இன்றைய நட்சத்திரம் நீங்களா ?!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீஅறையணிநல்லூர் ரூபன்

திருக்கோயிலூரில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலமே அரகண்டநல்லூர் என்று மக்களால் அழைக்கப்படும் அறையணிநல்லூர் சிவத்தலமாகும். இறைவன் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர், இறைவி ஸ்ரீசௌந்தர்ய கனகாம்பிகை. நமது பூவுலகில் எவ்வளவு உயரமான மலையாக இருந்தாலும் அது வானத்திலிருந்து பார்க்கும்போது மிகவும் குறைந்த உயரத்துடன்தானே திகழும். அதிலும் மற்ற நட்சத்திர லோகங்களிலிருந்து பார்த்தால் இமயமலையில் உள்ள எவரெஸ்ட் சிகரமும் ஒரு தூசு தூசுதானே. இவ்வாறு நீங்கள் வானில் பிரகாசிக்கும் ஒரு நட்சத்திரமாக திகழ நம் சற்குருவால் அளிக்கப்பட்டுள்ளதே கீழ்க் கண்ட திருத்தல வழிபாடுகளாகும்.

ஆலகிராமம்

அறையணிநல்லூர் திருத்தல நாதனின் திருநாமம் ஸ்ரீஅதுல்யநாதேஸ்வரர். அதுல்ய நாதன் என்றால் ஈடு இணையற்ற நாதன், தன்னிகரில்லா தலைவன், தனக்கு ஒப்பாரில்லா உயர்ந்த நிலையில் உள்ளவன் என்றெல்லாம் பொருளுண்டு. இவ்வாறு ஒப்பாரில்லா தலைவனான முருகப் பெருமானை குழந்தையாகப் பெற அன்னை பார்வதி தேவி அருந்தவம் இயற்றிய திருத்தலமே திண்டிவனம் அருகில் தற்போது ஆலகிராமம் சிற்றூரில் உள்ள ஸ்ரீதிரிபுர சுந்தரி சமேத ஸ்ரீஎமதண்டீஸ்வரர் திருத்தலமாகும்.

தண்டம் என்றால் கோல், அடையாளம், அத்தாட்சி என்றெல்லாம் பொருள்படும். ஞான தண்டம் ஏந்திய ஞான வேல் முருகனைப் பெறுவதற்கு ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்பிகை தவமியற்றிய அற்புத தலமே ஆலகிராமம் ஆகும். ஒரு காலத்தில் திருஅண்ணாமலையில் கல்லால மர வகையைச் சேர்ந்த மணவாள ஆல மரங்கள் என்ற ஒரு வகை ஞான வளங்கள் மிகுந்த ஆலமரங்கள் செழித்திருந்ததே ஆலகிராமம் ஆகும்.

நம் சற்குரு போன்ற மகான்கள் ஒரு திருத்தலத்திற்கு சென்றால் அவர்கள் தம் திருவடிபட்ட தலங்கள் எல்லாம் ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு புனருத்தாரணம் பெறும். அவ்வாறிருக்க கனிந்த கனி பரமாச்சாரியார் ஆலகிராமம் திருத்தலத்திற்கு குறைந்தது 12 முறை விஜயம் செய்து வழிபாடுகள் இயற்றியுள்ளார்கள் என்றால் ஆலகிராமம் தலத்தின் புனித சக்திகள் எந்த அளவிற்கு நம் உலகில் விரவி இருக்கும்.

சந்தான சக்திகள் நன்முறையில் ஆலவிருட்சமாக விருத்தியாகி, தழைத்து பெருகவே காஞ்சி கனிந்த கனி இத்தகைய வழிபாடுகளை கனிந்து மேற்கொண்டார் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும்.

ஒவ்வொரு தமிழ் வருடமும் மகர ராசியில் சூரிய பகவான் பிரவேசிப்பதை நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுவது வழக்கம் என்பது நீங்கள் அறிந்ததே. இதுவே உத்தராயண புண்ணிய காலமாக தை மாதப் பிறப்பாக அமைகின்றது. இந்த சோபகிருது வருட பொங்கல் திருவிழாவை திண்டிவனம் அருகில் உள்ள ஆலகிராமம் திருத்தலத்தில் ஸ்ரீயமதண்டீஸ்வர ஆலயத்தில் கொண்டாடி மகிழுமாறு நம் சற்குரு அருள் வழிகாட்டுகிறார்.

மணவாள தீர்த்தம் ஆலகிராமம்

14.1.2024 ஞாயிற்றுக் கிழமை இரவு சுமார் 2.45 மணிக்கு சூரிய பகவான் மகர ராசியில் பிரவேசம் செய்கிறார். எனவே அடியார்கள் அன்று இரவு 3.00 மணிக்கே ஆலகிராமம் திருத்தல மணவாள தீர்த்தத்தில் நீராடி, அத்திருக்கோயில் வளாகத்தில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் அடுப்பு வைத்து சமைத்து, புதுப் பானையில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து சூரிய உதயத்தில் அதாவது 15.1.2024 திங்கட் கிழமை சுமார் காலை 6.45 மணிக்கு சூரிய பகவானுக்கு நைவேத்யம் செய்து திருக்கோயிலுக்கு தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு அன்னதானமாக அளித்து விடவும்.

தோகையுடன் கூடிய மூன்று முழுக் கரும்புகளை ஒன்றாகக் கட்டி அடுப்பைச் சுற்றி வைத்து விடவும். ஆயுத எழுத்து வடிவத்தில் அமைந்த இந்த சக்கரத்தின் இடையே பொங்கல் தயார் செய்து வழிபடுவதால் குருவின் அனுகிரக சக்திகளை பூரணமாய்ப் பெற உதவும் என்பதும் ஒரு காரணமே. இந்த அடுப்பிற்கு எரிபொருளாக பசு விராட்டி, சவுக்கு விறகு, ஆல மர சமித்துகள் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

சர்க்கரைப் பொங்கலை சூரிய நாராயண சுவாமிக்கு நைவேத்யமாக அளித்த பின்னர் இந்தப் பொங்கலை பானையுடன் தானமாக அளித்து விடவும். சர்க்கரைப் பொங்கலை கிண்டுவதற்கு கரும்புத் துண்டை பயன்படுத்துவதால் பிரஹஸ்பதி சக்திகள் என்ற குரு அனுகிரகம் இந்தப் பொங்கலில் நிறையும் என்பதையும் அடியார்கள் நினைவில் கொள்ளவும்.

திருக்கோயிலில் எழுந்தருளி உள்ள நந்தி மூர்த்தியைச் சுற்றி படத்தில் காட்டியுள்ளபடி ஓம் என்று அரிசி மாவால் வரைந்து அதில் எத்தனை செம்புகளில் மணவாள தீர்த்தம் பெற்று அந்த தீர்த்தக் கலசங்களை தேங்காய், மாவிலையுடன் வைக்க முடியுமோ அத்தனை கலசங்களை வைத்து வழிபட்டு இந்த கலச தீர்த்தம் அனைத்தின் மேலும் சூரிய உதயத்தில் சூரிய ஒளி வர்ஷித்ததும் அந்த தீர்த்தம் அனைத்தையும் இறைவன் ஸ்ரீஎமதண்டீஸ்வரரின் அபிஷேகத்திற்கு அளித்து விடவும். கலச தீர்த்தத்தில் மற்ற திருத்தல தீர்த்தங்களையும், கங்கை, காவிரி புனித தீர்த்தங்களையும் சேர்த்தல் ஏற்புடையதே. Heena 360 என்ற நறுமணத்தை இறைவனின் அபிஷேகத்திற்காக இந்த வருடம் முழுவதும் பயன்படுத்துதல் சிறப்புடையதே.

அஷ்டக நந்தி மூர்த்தியைச்
சுற்றி ஓங்காரம் வரையும் முறை

குறைந்தது ஒரு அடியாரின் குடும்பத்திற்கு ஒரு கலசம் என்ற முறையில் கலசம் தயார் செய்து அளிப்பது சிறப்பு. அறிந்தவர்கள், அறியாதவர்களின் மேன்மைக்காவும் இவ்வாறு மணவாள கலச தீர்த்தம் அபிஷேகத்திற்காக அளிப்பது சிறப்பே. மணவாள தீர்த்தத்தில் நீராடிய பின்னர் திருக்கோயிலை
ஜபா குசும சங்காசம்
காஸ்யபேயம் மகத்யுதிம்
தமோரிம் சர்வ பாபக்நம்
பிராணதோஸ்மி திவாகரம்
என்ற துதியை வாய்விட்டு பாடியவாறே வலம் வந்து கொண்டே இருத்தல் சிறப்பாகும். இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றிய பின்னரும் இந்த சூரிய துதியை எத்தனை முறை வேண்டுமானாலும் ஓதி பயன்பெறலாம். இவ்வாறு உத்தராயண புண்ணிய காலத்தில் இத்தலத்தில் ஓதும் புண்ணிய சக்திகளின் பலன்களை குறைந்தது ஆயிரம் மடங்காக பெருக்கி வர்ஷிப்பதாக இத்தலத்திற்கு விஜயம் செய்த சமயங்களில் எல்லாம் காஞ்சி கனிந்த கனி சங்கல்பித்து இறைவனிடம் அர்ப்பணித்து உள்ளதால் இந்த அரிதிலும் அரிய வாய்ப்பை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

பொதுவாக, திருக்கோயில்களில் சுவாமிக்கும் நந்திக்கும் இடையே செல்லக் கூடாது என்ற விதி முறை உண்டு. சுவாமிக்கும் நந்திக்கும் இடையே சுவாச பந்தனம் இருப்பதால் இதை களைக்கக் கூடாது என்ற விதிமுறையின் காரணமாகவே, இவ்வாறு பக்தர்கள் நந்தியின் மூச்சைக் களைப்பதான பணியில் ஈடுபடுவதாக இத்தகைய குறுக்கீடு அமையும் என்பதற்காக நம் முன்னோர்கள் இத்தகைய விதிமுறையை வைத்தனர்.

விதி என்று ஒன்று இருந்தால் அதற்கு விலக்கு என்ற ஒன்றும் நிச்சயம் இருக்கத்தானே செய்யும். இம்முறையில் சுவாமிக்கு அபிஷேக ஆராதனைக்காக மணவாள தீர்த்தக் கலசங்களை அஷ்டக நந்தி மூர்த்தியைச் சுற்றி வைத்து வழிபடுவது ஏற்புடையதே. இருந்தாலும் அடியார்கள் நலன் கருதி நம் சற்குரு அளித்துள்ள கீழ்க்கண்ட இரண்டு காயத்ரீ மந்திரங்களையும் குறைந்தது 12 முறை ஓதி தீர்த்தக் கலசங்களை அமைப்பதால் எந்தவித நந்தி சுவாச இடர்களும் அமையாது, அது மட்டுமல்லாமல் இந்த பிரபஞ்சத்திற்கே அருளும் அஷ்டக சக்திகளையும் இந்த வழிபாடு பெருக்கித் தரும் என்பதே நம் சற்குருவின் வழிகாட்டுதலாகும்.

ஓம் தத் புருஷாய வித்மஹே ரிஷப தேவாய தீமஹி
தந்நோ நந்தீஸ்வர ப்ரசோதயாத்
ஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே மஹா தேஜோ மயாய தீமஹி
தந்நோ சூர்ய ப்ரசோதயாத்

தீர்த்தக் கலசங்கள் அமைக்காது வெறுமனே ஸ்ரீஎமதண்ட ஈசனை வழிபடச் செல்பவர்களும் இவ்வாறு 12 முறை காயத்ரீ மந்திரங்களை ஓதி அஷ்டக நந்தி மூர்த்தியை வலம் வந்து வழிபடுவதும் சிறப்பான பலன்களைத் தரும்.

உத்தால மகரிஷி வழிபட்ட
சிவலிங்கம் ஆலகிராமம்

ஷன்னவதி தர்ப்பணம் என்று ஒரு வருடத்தில் 96 நாட்கள் தர்ப்பணம் செய்ய வேண்டிய வழிபாட்டு முறை பற்றி நீங்கள் நன்கு அறிவீர்கள். இதில் அஷ்டக தர்ப்பணம் என்பது மார்கழி, தை, மாசி, பங்குனி என்ற நான்கு மாதங்களிலும் 13, 14, 15 என்ற தேதிகளில் நிறைவேற்ற வேண்டிய தர்ப்பணம் ஆகும். இந்த அஷ்டக தர்ப்பணத்தில் தோன்றுவதே சூரிய மண்டலத்தில் இருந்து பெறப்படும் அஷ்டகாமிர்தம் என்ற ஆரோக்ய சக்திகளாகும். நாம் அறிந்தது சூரிய நிறமாலையில் தோன்றும் ஏழு ஒளி வண்ணங்களே. இதில் எட்டாவது ஒளி சக்தியாக, அஷ்டக ஆரோக்ய சக்திகளாக நாம் பெறக் கூடிய திருத்தலமே ஆலகிராமம் சிவத்தலமாகும்.

கனிந்த கனி பரமாச்சாரியார் 12 முறை ஆலகிராமம் சிவாலயத்திற்கு வந்த இரகசியம் இப்போது ஓரளவு புலனாகின்றது அல்லவா? அஷ்டக ஆரோக்ய ஒளியை மக்கள் புரிந்து கொள்ளும் அளவிற்கு இனம் பிரித்து காட்ட முடியாது என்றாலும் மயில் கழுத்து நிறமான நீல வண்ணமாக ஒளிர்வதே இந்த ஆரோக்ய கதிர்களின் வண்ணமாகும். இந்த நிற சக்திகளை ஓரளவு பெறும் வண்ணமாக அம்பிகை ஸ்ரீதிரிபுர சுந்தரிக்கு நீல நிறத்தில் உள்ள ஒன்பது கஜ புடவையால் அலங்கரித்து வழிபாடுகள் இயற்றும்படி பணிக்கிறார் நம் சற்குரு.

அஷ்டக தர்ப்பணம் என்னும்போது அது சனி பகவானின் ஆட்சி ராசியான மகரம், கும்பம் என்றவாறு அமைந்து அந்த இரண்டு ராசிகளும் குரு பகவானின் ஆட்சி ராசிகளான தனுசு, மீனம் என்ற ராசிகளுக்கிடையே அமையும் என்பதே இந்த தர்ப்பணத்தின் ஜோதிட விளக்கமாகும். அஷ்டக வண்ணம் என்பது ஏன் சனி பகவானுக்கு உரித்த கருநீல வண்ணமாக அமைகிறது என்பது இப்போது ஓரளவு புலனாகின்றதே.

ஜேஷ்டாதேவி சமேத உத்தாதலக மகரிஷி தம்பதியரைப் பற்றி நாம் அறிவோம். பாற்கடலிலிருந்து தோன்றிய மூத்த லட்சுமியான ஜேஷ்டாதேவியை எவரும் ஏற்க முன்வராத போது ஸ்ரீஉத்தாதலகர் அல்லது உத்தாலர் என்பவரே தியாகச் செம்மலாய் உதித்து ஜேஷ்டாதேவியை மனைவியாக ஏற்றார். மூதேவி என்பது ஜேஷ்டாதேவியின் நாமங்களில் ஒன்று என்பதால் பெயருக்கு ஏற்றபடி பலப்பல உடல் கஷ்டங்களை அனுபவித்து வந்த உத்தால மகரிஷி மக்கள் அனைவரின் கஷ்டங்களின் ஒரு பகுதியை தாம் ஏற்கவும் இறைவனின் அனுமதி பெற்று என்றென்றும் தியாக மூர்த்தியாய் உலா வருகிறார்.

உத்தாலக மகரிஷியின் திருமணத்திற்கு முன்னரே தோன்றிய திருத்தலம் என்றால் ஆலகிராமம் வரலாறு காலம் கடந்த தெய்வீக மகாத்மியம் உடையது என்பது தெளிவாகின்றது அல்லவா? உத்தால மகரிஷி தன்னுடைய அரும்பெறும் தவப் பயனாய் ஆலகிராமம் திருத்தலத்திற்கு திருக்கைலாயத்தில் பொலிந்த உத்தால மரம் என்பதை தல விருட்சமாக கொண்டு வந்தார் என்பதே உத்தால மரத்தின் தெய்வீக மகாத்மியமாகும். ஆதியில் தோன்றிய உத்தால மரம் இன்று இத்திருத்தலத்தில் மறைந்து விட்டாலும் அடியார்கள் மீண்டும் அந்த மரத்தை செழிக்கச் செய்தல் இந்த வருடம் ஆற்றக் கூடிய ஒரு தெய்வீகத் தொண்டாகும்.

ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன்
ஆலகிராமம்

அடியார்கள் புதிதாக ஆடைகளை அணிந்து கொள்வதற்கு முன்னும், தானத்திற்காக புத்தாடைகளை அல்லது பழைய ஆடைகளை தானமாக அளிக்கும் முன்னும் கீழ்க்கண்ட காயத்ரி மந்திரத்தை குறைந்தது 12 முறை ஓதி தானமளித்தலால் அந்த ஆடையில் உள்ள தோஷங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ள தறி, க்னா என்ற தேவதைகள் காத்திருக்கின்றனர் என்பதே வஸ்திர தேவதைகளின் அருட்பாங்கு. இவ்வாறு தோஷங்கள் நீக்கும் அனுகிரக சக்திகளை வஸ்திர தேவதைகள் இந்த யுகத்தில் பெற்ற திருத்தலமே ஆலகிராமமாகும்.
ஓம் தத் புருஷாய வித்மஹே
ந ம சி வ ய தேவாய தீமஹி
தந்நோ பஞ்சபூத வஸ்திர தோஷ நிவர்த்தி ப்ரசோதயாத்

உத்தால மரத்திலிருந்து பெறப்பட்டதே நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் விநியோகிக்கப்பட்ட தீனக் காப்பு என்ற மர வளையல் ஆகும். பகல் நேரத்தில் ஆண்கள் இந்த தீனக் காப்பு வளையத்தை வலது கையிலும் இரவில் இடது கையிலும் அணிந்து கொள்ள வேண்டும் என்பது இந்த வளையலைப் பயன்படுத்தும் முறையாகும். பெண்கள் இந்த வளையத்தை இரு கைகளிலும் அணிந்து கொள்ள வேண்டும் என்பதே முறை.

ஆயிரம் ஆண்டுகள் ஆத்ம விசாரம் செய்தாலும் இந்த வளையல்களின் பெருமையை அறிந்து கொள்ள முடியாது என்பதே உத்தால மர வளையலின் தெய்வீகத் தன்மை ஆகும். ஆனாலும், ஓரளவு இந்த வளையல்களின் மகத்துவத்தை அறிந்து கொள்ள உதவி செய்வதே ஆலகிராமம் திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மன் இரு கைகளிலும் ஏந்தி இருக்கும் தாமரை மலர்களைக் குறித்து ஆத்ம விசாரம் செய்து வருவதாகும்.

ஒரு பட்டை லிங்கத்தின் மகிமையை அறிந்து கொள்ள ஒரு கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்று சொல்வதுபோல் எம்பெருமானின் ஒவ்வொரு நடனக் கோல இரகசியத்தைப் பற்றியும் புரிந்து கொள்ள ஒரு கோடி ஆண்டுகள் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் என்பதும் உண்மையே. உதாரணமாக, ஆலிங்கன நர்த்தனம் என்ற சிவபெருமானின் ஆனந்தக் கூத்து நடனம் ஒன்று உண்டு. இந்த நடனத்தில் சிவ சக்தி ஐக்ய இரகசியங்கள் அனைத்தும் பூரணமாய்ப் பொங்கி பொலிகின்றன என்பதே நம் சற்குரு கூறும் இரகசியம். இந்த ஆலிங்கன நாட்டியத்தில் எம்பெருமான் தன் வலது கையில் உடுக்கையையும் இடது கையில் அக்னியையும் தாங்கி இருக்க, அம்பாள் தன் வலது கை, இடது கை இரண்டிலுமே தாமரை மலர்களை ஏந்தி இந்த நடனக் கூத்து நாயகியாய் திகழ்கின்றாள் என்பதே நம்மை பிரமிக்க வைக்கும் நாட்டிய கோலமாகும்.

அடியார்கள் சற்றே ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலும் இந்த ஆலிங்கன நாட்டியக் கோலத்தில்தான் ஆலகிராம அம்பிகையும் திகழ்கின்றாள் என்பது எத்தகைய பிரமிப்பை உண்டாக்கும் தரிசனக் காட்சி ?!

இந்த ஆலிங்கன நடனக் கூத்து இரகசியங்களை அறிந்து கொண்டவர்களை கனிந்த கனி, நம் சற்குரு, உத்தால மகரிஷி, காரைக்கால் அம்மையார் என்று விரல் விட்டு எண்ணி விடலாம்.

பிராணாயாமம் என்ற மூச்சுப் பயிற்சியில் அமையும் தத்துவங்களைப் புரிந்து கொண்டால் இந்த ஆத்ம விசாரம் பயன் தருவதாக அமையும். பிராணாயாமத்தில் வலது மூக்கின் வழியாக சுவாசம் செல்லும்போது அது சூரிய கலையில் பரிணமிப்பதாகவும், இடது மூக்கின் வழியாக சுவாசம் செல்லும்போது அது சந்திர கலையில் பரிணமிப்பதாகவும் அமையும். இரு மூக்கின் வழியாக சுவாசம் சென்றால் அப்போது சுசும்னா நாடி வழியாக மூச்சுக் காற்று செல்வதாக பொருள். இவ்வாறு சூரிய கலையும் சந்திர கலையும் ஒன்றில் ஒன்று லயமாகி விடுவதே சுசும்னா நாடியில் சுவாசம் செல்ல ஏதுவாகும். இவ்வாறு சுசும்னா நாடியில் லயமாகும் சூரிய சந்திர கலைகளே குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுவதற்கு ஏதுவாக அமையும் என்பதே இந்த மூச்சுப் பயிற்சியில் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தத்துவமாகும்.

அஷ்டக நந்தீஸ்வர மூர்த்தி
ஆலகிராமம்

இவ்வளவு எளிமையாகத் தோன்றும் பிராணாயாம பயிற்சியில் நாம் ஏன் முன்னேறவே முடியவில்லை என்பது பல அடியார்களின் கேள்விக் குறி. இதற்கு விடையாக வருவதே அவரவர் சேர்த்து வைத்திருக்கும் கர்ம மூட்டைகளின் அழுத்தமாகும். இந்த கர்ம வினைகளை பொடியாக்கி அடியார்கள் ஆன்மீகத்தில் முன்னேற வழிவகுப்பதே ஆலகிராம திருத்தலத்தில் வழிபாடுகளை ஆரம்பித்து தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஷன்னவதி தர்ப்பணத்தை அளித்து வருவதாகும். சிறப்பாக சனி கிரகமும் குரு கிரகமும் ஆட்சி கொள்ளும் ராசிக் காலங்களில் அஷ்டக ஷன்னவதி தர்ப்பணம் அமைவதால் கர்ம வினைகளின் அழுத்தம் வெகுவாகக் குறைய இத்திருத்தல வழிபாடுகள் உறுதுணையாக அமைகின்றன.

லக்னத்தில் சனி பகவான் அமைந்த நம் சற்குருவின் ஜாதகத்தையும், லக்னத்தின் இரண்டாம் இடத்தில் சனி பகவானைக் கொண்ட கனிந்த கனியின் ஜாதகத்தையும் சற்றே ஆழ்ந்து நோக்கினாலும் இந்த இரு குருமார்களும் மக்களின் மேன்மைக்காக எந்த அளவு பாடுபடுகிறார்கள் என்பது தெரியவரும். ஒரு கோடி ஆண்டுகள் எடுத்துக் கொள்ளும் என்றாலும் இந்த அற்புத ஆலிங்கன நடனத்தின் பலாபலன்களை அடியார்களுக்கு அளிப்பதற்காகவே உத்தால மரத்தால் அமைந்த வளையல்களை அணியும்படி நம் சற்குரு பணிக்கிறார் என்றால் இந்த சிவகாம சுந்தரியின் நாட்டியப் பலன்களை நாம் அடைய கனிந்த கனி, உத்தால மகரிஷி இவர்களும் இணைந்து ஆற்றும் அரும் பணியைப் பற்றி நாம் வார்த்தைகளால் விவரிக்க இயலுமா?

கிழமை என்னும்போது அது ஒரு நாள் சூரிய உதயத்திலிருந்து மறுநாள் சூரிய உதயம் வரை உள்ள நேரமே என்பது நாம் பொதுவாக கைக்கொள்ளும் விதி. அதே சமயம் ஒரு நாளின் விடியற்காலையில் திகழும் கிழமையையே அன்றைய கிழமையாக நாம் பல காரியங்களுக்கும் ஏற்று பயன்படுத்தி வருகிறோம் என்பதையும் நாம் மறுக்க முடியாது. இவ்வாறு அமைவதுதான் ஷன்னவதி அஷ்டக சக்திகளும் ஆகும். மார்கழி மாதம் முதல் பங்குனி வரை அளிக்கும் தர்ப்பண சக்திகளே அஷ்டக நிற சக்திகளாக உருவாகின்றன என்றாலும் இந்த அஷ்டக நிறமாலை சக்திகளை ஆரோக்கிய சக்திகளாக ஸ்ரீஎமதண்டீஸ்வர மூர்த்திக்கு வர்ஷித்து ஆராதனை நிகழ்த்துபவர்களே சூரிய பகவானும் ஆலகிராம திருத்தலத்தில் உறையும் அஷ்டக நந்தி மூர்த்தியும் ஆவர்.

இத்தகைய சிறப்பான அனுகிரகத்தை அளிக்கவல்ல மூர்த்தியாக இருக்கும் காரணத்தாலேயே இந்த நந்தி மூர்த்தி ஸ்ரீஅஷ்டக நந்தீஸ்வரர் என்று காஞ்சி கனிந்த கனியால் அழைக்கப்பட்டார். நாமும் இந்த மரபை ஒட்டி ஆலகிராம நந்தீஸ்வர மூர்த்தியை அஷ்டக நந்தீஸ்வர மூர்த்தி என்றே அழைப்போம்.

ஸ்ரீஅய்யனார் சுவாமி
ஆலகிராமம்

ஒவ்வொரு வருட சித்திரை மாதம் சூரிய பகவான் மேஷ ராசியில் உச்சம் கொள்ளும் நாளில் (பொதுவாக, சித்திரை 10ம் நாள்) ஆலகிராமத்தில் வழிபாடுகளை இயற்றுவதால் அஷ்டக நந்தி மூர்த்தி அருளும் அஷ்டக சக்திகளை நாம் நிறமாலை ஆரோக்கிய சக்திகளாகப் பெற முடியும். இந்த சக்திகளைப் பெற ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மனுக்கு ஆரஞ்சு வண்ண புடவையை சார்த்தி வழிபடுதல் சிறப்பாகும். தை மாதப் பிறப்பன்று மயில் கழுத்து நிற வண்ண ஆடையையும் சித்திரை மாதத்தில் ஆரஞ்சு வண்ண ஆடையையும் சார்த்துதலால் எப்படி ஒரு ஆடை வண்ணமே பக்தர்களுக்கு அவர்கள் கனவிலும் கருத முடியாத ஆரோக்கிய சக்திகளை அளிப்பதாக அமைவதே நம் சற்குருவின் வழிகாட்டுதலில் உள்ள ஆழ்ந்த மகத்துவமாகும்.

பல திருத்தலங்களிலும் அம்பிகை மூர்த்திகள் இரு கைகளிலும் தாமரை மலர்களை ஏந்தி அருள்வதை நாம் தரிசித்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஆலகிராம அம்பிகை ஏந்தும் தாமரை மலர்களுக்கு மட்டும் ஏன் இந்த தனிச் சிறப்பு உண்டாகிறது என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். இதற்கான பல சிறப்பான காரணங்களுள் ஒன்றே அம்பிகை ஆலிங்கன நடன ஐக்யத்தில் எழுந்தருளி இருப்பதாகும்.

ஆலிங்கன நடனக் கோல தத்துவங்களை அடியார்களின் நலனுக்காக ஸ்ரீதிரிபுர சுந்தரி அம்மனின் திருவடிகளில் பிரதிஷ்டை செய்து அளித்தவரே ஸ்ரீஆதிசங்கர பகவத் பாதாள் ஆவார். ஸ்ரீசக்கரத்தின் சக்திகளே ஆலிங்கன நடன கோலத்தின் ஒரு அம்சமாகப் பொலிகின்றது என்றால் மிகையாகாது. இரண்டு பரிமாணங்களில் எழுந்தருளிய ஸ்ரீசக்கரம், முப்பரிமாணத்தில் எழுந்தருளிய மேரு ஸ்ரீசக்கரம் என்று ஸ்ரீசக்கரங்களிலும் பல விதங்கள் உண்டு.

கனிந்த கனி ஒவ்வொரு முறை ஆலகிராமத்தில் எழுந்தருளிய போதும் இந்த ஆலிங்கன ஸ்ரீசக்கர அம்சங்களும் புனருத்தாரணம் பெற்றன என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் இரகசியமாகும். எப்போதோ நிகழ்ந்த இந்த ஆலிங்கன நர்த்தனத்தால் இப்போதும் நிகழும் சில அற்புதங்களைப் பற்றி இங்கு குறிப்பிடுகிறோம்.

ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு நிர்விகல்ப சமாதி நிலையை உபதேசித்த தோத்தாபுரி மூன்று நாட்கள் நிர்விகல்ப சமாதியில் நிலைத்த பரமஹம்சரைக் கண்டு தாங்க முடியாத ஆச்சரியம் அடைந்தார் என்பது நாம் அறிந்ததே. பரமஹம்சர் நிர்விகல்ப சமாதி நிலையிலிருந்து மீள்வதற்காக அவர் காதில் ஓங்காரத்தை மூன்று முறை ஓதினார் தோத்தாபுரி. ஆலிங்கன நர்த்தன சக்திகளுக்கு தோத்தாபுரி என்ற அத்வைதி அளித்த நாமமே நிர்விகல்ப சமாதி என்பதாகும். இதன் ஒரு நிலையை மக்களுக்கு பயன்தருவதற்காக அளித்தவரே கனிந்த கனி.

ஸ்ரீமகாவிஷ்ணு ஆலகிராமம்

பல வீடுகளிலும் அக்னி மூலை என்ற தென்கிழக்கு மூலையில் சமையலறை அமையாதது போன்ற வாஸ்து தோஷங்கள் நிறைந்திருக்கும். இத்தகைய தோஷங்களுக்கு ஓரளவு நிவாரணம் அளிப்பதே சனிக் கிழமைகளில்
ஓம் தத் புருஷாய வித்மஹே
வராஹி சமேதாய தீமஹி
தந்நோ ஆமநாசன ப்ரசோதயாத்
என்ற காயத்ரி மந்திரத்தை 35 முறைக்குக் குறையாமல் ஓதி ஆலகிராமம் போன்று கோஷ்டத்தில் மகாவிஷ்ணு எழுந்தருளிய தலங்களில் சுவாமியை வலம் வந்து வணங்கி கழுதைகளுக்கு காரட், பச்சை பட்டாணி போன்ற உணவு வகைகளை தானம் அளித்து வருதலாகும். வாஸ்து நாட்களில் இத்தகைய வழிபாடுகளைத் தொடர்வதும் அற்புத பலன்களை வர்ஷிக்கும். அலுகலகங்களில் ‘மாடாய் உழைக்கும், கழுதையாய்ச் சுமக்கும்’ உயர்ந்த பட்டதாரிகளும் இத்தகைய தானங்களால் நலம் அடைவர்.

ஆலகிராமத்தில் முகாமிட்டிருந்த கனிந்த கனியை ஒரு பக்தர் தன்னுடைய இல்ல கிரகப் பிரவேசத்திற்கு வருமாறு அழைத்தார். அந்த பக்தரின் அழைப்பை ஏற்று அன்று மாலை சுமார் ஏழு மணி அளவில் சென்ற கனிந்த கனி அந்த பக்தருடைய இல்லம் இருளில் மூழ்கிக் கிடப்பதைக் கண்டார். கிரகப் பிரவேசம் என்ற சிறப்பான நிகழ்ச்சியின்போது அந்த இல்லம் இருளில் குளித்ததன் காரணத்தை வினவியபோது அரசாங்கத்திற்கு சேர வேண்டிய தொகை அனைத்தையும் உரிய காலத்தில் செலுத்தியிருந்தாலும் ஏதோ சில காரணங்களால் அந்த புது வீட்டிற்கு மின்சார இணைப்பு கிடைக்கவில்லை என்று அந்த பக்தர் தெரிவித்தார்.

கனிந்த கனியும் அந்த பக்தர் கூறியது அத்தனையும் பொறுமையாகக் கேட்டு விட்டு மின்சார சப்ளை செய்யும் மெயின் போர்டு எங்கிருக்கிறது என்பதை கேட்டு அறிந்து கொண்டு அந்த மெயின் இணைப்பிற்கு சென்று தன்னுடைய விரலை அந்த மெயின் சுவிச்சில் வைத்து எடுத்தார். அவ்வளவுதான் ... மறு விநாடி அந்த இல்லத்தில் உள்ள அனைத்து விளக்குகளும் பளிச்சென எரிந்து வெளிச்சம் தந்து பிரகாசித்தன. இதில் ஆச்சரியம் என்னவென்றால் சுவிட்ச் போட்ட பல்புகள், சுவிட்ச் ஆப் செய்த பல்புகள் என்ற கணக்கே இல்லாது அனைத்து பல்புகளும் பிரகாசிக்க ஆரம்பித்தன என்றால் கனிந்த கனியின் கருணையை என்னென்பது?

அப்புறம் என்ன? பக்தர்கள் அனைவரும் கனிந்த கனிக்கு விருந்து உபசார வரவேற்பு அளித்து மகிழ்ந்தனர். மற்ற உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சிறப்பான விருந்து வழங்கப்பட்டது. உபசாரம் அனைத்தும் முடிந்த பின் அந்த பக்தரிடமிருந்து விடை பெற்றுக் கொள்ளும் தருணம் வந்த போது கனிந்த கனி அந்த மெயின் போர்டுக்கு சென்று மீண்டும் தன் கையை மெயின் சுவிச்சில் வைத்து எடுக்கவே மின்சாரம் பழையபடி துண்டிக்கப்பட்டு விட்டது. இதுவும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத நம் சற்குரு போன்ற சித்தர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய ஆலிங்கன நடன அற்புத கூத்துதான்.

அரிதிலும் அரிய இந்த ஆலிங்கன நடனக் கூத்து சக்திகளை தரிசன சக்திகளாக பெற விரும்பும் பக்தர்கள் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் மணவாள தீர்த்தத்தில் நீராடி உலர்ந்த ஆடைகள் அணிந்து கொண்டு மணவாள தீர்த்தக் கரையில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஅய்யனார் சுவாமி முன் மண்டியிட்டு வணங்கி மணவாள தீர்த்தத்தை தரிசனம் செய்து அடுத்த விநாடி ஆலகிராம திருத்தலத்தை தரிசிக்க வேண்டும். மிக மிக எளிய இந்த வழிபாட்டில் குவியும் பலன்கள் கோடி கோடியே. ஓரிரு விநாடிகளே எடுத்துக் கொள்ளும் இந்த வழிபாட்டிற்கு சித்தர்கள் வழங்கிய நாமமோ மணவாள முகூர்த்த அபிஷேகம் என்பதாகும்.

ஒரு முறை திருஅண்ணாமலை ஆஸ்ரமத்திற்கு சேவைக்கு வந்திருந்த ஒரு அடியாரை சிவ சக்தி ஐக்ய தரிசனத்தை நோக்கி விட்டு அடுத்த நொடி பர்வத மலையைப் பார்த்து தரிசிக்கும்படி வழிகாட்டினார் நம் சற்குரு. திருஅண்ணாமலை சிவ அம்சம், பர்வத மலை சக்தி அம்சம். சற்றே ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்தாலும் இந்த இரு தரிசனங்களில் மலரும் அனுகிரக சக்திகள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் என்பது உண்மையே. அடுத்தடுத்து அமையும் இந்த இரு தரிசனங்களில் மட்டும் களையப்படும் கர்ம வினைகள் கோடி கோடியே. நம் சற்குருவிற்கு நிகர் நம் சற்குரு ஒருவரே என்ற உண்மையையும் இது பறைசாற்றும்.

ஸ்ரீஎமதண்டீஸ்வரர்
ஆலகிராமம்

சுந்தரம், சுந்தரி என்ற பெயரை தங்கள் பெயராகக் கொண்டவர்களோ அல்லது இதை தங்கள் பெயரின் ஒரு பகுதியாகக் கொண்டவர்களோ, உதாரணமாக மோகனசுந்தரம், சோமசுந்தரம், அதுல்ய சுந்தரி, திரிபுர சுந்தரி போன்றோர் வாழ்வில் ஒரு முறையாவது ஆலகிராமம் திருத்தலத்தை தரிசனம் செய்து மணவாள முகூர்த்த அபிஷேகத்தை இயற்றுதல் நலம்.

இதனால் திருமணம் ஆகாதவர்கள் விரைவில் திருமணம் நிறைவேறும் பாக்கியத்தையும், திருமணம் ஆனவர்கள் தங்கள் வாழ்வில் ஒற்றுமையையும் காண்பர். மற்றவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்யமும் மன ஆரோக்யமும் கனியும்.

ஒரு முறை காஞ்சி கனிந்த கனி பரமாச்சாரியாரை தரிசனம் செய்வதற்காக ஒரு வைசிராய் தன் மனைவியுடன் வந்தார். ஆங்கிலேய ஆட்சி நிலவிய காலம் அது. கனிந்த கனியை தரிசித்த பின்னர் சுவாமி தங்கள் இல்லத்திற்கு வருகை தர முடியுமா என்ற ஒரு அன்பு அழைப்பை விடுத்தார் அந்த ஆங்கிலேய துரை. கனிந்த கனியோ அதற்கு உடனே சம்மதித்து விட்டார், ஒரு நிபந்தனையுடன்.

அந்த நிபந்தனை என்னவோ? அந்த வைஸ்ராய் துரைக்கு 300 வேலைக்காரர்கள் இருந்தனர். ஆனால் வேலைக்காரர்கள் எவர் உதவியும் இல்லாமல் அந்த துரையும் துரையின் மனைவியும் ஆட்டுக்கல்லில் இட்லி மாவு அரைத்து, தேங்காய் சட்னி தயார் செய்து பரமாச்சாரியாருக்கு அளிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை. பரமாச்சாரியார் தங்கள் இல்லத்திற்கு வருகை தர ஒப்புக் கொண்டதையே பெரும் பாக்கியமாக எண்ணிய அந்த ஆங்கிலேய துரை சுவாமிகளின் நிபந்தனைக்கு மறுபேச்சு இல்லாமல் உடனே ஒப்புக் கொண்டார்.

குறித்த நாளில் கனிந்த கனி அவர்கள் இல்லத்திற்கு எழுந்தருளி வைஸ்ராய் தம்பதிகள் அன்புடன் பரிமாறிய இட்லிகளையும் சுவைத்து மகிழ்ந்தார். சில மாதங்கள் கடந்தன. வைஸ்ராய் தம்பதிகள் இள வயதினராக இருந்தாலும் பல வருடங்களாக அவர்களுக்கு குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. ஆனால், கனிந்த கனியைச் சந்தித்தபோது அவர்கள் தங்கள் பிரச்னையைப் பற்றி சுவாமியிடம் தெரிவிக்கவே இல்லை. மக்கள் குறைகளை தங்கள் வாய் வார்த்தைகளால் தெரிவித்தால்தான் அதற்கு பரிகாரம் அளிப்பவரா காஞ்சிப் பெரியவர். தாயினும் சாலப் பரிந்து ஊட்டுபவர்தானே ஜகத்குரு?!

ஸ்ரீஞானவேல் முருகப் பெருமான்
ஆலகிராமம்

வைஸ்ராய் மனைவி கர்ப்பம் அடைந்து உரிய காலத்தில் ஒரு ஆண் மகவையும் பெற்றெடுத்தாள். வைஸ்ராய் தம்பதிகள் ஆனந்தக் கடலில் மூழ்கினர் என்பதைக் கூறவும் வேண்டுமோ? உத்தால மகரிஷி ஜேஷ்டா தேவி தம்பதிகளின் அருள் ஆசிகளைத் திரட்டியே அந்த ஆங்கிலேய துரை தம்பதிகளுக்கு குழந்தைப் பேற்றை அளித்தார் கனிந்த கனி என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் சித்த இரகசியம் ஆகும். ஜேஷ்டா தேவிக்கும் ஆலகிராமம் திருத்தலத்திற்கும் உரிய தொடர்பை பின்னர் காண்போம்.

மணவாள தீர்த்தம் என்பது அத்தீர்த்தத்தின் உண்மை பெயர் கிடையாது. பார்வதி தேவி முருகப் பெருமான் பூமியில் தோன்றுவதற்காக இத்தலத்தில் தவம் இயற்றிய பின் இங்கிருந்து திருக்கைலாயம் சென்றபோது இத்தலத்தில் இருந்த மணவாள ஆல மரங்கள் எல்லாம் மறைந்து விட்டன. ஆனாலும் அந்த ஆல மரங்களின் சக்திகளை மக்கள் தொடர்ந்து பெறும் வண்ணம் அந்த மணவாள ஆல மரங்களின் சில சக்திகளை மட்டும் இந்த சக்தி தீர்த்தத்தில் ஆவாஹனம் செய்தாள் அன்னை பார்வதி என்பதே நாம் அறிந்து மகிழ வேண்டிய செய்தி.

ஸ்ரீஎமதண்டீஸ்வர ஈசனின் அனுகிரகத்தை ஒரே வார்த்தையில் சொல்வதாக இருந்தால் ...

ஒரு முறை நம் சற்குருவிடம் ஒரு அடியார், “சுவாமி, தானத்தில் சிறந்தது ...?” என்று கூறி நிறுத்தினார். நம் சற்குரு மறு விநாடி பளிச்சென்று, “நிதானம்” என்றார். அங்கிருந்த அனைத்து அடியார்களும் இந்த பதிலைக் கேட்டு கொல்லென்று சிரித்து விட்டனர். நம் சற்குருவும் அவர்கள் சிரிப்பில் ஆனந்தாமாக கலந்து கொண்டு, “நீங்கள் விரும்பும் பதிலைக் கூறுவதற்காக அடியேன் இந்த சீட்டில் (உலகத்திற்கே வழிகாட்டும் சற்குரு என்ற பதவி) இல்லை. உண்மையைக் கூறுவதே எங்கள் வேலை...”, என்றார் தொடர்ந்து. தானத்தில் சிறந்தது அன்னதானம் என்பதுதானே அனைவரும் அறிந்த பதில், இந்த பதிலை நம் சற்குரு கூறுவார் என்பதுதானே அனைவரின் எதிர்பார்ப்பும்.

சாதாரண சமயத்தில் கையாள்வதற்கு எளிமையாகத் தோன்றும் இந்த நிதானம், புலன்கள் பலமடைந்து ஆர்ப்பரிக்கும் சமயத்தில், புத்தி மழுங்கி செயலற்றுப் போகும் சமயத்தில், கைக்கொள்வதற்கு மிகவும் கடினமானதே. ஒரு முறை மதப் பிரச்னை ஒன்று தலைவிரித்து ஆடி கலவரம் ஏற்பட்டு ஒரு கல்லூரியில் பல மாணவர்களும் மாணவிகளைக் கற்பழிக்கும் அவலமான செயலில் ஈடுபட ஆரம்பித்தனர். அப்போது பகவான் ரஜனீஷின் நண்பரான ஒரு பேராசிரியரும் இந்த அவலமான செயலில் ஈடுபடத் துணிந்தபோது பகவான் அவர் செயலைத் தடுத்து நிறுத்தி, ”நீ ஒரு பேராசிரியர். மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய நீயே இத்தகைய இழிந்த செயலில் ஈடுபடலாமா?” என்று கேட்டபோதுதான் அந்த பேராசிரியரும் தன்னிலை அடைந்து, தன்னுடைய தவறை உணர்ந்து திருத்திக் கொண்டார்.

தவறு செய்வது மனிதனின் இயற்கையான குணம் என்றாலும் தவறு செய்யாமல் அவனைத் தடுத்தி நிறுத்தி நல்வழிப்படுத்துவதே ஆலகிராமம் திருத்தலத்தில் நாம் மேற்கொள்ளும் வழிபாடுகளின் மகத்துவமாகும். அதிலும் உத்தராயண புண்ணிய காலத்தில் தொடங்கும் இத்தகைய வழிபாடுகள் ஒரு நல்ல மாற்றத்தை உங்கள் வாழ்வில் தோற்றுவிக்கும் என்பது உண்மையே.

ஸ்ரீபைரவ மூர்த்தி ஆலகிராமம்

ஆலவட்ட உபசாரம் என்பதைப் பற்றி நீங்கள் அறிவீர்கள். பனை ஓலை அல்லது வெள்ளியால் தயார் செய்யப்பட்ட விசிறியால் சுவாமிக்கு விசிறி உபசாரம் செய்வதே ஆலவட்ட உபசாரம் என்பதாகும். இறை மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகளின் போது நம் சற்குரு நிறைவேற்றும் இத்தகைய ஆலவட்ட உபசாரத்தை நேரில் தரிசிக்கும் வாய்ப்பு பெற்றவர்கள் இந்த உபசாரத்தின் மகிமை பற்றி நன்கு அறிவர். தம் இரு கரங்களாலும் சுவாமிக்கு நிறைவேற்றும் இத்தகைய ஆலவட்ட உபசாரங்கள் பல கால தோஷங்களை களைய வல்லதாகும். நம் சற்குருவிற்கே இந்த ஆலவட்ட உபசாரத்தை நிறைவேற்றும் பாக்கியம் பெற்ற ஒரு அடியாரும் உங்களுடன் அடிக்கடி உரையாடுபவர்தான்.

அவரவர் கையால் ஒரு முழம் குறுக்களவு உள்ள பனை விசிறிகளை ஆலகிராம ஈசனுக்கு அர்ப்பணித்து அதை அடியார்களின் சேவைக்கு அளிப்பது இந்த வருடம் நிறைவேற்றக் கூடிய அற்புத தான முறையாகும்.

சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள கோண அளவே திதி என்பதாகும். திதியில் பாதி கரணம் என்ற கால அளவு. தற்காலத்தில் கரணம் பற்றியே பலரும் கவலைப்படுவது கிடையாது என்றாலும் தொடங்கிய நற்காரியம் தடங்கல் இல்லாமல் முறையாக நிறைவேற உதவுவதே கரணம் என்ற கால அளவாகும். சூரியனுக்கும் சந்திரனுக்கும் உள்ள கோண அளவைக் கூட்டினால் வருவது யோகம் என்ற கால அளவு. உடல், மன ஆரோக்யத்திற்கு உறுதுணையாக நிற்பது யோகம். இத்தகைய ஜோதிட அம்சங்கள் எதுவும் அறியாதவர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் உதவுவதே மேற்கூறிய ஆலவட்ட தானமாகும் என்பதே நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் தான முறையாகும்.

நம் கனிந்த கனி பரமாச்சாரியார் நூறு வயதிற்கு மேல் இப்பூமியில் வாழ்ந்திருந்து, இந்த உலகிற்கே ஜகத்குருவாய் இப்பூவுலகெங்கும் மணம் பரப்பிய பெருமையை நாம் அறிவோம். நம் சற்குரு கூறுவதோ சுவாமிகள் வெகுநாட்கள் முன்னரே நம் பூதவுடலை நீத்து விட்டாலும் தன் மேல் மிகுந்த அன்பு வைத்திருந்த அடியார்களின் நலன் கருதியே மனித உருவில் நடமாடி வந்தார் என்பதே. இதன் பொருட்டே பலரும் கனிந்த கனியை ‘நடமாடும் தெய்வம்’ என்றே அழைத்து வந்தனர். இது உண்மையே.

இன்றும் கனிந்த கனியின் கனிந்த ஆசியை பெற விரும்பும் அன்பர்கள் அனைவரும், குறிப்பாக பெண் அடியார்கள் கீழ்க்கண்ட மந்திரத்தை ஓதி சந்தனம் அரைத்து ஸ்ரீஎமதண்டீஸ்வர ஈசனுக்கு அர்ப்பணித்தலால் அவர்கள் வாழ்க்கை மணம் பரப்புவதாக, மணம் மிகுந்ததாக அமையும். சந்ததி செழித்து வாழும்.
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்

விழி கிடைக்குமா ... !

மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

பல்லாண்டுகளுக்கு முன் ஸ்ரீபடேசாகிப் சுவாமிகள் ஜீவாலயத்திற்கு மூன்றாம் பிறைச் சந்திர தரிசன நாளில் சந்தனம் அரைத்து நம் அடியார்கள் வழங்குவதற்காக நம் சற்குருவால் அளிக்கப்பட்டதே மேற்கண்ட சுகந்த சந்தன துதி.

பல திருத்தலங்களிலும் சண்டி, முண்டி போன்ற துவார பாலகர்கள் எழுந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். துவார பாலகர்களில் சண்டன், பிரசண்டன், ஜய விஜயர்கள் என்ற எத்தனையோ விதமான துவார பாலகர்களையும் நாம் தரிசன செய்ய முடியும். இவ்வாறு துவார பாலகர்களே அமையாத கோயில்களும் உண்டு. அதனால் அந்த திருத்தலங்களில் துவார பாலகர்கள் இல்லை என்று கிடையாது. அந்தந்த சிவ, பெருமாள், சக்தித் தலங்களில் எழுந்தருள வேண்டிய துவார பாலகர்களின் சக்தி அம்சம் அந்தந்த கோயில்களில் நிச்சயமாக எழுந்தருளி இருக்கும்.

திருஅண்ணாமலை திறவுகோல்
(key) தரிசனம்

கனிந்த கனியுடன்
காட்சி தரும் கனிந்த கனி

துவார பாலகர்கள் என்போர் தற்போது அலுவலகங்களில் காணப்படும் வாயிற்காப்போர்களைப் போல் தேவையில்லாதவர்களை, வேண்டாதவர்களை தடுத்தும், வேண்டியவர்களை அந்தந்த அலுவலகப் பகுதிகளுக்கு அனுப்பும் வேலையைச் செவ்வனே ஆற்றி வருபவர்கள், பாரபட்சம் சிறிதும் இன்றி செயல்படும் உத்தமர்கள் ஆவர்.

இவ்வாறு சித்தர்களின் ஜீவாலயங்களில் அமைந்திருக்கும் துவார பாலகர்களே மஜும், போட் என்ற துவார பாலகர்கள் ஆவர். இத்தகைய அரிய துவார பாலகர்களின் சக்தியை வேண்டுவதாகவே நம் சற்குரு அளித்த ஸ்ரீபடேசாகிப் சித்தருக்கான சந்தனத் துதி அமைந்துள்ளது என்பதும் நம் சற்குருவின் கருணையைப் பறை சாற்றுவதாகும்.

இவ்வாறு சிவத் தலங்களில் அம்பாள் சன்னதிக்கு முன்னால் துவார பாலகிகள் அல்லாது, துவார சக்திகள் எழுந்தருளிய ஆலயங்களும் உண்டு. அத்தகைய ஆலயங்களில் ஒன்றே ஆலகிராம திருத்தலம் ஆகும். தங்கள் பெண் குழந்தைகள் உரிய காலத்தில் பருவம் அடையாமை, பருவம் அடைந்து நல்ல முறையில் திருமணம் ஆகி இருந்தாலும் மண வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் தோன்றி அதனால் பிரிந்து வாழும் பெண்கள் ஆலகிராமம் திருத்தலத்தில் ஸ்ரீதிரிபுர அம்பிகையின் துவார சக்திகளாக, கண்ணுக்குத் தெரியாமல் எழுந்தருளி இருக்கும் பெண் தேவதைகளை, வணங்கி வழிபடுதலால் நற்பலன் பெறுவார்கள்.

முழு முந்திரியை பசு நெய்யில் வறுத்து பால் பாயசத்தில் சேர்த்து தானம் அளித்தால் மேற்கண்ட வேதனைகளால் வாடும் பெண்கள் நலம் அடைவர். ஒரு காலத்தில் அனைத்து துவார பாலகர், பாலகிகளின் சக்தியும் பக்தர்கள் தங்கள் கண்ணால் பார்த்து தரிசிக்கும் வண்ணம் அமைந்திருந்ததே இந்த பண்டைய திருத்தலம் ஆகும். தரமான கம்பளிகளை, கம்பளி சால்வைகளை ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தானம் அளிப்பதும் மேற்கூறிய தானப் பலன்களை துரிதமாக்கும். தம்பதிகளுக்கு இடையே அமையும் வெளியில் சொல்ல முடியாத பல தாம்பத்ய பிரச்னைகளையும் இத்தகைய ‘கம்பளி’ தானம் சீர்படுத்தும்.

திருக்கோயிலூரிலிருந்து கனிந்த கனி
பரமாச்சாரியார் பெற்ற அறையணி
திருஅண்ணாமலையார் தரிசனம்

பிரச்னைகளே இல்லாது தெய்வீகத்தில் முன்னேறத் துடிக்கும் அடியார்களுக்கும் மேற்கண்ட தானம் நற்பலன்களை அளிக்கும். சிவ சக்தி ஐக்ய கோலத்தில் நம்மால் புரிந்து கொள்ள முடியாத ஆயிரமாயிரம் ஆன்மீக இரகசியங்கள் உண்டு. இவைகளுக்குத் ‘திறவு கோலாக’ அமைவதும் மேற்கண்ட தானமுறையாகும்.

திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதற்காக ஒரு அடியார் பல முறை முயன்றும் ஏதோ சில காரணங்களால் அது முடியாமல் போயிற்று. பின்னர் நம் சற்குருவின் சத்சங்கத்தில் சேர்ந்து அன்னதான கைங்கர்யத்தில் பங்குபெறும் வாய்ப்பு கிட்டியபோது நம் சற்குருவே அந்த அடியாரை கிரிவலம் சென்று வருமாறு பணித்தார். ஆனால், அக்காலத்தில் இரவு பகலாக கடுமையான தொடர்ந்த வேலைகள் ஆஸ்ரமப் பணியாக அமைந்ததால் நம் அடியார் கண்ணையே திறக்க முடியாத நிலையில் ‘தூங்கிக் கொண்டே’ கிரிவலம் வந்ததால் எந்த தரிசனத்தையும் அவரால் காண இயலாது போயிற்று.

இதை எல்லாம் அறியாதவரா நம் சற்குரு? சில வருடங்கள் கழித்து அந்த அடியாரை கிரிவலமாக அழைத்துச் சென்று மேற்கண்ட திறவுகோல் தரிசனத்தை தரிசிக்கச் செய்து தானும் அந்த தரிசனத்தில் சாஷ்டாங்கமாக வீழ்ந்து நமஸ்கரித்து அந்த தரிசனப் பலன்களை எல்லாம் உலகத்தவர்களுக்கு அர்ப்பணித்தார் நம் சற்குரு என்பது நம் சற்குருவின் மகிமையும் நீங்கள் இங்கு காணும் திறவுகோல் திருஅண்ணாமலை தரிசனத்தின் மகிமையுமாகும்.

திருஅண்ணாமலையில் திறவுகோல் தரிசனம் துலங்கும் சரியான இடத்தைக் கண்டு பிடிக்க முடியாதவர்களுக்கு உதவுவதாக அமைவதே மேற்கண்ட திறவுகோல் தரிசனமாகும். வரும் பொங்கல் திருநாள் அன்று தங்கள் இல்லம், பீரோ அலமாரி, வாகனம் போன்றவற்றின் திறவுகோல்களை (key) ஆலகிராமம் திருத்தலத்தில் அமைந்துள்ள மணவாள தீர்த்தத்தில் நீராட்டி இறைவன் திருவடிகளில் அர்ப்பணித்து பயன்படுத்துதலால் கிட்டும் பலன்கள் அமோகமே.

ஸ்ரீஅகோர வீரபத்திரர் காருகுடி

ஏகாதச ருத்ரர்கள் என்று சிவபெருமானின் அம்சங்களைப் பெற்ற ருத்ர மூர்த்திகளின் பதவிப் பிரமாணத்தில் எம்பெருமானே அவர்கள் பதவி எந்த வித பிழையும் இல்லாமல் நன்முறையில் நிறைவேற பிரமாண சக்தி அருளும் தரிசனமே மேற்கண்ட திறவுகோல் தரிசனமாகும். ஏகாதச ருத்ர பதவிப் பிரமாண சீர்தரிசனம் என்பதும் இதுவேதான். அடியார்கள் தாங்கள் புதிதாக பதவி ஏற்கும் முன் இத்தகைய தரிசனத்தைப் பெறுதல் கிடைத்தற்கரிய பொக்கிஷமே.

பூர்வ ஜன்ம காரணங்களால் திருஅண்ணாமலைக்கு எழுந்தருளாத கனிந்த கனி பரமாச்சாரியார் தான் பட்டத்திற்கு வந்த பின் முதன் முதலில் ஸ்ரீஎமதண்டீஸ்வரர் அருளும் மணவாள தீர்த்தத்தில் நீராடி அதன் பின்னரே காஞ்சிமட பீடாதிபதியாக அமர்ந்தார் என்பதே நம் அறிய வேண்டிய சற்குரு மகாத்மியமாகும். திருஅண்ணாமலைக்கு தூல உடலில் எழுந்தருளா விட்டாலும் திருக்கோவிலூரிலிருந்து பரமாச்சாரியார் பெற்ற தரிசனத்தையே நாம் நம் அடியார்கள் நலனுக்காக பல்லாண்டுகளுக்கு முன் அளித்திருந்தோம் என்பதும் நம் சற்குருவின் கருணை மழைக்கு ஓர் சான்றே!

பல்வேறு காரணங்களால் தங்கள் வீடுகளைப் பூட்டி விட்டுச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோர் அநேகர். இவ்வாறு தங்கள் வாகனங்களை ஏதாவது ஒரு இடத்தில் நிறுத்தி விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலையைச் சந்திக்கும் எத்தனையோ அடியார்களும் உள்ளனரே. இவர்கள் கீழ்க்கண்ட சந்திர கிரண துதியை 11 முறை ஓதி செல்வதால் அந்தச் சொத்துக்களை கவர வேண்டும் என்ற தவறான எண்ணம் உருவாகதபடி காப்பவரே ஆலகிராம அண்ணல் ஆவார்.
ஓம் ஹேம சந்த்ராய வித்மஹே பூர்ண சந்த்ராய தீமஹி
தந்நோ சந்த்ர சூட சிகாமணி ப்ரசோதயாத்
சீராரும் எதிராஜர் திருவடிகள் வாழி
திருவரையில் சாத்திய செந்தூராடை வாழி
ஏராடும் செய்யவடி எப்பொழுதும் வாழி
ஈராறு திருநாமம் அணிந்த எழில் வாழி வாழி

கன்றாப்பூர் ஸ்ரீநடுதறி

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவத்தலமே கன்றாப்பூர் ஆகும். தற்போது மக்கள் வழக்கில் இத்தலம் கோயில் கண்ணாப்பூர் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் ஸ்ரீநடுதறி நாதர். இறைவி ஸ்ரீவல்லிநாயகி. பராசக்தி தேவி நல்ல குழந்தையைப் பெறுவதற்காக தவமியற்றிய தலங்களுள் ஒன்றே ஆலகிராமம் என்று அறிவோம். அவ்வாறு பெறும் சந்தானம் நல்ல பண்புகளுடன் தரணி புகழும் பாலனாக விளங்க வேண்டும் என்பதும் முக்கியம் அல்லவா? இதற்காக ஆலகிராமம் சிவத்தலத்தை அடுத்து தேவி கன்றாப்பூர் சிவத்தலத்தில் சிவராத்திரி வழிபாடுகளை பல யுகங்களாக மேற்கொண்டாள்.

ஸ்ரீகணேச மூர்த்தி கன்றாப்பூர்

சித்த தத்துவங்களுள் ஒன்றே குசா என்னும் எப்போதும் நல்லது ஒன்றை மட்டும் பொழியும் தத்துவம். மூன்று சக்திகளிடையே உள்ள நடு தத்துவத்தின் அடிப்படையாய் எழுந்தருளிய தெய்வ மூர்த்தியே கன்றாப்பூர் ஸ்ரீநடுதறி நாதர் என்றால் நல்ல சந்தானங்களை, சமுதாயத்தில் பேரும் புகழும் பெற்று, நிலைத்து நிற்கும் குழந்தைச் செல்வங்களை வர்ஷிக்கும் சிவத்தலம் இதுவே என்பது புலனாகின்றதே. அதனால் இத்தகைய அனுகிரகங்களை சிறப்பாக அருள்வதற்காகவே சோபகிருது வருட சிவராத்திரி வைபவங்களை கன்றாப்பூர் திருத்தலத்தில் நிகழ்த்தி பயனடையும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார்.

கன்று ஆப்பு ஊர் என்பதே கன்றாப்பூர் என்பதை நாம் அறிவோம். ஆப்பு என்றால் நுனி இருபுறமும் விரிந்த ஒரு குச்சி என்று பொருள். இதில் தான் பசு, கன்றுகளை கட்டி வைப்பார்கள். இதனால் குச்சியிலிருந்து மாடுகளைக் கட்டியிருக்கும் கயிறு கழன்று விடாது அவை பாதுகாப்பாக இருக்கும் என்பதே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன். இத்தகைய ஆப்புகளை கவட்டைக் குச்சி என்றும் கூறுவதுண்டு. கவட்டை என்றால் மூன்று சக்திகள் சந்திக்கும் புள்ளி என்பது ஒரு அர்த்தம். மையம் என்றும் இதைக் கூறலாம். நடு மையம், மைய மையம், ஆரண மையம் என்ற மையத்தில் எழுந்தருளி இருப்பவள்தான் செவலூர் ஸ்ரீஆரணவல்லி அம்மன்.

பெண்களின் கர்ப்பப் பையும் இந்த ஆரண மையத்தில்தான் அமைந்துள்ளது. எனவே தன்னுடைய சாயலாகவே இறைவன் மனிதனைத் தோற்றுவித்துள்ளான் என்பது எத்தகைய பொருத்தமான வசனம். எனவே ஸ்ரீநடுதறி நாதர் வழிபாடு உத்தம சந்தானங்களை உருவகித்துத் தருவதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

நடுத்தறி என்றால் குச்சிகளுக்கு நடுவே உள்ள தறிக் குச்சி ஆகும். நடு தறி என்றால் நட்ட தறி, நடுகின்ற தறி, நடும் தறி என்று மூன்று கால வினைகளையும் குறிக்கும் சொல்லாக அமையும். எனவே, நடு தறி நாதர் மூன்று காலங்களுக்கும், அதாவது எக்காலத்திற்கும் சந்தான வளங்களை அளிக்கும் நாதர் மட்டும் என்ற பொருள் உடையவர் கிடையாது, அவ்வாறு மூன்று காலங்களுக்கும் வளம் தரும் சந்தானங்கள் நடுத்தறியாக நல்ல சக்திகளாக மலரவும் அருள்புரியும் நாதர் என்று பொருள். இவ்வாறு தமிழ் வேந்தனாகவும் கொன்றை வேந்தனாகவும் இறைவன் அருள்புரிகிறான் என்பதே இறைவனின் திருநாமம் சுட்டிக் காட்டும் பொருளாகும். நாமமே இத்தகைய மகிமை உடையதாகத் திகழ்கிறது என்றால் இத்தலத்தின் மகிமையை என்னவென்று கூறுவது?

ஸ்ரீநடுதறி நாதர் கன்றாப்பூர்

கன்றாப்பூர் திருத்தல ஞான தீர்த்தமே வஜ்ர தீர்த்தமாக இந்த புத்தாண்டு 2024 வழிபாட்டில் ஸ்ரீபோஜீஸ்வரருக்கு அபிஷேகிக்கப்பட்டது என்றால் என்னே நம் சற்குருவின் தொலை நோக்குப் பார்வை. வரும் மகாசிவராத்திரி தின அபிஷேக ஆராதனை வழிபாடுகளை சோபகிருது வருட மாசி மாதம் 25ந் தேதி (மார்ச் 8,2024) வெள்ளிக் கிழமை அன்று ஞான தீர்த்தத்திலிருந்து தீர்த்தம் எடுத்து நான்கு கால வழிபாடுகளையும் நிறைவேற்றுதல் நலம். இத்தகைய புனித நாளில் புனிதம் சேர்ப்பதாக திருவோண அவிட்ட நட்சத்திரங்களும், சிவ யோகமும், சிவ அமிர்தாதி யோகமும் இணைவது என்பது நம் கலியுக மக்கள் பெற்ற பெரும் பேறே.

நடுத்தறி என்றால் மூன்றாம் கண் என்ற பொருளும் உண்டு. மனிதன் இயற்கையாகவே ஆறு சக்கரங்களுடன் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்த சக்கர சக்திகளை அடையாளம் கண்டு கொண்டு குண்டலினி யோகத்தில் உன்னதம் பெற்ற மக்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அல்லவா? அது போலவே மூன்றாம் கண் சக்தியும் மனிதர்களுக்கு இயற்கையாக படைக்கப்பட்ட ஒரு அதீத சக்தியாக இருந்தாலும் இந்த சக்தியை இனங் கண்டு கொண்டு அதை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் உத்தமர்களும் வெகு சிலரே.

ஒரு யுகத்தில் சாபம் பெற்ற ஒரு இந்திர மூர்த்தி இறைவனை நோக்கி பன்னெடுங்காலம் தவமியற்றி வேண்டியபோது எம்பெருமான் தன்னுடைய ஜடாமுடி கங்கை தீர்த்தத்தையே அந்த இந்திர மூர்த்திக்கு தீர்த்த பிரசாதமாக அளித்து இந்திரனுக்கு புனர்வாழ்வு அளித்ததால் இந்த ஞான தீர்த்தம் சிவகங்கை என்றும் அழைக்கப்படுகிறது. சோப கிருது என்றால் அழகான செயல், நேர்த்தியான செய்கை என்றெல்லாம் பொருள் உண்டு. அதனால் இந்த வஜ்ர தீர்த்தம், ஞான தீர்த்தம் என்ற தீர்த்தங்களே வரும் சிவராத்திரி அன்று சிவகங்கை சக்திகளுடன் துலங்கும் என்பதால் அரிதிலும் அரிய இந்த சந்தர்ப்பத்தை அடியார்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படிக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இருந்ததை மறைப்பார்...

‘இருந்ததை மறைப்பார், இல்லாததைக் கொணர்வார்...’, என்பது நம் சற்குரு கூறும் மறை வாக்கியம். இதை ஒரு உதாரணத்தின் மூலம் தெளிவுபடுத்துவோம். ஒரு முறை திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதானத்திற்காக ஒரு அடியார் வீட்டில் நூற்றுக் கணக்கான நெல் மூட்டைகள் பாதுகாப்பில் வைக்கப்பட்டன. நம் சற்குருவின் வழிகாட்டுதலின்படி அந்த நெல் மூட்டைகளுக்கு தான்ய பூஜைகளும் அந்த அடியாரால் தொடர்ந்து நிறைவேற்றப்பட்டு வந்தன.

ஸ்ரீவல்லிநாயகி அம்மன் கன்றாப்பூர்

அந்த நெல் மூட்டைகள் காற்றோட்டமாக இருப்பதற்காகவும் அவைகளுக்கு அவ்வப்போது தொடர்ந்து சாம்பிராணி தூப வழிபாடுகள் செய்வதற்காகவும் அந்த மூட்டைகள் வைத்திருந்த அறைகளுக்கு வெளியில் கம்பி வலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த அடியார் தொடர்ந்து பல மாதங்கள் அந்த நெல் மூட்டைகளை நம் சற்குரு கூறிய முறையில் வழிபட்டு வந்தார். ஆனால், அந்த நெல் மூட்டைகள் வைத்திருந்த அறையில் ஏகப்பட்ட தேள்கள் தோன்றி அந்த கம்பி வலைகளின் மேல் தவழ்ந்து விளையாடிக் கொண்டிருந்தன. பாதுகாப்பு வலைகள் அமைக்கப்பட்டிருந்ததால் அந்த தேள்களைப் பற்றி அந்த அடியார் சிறிதும் அச்சம் கொள்ளவில்லை.

கார்த்திகை தீப அன்னதானம் நெருங்கியதும் அந்த நெல் மூட்டைகள் எல்லாவற்றையும் ஒரு லாரியில் ஏற்றி அருகில் இருந்த ஒரு நெல் அரைக்கும் ஆலைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், என்ன ஆச்சரியம்... இரண்டு அறைகள் நிறைய நெல் மூட்டைகள் அடுக்கப்பட்டு அந்த இரண்டு அறைகளிலுமே ஏகப்பட்ட தேள்கள், தேள் குஞ்சுகள் உலா வந்து கொண்டிருந்தாலும் அந்த நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தும்போது ஒரு தேள் கூட அடியார்களின் கண்ணில்படவில்லை என்பதே நம் அடியார்களால் நம்ப முடியாத ஆச்சரியம் ஆகும்.

இதுவே ஆச்சரியம் என்றால் அந்த அரிசி ஆலையில் இருந்த சிப்பந்திகள் கூறியதும் ஒரு பெரிய ஆச்சரியத்தை அளித்தது. ஆம், அந்த நெல் அனைத்தையும் அரைக்க சில நாட்கள் ஆகும் என்பதால் அத்தனை நாட்கள் அரிசி ஆலையில் உள்ள வேலைக்காரர்கள் இது தானத்திற்கு வந்த அரிசிதானே இதில் நாம் கொஞ்சம் எடுத்துக் கொண்டால் என்ன என்ற சிந்தனை வருவது சகஜம்தானே என்று எண்ணி அந்த ஆலைப் பொறுப்பில் இருந்தவரைக் கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே, “சார், இது குறித்து நீங்கள் சற்றும் கவலைப்பட வேண்டாம். காரணம் அன்னதானத்திற்கான இந்த நெல் மூட்டைகளின் மேல் ஒரு நல்ல பாம்பு படம் எடுத்த நிலையிலேயே இருந்ததால் நம் வேலைக்காரர்கள் அனைவரும் பார்த்துப் பயந்து அண்ணாமலை அப்பா எங்களை ஒன்றும் செய்து விடாதே, அன்னதானத்திற்கான இந்த அரிசி மணியில் ஒன்றைக் கூட நாங்கள் தொட மாட்டோம்,” என்று உறுதி அளித்த பின்னர்தான் அந்த நாகப் பாம்பு நெல் மூட்டைகளின் மேலிருந்து இறங்கி எங்கோ சென்று மறைந்து விட்டதாம்...”, என்ற நம்பமுடியாத இந்த அண்ணாமலையான் லீலையை வர்ணித்தார்.

இத்தகைய ஒரு சிவலீலைதான் கன்றாப்பூர் சிவத்தலத்தில் நிறைவேறியதும். பக்தி மிகுந்த ஒரு பெண் சிவலிங்கத்தை தன் புகுந்த வீட்டில் வழிபட்டு வந்தபோது அதைக் கண்டு பொறுக்க முடியாத அந்த வீட்டினர் அந்த சிவ லிங்கத்தை எங்கோ மறைத்து வைத்து விட்டனர். அந்தப் பெண் வேறு வழியின்றி அந்த வீட்டின் ஒரு மூலையில் இருந்த ஒரு மாடு கட்டும் தறியை சிவ லிங்கமாக பாவித்து அதைத் தொடர்ந்து வழிபட்டு வந்தாள்.

சிவகங்கை தீர்த்தம் கன்றாப்பூர்

அதையும் ஒரு சந்தர்ப்பத்தில் கண்டு கொண்ட அந்தப் பெண்ணின் கணவன் அந்தச் சிவலிங்கத்தை கோடரியால் வெட்டவே அந்த கட்டுத்தறியிலிருந்து இரத்தம் பீறிட்டு வழிய ஆரம்பித்தது. அந்த இல்லத்தார் தங்கள் தவறை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கோர, அந்தக் கட்டுத்தறி மறைந்து அந்த இடத்தில் ஒரு அழகிய சிவலிங்கம் தோன்றியது. அதுவே இப்போது நாம் காணும் நடுதறி நாதர் ஆவார்.

கட்டுத்தறிதான் சிவலிங்கமாக மாறியதா?
சிவலிங்கம் கட்டுத்தறியாக காட்சி அளித்ததா?
இரண்டும் உண்மையா?
இல்லை, இந்த இரண்டு காட்சிகளில் ஏதோ ஒன்று மட்டும் உண்மையா?
இருந்த தேள்கள் எங்கே மறைந்தன?
இல்லாத நாகம் எங்கிருந்து வந்து படையெடுத்தது?

எந்த அளவிற்கு சிரத்தையுடன் நீங்கள் வரும் சோபகிருது சிவராத்திரி அன்று முழுவதும் கன்றாப்பூர் சிவத்தலத்தில் வழிபாடுகள் இயற்றுகிறீர்களோ அந்த அளவிற்கு நீங்கள் மேற்கண்ட கேள்விகளுக்கான அனுபவபூர்மான உண்மையை உணர்வீர்கள். அது உண்மைதான் என்று உங்கள் உள்ளம் உணர்வதற்கு எந்த உரைகல்லும் உங்களுக்குத் தேவைப்படாது.

ஸ்ரீநடராஜப் பெருமான் திருவாசி

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு ஸ்ரீராமரின் ஜன்ம பூமியான அயோத்திக்கு நம் சற்குரு அடியார்களுடன் சென்றிருந்தார். அப்போது அயோத்தியில் எழுந்தருளி இருந்த ஸ்ரீசீதா தேவி சமேத ஸ்ரீராமரைத் தரிசித்த நம் சற்குரு, “ஒரு நல்ல உள்ளத்தின் வேண்டுதலால்தான், நாற்பது வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நிறைவேற்றிய உளமாற பிரார்த்தனையின் பலனாகவே இங்கு ஸ்ரீராமபிரானுக்கு கோயில் எழுந்தருள உள்ளது...”, என்றார். கோடிக் கணக்கான மக்களின் இனிய கனவை நனவாக்கும் அந்த புனித ஆத்மா யாராக இருக்கும் என்பதை உங்களால் ஊகிக்க முடிகிறதா?

இந்தக் கேள்வியை நம் அடியார் ஒருவரிடம் கேட்டபோது அவர் உடனே பளிச்சென்று, “அது நம் சற்குருவைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?” என்று கேட்டார். இது ஒரு நல்ல எண்ணமே, ஆனால், இது சரியான விடையாக இருக்க முடியுமா?

ஒரு முறை தொழுப்பேடு சித்தர் முன்னிலையில் ஆயிரக் கணக்கான மக்களுக்கு அன்னதானம் பரிமாறப்பட்டு மக்கள் அனைவரும் உணவேற்கும் நிலையில் தயாராக இருந்தனர். அப்போது எங்கிருந்தோ மேகங்கள் திரண்டு வந்து கனமழை பொழிவது போல் தோன்றிது. அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்திருந்த அடியார்கள் செய்வதறியாது திகைத்து சித்தரிடம் இந்த தர்ம சங்கடமான விஷயத்தைக் கூறவே, எப்போதும் குனிந்து கொண்டு தரையைப் பார்த்தவாறே இருக்கும் அம்மகானோ, “வருணனா, அவன் எங்கே இங்கே வந்தான்...?” என்று கேட்டுக் கொண்டே வானைத்தை அண்ணாந்து பார்த்தாராம்.

வானத்தில் மேகங்கள் திரண்டு நிற்பதைக் கண்டு தன்னுடைய ஆள்காட்டி விரலை ஆட்டி வானத்தில் ஒரு கோடு கிழிப்பதைப் போல் பாவனை செய்தாராம். அவ்வறளவுதான் ... மறு விநாடி வானத்தில் பளீரென்று ஒரு கோடு விழுந்து வானமே இரண்டாகப் பிரிந்து விட்டதாம். மழை மறைந்தது ... அடியார்கள் நிம்மதியாக உணவேற்றனர்.

இந்த நிகழ்ச்சி பற்றி விவரித்த நம் சற்குரு, “பாருங்க சார், வருணன் எங்கே வந்தான் என்று கேட்கிறார் அந்த சித்தர். நீயும் நானும் அப்படிக் கேட்க முடியுமா? இதுவே சித்தர்களின் சக்தி, அவர்களுக்கு கற்பனை நனவு என்பதற்கு வித்தியாசம் கிடையாது. அவர்கள் நினைத்தது நடக்கும், நடப்பதைத்தான் அவர்கள் கற்பனை செய்வார்கள்...” என்றார்.

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

நாம் தொடங்கிய கேள்விக்கு வருவோம். ராமருக்கு கோயில் எழ வேண்டும் என்று நம் சற்குரு நினைத்திருந்தால், அல்லது எந்த சித்தர் நினைத்திருந்தாலும் அது உடனே நிறைவேறி இருக்கும். 40 ஆண்டு கால அவகாசம் அதற்கு தேவைப்படாது. ஆனால், ஒரு இடத்தில் தெய்வ சக்திகளை நிலைநிறுத்துவதற்கு மகான்கள், சித்தர்கள், ஏன் இறை மூர்த்திகளே கூட பல நாட்களை, ஆண்டுகளை எடுத்துக் கொள்ளலாம். அது வேறு விஷயம்.

உதாரணமாக, ஒரே இரவில் தோன்றியதுதான் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். பூரி ஜகன்னாதர் விக்ரஹம் உருவாவதற்கு சிற்பி வடிவில் தோன்றிய இறைவனே ஒரு வருடத்திற்கு மேலான காலத்தை எடுத்துக் கொண்டார். சிவபெருமானே உருவாக்கியதுதான் திருவாசி திருத்தலத்தில் நாம் காணும் நடராஜப் பெருமான் திருஉருவம்.

இவ்வாறு ராம பிரானுக்கு அயோத்தியில் கோயில் எழுந்தருள வேண்டும் என்ற பிரார்த்தனையை 60 வருடங்களுக்கு முன்னால் உள்ளத்தில் எழுந்தருளச் செய்த அந்தப் புனித ஆத்மா யார் என்பதை உங்களால் ஊகிக்க முடிந்தால் இன்று அயோத்தியில் எழுந்தருளிய ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் கும்பாபிஷேக வைபவத்தை நீங்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடத்தில் இருந்தவாறே பெற முடியும் என்பதே நம் சற்குரு அத்தகைய புனித ஆத்மாவிற்காக அளிக்கும் குருவருள் பிரசாதம்.

முயன்று பாருங்கள்... குரு பிரசாதத்தை பேருகையுடன் பெற்றுக் கொள்ளுங்கள்.

அது சரி, இத்தகைய குருவருட் பிரசாதம் பெற முடியாத மற்ற அடியார்கள் என் செய்வது? எத்தனையோ லட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஸ்ரீராம பிரானை நாம் இன்றும் தரிசனம் செய்ய வழிகாட்டுபவர்களே சற்குருமார்கள். “அன்பின் வழியில் யார் நடந்தாலும் அவனும் ராமனும் ஒன்று...”, என்று வழிகாட்டுகிறார் அன்னை அமிர்தானந்தா. இதையே சற்று விளக்கமாக விவரிக்கிறார் நம் சற்குரு.

ஸ்ரீரிஷிகேஷ் சிவானந்தா

1. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று திடமாக எண்ணி யார் நடக்கிறார்களோ அவர்கள் அனைவரும் ராமர்களே.

2. தன் மனைவியைத் தவிர வேறு யாரையும் கனவிலும் கருதாத அனைவரும் ராமச்சந்திர மூர்த்திகள்தான்.

3. தன்னுடைய குடி மக்களை தன் உயிரினும் மேலாக மதித்துப் போற்றும் தலைவர்கள் அனைவரும், தன் சமுதாய அங்கத்தினர்கள் அனைவரையும் மதித்துப் போற்றும் மக்கள் அனைவருமே ராமர்களாக மதிக்கப்பட வேண்டியவர்களே.

நம் சற்குருவால் வர்ணிக்கப்பட்ட இந்த மூன்று கருத்துக்களும் கன்று ஆப்பு ஊர் என்பதாக மூன்று மைய சக்திகள் இணையும் திருத்தலமாக துலங்குவதே கன்றாப்பூர் ஆகும். இத்தகைய திருத்தலத்தில் சிவராத்திரி வழிபாடுகளை மேற்கொள்ளும்படி நம் சற்குரு வழிகாட்டுகிறார் என்றால் நம் சற்குருவின் தொலை நோக்குப் பார்வைக்கு இணையாக உலகில் வேறு எதைக் கூற முடியும்?!

அண்ணல் மகாத்மா காந்தி
திருப்புகலூர்

ஸ்ரீராமருக்கு கோயில் எழ பிரார்த்தனை செய்த அந்த புனித ஆத்ம யார் என்ற கேள்விக்கு நம் அடியார்கள் பலரும் அருமையான பதில்களைக் கூறியுள்ளனர்.
1. ஆஞ்சநேய மகாபிரபு
2. நம் சற்குருவின் தாயார் திருமதி முத்து மீனாட்சி
3. கனிந்த கனி பராமாச்சாரியார்
4. ரிஷிகேஷ் சிவானந்தா
5. யோகி ராம்சூரத் குமார்
6. சுவாமி விவேகானந்தர்
போன்ற பலரும் இந்த பட்டியலில் அடங்குவர். இங்கு நாம் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டதாகத் தோன்றுகிறது. இவர்கள் எவரையுமே சாதாரண ஆத்மா என்ற நிலையில் எண்ண முடியாத உத்தமர்கள். சதா சர்வ காலமும் ராம பிரானை தங்கள் உள்ளக் கோயிலில் நிலை நிறுத்தி வழிபடும் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள். ஸ்ரீராம பிரான் அமரக் கூடிய உயர்ந்த ஆசனம் ஒரு உத்தமரின் உள்ளத்தை விட வேறு எதுவுமே இந்தப் பிரபஞ்சத்தில் இருக்க முடியாது...

குழந்தை ஒன்று
ராமரை அழைத்தால்...!

ஒருமுறை ரிஷிகேஷ் சிவானந்தாவை பற்றிக் கேட்டபோது, “ஒரு விசிறி இருக்கிறது என்றால் அது மக்களுக்கு காற்றைத் தரும், மின்சார பல்பு இருக்கிறது என்றால் அது மக்களுக்கு ஒளிப் பிரகாசத்தைத் தரும். அதுபோல ஒவ்வொரு மனிதனும் தன்னை இறைவன் எதற்காகப் படைத்தான், இறைவனின் சிருஷ்டி நோக்கத்தை நாம் எந்த அளவிற்கு நிறைவேற்றுகிறோம் என்று தன்னைத் தானே ஆராய்ந்து பார்த்து தன்னுடைய சிருஷ்டி நோக்கத்தை நிறைவேற்றுபவனே உண்மையான மனிதன், என்று மனிதனின் படைப்பிற்கான காரண காரியத்தை உணர வழிகாட்டியவரே சுவாமி சிவானந்தா...”, என்றார் நம் சற்குரு.

சரி, உத்தம ஆத்மா இல்லை என்றால் என்ன, ஒரு நல்ல ஆத்மா என்ற முறையில் அண்ணல் மகாத்மா காந்தி இருக்கலாமே என்று பல அடியார்களும் குறிப்பிட்டுள்ளனர். இது வரவேற்கத் தக்க ஒரு ஆத்ம விசார முயற்சி என்று நாம் பாராட்டினாலும் இது சரியான விடையாக இருக்க முடியாது என்பதை அடியார்கள் சற்றே, சற்றே ஆத்ம விசாரம் செய்தாலும் புலனாகுமே...

சனீஸ்வர பிரபாவ சக்கரம்
கன்றாப்பூர்

ஸ்வஸ்திக் சக்கரங்களில் தைவிக் சக்கரம், ஆஸ்ரிக் சக்கரம் என்ற பிரிவுகள் உண்டு என்பதை நாம் அறிவோம். தைவிக் சக்கரம் என்னும் வலது பக்க இயக்கத்தை உடைய தெய்வீக ஸ்வஸ்திக் சக்கரத்தை பயன்படுத்தும்போது நற்பலன்கள் தொடர்ந்து பெருகும் என்பதால் நாம் தைவிக் ஸ்வஸ்திக் சக்கரத்தையே பயன்படுத்தும்படி நம் சற்குரு வலியுறுத்துகிறார். இவையல்லாது சனீஸ்வர பிரபாவ சக்கரங்களும் உண்டு. இதற்கு உதாரணமாகத் திகழ்வதே நாம் கன்றாப்பூர் சிவத்தலத்தில் தரிசனம் செய்யக் கூடியதாகும்.

2024 வருடம் முழுவதும் திருத்தலங்களில் இதய கமல கோலங்கள் வரையும்போதோ அல்லது மற்ற இடங்களில் மனிதர்களின் பாதங்கள் படாத இடங்களில் இதய கமல கோலம் வரையும்போதோ இந்த சனீஸ்வர பிரபாவ சக்கரத்தை கோலம் நடுவில் அமைப்பது சிறப்பாகும். ஸ்வஸ்திக் சக்கரத்தில் அமைந்துள்ள சனீஸ்வர பகவானைக் குறிக்கும் எட்டு ஆரங்களும் எட்டு திசைகளில் இருந்து வரும் தீய எண்ணங்களைத் தவிடு பொடியாக்கி, இதயத்தைச் சுற்றியுள்ள ஈரெட்டு நாளங்களில் ஏற்படும் வீக்கம் போன்ற வேதனைகளைத் தணிக்கும் என்பது இந்தக் கோல வழிபாட்டின் மேலோட்டமான பலனாகும்.

கன்றாப்பூர் சிவாலயத்தில் ஆரம்பிக்கும் இந்த தெய்வீக வழிபாட்டால் ஆப்பைச் சுற்றி வரும் கன்றைப் போல் மனமானது சற்குருவைச் சுற்றி சுற்றி வர இந்த கோலத்தின் சக்திகள் உறுதுணையாக அமையும். ஊறவைத்த கருப்பரிசி, எள் இவற்றுடன் அச்சு வெல்லத்தைச் சேர்த்து இதைக் கையில் ஏந்தி கன்றாப்பூர் சிவத்தலத்தில் இந்த ஸ்வஸ்திக் சக்கரம் அமைந்துள்ள தூணை எட்டின் மடங்காகச் சுற்றி வந்து பசு மாடுகளுக்கு, கன்றுகளுக்கு அளிப்பதால் இதயத்திற்கு பலம் அளிக்கும் வழிபாடாக இது திகழ்வதோடு மட்டுமல்லாமல், சனி தசை, புத்தி, அந்தரம், சனி பார்வை, ஏழரை நாட்டுச் சனி போன்ற விளைவுகளால் அடியார்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.

சனீஸ்வர பிரபாவ சக்கரம் திகழும் தூணை வலம் வரும்போது
ஓம் பங்கு பாதாய வித்மஹே
சூர்ய புத்ராய தீமஹி
தந்நோ சனீஸ்வர பிரசோதயாத்
என்ற காயத்ரீ மந்திரத்தை ஒதியவாறே வலம் வருதல் சிறப்பாகும். எந்த நாளிலும் மேற்கண்ட வழிபாடுகளை நிகழ்த்தி பலன் பெறலாம் என்றாலும் சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை அஷ்டமி, வெள்ளி சனிக் கிழமைகளில் நிகழ்த்தப்படும் இந்த வழிபாடுகள் அற்புத பலன்களை வர்ஷிக்கும்.

ஸ்ரீஅங்காளி அருள்
அழைப்பு...!

தொற்றுநோய் பாதுகாப்பு என்பதை காரணம் காட்டி பலரும் தற்காலத்தில் முகக் கவசம் (face mask) அணிந்து கொண்டு இருப்பதை நாம் காண்கிறோம். மனிதன் தோன்றிய நாள் முதலாகவே இத்தகைய கவசங்களோடுதான் மனிதன் உலவி வருகின்றான். பெண்களை தாய்மார்களாக, சகோதரிகளாக எண்ணிப் பழகுவதாகக் கூறும் எத்தனை காமுகர்களை நாம் அன்றாடம் சந்தித்து வருகிறோம். இவர்கள் அல்லாமல் நான் நல்லவன், நேர்மையானவன், பிறர் சொத்தை அபகரிக்க கனவிலும் கருதுவது கிடையாது, என்றெல்லாம் கூறி வரும் மனிதர்களையும் நாம் சந்தித்துக் கொண்டுதானே இருக்கிறோம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
கன்றாப்பூர்

தீய பழக்க வழக்கங்கள், சுகாதாரமற்ற வாழ்க்கை, தவறான சிந்தனைச் சுழல்கள் போன்ற எத்தனையோ இதய நோய்களுக்கான காரணங்களில் இத்தகைய முகக் கவசங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன. டீவி, சினிமா, செல்போன்கள் இவையும் இதய நோய்களுக்கான முக்கிய காரணங்கள் என்பதை மறுக்க முடியாது. எனவே எவ்வளவுக்கு எவ்வளவு இத்தகைய தீய சக்திகளை நாம் தவிர்க்கிறோமோ, எந்த அளவிற்கு இத்தகைய தீய சக்திகளிலிருந்து நம்மால் விலகி இருக்க முடிகிறதோ அந்த அளவிற்கு நாம் இதய நோய்களின் தாக்குதலிலிருந்தும் விலகி இருப்போம். போலி முகக் கவசங்களை தவிர்ப்பது ஒன்றுதான் உண்மையான இதய ஆரோக்யத்தைத் தர முடியும்.

கன்றாப்பூர் சிவாலயம் மட்டுமல்லாது எங்கெல்லாம் மேற்கூறிய சனீஸ்வர பிரபாவ சக்கரம் துலங்குகிறதோ அங்கெல்லாம் 2024 ஆண்டு முதற்கொண்டு வழிபாடுகளை நிகழ்த்தி வருவதால் சமுதாயத்தைப் பீடிக்கும் இதய நோய்களிலிருந்து மக்கள் நிரந்தர விடுதலை பெற முடியும். போலி முகக் கவசம் அணிய வேண்டிய கட்டாயத்தை சிறிது சிறிதாக தவிர்ப்பவையே சனீஸ்வர பிரபாவ சக்கர வழிபாடுகள்.

ராமபிரானின் பட்டாபிஷேகத்தின் போது தோன்றிய பல அற்புதங்களில் ஒன்று தயைபுரி பறவைகளின் தோற்றமாகும். வால் முதல் தலை வரை நான்கு அங்குலமோ அல்லது அதற்கு குறைவாக உள்ள பறவைகளே தயைபுரி என்ற இன வகைப் பறவைகளாகும். கருப்பு வண்ணத்தில் திகழ்பவை. குடும்ப ஒற்றுமையும் சமுதாய ஒற்றுமையும் ஏற்படுத்துபவை இத்தகைய பறவைகள். கொசுவை உணவாக உண்டு வாழ்பவை. செல்போன் ஆக்கிரமிப்பால் இந்த பறவைகள் அழியும் நிலைக்கு வந்து விட்டன என்பது சித்தர்களின் எச்சரிக்கை. இதனால் சமுதாயத்தில் காமக் குற்றங்கள் பெருகுவதுடன் சமுதாய ஒற்றுமையும் பெருமளவில் பாதிக்கப்படும். கொசுக்களின் நடமாட்டம் அதிகரிக்கும்.
கம்பு தான்யம், மண் தட்டுகளில் நீர் வைத்து வெள்ளிக் கிழமைகளில் இத்தகைய பறவை இனத்திற்கு அளிப்பதால் காது மந்தம் என்ற செல்போன் பாதிப்பால் வருந்துவோர் நலமடைவர். சமுதாய ஒற்றுமையும் பெருகும்.

தினமும் நிலைக் கண்ணாடியைப் பார்க்கும்போது, “நாம் இன்று எத்தனை முகக் கவசங்களை, எந்தெந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அணிந்து கொண்டோம், இவை எல்லாம் தேவையா?” என்று ஐந்தே ஐந்து நிமிடங்கள் ஆத்ம விசாரம் செய்து வந்தால் போதும், சிறிது சிறிதாக போலி முகக் கவசங்களின் பிரபாவம் குறையும். மகான்கள் அனைவருமே தங்கள் கடைசி நிமிட வாழ்க்கை வரை வசீகரமான முகத் தோற்றத்துடன் பொலிந்ததற்கு இத்தகைய ‘போலி முகக் கவசமில்லா’ வாழ்க்கையே காரணமாகும். நீங்களும் ஏன் இத்தகைய சூப்பர் ஸ்டாராக பிரகாசிக்கக் கூடாது?

நம் சற்குருவின் ஜனன ஜாதகத்தில் குரு பகவான் உச்சமாக வேண்டிய கடக ராசியில் சனீஸ்வர பகவான் இருக்க, சனி பகவான் உச்சமாக வேண்டிய துலா ராசியில் குரு பகவான் எழுந்தருளி உள்ளார். இந்த பரிவர்த்தனையால் லாபம் அடைவது அடியார்கள் தானே. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம். நம் சற்குருவின் மேல் நம்பிக்கை உடைய ஒரு அடியார் நவரத்தின மோதிரம் ஒன்று வாங்கினார். பல வருடங்கள் கழித்து அந்த மோதிரத்தில் இருந்த வைரக் கல் ஒன்று பெயர்ந்து விழுந்து விட்டது. எங்கு எப்போது அந்தக் கல் விழுந்தது என்ற அந்த அடியாரால் கூற முடியவில்லை. இந்நிலையில் அந்தக் கல்லை எப்படித் தேடுவது?

ஒவ்வொரு வாரமும் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது அவர் நவரத்தினக் கல்லில் உள்ள வைரங்களை சரி பார்க்கும் வழக்கத்தைக் கொண்டிருந்ததால் கல் காணாமற்போய் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் ஆகி விட்டது என்ற தோராயக் கணக்கை மட்டும் அவர் வைத்திருந்தார். என்ன ஆச்சரியம் ... சுமார் ஒரு மாத காலத்திற்குப் பின் தரையைப் பெருக்கும்போது கடுகு அளவே உடைய அந்த வைரக் கல் கண்டு பிடிக்கப்பட்டது. இது ஒரு ஆச்சரியம் என்றால் இந்தக் கல் கிடைத்த நேரம் இதை விடவும் ஒரு பெரிய ஆச்சரியத்தை தரக் கூடியதே.

இங்கு குறிப்பிட்டுள்ள தயைபுரி பறவைகளை எங்கே காணலாம் என்பதை தெரிவித்தால் அவை இருக்கும் இடத்திற்குச் சென்று உணவு அளிக்கலாமே என்று கேட்டுள்ளார் ஒரு அடியார். இது நல்ல கேள்விதான் ஆனால், சிக்கல் நிறைந்தது. பல இடங்களில் பசு மாடுகள் மேல் மைனா, குருவி, காக்கைகள் வெகுநேரம் அமர்ந்து பயணம் செய்வதைப் பார்த்திருப்பீர்கள். மாடுகளுக்கு சில வகை மூலிகைகளை இனங்கண்டு கொள்ளும் ஆற்றல் உள்ளதால் குறித்த வகை மூலிகைகளை மேயும் போது அந்த மாடுகள் மேல் பறவைகள் அமர்ந்து அந்த மூலிகைகளின் சாரத்தை, சத்தை ஈர்த்துக் கொண்டு விடும். அதனால்தான் மாடுகள் அத்தகைய தெய்வீகப் பறவைகளை துன்புறுத்துவது கிடையாது. இது போன்றதே தயைபுரி பறவைகளின் செயல்பாடும். நம்மால் அவைகளை இனங் கண்டு கொள்ள முடியாவிட்டாலும் பொதுவாக பறவைகளுக்கு வெள்ளிக் கிழமைகளில் கம்பு தான்யம் அளித்தால் அதை தயைபுரி பறவைகள் எங்கிருந்தாலும் ஏதோ ஒரு முறையில் தங்களுக்கு வேண்டிய உணவு சக்தியாக ஈர்த்துக் கொண்டு விடும்.

குருவிற்கு உரிய மூன்றாம் தேதியும், ஞானபண்டிதனின் ஜன்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரமும் திரிதினமாக இணைய இத்துடன் வைரத்திற்கு உரிய சனிக் கிழமையும் இணைவது என்றால் இத்தகைய சங்கமம் எத்தகைய ஒரு அளவிலாத ஆனந்தத்தை அந்த அடியாருக்கு அளித்திருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள். அந்த அடியாருக்கு மட்டுமா இத்தகைய சங்கமம் ஆனந்தத்தை அளிக்கும்? இன்னும் எத்தனையோ அடியார்கள் நம் சற்குருவின் ஜாதக அம்சங்களால் அற்புத பலன்களைப் பெறுவர் என்பதே சனி பகவான் உச்சம் கொள்ளும் இந்த ஆண்டின் ஜோதிடப் பலன்களில் ஒன்றாகும்.

இத்தகைய பலன்களும் சனீஸ்வர பகவானின் பிரபாவ சக்கர வழிபாட்டில் கனிபவையே.

பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ள பல பண்டிகளைகளும் சமுதாயத்திற்கு அபரிமிதமான பலன்களை அளித்தாலும் அதைப் பற்றி பலரும் அறிவது கிடையாது, அறிந்த சிலரும் அதை முறையாகக் கொண்டாடுவது இல்லை, அவ்வாறு முறையாகக் கொண்டாடும் உள்ளம் இருந்தாலும் அதற்கான சூழ்நிலை சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. அவற்றில் ஒன்றே காம தகனப் பண்டிகை ஆகும். தற்காலத்தில பலரும் எரிவாயு தகனத்தை மேற்கொள்வதால் சடலங்கள் புனித அக்னியால் எரிக்கப்படாததால் பல கர்மங்கள் கழிக்கப்படாது பூமியிலேயே தங்கி விடுகின்றன. அந்த சடலங்கள் எத்தனை லட்சம் ஆண்டுகள் ஆனாலும் அடுத்த உயர் நிலையை பெற முடியாது என்பது வேதனையான செய்தியே.

பசுவின் உடலில் அனைத்து தேவதைகளும் தங்கி உறைவதால் பசு வராட்டி ஒன்று மட்டுமே புனிதமான அக்னியை உருவாக்க முடியும். இது குறித்தே நம் முன்னோர்கள் உடல் தகனத்தின்போது வேப்ப விறகு போன்றவற்றுடன் பசு வராட்டியை தகனத்தில் சேர்த்து மக்களுக்கு நற்கதி அளிக்கும் முறையை கற்பித்தனர். நம் சற்குரு போன்ற உத்தமர்கள் தங்கள் உடலை அக்னிக்கு இரையாக்கும்போது அப்போது தோன்றும் அக்னி எம்பெருமானின் முக்கண் ஜோதிக்கு இணையான தூய அக்னி சக்தியுடன் பொலிந்து சமுதாயத்தில் இதுவரை பஸ்மம் செய்யப்படாத கர்ம வினைக் கழிவுகளைக் கழிக்க உதவுகிறது என்றால் உடல் மறைந்த பின்னும் அற்புத சேவையாற்றும் நம் சற்குரு போன்ற மகான்களுக்கு குடம் குடமாக கண்ணீர் வடித்தாலும் நன்றிக் கடன் செலுத்த முடியுமா?!

இவ்வாறு தங்கள் உடலை வாழ்வின் இறுதி வரையில் தூய்மையாகப் பாதுகாத்து வைத்திருந்து அது மறைந்த பின்னும் தூய அக்னிப் பிழம்பாக மாற்றி சமுதாயத்திற்கு சேவை ஆற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் கன்றாப்பூர் சிவத்தலத்தில் சிவராத்திரியை கொண்டாடிய பின்னர் அங்குள்ள ஞானதீர்த்தத்திலிருந்து ஒரு முறை தர்ப்பணம் ஆற்ற வேண்டிய அளவு தீர்த்தம் எடுத்துச் சென்று தங்கள் ஊரில் அமாவாசை தர்ப்பணம் அளிப்பதால் அடியார்களின் உடல் தூய்மை அடைந்து, முழு ஆரோக்யத்துடன் திகழ்ந்து சமுதாயத்திற்கும் நன்மை அளிக்கும் என்பது உறுதி.

10.3.2024 ஞாயிற்றுக் கிழமை அமையும் கிரக சஞ்சார அமைப்புகள் இத்தகைய அபூர்வ ‘காம தகனத்திற்கு’ உறுதுணையாக அமைவதால் அடியார்கள் இந்த அரிதிலும் அரிய சந்தர்ப்பத்தை நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஒவ்வொரு அடியாரும் குறைந்தது ஐந்து உற்றம் சுற்றத்தினரை, அறிந்தவர் அறியாதவர்களையும் இந்த சிவராத்திரிக்கு கன்றாப்பூர் சிவத்தலத்திற்கு அழைத்துச் சென்று அவர்கள் மூலம் தர்ப்பணம் அளிக்கவும் துணை புரிவதால் கனியும் பலன்களை வார்த்தைகளால் விவரிக்க இயலாது.

தயைபுரி நீள்வட்டம்

இங்கு நாம் குறிப்பிட்டுள்ள தயைபுரி குருவிகளைப் பற்றி அறிந்து கொள்ள பல அடியார்களும் விழைவதால் அந்தக் குருவிகள் பற்றிய தியாக வரலாற்றை இங்கு கன்றாப்பூர் திருத்தல மகிமையாக நம் சற்குரு அருள்கின்றார். சதுர வடிவத்திற்கு பாதுகாப்பை அளிக்கும் சக்தி உண்டு. எதிரிகளின் தாக்குதல், பகைவர்களின் சதித் திட்டம் இவை மட்டுமல்லாது நோய்களிடமிருந்து, நோய்க் கிருமிகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் சக்தியும் சதுர வடிவத்திற்கு உண்டு. அதனால்தான் நாம் வீட்டு அறைகளை அமைக்கும்போது சரியான அளவுகளில், சதுரமாக அமையும்படி கட்டுகிறோம்.

முன்னின்று காக்கும்
மூன்று பைரவ மூர்த்திகள்
கன்றாப்பூர்

இத்தகைய சதுர சக்திகளே நான்கின் மடங்காக 4, 8, 16 என்பதாக பெருகுவதால் இவ்வாறு 16 பட்டைகள் உள்ள லிங்க மூர்த்திகளை வழிபடும்படி இந்த ஆண்டின் ஆரம்பித்திலேயே நம் சற்குரு அருளிய வழிகாட்டுதலை அளித்திருந்தோம். இந்த ஏற்பாட்டை பலப்படுத்தும் பொருட்டே கன்றாப்பூர் வஜ்ர தீர்த்தத்திலிருந்து (ஞான தீர்த்தம் எனவும் இந்த தீர்த்தம் வழங்கப்படும்) தீர்த்தம் எடுத்து அதை ஸ்ரீபோஜீஸ்வர மூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் இயற்றும்போது அதனால் சமுதாயத்திற்கு ஏற்படும் பாதுகாப்பு சக்திகள், நோய் நிவாரண சக்திகள், நோய் எதிர்ப்பு சக்திகள்தான் எத்தனை எத்தனை?

தயைபுரி குருவிகள் என்பவை மக்களுக்குப் புரிவதற்காக நம் சற்குருவால் அளிக்கப்பட்ட ஒரு பெயரே. உண்மையில் இந்தப் பறவைகளை இனம் காட்டி விட்டால் அவைகளை வேட்டையாடி மக்கள் முழுவதுமாக அழித்து விடுவார்கள் என்பதும் சித்தர்களின் ஒரு தற்காப்பு ஏற்பாடே. நீங்கள் இங்கு காணும் வீடியோவில் கன்றாப்பூர் திருத்தல தீர்த்தத்தில் தயைபுரி குருவிகளால் ஏற்படுத்தப்பட்ட ஒரு சதுர அமைப்பைக் காணலாம். இந்த சதுர அமைப்பில் சூரிய கதிர்கள் பிரதிபலிக்கப்படும்போது அந்த சூரியக் கதிர்கள் சமுதாயத்தில் நோய் நிவாரண சக்திகளை வர்ஷிக்கும் என்பதே நம் முன்னோர்களின் அறிவுத் திறன்.

ஏதோ நீர்ப்பாசிகளால், மலர்களால் உருவாவதுபோல் இத்தகைய சதுரங்கள் தோன்றினாலும் உண்மையில் இந்த அமைப்பின் பின்னணியாகத் திகழ்பவை தயைபுரி குருவிகளின் தியாகமாகும். எப்படி கங்கையில் நோய்க் கிருமிகள் மிகும்போது கங்கை நீரில் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்திகளும் பெருகுகின்றதோ அது போல் சமுதாயத்தில் நோய்க் கிருமிகளின் சக்தி அதிகமாகும்போது சூரியனின் கதிர்களும் அதிக உஷ்ணம் கொண்டு உயிர்களை தகிப்பது இயற்கையே, மக்கள் நலனுக்காக இது தவிர்க்க முடியாததே.

இந்த உஷ்ண சக்திகளை ஓரளவு ஈடுகட்டுவதற்காகவே கம்பு தான்யத்தை தயைபுரி குருவிகளுக்கு உணவாக அளிக்கும்படி வலியுறுத்துகிறோம். கம்பு உடலுக்கு குளிர்ச்சி ஊட்டக் கூடியது என்பது நீங்கள் அறிந்ததுதானே.

ஜபாகுசும சங்காசம்...!

வட்டத்திற்குள் வட்டம், சதுரத்திற்குள் சதுரம் என்ற அமைப்புகள் குசா சக்திகயை உருவாக்குவதால் இத்தகைய சக்திகள் சமுதாயத்திற்கு நன்மையை வர்ஷிக்கும் என்பதில் சந்தேகமில்லை. கன்றை ஆப்பில் கட்டி வைக்கும்போது அது வட்டத்திற்குள் வட்டமாகத்தானே சுழலும். கன்றாப்பூர் சிவாலய தீர்த்தத்தில் நாம் காண்பதோ சதுரத்திற்குள் சதுரம். இந்த இரண்டையும் எப்படி தயைபுரி நீள்வட்டம் இணைக்கிறது? இதை குறித்து ஆத்மவிசாரம் செய்து தெளிவதும் அடியார்களின் ஆரோக்கியத்திற்கு உதவும் நல்ல ஆத்ம விசார பத்ததிதானே?

பாதுகாப்பை அளிக்கும் பரம தலம் என்பதால் கன்றாப்பூர் சிவாலயத்தில் மூன்று பைரவ மூர்த்திகள் எழுந்தருளி உள்ளனர். மூன்று காலங்களைக் குறிக்கும் பைரவ மூர்த்தியாக இவர்கள் அருள்வதால் நம்முடைய மூன்று கால கர்ம வினைகளையும் எளிதில் களைத்து, கரைத்து நம்மை இறைவனின் திருப்பாதங்களில் சேர்க்க இம்மூர்த்திகளின் பேரருள் துணையாக நிற்கும்.

தயைபுரி குருவிகள் செல்போன் பாதிப்பால் உயிரை விடுவது தியாகமா என்று ஒரு அடியார் வினவியுள்ளார். வெறுமனே உயிரை விடுவதை எப்படி தியாகச் செயலாக எடுத்துக் கொள்ள முடியும்? ஒருமுறை இது போன்ற ஒரு கேள்வியை நம் சற்குருவிடம் கேட்டபோது, “நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள். உங்களுக்கு சம்பளம் ஆயிரம் ரூபாய் என்று வைத்துக் கொண்டால் அதில் 900ஐ நற்காரியத்திற்காக செலவிட்டு விட்டு பாக்கித் தொகையில் ஏனோ தானோவென்று உண்டு, உடுத்தி உயிர் வாழ்வதை ஆன்மீக வாழ்வு என்று நினைக்கிறீர்கள். நிச்சயம் அது தியாகம் ஆகாது. கடவுள் உங்கள் தலையில் களிமண்ணை வைத்துப் படைக்கவில்லை. மூளையை வைத்துப் படைத்திருக்கிறான். அந்த மூளையை வைத்து சிலரை பணிக்கு அமர்த்தி, உங்கள் மூளையை கசக்கிப் பிழிந்து அதன் மூலம் நிறைய வருவாய் ஈட்டி பலர் நல்வாழ்வு வாழ துணை புரிவதுதான் நாங்கள் எதிர்பார்க்கும் ஆன்மீகத் தியாகம்...”, என்றார்.

இத்தகைய தியாக வாழ்வை நாம் மேற்கொள்கிறோமா என்பது கேள்விக்குறியாக இருந்தாலும் இந்த தியாக வாழ்வை மேற்கொள்பவையே தயைபுரி குருவிகள். த யை பு ரி என்ற நான்கெழுத்தும் ஒரு சதுரத்தில் அமையும் நான்கு செங்கோணங்கள் ஆகும். இந்த செங்கோணங்களே பாதுகாப்பு சக்தியுடன் பொலிபவை. உதாரணமாக, நாம் தரிசனம் செய்ய உதவிய கன்றாப்பூர் சிவாலயத்தில் விளங்கிய இந்த சதுரத்தை உருவாக்குவதற்கு சுமார் 300 தயைபுரி குருவிகளின் அயராத உழைப்பே, தியாகமே உதவியது என்பதே நம் சற்குரு அளிக்கும் தெளிவு.

வெறுமனே ஒரு சக்கரத்தை உருவாக்கி விட்டால் மட்டும் போதுமா, இத்தகைய சதுரத்தில் சூரிய பகவானின் கதிர்கள் பிரதிபலிக்கப்படும்போதுதான் அதிலிருந்து நோய் எதிர்ப்பு சக்திகள் உருவாகும். க ஸ் ய ப என்ற நான்கு ஆதித்ய அட்சரங்கள் இத்தகைய செங்கோணங்களில் இணைவதும் ஒரு அதிசயமே.

அபிஜித் கணிப்பு

அபிஜித் முகூர்த்தம் என்ற ஒரு அரிய, அபூர்வ முகூர்த்த கால கணிப்பை பற்றிய பல விளக்கங்களை நம் சற்குரு அருளியுள்ளார்.
1. அபிஜித் உச்சிகால முகூர்த்தம்
2. அபிஜித் நட்சத்திரம்
3. ரேவ சுதம் அபிஜித் சக்திகள்
என்ற மூன்று விதமான அபிஜித் சக்திகள் இந்த கணிப்பில் அடங்கும். எந்த அளவிற்கு ஒருவர் ஆன்மீகத்தில் முன்னேறி தன்னுடைய முழு சக்தியையும் மற்றவர் நலனுக்காகவே பயன்படுத்துகிறாரோ அவர் மட்டுமே அபிஜித் முகூர்த்தத்தை சரியாக கணிக்க முடியும் என்பதை முதல் கட்டமாக ஒவ்வொரு ஆன்மீக அடியாரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அபிஜித் நாயகன் ஸ்ரீசனீஸ்வரர்
கன்றாப்பூர்

உதாரணமாக, ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை சுமார் ஐந்து மணிக்கு திருஅண்ணாமலை தீப அன்னதான கைங்கர்யத்திற்காக வந்திருந்த அடியார்களை வழியனுப்பும்போது, “சீக்கிரம் ஊருக்கு புறப்படுங்கள், சார், இன்னும் சற்று நேரத்தில் ராகுகாலம் வந்து விட்டால் நீங்கள் பறப்படுவது சிரமம் ...”, என்றார். ஞாயிறு மாலை 5 மணி என்பது பழுத்த ராகு கால நேரம் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியானால் நம் சற்குரு கூறியதன் பொருள் என்னவோ.

ராகு காலம் என்பது சுமார் ஒன்றரை மணி நேரம் நிரவி இருக்கக் கூடிய ஒரு கால அளவே. நமது பூமியிலேயே சூரிய உதய, அஸ்தமன நேரத்தைப் பொறுத்து இதன் வியாபக நேரமும் மாறும். மற்ற பூமிகளுக்கு இந்த ராகு கால சக்திகள் மாறுபாடு அடைவது இயற்கையே. எனவே நம் சற்குரு விடை கொடுத்தபோது அவர் எந்த உலக, லோகத்தில் இருந்தார் என்பதைப் பொறுத்து அவருடன் இருந்த அடியார்களும் அந்த லோகத்தில் இருந்ததாகத்தானே பொருள் கொள்ளப்படும். இதை அடிப்படையாக வைத்து ஆத்ம விசாரம் செய்து வந்தால் மற்ற கால அளவுகளுக்கும் அடியார்கள் பொருளை உணர்ந்து கொள்ளலாம்.

இவ்வாறு, அபிஜித் உச்சிகால முகூர்த்தம் என்பது ஒரு நாளில் பகல் பொழுது அமையும் நேரத்தின் இடைப்பட்ட பகுதியாகும். ஆனால், இந்த முகூர்த்தம் நிரவி நிற்கும் கால அளவை (duration) நம் சற்குரு ஒருவரால் மட்டுமே தெளிவாகக் கூற முடியும்.

அபிஜித் நட்சத்திரம் என்பது உத்திராடம் திருவோண நட்சத்திரத்திற்கு இடையே வரும் நட்சத்திரம். ஆனால், இந்த நட்சத்திரத்தால் கால அளவு (duration) மாறாது. அதாவது ஞாயிற்றுக் கிழமை என்னும்போது அடுத்த நாள் திங்கட் கிழமை என்பதாக காலம் மாறி வருகிறது. ராகு காலம் என்னும் நேரத்தால் காலத்தில் மாற்றம் நிகழ்வதில்லை, காலம் தள்ளிப்போவது கிடையாது.

ரேவ சுதம் என்ற அபிஜித் நேரம் 24 நிமிடங்கள் நிரவி நிற்பது. ரேவதி நட்சத்திரத்தின் முடிவு நேரத்தில் உள்ள 12 நிமிடங்கள், அஸ்வினி நட்சத்திரத்தின் முதல் 12 நிமிடங்கள் சேர்ந்தது ரேவ சுதம்.

அபிஜித் முகூர்த்தம், அபிஜித் நட்சத்திர சக்திகள், ரேவ சுதம் என்ற இந்த மூன்று கால பிரபாவங்களும் தயைபுரி சக்கரத்தில் மனித கற்பனைக்கு எட்டாத பிரபாவத்தை ஏற்படுத்தவல்லவையே. ஆனால், இந்த பிரபாவத்தை அடியார்களின் தொடர்ந்த ஆத்ம விசாரத்தாலும், தொடர்ந்து தயைபுரி குருவிகளுக்கு உணவளிப்பதால் மட்டுமே ஓரளவு புரிந்து கொள்ள முடியும்.

ஆயிரம் சங்குகளில் ஒன்று வலம்புரிச் சங்காக உருவெடுக்கும், ஆயிரம் வலம்புரிச் சங்குகளில் ஒன்றுதான் பாஞ்சசன்யம் என்ற சங்கின் சக்திகளுடன் துலங்கும். பாரதப் போரில் பகவான் கிருஷ்ணர் எழுப்பியதே பாஞ்சசன்ய சங்கு நாதம் என்பதை நாமறிவோம். பாஞ்சசன்யம் என்ற வார்த்தை சுட்டும் பொருள்களில் ஒன்றே மகாபாரத யுத்தத்தில் இறந்த, மறைந்த உயிர்கள் அனைத்தும் பகவான் கிருஷ்ணரின் சங்கு நாதத்தால் மீண்டும் உயிர் பெற்று எழுந்து உயர்ந்த நிலையை அடையும் என்பதாகும்.

75 துளி தூய்மையான இரத்தமே ஒரு துளி விந்துவை உருவாக்க முடியும். 75 துளி தூய்மையான விந்து சக்தியே ஒன்றாகத் திரண்டு இறைவனைக் காட்ட முடியும். இவ்வாறு தூய்மையான விந்து சக்தியால் இறைவனை தரிசனம் செய்த உத்தமரே ராமகிருஷ்ண பரமஹம்சர் ஆவார். கலியுகத்தின் கடைசி மனித யோகி என்று இவரை சித்தர்கள் பாராட்டுகின்றனர்.

மனம் திருந்தினால் வாழ்வு மணமே...

ஆயிரம் பெண் பனை மரங்களில் ஒன்றுதான் ஆண் பனை மரமாக இருக்கும். ஆண் பனை மரத்தின் தெய்வீக சக்தியை நாம் ஏற்கனவே விவரித்துள்ளோம்.இவ்வாறு ஆயிரம் ஆண் பனை மரங்களின் சக்தியை ஒருசேரப் பெற்றதே கல்பனை மரமாகும். இந்த கல்பனை மரம்தான் கன்றாப்பூர் சிவாலயத்தின் தலவிருட்சம் ஆகும். கலியுக நியதியாக இன்று கன்றாப்பூர் சிவாலயம் தலவிருட்சம் இன்றிப் பொலிகின்றது.

கற்பு என்பது கல்பனை, கற்பனை ஆகிவிட்டதும் தற்போதைய கலியுகத்தின் முக்கிய காரணமாகும். இது பற்றி குறித்து நம் அடியார்கள் நம் சற்குருவைக் கேட்டபோது, “ஏன் சார், உங்கள் மனைவிமார்கள் கற்போடு இல்லையா?” என்று திருப்பிக் கேட்டார். கற்பு என்பது யுகத்திற்கு யுகம் மாறுபடக் கூடியதே. நளாயினி காலத்து கற்பை நாம் தற்போது ஒப்பிட முடியாது, ஒப்பிடவும் கூடாது. இந்த நோக்கில் பார்த்தால் எத்தனையோ கற்புடைய ஆண்களும் பெண்களும் சமுதாயத்தில் நிறையவே உள்ளனரே. அதனால்தான் இன்றும் அவ்வப்போது மழைப் பொழிவு ஏற்படுகின்றது.

ஸ்ரீகன்னிமூலை கணபதி
கன்றாப்பூர்

கன்றாப்பூர் சிவாலயத்தில் கல்பனை தலவிருட்சம் தற்போது இல்லாவிட்டாலும் இந்த தலவிருட்சத்தின் நிழலில் அருளிய ஸ்ரீகல்பனைநாதர் இன்றும் பக்தர்களின் தரிசனத்திற்காக எழுந்தருளி இருப்பது நாம் பெற்ற பெரும் பேறே. கன்றாப்பூர் திருத்தலத்தில் இறை மூர்த்திகள் எழுந்தருளி உள்ள விதமே நம்மை பிரமிப்புக்கு உள்ளாக்குவதாகும்.

1. கன்னி மூலையில் ஸ்ரீகன்னி மூலை கணபதி
2. இவரை அடுத்து ஸ்ரீதருண கணபதி, ஸ்ரீசித்தி கணபதி, ஸ்ரீபுத்தி கணபதி, ஸ்ரீமுத்தி கணபதி மூர்த்திகள்
3. ஸ்ரீவேதநாதர் அருகே ஸ்ரீபால கணபதி மூர்த்தி
4. ஸ்ரீவள்ளி தெய்வானை சமேதராய் ஸ்ரீமுருகப் பெருமான்
5. ஸ்ரீகன்னி மூலை கணபதியை அடுத்து ஸ்ரீகல்பனைநாதர்
என்ற இந்த ஐந்து விதமான சக்திகளே சாதாரண மனிதனும் கலியுகத்தில் அரிதிலும் அரிதான கல்பனை சக்தியை பெற ஏதுவான அமைப்பாகும். அபூர்வமாக கன்றாப்பூர் திருத்தலத்தில் அமைந்த இந்த பஞ்ச ஆன்மீக சக்திகளை அடிப்படையாக வைத்தே ஒவ்வொரு அடியாரும் வரும் சிவராத்திரி வைபவத்திற்கு குறைந்த பட்சம் ஐந்து அடியார்களை அழைத்து வருமாறு நம் சற்குரு கேட்டுக் கொண்டார். இந்த கல்பனை சக்திகளை ஒரு மனிதன் பெற முடியுமானால் அவன் நிச்சயம் அடுத்த ராமகிருஷ்ண பரமஹம்சராகத் திகழ்வான் என்பது நம் சற்குருவின் உறுதிப்பாடு. எனவே இந்த சிவராத்திரி இறுதியில் மற்றோர் பரமஹம்சரின் அவதாரத்தை எதிர்பார்ப்பது தவறல்லவே?!

ஒருவேளை இத்தகைய பரமஹம்சர் உருவாகா விட்டாலும் கீழ்க்கண்ட மலர் வழிபாடுகளை இயற்றுவதால் கல்பனை சுட்டும் கற்பு சக்திகளை சாதாரண மனிதர்களும் அவரவர் நிலையில் பெற இது உறுதுணையாக அமையும்.
1. சிவராத்திரி முதல் காலத்தில், ஜாமத்தில் செந்தாரை மலர்
2. இரண்டாம் கால அபிஷேக ஆராதனையின் போது செவ்வல்லி மலர்
3. மூன்றாம் கால வழிபாட்டின் போது வெண்தாமரை மலர்
4. நிறைவு கால பிரார்த்தனையின்போது வெள்ளை அல்லி மலர்
என்றவாறாக இறைவன், இறைவிக்கும் மட்டுமல்லாது மேற்கூறிய மூர்த்திகளுக்கும் இத்தகைய மலர்களால் அலங்காரம், அர்ச்சனை செய்து வழிபடுவது அற்புதமான பலன்களை வர்ஷிக்கும். ஆணோ பெண்ணோ இதுநாள் வரை அவர்கள் சமுதாயத்தில் எப்படி வாழ்ந்திருந்தாலும் இந்த சிவராத்திரி முதற்கொண்டாவது அவர்கள் திருந்திய உள்ளங்களைக் கொண்டு வாழ்ந்தால் போதும் அவர்கள் வாழ்வு மணம் வீசும், ஒளி பரப்பும்.

ஸ்ரீகல்பனைநாதர் கன்றாப்பூர்

அது எப்படி ஒரு சாதாரண மலர் அர்ச்சனையில் மகிழ்ந்து விடுபவனா ஈசன் என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றலாம். அவ்யாஜ கருணா மூர்த்தி என்று லலிதா பரமேஸ்வரியைப் புகழ்வது உண்டு. அதாவது காரணம் இல்லாமல், கேட்காமலே கருண புரியும் தாயே லலிதா பரமேஸ்வரி எனும்போது அந்த தாயினும் சாலப் பரிந்து ஊட்டும் சற்குரு நம்மை ‘கவனிக்க’ மாட்டாரா என்ன?

நம் அடியார் ஒருவர் பகிர்ந்து கொண்ட ஒரு இனிய அனுபவத்தை இங்கு விவரிக்கின்றோம். அந்த அடியார் அவ்வப்போது சந்தனம் அரைத்து சுவாமி படங்களுக்கு எல்லாம் சந்தனப் பொட்டு, குங்குமம் வைத்து அலங்கரிப்பது வழக்கம். பின்னர் ஒவ்வொரு நாளும் அந்த படங்களில் உள்ள சந்தனத்தை எடுத்து நீர் விட்டு குழைத்து நெற்றியில் திலகமாக இட்டுக் கொள்வார். பெரும்பாலும் அந்த சந்தனப் பொட்டுகளில் பலவும் திரும்ப எடுக்கும்போது பின்னமாகி, சிதைந்து விடுவது உண்டு.

ஒரு நாள் அவர், “சரி இன்று நாம் சற்குருவின் படத்தில் இதயத்தில் வைத்த சந்தனப் பொட்டை எடுத்துக் கொள்வோம்...”, என்று நினைத்து நம் சற்குருவின் போட்டோ படத்தைப் பார்த்தாராம். என்ன ஆச்சரியம், அவர் கண்களையே அவரால் நம்ப முடியாத அளவில் நம் சற்குருவின் படத்தில் இருந்த சந்தனப் பொட்டு கீழே விழுந்து, “வா ... ராஜா ... வா ... வந்து இந்த பொட்டை எடுத்துக் கொள் ...”, என்று கூறுவதைப் போல் இருந்ததாம்.

மற்ற அடியார்களுக்கு இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றலாம். ஆனால், அந்த அடியாரைப் பொறுத்தவரை இது ஒரு மிகப் பெரிய விஷயமே. காரணம் விதிப்படி அந்த அடியாருக்கு ஆண் வாரிசே கிடையாது, நம் சற்குருவின் பிரார்த்தனையால் அந்த அடியாரின் ஆகாஷிக் ரெகார்டையே மாற்றி அந்த அடியார் ஒரு ஆண் குழந்தையைப் பெறச் செய்தார். அந்த ஆண் குழந்தையின் பிறந்த நாளாக அந்த குறிப்பிட்ட தினம் அமைந்தது என்றால் இது அவ்யாஜ கருணா மூர்த்தியின் பேரருள் பொக்கிஷம்தானே?

ஜனன ஜாதகம் என்பது ஒரு மனிதன் பிறந்த நேரத்தில் இருந்த நவகிரகங்கள் பூமியில் நிலைகொள்வதைக் குறிப்பது. ஆகாஷிக் ரெகார்டு என்பது அந்த மனிதன் இதுவரை கல்லாய், கணங்களாய் ... எடுத்த எல்லாப் பிறவிகளையும் பற்றிய இரகசியங்கள் பதிந்த ஏடு. இது பொதுவாக வால் நட்சத்திரங்களின் வால் பகுதியில் பதிந்திருக்கும். அதனால்தான் தினமும் நட்சத்திரங்களை சிறிது நேரமாவது பார்த்து தியானிக்க வேண்டும் என்று நம் சற்குரு வலியுறுத்துகிறார்.

ஸ்ரீமுருகப் பெருமான் கன்றாப்பூர்

இந்த சந்தனப் பொட்டு நிகழ்ச்சியில் மற்றோர் நறுமணமும் பரிணமிக்கின்றது. சந்தனம் ஆண் தத்துவத்தைக் குறிப்பது, குங்குமம் பெண் தத்துவத்தைக் குறிப்பது. அதனால்தான் சுவாமி படங்களுக்கு சந்தனப் பொட்டு வைத்து அலங்கரிக்கும்போது சந்தனத்தை உருண்டையாக உருட்டி படங்களில் பொட்டு வைத்து அதன் மேல் கட்டாயம் குங்குமப் பொட்டும் வைக்க வேண்டும்.

ஸ்ரீதுர்கை கன்றாப்பூர்

ஒரு முறை ஏதோ ஒரு காரணத்தால் நம் சற்குரு சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும்போது ஞாபக மறதியால் சந்தனப் பொட்டு வைத்த சில படங்களில் குங்குமம் வைக்காமல் படுத்துறங்கி விட்டாராம். அப்போது சில நாய்கள் தொடர்ந்து குலைப்பதாக தோன்றவே தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்து பார்த்து யோசித்தபோதுதான் தான் செய்த தவறு புரிந்ததாம். ஆனால், சுவாமிகளின் இதயப் பகுதியில் பொட்டு வைக்கும்போது அங்கு சந்தனம் மட்டும்தான் வைக்க வேண்டும், குங்குமப் பொட்டு வைக்கக் கூடாது. ஏனென்றால் சுவாமியில் இதயத்தில் வைக்கப்படும் குங்குமப் பொட்டு ஒரு தனமாகக் கருதப்படும்.

மூன்று தனங்களுடன் பெண்கள் இருப்பது தவறு. இவ்வாறு மூன்று தனங்களுடன் விளங்கிய மீனாட்சி அம்மை சோமசுந்தர பிரானை பார்த்தவுடன் அம்மையின் மூன்றாவது தனம் மறைந்த திருவிளையாடல் வைபவம் இவ்வாறு மூன்றாவது தனத்தால் பெண்களுக்கு விளையும் அசம்பாவிதங்களைக் குறிக்கிறது.

ஏதோ ஒரு அடியாருக்கு மட்டும்தான் நம் சற்குரு இவ்வாறு ஆகாஷிக் ரெகார்டை மாற்றுவார் என்று கிடையாது. நம் சற்குருவை மனதார நம்பும் அனைவரும் பெறும் சித்த அனுகிரகமே இது. வரும் சிவராத்திரி அன்று மகர ராசி முதலாக நான்கு ராசிகளில் எட்டு கிரகங்கள் எழுந்தருளி இருக்கும் அற்புதத்தை நல்ல நவகிரக சஞ்சாரமாக மாற்ற இந்த சிவராத்திரி வழிபாடு உறுதுணையாக அமையும். குறிப்பாக தந்தையும் தனயனுமாக சூரியன் சனீஸ்வரன் இருக்கும்போது இவர்கள் நிலைத்த ராசியான கும்பத்தில் ஆட்சி கொள்வதால் தந்தைக்கும் மகனுக்கும் உள்ள முறிந்த உறவுகள் சுமுகமாகும், தந்தை வழி பித்ரு தேவர்களின் அனுகிரகம் கனியும்.

சகுனியுடன் நட்பு கொண்டதால் அழிந்தான் துரியோதனன். பரமாத்வான கிருஷ்ணருடன் நட்பு கொண்டு அழியாப் புகழையும், மேலான வீடு பேற்றையும் பெற்றான் அர்ச்சுனன் என்பதை நாம் அறிவோம். அதே சமயம் தனக்குப் பிடித்தவர்களை காட்டும் மாயக் கண்ணாடியின் முன் பகவான் கிருஷ்ணர் நின்றபோது அது சகுனியைத்தான் பகவான் விரும்பியதாகக் காட்டியது என்பதை நாம் அறிவோம்.

இதிலிருந்து நாம் அறியும் பாடம் என்ன? ஒருவர் யாரை விரும்பினாலும் அவருடைய எண்ணம் தூய்மையாக இருந்தால் அவர் என்றும் வெற்றி வாகை சூடுவார் என்பதே. இதை ஒரு உதாரணம் மூலம் விளக்குவோம்.

ஒரு முறை நம் சற்குரு ராம ஜன்ம பூமியான அயோத்திக்கு தம் அடியார்களுடன் எழுந்தருளினார். அங்கு ராமபிரான் இறுதியாக தன் உடலை நதியில் மறைத்த சரயு நதிப் பகுதியில் நீராடிக் கொண்டிருந்தபோது நம் சற்குருவின் மைந்தனின் சட்டையை ஒரு குரங்கு தூக்கிக் கொண்டு ஓடி ஒரு மரத்தின் மேல் ஏறிக் கொண்டு விட்டது. பல அடியார்களும் வெகுநேரம் அந்த குரங்குடன் போராடிய பின்னரே அந்தக் குரங்கு சட்டையை போட்டு விட்டு ஓடி விட்டது.

பொதுவாக, ஒரு குரங்கு நம் ஆடையை எடுத்துக் கொண்டு விட்டால் அது நமக்கு எதிர்காலத்தில் வரப்போகும் அவமானமான சூழ்நிலையை குறிக்கிறது. அந்தச் சட்டையில் வெள்ளை, மெரூன் நிறத்தில் அமைந்த கட்டங்கள் இருந்தன. கட்டங்கள் பாதுகாப்பு அம்சத்தை குறிப்பவை, சந்திர பகவானுக்கு உரித்தான வடிவம். மெரூன் நிறம் செவ்வாய் பகவானுக்கு உரித்தானது, இதில் சனி பகவானின் வேகமும் சிறிது கலந்திருக்கும். இவை அனைத்தையும் வரும் சிவராத்திரி அன்று அமையும் கிரக சஞ்சாரத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அடியார்களுக்கு வரும் அவமானமான சூழ்நிலையை தவிர்ப்பதற்காக நம் சற்குரு மேற்கொள்ளும் முயற்சியே இந்த சிவராத்திரி வழிபாடு என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம்.

மெரூன், வெள்ளை நிறத்தில் அமைந்த கட்டங்கள் கூடிய சட்டையை எந்த அளவிற்கு அடியார்கள் வரும் சிவராத்திரியை அடுத்த அமாவாசை அன்று தானமாக அளிக்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களோ, அவர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அவமானமான சூழ்நிலைகளை சந்திக்க மாட்டார்கள் என்பது நம் சற்குரு நமக்காக பரிந்தளிக்கும் பாதுகாப்பு நடவடிக்கை. இத்தகைய தானத்தை ஊஞ்சலூரில் உள்ள ஸ்ரீநாகேஸ்வரர் சிவாலயத்திலோ அல்லது “மகர புத்திரன்” என்று நம் சற்குருவால் அன்பாக அழைக்கப்படும் மகான் சேஷாத்ரி சுவாமிகள் அதிஷ்டானத்திலோ அல்லது திருஅண்ணாமலை சேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்திலோ அளித்தல் சிறப்பாகும். மகான் சேஷாத்ரி சுவாமிகள் ஜனன ஜாதகத்தில் செவ்வாய் பகவான் உச்சம் பெற்று சூரிய பகவானுடன் இணைந்து விளங்குவது இங்கு குறிப்பிடத்தக்கது.

நம் சற்குரு யாருக்கு தன் மைந்தனின் சட்டையை தானம் அளித்தார், அந்தத் தானம் பெற்றவர் எப்படி இத்தகைய ஒரு அவமானம் அடையக் கூடிய சூழ்நிலையிலிருந்து காப்பாற்றப்பட்டார் என்பதை நம் சற்குருவுடன் கூடவே இருந்த ஒரு சில அடியார்கள் மட்டுமே அறிவர்.

இந்த வெப்தளத்தில் இதுவரை அளிக்கப்பட்டு வந்த நம் சற்குருவின் செய்திகள் நிறைவடைகின்றன. இந்த வெப்தளம் அனைவருக்கும் பயனாகும்படி துணைபுரிந்த அனைத்து அடியார்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி!

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam