அரைகுறை மனத்திற்கு நிறை நிலை புரியாது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருகோளக்குடி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருகோளக்குடி வாழ்க்கையில் ஒரு முறையாவது அனைவரும் தரிசனம் செய்து தங்கள் குறிக்கோளை நிர்ணயம் செய்து கொள்ள உதவும் திருத்தலமாகும். கோள்கள் என்றால் நட்சத்திரம், நவகிரகங்கள் மட்டுமே அவ்வார்த்தையில் அடங்கும் என்று நாம் நினைக்கின்றோம். உண்மையில் கோள் என்பது இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிரினங்களையும் குறிப்பதால் நாம் அனைவருமே தரிசனம் செய்ய வேண்டிய திருத்தலமே திருகோளக்குடி என்பது இதிலிருந்து புலனாகின்றது அல்லவா ? சித்தர்கள் கூறும் இந்த உண்மையை ஆமோதிப்பதற்காகவே சித்தர்குல நாயகரான ஸ்ரீஅகத்திய மகரிஷியும் அவரின் அன்புச் சீடரான ஸ்ரீபோகரும் ஸ்ரீதிருக்கோள நாதர் மூலதானத்திலேயே எழுந்தருளி இருப்பதை இன்றும் தரிசனம் செய்து இன்புறலாம்.

ஸ்ரீஅகத்திய மகிரிஷி திருகோளக்குடி

ஸ்ரீபோகர் சித்தர் திருகோளக்குடி

இத்தல வரலாறு ஸ்ரீதிருக்கோளநாதரின் வலது பக்கம் துலங்கும் ஸ்ரீஅகத்திய பிரானும் இடது பக்கம் துலங்கும் ஸ்ரீபோகர் சித்தரும் கங்கையிலிருந்து தீர்த்தத்தைக் கொண்டு வந்து ஸ்ரீதிருகோளக்குடி நாதருக்கு அபிஷேகித்தனர் என்று கூறுகிறது. உண்மையில் தினமுமே ஸ்ரீஅகத்திய பிரானும் ஸ்ரீபோகரும் கங்கையிலிருந்து தீர்த்தம் சுமந்து வந்து ஸ்ரீதிருகோளக்குடி ஈசனுக்கு அபிஷேகம் நிகழ்த்துகின்றனர் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியமாகும். எனவே ஸ்ரீதிருகோளநாதரின் நிர்மால்ய தரிசனம் என்பது நமது பூலோகத்தில் கிடைத்தற்கரிய ஒன்றாகும். காரணம் ஸ்ரீஅகத்தியரும் ஸ்ரீபோகரும் கங்கை நீரால் அபிஷேகம் இயற்றிய இறைவன் திருமேனியை தரிசனம் செய்வதென்றால் அத்தகைய திருக்கோளத்தைக் காண ஒரு பக்தன் எந்த அளவு புண்ணியம் நிறைவேற்றி இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பாருங்கள். நீங்கள் ஸ்ரீதிருகோளக்குடி நாதரின் நிர்மால்ய தரிசனத்தைப் பெறாவிட்டாலும் சித்தர்களால் தினமும் கங்கை நீரால் அபிஷேகிக்கப்பட்ட இறைவன் திருமேனியை தரிசனம் செய்கின்றீர்கள் என்றால் இதை விடச் சிறந்த பாக்கியம் வேறு எதுவாக இருக்க முடியும். ஆனால் நாம் காணும் இந்த இறைவனின் தரிசனம் பூரண பலனைத் தர வேண்டும் அதற்கு உரித்தான வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால்தான் திருகோளக்குடி ஈசனின் வழிபாட்டின் மகத்துவத்தை சாதாரண மக்களும் அடியார்களும் தெரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக தினமும் குழந்தையைப் போல் தவழ்ந்து மலைமேல் ஏறி ஸ்ரீதிருப்பதி வெங்கடாஜலபதி பெருமாளைத் தரிசனம் செய்து வந்தார் ஸ்ரீராமானுஜர். எப்போதாவது அவருக்கு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தால் அவர் கீழே தவழ்ந்து வந்து மீண்டும் குழந்தையைப் போல் தவழ்ந்து மலை மேல் ஏறித்தான் செல்வார் ஸ்ரீராமானுஜர். இன்றோ எத்தனை பேர் சிறுநீர் கழிக்க திருப்பதி மலைமேல் இருந்து கீழிறங்கி வருகின்றார்கள் என்பது நீங்கள் அறிந்ததே. காரணம் திருப்பதி வெங்கடாஜலபதி பெருமானை ஸ்ரீராமானுஜர் தரிசனம் செய்தது போல் யாரும் தரிசனம் செய்ய முடியவில்லை என்பதே. பக்தர்கள் பெருமாளை கல்லாய் விளங்கும் கோமானாய்த் தரிசனம் செய்கின்றார்கள் என்பதே உண்மை. அது போல் பக்தர்களுக்கு திருகோளக்குடி ஈசனும் கோள்கள் வணங்கும் கோனாய்த் திகழ வேண்டுமானால் இங்கு சித்தர்கள் சுட்டிக் காட்டும் விளக்கங்களை முடிந்த மட்டும் பக்தர்கள் தங்கள் வாழ்க்கையில் கடைபிடிப்பதே உத்தம வழியாகும்.

திருகோளக்குடி ஈசனை சித்தர்கள் அபிஷேகித்த பின்னர் மற்ற சித்தர்கள், அவதார மூர்த்திகள், யோகிகள், ரிஷிகள் மற்றும் தகுதி பெற்ற அனைவருமே திருகோள நாதரின் நிர்மால்ய தரிசனத்தைப் பெறுகிறார்கள். திருஅண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு முன் தீபத்தைச் சுற்றி மேக மூட்டத்தைக் காணலாம். இது விண்ணுலக தேவதைகளின் வழிபாடாகும். ஒளி பொருந்திய அவர்கள் தேகத்தையோ வாகனத்தையோ பூலோக ஜீவன்கள் காணும் சக்தி பெறாததால் அவர்கள் மேகக் கூட்டத்திற்கு இடையே அமர்ந்து திருக்கார்த்திசை தீபத்தை தரிசனம் செய்து அதில் ஒரு பகுதியை தங்கள் லோகங்களுக்கு எடுத்துச் செல்கின்றார்கள். அது போல திருகோளக்குடியிலும் ஈசனின் அபிஷேகத்திற்குப் பின் இறைவனின் நிர்மால்ய அபிஷேக பிரசாதத்தைப் பெற்றுச் செல்லும் ஜீவன்கள் கோடி கோடி. ஆனால் அவர்கள் திருஅண்ணாமலையில் தங்கள் வாகனங்களில் வந்து தீப பிரசாதத்தைப் பெற்றுச் சேல்வதைப் போல திருகோளக்குடியில் நிர்மால்ய பிரசாதத்தைப் பெற முடியாது. அவர்கள் அனைவரும் சாதாரண பூலோக ஜீவன்களைப் போல திருகோளக்குடியில் படியேறி மேலே சென்றுதான் ஈசனின் நிர்மால்ய பிரசாதத்தைப் பெற வேண்டும். மேலும் இவ்வாறு நிர்மால்ய பிரசாதம் பெற விழைபவர்கள் படியில் குழந்தையைப் போல் தவழ்ந்து சென்றுதான் நிர்மால்ய பிரசாதம் பெற வேண்டும் என்பது விதியாகும். அதனால் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இவ்வாறு படியில் குழந்தையைப் போல் தவழ்ந்து செல்வதால் அவர்களுக்கு திருகோளக்குடி ஈசனின் பிரசாதம் மட்டும் கிடைப்பதில்லை. முப்பத்து முக்கோடி தேவர்கள் தரிசனமும், அவதார மூர்த்திகள், யோகிகள், பிரம்ம ஞானிகளின் தரிசனமும் கிட்டும் என்பதே உண்மை. இக்காரணம் பற்றியே திருகோளக்குடி திருத்தலத்தின் வாயிற்படிகள் மற்ற எந்த திருத்தலத்திலும் இல்லாத அளவிற்கு அலங்கார வைபவத்துடன் மக்களின் சாதாரண ஊனக் கண்களுக்கே காட்சி அளிக்கிறது.

படிகளை எண்ணியும் பலனடையலாம்
திருகோளக்குடி

இன்றும் பல லோகங்களிலிருந்து வரும் தேவதைகள் தெய்வ மூர்த்திகள் திருகோளக்குடி படிகளில் கிட்டும் இத்தகைய நிர்மால்ய தரிசனத்தை மட்டுமே பெற்றுச் சென்று விடுவதுண்டு. இதற்கு பல காரண காரியங்கள் உண்டு. உதாரணமாக ஒரு முக்கியஸ்தரைக் கண்டு தரிசனம் செய்து தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்வது ஒரு வகை. அந்த முக்கியஸ்தரைக் காண வரும் விருந்தினர்களைக் கண்டு அளவளாவி அவர்களால் பயன் பெறுபவர்களும் ஏராளமாய் உண்டு அல்லவா ? இவ்வாறு நிர்மால்ய தரிசனத்தித்திற்காக வரும் தேவ தெய்வ மூர்த்திகள், அவர்களைக் காண வரும் தேவ தெய்வ மூர்த்திகள், தேவதைகளால் திருகோளக்குடி பூமியே ஒரு தெய்வீக வளாகமாகத் திகழும். இந்த உண்மையை சாதாரண மக்கள் உணராதலால் திருகோளக்குடி ஆளரவமற்ற மனித சஞ்சாரமற்ற ஒரு பகுதி போன்றே தோன்றும். இதுவும் ஈசனின் மாயா விநோதமே. திருகோளக்குடியில் திகழும் படிகளை அவதாரப் படிகள் என்று சித்தர்கள் அழைப்பதுண்டு. நாம் அறிந்தவை பெருமாளின் பத்து அவதாரங்களே. உண்மையில் பெருமாளின் அவதாரங்களே கோடி கோடியாகும். இந்த அவதாரங்கள் பற்றி முழுமையாக உணர்ந்தவர்கள் சித்த பெருமக்களே. சித்தர்கள் வாழும் காலம் அவதாரங்களின் தோற்றம் மறைவை மிஞ்சி விஞ்சி நிற்பதால் அவதாரங்கள் பற்றி சித்தர்கள் அளிக்கும் விளக்கங்களே உண்மையாய் பொருள் பொதிந்தவையாய எக்காலத்திலும் எவரும் பயன்படுத்தி பயன்பெறக் கூடியவையாக உள்ளன. உதாரணமாக ஸ்ரீபோடா சித்தர் காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திலேயே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் மானிட உடலில் வாசம் கொண்டவர் என்பதால் அவர் சிவபெருமானுக்கே திருமணம் நிகழ்த்தும் பெருமையையும், ஸ்ரீஇடியாப்ப சித்தர் ஸ்ரீஅங்காளி தேவிக்கே மணாளனாக சிவ பெருமானை வரித்த பெருமையுடன் இன்றும் திகழ்கின்றார்கள் என்பதில் வியப்பேது ? அவதார மூர்த்திகள், பிரம்ம ஞானிகளே அமர்ந்து தவம் இயற்றும் படிக்கட்டுகள் என்பதால் திருகோளக்குடி படிக்கட்டுகளில் ஒரு முகூர்த்த நேரம் அமைதியாக அமர்ந்து இறைவனைக் குறித்து தியானித்தால் கூட அத்தியான பலன்கள் பல பிறவிகளுக்கு தொடரக் கூடியதாகும். இத்திருத்தலத்திற்கு விஜயம் செய்யும் பக்தர்கள் பலர் ஆலயம் திறக்கவில்லை என்று காரணம் கூறி திரும்பிச் சென்று விடுகிறார்கள். உண்மையில் அவர்கள் இத்திருத்தல படிக்கட்டுகளில் அமர்ந்து இறைவனைக் குறித்துத் தியானிக்க, தவம் இயற்ற இத்தலத்தை தரிசனம் செய்யும் மகான்கள் அருளிய ஏற்பாடு என்பதை அறிய முடிவதில்லை. இதை அடியார்கள் உணரச் செய்வதும் சற்குரு வெங்கடராமன் அவர்களின் கோடிக் கணக்கான திருப்பணிகளில் ஒன்றாகும்.

கோள விளம்ப தீர்த்த தேவதைகள்

ஸ்ரீஅகத்திய பிரானும் ஸ்ரீபோகர் சித்தரும் திருகோளக்குடி ஈசனுக்கு பிரம்ம முகூர்த்தத்தில் கங்கை தீர்த்தத்தால் அபிஷேகம் நிகழ்த்துகிறார்கள் என்று அறிந்தோம் அல்லவா ? ஆனால் இந்த அபிஷேகத்தையோ அதன் பின்னர் கிட்டும் நிர்மால்ய தரிசனத்தையோ பெறும் பாக்யம் கோடியில் ஒருவருக்குத்தான் கிட்டும் என்றால் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலருக்கே மட்டும் அனுகிரகத்தை அளிப்பதற்காகவா சித்தர்கள் இவ்வளவு சிரமப்பட்டு பூலோக வாழ்வை மேற்கொள்கிறார்கள். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பதுதானே சித்தர்களின் கோட்பாடு. ஆனால், அதே சமயத்தில் பள்ளிச் சிறுவனுக்கு சக்தி வாய்ந்த அணுகுண்டை அளித்து விட முடியாதே. எனவே இந்த சிக்கலான பிரச்னைக்கு அவர்களால் இனம் கண்டு கொள்ளப்பட்ட தீர்த்த தேவதைகளே திருகோளக்குடியில் மட்டுமே அருள்புரியும் கோள விளம்ப தீர்த்த தேவதைகள் ஆவார்கள். எந்நாளும் எந்நேரமும் சற்றும் ஓய்வு என்பதை அறியாத தீர்த்த தேவதைகளே இவர்கள். ஸ்ரீதிருக்கோள நாதருக்கு சித்தர்களால் அபிஷேகிக்கப்பட்ட கங்கை அபிஷேக தீர்த்தத்தை மூன்று பங்காக பிரித்து இரண்டாவது பங்கை இங்குள்ள தாமரைச் சுனையிலும் மூன்றாவது பங்கை திருகோளக்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ககோள தீர்த்தத்தில் கலந்து விடுவதோடு மட்டுமல்லாமல் இத்திருக்குளங்களில் நீராடும் பக்தர்களின் தகுதிக்கு ஏற்ப தீர்த்த நீராடல் பலன்களை அளிப்பதும் இந்த தீர்த்த தேவதைகளின் பணியாகும். உதாரணமாக ஒரு பக்தர் இங்குள்ள தீர்த்தக் குளத்தில் நீராடுவதால் அவர் ஒருவிதமான பலனைப் பெறுகிறார் என்றால் அதே பக்தர் பத்து இட்லி பொட்டலங்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து விட்டு இங்குள்ள தீர்த்தத்தில் நீராடினால் அவருக்கு கிட்டும் பலன்களை வேறு விதமாக அளிப்பவர்களே கோள விளம்ப தீர்த்த தேவதைகள் ஆவர். விளம்புதல் என்றால் விவரித்தல், தெளிவாகக் கூறுதல் என்று பொருள். இவ்வாறு சொல்லுக்கும் பொருளுக்கும் அப்பாற்பட்டதே கோள விளம்ப தீர்த்த தேவதைகளின் அரும்பணியாகும்.

ஸ்வஸ்தி தீர்த்தம்
திருகோளக்குடி

சதாஸ்து தேவதைகள் நிரந்தர வாசம் செய்யும் திருக்குளமே இந்த தீர்த்தமாகும். சதாஸ்து என்றால் அப்படியே ஆகட்டும் என்று பொருள். சப்த கன்னிகள் இந்த தீர்த்தத்தில் வாசம் செய்து தவம் இயற்றி பக்தர்களுக்கு அவர்கள் விரும்பிய நல்ல வரத்தை அளிக்கும் சக்தியைப் பெற்ற இடமே இந்த ஸ்வஸ்தி தீர்த்தமாகும். மங்கள சக்திகள் பெருகும் தீர்த்தம் இது. சூரிய பகவான் நேரிடையாக தன்னுடைய கிரணங்களால் பூஜிக்காது விசேஷமான தன்னுடைய ஸ்வஸ்தி கிரணங்களால் பூஜிக்கும் பெருமை உடைய தீர்த்தம் ஆதலால் ஸ்வஸ்தி தீர்த்தம் என்ற பெருமையை உடையது இந்த தீர்த்தமாகும். 21ந் தேதி ஞாயிற்றுக் கிழமை ஐப்பசி மாதம் ஸ்வஸ்தி முகூர்த்தத்தில் திகழும் ஸ்வஸ்தி தீர்த்தத்தையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் எந்த அளவு உங்களுடைய ஸ்வஸ்தி மூதாதையர்களுக்கு கடன்பட்டு இருக்கிறீர்கள் என்பதை உங்களுக்கு உணர்த்துவதும் இந்த ஸ்வஸ்தி திருக்குளத்தின் மகிமையாகும். இத்திருக்குளத்தின் தேன் கூடாய் சப்த கன்னிகள் விளங்குகிறார்கள் என்ற சொல் வழக்கு உண்மையே. அதனால்தான் எவரும் இந்த தேன்கூடுகளைக் களையும் முயற்சியில் ஈடுபடுவது கிடையாது. மேலும் குருவருளாக இந்த தீர்த்தத்தில் சொட்டும் தேன் என்றும் இடைவிடாது நடக்கும் ஒரு இனிய வைபவமாகும். இந்த குருவருள் நிறைந்த தீர்த்தமே சுவாமிக்கு அபிஷேகமாக நிறைவேற்றப்படுவதால் அது எத்தகைய கங்கா சக்திகளுடன் பூரிக்கும் என்பதை அடியார்கள் புரிந்து கொள்ளலாம். பொதுவாக ஒரு லட்சம் பேருக்கு அன்னதானம் அளிக்கப்படும் இடத்தில் ஒரு தடாகம் தோன்றும் என்றால் இவ்வாறு சூரிய பகவான் தன்னுடைய ஸ்வஸ்தி கிரணங்களால் பூஜிக்கும் குருவருள் நிறைந்த தடாகம் எத்தகைய தெய்வீக சிறப்புகளுடன் துலங்கும் என்பதை ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். இவ்வாறு ஒரு லட்சம் ஆத்ம விசார வினாக்களுக்கு விடை கிடைத்தால்தான் ஸ்ரீஆத்மநாயகியின் தரிசனமே கிட்டும். ஸ்ரீஆத்மநாயகியின் தரிசனத்திற்குப் பின்னர் வருவதே ஸ்ரீதிருகோளக்குடி ஈசனின் தரிசனம். இத்தகைய சதாஸ்து வாக் சக்தியை சிறப்பாகப் பெற்றவர்களே ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார். வாக் சக்தியான இரண்டாம் இடத்தில் நான்கு கிரகங்கள் இடம் பெற்றதோடு மட்டுமல்லாமல் வாக்கு என்றால் தீ என்பார்கள் அந்த தீக்கே சக்தியை அளிக்கும் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்துள்ளதால்தான் அவர் ஏழு வயதிலேயே சதாஸ்து தேவதைகளின் தரிசனத்தைப் பெற்றதோடு அல்லாமல் கந்தர்வ தேவதைகள் இசைக்கும் பிலஹரி ராகப் பாடலையும் அறியும் ஆற்றலைப் பெற்றிருந்தார்கள். இவ்வாறு சற்குரு அவர்களின் இரண்டாம் இடத்தை விளக்கப் புகுந்தால் அது இரண்டாவது ராமாயணமே. எனவே அனைவரும் சிறப்பாக ஜோதிடர்கள், வழக்கறிஞர்கள், முகவர்கள், அரசியல்வாதிகள் போன்று வாக்கு சக்தியை ஆதாரமாக கொண்டவர்கள் இந்த தீர்த்தத்தை தனியாக ஒரு மரப்பாத்திரத்திலோ அல்லது குடுவையிலோ எடுத்து தர்ப்பணம் அளித்து உரிய தான தர்மங்களை நிறைவேற்றுவதால் அளப்பரிய பலன்களைப் பெறலாம். பிறவி ஊமைகளுக்கு கூட நற்பலன் அளிக்கும் அற்புத தீர்த்தம் இது. பிலஹரி ராகத்தில் அமைந்த தியாகராஜர் (தொரகுணா), புரந்தரதாசர் கீர்த்தனைகளை உரிய பாடகர்களைக் கொண்டு பாடச் செய்து அவர்களுக்கு சன்மானம் வழங்குவதும் இத்தகைய தர்ப்பணத்திற்குப் பின் நிறைவேற்றக் கூடிய சிறப்பான வழிபாடாகும். ஜாதகக் கட்டங்களின் ஒற்றைப் படை ராசிகள் உடல் ஆரோக்கியத்தையும், இரட்டைப் படை ராசிகள் மனோ வலிமையையும் குறிக்கும். அவ்வாறே சூரியன் உடல் ஆரோக்கியத்தையும் சந்திரன் மன ஆரோக்கியத்தையும் அளிப்பவர்கள். இவர்கள் சற்குரு வெங்கடராமன், சேஷாத்ரி சுவாமிகள் இவர்களின் ராசிக் கட்டங்களில் கிரகங்கள் எழுந்தருளி இருக்கும் விதத்தைக் குறித்து ஆத்ம விசாரம் செய்து எந்த அளவிற்கு இவர்களுடைய அருளுரை அடியார்களுக்கு ஆரோக்யம் அளிப்பதாக அமைந்தது என்று ஆத்ம விசாரம் செய்வதும் ஒரு லட்சம் ஆத்ம விசார கேள்விகளை எழுப்பி அவைகளுக்கு விடை காணும் ஒரு முயற்சியாகும், ஆத்மநாயகி, ஆத்மாவை தரிசனம் செய்யும் ஒரு வழிமுறையாகும். ஸ்வஸ்தி என்னும் சொல் ஆரோக்யத்தைக் குறிப்பதால் ஸ்வஸ்திக் சக்கர வழிபாடு ஆரோக்யத்தை அளிக்கிறது. இவ்வாறு ஸ்வஸ்திக் வடிவில் உள்ள திருவெள்ளரை போன்ற தலத்தில் உறையும் திருக்குளங்களில் உள்ள தீர்த்தமும் நீராடலும் ஆரோக்யத்தை அளிப்பதாக உள்ளன. இத்துடன் தொடர்புடையதே சித்ரா நட்சத்திரத்தன்று வழங்கும் சித்ரான்ன கலவை அன்னதானமும் சித்திரை நட்சத்திர வழிபாடும் ஆகும். இவை அனைத்தும் ஆரோக்யம் அளிக்கும் வழிபாடுகள் மட்டுமல்ல, “நீ நீயாக இரு” என்பதை உணர்த்தும் ஸ்வஸ்தி மகா வாக்கியங்களாகும். திருகோளக்குடி ஸ்வஸ்தி தீர்த்தத்தை சிறிதளவே எடுத்து அதில் பிரசாதம் செய்து ஏழைகளுக்கு அளிப்பதால் கிட்டும் ஆரோக்ய வாழ்வை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. எத்தகைய கொடிய நோய்களையும், நாட்பட்ட வியாதிகளையும் துரத்தும் எளிமையான வழிபாடு இது.

ஸ்ரீசசபிந்து மகரிஷி
திருச்சி நாகநாதசுவாமி கோயில்

ஒருமுறை பரமசிவனின் கழுத்திலிருந்த பாம்பு ஒன்று கருடனைப் பார்த்து, “கருடா சௌக்யமா?” என்று கேட்டது. அதற்கு கருடன், “யாரும் இருக்கும் இடத்தில் இருந்தால் சௌக்யத்திற்கு என்ன குறைச்சல் !” என்று பதிலளித்த வரலாறு நீங்கள் அறிந்த ஒன்றே. ஆனால், நீங்கள் அறியாதது இதன் பின்னால் அமைந்த சுவையான நிகழ்ச்சியே. தன்னிலை அறியாது கருடனை அவமதித்த குற்றத்திற்காக அந்த நாகராஜன் பூலோகத்தில் பிறக்கும்படி ஆயிற்று. பரமசிவன் கழுத்திலிருந்த காரணத்தால் பூலோகத்தில் திருகோளக்குடியில் பன்னெடுங்காலம் தவம் இயற்றி நண்பர், பகைவர், மாற்றான் என்ற வேற்றுமை உணர்வை முற்றிலுமாக விலக்கி இறுதியில் பரமசிவனுடன் ஒன்றாக இணையும் பேற்றைப் பெற்றது. பாம்பிற்குப் பகையாய்க் கருதப்படும் தவளைகள் எல்லாம் பாம்போடு ஐக்யம் பெற்றதால் பூவுடன் சேர்ந்த நாறும் மணம் பெறும் என்பதாக அத்தவளைகளும் இறைவனுடன் ஒன்றும் பெற்றைப் பெற்றன. அத்தகைய தவளைகளே மண்டூக தவளைகளாக உயர்ந்த நிலையை அடைந்து திருப்பட்டூர் ஸ்ரீமண்டூக நாதரை அலங்கரிக்கின்றன. எனவே எத்தகைய நாக தோஷங்கள் உடையவர்களும் திருச்சி நாகநாத சுவாமி திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள ஸ்ரீசசபிந்து மகரிஷியை வணங்கி திருக்கோளக்குடி ஈசனை வழிபடுவதால் அனைத்து விதமான நாக தோஷங்களும் மறைந்து நன்முறையில் திருமணம் கைகூடும், பகை உணர்வுகளால் பாதிக்கப்பட்டவர்கள் நன்னிலை அடைவர். திருக்கோளக்குடியில் வாழ்ந்த தவளைகள் எல்லாம் இங்கு தவமியற்றிய நாகராஜனுடன் சேர்த்து சிவபெருமானுடன் ஐக்கியம் கொண்டதால் திருகோளக்குடி ஸ்வஸ்தி தீர்த்தத்தில் தவளைகளைக் காண முடியாது. சிவபெருமான் ஆலகால விஷத்தை உண்டபோது அனைத்து நாகங்களும் ஆலகாலத்தின் வெப்பம் தாளாது பெருமானின் உடலை விட்டு கீழே இறங்கி விட்டன. ஆனால், சசபிந்து என்ற நாகம் மட்டும் சிவபெருமானின் தலை உச்சியில் நின்று எந்த உஷ்ணம் தாக்கினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சுவாமிக்கு தன்னாலான இயன்ற சூட்டைக் குறைக்கும் சேவையைத் தொடர்ந்து செய்து வந்தது. அன்னதானம், முதியோர் சேவை, குருடர் சேவை போன்ற எந்த நற்காரியத்தில் ஈடுபட்டாலும் பொருள் பற்றாக்குறை, உடல் சோர்வு என்ற துன்பத்தால் அலைக்கழிக்கப்படுபவர்கள் சசபிந்து மகரிஷியை வணங்கி நற்காரியங்களில் மனத் தளர்ச்சி கொள்ளாத உயர்ந்த நிலையைப் பெறலாம். ஸ்ரீசசபிந்து மகரிஷிக்கு தம் கைகளால் அரைத்த மஞ்சள் காப்பிட்டு அடிப்பிரதட்சணமாக வலம் வந்து வழிபடுதலால் ஜாதகத்தில் எத்தகைய நாக தோஷங்கள் (ராகு கேது தோஷங்கள்) இருந்தாலும் அத்தகையோருக்கு நல்ல திருமண வாழ்வு கைகூடும். அனைத்து நாக தோஷங்களையும் தன்னுடலில் ஏற்று கருணை புரியும் வள்ளலே ஸ்ரீசசபிந்து மகரிஷி ஆவார். திருச்சி நாகநாத சுவாமி கோயில் ஒன்றே அனைத்து நாகதோஷங்களையும் மாய்க்கும் சக்தி கொண்ட சிவத்தலமாகும். இத்தலத்தில் உழவாரத் திருப்பணிகளை மேற்கொண்டு நாக தோஷ நிவர்த்தி சக்திகளை புனருத்தாரணம் செய்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு உத்தம இறை அடியார்களுக்கு திருமணம் நிகழ்த்தி தோஷங்கள் நெருங்கிய உறவால் நிச்சயமாக ஏற்படுவது கிடையாது அவை ஒருவரின் தான்தோன்றித்தனமான, சற்குருவைப் புறக்கணிக்கும் செயலால் ஏற்படுவதே என்பதை உலகிற்கு உணர்த்தியவரும் சற்குரு வெங்கடராமன் ஆவார்கள். இந்த உண்மையை உணர்த்த உதவிய தலமே திருச்சி நாகநாதசுவாமி திருக்கோயில்.

பாதாள சொற்கழிவு பாதமலர்

திருகோளக்குடி திருத்தலம் பல அடுக்குகளாக அமைந்த ஒரு சிவத்தலம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இதில் எத்தனை அடுக்குகள் உள்ளன என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. இதையே மணிவாசகப் பெருமான், “பாதாளம் ஏழினும் கீழ் சொற்கழிவு பாதமலர்,” என்று பாதாளத்திற்குக் கீழ் சென்றாலும் அங்கு நாம் தரிசனம் செய்வதும் இறைவனின் பெருமையைத் தானே என்று எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் பெருமையையே புகழ்ந்து கூறுகின்றார். உதாரணமாக கீழ்சூரியமூலை திருத்தலத்தில் அனைத்து சூரிய மூர்த்திகளும் வந்து இறைவனை தரிசனம் செய்வதை பாஸ்கர நேத்ரம் பெற்ற ஸ்ரீபாஸ்கராச்சாரியார் போன்ற மகான்கள் தரிசனம் செய்து மகிழ்கின்றார்கள். பல பிறவிகள் இறைவனுக்காக சேவை புரிந்த ஒரு ஜப்பானிய அடியாருக்கு அவர் எடுத்த போட்டாவில் கூட இந்த சூரிய மூர்த்திகள் எழுந்தருளி அனுகிரகம் செய்துள்ளனர். அது போல திருகோளக்குடி திருத்தலமும் இந்த பிரபஞ்சத்தின் ககோளம் அதாவது இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து லோகங்களின் சக்தியையும் உள்ளடக்கிய ஆனால் மனிதர்கள் போன்ற சிற்றுயிர்களும் காணக் கூடிய ஒரு சிறு இறை வடிவமே என்பதே பொருத்தமாகும். இதையே சித்தர்கள் பூமி அந்தர வாஸ்து சுந்தரம் என்று அழகாக திருகோளக்குடி மகிமையை வர்ணிக்கிறார்கள். அதனால் திருகோளக்குடியில் நான்கு நிலைகள் இருப்பதாக நாம் முடிவு செய்ய முடியாது. நாம் அறிந்த நட்சத்திரங்கள் அஸ்வினி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்கள் மட்டுமே. உண்மையில் நட்சத்திர லோகங்களோ கோடி கோடி. சற்குரு வெங்கடராமன் அவர்களுடைய சத்சங்கத்தில் இருப்பவர்கள் இருவர் கூட ஒரே நட்சத்திர லோகத்தைச் சேர்ந்தவர் கிடையாது என்றால் சற்குருவின் சாம்ராஜ்யம் எந்த அளவிற்கு பரந்து விரிந்திருக்கும். எனவேதான் இந்த லோகங்களைப் பற்றி கூறும்போது அசுவினி, பரணி என்ற பெயர்கள் எல்லாம் திருச்சியின் STD code எண் 0431 என்று சொல்வதைப் போல்தான். உண்மையில் இந்தக் குறி எண்ணிற்குப் பின்னால் உள்ள தொலைபேசிகள் எத்தனையோ.

ஸ்ரீநாகராஜ மூர்த்தி
திருகோளக்குடி

திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தில் இந்த விந்தையை நேரடியாகவே அனுபவித்து தெரிந்து கொள்ளலாம். அங்கு எத்தனையோ அறைகள் இருந்தாலும் இரு அறைகள் ஒரே மாதிரியான வடிவத்தில் இருப்பதில்லை. ஒவ்வொரு லோகத்தைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு அறையிலும் தங்கி தங்கள் பணியை நிறைவேற்றும் வண்ணம் அமைந்திருக்கும். அதே போல திருகோளக்குடியில் முதல் படிக்கட்டில் அமர்ந்து தியானம் புரிவதால் கிட்டும் பலன் நிச்சயமாக அடுத்த படியின் தியான நிலைக்கு மாறுபாடு கொண்டதாக இருக்கும். இவ்வாறு படிக்கு படியே நிலைகள் மாறும் என்றால் திருருகோளக்குடியில் எல்லா நிலைகளையும் உணர ஒரு அடியாருக்கு எத்தனை ஆண்டுகள் ஆகும், எத்தனை பிறவிகள் தேவைப்படும். இறைவன் எல்லையற்றவன், அவன் சாம்ராஜ்யமோ கற்பனைக்கு எட்டாதது என்பதே உண்மை. திருகோளக்குடியின் ஆரம்பமாக ஸ்ரீசித்தி விநாயக மூர்த்தியும் மேல் எல்லையாக ஸ்ரீசுப்ரமணிய சுவாமியும் எழுந்தருளி உள்ளார்கள். மணி வயிறு படைத்த விநாயகர் தொப்பையிலேயே அனைத்து லோகங்களும் அடங்கும். அதனால்தான் அவர் மஹோதரன் அதாவது பெருவயிறு படைத்தவன் என்று புகழப்படுகிறார். பூரண கொழுக்கட்டைகளை இந்த பிள்ளையார் மூர்த்திக்கு படைத்து தானமளித்தால் இந்த பிரபஞ்சம் பற்றிய அறிவை எளிதில் பெறலாம். இந்தப் பிள்ளையார் மூர்த்திக்கு தோப்புக் கரணம் இட்டு வந்தால் அடங்காத காளைகளே அடங்கும் என்றால் முரட்டுப் பிள்ளைகளைப் பற்றி கேட்கவா வேண்டும். உடல் வலிமைக்கு பெயர் பெற்ற மருது சகோதரர்கள் இந்த பிள்ளையார் மூர்த்திக்கு தோப்பு கரணம் இட்டே தங்கள் உடல் வலிமையைப் பெருக்கிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் ஒரு அரசாங்கமே அவர்களைக் கண்டு நடுங்கும் மன வலிமையையும் பெற்றிருந்தார்கள். திருகோளக்குடியின் வான் எல்லையாக ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி எழுந்தருளி உள்ளார். ஒன்பதிற்கு மேல் எண்கள் கிடையாது. சுப்ரமண்ய சுவாமியை மிஞ்சிய தெய்வம் கிடையாது என்பதை நிரூபணம் செய்யும் மூர்த்தியாக மலைபோன்ற குன்றின் மேல் எழுந்தருளி உள்ளார் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி. செவ்வாய் கிழமைகளில் இவரை தரிசனம் செய்து அவித்த வேர்க்கடலையை தானமாக அளித்து வந்தால் குருவாய் வருவார் குறைகள் தீர்ப்பார்.

ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்
திருகோளக்குடி

பொதுவாக குன்றின் மேல் அருள்புரியும் தெய்வ மூர்த்திகள் எத்தகைய வாஸ்து தோஷங்களையும் நீக்கும் சக்தி படைத்தவர்களாக துலங்குகிறார்கள். திருகோளக்குடி போன்ற அனைத்து வாஸ்து சக்திகளையும் உள்ளடக்கிய ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை தரிசனம் செய்வதே கிடைத்தற்கரிய பாக்கியமாகும். செவலூர் ஸ்ரீபூமிநாதரை தரிசனம் செய்து திருகோளக்குடியில் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை தரிசனம் செய்து உரிய தான தர்மங்களை நிறைவேற்றுதால் அற்புதமான பலன்களைப் பெறலாம். இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேதகம் தோன்றலாம். செவலூர் ஸ்ரீபூமிநாதரே அனைத்து வாஸ்து தோஷங்களையும் களையும் சக்தி கொண்டவர் என்றால் எதற்காக திருகோளக்குடியில் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை தரசனம் செய்ய வேண்டும் ? கிருமி எதிர்ப்பு மருந்துகள் (antibiotics) என்பவை நோயைத் தடுக்கும் மருந்துகள்தானே. விட்டமின் மாத்திரைகள் என்பவை உடலுக்கு சக்தி வழங்குபவை தானே. அப்படியிருக்க சற்கரு வெங்கடராமன் அவர்களே விஷக் காய்ச்சலுக்கு நோய் எதிர்ப்பு மாத்திரைகளோடு ஒரு பி காம்பளெக்ஸ் மாத்திரையையும் விழுங்கும்படிக் கூறுவதேன். நோயை எதிர்ப்பது மட்டும் முக்கியமல்ல, உடலைப் பாதுகாப்பதும் அந்த அளவிற்கு முக்கியமானதே. ஒரு சாதாரண மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மாத்திரை மருந்துகளுக்கு இத்துணை வீர்யம் இருக்கும் என்றால் அனைத்தையும் கடந்த இறைவனின் சக்திகளைப் பற்றி நாம் என்ன புரிந்து கொள்ள முடியும் ? எனவே அனைத்தும் அறிந்த சற்குருமார்கள் கூறுவதை கண்ணை மூடிக் கொண்டு கடைபிடிப்பதே உத்தமமான அறிவு உடையவர்களின் செயலாகும். உதாரணமாக ஸ்வஸ்தி தீர்த்தத்தில் நீங்கள் எந்நேரமும் ஸ்வஸ்தி கிரண சக்திகளைப் பெறலாம் என்றாலும் சில குறிப்பிட்ட முகூர்த்த நேரங்களில் பொலியும் சூரிய கிரணங்கள் ஸ்வஸ்தி சக்தியுடன் திகழ்வதால் மாலை வெயில் மனிதனுக்கு என்ற பழமொழி ஏற்பட்டது.

ஸ்ரீபூமிநாதர் செவலூர்

நீங்கள் இங்கு தரிசனம் செய்யும் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி திருத்தலமும் ஸ்வஸ்தி கிரணங்களால் மெருகூட்டப்பட்டவையே. அடியார்கள் தரிசனம் செய்யும் வண்ணம் இந்த படம் அளிக்கப்பட்டு எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டாலும் அந்த தரிசனத்தின் மேன்மை பற்றி புரிந்து கொள்ளவும் நேரம் கனிய வேண்டும் அல்லவா ? "We are perennial waters !" என்று சற்குரு வெங்கடராமன் அடிக்கடி சொல்வதன் மகிமை இதுதானோ ? திருகோளக்குடி திருத்தலத்தின் ஆரம்பத்திலேயே வீற்றிருப்பவரே ஸ்ரீசத்யவாகீஸ்வரர். சுவாமியின் வேறுபெயர்கள் ஸ்ரீபொய்யமொழீசர், ஸ்ரீசோழீசுவரர் என்பதாகும். பலரும் சக்தி வாய்ந்த ஸ்ரீசத்யவாகீசரின் தரிசனத்தைப் பெறாது நேராக ஸ்ரீதிருகோளக்குடி நாதரின் தரிசனம் பெற மேலே விரைந்து விடுகிறார்கள். அஸ்திவாரம் இல்லாத கட்டிடம் எப்படி உறுதியாக இருக்க முடியும் ? சத்தியமே உண்மை, அதுவே அனைத்தையும் சாதிக்கும் என்ற பொன் வாக்கியங்களுக்கு சான்றாக நிற்பவரே ஸ்ரீசத்யவாகீச ஈசனாவார். சத்யம் என்ற ஒரே ஒரு ஆயுதத்தை மட்டுமே வைத்துக் கொண்டு மகாத்மா காந்தி அடிகள் உலகப் புகழ்பெற்ற வரலாறு அனைவரும் அறிந்ததே. சத்தியம் என்றும் நிலைத்திருப்பது என்பதற்கு உதாரணமாக கிழக்கு திசையே எல்லா திசைகளுக்கும் ஆரம்ப திசையாகவும் ஹரிச்சந்திர மகாராஜா போன்ற சத்யகீர்த்திகளே அதை ஆளும் வேந்தர்களாகவும் போற்றப்படுகிறார்கள்.

ஸ்ரீபொய்யாமொழி ஈசன்
திருகோளக்குடி

சத்யம் என்ற வார்த்தை கேட்பதற்கு எளிமையாகத் தோன்றினாலும் அதை நடைமுறையில் செயல்படுத்துவது என்பது மிகவும் கடினமான காரியமே. உதாரணமாக நீங்கள் கூறும் சூரியன் கிழக்கில் உதிக்கிறான், மேற்கில் மறைகிறான் என்பது சத்யமான வாக்குதான். உண்மையில் சூரியன் உதிப்பதும் இல்லை, மறைவதும் இல்லை என்பதே உண்மை. உண்மையில் கிழக்கிலிருந்து மேற்காக சூரியன் பவனி வருவது கிடையாது, பூமிதான் மேற்கிலிருந்து கிழக்காக சுற்றுகிறது. நம் முன்னோர்கள் பொய்யுரையாத புண்ணியர்கள் ஆயிற்றே, அவர்கள் எப்படி சூரியன் கிழக்கில் உதிக்கிறான் என்று கூறினார்கள் என கேட்கத் தோன்றுகின்றது அல்லவா ? இத்தகைய விவாதங்களுக்கு விடையளிப்பவர்களே சித்தர்கள். சித்தர்களின் வாக்கே எதற்கும் இறுதி முடிவை அளிக்கக் கூடியது என்பதால்தான் நாம் சித்தர்களின் உரையையே போற்றுகிறோம். உங்களுடைய வாக்கு பிறருக்கு தீமை பயக்காவிட்டால் அல்லது உங்களுடைய வாக்கு பிறருக்கு நன்மை புரிந்தால் அது உண்மையே. இதுவே சித்தர்களின் தீர்ப்பு. ரஜனீஷிடம் ஒரு அடியார் கைமைதுனம் செய்யலாமா என்று கேட்டபோது தாராளமாக அதனால் தவறு ஏதும் கிடையாது என்று பதிலளித்தார். சற்குரு வெங்கடராமன் அவர்களிடன் இதுபற்றி கேட்டபோது அவர் நாங்கள் இதை அங்கீகரிப்பதில்லை. அதனால் உடலும் உள்ளமும் மாசு பெறும் என்றார். ஆனால் நாங்கள் சொல்வதை அடியார்கள் கேட்க மாட்டார்கள் என்பது எங்களுக்குத் தெரியும் என்றார்கள். இரு மாபெரும் சித்தர்கள் கூறுவது உண்மைதானே. இதை விளக்குவதே சோழி தத்துவமாகும். ஸ்ரீசத்யவாகீஸ்வரரின் பெருமைகளைப் பேச ஆரம்பித்தால் அதுவே பெரிய புராணமாக மாறிவிடும் என்பதால் மிக மிகச் சுருக்கமாக சுவாமியின் பெருமைகளை விளக்குகிறோம். அடியார்கள் ஒன்றுக்குப் பலமுறை இந்த மகிமைகளைப் படித்து மீண்டும் மீண்டும் ஆத்ம விசாரம் செய்து இறைவனின், சற்குருவின் பெருமைகளை அறிந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். சத்தியம், அசத்தியம், சோழி, சோளி, ஆண், பெண் இவை அனைத்தும் ஒன்றே என்று பக்தர்கள் புரிந்து கொள்ள உதவுவதே ஸ்ரீபொய்யாமொழி ஈசனின் வழிபாடாகும். 12, 24, 36 என்று 12ன் மடங்காக சோழிகளை ஸ்ரீசத்யவாகீசரிடம் சமர்ப்பித்து இச்சோழிகளை காசி செல்லும்போது ஸ்ரீசோளி அம்மனிடம் சமர்பிப்பதே உத்தம வழிபாடாகும். இதனால் வக்கீல்கள், முகவர்கள் போன்று தங்கள் துறையில் பொய் பேச வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்படுபவர்கள் தங்களுடைய தவறுகளுக்கு ஓரளவு பிராயசித்தத்தை தேடிக் கொள்ள முடியும். அவர்கள் உண்மையாகவே தங்கள் செய்கைகளுக்காக வேண்டி இறைவனிடம் முறையிட்டால் அவர்களின் அடுத்த பிறவி நன்முறையில் அமைந்து அவர்கள் இப்பிறவியில் செய்த தவறுகளுக்கு பிராயசித்தங்களை நிறைவேற்ற துணை புரிவார். பூலோகத் திருத்தலங்கள் எந்த தலத்திலும் பிராயசித்தம் என்பதைப் பெறவே முடியாது. பிராயசித்தம் தரும் பிறவிகளைப் பெற அவை துணை புரியும் என்பதே சித்தர்கள் கூறும் உண்மையாகும்.

ஸ்ரீமரகதவல்லி அம்மன்
திருகோளக்குடி

சரி பிராயசித்தம் தரும் திருத்தலங்களை பூலோகத்தில்தான் தரிசிக்க முடியாது. புவர் லோகம், சுவர்க லோகம் என்றெல்லாம் சொல்கிறார்களே அந்த லோகங்களில் கூட இத்தகைய பிராயசித்தம் தரும் ஆலயங்களை தரிசிக்க முடியாதா என்பது பலரின் மனதில் எதிரொலிக்கும் கேள்வியாகும். உண்மையில் பிராயசித்தம் என்றாலே பூலோகத்தில் மட்டும்தான் அது கிட்டும், மற்ற லோகங்களில் பிராயசித்தம் என்ற வார்த்தைக்கு இடமே கிடையாது. அப்படியானால் பூலோக வாசிகள் எந்த அளவு கொடுத்து வைத்தவர்கள் என்பது இதிலிருந்து புரிகின்றது அல்லவா ? அதனால்தான் தேவர்கள், அசுரர்கள் ஏன் ரிஷிகள் கூட பிராயசித்தம் பெற தவம் இயற்ற பூலோகத்தையே நாடி ஓடி வருகிறார்கள். இத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீமரகதவல்லி அம்மன் என்ற நாமத்தைப் புரிந்து கொள்ளவே மனிதர்களுக்கு ஒரு சதுர்யுகம் தேவைப்படும் என்பது சித்தர்களின் கணக்கு. உதாரணமாக மரகதம் என்றால் மாணிக்கத்தின் ஒரு வகை என்று கூறினால் மாணிக்கம் எப்படி கொடியாகப் படரும் என்பது இதைத் தொடர்ந்து வரும் கேள்வி. இதை எளிமைப்படுத்தி சித்தர்கள் கூறும் பதிலே எந்த வைரத்திற்குமே இயற்கை ஒளி என்று ஒன்று கிடையாது, அனைத்து மாணிக்கங்களுமே ஒளியைப் பிரதிபலிக்கும் தன்மை உடையனவே. எனவே மனைவி என்பவள் தனக்கு என்று எந்த விருப்பத்தையோ வெறுப்பையோ கொள்ளாது கணவன் விருப்பத்தையே தன் விருப்பமாக ஏற்று நடப்பவளே உத்தமமான மனைவி ஆவாள். அதனால்தான் திருமணத்திற்குப் பின் கோத்ரம் குறிப்பிடும்போது திருமணத்திற்கு முன் தன்னுடைய தந்தை கோத்திரத்தை அனுசரித்து வாழும் பெண்மணியானவள் திருமணத்திற்குப் பின் தன் கணவனின் கோத்திரத்தையே தன்னுடைய கோத்திரமாக ஏற்று வாழும் பண்பைப் பெறுகிறாள். இவ்வாறு உத்தமர்களை சார்ந்து வாழும் பெண்களையே உத்தமிகள் என்கிறோம். அவர்களே பெய் என்றால் பெய்யும், சூரிய இயக்கத்தையும் எதிர்க்க வல்லவர்கள், நிறுத்தவல்லவர்கள். இவ்வாறு கணவனையே கண் கண்ட தெய்வமாகப் போற்றும் உத்தமிகளின் செல்வம் எப்படி இருக்கும் என்று நிரூபனம் செய்பவரே அவர்களை தரிசிப்பதாக மலைமேல் அமர்ந்திருக்கும் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி ஆவார். திருச்சி செட்டிகுளம், திருகோளக்குடி போன்ற திருத்தலங்களில் மலை மேல் முருகப் பெருமானும் அடிவாரத்தில் ஈசனும் ஒருவரையொருவர் பார்த்தபடி எழுந்தருளிய கோலம் குடும்ப ஒற்றுமையை வளர்க்கும் திருக்கோலமாகும். இத்திருக்கோலத்தை சூரிய பகவானே கண்டு மனமகிழ்ந்து தரிசனம் பெறுகிறார் என்றால் மானிடர்களுக்கு இத்தகைய மூர்த்திகள் வழங்கும் ஒற்றுமையைப் பற்றி கூறவும் வேண்டுமோ ? குடும்பத்தில் நிலவும் காதல் திருமணம், சொத்துத் தகராறு, பாகப் பிரிவினை போன்ற நிகழ்ச்சிகளால் பெற்றோர்கள் குழந்தைகளிடையே நிலவும் மன வேற்றுமையைக் களைந்து சுமுகமான உறவை ஏற்படுத்துவதே இத்தகைய மூர்த்திகளின் தரிசனப் பலனாகும். முதலில் சிவபெருமானையும் பின்னர் முருகப் பெருமானையும் வணங்கி தக்க தான தர்மங்களுடன் வழிபடுவதால் உறவுப் பகை நீங்கி குடும்ப ஒற்றுமை ஓங்கும். இத்தலத்தில் சோழிகளை சுவாமிக்குப் படைத்து அதை தான தர்மமாக அளித்தலாலும் குடும்ப ஒற்றுமை ஓங்கும், சிறப்பாக பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் துன்பங்கள் தீர்வதுடன் கணவன்மார்களின் பொய்யுரையால் குடும்பத்தில் தோன்றும் பிளவுகள் மறையும். அந்தஸ்து, செல்வம், படிப்பு காரணமாக கணவனை விடக் குறைந்த நிலையில் உள்ள மனைவிமார்கள் தாழ்வு மனப்பான்மையுடன் துலங்குவதுண்டு. இதனால் குடும்பத்தில் பல பிரச்னைகள் ஏற்படுவது இயல்பே. இவ்வாறு சுவாமிக்கு வலப்புறத்தில் அம்பாள் எழுந்தருளி இருக்கும் கோலத்தை தம்பதி சகிதமாக தரிசனம் செய்தலால் இல்லத்தில் ஒற்றுமை ஏற்பட்டு அது நல்லவறமாகத் துலங்கும். “பொய்யுரையாத புண்ணியா!” என்று தன் கணவனைப் பெருமையாக அழைப்பதில் இன்பம் காண்பவள் தாரை மட்டுமல்ல எல்லா பெண்களுமே தங்கள் கணவன் குறிப்பாக தங்களிடம் பொய் பேசாது இருத்தலையே விரும்புகிறார்கள். அத்தகைய உத்தம நிலையை கணவன்மார்கள் அடைய துணை புரிவதும் இத்தகைய வழிபாடாகும். அவ்வாறு உண்மையை மட்டுமே பேசி வாழ்ந்து நன்மையை விளைவிக்க விரும்பவோர் பத்தின் மடங்காக சோழிகளை இறைவனுக்கு சமர்ப்பித்து தானமளித்தல் நலம்.

வளர்பிறை துவாதசி திதி லட்சுமி கடாட்சத்தை அருளவல்லது என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு வறுமையில் உழலும் பலரின் துன்பத்தைத் துடைக்க சற்குரு வெங்கடராமன் அவர்களால் அருளப்பட்ட வீடியோ துவாதசி திதியில் எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவா? தாமே அரைத்த மஞ்சளை இத்தல விருட்சத்திற்கு பூசி சுத்தமான குங்குமத்தால் பொட்டிட்டு ஆதிசங்கரர் அருளிய கனகதாரா தோத்திரம் அல்லது அகத்திய பெருமான் அருளிய லட்சுமி துதியை ஓதியவாறே வளர்பிறை நாட்களில் சிறப்பாக துவாதசி, ரோஹிணி நட்சத்திர நாட்களில் இம்மரத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குதல் மிகவும் நலம். திருமணமாகாத கன்னிப் பெண்கள் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றுதலால் நல்ல வரன்கள் வாய்க்கப் பெறுவார்கள். லட்சுமி கடாட்சமும் நிரந்தரமாகும். அருகிலுள்ள சுனையிலிருந்து தீர்த்தத்தை எடுத்து இத்தல விருட்சத்திற்கு வார்ப்பதும் அற்புத வழிபாடாகும். இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றும் ஆண்களும் பெண்களும் தேக சுத்தியுடன் திகழ்தல் நலம். இதனால் நேத்ர சக்தி விருத்தியாவதால் நல்ல கண் பார்வையும் கிட்டும்.

திறந்த ஜன்னல் பிறந்த பலனைக் கூட்டும்
துறந்த கதவு விதியின் வேகத்தைக் குறைக்கும்

என்ற வரிகள் திறந்த ஜன்னல் வழியாக நட்சத்திரங்களைப் பார்த்து வழிபாடுகள் இயற்றுதலாலும் உதாரணமாக சித்தர்கள் அருளிய நட்சத்திர துதியை ஓதுதல், யாராவது பிச்சைக் கேட்டு வருபவர்களுக்கு தங்களால் முடிந்த உணவை இடுவதாலும் விதியின் வேகத்தைக் குறைக்கலாம் என்பதைக் குறிக்கின்றன. இவ்வாறு தன்னுடைய முற்பிறவியின் செய்கைகளின் பலன்களாகவே ஒரு மூதாட்டி பெற்ற தங்க மழையையே ஆதிசங்கரரின் கருணை நமக்கு உணர்த்துகிறது. தற்காலத்தில் ப்ளாட்டுகளில் வசிப்போரின் நிலையை சுட்டிக் காட்டுவதாக அமைந்துள்ளது அல்லவா இந்தப் பாடல் வரிகள். தங்களால் முடிந்தபோது திருத்தலங்களில் இறைவனை நம்பி வாழ்பவர்களுக்கு அன்னதானம் அளிப்பதும் ஏற்புடையதே.

ஸ்ரீரஜனீஷ்
திறந்த ஜன்னலா துறந்த கதவா?

9+1=10=1, 9-1=8 என்ற கணக்கில் 1 என்பது சூரியனாகவும் 8 என்பது சனிபகவானாகவும் விளங்குவதாக குறிப்பதே எண் கணிதம். இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்ட எண்கள் ஒரே மாதிரியாக இருந்தாலும் அவற்றின் இடைய உள்ள குறிகளைப் பொறுத்து சூரியன் அதன் பகை எண்ணான சனியும் தோன்றுகின்றன என்பது எண் கணிதம். இந்த எண்களை வெறும் எண்களாக பார்ப்பவர்கள் ஸ்ரீரஜனீஷ், அரவிந்தமாதா, சற்குரு வெங்கடராமன் அவர்கள். இந்த எண்களுக்கு இடையே உள்ள குறிகளையும் சேர்த்துப் பார்ப்பவர்களே சாதாரண மனிதர்கள். இதற்கு காரணம் மனிதர்கள் ஏற்றுக் கொண்டு பிறந்த முன்வினைப் பயன்களே காரணம் ஆகும். வினைகளைக் குறைக்க மகான்கள் விரும்பினாலும் அதை முழுவதுமாகக் களைய விரும்புவதில்லை. அவ்வாறு முழுவதுமாக வினைகளைக் களைய முயலும்போது அதில் தோல்வியே கிட்டும் என்பதை உலகிற்கு உணர்த்துவதாக ஏற்பட்டதே ஸ்ரீரஜனீஷ் அவர்களின் அவதாரம். ஆனால் அதே சமயத்தில் இவ்வாறு மகான்கள் அடியார்களின் வினையைத் தீர்க்க முன் வந்தாலும் சற்குரு வெங்கடராமன் போன்றவர்கள் அடியார்கள் அனுபவிக்க வேண்டிய வினைகளின் ஒரு சிறு பகுதியை மற்ற மகான்கள் அனுபவிக்க சித்தமாகிறார்கள் என்பதை அரவிந்தமாதாவின் படத்தை தரிசனத்திற்காக அளிக்காமல் அன்னையின் சிறு வயது படத்தையே ஸ்ரீஅகஸ்திய விஜய அடியார்களுக்கு அளித்து கர்ம வினைச் சுமை குறைக்க கருணை புரிந்த தன்மையை நீங்கள் கண்டு இரசிக்கலாம். ஒரு வேளை சற்குரு, மாதாவின் மற்ற படத்தை தரிசனத்திற்காக அளித்திருந்தால் ஸ்ரீதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனாரைப் போல் அவருடன் கயிலைக்குச் சென்றவர்கள் எல்லாம் தங்கள் நிலை உணர்ந்து திரும்பி பூமிக்கு வந்த கதையாகி விடும் என்ற காரணமாகவும் இருக்கலாம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருகோளக்குடி

தற்காலத்தில் சிறு வயதுள்ள குழந்தைகளே பார்வை குறைவால் கண்ணாடி அணிந்திருப்பதைப் பார்க்கிறோம். இவ்வாறு சூரிய ஒளிபடாத தீர்த்தங்களை தரிசனம் செய்து அத்தீர்த்தங்களிலிருந்து நீர் பெற்று தலவிருட்சங்களுக்கு வார்த்தல் என்பது கண் நோய்களைத் தீர்க்கும் அற்புத வழிபாடாக அமைவதுடன் சிறுவயதிலேயே கண்ணாடி அணியும் அவல நிலைக்குத் தள்ளப்படுவதைத் தவிர்க்கலாம். இவ்வாறு சூரிய ஒளி படாத தீர்த்தங்களில் இயற்றும் வழிபாடு எத்தனையோ பிறவிகளுக்குத் தொடர்ந்து வந்து சந்ததிகளுக்கு நல்ல கண் பார்வையை அளிக்கும். ஒரு முறை கிரிவலப் பாதையில் கோவணாண்டி ஒரு இளைஞன் மேல் தவறுதலாக இடித்து விட்டார். உடனே அந்த இளைஞன் கோபித்துக் கொண்டு, “என்ன கிழவா, கண் தெரியவில்லையா ?” என்று கேட்டானாம். எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்த சற்குரு வெங்கடராமன் அவர்கள், “என்ன சார் பண்றது, சூரியனுக்கே ஒளி கொடுக்கக் கூடியவர். என்றும் இளைமையோடு திகழும் உத்தமர். அவரைப் பார்த்து ஒருவன் ஏன் கிழவா கண் தெரியவில்லையா என்று கேட்டால் அடியேன் என்ன செய்ய முடியும். அடியேனோ சிறுவன். அடியேனுக்குத் தெரிந்தவர், உறவு என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர் எல்லாம் கோவணாண்டி ஒருவர்தானே.” இந்த வார்த்தைகளை சற்குரு கூறும் சமயத்தில் சற்குருவின் கண்கள் குளமாகின என்பதைச் சொல்லவும் வேண்டுமோ. சற்குரு தொடர்ந்தார், “கோவணாண்டியைக் கிரிவலப் பாதையில் பார்த்தவர் (திருகோளக்குடியில்) பெற்ற தர்ப்பண பலத்தால் அந்த அடியாருக்கு அருள்புரிய நினைத்தார் பெரிவயர். அந்த இளைஞன் ஒருவேளை, ‘ஐயா, இவ்வளவு களைத்துப் போய் என்மேல் விழுகிறீர்களே உங்களுக்கு ஏதாவது நான் செய்ய முடிமா ?’ என்று கேட்டிருந்தாலே போதும். அந்த அடியாரின் கதையே மாறிவிடும். அந்த அடியாரின் எத்தனையோ சந்ததிகள் கரையேறி விடும்,”

அனைத்தையும் கடப்பது அவசியமா ?

ஸ்வஸ்தி தீர்த்தம் இவ்வளவு சக்தி உடையது என்றால் இதில் நீராடினால் எத்தகைய பலன்கள் கிட்டும் என்று எவரும் நினைக்க வேண்டாம். இந்த சுனை தீர்த்தத்தை அன்னதானம், சுவாமி அபிஷேகம், அர்க்யம், தர்ப்பணம் போன்ற ஆண் பெண் நிலைகளைக் கடந்த வழிபாடுகளுக்கே மட்டுமே பயன்படுத்த வேண்டும். நீர் அருந்துதல், நீராடுதல் போன்ற தனிப்பட்டவர்களின் நலனுக்காக இந்த சூரிய ஒளி படா தீர்த்தத்தை பயன்படுத்தினால் அதனால் எதிர்விளைவுகளே தோன்றும் என்பதை அடியார்கள் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். இது சூரிய ஒளி படாத தீர்த்தம் மட்டுமன்று, இதில் சந்திர கிரணங்களும் நேரிடையாக பாய்வது கிடையாது.

ஸ்ரீசிவதர்மபுரீஸ்வரர்
திருகோளக்குடி

சூரியன் தந்தைக்கும், சந்திரன் தாய்க்கும் காரகர்களாக ஜாதகத்தில் அமைவதால் ஆண் பெண், கணவன் மனைவி உறவுகளைக் கடந்த தர்ப்பணாதி வழிபாடுகளுக்கு மட்டுமே ஸ்வஸ்தி தீர்த்தத்தை பயன்படுத்தும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறோம். சற்குரு வெங்கடராமன் நிறைவேற்றிய அன்னதானம் போன்ற கைங்கர்யங்களில் எல்லாம் ஆண், பெண், கணவன், மனைவி சக்திகளே ஊடுருவி நின்றன என்பதை அவருடன் பணியாற்றும் பாக்யம் கொண்ட அனைவரும் அறிந்ததே. கணவன், மனைவி சேர்ந்து இயற்றும் வழிபாடே பூரண பலன்களைக் கொடுக்கும் என்று நாம் மேலோட்டமாக நினைத்தாலும் உண்மையில் கணவன் மனைவி, ஆண் பெண் என்ற உறவு, நிலைகளைக் கடந்த வழிபாடே இறைவன் விரும்புவது என்ற உண்மையை உணர்த்துவதே சற்குரு இயற்றும் அன்னதானம் போன்ற மகத்தான காரியங்கள் எல்லாம். சற்குரு வெங்கடராமன் அவர்களின் பார்வை கூட ஆண் பெண், கணவன் மனைவியாக நின்ற அடியார்களைத் தாண்டி இறைவன் என்ற உண்மையைத் தீண்டிய அற்புதத்தை சற்குருவின் கூடவே இருந்து பணியாற்றிய அடியார்கள் புரிந்து கொள்ளலாம். திருகோளக்குடி திருத்தலத்திலும் இறைவனின் இத்தகைய பூரண அருட்கடாட்சத்தை கண்டு இரசிக்கலாம். தாயின் பூரண அனுகிரகத்தைப் பெற்ற கணபதி மூர்த்தி இத்திருத்தல ஆரம்பத்திலும் தந்தையின் பூரண அருளாசியைப் பெற்ற முருகப் பெருமான் திருத்தல உச்சியிலும் அமர்ந்து அருளாட்சி செய்கிறார்கள். எனவே அடியார்கள் தான் ஆண் என்றோ, பெண் என்றோ நினைக்கும் நிலையில் இறை வழிபாடுகளை இயற்றி, தான் பூரணமான ஆண், முழுமையான பெண் என்ற அடுத்து நிலையில் இறைவனை வழிபட்டு, இறையடியார்களுக்கு சேவை செய்து, இந்த இரண்டையும் கடந்த நிலையில் இறைவனுக்கு சேவை செய்வதே பூரண நிலையாகும் என்பதை உணர்த்துவதும் திருகோளக்குடியில் அருள்புரியும் மூர்த்திகளின் வழிபாடு ஆகும். இந்த இறை நிலையில் சதா சர்வ காலமும் திகழ்ந்தவர்களே நாயன்மார்கள் ஆவார்கள். அதனால்தான் நாயன்மார்கள் வரலாற்றைத் தெளிவாக படித்து உணர்ந்து ஏதாவது ஒரு நாயன்மார் சுட்டிக் காட்டும் வழியில் இறைவனை வழிபடுவதும் இறைவழிபாட்டில் நாம் பெறக் கூடிய குறுக்கு வழி என்று ரிஷிகேஷ் சிவானந்தா, சற்குரு வெங்கடராமன் போன்ற இறை தத்துவம் உணர்ந்த பெரியோர்கள் சிபாரிசு செய்கிறார்கள். இவ்வாறு ஆண் பெண்களின் பூரண தத்துவத்தின் வெளிப்பாடாக விளங்கும் உருவங்கள் புணரும் காட்சிகளை திருக்கோயில் கோபுரங்களில் காணும்போது அரை குறையான ஆண், பெண் நிலையில் இருப்பதால் இவர்களைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியவில்லை. அரை குறை மனதிற்கு நிறை நிலை புரியாது என்பது உண்மைதானே.இறைவனும் அவன் நாமமும் ஒன்று என்பார்கள் சித்தர்கள். அவ்வாறு இருக்கும்போது சிவன் என்னும் நாமத்துடன் சிவபெருமான் திருகோளக்குடியில் எழுந்தருளி உள்ளார் இதை விடச் சிறப்புடைய ஈசனை பூலோகத்தில் எங்காவது காண முடியுமா ? இந்த சிறப்பிற்கு மேலும் பெருமை கூட்டுவது இத்தகைய பிரம்மாண்ட ஈசன் இரண்டு ஈச மூர்த்திகளுக்கு இடையில் எழுந்தருள்வது. இரண்டு தீபங்களுக்கு இடையே விளங்கும் தீபமே குசா சக்தியுடன் பொலியும் என்றால் ஸ்ரீதிருக்கோளக்குடி ஈசனுக்கும் ஸ்ரீசத்யவாசீச ஈசனுக்கும் இடையே எழுந்தருளிய ஸ்ரீசிவதர்ம ஈச பிரானின் மகிமைகளை விளக்க வார்த்தைகள் தான் ஏது ? அத்தோடு நின்றதா இந்த ஈசனின் திருவிளையாடல். இல்லை இல்லை. இந்த ஈசனுக்கு மகிமை கூட்ட வந்தவளே ஸ்ரீசிவகாமி என்னும் அருள்நாயகி. இவ்வாறு சிவனுடன் சேர்ந்து அருள்பாலிக்கும் சிவகாமி அம்மன் இந்த பிரபஞ்சம் அனைத்திலும் ஏன் பிரபஞ்சம் முழுவதிலுமே எங்கும் கிடையாது என்றால் இந்த கருணை மிகு அன்னைக்கு ஈடாக, இணையாக எவரைத்தான் சுட்டிக் காட்ட இயலும் ?

ஸ்ரீசிவகாமி அம்மன்
திருகோளக்குடி

இறைவனுக்கு அடியவர்கள் என்ற முறையில் இத்தகைய சிறப்பு வாய்ந்த மூர்த்திகளுக்கு நாம் அளிக்கக் கூடியது இறைவன் அளித்த ஸ்ரீருத்ர பாராயணம்தானே. காரணம் அதுதானே சப்த காண்டங்களுக்கு நடுவேயும், பதினோறு அனுவாகங்களுக்கு நடுவே ஆறாவதாக அமர்ந்து, ஸ்ரீருத்ரம் என்ற மணியாக நமசிவாய என்ற பஞ்சாட்சரமாக ஒலிப்பது, ஒளி வீசுவது. ருத்ர பாராயணத்திற்கு இதை விடச் சிறந்த சிவத்தலத்தை மூவுலகிலும் காண இயலாது என்பது உண்மையே. எனவே திருகோளக்குடி சிவத்தலத்தில் குறிப்பாக ஸ்ரீசிவதர்மபுரி ஈசன் முன்னிலையில் ருத்ர பாராயணத்தை நிகழ்த்தி வேதியர்களுக்கு உரிய சன்மானத்தை அளித்து கௌரவிப்பது மிகச் சிறந்த வேத வழிபாடாக அமைகிறது. வேதம் ஓத முடியாதவர்கள் அப்பர் பெருமான் அருளிய தாண்டக தேவாரப் பதிகங்களை ஓதுவதாலும் வேதம் ஓதிய பலனைப் பெறலாம். “வேற்றாகி விணாணாகி ...” என்று அப்பர் சுவாமிகள் ஓதிய தேவாரப் பதிகத்தை இத்தலத்தில் 11 முறை ஓதுவதும் சிறப்பானதே. ஒரு முறை கோவணாண்டிப் பெரியவர் சிறுவன் வெங்கடராமனை அழைத்துக் கொண்டு திருகோளக்குடி திருத்தலத்திற்கு வந்தார். இருவரும் சேர்ந்து விடியற்காலையிலேயே படியேற ஆரம்பித்தார்களாம். நமக்கு 60, 70 படிகளாய்த் தோன்றுபவை கோவணாண்டிக்கு எத்தனை படிகளாக தோன்றினவோ ? அவர்கள் மாலையில் விளக்கேற்றும் சமயத்தில்தான் திருகோளக்குடி ஸ்ரீசிவதர்ம ஈசனையே பார்க்க முடிந்ததாம். இதற்கிடையே பெரியவர் திருகோளக்குடி மகிமையைப் பற்றியும், ஸ்வஸ்தி முகூர்த்தம் கணிக்கும் இரகசியங்கள், ஒளி ஒலி இரகசியங்கள் பற்றிய விளக்கங்களை எல்லாம் சிறுவனுக்கு எடுத்துரைத்தாராம். சிறுவனுக்கு இவை எதுவுமே புரியவில்லை என்றாலும் சிறுவனுக்கு இரண்டு விஷயங்கள் மட்டும் தெளிவாய்த் தெரிந்தனவாம். ஒன்று இக்கோயில் தரிசனத்திற்குப் பின்தான் சாப்பாடு, நாம் சாப்பிடும் வரை நாம் இத்திருக்கோயிலைச் சுற்றி அலைவதால் ஏற்படும் கால் வலியும் மறையப் போவதில்லை. ஆனால் இது பற்றி எதுவும் கோவணாண்டியிடம் வாய் திறக்கவே இல்லையாம். இத்தகைய அலைச்சலுக்குப் பரிசாக சிறுவன் பெற்ற மகிழ்ச்சியோ எல்லை இல்லாதது. ஆம் சிறுவன் ஸ்ரீசிவதர்ம ஈசனை தரிசனம் செய்தபோது பெரியவர், “ஏன்டா நைனா, உனக்கு ருத்ரம் தெரியுமா?” என்று கேட்டாராம். சிறுவன் அப்போது அனுபவித்த கால்வலி, பசி மயக்கத்தில் எதையும் கூற முடியவில்லை. பெரியவர் தொடர்ந்து, “சரி, சரி அதற்கு ஏன் ஆடு திருடின கள்ளன் மாதிரி முழிக்கிற. (இதற்கு அர்த்தத்தை விளக்கினால் அது பெரிய புராணமாக மாறிவிடும்). நம்ப அப்பர் சுவாமிதான் பாடியிருக்கிறாரே, வேற்றாகி விண்ணாகி என்று அதப் பாடு போதும்,” என்றார். சிறுவன் நின்ற இடத்தில் தலைக்கு மேல் நட்சத்திரங்கள் மின்ன ஆரம்பித்தன. உண்மையில் அவை திருகோளக்குடி ஈசனை துதி செய்கின்றன என்பதை உணர்ந்த சிறுவன் தன்னை மறந்த பெரும் பரவச நிலையில் அந்த நட்சத்திரங்களின் வழிபாட்டில் மெய் மறந்து நின்றான். ஆனால் அனைத்தும் உணர்ந்த கோவணாண்டி இந்தச் சிறு விஷயத்தைக் கூட அறியாதவரா என்ன ? எனவே அவரிடம் இந்தப் பரவச நிலை பற்றி எதுவுமே கூறாது, “வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி, வேற்றாகி விண்ணாகி நின்றாய் போற்றி”, என்று முதல் வரியின் ஒரு பகுதியையே திரும்ப திரும்ப பாடிக் கொண்டிந்தான், இல்லை வெறுமனே சொல்லிக் கொண்டிருந்தானோ தெரியவில்லை. இவ்வாறு ஒரு அரை மணி நேரம் சென்றவுடன் பெரியவர், “நைனா, போதும் வாடா, ரெண்டாவது வரிய அப்புறம் பார்க்கலாம்,” என்று கூறி சிறுவனின் கைகளைப் பற்றி இழுத்துக் கொண்டு கோவிலிக்கு வெளியே வந்து விட்டார். ஆமாம் காலை முதல் மாலை வரை படியேறி சிறுவனை அழைத்துக் கொண்டு சென்ற பெரியவர் ஒரே நொடியில் கோயிலுக்கு வெளியே வந்து விட்டாராம். சிறுவன் வெங்கடராமனுக்கு இன்று வரை அந்த இரகசியம் புரியவில்லையாம்.

இதன் பின்னால் அமைந்த சித்தோபநிஷத் தாத்பர்யங்களை சிறிதே விளக்குவோமா ? சிறுவன் காலை முதல் இரவு வரை சுமார் 12 மணி நேரம் படியேறி களைத்து விட்டான் என்று கூறினோம் அல்லவா ? படியேறி களைத்தது சிறுவன் மட்டுமல்ல, பெரியவரும் தானே. காரணம் “வேற்றாகி விண்ணாகி ...” என்ற தோத்திர வரியில் உள்ள 15 அட்சரங்களைப் பாடித்தானே சிறுவன் வெங்கடராமன் ஸ்ரீசிவதர்மருக்கு அபிஷேகம் நிகழ்த்தினான். அவனருளாலே அவன் தாள் வணங்கி என்பது போல குருவின் மூன்று எழுத்து சக்திகளே குருவாய் மலர்ந்த சீடனின் மூன்றெழுத்து சக்திகளுடன் இணைந்து சுவாதி என்ற மூன்றெழுத்து நட்சத்திர சக்தியை கிரகித்தது. ஆனால் இந்த இரகசியத்தைப் பயில ஒருவருக்கு குறைந்தது 15 பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்பது சித்தர்களின் எண் கணித சூத்திரக் கணக்கு. சித்துக்காடு சிவாலயம் இயற்கையாக இந்த நட்சத்திர ஒளியைக் கிரகிக்கக் கூடியது. இதை மற்ற நட்சத்திர ஒளியிலிருந்து கிரகித்து சிவ என்ற ஒளி ஒலி இரகசியம் கொண்டுள்ள இறைமூர்த்திகளுக்கு சமர்ப்பிக்கும் தொண்டையே இடியாப்ப சித்த பிரானும் அவர்தம் அருமைச் சீடனான சிறுவனும் திருகோளக்குடி ஸ்ரீசிவதர்ம ஈசனுக்கும் அன்னை சிவகாமிக்கும் நிறைவேற்றினார்கள் என்பதே அபிஷேக இரகசியம். இவ்வாறு 12 மணி நேரம் அன்ன ஆகாரமின்றி நீரருந்தாது இயற்றிய தவத்தின் பலனாகத்தான் 30 நிமிட நேரத்தில் இந்த ககோலத்தின் சுவாதி சக்திகளை அதற்குரிய இறைமூர்த்திகளுக்கு தாரை வார்த்து அளிக்க முடிந்தது என்பதே வேற்றாகி விண்ணாகிய இரகசியம். 12+3=15 என்பது கூறுவது எத்துணை எளிது ?

ஸ்ரீநடராஜ பெருமான்
திருகோளக்குடி

தர்மத்தில் பல வகைகள் உண்டு. ஒருவன் பத்து ரூபாய் சம்பாதித்தால் அதில் ஒரு ரூபாயை தர்மம் செய்வது ஒரு வகை. அவன் எட்டு ரூபாயை தர்மம் செய்தால் அது வேறு வகை. பத்து ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் இரண்டு ரூபாய் கடன் வாங்கி 12 ரூபாயை தர்மத்திற்காக செலவிட்டால் அதுவும் ஒரு சிறந்த தர்மமே. ஆனால் யாருக்கு எத்தனை ரூபாயை தர்மம் செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து தர்மம் செய்வதே சிவதர்மமாகும். இதை நிறைவேற்றக் கூடியவன் ஈசனும் அவன் அருளைப் பூரணமாகப் பெற்ற சித்த மூர்த்திகளே. எனவே சற்குருவின் கீழ் இயங்கும் சத்சங்கங்களில் பங்கேற்று அவர் அருளும் முறையில் அன்னதானம் போன்ற நற்கார்யங்களை இயற்றுவதால் கிட்டும் பலன்களை வாய் விட்டுக் கூற முடியாது. அத்தகைய சக்திகளை சாதாரண மக்களும் பெற அருள்புரியும் தெய்வமே ஸ்ரீசிவதர்மபுரீசர் ஆவார். எதற்காக இவ்வளவு சிரமப்பட்டு நட்சத்திர ஒளி சக்திகளை சிறுவனும் பெரியவரும் திருகோளக்குடியில் நிரவினார்கள் என்பது இப்போது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் அல்லவா ? உண்மையில் கோவணாண்டியும் சிறுவனும் எந்தத் தலத்திற்கும் வெறுமனே இறைதரிசனத்திற்காக மட்டும் செல்வது கிடையாது என்பது உண்மை. எப்படி அப்பரோ, சம்பந்தரோ ஒரு திருக்கோயிலுக்கு எழுந்தருளினால் அந்த திருத்தலம் பல ஆண்டுகளுக்கு கும்பாபிஷேகம் இயற்றியது போன்ற புனிதத்துவம் பெறுகின்றதோ அது போல இத்தகைய மகான்கள் ஒரு திருக்கோயிலுக்குள் நுழைந்தாலே அந்த திருத்தலம் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்குரித்தான புனித சக்தியைப் பெற்றுவிடும். இந்த புனிதத்துவத்தில் ஒரே ஒரு சக்தியைப் பற்றி மட்டும் இங்கு விளக்குகிறோம். ஐன்ஸ்டீன் என்ற புகழ் பெற்ற விஞ்ஞானியை ஒரு விருந்திற்காக சில பெண்கள் அழைத்திருந்தனர். அவர்கள் அளித்த விருந்தைப் பற்றி அவருடைய மனைவி கேட்டபோது அவர்கள் அனைவரும் “topless” ஆகவே விருந்து அளித்ததை விவரித்தார். அத்தோடு விடாமல் அந்த அம்மணி, “சரி சரி மேலேதான் ஒன்றும் அணிந்து கொள்ளவில்லை. இடையிலாவது ஏதாவது அணிந்திருந்தார்களா ?” என்று கேட்டாளாம். அதற்கு ஐன்ஸ்டீன், “குனிந்து பாரக்க சோம்பேறித்தனமாக இருந்தது,” என்று சொல்லி விட்டாராம். இதுவே ஒரு நிறை ஆண்மகனின் நிலை. ஒரு ஆணுக்கோ பெண்ணிற்கோ இத்தகைய நிறைவைத் தருவதும் திருகோளக்குடி ஈசனின் வழிபாடாகும். அத்தகைய நிறை நிலை அடைந்தவர்கள் வருடம் ஒரு முறை பெறும் இல்லற சுகமே அவர்களுக்கு நிறைவுடையதாக இருக்கும் என்று சித்தர்கள் தெரிவிக்கிறார்கள். அவர்கள் மற்றப் பெண்களைப் பற்றி கனவிலும் கருதமாட்டார்கள். முழுமையான ஆணிண் துணை பெற்ற லட்சுமி தேவியானவள் பெருமாளின் திருப்பாத சேவைக்கு அமர்ந்தபோது அவளை விஷ்ணு மூர்த்தி ஏறெடுத்தும் பார்க்கவில்லையாம். ஆனால் தேவியோ சுவாமியின் பாத சேவையில் தன்னை மறந்து இருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கவே இல்லையாம். இதுவே முழுமை பெற்ற ஆணின் ஸ்பரிச நிலை.
திருத்தாண்டகத்தின் முதல் வரியின் விட்டுப் போன பகுதியை சற்குரு வெங்கடராமன் அவர்கள் பாடுவதை யாரும் கேட்கும் வாய்ப்பு கிட்டவில்லை என்றாலும் அந்த வரி உணர்த்திய உண்மையை உணரும் வாய்ப்பு பலருக்கும் கிட்டியது. ஒன்பதிற்கு மிஞ்சிய எண் இல்லை சற்குருவை மிஞ்சிய தெய்வம் இல்லை என்பதற்கு நிரூபணமாக சற்குரு வெங்கடராமன் அவர்கள் 2007ம் ஆண்டு திருக்கார்த்திகை தீப உற்சவத்தின்போது திருஅண்ணாமலை தீபத்தை இதற்கு மேல் கண்களை விரிக்க முடியாது என்ற அளவிற்கு கண்களை விரித்து தரிசனம் செய்து திருஅண்ணாமலையாரை விழுங்கிக் கொண்டு இருப்பது போல் தோன்றியது. சற்குருவின் திருப்பார்வையோ, “மீளாமே ஆளென்னைக் கொண்டாய் போற்றி” என்ற வரிகளையே பாடுவதாகத் தோன்றியது. அருணாசல ஈசனின் அரவணைப்பில் மயங்கிய சற்குருவால் அதிலிருந்து மீள முடியவில்லையா இல்லை அதிலிருந்து மீள விரும்ப வில்லையா ? தாயின் அரவணைப்பில் மயங்கிய குழந்தையாகி விட்டாரோ சற்குரு ?

வாஸ்து தீர்த்தம்
மணமேல்குடி விண்ணகரம்

தீப உற்சவத்தின்போது ஒளிர்ந்த திருவிளக்குகள் நட்சத்திரங்களைப் போல் மின்னியதன் இரகசியம் இப்போது உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் அல்லவா ? அவையே திருகோளக்குடியில் சற்குரு அவர்கள் நிரவிய சுவாதி நட்சத்திர சக்திகள். சித்தர்களின் நிலையைப் பன்னிரெண்டு பிரிவாக பிரிக்கிறார்கள். இதில் நமது சற்குரு வெங்கடராமன் அவர்கள் வகிக்கும் அடிமை என்ற நிலை ஒன்பதாவதாக வருகிறது. “எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே (24 அட்சரங்கள்) அருளாளா அருணாசலா (9 அட்சரங்கள்)” என்ற சித்த மந்திரத் துதி கூறுவதாக தன்னை முழுமையாக முழுமையான ஈசனிடம் அர்ப்பணித்தவரே சற்குரு அவர்கள். இந்த அர்ப்பணிப்பிற்கு துணையாக நின்றதும் குருவருளே என்பதையே “மீளாமே ...” என்னும் வார்த்தைகளில் உள்ள மூன்றெழுத்து தத்துவம் உணர்த்துகிறது.

கந்தா மலரில் கனியும் பெருமாள்

பொதுவாக அன்பில் ஸ்ரீரெங்கநாதர் போன்ற சுதை மூர்த்திகள் மிகவும் பழைமை வாய்ந்த மூர்த்திகளாகத் துலங்குவர் என்பதால் சுதை மூர்த்திகளின் வழிபாடு மிகவும் சக்தி வாய்ந்ததாகத் திகழ்கின்றது. மண், சுண்ணாம்பிலான மூர்த்திகள், வெட்டவெளி மூர்த்திகள் இத்தகைய வான சக்திகளை, விண்ணகர சக்திகளை மிகுதியாகப் பெற்றிருப்பார்கள். இத்தகைய விண்ணகர சக்திகளை வழங்கும் பெருமாள் மூர்த்தியான விண்ணகரப் பெருமாளை மணமேல்குடியில் தரிசனம் செய்தலால் சிறப்பாக வான்வெளி வாஸ்து தோஷங்கள் நிவர்த்தியாகும். விண் நகரம் என்றால் விண்மீன்களால் சூழப்பட்ட நகரம், வான்வெளி என்பது மேலோட்டமான பொருள். உண்மையில் நட்சத்திர சக்திகளால் சூழப்பெற்ற பெருமாள் மூர்த்தியே ஸ்ரீவிண்ணகரப் பெருமாள். தங்கள் நட்சத்திரம் இன்னதென்று தெரியாதவர்களும் அல்லது தங்கள் பிறப்பில் இரகசியம் உடையவர்களும், (ஆயுள் ரேகையில் உள்ள தீவுகள் இதைக் குறிக்கும்) ஸ்ரீவிண்ணகரப் பெருமாளை தரிசனம் செய்தலால் தக்க வழிகாட்டுதலைப் பெறுவார்கள். இத்தகையோர் சுதை மூர்த்திகளை ஞாயிற்றுக் கிழமைகளில் வணங்கி உரிய தான தர்மங்களுடன் வழிபடுதலால் அவர்களுக்கு வழிகாட்ட இறைவனே முன் வந்து உதவுவான். தங்கள் குலதெய்வம் அறியாதவர்களும் இவ்வாறு சுதை மூர்த்திகளை வணங்கி நற்பலன் பெறலாம் என்பது சித்தர்களின் வழிகாட்டுதலாகும். திருகோளக்குடியில் ஸ்ரீஆறுமுகப் பெருமான் ஒருவரையொருவர் பார்த்த ஸ்ரீவள்ளி தெய்வானை மூர்த்திகளுடன் எழுந்தருளி உள்ளார். இவ்வாறு எழுந்தருளிய முருகப் பெருமானை நாற்றிசை மூர்த்திகள் என்று அழைப்பதுண்டு.

ஸ்ரீமுருகப் பெருமான்
திருகோளக்குடி

அத்வைத தத்துவத்தின் சாரமாக விளங்குவதே இத்தகைய நாற்றிசை மூர்த்திகள் வழிபாடாகும். இலஞ்சி போன்ற பண்டைய தலங்களிலும் இத்தகைய மூர்த்திகளைத் தரிசித்து பலன் பெறலாம். முருகன், வள்ளி, தெய்வானை என்ற மூன்று மூர்த்திகளுடன் இந்த மூர்த்திகளை வணங்குபவரும் ஒரு மூர்த்தியாக, தெய்வமாக கருதப்படுவதால் இது நாற்றிசை மூர்த்தி எனப் பெயர் கொண்ட அத்வைத வழிபாடாகும். ரஜனீஷ், மாதா அமிர்தானந்தா மயி போன்ற அத்வைதிகள் பெரிதும் வலியுறுத்தும் இத்தகைய வழிபாட்டை அனைவரும் ஒத்துக் கொள்வதில்லை. அத்தகையோர் முருகப் பெருமானை தன்னுடைய குடும்பம், சுற்றம் விளங்க துணை புரியும் தெய்வமாக ஏற்று வழிபடுவதும் ஏற்புடையதே. இந்த வழிபாட்டில் ஒவ்வொரு மூர்த்தியும் ஒவ்வொரு திசையைப் பார்க்கிறார்கள் என்பதே இந்த வழிபாட்டின் சிறப்பு அம்சமாகும். எனவே நான்கு தீபங்கள் ஒன்றையொன்று பார்க்கும் வண்ணம் 12 தீபங்களை ஆயுத எழுத்து வடிவில் ஏற்றி வழிபடுவது ஒரு சிறந்த வழிபாடாகும். இதனால் கணவன், மனைவி என்ற உறவில் அன்பு பிணைப்பு ஏற்படுவதுடன் தாய், தந்தை, அத்தை, மாமா, சகோதரன், சகோதரி என்று உறவு முறைகள் ஒற்றுமையுடன் சிறந்து விளங்கும். அல்லது ஆயுத எழுத்து வடிவில் ஒன்பது தீபங்களை மூன்று மூன்றாக ஏற்றி வழிபாடு இயற்றுவதும் சிறப்பே. அவ்வாறு ஒன்பது தீபங்களை ஏற்றும்போது அந்த தீபங்கள் அனைத்தும் ஸ்ரீமுருகப் பெருமானை நோக்கிய வண்ணம் பிரகாசித்தல் சிறப்பு. ஒன்பது செவ்வாய் பகவானின் அதிதேவதையாக துலங்கும் முருகப் பெருமானுக்கு உரியது என்பது நீங்கள் அறிந்ததே. இவ்வாறு ஆறிற்கும் ஒன்பதிற்கும் உள்ள உறவை, தொடர்பை அறிந்து கொள்தலே பக்தி மார்கத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். மூலாதாரத்தில் இருந்து எழும் குண்டலினி சக்தியானது ஆறு சக்கரங்களைப் பிளந்து கொண்டு செல்கையில் உடம்பில் 30000 டிகிரி உஷ்ணம் ஏற்படுகிறது. இதுவே ஆறிற்கும் ஒன்பதிற்கும் உள்ள எளிய தொடர்பு. உஷ்ணத்திற்கு அதிபதி செவ்வாய் பகவான். மற்ற அம்சங்கள் தக்க குரு மூலமாய் தெரிந்து கொள்ள வேண்டியவையே.
நவிலு, புகழினி போன்ற பெயர்கள் மூன்று உயிர் எழுத்துக்களைக் கொண்டு முடிவதால் இத்தகைய பெயருடையவர்கள் நான்காவதான ஆத்ம தீபத்தைச் சேர்த்து நான்கு நான்கு தீபங்களை ஏற்றி இத்தல முருகப் பெருமானை வழிபடுதல் சிறப்பு. அழகு, பரிவாதிணி போன்ற இரண்டு உயிரெழுத்துக்களில் முடியும் நாமத்தைக் கொண்டவர்கள் அத்துடன் ஆத்ம தீபத்தைச் சேர்த்து மூன்று மூன்று தீபங்களாக ஏற்றி முருகப் பெருமானை வழிபடுதல் சிறப்பு. இத்தகைய வழிபாடுகள் பெற்றோருக்கு அடக்கத்துடன் திகழும் அழகை அளிப்பதுடன் தங்கள் துறைகளில் முன்னேறும் வாய்ப்பையும் நல்கும். முருகப் பெருமான் சிவனுடன் கோபம் கொண்டு பழநியம்பதியில் எழுந்தருளியபோது அன்னை பார்வதியின் மூலம் தந்தையின் திருவிளையாடலை அறிந்து கொண்டார் அல்லவா? அதனால் தன்னுடைய கோபம் தணிந்து தன் தந்தையை மனமார வணங்கினார். அதனால் தண்டம் ஆயுத பாணியாக மாறினார். எனவே தண்டாயுதபாணி புகட்டும் நெறி நீங்கள் அறிந்ததே. எவர் ஒருவர் தன்னுடைய தந்தைக்கு (விட்டால் கீழே விழும் தண்டத்தைப் போல) மனதார வணக்கம் தெரிவிக்கிறாரோ அவரை உலகமே வணங்கும் என்பதே முருகப் பெருமானின் ஆயுதமான தண்டம் புகட்டும் பாடமாகும். இவ்வாறு வணக்கம், பணிவு, அன்பு என்ற தண்டங்களையே ஆயுதங்களாக பயன்படுத்தி சற்குரு வெங்கடராமன் நிறைவேற்றிய சாதனைகள் உலகறிந்தவையே.

ஸ்ரீசண்டேச மூர்த்தி
திருகோளக்குடி

ஸ்ரீதண்டாயுதபாணி மூர்த்தி
திருகோளக்குடி

திருஅண்ணாமலையில் உண்ணாமுலை அம்மன் அருள்புரியும் உண்ணாமலை மண்டபத்திற்கு எதிரே அமைந்துள்ளதே சோமாஸ்கந்த தரிசனமாகும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை குடும்பத்தில் திகழ்வதால் அது எத்தகைய பூஞ்சோலையாக மாறும் என்ற தத்துவத்தை உலகிற்கு உணர்த்தும் ஒப்பற்ற தரிசனம் இதுவே. தாய், தந்தையர், மகன், மகள் என்று மட்டுமல்லாது குடும்பத்தில் உள்ள அனைவரும் முதலாளிகள், தொழிலாளிகள், அரசியல் துறையில் உள்ளவர்களும் பெற வேண்டிய அற்புத தரிசனம் இது. என்னதான் ஒரு நாட்டை ஆளும் மன்னனாக இருந்தாலும் அவன் வீட்டில் தந்தைதானே. மனைவிக்கும் குழந்தைக்கும் உரிமை உள்ளவன்தானே. இவ்வாறு பார்வதி பரமேஸ்வர மூர்த்தி இடையே அமர்ந்த ரிஷி, முருகப் பெருமான் தன் பெற்றோர்கள் இடையே அமர விரும்பியபோது தன்னுடைய இருப்பிடத்தை முருகப் பெருமானுக்கு மனமவமுவந்து அளித்தார். அதனால் முருகப் பெருமான் சோமாஸ்கந்தரானார். தன்னுடைய இருப்பிடத்தை விட்டுக் கொடுத்த அந்த மகரிஷி சோமாஸ்கந்த ரிஷியானார். அற்புதமான இந்த விட்டுக் கொடுக்கும் புராணம் தொடர்ந்த இடமே திருகோளக்குடி திருத்தலமாகும். ஆமாம் இங்கு விட்டுக் கொடுத்தவர் யார் ? ஆமாம், உங்கள் யூகம் சரியே, ஏற்கனவே விட்டுக் கொடுத்தலால் கிட்டும் சுகத்தை உணர்ந்த பழநிப் பதியான சுப்ரமண்ய சுவாமிதான் தன்னுடைய இடத்தை தந்தையால் நிராகரிக்கப்பட்ட சண்டேச மூர்த்திக்கு விட்டுக் கொடுத்துவிட்டு ஆனால் புத்திசாலித்தனமாக தந்தையில் நிழலில் ஒதுங்கி விட்டார். இந்த விட்டுக் கொடுத்த மகாத்மியத்தால் அவர் சண்டேசரை விட உயர்ந்த இடத்தில் குடி கொண்டார் என்பதையும் திருகோளக்குடியை நேரே தரிசனம் செய்பவர்களுக்கே புரியவரும். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்றார் ஏசுநாதர், எந்த வசவையும் நூறு முறை ஏற்பேன் என்று விட்டுக் கொடுத்தலில் வேந்தனாகத் துலங்கினார் கீதை நாயகன். ஆனால், சற்குருவோ, “அதெல்லாம் வேண்டாம் ராஜா, மூன்றே முறை ஒவ்வொருவருக்கும் விட்டுக் கொடு, அது போதும்,” என்கிறார்.

திருகோளக்குடியில் வருடத்தில் எட்டு நாட்கள் மட்டுமே வாஸ்து சக்திகள் முகிழ்க்கும் சமயத்தில் தோன்றும் மலரே கந்தா மலர் என்பதாகும். முருக பக்தர்களுக்கும் வாஸ்து உபாசகர்களுக்கும் வாஸ்து நாட்களில் கிட்டும் உன்னத தரிசனமே கந்தா மலர் தரிசனமாகும். ஸ்வஸ்திக் தீர்த்தம் போல் அல்லாது சூரிய சந்திர மூர்த்திகளின் ஒளியில் வெட்ட வெளியில் சிறப்பாக திருகோளக்குடி திருத்தலத்தில் மலை உச்சியில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானை சுற்றி இம்மலர்களின் தரிசனம் கிட்டும். வாஸ்து தினங்களில் மூன்று மூன்றாக தேங்காய் எண்ணெய் தீபங்களை திருகோளக்குடி திருத்தலத்தில் ஏற்றி வழிபடுதல் சிறந்த வாஸ்து வழிபாடாக அமைவதுடன் உறவுப் பகை, சுற்றம், அலுவலகம், நண்பர்கள் இடையே தோன்றும் எவ்வகை பகை உணர்வையும் தடுக்கும் சக்தி பெற்றதாகும் இந்த கந்தா மலர்கள். கொடுத்த நியாயமான கடன்கள் வசூலாகவும், விஷக்காய்ச்சல்கள், விஷக்கடி வேதனைகள் நீங்கவும் இத்தகைய தேங்காய் எண்ணெய் தீப வழிபாடுகளை செவ்வாய்க் கிழமைகளில் ஏற்றியும் பயன்பெறலாம். கந்தா மலர்களின் நிறம் செவ்வாய் பகவானுக்கு உகந்த நிறமே என்பதும் இந்த கந்தா மலர்களின் சிறப்பாகும். ககோள சக்திகளை முழுமையாகப் பெற்றவையே தேங்காய் வித்துக்கள். பூகோளப் பாடங்களில் தேர்ச்சி பெறவும், வானவியல், ஜோதிடம் போன்ற துறைகளில் சிறப்பு பெறவும் இத்தகைய வழிபாடுகள் பயன் தரும். அழுக்கடைந்து அல்லது கந்தலாகி யாருக்கும் பலனளில்லாத ஆடையையே கந்தலாடை என்கிறோம். பலரும் தங்களுடைய வாழ்க்கை இத்தகைய கந்தல் வாழ்க்கையாக மாறி விட்டதாக நினைத்துக் கொள்வது உண்டு. அத்தகையோரும் வாஸ்து நாட்களில் குன்றின் மேல் துலங்கும் குகனை வழிபட்டு வருதலால் அற்புத பலன்கள் பெற்று வாழ்வார்கள் என்று திருகோளக்குடி தல புராணம் பறை சாற்றுகிறது. குப்பைமேட்டையும் குணக் குன்றாக மாற்றுவான் குமரன் ! நம்பிக்கையே மாமருந்து.

ஸ்ரீஆடலரசர்கள் திருகோளக்குடி

பூமியில் வாழும் உயிர்கள் அனைத்தும் சூரிய கோளத்திலிருந்தே தோன்றியவை என்றாலும் சூரிய பகவானின் ஒளிக் கதிர்களைப் பற்றி அறிந்தவர்கள் ஒரு சிலரே. சூரியனிடமிருந்து வரும் கதிர்களில் அருணன் முதலாக ஆதிபுதன் ஈராக உள்ள ஏழுகதிர்களே பூமியை அடைகின்றன. இந்த ஏழு கதிர்களில் துலங்கும் மித்ரன் முதலான 12 சக்திகளை கிரகிக்கும் வல்லமை பெற்றவர்களே சூரிய பகவானைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். இந்த இரசியங்களைப் பெறும் முறையாகவே சற்குரு வெங்கடராமன் அளித்துள்ள சூரிய நமஸ்கார வழிபாடு அமைந்துள்ளது. இதற்கு முதற்படியாக அமைவதே அக்னியில் சுட்டு தயாராகும் சப்பாத்தி, சோளப்பொறி போன்ற உணவுகளை தானமாக அளிப்பதாகும். தேவதா மூர்த்திகளை ப்ரீதி செய்வதற்காக சுத்தமான பசு நெய்யையும் அவல், நெல்பொரி போன்ற பொருட்களையும் அக்னியில் இட்டு ஆஹூதியாக அளிக்கிறோம். இந்த ஹோம வழிபாட்டிற்கு இணையாக தற்காலத்தில் அமைவதே மேற்கூறிய அன்னதானமாகும். இதன் அடுத்த கட்டமாக அமைவதே மற்ற கோள்கள் நட்சத்திரங்களிலிருந்து வரும் ஒளிக் கதிர்களை அறிந்து அதை பூலோக ஜீவன்களின் நன்மைக்காக பயன்படுத்தும் முறையாகும். திருகோளக்குடியைச் சுற்றியுள்ள பாறைகள் வெவ்வெறு வடிவங்களில் தோன்றுபவையாக அமைகின்றன அல்லவா ? இந்த கற்களில் எல்லாம் அந்தநதந்த கோள்களிலிருந்து வரும் ரிஷிகள் அமர்ந்து தியானம் இயற்றி தங்கள் தியானத்தின் ஒரு பகுதியை பூலோகவாசிகளுக்கும் அளித்துச் செல்கின்றனர். இதை அவர்கள் பெறுவதற்காகவும் ஸ்ரீஅகத்திய பிரான் கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வந்து ஸ்ரீதிருக்கோளக்குடி நாதருக்கு தினமும் அபிஷேகம் நிறைவேற்றுகிறார் என்பது நாம் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியமாகும். திருகோளக்குடியில் சுதையில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜ மூர்த்திகள் அல்லாது பஞ்சலோக விக்ரஹங்களாகவும் சிவசக்திகள் எழுந்தருளி உள்ளனர். இதற்குக் காரணம் நம்முடைய அபிலாஷைகளே. ஒரே அண்ணாமலையைச் சுற்றி ஐந்து லட்சம் பேர் கிரிவலம் வந்தாலும் அவர்களின் பக்தி நிலை, நம்பிக்கையைப் பொறுத்து அருணாசல ஈசனின் அருட்கடாட்சம் அவர்களுக்குக் கிடைப்பதைப் போல எத்தனை விதமான ஆடலரசர்கள் திருகோளக்குடியில் எழுந்தருளி இருந்தாலும் அவரவர் பக்திநிலையைப் பொறுத்து இவர்களின் அனுகிரகமும் கனியும் என்பதே உண்மை. தேவலோகத்திலுள்ள கங்கையை பகீரதன் பூலோகத்திற்கு கொண்டு வந்தான் என்று கூறுகின்றோம். அப்படியானால் மற்ற லோகங்களில் கங்கை கிடையாதா என்ற கேள்வி எழலாம். உண்மையே. பூலோகத்திலுள்ள கங்கையை வேறு எந்த லோகத்திலும் காண முடியாது என்பதால் மற்ற லோகங்களிலிருந்து 200, 300 வருடங்கள் பறக்கும் தட்டுகளில் பறந்து வந்து கங்கை தீர்த்தத்தில் ஒரு சிறிதளவே எடுத்துச் சென்று தங்கள் லோகத்தில் உள்ள நீர்நிலைகளில் அந்த கங்கை தீர்த்தத்தை சேர்த்து அந்த லோகங்களில் தீராத வியாதிகளை எல்லாம் தீர்க்கிறார்கள். அதே போல திருக்கார்த்திகை தீபத் திருநாள் அன்று திருஅண்ணாமலை தீப சக்தியை ஏந்திச் சென்று மற்ற லோகங்களில் பிரகாசிக்குச் செய்யும் தீப தேவதைகளும் உண்டு. அதே போல திருகோளக்குடியில் ஸ்வஸ்தி தீர்த்தத்தில் சொட்டும் தேன் அபிஷேகத் துளிகள் சுவாமிக்கு அபிஷேகிக்கப்படும்போது அதை பிரசாதமாகப் பெற்று அந்தந்த லோகங்களுக்கு எடுத்துச் செல்லும் தீர்கநாடி தேவதைகளும் உண்டு. இவை எல்லாம் திருகோளக்குடியில் நிகழும் கண்ணுக்குத் தெரியாத அற்புதங்கள். எனவே சுத்தமான தேனை திருகோளக்குடி பழநி ஆண்டவருக்கு சமர்ப்பித்து அதனால் திருகோளக்குடி நாதருக்கு அபிஷேகம் இயற்றி கிட்டும் பிரசாதத்தால் தீராத நோய்களும் தீரும் என்பது கண்கூடு. எதற்காக தேனை பழநி ஆண்டவருக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்ற கேள்வி எழலாம். ஸ்வஸ்தி தீர்த்தத்தில் சொட்டும் தேன் செவ்வேல் வடிவத்தில் இருப்பதும் ஒரு காரணமாகும்.

ஸ்ரீதலவிநாயகர் திருகோளக்குடி

ஸ்ரீதலவிநாயகர் இத்தலத்திற்கு உரிய விநாயகர் என்று மேலோட்டமாக பொருள் கொண்டாலும் தல மூர்த்திகள், க்ஷேத்ர பாலகர்கள் என்பவர்கள் தன்னிலையை தானறிய வழிகூறும் தள மூர்த்திகளே. தன்னிலை. தான் இருக்க வேண்டிய தளத்தை தெளிவுபடுத்துபவர்களே இத்தகைய மூர்த்திகள் ஆவார். இன்று வீட்டில், அலுவலகத்தில், ஏன் சமுதாயத்தில் தோன்றும் பல பிரச்கனைகளுக்கும் காரணம் தன்னிலையை பலரும் உணர்ந்து கொள்ளாததுதான். இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். ஒரு முறை சற்குரு வெங்கடராமன் அவர்கள் திருச்சியில் ஒரு அடியார் இல்லத்திற்கு வருகை புரிந்தார்கள். அவர்கள் உணவருந்த என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென்று அவருடன் நெருங்கி இருந்த அடியார்கள் அவ்வீட்டு உரிமையாளருக்கு தெரிவித்தனர். அதைக் கேட்டுக் கொண்டிருந்த சற்குரு அவர்கள் அனைவர் முன்னிலையிலும், “சார், இவர்கள் கூறுவது எதையும் நீங்கள் கேட்க வேண்டாம். இந்த வீட்டைப் பொறுத்தவரை நீங்கள்தான் ராஜா, உங்கள் மனைவிதான் ராணி. குழந்தைகளைப் எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது நீங்கள் முடிவு செய்ய வேண்டியது. விருந்தினருக்கு என்ன உணவு அளிப்பது என்பதை இந்த வீட்டு ராணிதான் முடிவு செய்ய வேண்டுமே தவிர இதில் அடியேன் மனைவிக்குக் கூட எந்தவித உரிமையும் இல்லை,” என்று அவரவர் நிலையில் ஒருவர் எப்படி செயல்பட வேண்டும் என்பதை தெளிவாக உபதேசித்தார்கள். இது கேட்பதற்கு மிகவம் எளிமையாகத் தோன்றினாலும் இதை நடைமுறையில் செயல்படுத்த உதவக் கூடியதே திருகோளக்குடி தலவிநாயக வழிபாடு ஆகும். “நான் யார்?” என்பதே ஆன்மீகத் தேடலின் ஆரம்பம் என்பதில் எந்த வித சந்தேகமும் கிடையாது. இந்த தேடலுக்கு ஆன்மபலம் கூட்டுவதே இத்தல விநாயக வழிபாடு ஆகும். தானே அனைத்திற்கும் ஆணி வேராய் தலைவனாய் இருப்பதை உணர்த்தவே ஆதி திசையான கிழக்கு திசை நோக்கி தலவிநாயகர் எழுந்தருளி உள்ளார் என்று உணர்வதும் தேடலின் சீரிய ஆரம்பமாகும். இவ்வாறு தன்னிலையைத் தெளிவாக உணர்ந்தவர்களே பிறருக்கு உதவு முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவரே நம் சற்குரு ஆவார்கள். மேற்கூறிய வீட்டிற்கு சற்குருவைக் காண பலரும் வந்திருந்தனர். அதில் ஒரு அடியார் சரியாக நடக்கக் கூட முடியாத ஒரு சிறு குழந்தையையும் அழைத்து வந்திருந்தார். எல்லோருக்கும் இலையில் கேசரி பரிமாறப்பட்டது. அனவைரும் கேசரியை உண்ணத் தொடங்கினர். ஆனால் சற்குருவோ ஒன்றும் கூறாது கேசரியை உண்ணாமல் இலையிலேயே வைத்துக் கொண்டிருந்தார். யாருக்கும் ஒன்றும் புரியவில்லை. அந்த வீட்டு உரிமையாளரும் ஒன்றும் புரியாமல் சற்குருவைப் பார்த்தபோது சற்குரு, “பொருத்திருந்து பார்,” என்பது போல் கண் சாடை காட்டவே அவரும் அமைதியாக இருந்த விட்டார். சற்று நேரம் கழித்து அடியார் மடியில் அமர்ந்திருந்த குழந்தை மெதுவாக தடுமாறி நடந்து வந்து சற்குருவின் இலையைக் கேசரியோடு சேர்த்து எடுத்துக் கொண்டு வந்து தடுமாறி நடந்து தன்னுடைய தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு கேசரியைத் தரையில் வைத்து தன்னுடைய தந்தையிடம் தனக்கு ஊட்டி விடுமாறு சைகை செய்தது. சற்குரு உட்பட இந்த காட்சியைக் கண்டு இரசித்துக் கொண்டிருந்த அனைவரும் தங்களை மறந்து சிரித்து விட்டனர். சற்குரு புன்சிரிப்புடன், “ ....க்காக வைத்த கேசரியை அடியேன் எப்படி சார் சாப்பிட முடியும் ?” என்று தன்னை அறிந்த தகைமையை அனைவருக்கும் தெளிவுபடுத்தினார் சற்குரு. நிறத்தில் மஞ்சளும், ருசியில் இனிப்பும் குருவிற்கு உரித்தானவை. அதனால் வெங்கடராம பெருமாள் தன் குருவான தாயுமான ஈசனுக்கு அந்த மஞ்சள் கேசரியைப் படைத்தாரோ ? மகப்பேறு பார்க்க எழுந்தருளியதால் தாயான ஈசனைப் போல குழந்தைக்கு தாயைப் போல கேசரியை ஊட்டியதால் அந்த அடியார் தாயும் ஆனாரா ? சற்குருவையே இறைவனாக வரித்தாக நினைத்து அந்த வீட்டு அடியார் இறைவனுக்கு நைவேத்யம் செய்யாமல் கேசரியை ஸ்ரீவாத்யாருக்கு அளித்து விட்டார் என்ற இரகசியங்கள் பின்னால் தெரிய வந்தன. இவ்வாறு அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய் ஆனந்த வெள்ளமாய் எழுந்தருளிய ஞான தீபமே சற்குரு வெங்கடராமன் ஆவார்கள்.

ஸ்ரீதாயுமான ஈசர் திருக்குளம்

தாயுமான ஈசன் நிகழ்த்திய செட்டிப் பெண் மருத்துவம் ஏதோ ஒரு காலத்தில் நிகழ்ந்த அற்புதம் என்று எவரும் எண்ண வேண்டாம். அது இன்றும் என்றும் நடந்துவரும் அற்புதம் என்பதை நிரூபித்துக் காட்டியவரே சற்குரு வெங்கடராமன். சற்குருவை நம்பி திருமணம் புரிந்து கொண்ட அடியார் ஒருவரின் மனைவி மகப்பேற்றிற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மருத்துவர்களோ அந்தப் பெண்ணிற்கு அறுவை சிகிச்சை மூலமே குழந்தையே எடுக்க முடியும் என்று கூறி விட்டனர். சற்குரு அவர்களைக் கேட்டபோது அவர் வழக்கம்போல் மருத்துவர்களின் முடிவிற்கே விட்டுவிடுமாறு கூறிவிட்டார். ஆனால் குறித்த நேரத்திற்கு முன்னரே எந்தவித சிரமமுமின்றி ஆண் குழந்தை பிறந்து விட்ட செய்தியை அறிந்த அந்த அடியார் சற்குருவிடம் இது பற்றித் தெரிவிக்கவே, “அப்படியா கண்ணு, அது குரு கருணை,” என்று மட்டுமே தெரிவித்தார். ஆனால் அருகிலிருந்த அடியாரிடம், “இந்த பிரசவத்திற்காக அடியேன் பட்ட சிரமம் வேறு யாருக்கும் தெரியாது. குழந்தை பிரவசித்திற்காக தாயின் அடி வயிற்றில் உள்ள தசைகளை ஒவ்வொன்றாக சரியான வரிசையில் சுருக்கி விரித்து குழந்தையை வெளியே கொண்டு வர வேண்டியிருந்தது,” என்றார். எனவே சற்குருவை நம்பும் ஒவ்வொரு அடியாரின் பிரசவத்தையும் தாயமானவராக அவரே நிகழ்த்துகின்றார் என்பதே உண்மை. சற்குருவால் மகப்பேறு பார்க்கப்பட்ட அந்த உத்தம குழந்தை இன்று தன் தாய் தந்தையரை காரில் வைத்து இதே தாயுமான ஈசனை பவனி வருகிறது என்றால் அதற்கு காரணம் சற்குருவே என்பதை நினைத்து மகிழ்பவர்கள் அதன் பெற்றோர்கள் மட்டுமல்ல, நீங்களும்தானே.

அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி !
தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி !!

ஷீரடி சாய்பாபா இந்துவா முஸ்லீமா என்று அவர் ஜீவ சமாதி கொள்ளும்வரை இந்த வினா தொடர்ந்ததால் விடிந்த பின் என்னுடைய சமாதியை தோண்டிப் பாருங்கள் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்கும் என்ற அசரீரி ஒலிக்கவே அனைவரும் பேராவலுடன் அடுத்த நாள் பாபாவின் சமாதியை அடைந்து பார்த்தால் அங்கே ஒரு வெள்ளை ரோஜா ஒலி வீசிக் கொண்டிருந்ததாம். இதையே நம் சற்குரு வெங்கடராமன் அவர்களும் பழைய புகைப் படத்தின் மூலம் தெரிவிக்கிறார்கள். சற்குரு தன்னுடைய வலது குரு விரலையும் புத விரலையும் நீட்டிய நிலையில் இடது கையை இல்லை என்று கூறும் நிலையில் வைத்திருப்பார்கள். அதாவது பரம்பொருளை உன்னுடைய “அறிவால் பார்க்க” முயலாதே என்பதே இதன் பொருள். அறிவு விரலை மடக்கி விட்டால் குரு விரல் தனிக்து இறைவனை சுட்டி நிற்கும். இதுவே ஷீரடி சாய்பாபாவின் ஞான முத்திரை. இந்த முத்திரையை நினைவு கூர்ந்தால் பிரளயத்திலும் காக்கப்படுவார்கள் என்பதே சற்குருவின் அருளுரை.
மூன்று கணுக்கள் கூடிய அருகம்புற்களால் முடிச்சு ஒன்றிற்கு ஒன்பது புற்கள் இருக்கும் வண்ணம் முடிச்சுகள் போட்டு இவ்வாறு 21 முடிச்சுகள் கொண்ட அருகம்புல் மாலையை இத்தல விநாயகருக்கு சூரிய உதயத்திற்கு முன் அணிவித்து வழிபடுதல் சிறப்பாகும். இத்தகைய வழிபாடுகளை மற்ற கணபதி மூர்த்திகளுக்கு இயற்றி வழிபடலாம் என்றாலும் திருகோளக்குடி தல விநாயகருக்கு இவ்வாறு சூரிய உதயத்திற்கு முன் இயற்றும் வழிபாட்டின் சிறப்பு பற்றி ஆத்ம விசாரம் செய்து உணர்ந்து கொள்தலே சிறப்பாகும். அதுவே தன்னை உணரும் தகைமைக்கு வழிகோலும். ஆதிவாரமான ஞாயிற்றுக் கிழமை, சதுர்த்தி, சதுர்த்தசி, வாஸ்து நாட்களில் இத்தகைய வழிபாடுகளை நிகழ்த்துதல் சிறப்பாகும். ஸ்ரீதிருகோளக்குடி நாதர், ஸ்ரீஆத்மநாயகி அம்மன், ஸ்ரீதலவிநாயகர் இவர்கள் அடியார்கள் பிரதட்சணம் வரும் முறையில் எழுந்தருளவில்லை என்பதும் இத்தலத்தின் சிறப்பாகும். ஒருவர் தன்னுடைய ஆத்மாவை எப்படி வலம் வர முடியும் என்பதே ஸ்ரீஆத்மநாயகி அம்மன் அருளும் வினா. அப்படி ஒரு வேளை தான் அனைத்து உயிர்களிலும் அனைவரும் தன்னிலும் பிரகாசிப்பதாக காண்பவர்கள் திருகோளக்குடி திருத்தலத்தை வலம் வருதல் சிறப்பு. இதற்கு பௌர்ணமி, சிவராத்திரி, ஒன்பதின் சக்தி நிலவும் நாட்கள் சிறப்பு என்றாலும் திருகோளக்குடி திருத்தலத்தை எந்நாளிலும் எந்நேரமும் வலம் வரலாம், பயன் பெறலாம். இதில் எவ்வித ஐயப்பாட்டிற்கும் இடமில்லை. திருகோளக்குடி திருத்தலத்தில் பெரும்பாலான இறை மூர்த்திகள் கிழக்கு நோக்கி உதய மார்த்தாண்ட சக்திகளுடன் துலங்குவதால் உதய மார்த்தாண்ட சக்திகள் துலங்கும் ஞாயிற்றுக் கிழமை உதய நேரமும் குருமங்கள சக்திகள் பொலியும் செவ்வாய்க் கிழமை உதயநேரமும் கிரிவலத்திற்கு உகந்தவை. சிறப்பாக வரும் மார்கழி மாதப் பிறப்பு தினம் ஞாயிற்றுக் கிழமை நவமி திதியின் 60 நாழிகையுடன் திகழ்வதால் இந்நாளில் நிகழ்த்தும் திருகோளக்குடி கிரிவலமும் சர்க்கரை பொங்கல் தானமும் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறாகும்.

ஸ்ரீபைரவ மூர்த்தி
திருகோளக்குடி

நெல்லிகளில் பல வகை உண்டு. அத்தகைய நெல்லிகளில் பைரவ நெல்லி ஒரு வகை நெல்லியைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். சாதாரணமாக வாரம் ஒரு முறை நெல்லிக்காயை ஏற்றுக் கொண்டாலே உடம்பிற்கு தேவையான சக்தி கிடைத்து விடும். திருகோளக்குடியில் விளங்கும் நெல்லிக்காய் பைரவ நெல்லி வகையைச் சேர்ந்தது. கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ண பகவான் அனைவரும் தங்கள் மனத்தில் மறைந்து வைத்து இதுவரை எவரிடம் கூறாத உண்மைகளை இந்த நெல்லிக்காய் மரத்திடம் கூறும்படி சொன்னார் அல்லவா ? 12 வருடத்திற்கு ஒரு முறையே அந்த நெல்லி மரத்திடமிருந்து ஒரே ஒரு நெல்லிக்காய் தோன்றும். அந்த நெல்லிக்கனியை அதன் எதிரே தவம் இயற்றிக் கொண்டிருந்து ரிஷி தன்னுடைய 12 வருட தவத்திற்குப் பின் கண்களைத் திறந்து உண்டு விட்டு மீண்டும் தவக் கோலம் பூண்டு விடுவார். இப்போது அர்ச்சுனன் தன்னுடைய காண்டீப சக்தியைக் காண்பிப்பதற்காக அம்பெய்து அந்த நெல்லிக் கனியை கொய்து விட்டான். ரிஷி தன்னுடைய தவம் களைந்து அந்த நெல்லிக்கனியை காணா விட்டால் ஒன்றும் சொல்ல மாட்டார். அந்த மரத்தில் நெல்லி இல்லாதததைக் கண்டு இதுவும் இறைவன் விருப்பம் என்று நினைத்துக் கொண்டு எதுவும் உண்ணாமலே கண்களை மூடி மீண்டும் தவம் இயற்ற சென்று விடுவார். அடுத்த 12 வருடத்திற்குப் பின் மீண்டும் கண் திறக்கும்போதுதான் சாப்பாடு அதாவது நெல்லிக் கனி. இப்போது என்ன செய்வதென்று தெரியாமல் அனைவரும் விழித்துக் கொண்டிருந்தபோது துரோபதை ஆபத்பாந்தவனான கிருஷ்ணனை நினைத்தாள். உடனே தோன்றிய ஸ்ரீகிருஷ்ணர்தான் மேற்கண்ட உபாயத்தைக் கூறினார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்தைக் கூற துரோபதையோ தான் ஐந்து கணவன்மார்களைப் பெற்று அவர்களுடன் மனம் ஒருமித்து வாழ்ந்தாலும் தன்னுடைய மனமானது ஆறாது கர்ணனையும் நாடுகிறது என்ற உண்மையைக் கூறினாள். அப்போது கீழே விழுந்த நெல்லிக்கனி மீண்டும் நெல்லிமரத்துடன் சேர்ந்து கொண்டது. இவ்வாறு தாங்கள் செய்து தவறுகளுக்காக வருந்தி இந்த நெல்லிமரத்திடம் தாங்கள் வாழ்க்கையில் புரிந்த தவறுகளை வாய்விட்டுக் கூறினால் அதற்கான பிராயசித்தத்தை இறைவன் அருள்வார். ஆனால் பிராயசித்தம் என்பது ஒரு முறையே என்பது நினைவிருக்கட்டும். பைரவ மூர்த்திகளில் வாகனம் இல்லாத பைரவ மூர்த்திகள், வலது பக்கம் வாகனம் பார்க்கும் பைரவ மூர்த்திகள் (சமயபுரம் ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம்), இடது பக்கம் வாகனம் பார்க்கும் மூர்த்திகள் (கரிவலம்வந்தநல்லூர்) என்று எத்தனையோ விதமாக பைரவ மூர்த்திகளின் அனுகிரகம் அமைவதுண்டு. பொதுவாக திருகோளக்குடியைப் போன்ற மேற்கூரையில்லாத மூர்த்திகளுக்கு சுத்தமான நல்லெண்ணெய் காப்பிட்டு வஸ்திரம் அளித்தலால் கிட்டும் பலன்கள் அமோகம். திருஅண்ணாமலையில் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்திய ஆஸ்ரமம் தோன்றிய சிறிது காலத்தில் அன்னதானம் நிறைவேற்ற வேண்டி வந்தபோது திருக்கார்த்திகை தீபம் தரிசனம் செய்த அடியார்கள் பலரும் அங்கு வேலிக்காக போடப்பட்டிருந்த கருங்கல் தூண்கள் மேல் தலை வைத்து தீபத்தை தரிசனம் செய்தவாறு படுத்து விட்டார்கள். திருஅண்ணாமலையாரை நோக்கி மந்திரம் சொல்லிக் கொண்டிருந்தவர்களும் தங்களையும் அறியாமல் கண்ணயர்ந்து விட்டனர். அப்போது அங்கு வந்த அடியார் ஒருவர் சற்குரு ஏன் இன்னும் தூங்கவில்லை என்று அவரைப் பற்றி விசாரித்தார். சற்குருவோ, “அடியேன் எங்க சார் தூங்கறது. இத்தனை அடியார்கள் படுத்துக் கொண்டிருக்கும்போது அடியேன் மாத்திரம் எப்படி நிம்மதியாக உறங்க முடியும் ? இங்கு பல கற்களின் அடியிலும் பாம்புகள் உறைவதை அடியேனுடைய குருநாதர் எனக்குக் காண்பிக்கிறார். இதை அறியாத அடியார்கள் சுகமாக அந்த கற்களின் மேல்தான் படுத்திருக்கிறார்கள். விடிய விடிய அவர்கள் நித்திரை நலமாக அமைய வேண்டும் என்று அண்ணாமலையாரை வேண்டுவதைத் தவிர அடியேன் வேறு என்ன செய்ய முடியும்?” என்று அந்த அடியாரைத் திருப்பிக் கேட்கவே வந்த சுவடு தெரியாமால் அந்த அடியார் திரும்பி விட்டார் என்பதைக் கூறவும் வேண்டுமோ? இதுவே தாயினும் சாலப் பரிந்து தன் அடியார்களைக் காத்த சற்குருவின் செயல். எவருமே திறந்த வெளியில் உறங்கக் கூடாது என்று கூறினாலும் வசதி படைத்தவர்களும் விபத்து, வாகனம் பழுதடைதல் போன்ற காரணங்களால் திறந்த வெளியில் தூங்கும்படி இக்கட்டான சூழ்நிலை உருவாகி விடுகிறது அல்லவா ? அத்தகையோர் திருகோளக்குடி போன்ற திறந்தவெளி பைரவ மூர்த்தியை வேண்டி தங்கள் உறக்கத்தை மேற்கொள்தலால் தக்க பாதுகாப்பு பெறுவார்கள்.

ஸ்ரீகுபேர கணபதி
திருகோளக்குடி

திருகோளக்குடி திருத்தலத்தில் அனைத்து மூர்த்திகளும் கிழக்கு, மேற்கு, தெற்கு திசைகளில் எழுந்தருள இந்த திருத்தலத்தில் ஆரம்ப படிக்கட்டுகளில் அருளும் ஸ்ரீசித்தி விநாயக மூர்த்தி குபேர திக்கான வடக்கு திக்கை நோக்கி அமர்ந்திருப்பது தனிச் சிறப்பாகும். அதனால் இவருக்கு ஸ்ரீககோள மூர்த்தி என்ற சிறப்புப் பெயரும் உண்டு. நட்சத்திரங்கள் மட்டுமல்ல இந்த ககோள சக்திகளையே தன்னுடைய மகோதரத்தில் அடக்கியவரே இந்த விநாயக மூர்த்தி. நிர்விகல்ப சமாதி நிலை கொள்ளும்போது உடலின் உஷ்ண நிலை 30000 டிகிரி வரை செல்லும் சித்தர்கள் விவரிக்கிறார்கள். இத்தகைய அதிஉஷ்ணத்தை உடல் தாங்குவதற்காக அருள்புரியும் மூர்த்தியே ககோள விநாயகர் ஆவார். திருக்கோயிலின் கீழே உள்ள தீர்த்தம் ககோள தீர்த்தம் என்று அழைக்கப்படும். இந்த ககோள தீர்த்தத்தில் நீராடி ககோள மூர்த்தியாக விளங்கும் ஸ்ரீசித்தி விநாயக மூர்த்தியை வழிபடுவதே இத்தகைய அதிஉஷ்ண நிலையைத் தாங்கும் எளிய வழிமுறையாகும். குபேரனே தன்னுடைய பூலோக வாசத்தின்போது உடல் ஆரோக்கிய சக்திகளை நிலைப்படுத்த அருள்புரிந்த மூர்த்தி ஆதலாலும் இவர் குபேர கணபதி என்ற திருநாமத்தைப் பெற்றார். வளர்பிறை வெள்ளி சனிக்கிழமைகளில் இவரை வழிபட்டு பயனடையலாம். பூரண கொழுக்கட்டைகளும் தேங்காய் கலந்த கொழுக்கட்டைகளும் இவருக்கு ப்ரீதியானவை. ஒன்பது என்பது உஷ்ணத்தைக் குறிக்கும் எண்தானே. அந்த ஒன்பதிற்கு உரிய இரு மூர்த்திகளான பிள்ளையாரும் முருகப் பெருமானும் இந்த ககோளத்தின் அடிவாரத்திலும் உச்சியிலும் அமர்ந்துள்ள பெருமையை வர்ணிக்க வார்த்தைகள் போதாது. எத்தகைய காய்ச்சல் வியாதிகளும் நயம் பெற அருள்புரிபவரே ஸ்ரீசித்தி விநாயக மூர்த்தியாவார். மூலம் போன்று அதிஉஷ்ணத்தால் பாதிப்படைபவர்கள், அதிக உஷ்ணம் கொண்ட கொதிகலன்களில் பணிபுரிவோர் இத்தல தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீசித்தி விநாயக மூர்த்தியை சனிக் கிழமைகளில் வழிபடுதலால் பயனடைவர். தேய்பிறை செவ்வாய்க் கிழமைகளிலும் இத்தகைய வழிபாடுகளை மேற்கொண்டு பயன்பெறலாம். எளிமையாகச் சொன்னால் எந்நாளும் எந்நேரமும் உங்கள் வழிபாட்டிற்கு உரிய இனிய மூர்த்தியே இந்த விநாயகப் பெருமான் ஆவார். மருது சகோதரர்களில் மூத்தவன் வெள்ளையர்களுக்குப் பயந்து திருகோளக்குடியில் ஒரு மூதாட்டியின் வீட்டில் தங்கியிருந்தான். அக்காலத்தில் திருகோளக்குடியைச் சுற்றிலும் சிறுத்தைகள் வசிக்கும் அடர்ந்த காடுகளே திகழ்ந்தன. சிறுத்தையின் வாலைப் பற்றி சுற்றி அதைத் தரையில் அடிக்கும் அளவிற்கு வலிமை பெற்ற ஒரு வீரன் மனிதர்களுக்குப் பயந்து தன்னுடைய வீட்டில் தங்கியிருப்பதை உணர்ந்த மூதாட்டி அவனுக்கு திருகோளக்குடி ஈசனின் மகிமையைப் பற்றியும் குறிப்பாக ஸ்ரீசித்தி விநாயகரின் வழிபாடு பற்றிக் கூறியதும் அவன் தன் சகோதரருடன் சேர்ந்து திருகோளக்குடி பிள்ளையார் மூர்த்திக்கு வழிபாடுகள் இயற்ற ஆரம்பித்தான். அதன் பின்னர் மருது சகோதரர்கள் காளையார் கோவில் கோபுரத்தைக் காக்க தங்கள் உரையும் தியாகம் செய்யத் துணிந்ததால் நம் பக்தி இலயத்தியத்திலும் வீர வரலாற்றிலும் நீங்கா இடம் பெற்றது நீங்கள் அறிந்ததே. இன்றும் மருது சகோதரர்களின் வீரமிகு கதைகளை சற்குரு வெங்கடராமன் விவரிக்க கேட்கும் கோழைக்கும் வீரம் பிறக்கும் என்றால் இதில் மகிமை பொருந்தியவர் சற்குருவா சித்தி விநாயகரா ?

பொதுவாக மலைமேல் அருளும் சப்தகன்னிகள் ஐயர்மலை சப்தகன்னிகளைப் போல் பாதுகாப்பை அளிக்கும் மூர்த்திகள் ஆவர். பொதுவாக சப்தகன்னிமார்கள் பெண்களுக்கு பாதுகாப்பாக திகழ்வதுடன் இளம் பெண்கள் நன்முறையில் துணையைப் பெறவும், பக்தியில் சிறந்து விளங்கவும், பிறரை நம்பி தங்கள் உடமைகளை உரிமைகளை ஒப்படைக்கும்போது அதில் ஏமாந்து போகாமல் அவர்களை கரைசேர்க்கும் மூர்த்திகள் ஆவர். பெண்கள் சப்தகன்னிகளை முறையாக வழிபாட்டாலே போதும் பிற வழிபாடுகள் அவர்களுக்குத் தேவையே இல்லை என்பார் சற்குரு வெங்கடராமன். அந்த அளவிற்கு மகிமையுடன் திகழ்பவர்களே சப்தகன்னிகள், சக்தி உடையதே சப்தகன்னிகள் வழிபாடு. சப்த கன்னிகளுடன் சேர்ந்து ஸ்ரீவீரபத்திரர் தவம் இயற்றும் காட்சி கண்கொள்ளாக் காட்சி ஆகும். திருகோளக்குடியில் மட்டுமே கிட்டும் கவின்மிகு காட்சி இது. துர்வாசரின் தவமும், ஜடபரதரின் ஞான நிலையும், ஜனகரின் துரீயநிலையும் காணக் கண் கோடி வேண்டும் என்பார்கள் பெரியோர்கள். அந்த வார்த்தைகளின் மகிமையை நேரில் புலப்படுத்துவதே திருகோளக்குடியில் வீரபத்திரரின் தவக்கோலமாகும். பெண்களுக்கு மட்டுமல்லாமல் தங்கள் நகைகள், அசையும் அசையா சொத்துக்கள் அனைத்திற்கும் பாதுகாப்பை அளிப்பதும் ஒருவேளை அந்த சொத்துக்கள் ஏதோ காரணத்தால் களவு போய் விட்டால் அதை மீட்டுத் தருபவரும் ஸ்ரீவீரபத்திர மூர்த்தி ஆவார். இதில் ஆழ்ந்த பொருள் பொதிந்த கருத்துக்கள் மறைந்துள்ளன. மீண்டும் மீண்டும் படித்து அந்த ஆழ்ந்த பத்திர கருத்துக்களையும் தெரிந்து புரிந்து தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். சுத்தமான குங்குமப்பூ கலந்த நல்லெண்ணெய் காப்பை சப்த கன்னியருக்கு இயற்றி இவர்கள் எதிரில் உறையும் சிவலிங்க மூர்த்தியை வழிபடுவதால் கிட்டும் பலன்கள் அமோகம், அற்புதமே.பஞ்ச மாதர்கள் என்று புகழப்படும் அகல்யா ஆதி கன்னிகள் சப்த கன்னிகள் வழிபாட்டை முறையாக இயற்றி அதில் திளைத்தவர்களே.

ஸ்ரீதிருகோளக்குடிநாதர்
திருகோளக்குடி

ஸ்ரீஆத்மநாயகி அம்மன்
திருகோளக்குடி

திருகோளக்குடியின் அம்மன் ஸ்ரீஆத்மநாயகி என்ற திருநாமத்துடன் சுவாமியின் இடப்புறம் எழுந்தருளி உள்ளாள். ஆத்ம நாயகி என்ற நாமத்தை ஆத்ம விசாரம் செய்து வந்தாலே மனிதர்கள் மட்டும் அல்லாது இந்த பிரபஞ்சத்தில் தோன்றிய உயிர்கள் அனைத்தும் தங்கள் இறுதி நிலையை அல்லது உயர்ந்த நிலையை பூரண நிலையை அடைந்து விடும். இதைக் குறிப்பவளே ஆத்ம நாயகி ஆவாள். மனிதர்கள் தங்கள் ஆத்மாவைத் தவிர மற்ற விஷயங்களை தரிசிப்பதிலும் அனுபவித்தலிலுமே தங்கள் மனதைச் செலுத்துகிறார்கள். எப்போது உயிர்கள் தங்கள் ஆத்மாவை உணர்ந்து அதில் ஆதிசங்கர பகவத் பாதாளைப் போல தன்னில் தானாய் சுடர் விட்டுப் பிரகாசிக்கிறதோ அப்போதுதான் துன்பம் என்பது இனி இல்லை அனைத்தும் இன்பமே. இதை உணர்த்துவதும் ஆத்ம நாயகியே, ஆத்ம நாயகியின் வழிபாடே. கோயம்பேடு பஞ்சாட்சரமாக ஒளிவிடும் திருத்தலம், கோளக்குடி பஞ்சாட்சரத்தின் வெளிப்பாடான ஆத்மாவை விளக்கும் தலம். இவ்விரண்டு திருத்தலங்களின் மகிமையை உணர சற்குரு வெங்கடராமன் அனுகிய தலமே சதுரகிரியாகும். நான்கு வேதங்களின் சாரம் மட்டுமன்று சதுரகிரி. அனைத்து ஆத்ம விசார கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் திருத்தலமே சதுரகிரியாகும். இத்தகைய ஆத்மவிசார வினாக்களுக்கு குருவருளால் விடைபெற உதவும் தலம் சதுரகிரி என்பதால் சற்குரு வெங்கடராமன் அவர்கள் திருமணமான புதிதில் தன்னுடன் ஒரு மூத்த அடியாரை அழைத்துக் கொண்டு சதுரகிரி மலைக்குச் சென்றார். சதுரகிரி, திருஅண்ணாமலை, பர்வதமலை, இமயமலை, திருகோளக்குடி போன்ற திருத்தலங்கள் நட்சத்திரங்கள், கோள்களின் மகிமையை உணர்த்த வல்லவையே. சீந்தில் கொடி என்பது மிகவும் பலமுள்ள கொடி மட்டுமன்று பிறவிப் பிணியையும் அறுக்கவல்ல கொடி என்பதால் சீந்தில்கொடியைப் பற்றியவாறு ஒரு மலையின் மேலுள்ள ஒரு குகைக்கு சென்றார் சற்குரு. அங்கு மூன்று இரவுகள் மூன்று பகல் நேரங்களில் தங்கி சற்குரு பெற்ற ஆத்மஞான விளக்கங்களையே இங்கு நீங்கள் திருகோளக்குடி மகிமையாகத் தெரிந்து கொள்கிறீர்கள். திராட்சை, அக்ரூட் பருப்பு போன்ற கனி, கனி விதைகளே அவர்களுடைய உணவு. சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், மணிவாசகரின், “நமசிவாய வாழ்க” என்ற எட்டெழுத்து மந்திரத்தின் விரிவாக்கமே சற்குரு அவர்களின் வாழ்க்கை வரலாறு.

எட்டில் ஒன்றாய்த் திகழும் நாதன்
எட்டில் ஒன்று கூடும் நிலையில்
எட்டாய் விளங்கும் சக்தி தழைக்க
எட்டாய் எட்டு திகழ நின்றானே

என்னும் வரிகள் திருகோளக்குடியில் வாஸ்து நாளில் நீராடி இறைவனை வேண்டுதலால் கிட்டும் அஷ்டமா சித்திகளைப் பற்றி விளக்குகிறது. 64 சிவ சொரூப மூர்த்தங்களுக்கும் வாஸ்து மூர்த்திக்கும் உள்ள தொடர்பை இந்த துதியால் அறிந்து கொள்ளலாம். இத்தகைய வாஸ்து சக்திகள் துலங்கும் ககோள தீர்த்தப் படத்தையே நீங்கள் இங்கு தரிசனம் செய்கிறீர்கள். விளம்பி வருட மார்கழி மாதப் பிறப்பன்று இந்தக் ககோள தீர்த்தத்தில் நீராடுவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றாலும் விளம்பி என்பது சொல் பொருளுக்கு அப்பாற்பட்ட உத்தம நிலைகளை வார்த்தைகளால் விளக்கக் கூடிய வருடமாக அமைவதால் ஒன்பது சக்திகள் மிளிரும் திருத்தலத்தில் ஒன்பதாம் ராசியான தனுசு ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் உதயம் ஒன்பது மணிக்கு திரிதினமாக ஒன்பதாம் திதி நவமி அமையும் நேரத்தில் உதய மார்த்தாண்ட சக்திகள் நிறைந்த பொய்கையில் நீராடுதலால் கிட்டும் பலன்களை விளம்ப முடியுமா ? முடியாது என்பதால் அடிமை என்ற ஒன்பதாம் தளத்தில் பிரகாசிக்கும் சற்குரு வெங்கடராமன் ககோள தீர்த்த மகிமைகளை உங்களுக்கு விளக்கியுள்ளார். இதன் மூலம் இறைவனின் பெருங்கருணையை அடியார்களும் உணர வழிவகுப்பதே ககோள தீர்த்த நீராடலும் தான தர்மங்களும்.


ககோள தீர்த்தம் திருகோளக்குடி

ஒரு முறை கோயம்புத்தூரிலிருந்து ஆஸ்ரமத்திற்கு வந்த அடியார்கள் பல கேன்களில் சிறுவாணி தீர்த்தத்தை கொண்டு வந்திருந்தனர். தாங்கள் தயாரிக்கப்போகும் சோன்பப்டி இனிப்பிற்கு சில கேன் தீர்த்தங்களை வைத்துக் கொண்டு மற்ற தீர்த்தங்களை சற்குருவின் அறையில் வைத்து விட்டனர். அன்னதான ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில் சற்குரு சிறுவாணி தீர்த்த மகிமையை விளக்கினார்கள். வாணி என்னும் சொல் கலைவாணியைக் குறிக்கும், சிறுவாணி என்பது கலைவாணியின் சகோதரியாக கருதப்படும் லட்சுமி தேவியைக் குறிக்கும். அதனால்தான் சரஸ்வதி, லட்சுமியை ஒன்றாக வைத்து வழிபடும்போது முதலில் லட்சுமியும் அடுத்து கலைவாணியும் அமையும்படி வழிபடுதல் சிறப்பு. இளையவள் வள்ளியைஅடுத்து தெய்வானை அமர்வதை இங்கு நினைவு கூர்க. எனவே ஆஸ்ரம அடியார்களும் கிரிவல அடியார்களும் லட்சுமி தேவியின் லட்சமி கடாட்ச சக்திகளையும் கலைவாணி அருளிய அறிவு சக்திகளையும் பெற சற்குரு மேற்கொண்ட ஏற்பாடு இது என்பது புரிய வந்தது. அது மட்டுமல்ல சற்குரு அவர்களே இந்த தீர்த்தத்தை தன் அறையில் வைத்துக் கொண்டு தன் கைப்பட அடியார்கள் பயன்படுத்தும் ஓவர்ஹெட் டாங்கில் கலக்கும் பணியை எவரும் அறியாமல் செய்தார்கள். காரணம் அடியார்களுக்கு அறிவையும் செல்வத்தையும் ஊட்டுவதில் தாயையும் விஞ்சி நின்றவர் அல்லவா சற்குரு ? சற்குருவின் கைகளில் லட்சுமி கடாட்ச ரேகையும் அறிவு ரேகையும் தீர்கமாக இருந்ததும் ஒரு காரணமே. “நீங்க குடிக்க யூஸ் பண்ணினது மட்டும் சிறுவாணி இல்ல ராஜா நீங்க ..... கழுவ பயன்படுத்தியது கூட சிறுவாணி தீர்த்தம்தான். இந்த அனுகிரகத்தை திருஅண்ணாமலையபரை வலம் வரும் அடியார்களுக்கு அளிக்க அடியேன் குருநாதன் முடிவு செய்ததால் சோன்பப்டியை (குருவருள் துலங்கும் தங்க சக்திகளுடன் செறிவது) தயார் செய்து தானம் அளிக்க சிறுவாணியைப் பயன்படுத்தினோம்,” என்றார்.


சிந்தைக்கு எட்டா சித்த விருந்து சிறுவாணி தீர்த்தம்
சிறுவாணி நான்கு எழுத்துக்களுடன் பொலிவது அதை காட்டும் குரு சக்தி பெற்ற மஞ்சள் மலரோ எட்டு இதழ்கள் கூடிய குசா சக்தியுடன் பொலிவது. இவ்வாறு நாம் காணும் அனைத்தையும் தெய்வீகத்துடன் பொருத்திப் பார்ப்பதும் குருவருளால் திருவருளைத் தேடும் ஒரு ஆத்ம விசார முறையாகும்.

வரும் மார்கழி அன்னதானத்தில் சர்க்கரைப் பொங்கலில் சிறுவாணி தீர்த்தத்தையும் கலந்து திருகோளக்குடியில் அன்னதானம் செய்வது என்பது கிடைத்தற்கரிய பேறாகும். வாணி என்றால் (பொய்யா)மொழி என்பது சிறுவாணிக்கும் திருகோளக்குடிக்கும் உள்ள தொடர்பு. மற்ற பஞ்சாங்க விஷயங்களை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து தெரிந்து கொள்வதே சிறப்பு. ஒரு பொருளை சம்பாதிப்பது என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் அதை உரிய முறையில் உரியவருக்கு சமர்பிப்பதும் என்பார் சற்குரு. இந்த விஷயத்தில் ராஜா என்ன சக்கரவர்த்தியாக நின்றவரே நம் சற்குரு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்த சிறுவாணி மகாத்மியமாகும். எனவே சற்குரு கொண்ட, “அடியேன் குரு அடிமையே”, என்ற பூரணமான எண்ணமே கூஜாவை ராஜாவாக ஆக்கியதோடு மட்டுமல்லாமல் அந்த ராஜாவை சக்கரவர்த்தியாகவும் மாற்றியது.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam