கனவுகள் கனவுகளாக இருக்கட்டும் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

எண்களின் சக்தி

இவ்வுலகில் நாம் காணும் அனைத்தும் பிரணவத்திலிருந்துதான் தோன்றியுள்ளது. இவ்வாறு பிரணவ ஒலியிலிருந்து தோன்றிய உலகைக் காண்பதற்கு மனித உடலிலுள்ள மூலாதாரக் கனலே வழி வகுக்கிறது. இதனால்தான் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை எழுப்பும் கலையை ஔவை மூதாட்டியும் விளக்கி உள்ளார். மூலாதாரத்தில் எழும் ஒலியும், ஒளியும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தன்மையை உடையதாக இருந்தாலும் ஒருவர் பிறந்த தேதிக்கும் அவருடைய மூலாதாரத்தில் எழும் ஆதாரக் கனலுக்கும் தொடர்பு இருப்பதால் தங்கள் பிறந்த தேதிக்கு உரித்தான கணபதி மூர்த்தியை உபாசித்து வருவதால் எளிதில் இந்த மூலாதாரக் கனலின் தன்மையைப் புரிந்து ஆன்மீகப் பாதையில் விரைவாக முன்னேற முடியும்.

கணபதி மூர்த்திகளின் உருவங்களுக்கும் எண்களுக்கும் உள்ள தொடர்பை சித்தர்கள் விளக்கிய முறையில் வழிபடுவோர் எளிதில் எண் சக்திகளைப் பெற்றுப் பயனடைய முடியும். ஒரு எண்ணிற்கும் அதற்குரித்தான கணபதி மூர்த்திக்கும் உள்ள இணைப்பை இங்கு அளிக்கிறோம்.

ஒன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் என்னும் மூஞ்சூறு கணபதியின் திருவடிகளைத் தரிசித்த வண்ணம் அதன் தலை குனிந்து பணிந்து நிற்கும். இத்தகைய கணபதி மூர்த்தி எண் ஒன்றுக்கு உரித்தானவர். இவரின் திருஉருவத்தை கோயில்களில் அல்லது ஓவியங்களில், வண்ணப் படங்களில் தரிசித்து குறைந்தது 10 நீர்க் கொழுக்கட்டைகளை தானமாக அளித்து வந்தால் எண் ஒன்றின் சக்திகளை விரைவாகப் பெறலாம்.

பணிவுடன் வணங்கி நிற்கும் இந்த வாகன மூர்த்தியின் வரலாறு அறிவதற்கு மிகவும் அற்புதமானது. நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வர பட்டம் பெற்ற சனீஸ்வர பகவானைப் போல தெய்வ அவதார மூர்த்திகளின் வாகனங்களில் ஈஸ்வர பட்டம் பெற்ற மூர்த்திகளும் உண்டு. அவர்களுள் தலையாயவர் மூஷிகேஸ்வரர் என்னும் நாமத்துடன் பிள்ளையாரின் வாகனமாக அருள்புரியும் மூர்த்தியாவார். அவர் தன்னுடைய தவத்தின் நிறைவில் ஸ்ரீஅருணாசல மூர்த்தியிடமிருந்து ஈஸ்வர பட்டம் பெற்றவுடன் தன்னுடைய சற்குருவான பிள்ளையார் அப்பனுக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் எழுந்தருளிய கோலமே அதாவது பிள்ளையாரின் திருப்பாதக் கமலங்களை வணங்கி நின்ற தோற்றத்தையே பிள்ளையார் மூர்த்தி எண்களில் முதலிடம் ஒன்றுக்கு உரிய கோலமாக ஏற்றுக் கொண்டார். பணிந்தவனே பக்தன் என்று பக்திக்கு ஆதாரமாக பணிவு இருக்க வேண்டும் என்ற காரணத்தால் முதல் எண்ணிற்குரிய கோலமாக இதைக் கணபதி மூர்த்தி ஏற்றுக் கொண்டார் எனலாம்.

கணபதி மூர்த்தியின் இந்தத் திருவிளையாடலின் பின்னணியில் உள்ள ரகசியம் என்ன? எல்லா ரகசியங்களுக்கும் மூலமாக இருப்பதே திருஅண்ணாமலை புனித பூமியாகும். தான் சுமக்கும் ஈசனான பிள்ளையாருக்குத் தகுதியான வாகனமாக அமையும் பொருட்டு ஈஸ்வர பட்டம் பெறுவதற்காக எம்பெருமானை வணங்கி அதற்குரித்தான உபாயத்தையும் மூஷிகம் கேட்டார். அதைக் கேட்டு மனம் மகிழ்ந்த பிள்ளையார் மூர்த்தி திருஅண்ணாமலையைத் தொடர்ந்து வலம் வந்தாலே எல்லா அனுகிரகமும் கிடைத்து விடும் என்று பதிலுரைத்து அதற்கான ஒரு பூஜை முறையையும் தெரியப்படுத்தினார்.

திருஅண்ணாமலையை வலம் வரும்போது கிரிவலப் பாதையில் உடன் வரும் மற்ற ஜீவன்களின் திருப்பாதங்களை மட்டுமே நோக்கி வலம் வர வேண்டும். எக்காரணம் முன்னிட்டும் எந்த ஜீவனுடைய முழங்காலிற்கு மேல் மூஷிக வாகனத்தின் பார்வை பட்டு விடக் கூடாது என்பதே கணபதி மூர்த்தி மூஷிகருக்கு அளித்த பூஜை முறையாகும். கேட்பதற்கு மிகவும் எளிமையாக இருந்தாலும் சற்று யோசித்துப் பார்த்தால்தான் இந்த பூஜையை நிறைவேற்றுவது எவ்வளவு கடினம் என்பது புரிய வரும். திருஅண்ணாமலையை ஈ, எறும்பு, பறவைகள், விலங்குகள், பாம்புகள் என கோடி கோடி ஜீவ ராசிகள் வலம் வருகின்றன. எறும்பு, புழு, பூச்சி போன்ற ஜீவன்களை விட எலி வடிவில் இருக்கும் மூஷிக வாகனம் உருவத்தில் பெரிதாக இருப்பதால் இத்தகைய நுண்ணிய ஜீவ ராசிகளின் பாதங்களை மட்டும் பார்ப்பது என்பது எப்படி சாத்தியமாகும்?

அதற்காக ஓர் விந்தையான பூஜை முறையை தனக்குத்தானே ஏற்படுத்திக் கொண்டார் மூஷிகர். தரைக்கு மேல் கிரிவலம் மேற்கொண்டால்தானே மற்ற ஜீவ ராசிகளைப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். கிரிவலப் பாதையில் பூமிக்கு கீழ் மூன்று சாண் ஆழத்தில் துளையிட்டுக் கொண்டே அத்துளை வழியாகத் தன்னுடைய கிரிவலத்தை மேற்கொண்டார். தொடர்ந்து பல வருடங்கள் துளையிட்டுக் கொண்டே சென்றதால் மூஷிகருடைய பற்கள் நாளடைவில் பலம் இழக்கத் தொடங்கின. சிறிது காலம் சென்றவுடன் பற்கள் எல்லாம் கொட்டிப் போய் தன்னுடைய மூக்கு, கால்களால் மட்டுமே மண்ணைத் தோண்டித் தோண்டி கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார். யுகங்கள் கடந்தன. கொஞ்சம், கொஞ்சமாக கால்களும் தேய்ந்து போனதால் மேற்கொண்டு மண்ணைத் தோண்ட முடியாமல் எங்கெல்லாம் சிறிய பொந்துகள் தென்படுகின்றனவோ அதன் வழியாக உருண்டு உருண்டு கிரிவலத்தைத் தொடர்ந்து நிறைவேற்றி வந்தார் மூஷிகர்.

ஒரு யுகத்தில் ஆவணி மாத சுக்ல பட்ச சதுர்த்தி திதி அன்று ஏக முக தரிசனப் பகுதியில் அருணாசல ஈசன் மூஷிகருக்கு காட்சி அளித்து, மூஷிகேஸ்வரா என்று தன் திருவாக்கால் அழைத்தார். அத்தருணத்திலும் மூஷிகேசருக்கு ஒரு சோதனை காத்திருந்தது. தன்னை அழைத்த குரல் எல்லாம் வல்ல எம்பெருமானின் குரலோசை என்று உணர்ந்தவுடன் உள்ளம் எல்லையில்லா ஆனந்தப் பரவசத்தில் திளைத்து தன்னையும் அறியாமால் எம்பெருமானின் திருமுகத்தை நிமிர்ந்து பார்க்கலாம் என்று சற்றே நினைத்தார். அப்போது தன் குருநாதரான கணபதி மூர்த்தியின் அருளாணை ஞாபகத்திற்கு வரவே தன் தவறை உணர்ந்து தன்னிலை பெற்றார். ஈசனின் திருமுகத்தை நோக்காமலே அவருடைய திருப்பாதங்களை மட்டும் வணங்கி தன்னுடைய பூஜையை நிறைவேற்றினார். எந்தச் சூழ்நிலையிலும் கடமை மறவாத, குரு வாக்கை உயிரினும் மேலாகப் போற்றி மதித்த மூஷிகேசரின் தவத்தை மெச்சிய ஈசன் அதிஅற்புதமான தெய்வீக வரங்களை எல்லாம் அவருக்கு வழங்கி மறைந்தார். மூஷிகேசருக்கு அருணாசல ஈசன் அருளாசி வழங்கிய ஏகலிங்க முக தரிசனப் பகுதி தற்போது ரமணாஸ்ரமத்தை அடுத்துள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு எண்ணிற்கும் உரிய கணபதி கோலத்தின் பின்னால் பற்பல காரணங்கள் உண்டு. இந்த காரணங்கள் என்னவென்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். உரிய காலத்தில் மற்ற எண்களின் கோலத்திற்குரிய மகத்துவம் அளிக்கப்படும்

இரண்டாம் எண் கணபதி

இரண்டு கைகளாலும் லட்டைப் பிடித்துக் கொண்டு இரண்டு கால்களால் நின்று கொண்டிருக்கும் மூஷிக வாகனத்தை உடைய கணபதி மூர்த்தி எண் இரண்டுக்கு உரியவர் ஆவார். இத்தகைய மூர்த்திகளை வழிபட்டு பூரண கொழுக்கட்டைகளை 11, 20 என்ற எண்ணிக்கையில் சுவாமிக்கு நைவேத்தியம் செய்து சந்தியா நேரங்களில் தானம் செய்து வந்தால் எண் இரண்டின் சக்திகள் வாழ்விற்கு பல நன்மைகளைச் செய்யும்.

மூன்றாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் வாகனமான மூஷிகம் வெண்மையாக இருக்க வேண்டும். வெண்ணிற வாகனம் பெற்ற கணபதி மூர்த்தி எண் மூன்றுக்கு உரிய மூர்த்தியாகத் திகழ்வதால் அவரவர் கை கொள்ளும் அளவிற்கு மூன்று கைப்பிடி வேகவைத்த நிலக்கடலையை சுவாமிக்கு நைவேத்யம் செய்து மாணவர்களுக்குத் தானமாக அளித்தலால் எண் மூன்றின் சுப சக்திகளை எளிதில் பெறலாம்.

நான்காம் எண் கணபதி

இரண்டு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்திய கோலத்தில் திகழும் கணபதி மூர்த்தி எண் நான்கிற்கு உரிய மூர்த்தியாவார். மண் கலயத்தில் கொள்ளை வேக வைத்து சர்க்கரை கலந்து சுவாமிக்கு நைவேத்யம் செய்து கழுதைகளுக்கு தானம் அளித்தலால் எந்த வேலையிலும் நிரந்தரமாகப் பணி செய்ய முடியாமல் அலை பாயும் மனதுடன் இருப்பவர்களின் மன வேதனை தணியும். கடுமையாக வேலை செய்தும் அதற்குரிய கூலியோ, சன்மானமோ பெற முடியாக நிலை மாறும்.

ஐந்தாம் எண் கணபதி

பாசம், அங்குசத்தை கைகளில் ஏந்தி அருள் புரியும் கணபதி மூர்த்தி எண் ஐந்திற்குரிய கணபதி மூர்த்தி ஆவார். இவரை வணங்கி உருண்டை வடிவில் இலவம் பஞ்சு வைத்துத் தைத்த திண்டு தலையணைகளை நீண்ட நாள் படுத்த படுக்கையாக கிடக்கும் நோயாளிகளுக்கு, வயதானவர்களுக்குத் தானமாக அளித்தலால் வயதான காலத்தில் மற்றவர்கள் உதவியை எதிர்பார்த்து வாழும் நிலை ஏற்படாமல் இறைவன் காத்தருள்வார்.

ஆறாம் எண் கணபதி

கணபதி மூர்த்தி தன்னுடைய வலது காலை மடக்கி இடது காலைத் தொங்க விட்ட நிலையில் அருள்புரியும் கோலம் எண் ஆறுக்கு உரியதாகும். சுவாமியின் துதிக்கை வலஞ்சுழியாக இருத்தல் வேண்டும். இம்மூர்த்திகளை வணங்கி தேங்காய் பர்பி நைவேத்யம் செய்து தானம் அளித்தலால் நேரம் காலம் பார்க்காது கொடுத்த கடன்கள் உரிய காலத்தில் வசூலாகும். இது ஒருமுறையே கிட்டும் பரிகாரம் என்பதை நினைவில் கொள்ளவும்.

ஏழாம் எண் கணபதி

கணபதி மூர்த்தியின் துதிக்கை இடஞ்சுழியாக அமைந்து, மூர்த்தியானவர் தன்னுடைய இடது காலை மடக்கி, வலது கால் தொங்கிய நிலையில் அருள் வழங்கும் கோலம் எண் ஏழிற்கு உரியதாகும். இம்மூர்த்தியின் தரிசனமும், ஏழை இசைக் கலைஞர்களுக்கு நரம்பு இசைக் கருவிகள் தானமும் சொந்த வீடுகள் வாங்க விரும்புவோர்க்கு நலம் பயக்கும். சம்பூர்ண ராகங்களில் அமைந்த தியாகராஜ கீர்த்தனைகளை இறைவன் முன் பாடி வருதலால் வாஸ்து தோஷங்கள் விலகும்.

எட்டாம் எண் கணபதி

துதிக்கை மேலே தூக்கியவாறு ஆசீர்வதிக்கும் நிலையில் உள்ள கணபதி மூர்த்தி எண் எட்டுக்குரியவர் ஆவார். இவரை வணங்கி எள் கலந்த முறுக்கு, சீடைகளைத் தானம் அளித்தலால் சனி பகவான் பீடிப்பால் வரும் துன்பங்கள் ஓரளவு குறையும். எல்லா தெய்வ மூர்த்திகளுமே சனி பகவான் பீடிப்பால் துன்பம் அடைந்து விதியின் வலிமையை மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள் அல்லவா? இந்த விதிக்கு விலக்காக அமைந்தவர்கள் பிள்ளையார், ஆஞ்சநேயர் மூர்த்திகள் மட்டுமே. இவ்வாறு பிள்ளையாரைப் பீடிக்க முடியாமல் சனி பகவான் தன்னுடைய பணியில் ஏற்பட்ட குழப்பத்தை நினைத்து மனம் வருந்தி நின்றபோது விநாயகப் பெருமான் தன்னுடைய துதிக்கையை துக்கி அவரை ஆசீர்வதித்து ஆறுதல் கூறினார். அன்று முதல் பிள்ளையாரின் இந்த தரிசனம் சனி பகவானால் பூஜிக்கப்பட்டு மக்களின் துயர் நீக்க வந்த கணபதி பிரசாதமாக அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்பதாம் எண் கணபதி

பத்மாசன  கோலத்தில் அமர்ந்து துதிக்கையில் கும்பம் ஏந்திய கணபதி மூர்த்தி எண் ஒன்பதிற்குரிய இறை மூர்த்தியாவார். மங்கள சக்திகள் பூரணமாய்ப் பொலியும் இந்த இறைக் கோலத்தை தரிசனம் செய்து ஒன்பது சுற்றுகள் உடைய கை முறுக்கு தானம் செய்து வருதலால் பெண்களின் திருமணத் தடங்கல்கள் நீங்கி விரைவில் மண வாழ்வு மலரும். அபாய நிலையில் உள்ள நோயாளிகள் நலம் பெறுவர்.

குசா கணபதி

குசா எண்ணுக்கு உரித்தான மூர்த்தி குசா வாகன மூர்த்தி. பறவை இனத்தில் மயில் குசா சக்திகளைப் பெற்றுள்ளதால் இரண்டு மயில்களை வாகனமாக உடைய ஸ்ரீவைபவ கணபதி மூர்த்தி குசா எண்ணுக்கு உரிய மூர்த்தியாக போற்றப்படுகிறார்.

விநாயகப் பெருமானைப் பூஜிப்பதால் எண் சக்திகளை மிக விரைவாக அடைந்து விடலாம் என்பது தெளிவாகின்றது அல்லவா? இதே போல காலத்தின் கண்களாக விளங்கும் நட்சத்திரங்களை முறையாக பூஜிப்பதாலும் எண் சக்திகளைப் பூரணமாகப் பெறலாம்.

நட்சத்திர தேவதைகள் லிங்க வடிவிலும், நட்சத்திர விருட்சங்கள் என தாவர வடிவிலும், ஸ்ரீசக்கரம் போன்ற யந்திர வடிவுகளிலும், குறித்த சில திருத்தலங்களில் தீர்த்த வடிவிலும், ருத்ரம் சமகம் போன்ற வேத ஆகமங்களில் மந்த்ர வடிவிலும் தோன்றி அருள்பாலிக்கின்றன. பூவுலகில் பிறப்பெடுத்துள்ள எல்லா ஜீவன்களும் ஏதாவது ஒரு நட்சத்திர கால இடைவெளியில்தான் தங்கள் பிறப்பைப் பெறுகின்றன. அந்த நட்சத்திரத்தை ஜன்ம நட்சத்திரம் என அழைக்கிறோம். இவ்வாறு 27 நட்சத்திரத்தில் எந்த ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் அவர்கள் தங்கள் ஜன்ம நட்சத்திரம் மட்டும் அல்லாது ஏனைய நட்சத்திரங்களையும் தினந்தோறும் வழிபடுதல் வேண்டும் என சித்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதற்குப் பல காரணங்கள் உண்டு.

  1. ஒருவர் இப்பிறவியில் ஒரு நட்சத்திரத்தில் பிறந்திருந்தாலும் இதற்கு முந்தைய பிறவிகளில் எந்த நட்சத்திரங்களில் வேண்டுமானாலும் பிறப்பு எடுத்திருக்கக் கூடும். முற்பிறவிகளில் சேர்த்த சஞ்சித கர்மாவின் விளைவாகவே இப்பிறவியும் இனி வரும் பிறவிகளும் அமைவதால் இதுவரை விட்டுப் போன ஜன்ம நட்சத்திர பூஜைகளை இப்பிறவியிலாவது நிறைவேற்ற முயற்சி செய்ய வேண்டியது நம் கடமை அல்லவா?

  2. இப்பிறவியிலேயே நமது தாய், தந்தையர், மனைவி, மக்கள், உடன் பிறந்தவர்கள் மற்ற நட்சத்திரங்களில் பிறந்திருந்தால் அவர்கள் நன்மைக்காகவும் அனைத்து நட்சத்திர பூஜைகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டுமே.

  3. பூமி வலம் வரும் சூரிய பாதையை 12 ராசி மண்டலங்களாகவும் 27 நட்சத்திர மண்டலங்களாவும் பிரித்துள்ளதால் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நட்சத்திரம் அடங்கும். உதாரணமாக, ஒருவர் பூச நட்சத்திரத்தில் பிறந்தால் அவருடைய ஜன்ம ராசி கடகமாக அமைகிறது. அதே சமயம் அஸ்வினி, ரோஹிணி, புனர்பூசம், மகம், அஸ்தம், விசாகம், மூலம், திருவோணம், பூரட்டாதி என ஒன்பது நட்சத்திரங்களின் நான்காம் பாதம் கடக ராசியில் அமைகிறது. மேலும், பூச நட்சத்திரத்தில் பிறந்தவருடைய முதல் தசை சனி தசையாக அமைந்து அடுத்து வரும் தசைகள் புதன், கேது, சுக்கிரன் என்ற வரிசையில் அமைவதால் அந்த கிரகங்களுக்குரித்தான பாத சார நட்சத்திரங்களாக ஆயில்யம், கேட்டை, ரேவதி, அஸ்வினி, மகம், மூலம், பரணி, பூரம், பூராடம் என்ற வரிசையில் அமையும் மற்ற நட்சத்திரங்களின் ஆதிக்கமும் ஒருவருடைய வாழ்வில் தசை, அந்தர்தசை ரீதியில் அமைவதால் கிட்டத்தட்ட 27 நட்சத்திரங்களுமே ஒரு மனிதனின் வாழ்வில் முக்கியத்துவம் பெறுகிறது.
மனித உடல் கடிகாரம்

நம்முடைய அன்றாட வாழ்வில் பல நிகழ்ச்சிகள் அமைகின்றன. இதில் தேநீர் அருந்தும் ஒரு நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டால் ஒரு குறிப்பிட்ட நாளில் எவ்வளவு நேரம் தேநீர் அருந்தினோம் என்பதை தோராயமாக மூன்று நிமிடம், ஐந்து நிமிடம் என சொல்லலாம். இதற்கு கடிகாரம் தேவையில்லை. இது எப்படி சாத்தியமாகிறது? இதை என்றாவது யோசித்துப் பார்த்தீர்களா? ஒவ்வொருவருடைய உடலிலும் சூட்சுமமாக இயங்கும் ஒரு கடிகாரம் உள்ளது. ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ் கடிகாரத்தைப் போல் இரவு பகல் எந்நேரத்திலும் மனித உடலிலும் இடைவேளையின்றி செயல்படும் ஒரு கடிகாரம் உள்ளது. இதை கடிகாரம் என்று சொல்வதைவிட கடிகார அமைப்பு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.

இந்தக் கடிகாரத்தைக் கொண்டு நாம் ஒவ்வொரு காரியத்தையும் நிறைவேற்றுவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டோம் என்று துல்லியமாகக் கூற முடியும். நம்முடைய செயலுக்கு நாம்தானே சாட்சி. அதனால் இவ்வாறு நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறுவதில் எந்த விந்தையும் இல்லையே. மேலும் தினந்தோறும் நம்மைச் சுற்றி நிகழும் சூரிய உதயம், சந்திர உதயம் என ஒவ்வொரு கிரகங்களின் உதய நேரத்தையும், அஸ்தமன நேரத்தையும், நட்சத்திர ஹோரை போன்ற எல்லா கால அளவுகளையும் துல்லியமாகக் கணக்கிட முடியும். ரிஷிகளும், மகான்களும் இவ்வாறுதான் காலத்தைக் கணக்கிடுகிறார்கள். ஆனால், நடைமுறையில் மனிதனால் இவ்வாறு காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியாமல் போவதற்குக் காரணம் மனிதனுடைய மனம் என்ற மாயைதான்.

யோகிகளும் மகான்களும் மனம் என்ற மாயைக்கு உட்படாததால் அவர்களால் எளிதில் இவ்வாறு காலத்தைக் கணக்கிட முடிகிறது. சாதாரண மனிதர்களும் காலத்தைத் துல்லியமாகக் கணக்கிட உதவுவதே நட்சத்திர வழிபாடாகும். எந்த அளவிற்கு நட்சத்திர தேவதைகளை வணங்கி, பூஜித்து அவர்களுடைய ஆசிகளைப் பெறுகிறோமோ அந்த அளவிற்கு காலத்தைத் துல்லியமாகக் கணக்கிடும் அனுகிரகத்தையும் பெறுவோம்.

காலத்தை அளத்தல் என்ற செயலின் மகத்துவம் மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. அதை ஊன்றிக் கவனித்துப் பார்த்தால்தான் அதன் மகத்துவம் புரிய வரும்.

நாம் ஒவ்வொரு விநாடியும் உயிருடன் இருப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் நம்முடைய உடலில் உள்ள காலத்தைக் கணக்கிடும் கருவியின் செயல்பாடு மிகவும் முக்கியமாகும். உதாரணமாக, நம்முடைய இதயம் சராசரியாக நிமிடத்திற்கு 70, 80 முறை துடிக்கிறது என்றால் இதற்குக் காரணம் நமது உடலில், இதயத்தில் உள்ள கடிகார அமைப்புதான் நிமிடத்திற்கு இத்தனை முறை என்ற கணக்கில் செய்தியை அனுப்பி இதயத்தைத் துடிக்கச் செய்கிறது. இந்தச் செய்தியை இதயம் பெறா விட்டால் இதயம் நின்று விடும்.

அதே போல உறங்கப் போகும் முன் 8 மணி நேரம், 10 மணி என நமக்கு நாமே ஒரு அளவு கோலை நிர்ணயித்து வைத்து விட்டு உறங்கிப் போய் விடுகிறோம். குறிப்பிட்ட அந்தக் கால எல்லை வந்தவுடன் நாம் விழித்தெழுகிறோம். இதற்குக் காரணம் நம் உடல் கடிகாரமே. அதோடு மட்டுமல்லாமல் நாம் உணவு உண்டவுடன் குறிப்பிட்ட நேர இடைவெளியில் குடல்கள் சுருங்கி விரிய வேண்டும் என்ற செய்தி உடல் முழுவதும் அனுப்பப்படுவதால் உணவு செரிக்கவும், செரித்த உணவு கழிவாக வெளிவருதற்கும் ஏதுவாகிறது. இந்தச் செய்தியைத் தக்க சமயத்தில் உடல் உறுப்புகள் பெறாவிட்டால் உடல் ஆரோக்கியம் என்னவாகும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

இந்த உடல் கடிகாரத்தை இயக்கும் சக்தி எது? இன்றைய விஞ்ஞானக் கோட்பாட்டின்படி இதயத்தில் உள்ள சைனோஅட்ரியல் நோட் என்பது முதல் கட்ட கடிகாரமாகவும், ஏவி சந்திப்பு என்பது இரண்டாம் கட்ட கடிகாரமாகவும், பர்கன்ஜி செல்கள் என்பவை மூன்றாம் கட்ட கடிகார அமைப்பாகவும் செயல்படுவதாகவும் உள்ளன. உண்மையில் இந்த முதல் கட்ட கடிகார அமைப்பான எஸ்ஏ நோட் எங்கிருந்து தன்னுடைய செய்தியைப் பெறுகிறது என்பது இன்றைய விஞ்ஞானத்திற்குப் புலப்படாத ஒன்று. மெய்ஞ்ஞானிகளான நமது மூதாதையர்கள் இது பற்றிய இரகசியங்களைத் தெரிவித்துள்ளார்கள். தச வாயுக்களில் ஒன்றான பிராணன் என்ற வாயுவே நமது உடலில் உள்ள கடிகார அமைப்பை இயக்கும் மூலக் கருவாகும் என்பதே அந்த இரகசியம். இதில் இன்னும் பல அற்புத இரகசிய விந்தைகள் உண்டு.

பிராணனுக்குத் தேவையான சக்தியைத் தருவதற்காக உள்ள அணிகலேன பூணூல் என்ற சாதனமாகும். சுத்தமான பஞ்சினால் திரிக்கப்பட்ட பூணூல் மனித உடலில் உள்ள பிராணனை நிலைப்படுத்துகிறது. பூணூலில் உள்ள பிரம்ம முடிச்சு நாம் ஜபிக்கும் காயத்ரீ மந்திர சக்திகளைக் கிரகித்து இதயத்தில் நிலவும் பிராணனுக்கு செலுத்தும் எந்திரமாக செயல்படுகிறது. மேலும், நமது உடலில் உள்ள எல்லா அவயவங்களுக்கும் செய்திகள் ரசாயணக் குறியீடுகள் மூலமாகத்தானே அனுப்பப்படுகின்றன. இந்த குறியீடுகள் முறையாகச் சென்றடைய உதவுவதே நமது மூளையில் உள்ள பீனியல் சுரப்பியாகும்.

பிறந்த குழந்தை ஏழு வயது அடையும்வரை வரும் எல்லா வியாதிகளுக்கும் தேவையான பாதுகாப்பு ரசாயண சக்திகளை இந்த பீனியல் சுரப்பி தயாரித்து அனுப்புகிறது. அதன்பின் இந்த பீனியல் சுரப்பி செயலிழக்கத் தொடங்குகிறது. இதனால்தான் நமது முன்னோர்கள் மனதில் காமம் புகும் முன் காயத்ரீ புக வேண்டும் என்று அறிந்து எட்டு வயதிற்குள் பூணூல் அணிவித்து காயத்ரீ மந்திரத்தை உபதேசிக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர். அதனால் எந்த வயது வரை ஒரு மனிதன் பூணூல் அணிந்து சந்தியா வழிபாடுகளை மேற்கொண்டு அதன் ஒரு அங்கமான காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வருகின்றானோ அதுவரை அவனை எந்த வியாதிகளும் அண்டாது என்பது உறுதி.

மேலும் நமது உடல் கடிகாரம் முறையாக இயங்குவதற்குத் தேவையான சுரப்பு நீர்களை அனுப்பி வைப்பதும் பீனியல் சுரப்பியின் கடமைகளுள் ஒன்றாக இருப்பதால் 27 நட்சத்திரங்களைத் தொடர்ந்து வழிபட்டு வருவதால் குசா சக்திகள் பெருகி நாம் முழுமையான உடல், மன ஆரோக்கியத்துடன் வாழ வழி வகுக்கும்.

நட்சத்திர வழிபாட்டில் மலரும் குசா

அனைவரும் 27 நட்சத்திர துதிகளையும் ஓத வேண்டும் என்பதற்கு இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. அதுவே நட்சத்திர மண்டலங்களின் இடையே நிலவும் ரகசிய சக்திகள் ஆகும். நாம் அறிந்த அஸ்வினி முதல் ரேவதி வரையிலான நட்சத்திரங்கள் மட்டும் அல்லாது நம் கண்ணுக்குப் புலப்படாத அபிஜித், நயனதாரா போன்ற நட்சத்திர மண்டலங்களும், கனோபஸ், கௌந்தகீ போன்ற தவ சீலர்களுடைய நட்சத்திர மண்டலங்களும் உண்டு. நமக்குத் தெரிந்த 27 நட்சத்திர துதிகளை ஓதி வந்தாலே இந்த ரகசிய மண்டலங்களில் நிலவும் குசா சக்திகளை நாம் நமது கோத்ராதிபதிகள் மூலமாக பெற்று விடலாம். கோத்ராதிபதிகளின் நாமம் அறியாதோர் ஒவ்வொரு நாள் இரவு எட்டு மணி முதல் ஒன்பது மணிக்குள் வடக்கு திசையில் அவரவர் கண்ணுக்குத் தெரிந்த நட்சத்திரங்களை மூன்று நிமிடங்களுக்குக் குறையாமல் உற்று நோக்கி தரிசித்து விட்டு வடக்கு திசையை நோக்கி மூன்று முறை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வந்தால் தங்கள் கோத்ராதிபதிகளை முறையாக வணங்கிய பலனைப் பெறுவார்கள்.

பெண்களுக்கான குசா பூஜை

தற்காலத்தில் திருமண வயதைக் கடந்த நிலையிலும் திருமண வாழ்வு அமையாத நிலையில் உள்ள பெண்கள் ஏராளமாக இருப்பதைக் காண்கிறோம். இதற்கு ஆன்மீக ரீதியாக, பொருளாதார நிலையில் பல காரணங்களைக் கூறலாம் என்றாலும் ஜோதிட ரீதியாக மூலம், ஆயில்யம், கேட்டை, விசாகம் போன்ற நட்சத்திரங்களில் பிறந்த பெண்களை ஒதுக்கி விடுவதும் ஒரு முக்கிய காரணமாகும். இவ்வாறு குறித்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்களை நிராகரிப்பது பலத்த தோஷங்களை விளைவிக்கும் என்பது சித்தர்கள் வாக்கு. எல்லா நட்சத்திரங்களுமே தேவதா அம்சம் பெற்றவர்களே. எனவே ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் பெண்களை நிராகரிப்பதால் அந்த தெய்வங்களின் சாபத்தைப் பெற வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் பெருமளவில் இத்தகைய துன்பத்திற்கு உள்ளாவதால் மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்ற வேண்டிய வழிபாடுகளை இங்கு அளிக்கிறோம்.

எண் ஒன்பதை அடுத்து வருவது குசா எண் என்பதை நாம் அறிவோம். இதே வகையில் எண் 19ஐ அடுத்து வருவதும் குசா சக்தியே. இவ்வாறு நட்சத்திரத்தில் 19ம் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இயற்கையாகவே குசா சக்திகளை எளிதில் கிரகிக்கும் சக்திகளைப் பெற்றிருப்பார்கள். அவர்கள் எத்துறையில் இருந்தாலும் அதில் முதன்மை இடத்தை, தலைமைப் பதவியை நிர்வகிக்கும் திறமையை உடன் பெற்றிருப்பார்கள். அவர்கள் எடுத்த காரியம் சிறப்பாக அமையும் என்பதிலும் ஐயமில்லை. மருத்துவம், விஞ்ஞானம், அணுவியல் போன்ற நுண் துறைகளில் இவர்கள் சிறப்பாகப் பிரகாசிப்பார்கள்.  

எல்லா பெண்களும் குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஆற்ற வேண்டிய நவகிரக குசா வழிபாட்டு பூஜை முறை ஒன்று உண்டு. அதாவது, அவரவர் பிறந்த கிரக சஞ்சார கோலத்தை (ஜாதகக் கட்டம்) பச்சரிசி மாவினால் ஒரு மா, தேக்கு அல்லது பலாப் பலகையில் அல்லது ஒரு வாழை இலையில் வரைந்து கொள்ளவும். பச்சரிசி மாவு நீர்க் கோலமும் இடலாம். அவரவர் விருப்பத்தைப் பொறுத்து பல்வேறு வண்ணப் பொடிகளாலும் இந்த ஜாதகக் கட்டத்தை அலங்கரிக்கலாம். மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு சந்திரன் தனுசு ராசியில் எழுந்தருளியிருப்பார். தனுசு ராசி குரு பகவானின் ஆட்சி வீடாகவும், மூலத் திரிகோண வீடாகவும் இருப்பதால் குரு பகவானுக்கு உரித்தான மஞ்சள் நிற மணமுள்ள பூக்களால் அல்லது செம்பருத்தி மலர்களால் கோலத்தில் உள்ள 12 கட்டங்களையும் அலங்கரிக்கவும். ஒவ்வொரு ராசிச் சக்கர கட்டத்திலும் வரிசைக்கு இரண்டு மலர்களாக இரண்டு வரிசையில் நான்கு மலர்களை வைக்கவும்.

பொதுவாக, பெண்கள் ஜாதகங்களில் எட்டாம் இடத்தில் சூரிய பகவான் எழுந்தருளி இருந்தால் அத்தகைய பெண்கள் அழகும் ஐஸ்வர்யமும் நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்கள். எனவே, சூரிய பகவானுக்கு உரித்தான செந்தாமரை மலர்களால் ஜாதகக் கோலத்தை அலங்கரிப்பதும் நற்பலன்களைத் தரும்.

ஒவ்வொரு ராசிக் கட்டத்தில் முதல் வரிசையில் உள்ள மணமுள்ள மலர்களை ஒன்றாக இணைக்கவும். பின் இரண்டாம் வரிசையில் உள்ள மலர்களை ஒன்றாக இணைக்கவும். அடுத்து முதலில் சேர்த்த இரு மலர்களை எடுத்து தனக்குப் பிடித்த இஷ்ட தெய்வத்தின் திருப்பாதங்களில் சேர்க்கவும். குரு பாதம், சங்கு சக்கரம், ஸ்ரீசக்கரம், ஸ்ரீஆயுர்தேவி, ஷோடச கணபதி போன்ற எந்த தெய்வ மூர்த்திகளுக்கும் இவ்வாறு குசா சக்தி பெற்ற மலர்களை அர்ப்பணித்து பூஜிக்கலாம். அடுத்து இரண்டாம் வரிசையில் இணைத்து மலர்களை இறைவனுக்குச் சமர்ப்பிக்கவும். ஒரு ராசியில் நான்கு மலர்கள் என 12 ராசிகளிலும் நிறைந்துள்ள 48 மலர்களையும் மேற்கூறிய முறையில் இறை மூர்த்தியின் பாதங்களில் சமர்ப்பித்தவுடன் பூஜை நிறைவடைகிறது. பூஜையின் நிறைவில் உரிய நைவேத்தியங்களை இறைவனுக்குப் படைத்து தானமாக அளித்தல் சிறப்பு.

மேற்கூறிய குசா பூஜையை மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டும் அல்லாது விசாகம், கேட்டை, ஆயில்யம் நட்சத்திர பெண்களும், மற்றவர்களும் தொடர்ந்து நிறைவேற்றி வருவதால் திருமணத் தடங்கல்கள் நீங்கி உரிய காலத்தில் சிறப்பான மண வாழ்க்கை அமையப் பெறுவர். மலர்களை இறைவன் பாதங்களில் சமர்ப்பிக்கும்போது கீழ்க்கண்ட சித்த காயத்ரீயை ஓதுதல் நலம்.

ஓம் தத் புருஷாய வித்மஹே லோபாமுத்ரா சமேதாய தீமஹி       
  தந்நோ அகஸ்தீஸ்வர ப்ரசோதயாத்

குங்குமம் தரும் சுமங்கலிக் காப்பு

திருமணமான பெண்கள் கட்டாயம் குங்குமம் அணிய வேண்டும். திருமாங்கல்யம், நெற்றி, முன் வகிடு என மூன்று இடங்களில் பெண்கள் அணியும் குங்குமம் அவர்களைக் கவசம் போல் காக்கிறது. ஒரு சுமங்கலி ஒரு கோடி சுமங்கலிகளை உருவாக்க முடியும் என்பது சித்தர்கள் வாக்கு. இந்தச் சாதனையை பெண்கள் நிறைவேற்ற அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதே குங்கும்ம் என்னும் மாங்கல்ய சின்னமாகும். தற்காலத்தில் நாகரீகம் என்ற மயக்கத்தில் உண்மை நிலையை உணராமல் குங்குமத்திற்குப் பதிலாக ப்ளாஸ்டிக் ஒட்டுப் பொட்டுகளை நெற்றியில் வைத்துக் கொள்வதால் தங்கள் சுமங்கலித்துவத்தை இழந்து கணவன் ஆயுளைக் குறைக்கும் தோஷத்தை ஏற்படுத்துவதுடன் மற்ற சுமங்கலிகள் உருவாவதைத் தடுக்கும் தடைக் கல்லாக மாறி அதனாலும் பல தோஷங்களை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை இனியேனும் உணர்ந்து உரிய முறையில் குங்குமத்தை அணிந்து பலன் பெறும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

ஒரு சுமங்கலி எப்படி ஒரு கோடி சுமங்கலிகளை உருவாக்க முடியும்? சுமங்கலி என்றால் தன்னுடைய பூஜை சக்தியால் கணவனின் உயிரை நிலை நிறுத்துதல் என்ற பொருள் மட்டும் அல்லாது மங்கல சக்திகளை, தூய நல்லெண்ணக் கதிர்களை பரவெளியில் நிரவச் செய்து எங்கும் நல்லதே நிகழ துணை நிற்பவள் என்ற பொருளும் உண்டு. கற்பில் சிறந்த பெண்கள் சூரியனையே நிறுத்தி வைக்கும் பேராற்றல் படைத்தவர்களாக இருப்பதுடன் அவர்களுக்காக வருண பகவானே மாதம் ஒரு முறை நல்ல மழையை பொழிவிக்கிறார் என்பதும் நீங்கள் அறிந்ததே.

பெண்கள் மூன்று இடங்களில் குங்குமத்தை அணியும்போது அவர்கள் நெற்றியில் இடும் குங்குமம் தலை வகிட்டிற்கும், திருமாங்கல்யத்திற்கும் இடையே நிலவுவதால் மூன்றின் நடுவே உள்ள பொருள் குசா சக்தியைப் பெறும் என்ற தத்துவத்தின்படி நெற்றித் திலகம் குசா யந்திரமாக அமைந்து சுமங்கலிகளைச் சுற்றி சதா சர்வ காலமும் நற்சக்திகளைப் பரவெளியில் பரப்பிக் கொண்டே இருக்கிறது.  இத்தகைய சுமங்கலிகளின் தரிசனம் பெறுவோருக்கெல்லாம் மங்கல சக்திகள் அனுகிரகமாக கிடைக்கின்றன.

விஸ்வாமித்திர மகரிஷி தான் சக்கரவர்த்தியாக இருந்தபோது பல யுத்தங்களை இயற்றி கோடிக் கணக்கான வீரர்களை பலி கொண்டதால் அவர்கள் மனைவிமார்கள் எல்லாம் தங்கள் சுமங்கலித்துவத்தை இழக்கும் தோஷத்திற்கு ஆளானார். அன்னை பராசக்தியின் அருளால் சுத்தமான குங்குமத்தைத் தயாரித்து இறைவிக்கு அணிவித்தபோது அத்துணை சுமங்கலித் தோஷங்களும் ஒரு நொடியில் சாம்பலாயிற்று அல்லவா? இத்தகைய சிறப்பு வாய்ந்த குங்குமத்தை ஒரு சுமங்கலி தன்னுடைய வாழ்நாள் முழுதும் தன் நெற்றியில் தாங்கியிருந்தால் அது எத்தனை கோடி சுமங்கலி சக்திகளை விண்ணில் பரவச் செய்யும் என்பதை சிந்தித்துப் பார்த்தால்தான் குங்குமத்தின் மங்கல சக்தியும் குசா சக்தியின் மகத்துவமும் புரிய வரும்.

காசிக் கயிறா காலக் கயிறா ?

காசியிலுள்ள கால பைரவரின் திருப்பாதங்களில் வைத்து பிரசாதமாகப் பெறப் பெற்ற காசிக் கயிறு பலவிதமான கால தோஷங்களையும் நீக்கும் அற்புதக் காப்புச் சாதனமாகும். ஆண்கள் மட்டும் அல்லாது பெண்களும் காசிக் கயிறு, அரைஞாண் கயிறு, தீனக் காப்பு போன்ற காப்புச் சாதனங்களை அணிவது அவசியம். இடுப்பிலும், இடது கை மணிக் கட்டிலும் பெண்கள் மூன்று சுற்றுகள் உள்ள காப்புக் கயிறுகளை அணிந்து கொள்ளவும். இதனால் இடையில் உள்ள சுற்றானது குசா சக்திகளைக் கிரகித்து பெண்களுக்கு வரும் துன்பங்களிலிருந்து, ஆபத்துகளிலிருந்து கவசம் போல் காக்கும்.
வரிசை மடிப்பில் நிலவும் குசா சக்திகள்

பெண்களும் ஆண்களும் ஆடைகள் அணியும்போது வேஷ்டி, புடவை போன்றவற்றின் நுனிகளை பல மடிப்புகளாக மடித்து அணிந்து கொள்ளும் வழக்கம் உண்டு. இவ்வாறு ஆடைகளை மடிப்பதில் பல ரகசிய தாத்பர்யங்கள் உள்ளன. இதுவரை சித்தர்களால் போற்றிப் பாதுகாக்கப்பட்ட இந்த அபூர்வ ரகசியங்களை தற்கால மக்களும் பெற்றுப் பயனடைய அர்ப்பணித்தவரே நமது குருமங்கள கந்தவர்வா, ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஆவார்.

வரிசை மடிப்பு

நமது உடலுக்கும் வெளி உலகத்திற்கும் இடையே உள்ள சாதனமாக அமைவதே நமது ஆடையாகும். மனிதனின் மனத்தளவே ஆகுமாம் மாண்பு என்ற வள்ளுவப் பெருந்தகையின் கூற்றுப்படி நாம் வெளி உலகுடன் கொள்ளும் தொடர்பை விரும்பிய வகையில் மாற்றி அமைக்க வல்லதே இந்த வரிசை மடிப்பு என்னும் தத்துவமாகும்.

இந்த தத்துவத்தை சித்தர்களும், மகான்களும் எப்படிக் கையாளுகிறர்கள் என்று அறிவோம். உதாரணமாக, நமது சற்குருநாதரை ஒரு அன்பர் தரிசனம் செய்ய வருகிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது அவருக்கு முன்னால் எத்தனை தலைமுறையைச் சேர்ந்த பித்ருக்கள், குலதேவதைகள், சாதாரண மனிதர்கள், மற்ற நிலையில் உள்ள ஜீவன்கள் இருக்கிறார்கள் என்பதை கணக்கிட்டுக் கொள்வார். அவர் இனி எடுக்கும் ஜன்மங்களில் அவர் சந்ததியில் எத்தனை பேர் எந்த நிலையில் தோன்ற இருக்கிறார்கள் என்பதையும் கணக்கிட்டுக் கொள்வார். இவ்வாறு கணக்கிட்டவுடன் அத்தனை தலைமுறையைச் சேர்ந்த ஜீவன்களுக்குத் தேவையான அனுகிரக சக்திகளை எண்ணிக்கை வடிவில் கூறாக்கி அதற்கு ஏற்ற மடிப்புகளை தான் அணியும் வேஷ்டியில் நிலைப்படுத்திக் கொள்வார்கள்.

பொதுவாக, திரு வெங்கடராம சுவாமிகள் ஒரு அடியாருடைய முந்தைய 14 தலைமுறைகளுக்கும், அவருக்கு இனி வரும் 14 தலை முறை சந்ததிகளுக்குமான அனுகிரக சக்திகளை உள்ளடக்கித் தன்னுடைய வேஷ்டி மடிப்பில் நிலைப்படுத்தி வைத்தார்கள். இதற்குச் சான்றாக இன்றும் எமது ஆஸ்ரமத்தில் பிரகாசிக்கும் அவரின் திருஉருவப் படமாகும். அவரின் திருஉருவத்தை உற்றுக் கவனித்துப் பார்த்தீர்களானால் தன்னுடைய வலது உள்ளங்கையை இடது உள்ளங்கை மேல் வைத்து அலங்கார ஜோதி தத்துவ முறையில் அமைந்த முத்திரையுடன் காட்சி அளி,க்கிறார். வலது கையில் அமைந்தத 14 அங்குலாஸ்திதிகள் ஒரு அடியாரின் முந்தைய 14 தலைமுறைகளுக்கான அனுகிரகத்தையும் இடது கையில் உள்ள 14 அங்குலாஸ்திதிகள் இனி வரும் 14 தலைமுறைகளுக்கான அனுகிரக சக்திகளையும் வாரி வழங்கிக் கொண்டிருப்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.

பெண்களுக்கான வரிசை மடிப்பு

சித்தர்களுக்குரித்தான இந்த வரிசை மடிப்பு தத்துவத்தை பெண்கள் எப்படிப் பயன்படுத்துவது ? இக்கால சந்ததிகளுக்காக வரிசை மடிப்பு தத்துவ ரகசியங்கள் தேவார, திருவாசக பதிகங்களில் நிறைந்து பரந்துள்ளன. உதாரணமாக,

என்பொடு கொம்பொடாமை இவை மார்பிலங்க எருதேறி ஏழையுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்தென் உளமே புகுந்ததனால்
ஒன்பதோடொன்றொ டேழு பதினெட்டோ டாறும் உடனாய நாட்களவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல அடியார் அவர்க்கு மிகவே

என்னும் திருஞான சம்பந்தப் பெருமானின் தேவாரம் பெண்களுக்கான வரிசை மடிப்பு தத்துவத்தை விளக்குகிறது.

இம்முறையைப் பயன்படுத்த விரும்பும் பெண்கள் தங்கள் பிறந்த தேதியையும், தங்கள் கணவரின் பிறந்த தேதியையும் கூட்டிக் கொள்ளவும். வரும் எண்ணை இரண்டால் பெருக்கவும். அவ்வாறு வரும் எண்ணை ஓரிலக்கமாக்கி அதற்குச் சமமான மடிப்புகளைத் தங்கள் புடவை நுனிகளில் வைத்து அணிந்து வந்தால் குடும்பத்தில் ஒற்றுமையும் அன்பும் நிலவும்.

உதாரணமாக, மனைவியின் பிறந்த தேதி 5 எனவும், கணவரின் பிறந்த தேதி 7 எனவும் அமைந்தால், ஐந்துடன் ஏழைக் கூட்ட அது 12 என வரும். 12ஐ இரண்டால் பெருக்கி வரும் 24ஐ ஓரிலக்கமாக மாற்ற அது 6 என வரும். மேற்கூறியபடி அந்தப் பெண் தன்னுடைய புடவையில் ஆறு மடிப்புகளை வைத்து அணிந்து கொண்டால் அந்த மடிப்புகள் குசா என்னும் நற்கிரண சக்திகளைப் பரப்பி குடும்பத்தில் ஒற்றுமையையும் அமைதியையும் நிலவச் செய்யும். இக்காரணம் பற்றியே அக்காலத்தில் ஒன்பது கஜம் கொண்ட நூல் புடவைகளை அணியும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர்.

நூல் புடவைகளில்தான் குசா சக்திகள் முழுமையாக நிரவித் திகழும் என்பதை மனதில் கொள்ளவும். புடவை அணியும்போது திருஞான சம்பந்த நாயனாரின் மேற்கூறிய பாடலை அவசியம் பாடிக் கொண்டே அணிய வேண்டும் என்பது முக்கிய விதியாகும். தன்னுடைய பிறந்த தேதி, தன் கணவரின் பிறந்த தேதி இவற்றை தெரியாதவர்கள் ஒன்பது கஜ நூல் புடவையில் ஒன்பது மடிப்புகள் வைத்து மேற்கூறிய திருஞான சம்பந்த நாயனாரின் தேவாரப் பாடலைப் பாடி அணிந்து கொள்ளுதல் நலம்.

இவ்வாறு வரிசை மடிப்பு தத்துவத்தை அக்கால மக்கள் உணராமல் இருந்தாலும் அப்போது நிலவிய மகான்கள் இதனால் விளையும் குசா சக்திகளை மக்களுக்கு அளிக்கத் தவறியது கிடையாது. திருஞான சம்பந்தப் பெருமான் நல்லூர் பெருமணத்தில் நடந்த திருமண வைபவத்தின்போது இவ்வாறு வரிசை மடிப்பு அறியாத பெண்களும் நலமடைய வேண்டி தன்னுடைய இளம் மனைவியான தோத்திர பூர்ணாம்பிகைக்கும் மற்றும் திருமணத்திற்கு வருகை தந்திருந்த தம்பதிகளுக்கும் வரிசை மடிப்பு தத்துவத்தில் ஆடைகளை அணிவத்து அனைவரையும் வேள்வித் தீ வாயிலாக கைலாயத்திற்கு அழைத்துச் சென்றார் என்பது தெய்வீக இரகசியம்.

திருஞான சம்பந்தப் பெருமானின் தேவாரப் பதிகங்களை ஓதுவதும், ஏழைச் சுமங்கலிகளுக்கு ஒன்பது கஜ புடவைகளைத் தானமாக அளிப்பதும் வரிசை மடிப்பு அனுகிரக சக்திகளை அனைவரும் எளிதில் பெறும் வழிமுறைகளாகும்.

இறை வழிபாட்டில் வரிசை மடிப்பு

ஒற்றுமையை வளர்க்க, நற்சக்திகளை நிரவ மட்டும்தான் வரிசை மடிப்பு தத்துவம் என்றில்லாது இறை வழிபாட்டிலும் வரிசை மடிப்பு தத்துவத்தைப் பயன்படுத்த முடியும். இதை மகான்கள் தொடர்ந்து கையாண்டும் வருகின்றனர். அருணகிரியாரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அற்புத சம்பவத்தை உங்களுக்கு அளிக்கிறோம். மன்னன் தேவராயரின் அரச சபையில் அருணகிரியார் இருந்தபோது ஒரு நாட்டிய மங்கையின் நடன நிகழ்ச்சி நடந்து கொண்டடிருந்தது. அருணகிரி நாதரின் புகழை எப்படியாவது தகர்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சம்பந்த ஆண்டான் தான் காண்பது எல்லாம் முருகன் என்ற அருணகிரி நாதரின் கூற்று உண்மையாக இருக்குமானால் அருணகிரியார் அந்த நாட்டிய மங்கையை முருகனாக எண்ணி நாட்டியம் ஆடி தன்னுடைய பக்தியை நிரூபணம் செய்யட்டும் என்று கூறி மன்னரைத் தூண்டினான்.

மன்னருக்கு அருணகிரிநாதரின் பக்தியின் மீது எவ்வித சந்தேகமும் இல்லையாயினும் உலகத்தவருக்கு ஒரு சான்றாக இருக்கும் பொருட்டு அருணகிரியாரை அந்த நாட்டிய மங்கையுடன் சேர்ந்து ஆட முடியுமா என்று அழைப்பு விடுத்தார். அருணகிரி நாதர் சற்றே யோசித்தார். முருகனே எல்லாமாய் தோன்றி இருப்பது உண்மை என்றாலும் உலக மக்களுக்காக சில சமுதாய எல்லைக் கோடுகளை தாண்டக் கூடாது என்பது விதிமுறைதானே. இதை மகான்களும் போற்றி மதிக்கத்தானே வேண்டும். அந்த வரை முறைக்கு உட்பட்டு அருணகிரி நாதர் அந்த நாட்டிய மங்கையிடம் சில ரகசிய வரிசை மடிப்பு தத்துவங்களை விளக்கிக் கூறி அம்முறைப்படி ஆடை அணிந்து வரும்படி வேண்டினார். அந்த நாட்டிய மங்கையும் அருணகிரியார் கூறிய வண்ணம் 21 வரிசை மடிப்புகள் உடைய ஆடையை அணிந்து நாட்டியம் ஆடவே அருணகிரி நாதரும் அவளுடன் நாட்டியம் ஆடத் தொடங்கினார்.

அந்த காட்சியைக் கண்ட அனைவருக்கும் அருணகிரி நாதரும், நாட்டிய மங்கையும் கண்களிலிருந்து மறைந்தனர். அங்கே அவர்களுக்குக் காட்சி அளித்தது முருகனும் வள்ளியுமே. அந்த இறைப் பரவசத்தில் தன்னை மறந்த நாட்டிய மங்கை அன்று முதல் தன்னுடைய நாட்டிய பிழைப்பை விட்டு விட்டு அருணகிரி நாதரின் அன்புச் சீடர் ஆனாள். இதற்கு வழி வகுத்ததே அருணகிரி நாதர் அளித்த வரிசை மடிப்பு அனுகிரக சக்தியாகும். அருணகிரியார் அருளிய வரிசை மடிப்பு தத்துவத்தை உள்ளடக்கி அருள்பாலிப்பதே எமது சற்குருநாதர் அளித்துள்ள ஸ்ரீஆயுர்தேவியின் ஆடையில் பொலியும் 21 வரிசை மடிப்பு தத்துவங்கள். ஆழ்ந்த குரு நம்பிக்கையும் இறை நம்பிக்கையும் பெற வேண்டுவோர் ஸ்ரீஆயுர்தேவியின் இந்த வரிசை மடிப்பு கிரமங்களைத் தொடர்ந்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் பற்பல அனுபூதிகளை கண்கூடாகக் காணலாம்.

சிற்றாடையில் குவியும் குசா

குல தெய்வங்களுக்கும், இஷ்ட தெய்வங்களுக்கும், நவ தேவியர், சப்த கன்னிகள், சப்த மாதாக்களுக்கு சிற்றாடை அணிவித்து வழிபடும்போது தங்கள் பிறந்த எண்ணுக்கு உரித்தான குசா சக்திகள் பொலியும் சிற்றாடைகளை அணிவித்தலால் நினைத்த காரியங்கள் விரைவில் நிறைவேறும். உதாரணமாக, ஒருவரின் பிறந்த தேதி 3 என்றால் அவருடைய குசா எண் 6 அல்லவா? அவர் ஆறு மடிப்புகள் கொண்ட சிற்றாடையை பெண் தெய்வங்கள், தேவதைகளுக்கு அணிவித்து வழிபட்டால் நினைத்த காரியம் தடையின்றி கை கூடும்.

குசா சக்திகளால் திருமண தோஷங்களை அகற்றி நல்லருள் வழங்கிய மகான்களுள் ஒருவரே சமீப காலம் வரை நம்முடன் வாழ்ந்த ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆவார். உலகத்தவரால் விலைமாது என்று இகழப்பட்ட பெண்ணொருத்தி சேஷாத்ரி சுவாமிகளை அணுகி தன்னுடைய குறையைத் தெரிவித்தாள். சுவாமிகளும் அவளுக்கு ஆறுதல் அளித்து வரிசை மடிப்பு ரகசியங்களை அவளிடம் தெரிவித்து அதன்படி ஆடை அணிந்து திருஅண்ணமலையைக் கிரிவலம் வரும்படிக் கூறினார். ஒரு மண்டல காலம் சுவாமிகள் கூறியபடி கிரிவலம் நிறைவேற்றியவுடன் ஒரு ஜமீன்தார் அம்மங்கையை திருமணம் செய்து கொண்டார். இந்த அற்புத நிகழ்ச்சியை நேரில் கண்டு அனுபவித்தவர்கள் இன்றும் உண்டு.

பெண்களுக்கான குசா சக்தித் தலம்

குசா சக்திகள் பொலியும் தலங்கள் நமது தமிழ்நாட்டிலேயே நூற்றுக் கணக்கில் நிலவினாலும் பெண்களுக்கான சிறப்பான தலமாக விளங்குவதே ஸ்ரீரங்கத்தில் உள்ள ஸ்ரீவிசாலாட்சி சமேத ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருத்தலமாகும்.

இத்திருத்தலத்தின் பெருமையை அகத்திய நாடிகள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

புண்ணியம் பல கோடி வேண்டுமப்பா
பொன்னியின் வட கோடி தீண்டுதற்கே
என்று வடகாவிரி என்னும் கொள்ளிட நதிக்கரையில் திகழும் இத்திருத் தலத்தை மனதில் நினைப்பதற்கே பல பிறவிகளில் பல கோடி புண்ணியங்களை நிறைவேற்றி இருக்க வேண்டும் என்று அகஸ்திய கிரந்தங்கள் அருள்கின்றன.

பராசர முனிவரால் வழிபடப் பெற்ற தொன்மையான தலம். இத்தலத்தில் பல்லாண்டுகள் தவம் இயற்றிய பின்னர்தான் அம்முனிவருக்கு வேத வியாசர் மகனாகப் பிறந்தார். வியாசருக்கு த்வைபாயனர் என்ற காரணப் பெயர் உண்டு. அதாவது தீவில் வளர்க்கப்பட்டவர் என்று வியாசரை அழைப்பதுண்டு. உண்மையில் பொன்னி நதியில் அமைந்த தீவில் அருள்புரியும் இறைவனின் அனுகிரகத்தைப் பெற்றவர் என்பதே அவருக்குப் பொருந்தும் என்பது சித்தர்கள் கூற்று.

அகத்திய மாமுனியும் வியாச பகவானை பொன்னியின் செல்வன் என்று அன்புடன் அழைத்து மகிழ்கிறார். பொன்னியின் செல்வன் என்றால் பொன்னி நதியின் தவப் புதல்வன் என்றும், தன் தாயையே குருவாகப் பெற்ற தவசீலன் என்றும் பொருளாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த தலத்தில் கற்ப கனி என்று அழைக்கப்படும் நாவல் பழத்தால் பராசரர் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நிகழ்த்தி வழிபட்டு பெற்ற பிரசாதம் ஆதலால் வியாச முனியும் கரிய நிறம் பெற்ற தவசீலராகத் திகழ்ந்தார். இதன் பின்னணியில் ஆயிரமாயிரம் தத்துவங்கள் உண்டு. அவை மனித சக்திகளுக்கு அப்பாற்பட்டவை

சுப முகூர்த்தக் கணிப்புகள்

திருமணம், கிரஹப் பிரவேசம், சீமந்தம், குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்தல் போன்ற நல்ல காரியங்களை நிகழ்த்தும்போது கூடா நாள், சூன்ய திதி போன்ற கால தோஷ நேரங்களைத் தவிர்த்தல் வேண்டும் என்ற ஜோதிட விதி உள்ளது போல சுக்ர மூடம், குரு மூடம் போன்ற கால தோஷங்களையும் கணித்து முகூர்த்த நேரம் கணிக்க வேண்டும். தற்காலத்தில் பலரும் இத்தகைய முறையில் சுப நிகழ்ச்சிக்கான நேரங்களை துல்லியமாகக் கணக்கிடாமல் போவதால் தம்பதிகளுக்கிடையே பல்வேறு பிரச்னைகள் தோன்றி குடும்பத்தில் பல விதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன. உதாரணமாக, திருமண வைபவத்தின் போது மணப் பெண் வீட்டு விலக்காகும் சூழ்நிலை உருவாவதுண்டு. மன வேதனைக்குரிய இந்த சம்பவத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள முன் வராத காரணத்தால் இதனால் விளையும் தோஷங்கள் சந்ததியின்மை, சந்ததிகளுக்கு அங்கக் குறைவு, கர்ப்பம் நழுவுதல் போன்ற குறைபாடுகளாகி மாறி துன்பத்தை அளிக்கக் கூடும்.

சில சமயம் திருமணம் முறையாக நிறைவேறினாலும் சாந்தி முகூர்த்தத்தின்போது பெண்களுக்கு இத்தகைய தோஷங்கள் ஏற்பட்டு அக்குறைபாடுகளை வெளியில் கூற முடியாத நிலை உருவாகி அதனாலும் பல துன்பங்களைச் சந்திக்க வேண்டி வரும். இத்தகைய சூழ்நிலைகள் பல பெண்களின் வாழ்விலும் ஏற்படக் கூடும் என்பதை உணர்ந்த நம் முன்னோர்கள் மிகவும் கவனத்துடன் குரு, சுக்ர மூட நாட்களைத் தவிர்த்து முகூர்த்தங்களைக் குறித்தனர். அது மட்டுமல்லாமல் மூன்று நாள் கல்யாணம், ஏழு நாள் கல்யாணம் என்று அக்காலத்தில் நிறைவேற்றியதற்கு காரணம் இத்தகைய தோஷ நிவர்த்திகளுக்காகத்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். திருமண வைபவத்திற்கு முன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இறைத் திருமணங்களை இயற்றுவது நமது பண்பாடாக அக்காலத்தில் இருந்தது. வள்ளித் திருமணம், மீனாட்சி கல்யாணம், ராதா கல்யாணம் என்று இறைவன், இறைவிகளின் திருமண வைபவங்களை நிகழ்த்தி திருமணத் தம்பதிகளுக்கு மட்டும் அல்லாமல் சமூகத்திற்கும் பல வரங்களை அனுகிரகமாகப் பெற்றுத் தந்தார்கள் நமது முன்னோர்கள்.

பங்குனி உத்திரம், சித்திரை உத்திரம் போன்ற நாட்களில் திருக்கோயில்களில் இறை மூர்த்திகளின் திருமணங்களை நிகழ்த்தி திருவிழாக்களை இன்றும் நடத்தி வருகின்றனர். அறிந்தோ, அறியாமலோ மக்களின் திருமணத்தில் ஏற்பட்ட தோஷங்களை இத்தகைய தெய்வத் திருமண வைபவங்கள் ஓரளவு குறைக்கும் வழிபாடாக அமைகின்றன. உதாரணமாக, முருகப் பெருமான் தெய்வானையின் திருமண வைபவம் குரு மூட தோஷங்களை விலக்குவதாகவும், வள்ளித் திருமணம் சுக்ர மூட தோஷங்களைக் களைவதாகவும் அமைகிறது. இறைத் திருமணங்கள் நல்கும் கோடிக் கணக்கான அனுகிரக சக்திகளில் இதுபோன்ற தோஷ நிவர்த்திகள் ஒரு துளியே என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நமது கற்பனைக்கு அப்பாற்பட்ட எத்தனையோ விதமான தோஷங்களுக்கும் தெய்வத் திருமணங்கள் அருமருந்தாக அமைகின்றன.

அகத்தியரின் அற்புதமான நாடி விளக்கங்கள் கூறும் இந்த அனுகிரக சக்திகளின் குறிப்புகளை இங்கு அளிக்கிறோம்.

சுக்கிலமாம் சுரோணிதமாம் சேர்ந்தெழுந்த நித்திலமாம்
குரு பகவன் நிச்சலமாம் சுக்கிரனும் அச்சலமாம்
ஒன்றொளிந்து ஒன்றேக உத்திரத்தில் உறுதுணையாம்

என்ற நாடி வாக்கியங்கள் பங்குனி உத்திரத்தன்று இறை மூர்த்திகளின் திருமண வைபவங்கள் மூலம் பெறும் தோஷ நிவர்த்தி அனுகிரக சக்திகளை வர்ணிக்கின்றன.

இவ்வாறு தெரிந்தோ தெரியாமலோ குரு, சுக்ர மூட தோஷங்களால் பாதிக்கப்பட்ட பெண்கள் தம்பதி சகிதமாக குரு க்ஷேத்திரங்களில் குசா க்ஷேத்திரமாகப் பொலியும் ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருத்தலத்தில் முறையாக அபிஷேக ஆராதனைகளை செய்து வழிபடுவதால் பலவிதமான திருமண தோஷங்களிலிருந்து விடுபடலாம். பஞ்ச கவ்ய அபிஷேகமும், தங்கள் கையால் அரைத்த மஞ்சள் காப்பும் சுவாமிக்கு சிறப்பான வழிபாடாகும்.

குரு க்ஷேத்திரமான
குசா க்ஷேத்திரம்

பஞ்ச பூத தலங்களுள் ஒன்றான திருஆனைக்காவல், வடகாவிரி தீரத்தில் அமைந்த காசி விஸ்வநாத திருத்தலம், திருவெள்ளறையில் அருள்புரியும் ஸ்ரீவடஜம்பு நாதர் இந்த மூன்று திருத்தலங்களும் ஜம்புநாத சக்திகளுடன் பொலிபவையே. இக்காரணம் பற்றியே இம்மூன்று தலங்களிலும் ஜம்பு என்னும் நாவல் பழ அபிஷேகம் ஒரு சிறந்த வழிபாடாக கருதப்படுகிறது. இம்மூன்று தலங்களுள் ஸ்ரீகாசி விஸ்வநாத தலம் நடுநாயகமாக விளங்குவதால் மூன்று பொருட்களில் நடுவே உள்ள பொருள் குசா சக்தியைப் பொழியும் என்ற தத்துவத்தின்படி இத்தல குருநாதர் குசா நாதர் ஆகிறார். இதை விடவும் ஒரு சிறந்த அனுகிரகத் தலத்தை இப்புவியில் காண முடியுமா?

என்றும் வளரும் ஏகாந்த ஜோதி

இறை மூர்த்திகளில் சோமாஸ்கந்த மூர்த்தி இயற்கையிலேயே குசா அனுகிரக மூர்த்தியாகப் போற்றப்படுகிறார். மங்களமான தாய், தந்தையருக்கிடையே அமர்ந்து அருள்புரியும் மங்கள கந்த மூர்த்தி சிவ குசா நாதர் என்று சித்தர்களால் போற்றப்படுகிறார். இத்தலத்தில் அருளும் சோமாஸ்கந்த மூர்த்தி பிள்ளையார், முருகன் என்ற இரு சிவ மூர்த்திகளின் இடையே அமர்ந்து மேலும் பல அற்புத குசா சக்திகளை வாரிவழங்கும் வரப் பிரசாதியாக கொலுவீற்றிருக்கும் அற்புதத்தையும் காணலாம்.

அகத்திய நாடியில் கூறப்பட்டிருப்பதைப் போல பெண்களின் சுரோணிதம் நிச்சலமாய் இருப்பதற்கு வேண்டிய அனுகிரகத்தை அளிக்கக் கூடிய மூர்த்திகளே செவ்வாயும், சந்திரனும் ஆவார்கள். இத்தலத்தில் சோமாஸ்கந்த மூர்த்தி சந்திர சக்தியையும், செவ்வாய் அனுகிரக சக்தியையும் ஒருங்கே அளித்து அச்சக்திகள் குசா என்னும் நற்கிரணங்களால் பலமடைந்து விளங்கும் சாத்தியக் கூறுகள் உள்ளதால் பெண்களுக்கு ஏற்படும் பெருவாரியான சந்ததிக் குற்றங்கள், தோஷங்கள், குறைபாடுகள், மாத விலக்குத் துன்பங்கள், நோய்கள் போன்றவற்றை நீக்கும் அற்புத தலமாக விளங்குகிறது.

நாடித் தேட வேண்டிய
கோடி மூர்த்திகள்

சில சிவத் தலங்களில் பிள்ளையாரும் முருகப் பெருமானும் துவார பாலகர்களாக அருள்பாலிப்பதுண்டு. உதாரணமாக, திருச்சி ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர், திருஆனைக்கா திருத்தலங்கள். அத்தகைய தல மூர்த்திகள் எம்பெருமானின் ஓர் அம்ச அனுகிரக சக்திகளை ஏற்று விளங்குகின்றனர். ஸ்ரீரங்க காசி விஸ்வநாத தலத்திலோ சிவபெருமானுக்கு இணையான மூர்த்திகளாக கணபதியும், முருகப் பெருமானும் விளங்குகின்றனர். இத்தல மூர்த்திகளின் அனுகிரக சக்திகளை இன்னும் விளக்கமாகக் கூறுகின்றோம்.

ஸ்ரீராமர் இறைவனின் அவதாரம் அதாவது இறைவனின் எல்லையில்லா அனுகிரக சக்திகளின் ஒரு கூறில் இராவணனை வதம் செய்வதற்கு எவ்வளவு சக்தி வேண்டுமோ அதை மட்டுமே எடுத்துக் கொண்டு பூமியில் தோன்றியவர். இராவணனுடன் போர் புரியும்போது இந்திரஜித்தின் நிகும்பள தேவி யாகம் நிறைவேறி இருந்தால் ராம பிரானால் கூட இந்திரஜித்தை வென்றிருக்க முடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது? சாட்சாத் பரமேஸ்வரனின் அவதாரமாக ஸ்ரீராமர் இருந்தாலும் தனக்கு விதிக்கப்பட்ட கடமைக்குத் தேவையான சக்திகளை மட்டுமே தன்னிடம் வைத்திருந்தார் என்பதே இராமாயணம் நமக்குப் புகட்டும் பாடமாகும்.

அதே சமயத்தில் சரபேஸ்வர மூர்த்தியாக எம்பெருமான் தோன்றியபோது இறைவனின் ஒரு கூறாகவே அது விளங்கியது. ஒரு திருக்கோயிலில் உள்ள மூலவருக்கும் உற்சவ மூர்த்திக்கும் எந்த விதமான வித்தியாசமும் இல்லையோ அதே போல்தான் சிவபெருமானுக்கும் சரபேஸ்வர மூர்த்திக்கும் இடையே நிலவிய அருள் கூறுபாடுகள். இதே முறையில் இறைவனின் சக்தி அம்சங்களை விட உயர்ந்த நிலையில் இறைவனின் பிரதிபலிப்பாக விளங்குபவர்களே ஸ்ரீரங்க காசிவிஸ்வநாத திருத்தலத்தில் அருள்புரியும் கணபதி முருக மூர்த்திகள். காணுதற்கரிய இம்மூர்த்திகளின் அற்புத அனுகிரக சக்திகளை இனியும் தாமதியாது சென்று பெற்றுக் கொள்ளுங்கள்.

வில்வதள யாத்திரை வழிபாடு

சப்தஸ்தானம் என்ற முறையில் ஒரு திருக் கோயிலைச் சுற்றியுள்ள ஏழு கோயில் மூர்த்திகளை தரிசனம் செய்து வழிபடுகிறோம் அல்லவா? அதே போல ஒரு திருத்தலத்தைச் சுற்றி எட்டு முறை வழிபடும் அஷ்ட மூர்த்தி தரிசன வழிபாடு என்ற முறையையும் நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ளனர். இத்தகைய திருத்தலங்களில் ஒன்றாக திகழ்வதே ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருத்தலாமாகும்.

இம்முறையில் ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசனம் செய்து விட்டு ஸ்ரீரங்க நாதப் பெருமாளை தரிசிக்க வேண்டும். தொடர்ந்து காசி விஸ்வநாதரை மீண்டும் தரிசனம் செய்து விட்டு திருவெள்ளறை ஸ்ரீவடஜம்பு நாதரைத் தரிசித்தல் வேண்டும். தொடர்ந்து ஸ்ரீபுண்டரீகாக்ஷப் பெருமாளை தரிசனம் செய்து அதன் பின் மீண்டும் ஸ்ரீவட ஜம்பு நாதரை தரிசித்தல் வேண்டும். மூன்றாம் கட்டமாக திருஆனைக்காவில் அருள்புரியும் ஸ்ரீஜம்புநாதரை தரிசித்த பின்னர் மீண்டும் ஸ்ரீகாசி விஸ்வநாதரை தரிசித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இவ்வாறு ஆறு முறை சிவ மூர்த்திகளையும் இரண்டு முறை பெருமாள் மூர்த்திகளையும், மொத்தத்தில் எட்டு மூர்த்திகளை ஒரு சேர வழிபடும் முறையே அஷ்ட மூர்த்தி தரிசன வழிபாடு என்று முற்காலத்தில் போற்றப்பட்டது. இவ்வழிபாடு மூன்று நிலைகளில் மேற்கொள்ளப்படுவதால் வில்வதள யாத்திரை வழிபாடு எனவும் வழங்கப்படுகிறது.

ஸ்ரீரங்கம் காசி விஸ்வநாதர் திருத்தலத்தில் நவகிரக மூர்த்திகள் எண்கோண பீடத்தில் எழுந்தருளி உள்ளதால் இத்தலத்தில் அஷ்ட மூர்த்தி தரிசன வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.

பெண்களுக்கு ஒரு சிறந்த வரப் பிரசாதமாகத் திகழ்வதே இத்தகைய வில்வதள யாத்திரை வழிபாடாகும். இவ்வழிபாட்டில் சுக்ர சக்திகளும், சந்திர சக்திகளும், பெண்களின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமான தீர்த்த சக்திகளும் நிறைந்து விளங்குவதால் பெண்களுக்கு உரிய ஒரு சிறப்பான வழிபாடாக இது அமைகிறது. முடிந்த மட்டும் பாத யாத்திரையாக இந்த வழிபாட்டை மேற் கொள்தலால் சிறந்த பலன்களைப் பெறலாம்.

பாத யாத்திரையாகச் செல்லும்போது கீழ்க் கண்ட ஸ்ரீஅகத்திய பாமாலையை உரக்கப் பாடிக் கொண்டே செல்வதால் அற்புதமான பலன்களைப் பெறலாம்.

மலையைப் பார்க்கும்போது மகாதேவா உன்நினைவு
மலர்களைப் பார்க்கும்போது மலருது உன்நினைவு
வில்வ இலையைக் காணும்போது பெருகுது உன்நினைவு
திருநீறு கொள்ளும்போது கூடுது உன்நினைவு
தாயினை நினைக்கும்போது நீ தந்தது நினைவாகுது
வானளாவ வளர்ந்ததை நினைக்கும்போது நீ கொடுத்தது நினைவாகுது
வந்த இடர்களை நினைக்கும்போது நீ தடுத்தது நினைவாகுது
பிறந்ததை நினைக்கும்போது உன்னை நினைப்பதே முடிவாகுது
திறந்த வெளியெல்லாம் பார்க்கும்போது அருணாசலா நீ ஒன்றே என முடிவாகுது

காசி யாத்திரையை மேற்கொள்வோர் யாத்திரைக்கு முன்னும் பின்னும் ராமேஸ்வரம், தனுஷ்கோடி யாத்திரையை நிறைவேற்ற வேண்டும் என்ற நியதி இருப்பதைப் போல திருமணத்திற்கு முன்னும் பின்னும் இத்தகைய அஷ்ட மூர்த்தி வழிபாடுகளை நிறைவேற்ற வேண்டும் என்ற நியதியையும் நமது முன்னோர்கள் ஏற்படுத்தி உள்ளனர். அதாவது, திருமணத்திற்கு முன ஒரு மண்டலமான 48 நாட்களுக்குள்ளும், திருமணத்திற்குப் பின் ஒரு மண்டல காலத்திற்குள்ளும் தம்பதி சகிதமாக இத்தகைய வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும் என்பது நியதி.

திருமண முகூர்த்த நேரங்களைக் கணிக்கும்போது ஏழாம் இடம் சுத்தமாகவும் எட்டாமிடம் தீய கிரகங்களின் சேர்க்கையோ பார்வையோ பெறாமல் இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. முறையாக இவ்வாறு கணிக்கப்படாத திருமண முகூர்த்தங்களில் விளைந்த தோஷங்களுக்கும், குரு, சுக்ர மூடம் பார்க்காமல் நிகழ்ந்த தோஷ விளைவுகளுக்கும் ஓரளவு பிராயசித்தம் அளிக்க வல்லதே இந்த வழிபாடுகளாகும்.

பெண்கள் ஜாதகத்தில் எட்டாமிடம் மாங்கல்ய ஸ்தானமாக விளங்குவதால் இத்தகைய வில்வ தள வழிபாடு அவர்களுக்கு நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான சந்ததியையும், சுபமங்கள, மாங்கல்ய சக்திகளையும் பெற்றுத் தரும்.

சௌபாக்கிய நவசக்தி வழிபாடு

ஆண்களுக்கு பூணூல் காப்புச் சக்திகளை அளிப்பது போல் பெண்களுக்குரிய காப்புச் சாதனமாகத் திகழ்வதே திருமாங்கல்யம் ஆகும். தற்காலத்தில் இதை ஒரு ஆடம்பர அணிகலனாக நினைத்து தங்கச் சங்கிலியில் கோர்த்து அணிவதால் திருமாங்கல்யத்தின் முழுமையான காப்புச் சக்திகளைப் பெண்களால் பெற இயலாமல் போய் விடுகிறது.

எம்பெருமான் பார்வதிக்கு அணிவித்த திருமாங்கல்யம் சுட்ட மண்ணால் அமையப் பெற்றதே. அத்திருமாங்கல்யத்தைத் தாங்கி நின்றது பஞ்ச பூத சக்திகள் பொலியும் நூல் சரடுதான். அவ்வாறு தன் திருமாங்கல்யத்தில் பொலிந்த திருமாங்கல்ய சக்திகளை ஒன்பது கூறாக்கி நவ சக்தியாக உருவாக்கினாள் அன்னை பராசக்தி. இந்த நவ சக்திகளே பெண்களைக் காக்கும் காப்புச் சக்தியாக ஒன்பது இழைகள் உடைய மாங்கயச் சரட்டில் தங்கி பெண் குலத்தை எதிர் வரும் ஆபத்துக்களிலிருந்து காக்கின்றன. சுமங்கலிகள் நூல் சரட்டிற்குப் பதிலாக தங்கச் சங்கிலிகளைப் பயன்படுத்தினால் இந்த நவ சக்திகள் எங்கே தங்கி பெண்களைக் காக்க முடியும்? இனியாவது பெண்கள் தங்கள் தவறை உணர்ந்து பருத்தி நூலாலான மாங்கல்யச் சரட்டைப் பயன்படுத்தும்படிக் கேட்டுக் கொள்கிறோம்.

அன்னை பராசக்தி அளித்த நவசக்திகளை பெண்கள் பெறுவதற்காக சித்தர்கள் பல வழிபாட்டு முறைகளை உருவாக்கி உள்ளனர். அவற்றில் ஒன்றே சௌபாக்கிய நவசக்தி வழிபாடாகும்.

கீழே கொடுத்துள்ள முறையில் சுத்தமான பச்சரிசி மாவினால் கோலத்தை வரைந்து கொள்ளவும். ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய வண்ணத்தை கவனித்து அதே முறையில் கோலத்தை அலங்கரிக்கவும். மூன்று ஆவரணங்களைக் கொண்ட இந்தக் கோலத்தின் ஒவ்வொரு ஆவரணத்திற்கும் எட்டு விளக்குகளும் நடுப் பகுதியில் உள்ள மூன்று விளக்குகள் ஒவ்வொரு ஆவரணத்திற்கும் உரித்தான குசா சக்திகளை நிலைப்படுத்தும் முறையில் அமைந்துள்ளன. நடுவில் உள்ள மூன்று விளக்குகளில் மத்தியில் அமையும் விளக்கு மூன்று ஆவரணத்தின் குசா சக்திகளை நிலைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

நவராத்திரி, வெள்ளிக் கிழமை, ஒரே ராசியில் புதனும் சந்திரனும் இணைந்து விளங்கும் தினங்களில் இந்த பூஜையை நிறைவேற்றுதல் சிறப்பாகும். கோலத்தின் நடுவில் தங்கள் இஷ்ட தெய்வத்தின் படம், எந்திரம், சக்கரம், ஸ்ரீஆயுர்தேவி போன்ற தெய்வ மூர்த்திகளின் படம் போன்றவற்றை வைத்தும் வழிபடலாம். கோலத்தை மணமுள்ள பூக்களால் அலங்கரித்தல் நலம். அகல் மண் சட்டி, பித்தளை, செம்பு, வெள்ளி என எந்தவித விளக்காக இருந்தாலும் ஒரே மாதிரியான விளக்குகளை வைத்துப் பூஜித்தல் சிறப்பு. பசு நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெயால் தீபம் ஏற்றி வழிபடலாம். திருக்கோயில்களில் சத்சங்கமாக பலரும் ஒன்று சேர்ந்து இத்தகைய சுமங்கலி பூஜைகளை நிறைவேற்றி வந்தால் சமுதாயத்தில் அமைதியும் ஒற்றுமையும் நிலவும்.

தீபங்களை ஏற்றிய பின்னர் கீழ்க் கண்ட துதியை ஓதவும்.

      


யா தேவி சர்வ பூதேஷூ புத்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ சக்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ திருஷ்ணா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ சாந்தி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ரத்தா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ லக்ஷ்மீ ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ ஸ்ம்ருதி ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ தயா ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

யா தேவி சர்வ பூதேஷூ மாத்ரு ரூபேண ஸம்ஸ்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

என்ற துதியை ஓதவும். இதனால் பரவெளியில் நிரவியுள்ள நவசக்திகள் பச்சரிசி மாக்கோலத்தில் ஆவாஹனம் ஆகும்.

அடுத்து திருநாவுக்கரசு நாயனார் அருளிய வேற்றாகி விண்ணாகி … என்று தொடங்கும் திருத்தாண்டகப் பதிகத்தை ஓதவும். இதனால் கோலத்தில் ஆவாஹனம் அடைந்த நவ சக்திகள் மூன்று ஆவரணமாக உள்ள 27 விளக்கு ஜோதிகளில் ஆவாஹனம் ஆகும்.

அடுத்து,

ஓம் தத்புருஷாய வித்மஹே அர்த்தநாரீஸ்வர தேவாய தீமஹி
தந்நோ அருணாசல தேவ ப்ரசோதயாத்

என்ற காயத்ரீ மந்திரத்தை ஓதவும். இதனால் விளக்கு ஜோதிகளில் ஆவாஹனம் அடைந்த நவசக்திகள் பெண்கள் அணிந்துள்ள மாங்கல்யங்களில் ஆவாஹனம் அடைந்து அவர்களுக்கு எல்லா காப்புச் சக்தி அனுகிரகங்களையும் அள்ளி வழங்கும். திருமணமான பெண்கள் மட்டும் அல்லாது கன்னிப் பெண்களும் இத்தகைய வழிபாட்டினால் திருமணத் தடங்கல்கள் நீங்கி நலம் பெறலாம்.

குறைந்தது 9, 18, 27 என்ற எண்ணிக்கையில் மேற்கொண்ட துதிகளை ஓதி பூஜையை நிறைவேற்றுதல் சிறப்பாகும். பூஜை நிறைவில் உரிய நைவேத்தியம் படைக்கவும். அவரவர் வசதிக்கேற்ப பொன் மாங்கல்யம், ஒன்பது கஜ நுல் புடவைகளை ஒரு மீட்டருக்குக் குறையாத ரவிக்கை துணியுடன் தானமாக அளித்தல் சிறப்பாகும்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam