உயிரில் உறையும் உடலுக்குச் சேவையே தீபசேவை!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கொண்டராங்கி குசல தீபம்

தீபங்களில், தீப சக்திகளில் பல உட்பிரிவுகள் உண்டு. அதே போல குசா சக்திகளிலும் பல உட்பிரிவுகள் உண்டு. குசா சக்தியில் உள்ள 108 உட்பிரிவுகளில் உள்ள ஒரு உட்பிரிவே தீப சக்திகளாகும். இதில் அசல தீபம், குசல தீபம், கண்ட தீபம், கொண்ட தீபம், தீர்க தீபம் என்பவை ஒரு சில நன்மையே செய்யும் தீப சக்திகளாகும். இத்தகைய நன்மையே செய்யும் தீப சக்தியான குசல தீபம் பிரகாசிக்கும் ஆண்டே இந்த சோபகிருது ஆண்டு ஆகும்.

பழநி ஒட்டன்சத்திரம் அருகில் உள்ள கொண்டராங்கி திருமலையில் குசல தீபத்தை ஏற்றி அதை பிரபஞ்சத்தின் நன்மைக்காக அளிக்க சித்தம் கொண்டுள்ள மூர்த்திகளே
              1. வியாச மகரிஷி
              2. மகாபலி சக்கரவர்த்தி
              3. பரசுராமர்அருணாசல தீப கீதம்!

              4. விபீஷணன்
              5. ஆஞ்சநேயர்
              6. கிருபாச்சாரியார்
              7. அஸ்வத்தாமன்
என்ற ஏழு சிரஞ்சீவி மூரத்திகள் ஆவர். வெறும் ஏழே ஏழு சிரஞ்சீவி மூர்த்திகள்தான் இந்த பிரபஞ்சத்தில் இதுவரை தோன்றியுள்ளார்களா என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். நிச்சயமாக இல்லை. எப்படி 63 நாயன்மார்கள் என்று நாம் வழக்கில் குறித்தாலும் நாயன்மார்கள் நூற்றுக்கும் மேல் உண்டு. சிரஞ்சீவிகளும் அவ்வாறே.

தன் ஒரே மகனின் கழுத்தை அறுத்து கறி சமைத்து ஒரு சிவனடியாருக்குப் படைத்தார் ஒரு நாயன்மார், ஆடாது அசையாது 30 வருடங்களுக்கு மேல் அமர்ந்து இதயத்தில் கோயில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்து வழிபட்டார் ஒரு நாயன்மார். இவையெல்லாம் பக்தி இலக்கணங்களை கற்பிக்கும் தத்துவங்களே, இந்த தத்துவங்களை ஏற்று செயல்படுத்தி அதை உலகிற்கு வெளிப்படுத்திய உத்தமர்களையே நாம் நாயன்மார்கள் என்று அழைக்கிறோம்.

அது போல் என்றும் எங்கும் விளங்கும் தெய்வ தத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்த தோன்றியவர்களே சிரஞ்சீவி மூர்த்திகள். இவர்கள் ஏழு பேர் வெளிப்படுத்திய தத்துவத்தையே மேற்குறித்த சிரஞ்சீவி மூர்த்திகளாக நம் சற்குரு அருளியுள்ளார். உண்மையில் கலியுகத்தில் தோன்றிய மார்க்கண்டேயரைப் போன்ற சிரஞ்சீவிகள் ஆயிரம் ஆயிரமே. இது சோபகிருது தமிழ் வருடத்துடன் 2023 என்ற ஆங்கில வருடத்தின் ஏழைக் குறிக்கும் சக்திகள் இணைவதால் ஏழு சிரஞ்சீவ சக்திகளை முன் வைத்து சிரஞ்சீவிகள் அனைவரும் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து வழிபட்டு, இந்திர லிங்கம் முதலான அஷ்ட லிங்கங்களில் வழிபாடுகளை இயற்றி அந்த சக்திகளை எல்லாம் கொண்டராங்கி திருமலையில் ஏற்றப்படும் குசல தீபத்தில் சிரஞ்சீவித்துவ அனுகிரகமாக அளிக்கின்றார்கள் என்பதே நம் சற்குரு நமக்காக அருளும் சித்தர்கள் மட்டுமே அறிந்த இரகசியமாகும்.

18.11.2023 சனிக் கிழமை முதல் அனைத்து சிரஞ்சீவிகளும் திருஅண்ணாமலையை தொடர்ந்து கிரிவலம் வந்தவாறு இருப்பார்கள். எட்டாம் நாள் சனிக் கிழமை அன்று அஷ்ட லிங்கங்களிலும் வழிபாடுகளை இயற்றி தங்கள் வழிபாட்டுப் பலன்கள் அனைத்தையும் உலக நன்மைக்காக 26.11.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று ஏற்றப்படும் கொண்டராங்கி குசல தீபத்தில் அர்ப்பணித்து விடுவார்கள் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் தீபப் பலன்கள். இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். சிரஞ்சீவியாக இருந்தாலும் மகாபலி சக்கரவர்த்தி தன்னுடைய இருப்பிடமான பாதாள லோகத்தை விட்டு வெளியே வர முடியாது. ஆஞ்சநேய மகாபிரபு தன்னுடைய தவபீடமான சாந்தவெளி இமயமலைப் பகுதியிலிருந்து சாதாரணமாக வெளியே வருவது கிடையாது. இந்நிலையில் அனைத்து சிரஞ்சீவிகளின் அருட்கடாட்சத்தையும் நாம் எப்படி பெற முடியும்?

உங்கள் ஆத்ம விசார வழிபாடாக திருஅண்ணாமலையை வலம் வரும் காலம் முழுவதும் இது போன்ற சிரஞ்சீவி சக்திகள் எவ்வாறு பொலியும் என்பது குறித்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் நீங்கள் இந்த கேள்விகளுக்கான விடைகளைப் பெற முடிகிறதோ இல்லையோ நிச்சயம் உங்கள் வாழ்வில், உங்கள் சந்ததிகளுக்கு நிரந்தர சிரஞ்சீவித்துவ சக்திகளைப் பெற்றுத் தந்தவர்கள் ஆவீர்கள். இதை விடச் சிறந்த ஒரு செல்வத்தை, சொத்தை, ஐஸ்வர்ய கடாட்சத்தை உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் பரம்பரைக்கும் பெற்றுத் தர முடியுமா?

பரிமாணம் கடந்த பரிணாமம்

ஒரு முறை நம் சற்குருவைக் காண 120 கொலைகள் புரிந்து ஒரு ‘உத்தமர்’ வந்திருந்தார். சாதாரண வேலையில் சேர்ந்த அந்த அரசு அதிகாரி தன்னுடைய ‘திறமை’ மூலமாக பலரை எமலோகத்திற்கு அனுப்பி விட்டு அதன் ‘பயனாய்’ பல பதவி உயர்வுகளை அடுத்தடுத்து பெற்று விட்டார். இப்போது தன்னுடைய திறமையைக் காட்ட தன்னுடைய ‘தர்ம பத்தினி’ என்று கூட்டி வந்த ஒரு விலைமாது மூலமாக தன்னுடைய காரியத்தை சாதிக்க அவர் தயாராக இருந்தார். நம் சற்குருவும் இதற்காகப் பச்சைக் கொடி காட்டவே அந்த அதிகாரி தன் ‘மனைவியின்’ மூலம் பதவி உயர்வைப் பெற்று விட்டார்.

சங்கு தீர்த்தம் திருக்கழுக்குன்றம்

நம் சற்குருவின் இந்த அரிய சேவைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்க அந்த அதிகாரி நம் சற்குருவின் இல்லத்தை அடைந்தபோது கோவணாண்டிப் பெரியவரோ, “டேய், நீ மறஞ்சுடுடா...”, என்று கூறவே நம் சற்குருவும் அந்த அதிகாரியின் பார்வையிலிருந்து மறைந்து விட்டார். பூமியிலுள்ள எந்தப் பொருளும் நான்காவது பரிமாணத்திற்குச் சென்று விட்டால் அது மனிதக் கண் பார்வையிலிருந்து மறைந்து விடும். இவ்வாறு தன்னுடைய ‘மறைவை’ தன்னுடைய சுயநலத்திற்காகப் பயன்படுத்தாமல் மற்றவர் நலனுக்காகப் பயன்படுத்தியதே நம் சற்குருவின் உயர்ந்த செயல்.

ஒருமுறை நம் சற்குரு உட்பட மூன்று பெயர் சென்னையில் ஒரு சந்தடி மிகுந்த சாலையின் வழியாக சென்று கொண்டிருந்தபோது ஒரு ‘பிளேடு’ அவர்கள் எதிரில் வந்து விட்டார். கார்த்திகை தீப அன்னதானத்திற்கு நன்கொடை பெறுவதற்காக ஒரு பிரமுகரைச் சந்திக்க அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அந்த அடியார் நம் சற்குருவைக் காணப் போவதாகவும் அந்த இரண்டு பேரும் தன்னுடன் வருவதாக இருந்தால் வரலாம்..., என்று ஒரு ‘அன்பு’ அழைப்பையும் விடுத்தார். அப்போதுதான் அந்த அடியார்களுக்கே தெரிய வந்தது. நம் சற்குரு அந்த அடியாரின் பார்வையிலிருந்து மறைந்து விட்டதால்தான், சாலையில் சென்று கொண்டிருந்த மூன்று நபர்கள் இரண்டு நபர்களாக அந்த அடியாரின் பார்வைக்குத் தெரிந்தனர் என்ற இரகசியம்.

இத்தகைய பரிமாணம் கடந்த பரிணாம இரகசியங்களை நம் சற்குரு எப்படி எல்லாம் அடியார்களின் நன்மைக்காக பயன்படுத்துவார் என்பதையும் நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம். குசல தீபம் என்னும்போது அது இத்தகைய பரிமாணம் கடந்த பரிணாம இரகசியங்களை நம் சற்குருவை நம்பும் உத்தமர்களுக்கு தீபப் பிரகாச பலன்களாக நல்கும் என்பதே குசல தீபத்தின் மகத்துவமாகும்.

இந்த சோபகிருது வருடம் கார்த்திகை தீபத்தின் உற்சவ தினங்களில் திருஅண்ணாமலையை வலம் வரும் சிரஞ்சீவிகள் அனைவரும் ஏதாவது ஒரு குசல சக்தியை தங்கள் அனுகிரகமாக அளிக்க வேண்டும் என்பது கார்த்திகை தீப கிரிவல விதியாக இருப்பதால் இந்த உற்சவ நாட்களில் வலம் வந்து கொண்டராங்கி குசல தீபத்திற்கு ஏதாவது ஒரு வகையில் உறுதுணையாய் இருப்பவர்களுக்கு, நிற்பவர்களுக்கு இந்த குசல சக்திகள் உறுதுணையாய் நின்று பொலியும் என்பது உறுதி.

குசல சக்தியால் என்ன பயன்?
மனித கற்பனைக்கு எட்டாத எத்தனையோ பயன்கள் குசல சக்தியால் விளையும் என்றாலும் ஒரே ஒரு பயனைப் பற்றி மட்டும் இங்கு விளக்குகிறோம். ஒரு முறை ஐந்து நதிகள் பாயும் திருவையாறு திருத்தலத்திற்கு வருகை தந்த நம் சற்குரு அங்குள்ள காவிரி ஆற்றில் அடியார்கள் சூழ நீராடிக் கொண்டிருந்தார். அப்போது அங்குள்ள அடியார்களிடம் இரகசியமாக ஒரு அடியாரைச் சுட்டிக் காட்டி, “அவன் மேல் வேண்டும் அளவிற்கு தண்ணீரை வாரி இறையுங்கள்...” என்று கூறி விட்டு நைசாக நீரிலிருந்து வெளியேறி விட்டார்.

இது போதாதா நம் அடியார்களுக்கு? காவிரி ஆற்றில் இருந்த தண்ணீரை எல்லாம் ஏதோ விளையாடுவதுபோல் அந்த அடியாரைச் சுற்றி நின்று கொண்டு அந்த அடியார் மேல் கையால் வேகமாக தள்ளத் தொடங்கி விட்டனர். அனைத்து அடியார்களும் சேர்ந்து கொண்டதால் அந்த அடியார் திக்குமுக்காடிப் போனார். சிறிது நேரம் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். அவரால் இந்த ‘தண்ணீர்’ தாக்குதலை சமாளிக்க முடியாமல் போன போது சட்டென்று கோபக் கனல் வீச ஆற்றிலிருந்து வெளிவந்து விட்டார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர் நம் சற்குரு இருக்கும் திசையில் தலை வைத்து கூடப் படுக்க வில்லை.

“நல்லவர்கள், தெய்வ பக்தி மிக்கவர்கள் என்று நினைத்த அடியார்களே இவ்வாறு எனக்கு மூச்சுத் திணறுகிறது என்று தெரிந்தும் என் மேல் தண்ணீர் அடித்து, குருநாதர் முன்னிலையிலேயே விளையாடுகிறார்களே, இவர்களுடைய சத்சங்கத்தில் இனிமேல் இருந்து என்ன பயன்?” என்று அந்த அடியார் நினைத்து விட்டார்.

நம் சற்குரு தம் சத்சங்கத்திலிருந்து ஒரு அடியார் பிரிந்து விட்டார் என்பது பற்றி சற்றும் கவலைப்படவில்லை. காரணம், அந்த அடியாருடைய மூதாதையர்களின் வேண்டுகோளை தம்மால் நிறைவேற்ற முடிந்தது. அது போதும், மற்ற விஷயங்களைப் பற்றி கவலைப்பட வேண்டியது அந்த அடியாரின் பித்ருக்களே.

அந்த அடியாருக்கு முற்பிறவிகளில் செய்த காரியங்களின் விளைவால் தண்ணீரில், அதுவும் ஐந்து நதிகள் பாயும் நதியில், உயிர் போக வேண்டும் என்பது விதி. அதை தம் அடியார்கள் மூலம் தடுத்து விட்டார் நம் சற்குரு. இதே அற்புதம்தான் மேற்கூறிய அதிகாரியின் பதவி உயர்விலும் நடந்த உன்னதம். ஒரு கொலைகாரனுக்கு நம் சற்குரு உதவினார் என்பது இங்கு விஷயமல்லை, அந்த அதிகாரிக்கு அவர் பதவி உயர்வைப் பெற்றுத் தரவில்லை என்றால், அது உலகத்தவர் ஏற்கும் முறையில் இல்லாவிட்டாலும் கூட, அவருக்கு மேல் உள்ள அதிகாரியின் உயிர் பறி போயிருக்கும், இதைத் தடுக்கவே நம் சற்குருவின் ‘தகாத’ செயல்.

இந்த இரண்டு அற்புதங்களையும் நினைத்துப் பாருங்கள், இணைத்துப் பாருங்கள், நீங்கள் என்றுமே சற்குருவின் நிழலை விட்டுப் பிரிய மாட்டீர்கள்!

திருக்கோஷ்டியூர்

ஒரு முறை திருக்கோஷ்டியூர் பெருமாள் தலத்திற்கு நம் சற்குரு சென்றிருந்தார். ராமானுஜ ஆச்சாரியார் ‘ஓம் நமோநாராயணாய’ என்ற தம் சற்குரு உபதேசமாக அளித்த எட்டெழுத்து மந்திரத்தை குரு ஆணையை மீறி அனைவருக்கும் அளித்த உத்தம விதானத்தை நம் சற்குரு அடைந்தபோது பலரும் அவரைப் பின் தொடர்ந்து சென்றனர். அது குறுகிய பாதையாக இருந்ததால் ஆண் பெண்கள் சேர்ந்த அடியார்கள் குழுவில் மிகுந்த குழப்பம் ஏற்பட்டது.

“அடியேன் ஒருவன் பார்த்தால் போதும் என்ற எண்ணம் ஏன் இவர்களுக்கு வரவில்லை?” என்று நம் அடியார்களைப் பார்த்து நொந்து கொண்டார் நம் சற்குரு. நம் குருநாதர் ஒரு இடத்தைப் பார்த்தால் அந்த இடத்து தரிசன பலன்களை எல்லாம் தம் அடியார்களுக்கு தாரை வார்த்து அளித்து விடுவார், தமக்கு என்று எதையும் வைத்துக் கொள்ள மாட்டார், என்ற நம்பிக்கை ஏன் நம் அடியார்களுக்கு ஏற்படவில்லை என்பதே நம் சற்குருவின் மனக் குறை. அதுபோல் குருமங்களகந்தர்வ லோகத்தை நாம் அடைய முடியாவிட்டாலும் அந்த குரு லோகத்தைச் சேர்ந்த நம் சற்குரு தன் அனுகிரகத்தை எல்லாம் தம் அடியார்களுக்கு எல்லாம் பகிர்ந்தளிப்பார் என்ற எண்ணத்தை நாம் வலுப்படுத்திக் கொள்ள உதவுவதே கொண்டராங்கி திருமலையில் பொலியும் குசல தீபத்தின் மகிமைகளுள் ஒன்றாகும்.

நான்காம் பரிமாணத்தில் துலங்கும் ஒரு பலனே நம் உயிரையும் காக்கவல்லது என்றால் மற்ற பரிமாணங்களை ஊடுருவும் சக்தி பெற்ற நம் சற்குரு நமக்காக அளிக்கக் கூடிய பலன்களை வார்த்தைகளால் விவரிக்க முடியுமா?

நம் சற்குரு மணமுள்ள மலர்களை மட்டுமே இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என்று கூறுகிறார். அரவிந்த மாதாவோ காகிதப் பூவையும் கடவுளுக்கு அளிக்கலாம் என்று சிபாரிசு செய்கிறார். இரு குருநாதர்களுக்கு இடையே ஏன் இந்த முரண்பாடு என்பது நம் அடியார் ஒருவரின் ஐயப்பாடு.

ஐயம், சந்தேகம், முரண்பாடு எல்லாம் அடியார்களின் மனதில்தானே தவிர குருமார்களின் கருத்துக்களில் எந்த காலத்திலும் முரண்பாடுகள் இருந்ததில்லை, இருக்கவும் முடியாது, காரணம் கடவுள் ஒன்றே. ஒன்றே பரம்பொருள்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் இருக்கும் ராமகிருஷ்ண பரமஹம்சர் திருஉருவத்திற்கு பிளாஸ்டிக் தாமரை மாலையை சார்த்தி இருப்பார்கள். தினமும் விவேகானந்தர் பாறைக்குச் சென்று இங்குள்ள பரமஹம்சரின் திருஉருவப் படத்தை பக்தர்கள் தரிசனம் செய்ய முடியாது. அதனால் பிளாஸ்டிக் மாலையை அவருக்குச் சார்த்தி இருப்பார்கள். ஆனால், அந்த மாலையைப் பார்க்கும் நம் அடியார் தான் எந்த ஊரில் இருந்தாலும் கடவுளுக்கு என மலர் மாலையை அணிவிக்க எண்ணும்போது ரோஜா, மல்லிகை, சம்பங்கி என்ற மணம் மிகுந்த மாலையையே தேர்ந்து எடுத்து வாங்குவார்.

அதே போல் அமிர்தானந்தா அன்னைக்கு பிளாஸ்டிக் மாலையை விலை கொடுத்து வாங்கி சார்த்துவார்கள். அது பிளாஸ்டிக் மலர் மாலை என்றாலும் அந்த விற்பனையில் கிட்டும் பணம் கொண்டு அன்னை அடியார்களுக்கு சுவையான, சூடான உணவைத்தானே அளிக்கிறார்கள்? அடியார்கள் மணம் மிகுந்த வாழ்வை மேற்கொள்ள வழிகாட்டுகிறார்களே அன்னை. இதற்கும் இந்தப் பணம் பயனாகுமே.

எனவே சற்குருமார்கள் மனம் வைத்தால் முள்ளும் மலராகும், பிளாஸ்டிக் மலரும் மணக்கும், கல்லும் கனியாகும். காரணம், எந்தப் பலனையும் எதிர்பார்த்து இறைவனிடம் கையேந்துபவர்கள் கிடையாது மகான்கள், அனைவர் உள்ளும் நிலை கொண்ட இறைவனை அவரவரே உணர்ந்து அவர்களே மணம் வீச அவர்களுக்கு துணையாய் நிற்பவர்களே சற்குருமார்கள்.

சாதாரணமாக மனிதர்களுக்கு நல்ல பல் முளைப்பதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகும் என்பது நீங்கள் அறிந்ததே. அது போல் சங்குகள் உருவாவதற்கு ஒரு ஆண்டு காலம் முதல் சங்கின் தன்மையைப் பொறுத்து நூற்றுக் கணக்கான ஆண்டுகள் கூட எடுத்துக் கொள்ளும். ஒரு அடியார் வீட்டில் மழை பெய்த போது அங்கிருந்த துளசிச் செடியைச் சுற்றி நூற்றுக் கணக்கான சங்குகள் ஒரு இரவு மழையில் தோன்றி விட்டன. இது எப்படி சாத்தியாமாகும்?

அவதூத நிலை
யாருடைய நிர்வாணம் பார்ப்பவர்கள் மனதில் அசூயையான எண்ணங்களைத் தோற்றுவிக்கவில்லையோ, அவர்களே உண்மையான அவதூத நிலையை எட்டியவர்கள். மனிதனும் தெய்வமாகலாம் என்ற நிலை. உதாரணம் – ஸ்ரீகசவனம்பட்டி சித்தர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி சுவாமிகள், நம் சற்குருவின் சமாதிக்கு முந்தைய நிலை

அந்த அடியார் வீட்டிற்கு பல முறை நம் சற்குரு விஜயம் செய்து இருந்தார். ஒவ்வொரு விஜயத்தின் போதும் பல சங்கு சக்திகளை அந்த இல்லத்தில் நிரவிட அந்த சங்குகள் எல்லாம் சிறிது சிறிதாக வளர்ந்து விட்டன. ஆனால் அந்த சங்குகள் எல்லாம் மனிதக் கண்களுக்குத் தெரியாத பரிமாணத்தில் திகழ்ந்தன. நம் சற்குரு எப்போது அந்த சங்குகளை சங்பல்பித்தாரோ அப்போது உடனே அந்த சங்குகள் அந்த அடியார் வீட்டில் தோன்றி விட்டன. இதுவும் பரிமாணம் கடந்த பரிணாமமே.

இத்தகைய அற்புதங்களை எல்லாம் நம் சற்குரு குறித்த அடியார்கள் இல்லத்தில் மட்டும்தான் நிகழ்த்துவார், குறித்த அடியார்கள் வாழ்வில் மட்டும்தான் இத்தகைய அற்புதங்கள் எல்லாம் நிகழும் என்று குறுகிய வட்டத்திற்குள் சுற்றுபவரா நம் சற்குரு. இல்லவே இல்லை, இந்த பிரபஞ்சம் அனைத்திலும் உள்ள மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்று மட்டுமல்லாது புழு பூச்சிகள் என்ற அனைத்திற்கும் சொந்தமே நம் சற்குரு. அவரவர் கொண்ட நம்பிக்கையைப் பொறுத்து நம் சற்குருவின் மகிமைகளை நாம் உணர வழிவகுப்பதே கொண்டராங்கி குசல தீபமாகும்.

திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தத்தில் 12 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு சங்கு தோன்றும். மேள தாளங்களுடன் அந்த சங்கை எடுத்து வந்து அதற்கு பூஜை ஆராதனைகள், வழிபாடுகள் செய்து மகிழ்வார்கள் பக்தர்கள் என்பது நீங்கள் அறிந்ததே. 12 வருட காலத்திற்கு அந்த சங்கு எங்கிருந்தது? இதுவே சங்கின் தோன்றாநிலையை நாம் காணும் நிலை வரை சங்கு தீர்த்தத்தில் மறைத்து வைத்திருந்து நமக்கு முன்னரே அந்த சங்கிற்கு பூஜை ஆராதனைகளை செய்து நமக்காக அர்ப்பணிப்பவர்களே சித்தர்கள்.

உண்மையில் ஒவ்வொரு 60 வருட தமிழ் வருடத்தின் ஆரம்பத்திலும் திருக்கழுக்குன்ற சங்கு தீர்த்தத்தில் ஒரு சங்கு தோன்றும். இவ்வாறு தோன்றும் சங்குகளை 12 வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே நம் கண்ணிற்கு புலனாகும் வரையில் அதற்கு பூஜைகள் இயற்றி சங்கின் புனிதத்துவத்தை நிலைநிறுத்துவார்கள் சித்தர்கள் என்பதே நம் சற்குருவின் தெளிவுரை.

எதற்காக திருக்கழுக்குன்ற சங்கிற்கு இத்தகைய வர்ணனை? இதை ஆத்ம விசாரத்தின் ஆரம்பமாகக் கொண்டு முன்னேறினால் நீங்கள் எளிதில் கொண்டராங்கி குசல சக்திகளின் மகத்துவத்தை புரிந்து கொள்ளலாம். கொண்டராங்கியில் தீபம் ஏற்றும்போது அது அடிவாரத்திலிருந்து பார்க்கும்போது மலை உச்சியில் ஒரு சிறிய அகல் விளக்கு தீபம் ஒளிர்வதுபோல்தான் தோன்றும். ஆனால் இதன் பரிமாணம் 2000 மைல்கள் குறுக்களவிற்கும் 6000 மைல் உயரத்திற்கும் கொண்டராங்கி குசல தீப சக்திகளாக வியாபித்து இருக்கும் என்பதே நம் சற்குருவின் தெளிவுரை.

இப்போது பளிச்சென ஒரு தெய்வீக இரகசியம் புரிந்திருக்குமே? ஆம், அதுவே கொண்டராங்கி மலை திருஅண்ணாமலையிலிருந்து 6000 மைல்கள் உச்சியில் பொலிகின்றது என்பதாகும். எனவே நாம் கார்த்திகை தீபத்தன்று கொண்டராங்கியில் மலை உச்சியில் ஏற்றும் தீபம் திருஅண்ணாமலையில் 6000 மைல் உயரத்திற்கு வியாபிக்கும் என்றால் இதனால் பஸ்மமாகும் கர்ம வினைகளை, மக்களுக்கு மற்ற உயிர்களுக்கு கிட்டும் அனுகிரக சக்திகளை எழுத்தால் வர்ணிக்க இயலுமா என்ன?

ஒரு முறை திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்தின்போது மேள தாள இசையுடன் ஒரு அடியார் 120க்கும் மேற்பட்ட இராகங்களில் அருணாசல சிவ, அருணாசல சிவ என்ற அருணை மந்திரத்தை இரவு முழுவதும் ஓதிக் கொண்டே இருந்தார். திருஅண்ணாமலையில் மிகவும் சுத்தமான மனதுடன், சற்குருவின் திரண்ட ஆசியுடன், மேள தாள இசையுடன், அங்கு அருணாசல கீதமும் இசைக்கப்பட்டால் அதன் மகிமைதான் என்னே என்னே?

நம் சற்குரு எந்த காரியத்தைச் செய்தாலும் அதன் பின்னணியில் ஆயிரமாயிரம் அனுகிரக சக்திகள் சமுதாயத்திற்கும், அடியார்களுக்கும் திரளும் என்பதை பன்முறை வலியுறுத்தி வந்திருக்கிறோம் அல்லவா? இந்த அருணாசல கீத இசையின் பின்னணி சக்திகள் என்ன? ஒருவர் தன் உயிரை விடும்போது பூமியிலிருந்து ஒரு சாண் உயரத்திற்குக் கூட அவருடைய ஆன்மா எழுவதில்லை என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். அவ்வாறு எழும் ஆன்மா உடனே அடுத்த பிறவியை பூமியில் பெற்று விடுகிறது. புனரபி ஜனனம், புனரபி மரணம் என்பதாகத்தானே பூமி மக்களின் வாழ்வு பூமியில் தொடர்கிறது.

இதை தடுத்து உயர்ந்த நிலையான பித்ரு தேவர்களின் நிலையையாவது அடைய வேண்டுமானால் இதற்காக மனித ஆன்மா பூமியிலிருந்து 3000 யோசனை தூரம் உள்ள பித்ரு மண்டலத்தை அடைந்தாக வேண்டும்.

ஒரு சாண் அளவு கூட உயரே செல்ல முடியாத மனித ஆன்மா என்று பித்ரு மண்டலத்தை அடைவது? இதற்கு நம் சற்குரு அருளும் குறுக்கு வழியே, சுருக்கு வழியே இவ்வாறு அருணாசல கீதத்தை பல இராகங்களில் இசைத்து அவ்வாறு இசைக்கப்பட்ட தீப பிரசாதத்தை அடியார்களுக்கு வழங்குவதாகும். கொண்டராங்கியில் தீபம் பிரகாசிக்கும்போது இவ்வாறு அருணாசல கீதத்தை தீபம் முன்னிலையில் பல ராகங்களிலும் இசைப்பதும் கிடைத்தற்கரிய பேறே. இதனால் கொண்டராங்கி குசல தீப சக்திகள் 6000 மைல் உயரத்தில் உள்ள கொண்டராங்கி பர்வதத்தை அடைய வழிவகுத்தவர்கள் ஆவோம். ஆஹா, என்ன சுகம், இந்த சுகம்?!

இரண்டு வெள்ளை யானைகளுக்கு நடுவில் தீபம் பிரகாசிப்பதாக தியானித்தல் எத்தகைய பலன்களை நல்கும் என்று ஏற்கனவே விளக்கியுள்ளோம். அதுபோல் இந்த சோபகிருது வருட தீப தியானமாக 6000 மைல் உயரமும் 2000 அடி குறுக்களவும் உள்ள கொண்டராங்கி குசல தீபத்தின் நடுவில் நீங்கள் அமர்ந்திருப்பதாக தியானித்தால் கிட்டும் பலன்கள் அமோகமே. இனி நாம் எடுக்க வேண்டிய எத்தனையோ பிறவிகள் இந்த தீப அக்னியில் எரிந்து பஸ்மமாகும் என்பதே இந்த அனுகிரகத்தின் சுருக்கமான விளக்கமாகும்.

அருகில் செல்லவே முடியாத அளவிற்கு கொழுந்து விட்டு எரியும் கார்த்திகை தீப அக்னியின் நடுவே அமர்ந்திருப்பது எந்த அளவிற்கு சாத்தியம் என்று நீங்கள் நினைக்கலாம். இது பல காலங்களாக திபெத்திய லாமாக்களால் நிறைவேற்றப்படும் ஒரு தியான முறையே. குழந்தை பிறந்தவுடன் பனிக் கட்டி மூடியிருக்கும் ஒரு குளத்தின் ஐசை உடைத்து அதன் உள்ளிருக்கும் குளிர்ந்த நீரில் குழந்தையை ஒரு முக்கு முக்கி எடுப்பார்கள். இவ்வாறு தயாராகும் குழந்தை வளர்ந்து பெரியவன் ஆகியதும் இத்தகைய குளத்து நீரில் நனைத்த துண்டை உடலில் போர்த்தி ஒரு இரவுக்குள் மூன்று தடவை தன்னுடைய உடல் வெப்பத்தால் அந்த துண்டை உலர வைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தியானத்திற்கு தகுதி பெறுகிறார்கள்.

இவ்வாறு தியானம் பழகும்போது தன்னைச் சுற்றிலும் கொழுந்து விட்டு எரியும் அக்னி சுற்றிக் கொண்டிருப்பதாக அவர்கள் தொடர்ந்து நினைத்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்பர் சுவாமிகள் கூறும் மாசில் வீணை என்ற குளிர் தென்றலும் இவ்வாறு கொழுந்து விட்டு எரியும் நெருப்பை பொய்கையின் குளிர்ச்சியாக தியானம் செய்த முடிந்ததன் விளைவுதானே?

அங்கிங்கெனாதபடி ஆனந்த வெள்ளமாய் அருட் பிரகாசமாய் தோன்றுவது இறைப் பரம்பொருள் என்பர் பெரியோர். இத்தகைய இறை அனுபவம் காயுமானவருக்கு மட்டும்தான் சொந்தமா என்ன? நிச்சயம் கிடையாது, நம் அடியார்களும் இந்த எல்லையில்லா ஆனந்தப் பெருவெளியை அடைய நம் சற்குருவால் சுட்டிக் காட்டப்படுவதே இந்த ‘குசல தீபப் பிரவேசம்’.

குசல சக்தி வாழ்வில் என்றும் அசல சக்தியாய் நின்று ஒளி வீச அருள்வதே கொண்டராங்கி குசல தீபம் !

குசல சக்தி என்னும் பதத்திற்கு ஆயிரமாயிரம் விளக்கங்கள் உண்டு. அதில் ஒன்றே ராமகிருஷ்ண பரமஹம்சர் அருளும் மூவித கவர்ச்சிகள் ஆகும்.

        கு .. உத்தம தாய்க்கு தன் குழந்தை மேல் உள்ள கவர்ச்சி
        ச .. கற்புடைய மங்கைக்கு தன் காதலன் மேல் உள்ள கவர்ச்சி
        ல .. லோபிக்கு உலகப் பொருட்கள் மேல் உள்ள கவர்ச்சி
இந்த மூன்று கவர்ச்சிகளும் ஒருங்கிணைந்து ஒரு பக்தனுக்கு அமையுமானால் அவன் விரைவில் இறைவனை அடைந்து விடுவான் என்பார் பரமஹம்சர். எப்படி இத்தகைய கவர்ச்சிகளை ஒன்றாய் ஒருங்கிணைப்பது என்று உங்களுக்கு சந்தேகம் எழலாம்.

கவலையை விடுங்கள், கொண்டராங்கி குசல தீபத்தை ஏற்றி பிரகாசிக்க முழு மூச்சாக உங்களால் முடிந்த சேவைகளை நிறைவேற்றுங்கள். நிரந்தர குசல சக்திகளைப் பெறுவீர்கள். அதன் பலன் கடவுள் உள்ளங்கை நெல்லிக் கனியே!

வியாச மகரிஷி முதல் பல சிரஞ்சீவிகளும் திருக்கார்த்திகை தீப வைபவத்தை ஒட்டி கிரிவலம் வருவதாக அளித்திருந்தோம். இத்தகைய பெரியோர்களை தரிசிக்கும் அளவிற்கு நாம் தெய்வீகத்தில் முன்னேறா விட்டாலும் இந்த மகான்கள் அளிக்கும் அனுகிரக சக்திகளை நிச்சயமாக நாம் குறித்த தான தர்மம் மூலமாகப் பெற முடியும் என்பதே நம் சற்குரு அளிக்கும் உத்திரவாதம். இவ்வாறு சிரஞ்சீவிகள் ஆற்றும் கிரிவலத்தில் திரளும் பலன்களை நம் அடியார்களுக்கு அளிப்பதே கீழே விவரித்துள்ள தான முறையாகும்.

18.11.2023
சனிக்கிழமை
கம்பளி ஆடைகள், போர்வை, ஸ்வெட்டர், தொப்பி போன்ற ஆடைகள் குறிப்பாக முதியோர்க்குத் தானம்
 
19.11.2023
ஞாயிற்றுக்கிழமை
பால்பொருட்கள் தானம் - பால்கோவா, குழந்தைகளுக்கு பால் பவுடர், கெட்டிப்பால் (milk maid), தயிர், வெண்ணெய் போன்றவை (நெய் தவிர்த்து)
 
20.11.2023
திங்கட்கிழமை
பிளாஸ்டிக் கூடைகளில் ஒன்பது சுற்று முறுக்கு அல்லது அதிசரம் வைத்து தானம்
 
21.11.2023
செவ்வாய்க் கிழமை
கைத்தடிகள், ஏற்கனவே பரிசோதனை செய்தவர்களுக்கு கண் கண்ணாடி, மூன்று செல் டார்ச் தானம்
 
22.11.2023
புதன் கிழமை
எழுது பொருட்கள், அதாவது இங்க் பேனா, நோட்டு புத்தகம், கைக்கடிகாரம் போன்றவை படிக்கும் மாணவர்களுக்கு மட்டும்
 
23.11.2023
வியாழக் கிழமை
வெள்ளிக் குங்குமச் சிமிழ்களில் தாமே தயாரித்த மஞ்சள், குங்குமம் தானம்
 
24.11.2023
வெள்ளிக் கிழமை
ஒன்பது கஜ புடவை, எட்டு முழ வேட்டி தம்பதிகளுக்கு மட்டும் தானம்
 
25.11.2023
சனிக் கிழமை
அட்டலிங்கங்களில் ஏதாவது ஒரு லிங்கத்திற்கு, குறிப்பாக எமலிங்கத்திற்கு அபிஷேக ஆராதனை
 

சென்னையில் ஒரு திருத்தலத்தில் நம் சற்குரு உழவாரத் திருப்பணிகள் ஆற்றிக் கொண்டிருந்தபோது நம் சற்குருவின் அருகில் எட்டுப் பனைமரம் உயரம் உள்ள மார்க்கண்டேய மகரிஷி எழுந்தருளி அந்த உழவாரத் திருப்பணிகளை இரசித்துக் கொண்டிருந்தார். இதை அறிந்த நம் சற்குரு எல்லையில்லா ஆனந்தத்துடன் நம் அடியார்களுக்கு மார்க்கண்டேய மகரிஷியின் தரிசனப் பலன்களை சுருக்கி, அதாவது எட்டுப் பனைமரம் உயரத்தை குறுக்கி, வாங்கித் தர வேண்டும் என்று துடித்தாராம்.

ஆனால், மார்க்கண்டேய மகரிஷியோ தன் உதட்டில் கைவைத்து ‘உஷ்...’ என்றாராம், அதாவது அடியேனுடைய வருகையை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம் என்பதற்காக. அன்றிலிருந்து இவ்வாறு சிரஞ்சீவிகளின் அனுகிரகத்தை எப்படியாவது நம் அடியார்களுக்கு வாங்கித் தர வேண்டும் என்று அரும்பாடுபட்டு வந்தார் நம் சற்குரு. அதனால் கனிந்த அரும்பயனே இந்த சோபகிருது வருட அருணாசல கிரிவலம். எத்தனை வருடங்கள் ஆனாலும் சரி, ஒரு சிரஞ்சீவி என்ன பல சிரஞ்சீவி உத்தமர்களின் அனுகிரகத்தை பெற்றுத் தருவதாக அமைவதே இந்த கார்த்திகை தீப கிரிவலமாகும். எனவே நம் அடியார்களின் குரு நம்பிக்கையைப் பொறுத்து, ஆன்மீக முன்னேற்றத்தைப் பொறுத்து பல சிரஞ்சீவிமார்களின் தரிசனத்தை ஏதாவது ஒரு வழியில் பெற உதவுவதே தான தர்மத்துடன் இணையும் மேற்கூறிய கிரிவல முறையாகும்.

இயற்கையான பிரசவத்தை சுகப் பிரவசம் என்றே அழைப்பர். இதிலிருந்தே இதன் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ளலாம். பிரசவத்தில் கர்ப்பிணிப் பெண்கள் மிகுந்த வேதனை அடைகின்றனர் என்பது மக்களின் பொதுவான கருத்து. ஆனால், சித்தர்கள் கூறுவதோ சுகப் பிரசவத்தில் பெண்கள் ஈடு இணையற்ற ஆனந்தத்தை அடைகிறார்கள் என்பதே! சுகப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகளும் பிறக்கும்போது வேதனையை அடைந்தாலும், இந்த வேதனை எதிர்காலத்தில் அவர்கள் எத்தகைய நெருக்கடியான சூழ்நிலைகளையும், கடுமையான வியாதிகளையும் எதிர்த்து வெற்றி கொள்ள உறுதுணையாக அமையும்.

விதிவசமாக இத்தகைய சுகப் பிரசவம் பெற முடியாத பெண்களுக்கும், சிசேரியன் ஆபரேஷன் மூலமாக பிறந்த குழந்தைகளுக்கும் ஓரளவு நிவர்த்தி நல்குவேதே 25.11.2023 சனிக் கிழமை அன்று அஷ்டலிங்க மூர்த்திகளுக்கு இயற்றும் அபிஷேக ஆராதனையாகும். சுத்தமான பவள பஸ்மம் கலந்த பஞ்சாமிர்தத்தால் இறைவனுக்கு அபிஷேகம் இயற்றி இந்த பிரசாதத்தை கிரிவலம் வரும் பக்தர்களுக்கு அளிப்பதால் கிட்டும் பலன்கள் அமோகமே. இந்த அபிஷேக ஆராதனைக்குப் பின் கொண்டராங்கி குசல தீபத்தை தரிசிக்கும்போதுதான் ‘குசல’ என்ற பதம் அளிக்கும் பொருளை ஓரளவு, ஓரளவே உணர்ந்தவர்கள் ஆவோம்.

கடவுள் கருணையால் சுகப் பிரசவம் பெற்ற பெண்களும் சற்குரு விளக்கும் இந்த ‘எல்லையில்லா ஆனந்தத்தை’ பிற்காலத்தில் இறை தரிசனமாக அடைவதற்கும் இந்த அஷ்டலிங்க வழிபாடு உறுதுணையாக அமையும்.

ஓடக்கரையிலிருந்து பெறும்
ஐயர்மலை தரிசனம் முசிறி

நம் சற்குரு திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் ஒரு அறையில் தங்கி இருந்தார். சில வருடங்கள் கழித்து அந்த அறையை விட்டு வேறு ஒரு அறைக்குச் சென்று விட்டார். அந்த அறையில் பௌர்ணமி சேவைக்கு வரும் ஒரு சில அடியார்கள் தங்க ஆரம்பித்தனர். ஒரு நாள் அந்த அறைக்கு வந்த நம் சற்குரு, “அடியேன் உடலை விட்டு விட்டு அடிக்கடி ஆஸ்ட்ரலாக சென்ற அறை, சார், இது. ரொம்ப ஜாக்கிரதையாக பயன்படுத்துங்கள்...”, என்று கூறி சென்று விட்டார்.

அங்கிருந்த அடியார்களுக்கு நம் சற்குரு கூறிய ‘ஜாக்கிரதை’ என்ற வார்த்தையின் பொருள் அப்போது விளங்கவில்லை. வருடங்கள் கழிந்தன. பல வருடங்கள் கழித்தே ஒரு அடியாருக்கு நம் சற்குரு கூறிய ‘ஜாக்கிரதை’ என்ற சொல்லின் பொருள் புரிய வந்தது.

அது என்னவோ?

பல வருடங்களுக்கு முன் ஒரு ஆங்கிலத் திரைப்படம் வந்தது. அதில் ஒருவனுக்கு திடீரென்று சுவர் போன்ற எந்த ஜடப் பொருளையும் கடந்து செல்லும் ஆற்றல் வந்து விடும். அவன் அந்த ‘நோயை’ சரிப்படுத்த வைத்தியம் செய்ய ஆரம்பித்தான். இடையே ஒரு நடிகையின் வீட்டிலுள்ள சுவர்களைக் கடந்து சென்று பாத்ரூமில் அவள் நிர்வாணமாகக் குளிப்பதை இரசிக்க ஆரம்பித்தான்.

இவ்வாறு நடந்து கொண்டிருக்கும்போது அவன் மேற்கொண்ட வைத்தியமும் பலன் தர ஆரம்பித்தது. ஒரு நாள் அந்த நடிகையின் குளியல் அறையில் மறைவாக நின்று கொண்டிருப்பதை அந்த நடிகை பார்த்து அலற ஆரம்பித்து விட்டாள். அதை அறிந்த அவன் வெகுவிரைவாக அங்கிருந்து சுவர்களைக் கடந்து முன்போல் வெளியே வர ஆரம்பித்தான். ஆனால், அவனுடைய வியாதி அவன் மேற்கொண்ட வைத்தியத்தால் முற்றிலும் குணமாகி, அவன் முன் போல திடமான உடலைத் திரும்பப் பெற்று விட்டதால் அவன் சுவர்களைக் கடக்க முடியாமல் போகவே ஒரு சுவற்றின் குறுக்கே அப்படியே மாட்டிக் கொண்டு விட்டான்!

கணவன் மனைவி ஒருவரோடு ஒருவர் சண்டை போட்டுக் கொண்டு ஒரு நிமிடம் பேசாமல் இருந்தால் கூட ஆறு மணி நேரத்துக்கான கர்மா வந்து சேர்கின்றது. மேலும், கணவனின் வருமானம் குறையும். கணவன் மனைவியை அடித்துத் துன்புறுத்தினால் எட்டு மணி நேரத்துக்கான கர்மா வந்து சேர்கின்றது. ஆன்மீகத்தில் முதல் பாடமே கணவன் மனைவி இடையே சண்டையே வராமல் வாழ வேண்டும் என்பதுதான்.

“இப்படி எல்லாம் நடப்பதற்கு வாய்ப்பு உண்டா?” என்று நம் சற்குருவை ஒரு அடியார் கேட்டபோது, நம் சற்குரு சிரித்துக் கொண்டே, “தாராளமாக இத்தகைய அற்புதங்களை நீங்கள் நிகழ்த்தலாம், நீங்கள் நான்காம் பரிமாணத்தில் சஞ்சரிக்க முடிந்தால்... நான்காம் பரிமாணத்தில் சஞ்சரிப்பது எப்படி என்பதை அடியேன் உங்களுக்கு ஒரு நொடியில் சொல்லிக் கொடுத்து விடுவேன். ஆனால், நீங்கள் அடுத்த நொடி ஏதாவது ஒரு நடிகையின் பாத்ரூமில் சென்று நிற்பீர்கள், அல்லது அவளுடைய பெட்ரூமிற்குள் சென்று உடலுறவு காட்சிகளை இரசிக்கத் தொடங்கி விடுவீர்கள்...”, என்றார் வேடிக்கையாக.

மேற்கூறிய இரண்டு விஷயங்களையும் நீங்கள் நன்கு படித்து சிந்தனை செய்தால் இதைப் பற்றி நீங்கள் புரிந்து கொள்ளலாம். அதாவது,
          நான்காம் பரிமாணத்திற்கு நாம் சென்றால் நம் உடல் மறைந்து விடும்
          நான்காம் பரிமாணத்திற்கு செல்ல கடவுள் நம்பிக்கையோ, குரு நம்பிக்கையோ தேவையில்லை
          ஆனால், கடவுள் நம்பிக்கையோ, குரு நம்பிக்கையோ இல்லாமல் ஒருவர் நான்காம் பரிமாணத்தில் சஞ்சரித்தால் அவர் தேவையில்லாத கர்ம வினைகளைப் பலனாகப் பெற்று முடிவில்லாத நரக லோகத்தை அடைய நேரிடும்.

உதாரணமாக, சமீபத்தில் அத்தாழநல்லூர் திருத்தலத்தில் தர்ப்பண வழிபாடுகள் இயற்றிய அடியார்களுக்கு குறைந்தது 100 சித்திகள் கைகூடும் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். ஆனால், நம் அடியார்கள் இந்த சித்திகள் எதையுமே தற்போது பயன்படுத்த முடியாமல் அவர்களை ‘கட்டிப் போட்டு வைத்திருப்பது’ அவர்கள் போதிய அளவு குரு நம்பிக்கை பெறாததே ஆகும். குரு நம்பிக்கை பூரணம் பெறாமல் ஒரு அடியார் ஒரே ஒரு பரிமாணத்தைக் கடந்தால் என்னென்ன இடர்களை எல்லாம் அவர் சந்திக்க நேரிடும் என்று மேலே கண்டோம். அவ்வாறு இருக்கையில் 108 பரிமாணங்கள் கடந்து நிற்கும் நம் சற்குரு அளிக்கும் அனுகிரகங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள நம் அடியார்கள் எந்த அளவிற்குப் பாடுபட வேண்டும்.

மேலே விவரித்த அஷ்டலிங்க வழிபாடு நம் சற்குருவிடம் ஆழ்ந்த நம்பிக்கையை வலுப்படுத்திக் கொள்ள உறுதுணை செய்யும்.

ஸ்ரீவாமனர் நாச்சியார்கோவில்

உதாரணமாக, நான்காம் பரிமாணத்திற்கு செல்லும் ஒருவர் அல்லது ஆஸ்ட்ரல் பயணம் புரிய வல்லவர்கள் தங்கள் ஆற்றலை எப்படி அடியார்களின் நன்மைக்காகப் பயன்படுத்திக் கொள்வது? அகண்ட காவிரி பாயும் முசிறியில் விசிறி சித்தர் என்று ஒருவர் இருந்தார். கையில் எப்போதும் விசிறியுடன் ஆடையின்றி நிர்வாணமாகத் திகழ்ந்ததால் அவருக்கு இந்த காரணப் பெயர் ஏற்பட்டது. அக்காலத்தில் முசிறிக்கும் அக்கரையில் உள்ள குளித்தலைக்கும் இடையே ஓட வசதி இருந்தது. கட்டிட பாலம் எதுவும் இல்லாத காலம் அது. காற்று அதிகமானாலோ, மழை பெய்தாலோ ஓடம் ஓடாது நிறுத்தப்பட்டு விடும்.

கர்ப்பிணிப் பெண்களோ அல்லது நோயாளிகளோ அல்லது ஏதாவது ஒரு உண்மையான அவசர காரியத்திற்காக அக்கரைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்து எவராவது முசிறி ஓடக் கரைக்கு வரும்போது அங்கு ஓடப் பயணம் ரத்து செய்யப்பட்டிருந்தால் விசிறி சித்தர் அவர்களுக்கு உதவுவதற்காக தன்னுடைய விசிறியை காவிரி நதி வெள்ளத்தில் போட்டு விடுவார். சித்தரை நம்பி அந்த விசிறியின் மேல் ஏறி நின்று கொண்டால்போதும், நீராவி படகு போல் அந்த விசிறி நீரைக் கிழித்துக் கொண்டு சென்று மறுகரையில் அந்த விசிறியில் ஏறி வந்தவர்களைக் கரை சேர்த்து விடும். இவ்வாறு விசிறி சித்தரின் சேவையால் பலன் பெற்ற நோயாளிகளும் மக்களும் பக்தர்களும் அனேகர்.

ஒரு முறை இந்த சித்தரின் மகிமை தெரியாத ஒரு காவல்துறை அதிகாரி இவ்வாறு நிர்வாணமாக பைத்தியம் போல் தோன்றும் அந்த சித்தரை காவல் நிலையக் காவலில் வைத்து, ஒரு அறையில் பூட்டி வைத்து விட்டார். மறுநாள் காலையில் பார்த்தால் அந்த சித்தரோ அமைதியாக முசிறி கடைவீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தாராம். இதைக் கண்டு அதிசயித்த அந்த காவல்துறை அதிகாரி இவர் ஒரு பெரிய மகானாக இருக்க வேண்டும் என்று உணர்ந்து தன்னுடைய தவறான செயலுக்காக அந்த சித்தரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.

இப்போது உங்களுக்குச் சட்டென புரிந்திருக்குமே. ஆம், ஒரு மனிதர் நீர் மேல் மிதக்கும் விசிறி மேல் நின்று கொண்டு ஓடும் நீரில் பயணம் செய்வதும், மூடிய சிறைக் கதவுகளின் வழியே வெளியே வந்து சுதந்திரமாக, மற்றவர்களின் சேவைக்காக பொது இடத்தில் உலவுவதும், நான்காம் பரிமாணத்தை பயன்படுத்தும் ஒரு தெய்வீக முறையாகும்.

இங்கு அடியார்களுக்கு ஒரு சந்தேகம் தோன்றலாம். நான்காம் பரிமாணத்தில் சஞ்சரிக்கவல்லவர்கள் ஒருவேளை நம் இல்லத்திற்கு வந்து தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்தி விட்டால் என்ன செய்வது? நம் அடியார்கள் நம் சற்குருவின் நிழற்குடையின் கீழ் உறுதியாக நின்றால் நான்காம் பரிமாணம் என்ன, நாற்பதாம் பரிமாணத்தில் இருப்பவர்கள் கூட நம்மை அசைக்க முடியாது.

உறக்கநிலை விழிப்புணர்வு

இரவு உறங்கும் நேரத்தில் பொதுவாக நாம் ஆஸ்ட்ரலாகச் செல்கிறோம், அதனால் இச்சமயத்தில் ‘ஜாக்கிரதையாக’ செயல்பட முடியாமல் போகிறது என்று சிலர் நினைக்கலாம். உறங்கும்போதும் விழிப்புணர்வு நிலையில் இருப்பதுதான் முன்னேறிய ஒரு சாதகனின் நிலை. இந்த உறக்க நிலை விழிப்புணர்வு அனைவருக்கும் அவசியமே. இந்த உறக்க நிலை விழிப்புணர்வை அதிகப்படுத்தும் ஒரு பயிற்சி முறையை அளிக்கிறார் நம் சற்குரு. தனுர் ஆசனத்தில் இருந்து கொண்டு அதே நிலையில் முன்னும் பின்னுமாக ஆட வேண்டும். கை கால்களுக்கு மிகுந்த சிரமம் கொடுக்காமல் சிறிது சிறிதாக பயிற்சியில் முன்னேறவும். அப்போது இறை நாமம் ஜபித்தல் அவசியம். சத்ய சாய்பாபா கூறுவதுபோல் பிராணாயாமம், ஆசனம் போன்ற எந்த யோகப் பயிற்சியின் போதும் இறை நாமம் அவசியமே. இறை நாமம் இல்லாமல் இத்தகைய பயிற்சிகளில் ஈடுபடும் ஒருவர் மிருகமாகத்தான் கருதப்படுகிறார்.

இத்தகைய விழிப்புணர்வு நிலையில் நிலைக்க ஆரம்ப பயிற்சிகளில் ஈடுபடும் அடியார்கள், தம்மையும் அறியாமல் தூங்கி விடும் சந்தர்ப்பமும் உண்டு. ஒருவேளை அவ்வாறு தூங்கி விட்டால் நம்மை எழுப்பி விட ஒருவரை வைத்துக கொள்ள வேண்டும்.

பாதாளச் சிறையில் அடைபட்டிருக்கும் மகாபலிச் சக்கரவர்த்தி எப்படி கார்த்திகை தீபத்தை ஒட்டி திருஅண்ணாமலைக்கு கிரிவலம் வருவார் என்ற கேள்விக்கு சரியான விடையை அளிக்கும் முதல் அன்பரின் சார்பாக கொண்டராங்கி குசல தீபத்திற்கு ஒரு டின் எண்ணெய் வழங்குவதாக ஒரு அடியார் பரிசு மழையை அறிவித்துள்ளார். முந்துங்கள், உடன் பரிசை வெல்லுங்கள்!

‘நான் எந்நேரமும் விழிப்புணர்வு நிலையிலேயே திகழ வேண்டும்,’ என்ற உணர்வை, நினைவை தீவிரமாக ஏற்று அது எப்போதும் மறைந்து விடாதபடி, அதை மறந்து விடாதபடி மனதின் ஒரு மூலையில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் வேலையில் ஈடுபட்டு இருக்கும்போது உறக்கம் வருவது போல் தோன்றினால் கை கால்களை தளர்த்தி, ஓய்வாக இருக்க முயலுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள், கை கால்களை நீட்டிக் கொள்ளுங்கள், ஒரு கிளர்ச்சியூட்டும் காட்சியை மனக் கண் முன் கொண்டு வந்து அதைக் கவனியுங்கள். இறை நாமம் குறைந்தது அரை மணி நேரம், முடிந்தால் சப்தமாகக் கூறுவது அவசியமே.

இவ்வாறு அரை மணி நேரம் பயிற்சி செய்தும் நீங்கள் தூக்க நிலையிலிருந்து முழுவதுமாக விடுபட முடியவில்லை என்றால் எழுந்து மெதுவாக நடக்க ஆரம்பியுங்கள். கடவுள் நாமத்தை இடைவிடாது கூறுங்கள். சிறிது வெந்நீர் அருந்தி விட்டு, விட்ட வேலையைத் தொடர்ந்து நிறைவேற்ற முயலுங்கள். அப்படியும் தூக்கம் உங்கள் கண்களைத் தழுவினால் உறங்கச் சென்று விடுங்கள். 1919, 1920 ஆண்டுகளில் முதல் உலக யுத்த காலத்தில் ஷாலின் (Shaolin) மடாலயங்களில் இத்தகைய உறக்கநிலை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. Forest training என்பதாக அடர்ந்த காடுகளில் இரவு நேரங்களில் தங்கும் பயிற்சியும் இத்தகைய விழிப்புணர்வை மேம்படுத்தும்.

செஞ்சி கொல்லி மலைப் பகுதிகளுக்கு நம் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை கூட்டிக் கொண்டு சென்றபோது இவ்வாறு விழிப்புணர்வு பயிற்சிகளை அளித்தார். கொடிய விஷ நாகங்கள் நிறைந்த பல பகுதிகள் அங்கு உண்டு. இருவரும் உறங்கிக் கொண்டு இருக்கும்போது யாருடைய நிழலாவது இவர்கள் மேல் பட்டால் கூட பெரியவர் கண்ணைத் திறந்து பார்ப்பாராம். ஒன்றும் பிரச்னை இல்லை என்று உறுதியான பின்னரே மீண்டும் உறங்கச் செல்வாராம்.

ஒரு முறை யாத்திரையாகச் சென்ற பெரியவரும் சிறுவனும் ஒரு பழங்கால கோயில் மண்டபத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்களாம். அப்போது நள்ளிரவில் ஒரு நட்டுவாக்கிளி பெரியவர் உடலின் மேல் ஊர்ந்து சென்று கடந்து விட்டு, பின்னர் அருகில் இருக்கும் சிறுவனை நோக்கிச் சென்றதாம். அப்போது பெரியவர், “டேய் இட்லி, நட்டுவாக்கிளி ஒன்று உன் மேல் ஏறிச் செல்ல வருகிறது, அசையாமல் படுத்திரு...” என்று கூறவே பெரியவரின் கருணையால் எப்போதும் விழிப்புணர்வுடன் இருக்கும் சிறுவனும் அமைதியாகப் படுத்து விட்டானாம். அந்த நட்டுவாக்கிளி மேதுவாக ஊர்ந்து சென்று நம் சற்குரு மேல் ஏறி, அவரைக் கடந்து அடுத்து அங்கு படுத்திருந்த ஒரு வழிப்போக்கன் மேல் ஏறியது.

அந்த வழிப்போக்கன் என்ன செய்வான்? ஏதோ ஊர்கிறதே என்று நினைத்து அரைத் தூக்கத்தில் அந்த நட்டுவாக்கிளியைத் தொட்டுப் பார்க்க அது அவனைக் கொட்டி விட்டது. அப்புறம் என்ன ... அவன் குய்யோ முய்யோ என்று கதற ஆரம்பித்து விட்டான். இதுவும் விழிப்புணர்வால் நாம் பெறும் பாதுகாப்புகளில் ஒன்றாகும்.

இத்தகைய உறக்கநிலை விழிப்புணர்வை தீப பிரசாதமாக அளிக்கக் கூடியதே கொண்டராங்கி குசல தீபம். பாக்கியம் உள்ள அடியார்கள் இந்த சந்தர்ப்பத்தை நன்கு பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்கிறோம். நல்ல திடகாத்திரமான உடல் உள்ளவர்கள், இளைஞர்கள் தீபத்திற்கான எண்ணெய், திரி போன்றவற்றை தங்கள் தோளில் தலையில் சுமந்து சென்று கொண்டராங்கி தீப கைங்கர்யத்திற்காக அளிப்பதும் இந்த விழிப்புணர்வை மேம்படுத்த உறுதுணை செய்யும்.

அங்கிட்டுமா? எங்கிட்டுமா?

பாதாள லோகத்தில் சிறையில் அடைபட்டிருக்கும் மகாபலி சக்கரவர்த்தி எப்படி வரும் கார்த்திகை தீபத்தின் போது திருஅண்ணாமலையை கிரிவலமாக வருவார் என்ற சற்குருவின் கேள்விக்கு அடியார்கள் பல அற்புதமான விளக்கங்களை அளித்துள்ளனர். அவற்றில் நம் சிந்தனையைத் தூண்டும் இரண்டு பதில்கள்,
1. நான்காம் பரிமாணத்திற்கு சென்று மகாபலி கிரிவலம் வருவார்
2. திருஅண்ணாமலை என்பது அனைத்து லோகங்களில் இருப்பதால் தம்முடைய பாதாள லோகத்திலேயே மகாபலி கிரிவலத்தை மேற்கொண்டு விடுவார்.

நான்காம் பரிமாணத்திற்கு நம்மையும் கூட்டிச் செல்ல பயிற்சி அளிக்க முன்வரும் ஒரு அன்பரைப் பற்றி ஒரு அடியார் தெரிவிக்கிறார். அந்த அடியார் நான்காம் பரிமாணத்திற்குச் செல்ல வல்லவரா இல்லையா என்று ஆராய்ச்சி செய்வது நம் வேலை அல்ல, கற்பனைக் கதை என்று கூறி அவர் திறமையை எள்ளி நகையாடுவதையும் நம் சற்குரு அங்கீகரிப்பதில்லை.

ஒரு முறை ஒரு சிறுவன் ஒரு கிராமத்தில் இருந்தான். சாமியார்களைப் பார்த்தால் அவர்கள் நம்மைக் கடவுளிடம் கூட்டிச் செல்வார்கள் என்று யாரோ கூறியதை அப்படியே நம்பி அவனுக்குத் தெரிந்த ஒரு சாமியாரை, அதாவது ஒரு காவி கட்டிய ஆசாமியை சென்று பார்த்தான். அவரோ கடவுளைப் பற்றி எதுவும் தெரியாத ஒரு போலி சன்னியாசி. அந்த சன்னியாசியின் காலில் விழுந்து தனக்கு கடவுளைக் காட்டும்படி வேண்டினான் சிறுவன். சன்னியாசிக்கு ஒன்றும் புரியவில்லை, அதனால் நிலைமையைச் சமாளிக்க “அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டிரு...” என்று கூறி அந்தச் சிறுவனை அனுப்பி விட்டார்.

சிறுவனுக்கு எல்லையற்ற ஆனந்தம் ... ஒரு ஆலமரத்தடியின் அடியில் அமர்ந்து கொண்டு அந்த சாமியார் கொடுத்த ‘மந்திரத்தை’ வாய்விட்டு, “அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டிரு, அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டிரு ...” என்று சொல்ல ஆரம்பித்தான். உணவு, உறக்கத்தை மறந்தான். வாய் மட்டும் அந்த மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருந்தது.

நாட்கள் வாரமாக, வாரங்கள் மாதங்களாக பல வருடங்களும் கடந்து விட்டன. அந்தச் சிறுவனும் இளைஞன் என்ற தகுதியையும் அடைந்து விட்டான். அப்போது ஒரு நாள் அவன் சொல்லிக் கொண்டிருந்த மந்திரம் சித்தியாகி விட்டது என்பதை உணர்ந்தான். மந்திரம் சித்தியான அடுத்த விநாடி அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ள ஆரம்பித்தது.

வாமன அவதார விளக்கம்
அளிக்கும் ஸ்ரீஅமிர்தானந்த மயி

தன்னுடைய நீண்ட நாள் தவத்திலிருந்து எழுந்து உணவைத் தேட ஆரம்பித்தான். பல வருடங்கள் ஜபித்த பலனாய் அவன் சொல்லிக் கொண்டிருந்த ‘மந்திரம்’ தன்னையும் அறியாமல் தன்னுள் எழுந்து கொண்டிருந்தது. அப்போது அவன் ஒரு பனை மரத்தைப் பார்க்கவே, அது வேரோடு பிடுங்கிக் கொண்டு வந்து அவன் காலடியில் விழுந்தது. அவனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை, மீண்டும் அந்த மரத்தைப் பார்த்து மனதிற்குள் அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டிரு என்று கூறவே அந்த பனை மரம் முன்போல் பழைய இடத்திற்கு சென்று விழுந்தது.

ஆச்சரியத்தின் எல்லைக்கே சென்ற அந்த சிறுவன் தன்னுடைய அகோரப் பசியையும் மறந்து விட்டு இத்தகைய வரப் பிரசாதத்தை தமக்கு அளித்த தன்னுடைய குரு நாதரை முதலில் தேடுவோம் என்று நினைத்து அவரைத் தேடோ தேடு என்று தேட ஆரம்பித்தான். பல வருடங்கள் கழிந்து விட்ட காரணத்தால் அவரைத் தேட மிகுந்த சிரமம் ஏற்பட்டாலும், முடிவில் அவரைத் தேடி அவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து தன்னுடைய தவம், மந்திர சித்தி பற்றி எல்லாம் அவரிடம் விவரிக்க ஆரம்பித்தான்.

அந்தச் சாமியாருக்கு சிறுவனின் இந்த உயர்ந்த நிலை எப்படிப் புரியும்? அதனால் அவர் சிறுவனை நம்பாததுபோல் பேச ஆரம்பிக்கவே சிறுவன் தன்னுடைய கூற்றை மெய்ப்பிப்பதற்காக தூரத்தில் இருந்த ஒரு பாராங்கல்லைப் பார்த்து அங்கிட்டும் இங்கிட்டும் போய்க் கொண்டிரு என்று கூறவே மறுநொடி அது அந்த சாமியாரின் அருகில் வந்து ‘மடேர்’ என்று விழுந்தது. பதறி அடித்துக் கொண்டு எழுந்து அந்த சன்னியாசி சட்டென அந்த சீடனின் காலில் விழுந்து, “அப்பா, நீ சொல்வது எதுவுமே எனக்குப் புரியவில்லை, ஆனால், நீ கூறுவது அனைத்தும் உண்மையே என்று நம்புகிறேன்,” என்றார். சிறுவன் இப்போது உயர்ந்த ஞான நிலையை அடைந்து விட்டதால் தான் அடைய வேண்டிய அடுத்த ஆன்மீக நிலை பற்றி தனக்கு உபதேசிக்க முடியுமா என்பது குறித்து அந்த சன்னியாசியிடம் வினவினான். ஆனால், அந்த சன்னியாசியின் இயலாமையை உண்ர்ந்து கொண்ட ‘சிறுவன்’ அவரை விட்டு விலகி தன்னை வழிநடத்தக் கூடிய ஒரு உத்தம வழிகாட்டியைத் தேட ஆரம்பித்தான்.

இந்நிலையில்தான் அவன் நம் சற்குருவை சென்னையில் சந்தித்து தன்னுடைய பிரார்த்தனையை அவரிடம் தெரிவித்தான். நம் சற்குருவும் அவன் கூறியதை எல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு, “சரி, தமிழ்நாட்டில் எத்தனை சிவாலயங்கள், இதில் எத்தனை பாடல் பெற்ற தலங்கள், எத்தனை சுயம்பு மூர்த்திகள், எத்தனை பெருமாள் தலங்கள், எத்தனை மங்கள சாசனம் பெற்ற தலங்கள் என்பதைக் கண்டு வா...”, என்று கூறவே ஆஸ்ட்ரலாகச் சென்று ஒரே நொடியில் இந்த விபரங்கள் அனைத்தையும் நம் சற்குருவிடம் தெரிவித்து விட்டான்.

“அடுத்து இதில் எத்தனை திருத்தலங்களில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன என்பதைப் பார்த்து சொல்...”, என்று சொல்லவே அந்த தகவலையும் ஒரே நொடியில் சேகரித்துத் தந்து விட்டான். சிறுவன்.

“இப்போது நீ என்ன செய்கிறாய்..., இவ்வாறு கும்பாபிஷேக திருப்பணிகள் நடக்கும் ஆலயங்களில் எல்லாம் சென்று அமர்ந்து கொள். அங்கு தூண்கள், கல் உலோக விக்ரகங்கள், இரும்பு கர்டர்கள் போன்ற மனிதர்களால் எளிதில் தூக்க முடியாத பொருட்களை உன்னுடைய மந்திர சித்தி மூலம் அவற்றை குறித்த இடங்களுக்கு நகர்த்தி கும்பாபிஷேகத் திருப்பணிகளை சிறப்பாக நிறைவேற்றி ஒவ்வொரு கோயில் கும்பாபிஷேகம் நிறைவேறிய பின்னரும் அடியேனை வந்து பார்... ஆனால், நீதான் இந்தத் திருப்பணிகளை எல்லாம் செய்கிறாய் என்பது யாருக்கும் தெரிய வேண்டாம்... உன்னுடைய சேவை மற்றவர் கண்களிலிருந்து மறைத்து துலங்க வேண்டும்...”, என்று கூறினாராம். சுமார் 30 வருடங்களுக்கு முன் நாம் சற்குருவைப் பார்த்தபோது அந்தச் சிறுவன் 75 கோயில்களில் இவ்வாறு கும்பாபிஷேகத் திருப்பணியை முடித்து விட்டிருந்தான்.

இங்கு நாம் அறிந்து கொள்வது நம் சற்குருவின் கருணை கடாட்சத்தின் ஒரு தூசி தூசியே. எனவே நம் அடியார்கள் இத்தகைய அதீத திறமை பெற்றவர்களைப் பற்றி அறிய நேர்ந்தால் நம் சற்குரு காட்டிய வழியில் சென்று அவர்களையும் இந்த கொண்டராங்கி குசல தீப வைபவத்திற்குத் தாரராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொடரும் தீப மகிமை...

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam