மனத் தெளிவு மன உறுதியே சிதம்பரம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர்

திண்டுக்கல் அருகே வத்தலகுண்டு லட்சுமிபுரம் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள தெய்வமே கலியுகம் புகழும் ஸ்ரீசிவகாமி சமேத கலியுக சிதம்பரேஸ்வர மூர்த்தி ஆவார். சுயம்புவாக பூமியிலிருந்து வெளிப்பட்டு கலியுக மக்கள் நல்வாழ்வு பெற வேண்டி அருளும் மூர்த்தியாக இவர் இருப்பதால் ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.

வஞ்சி ஓடை வத்தலகுண்டு

கிருத யுகத்தில் விளங்கியது போன்ற பக்தியும் கடவுள் நம்பிக்கையும் கலியுகத்தில் நாம் காண முடியாது எனினும் கிருத யுகத்தில் ஆயிரக் கணக்கான வருடங்களில் ஒற்றைக் காலில் நின்று தவமியற்றிய பக்தியை ஒரே இரவு பிரார்த்தனையில், ஏன் ஒரே ஒரு மணி நேர இறைச் சிந்தனையில் நாம் பெற முடியும் என்பதே கலியுகத்தின் சிறப்பாகும். அது போல் பல முறை முயற்சி செய்தாலும் இத்தலத்து இறைவனைக் காண்பது கடினம் என்பதும் ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரரின் சிறப்புகளில் ஒன்றாகும். எனவே ஒரே முயற்சியில் இத்திருத்தலத்தை தரிசனம் செய்ய முடியவில்லை என்பது குறித்து யாரும் கலங்க வேண்டாம். அதே போல் ஒரே முயற்சியில் இந்த ஈசனை தரிசனம் செய்து விட்டவர்கள் தங்கள் பெருமையைக் குறித்து மார் தட்டிக் கொள்ளவும் வேண்டாம், காரணம் பல நூறு பிறவிகளின் முயற்சியால் மட்டுமே ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் தரிசனத்தை மக்கள் பெற முடியும் என்பதே சித்தர்கள் கூறும் இரகசியம். பல்லாயிரம் முற்பிறவிகளில் செய்த வழிபாட்டின் பலனாகவே இப்பிறவியில் ஸ்ரீகலியுக சிதம்பர ஈசனின் தரிசனம் கிட்டியது என்பதை நாம் உணர வழிவகுப்பதே வஞ்சி ஓடைக் கரையில் அமைந்த ஈசனின் பெருமையாகும்.

மற்ற எந்த யுகத்திலும் இல்லாத தனி சிறப்பு கலியுகத்திற்கு உண்டு என்பது இத்தலத்தைப் பார்த்து சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் இத்தல அமைப்பு நம்மை பிரமிக்க வைக்கும். பிரதானமாக ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் சுயம்பு விதானத்தில் துலங்க சுவாமிக்கு வலப்புறம் மகா விஷ்ணுவும் இடப் புறம் ஸ்ரீபிரம்மாவும் தனிச் சன்னதி கொண்டு அருள் வழங்குகின்றனர். தாய் சிவகாமியோ கணவன் பின் மறைந்த காரிகையாய் ஈசனுக்குப் பின் ஸ்ரீசிவகாமி அம்மனாக விளங்குகின்றாள்.

பொதுவாக, கோஷ்ட மூர்த்தியாகத் துலங்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி இங்கு கோஷ்டத்தை விட்டு விலகி தனிப் பெரும் மூர்த்தியாக அருள் வழங்குகிறார். தனிச் சன்னதியும் அன்ன வாகனமும் கொண்ட ஸ்ரீபிரம்ம மூர்த்தியை நாம் இத்தலத்தில் மட்டுமே தரிசிக்க இயலும். நதி, ஆறு, வாய்க்கால், ஓடை என்றவாறாக நீர்ப் பிரவாகம் அமைவது போல் இறைவனின் அனுகிரகமும் யுகத்திற்கு யுகம் மாறுபாடு கொள்ளும். ஆனால், எந்த நீர்ப் பிரவாகம் வழியாகச் சென்றாலும் இறுதியில் பக்தி சமுத்திரமான கடலை அடைவது உறுதி என்பதை நாம் உணரச் செய்வதே வஞ்சி ஓடைக் கரையில் அமைந்த இந்தச் சிவாலயமாகும்.

இளம் பெண், ஏமாற்றுதல், இல்லாததை இருப்பது போல் காட்டுதல், சீந்தில் கொடி, வெற்றி வாகை போன்ற பல அர்த்தங்கள் வஞ்சி என்ற சொல்லுக்கு உண்டு. இவை அனைத்துமே கலியுகத்தில் நாம் தினமும் சந்திப்பவையே. ஆனால், இறைவனை உண்மையாக நம்பும் ஒரு பக்தன் யாராலும் ஏமாற்றப்பட மாட்டான், எந்த சக்தியும் அவனை பாதிக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தும் ஈசனே வஞ்சி ஓடை ஈசன் ஆவார். வஞ்சி ஓடைக் கரையில் அமைந்த ஆலமரம் இந்த உண்மையை என்றென்றும் பறை சாற்றும் சான்றாகும். காதலி, மனைவி, மக்கள், செல்வம், பதவி என்ற வஞ்சி ஓடை ஒரு மனிதனின் வாழ்வில் குறிக்கிட்டாலும் அவன் ஆலமர விழுதை உறுதியாகப் பற்றிக் கொண்டால் அவன் எதனாலும் பாதிக்கப்பட மாட்டன் என்பதை தெளிவாக உணர்த்தும் தலமே சிதம்பரேஸ்வரர் அருளும் திருத்தலமாகும்.

வான் கலந்த வஞ்சி ஓடை

சரஸ்வதி தேவி பெரும் கோபம் கொண்டு வேகவதி என்ற வான தீர்த்தமாய் சீறி பூமியை அடைந்தபோது தேவியின் கோபக் கனலை பிரம்மாவின் ஐந்தாவது தலை ஓட்டில் தாங்கி அதை பிரம்மா சரஸ்வதி ஐக்கியமாக மாற்றி பூமிக்கு அருந்தொண்டாற்றிய ஸ்ரீபோடா சுவாமிகளின் அரிய சேவையைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். ஆணவத்தால் செருக்கடைந்த பிரம்மாவின் ஐந்தாவது தலையை ஈசன் கொய்து விடவே அதனால் கோபம் கொண்ட சரஸ்வதி தேவி வேகவதியாய் பூமிக்கு வந்தாள் என்பது நாம் அறிந்த வரலாறு. சிவ பெருமான் பிரம்மாவின் தலையைக் கொய்தவுடன் இந்த சாபத்தை மாற்ற வேண்டி சரஸ்வதி தேவி இறை நியதிப்படி பூலோகத்தில் அமைந்த திருத்தலமான ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் வஞ்சி ஓடையாகத் தவழ்ந்து பெருமானின் திருவடிகளைத் தீண்டி அரிய சேவை ஆற்றிக் கொண்டிருந்தாள்.

வேகவதி ஆறு காஞ்சிபுரம்

உரிய தருணம் வந்தபோது சரஸ்வதி தேவி வேகவதி ஆறாய் மாற்றம் கொண்டு பூமியை நாடி வந்தபோது அதுவரை பூலோகத்தில் ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் தவழ்ந்த சரஸ்வதி தேவியின் ‘வேகம்’ என்ற அம்சம் ‘விவேகம்’ என்ற அம்சமாய் வேகவதி ஆற்றுடன் இணைய இந்த வேகமும் விவேகமும் இணைந்த சரஸ்வதி தேவி பிரம்மா கபாலத்துடன் கலந்தாள் என்பதே நாம் உணர்ந்து கொள்ள வேண்டிய சித்த இரகசியமாகும்.

‘நல்லிடம் சேர்ந்தேன், நலம் அடைந்தேன்...’, என்று சரஸ்வதி தேவி பெருமகிழ்ச்சியுடன் கூறி பிரம்மா கபாலத்தில் இணைந்ததன் பின்னணியில் எத்தனை அற்புதங்கள் மறைந்துள்ளன பார்த்தீர்களா?

படத்தில் காட்டிய நான்கு இதழ்கள் கொண்ட ஆராக்கீரை என்பது தத்துவ ரீதியாக ஐந்தாவது தலையை இழந்து விளங்கிய பிரம்மாவைக் குறிப்பதால் ஆராக்கீரையுடன் வெல்லம் கலந்து பசு மாடுகளுக்கு உண்ண அளிப்பது ஆணவத்தைக் களையும் ஓர் அற்புத நிவாரணமாக நம் சற்குருவால் சுட்டிக் காட்டப்படுகிறது. தினமும் ஆராக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வது சர்க்கரை வியாதி போன்ற பல வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கவல்லதும் ஆகும். ஆராக் கீரையில் உள்ள நான்கு இதழ்களில் உள்ள அமிர்த சக்திகள் பசுவின் மடிப்பாலுடன் கலந்து ஷீர அமிர்தம் என்ற அபூர்வ அமிர்த சக்திகளை உருவாக்குவதால் இந்த அமிர்த சக்தி எத்தகைய வியாதிகளுக்கும் நிவாரணம் அளிக்க வல்லதாக அமைகிறது.

அன்ன நடை என்று பெண்களின் நடை அழகை வர்ணிப்பது உண்டு. இதில் அழகு என்பது நாம் நினைக்கும் ஒயிலான நடை என்ற புறத்தழகு அல்ல. மனதில் அமைதி, இறை பக்தி மிளிரும் போது நடையில் தோன்றும் நல்லிணக்கமே நடை அழகு என்பதாகும். நம் சற்குரு, மாதா அமிர்தானந்தா போன்ற மகான்களின் நடையில் இந்த அன்ன நடை அழகை இன்றும் தரிசித்து மகிழலாம். பாலில் உள்ள நீரைப் பிரிப்பது அன்னம் என்பதை மட்டும்தான் நாம் அறிவோம். ஆனால், உலகியலில் நாம் அன்றாடம் சந்திக்கும் பல பிரச்னைகளில் உள்ள வேண்டத் தகாத அம்சங்களை பாலில் இருந்து நீரைப் பிரித்தெடுப்பது போல் நம்மால் பிரித்தெடுக்க முடிந்தால் அந்த அமைதியில் தோன்றுவதே அன்ன நடை. இந்த இயல்பான பண்பைக் கொண்டதே அன்னமாகும். கலியுலகத்தில் மிகவும் அவசியமான இந்த பண்பை வளர்ப்பதே அன்ன நடை, அன்னத்தை வாகனமாகக் கொண்ட ஸ்ரீஆயுர்தேவியின் வழிபாடும் ஆகும். ஒரு பெண் தீபத்தைக் கையில் ஏந்தி நடக்கும் போது அவள் முகத்தில் தோன்றும் ஒளி பிரதிபலிப்பைக் கொண்டு அவள் குணத்தைத் துல்லியமாக எடை போட்டு விடலாம் என்பதை நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். அதனால்தான் அக்காலத்தில் இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம் பெண் பார்க்கும் படலத்தில் இணைக்கப்பட்டிருந்தன.

நாகதோஷம் களையும்
நல்லாண்டவர் வத்தலகுண்டு

தற்காலத்தில் பெண் பார்ப்பவர்களின் எதிர்பார்ப்பு எப்படி எப்படியோ இருந்தாலும் திருமணம் ஆகாத பெண்கள் விளக்கைக் கையில் ஏந்தி ஸ்ரீபிரம்மாவையும் அன்ன வாகனத்தையும் குறைந்தது 12 முறை வலம் வந்து இத்திருக்கோயிலில் ஏற்றுவதால் பெண்களின் நடை சிறிது சிறிதாக சிறப்பாக அமையும், அவர்களின் குணாதிசயமும் வியத்தகு முறையில் முன்னேற்றம் அடையும். திருமணத்திற்குப் பின்னரும் இத்தகைய ‘நடை அழகை’ பெண்கள் வளர்த்துக் கொள்வது தவறு கிடையாது. இதனால் எதிர்கால சந்ததிகளின் குணாதிசயமும் நல்ல முறையில் வளர்ச்சி அடையும், விருத்தி ஆகும். தற்காலத்தில் பல பெற்றோர்களும் தாங்கள் படித்து அறிவு ஜீவிகளாக இல்லா விட்டாலும் தங்கள் குழந்தைகள் நல்ல அறிவுடன், குண நலத்துடன் இருக்க வேண்டும், விளங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே? அத்தகைய தம்பதிகள் வழிபாடுகள் இயற்ற வேண்டிய திருத்தலம் இதுவே.

ஸ்ரீபிரம்மாவின் அருள் வேண்டி இயற்றும் ஒரு வழிபாட்டை சித்தர்கள் விளக்குகிறார்கள். ஒரு பெரிய பித்தளை, செம்பு அல்லது வெள்ளி தாம்பாலத்தில் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து வைக்க வேண்டும். சிறப்பாக திருமணம் ஆகாத பெண்கள் தாமே தங்கள் கையால் அரைத்த மஞ்சள் பொடியை இந்த மஞ்சள் மூர்த்திக்கு சமர்ப்பித்தல் நலம். 108 மண் கலசங்களில் வஞ்சி ஓடை நீரை நிரப்பி ஸ்ரீபிரம்மா சன்னதி, அன்ன வாகனத்தைச் சுற்றிலும் வைத்து அவரவருக்குத் தெரிந்த இறை கீதங்களை, கோதை நாச்சியார் அருளிய வாரணம் ஆயிரம் போன்ற பதிகங்களை ஓதி பின்னர் இந்த தீர்த்தத்தால் இந்த மஞ்சள் பிள்ளையார் மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகளை நிகழ்த்துதல் நலம். ஸ்ரீபிரம்மாவிற்கு இந்த பாராயண தீர்த்தத்தால் அபிஷேகம் இயற்றுவதும் சிறப்புடையதே. அபிஷேகத்திற்குப் பின் எஞ்சிய தீர்த்தத்தை வஞ்சி ஓடையில் சேர்த்து விடவும்.

இங்கு நீங்கள் கேட்கும் வாரணமாயிரம் என்று தொடங்கும் கோதை நாச்சியாரின் பாடலில் நம் சற்குரு அருளிய பல தம்பதி ஒற்றுமை மந்திரங்கள் இணைக்கப்பட்டுள்ளன என்பதே இதன் சிறப்பாகும்.

வஞ்சி தீர்த்த வளாகம்

நம் மூளையில் தோன்றும் ஒருவித தீர்த்த சக்தியே வஞ்சி தீர்த்தம் என்பதாகும். காலம், நேரம் என்று நாம் அடிக்கடி கூறுவதுண்டு. இந்த காலம் என்பதுடன் சம்பந்தப்பட்டதே வஞ்சி தீர்த்தமாகும். நான்கு நிமிடத்திற்கு ஒரு முறை மூளையிலிருந்து வரும் கட்டளை வினை செயல்பாடு மூலமே நம் இதயம் துடிக்கிறது என்பது விஞ்ஞான கோட்பாடு. இந்த கட்டளை சிறு மூளையிலிருந்து வராவிட்டால் இதயம் நின்று போய் உயிர் போகும் ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் இதைத் தவிர்க்க தற்காலத்தில் pace maker என்னும் உபகரணத்தை இதயத்தில் பொருத்தி விடுகிறார்கள்.

இந்த வஞ்சி தீர்த்த சக்தியை ஊக்குவிப்பதாக பல்லாண்டுகளுக்கு முன்னரே தஞ்சை அரசலாற்றில் நம் அடியார்களுக்கு தொட்டுக் காட்டிய வித்தையாக நம் சற்குரு அருளிய சில விளையாட்டு முறைகளை இங்கு அறிவிக்கிறோம். ஒரு குழந்தையாவது பெற்ற தம்பதியர் மட்டுமே இந்த விளையாட்டை விளையாட முடியும்.

ஸ்ரீசிவகாமி அம்மன் வத்தலகுண்டு

வஞ்சி தீர்த்த வளாகம் 1
தாய் அல்லது தந்தை முழந்தாளிட்டு கைகளை ஊன்றி நின்று கொள்ள வேண்டும், பெற்றோர்கள், குழந்தைகள் மண்டியிட்டு இந்த முழந்தாளிட்ட பெற்றோர்களின் கை கால் வழியாக உள்ளே நுழைந்து வர வேண்டும். முதலில் பெற்றோருக்கு இடப் புறம் உள் நுழைந்து வெளியே வர வேண்டும். குறைந்தது ஒன்பது முறை இவ்வாறு வெளியே வந்த பின் மீண்டும் வலப் புறமாக முழந்தாளிட்டு நுழைந்து வெளி வர வேண்டும். தம்பதியர் அல்லது பெரிய, வளர்ந்த குழந்தைகளும் இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் மண்டியிட்டு அமர மற்றவர்கள் தொடர்ந்து இந்த இடைவெளியில் முழந்தாளிட்டு ஊர்ந்தே வெளிவர வேண்டும்.

கடற்கரைகள், ஆறுகளில் இந்த விளையாட்டை விளையாடி மகிழலாம். வீடுகளிலும் திருத்தலங்களிலும் இந்த விளையாட்டை விளையாடுவதும் ஏற்புடையதே. இந்த விளையாட்டிற்கு எந்த குறிப்பிட்ட மந்திரமும் பெரியோர்களால் விதிக்கப்படவில்லை என்பதே இந்த விளையாட்டுகளின் சிறப்பாகும். இந்த விளையாட்டில் ஈடுபடும் அனைவரின் வஞ்சி தீர்த்தமும் சக்தி உடையதாக மாறுவதால் உடல் ஆரோக்யம், மன ஆரோக்யம் சிறப்படைவதுடன் குடும்ப ஒற்றுமையும் பெருகும் என்பதில் சந்தேகமில்லை. இந்த விளையாட்டில் குடும்ப அங்கத்தினர்கள் மட்டுமே ஈடுபட வேண்டும் என்பது முக்கியம். தாத்தா, பாட்டி, மாமனார், மாமியார் என்ற உறவு முறைகளும் தாராளமாக இந்த விளையாட்டில் பங்கேற்று பயன்பெறலாம்.

வஞ்சி தீர்த்த வளாகம் 2
இம்முறையில் தாய் தந்தையர் ஒருவர் தோள் மேல் மற்றவர் கைகளை வைத்து நின்று கொள்ள வேண்டும். இந்த இணைந்த கைகளின் மேல் ஒரு குழந்தையோ அல்லது இரு குழந்தையோ அவரவர் உடல் வளர்ச்சி அம்சங்களை கருத்தில் கொண்டு அமர்ந்து கொள்ள வேண்டும். இந்த இணைந்த கோலத்துடன் தம்பதியர் இடப் புறமாக ஒன்பது முறையும் வலப்புறமாக ஒன்பது முறையும் சுற்றி சுற்றி வர வேண்டும்.

வஞ்சி தீர்த்த வளாகம் 3
இம்முறையில் தம்பதியர், மற்றவர்கள் ஒருவர் முதுகு மற்றவர் முதுகைப் பார்க்கும் வண்ணம் நின்று கொண்டு ஒருவர் முழங்கைகளுக்குள் மற்றவர் முழங்கையை இணைத்து, அல்லது சிறுவர்களாக இருந்தால் ஒருவர் கையுடன் மற்றவர் கையை கோர்த்து வைத்து நின்று கொள்ள வேண்டும். இந்த இணைப்புடன் வலப்புறம் ஒன்பது சுற்றுகளும், இடப்புறம் ஒன்பது சுற்றுகளும் சுற்றி வலம் வர வேண்டும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வத்தலகுண்டு

மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இது சாதாரண விளையாட்டு முறை போல் தோன்றினாலும் தொடர்ந்து இந்த விளையாட்டுகளை விளையாடினால்தான் இவைகளின் அருமை பெருமைகளை உணர்ந்து பயன்பெறலாம். குறிப்பாக பெண்களுக்கு வரும் மூட்டு நோய்கள், மாத விடாய் சம்பந்தமான பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள், இதய நோய்கள் சிறிது சிறிதாக குணம் அடையும். மயக்கம், வாந்தி, தலை சுற்றல், கண்கள் இருட்டிக் கொண்டு வருதல் போன்ற கோளாறுகளும் அதிசயமாக மறையும். இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் சிறிது சிறிதாக தங்களின் சுற்று வேகத்தை அதிகப்படுத்தி பார்த்தால்தான் இந்த விளையாட்டுகளின் பயன்களை கண் கூடாக அனுபவித்து மகிழலாம்.

இந்த விளையாட்டுகளை எந்த திருத்தலத்திலும் விளையாடி மகிழலாம் என்றாலும் கலியுக சிதம்பரேஸ்வர திருத்தலமே இத்தகைய விளையாட்டுகளை ஆரம்பிப்பதற்கு உகந்ததாகும். நம் சற்குரு தம் குடும்ப அங்கத்தினர்களுக்கு இந்த விளையாட்டுகளை தஞ்சாவூரில் விளக்கிக் கொண்டிருந்தபோது பெண் உருவில் மறைந்த ஒரு பேய் இந்த விளையாட்டுகள் எல்லாவற்றையும் ஆவி வடிவில் தரிசித்து மகிழ்ந்தது என்றால் மக்களாகிய நமக்கு இதன் பெருமைகள் எந்த அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்? தான் அடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த ஜல் ஜல் என்ற சலங்கை ஒலி ஒலிக்க அடியார்கள் தங்கியிருந்த திருமண மண்டபத்தை வலம் வந்தது என்றால் அந்த ஆவி அடைந்த ஆனந்தத்தை நாமும் ஏன் அனுபவிக்கக் கூடாது? மனிதர்களுக்கு மட்டுமன்றி புழு, பூச்சி, ஆவிகள், விலங்குகள் என்ற அனைத்திற்கும் சற்குருவின் அரவணைப்பு உண்டு என்பதை விளக்குவதே இந்த நிகழ்ச்சி ஆகும்.

ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணம்

வள்ளித் திருமணம், பார்வதி திருக்கல்யாணம் போல் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணமும் மக்களால் கொண்டாடப்பட வேண்டிய ஓர் அற்புத வைபவமே. வைகாசி மாதத்தில் வரும் விசாக நட்சத்திர தினத்தன்றே முதன் முதலில் பூலோகத்தில் ஸ்ரீசரஸ்வதி தேவி பிரம்மாவுடன் இணையும் இனிய வைபவம் கொண்டாடப்பட்டதால் நாம் வரும் 2.6.2023 வெள்ளிக் கிழமை அன்று இந்த நிகழ்ச்சியை கோலாகலமாக ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் கொண்டாடுவது சிறப்பாகும்.

அன்ன வாகனம் வத்தலகுண்டு

ஸ்ரீபிரம்மா சரஸ்வதி
கல்யாண வைபவம்!

வஞ்சி ஓடையிலிருந்து தீர்த்தம் எடுத்து மேற்கூறிய முறையில் பூஜைகள் இயற்றி ஸ்ரீபிரம்ம தேவருக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றி வழிபடுவதே பிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணத்தை எளிமையாக வழிபடும் முறையாகும். இந்த வைபவத்தை விஸ்தாரமாக கொண்டாட விரும்பும் பக்தர்கள் சத்சங்கமாக ஒன்று கூடி மஞ்சள் அரைத்து ஒரு அடி உயரத்திற்கு குறையாமல் மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து இதை பிரம்மாவாக பாவித்து அருகில் முக்கால் அடிக்கு குறையாமல் ஒரு மஞ்சள் பிள்ளையாரைப் பிடித்து இதை சரஸ்வதி தேவியாக பாவித்து இருவருக்கும் திருமண வைபவத்தை நிறைவேற்றுதலே பிரம்மா சரஸ்வதி திருக்கல்யாண வைபவமாகும். இந்த திருமண மண்டபத்திற்கு பச்சை மூங்கிலால் பந்தல் அமைத்து வாழைத் தோரணங்களை கோயில் வாசலில் கட்டி இளநீர், நுங்கு, கூந்தல் பனை போன்று அவரவர் விரும்பும் மங்களப் பொருட்களை வைத்து தோரணம் கட்டி இந்த வைபவத்தை மேலும் சிறப்புறச் செய்யலாம்.

திருக்கல்யாண வைபவத்திற்குப் பின் இந்த மஞ்சள் பிள்ளையார் மூர்த்திகளை வஞ்சி ஓடையிலேயே அல்லது அவரவர் ஊரில் உள்ள ஓடும் தீர்த்தங்களிலோ விசர்ஜனம் செய்து விடலாம். இதனால் தீரும் குடும்ப சச்சரவுகள், பகை, குரோத எண்ணங்களை விவரிக்கவே முடியாது என்னும் அளவிற்கு சிறப்பு வாய்ந்ததாகும் பிரம்மா திருக்கல்யாணம்.

வெண் தாமரை மலர்களால் திருமண மண்டபத்தை அலங்கரித்து, வீணைக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்தல் மிகவும் சிறப்பாகும். இதனால் தங்கள் குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம் பற்றிய கவலையையே பெற்றோர்கள் மறந்து விடலாம்.

சங்கநிதி பதுமநிதி

பொதுவாக சிவன் பெருமாள் போன்ற ஆண் தெய்வங்களுக்கு காவல் தெய்வங்களாக துவார பாலகர்களும், அம்பாள், லட்சுமி போன்ற பெண் தெய்வங்களுக்கு காவல் தெய்வங்களாக துவார பாலகிகளும் எழுந்தருள்தல் இயல்பு. வத்தலகுண்டு சிவாலயத்திலோ சங்கநிதி பதுமநிதி என்ற பெண் காவல் மூர்த்திகளே துவார சக்திகளாக எழுந்தருளி இருக்கும் அதிசயத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர்
வத்தலகுண்டு

எந்த நற்காரியம் நம் இல்லத்தில் நிகழ்வதாக இருந்தாலும் அதற்கு நிதி என்பது அவசியமே. இவ்வாறு நிதி பற்றாக்குறையால் திருமணம், உயர் படிப்பு, வீடு கட்டுதல், வியாபார அபிவிருத்தி போன்ற எந்த சுபகாரியங்களையும் நிகழ்த்த முடியாமல் அல்லது தொடர முடியாமல் தவிப்போர் ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரரை தரிசனம் செய்து வழிபாடுகள் இயற்றி வருதலால் அவர்களுடைய நிதி நிலை சிறிது சிறிதாக முன்னேறும் என்பதில் ஐயமில்லை.

செல்வ விருத்தியைப் பெறும் எவரும் அது நிலைத்திருக்க வேண்டும் என்று எண்ணுவது இயற்கையே. இவ்வாறு செல்வம் நிலைத்து நின்று பல தலைமுறைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் ஸ்ரீசிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் துலங்கும் சங்கநிதி பதுமநிதி துவார பாலகி தேவதைகளை அனுஷம் நட்சத்திர நாட்கள், வியாழக் கிழமைகளில் தொடர்ந்து தரிசித்து வர வேண்டும். திருமகள் அமர்ந்த கோலத்தில் அருள்வதாலேயே செல்வம் நிலைத்து நிற்கும் அனுகிரகத்தை அளிக்கவல்ல மூர்த்தியாக அருள்வதைப் போல வத்தலகுண்டு சிவாலயத்தில் அருளும் சங்கநிதி பதுமநிதி தேவதைகளும் அமர்ந்த கோலத்தில் காட்சி அளித்து பக்தர்கள் பெறும் செல்வம் பல தலைமுறைகளுக்கு நிலைத்து நின்று அபிவிருத்தி ஆக துணை புரிகின்றனர்.

தாமே அரைத்த சந்தனம், தாமே தாமரை இலைகளில் பிடித்த பசுஞ்சாணத்தால் தயாரித்த விபூதி, தாமே தயாரித்த குங்குமம் போன்றவற்றால் இந்த மூர்த்திகளுக்கும், சங்கநிதி பதுமநிதி மூர்த்திகளைச் சுற்றி இருக்கும் கல்லால் அமைந்த அலங்கார வளைவுகளுக்கும் பொட்டிட்டு வணங்குவதால் அவரவர் பெற்றிருக்கும் செல்வங்கள் நிலைத்து நிற்கும் தன்மையைப் பெறலாம். இந்த வழிபாட்டில் அடியார்கள் எந்த அளவிற்கு சிரத்தையைக் கூட்டுகிறோர்களோ அந்த அளவிற்கு அவர்கள் பெற்றிருக்கும் செல்வம் அபிவிருத்தி ஆகி இறுதியில் அவர்கள் அழியாச் செல்வமாக இறை அருளையும் பெறலாம் என்பதே ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வர நாதனின் பெருங்கருணையாகும்.

ஸ்ரீகுழந்தை வேலாயுதசுவாமி
குருந்தமலை

சங்கநிதி பதுமநிதி தேவதைகள் ஈசனின் துவார பாலகிகளாக எழுந்தருளியதே ஒரு அற்புத வரலாறு ஆகும். கார்த்திகைப் பெண்களைப் போன்று சங்கநிதி பதுமநிதி தேவதைகளும் திருமணம் இன்றியே அம்பாளின் காவல் மூர்த்திகளாக நெடுங்காலம் சேவை செய்து வந்தனர். இவர்களின் அரிய சேவையைப் பாராட்டி இவர்களுக்குத் திருமணம் நிகழ்த்த வேண்டி அவர்களின் விருப்பத்தை அறிந்து கொள்ள விழைந்தபோது அவர்கள் எம்பெருமானை என்றும் பிரியாது அர்த்தநாரீஸ்வரக் கோலத்தில் அம்பாள் துலங்குவதைப் போல் சங்கநிதி பதுமநிதி என்ற தேவர்களை மணக்க விரும்பியது மட்டுமல்லாமல் அவர்களோடு எப்போதும் பிரியா நிலையில் இருக்க வேண்டும் என்ற தங்கள் கருத்தையும் தேவியிடம் தெரிவித்தனர்.

சங்க பதுமநிதி தேவதைகளுக்கு தங்கள் வருங்கால கணவன்மார்களின் மேல் இருக்கும் ஆழ்ந்த அன்பைக் கண்டு பெருமகிழ்ச்சி கொண்டு சங்கநிதி பதுமநிதி தாங்கியிருக்கும் கோணிப் பைகளாக அவர்கள் உருவத்தை மாற்றி அருள்புரிந்தாள். இவ்வாறு ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரரின் சக்தியாக எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசிவகாமி அம்பிகையே இவ்வாறு கோணிப் பை உருவில் மறைந்திருக்கும் சங்கநிதி பதுமநிதி பெண் தெய்வங்களுக்கு முதலிடம் அளித்து அவர்களை சுவாமியின் வலப்புறத்திலும் இடப்புறத்திலும் எழுந்தருள ஆசனம் அளித்து தான் பெருமானின் பின்னணி தெய்வமாக, சக்தியாக இங்கு அருள் வழங்குகிறாள் என்பதே நம்மை மெய்மறக்கச் செய்யும் தேவி மகாத்மியமாகும்.

எனவேதான் எவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தாலும் அவர்கள் கோணிப் பைகளில் பணத்தைக் கட்டி வைக்கும் பழக்கம் இன்று பல கோடீஸ்வரர்களிடம் காணப்படுகிறது. பொன் விகிதத்தில் அதாவது 1:1.6 என்ற முறையில் அகலம் நீளம் அமைந்த கோணிப் பைகளில் பச்சரியைக் கட்டி எடுத்து வந்து இம்மூர்த்திகளிடம் சமர்ப்பித்து அதை மீண்டும் தங்கள் இல்லம் எடுத்துச் சென்று அதில் ஒரு பகுதியை அன்னதானமாக சமைத்து வழங்குதலால் என்றும் நிலைத்து நிற்கும் செல்வ வளத்தை அடியார்கள் பெறுவார்கள்.

அட்சய திரிதியை என்றால் அழியாமல் என்றும் நிலைத்து நிற்கும் சக்தி பெருகும் நாள், முகூர்த்தம் என்று பொருள். எது நிலைத்து நிற்க வேண்டியது? பலரும் செல்வம் பெருக வேண்டும் என்ற எண்ணத்தில் அட்சய திரிதியை நாட்களில் தங்கம் வெள்ளி நகைகளை வாங்கி, செல்வம் பெருக வேண்டும் என்று எண்ணுகின்றனர். இது தவறு கிடையாது என்றாலும் காசு, பணம் என்ற செல்வம் பெருகப் பெருக மனதில் அமைதி மறைவது இயற்கையே. அதே சமயத்தில் மன அமைதி என்ற செல்வம் பெருகிக் கொண்டே சென்றால் அதற்கு எல்லையே கிடையாது, இந்த அமைதிக்கு விலை மதிப்பும் கிடையாது. ஆரம்பத்தில் செல்வம் ஈட்டுவதைக் குறிக்கோளாகக் கொண்டாலும் நாட்கள் செல்லச் செல்ல மன அமைதி என்ற செல்வத்தை அடியார்கள் நாடினால் அவர்களுக்கு துணை புரிவதே ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நாம் மேற்கொள்ளும் அட்சய திரிதியை அன்னதான வழிபாடு ஆகும்.

குருந்தமலை குணக்குன்று

கோயம்புத்தூர் குருந்தமலை திருத்தலத்தில் அமைந்துள்ளதே ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலாகும். முருகப் பெருமானை வளர்த்த கார்த்திகைப் பெண்கள் ஒவ்வொரு சூரிய கிரகண தினத்தன்றும் குருந்தமலைக்கு எழுந்தருளி தாங்கள் வளர்த்த அருமைப் புதல்வனை தரிசனம் செய்வது வழக்கம். அதே போல் சங்கநிதி பதுமநிதி தேவதைகளும் குருந்தமலையை வலம் வந்து வணங்கினர். அவர்களின் நெடுநாளைய வழிபாட்டைக் கண்டு மகிழ்ந்த முருகப் பெருமானும் அவர்களின் பிரார்த்தனைக்கு செவி சாய்த்து வஞ்சி ஓடைக் கரையில் அமைந்துள்ள ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வர சிவத்தலத்தில் அவர்கள் மனித உடலுடன் எழுந்தருளும் அனுகிரகத்தை அளித்தார். இவ்வாறு சங்கநிதி தேவதைகள் தங்கள் திருமணத்திற்கு முன் மனித அவதாரமாய் பூவுலகில் தோன்றிய திருத்தலமே வத்தலகுண்டு திருத்தலமாகும்.

இவ்வாறு கடந்த சூரிய கிரகண நாளான 20.4.2023 வியாழக் கிழமை அன்று கார்த்திகைப் பெண்களும் சங்கநிதி பதுமநிதி தேவதைகளும் குருந்தமலை திருத்தலத்தில் ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமியைத் தரிசனம் செய்து அருள் பெற்ற காட்சியை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம். எனவே ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வர திருத்தலத்தில் சங்க பதும நிதி தேவதைகளின் நிரந்தர அனுகிரகத்தைப் பெற விரும்பும் அடியார்கள் அனைவரும் குருந்தமலையில் ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமியை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வர தலத்தில் அருளும் சங்க பதும நிதி தேவதைகளை தரிசனம் செய்தல் சிறப்பு.

பொதுவாக, சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ நாம் வசிக்கும் பகுதியில் அமையா விட்டால் நாம் அந்த கிரகணங்களை வழிபாட்டிற்காக அமைத்துக் கொள்வது கிடையாது. நம் சற்குருவோ, சூரிய கிரகணமோ சந்திர கிரகணமோ நாம் வசிக்கும் பகுதியில் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் அந்தக் கிரகணங்களை வழிபடுவதே ஒரு சமுதாய சேவையாக அமைந்து நமக்கும் நாட்டிற்கும் நலம் பல செய்யும் என்று அருளியுள்ளதால் இம்முறையில் குருந்தமலையில் அருளும் ஸ்ரீகுழந்தை வேலாயுத சுவாமியை நம் அடியார்கள் சூரிய கிரண நாளில் தரிசித்து, அத்தரிசன பலன்களை எல்லாம் மக்களுக்கு அர்ப்பணித்தனர்.

திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு ஆறு கஜம் புடவை ஒரு மீட்டர் ஜாக்கெட் துணியுடன் மங்களப் பொருட்களை குருந்தமலையில் தானமாக அளித்தல் சிறப்பாகும்.

ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் நிகழ இருக்கும் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணத்திற்கு முன்பாக கோவை குருந்தமலையில் கார்த்திகை பெண்கள் நிகழ்த்தும் ஸ்ரீமுருகப் பெருமானின் அபிஷேக ஆராதனைகளை நினைவு கூறும் முகமாக இத்தலத்தில் நம் அடியார்கள் நிகழ்த்திய அபிஷேக ஆராதனை காட்சிகளை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம்.

தம்பதிகள் இளமையாக இருக்கும்போது நிறைவேறும் திருமண பந்தம் நாட்கள் செல்லச் செல்ல அன்பினால் புனிதம் அடைந்து இல்லறம் நல்லறமாய்த் துலங்குவதை பக்தர்கள் அறியும் முகமாக குருந்தமலையில் குககுருவாக எழுந்தருளி இருக்கும் முருகப் பெருமானின் கோலம் பாதி இளமைக் கோலத்துடனும், மறுபாதி முதுமைக் கோலத்துடனும் துலங்குவது சிறப்பே. இத்தகைய ஒரு கோலத்தை பிரம்மா சரஸ்வதி திருமணத்திற்கு முன் கண்டு ஆராதிப்பது என்பது எத்தகைய பேறு?!

அடி முடி தேடா தரிசனம்

எம்பெருமானின் திருவடியையும் திருமுகத்தையும் காண விஷ்ணுவும் பிரம்மாவும் வராக அவதாரம், அன்னப் பறவை வடிவங்கள் எடுத்து முயற்சி செய்த இறைத் திருவிளையாடலை நாம் அறிவோம். கலியுகத்தில் இத்தகைய கடுமையான முயற்சிகளை மேற்கொள்ளும் மனிதர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் என்பதை உணர்ந்த மகான்கள் கலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் இத்தகைய தரிசன பலன்களை அளிக்கிறார்கள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் இறை இரகசியமாகும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி வத்தலகுண்டு

எம்பெருமானின் திருமேனியில் தவழ்ந்த நாகங்கள் கோடி கோடியே. உண்மையில் இந்த நாகங்கள் எல்லாம் பல யுகங்கள் தவம் இயற்றி, அரும் பெரும் சாதனைகள் சோதனைகள் எல்லாவற்றையும் மேற்கொண்டு எம்பெருமானின் உடலை அலங்கரித்த வெவ்வேறு ஜீவன்களே. இவற்றில் எம்பெருமானின் திருமுடியை அலங்கரித்த நாக தேவதையே சசபிந்து மகரிஷி ஆவார். திருச்சி நாகநாத சுவாமி திருத்தலத்தில் இப்பெருமானின் உருவத்தை தரிசித்து இன்றும் மக்கள் பயனடையலாம்.

எம்பெருமானின் வலது கரத்தில் பொலியும் கார்கோடகன் நாக தரிசனத்தை சீர்காழி அருகே உள்ள தென்திருமுல்லைவாயில் திருத்தலத்தில் தரிசிக்கலாம். இவ்வாறு ஸ்ரீகலியுகசிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் அருள்புரியும் ஸ்ரீதட்சிணா மூர்த்தியின் திருவடியில் அமைந்த நாகமே வரகுணன் என்ற நாக தேவதை ஆகும். எனவே சசபிந்து மகரிஷி, கார்கோடகன், வரகுணன் என்ற மூன்று நாக தேவதைகளையும் தரிசிக்கும் ஒரு பக்தர் இறைவனின் சிரம் கரம் பாதம் என்று மூன்று அங்கங்களையும், அதாவது இறைவனின் பரிபூரண உருவத்தை தரிசித்ததாகத்தானே பொருள்படும்?

எப்படி தன் தலைமேல் கரங்களை குவித்து வணங்கிய கோலத்தில் ராமபிரானை தரிசிக்க வந்த விபீஷணனுக்கு அவன் பகைவன் பாசறையைச் சேர்ந்தவன் என்று நன்கு அறிந்திருந்தாலும் அவனுக்கும் அடைக்கலம் அளித்து இலங்கை சாம்ராஜ்யத்தையே தானமாக அளிக்க ராமபிரான் முன்வந்தாரோ அதே போல வரகுணன் என்ற நாகத்திற்கு ஆறுதல் அளிப்பதாக தன் இடக்கரத்தை நாகத்தின் தலை மேல் வைத்து தட்சிணா மூர்த்தி பகவான் ஆறுதல் அளிக்கும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும் என்பார் இந்தக் காட்சியை நேரில் தரிசித்த நம் சற்குரு.

ஒரு முறை நம் சபையைச் சேர்ந்த ஒரு அடியார் கனிந்த கனி காஞ்சி பரமாச்சாரியாரைத் தரிசிக்க சென்றிருந்தார். காஞ்சி பெரியவர் அவரிடம், “பதினெட்டு பதினெட்டு...”, என்று கூறினார். அடியாருக்கோ ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் ஏதோ புரிந்தது போல் தலையை மட்டும் ஆட்டி விட்டு பெரியவாளின் அனுகிரகத்தைப் பெற்று திரும்பி விட்டார். நம் சற்குருவை நேரில் கண்டபோது சற்குருவிடம் காஞ்சி பெரியவா சொன்ன வார்த்தைகளை நம் சற்குருவிடம் திரும்பக் கூறி அதன் அர்த்தத்தை விளக்குமாறு கேட்டுக் கொண்டார்.

நம் சற்குருவோ தனக்கே உரிய தெய்வீகச் சிரிப்பை உதிர்த்து விட்டு, “என்ன சார், இது கூடவா புரியவில்லை...
சரி, பதினெட்டு என்றால் அது எப்படி வரும்?
பத்தும் எட்டும் சேர்ந்ததுதானே பதினெட்டு...?
அதாவது, பத்து என்பது பற்று என்பதைக் குறிக்கும்... பற்று ... எட்டு ...
அதாவது, தற்போது உனக்கு குருவாக இருக்கும் மகானைப் பற்றிக் கொள்...
அதன் மூலம் இறைவனின் திருவடியை எட்டு...
இதுவே கனிந்த கனி விளக்கும் அற்புதமான குரு தத்துவம்...”, என்றார் சற்குரு.

பதினெட்டு பதினெட்டு

சற்குருவின் இந்த அருமையான விளக்கத்தைக் கேட்ட அந்த அடியார் அப்படியே அயர்ந்து போய் விட்டார் என்று சொல்லவும் வேண்டுமோ...ஆமாம், காஞ்சி கனி அந்த அடியாருக்கு மட்டும் ஏன் அப்படி ஒரு உபதேசத்தை அளித்தார்... அந்த அடியார் தற்போது நம் சற்குருவின் நிழலில் தங்கி இருக்கவில்லை என்பதே கனிந்த கனியின் தொலை நோக்குப் பார்வை விளக்கும் தத்துவம்.

புனர்சோதி பூம்பாவை தரிசனம்
திருஅண்ணாமலை

இந்த தொலை நோக்குப் பார்வை அளிக்கும் சத்திய வாக்கு, குரு உபதேசம் அந்த அடியாருக்கு மட்டும்தானா... நிச்சயமாக இல்லை ... அது நம் அனைவருக்குமேதான் என்று சொல்லாமல் சொல்லுவதே இங்கு நீங்கள் காணும் காஞ்சி பெரியவா அளிக்கும் தரிசன மகிமை.

குருவைக் குறிக்கும் மூன்று விரல்களை ஒன்று சேர்த்து அதை சுக்கிர விரல் தொடுவதாக அமைத்து, தனித்த புத விரல் கடவுள் ஒருவரே உண்மை என்ற அத்வைத தத்துவத்தை சுட்டிக் காட்டுவதாக அமைத்திருப்பதே ஜகத்குருவின் தனிப் பெருங் கருணை. இவ்வாறு கடவுளை அடைவதற்கு இல்லற தர்மமே உத்தமமானது என்பதைச் சுட்டிக் காட்டுவதும் சுக்கிரவிரல் குரு தத்துவ இணைப்பாகும்.

ஒரு முறை சிறுவனான நம் சற்குரு கோவணாண்டியுடன் கர்நாடக மாநிலத்திற்கு யாத்திரையாகச் சென்றிருந்தார். அப்போது அங்குள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தபோது மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று எதிர்ப்படுவதைக் கண்டார். சிறுவனுக்கோ ஒன்றும் புரியவில்லை. இப்படி ஒரு அடர்ந்த காட்டில் யார் இவ்வளவு பெரிய கட்டிடத்தை கட்டி வைத்திருக்கிறார்கள், எதற்காக இந்த கட்டிடம் என்று வியந்து அந்த கட்டிடத்தை கூர்ந்து கவனித்தபோதுதான் அது கட்டிடம் அல்ல, படம் எடுத்து நிற்கும் ஒரு நாகப் பாம்பு என்பதையே புரிந்து கொண்டாராம்.

பிறகு என்ன...
பயத்தில் வெலவெலத்துப் போய் பெரியவரைக் கட்டிக் கொள்ள, பெரியவரோ, “என்னடா உன்னோட ரொம்ப ரோதனையா போச்சு... இந்த குட்டி வாண்டு பாம்புக்கெல்லாம் பயந்து அலறறியே... இது அந்த பாம்போட சுய உருவமே இல்லைடா ... பூலோகத்துக்காக வேண்டி ஒரு சின்னதா வடிவம் எடுத்துக்கிட்டு வந்திருக்குடா...”, என்றாராம். அதன் பின்னரே அந்த பாம்பு சஞ்சரிக்கும் இடங்களில் ஒன்றுதான் சுப்ரமண்யா என்று காட்டுப் பகுதியில் தற்போது பிரசித்த பெற்றுள்ள முருகப் பெருமானின் தலமாக, நாகதோஷங்கள் அனைத்தையும் களையும் தலமாக விளங்குகின்றது என்பதை பெரியவர் மூலம் அறிந்து கொண்டார். அதுவே தற்போது கலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் தட்சிணா மூர்த்தியின் திருவடியில் அடைக்கலம் கொண்டுள்ள வரகுணன் என்ற நாக தேவதை.

புனர்சோதி பூம்பாவை சோதிகள்

பூமியில் தோன்றிய நம் சற்குருவின் அவதாரங்கள் அனைத்துமே ஏதோ ஒரு மைய காரணத்தை, கருத்தைக் கொண்டிருக்கும் அல்லவா? அது போல் இந்த வருடம் கேதுவின் வருடமாக இருப்பதால் இந்த கேது வருடத்தில் குரு சக்திகளை இணைக்கும் வண்ணம் N2023 என்று இந்த வருடத்தை அமைக்கும்படி நம் சற்குரு சிபாரிசு செய்துள்ளார். இதை அனுசரித்து இவ்வருடம் நம் சற்குருவின் பிறந்த நாளான 21.5.2023 அன்று குறைந்தது 300 மஞ்சள் ஜாங்கிரிகளை தானமாக அளித்தல் சிறப்பாகும். இந்த தான தர்ம வழிபாடுகளை சசபிந்து, கார்கோடகன், வரகுணன் என்ற நாகதேவதைகளை தட்சிணா மூர்த்தி ஏந்தியிருக்கும் திருத்தலங்களான திருச்சி நாகநாதசுவாமி திருத்தலம், தென்திருமுல்லைவாயில், வத்தலகுண்டு போன்ற திருத்தலங்களில் இயற்றுதல் சிறப்பாகும்.

ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாண உற்சவத்தை வத்தலகுண்டு திருத்தலத்தில் கொண்டாடுவதில் மற்றோர் ஆழ்ந்த அர்த்தமும் உண்டு. அதை இங்குள்ள வீடியோவில் நீங்கள் கண்டு இரசிக்கலாம். ஒரு மனிதன் உரிய வயது வந்தவுடன் பூணூல் அணிந்து காயத்ரீ மந்திரம் ஜபிக்க ஆரம்பிக்கிறான். இவ்வாறு பூணூல் அணிந்திருப்பவர்களை இரு பிறப்பாளர்கள் என்று கூறுகிறோம். அவர்களை தரிசிப்பதே சிறந்த சகுனம் என்று சகுன சாஸ்திரத்திலும் அவர்கள் பெருமை பறைசாற்றப்படுகிறது. பிரம்மா என்பவர் சிருஷ்டிக்கு உரியவர் ஆதலால் பிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணத்தை உரிய முறையில் கொண்டாடும்போது அவர்கள் இறைவனுக்காக மட்டும் வாழும் வாழ்க்கைக்கு தங்களை உரியவர்கள் ஆக்கிக் கொள்கிறார்கள் என்பதே பிரம்மா கல்யாணத்தின் தாத்பத்யர்யமாகும். பிரம்மா கல்யாணத்தில் இறைவனுக்காக மட்டும் வாழும் ஒரு மனிதம் மீண்டும் பிறக்கிறான், அவனுக்கு இறைவனுக்காகவே மட்டும் வாழும் இரண்டாவது புதிய பிறவி பிரம்மாவால் சிருஷ்டிக்கப்படுகிறது என்பதே இதன் தாத்பர்யம்.

இவ்வாறு மனிதன் முழுமை அடையவே திருமணம் என்ற பந்தம் நம் முன்னோர்களால் அமைக்கப்பட்டது. அதனால்தான் திருமண வைபவங்களில் பூர்ணத்தைக் குறிக்கும் ஒன்பது இழைகளால் அமைந்த மாங்கல்யம் மணமகளுக்குச் சூட்டுப்படுகிறது. கலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் இதைக் குறிக்கும் விதமாக கீழ்க்கண்ட ஒன்பது சன்னதிகளில் தீபங்களை ஏற்றுதல் சிறப்பாகும்.

      1. ஸ்ரீபிள்ளையார் சன்னதி
      2. ஸ்ரீவிஷ்ணு பகவான் சன்னதி
      3. ஸ்ரீமுருகப் பெருமான் சன்னதி
      4. ஸ்ரீதட்சிணா மூர்த்தி சன்னதி
      5. ஸ்ரீபிரம்மா சன்னதி
      6. ஸ்ரீசிவகாமி அம்மன் சன்னதி
      7. ஸ்ரீகலியுகசிதம்பரேஸ்வரர் சன்னதி
      8. ஸ்ரீவிருமாண்டி தேவர் சன்னதி
      9. ஸ்ரீதுர்கை அம்மன் சன்னதி

இங்கு விளக்கப்பட்டுள்ள முறையில் ஸ்ரீகலியுகசிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் புனர்சோதி பூம்பாவை சோதிகளை ஏற்றி ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாண வைபவத்தை விமரிசையாக கொண்டாடி பக்தர்கள் மகிழலாம். நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய், விளக்கெண்ணெய் இவற்றுடன் பசு நெய் அதிகமாகச் சேர்த்து தீபம் ஏற்றுதல் சிறப்பு. புனர்ஜோதி பூம்பாவை தரிசனம் என்ற ஓர் அற்புத தரிசனம் திருஅண்ணாமலையில் விளங்குவது, இந்த தரிசனத்தின் பலன்களை பக்தர்களுக்குப் பெற்றுத் தருவதும் மேற்கண்ட ஜோதி வழிபாடாகும். திருஞானசம்பந்தர் கைப்பிடித்த தோத்திரபூர்ணாம்பிகை தன் திருமணத்திற்கு முன், ஒன்பதாவது வயதில், திருஅண்ணாமலையில் இந்த பூம்பாவை தரிசனத்தைப் பெற்றாள் என்பதே இந்த தரிசனத்தின் பலனை சாதாரண மக்கள் அறிந்து கொள்ள துணை புரிவதாகும்.

2023 ஆண்டிற்கான நம் சற்குருவின் பிறந்த நாள் வைபவம் நம் சற்குரு தோன்றிய அதே மூன்றாம் பிறை வைபவத்துடன் 21.5.2023 அன்று இணைந்து வருவது நாம் பெற்ற பேறே. இதைக் கொண்டாடும் முகமாகவும், இறைவனின் பூரண தரிசனத்தை விளக்கும் முகமாகவும் அமைந்த திருச்சி ஸ்ரீநாகநாத சுவாமி திருத்தலம், வத்தலகுண்டு ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயம், தென்திருமுல்லைவாயில் சிவாலயம் போன்ற திருத்தலங்களில் நம் அடியார்களால் நிறைவேற்றப்பட்ட ஜாங்கிரி தான வைபவத்தை இங்குள்ள வீடியோவில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம்.

கடுகினும் சிறிய நம் முயற்சியையும் பாராட்டும் விதமாக அன்று நம் சற்குரு மூன்றாம் பிறை வடிவில் சுமார் 12 நிமிடம், அதாவது 6.45 முதல் 6.57 வரை நம்மை அரவணைத்த இன்பத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

அரிஷ்ட யோகம் களையலாம்

அரிஷ்டம் என்னும் மரணத்தைக் கொடுக்கும், விபத்துகள் சம்பவிக்க ஏதுவான பலவிதமான தோஷங்கள் உண்டு. இத்தகைய பிரபல அரிஷ்டத்தைக் கொடுக்கும் நாளையே பிரபலாரிஷ்ட யோக நாளாக, கூடா நாளாக நம் முன்னோர்கள் தெரிவிக்க அதைக் களையும் பலவித வழிபாடுகளை நம் சற்குரு மூலம் நாம் அறிந்து கொண்டுள்ளோம்.

தேன் சுவையான குரு!
வெள்ளலூர்

இத்தகைய அரிஷ்ட விளைவுகளில் ஒன்றே மாதத்தின் கடைசி நாட்களில் சூரிய பகவான் சஞ்சரிக்கும்போது உண்டாகும் குழந்தைப் பிறப்பின் தன்மையாகும். இதில் இன்னும் பல ஜோதிட நுணுக்கங்கள் உள்ளன. இத்தகைய அரிஷ்ட விளைவுகளைக் களையும் மூர்த்தியே கோவை வெள்ளலூரில் அருள்புரியும் ஸ்ரீதேனீஸ்வரர் ஆவார்.

அரிஷ்டம் என்றால் பெற்ற குழந்தையை இழத்தல் என்றும் ஒரு பொருள். பிரம்மா சரஸ்வதி கல்யாணத்தில் மேற்கூறிய முறையில் சிருஷ்டிக்கப்பட்ட கடவுள் பக்தி, குரு பக்தி என்ற குழந்தையை ஒரு அடியார் இழந்தாலும் அது அரிஷ்டமே என்று நீங்கள் புரிந்து கொள்து சிரமம் இல்லையே. பொதுவாக, ஒரு வருட காலம் முடிவதற்கு முன் குழந்தை இழத்தலை அரிஷ்டம் என்று கூறுவது போல இறை நம்பிக்கை பனித் துளியைப் போல் பளபளப்பாகத் தோன்றி உடனே மறைவதும் அரிஷ்டம்தானே. நாம் கலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் அரும்பாடு பட்டு பிரம்மாசரஸ்வதி திருக்கல்யாணத்தால் பெற்ற கடவுள் நம்பிக்கை என்ற குழந்தையை இழந்து விடாது காக்க நமக்கு அருள்சுரக்கும் திருத்தலமே கோவை வெள்ளலூர் சிவத்தலமாகும்.

வைகாசி, ஆவணி, கார்த்திகை, மாசி என்ற மாதங்கள் திர மாதங்கள் ஆவதால் இந்த மாதங்கள் பிறப்பதற்கு முந்தையை தினங்களில் வெள்ளலூர் ஈசனை தரிசித்து வழிபாடுகள் இயற்றி வருவதால் நாம் அரும்பாடு பட்டு பெற்ற குரு பக்தி என்ற குழந்தையை நல்ல முறையில் வளர்த்து ‘போஷிக்கலாம்’. அபூர்வமாக இத்திருத்தல வாசல் முன்பு ஒரு பழம்பெரும் சித்த சுமை தாங்கி விளங்குகின்றது. இத்திருத்தலத்திற்கு தினமும் வருகை தந்து ஈசனை தேனி வடிவில் வணங்கும் ஸ்ரீஅகத்திய பெருமான் காட்டிய முறையில் நாமும் ஈசனை வணங்குவதால் அரிஷ்ட யோகங்களிலிருந்து நம்மை மட்டும் அல்லாது நம்முடைய சந்ததிகளையும், இந்த சமுதாயத்தையுமே நல்ல முறையில் காக்க முடியும்.

ஸ்ரீகல்யாண கணபதி வெள்ளலூர்

வெள்ளலூர் சிவாலயத்தின் அக்னி மூலையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகல்யாண விநாயகரை தரிசனம் செய்து, பின்னர் மற்ற இறை மூர்த்திகளையும் பைரவர், வன்னி மரங்கள், அம்பாள், இவர்களை தரிசனம் செய்தபின் ஸ்ரீதேனீஸ்வர ஈசனை வணங்கி இறுதியாக இந்த தரிசன பலன்கள் அனைத்தையும் திருத்தல வாசலில் விளங்கும் சித்தர்கள் வாசம் செய்யும் சுமைதாங்கியை வணங்கி இந்த அரிய சந்தர்ப்பத்தை அளித்த இடியாப்ப சித்த ஈசனுக்கும், நம் சற்குரு நாதருக்கும், அகத்திய பெருமானுக்கும் நன்றி கூறி நிறைவு செய்வதே வெள்ளலூர் திருத்தலத்தில் வழிபாட்டை பூரணம் செய்வது மட்டும் அல்ல நம் வாழ்க்கையும் நிறைவு செய்யும் ஒரு உன்னத வழிபாடாகும்.

உரிய அனுமதி பெற்று
எதுவும் என்னுடையது அல்ல அனைத்தும் உன்னுடையதே
அருளாளா அருணாசலா !
என்ற சித்தகுரு வேத சூக்த மாமந்திரத்தை இந்த சுமை தாங்கியில் பொறித்து சேவை செய்வது என்பது நம் வாழ்வில் கிட்டும் மிக மிக அரிய பேறே.

அரிஷ்ட யோக விளைவுளைக் களையும் வழிபாடாக வெள்ளலூர் திருத்தலத்தில் இயற்ற வேண்டிய வழிபாடுகளை மூலவர் கிழக்குப் பார்த்து அருளும் மற்ற சிவாலயங்களிலும் திர மாதங்கள் பிறக்கும் நாட்களுக்கு முந்தைய தினங்களில் இயற்றி நற்பலன் பெறலாம். பிறப்பை ஒட்டிய அரிஷ்ட யோக விளைவுகள் மட்டும் அல்லாது ஜாதகருக்கோ அல்லது அவர்கள் குடும்பத்தைச் சார்ந்த எவருக்கும் அரிஷ்ட யோகங்கள் அமைந்திருந்தால் மேற்கூறிய திருத்தலங்களில் வழிபாடுகள் இயற்றி நல்லருள் பெறலாம். எல்லாத் திருத்தல வழிபாடுகளுக்கும் பொதுவான அபிஷேக ஆராதனையாக குறைந்தது மூன்று படி தேன் அபிஷேகத்தை மூலவருக்கு இயற்றுவது சிறப்பாகும்.

சதாபிஷேகம், சஷ்டியப்த பூர்த்தி போன்ற பிறந்த நாள் வைபவங்களையும் இத்தகைய திருத்தலங்களில் நிறைவேற்றி இறையருள் பெறலாம். அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது என்பர் பெரியோர். இத்தகைய அரிதான மானிடப் பிறவியை குரு அருளால் தொடர்ந்து பெற்று விரைவில் இறைவன் திருவடியை அடைய உதவுவதே இத்தகைய ‘தேன்’ வழிபாடுகளாகும்.

தினமும் ராயபுரம் அங்காள பரமேஸ்வரியை ஆயிரம் முறைக்குக் குறையாமல் வலம் வந்து வழிபடுவதை தன்னுடைய நித்திய அனுஷ்டானங்களில் ஒன்றாக சிறுவன் வெங்கடராமன் வைத்திருந்தான். சில சமயம் கோவணாண்டி பெரியவர் ஏதாவது ஒரு திருப்பணி நிமித்தமாக மற்ற திருத்தலங்களுக்கு சிறுவனை அனுப்பினால் அப்போது அத்திருத்தலங்களிலும் கால நேரத்தை உத்தேசித்து அந்த ஆலயத்தின் மூலவரையும் ஆயிரம் முறைக்குக் குறையாமல் வலம் வந்து வணங்கவும் செய்தான்.

இவ்வாறு ஒரு திருத்தலத்திற்குச் சென்று தன்னுடைய சகஸ்ர வலத்தை நிறைவேற்றி விட்டு சுவாமியை நமஸ்கரித்து எழுந்தபோது அந்த சுயம்பு திருமேனியில் கோவணாண்டியின் திருஉருவத்தைக் கண்டான். ஆச்சரியம் மேலிடவே தன் கண்களை நன்றாக கசக்கிக் கொண்டு மீண்டும் அந்த இறைத் திருமேனியை நோக்கினான். “சந்தேகமே இல்லை ... இல்லை ... இறைவனின் சுயம்பு லிங்க வடிவம்தான் கோவணாண்டியின் திருமுகம் போல் பளிச்சிட்டது ... இல்லை, ஒருவேளை கோவணாண்டியின் திருஉருவம்தான் எல்லாத் திருத்தலங்களிலும் லிங்க வடிவத்தில் தோன்றுகிறதா? நாம்தான் இதைக் கவனிக்காமல் விட்டு விட்டோமா?” என்று சிறுவன் குழம்பித் தவிக்க ஆரம்பித்தான். யார் சிறுவனின் இந்த குழப்பத்திற்கு விடை கூற இயலும் ... ?

இரவு முழுவதும் தூங்க “முடியாமல்” ஆனந்த பரவசத்தில் திளைத்திருந்த சிறுவன் மறுநாள் பொழுது விடியும் முன்னரே அங்காளி கோயிலை நோக்கி ஓடினான் என்று சொல்லவும் வேண்டுமோ? பெரும்பாலும் இத்தகைய அரிய சந்தர்ப்பங்களில் எல்லாம் சிறுவனைக் காக்க வைத்து வேடிக்கை பார்க்கும் பெரியவரோ அன்று ஆத்தாவின் கோயில் வாசலிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.

வத்தலகுண்டு

சிறுவன் தன் ஆனந்த பரவசத்திற்கு உருவம் கொடுக்கும் முன் பெரியவர் இடைமறித்து, “சரிடா, குரு தத்துவத்திற்கு எண் என்ன?” என்று கேட்டார். கல்லூரி படிக்கும் மாணவனிடம், ஒன்றும் ஒன்றும் எத்தனை என்று கேட்பதுபோல் இந்த கேள்வி சிறுவனுக்குத் தோன்றினாலும், கோபத்தை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டு, “மூன்று...”, என்றான் சிறுவன். “இந்த மூன்றில் இறைவனைக் காண்பதுதானடா பெருமை ... இதைக் கண்டபின் என்னை வந்து பார் ...”, என்று கூறி சட்டென தூணின் பின் சென்று மறைந்து விட்டார் பெரியவர்.

வழக்கம்போல் சிறுவனுக்கு பெரியவர் மேல் கோபம் கோபமாக வந்தது. “தான் கூற வந்த பொக்கிஷமான விஷயங்களை காதில் போட்டுக் கொள்ளாமல் அடுத்த வேலையை தனக்கு அளித்து விட்டாரே...” என்று. இருந்தாலும் இந்த ‘வேலையும்’ தான் கூற வந்த பொக்கிஷத்திற்கு அணி சேர்ப்பதே என்பதை சிறுவன் அறிந்து கொள்ள பல நிமிட ஆழ்ந்த யோசனை தேவைப்பட்டது. சிறுவன் பல வாரங்கள் நாயாய் பேயாய் அலைந்து திரிந்து குரு பொக்கிஷமான மூன்று கல் சுமைதாங்கியில் இறைவன் ஸ்ரீதேனீஸ்வரரின் திருஉருவத்தைக் கண்டு பிரமித்த வெள்ளலூர் திருத்தல சம்பவமே பெரியவரின் கேள்விக்கான விடை என்பது விளக்காமலே புலரக் கூடியதுதானே?!

நடுநிசியில்தான் இத்தகைய இறை திருக்காட்சியை சிறுவன் பெற்றான் என்பதே “தேன் சுவையான குரு” என்ற பதம் சுட்டும் சுவையாகும்.

பிறந்த நாளில் நம்மை
மூன்றாம் பிறை வடிவில்
அரவணைத்த நம் சற்குரு!

சோபகிருது வருடம் முழுவதும் கபால சம்பந்தமான நோய்களின் ஆதிக்கம், வாகன விபத்துக்கள் அதிகரிப்பதாக சித்த கிரந்தங்கள் தெரிவிப்பதால் இதிலிருந்து ஓரளவு நிவாரணம் அளிப்பதாக ஆண்களும் பெண்களும் தலைக் கவசம் (helmet) என்னும் பாதுகாப்பு அங்கத்தை வெள்ளலூர் சுமை தாங்கி மேல் வைத்து வணங்கி வழிபடுவதால் தலை, கபாலம் சம்பந்தமான நோய்களிலிருந்தும் விபத்துக்களிலிருந்தும் பாதுகாப்பு பெறுவர். இரவில் எந்த நேரத்தில் தூக்கம் கலைந்து எழுந்தாலும் மறையுடையாய் என்ற திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகத்தை மீண்டும் தூக்கம் வந்து நினைவை மறைக்கும் வரை படுக்கையில் படுத்தவாறே ஓதுதல் நலமே.

கும்பகோணம் சோழீஸ்வரம், திருச்சி ராச்சாண்டார் திருமலை, பெருங்குடி, ஐயர்மலை, திருஅண்ணாமலை போன்று விருத்தசீர சுமைதாங்கிகள் மேல் தலைக் கவசங்களை வைத்து வழிபாடுகள் இயற்றுவதும் ஏற்புடையதே.

நன்கு துவைத்த பருத்தி துணியை இந்த சுமைதாங்கிகள் மேல் வைத்து அந்த ‘கவசத்தால்’ தங்கள் தலையை போர்த்துக் கொண்டு தியானம் செய்வதால் தியானத்தில் ஒருமுகப்பட்ட நிலை எளிதில் சித்திக்கும். ‘தைல தாரை...’ என்பதாக நாம் நினைக்கும் பொருள் இடைவெளியின்றி மனதினுள் நிலைத்திருப்பதே தியானத்தின் முதற் கட்டம். இது சித்தியாவதற்கும் இந்த ‘கபாலசீலை’ என்ற குரு அருளும் எதிர்மறை சக்திகளின் ஆக்கிரமிப்பை மறைக்கும், சீர்செய்யும் கபாலசீலையாக நமக்கு உறுதுணையாக அமையும்.

ஒலிக்குள் ஒளிந்த சிதம்பரம்

‘ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான்...’ என்று இறைவனின் மகிமையை உரைப்பார் நம் சற்குரு. இவ்வாறு ஒலிக்குள் ஒளிந்த சிதம்பர நாதனையே நாம் வத்தலகுண்டு திருத்தலத்தில் தரிசிக்கிறோம். சிதம்பரம் திருத்தலத்தில் உறையும் சிவபெருமானுக்கும் கலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் உறையும் சிவபெருமானுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

ஸ்ரீபிரம்மா வத்தலகுண்டு

ஒலிக்குள் ஒளிந்த சிதம்பரத்தானை மக்கள் தரிசித்து பயன்பெற சிதம்பரம் திருத்தலத்தில் சிதம்பர இரகசியமாக எழுந்தருளி உள்ளார் எம்பெருமான். வத்தலகுண்டு திருத்தலத்திலோ ஒலிக்குள் ஒளிந்த சிவபெருமான் மக்கள் வழிபடும் விதத்தில் ஸ்ரீதட்சிணா மூர்த்தியாக நாகத்தை அரவணைத்த கோலத்தில், சக்தியை அரவணைத்த தன்மையில் எழுந்தருளி உள்ளார். இங்கு எம்பெருமானின் ரூபம் சக்தி வடிவில் இருந்தாலும் சாதாரண மக்களும் தரிசிக்கும் தட்சிணாமூர்த்தி சிலா ரூபமாக அமைந்துள்ளதே இறைவனுக்கு மக்கள் மேல் உள்ள பெருங் கருணையை உணர்விப்பதாகும்.

இறைவனின் ஆதி சக்தி வடிவம் ஓங்காரமே. இந்த ஓங்கார ரூபத்தின் சக்தியையே நாம் கணபதியாக வழிபடுகின்றோம். அது போல் இந்த சக்தியை மக்கள் யாவரும் பெற்று பயனுறும் விதமாக ஒலி ரூபமாக ஆலயமணியை இசைத்து திருத்தலங்களில் இறையருளைப் பெறுகின்றோம். ஒலி வடிவம் கண்ணுக்குத் தெரியாது என்பதால் அதை முக்கிய புலனான கண் உணரும் பொருட்டு இறைவனின் பல்வேறு தத்துவக் கோலங்களை சிலைகளாக, மூர்த்திகளாக வடித்து மகான்கள் மக்களின் வழிபாட்டிற்கு அமைத்துத் தந்துள்ளார்கள்.

இங்கு நாம் விளக்கும் இறை தத்துவம் பிரம்ம தத்துவமே. பிரம்மம் என்றால் மாறு படாதது, பிளவு படாதது, வித்தியாசம் இல்லாதது, எங்கும் எப்போதும் நிறைந்திருப்பது என்றெல்லாம் கூறுகிறோம். இதுவே பிரம்மம் என்பது. இந்த பிரம்மமே கலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நாம் காணக் கூடிய, தரிசிக்கக் கூடிய ஸ்ரீதட்சிணா மூர்த்தி இறைவனின் பின்னணி சக்தியாக எழுந்தருளி உள்ளது. இது ஊனக் கண்களால் காண முடியாத, உள்ளத்தால் மட்டுமே உணரக் கூடிய பிரம்ம தத்துவம்.

ஸ்ரீசாந்தரூப அனுமான் வத்தலகுண்டு

ஒரு முறை விவேகானந்தர் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அடுத்த அறையில் ஒரு ஹாலிவுட் நடிகை தங்கியிருந்தாள். அவள் தன்னுடைய வாழ்க்கை வெறுத்து விட்டதால் எதிரில் உள்ள ஏரியில் குதித்து தன்னுயிரைப் போக்கிக் கொள்வதற்காக அந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தாள் என்பதே அவள் வெளியிடாத உண்மை. அவ்வாறு அந்த நடிகை அங்கு தங்கியிருந்தபோது அடுத்த அறையில் உள்ள ஒரு சக்தி தன்னை ஈர்ப்பதாக அவள் உணர்ந்தாள். தான் யார், தன்னுடைய தகுதி என்ன என்ற அனைத்தையும் மறந்து விட்டு தாளிடப்படாமல் இருந்த அடுத்த அறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே சென்றாள்.

“வா மகளே, வா...”, தன் ஆயுள் முழுவதுமே கேட்டிராத இந்த உண்மையான அன்பு நிறைந்த வார்த்தைகளைத்தான் அந்த நடிகை அந்த அறையில் விவேகாநந்தரின் வரவேற்பு ஒலியாகக் கேட்டாள்... அன்பின் அதிர்ச்சியில் பேச்சிழந்து, செயலிழந்து மௌனியானாள்...

அங்கு கண் மூடிய நிலையில் அசையா சிலையாக நின்ற தன் ‘அன்னையை’ கண்டாள். ஆம், விவேகாநந்தரின் ‘காண முடியாத’ அன்புக் கிரணங்களே அந்த நடிகையை அங்கு ஈர்த்து வந்து விட்டன. அன்பான ஆதவனின் கிரணங்கள் முன் கரைந்தது துயரம் என்ற பனி மாமலை. அந்த நடிகை தாயின் மடியில் தவழும் குழந்தையைப் போல் விக்கி விக்கி பல நிமிடங்கள் அழுது, அழுது தன் துயரங்கள் அனைத்தையும் விவேகானந்தரின் முன்னிலையில் கொட்டிக் கரைத்த்து விட்டாள்.

இதுவே கண் மூடியிருந்த விவேகானந்தரின் உள்ளத்தில் எழுந்த அன்பு அலைகளின் மகத்துவம், பிரம்மம் எங்கும் நிறைந்திருப்பதே, ஆறுதல் அளிப்பதே ... உண்மைதானே...?

எவ்வளவுதான் கடினமான ஆன்மீக விஷயமாக இருந்தாலும் அதை மிக மிக எளிமையாக்கித் தருபவரே நம் சற்குரு. உலகில் மனித வாழ்வில் மிகவும் எளிமையானது இறை தத்துவமே. ஆனால், அறிய முயன்றால் மிகவும் கடினமாகத் தோன்றுவதும் இறை தத்துவம்தான் என்பதும் உண்மையே. இந்த இறை தத்துவக் கருத்தை உள்ளடக்கி பாமர மக்களும் எளிமையாகப் புரிந்து கொண்டு பிரம்ம ஞானத்தைப் பெற நம் சற்குருவால் அளிக்கப்பட்டதே காயத்ரி முத்திரையாகும். நம் சற்குரு அருளிய முறையில் காயத்ரீ மந்திரத்தை ஜபித்து வந்தால் பிரம்ம தத்துவமே உள்ளங்கை நெல்லிக் கனி என்றால் நம் சற்குருவிற்கு நிகர் நம் சற்குரு மட்டுமே என்ற உண்மையை ஆயித்தோராவது முறையாக நாம் உணர்ந்து இன்புறலாம்.

ராஜாவா கூஜாவா?

நம் சற்குரு பல அடியார்களை, “வா, ராஜா, வா...”, என்று வரவேற்பதுண்டு. இந்த அன்பான வார்த்தைகளால் மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்பு போல் மயங்காதவர்களே இல்லை எனலாம். காரணம் என்ன? நம் சற்குருவின் வார்த்தைகளில் பொங்கித் ததும்பிய பூரண அன்பே இதற்குக் காரணம். அந்த அன்பும் உண்மையின் வெளிப்பாடே என்பதை உணர்வதற்கு ஒவ்வொரு அடியாருக்கும் எத்தனையோ வருடங்கள் எடுத்துக் கொள்ளும் என்பது உண்மை என்றாலும், இந்த ‘ராஜா’ என்ற சொல் உணர்த்தும் உண்மையை ஒரு அடியார் உணர்ந்து கொண்டால் அடுத்து அவர் சாதிப்பதற்கு எதுவுமே இல்லை என்று சொல்லி விடலாம்.

வகுளாபரணன் ஸ்ரீமகாவிஷ்ணு
வத்தலகுண்டு

ஆம்... அத்தகைய பொருள் பொதிந்தது... ராஜா என்ற இந்த ஒரு சொல் மட்டும் அன்று... நம் சற்குருவிடமிருந்து பிறக்கும் ஒவ்வொரு வார்த்தையும் ஆழ்ந்த அர்த்தம் உடையதே...

ராஜா என்றால் பொதுவாக வரம்பில்லா அதிகாரம் உடையவன், எல்லையில்லா சொத்து சுகம் உடையவன், கேட்பாரும் ஆள்வாரும் இல்லாதவன்... என்றெல்லாம் நாம் நினைப்பதுண்டு. இவை உண்மையே. ஆனால், மகான்கள் குறிப்பிடும் ராஜா என்ற சொல்லோ தன் புலன்களை அடக்கியவன், மனதைக் கட்டுப்படுத்தியவன், தன்னிச்சையாகச் செயல்பட்டு எதையும் ஆளவல்லவன் என்ற பொருள் கொண்டதாகும்.

புலன்களை அடக்குதல் என்பது நாம் நினைப்பது போல் அத்தனை எளிதே அல்ல. ஒரு முறை ஒரு பக்தர் ஒரு பழைமையான ஆலயத்திற்குச் சென்றிருந்தார். எங்கும் புதர்கள் மண்டிக் கிடக்க ஆலயத்தின் பெரும் பகுதி ஜீரணமாகி இடிபாடுகள் நிறைந்து கிடந்தது. அந்த இடிபாடுகளுக்கிடையில் அவர் இறை தரிசனம் பெற எண்ணியபோது அங்கிருந்த மின்விளக்குகள் பிரகாசமாய் எரியத் தொடங்கவே அந்த பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்ட நிலை, பழுதடைந்த பல்புகள், அந்நிலையில் மின்விளக்குகள் எப்படி எரிய முடியும்? இருந்தாலும் ஒன்றும் புரியாமல் இறை தரிசனத்தை முடித்து விட்டு ஊர் திரும்பினார் அந்தப் பக்தர்.

திரும்பும்போது ரயிலில் வர வேண்டியிருந்ததால் இரயில் நிலையத்திற்குச் சென்று இரயிலுக்காகக் காத்திருந்தபோது அங்கு பிளாட்பாரத்தில் ஒரு கிழிந்த ஆடை அணிந்திருந்த ஒரு பரதேசி போல் தோற்றமளித்த ஒரு பெரியவர் தன் வாய் முழுவதும் வெற்றிலை பாக்கு போட்டு குதப்பிக் கொண்டே வழிநெடுகிலும் எச்சிலை துப்பிக் கொண்டே போன காட்சியைக் கண்டார். அவர் மனம் வேதனை அடையவே அந்த பரதேசிக்கு அறிவுரை கூறலாம் என்ற நினைப்பில் அவரை நெருங்கிய போது அந்த பரதேசியைக் கூர்ந்து நோக்கிய பக்தருக்கு வெலவெலத்துப் போய் விட்டது. காரணம் அந்தப் பரதேசியின் கண்களில் பிரகாசித்த ஒளி வெள்ளம் அவர் தாம் நினைப்பது போன்ற ஒரு சாதாரண பரதேசி இல்லை என்பதை பறைசாற்றியது.

அந்த பரதேசி சிரித்துக் கொண்டே, “என்ன நைனா... பல்பு எரியுதா...?” என்று கேட்டார். பக்தர் திடுக்கிட்டார். அந்தப் பரதேசியின் பேச்சில் தொனித்த கிண்டல் அந்தப் பக்தர் கோயிலில் கண்ட காட்சியை எல்லாம் நேரில் பார்த்து தெரிந்து கொண்டவர் போல் தோன்றவே பேச்சிழந்து அமைதியானார் அந்த பக்தர். அப்போது அந்த பக்தர் போக வேண்டிய ரயில் வண்டி தொலைவில் பிளாட்பாரத்தில் வரவே இரயிலிலிருந்து விசில் சப்தம் ஒலிக்கத் தொடங்கியது. அந்தப் பரதேசி, “என்ன நைனா, விசில் சத்தம் கேக்குதா?” என்று கேட்டார். அதைக் கேட்ட அந்த பக்தர் மிகவும் பணிவுடன், “ஆம், சுவாமி... விசில் சப்தம் கேட்கிறது...”, என்றார்.

பரதேசியோ, “கேக்கல ...” (அதாவது சப்தம் கேட்கவில்லை) என்றார்.

பக்தருக்கு ஒன்றும் புரியவில்லை. ரயில் மீண்டும் விசில் சப்தத்தை எழுப்பியது. அவர் மெதுவாக, “சுவாமி, விசில் சப்தம் நன்றாக கேட்கிறதே...”, என்றார். அந்த பரதேசியோ, “இல்ல கேக்கல...”, என்று சொல்லி சப்தமாக சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து விட்டார். அதற்குப் பின் தன் வாழ்நாளில் அந்த பரதேசியை அந்த பக்தர் தரிசிக்கவே இல்லை.

ஸ்ரீபேச்சியம்மன் வத்தலகுண்டு

கலியுகத்தில் உத்தம குருநாதர் ஒருவரின் வழிகாட்டுதல் எப்படி வேண்டுமானாலும் இருக்கும் என்பதற்கு மேற்கூறிய குரு சிஷ்ய உரையாடல் நமக்கு தெளிவுபடுத்தும். ஒரு மனிதன் தன்னுடைய புலன்களை அடக்குவதற்கு எத்தனை பிறவிகள் எடுத்துக் கொள்ளும் என்பதைத் திட்டவட்டமாகக் கூற முடியாது. மேற்கண்ட உதாரணத்தில் அந்த பக்தர் ரயிலின் விசில் சப்தம் கேட்டாலும் அதைக் கேட்காத அளவிற்கு தன்னுடைய கேட்டல் என்னும் புலனை, காதுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்ட வர வேண்டும் என்பதையே உத்தம குரு ஒருவர் தன் சீடனுக்கு ஒரு பிறவி வழிகாட்டுதலாக, தொட்டுக் காட்டிய வித்தையாக தெரிவித்து விட்டார்.

அந்த சீடரோ அடுத்தடுத்த பிறவிகளில் ஏதாவது ஒரு முறையில் தன்னுடைய குருவின் வழிகாட்டுதலை தொடர்ந்து பெற்றுக் கொண்டே இருப்பார். இவ்வாறு தன் புலன்கள் அனைத்தையும் வென்ற ஒரு சீடரே ‘ராஜா’ ஆகிறார். புலன்களைத் தொடர்ந்து அவர் தன் மனதை ஆள வேண்டும். அதன் பின்னரே ‘சீடன்’ என்ற உத்தம பதவி.

நம் சற்குருவின் சீடர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவரும் புலன்களை அடக்கி ‘ராஜா’ என்ற பதவியையாவது இந்தப் பிறவியில் பெறுவார்கள் என்று நம்புகிறோம். இந்த ‘பதவி பிரமாணத்திற்கு’ உதவி செய்வதே ஸ்ரீசிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒன்பது சூட்சும சரீரங்கள் உண்டு என்பதை நாம் அறிவோம். பல வழிபாட்டு முறைகளுள் நவகிரக வழிபாடு இந்த சூட்சும சரீரங்களை தூய்மைப்படுத்துவதாக அமைகிறது. இதுவல்லாமல் மனிதர்களின் திருமண வைபவமும் திருமணத்தின் போது அணியப்படும் மாங்கல்யத்தில் துலங்கும் ஒன்பது இழைகளில் நவகிரக சக்திகளாக, சூட்சும சரீரத்தை நிர்வகிக்கும் தேவதா சக்திகளாக அமைந்து தம்பதிகள் இறைவனை அடைய துணை புரிகின்றன.

அதனால்தான் திருமண பந்தம் ஒன்றே மனிதனை முழுமைப்படுத்தும், இறைமைப்படுத்தும் வழிபாட்டு சாதனமாக அமைகின்றது. கணவன் மனைவி என்ற உறவிற்கு முன்னால் வெறும் ஆண் பெண் உறவு எந்த விதத்திலும் பயன்தராது என்பதை நாம் ரஜனீஷ் போன்ற மகான்களின் வாழ்க்கை சரிதம் மூலமாகவும் உணர்கின்றோம். கணவன் மேற்கொள்ளும் வழிபாடுகளின் புண்ணிய சக்திகள் அனைத்தும் மாங்கல்ய இழைகள் மூலமாகவே மனைவியை அடைவதால்தான் பெண்கள் பருத்தி நூலால் அமைந்த சரட்டில் மாங்கல்யங்களை அணிந்து பயன்பெறும்படி மகான்கள் வலியுறுத்துகின்றனர்.

நம் சற்குருவிடம் ஒரு அடியார் அடிக்கடி தன் பெண்ணின் ஜாதகத்திற்கு பொருத்தமான வரன்களைப் பார்த்துத் தரும்படி பல மாப்பிள்ளை ஜாதகங்களுடன் வருவார். பல பெண்களைப் பெற்றிருந்ததால் அவர்களுக்கு திருமணம் முடிக்க வேண்டிய நெருக்கடியான சூழ்நிலையிலேயே அவர் வாழ்க்கை அமைந்தது எனலாம். நம் சற்குருவோ அந்த ஜாதகங்கள் அனைத்தையும் நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு மேற்கொண்டு திருமண விஷயங்களை நிறைவேற்றும்படி அந்த அடியாரிடம் கூறுவார்.

துன்பம் இனியில்லை இன்பமே எந்நாளும்!

சுற்றியிருந்த அடியார்களுக்கோ ஒரே கோபம், குழப்பம். காரணம் கத்தை கத்தையாக அவர் வரன்களின் ஜாதகங்களை கொண்டு வந்து கொடுக்க நம் சற்குருவும் அந்த ஜாதகங்கள் அனைத்தையும் அலசிப் பார்க்க வேண்டியிருக்கிறதே என்று...? இது பற்றி வெளிப்படையாகவே தன் செயலுக்கான காரணத்தையும் கூறி விட்டார் சற்குரு. “சார், நீங்கள் நினைப்பதுபோல் அடியேன் வெறுமனே ஒரு ஜாதகப் பொருத்தம் பார்க்கிறேன் என்றோ, வேண்டுமென்றே அந்த அடியார் அடியேன் சிபாரிசு செய்யும் சம்பந்தத்தை உதறித் தள்ளுகிறார் என்றோ அர்த்தமில்லை. நமது ஆஸ்ரமத்திற்கு ஒரு ஜாதகம் வருகிறது என்றால் அந்த ஜாதகதாரர் எத்தனை புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாது. அடியேன் மட்டும்தான் இந்த ஜாதகங்களைப் பொருத்தம் பார்க்கிறேன் என்பது போல் உங்களுக்குத் தோன்றும். உண்மையில் இந்த ஜாதகங்கள் இங்கு வந்தவுடன் ஸ்ரீலோபாமாதா அகத்தியர் உட்பட அனைத்து தெய்வீக சக்திகளும் சதாஸ்து தேவதைகள் உட்பட அனைத்து மங்கள சக்திகளுமே இந்த மங்கள மடலில் தோன்றி ஆசீர்வதிக்கின்றன. அதனால் அந்த வரன்கள் கூடி திருமணம் நிறைவேறுகிறதோ இல்லையோ அகத்தியர் தம்பதிகளின் அருளாசி அவர்களுக்கு கூடுவதால் பூலோகத்தில் ஒரு திருமண வாழ்வைப் பெற்று அதை நன்முறையில் வாழ்ந்ததாக அவர்கள் ஆகாசிக் ரெகார்டில் பதிவு செய்யப்படும். அதாவது அந்த அளவிற்கு இனி அவர்கள் திருமண சம்பந்தங்களைப் பூலோகத்தில் பெற வேண்டியதில்லை என்பதே நம் கோவணாண்டி அவர்களுக்கு அளிக்கும் அனுகிரகங்களில் ஒன்று ...”, என்றார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்

அடியார்கள் அடைந்த பிரமிப்பிற்கு எல்லை என்பது இல்லை என்பதை இனி கூறவும் வேண்டுமோ? ஒரே ஜாதகப் பொருத்தத்தில் ஒரு பிறவி திருமண சம்பந்த கர்மாவையே சீர்செய்ய வல்லவர் நம் சற்குரு என்றால் கலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் பிரம்மா கல்யாண வைபவத்தை நிகழ்த்துவதால் களையப்படும் திருமண சம்பந்த கர்மாக்களைப் பட்டியல் போட வேண்டுமா என்ன?

திருமணமான பல தம்பதிகளும் திருமணத்திற்குப் பின் தங்களுடைய வாழ்க்கை ஒரே கேள்விக் குறியாக மாறிவிட்டது என்று கூறி அழுத்துக் கொள்கிறார்கள். உண்மையில் கேள்விகள் அனைத்தும் சங்கமமாகும் உறவே திருமணம் என்னும் பந்தம், குருவிடம் உன்னத சீடன் கொள்ளும் உறவு. உதாரணமாக, ஒரு அடியார் வாரணம் ஆயிரம் என்று தொடங்கும் நாச்சியார் பாடலைக் குறித்த ஒரு சந்தேகத்தை எழுப்பி விட்டு, தான் கண்ட கனவிற்கு பலன் தெரியாமல் தவித்த தன்னுடைய நிலையையும் குறிப்பிட்டார். இதுவே கேள்வியில் பதில் சங்கமமாகும் நிலை. கோதை நாச்சியார் பெருமாளை கை பிடிப்பதாக கனவு கண்டு அதை நமக்கு வெளிப்படுத்திய பக்தி உருவமே வாரணம் ஆயிரம் என்ற பாடல். இந்த கனவை கோதை நாச்சியார் கண்ட மறுநாள் காலைப் பொழுதிலேயே கோதை நாச்சியாருக்கு பெருமாள் நம்பியுடன் திருமணம் நிறைவேறி இருவரும் பெரியாழ்வார் முன்னிலையில் வைகுண்டத்திற்கு எழுந்தருளினர்.

இந்த அரிய காட்சி என்றோ திருவில்லிபுத்தூர் திருத்தலத்தில் நிறைவேறியது என்றாலும் அதை இன்றும் தன் அடியார்களுக்கு திருவில்லிபுத்தூர் திருத்தலத்திலேயே குருவாய் மொழியாக எடுத்தியம்பி அனுகிரகம் அளித்தவரே நம் சற்குரு. இந்த ஈடில்லா அனுகிரகத்தை எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் நம் அடியார்கள் பெற்றாலும் இந்த அரிய அனுகிரகத்தை வரும் வைகாசி விசாகத் திருநாளிலும் அளிக்க திருவுள்ளம் கொண்டவரே நம் சற்குரு என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் குருவருள்.

கனவு என்றால் அது நனவாக மாறி கோதை நாச்சியார் மொழி போல அமைந்து பல்லாயிரக் கணக்கான மக்களுக்கு ஆனந்தத்தை, அமைதியான வாழ்வை அளிக்க வேண்டும். இதை தங்கள் வாழ்வின் குறிக்கோளாக அமைத்துக் கொள்ள விரும்பும் அடியார்கள் இங்கு கேள்வியும் பதிலுமாக அமைந்து, கேள்விக்குள் பதிலைப் பொருத்திய நம் சற்குருவின் அருளாசியையும் அடிக்கடி கேட்டு வருதலால் குருவின் வழிகாட்டுதலைத் தொடர்ந்து பெறுவார்கள். அனைத்து குழப்பமான சூழ்நிலைகளுக்கும் தெளிவைத் தருவதே இங்கு நீங்கள் கேட்கும் கம்பியிசை.

வெயில் அடிக்கும்போது மழை பொழிவு ஏற்படுவதையும், மழை பொழியும் நேரத்தில் வெயில் காய்வதையும் பல முறை பார்த்து இரசித்திருக்கிறோம். அருண வருணம், வருண அருணம் என்று புகழப்படும் இத்தகைய தெய்வீக மழைப் பொழிவுகளில் நற்காரிய சித்திகளை உருவாக்கும் பற்பல சக்திகள் தோன்றுகின்றன. ஸ்ரீமந்திரிணி அம்பா என்ற லலிதா பரமேஸ்வரி லோகத்து தேவதை இத்தகைய மழைப் பொழிவுகளில் ஏற்படும் சக்திகளை பக்தர்களுக்கு அளிக்கிறாள் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியம். இத்தகைய அபூர்வமான சக்திகள் சமீபத்தில் நம் அடியார்கள் காமேஸ்வரம் திருத்தலத்தில் பித்ரு பூஜை இயற்றியபோது அவர்களுக்கு பித்ரு மூர்த்திகளால் அளிக்கப்பட்டன என்பது நம் சற்குருவால் தெரிவிக்கப்படும் இரகசியங்களில் ஒன்று.

பற்பல காரணங்களால் இந்த அபூர்வ அனுகிரக சக்திகளைத் தவற விட்டவர்கள் இத்தகைய பித்ரு சக்திகளை நோய் எதிர்ப்பு சக்திகளாக சமுதாயத்திற்கு அர்ப்பணிக்கும் ஒரு அரிய பூஜை வழிபாடும் ஸ்ரீபிரம்மா திருக்கல்யாணத்தில் அடங்கியுள்ளது. இம்முறையில் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாண வைபவத்திற்குப் பின்

நற்குணங்களை பூரணமாய் நல்கும்
நித்யக்ஷேம மண்டபம்

1. தம்பதிகள் தங்கள் கைகளில் பவித்ரம் அணிந்து கொண்டு மூன்று தர்ப்பைகளால் முதலில் மனைவி தன்னுடைய தலையில் வஞ்சி ஓடை தீர்த்தத்தை தெளித்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் தன்னுடைய கணவனை மூன்று முறை வலம் வந்து கணவனுடைய பாதத்தில் மூன்று முறை தர்ப்பையால் வஞ்சி ஓடைத் தீர்த்தத்தை தெளிக்க வேண்டும். இவ்வாறு மனைவியால் தூய்மை செய்யப்பட்ட கணவன் மஞ்சள் தூளால் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீபிரம்மாவிற்கும் ஸ்ரீசரஸ்வதிக்கும் அவர்கள் திருவடிகளில் வஞ்சி ஓடை தீர்த்தத்தை மூன்று தர்ப்பைகளால் மூன்று முறை தெளிக்க வேண்டும்.

ஸ்ரீபிரம்மா ஸ்ரீசரஸ்வதி திருவடிகளில் வஞ்சி ஓடை தீர்த்தத்தை வர்ஷிக்கும்போது லால்குடி கூகூர் ஸ்ரீகல்யாண சுந்தரி அம்மன், அம்பாசமுத்திரம் ஸ்ரீநித்திய கல்யாணி அம்மன் போன்ற சுமங்கலி நாமங்களை ஓதி வர்ஷிப்பதால் பூரணமான கல்யாண குணங்கள் அனைத்தையும் இந்த சமுதாயம் பெறும். ஒரு சுமங்கலி தன்னுடைய சுமங்கலித்துவ சக்தியால் ஒரு கோடி சுமங்கலிகளை உருவாக்க முடியும் என்ற நம் சற்குருவின் தத்துவமே இங்கு செயல்படுகின்றது.

மூங்கில் முச்சுடர் திருநின்றியூர்

2. திருமணம் ஆனவர்களோ மற்றவர்களோ தனியாக ஸ்ரீபிரம்மா திருமண வைபவத்திற்கு வந்திருப்பவர்கள் தங்கள் தலையில் மூன்று தர்ப்பைகளால் வஞ்சி ஓடை தீர்த்தத்தை தெளித்துக் கொண்டு தங்களைத் தாங்களே மூன்று முறை பிரதட்சணம் வந்தபின் ஸ்ரீபிரம்மா சரஸ்வதிக்கும் மூன்று முறை அவர்கள் பாதத்தில் தீர்த்தத்தை தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அனைத்து அடியார்களும் ஸ்ரீபிரம்மா சரஸ்வதியின் திருப்பாதங்களுக்கு வஞ்சி ஓடை தீர்த்தத்தை வர்ஷித்த பின்னர் மஞ்சள்தூளில் நித்ய க்ஷேம மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீபிரம்மா மூர்த்தியையும் ஸ்ரீசரஸ்வதி தேவியையும் ஒரு மணப்பலகையில் அல்லது வாழை இலையில் ஒன்றாக எடுத்துச் சென்று வஞ்சி ஓடையில் விசர்ஜனம் செய்து விட வேண்டும். இத்துடன் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணம் சம்பூர்ணம் பெறுகின்றது.

நித்ய க்ஷேம மண்டபம் என்பது மூங்கில்களால் அமைக்கப்பட்ட நான்கு கால் மண்டபம் ஆகும். இதில் நிர்மாணிக்கப்படும் மஞ்சள் தூளால் பிடிக்கப்பட்ட மூர்த்திகள் குண நலன்களை பூரணமாக நல்குவர். இத்தகைய மண்டபம் நம் அடியாரின் திருமணத்தில் அமைக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.

பித்ருக்கள், தேவதா, தெய்வ மூர்த்திகள் அனைவருமே ஆண் பெண் என்ற பாகுபாட்டைத் தாண்டியவர்கள். இதைக் குறிப்பதாகவே நுனி தர்ப்பையால் ஆன பவித்ரம் என்னும் தர்ப்பை மோதிரத்தை நாம் தர்ப்பணம், ஹோமம் போன்ற தெய்வீக காரியங்களில் பயன்படுத்துகிறோம். ஸ்ரீபிரம்மா கல்யாணத்திற்குப் பின் இந்த பவித்ரத்தைக் கழற்றி, பிரித்து வஞ்சி ஓடையில் சேர்த்தல் நலம்.

தலைமுறைகளை நிலைநிறுத்தும் தன்மை மூங்கிலுக்கு இயற்கையாகவே உண்டு என்பதால்தான் திருமண மண்டபங்களிலும் இறைவனைச் சுமக்கும் பல்லக்குகளிலும் மூங்கிலைப் பயன்படுத்துகிறோம்.

மூங்கில் இலை மேலே தூங்கும் பனி நீரே
தூங்கும் பனி நீரை வாங்கும் கதிரோனே
என்கிறார் நம் சற்குரு. புனிதமான பிரசாதம் என்பதாக மூங்கில் இலை நீரை கதிரவன் மூலமாய் இறைவனே ‘வாங்குகிறார்’, பெறுகிறார் என்றால் மூங்கில் எத்தகைய புனிதத் தன்மை வாய்ந்தது! இந்த குரு வாக்கியத்தில் உள்ள 32 அட்சரங்களும் மக்களுக்குத் தேவையான 32 அருட் செல்வங்களை வாரி வழங்குகின்றன என்பதும் மூங்கிலின் அனுகிரகத் தன்மையாகும். மேற்கண்ட வார்த்தைகள் அமைந்த காயத்ரீ மந்திரத்தால் நம் ஆஸ்ரமத்தில் ஹோமம் நிறைவேற்றிய பின்னரும் பல நாட்கள் பல அடியார்கள் இந்த வார்த்தைகளை தாங்கள் செல்லும் இடமெல்லாம் அவர்கள் அறியாமலேயே வாய் விட்டுச் சொல்லி நித்திய லட்சுமி கடாட்ச சக்திகளை எங்கும் வர்ஷித்தனர் என்றால் நம் சற்குருவின் மகிமைதான் என்னே!

2.6.2023 வெள்ளிக்கிழமை அன்று விமரிசையாக வத்தலகுண்டு ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில்நம் அடியார்களால் கொண்டாடப்பட்ட ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சிகளை இங்குள்ள வீடியோவில் கண்டு களிக்கலாம். இத்தலத்தின் ஸ்ரீவிருமாண்டியையே ஸ்ரீபிரம்மாவாக வரித்து இங்குள்ள மக்கள் வழிபட்டு வருவதால் ஸ்ரீவிருமாண்டி தெய்வத்திற்கு அமைந்த வழிபாடாக இதை உள்ளூர்வாசிகள் ஏற்றுக் கொண்டு பெருமளவில் இந்த வைபவத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

அதே போல் விருத்த சீர சுமைதாங்கிகளையும் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருமண மேடையாக அலங்கரித்து அதில் பிரம்மா சரஸ்வதி மூர்த்திகளை எழுந்தருளச் செய்து திருக்கல்யாண வைபவத்தைக் கொண்டாடிய நிகழ்ச்சிகளும் திருச்சி ராச்சாண்டார்மலை போன்ற திருத்தலங்களில் அமைந்தன என்பதும் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி தம்பதிகளின் திரண்ட அருளை நம் அடியார்களுக்கு மட்டும் அல்லாது இந்த சமுதாயத்திற்கு பெற்றுத் தந்த பெருமையை பறைசாற்றுகிறது.

ஸ்ரீகலியுகசிதம்பரேஸ்வரர் திருத்தலத்தில் நிறைவேறிய ஸ்ரீபிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணத்தை கொண்டாடும்போது, “வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து...” நாராயண சுவாமி நடக்கும் திவ்ய காட்சியை வர்ணிப்பதாக அமைந்துள்ள பாடலை ஓதி இந்த திருக்கல்யாண வைபவத்தை நிறைவேற்றுமாறு நம் சற்குரு பணித்திருந்தார் அல்லவா? இது ஏதோ வர்ணனைக்காக அமைந்த குரு வாக்யம் அல்ல என்பது இங்குள்ள வீடியோவை நீங்கள் காணும்போது கண்டு இன்புறலாம். இந்த ஆலயத்தில் உள்ள பல கற்சிலைகள் காலப்போக்கில் ஜீரணம் ஆகி மாற்றப்பட்டு விட்டாலும் ஸ்ரீபிரம்மா சரஸ்வதி கல்யாணத்திற்கு எழுந்தருளிய வாரணம் என்ற யானைகள், நாகங்கள், பூதங்கள், அனைத்து ஜீவ ராசிகளும் இங்குள்ள பலி பீடத்தில் தற்போதும் திகழ்வது நமக்கு குரு வார்த்தைகளை மெய்ப்பிப்பதாகவே அமைந்துள்ளது. இதனால் நம் அடியார்களுக்கும் சமுதாயத்திற்கும் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா?

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam