வெளுத்ததெல்லாம் பாலல்ல !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆவூர் பசுபதி ஈஸ்வரன்

கும்பகோணம் அருகிலுள்ள ஆவூர் திருத்தலம் 2021 ஆண்டிற்குரித்தான வழிபாட்டுத் தலமாக சித்தர்களால் அறிவிக்கப்படுகிறது. ஸ்ரீமங்களாம்பிகை ஸ்ரீபங்கஜவல்லி உடனாய ஸ்ரீபசுபதி ஈஸ்வரத் தலம் கும்பகோணம் மன்னார்குடி சாலையில் வலங்கைமான் அருகே அமைந்துள்ளது. வரும் புத்தாண்டு பலன்களாக சித்தர்கள் சந்திரனுக்கு உரித்தான இரு வார்த்தைகளில் “வெளுத்ததெல்லாம் பாலல்ல,” என்ற தெரிவிக்கிறார்கள். வழக்கம்போல் கடவுளை நம்பினோர் சிறப்பான பலன்களைப் பெறும் ஆண்டாக இந்த ஆண்டும் அமைவதால் உரிய வழிபாடுகளை முறையாக இயற்றுவதால் தெய்வீக ஈடுபாடு கொண்டோர் நன்னிலை அடைவர். குரு நீசமாக இருந்தாலும் அந்த நீசம் பங்கமாகி சந்திரனைப் பார்ப்பதால் இந்த நீச பங்க கஜகேசரி யோகம் பல அற்புத ஆன்மீக பலன்களை வர்ஷிக்கும். கடவுள் நம்பிக்கை உடையோர் வழக்கம்போல் வெற்றி பெறுவார்கள் என்றாலும் அந்த வெற்றியைப் பெற அவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே நீச பங்கம் பெற்ற குரு பகவானின் நிலை உணர்த்துகின்றது.

ஸ்ரீமங்களாம்பிகை ஸ்ரீபங்கஜவல்லி சமேத ஸ்ரீபசுபதி ஈஸ்வரர் ஆவூர்

வரும் 2021 வருடம் பசுபதி ஆண்டு என்றே சித்தர்களால் புகழப்படுகிறது. காரணம் 20 21 என்பது சந்திரனும் குருவும் சேர்ந்ததாகத்தானே அமைகிறது. கிரக சஞ்சார ரீதியாகவும் சந்திரனும் குருவும் ஒருவரையொருர் தரிசனம் செய்யும் கஜகேசரி யோக அமைப்புடன்தானே துலங்குகிறது ? கால சர்ப்ப யோக பந்தனம் கொள்ளாமல் சந்திரபகவான் தனித்து அருள்வதாலும் புது வருடப் பிறப்பு லக்கினம் இந்த சர்ப்ப யோகத்துடன் சம்பந்தம் கொள்ளாததாலும் இந்த ஆண்டு பசுபதி ஆண்டாகவே திகழ்வதில் ஆச்சரியம் அல்லவே. பசு = 2+0, பதி 2+1, என்ன சுவை இந்த அமிர்த சுவை. பாலும் தேனும் (இரண்டும், மூன்றும்) கலந்த ஆண்டாக இந்த வருடம் அமைவதால் எந்த அளவு இந்த ஆண்டு திருமண முயற்சிகளை மேற்கொள்கிறார்களோ அந்த அளவிற்கு அது வெற்றி உள்ளதாக அமையும். அதே சமயத்தில் சந்திர பகவான் தேய்பிறை அம்சங்களுடன் பொலிவதால் தாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும். இல்லாவிட்டால் மிக எளிதாக மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்று சித்தர்கள் எச்சரிக்கிறார்கள்.

சூரிய சந்திர மூர்த்திகள்
ஆவூர்

கன்னி ராசி என்பது புத்தாண்டின் லக்னமாக அமைவதால் பெண்கள் வெகுவாக இந்த ஆண்டு பயனடைவார்கள் என்றாலும் அவர்கள் தங்களுக்கு உரித்தான எச்சரிக்கையுடன் செயல்படுதல் நலம். புத்தாண்டு லக்னமான கன்னி ராசியிலிருந்து 11ல் சந்திர பகவான் பொலிவதால் பஞ்ச கவ்ய அபிஷேகம் சிறப்புள்ளதாக அமைகிறது. எடுத்துக் கொள்ளும் பாலில் அரை பகுதி தயிர், தயிரில் அரை பகுதி நெய், அதில் அரை பகுதி கோமேயம், அதில் அரை பகுதி பசுஞ் சாணம் என்பதே பஞ்சகவ்யத்தின் சரியான அளவாகும். ஆனால், என்னதான் அளவு சரியாக அமைந்தாலும் பால் சுத்தமான பாலாக அமையாதபோது எதுவும் பலனளிக்காது என்பதை நினைவில் கொள்ளவும். நூறு லிட்டர் பாக்கெட் பால் அபிஷேகத்தை விட ஒரு 10 மிலி சுத்தமான நாட்டு மாட்டுப் பாலை சுவாமிக்கு, இறை மூர்த்திகளுக்கு, சுயம்பு லிங்க மூர்த்திகளுக்கு அபிஷேகித்தலால் அளப்பரிய பலன்களைப் பெறக் கூடிய ஆண்டு இதுவாகும். அதே சமயம் பால் என்ற பெயரில் கலப்படம், ரசாயணக் கலவைகள் அதிகம் விநியோகம் செய்யப்படும் ஆண்டு இது என்பதை நன்றாக கவனத்தில் கொள்ளவும். பாலை விடவும் முடியாது, கலப்படத்தை தவிர்க்கவும் முடியாது, கவனம் தேவை, கவனம் தேவை. குருவின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள் இந்த ஆண்டு, எந்த ஆண்டும் நிச்சயமாகப் பாதிக்கப்பட மாட்டார்கள். பதியைக் குறிப்பது குருவிற்கு உரிய மூன்றாக அமைவதாலும் குருவின் ராஜயோகப் பார்வை பெற்று சந்திர பகவான் துலங்குவதாலும் ஐந்தாவது பைரவ மூர்த்தி, மூன்றிற்கு உரிய வட திசையை நோக்கி அருள்வதாலும் குரு இவ்வருடம் அசாத்திய பலன்களைப் பெறுகிறார். 202 1 என்று இவ்வருடத்தைப் பார்த்தால் நான்குடன் ஒன்று சேர்ந்த ஐந்தாகத்தான் இது திகழும், இந்த நிலையில் எழுந்தருளி உள்ளவர்கள்தானே அதாவது நான்குடன் ஐந்தாவதாக எழுந்தருளியவர்தானே ஆவூர் பைரவ மூர்த்தி. பஞ்சகவ்யத்தை முறையாக செய்ய இயலாதவர்கள் நாட்டு மருத்துக் கடைகளில் விசாரித்து தூய பஞ்சகவ்யத்தால் சுவாமிக்கு அபிஷேகம் நிகழ்த்துவதும் அத்தகைய பஞ்சகவ்ய பிரசாதத்தை பக்தர்களுக்கு அளிப்பதும் மிகச் சிறந்த சமுதாய இறைப் பணியாகும். மூளை வளர்ச்சி இல்லாதவர்களுக்கும், மூளையின் செயல் திறன் குறைவாக உள்ளவர்களுக்கும் இத்தகைய பிரசாதம் பெருந்துணை புரியும். தரமான தேனை மூன்றாம் பிறை நாட்களிலும் வளர்பிறை துவாதசி திதியிலும் சுவாமிக்கு அபிஷேகம் இயற்றுவது நன்றே. சுத்தமான, தரமான நாட்டு மாட்டுப் பால் கிடைக்காவிட்டால் அதை விட்டுவிடலாமா என்பது பல அடியார்களின் கேள்வி. உயிர்காக்கும் மருந்து ஒன்று வெளிநாட்டில் கிடைத்தாலும் அதை எப்படியாவது விலை கொடுத்து வாங்குவதற்கு மக்கள் தயாராக இருப்பதைப் போல இந்த உயிர் காக்கும் மருந்தை விடவும் ஆன்மாவைக் காக்கும் உத்தம பொக்கிஷமே நாட்டு மாட்டுப் பால், அதை எப்படியாவது பெற்று இறைவனுக்கு அபிஷேகம் நிறைவேற்ற அடியார்களும் நல்லோர்களும் தங்களாலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் நாகரீக மோகத்தால் குழந்தைகளுக்கு பாலூட்டும் தாய்மார்களின் மனோ நிலை வெகுமாக பாதிக்கப்படுமாதலால் இவர்கள் தவறான வழிகாட்டுதல்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தங்கள் குழந்தைகளைப் பேணுவதிலேயே கருத்துடன் இருக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். குழந்தை வளர்ப்பில், பராமரிப்பில் பலவிதக் குழப்பங்கள் தோன்ற இருப்பதால் தாய்மார்கள் இறை நம்பிக்கை உள்ள பெற்றோர்கள், சற்குருமார்களின் ஆலோசனைகளின்படி நடந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஆவூர்

நமசிவாய வாழ்க என்று தொடங்கும் ஸ்ரீமாணிக்க வாசகர் அருளிய சிவபுராணம், துஞ்சலும் துஞ்சல்..., காதலாகிக் கசிந்து ..., சொற்றுணை வேதியன், மற்று பற்று ... போன்ற பஞ்சாட்சர பதிகங்களை மட்டுமாவது தினமும் வாய்விட்டு ஓதும்படி அடியார்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதனால் எத்தகைய இடர் வரினும் அவற்றை இறையருளால் சமாளித்து வாழ்வில் வெற்றி பெற இறையருள் துணை நிற்கும். இத்துடன் பகவத்கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தை மட்டுமாவது தினந்தோறும் ஓதுதல் நலமாகும். இந்த அத்தியாயத்தின் பொருளைப் பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதும் முக்கியமே. புருஷோத்தம யோகம் என்னும் பதினைந்தாவது யோகத்தை அர்ச்சுனனுக்கு உபதேசிக்கையில் ஸ்ரீகிருஷ்ண பகவான் ஆவூர் ஸ்ரீபசுபதி ஈஸ்வரனை தியானித்தே நல்கினார் என்பதே சித்தர்கள் கூறும் யோக இரகசியம். இவ்வாறு புருஷோத்தம யோகத்தை பகவான் உபதேசிக்கையில் அந்த உபதேசத்தின் ஆரம்ப வரிகளாக வரும் வேர் மேலாகவும் இலைகள் கீழாகவும் இருக்கும் அஸ்வத்த மரம் என்னும் அரச மரம் பகவானின் கீதா உபதேசத்தைக் கேட்டதால் முக்தி அடைந்து வைகுண்டத்தை அடைந்து விட்டதால் தற்போது ஆவூர் திருத்தலம் தலவிருட்சம் இன்றியே திகழ்கிறது. பொதுவாக, தலவிருட்சம் என்பது முதன் முதலில் பூலோகத்தில் தோன்றிய தெய்வீக மரத்தையே குறிக்கும். கொன்றை, அரசு போன்ற மரங்கள் பல தலங்களுக்கு தல விருட்சமாக இருப்பது இக்காரணத்தால்தான். ஒரே மரம் பல தலங்களுக்கு தல விருட்சமாக அமைந்திருந்தாலும் அத்தனை தல விருட்சங்களும் வேறு வேறானவையே என்பதை இந்த திருத்தலத்தின் தலவரலாறுகள் சுட்டிக் காட்டுகின்றன. தற்போது இந்த அரச மர சக்திகளை இத்தலத்திலுள்ள நான்கு வில்வ மரங்களும் ஏற்று தல விருட்ச சக்திகளை பக்தர்களுக்கு அளிக்கின்றன என்பதும் ஆவூர் திருத்தலத்தின் சிறப்பம்சங்களுள் ஒன்றாகும். இவ்வாறு சங்கர நாராயண அம்சங்களுடன் திகழ்வதே ஆவூர் திருத்தலமாகும். இந்த கீதா உபதேசத்தின் சாரமாக இங்குள்ள ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி தனுசு ஏந்திய கரத்துடன் காட்சி அளிப்பது இன்று பக்தர்கள் தரிசிக்கக் கூடிய அற்புத காட்சியாகும். வில்வம் துளசி கலந்த மாலைகளை ஸ்ரீதனுசு சுப்ரமண்ய சுவாமிக்கு அணிவித்து வணங்குவதால் அஞ்சி அஞ்சியே வாழ்க்கையை நடத்தும் அடியார்கள் தக்க மனோ தைரியத்தை, வாழ்க்கையை எதிர்நோக்கும் திட நம்பிக்கையை பெறுவர். கடந்த கால ஏமாற்றத்தால் அல்லது இயலாமையால் தற்கொலை போன்ற தவறான முடிவுகளுக்கு உந்தப் பெற்றோர் ஸ்ரீதனுசு சுப்ரமண்ய சுவாமியை வணங்கி வருவதால் அல்லது பகவத் கீதையின் பதினைந்தாவது அத்தியாயத்தை தொடர்ந்து ஓதி வருவதால் நல்லருள் பெறுவர்.

ஸ்ரீகாமதேனு இறைவனுக்கு பால்சொரிதல் ஆவூர்

பக்தி நிலைகளில் தன்னை மறந்த நிலையே உன்மத்த நிலை எனப்படுகிறது. உன்மத்தம் என்றால் பைத்தியம், புத்தி பேதலித்தல் என்று பொதுவாக கூறினாலும் வெறுமனே சுயநினைவை இழத்தல் என்பதாக அல்லாமல் இறை உணர்வினால் தன்னைப் பற்றிய உணர்வு எழாத நிலையே உன்மத்த நிலையாகும். இந்த உன்மத்த நிலைக்கு உதாரணமாகக் கூற வேண்டுமானால் பூமியில் முதன் முதலாக பிரதோஷ வழிபாடு தோன்றிய கோயம்பேடு திருத்தலத்தில் நம் சற்குரு வழிபாடுகள் தொடர்ந்து இயற்றிக் கொண்டிருந்தார். அப்போது கோயில் வளாகம் தற்போது இருப்பதைப் போல அழகாக சலவைக் கற்கள் பதித்துத் திகழவில்லை. பிரகாரம் முழுவதும் பெயர்ந்து கிடந்ததால் நடப்பதே மிகவும் சிரமமான விஷயம்தான். ஆனால், நம் சற்குருவோ அப்போதிருந்த பிரதோஷ நாயனாரை தன் தோள் மேல் வைத்துக் கொண்டு அந்த சிதிலமடைந்த பிரகாரத்தில் நடை பயின்று சுவாமியை பலவிதமான நாட்டிய கோலங்களின் சுமந்து சென்று திருப்பணியை நிறைவேற்றுவார். அவ்வாறு நடை பயில்கையில் பிரதோஷ நாயனாரை சுமந்தவாறே முட்டிக் கால்கள் மேல் நடந்து செல்ல வேண்டியிருக்கும். அத்தகைய தருணங்களில் சரளை கற்கள் நிறைந்திருக்கும் பிரகாரத்தில் பிரதோஷ நாயனாரை தன் தோளில் சுமந்து சென்றால் அவருடைய முட்டிக் கால்களின் நிலை என்னவாகும் ? சுவாமிகளின் முட்டிகள் இரண்டும் தேய்ந்து அதில் இரத்தம் பீறிட்டு வழியும். ஆனால், நம் சற்குருவோ அதைப்பற்றி சற்றும் பொருட்படுத்தாது சுவாமிக்கு உபசாரங்கள் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார் என்றால் இதை விடச் சிறந்த உன்மத்த நிலையை நாம் எங்காவது காண முடியுமா ? இந்த உன்மத்த நிலையை நேரில் பார்த்து பிரமித்தவர்கள் இன்றும் நம்மிடையே உண்டு.

ஆவூர்

இங்கு வடக்கு திசை நோக்கி எழுந்தருளி இருக்கும் ஸ்ரீஉன்மத்த பைரவருக்கு ஆட்டுப் பாலில் சம அளவு நீர் விட்டுக் காய்ச்சி அதில் தேவையான பனை வெல்லம் சேர்த்துப் படைத்து பின்னர் பக்தர்களுக்கு அளித்தலால் கடுமையான பல நோய்களுக்கு இது நிவாரணம் அளிக்கும். பிரதோஷ நாட்கள், செவ்வாய்க் கிழமைகள், தேய்பிறை அஷ்டமி நாட்களில் இத்தகைய வழிபாடுகள், தான தர்மங்களை நிறைவேற்றுதல் நலமே. ஆட்டுப் பாலுடன் சம அளவு தீர்த்தம் சேர்க்கும்போது ஆவூர் திருத்தல கோயிலினுள் விளங்கும் தேனு தீர்த்தத்தை பயன்படுத்துதலும் அற்புத சிறப்புகளை வர்ஷிக்கும். தொடர்ந்து இத்தகைய வழிபாடுகளை இயற்றி வந்தால் மூளை வளர்ச்சி இல்லாத குழந்தைகளும், மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு உடல் உறுப்புகள் வேலை செய்யாமல் துன்புறுவோரும் விரைவில் குணமடைவர். நம்பிக்கையே மாமருந்து. நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் என்று இறைவனை மணிவாசகப் பெருமான் வர்ணிக்கிறார். காட்சிகளுக்கு, அறிவுக்கு அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் அந்தந்த உயிர்களின் நிலைக்கு ஏற்ப, அந்தந்த உயிர்களின் அறிவு தன்மைக்கு ஏற்ப துலங்குவதும் இறைவனின் திருநடனம், நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது. நடராஜ நாட்டியம் என்பது இறைவன் மனிதனின் கண்களால், புலன்களால், அறியக் கூடிய உருவம் என்றாலும் இது மனிதனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஓருயிர், ஈருயிர் என்ற அனைத்து விதமான உயிர்களுக்கும் அவரவர் நிலையில் காட்சி அளிக்கக் கூடியவரே இறைவன். அதனால்தான் இறைவனை உணர்ந்தோர்கள் எல்லாம் இறைவனின் இந்த பெருங்கருணையை உணர்ந்து கண்ணீர் வடிக்கின்றனர். புலன்கள் கடந்து நிற்கும் இறைவனை புலன்களுக்கு, மக்கள் அறிவு நிலைக்கு ஏற்ப தோன்றும் நிலையையே குரு வடிவில் நாம் காண்கிறோம். இவ்வாறு புலன்கள் கடந்து நிற்கும் இறைவனை தங்கள் மனிதப் புலன்களால் “காணும்” நிலையையே உன்மத்த நிலை என்று பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள். இந்த உன்மத்த நிலையை குரு அருளால் இந்த ஆண்டில் அளிக்கக் கூடிய தெய்வமே ஆவூர் திருத்தலத்தில் அருளும், குரு திசை நோக்கி எழுந்தருளி உள்ள உன்மத்த பைரவ மூர்த்தி ஆவார்.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் ஆவூர்

ஆவூர் திருத்தலத்தில் அருளும் உன்மத்த பைரவ மூர்த்தி அருளும் அனுகிரக சக்திகள் சூட்சும சக்திகளாக இருப்பதால் இந்த சூட்சும ஞானத்தைப் பெற விரும்புவோர் பஞ்சமங்கள சக்திகள் பொலியும், பெருகும் சிறுகுடி திருத்தலத்தில் அருள்புரியம் ஸ்ரீசூட்சுமபுரீஸ்வரரை வழிபடுதல் சிறப்பே. பஞ்சபூத சக்திகளுக்கு உரிய தலமாக இருப்பதால் பஞ்ச மங்கள சக்திகள் சூட்சுமமாகப் பொலியும் இந்த ஆண்டில் செருகுடி அல்லது திருச்சிறுகுடி திருத்தலத்தில் வழிபாடுகள் இயற்றுதல் நலமே. இவ்வருடம் செருகுடியில் வழிபாடுகளை இயற்றும்போது இங்கு தனித்தருளும் ஸ்ரீஅங்காரக பகவானுக்கு மந்தாரை மலர்களால் அல்லது முல்லை, செம்பருத்தி மலர்களால் அர்ச்சித்து சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் படைத்து தானமாக அளித்தல் சிறப்பாகும். செவ்வாய் பகவான் உச்சம் கொள்ளும் மகர ராசியில் குரு பகவான் நீச்சபங்க ராஜ யோகம் கொள்வதும், சனி பகவான் ஆட்சி பெற்ற அம்சங்களுடன் திகழ்வதும் நாம் புரிந்து கொள்ளக் கூடிய ஜோதிட விளக்கங்களே. மகர ராசி என்பது புத்தாண்டு தோன்றும் கன்னி ராசி லக்னத்திற்கு ஐந்தாவதாகத் திகழ்வதும் இவ்வருடம் நிகழும் நிர்ணயிக்கப்படும், நிறைவேறும் திருமண உறவுகளுக்கும், சந்தான பாக்கிய வளங்களுக்கும், வேலை வாய்ப்புகளுக்கும் நல்ல ஆசீர்வாத கிரணங்களை வர்ஷிக்கும். மொத்தத்தில் எந்த விதமான புதிய உறவுகளுக்கும், உத்தியோகம், கிரகப்பிரவேசம் போன்ற அனைத்து நற்காரியங்களுக்குமே ஆவூர் திருத்தல வழிபாடும், செருகுடி திருத்தல வழிபாடும் உகந்ததாகும். செவ்வாய் பகவான் அளிக்கும் அங்காரக சக்திகளை உஷ்ண சக்திகளை, வெப்பக் கதிர் அம்சங்களை நாம் பொதுவாக நோய் நிவாரணம் அளிக்கும் சக்திகளாக எடுத்துக் கொண்டாலும் உண்மையில் இந்த நோய் நிவாரண சக்திகள் நோய் எதிர்ப்பு சக்திகளே என்பதை அனுபவத்தில் மட்டுமே பக்தர்கள் உணர முடியும். மங்களம் என்ற வார்த்தையே செவ்வாய் பகவானைக் குறிக்கும் என்றாலும் இதை நடைமுறையில் அனுபவித்தால்தான் இதை உணர முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக செவ்வாய் பகவான் செருகுடி ஸ்ரீசூட்சுமபுரீஸ்வர ஈசனை வணங்கி வழிபடுவதை சாதாரண மக்களும் காணும் வண்ணம் இங்கு அளிக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் ஈசனைச் சுற்றி விரவியுள்ள சிவப்பு நிற வண்ணக் கதிர்களும், வேறு எந்த தலத்திலும் காண முடியாத அளவிற்கு மங்கள தீர்த்தத்தில் செந்தாமரை மலர்கள் செந்நிறத்தில் பொலிவதும் சிறப்பாகும். இறைவனை செந்தழல் மேனியன் என்று வர்ணிக்கிறோம். அந்த செந்தழலை தரிசிக்கவும் இறைவன் அருள்புரிகிறான் என்றால் அவன் கருணைதான் என்னே ?

வில்வ விருட்சம் ஆவூர்

ஒரு முறை ஒரு இயற்கை வைத்தியர் பல்லாயிரக் கணக்கான படைவீரர்க்ள குழுமிய இடத்தில் ஒரு பரிசோதனைக் குழாயில் பாதி அளவு திரவத்தை வைத்துக் கொண்டு அங்கிருந்தவர்களிடம், “இந்த பரிசோதனைக் குழாயில் உள்ளவை காலராவை உருவாக்கும் நோய்க் கிருமிகளின் செறிவாகும். சாதாரணமாக இங்கு குழுமியிருக்கும் அத்தனை பேருக்கும் காலரா என்னும் சீதபேதியை உருவாக்கும் ஆற்றல் உடையவையே இத்தகைய கிருமிகள். இந்த கிருமிகளை நான் ஒருவனே விழுங்குகின்றேன். என்ன நடக்கிறது என்று பாருங்கள்,” என்று கூறி அவர்கள் அனைவரின் முன்னிலையில் மருத்துவர்களால் சான்றளிக்கப்பட்ட, காலரா சீதபேதியை நொடியில் உருவாக்கும் அந்த கிருமிகள் அனைத்தையும் விழுங்கி விட்டார். இதிலிருந்து என்ன தெரிகிறது ? என்னதான் ஒரு கிருமி நோயை உருவாக்கும் சக்தியைப் பெற்றிருந்தாலும் பலவீனமான உடலில்தான் அந்த கிருமி தன் நோய் உருவாக்கும் செயலை நிறைவேற்ற முடியும். ஆரோக்கியமான உடலில் அந்த கிருமியால் எதுவுமே செய்ய முடியாது என்பதே நாம் அறிந்து கொள்ள வேண்டிய நோய் நிவாரண இரகசியங்களாகும். இத்தகைய நோய் நிவாரண சக்திகளையே அனுகிரக சக்திகளாக திருச்செறுகுடியில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீசெவ்வாய் பகவான் வழங்குகின்றார் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் அபூர்வ இரகசியங்களாகும். ஆவூர் திருத்தலத்தில் எழுந்தருளி உள்ள பஞ்ச பைரவ மூர்த்திகளைப் பற்றி பல கிரந்தங்கள் எழுதும் அளிவிற்கு மகிமை பொருந்தியவர்களே என்பதே நம் சற்குரு இம்மூர்த்திகளைப் பற்றி விவரிக்கும் மகிமைகளாகும். பசுபதி என்ற நான்கெழுத்து இறைவன் இத்தலத்தில் உறைவதால் பசுவின் மடியில் திகழும் நான்கு அமிர்த வர்ஷிணி தாரைகளின் சக்திகளை வழங்குவதற்காகவே அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் என்ற நான்கு பைரவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். இந்த பைரவ சக்திகளை பக்தர்கள் எளிதில் பெறும் பொருட்டே ஆட்டுப் பாலில் காமதேனு தீர்த்தத்தைக் கலந்து காய்ச்சி பிரசாதமாக அளிக்குமாறு சித்தர்கள் வழிகாட்டுகின்றனர்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி ஆவூர்

இதில் அமிர்தத்தில் திகழும் சுவை (22=2+2=4) நான்கு யுகங்களுக்குமே நிரவி நிற்கும் என்பதைப் பறை சாற்றுபவையே தற்போது ஆவூர் திருத்தல அமிர்த சக்திகளை வழங்குவதற்காக எழுந்தருளி உள்ள நான்கு வில்வ மரங்களாகும். இவ்வாறு ஒன்றுக்கொன்று அமிர்த சுவை மேலோங்கி நிற்கும் திருத்தலமே ஆவூர். ஆ என்றால் பசு, அமிர்தச் சுவை வழங்கும் காமதேனு பசு, அமிர்த சுவையை மக்களுக்கு எளிமையாக மாற்றித் தரும் பைரவ மூர்த்திகள், இந்த அமிர்த நிவாரண சக்திகளை பல யுகங்களுக்கும் நிர்மாணிக்கும் வில்வ விருட்சங்கள் என்று இவ்வாறு அமிர்த சாகரமாக விளங்குவதே ஆவூர் திருத்தலமாகும். ஆவூர் திருத்தலத்தில் ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி அபூர்வமாக தனுசு ஏந்திய வடிவில் அருள்பாலிக்கிறார். இது சம்பந்தமாக ஆயிரமாயிரம் அனுகிரக சக்திகள் பொலிந்தாலும் இந்த யுகத்திற்குப் பயனாகும் ஒரு அமிர்தச் சுவையை சித்தர்கள் அளிக்கிறார்கள். ஒரு சமயம் வசிட்டரின் ஆஸ்ரமத்தில் விளங்கிய பசுவான காமதேனுவை தேவர்கள் திருடிக் கொண்டு சென்று விட்டார்கள். அந்தப் பசுவை மீட்பதற்காக வசிட்ட மகரிஷி தன்னுடைய 100 குமாரர்களை அனுப்பினார். அந்தக் குமாரர்கள் அனைவருமே தேவர்களால் சம்ஹாரம் செய்யப்பட்டனர். முடிவில் தன்னுடைய அனைத்து முயற்சிகளும் பலனளிக்காமல் போகவே வசிட்ட மாமுனி இறைவனை வேண்டவே, சிவபெருமான் முருகப் பெருமானை அனுப்ப முருகப் பெருமான் தனுசு ஏந்தி போர்க்களம் சென்று தேவர்களை எல்லாம் வீழ்த்தி காமதேனுவை வசிட்டப் பெருமானுக்கு மீட்டுக் கொடுத்தார். அவ்வாறு காமதேனுவை மீட்பதற்காக சிவபெருமானால் முருகனுக்கு அளிக்கப்பட்ட சிவதனுசுவையே ஆவூர் திருத்தலத்தில் நீங்கள் தரிசனம் செய்கிறீர்கள். இந்த சிவதனுசுவின் தரிசனமே எத்தகைய பகைமையையும் வேரறுக்கவல்லது. தொழில், வியாபாரம், அரசியம், பொருளாதாரம் என எத்துறையாக இருந்தாலும் பகைமையைச் சந்திப்பவர்கள், எதிரிகளால் துன்பம் அடைவோர் இத்தல தனுசு சுப்ரமண்ய சுவாமியை வணங்கி சுத்தமான பால் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நிறைவேற்றுவதால் எதிரிகளின் எந்த சதித் திட்டத்தையும் வெல்வதுடன் தங்கள் துறையில் மேன்மையை அடைவார்கள் என்பது உறுதி. இதன் பின்னணியில் உள்ள சூட்சும இரகசியங்களை தக்க சற்குருவின் வழிகாட்டுதலின் பேரிலோ அல்லது தொடர்ந்து இத்தலத்தில் இயற்றும் வழிபாடுகள் மூலமாகவோ அறிந்து கொள்ளலாம். அன்னவர்க்கு முருகவேளின் தனுசு வழிகாட்டும் என்பது சித்தர்களின் வழிகாட்டுதல். சற்குமார்கள் எத்தகைய உபதேசத்தையும் தங்கள் அனுபவங்கள் மூலமாக, வாழ்க்கைப் பாடமாகவே அருளவல்லவர்கள் என்பதற்கு வசிஷ்டர் மட்டும் விதி விலக்கா என்ன ? தன்னுடைய நூறு குழந்தைகளையுமே, உத்தம புத்திரர்களையுமே ஒரு பசுவை மீட்பதற்காக போர்க்களத்தில் இழந்த வசிட்ட மகரிஷிதான் உத்தம குழந்தைப் பேற்றை தன்னை அண்டி வந்த பேரரசரான தசரத மகாராஜாவிற்கு அளித்து வழிகாட்ட முடியும். தசரத மகாராஜா வழிபட்ட சிவலிங்கம் இன்றும் பக்தர்களின் வழிபாட்டிற்காக ஆவூர் திருத்தலத்தில் விளங்குகின்றது. ஸ்ரீராமபிரானைப் போன்ற உத்தம சந்தான பாக்கியத்தைப் பெற விரும்பும் பக்தர்கள் இத்தல தனுசு சுப்ரமண்யரை உரிய முறையில் வழிபட வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கக் கூடிய உண்மைதானே.

ருத்ராட்சம் அணியும் முறை

சென்னையில் நம் சற்குரு பௌர்ணமி தினங்களில் வழிபாடுகள் நிறைவேற்றும்போது அடியார்கள் அனைவரும் அவருடைய இல்லத்தில் குழுமி இறை நாமங்களை இசைப்பர். அத்தருணங்களில் நம் சற்குரு பத்மாசனக் கோலத்தில் அமர்ந்து பல ருத்ராட்ச மாலைகளை அணிந்த வண்ணம் நாம சங்கீர்த்தனம் முடியும் வரை அனைவருக்கும் அந்தக் கோலத்திலேயே தரிசனம் அளிப்பார். சிறிது காலம் சென்ற பின் அவர் அணிந்திருந்த இறை நாமங்கள் செறிந்த ருத்ராட்சங்கள் அனைத்தையும் இறை பிரசாதமாக, குரு பிரசாதமாக நம் அடியார்களுக்கு அளித்து அவற்றைத் தங்கள் கழுத்தில் அணிந்து கொள்ளும்படிக் கூறினார். அனைவரும் அவ்வாறே அணிந்து கொண்டனர். ஆனால், ஒரு வருட காலத்திற்குள் நம் சற்குரு அளித்த எல்லா ருத்ராட்சங்களுமே பின்னம் அடைந்து உடைந்து மறைந்து விட்டன.

ருத்ராட்ச தத்துவங்கள்

இது பற்றி நம் சற்குருவிடம் வினவியபோது, “ருத்ராட்சம் என்பது உங்களுக்கு இறைவன் மீதுள்ள, குருவின் மேலுள்ள நம்பிக்கையைச் சுட்டிக் காட்டுவது...”, என்று சுருக்கமாகப் பதிலளித்தார்கள். இதன் விரிவான பதிலை தம் வாழ்க்கை நெறிமுறையில் எடுத்துக் காட்டினார் நம் சற்குரு. கோவணாண்டிப் பெரியவரான ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்தர் நம் சற்குருவிற்கு மூன்று ருத்ராட்ச மணிகளை குரு பிரசாதமாக அளித்தார் அந்த மூன்று ருத்ராட்சங்களையும் சக்தி தத்துவத்தில் இணைத்து தம் கழுத்தில் அணிந்து கொண்டார். ருத்ராட்சம் அணிவதில் பல தத்துவார்த்த விளக்கங்கள் உண்டு. ருத்ராட்சம் தம் கழுத்தை ஒட்டி அணிவதாகவும், நெஞ்சக் குழியில் படுமாறு அணிந்து கொள்வது ஒரு வகை. இதுவல்லாமல் ருத்ராட்சத்தின் முன்னும் பின்னும் பூண் சேர்த்து தொங்கும் முறையில் அணிந்து கொள்வது சிவ தத்துவமாகும். ருத்ராட்சத்தின் இருபுறமும் பூண் வைத்து நெஞ்சிற்கு இணையாக அணிந்து கொள்வது (கயிறு படுக்கை வசத்தில் இருப்பது) சக்தி தத்துவம். ருத்ராட்சத்தின் மேல் பக்கம் பூண் வைத்து கீழே பூண் இல்லாமல் தொங்கும் வண்ணம் இருப்பது பிரம்ம தத்துவமாகும். இவ்வாறு குருவைச் சுட்டும் மூன்று ருத்ராட்ச மணிகளை சக்தி தத்துவத்தில் தம் கழுத்தில் குரு உறையும் நெஞ்சில் தவழுமாறு அணிந்து கொண்ட நம் சற்குரு அந்த ருத்ராட்ச மணிகளை தாம் இந்த பூலோக வாழ்வை நிறைவு செய்யும் அந்தக் கடைசி வினாடி வரை வைத்துக் காப்பாற்றினார் என்பதே நம் சற்குருவிற்கு இறைவன் மீதும், குருவின் மீதும் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்கு சான்றாகத் திகழ்ந்தது, திகழ்கிறது. பலரும் ருத்ராட்சம் அணிபவர்கள் மாமிசம் சாப்பிடாமல் இருக்க வேண்டுமா, தாம்பத்ய உறவிர் ஈடுபடாமல் இருக்க வேண்டுமா, தினமும் நீராட வேண்டுமா, சிவபூஜை அவசியம் செய்ய வேண்டுமா என்றெல்லாம் நம் சற்குருவிடம் கேட்பது உண்டு. நம் சற்குருவோ, “இவை எதுவுமே அத்தியாவசியம் என்று சொல்ல முடியாது. ருத்ராட்சம் அணிய அத்தியாவசியமானது குரு நம்பிக்கை, இறை நம்பிக்கை மட்டுமே,” என்று ஆணித்தரமாக உரைப்பார். “இறைவனை அடைய சுத்தம் மட்டுமே போதும், சுத்தம் என்பது நம்பிக்கையே,” என்பதே நம் சற்குரு அடிக்கடி கூறிய சித்த வாக்கியம். ருத்ராட்சத்தில் 108 முகம் வரை உண்டு. நம் சற்குரு 38 முகங்கள் வரை உள்ள ருத்ராட்ச மணிகளைத்தான் தரிசனம் செய்து உள்ளார். இதில் ஏகமுகம் என்ற ஒருமுக ருத்ராட்சம் மிக மிக அரிதானது. இதை உரைத்தால் சுத்தமான தங்கம் அளிக்கும் பொன்னிறத்தை அளிக்கும். நேபாள ராஜாவிடம் ஏகமுக ருத்ராட்ச மாலையே உள்ளது. ருத்ராட்சம் கறுப்பு, வெள்ளை, மரக்கலர் (brown) போன்ற வண்ணங்களில் கிடைக்கும். வெள்ளை வண்ணம் மிகவும் அரிதே. இவ்வருடம் இத்தகைய வெள்ளை ருத்ராட்ச மணிகளை அணிவது சிறப்பாகும். அதன் காரணத்தை தொடர்ந்து இந்த உரையை படிப்பதால் அறிந்து கொள்ளலாம். ஆவூர் திருத்தல 24 படிக்கட்டுகளை ருத்ராட்ச படிக்கட்டுகள் என்றே அழைப்பார். காரணம் 2 x 12 = 24 = 6. ஆவூர் பசுபதி ஈச்சரம் ஆவூர் பசுபதி ஈஸ்வரன் என்று சொல்லியவாறே ஏறி இறங்குவது ஒன்றே போதும், இத்தல மகிமையை உங்களுக்கு உணர வைக்க.

ஸ்ரீசுக்ரீவன் தங்கச்சிமடம்

அவரவருக்கு விருப்பமான எத்தனை முகங்கள் கொண்ட ருத்ராட்ச மணிகளை அணிந்து கொள்ளலாம் என்றாலும் ஐந்தாம் தேதியில் பிறந்தவர்கள் ஐந்து முக ருத்ராட்சத்தையும், ஆறாம் தேதியில் பிறந்தவர்கள் ஆறு முக ருத்ராட்ச மணிகளையும் அணிந்து கொள்தல் சிறப்பாகும். நம் சற்குருவே 38 முகங்கள் உடைய ருத்ராட்ச மணிகளை தரிசித்து உள்ளார் என்றால் மற்றவர்கள் 108 முகங்கள் உடைய ருத்ராட்ச மணிகளை தரிசிப்பது எங்ஙனம் ? தான் அடைய முடியாததையும் மற்றவர்களுக்காக தாரை வார்த்து அளிப்பவர்களே சற்குருமார்கள். ஆவூர் போன்ற பாடல் பெற்ற தலங்களில் 108 வலம்புரிச் சங்குகளை வைத்து பூஜைகளை நிறைவேற்றுதலால் இவ்வாறு 108 முகங்கள் உடைய ருத்ராட்சங்களை தரிசித்த பலன்களையும், இந்த சங்குகளை விரத நியம நிஷ்டையுடன் தரிசித்த பலன்களையும் பெறலாம் என்றால் குரு கருணைக்கு எல்லைதான் உண்டோ ? ராமேஸ்வர தங்கச்சி மடம் போன்ற பெருமாள் தலங்களிலும் இத்தகைய வலம்புரிச் சங்கால் படிக லிங்க மூர்த்திகளுக்கு இயற்றும் அபிஷேக ஆராதனைகளும் இத்தகைய பலன்களை வர்ஷிக்க வல்லவையே. ருத்ராட்சம் சம்பந்தமான ஒரு சுவையான தகவலை இங்கு பகிர்ந்து கொள்கிறோம். நம் சற்குரு தம் பூதவுடலை விட்டுப் பிரியும் தருணத்தில் ஒன்று இரண்டு மூன்று என்று ஏறுவரிசையில் அமையும் மருத்துவ மனை ஒன்றில் சிகிச்சைக்காக சென்றார்கள். அப்போது ஸ்கேன் செய்வதற்காக அவரை அந்தக் கருவியில் படுக்க வைத்தபோது ஒரு பெண் நர்ஸ் நம் சற்குரு அணிந்திருந்த ருத்ராட்சங்களை அகற்றும்படிக் கேட்டுக் கொண்டார். நம் சற்குருவோ, “அம்மா, அடியேன் சிறுவயதிலிருந்தே அணிந்துள்ள ருத்ராட்சங்கள் இவை. வேண்டுமானால் இந்த ருத்ராட்சங்கள் உங்கள் ஸ்கேன் மெஷினை பாதிக்காத வகையில் தலைக்கு மேல் வைத்துக் கொள்ளட்டுமா ?” என்று கேட்கவே அந்த நர்சும் சம்மதித்தார். அவ்வாறு சக்தி தத்துவத்தில் அமைந்து குரு தத்துவத்தை பறை சாற்றும் மூன்று முக ருத்ராட்ச மணிகளை தன் தலைக்கு மேல் அணிந்து கொண்டு சக்தி தத்துவத்தின் முன்னிலையில் (பெண் செவிலி) தன் பூலோக வாழ்வை நிறைவு செய்தவரே நம் ஆருயிர் சற்குரு. இந்த அரிய தகவலை நமக்கு அளித்ததும் சக்தி தத்துவத்தின் சாட்சியான ஒரு பெண் அடியார்தான். இது என்றோ நிகழ்ந்த சித்த குருநாதரின் அனுபவம் என்றாலும் இந்த தத்துவத்தை நாம் இன்றும் பயன்படுத்தி நம் வாழ்வை நிறைவு செய்ய, பூரணமாக்க உதவுவதே இவ்வருடத்தில் ஆவூர் திருத்தலத்தில் மேற்கொள்ளும் வழிபாடுகளாகும். ஆவூர் பசுபதி ஈஸ்வரன், ஆவூர் பசுபதி ஈச்சரம் என்பதெல்லாம் மூன்று, நான்கு, ஐந்து என்ற ஏறுவரிசை தத்துவங்கள்தாமே ? 20 21 என்ற வருடமும் 2, 3 என்ற ஏறுவரிசையில் அமைவதால் இந்த வருடமும் இத்தகைய வழிபாடுகளுக்கு ஏற்றதாக அமைகிறதே. காமதேனு தீர்த்தத்தில் பச்சைக் கற்பூரம் கலந்து அதை 108 வலம்புரிச் சங்குகளில் ஊற்றி அந்த சங்குகளுக்கு முன் அமர்ந்து பகவத்கீதையின் 15வது அத்தியாயத்தையோ, விஷ்ணு சகஸ்ரநாமத்தையோ பாராயணம் செய்து ஆவூர் பசுபதி ஈசனுக்கு அபிஷேகிப்பது இவ்வருடம் நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடாகும். சங்குகளை 27, 27ஆக வட்டமாக வைத்து இவ்வாறு அமைந்த நான்கு வட்டங்கள் முன்னிலையில் வழிபாடுகளை நிறைவேற்றுவது வாழ்வை நிறைவு செய்வதாகும், அதாவது மனித வாழ்வில் எத்தகைய குறைபாடுகளும் அணுகாத வகையில் மனம் நிறைவு பெறுவதே உத்தம வாழ்க்கை முறையாகும். நிறைவு என்பது மன நிறைவே, வாழ்க்கை வசதிகள் கொடுக்கும் தற்காலிக ஆனந்தம் அல்ல. ஒவ்வொரு வலம்புரி சந்திர பிம்பம் என்ற வட்டத்தின் நடுவே சிவ சிவ சிவ சிவ என்று பச்சரிசி மாவால் கோலமிடுவதால் இவ்வாறு அமையும் 16 சிவ மந்திரங்கள் வாழ்வை நிறைவு செய்யும் என்பதே சித்தர்கள் அளிக்கும் தெளிவுரை. இதுவே 16 நலன்களுடன் வாழும் பெருவாழ்வு.

ஸ்ரீகிருஷ்ண பகவான் ரெட்டைவயல்

ஆ ஊர் என்றால் பசுக்கள் நிறைந்த ஊர், பசும்பால் சக்தியான அமிர்த சக்திகள் செறிந்த ஊர், பசும்பால் சொரிந்து நினைத்ததெல்லாம் நிறைவேற்றும் காமதேனு வழிபட்ட ஊர் என்று மட்டும் பொருள் அல்ல. நம்ப முடியாத ஒரு காட்சியைக் கண்டு வாயைப் பிளந்து நின்றான் என்று சொல்கிறோம். வாயைத் திறத்தல் வேறு, வாயைப் பிளத்தல் வேறு. முந்தியது நம்முடைய செயல்பாட்டின் விழைவாக உண்ண, பேச, அருந்த அமைவது. பிந்தியது நம்மை அறியாமல் அன்னிச்சையாக நடைபெறுவது. இதுவே பிளந்தகுறி என்னும் தன்மையைக் குறிக்கும். இவ்வாறு பிளந்தகுறி என்ற பெயரில் அமைந்த வேட்டியை பெருமாளுக்கு அணிவிக்கும் வழிபாட்டின் பின்னணியில் அமைந்ததற்கு இதுவும் ஒரு காரணமே. திருமால் தன் பிளந்த குறியான வாயில் இந்த உலகையே விஸ்வரூபமாக காட்டியதால் பிளந்தகுறி என்னும் வஸ்திரம் இத்தகைய சிறப்பு பெயரைப் பெற்றது. ஸ்ரீமகாவிஷ்ணு கண்ணனாக கீதா உபதேசம் செய்ததற்கு ஆவூர் திருத்தலம் சாட்சியாக நின்றதால் ஆவூர் திருத்தல ஈசன் ஸ்ரீபசுபதி ஈசனுக்கும் இவ்வாறு பிளந்தகுறி வஸ்திரத்தை அணிவித்து வழிபாடுகள் இயற்றுவது இவ்வருடம் சிறப்படைகிறது. தன்னுடைய வளர்ப்பு அன்னையாக யசோதை இருந்தாலும், “வாயைத் திறடா, கண்ணா,” என்று கூறி யசோதை வாயை மூடும் முன் தன்னுடைய வாயைத் திறந்து அல்லது பிளந்து, இங்கு தன்னுடைய சக்தி முழுவதையும் பிரயோகம் செய்து, யசோதைக்கு விஸ்வரூப தரிசனத்தைக் காட்டியவரே நம் பெருமாள் மூர்த்தி. பசுபதி ஈச்சரம், பசுபதி ஈஸ்வரன் என்ற வார்த்தைகளே கீதையைக் குறிக்கும் 18 அட்சரங்களாக அமைவதால் வேறு எந்த மந்திரத்தையும் உபசேதமாகப் பெறாதவர்கள் கூட இவ்வருடம் முழுவதும் பசுபதி ஈச்சரம் பசுபதி ஈஸ்வரன் என்றவாறு ஓதி வந்தாலே அவர்கள் பகவத் கீதையின் 18 அத்தியாயங்களையும் பொருள் உணர்ந்து ஓதிய பலன்களை ஸ்ரீகிருஷ்ண பகவானே அவர்களுக்கு காமதேனு பிரசாதமாக அருள்வார் என்பதும் ஆவூர் திருத்தலத்தின் மகிமைகளுள் ஒன்றாகும். குழந்தை கண்ணன் மண்ணைத் தின்று கொண்டிருந்த காட்சியைக் கண்டுதானே யசோதை கண்ணனை வாயைத் திறக்கும்படிக் கூறினாள். கண்ணன் பெருமாளின் பூரண அவதாரகமாகத் திகழ்ந்ததால் தன்னுடைய கண்ணன் அவதாரத்திலும் இவ்வாறு பூமியைச் சுத்திகரிக்கும் பணியாக, ஸ்ரீபூதேவிக்கு அளிக்கும் அனுகிரகமாக மண்ணை உண்டான் என்பதே சித்தர்கள் தெரிவிக்கும் இரகசியம். இவ்வாறு மண்ணை அளந்தவனும், மண்ணைத் தின்றவனுமாகிய பெருமாளுக்கு உரிய வஸ்திரத்தை மண்ணைச் சுமந்தவனுக்கு அளித்தல் என்பதே இத்தலத்தில் நிறைவேற்றும் வழிபாட்டின் சிறப்பாகும். கோதூளி அபிஷேகம் என்ற சிறப்பான அபிஷேகத்தை நிறைவேற்ற உகந்த தலமே ஆவூர் ஆகும். இதன் பலன்கள் சொற் பொருள் கடந்தது என்றாலும் இதனை நிறைவேற்றும் பாக்கியத்தை அடியார்கள் பெறலாமே. குறைந்தது 15 பசு மாடுகள் மிதித்த மண்ணை எடுத்து அதை ஒரு வெள்ளைத் துணியால் சலித்து அவ்வாறு சலித்து எடுத்த மண்ணை கங்கை, காவிரி, வைகை போன்ற புனித நதி நீரில் கலந்து ஸ்ரீபசுபதி ஈசனுக்கு அபிஷேகித்தலே இவ்வருடம் நிறைவேற்றக் கூடிய மிகச் சிறந்த வழிபாடாகும். தசரதர் இத்தலத்திற்கு வந்திருந்தபோது ஒரு சாதாரண இடையன் வடிவில் இந்த கிராமத்து மக்களிடம் ஆயிரம் பசுமாடுகளிடமிருந்து கோதூளி பிரசாதத்தைப் பெற்று ஸ்ரீவசிஷ்ட மாமுனி அருளிய முறையில் திரிவேணி சங்கம தீர்த்தத்துடன் கலந்து அதை இறைவனுக்கு அபிஷேகமாக நிறைவேற்றினார். இதன் விளைவாகவே ஸ்ரீராமபிரானை அவர் உத்தம புத்திரனாக, சக்கரவர்த்தித் திருமகனாகப் பெற்றார் என்பதே சித்தர்கள் அறிவிக்கும் இனிய வரலாறு.

மன நிறைவு 2021

இவ்வருடம் மன (20), நிறைவு (21) ஆண்டுதானே என்று ஒரு அடியார் கேட்டுள்ளார். உண்மையே. குரு அருளால் பக்தர்களின் அனைத்து அபிலாஷைகளும் நிறைவேறும் ஆண்டே இந்த வருடம் என்பதில் ஐயமில்லை. இதன் பொருட்டே மூன்றின் குசா சக்தியான ஆறு செறியும் வண்ணம் அமிர்த சக்தி நிறைந்த கோதூளி வழிபாடு போன்ற வழிபாடுகள் குருவருளால் இங்கு அளிக்கப்பட்டுள்ளன. ஆவூர் திருத்தலத்தில் இறை மூர்த்திகளை தரிசனம் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள 24 படிக்கட்டுகள் வடக்கு திசையான குபேர திக்கை நோக்கி அமைந்துள்ளதால் எத்தகைய ஏழ்மை நிலையில் உள்ளவர்களும் இந்த படிக்கட்டுகளின் மேல் ஏறி வழிபாடுகளை இயற்றுவதால் நலமடைவர் என்பதே நம் மூதாதையர்கள் வழங்கும் அருளாசியின் தன்மை ஆகும்.

காமதேனு பூஜை திருஅண்ணாமலை

ஏழ்மை என்பது பொருளாதாரத்தில் மட்டுமல்ல ஆரோக்கியம், சந்ததிகள், அறிவு, படிப்பு, கலாச்சாரம் போன்ற பல துறைகளில் விளையும் குறைபாட்டைக் குறிப்பதால் எவ்விதக் குறைபாட்டையும் தீர்த்கும் அமிர்தவர்ஷினி தலமாக ஆவூர் திருத்தலம் விளங்குகிறது. இந்த அமிர்தவர்ஷினி படிக்கட்டுகளின் இருமருங்கிலும் தேங்காய் எண்ணெயாலும் நடுவில் இரு வரிசையாக நல்லெண்ணெய் தீபமும் ஏற்றி மொத்தம் இவ்வாறு (4 x 24) 96 தீபங்களை ஏற்றி வழிபடுவதால் மக்களின் அனைத்து விதமான குறைபாடுகளும் குருவருளால் சீர்பெறும். வரும் ஆங்கிலப் புத்தாண்டு 2021 வியாழக் கிழமை தோன்றுவதால் 31.12.2020 வியாழக் கிழமை இரவு 12.00 அல்லது அடுத்த நாள் 1.1.2021 வெள்ளிக் கிழமையோ இங்கு அளித்துள்ள வழிபாடுகளை நிறைவேற்றலாம். 2021 ஆண்டு முழுவதுமே ஒவ்வொரு வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் மேற்கூறிய வழிபாடுகளை நிறைவேற்றுதல் நலமே. கவச சக்திகள் கற்கண்டாய் இனிக்கும் தலமே ஆவூர்.

ஸ்ரீருணலிங்கம் ஆச்சாள்புரம்

காயத்ரி படிக்கட்டுகள் ஆவூர்

காமதேனு என்பது நாம் நினைப்பது போல சாதாரண தேவ பசுவல்ல. பெருமாளுக்கு இணையான தெய்வீக சக்திகளைக் கொண்டதே காமதேனு. பக்தர்கள் வேண்டும் வரங்களை அனுகிரகமாக அளிக்கவல்லதே. அதனால் திருஅண்ணாமலை ஈசனுக்கு காமதேனு இயற்றும் பூஜையை சாதாரண மனிதர்கள் தங்கள் ஊனக் கண்களால் காண இயலாது, காணக் கூடாது என்பதால் தேவர்கள் காமதேனுவின் பூஜையை திரையிட்டு மறைத்து விடுகிறார்கள். ஆனால், சிலக்காகித சித்தர்கள் என்ற சித்த பாரம்பரிய சற்குருமார்கள் காமதேனுவின் வழிபாட்டு அனுகிரகங்களை “காமதேனு பவசாகர கதிர்” என்பதாக மாற்றி அவற்றை திருஅண்ணாமலை நான்கு கோபுரங்களிலும் வர்ஷித்து விடுகிறார்கள். எனவே 2021 ஆண்டு வியாழன், வெள்ளிக் கிழமைகளில் திருஅண்ணாமலை நான்கு கோபுரங்களையும் ஒருசேரப் பார்த்து தரிசனம் செய்யும் பக்தர்கள் காமதேனுவின் ஆசிகளைப் பெறுகிறார்கள். பவசாகரம் என்ற பிறவிப் பெருங்கடல். இதை நீந்த துணை செய்வதே காமதேனுவின் அனுகிரகம். காமதேனு இறைவனை பூஜிக்கும் தலம் ஆவூர் ஆதலால் 2021ம் ஆண்டு ஆவூர் திருத்தலத்தை தரிசித்த பின் ஒரு மண்டல காலத்திற்குள் வரும் வியாழக் கிழமை, வெள்ளிக் கிழமைகளில் திருஅண்ணாமலை நான்கு கோபுரங்களையும் தரிசித்தலால் காமதேனுவின் தரிசனப் பலன்கள் பூரணமடையும். ஆவூர் திருத்தலத்தில் அமைந்துள்ள 24 படிக்கட்டுகளை காயத்ரி படிக்கட்டுகள் என்றும் அழைப்பார்கள். காயத்ரி மந்திரம் 24 அட்சரங்களுடன் தத் சவிதூர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத் என்று பொலியும். இந்த காயத்ரி மந்திரத்துடன் ஓம் பூர் புவ சுவஹ என்றவாறு பிரணவத்தையும் மூன்று லோகங்களையும் இணைத்து ஓதுவதே நாம் தொன்றுதொட்டு கைக்கொண்ட ஜப முறையாகும். இதுவரை காயத்ரீ மந்திரத்தை உபதேசமாகப் பெறாதோரும், உபதேசம் பெற்றிருந்தாலும் முறையாக ஜபத்தை ஓதாமல் கை விட்டவர்களும் இந்த ஆண்டில் ஆவூர் திருத்தலத்தில் அமைந்துள்ள காயத்ரி படிக்கட்டுகளில் படிக்கு ஒரு அட்சரமாக காயத்ரீ மந்திரத்தை ஜபித்தலால் இதுவரை ஜபிக்காத காயத்ரிக்கு ஓரளவு பிராயசித்தத்தை அளிக்கும்.

பிரம்ம தீர்த்தமும்
தேனு தீர்த்தமும் ஆவூர்

இவ்வாறு 24 அட்சரமாக காயத்ரி மந்திரத்தை பிரித்துக் கூற முடியாதவர்கள் இந்த காயத்ரி படிக்கட்டுகளில் மந்திரத்தை ஜபித்தவாறே ஏறி இறங்குவதும் ஏற்புடையதே. காயத்ரி என்பதை காய் த்ரீ என்று பிரிக்கலாம் அதாவது மூன்று பசுக்கள் என்று பொருள். காமதேனு தம் புதல்விகளான பட்டி, ஆச்சா என்ற செல்வங்களுடன் இந்த காயத்ரி படிகளை ஏறிச் சென்று இறைவனை வலம் வந்து வணங்கினாள் என்றால் இந்த புனிதப் படிகளின் புனிதத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க இயலுமா ? இந்தப் புனிதப் படிகள் வழங்கும் புனிதத் தன்மையை பெருக்கிக் கொள்ள விரும்பும் அன்பர்கள் காயத்ரீ மந்திரத்தையோ அல்லது ஆவூர் பசுபதி ஈச்சரம் ஆவூர் பசுபதி ஈஸ்வரன் என்றோ ஓதியவாறே இந்த 24 அட்சர படிக்கட்டுகளை ஏறி இறை மூர்த்திகளை வலம் வந்து மீண்டும் மந்திரத்தை ஜபித்தவாறே படிகளில் இறங்கி வருவது ஒரு பட்டி வலமாகும். எவ்வளவுக்கு எவ்வளவு இந்த பட்டி வலத்தை பக்தர்கள் நிறைவேற்றுகிறார்களோ அந்த அளவிற்கு அவர்கள் பரம்பரைகள் நலம் பெறும். செல்வம், ஆரோக்யம், அந்தஸ்து போன்ற சம்பத்துக்கள் பல தலைமுறைகளுக்கும் தொடர்ந்து வந்து நிலைத்து நிற்க வேண்டும் என விரும்பும் அனைவரும் மேற்கண்ட பட்டி வலத்தை தங்கள் சக்திக்கு முடிந்த அளவு நிறைவேற்றுதல் நலம். வியாழன், வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய பட்டி வலத்தை மேற்கொள்தல் நலமே. அனைவரும் ஓதக் கூடிய எளிய மந்திரமாக இருப்பதாலும் அனைவரும் வலம் வரக் கூடிய எளிய வல முறையாக இருப்பதாலும் பட்டி வலத்தில் ஓதப்படும் ஆவூர் பசுபதி ஈச்சரம் ஆவூர் பசுபதி ஈஸ்வரன் என்ற மந்திரம் பட்டி காயத்ரி என்றே சித்தர்களால் புகழப்படுகிறது. இந்த பட்டி காயத்ரி மந்திரத்தை ஆவூர் திருத்தலம் என்று மட்டுமல்லாது கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம், கோவை பேரூர், சீர்காழி அருகிலுள்ள ஆச்சாள்புரம், திருஅண்ணாமலை போன்ற காமதேனுவின் பாரம்பரிய செல்வங்கள் வழிபட்ட அனைத்து திருத்தலங்களிலும் ஓதி நலம் பெறலாம், வளம் பெருக்கலாம்.

அன்புக் குழந்தைகளே
ஆதரவு பெறுவீர்

ஸ்ரீஏரண்ட மகரிஷி கொட்டையூர்

31.12.2020 இரவு 12 மணிக்கு ஆவூர் திருத்தலம் திறந்திருக்குமா என்று ஒரு அன்பர் சந்தேகத்தை எழுப்பியுள்ளார். இது நம்மிடையே உள்ள ஒற்றுமைக் குறைவையே காட்டுகிறது. பல ஆண்டுகளுக்கு முன் எந்தக் கோயிலையும் இரவு திறப்பது கிடையாது. ஆனால் நம் சற்குரு திருஅண்ணாமலை கிரிவலப் பெருமையை பிரபலமடையச் செய்துள்ளதால் திருஅண்ணாமலை உட்பட பல ஆலயங்கள் பௌர்ணமி இரவு முழுவதும் பக்தர்களின் தரிசனத்திற்காக நடைசார்த்தப் படாமல் இருப்பது நீங்கள் உணர்ந்த ஒன்றுதானே. ஒருவேளை ஆவூர் திருத்தலம் திறந்திருக்காவிட்டாலும் சற்றே குறுகிய கண்ணோட்டத்தை விடுத்து இந்த வழிபாட்டை அணுகினால் போதுமே. திருஅண்ணாமலை கிரிவலப் பாதை இரவு முழுவதும் பக்தர்களின் வருகைக்காக திறந்து விடப்பட்ட திருக்கோயிலின் ஏழாம் பிரகாரம்தானே. இந்த கிரிவலப் பாதையில் ஈசன் மட்டும் அல்ல சிலுவை தரிசனம் என்ற திருஅண்ணாமலை கிரிவலப் பகுதியில் பரமபிதா ஏசுநாதர் தன்னைக் காண எவராவது வருகிறாரா என்று வைத்த கண் மூடாமல் காத்துக் கொண்டே இருக்கிறாராம். பரமபிதாலின் புகழ்பாடும் எத்தனையோ சர்ச்சுகள் புத்தாண்டு இரவு பக்தர்களின் வழிபாட்டிற்காக திறந்துதானே கிடக்கின்றன. இந்த கேள்விக்கான பதிலை பல்லாண்டுகளுக்கு முன் வழங்கியவரே நம் சற்குரு. இத்தகைய பத்தாண்டு பிறக்கும் வேளையில் kitkat என்ற சாக்லேட்டை அனைவருக்கும் புத்தாண்டு அனுகிரகமாக இரவு 12 மணிக்கு அளித்து இனிப்புச் சுவை என்னும் குரு அமிர்தத்தை அனைவருக்கும் வழங்கியவரே நம் சற்குரு. அத்தோடு விட்டதா நம் சற்குருவின் அடைமழை அனுகிரகம். சற்குரு அளித்த சாக்லேட் பெரிய அளவாக இருந்ததால் அதை தன் குழந்தை, மனைவிகள், நண்பர்களுக்கு பகிர்ந்தளிக்கலாமே என்று சிலர் மனதில் எண்ணியதுதான் தாமதம். அதையும் சிக்கெனப் பிடித்து, “யாரும் சாக்லேட்டைப் பகிர்ந்தளிக்க வேண்டாம். யாருக்காவது மேலும் சாக்லேட் தேவைப்பட்டால் கூறுங்கள், அடியேன் அதையும் தந்து விடுகிறேன்,” என்றார் தாயினும் சாலப் பரிந்தூட்டும் நம் சற்குரு. பின்னப்படாமல், சிதலமடையாமல், முழுமையாக அனுபவிக்க வேண்டியதே சற்குருவின் அனுகிரகம் என்பதைக் குறிப்பதே இந்த தொட்டுக் காட்டிய வித்தை.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
கொட்டையூர்

Kitkat என்பது எண் கணிதத்தில் 5 என்ற அதாவது 2021 என்ற புத்தாண்டைக் குறிப்பதுதானே. என்னே நம் சற்குருவின் தொலை நோக்குப் பார்வை. சற்குரு காட்டிய முறையில் பெரிய அளவு kitkat சாக்லேட்டை வழங்கி அனைருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு அளிப்பது இந்தப் புத்தாண்டைக் கொண்டாடும் சிறந்த முறையாக சித்தர்கள் சிபாரிசு செய்கிறார்கள். ஸ்ரீபூண்டி அன்னையின் திருவாசியில் 12 நட்சத்திரங்கள் பொலிவது ஏதேச்சையாக விளைந்த சிறப்பு அல்ல. தன்னுடைய தலைப்பாகையில் குரு அனுகிரகத்தைக் குறிக்கும் 12 நட்சத்திரங்களைக் கொண்ட ஸ்ரீஏரண்ட மகரிஷியை புத்தாண்டு பிறப்பு அன்றோ 3, 12, 21, 30 என்ற தேதிகளிலோ அல்லது தங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கு உரிய நாட்களிலோ தரிசனம் செய்து மேற்கூறிய இனிப்பு தானத்தை நிறைவேற்றுவதும் சிறப்பே.

நட்சத்திரங்கள் கைக்கெட்டா தொலைவில் இருந்தாலும் அவை அளிக்கும் அனுகிரகங்களை நாம் அனுபவிக்கும் வண்ணம் நம் கரங்களில் அளிக்கும் வல்லமை பெற்றவரே ஸ்ரீஏரண்ட மகரிஷி. அகல உழுவதை விட ஆழ உழுவதே சிறப்பு என்பர் பெரியோர். இவ்வாறு எந்தத் துறையாக இருந்தாலும் அதில் நுணுக்கமான அறிவைப் பெற உதவுவதே ஸ்ரீஏர் அண்ட மகரிஷியின் அனுகிரகம். எந்தப் பொருளையும் பற்றிய ஆழ்ந்த அறிவை, நுணுக்கமான புலனை அளிக்கக் கூடியவர் சற்குரு ஒருவரே என்பதே ஸ்ரீஏரண்ட மகரிஷியின் வழிபாட்டில் நாம் உணரக் கூடிய தத்துவமாகும். குருவின் விரல் அசைந்தால் அதில் ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என்பார் நம் சற்குரு. இது தெய்வ மூர்த்திகளுக்கும் பொருந்தும் தத்துவம்தானே. இவ்வகையில் குருவின் தெய்வ வடிவமாகப் பொலியும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் பாதங்களை கவனித்தால் இதில் மேலோட்டமாக மூன்று கோணங்களைக் காணலாம். அதாவது நம்மை நோக்கும் குரு பாதங்கள், சுவாமியின் வலது பக்கம் திரும்பிய பாதங்கள், சுவாமியின் இடது புறத்தில் சற்றே விலகி உள்ள பாதங்கள் என்ற மூன்று கோணங்களைப் பற்றி மட்டுமே குரு பாத கோண இரகசியம் என்ற நூலை ஸ்ரீபோகர் சித்தர் படைத்துள்ளார். ஆளுமை, மென்மை, பெண்மை என்று இந்த கோண சக்திகளின் அனுகிரக தன்மையாக சித்தர்கள் விவரிக்கிறார்கள். இந்த வார்த்தைகளின் பொருளை ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலே இந்த குரு அனுகிரகங்கள் அளிக்கும் தன்மையை புரிந்து கொள்ளலாம்.

சத்யோஜாத தீப வழிபாடு

2021 வருடத்தில் நம்மை நோக்கும் குரு பாதமாக ஆவூர் திருத்தலத்தில் ஸ்ரீதட்சிணாமூர்த்தி குருவின் ஐந்து திருப்பாத விரல்களும் திகழ்வதால் ஆவூர் திருத்தலம் குருப்பாத மென்மை சக்திகள் பூத்துக் குலுங்குவதாக இந்த ஆண்டு விளங்குகிறது. இதை பஞ்சமங்கள பாதங்கள் என்றும் போற்றுகிறோம். இந்த பஞ்சமங்கள பாதங்களுக்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், செம்பருத்தி தைலம், கரிசலாங்கண்ணி தைலம், விளக்கெண்ணெய் என்ற ஐந்து தைலங்கள் கலந்த பஞ்ச தைலக் காப்பிட்டு வணங்குதல் வாழ்வில் கற்பனை செய்ய முடியாத குரு அனுகிரகத்தை வர்ஷிக்கும் வழிபாடாக இது மலரும். சற்றே கூர்ந்து கவனித்தால் இந்த பஞ்ச தைலங்களும் புத்தாண்டு பிறப்பில் அமையும் குரு சந்திர யோக அமைப்பில் இணையும் கிரகங்கள் அளிக்கும் சக்தியை உறுதிப்படுத்துவதாகவே அமையும். தட்சிணா மூர்த்தி என்று மட்டும் அல்லாது துர்கை, பைரவர், அர்த்தநாரீஸ்வரர் என்ற மூர்த்திகளுக்கும் இத்தகைய “மென்மை” தைலத்தால் காப்பிட்டு இவ்வருடம் வழிபடுவது சிறப்பாகும். மேலும் இவ்வருடம் முழுவதும் எத்தலத்திலும் ஐந்து தீபங்களை இந்த மென்மை தைலம் கொண்டு ஏற்றி வழிபடுதல் சிறப்பாகும். கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு என்ற நான்கு திசைகளுக்கு நான்கு தீபத்தையும் நடுவில் ஐந்தாவது தீபத்தை குருவைக் குறிக்கும் சத்யோஜாத தீபமாக வடக்கு நோக்கி ஏற்றுதல் சிறப்பாகும். இந்த சத்யோஜாத ஜோதி வழிபாட்டை ஆலயத்தில் எந்த இடத்திலும் எந்த பிரகாரத்திலும் ஏற்றி வழிபடலாம், திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும் இத்தகைய தீபவழிபாட்டை மேற்கொள்தல் சிறப்பே. குபேர பிரச்னம் என்ற ஒரு ஜோதிடமுறை முற்காலத்தில் சிறப்புற்று விளங்கியது. இம்முறையில் மேற்கூறியவாறு நான்கு தீபங்களை திசைக்கு ஒன்றாக ஏற்றி ஐந்தாவது தீபத்தை வடக்கு திசையான குபேர திக்கில் வைத்து அவ்வாறு தீபம் வைக்கும்போது மிளிரும் அந்தச் தீபச் சுடரின் தன்மையை உற்றுக் கவனித்து, அந்தச் சுடர் மற்ற திசைகளில் எரியும் தீபங்களுடன் எந்த அளவிற்கு ஓத்துப் போகிறது என்பதைக் கண்டறிவர். இதனால் வரும் மருமகளோ, மருமகனோ, பிறக்கும் குழந்தைகள் போன்ற புது உறவுகளோ, வாங்கும் வீடோ, நிலம் போன்ற நிரந்தர சொத்துக்களோ இருக்கும் மற்ற உறவுகளுடன், சொத்துக்களுடன் எந்த அளவிற்கு ஒத்துப் போகும், விருத்தியாகும் என்பதை கண்டறிந்து உரிய வழிபாடுகளை மேற்கொள்வர். இப்போது இந்த பிரச்ன முறை முற்றிலும் மறைந்து போய் விட்டது என்றாலும் இவ்வாறு ஐந்து தீபங்களை ஏற்றி தொடர்ந்து வழிபடுவதால் புது உறவுகளும், சொத்துக்களும் இருக்கும் உறவுகளுடன் சொத்துக்களுடன் நன்முறையில் இணைந்து வாழ இவ்வருட தீபச் சுடர் தேவதைகள் ஆசி வழங்குவர். தொடர்ந்த வழிபாடு நிரந்தர இன்பம் அருளுமே.

நான்குடன் ஒன்று
நலமாய் மலர

ஆவூர் திருத்தலத்தில் அசிதாங்க பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், கால பைரவர் என்ற நான்கு பைரவ மூர்த்திகள் மேற்கு நோக்கி எழுந்தருளி இருக்க உன்மத்த பைரவர் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார் அல்லவா ? இதே போல நான்கு வில்வ மரங்கள் பிரகாரத்தில் வடக்கு திசையில் ஓங்கி உலகளந்து உத்தமன் புகழ் பாட இந்த வில்வ விருட்சங்களை நோக்கும் அரச மரமோ மறைவில் நின்று சூட்சும கதிர்களை மட்டுமே நல்குகின்றது. இத்தகைய சிறப்புகளுக்கு அணி சேர்ப்பதாக அமைவதே ஐந்து வலம்புரி வட்டச் சக்கரங்களுடன் திகழும் குசா யந்திரமாகும்.

குசா யந்திரத்தில்
இணையும் சத்யோஜாதம்

இவ்வருடம் முழுவதும் பச்சரிசி மாவினால் குசா யந்திரக் கோலமிட்டு அதன்மேல் மேற்கூறிய வகையில் ஐந்து தீபங்களை ஏற்றி வைத்து வழிபடுவதால் பஞ்சபூத சக்திகளும், குசா சக்திகளும், பஞ்ச சுடர் சக்திகளும் பெருகும். குசா யந்திரம் வரையும்போது அதிலுள்ள நான்கு சிறிய வட்டங்களும், ஒரு பெரிய வட்டமும் வலம்புரியாக வரைய வேண்டும் என்பது விதி. கோயிலில் நாம் மேற்கொள்ளும் பிரதட்சிண வல முறையைக் குறிப்பதாக அமைவதுதான் இந்தக் குசா யந்திரம் அமைக்கும் முறையும். குறிப்பாக ஆவூர் திருத்தலத்தில் விளங்கும் 24 காயத்ரி படிக்கட்டுகளிலும் பச்சரிசி மாவினால் குசா யந்திரக் கோலமிட்டு அதன் மேல் இத்தகைய தீபங்களை ஏற்றி வழிபடுவது (24 x 4 = 96) குடும்ப ஒற்றுமையை மட்டும் விருத்தி செய்வது அல்ல, காயத்ரி என்பது பிரபஞ்சம் தழுவிய பலன்களை அளிக்கவல்லதால் இந்த வழிபாடு சமுதாயம் கடந்த ஒற்றுமையையும் வர்ஷிக்கும். கொசு ஜீவன்களைக் குறிக்கும் சித்தர்களின் பரிபாஷை சொல்லே வருணஜீவி என்பதாகும். வருணஜீவி என்ற ஐந்தெழுத்து ஜீவன்களை இந்த வருடம் முழுவதும் பேணுவதால் அற்புத அனுகிரகங்களைப் பெறலாம். பேணுதல் என்றால் இந்த ஜீவன்களை வளர்க்க வேண்டும் அதாவது கொசுக்களை வளர்க்க வேண்டும் என்பது பொருளல்ல. வருணஜீவிகள் இயற்றும் திருப்பணியை பெருக்க நம்மால் இயன்ற உதவிகளை நிறைவேற்றுதலே இந்த வருடம் பக்தர்கள் நிறைவேற்றக் கூடிய அரிய பணியாகும். இந்தப் புத்தாண்டில் தேய்பிறைச் சந்திரனைத் தவிர மற்ற கிரகங்கள் அனைத்தும் காலசர்ப்ப யோகத்தில் சிக்கித் தடுமாறுவதால் செவ்வாய் பகவான் உச்சம் கொள்ளும் மகர ராசியில் ஆட்சி பெற்ற சனீஸ்வர பகவானின் திருப்பணிக்கு சக்தி கூட்டுவதாக அமைவதே இந்த வருண ஜீவி வழிபாடாகும். வருண ஜீவிகள் என்பவை எங்கெல்லாம் வேத ஒலிகள் எழுகின்றனவோ அந்த வேத ஒலிகளை ஈர்த்து பெருக்கும் அற்புத திருப்பணியை மேற்கொள்ளும் வருடமே 2021 என்பதை பறைசாற்றுவதே சித்த கிரந்தங்கள் ஆகும். வருண ஜீவிகளின் இந்த அபூர்வ திருப்பணி மேலும் சிறப்படைய வேண்டுமானால் குசா யந்திரத்தை பச்சரிசி மாக்கோலத்தால் வரைந்து அதன் நடுவில் ஐந்து தீபங்களை மேற்கூறிய முறையில் ஏற்றி வழிபடுவதால் இந்த பஞ்ச சுடர் சக்திகள் மேலும் குசா சக்தியால் புனிதமடைந்து, பெருகி, நல்லியக்கம் கொண்டு சுற்றுப்புறத்தை அடையும், இதனால் நாம் வாழும் பூமி மட்டும் அல்லாது காயத்ரீ மந்திரம் நிலவும், நிரவும் மூன்று உலகங்களுமே நன்மை பெறும் என்பதே இந்த வருண ஜீவிகள் மேற்கொள்ளும் திருப்பணியின் தன்மையாகும்.

கை விளக்கு ஏந்திய காரிகை

இங்கு அளித்துள்ள சித்திரத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு என்ற திசைகளை நோக்கும் தீபங்கள் சற்றே சலனம் கொண்டிருந்தாலும் குபேர திசையான வடக்கு திசையை நோக்கி ஒளி பரப்பும் தீபங்கள் தெளிவாக இருப்பது குரு நம்மை ஒருபோதும் கை விடமாட்டர் என்ற தத்துவத்தை உறுதிப்படுத்துவதாகும். மேலும் நடுவில் பிரகாசிக்கும் குசா தீபம் குபேர திக்கு தீபத்துடன் இணைந்து மிளிர்வதால் இந்த தீபத்தை ஏற்றியவர் செல்வ நிறைவுடன் எப்போதும் துலங்குவார் என்பதும், கிழக்கு, தெற்கு, மேற்கு நோக்கிய தீபங்கள் வலஞ்சுழியாக அசைவதால் நடக்க இருக்கும் நிகழ்ச்சிகள் நன்மையை அளிக்கும் என்பதும் குபேர பிரச்னம் தெரிவிக்கும் இரகசியமாகும். மேலும் கருப்பு வண்ண பின்னணியில், தரையில் ஏற்றப்பட்ட தீபங்கள் இருண்ட வாழ்வில் ஒளி வீசும் தன்மையைக் குறிக்கும் என்பதும் குபேர பிரச்னம் உணர்த்துவதே. முற்காலத்தில் மணப்பெண்ணைத் தேர்ந்தெடுக்கும்போது அந்தப் பெண்ணை கையில் ஒரு தீபத்தை ஏற்றி வரும்படிக் கூறுவார்கள். அவ்வாறு வரும் அந்தப் பெண் ஏந்தியிருக்கும் விளக்கிலிருந்து வரும் ஒளிக் கதிர்கள் அந்தப் பெண்ணின் உடலெங்கும் குறிப்பாக நெற்றி, கண்கள், கன்னங்கள், அதரங்கள், மூக்கு என்ற ஐந்து பகுதிகளில் பிரதிபலிப்பதைக் கொண்டு அந்தப் பெண் தங்கள் குடும்பத்திற்கு ஒத்து வருவாளா என்பதை தீர்மானிப்பார்கள். மேலும் அந்தப் பெண்கள் தங்கள் வலது கையையோ, இடது கையையோ கொண்டு தீபத்தை மறைத்து தீப ஒளி தங்கள் மீது பிரதிபலிக்கும்படி வைத்திருப்பார்கள். இந்த பிரதிபலிப்பின் தன்மையைக் கொண்டு வரப் போகும் சந்ததியைக் குறித்த விஷயங்களையும், கற்பு நெறிகளையும் உறுதிபடுத்திக் கொள்வார்கள். இப்போது இந்த முறையை நிறைவேற்றும் அளவிற்கு மக்கள் தெளிந்த ஞானம் பெறவில்லை என்றாலும் ஆவூர் திருத்தலத்தில் குசா சக்கரத்தின் மீது ஏற்றப்படும் ஐந்து தீபங்களும் பஞ்ச பூதங்களை வழிபடுவதாக அமைவதால் நமக்கு வரும் மருமகனோ மருமகளோ குடும்பத்திற்கு ஏற்ற குத்து விளக்காக அமையும் வரத்தை அளிக்கும் என்பதே இந்த சத்யோஜாத வழிபாட்டின் சிறப்பம்சமாகும். தற்காலத்தின் கிர்லியன் போட்டோக்கள் மூலமாக மக்களுக்கு உண்டாகும் புற்று நோயின் தன்மைகளை முன்கூட்டியே அறிந்து கொள்கிறார்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உடல் பகுதிகள் ஒளிக் கதிர்களை வெளிவிடாது. இந்த ஒளி வீசும் தன்மையைக் கொண்டு உடல் நோய்களை அறிவது போல ஒரு பெண்ணின் உள்ளங்கை, உள்ளங்கை ரேகைகள் ஒரு விளக்கு ஜோதியை மறைக்கும்போது அந்தப் பெண்ணின் உடல் ஆரோக்யம், மன ஆரோக்யம் போன்ற அனைத்தையும் நம் முன்னோர்கள் அறியும் ஞானத்தைப் பெற்றிருந்தனர். தற்போது திருத்தலங்களில், குறிப்பாக ஆவூர் திருத்தலத்தில் நிறைவேற்றும் சத்யோஜாத வழிபாடு இத்தகைய ஞானத்தை சாதாரண மக்களும் பெற வழி வகுக்கும். இரத்தத்தை இதயத்திற்கு எடுத்துச் செல்லும் குழாய்களை சிரைகள் என்றும், இதயத்திலிருந்து மற்ற உறுப்புகளுக்கு இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்களை தமனி என்றும் அழைக்கிறோம். நீங்கள் கூர்ந்து கவனித்தால் வருணஜீவிகன் மனிதனின் சிரையில் அமர்ந்து கெட்ட இரத்தத்தை உறிஞ்சி இரத்தத்தை சுத்தம் செய்கின்றன என்பதை அறியும்போது நாம் பிரமிப்பு அடைவோம். தமனிகளில் செல்லும் நல்ல இரத்தத்தை அவைகள் ஒரு போதும் உறிஞ்சுவதில்லை.

மகான்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உடலில் கெட்ட இரத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை ஆதலால் சுற்றுப்புறத்தை தூய்மைசெய்யும் திருப்பணியை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ள, தகுதி பெற்ற வருணஜீவிகள் ஒரு மகானை அணுகி அவர் உடம்பிலிருந்து இரத்தத்தை எடுத்துக் கொள்ளலாமா என்று அனுமதி கேட்கும். பெரும்பாலும் அந்த மகான்கள் தன் உடலிலுள்ள எந்த இரத்தக் குழாயிலிருந்து எந்த அளவு இரத்தத்தை எடுத்துக் கொள்ள வேண்டும், அவ்வாறு எடுத்த இரத்தத்தை எங்கு எப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிப்பார். பெரும்பாலும் இத்தகைய செயல்பாடுகள் குறிப்பிட்ட திருத்தல தீர்த்தங்களை குறித்த நேரத்தில் சுத்தி செய்வதாகவே அமையும் என்றாலும் சில நோய்வாய்ப்பட்ட உத்தமர்களின் உயிர் காக்கும் சேவையாகவும், அவர்களுக்கு உரிய சஞ்சீவினி மருந்தாகவும் இவை அமைவதுண்டு. இவ்வாறு வருணஜீவிகள் நம் சற்குருவின் உடலில் இரத்தத்தை உறிஞ்சும்போது அந்த வருண ஜீவிகளுக்கு தன் திருக்கரத்தில் உள்ள ஐந்து விரல்களால் வீசி விடுவார். அந்த ஐந்து விரல் இரகசியம் இப்போது உங்களுக்குப் புரிந்து விட்டது அல்லவா ? கும்பகோணத்தில் கொசுக்களின் ஆதிக்கம் அதிகம் இருப்பதற்கு இத்தகைய கர்ம நிவாரண நடமாட்டமே முக்கிய காரணமாகும். ஒருமுறை நம் சற்குருவிடம் அத்வைத தத்துவத்தை சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி விளக்க முடியுமா என்று ஒரு அடியார் கேட்டபோது, சற்குரு, “எவ்வளவு கடினமான தத்துவத்தையும் எளிதாக்கித் தருபவர்கள்தானே சித்தர்கள். கடிக்க நினைக்கும் கொசு, அதை அடிக்க நினைக்கும் மனிதன் இரண்டையும் படைத்தது இறைவன்தானே, இதுதான் அத்வைதம்,” என்றார்கள். உங்களுக்குப் புரிகிறதா ?

வேலில்லை வினையுண்டு ?!

கருந்துளசி, மகாவில்வம், மின்னிலை போன்ற அரிய மூலிகைகளிலிருந்து மூலிகைச் சாற்றை உறிஞ்சி அதை மனிதர்களின் உடலில் இரத்தம் மூலம் செலுத்தும் நற்காரியங்களையும் வருண ஜீவிகள் ஆற்றுவதுண்டு. இத்தகைய சிகிச்சை பெருகும் முறை இந்த ஆண்டாக இருப்பதால் நாம் அனைவரும் நம் சற்குருவைப் போல் சாமரம் வீசி வருணஜீவிகளை வரவேற்காவிட்டாலும் அவை நம் உடலின் மீது அமர்ந்த உடனே அவைகளை அடித்துத் துன்புறுத்தாமல் நம்மால் இயன்ற வரை அவர்கள் பணி நிறைவேற நாம் அவர்கள் “கடியை” பொறுத்துக் கொள்ள முயற்சி செய்வோம். “ஒரு டாக்டரோ, நர்ஸோ ஒரு மனித உடலிலுள்ள வெய்னைக் (சிரையைக்) கண்டு பிடிக்க போராட வேண்டி இருக்கும்போது ஒரு கொசு ஒரே நொடியில் வெய்னைக் கண்டு பிடித்து விடுவதுதான் அதன் சிறப்பு ...,” என்பார் நம் சற்குரு.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் ஆவூர்

வேலுண்டு வினையில்லை என்று பெரியோர்கள் முருகவேளின் பெருமையைப் புகழ்ந்து கூறுவதுண்டு. வேலாயுதம் தூல உடலில் பெருகும் வினைகளை மட்டுமல்லாமல் சூட்சும உடலில், மனதில் மறைந்துள்ள கர்ம வினைகளையும் வேரறுக்க வல்லதே என்பதற்கு சான்றாக அமைவதே ஆவூர் தனுசு சுப்ரமண்ய சுவாமியின் அனுகிரக சக்தியாகும். வேல் இல்லாமல் அருள்கின்றார் முருகவேள் என்றால் வேலாயுதம் இல்லாமல் சுவாமி இருக்கிறார் என்று பொருள் அல்ல, முருகவேளின் வேல் சக்திகள் சூட்சுமமாய் இத்தலத்தில் பொலிகின்றன என்பதே இதன் பொருள். மெய்க்காவல் என்ற ஒரு வகை காவல் படை உண்டு. உயர் பதவி வகிப்போரின் உடலை, மெய்யைக் காக்கும் பணி இவர்களுடையது. இந்த மெய்க்காவல், மெய்க்காவலாக அதாவது உண்மையான காவலாக அமைய வேண்டும் என்று நினைக்கும் உயர் அதிகாரிகளும், உயர் அந்தஸ்தில் உள்ளவர்களும் இவ்வாண்டில் வழிபட வேண்டிய தெய்வமே தனுசு சுப்ரமண்யர் ஆவார். பொதுவாக, மெய்க் காவல் படையினர் தாங்கள் பாதுகாக்கும் உயர்மட்ட அதிகாரிகளை நான்கு புறமும் அமைந்து நின்று காப்பது வழக்கம் என்றாலும் இந்த காவல் படையினர் அனுஷ்டிக்க வேண்டிய கோண அளவுகள் மிகவும் முக்கியமானதாகும். இந்தக் கோண அளவுகள் நாட்டிற்கு நாடு, சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறக் கூடியது என்றாலும் நம் பண்டைய அரசர்கள், தசரதர் போன்ற சக்கரவர்த்திகள் அனுஷ்டித்த கோண அளவுகளே அப்பழுக்கில்லாத விஞ்ஞான கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்ததாகும். எனவே காவல் படையினர், சிறப்பாக மெய்க்காவல் படையினர் இத்தல நான்கு மெய்க்காவல் வில்வ மரங்களை வணங்கி வருவதால் ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் கருணையால் தங்கள் துறையில் பேரும் புகழும் பெறுவர்.

ஸ்ரீஅட்சர விநாயகர் ஆவூர்

சூரபத்மனை வதம் செய்ய பார்வதி தேவியே தன் சக்தியை வேல் வடிவில் முருகப் பெருமானுக்கு வேலாயுதமாக அளித்ததால் இவ்வாறு வேல் இல்லாமல் முருகன் அருளும் ஆலயம் சூரபத்மனுக்கு முன் தோன்றிய புராதன தலம் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைகிறது. ஸ்ரீபசுபதி ஈஸ்வரன் சுயம்பு மூர்த்தியாக மாடக் கோவிலில் தன் இரு பத்தினிகளுடன் எழுந்தருளி இருக்க தாய் தந்தையரான இம்மூவருக்கும் பாத பூஜைகளை இயற்றும் முகமாக ஸ்ரீசுப்ரமண்ய சுவாமி அடித்தள பிரகாரத்தில் எழுந்தருளி உள்ளார் என்றால் இத்தகைய சிறப்புடைய ஒரு தலத்தை எங்காவது காண முடியுமா ? தன் தாய் தந்தையருக்கு முறையாக பாதபூஜைகளை நிறைவேற்றாதவர்களும், தன் கணவனுக்கு பாத பூஜைகளை தினமும் நிறைவேற்றாதவர்களும் இத்தல ஸ்ரீசுப்ரமண்ய சுவாமியை வணங்கி வழிபடுதலால் விட்டுப் போன பாத பூஜைகளுக்கு ஓரளவு பிராயசித்தம் கிட்டும். ஆனால், அவர்கள் தங்கள் பெற்றோர்களுக்கும் கணவன்மார்களுக்கும் பாத பூஜையைத் தொடர வேண்டும். இல்லாவிட்டால் இத்தகைய கர்ம வினைகள் பல பிறவிகளுக்குத் தொடர்ந்து வந்து துன்புறுத்தும் என்பதை நினைவில் கொள்ளவும். தங்கள் பிள்ளைகள் தான்தோன்றித் தனமாய் வளர்ந்து பெற்றோர்களின் வார்த்தைகளுக்கு மதிப்புக் கொடுக்காமல் இருப்பதற்கு இத்தகைய வழிபாடுகளை மக்கள் மறந்து விட்டதே முக்கிய காரணமாகும். ஆவூர் திருத்தல முருகப் பெருமானை வழிபடுவதற்கு உரிய துதியாக திருமுருகாற்றுப்படை விளங்குகிறது என்றாலும் நக்கீரர் பாடிய சூலபாணியை ... என்ற பாடலை ஓதுவதும் ஏற்புடையதே. இந்த துதிகளை ஓதி முருகப் பெருமானை வணங்கி வந்தால் எத்தகைய முரட்டுக் குணம் உடைய பிள்ளைகளும், கணவன்மார்களும், மனைவிகளும் திருந்தி வாழ்வர் என்பதே இத்தல வழிபாட்டின் சிறப்பாகும். தனுசு என்னும் சொல் இரண்டு வல்லின அட்சரங்களுக்கு இடையே விளங்கும் மெல்லினம்தானே. இவ்வாறு இரண்டு மெல்லியலாளான வள்ளி தேவயானை இடையே விளங்கும் வல்லின வேந்தனான முருகப் பெருமான் எத்தகைய கடுமையான, வன்மையான சூழ்நிலையில் வாழ்வோரையும் காப்பாற்றுவார் என்பதே தனுசு ஏந்திய வேலவனின் அருட்கடாட்சமாகும். ஆளுமை, மென்மை, பெண்மை என்ற சக்திகளை வர்ஷிக்கும் இறை மூர்த்தியின் செல்வ மைந்தன் இத்தகைய மென்மை சக்திகளை தனுசு அனுகிரகமாக அளிப்பதில் வியப்பில்லையே. மாடக்கோயிலின் நிருதி மூலையில் அருளும் மூர்த்தியே ஸ்ரீஅட்சர விநாயகர் ஆவார். அட்சரம் என்றால் நிலையான, தெளிவான அனுகிரகத்தை அளிக்கும் மூர்த்தி என்று பொருள். இத்தகைய தெய்வ மூர்த்திக்கு நிரந்தர வண்ணமாகத் திகழும் சிவப்பு நிற செந்தாமரை, செம்பருத்தி, விருட்சிபூ போன்ற மலர்களை அணிவித்தல் சிறப்பாகும். 24 காயத்ரி அட்சர படிகள் ஏறி தரிசிக்கக் கூடிய மூர்த்தியாக இவர் திகழ்வதாலும் இவர் (காயத்ரி) அட்சர மூர்த்தியாகத் திகழ்கிறார். இரண்டின் குசாவாக நான்கு திகழ்வதாலும், இரண்டிற்கு உரிய தேய்பிறைச் சந்திரன் இந்த புத்தாண்டில் கஜகேசரி யோகம் கொள்வதாலும் பெண்கள் மூலம் அதாவது, அம்மா, மகள், மனைவி, சகோதரி, மாமியார், அத்தை, பெண் அதிகாரிகள் போன்ற அனைத்து பெண் உறவுகளால் விளையும் துன்பங்கள் அனைத்தையும் களையக் கூடிய மூர்த்தியே ஸ்ரீஅட்சர விநாயகர் ஆவார். நாள், கிழமை என்று பார்க்காமல் எந்நாளும் வணங்கி வழிபடக் கூடிய மூர்த்தியே ஸ்ரீஅட்சர விநாயகர் ஆவார். சிவப்பு பார்டர் உள்ள வெள்ளை வஸ்திரத்தை ஸ்ரீஅட்சர விநாயகருக்கு சார்த்தி வழிபடுதலால் பெண்களின் மாதவிடாய்த் துன்பங்கள் நீங்கும்.

முத்துக்கள் மூன்று ஆவூர்

படை என்றால் குறைந்தது ஒரு லட்சம் வீரர்கள் ஆயுதம் ஏந்தி போருக்குத் தயாராக நிற்கும் நிலை. திருநாவுக்கரசர் தன் கைகளில் ஏந்தி இருக்கும் உழவாரக் கருவியையும் படை என்றுதான் அழைக்கிறோம். முருகப் பெருமானின் புகழைப் பாடுவது திருமுருகாற்றுப்படை. இது எதைக் குறிக்கிறது ? ஒரு மனிதன் ஆயிரக் கணக்கான பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள கர்ம வினைகளைக் களைய லட்சக் கணக்கான நல்ல பிறவிகள், ஆற்றுப்படுத்தும் சீரிய படைகள் தேவை. அவ்வாறு ஆற்றுப்படுத்தப்பட்ட மனிதனே அழுக்காறு, அவா, வெகுளி, இன்னாச்சொல் என்ற தீமைகளிலிருந்து நீங்கி அறவானாகத் திகழ்வான் என்பது வள்ளுவர் கூறும் அறம். இவ்வாறு மனிதனும் அறவானாக மாற துணை புரிவதே இவ்வருடம் ஆவூர் திருத்தலத்தில் நிகழ்த்தும் வழிபாடுகள் என்பதை முழுமையாக உணர்ந்தால் ஒரு அடியார் கூட ஆவூர் திருத்தலத்தை விட்டு நகர மாட்டார். அத்தகைய சிறப்புகள் குவிந்துள்ள திருத்தலமே ஆவூர்.

ஸ்ரீதசரதர் சிவ வழிபாடு ஆவூர்

ஆ ஊர் என்றால் “அந்த” ஊர் என்று பொருள். அதாவது புலன்களுக்கு அப்பாற்பட்டு காலம் தேசம் கடந்து நிற்கும் ஊரே ஆவூர். இவ்வாறு “அந்த” ஊரில் காயத்ரீ மந்திரத்தை பொன் எழுத்துக்களில் தரிசித்தவரே விவேகானந்தர் ஆவார். ஆனால், இது என்றோ ஸ்ரீவிவேகானந்தர் பெற்ற அனுகிரகம் கிடையாது, இன்றும் குருவை நம்பியோர் குருவிற்கு உரிய வடக்கு திசையில் 24 காயத்ரீ அட்சர படிகளை உடைய திருத்தலத்தில் 24 அட்சரங்கள் உடைய காயத்ரீ மந்திரத்தை பொன் எழுத்துக்களில் தரிசிக்கலாம் என்பதே சித்தர்கள் இந்த வருடம் அளிக்கும் அனுகிரகமாகும். தேவை நம்பிக்கை, முயற்சி மட்டுமே. ஆவூர் திருத்தலத்தில காயத்ரீ தரிசன சக்தியை அளிக்கும் மூன்று மந்திரங்களை சித்தர்கள் அளித்துள்ளனர்.

1. ஓம் பூர் புவ சுவஹ தத் சவிதூர் வரேண்யம்
பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோந ப்ரசோதயாத்
2. ஆவூர் பசுபதி ஈச்சரம் ஆவூர் பசுபதி ஈஸ்வரன்
3. அட்சர அட்சர பாஹிமாம் அட்சர அட்சர ரக்ஷமாம்
என்று மூன்று மந்திரங்களில் ஏதாவது ஒன்றை நம்பிக்கையுடன், சிரத்தையுடன் ஓதி ஆவூர் திருத்தலத்திலுள்ள 24 காயத்ரி படிக்கட்டுகளை ஏறி இறங்கி இவ்வருடம் வழிபாடுகளை இயற்றுவதால் நாமும் காயத்ரீ மந்திர அட்சரங்களை பொன் எழுத்துக்களாக தரிசிக்கும் அனுகிரகத்தைப் பெறுவோம். புலன்களுக்கு அப்பாற்பட்டு விளங்கும் இறைவன் சக்தி அம்சத்துடன் சேர்ந்து ஒலியாக முதலில் தோன்றினான். இதையே பிரணவத்துள் விளங்கும் சிதம்பர இரகசியம் என்று அழைக்கிறோம். ஒலியாக ஒலிக்குள் ஒளிந்தவனே சிதம்பரத்தான் என்பது நம் சற்குரு அளிக்கும் சிதம்பர இரகசிய விளக்கம். இவ்வாறு ஒலியான இறைவன் அளிக்கும் ஒளித் தோற்றமே காயத்ரீ போன்ற மந்திர வடிவங்கள் ஆகும். புலன்களுக்கு அப்பாற்பட்ட இறைவனின் மந்திர ஒலி வியாபகத்தை, மந்திர ஒளி வடிவம் கால தேசங்களுக்கு அப்பாற்பட்டு விளங்கினாலும் உயிர்கள் மேலுள்ள பெருங்கருணையால் இந்த ஒலி ஒளி வடிவங்களை சித்தர்கள் சிதம்பரத்திலும், இந்த புத்தாண்டில் ஆவூர் திருத்தலத்திலும் அளிக்கிறார்கள். இவை எல்லாம் தத்துவார்த்த விளக்கங்களே. இந்த தத்துவங்களிலிருந்து விலகி நடைமுறையில் இறைவனின் அனுகிரகத்தைப் பெற விழைபவர்களுக்கே பஞ்சதீப, பஞ்சகவ்ய வழிபாடுகள், காயத்ரீ படிக்கட்டு வழிபாடுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஈ, எறும்பு, யானை, சிங்கம், கரடி போன்றவற்றால் நமக்கு எந்தவிதமான நேரிடையான பயனும் கிடையாது. ஆனால், இவை எல்லாம் இறை அருளைப் பொலியும் அற்புத இறை சாதனங்களே. இதைப்போல் மனிதர்களிலும் அற்புத குணம் படைத்தவர்கள் ஏராளமாய் உண்டு. இவ்வாறு இறைவனின் அனைத்து படைப்புகளிலும் துலங்கும் இறைத்தன்மை என்ன என்பதை துருவி ஆராய்ந்து அதை நாம் வாழ்க்கைக்கு பயன்படுத்தி நம் வாழ்வை நிறைவு செய்து கொள்வதே, பூரணமாக, முழுமையாக்கிக் கொள்வதே இவ்வருடம் நீசபங்கம் இராஜ யோகம் பெற்ற குரு பகவான் அளிக்கும் அனுகிரகமாகும். இந்த அனுகிரகத்தைப் பெறுவோம், இந்த புத்தாண்டு முதலாவது அனைவரும் ராஜாவாக, ராஜாபோல் வாழ்வோமே !

அன்னப் பறவையாய் வாழ வேண்டிய ஆண்டே 2021 !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam