முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கேடில்லா கெழுமிய பிரகாசம்

சிவபெருமானுக்கு உரிய திங்களன்று மாதசிவராத்திரி அமைவது மிகவும் விசேஷமானதாகும். இரவில்தாம் கலியுகத்தில் மனித குலம் கணக்கில்லாத தவறுகளைப் பெரும் பாவ வினைகளாகச் செய்வதால், இரவு நேர பூஜைகள் மூலம்தாம் இவற்றுக்குப் பரிகாரங்களைத் தேட முடியும். இதற்காகவே, அருணாசல பெளர்ணமி இரவு கிரிவலம், நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, மஹாசிவராத்திரி, மாதசிவராத்திரி போன்ற இரவு நேரப் பூஜைகள் அமைந்துள்ளன. ஆனால் இவற்றை மனித சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொண்டால்தானே இரவில் செய்யும் அதிபயங்கரத் தீவினைகளில் இருந்து மீள முடியும். இரவில்தாம் பூலகெங்கும் பலத்த தீவினைசக்திகள் விண்ணில் பரவுகின்றன. பிற லோகங்களில் இருந்தும் தீவினைக்காரர்கள் வந்திறங்குகின்றனர்.
இன்று உலகெங்கும் இளைய சமுதாயத்தினரை அலைக்கழித்துக் கெடுக்கும் காம இச்சைகளை முறைப்படுத்திடவே, இல்லறமாம் நல்லற தர்மம் பிறந்தது. இரவு நேரப் பூஜைகளை, மாதமிருமுறை (பட்சம்) அல்லது மாதம் ஒரு முறையேனும் கடைபிடித்து, இரவுக் காலத்தில் தோற்றம் பெறும் ஆன்ம சக்திகளை உணர்த்திடவும், பெற்றிடவுமே பெளர்ணமி, மாதசிவராத்திரி, விஷ்ணுபதிப் பூஜைகள் பிறந்தன. இளைய சமுதாயத்தினர் முறையற்ற காமஇச்சைகள், புகை பிடித்தல், மது போன்ற தீவினைகளுக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளவும் மாதசிவராத்திரித் தினத்தில் அருணாசல கிரிவலம் போன்ற இரவு நேரப் பூஜைகள் உதவுகின்றன.
இத்தகைய மாத சிவராத்திரி அதாவது தேய்பிறைச் சதுர்த்தசித் திதியில்தான் கணபதி மூர்த்தியின் ருத்ர கணபதி, அக்னி கணபதி சந்தான கணபதி போன்ற அவதாரங்கள் தோன்றின. மாதசிவராத்திரி நாளில் - மதுரை - அவனியாபுரத்தில் அருள்வதான ஸ்ரீசந்தான கணபதியை வழிபடுதல் சந்ததி வளத்தைத் தருவதாகும்.
மேலும் அமாவாசைக்கு முதல் நாள் மாதசிவராத்திரியில் அருணாசலமாம் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் மலையைச் சுற்றித் தோன்றும் இயற்கை ஒளிப் பிரவாகத்தைத் தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். அமாவாசைக்கு முன்பு வரை வானில் பரிபூரண இருள் சூழ்ந்திடினும், திருஅண்ணாமலையைச் சுற்றி எப்போதும், குறிப்பாக மாதசிவராத்திரி நாளில் பரந்த இயற்கை ஒளி எழுதலைக் கலியுகத்தில் இன்றும் காணலாம். இது கண்களுக்கும் உடல் நாள, நாடிகளுக்கும் மிகவும் நன்மை பயப்பதாகும். கேடில்லாத கெழுமிய கேதாரப் பிரகாசம் எனச் சித்தர்கள் இதனைப் போற்றிப் பகர்கின்றனர்.

இன்னம்பூர் சிவத்தலம்

இமயமலையில் கேதார்நாத்தில் ஆலயத்திற்கு இடப்புறம், வானில் தினமும் மாலையில் மிக மிகப் புனிதமான நித்தியப் பிரதோஷ நேரத்தில் நித்தியப் பிரதோஷப் பேரொளி தரிசனம் கிட்டுகின்றது. ஆரஞ்சு, இளஞ்சிவப்பு நேரத்தில் கிட்டும் இத்தகைய நித்தியப் பிரதோஷப் பேரொளியைத் தரிசிக்கையில் சிந்தாமணி கணபதியைத் தியானித்தலால், சந்ததி நன்கு செழுமை பெறும். அதாவது கேடில்லாத, அனைத்துமே நன்மைகளைப் பயப்பதாகிய, ஒப்பில்லாத சிவமணிப் பிரகாசமே மாதசிவராத்திரியில் அருணாசல மலையில் தோன்றும் ஒளிப் பிரகாசமாகும்.
மேலும் மறுநாள் அமாவாசைப் புனித நீராடலுக்காகப் பூவுலகிற்கு வரும் பல பித்ரு மூர்த்திகளும், முதல் நாளே இரவே மாதசிவராத்திரியை முன்னிட்டுப் பூவுலகிற்கு வந்து, அருணாசல கிரிவலத்தை மேற்கொள்வதால் திருஅண்ணாமலைக் கிரிவலத்தில் உங்கள் பித்ரு மூர்த்திகளையும் தூல, சூக்கும வடிவுகளில் தரிசிக்கும் தெய்வீக மாண்பினைப் பெறுகின்றீர்கள். மாதந்தோறும் திருஅண்ணாமலையில் மாதசிவராத்திரி கிரிவலம், பெளர்ணமி கிரிவலத்தை முறையாகத் தொடர்ந்து மேற்கொண்டு வருபவர்கள் பன்மடங்கான பலன்களை, நல்வரங்களை இரட்டிப்பாய்ப் பெறுகின்றார்கள்.
இவ்வாறாக பல இறைநல்வர தரிசனங்களைப் பூண்டுள்ள மாதசிவராத்திரியின் மஹிமையைப் பலரும் அறியாமல் இருக்கின்றார்கள். மாதசிவராத்திரியில் அருணாசல கிரிவலம் வருகின்றவர்கள் இதன் பலாபலன்களைத் தெள்ளியதாக நன்கு உணரலாம்.
அமாவாசைக்கு முதல் நாளே, இல்லங்களில் சந்தனக் கட்டை, சந்தனக் கல், பிரண்டை, வாழை இலை மணமுள்ள புஷ்பங்கள், துளசி, வில்வம், தேக்கு, மாம்பலகைகள், புதுப் பூணூல், தக்ளியில் கையால் நெய்யப் பெற்ற இயற்கையான பருத்தி விளக்குத் திரி, தக்ளிப் பூணூல் தர்பை, மரக் கிண்ணத்தில் எள் போன்றவற்றில் பித்ருக்கள் ஆவாஹனம் ஆவதால், மாதசிவராத்திரி இரவில் ஒரு தாம்பாளத்தில் வாழை இலையில்  இவற்றைப் பூஜித்து வைத்து, மறுநாள் இவற்றின் சாட்சியாகத் தர்ப்பணம் அளித்தல், பித்ருக்களின் விசேஷமான ஆசீர்வாதப் பலன்களைப் பெற்றுத் தருவதாகும்.
எந்த வீட்டுக்குக் குடி போவது? எனத் திகைப்போர் இத்தகைய மாதசிவராத்திரிப் பூஜையை முறையாக ஆற்றி வந்தால், நல்ல பலன்களைக் காணலாம்.
மாசி மாத மஹாசிவராத்திரி போன்று, மாதந்தோறும் கும்பகோணம் - புளியஞ்சேரி அருகில் உள்ள இன்னம்பூர் எழுத்தறிவித்தநாதர் ஆலயத்தில் மாத சிவராத்திரிப் பூஜையை, பிரமாதமான அபிஷேக ஆராதனைகளுடன் நிகழ்த்துவதற்கு சிறிது, சிறிதாக ஏற்பாடுகளைச் செய்து வந்திடில், நாளடைவில் பண்டைய காலம் போல், ஆயிரக் கணக்கானோர் மாதசிவராத்திரிப் பூஜையை ஆற்றும் அருந்தலமாக, திருஅண்ணாமலை பெளர்ணமி கிரிவலம் போல, இன்னம்பூர் சிவாலயத்தை நன்கு பிரகாசிக்கச் செய்திட முடியும்.  

பூர்வீகச் சொத்துக்களை
நிலைப்படுத்தும் முறை

முன்னோர்களுடைய பூர்வீக சொத்துக்களை வைத்துக் கொண்டு வாழ்வோர் நிச்சயமாக 24 முறை தர்ப்பண அர்க்யம் அளித்து வழிபட வேண்டிய கடமை ஒன்று உண்டு. 24 தலைமுறைகளுக்கும் தர்ப்பண சக்தி சென்றடைகின்ற அபூர்வமான நாட்களில் திருவோண நட்சத்திரத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கின்ற நாளும் ஒன்று. இது சுக்கிர அம்சங்கள் வம்சவாரியாக வந்தமைந்தால்தான் பூர்வீகச் சொத்து ஸ்திரம் பெறும் என்பதை உணர்த்தும்.
ஒரே நாளில் தொடங்கி, மறுநாள் நிரவாது, அதே நாளிலேயே நிறைவுறும் அமாவாசையாக வருவது மிக மிக அபூர்வமே! இவ்வாறு அதே நாளிலேயே பரிபூரணமாகும் அமாவாசைத் திதிக்கு வர்தகாஷ்ட அமாவாசை என்று பெயர். இதில் பல அரிய பலாபலன்களைப் பெற்றிடலாம்.
பூமியின் நிலப்பரப்பை அறிவதற்காக அட்சரேகை, தீர்க்கரேகை என்ற விஞ்ஞானப் பூர்வமான உத்தேசக் கோடுகளை, நிஜமாக அல்லாது கணக்கிற்காக வரைந்து கொள்கின்றோம் அல்லவா. உண்மையில் பூமியடியில் அட்சரேகை, தீர்க்கரேகை நீரோட்டங்கள் நிச்சயமாக உண்டு. இவற்றைப் பராமரிக்க வேண்டிய பொறுப்பு சமுத்திர ராஜனுடையதாகும். எனவேதான் அமாவாசை தோறும் கடலில் நீராடும் முன், சில கோடுகளை பீஜாட்சரப் பூர்வமாக வரைந்து கடலை உண்டு ஆசியருளிய ஸ்ரீஅகஸ்தியரின் ஆசியுடன்தான் கடலில் காலடி எடுத்து வைத்திட வேண்டும்.


குருவும் ஞானகுருவும் நல்லூர் சிவாலயம் தஞ்சை மாவட்டம்

இவ்வாறு ஸ்ரீஅகஸ்தியர், சமுத்ரராஜரின் அனுமதியைப் பெற்றிடத் துதித்து வணங்கிய பின் நீராடுகின்ற மேன்மையான வழிபாடு வகையும் உண்டு. எனவே குறித்த நாட்களைத் தவிர மற்ற நாட்களில் கடலில் நீராடக் கூடாது, தேவையின்றிக் கடல் நீரில் காலடிகளை வைத்திடல் கூடாது. உண்மையில் கடல் முன் தேவையின்றிக் கூடினால் அலைகள் சீற்றமுறும் என்ற பொருள் தரும் மூதாதையர் வாக்கியமும் உண்டு.
பீச் வகை நடத்தல் என்று எண்ணி கடற்கரையில் உலாவுதலால் கடலின் புனிதம் பாதிக்கப்படுகின்றது. கடல் தேவதைகளின் சாபமும் உண்டாகும். மதிப்பிற்குரிய மீனவப் பெருமக்களுக்கு இதிலிருந்து இறையாணைப் பூர்வமாகவும் மச்சமூர்த்திப் பெருமாளின் அனுகிரகத்தால் விதிவிலக்குகள் உண்டு. சிவபெருமானே மீனவராக அவதாரிகை கொண்டு அருள்கின்றாரன்றோ! ஏனையோர் அமாவாசை, கிரண காலங்கள், மாதப் பிறப்பு போன்ற தர்ப்பண சக்தி நாட்களில் மட்டுமே கடலில் நீராடிடலாம்.
கங்கை, காவிரி போன்ற புனிதத் தீர்த்தத்த்தில் கழிவு நீரைச் சேர்த்தல், இவற்றை மாசுபடுத்துதல் போன்று ஆறுகளுக்கு, கடலுக்கு மனித சமுதாயம் இழைக்கும் தீங்குகளே பல்வகை இயற்கைச் சீற்றங்களுக்குக் காரணமாகின்றன. கடல் தேவதைகளின் சீற்றத்தைத் தணிக்கவே, தீர்த்தவாரி எனப்படும் சமுத்திர பூஜைகளை, கடல் நீர் வழிபாடுகளை அவ்வப்போது ஆற்றி வர வேண்டும்.

குந்திதேவி வழிபாடு திருநல்லூர்

பண்டைய காலத்தில், வருடத்திற்கு ஒரு முறை லவண லம்பதாரண்ய பூஜை என்பதாக அன்று மட்டும், ஒரு கொய்யாக் குச்சியின் வழியே கடலின் புனிதமான, சுத்தமான, உப்பு நீரை அபிஷேக தீர்த்தமாக சுயம்பு மூர்த்திகளின் வார்த்துப் பூஜிக்கும் தெய்வீக மாண்பு நிலவியது. இது சமுத்திர ராஜருக்கு மிகவும் ப்ரீதி தருவதாகும். மக நட்சத்திர நாளில் தீர்த்தவாரியாக, இறைஉற்சவ மூர்த்திகள் கடலுக்குச் சென்று, குறிப்பாக பிரதமை, மக நட்சத்திர நாட்களில் தீர்த்தமளிப்பர். சில ஆலயங்களில் இன்றும் இவை கடைபிடிக்கப்படுகின்றன. இவையெல்லாம் காலப் போக்கில் மறக்கப்பட்டு விட்டமையால்தாம் இயற்கைச் சீற்றங்கள் பெருகி வருகின்றன.

சப்த சாகர தீர்த்தம்
திருநல்லூர்

கடல் நீர் உப்பாக இருப்பது போல் தோன்றுவதும் பல்வகை ஆன்மீகக் காரணங்களுக்காகவே! உண்மையில் கடல் நீர் இவ்வாறு உப்பு கரித்தலுடன் இல்லாவிட்டால் மனித சமுதாயம் பாதி கடல் நீரை தன்னுடைய சுயநலத்திற்காகவே பயன்படுத்தி, வறண்டிட விட்டிருப்பார்கள். உப்பு நல்வகைக் கிருநாசினியாக, தன்னுள் வந்து விழும் கழிவு நீரையும் சுத்திகரிக்கின்றது. அளவோடு நன்முறையில் பயன்படுத்தினால், பல கர்ம வினைகளைக் கழிக்கும் தன்மை உப்பிற்கு உண்டு. இதனால்தான் உலகெங்கும் தினசரி உணவில் உப்பு பயனாகின்றது.
சமுத்திர ராஜ பூஜையை மிகவும் மேன்மையாக முறையாக ஆற்றியவர்களுள் ஒருவரே கிருஷ்ண பரமாத்மாவின் சற்குருவாகிய சாந்தீபனி மகரிஷியும் பாண்டவர்களின் தாயுமான குந்தி தேவியும் ஆவர். குந்தி தேவி தினமும் ஓதிய மிகவும் சக்தி வாய்ந்த மந்திரங்களுள் ஒன்றே பாஸ்கர குந்தளத்ரய சுலோகங்களாகும். சமுத்திர ராஜர் தினமுமே சூரிய, சந்திர மூர்த்திக்குப் பாத பூஜைகளை ஆற்றி வழிபடுபவர். குந்தி தேவி, பல மாமுனிகளிடம் மிக, மிக அபூர்வமான மந்திரங்களை உபதேசமாகப் பெற்று முறையாகத் துதித்தவள். கணவனை இழந்தோர் ஆன்ம இலக்கணங்களுடன் வாழ வேண்டிய நல்வழி முறைகளை, கணவனே கண் கண்ட தெய்வம் என்ற பாரத இல்லறப் பாங்கின்படி அளித்து நல்வழி காட்டியுள்ளாள். இவற்றைக் கடைபிடிப்போர் மறுஉலகில், தாம் தெய்வமாகப் போற்றிய கணவனையே சென்றடைவர்.
சமுத்ரராஜர் தினமும் அரிய சூரிய பூஜைகளை ஆற்றுவதாலும், அவர் போற்றும் சூரிய மூர்த்திக்கான உன்னதமான மந்திரங்களைக் குந்தி தேவி திறம்பட ஓதி வந்தமையாலும், குந்தி தேவி வருகையில் கடல் நீர் தானாகவே விலகி வழிவிட்டு வணங்கிடும். மேலும் கும்பகோணம் அருகே திருநல்லூர் (திருநல்லம் எனும் கோனேரிராஜபுரம் வேறு) சிவாலயத்தில் உள்ள குந்தி தேவிக்கு சிவபெருமானே ஏழு கடல் தீர்த்தங்களையும் வருவித்த சப்த சாகர தீர்த்தத்தில் அமாவாசை தோறுமும், பவானி முக்கூடலிலும், அன்பில் அருகே காயத்ரீ, காவிரி, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்திலும், லால்குடி அருகே உள்ள தென்கயா எனப் போற்றப் பெற்று வந்துள்ள பூவாளூரில் பல்குனி நதியில் நீராடுதல் மிகவும் விசேஷமானது.
வ்யதிபாத யோக நாள்தோறும் பூவாளூர் பல்குனி ஆற்றங்கரையில் திவசப் பூஜைகளை நடத்தி, ஏழைகளுக்கு வாழை இலை நிறைய உணவுப் பண்டங்களை வைத்துத் தானமளித்தலால், மூதாதையர்களுடைய ஆசிகளைச் சொத்துப் பூர்வமாகவும், வித்யா சக்தியாகவும் பெற்றிடவும், பித்ரு சாபங்கள் தணியவும் வழி பிறக்கும்.

நெல்லி தருமே நல்ல எண்ணம்

பவ கரணமும், பிரதமைத் திதியும் சுத்திகரிப்புத் தன்மைகளைக் கொண்டவையாகும். அவிட்ட நட்சத்திரம், தவிட்டுப் பானை நிறையப் பொன்! என்பதாக மனம், உடல், உள்ளம், வீடு, தோட்டம், நிலம், அலுவலகம் அனைத்தையும் சுத்திகரித்து தர வல்ல நற்கிரணங்களைக் கொண்டதே அவிட்ட நட்சத்திரமாகும்.    

மஹாவிஷ்ணுவின் அம்சமாக நெல்லி மரம் விளங்குவதாலும், புதன் பெருமாளுக்குரிய நாளாதலாலும், புதன் தோறும் நெல்லி மரத்தைப் பூஜித்து வலம் வந்து சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்குவதால், தான் செய்த பலத்த தவறுகளுக்குப் பரிகாரங்கள் பெற வாய்ப்புகள் கூடி வருவதுடன், செய்த தவறுகளுக்கு மனப்பூர்வமாகத் தண்டனைகளை ஏற்கும் பக்குவமும் நன்கு கிட்டும். தற்காலத்தில் பலரும் தாம் செய்த பாவ வினைகளில் இருந்து எளிய பரிகாரங்கள் மூலமாக விடுபட எண்ணுகின்றனர். உண்மையில், செய்த வினைகளுக்கான விளைவுகளைத் துன்பங்களாக மனதார ஏற்று அனுபவித்திட மனமாரத் தயாராக இருப்பதும் வினைகளின் கடுமையைத் தணிக்க உதவும்.

பல்குனி நதி பூவாளூர்

நெல்லிச் சாற்றுற்குப் பலவிதமான நாளங்களைச் சுத்தப்படுத்தும் சக்தி உண்டு. நெல்லிச் சாற்றினில் தேன் மற்றும் சற்று அதிமதுர கஷாயம் சேர்த்து புதன் கிழமை தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்து கோமுகம் வழியாக அபிஷேக நீரைப் பெற்று அருந்துவதும் உடலும், மனமும் சுத்தியாகிட உதவும்.
புதன் கிழமைகளில் அபிஷேகத் தீர்த்தம் உள்ள ஆலயக் கிணற்றை 14 முறை வலம் வந்து வணங்கிடுக! கற்பாறையாய், பாசிப் படிவுகளாய் பல்லாண்டுகளாக மனத்தடியில் உறைந்து கிடக்கும் எண்ணப் பாறைகளை ஒரே நாளில் கரைத்து சுத்திகரிக்க முடியுமா? ஆனால் கழிவு நீர் ஓடிட, வாய்க்கால் அமைத்துத் தருவதும் ஒரு நற்பணிதானே!
மனதில் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை மனதில் ஓதி வந்தால், இதுவே மனதில் உள்நீரோடையாக அமைந்து, மனத்தில் தெளிவு பிறக்கும் அல்லவா!
ஒவ்வொருவர் மனதினுள்ளும் ஞான நீரோட்டம் உண்டு. உள்மனம் எப்போதும், எது நியாயமோ, தர்மமோ அதையே எடுத்துரைத்திடும். இதுதான் ஞானபல நீரோடையாக உள் மனதில் ஓடும்.  
14 வகை அபிஷேக வகைகளால் ஸ்ரீஞானாம்பிகை, ஸ்ரீஞானபுரீஸ்வரர், ஸ்ரீஞான ஸ்கந்த மூர்த்தி, ஸ்ரீஞானகுரு (தட்சிணா) மூர்த்திகளை ஆராதித்துப் பூஜித்தலால், பேச்சுத் திறன், வாக்சக்தி நன்கு சிறப்புடன் அமைய உதவும். குறிப்பாக ஆன்மீகப் பேச்சாளர்கள், உபன்யாசகர்களும், பேச்சு வன்மையை நாடுபவர்களும், விற்பனை, மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்களும் மேன்மை அடையத் துணையாகும்.

சற்குருவே அனைத்தையும் அருள்வார்

பலரும் குருவாரம் என்று போற்றி, வியாழனன்று ஸ்ரீதட்சிணா மூர்த்தியைப் பலவிதங்களில் தரிசிப்பதோடு நிறுத்தி விடுகின்றார்கள். குருவின் அனுகிரகம் என்பது வாழ்வில், பிறவிகளில் எந்நேரமும் தொடர்ந்து வந்து காப்பதாகும். ஆனால் கலியுகத்தில் சற்குரு என்றால், துன்பங்களை ஒப்புவித்து, பரிகார, பிராயச்சித்தங்களைப் பெறும் வெறும் வரம் காய்ச்சி மரமாக சத்குருவைப் பாவிப்பதால்தான், குருவருளைப் பரிபூரணமாக உணர இயலாது, பெற இயலாமல் போகின்றது.
சத்குருவை இவ்வாறு நாடி ஜோசியராகவோ, வெறுமனே ஜாதகம் பார்ப்பவராகவோ, ஜோசியராகவோ நோக்கினால் அவரும் அவ்வகையில்தான் தென்படுவார். ஆனால் நம்மைக் கரையேற்றும் கற்பகப் பாத்திரம் என அறிகையில்தான் சத்குருவின் பூரண தரிசனம் புலனாகும். இதற்கென மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில், பூர்ணச் சந்திர மஹரிஷி என்பார் கதலிவாரண யோகம் பயின்று, ஸ்ரீசந்த்ர மெளளீஸ்வரரைப் பூஜிக்கின்றார். திருவக்கரை போன்று சிரசில் பிறைச் சந்திரனுடன் துலங்கும் சிவதரிசனத் தலங்களிலும், சுயம்பு மூர்த்தித் தலங்களிலும் ஸ்ரீ பூர்ணச் சந்திர மஹரிஷியின் தரிசனம் பாக்யம் உள்ளோருக்குக் கிட்டும்.

ஸ்ரீருணம் தீர்த்த கணபதி
சீர்காழி

நம் பூர்வ ஜன்ம கர்ம வினைகளுக்கேற்ப வரும் இன்ப, துன்பங்களை எப்படியேனும் குருவருளால் அனுபவித்தே கரைப்போம். இதற்காக முதலில் அருணாசல கிரிவலம், பூஜைகள், புண்ணிய நதி நீராடல், மருத்துவம், சிகிச்சை போன்ற பலவற்றை மனிதப் பிரயத்னமாகக் கடைபிடித்தே ஆக வேண்டும்! என்ற எண்ணத்தை முதலில் ஊட்டுபவரே சத்குரு.
பலருக்கும் எவ்விதப் பெருந் துன்பங்களும் இல்லாமல் வாழ்க்கையை ஓட்டினாற் போதும் என்ற எண்ணமே ஏங்கி நிற்கின்றது. ஆனால் கர்ம வினைகள் மலை போல் கிடந்தால் என் செய்வது? சத்குரு அனுகிரகம் என்பது முதலில் அவரவருக்கான வினையின் விளைவுகளை அனுபவிக்கத் தயாராக இருக்கச் செய்வதுதான்! இதுவே தார்மீகமானதும், தர்மமுடையதும், நியாயமானதும் ஆகும். பிரச்னைகளைக் கொண்டு கொட்டுவதற்காக ஒரு பெட்டியாக சத்குருவைக் கருதும் வரை சத்குருவின் தெய்வீக மாண்பு ஒரு சிறிதும் புலனாகாது. இவ்வாறு சத்குருவைப் பற்றி எண்ணும் வரை, உங்களுடைய புண்ய சக்திகளைக் கொண்டே அல்லது உங்களைப் புண்ய காரியங்களை ஆற்றச் செய்து அதில் விளையும் புண்யத்தைக் கொண்டே உங்கள் துன்பங்களைக் கரைக்கும் வழிகாட்டியாக அவர் காட்சி தருகின்றார். ஆனால் என்றுதான் சரணடைவது? ஆனால் சத்குருவின்  ஆழ்ந்த நம்பிக்கை பெருகப் பெருக, அவரே தம் தபோ பலத்தால் மனமுவந்து இறையருளால் பலவிதமான துன்பங்களைக் கரைத்தும், துன்பங்களைத் தாங்கி அனுபவிப்பதற்கான மனோபலத்தையும் தருவதுண்டு.
நான் நல்லவனாகத் தானே வாழ்கின்றேன், எனக்கு ஏன் இவ்வளவு துன்பங்கள்? என்று எண்ணுவோரும் உண்டு. இப்பிறவியில் பிறருக்குக் கெடுதல் செய்யாது நல்லவராக வாழ்வதும் பூர்வ ஜன்மப் புண்யத்தினால்தான்! தானுண்டு, தன் வேலை உண்டு என நல்லவராக, தனக்குத் தானே வாழ்வதும் சுயநலமே! பிற ஜீவன்களின் நலன்களுக்காக பூஜைகள், தான, தருமங்கள், சிறு, சிறு உதவிகள், இவற்றைச் சத்சங்கப் பூர்வமாக ஆற்றுகின்ற அமைப்புகளுக்கு உதவுதல், இறைப் பிரச்சாரம், இறைவிஷயங்களைப் பரப்புவோர்க்கு உதவுதல் - என்று பலவற்றையும் ஆற்றி வாழ்தலே நல்லவராக வாழ்வதின் உண்மையான இலக்கணமாகும். மற்றபடி தானே வெளி வராது நல்லவராக (எண்ணி) வாழ்தல் என்பதும் பெருஞ் சுயநலமே!
இப்பூவுலகில் அறிந்தோ அறியாமலோ அனைத்து நாட்டு மக்களின் இலை மறை கனியாகத் துலங்கும் வாழ்க்கை லட்சியமே சத்குருவைத் தேடி, நாடிச் சரண் அடைதல் என்பதேயாகும். இதனை வாழ்வில் அவ்வப்போது உணர்த்திச் செல்வதே குருவாரமாகிய வியாழக் கிழமை ஆகும்.
எனவே வியாழன் தோறும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியிடம் குறைவற்ற செல்வமாகிய குருவருளையே அருள்வாய் என ஒரே ஒரு வாக்கியத்தைச் சங்கல்பமாக உரைத்துப் பூஜித்தால் இதில் அனைத்துமே அடங்கி விடும். இதுவும் முதலில் வெறும் வாய் வார்த்தை வேண்டுதலாகவே அமையும். இந்த வேண்டுதலோடு, வியாழன் தோறும், விடியற்காலையிலும் குரு ஹோரை நேரத்திலும், எலுமிச்சை அன்னம் சமைத்துப் படைத்து, முதலில் காக்கைகளுக்கு இட்டு, பிறகு ஏழைகளுக்கு அளித்து வருகையில்தான் குறைவற்ற செல்வமாகிய குருவருளைப் பெற்றுத் தா, என்பது மனமார்ந்த பிரார்த்தனையாக மலரத் தொடங்கும்.

ஸ்ரீஞானாம்பிகை
திருச்சேறை

திருவக்கரை

மஹாபாரதத்தில் அர்ஜுனன் போர்க் களத்தில் கலங்கி நின்ற போது, "அர்ஜுனா, இது தர்மத்தைக் காக்க நடக்கும் யுத்தம். பாசத்தில் உழல்கையில் உனக்கு எது நியாயம், தர்மம் எது எனப் புலனாகாது! என்னைச் சரணடைந்து சொல்வதைச் செய்!'' என ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா பகன்றது எந்த நேரத்திற்கும் பொருந்தும்!
எனவே வியாழனன்று "பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காகக் கடந்த வாரம் யாது செய்தாய்?'' என்று உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்ளுங்கள்! இதற்கான சரியான விடை வருகின்றதா என்று உங்களுக்கே தெரியும்! "என் வாழ்வே தடுமாறுகிறதே? இதில் பிறருக்கா எவ்வாறு ஏதேனும் செய்வதாகும்?'' என்ற (பொய்மையான) பதில் வந்தால், "இந்தத் தடுமாற்றங்களின் ஊடேயும், - பசுவிற்கு ஒரு சீப்பு வாழைப் பழம் அளித்தல், நான்கு இட்லிகள் கொண்ட உணவுப் பொட்டலத்தை ஒரு ஏழைக்கு அளித்தேன்!'' என்ற வகையில் பதில் வருமாறு, ஜீவன்களின் நலனுக்காக ஒரு சிறிதேனும் வாழ்ந்து பாருங்கள்!
நல்லவனாக வாழ்கிறேன் என எண்ணிட, கடந்த வாரத்தில் ஏதேனும் சிறு நற்காரியமாவது செய்தாயா? என்ற வினாவிற்குக் கிட்டும் விடையைப் பொறுத்துத்தான், இறைவன் உங்களுடைய துன்பங்களைப் படிப் படியாகத் தீர்ப்பார். இத்தகைய ஆத்ம விசாரங்களுக்கு உறுதுணையாக இருப்பதே மனாதிபதியாகிய சந்திர மூர்த்தியின் மூன்றாம் பிறைத் தரிசனம்!
தினமும் சிவபுராணம் போன்ற மந்திரங்களை ஓதி இதன் பலாபலன்களை நீங்கள் உங்கள் தினசரி வாழ்வில் காணும் சிறு பள்ளிக் குழந்தைகளுக்கு அர்ப்பணித்து, வருங்காலச் சமுதாயம் நல்ஒழுக்கத்துடன் அமைய தினமும் அருட்பணியாற்றுதலும் கூடுமன்றோ! இவ்வாறு நம்முடைய சக ஜீவன்களின் நலன்களுக்காக தன்னால் ஆனதைச் செய்து வாழ்வதே நல்லவராக வாழ்தல் என்பதை எடுத்து உணர்த்துவதற்காகவே வியாழனன்று கூடும் குருவார மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் பூர்ணச் சந்திர மஹரிஷி என்பார், வியாபாரி போல் தலையில் ஒரு கூடையில் வாழைப் பழங்களைச் சுமந்து நடந்து, நடந்து ஏழைக் குழந்தைகளுக்கும், பசுக்களுக்கும் அளித்துத் தம் ஆசிகளைப் பதிக்கின்றார். இவ்வகை தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.
எனவே வியாழக் கிழமைகளிலும், மூன்றாம் பிறை தரிசன நாட்களிலும் கூடை நிறைய வாழைப் பழங்களை வைத்துக் கொண்டு ஆங்காங்கே தானமாக அளித்தலால் தேவையில்லாத மனசஞ்சலங்கள் தணிய உதவும்.

முரண்பாடுகள் கனியும்

விஷ்கம்பம் முதல் வைதிருதி வரை 27 வகை யோகங்களுள் 21 ஆவது யோகமாக அமைவது சித்தம் யோகமாகும்.
சிவ யோக நாள், சித்தயோக நாள், சாத்தியம் யோக நாள் ஆகிய மூன்றும் அடுத்தடுத்து 20, 21, 22 ஆவது யோக நாட்களாக அமைகின்றன. இறையருள் தாமாகவே பூரித்துச் சுயம்புவாய் அமையும் அம்சங்களுக்கு சிவசித்த சாத்யம் என்று பெயர்.

ஸ்ரீதுங்கஸ்தாம்பிகை
காஞ்சனாகரம்

சிவனாரின் சித்தத்தில் கிளைப்பவையே சுயம்பு மூர்த்தி அம்சங்களாகும். சபரி மலையில் மகர ஜோதி தோன்றுவது, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் குளத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை அத்தி (மர) வரதரை  எழ வைத்துப் பூஜித்தல், திருக்கழுக்குன்றத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை சங்கு தோன்றுவது, கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மஹாமகம், வருடந்தோறும் திருக்கார்த்திகை நாளில் ஏற்றப்படும் அருணாசல தீபம் என்பதாக, பூவுலகில் பல அதியற்புதமான சிவசித்த சாத்யாம்சங்கள் மகத்தான தெய்வீக அம்சங்களாகத் துலங்குகின்றன.

ஓங்காரப் பிரகாரம்
திருவிடைமருதூர்

21 ஆவது யோகமாக சித்தம் யோகம் விளங்குவதால், ஒவ்வொருவரும் வாழ்வில் இத்தகைய 21 சிவசித்த சாத்யாம்சங்களைத் தரிசித்திடுதல் வேண்டும். இது மானுட வாழ்க்கையில் மிகவும் இன்றிமையாததாகும். திருஅண்ணாமலை கிரிவல தரிசனங்கள், திருக்கயிலயாயத்தில் நமஸ்காரப் பிரதட்சிணத் தரிசனங்கள், கேதார்நாத்தில் தினமும் மாலையில் ஆலயத்திற்கு இடப் புறம் மலையுச்சியில் தோன்றும் பிரதோஷாக்னி தீபம், கேதார்நாத் செல்லும் வழியில் த்ரியுகி நாராயண மலையில் பல்லாண்டுகளாகத் துலங்கி வரும் அக்னி, பிரயாக், வாரணாசி, கயை ஆகிய மூன்றிலும் உள்ள விசேஷமான ஆலமரங்களின் வேர், தண்டு, நுனிப்பகுதிகள், திருவிடைமருதூர் ஓங்காரப் பிரகாரம், மதுரை ஆலயத்தில் உள்ள மீனாட்சி அம்மனின் கிளி போன்று பாரத நாட்டில் மிக அதிகமாகவும், பிற நாடுகளிலும் சிலவுமாகவும் பல அரிய சிவசித்த சாத்யாம்சங்கள் பலவும் உள்ளன.
சிவ யோக நாள், சித்தயோக நாள், சாத்தியம் யோக நாள் ஆகிய இம்மூன்று நாட்களிலும் மேற்கண்ட வகையிலான சிவசித்த சாத்யாம்சங்களை விரதமிருந்து தரிசித்தல் மிகவும் விசேஷமானதாகும். இம்மூன்று நாட்களிலும் தேனில் பழங்களை ஊற வைத்து சாத்தியம் யோக நாளுக்கு அடுத்த சுபம் யோக நாளில் தானம் அளிப்பதால், குடும்பத்தில் நிலவும் எத்தகைய கொதிப்பான சூழ்நிலைகளுக்கும் நல்ல நிவாரணம் பெற்றிடலாம்.

சித்த யோகத்துடன் சிவம் யோகம் சேரும்போது சித்தம் எனப்படும் நெற்றிப் பட்டையில் முழுத் திருநீறு இட்டு, சித்தாமிர்த சக்திகள் நிறைந்த சித்துக்காடு, சித்தீஸ்வரம் போன்ற சித்சக்தித் தலங்களிலும் சித் மற்றும் சக்தி அம்சங்களாக இரு அம்பிகை உள்ள தலங்களிலும் வழிபடுதலால் வாழ்க்கையில் பல துறைகளிலும் முரண்பாடாக உள்ள கருத்துக்கள் கனிந்திட உதவும்.

கண்ணுள்ளபோதே சூரிய நமஸ்காரம்

பொதுவாக, பெண்கள் பூப்படைவதையும், மாத விலக்கு காலத்தையும், ருது காலம் என்று வழக்கில் குறித்தாலும் ருது என்பதற்கு எண்ணற்ற அர்த்தங்கள் உண்டு. எந்த ருதுக் காலத்தில் எவ்வகைப் பூக்கள் பூக்கும் என்பதை அறிந்து, ஆலயப் பூஜைகளை அமைப்பர். இதைப் பொறுத்து, மருத்துவர்களும் லேகியம், கஷாயம், பஸ்மம் தயாரிப்பதை சித்த, ஆயுர்வேத துறைகளில் நிர்ணயித்துக் கொள்வார்கள்.

வசந்த பஞ்சமி, ரத சப்தமி, மஹாசிவராத்திரி, காரடையான் நோன்பு போன்ற பலவும், சிசிர ருதுக் காலத்தில் வருகின்ற பண்டிகைகள் ஆகும். சிசிர ருதுக் காலம் பஞ்சமி திதியில் வசந்த ஸ்ரீபஞ்சமியுடன் துவங்குவதும், கலியுகாந்த நாளாக இது அமைவதும் விஷ்ணுபதியின் தொடர் பூஜைகளும் நிகழும் நாளாகவும் இந்நாள் துலங்குவது சிசிர ருதுவின் மகாத்மியங்களை மேம்படுத்துகின்றது.
வசந்த பஞ்சமி அன்று அவரவர் தம்முடைய ஜாதகத்தை சுவாமி விளக்கு முன் தாமரை இலையில் தாமரை மலரைப் பரப்பி இதன் மேல் சூரியக் கோலமிட்டு ஜாதகத்தை வைத்து வணங்குதல் விசேஷமானதாகும். வசந்த ஸ்ரீபஞ்சமி என்பது இந்திர லோக பிரம்மோற்சவங்களுள் ஒன்றாகும். முற்காலத்தில் ஒவ்வொரு ஆலயத்திலும் மூன்று அல்லது நான்கு கொடியேற்ற விழாக்களுடன் பிரம்மோற்சவங்கள் அமையும். இந்திர மூர்த்தி நேரில் வந்து அமைத்துத் தருபவையே வசந்த ஸ்ரீபஞ்சமிப் பூஜைகளாகும்.
பஞ்சமி, வசந்த பஞ்சமி, வசந்த ஸ்ரீபஞ்சமி, வசந்த மஞ்சுளா பஞ்சமி ஆகிய நான்கும், நான்கு பாதங்களுடன் துலங்கும் பஞ்சமி திதி நாட்களும் உண்டு. நட்சத்திரங்கள் போல் திதிகளுக்கும் சூட்சும பாதங்கள் உண்டு. இவை உத்தம தனுர் வேத ஜோதிடத்தில் குறிப்பிடப் பட்டிருப்பவை ஆகும்.

சித்துக்காடு பெருமாள் தலம்

பொதுவாக, அக்காலத்தில் போர்த் துறையில் இருப்போர் அக்காலத்தில் திதிக் கால்களை, திதிக் காலங்களை, ஆறு வகை ருதுக் காலங்களை நிர்ணயித்துப் போர் பயிற்சிப் பெறுவர். வசந்த பஞ்சமி அன்று சிறிதளவேனும் மழைப்பொழிவு ஏற்பட்டால் அது நாட்டிற்கு நல்ல சுபிட்சத்தைக் குறிப்பதாகும். வசந்த பஞ்சமி அன்றிலிருந்துதான் வசந்த காற்று வீசத் தொடங்கும். இதில் இந்திர லோகத்திலிருந்து எழுகின்ற கர்ண சூடக் கிரணங்கள் பரிணமிப்பதால் சுயம்பு லிங்கத்தின் மேல் வைத்து பூஜிக்கப்பட்ட அடுக்கு நந்தியாவட்டை புஷ்பங்களை இரு காதுகளில் வைத்துக் கொண்டு ஏழின் மடங்காக (7, 14, 21) தோப்புக் கரணம் இடுதல் அதி விசேஷமாகும்.

ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர்
செவலூர்

மருதாணி இட்டுக் கொள்வதற்கு மிகச் சிறந்த தினங்களுள் வசந்த பஞ்சமியும் ஒன்றாகும். சூரிய பகவானுக்குப் பூஜை ஆற்றி வழிபடுவதும், இந்திர சக்திகள் நிறைந்து விளங்கும் ஆலய பலி பீடங்களைச் சுத்திகரித்து எண்ணெய்க் காப்பிட்டு புஷ்பம் வைத்து வணங்குவதும் இந்திர அம்சங்களுக்கு உரிய தந்தங்களுடைய யானைகளுக்கு வயிறு நிறைய உணவிடுவதும் பிறரிடம் பயத்தால் சிலவற்றைச் சொல்ல முடியாத நிலையில் வாழ்கின்றவர்களுக்குத் தக்க நல்வழிகள் கிட்ட உதவும்.
மனத்தளவில் விரிந்திருக்கும் ஞானம், உடலளவில் பொருந்தி அமைதலே சிறப்பாகும். உடல், மனம் இரண்டுமே ஆன்மீக ரீதியாக ஒருங்கிணைந்து முன்னேற்றம் பெற்றால்தான் பெறுகின்ற ஆன்மீக நிலைகளும் சாசுவதமானதாக, அடுத்த முன்னேற்ற நிலையை நோக்கியதாக அமையும். இதற்கு ஞாயிறு தோறும், ஞாயிறு ஸ்ரீஞாயிறப்பர் (ஸ்ரீபுஷ்பரதேஸ்வரர்) ஆலயத்தில் வழிபடுதல் விசேஷமானதாகும்.
நிறையப் புத்தகங்களைப் படித்துப் பிறருக்கு விளக்கும் வண்ணம், சிறிது ஞானம் பெற்றாலும், தனக்கென வருகையில் தவித்தலாகாது! இதற்காகவே உழவார ஆலயத் திருப்பணிகள் அமைந்து, உள்ளம், மனம், உடல் மூன்றும் சமநிலை வளம் பெற உதவும். தத்துவார்த்தம் வெறும் ஏட்டுச் சுரைக்காய் ஆகி விடும். சுரைக்காயின் ருசியை வாயால், எழுத்தால் விளக்க முடியுமா ?

சித்துக்காடு சிவத்தலம்

இதனால்தான் இல்லறமே சாசுவதமான ஆன்ம நிலைகளைத் தரும் மகத்தான யோகமாக, நல்லறமாகக் கலியுகத்தில் போற்றப்படுகின்றது. மனமும், உள்ளமும், உடலும் ஒருங்கிணைந்து செயல்பட, சூரிய வழிபாடுகள் நன்கு உதவும். கண்களை நம்பித்தான் கலியுக வாழ்க்கை அமைந்துள்ளது. கண்களால் காண்பதை ஒட்டியே கலியுக வாழ்க்கை நிகழ்ச்சிகள் அமைகின்றன. கண்களால் காண்பனவற்றால் உந்தப் பெற்றே உடல் செய்யும் காரியங்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் அமைகின்றன. எனினும், கண்கள் நல்ல விதமான பார்க்கும் சக்திகளுடன் திகழ, சூரிய சக்திகள் மூலாதாரமாகத் தேவை எனப் பலரும் உணர்வதில்லை. எனவே ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பூஜைகளை ஆற்றுதல் மிகவும் விசேஷமானதாகும். சூரியனுக்கு உரிய ஞாயிற்றுக் கிழமைகளில் சூரியக் கிரணங்கள் மிகவும் பொலிவுற்று விளங்குகின்றன.
சூரிய சக்திகளைப் பெறும் வழிமுறைகள் பலவும் உள்ளன. யோகம், தியானம், மந்திரம், பூஜைகள், தான, தர்மங்கள் போன்றவை மூலமாக எளிதில் தினமுமே சூரிய சக்திகளைப் பெற்றிடலாம். மேலும் சூரிய சக்திகளைப் பெறுதல் என்பது ஒரு முறை பெற்று நின்று விடுவதல்ல! வாழ்க்கையில் இறுதி வரை நல்ல கண் பார்வையுடன் திகழ வேண்டும் ஆதலின், தினமுமே சூரிய சக்திகளைப் பெற்று வருவதற்கான ஆன்மீகப் பயிற்சிகளை மேற்கொண்டு வருதலே நன்மை பயக்கும். இதற்காகத்தான் தினமுமே மூன்று மணி நேரத்திற்கேனும் சூரிய ஹோரை நேரமும், சூரிய நட்சத்திர, அல்லது யோக, கரண சக்திகளும் வந்தமைகின்றன. இவற்றை நன்கு பயன்படுத்திக் கொள்ள மனித குலம் தவறினால் என் செய்வது?
கண்களால் நன்கு பார்த்தால் மட்டும் போதுமா? நல்லவற்றை எண்ணுதல், நல்லவற்றைப் பார்த்தல், நற்காரியங்களை ஆற்றுதல் என இவை அனைத்திற்கும் கண்களே காரணமாவதால், கண்களை நன்முறையில் பயன்படுத்தவதற்கும் சூரிய சக்திகள் மிக மிகத் தேவை என உணர்தல் வேண்டும்! ஏனெனில் கண்களால் பார்ப்பதைக் கொண்டுதானே எண்ணங்களில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. கருவில் வளரும் குழந்தைக்கும் கூட சூரிய சக்திகள் தேவையே!  
கண்களுக்கு மட்டும் என்றில்லாது, தந்தை வகைப் பித்ருக்களுக்கு மேன்மை அளித்தல், தந்தை வளி(ழி)யினர் நன்முறையில் வாழ்தல், நல்ல புத்தி ஏற்பட புத கிரக அம்சங்களோடு அருள்தல், சந்ததி விருத்தி, நல்ல நிலப் பயிர் உற்பத்தி, தீர்த்த யாத்திரை போன்ற பலவற்றுக்கும் சூரிய சக்திகள் உதவுகின்றன.

திருநறையூர் சித்தீச்சரம்

பல குடும்பங்களிலும் ஆண் அல்லது பெண் சந்ததி ஸ்தம்பித்து நின்று விடும். இவ்வாறல்லாது, ஆண், பெண் சந்ததிகளோடு குடும்பம் நன்கு வளர்ந்து வளம் பெறுதலே இல்லறத்திற்கு நன்மை பயக்கும். அனைத்துத் தானங்களின் சக்திகளை அன்னதானம் போலும், அன்னதானத்தினும் உத்தம சக்திகளை அளிப்பதாகவும் துலங்குவதே கன்னிகா தானம் எனப்படும் புனிதமான பெண் பிள்ளையின் திருமண வைபவம் ஆகும். எனவே, ஒரு பெண்ணை வளர்த்து ஆளாக்கித் திருமணம் செய்விப்பதை, உத்தமக் கன்னிகா தானம் என்றும், உன்னத இல்லற யோகம் என்றும் வேதங்களும், ஆன்றோர்களும் போற்றுகின்றனர்.
கலியுக மக்களை சூரிய சக்திகள் மூலம் உய்விக்கவே, ஞாயிறு என்ற பெயரிலேயே, சென்னை அருகில் சூரியகாரகத் தலம் ஒன்றுள்ளது. ஞாயிறு தோறும் பண்டைய காலத்தில் மகத்தான உற்சவங்கள் பொலிந்த தலம். ஞாயிறு தோறும் இங்கு வழிபட்டு வருதல், அனைவருக்கும் குறிப்பாக
* தந்தையை இழந்து வாடுவோர்க்கு உதவும்
* கம்ப்யூட்டர் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல கண் சக்தியை அளிக்கக் கூடிய தலம்
* வம்சம், வம்சமாகக் கண் நோய்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நன்னிலை பெற உதவும்.
* தந்தை வகை மூதாதையர் நல்வழி பெற உதவும் தலம்.
இங்குள்ள சூரிய மூர்த்தியே வேதபூஷண பாஸ்கர மூர்த்தி (மறைவளப் பரிதி மூர்த்தி) ஆவார். யாவர்க்கும் வேத சக்திகளை அளிக்க வல்லவர். வாலகில்லிய மஹரிஷிகள் இங்கு தாம் சூரிய மூர்த்திக்கு அரிய மந்திரங்களை உபதேசித்தனர். சூரிய மூர்த்தி சன்னதியில், தக்க மந்திர உபதேசம் பெறச் சிறந்த நாளும், சிறந்த தலமும் இதுவேயாம்!
லிங்க / பெருமாள் / பிள்ளையார் மூர்த்திகளின் மேல்  சூரிய ஒளிபடும் (சூரிய பூஜைத்) தலங்களில் ஞாயிறு தோறும் அபிஷேக, ஆராதனைகள், தான, தர்மங்களுடன் பூஜித்தல் விசேஷமானதாகும்.

இம்சைகளிலிருந்து விடுதலை

புதன் கிரகமும், அவிட்டமும் பொன் சக்திகளைக் கொண்டவை. பொன்னைப் பிரகாசிக்கச் செய்யும் ஸ்வர்ண புஷ்பதாக்னி எனப்படும் - பொற்கொல்லர்கள், பொன்னை உருக்கப் பயன்படுத்தும் - நெல் உமியில் எழும் அக்னிதான், தங்கத்தை மேன்மேலும் ஒளி பிரகாசப்படுத்துவதாகும். இதற்கான உமி-நெருப்பு சக்தியை, அக்னி மூர்த்தி அஸ்வினி மற்றும் பரணி, கிருத்திகை நட்சத்திர மண்டலங்களில் இருந்தே பெறுகின்றார். எனவே அனைத்து இல்லங்களிலும் உமியாலான அக்னியை எழுப்பி, கரி சேர்த்து, சாம்பிராணி தூபம் இடுதல் விசேஷமானது.

பஞ்ச பைரவ மூர்த்திகள் ஆவூர்

விளக்கு, கரிஅடுப்பு, ஊதுபர்த்தி, சாம்பிராணி, விறகு அடுப்பு எனப் பல்வகை அக்னிகள் இல்லத்தில் எழுதலே சிறப்புடையதாகும். மேலும் ஊதுபர்த்தி, விளக்கு தீபம் உட்பட ஒவ்வொரு வீட்டிலும் குறைந்தது மூன்று மணி நேரம் தொடர்ந்து தீபப் பிரகாசம் ஒளிர்தல் வேண்டும். இது இல்லத்தைச் சுத்தமாக்குவதுடன் கணவன் மனைவி இடையே பரிபூரண அன்பை அக்னிப் பூர்வமாக உருவாக்க இது உதவும். மேலும் அவிட்ட நட்சத்திர நாளில் விளக்கிற்குத் தங்க ஆபரணம் அணிவித்து வழிபடுதல் மிகவும் விசேஷமான அன்புக் கதிர்களைப் பொழிவித்திட உதவும்.
தங்கத் திருமேனி அம்சங்களுடன், சுயம்புவாய் ஆகர்ஷணம் பெற்று உற்பவிக்கின்ற பைரவ மூர்த்தியே ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆவார். புதனும் அவிட்டமும் கூடும் நாட்களில் ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் (பொன்னப்ப பைரவர்) என்ற பெயர் தாங்கி பைரவர் அருளும் சிவாலயங்களில், அடிப் பிரதட்சிணம் செய்து வழிபடுவதால் அபூர்வமான பலாபலன்கள் கிட்டுகின்றன.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

குறிப்பாக, பகைமை விரோத, குரோத சக்திகளால் தினமும் அஞ்சி வாழ்வோர், தக்க துணையும் தற்காப்புச் சக்தியும் பெற புத அவிட்ட பைரவ பூஜை நன்கு உதவுவதாகும். இந்நாட்களில் எவ்வகையிலேனும் - திருஅண்ணாமலையில் உள்ளது போலான - அஷ்ட (எட்டு) பைரவ மூர்த்திகளை அல்லது எட்டு சிவாலயங்களில் எட்டு பைரவ மூர்த்திகளைத் தரிசிக்கும் பாக்கியத்தைப் பெற்றிடுங்கள் இதன் பலாபலன்களாக, பலவிதமான வெறுப்பு உணர்ச்சிகளோடு வாழ்பவர்களின் மனத் தாங்கல்கள் தணிந்திட நன்கு உதவும். கும்பகோணம் அருகே சோழரத்தில் உள்ள ஸ்ரீபைரவேஸ்வரர் வழிபாடு, கும்பகோணம் -ஆவூரில் ஐந்து பைரவ மூர்த்திகள் சேர்ந்தருளும் பஞ்ச பைரவ வழிபாடுகள் உற்றம், சுற்றம், அலுவலகத்தில உள்ள பகைமையைப் போக்க உதவுபவையாகும்.
குறிப்பாக எப்போதும் பிறரிடம் வசவு, திட்டுகளை வாங்கிக் கொண்டு, வீண் பழி சுமந்து, செய்யாத தவறுகளுக்காக ஏசப்பட்டு, சிறு தவறிழைத்தாலும் பெரும் நஷ்டமாகிறது என்ற பழிச் சொல்லோடு வாழ்பவர்களும், இத்தகைய பழிகளில் இருந்து இருந்து மீள இத்தகைய பூஜைகள் உதவும்.
புதனும் அவிட்டமும் கூடும் நாட்களில் பைரவருக்கு 64 முழு முந்திரிகளாலான (வில்வம் சேர்த்திடலாம்) முந்திரி மாலையைக் கழுத்து முதல் பாதங்களைத் தொடும் வரை நீண்ட அங்கி மாலையாக அணிவித்து வழிபடுவதால், பிறருடைய இம்சைகளால் தினசரியே அவதிப்பட்டு வாழ்வோர்க்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சனி செவ்வாய் தோஷங்களையும் களையலாம்

நம் உடலையும் ஆத்மாவைத் தாங்கி இருக்கும் ரதம் என்றே உரைப்பர். சூரிய மூர்த்தி அனைத்து உலகங்களுக்கும் ஒளி தர மட்டுமே உலகை வலம் வரவில்லை! மகர ஜோதி போல, வடிவிலா இறைவடிவை மக்களுக்கு உணர்விக்கும் முகத்தான், நிதமும் அருணாசலமாம் திருஅண்ணாமலையை வலம் வந்தும் விண்ணில் தோன்றுகின்றார்.
சூரிய ஒளியில்லா ஒரு நாள் வாழ்வை நம்மால் நினைத்துப் பார்க்க முடிகின்றதா? தினமும் சூரிய உலகிற்கே தம் தபோ பலத்தால் சென்று வருகின்றனர் என்னே சித்தர்களின் தவப் பிழம்பு! ரத சப்தமி அன்று ஏழு சூரிய மூர்த்திகளைத் தரிசித்தலும், வெள்ளெருக்கு விநாயகரை வழிபடுதலும், மஹா விசேஷமானது. பசுவை இம்சித்தல், பிறரை அடித்தல் போன்ற தகாத காரிய வினைகளுக்கான பிராயச்சித்தங்கள் பெற இது உதவும்.
உத்தராயணம் தோன்றிட மட்டுமன்றி, முதலில் ஸ்ரீகிருஷ்ணனின் ஆணையாகவும், அவருடைய விஸ்வரூப தரிசனம் பெறவுமாக, பீஷ்மர் தர்பைப் படுக்கையில் வீற்றிருந்தார் அல்லவா! தான் அப்படுக்கையில் இருந்த நாட்களில், எவ்விதமான பிற சிந்தனையும் அல்லாது, விஷ்ணு நாமத்தையே ஓதி வந்தமையால், அம்புகளும் ஸ்வர்ண மயமாகி ஜ்வலித்தன. தரையிலிருந்து உயர எழும்பி நிறைந்த அம்புகளின்  மேல் படுத்திருந்தமையால், பூமாகர்ஷண சக்திகளும், பீஷ்மருடைய அப்பழுக்கிலா நைஷ்டிக பிரம்மச்சர்ய சக்திகளும் ஒன்றிணைந்து தேஜோமயப் பிரகாசம் ஆங்கே நிலவியது. அனைத்து மஹான்களும் ஆங்கே பிரசன்னமாயினர். முதன் முதலாக பீஷ்மர் ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத் துதிகளை ஓதிய ஒன்பது திவ்யப் பிரகாசமான நாட்களுள் ரதசப்தமியும் ஒன்றாகும்.
ரதசப்தமி எனப் பெயர் வரக் காரணம் என்ன? பூவுலக ஜீவ சக்திக்குச் சூரிய ஒளி அம்சங்கள் மிகவும் அத்யாவசியமானதன்றோ! சூரியனின்றிப் பூவுலக சக்திகள் பலவும் இயங்காது என நாமறிவோம். சூரிய மூர்த்தி ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் வானில் வலம் வந்து எத்தனையோ கோடி பூமிகளுக்கும், சந்திரக் கோள்களுக்கும் ஒளி வழங்குகின்றார். சப்தமித் திதியில்தான் சூரிய மூர்த்தி தோன்றினார். சப்தமித் திதி தோறும் சூரியக் கிரணங்கள் நயப் பிரகாச ஆற்றல்களைப் பெறுவதால், சப்தமித் திதியன்று சூரியக் கிரணங்கள் வித்யாசமானதாக இருக்கும். சப்தமித் திதி தோறும் சூரிய வழிபாடு ஆற்றுவது நல்ல புத்தி, நல்ல நினைவாற்றலைத் தருவதாகும்.

சூரியபகவானின் தேர்பவனி
கோயம்பேடு சிவத்தலம்

சூரியனுக்குரியது ஏழு குதிரைகள் பூட்டிய ரதம் என்று நமக்குப் புரிவதற்காகச் சொன்னாலும், உண்மையில் அவை, பூவுலகு ஜீவிப்பதற்காக உதவும் சப்த மாத்ருகா சக்திகளையும் குறிக்கின்றன. இதனையே ஏழேழு தலைமுறைகள் என்று குறிக்கின்றோம் அல்லவா! ஜாதகக் கணித ரீதியாகவும் சூரிய அம்சங்கள் பிதாகாரகராக, தந்தை வழி வம்சப் பரல்களைக் குறிக்கின்றன.
ஒவ்வொரு பூலோக ஜீவனும் அதற்கு முந்தைய ஏழு முதல் தலைமுறைகளில் விளைந்த ஜீவ சக்திகளைக் கொண்டுதாம் தோற்றம் கொள்கின்றன. கருவில் ஜீவசக்தி தோன்றுவது என்பதும் ஏழாம் நாளில் தோன்றுவதாகும். ஏழு குதிரைகள் என்பதாக ஏழு விதமான தெய்வீக சக்திகளைக் குறிக்கின்றன. ஸ்வரப் பிரகாச ஒலி சக்தி, ஸ்வர ஜீவித ஒளி சக்தி, வேத சக்தி, புருஷ சக்தி, பிதாசக்தி, மாத்ருகா சக்தி, பூ சக்தி ஆகிய ஏழும் தாம் சூரிய ரதத்தின் குதிரைகளாகும். இவை அனைத்தும் நமக்குத் தினமும் தேவையானதே! இதனைக் குறித்து அமைந்ததே வாரத்தின் ஏழு நாட்களும்!
ஏழு குதிரைகளுடன் கூடிய ரதத்தில் சூரிய மூர்த்தி வலம் வருகின்ற திவ்யமான காட்சியை ரத சப்தமித் தினத்தில் பாக்யமுள்ளோர் தரிசனம் பெற்றிடலாம். ஏழு விதமான நரம்புகளால் ஆவதே வெள்ளெருக்கு ஆகும். மிகச் சிறந்த சூரிய சக்தி மூலிகைகளுள் வெள்ளெருக்கும் ஒன்றாகும். தினமும் சூரிய மூர்த்தி வெள்ளெருக்கு விநாயகரை வணங்கியே தம் பிரகாசப் பணியைத் தொடங்குகின்றார். எனவே தாம் சூரியனார் கோயிலில் வெள்ளெருக்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

வெள்ளெருக்கு உள்ளிருக்கு!
ஆச்சிராமவல்லி

சூரிய மூர்த்தி, சிவ பூஜைகளை ஆற்றுகையில், மஹா சப்தமித் திதி தினமொன்றில் ஈஸ்வரனே சூரிய மூர்த்தியின் சிரசில் ஒன்பது வெள்ளெருக்கு இலைகளில் தானியங்கள், முக்கனிகள், புஷ்பங்களை வைத்து ஆசிர்வதித்து, ஜீவன்களுக்கு ஜீவசக்தி அளித்தல், அனைத்து ஜீவ காரியங்களுக்குச் சாட்சியாய் இருத்தல், இரவு பகல் காலத்தை உருவாக்குதல், உத்தராயண, தட்சிணாயன இரு அயனங்களை ஏற்படுத்துதல், அமாவாசைத் திதி ஆக்கம், தேவ மூர்த்திகளின் வலக் கண்ணாய் ஆகுதல், ஜீவன்களின் கபாலத்தில் பிரகாசித்தல் போன்ற அருட்பணிகளை இறையருளால் ஆற்றித் தருகின்றார். இவை அனைத்தும் வெள்ளெருக்கு இலை நரம்புகளில் வியாபிக்கின்றன. எனவே ரத சப்தமி அன்று வெள்ளெருக்கு விநாயகரைப் பூஜித்தல் மிகவும் விசேஷமானதாகும்.
பல யுகங்களிலும் ஜீவன்கள் இறை தரிசனங்களைப் பெற முடியவில்லையே என ஏங்கிய போது, சூரிய, சந்திர மூர்த்திகளை இறைவன் ஒளி வடிவில் படைத்து, தெய்வப் பொருளை ஜீவ அறிவிற்கு, உடலுக்கு ஓரளவு வடிவுப் பூர்வமாக, உரு வடிவில் காண ஒப்பி வருவதாக, பாஸ்கரச் சந்திரப் பிரகாச யோகத்தை உணர வைத்துத் தந்தார். இதில் சிலவும் சூரிய நமஸ்கார வகை முறைகள் ஆயின.
ரத சப்தமி அன்று அதிகாலை சூரியோதய நேரத்திற்குச் சற்று முன், தலையில் எருக்க இலைகளை வேறு பல சூரிய சக்தித் திரவியங்களுடன் வைத்து வழிபடுதலும், (விளக்கங்கள் தேனிமலை மஹிமை புத்தகத்தில்) தேனி மலை கிரிவலமும் மிகவும் விசேஷமானதாகும்.
சப்தமி திதிக் கிரிவலம் நல்ல கண் பார்வைக்கான யோக சக்திகளை அளிப்பதுடன்,  ஞாயிறு, சூரியனார் கோவில், பாஸ்கரராயபுரம், சூரியூர், தேனி மலை (பண்டைய சூரிய ஸ்கந்த மலை) போன்ற சூரிய நாமப் பூஜைத் தலங்களில் வழிபடுதல் நலம் பயக்கும். ரத சப்தமி அன்று ஒன்பது எருக்க இலைகளைச் சாட்சியாக வைத்துத் தர்ப்பணம் அளித்தல் மிகவும் விசேஷமானதாகும். உறவினர் சொத்து, கோர்ட் வழக்குகளில் வேதனையுற்று இருப்போர் நல்ல மனவைராக்யத்துடன் போராடி வென்றிட, இந்த அர்க்கபாத சாட்சித் தர்ப்பணமும் சப்தமி திதி தோறும் வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடும், ஜாதக ரீதியாக சனி மற்றும் செவ்வாய் அம்சங்களை வலுப்படுத்த மிகவும் உதவும்.

அர்க்யம் அனைத்தையும் நல்கும்

அஷ்டமித் திதிப் பூஜைகளில் தலை சிறந்தவர்களுள் ஒருவரே பீஷ்மாச்சாரியார் ஆவார். நீண்ட நெடுங்காலமாகப் பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து சிறந்து, எண்ணற்ற அஷ்டமித் திதி விரதங்களை முறையாக ஓரணுவும் பிசகாது கடைபிடித்துக் கைக் கொண்டவர். இதன் பலாபலன்களைத் தனக்கென இவர் ஒரு போதும் கொண்டதில்லை! இதனால்தான், இவருக்கு ஸ்ரீகிருஷ்ண பகவானுடைய விஸ்வ ரூப தரிசனம் கிட்டியவுடன், தாம் அணிந்திருந்த ஸ்படிக மணிமாலை மூலம் தாம் பெற்ற விஷ்ணு சகஸ்ர நாம மந்திரங்கள் அனைத்தையும் உலகிற்கு எடுத்தளித்து அர்ப்பணித்துத் தந்தார்.
அஷ்டமித் திதி தோறும் பீஷ்மாச்சாரியாரை எண்ணிச் சங்கல்பம் செய்து கொண்டு, எட்டு முறை விஷ்ணு முறை சஹஸ்ர நாமம் ஓதுவோர்க்கு நல்ல ஞாபக சக்தி விருத்தியாகும். தமிழிலும் தினந்தோறும் திருமாலின் செவ்விய ஆயிரத்தோர் நாமங்களை ஓதி வருதல் நல்ல நெறிகளைத் தரும். தீய வழக்கங்கள் ஒரு போதும் வாழ்வில் அண்டாது காக்கும்.
பல தலைமுறைகளையும் கண்ட பீஷ்மர் அஷ்டமித் திதி பூஜைப் பலன்களால் தாமாகவே பொழிந்த நல்வரன்களாக அற்புதமான சத்குணங்களுடன், நல்ல நினைவாற்றலுடன் பிற ஜீவன்களுக்குத் தொண்டாற்றும் வகையில் இறுதி வரை பொலிந்தார். ராஜ வம்சத்தில் பிறந்தாலும் அதன் சுகபோகங்களில் வயப்படாது பிறன் மனையை ஒரு போதும் நோக்கிடாத அதியற்புத நைஷ்டிக பிரம்மசாரியே பீஷ்மாச்சாரியார் ஆவார்.

ஸ்ரீபுண்டரீக தீர்த்தம்
திருவெள்ளறை

நைஷ்டிகப் பிரம்ச்சர்யம் எனில் பல ஆன்மீக அர்த்தங்கள் உண்டு. விந்துவின் ஒரு அணுத் துளி கூட வீணாகாது, மூலாதாரத்திலிருந்து சகஸ்ராரம் வரை வெள்ளை நரம்பு மூலமாக ஆத்மஜோதி தரிசனம் பெறுதல், ஆண், பெண் வேறுபாடு இல்லாது அனைவரிடமும் பரிபூரணமான அன்பைப் பரிமாறுதல், நன்றியுடையோராய் இருத்தல், தர்மத்தை உரைத்தல் போன்ற பலவும் நைஷ்டிக பிரம்மசாரிக்கு உரிய இலக்கணங்கள். இவற்றிற் சிறந்தவரே பீஷ்மராவார்.
அஷ்டமித் திதி அன்று எட்டு விதமான கபாலசித் சக்திகள் வலுப் பெறுகின்றன. கபாலத்தில் எட்டுத் திக்குகளிலும் எண் வகை யோகச் சிந்தனாக் கு(மி)ழிகள் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் எட்டு திசைகளில் இருந்தும் மற்றும் தாவரங்கள், பட்சிகள், தூண், சுவர், கம்பம் போன்ற ஜடப் பொருட்கள் மூலமாகவும் எண்ணற்ற உலக விஷயங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இவற்றைப் பெற எண் வகை யோகச் சிந்தனாக் கு(மி)ழிகள் மிகவும் உதவும்.
உண்மையான ஆறாம் பகுத்தறிவுடன் செயல்படும் எந்த மனிதனுமே இவை அனைத்தையும் எளிதில் கிரகித்திடலாம். ஆனால், இவற்றில் பலவும் வருங்கால நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் வண்ணம் அமைவதால் சாதாரண மனித மனமானது வருகின்ற நிகழ்ச்சியை தடுக்கவே முயற்சிக்கும். இதனால்தான் இவற்றைச் சாதாரண மனிதர்களால் கிரகிக்க முடியாமல் போகின்றது. ஆனால், நடப்பதெல்லாம் நன்மைக்கே என்ற பக்குவம் வந்தாக வேண்டும். இதற்கு அஷ்டமித் திதிப் பூஜை உதவும்.
பீஷ்ம தர்ப்பண நாட்களில் பீஷ்மம் தர்ப்பயாமி! என்று ஓதி, குதி கால்களில் நின்று, இரு கைகளிலும் நீரை ஏந்தி பூமியில் வார்த்து 12 முறைகள் அர்க்யம் அளிப்பதாலும்,
தினந்தோறும் பீஷ்மருக்கு அர்க்யம் அளிப்பதாலும், இளைய தலைமுறையினர் காம இச்சையின்பால் வயப்படாது நல்ஒழுக்கத்தில் எப்போதும் சிறந்திட உதவும்.
பீஷ்ம தர்ப்பண நாளில் எண் கோணக் கிணறு, எண் துறைத் தீர்த்தம், எட்டு விமானங்கள் உள்ள ஆலயங்கள், எட்டு விருட்சங்கள் உள்ள ஆலயங்கள், எட்டு திசைகளிலும் படிக்கட்டுகள் உள்ள தீர்த்தம் போன்றவற்றில் நீராடுதல், அர்க்யம் அளித்தல் நல்ல மன சுத்தியை அடைய உதவும். திருச்சி அருகே உள்ள ஸ்ரீபுண்டரீகாட்சப் பெருமாள் தலமான திருவெள்ளறைத் தீர்த்தத்தில் பீஷ்மார்க்யம் அளித்தல் சிறப்புடையது.
அவரவர்க்கு தம் உள்ளத்தில் பல வயதுப் பருவங்களிலும் உள்ள அல்லது வெளிப்பட்ட தகாத எண்ணங்கள் யாவை என மிகவும் நன்றாகவே தெரியும். இவர்கள் இப்போதிருந்தே தம்முடைய தகாத எண்ணங்களை முறைப்படுத்தி வாழ்வில் எக்காலத்தும், எங்கும் குறிப்பாக வெளிநாடுகளிலும் சுகபோக (அ)நாகரீகத்தின் நடுவிலும் பாரதப் பண்பாட்டிற்குரிய சிறப்பான மன, உடல் நல்ஒழுக்கத்துடன் ஆன்மீக ரீதியாகப் பொலிந்திட, தினமும் பீஷ்ருக்கு அர்க்யப் பூஜைகளை அளித்து வர வேண்டும்.

புத்திப் பிரகாசம்
அறிவுப் பிரகாசம்

புத்திரகாரகராக புத கிரகம் துலங்குவதாலும், புத்தி சிறப்புற இருந்தால்தான் வாழ்க்கை நன்னெறிப்படும் என்பதாலும், புத கிரகம் எந்த நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் பூஜைகளை நிகழ்த்தி வருதலால், புத்தி ஸ்திரப்படுவதோடு புத்திப் பிரகாசமும் கிட்டும்.
புத்திப் பிரகாசமே நினைவாற்றலுக்கும், மனம் ஒருமிக்கவும் மிகவும் உதவும். இது அனைத்து வயதுப் பருவத்தினருக்கும் மிகவும் முக்கியமானது. ஏனெனில் 65 வயதைத் தாண்டினாலேயே, கலியுகத்தில் ஞாபக மறதி ஏற்பட்டு, “என்ன சாப்பிட்டோம், அல்லது சாப்பிட்டோமா, இல்லையா?'' என்பதே தெரியாத புத்தி மழுங்கல் வந்திடும். இதிலிருந்து தற்காத்துக் கொள்ளவே, இள வயதில் இருந்தே புத வழிபாடு, நவமித் திதி வழிபாடுகள் கல்வி சக்திகளின் விருத்திக்காக அமைகின்றன.
தினமும் நவகிரகத்தை 27 முறை வலம் வருதலும், நவதான்யங்களால் தினமும் இல்லத்தில் அர்ச்சனை செய்து ரவையாக்கி எறும்புகளுக்கு இடுதலும் பணக் கஷ்டங்களைப் போக்க உதவும். இதுவே தினசரியுமே அனைத்து கிரக அனைத்து நட்சத்திர சஞ்சார வழிபாடுமாக ஆகிறது.
தினமுமே பல்வகை வழிபாடுகள் என்றால் மனம் சலித்து விடாதா? இடைவிடாது இறையம்சங்களில் இல்லறத்தோடு இணைந்து சஞ்சரித்தலே, பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் பெருங் கடமையாகின்று அல்லவா, இதே போன்றதே தினமும் பலவகை வழிபாடுகளில் ஈடுபட்டு உடலில், மனதில் இறைசஞ்சாரத்தை விருத்தி செய்வதாகும்! கடமையில் சலிக்கலாகுமா?
தெய்வத்தை இடைவிடாமல் வழிபடுகின்றேன், என்ற மேலுலகில் வாக்கைக் கொடுத்து விட்டு, பெறுதற்கரிய மனிதப் பிறவியை எடுத்துக் கொண்டு வந்து விட்டு, இதனைப் புத்திப் பூர்வமாகவும் மறந்து வாழ்வது யாருடைய தவறு? இந்த வாக்குறுதியினால்தான் உங்களுக்கு இந்த மானுடப் பிறவி வந்தமைந்துள்ளது என்பதை மறவாதீர்கள்! இதிலேனும் வாக்கு நாணயம் தவறாது இருங்கள்!
தர்ம தேவதா மூர்த்தி மண்டலமாகவும் சதய நட்சத்திரம் பொலிவதால் சதயமும் புதன் கிழமையும் கூடும் நாட்களில் தான, தர்மத்தையே பூஜையாகக் கொண்டிடுங்கள்! வாழ்க்கையில் உங்களுக்குத் தேவையான நிலம், வீடு, உடை, வாகனம், உணவு, பழங்கள், குடை, பாத்திரங்கள், காலணி, கைத்தடி என அனைத்தையும் வகைப்படுத்தி உங்கள் வாழ்வில் அவரவர் வசதிக்கேற்ப வாழ்வு முடிவதற்குள் இவை அனைத்தையும் ஒரு முறையேனும் பிறருக்குத் தான, தர்மமாக ஆற்றி வருதலும் புத்திப் பிரகாசத்தைத் தருவதாகும்.
தானதருமம் தனியாக இயலாதெனில் பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்கமாக நடத்திடலாமே! புதன் சதயத்தில் சஞ்சரிக்கும் காலத்தில் காலணிகள், குடை, கைத்தடி என்ற வகையில் பூமி, ஆகாயம் சம்பந்தப்பட்ட பொருளைத் தானமாக அளித்து தர்ம மூர்த்தி, எம மூர்த்தி பூமா தேவியை வணங்குதலால் அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவது மறையும்!

திருத்த வேண்டாம் திருந்தி வாழ்

வெள்ளிக் கிழமையை அனைத்து மதத்தினரும் மிகவும் புனிதமான நாளாக உலகளாவிய நிலையில் போற்றுகின்றனர் அல்லவா! இதற்குக் காரணம் என்ன? வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து விதமான வளங்களையும் அருளும் சுக்கிர சக்திகள் பூரிக்கும் திருநாளே வெள்ளி என்பதுடன், அம்பிகை பூவுலகிற்கு மானுட வடிவில் சுயம்பு மூர்த்திகளைப் பூஜித்து வருவதற்காக அருள் வரமாகப் பெற்ற நாளே வெள்ளிக் கிழமையாகும். சுக்ர வாரம் என்று சகல ஐஸ்வர்யப் பலாபலன்களையும் எளிய பூஜா வரங்களாகப் பெற்றுத் தர வல்ல நாளாகவும் வெள்ளி துலங்குகின்றது.

ஸ்ரீகாலபைரவர்
மெய்ஞானபுரி

விடியற் காலையில் விடிவெள்ளியாகக் காட்சி தருவது சுக்கர கிரகமாகும். வருடத்தில் சில மாதங்களிலேயே கிழக்கில் தென்படும் விடிவெள்ளி கிரகத்தின் தினசரித் தரிசனம் சிறிது சிறிதாக உடல் நாளங்களை, அசுர சக்திகளிடம் இருந்து விடுவித்து மனதைச் சுத்திகரிக்க உதவும்.
சுக்கிர மூர்த்தி சர்வேஸ்வர தரிசனம் பெற்ற நாளாகையால், சுக்கிர வாரம் எனப் பெயர் பெற்றதாகப் பலரும் எண்ணினாலும், சுக்ர சக்தி என்பது சுக்ர மூர்த்தி தோன்றுவதற்கு முன்னிருந்தே பொலிகின்றது என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
சகல நலவள வரன்களும் பொ(லி)ழியும் நன்னாளாக வெள்ளிக் கிழமையை மும்மூர்த்திகளும், துர்க்கா, லக்ஷ்மீ, சரஸ்வதி மூர்த்திகளும் ஸ்ரீகால பைரவேஸ்வர மூர்த்தியிடமிருந்தே பெற்றுத் தந்த நாளாகும். இதனால்தான் வெள்ளிக் கிழமையன்று குளிகை நேரத்தில் சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரரை வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.
ஐஸ்வர்ய சக்திகளுள் காலப் பதக்கச் சக்கர சக்தி என்ற ஒன்றுண்டு. இந்த காலப் பதக்கச் சக்கரத்தில் நவரத்னம் போன்ற அனைத்து விதமான உத்தம தெய்வீக சக்திக் கற்களும், அனைத்து உலோகங்களும், வண்ணங்களும், எண் சக்திகளும், யாகம், கிழமை, திதி, நாள், வாரம் போன்ற 108 வகைக் கால யந்த்ர வகைகளும் பொறிக்கப்பட்டிருக்கும். இதனைத்தான் கால செச்சி ஆபரணமாய் ஸ்ரீகாலபைரவர் அணிந்து அருள்கின்றார். இதில் பொதியும் பஞ்சாங்க சக்திகள்தாம் பஞ்சாங்க விளக்கங்களாக நமக்கு வந்துள்ளன. இதனால்தான் ஸ்ரீகாலபைரவருக்குத் தினமும் காலையில் ஆலய நடை திறக்கும் முன்னும், இரவில் நடை சார்த்துவதற்கு முன்னுமாக ஸ்ரீகாலபைரவ பூஜைகளை நிகழ்த்தி, ஸ்ரீகாலபைரவருக்கு ஐந்து இடங்களில் சந்தனமும், புனுகும் இட்டு வழிபடுவார்கள்.
ஒவ்வொருவரும் தம் வாழ்நாளில் ஒரு முறையேனும் சிவகங்கை-மாவட்டம் காரைக்குடி அருகில் உள்ள,
1. வைரவன்பட்டி ஸ்ரீபைரவர்
2. திருப்பத்தூர் ஸ்ரீதளீஸ்வரர் ஆலய பைரவர்
3. சீர்காழி ஆலய ஸ்ரீசட்டநாதர் ஆகிய மூன்று தலங்களிலும் இரவில் இறுதிப் பூஜை காலத்தில் நிகழும் அர்த்த ஜாமப் பூஜையைத் தரிசித்திட வேண்டும். இதில் திருப்பத்தூர் பூமி, பைரவ பூமியாக ஆவதால் இப்பகுதியில் உள்ள ஆலயங்களில் பைரவ சன்னதிகள் தனி விமானம், கலசத்துடன் அமைந்திருக்கும்.
திருப்பத்தூர் ஸ்ரீதளீஸ்வரர் ஆலய பைரவர் சன்னதியில், இரவு நேர பைரவ பூஜையில் நிறைய நியதிகள் உண்டு. இவற்றை முன்னரே அறிந்து தரிசிக்கவும்.

சுக்ரனுக்கு உரிய எண் ஆறு என்பதால்,
சுக்ர ஜோதி, சுக்ரவேதம், சுக்ரபீஜம், சுக்ரமூலம், சுக்ரதேவம், சுக்ரபாதம்.
சுக்ரபூதி, சுக்ரநாதம், சுக்ரகானம், சுக்ரதானம், சுக்ரபாடம், சுக்ரபூதம்
போன்று ஆறு, ஆறு வகைகளில் ஆன சுக்ர சக்திகள் உண்டு. இவற்றை அந்தந்த வெள்ளிக் கிழமைகளின் தன்மைகளுக்கு ஏற்ப வந்தருளும் முறைகளை அறிந்து பூஜிப்பதே மிகவும் விசேஷமானது. எந்தெந்த சுக்ர வாரத்தில் (வெள்ளிக் கிழமையில்) எவ்வகை ஆறாறு வகை சக்திகள் பூரிக்கின்றனவோ அவற்றின் வகையில் ஆலயங்களில் அம்பிகைக்கான அலங்காரங்கள், அபிஷேக, ஆராதனைகள் போன்றவற்றை நிகழ்த்துவார்கள். எனவே வெள்ளி தோறும் ஆறு காலங்களிலும் ஆலயத்தில் அம்பிகை தரிசனங்கள் விசேஷமானவை.


ஸ்ரீயோக பைரவ மூர்த்தி திருத்தளி திருப்பத்தூர்

சுக்ர மாமுனி வழிபட்ட தலங்களில் ஆறு வகை அபிஷேக, ஆராதனைகளுடன் பூஜிப்பது மிகவும் விசேஷமானதாகும்.
தீய வழிகளில் அல்லலுற்ற அசுரர்களுக்கு நல்வழி காட்டிட, சுக்ராச்சாரியார் அசுர குரு ஆனார். தம் அகங்கார, ஆணவத்தால் தெய்வ சக்திகளையே எதிர்க்கத் துணிந்த அரக்கர்களை நல்வழிப்படுத்துதல் கை கூடுமா? இருப்பினும் அசுரர்களுக்குக் குருவாக சுக்ராச்சாரியார் ஆகிடக் காரணமென்ன?
உலக ஜீவன்கள் யாவர்க்கும் குரு உண்டு. ஆனால் குருவை அறிந்தடையும் காலம்தான் அவரவர்களுடைய கர்ம வினைப் பாங்கைப் பொறுத்து அமையும்.
தீயவர்கள் என்றாலும் அவர்களையும் நல்வழிப்படுத்த வாழ்வில் முயற்சி என்ற ஒன்றையுமே எடுக்காது, அசுரர்களா, கெட்ட மனிதர்களா, அவர்களைத் திருத்தவே முடியாதே என்ற முடிவிற்கு வரலாகுமா?
தீய குணம் என்றால் கலியுகத்தில் அவரவர் உள்ளம், மனம், உடல் எப்போதும் தூய்மையாகவே இருக்கின்றதா என அவரவரே தம்மை நன்கு மனசாட்சிப் பூர்வமாக எடை பார்த்துக் கொள்ளட்டும். அவரவர் தம் உடல், மனத்தளவில் எந்த அளவுக்கு அசுர குணங்களுடன் இருக்கின்றார்கள் என்பது அவரவருக்கே மிகவும் நன்றாகத் தெரியும்.
எனவே கலியுகத்திலும், அசுர சக்திகள், அசுர குணங்கள், அசுர நடவடிக்கைகள், அசுரத்தனமான எண்ணங்கள் பெரும்பாலான மனிதர்களிடம் எழத்தான் செய்கின்றன. பரிசுத்தமான சத்யம், நற்பண்பு, உண்மை, தர்ம சிந்தனை, தான தர்மக் கைங்கர்யங்கள், நாணயம், பொறுமை, அடக்கம் போன்ற பல இறைப் பண்புகளுடன் நிறைந்து இருப்போர் மிகவும் குறைவே!
எனவே அனைவரும் திருந்திட, அவரவரிடம் உள்ள கோபம், குரோதம், விரோதம், பகைமை, அதர்மமான, முறையற்ற காம இச்சைகள் போன்ற பல அசுர குணங்களையும் களையும் முயற்சியே வாழ்க்கைக் காலம் என்பதாகும். எனவே முயற்சி தளராமை வேண்டும்.
எனவே திருத்த, திருந்திட முயற்சித்தல் என்பது வாழ்க்கையில் எப்போதும் நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். ஆனால் செய்த தவறுகளில் இருந்து மீண்டு, மீண்டும் மீண்டும் அதே தவறுகளைச் செய்வதே அசுரத் தீய சக்தி ஆகி இவற்றிலிருந்து வெளி வருவதே கடினமாகி விடும். அசுர சக்திகள் உள்ளே புகுந்தால் அகங்காரம், ஆணவம், கர்வம் போன்ற பலவற்றுடன் வருவதால் இவற்றைக் களைவதும் மிகவும் கடினமே!
இயற்கையிலேயே சுத்தமாக அமைந்து பிறவற்றையும் சுத்திகரிக்க வல்ல கோமேயம், தேன், பசும் பால், புனுகு, சந்தனம், சாம்பிராணி, பசு நெய், தக்ளியால் நெய்யப் பெற்ற திரி, தக்ளியால் நெய்யப் பெற்ற பூணூல் போன்றவற்றைக் கொண்டு அபிஷேக, ஆராதனைகளை ஆற்றுதலால் மன சுத்திக்கான பெரியோர்களின் நல்வழிகாட்டுதல் வந்தமையும். எப்படி முடிவெடுப்பது எனத் திகைக்கும் காரியத்தில் தக்க பெரியோர்கள் மூலமாக நல்வாய்ப்புகள் கை கூடும்.

விரதங்கள் வர்ஷிக்கும் வரங்கள்

வாரத்தின் ஏழு நாட்களும் விரதத்திற்கு ஏற்புடையனவே! ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் சிறப்புடையதாகும். வியாழக் கிழமை விரதமிருப்பது ஜாதக ரீதியாக பலன்களை ஸ்திரம் செய்து, பலமாக்கித் திருமண வகை தோஷங்களை நிவர்த்தி செய்ய உதவும்.
பிள்ளைகளுக்காகப் பெற்றோர்கள் குரு வார (வியாழன்) விரதமிருந்து, ஸ்ரீதட்சிணாமூர்த்திக்குக் கடலை மாலை சார்த்தி வழிபடுதல், பிள்ளைகள் நல்ல ஸ்திரமான புத்தியைப் பெற உதவும்.
சனிக்கிழமை ஸ்திர வாரம் எனப் போற்றப்படுவதாகும். வாழ்க்கையில் ஆயுள், புத்தி, ஆரோக்யம் போன்றவை ஸ்திரமாக இருக்க வேண்டும். ஆயுள் ஆரோக்யம், ஆயுள் ஸ்திரம், ஆயுள் விருத்தி ஆகிய மூன்றும் குடும்பத்தில் நிலவும் ஆயுள் வகை தோஷங்களைப் போக்குவதாகும்.
* புற்று நோய் மற்றும் கடுமையான நோய்களால் பாதிக்கப்படுதல்
* அடிக்கடி மரண பயம் ஏற்படுதல்
* நோயைப் பற்றிய சிந்தனையே நாள் முழுதும் மனதில் பரவி இருத்தல் (இது பலத்த ஆயுள் தோஷத்தைக் குறிப்பதாகும்)
* குடும்பத்தில் பாரம்பரியமாகக் கணவனை இழந்து கைம்பெண் ஆதல்
* நடுத்தர வயதிலேயே சர்க்கரை வியாதி, சிறுநீரக நோய் போன்ற பலவற்றிற்கும் ஆட்பட்டு மாத்திரை, மருந்துகளுடனேயே வாழ்நாளைக் கழித்தல்
- மேற்கண்ட யாவும், மிருத்யு தோஷம், மற்றும் ஆயுள் சக்தி பாதிப்பால் வருவதாகும். விரத சக்திகளால் நமக்குரிய வல்வினைகளே நோய்களாக வந்துள்ளன என்ற எண்ணங்கள் ஸ்திரமாவதால் நோயைப் பற்றியே எண்ணிக் கொண்டிருக்கும் (நேர விரயத்) தன்மை மறையும்.
நோய் நிவாரணத்திற்கு செவ்வாய்க் கிழமை வழிபாடு உகந்தது. ஆயுள் ஸ்திரமாக விளங்க, சனிக்கிழமை தோறும் துளசித் தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருந்து வருதல் வேண்டும். அந்தந்தக் கிழமையில் அந்தந்த கிரஹ ஆஹர்ஷண சக்திகள் மேம்பட்டிருக்கும் ஆதலால், அந்தந்தக் கிரக அம்சங்கள் பதிந்திருக்கும் உடல் பகுதிகளில், அந்தந்தக் கிரக ஆகர்ஷண சக்திகளை மேம்படுத்த விரத சக்திகள் உதவும்.
விரதம் எனும் போது ஆசை, மன சஞ்சலம், பசி இவைகட்கு அடிபணியாது நிற்கும் மன வைராக்யமும், ஏனைய துன்பங்கள் இருந்தாலும் அவற்றின் ஊடே அவற்றுக்கு ஆட்படாத மனஉறுதி, மனவைராக்யம், மனத் துணிவும் உண்டாவதால், விரதங்கள் வாழ்க்கையில் மிக எளிமையாக ஆத்ம சக்திகளைத் தருவதாகும்.
பசி என்பது நாளங்களின் தன்மைகளைக் காட்டுவதாகும். பசித்துப் புசி! என்பது விரதத்தின் பாங்கினையே குறிக்கின்றது. வயிற்றில் எதையாவது போட்டு அடுக்கிக் கொண்டே இருந்தால் எப்படிப் பசியின் மேன்மை அறிய உதவும்? இதற்காகவே தியாகம் என்பதாக, தான் ஒரு வேளை சாப்பிட வேண்டியதைப் பிறருக்கு அளித்தும் காருண்ய குணம் பிறக்கவும் விரத முறை பிறந்தது.
பிறருக்கு எப்படிப் பசி ஏற்படும் என அறிந்தால்தானே அன்னதான புத்தி இயற்கையாகவே வரும். மேலும் இவ்வாறு விரதத்தில் ஆத்ம விசார சக்திகளும் நன்கு மேம்படுகின்றன. பெருமாளுக்குரிய சனிக் கிழமையில் ஏகாதசி வருவது இந்நாளின் விரத மகத்துவத்தைப் பெருக்குகின்றது.
சனிக்கிழமை தோறும் தாயார் விரதமிருந்து பெருமாளின் திருவடிகளைப் பூஜிக்கும் திருநாளாதலின் சனிக் கிழமைகளில் பெரியோர்களின் பாதங்களைப் பற்றி வணங்கிடுக! இறைவனுக்குப் பாதங்களில் மலர்களைப் பாதணிகளாக அணிந்து பூஜித்தல் மிகவும் விசேஷமானது. ஆயுள் பற்றிய கவலைகள் தீரவும், உதவிக்காக, உதவி வர வேண்டிய இடத்தில், பிறரைச் சந்திப்பதில் உள்ள அகங்கார, சங்கோஜப் பிரச்னைகள் தீர்ந்து நற்காரியங்கள் நன்கு நடைபெறவும், சனிவார விரதம் மிகவும் உதவும்.

ஏழ்கடலையும் விஞ்சிய எள்

ஒவ்வொரு தானியமும் ஒவ்வொரு தினத்தில் ஸ்ரீசாகம்பரி தேவியால் தோற்றுவிக்கப் பெற்றுள்ளதே! மனிதர்கள் இப்பூவுலகில் தம் பிறந்த நாளை, ஏழைகளுக்கு இயன்ற வகையில் உதவும் வண்ணமாக அல்லாது, பிரயோஜனமற்ற வகையில் ஆடம்பரமாகக் கொண்டாடுவது போல் அல்லாது, பழம் மற்றும் தானியத் தாவரங்கள், தம்மை பூலோக ஜீவன்களின் நலன்களுக்காகத் தம்மை அர்ப்பணித்துக் கொள்வதால், இவற்றின் உற்பத்தித் தினங்கள் தியாகமய தினங்களாக மகத்துவம் பெறுகின்றன.

ஸ்ரீகருக்குடிநாதர்
மருதாநல்லூர்

இவ்வகையில் எள் தானியம் உற்பவித்தத் தினமே ஞாயிறாகும். புனிதமான எள் தாவரத்தின் உள்அமைப்பு எண்ணற்ற தெய்வீக ரகசியங்களைக் கொண்டதாகும். மருத்துவ விஞ்ஞானத்தில் குறிப்பிடப்படும் மரபுச் சின்ன தாத்பர்யங்கள் ஒரு சிறு எள்ளில் அடங்கி உள்ளது எனில், என்னே எள்ளின் (தெய்வீகப்) படைப்பு ரகசியங்கள்! சித்தர்கள் இதன் ஆன்மத் தத்துவங்களைப் பரிபாஷைத் துரீய ஞான விள்ளல்களாக, எழுதாக் கிளவி மாமறைப் பரிபாடல்களாக உரைத்துள்ளனர்.

திலத்துறைச் சுதவளித வளிவார வழிப் பதமாய்
குலத் துறையும் கோதை குலன் கோப்பரியம் ஆவதென
பலத் துரிய பந்தாளம் பண்டுரிய மாபேதம்
இலத்துறை யேகம்பவதி எண்ணாரம் கூளபதி
என்பது எள்ளில் எண்ணெயாய் உறைந்திருக்கும் வளிப்பளி பற்றிய ஆன்ம ரகசிய அம்ச விளக்கங்களாகும். இதில் ஆயிரமாயிரம் விளக்கங்கள் தக்க சற்குரு மூலமாய்ப் பெறப்படுவதாக அமைந்து, விரிந்து, நிறைந்துள்ளன.
கோப்பரி என்பது ரிப்பனைப் போல முறுக்குக் கம்பியாகும். இதனைத்தான் வளிப்பளி வடிவாகத் தற்போது காட்டுகின்றார்கள்

முறுக்கைப் பிரிவாடம் முன்னாரப் பதிவாசல்
கொறுக்கை இருபாரி குறுமுனியே கருவாரி
வறுக்கை இலஞ்சிபத வந்தார மந்தாரம்
ஒறுக்கை யதுவாமே ஓங்காரச் சீவனமாம்
(கொறுக்கை இருபாரி - கும்பகோணம் - பட்டீஸ்வரம் அருகே இரண்டு நந்திகள் உள்ள கொறுக்கைத் தலம்
குறுமுனி கருவாரி- கும்பகோணம் - மருதாநல்லூர் அருகே கருவளர்ச்சேரித் தலத்தில் தம்பதி சகிதம் பூஜித்த அகஸ்திய மாமுனி)
வறுக்கை இலஞ்சி - குற்றாலம் அருகே இலஞ்சித் தலத்தில் உள்ள இறுவாருக நாதர் சிவாலயம் )
என்பதும் சிருஷ்டி ரகசியங்களை உணர்த்துவதாகும். இத்தலங்கள் யாவும் வளிப்பளி தெய்வீக ரகசியங்களை உணர்விக்கின்ற சிருஷ்டித் தத்துவங்களைக் குறிக்கின்றன.

.

ஸ்ரீஇறுவாருகநாதர் சிவாலயம் இலஞ்சி

மரபம்சங்கள் பெற்றோர்களின் ரத்த அணுக்களில் பாரம்பரியமாய் வருவதையே கொறுக்கை என அழைக்கின்றனர். இதனால்தான் சிருஷ்டியை உருவாக்கும் ஆதி மூல பிரம்ம மூர்த்தியே சிருஷ்டிக்கான அற்புதப் படைப்பு ரகசியங்களைப் பெற்ற தலமே கொறுக்கை ஆயிற்று.
தந்தை வழி மரபணுக்களுக்குக் கொறுக்கை என்பதாகக் கருப்பு எள்ளையும், தாய் வழி மரபணுக்களுக்குக் கொருக்கை என்பதாக வெள்ளை எள்ளையும் குறித்து, இதனால் கொறுக்கைத் தலச் சிவமூர்த்தியே ஸ்ரீபிரம்மஞானபுரீஸ்வராகவும் அருள்கின்றார்.
இங்கு கொறுக்கையில் சனி ஹோரையில், சனிக் கிழமைகளில் சிவபெருமானுக்கு எள் காப்பு இட்டு வழிபடுதல் ருணஹர பூஜையாக, கடன்கள் வருவதற்கான ருணவழி வினைகளை நீக்கி, கடன்களைத் தீர்க்க வல்ல நல்வழிகளைத் தருவதாகும்.
எள் தாவரத்தில் 72 வகைளுக்கு மேல் உண்டு. பெருமாள் திருமேனியில் பிறந்த எள் வகை ஸ்ரீவாரி எள் ஆகும். இதில் சற்றுச் சிவந்தும் கருப்பும் உடையதுமான ஆதி எள் ஆகும். சனீஸ்வரர் திருமாலை வணங்கிப் பெற்ற எள் செடி மாலையில் விளைந்த எள் க்ருஷ்ண திலபாரி எனும் கருப்பும், கருநீல வண்ணமும் சேர்ந்த எள் ஆகும்.
ஞாயிறன்று எள் கலந்த முறுக்கு, எள் உருண்டை, எள் தட்டை போன்றவற்றைப் பெருமாளுக்குத் தானமளிப்பதும், எள் எண்ணெயான நல்லெண்ணெயாலான 8, 26 என எட்டு எண் வரும்படியான எண்ணிக்கையில் தீபங்களை ஏற்றுவதும் மிகவும் விசேஷமானதாகும்.

கொறுக்கை சிவாலயம்

ஞாயிறன்று எள் செடிகளை வயலில் தரிசிப்பதும், அறுவடை செய்த எள் செடிகளை விலைக்கு வாங்கி, புல், வாழை இலைகளுடன் பசு, காளை, யானைகளுக்கு அளிப்பதும், ஏழைகளுக்குப் புது ஜாடிகளில் நல்லெண்ணெய் தானமளித்தலும், சந்ததி, சந்ததியாய் வரும் குற்றங்களை, தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான பரிகாரங்களைப் பெற உதவும்.
எல்லாவற்றையும் விட, தர்ப்பணத்திற்கு மிகச் சிறந்த சாதனமாய் பித்ருக்களுக்கு மரபணுசக்தி மூலமாக அர்க்ய சக்திகளை அளிக்கும் தெய்வீக மார்க சாதனமாய் விளங்கும் எள் தேவதைகளுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையும் ஆக இதனை நடத்தி, பித்ருக்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றுத் தரும் அட்சயப் பாத்திரமாக விளங்கும் எள் தானியத்திற்கு உரிய தேவதைளை வழிபட வேண்டிய பொன்னாளே ஞாயிறாகும்.
மேற்கண்ட பாடல்களை ஓதி, பெருமாளை நவதானியங்களுடன் கூடிய எள் மணிகளால் 1008 போற்றித் துதிகள் ஓதி
ருணஹர கணேச ஸ்தோத்திரங்கள் ஓதிப் பிள்ளையாரையும்,
திருநெடுங்கப் பதிகங்கள் ஓதி சிவனையும்,
தொண்டரடிப் பொடியாழ்வார் பாசுரங்களை ஓதிப் பெருமாளையும்
அர்ச்சித்து, எள் மணிகளை ரவை, சர்க்கரையுடன் சேர்த்து எறும்புகளுக்கு இட்டு வர, பணக் கஷ்டங்கள் தீர, முதலில் இதற்குக் காரணமான ருண ஹரத்தை நீக்கிட உதவும்.

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam