முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அனுபவப் படிப்பு வேண்டுமே

27 நட்சத்திரங்களில் புனர்பூசம் நல்ல ஞானம், ஞாபக சக்தி போன்ற வித்யா சக்திகளையும், பூரட்டாதி நட்சத்திரமானது கல்வி அறிவியல், அனுபவப் படிப்பையும் தருவதாகும். ஒரு இயந்திரத்தைப் பழுது பார்ப்பதைக் கல்வி மூலமாகவும், அனுபவப் பூர்வமாகவும் அறியலாம் அல்லவா! ஏட்டுப் படிப்பு என்ன தான் உரைத்தாலும், அனுபவப் படிப்புதான் நடைமுறையில் பலன்களைத் தரும். மேலும் எது எந்த அளவிற்கு உடலுக்கு, மனதுக்கு, நாட்டிற்குத் தேவையானது என்றறியும் சிந்தனா சக்தியையும் கொண்டது. பூரட்டாதி நட்சத்திர வளாகத்தில் புத மூர்த்தி சஞ்சரிக்கையில் அறிவுப் பூர்வம் நல்ல திறத்துடன் விருத்தியாகும்.
புத மூர்த்தி பூரட்டாதி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும்போது, சத்குருவின் மூலமாக அனுபவப் படிப்பைப் பெற நல்வாய்ப்புகள் உருவாகும். தேவையான அளவு மன வளத்தையும், நாட்டிற்கான பொருள் வளத்தையும் அளிக்க வல்லது. பூரட்டாதியில் ஹோமம் நிகழ்த்துதல் முறையான நல்வளத்தைத் தரும்.
பூரட்டாதி நட்சத்திர தேவி கோ பூஜையில் சிறந்தவள். இந்நாளில் காராம் பசுவைக் கன்றுடன் சற்றுச் சுடுநீரில் நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு, முழுத் தாமரை மலர்களாலான மாலையைச் சார்த்தி வலம் வந்து பூஜித்து வணங்கி, பசுவின் காலடி பட்ட கோதூளி மண்ணை நெற்றியில் பிரசாதமாக இட்டுக் கொள்தல் மிகவும் விசேஷமானது. அவரவர் கல்வித் துறையில், தொழிலில் துறையில் முறையான வளம் பெற உதவும்.

ஆடுகள் அறியும் ஆன்மீகம்

பெளர்ணமி மற்றும் அமாவாசையை அடுத்து வரும் பிரதமை திதிகள், உள்ளம், மனதைச் சுத்திகரிக்க வல்ல பகுளாதிபத சக்திகளையும், சித்சுத்தி சக்திகளையும் அளிக்க வல்லனவாகும். ஏனெனில், வளர்பிறையிலான அமாவாசையை அடுத்து வரும் பிரதமைத் திதியானது, சித்சுத்தி சக்திகளுடனும், தேய்பிறையிலான பெளர்ணமியை அடுத்து வரும் பிரதமை, பகுள சக்திகளுடனும் பொலிகின்றன என்பதைப் பலரும் அறியார்.
பெளர்ணமியன்று சந்திரன் பூரித்து நிறைகையில், சந்திர மூர்த்தியின் அமிர்தக் கிரணங்களால் உலகில் பல்வகை ஜீவன் மற்றும் பல அம்சங்களும் நன்கு சுத்திகரிப்பு ஆகின்றன. உதாரணமாக, மனித உடலில் உள்ள 72,000 நாளங்களிலும் அமிர்தமயமாகச் சுத்திகரிப்பு நீரோட்டம் பிரதமை நாளில் வந்தமையும். இதே போன்று, அமாவாசை அன்று சூரியச் சந்திர சங்கமத்தில் கிளைக்கும் அக்னிப் பராந்தக சக்திகளும், பூமியில் நற்காரியங்களை நிகழ்த்துவதற்கான பகுள சக்திகளாகப் பிரதமை அன்று ஆலயங்களின் பலி பீடங்களிலும், சித்தர்கள், மகான்கள் ஜீவ சமாதிகளிலும் நிரவுகின்றன.
இதனால்தாம் பெளர்ணமியை அடுத்து வரும் பிரதமை அன்றும், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை பிரதமை அன்றும் ஜீவாலயங்கள், ஜீவ சமாதிகள், குரு மூர்த்தங்கள், அதிஷ்டானங்கள், பிருந்தாவனங்கள் போன்ற சித்தர்கள், மகரிஷிகள், ஞானிகள், யோகியர் தம் உடலை உகுத்த இடங்களில் மிகவும் சிறப்பான விருத்தி சக்திகள் நிறைந்த ஆசீர்வாத கிரணங்கள் பூரிக்கின்றன.
மக நட்சத்திரத்திற்கு புண்ணிய நதி தேவதா மூர்த்திகளையும் சுத்திகரிக்கின்ற மகத்தான நீரோட்ட சக்திகளை இறைவன் அளித்துள்ளான் அல்லவா! இதனால்தான் வருடந்தோறும் வரும் மாசி மாத மக நட்சத்திர நாளில் இறை மூர்த்திகளே தீர்த்தவாரி கொள்வதும், திருஅண்ணாமலையில் அருணாசலேஸ்வரரே வல்லாள மகாராஜாவிற்கு திதி, தர்ப்பணத் தீர்த்தம் அளிப்பதும் இன்றும் என்றுமாய் நிகழ்ந்து வருகின்றன.

ஸ்ரீஜகதீஸ்வரர் திருத்தலம்
மணமேல்குடி

இதே போல, பெளர்ணமித் திதியில் பூவுலகிற்கு வரும் பித்ருக்களும், மறுநாள் பிரதமை அன்று புண்ணியத் தீர்தங்களிலும், ஜீவாலயங்களில் பூஜிக்கின்றனர்.
பிரதமை நாள் தோறும் சந்தான விருத்தி என்பதான சந்ததி நன்கு தழைப்பதற்கான நல்வரங்களைச் சித்திக்க வைக்கும் பகுள சக்திகள் பல முக்கியமான இடங்களிலும் பரிமணமிப்பதால், இந்நாளில் ஜீவாலயங்களில் தேன் அபிஷேகம் செய்து வழிபடுதல் பகுள சுத்திக் கிரணங்களை பூமியில் நிரவ வைப்பதாகும்.
நெரூர் ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் ஜீவ சமாதி, சிங்கம்புணரி ஸ்ரீவடுக நாதச் சித்தர் வாத்யார் ஐயா ஜீவ சமாதி, மந்த்ராலாயம் ஸ்ரீராகவேந்திரர் சுவாமிகள் ஜீவ சமாதி போன்ற ஜீவ சமாதிகளில் இந்நாட்களில் அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்துவது விசேஷமானதாகும்.

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் ஜீவாலயம்
நெரூர் கரூர்

ஆடுகளுக்கு ஜீவ சமாதிகளை அறிந்துகொள்ளும் பக்குவம் நிறையவே உண்டு. இதனால்தான் சித்தர்களின் வாழ்க்கை அனுபூதிகளில் ஆட்டிடையர் சம்பந்தமான தெய்வீக நிகழ்ச்சிகளும், ஆடுகளின் உயரிய பங்கும் நிறையவே வரும். ஆலயத் தூண்களில் ஆடுகளின் உருவங்கள் இருப்பின், அவ்வாலயத்தில் சித்தர்களின் போக்குவரத்து நிறைய உண்டு என்று பொருள்.
தினமும் ஆட்டுப் பாலை உண்டு வருவது பல அரிய ஆன்மீக சக்திகளை மிக எளிதில் பெறுகின்ற நல்மார்க்கமாகும்.
கோடிக் கணக்கான மக்களைத் தம்முடைய உத்தம சத்திய சக்தியால் வசீகரித்த மகாத்மா காந்தி அவர்கள், ஆட்டுப் பால் மூலமே பெறுதற்கரிய ஆன்ம சக்திகளைப் பெற்றிட்டார். பிரதமைத் திதி நிறையும் நாளில் ஆடுகளுக்கு மிகவும் விருப்பமான புல் தழைகளை அளித்து, குறிப்பாக, உடல், தலை முழுதுமாக வெண்ணிறமாக உள்ள ஆட்டினை, அதன் குட்டிகளுடன் மிதமான வெந்நீரில் நன்கு நீராட்டி, மஞ்சள் குங்குமம் இட்டு போஷித்துப் பூஜித்தலால், எந்த விஷயத்தில் மனம் சுத்தி அடையாமல் இருக்கிறதோ அதில் சுத்தி பெற கூடிய விரைவில் வாழ்வில் நல்வழிகள் பிறக்க செவ்வாய் பகவானின் ஆசிகள் கூடி வரும்.
பிரதமைத் திதியில் ஆடுகளைப் பூஜித்தல் பகுள சித்சக்திகளை ஊட்டுவிக்கும்.
பல கன்றுகளை ஈன்ற பழுத்த பசு மாட்டின் தலைச்சன் கன்றுப் (இது பெரிய பசுவாக கூட வளர்ந்திருக்கக் கூடும்) பசுவின் குளம்படி மண்ணைத் தாய்ப் பசுவின் குளம்படி மண்ணுடன் சேர்த்து, ஒரு மண் அகலில் வைத்துப் பிரதமை அன்று பூஜித்தலால், சந்ததிகள் இன்றி வருந்துவோர் தம் சந்ததிகள் தழைக்க நல்வழி காட்டப் பெறுவர்.

ஸ்ரீநாராயண தீர்த்தர் ஜீவசமாதி
திருப்பூந்துருத்தி

திருப்பூந்துருத்தி திருத்தலத்தில் நாராயண தீர்த்தர் என்ற உத்தமர் வாழ்ந்து வந்தார். அவர் ஒரு சிறந்த மகான் என்று அறியாத காலம். ஒரு ஏழை விவசாயிக்கு இருந்த ஒரே ஆடும் திடீரென இறந்து விடவே அதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அந்த விவசாயி வரப்பில் அமர்ந்து கொண்டு ஓவென்று கதறி அழ ஆரம்பித்தான். அவ்வழியே சென்ற நாராயண தீர்த்தர் அவனிடம் விசாரித்து இறைவனை வேண்டி அந்த ஆட்டை மீண்டும் உயிர்ப்பித்தார். எல்லையில்லா ஆனந்தம் அடைந்த விவசாயி மகானின் அற்புத செயலை ஊர் மக்கள் அனைவரிடமும் சொல்ல ஆரம்பித்தான். அவனுடைய வார்த்தைகளை நம்ப மறுத்த சில சிறுவர்கள் ஒரு சிறுவனை பாடை மேல் படுக்க வைத்து வேண்டுமென்றே ஊர்வலமாக அந்த சிறுவனை எடுத்துச் சென்று நாராயண தீர்த்தரிடம் காண்பித்தனர். “அவனுக்கு உயிர் உண்டாக்க முடியுமா?” என்று ஒன்றுமறியாதவர்கள் போல் அவரிடம் கேட்டனர்.

அனைத்தையும் அறிந்த மகானிடம் விளையாடலாமா ?

தீர்த்தரோ, “டேய் செத்தவன் செத்தவன்தான், ஒன்றும் செய்ய முடியாது...”, என்று கூறவே அந்தச் சிறுவர்களும் சிரித்துக் கொண்டே அந்தச் சிறுவனை எழுமாறு கூறினர். ஆனால், என்ன ஆச்சரியம், அந்தச் சிறுவன் மீண்டும் எழவே... இல்லை. பயந்து நடுங்கிப் போன சிறுவர்கள் மகானின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டனர். தன் தாய்க்கு ஒரே மகனான அந்தச் சிறுவனுக்கு மீண்டும் உயிர்ப் பிச்சை அளிக்குமாறு வேண்டினர்.

தீர்த்தர் மறு பேச்சு கூறாமல் அவ்விடத்தை விட்டு அகன்றார்...
செத்தவன், செத்தவனாகவே ஆனான் ...
நாரயண தீர்த்தர் தம் கையால் வளர்த்த பவளமல்லி மரம் இன்றும் அந்த உத்தம மகானின் புகழை பரப்புவதாக, செல்வத்தை வாரி வழங்குவதாக அவ்விடத்தில் செழித்து நிற்கிறது.

இங்கு உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். ஒரு ஆட்டைப் பிழைக்க வைத்த மகான் ஏன் ஒரு மனிதனைப் பிழைக்க வைக்க வில்லை ? அந்த ஆடு தன் பூர்வ ஜன்ம கர்ம வாசனையால் திருப்பூந்துருத்தியை வலம் வந்து திருப்பூந்துருத்தி இறைவன் திருவடிகளிலேயே தன் உயிரை அர்ப்பணித்தது. இந்த உத்தம பக்தனின் பிரார்த்தனையையே நிறைவேற்றினார் நாராயண தீர்த்தர்.

எங்கே ஸ்திரமாக இருக்க வேண்டும் ?

வாரத்தின் ஏழு நாட்களிலும் நாமறியாத வகையில், எண்ணற்ற தேவாதி தேவ தெய்வீக சக்திகள் நிறைந்துள்ளன. நம் வாழ்நாளில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும், ஒவ்வொரு நிமிஷமும் மிக, மிக முக்கியமானது, இதனை அதாவது காலத்தின் மகத்துவத்தை நாம் முதலில் நன்கு உணர்ந்து வாழ்வில் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பலரும் காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்கும் மேலாக, பாதி வாழ்க்கையை அலுவலகத்திலேயே கழிக்க வேண்டிய நிர்பந்தம் கலியுகத்தில் ஏற்பட்டுள்ளது. இவர்கள் சனிக் கிழமை தோறும் குளிகை நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்குப் புனுகு சார்த்தி, முழு முந்திரிகளாலான மாலையைச் சார்த்திப் பூஜித்து வந்தால், காலப் பிரவேச சக்தியை உணரும் சக்திகளைப் பெறுவர்.
மது, புகை, சினிமா, கேளிக்கைகள், தேவையில்லாத டிவி நிகழ்ச்சிகளைப் பார்த்து, நேரத்தை விரயமாக்குதல் இவற்றைத் தணித்தும், நேர விரயத்தை நீக்க உதவவும், காலத்தை வீணாக்காது நன்கு பயன்படுத்திக் கொள்ளும் திறனைப் பெறவே சனிக் கிழமையிலான பைரவ வழிபாடு உதவும்.
மாங்கல்ய சக்தி, ஆயுள் சக்தி, ஆரோக்ய சக்தி போன்ற பலவும் ஸ்திரமாக, நன்கு வாழ்வில் நிலை பெற்றிருக்க வேண்டும். ஒரு நாடு வளமுடன் திகழ, அரசு, சமுதாய அலுவலக இயந்திரங்கள், வளர்ச்சி, உற்பத்தி போன்ற பலவும் ஸ்திரமாக இருக்க வேண்டும். இதற்காகவே சனிக் கிழமை தோறும் மக்கள் சமுதாயநல இறையருட் பூஜையாகப் புண்ணிய நதிகளில் இலைகளில் அகல் விளக்கேற்றி நீரோட்ட உற்சவமாக நிகழ்த்தி வழிபட வேண்டும்.

வாஸ்து சக்தி தீர்த்தம்
பொன்னகரம், மணமேல்குடி

கலியுக மனிதனுக்கு ஒரு கால் மணி நேரங் கூட மனம் நிலையாக இருப்பதில்லையே! வாழ்வில் வளம் பெற மனம் நன்கு ஸ்திரமாகவும், மன சக்திகள் நன்கு தீர்கமாக அமைந்திடவும் வேண்டுமன்றோ! மனம் அலை பாயாது ஸ்டெடியாக இருந்தால்தானே நல்ல முடிவுகளை எடுக்க முடியும்! இதற்கான பலன்களைத் தர வல்லதே சனி வார உண்ணா நோன்பாகும்.
எனவே, சனிக் கிழமைக்கு ஸ்திர வாரம் எனப் பெயர் வரக் காரணம், சாசுவதமான நற்பலன்களைத் தரக் கூடிய, மனித ஜீவ வாழ்க்கைக்குத் தேவையான பூஜை பலன்கள், தீர்த்த நீராடல் பலன்கள், பல்வேறு ஆலய தரிசனப் பலன்கள் போன்றவற்றைப் பொழிய வல்ல விரத நன்னாள் என்ற அர்த்தத்திலும்தான்!
மஹாப் பிரதோஷ நாளாக, பிரபஞ்சத்திற்கே பிரதோஷ பூஜையை முதன் முதலாக அளித்த பெருநாளே சனிக் கிழமை என்பதால்தான் சனிப் பிரதோஷ பூஜை ஆயிரம் மடங்கு பிரதோஷ பூஜா பலன்களை அளிப்பதாகும். உண்மையில், தினமுமே மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை தினசரிப் பிரதோஷமாக, நித்யப் பிரதோஷ நேரமாக அமைவதால், சனிக்கிழமை மாலையை மஹாப் பிரதோஷமாக பாவனை செய்து, சனி தோறும் மாலையில் ஸ்ரீநந்தீஸ்வரருக்கான பூஜைகளை ஆற்றி வருதலால், பெண்ணுக்கு நல்ல திருமண வாழ்க்கை அமைய மிகவும் உதவும். திருமணம் ஆகியும் திகைப்புடன் வாழும் மகள், மகன் நல்வாழ்வு பெற சனிக் கிழமைக்கான நித்யப் பிரதோஷ பூஜைகளைச் சுயம்பு லிங்கத் தலத்தில் ஆற்றி வருவது மிகவும் விசேஷமானதாகும்.
நவகிரக மூர்த்திகளில் ஈஸ்வரப் பட்டம் உடையவரும், ஆயுள் சக்திகளை அளித்துக் கோள்களிலேயே ஆயுள்காரகாராக மிளிர்பவருமான சனீஸ்வரருக்கு மிகவும் ப்ரீதியான நாளும் சனிக் கிழமை என்பதால், தனித்துச் சன்னதி கொண்டருளும் சனீஸ்வரருக்கு, சனிக் கிழமையில் தைலக் காப்பு இட்டும், சனியன்று நாள் முழுதும் தீபம் பிரகாசிக்கும்படி தூண்டா விளக்கு ஏற்றி வைக்கும் அறப் பணியை ஆற்றுவது, தாய் அல்லது தந்தை மட்டும் தனித்திருக்க அல்லது சேர்ந்து வாழும் குடும்பங்களில் உள்ள மனஸ்தாபங்கள் தீர உதவும்.
மிருத்யு சக்திகளை நல்வரங்களாகப் பொழிந்து, துர்மரணம், இளவயது மரணம், விபத்தால் இறப்பு போன்றவற்றில் உள்ள மிருத்யு தோஷங்களைத் தணிப்பதற்கும் நீக்குவதற்கும் சனிக்கிழமையிலான பூஜைகள் மிகவும் துணை புரிவதால், சனி தோறும் ஆற்றப் பெறும் எண்ணெய், சீயக்காய் தானம் சிறப்புடையதாகும்.
விமானப் படைப் பணி, விமானத் துறைப் பணி, கப்பல் பிரயாணம், சுரங்கப் பணி போன்று ஆபத்தான துறைகளில் மிருத்யு தோஷம் அண்டாமல் காத்தலுக்கு உரிய மிருத்யுஞ்ஜய ஹோமம், வழிபாடுகளுக்கு ஏற்ற மகத்தான பூஜை நாள் சனிக் கிழமையே ஆகும்.
சந்ததிகள் தழைப்பதற்கான பிண்டத் தர்ப்பணப் பூஜைக்குரிய திருநாளும் ஸ்திரமான சனிக் கிழமையே!
தாவரங்களைப் படைக்கும் ஸ்ரீசாகம்பரீ தேவியே கருங்குவளைப் புஷ்பத்தை சனிக்கிழமையில்தான் தோற்றுவித்து, இந்நாளுக்கு ஆயுள் விருத்தி சக்திகளை, சனீஸ்வரரை கருங்குவளைப் புஷ்பங்களால் அலங்கார, அர்ச்சனைப் பலன்களாக உணர்வித்த திருநாள்
மனதை இருட்டாக்கும் பீதிகளை, மனோபயங்களைப் போக்கிட, கிருஷ்ண பிங்கள சக்திகள் எள்ளில் நிரவி வந்து எள் வகை ஹோமம் (தில ஹோமம்) நிகழ்த்திட உகந்த நாளும் சனிக் கிழமையே!

ஹஸ்தமாகிய கைகளில் உள்ள உள்ளங்கை ரேகைகள் ஆயுள் சக்திகளைத் தீர்கமாக அளிக்க வல்லவையாகும். எனவே ஹஸ்த நட்சத்திரம் கூடும் சனிக் கிழமைகளில் உள்ளங் கை ரேகைகள் பதியும் வகையிலான,
* சந்தனம் அரைத்துத் தருதல்
* மருதாணி அரைத்து, பெருமாளுக்கு, சனீஸ்வரருக்கு இடுதல்
* விரதமிருந்து உள்ளங்கைகளை இணைத்தவாறு நாள் முழுதும் பெருமாள், சனீஸ்வரத் துதிகளை ஓதுதல்
* ஏழ்மை நிலையில் இருக்கும் கை ரேகை சாஸ்திரக்காரர்களுக்கு உதவுதல்
* கிளி ஜோஸ்யக்காரரிடம் உள்ள கிளிகளுக்கு நல் பழங்கள், தானியங்களை அளித்தல்
* எள் வகைப் பண்டங்களைக் கால் ஊனமுற்றவர்க்கு அளித்தல்
* காக்கைகளுக்குப் பிரியமான வடைகளை வயிறார அளித்தல்
இவற்றைச் சத்சங்கப் பூர்வமாக சனிக்கிழமை தோறும் ஆற்றி வந்தால், வாழ்வில் எந்தத் துறையில் ஸ்திரத் தன்மை தேவையோ (வேலை, வீடு, நிலம் போன்றவை) அதில் நல்லனவும் மனப் பூர்வமாகக் கிட்டிடவும் ஹஸ்தம் கூடும் சனிக் கிழமைப் பூஜைகள் மிகவும் உதவும்.

மனத்தை வருத்தும் மானப் பிரச்னை

சங்கடங்களைக் களைகின்ற சதுர்த்தித் திருநாளாகிய, பெளர்ணமியை அடுத்து வரும் நாலாம் திதி நாளாகிய சங்கட ஹரச் சதுர்த்தி நாள், மாதம் ஒருமுறை தான் வருகின்றதெனில், ஏனைய தினங்களில் என் செய்வது என்று பலரும் எண்ணிடலாம். துன்பங்கள் அகல மட்டுமே இறை வழிபாடு என்று பலரும் கருதுவதால்தான், இந்த ஒரு நாளில்தான் சங்கடங்கள் அகலும் என்று பலரும் எண்ணுவதோடு, இறைமையைப் பற்றிய இவ்வகைக் குறுகிய எண்ணங்களினால்தாம் தெய்வீக சக்திகளின் மகாத்மியத்தைப் பலராலும் எளிதில் உணர்ந்து கொள்ள முடிவதில்லை. துன்பங்களுக்கான காரணங்களை முதலில் உணர்ந்து தெளிவதுதான் சங்கடங்களைத் தீர்ப்பதற்கான மூலாதார வழிமுறை ஆகும்.
பலரும் இறைவழிபாடுகளின் மூலம் துன்பங்கள் எவ்வாறு களையப்படுகின்றன, இதற்கு மேலும் இறைவழிபாடுகள் எவ்வகைகளில் எல்லாம் துணை புரிகின்றன என்ற தெய்வாம்ச வழிமுறைகளை நன்கு அறிய முயல்வதில்லை. இதனால்தான் இறைதரிசனமும் எளிதில் கிட்டியும் அடைய முடியாததும் ஆகி விடுகின்றது. இறைவன் கடலளவில் அனுகிரகங்களை அள்ளித் தரக் காத்திருக்கையில், அருளாசிகளைப் பெற, கலியுக மனிதன் மேற்கண்ட தவறான எண்ணங்களுடன் ஒரே ஒரு உத்தரணியை (ஸ்பூன்) மட்டுமே எடுத்து வந்தால் என் செய்ய முடியும்?
சங்கடஹர சதுர்த்திப் பூஜைக்கான சங்கல்பம், தலைமுடிப் பிரார்த்தனை, அங்கப் பிரதட்சிண நேர்த்தி போன்றவற்றில் உடல் உழைப்பு, முயற்சி, கடினமான நடை மற்றும் பொருள் செலவு போன்றவற்றில் சில தியாகமயமான புண்ணிய காரியங்கள் நிகழ்கின்றன. சேர்த்து வைக்கும் பொருளில், ஒரு பகுதியை கோயில், யாத்திரைச் செலவு, பூ, பழம், தேங்காய் வாங்குதல் எனச் செலவழிக்கையில், பிறருக்கும் வியாபாரம் எனப் பலரும் வாழும் வழி வகைக்கு உதவுவதன் மூலம், இதில் சிறுசிறு புண்ணிய சக்திகள் திரள்கின்றன. எனவே சிறு சிறு கிராம ஏழைகளை ஊக்குவிக்கும் வண்ணம் ஓலை விசிறி, பாய், அகல் போன்றவற்றை அவ்வப்போது, வாங்கி, வாங்கிப் பிறருக்குத் தானமாக அளித்து, இச்சிறு தொழில்களைப் போஷித்து வர, நன்கு உழைக்கும் ஏழைகளின் மனம் குளிர்ந்தால்தானே நாடும் நன்கு சுபிட்சமடையும். மக்களுடைய மனமும் ஆன்மீகப் பூர்வமாகவும் விசாலமாகும்.

ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் ஆலயம்
பொன்னகரம், மணமேல்குடி

தான, தர்மம், பரிகாரப் பிராயச் சித்த பூஜைகள், நேர்த்திப் பிரார்த்தனைகள், குல தெய்வ பூஜைகள் - போன்றவை யாவும் முதலில் அவரவருடைய துன்பத்திற்கான மூலாதாரக் காரணங்களை மறைமுகமாக உணர்வித்து, அவரவருடைய பூர்வ ஜன்ம உறவுகளுடன் எவ்வகையிலேனும் தொடர்புகளை ஏற்படுத்திச் சில காரியங்களை ஆற்றி, பழவினைக் கர்மங்களைத் தணிக்கும் மார்கமாகவும் நன்கு உதவுகின்றன. இவை யாவும் பிரார்த்தனைகளில் நிறைந்திருக்கும் ஆன்மீக ரகசியங்களும் ஆகும்.
சிதறுகாய் உடைத்தல், அர்ச்சனைப் பொருட்களை வாங்குதல், கோயில் யாத்திரைப் பயணம் முதல், தான, தர்மம் வரை, ஆங்காங்கே பணத்தைச் செலவழிக்கையில் இதுவே பலருக்கும் நல்வகை வருமானமுமாகி பஸ் டிரைவர், கணடக்டர், பஸ் உரிமையாளர், பூ, கற்பூரம், தேங்காய், பழ விற்பனையாளர், தான தர்மங்களைப் பெறுபவர் - என்றவாறாக,
சமுதாயத்தின் பலவேறு வகையினரும், இவற்றின் மூலம் பயனாவதோடு இதில் புலரும், பலரும் அறியாத ஆன்மீக ரகசியங்கள் யாதெனில் இக்காரியங்களில் நீங்கள் சந்திக்கும் அனைவருமே பூர்வ ஜன்மப் பூர்வமாக உங்களுடன் கர்ம பாக்கி தொக்கிய நிலையில், உங்களுடன் பூர்வ ஜன்ம உறவு, சுற்றம், நட்பு கொண்டவர்களே.
மேலும் சுவாமிக்கு நீங்கள் அளிக்கும் தேங்காய், பழம், புஷ்பம், நேர்த்தி முடி - யார் யாரை, எவரைச் சென்று அடைகின்றதோ, அவர்களுக்கும் உங்களுக்கும் உள்ள பூர்வ ஜன்மத் தொடர்புகள் மூலம், பல கர்ம வினை பாக்கிகளும் ஓரளவேனும் தீர்வதால், துன்பத்திற்குக் காரணமான - தொக்கி நிற்கும் பழவினைகள் தீர்ந்து காரியத் தடங்களும் நிவர்த்தி ஆகின்றன. மேலும், மேற்கண்ட காரியங்களில் விளையும் புண்ணிய சக்திகளில் தாம் பித்ருக்களின் ஆசிகளும் நன்கு திரண்டு வந்து உதவும்.

ஸ்ரீநரமுக விநாயகர்
திலதைப்பதி

இவ்வாறு ஞாயிற்றுக் கிழமையில் கூடி வரும் சங்கட ஹரச் சதுர்த்தியன்று, சூரிய மண்டலத்தில் சூரிய மூர்த்தியால் வழிபடப் பெறும் மானுட வடிவிலான ஆதி விநாயகரின் அருளையும் பெற்றுத் தருகின்றது. திருச்சி மலைக் கோட்டை அருகே நன்றுடையான் கோயிலிலும், மயிலாடுதுறை - பூந்தோட்டம்- பேரளம் அருகில் உள்ள (கோயில்பத்து) திலதைப் பதியிலும், மானுட வடிவில் (நரமுகப்) பிள்ளையார் அருள்கின்றார். இவ்விநாயகர் மகத்தான சூரிய காந்த சாந்த சக்திகளைப் பூண்டவர் ஆதலின்,
* தந்தை வழிச் சொத்துக்களில் உள்ள பிணக்குகளை நீக்கிடவும்,
* பெற்றோர்கள் - பிள்ளைக்கிடையே நல்லிணக்கத்தையும் தோற்றுவிக்கவும் உதவுகின்றார்.

சங்கடங்களைக் களையும் ஸ்ரீகிரிஜாத்மஜ விநாயகராக, (மஹாராஷ்டிர மாநிலத்தில் புனா அருகே - அஷ்ட விநாயக மூர்த்தங்களுள் ஒன்று) சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகப் பெருமாள் அருள்கின்றார்.
கிரி என்றால் மலை என்று மட்டும் பொருள் அல்ல. கிரி என்பதற்கு, அனைத்துத் துன்பங்களையும் ஒரு சேர இயக்கி மாற்ற வல்லத் தக்க புண்ணிய வழி, புனிதமான மார்க்கம், தெய்வசாரப் புலம், யோக மார்க்கம் என்றெல்லாம் பல அர்த்தங்கள் உண்டு. காரைக்குடி அருகே மானகிரி என்ற சிவத் தலத்தில் ஸ்ரீகண்டீஸ்வரச் சுயம்பு மூர்த்தி அருள்கின்றார்.
பணக் கடன்கள், உடல் தூய்மையின்மை, மானப் பிரச்னைகள், கோர்ட் வழக்குகள், பங்காளிச் சண்டை, கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமை, அவமானப்படுத்தப்படுதல் போன்றவற்றில் நிலவும் மானம் சம்பந்தமான பிரச்னைகளில் பலரும் மானம் இழந்து தவிக்க வேண்டிய நிலைகளில்,
அனைத்து வகை அவமானங்களையும் ஒரு சேரத் தீர்க்கும் உத்தமச் சிவாலயப் புண்ணிய பூமியே மானகிரி ஆகும்.
மானம் சம்பந்தமான சங்கடங்களைப் போக்க வல்ல சதுர்த்தித் திருநாளிலும், பிரதோஷத்திலும், சங்கு வடிவத்தில் தீர்த்தக் குளம் உள்ள இங்கு, சனிப் பிரதோஷப் பூஜைகளை ஆற்றுதலும் கோர்ட் வழக்கில் உள்ள கடன் மற்றும் மானப் பிரச்னைகளையும் தீர்த்து வைக்க உதவும்.

மனதிற்கும் ஆயுள் தேவையே

என்று சூரியன் மேற்கே உதிக்கின்றதோ, அதுதான் கலியில் அதர்மங்கள் முற்றி மீளா நிலைக்குச் சென்று, கலியுக முடிவிற்கும், கல்கி அவதாரத் தோற்ற லீலைகளுக்கும் ஆயத்தமாகி உள்ளது என்ற நிலையைக் குறிக்கும் பொருளாகும்.
ஆனால், ஏனைய கிரகங்களும் மேற்கே உதிப்பதுண்டு. சூரியன் மேற்கே உதிப்பது கலிக் கால முற்றுதலைக் குறித்தாலும், ஏனையக் கிரக மேற்குத் திசை உதிப்பிற்கும் கலியில் நிறைய காரணங்கள் உண்டு. இவ்வாறு புத கிரகம், மேற்கில் உதயம் கொள்ளும் நாட்கள் மக்களுக்கு மனோ சக்தியை அளிக்கவல்லவை ஆகும். இந்நாட்களில் நறுமணப் புஷ்பங்களால் புத மூர்த்திக்கு பச்சை நிறப் பட்டு வஸ்திரத்தில் கிரீடம் கட்டி அணிவித்து வழிபடுதல் மனமடங்க உதவும். மன முதிர்ச்சி இல்லாமையால் இள வயதிலேயே கண்டதும் காதல் எனவும் மற்றும் தீய வழக்கங்களின்பால் செல்லும் பிள்ளைகள் திருந்திட புத வார பூஜை அவசியமானது.

குறைகேள் நந்தீஸ்வரர்
கடுவெளி சிவத்தலம்

மனதிற்கு அதிபதி சந்திர மூர்த்தி. புத்திக்கு அதிகாரகர் புத மூர்த்தி. வாழ்வில் தினமுமே மனதும் புத்தியும் ஒருங்கிணைந்து செயல்படுதல் வேண்டும் அல்லவா! ஆயுள் சக்தி தீர்கமாக பொலிந்தால்தான் புத்தியும், மனதும் பண்படும் வகையில் செயலாற்ற முடியும். இல்லையெனில் வாழ்க்கையில் விரக்தியும், தற்கொலை எண்ணமுமே பெருகும்.
எதற்குமே தற்கொலை ஒரு தீர்வு அல்ல. ஒவ்வொரு விநாடியும் பேய் வகைகள் துரத்தித் துரத்தி வதைக்கும் மகா கேவலமான ஆவி வகைச் சரீரமே தற்கொலையில் வந்து சேரும். இதிலிருந்து மீண்டு ஒரு புழு வகைப் பிறவியைப் பெறுதலும் கூட மிக மிகக் கடினமே! தற்கொலை செய்து கொள்பவர்கள் எண்ணற்ற பல லட்ச வருடங்களுக்கு துர் ஆவிகளாக அலைந்து திரிவர். எனவே தற்கொலை என்பது மிகவும் கொடூரமான, தீர்வே இல்லாத ஆவி வகை நிலை என்பதால், தற்கொலை ஒரு பெருங் கொலைக் காரியமே, இறைவனளிக்கும் மனிதப் பிறவிப் பிரசாதத்தைக் கடவுளிடமே விட்டெறிவது போலானதே தற்கொலை.

ஸ்ரீசனீஸ்வரர் கோனேரிராஜபுரம்
திருநல்லம்

புத்தியும், மனமும் நன்கு நிலவ உதவும் ஆயுள் தீர்க்க சக்தி என்பது, நீண்ட ஆயுள் மட்டுமன்றி, ஆரோக்கிய சக்திகள், தெளிந்த மனம், நல்ல புத்தியுடனும் பிரகாசிப்பதாகும். இவ்வாறு பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து பொலிந்தவரே பீஷ்மாச்சாரியார். எனவே தினமும், பீஷ்மருக்குக் காலையில் சூரிய உதய நேரத்தை ஒட்டித் தர்ப்பணம் அளித்து வந்தால், தீய வழக்கங்கள் தாமாகவே விலகி, மனமும், புத்தியும் பண்படும்.
எனவே, பெற்றோர்களே முன்னின்று பிள்ளைகளுடன் சேர்ந்து பீஷ்மருக்குத் தினமும் அர்க்யம் அளித்துக் குடும்பத்தைப் பண்புள்ள குடும்பமாக ஆக்கிட வேண்டும்.  
உடலுக்கு ஆயுள் சக்தி இருப்பது போல மனதுக்கும் தீர்க்க ஆயுள் சக்தி தேவை. இதைத் தருவதே திங்களும் கரிநாளும் கூடும் நாளில் இயற்றும் வழிபாடுகளாகும்.. ஏனென்றால், ஒரு மனிதன் உறங்கியவுடன் உடல் பொறிகள் ஓய்வு கொள்ள, பல்வகை மனப் பொறிகள் பணி புரிவதால், மனதிற்கும் தீர்க்க ஆயுள் சக்தி தேவையே!
வெண்மை நிறம் திங்களாகிய சந்திர மூர்த்திக்கு உரியது. கும்பகோணம் அருகில் கோனேரிராஜபுரத்தில் மிகவும் அதிசயமாக, அற்புதமாக, ஆனந்தமாக சனீஸ்வரருக்கு வெள்ளை வஸ்திரம் சார்த்தப்படுகின்றது. எனவே, திங்களன்று வரும் கரிநாளில், இவ்வரிய வெண் சாமவேதபுல சனீஸ்வர சக்தித் தலத்தில் சனீஸ்வரருக்கு வெண்பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபடுவதால்,
மன நிலைகளால் பாதிக்கப்பட்டோர், தற்காலிக மறதி நோய், மற்றும் மன பீதிகள், அச்சங்களால் பாதிக்கப்பட்டோரின் துன்பங்கள் ஓரளவு தணிவும், தக்க தீர்வு பெறவும் நல்வழி முறைகளும் கிட்டும்.

மெளன விரதம், உண்ணா விரதம் சனீஸ்வர பூஜைகளுடன் கூடிய கரிநாளில் அமையும் திங்கட் கிழமை பூஜைகள் மிகவும் சக்தி வாய்ந்தவையாம்.

வீட்டிற்கும் உண்டு ஆயுள் சக்தி

செவ்வாய் கிரக அம்சங்களான வீடு, வாசல், நில புலம், வேலை, நோய்த் தன்மைகள், நோய் குணமாகும் அம்சங்கள், திருமண தோஷ நிவர்த்தி, துர்க்கா பூஜா பலாபலன்கள் போன்றவை சம்பந்தமான பலவும் செவ்வாய் ஹோரை, செவ்வாய் கிரகம், செவ்வாய்க் கிழமையில் கர்ம வினைப் பரிபாலனம் பெறுவதாக அமைகின்றது. எனவே கரிநாளும் செவ்வாயும் கூடும் நாளில் முதலில் பீஷ்மத் தர்ப்பண அர்க்யம் அளித்து, நில வகைப் பூஜைகளை ஆற்றல் நன்று.
சனிக் கிழமை அமையும் பிரதோஷம் மகாப் பிரதோஷம் ஆவது போல செவ்வாய் அன்று அமையும் வாஸ்து நாள் மகா குஜ வாஸ்து நாளாகச் சித்தர்களால் போற்றப்படுகின்றது. இந்த வகையில் எந்நாளில் இவ்வகை மஹாகுஜ வாஸ்து நாள் என்று இப்போதே பஞ்சாங்கத்தைப் பார்த்துக் குறித்து எழுதி வைத்துக் கொண்டு, இத்தகைய மகா குஜ வாஸ்து நாளில்,

ஸ்ரீஆகாசபுரீஸ்வரர் திருத்தலம்
கடுவெளி

செவலூர், திருச்சி பூலோகநாதர், மணமேல்குடி ஸ்ரீஜகதீஸ்வரர், விக்ரவாண்டி ஸ்ரீபூமிநாதர், கடுவெளி ஸ்ரீஆகாச புரீஸ்வரர், ஜகதீஸ்வரர், கும்பகோணம் சாக்கோட்டை - சிவபுரம் செல்லும் வழியில் உள்ள ஸ்ரீஆகாச விநாயகர், திருக்கோளக்குடி போன்ற வாஸ்து பூமித் தலங்களில் வாஸ்து பூஜைகளை நடத்துவது விசேஷமானதாகும்.
நல்ல வீடு, நல்ல நிலம், நல்ல தொழிற்சாலைக்கான இடம், வாடகை வீடு, வாடகைக் கடை அமைந்திட, இவற்றில் பிரச்னைகள் இன்றி வாழவும் வாரவாஸ்து நாளாகிய செவ்வாய்க் கிழமை, செவ்வாய் ஹோரை நேரங்களில் காலை 6-7 மணி, பகல் 1-2 மணி, இரவு 8-9 மணி, நள்ளிரவு  விடியற்காலை பிரம்ம முகூர்த்த நேரமான 3-4 மணிஆகிய நான்கு வேளைகளிலும், நான்கு கால பூஜையாக ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கான பூஜையை ஆற்றி வந்தால், கைமேல் பலன்களை ஒரு மண்டல காலத்தில் கண்டிடலாம்.

அங்காரக லோகத்தில் உள்ள வாஸ்து பூமிச் சித்தர்களும், மகரிஷிகளும் செவ்வாய்க் கிழமை தோறும் பூமியில் உள்ள மேற்கண்ட வகையிலான வாஸ்து பூமித் தலங்களில் பூஜைக்காக வருவதால், வாரத்தின் வாஸ்து நாளாக செவ்வாய்க் கிழமையைக் கொண்டாடுதல் விசேஷமானதாகும்.
மனிதனுக்கென ஆயுள் சக்திகள் இருப்பது போல, நிலம், வீட்டிற்கும் ஆயுள் சக்திகள் உண்டு. தொழிற்சாலையில், சொந்தமாக உள்ள அலுவலகத்தில், வீட்டில் ஏதேனும் பிரச்னைகள் என்றால் உடனடியாக அடுத்து வரும் செவ்வாய் ஹோரை நேரத்தில் வாஸ்து பூஜைகளை நிகழ்த்திட வேண்டும்.
அடிக்கடி செவ்வாய் ஹோரை நேரத்தில் வாஸ்து பூஜைகளை நிகழ்த்தி வருவதாலும், வார வாஸ்து வழிபாட்டு நாளாகிய செவ்வாய் தோறும் வாஸ்து பூஜைகளை நிறைவேற்றி வருவதாலும், நிலம் வீடு, கடை, தொழிற்சாலைக்குரிய பூமியின் ஆயுள் சக்தியை நன்கு விருத்தி செய்திடலாம்.
வாஸ்து நாளில் ஏர் வைத்து உழைக்கின்ற உழவர்களுக்கு, சனீஸ்வர சக்திகளைக் குறிக்கின்ற பொருட்களாகிய இடுப்பில் அணியும் அரைஞாண் கயிறு, கருநீல நிறப் புது ஆடைகள், அவர்களுடைய குடும்பத்தில் இல்லப் பெண்களுக்குத் தேவையான கண் மை, மேலும் கருவேப்பிலைப் பொடி, சாதம் மற்றும் சிகப்பு நிற ஆடைகளைத் தானமாக அளிப்பதுடன்,
உழவப் பெருமக்களின் மாடுகளை நீராட்டி, லாடம் அடித்துக் கொடுக்க உதவிகள் செய்து, மாட்டுக் கொம்புகளுக்குச் சிகப்பு வர்ணம் தீட்டி, மாடுகளுக்கு கழுத்தில் கருப்பு சங்குகளாலான மாலைகளை அணிவித்தலால் அவரவர் குடியிருக்கும் (நிலம், வீடு, அலுவலகம், பாக்டரி) பூமியின் ஆயுள் சக்தி பெருக உதவும்.

தேவையில்லாக் குழப்பங்களைத் தீர்த்திடுங்கள்

திவசம், படையல் என்பது வருடத்திற்கு ஒரு முறையாக, இறந்தவரின் திதி நாளில் மட்டுமே அளிக்கப்பட வேண்டும் என்று பலரும் எண்ணுகின்றனர். ஆனால் தினசரித் தர்ப்பணமும், மாதந்தோறும் திதிப் படையலும் முந்தைய காலத்தில் நிலவியதால்தாம், மூதாதையர்களாகிய பித்ருக்களின் நல்லாசிகள் திரண்டு, சமுதாய ஒற்றுமை வளம் பெற்றுக் கொழித்தது.
இவ்வகையில் தேய்பிறை அஷ்டமிக்கு சிராத்தப் பலமுத நாள் என்று பெயர். பித்ருக்கள் பழச் சாறு சக்திகளைக் கிரகிக்கும் நன்னாள். முன்னோர்களின் நலன்களுக்காக அமாவாசைத் தர்ப்பணம் மட்டுமன்றி, அந்தந்தத் திதியிலான தர்ப்பணம் மற்றும் ஒரு தமிழ் ஆண்டில் வந்தமையும் 96 வகை பித்ரு சக்தித் தினங்களில் விசேஷமானத் தர்ப்பணங்கள், படையல்களை தான தர்மங்களுடன் நிகழ்த்தி வருதல் வேண்டும்.

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

பொதுவாக, புதன் கிழமையில் புத்திகாரகராகிய புத மூர்த்தி, மிகவும் சக்தி வாய்ந்த புத்திக் கிரணங்களுடன் பரிமளித்து அருள்கின்றார். எனவே, புதன் கிழமையை ஆத்ம விசார வித்யா தினமாகக் கொண்டாடுதல் வேண்டும். புதன் கிழமையன்றும், குறிப்பாக புத ஹோரை நேரத்திலும், ஒவ்வொருவரும், தான் வாழ்வில் எப்படி வாழ வேண்டும், எதிலெல்லாம் நெறிமுறைகள் பிறழ்ந்து வாழ்ந்திருக்கின்றோம்! என்றெல்லாம் அவரவரும் தம்மைப் பற்றிய ஆத்ம விசாரம் செய்தாக வேண்டும். ஏனெனில் நீதிப் பூர்வமான ஆத்ம விசார சக்திகளை அளிக்க வல்லதே புத கிரக வழிபாடாகும்.
மேலும் நீரில், எண்ணெயில், நீராவியில் பூரிக்கின்ற திரவியங்களில், பண்டங்களில் நல்புத்தி சக்திகள், மன விசால சக்திகள் பூரிக்கும் விசேஷ தினமே புதன் கிழமை, பூரிதப் படையல் நாளும் ஆகும்.
தற்போதையக் கலியுகத்தில், தினமும் தேவையற்ற வகையில் கண்டபடி பொழுதை விரயமாக்கும் எண்ணமே, பல குடும்பங்களிலும் பெற்றோர்களுக்கும் கூட பெருகி வருகின்றது என்பது மிகவும் வேதனைக்குரியதாகும். கலியில் நாள் முழுவதும் தெய்வீக நிலையிலேயே துய்த்திருத்தல் மிகவும் கடினமே! இல்லறத்தோடு இணைந்து வரும் இறைப் பணிகளே, ஒருவரை நிலையான தெய்வீகப் பாதையில் இட்டுச் செல்லும். திடீரென்று ஆன்மீகத்தில் பேரார்வம் வந்தால் வந்த வேகத்திலேயே மறைந்தும் விடும்!
இதற்காகத்தான் நடப்புக் கலியில் இல்வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்களை, காரியங்களை ஒட்டிய வகையில் கலியுக வழிபாட்டு முறைகளைச் சித்தர்கள் அளித்துள்ளார்கள்.
தவறான வழிகளில் வந்த முறையற்ற சொத்தை அனுபவிப்பதால் ஏற்படும் துன்பங்கள் தணிய முதலில், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தகுந்த நிவாரணம் அளித்து, சித்தர்களின், மஹான்களின் ஜீவ சமாதிகளில் புதன் கிழமை தோறும் புத ஹோரை நேரத்தில் வில்வம், மரிக்கொழுந்து, தவனம் போன்ற நறுமண தளங்களைப் பெரிய அளவில் சார்த்திப் பழச்சாறு படைத்துப் பூஜித்தல் வேண்டும்.

எது சாசுவதம் ?

ஹர்ஷ யோகம் மனோசக்திகளை, ஆத்ம விசார சக்திகளாக அளிப்பது. அதாவது சளசளவென்று பேசுவதை விட, மனதுக்குள் உங்களுடனேயோ, நல்ல தாவரங்கள், மரங்கள், பட்சிகளுடனேயோ பேசி வந்தால், மனோசக்தி நன்கு பெருகும்.  
நாள் முழுதும் அலுவலகப் பணிகளிலேயே முழுகி, இடையில் ஒரு முறை கூட ஸ்ரீகாயத்ரீ மந்திரமோ, ஓம் நமசிவாய, ராமா, கிருஷ்ணா என்ற வகையிலான எந்த இறைநாமமுமே ஓத முடியாதபடி அலுவலகப் பணிகளுக்குள் ஆழ்ந்து கிடப்பவர்கள் உண்டு.
“நான் என்ன செய்ய முடியும்? இந்த மாதிரி வேலையில் சிக்கிக் கொண்டாகி விட்டது. இதிலிருந்து மீண்டும் வெளி வரவும் முடியாது!'' என்று சொல்பவர்கள் உண்டு. இவர்கள் எல்லாம் ஆபீஸிலிருந்து ஓய்வு பெறும் போது இந்த வாக்கியங்களைச் சொல்லிக் கொண்டு மறுநாள் அலுவலகத்தில் நுழைய முடியுமா? என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அலுவலகப் பணியில் பெறும் சம்பளமே வாழ்க்கை இயந்திரத்தை ஓட்டுகின்றது என்பது உண்மையே! இவ்வாறு அலுவலகப் பணியை ஜீவிதமாக ஆக்கித் தந்த இறைவனுக்கு எவ்வகையில் நன்றி சொல்வது?
அலுவலகப் பணியோடு இயைந்த அளவில் யோகப் பூர்வமாக அவ்வப்போது என்ன ஹோரை நடக்கின்றது எனற வகையில் மேஜையில் ஹோரை கால அட்டவணையை வைத்துக் கொண்டு அந்தந்த ஹோரை நேரத்தில் அந்தந்த நவகிரக நாமத்தைப் போற்றிச் சொல்வதும் சிரமமில்லாத ஹோரை வழிபாடு தானே! இதற்கு ஆரம்பத்திலிருந்தே பழகி வந்தால், அலுவலகப் பணிச் சுமையே தெரியா வண்ணம் அவ்வப்போது மனோசக்திகளைப் பெற்றுக் களைப்பின்றிப் பணி ஆற்றலாம் அன்றோ!
பெரும்பாலான அலுவலகப் பணிகள், எண்களை ஒட்டி அமைவதால், எண்களைக் கூட்டுதல், கழித்தல் என்பதும் ஒன்று முதல் பத்து வரையிலான எண் தேவதைகளை வழிபடுவதாக எண்ணியும், எண் தேவதைகளோடு அன்போடு பழகுவதாகவும் ஆன்மீக ரீதியாக எண்ணிப் பழகுதலும் எண் தேவதா வழிபாட்டு அம்சம்தானே!
அந்தந்த நாளுக்கான கிரக ரீதியான வண்ணத்தில் ஆடைகளை அணிந்து செல்வதும் கிரக வழிபாடுகளுள் ஒன்றுதானே! எனவே அலுவலகப் பணியோடு தெய்வ சிந்தனைகளைப் பிணைப்பது எளிதானதே! இதனால் கவனக் குறைவும் தவிர்க்கப்படும். அலுவலகப் பணிகளில் செய்யும் தவறுகளினால் எழும் பிரச்னைகளின் வன்மையும் தணியும்.

செவலூர் தீர்த்தம்

அவ்வப்போது பீடி, சிகரெட், வெற்றிலை, பாக்கு, டீ, அரட்டைக்காக வெளி வருவோர் நிறைய உண்டு. இச்சமயங்களில் காலத்தை விரயம் செய்யாது, கண்ணில் படும் ஆலய தரிசனங்களை நன்கு உற்று நோக்கித் தியானித்தலும் நன்றே!
ஆலயக் கலச மாண்பு
அற்புதத் திருப்புனல் காணல்!
மாலயன் மாதவராயன்
மணிவழி மந்திரப் பேணல்
என்ற எளியத் தோத்திரத்தை ஓத எவ்வளவு நேரம் ஆகும், யோசித்துப் பாருங்கள்! இதை ஓதிக் கொண்டே அலுவலகப் பணிகளை ஆற்றிப் பாருங்கள்!
மேலும் அருகில் உள்ள, அலுவலகச் சரகத்தில் உள்ள சிறு, சிறு மூலிகைச் செடிகள், அரசு, ஆல், வேம்பு போன்ற மரங்களையும், சஙகோஜமாக இருந்தால் மனதுக்குள்ளேயே தரிசித்து அவற்றுடன் மனம் விட்டுப் பேசுங்கள். அவற்றின் மீது ஏறி, அமர்ந்து விளையாடும் அணில், எறும்புகள், பறவைகளுடன் அன்புடன் பேசுங்கள். அவையும் திரும்ப பதிலளிப்பதை நாளடைவில் உணர்வீர்கள்! இவைதாம் வாழ்வில் சாசுவதமானவை. அலுவலகப் பணியோ அறுபதோடு சரி!
எனவே, வாழ்வில் எது சரியானது, ஆன்மீக ரீதியாக எது சாசுவதம் என்று முடிவு செய்திடுக. அலுவலகப் பணிகளிலேயே மூழ்கி வெறுத்து வாழ்வோரும் உண்டு. தற்போதைய இளைஞர்களையும் பெரிய பெரிய கம்பெனிகளில் கூட காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை கசக்கிப் பிழிகின்ற காட்சியைக் காண்கின்றோம். இவர்கள் என்றுதான் பூஜை என்று சற்று நேரம் அமர்வது?
எனவே இவர்கள் வாரந்தோறும்,
* குறைந்தது மூன்று மணி நேரம் தர்ப்பை பாயில் ஒரே இடத்தில் அமர்ந்து பூஜை,
* ஆறு மணி நேரம் தொடர்ந்து ஆலயத்தில் இருத்தல்,
* பெளர்ணமியில் அருணாசல கிரிவலம்,
* தினசரி அடிப் பிரதட்சிணம்
* திங்களன்று குறைந்தது ஆறு மணி நேரமாவது மெளன விரதம் பூண்டு இருந்து வந்தால்
- புண்ணிய சக்தியைத் திரட்டி, ஓரளவு துன்பங்களைத் தணித்து வாழ முடியும்.

இவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அலுவலக வேலைகளில் மூழ்கிக் கிடக்க வேண்டிய நிலையில் இருப்பவர்கள், பட்சம் (15 நாட்கள்) ஒரு முறை, பிரதோஷ பூஜைகளில் மெளன விரதம் பூண்டு இறைத் துதிகளை ஓதுதலும்,
மாதம் ஒரு முறை கொட்டையூர் (கும்பகோணம் அருகே) ஸ்ரீ கோடீஸ்வரர் ஆலயத்திலும், கோடீஸ்வரர் என இறைவன் அருளும் ஆலயங்களிலும், சிவபுராணம், ருத்ர, சமக மந்திரங்களை ஓதி, முழு முந்திரிகளால் அர்ச்சித்து வழிபடுதல் வேண்டும்.
தாமும், தம் குடும்பமும் போதிய அளவு புண்ணிய சக்தி இன்றி வாடுவதாக எண்ணுவோர்க்குக் கொட்டையூர் ஆலய வழிபாடு மிகவும் முக்கியமானது. எண்ணும் எண்ணங்களுக்கு ஏற்ப அனைத்தும் கோடி மடங்காய்ப் பெருகும் தலம். எனவே அனைத்தையும், ஆலயத் தரிசனப் பலன்களையும் இங்கு கோடி விநாயகருக்கே அர்ப்பணித்தல் சிறப்புடையதாகும்.

நிரந்தர வேலை வாய்ப்பு

விரல்களைப் பல கோணங்களில் அமைத்து வழிபடுவதே முத்திரை வழிபாடு. உதாரணமாக, அகஸ்தியர் பரம்பரையில் வரும் சித்தர்களை, தலைக்கு மேல் இரு கைகளையும் 5 விரல்களையும் கூடுமாறு மடித்து வைத்து, கட்டை விரல்கள் மற்றும் சுண்டு விரல்களை மட்டும் ஒன்று சேர்த்து வணங்குவது குரு முத்திரையாகும். இதனால் அகஸ்தியர் குரு பாரம்பரியச் சித்தர்கள் அத்தனை கோடியினரையும் வணங்கிய சந்தர்பப் பலன்கள் கிட்டும். நவமித் திதி முத்திரை வகைப் பூஜைகளுக்கு மிகவும் ஏற்றதாகும். பக்த ராமதாஸர் பல அற்புதமான முத்திரை அபிநயங்களுடன் கீர்த்தனைகளைப் பாடி ராம தரிசனம் பெற்றவர்.  
ஒவ்வொரு கடவுள் மூர்த்திக்கும் உரிய முத்திரைகள் உண்டு. இவை தற்காப்பு சக்திகளையும் அளிக்கும். ஆலயங்களிலும், இல்லத்திலும் சில எளிய முத்திரைகளைத் தக்க சத்குருவின் அருள்வழி முறைகளுடன் பயன்படுத்துதலால், பன்மடங்கு மந்திர சக்திகளையும், பலவிதமான சித்திகளையும் இதன் மூலம் பெற்றிடலாம். ஆனால் வெறும் சித்திகளைப் பெறுவதற்காக மட்டும் இந்த முத்திரைகள் அமையவில்லை. உங்களுடைய பக்தியை, மனோ சக்தியை, மனோ வைராக்யத்தைப் பெருக்குவதற்காகவும் இது பெரிதும் உதவுகின்றது.
முக்கியமாக, நமக்கு வர இருக்கின்ற துன்பங்களை முன்கூட்டியே உணர்கின்ற தீர்க்க தரிசன உள்ளுணர்வையும் இவ்வகை முத்திரைகள் தருகின்றன. ஜோதிடர்களுக்குரிய மிகவும் முக்கியமான முத்திரைகளும் உண்டு. இவர்கள் குறித்த சில முத்திரைகளைத் தினந்தோறும் ஒரு மணி நேரமாவது செய்து பழகுதலினால் தீர்க்க தரிசன சக்தி பெருகும்.

ஸ்ரீநடராஜர் திருஅதிகை

மேலும் ரத்த விருத்தி அணு, மரபு அபிவிருத்தி அணுக் குறைவினால் பலருக்கும் ரத்த சோகை நோய்களும், குழந்தை பாக்கியம் இல்லாததும் அமைந்து மிகவும் வருத்தம் அடைகின்றார்கள். இவற்றை நிவர்த்தி செய்வதற்கான முத்திரை யோகப் பயிற்சிகளும் உண்டு. ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவற்றைத் தக்க சத்குருவின் அருள் வழிகாட்டுதலுடன் பயன்படுத்திட வேண்டும்.
பசுவின் முன் குறித்த முத்திரையை இட்டு வலம் வந்து வணங்கி வருவதால், குடும்பத்தில் நல்ல மன அமைதி கிட்டும். ஆண், பெண் இரு பாலருக்கும் ஏற்ற முத்திரைகளும் உண்டு. ஆத்திரமாக முன் கோபப்பட்டு அடிக்கடிப் பேசுவதால் அருமையான நட்புகளும் உடையும். ஆலயத்தில் சண்டிகேஸ்வரர் சன்னதியில் சந்த்ரசூட முத்திரை இட்டுப் பின், கை கூப்பி வணங்கி வருதலால், அதியற்புதமான வகையில் முன் கோப புத்தி நாளடைவில் நன்கு அடங்கும்.
பலரும் வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இன்றி விரக்தியுடன் வாழ்கின்றனர். கையில் பணம் வந்தால் முகம் மலரும். பணமில்லையேல் மனமும், உடலும் சோர்ந்து விடும். ஏதோ இயந்திர கதியில் இவர்களுடைய குடும்ப வாழ்க்கை நடந்து கொண்டிருக்கும். எவ்விதப் பற்றும் இன்றி வருவது, போவது என்ற முறையில் வாழ்க்கையை நடத்தினால், அது வீண்தானே.
பெறற்கரிய மனிதப் பிறவியை பெற்றுவிட்டு அதனை ஏனோதானோ என்றா வாழ்ந்து பொன்னான காலத்தைக் கடத்துவது? இதனைத் தணித்து நன்முறையில் வாழ, தினமும் தர்பைப் பாயில் அமர்ந்து, தலைக்கு  மேல் கை கூப்பிய நிலையில், நெடு நேரம் அமர்ந்து இருந்து வணங்கி வந்தால், கைகளில் நிறையும் திணவால் நாளச் சுரப்பிகள் விரிவடைந்து நல்ல பலன்களைக் காணலாம். முதலில் வலி காரணாக இதனைப் பழகுவது சற்றுச் சிரமமாக இருக்கும். சற்று கைகளை முதலில் தளர்த்திப் பிறகு மெதுவாகப் பழகி வருதல் வேண்டும்.
வறுமை, துன்பங்கள், தீராத நோய்கள், அடுக்கடுக்கான கஷ்டங்கள் இவற்றினூடே வாழ்கின்றவருக்குத்தான் இத்தகைய ஒரு விரக்தியான நிலைமை அமைகின்றது. இவர்கள் முத்திரைப் பயிற்சிகள் அறிந்து வழிபாடுகளை ஆற்றல் நன்று.
தினந்தோறும் விடியற்காலை ஐந்து மணி அளவில் சூரியோதயத்திற்கு முன்பும், மாலையில் அஸ்தமன நேரத்திலும், முத்திரைப் பயிற்சிகளைச் செய்து வருவார்களேயானால் அவர்களுக்கு வாழ்க்கையில் ஒரு நல்ல பிடிப்பும் ஏற்படும். தெய்வீகத்தில் பற்றும் உண்டாகும்.
பலருடைய குழந்தைகள் படிப்பில் மந்தமான இருப்பவர், எவ்வளவோ புத்தகங்கள் வாங்கிக் கொடுத்தாலும் கூட, டியூஷன் என்று வைத்தாலும் கூட சுமாரான மார்க்குகளே பெறும் போது, பெற்றோர்களுக்கு நிறைய வேதனைகள் ஏற்படுவதுண்டு. குழந்தைகளுக்கு இத்தகைய சக்தி வாய்ந்த முத்திரைகளைச் சொல்லிப் பயிலச் செய்து வருவீர்களேயானால் இம்மந்த நிலைமை மாறிப் படிப்பில் நாட்டம் உண்டாகும்.
கைகளினால் ஆக்கப் பெறும் முத்திரைகளில் கிட்டும் ஆன்மீக சக்திகள் உள்ளங்கைச் சந்திர மேடுகளிலும், புத்தி ரேகைகளிலும் படிவதனால், மனதிற்கு அதிதேவதையாக விளங்குகின்ற சந்திர பகவான் மன ஆரோக்கியத்தைத் தருகின்றார். குறிப்பாக மூன்றாம் பிறைச் சந்திர தரிசனத்தைக் குறித்த முத்திரை நிலையில் வணங்கித் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
வறுமையில் வாழ்கின்றவர்களுக்கு எவ்விதத் துன்பங்களையும் தாங்கக் கூடிய சக்திகளைத் தர வல்ல முத்திரைகளும் உண்டு.
கேட்டை நட்சத்திர நாளில் முத்திரை நிலைகளில் அருளும் நடராஜர் போன்ற மூர்த்திகளைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானது. இது பிள்ளைகளுக்கு நல்ல மனோ திடத்தைத் தருவதாகும். கேட்டை அன்று புனிதமான பரத நாட்டியம் போன்ற தெய்வீக் கலைகளில் உள்ள ஏழைக் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதால், பணி, குடியிருப்புகளில் நன்முறையில் நிரந்தரம் பெற வாய்ப்புகள் தேடி வரும்.

முழுமையாய்த் துன்பங்களைத் தீர்க்கலாம்

தீபாளியை ஒட்டி வரும் கேதார கெளரீ விரதம் பெண்களுக்கு நல்ல வரப் பிரசாதி. குறிப்பாக இல்லத்தில் தம்பதியரிடையே நல்ல மன ஒற்றுமைக்கு கேதார தரிசனம் உதவும். கேதார்நாத்தில் மட்டுமல்லாது சில தலங்களிலும் கேதாரீஸ்வரராக இறைவன் அருள்கின்றார். சனிக் கிழமை தோறும் கேதாரீஸ்வரரை வழிபடுதல் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளைத் தணிக்க உதவும்.
சனிக் கிழமை தோறும் சனீஸ்வரர், சனிப் பரணிச் சித்தரின் தலைமையில் நடக்கும் வேள்வியில் வேண்டி, மக்களுக்கு வினைகளின் விளைவுகளைப் பற்றிய புலத்தை அளிக்கின்றார். அதாவது தாம் செய்த தீவினைகளே தமக்குத் துன்பங்களாக வருகின்றன என உணர்தலே முழுமையாகத் துன்பங்களைத் தீர்க்க உதவும். இதுவே சனிப் புலம் என்பதாகும். இது எள், தர்பையில் நிறைந்துள்ளது.
வாழ்க்கையில் ஒவ்வொருவரும் 12 ஜோதிர் லிங்க மூர்த்திகளுள் ஒன்றான கேதார்நாத் ஈஸ்வரனைத் தரிசித்தாக வேண்டும். ஆனால் உடல் நிலை, பண வசதி, போக்குவரத்துக் கஷ்டங்கள் காரணமாக பலராலும் கேதார்நாத் பத்திரிநாத் தரிசனங்களைப் பெற இயலாமல் போய்விடுகின்றது. இதற்காகவே உலகத்தில் எந்தக் கோடியில் இருப்பவரும் கேதார்நாத்தைத் தரிசித்த பலன்களைப் பெறுவதற்காகவே இறைவன் கேதார கெளரீ விரதத்தை நமக்கு அளித்துள்ளார்.

ஸ்ரீவசிஷ்டர் தம்பதிகள் திட்டை

கேதாரீஸ்வரரை, கேதாரீஸ்வரியை மக்கள் தரிசிப்பதற்கு முன்னரேயே சனீஸ்வரர்தான் முதலில் தரிசித்தார். எனவே சனீஸ்வர பூஜை கேதார தரிசனப் பலன்களைத் தருவதாகும். இந்தப் பிரபஞ்சத்தில் எத்தகைய கடுமையான விரதங்கள் உண்டோ அவற்றையெல்லாம் கெளரீ என்ற மானுடப் பெண் வடிவிலே பார்வதிதேவி இன்றும், என்றுமாய்க் கடைப்பிடித்து வருகின்றாள்.
இத்தகைய விரத நெறிகளைப் பெறுவதற்காகப் பார்வதி தேவியே சாதாரண மானிடப் பெண் வடிவிலே அனுசூயாதேவி, கார்கி தேவி, மைத்ரேயி தேவி போன்ற மஹரிஷிகனிடத்திலும் உபதேசமாகப் பெற்று தாம் ஒரு அவதாரத்துவம் பொதிந்த ஈஸ்வரி என்ற எண்ணமே இல்லாது சாதாரண மானுடப் பெண்ணாக இத்தகைய விரதங்களைப் பரிபூரணமாகக் கடைப்பிடித்து அவற்றின் பலாபலன்களை சனிக் கிழமைகளிலும், கேதார கெளரீ விரத நாளிலே பதித்து வைக்கின்றாள்.
கால பைரவ மூர்த்தியின் அனுக்ரஹச் சக்திகளுள் ஒன்று என்னவென்றால் அந்தந்த நாள் ஹோரை, கிழமை, நட்சத்திரம், யோகம், காரணம், போன்றவற்றில் பதிந்துள்ள விரதச் சக்திகளின் பலாபலன்களை அந்தந்த நாளில் ஜீவன்களுக்கு அளித்தலே ஆகும்.
வசிஷ்ட மஹரிஷி தினமும் கோபூஜை செய்கின்ற நேரமே கோதூளி லக்னமாகும்.  கோதூளி லக்னம் எனப்படும் மாலை 4 மணிமுதல் 6 மணி வரையிலான கோதூளி லக்னத்தில் வசிஷ்டர் தினமும் ஆற்றுகின்ற பூஜைகள் யாவும் அந்த லக்னத்தில் நிலைத்து இருக்கும். யாரொருவர் சனிக் கிழமை தோறும் மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலான பூஜைகளை முறையாகக் கடைப்பிடிக்கின்றார்களோ, கோதூளி லக்னத்தில் கொடிக் கம்பத்தில் அமரும் காக்கையைத் தரிசிக்கின்றார்களோ, ஆலய தரிசனங்களை மேற்கொள்கின்றார்களோ அவர்களுக்கு இந்த கோதூளி லக்ன பலாபலன்களில் சில அம்சங்கள் அவரவர் பக்தி நிலையைப் பொறுத்துச் சென்று அடையும்.
இதே போல காலாஷ்டமி, கால பைரவாஷ்டமி போன்ற தினங்களில் பைரவ மஹரிஷி கடைப் பிடிக்கின்ற பைரவ பூஜை சக்திகள் அஷ்டமித் திதிக் காலத்தில் பதிந்திருக்கும்.
இவ்வாறாக ஒவ்வொரு தினத்திற்கும் ஒவ்வொரு விநாடிக் காலத்திற்கும் மகத்தான புண்ணியச் சக்திகள் நிறைந்துதான் இருக்கின்றன. இதைப் பயன்படுத்தாதது யாருடைய தவறு? இப்போது சிந்தித்துப் பாருங்கள்! பஞ்சாங்கம் என்பது காலபைரவ லோகத்தில் ஒவ்வொரு விநாடி காலத்திலும் நிறைந்து இருக்கின்ற தெய்வீகச் சக்திகளைப் பிரதிபலிக்கின்ற இறைச் சாதனங்களைப் பற்றி உணர்த்துவது ஆகும். எனவே பண்டிகைகள் பூஜை வழிபாட்டு முறைகள் இல்லாத தினமே கிடையாது, எமகண்டத்திலும் இராகுகாலத்திலும் கூட ஆற்றவேண்டிய பூஜை வழிபாட்டு முறைகள் உண்டு. எமகண்டம் என்பது எமபகவானை வழிபட வேண்டிய முக்கியமான காலம் ஆகும்.
இவ்வாறாக நாம் எந்த பூஜைகளை இழந்து விட்டமோ அதனால் தீர வேண்டிய நோய்கள், தீவினைகள், தீய வன்முறைகளே தீர வழிவகை இல்லாது கலியுகத்தில் பெருகி வருகின்றன.

தோல் நோய்கள் அகல ...

பகைமை, வன்முறை முற்றி வரும் கலியுக வாழ்நாளில், ஞாயிறு தோறும் அருகில் உள்ள முனீஸ்வரரைக் குடும்பத்தோடு வழிபட்டு, நல்ல ரட்சா சக்திகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மச்சேந்திரச் சக்கரம் என்பது, பூமியில் நீரோட்ட சக்திகளை நன்கு விருத்தி செய்யவும், வாஸ்து சக்திகளைப் பெருக்குவதற்கும் மிகவும் பயன்படுவதாகும். பித்ரு சக்திகள் நிறைந்தது என்பதால், மச்சேந்திரச் சக்கரம், குடும்பத்திற்கான பல வகை ஆசிகளையும் பெற்றுத் தர வல்லதாகும்.
பஞ்சாங்கத்தில் கீழ்நோக்கு நாட்கள் என்று போட்டிருப்பார்கள். இத்தகைய கீழ்நோக்கு நாட்களில், முதலில் பித்ருக்களுக்கான தர்ப்பணப் பூஜைகளை ஆற்றி, பிறகு மச்சேந்திரச் சக்கர பூஜையை ஆற்றுவது, மிகவும் சக்தி வாய்ந்த பலன்களை நன்கு துரித கதியில் திரட்டித் தருவதாகும்.

ஸ்ரீவாத்யார்ஐயா ஜீவசமாதி
சிங்கம்புணரி

ஞாயிற்றுக் கிழமையில் வரும் கீழ் நோக்கு நாளில் ஆற்றும் ஸ்ரீவராஹி பூஜை, ஸ்ரீவராஜப் பெருமாள் பூஜை, பாதாள மூர்த்திகளுக்கான (விருத்தாசலம் ஆழத்துப் பிள்ளையார், திருச்சி மலைக் கோட்டை - ஸ்ரீபாதாள அய்யனார், துறையூர் அருகே வாத்தலை ஸ்ரீபாதாளீஸ்வரர்) பூஜைகளுடன். பூமிக்கு அடியில் விளையும் பண்டங்களாலான அன்னதானமும் ஆற்றி வருவதால், நிலம், வீடு வகைகளில் ஏற்பட்ட கடன்களைக் கூட விரைவில் நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் கூடி வரும்.
தசமியன்று தன்வந்த்ரீ சக்கர பூஜை நல்ல பலாபலன்களைத் தரும். சனியும், தசமியும் சேரும் நாளில் தன்வந்தரீச் சக்கரத்தை வைத்துப் பூஜிப்பதன் பலன்கள் கண் கண்டதாக இருக்கும். இந்நாளில்தான் தன்வந்த்ரீச் சித்தர், பூவுலகில் கொடி சம்பந்தமான மூலிகைப் பூஜைகளை நிகழ்த்துவதால்,
- சனியும், தசமியும் கூடும் நாளில் கொடி வகைப் பூக்களால் ஸ்ரீதன்வந்த்ரீ மூர்த்தி மற்றும் தன்வந்த்ரீ சக்கரத்திற்கும் பூஜைகளை ஆற்றி,
- கொடி வகைக் காய்கறிகளாலான பண்டங்களைப் படைத்துப் பூஜித்தலால் நோய்க் கடுமை நன்கு தணியும்.
முனீஸ்வரர் கிராம தேவதைகளில் தலையானவர். இவருக்கான பூஜை நாளே ஞாயிற்றுக் கிழமை ஆகும். இதில் சப்தமித் திதி சேர்வது, நோய் நிவாரண சக்திகளை, குறிப்பாக கண் நோய்களுக்கான நிவர்த்தியைத் தருவதாகும்.
முனீஸ்வரரை அந்தந்த கிராம மக்கள் மட்டுமல்லாது, எந்த நகர மக்களுமே அடிக்கடி பூஜித்து வர வேண்டும். முனீஸ்வர மூர்த்திக்கு பரணி நட்சத்திரப் பூஜை மிகவும் ஏற்றது.

ஸ்ரீவராகி தேவி சுவாமிமலை

சுதை மூர்த்தியாக இருக்கும் முனீஸ்வரருக்கு, ஞாயிறும், விசாகமும் கூடும் நாளில் வெண்கலப் பானை, விறகடுப்பில் பால் பொங்கல், மண் பானையில் வெண் பொங்கல் படைத்துத் தானமளித்து வந்தால், தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு வியக்கத் தக்க முறையில் நிவாரணம் கிட்டும்.
தமிழர் பண்பாட்டில் கணவரை அத்தான் என்ற அழைக்கின்ற ஒரு பண்பாடு உண்டு. ஆதி காலத்தில் இருந்தே, மாமன் புதல்வனை ஆணும், பெண்ணுமே அத்தான் என்று கூப்பிடுகிற வழக்கமும் உண்டு. அத்தான் முறை மாப்பிள்ளை ஆவதும் உண்டு. இவ்வாறு முறைப் பையனாகிய மாமன் மகனாகிய அத்தான், குடும்ப மாப்பிள்ளையாக ஆகி இருக்கும் குடும்பத்தினர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாவது முனீஸ்வரருக்குப் பொங்கல் படைத்து வழிபட்டு வந்தால், உறவு முறைகள் நன்கு பண்பட்டு வளரும்.
கலியில் பங்காளி சண்டைகள் என்பது வந்தாலே பெண், பிள்ளை கொடுத்து வாங்குதல், முறை மாப்பிள்ளை உறவு வகைகள், ஏற்கனவே திருமண வகையில் ஏற்பட்ட உறவுகள் பலவும் பாதிக்கப்பட்டு, ஏற்கனவே நிச்சயமான திருமணங்களிலும் சுமூக உறவு பிளவுறும் நிலை ஏற்படுவதால், இத்தகைய துன்பங்கள் வராமல் காக்கவும், இவ்வகையில் வந்துள்ள துன்பங்கள் விலகவும், ஞாயிற்றுக் கிழமை அன்று முனீஸ்வரருக்குப் பொங்கல் படைத்து வழிபட்டு வருதல் வேண்டும்.
வசதி உள்ளோரும், பழக்கம் இல்லாதவர்களும் கூட, சங்கோஜப்படாமல் கிராம மக்கள் துணையுடன் செங்கல், விறகு அடுப்புகளில், ஞாயிறன்று சூரிய வெளிச்சத்தில், வெட்ட வெளியில் அமர்ந்து, தாமே விறகடுப்புப் புகையின் ஊடே முனீஸ்வரருக்குப் பொங்கல் படைத்தால்தான் பலன்களைத் தாமே நன்கு அற்புதமான முறையில் உணர முடியும்.
ஞாயிறன்று முனீஸ்வரருக்கான வெட்ட வெளிப் பொங்கல் படையலுக்கு எவ்வகையிலும் எந்த நற்காரியத்திற்கும் நேர்த்தி வேண்டிச் செய்து வந்தால் பலன்கள் தாமே கனிந்து வரும்.

நீரால் கிட்டும் ஆரோக்யம்

தண்ணீரில் அசுத்தங்கள், கிருமிகள் கலந்து வருவதுடன், எண்ணங்கள் பரவும் நிலப் பரவியாகவும் நீர் விளங்குகின்றது. சமைக்கும் போது எவ்வகை எண்ணங்கள் நிலவுகின்றனவோ, அவைதாம் சமைக்கும் பண்டங்களிலும் வரும். நல்ல எண்ணங்களோ, தீயவையோ எதுவானாலும் அன்னத்தில் படிந்து விடும். எனவேதான் இறைத் துதிகளை ஓதியவாறே இல்லத்தில் சமைக்க வேண்டும் என்று பெரியோர்கள் உரைக்கின்றனர். எங்கும் வெந்நீர் அருந்துவதே ஆன்மீகப் பூர்வமாகவும் நல்லது. அக்னியில்தான், நீரில் உள்ள தீய சக்திகள் ஓரளவு உடனடியாகத் தீரும்.
பொதுவாக, சில ஹோட்டல்களில் அதிகம் வேலை வாங்குதல், சம்பளம் தராதிருத்தல், குறைந்த சம்பளம் தருதல், அடிமையாக நடத்துதல், அசுத்தமான சமையலறை போன்றவற்றால் சமையற் கலைஞர்களும், பணியாளர்களும் வேதனைகளுடனும், முதலாளியைத் திட்டிக் கொண்டே, காழ்ப்பு உணர்வுடன் சமைக்க வேண்டிய நிலைகள் அமைவதாலும் பரிமாறுதலாலும் இத்தகைய வேதனைப் படிவுகள், வசவுகள் அப்படியே உணவுப் பண்டங்களில், நீரில் நிறையும். இதனால்தான் இயன்றவரை ஹோட்டல் உணவைத் தவிர்த்தல் நன்று.

மலையடிப்பட்டி சக்தி தீர்த்தம்

ஹோட்டலில் உண்ண வேண்டிய நிர்பந்தம் வந்திடில், வெந்நீர் அருந்தியும், இறைத் துதிகளை ஓதியவாறு உண்டும், பரிமாறுகின்ற ஏழைச் சர்வர்களுக்கு ஏதேனும் அளித்தும், ஹோட்டல் செலவோடு செலவாக ஒரு உணவுப் பொட்டலத்தை வாங்கித் தானமாக அளித்தும், உணவில் நிறையும் தகாத எண்ணங்கள் மற்றும் தீய சக்திகளில் இருந்து ஓரளவு தற்காத்துக் கொள்ள வேண்டும்.
வெளியில் நீர் அருந்தி வருவதால் ஏற்படும் எண்ணத் துன்பங்களில் இருந்து காத்துக் கொள்ள அவ்வப்போது கங்கை, காவிரி புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம், புண்ணியத் தீர்த்தங்கள் கலந்த நீரால் சமைத்தல், செப்புத் தம்ளரில் நீர் அருந்துதல் மிகவும் நன்று. கார்ப்பரேஷன் குழாய்த் தண்ணீராக இருந்தால் அதை நன்றாகக் கொதிக்க வைத்து, மஞ்சள் நிறப் பருத்தித் துணியில் வடிகட்டி, ஆற வைத்து, துளசி, வில்வ தளங்களைப் போட்டு வைத்து, வசதி உள்ளோர் தங்கக் காசையும் அதில், ஸ்வர்ண சக்தி பெற்றிடுவதற்காகப் போட்டு வைத்து, இரவில் ஊறிய பின் மறுநாள் பூஜையில் வைத்துப் பிறகு, தங்கக் காசை பத்திரமாக எடுத்து வைத்து விட்டு நீரை அருந்தி வருவது சிறப்புடையதாகும். வெள்ளித் தம்ளரில் பருகுவது நல்ல ஆரோக்கியமானது.
துளசி, வெட்டி வேர், வேப்ப இலையையும் சிறிது சிறிதாக ஒவ்வொரு நாளிலும் சேர்க்கலாம் பன்னீர் திராட்சை இட்டு மறு நாள் காலையில் சாப்பிடுவதும் ரொம்ப விசேஷமானது. இதனை ரோகிணி நட்சத்திர நாளில் செய்தால் நல்ல அனுகிரகம் கிட்டும். வியாழக் கிழமை அன்று, பலாப்பழம் போட்டு, பலாப்பழமும், தண்ணீரும் சேர்ந்து உண்டு, அருந்தி வரலாம்.

சதுரகிரி மலையிலே, கீழ்தோன்றிப் பள்ளம் என்ற ஒரு இடம் உண்டு. 300 அடி கீழே உள்ள இடம். அந்தக் கீழ்தோன்றிப் பள்ள பூமியின் விசேஷம் யாதெனில், அஷ்டவசுக்கள் பூஜித்த வாஸ்து சக்திகள் நிறைந்த இடம். அஷ்ட வசுக்களும் பூமியைச் சில கோணங்களில் தாங்குகின்றனர். குறிப்பாக வாஸ்து சாத்திரப் படி பூமியைச் சில அம்சங்களில் தாங்குகின்ற அஷ்டவசுக்களின் ஆசி கிடைக்கின்ற இடம் இதுவே! இங்கு சாஷ்டாங்கமாக 108 முறை வீழ்ந்து வணங்குதல் கட்டிடத் துறையில் உள்ளவர்களுக்கு மிகவும் உதவும். நல்ல வீடு, நிலம் அமையவும் துணை புரியும்.
கலியுகத்தில் தினமுமே பிரயாணம் இருக்கிறது. இதற்கெல்லாம் கால பைரவர் அருள் தேவை! பைரவ மூர்த்திகளில் முக்கியமானதாக எட்டு விதமான அஷ்ட பைரவர்கள் உண்டு. அஷ்ட பைரவர்களும் குறிப்பிட்ட காரணங்களால் தோன்றி உள்ளனர். சென்னை கபாலி கோயில், திருச்சி தாயுமானவர், ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர் ஆலயம் என ஒவ்வொரு கோயிலும் பைரவர் விதவிதமான வழிமுறைகளில் அருள்கின்றார்.
பைரவர்களின் வாகனங்கள் அனைவரும் அதியற்புத தபோ பலன்கள் வாய்ந்த மஹரிஷிகளே! சென்னை கபாலி கோயில் பைரவருக்கு அஷ்டாங்க ருத்திர பைரவர் என்று பெயர். எத்தகைய பகைமையையும் நீக்குவதுடன் பகைவர்களையும் திருத்தி நல்வழி காட்டி அருள்பவர். அஷ்டமித் திதியில் இவருக்குச் ஜவ்வாது, புனுகு, கஸ்தூரி, கோரோஜனை, ஜாதிக்காய் ஆகிய ஐந்தும் கூடிய சந்தனத்தால் பஞ்சகல்பக் காப்பு இட்டு வழிபட்டு வருவது பகைமை, மனவேறுபாடுகளை நீக்கி இல்லறம், வணிகத்தில் நல்ல ஒற்றுமையைத் தரும்.

சதுரகிரி ஸ்ரீமகாலிங்க ஈஸ்வரர்

எதிரிகளுடைய துன்பங்களில் இருந்து காக்கப்படத் தினமும் பைரவரை வணங்குதல் வேண்டும். சஷ்டிக் கவசத்தையும், பைரவரக்குரிய பைரவாஷ்டகம் போன்ற துதிகளின் அர்த்தங்களைப் பார்த்தால், பைரவா காக்க! இறைவா காக்க! துன்பத்திலிருந்து காக்க! அடுப்பிலிருந்து காக்க! ஊறுகளிலிருந்து காக்க! கண்ணேறுகளிலிருந்து காக்க! சிதைகளிலிருந்து காக்க! பிரேத தோஷங்களில் இருந்து காக்க! சூனியத்திலிருந்து காக்க! இவை அனைத்திலிருந்தும் காத்தருள வேண்டும், பைரவா! என்று பைரவர் ஸ்தோத்திரத்தில் பெரிய கோரிக்கைகளுடன் இருக்கும். ஆம், இவை போன்று தினமுமே ஒவ்வொரு மனிதனும் பெரிய கண்டங்களைத் தாண்டியே வாழ வேண்டியதாக உள்ளது.

ஸ்ரீபாதாள ஐயனார்
திருச்சி மலைக்கோட்டை

இறைத் துதிகள் தெரியாவிடில் தமக்குத் தெரிந்த கஷ்டங்களைச் சொல்லி, "இந்த மாதிரி பல திசைத் துன்பங்கள் தாக்காமல் காப்பாத்தணும் அப்பா, உன்னைத் தவிர வேற கதி கிடையாது!'' என்று பைரவரிடம் பேசுவதும் நல்ல பிரர்த்தனைதான்! எனினும் இறைத் துதிகள் யாவும் கடவுள் தரிசனங்களைப் பெற்றவர்களுடைய வாக்குகள் ஆதலின், அவைகளில் தரிசன சக்திகளும் கூடி வரும். எனவே தினமும் இறைவனிடம் மனதாரப் பேச வேண்டும். தினமும் நம்மைப் பல்வகைத் துன்பங்களில் இருந்து காப்பவர் பைரவரே! கலியுகத்தில் வருங்காலத்தில் பைரவ வழிபாடு மகத்தான அளவில் பெரிதும் மேன்மையுறும்.

ஸ்ரீபாதாளேஸ்வரர் வாத்தலை

சில ஆலயங்களில் அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு மட்டும் வெள்ளை வஸ்திரம் சார்த்தி, காலை முதல் பூஜையில் களைவர். இத்தகைய கோயில் ஆகம முறையும் உண்டு. சுற்றிலும் பகைமையுடன் நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என வாழ்வோர், காலையில் ஆலயத்தில் முதலில் ஆற்றும் பூஜை, இரவில் பைரவருக்கு இறுதியில் ஆற்றப் பெறும் இறுதி பூஜை இரண்டையும் ஒரு மண்டலத்திற்கு இடைவிடாது தரிசித்து வந்திடில் பகைமை சக்திகள் நன்கு தணியும்.
இரவில்தான் மனிதன் அடங்குகிறான். அந்தந்த நாளில் ஆற்றிய பூஜைகள், தான, தர்மங்களைப் பொறுத்து, இரவு நேரத்தில் சில வகைப் பிதுர்தேவகைள் இல்லத்திற்கு ஆசீர்வாதக் கிரணங்களை அளித்துச் செல்கின்றார்கள். எனவேதான் இரவு உறங்கச் செல்கையில் நெற்றிக்கு விபூதி, குங்குமம் இட்டு உறங்கச் செல்ல வேண்டும். சுவாமி படங்கள் முன் ஒரு குடுவையில் நீர், பூக்கள், பழங்களை வைத்து விட்டுப் படுக்க வேண்டும். பிதுர் தேவதைகளைச் சாதாரணக் கண்களால் பார்க்க முடியாது. ஒளி சக்தி நிறைந்த அவர்களைக் காணவே கண் கூசும், பரிபூரணப் புனிதம் இல்லாமையால் பார்ப்பதற்கு மனமும் அஞ்சும். எனவே பித்ரு தேவதைகளே இல்லத்துச் சூழ்நிலைகளைப் பார்த்து விட்டு, எல்லாரும் மெய் மறந்து உறங்குவதால், தங்கள் ஆசிகளை, ரகசிய மூலிகை சக்திகளாக சுவாமி / பூஜையறையில், சந்தனக் கல், கட்டையில் பதித்து நிரவிச் செல்கின்றனர். ஆரோக்கிய சித்தி வழி முறை இது!

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam