முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆத்ம பிரதட்சிணம்
தரும் வாஸ்து சக்திகள்

தினந்தோறுமே, குறிப்பாக வாஸ்து நாளிலாவது, ஆத்மப் பிரதட்சிணம் என்பதாகத் தன்னுள் சுயம் பிரகாசமாக ஒளிர்ந்து உறையும் சுயஞ்ஜோதியை வணங்குவதான பாவனையுடன், கைகளைக் கூப்பி வணங்கியபடி, தன்னைத் தானே குறைந்து எட்டு முறை சுற்றி வந்து வணங்கி, பிறகு சாஷ்டாங்கமாக எட்டுத் திசைகளிலும் வீழ்ந்து வணங்குதலே அஷ்டாஷ்ட (8 x 8 = 64 திசைப்) பிரதட்சிண முறையாகும்.
இளம் பிராயத்தில் இருந்தே இத்தகைய ஆத்மப் பிரதட்சிணத்தைப் பயின்று வந்தால், தலைசுற்றல், வாந்தி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் வராமல் தற்காத்துக் கொள்ள முடியும். கபாலமும், பாதங்களும் நன்கு வலுப் பெறும்.  சிறு வயதிலிருந்தே இதனைப் பழகி வருதல் நல்ல பலன்களைத் தரும். மிகவும் வயதான பின் இதனைப் பயிலுதல் கடினம்.
இந்த ஆத்மப் பிரதட்சிணத்திலும் பல வகைகள் உண்டு. ராகு கிரகபோதப் பிரதட்சிணம், கேது கிரக போதப் பிரதட்சிணம் இவற்றில் முதல் எட்டுச் சுற்றை இட வலமாகவும், அடுத்த எட்டுச் சுற்றை வல இடமாகவும் சுற்றுதல் வேண்டும். எடுத்த உடனேயே இதனைச் செய்து பாராது, சிறிதாக, சிறிதாகப் பயில வேண்டும். அவரவர் ஆரோக்ய நிலையை நன்கு அறிந்து கொண்டு மெதுவாக, சிறிது, சிறிதாகப் பழகிடுக! இதனால் உடல்வள மட்டுமன்றி, மனவளமும் நன்கு மேம்படும்.
திருவையாறு ஸ்ரீபஞ்சநதீஸ்வரர் ஆலயத்தில், சிவபெருமானே அர்ச்சகர் வடிவில் வந்து தம்மைத் தாமே பூஜித்தப் புராண அனுபூதிகள் உண்டு. இங்குள்ள ஸ்படிக லிங்கம் ஆத்மப் பிரகாச ஸ்படிக லிங்கமாகும். இதனை தரிசிக்கும் முன்னும், பின்னும் தன்னைத் தானே வலம் வந்து தரிசித்தல் மிகவும் சிறப்புடையது, மன சுத்தியைத் தர வல்லதாகும்.
தான் இறந்த பிறகு, தன் குடும்பம் நிர்கதி ஆகி விடுமே என்று அஞ்சுவோர், தன் உடல் ஆரோக்யத்தைப் பொறுத்துத் தினமும், ஸ்படிக லிங்க பூஜையை இல்லத்தில் ஆற்றி, வாஸ்து நாட்களிலும், ஆத்ம சக்தி நாட்களிலும் மேற்கண்ட தலங்களிலும் வழிபட்டுத் தன்னைத் தானே வலம் வந்து வணங்குதல் நன்மை பயக்கும்.
சிறு வயதில் இருந்தே, உங்கள் பிள்ளைகளுக்கு இந்த ஆத்மப் பிரதட்சிண முறையைக் கற்றுத் தாருங்கள். பாதகணப் பாதாளநல யோகம் என்ற சிறப்பான முறையில், ஒரு குதிகாலின் அடிப்பாதம் மட்டும் பூமியில் அழுந்த, இதனை ஆதாரமாகக் கொண்டு, உடலைச் சுற்றும் யோக முறையும் நல்ல ஆத்ம சக்திகளைத் தரும். தக்க யோகியர் மூலம் மிகவும் கஷ்டப்பட்டுக் கற்று ஆற்ற வேண்டிய நின்ற நிலை யோகாசனம் இது! எத்தகைய மனக் குழப்பங்களிலும் தக்க சாந்தத்தைத் தருவதாகும். பிறருக்கும் ஆறுதல் அளிக்கும் மனவல்லமையைத் தருவதாகும்.
84 லட்சத்திற்கும் மேலான யோகாசனங்கள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது.
உண்மையில் ஆத்மப் பிரதட்சிணம் என்பது உடலில் வாஸ்து நியதிகளைச் சீரமைத்துத் தருவதாகும் என அறிக!

உற்றமும் சுற்றமும் உறவாடும்

"வை' என்று தொடங்கும் வார்த்தைகளுக்கு, வேதவேக சக்திகள் அதிகம். வைதிருதி நாளில் தோற்றுவிக்கப் பெற்றதே சரஸ்வதி கடாட்சம் நிறைந்த வேகவதி நதி. இன்றும் காஞ்சிப் பகுதியில் ஓடுவதே வேகவதி நதி! வேகம் என்றால் விரைவு என்று மட்டும் பொருள் அல்ல. ஓர் அருவியில் நீர் ஆவலுடன் ஓடி வருகிறது அல்லவா ! இந்த ஓட்டத்தின் அழகைத் தான், வேதவேக வேகவதி என்பதான, வைபுலம் என்கின்றனர் சித்தர்கள். திபெத்திய நாட்டின் புனிதமான புத்த பிட்சுக்கள்,

ஓம் மணி பத்மே ஹம் என்ற மணி மந்திரத்தை எப்போதும் உள்ளும் புறமுமாய் ஓதி வருவார்கள். இந்த அற்புதமான மந்திரம் பொறிக்கப் பெற்ற சக்கரத்தை, அருவியின் மேல் பகுதியில் வைத்து, எப்போதும் இந்தச் சக்கரம் அருவியின் வேதவேகத்தில் சுழன்று, வானில் இம்மணி மந்திர சக்திகள் நிறையுமாறு செய்கின்றனர்.
வைரம், வைடூரியம், வைப்பு நிதி என்பதாக வேதவேக சக்திகள் மிகவும் நிறைந்த எழுத்தே "வை' அட்சரம் ஆகும். "வை'' எனும் எழுத்தின் ஒலியானது, மேலுதடு படாத சப்தமாதலின், இதனைக் கீழையூர் அம்பலச் சொல்லாகச் சித்தர்கள் போற்றுகின்றனர். (அம்பலம் - சித்ஆகாசத்தில் எப்போதும் நிறைவது). ஞானமே சித்ஆகாசத்தில் எப்போதும் நிறைவது அல்லவா! எனவே, கீழையூர், கீழாநல்லூர், கீழ்ப்பெரும்பள்ளம் போன்றவை, கேதுகாரக சக்திகள் நிறைந்த தலங்கள் ஆகும். "வை' என்ற சொல்லும் வைத்த மாநிதியான ஞானபொக்கிஷத்தைக் குறிப்பதால், இதுவும் கேதுகார சக்திகள் நிறைந்ததுவே.

சிம்ம தீர்த்தம் திருஅண்ணாமலை

வைதிருதி யோகத் தர்ப்பண நாளில், கோயில், மலை, தீர்த்தம் என பூமியில் கீழ்த்தரை நிலையில் உள்ள தீர்த்தத்தைக் கொண்டு அளிக்கும் தர்ப்பணம் அல்லது (கீழிறங்கி வரும்) படித்துறைத் தர்ப்பணம் மிகவும் விசேஷமானதாகும். (திருஅண்ணாமலை சிங்கமுகத் தீர்த்தம், திருச்செந்தூர் நாழிக் கிணறு, நெடுங்குடி) அதாவது, தரையிலிருந்து கீழிறங்கிச் செல்வதாக அமைந்துள்ள உள்ள தலங்களில் தர்ப்பணப் பூஜை ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும்.  
வைதிருதி யோக நாளில், சிங்க முகத் தீர்த்தத் தர்ப்பணம் மிகவும் விசேஷமானதாகும். வட பாரதத்தில் வை(திருதி) அட்சர சக்திகள் நிறைந்த வைசாலி என்ற புனிதமான தலம் ஒன்று உண்டு. வைதிருதி நாளில் இத்தலத்தில் தர்ப்பணம் அளித்தலால், கொடிய கர்ம வினைகள் காரணமாக, வன மிருகங்களாய்ப் பிறந்துள்ள மூதாதையர்கள் நற்கதி பெறக் குறித்த நற்பரிகாரங்களை அடைய உதவும்.

வேகவதி ஆறு காஞ்சிபுரம்

மேலும் வைதிருதித் தர்ப்பணத்தை, வைகைக் கரை, கேது சக்தித் தலமான கீழ்ப்பெரும்பள்ளம் தீர்த்தக் குளம், வையங்காத்த பெருமாள், வைத்தமாநிதி, வைகுண்டப் பெருமாள் போன்று "வை' எழுத்துத் தலங்களில் நடத்துதல் மிகவும் விசேஷமானது.
முருகனுக்கு வையாபுரி என்ற பெயரும் உண்டு. தேவாரப் பாடல்களில் மறைந்து பதிந்திடுக்கும் தலங்களை வைப்புத் தலங்கள் எனப் போற்றுவார்கள். எனவே, வைதிருதி நாட்களில், தேனிமலை, குன்றக்குடி போன்ற தலங்களில் மலைக்குக் கீழ் உள்ள தீர்த்தங்களில் தர்ப்பணம் அளித்து, மந்தாரை இலையில் கையை விரித்து வைத்துக் கை நிறைய, இலை நிறைய அன்னம் வைத்து இலை முழுதும் நிரவித் தானமாக அளித்திடுக! இதுவே வை கை தானம்!
உள்ளங்கையில் வைத்து ஆக்கப்படும் உணவு வகைகளைத் தானமாக அளித்து (வடை, பஜ்ஜி, போண்டா, மிளகு வடை) முருகப் பெருமானை,
வையாபுரியே! வைத்த மாநிதியே போற்றி! போற்றி! போற்றி!
என்று ஓதிப் பணிந்தோமாயின், (பகைமையினால்) சிதறிக் கிடக்கும் நெருங்கிய சொந்த பந்தம் ஒட்டி நல்உறவு மலர உதவும். பெற்றோர்களிடம் கொண்டுள்ள பிணக்குகள் தீர உதவும்.

சுகம் தரும் சுக்ர மனோ சக்தி

என்றாவது உங்கள் மனதைப் பின் தொடர்ந்து சென்று பார்த்திருக்கின்றீர்களா? உங்கள் மனதைப் பின் தொடர்வதென்றால், எந்த உடல் சாதனம் மனதைப் பின் தொடரும்? புத்தியா அல்லது பிறிதொரு மனமா? குளத்து நீரில், கண்ணாடியில் தன் பிம்பத்தைப் பார்ப்பது போல, தன் மன ஓட்டத்தைத் தானே எவ்வாறு பார்ப்பது? இருக்கின்ற குடும்ப, தினசரி வாழ்க்கை, நாட்டுப் பிரச்னைகளில், இந்த மன ஓட்ட ஆராய்ச்சி அவசியந்தானா? இவை எல்லாம் வெறும் தத்துவார்த்தங்கள் அல்ல! எளிமையான பாமரரும் கடைபிடிக்க வல்ல எளிய ஆத்ம விசாரப் பாடங்களே!

நீங்கள் இதைப் படித்துக் கொண்டு இருக்கும் போதே, யாரோ காலிங் பெல்லைத் தட்டுகின்றார்கள், கூப்பிடுகின்றார்கள் அல்லது பிறர் பேசுவது காதில் விழுகிறது அல்லவா! அப்படியானால் உங்கள் மனதால் இரண்டு, மூன்று காரியங்களை ஒரே சமயத்தில் செய்ய முடிகின்றது அல்லவா! இதே போலத் தான், மனமும் சில பிரிவுகளாகி, ஒன்று வாகனத்தை ஓட்டும், மற்றொன்று சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லும், பிறிதொன்று ஏதேனும் பாட்டைப் பாடும், மற்றொன்று எதையாவது நினைத்துக் கொண்டிருக்கும், இவற்றுக்கு இடையில், மூலமனம் அனைத்தையும் சாட்சி பூதமாகப் பார்த்துக் கொண்டிருக்கும்.

ஸ்ரீமனோன்மணி திருநாவலூர்

மனதுக்கும் கபாலத்தின் ஞாபக சக்திச் செல்களுக்கும் அரிய இணைப்பு உண்டு. இதனால் தான், தினமுமே உங்கள் வீடு, ஆபீஸைச் சரியாக அடையாளம் கண்டு, பல்லாண்டுகளாக மிகவும் சரியாக வருகின்றீர்கள். இந்த மனதை இன்னமும் சற்று பலப்படுத்தினால், எத்தனையோ ஆற்றல் மிகு காரியங்களைச் சாதிக்க முடியும் அல்லவா! அப்படி என்னதான் சாதிக்க முடியும்?
உதாரணமாக, கார்த்திகை மாதம் திருஅண்ணாமலையில் கார்த்திகை தீபப் பெருவிழா நிகழ்கிறது. இதில் 10000 பேருக்காவது சமைத்து அன்னதானம் அளிப்பது என்ற பெரிய நற்காரியத்தில் உங்களால் உடனே இறங்க முடியுமா? இதைக் கேட்டாலேயே, நம்மால் முடியாதப்பா! இதற்கு நிறையப் பொருள் வசதியும், ஆள் வசதியும் தேவை ஆயிற்றே என்றே பலரும் கூறுவர். இந்த நற்காரியத்தில் துணிகரமாக இறங்கினால்தானே, தெய்வ சகாயம் எப்படி எல்லாம் அதியற்புதமாகக் கை கூடி வரும் என்பது தெரிய வரும்!
இதற்காக நீங்கள் மன ஆற்றலைப் பெருக்கி வந்தால், சுக்ர சக்திகள் கை கூடி, நிறையச் செலவாகுமே என எண்ணப்பெறும் நற்காரியமானது, நீங்களே மலைத்திடும் வண்ணம் நன்முறையில் அன்னதானச் சேவை தக்க சத்சங்கம் மூலம் அளித்திட முடிவதை நீங்களே உணரப் பெறுவீர்கள்! இதனை முன்னின்று நடத்திடவே தக்க மனோ ஆற்றல் தேவை!
ஒவ்வொரு நவகிரகமும், ஒவ்வொரு விதமான மன ஆற்றலைத் தருகிறது. சுக்ர மனோசக்தி, சூர்ய மனோ சக்தி, புத மனோ சக்தி போன்று சுக்ர மனோ சக்திகள் நிறைந்த வெள்ளிக் கிழமையன்று அபரிமிதமானச் சுக்ர சக்திகள் பொலியும் தலங்களும் உண்டு. பாரி, ஓரி போன்ற தர்மமிகு மன்னர்கள் காலத்தில் சுக்ர சக்தி நாட்களில் இத்தலங்களில் நிறைப் பூஜைகளை ஆற்றி, நல்ல மனவளம் பெற்று மக்களுக்கு உதவினர்.
சுக்ர மனோ சக்திகளை நன்கு விருத்தி செய்து கொள்ளும் வண்ணம், வெள்ளிக் கிழமை நாட்களில், மனோன்மணியாக இறைவி அருளும் ஆலயங்களில் (உத்தரமேரூர், கும்பகோணம் அருகே கூகூர், பேரூர் கோவை. திருநாவலூர்) திரவிய வகை உணவு வகைகளைப் (பால் பாயசம், பானகம், பழரசம்) படைத்துத் தானமளித்தல் சிறப்புடையதாகும். பெரும் மனத் துன்பங்களால் வாடுவோர், மனோன்மணி தேவி அருளும் ஆலயங்களில் வெள்ளி தோறும் வழிபட்டு வருதல் நலம் பயக்கும். மனோன்மணி தேவி உபாச வாலையோக சூத்திரத்தில் சிறப்பிடம் பெறுவதாகும்.

முந்தைய தலைமுறை சொத்துக்கள்

சனிக்கிழமை, பெருமாளுக்கு உரித்தான நாளாகிறது! சனிக் கிழமையன்று, சனீஸ்வரர் வழிபாட்டை மேற்கொள்வதா, பெருமாள் பூஜையில் ஈடுபடுவதா?
மனிதனின் விருப்பங்கள் பற்பலவாக இருப்பதால்தான், எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும் பற்பல வடிவுகளில் அருள்கின்றார். உருவ வழிபாடுதான், உருவமற்ற இறைவனை அடைவதற்கான எளிய முறையாகும். ஏனெனில், எதனையும் கண்களால் காண்பதையே நம்பும் குணத்தைக் கலியுக மனிதன் பூண்டு வருவதால், நன்முறையில் தக்க இறை தரிசனத்தைப் பெற்றுத் தர வல்ல உத்தமர்களையும், தற்போதைய மனித சமுதாயம் மதிக்கத் தவறி வருகிறது. கண்களால் கண்டு உருவங்களைத் தரிசித்தலில்தான், மனித மனமும் லயிக்கின்றது.
நவகிரக மூர்த்திகள் தாம் கலியுகத்தில் கர்ம பரிபாலனத்தை நிர்ணயிக்கின்றனர் என நாமறிவோம். சனீஸ்வரர் ஆயுள்காரகராகப் பொலிவதால், சனிக்கிழமையில் சனீஸ்வரர் வழிபாடு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. அந்தந்த கிரக நாட்களில், அந்தந்த கிரக மூர்த்திகள், அந்தந்தக் கிழமை நாளுக்கான தலைமை மூர்த்திகளை (திங்கள் - சிவன், புதன் - பெருமாள், வியாழன் - தட்சிணாமூர்த்தி) வழிபட்டு, இதன் பலாபலன்களை ஜீவன்களின் நலன்களுக்காக அர்ப்பணிக்கின்றார்கள். இப்பலாபலன்கள் பலவும் பித்ருக்கள் மற்றும் உத்தமர்கள் மூலமாகப் பூலோக மக்களாகிய நம்மை வந்தடையும். பூமிவாழ் மக்களும் இதே முறையில் பூஜித்து, ஏனைய சகப் பாமர மக்கள், நலிவுற்றோரின் நல்வாழ்விற்கும், மக்கள் சமுதாயத்தை அண்டி வாழும் பிராணிகள், தாவரங்கள் நல்வாழ்வுக்காகவும் தம் பூஜா பலன்களை அர்ப்பணித்தல் வேண்டும். தன் வாழ்க்கையில் எவ்வளவோ துன்பங்கள் இருந்தாலும், பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக நற்சேவைகள் புரிகையில், பூஜிக்கையில், இத்தியாக மய உள்ளத்திற்காக, உத்தமர்களின், பித்ருக்களின் ஆசிகள் தாமாகவே நல்வரங்களாகப் பொழிகின்றன.
ஆலயப் பூஜைகள் பூவுலகத்தின் அனைத்து ஜீவன்களின் நல்வாழ்க்கைக்காகவே நிகழ்த்தப் பெறுகின்றன. உத்தம நிலையில் உள்ள பித்ருக்களின் பராமரிப்பின் கீழ் லட்சக் கணக்கான சந்ததிகள் மட்டுமல்லாது, பிராணிகள், தாவரங்களாகப் பிறப்பெடுத்து, பூமியில் மட்டுமல்லாது, எண்ணற்ற லோகங்களில் இருப்பவர்களும் பல லட்சாதி லட்சக் கணக்கில் இருப்பதால், பித்ரு தேவதா மூர்த்திகளுக்கு இவர்களைப் பராமரிக்கவே நேரம் காணாது!  
எனவே, இவ்வகையில்தாம் ஒவ்வொரு பித்ருவும் ஒவ்வொரு விநாடியும் அயராது உழைத்துச் செயல்படுகின்றனர் என இனியேனும் அறிக! இதனால்தாம் பித்ருக்களுக்கு அழியா உடலும், பசியா வரமும் , உறங்கா நிலையும் அளிக்கப்படுகின்றன. அவர்களுடைய தபோ பலத்தால், எந்த லோகத்திலும் எந்த இடத்திற்கும் செல்ல முடியும்.
ஆனால், இவ்வளவு தெய்வீக சக்திகள் இருந்தும், ஒவ்வொரு பித்ருவும் தம்முடைய தெய்வீகப் புண்ணிய சக்திகளைக் கொண்டுதாம் தம் சந்ததிகளைக் கரையேற்ற வேண்டும் என்ற நியதியும் உண்டு. இதனால், பூவுலக மக்களைப் போலவே அவர்களும் பலவிதமான விரதங்களையும் பூஜைகளையும் கடைபிடிக்கின்றனர். மேலும் பூவுலகிற்கு வந்து, தம் சந்ததிகளை ஆலய தரிசனங்களையும், கிரிவல யாத்திரைகளையும், பூஜைகளையும், விரதங்களையும் கடைபிடிக்க ஆக்கப்படுத்துகின்றனர்.
சந்ததிகள் நிறைவேற்றும் பூஜைப் பலன்களில் ஒரு பங்கும் பித்ருக்களையும் சென்றடையும். தர்ப்பணம், படையல், திவசப் பூஜைகளைக் கடைபிடிக்கையில் பித்ருக்களும் மேன்மை பெறுகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமையும், பித்ருக்கள் ஸ்ரீசூரிய நாராயண சுவாமியை ஆராதித்து, அதன் பலாபலன்களை சனீஸ்வர மூர்த்தியிடம் வழங்குவதால், சனிக்கிழமை அன்று தர்ப்பணப் பூஜையை ஆற்றுவது மிகவும் விசேஷமானதாகும். சனிக்கிழமை தோறும் ஸ்ரீசூரியநாராயண சுவாமி என்ற பெயரில் அருளும் பெருமாளை ஆராதித்து வருவோர்க்கு, முந்தைய தலைமுறைச் சொத்துக்கள், நன்முறையில் வந்து சேர மூதாதையர்களின் அருளாசி கிட்டும்.

சிருஷ்டி ரகசியங்கள்

சிருஷ்டி என்பது, பிரபஞ்சத்தில் ஜீவன்கள் உற்பத்தி செய்யப்படும் தெய்வத் திட்டமாகும். உலகில் ஜீவ சிருஷ்டியானது ஒவ்வொரு அறிவுப் பூர்வமாக விரிந்து விரிந்து (ஓரரறிவு, ஈரறிவு என்பதாக ... ) ஜீவ விருத்தி வந்தமைந்தது என்பதெல்லாம் பலத்த மெய்ஞானச் சீரமைப்பிற்கு ஆளாக வேண்டும்.
ஏனென்றால், இறைவனால் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது என்ற பேதமற்ற வேத சத்திய வாக்கை உறுதியாகக் கைக் கொண்டால்தான், சிருஷ்டியின் தத்துவங்கள், சிருஷ்டி ரகசியங்கள், அதுவும் தக்க சத்குரு மூலமாக, விஞ்ஞானத்திற்கும் ஓரளவேனும் புலனாகும், அவரவருக்குத் தேவையான பாங்கில் ஒரளவேனும் புலப்படுத்தப் பெறும்.

ஸ்ரீஏகாதச ருத்ர லிங்கங்கள்
ராமேஸ்வரம்

மேலும் சிருஷ்டி இறப்பு, பிறப்பு, மறுபிறவி, கர்மவினைகள் போன்ற பலவற்றையும் உள்ளடக்கியதே சிருஷ்டித் தத்துவமாகும். சிருஷ்டியைப் பரம்பொருளின் பேரருளால் துவங்கும் முன் பிரம்ம மூர்த்தி, உற்பத்திக் காரண பாவன விரதத்தைப் பூண்டு, ஏகாதசப் பூரண விரதம் பூண்ட பின்னரே அவருக்கும் சிருஷ்டிப் பூர்வத்திற்கான தேவதேவ தத்துவங்கள் புலப்படவாயின.
ஏகாதசித் திதியில்தாம் பலவிதமான சிருஷ்டி உற்பவிப்புகள் ஏற்பட்டன என உரைக்கையில், சிருஷ்டிக்கு முன்னேரேயே திதிகள் தோன்றினவா என எண்ணம் எழும்.
காலப் படைப்பு ஜீவ சிருஷ்டிக்கு முந்தையதா, பிந்தையதா என்று கோருவதெல்லாம் மனித மனக் கோட்பாடே! கேட்கும் நிலையைத் தாண்டி கேளா நிலையில்தாம் இவை ஆறறிவுப் பூர்வமாகப் புலப்படுத்தப் பெறும். இவை நிகழ்ந்த போது, அனைத்திற்கும் சாட்சியாக இருந்தவர்கள் சித்தர்களும், மஹரிஷிகளுமே ஆவர். எனவேதான், சித்தர்களின், மஹரிஷிகளின் வழித் தோன்றல்களான சத்குருமார்களே, சிருஷ்டியின் ரகசியங்களை, பிறப்பு, இறப்பு, மறைவு, ஜீவ ஐக்யத்திற்கான காரண, காரியங்களை உணர்விக்க வல்லவர்கள் ஆவர்.

ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருத்தலம்
செட்டிக்குளம்

ஏகாதசித் திதி விரதமானது, பிந்து சக்திகளை மேம்படுத்தி சந்ததிகளை நன்கு விருத்தி செய்து தரும். எனவே ஏகாதசி விரதத்தை யாவரும் எவ்வகையிலேனும், ஒரு வேளை உண்ணா நோன்பு பூண்டாவது, கடைபிடிக்க வேண்டும். இவற்றைப் பற்றி அறியாதோர், கடைபிடிக்க இயலாதவர்கள் என்ன செய்வது? இதனைப் பற்றி அறிவோர், பிறருக்கும் நன்கு உணர்த்தி, ஏகாதசி தோறும், குறிப்பாக இன்று ஒரு வேளையாவது உண்ணா நோன்பு இருந்து, இதன் பலாபலன்களை, ஏகாதசி விரதம் பூண இயலாத, ஏகாதசி விரதம் இருக்க இயலாதவர்களுக்குச் சென்றடையும் வண்ணம் சங்கல்பம் செய்து பூஜித்திட வேண்டும்.
ஏகாதசி விரதப் பலாபலன்களை அளிக்க வல்ல விரத சக்தி நிறைந்த தலங்கள் உண்டு. இவற்றில் இன்றும் சித்தர்களும், மஹரிஷிகளும் ஏகாதசி விரதமிருந்து வழிபட்டு, ஏகாதசி விரத சக்திகளை அர்ப்பணித்துப் பலரையும் சென்றடையுமாறு அளிக்கின்றார்கள்.
* ஏகாதச ருத்ர லிங்க மூர்த்திகள் (11 லிங்க மூர்த்திகள்) உள்ள தலங்கள்,
* அரசு, ஆல், வேம்பு, வில்வம் போன்ற குறைந்தது 11 வகையான மூலிகை விருட்சங்கள் உள்ள தலங்கள்,
* 11க்கும் மேற்பட்டத் தீர்த்த நீராடல் தலங்கள் (ராமேஸ்வரம்)
போன்றவற்றிலும், ஏகாம்பரேஸ்வரர் என இறைவன் பெயர் பூண்டு அருளும் தலங்களிலும், தொடர்ந்து ஒருமணி நேரமேனும் கோமுகத்தில் அபிஷேகத் தீர்த்தங்கள் பொழியுமாறு அபிஷேக, ஆராதனைகள் நிகழ்த்தி, ஒவ்வொரு குடும்பத்தினரும், ஒரு ஏழைக் குடும்பத்திற்காகவது தேவையான வகையில் குறைந்தது 11 விதமான பலவிதமான அத்யாவசியமான பொருட்களைத் தானமாக அளித்திட வேண்டும் (அடுப்பு, பாத்திரம், விறகு, அரிசி, காய்கறிகள் போன்றவை).
இவ்வாறு ஒரு வேளையேனும் ஏகாதசி விரதமிருந்து, முழுமையான வகையில் தான தர்ம வகைகளை ஆற்றிப் பாமரர்களுக்கும் ஏகாதசி விரதப் பலன்கள் சென்றடையும் வண்ணம் சங்கல்பித்துப் பூஜித்தலால், எதிர்பாராத வகையில் அற்புதமான பலன்கள் வந்து கூடும் பாக்யத்தைப் பெற்றிடலாம். குறிப்பாக, திருமணம், வீடு கட்டுதல், கோர்ட்டுப் பிரச்னைத் தீர்வுகள் போன்றவற்றில் கிட்டத்தட்ட நிறைவுக்கு முடிவுக்கு வந்து கடைசியில் நல்ல முடிவுகள் தடைப்படும் நிலை மாறி, நற்காரியங்கள் நிறைவாக மேம்பட உதவும்.

மௌனத்தின் மகத்தான சக்திகள்

ஒவ்வொரு பிராணியும், தங்கள் குலத்திற்கு மட்டுமல்லாது, ஏனைய ஜீவன்களின் நலன்களுக்காகவும், குறிப்பாக, பிராணிகள் மிகவும் உயரிய பாக்யம் கொண்டதாகப் போற்றும் மனித குல மேன்மைக்காகவும், தினமுமே பல்வகைகளிலும் வழிபாடுகளைச் செய்கின்றன. ஒரு பிரம்மாண்டமான ஆலமரம், தன்னுடைய ஒவ்வொரு இலையைக் கொண்டும், இருந்த இடத்திலிருந்து கொண்டே எத்தனையோ லோகங்களுக்கான எத்தனையோ வழிபாடுகளை தியான யோக, நீரோட்ட வகைப் பூஜைகளை ஆற்றுகின்றது. இதனால்தான் உத்தமப் பிறவியைக் கொண்ட மனிதன் கூட, அரசு, ஆல், வேம்பு, வில்வம், துளசி, வன்னி, புரசு போன்றவற்றை வலம் வந்து வணங்குகின்றான்.
அனைத்து மிருகங்களும், தாவரங்களும், பறவைகளும், ஜந்துக்களும் மனிதப் பிறவி என்பது ஆறறிவின் மேன்மை கொண்டது என்று நன்றாக உணர்ந்துள்ளன. ஆனால், மனித குலத்தைப் பற்றிப் பிற ஜீவன்கள் இத்தகைய மேன்மையான கருத்தை உளமாறாகக் கொண்டிருப்பதைக் கலியுக மனிதன்தான் சற்றும் உணராமல், மரங்களை அநாவசியமாக வெட்டியும், பறவைகள், மிருகங்களை ஜீவ இம்சை செய்தும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான்.

தன்னைப் பிற ஜீவன்கள் இவ்வளவு உயர்வாக மதிக்கையில், அந்த அளவிற்கு மனிதன் சிறப்பான ஆன்மீகப் பண்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் அல்லவா ! ஆனால் மனிதனே, பிறரை வசை பாடுகையில், நாயே! கழுதை, எருமை! என்றும், இவர் பெரிய வெண்டைக்காய், சுண்டைக்காய் என்றும் தாவரங்களின், பிராணிகளின் பெயரை வைத்தே ஏசி ஏசிப் பேசியே தீர்க்க முடியாத வகையில் பெரும்பாவங்களை சம்பாதித்துக் கொள்கிறான். என்னே கலியுக மனித குலத்தின் இழிநிலை! இவற்றுக்கானத் தக்கப் பரிகாரங்களைப் பெற, மிருகசீரிஷ நட்சத்திரம் மற்றும் திங்கள் தோறும் ஆதிமூல விருட்சங்களுள் ஒன்றான நெல்லி மரப் பூஜை நிகழும் ஆலயங்களில் வழிபட்டு வருதல் வேண்டும். (திருநெல்லிக்கா, சித்துக்காடு சுந்தரராஜப் பெருமாள் ஆலயம்)
ஒவ்வொரு மனிதனும், தினமும் தன்னைத் தானே ஆய்வு செய்து கொண்டு, எத்தனை சதவீதம் முழுமையான மனிதனாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நன்றாகத் தெரிந்து கொண்டு சீர் திருந்தி வாழ வேண்டும். மிருக தர்மமும், மிருக குணங்களும் (காடுவாழ்) மிருக வாழ்க்கைக்கு மட்டுமே உரித்தானவை. மிருகங்கள் ஒன்றையொன்று வென்று, கொன்று, தின்று ஜீவிக்க வேண்டிய நிலையில், இதையே மிருக தர்மமாகக் கொண்டு வாழுகின்றன. இதில் கூட மனிதர்களைப் போல் பல நாட்களுக்குச் சேர்த்து வைத்துக் கொள்ளாது, ஒரு சிங்கம் ஒரு முறை வயிராற உண்டால் ஒரு மாத காலத்திற்கு, அதனருகில் மானே வந்தால் கூட, உணவேற்பதில்லை, கூடுதல் உணவுக்காகப் பேராசை கொள்வதில்லை!

ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் ஆலயம்
சித்துக்காடு

கோபம், தாபம், காமவெறி, குதர்க்கம் போன்றவை மிருக வம்ச குணங்களாகும். தம்மை விட வலிமை வாய்ந்த பல மிருகங்கள் எப்போதும் எந்நேரமும் தாக்கக் கூடும் என்பதால், அவை தற்காப்பிற்காகவும் துர்குணங்களைப் பூணுவது உண்டு. மனிதன் மிருக குணங்களை ஒருபோதும் பெற்றிடக் கூடாது
பிராணிகள், தாவரங்களுக்கும் கூட இல்லற நெறிகளும், இன விருத்தி நெறிகளும் வேறு விதமாய் உள்ளன. மனித குல நியதிகளை விட அவை மாறுபாடு உடையவையாம்.
இவ்வளவு இருப்பினும் ஒவ்வொரு பிராணியும், தாவரமும் மனிதனை விட சில வகையான உத்தமமான குணங்களையும், ஆன்மீக சக்திகளையும் பெற்றுத் துலங்குவதும் உண்மையே! உதாரணமாக, சில பறவைகள், பல விண்ணுலக லோகங்களுக்குச் சென்று வர வல்லவை. நாய்க்கு எம லோக தேவதையரின் தரிசனம் நன்கு புலப்படும். ஆமைகள் யோகப் பூர்வமாகப் பல ஆண்டுகள் உணவின்றி வாழும் தன்மை உடையவை!
வள் வள்ளென்று நாய் போல் விழுகின்றான்! என்று எப்போதும் கோபத்தினால் உஷ்ணமாகப் பேசுபவர்களைக் குறிக்கின்றார்கள். வள் வள் என்பது நாய் மொழியாகிறது. ஒரே வார்த்தையான வள் வள் என்பதையே ஆயிரத்திற்கும் மேலான சப்த த்வனிகளுடன் ஒவ்வொரு நாயும் ஒலிக்கிறது என்பது அற்புதமான சப்த இலக்கணமாகும்.
மேலும், பிராணிகள் வாயால் பேசுவதை விட, மனதால் ஒன்றுக்கொன்று பேசும் மன ஆற்றலை நிறையக் கொண்டு இருப்பதால், அவற்றுக்கு இயற்கையாகவே வாய்ப் பேச்சு மிகவும் குறைவே! மனமொழியே அவற்றுக்கு மிகவும் அதிகம்! எனவே, நிறைவான மனமொழியுடன், இயல்பாக ஓரிரு வார்த்தைகளை அவை பேசுகின்றன. மேலும் அனைத்துப் பிராணிகளும், தாவரங்களும் உலகில் எந்த நாட்டிலும், எந்த மனிதரிடமும், எந்த மொழியிலும் பேச வல்லவை! இத்திறமை மனிதனுக்கு இல்லையே! ஆம், நீங்கள் உங்கள் வீட்டில் உள்ள நாய், பூனை, எறும்பு, பல்லி எதனுடனும், எம்மொழியில் பேசினாலும் புரிந்து கொள்ளும். ஆனால், அவற்றின் மனமொழியை அறியும் அளவிற்கு, யோகபல யோக்யதாம்சங்களை மனிதன் பெற வேண்டுமே!
மேலும் டெலிபதித் துறையிலும் பல பிராணிகளும், தாவரங்களும் மிகவும் வல்லவை! சில வகைத் தாய்லாந்து சயாமிஸ் பூனைகள், கண்டம் விட்டுக் கண்டம் கடந்து வாழும் பூனைகளிடம் டெலிபதி மார்கமாகப் பேச வல்லவை!
அனைத்துக் காக்கைகளும் "கா கா" என்று ஒரே மாதிரியாகப் பேசுவது போல்தான் தோன்றும். ஆனால் உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால், காகார மாற்றங்களும், சில உடல் சைககளுடனும் அவை பேசுவதை அறியலாம். "கா கா கா'' என்பதையே நூற்றுக் கணக்கான வழிமுறைகளை மாற்றி மாற்றிக் காகங்கள் உரைப்பதே மனிதன் அறியான். மனிதனுக்கு மனமொழி, வாய்மொழியை விட, மெளன மொழி என்ற அற்புத மொழியை இறைவன் தந்துள்ளான். இது பலப்படும் நாளே திங்கள் கிழமை ஆகும். எனவே திங்கள் தோறும்,
• மெளன விரதம் இருத்தல்,
* முழுமையாக இல்லாவிடினும் 5, 6 மணி நேரமேனும் மெளனமாக இருத்தல்
* திங்களன்று அதிகம் பேசாது மனதினுள் நிறைய மந்திரங்களை ஓதுதல்
* திங்களன்று மரம், செடி, கொடிகளுடன், பறவைகளுடன், பிராணிகளுடன், ஜந்துக்களுடன் நிறைய பேசுதலை ஆற்றி வருக! அவற்றுக்கு நீங்கள் இறைமந்திரங்களைக் கூடச் சொல்லித் தரலாம். ஆலயப் பிரசாதங்களை அளித்திடலாம். திங்களன்று ஆலயங்களில் வாகனங்களைத் தரிசனம் செய்திடுக! இறை வாகனங்களாகத் துலங்கும் பிராணிகளுக்கு உணவு வகைகளை அளித்திடுக!
நதிக் கரைகளில், குளக் கரைகளில் இடும் உணவைப் பறவைகள் உண்பதைக் கண்டு களித்து அவற்றுடன் உரையாட முயல்க! நாளடைவில் நற்பலன்கள் தெரியும். கூண்டுப் பறவைகளுக்கு, குரங்குகளுக்கு விடுதலை அளிக்க வழிவகை செய்க!

திருமகள் தரும் ஸ்ரீதனம்

சூரிய மூர்த்தி, (அரியலூர் அருகே) ஸ்ரீபுரம் எனும் தலத்தில், தாம் அனுஷ நட்சத்திர நாளில் பிரவேசிக்கும் தினங்களில், ஸ்ரீபுர ரவிசாம்யப் பூஜைகளை, தாமரை மலர்களைக் கொண்டு நிகழ்த்துகின்றார். தாமரை மலர்கள், பூவுலகில், சூரிய கதிர்களைக் கண்டு மலர்ந்து பூரிக்கையில், ஸ்ரீபுர மண்டபத்தில் சகலவிதமான ஐஸ்வர்யப் பூஜைகளும் நிகழும். ஐஸ்வர்யம் என்பது வெறும் செல்வச் செழிப்பு என்பது மட்டுமல்ல, நிரந்தரமான ஆனந்தச் செல்வத்தைத் தருவதே ஸ்ரீபுர ஐஸ்வர்யமாகும். இதனைப் பெறுதற்குக் குபேர மூர்த்தி, பல கோடிச் சதுர் யுகங்களில் கடுந் தவம் புரிந்தார்.

தினகரக் கமலபாதம் (தினகரன் = ஆதித்யன் = பாஸ்கரன் = ரவி = சூரிய நாமங்கள்) என்பது, பூவுலகிற்குத் திருமகள் வருகையில், லட்சுமியின் திருப்பாதங்கள் படுவதற்காக, சூரிய மூர்த்தி மலர வைக்கும், புஷ்பிக்க வைக்கும் முழு ஸ்வர்ண கமல (தாமரை) மலர்களாகும். இதனால் தான், எந்தத் தாமரை புஷ்பத்தைக் கண்ட உடனும், அதனை இரு உள்ளங்கைகளில் தொட்டுக் கண்களில் ஒற்றி, ஸ்ரீபாதமாக, திருமகளின் திருவடிகளாக பாவனை செய்யும் கமலாலய வழிபாடு நிலவுகிறது.

அனுஷம் கூடும் பிரதோஷ நாட்களில் சூரிய மூர்த்தியே, கமலநாதப் பிரதோஷ உற்சவத்தில், கமலாலயம் போன்ற தீர்த்தங்கள், தாமரை மலர்கள் பூரிக்கும் தீர்த்தங்கள், சிவனுக்கு வலப்புறம் அம்பிகை அருளும் தலங்களில், கமலா வல்லப கோவிந்தரின் பகவத்பாத கமலச் சரண மூர்த்தியாகப் பல தலங்களிலும் பிரதோஷத்தை நிழ்த்தி வைக்கிறார்.
அனுஷ நட்சத்திர மண்டலத்தில் உறையும் சூரிய மூர்த்தியே கமலாதித்யர் ஆவார். அனுஷ நட்சத்திரத்தின் நான்கு பாதங்களிலும் சூரிய கிரகம் உறைகையில் அனுஷபாத சூரியக் கிரணங்களில் தாமரை மலர்கள் பூரிக்கையில், இதில் ஸ்ரீசூக்த மறைக் கதிர்கள் தாமாகவே பூரிக்கும். எனவேதான், அனுஷ நட்சத்திர நாளில் ஸ்ரீசூக்த ஹோமம், குபேர ஹோமத்தை ஆற்றுவது மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீபிரதட்சிணேஸ்வரர்
ஸ்ரீபுரந்தான்

சூரிய மண்டலத்தில் புஷ்பிக்கப் பெற்றதே அனுஷ நட்சத்திரமாகும். இதனால்தான், சூரியமூர்த்தி அனுஷ நட்சத்திர மண்டபத்தில் பிரவேசிக்கையில் கமலாதித்ய சக்திகள் பூமியில் நன்கு வியாபிக்கின்றன. பூவுலகில் பணக் கஷ்டம் மட்டுமல்லாது, தானியம், மருந்துகள், வித்துக்கள் போன்ற பல துறைகளிலும் நிலவும் தரித்திர நிலைமை தீர உதவும்.
சூரிய கிரகம் அனுஷ நட்சத்திர மண்டலத்தில் இருக்கும் போது பெய்யும் கமல சூரியக் கிரணங்களில் மலரும் தாமரைப் புஷ்பங்கள், விசேஷமான ஸ்ரீதனக் கதிர்களைக் கொண்டு மலர்கின்றன.
ஸ்ரீதனம் என்பது திருமகளே வந்து, தந்து மலர்ப்பிப்பதாகும். "ஸ்ரீ” யில் உள்ளடங்கியதே ஸ்ரீதனம். ஸ்ரீ என்றாலும் என்றாலும் தனம் என்றாலும், செல்வத்தைத் தானே குறிக்கிறது. தனலக்ஷ்மியாகத் திருமகள் அவதாரம் பூணுகையில், லட்சுமி கடாட்சத்தைப் பலவிதமான தனப் பொருட்களாக அருள்கிறாள். மஞ்சள், குங்குமம், புஷ்பம், மாங்கல்யம், சங்கு, பாலாடை, குத்து விளக்கு, மஞ்சள் பூசிய தேங்காய், கலசம், மாவிலை போன்றவை ஸ்ரீதனங்களாகும். இவற்றை ஏழைகளுக்கு அளித்திடுக! இதுவே வழக்கில் சீதனம் என்று ஆகி விட்டது. சமீபத்தில் கல்யாணம் ஆகிய தம்பதிகள் இத்தகைய தான, தர்மப் பூஜை முறைகளைக் கடைபிடிப்பது நன்று.
இல்லத்து லக்குமியே மனைவி ஆகிறாள். எனவே, இல்லத்தில் கன்னிப் பெண் என்ற ஸ்தானத்தில் இருந்து, திருமண வைபவத்தில் இன்னொரு வீட்டிற்கு இல்லத்து லட்சுமியாகச் செல்லும் பெண்ணிற்கு அன்புடைப் பெற்றோர்கள் தாமாகவே மனமுவந்து அளிப்பவையே ஸ்ரீதனப் பொருட்கள் ஆகும். இவை நடைமுறையில் வலியுறுத்திப் பெறும் வரதட்சிணையாக ஆகி விட்டது என்பது மிகவும் வேதனை தருவதாகும்.

இரகசிய மனக் கதவுகள் திறக்கும்

இறைவனுக்கு நாம் பல நாமங்களைச் சூடி மகிழ்கின்றோம், இறைவனின் நாமங்களையே நாமும் சூடி ஆனந்தம் கொள்கின்றோம். அறிந்தோ, அறியாமலோ இறை நாமத்தை எவ்வகையிலேனும் ஓதினால் கூட, இறைநாமத்தை ஓதியதற்கான பன்மடங்கு பலாபலன்கள் வந்து கூடுமெனில் என்னே இறைநாம மஹிமை! இதனால்தான் ராமா, கிருஷ்ணா, பூமா என்று வீட்டில் குழந்தைகளுக்குப் பெயர் வைத்து, நாள் முழுதும் பலரும் ராமா, கிருஷ்ணா, என்று பலரும் வீட்டில் அழைத்து, அழைத்து, இதுவே இறைவனுக்கான 108, 1008 போற்றித் துதிகளை ஓதிய வகையினதாகத் தினமும் மலர்கின்றது அல்லவா!
உருவமற்றவராய, எங்கும், எப்போதும், எதிலும் நிறைந்திருக்கும் இறைவனுக்கு, ஒரு சிறு பெயரான ராமா என்பதை வைத்தும், இதுவே உலகையே, பிரபஞ்சத்தையே காக்கும் தாரக மந்திரமாக, எந்த யுகத்திலும், எந்த நாட்டிலும் விளங்குகிறது எனில், என்னே (ராம) நாம சக்திகள்! உருவ வழிபாட்டை விட, ஒலி வழிபாடு மனதில் நன்கு பதியும். ஒளி வழிபாடோ உள்ளத்தில் நேரடியாகவே நிலைக்கும்.
ராம, ராமா என்று மிக மிக எளிதான ராம நாமத்தை மனதினுள் எப்போதும் ஓதிக் கொண்டிருக்கப் பழகிடுங்கள். ராம, ராம், ராமா என்ற இரு எழுத்தில் குடிகொள்ளும் இறைவன், ராம நாம சக்திகளுடன் நம் உள்ளத்திலும் வந்து குடிபுகுவான் அல்லவா!

உள்ளமானது, ஏற்கனவே இறைவன் குடி கொண்டிருக்கும் ஆலயம் தான்! எவ்வாறு கிராமப் புறங்களில் ஆலயங்கள் ஜீரணமடைந்து, சிதிலமாகி, பூஜைகள் இன்றியோ, ஒரு வேளை பூஜையுடன் மட்டுமோ இருக்கின்றதோ, இதே போலத்தான் மனமும், உள்ளத்தில் இருக்கும் ஆலயமும், மனிதனால் சரிவரப் பூஜிக்கப்படாது, பராமரிக்கப்படாது குறுகி இருக்கிறது.
தாமரையாக, பிரபஞ்சம் போல் விரிய வல்லதால், மனதுக்கும் பத்மநாபம் என்ற பெயரும் உண்டு. தாமரை மலர் போல் விரிந்து உள்ளத்தைக் கவரும் வகையில், அன்பு சக்தியுடன் பூரிப்பதன்றோ உள்ளமாகிய இருதயாகாசம். ஆம், இருதயத்தில் பரந்த ஆகாயம் உண்டு. இதிலும், புதன் கிழமையன்று புத்திகாரராகிய புதனுக்கு உரிய நாளில் இருதயம் நன்கு விரியும். இதனை நற்கதிர்களால், நல்ஒளியால், நல்வாக்கால் நிறைத்திட வேண்டும். மனம், புத்தி, அறிவு, உள்ளம் இவற்றைப் பற்றி நாம் பன்முறை விளக்கி உள்ளோம். உள்ளத்தின் கண் உறையும் பத்மநாப ஆலயத்தின் வளாகத் துறைகள் இவை.
புதனன்று பத்மநாப சக்திகள், உள்ளம், மனம், புத்தியில், உடலில் நன்கு மலர்கின்றன.
அச்சுதா, அனந்தா, கேசவா, நாராயணா, மாதவா, கோவிந்தா, விஷ்ணு, மதுசூதனா, திரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ஹ்ருஷிகேசா, பத்மநாபா, தாமோதரா, சங்கர்ஷணா, வாசுதேவா, பிரத்யும்னா, அநிருத்தா, புருஷோத்தமா, அதோக்ஷஷா, நரசிம்மா, அச்யுதா, ஜனார்தனா, உபேந்த்ரா, ஹரி, ஸ்ரீகிருஷ்ணா
- என்றவாறாக மஹாவிஷ்ணுவின் 25 நாமங்களையாவது, எப்போதும் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருந்தால், இது புத்தி, மனம், உடலில் நன்கு நிறைந்து சுத்தி செய்யும்.
எடுத்த உடனேயே பக்தியின் பரவசம் வந்திடாது, எனவே, முதலில் கர்ம வினைகளின் அழுத்தத்தால் சிதிலமடைந்த நிலையிலும், பக்தி சிரத்தை இல்லாமையால் தக்கப் பூஜைகள் இன்றியும் இருக்கும் மன ஆலயத்தையும் மேற்கண்ட விஷணுத் துதிகளால் நன்கு அடிக்கடி சுத்திகரிக்க வேண்டும். பூஜையின் போதுதான் இவற்றை ஓத வேண்டும் என்பதில்லை! ஒவ்வொரு மணி நேரத்திலும், ஒவ்வொரு ஹோரையிலும், ஒரு முறை பார்த்துப் படித்து வந்தால், நாளடைவில் தானே உள்ளுள் ஒலிப்பதாக நன்கு பழக்கமாகி விடும். விஷ்ணுத் துதிகளுக்கு உடல், மனம், உள்ளத்தைத் துரிதமாகச் சுத்திகரிக்கும் சக்திகள் உண்டு.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

கும்பகோணம் அருகே, சோழபுரத்தில், ஸ்ரீகைலாசநாதர் கோயிலின் அருகே உள்ள பழமையான ஸ்ரீமஹாபைரவேஸ்வரர் ஆலயம், இந்த ஆலயக் கருவறைக்குச் சிவபத்மம் என்று பெயர். தாமரை போல் மலரும் கருவறையைக் கொண்டது.
இத்தலத்தில் தாமரை வடிவில் ஹோம குண்டம் அமைத்து, முழுத் தாமரை மலர்களை ஆஹூதியாக அளித்து, ஹோம வழிபாட்டை ஆற்றி வருதலால், எத்தகையப் பகைமையையும் களைந்திட நல்வழி பிறக்கும். கோள் மூட்டிப் பிறர் வாழ்க்கையைக் கெடுக்கும் கேவலமான தீய மனித குணத்தாரிடம், உறவினரிடம் இருந்தும் தேவையில்லாமல் தன்னைப் பிரச்னைகளில் சிக்க வைத்த துரோகிகளிடம் இருந்தும் தற்காத்துக் கொள்ளவும் முடியும்.
புதன் கிழமை தோறும்,
ஓம் பத்மநாபாய வித்மஹே, கமலா வல்லபாய தீமஹி
தந்நோ ஹ்ருதய ப்ரகாச ப்ரசோதயாத்
என்ற ஸ்ரீபத்மநாப கமல காயத்ரீ மந்திரத்தை 1008 முறைக்குக் குறையாமல் ஓதி, குறைந்தது 12 பெருமாள் ஆலயங்களில் முழுத் தாமரை மலர்களைச் சார்த்தித் தரிசிப்பது என்ற மனோவைராக்யம் பூண்டு, பிள்ளைகளுடன் சேர்ந்து சென்று வழிபடுக! இதனால் புத்தி நன்கு விசாலமாகும்.
புதன்தோறும், திருப்பத்தூர் - திண்டுக்கல் சாலையில் திருப்பத்தூரில் இருந்து 4 கி.மீ தொலைவில் இருக்கும் காரையூர் ஸ்ரீமணவாளப் பெருமாள் ஆலயத்தில் அபிஷேக, ஆராதனைகளுடனும், மிகவும் சக்தி வாய்ந்த முனிப் பெருமாள் சன்னிதி முன் (பசு, கன்று சேர்ந்த) கோ பூஜையை ஆற்றி வருதலால், பலவிதமான ரகசியங்களுடன் பூட்டி இருக்கும் மனக் கதவு (நல்ல பூஜைக்காகத்) திறக்க வழி பிறக்கும். மனம் தெளிவடையும். என்ன ஆகுமோ, ஏது ஆகுமோ என்ற வகையிலான பீதிகள் தணியும்.

தனம் கொழிக்கும் தன கங்கை

கார்த்திகை மாத அமாவாசையே, ஸ்ரீதர அய்யாவாள் எனும் சமீப காலத்திய கலியுக மஹரிஷி, தன் இல்லத்துக் கிணற்றில் ஒரே நாழிகையில் கங்கையைப் பொங்கிட வைத்து, ஊரெங்கும் கங்கையை ஓடச் செய்து, ஜாதி, மத, குல, இன பேதமின்றிச் சகல ஜனங்களும் கங்கா தேவியிடம் இருந்து நல்வரங்களைப் பெறச் செய்த திருநாள். கும்பகோணம் அருகே திருவிசை நல்லூரில் இன்றும் ஸ்ரீதர அய்யாவாளின் இல்லமும், கங்கை பெருகிய தனகங்கை நாழிக் கிணறு மக்களின் வழிபாட்டிற்காக அமைந்துள்ளது.
இங்கு வழிபட்டுத், தக்க காணிக்கையைச் செலுத்தி, சிறிது தனகங்கை நீரைப் பிரசாதமாக எடுத்து வந்து, இல்லத்தில் வைத்து வழிபட்டு வருக! இந்த அபூர்வமான தனகங்கா ஜலத்தை அவ்வப்போது தேவைப்படுகையில், பிறருக்கும் அளித்திடுக!
திருவிசைநல்லூரில் இந்த தனகங்கை வர்ஷித்த வைபவத்தைப் பலரும் அறிந்திருப்பார்கள். எனினும் அதனை மீண்டும் படிப்பது, அறிவது மிகவும் விசேஷமானதாகும்.

தனகங்கை நாழிக்கிணறு
திருவிசநல்லூர்

கார்த்திகை மாத அமாவாசை நாளில், வீட்டில் தம் மூதாதையர்களுக்கான படையலுக்காக வைத்திருந்த உணவுப் பண்டங்களை, தன் இல்லத்தின் வாசலில், பசியால் வாடி நின்ற பரம ஏழைகளுக்குச் சந்தோஷமாக எடுத்தளித்த ஸ்ரீதர அய்யாவாளைக் கண்டு சிலர் வெறுப்படைந்தனர்.
இனிமேல் சமைத்துத் திவசக் காரியங்களை ஆற்றிட நேரம் இல்லாமையாலும், பித்ருக்களுக்குப் படைப்பதற்கு என வைத்திருந்த பல்வகை உணவுப் பிரசாத வகைகளைப் பிறருக்குக் கொடுத்து விட்டமையாலும், நேரங் கடந்து ஒரு வருடத்தில் தக்க திவச வழிபாட்டை நிகழ்த்துவதற்கு, காசியில் கங்கையில் சென்று நீராடி வந்தால்தான் பரிகாரம் கிட்டி, மீண்டும் படையல் பூஜைகளை ஆற்றிட முடியும் என்ற நியதியை எடுத்து உரைத்தார்கள்.
வேதத்திலும், பூஜை முறைகளிலும் வல்லவரான ஸ்ரீதர அய்யாவாள் அவர்களுடைய அறியாமையையும், காழ்ப்பு உணர்ச்சியையும் கண்டு மன வருத்தமுற்று, அன்னதானத்தில் அனைத்து ஆசார, அனுட்டானங்களும் அடங்குமே! இதனைப் பித்ருக்களே அறிந்து மகிழ்வார்களே! ஏழைகளின் வயிற்றுப் பசியை ஆற்றியமையைக்கா இந்நிலை! என மிகவும் பதறினார்.
காசி கங்கையில் நீராடி வந்தால் தான் பரிகாரம் என்று சொல்லிப் படையல் பூஜை ஆற்றிடப் பலரும் முன் வராத போது, ஸ்ரீதர அய்யாவாள் மிகவும் திகைத்தார். அக்காலத்தில் நடந்தே காசி சென்று வர வேண்டும். இதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அதுவரையில் மூதாதையர் திவச வழிபாடுகள் என்னாவது! இறைவனிடம் மனமுருக வேண்டினார் ஸ்ரீதர அய்யாவாள். அவ்வளவுதான், உடனே பெருகியது கங்கை ஓடை, அவருடைய வீட்டுக் கிணற்றில் இருந்து!
பூஜை நியதிகளை விட, சடங்குக் கட்டுப்பாடுகளை விட, ஆசார அனுஷ்டானத்தை விட, தூய அன்பாகிய பக்திக்குத் தானே இறைவனே தானே அடிமை ஆகின்றான். ஸ்ரீகிருஷ்ணரை, அன்பால் தன் மனதில் சகாதேவன், கட்டிப் போட்டமையால் கிருஷ்ண பரமாத்மாவால் சற்றும் நகர முடியவில்லையே! (புனிதமான) அன்பின் ஆகர்ஷண சக்தி ஆண்டவனையே ஈர்க்குமே!
ஸ்ரீதர அய்யாவாளின் தபோ பலத்தால், அவரே எதுவும் வேண்டாவிடினும், அவர் வீட்டுக் கிணற்றில் கங்கை சுரந்து, பரவி, நிரவி, ஓடையாய்ப் பெருகி ஊரெங்கும் ஓடி நிறைந்தது,பலரும் இது கங்கைப் பிரவாகம் அல்ல, மந்திர மாயாஜாலம் என முகம் சுளித்த போது,
...... காசியில் கங்கையில் உள்ள அதே பிராணிகள், மீன்கள், காசிக் குடைகள் ........... எனச் சகலமும் இதில் தோன்றி, கங்கைப் பிரவாகம் ஊர் முழுதும் நிறைந்திட, பாமரர்களும், ஜாதி, மத பேதமின்றி பல ஊர் மக்கள் யாவருமாயும், அதுவரையில் கங்கையைக் காணாதவர்களும், காசிக்குச் செல்லப் பொருள் வசதி இல்லாதவர்களும், திருவிசைநல்லூர் மாமுனியின் தபோப பலத்தால், அத்தலத்தில் தனகங்கை கிணற்றில் விளைந்த கங்கையில் நீராடி, அரும்பெரும் பாக்யங்களையும், ஐஸ்வர்யங்களையும் பெற்று மகிழ்ந்தனர்.
தலைமுறைத் தலைமுறையாய்ப் படையல், திவசம், தர்ப்பணம் அளிக்காதவர்களும், திருவிசையில் அதாவது இறைவனே எடுத்துக் கொடுத்து அளித்த விசையால் வந்த தனகங்கையில் அன்று நீராடி ஆனந்தம் அடைந்தனர்.
இவ்வாறு ஐப்பசி மாதத்தில் கங்கைப் பிரவாகம் எழும் தலங்கள் சிலவும் உண்டு. சென்னை அருகே தக்கோலம் பெரிய சிவாலயத்தின் பின்புறம் உள்ள சிதிலமடைந்த நந்திவாய்த் தீர்த்தம் நிறைந்த கங்காதீஸ்வரர் ஆலயத்திலும் தினமும் குறித்த ஹோரையில் கங்காமிர்தப் பிரவாகம் சூக்குமமாகத் தோன்றுகிறது.
மிகவும் சிதிலமடைந்து இருக்கும் தக்கோலம் ஸ்ரீகங்காதீஸ்வரர் ஆலயத் திருப்பணிகளை ஏற்று நடத்துவோர்க்கு முன்னோர்களின் சாபங்களால் விளைந்துள்ள கொடிய சாபக்கேடுகள் தீர உதவும்.

ஆலயத்தில் நடை சார்த்தி விடடால்
என்ன செய்வது ?

பகலில் கோயில் நடை சார்த்தி இருக்கும் போது, கோயிலில் வழிபடக் கூடாது என்று எண்ணித் திரும்பி வந்து விடாதீர்கள். கலியுலகில் பலரும் வாகனங்களை நம்பியே வாழ்வதால் ஒரே நாளில் பல ஊர் ஆலயங்களைத் தொடர்ந்து தரிசிக்கையில், இவ்வாறு ஆலய நடை சார்த்தப் பெறும் சமயத்தில் அங்கு செல்லும் நிலை வரலாகும் என்பதைத் தீர்கத் தரிசனமாக உணர்ந்தே, கலியுகக் காலங்களில் ஆலய வழிபாட்டு நிர்ணய முறைகளை அளிக்கும் வில்வநாதச் சித்தர், காரண மஹரிஷி போன்றோர், எளிமையான கலியுக ஆலய வழிபாட்டு நியதிகளை அளித்துள்ளனர். இவை ஆகம நியதிகளைப் பாமரர்களுக்கும் எளிமைப்படுத்தித் தரும் மார்கமாகும்.
எத்தனையோ அபிஷேக, ஆராதனைகளை, விரத, ஆலய வழிபாட்டு (தர்ம) நியதிகளை அடியோடு கைவிட்டு விட்டு, ஏதோ ஒன்றிரண்டை மட்டும் கெட்டியாகப் பற்றிக் கொண்டு இருப்பதில் எவ்விதப் பயனும் இல்லை. கலியுகத்தில், துன்பங்கள் நாளுக்கு நாள் சமுதாயத்தில் மிகுந்து வருகையில் அனைவரும் தினமுமே காலையும், மாலையும் ஆலயத் தரிசனம் வழிபாட்டைச் செய்யும் வண்ணம், நடைமுறைக்கு ஏற்ற நியதிகளாக, காரண மஹரிஷி, வில்வநாதச் சித்தர், சுசீந்தர யோகி, தாந்த்ரேய ஞானி போன்றோர் சித்தர்களின் ஆதிபத்ரக் கிரந்த வாக்யங்களாக அளித்துள்ளனர்.

நடைவாசல் நர்த்தனம்

ஆதிபத்ரக் கிரந்த வாக்யங்களை, திரேதா யுகம், கிருத யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கையும் கண்ட சித்தர்களும், துர்வாச மஹரிஷி போன்ற மாமுனிகளும் அளித்துள்ளனர். எழுதாக் கிளவியாக அமைந்துள்ள இவற்றை சத்குரு மூலமாக மட்டுமே பெற முடியும். இவற்றில் கலியுக நடைமுறையில், ஆலய வழிபாட்டில் உள்ள சந்தேகங்கள் பலவற்றுக்கும் விளக்கங்களும், தீர்வுகளும் காணப் பெறுகின்றன.
ஆலய நடை சார்த்துதல் என்பது தேவாதி தேவர்களின் பூஜைக் காலத்தைக் குறிப்பதாகும். ஆம், பூலோகக் கோயில் பூஜைகள் யாவும் அந்தந்த நாட்டு மனிதர்களுக்கோ அல்லது உலக மனித குலத்துக்கு மட்டுமோ உரியதல்ல. அண்ட சராசர நலன்களுக்கும், ஜாதி, மத, குல, இன, ஆண், பெண், மனிதன், தாவரம், மிருக பேதமின்றி அனைத்து ஜீவன்களின் மேன்மைக்காகவுமே ஆலயங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது ஆலய நடை சார்த்தப் பெற்றிருந்தாலும், சில பிரகாரங்கள் திறக்கப்பட்டு இருக்கும் அல்லவா! அல்லது தல விருட்ச தரிசனமாவது கிட்டும். மூல சன்னிதி தவிர, ஏனைய சன்னதிகள் திறக்கப் பெற்றிருக்கும் அல்லவா! மேலும் கோயிலுக்கென பகலில் எந்நேரத்திலும் அருளும் சகலகால அனுகிரக தேவதா மூர்த்திகளும் உண்டு. மூலச் சன்னதி சார்த்தப் பெற்றிருக்கும் போது மூலவரின் தேவானுக்கிரக சக்திகள் பலவற்றையும் இத்தேவதா மூர்த்திகள் பெற்று தல விருட்சம், ஆலய கோபுரம், கலசங்கள் மூலமாக அருள்கின்றனர். எனவே, கோயில் நடை சார்த்தப் பெற்று இருக்கையில் ஆலயத்தை வலம் வருவதில் எவ்விதத் தவறும் கிடையாது.
இன்றும் கூட, ஒரு வேளை பூஜை மட்டும் நடக்கின்ற ஆலயங்களில், பக்தர்கள் வரும் போது அவ்வப்போது திறக்கப்படுகின்றன அல்லவா! இதில் நடை சார்த்துதல் நியதி எப்படிக் கைக் கொள்ள முடியும்? இதனால்தான் பகலில் ஆலய நடை சார்த்தப் பெறும் தருணங்களில், மக்களிடம் தினசரி ஆலய வழிபாட்டுத் தன்மைகள் விருத்தியாவதற்காகவே, பகலில் ஆலய நடை சார்த்தப்பட்டு இருக்கும் போது, தல விருட்சங்களிலும், ராஜ கோபுரங்களிலும், கொடிக் கம்பங்களிலும், கொடி மரத்தடி விநாயகர் சன்னதியிலும், தரிசன சக்திகள் நிறைவதால் மேற்கண்ட இடங்களிலும், கோஷ்ட மூர்த்திகளையும் வழிபடுவதில் எவ்விதத் தவறும் கிடையாது. தல விருட்சத்தில் தரிசனப் பலன்கள் பலவும் வந்து நிறைகின்றன, தல விருட்சத்தின் ஒவ்வொரு இலையும், தண்டும் மஹரிஷிகளும், சித்தர்களும் ஆவதால், இவர்கள் ஆலயத் தரிசனப் பலன்களை அருள்கின்றார்கள்.
ஆலய பூஜைகள் அவ்வளவாக நடைபெற இயலாத தலங்களில், மூன்றாம் பிறை நாளில், பக்தர்களைப் பிரகாரங்களில் அமர வைத்துப் பூஜைகளை நடத்தி ஜாதி, குல பேதமின்றி மூன்றாம் பிறைப் பூஜைகளை ஆற்றி வந்தால், ஆலய வழிபாடுகள் நன்கு மேன்மை பெறும்.

ஸ்ரீசோமநாதேஸ்வரர்
மானாமதுரை

பெரிய ஆலயங்களிலும், சந்த்ரசேகரபுரம், பழையாறை, மானாமதுரை, மதுரை, திருப்பதி போன்ற சந்திர சக்தித் தலங்களிலும், பிரதோஷ பூஜை போல மூன்றாம் பிறை நாளில் ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரப் பூஜைகளை மகத்தான சமுதாய நெறிவளப் பூஜைகளாக ஆற்றி வர வேண்டும். இதுவும் சமுதாய அமைதிக்கான எளிய வழிமுறையாகும்.
அர்த்த ராத்திரி நேரத்தில் கடை பூஜை முடிந்த பின், ஆலய நடையானது தேவர்களின் பூஜைக்காகச் சார்த்தப் பெறுதல் வேண்டும் என்ற நியதி உண்டு. நதி தேவதைகளும், பலவிதமான தேவதைகளும், விருட்ச தேவதைகளும் அந்திப் பொழுதுக்குப் பின்னான பூஜைகளுக்குத் தயாராவதால், இவ்வாறு நிகழ்கின்றன.
மக்களும் இத்தகைய தேவதேவதா பூஜைப் பலாபலன்களைப் பெற வேண்டும் என்பதால்தான், சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற விசேஷமான இரவு காலப் பூஜை நாட்கள் வந்தமைகின்றன. மக்களுக்கு இரவு நேரப் பூஜா பலன்களைப் பெற்றுத் தரவே பெளர்ணமி, மாத சிவராத்திரி (அருணாசல) கிரிவல முறைகள் அமைந்துள்ளன.
உண்மையில், ஒவ்வொரு அருணாசல கிரிவலத்திலும் அனைத்து அங்கங்களும் பங்கு பெறுவதால் நடத்துவதால், அருணாசல கிரிவலத்தில் அனைத்து வகைப் பூஜா பலன்களும் நிறைந்து வருகின்றன.
எனவே இனியேனும் கோயில் நடை சார்த்தி இருந்தால் திரும்பி வந்து விடாதீர்கள். ராஜகோபுரத் தரிசனம், தல விருட்சத் தரிசனம், பிரகார மூர்த்திகள் தரிசனத்தைப் பெற்றிடுக. பல தெய்வீகப் பலன்களைக் கோட்டை விட்டு விட்டு, ஓரிரு தர்ம நியதிகள் மட்டும் "பிடித்து வைத்துக் கொண்டு'', மக்கள் கடைபிடிக்கின்ற, சமுதாயத்தில் இருக்கின்ற தரிசன முறைகளையும் கோட்டை விடுதல் கூடாது.
பாமரர்கள் முதல் பணக்காரர்கள் வரை அனைவருமே ஆலய தரிசனம் செய்தால்தான் சமுதாயம் அமைதியாக இருக்கும். சமுதாய அமைதிக்கு, ஆலயங்களில் மூன்றாம் பிறை நாளில் விசேஷமான அபிஷேக, ஆராதனைகனைச் சந்திர மூர்த்திக்கு ஆற்றி வர அனைரும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
பத்து வருடங்களுக்கு மேலாக விஷ்ணுபதிப் பூஜைகளைப் பற்றி இடைவிடாது எடுத்துரைத்து வந்து தற்போதுதான் ஒரு சில விஷ்ணு ஆலயங்களில் விஷ்ணுபதிப் பூஜைகளைக் கொண்டாடும் அருட்பாங்கு ஏற்பட்டுள்ளது. எனினும் மனந்தளராது, நல்ல சத்விஷயங்களைப் பரப்புவதில் சோர்வடையாது, மூன்றாம் பிறைச் சந்திர (சேகர) வழிபாட்டையும் ஆலயப் பெரு விழாவாக நடத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

மௌன மொழி பேசுங்கள்

பரவெளியில் வாக்சக்தி சப்த தேவதைகள் நம்முடைய நல்மந்திர ஒலிப்புகளுக்காக, தேவ மற்றும் தமிழ் மறை ஓதுதலுக்காக நல்வார்த்தைகளுக்காக, நல் எண்ணங்களுக்காக எப்போதும் காத்துக் கிடக்கின்றன. இறைவன் வாயைப் படைத்தது உண்பதற்கும், நல் வார்த்தைகளைப் பேசுவதற்கும் என்பதோடு அல்லாது இதன் பின்னணியில் கோடிக் கணக்கான தேவ இரகசியங்கள் பதிந்து கிடக்கின்றன என்பதை இனியேனும் அறிக.
எந்த அளவிற்கு ஒவ்வொருவரும் வாயைப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள் என்பதை அவரவரே ஆத்ம விசாரம் செய்து பார்த்துக் கொள்ள வேண்டும்.  
ஒருவர் தன் வாழ்நாளில் பேசும் தீய வார்த்தைகள் அனைத்தும் வானில் திரண்டு விஷ வாக்ய மூட்டையாக நச்சுத் தன்மைகளுடன் கிடக்கும். இதனை நிவர்த்தி செய்து தர வேண்டியது அந்தந்த மனிதனின் பொறுப்பாகும். இப்பிறவியிலோ, அல்லது வரும் பிறவிகளிலோ, தீய வாக்கிய நச்சு மூட்டையை நல்ல பிரார்த்தனைகள், மந்திரம் ஓதுதல், நல்ல சத் விஷயங்களைப் பிறருக்கு எடுத்துரைத்தல் போன்றவை மூலமாகக் கட்டாயமாகக் கரைத்தாக வேண்டும். இதற்கான நல்வழி முறைகளில் ஒன்றே மெளனமொழி பேசும் மெளன விரதமாகும்.

ஸ்ரீநீலாயதாட்சி அம்மன்
நாகைக்காரோணம்

மெளன விரதத்தின்போது அவரவர் தமக்குள்ளேயே பேசிக் கொள்ள முடியும். தன்னுள்ளேயே தன்னையும் அறியாமல் எத்தகைய எண்ணங்கள் கட்டுப்பாடு இல்லாமல் தோன்றுகின்றன என்பதும் தெரிய வரும். தன்னைத் தானே அடக்கிக் கொள்ள முடியாத மனிதன், தன்னைத் தானே நன்முறையில் பேணிக் கொள்ள முடியாத மனிதன் அசுர சக்திகளை உடையவன் ஆகிறான். எனவே, கலியுக மனிதன் ஒவ்வொருவருமே நல்ல குணங்களையும் தீய வகையிலான அசுர குணங்களையும், இரண்டையும் சேர்த்துக் கொண்டே வாழ்ந்து வருகின்றார்கள்.
என்றுதான் அசுர குணங்களிலிருந்து மீள்வது?
மெளன விரதம் என்றால் வெறுமனே வாயால் பேசாமல் இருத்தல் மட்டும் அல்ல. சில சமயங்களில் மெளன விரதம் பூணுகையில் தன்னையும் அறியாமல் பேச்சு வந்து விடும். மெளன விரதம் பூணுவதை எளிமைப்படுத்துவது மாசிக்காய் எனும் அற்புதமான மூலிகை மருந்துக் கொட்டையாகும். சற்று முள் பாங்குடன் சிறிய கோலி உருண்டைபோல் இருக்கும். இதனை உடைத்து ஒரு சிறு துளியை மட்டும் வாயில் வைத்துக் கொண்டு மெளன விரதம் பழகுதல் நன்று. இது உமிழ் நீருடன் கசப்பு, இனிப்பு, துவர்ப்பு கலந்த நீரோட்டத்தை உருவாக்கி மன ஓட்டத்தைப் பண்படுத்திட மிகவும் உதவும். வயிற்றுப் புண்ணை, வாய்ப் புண்களை ஆற்ற வல்ல மாமருந்து.
இந்த மாசில் காய் எனும் மாசு இல்லாத காயமானது (காயம் என்றால் தூய தமிழில் உடல் என்று பொருள்) காயாரோகணேஸ்வரர் (நாகப்பட்டினம்) என்னும் பெயர் தாங்கி அருளும் மூர்த்தித் தலங்களில் கிட்டும் மூல காயத்தோடு உபகாயம் ஐக்கியமடையச் செய்யும் அருள் மாமருந்தாகும். மாசில் காயே மாசிக்காய் என ஆயிற்று. மாசிக் காயுடன் ஜவ்வாது, புனுகு, கோரோசனைச் சேர்த்து அரைத்து கம்ப்பூட்டர் சாம்பிராணி அல்லது பெரிய ஊதுபத்தியின் மேல் தடவி காய வைத்து இதன் நறுமணத்தில் மெளன மொழியாக தியானம் செய்வது மிகவும் விசேஷமானதாகும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே மாசிக்காய் தேவாய தீமஹீ
தந்நோ ஜனரஞ்சன ப்ரசோதயாத்
என்னும் மாசிக்காய் தேவதைக்குரிய காயத்ரீ மந்திரத்தை 11 முறை ஓதி மாசிக்காயை பயன்படுத்துவது சிறப்பாகும்.
ஒவ்வொருவரும் மாதம் ஒரு முறையேனும் நிச்சயமாக மெளன விரதம் பூணுதல் உடல், உள்ளம், மன வளத்திற்கு துணை புரியும். மெளன விரதம் பூணும் நாளில் சந்திர மெளலீஸ்வரர், சந்திரசேகர், மனோக்ஞநாதர், மனோன்மணி போன்ற மூர்த்திகள் அருளும் தலங்களில் வழிபடுதல் வெளியில் பிறரிடம் சொல்ல முடியாத மன வாதனைகளை, மன வேதனைகளைத் தணிக்க உதவும்.

விரதமற்றோர்க்கும் விரத பலன்கள்

நம் வாழ்க்கையில் அமையும் ஒவ்வொரு நாளும் மகத்தான தெய்வீகச் சக்திகளைப் பூண்டு வருகின்றன. எங்கும் நிறைந்திருக்கும் இறைவனின் மகத்துவத்தை விளக்கும் வண்ணம், ஆத்ம சக்திகளுடன் பொலிபவையே அண்ட சராசரத்தில், அனைத்துக் கோடி லோகங்களிலும், பூமிகளிலும் துலங்கும் அனைத்து வகை ஜீவன்களும், பொருட்களும் ஆகும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தின் பிணைப்புப் பரல்களாய்த் துலங்கும் பிரபஞ்ச ஜீவன்கள், வஸ்துக்கள், திடப் பொருட்கள் யாவுமே இறைவனின் நிறைவான விரிவே ஆகும். இதனையே இறைவன் அனைத்திலும் உறைகின்றான் என்பதாக ஆனந்தித்துப் போற்றுகின்றோம்.
கலியுகத்தில் கால சக்திகளாகத் தெய்வத்தை உணரும் பாங்கு அதிகம் ஆதலால்தான் வருடம், மாதம், வாரம், நட்சத்திரம், கரணம், யோகம் போன்ற பலவற்றிலும் பூஜை, விரத, பண்டிகை, உற்சவ சக்திகள் நிறைந்து வருகின்றன. பூஜை என்றால் இறைவனை அர்ச்சிப்பது, அமர்ந்து வழிபடுவது என்பது மட்டும் அல்ல. ஹோமம், அன்னதானம் போன்ற தான தர்மங்களும் நல்வகை ஆத்ம விசாரமும், ஆறுகளில், தீர்த்தங்களில் புனித நீராடலும், மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் அளித்தலும் பூஜை வகைகளே.
கலியுக மனிதன் குறைந்த பட்சம் 360 வகையான பூஜைகளைத் தன் வாழ்நாளில் கடைபிடித்தாக வேண்டும். இதற்காகவே கால சக்திகளை, ஏழு நாட்களாகவும், 15 திதிகளாகவும் பிரித்து, ஒவ்வொரு நாளின் மகத்துவத்திற்கேற்பப் பூஜைகளை வகைப்படுத்தித் தந்துள்ளார்கள்.
அகில உலக ஜீவன்களின் நலன்களுக்காகவே, பாரதத் திருக்கோயில்கள் அனைத்திலும், அகில உலகப் பொது நலச் சமுதாயப் பூஜைகளாகவே, பிரதோஷம், மாத சிவராத்திரி என்பதாக, அந்தந்த நாளின் காலத் தன்மைகளுக்கேற்பத் தினமும் நிகழ்த்தப் பெறுகின்றன.



இடையாற்றுமங்கலம் திருத்தலம்

இவ்வகையில் பல விரத சக்திகள் கூடி வரும் நாட்களில் 108 நாகங்களுக்கும் மேல் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பொன்னமராவதி அருகே பேரையூர், காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயம், ஸ்ரீநாகேஸ்வரர் கோயில், நாகர்கோயில் போன்ற நாக சக்தித் தலங்களில் விரதம் பூண்டு வழிபடுதல் விசேஷமான பலன்களைத் தரும்.
பொதுவாக, சந்ததி சந்ததியாக வந்து கொண்டிருக்கும் பலவகைத் துன்பங்களிலிருந்து நற்பூஜைகள், நற்காரியங்கள் மூலமாகப் பரிபூரணமாக நிவர்த்திகளை அடைவதற்கு, இத்தகைய விரத சக்தி நாட்கள் மிகவும் உதவும். மங்கள மகரிஷி தாம் ஆயிரக் கணக்கான விரதங்களைப் பூண்டு, இதன் பலாபலன்களைச் சகல கோடி ஜீவன்களுக்கும், சகல யுக காலங்களின் நல்வாழ்விற்காக அர்பபணித்து வருகின்றார்.

ஸ்ரீநாகநாத சுவாமி
திருச்சி

சூரியனார் கோயில் அருகே உள்ள திருமங்கலக்குடி சிவத்தலமானது மங்கள மகரிஷி வழிபட்ட தலமாகும். இத்தலத்திலும், ஸ்ரீமாங்கல்யேஸ்வரரைத் தினமும் பூஜிக்கும் ஸ்ரீமாங்கல்ய மகரிஷி அருளும் திருச்சி லால்குடி அருகே உள்ள இடையாற்று மங்கலம் சிவாலயத்திலும், லால்குடிச் சிவாலயத்திலும் செவ்வாய் தோறும் மற்றும் பல்விரத சக்தி நாட்களிலும் வழிபட்டு வருதல் மிகவும் அபரிமிதமான விரத பலன்களைத் தர வல்லதாகும். விரதங்களைக் கடைபிடிக்க இயலாதவர்களுக்குக் கூட, விரதமால்ய நற்பலன்களை மிக எளிதில் பெற்றுத் தருவதாகும்.

அமைதியை நிலைநிறுத்துங்கள்

வாழை இலையில் சப்தமி திதி நாளில் அன்னதானம் அளிப்பது மிகவும் விசேஷமானது. காரணம், வாழை இலையில் உள்ள பலவிதமான இணை கோடுகள் கணிதப் பூர்வமாக கணிதக் கருவிகள் கொண்டு வரைவதை விட மிகவும் துல்லியமான ரேகைகளைக் கொண்டிருப்பதால், இவற்றை மித்திர ரேகைகள் என்று உத்தமச் சித்தர்கள் குறிக்கின்றார்கள். எனவேதான், வாழை இலையில் தினமுமே உண்டு வருவது சத்ருத் தன்மைகளைத் தணித்து மித்ருத் தன்மைகளைப் பெருக்கித் தரும்.
நல்ல ஆயுளையும், சாந்தமான வாழ்வையும் தருவதால், வாழை இலையில் சப்தமாதா தேவிகளுக்குப் படைத்து வழிபடுவதற்கு மகத்தான சாந்தபல சக்திகள் உண்டு. இதனால்தான் காய்ந்த வாழை இலைகளைக் கூடச் சருகாக மாற்றி உணவு ஏற்கும் பழக்கமும் கிராமங்களில் நிலவிவருகின்றது.
மேலும், திருமணம், கிரகப்பிரவேசம் போன்ற சுபமங்களக் காரியங்களில் மித்திர வாழை என்ற வகையில் வாழை மரத்தைத் தோரணமாக வாசலில் கட்டி வைப்பார்கள். வாழைக்கு நன்கு விருத்தி செய்து தரும் மித்திரத் தன்மைகள் நிறைந்து இருப்பதால்தான் வாழையடி வாழையாக என்ற சுப வாக்கியம் அமைந்து வருகின்றது.

சப்தமாதர்கள் நகர்

மித்ர சப்தமி நாளிலும், ஒவ்வொரு சப்தமித் திதியிலும் குறைந்தது ஏழு குடும்பங்களுக்காவது, வாழை இலை நிறைய உணவு வகைகளை வைத்துப் படைத்து, அன்னதானம் அளித்து, சப்த மாதர், சப்த கன்னியர்களை வழிபட்டு வருதல் வேண்டும். இது குடும்பத்தில் நல்ல ஒற்றுமையை விருத்தி செய்து தரும்.
சப்தமித் திதியில் சந்தோஷி மாதாவை வழிபடுதல் மிகவும் விசேஷமானது. ஏனென்றால், ஒரு யுகத்தில் ஆதி பராசக்தி தேவி, பூலோகப் பெண்ணாகத் தோற்றம் கொண்டு கோடானு கோடி யுகங்கள் தவம் புரிந்தும் இறை தரிசனத்தைப் பெற இயலவில்லை. இதற்குக் காரணமும் உண்டு. ஏனென்றால், இந்த தேவி தவ வைபவம் மூலம், சந்தோஷி மாதா எனும் புதிய அவதாரத்தை உற்பவித்திட, சர்வேஸ்வரன் கங்கணம் பூண்டிருக்கும் போது அனைத்தும் அவன் இஷ்டப்படித் தானே நிகழும்?
எளிய பெண்ணாய் வந்து பூஜித்த அம்பிகையைச் சுற்றி ஏழு பெண்கள் தேவியையே தம் சத்குருவாக ஏற்று வரித்து, எப்படியேனும் இந்த பால சுந்தரி இறை தரிசனத்தைப் பெற்றிட அரும் பக்தி பூண்டு, அம்பிகையின் அருகிருந்தே கன்னிப் பெண்களாக அருந்தவம் புரிந்தார்கள்.

ஒரு நாள் .... தவத்திலிருந்து மீண்ட தேவி தன்னைச் சுற்றி ஏழு கன்னிப் பெண்கள் உண்ணாது, உறங்காது ஆழ்ந்த பக்தியுடன் தவம் புரிவதைக் கண்டு ஒரு புறம் சற்றே வருந்தினாலும், அவர்களுடைய ஆழ்ந்த வைராக்கியத்தைக் கண்டு மிகவும் சந்தோஷத்துடன் பூரித்த போதுதான் இறைவனே தோன்றி சந்தோஷி மாதா என்ற நாமத்துடன் ஆட்கொண்டான்.
சப்த கன்னிகையரும் சந்தோஷி மாதாவைப் பூஜித்து உலக ஜீவன்களுக்கு சந்தோஷி மாதா வழிபாட்டை அளித்த போது, சப்த மாதர்களாகப் பூரணத்துவம் அடைந்தார்கள். இந்த மித்திர சுப வைபவத்தை மனதில் நிறுத்தி மேற்கண்ட வகையில் சப்தமி திதிநாளில் வழிபட்டு, குடும்பத்தில் நல் அமைதியை நிலை நிறுத்திக் கொள்வீர்களாக!

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam