வானமும் கடலும் முத்தமிட்டால்... !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

திருவெள்ளியான்குடி சிவாலயம் மகாத்மிய தொடர்ச்சி...

பால் வண்ணனா
மால் வண்ணனா?

நீங்கள் தினமும் பயன்படுத்தும் ரூபாய் நோட்டில் பதிந்துள்ள இரகசியங்களை என்றாவது கவனித்தது உண்டா? அதில் உள்ள பல இரகசியங்களில் ஒன்றே ஓம்ரான் வளையங்கள் என்னும் கள்ள நோட்டு பயன்பாட்டை தடுக்கும் ஒரு சாதனமாகும். ஒரு ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் மிஷினில் வைத்து ஜெராக்ஸ் எடுக்க முயன்றால் அந்த முயற்சியை செயல்படுத்த முடியாதவாறு ரூபாய் நோட்டில் உள்ள பாதுகாப்பு அம்சமே இந்த ஓம்ரான் வளையங்கள் ஆகும்.

சற்குரு ஸ்ரீவெங்கடராமன் அவர்கள்
சிரவணபௌகோளா

ஒரு உண்மையான செலாவணி நோட்டை அடையாளம் கண்டு கொள்ள அரசாங்கம் இத்தகைய முயற்சிகளை எல்லாம் எடுக்கின்றது என்றால் ஒரு உண்மையான பக்தனை அடையாளம் கண்டு கொள்ள கடவுளும், ஒரு உண்மையான அடியாரை இனம் கண்டு கொள்ள நம் சற்குருவும் எத்தகைய முயற்சிகளை எல்லாம் எடுப்பார்?!

இதை ஒரு நிகழ்ச்சியின் மூலம் உறுதிப்படுத்துகிறோம். ஒருமுறை திருஅண்ணாமலை கார்த்திகை தீப வைபவத்தின் நம் சற்குரு ஒரு அடியாருக்கு புது வஸ்திரங்களை அளித்து அதை மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள பண்டரிபுரம் பாண்டுரங்க விட்டலநாதனின் திருத்தலத்தில் வஸ்திர தானமாக அளித்து விடும்படிக் கூறினார்.

பண்டரிநாதனின் திருச்சன்னிதானத்தை தம் குடும்ப அங்கத்தினர்களுடன் சென்றடைந்த அந்த அடியார் திகைத்து அங்கேயே நின்று விட்டார். காரணம் சுவாமியை தரிசனம் செய்ய லட்சக் கணக்கான பக்தர்கள் புடை சூழ நின்று கொண்டிருந்தனர். அந்த திருவிழாக் கும்பலில் எவ்வாறு சென்று விட்டலநாதனை தரிசனம் செய்ய முடியும் என்று அவருக்குத் தெரியவில்லை.

அப்போது முன் பின் அடையாளம் தெரியாத ஒரு அன்பர் அவரிடம் வந்து, “சார், நீங்கள் தமிழ்நாட்டுக்காரர்தானே? சுவாமியை தரிசனம் செய்ய வேண்டுமா?” என்று தமிழ் மொழியிலேயே கேட்க அந்த அடியாருக்கோ, ‘கரும்பு தின்னக் கூலியா?’ என்று நினைத்து ஆமாம் என்று அந்த அன்பர் கூறியதை ஏற்றுக் கொண்டார். உடனே அந்த அன்பரும் நம் அடியாரை அழைத்துக் கொண்டு சென்று, அங்கிருந்த அனைவரையும் கடந்து சென்று, கடைசியில் கருவறையை அடைந்து ஸ்ரீவிட்டலநாதனின் தரிசனத்தையே பெற்றுத் தந்து விட்டார் அந்த அறிமுகம் இல்லாத ‘ஆசாமி’. அவர் ஆசாமியா இல்லை சாமியிடமே அழைத்துச் சென்ற ஆ...ஆ...சாமியா?

ஸ்ரீகோமதீஸ்வரர்
சிரவணபௌகோளா

இடையில் எவரும் இவர்களைத் தடுக்கவில்லை, ஏன் எதற்கு என்ற கேள்வியையும் கேட்கவில்லை.
ஏன் ?
இதுவே நம் ‘குருமங்களகந்தர்வாவின் அடியார்’ என்ற பாதுகாப்பு வளையத்தைப் பெற்ற அடியார்களுக்கு இறை உலகில் கிடைக்கும் வரவேற்பாகும். இந்த குருமங்கள பாதுகாப்பு வளையத்தைப் பெறும் முறையாகவே எந்த திருத்தலத்தில் அடியார்கள் வழிபாடுகள் செய்தாலும் திருத்தலத்தை அடைந்தவுடன் ஸ்வஸ்தி துதியை ஓதி இறை மூர்த்திகளை வணங்கும்படி நம் சற்குரு சிபாரிசு செய்கிறார். இதுவே சித்தர்கள் அளிக்கும் பாதுகாப்பு வளையத்தை இறை உலகில் உள்ள அனைவரும் அடையாளம் கண்டு கொண்டு உரிய மரியாதையை அளிக்க உதவும் ‘நிரந்தர விசா’ ஆகும்.

எந்த நாட்டிலும், உலகத்திலும், லோகத்திலும் செல்லுபடியாகக் கூடிய சித்த நாணயம் இது ஒன்றே. ரூபாய் நோட்டில் ஓம்ரான் வளையத்தைப் பதிப்பதைப் போல் நம் சற்குரு நம்முடைய ஆகாஷிக் ரெகார்டு என்பதிலேயே இந்த அடையாளத்தைப் பதித்து விடுகிறார். ஓட்டுநர் உரிமத்தை (driving license) அவ்வப்போது புதுப்பித்துக் கொள்வதைப் போல இந்த உரிமத்தை நாம் தொடர்ந்து பயன்படுத்திப் பயன்பெறவே ஸ்வஸ்தி துதியை தொடர்ந்து ஓதி வருகின்றோம்.

பண்டரிபுரம் பழைய கதை அல்ல, அது இன்றும் அடியார்கள் பெறும் இனிய அனுபவமே என்று உறுதி செய்வதே சிரவணபௌகோளாவில் நம் அடியாரின் ‘அமிர்த’ அனுபவமாகும்.

சந்திர கிரகண பால்கோவா இனிப்பை சிரவணபௌகோளாவில் அளிக்கும் திருப்பணியை நிறைவேற்ற நம் அடியார் சென்றபோது அங்கு ஒரு இனிப்பான அனுபவம் இவருக்காகவே காத்திருந்ததுபோல் இருந்தது.

அது என்னவோ?

அந்த அடியாரின் தந்தை திருச்சி தாயுமான ஈசர் திருத்தலத்தில் மேற்கு பகுதியில் (சந்திரனுக்கு உரித்தான திசை) உள்ள ஆஞ்சநேய மூர்த்திக்கு கைங்கர்யம் செய்து கொண்டிருப்பவர். இதுவும் அந்த அடியாரின் ஆகாஷிக் ரெகார்டில் நம் சற்குருவால் பதிக்கப்பட்டிருந்ததோ என்னவோ நம் அடியாரைப் பார்த்தவுடன் சிரவணபௌகோளாவில் இருந்தவர்கள் நம் அடியாரே அங்குள்ள தீர்த்தங்கர்கள் அனைவருக்கும் அந்த அடியார் எடுத்துச் சென்றிருந்த பால்பேடா இனிப்பை நைவேத்யம் செய்து விடும்படிக் கூற மிகுந்த ஆச்சரியத்துடன், ஆனந்தத்துடன் அந்த பால் இனிப்புகளை எல்லாம் அனைத்து தீர்த்தங்க தேவதை மூர்த்திகளுக்கும், குறிப்பாக நம் சற்குருவின் முந்தைய அவதாரத் தோற்றமான 24வது தீர்த்தங்க மூர்த்திக்கும் நைவேத்யம் செய்யும் பேறு பெற்றார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் ‘பால் இனிப்பு பர இனிப்பு’ சுவையாகும். இந்த இனிப்பு சுவையின் ஒரு பகுதியை இங்குள்ள வீடியோவில் நீங்கள் பெற்று சுவைக்கலாம்.

சக்தி இன்றி சிவன் இல்லை !
சிரவணபௌகோளா

நம் சற்குருவிடம் ஒரு அடியார் வந்தார். அவர் அப்போது அமெரிக்காவில் இருந்த பகவான் ரஜனீஸை தான் சந்தித்த அனுபவத்தைப் பற்றிக் குறிப்பிட்டார். அவர் தினமும் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலுக்குச் சென்று அங்கு நிகழும் தீப ஆராதனையை தரிசிப்பதாக குறிப்பிட்டார். அப்போது பகவான், “நீங்கள் தினமும் சென்னைக்குப் போக வேண்டுமா என்ன? அந்த தரிசனத்தை இங்கேயே நீங்கள் காணலாமே?” என்று கூறி அந்த ஆஸ்ரமத்தைச் சேர்ந்த ஒரு பெண் அடியாரை அங்கு வரச் சொல்லி அவரைப் பார்த்து கை கூப்பி நிற்கும்படி அந்த சென்னைவாசியிடம் கூறினார். அவரும் அவ்வாறு குவிந்த கைகளுக்கு இடையே அந்த பெண்ணைப் பார்த்த போது அந்தப் பெண்ணின் உருவம் மறைந்து ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் தீப ஆராதனைக் காட்சிகள் தத்ரூபமாகத் தெரியவே அதைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டாராம்.

வியப்புடன் அந்த அன்பர் நம் சற்குருவிடம் இருந்து விடைபெற்றுச் சென்ற பின் நம் அடியார்களிடம் சற்குரு, “இது ஒன்றும் பிரமாதமில்லை, சார். ரஜனீஷ் ஒரு பெண் அடியாரின் துணையில்லாமல் தீபாராதனையை வாங்கிக் கொடுத்திருந்தால் அதுதான் சாதனை, அது அவரால் மட்டுமல்ல, வேறு யாராலும் முடியாது. அது என்ன இரகசியம் என்பது எங்களுக்கு (சித்தர்களுக்கு) மட்டும்தான் தெரியும்...”, என்றார்.

இதுவே உள்ளும் புறமுமாய் பிரபஞ்சம் அனைத்தையும் வியாபித்து நிற்கும் சிவசக்தி ஐக்ய இரகசியம் ஆகும். இந்த இரகசிய அனுகிரகம் வர்ஷிக்கும் திருஅண்ணாமலை தரிசனப் பகுதி எதிரில்தான் நம் அகத்திய ஆஸ்ரமம் அமைந்துள்ளது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய சுவையாகும்.

பௌ கோளா என்றால் வெள்ளைக் குளம் என்று பொருள். சிரவண பௌகோளா என்றால் வாயு சக்திகள், பேச்சிற்கு உறுதுணையான காற்று சக்திகள் குளமாக நிரவி, பெருகும் திருத்தலம் என்று பொருள். இத்தகைய வாயு சக்திப் பரிமாணத்தையே அஞ்சனை மைந்தன் தன்னுடைய இடது கை என்ற சந்திர சக்தி பெருகும் கையில் கதையைத் தாங்கி அதை இத்திருத்தலம் முழுவதும் நிரவும் அரிய பணியை நிறைவேற்றி வருகிறார் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் அனுமந்த சுவையாகும்.

63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் இருப்பதுபோல் 24 தீர்த்தங்கர்கள் உண்டு. எப்படி தமிழ் மொழியில் வல்லினம், மெல்லினம் என்றெல்லாம் எழுத்துக்களைப் பிரிப்பதுபோல் பல மொழிகளிலும் சூரிய சந்திர எழுத்துக்கள் என்ற பிரிவினை உண்டு.

ஜோதி அலங்கார பீடாதிபதி
(12 அட்சரங்கள்!)

அதே போல் தீர்த்தங்கர்களிலும் சூரிய தீர்த்தங்கர மூர்த்திகள், சந்திர மூர்த்திகள் என்ற பாகுபாடு உண்டு. அதே போல் வலது பக்கம் பார்க்கும் ஆவுடை மேலும், இடது பக்கம் பார்க்கும் ஆவுடை மேலும் எழுந்தருளிய தீர்த்தங்கர்கள் உண்டு. இவ்வாறு 24வது சந்திர தீர்த்தங்கராக நம் சற்குரு எழுந்தருளி இருப்பதும் நடப்பு பிறவியில் நம் சற்குரு சந்திரன் உச்சம் பெற்று விளங்கும் ரோஹிணி நட்சத்திரம் நிலவும் இராசியில் ஜனனம் கொண்டார் என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தீர்த்தங்கர சுவையாகும்.

இந்த சிவசக்தி ஐக்ய இரகசியத்தை பல மகான்களும் பலவிதமான சக்திகளில், தரிசனங்களில், நீர்நிலைகளில் பதித்து வைத்து சமுதாயத்திற்கு நன்மை தேடித் தருகிறார்கள் என்பதே பாம்பின் கால் பாம்பறியும் என்பதாக நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். இம்முறையில் வானும் கடலும் முத்தமிட்டால் அந்த முத்தத்திலும் சிவசக்தி ஐக்யம் உண்டாகிறது என்று பாடி மகிழ்பவரே புரட்சிக் கவி பாரதியார் ஆவார்.

கயிலையில் திருநடனமிடும் சிவசக்தி பெருமானக் காண அப்பர் பெருமான் தன்னுடைய முதிய வயதையும் பொருட்படுத்தாது நடந்தே சென்றார் அல்லவா? அப்போது அவருடைய உடலும், காலும், கையும், அனைத்து உறுப்புகளும் தேய அவர் ஒரு காட்டின் வழியாக ஊர்ந்து சென்றார். உடல் உறுப்புகள் அனைத்தும் தேய்ந்த நிலையில் அப்பர் பெருமானின் இதயம் மட்டும் தத்தி, தத்தி குதித்து சென்றதாம். மனித குலத்தால் நம்ப முடியாத அத்தகைய பக்தி நிலைக்கு உந்தப்பட்ட அப்பர் பெருமானை வேடன் வடிவில் வந்து இடைமறித்தான் சிவ பெருமான்.

இத்தகைய வயோதிக வயதில் கைலையை அடைய முடியாது என்பதால் அப்பரை அருகில் உள்ள ஒரு குட்டையில் மூழ்கி எழுந்தால் அவருக்கு கயிலை காட்சி கிடைக்கும் என்று கூறவே அப்பரும் வேடன் கூறியபடி அங்குள்ள குளத்தில் மூழ்கினார். மறுகணம் திருவையாறு திருத்தலத்தில் தற்போது அப்பன் குட்டை என்று அழைக்கப்படும் திருக்குளத்தில் நீரிலிருந்து எழுந்தார். எதிரே கண்களில் காட்சி தந்த சிவாலயத்தை அடைந்து உள்ளே சென்றபோது அங்கு கைலையில் சுவாமியும் பார்வதியும் சிவ சக்தி சொரூபமாய் எழுந்தருளிய காட்சியைக் கண்டு அதைப் பலவாறு புகழ்ந்து பாடி உள்ளார்.

பெண் யானை, ஆண் யானை வடிவாகவும், பெண் அன்னம், ஆண் அன்னம் வடிவாகவும், கைகளில் நறுமண மலர்களை ஏந்திய ஆண் பெண் தம்பதியர் வடிவமாகவும், இவ்வாறு பலவகைகளில் எம்பெருமான் அளித்த கைலை காட்சியைக் கண்டு பேருவகை உற்றார் அப்பர் பெருமான்.

பால் நினைந்தூட்டும் தாயினும்
சாலப் பரிந்து அருளும் சற்குரு

இத்தகைய ஒரு பரவசக் காட்சியைத்தான் இங்கு கயிலாய தரிசனமாக நம் அடியார்களுக்கு அளிக்கிறார் ஸ்ரீகோமதீசர். இத்தகைய கயிலை தரிசனம் சிரவணபௌகோளாவில் மட்டும்தான் இறைவன் அருள்வாரா என்று நீங்கள் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது. அடியார்களின் ஆர்வத்தை நிறைவேற்றும் முகமாக சுபவர்ஷம் என்ற அமிர்தமழை ரூபத்தில் தற்போது நிகழ்ந்த சந்திர கிரகண வைபவத்தின்போது நம் அடியர்களுக்கு அனுகிரகம் அளித்தவரே திருக்கயிலாய பொதிய முனி ஸ்ரீஅகத்திய மகா பிரபு ஆவார். திருஅண்ணாமலையில் பொழியும் ஒவ்வொரு துளி மழையும் அமிர்த சக்தியுடன் துலங்கும். இந்த மழைத் துளிகள் சூரிய சந்திர கிரகணங்களின் போது பானுவர்ஷமாக அமையும் என்பதும் இந்த பானுவர்ஷ அமிர்தத் துளிகள் இந்த சுபகிருது வருடத்தில் சுபவர்ஷம் என்ற அபூர்வ அமிர்த சக்திகளை அனுகிரகமாக அடியார்களுக்கு அளிக்கின்றன என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் சித்த பொக்கிஷமாகும்.

எப்படி ஒரே ஒரு செங்கல்லை திருக்கோயில் கட்டுவதற்காக அளித்தால் கூட அதனால் கிட்டும் புண்ணிய சக்திகள் 21 தலைமுறைகளுக்குத் தொடர்ந்து வந்து காக்குமோ அது போல் சுபவர்ஷம் என்ற புண்ணிய சக்திகள் 30 மைல் விஸ்தீரணத்திற்குப் பரவி 30 தலைமுறைகளுக்கு நோய் நிவாரண சக்திகளை அளிக்கும் என்பதே சுபவர்ஷம் என்ற அபூர்வ புண்ணிய சக்திகளில் திரளும் அனுகிரகமாகும்.

பால் பேடா, பால் கோவா இனிப்புகளை சிரவணபௌகோளாவில் அல்லது மற்ற திருத்தலங்களிலோ தானம் அளிக்கும்போது அந்த பால்பேடாக்களை மூன்று ஏழுகள் சேர்ந்த வடிவில் இங்குள்ள படத்தில் காட்டியுள்ளபடி அடுக்கி வைத்து நைவேத்யம் செய்து தானம் அளிப்பது சிறப்பாகும். அவ்வாறு அமைக்கும்போது 5, 7 என்ற வகையில் இனிப்புகள் அமைப்பதால் இது (12+12+12) என்றவாறாக அமைந்து கர்ம வினைகளை பஸ்மம் செய்யும் மங்கள ஜோதியாக அமையும் என்பது இதன் உள்ளார்ந்த அக்னி சக்தியாகும். கோமதீஸ்வரரின் உயரத்தை குறிக்கும் 57 அடியாகவும், கோமதி என்ற மூன்று அட்சரங்களைக் குறிப்பாதாகவும் இந்த தானம் அமையும் என்பது மேலோட்டமான அமுத சுவையே.

கோமதி கோபுர வாசம்

43 கோணங்கள் அமைந்த ஸ்ரீசக்ர பீடத்தை ஸ்ரீலலிதா பரமேஸ்வரி உறையும் ஸ்ரீவித்யா பீடமாக வழிபடுகிறோம் அல்லவா? அதுபோல இந்த மூன்று ஏழுகள் அமைந்த பீடத்தை ஸ்ரீகோமதி பீடமாக சித்தர்கள் அமைத்து அதை அனைத்து மக்களும் வழிபடும் எளிய சக்தி பீடமாக அமைத்துத் தந்துள்ளார்கள். சற்று ஆழ்ந்து சிந்தித்தாலும் ஒரு சிறிய மாற்றத்தால் இந்த சக்தி பீடம் உலகிலுள்ள பெரும்பாலான மக்களால் வழிபடப்படும் பிரதட்சிண வலவோட்டு பீடமாக மாறும் என்பதும் சித்தர்களின் தொலைநோக்கு பார்வை உணர்த்தும் சுவையாகும், உண்மையாகும்.

திருக்கயிலாயப் பொதிய முனிப்பரம்பரை 1001வது குரு மகாசந்நிதானம் சக்தி ஸ்ரீஅங்களா பரமேஸ்வரி அடிமை ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் ஜோதி அலங்கார பீடாதிபதி என்று சித்தர்களால் புகழப்படுகிறார்.

காரணம் என்ன ?

இதற்கு ஆயிரமாயிரம் காரணங்கள் இருந்தாலும் நம் சற்குருவே மறைமுகமாகத் தெரிவித்த ஒரு தெய்வீக சுவையை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். நம் சற்குரு தான் அண்ணமாலை ஜோதியுடன் ஐக்யமாகுமுன் உடலில் எந்த விட ஆடையும் இல்லாது, கோவணம் கூட தரிக்காது, இடுப்பில் அரைஞாண் கயிறு, பூணூல் சின்னத்தையும் கழற்றி விட்டு இருந்தார்கள். இதுதானே சற்குருவின் முந்தைய அவதாரமான 24வது தீர்த்தங்க கோலம்.

அப்போது ஒரு குழாய் மாத்திரை மூலம் தன் உடலில் ஒரு சாண் அளவு தங்கியிருந்த மலம் அனைத்தையும் வெளியேற்றி விட்டார்கள். தான் அவ்வாறு மலம் முழுவதையும் வெளியேற்றிய காட்சியை அங்கிருந்த மூன்று அடியார்கள், ஒரு மருத்துவர் உள்பட, காணும் பாக்கியத்தைப் பெற்றனர்.

விற்குடி விஜய தீபம்

பூலோகத்தில் ஒருவர் எந்தவிதமான பிறவியைக் கொண்டாலும் அவர்கள் உடலில் மலம் சேருவது இயற்கையே. இவ்வாறு பூலோகத்தில் அவதாரம் கொள்ளும் மகான்கள் அனைவருமே தங்கள் உடலில், மலக் குடலில் ஒரு சாண் அளவு மலத்தை வைத்திருப்பார்கள். ஒரு சாண் என்பது மலக் குடலிலிருந்து இதயம் வரை உள்ள குண்டலினி பயணம் செய்யும் தண்டு வடப் பகுதியாகும். இந்தப் பகுதியை அதாவது அனாகத சக்கரத்தை குண்டலினி சக்தி தாண்டி விட்டால் அதன் பின்னர் நாம் பூலோகத்தில் காணும் எந்த உருவத்தையும் அங்கு காண முடியாது,

அனைத்தும் ஜோதி மயம்.

இவ்வாறு தன் ஆன்மா என்பதை ஜோதி வடிவில் அலங்காரம் செய்து கொண்டு அனைவரும் காணும் வண்ணம் சற்குரு ஜோதியாய் நான்கு நாட்கள் பூலோகத்தில் உலவி வந்தவரே நம் சற்குரு ஆவார். இந்த நான்கு நாட்களும் நம் சற்குருவை தரிசிக்கும் பாக்யம் பெற்ற அனவருமே அடி முடி காணாத அண்ணாமலை ஜோதியை அழற் பிழம்பாய் தரிசனம் செய்தவர்களே என்றால் நம் சற்குருவின் கருணை மழைக்கு நாம் எவ்வாறு கைமாறு செய்ய முடியும்.

இத்தகைய ஒரு அரிய பாக்யத்தை தவற விட்டவர்கள் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களுக்கும் நல்லருள் புரிந்தவரே நம் சற்குரு.

எப்படி ?

சமீபத்தில் நிகழ்ந்த சூரிய கிரகணம், சந்திர கிரகண சமயங்களில் திருஅண்ணாமலை கிரிவலப் பாதை, ஸ்ரீகௌதமர் ஆஸ்ரமம், படம்பக்க நாதர் தரிசனப் பகுதி, சிரவணபௌகோளா, செருகுடி போன்ற திருத்தலங்ளிலும் மேற்கூறிய திருத்தலங்களிலும் சுபவர்ஷம் என்ற சக்தி வாய்ந்த மழையாக தம் திருக்கயிலாய தலைமை பீடாதிபதி ஸ்ரீஅகத்திய பிரான் மூலம் அருளியவரே நம் சற்குரு.

இத்தகைய ஒரு கருணை வர்ஷத்தை சற்குருவாய்ப் பெற்ற நம்மை விடக் கொடுத்து வைத்தவர்கள் யார்...?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam