அடியார்களின் ஆரோக்கியமே சற்குருவின் ஆனந்தம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கம்பி இசை நோய் நிவாரணம்

ஆரோக்யம் என்னும்போது இது பொதுவாக உடல் ஆரோக்கியத்தைக் குறித்தாலும், உண்மையில் உடல், மனம், உள்ளம் ஆகிய அனைத்துமே ஆரோக்யத்துடன் திகழ்ந்தால்தான் நாம் ஆரோக்யம் என்றால் என்பதையே உணர முடியும். இந்த முழுமையான ஆரோக்யமே நாம் கடவுளை நெருங்க துணை புரியும். ஆரோக்யமான உடலோ மனமோ இல்லாமல் எவரும் இறைவனை நெருங்கியதே இல்லை.

முழுமையான ஆரோக்யத்தைப் பெற கோடி கோடியான வழிபாட்டு முறைகள் நம் சற்குருவால் அளிக்கப்பட்டாலும் விதிவசத்தால் இவை எவற்றையுமே உணரக் கூட முடியாத நிலையில் உள்ள பல அடியார்களுக்கு உதவி புரியும் முகமாகவே இங்கு கம்பி இசை அளிக்கப்பட்டுள்ளது. உடலை அசைக்கக் கூட முடியாத நிலையில் உள்ளவர்களுக்கும், உடல் அசைந்தாலும் ஒருநிலைப்படுத்த முடியாத நிலையில் பலவீனமாக உள்ள மனத்தை உடையவர்களுக்கும் இங்கு அளிக்கப்பட்டுள்ள கீதங்கள் பெரிதும் துணை புரியும்.

தினமும் உறங்கப் போகும் முன் அல்லது நேரம் சாதகமாக உள்ள எந்த நேரத்திலும் இங்கு அளிக்கப்பட்டுள்ள இசையைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தால் மனம் சிறிது சிறிதாக அமைதி பெறும். அதைத் தொடர்ந்து ஆழ்ந்த உறக்கம் கிட்டுவதால் உடலிலும் உள்ளத்திலும் புத்துணர்ச்சி குடிகொள்ளும். கோயில் தரிசனங்கள், நலம் தரும் தேவாரப் பதிகங்களை ஓதுதல், மலைத் தலங்ளை, திருத்தலங்களை கிரிவலம் வருதல், முறையான தர்ப்பண வழிபாடுகள் மூலம் ஆரோக்யம் நன்னிலையை அடையும். இங்குள்ள இசை அடியார்களுக்கு மன அமைதியையும், மனத் தெளிவையும் தருமே தவிர இது எக்காலத்தும் முழுமையான வழிபாடாக அமையாது என்பதை அடியார்கள் நினைவில் கொள்ளவும்.

இங்கு அளித்துள்ள இசையைத் தொடர்ந்து கேட்பதால் உடலும் மனமும் அமைதி பெறுவதால் அதன் மூலம் கிட்டும் ஆரோக்யத்தின் துணை கொண்டு இங்கு அளிக்கப்பட்டுள்ள இலம்பயங்கோட்டூர் முத்திரையை படுக்கையில் அமர்ந்தவாறே பழகி சுய நாம ஜபமோ அல்லது ஏதாவது ஒரு காயத்ரீ மந்திரத்தை ஓதுவதால் நோயாளிகள் எழுந்து நடக்கும் நிலையை அடைவார்கள். நோய்க்கான மூல காரணங்கள் சுய நாம ஜபத்தால் உணர்த்தப்படும். நோய்க்கான காரணம் தெரிந்து விட்டால், அதை நிவர்த்தி செய்வது ஒன்றும் சிரமம் அல்லவே.

     பிறவிப் பிணி அகல
     கண்ணொளி பெருக
     ஆழ்ந்த உறக்கத்திற்கு
     இதய நோய்கள் அகல
     இரத்த சோகை
     நிவர்த்தியாக
     சுகப் பிரசவம் பெற
     தோல் நோய்
     நிவாரணம்
     தீய பழக்கங்கள் மறைய
     மாத விலக்கு
     துன்பங்கள் குறைய
     புற்று நோய் நிவர்த்தி
     சர்க்கரை நோய்
     நிவாரணம்
     சுப முகூர்த்த
     சோபனம்

நீங்கள் இங்கு கேட்கும் இசையொலிக்குப் பின்னணியாக ஹிரண்யகர்ப்பம் என்னும் அரிய நோய் நிவாரண பீஜாட்சர சக்திகள் நம் சற்குருவால் பதிக்கப்பட்டுள்ளதால் தொடர்ந்து இந்த இசையைக் கேட்டுக் கொண்டு வருவதால் உங்களையும் அறியாமல் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

பல்லாண்டுகளுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி...
நம் சற்குருவிடம் அறிமுகம் இல்லாத ஒரு நபர் வந்தார். “சாமி, உன்னை எல்லோரும் சாமி, சித்தர்ன்னு சொல்றாங்க...
நான் கேட்கிறதை செய்து கொடுத்தால் நானும் உன்னை சாமின்னு ஒத்துக் கொள்கிறேன்...”, என்றார்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
திருக்குற்றாலம்

நம் சற்குரு, “அந்த ஆசாமியிடம் நல்ல பெயர் எடுப்பதோ, அந்த ஆள் அடியேனை சித்தர் என்று ஒத்துக் கொள்வதோ அடியேனுக்குத் தேவையில்லை. ஆனால், எங்கள் கடமையை நாங்கள் செய்தாக வேண்டுமே...அதனால் அடியேன் தொடர்ந்து, ‘சரி ஐயா, உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்க அவரோ, ‘ஆப்பிளை (அந்த ஆசாமி தெரிவித்த பிரபல நடிகையின் இயற்பெயர் இங்கு மாற்றப்பட்டுள்ளது) கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று எனக்கு ஆசையாக இருக்கிறது, இதை உன்னால் செய்து வைக்க முடியுமா?’ என்று கேட்கவே அடியேனும் சற்று நேரம் யோசிப்பது போல் இருந்து விட்டு, “அப்படியா... அது ஒன்றும் பிரமாதமில்லை. ஆப்பிளின் எந்த உடல் பாகம் உங்களுக்குப் பிடித்திருக்கிறது... அவள் கண்களா, மார்பகமா இல்லை மர்மப் பகுதியா ? அதைச் சொன்னால்தான் அடியேன் உங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்ற முடியும்...”, என்றார்.

நம் சற்குருவின் வார்த்தைகளைக் கேட்ட அந்த ஆள் திகைத்து...,”அதெப்படி சொல்ல முடியும்... எல்லாம்தான் எனக்குப் பிடித்திருக்கிறது...” என்றார். நம் சற்குரு, “அதை நீங்கள் கூறத்தான் வேண்டும். இந்தியாவில் 20 கோடி பேர் ஆப்பிளின் கண்களைக் கேட்டால் என்ன செய்ய முடியும்? அதனால் நீங்கள் யோசித்துச் சொல்லுங்கள் ... அவசரமில்லை, அடியேன் முயற்சி செய்கிறேன்... என்று கூறி அந்த ஆளை அனுப்பி விட்டேன். ஆனால், இன்று வரை அந்த ஆள் திரும்பி வரவில்லை...”, என்றார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது. ஒரு பெண்ணிற்கு கவர்ச்சி என்பது அவளுடைய உடம்பில் இல்லை. நம் சற்குருவிடம் வந்த ஆள் மிகவும் புத்திசாலி. அதனால் நம் சற்குருவின் வார்த்தைகள் அவர் உள்ளத்தில் மறைந்து கிடந்த ஆத்ம விசார சக்திகளைத் தூண்டி விட்டதால், தொட்டுக் காட்டிய வித்தையாக, ஒரு பெண்ணின் ஒவ்வொரு உடல் பகுதியையும் குறித்து ஆழ்ந்து சிந்திக்க சிந்திக்க இறைவனே உண்மையான கவர்ச்சி என்பதை அவன் உணர்ந்து விட்டான், இல்லை உணர்ந்து விட்டாரா?

குணமே குணக்குன்று
நாச்சியார்கோவில்

பணக் கவர்ச்சி, உடல் கவர்ச்சி என்ற மாயையே மனிதர்களைப் பொறுத்தவரை அனைத்து நோய்களுக்கும் அடிப்படை காரணமாக அமைவதால் நீங்கள் ஓரிரு நிமிடங்கள் இங்கு அளித்துள்ள இசையைக் கேட்டாலும் அந்த ஞான வேள்வி தொடரும்போது நிலையில்லா கவர்ச்சி அனைத்தையும் அழிக்கவல்லதாக அது அமைவதால் நீங்கள் எளிதில் முழுமையான ஆரோக்யத்தைப் பெற்று இறைவனை நோக்கி விரைவாக முன்னேறலாம்.

தன்னை அறிந்தால் தன்னலம் புரியும், தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம் ... பெரும் பேரின்பம் ... இந்த வார்த்தைகளை நம் சற்குரு கூறும்போது நம் சற்குருவின் கண்களைப் பார்க்கும் பேறு பெற்றவர்கள் பாக்கியசாலிகளே. மேற்கண்ட நிகழ்ச்சியை ஒரே வார்த்தையில் உள்ளடக்கும் ‘பெரும் பேரின்ப நிலை’ அது.

கம்பி இசைக்கும் ஆப்பிள் நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம்.
இங்கு அளிக்கப்பட்டுள்ள இசைத் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் உங்கள் மனம் லயித்தால் கூட போதும் அதில் பதிந்துள்ள ஹிரண்யகர்ப்பம் என்ற பீஜாட்சர சக்திகளால் நீங்கள் ஆத்ம விசாரத்தில் ஒன்றி இறை தரிசனம் என்னும் கனியைச் சுவைத்து மகிழலாம்.

இங்கு ஒரு விஷயத்தை அடியார்கள் அறிந்து கொள்வது அவசியம். மாதவிலக்கு துன்பங்களிலிருந்து நிவாரணம் பெறுவதற்காக ஒரு கம்பி இசைத் தொகுதி இங்கு அளிக்கப்பட்டுள்ளது. ‘நான் என்ன பெண்ணா?’ என்று ஒரு ஆண் மனதிற்குள் நினைத்து சிரித்துக் கொள்ளலாம். இந்த இசையைக் கேட்பவர் ஆணாகவே இருந்தாலும் அவருடைய தாய், சகோதரிகள் நிச்சயம் பெண் தானே, அவர்களுக்காக அவர் ஏன் இந்த இசையைக் கேட்டு அதன் பலன்களை தனக்கு பல பிறவிகளிலும் தாயாய், தந்கையாய், அண்ணியாய் வந்து உதவிய பெண் உறவுகளுக்கு அர்ப்பணிக்கக் கூடாது?

மேலும் பல முந்தைய பிறவிகளிலும் நாம் பெண்ணாகவும் பிறந்திருக்கக் கூடும் அல்லவா? அத்தகைய பிறவிகளில் நாம் செய்த தவறுகள் இந்த பிறவிகளில் தொடரக் கூடுமே? உதாரணமாக மாத விடாய் காலங்களில் நாம் உண்ட மீதியை பசுவிற்கோ, கன்றுகளுக்கோ அளித்திருந்தால் அது இப்பிறவியில் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் கடுமையான வயிற்று வலியாய் தொடரும்.

ஒரு முறை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் ஒரு அடியாரைக் காட்டி, “சார், இவர் இப்பிறவியில் மட்டும்தான் சிரித்துக் கொண்டே இருக்கிறார் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள், போன பிறவியில் ஒரு பெண்ணாகப் பிறந்து இவர் சிரிப்பில் மயங்கி இவர் (அல்லது இவள் பின்னால்?) பின்னால் சுற்றி சுற்றி வந்த ஆண்கள் எத்தனை பேர் தெரியுமா...”, என்று கேட்கவே அருகில் இருந்த அடியார்கள் எல்லாம் தம்மை மறந்து சிரித்தார்களே பார்க்கலாம்...

சாரமின்னல் சக்தி

மனித உடலில் ஆசன வாயிலிருந்து சுமார் ஒரு அங்குல தூரத்தில் அமைந்துள்ள அழுத்த புள்ளியே (acupressure point) சாரமின்னல் சக்தி புள்ளியாகும். அகஸ்திய வாடகத்தில் இடம் பெறும் இந்த சக்தி புள்ளியின் பெயர் சற்குருவால் மாற்றப்பட்டுள்ளது. முற்காலத்தில் மன்னர்கள் இத்தகைய புள்ளிகளை தக்க மருத்துவர்கள் மூலம் ஆக்கப்படுத்தினர். தற்போது இந்த புள்ளியின் தேவை அதிகம் இல்லாததால் நம் சற்குரு போன்ற மகான்கள் ஒற்றுமையான குடும்ப வாழ்விற்கும், ஆரோக்கியமான சந்தான அபிவிருத்திக்கும் இந்த புள்ளியை ஆக்கப்படுத்தும் முறைகளை அருளியுள்ளனர்.

ஸ்ரீபோஜீஸ்வரர் சிவாலயம்
சமயபுரம்

வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்தப் புள்ளிகள் ஆக்கம் பெறுகின்றன. திருஅண்ணாமலை போன்ற மலைத் தலங்களை அஷ்டமி திதிகளில் வலம் வந்து வணங்குவதால் இந்த சாரமின்னல் சக்திகளை விரைவில் ஆக்கப்படுத்தலாம். தங்கள் விரல் நுனிகளை இந்தப் பகுதிகளில் வைத்து சாரமின்னல் சக்திகளை உணர வல்லவர்கள் எண்ணெய் நீராடல் சமயத்தில் இந்த புள்ளிகளில் எண்ணெய் தடவி அழுத்தி விடுவதால் நல்ல ஆரோக்யத்தைப் பெறலாம். இந்த புள்ளியில் விரலை வைத்து லேசாக அழுத்தினாலே உடலில் மின்சாரம் பாய்வது போன்ற சக்தி ஊடுருவுவதால் இத்தகைய காரணப் பெயர் அமைந்தது.

வீணையின்றி ஞானம்
வழங்கும் அன்னை வேதாரண்யம்

மேற்கண்ட கம்பி இசையை தொடர்ந்து கேட்டு தியானிப்பதும் இந்த சாரமின்னல் சக்திகளை கிரகிக்கும் முறைகளில் ஒன்றாகும். கம்பி இசைக் கருவிகளான வீணை, கிடார், பிடில் போன்ற கம்பி இசைக் கருவிகளே இந்த சக்தியை ஆக்கப்படுத்தும். யாழ்அமராந்தக சித்தரும் இத்தகைய சாரமின்னல் சக்திகளை திருஅண்ணாமலை, சமயபுரம் அருகே ஸ்ரீபோஜீஸ்வரர் சிவத்தலம் போன்ற திருத்தலங்களில் வர்ஷிக்கிறார் என்பதும் நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும்.

பத்மாசனம், வஜ்ராசனம் போன்ற ஆசனங்களில் குறைந்தது ஒரு மணி நேரம் அமர்ந்து பிராணாயாமல் பயில்வதாலோ அல்லது நலம் தரும் தேவாரப் பதிகங்களை திருத்தலங்களில் ஓதி ஒவ்வொரு பதிக முடிவிலும் ஸ்வஸ்தி நமஸ்காரம் நிறைவேற்றுவதால் சாரமின்னல் சக்தி புள்ளிகள் ஆக்கம் பெறுவதால் இது அற்புத சமுதாய சேவையாக மலர்ந்து சமுதாயத்தில் நோய் நிவாரண சக்திகள் பெருகும்.

ஒரு அடியார் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் எந்த வரிகள் சர்க்கரை வியாதிக்கு நிவாரணம் அளிக்கும் என்று கேட்டுள்ளார். சஹஸ்ர நாமத்தை தொடர்ந்து ஜபித்து வருவதால் தீராத வியாதிகளே இல்லை எனலாம். சகஸ்ர நாம துதிகளை ஓத தெரியாதவர்களுக்கே, ஓத முடியாத நிலையில் உள்ளவர்களுக்கே இந்த கம்பி இசை துணை புரியும். “சிவ சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், லலிதா சஹஸ்ரநாமம் இவற்றில் ஏதாவது ஒன்றை ஒருவன் உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவனுக்கு முக்தி நிச்சயம்...”, என்பார் சேஷாத்ரி சுவாமிகள். முக்தியையே தங்கத் தட்டில் வைத்து அளிக்கும் ஒரு சகஸ்ர நாமம் நோய் நிவாரணம் அளிப்பது பற்றி கேட்க வேண்டுமா என்ன?

ஹிரண்யம் என்னும் சிவ சக்திகள் பொலிபவையே மேற்கூறிய இசை பகுதிகள் என்று அளித்துள்ளோம். இந்த ஹிரண்யம் என்னும் பீஜாட்சர சக்திகளுடன் லலிதம் என்னும் பீஜாட்சர சக்திகளும் இணைந்து பொலிவதே லலிதா சஹஸ்ரநாமம். இத்தகைய சிவ சக்தி ஐக்ய சக்திகளே இங்கு சிவ சக்தி ஐக்ய சொரூப தரிசனமாக காட்சி அளிக்கின்றன என்பதை நீங்கள் சற்று ஊன்றிக் கவனித்தால் உணர்ந்து கொள்ளலாம்.

திருமணம், சீமந்தம், வளைகாப்பு, கிரகப்பிரவேசம், சதாபிஷேகம், பிறந்தநாள் போன்ற சுப முகூர்த்ந நிகழ்ச்சிகளின் போது சம்பந்தப்பட்டவர்கள் பல பொறுப்புகளில் இலயித்து விடுவார்கள். மற்றவர்களோ உபயோகமில்லாத, நம் சற்குரு குறிப்பிடும் ‘கிழக் கதைகளை’ பேசிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய சூழ்நிலைகளில் இங்கு அளிக்கப்பட்டுள்ள சுப முகூர்த்த சோபனம் என்னும் கம்பி இசையை சத்தமாக ஒலிப் பெருக்கியில் இசைப்பதால், திருமணங்களில் நிறைவேறும் கெட்டிமேள வைபவம் போல் இது அமைந்து, அந்த சுப நிகழ்ச்சிகளில் தேவதைகள், தெய்வங்களின் சுப மங்கள ஆசிர்வாத சக்திகளை அள்ளி வழங்கும்.

     பார்வையற்றோருக்கு
     பரமசுகம்
     வாக்தேவி வாகீஸ்வரி
     விரக்தி மனப்பான்மை
     மாயமாக
     குறைபாடுகள்
     களையும் இசை
     கோமா
     மூளை செயலிழப்பு
     தனாகர்ஷண
     சங்கு நாதம்

பார்வை அற்றோருக்கு பரமசுகம் என்ற தலைப்பில் இங்கு அளிக்கப்பட்டுள்ள டமரு நாதத்தை பலவித நோய்களால், முதுமையால் பார்வையில் குறைபாடு உள்ளவர்களோ, பிறவிக் குருடர்களோ அல்லது எவ்விதத்தில் தங்கள் உடலில், உடல் அங்கங்களில் குறைபாடுகள் உள்ளவர்கள், மன நோயாளிகள் அனைவரும் தொடர்ந்து கேட்டு நற்பலன் பெறலாம்.

ஊனம் ஊனமல்ல
ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

வாக்கு என்ற சொல்லிற்கு ஆதாரமாக, மூலமாக, மூலாதாரமாக அமைபவளே கலைவாணி என்னும் சரஸ்வதி தேவி ஆவாள். இவளே வாக்தேவி வாகதீஸ்வரி. நம் சற்குருவை அனைவரும் அன்புடன் “வாத்யார்” என்றே அழைப்பதுண்டு. வாக் தீ யார் என்ற நமசிவாய சக்திகளே வாக்கிற்கு தீயாக, ஆதார சக்தியாக, அருளூட்டும் ஒளிப் பிழம்பாகத் திகழ்கிறது என்பதே நம் சற்குரு வழங்கும் தெளிவுரை. எனவே, பேச்சு சரியாக வராத குழந்தைகளும், ஐந்து, ஏழு வயது வரையுமே பேச முடியாமல் விளங்கும் குழந்தைகளும், திக்கு வாயாக விளங்கும் சிறுவர்களும் பெரியோர்களும், ஏன், பிறவி ஊமைகளும் கூட இங்கு நம் சற்குரு அளித்துள்ள டமரு நாத அட்சரங்களால் தெளிவு பெறுவர். பேச்சை ஆதாரமாக உடைய மேடைப் பேச்சாளர்களும், பாடகர்களும், பல துறையைச் சேர்ந்த முகவர்களும், அரசியல்வாதிகளும் வாழ்வில் ஒளி பெற, ஒலி கூட்ட இந்கு நீங்கள் கேட்கும் வாகீசப் பரல்கள் உறுதுணையாக விளங்கும்.

வரும் N2023ம் ஆண்டில் காலையில் எழும்போதே பொழுது ஏன்தான் விடிகிறதோ என்ற விரக்தி மனப்பான்மையே பலருக்கும் தோன்றக் கூடும். அனைத்து வித வசதி வாய்ப்புகள் இருந்தாலும், வளமை தாண்டவமாடினாலும் இந்த விரக்தி ‘அலைகள்’ மனதில் மோதுவது இயற்கையே. இங்கு அளிக்கப்பட்டுள்ள ராம கீதத்தை காலையிலும் இரவில் உறங்கும் முன்னும் கேட்டு வந்தால் சிறிது சிறிதாக மற்றவர்களிடம் சகஜமாகப் பழகி உறவினர்களிடம் நண்பர்களிடம் ஒட்டி உறவாடும் மனப்பான்மை உருவாகும்.

வெறுமனே ஒரு இசையை கேட்பதால் மட்டும் நம்முடைய குறைகள் தீர்ந்துவிடுமா? நிச்சயமாகத் தீராது. ஆனால், நீங்கள் இங்கு கேட்பது நம் குறைகள் மறைய வேண்டி நம் சற்குரு இறைவனிடம் முன் வைக்கும் பிரார்த்தனையாகும். ஒரே நொடியில் நம்முடைய குறைகள் யாவற்றையும் தீர்க்கும் சக்தி நம் சற்குருவிடம் அபரிமிதமாக உண்டு என்றாலும் அந்த சக்தியை நம் சற்குரு சற்றும் பிரயோகம் செய்வது கிடையாது. காரணம் நாமாகவே நம்முடைய குறைகளை உணர்ந்து, அவற்றை சீர்திருத்திக் கொள்வதுதானே சிறப்பு. நம்முடைய குறை நிறைகளை உணர்வதற்கு இங்கு நீங்கள் கேட்கும் இசை நிச்சயம் உறுதுணையாக அமையும். நம் சற்குருவின் பிரார்த்தனைகளுடன் நம் பிரார்த்தனைகளையும் இணைக்கும் ஒரு சிறு முயற்சியே இது.

முள்ளில்லா வில்வம் நகர்

Stroke, பக்கவாதம் போன்ற காரணங்களால் உடலின் ஒரு பகுதி செயலிழந்து விடுவதோ அல்லது உடல் முழுவதுமோ செயல்படாமல் கோமா நிலையில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. அந்நிலையில் உடலின் பல உறுப்புகள் செயல்படாதது போல் தோன்றினாலும் உடலின் உள்ளும் பறமும் பல உறுப்புகள் பல நிலைகளில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.

சமீபத்தில் கோமா என்ற உணர்வற்ற நிலையிலேயே ஒரு பெண் அறுவை சிகிச்சை இல்லாமல் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள் என்ற செய்தியை அறிந்திருப்பீர்கள். இதுவே நம் உடல், மனதைப் பற்றி நாம் புரிந்து கொள்ள முடியவில்லை என்னும் நம் சற்குருவின் செய்தியை வலுப்படுத்துகிறது. நம் அடியார்களில் ஒருவர் சுமார் இரண்டு வருடங்கள் கோமா நிலையிலிருந்தபோதும் தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவரைப் பார்க்கும்போதெல்லாம் அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வடிந்து தன்னுடைய குடும்பத்தினரை நிர்கதியாக்கி விட்ட நிலையைக் குறித்து வருந்துமாம்.

எனவே எத்தகைய உணர்வற்ற நிலையிலிருந்தாலும் அவர்கள் இங்குள்ள கம்பி இசையை தினமும் உணவருந்தும் முன் கேட்குமாறு ஏற்பாடு செய்தலால் அவர்கள் வியத்தகு முன்னேற்றத்தை அடைவார்கள், அது நம்மால் மேலோட்டமாக அறிய முடியாத ஒரு முன்னேற்றமாகவும் இருக்கலாம் என்பதே நம் சற்குரு அளிக்கும் இசையின் மகத்துவம். பார்க்கும் நிலையில் உள்ளவர்கள் நகர் திருத்தல வீடியோவையும் அடிக்கடி அவர்கள் காணுமாறு செய்தல் நலம்.

ஸ்ரீஉடையவர் சன்னதி ஸ்ரீரங்கம்

நல்ல ஆரோக்யமாய் இருப்பவர்கள் ஓடி ஆடி கோயில் திருப்பணி, அன்னதானம், கிரிவலம் போன்ற நற்காரியங்களை இயற்றி, பிறருக்காக சேவை செய்து வாழலாம். கோமா நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வது? “அனைவரும் சுகமாய் இருக்கும்போது என்னை மட்டும் கடவள் இப்படி ஆக்கி விட்டாரே?” என்று இறைவனை நொந்து கொள்ளாமல், “இந்த நிலையிலும் சேவை செய்ய அடியேனை கடவுள் ஒரு கருவியாக ஆக்கிக் கொள்ளட்டும்...”, என்ற சங்கல்பத்துடன் வாழ்ந்தால் கோமாவிலும் கோடி நற்காரியங்களை ஆற்றலாம்.

பத்து மாதம் சுமந்து ஒரு குழந்தையைச் சுமக்கும்போது எந்தச் சேவையைத்தான் ஒருவரால் இயற்ற இயலாது. இந்தக் கட்டுரையை கோமாவில் இருப்பவர்களுக்கு அடிக்கடி படித்துக் காட்டுவதும் ஒரு அரிய சேவையே.

கொசு நம்மைக் கடித்தால் உடனே பட்டென்று தட்டி அதன் கதையை முடித்து விடத் துடிக்கிறோம். கோமாவில் இருப்பவர்களை நினைத்துக் கொண்டால் ஒரு சில நிமிடங்களாவது அவர்களைப் போல் நாமும் அமைதியாக இருந்து இறைவனிடம் வேண்டிக் கொண்டால் கோமாவில் இருப்பவர்களுக்கும் நற்கதி கிட்டும், நம் பிரார்த்தனையால் அந்தக் கொசுவும் அடுத்து ஒரு உயர்ந்த பிறவியை அடையுமே.

உயர்ந்த எண்ணம் உடையவர்கள் இன்னும் ஒரு படி மேலே சென்று நம் சற்குருவைப் போல் தங்கள் கையால் அந்தக் கொசுவிற்கு சாமரம் வீசலாம், அப்போது அது கை அல்ல, வரதராஜ பெருமாளுக்கு சாமரம் வீசிய ராமானுஜ பெருமானின் திருக்கரங்களாக மாறும். கையைச் சாமராக மாற்றுவது உங்கள் ‘கையில்’ இருக்கிறது.

கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலையில் உள்ளவர்கள் எத்தனையோ பேர். சந்தர்ப்பங்கள் அவர்களை ஏமாற்றுவது போல் தோன்றும், இது ஒரு பிரம்மையே. இத்தகைய நிலையில் உள்ளோர் இங்கு அளித்துள்ள தனாகர்ஷண சங்கு நாதத்தை ஆழ்ந்து கேட்டு தங்கள் கையால் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசி குருணையுடன் சர்க்கரை சேர்த்து கோயில் மதில் சுவர் ஓரம் இட்டு வந்தால் இந்த நிலை நிச்சயமாக மாறும். வேதனைகளை முக மலர்ச்சியுடன் எடுத்துக் கொள்ள சற்று காலம் தேவையே.

இரு கருட மூர்த்திகளின் நோய் நிவாரண சக்திகள், துளசி தள வருண நாதம் என்ற அபூர்வ தனாகர்ஷண சக்திகள் இந்த சங்கு நாதத்தில் பதிந்துள்ளதால் தினமும் சுவாமிக்கு நைவேத்யம் செய்யும் முன் செல்போனில் பதித்த இந்த நாதத்தை கேட்டபின் நைவேத்யம் நிறைவேற்றுவது சிறப்பே.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam