மின்மினிப் பூச்சியின் பட்டொளியும் அருணையின் அங்கமே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

தெய்வீக மின்மினி

உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவனின் படைப்பிற்குப் பின்னும் ஆழ்ந்த தெய்வீக காரணங்கள் உண்டு. இவ்வகையில் மின்மினிப் பூச்சிகளின் படைப்பிற்குப் பின்னும் சுவையான ஆன்மீக அர்த்தங்கள் உண்டு.

மனிதனை மிகவும் கவர்ந்த பல உயிரினங்களில் மின்மினிப் பூச்சியும் ஒன்று. எந்த உயிரினத்தின் படைப்பு இரகசியமும் விஞ்ஞானத்தின் கருவிகளுக்குப் புலப்படாது என்பது உண்மையாயினும் மின்மினிப் பூச்சிகளின் ஒரு சிறு அணுக் கூற்றைக் கூட இன்றைய விஞ்ஞானக் கோட்பாடுகளால் விளக்க முடியாது என்பதே சித்தர்கள் நமக்கு அறிவுறுத்தும் பாடமாகும்.

விளக்கு என்று இருந்தால் அதில் ஒளியும் வெப்பமும் இருப்பதே இயற்கை. ஆனால், ஒரு சிறிது வெப்ப சக்தியும் இன்றி ஒளியை மின்மினிப் பூச்சிகள் அளிக்கின்றன என்றால் அதன் தெய்வீகத் தன்மை எத்தகைய சிறப்பு வாய்ந்தாக இருக்கும்?

பொதுவாக, மின்மினிப் பூச்சிகள் நமது பூமிக்கு உரிய சிவப்பு (மண்) வண்ணத்தையும், புவர் லோகத்திற்கு உரித்தான பச்சை வண்ணத்தையும், சுவர் லோகத்திற்கு உரித்தான மஞ்சள் வண்ணத்தையும் தங்கள் ஒளிப் பிரகாசத்தால் அளிக்கின்றன. எனவே மின்மினிப் பூச்சிகளை ”திரிலோக சஞ்சாரிகள்” என்று காரணப் பெயரால் அழைக்கின்றனர். சித்தர்களோ அவற்றை சுடர்மணிகள் என்று அன்புடன் விளிக்கின்றனர்.

இறைவனை, ”சோதியே, சுடரே,” என்றுதானே பெரியோர்கள் அழைப்பார்கள். முழுக்க முழுக்க ஒளிப் பிரகாசம் மட்டும் நிறைந்ததே சுடர் எனப்படும். இறைவன் வெறும் ஜோதிப் பிரகாசமாகவே விளங்குவதால் அவரை அருட்பெருஞ்சோதி என்றும், சுடர் என்றும் அழைக்கின்றனர். ”தோளா முத்தச் சுடரே,” என்று துதிக்கும்போது பிரகாச ஒளி மட்டுமே முழுவதும் நிறைந்தவர் என்பதுதானே அர்த்தமாகின்றது?

இவ்வாறு தங்கள் வாழ்நாள் முழுவதும் மூன்று லோகங்களுக்கும் உகந்த வண்ண ஜோதிக் கிரணங்களை பரப்பியே வாழ்வதால்தான் சித்தர்கள் மின்மினிப் பூச்சிகளை சுடர் மணிகள் என்று பாராட்டுகின்றனர்.

தமிழ் மொழி சுப்ரமண்ய சுவாமியின் தூல சரீரமாக அமைவதால் தமிழ் வார்த்தைகளில் ஆழ்ந்த அற்புதமான அர்த்தங்கள் பொதிந்திருக்கும். மின்மினி என்னும் தமிழ் வார்த்தையும் அர்த்தம் பொதிந்த பதமாகும். ”ம, ன” என்ற மெல்லின எழுத்துக்களால் ஆன மின்மினி என்ற வார்த்தை மென்மையைக் குறிக்கும். பெயருக்கேற்ப இப்பூச்சிகளின் உடல் மிகவும் மென்மையாக, மிருதுவாக இருக்கும்.

ஸ்ரீவிநாயகர் கருப்பத்தூர்

பொதுவாக, ஒருவர் எந்த அளவு இறைவனை நோக்கி தவம் இயற்றுகிறாரோ அந்த அளவிற்கு அவருடைய உடல் உறுப்புகள் மென்மை அடையும். மகான்களின் தூல உடம்பை தொட்டுப் பார்த்து உணரும் பாக்கியம் பெற்றவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். மேலும் எந்த அளவு உடல் மென்மையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது வலிமை உள்ளதாகவும் இருக்கும்.

பெண்கள் ஆண்களை விட ஏழு மடங்கு ஆன்மீக சக்தி உடையவர்களாக இருப்பதால் அவர்கள் மென்மையான உடல் வாகுடன் இருக்கிறார்கள். மேலும் அதிக சக்தியை வெளிப்படுத்தக் கூடிய அவர்களுடைய ஜனன உறுப்புகளும் மிகவும் மென்மையாக இருப்பதற்குக் காரணமே அந்த உறுப்புகளால் நிறைவேற்றப்பட வேண்டிய பணி மிகவும் சிறப்புடையது என்பதற்காகத்தான். இதை உணர்வதே உண்மையான தெய்வீகம்.

அப்படியானால் உலகில் உள்ள ஜீவன்களை கரையேற்றுவதற்காக அவதாரம் எடுத்து வந்துள்ள மகான்களின் உடல் மிகவும் பஞ்சு போல் மென்மையாக இருப்பதில் அதிசயம் இல்லையே.

அதே போல மிகவும் மென்மையான உடலமைப்பை மின்மினிப் பூச்சிகள் பெற்றிருப்பதால் அவைகளின் பெயரும் மென்மையான எழுத்துக்களால் அமைந்துள்ளன.

மேலும், மின்மினிப் பூச்சிகள் என்று கூறும்போது ”பூச்சி” என்ற வார்த்தையில் பொதிந்த அர்த்தத்தையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ”பூச்சி” என்ற வார்த்தைக்கு உரிய பல அர்த்தங்களில் ”அடிப்படை உயிர்”, ”காரணம்” என்பவையும் அடங்கும்.

சித்தர்கள் கூற்றின்படி விந்து இரகசியம் அறிந்தவனே உயிர் இரகசியம் அறிந்தவன் ஆகிறான். உயிர் இரகசியம் அறிந்தவன்தான் ஆத்மாவைப் பற்றி உணர முடியும். ஆன்மாவை உணர்ந்தவன்தான் இறை தரிசனம் பெற முடியும். விந்து இரகசியத்திற்கு ஆதாரமாய் இருப்பதே சுக்ர சக்தியாகும். இந்த சுக்ர சக்தியை அளிப்பதே மின்மினிப் பூச்சிகளின் அருந் தொண்டாகும்.

ஆம், கற்பனைக்கும் எட்டாத அற்புத ஆன்மீகத் தொண்டாற்றுபவையே மின்மினிப் பூச்சிகளாகும். நவீன விஞ்ஞானக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டுச் சொன்னால் ATP enzyme கூறின் மூல சக்தியாக அமைவதே சுக்ர சக்தியாகும். இதை எந்த உபகரணங்களாலும் பார்க்கவோ உணரவோ முடியாது.

இவ்வாறு மனித சமுதாயத்திற்கு வேண்டிய சுக்ர சக்திகளை வான மண்டலத்திலிருந்து கிரகித்துத் தரும் இந்த அற்புத சேவையை மின்மினிப் பூச்சிகள் எப்படி நிறைவேற்றுகின்றன என்பதை விளக்குவோம்.

ஒவ்வொரு மார்கழி மாதப் பிறப்பிலும் திருஅண்ணாமலை உச்சியிலிருந்து வெண்பனி வடிவில் ஒரு சக்தி உற்பத்தியாகி உலகெங்கும் வியாபிக்கிறது. இதை ஆங்கிலத்தில் ஓசோன் என்று அழைக்கிறோம். இந்த ஓசோன் வாயு மிகவும் சக்தி வாய்ந்த கிருமி நாசினி. இதன் சக்தியைப் பெறுவதற்காக தமிழ்நாட்டில் உள்ள மக்கள் விடியற் காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து வீட்டு வாசலை நீர் விட்டு சுத்தம் செய்து, பசுஞ் சாணம் தெளித்து அதன் மேல் பச்சரிசி மாக்கோலம் இட்டு பசுஞ் சாணத்தை அந்தக் கோலத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு பறங்கிப் பூவை வைப்பார்கள்.

மார்கழி என்பது மார்கசீர்ஷம் என்னும் நட்சத்திரத்தின் (தமிழில் மிருக சீரிடம்) பெயரைக் கொண்டு வழங்கப்படுவது. மிருக சீர்ஷ நட்சத்திரம் செவ்வாய் பகவானின் பாத சாரத்தைப் பெற்றிருப்பதால் மார்கழி மாதத்தில் அற்புதமான பூமி சக்திகள் தோன்றுகின்றன. இந்த பூமி கிரணங்களையும் ஓசோன் வாயு கிரணங்களையும் ஒருங்கிணைப்பதே பச்சரிசி மாக்கோலம், பசுஞ் சாணம், பறங்கிப் பூ (மஞ்சள் பூசணிப் பூ).

ஸ்ரீசுகந்தகுந்தளாம்பாள் கருப்பத்தூர்

எனவே நமது முன்னோர்கள் கற்றுத் தந்த வழிபாட்டு முறைகள் அற்புதமான அனுகிரக சக்திகளை அளிக்கக் கூடியவை. மார்கழி மாதத்தில் இத்தகைய வழிபாடுகளை நிறைவேற்றி விட்டால் அந்த வருடம் முழுவதும் மக்களுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து விடும் என்றால் மார்கழி மாத வழிபாட்டுப் பலனை எப்படி வார்த்தைகளால் விளக்க முடியும்.

அதே போல இந்த ஓசோன் வாயுவை கிரகித்து அதிலிருந்து மக்களுக்குத் தேவையான சுக்கிர சக்திகளைப் பெற்றுத் தருவதே மின்மினிப் பூச்சிகளின் சேவையாகும். சாதாரண மனிதர்களால் ஓசோன் வாயுவிலிருந்து சுக்ர சக்தியை கிரகிக்க முடியாது. அதற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட ஜீவன்களால்தான் அந்தப் பணியை நிறைவேற்ற முடியும்.

சுக்கிரனுக்கு உரித்தான எண் 6. எனவே ஆறு கால்கள் உடைய வண்டினங்களும் பூச்சிகளும்தான் சுக்கிர சக்திகளை இனங் கண்டு கொள்ள முடியும். மேலும் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகத்திற்கு உடைய வண்ணங்களை அளிக்கக் கூடிய ஜீவன்கள்தான் சுக்ர சக்திகளைக் கையாள முடியும்.

மின்மினிப் பூச்சிகள் புழு பருவத்தில் இருக்கும்போது மார்கழி மாதம் முழுவதும் பூமியை விட்டு வெளிவராமல் பூமி சக்திகளைக் கிரகிக்கின்றன. அப்போது அவை எந்த உணவையும் ஏற்பதில்லை. மார்கழி மாதம் முழுவதும் உபவாசம் இருந்து உத்தராயணத்தில் கண் திறக்கின்றன. அப்போது சூரிய பகவானை வழிபடும் நத்தை போன்ற ஜீவன்களை உணவாகக் கொள்கின்றன.

இதன் பின்னால் அற்புத ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளன. மனிதனைத் தவிர மற்ற ஜீவராசிகள் தங்கள் உடலை மற்ற ஜீவ ராசிகளுக்கு உணவாக அர்ப்பணித்து பொது நலத்தைப் பேணுகின்றன. உதாரணமாக, ”பா, பு” என்ற பீஜாட்சரங்களை ஓதி கஞ்சலங்கை என்ற தவளை ஒரு வருடம் முழுவதும் ஓதி அதன் பலனை தானே உணவாக மாறி இஷ்ட பரிமாண திவ்ய நாகம் என்னும் நாகதேவதைக்கு அளிக்கும் தியாகத்தை திருக்கழிப்பாலை திருத்தல வரலாற்றின் மூலம் நாம் அறியலாம். இதன் விளக்கங்களை கடுக்கன் மகிமையை விளக்கும் எமது நூலில் காணலாம்.

அதே போல நத்தைகள் சூரிய பகவானைத் துதிப்பதால் கிடைக்கும் அனுகிரக சக்திகளை மின்மினிப் பூச்சிகளுக்கு அளிக்கின்றன. அதனால்தான் தங்கள் ஒரு மாத உபவாசத்திற்குப் பின் நத்தைகளை உண்ட மின்மினிப் பூச்சிகள் எந்த வண்ணத்திலும் ஒளிப் பிரகாசத்தை ஏற்படுத்தும் அற்புத தெய்வீக சக்திகளுடன் விளங்குகின்றன.

அது காரணம் பற்றியே நத்தைகள் ஊர்ந்து சென்ற தாரையில் சூரிய ஒளி பட்டு அது மனிதர்கள் மேல் பிரகாசித்தால் சுப சகுனமாக கணக்கிடப்படுகிறது.

இவ்வாறு செவ்வாய் பகவானின் அனுகிரகத்தையும் சூரிய பகவானின் அனுகிரகத்தையும் பெற்ற மின்மினிப் பூச்சிகள் சூரிய பகவானின் ஏழு நிறங்களுடன் சத்துவம், ரஜோ தமோ குண பேதங்களையும் இணைத்து ஒன்பது வண்ணங்களுடன் மிளிர்கின்றன. ஒரு மனிதனுக்கு உள்ள ஒன்பது சூட்சும உடல்களின் வண்ணங்களைத்தான் மின்மினிப் பூச்சிகள் பிரதிபலிக்கின்றன என்பதே இதுவரை மக்கள் சமுதாயம் அறிந்திராத தெய்வீக உண்மையாகும்.

ஒன்பது வண்ண ஒளிக் கீற்றுக்களை
வெளிப்படுத்தும் மின்மினிப் பூச்சி

இந்த விந்தையை இங்கே உள்ள படத்தின் மூலம் நீங்களே கண்டு உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு ஒன்பது வண்ணங்களுடன் பிரகாசிக்கும் மின்மினிப் பூச்சிகளைக் கண்டு தம்பதிகளுக்கு ஏற்படக் கூடிய தாம்பத்ய பிரச்னைகளை அறியக் கூடிய ஜோதிடக் கலை முற்காலத்தில் பின்பற்றப்பட்டு வந்தது. வர்ண மாலை எனப்படும் அந்த ஜோதிடக் கலை நாட்கள் செல்லச் செல்ல மறைந்து விட்டது.

தம்பதிகளுக்கு இடையே தேவையான ஈர்ப்பு சக்தியைத் தோற்றுவிக்கும் வல்லமை உடைய சுக்ர சக்திகளை நிர்வகிக்கும் திறனை மின்மினிப் பூச்சிகள் பெற்றிருப்பதால் வர்ண மாலை ஜோதிடக் கலையால் தம்பதிகளுக்கிடையே உள்ள தாம்பத்ய உறவுப் பிரச்னைகளை எளிதில் இனங் கண்டு தேவையான, பரிகார முறைகளை அளித்து வந்தனர் அக்காலப் பெரியோர்கள்.

குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பதே மின்மினிப் பூச்சிகளின் வழிபாடாகும். தம்பதிகள் அவ்வப்போது இத்தகைய மின்மினிப் பூச்சிகள் கூட்டமாக சஞ்சாரம் செய்யும் மரங்களுக்கு மஞ்சள், குங்குமம் இட்டு வலம் வந்து வணங்கி வருவதால் குடும்ப ஒற்றுமை ஓங்கும்.

மின்மினி என்பதைப் பிரித்தால் ம்+இ+ன்+ம்+இ+ன்+இ என்று வரும். இவ்வாறு ”இ” என்ற குற்றெழுத்து சுட்டெழுத்தாய்த் தொழில் செய்யும்போது அது நிலைத்த சக்திகளை உருவாக்கும். இதனால் தம்பதிகளுக்கு இடையே உள்ள உறவும், நண்பர்களுக்கு இடையே உள்ள உறவும். முதலாளி தொழிலாளிகளுக்கு இடையே உள்ள உறவும், சமுதாயத்தில் சகோதர உறவுகளும் நிலைப்படும். இவற்றை அளிக்கவல்லதே மின்மினிப் பூச்சிகளின் வழிபாடு.

மின்மினிப் பூச்சிகளுக்கு ஒளிகாட்டிகள், வழிகாட்டிகள், ஒளி கூட்டிகள் என்ற காரணப் பெயர்களும் உண்டு. தங்கள் நிற மாலை மூலம் மனிதர்களின் குணாதிசயம், வரக் கூடிய வியாதிகள், குடும்பப் பிரச்னைகள் போன்றவற்றை தங்கள் ஒளிப் பிரகாசத்தின் மூலம் காட்டுவதால் அவைகள் ஒளி காட்டிகள் என அழைக்கப்படுகின்றன.

இறந்தவர்கள் அனைவரும் திருக்கைலாயத்திற்கோ, வைகுண்டத்திற்கோ சென்று விடுவதில்லை. லட்சத்தில் ஒருவரோ கோடியில் ஒருவரோதான் அத்தகைய உயர் நிலைகளை அடைகிறார்கள். மற்றவர்கள் பெரும்பாலும் ஒளி உலகம், மத்திம உலகம், இருண்ட உலகம் இவற்றைத்தான் அடைகிறார்கள்.

இவற்றில் ஒளி உலகம் அடைந்தவர்களை நாம் நமது பித்ருக்கள், முன்னோர்கள் என்று அழைக்கிறோம். மனிதர்கள் அளிக்கும் தர்ப்பணங்கள், திவசம், படையல் போன்ற வழிபாடுகள் எல்லாம் இந்த ஒளி உலகத்தில் உள்ளவர்களுக்குத்தான் போய்ச் சேரும்.

தற்கொலை, விபத்து போன்ற அகால மரணம் அடைந்தவர்கள் பெரும்பாலும் இருண்ட லோகத்திற்குத்தான் செல்வார்கள். இதில் பல விளக்கங்கள் உண்டு. அவற்றைத் தக்க பெரியோர்கள் மூலம் தெரிந்து கொள்ளவும்.

அவ்வாறு இருண்ட லோகம் அடைந்தவர்களை பூமியில் உள்ள எவருமே தொடர்பு கொள்ள முடியாது. அப்படியானால் நாம் அத்தகையோருக்கு பூமியில் அளிக்கப்படும் தர்ப்பணம், திவசம் போன்றவை வீணாகி விடுமா என்று நினைக்கத் தோன்றும் அல்லவா?

உண்மையில் தெய்வீகத்தில் நாம் செய்யும் எந்தக் காரியங்களும் வீணாவதில்லை. நீங்கள் ஒரு வங்கியில் மாதம் மாதம் போட்டு வைக்கும் பணம் நீங்கள் பணியிலிருந்து ஓய்வு பெறும்போது பெருந்தொகையாக வட்டியுடன் உங்களுக்குக் கிடைக்கிறது அல்லவா? அது போல இருண்ட லோகத்தை அடைந்தவர்களை நினைத்து நீங்கள் செய்யும் வழிபாடுகள் அவர்களைப் போய்ச் சேராது எனினும் அந்த வழிபாட்டுப் பலன்கள் உங்கள் வம்சாவழியில் உள்ள ஒளி உலகத்தைச் சேர்ந்த மூதாதையர்களுக்கு போய்ச் சேரும்.

எப்போது இருண்ட லோகத்தில் உள்ள உங்கள் மூதாதையர் அங்கிருந்து வெளியே வருகிறாரோ அப்போது ஒளி உலகத்தில் உள்ள உங்கள் பித்ருக்கள் நீங்கள் இவ்வளவு நாள் அளித்த தர்ப்பண சக்திகளை உங்கள் இருண்ட லோக வாசிகளுக்கு அளித்து விடுவார்.

சினிமா, அரசியல், விளையாட்டுத் துறை, விஞ்ஞானம் போன்ற துறைகளில் திடீரென பெரும் பதவிகள், விருதுகள் போன்றவற்றைப் பெற்று உலகப் புகழுடன் விளங்குவதற்கு இவ்வாறு பல வருடங்கள் சேர்த்து வைத்த தர்ப்பணப் புண்ணிய சக்திகள் திடீரென ஒரு இருண்ட லோகத்தில் இருந்தவருக்கு சேர்ந்து அவர் ஒரே சமயத்தில் அனைத்து புண்ணிய சக்திகளையும் உங்களுக்குப் பலனாக வழங்குவதுதான்.

கருப்பத்தூர் சிவாலயம்

அதனால்தான் பெரியோர்கள் அதிர்ஷ்டம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதில்லை. முன்னால் நாம் சேர்த்து வைத்த புண்ணியமே பின்னால் சுகமாக வருகிறது என்பதே உண்மை.

பூமியில் உள்ளவர்கள் இருண்ட லோகவாசிகளைத் தொடர்பு கொள்ள முடியாது என்றாலும் மூவுலகிற்கும் சஞ்சாரம் செய்ய வல்ல மின்மினிப் பூச்சிகள் இருண்ட லோகவாசிகளையும் தொடர்பு கொள்ளும் சக்தி பெற்றவை.

மின்மினிப் பூச்சிகள் கூட்டமாகத் தங்கும் பால் விருட்சங்களுக்கு கையால் அரைத்த சந்தனம், தங்கள் கையால் அரைத்த மஞ்சள் இவற்றைப் பூசி குங்குமப் பொட்டிட்டு வலம் வந்து வணங்கி அம்மரத்தடியில் தர்ப்பண பூஜைகளை மேற்கொண்டால் உங்களுடைய தர்ப்பண சக்திகள் ஒளி உலக பித்ருக்களை அடையும். அவர்கள் எந்த இருண்ட லோகவாசிகளுக்கு அந்த புண்ணிய சக்திகளை அளிக்க வேண்டும் என்ற செய்தியை நீங்கள் தர்ப்பணம் அளிக்கும் மரத்திலுள்ள மின்மினிப் பூச்சிகள் அந்த ஒளி லோக பித்ருக்களிடம் தெரிவித்து விடும்.

இவ்வாறு இருண்ட லோகத்தில் வாழும் உங்கள் மூதாதையர்களை அடையாளம் கண்டு. அவர்களிடம் மனோ ரீதியான தொடர்பை ஏற்படுத்தி அவர்களைப் பற்றிய விளக்கங்களை ஒளி லோக பித்ருக்களுக்கு அளிப்பதால் மின்மினிப் பூச்சிகள் வழிகாட்டிகள் என்று புகழப்படுகின்றன.

நாரதர் ஒரு முறை அகத்திய பெருமானை பித்ரு லோகத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பல பித்ருக்கள் தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருப்பதை அகத்தியர் பார்த்து திடுக்கிட்டார்.

நாரதரிடம், ”சுவாமி, ஏன் இந்த மூர்த்திகள் இவ்வாறு தலை கீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்? அவர்கள் என்ன தவறு புரிந்தனர்?” என்று வினவ நாரதர் குறுநகையுடன், ”முனிபுங்கவரே, அவர்கள் தவறேதும் செய்யவில்லை. பூமியில் அவருடைய வழித் தோன்றல்கள் செய்த மறந்த காரியத்தால் இங்கு இவர்கள் தலை கீழாகத் தொங்கும் நிலை ஏற்பட்டது,” என்றார்.

அகத்தியர், ”சுவாமி, அப்படியானால் அவர் யார் என்று சொன்னால் அவர் காலில் விழுந்து வணங்கியாவது இந்த முதியவர்களை அவலமான இந்தச் சூழ்நிலையிலிருந்து மீட்க முயற்சி செய்கிறேன்,” என்று பணிவுடன் கூறினார்.

நாரதர், ”முனிசிரேஷ்டரே, நீங்கள் யார் காலிலும் விழ வேண்டிய அவசியமில்லை. இவர்கள் அனைவரும் உங்களுடைய மூதாதையர்கள்தான். நீங்கள் இதுவரை தவம், யோகம் என்று மூழ்கி விட்டதால் திருமணம் என்ற தெய்வீக பந்தத்தைப் பற்றி நினைக்கவில்லை. நீங்கள் திருமணம் செய்து கொண்டால்தான் உங்களுடைய மனிதப் பிறவி பூர்த்தியாகும். அப்போது நீங்கள் அளிக்கும் தர்ப்பணம்தான் இவர்களை இந்த நிலையிலிருந்து விடுவிக்கும்,” என்று கூறி முடித்தார்.

அதன் பின்னரே ஸ்ரீஅகத்தியர் லோபா மாதாவை மணந்து தன்னுடைய மூதாதையர்களை பித்ரு லோகத்திலிருந்து விடுவித்து அவர்கள் கைலாயத்தை அடைய வழிவகுத்தார்.

இவ்வாறு ஒரு மனிதனுடைய பித்ருக்கள் நன்னிலை அடையும்போதுதான் அவனுடைய ஒன்பது சூட்சும சரீரங்களும் தூய்மை அடைகின்றன. அப்போதுதான் அவன் இறை மார்கத்தில் முன்னேற முடியும். இவ்வாறு ஒன்பது சரீரங்களின் வண்ணத்தை தூய்மைப்படுத்த மின்மினிப் பூச்சிகள் வழிகாட்டி மனிதனின் சூட்சும சரீரங்களின் ஒளியைக் கூட்ட, பெருக்க உதவுவதால் அவை ஒளி கூட்டிகள் என்று பாராட்டப்படுகின்றன.

மின்மினிப் பூச்சிகளின் தரிசனம் எத்தகைய மனக் கஷ்டத்தையும் போக்கி மனதிற்கு அமைதி அளிக்கக் கூடியதாகும். பல்வேறு மனக் கஷ்டங்களால் அல்லல்படுவோர் கீழ்க் கண்ட துதியை ஓதி இரவு படுக்கைக்குச் செல்லும் முன் குறைந்தது ஒரு நாழிகை (24 நிமிடம்) மின்மினிப் பூச்சிகளை தரிசனம் செய்து வந்தால் மனம் அமைதி பெறும். ஆழ்ந்த உறக்கம் கிட்டும்.

சுடர்மணி சோதியே சுப்பிரமே நிறைமணியே
இடர்களையும் பாங்கில் உனக்கினை யாருமுண்டோ
மனக் கவலை மாற்ற வல்ல மாமறையே மாமருந்தே
எனதிருள் நினதருளால் மறையாதோ மண்ணாளா

சுப்பிரம் என்பது 24வது யோகம். அந்த யோக ஸ்புடம் சதய நட்சத்திர ஸ்புடத்துடன் இணைந்து சதய நட்சத்திரத்தின் முதல் பாதம் குரு நவாம்சத்துடன் இணைவதும் சுடர் மணிக்கு ஒளி கூட்டுவதாகும். எனவே மின்மினிப் பூச்சிகள் திகழும் பால் விருட்சங்களின் அடியில் தர்ப்பண வழிபாடுகளை இயற்றுவதும் அதையொட்டி தேங்காய் மிட்டாய்கள், பர்பிகளைத் தானமளிப்பதும் அற்புத வழிபாடாகும்.

சூரிய பகவான் வழிபாடு செய்யும் திருநெடுங்களம் போன்ற திருத்தலங்களிலும் (பாஸ்கர பூஜை தலங்கள்), காவிரி போன்ற புனித நதிக் கரைகளில் அமைந்துள்ள திருத்தலங்களிலும், சூரிய பகவான் சிறப்புப் பெறும் திருத்தலங்களிலும் (உதாரணமாக முள் இல்லாத வில்வ மரம் திகழும் நகர்) மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் ஒரு குருநாதர் உண்டு. எறும்புகளுக்கு பிப்லாத மகரிஷியும், எருமைகளுக்கு சுவாலினன், காரடையான் கரட்டையும், கழுதைகளுக்கு ருத்ர பல்குனி சித்தரும் குருநாதர்களாய் அமைந்து நல்வழி காட்டுவது போல மின்மினிப் பூச்சிகளுக்கு சற்குரு அமைந்தவரே ஸ்ரீதிரிநாம கண்ட மகரிஷி ஆவார்.

ஸ்ரீமகாலட்சுமி கருப்பத்தூர் சிவாலயம்

திரிநாம கண்ட மகரிஷி நித்ய வாசம் செய்யும் திருத்தலங்களுள் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலமும் ஒன்றாக இருப்பதால் இங்கு மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகம். மேலும் இன்னும் ஓர் அற்புத விசேஷமும் இத்தலத்திற்கு உண்டு. மின்மினிப் பூச்சிகளின் அவதாரத் தலமே கருப்பத்தூர் திருத்தலமாகும். ஜீவ நதிகளின் நீரோட்டம் நாளுக்கு நாள் உலகெங்கும் குறைந்து வருவதைப் போல மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டமும், மகான்களின் சஞ்சாரமும் குறைந்து வருவது கலியுகத்தின் யுக தர்மமே.

என்று நீங்கள் மின்மினிப் பூச்சிகளைக் காண முடியாத நிலை வருகிறதோ அன்று தெரிந்து கொள்ளலாம் பூமியில் உள்ள ஜீவ நதிகளும் மகான்களின் சஞ்சாரமும் முற்றிலும் மறைந்து விட்டதென்று.

ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்தில் முற்காலத்தில் மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாகவே இருந்தது. தற்காலத்தில் குறித்த சில சமயங்களில் மட்டும் அவைகளைக் காண முடிகிறது. ஆனால், பாக்கியம் பெற்றோர் இன்றும் இத்தலத்தில் மின்மினிப் பூச்சிகளைக் கும்பல் கும்பலாகத் தரிசிக்க முடியும்.

ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் கருப்பத்தூர்

ஆயிரக் கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொண்டே ஒரு பட்டுப் புடவை உருவாக்கப் படுவதால் ஆன்மீகத்தில் இருப்பவர்களாவது பட்டுத் துணிகளை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், இறைவனுக்கு பட்டு வஸ்திரங்களை அளிப்பதும், ஏழைகளுக்கும் சுமங்கலிகளுக்கும் பட்டுப் புடவைகளைத் தானமாக அளிப்பதும் ஏற்புடையதே. அதனால் பட்டுப் பூச்சிகள் நன்னிலை அடைந்து அத்தகைய தானம் அளித்தோரை வாழ்த்தி அற்புத புண்ணிய சக்திகளை அளிக்கும்.

பட்டுப் புடவையை வாங்க வசதி அற்றவர்களும் இறைவனுக்கு பட்டு வஸ்திரங்கள் சார்த்திய புண்ணிய சக்தியைப் பெற வழி வகுப்பதே மின்மினிப் பட்டாகும். மின்மினிப் பூச்சிகளின் பட்டொளி வீசிய வஸ்திரங்கள், ஆடைகள் மின்மினிப் பட்டு என அழைக்கப்படுகின்றன. அற்புதமான தெய்வீக சக்தியை மின்மினி ஒளிக் கீற்றுகள் கொண்டுள்ளதால் மின்மினிகளின் ஒளியை ”பட்டொளி” என்று சித்தர்கள் புகழ்கின்றனர்.

63 நாயன்மார்களின் ஒருவரான நேச நாயனார் முசிறி அருகே மணமேடு என்னும் கிராமத்தில் வாழ்ந்தவர். அவர் நெசவுத் தொழிலை மேற்கொண்டு இறைவனுக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு வேஷ்டியை நெய்து எடுத்து வந்து ஸ்ரீசிம்மபுரீஸ்வரருக்கு சார்த்தி வந்தார்.

சப்திமி திதி அன்றே கருப்பத்தூர் திருத்தலத்தை அடைந்து தான் பஞ்சாட்சரம் ஓதி நெய்த வேட்டியை ஒரு மூங்கில் கூடையில் வைத்து தலையில் சுமந்தவாறே திருக்கோயிலில் உள்ள அரசமரத்தைச் சுற்றி சப்தமி திதி முழுவதும் வலம் வருவார். அவர் வாழ்ந்த காலத்தில் மின்மினிப் பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது.

மின்மினித் தாரகை குடை பிடிக்க
தாரகைக்குத் தாரகை குடை பிடிக்க
குடை பிடிக்கும் நாகமும் குனிந்து போற்றும்
குவலயத்து ஈசனைக் கூறாமல் போவேனோ

என்று ஓதியவாறே ஆனந்தத்துடன் வலம் வருவாராம். திருஞான சம்மந்த மூர்த்தி நாயனார் மூன்று வயதுடைய பாலகனாக தன்னுடைய தந்தையில் தோளில் செல்லும்போது தான் இறைவனுடைய திருப்பாதத்தின் கீழ் ஊர்ந்து சென்று கொண்டிருக்கிறோம் என்ற ஆனந்தப் பரவச நிலையில் இருப்பாராம்.

அது போல நேச நாயனார் இறைவனுக்காக நட்சத்திரங்கள் குடை பிடிக்க இறைவனுக்காக பட்டாடைகளை எடுத்துச் சென்று கொண்டிருக்கிறோம் என்ற பரவச நிலையில் மூழ்கி அரச மரத்தை வலம் வந்து கொண்டிருப்பாராம். இத்தகைய மின்மினிப் பட்டு வஸ்திரத்தை இறைவனுக்கு சார்த்தி வழிபடுவதால் ஒரு பட்டுத் துணியை அளிப்பது போல நூறு மடங்கு பலனைப் பெறலாம்.

எந்த வஸ்திரத்தையும் ஆடையையும் இவ்வாறு மூங்கில் கூடையில் வைத்து அரசமரத்தை சப்தமி திதியில் வலம் வந்து, சிறப்பாக மின்மினிப் பூச்சிகள் நடமாட்டம் உள்ள பால் விருட்சங்களை வலம் வந்து, அஷ்டமி திதியில் இறைவனுக்கு சார்த்தி வழிபடுவதால் திருமண தோஷங்கள் விலகும். குடும்ப ஒற்றுமை பெருகும்.

எட்டாமிட தோஷங்கள் விலகும். குறிப்பாக திருமணத்திற்கான முகூர்த்த லக்னத்திற்கு எட்டில் சுக்ரன் இருத்தலால் ஏற்படும் தோஷங்களைக் களைவதே ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் தலத்தில் நிறைவேற்றப்படும் வழிபாடாகும். சுயம்பு மூர்த்தி தலங்களிலும் இத்தகைய வழிபாட்டை நிறைவேற்றிப் பலன் பெறலாம்.

கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிபவர்களும், ஆர்க் வெல்டிங் பணியாளர்களும், எக்ஸ்ரே போன்ற சக்தி வாய்ந்த ஒளிக் கதிர்களை கையாள்பவர்களும் நேச நாயன்மாரை வணங்கித் துதித்து மேற்கூறிய சுடர்மணித் துதி, குடைக் கவசத் துதிகளை ஓதி வெயிலில் வாடும் ஏழைகளுக்கும், சாலைப் பணியாளர்களுக்கும் குடைகளைத் தானமாக அளித்தலால் தங்கள் துறையில் பாதுகாப்புப் பெறுவார்கள்.

ஸ்ரீசாந்த நாயகி வேலவன்

சிவபெருமான் நெற்றிக் கண் ஜோதியிலிருந்து தோன்றிய முருகப் பெருமானை கார்த்திகைப் பெண்கள் அறுவர் அன்புடன் போற்றி வளர்த்தார்கள். அவர்களின் அன்புக்குப் பரிசாக எம்பெருமான் அவர்களை கார்த்திகை நட்சத்திரமாக மாற்றி விண்ணில் நிரந்தரமாக பிரகாசிக்கும் வரத்தை அளித்தார்.

அதன் பின்னால் நடந்த சம்பவங்களை யார் அறிவார்? இவை அனைத்தும் சித்த கிரந்தங்களிலேயே காணக் கிடைக்கின்றன. அவற்றில் சுவையான ஒரு நிகழ்ச்சியை இங்கு காண்போம்.

தேவ ரிஷியான நாரதர் ஒரு முறை கிருத்திகா லோகத்திற்கு வருகை தந்தார். அவருடைய அன்புடன் வரவேற்ற கார்த்திகைப் பெண்கள் பாத பூஜைகள் நிறைவேற்றி அறுசுவை உணவு, பழங்கள் அளித்து கௌரவித்தனர்.

உபசாரங்கள் முடிந்து ஓய்வெடுத்த பின்னர் நாரதர் தன்னுடைய “கலகப் பணியை” மெதுவாக ஆரம்பித்தார்.

“நீங்கள் என்ன இன்னும் கன்னியாகவா இருக்கிறீர்கள்?”

கார்த்திகைப் பெண்கள் ஆச்சரியத்துடன் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“சுவாமி, நாங்கள் கன்னிப் பெண்கள் என்பது மூவுலகம் அறிந்த உண்மைதானே. தாங்கள் ஏதோ புதிதாக ஒரு விஷயத்தைக் கேள்விப் படுவது போல் கேட்கிறீர்களே?”

“காரணத்தோடுதான் கேட்கிறேன். பொதுவாக, கன்னிப் பெண்கள் எப்போதுமே கன்னிப் பெண்களாக இருந்து விட முடியாது. காலம் கனியும்போது அவர்கள் உரிய மணாளனை அடைவதுதானே முறை. அப்படி இருக்க இன்னும் கன்னிப் பெண்களாகவே இருப்பது சரிதானா?”
“சுவாமி, நீங்கள் சொல்வது பொருத்தம் இல்லாத வார்த்தைகளாக எங்களுக்குத் தெரிகின்றன. நாங்கள் கன்னிகளாகவே இருக்க வேண்டும் என்றுதானே எம்பெருமானிடம் வரம் கேட்டு வந்தோம். நாங்கள் கேட்ட வரத்தைத்தானே இறைவனும் எங்களுக்கு மனமுவந்து அளித்தார். அப்படி இருக்கும்போது திருமணம் என்பதைப் பற்றி நாங்கள் எப்படி யோசிக்க முடியும்?”

“மேலும் சதா சர்வ காலமும் நாங்கள் முருகப் பெருமானைப் பற்றிதான் எண்ணிக் கொண்டு, பேசிக் கொண்டு, தியானித்துக் கொண்டு இருக்கிறோம். எங்கள் சுவாசக் காற்றே மயில் வாகனன்தானே. இதில் திருமணம் என்ற வார்த்தைக்கு இடம் எங்கே?” இந்த பதில் சற்று சூடாகவே அவர்களிடமிருந்து வந்தது.

ஸ்ரீசுகந்தகுந்தளாம்பிகை
கருப்பத்தூர்

நாரதர் சற்றும் அயரவில்லை.

“நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால், முருகப் பெருமானை வளர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட நீங்கள் அந்தப் பணியை சிறப்பாக நிறைவேற்றி விட்டீர்கள். அதை யாரும் மறுக்க வில்லை. ஆனால், அத்துடன் உங்கள் தெய்வீகப் பணியை முடித்துக் கொள்வதா? அடுத்து நீங்கள் செய்ய வேண்டிய இறைப் பணியைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டாமா?”

“ஓடும் நீர் ஓடிக் கொண்டிருந்தால்தான் அது புனித நீர். நின்று விட்டால் அது குட்டை, சாக்கடை. அதுபோல பக்தன் என்பவன் சதா சர்வ காலமும் எந்த இறைப் பணி முடிந்தவுடனும் அதிலேயே நின்று விடாமல் அடுத்து செய்ய வேண்டிய இறைப் பணியைப் பற்றி சிந்தித்துக் கொண்டே இருக்க வேண்டும்.”

“எனவே கன்னிகள் குறித்த காலம் முடிந்தவுடன் திருமணத்தைப் பற்றி நினைப்பதுதான் முறை. அது மட்டுமல்லாமல் நீங்கள் யாரை அன்புடன் வளர்த்து பெருமை கொண்டீர்களோ அந்த முருகப் பெருமானே காதல் நங்கை, தேவ மாது என்று இரு மங்கைகளைத் திருமணம் புரிந்து கொண்டு ஆனந்தமாக இருக்கும்போது நீங்கள் ஏன் கன்னியாகவே காலம் கழிக்கிறீர்கள்?”

கலகம் புரிவதில் சாமர்த்தியம் உள்ளவர் அல்லவா நாரதர்? தன்னுடைய கேள்விக் கனைகளை மேலும் மேலும் தொடுத்தார். கார்த்திகைப் பெண்கள் நாரதரின் கூற்றில் இருந்த உண்மையை உணர ஆரம்பித்தார். அவர்கள் நெற்றியில் குழப்ப ரேகைகள் தோன்ற ஆரம்பித்தன. அதை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள அடுத்த அஸ்திரத்தை எடுத்தார்.

“நீங்கள் வாழ்நாள் முழுவதும் கன்னியாகவே இருந்து விட்டுப் போங்கள் பரவாயில்லை. ஆனால், நீங்கள் கன்னியாக இருப்பதைக் காரணம் காட்டி பூமியில் பலரும் கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள்? உங்களால் ஒன்றும் அறியாத அப்பாவிப் பெண்களின் வாழ்க்கை சீர்குலையலாமா?”

நாரதர் தன்னுடைய கடைசி அஸ்திரத்தையும் பிரயோகம் செய்து விட்டு அமைதியுடன் தனக்கு அளித்த தங்க சிம்மாசனத்தில் சாய்ந்து அமர்ந்து விட்டார்.

பெண் என்றால் பேயும் இரங்குமே. கார்த்திகைப் பெண்களின் தாய் மனம் கனிந்தது. அவர்கள் நாரதரை, “அடுத்து நாங்கள் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்வியைக் கண்களில் தேக்கி அவரைப் பார்த்தனர்.

நாரதர் வெற்றிப் புன்னகையுடன், “நீங்கள் உடனே பூமிக்குச் சென்று உங்கள் பிரார்த்தனைக்கு உரிய தலத்தை தேர்ந்தெடுத்து தவத்தை மேற்கொள்ளுங்கள். இறையருளால் விரைவில் உங்கள் திருமணம் நிறைவேறும்,” என்றார்.

கார்த்திகைப் பெண்கள் ஒருமித்த குரலில், “நாங்கள் தவமியற்ற வேண்டிய முருகத் தலம் எங்குள்ளது என்ற விவரத்தையும் தாங்களே தெரிவிக்க வேண்டுகிறோம்,” என்றனர்.
நாரதர் ஒரு குறும்புப் புன்னகையுடன் அவர்களை விநோதமாகப் பார்த்தார். “தேவிகளே, உங்கள் முருக பக்தியைப் பாராட்டுகிறேன். முருகன் ஈடு இணையற்ற அனுகிரக மூர்த்திதான். அதில் சந்தேகமில்லை. கேட்கும் வரத்தை உடனே அளிக்கக் கூடிய கருணாகர மூர்த்தி அவர். ஆனால், ஒரு விஷயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். முருகப் பெருமான் தெய்வமாக இருந்தாலும் நீங்கள் அவரை ஊட்டி வளர்த்த காரணத்தால் அவருடைய அன்னையாகி, தாய் ஸ்தானத்தில் இருக்கிறீர்கள். ஒரு தாய் தனயனிடம் திருமணத்தை வேண்டலாமா? அது முறையாகுமா?”

ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி

அதைக் கேட்டதும் கார்த்திகைப் பெண்கள் நாணம் மேலிட மொழி மறந்து திகைத்தனர்.

நாரதர் தொடர்ந்து, “உங்கள் முருக பக்திக்கு பங்கம் ஏற்படாமல் நீங்கள் தவத்தை மேற்கொள்ளும் வழி ஒன்று உண்டு. அதாவது, முருகப் பெருமானின் வாகனமான மயில் வடிவில் உமையம்மை வழிபட்ட கபாலீசுவரத்தில் நீங்கள் அம்பிகையை நோக்கித் தவம் இயற்றினால், அம்பிகை உங்கள் வேண்டுதலை ஏற்றுக் கொள்வாள்,” என்று அற்புத உயாயத்தை அருளினார்.

கார்த்திகைப் பெண்களும் அதை ஏற்றுக் கொண்டு பூலோகம் விரைந்தனர். மயிலை ஸ்ரீகபாலீஸ்வரரை வணங்கி அம்பிகையை நோக்கி தவம் புரிய ஆரம்பித்தனர்.

நீண்ட தவத்திற்குப் பின் அம்பிகை அவர்களுக்கு திருக்காட்சி நல்கி அவர்கள் தவத்திற்கான காரணத்தை அறிந்தாள்.

கார்த்திகைப் பெண்களின் பிரார்த்தனையைக் கேட்ட தேவி, “குழந்தைகளே, திருமணம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற உங்களுடைய பிரார்த்தனை நியாயமானதுதான். ஆனால், நீங்கள் கன்னித் தெய்வங்களாக, நட்சத்திர தேவிகளாக வானில் பிரகாசிக்க வேண்டும் என்ற வரம் எம்பெருமானால் அளிக்கப்பட்டது. அதை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது.”

“ஆனால், இதற்கு மாற்று உபாயம் ஒன்றை உங்களுக்கு அளிக்கிறேன். அதன்படி நீங்கள் ஒன்றாகச் சேர்ந்து திரிநாம கண்ட மகரிஷிக்கு குழந்தையாக பிறப்பீர்கள். அப்போது உங்களுக்கு உரிய வயதில் திருமணம் நிறைவேறும்,” என்று வரம் அளித்தாள் தேவி.

கார்த்திகைப் பெண்கள் தேவிக்கு நன்றி தெரிவித்து விட்டு தங்கள் லோகம் திரும்பினர். காலச் சக்கரம் உருண்டது.

அம்பிகை தான் வாக்களித்தபடி ஆறு கார்த்திகைப் பெண்களையும் ஒரே மானிட சக்தியாக்கி கடம்பவனத்தில் இருந்த திரிகண்ட மகரிஷிக்கு குழந்தை பிரசாதமாக அளித்தாள். அனைத்து தேவ இரகசியங்களையும் அறிந்தவர் திரிநாம கண்ட மகரிஷி. எனவே, அவர் தன் தெய்வக் குழந்தைக்கு விச்வபூரணி என்று திருநாமம் இட்டு அன்புடன் வளர்த்து வந்தார். கார்த்திகை நட்சத்திர தேவிகளின் ஆறு சக்திகளும் இந்த நாமத்தில் ஆறு அட்சர சக்திகளாய்ப் பூரித்தன.

விச்வபூரணி தன் ஈடு இணையற்ற முருக பக்தியால் அனைவர் உள்ளங்களையும் கொள்ளை கொண்டாள். தினமும் தன் தந்தையுடன் சென்று ஸ்ரீகடம்பவனேஸ்வரரை தரிசனம் செய்து, சண்பக பூக்களால் எட்டு முழம் சரம் தொடுத்து கருப்பத்தூரில் அருள்புரியும் முருகப் பெருமானை நடந்து சென்று தரிசித்து அம்மலர் மாலையை அவருக்குச் சூட்டி மகிழ்ந்தாள்.

உரிய வயது வந்ததும் பாண்டிய நாட்டு இளவசரனான அமிர்தகடேசனை மணாளனாகத் தேர்ந்தெடுத்தார் திரிநாம கண்ட மகரிஷி. இறை பக்தி மிக்கவன் அமிர்த கடேசன். இளவரசனுக்கு சேவை செய்வதற்காக பணிப் பெண்கள் மட்டும் இரண்டாயிரம் பேர் இருந்தனராம். ஆனால், அவர்களை மனதால் கூட தீண்டாத உத்தமன் அவன். இப்படி ஒரு உத்தமனை கணவனாக அடைவதை விட ஒரு சிறந்த பாக்கியம் ஒரு கன்னிப் பெண்ணுக்கு வேறு எது இருக்க முடியும்?

திருமணத்திற்கு பார்வதி பரமேசுவர மூர்த்திகளே எழுந்தருளினர். விஷ்ணு பிரம்மா உள்ளிட்ட தேவர்களும் இந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் ரிஷிகளும் தேவ கணங்களும் பூத கணங்களும் என கோடி கோடியான விருந்தினர் இந்தத் தெய்வீகத் திருமண வைபவத்தில் பங்கு கொள்ள வருகை புரிந்தனர்.

திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் அதிகார நந்தியே மேற்பார்வையிட்டு நிறைவேற்றி வந்தார். அனைத்து லோக நாக தேவதைகளும் வந்திறங்கின. அவர்களுக்கு நிகழ்ந்த உபசாரத்தை மட்டும் இங்கு சிறிது காண்போம்.

நாகங்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பிரிவுகள் உண்டு. ஒரு நாகத்திற்கு குளிர்ச்சியான இடம் வேண்டும், மற்றோர் நாகம் புற்று போன்ற சூழ்நிலையை விரும்பும். அதற்கு காற்றோட்டம் இருக்கக் கூடாது. சில நாகங்கள் சில்லென்ற தரையில் நீர்க் கசிவாய் இருந்தால்தான் பிடிக்கும்.
மேலும், ஒவ்வொரு நாக வகைக்கும் ஒவ்வொரு விதமான உணவைப் பரிமாற வேண்டியிருக்கும். சில நாகங்கள் பூச்சி, புழு இவற்றை உண்ணும். சில நாகங்கள் உயிருள்ள தவளையைத் தான் கேட்கும். தவளைகளிலும் விதவிதமான வகைகள் உண்டு. எந்தெந்த நாகத்திற்கு எந்தெந்த வகை தவளை விருப்பமோ அதை மட்டும்தான் பரிமாற வேண்டும்.

திருமண நாள் அன்று இந்த நாகங்களுக்கு எல்லாம் திருமணத்தில் பங்கு கொள்வதற்காக வாகன வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும். இது போன்ற அனைத்து வசதிகளையுமே சிறப்பாக ஏற்படுத்திக் கொடுத்தார் அதிகார நந்தி.

உலகைக் காத்து ரட்சிக்கும் பார்வதி பரமேஸ்வரர் முன்னிலையில் எல்லா தெய்வங்களும் மகரிஷிகளும் தேவர்களும் பஞ்ச பூதங்களும் சாட்சியாய்க் குழுமியிருந்த தெய்வீகமான மண விழாவில் உத்தராயண புண்ணிய காலம் வசந்த ருது வைகாசி மாதம் சுக்ல பட்சம் திரிதியை திதி புனர்பூச நட்சத்திரம் கூடிய சுப தினத்தில் திங்கட் கிழமை அன்று மிதுன லக்னத்தில் வளர் அமிர்த சந்திர ஹோரையில் மங்கள வாத்தியங்கள் முழங்க அமிர்த கடேசன் விச்வபூரணி மாங்கல்ய தாரண திருமண வைபவம் இனிதே நிறைவேறியது.

மங்கள வாத்தியங்களும், வேத கோஷங்களும் விண்ணை நிறைக்க, தேவர்களின் பூமாரி மண்ணை நிறைக்க எங்கும் மங்களம் பொங்கி நிறைந்தது.

ஸ்ரீவிச்வபூரணி திருக்கல்யாணம்

பூலோகத்தில் திருமணத் தடங்கல்களால் வாடும் இளம் பெண்களுக்கு மழை மேகமாய்த் திகழ்ந்த இத்திருமண வைபவத்தைப் பார்த்து நாரதரின் கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகி நிறைந்தது.  

மீனாட்சி திருக்கல்ணாயத்திற்குப் பின் பூலோகத்தில் நடந்த மிகப் பிரம்மாண்டமான தெய்வீகத் திருமணம் இதுவே ஆகும்.

திருமணம் இனிதே நிறைவேறியவுடன் திருமணத்திற்காக வந்திருந்த அனைத்து விருந்தினர்களுக்கும் அவரவர் தகுதிக்கேற்ப அவர்கள் திரும்பிச் செல்வதற்கான வாகன வசதிகளும் வழியில் உண்பதற்குச் தேவையான உணவு வகைகளும், குளிர் பானங்களும் அளிக்கப்பட்டன. கட்டுச் சோறு வகைகளும் பலகாரங்களும் பரிசுகளும் திரிநாம கண்ட மகரிஷியால் அனைவர்க்கும் அளிக்கப்பட்டன.

நாகங்களுக்கெல்லாம் தவளைகள் பதப்படுத்தப்பட்டு அவைகள் தங்கள் லோகங்கள் செல்லும் வரை தேவையான அளவு அவர்களுடன் கூடவே அனுப்பப்பட்டன.

நாகங்கள் மட்டும் அல்லாது அந்தத் திருமணத்தில் பங்கு கொண்ட அனைவருமே தங்கள் வாழ்நாளில் அதுபோன்ற அன்பான உபசரிப்பையும், சுகமான வசதியையும், இனிமையான சுவையான உணவு வகைகளையும் பலகாரங்களையும் கண்டதே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைவரையும் திருப்திப்படுத்தியது அந்தத் தெய்வீகத் திருமணம்.

ஸ்ரீசுதர்சன சக்கர பீடம்
பெரும்புலியூர்

நாகங்கள் எல்லாம் ஆனந்தத்தின் எல்லைக்கே சென்று விட்டன. அதனால் அவை திருமணம் முடிந்து ஒரு வாரம் ஆகியும் தங்கள் லோகங்களுக்குச் செல்ல விருப்பமில்லாமல் கடம்பவனத்திலேயே தங்கி விட முடிவு செய்தன. இதை அறிந்த திரிநாம கண்ட மகரிஷி இவ்வாறு நாகங்கள் ஒரே இடத்தில் தங்கி விட்டால் பிரபஞ்சத்தில் நடக்க வேண்டிய பல காரியங்கள் ஸ்தம்பத்துப் போய் விடும் என்பதால் அவைகளிடம் அன்பாய், நயமாய் பேசி அவைகளை மீண்டும் தத்தம் லோகங்களுக்கு அனுப்பி வைத்தார்.

இத்தகைய சிறப்பான திருமண வாழ்க்கை முருகப் பெருமானால்தான் தனக்குக் கிடைத்தது என்பதை உணர்ந்த விச்வபூரணி ஒரு சிறந்த பரிசை முருகப் பெருமானுக்கு அளிக்க விரும்பினாள். இறைவன் எதை விரும்புவான்? அன்பு ஒன்றுதானே அவன் விரும்புவது.

எனவே இதுநாள் வரை கார்த்திகைப் பெண்களாகவும், விச்வபூரணியாகவும் முருகப் பெருமான வழிபட்டு சேர்த்து வைத்த அனைத்து புண்ணிய சக்தியையும் கருப்பத்தூர் முருகப் பெருமானுக்கு தேஜோ பீடமாக, ஒளி பீடமாக, கிருத்திகா சக்திப் பீடமாக அளிக்க முருகப் பெருமான் அதை மனமுவந்து ஏற்றுக் கொண்டு அதன் மேல் வள்ளி தெய்வானை சமேதராய் எழுந்தருளினார்.

பொதுவாக, திருக்கோயில்களில் மூலவரின் பீடங்கள் பத்ம பீடமாக அமைந்திருக்கும். திருவையாறு அருகே பெரும்புலியூர் சிவத்தலத்தில் எம்பெருமான் சுதர்சன சக்கர பீடத்தில் எழுந்தருளி உள்ளார். இதனால் புதிதாக வாகனங்கள் வாங்குவோர் இத்தலத்தில் வழிபாடுகள் நிகழ்த்துவதால் அவர்கள் வாகனம் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து நற்காரிய சித்தியை அளிக்கும்.

கருப்பத்தூர் திருத்தலத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள கிருத்திகா ஒளி பீடம் சாதாரண மக்களும் தங்கள் ஊனக் கண்ணால் காணும் வண்ணம் மிகுந்த பிரகாசத்துடன் விளங்குகிறது. (படத்தைப் பார்க்கவும்).

கார்த்திகை, ஆயில்யம், கேட்டை, மூலம் போன்ற நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இத்தலத்தில் வழிபாடுகளை மேற்கொள்வதால் திருமணத் தடங்கல்கள் நீங்கும்.

மேற்கூறிய சுப முகூர்த்த லக்ன ராசிச் சக்கரத்தை ஒரு மரப் பலகையில் வரைந்து வாசனையுள்ள மலர்களால் பூஜித்து வருவதால் திருமணம் விரைவில் நிறைவேற அமுத நந்தியா தேவதைகள் அருள் புரிவர்.

திருமண முகூர்த்தங்களைக் குறிக்கும்போது கூடா நாள், சூன்ய திதி, சந்திராஷ்டமம், குரு சுக்ர மூடம் போன்ற கால தோஷங்கள் அணுகா வண்ணம் கவனமாக கணக்கிட வேண்டும். அவ்வாறு கவனக் குறைவால் விவாஹ முகூர்த்த லக்னத்தில் கால தோஷங்கள் ஏற்பட்டிருந்தால் மேற்கூறிய சுப லக்ன முகூர்த்த ராசிச் சக்கரத்தை வழிபட்டு கருப்பத்தூர் முருகப் பெருமானிடம் அடைக்கலம் அடைந்தால் அத்தோஷங்களின் விளைவுகள் ஓரளவு நிவர்த்தியாக அப்பெருமான் வழிகாட்டுவார். 

திருமண வைபவங்கள் நடக்கும் இடங்களில் இந்த விச்வபூரணி அமிர்த கடேச திருமண வைபவத்தை படிப்பதாலும் கேட்பதாலும் இதைப் பற்றி பலருக்கும் எடுத்துரைப்பதாலும் மாங்கல்ய தோஷங்கள் விலகும். சுப மங்கள சக்திகள் பெருகும்.

கடம்ப மரம் வீர்யத்தின், வீரத்தின் அடையாளமாகும். சூரபத்மன் கடம்ப மரமாக நின்றபோது முருகப் பெருமான் அவனை சம்ஹாரம் செய்து தன்னுடைய வாகனங்களாக மாற்றிக் கொண்டார் அல்லவா? எனவே திருமணத் தம்பதிகள் திருமணத்திற்குப் பின் ஸ்ரீகடம்பவன ஈசனை வழிபட்டு, ஆறு இதழ்கள் கொண்ட நறுமண மலர்களால் எட்டு முழ சரம் தொடுத்து அதை கருப்பத்தூர் முருகப் பெருமானுக்குச் சூட்டி வழிபடுதலால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

நங்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணிசெய்து கிடப்பதே

என்ற அப்பர் பெருமானின் தேவாரப் பாடலைப் பாடி பூத்தொடுத்தல் நலம்.

ஆயுதபாணியின் அருள்நெறி

வாமன அவதாரம் கொண்ட பெருமாள் மூர்த்தி மகாபலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் கேட்டபோது தன் ஆருயிர் சீடனான மகாபலியைக் காப்பாற்றுவதற்காக சுக்ராச்சாரியார் மகாபலியின் கமண்டல துவாரத்தை வண்டு வடிவில் சென்று அடைத்தார். அதை அறிந்த பெருமாள் ஒரு தர்ப்பையை அந்தக் கமண்டலத் துவாரத்தில் செலுத்தவே அந்தத் துன்பம் தாளாமல் வண்டு வடிவில் இருந்த சுக்ராச்சாரியார் வெளியேறினார். பெருமாளும் அதன் மூலம் பூமி அனைத்தையும் பெற்ற வரலாறு அனைவரும் அறிந்ததே.

தர்ப்பையால் தன் கண்ணொளியை இழந்த சுக்ராச்சாரியார் அதிலிருந்து நிவாரணம் பெற விழைந்தார். நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி தீவிரமாக ஆத்ம விசாரம் செய்யத் தொடங்கியபோது சில உண்மைகள் அவருக்குத் தெளிவாயின.

தான் குரு நிலையில் இருந்து நிறைவேற்றிய காரியத்தில் தன் கண்ணொளியை இழந்ததால் குருவுக்கும் குருவாய்த் திகழும் ஒருவர் மூலமே தான் இழந்த கண்ணொளியை மீண்டும் பெற முடியும். ”வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்,” என்பார்கள். அதுபோல் சாத்வீக உருவில் வேதம் ஓதும் அந்தணர் வடிவில் வந்த வாமன மூர்த்தி ஒரு சாதாரண தர்பைப் புல்லைக் கொண்டு அசுரர்களுக்குத் தலைமைக் குருவான சுக்ராச்சாரியாரின் கண்ணைக் குருடாக்கி விட்டார் என்றால் எந்த ஆயுதமும் வேலை செய்யாத சக்தி உள்ள திருத்தலத்தில்தான் தன்னுடைய நிலைக்கு பரிகாரத்தைப் பெற முடியும்.

இதுவே சுக்ராச்சாரியார் உணர்ந்த உண்மைகள்.

இவ்வாறு ஒருவர் தனக்கு வரக் கூடிய எந்தப் பிரச்னைக்கும் உரிய தீர்வை ஆத்ம விசாரத்தின் மூலம் உணர்ந்து கொள்ள முடியும். ஆனால், ஆத்ம விசாரம் என்பது அவ்வளவு எளிதில் சித்தி ஆகக் கூடிய விஷயமில்லை என்பதும் உண்மையே. அதற்குக் காரணம் யாரும் அதற்கான தீவிர முயற்சியை எடுப்பதில்லை.

ஸ்ரீவாமன மூர்த்தி பெருமாள்மலை

இறை நம்பிக்கை தீவிரமடைந்து இறை மார்கத்தில் ஆழ்ந்து ஊறி இருப்பவர்களில் ஐந்து கோடியில் ஒருவரே ஆத்ம விசாரத்தில் ஈடுபடுகிறார். சாதாரண பக்தர்களில் ஐம்பது கோடியில் ஒருவரே ஆத்ம விசாரத்தில் நாட்டம் கொள்கிறார் என்பது சித்தர்களின் கணக்கு.  

தன்னுடைய கண் பார்வையைத் திரும்பப் பெறுவதற்காக சுக்ராச்சாரியார் மேற்கூறிய சக்தி நிரம்பிய தலத்தைத் தேடிய வண்ணம் பூலோகம் எங்கும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். அவ்வாறு கருப்பத்தூர் ஸ்ரீசிம்மபுரீஸ்வரர் திருத்தலத்தை அடைந்தபோது தான் இவ்வளவு காலம் தேடி அலைந்த திருத்தலம் அதுதான் என்பதை உணர்ந்து கொண்டார்.

இத்தலத்தில் முருகப் பெருமான் நிருதி திக்கில் (தென்மேற்கு) எழுந்தருளி உள்ளார். சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின் தனக்கு தேவர்கள் உள்ளிட்ட பலரும் அளித்த ஆயுதங்களையும் அன்னை பராசக்தி அளித்த வேலாயுதத்தையும் சாந்தம் செய்து அவற்றை நிருதி திக்கில் வைத்து அந்த ஆயுதங்கள் அனைத்திற்கும் அமைதி அளித்தார்.

பூமியில் சாதாரண மக்களால் தயாரிக்கப்பட்ட அணுகுண்டுகள் வெளியிட்ட சக்திகளே இன்றும் ஹிரோசிமா போன்ற இடங்களில் வியாபித்து இருக்கிறது என்றால் முருகப் பெருமானின் வேலாயுதமும் வாமன மூர்த்தியின் தர்பை ஆயுதமும் எவ்வளவு யுகங்களுக்கு சக்தியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும்.

ஆனால், உலகில் எந்தப் பொருளும் அதன் செயல் முடிந்து விட்டால் அதை சாந்தம் செய்வதே முறை. அதுபோல இந்தத் தெய்வீக ஆயுதங்களும் தங்கள் பணி முடிந்த பின் சாந்தம் பெறுவதுதானே முறை? எனவே முருகப் பெருமான் ஆயுதங்கள் சாந்தம் பெறும் நிருதி திக்கில் எழுந்தருளி தன்னுடைய தெய்வீக அஸ்திரங்களுக்கும் ஆயுதங்களுக்கும் அமைதி அளித்தார்.

மேலும் சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காகத்தானே இத்தனை ஆயுதங்களையும் பெற்றார்? எனவே அந்தத் தெய்வீகத் திருப்பணி நிறைவேறியவுடன் பிரம்மச்சாரியாக இருந்த முருகப் பெருமான் வள்ளி தெய்வானை சமேதராய் இங்கு எழுந்தருளி உள்ளார்.

இவ்வாறு பத்தினி சமேதராய் எழுந்தருளும் இறை மூர்த்திகள் சாந்தம் தவழும் கோலத்தில் இருப்பதால் பக்தர்கள் தாங்கள் வேண்டும் வரங்களை எல்லாம் இவ்வாறு சக்தி சமேதராய் இறை மூர்த்திகள் எழுந்தருளிய கோலத்தை தரிசனம் செய்து தங்கள் பிரார்த்தனையைச் சமர்ப்பிக்கின்றனர்.

சிவபெருமானிடம் எல்லையற்ற அன்பும் பக்தியும் பூண்ட ஸ்ரீஅகத்திய மகரிஷியே சிவபெருமானைத் தனியாக தரிசிப்பது கிடையாதாம். காரணம் தான் என்னதான் தூய்மையான உள்ளத்துடன் இருந்தாலும் சிவபெருமான் தனியே இருக்கும்போது தரிசித்தால் தன்னையும் அறியாமல் ஏதாவது சுய நலம் எண்ணம் வந்து விட்டால் அந்நிலையில் சிவபெருமானின் சந்நிதியில் இருந்தால் அவர் ஏதாவது சாபம் அளித்து விடலாம். ஆனால், அன்னை பார்வதியுடன் பெருமான் வீற்றிருக்கும்போது எதைப் பற்றியும் கவலைப் படாமல் பெருமானின் சக்தி கோலத்தை தரிசனம் செய்து தன்னுடைய பிரார்த்தனையை தைரியமாக வெளியிடுவாராம்.

சக்தி உடனிருப்பதால் அடியார்களின் பிரார்த்தனை எத்தகையதாக இருந்தாலும் எம்பெருமான் சாந்த மூர்த்தியாய் அதைக் கேட்டு தன்னுடைய கருணை கடாட்சத்தை அளிப்பாராம். எனவே பக்தர்கள் இந்த தரிசன சக்திகளின் உட்கருத்தைப் புரிந்து கொண்டு பலனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தந்தைக்கு உபதேசம் செய்த தனயனான கார்த்திகேயன் தன்னுடைய தந்தைக்கு மட்டும் அல்லாது வள்ளி, தெய்வானை இருவருக்கும் சற்குருநாதராய் இருப்பதால் தன்னுடைய பிரார்த்தனையை சுவாமிநாதன் முன் சமர்ப்பித்தார் சுக்ராச்சாரியார்.

முருகப் பெருமான் தன்னிடம் அடைக்கலம் அடைந்த அசுர குருவின் பிரார்த்தனையை அன்புடன் கேட்டார். சுக்ராச்சாரியார் எந்த சுயநலமுமின்றி தன்னுடைய சீடனைக் கரையேற்றுவதற்காக மேற்கொண்ட தியாகத்தைப் பாராட்டி அவருக்கு ஆறு எண் சக்தியை அளித்தார். எண் சக்தியுடன் அட்சர சக்தியும் சேரும்போது அவருக்கு கண்ணொளி கிட்டும் என்று வழிகாட்டி அட்சர சக்தியை திருஅண்ணாமலையை வலம் வந்து பெறுமாறு பணித்தார்.

முருகப் பெருமானிடம் எண் சக்தியைப் பெற்ற சுக்ராச்சாரியார் திருஅண்ணாமலையை வலம் வந்து அட்சர சக்திகளைப் பெற்று அதன் பின்னர் சென்னையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவெள்ளீஸ்வரரின் தரிசனத்தால் இழந்த கண் பார்வையை மீண்டும் பெற்றார்.

”எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்,” என்ற மூதுரையின் பொருள் இதுதான். இந்த உலகில் தோன்றியுள்ள அனைத்துப் பொருட்களும் எண் சக்திகளாலும் அட்சர சக்திகளாலும்தான் தோன்றியுள்ளன. Number and pattern of atoms is the secret of all material things in this world.

முருகப் பெருமானின் கருணையால் எண் சக்தியைப் பெற்ற சக்ராச்சாரியார் தன்னுடைய நன்றியைத் தெரிவிக்கும் பொருட்டு சுவாமிக்கு சுக்ராமிர்தம் என்னும் அற்புத அபிஷேக ஆராதனையை நிறைவேற்றினார். பஞ்சாமிர்தத்துடன் பசும்பாலில் வேகவைத்த குங்குமப் பூவைச் சேர்த்து அபிஷேகம் செய்வதே சுக்ராமிர்த அபிஷேகம் ஆகும்.

கண் பார்வைக் கோளாறுகள் உள்ளவர்களும், ஆறு எண்ணில் பிறந்தவர்களும் இத்தலத்தில் முருகப் பெருமானுக்கு சுக்ராமிர்த அபிஷேகம் நிறைவேற்றி வழிபடுதல் நலம்.

காவல்துறை, ராணுவம், உளவுத் துறை, பாதுகாப்புப் பணியாளர்கள் (Security Guards) போன்ற துறையில் உள்ளவர்கள் அவசியம் வழிபட வேண்டிய தெய்வ மூர்த்தியே கருப்பத்தூர் முருகப் பெருமான் ஆவார். இதனால் தங்கள் ஆயுதங்களால் தங்களுக்கும் மற்றவர்களுக்கும் எந்தவித ஆபத்தும் நேராமல் காத்துக் கொள்வதோடு தங்கள் துறையில் பேரும் புகழும், அமைதியான ஓய்வு பெறவும் (peaceful retirement) எம்பெருமான் அருள்புரிவார்.

வீட்டில் கத்தி, அரிவாள், அரிவாள்மனை, கடப்பாரை போன்ற ஆயூதங்களை அவற்றின் பணி முடிந்தபின் நிருதி திக்கில் வைத்து சாந்தம் அளிப்பதால் அந்த ஆயுதங்களால் எந்த வித ஆபத்துக்களும் குழந்தைகளுக்கோ மற்றவர்களுக்கோ ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.

தனது ஆயுதங்களை சாந்தம் செய்து இரு தேவிகளுடன் சாந்தம் தவழும் மூர்த்தியாய் எழுந்தருளி உள்ளதால் இத்தல முருகப் பெருமான் சாந்த நாயக வேலன் என்று அழைக்கப்படுகிறார்.

அணு விஞ்ஞானம், கதிரியக்க மருத்துவம் போன்ற துறையில் உள்ளோர் இத்தல சாந்த நாயக வேலனை வழிபடுவதால் அவர்கள் கண்டு பிடிப்புகள் மக்களுக்கு நலம் பயக்க வழி பிறக்கும்.

நிருதி திக்கு விநாயகப் பெருமானுக்கு உரிய திசையாகும். பிரார்த்தனைக்கு உரிய விசேஷமான இடமும் இதுவேயாம். இது குறித்த சுவையான ஒரு இறை விளையாட்டைக் காண்போம்.

ராம பக்தரான ராமதாசர் நவாபிடம் பணி புரிந்து வந்தார். அரசாங்க காரியத்திற்காக நவாப் கொடுத்த பணத்தைக் கொண்டு ராமபிரானுக்கு கோயில் கட்டி விட்டார். செய்தி அறிந்த நவாப் ராமதாசரை அழைத்து அரசாங்கப் பணத்தை எடுத்து எப்படி கோயில் கட்டலாம் என்று கேட்டார்.

ராமதாசர் தான் இறைவனுக்கு மட்டுமே கோயில் கட்டியதாகவும் அனைவரும் ராமபிரானின் அடிமைகள் என்பதால் அரசாங்க பணத்தை எடுத்து கோயில் கட்டியது தவறு கிடையாது என்று வாதிட்டார். அதை நவாப் ஏற்றுக் கொள்ளவில்லை.

அரசாங்கப் பணத்தைத் திருடினால் அதற்கு மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், ராமதார் இறைவனுக்காக அதை செலவிட்டதால் நவாப் அதை மன்னித்தார். ஆனால், செலவழித்த பணத்தை வட்டியுடன் திரும்பித் தந்தால் அவரை விட்டு விடுவதாகவும் இல்லையெனில் சிறைத் தண்டனை வழங்கப் போவதாகவும் நவாப் தெரிவித்தார்.

ராமதாசரும் தன்னுடைய உற்றார், உறவினர், நண்பர்களிடம் ராமருக்குக் கோயில் கட்ட செலவான பணத்தைக் கடனாக தருமாறு கேட்டார். ஆனால், எவருமே அதற்கு முன் வராததால் மிகவும் மனம் நொந்து போனார். அப்போதுதான் ராமர் ஒருவர்தான் தன்னுடைய உண்மையான உறவினர், அவர் ஒருவர் மட்டுமே தன்னுடைய நிரந்தர நண்பர் என்பதை உணர்ந்தார்.

கனத்த நெஞ்சத்துடன் நவாபிடம் சென்று தன்னால் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியவில்லை என்று கூறி தான் அரசாங்கப் பணத்தை எடுத்த குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு கேட்டார். நவாபும் வேறு வழியின்றி ராமதாசரை சிறையில் அடைத்து விட்டார்.

சிறையில் வாடிய ராமதாசர் ராம நாமத்தை இரவு பகலாக ஓதிக் கொண்டே இருந்தார். நாட்கள் வாரங்களாக, வாரங்கள் மாதங்களாகி வருடங்களும் உருண்டோடின.

ராமதாசரின் வேதனைக் குரல் வைகுண்டத்தை அடைந்தது. லட்சமி தேவி பெருமாள் மூர்த்தியிடம், ”சுவாமி, உங்கள் பக்தன் எவ்வளவு காலமாய் உங்களைக் கூவி அழைக்கிறான். ஆனால், தாங்கள் சிறிதும் அவனைக் கண்டு கொள்ளாமல் இருக்கிறீர்களே? அது ஏன் என்று எனக்குப் புரியவில்லை,” என்றாள்.

பெருமாள், ”தேவி, பக்தர்கள் அழைத்தால் மறு கணமே கருட வாகனத்தில் விரைந்து சென்று அவர்களைக் காப்பாற்றுவதுதானே என்னுடைய தலையாய கடமை. அப்படி இருக்கும்போது ராமதாசர் அழைத்தால் போகாமல் இருப்பேனா? இவ்வளவு கடுமையான சிறைத் தண்டனை பல வருடங்களாக அனுபவித்தும் இன்னும் ஏன் அவன் என்னை அழைக்கவில்லை என்று புரியவில்லை,” என்று சிறு குழந்தையைப் போல் கேட்டார்.

லட்சுமி தேவிக்கு ஒன்றும் புரியவில்லை. ”என்ன சுவாமி சொல்கிறீர்கள், சுவாமி? அவன் உங்களை அழைக்கவில்லையா? அவனுடைய ராம நாம ஒலி பூமியிலும் வானத்திலும் ஒலித்து எங்கும் வியாபித்துள்ளதே.”

பெருமாள், ”நீ சொல்வது எனக்கு சிறிதும் புரியவில்லை, தேவி. அவன் ஒரே ஒரு முறை என்னை அழைத்தால் போதும். உடனே சென்று அவனைக் காப்பாற்றி விடுவேன்,” என்று மீண்டும் கூறினார்.

தேவிக்கு குழப்பம் அதிகரித்தது. சற்று நேர யோசனைக்குப் பின் அவளுக்கு ஒரு விஷயம் புரிந்தது. தனக்கே ராமதாசரின் ராம நாம ஒலி தொடர்ந்து கேட்கிறது என்றால் தன்னுடைய பிராண நாயகனுக்கு நிச்சயம் அந்த ஒலி கேட்டிருக்கும். ஆனால், அதை தனக்குத் தெரியாது என்று மறுக்கிறார் என்றால் அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ற முடிவுக்கு வந்தாள் தேவி.

உண்மையில் பெருமாள் மூர்த்தி ஒரு நாடகத்தை நடத்த திட்டம் வைத்திருந்தார். இறைவனிடம் பக்தன் கொண்டாடும் பக்தியில் பல படித்தரங்கள் உள்ளன. இறை பக்தியில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளதே அடிமை என்னும் பாவத்தில் தோன்றும் பக்தி நிலை. மிக மிக உன்னத பக்தி நிலை இது.

ராமதாசர் தன்னை ராமரின் பக்தனாக நினைத்தால் ஒரு நொடியில் ராமர் பூலோகம் வந்து ராமதாசரைக் காப்பாற்றி இருப்பார். ஆனால், ராமதாசரோ தன்னை ராமபிரானின் தாசன் அதாவது அடிமை என்ற உன்னத நிலையில் நிலைக்க விரும்பினார். எனவே, இத்தகைய உயர்ந்த நிலையை அடைய வேண்டுமானால் அதற்கான காலம் கனியும் வரை காத்திருக்கத்தானே வேண்டும்.

ராமதாசரும் விடாமல் ராம நாமத்தைக் கூவிக் கொண்டே இருந்தார். பன்னிரெண்டு வருடங்கள் கடந்தன. ஒரு நாள் பிரம்ம முகூர்த்த நேரத்தில் பெருமாள் மூர்த்தி லட்சுமியிடம், ”தேவி நீயும் நீண்ட காலம் ராமதாசரைக் காப்பாற்றும்படி கேட்டுக் கொண்டிருக்கிறாய். எனக்கோ அவன் குரல் கேட்கவில்லை. இப்போது ஒரு வழி முறை உள்ளது. அதாவது அவன் பிரார்த்தனைக்கு உரிய திசையான நிருதி திக்கில் இருந்து ராம நாமத்தை அழைத்தால் அப்போது அந்த நாமம் என்னுடைய காதில் விழும். நானும் உன்னுடைய விருப்பப்படி அவனைக் காப்பாற்றி விடுவேன்,” என்றார்.

தேவியும் மிகவும் மகிழ்ச்சியடைந்து இந்தச் செய்தியை எப்படி ராமதாசருக்குத் தெரிவிப்பது என்று யோசித்தாள். அப்போது நந்தவனத்தில் புறாக்கள் பறக்கும் ஒலி கேட்டது. உடனே தேவி ஒரு புறாவை அழைத்து ராமதாசரிடம் சென்று எம்பெருமான் கூறிய செய்தியைத் தெரிவிக்குமாறு வேண்டினாள்.

அந்தத் தெய்வீகப் புறாவும் வைகுண்டத்திலிருந்து பூலோகம் வந்து ராமதாசரின் சிறைக்கு மேலிருந்த ஜன்னலில் உட்கார்ந்து ராம நாமத்தை ஒலிக்க ஆரம்பித்தது.

ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா
ராமா ராமா ராமா ராமா ராமா ராமா

என்று கூவி விட்டு அங்கிருந்து பறந்து சென்று வைகுண்டத்திற்கு வந்து விட்டது.

புறாவின் ராம ஒலியைக் கேட்டார் ராமதாசர். புறாக்கள் தெய்வீக லோகத்திலிருந்து செய்தியைக் கொண்டு வரும் என்பதை உணர்ந்தவர் ராமதாசர்.

இதில் சில வாஸ்து ரகசியங்களும் உண்டு. பொதுவாக, வீடுகள் கட்டும்போது சமையல் அறை, முற்றம், பூஜை அறை இந்தந்த அளவுகளில் இருக்க வேண்டும் என்ற வாஸ்து சாஸ்திர அளவு கோல் இருப்பது போல என்னென்ன அமைப்புகள் எவ்வளவு உயரத்தில் இருக்க வேண்டும் என்ற சாஸ்திர நியதிகளும் உண்டு.
அதன்படி இருபது அடி உயரத்தில் புறாக் கூண்டுகள் அமைத்தால் அக்கூண்டில் தெய்வ லோகத்து பட்சிகள் வந்து இறை மூர்த்திகளிடமிருந்து செய்தி கொண்டு வரும் என்பது வாஸ்து நியதி.

அந்த வாஸ்து நியதியை அறிந்த ராமதாசர் அந்த புறா இருபது அடி உயரத்தில் இருந்த ஜன்னலில் அமர்ந்ததால் அது தெய்வீக லோகத்திலிருந்து செய்தி கொண்டு வந்தது என்பதை எளிதில் உணர்ந்து கொண்டார். ஆனால், அந்த செய்தி என்ன என்பது அவருக்குப் புரியவில்லை. மீண்டும் மீண்டும் அந்த வைகுண்டப் புறா ஓதிய ராம நாமத்தினை நினைவுக்குக் கொண்டு வந்து சிந்திக்கத் தொடங்கினார். பல மணி நேரத்திற்குப் பின் புறா கூறிய இறைச் செய்தி அவருக்குப் புரிந்தது.

ஆறு முறை ராம நாமத்தை புறா தொடர்ந்து ஓதியது. ஆறு எண்ணிற்கு உரிய திசை நிருதி. எனவே நிருதி மூலையில் நின்று ராம நாமத்தை ஓதினால் நிச்சயம் ராமபிரானின் தரிசனம் கிட்டும் என்று அவருடைய உள்ளுணர்வு அவருக்குத் தெளிவாக தெரிவித்தது. எல்லையில்லா உவகையுடன் ராமதாசரின் நிருதி மூலையில் நின்று கொண்டு பசி தாகத்தை மறந்தவராய் ராம நாமத்தை ஓத ஆரம்பித்தார்.

பெருமாள் மூர்த்திக்கு ராமதாசரின் ராம நாமம் தெளிவாகக் கேட்டது. குறும்புப் புன்னகையுடன் லட்சுமியை நோக்கி, “இப்போதுதான் ராமதாசரின் இறை நாமம் என்னுடைய காதில் கேட்கிறது. நான் உடனே சென்றாக வேண்டும். ஆனால், நவாபுக்குக் கொடுக்கத் தேவையான பணம் இல்லையே என்ன செய்வது? என்னிடம் இருப்பது இந்த பழைய வில்தான். இதை வைத்துக் கொண்டு யார் பணம் தருவார்கள்?” என்று ஒன்றும் அறியாதவர்போல் பெருமாள் கேட்டார்.

லட்சுமி தேவியும், ”நீங்கள் கூறுவதும் உண்மைதான். ஏற்கனவே நீங்கள் குபேரனிடம் வாங்கிய கடனே தீராமல் இருக்கிறது. அப்படி இருக்கும்போது யார் உங்களுக்குக் கடன் தருவார்கள்? வேண்டுமானால் நான் சேர்த்து வைத்த பணத்தில் இருந்து உங்களுக்குத் தருகிறேன். சீக்கிரம் சென்று நம் குழந்தையை மீட்டு வாருங்கள்,” என்று கூறி ஒரு பொன் முடிச்சை பெருமாள் மூர்த்தியிடம் கொடுத்தாள் லட்சுமி தேவி.

பெருமாள் ராம லட்சுமண மூர்த்திகளாய் மாறி நவாபிடம் வந்தார்கள். நவாபிடம் தங்களை ராமதாசரின் நெருங்கிய உறவினர்கள் என்றும் தங்கள் பெயர் ராம்சிங், லக்ஷ்மண் சிங் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிறையில் வாடும் ராமதாசரை அழைத்துப் போக வந்திருப்பதாகக் கூறினர். அவர்களைக் கண்ட நவாப் தன்னை மறந்தான். ராம லட்சுமணர்களின் கம்பீரத் தோற்றம் அவனை ஈர்த்தது. அவனுடைய கண்கள் அந்த திவ்ய மூர்த்திகளிடமிருந்து நகர மறுத்தன. தன் வாழ்நாளில் இதுவரை கண்டிராத ஒரு தெய்வீகப் பரவச நிலைக்குச் சென்று விட்டான் நவாப்.

ராமதாசர் தர வேண்டிய பணத்திற்கு வட்டி, கூட்டு வட்டி எல்லாம் கணக்கிட்டு ஒரு பெரிய தொகையைக் கேட்டான் நவாப். லட்சுமண சுவாமி லட்சுமி தேவி கொடுத்த பொற்காசு மூட்டையை நவாபிடம் கொடுத்தார். அதை அவிழ்த்துப் பார்த்த நவாபின் மனம் மாறியது. அரசன் பக்தன் ஆனான்.

“ஹமாரா அல்லா ஆ கயா” (நமது இறைவன் வந்து விட்டான்) என்று கூறி ஆனந்தக் கூத்தாடினான் நவாப். தன்னை மறந்த நிலையில் இருந்த நவாபிடம் ராமதாசரை சிறையிலிருந்து விடுவிக்குமாறு கூறிவிட்டு அவ்விடத்திலிருந்து மறைந்தனர்.

நேராக சிறைக்குப் பறந்து வந்தான் நவாப். ராமதாசரின் பாதங்களில் தடாலென விழுந்து வணங்கினான். ராமதாசருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்னுடைய அரசாட்சி, அரண்மனை, நாடு, நகரம் அனைத்தையும் உன்னுடைய காலடியில் சமர்ப்பிக்கிறேன். வேறு எது வேண்டுமானாலும் கேள். என்னுடைய உயிரை வேண்டுமானாலும் தரத் தயாராக இருக்கிறேன். ராம்சிங், லட்சுமண்சிங் என்ற அந்த இருவரை மட்டும் எனக்குக் கொடுத்து விடு,” என்று கதறி அழுதான் நவாப்.

ராமதாசருக்கு மெல்ல மெல்ல விஷயம் புரிய ஆரம்பித்தது. ராமதாசர் நேரே தான் கட்டிய கோயிலுக்குச் சென்றார். ”ராம் நாம் சத்ய ஹை” அதாவது ராம நாமமே உண்மை. அதுவே நித்தியமானது, சாசுவதமானது என்று கூறிக் கொண்டே ராமருடன், ராம நாமத்துடன், ராம ஜோதியுடன் இரண்டறக் கலந்தார் ராமதாசர்.

இறைவனுடன் நெருங்கி உறவாட, பிரார்த்தனை செய்ய உகந்த திசையே நைதிருதி ஆகும். இதை நன்முறையில் பயன்படுத்தி பயன் பெறுவது பக்தர்கள் கடமை.

பிரார்த்தனைக்கு மட்டும் அல்லாது கடன் வாங்கவும் நிருதி திசை உகந்தது. கடன் வாங்குபவர்கள் நிருதி மூலையிலோ அல்லது அந்தத் திசையை நோக்கி நின்று கொண்டோ கடன் கேட்டால் எளிதில் கடன் கிடைக்கும். அவ்வாறு பெற்ற கடனைத் திருப்பித் தருவதும் சுலபமாகும்.

சப்தாவர்ண பீட பூஜை

திருமணத்திற்கு மாங்கல்யம் செய்வதற்கு பொன் உருக்க குறித்த முகூர்த்தம் பார்த்து நல்ல நேரத்தில் நிறைவேற்றுவதே நலம். இதற்கென்று பிரத்யேகமான முகூர்த்த லக்னமும் உண்டு. ஆனால், தற்காலத்தில் பெரும்பாலும் இந்த முறையயைப் பின்பற்றுவது கிடையாது. கடைகளில் எப்போதோ செய்யப்பட்டு தயார் நிலையில் கிடைக்கும் மாங்கல்யத்தையே திருமணத்திற்குப் பயன்படுத்துகின்றனர்.

இதனால் விளையும் தோஷங்கள் ஏராளம். உதாரணமாக, கடையில் இருக்கும் மாங்கல்யத்தை நீங்கள் வாங்குவதற்கு முன் அதை எவ்வளவோ பேர் பார்த்திருக்கலாம். அதைப் பலரும் தொட்டும் இருக்கலாம். இதனால் அந்த மாங்கல்யத்தில் பல தோஷங்கள் படியும்.

நமது தொண்டையில் 32 தேவதைகளும், வயிற்றில் 68 தேவதைகளும் உறைகின்றன. உமிழ் நீர், அமிலங்கள் நமது உணவைச் செரிப்பதற்குப் பயன்படுகின்றன என்று கூறினாலும் உண்மையில் நாம் பேசுவதும், சுவாசிப்பதும், திரவப் பதார்த்தங்களை அருந்துவதும், உண்ட உணவு செரிப்பதும் இந்த 100 தேவதைகளின் அனுகிரக சக்தியால்தான்.

அது மட்டுமல்லாமல் இந்த 100 தேவதைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயலாற்ற கீழ்க் கண்ட 18 சித்தர்களின் தீர்த்த சக்திகளும் இன்றியமையாததே.

     
அஷ்ட வக்ரர் அணிருத்ரர் அசலா முகீஸ்வரர்
அம்பல தேசிகர்    அருநந்தி கூபர்     அறவாண சித்தர்
ஆருநாராயணர் அணிகல்பர் ஆசிதரர்
அவுண ரட்சகர் ஆடின்யர் அர்க்யர்
அசலர் ஆர்ப்பரிதரர் ஆணிக்கர்
ஆங்கிரசர் அடலர் ஆரண்யர்
     

புகைப் பிடிப்பவர்கள், மது போன்ற போதைப் பொருட்கள் பயன்படுத்துவோரை இந்த 100 தேவதைகளும் 18 தீர்த்த தேவதா சக்திகளும் சபிக்கின்றன. எனவே, ஒரு கடையில் விற்கும் மாங்கல்யத்தையோ, தங்க நகைகளையோ தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டோர் தொடும்போது அந்த நகைகளில் இந்த தேவதைகளின் சாபங்களும் படியும் என்பது உண்மை. ஆனால், தற்காலத்தில் கடையில் தங்க நகைகள் வாங்குவது என்பது தவிர்க்க முடியாது என்பதால் இதை உணர்ந்த மகான்கள் அத்தகைய தோஷங்கள் திருமணத் தம்பதிகளைத் தாக்காதிருக்க ஒரு வழிபாட்டு முறையை உருவாக்கித் தந்துள்ளார்கள். அதுவே சப்தாவர்ண சித்ர பீட வழிபாடாகும்.

நாம் அன்னதானம் கொடுக்கும்போது ஒவ்வொரு நாளும் ஒரு குறித்த இலையைப் பயன்படுத்துவதால் தானத்தின் பலனை ஏழு மடங்காக விருத்தி செய்ய முடியும்.

ஞாயிற்றுக் கிழமை     தாமரை இலை
திங்கட் கிழமை அல்லி இலை
செவ்வாய்க் கிழமை மண் பாத்திரம்
புதன் கிழமை நீள வாக்கில் இரண்டாக வெட்டப்பட்ட வாழை இலை
வியாழக் கிழமை மந்தார இலை
வெள்ளிக் கிழமை முழு வாழை இலை
சனிக் கிழமை காய்ந்த வாழை சருகு, தொன்னை

உதாரணமாக, திருஅண்ணாமலையில் வெள்ளிக் கிழமை முழுவாழை இலையில் அன்னதானம் செய்தால் அந்த அன்னதானத்தின் பலன் ஏழாயிரம் மடங்காகப் பெருகும் என்பது மேற்கூறிய அன்னதான வழிபாட்டின் பலன்.

ஒரு மண் தட்டின் மேல் பச்சரிசி மாவால் சஷ்டி சக்கரம் வரைந்து நடுவில் பிரணவச் சுழியை இட்டு அதன் மேல் மேற்கூறிய ஆறு இலைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக வைத்து அனைத்திற்கும் மேல் கடையிலிருந்து வாங்கிய மாங்கல்யத்தை வைத்து நிருதி திக்கில் இருந்து இறைவனை வழிபட்டால் மாங்கல்யம், தங்க நகைகளின் மேல் படியும் தோஷங்கள் குறையும்.

”ஓ‘’ என்ற எழுத்தையும் ”ம” என்ற எழுத்தையும் ”ம”வின் மேல்வைக்கும் புள்ளியையும் கையை எடுக்காமல் வரைவதே இடைவெளியில்லாமல் வரைவதே பிரணவச் சுழியாகும். இதனால் விளையும் பலன்கள் ஏராளம்.

திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிச் செய்த ”இடரினும் தளரினும்…” எனத் தொடங்கும் திருவாவடுதுறை பதிகத்தை ஓதி வழிபாட்டை நிறைவு செய்யவும்.

ஷஷ்டாஷ்டக தோஷம்

சில ஜாதகங்களை செவ்வாய் தோஷ ஜாதகம் என்றும் சிலவற்றை நாக தோஷ ஜாதகம் என்றும் பலவகையான தோஷங்களை ஜாதகங்களில் கற்பிக்கிறோம்.

உண்மையில் செவ்வாய் தோஷம் என்றால் செவ்வாய் பகவானால் ஏற்படும் தோஷம் என்றே பலரும் எண்ணுவர். நவகிரக மூர்த்தியான செவ்வாய் பகவான் மனிதருக்குத் தோஷத்தை ஏற்படுத்துவாரா? கண்டோர் மதி மயங்கும் மோகினி அவதாரம் எடுத்த பெருமாள் மூர்த்தியின் திருக்கரங்களால் அமிர்தம் பெற்ற ராகு, கேது மூர்த்திகள் நாக தோஷத்தை அளிப்பார்களா? சற்றே சிந்தித்துப் பாருங்கள்.

உண்மையில் மனிதர்கள் முற்பிறவிகளில் செய்த தவறுகளை சுட்டிக் காட்டவே நவகிரக மூர்த்திகள் ஜாதகக் கட்டங்களில் எழுந்தருளி மக்கள் தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்து அதை நிவர்த்தி செய்வதற்கு உரிய வழிபாடுகளை மேற்கொள்ள உறுதுணை செய்கின்றனர்.

இம்முறையில் இரண்டு நவகிரக மூர்த்திகள் ஒருவருக்கு ஒருவர் ஆறு எட்டாம் இடங்களில் எழுந்தருளி இருப்பதே ஷஷ்டாஷ்டகம் என்னும் அமைப்பாகும். பொதுவாக, ஒருவருக்கு ஜாதக ரீதியாக ஒரு கிரகத்தின் மகா தசை நடக்கும்போது அந்த மகா தசைக்கு புக்தி நாதனாய் விளங்குபவர் அவருடைய ஜாதகத்தில் ஷஷ்டாஷ்டக அமைப்பில் இருந்தால் அந்த புக்தி காலம் ஜாதகருக்கு நன்மை பயக்காது.

அது போல திருமணப் பொருத்தம் பார்க்கும்போது மாப்பிள்ளை பெண்ணின் ராசி அதிபதிகளோ லக்ன அதிபதிகளோ ஒருவருக்கொருவர் ஷஷ்டாஷ்க அமைப்பில் இருந்தால் அதனால் சில குழப்பங்கள் ஏற்படும். இதில் விதி விலக்குகள் உண்டு என்பதும் உண்மையே. எனவே ஷஷ்டாஷ்டக தோஷம் என்பது தம்பதிகளுக்கு இடையே மட்டுமன்றி உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்கள் என சமுதாயத்தில் பலதரப்பட்ட உறவுகளிலுமே ஏற்படும் அல்லவா?

இதற்குத் தீர்வாக அமைவதே சாந்த நாயக வேலனின் வழிபாடாகும். மணம் கமழும் ஆறு இதழ்கள் கொண்ட எட்டு முழப் பூச்சரங்களை சூட்டியும், சுக்ராமிர்த அபிஷேக ஆராதனைகளாலும் முருகப் பெருமானை வழிபடுதல் நலம்.

கருப்பு பார்டர் வைத்த நீல வண்ண சேலைகளோ அல்லது நீல பார்டர் வைத்த கருப்பு வண்ண ஒன்பது முழச் சேலைகளையோ அம்பாளுக்கு சார்த்தி வழிபடுதலும் ஏழைச் சுமங்கலிகளுக்கு மேற்கூறிய வண்ணச் சேலைகளைத் தானமாக அளித்தலும் ஷஷ்டாஷ்டக அமைப்பில் விளையும் துன்பங்களைக் களையும்.

வெள்ளிக் கிழமையும் அஷ்டமி திதியும் இணைந்த நாட்களிலும், சனிக் கிழமையும், ஷஷ்டி திதியும் இணைந்த நாட்களிலும் மேற்கூறிய வழிபாடுகளை நிகழ்த்துதலால் பலன்கள் துரிதமடையும்.

திடீர் விபத்துகளையும், அகால மரணங்களையும் களைவதே மேற்கூறிய வழிபாடாகும்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஒரு மனிதனுக்கு வரக் கூடிய துன்பங்கள் மலையளவாக இருந்தாலும், கடுகளவாக இருந்தாலும் அதைத் தீர்ப்பதற்கு நமது புண்ணிய பாரதத்தில் எத்தனையோ திருத்தலங்கள் உண்டு, தெய்வீக வழிபாட்டு முறைகள் உண்டு என்பதுதான்.

தீர்க்க கண்ட நந்தீஸ்வரர்

இறைவனுடன் மனிதனை இணைப்பதே யோகமாகும். இந்த யோக முறைகளில் கண்ட யோகம் என்ற ஒரு அற்புத யோகம் உண்டு. கண்ட யோகக் கலையில் சிறந்த மகான்களுள் விடோபா சுவாமிகளும் ஒருவராவார்.

த்ரைலிங்க சுவாமிகள், திண்டுக்கல் ஓத சுவாமிகள் போன்ற மகான்களும் கண்ட யோகக் கலையை மக்களின் நல்வாழ்விற்காகப் பயன்படுத்தி வந்தனர் என்பது ஒரு சிலரே அறிந்த ரகசியமாகும்.

கண்ட யோக ரகசியங்களில் சேஷ கண்டம், உத்தி கண்டம், விபூதி கண்டம், நாத கண்டம் போன்ற நூற்றுக் கணக்கான பிரிவுகள் உண்டு. ஸ்ரீவிடோபா சுவாமிகள் உத்தி கண்டத்தில் திளைத்த அற்புத யோகி ஆவார்.

உத்தி கண்ட யோக முறையில் மகான்கள் தங்கள் உடலை பல்வேறு கூறுகளாகப் பிரித்து மற்றவர்களுக்கு காட்டுவது வழக்கம். ஒரு முறை விடோபா சுவாமிகள் திருஅண்ணாமலையில் இருந்ததை அறிந்து ஒருவர் அவரைப் பார்க்க வந்தார். வந்தவர் பல இடங்களில் அலைந்து திரிந்து கடைசியாக ஒரு ஆற்றுக் கரை அருகே இருப்பதாகக் கேள்விப்பட்டு அந்தக் குறிப்பிட்ட ஆற்றங் கரையில் சென்று பார்த்தார். அப்போது விடோபா சுவாமிகள் அருகே எவரும் இல்லை.

ஸ்ரீதீர்க கண்ட நந்தி மூர்த்தி கருப்பத்தூர்

அந்நிலையில் விடோபா சுவாமிகளைப் பார்த்தவர் மிகவும் மிரண்டு போய் அங்கிருந்து ஒரே ஓட்டமாக தன்னுடைய ஊரை நோக்கி ஓடிப் போய் விட்டார். அவர் அவ்வாறு மிரண்டு பயந்து ஓடியதற்குக் காரணம் என்ன?

அவர் விடோபா சுவாமிகளைப் பார்த்தபோது அம்மகான் தலைவேறு, முண்டம் வேறாகக் கிடந்ததே அவர் பயந்து அலறியதற்குக் காரணம் ஆகும். ஆனால், அதற்குப் பின்னால் மற்றோர் இரகசியமும் இருந்தது. விடோபா சுவாமிகளைத் தரிசனம் செய்ய வந்தவர் நிலத் தகராறு காரணமாக ஒரு விவசாயியை வெட்டி ஒரு ஆற்றங் கரையில் வீசி விட்டார்.

அதே விவசாயியின் உருவத்தில் தலை வேறு உடல் வேறாக விடோபா சுவாமிகள் காட்சி அளித்ததே அவரைக் கண்டவுடன் இனந் தெரியா பயம் தோன்றியதற்குக் காரணம் ஆகும்.

இவ்வாறு மகான்கள் தங்கள் உடல் பகுதிகளைக் கூறு போட்டு மற்றவர்களின் கர்ம வினைகளைச் சுட்டிக் காட்டி அவர்களை நெறிப்படுத்தி வந்தனர். சில சமயம் மகான்கள் தங்கள் உடலை வேறு உருவத்தில் காட்டுவதும் உண்டு.

ஒரு சமயம் பூண்டி மகானைக் காண ஒருவர் வந்தார். அவர் காட்டில் வாழும் மலைப் பாம்புகளைப் பிடித்து அவற்றின் தோலை உரித்து விற்று வந்தார். அவர் பூண்டி மகானைக் கண்ட போது அவர் ஒரு மலைப் பாம்பு வடிவத்தில் காட்சி அளிக்கவே அங்கிருந்து, ”பாம்பு, பாம்பு,” என்று கூறிக் கொண்டே ஓடி விட்டார். அதே சமயம் அன்று முதல் பாம்பு பிடிக்கும் தொழிலையும் விட்டு விட்டார் என்பது உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும்.

தம்மை நாடி வரும் அடியார்களின் தீராத நோய்களைத் தீர்க்கவும் மகான்கள் கண்ட யோகத்தை நிறைவேற்றுவது உண்டு. திண்டுக்கல்லில் வாழ்ந்த ஓத சுவாமிகள் தன்னிடம் வரும் அடியார்களை குறித்த நேரத்தில் அங்குள்ள பத்மகிரி தீர்த்தத்தில் நீராடும்படி கூறுவார். அவ்வாறு நீராடியவர்கள் மறுகணமே தங்கள் நீண்ட நாள் நோய், வேதனைகள் உடனே தீர்வதைக் கண்டு அதிசயித்ததும் உண்டு.

அவ்வாறு ஓத சுவாமிகள் அறிவுரையின்படி நீராடும்போது சுவாமிகள் தம்முடைய கண்ட யோக சக்தியால் அந்த தீர்த்தமானது நோயால் வருந்துபவரின் குறிப்பிட்ட பகுதியை அடையும்படி செய்து நோய் நிவாரணம் அளித்து வந்தார். சுவாமிகளை நாடி வந்தவர்கள் அந்த தீர்த்தத்தால்தான் தம்முடைய வியாதி நிவாரணம் பெற்றதாக எண்ணினாலும் உண்மையில் சுவாமிகளின் கண்ட யோக சக்தியே அவர்களை நோயிலிருந்து விடுதலை அளித்தது என்பதை அறிந்தவர்கள் சித்தர்கள் மட்டுமே.

இவ்வாறு மகான்கள் நிறைவேற்றும் கண்ட யோக சக்திகள் நிரவியதே 27 யோகங்களுள் பத்தாவதான கண்ட யோக நேரமாகும். ஒவ்வொரு மாதமும் கண்ட யோக நேரத்தில் கருப்பத்தூர் நந்தீஸ்வர மூர்த்தியை தரிசனம் செய்து உரிய அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுவதால் தீராத நோய்களும் தீர நந்தீஸ்வர மூர்த்தி அருள்புரிவார்.

கண்ட யோகக் கலையில் பத்தாவதாக அமையும் தீர்க்க கண்ட யோக சக்திகள் பொலியும் தெய்வ மூர்த்தியே கருப்பத்தூரில் அருள்புரியும் நந்தீஸ்வர மூர்த்தி ஆவார். அதனால் அவர் தீர்க்க கண்ட நந்தீஸ்வரர் என்னும் திருநாமத்தால் அழைக்கப்படுகிறார்.

திருஅண்ணாமலை, பர்வத மலை, பழநி மலை போன்ற மலைகளில் அற்புத மூலிகைகள் வளர்ந்து நோய் நிவாரண சக்திகளை அளிக்கின்றன அல்லவா? அது போல சில புனிதமான பள்ளங்களும், பிலங்களும் உண்டு. இவற்றை கடவுகள் என்று அழைப்பதுண்டு. இந்தக் கடவுகளில் நட்சத்திரக் கடவுகள், நவகிரக கடவுகள், ஔஷத கடவுகள் என்று பல பிரிவுகள் உண்டு. பொதுவாக இந்தக் கடவுகள் அற்புத நோய் நிவாரண சக்திகளுடன் துலங்குபவை.

இத்தகைய கடவுகளைப் பற்றிய இரகசியங்கள் அகத்திய சித்த வாடகத்தில் மட்டுமே காணக் கிடைக்கும். இத்தகைய கடவுகளின் ஔஷத சக்திகளை சில திருத்தலங்களில் சித்தர்கள் மக்களின் நன்மைக்காக பிரதிஷ்டை செய்து வைத்துள்ளனர் என்பது இதுவரை நீங்கள் அறியாத இரகசியமாகும்.

திருச்சி திருமழபாடி சிவத்தலத்தில் சுவாமி சன்னதிக்கு எதிரிலும், திருப்பைஞ்ஞீலி சிவத்தலத்தில் சுவாமி சன்னதிக்கும் வாயிற்படிக்கும் இடையிலும் இத்தகைய ஔஷத கடவுகளைக் காணலாம். மிகவும் தொன்மை வாய்ந்த இத்தலங்களில் நவகிரக மூர்த்திகளாக இத்தகைய பள்ளங்கள் வடிவில் அமைந்த கடவுகள் அருள்பாலிக்கின்றன.

கொல்லை மலையில் உள்ள மூத்திரக் கடவும், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் காமக் காடு அருகில் உள்ள சர்க்கரைக் கடவும் இத்தகைய ஔஷத வகைக் கடவுகள் ஆகும். இக்கடவுகள் சர்க்கரை நோயைத் தீர்க்கும் வல்லமை பெற்றவை. ஆனால், தக்க வழிகாட்டியின் உதவியுடன்தான் இத்தகைய கடவுகளைக் காண முடியும் என்பதும் உண்மையே.

திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் திகழும் இடுக்குப் பிள்ளையார் சன்னதியும் ஒரு வகை பிலக் கடவாகும்.

இம்முறையில் கருப்பத்தூரில் அருள் வழங்கும் தீர்க்க கண்ட நந்தீஸ்வர மூர்த்தி தன்னுடைய வலது காதில் தீர்க்க கண்டம் என்னும் கடவுடன் விளங்குகிறார் என்பது சித்தர்கள் கலியுக மக்களின் நல்வாழ்விற்காக அளிக்கும் அபூர்வ இறை இரகசியமாகும்.

இந்தக் கடவில் அருள் வார்க்கும் அஸ்வினி தேவதைகளின் எண்ணிக்கை 2700 ஆகும். ஒரு நட்சத்திரத்திற்கு நூறு அஸ்வினி தேவதைகள் என்ற கணக்கில் 2700 அஸ்வினி தேவதைகள் தீர்க்க கண்ட நந்தீஸ்வர மூர்த்தியின் வலது காதில் உறைகின்றனர். இத்தேவதைகள் உறைவதால் அது ஒரு பள்ளமாய்ப் பார்ப்பவர்களுக்குத் தோற்றமளிக்கும். இது தீர்க்க கண்ட கடவு என்றழைக்கப்படும்.

எத்தகைய கொடிய நோய்களுக்கும் தீர்வாக அமைவதே இந்த தீர்க்க கண்ட கடவு தரிசனமாகும். குங்குமப்பூ தைலத்தால் பிரதோஷ நாட்களிலும் கண்ட யோக நேரத்திலும் இம்மூர்த்திக்கு காப்பு அளித்து வழிபடுவதால் அற்புதமான நோய் நிவர்த்தி சக்திகளைப் பெற்று ஆரோக்கியமான வாழ்வு பெறலாம்.

நந்தி மூர்த்தியின் திருமேனி முழுவதும் குங்குமப்பூ தைல அபிஷேகம் நிறைவேற்ற முடியாத எளிய நிலையில் உள்ளோர் இம்மூர்த்தியின் வலது காதில் உள்ள தீர்க்க கண்ட கடவு என்னும் சிறு பள்ளத்தில் மட்டுமாவது குங்குமப்பூ தைலத்தை தடவி வழிபடுதல் நலம்.

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை பிரதோஷ நேரத்தில் அல்லது கண்ட யோக நேரத்தில் தீர்க்க கண்ட நந்தீஸ்வர மூர்த்தியை வணங்கி வழிபடுவதால் கீழ்க் காணும் நோய்கள் அகல வழி பிறக்கும்.

>
மாதம் நோய் ஏற்பட்ட உறுப்பு தீரும் நோய்கள்
   
சித்திரை தலை      தலைவலி, முடி உதிர்தல், மூளைக் கோளாறுகள்
வைகாசி   முகம், கண், காது      பருக்கள், மரு, திக்குவாய், பல் நோய்கள்
ஆனி  கழுத்து, தோள், கை   Spondylitis
ஆடி இதயம், நுரையீரல் உயர் இரத்த அழுத்தம், ஆஸ்துமா
ஆவணி வயிறு     சர்க்கரை நோய், குடல் நோய்கள், சிறுநீரக கற்கள்
புரட்டாசி  அடி வயிறு, கர்பப் பை    முதுகுத் தண்டு நோய்கள்
ஐப்பசி  இடுப்பு குழந்தையின்மை, மகப் பேறு கோளாறுகள்‘
கார்த்திகை ஜனன உறுப்புகள் இரகசிய நோய்கள், வாய்வு நோய்கள்
மார்கழி  தொடை  எலும்பு முறிவு, Osteoporosis
தை   முழங்கால் மூட்டு வீக்கம், Arthritis
மாசி  கணுக்கால் சதைப் பிடிப்பு, தோல் நோய்கள்
பங்குனி  பாதம் கால் ஆணி, Gangrene
   

தேய்பிறை பிரதோஷமும் கண்ட யோகமும் இணைந்து வரும் நாட்கள் மிகவும் சக்தி பெறுவதால் அத்தகைய நாட்களில் நிறைவேற்றும் வழிபாடுகள் அற்புத நோய் நிவாரண சக்திகளை வழங்கும்.

நித்திய பிரதோஷ நேரமான மாலை நாலரை மணி முதல் ஆறரை மணி வரையிலும் மேற்கூறிய வழிபாடுகளை இயற்றுவதும் நலமே.

மகிமைகள் தொடரும் ...

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam