வக்ரமும் ஒரு வரப்பிரசாதமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!)

குகை நமச்சிவாயர் தனக்கு உணவு அருளிய அம்பிகையைப் போற்றித் துதித்த பாடலை, பெரியவர் சிறுவனுக்குச் சொல்லிக் கொடுத்தார். பிறகு, பெரியவர் மறுபக்கமாகத் திரும்பிப் படுத்தவாறு தூங்க ஆரம்பித்து விட்டார். சிறுவனும் அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பச் சொல்ல ஆரம்பித்தான். இருட்டில் எங்கு எழுதி வைத்துக் கொள்வது? ஏதோ தடுமாறி ஓதலானான்.

கடுவினை தீர்க்கும்
கடுவெளி ஸ்ரீசுப்ரமண்யர்

வையகமே உணவளவோ!

ஐந்தாறு முறைதான் சொல்லியிருப்பான். திடீரென்று “ஜல் ஜல்“ என்று சலங்கைச் சத்தம் கேட்க வாசற்பக்கம் கண்களை ஓடவிட்ட சிறுவனுக்கு, அந்த இருட்டில் ஒரு மாட்டு வண்டி வந்து நிற்பது தெரிந்தது. பசியில், உலகம் சிறிதானதால் அவனுக்கு அதற்கு மேல் பார்க்க முடியவில்லை!

சிந்தனை செய்
இறைவனை சிந்தனை செய்!

வண்டியில் ஏதேதோ பேச்சுத் குரல்கள் கேட்கவே, சிறுவன் பெரியவரைத் திரும்பிப் பார்த்தான், அவரோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் தூங்கிக் கொண்டிருந்தார் அல்லது வழக்கம் போல் தூங்குவதாக நடித்தாரா?

சித்தர்கள்தான் உறங்குவதே இல்லையே! உறங்கினால் உலகம் என்னாவது? யோக சயனமே அவர்கள் அறிந்தது!

சிறுவன் மெதுவாக எழுந்து மாட்டு வண்டியை  நெருங்கினான். நல்ல சாப்பாட்டு மணம் மூக்கைத் துளைத்தது, வண்டியிலிருந்து ஒருவர் எட்டிப் பார்த்து “வா தம்பி வா, சாப்பாடு வேணுமா?“ என்றவாறே, இவன் பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல் ஒரு பெரிய பொட்டலத்தை எடுத்துக் கையில் திணித்தார். சிறுவன் தயங்கி நிற்பதைப் பார்த்து, மேலும் ஒரு பொட்டலத்தை எடுத்துக் கொடுத்தவாறே “போதுமா, இன்னும் வேணுமா?” எனக் கேட்டார்.

சிறுவன் “எங்க தாத்தா மண்டபத்துக்குள்ளாற படுத்துருக்காரு” என்று கூறி இழுத்தான்.

“இந்தா அவருக்கும் சேர்த்து வாங்கிக்க” என்று மூன்றாவது பொட்டலத்தையும் கொடுத்தார்கள். வாங்கியதுதான் தாமதம். சிறுவன் திரும்பிப் பார்க்காமலேயே நாலு கால் பாய்ச்சலில் மண்டபத்துக்குள் ஓடினான்.

இவன் ஓடி வரும் சப்தம் கேட்டு பெரியவர் கண்ணைக் கசக்கிக் கொண்டே மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். “வாத்யாரே, நீ சொன்ன மாதிரியே உண்ணாமுலை அம்மா கண்ணைத் திறந்துட்டா” என்றவாறே அவரிடம் மூன்று பொட்டலங்களையும் நீட்டினான்.

மந்திரமாவது...

“பார்த்தியா, ராஜா, நான் தான் சொன்னேனுல்ல, அம்மா கருணை வெள்ளமப்பா!” என்று சொல்லிக் கொண்டே பொட்டலங்களைப் பிரித்தார்.

சிறுவனின் கண்கள் முன்னால் மணக்க மணக்க நல்ல சாம்பார் சாதம், வாயில் எச்சில் ஊற சிறுவன் சாப்பிடத் தயாரானான்.

“இருடா! அவசரப்படாதே! இவ்வளவு நல்ல சாப்பாட்டைக் கொடுத்த அம்பாளுக்கு முதல்ல நன்றி சொல்லணுமில்ல!” என்ற பெரியவர் கண்களை மூடி ஏதேதோ மந்திரங்களை ஓதினார். பசித்தவனுக்கு அதில் மனம் லயிக்கவில்லையே! சிறுவனுக்கு முன்னால் இருக்கும் சாம்பார் சாதத்தைத் தவிர வேறு எதுவுமே கண்ணுக்குத் தெரியவில்லை.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கடுவெளி

 “பசியோ தாங்க முடியவில்லை. சாப்பிடலாம் என்றால் வாத்யாரோ ரொம்பவும் சீரியஸாக சாமி கும்பிடுகிறாரே, சரி சரி எப்படியும் இதை முடித்தவுடன் சாப்பிட வேண்டியது தானே! ஆக்கப் பொறுத்தவனுக்கு ஆறப் பொறுக்க முடியாதா?” என்று எண்ணி, அவர் முகத்தையும், சாம்பார் சாதத்தையும் மாறி மாறிப் பார்த்தவாறே உட்கார்ந்திருந்தான்.

எப்போ வருவாரோ எந்தன் பசி தீர்க்க!

பெரியவரோ கண்ணைத் திறக்கவே இல்லை, அவர் வாயோ ஏதேதோ ஸ்லோகங்களைச் சொல்லியவாறே இருக்க, அவர் கண்களை நன்கு இறுக்கி மூடிக் கொண்டே இருந்தார் சிறுவனும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தான், அவரோ பூஜையை முடித்த பாடில்லை, சிறுவன் பசி தாங்காப் பித்தன் ஆனான்!

மெதுவாக “வாத்யாரே“ என்று கூப்பிட்டும் பார்த்தான். ஒருபக்கம் பயம்,

“ஏண்டா பூஜை பண்றப்ப தொந்தரவு பண்ற?” என்று திட்டுவாரே! முன்னால் சாம்பார் சாதம் இருந்தும் ஒன்றும் செய்ய முடியவில்லையே!

‘அம்பாள் வரம் கொடுத்தும், இந்த “பூசாரி” வரம் கொடுக்கவில்லையே!” என்ன செய்வது?

“சரி என்ன திட்டு வாங்கினாலும் பரவாயில்லை!” என்று தைரியம் கொண்டு, சற்று சப்தமாகவே,

“வாத்யாரே, வாத்யாரே!” என்று மீண்டும் அழுத்தமாய்க் குரல் கொடுத்தான்.

அவரோ கல்லுளி மங்கனாய், எதையும் காதில் வாங்கிய மாதிரியே தெரியவில்லை, சிறுவனுக்குக் கோபமோ கோபம், இருந்தாலும் என்ன செய்வது?

“இவரு எப்பவுமே இப்படித்தான்! நல்ல முக்கியமான நேரத்துல கழுத்தறுக்கறதுதான் கை வந்த கலையாச்சே!” என்று மனதுக்குள் ஏதேதோ முனகிக் கொண்டே, விடாமல் “வாத்யாரே, வாத்யாரே” என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தான். கூப்பிட்டுக் கூப்பிட்டு வாய்தான் வலித்ததே தவிர பெரியவர் காதில் விழுந்த மாதிரியே தெரியவில்லை. அவர் கண்களைத் திறக்கவேயில்லை.

ஸ்ரீபிரம்மமூர்த்தி
கடுவெளி

பசி வந்து பறந்திலையே!

வெளியே மண்டபத்தை நோக்கி யாரோ வருவதுபோல் தெரியவே, சிறுவன் மெல்ல கண்களைத் திருப்பினான். யாரோ மூன்று பேர், கிரிவலம் வரும் யாத்ரீகர்கள் போல் இருந்தது, மண்டபத்து வாசலில் வந்து நிற்பதைப் பார்த்தான்.

“அடடே, வாங்க வாங்க!” என்ற குரல் கேட்டது. சட்டென்று திரும்பினான் சிறுவன். ஆம், பெரியவரின் குரல்தான் அது! இவ்வளவு நேரம் தியானத்தில் இருந்த (அல்லது இருந்ததாக நடித்த!) கோவணாண்டிப் பெரியவர் நன்கு எழுந்து நின்றுகொண்டு, வாயெல்லாம் பல்லாக அவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார்.

வருக வருகவே!

“பாவம், அர்த்த ராத்திரியில கிரிவலம் வர்றீங்க! வழியில சாப்பிட ஒண்ணுமே கெடச்சுருக்காதே! வந்து உக்காந்து சாம்பார் சாதம் சாப்பிடுங்க!” என்று சொல்லிக் கொண்டே, அந்த மூன்றுப் பொட்டலங்களையும் ஆளுக்கு ஒன்றாக – வந்த மூவருக்கும் கொடுத்தார். அவர்களும் மறு பேச்சே பேசாமல் டக்கென்று உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தனர்.

சிறுவன் இதை எதிர்பார்க்கவில்லை! அவனுக்கு ஆத்திரமும் அழுகையுமாகச் சேர்ந்து வந்தது.

“சே! என்னடா பொழப்பு இது” என்று வெறுப்பின் எல்லைக்கே போய்விட்டான். அவன் ஆசை ஆசையாகச் சாப்பிடலாம் என்று காத்திருந்த சாம்பார் சாதம் வேகவேகமாக மூவர் வயிற்றுக்குள் போய் மறைந்து கொண்டிருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று சொல்வார்களே, அது இதுதானோ!

பெரியவரோ, அவர்கள் சாப்பிட்டு முடித்துக் கிளம்பும்வரை சிறுவன் பக்கம் திரும்பவேயில்லை. வந்த மூவரும் இலையை மிச்சம் வைக்காததுதான் பாக்கி, நன்றாக வழித்துச் சாப்பிட்டு விட்டுத்தான் கிளம்பினர்.

சிறுவனுக்கோ அவர்கள் சாப்பிடுவதை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கத்தான் கொடுத்து வைத்திருந்தது போலும்!

“ரொம்ப நன்றிங்க சாமி! பசி நேரத்துல சாப்பாடு போட்டு உதவினீங்க! நல்ல வயித்துப் பசிக்குச் சாம்பார் சாதம் ரொம்ப நல்லாவே இருந்தது” என்று சொல்லி விட்டுச் சென்றனர்.

பெரியவரோ சிறுவன் இருப்பதையே அப்போதுதான் கவனித்தது போல்,

“அடடா, உன்னை மறந்துட்டேனே! நீ வேற ரொம்பப் பசிக்குதுன்னு சொல்லிக்கிட்டு இருந்தியே!” என்றார்.

சிறுவனுக்கு வந்ததே கோபம்!

“என்ன விளையாடறயா, வாத்யாரே! நான் ஆசையோட வாங்கி வச்சுருந்த சாம்பார் சாதத்தை – ஒண்ணுக்கு மூணாய் வாங்கி வச்சுருந்ததை எடுத்துப் பெரிசா தானம் பண்ணிட்டு....”

..... ஆத்திரத்தில் அவனுக்கு வார்த்தைகளே கோர்வையாக வரவில்லை.

பெரியவர் புன்சிரிப்புடன், “இப்ப என்னடா நடந்து போச்சு, உனக்கு இவ்வளவு கோபம் வர்றதுக்கு? உனக்குப் பசிக்குது அவ்வளவுதானே, வா! வா!” என்றவாறே உண்ணாமுலை அம்மன் மண்டபத்துக்குப் பின்னால் இருந்த உண்ணாமுலைத் தீர்த்தக் கரைக்கு அவனை அழைத்துச் சென்றார். அப்போது அதில் தாமரைகள் நிறைந்த தடாகமாய் நிறைய நீர் நிறைந்து இருந்தது.

பெரியவர் தன் இரு கைகளாலும் உண்ணாமுலைத் தீர்த்தத்தை வாரி எடுத்து, “வாடா ராஜா! வா! வந்து குடி!” என்று தன் இரு கைகளின் இடுக்கு வழியாகத் தீர்த்தத்தை வழிய விட்டார். இது என்ன வகை தீட்சையோ, யாரறிவார் சிவாபரமே!

பசி அறியாப் பையன்

‘சரி, அண்டப் பசி, ஆகாசப் பசிக்கு இதாவது கிடைத்ததே’ என்று சிறுவன் குனிந்து தீர்த்தத்தைப் பருகினான். ஆனால் தீர்த்தத்தைப் பருக.. பருக...

அது தேவாமிர்தம் போல் அற்புதமாக இனித்தது! என்னே சுவை! என்னே மணம்! என்னே இனிமை! என்னவென்றே விவரிக்க இயலாத புத்துணர்ச்சி தன் உடலில் பரவுவதை உணர்ந்தான், கொஞ்சம் பருகியதுமே, நல்ல விருந்தை வயிறு புடைக்க உண்டது போல் தோன்ற ஆரம்பித்தது.

குளத்து நீரைக் கொடுத்தே என்னன்னவோ தேவ அனுபவங்களைத் தரும் வல்லமை கொண்டவரையா சற்று நேரத்திற்கு முன்னா; ‘சாம்பார் சாதத்தை நமக்குக் கொடுக்கவில்லையே!’ என்று கோபித்துக் கொண்டோம்! என்ற குற்ற உணர்ச்சியோடு சிறுவன் மெதுவாகத் தன் தலையைத் தூக்கிப் பார்த்தான்.

“வாத்யாரே!” என்று ஏதேதோ சமாதானம் சொல்ல ஆரம்பித்த சிறுவனை நோக்கிச் சிரித்தவாறே, ‘தனக்கு மிஞ்சித் தானம் செய்யணும்’னு பெரியவங்க இதைத் தாண்டா சொன்னாங்கதானே! உனக்கு வேணுங்கும்போது இன்னொருத்தருக்குக் கொடுக்கணும்! இதுதான் உத்தம தானம்! இதைத் தாண்டா இன்னைக்குச் செஞ்சோம். எல்லாமே கடவுளோட திட்டம்! இல்லாட்டி நீ மூணு பொட்டலம் வாங்குவியா! உன்னை வாங்க வச்சதும், அதுக்குன்னு மூணு பேரை அனுப்பி வாங்க வச்சதும் அண்ணாமலையார் தான்! இப்படித் தாண்டா ரொம்பவும் எளிமையா இறைவனை சித்தர்கள் குருகுலவாசத்துல புரிய வைக்கிறாங்க!”

“நமக்கு எவ்வளவு பசி இருந்தாலும் பரவாயில்லை! அடுத்தவங்க பசிய முதல்ல தீர்ப்போம்!” என்ற எண்ணம் வந்து அந்த எண்ணத்துக்குச் செயல் வடிவம் கொடுத்ததுமே, “பார்த்தியாடா, உண்ணாமுலை அம்மா தீர்த்தத்தையே தேவாமிர்தமா, அறுசுவை உண்டியா மாத்திக் கொடுத்துட்டா” என்றார்.

சிறுவனோ பெரியவரை இறுக்கக் கட்டிப்பிடித்தவாறே, “அதெல்லாம் சொல்லாதே வாத்யாரே! நீதானே வெறும் தண்ணியையே தேவாமிர்தமா மாத்தினது!” என்றான்.

“சிவ சிவா! இந்தக் கிழவனுக்கு அந்த வித்தையெல்லாம் தெரியாதுடா கண்ணு! ஏதோ கோயில், குளம்னு சுத்திக்கிட்டு இருக்கறவனை அந்த அங்காளிதான் கருணை பண்ணி, அப்பப்ப ஏதோ கொஞ்சம் அன்னதானம் பண்றதுக்கு, நம்மளை ஒரு கருவியா வச்சுருக்காளே அதுவே பெரிசுடா” எனச் சொல்லிக் கொண்டே கிரிவலப் பாதையில் நடக்க ஆரம்பித்தார் பெரியவர்.

சிறுவனும் அவரைச் “சிக்கெனப்” பிடிக்க, அவர் பின்னாலேயே வேகமாக ஓட ஆரம்பித்தான்.

நவநாத சித்தர்கள்

விதர்பகால நவநாத சித்தர்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

“மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவைஷ்யஸி ஸத்யம் தே
ப்ரதிஜானேப்ரியோஸி மே” – (கீதை அத்யாயம் 18.65)

- என்னிடம் மனம் வைத்தவனாய், என்னிடம் பக்தி வைத்தவனாய், என்னை ஆராதிப்பவனாய், என்னையே நீ வணங்கு! அப்போது என்னையே நீ அடைவாய் என்பது சத்தியம்! இதை உனக்கு நான் உறுதி அளிக்கிறேன்.

வாழ்க்கையில், ஒவ்வொருவரும் ஒரே ஒரு தெய்வத்திடம் பக்தி வைத்து மனம் ஒன்றி ஆராதித்தால், அத்தெய்வத்தின் அருள் என்றும் கூடவே வரும் என்பதை அனைவரும் நன்கு உணர வேண்டும்.

நந்தியோடு நந்தியா
நந்திக்குப்பின் நந்தியா?
கடுவெளி

இதை உணர்த்தவே, நவநாத சித்தர்களுள் ஒருவரான விதர்ப காலச் சித்தர் உடல் ஊனமுற்றோருக்கான நல்வாழ்விற்காகத் தன் தவ வலிமையை அளிக்கின்றார். இவரும் கிருத யுகத்திலிருந்து வாலை மனோன்மணி தேவியை நோக்கித் தவம் இருந்து அம்மனின் அருள் பெற்றவர்.

பல யுகங்களில், ஏதேனும் ஓர் ஆண்டில் தொடர்ந்து ஒன்பது மாத சிவராத்திரிகளில் ஒவ்வொரு நவநாத சித்தராக அருணாசல கிரிவலத்தை மேற்கொண்டு சகல உலக ஜீவன்களுக்கு மட்டுமன்றி இதர சித்தர்கள், மகரிஷிகள், ஞானிகள், யோகியர், முமூட்சுகள், பித்ருதேவ மூர்த்திகளுக்கும் அருள் மழை பொழிகின்றனர். இவ்வகையில் சுபானு ஆண்டின் மாசிமாத மகா சிவராத்திரி நாளில் விதர்ப கால நவநாத சித்தர் கிரிவலம் கொள்கின்றார். விதர்பம் என்பதற்கு நிறைய அர்த்தங்கள் உண்டு. நாம் இங்கு விதர்ப காலமாகக் குறிப்பிடவது அதர்மம், அசத்தியம், வன்முறை, விரோதம், குரோதம், பகைமை பெருத்து வருகின்ற கலியுக நிலையில், இப்பிறவிக் காலத்தில் செய்ய வேண்டிய இறைக் காரியங்களை உத்வேகத்துடன் செய்ய வேண்டிய காலக் கட்டத்தைக் குறிப்பதாகும். புனிதமான தெய்வீக சூழ்நிலை நிலவிய, கிருத யுகத்தில் பக்தியுடன் பூஜிப்பதை விட, துன்பங்களின் ஊடே கலியுகத்தில் இறைபூஜைகளை ஆற்றுவதை மகாதவம் எனச் சான்றோர்கள் உரைக்கின்றனர்.

திருஅண்ணாமலையில் அஷ்டலிங்க தரிசன ரகசியங்களை முறையாகக் கற்றவரே விதர்பகாலச் சித்தர்பிரான் இன்னம்பூரில் அகஸ்தியருக்கு முன்னர் இறைவனிடமே ஞானக் கல்வி பெற்ற நவநாதச் சித்தர்!

அருணாசல அஷ்ட லிங்க மூர்த்திகளில், ஒவ்வொரு லிங்கமும் தெய்வ மூர்த்திகளாலும், தேவர்களாலும், பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப் பெற்றது.

இந்த அஷ்ட லிங்க ரகசியங்களைப் பற்றிப் பூரணமாகப் புரிந்து கொள்ள திருஅண்ணாமலையைப் பல யுகங்களில் சிவராத்திரியில் வலம் வந்தவரே விதர்பகாலச் சித்தர். ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு திக்கில் இருந்தாலும், ஒவ்வொரு லிங்கமும் 108 அட்சர பந்தனத்தில் வித்தியாசப்படும், இவ்வாறு அட்சர பந்தனத்தில் வித்தியாசம் ஏற்பட்டால் அருளுடைப் பாங்கில் பல அம்ச நிலைகளில் மாறுதல்களும் ஏற்படும்.

இறைவனின் அருளைப் பெறுதல் என்பது அவரவர் கர்ம வினைச் சாரத்தைப் பொறுத்தது. பக்தியும் இதைப் பொறுத்தே அமையும். அவரவர் கர்ம வினைகளின் விளைவால் பல வக்கர நிலைகள் ஏற்படும். இந்த வக்கர நிலையைச் சரி செய்ய பக்தியுடை வாலை மனோன்மணி உபாசகர்களால் தான் முடியும். இந்நிலையைச் சரி செய்தால்தான் அஷ்ட லிங்க மூர்த்தி வழிபாட்டுப் பலன்களைப் பெற முடியும். இந்த லிங்க மூர்த்திகளில் எழும் 108 அட்சர பந்தன மாறுதல்களையும் விதர்ப காலச் சித்தரே சீரமைத்து மக்கள் வரம் பெறும் வண்ணம் அட்சர பந்தனக் கும்பாபிஷேகங்களை நடத்துகின்றார். இதனைத் தேவாதி தேவ மூர்த்திகளே காண இயலும். மிகவும் சூக்குமமான மனோன்மணி வாலை யோக சூத்திரக் கும்பாபிஷேக வழிபாடு இது! கலியுக ஜீவன்களின் மேன்மைக்காக விதர்ப காலச் சித்தர் முன்வந்து அருணாசலத்தில் இந்த யோகபூஜையை ஆற்றித் தருகின்றார்.

ஸ்ரீஅஷ்டவக்ர மகரிஷி
ஸ்ரீபாணவாலைசித்தர்
கூனன்சேரி

அஷ்டவக்கிரர் வழிபட்ட எட்டு லிங்க ரகசியங்களை உலகுக்கு வெளிக் கொணர்ந்து புத்துயிர் ஊட்டப்பட்ட விளக்கங்களை இவ்வுலகுக்கு விளக்கி வைத்தவரும் இவரே! அசத்தியம், அதர்மத்திற்குப் பயப்படுவதை விடக் கலியுக மனிதன் எமபயம், மரண மயத்திற்குத்தான் மிகவும் ஆட்படுகின்றான். இங்கு திருஅண்ணாமலையில் உள்ள 362 தீர்த்தங்களிலிருந்து நீரெடுத்து, அங், உங், சிங், லங், மங், வங், பங், டங், ஆகிய அஷ்ட மந்திரக் கூட்டை, ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐம்முக சிவ ஜ்வாலையில் கலந்து, உருகுக் கள்ளிச் செடிக்கு, ஊங்கார மந்திரத்தால் உருவேற்றி, அச்சாற்றினை லிங்கத்தில் சூக்குமமாகப் பதிய வைத்தால் மரணத்தின் சக்தி குறைந்து எம பயம் நீங்க வழி செய்யும்.

இம்மூலிகை 2000அடி மலை உயரத்தில் மாத சிவராத்திரி அன்று வளர்ந்து நிற்கும். இதை முறையோடு எடுத்து வந்து பூஜித்து சதாசிவ அட்சர பந்தனக் கும்பாபிஷேகம் ஆற்றி லிங்க வக்கர நிவர்த்தி செய்து மக்கள் யாவரும் பயன்படும்படி வழி செய்தவர்களுள் ஒருவரே விதர்ப காலச் சித்தராவார். எட்டு சிவராத்திரிகளில் எட்டு விதமான மூலிகைப் பிரயோகத்தால் வக்கர நிவர்த்தி செய்து, மக்கள் சிவராத்திரியில் திருஅண்ணாமலை கிரிவலப் பலன்களாக எம பயம் நீங்கி வாழவும், பிரயாணத் தொல்லை நீங்கி நலம் பெறவும், நோய் நொடிகளால் துன்புறாமல் வாழவும், உத்தியோகத்தில் ஏற்படும் நிலையில்லாத தன்மையை மாற்றவும், திருமணக் குறைகள் நீங்கவும், சந்ததி பாக்கியங்கள் பெருகவும், உடுக்க உடை, இருக்க இடம், ஆளும் சக்தியைப் பெறவும், கல்வி கேள்விகளில் நிறைவு பெறவும் வழி செய்தார் விதர்ப காலச் சித்தர். குரு துரோகிகள் தாங்கள் செய்த தவறுக்கு உரித்தான தண்டனைகளைப் பெற்று அனுபவிப்பதும் கலியுகத்தில் தேவையானதே! இல்லாவிடில் தண்டனைகள் கிட்டும் வரை பிறவிகள் மலைகளாகி விடும்.

விதர்ப காலச் சித்தர் முதலில் அஷ்ட வக்ர லிங்கங்களைத் தரிசனம் செய்து, மகா சிவராத்திரி இரவில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருகின்றார். அஷ்ட வக்ர லிங்கங்களைத் தரிசிக்கும் தலம் கும்பகோணத்தை அடுத்துள்ள சுவாமி மலையிலிருந்து திருவைகாவூர் செல்லும் பாதையில் 4 கி.மீ தொலைவில் உள்ள கூனஞ்சேரி ஆகும். இங்கு பகலில் சுவாமியைத் தரிசித்துப் பூஜை செய்து, இதே இரவில் திருஅண்ணாமலை கிரிவலம் ஆற்றுவது மிகச் சிறந்தது.

ஸ்ரீபரியா மருந்தீஸ்வரர்

ரண நோய்களை ஆற்றும் பரியா மருதுபட்டி ஸ்ரீபரியா மருந்தீஸ்வரர் (ஸ்ரீஔஷதபுரீஸ்வரர்) சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் – பொன்னமராவதி மார்கத்தில், பொன்னமராவதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் பரியா மருதுபட்டி – நெற்குப்பை அமைந்துள்ளது.)

ஔஷத பூமித் தலங்களிவை!

தலவிருட்சம் மருதம்
பரியாமருதுபட்டி

நெற்குப்பை, பரியாமருதுபட்டி போன்ற மருது பரிபாலனத் தலங்கள் புராதன ரீதியாகவும், சரித்திர ரீதியாகவும், மருத்துவத் தலங்களாக ஔஷத சக்திகளின் உச்சத்தை, குறிப்பாக, நாட்டு மருத்துவத்தில், கால்நடை வைத்தியத்தில் சிறப்பைப் பெற்று பொலிந்தன. இத்தலங்களில் பல தர்மச் சத்திரங்களை நம் ஆன்றோர்கள் நிறுவி உமி மருந்து, மருது தள மருத்துவம் போன்றவற்றில் தலை சிறந்து விளங்கினர். இத்தகைய மருத்துவ பூமிகளில் நிலத்தில் பொங்கிடும் மருத்துவ சக்திகளைப் பெற, அக்காலத்தில் பல புனிதமான யாத்திரைகளும் இவற்றின் வழி செல்லுமாறு அமைக்கப்பட்டு இருந்தன. யாத்திரீகர்களுக்கும், பிரயாணிகளுக்கும் உதவும் வகையில் தர்மமிகு நகரத்தாரும் எண்ணற்றச் சத்திரங்களைக் கட்டித் தந்து, அன்னம் பாலித்து இப்பகுதிகளில் தர்மம் காத்தனர்.

பரியா மருதுபட்டி அருகில் உள்ள சிவத்தலமே நெற்குப்பை! நெல்லில் அரிசியைப் பிரிக்கும்போது உண்டாகும் உமியால் கட்டிய நெற்களஞ்சியம் போல் உமிக் களஞ்சியம் நிறைந்ததனால் நெற்குப்பை ஆயிற்று, குப்பை என்றால் கழிவு என்ற பொருள் மட்டும் அன்று, கழிவின் மேன்மை என்ற பொருளும் உண்டு. குப்பைமேனி மூலிகை ரண காயங்களை ஆற்ற வல்லதாகும். இன்றும் குப்பைச் சித்தர் குப்பைகளின் ஊடே அமர்ந்தும், மலப்புழுச் சித்தர் மலங்களின் இடையே அமர்ந்தும் தூய சூக்கும வடிவுகளில் வலம் வரும் பூமியே நெற்குப்பை பரியா மருதுபட்டி போன்றவையாம், சித்தர்கள் உலவும் மருத்துவ சக்தி பூமி!

தந்த தேவதைகள் ஆசிர்வதிக்கும் உமிப் பற்பொடி!

உமியில் ஏற்படும் வெப்பம், அக்னி, புகைக்கு மருத்துவ சக்திகள் நிறைய உண்டு. நெல் உமிச் சாம்பலில் இருந்து பற்பொடியைத் தயாரிக்கும் சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளும் உண்டு. நெல் உமிச் சாம்பலை வஸ்திர காயம் செய்து பற்பொடியாய்ப் பயன்படுத்தியே, நம் அன்றோர்கள் எண்பது வயதிலும் கரும்பைக் கடித்துத் தின்னும் பல்சக்தியைக் கொண்டிருந்தனர்.

நம் முன்னோர்கள், சதாபிஷேகத் திருநாளன்று, 80 வயது தெய்வத் தம்பதியராக வழிபாடு கொண்டு, கரும்பின் ஒரு முனையைக் கணவரும், மறு முனையை மனைவியும் பற்களால், கடித்து உண்டிட, கரும்பின் இடைப் பகுதியை அத்தெய்வத் தம்பதிகளின் பிள்ளைகளாய், பேரன், பேத்திமார்களாய், அனைவரும் மீந்திலைப் பிரசாதமாகப் பெறுவர். அந்த அளவிற்கு பல்லுக்கு வலிமை தருவதாக உமிப் பற்பொடி அமைந்தது.

ஸ்ரீபரஞ்சோதி அம்பாள்
பரியாமருதுபட்டி

இக்கரும்பானது சிவபெருமான், இட்சுவனேஸ்வர லிங்கம் (இட்சு = கரும்பு) என்று அருளும் தலமாக, திருப்பத்தூர் – சிவகங்கை இடையே உள்ள நயினார்பட்டி ஸ்ரீஇக்ஷுவனேஸ்வரர் சிவத்தலத்திலிருந்து பெறப்படுவதாகப் பண்டைய சதாபிஷேக சாங்கியம் ஒன்று உண்டு. திருக்கடையூர் போல 80 வயது சதாபிஷேக திருநாளுக்கு உரிய பூஜைத் தலமாக ஒரு யுகத்தில் பொலிந்ததே பரியா மருதுபட்டி ஆகும்.

பரியா மருதுபட்டி – பகைமையை அறுக்கும் தலம்

நெல் உமியில் பதனப்படும் மருந்துகள் ரணங்கள் ஆற்றுவதில் சக்தி வாய்ந்தவை. எனவேதாம் அக்காலத்தில் பரியா மருதுபட்டி – நெற்குப்பையை பகைமை இல்லாத, பகைப் புகைப் படியாத் தலமாக (neutral zone) அனைத்து மன்னர்களும் அறிவித்து, போரில் ஈடுபட்ட அனைத்துக் காயமடைந்த வீரர்களையும், மனிதாபிமானத்துடன், நாடு பேதமில்லாது, பகைமை பாராட்டாது மருத்துவ சிகிச்சைகள் அளித்த உன்னதத் தலமிது.

டாக்டர்கள், குறிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் அனைவரும் பரியா மருதுபட்டி ஸ்ரீமருந்தீஸ்வரரை செவ்வாய், சனி, திருவாதிரை, ஆயில்யம், அஸ்வினி நட்சத்திர நாட்களில் அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும். அறுவை சிகிச்சை நிபுணர்களுக்குக் கைராசியும், ஆன்மீக ரீதியான மருத்துவ குணங்களையும் அருளும் அதியற்புத மருத்துவத் தலம்.

அக்காலப் போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களின் ரண காயங்களில், உமியில் ஊறிய தேன் மெழுகு அல்லது மெழுகுவர்த்தியை அப்படியே சூடாக ரணத்தில் வைத்திட, நாட்பட்ட விழுப்புண் காயங்கள் விரைவில் சுவடு தெரியாமல் குணமடைந்த அற்புதத்தைப் பலரும் கண்டு அதிசயித்தனர். இது இம்மருத்துவ மண்ணின் மகிமையே.

அழுகண்ணிக் கீரை, அருணைப்பாலை, குப்பைமேனி, சதகுப்பை போன்ற மூலிகைகள் செறிந்த பாலையாகவும், நெற்குப்பையும் பரியா மருதுபட்டியும் விளங்கின. இங்கு தயாரிக்கப் பெற்ற உமித் தைலம், வெட்டுக் காயங்களுக்கும், விழுப்புண் காயங்களுக்கும் தலைசிறந்ததாக விளங்கிற்று.

மருது மரத்தில் ஆண் மரம், பெண் மர வகைகள் உண்டு. ஆண் மருது வெளி ரணக் காயங்களுக்கும், பெண் மருது உள்ரணக் காயங்களுக்கும் தீர்வளிக்கும். சிசேரியன், உள்மூலம், சிறுநீரகம், கர்பப்பை, குடல் ரண அறுவைச் சிகிச்சைகளுக்கு ஆட்பட்டோர், அறுவை சிகிச்சை ரண வலி தீர, ரணம் ஆற இங்கு பரியா மருதுபட்டியில் தங்கி ஸ்ரீபரியா மருந்தீஸ்வர ஆலயத் தல விருட்சமாம் மருது மரத்தை வழிபடுதல் விசேஷமானதாகும்.

சர்வானந்த தீர்த்தம்
பரியாமருதுபட்டி

வைத்ய சக்திகள் பரிமளிக்கும் பூமி!

மருத்துவ சிகிச்சை பெற விரும்புவோர், இயன்றால் நெற்குப்பையில் இருந்து பரியா மருதுபட்டிக்கு நடந்து பாதயாத்திரையாகச் செல்வதால், பூமியின், காற்றின் மருத்துவக் காற்றுத் தன்மைகள் உடல் நாளங்களுக்கு ஆக்கம் தருவதாகும். 11 மாத சிவராத்திரியை இங்கு நடத்தி, வழிபட்டு, 12ஆவது சிவராத்திரியை மகாசிவராத்திரியாக இங்கு கொண்டாடுவோருக்கு, குடும்பத்தில் உள்ள பலத்த பகைமை, மன வேறுபாடுகள், மன ரணங்கள் ஆறி, குடும்பத்தில் அமைதி உண்டாவது மகா நிச்சயமாகும்.

இதே போல் நாட்டில், உலகில் போர், வன்முறைகள் ஏற்பட்டால், சமாதான சாந்த சக்திகள் நிரவிட, இங்கு சாந்திப்பூர்வமான பாதயாத்திரையை நெற்குப்பையிலிருந்து தொடங்கி பரியா மருதுபட்டியில் நிறைவுறச் செய்து சுவாமிக்குப் பொன்னாங்கண்ணித் தைலம் சார்த்தி வழிபடுதல் விசேஷமானதாகும். இங்கு பொன்னாங்கண்ணிக் கீரை வகை உணவுகளைத் தானமாக அளித்தலால் நோய் நிவாரணமும், சாந்த நிலையும் சித்திக்கும்.

பொன்னாங்கண்ணித் தை(த)லம்

பொன்+ஆ+கண்ணி என்பதாக (பொன் – சுவர்ணம், ஆ – அம்பிகை) என்பதாக சக்தி பீடங்களுள் ஒன்றாக இது விளங்குகின்றது.

தட்ச யாகத்தில் வேள்வித் தீயினுள் நுழைந்த அம்பிகையை, இறைவன் சுமந்து சென்ற போது அம்பிகையின் கண் பூமியில் படிந்த தலமாகவும் துலங்குவதால் நேத்ர சக்திகள் மிகுந்த தலம். பிறகு இறைவன் அம்பிகைக்கு ஞானம் புகட்டி, ஞானாம்பிகை அவதாரத்தை அளித்தார். ஞானாம்பிகை அம்சங்களுடன் பரஞ்சோதியாய் அம்பிகை பரிமளிக்கும் தலங்களில் பரியா மருதுபட்டியும் ஒன்று.

நள தீர்த்தம்
பரியாமருதுபட்டி

உடல் ரணம், மன ரணம், உள்ள ரணத்தையும் ஆற்றித் தரவல்ல தலம். கண்களைக் கட்டி வாழ்ந்த பதிவிரதை காந்தாரி, பாரதப் போரின் முடிவில், கண்ணபிரானைச் சபித்தமையால் வந்த தோஷங்கள் தீர, கண்ணபிரான் பொன் கண் செய்தளித்துச் சிவனை வழிபட்ட தலமும் ஆகும். பொன்னாங்கண்ணி என்னும் மூலிகைத் தாவரத்தை ஸ்ரீசாகம்பரி தேவி பூமியில் முதன் முதலாய் படைத்த சிவத்தலமும் இதுவே!

சூரிய பூஜைத் தலம்

சூரிய மூர்த்தியும், மகா சிவராத்திரியின் முன்னும் பின்னுமாக, இங்கு வழிபடுவதால், இந்நாட்களில் சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் பெய்கின்றன. இது பார்ப்பதற்கு அரிய காட்சி, எனவே இங்கு மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதும் விசேஷமானதே! மாத சிவராத்திரியில், மகாசிவராத்திரியில், முதல் நாளே வந்திருந்து, மருத்துவ குண சக்திகள் நிறைந்த தல மருத விருட்சத்தை எவ்வளவு முறை வலம் வர முடியுமோ, அவ்வளவு முறை வலம் வந்து, கண்ணபிரான் வில் ஏந்தியப் பெருமாளாகக் காட்சி தரும் மூர்த்தியையும் வழிபடுக!

பரியா மருதுபட்டியில், ஸ்ரீகிருஷ்ணர் வில் ஊன்றிய போது தோன்றிய “சர்வானந்தத் தீர்த்தம்” எனும் புனிதத் தீர்த்தம் ஆலயத்தில் இருந்து ஒரு பர்லாங்கு தொலைவில் உள்ளது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரங்கள் பட்ட தீர்த்தமாதலின், கலியுகத்தில் பெறுதற்கரிய தீர்த்தமாகின்றது. கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டிய தீர்த்தம். ஸ்ரீகிருஷ்ணர் சிவனைப் பூஜித்த அபூர்வமான தலங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணையம்பதி, திருக்கண்ணபுரம், கண்ணை நகரம் போன்ற பண்டைய பெயர்களுடன் துலங்கிய தலம்.

ஸ்ரீநவநீத நந்தி மூர்த்தி
பரியாமருதுபட்டி

மாத சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி இரவு முழுதும் 64 விதமான மூலிகா திரவியங்களால் அபிஷேக ஆராதனைகள் செய்து சிவனை வழிபடுதல் மிகவும் விசேஷமானது. பொன்னாங்கண்ணிக் கீரை உணவு வகைகள், வெண்டைக்காய், காரட், அகத்திக் கீரை, வெண்ணெய் கலந்த உணவு வகைகளை இங்குத் தானமாக அளித்து வழிபட, உறவினர்கள், வியாபாரக் கூட்டாளிகள் (partners), பெற்றோர்கள், பிள்ளைகள் இடையே உள்ள பகைமை ரணங்கள் ஆறி சுமூகம் உண்டாகும்.

சுபானு அண்டு மகாசிவராத்திரித் தலம் ஸ்ரீகிருஷ்ணருக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம்! டாக்டர்கள் குறிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான பூஜைத் தலம்! பரியா மருதுபட்டி ஸ்ரீபரஞ்ஜோதி ஈஸ்வரி சமேத ஸ்ரீபரியா மருந்தீஸ்வரர்!

மகத்தான மாத சிவராத்திரி பூஜைகள்

மாத சிவராத்திரிக்கான விளக்கங்கள் பல உண்டு. இவற்றுள் ஒன்றாக, அம்பிகை பார்வதி தேவி, மானுடப் பெண்வடிவில் பூலோகத்திற்கு வந்து, பல சிவத்தலங்களிலும் சிவலிங்க பூஜைகளை ஆற்றுகின்ற நன்னாளே, அமாவாசைக்கு முந்தைய தினமான, மாத சிவராத்திரி (தேய்பிறைச் சதுர்த்தசித்) திதியின் இரவுக் காலமாகும் என்பதை நாம் நன்கு அறிவோம்.

அரிக்கேன் விளக்குச் சித்தர், கரலாக் கட்டைச் சித்தர் (பூந்தமல்லி ஸ்ரீவைதீஸ்வரர் ஆலயம்), கொடுக்குவால் குடுமிச் சித்தர் மற்றும் ரிஷி சுமந்தான் ரிஷி (கோயம்பேடு சிவாலயம்), சங்கூதிச் சித்தர், ஸ்ரீஇடியாப்ப சித்தர் போன்ற சித்தர் பெருமான்கள், எண்ணற்ற தம் அடியார்களுடன் அண்ணாமலையை கிரிவலம் வந்து, அருணையின் புனிதமான மலைமுகட்டு லிங்க மகிமைகளை, அருணாசல மலைத் தரிசனப் பலன்களாக நன்கு விளக்கி உணர்த்தியுள்ளனர்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
பரியாமருதுபட்டி

அருணாசல மகிமைப்படி, எந்த யுகத்திலும், குறிப்பாக கலியுகத்தில், சித்தர், மகரிஷி, ஞானி, யோகி போன்ற உத்தம இறைத் தூதுவர்கள், எக்காலத்தும், பலரும் அறியும் மானுட வடிவில் திருஅண்ணாமலையில் இருந்து உறைந்து அருள்வர். பலரும் சித்தர், யோகியென அறியும்படியும், அறியா மறைபொருளாயும் அவர்கள் மானுட சமுதாயத்திற்கு வந்து அமைந்து வாழ்வதுண்டு. சித்தர், யோகி, ஞானி என எவரும் அறிய இயலாது, தம் தெய்வீகத் தன்மைகளையும் வெளிக் காட்டாது, சாதாரணமான மனிதராயும் இங்கு துலங்குவதும் உண்டு. இவ்வாறு நேர்முகமாகவே உத்தம இறைத் தூதுவர்கள் கலியுக ஜீவன்களுக்கு அருள்வழி காட்டுகின்ற இறைச் சித்தாந்தம், அருணாசலமாம் திருஅண்ணாமலையில் இன்றும், என்றுமாய்ப் பொலிந்து வருகின்றது.

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், கலியுகத்தில் தற்போதைய பிரம்ம யுகாந்திரத்தில், தம் சற்குருநாதராம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தரின் சாரப்படி குருமங்கள கந்தர்வப் பீடப் பரலாய், திருஅண்ணாமலையில் ஆஸ்ரமம் கொண்டு, சித்தர்களும், மகரிஷிகளும் போதித்த அருணாசல கிரிவல மகத்துவத்தை, உபந்யாசங்கள், வேதவகுப்புகள், யோகப் பாடங்கள், தமிழ்மறை ஓதுதல் விளக்கங்கள், தியான வழி முறைகள், உத்தம தெய்வீக நூல்கள், இறைப் பிரசாரங்கள், உரையாடல்கள், கடித விளக்கங்கள், வெப்சைட் (website) மூலமாக, ஜாதி, மத, இன, குல பேதமின்றி, பாமரர்களும், யாவரும் உணரும் வண்ணம், மிகவும் எளிமையாக எடுத்துரைத்து வருகின்றார்கள்.

அமாவாசையன்று, சூரிய மூர்த்தியும் சந்திர மூர்த்தியும் ஒருங்கிணைந்து ஆதிசிவனைப் பூஜிப்பதற்கான, ஆயத்த, பூர்வாங்க சிவபூஜைகள் நிகழ்கின்ற (அமாவாசைக்கு) முந்தைய தினமாகவும் மாத சிவராத்திரி அமைகின்றது. சூரிய, சந்திர கிரகங்கள் தாமே ஜீவன்களுக்கு உயிர்நாடியாய் அமைகின்றன.

சுபானு வருட மகா சிவராத்திரித் தலம்

இவ்வகையில், நடப்பு சுபானு ஆண்டின், மாசி மாத மகாசிவராத்திரிப் பூஜைத் தலமாக திருப்பத்தூர் – பொன்னமராவதி இடையே பொன்னமராவதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள பரியா மருதுபட்டி, ஸ்ரீபரஞ்ஜோதி அம்பாள் சமேத ஸ்ரீபரியா மருதீஸ்வரர் ஆலயத்தைச் சித்தர்கள் குறிப்பிடுகின்றார்கள், மிகவும் சக்தி வாய்ந்த தலம்.

ஸ்ரீகிருத்திகை ரோகிணி சமேத
ஸ்ரீசந்திர பகவான் மானாமதுரை

மகாபாரத யுத்தத்தில் துரோணாச்சார்யார், கிருபாச்சாரியார் மறைவிற்குக் காரணமாக விளங்கியதாக, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பிரம்மஹத்தி தோஷங்களை ஏற்று, இதனைத் தீர்க்க, ஸ்ரீராமர் போல், பல தலங்களிலும் வணங்கி, இறுதியில் இங்கு பரியா மருதுபட்டியில் வழிபட்டு, பிரம்ம ஹத்தி தோஷத்திற்கு நிறைவு கண்ட அற்புதப் புண்ணிய பூமியாகவும் இச்சிவத்தலம் விளங்குகின்றது.

சூரிய லோக மகரிஷிகளான வாலகில்லியர்கள், நேத்ராதி பலாதி பலா மந்திரங்களைப் பல கோடி முறை ஜபித்துப் பூஜிக்கின்ற திருத்தலம். இங்கு வாலகில்லிய மகரிஷிகளுடன் சித்தர்களும் இணைந்து வழிபட்டு, பூஜா பலன்களை, அனுபூதிகளை, தக்க சற்குருமார்கள் மூலமாக உலக ஜீவன்களின் நலன்களுக்காக அளிக்கின்றார்கள்.

காதலாலும் மற்றும் பிற மதத்தினரையும் திருமணம் செய்து கொண்டு உறவினர்கள், நண்பர்களின் பகிஷ்கரிப்பால் சொல்லொணா வேதனைகளை அனுபவிப்போர்

பதவி, டிரான்ஸ்பர் காரணமாக நிலபுலன்கள், வீடு வாசல் அனைத்தையும் உறவினர்கள், தெரிந்தவர்களிடம் ஒப்படைத்து விட்டுத் திகைப்போர்..

தத்தம் துன்பங்களுக்குத் தீர்வு பெற இங்கு மகா சிவராத்திரியிலும், மாத சிவராத்திரியிலும் பூஜித்து வருதல் மிகவும் விசேஷமானது.

எனவே சுபானு ஆண்டு மகாசிவராத்திரியைச் சித்தர்கள் போற்றும் பரியா மருதுபட்டிச் சிவாலயத்தில் குடும்பத்துடன் கொண்டாடி, பார்வதி, பரமேஸ்வர அருளுடன், ஸ்ரீகிருஷ்ணரின் அனுகிரகத்துடன் பெற்று ஆனந்தம் அடையுங்கள்.

ஔபர மாமந்திரம்

“ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” – 2004ம் ஆண்டுக்கான ‘ஔபர’ மாமந்திரம்

எல்லா ராசிக்காரர்களும், 2004ம் ஆண்டில் தினமும் குறைந்தது 1008 முறையாவது கீழ்க்கண்ட ஔபர மந்திரத்தை ஓதி வரவேண்டும். “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ”

ராசி பலன்

2004ம் ஆண்டிற்கான, 12 ராசிக்காரர்களுக்குமான, சித்தர்கள் அளிக்கின்ற கர்ம பரிபாலன ரீதியான விளக்கங்கள் இவை. இவற்றைப் பொதுவான ராசிபலன்கள் எனக் கருதாது, கர்ம சிரத்தையுடன் நன்கு ஆத்ம விசாரம் செய்து, நல்ல ஆத்ம விளக்கங்களைப் பெற்றுக் கடைபிடிக்கவும். வாழ்க்கை அம்சங்களில், இவ்வாண்டில் அந்தந்த ராசிக்கான மிகவும் முக்கியமான துறை மட்டுமே இந்த ராசிச் சங்கியைக் கணிப்பில் தொட்டுக் காண்பிக்கப்படுகின்றது.

வயதானோர் மிகவும் பல மனக் கவலைகளுக்கு ஆளாகும் ஆண்டாக 2004ம் ஆண்டு இருப்பதால் பெரியோர்களின் சாபம் பற்றா வண்ணம், அநாதையாக இருக்கின்ற பெரியோர்களுக்குச் சரீர சேவை ஆற்ற வேண்டும். பிள்ளைகளையும் இதில் ஈடுபடுத்தி அவர்களுக்குப் பெரியோர்களின் ஆசிகளைப் பெற்றுத் தாருங்கள்.

ராசி அம்சங்களில், ஜாதக ரீதியாக “நிர்ச்சலனப் பரல்கள்” எனப்படுபவை மட்டும், பொதுவான ராசி குணாந்திரங்களைக் குறிப்பனவாக அமையும். ஏனையவை அவரவர் ஜாதக ரீதியாகவே தனித்துக் கணித்து அறிய வேண்டியவையே! எனவே இங்குள்ள குறிப்புகள் ராசிபலன் வகையில் அளிக்கப்படவில்லை. மேலோட்டமாக அர்த்தம் பாராது, இவற்றைப் பற்றி நன்கு சிந்திக்கவும். ஒவ்வொருவருக்கும் ஆத்ம விசார ரீதியாகச் சிந்தித்திட, தனிப்பட்ட பல கணிப்பு விஷயங்களை அளிக்க வல்ல குருவாக்பவ சக்திகளைக் கொண்ட வாக்கியங்களே இவையாவும்.!

ஸ்ரீவீணா தட்சிணா மூர்த்தி
துடையூர்

பெருமகளூர்

மேஷ ராசி : - மேஷ ராசிக்காரர்கள் மனதைப் பலவாறாக குழப்பிக் கொள்ளும் ஆண்டு இது. மனோசக்தி நன்கு திறம்பட வேண்டும். சூரியனையே நம்பி வாழ வேண்டிய இந்த ராசியினர், திடமான மனவளம் இன்றி, காமசுகம், ஏனைய சுகம், போகம்தனை நாடி அலைய வேண்டிய நிலைகள் ஏற்பட்டு விடும். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இதனால் தாய்மார்களுடைய உதவிகளைப் பெற முடியாமல் ஒன்றன் மீது ஒன்றாகத் தவறுகளைத் தொடர்ந்து செய்ய வேண்டிய நிலைக்கு ஆளாவார்கள்.

ஆகவே மலையில் இருந்து அருளும் விநாயகர் முன் அமர்ந்து இந்த ஔபர மந்திரத்தை விடாமல் ஜபித்திடில், பெண்களால், காமத்தால், சுக, போக உணர்வுகளால் வருகின்ற குழப்ப சூழ்நிலையில் இருந்து விடுதலை பெற வழியுண்டு. சென்னை அருகே நேமம் ஸ்ரீஆவுண்டீஸ்வரர் ஆலயத்தில் (ஸ்ரீவீரபத்ரர்) வழிபட்டு வருதல் விசேஷமானது.

ரிஷப ராசி :- அப்பா, பணம் வரும் வழிகள் உங்களுக்குத் தெரிந்தாலும், மடியில் இருந்து பணத்தை வெளியில் எடுத்து விடாதீர்கள். சிரித்து, சிரித்து உங்களைப் புகழ்ந்து, உங்கள் பணத்தைப் பிடுங்குவதற்குப் பலர் வந்து உங்களை அன்பாக நெருங்குவார்கள். வேலை பளு உள்ளது, வேலை பளு உள்ளது, என்று சொல்லி முடிந்த மட்டும் ஒதுங்கி விடவும். பணம் கதவைத் தட்டி வரும். பத்திரமாகக் காத்துக் கொள்ள வேண்டிய ஆண்டு இது. ஔபர மந்திரத்தை அரசமரத்தடி விநாயகர் ஆலயத்தில் நிறைய ஓதித் தற்காத்துக் கொள்ளுங்கள். மானாமதுரை ஸ்ரீசந்த்ரமௌளீஸ்வரர் ஆலய வழிபாடு விசேஷமானது.

மிதுன ராசி : “நல்லதல்ல கெட்டதல்ல நடுவில் நிற்பதொன்றுதான் நல்லதென்றபோதது நல்லதாகி நின்றபின் நல்லதல்ல கெட்டதென்றால் நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே!” – இதில் பதிந்துள்ள அர்த்தங்கள் தாம் உங்களை நன்கு வாழ்விக்கும்.

“ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” என்ற ஔபர மந்திரத்தை நீங்கள் ஜபித்துக் கொண்டே, உருவேற்றிக் கொண்டே வந்திடில் நல்லது எது, கெட்டது எது என்பதை ஆண்டு முழுவதும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். நாமக்கல் ஸ்ரீநாமகிரி தேவி வழிபாடு சிறப்பானது.

கடக ராசி: அனுபவசாலிகளாக இருப்பினும், திறமையாகத் தவறுகளைக் கண்டு பிடிக்கும் நல்லோராயினும், வீண் பழிகளைச் சுமக்க வேண்டிய ஆண்டு இது. வேண்டாத வம்புகள் வந்து சேரும். எந்த நேரமும் மஞ்சள் நிறத் துண்டு அல்லது கைத் துண்டு (கர்சீப்பு) ஒன்று வைத்திருங்கள். தினமும் மஞ்சள் நிற உணவு வகைகளை இயன்ற அளவு அன்னதானம் செய்து வாருங்கள். மஞ்சள் நிற வாழைப் பழங்களைத் தினமும் பசுமாட்டிற்கு அளிப்பதும் நன்மை பயக்கும். (கை, கால்கள் தரையில் படாமல்) பலகையில் அமர்ந்து ஔபர மந்திரத்தை ஓதுதல் சிறப்பான நன்மைகளைத் தரும். திருச்சி அருகே திருநெடுங்களம் சிவாலயத்தில் தொன்மையான உரலில் மஞ்சள் இடித்துத் தந்து சுவாமிக்குச் சார்த்துவது விசேஷமானது.

சிம்ம ராசி : பார்வையிலேயே பலரை நடுங்கச் செய்யும் சக்தி பெற்ற தாங்கள், மனதுக்குள்ளே பீதியை நிறைய நிரப்பி வைத்துக் கொள்ளும் ஆண்டு! கோபத்தால் கொடூரமாகச் செயல்படத் தூண்டுகின்ற சூழ்நிலைகள் நிறைய உருவாகும். ஆகவே மனதை ஒருமுகப்படுத்தி “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” எனும் ஔபர மந்திரத்தை ஒரு நாளைக்கு 5000 முறையாவது ஜபித்திடில் மனத் தெளிவு பெற வழியுண்டு. கனிகள் தானம் உங்களைக் கனியச் செய்யும். குறைந்த பட்சம் தினமும் ஒரு ஆப்பிள் பழத்தையாவது ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாய் அளித்தல் நலம். பேராவூரணி அருகே பெருமகளூர் ஸ்ரீசோமநாதர் (அபூர்வமான தாமரைத் தண்டாலான லிங்கம்) வழிபாட்டை மேற்கொண்டு வருக!

கன்னி ராசி : நல்ல திறமைக்கு, இறைவனை நன்கு வேண்டி வர, பல உதவிகளைப் பெறுவீர்கள். திடீரென பல மாற்றங்களைச் செய்ய மனமும் தூண்டும். “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” என்று 3000 முறைக்குக் குறையாமல் ஜபித்து, இந்த ஆண்டு ஜனவரியிலிருந்து டிசம்பருக்குள் – ஜாதி, மத பேதமின்றி 300 சுமங்கலிப் பெண்களுக்கு – மஞ்சள், குங்குமம் அளித்து மங்கள ஆசி பெறவும். பலவழிகளிலும் பெரியோர்களின் ஆசிகளைப் பெற விழையுங்கள்! திருப்பத்தூர் – சிவகங்கை அருகே உள்ள நயினார்பட்டி கரும்பீஸ்வரர் ஆலயத்தில் கரும்புச் சாறு அபிஷேகம் செய்து பூஜிக்கவும்.

ஸ்ரீவாறுகநாதர் இலஞ்சி

துலா ராசி: கண்ணாடி அணிந்த அன்பர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளாதீர்கள். கண் சம்பந்தமான நோய்கள், பிரச்னைகள், துன்பங்கள், கண் திருஷ்டி தோஷங்கள், கண் நோய் வினைகள் அதிகமாகும் ஆண்டு. உங்களைப் பற்றி மேலிடத்தில் வத்தி வைத்து விடுவார்கள். இந்த ஆண்டு பூராவும் கோதுமைப் பண்டங்களை நீங்கள் உண்டு வாழ்வது ஓரளவு நல்லதைச் செய்யும். ஒரு நாளைக்கு 2004 முறை “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” என்று ஜபித்து கோதுமைப் பண்டங்களைத் தானம் செய்யவும். தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி அருகே செம்பியன்கிளரியில் ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் ஆலயத்தில் தொழுது வரவேண்டும்.

ஸ்ரீநேத்ரபதீஸ்வரர் செம்பியன்களரி
மேகளத்தூர்

விருச்சிக ராசி : நன்முறையில் உங்களுடைய வாழ்க்கையை உருப்படியாக அமைத்துக் கொள்ள முயற்சி செய்யவும். வீணாகப் பிறர் காரியங்களில் தலையிட்டு ஆபத்தைத் தேடிக் கொள்ள வேண்டாம். வெளியூர், வெளிநாட்டு வியாபாரத்தில் கவனம் தேவை. ஒரு நாளைக்கு 5000 முறைக்குக் குறையாமல் “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” என்று ஜபித்து, உருப்படியாக நல்லனவற்றைச் செய்து நல்வழியில் வாழ வழி காணுவது நல்லது. புதுக்கோட்டை – பொன்னமராவதி அருகில் உள்ள தேனி மலையில் பௌர்ணமி கிரிவலம் ஆற்றி வருக!

தனுசு ராசி : புண்ய சக்திக் குறைபாடு அதிகமாகத் தெரிகின்றது. எனவே 2004ல் வீட்டில் நிறையப் பூஜிக்க வேண்டும். இரவு சீக்கிரமாய்ப் படுத்து, காலையில் கடவுளை வணங்குவதற்காக, ஆம், கடவுளைப் பிரதானமாக வணங்குவதற்காகத்தான், சீக்கிரமாக எழுந்து இறைவனை நிறையப் பூஜிக்க வேண்டிய ஆண்டு இது, “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” என்ற மந்திரத்தை 6000 முறைக்குக் குறையாமல் ஜபித்திடில், நல்ல பலன்களைக் காணலாம். காஞ்சீபுரம் புண்யகோடீஸ்வரர் ஆலய வழிபாடு முக்கியமானது.

மகர ராசி :- தாங்கள் கற்பனை வெள்ளத்தில் மிதக்கும் ஆண்டு இது. கற்பனையே உண்மையாய் ஆகி விடாது. நல்ல கற்பனை நிறைவேற அதிகமாகப் பாடுபட வேண்டும். ஆகவே செயலில் உங்கள் திறமையைக் காட்டுங்கள். திறமை பயன் தர வேண்டும் என்றிடில், மோதிர விரலில் தர்ப்பைப் பவித்ரம் அணிந்து ஔபர மந்திரத்தை நன்கு ஜபியுங்கள். திருச்சி- திருவாசி அருகே உள்ள துடையூர் சிவாலயத்தில் வியாழனன்று வீணா தட்சிணாமூர்த்தி வழிபாடு நற்பலன்களைத் தரும்.

கும்ப ராசி : கையில் இருப்பதைச் செலவழித்து விட்டு, யாராவது கடன் தருவாரா என்று பார்த்து ஏங்குகின்ற ஆண்டு இது. தயவு செய்து இந்த ஆண்டு கடன் படாதீர்கள், இது பல ஆண்டுகளில் சேர்ந்து வந்து கலக்கிவிடும். “ஓம் ஔவும் கிரிஜாத்மஜாய நமஹ” என்ற ஔபர மந்திரத்தைச் சொல்லி, விரலுக்கு ஏற்ற வீக்கம் வீங்குங்கள், நிம்மதியாய் ஓரளவு காலத்தைக் கழிக்கலாம். காலத்தைக் கழிப்பதை விட, கர்மாக்களையே நிறையவே கழிக்க வேண்டிய ஆண்டு! குற்றாலம் அருகே இலஞ்சியில் ஸ்ரீவாறுகநாதரை வழிபட்டு வரவும்.

மீன ராசி :- தூய உள்ளத்தோடுதான் வாழ வேண்டும் என்று நினைக்கின்ற நீங்கள் மாசு படிந்தவர்களோடு பழகுகின்றீர்கள். இத்தகையவர்களை விலக்கி விட்டு, இந்த ஔபர மந்திரத்தை விடாமல் ஜபித்திடில் ஏதோ ஒருவாறு இந்த ஆண்டை ஓட்டி விடலாம். ஸ்ரீஅக்னீஸ்வரர் வழிபாடு சிறப்பானது.

முடிகொண்டான் ஸ்ரீரெங்கநாதர்

திருவாரூர் – மயிலாடுதுறை மார்கத்தில், நன்னிலம் அல்லது பூந்தோட்டத்தில் இருந்து 4 கி.மீ தொலைவில் முடிகொண்டான் உள்ளது. விஷ்ணுபதிப் புண்யகாலத் தலம் முடிகொண்டான் ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீகோதண்டராமர் கோயில்!

பட்டாபிஷேகத்திற்கு முன்னரேயே முதன்முதலில் ஸ்ரீரங்கநாதர் முன்னிலையில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியின் விருப்பத்திற்கு ஏற்ப, ஸ்ரீராமருக்கு முடி சூட்டிப் பார்த்து மக்கள் ஆனந்தித்த திருத்தலமே முடிகொண்டான்!

சீதையை மீட்ட பின்னர், அயோத்திக்குத் திரும்பும் முன், ஸ்ரீராமருக்காக, ஸ்ரீபரத்வாஜ மகரிஷி, ரவிகுல குலதெய்வமாம் ஸ்ரீரங்கநாதரை, நேரில் தோன்றச் செய்து வேண்டி, தரிசிக்க வைத்த விஷ்ணு பூஜைத் தலம்!

குடும்பத்தில் தலைக்கு மேல் வெள்ளமாக வரும் இன்னல்களைப் போக்க உதவும் விஷ்ணுபதி பூஜை! தொழிலில், பதவியில் உள்ள கடுமையான பிரச்னைகளை நிவரத்தி செய்யும் விஷ்ணுபதி பூஜை!

சித்தர்கள் நவிலும் மகாநாராயண மந்திரம் தோன்றிய இடம்!

நடப்பு சுபானு ஆண்டின், வரும் விஷ்ணுபதிப் புண்யகாலத் தலமாக சித்தர்கள் அருள்வது முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர் ஆலயமாகும். அயோத்தியாவில் சேவை சாதித்த ரவிகுலக் குலதெய்வ மூர்த்தியாம் சாட்சாத் ஸ்ரீரங்கநாதரே அருளும் பரந்தாம மூர்த்தி! இலங்கையில் இருந்து சீதா தேவியை மீட்டு, அயோத்திக்குத் திரும்பும் வழியில், ஸ்ரீராமர், ஸ்ரீபரத்வாஜ மகரிஷியைத் தரிசிக்க இங்கு வருகையில், ஸ்ரீராமருக்காக, அயோத்தியில் இருக்கும் ஸ்ரீரங்கநாதர் வடிவை, மகரிஷியும் இங்கு தம் தபோ பலத்தால், அரும் பக்தியால் நேரில் தருவித்துத் தோன்றச் செய்து வணங்கத் துணை புரிந்த அதியற்புதத் தலமே முடிகொண்டான்!

காலச் சக்கரத்தில், கௌசிக ஏகாதசி, விஷ்ணுபதி, பொங்கல், தீபாவளி போன்ற எத்தனையோ, யுகங்களாகப் பொலிந்து வரும் புண்ணிய சக்திகளைத் தரும் சமுதாய தெய்வீகப் பண்டிகைகள் நிறையவே உண்டு. மனித சமுதாயம் இவற்றில் பலவற்றையும் கடைபிடிக்க மறந்தமையால் தாம், தற்காலத்தில் நாட்டுப் பொருளாதாரம், சமுதாயச் சூழ்நிலை, குடும்பம், தொழில், அலுவலகங்கள் அனைத்திலும் மக்களுக்குச் சொல்லொணாத் துன்பங்கள் ஏற்படுகின்றன.

பூவுலகின் யோக பூமியே புனித பாரதம்!

இப்பூவுலகில் தெய்வீகத்தில் தலைமை வகிக்கும் நம் பாரதபூமி தான் ஆன்ம வளம் நிறைந்ததாக, அனைத்து ஐஸ்வரியங்களையும் கொண்டதாகும். இகபர சுகத்தை நாடி, கடுமையாக உழைக்க மறுத்து, சுகபோக மாயையில் மக்கள் உழலும் போக பூமியாக, இப்பூவுலகில் பெரும்பான்மையான பல தேசங்கள் உள்ளன. ஆனால் புனிதமான நம் பாரதப் புண்ணிய பூமியே, ஆத்ம மகிமை வாய்ந்த யோக பூமியாக, அனைத்து உலக நாடுகளுக்கும் ஆன்மீக மையமாகப் பொலிகின்றது.

எனினும், புனிதமான நம் பாரத யோக பூமியிலும், மக்கள் தக்க முறையில் ஆன்மீக ரீதியான சமுதாய நல்வாழ்வைப் பேணாதது வேதனை தருவதாகும். ஆனால் மக்களைக் கடைத்தேற்றவும், மக்களுக்கு நல்வழி காட்டிடவும், சற்குருமார்களை, இறைவனே, தம் தூதுவர்களாக, இறைக் காப்பாக உலகின் பல இடங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார் என்பதை உணர்ந்திடுக! இதிலும் பூமியின் தெய்வீக மையமான இந்த பாரதப் புண்ணிய பூமியில்  தான், தம்மை ஆழ்ந்த நம்பிக்கையுடன் நாடி வருவோர்க்கும், பாமரருக்கும் அருட்தொண்டாற்றிட எண்ணற்ற சித்தர்களும், மகரிஷிகளும், யோகியர்களும், ஞானியரும் யாங்கணும் உலவி வருகின்றனர். எனவே சற்குருவை அடைந்து சமுதாய நல்வாழ்வைப் பேண வேண்டும் என்ற தெய்வீக லட்சியத்தில் அனைத்து நாட்டு மக்களும் உறுதியுடன் வாழ்வதே மனிதப் பிறவிக் கடமையாகும்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

சுபானு வருடத்தின் நான்காவது விஷ்ணுபதி புண்யகாலமானது, வரும் மாசி மாதப் பிறப்பு நாளில் அமைகின்றது. இதற்கான விஷ்ணுபதிப் பூஜைத் தலமாக சித்தர்கள் அளிப்பதே முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர் ஆலயம்.

எனவே வரும் விஷ்ணுபதிப் புண்ய கால பூஜையை முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் கொண்டாடி, சொல், பொருள், திறன் பகுத்தறிவிற்கும் அப்பாற்பட்ட அற்புதப் பலாபலன்களையும், நல்வரங்களையும் இறையருளாகப் பெற்றிடுவீர்களாக! குறிப்பாக பல தலைமுறைகளாக முறையாக குலதெய்வ பூஜை, இல்லறப் பூஜைகள், பெரியோர்கள் விட்டுச் சென்ற தான, தர்ம, பூஜை, நேர்த்திக் கைங்கர்யங்களை கைவிட்டோர், தாமும் தம் சந்ததிகளும் தேவதா சாபம், பித்ரு சாபங்களுக்கு ஆளாகாமல் காத்திடத் தக்க பரிகாரங்களைப் பெற உதவும் தலம்.

இவ்வாறு ஒவ்வொரு விஷ்ணுபதி பூஜையிலும் கிட்டும் பலன்களோ விதவிதமானவை, எண்ணற்றவை. குறிப்பாக, கலியுகத்தில் தோன்றும் பீதிகள், ஸ்திரமற்ற வாழ்வு, வன்முறைகள், ஒழுக்கக் குறைவு, பெண் பிள்ளைகள் கொள்ளும் அச்சங்கள் – போன்றவற்றின் ஊடே மக்களைக் காக்க வல்லவையே விஷ்ணுபதி பூஜைப் பலன்களாகும்.

உலகம் உய்வதற்கான அனைத்து இறைவழிகளும் நம் பாரத நாட்டில்தாம் காணக் கிடைக்கின்றன. இவற்றுள் ஒன்றே விஷ்ணுபதிப் புண்ணிய கால பூஜையாம். விஷ்ணுபதியை மிகச் சிறந்த உலக மனிதவள சமுதாய இறைப் பூஜையாக ஆற்றிடுவது, பாரதப் புண்ணிய பூமியில் பிறந்த நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும். இதற்காகக் கடந்த பல ஆண்டுகளாக நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் அரும்பணி ஆற்றி வருகின்றார்கள். வைணவப் பெரியோர்களும், ஆச்சாரியார்களும், பெருமாள் அடியார்களும், பக்த கோடிகளும் அனைத்து வைணவ ஆலயங்களிலும் ஸ்ரீவிஷ்ணுபதிப் பூஜையை மகத்தான சமுதாய பூஜையாகக் கொண்டாடிடத் துணை புரியவும், சேவையாற்றவும் மிகவும் பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

ஸ்ரீராமர் நாடி வந்த ஸ்ரீபரத்வாஜ மகரிஷிக் குடில்

ஸ்ரீராமபிரான், தம் வனவாசத்தில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியைப் பன்முறை தரிசித்து, முறைப்படி வணங்கி அருளாசிகளைப் பெற்றார். இலங்கைப் போரை முடித்து, அயோத்திக்குத் திரும்பும் வழியில், மீண்டும் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியைத் தரிசித்திட ஸ்ரீராமர் விரும்பினார். அப்போது, காவிரி ஆற்றங்கரையில், முடிகொண்டான் கிராமத்தில் பரத்வாஜர் பர்ணசாலை அமைத்துத் தங்கி இருந்தார்.

எங்கிருந்தாலும் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியைத் தரிசிக்க வேண்டும் என்ற தெய்வீக வேட்கையால், ஸ்ரீராமரின் புஷ்பக விமானம் தானாகவே இங்கு தரை இறங்கியது!

ஸ்ரீராமரின் வருகைக்காக நந்தி கிராமத்தில் நெடுங்கால உபவாசமிருந்து காத்திருக்கும் பரதனுக்கு, தன் வருகையைத் துரிதமாக அறிவிக்குமாறு ஸ்ரீஆஞ்சநேயரை அனுப்பி விட்டு, ஸ்ரீராமர் ஸ்ரீபரத்வாஜ முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தார்.

அவதார மூலக்காரியத்தை அற்புதமாக முடித்த ஸ்ரீராமரைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தார் ஸ்ரீபரத்வாஜர், மகாராஜா என்ற பாவனையில், பரத்வாஜர் ராமபிரானுக்கு அர்க்யம் அளித்து உபசரித்து, ஸ்ரீராமரையும், அவர்தம் பரிவார்த்தையும் விருந்திற்கு அழைத்தார். அப்போது...

ஸ்ரீராமர் கொண்டிட்ட சங்கல்பம்

ஸ்ரீராமர் முனிவரைப் பணிவுடன் வணங்கி, தான் எடுத்துக், கொண்ட சங்கல்பம் பற்றி மகரிஷியிடம் எடுத்துக் கூறினார்.

அயோத்தியை விட்டு வனவாசம் ஏகிய காரணத்தால், பரதன் உட்பட அனைத்து அயோத்தி மக்களும் கவலையுற்றுச் சரியாக உணவு கூட உட்கொள்ளாது இருக்கின்றனர் என்ற செய்தி வனத்தில் ஸ்ரீராமரை வந்தடைந்தது. இதைக் கேட்டவுடன் மாமன்னராம் ஸ்ரீராமரின் உள்ளம் நெகிழ்ந்தது. குடிமக்கள் மகிழ்ச்சியாக இருக்க நல்வழி செய்வது தானே அரசன் கடமை, எனவே அவ்வப்போது மகரிஷிகளைத் தரிசித்து, அருட்பணி ஆற்றி, அவர்களுடைய நல்வரங்களையே மக்களுக்குக் காணிக்கையாக்கினார் ஸ்ரீராமர்.

தம் ரவிகுல, குல தெய்வமாகிய ஸ்ரீரங்கநாதரை நேரில் அயோத்தியில் தரிசித்துப் பூஜை ஆற்றிய பிறகே, அறுசுவை முழு உணவு ஏற்பேன் என்பது தான் ஸ்ரீராமனின் சங்கல்பம், அதுவரை வனவாச, உபவாச உணவு வகைகளையே ஏற்றிட்டார்.

ஸ்ரீபரத்வாஜரின் அன்புப் பிரார்த்தனை

ராமரின் சங்கல்பத்தைக் கேட்ட பரத்வாஜ முனிவர் சற்றே சிந்தனையில் ஆழ்ந்தார். நெடுங்காலம் சீதாப் பிராட்டியின் பிரிவால் வேதனையுடன் கிடந்த ஸ்ரீராமருக்கு, அறுசுவை உணவை அளிக்காவிடினும், மூலிகாதி திரவியங்கள், சகல புண்ய தீர்த்தங்கள், மருத்துவக் கஷாய சக்திகளுடன், அமிர்த இன்சுவை கூடிய உணவை, அக்குறித்த விஷ்ணுபதிப் புண்ய நாளில் அளித்திட வேண்டும். ஆனால் அதே சமயத்தில் ஸ்ரீராமரின் சங்கல்பத்திற்கும் இடையூறு வரலாகாது. இதனை எவ்வாறு ஆற்றுவிப்பது?

நெடுங்காலங் கழித்து ஸ்ரீராமர் மீண்டும் ஸ்ரீரங்கநாதரை நேரில் வழிபட முதலில் வழிவகை செய்தல் வேண்டும் என ஸ்ரீபரத்வாஜர் எண்ணிட்டார். இது எப்படி சாத்தியமாகும்?

லட்டுப் பிரசாத மகாத்மியம்

இக்ஷவாகு குல தெய்வ மூர்த்தியாகிய ஸ்ரீஆதிரங்கன் தன் ஆஸ்ரமத்தில் தோன்றினால் தான் இது இயலும் என்பதை ஸ்ரீபரத்வாஜ மகரிஷி உணர்ந்தார். எனவே அவர் தம் பத்னியுடன் ஆத்மார்த்தமாக, 2001 பெரிய லட்டுகளைப் பக்திப் பூர்வமாக ஆக்கி, ஸ்ரீரங்கனுக்குப் படைத்தளித்தார்.

ஸ்ரீமகா நாராயண மகா மந்திரம் என்ற ஒன்று உண்டு. இதனைக் கலியுகத்தில் பல துறைகளிலும் ஓத வேண்டும். குறிப்பாக லட்டை ஆக்கும் போதும், படைக்கும், தானமாக அளிக்கும் போதும் ஓத வேண்டிய,

“ஸ்ரீமன் நாராயணா சரணம் சரணம் ப்ரபத்யே
ஸ்ரீமதே நாராயணாய நம:”

என்ற சித்தர்களின் அரிய மகாநாராயண மந்திரத்தை உலகிற்கு மீண்டும் எடுத்துரைத்து விடாமல் ஜபித்து, ஆதிரங்கனை மனமுருகி வேண்டுவோம் என்று அனைவரிடமும் கூறினார். கருணைக் கடலான அயோத்யா ஸ்ரீரங்கநாதரும் அவர்களின் பக்திப் பூர்வமான வேண்டுகோளை ஏற்று, இங்கே முடிகொண்டான் திருத்தலத்தில் நேரே அர்ச்சாவதார ரூபத்தில் தோன்றினார்.

ஸ்ரீராமர், நெடுங்காலம் கழித்துத் தன் குல தெய்வ மூர்த்தியை நேரே கண்டதும், மெய்சிலிர்த்துப் பூரித்து, சுவாமிக்குப் பலவிதமான பூஜைகளை முறைப்படி ஆற்றினார்.

ஸ்ரீராமர் தழுவிய பிரம்ம ஞானம்

ஸ்ரீராமர், அயோத்தியில் இக்ஷவாகு குலகுருவாகிய வசிஷ்ட முனிவரிடம் குருகுலவாசப் பாடம் கற்றார் அல்லவா! அப்போது பாடத்தின் உச்சியில், வசிஷ்டர், ஸ்ரீராமருக்கு பிரம்ம ஞான நிலையை உபதேசித்துப் பெற்றுத் தந்தார்.

பிரம்ம ஞானத்தை அடைந்த ஸ்ரீராமர் அதே ஞான நிலையிலேயே தான் நிலை நிற்க விரும்புவதாக ஸ்ரீவசிஷ்டரிடம் கூறினார். இதைக் கேட்ட குலகுரு ஸ்ரீராமரின் அவதாரக் காரணங்கள், அவர் ஆற்ற வேண்டிய செயல்கள் அனைத்தையும் எடுத்துக் கூறி, இவற்றைச் செய்து முடிப்பது ஸ்ரீராமரின் அவதாரக் கடமையாகும் என்று கூறினார். இவ்வாறு கடமைகளை ஆற்றும் காலங்களில், தான் பெற்ற பிரம்ம ஞானத்தைத் தன் குலதெய்வமாகிய ஸ்ரீரங்கநாதரின் திருவடிகளில் அர்ப்பணித்து, அவதாரக் காரியம் முடிந்த பிறகு, மீண்டும் பெற்றுக் கொள்ளலாம் என்று எடுத்துக் கூறினார்.

முடிகொண்டானே போற்றி! போற்றி!

ஸ்ரீராமர் மெய்சிலிர்த்து ஆற்றிய பூஜைகளைப் பேரானந்தத்துடன் ஏற்றுக் கொண்ட ஸ்ரீரங்கநாதர் பிரம்ம ஞானானந்தத்தை ஸ்ரீராமருக்கு அளித்தார். அதைப் பெற்றவுடன் ஸ்ரீராமரின் திருமேனி அழகு, கண் கொள்ளாக் காட்சியாகப் பொலிந்தது. இதுவும் ஒரு விஷ்ணுபதிக் புண்ய கால அனுபூதிதாமே!

ஸ்ரீரங்கநாதரை முடிகொண்டானில் பல்லாண்டுகள் கழித்துத் தரிசித்து, திருவடிகளில் தோய்ந்திருந்த பிரம்ம ஞானப் பரல்களைத் துய்த்திடவே, ஸ்ரீராமருக்குத் திவ்யஞானப் பிரகாச ஒளிச் சுடராழி கூடியது. இதைக் கண்டு மகிழ்ந்த ஸ்ரீபரத்வாஜ முனிவருக்கு அப்படியே ஸ்ரீராமருக்கு முடிசூட்டிப் பார்த்து விட வேண்டும் என்ற பெருவிருப்பமும் ஏற்பட்டு விட்டது. உண்மையான பக்தர்களின் நியாயமான விருப்பத்தை பூர்த்தி செய்பவர் தானே கருணைக் கடலான ஸ்ரீஆதிரங்கன், உடனே ஆங்கே கிரீடம் தரித்து “முடிகொண்டான்” ஆனார் ஸ்ரீகோதண்டராமர்!

இவ்வாறாக ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீராமர் வழிபாட்டிற்காக ஸ்ரீபரத்வாஜரின் விருப்பப்படி அயோத்திலிருந்து எழுந்தருளிய தலமே முடிகொண்டான் ஆகும். இங்கு ரவி குலத்தார் வழிபட்ட ஸ்ரீரங்கத் திருமேனி பொலிகின்றது. ஸ்ரீராமரே தொட்டுப் பூஜித்த அழகு திருமேனி, சுயம்பாய்த் தோன்றியவர். ஜீவன்களுக்காக அன்று ஒரு அவதாரம் மற்றொரு அவதாரத்தின் வழிபாட்டிற்காகத் தோன்றியமையால் முடிகொண்டான் தலம் ஒப்பற்றச் சீரும் சிறப்பும் பெறுகின்றது.

ஆஞ்சநேயரின் அபிலாட்சைகள்

ஸ்ரீராமரைக் குறித்த காலத்திற்குள் மீண்டும் காணாவிடில் தான் உயிரை விட்டு விடுவதாக பரதன் சங்கல்பம் கொண்டிருந்தமையால், ஸ்ரீராமர் முதலில் ஆஞ்சநேயரை அனுப்பி, தாம் வந்து கொண்டிருக்கும் செய்தியை அறிவிக்கச் செய்தார். தன் புனிதப் பயணம் தெய்வீகக் காரண காரியம் கொண்டிருப்பினும், ஸ்ரீராமரோடு ஸ்ரீரங்கர் பூஜையை ஆற்றுதல், ஸ்ரீபரத்வாஜர் ஆஸ்ரமப் பிரசாதம் ஏற்றல் ஆகியவை கிட்டாமற் போனது பற்றி ஆஞ்சநேயர் வருத்தமுற்றார்.

மேலும் ஸ்ரீராமர் விருந்துண்ட இலையில் தாம் புரண்டு, அங்கப் பிரதட்சிணம் செய்யும் பாக்கியம் கைவிட்டுப் போனது கண்டு ஆஞ்சநேயர் கவலை கொண்டார். எனினும் அனைத்தும் இறை லீலைகள்தாமே., ஆஞ்சநேயர் மன வருத்தம் கொண்டவராய் ஒதுங்கி இருக்கக் கண்டார் ஸ்ரீராமர்.

“ஆஞ்சநேயா! பிறருக்குக் கிட்டாத இறைப் பேரானுபவங்கள் உனக்குக் கிட்டி உள்ளனவே! இன்னமும் கிட்டப் போகின்றன!” என்று கூறித் தேற்றிடவே இதனால் மென்மேலும் ராமானுபவம் தோன்ற இருப்பதைக் கேட்டு ஸ்ரீஆஞ்சநேயர் பெருமகிழ்வு கொண்டார்.

“சுவாமி! அடியேன் மனவருத்தம் கொண்டதற்குக் காரணம் உண்டு. எவ்வாறு தாங்கள், தங்களுடைய குலதெய்வத்தை நெடுநாள் கழித்துப் பூஜித்துப் பேரானந்தம் கொண்டீர்களோ இதே போல, தங்களை அடியேன் ஸ்ரீராம த்வனியில் நேரில் கண்டு பூஜித்தால் தானே பேரமைதியும் சாந்தமும் கிட்டுகின்றது. தங்களைப் பிரிந்து இருக்கலாகாதே!”

காணாத நிலையில் காணும் உத்தம ராமானுபவம்

அப்போதுதான் ஸ்ரீராமர் ஆஞ்சநேயருக்கு விஷ்ணுபதிப் புண்யகால மகிமையை உணர்த்திடவே, ஸ்ரீஆஞ்சநேயரும் தனிமை, கொண்டு ராமானுபவத்தை உய்க்கலானார். இன்றும் இங்கு தனிச் சன்னதி கொண்டு அருள்கின்றார். ஸ்ரீபரத்வாஜரின் விருப்பத்திற்கு ஏற்ப ஸ்ரீராமரும் ஸ்ரீரங்கநாதரின் ஆணைப்படி தாம் மானுடத் திருமேனியில் பிரம்ம ஞானம் பூண்ட நிலையிலேயே திருமுடி சூட்டிப் பரிமளித்தார். இவ்வரிய அனுபூதிகளும் நிகழ்ந்த காலமே விஷ்ணுபதிப் புண்ணிய காலமாகும்.

விஷ்ணுபதிப் புண்ணிய கால பூஜா பலன்கள்

எனவே இவ்வாறு எண்ணற்ற பல அரிய விஷ்ணுபதிப் புராண வைபவங்கள், அனுபூதிகள், அற்புதங்கள் நிகழ்ந்த முடிகொண்டான் ஸ்ரீகோதண்டராமர் ஆலயத்தில் வரும் விஷ்ணுபதிப் புண்ணிய கால பூஜைகளை, தர்ப்பணம், ஹோமங்கள், அபிஷேக ஆராதனைகள், அன்னதானம் மற்றும் தானதர்மங்களுடன் நிகழ்த்துவது வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமாகும்.

ஸ்ரீராமருக்கு தர்பை, மலர்களால் ஆன கிரீடம் சார்த்தி, ஆதித்ய ஹ்ருதயம் ஓதி வழிபடுதல், சுந்தர காண்டத் துதிகள் ஓதுதல், பானகம், பெரிய வகை லட்டுகள், புளியோதரை, நெய், பால் கலந்த சர்க்கரைப் பொங்கல், பாயசம், பெரிய வகை மிளகு வடைகள் படைத்துத் தானமளித்தல் மிகவும் விசேஷமானது. மூன்று சந்தன உருண்டைகளை (வசு, ருத்ர, ஆதித்யர்கள்) வைத்து, விஷ்ணு தர்பைக் கூர்ச்சம் அமைத்துத் தர்ப்பணம் அளித்தல் சிறப்புடையது.

குறிப்பாக ராஜாராமன், பலராமன், சீதாராமன் போன்ற ராமன் பெயர்களை உடையவர்களும், சீதா, ஜானகி, ரங்கன் போன்ற பெயர்களைக் கொண்டோரும் இங்கு பூஜிப்பதால் வாழ்வில் நல்ல முன்னேற்றங்களைப் பெறுவர்.

வாழ்வில் தக்க தகுதி, விருது, பதவிகளைப் பெறாது வருந்துவோர், குடும்பத்திலும், தொழிலிலும், நாட்டிலும் நல்ல recognition பெற உதவும் தலம்.

சந்ததி சந்ததியாக ஒருவர் மாற்றி ஒருவராக மன நோயால் பீடிக்கப்பட்டு இருக்கின்ற சந்ததிச் சாப நிலை மாற உதவும் பூஜைத் தலம்.

விட்டுப் போன உறவுகள் நன்முறையில் தொடர்ந்திட உதவும் தலம். பெற்றோர்கள், உறவினர்களின் கட்டாயத்திற்காகத் திருமணம் செய்து கொண்டு, ஏதேதோ நினைவுகளுடன் வாழ்வோர், அனைத்தும் இறைவன் செயல் என்று ஏற்று, இல்லறத்தில் ஒன்றி வாழ உதவும் தலம்.

வாழ்வின் பல நிலைகளிலும், காம இச்சைகளிலும், முறையற்ற ஒழுங்கீன வாழ்க்கை வாழ்ந்தோர் மனம் திருந்தி வாழ உதவும் தலம்.

இழந்த சொத்துக்களைத் தார்மீக ரீதியாக ஓரளவேனும் பெற உதவும் தலம்,

உத்தராயணமும் தட்சிணாயனமும்

உத்தராயண, தட்சிணாயனக் காலச் சிறப்பு வழிபாடுகள்!

தமிழ் வருடத்தின், தை முதல் ஆனி வரை உள்ள ஆறு மாத உத்தராயணப் புண்ணிய காலமே, அனைத்து விதமான சுப காரியங்களுக்கும் ஏற்ற காலம் என்றும், உத்தராயணத்தில் இறப்பதே சிறப்புடையது என்றுமான கருத்துகள் நிலவுகின்றன. உத்தராயணப் புண்ணிய காலம், சுப காரியங்களுக்கு மிகவும் சிறப்புடையது எனினும், ஆடி முதல், மார்கழி வரையிலான தட்சிணாயனப் புண்ய காலத்தைச் சுபமற்றதாகக் கருதுதல் முற்றிலும் தவறு.

உத்தராயணப் புண்ணிய காலம் போன்றே, தட்சிணாயனமும் ஒரு புண்ணிய காலமாகவே அழைக்கப்படுவதால், இதிலும் விசேஷமான புண்ய சக்திகள் நிறையவே உண்டு. உண்மையில் வாமனம், தாந்த்ரீகம், நாடியம் போன்ற துறைகளில் உள்ள பல அரிய யோக சித்திகளைத் தட்சிணாயனத்தில் தாம் முழுமையாகப் பெற முடியும். கேதாரீய, பதரீய தேவ சக்திகள் தட்சிணாயனத்தில் தாம் பரிணமிக்கின்றன. தட்சிணாயன மார்கழியைத் தாமே, மாதங்களில் சிறந்ததென ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே ஏற்றுச் சிறப்பித்துப் போற்றுகின்றார். “உள்ளுடலாம் உள்ளம், பக்தியில் தோய உத்தமக் காலம் உத்தராயணமாகவும், வெளியுடல் பக்தியில் கனிய தட்சிணாயனமாகவும்”, பொலிவதை நன்கு உணரலாம். இரண்டுமே மனித சரீர தேவ வளத்திற்குத் தேவையானவை தாமே!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருநாவலூர்

இறப்பு என்பது விதிப் பூர்வமாக அமைவது. இன்பமோ, துன்பமோ, வாழ்க்கையில் எப்படி நடந்தாலும் இயற்கையாக இறுதி வரை தெய்வ நம்பிக்கையுடன் நல்வழியில் துலங்குவதையும் பெரிய யோகமாக கலியுகத்தில் போற்றுகின்றனர். எனவே எந்த அயனத்தில் இறப்பு என ஆராயாது, கடைசி நாடித் துடிப்பு வரை இறைநாமம் ஓதி, நம் கஷ்டங்களின் ஊடேயும், பிற ஜீவன்களின் நல்வாழ்க்கைக்கு, ஆவன செய்து வாழ்வதே கலியுக அயன யோகங்களுள் ஒன்றாம்.

இதற்காக, முதலில் அவரவர் பிறந்த அயனக்காலம், வளர்பிறை, தேற்பிறைக் கால நிலைகளை நன்கு அறிந்து, அதற்கான வழிபாடுகளைத் தக்க சற்குருவிடம் ஏற்று நடத்துதலால் அரிய பல ஆன்ம சக்திகளை, நல்வரங்களை நன்கு அடைந்திடலாம். உதாரணமாக, தட்சிணாயனத் தேய்பிறையில், நவமித் திதியில் ஒருவர் பிறந்திருந்தால் அவருடைய நட்சத்திரத் தல வழிபாட்டுடன், நின்ற கோலத் தட்சிணா மூர்த்தி அருளும் ஆலயத்தில் வழிபட்டு வருதல் வேண்டும்.

அந்தந்த அயன, ருதுக் காலத்தில் மனித சமுதாயத்திற்குத் தேவையான ஆன்ம சக்திகளை அளிக்க வல்லனவாக அந்தந்தக் கால மலர்கள், கனிகள், காய்கறிகளை இறைவன் படைக்கின்றார். இவற்றைப் பயன்படுத்தும் இறைவழி முறைகளைத் தக்க சற்குரு, சான்றோர்கள் மூலம் பெற்றுக் கடைபிடித்தலே நன்று.

உத்தராயணத்தில் பெற வல்ல சுபமங்களக் கிரணக் கதிர்களைத் தக்க அமிர்த முகூர்த்த நேர சக்தி மூலம் தட்சிணாயனத்திலும் பெறு வழிமுறைகளையும்,

தட்சிணாயண காலத்தில் ஏனைய பல சுபமங்கள காரியங்களை பல விசேஷமான வழிபாடுகளுடன் நிறைவேற்றும் முறைகளையும்,

தட்சிணாயணத்தில் சிறப்புடன் வழிபட வேண்டிய ஆலயங்களையும் தக்க சற்குரு மூலமாக அறிதல் வேண்டும்.

இதுவரையில் வளர்பிறை, தேய்பிறை, உத்தராயணம், தட்சிணாயனம், ராகு காலம், எம கண்டம், மரண யோகம் என காலப் பாகுபாடுகளை அறியாது, நல்ல நேரம் கணிக்காது, காரியங்களைச் செய்தவர்கள், கால தோஷங்களை நீக்கிட, ஸ்ரீபிட்சாடனர், ஸ்ரீகாலபைரவர், சப்தமாதர்கள் பூஜைகள், மலைத்தல கிரிவலங்கள் மற்றும் தக்க பரிகாரங்களை மேற்கொள்வதே சிறப்பானது.

நாகத்தி சிவாலயம்

திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலய ஸ்ரீமூகாம்பிகை, சென்னை – வேலூர் மார்கத்தில், காவேரிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீகுங்குமவல்லி நாயகி சமேத ஸ்ரீகொங்கணேஸ்வரர், திருவையாறு அருகே நாகத்தி ஸ்ரீபக்தவசலேஸ்வரர் போன்ற தலங்கள், தேய்பிறை, தட்சிணாயனக் காலங்களில் பல விசேஷமான சக்திகளை அளிக்கவல்லவை. மேலும் மனக் குழப்பங்களை அகற்றி, தீர்கமான தீர்வுகளையும் அளிக்கவும் வல்ல தலங்களாகும்.

மேலும், உத்தராயண வரபூஷண சக்திகள் நிறைந்த தலங்களும் பல உண்டு. பொதுவாக வடக்குத் திசையை நோக்கி உள்ள லிங்கம் (கோயம்பேடு, மயிலாப்பூர் ஸ்ரீவீரபத்ரர் ஆலயம்), வலப் பக்கம் ஆவுடை உள்ள லிங்கம், நடந்த கோலப் பெருமாள் மூர்த்தி (திருவிக்கிரமர்), இரண்டு அம்பிகைகள் உள்ள ஆலயங்கள் (இன்னம்பூர், திருப்பைஞ்ஞீலி) போன்றவற்றில் உத்தராயண சக்திகள் மிகுந்துள்ளன.

ஸ்ரீசனீஸ்வரர் திருநல்லம்
கோனேரிராஜபுரம்

தங்கள் வாழ்வில் அறிந்தோ அறியாமலோ, சுப காரியங்களைத்  தேய்பிறைக் காலத்தில் செய்தோர், மேற்கண்ட உத்தராயண வரபூஷணத்  தலங்களில், பிரதோஷ நேர சுவாமி புறப்பாடு, ஏழைகளுக்கான இலவசத் திருமணம், மாங்கல்யம், மெட்டிகள் அளித்தல், மற்றும் ஏழைகளுக்கான இலவச உபநயனம், போன்றவற்றை நிகழ்த்தி வருதலால், சுப காரியங்களில் ஒட்டி உள்ள காலசந்தி தோஷங்கள் அகலும்.

அக்காலத்தில் ஜாதி, இன, குல பேதமின்றி யாவரும் பூணூல் அணிந்து, குடுமி வைத்திட்டு நிலவிய புனிதமான காலத்தில், நம் பெரியோர்கள் நிதமும் காலையில் புதுப் பூணூல், புது வஸ்திரங்களை சுவாமிக்கு அணிவித்துப் பூஜிக்கும் இல்லற, சமுதாய நலப் பூஜைகளை பக்தி சிரத்தையுடன் கைக் கொண்டிருந்தமையால், சமுதாயத்தில் சத்திய சக்திகள் நிலவின. சமுதாயத்தில் சாந்தமும், அமைதியும் கொழித்தன.

கும்பகோணம் அருகே கோனேரிராஜபுரம் என்னும் திருநல்லம் திருத்தல சிவமூர்த்திக்கு ஆறு வேளைகளிலும் புது பூணூல், புது வஸ்திரம் சார்த்தும் சேவையும் மிகமிக விசேஷமானதாகும். இங்கு மிகவும் விசேஷமாக ஸ்ரீசனீஸ்வரருக்கு வெள்ளை வஸ்திரம் சார்த்தப்படுவதோடு, மூலவருக்கு சார்த்தப்படும் புஷ்பங்களை நிர்மால்யப் புஷ்பப் பிரசாதமாக ஸ்ரீசனீஸ்வரர் ஏற்று அருளுவதும் காணுதற்கு அரியது. சனி தசை, சனி புக்தியில் சிறப்பாக வழிபட வேண்டிய மூர்த்தி.

ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகர்

திருமகள் பாற்கடலில் தோன்றிய போது, நெல்லி மரச் சிலாவில் தோன்றியமையால், நெல்லிக் கட்டை மிதக்கும் கிணற்று நீரை வைத்துப் பூஜிப்பதும், அருந்தி வருவதும், நெல்லி மரப் பீடத்தில் ஸ்ரீமகாலக்ஷ்மி யந்திரம் வைத்துப் பூஜிப்பதும் லட்சுமி கடாட்சத்தைத் தருவதாகும். நீரைத் தூய்மையாக்கவும், நீரின் சுவையைக் கூட்டவும் கிணற்றில் நெல்லிக் கட்டையை மிதக்க விடும் வழக்கம் நெடுங்காலமாக நடைமுறையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஸ்வதப் பத்திரமான, அரச இலைகளால் ஸ்ரீஅஸ்வத பத்ரப் பிள்ளையார் எவ்வாறு உருவானார்?

நெல்லி விருட்சமும், அரச விருட்சமும், திருமாலின் அம்சங்களைப் பூண்டவையே! அத்தி மரம், சந்தன மரம், நெல்லி மரத்தாலும் ஆன பெருமாளின் திருமேனிகள் அரிதாகச் சில தலங்களில் உள்ளன. காஞ்சிபுரம் அத்தி வரதர், திருப்பாற்கடல் அத்தி ரங்கர், கருங்குளம் (சந்தன மரப்) பெருமாள் இவ்வகையில் மிகவும் பிரசித்தி பெற்ற, மிகவும் சக்தி வாய்ந்த பெருமாள் மூர்த்திகள் ஆவர்.

ஒரு யுகத்தில், ஸ்ரீரங்கநாதர், வைகுண்டத்தில் நீண்ட நெடுங்கால யோக சயனம் பூண்டிடவே, காத்தல் தொழில் பிரபஞ்சத்தில் சற்றே ஸ்தம்பித்தது போல் தோன்றியது. ஆனால் அனைத்தும் இறை லீலைகள் தாமே! அனைத்துத் தெய்வ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும், ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு மிகவும் ப்ரீதியான அரச இலைகளால், யோக நிலையில் இருந்த ஸ்ரீரங்கநாதரை அர்ச்சித்துக் கொண்டே இருந்தனர். திருமாலாம் திருவரங்கரின் திருமேனி முழுதும் அரசுப் பத்திரங்கள் மூடி, அரசு தள மலையே ஆயிற்று! எனினும் ஸ்ரீரங்கர் யோக சயனத்தில் இருந்து மீள்வாரில்லை!

எனவே அனைவரும் விநாயகரைத் தக்க தீர்வு தருமாறு வேண்டிடவே, திருமாலின் திருமேனியில் மலையளவு நிறைந்து கிடந்த அரசு இலைகளில் இருந்து பிள்ளையார் தோன்றி ஸ்ரீரங்கரின் முன் நின்று, சுழுமுனைச் சுவாசத்தில் தம் துதிக்கையால் ஓங்கார நாதத்தை எழுப்பிடவே, ஓங்கார ரீங்காரத்தால் யோக சயன சாந்தி பெற்று ஸ்ரீரங்கர் யோகசயனத்தில் இருந்து மீண்டு ஸ்ரீவிநாயகரைக் கண்டு ஆனந்தம் பூண்டு மீண்டும், அனந்த சயனராகவும், ஆனந்த சயனராகவும் காட்சி தந்து அனைவருக்கும் அருளினார்.

அஸ்வத பத்திரங்களில் தோன்றிய விநாயகரால்தாம் பல ஸ்ரீரங்கநாதரின் பல ஆனந்த யோகமய தரிசனங்களைப் பலரும் பெற்றமையால், அஸ்வத பத்ர ரூபராக அப்படியே வடிவு கொண்டு திவ்யமான காட்சி தரும்படி அனைத்துத் தெய்வ மூர்த்திகளும் கணபதியை வேண்டிட, ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகர் தோன்றினார். எனவே முதன் முதலில் தெய்வ மூர்த்திகளாலும், பிறகு சித்தர்கள், மகரிஷிகளால் வழிபடப் பெற்றவரே ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகர்!

புதன்கிழமை தோறும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட நெல்லிக்காய் ஊறுகாயுடன், தயிர் அன்னத்தை அரச மரத்தடியில் எழுந்தருளும் விநாயகரையே ஸ்ரீஅஸ்வத பத்ர விநாயகராகக் கொண்டு வேண்டிப் படைத்து, ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால், தளமிதி சாபங்கள் தணிந்து, கடன் சுமை தணிய நல்வழி பிறக்கும்.

ஹரிக்கேன் விளக்கு சித்தர்

அட்டைப் பட விளக்கம்

பல நூற்றாண்டுகளுக்கு முன், திருஅண்ணாமலையில் இறைத் தூதுவராய், திருஅண்ணாமலையில் பன்னெடுங்காலம் கிரிவலம் வந்து, அருணாசலத்தில் உறைந்து, ஜீவன்களின் நல்வாழ்விற்கு, குறிப்பாகப் பாமரர்களுக்கு அருள்வழி காட்டிய உத்தமச் சித்தர்களுள் ஒருவரே ஹரிக்கேன் விளக்குச் சித்தராவார்.

சித்தர்களுக்கே உரித்தான பாணியில், காரணப் பெயர் பூண்டு, தோளில் ஒரு கோலைச் சுமந்து, அதில் எப்போதும் ஒளி தரும் ஹரிக்கேன் விளக்கைத் தாங்கியவாறு நடந்து வருவார். இவர் படுத்துறங்கி எவரும் கண்டது கிடையாது. குறித்த சமித்து மரங்களில் (அரசு, ஆல், வேம்பு போன்றவை) மட்டும், சற்றே சாய்ந்த நிலையில் எப்போதாவது யோக நித்திரை கொள்வார். அந்நிலையிலும் அவர் கரம் கோலை உயர்த்திப் பிடித்திருக்க, அதன் நுனியில் ஹரிக்கேன் விளக்கு நன்கு பிரகாசித்துக் கொண்டிருக்கும்.

ஸ்ரீபூமிநாதர்
திருநல்லம் கோனேரிராஜபுரம்

பகலிலும் வெளிச்சம் தரும் அந்த அற்புத ஹரிக்கேன் விளக்கிற்கு அவர் திரியோ, மண்ணெண்ணெயோ இட்டு எவரும் பார்த்தது கிடையாது. அருணாசல கிரிவலப் பாதையில், மிகவும் பிரசித்தி பெற்ற 362 தீர்த்தங்களில், தினமும் ஒரு தீர்த்த நீரை ஊற்றி, ஹரிக்கேன் விளக்கைப் பிரகாசிக்க வைப்பார். ஹரிக்கேன் விளக்குச் சித்தர் குறித்த நாட்களில், தூல, சூக்கும வடிவுகளில், தற்போதும் ஹரிக்கேன் விளக்கைத் தாங்கியவாறு கிரிவலம் வந்த வண்ணமே இருக்கின்றார்.

பல பிரசித்தி பெற்ற மகரிஷிகள், சற்குருமார்களாகத் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து அவரைத் தரிசிக்கையில், ஒவ்வொரு சற்குருவிற்கும், தம் ஆசீர்வாதமாக ஒரு ஹரிக்கேன் விளக்கை அளித்திடுவார். இவ்வாறு இவருடைய ஆசீர்வாதம் பெற்ற சற்குரு தேவமார்கள், ஆண்டுதோறும் இன்றளவும் திருஅண்ணாமலைக் கார்த்திகை தீபத் திருநாளில் பல வடிவங்களிலும் வந்து (வியாபாரியாக, கிரிவல அடியாராக, ஆஸ்ரம சேவகராக) ஹரிக்கேன் விளக்குச் சித்தர் குருவருள் கூட்டி ஆசியுடன் தந்த ஹரிக்கேன் விளக்கை அண்ணாமலைத் திருக்கார்த்திகைத் தீபாக்னியில் மெருகு கூட்டி ஏற்றி, இதன் பலாபலன்களை உலகிற்கு நல்குகின்றனர். அனைத்துக் கார்த்திகை தீபப் பெருவிழாவிலும் நிகழ்கின்ற, பலரும் அறியாத அற்புத தெய்வீக விந்தை இது!

ஹரிக்கேன் விளக்குச் சித்தர் பூவுலகின் பெரும் பாரத்தைச் சமனாக்கும் அருட் சிவத்திறன் பெற்றவர். அண்ட சராசரத்திற்கும் அருள்பாலிக்க வல்லவரே ஹரிக்கேன் விளக்குச் சித்தர், பூண்டி மகான், கசவனம்பட்டிச் சித்தர் போன்ற சித்தர்கள், மகான்கள் நம் கால அளவில் புவியில் உலவி வந்த போதும், மனித சமுதாயம் அவர்களுடைய அருமை, பெருமைகளை, அருட்சக்திகள உணராது விட்டு விட்டது.

தம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் அவர்களுடைய அருளாணைப்படி, நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், ஹரிக்கேன் விளக்குச் சித்தர் போன்ற – கலியுகத்தில் மனித சமுதாயம் மறந்துவிட்ட – சித்தர்களின் மகத்துவத்தை எடுத்துரைத்து வருவது நம் பேறே! ஆழ்ந்த நம்பிக்கையுடன், ஹரிக்கேன் விளக்குச் சித்தரின் ஆசி வேண்டி, அமாவாசை, பரணி, கார்த்திகை, பூரம் போன்ற அக்னி ரூப நாட்களில் கிரிவலம் வருவோர் நன்னிலைகளைப் பெறுவர். சந்ததிகள் இல்லாது வீட்டில் விளக்கேற்ற வழி இல்லையே என ஏங்குவோர் தக்க தீர்வுகளைப் பெறுவர்.

ஸ்ரீஅங்கவள நாயகி
திருநல்லம் கோனேரிராஜபுரம்

கிராமங்களில், புற நகர்ப் பகுதிகளில் மின் வசதி இல்லாமல் வாடும் ஏழைகளின் உபயோகத்திற்காக, ஐந்தாறு ஹரிக்கேன் விளக்குகளையேனும் மண்ணெண்ணெய், தீப்பெட்டி, திரியுடன் அடிக்கடித் தானமாக அளிப்பது சந்ததி விருத்திக்கு விசேஷமாக அருள்பாலிக்கும். இதனால் குடும்பங்களை வாட்டும் கரி தோஷங்களும் தீரும்.

அடுப்பு தோஷங்கள், கரி தோஷங்கள், பிணத்தீ தோஷங்கள் போன்ற பலவிதமான தோஷங்கள்தாம் பலருக்கும் பணக் கஷ்டங்களாக ஏற்படுகின்றன. இவர்கள் ஏழைகளின் வீட்டில் அடுப்பு எரிவதற்கான – அதாவது ஏழைக் குடும்பங்களில் உணவு தயாரிப்பதற்கான பொருட்களை – அடுப்பு, விறகு, அரிசி, மளிகை சாமான்கள், எண்ணெய் போன்றவற்றை ஒரு வாரம் முழுதும் ஒரு ஏழை குடும்பத்திற்கு வரும் வண்ணம் அளித்து, அருணாசலத்தில் தம் பிறந்த நட்சத்திர நாள், அனுஷ நட்சத்திர நாளில் கிரிவலம் வந்திட்டால், இறையருளால் பணக் கஷ்டங்கள் தீர வழி பிறக்கும்.

ஹரிக்கேன் விளக்குச் சித்தரின் மகாத்மியம்

ஹரிக்கேன் விளக்குச் சித்தர் தலையில், ராஜஸ்தானியர்கள் போல் பெருந் தலைப்பாகையைக் கட்டி இருப்பார். ஷீர்டி சாய்பாபா போல கபாலவடி அக்னிச் சித்தர் வகையைச் சார்ந்தவர் ஆதலின், இத்தகைய தெய்வத் தூதுவர்களின் கபாலத்தில் அதியற்புதப் பிரகாசம் எப்போதும் நிறைந்திருக்கும். இதனைச் சாதாரண மானுடக் கண்களால் தரிசிக்க இயலாது. முப்பத்து முக்கோடித் தேவர்கள் கூடத் தரிசிக்க இயலாத வகையில் கோடி சூரியப் பிரகாசம் நிறைந்திருக்கும் ஆதலின் இவற்றைப் பூவுலகிற்குத் தேவையான அளவில் தேஜோமயப் பிரகாசத்தை அளித்திட, சித்தர்பிரான் நீண்ட நெடுந் தலைப்பாகை அணிந்து இருப்பார். இதில் உள்ள ஒவ்வொரு வரியும் பல கோள்கள், நட்சத்திரங்களுக்கான அக்னிப் பிரகாச சக்கரங்களைக் கொண்டிருக்கும்.

இவர் நீண்ட அங்கிச் சட்டை அல்லது நீளமான வேட்டியை உடல் முழுதும் சுற்றி இருப்பார். ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு. இவர் தாங்கி இருக்கும் அஷ்டசடாட்சரக் கழி (குச்சி அல்லது கோல்) இன்றும் திருஅண்ணாமலை மலை உச்சியில், மேக அமைப்பிலும், தூல வடிவிலும் சில சமயங்களில் தோன்றுவதுண்டு. இக்காட்சி தோன்றும் நாட்களில் ஹரிக்கேன் விளக்குச் சித்தர் அண்ணாமலையாரைப் பூஜிக்கின்றார் என்பது பொருள்.

மாமந்திரமே அருமந்திரமாம்

ஹரிக்கேன் விளக்குச் சித்தர் சுட்டிக் காட்டி அருளிய சித்த வேத சூக்த மாமந்திரப் பரிபாஷைத் துதி ஒன்று உண்டு. மிக மிக சக்திவாய்ந்த மந்திரக் கீற்றுகள் நிறைந்தது. இதற்கான விளக்கங்கள் கோடி கோடியாம். ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு நேரத்தில், இதற்கான விதவிதமான ஆத்ம விசார விளக்கங்கள் கிட்டும். மனக் கவலைகள் மிகுந்திருக்கும்போது, இதனை ஓதி வர, தக்க மனத் தெளிவு கிட்டுவதைப் பலரும் அனுபவப் பூர்வமாகக் கண்டிடலாம். விளக்கேற்றும் போதும், மின் விளக்கு சுவிட்சைப் போடும் போதும் ஓத வேண்டிய அக்னி முகாந்த்ர மாமந்திரத் துதிகளுள் இதுவும் ஒன்று. இரவில் தனித்துச் செல்லும் போது ஓதி வர, ஹரிக்கேன் விளக்குச் சித்தர் உடன் வந்து காத்திடுவார். எதற்கும் பயப்படும் சுபாவத்துடன் இருக்கும் பிள்ளைகள் இதனை ஓதி வர பயம் அகலும். நல்ல தெய்வீகப் பூர்வமான மனோ தைரியம் உண்டாகும். சரியான பூஜைகள், ஆலய தரிசனங்கள் இல்லாது அயல் இடங்களில், வெளிநாடுகளில் தனித்து வாழ்வோர்க்கு இம்மாமந்திரம் அருமந்திரமாகும்.

அக்னிப் பிரகாச வழித் துதி

பரிந் தருணைப் பசிவேட்டான் பரிபரியா மருந்தீச
வரித்துணையின் வேழத்தான் வரம் பூண்டு வாகீச
தரித்த சிரப்பாகை தரியா கிரகப் பாகை
அரிக்கு ஏனக விளக்கமாம் – அருணை
அரன்சுவடே அரிச்சுவடி!

(அரிக்கு ஏனக விளக்கம் = அரிக்கேன் விளக்குச் சித்த மூலம்)

பகலிலும் இரவிலும் ஹரிக்கேன் விளக்குச் சித்தர் ஹரிக்கேன் விளக்கை ஒரு நீண்ட கோலில் தாங்கி வரக் காரணம் என்ன?

ஹரிக்கேன் விளக்குச் சித்தர் ஏந்திய நீண்ட கோலானது, எட்டுப் பட்டைகளைக் கொண்ட அஷ்டசடாட்சரப் பிரம்மக் கழியாம். ஆச்சா மரத்திலான சிவலோக பிரம்ம விருட்சக் கழி இது! இப்பூவுலகை எட்டுத் திக்குகளிலும் அஷ்ட திக்குப் பாலகர்களும், அஷ்ட நாகங்களும் தாங்கிக் காக்கின்றனர். பூலோக ஜீவன்களின் கர்ம வினைகள் பெருகுகையில், அதன் பாரம் தாங்க இயலாது அவர்கள் பூமாதேவியிடம் முறையிடுகின்றனர். பூமாதேவியாலும் எவ்வளவுதாம் பூபாரத்தைச் சுமக்க முடியும்?

எனவே பூமாதேவி, பிருத்வி லோகச் சித்தர்களிடம் பூபாரத்தைப் பற்றி எடுத்துரைக்கின்றாள். அஷ்டாவதி பூஷண யோக சக்திகள் மூலம் அக்னி லோகச் சித்தர்கள் பூலோக ஜீவன்களின் கர்ம வினைகளைக் கழிக்கவும், ஜீவன்களின் கர்ம வினை பாரத்தைக் கழிக்கவும், பித்ரு மூர்த்திகளுடன் சேர்ந்து அயராது பாடுபடுகின்றனர்.

ஹரிக்கேன் விளக்கு என்பது DNA, RNA எனும் அணுத் திரள் படம் போல, ஜீவமூலாம்ச சூக்கும வடிவைக் குறிப்பதாகும். இதனுள் உள்ள தீபமே ஆத்மஜோதி! ஹரிக்கேன் விளக்கைச் சுற்றி உள்ள குறுக்கு வளைக் கம்பிகள், ஜீவசக்திக்குத் தேவையான பொருட்களின் அணு அமைப்புகளைக் குறிக்கின்றன.

“உலகம் ஒரு உலக்கை” என்பது சித்தர்களின் வாக்கு. ஹரிக்கேன் விளக்கில் உள்ள உலக்கை வடிவக் கண்ணாடி, அனைத்து வகைக் கோளங்களையும், பூமியின் ஆதிமூலப் பூர்வாங்க வடிவையும் குறிப்பதாகும். எனவே பூபாரத்தைச் சுமக்கும் பூமா தேவி, அஷ்டதிக்கு பாலகர்களுக்குப் பெருந் தூணாய்ப் பெருந் துணை புரியும் பிருத்வி மற்றும் அக்னி லோகச் சித்தர்களின் துணையுடன் பூமியைத் தாங்கிப் பரிபாலனம் செய்து வருகின்றாள். பரிஸ்சரண அக்னி லோகச் தலைமைப் பீடமே ஹரிக்கேன் விளக்குச் சித்தர் ஆவார்.

ஹரிக்கேன் எனப்படும் சூறாவளிக் காற்றிலும் ஆடாது அசையாது விளக்கு ஒளி தருவதால், ஹரிக்கேன் விளக்கு எனப் பெயர் கொண்டதாக இதனைக் குறிப்பர். எனினும் ஆன்மப் பூர்வமான விளக்கம் யாதென அறிவோமா?

“க்கம” ஜோதி யோகம்

‘கம்’ எனும் பீஜாட்சரம் போல், ‘க்கம்’ எனும் அரிய பீஜாட்சரம் ஒன்றுண்டு. இது அக்னியில் பொதிவது. இது எப்போதும் ஏனம் எனப்படும் சிவப் பாத்திரத்தில் தாம் உறைந்திருக்கும். ஏனாதி நாயனார் இந்த ‘க்கம ஜோதி யோகத்தில்’ வல்லமை பெற்றவர். திருமாலும், பிரம்மரும் பரஞ்ஜோதியாம் ஆதிசிவனின் அடிமுடிகாண விழையும் புராணப் படலத்தில், ‘க்கம்’ எனும் அரிய பீஜாட்சரம் நிறைந்திருக்கும் “ஏனம்” எனும் சிவப் பாத்திரத்தின் துணையால் சிவஜோதியைக் கண்ட திருநாளே மகாசிவராத்திரி ஆகும்.

அயனும் மாலும் கண்ட மகாசிவராத்திரிப் பேரொளியில் கலந்திருக்கும் “க்கம்” எனும் பீஜாட்சர ஒளியை ஏனம் எனும் சிவப் பாத்திரத்தில் (அவதாரிகை) ஒளிரக் கண்ட ஜோதியையே, ஜீவன்களாகிய நாமும் பெறும் பொருட்டு ஏனமாகிய எண்ணெய்க் கொப்பறையில் கார்த்திகைத் தீபத்தை முப்பத்து முக்கோடி தேவர்களும் அருணாசல மலையுச்சியில் ஏற்றி அருளும் மகத்தான தீப உற்சவமாக அருணாசலத் திருக்கார்த்திகைத் தீபம் பொலிகின்றது. இதனை இவ்வகையில் ஜீவ சமுதாயத்திற்கு அளிக்கத் துணைபுரிபவர்களே ஹரிக்கேன் விளக்குச் சித்தர், ஏனாதி நாயனார், ஆங்கிரஸ மகரிஷி போன்ற மாமுனிகள், சித்தர்பிரான்கள் ஆவர்.

சிறப்பு வழிபாடுகள்

2004 ஆண்டுக்கான சிறப்பு வழிபாடுகள்

கடந்த இதழில் உரைத்துள்ளது போல, கலியுகத்தில், மனிதன், தெய்வச் சிந்தனையில் உறையாது, ஆறாம் பகுத்தறிவை இழந்து, இரண்டு, மூன்று அறிவுத் திறனுக்குள்ளேயே சிக்கி, தர்மம், சத்தியத்தைப் போற்றி வாழாத நிலை பெருகி வருகிறது. இதனால் மிருக இனத்திற்கு உரிய கூட்டுக் கர்மா நியதிகள், 2004ம் ஆண்டில் மனித சமுதாயத்திற்கும் நடைமுறைப்படுவது அதிகமாகிறது. அதாவது, கரையான்கள், புற்றீசல்கள் போல, மிருகங்களுக்கு உரிய கூட்டுக் கர்ம நியதி வகையான கூட்டு இறப்புகள் (Group Karma) மனிதர்களுக்குமாக, 2004ல் வந்து சேர்ந்து, உலக சமுதாயத்தில் பெருகும் விபத்து, வன்முறை, சூறாவளி போன்ற இயற்கைச் சேதங்கள் வகையிலான மனித இன அழிவு அதிகமாகும். இதற்கு ஓரளவு பரிகாரமாக, ஜாதி, மத, இன, குல வேறுபாடின்றி, கிரிவலம், பாதயாத்திரை, கூட்டு நாம சங்கீர்த்தனம், அகண்டகார (இடைவிடாத) நாம பஜன் போன்ற சத்சங்கக் கூட்டு வழிபாடுகள், அன்னதானம் போன்றவை சமுதாயத்தில் விருத்தியாக வேண்டும்.

ஸ்ரீநாகராஜ மூர்த்தி
திருகோளக்குடி

எண் கணிதமும் 2004ல் ஜோதிட வகையில் விசேஷ இடத்தைப் பெறுகின்றது. கலியுகத்தில் அனைத்து இடங்களிலும், எண்களே எங்கு பார்த்தாலும் நம் வாழ்க்கையில் பெரும்பான்மையாகப் பயன்படுவதால், சரியான முறையில் எண்களின் சக்திகளைப் பயன்படுத்தும் வழிமுறைகளைத் தக்க சற்குரு மூலமாக அறிந்தாக வேண்டும். வெறும் பெயர் மாற்றம் மட்டும் எண் சக்திகளைத் தந்துவிடாது. எண்களின் தெய்வீக மகத்துவத்தை அறிந்து செயல்பட வேண்டும்.

ஆண்டு எண் 2004ல், இடையில் இரு பூஜ்ய வாரவரத்துவம் சிறப்பிடம் ஏற்கின்றன. சந்திர (எண் 2), ராகு கிரக (எண் 4) சக்திகளும், பூஜ்யவரமால்ய அம்சங்களுடன் கூடுதலாகப் பரிபாலன மேன்மையைக் கொண்டுள்ளன. எண் 2004ல், இரண்டிற்கு அடுத்துள்ள பூஜ்யம் சந்திர ஆகர்ஷணத்தையும், நான்கிற்கு முன் உள்ள பூஜ்யம் ராகு ஆகர்ஷண சக்தியையும் பெற்று விளங்குவதால் சந்த்ரவாரி நாகத் தல வழிபாடுகள் முக்யத்துவம் பெறுகின்றன. அதாவது சந்திர ஒளிபடும் நாகேஸ்வர மூர்த்திகளின் வழிபாடு மிகவும் முக்கியமானது. (உ-ம் திருப்பத்தூர் அருகே கோளக்குடி நாகநாதர்)

எண் 2004ல் இந்த இரண்டு ஆகர்ஷண சக்திகளுக்கும் இடையில், அதாவது இரண்டு பூஜ்யங்களுக்கு இடையே, கிரக சந்தி (சாந்தி) ஏற்படுகின்றது. கிரக சந்திகள், கிரக சாந்தி சக்திகளைப் பெற்றுத் தந்திட, பல வழிபாட்டு முறைகள் உண்டு. அந்தந்த கிரகங்களின் தன்மைகளுக்கேற்ப இவை பல்வகைப்படும். இங்கு, சந்திரனால் ஆகர்ஷிக்கப்பட்ட பூஜ்யத்திற்கும், ராகு கிரகத்தால் ஆகர்ஷிக்கப்பட்ட பூஜ்யத்திற்கும் இடையே உள்ள சந்தி, பரங்கிரிச் சந்தி எனப்படும்.

கடந்த இதழில் அளித்துள்ளது போல, மதுரை கல்லுப்பட்டி அருகே உள்ள மேலைப் பரங்கிரி (பேரையூர்) மலையில் உள்ள ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர், பூஜ்ய சக்திகளைப் பிரபஞ்சத்திற்கு அருளும் பெரிய லிங்க வடிவினர். ‘பரத்தை மறைத்தது பார் முதல் பூதம்’ என்பது போல், பரமபதம் என்பதில் பரம் என்பது பரிபூரணமான இறைமையின் பூஜ்ய சக்திகளைக் குறிப்பதாகும். கிரி என்பது மலையாகும்.

வட்டமான பூஜ்யத்தில் மேல் பகுதியே பரங்கிரி, பூஜ்யத்தின் கீழ்ப் பகுதி அடிவாரம் ஆகும். இதை ஒட்டித்தான் திருஅண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்குப் பின்புறத்தில், மலைக்கு மறுபுறம் அடி அண்ணாமலை அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் கிட்டும் பல முக்கியமான அருணாசல தரிசனங்களில் முக்கியமானவை மல்லிகார்ஜுன தரிசனம், பூஜ்யஸ்ரீ தரிசனங்களாம், அனைத்துச் சுயம்பு மூர்த்திகளின் ஆதாரத் தலமாக அருணாசல மலை துலங்குவதால், மல்லிகார்ஜுன தரிசனத்தில் உற்பவிப்பவையே உலகெங்கும் உள்ள சுயம்பு மல்லிகார்ஜுன சுயம்பு லிங்க மூர்த்திகள் ஆவர். பகவத்பாதாள் ஸ்ரீஆதிசங்கரர் அருணாசல கிரிவலத்தில் அடி அண்ணாமலையில் கிட்டும் மல்லிகார்ஜுன தரிசனப் பகுதியை நோக்கி அமர்ந்து பெருந்தவம் புரிந்தார். பூரண பூஜ்யத்தில், பூஜ்யஸ்ரீ தரிசனத்தை இங்கு அவர் அடைந்ததுடன், இதன் பலனாய் பூர்ண சூக்த மந்திரங்களையும், சக்திகளையும் நமக்குப் பெற்றுத் தந்தார்.

“பூர்ணமத பூர்ணமிதம்
பூர்ணாத் பூர்ண முதச்யதே

பூர்ணஸ்ய பூர்ணமாதாய
பூர்ணமே வாவசிஷ்யதே”

என்பது பூர்ண சூக்த உபநிஷத் மகாமந்திரமாகும்.

“இனிப்புப் பூரணத்தில் எப்பகுதியைக் கிள்ளி எடுத்தாலும் அதன் இனிப்புத் தன்மை குறைவதில்லை! இதே போலவே அமிர்தமய இறைமை நிறைவுடன், எக்குறைவு இன்றிப் பிரபஞ்சமெங்கும் நிறைந்துள்ளது.”

எனவே 2004ம் ஆண்டில் பூஜ்யஸ்ரீ சக்திகள் நிறைந்த அடி அண்ணாமலை, மேலப்பரங்கிரி போன்ற தலங்களில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

திருஅண்ணாமலையில் 2004ம் ஆண்டில் 10, 20, 30 என்ற பூஜ்ய சக்தி நாட்களில் கிரிவலம் வந்து, அடி அண்ணாமலையில் பூஜ்யஸ்ரீ மலை தரிசனம், மல்லிகார்ஜூன மலை தரிசனம் கண்டு, மேற்கண்ட பூர்ண சூக்த மாமந்திரம் ஓதி, பூரண வகை இனிப்புப் பண்டங்களான கொழுக்கட்டை, சுய்யம், போளி போன்றவற்றைத் தானமாக அளித்து வருவோருக்கு, வாழ்வில் கல்வி, சொத்து, தொழிலில் தடைப்பட்டுள்ள நற்காரியங்கள் சித்தியாகும்.

பூஜ்யம் என்றால் ஒன்றும் இல்லாதது என்று பொருள் அல்லவா! பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துப் பூஜ்யங்கள், பூஜ்ய வடிவுடைப் பொருட்களை உருவாக்குவதற்கு ஸ்ரீசாகம்பரி தேவிக்கு அனுகிரகம் செய்த மூர்த்தியே (பேரையூர்) மேலப் பரங்கிரி ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்! வட்ட வடிவம் உடைய அனைத்துக் கோளமூர்த்திகளும் தினமும் வழிபடுகின்ற மூர்த்தி. ஜோதிடம், வான சாஸ்திரம், நியூமராலஜி, ஜாதகப் பொருத்தம் மற்றும் எண் சாஸ்திரம், சகுன சாஸ்திரங்களில் வல்லமை பெற வேண்டுவோர் திங்கள், பிரதோஷ நாள், மற்றும் 10, 20, 30 ஆகிய பூஜ்யத் தேதி நாட்களில் வழிபட்டு வர, தீர்க தரிசன சக்திகளைப் பெறத் துணை புரியும் பூஜ்ய சிவபதத் தலமே மேலைப் பரங்கிரி.

சமராதித்ய கிரணங்களை வர்ஷிக்கும்
ஸ்ரீமல்லிகார்ஜூனேஸ்வரர்
மேலப்பரங்கிரி

கம்ப்யூட்டர் என்பது  0வாகிய பூஜ்யத்தை மூலமாக வைத்துப் பணி ஆற்றுவதால், திருச்சி – திருஎறும்பீஸ்வரர் தலம் போல, கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்கள் வழிபட வேண்டிய உன்னதத் தலங்களில் மேலைப் பரங்கிரியும் ஒன்றாம்.

வருங்காலத்தில் மேலைப் பரங்கிரித் (பேரையூர்) திருத்தலம், பூஜ்யவாரித் திருத்தலமாக மகிமை பெற உள்ளது. பேரையூர் எனப் பல ஊர்கள் உண்டு. நன்கு கவனித்து அறியவும். புதுக்கோட்டை – குழிபிறை – பொன்னமராவதி மார்கத்தில் உள்ள மற்றொரு பேரையூர், நாக தோஷங்கள், கால சர்ப்ப தோஷங்களை நீக்கும் தலமாகும். நாம் இங்கு குறிப்பது மதுரை – கல்லுப்பட்டி அருகே உள்ள பேரையூர் எனும் மேலைப்பரங்கிரி ஆகும்.

பொதுவாக, ஆன்மீகத்தில், ஆண் அல்லது பெண், கருத்தடை அறுவை சிகிச்சை செய்வதைத் தார்மீக ரீதியாக ஏற்பதில்லை. எந்த இயற்கையையும் தடுக்க இனிமையான இறைமையானது எப்போதும் ஒப்புவது கிடையாது. இதற்குப் பரிகாரம் பெறுதலும் மிக மிகக் கடினமே. ஜீவ விந்துக்கள் “பூஜ்ய வடிவில் பூஜ்யத்தின் ஜீவ த்வனியில்” இருந்து தோன்றுவதால், அறிந்தோ, அறியாமலோ பிள்ளைப் பிறப்பைச் செயற்கையான முறையில் தடை செய்தவர்கள், இதற்குக் காரணமான மருத்துவர்கள், தக்க முறையில், மேற்கண்ட இரண்டு பேரையூர்த் தலங்களிலும், பஞ்சமித் திதியில் ஒரே நாளில் வழிபட்டு வாழை இலை நிறைய அன்னதானம் செய்து வருவதால், இதுவரையில் பிறப்புத் தடையால் பெருகி உள்ள மாமலை போலான கர்ம வினைகள் சந்ததிகளைத் தாக்காது ஓரளவு கழியவும்,  ஓரளவு பரிகார வழிகளும், அவரவர் பித்ருக்கள் அனுமதித்திடில் ஓரளவு காட்டப் பெறும். ஆனால் இது அவ்வளவு எளிதன்று. மேலும் செயற்கைக் கருச்சிதைவிற்குப் பரிகாரமே கிடையாது.

அரிய பலன்களைத் தரும் சந்தனக் குழம்பு அபிஷேகம்

ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரருக்கு மிகவும் ப்ரீதியான அபிஷேகமாக விளங்குவது சந்தனக் குழம்பு அபிஷேகமாகும். வில்வம், வன்னி, மகிழம்பூ, துத்தி போன்ற மூலிகைத் தளங்கள் ஊறிய இலைத் தீர்த்தம், கங்கை, யமுனை, காவேரி போன்ற புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டு, சந்தனத்தை அரைத்துக் குழம்பாக்கி அபிஷேகித்து, சுவாமியை வழிபட வேண்டிய ஸ்ரீவாஞ்சியம், தேரழுந்தூர், திருச்சி – குளித்தலை – அய்யர்மலை அருகே உள்ள சிவாயம், திருப்பத்தூர் அருகே திருக்கோளக்குடி போன்ற சந்தனாமிர்த சக்தித் தலங்கள் சில உண்டு. இத்தலங்களில் மூலவருக்கும், நவகிரகங்களுக்கும், சந்தனக் குழம்பு அபிஷேகத்துடன், சப்தமித் திதி நாட்களில் குறைந்தது ஆயிரம் பேருக்காவது, தம்பதிகள் தம் கைப்பட அன்னதானம் செய்து வழிபட்டு வர, குறைந்த சந்ததிகளுடன் நிறைவற்று இருக்கின்ற குடும்பப் பாரம்பரியம், நன்கு விருத்தியாகத் தடையாக இருக்கும் பித்ரு சாபங்கள், காலசர்ப்ப தோஷங்கள் தணியப் பரிகார வழிகள் கிட்டும்.

பொதுவாக வளையல், சதங்கை, சிலம்பு, திருவெண்டயம், ம்ருதுள மணி கங்கண், ஸ்திர கங்கண், தீனக் காப்பு, ருத்திராட்சம், மோதிரம், கடுக்கன், தோடு, மூக்குத்தி போன்ற வட்ட வடிவமான ஆன்மீகச் சாதனங்களை அணிந்து திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதல் விசேஷமானதாக, காரிய சித்திகளைத் தருவதாகத் துலங்குகின்றது.

(பெரிய) லட்டுத் தான மகிமை

பொதுவாக வட்ட வடிவமாக உள்ள பண்டங்கள், பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவை ஒவ்வொன்றும் லௌகீகமாகவும், ஆன்மீக ரீதியாகவும் அளப்பரிய பலாபலன்களை அளிக்கவல்லவை. இதில் லட்டு தானம் என்பது மிகச் சிறந்த நல்வரப் பலன்களைத் துரிதமாக அளிக்க வல்லதாகும். அனைத்து நவகிரகங்களுமே வட்ட வடிவைக் கொண்டு இருக்கின்றமையால், பூமியில், பரவெளியில் உள்ள வட்டமான நட்சத்திரங்களின், வட்ட கிரகங்களின், வட்டப் பொருட்களின் ஆகர்ஷண சக்திகளை ஈர்க்க வல்லவையாம்.

“கோளத்தின் கோளம்
கோலத்துள் கோலம்
கோழம்பக் கோழம்
கோளகோமல் கோபிதமாய்
கோமள லட்டூகமாய்க் கொழியுமே!”

-என்ற பரிபாஷைச் சூத்திரமானது ழ, ள, ல வின் அட்சர மேன்மைகளையும், லட்டுக் கோள வடிவிற்கும், பூஜ்யத்திற்கும் உள்ள ஆன்மீகப் பிணைப்பையும் குறிக்கின்றது. எனவே ழ, ள, ல ஆகிய மூன்று எழுத்துக்களும் இணைந்து வரும் சொல்லுக்கு அதிமகா சக்திகள் உண்டு. இந்த ழளல யோக சக்திப் பிரவாகத்தைத் திருப்புகழில் அருணகிரிநாதர் அற்புதமாகக் கையாண்டு உள்ளார்.

தாழமங்கை

ஜெயவர்த்திக சக்திகள்

“வழிவளாகக் கோயில், கள்ளழகலோகம், கோமள லட்டூகக் கொழியல்” என்பது  போல, தார்மீக அர்த்தங்களுடன், ஒரு தமிழ் வார்த்தையில் அல்லது சொற்றொடரில் ல, ழ, ள என்ற மூன்று எழுத்துக்களுமே அமைவது வ(வா)ர்த்திகம் ஆகும். இது மட்டுமல்லாது இந்த வ(வா)ர்த்திகத்தில் உள்ள மூன்று லழள வகை அட்சரங்களுமே, அர்த்தம் தருவதில் ஒரு வட்ட வடிவப் பொருளுடன் அர்த்தப் பிணைப்பைக் கொண்டிருந்தால், அது ஜெயவர்த்திகமாக மாறி, அப்பொருட்களின் தெய்வீகச் சிறப்பினை விருத்தி செய்கின்றன. இதுவே ழளல யோகம் எனப்படும்.

ஜெயவர்த்திக சக்தித் தலத்துள் ஒன்றாக விளங்குவதே தஞ்சாவூர் – பாபநாசம் இடையில் உள்ள தாழமங்கைத் தலமாகும். தமிழுக்கே உரித்தான ‘ழ’கர அட்சரம் பிறந்த தெய்வீகத் தமிழ்த் தலம். இங்கு சந்திர நட்சத்திர நாட்களில் (ரோஹிணி, ஹஸ்தம், திருவோணம்) சந்தனக் குழம்பு அபிஷேகத்துடன், பெரிய லட்டுகளைப் படைத்துத் தானமாக அளித்துப் பூஜித்து வர, கல்வியில் நல்ல வெற்றி கண்டும் தகுந்த வேலை கிடைக்காமை, நல்ல திறமை, அனுபவம் இருந்தும் கூடுதல் சம்பளம், பதவி உயர்வு, விருது கிட்டாமை, கோர்ட் வழக்கில் வெற்றி அடைந்தும் பலன் இல்லாமை போன்ற குறைபாடுகள் நீங்கும்.

பெயர் மாற்றலா? யோசியுங்கள்!

கோளம், கோலம், கோழம் ஆகிய மூன்று சொற்களுமே பூஜ்யத்துடன் நெருங்கிய ஆன்மீகத் தொடர்பு கொண்டவை. இம்மூன்று சக்திகளும் பூஜ்யத்தின் பல சிறப்பு அம்சங்களை நமக்கு ஈர்த்துத் தருகின்றன. எண்களை மதியாது, அவற்றைத் தவறாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் எண் வகையிலான தோஷங்கள் நம்மைப் பற்றாமல் இருக்க நாம், முதலில், பூஜ்ய சக்திகளை நன்றாக விருத்தி செய்து கொள்ள வேண்டும். இதற்கு வட்ட வடிவக் கோலங்களை, ஆலயங்களில், இல்லங்களில் இட்டு வழிபட வேண்டும்.

தேவை இல்லாமல், பெயர் மாற்றம் செய்யக் கூடாது. இதிலும் தெய்வ மூர்த்தியின் பெயரைக் கொண்டவர்கள், பெரியோர்கள் அளித்த நல்ல சக்தி வாய்ந்த இறைநாமப் பெயரைக் கொண்டவர்கள். தம் பெயரை மாற்றும் முன் மிக, மிகக் கவனமாக இருக்க வேண்டும். இதில் ஜோதிடர்களும், எண் கணிதக் கணிப்பினரும்., (numerologists) எண் தோஷங்கள், நாம தோஷங்களைப் பெற்றிடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கரணம் தவறினால், அட்சரண தோஷங்கள் சேரும்.

இயன்றவரை, பெயரில் உள்ள நாம அட்சரங்களை (spelling changes, the divine way) எண் சக்திகளுக்கு ஏற்ப அமைத்துக் கொண்டு, இறைநாமப் பெயர்களை மாற்றாது இருப்பதே சிறப்புடையது.

ல, ள, ழ இவை மூன்றும் கூடிய அட்சரங்களால் ஜீவன்களுக்கு நன்மைகளைப் பெற்றுத் தரவும். எண்களை அவமதிப்பதால் உண்டாகும் தோஷங்களால் மக்களுக்கு எந்தவிதமான கஷ்டமும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும், 2004ல் கோளம், கோலம், கோழம்ப சக்திகள் கூடிய, பூஜ்ய சக்திகள் நிறைந்த மேலைப்பரங்கிரி மலைத் தல வழிபாடு நிர்ணயிக்கப்படுகின்றது. குறிப்பாக பூஜ்யஸ்ரீ என்று அழைக்கப்படுவோர் இங்கு வழிபடுவதன் மூலம் உத்தம மகரிஷிகளின் ஆசிகளையும், உத்தம தெய்வீக நிலைகளையும் பெற்றிடலாம்.

மேலைப்பரங்கிரி மலையில் தற்போது முறையான நித்திய பூஜைகள் இல்லாமையால் நன்கு விசாரித்துச் செல்லவும். குறுகிய படிகளும் சரியாக இல்லாது, ஏறுவதற்குச் சிரமமான மலை! இங்கு பூஜைகள் நன்கு நடைபெற பக்தர்களும், ஜோதிடர்களும் தகுந்த இறைப் பணிகளை நிறைவு பெறச் செய்து, மனித சமுதாயத்திற்கு அருள்வளம் நிறைந்த ஆலயத்தைச் சமுதாய வழிபாட்டிற்கு அளித்திட அரும்பணி ஆற்றுதல் பெறுதற்கரிய பாக்யம்தானே!

பூசத் தீர்த்தம்

பூச நட்சத்திரப் புனிதங்கள்

திருக்கயிலாயத்தில் பூசத் தீர்த்தம் என்ற சக்தி வாய்ந்த புனித தீர்த்தம் ஒன்று உண்டு. இறைவனின் திருவடிகளைப் பக்திப் பூர்வமாகப் பூஜித்திடுகையில் உற்பவிக்கும் திருப்பாத அபிஷேகத் துளிகள், பிரபஞ்சத்தில் உள்ள ஆலய கோமுகத் தீர்த்தத் துளிகள், புண்ணியத் தீர்த்தங்களின் துளிகள் போன்றவற்றைக் கூட்டாகக் கொண்டு உற்பவிப்பதே திருக்கைலாயப் பூசத் தீர்த்தமாகும்.

இரண்டு கைலாயங்கள் உண்டு. ஔவையார் போன்ற உத்தம மகரிஷிகள் பக்திப் பூர்வமாக அடையும் அந்தர்முக (உள்ளொளிக்) பூசுரக் கைலாயம், ஆலயங்கள் போல் வெளிமுகப் பூஜைக்கான புவிக் கைலாயம் (தற்போது திபேத் – சைனா பகுதியில் உள்ளது.)

கைலாயப் பூசத் தீர்த்தக் கரையில்தாம் கார்த்திகைப் பெண்டிர்கள் உறைந்து, முருகப் பெருமானை ஆதி ஸ்கந்தப் பருவத்தில் போஷித்தார்கள். மேலும் தைப் பூசத் திருநாளில் முருகப் பெருமான் சர்வேஸ்வரனிடமிருந்து கைலாசப் பூசத் தீர்த்தக் கரையில்தாம் வஜ்ரவேலை ஆசியாகப் பெற்றிட்டார். திருமுருகன் கரத்திலிருக்கும் வஜ்ரவேல், யுகப் பூர்வமாக, அருளளிக்கும் பாவனையில் பல சிறப்புகளைக் கொண்டுள்ளன.

எனவே, முருகப் பெருமானை அளித்த பூசத் தீர்த்தத்திற்கு நன்றி அளிக்கும் முகமாகத்தான், பல கோடி யுகப் பூர்வமாக, தைப்பூசத் திருநாளிலும், மாதப் பூச நாளிலும், வேல் வழிபாட்டினைக் கைக்கொள்தல் மிகவும் விசேஷமாக நடைபெறுகின்றது.

குறிப்பாக, பெண் மருத்துவர்கள் தைப்பூசம், மாதப் பூசத் திருநாளில் தாம் இதுவரையில் மருத்துவத் துறையில் அறிந்தோ அறியாமலோ கருத்தடைக்குக் காரணமாகுதல், மருத்துவக் கருவி மூலம் கர்பப்பைப் சிசுவின் இனம் அறிதல் போன்ற மன்னிக்க முடியாத பாவங்களைச் செய்த வினைகளைக் கழிக்க வல்ல பெரும் பரிகாரங்களை, பித்ருக்கள் ஒப்பிடில் தக்க உத்தமர்கள் மூலமாகப் பெற்றுத் தரும்.

பொதுவாக, நம்முடைய ஜாதகக் கட்டம் என்பது வான சாஸ்திரத்தில் கோளங்களின் ஜீவ சக்தி அம்சாதி, பலாதி, அனுகிரகத் தன்மைகளைக் குறிப்பவை ஆகும். எனவே ஜாதகத்தைக் கணிக்கும் முன், கோள உருண்டையான பெரிய லட்டுகளைக் குறைந்தது 12 லட்டுகளைத் (108 விசேஷமானது) தானமாக அளித்த பின் தான் ஜாதகத்தைக் குறிக்க வேண்டும். பூச நட்சத்திர நாளில், லட்டுகளைத் தானம் செய்து ஜாதகம் பார்ப்பது, கணிப்பது நன்று, காரணம் லட்டில் உள்ள கடலைப் பருப்பு, கற்கண்டு, கிராம்பு, முந்திரிப் பருப்பு, திராட்சை, எண்ணெய், சர்க்கரை ஆகிய முக்கியமான ஏழுமே (ராகு, கேது கிரகங்கள் வருவதற்கு முன்னான) ஆதிமூல சப்த கிரகங்களைக் குறிக்கின்றன. ராகு, கேது பிற்பாடு சேர்க்கப்பட்டு நவகிரக வழிபாடாக ஆயிற்று. தற்போது யுரேனஸ், நெப்டியூன், புளூட்டோ ஆகியவையும் ஜீவ சக்திகளை அளிக்க வல்ல கிரகங்களாக ஏற்பட்டு, தற்போது பன்னிரண்டாக ஆகியுள்ளன.

எதிர்காலத்தில் ஜாதக சாஸ்திரத்தில் நிறைய கிரகங்கள் சேர்க்கப்படும். பித்ருத் தலைமுறைகளைக் குறிக்கும் 24 கிரக வழிபாடுகள் வருங்காலத்தில் தோன்றும். இவற்றின் அம்சங்கள்தாம் எதிர்கால ஜீவ வாழ்க்கையை நிர்ணயிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாந்தியும் ஒரு கிரஹமே!

இவற்றுள் மாந்தி என்பது, கேரளப் பகுதியில் மட்டுமே ஜாதகக் கிரகச் சின்னமாகக் கட்டத்தில் விளங்குகின்றது. சனீஸ்வரரின் புத்திரரான மாந்தியின் கிரக இருப்பு, பல ராகு, கேது அம்சங்களின்  திரிபுகளையும் ஒட்டியவாறு அமைகின்றன. மாந்தியின் முதற்பிரதானமான அம்சங்கள்தாம் 2004ம் ஆண்டு முதல் பூவுலகில் நடைமுறைக்கு நன்கு வருவதாகத் துலங்குகின்றன. பூச நட்சத்திர நாளில் சனீஸ்வரரை வழிபடுவது மாந்தி கிரஹ அனுகிரகத்தைப் பெற்றுத் தரும்.

2004-ஆம் ஆண்டு முழுவதுமாக ராகு, கேது ஆகிய இரண்டு கிரக சஞ்சாரங்களும் முக்கியத்துவம் பெறுகின்றன. சூரியனார் கோயில் முதல் கீழ்ப்பெரும்பள்ளம், திருநாகேஸ்வரம் வரையிலான ஒன்பது மட்டுமே நவகிரகத் தலங்களாகக் கொள்கின்றனர். இவை தவிர, நாம் அறியாத நவகிரகத் தலங்கள் பல உண்டு. காலப் போக்கில் தொன்மையான மேலும் பல நவகிரகத் தலங்கள் பலவும் நடைமுறை வழிபாட்டிற்கு வரும். மானாமதுரை ஸ்ரீசந்திரமௌளீஸ்வரர் ஆலயம் சந்திரத் தலமாகவும், திருப்பத்தூர் அருகில் உள்ள திருக்கோளக்குடி ராகு, கேது சமனகிரக வழிபாட்டுத் தலமாகவும் விளங்குகின்றன.

மருத்துவர்களுக்கான வாஸ்து  சாஸ்திர முறைகள்

இப்பிறவியில் மருத்துவராக அமைகின்ற பாக்கியமானது, பல பூர்வ ஜன்ம பூஜைகளால், புண்யவசத்தால், மருத்துவ சேவை நற்காரிய விளைவுகளால் கிட்டுவது ஆகும். ஸ்ரீமருந்தீஸ்வரர் (திருவான்மியூர், திருத்துறைப்பூண்டி, மருங்கப்பள்ளம்), ஸ்ரீஅருமருந்துநாயகி (திருக்கற்குடி), ஸ்ரீவைத்தியநாத சுவாமி (பூவிருந்தவல்லி, வைத்தீஸ்வரன் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர்), ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி (ஸ்ரீரங்கம், நெல்லுவாய்புரம்), ஸ்ரீகருடாழ்வார் போன்ற மருத்துவ சக்திநிறை தெய்வ மூர்த்திகளின் உபாசனைகளில் பல பிறவிகளில், சிறந்தவர்களும் வரும் பிறவிகளில் மருத்துவர்கள் ஆகின்றனர்.

திருந்துதேவன்குடி சிவாலயம்

சித்த மூலிகைகளைப் போஷித்தவர்களும் மருத்துவர்கள் ஆவது உண்டு. பிற ஜீவன்களுக்குச் சேவை செய்யும் மனப்பான்மையோடு தியாகமயச் செல்வர்களாக அறப்பணிகள் புரிந்து வாழ்ந்தோரும், மருத்துவர்கள் ஆகின்றனர்.

டாக்டராக வேண்டும் என்று ஏங்கித் தவிப்பவர்களுக்கு, அவர்களுடைய பித்ருக்களிடம் இருந்து தவபர ஔஷத சக்திகளைப் பெற்று, அவர்களுடைய சந்ததியினர் மருத்துவர்களாக ஆவதும் உண்டு. டாக்டராக வேண்டும் என்ற ஏக்கத்திலேயே இருந்தவர்கள், அவர்களுடைய பல ஜன்மப் புண்ய சக்திகளைத் திரட்டி அளிக்கப்படும் பிறவியில், மருத்துவராக ஆவதும் உண்டு. மேற்கண்ட இரண்டு வகையினர், மருத்துவராகிச் சாதாரணமாக வாழ்வர். ஏனைய விசேஷமான காரணங்களால் மருத்துவர் ஆனோர். மருத்துவச் சிறப்புத் துறைகளில் நற்பெயரும் புகழும் பெறுவர்.

பல பிறவிகளிலும் ஐந்து கோடி மக்களுக்கு மேல் இலவச மருத்துவ சேவை புரிந்தோர், நோபல் பரிசு மற்றும் பல அற்புத விருதுகளைப் பெறுகின்ற நிலைகளுக்கு உயர்கின்றனர். இத்தகைய பொதுப்படையான காரணங்களைத் தவிர, வேறு பல சிருஷ்டிக் காரணங்களும், ஜாதக ரீதியான சந்திர லக்னம், செவ்வாய் கிரகப் பார்வை, அஷ்டவர்க சனி கிரக அம்சங்களும் உண்டு.

ஔஷதாம்பர வாஸ்து சாஸ்திரம்

மருத்துவத் துறைக்கென மருத்துவமனை அமைப்பு, மருத்துவரின் வாழ்க்கை முறை, மருந்துகளின் இலக்கணங்கள் போன்றவற்றிற்கான ஔஷதாம்பர வாஸ்து சாஸ்திர முறைகள் உண்டு.

மருத்துவரின் மேஜை, பலகை, திரை போன்றவை அஷ்ட திக்கு ஔஷதாம்பர வாஸ்து சாஸ்திர அடிப்படையில் பயன்படுத்தப் பட வேண்டும்.

பொதுவாக, மருத்துவர்கள் இரும்பு நாற்காலி அல்லாது நல்ல மர நாற்காலியில்தான் அமர வேண்டும். மேஜை, ஜன்னல் முதல் பேனா வரை மர சம்பந்தப்பட்ட பொருட்களையே கூடிய மட்டில் பயன்படுத்த வேண்டும். பல நியதிகள், சூழ்நிலை காரணமாக இரும்பு furniture பயன்படுத்த நேரிட்டால், பொன் வண்ணம், வான நீலம், கிளிப் பச்சை வர்ணத்தை நன்கு பூசுதல் வேண்டும்.

மருத்துவர்களின் கால்கள் தரையில் படாது மரப் பலகையில் படுமாறு (wooden foot rest) மேஜையடியில் வைத்திருக்க வேண்டும். மருத்துவ அறையில் பாதணிகளுடன் எவரும் இருத்தல் கூடாது.

 அறையின் இரு புறங்களிலிருந்தும், இயன்றால் மேலே உச்சியிலிருந்தும், சூரிய வெளிச்சம் தரையில் பாயுமாறு அறை அமைப்பு இருக்க வேண்டும். பகல் நேரத்தில், அறையின் ஏதாவது ஒரு பகுதியிலாவது சூரிய வெளிச்சக் கதிர்கள் வட்டமாகத் தரையில் பிரகாசிப்பது நல்லது. இத்தகைய சூரிய வட்டங்களுக்கு சோம ஸ்தூபிகள் என்று பெயர். காலையிலோ, மாலையிலோ வானிலிருந்து வரும் இந்த சூரிய ஒளி வீச்சில், மருத்துவர்கள், தங்கள் உள்ளங்கை ரேகைகள், கைகளின் கணுக்கள், பாத ரேகைகள் அனைத்தையும் காட்டி, கீழ்க்கண்ட மந்திரங்களை ஓதி, சோம ஸ்தம்பத்தை வணங்கிட வேண்டும்.

ஓம் தத்புருஷாய வித்மஹே
அம்ருத கலச ஹஸ்தாய தீமஹி
தந்நோ அம்ருத தன்வந்த்ரீ மூர்த்தி ப்ரசோதயாத்

சோமன் என்றால் சந்திரன், ஆனால் அறையில் விழும் சூரியக் கற்றைகளுக்கு சோம ஸ்தம்பம் என்று எவ்வாறு பெயர் வந்தது? ஔஷத மூலிகா காரகராக விளங்கும் சந்திரனுடைய சோம மண்டலத்தில் உள்ள பல அற்புதமான மருத்துவ மூலிகைகள் சூரிய ஒளியை உண்டு வாழ்கின்றன. பொதுவாக, ஒவ்வொரு சூரிய ஒளிக் கதிரிலும், பல்வகை ஒளிச் சக்திகள் கூடியிருக்கும். மருத்துவ சம்பந்தமான அறைகளில் பாயும் ஒளிக் கதிர்கள், சோம ஸ்தம்ப ஒளிக் கதிர்கள் ஆகும்.

அதாவது சந்திர மூர்த்தி தம்முடைய சந்திர மண்டலத்தில் மூலிகைகள் வளர, சூரிய மண்டலத்திலிருந்து விசேஷமான இத்தகைய மூலிகைச் சார ஒளிகளைப் பெறுகின்றார். இவையாவும் சோம ஸ்தம்பனக் கதிர்கள் ஆகும்.

தற்காலத்தில் பல மாடிக் கட்டிடங்களில், சூரிய ஒளியை அறையில் தருவிப்பது இயலாது, இத்தகைய கட்டிடங்களில் மருத்துவர்கள் என் செய்வது? இவர்கள் மேற்கண்ட வகையில், தினமும் ஆலய வளாகங்களில்  விழும் சூரியனின் சோம ஸ்தம்பனக் கதிர்களைக் கைகளிலும், கால்களிலும் படுமாறு நின்று வணங்குதல் வேண்டும். இதற்காகவே ஒன்பது சாளரங்களின் வழியே சூரிய ஒளி விழும் ஸ்தலங்களில் மருத்துவர்கள் வழிபட வேண்டும். அல்லது மருத்துவ சக்திகள் நிறைந்த அரசு, ஆல், வேம்பு, வன்னி, வில்வம் ஆகிய மரங்களின் இலைகளின் ஊடே வெளிப்படும் சூரிய ஒளிக் கற்றைகளைக் கைரேகைகளில் தாங்கி வழிபட வேண்டும்.

கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்

பூராட நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம்

உயரமான கட்டிடங்களைக் கட்டும் கட்டிடத் துறையினர், (flat promoters, Construction Companies) சிவில் என்ஜினீயர்கள் வழிபட வேண்டிய ஆகாச வாஸ்து வழிபாட்டுத் தலம்!

திருவையாறு அருகில் கடுவெளி கிராமச் சிவத்தலம் உள்ளது. பலரும் அறியாத மிகவும் சக்தி வாய்ந்த தலம். ஒரு வேளை பூஜைக்குக் கூட வசதியற்ற ஆலயம். பூஜிப்பவர் திருவையாற்றில் இருப்பதால் கோயில் திறப்பு நேரத்தை நன்கு விசாரித்துச் செல்லவும்.)

ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்
கடுவெளி

பரவெளி எல்லையைத் தொடும் கடுவெளி!

கடுவெளிச் சித்தர் மகத்தான ஜோதிகாரகச்  சித்புருஷர்களுள் ஒருவராவார். பரவெளியில் பல தேவாதி தேவ மண்டலங்கள் உண்டு. பரவெளியின் எல்லை மண்டலமாம் கடுவெளியில் தவம் புரிய வல்லவரே கடுவெளிச் சித்தர்.

இவை அனைத்திற்குமான தெய்வீக விடைகளை, அனுபூதிகளாக, நிதர்சனங்களாகப் பரிபூரணமாக உய்த்து அறிந்தவரே கடுவெளிச் சித்தராவார். கண் இமைக்கும் பொழுதில், கடுகி விரைந்து, எந்தப் பரவெளி மண்டலத்திற்கும் சென்று வர வல்லவர். அஷ்டமா சித்திகளைச் சித்தர்களுக்கு உணர்விக்கும் உத்தம யோகத் தலைமை பீடச் சித்தர்.

பிரஞ்சத்தில் பரவெளியின் எல்லை அம்சபாவனையே கடுவெளி எனப்படுவதாகும்.

“கடுவெளியைக் கண்டு,
கடுவெளியை விண்டு,
கடுவெளிச்சம் கண்டவன்!”
(கடுவெளிச்சம் = எல்லையில்லாப் பரஞ்ஜோதி)

கடுவெளி

- என்பது அகஸ்தியர் பிரான் கடுவெளிச் சித்தரைப் பற்றி உரைப்பதாகும். இவருடைய விசேஷமான மகத்துவம் யாதெனில், நாம் நம் பூமியில் மட்டுமே இருப்பதாக எண்ணுகின்ற அருணாசல மலையை, அனைத்துக் கோடி மண்டலங்களிலும், கடுவெளியிலும் கூடத் தரிசிக்கும் பாக்யம் பெற்றவர். ஆம், அனைத்துக் கோள்களிலும் அருணாசல தரிசனம் காணுதற்கு உண்டு. எனினும், பூமியில் அருணாசலத்தைத் தரிசிப்பதன் மகத்துவமே புனிதமான தனித்தன்மை கொண்டதாகும். எனவே புவியில் மானுட வடிவில் கிரிவலம் வருவதையே, அனைத்துத் தெய்வ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும் விரும்புகின்றனர். சர்வேஸ்வரனே ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கும், ஸ்ரீபிரம்மருக்கும் ஜோதியாகக் காட்சி தந்த அருணாசலத் தலமல்லவா!

கடுவெளிச் சித்தர் காருண்யச் சித்தரே!

கடுவெளிச் சித்தர் தவம் புரிந்த தலங்களுள் மிகவும் முக்கியமானது தேவாரத் தலமான இரும்பையும், திருவையாறு அருகிலுள்ள கடுவெளி கிராமச் சிவத்தலமும் ஆகும். கடுவெளிச் சித்தர் தம்மை மறந்த நிலையில் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தது, அவர் நிஷ்டை சாந்தமானது பற்றிச் சில புராண வரலாறுகள் உண்டு. அவர் சாபமிட்டதாகவும், சிலர் அறியாமையால் தவறாகச் சொல்வர். இவற்றின் பின்னணியில் உள்ள தெய்வீக மகத்துவங்களை உணர்ந்து கொண்டால், அவர் சாபம் இட்டதாக எண்ணுவது எவ்வளவு தவறானது என்பது புரிய வரும்.

ஓரிடத்தில் பல யுகங்களாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிஷ்டை பூண்டிருக்கும் சித்தரை, மற்றொரு இடத்திற்கு அனுப்பிட இறைப் பரம்பொருளே விழைகையில் பல இறை லீலைகள் ஏற்படும் அல்லவா! இவற்றைக் கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர். எனவே கடுவெளிச் சித்தர் அத்தலத்தைச் சபித்துச் சென்றார் என்று எண்ணலாகாது!

ஈ, எறும்பு உட்பட அனைத்து ஜீவன்களுக்கும் முக்திவழி காட்டக் கருணை புரிந்து அருள்வழி காட்டும் சித்தர்களா, ஊரைச் சபிப்பார்கள்? அதுவும் தாம் பல்லாயிரம் ஆண்டுகள் தவமிருக்க உதவிய புண்ணிய பூமியையா, சித்தர்கள் சபிப்பர்?

ஸ்ரீகடுவெளி சித்தர்
கடுவெளி

உண்மையில், கடுவெளிச் சித்தர் தாம் தவம் புரிந்த தலங்களுக்கே மீண்டும் வந்து, பல அனுகிரகங்களைப் பொழிந்துள்ளார். எனவே கடுவெளிச் சித்தர் சபித்ததாக எண்ணாது, புராண வரலாறுகளைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து உணர்ந்து, சத்தியமான இத்தகைய விளக்கங்களை அறிந்து தெளிவு பெறவும்.

பூ ஜோதி, ராடன ஜோதி சக்திகள் பூரிக்கும் பூராட நட்சத்திரம்

பூ எனும் புவன யோக சக்தியும், ராடனம் எனும் பூசுர தியான சக்தியும் இணையும் நட்சத்திர ஜோதித் தலமே பூராடன ஜோதியாக இங்கு புரசை இலையில் கடுவெளிச் சித்தர் மூலமாக வெளிப்பட்டது. இவை இரண்டும் திவ்யமான சிவஜோதிகள். கடுவெளிப் பரவெளியைத் தரிசனம் கண்டவர்களால் தான் இவ்விரண்டையும், பூமிக்குக் கொண்டு வர இயலும். இந்தப் பூராடன ஜோதியின் ஒரு வகையே, பூராட நட்சத்திர ஜோதியாயிற்று.

பூராட ஜோதியைப் படைத்த சிவமூர்த்தி. கடுவெளிப் பரவெளியில் இருந்துதாம் இதன் ஜோதியை, புரசு விருட்ச இலைகள் மூலம் பூவுலகிற்கு அளித்திட்டார். சாகம்பரி தேவி, புரசை மரத்தைப் பூவுலகிற்கு அளித்த திருத்தலமுமே கடுவெளி ஆகும். கடுவெளி என்பது பூராடன ஆகாசம். அதாவது, பூராடன ஜோதி எங்கு துலங்குகின்றதோ, அந்த எல்லையில் கடுவெளிச் சித்தர், தம் தூய உடலில் தவம் புரிந்த இடமே கடுவெளி ஆகாசம். அங்கு தாம் சுயம்புவாய்க் கண்ட ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை இங்கும் கண்டமையால், இதனையும் கடுவெளியாய்ப் பரவெளியாய்க் கண்டு இங்கும் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் பூண்டார்.

பஞ்சபூதத் தலங்கள் தவிர பரிவாரப் பஞ்சயோக பூதத் தலங்களும் பண்டைய காலத்தில் உண்டு. சப்த ஸ்தானங்கள் என ஏழு தல சிவ உற்சவங்கள் சில தலங்களில் நடப்பது போல, பஞ்சயோக பூதப் பரிவாரத் தலங்கள் உண்டு. இதில் கடுவெளி ஆகாசத் தலமாக அமைகிறது. வாயு மூர்த்தியும், கருட மூர்த்தியும் தினமும் வழிபடும் தலம்.

ஸ்ரீமங்களாம்பிகை
கடுவெளி

ஆகாச வாஸ்து  பூஜைத் தலம்

பழங்காலத்தில், ஆலயங்களில் பெரிய ராஜ கோபுரங்களை நிர்மாணிக்கும் முன், இங்கு தான் வாஸ்து பூஜைகளை, மண், செங்கல் பூஜைகளை நிகழ்த்தி, இங்கு பெற்ற மண், கல் கொண்டு ராஜ கோபுரத்தைத் தொடங்குவர்.

வருடத்தில் எட்டு வாஸ்து நாட்கள், சப்தமித் திதி, திங்கள், செவ்வாய், ரோகிணி, பூசம், பூராடம் ஆகிய நாட்கள் ஆகாச வாஸ்து பூஜைக்கு ஏற்றவை. புதிதாக வீடு கட்டுபவர்கள் கட்டிடம் ஸ்திரமாக ஆகாசத்தில் நிலைத்து நிற்க, கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை மேற்கண்ட நாட்களில் பூஜித்து வர வேண்டும். மூலவரின் கர்ப கிருகவாசற்படி மற்றும் தலைக்கு மேல் உள்ள படிக்கு புனுகு, ஜவ்வாது கூடிய மஞ்சளால் மெழுகி, பூஜித்து, ஆகாச வாஸ்து பூஜையை ஆற்றுதல் விசேஷமானது.

வாஸ்து பூஜை முறைகள்

பூராட நட்சத்திரம் தோறும் வாஸ்து மூர்த்தி ஆகாச வாசம் கொள்கின்றார். பூலோகத்தில் உள்ள நிலம், கட்டிடங்களுக்கு மட்டும்தான் வாஸ்து சாஸ்திரங்கள் பொருந்தும் என எண்ணாதீர்கள். தேவலோகங்கள், நட்சத்திர மண்டலங்கள் அனைத்திற்கும் வாஸ்து சாஸ்திரம் உண்டு. மேலும் ஆகாசப் பரவெளியில் அனைத்து மண்டலங்களுக்கும் தேவதைகள், தேவதா மூர்த்திகளுக்கான வாச ஸ்தலங்கள் உண்டு. எனவே பரவெளி தேவதா மூர்த்திகள் யாவரும் ஆகாச வாஸ்து பூஜையை நிகழ்த்தும் சூக்குமத் தலமே கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரத் தலமாகும்.

சப்தமித் திதிகளில் இங்கு வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். திங்கட்கிழமை, செவ்வாய் ஹோரையில் ஆகாச வாஸ்து நேரம் அமைவதால் திங்கள் தோறும் ஆகாச வாஸ்து சக்திகளை வேண்டி இங்கு வழிபடுதல் சிறப்பானதாகும்.

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் இருப்பவர்கள், கட்டிடம் கட்டுபவர்கள், உயரமான பிளாட்டுகளில் குடி இருப்பவர்கள், உயரமான கட்டிடங்களில் பணிபுரிபவர்கள், அயல் நாட்டில் வாழ்பவர்கள், விமானத்துறை, விமானப் படையில் பணிபுரிவோர், அடிக்கடி விமானப் பயணம் செய்பவர்கள், சொந்தமாக ஃப்ளாட் வாங்க வேண்டும் என்று விரும்புபவர்கள், தென்னை, பனை மற்றும் பழ மரத் தோட்டம் வைத்திருப்பவர்கள், வாயு சம்பந்தமான ரசாயனத் துறையில் இருப்பவர்கள், கெமிக்கல் எஞ்சினீயரிங், ரசாயனப் படிப்பு, துறைகளில் (கெமிஸ்ட்ரி) இருப்பவர்கள்,

தாய்தானே குறைகளைக்
கேட்பாள் ?! கடுவெளி

- மேற்கண்ட யாவரும் ஸ்ரீஆகாசபுரீஸ்வரரை அடிக்கடி வழிபட்டு வரவேண்டும். ஸ்ரீஆகாபுரீஸ்வரருக்கு ப்ரீதியான வழிபாடுகள் பல உண்டு. ஸ்ரீவாஸ்து மூர்த்தி, யோகப் பூர்வமாக வழிபடுகின்ற மூர்த்திகளுள் ஒருவரே கடுவெளி ஸ்ரீஆகாசபுரீஸ்வரர்.

பூஜை முறைகள்

1. ஜவ்வாது, அத்தர், புனுகு, வாசனை திரவியங்கள் கலந்த அடர்த்தியான நறுமண சாம்பிராணி தூபமிட்டு வழிபடுதல் விசேஷமானது. குறைந்தது மூன்று மணி நேரம் சாம்பிராணி தூபமிடுவதால் வீடு சம்பந்தமான தோஷங்கள், பிரச்னைகளுக்கு தீர்வு கிட்டும்.

2. சந்தனம், அத்தர், புனுகு, ஜவ்வாது போன்ற வாசமுள்ள திரவியங்களாலான காப்பு, அபிஷேக ஆராதனைகள்.

3. நல்ல வாசனையுள்ள புஷ்பங்களை, லிங்கம் முழுவதுமாகச் சார்த்தி அன்னாபிஷேகம் போல புஷ்பக் காப்பிட்டு  வழிபடுதல்.

4. முந்திரி, திராட்சை நிறையச் சேர்ந்த கேசரியால் (ஸ்வீட்) லிங்கத்திற்கு முழுவதுமாக காப்பிடுதல்

5. நல்ல வாசனை உள்ள ஊதுபத்திகளை நிறைய ஏற்றுதல்

6. நல்ல வாசனையுள்ள சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், கேசரி நைவேத்யம், அன்னதானம்

- ஆகியவை வாஸ்து மூர்த்தியின் அனுகிரகங்களை, ஆகாசபுரீஸ்வரரின் அருளாகப் பெற்றுத் தரும்.

கடுவெளிச் சித்தர் ஊர் மணக்க யோகம் புரிந்தார். எனவே இங்கு நிகழும் வழிபாடுகள் மணமுள்ளதாக ஊரின் கடுவெளிப் பரவெளி முழுதும் பரவுதல் விசேஷமானது.

பைரவரும் பெருமாளும் இணைந்த
கோலம் கடுவெளி

மானச பூஜைத் தலம்

பஞ்ச பாண்டவர்கள் எங்கு சென்றாலும் ராதனப் புஷ்பவனம் எனும் வகையில் பூஞ்சோலைகளை அமைப்பார்கள். இப்பூஞ்சோலை அமைப்புத் துறையில் வல்லவன் ராதேயன் எனும் கர்ணன். ராதன நந்தவனத்தில் விளையும் பூத்தாவரங்கள் பலவும் அர்ச்சுனன், பீமனால் தேவலோகம், நாகலோகத்திலிருந்து கொண்டு வரப் பெற்றன.

மானசீக பூஜையில் வல்லவன் பீமன், பீமனை வெறும் சாப்பாட்டு ராமன் என அர்ஜுனன் எண்ணிய போது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா புஷ்ப லோகத்தில், ஒரு லிங்கத்தின் மேல் எப்போதும் புஷ்பங்கள் பொழிந்து கொண்டே இருந்த காட்சியைக் காண்பித்தார். இதைக் கண்டு அர்ஜுனன் வியந்திட, அங்கு இருந்த தேவதா மூர்த்திகள், “இங்கு எப்போதும் பொழியும் பூக்கள் யாவும் பீமன் மானசீக பூஜையில் சிவலிங்கத்தைப் பூஜிக்கின்ற மலர்ப் பொழிவுகள்!” என்றனர். ஸ்ரீகிருஷ்ணரும், “அர்ஜுனா!, உறக்கத்திலும் கூட பீமன் மானசீக பூஜை செய்யும் உத்தம சக்திகளைக் கொண்டவன்!” என்று உரைத்த போது மனம் நெகிழ்ந்தான் விஜயன்.

பீமன் பூஜித்த இத்தகைய மானசப் புஷ்ப லிங்க மூர்த்திகளுள் ஒருவராக ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் விளங்குகின்றார். பீமன் தலைமையில் பஞ்ச பாண்டவர்கள் பூஜித்தத் தலமிது. இந்திர லோகம் செல்லும் முன்னர், அர்ச்சுனன் இங்கு வழிபட்டு ஆகாச மார்க்கமாகச் சென்றான். ஆஞ்சநேயப் பிரபு கால் படாமல் ஆகாசத்தில் மிதந்து, இங்கு ஆகாசபுரீஸ்வரரைப் பூஜித்து மகிழ்ந்தார். காரணம், பூமியில் கால் படா வண்ணம் பூஜிக்கும் யோகக் கலைக்குப் புஷ்ப காந்த யோக பூஜை என்று பெயர். பூமியின் காந்த ஈர்ப்பிற்கு எதிராக நின்று வாயு யோகம் பயின்றவாறே பூஜிப்பது மிகவும் கடினமானதாகும். ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த காந்தயோக பூஜை! பீதாம்பர யோகக் கலைகளுள் ஒன்றாக இது விளங்குகின்றது.

ஸ்ரீதுர்கை தேவி
கடுவெளி

பூராட நட்சத்திர வழிபாட்டுத் தலம்

பூராட நட்சத்திரம் பல அர்த்தமுள்ள அட்சர சக்திகளைக் கொண்டுள்ளது. ஆட்டு என்றால், உற்சவம், திருவிழா என்று பொருள், தேரோட்டம், உறியடி போன்றவை ஆட்டு வகை, அசையும் பாங்கில் உள்ள ஆட்டு உற்சவங்களாகும். ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், பாட்டுவித்தால் பாடுகின்றேன், என்ற பதிகத்தைப் பாடிய ஞானியான காரைக்கால் அம்மையார், மானுட வடிவை உகுத்துத் தம் வாழ்வில், எப்போதும் “அசையும்” தன்மைகளையே (ஆன்மச் சுடர்வடிவு) கொண்டு, புவியில் உலாவி, அரநாமம் ஓதிப் பொலிந்தார். பலரும் காரைக்கால் அம்மையார் ஆவி வடிவம் கொண்டதாகத் தவறாகச் சொல்வர். உண்மை அதுவல்ல! இறைவனிடமே வேண்டி அழகிய பெண் வடிவத்திற்கு பதிலாக “வராபர வடிவம்” கொண்டார்.

பூராடம் என்றால் “தன்மையான தகைமை என்றும் அசலமற்ற அசையும் பாங்கு” என்றும்  பொருள். அசைவற்று இருக்கும் யோக, தியான சக்திகள் மகத்தானவை எனினும், எப்போதும் அசைந்து கொண்டிருக்கும் வஸ்துக்களுக்குப் புனிதமான காரண சக்திகள் நிறைந்து பொலிந்திருக்கும், உதாரணமாக ஆற்று நீர், தாவர இலைகள், சூரிய, சந்த்ராதி அனைத்து கிரகங்கள், நட்சத்ராதி ஜோதிக் கிரணங்கள் போன்றவை எப்போதும் ஆக்கப் பூர்வமாக, அசைந்து கொண்டிருப்பவை. ஆகாச அசைபடுப் பொருளான காற்றுதானே நம் பிராண சக்தியாய் நமக்கு ஜீவகளை தருகின்றது. இவ்வகையில் பூராட நட்சத்திரமும் எப்போதும் ஜோதிப் பூர்வமாக அசைந்து கொண்டிருப்பதாகும். பூராடம் நூலாடும் என்பது பூராட நட்சத்திரம் சலன சக்திகளைக் கொண்டிருப்பதால், இதனைப் பிணைத்திருக்கும் கும்ப கலச நார்ச் சுடர்கள் அசைந்து கொண்டிருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் வழக்கில் இது தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது. இனியேனும் உண்மையை அறிந்து திருத்திக் கொள்ளவும்.

ஸ்ரீகன்னிமூலை கணபதி
கடுவெளி

பூராட நட்சத்திரத்தில் பிறந்தோர் வழிபட வேண்டிய தலமே திருவையாறு அருகில் உள்ள கடுவெளி கிராமத்தில் உள்ள ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் ஆலயமாகும். எனவே பூராட நட்சத்திரத்தில் பிறந்தோர் இங்கு, கடுவெளியில் தம் வாழ்நாளில் அடிக்கடி வழிபட்டு வருதல் வேண்டும்.

பொதுவாக பூராட நட்சத்திரத்தில் புஷ்பாலங்காரம், பூச்சொரியல், புஷ்பார்ச்சனைகளை நிகழ்த்துதல் மிகவும் சிறப்புடையது. பூராட நட்சத்திரக்காரர்கள், பொதுவாக, ஆலயங்களில், புஷ்ப அலங்கார பூஜைகளை குறிப்பாக இங்கு நடத்துவது நன்மை பயக்கும். இவர்களுக்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலங்களுள் இதுவும் ஒன்றாம்.

“பூராட நட்சத்திரம் ஆயிற்றே!” – என்று மனம் வருந்தி வாழ்வோர், இங்கு வந்து ஸ்ரீஆகாசபுரீஸ்வரரைச் சரணடைந்து பூஜித்து வர, நன்முறையில் திருமணம் நடைபெற அனுகிரகம் சித்திக்கும்.

பிப்ரவரி 2004 பௌர்ணமி நாள் : 5.2.2004 வியாழக்கிழமை மதியம் 1.43 மணி முதல் 6.2.2004 வெள்ளிக்கிழமை மதியம் 2.17 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமி திதி அமைகிறது. கிரிவல நாள்: 5.2.2004 வியாழக் கிழமை இரவு

18.2.2004 புதன் கிழமை மாலை 6.44 மணி முதல் 19.2.2004 வியாழக்கிழமை மாலை 4.35மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மாசி மாத மஹா சிவராத்திரி திதி அமைகின்றது. மஹா சிவராத்திரி கிரிவல நாள் :18.2.2004 புதன்கிழமை இரவு.

அமுத தாரைகள்

பூலோகத்தின் அனைத்துச் சுயம்பு மூர்த்திகளும், தேவ பிரதிஷ்டா லிங்க மூர்த்திகளும், இப்பூவுலகின் ஆன்மீக மையமாம் திருஅண்ணாமலையில் இருந்து உற்பவிப்பவையே! எனவே அனைத்து லிங்க மூர்த்திகளின் தெய்வீக வடிவுகளையும், அருணாசலத்தின் எண்ணற்ற மலை முகடுத் தரிசனங்களாகக் கண்டிடலாம். அதாவது, அருணாசல மலையில் இல்லாத லிங்க வடிவை வேறெங்கும், நம் பூமி மட்டும் அல்லாது பிரபஞ்சத்திலேயே காண இயலாது என்பதே உண்மை!

மானுடக் கண்களுக்குத் தெரியாத வகையில், அருணாசலக் கிரிவலச் சுற்று வளாகத்தில், பூமியிலும், காற்று மற்றும் பரவெளி மண்டலங்களிலும், அடிக்கொரு லிங்கம், அடித்துகள் பட்ட இடமெல்லாம் கோடி கோடி லிங்கங்களாகப் பொலிகின்ற அருணாசலப் புனிதமலையை, ஒரு முறை கிரிவலம் வந்து, பல தரிசனங்களையும் முறையாக, பக்திப் பெருக்குடன் பெற்று வந்தால், பல்லாயிரக்கணக்கான ஆலய லிங்க மூர்த்திகளைத் தரிசித்த, பலாபலன்களை அதியற்புதமான முறையில் நம் வாழ்வில் அடைந்திடலாம். இதனால்தாம் எத்துணை முறை அருணாசலத்தைக் கிரிவலம் வந்தாலும் திகட்டுவதில்லை!

பரியா மருதுபட்டியில், ஸ்ரீகிருஷ்ணர் வில் ஊன்றிய போது தோன்றிய “சர்வானந்தத் தீர்த்தம்” எனும் புனிதத் தீர்த்தம் ஆலயத்தில் இருந்து ஒரு பர்லாங்கு தொலைவில் உள்ளது. ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரங்கள் பட்ட தீர்த்தமாதலின், கலியுகத்தில் பெறுதற்கரிய தீர்த்தமாகின்றது. கண்களில் ஒற்றிக் கொள்ள வேண்டிய தீர்த்தம். ஸ்ரீகிருஷ்ணர் சிவனைப் பூஜித்த அபூர்வமான தலங்களில் இதுவும் ஒன்றாகும். கண்ணையம்பதி, திருக்கண்ணபுரம், கண்ணை நகரம் போன்ற பண்டையப் பெயர்களுடன் துலங்கிய தலம்.

இயன்ற வரை, திருமணம், உத்தராயணப் புண்ணிய காலத்தில் நிகழ்வதே சிறப்புடையது. உபநயனம் எனப்படும் பூணூல் அணியும் சுபநிகழ்ச்சி மிகவும் கண்டிப்பாக உத்தராயணத்தில் மட்டுமே நிகழ்த்தப்பட வேண்டும். தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் நடைபெறும் திருமணத்தில், பல விசேஷமான விரதங்கள் மற்றும் கூடுதல் வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும்.

தட்சிணாயனத்தில் ஒரு போதும் பூணூல் கல்யாணத்தை நடத்துதல் கூடாது. இவ்வாறு நடத்திடில் இதற்குப் பிராயசித்தமும் கிடையாது. உத்தராயணத்திலும் மாசி மாதத்தில் பூணூல் போடுவது மிக மிக விசேஷமானதாகும். பொதுவாக, ஆலயங்களில், குறைந்தது ஒரு மண்டலமேனும் (48 நாட்கள்) இறைவனுக்கு, ஆறு வேளைகளில், அல்லது ஆலய நித்ய பூஜைக் காலங்களில், புதுப் பூணூலும், புதுத் தறி வஸ்திரமும் தினமும் சார்த்தி வழிபடும் நேர்த்தியை ஏற்று நடத்தி வருவோருக்கு, சொத்துப் பரிமாற்றங்கள், வராத பணக் கடன் போன்றவற்றில் உள்ள தடங்கல்கள், இன்னல்கள் தீரும்.

ஜோதிடர்கள் அனைவரும் வழிபட வேண்டிய திவ்ய மூர்த்தியே (பேரையூர்) மேலைப்பரங்கிரி ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர். சப்போட்டா, சாத்துக்குடி, மாதுளை போன்ற வட்ட (பூஜ்ய) வடிவப் பழங்களின் சாற்றால் அபிஷேகம் செய்து வழிபட்டு, அபிஷேக நீரைக் கோமுகத் தீர்த்தப் பிரசாதமாகப் பெற்றுத் தினமும் அருந்தி வருவதால் ஜோதிடக் கணித அறிவு விருத்தி ஆகும். சித்தர்கள் பூஜ்யத்தைப் பற்றி அளிக்கின்ற விளக்கங்கள் வேறு. ஆனால் கணித விஞ்ஞானம் தற்போது அவற்றை ஏற்காது. எனினும் வருங்காலத்தில் பூஜ்யத்தின் தெய்வீக மதிப்புப் பற்றி அறிந்து, தற்போதையப் பூஜ்யக் கணித விளக்கங்களை மாற்றி அமைத்துப் புதுக் கணித விளக்கங்கள் எழும். அப்போதுதான் பூஜ்யத்தின் உண்மையான ஆன்ம சக்தியை மனித சமுதாயம் உணரும் நன்னிலை உண்டாக இருப்பதாகச் சித்தர்கள் குறிக்கின்றனர். இதற்குள் மேலைப்பரங்கிரித் (பேரையூர்) திருத்தலம் நன்கு பிரசித்தி பெற்று விடும்.

பெயர் மாற்றம் கொண்டவர்கள், மேலைப் பரங்கிரியில் அடிக்கடி வழிபட்டு வர வேண்டும். இதனால் பெயர் மாற்ற தோஷங்கள், அட்சரவழி தோஷங்கள் அகல  வழி பிறக்கும். அட்சரவழி தோஷமெனில் அழகான, சக்தி வாய்ந்த பெயரைச் சுருக்கி அட்சரங்களை வெட்டுவதால் ஏற்படும் தோஷங்கள் ஆகும் (உ-ம் வெங்கடசுப்ரமணியன் – வெங்கட்), நல்ல இறைநாமத்தைக் கர்நாடகமாக, பழங்காலப் பெயராக இருக்கிறது என்று அட்சரங்களை வெட்டி, modern ஆக இருக்க வேண்டும் என்பதற்காக அர்த்தமில்லாத, அல்லது negativeவாக, தீயசக்தி நிறைந்ததாக மாற்றுவதும் பலத்த அட்சர தோஷங்களுக்கு ஆளாக்கும்.

 மருத்துவர்கள் செவ்வாய், சனிக் கிழமைகளில், பிரதமை, சஷ்டி, துவாதசி, பௌர்ணமி, அஸ்வினி, ஆயில்யம் ஆகிய நாட்களில் கிரிவலம், அடிபிரதட்சிணம் செய்து தங்கள் தொழிலுக்குரிய ஆடைகளுக்கு மந்திர சக்திகளை உரு ஏற்றி அணிவது நலம் பயக்கும். மருத்துவர்கள் ஒரு புறத்தில் தங்களுக்கு மருத்துவ சக்திகளை விருத்தி செய்ய வேண்டிய கடமையும், மறுபுறம் தன்னிடம் நிறைந்துள்ள மருத்துவ அறிவும், நோய் தீர்க்கும் குணமும், தீய சக்திகளின் நுழைவால் மங்கி விடாமல் தற்காத்துக் கொள்ள வேண்டிய பொறுப்பும் உண்டு. மஞ்சள் அல்லது வெளிர் நீல உள்ளாடைகளை அணிதல், கூடிய மட்டும் பருத்தி ஆடைகளையே அணிதல், கடுக்கண், மோதிரங்கள், இடுப்புக் கயிறு, மணிக் கட்டில் காசிக் கயிறு, பூணூல், மெட்டி, திருவெண்டயம் போன்றவற்றை அணிவது தற்காப்புச் சக்திகளை அளிக்கும். இயன்றவரை தோலால் ஆன செருப்புகள், ஷூக்களைத் தவிர்க்கவும். அலுவலக நியதிகள் காரணமாகத் தோல் காலணிகளை அணிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தோல் கர்மங்களைக் களைதல் மிக மிகக் கடினமே. நீங்கள் அணிந்திருக்கும் watch strap, காலணி, ஷூக்கள், பசுவின் தோலால் ஆகியிருந்தால் ஜன்மம் ஜன்மமாகத் தோல் கர்மங்கள் தொடர்ந்து வரும். எனினும் இதற்கு ஓரளவு பரிகாரம் கண்டிட ஏழைகளுக்கும், ஆலயங்களுக்கும் கன்றுடன் கூடிய, பசுக்களைத்  தானமாக அளிப்பது, கோசாலைகளில் பசு தர்மம் பேணுவது, ஏழைச் செருப்புத் தொழிலாளர்களுக்குத் தக்க தான தர்மங்கள் செய்தல் வேண்டும்.

பஹிர்முகப் பூஜையில் பக்தியில் சிறந்து, முருகனை விட, வேல் வழிபாட்டைப் பிரதானமாகக் கொள்வதும் உண்டு. “வேலை வேண்டிட வேலன் வேகமாய் வருவான்!” என்ற ஆன்றோர் மொழிக்கு ஏற்ப, வேல் வழிபாடு காரிய சித்தியைத் துரிதமாக்கும். அச்சத்தைப் போக்கும். மனம், உள்ள வைராக்கியத்தைப் பேணும். கலியுகத்தில் பலவிதமான அச்சங்களோடு வாழ்வோர்க்கு, பாம்பன் சுவாமிகளின் வேல் மாறல் பதிகம், குறிப்பாகப் பெண்களுக்கு நல்ல காப்பு சக்தியை அளிக்கும். திருட்டு கொள்ளை பயம் உள்ள இடங்களில் வாழ்வோர் வேல்மாறல் பதிகத்தை ஓதி வருதலால் ரட்சா சக்திகளைப் பெற்றிடலாம்.

அவரவர் தம்முடைய ஜாதகத்தில் மாந்தி கிரகம் இருக்குமிடத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். குளிகை நேரத்தில், அவரவர் நட்சத்திரத் துதிகளுடன் மாந்தி கிரக சுவாமியைப் பூஜித்தல் அல்லது “வேல்” வழிபாட்டை மேற்கொள்தலால் பகைமை, விரோதம், பில்லி, சூன்யங்களால் வாடுவோர் நல்ல நிவர்த்திகளைப் பெறுவர்.

நன்றாக நிஷ்டையில் இருக்கும் ஒரு யோகச் சித்தரின் உடல் உஷ்ணம் ஒரு அக்னி மலையை ஒத்து இருக்கும். அதாவது நவீனக் கணக்குப்படி, 30,000 டிகிரி செல்சியஸுக்கு மேல் இருக்கும். இத்தகைய யோகாக்னியைத் தணித்திட, ஒரே ஒரு புரசு இலையில் உள்ள ஆன்மீக சக்தியே போதுமானது. அந்த அளவிற்கு ஹோமாக்னி சக்திகளைக் கொண்டதே புரசு மரமாகும். இவ்வாறு கடுவெளிச் சித்தர், பல்லாயிரம் ஆண்டுகள் அக்னிக் கடுவெளித் தவம்புரிகையில், புனிதமான கிராமத்துப் பத்தினிப் பெண்டிர்களும், சான்றோர்களும், பிரசாதமாக அளித்த புரசு இலை மூலம் தம் தவசக்திகளை பூலோகத்திற்குத் தவப் பரிசாக அளித்த தலமே கடுவெளி (கிராமம்) ஆகும். ஆகாச வாஸ்து சக்திகள் நிறைந்த சிவத்தலம்.

வாஸ்து பூஜைகளில் ஐந்து வகை உண்டு. பிருத்வி வாஸ்து பூஜை என்பது பூமி பூஜை. இவை தவிர ஜல, அக்னி, வாயு, ஆகாச வாஸ்து பூஜைகளும் உண்டு. எந்தக் கட்டிடமுமே ஆகாயத்தில் எட்டித்தானே நிற்கின்றது. எனவே தற்காலத்தில் ஐந்து மாடி, பத்து மாடி என்று வானுயரக் கட்டடம் கட்டுபவர்கள், இங்கு கடுவெளியில் ஆகாச வாஸ்து பூஜைகளை நடத்தி, ஆகாசபுரீஸ்வரரின் அனுமதியையும், அனுகிரகத்தையும் பெற்றிட, கட்டிடங்கள் நன்முறையில் ஸ்திரமாய் அமையும்.

உங்கள் ஜாதகத்தில் ராசிக் கட்டத்தில் உள்ள கிரகங்களை ஒரு கோடாக இணைத்துப் பாருங்கள். அவை புஷ்பம் போல அமைந்திருந்தால், நீங்கள் புஷ்ப யோக ஜாதகம் கொண்டவர்கள். உங்களுக்கு மிகவும் ஏற்ற வழிபாட்டுத் தலங்களுள் கடுவெளியும் ஒன்று. கடுவெளியில் வழிபட்டு வந்திடில் அரிய அனுகிரகங்களைப் பெற்றிடலாம்.

அருணாசலத்தை மாத சிவராத்திரியில் கிரிவலம் வரும்போது சொல்ல வேண்டிய அட்சர பந்தன மந்திரம் அஷ்ட லிங்க அனுகிரகத்தைப் பெற்றுத் தரும் மாமந்திரம்:

தொடரும் ஆனந்தம் ...

கனவுகளும் கழிவுகளும் ... .. பசுவும் கன்றும் ...
ஒரு மனிதன் திறந்த வெளியில் மல ஜலம் கழிப்பதாக வைத்துக் கொள்வோம். அவன் சென்றபின் வெகு உயரத்தில் வானில் பிரகாசிக்கும் சூரியன் தன்னுடைய கதிர்களால் அந்த மல ஜலத்தில் உள்ள தீய சக்திகளை எல்லாம் ஓரளவு தூய்மை செய்து சுற்றுப்புறத்தை பாதுகாக்கிறார். அதே சமயம் அந்த மலத்தை உண்பதற்காக வரும் பன்றியும் தன்னுடைய நிலையில் இதே பணியைத்தான் ஆற்றுகிறது.

ஸ்ரீவராக மூர்த்தி
நாச்சியார் கோவில்

அது போல அந்த மல ஜலக் கழிப்பிற்கு உறுதுணையாக அமைந்த பூமா தேவியும் தன்னுடைய நிலையில் சுற்றுப்புறத்தை தூய்மை செய்கிறாள். இது அனைவரும் அறிந்த ஒன்றே, ஒப்புக் கொள்ளக் கூடிய தெய்வீகமே. ஆனால், சூரிய பகவானுக்கும், பூமா தேவிக்கும் அளிக்கும் அதே மதிப்பை நாம் பன்றிக்கு அளிக்கிறோமா ? சூரியனை பகவான் என்று அழைக்கும் நாம் பன்றியை பகவான் என்று மனமார அழைக்க முடியுமா ? அதே பன்றி வடிவம் திருத்தலங்களில் அமையும்போது அதை வராக அவதாரம் என்ற பெருமாளின் அவதாரமாக மதித்துப் போற்றுகிறோம், ஆராதனை செய்கிறோம். அந்த பன்றியையே அவதாரமாக ஏற்க முடிந்தால் அதுவே மகான்களின், சித்தர்களின் நிலையாகும்.

திருஅண்ணாமலையில் நிகழும் அன்னதான வைபவங்களில் இதைத்தான் நம் சற்குரு அடிக்கடி வலியுறுத்துவார்கள். உதாரணமாக, தக்காளியை அன்னதான சமையலுக்காக நறுக்கும்போது அதன் வாய் பகுதியையும், வால் பகுதியையும் வெட்டி விடும்படி கூறுவார்கள். காரணம், வாயிலும் வாலிலும் நச்சு இருக்கும் என்பதே நாம் புரிந்து கொள்ள வேண்டிய தெய்வீகம். திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு திருப்பணிக்கு வரும் அடியர்கள் அனைவரும் இத்தகைய ‘வாய் நஞ்சு, வால் நஞ்சு’ என்ற விளைவுகளால் நிச்சயம் பாதிக்கப்பட்டவர்களாக, இனியும் பல சமயங்களில் வேதனைப்படும் சூழ்நிலைகளைத்தானே சந்திப்பார்கள். இதற்கு பிராயசித்தமாக, வருமுன் காப்பாக அமைவதே இந்த அற்புத ‘வெஜிடபிள் கட்டிங்’ முறை. ஆனால், எத்தனை பேர் இந்த எளிய முறையில் நிவாரணம் பெற்றார்கள் என்பது அவரவர் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தால்தான் தெரியும்.

மனிதன் ஒரு நாளில் காணும் நல்ல காட்சிகள், தீய காட்சிகள், தேவையில்லாத காட்சிகள், அந்த காட்சிகளிலிருந்து பெருகும் கற்பனைகளோ ஏராளம், ஏராளம். அதனால்தான் கடையில், ஹோட்டலில் கிட்டும் உணவுகளை விட வீட்டில் ‘வாய் நஞ்சு, வால் நஞ்சு’ நீங்கிய பதார்த்தங்கள் மனித மனதையும் உடலையும் தூய்மை செய்யும் என்று நம் சற்குரு சிபாரிசு செய்கிறார். சமைக்கும்போதும் உண்ணும்போதும் கூறும் சாகம்பரி, அன்னபூரணி சுலோக மந்திரங்கள் எத்தகைய உணவு தோஷங்களையும் களையும் தன்மை உடையன மட்டும் அல்ல, அடுத்து அந்த உணவு வகைகளை மலமாக, கழிவுகளாக ஏற்கும் புழு, பூச்சிகள் போன்ற பூமிவாழ் ஜீவன்களையும் உய்விக்க வல்லவையே. அன்னதானத்திலும் இத்தகைய முறைகளைப் பெருக்கினால் நம் வாழ்வில் பொலியும் தெய்வீகம் அமோகமே.

அரவிந்த மாதா கடவுளை இறைவன், பகவான், பரம்பொருள் என்று குறிக்காது உண்மை என்றே கூறுவார். கடவுள் என்ற பெயரெல்லாம் மக்களால் தவறுதலாக கையாளப்படுவதால் அன்னை இவ்வாறு உண்மை என்று இறைவனை அழைத்தார். ஆனால், இதுவும் இறைவனின் உண்மையான பண்பைக் குறிக்காது என்று உணர்ந்து வார்த்தையில் அடக்க முடியாத, அடங்காத இறைப் பெருங் கருணையை உள்ளடக்கவே இவ்வாறு உண்மை என்ற வார்த்தையை பிரயோகம் செய்தார் மாதா. இந்த உண்மை சொரூபத்தை ஒரு காவியமாக, இராமாயணமாக எழுத்தில் வடித்த பெருமை மாமுனி வால்மீகியையே சாரும். ஆயிரமாயிரம் மனிதப் பிறவிகளை எடுத்தாலும் முழுவதுமாக புரிந்து கொள்ள முடியாத இறைப் பொக்கிஷமே இராமாயணமாகும்.

விளங்குளம்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam