகுமுறை.

பிறவிப் பெருங்கடலில் சிக்கிய நிலையில், கர்ம வினைகளைக் கழித்திடுவதற்காகப் பெருந் தெப்பமாக உதவும் உத்தமமான மனிதப் பிறவியைப் பெற்று விட்டு, உழைக்காமல் சம்பாதித்து மலையளவு கர்ம வினைகளையே மென்மேலும் சேர்த்துக் கொண்டால் இதுவே பெரும் பாவமாகின்றதே!

கடுமையாகப் பகலில் உழைக்காவிட்டாலும், நிறைய ஓய்வு கிட்டினாலுமே இரவில் உறக்கம் தேவைப்படுகின்றது அல்லவா! எனவே, உறக்கம் மூலமாக ஓய்வு பெறுவது என்ற காரணம், இரண்டாம் பட்சமே., மனித வாழ்வில் கிட்டத்தட்ட 30 சதவீதம் உறக்கத்தில் கழிகின்றதன்றோ! உறக்கம் ஆரோக்கியத்திற்குத் துணைபுரிவதாலும், நல்உறக்க நிலையில் யோக சித்திகள் கனிவதாலும், கனவுலக வாழ்வில், பல கர்ம வினைகள், கழிவதாலும், உறக்கத்தில் கணிசமான வாழ்க்கைக் காலம் கழிவதாக உரைத்தலும் மிகவும் தவறானதே!

உறக்கத்தில் உறையும் பிம்ப யோக சக்தி!

உண்மையாக, இயற்கையாகப் பெறும் நல்உறக்கத்தில் கிட்டுகின்ற யோக சக்தியே பிம்ப யோக சக்தி ஆகும். உறக்கத்திற்கு முதற்காரணமாக, முதல் பட்சமாக அமைவது பிம்பயோக சக்தியைப் பெறுதலே ஆகும். இதில் கிளைக்கும் உத்தம யோக நிலைகளை எழுத்தில் விளக்கி உணர வைப்பது மிகவும் கடினம், ஆன்மீக அனுபூதியாகவே உணர்தல் வேண்டும்.

ஸ்ரீமுருகப் பெருமான்
கஞ்சனாகரம்

துவஜா பிம்பம், தாந்த்ரீய பிம்பம், தகிஸ்தார பிம்பம், ஆசூரி பிம்பம், அர்த்தநாரி பிம்பம், சமஸ்த பிம்பம் என்ற ஆறுவிதமான பிம்ப யோக சக்திகள் நல்உறக்கத்தில் தோன்றுகின்றன. கனவு (சொப்பனம்), ஆழ்ந்த உறக்க நிலை (சுஷூப்தி), ஆத்மநிலை (துரீயம்) ஆகிய மூன்று நிலைகள் உறக்கத்தில் அமையும். இந்த மூன்றின் ஒவ்வொன்றிலும் இரண்டு இரண்டாக, இந்த ஆறு பிம்ப யோக சக்திகளும், அவரவருடைய அந்தந்த நாளின் நற்காரிய வினைகளின் பாவனமாகவும், பூர்வ ஜன்ம கர்ம பரிபாலன ரீதியாகவும் அமைந்து வருவதாகும்.

ஒருவர், ஒரு நாளில், எந்த நற்காரியமுமே செய்யா விட்டால், இந்த ஆறு நிலைகளில் கிஞ்சித்தும் யோகப் பலன் கிட்டுவது கடினமே! இந்த ஆறில் எதுவுமே, ஒரு சிறு அம்சமுமே கிட்டாத உறக்க நிலை வீணே கழியும் காலமாகும். இது உண்மையான உறக்க நிலை ஆகாது. இதனால், ஒரு நாள் உறக்கத்தை விரயம் செய்த பெரும் பாவமும் வந்து சேரும்.

உறக்கத்தில் பரிணமிக்கும் உத்தம நுண் இழைப் பயணம்!

நற்காரியம் செய்து உறங்கிப் பெறும் உறக்க நிலையில் கிட்டுகின்ற பிம்ப யோக நிலைகளின் தன்மைகளும் அவரவர் செய்த நற்காரியங்களைப் பொறுத்து மாறுபடுவதாகும்.

இரவில் ஆழ்உறக்க நிலையில், இவ்வாறு கிட்டும் பிம்ப யோக சக்தி நிலையில், நாபியில் (தொப்புளில்) இருந்து, மயிரிழையினும் நுண்ணிய ஒளிப் புனல் தோன்றி விண்ணை நோக்கிச் செல்கின்றது. Astral travel எனப்படும் உத்தம விண்முழைப் பயண அம்சங்களில் இது ஒன்றாக அமைவதாகும். இத்தகைய நுண்ணிய ஒளிப்புனல், மேற்கண்ட ஆறு வகை பிம்ப யோக சக்திகள் குவியும் ஆறு பட்டை ஒளிக் கற்றைத் தொகுப்பாகும்.

இவை ஆறும் நன்றாய்ச் சேர்ந்து “இஷ்டி பிம்பம்” எனும் ஜோதிப் புழல் ஆகின்றது. இந்த “இஷ்டி ஜோதிப் புழல் பிம்பமே” சுஷூப்தி மற்றும் துரீய நிலையில் ஆத்ம லிங்க வழிபாட்டிற்கு வழி காட்டும், ஆனால் இதனை அடைவதற்கு முன், எண்ணற்ற உத்தம நிலைகளை உறக்கத்தில் கடக்க வேண்டும்.

உறக்கத்தில் முதலில் கனவு நிலை வரும். பிறகு சுஷூப்தி எனும் ஆழ்நிலை உறக்க நிலையானது, உறங்குவதற்காகப் படுத்தவுடன் ஏற்படும் கனவு நிலையை அடுத்து வருவதாகும். இதற்கு அடுத்த நிலையே துரீயம் ஆகும். இதில் துரீயம் என்பது பெறுதற்கரிய உத்தம நிலையாகும். இதனை அடைதல் மிகமிகக் கடினம். பலரும் இதனைப் பெறாது சுஷூப்தி நிலையிலேயே நின்றிடுவர்.

அதாவது, கனவற்ற ஆழ்நிலை அம்சங்களுள் ஒன்றே சுஷூப்தி நிலையாகும்.

ஸ்ரீஅஷ்டபுஜ துர்கை
கஞ்சநாகரம்

சுஷூப்தி நிலையில்தான் ஜோதிப் புழல் தரிசன உத்தம தேவ நிலையில், துஷாபர லிங்க உபாசனை ஊட்டப் பெறும். இவ்வாறு, பூவுலகில் ஒவ்வொருவரும் செய்கின்ற நற்காரிய விளைவுகள், அவரவருடைய சுஷூப்தி உறக்க நிலையில் முதலில் இஷ்டி பிம்ப யோக சக்தி உருவாகும் நிலையுமாகும். இதற்கு அடுத்த தெய்வீக உத்தம நிலையாக, விண்முழைப் பயணமானது, துஷாபர (துலாபார) லிங்க வழிபாட்டு மண்டலத்தை அடையும். இங்கு துஷாபார லிங்க பூஜைகளில் கலந்து கொண்டு, தானே துஷாபார லிங்க பூஜைகளைப் பலர் துரீய நிலையில் ஆற்றுவதும் உண்டு.

துஷாபார லிங்க தரிசனம்

இவ்வாரு ஆக்க(ம்)ப் பெறும் துஷாபார லிங்காதி பூஜா பலன்கள் யாவும், கார்த்திகை நட்சத்திர நாளில் அவரவருடைய 72000 உடல் நாளங்களில் பரிணமிக்கும். மேலும் கார்த்திகை மாதக் கார்த்திகை நாளில் துஷாபார லிங்க பூஜைப் புஷ்பாகாரமானது, கிருத்திகா ஜோதிக் கிரணங்களாக மாறி, திருஅண்ணாமலையில் அருணாசலத்தில், ஜோதி தரிசன வழிபாட்டிற்காக வந்தடையும்.

கார்த்திகை நட்சத்திரத்தில் உற்பவித்த முருகப் பெருமான், உமையம்மையைப் போல் துஷாபார லிங்கத்தைத் தழுவி வழிபட்டு, சரவணபவ சக்திகளைப் பிரபஞ்சத்தில் நிரவி மெருகூட்டுகின்றார்., இவை யாவும் கார்த்திகைத் திருநாளில் முருகனுடைய மலைத் தலங்களில் ஏற்றப் பெறும் கார்த்திகை தீப ஜோதியில் பரிணமித்துப் பூவுலக ஜீவன்களுக்கு நன்மை பயக்கும். இது கருதியே, தேனி மலை தீபோற்சவமாக, நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் சார்பில், அய்யர்மலை மற்றும் தேனி மலையில் திருக்கார்த்திகை தீபம் கடந்த சில ஆண்டுகளில் இறையருளால் ஏற்றப் பெற்றது.

துஷாபார லிங்க பிம்ப வடிவே கிருத்திகா நட்சத்திர லிங்கமாம்!

சித்தர்களின் இவ்வரிய கார்த்திகை தீப ஜோதி விளக்கங்களுடன், நீங்கள் அட்டைப் படத்தில் தரிசிப்பதே கிருத்திகை நட்சத்திர லிங்கமாகும். பூலோக மக்கள் தினமும் நற்காரியங்களை ஆற்றிட, ஆற்றிடத்தான், மேற்கண்ட ஆறுவகை பிம்ப யோக நிலைகள் பூவுலகில் பல மூலாதார ஜோதிகள் மூலமாகத் தோன்றி, துஷாபார லிங்க வழிபாடு சிறப்புற்று விளங்கும்.

எனவே, கார்த்திகை நட்சத்திர லிங்கத்தை வழிபடுவதால், துஷாபார பிம்ப லிங்க தரிசனப் பலன்களையும், சிவஸ்கந்த பூஜா வழிபாட்டுப் பலன்களையும், அம்சங்களையும் நல்வரங்களாகப் பெற்றிடலாம்.

ஸ்ரீசட்டநாதர்
கஞ்சனாகரம்

வியாக்ரபாத மகரிஷி மிகவும் போற்றி வழிபட்ட லிங்கமே துஷாபார லிங்கமாகும். தெய்வீக ரீதியாக நற்சேவைகளை, நற்காரியங்களை ஆற்றுவதற்குத் தேவையான, கிருத்திகைப் பிரகாச சக்திகள் கிட்டும் அருட்பொழிவே கிருத்திகா நட்சத்திர லிங்க மூல பூஜையுமாய் ஆகின்றது. நாதாட்சர தீப சக்திகள் தோன்றுமிடமும் கிருத்திகா நட்சத்திர லிங்க மண்டலமாகும்.

துஷாபார லிங்கம் சக்திகளின் ஒருமித்த ஒளிப் பிரகாச பிம்ப வடிவே கிருத்திகா நட்சத்திர லிங்கம் ஆகும். பரிசுத்தமான துஷாபார லிங்கத்தின் பிம்ப வடிவே, கலியுக ஜீவன்களின் வழிபாட்டிற்காக, சித்தர்கள் அளிக்கும் தக்க விளக்கங்களுடன், இங்கு கிருத்திக நட்சத்திரா லிங்கமாக வடித்துத் தரப்படுகின்றது. அதாவது, பூலோக ஜீவன்கள் பெறக் கூடிய துஷாபார பிரதி பிம்ப லிங்க வடிவே இவ்விதழின் அட்டையில் காணும் கிருத்திகா நட்சத்திர லிங்கம் ஆகும். இத்தகைய வடிவுகள் சில ஆலயங்களில் ஆகம, வைதீக வழிபாடுகளாக அமைந்துள்ளன.

கிரிவலத்தில் கிட்டும் லிங்க பந்தன சக்திகள்

பௌர்ணமித் திதியில், மலைத் தலங்களில் கிரிவலம் வருகையில், மலை உச்சியில் உறையும் “விபந்த பாத்ர சக்திகள்” ஜீவன்களுக்குப் பரந்த சேவைகளை ஆற்றுகின்றன. இவை தம்முடைய சக்தி ஈர்ப்புக் கிரணங்கள் மூலம், பௌர்ணமி ஜோதியின் பிம்பமாக கிருத்திகா லிங்கப் பிரகாச சக்திகளை ஈர்க்கின்றன. மலையினுள் பொதியும் உள் மனநீரோடைகள் மற்றும் மலையின் கீழ்ப் பகுதியில் உள்ள புனல் வட்டங்கள் மூலமாக நிலப் பகுதிக்கு இவை அனுப்பப் பெறுகின்றன.

கலியுக மனிதன் ஜீவிப்பது உணவாகிய அன்ன சக்தியால்தானே! எனவே, அன்னமய கோசத்திற்கு உரிய ஆத்ம தீப சக்திகளை அளிப்பதும் துஷாபார லிங்க தரிசனம் மற்றும் பூஜை சக்திகளாகும்.

கஞ்சனாகரம் – கிருத்திகா நட்சத்திரத் தலம்!

நற்காரிய விழிப்பு, நல்எண்ணத் தொகுப்பு, நல்வினை மொழிவு, நல்ஜோதிப் பகுப்பு, நற்புண்ய நிரவு போன்ற ஐந்து தேவநாள நற்கதிர் சக்திகள், கிருத்திகை நட்சத்திரம் தோன்றி உற்பவிக்கின்ற துஷாபார லிங்க சக்திகளாக இதில் தோன்றுகின்றன.

ஸ்ரீவிநாயகர்
கஞ்சநாகரம்

துஷாபார சக்திகளின் அம்சங்களைத் தாங்கி வரும் கிருத்திகா நட்சத்திர லிங்க சக்திகள் பரிமளிக்கும் தலங்களில் ஒன்றே மாயூரம் திருவிளையாடல் கிராமம் அருகே, கஞ்சனாகரம் சிவத்தலமாகும். காத்ரம் என்றால் ஒளிப் புனல் ஆன்ம வலிமையுடன், ஸ்திரமாக யுகம், யுகமாக இருப்பது என்று பொருளாகும். கஞ்சனாகரம் ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் மேற்கண்ட துஷாபார லிங்க ஷட் ஜோதிகளை உற்பவிக்கின்றார். சலனமற்று யோகம் புரிகின்ற ஸ்ரீகாத்ர சுந்தரேஸ்வரரை, முருகப் பெருமான் சஷ்டியும், கார்த்திகையும் கூடும் நாளில் வழிபட்டிட, அம்பிகை எவர் கண்களும் படாத தீர்த்தமான இளநீரால் அபிஷேகித்திட, காத்ர ஜோதியிலிருந்து சிவஸ்கந்த ஷட்கார ஜோதிகள் தோன்றி ஸ்ரீகாத்ரலிங்க வழிபாடு சர்வ ஜீவன்களுக்குமாய் எழுந்தது.

முருகனும், அம்பிகையும் ஈஸ்வரனை வழிபட்ட கஞ்சனாகரத் தலத்தில், சிவபெருமான் துஷாபார லிங்க சக்திகளின் தேவசார சக்திகளைத் தோற்றுவித்திடவே, அம்பிகை துங்கபால ஸ்தனாம்பிகையாக அவதாரிகை பெற்று, கீர சாத்திர சக்திகளைப் பரப்புகின்றாள். மேலும், இந்த ஆலயத்தில், அம்பிகை மதுரை மீனாட்சி போலக் கிளியைத் தாங்கி அருள்கின்ற காட்சி காணுதற்கு அரியதாம்.

மனவேற்றுமைகள், சொத்துத் தகராறு, பெற்றோருக்கு விருப்பமின்றி, பிள்ளைகள், பெண்கள் மணம் புரிதல் போன்ற காரணங்களால் பிரிந்துள்ள குடும்பங்கள் ஒன்று சேர உதவும் தலம் இதுவே ஆகும்.

இங்கு கஞ்சனாகரத்தில், அம்பிகை தன் இடது தோளில் கிளியைத் தாங்கி அருளும் தரிசனம் பிரபஞ்சத்தில் பெறுதற்கு அரியதாம். கன்னிப் பெண்களும், இல்லறப் பெண்களும் அம்பிகைக்குச் சந்தனக் காப்பிட்டு, அம்பிகையின் தோளில் தவம் புரியும் வேதாகமக் கிளியையும் தரிசித்து வழிபடுதல் பெண்களுக்கு நல்லபடியான குடும்ப வாழ்க்கையை அடைய நல்வரங்களைப் பெற்றுத் தரும்.

புகுந்த வீட்டிலும், பிறந்த வீட்டிலும் வெளியில் சொல்ல முடியா வண்ணம் பலவகைத் துன்பங்களால் வாடுகின்ற பெண்கள், இங்கு கார்த்திகை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபட்டு வர, நல்ல மாற்றங்களை வாழ்வில் காண்பர்.

சிலம்பான்சிலாவில் உருவான
ஸ்ரீநடராஜ மூர்த்தி கஞ்சநாகரம்

40 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் ஆகாத ஆண்கள், பெண்கள் ஒரு மண்டலம் (48 நாட்கள்) தக்க விரதம் இருந்து, இந்த ஆலயத்தில் வெள்ளி, பிரதோஷம் மற்றும் கார்த்திகை நட்சத்திர நாட்களில் அபிஷேக, ஆராதனைகளை ஆற்றி, துங்கபத்ரா நதி தீரத்தில் இருந்து கொணர்ந்த புண்ணிய நதி நீரால் அபிஷேகித்துப் பூஜித்து, 80 வயது நிறைந்த பழுத்த சுமங்கலிகளை வைத்து சுமங்கலி பூஜை நடத்தி வர, ஜாதக ரீதியாக குருபார்வை ஸ்திரம் பெற்றிட நன்கு உதவும். இதனால் நல்ல திருமண வாழ்வு அமைய நல்வழி துலங்கும்.

இவ்வாறு எண்ணற்ற தெய்வீக மகத்துவங்களை உடைய துஷாபார சிவலிங்க மகத்துவத்தை, ஹயக்ரீவ பெருமாள், சரஸ்வதி தேவிக்கும், ஆஞ்சநேயருக்கும் உபதேசித்துள்ளார். மிகவும் சக்தி வாய்ந்த சிவலிங்க வழிபாடு, வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வாயிலார் நாயனார், பூசலார், பீமன், அக்ரூரர், ஏகலைவன் போன்றோருக்கு மானசீக பூஜையில், துஷாபார லிங்க சித்திகள் நன்கு சித்தியாகி அருள்பாலித்துள்ளன!

கஞ்சனாகரத்தில் உள்ள நடராஜ மூர்த்தி சிலம்பான்சிலா என்ற அரிதான சிலாவில் உருவான மூர்த்தி ஆவார். கார்த்திகை நட்சத்திர முதல் பாதத்தில் சூரியன் பிரகாசிக்கும்போது மட்டுமே இந்த சிலம்பான்சிலா மனிதக் கண்களுக்கு புலப்படும். அதனால் கார்த்திகை நட்சத்திர முதல் பாத நேரத்தில் இத்தல நடராஜ மூர்த்தியை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதால் எத்தகைய தொற்று நோய்களும் நிவாரணம் பெறும்.

இத்தல அம்பாள் ஸ்ரீதொங்கு ஸ்தனாம்பிகை என்றும் அழைக்கப்படுவாள். பல சிறுவயது கன்னிப் பெண்களுக்கும் அவர்கள் தனங்கள் தொங்கிய நிலையில் இருப்பது தற்காலத்தில் நாம் காணக் கூடியதே. எழுச்சியுடன் இருக்க வேண்டிய தனங்கள் தொங்கிப் போயிருப்பதால் அத்தகைய பெண்கள் அடையும் வேதனையை அவர்கள் மட்டுமே அறிவர். இத்தகைய பெண்கள் தாங்கள் அரைத்த சந்தனத்தால் அம்பிகையின் இடது கரத்தில் அமைந்த கிளிக்கு காப்பிட்டு இத்தலத்தை தொடர்ந்து வலம் வந்து வழிபடுதலால் நற்பலன் பெறுவார்கள். வளர்ச்சியின்மை, Harmone deficiency, breast tumour, புற்று நோய் போன்ற பல்வேறு காரணங்களால் தங்கள் தனங்கள் பாதிக்கப்பட்ட வயது முதிர்ந்த பெண்களும் இத்தகைய வழிபாட்டால் நலமடைவர். சம்பந்தப்பட்டவர்கள் என்று அல்லாது அத்தகைய பெண்களின் உறவினர் எவருமே இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பலன் பெறலாம். தொடர்ந்த வழிபாடு அவசியம்.

துங்கம் என்றால் எழுச்சி, பால என்றால் வளம், குன்றா இளமை. அதாவது வளமான நிலைத்த எழுச்சியைத் தருவதே ஸ்ரீதுங்க பால ஸ்தனாம்பிகை வழிபாடு. பெண்களுக்கு இந்த வழிபாட்டைத் தவிர வேறோர் வரப்பிரசாதம் வேண்டுமா என்ன ?

மேலும் வியாபாரம், வேளாண்மை போன்று எந்தத் துறையில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும், அலுவலகங்களுக்கு செல்லும் பணியாளர்களாக இருந்தாலும் அவர்கள் நியாயமான காரணங்களால் வறுமை நிலையை அடைந்திருந்தால் அல்லது கடன்கள் பெருகி இருந்தால் அவர்களுக்கு அடைக்கலம் அளிப்பவளே இத்தல அம்பிகை ஆவாள். எழுச்சி மிக்க உத்தராயண மாதங்களான தை முதல் ஆனி வரையிலுமோ அல்லது அக்னி நட்சத்திர நாட்களிலோ நீர்மோர், பானகம் தானம் அளித்து வந்தால் தங்கள் வறுமை நீங்கி, செல்வ வளமும் பெறுவார்கள்.

சித்தர்களின் கருணைக்கு எல்லை கிடையாது என்பதற்கு மற்றுமோர் உதாரணம் இத்தல அம்பிகையின் வைபவம் குறித்து நம் சற்குரு அருளிய பொக்கிஷங்கள்.

பொதுவாக, கணபதி மூர்த்தியும் முருகப் பெருமானும் துவார பாலகர்களாய் சில சிவத்தலங்களில் எழுந்தருளி இருப்பதுண்டு. கணபதி, சுவாமிக்கு வலது புறத்திலும் முருகப் பெருமான் சுவாமியின் இடது புறத்திலும் எழுந்தருளி இருப்பார்கள். சில திருத்தலங்களில் இத்தகைய மூர்த்திகள் இடம் மாறி எழுந்தருள்வதும் உண்டு. அதிசயமாக கஞ்சனாகரம் திருத்தலத்தில் சுவாமியின் வலது புறத்தில் முருகப் பெருமான் தம்பதி சகிதமாகவும், இடது புறத்தில் கணபதி மூர்த்தியும் இறைவனை நோக்கியவாறு எழுந்தருளி உள்ளனர். வயதான பெற்றோர்கள், தங்கள் உடல் ஆரோக்ய குறைவு ஏற்படும்போதோ, வருமானம் குறையும்போதோ எங்கே தங்கள் குழந்தைகள் நம்முடைய வயதான காலத்தில் நம்மைக் கவனிக்காது விட்டு விடுவார்களோ என்று அஞ்சி அஞ்சியே மனம் நொந்து விடுவர். அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் என்பதாக உடல் ஆரோக்யமாக இருக்கும்போதும், தங்களிடம் போதுமான வருமானம் இருக்கும்போதும் காஞ்சனாகரம் கணபதி, முருக மூர்த்திகளை வணங்கி வந்தால் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி சற்றும் கவலையில்லாமல் வாழலாம் என்பதே சித்தர்கள் காட்டும் வழிகாட்டுதலாகும்.

மதன மதனிப் புறா

உலகெங்கும் ஒரே நாடாகட்டும்!

நம் நாட்டிலும், கிரேக்கம், இத்தாலி (பண்டைய ரோமானீயம்) போன்ற அயல் நாடுகளிலும் பழமையான பறவைச் சிற்பங்கள், பறவை வடிவங்களை கலைப் பொருட்களாக, அழகுப் பொருட்களாக அமைத்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள். இத்தகைய தொன்மையான வடிவுகள், வானிலிருந்து நற்கதிர்களை கிரகிக்க வல்லவை, சுற்றுப் புறச் சூழ்நிலையில் நிலவும் எதிரிணித் தீய சக்திகளை (negative forces) மாய்த்து, இல்லத்தை சுத்திகரிக்க வல்லவை! விண்ணுலக நல்தேவதைகளிடம் இருந்து அனுகிரக சக்திகளைப் பெற்றுத் தரும் தேவ சக்திகளைப் பூண்டவை!

ஸ்ரீநந்தி மூர்த்தி
கஞ்சனாகரம்

மொத்தத்தில், இத்தகைய ஆன்ம சாதனங்கள் இல்லங்களில் இருப்பதே பெரிய தற்காப்பு சக்திகளைப் பூரணித்துத் தருவதாம். இவற்றின் ஒவ்வொரு அமைப்பின் பின்னணியிலும் தேவாதி தேவ அனுபூதிகள் நிறையவே உண்டு. இவற்றுள் ஒன்றே படத்தில் நாம் காணும் மதன  மதனிப் புறாக்கள் ஆகும். இத்தகைய வடிவுகள் ஆங்காங்கே உலகெங்கும் நிரவி உள்ளதையே, பண்டைய யுகங்களில் சனாதன தர்ம நாடானது உலகில் துலங்கியதை நிரூபணம் செய்கின்றது.

தற்போதைய நாடுப் பிரிவினைகள் பிற்பாடு தோன்றியவையே! முந்தைய யுகங்களில் உலக மக்கள் அனைவரும் ஒருமித்து, சனாதன தர்மப் பிரஜைகளாக மகத்தான ஒற்றுமையுடன் வாழ்ந்தவர்களே!

திருக்கயிலாயத்தில் ஒரு நாள்...

உலக அன்னையாம் ஆதி பராசக்தி தேவி, இறைவனின் திருப்பாத தரிசனத்திற்காக, நவராத்திரியில் கௌலவ கரண நேரத்தில் ஆங்கே வந்த போது...

அங்கு இறைவனைக் காணவில்லை., ஈஸ்வரன், பூலோகத்தில் பக்தனைக் காணும் பொருட்டுப் பூவுலகு சென்றுள்ளதை அறிந்து வியப்புற்று உடனே பூவுலகிற்கு ஏகினாள்.

குந்தள பர்வதனின் தெய்வத் திருப்பணி!

அப்போது, பூலோகத்தில், குந்தள பர்வதன் என்ற உத்தமச் சிவனடியார், இறைவடிவிற்கு எங்கெல்லாம் மேற்கூரை இல்லையோ, அங்கெல்லாம் சிறு கூரை செய்து தருவது என்ற வைராக்யந்தனைக் கைக்கொண்டு அற்புதத் திருப்பணிகளை ஆற்றி வந்தார்.

இவ்வாறு பல இடங்களில் சுவாமிக்கு மேற்கூரையை அமைத்துத் தந்து அறப்பணி ஆற்றி வந்த காலை, ஓரிடத்தில், இறைவனும், “அப்பனே! யாம் இங்கு மேற்கூரையின்றி வெட்ட வெளி மூர்த்தியாகவே  இங்கு இருந்து, அருள்வோம்!” என்று அசரீரியாக, உரைத்ததை அவர் அறியாது, அந்த இடத்திலும் மேற்கூரை வேய விழைந்தார். இதற்கான மர உத்திரங்களைப் பெற அருகிலுள்ள காட்டிற்குச் சென்ற போது, அம்மரங்களில் இருந்து நிறைய நாகங்கள் குதித்து ஓடோடி வெளி வந்தன. நாகங்கள் காயமுற்று நாகதோஷம் அண்டலாகாது என்பதனால் அவரால் தேவையான அளவு மரக்கட்டைகளைப் பெற முடியவில்லை.

ஸ்ரீகாத்ரசுந்தரேஸ்வரர்
கஞ்சனாகரம்

“இதென்னப்பா சோதனையாக இருக்கின்றதே!” என்று எண்ணி, அவர் இன்னொரு கிராமத்திற்கு சென்ற போது, அங்குள்ளவர்கள் அவரைப் பல காரணங்களால்  மரங்களை வெட்ட விடாது தடுத்து விட்டனர். எனவே, அடுத்த ஊரில் இருக்கும் ஸ்தபதிகளை வைத்துக் கொண்டு இக்காரியங்களை செய்யலாம் என்று எண்ணி, ஸ்தபதிகளை அழைத்து வரச் செல்கின்றார். ஆனால் அவ்வூரிலும் சிறுவர் முதற் கொண்டு அனைத்து ஸ்தபதிகளும் வேலை நிமித்தமாக வேறு ஒரு ஊருக்குச் சென்று விட்டதை அறிந்து, “என்ன இது எங்கு சென்றாலும் தடங்கலாக இருக்கின்றதே!” என எண்ணி வருத்தமுற்றார்.

ஆனால் ஊர்க்காரர்களும் தாங்கள் பன்முறை மேற்கூரைப் பணியை ஆரம்பித்தும், ஜோதிடப் ப்ரசன்னத்தில் இறைவன் கூரையின்றி இருக்கவே நிர்ணயித்து வந்ததாகக் கூறினர். ஆனால் குந்தள பர்வதனோ எடுத்த காரியத்தை நிறுத்தலாகாது என்பதில் உறுதியாக இருந்தார். ஆனால், இந்தப் பணியில், தினமும் குறித்த இரு புறாக்கள் அடிக்கடி எதிரே வந்தமர்ந்து ஏதேதோ கூறிடும்.

பறவை மொழி அறியாததால் அவருக்கு வேறு எதுவும் விளங்கவில்லை! ஆனால் அவை பசியால் எப்போதும் வாடுவது போல் தோன்றியமையால், அவைகட்குத் தினமும் உணவளிப்பார். ஆனால் அவற்றைப் புறாக்கள் எடுத்துச் சென்று காக்கைகளுக்கு அளிப்பதைக் கண்டு வியந்திட்டார். நாளடைவில் அவை வெறும் பட்சிகளல்ல நல்தேவதை வடிவங்களாக இருக்கக் கூடும் என்றும் எண்ணினார்.

எனினும், வேறு வழி அறியாததால் அந்தப் பகுதியை ஆண்ட குறுநில மன்னரிடம் நடந்தவைகளைக் கூறி உதவி கேட்டார். மன்னரும் தன் தோட்டத்திலுள்ள சந்தன மரத்தை எடுத்துக் கொள்ளுமாறு மகிழ்ச்சியுடன் கூறுகின்றார். ஆனால் அங்கு சென்று பார்த்தாலோ, ராணியானவள் அச்சந்தன மரங்களை, ஸ்ரீமஹா விஷ்ணுவின் அம்சமாக எண்ணிப் பூஜை செய்து கொண்டிருக்கின்றாள். அவற்றின் மேலும் புறாக்கள் ஆங்கே உடனே வந்தமர்ந்தன.

ஸ்ரீகாலபைரவர் சந்திரன் சூரியன்
கஞ்சனாகரம்

இதை பார்த்த குந்தள பர்வதன், அம்மரங்களை வெட்டிட மனமின்றி, அருகில் உள்ள மலைப் பாறைகளைத் தான் எடுத்துக் கொள்ள விரும்புவதாகக் கூறி ராஜாவிடம் உத்தரவு கேட்கின்றார். மன்னரும் ஒப்பிடவே, தானே சென்று அப்பாறைகளைச் செதுக்கி, ஒவ்வொன்றிலும் “சிவ, சிவ” என சிவாட்சரங்களைப் பொறிக்கின்றார். ஒவ்வொரு பாறையிலும் அப்புறாக்கள் தினமும் பன்முறை வந்தமரும், பல கல் உத்தரங்கள் தயாரானாலும், பாறைகளின் உள்நீரோட்டம் சரி இல்லாமையால், ஒவ்வொன்றாக எடுத்துப் பதம் பார்த்து செதுக்கிட.. இவ்வாறு செய்து முடிக்கவே அவருக்கு ஆறு வருட காலம் ஆகின்றது.

“ஒரு சிறு ஆலய மேற்கூரைப் பணிக்கு இவ்வளவு காலமாகின்றதே, எனினும் எடுத்த காரியத்தை முடித்தாக வேண்டும்!” என்ற வைராக்யத்துடன் செயல்படுகின்றார்.

இதனை முடிக்கும் தறுவாயில் அவ்விரண்டு புறாக்களும் வந்து அப்பாறைகளின் மீது அமர்ந்து, குந்தள பர்வதனிடம், “அப்பா! இங்கு இத்தலத்தில் இறைவன் ஏற்கெனவே தான் கூரையில்லாமல் இருக்கப் போவதாகவே வாக்குறுதி கொடுத்துள்ளதால், இதனை மீறி மேற்கூரை இட்டால், உனக்காக இறைவன் மனம் இளகினால் பகவானின் வாக்கும் பொய்யாகி விடும்! நீ அங்கு மேற்கூரை இடாதே!” என அறிவுரை கூறின.

தேவ புறாக்களின் தேவ உரைகள்

இதுவரையில் தமக்குரிய பறவை மொழியில் பேசியவை, இன்று தனக்குப் புரியும் மொழியில் பேசுவதைக் கண்டு அவர் ஆச்சரியமுற்றார். எனினும் அவருடைய சந்தேகங்கள் அனைத்திற்கும் அவை நல்ல விளக்கங்களைத் தந்தன.

அவை, தினமுமே தாம் 36 லோகங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் பெறுவதையும் பித்ரு லோகங்களில் குந்தள பர்வதனின் பித்ருக்களைத் தரிசித்ததையும், சந்தித்ததையும் விளக்கின. தினமுமே அவருடைய பித்ருக்கள் அளித்த நற்செய்திகளை அவை அவருக்குக் கொண்டு வந்து அளித்தாலும், பித்ரு தர்ப்பணங்களை, வழிபாடுகளை அவர் முறையாக ஆற்றாமையால் தேவ புறாக்கள் அளிக்கும் தேவஉரைகளை உணரும் சக்தியை அவர் பெற முடியாமற் போயிற்று. இவருக்காக தேவ புறாக்கள் பல தலங்களிலும் புனித நீராடிப் பூஜித்தும், தினமும் இவர் சார்பாகக் காக்கைகளுக்கு உணவிட்டும், பித்ருப் ப்ரீதி செய்தும் அவருக்குப் பித்ரு லோக அட்சர சக்திகளைப் பெற்றுத் தர இவ்வளவு காலம் ஆயிற்று என விளக்கி உரைத்தன.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கஞ்சனாகரம்

குந்தள பர்வதன் அப்போதுதான் தர்ப்பணப் பூஜைகளின் மகத்துவத்தை உணர்ந்தார். கலியுகத்தில்  இவ்வாறு மூதாதையர்க்கான வழிபாடுகளை முறையாக ஆற்றாதோர்க்கும் அப்புறாக்கள் இவ்வகையில் உதவிட வேண்டும் என அவர் பிரார்த்தித்தார். இதற்காக, அன்றே அந்நேரத்திலேயே, தான் இதுவரையில் ஆற்றிய இறைத் திருப்பணிகளில் கிட்டிய புண்ய சக்திகளை தேவ புறாக்களுக்கு அர்ப்பணித்தார்.

தான் அதுவரையில் “சிவசிவ” எனச் செதுக்கிய நூற்றுக்கணக்கான பாறைகளை என் செய்வது என அவர் தேவ புறாக்களைக் கேட்கின்றார். அதற்கு அப்புறாக்களும் அவற்றைச் சுமைதாங்கி கற்களாகவும்,  சிறு ஓடையின் மீது பாலத்தை ஆக்கும் கற்களாகவும் பல இடங்களில் அமைத்தால், சுமைதாங்கிக் கற்களின் மீது மகான்கள், மகரிஷிகள், சித்தர்கள் வந்து சூக்குமமாக அமர்ந்து தியானிக்கவும், அருள் வரமளிக்கவும், பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரவும் பயன்படும் எனக் கூறின!

அவரும் அவை சொல்வதைப் போல் செய்வதாகவும் கூறி, மேலும் ஒரு வேண்டுகோளையும் வைக்கின்றார். தான் மட்டுமல்லாது, எவரெல்லாம் திருஅண்ணாமலை, திருப்பதி போன்ற யாத்திரைத் தலங்களில் எங்கெல்லாம், எவரெல்லாம் சுவாமிக்கு மேற்கூரைகளை, யாத்ரீகர்களுக்கு உதவும் வண்ணம் சுமைதாங்கிகளை, நீர் ஓடப் பாறைகளை அமைக்கும் திருப்பணிகளை ஆற்றுகின்றனரோ, அங்கெல்லாம் அப்புறாக்கள் வந்து அமர்ந்து ஆசி தர வேண்டுமென வரம் கேட்கின்றார். அவைகளும் அவ்வாறே செய்வதாக உறுதி கூறி இன்றளவும் பல தலங்களில் இவ்வாறு செய்து வருகின்றன.

அவ்விரு புறாக்களே நாம் இங்கு காணும் “மதன மதனிப்” புறாக்களாகும். தினமும் பித்ரு லோகங்களுக்குச் சென்று வரும் சக்திகளைக் கொண்டவை! இல்லத்தில் மூதாதையர்களின் ஆசிகளைத் திரட்டித் தருபவை! இவை, ஒவ்வொரு நாளும் பல லோகங்களுக்கும் தூல, சூக்கும வடிவுகளில் காற்றினும் கடுகிச் சென்று வந்து சாந்தக் கதிர்களை நிரவ வல்லவை!

இவ்வாறு இரு புறாக்கள் ஒரு மனிதனுக்கு ஆன்மப் பூர்வமாக உதவுவதைக் கண்டு ஆனந்தித்த அம்பிகை, பட்சிகளின் நலன்களுக்காக நவராத்திரியில் கௌலவ கரண பூஜா பலன்களை நல்வரமாக அளித்து உதவுகின்றாள். சுமைதாங்கிகள், ஆற்றுப் பாலக் கற்களிலும், மேற்கூரையின்றி இறைவன் பரிமளிக்கும் ஆலயங்களிலும் (நாமக்கல், உப்பூர் விநாயகர், திருச்சி வெக்காளி அம்மன் போன்றவை) கௌலவ கரணம், கார்த்திகை, ரோஹிணி, மிருகசீரிஷம், சப்தமி போன்ற தினங்களில் இவை வந்தமர்ந்து பித்ரு சக்திகளை அளிக்கின்றன.

பூஜா பலன்கள்

மதன மதனிப் புறா தேவதைகளை வைத்து, அவைகளுக்குத் தினமும் பூச்சூட்டுவதும், சந்தனப் பொட்டு வைப்பதும், ஊதுவத்தி ஏற்றி வரம் வேண்டியும் பூஜிப்பதால்,

கணவன், மனைவி இடையே ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் சாந்தமும், அமைதியும் நிலவிட உதவும். மனவேற்றுமைகளால் பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேர்வர், பெற்றோர்கள் – பிள்ளைகள் (குழந்தைகள்) இடையே உள்ள மனசஞ்சலங்கள், குடும்ப பிரச்னைகள் தீர உதவும்.

கணவனோ, மனைவியோ வேறிடங்களில் அல்லது அயல்நாட்டில் பணிபுரிந்திட, குடும்பத்தினர் இங்கு வாடி, வருத்தத்துடன் வாழும் நிலைகளில் குடும்பம் ஒன்றிணைய மதன மதனிப் புறா வரவழிப் பூஜைப் பலன்கள் பெரிதும் உதவும்.

மருத்துவத் துறையில் இருப்போர்க்குக் குடும்பப் பிரச்னைகளால் மருத்துவத் தொழில் பாதிப்பு அடையாது காக்க, ஷோபன க்ஷேமப் பித்ருக்களின் நல்வரங்களைப் பெற உதவும்.

சிறுகச் சிறுக சேமிப்பு பெருகி குடும்ப நிலைமை ஸ்திரமாகி, சந்ததிகளுக்கு உதவிட, ச்ரவணபாதப் பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும்.

முடவன் முழுக்கு

ஒழுக்கமின்மை, நாணயமின்மை, பொய் பேசுதல் போன்றவை மன ஊனங்களே! கடவுளை நம்பாததும் மனக் குருடு, மனச்செவிடு, மனஊமையைக் குறிப்பதாகும். இவற்றிற்குப் பரிகாரங்களைப் பெறுதல் மிகவும் கடினம்.

பஞ்சாங்கத்தில் கார்த்திகை முதல் தேதியை, “முடவன் முழுக்கு நாள்” எனக் குறித்திருப்பார்கள். இவ்வாறு தினமுமேயாக, ஒரு வருடத்திற்கான நூற்றுக்கணக்கான அனுபூதிக் குறிப்புகள் பஞ்சாங்கத்தில் நிரவி இருக்கும். ஒவ்வொன்றின் பின்னணியிலும் நிறைய தெய்வீக மகத்துவங்கள் உண்டு. தக்க சற்குரு மூலம் இவற்றின் மஹிமையை அறிந்து ஆற்ற வேண்டிய முறையான விரத, பூஜைகளைச் செய்து வந்திடில் எத்தனையோ குடும்பத் துன்பங்களுக்கு எளிதில் தீர்வுகளைப் பெற்றிடலாம்.

முடவன் முழுக்கு ஒரு இறை லீலையே!

துலா நீராடல் எனப்படும் ஐப்பசி மாதக் காவேரி நதிப் புனித நீராடலுக்காகப் பல மைல்கள் கடந்து, ஊர்ந்து, நகர்ந்து வந்த முடவர் ஒருவர், தாம் மயிலாடுதுறைக் காவேரி நதித் தீர்த்தக் கரையை அடைந்த போது, துலா மாதமாகிய ஐப்பசி மாதம் முடிந்து விட்டதை அறிந்து கலங்கினார். இதற்காக மனமுருகி அழுது வேண்டிய போது, அவருடைய பக்தியை மெச்சி, இறைவனே முன் தோன்றினார். ஐப்பசி மாதம் முடிந்து விட்ட போதும், கார்த்திகை மாதப் பிறப்பு நாளில் முடவருக்கான துலா மாதக் காவேரி நீராடலின் பலன்களை அளித்து, “முடவன் முழுக்கு” என்ற புனிதமான வைபவத் திருநாளையும் இறை லீலையாக, காவிரி நதிப் புண்ய மகாதியமாகத் தோற்றுவித்தார்.

முடவன் முழுக்கு அனுபூதி நிகழ்ந்ததும் ஒரு தாரண ஆண்டு விஷ்ணுபதிப் புண்ய காலத் திருநாளில்தான்! இதுவும் இந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் சேர்ந்து வருவது நம் வாழ்வில் கிட்டும் பெரும் பாக்கியமே! முடம் என்றால் உடல் அங்கங்களில் ஏற்படும் குறைகள் என்று மட்டும் எண்ணாதீர்கள். முடவன் முழுக்கு என்பதாக முடவராகிய ஊனமுற்றவர்க்கு மட்டுமா இறைவன் துலா காவேரி நீராடல் பலன்களை இந்நாளில் அளித்தார்? இதன் மூலம் ஈஸ்வரன் புகட்டும் பாடங்கள் யாதோ?

கார்த்திகை முதல் நாளில், துலா நீராடற் பலன்களுடன் ஈஸ்வர தரிசனம் பெற்று, துலா ஸ்நானப் பலன்களையும் பெற்ற அந்த உத்தம முடவர் யாது செய்தார் தெரியுமா?

தமக்கு இறைவன் இவ்வாறு அளித்த விசேஷமான துலா நீராடற் பலாபலன்கள் யாவும் இதே போன்று ஐப்பசி மாத நிறைவிற்கு மறுநாள் காவேரியில் நீராடுவோர்க்கும் வந்து சேரும்படி அப்பலன்களைத் தியாகமயமாகத் தாரை வார்த்து அளித்தமையால், அப்போதே உய்வு பெற்று உத்தம நிலைகளை அளித்திட்டார். இத்தகைய அர்க்ய நீர்த் தாரைகள் பூவுலகெங்கும் காவேரி சக்தி பரிமளிக்கும் தலங்களிலும், காவேரி கடலிற் கலக்கும் துறைகளிலும், வாஸ்து சக்தி நிறைந்த தீர்த்தங்களிலும் நிரவின. இவற்றுள் ஒன்றே பொன்னகரம் (மணமேல்குடி) ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலய வாஸ்துத் தீர்த்தமாகும்.

எனவே, “முடமாகி விட்டோமே, ஊனங்கள் உள்ளனவே!” என ஊனமுற்றோர் ஒரு போதும் தாழ்வு மனப்பான்மையைக் கொள்ளலாகாது, அனைத்தும் ஊழ்வினைப் பயன் எனத் தெளிந்து, பெறுதற்கரிய இம்மானுடப் பிறவியில் ஆற்ற வேண்டிய நற்காரியங்களை, இறைவழிபாடுகளைச் செவ்வனே ஆற்றுதற்குப் பொன்னகரம் (மணமேல்குடி) பெருமாள் ஆலய வழிபாடு துணை புரிகின்றது.

மனதில் புனிதமற்ற அவலமான, கேவலமான, அருவருக்கத் தக்க எண்ணங்கள், விரோதம், குரோதம், கோபம், பகைமை நிறைந்த எண்ணங்கள், பேராசைகள் கூடினாலும் இதுவும் மன ஊனத்தையே குறிக்கின்றது. எனவே, உடலில் அங்கம் குறைவில்லாது சிறப்போடு இருந்தாலும், மனம், புத்தி, உள்ளத்தில் குறைபாடுடைய எண்ணங்கள் இருக்குமாயின், இவையும் (மன) ஊனத்தின் வகைகளே!

எனவே இதற்கும் முடவன் முழுக்குத் திருநாளில் காவேரி நீராடலும், முடவன் முழுக்கு நாளில் இறைவன் அளித்த நல்வர சக்திகள் நிரவி உள்ள தீர்த்தத் தலங்களும் நல்ல மனசுத்திக்கு வழி வகுக்கும். இவ்வாறாக, துலா ஸ்நான நீராடற் பலன்கள் நிரவி உள்ள தீர்த்தங்களுள் மணமேல்குடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயத் தீர்த்தமும் ஒன்றாகும். குருவாயூர் போல, துலாபார மூர்த்தங்களுள் இதுவும் ஒன்றாகும். பொன்னகரம் என்பதாக ஸ்வர்ண (வேத) சக்திகள் பரிமளிக்கும் தலம்.

தற்போதைய கலியுக வாழ்வில், நல்லவராக வாழத் தலைப்பட்டாலும், பூர்வ ஜன்மங்களிலோ, தற்போதைய வாழ்விலோ அறிந்தோ, அறியாமலோ மேற்கண்ட வகையில் மன ஊனங்களுக்கு ஆளாகி இருக்கலாம் அல்லவா!

புனித நீராடல் தரும் சக்திகள்

ஒரே நாளில், அதெப்படி, முடவன் முழுக்கு நாளில் நீராடினால் மன சுத்தி வந்துவிடுமா என்று எண்ணிடலாம். முழங்கால் தேய, உடல் தேய, கைகள் தேய மிகவும் கஷ்டப்பட்டு ஆழ்ந்த பக்தியுடன், மயிலாடுதுறை காவேரிக் கரை வரை ஊர்ந்து வந்த அந்த முடவரின் பக்தி நிலையை என்னவென்று சொல்வது! இந்த உத்தமமான பக்தி நிலை கூடும் போது, புனித நதியில் ஒரே ஒரு முழுக்கும், முழுமையான முக்தியைத் தரவல்லதாகும் என்பதை உணர்த்துவதும் முடவன் முழுக்கு அனுபூதி தரும் தெய்வீகப் பாடமாகும்.

எனவே ஒவ்வொரு புனித நதி முழுக்கும், நீராடலும் உடல், மனம், உள்ளம், புத்தியைச் சுத்திகரிப்பதே ஆகும். ஆனால், நீராட்டிச் சுத்தப்படுத்தப்பட்ட எருமையும், நாயும், பன்றியும் மீண்டும் மீண்டும் சேற்றைப் பூசிக் கொண்டு வருவது போல, ஒரே ஒரு முறை அமையும் புனித நதி நீராடலில் நன்கு புனிதம் பெறும் கலியுக மனிதன், மீண்டும் மீண்டும் பேராசை, பகைமை, முறையற்ற காமம், தீயொழுக்கம் காரணமாக மனதை, உடலை அசுத்தப்படுத்திக் கொள்கின்றான்.

ஆனால், இறைவனோ மகா காருண்ய மூர்த்தி! எத்தகைய கொடிய வினைகளைச் செய்தாலும், இந்த மனிதப் பிறவியிலேயே மீண்டும் திருந்துவதற்கு சற்குரு மூலமாக எத்தனையோ நல்வாய்ப்புகளை அளிக்கின்றார். 60, 70 என நீண்ட ஆயுள் அமைவதற்குக் காரணமே எந்நாளிலாவது, எந்நேரத்திலாவது மனிதன் தன்னைத் திருத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில்தான்.

எனவே, துலா ஸ்நான சக்திகள், வாஸ்து சக்திகள், ஸ்வேத ஸ்வர்ண சக்திகள், ஸ்ருதி, ஸ்ம்ருதி புராண வேத சக்திகள், விருட்ச தல நீராடல் சக்திகள் நிறைந்த கேசவத் தீர்த்தம் பொலியும் தலமான பொன்னகரத்தில் நீராடி ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை வழிபட்டு பல ஆலய தரிசன, பல தீர்த்த நீராடற் பலன்களைப் பெற்று வாழ்வில் நம்மை வருத்தும் பல துன்பங்களுக்கும் விஷ்ணு பக்திப் பூர்வமாக நல்ல தீர்வுகளையும் பெற்று, இன்ப, துன்பங்களைக் கடக்க வல்ல ஸ்ரீவிஷ்ணு பக்தியையும் பெற்றிடுவோமாக!

அமுத தாரைகள்

கலியுகத்தில் மிகமிக எளிய முறையில் ஓர் உத்தமச் சித்தரின் தரிசனம் பெற நிச்சயமாக வழி உண்டு. ஆம், அருணாசலப் புனித பூமியில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் இட்டிட, ஆங்கே நிச்சயமாக சித்தரின், மகானின், மாமுனியின் தரிசனம் கிட்டும். தனக்கு வசதி இல்லாவிட்டாலும் சாதி, மத, குல பேதமின்றி ஒருங்கிணைந்து ஆயிரம் பேருக்கு அன்னமிடுதல் சாத்தியமானதுதானே. மேலும், திருஅண்ணாமலையில் இடைவிடாது, தொடர்ந்து 108 பௌர்ணமித் திதித் தினங்களில் முறையாகக் கிரிவலம் வருவோர்க்கும் சித்தரின், மகரிஷியின், தரிசனம் கிட்டிடும் என்பதும் உண்மையே, எனினும் சித்தரின் தரிசனம் கிட்டிடில், அடுத்து என் செய்வீர்கள்? நன்கு ஆத்மவிசாரம் செய்திடுக! ஏனெனில் இதற்கான பதிலில்தான் சித்தரின் தரிசனத்தை அளிக்கும் காரணப் பிராப்த ரகசியங்கள் உட்பட அனைத்தும் அடங்கியுள்ளன!

கண் பார்வை அற்ற திருதராஷ்டிரருக்கு, மகாபாரதத்தில், கடவுள் தரிசனம் பெறும் பல வழிமுறைகளை சனத்சுஜாதீய கீதை என்ற போதனைகளாக சனத்சுஜாத மஹரிஷி அருளியுள்ளார். இவற்றின் பல அம்சங்களும் கலியுகத்திற்கெனவும் அளிக்கப்பட்டவை ஆகும். திருதராஷ்டிரருக்கு, முள்ளு முருங்கை போன்ற முள் மரப் பலகைகளை வைத்து அரிய வேத மந்திரங்களை போதித்த சனத்சுஜாத மஹரிஷியே இன்றைய கண் பார்வை அற்றோர் எழுதப் படிக்க உதவும் பிரெய்லி முறைக்கு மூலகர்த்தா ஆவர்.

பொதுவாக, அவரவருடைய கோத்ராதிபதி மற்றும் பிரவர மஹரிஷிகளின் (குலமாமுனி, குலப் பிரவர மாமுனி) தரிசனமே வாழ்வில் முதலில் கிட்டும். கோத்ராதிபதியின் ஆசிகளைக் கொண்டே ஏனைய மஹரிஷிகள், சித்தர்களின் தரிசனங்கள் கிட்டலாகும் என்பதை நினைவிற் கொள்க! இதற்கு மூலாதார பூஜைகளுள் ஒன்றாக அமைவது பித்ருக்களுக்கு முறையாகத் தர்ப்பணம் அளித்து வருதலாகும். இப்பூவுலகில் சாதி, மத, குல, இன, நாடு பேதமின்றி, ஒவ்வொருவரும் ஒவ்வொரு மஹரிஷியின் வழி வந்தவர்களே! மனிதர்களிடையே உயர்வு, தாழ்வு கிடையாது!

தீர்கத்வ தீர்க சுமங்கலிகளுள் ஒருவராக, திருதராஷ்டிரரின் மனைவியான காந்தாரி தேவியானவள் பூஜா மஹிமைகள் நிறைந்த பதிவிரதையாகப் போற்றப்படுகின்றாள். இதற்குக் காரணம் காந்தாரி தன் நாட்டுப் பெண்கள் கணவனே கண் கண்ட தெய்வமெனப் போற்றி வாழ்தல் வேண்டும் என்ற சமுதாய நல இறைச் சங்கல்பத்துடன் நல்ல சுப முகூர்த்த நாட்களில் அருணாசல கிரிவலம் மற்றும் விஷ்ணுபதி, ஷடசீதி போன்ற பூஜைகளை முறையாக ஆற்றி வந்ததேயாம்.

இன்றும், கலியுகத்தில் ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக் பகுதிகளில், சில பருவங்களில் எப்போதும் தொடர்ந்து இரவாகவும், பகலாகவும் அமைகின்றன. மனித நடமாட்டம் இல்லாதது என நாம் கருதும் இப்பகுதிகளில் சித்தர்களும், மஹரிஷிகளும் மஹா சிவராத்திரி, மாத சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற நித்ய பூஜைகளை ஆற்றுகின்றனர். மேலும் நார்வே போன்ற பகுதிகளில் சூரியன் மறையாது பகல் நேரமானது ஒரு நாளின் பாதி காலத்திற்கும், அல்லது பல நாட்களுக்கும் மேலாக நீடித்திருக்கும். இவ்வகை நிலத்தை, “பாஸ்கர குந்தள சக்திகள்” நிறைந்த க்ஷேத்திரமாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். இவை அபிஜித் முகூர்த்த வழிபாடுகளுக்கான பன்மடங்கு பலன்களை அருளவல்லவையாம்.

நற்காரியத்தில் விளையும் நல்உறக்க யோக குணாதிசயங்கள்!

எறும்புகள் உண்பதற்காகவும் பச்சரிசி மாக்கோலம் போடுதல், காக்கைக்கு உணவிடுதல், பசுக்களுக்குக் கீரை அளித்தல், நாய்க்கு உணவிடுதல், உண்ட இலையில் சிறிது உணவை மீந்து வைத்துப் பிற ஜீவன்கள் உண்ணும்படி வைத்தல் போன்ற எளிய நித்திய தர்மக் காரியங்கள், யாவும் நம் முன்னோர்களால் தினசரி வாழ்வை ஒட்டியதாகக் கடைபிடிக்கப் பெற்று, தினமும் அனுசரிக்க வேண்டிய தான தர்மக் கைங்கர்யங்களாக அமைந்தன. எனவே, இதனால் தினமுமே, ஒவ்வொரு குடும்பத்திலும், ஏதாவது ஒரு நல்ல காரியமாவது செய்தோம் என்ற மனத்திருப்தி அக்காலத்தில் அனைவருக்கும் ஏற்பட்டது., சத்சங்கக் கூட்டுப் பலன்களாக, சமுதாயத்திலும் இதனால் சாந்தம் நன்கு நிலவியது.

பருவமடைந்த அனைத்துக் கன்னிப் பெண்களும், திருமணத்திற்கு முன், ஒரு முறையாவ்வது திங்கள், வெள்ளி, கார்த்திகை, துவாதசி, பஞ்சமி, அமிர்த யோக, சித்த யோக நேரங்களில் ஸ்ரீதுங்கபால ஸ்தனாம்பிகையை வழிபடுதலால், தேவாமிர்த கீரம் என்ற சிறப்பான நல்வரங்களை அடைந்திடுவர். வாழ்வின் பல பருவங்களிலும் துணை புரியும் அதியற்புத ஸ்ரீவித்யாசக்தி அம்சங்களுள் இதுவும் ஒன்றாகும். குறிப்பாக, சிறப்பான திருமண வாழ்க்கையைப் பெற உதவிடும்.

ஸ்ரீசோமநாதர் பெருமகளூர்

மகத்தான சந்திர கிரகத் தலம் பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் ஆலயம்!

தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை – பேராவூரணி – பெருமகளூர் – கட்டுமாவடி – மீமிசல் வழித்தடமாக மணமேல்குடிக்கு மற்றொரு பஸ் மார்கமும் உண்டு. அறந்தாங்கியில் இருந்து பெருமகளூர் செல்பவர்கள் அறந்தாங்கி – மீமிசல் மார்கத்தில் திருவாப்பாடி என்ற ஊரில் இறங்கி பெருமகளூருக்கு பஸ் மாறிச் செல்ல வேண்டும். திரு+ஆல்+ஆய்+பாடி என்பதாக பசுக்கள், ஆலமரங்கள் நிறைந்ததாகப் புராதனமாகப் பொலிந்த ஊர், பெருமகளூரில்தான் பிரபஞ்சத்திலேயே அபூர்வமான, அதியற்புதமான தாமரைத் தண்டால் ஆன ஸ்ரீசோமநாதச் சிவலிங்க மூர்த்தி அருளும் சிவாலயம் உள்ளது! திருப்பணிகளை நாடி நிற்கும் தொன்மையான சந்திர கிரகத் தலம்.

குடும்பத்தில், மன அமைதியின்மை, மனநோய்கள், இருதய நோய்கள் மற்றும் தலையில் அடிபட்டோ, ரத்தநாள வெடிப்பு காரணமாகவோ மனசக்திகளை, நினைவு சக்தியை இழத்தல் போன்றவற்றிற்கு நல்ல நிவாரணம் தரும் சந்திர சக்தித் தலம். பல சாபங்களால் சந்திர மூர்த்திக்கு ஏற்பட்ட நோய்களைத் தீர்த்த அற்புதமான கமலப் பராக்ரமத் தாமரைகள் பூக்கும் சந்திர புஷ்கரணித் தீர்த்தம் உள்ள தலமே பெருமகளூர்.

மனிதனாய்ப் பிறப்பு எடுப்பதே தம் பூர்வ ஜன்ம வினைகளைத் தெய்வீக பூமியில் நன்முறையில் கரைத்து இறைவனை அடைந்திடவே ஆகும். நல்ல ஆழ்ந்த இறை நம்பிக்கையுடன் தம் கர்ம வினைகளைக் கரைத்திட வேண்டும் என்று காரணப் பூர்வமாக வாழ்வோர் மிகவும் அரிதே! எனவேதாம் இதனை உணர்த்திடவே நவகிரக மூர்த்தி அம்சங்கள் தோன்றி உள்ளனர். நவகிரக மூர்த்திகளே மனம் கனிந்து கர்ம வினைகளின் கடுமையைத் தணித்தும், தாங்கும் நல்வரங்களையும் அளிக்கின்ற மூர்த்திகள் ஆவர்.

திருமாலுடைய மச்சாவதாரத்திற்கும் பொன்னகரம் திருத்தலத்திற்கும் நிறையப் புராணத் தொடர்புகள் உண்டு. திருமால் மாபெரும் தங்க மீனாய் உலா வந்தத் தலமே பொன்னகரம்! திரேதா யுகத்தில் இத்தகைய பொற்பவ சக்திகள் நிறைந்த வளாகங்களோடு பெருமாள், (பொன்) மணல் மேல் குடி கொண்ட திருமால் பிரான், மணல்மேற்குடி கொண்டவராய், மணமேல்குடியில் பொன்னகரத்தில் நின்ற கோலம் பூண்டு அருள்கின்றார். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் தங்கத் திரவிய சாலைகள் பொலிந்த திருநகரம் “கோல்டன் பிஷ்” எனப்படும் தவ சக்திகள் மிகுந்த மீன்கள் நீர் மேல் எழும்பி பெருமாளைத் தரிசித்தத் திருத்தலம்.

தொடரும் ஆனந்தம்...

திருச்சி லால்குடி அருகில் உள்ள கீழவாளாடியில் அருள்புரியும் அண்ணலே ஸ்ரீவிஸ்வநாதர் ஆவார். அபூர்வமாக தெற்கு நோக்கி அருளும் ஸ்ரீதட்சிண துர்கை எழுந்தருளிய தலம். இங்கு சித்திரை மாதம் முழுவதுமே இறை மூர்த்திகளுக்கு பாஸ்கர பூஜை நிகழ்வது என்பது மிகவும் ஒரு அபூர்வமான காட்சியே. இவ்வாறு ஸ்ரீபைரவ மூர்த்தியின் மேல் வர்ஷிக்கும் பாஸ்கர கிரணங்களை பக்தர்களின் தரிசனத்திற்காக ஏற்கனவே அளித்திருந்தோம். இதில் இன்னுமோர் அற்புதமாக ஸ்ரீவிஸ்வநாதர் சிவ மூர்த்திக்கும் பிரதோஷ பொற் கிரணங்களின் அபிஷேகம் நிறைவேறும் அதியற்புத காட்சியையும் பக்தர்கள் இங்குள்ள புகைப்படத்தில் கண்டு இரசிக்கலாம்.

வெள்ளி அருவியில் வினை தீர்க்கும்
ஸ்ரீவிஸ்வநாதர் கீழவாளாடி

இது புகைப்படமா இல்லை அடியார்களின் மாயைகளை மனதில், உள்ளத்திலிருந்து அடியோடு வேரறுக்கும் ஒளிப்படலமா என்பதை அடியார்களே முடிவு செய்து கொள்ளலாம்.

இந்த புகைப்படத்தின் பின்னணியில் நாம் அறிந்து கொள்ள விஷயங்களை விளக்கினால்தான் இந்த இறைக் காட்சியின் மகிமையைப் பற்றி அடியார்கள் புரிந்து கொள்ள முடியும். நவவீரர்களும் வீரபாகுவின் தலைமையில் இத்தலத்திற்கு வந்தபோது இங்குள்ள நவதுவாரங்கள் வழியே ஸ்ரீவிஸ்வநாதரின் அருட் கிரணங்களைப் பெற்றனர். அந்த துவாரங்கள் தற்போது புனரமைக்கப்பட்டு சிறு துவாரங்களே இப்போது விளங்குகின்றன. இந்த நவதுவாரங்கள் வழியேதான் ஸ்ரீநந்தி மூர்த்தியும் இறைப் பரம்பொருளை தரிசனம் செய்கிறார். இந்த நந்திமூர்த்தியின் பின்தான் ஸ்ரீமுருகப் பெருமானும் தனிச் சன்னதி கொண்டு எழுந்தருளி உள்ளார். இந்தச் சன்னிதியின் பின்னால் இருந்துதான் சூரிய பகவான் தன்னுடைய கிரணங்களால் மூலவரான ஸ்ரீவிஸ்வநாதரைத் தழுவ முடியும் என்றால் இது எப்படி மனித அறிவால் சாத்தியமாகும். நவசாளரம், நந்தி மூர்த்தி, ஸ்கந்த ஆலயம் என்ற மூன்று திட வடிவுகளைத் தாண்டி, ஊடுருவி சூரிய கதிர்கள் பாய்வது என்பது நிச்சயம் சாத்தியம் அல்லவே. இந்த அற்புதத்தையும் ஸ்ரீவிஸ்வநாதர் பூலோக மக்களின் நலன் கருதி இறை அனுகிரகமாக வர்ஷிக்கிறார் என்றால் இறைவனின் கருணைக்கு எல்லைதான் உண்டா ?

சூரியனின் கதிர்கள் சூரிய மண்டலத்திலிருந்து வெளியாகும்போது ஒரு பெயரையும், இவ்வாறு இறை மூர்த்திகளைத் தழுவி, சிவ அனுகிரக சக்திகளாக வெளிப்படும்போது வேறு பெயரையும் கொண்டிருக்கும் என்பதே ஸ்ரீபாஸ்கரராயர் மகான் தெரிவிக்கும் சித்த இரகசியம் ஆகும். இங்குள்ள புகைப்படத்தில் ஸ்ரீவிஸ்வநாதரைத் தழுவும் கிரணங்கள் பரிமேலழக பவள கிரணங்கள் என்றும் சுவாமியின் மேல் பட்டு பிரதிபலிக்கும், சுவாமியின் அனுகிரக சக்தியோடு வெளியாகும் கிரணங்கள் பரிவேட்டு விஸ்வபூரண பூஜிதம் என்ற திருநாமத்தைத் தாங்கி துலங்கும் என்பதே ஸ்ரீபாஸ்கரராயர் நம் அடியார்களுக்காக வெளிப்படுத்தும் சிவ இரகசியமாகும். எத்தகைய குரு துரோகிகளும் இந்தக் கிரண தரிசனத்தால் நன்னிலை பெறுவார்கள் என்பதும், இனி குருவிற்கு துரோகம் இழைக்காத ஆழ்ந்த நம்பிக்கையை மற்ற அடியார்கள் பெறுவார்கள் என்பதும் இந்த சூரிய கிரண தரிசனத்தின் முக்கியமான 1008 பலன்களில் சிலவாகும். கார் போன்ற நான்கு சக்கர வாகனங்களில் பயணம் செய்பவர்களும், தனித்து வாழும், பணிபுரியும் பெண்களும் தக்க பாதுகாப்பு பெறுவர் என்பது போன்ற மற்ற பலன்களை தொடர்ந்து இந்த ஆலயத்தில் பெறும் தரிசனத்தால் சிறிது சிறிதாக அறிந்து கொள்ளலாம்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam