பணிவின் பாதாளத்தை அடைந்தவன் பக்தியின் சிகரத்தைக் காண்பான் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடியார் நிழல் அமர்ந்த அறத்துறையான் வாழி

திருமால் நெறி வாழி, திருத்தொண்டர் புகழ் வாழி என்றெல்லாம் இறையடியார்களை வாழ்த்துவதுண்டு. மேலோட்டமாகப் பார்த்தால் இதுவும் இறைவனை வாழ்த்துவதாகும்.
திருமால் நெறி வாழி என்பது எட்டெழுத்து மந்திரத்தின் தமிழ் வேத விளக்கமாக அமைந்து விடுகிறது. திருத்தொண்டர் புகழ் வாழி என்பது பன்னிரு திருமுறைகளால் புகழப்பட்டு குரு தத்துவமாய் விளங்கும் சிவனைப் புகழப்படுவதாக அமைகிறது.
இவ்விரண்டு தத்துவங்களுக்கு விளக்கமாய், தெய்வீக கலங்கர விளக்கமாய்ப் பொலிவதே திருவெள்ளறை சிவத்தலமாகும். ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி உடனுறை ஸ்ரீவடஜம்புநாதர் சிவத்தலம் திருவெள்ளறையில் குடவரைக் கோயிலாக அமைந்துள்ளது. மிகவும் தொன்மையான இத்திருத்தலத்தின் அரிய பெருமைகள் சித்தர்களால் விளக்கப்படுவது கலியுக மக்களுக்குக் கிடைத்த பெரும் பேறாகும்.

பொறாமைப் பூத்திட்டால் ...

ஒரு சாதாரண மனிதன் ஒரு பணக்காரனைப் பார்த்து பொறாமைப் படுவதில்லை. ஒரு பணக்காரன் பல கோடிகளுக்கு அதிபதியான பெரும் கோடீஸ்வரனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில்லை. ஒரே அலுவலகத்தில் வேலை செய்யும் இருவரில் ஒருவர் சற்றே வசதியுடன் வாழ்ந்தாலும் அவர்களிடையே பொறாமைத் தீ மூண்டு விடுகிறது.
காட்டுத் தீயை விடவும் அழிக்கும் ஆற்றலை உடையதே பொறாமைத் தீயாகும். எனவே மனிதனுக்கு ஏற்படும் ஆசைகளில் மிகவும் கொடுமையானதாக, மிகவும் சக்தி பெற்றதாக அதை வள்ளுவரே அழுக்காறு, அவா, வெகுளி என்று மனிதனின் அறியாமைத் துன்பங்களை வரிசைப்படுத்துகிறார்.
கடவுளை மனிதன் நெருங்க விடாமல் தடுப்பதே ஆசையாகும். ஆசையைத் துறந்து விட்டால் அனைத்தையும் சாதித்து விடலாம். ஆனால், அது அவ்வளவு எளிதானதா ? ஒரு ஆசையை நிறைவேற்றி விட்டால் அடுத்த ஆசை எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டு விடுகிறது.
இதற்காகவே பெரியோர்கள் இறைவனிடம் ஆசையை வளர்த்துக் கொள்வதே அனைத்து ஆசைகளிலிருந்தும், பற்றுகளிலிருந்தும் விடுபடும் எளிய மார்கமாக உபதேசித்துள்ளார்கள். பல இறை அவதாரங்களும் இந்த மார்கத்தை நமக்குப் புகட்டுவதற்காக தாங்களே அவ்வழியில் நடந்தும் காட்டி வருகிறார்கள்.
அத்தகைய அற்புத சரித்திரமே தெய்வயானையின் தவமாகும். விஷ்ணுவின் அன்பகலா பத்தினியான லட்சுமி தேவி பெருமாளின் திருமார்பில் நிரந்தரமாக உறையும் அனுகிரகத்தை எம்பெருமானை தீயத்தூர் சிவத்தலத்தில் தவம் இயற்றிப் பெற்றாள் அல்லவா ? அது போல தெய்வானைக்கும் தன் இதய நாயகனான முருகப் பெருமானின் இதயத்தில் நிரந்தரமாகக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
மனிதக் கணக்கில் இதற்கு ஒரு மக்கள் வழக்கும் காரணமே. பொதுவாக, எங்கு பார்த்தாலும் வள்ளித் திருமணம் விமரிசையாக நடைபெறுகிறது. ராதா கல்யாணத்தை மக்கள் கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால், தெய்வானை திருமணம் குறித்து எவரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. இதுவும் தெய்வயானைக்கு வருத்தத்தை அளித்தது.
வள்ளித் திருமணமும் ராதா கல்யாணமும் மக்கள் மனதில் இந்த அளவு வேரூன்றியதற்குக் காரணம் வள்ளியும் ராதையும் காதலிகளாக மக்களால் கருதப்படுகிறார்கள். காதலன் காதலி உறவு கணவன் மனைவியின் உறவை விட நெருக்கமானதாக மக்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே முருகப் பெருமானின் உள்ளத்தில் குடியேறி தனக்கு அவர் மேல் உள்ள அளவற்ற காதலை மானிடர்களுக்கு தெரியப்படுத்துவதற்காகவும் துடித்தாள் தேவயானை.
ஒரு இனிய மாலைப் பொழுதில் தன்னுடைய எண்ணத்தை முருகப் பெருமானிடம் வெளியிட்டு தான் எத்தகைய தவமியற்றி இந்த தெய்வீக காரியத்தை நிறைவேற்றலாம் என்று பெருமானின் அனுமதியையும் ஆலோசனையையும் வேண்டி நின்றாள் அந்த உத்தமி. முருகப் பெருமான் புன்னகைத்து, ” தேவி, ஒரு பத்தினிக்கு கணவன் மேல் உள்ள அன்பு அவளுக்கும் அவள் கணவனுக்கும் மட்டும் தெரிந்தாலே போதுமே. இதை ஊரார் அறிய வேண்டிய அவசியம் என்ன ? ஆனால், நீ இதற்காக இயற்றும் தவத்தால் எத்தனையோ கோடி இறை அன்பர்களுக்கு ஒரு உத்தம பாடத்தை கற்பிக்கலாம். அம்முறையில் உன்னுடைய தவத்தை அங்கீகரிக்கிறோம்,” என்று அருளினார்.

தேவயானையின் தேவ அடியார்

தொடர்ந்து தெய்வயானை முருகப் பெருமானின் இதய சிம்மாசனத்தில் அமர்வதற்கான தகுதியை எவ்வாறு வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முறையையும் அருளினார் சுவாமி.
” எந்த தெய்வீக காரியமாக இருந்தாலும், எத்தகைய தவமாக இருந்தாலும் அதை பூலோகத்தில் நிறைவேற்றினால்தான் மிக விரைவில் பலன்கள் கை கூடும். உன்னுடைய தற்போதைய விருப்பத்தை நிறைவேற்றுவதற்கும் பூலோகமே உகந்தது.”
” உன்னுடைய இத்தவம் இதுவரை எவரும் இயற்றாத தவம் என்ற சிறப்பைப் பெற்றால்தான் உன் சித்தியுடன் (லட்சுமி தேவி) நீ மேற்கொள்ளும் சரியான போட்டியாக அமையும்,” என்று தெய்வயானையின் மனதில் உள்ள ஆசைத் தீக்கு நெய் வார்த்தவராக ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்தார் குமரேசன்.

ஸ்ரீஆதித்ய தட்சிணாமூர்த்தி
திருவெள்ளறை சிவத்தலம்

தெய்வானை நாணத்தால் முகம் சிவக்க தலையைக் குனிந்து கொண்டாள். தந்தைக்கே பாடம் படித்த வித்தகன் தெய்வயானையின் மனதைப் படிக்க முடியாதவரா என்ன ?
சுவாமிநாதன் தொடர்ந்தார். ” பொதுவாக மலைக் குகைகளில், பூமிக்கடியில், மரப் பொந்துகளில்தான் நீண்ட கால தவத்தை மேற்கொள்வார்கள். உன்னுடைய இத்தவத்திற்கு உகந்த இடமாக,
நிழல் வார்க்கும் நிழலடியான்
நிழலடியில் நீ வாழ்ந்தால்
நிழலும் நிறம் மாறி
நிமலன் அருள் ஈர்க்குமே,
என்று தெய்வானை தவம் இயற்ற வேண்டிய இடத்தைக் குறிப்பால் சுட்டிக் காட்டினார் சிவமைந்தன்.
தெய்வானை மிகவும் குதூகல மனதுடன் முருகப் பெருமானிடம் விடைபெற்றுக் கொண்டு கந்த லோகத்திலிருந்து புறப்பட்டு பூலோகத்தை அடைந்தாள்.
பூலோகத்தின் பல இறை தலங்களையும் குறிப்பாக சிவத்தலங்களை வழிபட்டு முருகப் பெருமான் சூட்சுமமாக அறிவித்த அந்த நிழலடியார் உறையும் இடத்தைத் தேடத் தொடங்கினாள் தேவி. பூலோகம் எங்கும் பல இறை அடியார்களும் பல விதமான எண்ணங்களுடன் தவத்தில் மூழ்கி இருந்தனர்.
அவர்கள் அனைவரும் எந்த எண்ணத்துடன் தவம் இயற்றுகின்றனர் என்பதை ரிஷிகளும் இறை மூர்த்திகளுமே அறிய முடியும். தெய்வானை சாதாரண மானிட நிலையில் பூமிக்கு வந்திருந்ததால் அவளால் அவர்கள் தவம் இயற்றும் காரணத்தை, அவர்கள் மனதில் உள்ள இரகசியங்களை அறிய முடியாமல் போயிற்று. திகைத்தாள் தேவி.
யுகங்கள் கடந்தன. ஆனால், கோடிக் கணக்கில் சிவத்தலங்கள் இருந்ததால் தெய்வானைத் தொடர்ந்து ஒரு சிவத்தலம் கூட விடாது அனைத்துத் தலங்களிலும் மனித உருவில் வழிபாடுகளை இயற்றி வந்து கொண்டிருந்தாள்.
இவ்வாறு திருவானைக் கோயில் திருத்தலத்தை அடைந்த தேவி அத்திருத்தலத்தைக் கண்டதும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்கினாள். தன்னையும் அறியாமல் தன் உள்ளத்தில் எழுந்த பரமானந்தத்திற்கு காரணம் அவளுக்குப் புரியவில்லை.
அத்தலத்தில் தெய்வானை கண்ட ஒவ்வொரு காட்சியும் அவளை மெய் மறக்கச் செய்தது. தினமும் பசுக்கள் சாரை சாரையாய் அங்கு வந்த நிற்க கண்களை கூசச் செய்யும் தேவப் பிரகாசம் உடைய ஒரு தேவ மங்கை அந்த பசுக்கள் தாங்களாக அளிக்கும் பாலை ஒரு தங்கக் குவளையில் பிடித்து அங்கு வெட்ட வெளியில் உள்ள சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து கொண்டிருக்கிறாள். இறை அடியார்கள் ஆயிரக் கணக்கில் அப்போது சங்கு நாதம் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் வேதங்கள் முழங்க மறு புறம் இறை கீர்த்தனைகள் விண்ணை நோக்கி எழுந்து கொண்டிருந்தன.
அந்த அற்புதமான தெய்வீக சூழ்நிலையில் அங்கு சுவாமிக்கு பால் அபிஷேகம் நிறைவேற்றியது வேறு யாரும் அல்ல. சாட்சாத் உமை தேவியே ஆவாள். அகிலாண்டேஸ்வரி தேவியே அந்த ஞானக் கண்களை தெய்வானைக்கு அளிக்க மறுகணம் உமையவளின் திருப்பாதங்களில் விழுந்து வணங்கினாள். அன்னை அவளை வாரி எடுத்து தெய்வானையின் தவம் விரைவில் கனியும் என்று ஆசீர்வதித்தாள்.
உமையவள் தொடர்ந்து, ” இத்தல இறைவன் வெட்ட வெளியில் அருளாட்சி செய்கின்றான். அன்னவனுக்கு மேற்கூரை வேய எத்தனையோ இறை அடியார்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் எவர் சேவையையும் அவர் ஏற்க சித்தமாக இல்லை. என்னைப் பொறுத்த வரையில் இறை நிழலில் வாழும் இறையடியார் நிழலில் அவர் நிலவ விரும்புகிறார் என்பது நான் இதுவரை அறிந்தது. ”
”அத்தகைய அடியார் எங்குள்ளார் என்பதை நீ கண்டு பிடித்தால் உன்னுடைய தவத்தில் பாதி முடிந்ததுபோல்தான்,” என்று அன்னை அருளினாள்.
தெய்வானை தேவிக்கு ஒன்றும் புரியவில்லை. தன்னுடைய தவம் என்ற சிறுகதை தொடர்கதையாகி ஒரு புராணம் போல் விரிந்து விடுமோ என்று எண்ணி திகைத்தாள். தன் அன்பு கணவனான முருகப் பெருமானைப் பிரிந்து பல யுகங்கள் ஆகி விட்டதால் மீண்டும் கந்த லோகத்திற்கே திரும்பி விடலாமா என்று கூட எண்ணினாள். ஆனால், வெற்றியுடன் திரும்பிச் செல்வதுதான் உத்தமப் பெணடிருக்கு அழகு என்று மனதைத் தேற்றிக் கொண்டு மீண்டும் தன் தேடலை ஆரம்பித்தாள்.

நிழலில் நிறைந்த நிமலன்

ஆனால், இறைவன் வெகுநாள் தெய்வயானையைச் சோதிக்கவில்லை. திரு ஆனைக்காவை தரிசித்த பின்னர் வடதிசை நோக்கி பயணத்தை மேற்கொண்ட தெய்வயானை கொள்ளிட தீர்த்தத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது ஓர் அற்புத ஜோதிப் பிரகாசத்தை வானில் கண்டாள். இதுவரை கண்டிராத அற்புத தெய்வீக ஒளிப் பிழம்பு வானில் பிரகாசிப்பதைக் கண்டு அதிசயித்த தேவி அந்த ஒளியை நாடிச் சென்றாள். தற்போது திருவெள்ளரை சிவத்தலம் இருக்கும் இடத்திற்கு வந்தாள். அப்போது பெருமாள் தலம் தோன்றியிருக்கவில்லை.
சொல்லப்போனால் திருவெள்ளறை என்ற பெயரே இத்தலத்திருத்தலத்திற்கு அப்போது ஏற்படவில்லை. வெண்ணாவலூர் என்பதே திருவெள்ளறையின் மிகப் பழமையான தெய்வீக பெயர். அப்படியானால் இந்த சிவத் தலத்தின் தொன்மை எப்படிப்பட்டது என்பதை யாரால் அறிய இயலும் ?
ஒரு மலை உச்சியில் கடும் வெயிலில் முனிவர் ஒருவர் தவத்தில் லயித்திருக்கும் திருக்காட்சியைக் கண்டாள் தேவி. அவரிடமிருந்தே அந்த தெய்வீக ஒளி வெள்ளம் பெருகி வருவதை ஆச்சரியத்துடன் பார்த்தாள் தேவி. கண் மூடி தவத்தில் ஆழ்ந்திருந்த அந்த தவ சீலரின் அருகில் சென்று நின்றாள் தெய்வானை. அவருக்கு வணக்கம் தெரிவிக்கலாமா, அவ்வாறு வணக்கம் தெரிவித்தாள் அவர் தவம் கலைந்து விடுமோ என்று குழப்பத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது அந்த தபசியே கண்களைத் திறந்து தெய்வானையைப் பார்த்தாள்.
தெய்வானை மிகவும் ஆனந்தத்துடன் முனிவரின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினாள். ” தீர்க சுமங்கலி பவ” என்று வாழ்த்தினார் முனிவர். மறு கணம் தேவயான சற்றும் எதிர்பாராத அதிசயம் நடந்தது.

ஸ்ரீவிநாயகர் திருவெள்ளறை

அம்முனிவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தெய்வானையின் திருப்பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினார்.
ஓம் தத் புருஷாய வித்மஹே வள்ளி ஆத்மநாயகி சமேதாய தீமஹி
தந்நோ சுப்ரமண்ய சுவாமி ப்ரசோதயாத்
என்ற வேத மந்திரம் அவர் திருவாயிலிருந்து அமிர்தமாகப் பொழிந்தது.
”இந்திரனின் பேரருட் செல்வமே, முருகப் பெருமானின் நீங்கா நிழலே அடியார் போற்றும் அருந்தவ தெய்வானை தேவியே தங்கள் திருப்பாதங்களுக்கு அடியேன் வெண்ணாவல் தொண்டனின் பணிவான வணக்கங்கள்,“. முனிவரின் அன்பு பொங்கிய வழிபாடு தெய்வானையை மெய்மறக்கச் செய்தது. அம்முனியின் பணிவைக் கண்டு பிரமித்தாள் தேவி.
முனிவரின் தீர்க்க தரிசனமான வார்த்தைகள் தெய்வயானையைப் பரவசப்படுத்தியது. ”தெய்வானை சமேத முருகப் பெருமான்” என்றல்லவா தெய்வானையை அம்முனிவர் துதித்திருக்க வேண்டும். ஆனால், அவரோ ஆத்மநாயகி என்று தெய்வானையை அழைப்பதன் மூலம் அந்த அற்புத இறையடியாரே தெய்வானை குமரேசனின் ஆத்ம சிம்மாசனத்தில் அமரப் போகிறாள் என்பதை குறிப்பால் உணர்த்தி விட்டார் அல்லவா ?
முக்காலம் உணர்ந்தவர்கள் அல்லவா முனிவர்கள். அவர்கள் வாக்கு சாட்சாத் எம்பெருமானின் வார்த்தைகள் அல்லவா. பேருவகை பூண்டாள் ஆத்மநாயகி.
வெண்ணாவல் தொண்டன் என்ற அந்த முனிவர் தொடர்ந்தார்.
“தேவியே, அடியேன் இங்கு பல யுகங்களாக தவம் இயற்றிக் கொண்டிருக்கிறேன். எம்பெருமான் பல தலங்களிலும் வெட்ட வெளியில் அருளாட்சி செய்து கொண்டிருக்கிறார் அல்லவா ? ஒரே ஒரு இடத்திலாவது அவருக்கு நிழல் தரும் பாக்கியத்தைப் பெறுவதற்காக பல யுகங்களாக இந்தத் தவத்தை இயற்றி வருகிறேன். “
“எவ்வளவோ யுகங்களாக தவம் இயற்றியும் என்னுடைய தவம் கனியவில்லை. ஒரு முறை திருக்கைலாயம் சென்று நந்தி மூர்த்தியிடம் இதற்கான காரணத்தை வினவியபோது அவர் எம்பெருமானிடமே அதற்கான விளக்கத்தைப் பெற்று அடியேனுக்குக் கூறினார்.“
“ இப்பிரபஞ்சத்தில் சிறந்த தவம் என்பது ஒரு உத்தம பத்தினியின் தவமே ஆகும். எனவே என்று ஒரு உத்தம பத்தினி, கணவனை நிழலாய்த் தொடரும் உத்தம பத்தினி ஒருத்தி உன் நிழலைத் தீண்டுவாளோ அன்றுதான் நீ இறைவனுக்கு நிழலாய் அமையும் அருள் பெறுவாய்,” என்று எம்பெருமானின் அருளுரையாக நந்தீஸ்வர மூர்த்தி அருளியபடி உத்தம பத்தினியின் வரவிற்காகவே இத்தனை யுகங்களாகக் காத்துக் கொண்டிருந்தேன்.“
“ஆனால், எம்பெருமான் சேனாதிபதியின் தெய்வசேனாவே அடியேனுக்கு அந்த பாக்கியத்தை அருள்வாள் என்று அடியேன் கனவினும் நினைத்ததில்லை. தங்களுடைய இந்தத் திருப்பணிக்கு அடியேன் என்ன கைமாறு அளிக்க முடியும் ?“ என்று வினவினார். அம்மகரிஷியின் கண்களிலிருந்து ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.
இறையடியார்களின் ஆனந்த வெள்ளத்தின் சங்கமத்தின் இடையே தெய்வானை தன்னுடைய தவத்திற்கான காரணத்தையும் விளக்கிக் கூறினாள். அதைக் கேட்ட முனிவர் சிவபெருமானின் இறை லீலை அற்புதங்களை எண்ணிப் பேரானந்தம் அடைந்தார்.
அப்போது .....
அங்கே பார்வதி பரமேஸ்வரன், வள்ளி முருகப் பெருமான், இந்திராணி இந்திரன், முப்பத்து முக்கோடி தேவர்கள், ரிஷிகள் சிவகணங்கள் குழுமிட அந்த தெய்வீக பேரோளி பிரவாகத்தில் முருகப் பெருமான் தெய்வானை தேவியை தன்னுடைய திருமார்பில் ஏற்றுக் கொண்டார்.
வானவர் பூமாரி பொழிந்தனர். துந்துபிகள் முழங்கின. அந்த உத்தம தெய்வ முகூர்த்த நேரத்தில் சிவபெருமான் வெண்ணாவல் தொண்டன் என்ற அந்த உத்தம மகரிஷியை அவர் விரும்பிய வண்ணமே வெண்ணாவல் மரமாக, ஜம்பு மரமாக ஏற்றுக் கொண்டு அவர் நிழலியே திருஆனைக் காவில் ஸ்ரீஜம்புநாதராக எழுந்தருளி பிரபஞ்சத்திற்கு அருள் மழை பொழிந்தார். வெண்ணாவல் தொண்டன் அன்று முதல் ஜம்பு மகரிஷி ஆனார்.
கூத்தனின் கூத்தை யாரறிவார் ?

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி
திருவெள்ளரை சிவத்தலம்

ஆமாம், குமரனின் மார்பில் நிரந்தர வாசம் கொள்ள தெய்வானை எந்த தவமும் இயற்றியதாகத் தெரியவில்லையே. தெய்வானை மேற்கொண்ட தவமும், ஜம்பு ரிஷியின் தொண்டும் மனிதர்கள் கணக்கில் சில நொடிகள் அளவே. ஆனால், அந்த சில நொடிகள் அவர்கள் ஆற்றிய தவத்தைப் பற்றி சித்தர்கள் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.
காரணம் சித்தர்கள் மட்டுமே நிழல்களை நிஜங்களாகப் பார்க்கிறார்கள், நிஜங்களை நிழல்களாகப் பார்க்கிறார்கள். உயர்ந்த நிலையில் உள்ள மகான்கள் கூட அத்தகுதியைப் பெற முடியாது. எனவே சித்த நிலையில் உணரக் கூடியதே இந்த நிழல் இரகசியங்களாகும்.
மேற்கூறிய நிழல் துதியை தினமும் ஓதி துவாதசி திதிகளில் தயிர் சாதம் நெல்லிக் காய் ஊறுகாய் கலந்து தானம் அளித்து வந்தால் நிழல் பற்றிய இரகசியங்களை ஒரு தூசி அளவு உணர்ந்து கொள்ளலாம் என்பது சித்தர்கள் கூற்று. குரு நம்பிக்கையை வலுப்படுத்துவதே இத்தகைய வழிபாட்டு முறைகள்.
மனிதன் இந்த நிழல் இரகசியங்களைப் பற்றி உணர்ந்து கொள்ள முடியாவிட்டாலும் நிழலுக்கு அடிப்படையான தத்துவத்தைப் பற்றி புரிந்து கொண்டால் போதுமே. நிழல் எப்படி தோன்றும் ? வெயிலில் ஒரு மரம் நிற்கும்போதுதான் அதன் அடியில் நிழல் தோன்றுகிறது. எனவே மரத்தின் தியாகமே நிழலாகும். தியாகத்தின் ஒட்டு மொத்த திரட்சியாக இறைவன் இருப்பதால்தான் அவரை தியாகராஜன் என்று அழைத்து பெருமைப் படுகிறோம்.
முருகப் பெருமான் தெய்வானையைத் தன் திருமார்பில் ஏற்று அருள்புரிந்ததால் தம்பதியிர் ஒற்றுமைக்கு மிகவும் உகந்த தலமாக இத்தலம் சித்தர்களால் போற்றப்படுகிறது. தம்பதியர்களுக்கு இடையே ஏற்படும் எத்தகைய மன வேற்றுமைகளையும் களையக் கூடியது இத்தல வழிபாடு. மேலும் தற்காலத்தில் கூடா நாட்கள், சூன்யத் திதி, குரு சுக்கிர மூடம், தேய் பிறை போன்ற பல கால தோஷங்கள் நிறைந்துள்ள நாட்களில் கூட திருமணங்களை நிகழ்த்தி விடுகிறார்கள்.
இத்தகைய திருமண தோஷங்களை ஓரளவு நிவர்த்தி செய்யக் கூடியதே இத்தலத்தில் இயற்றப்படும் வழிபாடுகளாகும். தாமே அரைத்த மஞ்சளால் இறைவிக்கு அபிஷேகம் நிறைவேற்றி நாவல் பழங்களால் அல்லது சுத்தமான சந்தன உருண்டைகளால் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தேவிக்கு அர்ச்சனை செய்து வழிபடுதல் குடும்பத்தில் குழப்பத்தை நீக்கி அமைதியை உண்டாக்கும்.
பொதுவாக, அம்மன் மூர்த்திகளுக்கு நிறைவேற்றப்படும் இத்தகைய மஞ்சள் அபிஷேகமும், சந்தன உருண்டைகள் அர்ச்சனையும் குடும்ப அமைதிக்கும் சமுதாய அமைதிக்கும் வழிவகுக்கும். நாவல் பழங்கள், நெல்லிக்காய் அர்ச்சனையும் சிறப்புடையதே.
எனவே திருவெள்ளறை சிவத்தலத்தில் ஸ்ரீவள்ளி மட்டும் முருகப் பெருமானுடன் எழுந்தருளி உள்ளதாக நினைக்காமல் தெய்வயானையை சிவநேசனின் ஆத்ம ஜோதியாக, சரவணபவ குகனின் ஆத்ம நாயகியாக, நிமலனின் நீங்கா நிழலாக தியானித்து வணங்குவதே உத்தம முருக வழிபாடாகும்.
குடும்ப ஒற்றுமை, மாங்கல்ய தாரணம், குருவின் தியாகம் போன்ற பல தெய்வீக தத்துவங்களை உள்ளடக்கிய ஒரு உண்மை நிகழ்ச்சியை இப்போது உங்களுக்கு அளிக்கிறோம். ஆனால், இதை மிகவும் கவனமாகப் படித்து பாலிலிருந்து தண்ணீரைப் பிரித்தெடுக்கும் அன்னத்தைப் போல இந்நிகழ்ச்சியின் பின்னால் அமைந்த சற்குருவின் கருணை கடாட்சத்தைப் பற்றி மட்டும் ஆழ்ந்து சிந்தித்து உண்மைப் பொருளை அறியும்படி இறை அன்பர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

ஸ்ரீவடஜம்புநாதர், திருவெள்ளரை

ஒருமுறை நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம் ஒரு அடியார், “ வாத்யாரே, தேவாரப் பாடல்களில் சில விரசமான வர்ணனைகள் உள்ளனவே .... “ என்று கூறியபோது சுவாமிகள் சிரித்துக் கொண்டே, “உங்களுக்கு எது தெரிகிறதோ அதைத்தான் பார்ப்பீர்கள். இதில் உங்களைக் குறை சொல்வதிற்கில்லை, உங்கள் நிலை அது. ஆனால், மகான்களோ சித்தர்களோ இறை மூர்த்திகளை பச்சிளங் குழந்தைகள் தாயைப் பார்ப்பது போல் பார்த்தார்கள். அதை அப்படியே பாடியும் விட்டார்கள்.“
“ இவனைப் பார் (தன் அருகே இருக்கும் ஒரு மூத்த அடியாரைச் சுட்டிக் காட்டி ...) தன்னுடைய மனைவி குளித்து விட்டு வந்தால் கூட அவளை ஓரக் கண்ணால் பார்க்கிறான். ஒரு சத்சங்கத்தில் இருக்கும் இறை அடியார்களே இந்த நிலையில் இருக்கும்போது வெளியே உள்ளவர்கள் எந்த அளவு இறை நம்பிக்கையுடன் இருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுக்கு தேவாரப் பாடல்கள் விரசமாகத் தோன்றுவதில் ஆச்சரியம் இல்லை.“
“ஆனால், இந்த இறைப் பாக்கள் உருப் பெறுவதற்கு ஒவ்வொரு மகானும் எந்த அளவிற்கு தியாகம் இயற்றி ஓடாய்த் தேய்ந்து உள்ளார்கள் என்பது அவர்களுக்கும் இறைவனுக்கும் மட்டும்தான் தெரியும். உதாரணமாக, ”மற்றுப் பற்றெனக்கின்றி ...” என்ற சுந்தர மூர்த்தி நாயனார் பாடிய தேவாரப் பாடலை எடுத்துக் கொள். அதில் வரும், உன்னுடைய கணக்கில் விரசமான வார்த்தைகளை மட்டும் ஒருவன் பாடினால் ஒரு மண்டல காலத்தில் 300 விதமான நோய்கள் தீரும் என்றால் அந்த முழுப் பாடலின் மகிமையை எப்படி வார்த்தைகளால் வர்ணிக்க முடியும். ஆனால், எந்த வார்த்தை எந்த நோயை எப்படித் தீர்க்கும் என்று அறிய வேண்டுமானால் அதற்கு குரு பின்னால் முட்டி தேய சுற்றினால்தான் முடியும். ஆனால், உங்களுக்கு அந்த சிரமத்தைத் தர வேண்டாம் என்பதால்தான் வெறுமனே இந்தப் பதிகங்களைப் பாடினால் போதும் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் ஸ்ரீஅகத்தியப் பெருமான் இறைவனிடமிருந்து பெற்றுத் தந்து விடுவார் என்று அடியேனுடைய குருவின் ஆணையால் கூறுகிறேன்,“ என்று பணிவுடன் தெரிவித்தார்கள்.
இனி அந்தச் சுவையான நிகழ்ச்சியைப் பற்றி அறிவோமா ?

முகூர்த்த இரகசியங்கள்

திருச்சியைச் சேர்ந்த ஒரு அடியாரின் திருமணம் ஸ்ரீவடஜம்புநாதர் ஆலயம், திருவெள்ளறையில் நடக்க இருந்தது. அதற்காக ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் குறித்த தினத்திற்கு முன்னதாகவே திருச்சிக்கு வந்து விட்டார். ஆனால், சுவாமிகள் தன்னுடைய திருமணத்திற்கு வரப் போகிறார் என்ற செய்தி அவருக்குத் தெரியாது.
ஜாதகம், ஜோதிடம் போன்ற விஷயங்களில் அந்த அடியாருக்கு அந்த அளவிற்குப் பரிச்சயமில்லை. எனவே ஏதோ ஒரு ஜோசியரைப் பார்த்து திருமணத்திற்கு நாளைக் குறித்து விட்டார்கள் அடியாருடைய பெற்றோர்கள். ஆனால், அந்த முகூர்த்தம் சுக்ர மூடத்தில் அமைந்திருந்தது. சற்குரு இதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருப்பாரா ?
இப்போது உங்களுக்கு ஒரு ஐயம் தோன்றலாம். மாங்கல்ய தாரண முகூர்த்த நேரங்களில் ஏற்படும் தோஷங்களைக் களைவதற்காகத்தானே இறைத் தலங்களில் திருமணங்களை நிகழ்த்த வேண்டும் என்ற நியதி உள்ளது. அப்படி இருக்க இந்த சுக்ர மூடத்தால் என்ன அசம்பாவிதம் நிகழ்ந்து விடப் போகிறது ? இங்கே ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும்.
இறை சன்னிதானத்தில் மாங்கல்ய தாரணம் நிறைவேறும்போது அனைத்து தோஷங்களும் களையப்படும் என்பது உண்மையே. ஆனால், மாங்கல்ய தாரண முகூர்த்த நேரத்தை நிர்ணயிக்கும்போது அது பற்றிய ஜோதிட அறிவு உள்ளவர்கள் அதை முறையாக மனித அறிவைக் கொண்டு, தானறிந்த ஜோதிட சாஸ்திர அறிவைப் பூரணமாகப் பயன்படுத்தி இறைவனின் கருணையை குருவின் அனுகிரகத்தை வேண்டி முகூர்த்த நேரத்தை நிர்ணயிக்க வேண்டும்.
இதுபற்றி ஸ்ரீசுவாமிகள், ” ஏன் சார், கடவுள் உங்களுக்கு நல்ல அறிவுள்ள மூளையைக் கொடுத்திருக்கிறார் அல்லவா ? களி மண்ணையா உங்கள் தலையில் வைத்திருக்கிறார். நல்ல காரியத்திற்கு, இறைவனை நம்பி வாழும் இறை அடியார்களின் மாங்கல்ய தாரண வைபவத்திற்குக் கூட உங்கள் மூளை பயன்படா விட்டால் அதனால் என்ன பயன் ?“ என்று சிரித்துக் கொண்டே உண்மையை நாசூக்காகப் புகட்டுவார்கள்.

திருவெள்ளறை சிவத்தலம்

இவ்வாறு மாங்கல்ய தாரண முகூர்த்தத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே திருவெள்ளறை சிவத்தலத்திற்கு ஸ்ரீசுவாமிகள் வந்து விட்டார்கள். மாப்பிள்ளை பெண்ணும் ஒரு சில நெருங்கிய உறவினர்களும் சற்று நேரம் கழித்து கோயிலை அடைந்தார்கள். சுவாமிகளை எதிர்பாராத விதமாக அத்திருத்தலத்தில் பார்த்த அந்த அடியாருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அது ஆனந்தக் கண்ணீராக அவர் கன்னங்களில் வழிந்து அவர் சட்டையை நனைத்தது.
வாத்யார், “சரி சார், முதலில் ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். தாமதிக்காமல் உடனே மாங்கல்ய தாரணத்தை நிகழ்த்தி விடுவோம்,“ என்றார். அந்த அடியாருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் நிர்ணயித்த முகூர்த்த நேரம் வர இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. மாங்கல்ய தாரண வைபவத்திற்கு அழைக்கப்பட்டிருந்த குருக்களும் இன்னும் வரவில்லை.
இதைப் பற்றி சுவாமிகளிடம் தெரிவிக்கப்பட்டபோது, “சார், நமக்கு நேரம்தான் முக்கியம். மேலும் உங்கள் சொந்தக்காரர்கள் அனைவரும் வந்தால் அவர்கள் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவார்கள். அம்பாள் சன்னதி முன்தான் தாலி கட்ட வேண்டும் என்பது அவர்கள் கோட்பாடு. ஆனால், நம் பெரிய வாத்யாரோ (இடியாப்ப சித்த ஈச சுவாமிகள்) சிவன் சன்னதியில்தான் தாலி கட்ட வேண்டும் என்று தெளிவுபடுத்தி உள்ளார்கள். எனவே நமது குரு ஆணைப்படி சுவாமி சன்னதியில் மாங்கல்ய தாரணத்தை நிறைவேற்றி விடுவோம் என்றவுடன் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் முன்னிலையில் ஸ்ரீவடஜம்புநாதர் சுவாமி சன்னதியில் அந்த அடியாரின் மாங்கல்ய தாரண வைபவம் இனிதே நிறைவேறியது.
இதில் சுவையான விஷயம் என்னவென்றால் மாங்கல்ய தாரணம் நிறைவேறி, மூன்று முடிச்சுகள் இட்டவுடன் அந்த மாங்கல்யம் மூன்று முறை திருகி மணப் பெண்ணின் நெஞ்சில் அமர்ந்தது கண்டு அத்திருமணத்திற்கு வந்திருந்த அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க அடித்தது. அவர்களிடம் கணவன் மனைவியின் ஒற்றுமையைக் குறிக்கும் தெய்வ சகுனமே என்று குருமங்கள கந்தர்வா தெளிவுபடுத்தினார்கள். அந்த  அற்புதத்தை கண்டு களித்த அனைவரும் தாம்பத்ய ஒற்றுமையைப் பெருக்கும் இறை மூர்த்திகளின் திருவிளையாடல்களை எண்ணி எண்ணி பேராச்சரியம் அடைந்தனர்.
ஆயிரம்தான் ஒரு விஷயத்தை படித்தாலும் ஒரு இறைத்தலத்தின் மகிமையை நேரில் கண்டு அனுபவித்தால்தானே அதன் சுவையை முழுமையாக அனுபவிக்க முடியும்.
அப்போதுதான் நம் குருமங்கள கந்தர்வா அவர்கள் திருவெள்ளறை சிவாலயம் பற்றிய அற்புதங்களையும் ஸ்ரீசெந்தாரைக் கண்ணன் மகிமைகளையும் எடுத்துரைத்தார்கள்.
இது திருவெள்ளரை திருத்தலத்தில் நடந்த நிகழ்ச்சியின் பாதி சுவை. மீதி சுவையையும் சுவைப்போமா ?
சிவபெருமான் திருமகளும் கலைமகளும் காணா தன் மலரடிகளை நில மகளின் மீது பதித்து திருவாரூர் திருத்தலத்தில் பரவை நாச்சியார் சுந்தர மூர்த்தி நாயனார் தம்பதிகளுக்காக எத்தனையோ முறை தூது சென்றார் அல்லவா ?
இறைப் பரம்பொருள் தன் அடியாருக்காக இந்த அளவு இறங்கி வந்து சேவை செய்வது என்பது என்றோ ஒரு நாள் நடந்த கூத்து என்று இறை அன்பர்கள் நினைக்கலாம். ஆனால், இன்றும் சற்குருமார்கள் தங்கள் அடியார்களுக்காக இறைவனின் கூத்தையும் மிஞ்சிய நிலையில் இறை சேவை செய்து வருகிறார்கள் என்பதை அறிந்தால் மெய்சிலிர்க்கும். இது உண்மையே. அதுவே திருவெள்ளறையில் சுவாமிகள் அளித்த மீதி சுவையாகும்.

பணிவின் பாதாளம் காட்டிய பரமன்

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் சென்னையில் நடந்த சம்பவம்.
உயர்ந்த அரசு பதவியில் இருந்த ஒருவர் ஸ்ரீசுவாமிகளைக் காண வந்தார். அவர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் பெரிய வாத்யார் நமது வாத்யாரின் செவிகளில்,“டேய், ஒரு பெரிய கர்ம மூட்ட வருதுடா, பாத்து ஜாக்ரதையா நடந்துக்க,“ என்று எச்சரிக்கை விடுத்தார்.
வாத்யாரும் தன் வழக்கமான பூஜைகளை நிறைவேற்றிக் கொண்டிருந்தார். அப்போது அந்த உயர் அதிகாரி அவரைக் காண வந்திருப்பதாக தெரிவித்தவுடன் வாத்யாரின் மனைவி அவரை வரவேற்று சோபாவில் அமரச் செய்தார்
சில நிமிங்கள் ஆயிற்று. வாத்யார் தன்னுடைய பூஜைகளை முடித்துக் கொண்டு பூஜை அறையிலிருந்து ஒளிப் பிழம்பாய் வெளி வந்தார். வாத்யாரைக் கண்டதும் அந்த உயர் அதிகாரி மிகவும் மரியாதையாக எழுந்து ஒரு பெரிய கும்பிடு போட்டார்.
அந்த அதிகாரியைப் பார்த்தால் அவர் இதுவரை எவருக்கும் வணக்கம் தெரிவித்ததாகவே தெரியவில்லை. அந்த அளவு ஒரு உயர்ந்த பதவியில் இருந்தார். வாழ்க்கை வசதிகளில் ஊறிய உடம்பு என்பது பார்த்தாலே தெரிந்தது. தொந்தி தொப்பையுமாக இருந்தார். சிவந்த கண்கள். உப்பிய கன்னங்கள். அவர் அணிந்திருந்த தோல் பெல்ட்டுக்கு மேல் தொந்தி வெளியில் பிதுங்கிக் கொண்டிருந்தது.

ஸ்ரீஜம்பு மகரிஷி தவநிழல்
திருவெள்ளறை சிவத்தலம்

வாத்யார் கையை அசைத்து அவரை அமரச் சொன்னார். அதிகாரி அமர்ந்தார். வாத்யார் அப்போதெல்லாம் பூஜைகளில் அதிக நேரம் செலவிடுவார். இடுப்பில் ஒரு சிறு துண்டு. உடம்பில் விபூதி பட்டைகள். இதுவே வாத்யாரின் கோலம். வாத்யார் அதிகாரிக்கு எதிரே ஒரு மர நாற்காலியில் அமர்ந்து கொண்டார். எப்போதுமே அந்த மர நாற்காலியில் அமர்ந்து பூஜை செய்து கொண்டிருப்பதால் வாத்யார் அந்த நாற்காலியில் அமர்ந்தவுடன் அங்கே வந்த உயர் அதிகாரி ஏற்கனவே செய்திருந்த அக்கிரம காரியங்கள் சினிமா படம் போல் வாத்யார் கண் முன் ஓடியது.
சாதாரண பணியில் வேலைக்குச் சேர்ந்த அந்த அதிகாரி தனக்கு மேலே உள்ளவர்களைத் திருப்திப் படுத்துவதற்காக எந்த தகாத காரியத்தைச் செய்யவும் தயங்க மாட்டார். இவ்வாறாக மிகவும் குறுகிய காலத்திலேயே தமிழ்நாட்டிலேயே ஒரு பெரிய பதவிக்கு வந்து விட்டார். இதற்காக அவர் செய்த கொலைகள் மட்டுமே 120. மற்ற அடாவடிச் செயல்களை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
அந்த அதிகாரி கூறினார், “சாமி, நான் ரொம்ப நல்லவன். யாரையும் மரியாதை இல்லாமல் பேசியது கிடையாது. கைதிகள், ரௌடிகளைக் கூட கைதொட்டு அடித்தது கிடையாது,“.
வாத்யார் புன்முறுவலுடன், “ஆமாம், ஆமாம் சார். உங்களைப் பார்த்தாலே நீங்கள் எவ்வளவு பெரிய உத்தமர் என்பது தெரிகிறதே.“ என்றார்.
வாத்யார் வார்த்தைகளைக் கேட்டு அந்த அதிகாரிக்கே வெட்கம் வந்து விட்டது.
சற்று நேரம் அமைதி நிலவியது. அந்த அதிகாரி தொடர்ந்தார். “சாமி, ஒரு முக்கியமான விஷயத்தில் உங்கள் ஒத்துழைப்பு வேண்டும். நானும் பல பெரிய மனிதர்களை இது பற்றி விசாரித்தேன் அவர்கள்தான் நீங்கள் என்னுடைய பிரச்னைக்கு சரியான தீர்வை அளிப்பீர்கள் என்று சொன்னார்கள். அதனால்தான் தங்களைக் காண வந்தேன்.“
வாத்யார், ”சொல்லுங்கள் சார், அடியேனால் முடிந்ததைச் செய்கிறேன்.” என்றார்.
அதிகாரி, ”சாமி, என்னுடைய மனைவியை இங்கு வரச் சொல்லட்டுமா ? அவளுக்கு இதில் முக்கிய பங்கு இருக்கிறது,” என, வாத்யார் அதற்கு ஆமோதிக்க அந்த அதிகாரி தன் கையில் இருந்து வயர்லெஸ் கருவி மூலம் ஏதோ சொன்னார். அடுத்த நிமிடமே வாசலில் ஒரு ஜீப் வந்து நிற்க அதிலிருந்து ஒரு நடுத்தர வயது பெண் இறங்கி வந்தாள்.
அவள் விலை உயர்ந்த மேல்நாட்டு சேலை அணிந்திருந்தாள். வீட்டிற்குள் அவள் வரும் முன்னரே செண்ட் வாடை மூக்கைத் துளைத்தது.
உள்ளே வந்த அவளிடம் அந்த அதிகாரி வாத்யாரைப் பார்த்து சைகை செய்ததும் அந்தப் பெண் குனிந்து மரியாதையாக வாத்யாருக்கு கை கூப்பி வணங்கினாள்.
அந்த அதிகாரி, “சாமி, இவள் என்னுடைய மனைவி,“ என்றார்.
”நான் ரொம்ப நல்லவன்” என்ற அதிகாரியின் அண்டப் புளுகை ரசித்த வாத்யார் இந்த ஆகாசப் புளுகையும் ரசித்தார்.
அதிகாரி தொடர்ந்து, ” சாமி, நீங்கள் இருவரும் பேசிக் கொண்டிருங்கள், நான் வெளியில் இருக்கிறேன். நான் இருந்தால் இவள் நான் சொல்வதைக் கேட்க மாட்டாள், ” என்றார்.
அதற்கு வாத்யார், ”அப்படி எல்லாம் இல்லை. இந்த அம்மா தங்கம். நீங்கள் தாராளமாக இங்கேயே இருக்கலாம். உங்களுக்குத் தெரியாமல் நாங்கள் அப்படி என்ன பேசி விடப் போகிறோம்.” என்றார்.
(வாத்யார் பின்னர் அடியார்களிடம், ”அவன் சாதாரண ஆள் கிடையாது. நான் அப்படி ஒரு வேளை அந்தப் பெண்ணிடம் தனியாக பேசி இருந்தால் அப்புறம் நானும் 121வது ஆளாய் ஆகி இருப்பேன்,” என்றார்,)
அதிகாரி, ”சாமி, எனக்கு இப்போது எனக்கு ஒரு ப்ரமோஷன் (பதவி உயர்வு) கிடைத்திருக்கிறது. ஆனால், அதில் ஒரு பிரச்னை இருக்கிறது. நான் சொல்வது போல் இவள் கேட்டால் எனக்கு அந்த ப்ரமோஷன் கிடைத்து விடும். இவளோ என் பேச்சைக் கேட்க மாட்டேன் என்கிறாள். நீங்கள் எப்படியாவது பேசி இவள் என் பேச்சைக் கேட்டு நடக்கச் சொல்லுங்கள்,“ என்றார்.
உண்மை என்னவென்றால் அந்த அதிகாரிக்கு வர வேண்டிய பதவி உயர்வை நிர்ணயிப்பவர் ஒரு அரசியல் பிரமுகர். நியாயமான முறையில் அந்தப் பதவி இந்த அதிகாரிக்கு கிடையாது. காரணம் அவருக்கு மேல் ஒரு தகுதி வாய்ந்த, நேர்மையான சீனியர் ஒருவர் இருந்ததுதான். பதவி உயர்வை உத்தரவிடும் அந்த அரசியல் பிரமுகரை இந்தப் பெண் ”கவனித்தால்” அவர் நியாயத்திற்கு புறம்பாக செயல்பட்டு இந்த அதிகாரிக்கு பதவி உயர்வை அளித்து விடுவார். அதற்கு சிபாரிசு செய்யவே வாத்யாரிடம் அதிகாரி வந்திருந்தார்.
வாத்யார் அந்தப் பெண்ணிடம், ”ஏம்மா, ஐயா சொல்லுகிற மாதிரி நடந்து கொள்வதில் உனக்கு என்னம்மா கஷ்டம் ?” என்று ஒன்றும் அறியாத அப்பாவிபோல் கேட்டார்.
அதற்கு அந்தப் பெண், “சாமி, எத்தனையோ ஆண்டுகள் இவருக்காக ”பாடுபட்டு” பல பதவி உயர்வுகளை வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இனிமேலும் அவ்வாறு செய்ய முடியாது,“ என்று பிடிவாதமாகச் சொன்னாள்.
வாத்யார் கெஞ்சும் குரலில், ”சரிம்மா, இந்த ஒருமுறை மட்டும் உங்கள் ஐயா வார்த்தையை கேட்டுக் கொள் ....  ..... ” என்று கூறவே அந்தப் பெண்ணும், “சாமி இதுதான் கடைசி தடவை. இனி இதுபோன்ற செயல்களைச் செய்யவே மாட்டேன். அதுவும் உங்களைப் பார்த்தால் சாமி போல் தெரிகிறது. சாமி சொன்னதாய் நினைத்து நான் இதற்கு ஒத்துக் கொள்கிறேன்,” என்றாள்.
அந்த அதிகாரிக்கு தாங்க முடியாத சந்தோஷம். வாத்யாருக்கு பிரமாதமாகப் பெரிய கும்பிடு போட்டு விட்டு அங்கிருந்து கிளம்பினார்.
ஒரு வாரத்தில் அந்த உயர் அதிகாரி எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்து விட்டது. அதை வாத்யாரிடம் சொல்ல ஜீப்பில் பறந்து வந்தார். அதற்கு முன்பே பெரிய வாத்யார் நமது வாத்யாரிடம், “டேய், அந்த கர்ம மூட்டை திரும்ப வரும். நீ மறஞ்சி போய்டு,” என்றார்.
நமது வெங்கடராம சுவாமிகளுக்கு அணிமா மகிமா என எத்தனையோ ஆயிரம் சித்திகள், சித்துகள் எல்லாம் கை வந்த கலை. ஆனால், அவர் எதையுமே தனது குருநாதர் இடியாப்ப சித்த சுவாமிகளின் உத்தரவு இல்லாமல் நிறைவேற்றுவது கிடையாது.
அந்த அதிகாரி வாத்யார் இல்லத்தை அடைந்தபோது வாத்யார் ஒரு தொப்பியைப் போட்டுக் கொண்டு வீட்டிற்கு முன்னாள் தோட்டத்தில் பூச்செடிகளுக்கு நீர் வார்த்துக் கொண்டிருந்தார்.
வீட்டிற்குள் வந்த அந்த அதிகாரி வாத்யார் மனைவியிடம், “அம்மா, சுவாமிகளை நான் பார்க்க வேண்டும். நான் வந்திருப்பதாக அவரிடம் சொல்லுங்கள்,” என்றார்.
வாத்யார் மனைவிக்கு முதலில் சற்று ஆச்சரியம் தோன்றியது. கண்ணெதிரே வாத்யார் நிற்கும்போது வாத்யாரைப் பார்க்க வேண்டும் என்று இவர் சொல்கிறாரே என்று நினைத்தாலும் மறு விநாடி இது போல் முன்பு பல நிகழ்ச்சிகளில் பார்ப்பவரின் கண்களுக்கு வாத்யாரின் உருவம் தெரியாது என்று அறிந்திருந்ததால், ”சார், அவர் இப்போதுதான் திருஅண்ணாமலை கிரிவலத்திற்காக புறப்பட்டுச் சென்றார்,” என்றார்கள்.
”சரி” என்று சொல்லிவிட்டு அந்த அதிகாரியும் நேராக திருஅண்ணாமலைக்கு ஜீப்பில் பறந்தார். அங்கே கிரிவலப் பாதையை மூன்று முறை ஜீப்பில் சென்று பார்த்தார். வாத்யாரை எப்படிக் காண முடியும் ?
திரும்பவும் சென்னைக்கு வந்தார். இப்போது வாத்யாரின் மனைவி, ”சார், அவர் வந்து விட்டு இப்போதுதான் கும்பகோணம் கோயிலுக்குப் போனார்,” என்றார்கள். அந்த அதிகாரியும் கும்பகோணத்திற்கு விரைந்தார். இவ்வாறு ஆறு மாதம் நாயாய், பேயாய் அலைந்து திரிந்தாலும் ஸ்ரீவாத்யாரின் திவ்ய தரிசனம் அவருக்குக் கிடைக்கவே இல்லை.
எனவே குரு நினைத்தால்தான் அவர் தூசியைக் கூட நாம் பார்க்க இயலும்.
ஒரு சாதாரண மனிதனால் நினைத்துப் பார்க்க முடியாத அத்தகைய கேவலமான, கீழ்த்தரமான, தன் தகுதிக்கு சற்றும் ஒவ்வாத ஒரு காரியத்தை திருக்கைலாய பொதிய முனிப்பரம்பரை ஆயிரத்தோராவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எதற்காக நிறைவேற்றினார்கள் ?
என்னதான் ஆத்ம விசாரம் செய்தாலும் இந்த நிகழ்ச்சியின் பின்னால் உள்ள தெய்வீக மகத்துவத்தை சற்குரு நாதரின் தியாக உள்ளத்தை அறிந்து கொள்ள முடியாது. தொட்டுக் காட்டினால்தான் சுந்தர ஆனந்தத்தை அறிய முடியும்.
”ஆடிப் பாடி அண்ணாமலை கை தொழ ஓடிப் போகும் வல்வினைகளே, வாய் திறந்து பாடுவீர் வாழ வழி காணுவீர்,” என்றெல்லாம் இறை நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை சித்தர்கள், மகான்கள், பெரியோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும் எந்த வழிபாடும் தனி மனிதனால் நிறைவேற்றப்படுவதை விட கூட்டாக அவை நிறைவேற்றப்பட்டால்தான் அது சமுதாயத்திற்கு மேன்மை தரும் என்பதும் பெரியோர்கள் வாக்கு. இம்முறையில் எழுந்ததே பல தெய்வீக சத்சங்கங்கள். இத்தகைய சத்சங்க அடியார்கள் ஒன்று சேர்ந்து இறை வழிபாடுகளை நிகழ்த்துவதற்காக சென்னையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தார்கள் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள்.
அந்த இடத்தில் இறை பூஜைகள் நிகழும் என்று அறிந்ததால் அந்த இடத்தின் சொந்தக்காரர் சற்று மலிவு விலையில் அந்த இடத்தை அளித்தார். அவர் அரசாங்க உயர் பதவியில் இருந்தவர். நேர்மையானவர்.
இப்போது நீங்கள் கணக்குப்போடுங்கள். இரண்டும் இரண்டும் நான்கு.
ஆம், நற்பணிகளுக்காக இடம் வழங்கிய அந்த அதிகாரிக்குத்தான் உண்மையான பதவி உயர்வு வந்திருக்க வேண்டும். அப்படி பதவி உயர்வு வந்திருந்தால் மேற்கூறிய ”கர்ம மூட்டை” அவர் இடத்தைப் பிடித்திருப்பார். எப்படி ? அவரைப் பொறுத்தவரை நூற்றி இருபதுடன், 121. அவ்வளவுதானே. ஆனால், நற்காரியத்திற்காக தங்கள் உயிரையும் தியாகம் செய்ய சற்குருமார்களும் மகான்களும் காத்திருப்பதால் மனிதக் கணக்கில் எந்தக் கீழ்த்தரமான காரியத்திலும் மகான்கள் இறங்கி இறை நம்பிக்கை உள்ளவர்களை காப்பாற்றி விடுகிறார்கள் என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.
இதைத்தான் நீங்கள் கடவுளை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தால் கடவுள் உங்ளை நோக்கி நூறு அடி எடுத்து வைக்கிறார், ஆனால், சற்குருவோ உங்களை நோக்கி ஆயிரம் அடி எடுத்து ஓடோடி வருகிறார் என்று சொல்கிறார்கள்.
இந்த இரகசியங்களை மேற்கூறிய திருவெள்ளறை திருமண வைபவத்தின்போது நம் குருமங்கள கந்தர்வா தெரிவித்தார்கள்.

ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன்

பக்தி என்பது விளையாட்டல்ல. அவதார மூர்த்திகளும் எம்பெருமானிடம் பக்தியை வளர்ப்பதற்காக யுகக் கணக்கில் தவம் இயற்றி வருகிறார்கள் என்பது நாம் அறிந்ததே. அவரவர் நிலையில் தவத்தை மேற்கொள்ளும் முறையும் பெருமுயற்சியாகவே இருக்கும்.
நாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்கு மூன்று நான்கு மணி நேரம் எடுத்துக் கொள்கிறோம். ஆனால், ஆஞ்சநேய சுவாமிக்கு இது ஒரு காலடி வைக்கும் தூரமே ஆகும். அப்படியானால் மூன்று மணி நேரத்தில் எவ்வளவோ புண்ணியத்தை அவர் சேர்த்து விடலாமே என்று நினைக்கத் தோன்றும். ஆனால், ஆஞ்சநேய மூர்த்தி ஆயிரம் முறை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தால்தான் நாம் ஒரு முறை கிரிவலம் வந்த பயனைப் பெற முடியும். அப்படியானால் நமது நிலை எவ்வளவோ உயர்ந்தது என்றுதானே நினைக்கத் தோன்றும்.
உண்மை என்னவென்றால் எவருடைய நிலையும் உயர்ந்தது தாழ்ந்தது என்று கிடையாது. இறைவன் படைப்பில் ஜீவன்கள் தங்கள் நிலைக்கு உரிய பூஜைகளை நிறைவேற்றி வந்தால் போதும் மற்றவற்றை அந்தப் பரம்பொருள் சித்தம் என்று தெளிவதற்காகத்தான் மகான்கள் இது போன்ற பல ஆத்ம விசார வினாக்களையும் பதில்களையும் அளித்து வருகிறார்கள்.
இதில் நாம் தெளிவு பெறுவதற்காக அறிய வேண்டியதே திருவெள்ளறை ஸ்ரீசெந்தாமரைக் கண்ணன் இயற்றிய பெருந்தவமாகும்.
ஸ்ரீமகா விஷ்ணுவை தேவர்கள் அனைவரும் பிரார்த்தித்து,“அசுரர்களின் பலம் அதிகரித்து விட்டது. நம்முடைய ஆயுதங்களால் அவர்களை வெல்ல முடியவில்லை. எனவே தாங்கள்தான் எங்களை அவர்களிடமிருந்து காக்க வேண்டும்,” என்று வேண்டிக் கொள்ளவே மகாவிஷ்ணுவும் எம்பெருமானை நோக்கி தவங்கள் மேற்கொண்டு பூஜித்தார்.
தினமும் பூலோகத்தில் உள்ள காராம் பசுக்களை கண்டறிந்து அவைகளிடமிருந்து பாலைக் கறந்து அந்தப் பாலின் இளஞ் சூடு ஆறும் முன் அதை பூலோகத்தில் உள்ள ஒரு சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து விட வேண்டும். இவ்வாறு அபிஷேகம் செய்தால் அந்த சுயம்பு லிங்க மூர்த்தி ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு ஒரு செந்தாமரையைப் பிரசாதமாக அளிப்பார்.
அந்த செந்தாமரையே ஸ்வர்ண புண்டரீகம் எனப்படும். சாமுத்ரிகா லட்சணத்தின்படி கண்களில் செவ்வரி ஓடி இருக்க வேண்டும் என்பர். இந்தச் செவ்வரி என்பது வானத்தில் ஒரு செந்நிறக் கீற்று மின்னல் தோன்றுவது  போல் இருக்கும். குறைந்தது ஆயிரம் சுயம்பு லிங்கத்திற்கு பூஜைகள் நிறைவேற்றியவர்களுக்கே இந்தச் செவ்வரிக் கண்கள் அமையும். எனவே கண்களில் செவ்வரி ஓடி இருக்க வேண்டும் என்றால் ஒரு மனிதன் முந்தைய பிறவிகளில் குறைந்தது ஆயிரம் சுயம்பு லிங்க மூர்த்திகளையாவது தரிசனம் செய்திருக்க வேண்டும் என்பது இதன் உட்பொருளாகும். திருவெள்ளறை என்பது இவ்வாறு செவ்வரிய ஓடிய கண்களை குறிக்கும்.

பூமியில் உள்ள சுயம்பு மூர்த்திகளை விஷ்ணு மூர்த்தி தொடர்ந்து பூஜித்து வந்தாரல்லவா ? இவ்வாறு தினமும் ஆயிரம் காராம் பசுக்களிடமிருந்து பாலைப் பெற்று ஆயிரம் சுயம்பு மூர்த்திகளை வழிபட்டு ஆயிரம் ஸ்வர்ண புண்டரீக மலர்களைப் பிரசாதமாகப் பெற்றார்.
அவ்வாறு பெற்ற பிரசாத மலர்களால் வெண்ணாவலூர் ஈசனை வழிபட்டு வந்தார். ஆண்டுகள் கணக்கில் இத்தகைய பூஜையைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் விஷ்ணு மூர்த்தி. கேட்பதற்கு இது சாதாரணமாகத் தோன்றினாலும் இது மிகவும் கடினமான தேவ பூஜை. ஒரு முறை பால் பெற்ற காராம் பசுவிடம் இருந்து மீண்டும் பால் பெறக் கூடாது. ஒரு முறை பூஜித்த சிவலிங்கத்தை மீண்டும் பூஜிக்கக் கூடாது.
இந்த ஆயிரம் சுயம்பு லிங்க பூஜைகளால் பெற்ற மலர்களைக் கொண்டு வெண்ணாவலூர் ஈசனை வழிபட்டு பிரம்ம முகூர்த்த நேரம் முடிவதற்குள் பூஜையை நிறைவேற்றியாக வேண்டும். இத்தனை கடுமையான இறை நியதிகள் இருந்தாலும். அனைத்தையும் இறைப் பெருங் கருணையால் எவ்வித தவறும் நிகழாது பூஜையை நிறைவேற்றி வந்தார் மகாவிஷ்ணு.
ஒரு சுக்ல பட்ச தசமி திதி தினம். ஹஸ்த நட்சத்திர நேரம் முழுவதுமாக அறுபது நாழிகை நிரவி இருந்தது. வழக்கம்போல் ஆயிரம் சுயம்பு லிங்க பூஜைகளை நிறைவேற்றி அதன் மூலம் கிடைத்த ஆயிரம் புண்டரீக பொன் மலர்களால் எம்பெருமானுக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தார்.
ஓம் சிவாய நமஹ
ஓம் ஹராய நமஹ
ஓம் ம்ருடாய நமஹ
.. ...
என்று அர்ச்சித்து தங்க மலர்களை எம்பெருமானுக்கு அர்ப்பித்து வழிபட்டு வந்த ஸ்ரீமகாவிஷ்ணு ஓம் ஸ்ரீஅகர்த்தாய நமஹ என்று அர்ச்சித்து ஆயிரமாவது மலரை இறைவனுக்கு அளிக்க முற்படும்போது மகாவிஷ்ணு திடுக்கிட்டுப் பார்த்தார்.
காரணம் ஆயிரமாவது மலரைக் காணவில்லை. சுற்றும்முற்றும் பார்த்தார் மகா விஷ்ணு. அருகில் எங்கும் மலர்கள் சிதறிப் போகவில்லை. அவர் கூற இருக்கும் நாமமோ ”அகர்த்த” அதாவது இறைவன் எதையும் செய்வதில்லை, அவர் சாட்சி பூதம் மட்டுமே என்பதாகும். சற்றே யோசித்தார் மகாவிஷ்ணு. இனி யோசிப்பதற்கு நேரமில்லை.
செந்தாமரைப் போன்ற அழகு வீசும் தன் கண்களை வலது கையால் அகழ்ந்து எடுத்தார். இறைவனுக்கு அர்ப்பணித்தார். அங்கே வானில் கண்ணைக் கூசச் செய்யும் திவ்ய ஒளிப் பிரவாகம் தோன்றியது. வெள்ளியை உருக்கி ஊற்றியது போன்ற வெள்ளிக் குன்றெனத் தோற்றம் கொண்ட ரிஷப வாகனத்தில் மேல் அமர்ந்து காட்சி அளித்த சிவபெருமான் மகாவிஷ்ணு மூர்த்திக்கு சக்கர ஆயுதத்தை அருளினார்.
எம்பெருமானின் இடப வாகனப் பேரொளி ஸ்ரீமகாவிஷ்ணுவின் கண்களில் பிரகாசித்திட அந்த திவ்ய சிவஜோதி திருவெள்ளறையாகப் பிரகாசித்தது. செந்தழல் வண்ணனின் ஜோதிப் பிரகாசம் செவ்வரியாக அதில் பதிந்தது, படர்ந்தது.
ரிஷப வாகன அருட் சுடரில் எம்பெருமானின் செந்தழல் வண்ணம் பதிந்ததே திருவெள்ளறையில் பிரகாசிக்கும் ஸ்ரீசெந்தாமரைக் கண்ணனின் திவ்ய உருவமாகும்.
ஸ்ரீமகாவிஷ்ணு தேவர்களின் நல்வாழ்விற்காக சக்ராயுதம் பெற்ற இந்த திவ்ய சரிதத்தைப் படிப்பவர்களுக்கும் கேட்பவர்களுக்கும் அனைத்து மங்களங்களும் உண்டாகும். கண் நோய்கள் விலகும். குரு நம்பிக்கை ஸ்திரமாகும்.
இந்த தெய்வீக புராண நிகழ்ச்சி குறித்து ஒரு அடியார் நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம், ”ஏன் வாத்யாரே, திருவீழிமிழலையில்தான் ஸ்ரீமகாவிஷ்ணு சக்ராயுதம் பெற்றார் என்று சொல்கிறார்களே ..... ” என்றபோது ஸ்ரீசுவாமிகள் புன்முறுவலுடன், ”மனிதனுடைய குருவி மூளையை வைத்துக் கொண்டு தெய்வீகத்தை எடை போட்டால் குழப்பமே மிஞ்சும். உங்கள் நிலையில் ஒரு சிறிய விஷயத்தைக் கூறுகிறேன். சென்னைக்கும் புதுடெல்லிக்கும் உள்ள தூரத்தைக் கேட்டால் அது 2000 கி.மீ, என்று பதில் சொல்வீர்கள். இங்கே உள்ள பூகோள மேப்பில் கை வைத்துப் பாருங்கள், சென்னைக்கும் புதுடெல்லிக்கும் இடையே உள்ள தூரம் ஒரு சாண் அளவே. உங்கள் கணக்கு வேறு, மகான்கள் கணக்கு வேறு, சித்தர்கள் கணக்கு வேறு. கால தேச பரிமாணத்தைக் கடந்து நிற்பவர்கள் சித்தர்கள், தெய்வ மூர்த்திகள்.”
திருவெள்ளறை குடவரைக் கோயில்
ஒரு சில கோயில்களில் திருத்தேர்கள் செப்பனிடப் படாமல் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும். ஆனால், கோயில்களில் ஆறு கால பூஜைகள், கும்பாபிஷேகம் குட முழுக்கு, திருவிழாக்கள், பிரம்மோத்சவம் போன்றவை சிறப்பாக நடந்து கொண்டுதான் இருக்கும். இது பற்றி நம் குருமங்கள கந்தர்வா அவர்களிடம் கேட்டபோது இதில் பல இரகசியங்கள் இருக்கின்றன. மண் மறைத்த இரகசியங்கள், ஜோதி மறைத்த இரகசியங்கள், கோயில் மறைத்த இரகசியங்கள் என்றவாறாக பல தெய்வீக இரகசியங்கள் இருக்கின்றன.
இத்தகைய இரகசியங்களைப் பற்றி மகான்கள் அறிந்துள்ளதால்தான் அவர்கள் இது போன்ற விஷயங்களைப் பொருட்படுத்துவதில்லை. உதாரணமாக, ஒரு அடியார் இறைவனுக்காக தேர் ஒன்றை நிர்மாணிக்க விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் தன்னிடம் உள்ள பணம் அனைத்தையும் செலவு செய்து தேர் கட்டுகிறார். ஆனால், பணம் போதவில்லை. பின் தன் சொத்துக்கள், நில புலன்கள், நகைகள் அனைத்தையும் விற்று அந்த தேர்த் திருப்பணியை எப்படியாவது நிறைவேற்றி தேரோட்டி இறைவனை மகிழ்விக்க வேண்டும் என்று எண்ணுகிறார். தேர் திருப்பணி நிறைவுபெறும் தருவாயில் அந்த அடியார் சிவபதம் சேர்ந்து விடுவதாக வைத்துக் கொள்வோம்.
இப்போது சாதாரண மனிதனுடைய எண்ணம் என்னவாக இருக்கும். அந்த மனிதன் எவ்வளவோ கஷ்டப்பட்டு தேரைச் செய்தான். ஆனால், விதி வசத்தால் தேர் தயார் நிலைக்கு வந்தபோது அது ஓடுவதைப் பார்க்க அவனுக்குக் கொடுத்து வைக்கவில்லை. இருப்பவர்கள் அந்தத் தேரை இழுத்து தேரோட்டம் நிகழ்த்துவோம் என்பதே.
ஆனால், அத்தல ஈசன் அதை விரும்புவதில்லை. எவன் தேரை ஓட்ட தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்தானோ அவன் கையால் தேர் ஓட்டுவதைக் காணவே விரும்புகிறான். எனவே இறந்த அந்த அடியார் மீண்டும் மனிதப் பிறவி எடுத்து அந்த தலத்திற்கு வர எத்தனையோ ஆண்டுகள் ஆகலாம். எத்தனை நூறு ஆண்டுகள் ஆனாலும் இறைவன் அந்த அடியார் வந்து அவன் நிர்மாணித்த தேரை ஓட்டி மகிழும் வரை காத்திருப்பார்.
எனவே, ”அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்,” என்று இறைவன் பொறுத்திருந்து தண்டிப்பான் என்பதை மட்டும்தான் மக்கள் உரைக்கிறார்களே தவிர இறைவன் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் அடியார்களுக்கு நன்மை செய்வதற்காக பொறுத்திருப்பான் என்ற இறைப் பெருங் கருணையை அவர்கள் ஏனோ பறை சாற்றுவதில்லை.

வான் புகழ் பெற்ற வம்சோதரர்

நிழல் விழாத கோபுரத்தின் நிழலில் நிலவ விரும்பிய வம்சோதர நந்தி மூர்த்தியைப் போல அடியார் நிழலில் நிலவ அன்புள்ளங் கொண்ட ஸ்ரீவடஜம்பு நாத பெருமானின் விருப்பத்தை நிறைவேற்ற எத்தனையோ அடியார்கள் முன் வந்தாலும் செவ்வரி ஓடிய திருக் கண்களுக்காக மண் மறைத்த இரகசியங்களை உள்ளடக்கி காத்திருந்தார் ஸ்ரீவடஜம்பு நாத பெருமான்.
கற்றோரைக் கற்றோரே காமுறுவர் என்ற இலக்கணத்தின்படி இறைவனின் பெருவிருப்பத்தை உணர்ந்த ஸ்ரீஜம்பு மகரிஷியும் அந்தப் பொன்னான தருணத்திற்காக காத்திருந்து கோச்செங்கட் சோழன் மூலம் திருவெள்ளறையில் குடவரைக் கோயிலை அமைத்தார். ஸ்ரீஜம்பு ரிஷியின் மேற்பார்வையில் அவர் அருளுரையின் பேரில் கோச்செங்கட் சோழனால் அமைக்கப்பட்டதே திருவெள்ளறை சிவத்தலமாகும்.
பக்தி மிகுந்த சிவனடியாரான ஸ்ரீஜம்பு மகரிஷி தவம் இயற்றிய நிழலில் தான் நிலவ வேண்டும் என்ற இறைவனின் பணிவுக்கு இதை விடச் சிறந்த ஒரு தெய்வ சின்னத்தை இந்தப் பிரபஞ்சத்தில் எங்காவது காண முடியுமா ?
பணிவிற்கும், பக்திக்கும் எடுத்துக் காட்டாக, ஊழிக் காலத்தும் மறையாத இறைப் பெருந் தலமாக விளங்குவதே திருவெள்ளரை சிவத்தலமாகும். தன் அடியாரின் பெயரிலேயே ஸ்ரீவடஜம்புநாதர் என்ற நாமத்தையும் இறைவன் ஏற்று அருள்பாலிக்கிறார் என்றால் இறைவனின் பெருங் கருணையை என்னென்று புகழ்வது ?
எதற்காக இறைவன் கோச்செங்கட் சோழனுக்காகக் காத்திருந்தார் ? திருவெள்ளறை என்பது நந்தி மூர்த்தியின் தர்ம கிரணங்களும் எம்பெருமானின் செந்தழல் வண்ணமும் இணைந்ததே என்று கூறினோம் அல்லவா ? இவ்விடத்தில்தானே பெருமாளும் செவ்வரி ஓடிய செந்தாரைக் கண்களைப் பெற்றார். அது போல செவ்வரி ஓடிய அடியார் ஒருவரைக் கொண்டே ஆலயம் அமைக்க வேண்டும் என்று எம்பெருமானின் திருவுள்ளம் அமைந்தது மிகவும் பொருத்தம்தானே.
கோச்செங்கட் சோழன் பிறப்பதற்கு சில நாழிகைக்கு முன்னர் அரண்மனை ஜோதிடர்கள் இன்னும் சற்றும் நேரத்தில்அற்புதமான தெய்வீக முகூர்த்த நேரம் ஒன்றும் அமையும் என்றும் அந்நேரத்தில் பிறக்கும் குழந்தைகள் சிறந்த தெய்வ பக்தியுடன் திகழும் என்று கூறவே கோச்செங்கட் சோழனின் தாய் தன்னை தலை கீழாக கட்டித் தொங்க விட வேண்டிக் கொண்டாள். அதன்படி உத்தம முகூர்த்த நேரத்தில் சிவ குழந்தையாய்த் தோன்றினான்.
மறையும் உடலைத் துறந்து மாளாப் புகழ் பெற்ற தன் தாயின் நல்லாசிகளை பிறக்கும்போதே பெற்றமையால் கோச்செங்கட் சோழன் அற்புதமாய் எத்தனையோ சிவத்தலங்களை இறை அருளால் நிர்மாணித்தான்.
முற்பிறவியில் திருஆனைக் காவில் சிலந்தியாய்ப் பிறந்து ஈசனை வழிபட்டதால் சிவ பூஜைக்கு ஊறு விளைவித்த யானையுடன் பகை கொண்டு தான் கட்டிய சிவத் தலங்களில் யானை புக முடியாதபடி அமைத்தான் என்று பலர் கூறுவதுண்டு.
இது ஒரு உத்தம சிவனடியாருக்குச் செய்யும் அபசாரமாகும். தன்னுடைய உயிரே போனாலும் கவலை இல்லை, இந்த உலகிற்கு ஒரு சிவ பக்தன் கிடைக்க வேண்டும் என்று தன்னுடைய இன்னுயிரைத் தியாகம் செய்த உத்தமியின் மைந்தன் கேவலம் ஒரு யானை சிவனைத் தரிசிக்கக் கூடாது என்று நினைப்பானா ? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
அப்படியானால் யானை புகாத் தலங்கள் என்பதற்கு என்ன அர்த்தம் ?
சிவ பெருமான் முப்புரம் எரித்தான் என்று புகழ்கிறோம். இதன் தத்துவார்த்தம் ரஜோ, தமோ, சத்துவ குணங்களுக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பதாகும். ராமாயணத்தில் ராவணன், கும்பகர்ணன், விபீஷணன் என்ற அசுரர்கள் ரஜோ, தமோ, சத்துவ குண அதிபதிகளாய் விளங்கி விபீஷணன் சத்துவ குணத்தால் ராமனை நெருங்கினாலும் விபீஷணன் தன்னுடைய சத்துவ குணமும் அழிந்த பக்தி நிலையை அடைந்தபோதுதான் ராமபிரானின் பிரம்ம தரிசனத்தைப் பெற்றான். மாயை முற்றிலும் விலகிய நிலையே முக்குணாதீத நிலை.
யானை என்பது சத்துவ குணத்தைக் குறிப்பது. அதனால்தான் யானைக்கு அருகம்புல், கரும்பு போன்ற உணவுப் பொருட்களை அளித்து வணங்கி வந்தால் இறைவனை நெருங்கும் பக்தி நிலையைப் பெறலாம் என்று பெரியோர்கள் அருளியுள்ளார்கள். ஆனால், இந்த சத்துவ குணத்தையும் கடந்து தூய பக்தி நிலையைப் பெற்றால்தான் இறைப் பரம்பொருளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும் என்பதே யானைப் புகாத கோயில் அதாவது சத்துவ குணத்திற்கு அப்பாற்பட்டது சிவப் பரம்பொருள் என்பதாகும்.
செவ்வேள் அபிஷேகம்
பல்வேறு குடும்பப் பிரச்னைகளால் அவதியுறுவோர் திருவெள்ளரை சிவத்தலத்தில் முருகப் பெருமானுக்கும் வள்ளி தேவிக்கும் பசும்பாலில் தேன் கலந்து அபிஷேகம் இயற்றி வருதல் சிறப்பாகும்.
காய்ச்சல், உடல் இளைப்பு, பெண்களுக்கு வெள்ளை படுதல் போன்ற உஷ்ண சம்பந்தமான நோய்கள் விலகும். தாமே அரைத்த சந்தனத்தை இளநீரில் கலந்து அபிஷேகம் நிறைவேற்றுவதாலும் அற்புதமான முறையில் உஷ்ண நோய்கள் நிவாரணம் பெறும். சஷ்டி திதிகளில் இயற்றப்படும் இத்தகைய அபிஷேகம் செவ்வெள் அபிஷேகம் என்றழைக்கப்படும்.
வாகன ஓட்டுனர்கள், வாகன உரிமையாளர்கள், போக்குவரத்துத் துறையில் உள்ளவர்கள் மேற்கூறிய வழிபாட்டு முறைகளால் நற்பலன் பெறுவார்கள்.
மணவாள மாமுனிகள்
இத்தலத்தில் மகாவிஷ்ணுவை வழிபட்டு உன்னத நிலைகள் அடைந்தோர் பலர். திருவெள்ளரை சிவத் தலம் தோன்றும் முன் ஸ்ரீவடஜம்பு நாதர் திருத்தலமே பிரதான மங்கள சாசனக் கோயிலாக அமைந்தது. ராமானுஜர், மணவாள மாமுனிகள் போன்ற உத்தம விஷ்ணு பக்தர்களால் வழிபடப் பெற்ற மூர்த்தியே திருவெள்ளரை சிவபெருமான் ஆவார்.
இத்தலத்தில் தெய்வயானை முருகப் பெருமானின் இதயத்தில் குடியேறும் பெரும் பேறு பெற்றதை மக்களுக்கு உணர்த்திய மாமுனியே மணவாள மாமுனிகள் ஆவார். தொடர்ந்த விஷ்ணு வழிபாட்டில் பேருவகை கொண்டிருந்த மணவாள மாமுனிகளின் கனவில் தோன்றிய ஜம்பு மகரிஷி தெய்வானை முருக ஹிருதய ஐக்கிய சரிதத்தைப் பற்றிக் கூறினார். அதனால் பெரிதும் அகம் மகிழ்ந்த மணவாள மாமுனிகள் அதன் அருளால் ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம் என்ற கிரந்தத்தை உருவாக்கினார்.
புதன் கிழமைகளில் இத்தல பெருமாள் மூர்த்திக்கு சாம்பிராணி தைலம் சார்த்தி விஷ்ணு சகஸ்ரநாமம் ஓதி சர்க்கரைப் பொங்கல் படைத்து வழிபட்டு வர குழந்தைகளின் கல்வி, உயர் கல்வி, அயல்நாட்டுக் கல்வி, வேலை வாய்ப்பு முறையாகக் கிட்டும்.
அயல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரும் தற்காலத்தில் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இத்தல விஷ்ணு மூர்த்தியை மேற் கூறிய முறையில் முறையாக வழிபட்டு வந்தால் முறையான அயல்நாட்டுக் கல்வியும் வேலை வாய்ப்பும் அமையும் என்றும் சித்தர்கள் அருள்கின்றனர்.

ஸ்ரீசந்தான சௌபாக்கிய தேவி

திருவெள்ளறை சிவத்தலத்தில் ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தேவி சகல சௌபாக்ய தேவியாக அமர்ந்திருப்பதாக சித்தர்கள் புகழ்ந்துரைக்கிறார்கள். அம்மனின் எதிரே ஸ்ரீவடஜம்பு நாதர் பெருமான். இது கல்யாணக் கோலம் அல்லவா ? அம்மனின் எதிரே ஸ்ரீமகா விஷ்ணு. அம்மனின் வலது புறம் மூத்த குமாரன் கணேச மூர்த்தி. அம்மனின் இடப் புறம் சம்பதி சமேதராய் இளைய குமாரன். அம்மனோ இறைவனை விட உயர்ந்த ஸ்தானத்தில் அமர்ந்துள்ளாள்.
இது சகல சம்பத் ஐஸ்வர்யங்களை, சந்தான சௌபாக்யங்களை அளிக்க வல்ல அற்புத திருக்கோலமாகும். ஒவ்வொரு இறை மூர்த்திக்கும் ஒவ்வொரு விதத்தில் இறை சக்திகள் பெருகுவதுண்டு.
உதாரணமாக, தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் வம்சோர நந்தி மூர்த்தி மூலவரை விட அளவில் பெரியவராக இருப்பதால் இவர் மூலவர் ஸ்ரீபிரகதீஸ்வரரை விட சக்தி உள்ளவராய், புகழ் பெற்று விளங்குகிறார்.
அது போல மேற்கு பார்த்த அம்பாள் மூர்த்திகளும் மூலவரை விட சக்தி மிகுந்து பொலிவார்கள். உதாரணமாக திருஆனைக்கா ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி, திருவாசி ஸ்ரீபாலாம்பிகை, உய்யக்கொண்டான்மலை ஸ்ரீஅம்மன் மூர்த்திகள் போன்றோர். இவ்வகையில் திருவெள்ளறை ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி தாய் சுவாமியை விட உயர்ந்த இடத்தில் அமர்ந்து அருள்பாலிப்பதால் மூலவரை விட சக்தி மிகுந்து அருளாட்சி செலுத்துகிறாள்.
எனவே திருவெள்ளறை அம்மன் பெண்களுக்கு கிடைத்தற்கரிய ஒரு வரப் பிரசாத மூர்த்தி ஆவாள்.
கஜ பூஜை
ஸ்ரீமகா விஷ்ணு கிடைத்தற்கரிய சுதர்சன சக்கரம் பெற்ற தலமாதலால் ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள், காற்றாலை உரிமையாளர்கள், மிக்ஸி, கிரைண்டர், மோட்டார் சாதனங்கள் தயாரிப்பாளர்கள், விற்பனையாளர்கள் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தியே திருவெள்ளறை சிவபெருமான் ஆவார். இங்கு யானைகளை வரவழைத்து கஜ பூஜை நிறைவேற்றுவதும் யானைகளுக்கு கரும்பு (குறைந்தது ஒரு டன்), நாவல் பழங்களை அளிப்பதும் அற்புத பலன்களை அளிக்கும். யானைகளுக்கு ஒரே ஒரு ஜம்பு பழம் என்ற நாவல் பழத்தை அளித்தால் கூட அதனால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.
சுவாச நோய்கள் தீர அருளும் தலம்.
பெரும்பாலானோர் இளவயதில் இரத்தத் திமிறால் பெரியோர்களை தெய்வங்களை மதிக்காது தான் தோன்றித் தனமாய் வாழ்வார்கள். பலவித வேதனைகளை, சோதனைகளை வாழ்க்கையில் சந்திக்கும்போது இறைவன் இருக்கிறான் என்பதை உணர்ந்து தங்களை திருத்திக் கொண்டு வாழ்வார்கள்.
ஆனால், இளவயதில் நேர்மையாக வாழ்ந்தாலும் வயதாக, வயதாக இறை நம்பிக்கை தளர்ந்து சுய நலம், பேராசையை பெருக்கிக் கொண்டு வீணாவதும் உண்டு. இவ்வாறில்லாமல் கடைசி வரை இறை நினைவுடன் வாழ்ந்து வாழ்க்கையை நிறைவு செய்ய இத்தல வழிபாடு உதவும்.
இறக்கும்போது சளி, மூச்சிரைப்பு போன்ற சுவாசக் கோளாறுகள் ஏற்படாது அமைதியான முறையில் இறை நினைவுடன் வாழ விரும்புவோர் மணவாள மாமுனிகள் அருளிய ஆசார்ய ஹ்ருதய தோத்திரத்தை ஓதி இத்திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றி வருதல் நலம். பணிவையும் குரு நம்பிக்கையையும் வளர்க்கக் கூடிய அற்புத தோத்திரம் இது.

ஸ்ரீ ஆயுஷ்மான் விநாயகர்

திருவெள்ளறையில் சுயம்புவாய் அருள்புரியும் ஸ்ரீஆயுஷ்மான் விநாயக மூர்த்தி ஆயுளை வளர்த்து ஆரோக்கியத்தை அளிக்கும் அனுகிரக மூர்த்தி ஆவார். நீண்ட நோய் நொடியற்ற வாழ்வை விரும்புவோர் அவசியம் வழிபட வேண்டிய மூர்த்தி.
வளர்பிறை ஆயுஷ்மான் யோக நாட்களில் 108 மோதகங்களை இவருக்குப் படைத்து வழிபடுதல் நலம். தேய்பிறை ஆயுஷ்மான் யோக நாட்களில் வேகவைத்த வேர்க்கடலை நைவேத்யம், தானம் இவருக்கு உகந்தது.
பொதுவாக ஒவ்வொரு பிறந்த நாள் அன்றுமே மக்கள் ஆயுஷ் ஹோமம் செய்து ஆயுளை வளர்த்துக் கொள்ள வேண்டும். அந்த நற்பழக்கம் மறைந்து தற்போது 60, 70, 80 ஆண்டு நிறைவுகளில் மட்டுமே ஹோமம், வழிபாடு என்று ஆகி விட்டது. இவ்வாறு ஹோம வழிபாடுகளை நிகழ்த்த முடியாதவர்கள் ஆயுஷ்மான் யோக நாட்களில் இப்பிள்ளையாரை வழிபடுதல் மிகவும் சிறப்பாகும். தங்கள் பிறந்த தினங்களிலும், திருமண நாட்களிலும் ஸ்ரீஆயுஷ்மான் விநாயகரை துதித்தல் அற்புத பலன்களை அளிக்கும்.
ஸ்ரீஆதித்ய தட்சிணா மூர்த்தி
திருவெள்ளறை சிவத்தல தட்சிணா மூர்த்தி சற்றே மேற்குப் புறம் சாய்ந்து அருள்பாலிக்கிறார். இது ஆதித்ய தட்சிண நிலை என்று சித்தர்களால் புகழப்படுகிறது. இந்த தேவ நிலைக்கு எவ்வளவோ மகாத்மியங்கள் இருந்தாலும் ஆதித்ய இயக்கத்தில், சூரிய கதியில் ஏற்படும் பல்வேறு துன்பங்களிலிருந்து மீள அருள் புரிபவரே ஸ்ரீஆதித்ய தட்சிணா மூர்த்தி ஆவார்.உதாரணமாக, சூரியப் புயல், அதிக வெப்பம் போன்ற சூரிய கிரண தாக்குதல்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய மூர்த்தி இவரே. தங்கள் கைகளால் அரைத்த சந்தன உருண்டைகளால் சுவாமியின் நெற்றி, கண்கள், மார்பு, வயிறு, பாதங்கள் இவற்றை அலங்கரித்தல் நலம்.
2020ம் ஆண்டு பல நாட்களுக்கு சூரியக் கதிர்கள் மறைந்து விடும். உலகில் பெரும் குழப்பம் ஏற்படும். அப்போது ஸ்ரீஆதித்ய தட்சிணா மூர்த்தி வழிபாடே மனக் குழப்பங்களிலிருந்து இறை அன்பர்களைக் காக்கும் என்று சித்தர்கள் அருள்கின்றனர்.

பல்லக்கு நந்தி தேவர்கள்

திருவெள்ளறை சிவாலயத்தில் சிவனை தரிசிக்கும் நந்தி மூர்த்திகளில் ஒருவர் தரை மட்டத்திலும் மற்றொரு நந்தி மூர்த்தி சற்று உயரமான இடத்திலும் அமர்ந்துள்ளார். இத்தகைய நந்தி மூர்த்திளை பல்லக்கு நந்தி தேவர்கள் என்று அழைக்கிறார்கள். தஞ்சாவூர் ஸ்ரீபிரகதீஸ்வரர் ஆலயத்திலும் இது போன்ற நந்தி மூர்த்திகள் அருள் வழங்குகின்றனர்.
இம்மூர்த்திகள் ஒருவொருக்கொருவர் கிழக்கு மேற்காக அமையும்போது இவர்கள் நிழல்துறை நந்தி தேவர்கள் என்றும் அழைக்கப்படுகின்றனர்.
இத்தகைய நந்தி மூர்த்திகளை வழிபடுவதால் விளையும் பலன்கள் ஏராளம். அவைகளில் சிலவற்றைப் பற்றி மட்டும் இங்கு விளக்குகிறோம்.
பல்லக்கு என்பது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வு நிலைகளைக் குறிக்கிறது. பல்லக்கில் அமர்ந்து செல்பவர்கள் உயர்ந்த நிலையிலும் பல்லக்கைத் தூக்கிச் செல்பவர்கள் தாழ்ந்த நிலையிலும் இருப்பதாக நினைப்பது சமுதாயக் கண்ணோட்டம்.
இவ்வாறு சமுதாயத்தில் பொருளாதாரம், வசதி, வாய்ப்புகள், உத்யோகம், படிப்பு போன்ற காரணங்களால் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் இந்த நந்தி மூர்த்திகள் வழிபாட்டால் நல்ல நிலையை அடைவார்கள்.
உதாரணமாக, வயதான காலத்தில் பணம் இல்லாமல் தங்கள் குழந்தைகளை நம்பி இருக்கும் பெற்றோர்கள், குருடு, செவிடு, கை, கால் ஊனம் போன்ற குறைபாடுகளால் மற்றவர்களின் தயவில் வாழ்பவர்கள், படிப்பறிவில்லாதவர்கள், ஒரு வேளை சோற்றிற்கே வழி இல்லாமல் வாழும் வறியவர்கள் போன்றோர் இந்த நந்தி மூர்த்திகளை நித்திய பிரதோஷ நேரமான மாலை நாலரை மணி முதல் ஆறரை மணி வரையிலான நேரத்தில் வழிபட்டு வருவதால் வாழ்வில் நல்ல திருப்பத்தை அடைவார்கள்.
அவ்வாறு நன்னிலை அடைந்தவர்கள் திருக்கோயில் தெய்வ மூர்த்திகளை எழுந்தருளச் செய்ய தரமான பல்லக்குகளை செய்து அளித்தல் நலம். பிரதோஷ வாகன மூர்த்திகளை செய்து அளித்தலும், கோயில் வாகன மூர்த்திகளை பழுது பார்த்து, வண்ணம் பூசி புதுப்பித்தலும் சிறப்பாகும்.
அது இயலாதபோது குறைந்த பட்சம் கோயில் புறப்பாடு சமயத்தில் தெய்வ மூர்த்திகளைத் தோளில் சுமக்கும் கைங்கர்யங்களையாவது செய்து இறைவனுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.
உயர் அதிகாரிகளால், உயர் அந்தஸ்தில் உள்ளவர்களால் மிதிக்கப்படும் தொழிலாளிகள், குடும்பச் சூழ்நிலையால் தரக் குறைவான பணிகளில் ஈடுபட வேண்டிய இளம் பெண்கள் இந்த நந்தி மூர்த்திகளை வழிபட்டு நன்னிலை அடையலாம். கருணைத் தெய்வங்கள் இவர்கள்.
உண்மையில் இத்தகைய நந்தி மூர்த்திகள் மூலவரை விட சக்தி மிகுந்தவர்களே. இது பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியைக் காண்போம்.
தஞ்சை ஸ்ரீபிரகதீஸ்வர ஆலயத்தில் வம்சோதர நந்தி (பெரிய நந்தி) மூர்த்திக்கு திருப்பணி செய்யும் வாய்ப்பை அடியார்கள் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் குருஅருட் கடாட்சத்தால் சுமார் 20 வருடங்களுக்கு முன் பெற்றார்கள்.
இறை மூர்த்திகளை யாரும் தொடக் கூடாது என்பதால் மிகவும் கடுமையான விதிமுறைகளை விதித்திருந்தார் சுவாமிகள். அனைவரும் விரல் நகங்களை வெட்டி தூய்மை செய்து, உடல், மன சுத்தியுடன் நந்தி மூர்த்தியைத் தொட்டு அவர் மேல் உள்ள அழுக்கை அகற்றுவதற்காக ஆயிரக் கணக்கில் வேத மந்திரங்கள் ஓதி சுத்தம் செய்யப்பட்ட மூலிகை திரவியங்களால் காப்பிட்டு மிகவும் மெதுவாக மென்மையான தேங்காய் நார், தீர்த்தம் கொண்டு அந்த நந்தீஸ்வர மூர்த்தியைத் தூய்மை செய்யும் பணியை ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் மேற்பார்வையில் செய்து வந்தார்கள்.
ஸ்ரீசுவாமிகளே அருகில் இருந்து திருப்பணியை அடியார்களின் உதவியுடன் நிறைவேற்றினார்கள். மூங்கில் கொண்டு சாரம் அமைத்து அதில் நின்றவாறுதான் அனைத்து திருப்பணிகளும் நிறைவேற்றப்பட்டன. அறியாமல் கூட கைகளைத் தவிர தேவையில்லாமல் உடம்பின் எப்பகுதியும் நந்தி மூர்த்தியின் திருமேனியின்மேல் பட்டு விடக் கூடாது என்று மிகவும் கவனமாக திருப்பணியை நிறைவேற்றும்படி ஸ்ரீசுவாமிகள் அடியார்களிடம் கூறியிருந்தார்கள்.
அடியார்கள் மிகவும் கவனமாகவும், எச்சரிக்கையாகவும் திருப்பணியை நிறைவேற்றினார்கள். மூன்றாம் நாள் மாலை திருப்பணி நிறைவேறும் சமயம் வம்சோர நந்தி மூர்த்திக்கு வாசனை தைலம் பஞ்சு கொண்டு அவர் திருமேனி எங்கும் பூசப்பட்டது. பச்சிளங் குழந்தைகளுக்கு பவுடர் அடிப்பது போல் நந்தி மூர்த்தியின் திருமேனியில் பஞ்சினால் வாசனைத் தைலம் தடவப்பட்டது.
அது நிறைவேறியவுடன் ஸ்ரீசுவாமிகள் இரண்டு அடியார்களை அழைத்து எதிரே உள்ள கொடிமரத்தைச் சுட்டிக் காட்டி, ”சார், அந்த மரத்தின் அடியில் நான்கு பக்கங்களிலும் உள்ள நான்கு குட்டி நந்தி மூர்த்திகளுக்கும் பஞ்சினால் தைலக் காப்பைப் போடுங்கள்,” என்றார்.
அங்கிருந்த அடியார்கள் தங்கள் மனதிற்குள், ”ஆமாம், நந்திக்கு தடவியதுபோக மீதி தைலம் இருக்கிறதே. அதை அந்த குட்டி நந்திகளுக்கும் போடலாமே,” என்று நினைத்தனர்.
ஸ்ரீசுவாமிகளின் பதிலோ, ”இந்த மூன்று நாட்கள் வம்சோதர நந்தி மூர்த்தியின் சக்திகளை தாங்கி இருந்தவர்கள் அவர்கள்தான். என்னதான் நாம் ஜாக்கிரதையாக இருந்தாலும் திருப்பணியில் ஏதாவது தவறு ஏற்பட்டு விட்டால், அது தேவ குற்றம் ஆகி விடும் அல்லவா ? எனவேதான் அடியேன் வம்சோதர நந்தி மூர்த்தியின் தெய்வ பிரதிஷ்டா சக்திகள் அனைத்தையும் அந்த நந்தி மூர்த்திகளுக்கு மாற்றி விட்டேன், ” என்று வந்தது.
அடியார்கள் முகங்களில் ஆச்சரிய அலைகள் வீசின.
தொடர்ந்து ஸ்ரீவாத்யார், ”இந்த இரகசியத்தை முன்பே உங்களுக்கு தெரிவித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் ? சரி சரி சக்தி இல்லாத நந்திதானே எப்படி திருப்பணி செய்தால் என்ன என்ற அசிரத்தையும் அஜாக்கிரதையும்தானே தோன்றியிருக்கும் ? எனவே நாங்கள் எது செய்தாலும் அதற்குப் பின்னால் ஆயிரம் ஆயிரம் காரண காரியங்கள் இருக்கும்,” என்ற சித்த உபநிஷத்தை ஆயிரமாவது முறையாக உதிர்த்தார்.
அடியார்களும் அது சரியே என்று வழக்கம்போல் தலையை ஆட்டி வைத்தனர்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam