உதட்டில் தவழ வேண்டியது புன்னகையே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

(மனசுல) “பிடி”த்த பத்து!

சிறுவன், பெரியவரிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகளைப் பெரும் புராணமாகவே வடித்திடலாம். அவற்றுள் பலவும் பன்முறை அவன் வாழ்க்கையில் மீண்டும், மீண்டும் நிகழ்ந்தாலும், ஒவ்வொரு முறையும் அவை அவனுள் விதவிதமான அனுபவங்களை ஏற்படுத்தி, அற்புதமான பாடங்களைப் புகட்டியதை அவன் நன்கு உணர்ந்திருக்கின்றான். பார்த்துப் பார்த்துப் பரவசமான ஸ்ரீஅங்காளி ஆலயத் தூணருகே பெரியவர் கால் நீட்டி அமர்ந்த கோலம் அவனுள் கற்சிலையாய்ப் பதிந்து விட்டாலும், அவரைத் தினமும், ராயபுரம் கல்மண்டபம் அங்காளி ஆலயத்தில், தூணருகே அதே கால் நீட்டிய கோலத்தில் கண்டால்தான், அவனுக்கு மனசாந்தியும், புத்துணர்ச்சியும், இனம் புரியா ஒரு வகை சந்தோஷமும், ஒரு வகைத் தற்காப்பு உணர்ச்சியும் கூட ஏற்படுவதைக் கண்டு அவன் அதிசயித்து, ஆத்ம விசாரம் செய்து மென்மேலும் ஆனந்தித்ததும் உண்டு.

ஆனால் பெரியவரோ நறுக்குத் தெரித்தாற்போல், “நல்லா மனசுல புடி!” என்று எல்லாவற்றையும் ஒரே (குருவேத) வாக்கியமாக முடித்து விட்டார்!

“உருவத்தைப் பார்க்காதே நயினா, நல்லா மனசுல புடி! நான் திடீர்னு மறைஞ்சுட்டாக் கூட, நீ பாட்டுக்கு நான் சொன்ன நற்காரியங்களை எல்லாம் நிறைவேத்தி ஆகணும், தெரிஞ்சுதா!”

சிறுவனால் இதைத்தான் ஒரு துளிக்கூட ஜீரணிக்க முடியவில்லை! ”திடீர்னு மறைஞ்சுட்டாக் கூட” என்ற பெரியவரின் இந்த வாக்கியத்தில் தனக்கு “செக்யூரிட்டி” இல்லாமல் போய் விட்டதாகவே அவன் நெடுநாள் எண்ணினான்! ஆனால் இதற்கும் உறுதியான விடையாகப் பெரியவர் பல குருகுலவாச அனுபூதிகளைத் தந்து, அவனுக்குக் “குருவருளே” சத்தியமான, சாசுவதமான, நிரந்தரமான, எந்த லோகத்திலும் காப்பாற்றும் eternal security என ஞானத் தெளிவைத் தந்திட்டார். என்ன இருந்தாலும் அவன் பள்ளிச் சிறுவன் தானே! எவ்வளவுதான் அவனுடைய குருவி மூளையில் ஏறும்!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

அந்த முறை… பெரியவருடன் சென்ற பயணமே முற்றிலும் புதியதான அற்புத நிகழ்ச்சிகளுடன் அமைந்தது!

அக்காலத்தில் நடுநாடு எனப் பிரசித்தி பெற்ற, தற்போதைய புதுச்சேரிப் பகுதிக்கு, அவனைப் பெரியவர் அழைத்துச் சென்றார், அது மிகவும் நீண்ட நெடும் பயணமாக அமைந்து விட்டது. கோடைக் கால விடுமுறை என்றாலும் பரவாயில்லை, பள்ளியிலும், வீட்டிலும் சமாளித்து விடலாம். ஆனால் டிசம்பர் மாத அரையாண்டுத் தேர்வுகளை ஒட்டி அவன் அப்போது செல்ல வேண்டியதாயிற்றே!

“வந்து பார்த்துக் கொள்ளலாம்!” – அதிதுணிச்சலாய் முடிவெடுத்தான் சிறுவன்! பரமஹம்சர் சொல்வது போல் தெய்வீகத்தில் “One Should Plunge!”

எங்கும் தங்குவதா? யோசி!

… ஆங்காங்கே நல்ல அடர்த்தியான மரங்கள்.. சிறிய காடு போல் பல இடங்கள் இருந்தன. இரு கிராமங்களுக்கு இடையே பலத்த இடைவெளி இருந்தது. இரவில் மரத்தடி, திண்ணை வீடுகள், சிறுசிறு மண்டபங்களில்.. எனப் பல இடங்களில் பெரியவர் தங்கினார். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான அனுபவத்துடன் தான்! இவற்றை எல்லாம் என்றுதான் எழுத்து வடிவில் பூலோகத்தார்க்கு உரைப்பதோ, அனைத்தும் கடவுள் சித்தம்!

ஏதோ அவனைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான பாரதத்திற்குப் பெரியவர் இட்டுச் செல்வது போல் இருந்தது. இப்புதுச்சேரிப் புனிதப் பயண அனுபூதிகள் யாவும்!

இதன் பிறகு வந்த பல ஆண்டுகளில் (பாண்டிச்சேரி) அன்னையைச் சிறுவன் தரிசித்த அற்புத வைபவங்களை உரைத்திடப் புகுமின், அது விசேஷமான தெய்வீகக் காப்பியமாகுமே! எல்லாம் இறைவன் விருப்பம்தானே!

“போற வழியில இருக்கற எல்லா மண்டபத்துலேயும் தங்கிட முடியாதுடா கண்ணு! பேய் வாசம், துர்தேவதைகள் வாசம் இல்லாத இடமாப் பார்த்துத் தங்கணும்! யாராவது காசு கொடுத்துத் தேள்கொட்டு வாங்கிப்பாங்களா என்ன? சொல்லு!”

“அப்படீன்னா துர்தேவதைகள் இருக்கற மண்டபங்களை, வீடுகளை எல்லாம் ஹோமம் பண்ணித் தூய்மை செய்யறதே ஒரு பெரிய சமுதாய சேவைதானே வாத்யாரே!”

“உண்மைதாண்டா! ஆனால் இந்த வேலைக்காக நாம பூமிக்கு வரலையே! ஜீவன்களோட கர்ம பரிபாலனத்துக்குன்னு தானே விசேஷமாக நம்மை அனுப்பி இருக்காங்க! இது ரொம்ப கஷ்டமான பீல்டுடா! அதுஅதுக்குன்னு கடவுள் பலரையும் அனுப்பி வைப்பாரு! எப்படியும் உலகம் இயங்கணுமே!”

“ஆனா ஒண்ணு தெரிஞ்சுக்கோ, ஒரு விதத்துல மந்திர சக்தியினால துர்தேவதைகளை ஓட்டிப் பூவுலகைக் “க்ளீன்” செய்யறதைக் கூட ரொம்பவும் கஷ்டப்பட்டுப் பண்ணிடலாம்! ஆனால் கலியுகத்துல துர்வேதைகள், பேய்கள்ன்னா யாருன்னு முதல்ல தெரிஞ்சுக்கோ? திடீர்னு பேய், பிசாசுகள் பூமிக்கு வந்து குதிச்சுடலை, தெரியுமா உனக்கு!”

எல்லாவற்றிற்கும் பிராயச்சித்தம் பூமியில்தான்!

“மோசமான வாழ்க்கை நடத்தறவங்க, தற்கொலை பண்ணிக்கிறவங்க, குருதுரோகம் பண்றவங்க, தீய வாழ்க்கை வாழ்றவங்க … இவங்க தான் இதே பூமியில வாழ்றதுக்கு உடல் கிடைக்காம பாவப்பட்ட ஜன்மாவா, ஆவியாப் பொறந்து அடிபட்டு, மிதிபட்டு, அல்லல்பட்டு … தான் செஞ்ச பாவங்களுக்கு அங்கங்க அவதிப்பட்டு… அப்புறம்தான் அவங்களுக்கு ஓரளவு பிராயச்சித்தம் கிடைச்சாலும் கிடைக்கலாம்! இல்லாட்டி இல்லைதான்! ஆனா இதுவே ஆயிரமாயிரம் வருஷத்துக்கு மேலா ஆவி வடிவக் கதையா, தேகமில்லாத வாழ்க்கையா ஓடும்! ஆனா ஆவி வாழ்க்கையில் ஒவ்வொரு நிமிஷமும் நரக வேதனைதான்! தூங்க முடியாது, எங்கேயும் தங்க முடியாது! இதனாலத்தான் தற்கொலைங்கறது மகா பாபகரமான செயல்னு சொல்றது!”

“ஆனா ரொம்ப, ரொம்ப அபூர்வமாக கிடைச்ச மனுஷப் பிறவியில, கொடுமையா வாழ்ந்தவங்களுக்கு அவ்வளவு ஈஸியா ஒரே ஹோமத்துல தர்ம தேவதைகள் பரிகாரம் கொடுத்துடுவாங்களா? அவங்கவங்க செஞ்சதுக்கு அவங்கவங்க அனுபவிக்கறது தானப்பா நியாயம், தர்மம், நீதி! அப்படீன்னா துர்சக்திகளும் திருந்தறதுக்கு, இந்த பூமி வாழ்வு தேவைதானே! இப்ப சொல்லு பார்க்கலாம்! இந்த பூமியில தாண்டா எல்லாத்துக்கும் பிராயச்சித்தம் கிடைக்கும்! அவ்வளவு புண்ணிய பூமிடா நாம் வாழற பூமி!”

சிறுவன் ஆத்ம விசாரம் செய்து யோசிப்பதற்குள் காரிருள் சூழ்ந்து கொள்ளவே…

இருவரும், அங்கு, ஒரு கோயிலருகே வேப்ப மரத்தடியில் தங்கினார்கள்..

இரவு சாப்பாடு? கண்ணுக்கு எட்டிய வரை டீக்கடை ஒன்று கூடத் தென்படவில்லையே!

இரும்பையில் ஓரிரவு!

அந்த இடம்… இரும்பை (மாகாளம்) .. என்று பெரியவர் சொன்னதாகச் சிறுவனுக்கு ஞாபகம்! ஏனென்றால் கடுவெளிச் சித்தரின் தவபூமிகளில் ஒன்றாக, இதனைப் பற்றி, இங்குதான், பெரியவர் அவனுக்கு நிறைய விஷயங்களைக் கொட்டினார்!

பல ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த அனுபூதி ஆயிற்றே! அப்போது இரும்பைச் சிவாலயம் சிதிலமடைந்து இருந்தது. ஒரு சில பகுதிகள் தொட்டாலே கழன்று விடும் போலிருந்தன! இரண்டு மூன்று நாட்கள் அங்கு தங்கி, பக்கத்துக் கிராமத்து ஜனங்களையும் அழைத்து, குடம், பானை, குச்சிகளைக் கொண்டு வரச் செய்து, ஆலயத்தில் நன்கு ஒட்டடை அடித்து, நீர் விட்டு மிகவும் கவனத்துடன் கோயிலை நன்கு அலம்பி, இயன்றவரை, பெரியவர் ஆலயத்தைச் சுத்தமாக்கினார்.

அப்போதுதான் பெரியவர் கடுவெளிச் சித்தர் மகிமையைப் பற்றிச் சிறுவனுக்கு நன்கு விளக்கினார்! கடுவெளிச் சித்தர் தியானம் பயின்ற இடங்கள் ஒரு  சில உண்டு. திருவையாறு அருகில்…. புதுச்சேரி அருகில். … திருக்குற்றாலம் அருகில் ….. இவ்வாறாக  இச்சித்தர் தபஸ் செய்த இடங்கள் பெரும்பாலும் வானம் பார்த்த பரந்த வெளியாக இருக்கும்! அவர் தவம் பூத்த பூமியும் சற்றே சிகப்பு நிற வடிவில் இருக்கும்..

அன்றிரவு…

கிராமத்தார் அன்புடன் அளித்த மர பெஞ்சுகளை வேப்ப மரத்தடியில் பரப்பி பெரியவரும், சிறுவனும் படுத்திருந்தார்கள்.. அப்போது அங்கு ஒரு பெரிய பிள்ளையார் குடி கொண்டு இருந்தார்!

இரவு சுமார் ஒருமணி வாக்கில்….

திடீரென்று சிறுவன் விழித்தபோது…. அருகில் பெரியவரைக் காணோம்! சிறுவனுக்குப் “பக்கென்று, பக்கென்று” இருந்தது.!

“எந்தச் சமயத்தில் வாத்யார் என்ன செய்வார் என்றே சொல்ல முடியாதே! வேறு லோகங்களுக்குப் போயிருக்கின்றாரா? அல்லது இந்த ஏரியாவை விட்டே கிளம்பி விட்டாரா?’

ஒலியும் ஒளியும் மங்காதிங்கே!

ஏதேதோ சிந்தனைகளில் லயித்தவாறே சிறுவன் மெதுவாக எழுந்தான். ஆனால், என்ன ஆச்சரியம்? அவனையும் அறியாமல் கால்கள் அவனைக் கோயிலை நோக்கி ஈர்த்துச் சென்றன. கோயிலோ வெளியில் பூட்டப்பட்டிருந்தது. அந்தக் காலத்துத் திடமான மரப் பட்டைக் கதவு! ஆனால் கதவில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள்!

திடீரென்று, எங்கோ அருகில் ‘ஜல் ஜல்வென்று’ சலங்கை ஒலிகள் கேட்டன., சிறுவனுக்குப் பயம் வந்து விட்டது! என்னது “மீண்டும் செஞ்சி அனுபவமா?” சிறுவன் நினைக்கவே அதிர்ந்தான்!

“இரவு நேர தேவதைகளா? ஆவிகளா?”

இரவு நேர தேவதைகள் அல்லது ஆவிகள் ஊடுருவுகையில் நள்ளிரவில் வெளிச் செல்லலாகாது எனப் பெரியவர் வலியுறுத்துவார். மேலும் மரத்தடியில், மொட்டை மாடியில், திறந்த வெளியில் இரவில் படுக்கக் கூடாது என்றும் அடிக்கடி கூறுவார். பிரார்த்தனைகள், நேர்த்திக் கடன்கள், பாத யாத்திரை, சபரிமலை விரதம் போன்ற இறைப்பணிகளில் இருக்கும் போது மட்டும் ராத்திரி சூக்தம், சிவபுராணம், நட்சத்திர சூக்தம் போன்ற குறித்த சில இரவு நேர இறைத் துதிகளை ஓதி விட்டு, மரத்தடியில் எப்போதாவது படுக்கலாம், அதுவும் சற்குருவின் அனுமதியுடன்தான்!

இதற்கு முன்னர் பல மண்டபவங்களில், மரத்தடியில், சாலையடியில் அவர்கள் படுத்திட்ட போது…

பெரியவர், சிறுவனுக்கு ஆங்காங்கே ‘ஜல்ஜல்லென’ சலங்கை ஒலியுடன் நடந்து வரும் நல்தேவதைகளின் தரிசனத்தைப் பெற்றுத் தந்திருக்கின்றார். எல்லோர் கண்களுக்கும் இவை தென்படுவதில்லை. ஆனால் பலருக்கும் சலங்கை ஒலி மட்டும் நன்றாகக் கேட்கும்! பல கொடுமையான ஆவிகளையும் அவன் கண்டதும் உண்டு!

ஆனால் இங்கோ ‘ஜல்ஜல்’ ஒலி ஆலயத்தில் இருந்து எழுந்தமையால் சிறுவன் சற்றே அமைதி கொண்டான், ‘பயம் ஏற்படவில்லை’ என்பதே, தற்போது அவனுக்குப் பெரிய விஷயமாக ஆகியது!

எனினும் சலங்கை ஒலி அதிகரிப்பது கண்டு திகைப்பும், ஆச்சரியமும் கொண்டவனாய், சிறுவன், மெதுவாக, அவனையும் அறியாமல், கோயில் கதவை இன்னமும் நெருங்கினான்.

அக்காலத்தில் கோயிலுக்கு மின்சார இணைப்புக் கிடையாது. கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) ஆதலின் சுற்றிலும் காரிருள்! தெரு விளக்குகள் கூட இல்லாத காலமது!

ஆயிரம் சூரியன் வந்தனரே!

கதவை நெருங்க… நெருங்க…

என்ன ஆச்சரியம்! உள்ளே வெளிச்சமானது மாபெரும் வெள்ளமாய்ப் புகத் தொடங்கியது. ‘பளிச் பளிச்சென்று’ ஆங்காங்கே சூரிய வெளிச்சம் போல் நல்ல ஒளிப் பிரவாகம் படரலாயிற்று!

சிறுவன் கோயிலின் கதவைச் சற்றே தள்ளிட..

ஓட்டை இடைவெளி நன்கு பெரிதாகியது! ஆயிரமாயிரம் மின்னல்கள் கூடு கட்டி வந்தாற்போல்….

லட்சக் கணக்கான டியூப் லைட்டுகள் ஒன்றாய் ஒளி தருவது போல்…

ஆலயம் முழுவதும் மகத்தான ஒளி வெள்ளம் பரவியது! இத்தனைக்கும் ஒரு தேங்காய் அளவு ஓட்டை மூலமாகத்தான் சிறுவனால், கோயிலின் உள்ளே பார்க்க முடிந்தது!

கோயிலின் உள்ளே…

மூலச் சுயம்பு லிங்கத்தின் வடிவு நன்றாகவே தெரிந்தது! ஆலயம் முழுதும்தான் ஆயிரமாயிரம் நட்சத்திரங்களைப் பிழிந்து விட்டாற் போல் ஒளி வெள்ளம் பாய்ந்துள்ளதே! எனவே ‘விளக்குத் திரி’ முதல், தூண் சந்தில் குங்குமம் அப்பியிருப்பது வரை, ஆலயத்தினுள் இருப்பவை எல்லாமே 3D போல் நன்றாகவே தெரிந்தன!

உள்ளே … பிளவுபட்ட மூல லிங்கமும், அதன் மேல்பகுதிப் பிளவுகளும், பிளவுகளை நன்றாகக் கம்பியால் இழுத்துக் கட்டி இருப்பதும் மிகவும் நன்றாகவே துல்லியமாகத் தெரிந்தன!

இரும்பைக்குள் ஒரு வானமா?

“இது என்ன தேவலோகத்தின் ஒரு பகுதியா? இங்கே இப்படி இவ்வளவு வெளிச்சம் வரக் காரணம் என்ன? இங்குதான் மின் இணைப்பே கிடையாதே! எங்கிருந்து தான் இந்த வெளிச்சம் வருகிறது? கோயிலுக்கென உள்ளே தனிச் சூரிய, சந்திரக் கோள்கள், துருவ நட்சத்திரங்கள் ஸ்பெஷலாகப் படைக்கப் பட்டிருக்கின்றனவா?

சிறுவன் எண்ணி, எண்ணி வியந்தான்!

தான் பெரியவரைத் தேடி வந்தோம் என்பதையே அவன் மறந்தும் விட்டான்!

“ஆமாம்… ஆலயங்களில் இரவில் மனிதர்களுக்கான அர்த்த சாம பூஜை முடிந்த பின்னர், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கான தேவ பூஜை தொடங்குவதாகப் பெரியவரே சொல்லி இருக்கின்றாரே! ஒரு வேளை தேவ பூஜை இந்தக் கோயிலில் தொடங்கி சூரிய, சந்திரர்களே நேரில் வந்து விட்டனரோ! ஆனால் கடந்த இரண்டு மூன்று நாட்களாக நாம் இங்குதானே தங்கி இருக்கின்றோம்! இதுமாதிரி ஒன்று நடப்பதாக, இதுவரையில் நமக்குத் தென்படவில்லையே!”

சிறுவன் கண்களை நன்றாகக் கசக்கிப் பார்த்தான்., அனைத்தும் நனவே, சந்தேகமே வேண்டாம்!

இப்போது சிறுவன் மிகவும் சாந்தமானான், ஆனால் அதே சமயத்தில் நல்ல அமைதியும் கொண்டான். அவனிடம் இருந்த ஆச்சரியம், படபடப்பு அனைத்தும் விலகின!

நடந்த நல்விக்ரகங்கள்!

சிறுவன் மகா சாந்தத்துடன் தற்போது கதவில் நன்கு விலகிய பெரிய ஓட்டை வழியே ஆலயத்திற்குள் மீண்டும் நன்றாக எட்டிப் பார்த்தான்!

என்ன ஆச்சரியம்..!

ஆலயத்தில் இருந்த ஒவ்வொரு தெய்வக் கற்சிலையும் ஒவ்வொன்றாக நகர்ந்து, நகர்ந்து.. ஜல்ஜல்லெனச் சதங்கைகள், சலங்கைகள் முழங்க… மூலத்தானத்தை நோக்கி நகர்ந்து சென்றன.. ஒவ்வொன்றிலும் எக்கச்சக்கமான ஒளிப் பிரவாகம்!

தெய்வ மூர்த்திகள், வரிசையாய் அசைந்து, அசைந்து அற்புத நாட்டிய பாணியில் நடந்து செல்வதைக் கண்டு சிறுவன் அதிசயித்தான்! அனைத்து மூர்த்திகளும் மூலத்தானம் முன் வரிசையாகப் பணிந்து நிற்க, அவர்கள் பேசுவதைச் சிறுவனால் நன்கு கேட்க முடிந்தது.. ஆனால் அவைகளின் மொழியுரைகள் ஒன்றையும் தான் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை!

எவ்வளவு நேரம்தான் அங்கு சிறுவன் சிலையாய்ச் சமைந்து நின்றானோ அவனுக்கே தெரியாது!

போதும் என்பார், போதாதே!

“போதும்டா கண்ணு பார்த்தது! இதெல்லாம் தெய்வ தேவலோகக் காட்சியப்பா! திருக்கயிலாய மலையில, மானசரோவர் பக்கத்துல, கிளேஸியர்ல சூரிய ஒளி பட்டுப் பிரகாசிக்கறதைப் பார்த்தாலே கண் பார்வை பாதிக்கும்னு அவங்கவங்க அங்கே வேக வேகமா கருப்புக் கண்ணாடியை எடுத்து மாட்டிப்பாங்க!”

“ஆனா, இங்கேயோ, உன்னை எதுவுமே இல்லாமலேயே, சாதாரணமான கண்ணாலேயே ஆயிரம் சூரியப் பிரகாசத்தையே பார்க்க வச்சதே பெரிய அனுகிரகம்தான்! இதை நல்லாப் புரிஞ்சுக்கோ! இந்த அனுகிரகத்துக்குன்னு பக்கத்துல ஒரு குரு வேணும்கறதையும் தெரிஞ்சுக்கோ! குரு இல்லாத வாழ்க்கை குருட்டு வாழ்க்கையப்பா! உன்னை, இதுவரைக்கும் இவ்வளவு நேரம் இதைப் பார்க்க வச்சதே பெரிய விஷயம்டா! இதுக்குன்னு விசேஷமான பார்வையைக் குரு ஒருத்தராலத்தான் தரமுடியும்.. நல்லாத் தெரிஞ்சுக்கோ!”

“சரி.., சரி.. பார்த்தது போதும் வா, வா! நாம பூலோகத்துக்கு வந்த கடமை இன்னமும் நிறைய இருக்கு! இதைப் பாத்துக்கிட்டே அதிசயிச்சு, அதிசயிச்சுக் காலத்தை ஓட்ட முடியாது!”

ஆம், நம் பெரியவர்தான் சிறுவனின் பின்புறம் நின்றவாறு, ஒரு பெரிய விளக்கம் கொடுத்து அவன் சட்டையைப் பிடித்து இழுத்தார்!

“இவர் ஏன் இந்த மாதிரியான தெய்வீகக் காட்சியை, இப்படிப் பாதியிலேயே பிடுங்குகின்றார்?”

ஏதோ முணுமுணுத்தவாறே அரைகுறை மனதுடன் வெளியே வந்தான் சிறுவன். ஆனால் அதே சமயத்தில் இன்னொன்றையும் நன்றாகவே உள்ளூர உணர்ந்தான்.. என்ன தான் அது?

தெளிந்த (ஞான) ரசம்!

“இந்த தேவ நிகழ்ச்சியைப் பார்க்க வைத்ததும் இவரே! இதைப் பார்ப்பதற்குமான விசேஷமான கண் பார்வையும் அளித்தவரும் இவரே! இவர் இல்லாவிடில் நாம் இன்று இங்கு வந்திருக்கப் போவதில்லை! எனவே இன்னமும் கொஞ்ச நேரம் இவர் நம்மை இந்த அற்புதக் காட்சியைப் பார்க்க வைத்திருக்கலாமே என்று சொல்வதற்கு நாம் யார்? நமக்கு என்ன உரிமை இருக்கிறது இப்படி நினைப்பதற்கு?”

சிறுவன் நன்கு தெளிந்து விட்டான்! அவன்தான் ஆத்ம விசாரத்தில் “மன்னாதி மன்னன்” ஆகி விட்டானே!

சரிதானா(னோ)! நீங்களே சொல்லுங்களேன்! ஏனென்றால் இந்நேரத்தில் நீங்களும் வேறு எதையாவது படித்துக் கொண்டு இருக்கலாமே! குருவருளின்றி இந்த அனுபூதியைத் துய்த்திருக்க முடியாதே!

ஸ்ரீகொன்றையடி விநாயகர்

அறிய இயலாப் பல காலமாக, பூமி ஆகாச மூர்த்தியாக, வானவெளியதாக, வெயில், மழை, பனியில் துலங்கி, நாமக்கல் ஆஞ்சநேயர், திருச்சி வெக்காளி அம்மன், ஹரித்வார் ஸ்ரீமிருத்யுஞ்ஜயர், உப்பூர் விநாயகர் போன்ற வெட்ட வெளியில் உறையும் மூர்த்திகளுக்கு விசேஷமான அனுகிரக சக்திகள் உண்டு. கை மேல் பலன் என்பது போல், பக்தி நிறைந்து வழிபடுவோர்க்கு இத்தகைய வானம் பார்த்த “ஆகாச மூர்த்திகள்” நல்வரங்களை நன்கு அள்ளி வழங்குகின்றனர். இவ்வாறான ஆகாச மூர்த்திகளுள் ஒன்றே புதுக்கோட்டை திருமயம் அருகே உள்ள அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயக மூர்த்தி என நாம் நன்கு அறிவோம்!

ஸ்ரீகொன்றையடி விநாயக மூர்த்தியின் கூடுதலான விசேஷ அம்சம் யாதெனில், இருபுறமும், வேத சக்திகள் நிறைந்த கொன்றை மர நிழலில் பிள்ளையாரப்பன் உறைவதால், வேதப் பூர்வமான அனுகிரகக் கிரணங்களை, நித்ய மழையாகப் பொழியும் பேற்றினை இத்தலம் பெற்றுள்ளதே ஆகும். இவ்விடத்தில், ஸ்ரீகணபதிப் பெம்மான் முன் தர்ப்பைப் பாயில் அமர்ந்து தியானித்தலும், ஸ்ரீகணபதி ஹோமம் நிகழ்த்துவதும், கண்கூடாகவே மகத்தான பலன்களைத் தருவதாகும்.

இவ்வாறு பன்னெடுங்காலம் பூம்யம் ஆகாசவாசம் பூண்ட பின், இறைநியதியாக, பிற்காலத்தில் கோயில் கோபுரம் வந்தமைந்து ஆலயத்துள் மூலமூர்த்தியாக வாசம் பெறுகின்ற ஆகாச க்ஷேத்ர மூர்த்திகளும் பெறுதற்கரிய பேரருளைப் பொழிகின்றனர். இதுவும் சில்ப ஆகமத்தில் இடம் பெற்றுள்ளது! கொன்றையடி விநாயக மூர்த்தமும் இவ்வகைத்தேயாம்.

அக்காலத்தில், வெட்ட வெளியில் ஹோமம் நிகழ்த்துவதானால், மாமுனிகள் கொன்றை மரச் சூழ்நிலையையே தேர்ந்தெடுப்பர். தற்காலத்தில் கொன்றை மர இறைச் சூழ்நிலையே மிக அரிதாக அமைவதால், கொன்றை மரத்தடியில் ஹோமம் செய்யும் பாக்யம் மிக, மிக அபூர்வமாகத் தானே கிட்டும். கலியுகத்தில் அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகர் வளாகமே இத்தகைய மிகவும் சக்தி வாய்ந்த கொன்றை மர, குருந்த மர வளாகமாக அமைவது நமக்குப் பெரும்பாக்யமே!

இங்கு அமைந்துள்ள சுயம்பு லிங்கமும் மகத்தான சக்திகளை தன்னுள் கொண்டுள்ளது! “கோடீய துருவ சக்திகள்” நிறைந்த சுயம்பு லிங்கம்! கோடீய துருவம் என்றால் ஆகாச மூர்த்தமாக, வெட்ட வெளியில் பல்லாண்டுகள் இருந்து, பல்லாயிரக் கணக்கான துருவ, சூரிய, சந்திர, ஏனைய கோள், நட்சத்திரச் சங்கமக் கிரணங்களைக் கண்டிட்ட மூர்த்தி என்று பொருள். சூரிய, சந்திர கிரகங்கள் சம்பந்தமான சூரிய, சந்திர கிரகணங்கள் மட்டுமல்லாது, அனைத்துக் கோளங்களின் பாதைகளிலும் பல கோளக் கோணக் கிரகணங்கள் ஏற்படுவது உண்டு.

இவ்வாறாக எழுகின்ற அபூர்வமான கோள சக்திகளை, பூமியில் அடியில் இருந்தும், பூமியின் மேல் சுயம்பாகத் தோன்றியும் ஆகாச மூர்த்திகள் அருள்கையில், விண்ணில் திகழ்கின்ற எண்ணற்ற நட்சத்திர, கிரக கிரகண சக்திகளை ஈர்த்தும், கிரகித்தும் பூலோக ஜீவன்களுக்கு அருள்கின்றனர். கிரகங்கள் சம்பந்தப்பட்ட சூரிய, சந்திர கிரகணம் மட்டுமின்றி,, எண்ணற்ற நட்சத்திரங்களும், பல கோள்களின் பாதைகளில் சேர்ந்து, அளவற்ற நட்சத்திர, கிரக கிரகணங்களையும் ஏற்படுத்துவதும் உண்டு.

இவ்வாறாகவே சமீபத்தில் “வ்ரதாமுதம்” எனும் நட்சத்திரமானது, சில கோள்களுடன், பல நட்சத்திரங்களுடன், சூக்கும ரீதியாக ஒரே பாதையில் நின்று, நட்சத்திரக் கிரக கிரகணத்தைத் தந்தது. இவ்வரிய கிரகணத்திற்கு “பதிவ்ரதாமுத பாவனம்” என்று பெயர். இது பல யுகங்களுக்கு ஒரு முறையே வருகின்றது.

ஆனால், சித்தர்களோ, மகரிஷிகளோ இத்தகைய அபூர்வமான நட்சத்திர, கிரக சங்கம கிரணங்களை முன்னரேயே எடுத்துரைப்பது கிடையாது. காரணம், அளப்பரிய சித்சக்திகளை அளிக்கக் கூடிய இத்தகைய நட்சத்திரத் துருவ கிரணங்களை பற்றிப் பலரும் முன்னரேயே அறிந்தால், அவற்றின் பலாபலன்களைக் கொண்டு, சமுதாயப் பணி ஆற்றாது, தனிப்பட்ட முறையில் செல்வத்தை குவிக்கின்ற தீய புத்தியே வரும். எனவேதான் வான்வெளியில் எத்தனையோ கோடி நட்சத்திரங்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றைக் கூட மனிதப் பகுத்தறிவால் முழுமையாக, விஞ்ஞானப் பூர்வமாக அறிய முடியவில்லை!

ஸ்ரீபாணலிங்கமூர்த்தி
அரண்மனைப்பட்டி

ஆனால் பூமியில் இருந்த இடத்தில் இருந்தவாறே எத்தனையோ நட்சத்திரங்களை அறிந்து கொள்ளக் கூடிய துருவ சக்திகளைப் பெறும் தும்பிச் சிவலிங்க மூர்த்திகள் பல உண்டு. இவ்வகை அம்சங்களும் கூடியதே அரண்மனைப்பட்டி ஸ்ரீகொன்றையடி விநாயகர் தலத்தில் உள்ள சுயம்பு பாணச் சிவலிங்க மூர்த்தியாகும்.

தும்பிலிங்கம், துருவலிங்கம், கிரணபாதலிங்கம், நட்சத்திரவிதான லிங்கம் போன்ற 1008 வகை ஆகாச பாண லிங்க மூர்த்திகள் உண்டு. இவற்றின் திரட்சியாக, எண்ணற்றச் சுயம்பு லிங்க சக்திகளைக் கொண்டதே அரண்மனைப்பட்டி சுயம்பு பாணலிங்கம், இந்தச் சுயம்புத் திருலிங்கத்தில் அனைத்து நட்சத்திர மூர்த்த லிங்க சக்திகளும் ஐக்கியமாகி உள்ளன ! சென்னை திருவொற்றியூர், திருவிடைமருதூர் போன்ற தலங்களில் 27 நட்சத்திரங்களுக்கு உரித்தான லிங்கங்கள் உள்ளன.

அனைத்துக் கோடி நட்சத்திர மூர்த்திகளும் வழிபடுகின்ற அரிய சிவலிங்கங்களுள் ஒன்றே அரண்மனைப்பட்டியில் தோன்றி இருப்பதாகும். பொதுவாக, இத்தகைய ஆகாச லிங்க மூர்த்தி வழிபாடுகளையே வசு, ருத்ர ஆதித்யப் பித்ரு மூர்த்திகள் பெரிதும் நாடுகின்றனர். இரவு, பகலாக நட்சத்திர மூர்த்திகள் தம் ஒளிக் கிரணங்களைப் பெய்து வழிபடுகின்ற லிங்கமானது அண்டசராசரத்தின் அனைத்துக் கோள சக்திகளையும் கொண்டதாகும்.

ஆழ்ந்த நம்பிக்கையுடன் கொன்றையடி விநாயகத் தலத்தில் ஸ்ரீகணபதி ஹோமம், பித்ரு ஹோமம், பித்ருத் தர்ப்பணம் இயற்றி, சுயம்பு பாண லிங்க மூர்த்தியிடம் மனமுருக வேண்டி வழிபட்டு வர, நட்சத்திரம் அல்லது கோத்திரம் அறியாதோர், குடும்பத்தில் காணாமல் போனோர் விரைவிலேயே இவற்றைப் பெற பித்ரு மூர்த்திகள் அனுகிரகம் தருவர். உத்தமப் பித்ரு மூர்த்திகளாக, பித்ரு லிங்கங்களாக, பித்ரு தேவதைகளாக இருப்போரும் இத்தகைய ஆகாச லிங்க மூர்த்தியைத் தரிசிக்க அடிக்கடி இங்கு வந்து வழிபடுகின்றனர்.

அரும்பெரும் அனுகிரகத் தலமான கொன்றையடி விநாயகர் தலத்தில் பிரதோஷ நாளில் கணபதி ஹோமம், பித்ரு ஹோமங்கள், தர்ப்பணங்கள் செய்தல், ஆகாச லிங்கத்திற்குச் சந்தனக் காப்பு இட்டு வழிபட்டு வர முடிவு எடுக்க இயலா விஷயங்களில் நல்ல முடிவைப் பெறலாம்.

நவநாத சித்தர்கள்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம் - ஸ்ரீகோட்டைக்கால் சித்தர் கிரிவலம் வரும் அற்புத மாதச் சிவராத்திரி – 27-7-2003

கடந்த பலகோடி யுகங்களில் எத்தனையோ நவநாத சித்தர்கள் ஆயிரமாயிரம் நாமதேயங்களில் தோன்றி மறைந்துள்ளனர். இவர்களுள் ஆதிமூல நவநாத சித்தர்கள் ஒன்பதின்மரைப் பற்றி இத்தொடரில் காண்கின்றோம். கடந்த இதழில் கோரைக்கால் சித்தரைப் பற்றி அறிந்தோம் அல்லவா!

வனவளச் சித்தர்பிரான்

கோட்டைக்கால் சித்தர் உலகிலுள்ள அனைத்து வனங்களின், சீதோஷ்ண நிலைகள், மூலிகை அம்சங்கள், தாவர ஜங்கமம், மழை, தினசரித் தட்ப வெப்பம், காடுகளின் வகைகள் போன்ற பல அம்சங்களையும் நிர்மாணிப்பவர் ஆவார். வனங்களிலும், ஆண்களைப் பெண்ணாக்கும் வனம், பெண்களை ஆணாக்கும் வன வகைகளும் உண்டு. தேவாதி தெய்வ மூர்த்திகள், தேவர்கள், கந்தர்வர்கள் வந்து வழிபடுகின்ற வனப் பகுதிகளும் உண்டு. எந்த வனத்தில் எத்தகைய மகரிஷிகள் எவ்வகையில் பர்ண சாலைகளையும், ஆஸ்ரமக் குடில்களையும் கொண்டிட வேண்டும். எத்தகைய மூலிகைத் தோட்டங்கள் அமையப் பெற வேண்டும் என்று பலவிதமான குடில்களுக்கான, பர்ணசாலைகளுக்கான, குருகுல வாசங்களுக்கான நியதிகளையும் வகுத்து அனைத்து மகரிஷிகளின் விருப்பங்களுக்கு ஏற்ப வனங்களில் தக்கக் குடில்களை அமைத்துத் தருபவரும் கோட்டைக்கால் சித்தர் ஆவார்.

வனத்தில் தெய்வீக வளம் போற்றும் சித்தர்!

மகரிஷிகளின் பூஜைக்களுக்கான வனச் சூழ்நிலைகளை அமைத்துத் தருபவரும் கோட்டைக்கால் சித்தரே ஆவார். கோடிக்கணக்கான வன தேவதைகளுக்கும் சத்குருவாக விளங்குகின்ற கோட்டைக்கால் சித்தரே ஸ்ரீவனதுர்க்கா தேவியின் உத்தம பக்தரும் ஆவார். காடுகள் செழித்தால்தான் நாடும் செழிக்கும் என்பது நாம் நன்கு அறிந்ததே! எனவே நாடு செழிப்பதற்கான வன அம்சங்களை, வனத் தாவர ஜங்கமங்களை நிர்மாணித்துத் தருபவரும் கோட்டைக்கால் சித்தரே ஆவார். வனங்களில் எத்தகைய யோக, தியான சக்திகள் வளம் பெற வேண்டும், எத்தகைய யோக, தியாக முறைகளைக் கடைபிடித்திட வேண்டும் என்பதை உணர்விப்பவரும் கோட்டைக்கால் சித்தரே!

வனத் தாவர, விலங்கின ஜீவ இலக்கணம் படைக்கும் சித்தர்!

இன்றைக்கும் கோட்டைக்கால் சித்தர் தினந்தோறுமோ, குறித்த நட்சத்திர நாளிலோ, கிழமைகளிலோ வந்து செல்கின்ற அபூர்வமான வனப் பகுதிகள் நிறைய உண்டு. திருஅண்ணாமலை, கொல்லி மலை, பொதிய மலை, தங்கால் மலை, திருப்பதி மலை, மேரு மலை, கதிராமங்கலம், இமய மலை என்று பல முக்கியமான மலைத் தலங்களில் கோட்டைக்கால் சித்தருடைய நடமாட்டம் இன்றைக்கும் நிறைய உண்டு. விஞ்ஞான உலகத்தால் தற்காலத்தில் மறைந்து விட்டதாகக் கருதப்படுகின்ற ‘டினோஸார்’ (Dinosaur) எனும் மிருகம் இன்றைக்கும் உலகத்தில் சில குறித்த வனப்பகுதிகளில் இருக்கத்தான் செய்கின்றன. இந்த “டினோஸர்” மிருக நடமாட்டத்தை நன்கு அறிந்தவரே கோட்டைக்கால் சித்தர் ஆவார்.

கலியுகத்தில் மலைத் துறை ஜோதிகள்!

நாம் இன்றைக்கும் பூவுலகில் அழிந்து, மறைந்து விட்டதாகக் கருதப்படும் தாவர, விலங்கு இனங்களும் எத்தனையோ முக்கியமான வனங்களில் இருக்கத்தான் செய்கின்றன. இவை அனைத்தையும் கண்காணித்து அவற்றின் வாழ்க்கை முறைகளை நிர்மாணித்துத் தருபவரும் கோட்டைக்கால் சித்தரே ஆவார். வனங்களில் தோன்றுகின்ற ஜோதிகள் நிறைய உண்டு. திருஅண்ணாமலை, பர்வதமலை போன்ற தலங்களில் இன்றைக்கும் மலை மீதுள்ள வனங்களில் பல அபூர்வமான ஜோதிகள் தென்படுவது உண்டு. ஆனால் பலரும் இதனைக் காட்டுத் தீயென எண்ணி அசட்டையாக இருந்து விடுகின்றனர். இவையாவும் தேவாதி தெய்வ தேவ மூர்த்திகளின் பூலோக வரவைக் குறிப்பனவே ஆகும்.

இத்தகைய சிறப்புடைய கோட்டைக்கால் சித்தர் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற நன்னாள் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகின்றது.. இடையில் பன்முறை கோட்டைக்கால் சித்தர் திருஅண்ணாமலைக்கு கிரிவலத்திற்காக வந்து சென்றாலும் மானுட ரூபத்திலே மக்கள் அறியும் அளவில் கிரிவலம் வருகின்ற அதியற்புத நாளாகத் துலங்குவதே வரும் ஆடி மாத சிவராத்திரி நாளாகும்.

கோட்டைக்கால் சித்தர் வகுத்த ஸ்ரீநவதுர்க்கா பூஜை!

எனவே இந்நாளில் திருஅண்ணாமலையை மாத சிவராத்திரி கிரிவலமாக வருவோர்க்குப் பலஅற்புத நல்வரங்கள் கிட்டுகின்றன. ஸ்ரீநவதுர்க்கா பூஜையினை ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒன்பது முறையாவது நன்முறையில் கடைபிடித்து வழிபட வேண்டும். அல்லது கதிராமங்கலம் போன்ற தலங்களில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவனதுர்க்கா தேவிக்கு, பழங்கள், காய்கறிகள், அன்னம் படைத்து முறையோடு வழிபட்டிட வேண்டும். ஸ்ரீசாகம்பரி தேவியின் துர்க்கை அம்சமாக விளங்குகின்ற ஸ்ரீவனதுர்க்கா தேவிக்குக் காய்கறிகள் மற்றும் பழங்களால் ஆன மாலைகளை ஆலயமெங்கும் வாழைநாரில் கட்டித் தொங்கவிட்டு ஸ்ரீசாகம்பரி பூஜை செய்து வழிபட்டு வருவதால் பிள்ளைப் பேறு இல்லாதவர்களுக்கு இறை அருளால் சந்தான பாக்கியம் கிட்டும். திருமணம் ஆகி நீண்ட ஆண்டுகள் கழித்துப் பிள்ளைப் பேற்றினைப் பெற்றவர்களும், பிள்ளைகளைத் தத்து எடுத்தவர்களும் இந்நன்னாளில் கிரிவலம் வந்திட, இறையருளால் புத்திர ஜீவித சக்திகள் ஏற்பட்டுப் பிள்ளைப் பேறற்ற குறையும், நீண்ட காலம் கழித்துப் பிள்ளை பிறந்ததால் ஏற்பட்ட ஏக்கங்களும் நீங்கி சந்ததியில் சந்தான வளங்களைப் பெறுவர். நவதுர்க்கா வழிபாட்டிற்கு உரித்தான பூஜா பலன்களைப் பெறுவதற்கும் நவதுர்க்கை அல்லது துர்க்கை உபாசகர்களாக இருப்போர் வரும் ஆடி மாத சிவராத்திரி நாளில் கண்டிப்பாக கிரிவலம் வருதல் வேண்டும்.

ஸ்ரீதுர்க்கையை உபாசிப்பவர்களும், ஸ்ரீதுர்க்கையை முன்னிட்டு அருள் வாக்குச் சக்தியை உண்மையாகவே பெற்று, அருள்வாக்கை வியாபாரமாக்காது சமுதாயத் தொண்டாற்றும் வகையில் ஏற்பவர்களும் இன்று கண்டிப்பாக கிரிவலம் வர வேண்டிய திருநாள் ஆகும். சனிதசை, குருதசை, சனி புக்தி, குரு புக்தி போன்ற தசா அங்க நிலைகளில் உள்ளோர் ஸ்ரீகோட்டைக்கால் சித்தரும் கிரிவலம் வருகின்ற இந்த மாத சிவராத்திரியில் அருணாசலத்தைக் கிரிவலம் வருதல் வேண்டும்.

பணமுடையைப் போக்கும் எறும்பிற்கான தர்மம்!

இன்று அனைத்து நவகிரகங்களையும் தீப, தூபங்களால் வழிபடுதலும் சிறப்புடையதாம். குறைந்தது மூன்று படி நவதான்ய மணிகளை ரவை போல் அரைத்து, சர்க்கரை சேர்த்து இதனைத் தாங்கியவாறு அருணாசலத்தை கிரிவலம் வந்து, பிறகு இல்லத்திற்கு எடுத்து சென்று, தங்கள் ஊர்களில் உள்ள ஆலய மதில் ஓரங்களிலும், மரத்தடிகளிலும் எறும்புகளுக்கு தான்ய ரவை சர்க்கரையை உணவாக இட்டு வந்தால் பணக் கஷடத்தால் வாடுவோர் தக்க சமயத்தில் தேவையான உதவிகளைப் பெறுவர்.

பிள்ளைகளுடைய கல்வி, வீடு, போன்றவற்றிற்குப் பணமுடையால் அவதிப்படுபவர்கள் இன்று நவதான்ய மணி ரவையைத் தாங்கி கிரிவலம் வந்து, குறைந்தது ஒன்பது ஆலயங்களில் சர்க்கரை கலந்த தான்ய ரவையை எறும்புகளுக்கு உணவாக அளித்து வந்தால் தேவையான சமயத்தில் தக்கவரிடமிருந்து, தக்க உதவிகள் நிச்சயமாகக் கிட்டும்.

இன்றைய கிரிவலத்தை ஸ்ரீதுர்க்கை ஆலயத்தில் இருந்து தொடங்கி, ஸ்ரீதுர்க்கை ஆலயத்திலேயே முடிப்பது சிறப்புடையதாம். கோட்டைக்கால் சித்தர் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் ஸ்ரீதுர்க்கையை வழிபடும் நன்னாள் இது!

தவசிமடை

மக நட்சத்திரத்தவர்கள் தம் ஆயுள் முழுவதும் வழிபட வேண்டிய கோயில் பரத்வாஜ கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாக வழிபட வேண்டிய மகத்தான திருத்தலம்.

கௌண்டின்ய மகரிஷி, சாண்டில்ய மகரிஷி, பாதநாராயணர், பரதநாராயணர், பாதாயனர், சூட்டுக்கோல் சித்தர், பரத்வாஜர் போன்ற சித்தர்களும், மகரிஷிகளும் ஆஸ்ரமங்களை நிறுவிய அற்புதச் சிவத்தலம்!

அருந்தபஸ்விகள் ஆயிரமாயிரம் உறைகின்ற சிவகுருத்தலம் தவசிமடை ஸ்ரீமகாலிங்கேஸ்வரர் ஆலயம் (திண்டுக்கல்லிலிருந்து நத்தம் செல்லும் சாலையில், 12-வது கிலோ மீட்டரில் அமைந்துள்ளது தவசிமடை. அருகில் இருப்போரும் அறியாத வகையில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள, சிதிலமடைந்த, சிவத்தலமாதலின் நன்கு தீர விசாரித்துச் செல்லவும்.

உள்ளூர் மக்களால் “ஒடுக்கம்” என்று அழைக்கப்படுகின்ற தவசிமடையில் மனம் ஒடுங்கும் புனித பூமியாதலின் பண்டைய யுகங்களில் ஆயிரக் கணக்கான சித்தர்களும், மாமுனிகளும் இங்கு தவக்குடில்களை நிறுவினர். காலப்போக்கில் இவை மறைந்தாலும் இன்றும் கலியுகத்தில் நைமிசாரண்யம் போல, தவச் செல்வ வளம் நிறைந்த புண்ணிய பூமியே தவசிமடை ஆகும். தட்சிண நைமிசாரண்யம் எனப் பெயர் பெற்ற தவச்சுடர் பூமி! தியானக் குடில்கள் அமைந்திட வல்ல அதியற்புத பூமி!

ஸ்ரீபரத்வாஜர் ஒடுக்கசுதம்
தவசிமடை

ஊருக்கு வெளியே அமைதியான சூழலில், அமைந்துள்ள இச்சிவாலயத்தில், பண்டைய “தவசுமாட வகை” விமானமானது கொடிக்கம்ப தேவதைகளுக்கும் அருள்பாலிக்கும் தொன்மையான ருத்ர சக்தி பொதிந்தது. ஆதிபைரவர் காலத்தில் தோன்றியதெனில் என்னே இதன் பழமை! மக நட்சத்திரக்காரர்கள் இங்கு தக்க கொடிக் கம்பம் அமைத்துக் கும்பாபிஷேகத் திருப்பணி ஆற்றுதல் மகத்தான தெய்வீக வர வளங்களை அள்ளித் தரும்.

ஒடுக்க யோக சக்திகளுடன் அருளும் இரு அம்பிகையர்!

மூலவருக்கு வலப்புறத்தில் மாணிக்கவல்லி, மரகதவல்லி ஆகிய இரு அம்பிகையரும் நவாபரண விமான நெறிகளுடன் தனிச் சன்னதியில் ஒரே பீடத்தில் அருகருகே நின்ற கோலத்தில் ஒடுக்கத்தில் தெற்கு நோக்கி (நேரடியாக அல்லாது பக்கவாட்டில்) நின்று அருள்வது கலியுகத்தின் மிகவும் அபூர்வமான கோலமாகும்,

“ஒடுக்கத்துள் ஒடுங்கும் ஒடுக்கலம்!” என்பது குப்பைச் சித்தரின் தவசிமடை ஆலயத்திற்கான பரிபாஷைச் சூத்திரப் பா! ஆத்ம விசாரம் செய்திடில் ஆயிரம் விளக்கங்கள் புலப்படும்.

“ஒடுக்கம்” ஓர் உத்தம தெய்வ நிலையே!

இங்கு அம்பிகையரை நேரடியாக அல்லாது பக்கவாட்டில் இருந்தே தரிசிக்கும் வண்ணம் ஒடுக்கத்தில் உள்ளடங்கிப் பக்கவாட்டில் நின்ற கோலத்தில் இரு அம்பிகையரும் அருள்கின்றனர். நேர்ப் பார்வைக்கு சன்னதியில் விக்ரகங்கள் இல்லாது வெறுமனே இருப்பது போல் காட்சியளிக்கின்றது. இதுவே ‘ஒடுக்கம்’ என உத்தம தெய்வ யோக நிலைகளில் விளக்கப்படுகின்றது! பிரசித்தி பெற்ற ஒடுக்கத்தூர்ச் சித்தர் ‘ஒடுக்க’ யோகங்களில் உன்னத நிலைகளைப் பெற்றவர்.

“உத்தரப் ப(ஸ்)சமம்
ஒடுக்கச் சுடராக்கம்
தத்வதப் பரிணாமம்
பத்பரத் தவசிமடம்
பாரேன் பரிபரியுள்!”

என்று குப்பைச் சித்தர் சித்தர்களின் பரிபாஷையில் ‘தவசிமடம்’ ஆலயத்தின் ஒடுக்க யோக சக்திகளையும், கிழக்குப் பார்த்த சன்னதியில் தெற்கு நோக்கும் அம்பிகையரின் அருள்நிறைகளையும் விளக்குகின்றார். இதுவும் “ஒடுக்க யோகச் சூத்திரத்திற்கான” பரிபாஷைப் பாடல்! தக்க சற்குருவை நாடி மேலும் விளக்கங்களைப் பெறவும்.

அம்பிகையரை நேரில் தரிசிக்காது, சன்னதி வெளியில் நின்று அத்வைத நாயகியராம் ஒரு பராசக்தி அம்சங்களையும் ‘ஒடுக்க யோகச் சுடராக’ தரிசித்துச் செல்லும் வழக்கம் பண்டைய யுகங்களில் நிலவி வந்துள்ளது. கலியுகத்தில் சித்தர்களால் இங்கு வழிபாட்டு முறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.

சிறுமலை தவசிமடை

பரத்வாஜர் அளித்த யோக ஒடுக்கசுதம்!

சுவாமி சன்னதிக்கு நேரே, ஸ்ரீபரத்வாஜ மகரிஷியின் ஒடுக்க யோகசுதம் என்ற யோக மேடை அமைப்பு இரண்டு பீடங்களாக அமைந்துள்ளது. தெற்குப் பகுதிப் பீடம் தலைப் பகுதி, வடக்குப்ப் பகுதிப் பீடம் கால் (பாதம்) பகுதி ஆகும். இந்த இரண்டு பீடங்களுக்கும் இடைவெளி 16 அடி இருக்கும். இங்குதாம் பரத்வாஜ மகரிஷி “ஒடுக்க யோகம்” சார்ந்தார். இப்பூவுலகில் ஒடுக்கயோக நிலையைப் பெறவல்ல ஒன்பதே ஒன்பது தலங்களுள் ஒன்றாக தவசிமடை விளங்குவது நம் பாக்யமே!

“எண்சாண் வடிப்பாகம்
இரண்டும் ஒன்றாகி
கண்சார் சிர, பாதாமுதம்
வண்சார் பரத்துவனே!”

என்பது பரத்வாஜர் இங்கு ஒடுக்க யோகம் பூண்டது பற்றி குப்பைச் சித்தர் அளிக்கும் பரிபாஷை விளக்கமாகும். பரத்வாஜர் யோக ஒடுக்கம் கொள்கையில் 16 அடி உயரம் கொண்டவராவார். ஆண்டவனே தம் அடியார்களைப் பெரிதும் போற்றுவதால், இங்கு வழிபட வருகின்ற பக்தர்களின் பாதங்கள் தம் ஒடுக்கத் திருமேனியின் மீது படவேண்டும் என்பதற்காக, பரத்வாஜ மகரிஷி இங்கு ஒடுக்க சயனம் பூண்டிட்டார்.

வாழை நரம்பு பிறந்த புராணம் பிறந்தது தவசிமடைத் தலமே!

ஸ்ரீராமருடைய திரேதா யுகத்தில் ஸ்ரீபரத்வாஜ மகரிஷியின் ஆஸ்ரமம் பல இடங்களில் இருந்தது. இதில் தவசிமடமும் ஸ்ரீபரத்வாஜ மகரிஷி தவம் பூண்ட பெருந்  தலமே! ஸ்ரீராமர் கனக மார்கமாக இவ்வழியே வந்து, ஒடுக்க யோக நிலையில் இருந்த ஸ்ரீபரத்வாஜ மகரிஷியை வணங்கிட, அவதார புருஷர் என்ற வகையிலும், பேரரசர் என்ற முறையிலும் ஸ்ரீராமருக்கு அர்க்ய பாத்ர பூஜைகள் அளித்து விருந்தளிக்க மகரிஷி விழைகையில், மாமுனியின் அதியற்புத ஒடுக்க யோகநிலை தன்னால் மாறலாகாது என்பதால், ஸ்ரீராமர் “யாம் சீதையுடன் திரும்பி வந்து தங்களது தவசி மடத்தில் விருந்துண்போம்” என்று கூறிட்டார்.

ஸ்ரீஒடுக்கத்தூர் சித்தர்

தம் வாக்கை நிறைவேற்றிட, ஸ்ரீராமர், சீதா தேவியுடன் திரும்பி வரும் வழியில் இங்கு வந்து விருந்துண்ண நாள் குறித்திட்டார். ஆனால் அதற்குள் தம் வருகைத் தாமதத்தால் தம் இளவல் பரதன் அதிர்ச்சியுற்று அயோத்தில் அக்னிப் பிரவேசம் செய்ய இருப்பதை அறிந்து ஸ்ரீராமர், ஸ்ரீஆஞ்சநேயரை அழைத்துத் தாம் வரும் செய்தியை பரதனுக்குத் தெரிவித்து வரச் சொல்லி அனுப்பி, விருந்தை முடிக்க இயலாது விரைவாக அயோத்தியா நகரம் திரும்ப நேரிட்டது!

எனினும் தமக்கு விருந்தளிக்கப்பட்ட இலையில், பரிமாறப்பட்ட உணவை இரண்டாகப் பிரித்து ஸ்ரீஆஞ்சநேயரை உண்ணச் செய்திட, அன்று முதல் வாழை இலையின் நடுவே நரம்பு ஏற்பட்டு இரு பாகத் தளமாயிற்று! இவ்வரிய புராண வைபவம் நிகழ்ந்த அற்புதத் தலமிது! அன்று முதல் துறவியர் மண் கலயத்தில், திருவோட்டில்தாம் உணவேற்க வேண்டும் என்ற நியதி மாறி, தவசிமடையில் வாழை இலையில் முழு உணவேற்கலாம் என்ற நியதி தெய்வ ரீதியாக அளிக்கப்பட்ட திவ்யமான தலமிது!

திருமணம் ஆகாது கன்னியராக, பிரம்மச்சாரியாக வாழ்பவர்கள் தக்க பரிகாரங்களைப் பெற இத்தலத்தில் மக நட்சத்திரம் தோறும் வழிபட்டு, முழு வாழை இலையில் ஏழைகளுக்கு அறுசுவை உண்டி படைத்து வர வேண்டும்.

இத்தலத் தலவிருட்சமே மிகவும் அபூர்வமான திருவாசி மரம்! தவசிமடை திருவாசி மரங்கள் நிறைந்த வனமாக ஒரு யுகத்தில் துலங்கியது. இம்மரத்திற்கு அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு விருட்ச பூஜை செய்து வலம் வருவோர்க்கு வயிறு சம்பந்தமான நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். உஷ்ண சம்பந்தமான முயலக நோய்களைத் தீர்க்கும் தலம்.

தீய பழக்கங்களால் அவதியுற்று வாழ்வோர் இங்கு முறையாக பிரதோஷ பூஜைகளுக்கு ஏற்பாடு செய்து வழிபட்டு வர, வியத்தகு முறையில் வாழ்வில் நல்மாற்றங்களைக் கண்டிடலாம்.

லட்சக் கணக்கில் கடன் சுமை சேர்ந்து வேதனைகளுடன் வாழ்வோர் இங்கு பிரதோஷம், குறிப்பாக சனிப்ப் பிரதோஷ பூஜைக்கு முயற்சி செய்து நன்கு நடத்தி வழிபட்டு வர, தக்க பரிகாரங்களைக் கண்கூடாகப் பெறலாம்.

தட்சிண சஞ்சீவி மலை!

இங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்தில் சிறுமலையில் உள்ள மாதவமலைக் குன்று சஞ்சீவி மூலிகைகள் நிறைந்த பகுதி சூக்கும குகைகளைக் கொண்டது. இன்றும் சித்தர்கள் நடமாட்டம் நிறைந்த பகுதி! ஆஞ்சநேயர் இங்கு வந்த போது தாம் இமய மலையில் அலைந்து தேடிய சஞ்சீவி மூலிகை இங்கு இருப்பதாகத் தெரிந்து ஆச்சரியமடைந்து, தனக்கு இது தெரியாமல் போனதற்கான காரணத்தை ஸ்ரீராமரிடம் கேட்டிட, அவரும் “ஒடுக்க யோக நிலை” அறிந்தோருக்கு மட்டும்தான் இங்கு சஞ்சீவினி மூலிகை புலப்படும் என்ற மூலிகா ரகசியத்தை உணர்வித்தார்.

நவவியாகரண பண்டிதராக சகல யோக நிலைகளையும் அறிந்த ஆஞ்சநேயர் தனக்கே உரித்தான மிகுந்த விநயத்துடன், பணிவுடன் தவசிமடையில் இருந்த மிகச் சாதாரணமான, எளிமையான ஒரு பிரம்மச்சரியத் துறவுச் சிறுவனிடம் “ஒடுக்க யோக மந்திரங்களை” ஒரு நாழிகை நேரத்தில் முறையாகப் பயின்று, ஸ்ரீராமரிடமே அந்த யோகத் திறமைகளை அர்ப்பணித்திட, சஞ்சீவி மூலிகை அவருக்குப் புலப்பட்டது! இதிலும், பல்லாயிரக்கணக்கான சஞ்சீவி மூலிகைச் செடிகளைக் கொண்ட சஞ்சீவி மலையையே தூக்கி வந்தவருக்கு, இங்கிருந்த பல சஞ்சீவினி மூலிகைச் செடிகளில் ஒரே ஒரு செடி மட்டும், அதுவும் அதிலும் ஒன்பது தளங்களே ஆஞ்சநேயரின் கண்ணுக்குத் தெரிந்தன! என்னே சித்தமாமலையின் மகிமை!

பசுபதிகோயில்

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம் பசுபதி கோயில் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம் (கேட்டைக் கோயில்)

தஞ்சாவூர் – கும்பகோணம் சாலையில், தஞ்சாவூரில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில், பசுபதி கோயில் கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்தான் ‘கேட்டைக் கோயில்’ எனப் பிரசித்தி பெற்றுள்ளது. கேட்டை நட்சத்திரத்தார் தம் ஆயுள் முழுதும் வழிபட வேண்டிய அதியற்புத ஆலயம்.

“கேட்டை மூட்டை செவ்வாய்” என்ற தவறான நடைமுறை வாக்கிய வழக்கைப் பற்றிய விளக்கங்களைக் கடந்த மே மாத ஸ்ரீஅகஸ்தியர் விஜய இதழில் அளித்துள்ளோம்! சுபகாரியங்களுக்கான நட்சத்திர, கிழமை, யோக நியதிகள் நிச்சயமாக உண்டு. ஆனால் இதற்காக கேட்டையையும் செவ்வாய்க் கிழமையையும் ஒரேயடியாகக் ‘கெடுதலான நாட்கள்’ என ஒதுக்கி விடுதல் தவறானதாகும்.

ஸ்ரீபெருந்தேவி தாயார்
பசுபதிகோயில்

நன்முறையில் சொந்த வீடு, வாடகை வீடுகள் அமைய செவ்வாய்க் கிழமை அன்று ஆற்றப்படும் வாஸ்து பூஜை, வாஸ்து ஹோமம், அருணாசல கிரிவலம் மிகவும் துணைபுரியும். இதே போல் இரும்பு சம்பந்தமான தொழிலில் இருப்போர், பணி புரிவோர் கேட்டை நட்சத்திர நாளில் இறைவனுக்கு வெள்ளிக் காப்பு, தங்கக் காப்பு, தங்க ரத பூஜை கொண்டு வழிபடுதலால் தொழிலில் நல் முன்னேற்றம் காண்பர்.

மேலும் வாழ்க்கையில் நிறைந்திருக்கும் முட்டுக் கட்டைகளை அகற்ற உதவுவதாக, மூத்த நட்சத்திரமான கேட்டை நட்சத்திர நாளுக்குரிய வழிபாடுகள் விளங்குகின்றன. கேட்டை நாளன்று மூன்று வேளைகளிலும் ஆலயங்களில் அனைத்துப் பலி பீடத் திக்குகளிலும் சாம்பிராணி தூபம் இட்டு வழிபடுதலால் எத்தகைய தடங்கல்களும் தீரும்.

நித்யக் கல்யாண உற்சவம் நிகழும் திருவிடந்தைத் திருமால் தலம்!

பண்டைய யுகங்களில், தினமுமே பெருமாளுக்கு நித்ய கல்யாண உற்சவம் மகத்தான முறையில் நிகழ்ந்த சிறப்பான பெருமாள் தலமிது! அதாவது தினமுமே 27 நட்சத்திர மூர்த்திகளும் இங்கு ஸ்ரீவராஹப் பெருமாளுக்கு நித்ய கல்யாண உற்சவத்தை நிகழ்த்தி, சந்திர பகவான் இழந்த ஒளிக் கலைகளை மீண்டும் பெற்றிடப் பெரிதும் சேவை புரிந்தனர்.

ஒளிப்புலன் மிகுந்த கேட்டை நட்சத்திர தேவியானவள். அமாவாசையை ஒட்டிய தேய்பிறை அதாவது கிருஷ்ணபட்ச இருளான தினங்களிலும் கூட, விசேஷமான ஒளி தந்து, திருவிடந்தையில் ஸ்ரீவராஹ அம்சத் திருமாலுக்கு நித்ய கல்யாண உற்சவம் நிகழ்ந்திட அருஞ்சேவை புரிந்தனள்.

இவ்வரிய பாக்யத்தைக் கேட்டை நட்சத்திர தேவி பெற்றிட அருள்பலித்த ஸ்ரீவரதராஜப் பெருமாள், நட்சத்திர மண்டலங்களில் இன்றும் அனைத்து நட்சத்திர தேவியர்களாலும் தினசரி வழிபடப் பெறுகின்றார். எனினும் பூலோகத்தில் இப்பெருமாள் மூர்த்தி எழுந்தருளித் தோன்றினால்தாமே பூலோக ஜீவன்களுக்கும் நட்சத்திர பூஜா பலன்களும் கிட்டப் பெறும். எனவே இதற்காகவே பெருமாளும் இங்கு எழுந்திட ஓர் இறைலீலை புரிந்தார்.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
பசுபதிகோயில்

தற்போது இத்தலத்தில் மானுட சமுதாயத்தால் நித்ய கல்யாண உற்சவம் பண்டைய யுகம் போல் தினமும் சிறப்பாக நடக்காததுபோல் தோன்றினாலும், விண்ணுலகத்தாராலும், சித்தர்கள், மகரிஷிகளாலும் நித்ய கல்யான உற்சவம் சூக்கும ரீதியாகச் சிறப்பாகவே நிகழ்ந்தே வருகின்றது. ஆழ்ந்த பக்தி உடையோர் இதனை நன்கு துய்த்திடலாம்.

பசுபதி கோயிலில் கேட்டைக் கோயில்

பசுபதி கோயில் கிராமத்தில் உள்ள ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம் உள்ள இடத்தில் தான், கேட்டை நட்சத்திர நாளில் ஸ்ரீபெரியநம்பி சுவாமிகளுக்கு ஸ்ரீவரதராஜப் பெருமாள் சிந்தனையில் துய்த்த ஸ்ரீபெரியநம்பியார் திருநாடு அதாவது ஜீவாலயம் கொண்ட காலை ஸ்ரீவரதராஜப் பெருமளே இத்தலத்தில் அன்னார் முன்தோன்றி ஆட்கொண்டு அருளினார்.

(ஸ்ரீஉடையவர் எனப் பிரசித்தி பெற்ற), ஸ்ரீராமானுஜருடைய குருவே ஸ்ரீபெரியநம்பிகள் ஆவார். இப்பெருமானார், தான் பெற்ற மானுட ஜீவ சரீரத்தை உகுத்து, பசுபதி கோயில் திருத்தலத்தில் வைகுண்ட பிராப்தம் அடைந்த நட்சத்திர நாளே கேட்டை நட்சத்திர நாளாகும்.

பசுபதி கோயில் கிராமத்தின் சிறப்பான கோயிலாம் ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம் அருகே திருவரிசில் எனப்படும் ஸ்ரீபெரியநம்பிகளின் ஜீவாலயம் அமைந்துள்ளது. இங்கு கேட்டை நட்சத்திர நன்னாளில் ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு மருதாணி, செம்பருத்தி, கரிசலாங்கண்ணி ஆகிய த்ரிகுணாதி முத்தைலத் தீபம் ஏற்றி, அதிரசம், பஜ்ஜி, போண்டா, வடை போன்ற எண்ணெய் வகைப் பதார்த்தங்களை படைத்துத் துதித்து. ஏழைகளுக்கும் தானமளித்து, ஸ்ரீபெரியநம்பிகளின் திருவரிசிலையும் தரிசித்தல் சிறப்புடையதாகும்.

கேட்டைக் கோயில் என்றே அழைக்கப்படும் ஸ்ரீவரதராஜர் ஆலயத்திலும், ஸ்ரீபெரியநம்பிகளின் திருவரிசிலிலும் (ஜீவசமாதி அல்லது குருமூர்த்தம் எனப்படுவது) கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தோர் மாதந்தோறுமோ அல்லது தம் பிறந்த நட்சத்திர நாளிலோ இங்கு அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி வருதல் வேண்டும்.

விஸ்வரூப தரிசனம் பெற உகந்த நாளே கேட்டை நட்சத்திர நன்னாள்!

பொதுவாக கேட்டை நட்சத்திர நாள், இதிலும் சூரிய சக்திகள் நிறைந்த ஞாயிறும், கேட்டையும் கூடும் விசேஷமான நாளானது ஜீவசமாதி, ஜீவாலயம், குருமூர்த்தம், திருவரிசில்களைத் தரிசிக்க உத்தமமான நாளெனச் சித்தர்கள் உரைத்துள்ளதை நீங்கள் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மூலமாக இதற்கு முன்னரேயே அறிந்திருப்பீர்கள்!

பொதுவாக கேட்டை நட்சத்திர நாளில், ஜீவாலயம் பூண்டுள்ள அனைத்து மகான்கள், சித்தர்கள், மகரிஷிகள், குருமார்கள், பெரியோர்களும் ஜீவசமாதியிலிருந்து ஜோதியாய், காரண வடிவுடையோராய் எழுந்து வந்து பல வடிவங்களில் நேரடியாகவே அருள்கின்றனர்.

ஸ்ரீபெரியநம்பிகள் ஜீவாலயம் பசுபதிகோயில்

நல்வர சக்திகளைப் பெற்றிட யோகியரும் ஸ்ரீவாமன மூர்த்தியையும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவையும், ஸ்ரீசரபேஸ்வரரையும் தரிசிக்கும் நாளும் கேட்டை நாளே! அனைத்து சித்தர்களும், மகரிஷிகளும், சற்குருமார்களும் இறைவனுடைய பலவிதமான  விஸ்வரூப தரிசனங்களைப் பெறும் நாளும் கேட்டை நட்சத்திர தினமே ஆகும்.

எனவே காஞ்சீபுரம் ஸ்ரீஉலகளந்தப் பெருமாள், ஸ்ரீபாண்டவ தூதப் பெருமாள் போன்ற விஸ்வரூபராக இறைவன் காட்சி தரும் ஆலயங்களில் கேட்டை நட்சத்திர நாளில் ஆழ்ந்த பக்தியுடன் வழிபடுவதால் மலையளவாய்ப் பெருகிக் கிடக்கும் துன்பங்கள் கூட எளிதில் தீர்ந்திட பெருமாள் பெரிதும் அருள்கின்றார்.

அர்ஜுனன், பீஷ்மர், குசேலன், குபேரன், நளன், அக்ரூரர் போன்றோர் இறைவனின் விஸ்வரூப தரிசனங்களைப் பெற்ற நன்னாளும் கேட்டை நட்சத்திர நாளேயாம்.

நட்சத்திர மண்டலங்களில் எழுந்தருளியவரும், கேட்டை நட்சத்திர தேவியால் வழிபடப் பெற்றவருமான ஸ்ரீவரதராஜப் பெருமாளே இங்கு எழுந்தருள்வதால், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுட்காலம் முழுதும் அடிக்கடி குடும்பத்தோடு வந்து வழிபடுதலை பிறவி லட்சியமாகக் கொண்டு கடைபிடித்தல் விசேஷமானதாம்.

நண்டு

ஸ்ரீராமரின் பரிவாரங்களுக்கு நிலவழி காட்டிய சேதுபாவன நண்டு! யோக நடன சக்திகளைக் கொண்டவையே நண்டுகள்!

உலகத்தில் கோடானுகோடி தாவரங்களும், உயிரினங்களும் படைக்கப்பட்டுள்ளன. ஆனால் பல்லி, கரப்பான், புழு, பூச்சி முதல் மனிதர்கள் வரை ஒவ்வொரு ஜீவனின் படைப்பிற்கும் பல பிறப்புக் காரணங்கள் உண்டு. இவற்றை எல்லாம் ஆராயப் புகுவோமேயானால் ஆயிரமாயிரம் பிறவிகள் கூடப் போதாதே என்று கூட உங்களுக்கு தோன்றும்.

ஆனால் ஒவ்வொரு ஜீவனின் பிறப்பிற்கான காரணம் உண்டு என்பதை ஆன்மப் பூர்வமாக அறிந்து, சற்குருவே இத்தகைய பகுத்தறியும் பேரறிவைக் கொண்டவர் என்பதை உணர்ந்து அவரைச் சரணடைந்திட, குரு மூலமாக வேண்டுவன யாவையும் ஒரே பிறவியில் க்ஷணநேரத்தில் அறிந்திடலாம் அல்லவா! கலியுகத்தில் ஆழ்ந்த இறைநம்பிக்கை எதையும் சாதிக்க வல்லதாம்.

இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்களுள், இதுவரையில் பல்லி, எறும்பு, ஆமை, பசு போன்றவை பற்றிய அரிய விளக்கங்களை நாம் கடந்த பல இதழ்களில் அளித்துள்ளோம். இங்கு, நண்டுகள் பற்றி சித்தர்கள் அளிக்கின்ற விளக்கங்களைக் காண்போமாக!

கற்கடம், கடகம் என்றால் நண்டு என்று பொருள். கும்பகோணம் திருவிசநல்லூர் அருகே கற்குடியில் அம்பிகையே நண்டு வடிவில் இறைவனைப் பூஜித்து அருள் பெற்றுள்ளாள் எனில் நண்டின் ஆன்மீக மகத்துவம் தாம் என்னே! இன்றோ கலியுகத்தில் நண்டானது, மீன், கோழி போல இறைச்சி உணவாகப் பெரிதும் பயன்படுத்தப்படினும் இனியேனும் நண்டின் ஆன்மீக மகத்துவத்தை உணர்ந்து கொண்டு மனித சமுதாயம் மனம் திருந்தி நன்மைகளைப் பெறுவதாக!

வலஞ்சுழிக் கற்கடம்

கடகமாகிய நண்டு பல அபூர்வமான தீர்க தரிசன சக்திகளைக் கொண்டதாகும். நண்டிற்குத் தன்னைச் சுற்றிலும் வரும் சப்தங்கள் எது எது எந்தெந்த திசையில் இருந்து வருகின்றது என்று ஒரே இடத்தில் இருந்தவாறே பகுத்தறிந்து உணர்கின்ற அற்புதமான ஆன்மீக ஆற்றல் நிறைய உண்டு. குறித்த சில வலஞ்சுழிக் கற்கடம் என்ற வகை நண்டுகள் எட்டுத் திக்குகளிலும் கண்களைச் சுழற்றிப் பார்க்கின்ற அபூர்வமான யோக சக்திகளையும் கொண்டுள்ளன. காட்டுவாசிகள் இத்தகைய வலஞ்சுழிக் கற்கடத்தை வன தேவதையாகப் போற்றி அதனை மிகவும் பவித்ரமாகச் சுமந்து சென்று அதனுடைய கண் ஓட்டத்தைக் கணித்துக் கண்டவாறே சுற்றிலும் வருகின்ற மிருக நடமாட்டத்தை உணர்ந்து செல்வார்கள்.

திருந்துதேவன்குடி கற்குடி சிவாலயம்

வர்மக் கலை மருத்துவத் துறைக்கு வளம் கூட்டும் திருக்கற்குடி ஸ்ரீகற்கடேஸ்வரர்!

மேலும் கற்கட நடனம் என்ற ஒரு வகை நடன வகை உண்டு. இந்த நடன யோக வகைச் சக்தியால் தசை, நாளங்கள், எலும்புகளில் ஏற்பட்டுள்ள பலவிதமான துன்பங்களுக்கு தீர்வுகளைப் பெறலாம். கடுமையான நோய்கள், விபத்துகளினால் தசை, எலும்பின் பலத்தை இழந்தோர், முதுகு வலி, இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவற்றால் அவதியுறுவோர் மாணிக்கத் தைலம், வேலத் தைலம் போன்ற குறித்த சில தைல வகைகளை உடலில் தேய்த்துக் கொண்டு கற்கட நடனயோக அசைவுகளைத் தினந்தோறும் செய்து வர, தக்க நிவாரணம் கிட்டும்.

நரம்புத் தளர்ச்சி, எலும்புத் தேய்வு நோய்களுக்கும் இது தக்க குணம் தருவதாகும். இவை யாவும் வர்மம் எனப்படும் அபூர்வமான மருத்துவக் கலையின் ஒரு பகுதியாகும். வர்மக் கலை வைத்தியத்தை மேற்கொண்டிருப்போர் கற்கட சக்தி நிறைந்த திருக்கற்குடி, ஸ்ரீகற்கடேஸ்வரர் போன்ற ஆலயங்களில் அடிக்கடி வழிபட்டு வர, வர்ம மருத்துவ நிவாரணத் துறையில் பல அற்புத ஆற்றல்களைப் பெறுவர்.

அங்குபங்க்சர், வர்மக் கலை போன்ற நரம்பு மருத்துவத் துறையிலே இருப்போர்க்கு திருத்துறைப் பூண்டி, திருவான்மியூர், திருக்கச்சூர், திருக்கற்குடி, கடம்பத்தூர் போன்ற நண்டு வழிபட்ட தலங்கள், நரம்பு நாள சக்தி உள்ள தலங்கள் மிகச் சிறந்த வைத்திய குண சக்திகளை அளிப்பவை ஆகும். கும்பகோணம் – திருவிசநல்லூர் அருகே உள்ள திருக்கற்குடி (நண்டாங் கோயில்) தலத்தில் ஸ்ரீகற்கடேஸ்வரராக சிவபெருமான் அருள்பாலிக்கின்றார். அருமருந்து நாயகி என அபூர்வமான பெயரைத் தாங்கி அம்பிகையே இறைவனை வழிபடுகின்ற தலம்! நண்டுகள் குலத்திற்கெல்லாம் சற்குருவாக விளங்குகின்ற கற்கட மகரிஷி அடிக்கடி மானுட வடிவு கொண்டு வழிபடுகின்ற தலம்..

இயற்கையாகவே இறந்த நண்டின் கூட்டிற்கும் கூட, சங்குக் கூடு போல பல அபூர்வமான தேவ சக்திகள் உண்டு. சித்த மருத்துவத் துறையில் அகத்திய வாடக முறைப்படி, நம் உடலில் உள்ள நரம்புகளில் சுலூவியான் நரம்பு என்ற ஒரு நரம்பு ஒன்று உண்டு. இது மூளை ஆற்றலுக்கும், பாத சக்திக்கும், ஹஸ்த (கரங்கள்) சக்திக்கும் மிகவும் அபூர்வமான முறையில் அருள்பாலிப்பதாகும். ஆனால் ஆன்மீக ரீதியாகவே, கற்கட சக்தி மூலமாகவே இதனை ஆக்கப்படுத்த இயலும்.

சுலூவியான் கற்கட சக்தி!

பொதுவாக, ஓட்டு வகைக் காய்கறிகள், பழங்கள் (விளாம்பழம்) இத்தகைய சுலூவியான் சக்திகளைக் கொண்டவையாம். மேலும் நண்டு புரளும் மண் கொண்டு ஆக்கப்படும் கண்ணாடிக் கூட்டிற்குள் இயற்கையாக மடிந்த நண்டின் கூடுகளைப் பதித்து மந்திர உரு ஏற்றிச் சகுனவளம்., வாஸ்து சக்தி, தோஷ நிவர்த்தி கூடிய வடிவுகளாக்கி ஆன்மீக சாதனமாகவும் பயன்படுத்துவதும் உண்டு. நண்டு பதிக்கப்பட்ட இத்தகைய கண்ணாடி வடிவுகள் சுலூவியான் கடகம் என்று அழைக்கப் பெறும். கப்பல் மாலுமிகள், ராணுவம், விமான ஓட்டுனர்கள், கப்பல் பிரயாணிகள், அடிக்கடி பயணம் செய்வோர் இத்தகைய சுலூவியான் கடகச் சின்ன வடிவுகளைத் தம்மிடம் வைத்திருந்து குறித்த மந்திரங்களை ஜபிப்பதினால் பல அபூர்வமான தற்காப்பு மற்றும் முன்னேற்ற சக்திகளைப் பெற்றிடலாம்.

வியாபாரம், குறிப்பாக Share Market போன்ற தினசரி மாற்றங்கள் நிறைய உள்ள துறைகளில் நன்முறையிலே வியாபாரம் செய்வதற்கும், பிறரால் ஏமாற்றப்படாமல் இருப்பதற்கும் உதவுகின்ற அற்புதமான வடிவும் சுலூவியான் கடகம் ஆகும்.

“சூல்கடக விதானம்” என்பது நண்டுகள் தோன்றுகின்ற சிருஷ்டி லோகம் ஆகும். இங்கு தான் அம்பிகை அருந்தவம் கொண்டு, இங்கிருந்தே நண்டு வடிவம் பெற்று பூமியை அடைந்து, திருக்கற்குடியில் இறைவனை வழிபட்டு அற்புத அவதாரம் பூண்டனள்.

நண்டின் கூடுகள் பல அபூர்வமான யோக சக்திகளையும் ஆன்மீக சக்திகளையும் கொண்டவை. பூலோக அறிஞர்கள் பல பூமி ரகசியங்களை ஆய்ந்திட, வன மிருகங்களின் நடமாட்டத்தை அறிந்திட நண்டின் மூலம் அறியும் வழிமுறைகளைக் கைக் கொள்கின்றனர். மேலும் கரையில் ஒதுங்குகின்ற நண்டின் அமைப்பைப் பொறுத்து அந்தந்த கடல் பகுதியின் ஆழம், அங்கு நிலவுகின்ற தாவர வகைகளை அறிகின்ற கற்கட பூ சூத்திர முறைகளும் உண்டு.

மல்யுத்தத்திற்கு உதவும் கற்கட சூத்திரம்!

மல்யுத்தம் என்பது எதிரியை அடித்து வீழ்த்துவது எனத் தவறாக அர்த்தம் கொள்ளப்படுகின்றது! தர்ம நெறி பிறழாமல் நடைபெறும் மல்யுத்தங்கள் அக்காலத்தில் நிகழ்ந்தன.

மல்யுத்த வீரர்களுக்கு நீரடிப் பயிற்சிகளை அளிக்கின்ற போது நீரின் அடியில் அமிழ்ந்து செய்கின்ற “ஜல கற்கடம்” என்ற யோகவழியும் உண்டு. இதில் பாண்டவ பீமன் பிரசித்தி பெற்றவர் ஆவார். ஓடுகின்ற ஆறு, ஆழமான நீர் நிலைகள், கடல் போன்ற இடங்களில் குறித்த மூலிகைகளை உடலில் சுற்றிக் கொண்டு இதனுள் நண்டைப் பாதுகாப்புடன் வைத்து யோகம் பூணுதலே “ஜல கற்கட” யோக முறையாகும். இதனைப் பயில்வோர்க்கு எத்தகைய விஷ ஜந்துக்கள் கடித்தாலும் அவை உடனடியாக இரத்தத்தில் ஏறாது, விஷகடிக்குத் தற்காப்பாகவும் இது அமைகின்றது.

இத்தகைய கடல் தாவர மூலிகைகள், ஆற்று மூலிகைகள் இருக்கின்ற பகுதிகளை அறிவதெனில் இதற்கும் நண்டுகளின் துணையே தேவையாம். குறித்த சிலவகை நண்டுகள் இருக்கின்ற இடங்களில்தான் இம்மூலிகைகள் தென்படும் ஆதலின் இந்த நண்டுகள் இருக்கின்ற இடத்தைத் தேடி மல்யுத்தக்காரர்கள் செல்வர்.

இன்றைக்கும் இத்தகைய நண்டுகள் வசிக்கின்ற கடல் பகுதி நாடுகளில் மல்யுத்த வீரர்கள் பெருகுகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நில நண்டுகள், நீர் நண்டுகள், சமுத்திர நண்டுகள் என்று பல வகைகள் உண்டு. நில நண்டுகள் இருக்கின்ற நிலங்கள் மிகவும் செழிப்புடையதாகவும், அபூர்வமான கற்கட மூலிகைகள் இருக்கின்ற இடமாகவும் அமைகின்றன..

நத்தை பஸ்பம், ஆமை பஸ்பம் போல நண்டு பஸ்பம் என்ற மருந்துகள் தயாரிப்பதற்கும் நண்டுகள் பயன்படுகின்றன. ஆனால் இதற்காக நண்டுகளை வதைத்தல் கூடாது. நண்டு, நத்தை ஆமையைப் பயன்படுத்தும் மிருக தர்மம் கூடிய வைத்தியத் துறை முறைகளும் உண்டு.

நண்டு ஒரு சுபசகுனவதியே!

சுப சகுனத்தை தருகின்ற பிராணிகளுள் கழுதையைப் போல் சிறந்ததாக விளங்குவது நண்டு ஆகும். வெளிச் செல்லும் போது நண்டு எதிர்ப்படுமாயின் அது மிகச் சிறந்த சகுனமாக, சகுன சாஸ்திரங்கள் பகர்கின்றன. நண்டு எந்தத் திசையை நோக்கி நகர்கின்றதோ, அத்திசையில் பயணம் செல்வோர்க்கு நற்காரிய சித்திகள் கிட்டும். அதற்காகவே அக்காலத்தில் கடல், ஆறு, நீர் நிலைகளில் காலையில் சூரியோதய நேரத்தில் யோகாசனங்கள் பயின்றவாறே சகுன சாஸ்திரங்களை அறிகின்ற முறையும் நடப்பில் இருந்து வந்தது.

ஆமாம், இத்தகைய ஆன்மீக சக்திகள் நிறைந்த நண்டினை நாம் எவ்வாறு ஆன்மீக ரீதியாகப் பயன் கொள்வது?

‘சேது பாவன கற்கடம்’

சேது பாவனம் என்ற அபூர்வமான சக்திகளைப் பூண்ட நண்டானது சூரிய உதய நேரத்திலும், அபிஜித் முகூர்த்தம் எனப்படும் பகல் உச்சிக் காலத்திலும், சூரிய அஸ்தமன நேரத்திலும் சூரிய பகவானை நோக்கி, குறித்த பாங்கில் கால்களை வைத்துக் கொண்டு யோக நடன பாவனையை ஏற்கும். இவ்வாறு நடனத்தோடு கூடிய யோகம் பயில்வது மிக மிகக் கடினமானது. ஆனால் யோகப் பல(ய)ன்களை அள்ளித் தருவது. இந்த யோக நடனக் கலைகளில் சிறந்து விளங்குபவர்தாம் கடலிலும், வானிலும் வெளிப் புலக் கண்களுக்கு எட்டாத தொலைவிலும் நிகழ்கின்ற காட்சிகளை அறிகின்ற கூரிய மனக் கண் பார்வையைப் பெற்றிடுவர்.

ஸ்ரீராமரின் பரிவாரங்களில் இருந்த சுக்ரீவ, வாலி அம்சக் குரங்கினங்கள் பலவும் இத்தகைய சேது பாவன நடனத்தைக் கற்கட மகரிஷியிடம் இருந்து கேட்டுப் பயின்று, கடலில், தொலைவில் நடக்கின்ற நிகழ்ச்சிகளை எடுத்துரைக்கும் ஆற்றல்களைப் பெற்றனர்.

கற்கட சாஸ்திரம் மிக சிறந்து விளங்கிய தலங்களில் ஒன்றே பட்டுக்கோட்டை பேராவூரணி அருகே உள்ள அக்காலத்தில் சேது பாவன சமுத்திரம் என்று பெயர் கொண்ட தற்காலத்து சேதுபாவா சத்திரம் எனும் கடற்கரை ஊராகும். சேதுபாவன சமுத்திரம் என்பதே சேதுபாவா சத்திரம் என மருவிற்று! பாவா என்றால் மானசீகமாக ஒருவரைத் தந்தையென, தம்மைக் காப்பவரென, வரித்தல் எனப் பொருளும் உண்டு,

சஞ்சீவி பர்வத மலையில் இருந்து மூலிகைகளை எடுக்கச் சென்ற ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி ஆகாயத்தில் இத்தகைய சேது பாவன நடனத்தைப் பயின்றே கண்களுக்கு எட்டாத தொலைவில் இருந்த இந்த மூலிகையைக் காணும் சக்தியை பெற்றிட்டார். இதனை ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி அறிந்து கொண்ட தலமே சேது பாவன சமுத்திரம் எனப்படும் தற்போதைய சேதுபாவாசத்திரம் ஆகும். இத்தலத்தின் யோக வள சக்தியைப் பலரும் அறியாது இருக்கின்றனர்.

மனோசக்தி மிகுந்த தலம்

ஸ்ரீராமர் தம் பரிவாரங்களுடன் இலங்கைக்கு சென்ற போது ‘சேது பாவன கற்கடம்’ என்று குறித்த சூரிய லோக நண்டு வகைகளின் நடமாட்டத்தை அடையாளம் கொண்டு, இதன் வழியே சென்று இலங்கைக்கான கடல் வழியை அடைந்தார் என்று சித்தர்களின் இருடிகள் இராமாயணம் பகர்கின்றது.

மிகவும் புனிதமான கடல் பகுதியான இதன் மகிமையைப் பலரும் உணராமல் இருக்கின்றார்கள். இன்னல்களால் வேதனை பூண்டிருக்கும் மனதுக்கு ஆறுதல் தரும் மனோரம்யமான கடற்பகுதி! மனோரத யோக சக்திகள் நிறைந்த இடம். பண்டைய யுகங்களில் இதன் மனோரம்யத்தைக் கண்டே பல பிரம்ம ரிஷிகள் இங்கு பர்ண சாலைகளைக் கொண்டனர். அக்காலத்து ராஜகுருமார்கள் தம் வேந்தர்களுக்கு மனோயோகம் பயில்வித்த தலம். எனவேதான் இப்பகுதியில் ‘மனோரா’ (MANORA) என்ற கலங்கரை விளக்கம் போன்ற உப்பரிகை மண்டபம் எழுந்துள்ளது. TELEPATHY, ASTROLOGY போன்ற மனோயோகத் துறைகளில் சிறப்படைய விழைவோர் யோகம் பயில வேண்டிய யோக மண் பூமி இதுவே!

யோகம், ஆசனம், தாரணையில் சிறந்து விளங்க வேண்டியவர்கள் இங்கு ஸ்ரீராமரைத் தியானித்து “சேதுபாவனம்” என்று அழைக்கப்படுகின்ற நண்டு வகை ஆசனத்தை, யோக நடனத்தை மேற்கொள்ள வேண்டும். “சேதுபாவன கற்கட நடனம்” என்றால் குறித்த சில தப்படிகளை முன்னும் பின்னுமாக நண்டு போல் வைத்து நடந்து யோக சப்த ரிதத்துடன் தாளம், காலம் பிசகாது அமைப்பதாகும்.

பரத நாட்டியக் கலையில் சித்தர்கள் தம் பாங்காக அளிக்கின்ற அற்புத கற்கட யோக நடனமிது! பரத நாட்டியக் கலையில் மிகவும் வல்லவரான ஸ்ரீபரத மகரிஷி வனவாசத்தில் ஸ்ரீராமரை நேரில் சந்தித்த போது அவருடைய பரிவாரங்களுக்குத் தாம் வல்லமை பெற்றிருந்த சேது பாவன யோக நடன சக்தியை ஊட்டுவித்தமையால் இவை அவர்கட்குப் பிற்பாடு பெரிதும் உதவின.

பரத மகரிஷி தெய்வீக நடன வளப்பம் ஊட்டிய நம் நாட்டில் பரத நாட்டியக் கலை சிறந்து விளங்குவதற்கு தற்போதைய சேதுப் பகுதியில் உள்ள விளங்குளம்., மருங்கப்பள்ளம் போன்ற ஆலயங்கள் பெருமளவில் நமக்கு துணை புரிகின்றன. தற்போது இவற்றில் பலவும் ஜீரணமாகி உள்ளன அல்லது கடல் கொண்டுள்ளது.

திருவுசாத்தானம் (கோயிலூர்) ஸ்ரீமந்திரபுரீஸ்வரர்

இந்த சேது பாவன கற்கட நடனக் கலையை அறிந்திடவே, ஸ்ரீராமர் மூர்த்தி பட்டுகோட்டை – முத்துப்பேட்டை அருகே திருவுசாத்தானம் (கோயிலூர் என்பது ஊரின் தற்போதைய வழக்குப் பெயர்) ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் சிவலிங்கத்தை வழிபட்டு அரிய யோக நடன மந்திர சித்திகளைப் பெற்றார். திருவுசாத்தானம் என்பது பண்டையப் பெயர். மிகவும் அற்புதமான பாடல் பெற்ற சிவத்தலமே திருவுசாத்தானம்! முத்துப்பேட்டை – கோயிலூர் என இதனைத் தற்போது அழைக்கின்றனர்.

இங்குதாம் சிவபெருமான் “கற்கட நடனக்” காட்சிக் கோலத்தில் ஸ்ரீவிஸ்வாமித்ரருக்குக் காட்சி தந்தார். விஸ்வாமித்ர மாமுனியும் இதன் தாத்பர்யங்களை ஸ்ரீராமரின் பரிவாரங்களுக்கு ஓதுவித்தார்.

இதனருகே சாம்பவான் ஓடையில் இருந்து தோன்றிய ‘சேதுபாவன’ நண்டு ஒன்று ஸ்ரீராமருடைய பரிவாரங்களுக்கு வழிகாட்டி சேதுபாவா சத்திரம் அருகே கடலில் மறைந்தது.

ஜோதிடர்களுக்கு உதவும் திருத்தலம்

யோகம், ஜோதிடம், நடனம் போன்ற கலையில் உள்ள யோக சக்திகளைப் பெறுவதற்கு திருவுசாத்தானம் (கோயிலூர்) ஸ்ரீமந்திரபுரீஸ்வரரை திங்கள், புதன், சனிக் கிழமைகளில், சந்திர ஹோரை, புத ஹோரை, குரு ஹோரை நேரங்களில் அபிஷேகித்து, ஆராதனை செய்து வருதல் வேண்டும்.

கடக ராசியைச் சேர்ந்தவர்கள் யாவரும் வழிபட வேண்டிய முக்கியமான தலங்களுள் ஒன்றுதான் திருவுசாத்தானம் (கோயிலூர்) ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் ஆலயம் ஆகும். ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபட வேண்டிய ஆலயங்கள் பல உண்டு. அவற்றை நன்கு அறிந்து கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் இத்தகைய ஆலயங்களை தரிசித்து வருதலால் பல அற்புதமான சக்திகளைப் பெறுவதுடன் தம்முடைய கர்ம பரிபாலன நிர்மாணிப்பையும் மிகச் சிறந்த முறையில் பெற்றிடலாம்.

எனவே கடக ராசியைச் சேர்ந்தவர்களும் ஏனையோரும் நண்டு வடிவில் உள்ள சுலூவியான் கடகம் அல்லது நண்டு பொறிக்கப் பெற்ற மர, உலோகச் சின்னங்கள் போன்றவற்றை வைத்திருந்து குறித்த மந்திரங்களை ஓதிப் பூஜித்தலால் மிகச் சிறப்பான கற்கட யோக சக்தியை அடைந்து தீர்க்க தரிசனத்தையும் பெற்றிடுவார்கள். குறிப்பாக எதிர்காலத்தைப் பற்றி நன்கு உணர்ந்து கொள்வதற்கு கற்கட சக்திகள் பெரிதும் துணை புரிகின்றன.

ஆமை புகுந்த வீடு

ஆமம் புகுந்த வீடு உருப்படாது என்பதே ஆமை புகுந்த வீடு எனத் தவறான வழக்காயிற்று! ஆம், ஆமம் எனப்படும் தீவினைகள், அரைகுறைக் கர்மவினைக் கழிவுகள், வாக்கு நாணயமின்மை புகுந்த வீடு நன்மை பெறாது தானே!

“ஆமம் (நன்கு கவனிக்கவும், ஆமை அல்ல) புகுந்த வீடு உருப்படாது” என்று இருக்க வேண்டிய முதுமொழியானது ‘ஆமை புகுந்த வீடு உருப்படாது’ என்ற ஒரு தவறான வாக்கிய வழக்காக மாறி நிலவி வருகின்றது. காலப் போக்கிலே எத்தனையோ தமிழ் வார்த்தைகள் உச்சரிப்பு த்வனி தவறி, அர்த்தங்கள் மாறி, தவறான வாக்கியங்கள் வழக்கு முறைக்கு வந்து விடுகின்றன. இதை எடுத்துரைத்து நன்கு விளக்க வல்ல சற்குருமார்களை, பெரியோர்களை மதித்து, நாடுகின்ற பண்பாடும் நம்முடைய சமுதாயத்திலே மறைந்து வருவதால் அனைத்து நாடுகளிலுமே, குறிப்பாக நம் பாரதத்தில், அதிலும் கோயில்கள் பொங்கும் தமிழ்நாட்டில் பல தவறான மொழிகள் அபத்தமான வழக்கு மொழி வாக்கியங்களாகப் புகுந்து விட்டன.. இதில் ஒன்றுதான் “ஆமை புகுந்த வீடு உருப்படாது” என்ற அர்த்தமற்ற வாக்கியமாகும்.

‘ஆமம்’ புகுந்த  வீடு (ஆமை அல்ல) நன்மை தராது!

“ஆமம் புகுந்த வீடு உருப்படாது” என்பதே சரியானது., “ஆமம்” காலப் போக்கில் ஆமையாக மாறியது வேதனைக்குரியதே!

ஆமம் என்பது மிகவும் தொன்மையான தமிழ்ச் சொல், தற்போது தேவமொழியில் “ஆமம்“ என்ற சொல் உள்ளது. இறைவனுடைய இருவிழிகளாகத் துலங்குபவையே தேவ மொழியாகிய சமஸ்கிருதமும், பண்டைத் தமிழ் மொழியும் ஆகும். இந்த இரண்டு மொழியில் இருந்து தாம் ஏனைய அனைத்து உலக மொழியும் பிறந்தன.. எனவே இவ்விரண்டுமே அனைத்து உலகியல் மொழிகளுக்கும் தாயும் தந்தையுமாம்!

இந்த இரண்டு மொழிகளிலுமே உள்ள பழமையான சொற்களுள் ஒன்றே ஆமம் என்பதாகும். ஆமம் என்றால் அரைகுறையான, நிறைவேற்றப்படாத, வாக்கு தவறப்பட்ட நிலைமை என்று பொருள், எனவே ஆமம் புகுந்த வீடு என்றால் எந்த வீட்டிலே வாக்குறுதிகள் தவறப்பட்டு, நாணயம் இல்லாமை பெருகி, அசத்தியமும், அதர்மமும் தலைகாட்டுகின்றனவோ அத்தகைய ‘ஆமங்கள்’ நிறைந்த வீடு உருப்படாது என்று பொருள்.

அதாவது ஆமம் புகுந்த வீடு உருப்படாது என்பதற்கான விளக்கத்தை மிக எளிமையாகச் சொல்ல வேண்டும் என்றால் வாக்கு நாணயம் இல்லாத அரைகுறையான மனிதத் தன்மையோடு அதர்மமாக இருப்பவர்கள் வாழும் வீடு உருப்படாது என்று பொருள். எனவே இதில் ஆமை புகுவதற்கும் ஒரு சம்பந்தமும் இல்லை!

லக்ஷ்மி கடாட்சம் நிறைந்ததே ஆமை!

உண்மையில் ஆமை என்பது லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த பிராணி ஆகும். பிள்ளையார் எறும்பு ஒரு வீட்டில் நிறைய மொய்த்திட்டால் அங்கு நிறைவேற்ற வேண்டிய நேர்த்திகள், பரிகாரங்கள், பிராயச்சித்தங்கள் நிறைய உள்ளன என்பதை அது குறிக்கின்றது அல்லவா! காக்கை கரைதல் விருந்தோம்பலையும், கழுதை கர்ஜித்தல் சுபசகுனத்தையும் குறிப்பது போல ஆமை புகுந்த வீடு என்பது அங்கு சுப வழிகளில் செல்வம் வர இருப்பதைக் குறிப்பதாகும்.

மேலும் ஆமை புகுதல் என்பது அந்த வீட்டில் அரைகுறையாக நின்று போன சுப காரியங்களில் தடங்கல்கள் நிவர்த்தியாகி, காரியங்கள் நன்கு நிகழ இருப்பதையும் மங்களகரமாகக் குறிப்பதாகும்.

“ஆமநாசனம்” என்ற அரைகுறையாக இருக்கின்ற (தேவையில்லாத) பற்றையும், பேராசைகளையும், நற்காரிய சித்திக்குத் தடங்கல்களாக இருப்பனவற்றையும், அதர்ம சக்திகளையும், அசத்தியத்தையும் நாசம் செய்தல் என்று பொருள்.

ஆமங்களை பஸ்மம் செய்யும் கால பைரவர்!

கச்சப வல்லப சக்தி மூலம் ஆமத்தைத் தீர்த்திடலாம்.. வாக்குத் தவறியவர்கள் மனம் திருந்தி தங்கள் வாக்குகளை நிறைவேற்றவும், நாணயம் இல்லாமல் திரிபவர்கள் நற்பாடம் பெற்று நாணயத்துடன் நடந்து கொள்ளவும் கச்சபவல்லப சக்தி பெரிதும் உதவுகின்றது.. இதற்காகத்தான் ஸ்ரீகாலபைரவருக்கான ‘காயத்ரீ’ மந்திரத்தில் கூட ஆமநாசனாய தீமஹி என்று வரும். ஸ்ரீகாலபைரவர் தான் ஆமநாசனராக அதாவது அரை குறையாக இருப்பவ., முடிக்கப்படாதவை, அசத்தியமானவை, அதர்மமானவை, அநீதியானவை, நிறைவு பெறாதவை போன்ற அனைத்தையும் தம்முடைய கால சக்தியால், தேவையற்றனவற்றை பஸ்மம் செய்து, வேண்டியதைத் திருத்தி நிவர்த்தி செய்து, நன்முறையிலே முடித்துத் தருபவர் என்ற போற்றித் துதியை பெற்றிருக்கின்றார்.

எனவே ஆமம் புகுந்த வீடு என்பது வாக்கு நாணயம் இல்லாதவர்கள் இருக்கின்ற வீடு, இவர்கள் புகுந்த வீடு என்பது பொருளாகும். எனவே கடன் வாங்கும் போதோ, கொடுக்கும் போதோ அல்லது சொத்து நிலப் பரிமாறல்களில் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை எவரும் மீறுதல் ஆகாது. அவ்வாறு மீறினால் “ஆமம்” (ஆமை அல்ல!) அந்த வீட்டிலே புகுந்தது ஆகின்றது. எனவே இத்தகைய ஆமமாகிய வாக்கு தவறிய தன்மை – ஆமம் புகுந்த வீடு உருப்படாது என்பதே விளக்கமாகும்.

ஆமை புகுவது நன்றே!

ஒரு வீட்டில் ஆமை புகுந்து விட்டால் என்ன செய்வது? ஆமை என்பது திருவளம் நிறைந்த ஜீவனாகும். நண்டு போல, கழுதை போல, சுபசகுன ஜீவன்களில் ஒன்றே ஆமை ஆகும். எனவே ஆமை எதிர்ப்படுவதும், ஆமை நகர்வதைப் பார்ப்பதும் மிக மிகச் சிறந்த சுப தரிசனங்கள் ஆகும். யோக சக்திகள் நிறைந்த பிராணிகளுள் ஆமையும் ஒன்றாம்.

ஜலமாகர்ஷண யோக சக்திகளை உடைய ஆமைகள் பல உண்டு. நிலத்திலும் நீரிலும் வாழக்கூடிய இருநிலைப் பிராணிகள் உண்மையிலேயே பல அபூர்வமான தேவ சித்திகளைப் பெற்றவையாம். தற்காலத்தில் எவர் வீட்டிலேனும் ஆமை புகுந்து விட்டால் உடனே அதனைத் தீயிட்டுக் கொளுத்துவது அல்லது திருப்பிப் போட்டு அடித்துக் கொன்று விடுவது, மாமிசமாகப் புசிப்பது என்ற பாவகரமான காரியத்தை செய்து விடுகின்றார்கள்.

ஆமையை இம்சிக்காதீர்!

ஆமை புகுந்த வீடு உருப்படாது என்ற தவறான வழக்கை நம்பி வாயில்லா அப்பாவிப் பிராணியான ஆமையைக் கொன்று தம் சந்ததிகளுக்குத்தான் தீர்க்க முடியாத பாவங்களைச் சேர்த்துக் கொள்கின்றார்கள்.

வீட்டிற்கு, நிலத்திற்கு, தொழிற்சாலைக்கு ஆமை வந்தால், ஆமை லட்சுமிகரமான ஜந்து என்பதால் அந்த ஆமைக்கு எவ்விதத் தீங்கையும் இழைக்காமல் கச்சபேஸ்வரர், கூர்ம அவதார மூர்த்திகளைத் துதித்து அருகில் உள்ள கிணற்றிலோ, நீர் நிலைகளிலோ அதனை அமைதியாக அதன் போக்கிலேயே விட்டு விடுதலே சிறப்புடையது ஆகும். ஆமை தானாகவே நீர் நிலைகளை அடையுமாறு விடுதலும் சிறப்பானதே! வீட்டுக் கிணற்றில் ஆமை இருப்பதிலும் தவறொன்றும் கிடையாது.

எல்லாம் வல்ல பரம்பொருளாம் திருமாலாகிய பெருமாள் மூர்த்தியே ஆமை உருவைக் கொண்டவராக, தசாவதாரங்களில் கூர்ம அவதாரம் கொண்டு ,ஆமைக்கு தெய்வீக அம்சங்களை சேர்த்துத் தருகின்றார் அல்லவா! எனவே திருவளம் பூண்டதே ஆமையாம்.

ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம்

ஆமை காட்டும் செல்வ வள சுபசகுனம்!

எனவே ஆமை என்பது பல அபூர்வமான யோக சக்திகள் நிறைந்த, ஐஸ்வர்ய சக்திகளும், லக்ஷ்மீ கடாட்சமும் நிறைந்த பிராணி ஆதலால் ஆமை வீட்டிற்கு வந்தால் அது சபசகுனத்தையே காட்டுகின்றது. அந்த வீட்டில் மங்களகரமான வகையில் பணக் கொழிப்பு ஏற்பட இருக்கின்றது. என்பதையும் இது சுட்டுவதாகும்.

ஆனால் இயற்கையாகவே தானாகவே ஆமை வரவேண்டுமே தவிர, லக்ஷ்மி கடாட்சத்தை வருவிக்க வேண்டும் என்பதற்காக வேண்டுமென்றே ஆமையைத் தருவிக்க எண்ணாதீர்கள்! பசு, ஆமை, யானை போன்றவை யாவுமே திருமகளுடைய லோகத்தில் இருந்து தோற்றுவிக்கப்படுபவை ஆதலால் இவை யாவும் லக்ஷ்மீ கடாட்சம் பொருந்தியவை ஆகும்.

எனவே ஆமை வந்த உடன் இத்தகைய ஆன்ம நற்குணங்களை, சுப சகுன அறிகுறிகளை ஆக்கப் படுத்துவதற்காக, “ஆமைகளின் சந்ததிகள் செழிப்பதாக!” என்று அவற்றை ஆசீர்வதித்து இயன்றால் அதற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு நல்ல நீர் நிலைகளிலேயே விட்டு விட வேண்டும்.

இதன் பிறகு கூர்ம அவதாரமாக ஆமை வடிவிலேயே பெருமாள் இருக்கின்ற தலங்களிலோ அல்லது பெருமாள் ஆமை வடிவில் ஸ்ரீகச்சபேஸ்வரரைப் பூஜித்தத் தலங்களிலோ (காஞ்சீபுரம், திருக்கச்சூர், தசாவதாரத் தலங்கள்) பலவிதமான நீர் வகை அபிஷேகங்கள் இளநீர், பழச்சாறு, பானகம், சந்தனக் குழம்பு போன்று குறைந்தது 12 நீர் வகை அபிஷேகங்களால் சுவாமியை ஆராதித்து, அபிஷேகித்துப் பூஜித்தால் அந்த பண வரவிற்கான சுபசகுனங்கள் “ஆக்கப்படுத்தப்படும்” என்பதை நன்கு அறிந்து கொள்ளுங்கள். பெருமாள் மூர்த்தி ஆமை வடிவிலே சிவபெருமானைப் பூஜித்த தலங்களில் சிவபெருமான் கச்சபேஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.

எனவே வீட்டில் புகுந்த ஆமையை நாசம் செய்து ஆமங்களை, சாபங்களைத் தேடிக் கொள்ளாதீர்கள். பிறருக்கும் இதனை உணர்த்துங்கள்! எனவே ஆமை வீட்டிற்கு வருவது நல்ல பணவரவு ஏற்பட இருக்கின்றது என்ற அறிகுறிகளைத் தருவதாகும்.

சங்குகளின் தெய்வீக சக்திகள்

சங்குப் பூச்சிகளின் உடற் கூடுகளே சங்குகள் என்பது நாம் நன்கு அறிந்ததே! மனிதர்கள், பிராணிகள், தாவரங்களின் உடற் கூடுகள், உயிர் பிரிந்த பின் அழுகி புதையுண்டோ, அக்னியில் எரியுண்டோ மடிகின்ற போது, சங்குப் பூச்சிகளின் உடற் கூடுகள் மட்டும் சங்காக உருப்பெற்று தெய்வீகத் தன்மை கொண்டவையாக விளங்கக் காரணம் என்ன?

சங்குகளை நாம் ஆலயத்திலும் பூஜைகளிலும் மிகவும் பவித்ரமாகப் போற்றிப் பாதுகாத்து வைத்து, தெய்வீக வழிபாட்டிற்கு பயன்படுத்துகின்றோம் அல்லவா! 1008 சங்காபிஷேகம் என்றால் அதில் அபரிமிதமான பலன்கள் கூடுகின்றன என்பதும் நாம் நன்கு அறிந்ததே!

“சங்காத்மவதிகள்”

எனவே இயற்கையாக இறந்த சங்குப் பூச்சிகளுடைய சங்குக் கூடுகள், பூஜைச் சங்காக, அபிஷேகச் சங்காகத் தெய்வீகத் தன்மை பெறுவதற்குக் காரணமே சங்குப் பூச்சிகள் யோக சக்திகள் நிறைந்த வாழ்வைப் பெற்றிருப்பதேயாகும். சங்குப் பூச்சி என்று சொல்வதை விட, “சங்காத்மவதிகள்” என்று அழைப்பதே சாலப் பொருந்தும் என சித்தர்கள் உரைக்கின்றனர். ஒவ்வொரு சங்குப் பூச்சியும் (சங்காத்மவதி) தினந்தோறும் ஆயிரக் கணக்கான நட்சத்திரங்கள், கோளங்கள், விண்வெளி மண்டலங்களில் இருந்து பலவிதமான ஒலி, ஒளிக் கிரணங்களை கிரகித்து அவற்றை ஓங்காரப் பிரணவ சங்கம சக்திகளாக மாற்றித் தம் உடல் நாளங்களில் ஏற்கின்றன. மனிதனும் ஓங்கார வடிவில் இருந்து தோன்றியவனே! இதில் பிரணவ சக்தி கூடும் போது ஜீவித சக்தி ஏற்படுகின்றது.

சங்குப்பூ

எனவே ஒரு சங்குப் பூச்சி மடிகின்றது என்று சொல்வதை விட ஒளிமயமான உடலை விடுத்து ஒளிச் சரண லோகம் அடைகின்றது என்று உரைப்பதே சரியானதாம். ஏனென்றால் ஒவ்வொரு சங்காத்மவதிக்கும் இப்பூவுலகில் வாழ்வதற்கான உன்னதமான இறை லட்சியங்களுள் ஒன்று ஓங்கார சக்தியை ஒலிச் சுடர் வடிவு ஆக்குவதாகும். அதாவது சங்காத்மவதிகள் உலகத்திலும் விண்வெளியிலும் நிறைந்து இருக்கின்ற நம் சாதாரணக் கண்களால் காண இயலாத பிரணவ ஒளி, கேட்க இயலாத பிரணவ ஒலி சக்திகளை நீர், நிலம், ஆகாசம், விண்ணிலிருந்து கிரகித்து அவற்றை ஓங்கார ஒளியொலிப் பிரணவ அணு வடிவுகளாக இணைத்து மாற்றி நமக்கு அளிக்கின்றன.

சங்குகளிலும் பல வகைகள் உண்டு. ஒவ்வொரு சங்கையும் நீங்கள் காதில் வைத்து கேட்டுப் பார்பீர்களேயானால் விதவிதமான ஸ்வரங்களில் ஓங்கார சப்தங்கள் எழுவதை நீங்களே உணர்ந்திடலாம். எனவே சங்கு ஊதும் போது எழுகின்ற ஒலியானது ஓங்காரத்தின் விதவிதமான சப்த வடிவுகளாகும். ஓங்காரத்தின் சப்தம் இதுதான் என்று எவரும் கணித்துக் கூற இயலாது. இப்பூவுலகிற்கென இறைவனால் அளிக்கப்பட்டுள்ள ஓங்காரத்திற்கான ஒரு கோடி ஸ்வர சப்தங்கள் உண்டு. நடப்புக் கலியுகத்திற்கான இந்த ஒரு கோடி ஓங்காரக ஸ்வரங்களை நமக்கு அளிப்பவரே ஓங்கார வடிவான வலம்புரிப் பிள்ளையார் மூர்த்தி ஆவார்.

சங்குப் புஷ்பம் ஓங்கார வடிவே!

ஓங்கார ஸ்வர வடிவுகளையும் இறைவன் பலவிதங்களில் அளிக்கின்றான். இவற்றில் சங்கு புஷ்பம் என்பது சங்கின் ஒலி சக்தியை, வெள்ளை மற்றும் நீல வண்ண வடிவுகளாக நமக்கு அளிக்கின்றது. சங்கு போன்ற அமைப்பில் இருக்கின்ற சங்குப் புஷ்பத்திற்கு மகத்தான பிரணவ சக்திகள் உண்டு. சுக்ர பகவானும், சனி பகவானும் தமக்குரிய பிரணவ சக்திகளை சங்குப் புஷ்பம் மூலமாகவே பெரிதும் பெறுகின்றார்கள். சங்குப் பூவானது வெள்ளை அல்லது கத்தரிப் பூ நீல வண்ணத்தில், சங்கு வடிவில் இருகும். வயலோரங்களில், தோட்டங்களில் நிறையக் காணப்படும்.

சதுர்த்தி, சதுர்த்தசி திதி தோறும் நீலவண்ண அல்லது வெள்ளை வண்ண சங்குப் பூக்களை “ஓம்” எனும் ஓங்காரப் பிரணவ ஒலியை ஓதியவாறு தொடுத்துப் பிள்ளையாருக்குச் சார்த்தி வந்தால் நெடுங்காலம் தடைபட்டிருக்கின்ற நற்காரியங்கள் கூட மகத்தான முறையிலே நிறைவு பெறும். மிக விரைவில் காரியங்கள் சித்தி ஆவதையும் நீங்களே கண்கூடாகக் கண்டிடலாம்.

இவ்வகையில் சங்குப் புஷ்பமானது பலரும் பயன்படுத்தாமல் ஏதோ தோட்டங்களிலும், வயல் வரப்புகளிலும் தாமே பூத்து, காய்ந்து விடுவதாக நீங்கள் எண்ணிடலாம். இவ்வாறு எங்கெங்கேயோ பூக்கும் சங்கு புஷ்பங்களைச் சூட்சும தேவ ரீதியாக, பூஜைக்கு எடுத்துச் செல்கின்ற உத்தம தேவாதி தெய்வ தேவ மூர்த்திகளும், பல மகரிஷிகளும், தேவர்களும் நிறைய உண்டு. இறைவனுடைய படைப்பில் எதுவும் வீணாவதில்லை! அனைத்திலும் பல வகைகளில் ஒன்று மாற்றி ஒன்றாக மாற்றங்கள் நிகழ்ந்தவாறே இருக்கின்றன.

மேலும் ஒவ்வொரு சங்கு புஷ்பமும் தன்னளவில் குறைந்தது ஒரு கோடி முறையாவது ஓங்காரப் பிரணவத்தை ஒலித்து, தியானித்து அதன் சக்திகளை பூமி, வானம், காற்று, நீர் நிலைகள், சக தாவரங்கள் மூலமாகவும் பூவுலகில் பரப்புகின்றன. எனவே எங்கெல்லாம் சங்கு புஷ்பச் செடிகள் மலர்கின்றனவோ அங்கு ஓங்காரப் பிரணவ சக்திகள் நிறைந்திருக்கின்றன என்பதை உணர்ந்திடுக.

ஓங்காரப் பிரகாரம்
திருவிடைமருதூர்

ஓங்காரப் பிரகாரம்
உய்யக்கொண்டான்மலை

ஓங்காரப் பொருள் வளர்ப்பீர்!

தினந்தோறும் ‘ஓம் விநாயகாய நம: ஓம் சிவனே போற்றி!’ என்ற வகையில் ஓங்காரம் கூடிய அஷ்டோத்ர பூஜை செய்து பரவெளியில் ஓங்காரத்தை விருத்தி செய்யும் கைங்கர்யத்தை உத்தம சமுதாய பூஜையாக மேற்கொள்ள வேண்டும். இதற்காக உலக சமுதாய பூஜையாக ஆலயங்களில் அஷ்டோத்ர (ஓங்காரப் போற்றித் துதிகள்) பூஜை நடைபெறுகின்றது. எனவே ஓங்கார வளாகமே ஆலயங்கள் ஆகும்.

மேலும் ஓங்காரப் பெருவளம் நிறைந்த ஓங்காரப் பிரதட்சிணப் பாதைகள் திருவிடைமருதூர், திருச்சி உய்யக்கொண்டான் மலை, உஜ்ஜயினி ஸ்ரீஓங்காரேஸ்வரர் ஆலயங்களில் உள்ளன. ஓங்கார வளம் நிறைந்த ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நிறைய ஓதுபவர்களும் காயத்ரீயின் பிரணவ சக்தியுடன் ஓங்கார சக்தியைப் பரப்புகின்றவர்கள் ஆவர்.

கடலில் இயற்கையாகவே வரும் சங்குகளுக்குத் தெய்வீக சக்திகள் நிறைய உண்டு என்பது உண்மையே. இவ்வாறு சங்குப் பூச்சிகள் உயிரோடு இருக்கின்ற சங்குக் கூட்டைக் கடற்கரையில் கண்டால் அவற்றை மீண்டும் கடலுக்குள் விடுவதுதான் சிறப்புடையதாகும். தானாக இயற்கையாக ஒதுங்குகின்ற சங்கு கூடுகளை நன்முறையில் சுத்திகரித்து அவற்றைப் புனித படுத்துவதற்கான மந்திர முறைகளும் உண்டு.

குருவின் திருக்கரங்களில் புனிதமாகும் சங்குகள்!

துளசித் தீர்த்தம், வில்வ திர்த்தம், இளநீர் தீர்த்தம், சங்கு புஷ்பத் தீர்த்தம், தாமரைத் தீர்த்தம், ஆலயத் தீர்த்தங்கள் போன்ற 21 விதமான தீர்த்தங்களினால், சூரிய உதய ஒளி, பகலொளி, மறையொளி ஆகிய மூன்று கால வகை சூரியக் கதிர்களிலும், சந்திர ஒளியிலும் வைத்துப் பூஜித்த பிறகே சங்கைப் பயன்படுத்துதல் வேண்டும். ஆனால் தற்போது இத்தகைய முறைகளைப் பலரும் அறியாது இத்தகைய முறைகளைப் பலரும் அறியாது கடைபிடிக்க இயலாததால் தான் சற்குருமார்களின் முன்னிலையில் இச்சங்குகள் வைக்கப் பெற்று அவருடைய பூஜை முறைகளாலும், நேத்ர கடாட்சத்தாலும் சுத்திகரிக்கப்படுகின்றன. சற்குருமார்களும் இவற்றால் 1008 சங்காபிஷேகம், பாலாபிஷேகம் போன்றவற்றை நிகழ்த்திச் சங்குகளைப் புனிதப்படுத்தி பூஜைக்குரியதாக ஆக்கித் தருகின்றார்கள்.

எனவே சற்குருமார்கள் மூலமாக பெறப்படுகின்ற சங்குகளுக்கு மகத்தான புனிதத்துவம் உண்டு என்பதை உணர்ந்திடுங்கள். எனவே எல்லோருடைய வீட்டிலும் குறைந்தது 108 சங்குகளாவது இருத்தல் வேண்டும். பூஜை அறையில் இவற்றை வைத்து தினந்தோறும் குறித்த சில சங்குகளையாவது நன்றாகத் துடைத்து விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட்டு வந்தால் இதுவும் எளிமையான சங்கு பூஜையாகிறது என உணர்க!

சங்கிற்கு, சங்கால், சங்குடன் பூஜையாம்!

தினந்தோறும் துளசித் தீர்த்தம் அல்லது வில்வ தீர்த்தத்தைச் சங்கில் நிரப்பி, உங்கள் வீட்டிலுள்ள சிறு இறை மூர்த்திகளை, பிம்பங்களை, வடிவங்களை அபிஷேகிப்பதும் மிகச் சிறந்த பூஜையாகும். துளசிச் செடியையும் சங்கால் அபிஷேகித்து வர, இல்லத்தில் உள்ள உறவு வகைப் பகைமை, வேதனைகள் தீரும்.

மாதத்திற்கு ஒரு முறையேனும் அருகிலுள்ள அரச மரத்தடி விநாயகர், ஆலமரத்தடி விநாயகர் போன்ற மூர்த்திகளை நல்ல தீர்த்தத்தால் அபிஷேகித்தலால் உடல் சுத்தி கிட்டும்.

மாதம் ஒரு முறை அமாவாசை, பௌர்ணமியன்று சங்குகளைக் கடலுக்கோ, ஆற்றுக்கோ எடுத்துச் சென்று ஆற்று நீரையோ, கடல் நீரையோ 108 முறை தீர்த்தம் போல் வார்த்து ஜலத்திற்கே ஜலபூஜை செய்வதும், அர்க்யம் அளிப்பதும் சங்கினுடைய மகத்துவத்தை பெருக்குவதாகும்.

கார்த்திகை, ரோஹினி நட்சத்திர நாட்களில் தாம் பலவிதமான சங்குகள் இப்பூவுலகில் படைக்கப்பட்டன. எனவே கார்த்திகை நட்சத்திரம் கூடிய சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் சங்கினால் அபிஷேகிப்பதால் பன்மடங்கு பலாபலன்களைப் பெற்றிடலாம். மேலும் பிரதோஷ நேரத்தில் ஆலயத்திற்குச் செல்ல இயலாதவர்கள் தம் இல்லத்தில் பிரதோஷம் முழுதும் சங்குத் தீர்த்தத்தால் தொடர்ந்து அபிஷேகித்துக் கொண்டே இருப்பது மகத்தான பலன்களைத் தரும். ஏனென்றால் இச்சமயத்தில் தான் முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவலோகத்தில் உள்ள அனைத்து விதமான சங்குகளையும் முழக்கி, ஓங்கார சக்திகளை எழுப்பி, அப்போது பூவுலகில் எவரெல்லாம் சங்குகளால் அபிஷேகம் செய்கின்றார்களோ அச்சங்கில் தம்முடைய தேவ தபோ பலன்களை அர்ப்பணிக்கின்றார்கள்.. திருமால் மூர்த்தியும் பிரதோஷ நேரத்தில் தம் கரங்களில் சங்கைத் தாங்கி அருள்கின்றார் எனில் சங்குகளின் மகிமைதான் என்னே! ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் நரசிம்மப் பெருமாள் ஆலயத்தில் பிரதோஷ பூஜை நடத்தப்படுகின்றது.

சங்காபிஷேக விசேஷ நாட்கள்!

திங்கட்கிழமை, கார்த்திகை நட்சத்திரம் சதுர்த்தி அல்லது சதுர்த்தசி திதி இவை மூன்றும் இணைவது மிகவும் அபூர்வமானதாகும். அதுவும் கார்த்திகை மாதத்தில் வருகின்ற திங்கட்கிழமை அன்று சங்காபிஷேகம் செய்வது மிகவும் விசேஷமானதாம். பொதுவாக திங்கட்கிழமை சங்காபிஷேகத்திற்கு ஏற்றதாக விளங்குவதற்கு காரணம் என்னவென்றால் சந்திர பகவான் தமக்குரிய அமுதமான வெண்ணிற (ஸ்வேத)க் கதிர்களை சங்காபரணர் என்ற ஆதி சிவ மூர்த்தியிடமிருந்து தான் பெற்றார். சங்குதாரணர், சங்காபரணர், சங்கமேஸ்வரர், சங்கீஸ்வரர் போன்ற சங்கு நாமம் பூண்ட மூர்த்திகள் நிறைய உண்டு. பவானியில் இருக்கின்ற ஸ்ரீசங்கமேஸ்வரர் மூன்று ஆறுகளின் சங்கமத்தில் உற்பவித்த சுயம்பு மூர்த்தியாக இருந்தாலும் ஆற்றுச் சங்குத் தீர்த்தங்களால் பல சித்தர்களாலும், மகரிஷிகளாலும் அபிஷேகிக்கப் படுகின்ற மூர்த்தியாவார்.

மூன்று ஆறுகளின் திரிவேணி சங்கமத்தில் உற்பவித்த 1008 சங்குகளைக் கொண்டு முதன் முதலாக ஸ்ரீபவானி அம்பிகை ஈஸ்வரனை அபிஷேகித்ததாலும் ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆனார்.

கார்த்திகை மாதத்தில், கார்த்திகை நட்சத்திரமும் திங்கள் கிழமையும் ரோகிணி நட்சத்திரமும் கூடி வருவது சங்கு பூஜைக்கும், சங்குக் கூட்டு அபிஷேகத்திற்கும் மிகவும் சிறப்புடைய நாட்களாகும். வாரம் ஒரு முறையாவது உங்கள் வீட்டில் உள்ள சங்கையே சங்கு லிங்கச் சிவபெருமானாக பாவித்து சங்கிற்கு விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமமிட்டு அபிஷேக ஆராதனைகள் செய்து வருவதால் வீட்டில் பெரியவர்களிடையே உள்ள பிணக்குகள் நீங்கி இல்லறம் அமைதியாகும்.

பிற சங்குகளால் ஒரு சங்கிற்கு அபிஷேகம் செய்வது பெறுதற்கரிய பாக்கியமாகும். இதனால் வாக்குத் தவறியதால் வந்த வல்வினைகள் நீங்க தக்க பரிகாரங்கள் கிட்டும்.

இப்பூஜையை ஆற்றி மகத்தான தபோ பலன்களைப் பெற்றவளே சத்தியவல்லி என்ற நாமம் கொண்ட அம்பிகை ஆவாள். சத்தியவல்லி எனும் பெயருடன் அம்பிகை பூலோகத்தில் மானுட வடிவில் தோன்றி சத்தியத்தை தவிர வேறு எந்த ஒரு வார்த்தையையும் உரைக்காதவளாய் வாழ்ந்து காட்டி சமுதாயத்திற்கு 32 அறநெறிகளையும் போதித்திட, சத்யகிரீஸ்வர லிங்க வடிவமானது சங்கு வடிவில் காட்சியளித்து அம்பிகையை ஆட்கொண்டிட, இந்தக் காட்சியைத்தான் கடந்த இதழில் (ஜுன் மாத ஸ்ரீஅகஸ்திய விஜயம்) அட்டைப் படமாக அளித்துள்ளோம்.

சங்கிற்கு சங்கு புஷ்பத்தால் அர்ச்சிப்பதும் சங்கினாலேயே சங்கிற்கு பாலாபிஷேகம், தேனாபிஷேகம் போன்ற 12 விதமான அபிஷேகங்களை செய்வதும் விசேஷமான பலன்களைத் தருவதாகும்.

திருவலம்புர வலம்புரிநாதர்!

சங்குகளிலும் வலம்புரிச் சங்கு, இடம்புரிச் சங்கு என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். பலவகை வலம்புரிச் சங்குகள் உற்பவித்த சிவத்தலம் ஒன்று உண்டு. சீர்காழி அருகே மேலப்பள்ளத்தில், திருவலம்புரத்தில் வலம்புரிநாதராக சிவபெருமான அருள்பாலிக்கின்றார். இங்குதான் ஸ்ரீவலம்புரி விநாயகர் பூஜித்து உலகத்திலுள்ள அனைத்து வலம்புரிச் சங்குகளும் இச்சிவலிங்கத்தில் இருந்து தோன்றுமாறு நல்வரம் பெற்றார். எனவே வலம்புரிச் சங்கை வைத்திருப்பவர்கள் அதனை இச்சிவலிங்கத்திடம் வைத்து, பூஜித்து, அபிஷேகித்து இல்லத்திற்கு எடுத்து வந்து பூஜித்தால் வலம்புரிச் சங்கில் இருந்து கிட்டுகின்ற பலாபலன்களை முறையாகப் பெற்றிடலாம்.

இல்லத்தில் சங்கொலி முழங்குதல் வேண்டும்!

எனவே வீட்டில் சங்கு இருப்பது சுபசகுனமாகும். தற்காலத்தில் சங்கு ஊதுவது என்றால் பிரேதத்திற்கு மட்டுமே என்ற தவறான எண்ணம் வழக்கில் வந்துவிட்டது. உண்மையில் இறைவனுக்கு மட்டுமே சங்கு வழிபாடுகள் இருந்திடுதல் வேண்டும். மனிதனுக்காக அல்ல! இல்லத்தில் சங்கு ஊதிப் பூஜை நடத்துவது மிகவும் சிறப்பானது! உண்மையில் ஒவ்வொரு இல்லத்திலும் தினசரி பூஜையின் போது சங்கு ஊதப்பட்டு சங்கநாதம் பல ஜீவன்களையும் சென்றடைய வேண்டும். எவ்வாறு சங்கு ஊதி ஆலயத்தில் பூஜை செய்வது மிக சிறப்பானதோ இதே போன்று இல்லத்தில் சங்கை ஊதி பூஜித்திட செல்வ வளங்கள் சித்திக்கும், சாசுவதாமாய் நிலை நிற்கும் என்பதை இனியேனும் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீகோமதி அம்மன்

அனைத்து இல்லறப் பெண்களுக்கும் சகல மங்களங்களையும் அளிக்கும் மிகவும் முக்கியமான ஸ்ரீகோமதி அம்மன் வழிபாடு

அன்னை பராசக்தி, இறைவனுடைய கோடானு கோடி அவதார மூர்த்தங்களின் அருட்கடாட்சத்தை மிக எளிய முறையில் ஜீவன்களுக்கும், அனைத்து லோகங்களுக்கும் பெற்றுத் தருவதற்கும், அந்தந்த அவதார மூர்த்திகளின் அருட் பரிபாலனத்திற்கு இறைத் துணை ஆகுதற்கும், பரம்பொருட் துணையால் பல தெய்வ வடிவுகளைப் பூண்டு, இறைப் பெருங்கருணையுடன் யாவர்க்கும், யாவைக்குமாய்ப் பலவிதமான நல்வரங்களையும் அனுகிரகங்களையும் மிக எளிய முறையில் வார்க்கின்றாள்.

ஸ்ரீஜூரஹரேஸ்வரர்
சங்கரநாராயணர் ஆலயம் தஞ்சை

எனவேதாம் தெய்வ உபாசனைகளில் சாக்த உபாசனை எனப்படும் அம்பாள் உபாசனையானது (இஷ்ட மூர்த்தி வழிபாடு) எல்லாம் வல்ல பரம்பொருளை அடைவதற்கான உத்தமமான எளிய முறையென, மகரிஷிகளாலும், பக்தர்களாலும் பெரிதும் போற்றப்படுகின்றது! சாக்த உபாசனை மூலம் கலியுகத்தில் இல்லற தர்மத்தை ஒட்டிய வகையில், உத்தம பக்தியைச் சம்பாதித்து முக்தி, மோட்ச நிலைகளை எளிதில் அடைந்திடலாம். ஏனைய உபாசனைகள் கலியுகத்தில் கடைபிடிப்பதற்கு மிகவும் கடினமானவை!

சித்தர்கள் பெற்றுத் தந்த கோமதி அம்மன் வழிபாடு!

இவ்வகையில் ஸ்ரீகோமதி அம்மன் எனும் பராசக்தி அவதாரமானது, சிவபெருமானும், விஷ்ணுவும் ஒருங்கிணைந்து அருள்கின்ற ஸ்ரீசங்கர நாராயண அவதாரத்தின் இறைவி அம்சமாகும். பசுவாகவும், யானையாகவும், மயிலாகவும், நண்டு வடிவிலும், துளசி வடிவிலும், மானுடச் சிறுமியாகவும் இவ்வாறாக அனைத்து ஜீவ வடிவுகளிலும் உலக அன்னையாம் உமையவள் அனைத்துத் தலங்களிலும் எண்ணற்ற யுகங்களில் இறைவனைப் பூஜித்து, பெறுதற்கரிய ஸ்ரீசங்கரநாராயண அம்சத் திருவருளையும் பெற்று, ஸ்ரீகோமதி அம்பிகையாகத் தோற்றம் கொண்டனள்.

ஆதி மூலபராசக்தி, அவதாரங்களில் ஒன்றே கோமதி மூர்த்தமாகும். பன்னெடுங்கால யுகங்களாக வான லோகங்களில் வழிபடப் பெற்ற கோமதி அம்பிகையை, உத்தம சாக்த உபாசகர்களான சித்தர்களே பூவுலகிற்கு வந்திட வேண்டிக் கடுந்தவங் கொண்டு பூஜித்திட, கோமதி அன்னையும் மனங்கனிந்தனள்.

அரிய தவங்களால் கோமதித்தாய் பெற்ற இறையருளை, அம்பிகையையே உபாசிப்பதன் மூலம் எளிதில் அடைந்திடலாம் எனில் என்னே பராசக்தியின் பரந்த நற்கருணை! ஏதேனும் ஒரு பிறவியிலேனும் சாக்த உபாசனை கொண்டவர்களே, முமூட்சுக்களாகவும், யோகிகளாகவும் ஆகின்றனர் என்பது பராசக்தி வழிபாட்டின் திரண்ட திருவருளைக் குறிப்பதாகும் அல்லவா!

ஸ்ரீகோணலிங்கம்
சங்கரநாராயணர் ஆலயம் தஞ்சை

நடமாடும் ஆலயமே பசு!

கலியுகத்தில் வேத பூஜைகள், பக்தி சிரத்தையுடன் கூடிய விரதங்கள் மங்கும் என்பதால் பல்வகைப் பூஜா பலன்களைத் தாங்கி வரும் பசுக்கள் பூமியில் தோன்றிட அரும் பெருந்தவம் பூண்டவளே கோமதி அம்பாள்! அனைத்து தெய்வ மூர்த்திகளையும் வழிபட்டு அவர்களை ஒரே சாதனமாகிய தெய்வப் பசுவிற்குள் ஆவிர்பவிக்கச் செய்வதெனில், எத்தனை கோடி யுகங்களாக அம்பிகை தவம் பூண்டிருக்க வேண்டும் என்பதை குருவருளுடன் ஞானப் பூர்வமாகத் தானே உணர்தல் கூடும்!

அனைத்துத் தெய்வாதி தெய்வ, தேவ மூர்த்திகளும், மகரிஷிகளும், சித்புருஷர்களும் உறைவதால், பசுவானது நடமாடும் தெய்வ சாதனமாகவே துலங்குகின்றது. பசும்பாலை அருந்துவோர்க்குத்தான் பசு அன்னையாகிறாள் என்பதில்லை! “கோமாதாவாக” (கோ – பசு), அனைத்து ஜீவன்களுக்கும் அன்னையாகப் போற்றப் பெற்று உலகெங்கும் தெய்வீக சக்திகளை நிரவுகின்ற புனிதமான “ஆத்மாதி ஆத்ம ஜோதிப் பரலே” பசுவாகும்.

ஒவ்வொரு பசுவும் ஆற்றுகின்ற தெய்வீகப் பணிகளின் நிறைவை உரையில் வடிக்க இயலாது. நடமாடும் தெய்வீகப் பெட்டகமே உத்தமப் பசு! பசுவை பக்திப் பூர்வமாக ஒருவர் ஆராதித்து வந்தால், மிக எளிதில் உத்தம தெய்வீக சித்திகளை அடைந்திடலாம். இதற்கான கோ பூஜை முறைகளையும் வழிவகுத்த அம்பிகையே கோமதித் தாய்!

தெய்வ மூர்த்திகளின் பராத்பர உறைவிடமாகத் துலங்கும் பசுவின் திருக்குளம்புகள் படிகின்ற ஒவ்வொரு இடமும் மகத்தான தெய்வீக சக்தியைப் பெறுகின்றது. பசு நடக்கும் இடமெல்லாம் தீவினை சக்திகள் களையப்படுகின்றன. பசுவின் கால் குளம்பு பட்ட மண் துகள்களும் பல்வகைப் பாவங்களைத் தீர்க்கும் சக்தி வாய்ந்த தேவநிவாரணியாக, கோதூளியாகச் சிறப்பைப் பெற்றுள்ளது!

பல்வகைப் பூஜா பலன்களைத் தரும் பசு பூஜை!

சங்கரன்கோயில்

கங்கை, காவிரி போன்ற புனித நதி தேவதைகள், மக்கள் புண்ணிய நதிகளில் நீராடிப் போக்குகின்ற பாவச் சுமைகளை எல்லாம் அருணாசல கிரிவலம், திருக்கயிலாய தரிசனம், மாத சிவராத்திரி பூஜை, மகாமகம், கும்பமேளா நீராடல் போன்றவற்றின் மூலம் கழித்துத் தீர்வு பெறுகின்றனர்.

எனவே அனைவரும் மாதம் ஒரு முறையேனும் “கோதூளி நீராடலை” மேற்கொண்டு நல்ல மனசுத்தியைப் பெற்றிட வேண்டும். இதற்கான புண்ணிய நீராடல் முறைகளும் உண்டு! கோபூஜைகளின் மகத்துவத்தை விளக்குவதே ஆலயத்தில் உள்ள கோமுகமாகும். பிரம்மா, சிவாலய கோமுக வாயிலில் தாம் தவம் புனைகின்றார். சித்தர்களும், மகரிஷிகளும், கங்கா மாதாவும், ஜீவன்களின் நல்வாழ்விற்காக, மானுட வடிவில், நம்மைப் போலவே கோ பூஜைகளிய ஆற்றுகின்றனர். இவ்வாறு சித்தர்கள், மகரிஷிகள், யோகிகள் மற்றும் ஜீவன்களுக்கான கோபூஜை, கோமுக பூஜை முறைகளை வகுத்துத் தந்தவளும் ஸ்ரீகோமதி அம்பாள் ஆவாள்.

பசுமடம் அதாவது கோசாலை இருக்கும் இடத்தில் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிப்போருக்குப் பன்மடங்கு ஸ்ரீகாயத்ரீ தேவி அருளும் வேதபாவன சக்திகள் கிடைக்கின்றன. பசுவைத் தினந்தோறும் வலம் வந்து வணங்குவதால், பசுவின் திருமேனியினுள் சித்தர்களும், மகரிஷிகளும் ஆத்மாலயமாகப் பூஜை கொள்வதால் பூஜிக்கும் பூபாலரைப் பூஜிக்கும் பெரும் பாக்யமும் நமக்குக் கிட்டுகின்றது தானே!

ஸ்ரீபிட்சாடன மூர்த்தி, லிங்கோத்பவர், அர்த்த நாரீஸ்வரர், வீரபத்ரர், சண்டிகேஸ்வரி போன்ற அனைத்து ஆலயங்களிலும் காண இயலாத பல அபூர்வமான தெய்வக் கோலங்களை ஒரு சேர நாம் பெறுகின்ற நடமாடும் திருக்கோயிலே பசுவின் திருமேனியாகும்.

எனவேதான் அம்பிகையே பசு வடிவு கொண்டு ஸ்ரீசங்கர நாராயணரைப் பூஜித்து, பல அரிய அவதார சக்திகளையும், ஜீவன்களுக்கு அருள்வதற்கான பல அரிய நல்வரங்களையும், அனுகிரகங்களையும் ஒரு சேரப் பெற்றிட்டாள். தினமும் பசுவை வணங்கும் போது அனைத்து தெய்வ மூர்த்திகளும் அருள்கின்ற ஆலய தரிசனப் பலன்களும் கிட்டுகின்றன அல்லவா! எனவே இவ்வாறாகவே பசுவின் தெய்வீகத் தன்மைகள் யாவையும் ஜீவன்கள் அறிந்து பெற்றிட உதவும் வண்ணமாயும் ஸ்ரீகோமதி அம்மன் அவதாரம் ஏற்பட்டது. பசுவை வழிபட்டு, பசுவிற்குச் சேவைகள் செய்து கோமதி அன்னையை வழிபடுவது கோபூஜா பலன்களைப் பன்மடங்கு ஆக்குவதாகும்.

பாக்கெட் பால் வேண்டாம்! பசும்பால் சக்தியை நேரடியாகப் பெறுவீர்!

ஸ்ரீநடராஜப் பெருமான்
சங்கரன்கோயில்

ஆலயங்களில் பிளாஸ்டிக் பாக்கெட் பாலால் அபிஷேகம் செய்வது நன்றன்று. இது கோமாதாவையே பழிப்பது போலாகும். சுத்தமான பசும்பாலால்தான் ஆலய வழிபாடுகள் நிகழ வேண்டும்.

இல்லத்திலும் கூட, பிளாஸ்டிக் பாக்கெட் பாலை வாங்கிப் பயன்படுத்துவதை விட, தினமும் ஒரு வேளையாவது பசும்பாலை வாங்கி, பசுவைப் பேணுவோருக்கு உதவுவதும் பசு தர்மமே! இதுவும் மகத்தான 32 இல்லற தர்மங்களுள் ஒன்றாகும். கோமதி அன்னை, காஞ்சி ஸ்ரீகாமாட்சி அன்னையைப் போல் 32 நல் அறங்களைப் பேணினள். பசும்பாலை வாங்குவதால் பசுவை வளர்க்கின்ற ஏழை, நடுத்தர மக்களுக்கும் நன்மை பயக்கும் நற்காரியமாகின்றது அல்லவா! பால் தண்ணீராக இருக்கிறதே என்று விட்டு விடாதீர்கள்! பசு தர்மத்தை அயராது நன்கு எடுத்துரைத்தால் அவரவர் மனம் திருந்தி நல்ல பசும்பால் கிட்டுவதற்கு வழி வகுப்பர்.

மாதம் ஒரு முறையாவது பசுக்களைப் பேணுகின்ற கோசாலைக்கோ அல்லது பசுவை வளர்க்கின்ற ஏழைகளின் வீட்டிற்கோ, பசுக் கொட்டகைக்கோ சென்று, பசுவிற்கு நீராட்டி, மஞ்சள், குங்குமம் இட்டு புண்ணாக்கு, தவிடு, புல் போன்ற உணவிட்டு நல் உதவிகளைச் செய்து பசு தர்மத்தை நன்கு பேணிடுங்கள். இதனால் நாட்டில் நீர்வளம், நிலவளம், தான்யவளம், போன்று பல்துறைகளிலும் செழுமை தோன்றும். இது மகத்தான பசுதர்மச் சமுதாய பூஜையாகும்.

இவ்வாறு பசுதர்மத்தைப் பேணுவதற்காகவும் ஸ்ரீகோமதி அம்மன் உலகில் தோன்றி உள்ளாள்.

நாம் வசிப்பது நகரமாயிற்றே, பசுக்களை இங்கு காணவே இயலாதே என்று எண்ணாதீர்கள். ஸ்ரீகோமதி அம்மன் ஆலயத்தில் பலவிதமான அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டிட, கோமதி வழிபாட்டுப் பலன்கள் நாடெங்கும் பல இடங்களில் பலரும் பசுதர்ம சக்திகளைப் பெறுவதற்கான ஆத்ம சக்தியை அளித்திடும்! எனவே  பசுதர்மத்தைப் பேணுதற்கு கோமதி வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.

உத்தம பெண் மகரிஷிகள் வழிபடும் கோமதி அம்பாள்!

ஸ்ரீஆதிநந்தி அற்புதம்
சங்கரன்கோயில்

மைத்ரேயி, கார்க்கி போன்று பெண் மகரிஷிகள் பலர் உண்டு. இவர்கள் யாவரும் ஸ்ரீகோமதி அம்பிகையை உபாசித்து உத்தம மகரிஷிகள், சித்தர்கள் போற்றும் வண்ணம், அற்புதத் தெய்வீக நிலைகளை அடைந்தவர்கள் ஆவர். ஸ்ரீகோமதி அம்மன் ஆலயத்தில் தினந்தோறும் தூல, சூக்கும, காரண, வடிவுகளில் மகரிஷினிகள் பலரும் வந்து வழிபடுகின்றனர் என்பதை இனியேனும் நன்கு அறிந்திடுங்கள்!

துறவு, பக்தி, உத்தம தர்ம நிலைகளில் ஆண், பெண் என்ற பேதம் கிடையாது. ஆனால் மனிதப் பகுத்தறிவால் உணர்வதற்காக பெண் மகரிஷிகள் என்று எடுத்துரைக்கின்றோம். எனவே மைத்ரேயி, கார்க்கி போன்ற உத்தம மகரிஷினிகள், ஆயுர்தேவி அம்மனின் அருளால், பூவுலகில் நித்ய வழிபாடு கொள்ளும் தலமே ஸ்ரீகோமதி அம்மன் ஆலயமாவதால் கோமதி அம்மன் வழிபாடு இல்லறப் பெண்களுக்குப் பலவிதமான மங்களங்களையும், நல்வரங்களையும், சௌபாக்ய சித்திகளையும், ஸ்திரமான மாங்கல்ய சக்தியையும், சுமங்கலித்வப் பேரருளையும் தருவதாகும்.

கருட மூர்த்தி தரும் விசேஷ நல்வரங்கள்!

ஸ்ரீகோமதி அம்மனுக்கு மிகவும் உகந்தது வேர்க்கடலைப் பாயசமாகும். கருட மூர்த்தி, வைத்ய சக்திகளை விருத்தி செய்து கொள்வதற்காக, கருடக் கொடிச் சித்தர் உரைத்தபடி வியாழன் தோறும் குரு ஹோரையிலும், ஆடித் தபசு அன்றும்  ஸ்ரீகோமதி அம்மனை வழிபட்டுப் பல தெய்வீக சக்திகளையும், அரிய அனுகிரகங்களையும் பெற்றார்.

எனவே வியாழன் தோறும் ஸ்ரீகோமதி அம்மனை வழிபட்டு, அடிப் பிரதட்சிணம் செய்து, வேர்க்கடலைப் பாயசம் படைத்து, தானமாக அளித்து வந்தால், கருட மூர்த்தியே பெறுதற்கரிய வைத்திய சக்திகளை, நோய் நிவாரண சக்திகளை மனமுவந்து நேரடியாகவே அளிக்கின்றார். நோயுள்ளோர், மருத்துவர்கள், மனஅமைதி இன்றி வாடுவோர் யாவரும் கோமதி அம்மன் ஆலயத்தில் வியாழன், திருவோணம், திருவாதிரை, பிரதோஷம், மாதசிவராத்திரி நாட்களில் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு இது!

இப்பூவுலகில் வைணவ, சைவ பேதங்கள் இன்னமும் இருந்து வருவது வேதனைக்குரியதே! ஆனால் விண்ணுலகிலோ, சித்தர்கள், மகரிஷிகளுடன், முப்பத்து முக்கோடி தேவர்களுடன் வைகுண்ட ஏகாதசியன்று சிவபெருமான் வைகுண்டத்தில் பெருமாளைப் பூஜித்திட, மகாசிவராத்திரி அன்று ஸ்ரீமகாவிஷ்ணுவே திருக்கயிலாயத்திற்கு ஏகி சிவனைப் பூஜிப்பதும் நிகழ்கின்றன!

உடல் முழுவதும் விபூதி அல்லது திருச்சூர்ணம் தரித்து, ஸ்ரீகோமதி சமேத ஸ்ரீசங்கரநாராயண ஆலயத்தை பசு, கன்றுடன் வலம் வந்து வழிபடுவது மிகச் சிறப்பான பிரார்த்தனையாகும். பெண்களாயின் குங்குமத்தை முன் வகிடு, நெற்றி, மாங்கல்யம் ஆகிய மூன்று இடங்களில் நன்கு தரித்து வழிபட வேண்டும். குங்குமம் இடாது ஒட்டுப் பிளாஸ்டிக் பொட்டு இடுவது பலத்த குங்கும தோஷத்திற்கு ஆளாக்கி விடும். இது கணவனின் ஆயுளைப் பாதிக்கும். இவ்வாறு இதுகாறும் அறிந்தோ, அறியாமலோ ஒட்டுப் பிளாஸ்டிக் பொட்டு இட்டு குங்கும தோஷத்திற்கு ஆளானோர் ஆடித் தபசு அன்று நிறைய ஏழைச் சுமங்கலிகளுக்கு குங்கும தானம் தந்து தக்க பரிகாரத்தை நாடிட வேண்டும்.

ஸ்ரீவிக்னராஜன்
சங்கரன்கோயில்

கோமதீய வழிபாடு!

ஸ்ரீஆதிசங்கரர் பகுத்தளித்த சாக்த வழிபாட்டின் கண் கோமதீய வழிபாடும் அமைகிறது. கோமதீயம் என்றால் பல்லாயிரக்கணக்கான தெய்வாதி தெய்வங்கள் நிறைந்துள்ள பசுவின் திருமேனியில் பொலியும் ஸ்வயம்ப்ரகாச கோசதீப ஞானம் என்று பொருள். இதுவே கோமதீய ஜோதி என்று எளிமையாக அறியப்படுவதாம்.

கோமதீய ஜோதியானது கண்ணுக்குத் தெரியாத வாயு அம்ச ஜோதி! இது அருணாசல ஜோதியின் ஓரம்சமாகும். அடிமுடி தேடும் படலத்தில் பரம்பொருள் ஜோதியை நாட இயலாத வகையில், பெருமாளப்பர் அரிய தவத்தால் ஸ்ரீசங்கரநாராயண ரூபத்தில் இணையும் பாக்யம் பெற்று சங்கரநாராயணத் தோற்றத்தில் அன்று ‘காணாததைக் கண்டோம்’ எனப் பரமானந்தம் கொண்டார்.

ஓம்மதீய ஜோதியே கோமதீய ஜோதி!

வேர்க்கடலைக்குள் இரண்டு பருப்புகள் உள்ளன அல்லவா. இது ஹரிஹரத் தத்வாம்சமாகும். இந்த இரண்டு பருப்புகளுக்கும் இடையில் நுண் புலனால் மட்டுமே அறியும் வகையில் பருப்பொருட்பரவெளி வீற்றிருக்கும். இதற்கு ஓம்மதீய ஜோதி என்று பெயர்.

ஊசிமுனையில் உன்னதத் தவம், பசுவின் திருக்குளம்புகளில் அமர்ந்து பரமார்த்திகத் தவம், ஒரே ஒரு தர்ப்பை புல்லின் மேல் அமர்ந்து தன்னலமறியாத் தவம், ஆகாயத்திலிருந்து அதிவேகத்தோடு கங்கை பூலோகத்திற்கு வருகின்ற இடத்தில் அதன் வேகத்தைத் தாங்கியவாறு நாராயண திருப்பாதங்களின் கீழ் அமர்ந்து கங்காதர பாவனத்தவம், இவற்றோடு வேர்க்கடலையின் நடுவில் உள்ள வெற்றிடப் பரவெளி ஓம்மதீய ஜோதி பெருகும் இடத்தில் உறைந்து பல கோடி யுகங்கள் தவம் எனப் பலவகைத் தவங்களை கோமதி அம்மன் பூண்டாள். அப்போது அம்பிகைக்கு “கோதாவன கோச ஜோதியும், ஜோதிப்ரகாச ஞானம்” கிட்டியதால் அப்போது தக்ஷிணாமூர்த்தி, ஞானதக்ஷிணா மூர்த்தியாகத் தோன்றி கோமதிக்கு அருள்பாலித்திட்டார். இதனால் குரு தத்துவம் அவனியில் நன்கு பரிணமித்து, குரு பகவானுக்கும் நிலக் கடலையானது நவதான்ய மாமணியாக அமைந்தது.

எனவே குருபகவானுக்கு நிலக்கடலை நவதான்யமாக அமைவதற்கு ஸ்ரீகோமதி அம்மனின் பெருந்தவமே காரணமாகும். எனவே தான் வேர்க்கடலை மாலை சார்த்துதல், வேர்க்கடலைப் பாயசம் போன்றவை ஸ்ரீகோமதி அம்மனுக்கு ப்ரீதியை அளிக்கின்றன.

பெண்கள் கடைபிடிக்க வேண்டிய கோமதி அம்மன் வழிபாடு!

கலியுகத்தில் எத்தனையோ விதமான இன்னல்களைத் தாங்கி ஒரு இல்லறப் பெண்மணி தம் வாழ்க்கையை நடத்த வேண்டியுள்ளது. எனவே இன்னல்களை வென்று இனிய வாழ்வு பெற அனைத்துப் பெண்களுக்கும் கோமதீய ஒளி ப்ரகாச சக்தி கிட்டிட ஸ்ரீகோமதி அம்பாள் வழிபாடு மிகவும் அத்யாவசியமானதாகும். நன்முறையில். இறைநெறிகளில் துய்க்கும் வாழ்க்கை ஒவ்வொரு இல்லறப் பெண்ணுக்கும் அமைந்து, தீர்க்கமான மாங்கல்ய சக்தி சௌபாக்யம் பெற்று, கணவனுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், நீண்ட ஆயுளையும் அளிக்கும் சுமங்கலித்வ சக்திகளையும் அடைந்திடவே, ஸ்ரீகோமதி அம்மனும் பலவிதமான தவங்களை மேற்கொண்டு இதனுடைய பலாபலன்களை ஸ்ரீசங்கர நாராயணப் பெருமானின் திருவடிகளில் சமப்பிக்கின்றாள்.

ஸ்ரீகோமதி அம்பாள் சமேத ஸ்ரீசங்கரநாராயண மூர்த்தி அருளும் கோயில்களில் (சங்கரன் கோயில், சென்னை திரு,வி.க நகர்) ஆலயம் முழுவதும் பச்சரிசி மாவால் கோலம் இடுதல், நீர்க் கோலம் இடுதல், வேர்க்கடலை மாலை சாற்றுதல், வேர்க்கடலைப் பாயசம் படைத்துத் தானம் அளித்தல், ஆலயத்தில், கோசாலையில், இல்லத்தில் கோ பூஜை செய்தல், பசு கன்றுடன் ஆலயத்தினை வலம் வருதல் போன்ற பலவிதமான வழிபாடுகளை மேற்கொள்தலால், கோமதீயம் எனப்படும் பதிவிரதா சக்தியையும், மாங்கல்ய ப்ரகாச சக்தியையும், தீர்க்க சௌபாக்ய மங்கள சக்தியையும் இல்லறப் பெண்கள் பெறுகின்றார்கள்.

எனவே வாரம் ஒருமுறையேனும் ஸ்ரீகோமதி அம்மன் ஆலய வழிபாட்டினை மேற்கொண்டு அளப்பரிய பலாபலன்களைப் பெறுவீர்களாக!

ஸ்ரீபோடா சித்தர்

காஞ்சிபுரம் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் (சிவசாமி சித்தர்)

ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரின் குருமூர்த்தம் (ஜீவசமாதி அல்லது ஜீவாலயம்) காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில், மயானப் பகுதி அருகே உள்ளது. ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் கோயிலில் இருந்த சிவசாமி சித்தரின் ஜீவசமாதி என்று கேட்டால்தான் பலருக்கும் தெரியும். நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்தர் சுவாமிகளால் “அண்ட சராசரமறிந்த ஆத்ம ஞானப் பிரபு” என்று துதிக்கப் பெற்றவர். காஞ்சிபுரம் ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளால் “அரும்பெரும் சித்தர்” எனப் போற்றப்பட்டவர். ஸ்ரீபரமாச்சார்யாள் காலத்தில், காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில், பன்னெடுங்காலம் உறைந்தவர். காலத்தைக் கடந்த ஞானயோகச் சுடர்ச் சித்தரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!

காஞ்சிபுரத்தில் சமீப காலம் வரை, இறைத் தூதுவராய் சித்தர்பிரானாய், மனித உருவில் தோன்றி ‘வாழ்ந்து’ மக்களிடையே ஸ்ரீசிவசாமிச் சித்தர் சுவாமிகள் எனப் பிரசித்தி பெற்று, தற்போது ஜீவசமாதி பூண்டிருக்கின்ற, மகத்தான சித்தர்பிரானே சித்தர்களால் “ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்” என்றழைக்கப் பெற்று அரிய காரணப் பெயரைப் பூண்டு, என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் இன்றும், என்றுமாய், குருமூர்த்தமாகிய காஞ்சீபுரம் ஜீவாலயத்தில் ஞானஜோதிப் பூர்வமாய்க் குடிகொண்டு, சித்தாமிர்த அருளை வார்க்கின்றார். பூலோகத்தார்க்கு மட்டுமன்றி, அண்ட சராசர லோகங்களுக்கும் அருளை அள்ளிப் பொழியவல்லவர்!

ஸ்ரீபோடா சித்தர் ஜீவாலயம்
காஞ்சிபுரம்

‘போ’வில் கூடும் ஓங்காரப் பகாராத்யமும், ‘டா’மரப் பராசக்தி அம்சங்களும் “போடா” ஆயிற்று!
“போடா” என்பதற்குத் தமிழில் ‘செல்!’ என்ற கொச்சை வழக்கு ஒருமைப் பொருளையே நாமறிந்தாலும், ஆன்மீக ரீதியாக, “போடா” என்பதற்கு தெய்வீக ரீதியான அர்த்தங்களும், எண்ணற்ற பீஜாட்சரக் கீர்த்திகளும் உண்டு.

சித்தர்கள் இட்ட ஸ்ரீபோடாஸ்வாமி எனும் நாமகரணத்தில், “போ” என்பது ஸ்ரீவித்யா சக்கரப் பொருளாம் ‘பகாராத்யமும், சின்மய ஓங்காரமும் சேரும் (ப+ஓ = போ) சிவபர சக்தியாகும்.

‘டா’ என்பது மிகவும் சக்தி வாய்ந்த சாக்த ‘டாமர பீஜாட்சரங்களுள்’ ஒன்று. டாகினீஸ்வரி, டாமரீ, டாமர்யாதி தேவிகள் போன்றோர் பராசக்தி வழிபாட்டில், வித்யைச் சக்கரப் பிரவாகத்தில் ‘டாமர பீஜாட்சர’ யந்திர வடிவுகளில் உறையும் தேவிமார்கள் ஆவர்.

பரவெளியில் ஓங்காரப் பகாராத்யம் எனும் கைலாய சிவகுரு மண்டலம் ஒன்றுண்டு. இது ஓம் வடிவில் இருக்கும். இதன் பிரதிபலிப்பே திருக்கயிலாய மலையின் (Mount Kailash) வடகிழக்கு முகத்தில் தோன்றும் ஓங்காரச் சின்னமாகும். இதனைத் தன்னுடைய வலது உள்ளங்கையில் சூக்குமமாய்க் கொண்டிருந்தவரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!

ஒளியில் ஓங்காரமாய் ஒளிரும் ‘ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்’!

ஸ்ரீவித்யா சக்கரத்தில் உறையும் 43கோடி தேவதைகளில், குறித்த பல ‘டாமர’ வகை பீஜாட்சர தேவதா மூர்த்திகள், ஓங்காரப் பகாராத்ய ஒளிப் பிரவாக(ள) கைலாய சிவகுரு மண்டலத்தில் அக்னி வகை யோக நிலைகளைக் கொள்கின்றனர். இங்குள்ள ஒளி வகைகள் பூவுலகில் நாமறியா பல வண்ணங்களைக் கொண்டவை! பூலோகத்தில் நாம் காண இயலா பல நிற ஒளி வகைகளையும் நாம் இங்கு பெறலாம். இந்த மகத்தான ஒளிப் பிரகாசத்தைத் தாங்கி, ஒளியில் ஒளிரும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாக, பூமியில் இறைத் தூதுவராக வந்தவரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!

அகஸ்தியர் வழிவந்தவர்

சாக்த வழிபாட்டில் சித்தர்கள் மகா வல்லுவனர்கள் ஆவர். சித்தர்கள் சிவம், வைணவம் என்று எந்த பேதமும் கொள்வதில்லை. சித்தர்களின் பீடாதிபதியான ஸ்ரீஅகஸ்தியர், சித்தர்கள், யோகியர்கள், மகரிஷிகள், ஞானியர், முமூட்சுக்கள், தரணி பந்துக்கள், பித்ரு மூர்த்திகள், கந்தர்வர்கள், தேவர்கள், மனிதர்கள் மற்றும் சகல ஜீவன்களாலும், இனிதே போற்றப்படுவர்., வைகுண்டத்தில் ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கும், கயிலாயத்தில் சர்வேஸ்வரனுக்கும் தினமும் திருப்பாதப் பூஜைகளை ஆற்றும் பாக்யம் பெற்றவர். ஸ்ரீவித்யா உபாசனையில் உன்னதம் பெற்றவரும், ஜோதி வழிபாட்டில் கரை கண்டவருமான ஸ்ரீஅகஸ்தியர் வழிவந்தவரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!

அண்டசராசர இயக்கங்களையும் தம் உள்ளங்கையில் பூண்ட உத்தமச் சித்தர்!

ஆதிசிவன், பிரம்ம மூர்த்தியின் ஐந்தாம் சிரசைத் தாங்கியது முதல், காஞ்சியில் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் திருமண வைபவம் போன்று அனைத்துப் புராணங்களிலும் பங்கு பெற்ற சிரஞ்சீவிச் சித்தர் பிரான்!

காஞ்சிபுரம் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் (சிவசாமி சித்தர்) – அட்டைப் படவிளக்கம்

சித்தர் வாயுரை, சத்தியப் பேருரை!

ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் போன்றோர் சத்திய வித்தகர்கள்! தம் வாயுரை, வாய்மொழி எதனையும் சத்தியமாக்கும் இறைப் பேராற்றல் படைத்தவர்கள்! அபிராமி பட்டர், அபிராமி அருளால், அமாவாசையைப் பௌர்ணமி ஆக்கினாரே, நினைவிருக்கிறதா?

எனவே சித்தர்களுடைய எந்த வாய் வார்த்தையும் வீணாவது கிடையாது. ஒவ்வொன்றும் நிலைத்து நின்று பல பாடங்களைப் புகட்டும், அவர்கள் திட்டுவது, வைவது, வேறு மொழிகளைக் கூறுவது யாவையும் நம் பார்வைக்கு மிகவும் லௌகீகமாகத் தோன்றினாலும் ஒவ்வொன்றிற்கும் ஆயிரமாயிரம் உட்பொருளுண்டு. அனைத்தும் மறையாத, மங்காத மகத்தான வேத சக்திகளைக் கொண்டவை!

இவர் “போடா, போடா” என்றே பலரையும் ஒருமையில் விளித்துப் பேசியதாகவே எண்ணியதால் பலரும் தவறாக இதனைக் கண்டு அச்சமுற்று, அநர்த்தம் கொள்வர். உண்மை அதுவன்று! ஞானபோதனமே இவர் உரைத்த “போடாந்திர குருவாய்மொழி!” இவர் “போடா” என்று கூறித் துரத்துவது வந்திருப்பவரைச் சூழ்ந்திருக்கும் தீயகர்ம வினைகளைத்தான்.. இவர் ‘போடா’ என்று சொல்லிப் ‘போய் காய்ந்து, மாய்ந்த தீவினைகள்’ ஏராளம்! ‘போடா’ என உரைத்தது கொச்சைப் பொருளில் அல்ல “ஓங்காரப் பகாராத்ய ஜோதி பீஜாட்சரமே” என இனியேனும் நன்கு உணர்ந்திடுவீர்களாக!

ஞானயோகிச் சித்தரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!

அவிநாசி

சிவபெருமானும், சித்தர்களும் இச்சித்தர்பிரானை “போடாஸ்வாமி சித்தர்” எனப் பெயர் சூட்டக் காரணமென்ன? பொதுவாக, சித்தர்கள் நம்மைப் போல் கர்ம வினைகளின் காரணமாகப் பிறவி கொள்ளார். இறைவனே ஸ்ரீகாரணீஸ்வரராக, தம் தூதுவராக சித்தர்களைப் படைக்கின்றார்.! சாதாரணமாக மக்களே எந்தச் சித்தருக்கும் ‘தடிதூக்கி சுவாமி, சங்கூதிச் சித்தர், கழுவெளிச் சித்தர், குப்பைச் சித்தர்’ எனக் காரணப் பெயர் வைப்பர். ஆனால் நாம் இங்கு காணும் காஞ்சிபுரம் சித்தர்பிரானுக்கோ, சிவபெருமானே, அரும்பெரும் சித்தர்களே “போடாஸ்வாமி சித்தர்” எனக் காரணப் பெயர் வைத்தனர் எனில், என்னே இவர் மகிமை!

சிவனாரின் திருக்கையில் பிரம்ம கபாலம் ஒட்டிய காலை, அந்த ஓட்டை ஒடுக்க, ‘ஒடுக்க நாடியால்’, ஒடுக்க மறையை, ஒடுக்க நாடி முறையில் ஓதி, அந்தப் பன்னெடும் புராண காலமாக உறையும் புக்கொளியூர்ச் சித்தரே “ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!” புக்கொளியூர் எனப்படும் அவினாசித் தல வைபவத்திலும், கச்சி ஏகம்பத் திருமணப் புராண லீலையிலும் உறைந்த செம்மலே ‘ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்’! ஆம் காலத்தை வென்ற சித்தர்பிரான்!

எனவே “போடா” எனும் பீஜாட்சரப் பரலில் “போ” என்பது ஓங்கார ஜோதியுடன், பகாராத்ய ஜோதி சக்தியை இணைப்பதாகும். “போதவர்ஷிதம்” என்ற அரிய இறைசக்திகளைப் பெற்ற சித்தர்களே, ஓங்காரத்தையும், பகர ஜோதிப் பரல்களையும் சங்கமிக்க வல்லவர்கள் ஆவர். போதவர்ஷிதம், ஓங்கார டாகினித்வம், பகாராத்ய யோக ஜோதித் தத்துவம் போன்ற ஞானயோகக் கலைகளில் உன்னதம் பெற்றவரும் காஞ்சிபுரம் ஸ்ரீபோடாஸ்சுவாமி சித்தரே!

ஞானியை ஞானியரே அறிவர்!

ஆதிசங்கரருக்கு முன்னரே தோன்றி, தபோவனம் ஸ்ரீஞானானந்த சுவாமிகள் போல் காலங்கடந்த, தேசங் கடந்த ஞானயோகச் சித்தரே ஸ்ரீபோடாஸ்சுவாமி சித்தர் எனச் சித்தர்களின் ஞானபத்ர கிரந்தங்கள் போற்றுகின்றன.

சமீப காலம் வரை காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலய வளாகத்தினுள் உறைந்த அற்புதச் சித்தர்பிரானை, ‘அரும்பெரும் சித்தரெனப்’ போற்றிய பரமாச்சார்யாள் ஸ்ரீசந்திரசேகரேந்த்ர சரஸ்வதி சுவாமிகளும், “ஏகாம்பரேஸ்வரர் கோயில்ல இருக்கற சித்தரைத் தரிசிச்சேளா?” என்று அடிக்கடிப் பலரையும் பரிவுடன் கேட்டதுண்டு!

ஞானியரை, ஞானிகளே அறிவதில் அதிசயமென்னவோ!

சித்தரின் திருவடிகளில் சிறுவன் குருமங்கள கந்தர்வா!

பல ஆண்டுகளுக்கு முன், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் சுவாமிகள், தம் ஆருயிர் சிஷ்யனாம் (அப்போதையப் பள்ளிச் சிறுவன்) நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனை, காஞ்சிபுரத்திற்கு அழைத்துச் சென்று, ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரிடம் ஒப்படைத்து, ‘அண்ட சராசரமும் இவருடைய ஒடுக்க நாடியில் அடக்கமப்பா!’ என்று கூறி, ஒரு மண்டலம் (48 நாட்கள்) சித்தர்களுக்கே உரித்தான இறைநெறிகளில் அவரிடம் குருகுலவாசம் பயில வைத்தார்.

சித்தரைச் சித்தரே அறிவதில் வியப்பென்னவோ!

அந்த ஒரு மண்டல காலமே மெதுவாக, மெதுவாக ஊர்ந்து, ஊர்ந்து, பல வருட காலமாய் விரிந்து, விருத்தியாகி, எத்தனையோ தெய்வீக அனுபூதிகளைச் சிறுவன் பெற்றுத் துய்த்திட்டான். விண்ணுலகிலும் கிட்டாத திவ்யமான தெய்வீக அனுபூதிகள் அவை! எவ்வளவு எடுத்துரைத்தாலும் இப்பூவுலகம் அவற்றை நம்பாது! நம்பியவர்க்கே நடராஜா!

ஆத்ம போதம் ஆக்கிய அற்புதச் சித்தர்!

“போடா” என்பதற்கு எத்தனையோ ஆன்மீக அர்த்தங்கள் உண்டு. ஓங்காரப் பகாராத்ய சிவகுரு மண்டலத்தில் கடைபிடிக்கப்படும் கும்ப பூஜைகளில் “போதகுடாயம்” என்ற ஒரு பாஸ்கரசுத (சூரிய வகை)க் கும்பம் ஒன்று உண்டு.. (கும்பம் – குடம்) ஸ்ரீஅமிர்த தன்வந்த்ரீ மூர்த்தி கொண்டிருக்கும் கும்ப கலசமிதுவே!

இந்த சிவகுரு மண்டலத்தில் தினமும் ஒரு கோடி சூரியன்கள் உதிக்கும். அவ்வளவு ஞானப் பிரகாசம் உடைய புண்ணிய பூமி! பூமியில் நாமாக உருவாக்கி உள்ள விஞ்ஞான வகை ஒளி வகைகளில் தாங்க இயலாத, காண முடியாத வெப்பமும், விபத்துக்களும் ஏற்படுவதுண்டு. ஆனால் கைலாய சிவகுரு மண்டலங்களில் உள்ள ஒளி வகைகள் பலவும் சாந்தமானவை, குளுமையானவை, தீங்கில்லாதவை, எப்போதும் நன்மை பயப்பவை! இவை யாவும் குரு மூலமாகவே அறிய வல்ல, மனிதப் பகுத்தறிவுக்கு எட்டாத, ஞானப்பூர்வ அறிவுச் செல்வமாகும். சாக்த வழிபாட்டில் கிட்டும் ஞான ஐஸ்வர்யங்கள்! இத்தகைய அக்னிச் செல்வங்கள் நிறைந்த சிவகுரு குரு மண்டலத்தில் உதித்தவரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!
இங்கு உறையும் பல குருமங்கள சித்தர்கள் பல யுகங்களிலும், பல கோடி லோகங்களிலும், பல கோடி ஆண்டுகள் சிரஞ்சீவித்துவத்துடன், நினைத்த வடிவில் வாழ வல்லவர்கள். இவர்கள் எப்போதும் ‘ஒடுக்க நாடியில்’ திளைப்பர். ‘ஒடுக்க நாடி’ என்பது ஜீவசக்தியை ஒளியாக்கிச் சுவாசிப்பதாகும்! சித்தர்களால் மட்டும் தாம் இதனைக் கையாள முடியும்.!

இச்சித்தர்கள் புசிப்பதோ கோடி சூர்யப் பிரகாசத்தில் கிட்டும் போதாதித்யம் என்ற ஒருவகை சூரியக் கிரணங்களையேதாம். இவர்கள் இவ்வாறு மூங்கில் குவளைகளில் அருந்துகின்ற ‘போதாதித்யக் கிரணங்கள்’, இச்சித்தர்களின் திருவயிற்றில் அனுகிரக சக்திகளாக மாறி, இவர்கள் பூமியில் நடக்கையிலும், சுவாசிக்கையிலும், கண் பார்வையிலும், உலகிற்கு நிரவி அளிக்கின்றார்கள். இத்தகைய ஒடுக்க நாடி சித்தர்களுள் ஒருவரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்.

நாடி என்றால் தற்போதைய சுவடி ஜாதக முறையோடு குழப்பிக் கொள்ளாதீர்கள்! இங்கு நாம் நாடி எனக் குறிப்பிடுவது “சுவாச ஜோதி” முறைகளாம்.

ஸ்ரீபோடா சித்தர்
காஞ்சிபுரம்

அனைத்துப் புராணங்களிலும் தோய்பவர்!

“போதகுடாய” குருமண்டலத்தில் உறையும் சித்தர்கள் தாம் பெற்ற யோக சக்திகளில் ஒரு பங்கை, சில மகரிஷிகளுக்கு அளிக்கின்றனர். இத்தகைய மந்த்ரோபதேசம் பெற்ற போதாதித்ய மந்திரக் கர்த்தாக்களே போதாயன மகரிஷிகள் ஆவர். மகாபாரதத்தில், ஸ்ரீகிருஷ்ண பகவானின் லீலையான, போதாயன சூரியக் கிரகணத்தில், பகவானளித்த காலநிலைகளைப் பரிபூரணமாக நம்பித் தர்ப்பண பூஜை இட்டவர்களே போதாயன மகரிஷிகள் ஆயினர்! போதாயன வகையினர் உருவானபோது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்ம லீலையில், பகவானோடு உடனிருந்தவர்களே ஸ்ரீபோடஸ்வாமி சித்தர் போன்ற காலங் கடந்த ஞான யோகிச் சித்தர்கள்!

இவர்கள் ராமாயணம், மகாபாரதம், பாகவத புராண சம்பவங்கள் அனைத்தையும் உடனிருந்து காணும் சிரஞ்சீவித்வம் பெற்றவர்கள். கேட்பதற்கு இது சர்வசாதாரணமாகத் தோன்றினாலும், அடுத்தது என்ன நடக்கப் போகிறது என அறிந்தும், அறியாதவர்களாய், மிச்ர பாவனத்துடன் சாந்தமான மனோநிலையைக் கொள்வது எளிதல்லவே!

ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் போன்றோர் அண்ட சராசரங்களிலும் நிகழ்வதை உடனுக்குடன் அறிய வல்லவர்களே! சூரிய, சந்திரர்களைப் போல் உலகக் கிருத்தியங்களில் இறைவனால் சாட்சிதரர்களாக நிர்மாணம் பெறுபவர்கள். இவ்வகைச் சித்தர்பிரான்களில் ஒருவராகவும் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் அமைந்ததும், நாம் வாழும் பூலோகத்தில் அவர் மானுட உருவில் உதித்ததும், ஜீவாலயம் பூண்டிருப்பதும் நமக்குப் பெரும் பாக்யமே!

அமாவாசையில் ஒளிஆசி தரும் அற்புதச் சித்தர்கள்!

போதாயன சிருஷ்டிக் காலத்திலும் பிரசன்னமானவர் என்பதால், அனைத்து அமாவாசைத் திதிகளிலும், ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரின் ஜீவசமாதியில் மரத் தாம்பாளத்தில், துளசித் தீர்த்தத்தில் தர்ப்பணமும், புளியோதரை, எள்ளோதரை (எள்சாதம்), எலுமிச்சை அன்னங்களையும் படைத்துத் தானம் செய்திட, போதாயன மகரிஷிகளே நேரில் வந்து, ஏற்று ஆசி பொழிகின்றனர். பஞ்சாங்க நிர்ணயப்படி வருடத்தில் ஒரு சில போதாயன அமாவாசைகள்  அமைவதுண்டு. இந்நாட்களில் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரின் ஜீவாலயத்தில் போதாயன மகரிஷிகள் சூக்கும, தூல, காரண வடிவுகளில் குழுமுகின்றனர்.

புவியில் புவனம் காட்டும் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர்!

ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் சமீப காலம் வரை மானுட வடிவில் ஏகாம்பரேஸ்வர ஆலயத்தில் இருந்தவாறாகவே, அண்ட சராசரத்தையும் இயக்கிய அருட் பெருஞ் சித்தராகப் பொலிந்தார். ஆனால் பலரும் இவருடைய மகிமையைப் புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டனர்.

இச்சித்தர் பிரான், பகலிலேயே வானில் அனைத்து நட்சத்திரங்களையும், கோள்களையும் காண வல்லவர். கோள்களின் நிலைகளை, விரைவுகளை, பாதைகளை மாற்றும் அண்டசராசர சக்திகளைப் பெற்றிருந்தார். பூலோகத்தில் அவரை நாடி வந்தவர்களை விட, ஏனைய விண்ணுலக லோகங்களில் இருந்து சூட்சும ரீதியாக அவரை நாடி வந்த, இன்றும் வருகின்ற சித்த மாமுனிகளும், மகரிஷிகளும், தேவாதி தேவ, தேவதைகளுமே ஏராளம், ஏராளம்!

ஈயும், கொசுவுமாய் மாறிய மாமுனிகள்!

நேரில் பார்ப்பதற்கு ஈ, கொசு மொய்த்த நிலையில் காட்சி தந்த சித்தர்பிரான்! நிர்மலச் சித்தராய்த் துலங்கிய அவருடைய கண்களில் நிலவிய தெய்வீக ஒளியானது, கோடானு கோடி லோகங்களையும் தாண்டிச் செல்லவல்லதாம். அவரை மொய்த்தவை வெறும் ஈக்கள், கொசுக்கள் அல்ல. மாமுனிகளும், தேவர்களுமே சித்தர் பிரானின் அருளை வேண்டி ஈ, கொசு வடிவுகளில் அவருக்குப் பாத பூஜை செய்து, வலம் வரவே மொய்த்தனர் என்பதே உண்மை! துறவியரும், மகரிஷிகளும் நேரில் வந்தால் எங்கே சுயநலப் பித்துக்களான நாம் அவர்களை மானுட ஈக்களாக வருகின்ற மகரிஷிகளை, யோகியரை மொய்த்து, அவர்களிடம் ‘அது வேண்டும், இது வேண்டும்’ என லௌகீகமாகப் பலவற்றைக் கேட்டுப் பிய்த்துப் பிடுங்கி விடுவோம் என்பதால்தான் முக்தியும், மோட்சமும் பெற்ற சித்தர்களும், மகரிஷிகளுமோ ‘குருவருள் கூடிய இறையருளும், ஞானமும்’ மட்டுமே பெற வேண்டி, சாதாரண ஈ, கொசு வடிவில், ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரை மொய்த்தனர்!

என்னே கலியுகம் ஐயா இது? உண்மையான ஈ, கொசு கூட எது எனப் பகுத்தறியத் தெரியாத விஞ்ஞானம் ஒரு மாயைசூழ்ப் பொய்ஞானம் தானே!

இப்போது தூல மனித உருவை ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் உகுத்து ஜீவசமாதி பூண்டிருப்பினும், அன்று அவரை பக்தியுடன் நாடி, இன்றும் மனமுருகி வழிபடுபோர்க்கு, அவரவர் விரும்பும் வண்ணம் தரிசனம் தந்து அருள்பவரே ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர், இத்தகைய சித்தர்கள் யாவரும் மானுடத் தூல வடிவை உடுத்திருப்பினும், எந்த லோகத்திலும் எந்நேரமும் இருப்பவர்களாய், என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகவே விளங்குகின்றனர்.

இம்மூன்று நாடிக் கலைகளில் வல்லவர்களே “கலையான்” வகைச் சித்தர்கள்! நாடி, நாளக் கலைகளில் பரிபூரண ஞானம் பெற்ற தம்பிக் கலையான் சித்தர், தம்பிடிக்காசுச் சித்தர், பூதக்கலையான் சித்தர், சங்கூதிச் சித்தர் போன்ற உத்தமச் சித்தர்கள், பாரெங்கும் நாடிநாள யோக மார்கங்களை எண்ணற்ற குருமார்களுக்கு, தக்கோர்க்கு ஊட்டி உணர்த்துபவர்கள்! இவர்கள் உத்தி நாடி, உதக நாடி, ஒடுக்க நாடி மூன்றின் குணப்பாடுகளையும் நாகர வேதமொழிகளாய் அளித்துள்ளனர். இத்துறையில் நாடிநாள ஞானயோகச் சித்தராகப் பிரகாசிப்பவரும் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் ஆவார்.

அர்த்தமுள்ள இந்த (சித்தர்) வாயமுதம்!

இச்சித்தர்கள் வாய்க்கு வந்தபடி சொற்களைப் பயன்படுத்துவார்கள். இவர்களுடைய வாய்மொழிகள், கொச்சையாகவும், பச்சையாகவும், கச்சையாகவும் இருப்பதும் போல் லௌகீகமாகத் தோன்றும். ஆனால் சொல்வதை அனைத்தையும் எல்லாம் சத்தியமறைகளாக்க வல்ல இவர்களுடைய வாய்மொழிகளுக்கு உண்மையான அர்த்தம் தெரிந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இவ்வகைச் சித்தர்கள் குழாமில் வருகின்ற ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் பலவாறு வார்த்தைகளால் வசைமாரிப் பொழிவார். ஆனால் அவர் நாக்கில் பொழியும் வாக்குமொழிகளின்  உள்அர்த்தம் அறிந்து, வாழ்க்கையில் கடைபிடிப்போர் யாவரும் எத்தகைய துன்பங்களிலிருந்தும் விடுதலை பெறுவர்.

இவர் ஆயிரமாயிரம் நாளநாடிகளில் உறைந்து அருளவல்லவர். ஆனால் கலியுலகிற்கென இவர் உத்திநாடி, உதக நாடி, ஒடுக்க நாடி ஆகிய மூன்று நாடிகளையே கடைபிடித்தார். இன்றும் காஞ்சீபுரத்தில் இவருடைய ஜீவசமாதியில் இம்மூன்று நாடிகளின் அருட்சக்தியால் பலரும் நல்லருள் பெற்று வருகின்றனர்.

நம்மால் தக்க குருவருளின்றி இந்த மூன்று நாடிகளின் தன்மைகளை உணர இயலாவிடினும், ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரின் ஜீவ சமாதியில் அந்தந்த நாள் கிழமை, நட்சத்திரங்களுக்கு ஏற்ப உதிக்கும் நாடிநாள இயல்புகள் ஆசிகளாக, நல்வரங்களாகப் பொழிவதை இங்கு கண்கூடாகக் காணலாம்.

காஞ்சீபுரம் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் ஜீவாலய வழிபாட்டு முறை உத்தி நாடி தரிசன பலன்கள்

காலம் கடந்த சித்தர்களின் ஜீவசமாதியில் எந்நாளில் தரிசிப்பினும் விசேஷமே! அமாவாசை, மாத சிவராத்திரி, கேட்டை, ஞாயிறு கூடிய கேட்டை, அஸ்வினி, கார்த்திகை, ரோஹிணி, அஷ்டமி, பௌர்ணமி நாட்களில் இங்கு வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும். தயிர் அன்னக் காப்பு இட்டு, முந்திரி, திராட்சை, பாதாம் பருப்பு பழத் துண்டுகளை நட்சத்திரங்கள் போல் அன்னத்தில் பதித்து அலங்கரித்து வழிபடுவதால் நல்ல பிரார்த்தனைகள் துரிதமாகக் குருவருளால் நிறைவேறும்.

ஞாயிற்றுக் கிழமை சூரிய ஹோரை நேரத்தில் சித்த லிங்கத்திற்கு ஆரஞ்சு நிற ஆடைகள் சார்த்தி, தேன் அபிஷேகம், தூபதீபம், கோதுமை மற்றும் பாயச வகை உணவு நைவேத்யம் படைத்து அன்னதானம் செய்திடில், நெடுங்காலமாக நிறைவேறாமல் தடைபட்டு வரும் நற்காரியங்கள் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தரின் உத்தி நாடி கிரண சக்திகளால் நிறைவேறி, பலவிதமான நல்மாற்றங்களைப் பெறுவர்.

திங்கட்கிழமை அன்று சந்திர ஹோரையில் ஸ்ரீபோடாஸ்வாமி சித்தர் ஜீவ சமாதியில் வழிபட்டு, தூபதீபம் காட்டி, ஏழை எளியோர்க்கு வெண்மை மற்றும் மஞ்சள் நிற உணவு வகைகள், ஆடைகளைத் தானம் செய்திடில் ஜீவசமாதியில் தோன்றும் உத்தி நாடி அருட்கிரணங்களால் மன சஞ்சலம் நீங்கப் பெறுவர். பல குழப்பங்களுக்கு நடுவே, எந்த முடிவையும் எடுக்க இயலாமல் தவிப்போர் இங்கு திங்கட் கிழமையில் சந்திர ஹோரை வழிபாட்டின் மூலம் நல்ல தெளிவான மனதோடு நல்ல முடிவையும் எடுக்க முடியும்.

செவ்வாயன்று செவ்வாய் ஹோரை நேரத்தில், இங்கு குறைந்தது மூன்று மணி நேரமாவது சாம்பிராணி தூபதீபம் காட்டி, பால் வகை உணவு, இனிப்புகளை நைவேத்யம் வைத்து வேண்டி, தானமளித்திடில் உத்தி நாடியருளால், அரசாங்கத் துறை, காவல், ராணுவம், உளவுத்துறை, வருமான வரி, விற்பனை வரித்துறையில் உள்ளோர், பணிபுரிவோர் தங்கள் துறைகளில் உள்ள குறைகளுக்கு நிவர்த்தி பெறுவர்.

புதன் கிழமையன்று புதன் ஹோரையில் வெட்டிவேர்த் தைலக் காப்பிட்டு தூப தீபம், பச்சைக் காய்கறிகளால் ஜீவசமாதியில், மண்டபத்தில் அலங்காரம் செய்து, காய்கறிகள் நிறைந்த கலவை உணவு படையல், அன்னதானம் செய்திட கல்வி அபிவிருத்தி ஏற்படும். மனோநலம் சரியில்லாத குழந்தைகளுக்குத் தக்க நல்வழிகள், பரிகாரங்கள் கிட்டும். தந்தை, தாய், பெரியோர்களின் சொல் பேச்சைக் கேட்காமல் இருக்கும் குழந்தைகள் திருந்துவர். திருமண வாழ்வில் பெண், பிள்ளைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் தீரும்.

வியாழனன்று குரு ஹோரையில் மஞ்சள் வஸ்திரங்கள் சார்த்துதல், தூபதீபம், அவித்த பெரிய கொண்டைக் கடலைகளால் ஆன மாலை சார்த்துதல், பட்டாணி, மொச்சை போன்ற தானிய வகை உணவுகள் படைத்தல், அன்னதானம் செய்திட, தம்பதியரிடையே உள்ள நெடுநாள் பிணக்குகள் தீரும். உத்யோகம் செல்கின்ற ஆண் பெண் இருபாலருக்கும் உத்யோகம், குடும்ப வாழ்க்கையில் உள்ள இன்னல்கள் தீரும்.

வெள்ளிக் கிழமை சுக்ர ஹோரையில் பட்டு வஸ்திரம் சார்த்துதல், தூபதீபம், நீள வகைக் காய்கறிகள் கூடிய உணவு (முருங்கை, சுரை, புடல்) நைவேத்யம், அன்னதானம் செய்திட நெசவுத் தொழிலாளர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் விலகும். கைத்தறி, விசைத்தறிப் பட்டு ஜரிகை நெய்பவர்களின் இன்னல்கள் படிப்படியாக நிவர்த்தியாகும். மற்றும் அனைத்து வகை வியாபாரிகளின் பிரச்னைகளுக்கும் முறையாகத் தீர்வு கிட்டும்.

சனிக்கிழமை சனி ஹோரையில் ஜவ்வாது, புனுகு கலந்த தூப தீபம், கருப்பு, கருநீல ஆடைகள் தானம், எள் , நல்லெண்ணெய், பீட்ரூட், கருந்திராட்சை கூடிய உணவு வகைகள் படைப்பு மற்றும் அன்னதானம் செய்திட, இரும்பு நிலம், பூமி, கட்டிடம், வீடு விற்போர், கட்டுவோர் வாகன உதிரி பாகங்கள், மோட்டார் கம்பெனி, வங்கித் துறையினருக்கு, ஏற்படும் துன்பங்கள் நிவர்த்தியாகும் நாள்!

குறிப்பு : மேற்கண்ட வகையில் (ஞாயிறு -  சூரிய ஹோரை , திங்கள் – திங்கள் ஹோரை, புதன் – புதன் ஹோரை என்றவாறாக, அந்தந்தக் கிழமைக்கான அந்தந்த கிழமை ஹோரை நேரம் காலை மணி 6-7, பகல் மணி 1-2, இரவு மணி 8-9 காலத்தில் அமைகின்றன!) அந்தந்த பகுதியில் அன்றைய நாளின் சூரிய உதய நேரத்தை ஒட்டி கணக்கிட்டுக் கொள்க!

13.7.2003 ஞாயிற்றுக் கிழமை விடியற்காலை 3.22 மணி முதல் இதே நாள் நள்ளிரவு 12.51 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆனி மாதப் பௌர்ணமி திதி அமைகின்றது.   ஆனி மாதப் பௌர்ணமி கிரிவல நாள் :13.7.2003 ஞாயிற்றுக் கிழமை இரவு.

27.7.2003 ஞாயிறு காலை 11.53 மணி முதல் 28.7.2003 திங்கள் காலை 12.25 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி ஆடி மாத சிவராத்திரி திதி அமைகின்றது. மாத சிவராத்திரி  கிரிவல நாள் ; 27.7.2003 ஞாயிறு இரவு.

அமுத தாரைகள்

இன்றைக்கும் குறித்த நாட்களில் திருஅண்ணாமலை ரிஷிமுகப் பர்வதப் பகுதியில் தோன்றுகின்ற கோட்டைக்கால் சித்தர் மனித வடிவெடுத்து உலகத்தின் பல பகுதிகளிக்கும் சென்று வருகின்றார். பல வனங்களில் உள்ள காட்டுவாசிகள் கோட்டைக்கால் சித்தருடைய திருவடிகளை அடையாளம் கண்டு அதனைப் பூஜித்து வருகின்ற நன்னிகழ்ச்சி உலகில் பல இடங்களிலும் நடைபெற்று வருகின்றது. ஆனால் அவர்கள் இத்திருவடிகளுக்குச் சூட்டுகின்ற பெயர்கள் விதவிதமாக இருக்கும், திருவடி வடிவுகளும் மாறுபடும்.

இன்றைக்கும் பல மக்கள் வசிக்கின்ற பகுதிகளின் அருகில் உள்ள சிறு வனங்களில் கூட வன தேவதைகளின் நடமாட்டங்கள் நிறைய உள்ளன. வனதேவதைகளுக்கான பூஜைகள் முறையாக நிகழ்ந்தால் தான் நாட்டில் நல்ல மழை வளம் ஏற்படும். இதற்காகவே ஸ்ரீவனதுர்க்கா தேவியாக, ஸ்ரீதுர்க்கை அம்பிகையே ஓர் அவதாரமெடுத்து அருள்பாலித்து வருகின்றாள். நாட்டில் மழைப் பொழிவோ, நீர் வளமோ இல்லை என்றால் ஸ்ரீவனதுர்க்கா தேவிக்கு சந்திர ஹோரை நேரத்தில் அபிஷேகம் செய்து வந்தால் நல்ல நீர்வளம் ஏற்படும். கும்பகோணம் கஞ்சனூர் அருகே கதிராமங்கலத்தில் ஸ்ரீவனதுர்க்கா தேவி அருள்பாலிக்கின்றாள். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! நவநாத சித்தர்களில் ஒருவராகிய கோட்டைக்கால் சித்தர் அடிக்கடி மானுட வடிவில் வந்து வழிபடுகின்ற அம்பிகை.. மேலும் நவதுர்க்கை வழிபாட்டைப் பிரசித்தி பெறச் செய்தவருமே கோட்டைக்கால் சித்தர் ஆவார்.

ஸ்ரீவனதுர்கை கிள்ளுக்கோட்டை
திருச்சி அருகே

நம்முடைய தினசரி அலுவல்கள், கடமைகள், பிரச்னைகளுக்கு ஊடே 24 மணி நேரமும் இறைச் சிந்தனையோடு வாழ முடியுமா? நிச்சயமாக முடியும் தக்க சற்குருவைச் சரணடைந்திடில்! வாழ்வில் குரு என்ற ஒருவர் அமையும்போது நம் இன்ப துன்பங்கள் நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்ப அமைந்திட, அறிந்தும் அறியாதவராய் இன்ப துன்பங்களின் ஊடே நம்மை நல்இறைப் பாதையில் இட்டுச் செல்பவர் சற்குரு ஆவார். ஆம். சற்குருவின் அருட்கடாட்சத்தின் கீழ் வருபவர்கள் எப்போதும் இறைச் சிந்தனையுடன் தான் வாழ்கின்றார்கள். சற்குரு கிட்டும் வரையில் .. “சற்குருவை அருளிடு இறைவா!” என்ற ஒரே ஒரு பிரார்த்தனையை இறைவனிடம் எழுப்பியவாறே 24 மணி நேரமும் வாழ்ந்திட வேண்டும். ஆம் உறக்கத்திலும் “சற்குருவைத் தந்திடு சதாசிவா” என்பதே வேண்டுகோளாக இருக்க வேண்டும்.

கும்பானந்தர், வாலானந்தர் என்ற சூரிய நாராயணப் பெரியார், மாரிமுத்து வடுகர் போன்ற மாமுனிகள் அருந்தவம் பூண்டு குருமூர்த்தமாகிய ஜீவசமாதிகள் பூண்ட தலமே தவசிமடை. பூமியடியில் எண்ணற்ற துறவியரின் ஜீவாலயங்கள் நிறைந்த பூமி! இதனால்தான் தவசிமடை என இத்தலம் காரணப் பெயரைப் பூண்டது. கலியுகத்திலும் பல்லாண்டுகளுக்கு முன் வரை இங்கு தவக்குடில்கள் நிறுவிய புனிதமான பூண்டது. கலியுகத்திலும் பல்லாண்டுகளுக்கு முன் வரை இங்கு தவக்குடில்கள் நிறுவிய புனிதமான துறவியர்கள் சிவநெறியைப் பரப்பி அளப்பரிய தொண்டு புரிந்துள்ளனர். மாமுனிகளை மதிக்கும் பண்பு மறைந்து வருவதால் தற்போது தவசக்திகள் இங்கு சூக்குமமாக நிறைந்துள்ளன. கலியுகத்தில் யாவரும் அறியா சூக்கும வடிவுகளிலேயே தவயோகியரும் இங்கு தோன்றி வழிபடுகின்றனர்.

தவசிமடை ஆலயத்தில், பண்டைய யுகங்களில், தினசரி காலையில் மூலவர் மீதும், மாலையில் ஸ்ரீகாலபைரவர் மீதும் தம் பாஸ்கரக் கிரணங்களைப் பெய்து சூரிய பகவான் வழிபட்டு, சர்வ லோகங்களுக்கும் ஒளி தரவல்ல தவத் திண்மையைப் பெற்றிட்டார். அதாவது காலையிலும், மாலையிலும் சூரிய ஒளி லிங்கத்தின் மேலும், பைரவர் மேலும் படுவதே சூரியபூஜையாகும். அதாவது சூரியனே பூஜிக்கின்ற தலம்! ஆண்டில் குறித்த நாட்களில் சூரிய ஒளி மூலவர் மேல் படுகின்ற தலங்கள் பல உண்டு. (வைதீஸ்வர்ன் கோயில், அய்யர் மலை, ஈங்கோய் மலை, திருச்சி மலைக்கோட்டை, ஏத்தாப்பூர்). இவ்வாறு சூரிய பூஜை நிகழும் தவசிமடம், கண் பார்வையை விருத்தி செய்யக் கூடிய நேத்ர மூலிகா சக்திகள் நிறைந்த தலம். ஞாயிறு தோறும் அடிப்பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணத்துடன் வழிபட, கண் ரோகங்கள் நிவர்த்தி ஆகும்.

ஸ்ரீமகாலிங்கேஸ்வரர்
தவசிமடை

ஸ்ரீ காலபைரவர்
தவசிமடை

அக்காலத்தில் ஸ்ரீராமர் சந்தியாவந்தன பூஜைகள் ஆற்றிய பாஸ்கரச் சரயு தீர்த்தம் இங்கு இருந்தது. தற்போது மறைந்துள்ளது. அயோத்தியாவுடன் சூக்கும ரீதியான பூமியடித் தொடர்பு உள்ள அபூர்வமான தலங்களில் இதுவும் ஒன்று! எனவே நதிகளுக்குப் புனிதம் தருகின்ற மக நட்சத்திரம் தோறும் ஸ்ரீசரயு நதி தேவதை வழிபடும் அற்புதத் தலமே தவசிமடை ஆகும். கும்பகோணம் மகாமகத் தீர்த்தம் போல் பண்டைய யுகங்களில் தவசிமடை பாஸ்கரச் சரயு தீர்த்தம் பிரசித்தி பெற்றிருந்தது!

சென்னை அருகே திருவிடந்தைத் திருத்தலத்தில், ஸ்ரீநித்ய கல்யாணப் பெருமாளாக, திருமால் தினமும் கல்யாண சேவை சாதிக்கின்றார். திருமண தோஷங்களை நிவர்த்தி செய்யவல்ல அதியற்புதத் தலம். இங்கு சனிக்கிழமை, புதன் கிழமை, திருவோணம், கேட்டை நட்சத்திர நாட்களில் கோயில் முழுதும் நிரவும் வகையில் சாம்பிராணி தூபத்தைக் குறைந்தது மூன்று மணி நேரமாவது இட்டு வழிபட்டு வந்தால் திருமண வாழ்க்கையில் உள்ள எத்தகைய கொந்தளிப்புகளும் அடங்கி நல்வாழ்வு கிட்டும். சந்தன நறுமணத் துகளோடு ஜவ்வாது, புனுகு கலந்து சாம்பிராணிக்கான அக்னியில் இட்டு மிகவும் அடர்த்தியாகச் சாம்பிராணி தூபத்தை எழுப்புதல் மிகவும் விசேஷமானதாம்.

எலும்பு சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர், சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீபூம்பாவை, ஸ்ரீகாரணீஸ்வரர் என்ற நாமத்தை உடைய சிவலிங்க மூர்த்திகள், கும்பகோணம் அருகே முழையூரில் உள்ள ஸ்ரீபரசுநாத லிங்கம் போன்று உயர்ந்தும், பருமன் இல்லாது நெடிசலான வடிவங்களில் இருக்கும் லிங்க மூர்த்திகளுக்கும் செவ்வாய் தோறும் பசுநெய், வேப்பெண்ணெய், விளக்கெணெய் கலந்த காப்பிட்டு, இவ்விரண்டு தைலங்களும் கலந்த தீப ஜோதியை, குறைந்தது ஆறு மணி நேரமாவது இருக்கும் வண்ணம் நிறைய திரி,, தைலமிட்டு ஜோதி ஏற்றித் தீபமிட்டு வழிபடுவதுடன், புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய் போன்ற நீளவகைக் காய்கறிகள் கலந்த உணவினைத் தானமாக அளித்து வர, தக்க தீர்வுகள் கிட்டும்..!

முழையூர் சிவாலயம்

தினமும் காலையில் எழுந்தவுடன் கைகளில் உள்ள கை ரேகைகளை தரிசித்து (உள்ளங்கையே ஒரு நவகிரக சன்னதி போன்ற அமைப்பை உடையது) தினசரிக் காலண்டரோ, பஞ்சாங்கமோ அதில் அந்நாளுக்கு உரிய, தேதி, கிழமை, நட்சத்திரம், யோகம், கரணம், கண்டம் அனைத்தையும் நன்றாக வாயாரப் படிக்க வேண்டும். இதுவே தினசரிப் பஞ்சாங்கப் படனம் ஆகும்.

ஆலயத்தில் ஸ்ரீகாலபைரவரைத் தரிசிக்கும் போது, காலையில் படித்த பஞ்சாங்கப் படனத்தை நினைவில் கொணர்ந்து “பைரவா! தாங்கள் இயக்கும் காலச் சக்கரப் பாதையில் அடியேன் இறையருளுடன் இயங்கிச் சென்றிட வேண்டுகின்றேன்!” என்று பிரார்த்தித்தல் வேண்டும்.

பலரும் ஆலயக் கொடிக் கம்பத்தின் மகத்துவத்தை உணர்வதில்லை! இவ்வகையில் ஆலயத்தில் பொதிந்துள்ள கோடானு கோடி இறைரகசியங்களைத் தக்க சற்குருவே உணர்த்த வல்லார். நாமாக, வெறும் நூல் படிப்பாக, எதையும் அறிய இயலாது! ஏனெனில் நூல் உணர்வு அறியா நுண்ணியோனாகத்தானே இறைவன் மிளிர்கின்றான்!

காலையிலும், மாலையிலும், உத்தம சிவபக்தராம் ஸ்ரீஉமாபதி சிவாச்சார்யாரின் “ஒளிக்கும் இருளுக்கும்” எனத் துவங்கும் “கொடிக் கவித் துதியை” ஓதி, ஆலயக் கொடிக் கம்பத்தை, அடியிலிருந்து நுனி வரை ஒவ்வொரு பகுதியாக, கண்ணால் உணர்ந்து வழிபட்டு வர, நல்ல தியான நிலை சித்திக்கும்.

மன அமைதியின்றி வாடுவோர், பானகம் தானம் செய்து, கொடிக் கவித் துதியுடன் கொடிக் கம்பத்தை வணங்கி, கொடிக் கம்பத்தின் உச்சியில் இருக்கும் நந்தியெம்பிரானை குறைந்தது 11 நிமிடங்களேனும் உற்று கவனித்து, தியானித்து வணங்கி வர, மன அமைதிக்கான நல்வழி முறைகள் அருளப் பெறுவர்.

தோல் சம்பந்தமான வியாதிகளால் வாடுவோர் ஸ்ரீபச்சையம்மன், ஸ்ரீதிருமேனீஸ்வரர், ஸ்ரீஅக்னீஸ்வரர், ஸ்ரீபிட்சாசனர், ஒழுகமங்கலம் ஸ்ரீஅகோர வீரபத்ர பைரவ மூர்த்திகளுக்கு செவ்வாய் ஹோரை நேரத்தில் சந்தனக் குழம்பால் அபிஷேகம் செய்து, அபிஷேகத் தீர்த்தத்தை கோமுகத்தில் (மூலத்தான அபிஷேக நீர்த்தாரை) பிரசாதமாகப் பெற்று அருந்தி வர வேண்டும்.

ஸ்ரீபைரவர் ஒழுகமங்கலம்

மேலும் பசுக்களைத் தம் கரங்களாலேயே நீராட்டி மஞ்சள், குங்குமம் இட்டு வலம் வந்து வழிபட, தோல் நோய்களுக்குக் தக்க நிவாரணம் கிட்டும். பொதுவாக, பூர்வ ஜென்மங்களில் மாமியார், நாத்தனார், பண்ணையாராக, பெரும் பதியாளராக இருந்து எப்போதும் பிறரை மனம் நோகும்படி வசை பாடி, ஓட ஓட வருத்தித் துன்புறுத்திய வினைகளின் விளைவுகளே, நகர முடியாத பல தோல் நோய்களாக வருவதுண்டு. எனவே நம்முடைய தீவினைகளே, நமக்கு நோய்களாகின்றன என்று எண்ணித் திருந்தி, தக்க பரிகார முறைகளை, வைத்தியத்துடன் தொடர்வதே முழுமையான நோய் நிவாரணத்திற்கு வழி வகுக்கும்.

பொதுவாக சங்கு புஷ்பங்களுடைய மறு ஜென்மமாக விளங்குவதே சங்குப் பூச்சிகள் ஆகும். இங்கு ஜென்மம் என்று சொன்னால் பிறவித் தளை, கர்மாக்களை உடையதாக எண்ணாதீர்கள். ஏனென்றால் பிறவி என்றாலே கர்மங்கள் நிறைந்தது என்ற பொருளில் தான் சொல் வழக்கு நிலவுகின்றது. இது அப்படியல்ல!

முக்தி, மோட்ச நிலைகளை அடைந்த சித்தர்களும், மகரிஷிகளும் பல மானுட வடிவங்களில் பல ஜீவன்களை கடைத்தேற்றுவதற்காக பூலோகத்திற்கு வருகின்றார்கள். பூலோகத்தில் மானிட பிறப்பை அவர்கள் இவ்வாறு இறையாணையாக ஏற்கையில், அவர்களுடைய பூலோக வாழ்வில் உதவி புரிய, சேவை ஆற்றிட, இறைவனே பல நல் அடியார்களை பூலோக வாழ்வில் உதவி புரிய, சேவை ஆற்றிட, இறைவனே பல நல் அடியார்களை குடும்ப உறுப்பினர்களாகவும், சத்சங்க உத்தம இறை அடியார்களாகவும் அனுப்பி வைக்கின்றார்.

ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் துவாரபாலக தவபுருஷர்களாக அருளும் அற்புதத் தலமே தவசிமடம். பங்காளிச் சண்டைகள், சொத்துத் தகராறுகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்கள் நன்னிலை பெற இங்கு பிரதோஷ பூஜைகளை நிகழ்த்தி, துவாரபாலக ஸ்ரீவிநாயகர், ஸ்ரீமுருகன் மூர்த்திகளை வழிபட்டு வர, குடும்பத்தில் எத்தகைய பகைமையும் தீர்ந்து மனசாந்தி கிட்டும். சொத்துகளும் நியாயமான முறையில் மீளும்.

ஆடித் தபசில் அவதரித்த அம்பிகை!

ஸ்ரீகோமதி அம்மன் பூவுலகில் வழிபாட்டு மூர்த்தியாக உற்பவித்த ஆடித் தபசு என்ற ஓர் அற்புத விசேஷ தினம் உண்டு. முதலில் கோமதி என்ற அரும்பெரும் நாமத்தைப் பெறவே ஆதிஈஸ்வரி பல கோடி யுகங்கள் அருந்தவம் புரிந்தனள். அம்பாளின் நாமத்திற்கே இவ்வளவு மகிமை எனில் சர்வேஸ்வரியின் பரிபூரண தெய்வாத்மீகத்தை என்னென்பது? வெள்ளிக்கிழமை, துவாதசி, அனுஷ நட்சத்திர நாட்களில் கோசாலைகளுக்கு குடும்பத்தோடு சென்று பசுக்களுக்கு நீராட்டுதல், மாட்டுக் கொட்டிலை சுத்திகரித்தல் போன்ற பசுதர்ம சேவைகளை ஆற்றி வந்தால் குடும்பத்தில் சாந்தம் நிலவும்.

தற்காலத்தில் காய்கறி, பழக் கடைகளில் பசுவைக் கம்பால் அடித்து விரட்டிப் பலரும் பலத்த சாபங்களைப் பெறுகின்றார்கள். இது அதிபயங்கரமான கோஹத்தி சாபத்தில் கொண்டு போய் விட்டு விட்டால் இதில் இருந்து மீள்தல் மிக மிகக் கடினமானதாகும். எனவே எவரேனும் பசுவை அடிக்கின்ற, வதைக்கின்ற காட்சியைக் கண்டால் பசுதர்மத்தின் மேன்மையை எடுத்துக் கூறி இத்தகைய பாபச் செயல்களில் ஈடுபடக் கூடாது என்று வலியுறுத்தி பசுக்களைப் பேணிக் காத்திடும் கடமையை ஒவ்வொருவரும் தம் வாழ்விற்கான பசுதர்மமாக ஆற்றிட வேண்டும். இதனை நோட்டீஸாகப் பிரசுரித்து விநியோகிப்பதும் நல் அறச் செயலே!

கலியுகத்தில் பசுதர்மம் மங்கி வருவதால்தான் எண்ணற்ற இன்னல்களும் துன்பங்களும் கலியுகத்தைச் சூழ்கின்றன. குறிப்பாக பெண் இனத்திற்குப் பல அச்சங்களும், துன்பங்களும் ஏற்படக் காரணமே பசுதர்மத்தை முறையாகப் பேணாததே ஆகும்.

எங்கெல்லாம் பண்டைய யுகங்களில் பசுதர்ம சக்திகள் நிறைந்து பிரகாசித்தனவோ அங்குதாம் இறையருளால் ஸ்ரீகோமதி அம்பிகைக்கு ஆலயம் எழும், பழமையான ஆலயமோ அல்லது நவீனக் கோயிலோ எதுவாயினும் சரி, ஸ்ரீகோமதி அம்பாள் எழுந்தருள்கின்ற தலமே, ஒரு யுகத்தில் லட்சக்கணக்கான பசுக்கள் நிறைந்து கோசாலைகள் செழித்த இடம் என்பதையும் உணர்ந்திடுக!

மனித உடலில் இருப்பதான வாதநாடி, பித்த நாடி, சிலேத்தும நாடி போன்ற பொதுவான நாடிகளைத் தவிர உத்தி நாடி, உதக நாடி, ஒடுக்க நாடி ஆகிய முக்கியமான மூன்று நாடிகளும் அண்ட சராசரத்தில் யோக வாடகங்களில் உண்டு. இந்த மூன்றின் வகைப்பாடுகள், தன்மைகள், இயக்கங்களைப் பற்றிச் சித்தர்களே நன்கு அறிவர். காரணம் இவற்றின் சித்சக்திகளை பிற ஜீவன்களின் நலனுக்காக, லோக க்ஷேமத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியும். இதற்காக இறைவனால் விசேஷமாகச் சிருஷ்டிக்கப்படுபவர்கள் தாமே சித்தர்கள்! நமக்கு சுவாசம் காற்றுப் பூர்வமாக இருக்கிறது அல்லவா! ஆனால் உத்தி நாடி, உதக நாடி, ஒடுக்க நாடிகளில் ஒளி அம்சமாக சுவாசம் நிகழும்! மின்னல் என்பதும் பல லோகங்களில் நிகழும் ஒருவகை ஒளிநாடி அம்சமே!

தொடரும் ஆனந்தம்...

தியாகராஜன் என்று இறைவனை அழைக்கிறோம். உலகில் உயர்ந்தது, சிறந்தது தியாகமே. அதனால்தான் உலகில் சிறந்ததான இறைவனுக்கு உலகில் சிறந்த தியாகராஜன் என்ற பட்டத்தை அளித்து கௌரவிக்கிறோம். இறைவனை அறிந்து கொள்தல் என்பது எல்லோராலும் முடியாது என்றாலும் மகான்களே இப்புவியில் நம்மைப்போல் மனித வடிவில் தோன்றி தியாகச் செயல்களைப் புரிந்து இறைவனின் அருமை பெருமைகளை நாமும் உணர்ந்து பேருவகை கொள்ள வழிகாட்டுகின்றனர். மா என்றால் பெரிய, உயர்ந்த என்று பொருள். சமீப காலம் வரை கன்னியாகுமரியில் வாழ்ந்து பக்தி வெள்ளப் பெருக்கை உருவாக்கியவரே மாயம்மா என்ற சித்த பெரு மாமுனி ஆவார். அருவருக்கத்தக்க தோற்றத்தைக் கொண்ட மாயம்மாதான் எவ்வளவு அருவருக்கத்தக்க மனதை உடைய மக்களையும் திருத்தி வாழச் செய்த பெருந்தகை ஆவார். பொதுவாக, இறை மூர்த்திகளைக் குறிக்கும்போது “ஸ்ரீ” என்ற பட்டத்தைக் கொடுத்து அழைத்து கௌரவிப்பது நம் பாணி. ஆனால், இந்த ஸ்ரீ என்ற பட்டமே இந்த உத்தம ஞானிக்கு மிகவும் குறைந்த மதிப்பைக் கொடுக்கக் கூடியது என்பதால் மா அம்மா, மிக மிக உயர்ந்த தாய் என்ற பட்டத்தை அளித்து கௌரவிக்கிறார்கள் சித்தர்கள். அந்த யோகியும், “ஜல்தி ஆவோ பேட்டா. ஜல்தி ஆவோ (விரையில் வந்து சேர்வாய், அன்பு மகனே !)”, என்றுதானே நம் சற்குருவை அழைத்தார். இவ்வாறு ஒரு அன்பு விண்ணப்பத்தை அளித்து விட்டு மாயம்மா கடலில் சென்று மறைந்தார் என்று தான் மாயம்மாவை சந்தித்த அந்த அற்புத நிகழ்ச்சியை நினைவு கூர்வார் நம் சற்குரு. மேலோட்டமாகப் பார்ப்பதற்கு இவ்வுலக துன்பங்களின் இடையே பக்தர்களுக்காக அல்லல்படும் நம் சற்குருவை இறை சாம்ராஜ்யத்தில் பிரவேசிப்பதற்காக மாயம்மா விடுத்த ஒரு அன்பு அழைப்பு போல்தான் தோன்றும். சற்றே கூர்ந்து கவனித்தாலும் மாயம்மாவின் தாயுள்ளம் இதில் கருணையால் நிரம்பி வழிவதைக் காணலாம். ஜல்தி ஆவோ என்பது தாய் தன்னுடைய ஒரே ஒரு குழந்தையான நம் சற்குருவிற்கு விடுத்த வரவேற்பு கிடையாது. மாயம்மாவின் குழந்தைகளான நம் அனைவருக்குமே அன்னை விடுத்த வரவேற்புக் கட்டளை அது என்பது புரியவரும். இதுவே மா அம்மாவின் மாபெருங் கருணை ! குறுகிய நோக்கம் கொண்டு வாழும் மக்களின் உள்ளம் விரிந்து பரந்து இறை சாம்ராஜ்யத்தை அடைய பெருங்கருணை கொண்டு வாழும் உள்ளம் உடையவரே மா அம்மா.

தியாகராணி மாயம்மா

ஒருமுறை ஒரு அடியார் மாயம்மாவிடம் தன்னுடைய பிரச்னைகள் பற்றி விவரமாக எடுத்துரைக்கவே அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட மாயம்மா தன் முதுகில் ஏதோ அரிப்பதுபோல் தோன்றுவதாகவும் சட்டையைக் கழற்றி என்னவென்று பார்க்குமாறும் அந்த அடியாரிடம் கூறினார். மாயம்மாவின் சட்டையைக் கழற்றி அவர் முதுகைப் பார்த்த அடியாருக்கு ஒன்றும் தோன்றவில்லை. காரணம் அவர் முதுகில் ஒரு பெரிய கறுப்புப் படைபோல் ஏதோ இருப்பதாகத் தோன்றவே அதை சாதாரணமாகக் கருதி மாயம்மா வயதானவராக இருந்ததால் ஏதோ அது படை (ஒருவகையான சிரங்கு) என்று நினைத்து விட்டார். சற்று நேரம் கழித்து அந்தப் படையை நன்றாக உற்றுப் பார்த்த பின்னர்தான் அது படை இல்லை அங்கு ஒரு பெரிய எறும்புப் “படையே” மொய்த்துக் கொண்டிருக்கிறது என்ற உண்மை தெரிய வந்தது. உள்ளம் பதற திடுக்கிட்டு பேச்சு வராமல் திக்கித் திக்கி, “அம்மா, இது என்ன, இத்தனை ஆயிரம் எறும்புகள் உங்களை கடித்துக் கொண்டு இருக்கின்றன. நான் எப்படி அவைகளை பிய்த்துப் போடுவது ...?” என்று கேட்கவே அன்னையும் அது இருக்கட்டும் முன் பக்கத்தைப் பார் என்று கூறவே அன்னையின் முன்பக்க சட்டையை கழற்றிப் பார்த்தவருக்குத் தலையே சுற்றியது. ஆம், அங்கும் முதுகில் மொய்த்த எறும்புகளைப் போல் அடை அடையாய், கூட்டம் கூட்டமாய் எறும்புகள் கடித்துக் கொண்டு கும்மாளமிட்டுக் கொண்டிருந்தன ! அடியாரின் கண்கள் குளமாயின. இப்போது அவருக்கு பிரச்னை என்ற ஒன்று இருந்ததாகவே தெரியவில்லை. மாயம்மா தியாக ராஜனா, தியாக ராணியா, மா அம்மாவா ?

பாஸ்கர பூஜையில் பவனி வரும் ஸ்ரீபைரவ மூர்த்தி தவசிமடை

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam