பாத நமஸ்காரம் பரமனாக்குமே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆத்ம விசாரம்

சாதகர்: உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் சற்குருவை அடைந்தால் தான் பிறப்பிறப்பில்லா நிலையையும் இறைப் பரம்பொருளையும் அடைய முடியும், அப்படித்தானே, குருதேவா ?

சற்குரு: நிச்சயமாக!  உண்மையில் உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனும் எந்த நாட்டில் வாழ்ந்து எந்த சமய நம்பிக்கை  கொண்டிருந்தாலும் தன்னையும் அறியாமல் சற்குருவைத் தேடியே தன் வாழ்க்கையை நடத்திக் கொண்டு இருக்கின்றான். உலகின் ஆன்மீக மையமாகப் பாரத நாடு பொலிவதால் உண்மையான ஆன்மீகவாதி எந்த நாட்டில், எந்த சமயத்தவராக இருந்தாலும் சரி தன்னையும் அறியாமல் ஏதேனும் ஒரு வழிவகையில் பாரதப் புனித மண்ணை அடைய வருகின்றான் என்பதே நிதர்சனமான உண்மை.கண்டம் விட்டுக் கண்டம் பறந்து நம் பாரதத்தின் வனங்களுக்கு, ஏரிகளுக்கு வரும் பறவைகள் கூட ஆன்மீக வேட்கையால் தாம் இங்கு வருகின்றன என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

சாதகர்: சற்குரு கடுமையான சோதனைகளைத் தருவதுண்டா?

சற்குரு : சற்குரு சோதனைகளை அளிக்கின்றார் என்பதை விட அவரவருடைய ஆன்மீக வேட்கையைப் பொறுத்துச் சோதனைகள் அமைவதுண்டு. உண்மையில் இறைவனே சற்குரு மூலமாக இத்தகைய சோதனைகளை, பக்தர்களின் பரிபக்குவத்திற்காகத் தோற்றுவிக்கின்றான். இவ்வான்மீக சோதனைகள் லௌகீகமான முறையில் கூடப் பலருக்கும் அமைவதுண்டு! இவை யாவும் துன்பங்களைத் தருவதற்காக அமைவதல்ல! வாழ்வில், எதிர்வரும் பிறவிகளில், எத்தகைய துன்பங்களையும், பகைமையையும் எதிர்த்துச் சமாளிக்கவல்ல ஆன்ம பலத்தைத் தந்திடவே இவை இறைவனால் அளிக்கப்படுகின்றன. ஒரு சிறு ஆன்ம சோதனையில் கிட்டும் பரிபக்குவமானது ஆயிரம் பிரச்னைகளைச் சமாளிக்க வல்ல மனோதிடத்தையும், ஆன்ம சக்தியையும் தந்திட  வல்லதெனில் தெய்வீகத்தில், நடைமுறை வாழ்வில் இத்தகைய ஆன்ம சோதனைகள் அவசியமானவை தாமே! பீமனின் மனைவி இடும்பியானவள் ஒரு சிறு ஆன்ம சோதனை மூலம் தான் பெற்ற ஒரு சிறு நாவல் பழத்தைப் பூஜித்துப் பிரசாதமாக பீமனுக்குத் தந்து பல்லாயிரம் யானைகளைச் சமாளிக்க வல்ல ஆன்ம பலத்தைத் தந்திட்டாள் எனில் ஆன்ம சோதனைகள் ஆன்ம பலம் தந்திடவே என்று நன்றாக உணர்ந்திட வேண்டுமல்லவா!

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

சாதகர்: நம் புனித பாரத மண்ணை அடைவோர்க்குத் தாம் உத்தம ஆன்மீக நிலைகள் கிட்டலாகுமா?

சற்குரு: பாரத மண்ணில் கால் வைத்தவர்களுக்குத் தாம் முக்தி நிலை கிட்டும் என்பது நிச்சயமே! அப்படியானால் இங்கு பிறப்பதெனில் எத்தகைய உத்தம பாக்யமது! ஆன்ம ரீதியாக உலக ஜீவன்கள் யாவர்க்கும் யாவைக்கும் தெய்வத் தாய் பூமியாக என்றும் எப்போதும் துலங்குவது பாரதப் புனித பூமியே! காரண, சனாதன தர்ம நாடாக ஆதி உலகில் ஒரே ஒரு நாடாகப் பொலிந்தது நம் புனிதமான பாரத நாடாகும். எனவே இன்று அனைத்து நாடுகளிலும் வாழ்கின்ற சகோதர மக்கள் யாவரும் சனாதன தர்ம நாட்டின் ஆதி மூலப் பிரஜைகளாகப் பொலிந்தவர்களே!

தாயைத் தேடி வரும் கன்று போல இறைமையை பரிபூரணமாகத் துய்க்க விழைவோர் எங்கிருந்தாலும் ஏதேனும் ஒரு காரணமாக தன்னையும் அறியாது பாரதத் திருமண்ணை நாடுகின்றனர். நம் அருணாசல மலையில் இருந்துதான் இப்பிரபஞ்சத்திற்கான ஜீவ ஜோதி நிரவுவதால் திருஅண்ணாமலையே பிரபஞ்சத்தின் மாபெரும் லிங்கமாகத் துலங்கி பிரபஞ்ச ஜீவன்கள் யாவருக்கும் அம்மையப்பனாக விளங்குவதால் உலகின் அனைத்து நாடுகளுக்கும் தெய்வீகத் தாயகமாகப் பொலிவது நம் புனிதமான பாரத நாடேயாம்!

சாதகர்: கலியுகத்தில் சற்குருமார்களுக்குத் துன்பங்களைத் தந்து குருவிற்கே துரோகம் இழைக்கும் நிலை வந்து விட்டதே, என்ன செய்வது?

சற்குரு: இறைத் தூதுவர்களான சற்குருமார்கள் விருப்பு, வெறுப்பு, இன்ப, துன்பங்களுக்கு அப்பாற்பட்டவர்கள். நமக்குக் கருணை புரிய அவர்கள் மனித உருவை ஏற்கும் போது மகா காருண்யத்தால் பல அடியார்களின் கர்ம வினைகளைத் தம்முள் ஏற்று அனுபவிப்பதுண்டு.

ஆனால் அவநம்பிக்கையால் தம்முடைய சுயநல எதிர்பார்ப்புகள் ஏமாற்றமாகும் போது சிலர் சற்குருமார்களுக்குப் பல துன்பங்களை அளித்திட யத்தனிப்பர். இது அவர்கள் மேலேயே தண்டனையாகத் திரும்பி விட்டால் எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் குரு துரோகி என்றே பிறப்பு விதியில் எழுதப்பட்டு ஜன்மம், ஜன்மமாகக் கொடிய தண்டனைகள் தொடரும்.

சாதகர்: குருவே!  கலியுகத்தில் நடைமுறை வாழ்வில் நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றனவே! சற்குருவை அடைந்த பின் கலியுகத் துன்பங்களின் நடுவே ஒரு சாதகர் குருவின் கீழான சத்சங்க வாழ்வில் எப்படி இருக்க வேண்டும்?

சற்குரு: கலியுகம், கலியுகம் என்று சொல்லி, ஏதோ கலியால் தான் துன்பங்கள் மிகுவதாக எண்ணுவது தவறு! மனிதர்கள் பக்தியோடு வாழ்ந்தால் ராமர் அவதரித்த உத்தம ராமராஜ்யமே இப்போதும் தொடர்ந்திருக்குமே! அளவுக்கு மீறிய தன் கர்ம வினைகளினால் தாம் மனித சமுதாயம் சத்தியத்தை விட்டுப் பிறழ்ந்து துன்பங்கள் மிகுந்த கலியுகத்தைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டது!

இறையருளால் கலியுகத்திலும் சற்குருவும், அவருடைய சத்சங்கப் பரிபாலனமும் அமைவது மகா பாக்கியமே!

அடுத்ததாக, கலியுகத்தில் சற்குருவை அடைதல் மட்டும் போதாது. சரணடைந்த சற்குருவிடம் நிலைத்து நிற்கும் உத்தம நிலைகளையும் அடைதல் வேண்டும். சற்குருவிடம் பரிபூரண நம்பிக்கை பரிணமிக்கும் வரை ஒருவர் அடியாராக, சாதகராகவே விளங்குகின்றார். உத்தம சீடராவது ஆழ்ந்த குரு நம்பிக்கை கனியும் போதுதான்! சீடர் என்பது பதவியன்று, சாதகர் தாமாக அடைவதுமன்று! சீடர் என்பதே ஓர் உத்தம நிலையே! அதுவும் சற்குருவால் அருளப் பெறுவதே!

ஆழ்ந்த நம்பிக்கை வருவதும் ஓர் உத்தம நிலையே!

ஆம், சற்குருவிடம் முழுமையாகச் சரணடைதலும் ஓர் உத்தமமான தெய்வீக நிலையையே குறிக்கின்றது. சற்குருவிடம் குருகுலவாசம் பரிணமிக்கும் போதும் கர்ம வினைகளின் விளைவுகள் துன்பங்களாக, நோய்களாக சாதகரின் வாழ்க்கையில் தலை தூக்கவே செய்யும். ஏனெனில், சற்குருவிடம் வந்தடைந்தால், எத்துன்பமும் இராது எனில் கலியுகத்தில் ஒவ்வொரு சற்குருவையும் கோடிக் கணக்கானோர் சூழ்ந்து கொள்வார்களே!

ஸ்ரீபடேசாகிப் சித்தர் ஜீவாலயம்
சின்னபாபு சமுத்திரம்

ஸ்ரீபடே சாகிப் சமாதியில் சந்தனம் அரைத்து சார்த்த ஓத வேண்டிய துதி
ஓம் மஜும் போட் துத்யாய வித்மஹே
மதிபூரண சந்தன சந்த்ராய தீமஹி
தந்நோ குரு பாத விருட்ச ப்ரசோதயாத்
மூன்றாம் பிறையாகி முக்கண் சுதமாகி
முச்சுடர் பரிமாணம் மூதையர் வழி தாங்கி
ஒன்றாய் புலன் சேர்ந்து ஓதிய சந்தனப் பூ மலர்
நன்றாய் நவின்றேன் நமசிவாய என மகிழம்பூ சாறல்
மறையொலியாய் மாதவனை அகிலம் புகழ் ஓங்கும் அரணே அரண் !

எனவே எவருடைய விதியையும், கர்ம வினைகளின் விளைவுகளையும் இறைவன் விரும்பினாலன்றி எந்த சற்குருவும் தாமாகவே மாற்றுவது கிடையாது. எனினும் இறையருளால், கர்ம வினைகளை இலகுவாக அனுபவித்துக் கழிக்கும் நல் வழிமுறைகள், உழவாரத் திருப்பணி, ஹோமம், தானதர்ம வழிமுறைகள் போன்ற பல அரிய ஆன்மீக சாதனங்கள், கர்ம வினைகளின் விளைவுகளைத் தணிக்கும் பிராயச்சித்த முறைகள், சில வகையான கர்ம வினைகளை அடியோடு வேரறுக்கும் நற்பரிகார முறைகள் போன்றவற்றை சற்குரு ஆழ்ந்த நம்பிக்கை பூண்ட சாதகருக்கு, சீடருக்கு அளிப்பதுண்டு.

இவ்வாறாக அவரவர் பக்தி, நம்பிக்கை, தியாகம், ஈடுபாடு போன்றவற்றிற்கு ஏற்ப என்றும் இறைத் திருவடிகளில் துய்ப்பதற்காக ஆன்ம சக்திகளையும் சற்குருவே அளிக்க முடியும்.

சோதனை வேதனையன்று! உத்தம நிலைப் படிக்கட்டுகளே சோதனைகளாம்!

எனவே சற்குருவின் பரிபாலன முறையின் போதும், சத்சங்க வாழ்விலும் ஆயுள் முழுவதும் சோதனைகள் தொடர்ந்து வரும். ஒவ்வொரு சோதனையையும் கடக்கும் போது தான் மென்மேலும் ஆன்மத் தெளிவுகள் கிட்டி நம்பிக்கையும் நன்கு கனியும். தெய்வீகத்தில் மேலும் பல உத்தம நிலைகளை அடைவதற்கு இச்சோதனைகள் தாம் பெரிதும் துணை புரியும்.

அப்பர் சுவாமிகள், சம்பந்தப் பெருமான், மாணிக்கவாசகர் போன்ற உத்தமச் சிவனடியார்கள், ஆழ்வாராதியர்கள், நாயன்மார்களாம் இறைத் தூதுவர்கள் மானுட சரீர வாழ்க்கையில் அனுபவித்த சோதனைகளை நாம் நன்கறிவோம். இரு கண்களையும் இழந்து சுந்தரர் அடைந்த வேதனைகள், சுண்ணாம்பு காளவாயில் தள்ளப்பட்டு, கடல் நீரில் கல்லைக் கட்டி ஆழ்த்தப்பட்டு சோதனைகள், துன்பங்கள் யாவும் இத்தகைய உத்தம பக்தர்களை மிகவும் உன்னதமான தெய்வீக நிலைகளுக்கு உயர்த்தினதாமே!  முக்தி நிலை அடைந்தவர்களுக்கே இத்தகைய இறைச் சோதனைகள் எனில்....நன்றாகச் சிந்தியுங்கள்!

எனவே கலியுகச் சற்குரு வாசத்தில் தான் அவரவர் கர்ம வினைகளை அவரவர் அனுபவிப்பதாக வேண்டும் என்ற உன்னத தெய்வீக நியதியை நன்கு உணர முடியும். இதுவும் கலியுகத்தில் ஒரு பெரிய உத்தம நிலையாகும்.

நம்பிக்கை மாசுபடுவதில்லை! அவநம்பிக்கையே மனிதனைக் குழப்பிக் குழியில் தள்ளும்!

சாதகர்: சற்குருவை அடைந்த பின்னரும் ஒரு அடியார்க்குத் துன்பங்கள் தொடர்ந்தால் குருவின் மேல் நம்பிக்கை அன்றோ குறைவுபடும்?

சற்குரு: தம் வாழ்வில் கரையேற்ற வந்தவர் இவரே என்று சற்குருவின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொள்வோர்க்கு எக்காலத்தும் குருவின் மேல் நம்பிக்கை தளர்வதில்லை!

ஆனால் ஒருவர் தாம் செய்த தீவினைகளுக்கான விளைவுகளைச் சற்குருவே உடனடியாகக் கழித்துத் தர வேண்டும் அல்லது சற்குருவே அவற்றை அனுபவிக்க வேண்டும், தான் செய்த வினைகளுக்கு எதையும் அனுபவிக்காது அவற்றிலிருந்து விடுபட்டுச் சுகமாக வாழ வேண்டும். தன்னால் எதையும் சாதிக்க முடியும் என்று சுயநலமாக எண்ணிச் சற்குருவை அண்டி வருவோர்க்குத்தான் இத்தகைய நம்பிக்கைக் கோளாறுகள் ஏற்படும்.

எனவே நம்பிக்கைக் குறைவால் பாதிக்கப்படுவோர் அரைகுறை நம்பிக்கையாளர்களே தவிர உண்மையான சீடர்களுக்கு சற்குரு, சற்குருவாகவே எக்காலத்தும், எந்த லோகத்திலும், எப்பிறவியிலும் பொலிகின்றார்!

சற்குரு புகட்டும் வினைப்பயன் அறிதல்

மேலும் சற்குருவின் மீதான பரிபூரண நம்பிக்கை விருத்தி அடைந்து கொண்டே வரும் போது, இதனை ஒட்டியே மற்றொரு நன்மையும் விளையும். அதாவது நமக்கு வரும் இன்ப, துன்பங்களுக்குக் காரணம் நம் கர்ம வினைகளே என்று உணரும் பரிபக்குவமும் குரு நம்பிக்கையுடன் கூடவே சாதகருக்கு நன்கு விருத்தி ஆகும்.

அப்போது தம்முடைய கர்ம வினைகளின் விளைவுகளே தமக்கு இன்ப, துன்பங்களாக அமைவதை அந்த அடியாரே உளப்பூர்வமாக உணரும் போது, உண்மையான அடியார்க்கு வேறு எந்தத் தவறான எண்ணமும் தோன்றாது அல்லவா!

எனவே உண்மையாகவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் சற்குருவை நம்புவோர்க்கு எத்தகைய துன்பச் சூழலிலும் குரு மேல் கொள்ளும் நம்பிக்கையானது சற்றும் மங்காது சுடர் விட்டுப் பிரகாசிக்கும்.

சற்குருவின் மேல் பக்தி நிறைந்த நம்பிக்கை பூணுவோர்க்கென அருணாசலப் பெருமான் திருக்கார்த்திகை ஜோதியைப் பல வண்ணங்களில் அவர்களுக்குக் காட்டி ஆசீர்வதிக்கின்றார்!

அடிமை கண்ட ஆனந்தம்

ஒரு முறை பெரியவர் சிறுவனை திருஅண்ணாமலைக்கு கூட்டிச் சென்றார்.

"என்ன வேலை தருவாரோ அல்லது ஒரு வேலையும் தரமாட்டாரோ?" குழப்ப ரசத்துக்குள் தக்காளிப் பூண்டாய்க் குமைந்து தத்தளித்தான் சிறுவன்!

ஆனால், வழக்கமான அவருடைய சித்தர் பாணியில், பெரியவரோ எதையுமே கண்டு கொள்ளவில்லை! ஆயிற்று மாலை ஆறு மணியும்! இரவும் வந்து மிக மெதுவாய் ஆமையாய்க் கழிந்தது!  துன்ப மாயையில் விரியும் காலமானது சுகபோகத்தில் சுருங்குவது போலாகி இதுதானே மனித குலம் "காலத்தைப்" பற்றிக் கொண்டிருக்கும் தவறான நிலை!

மறுநாள்.....காலை மணி ஆறு இருக்கும்....

அன்னதானச் சத்திரத்தில் ஒரு ஓரத்தில் சுருண்டு கிடந்து தூங்கியவனைத் தட்டி எழுப்பிய பெரியவர், "வாடா, வா!  அன்னதான வேலையை ஆரம்பிக்கலாம்!" என்று சொல்லிக் குரல் கொடுத்திட்டார்.

"ஆஹா!  அன்னதானப் பணி!"

துள்ளிக் குதித்து எழுந்தான் சிறுவன்!

"என்ன இது? நேற்றுக் காலையிலிருந்து இந்தச் சத்திரத்திற்குப் பல அடியார்களும் வருவதும், போவதுமாக ஏதேதோ அன்னதானத்திற்காக வாங்குவதும்... இப்படியாகப் பொழுது சாய்ந்து, இரவாகி, அதுவும் கனிந்து விடிந்தும் விட்டது!  இவர் என்னடாவென்றால் இப்போதுதான் அன்னதான வேலையை ஆரம்பிக்கலாம் என்று சொல்கின்றாரே! ஒரு வேளை நமக்கு என வாத்யார் வகுத்த அன்னதானப் பணி இனிமேல் தான் ஆரம்பமாகுமோ!"

சிறுவன் தெளிவிலிருந்து விலகி நெடுந்தொலைவு போய் "குழப்பநாதனாக" ஆகி விட்டான்! இவை யாவும் அதியற்புத குருகுலவாசப் பாடங்கள் என அப்போது அவன் உணர்ந்தானில்லையே!

எத்தனையோ பேர் மூட்டை, விறகுகள், மளிகைச் சாமான்கள், பாத்திரங்கள் போன்றவற்றைத் தூக்கி, ஏற்றி இறக்குவதுமாக....சிறுவன் அவர்களை ஏக்கத்துடன் பார்த்தான்.

ஜபமோ ஜபம்!

ஆனால் பெரியவர் சிறுவனை அரிசி மூட்டைகளின் முன் அமர வைத்து, சாட்சாத் ஸ்ரீசாகம்பரி தேவி, ஸ்ரீஅன்னபூரணி தேவிக்கான மந்திரங்களை ஜபிக்க வைத்து, "நல்லா விழிச்சிருந்து அப்பப்ப விளக்கைத் தூண்டி வச்சு நான் சொல்ற வரைக்கும் இந்த மந்திரங்களை ஜபம் பண்ணிக்கிட்டு வா!" என்பதே அவனுக்கு வந்த கட்டளை! தனக்கு அன்னதானப் பணி ஒன்றும் இல்லையா என்று ஏங்கிய சிறுவன் "தனக்கு வந்த இந்த ஜபிக்கின்ற இறைப் பணியை ஒழுங்காகச் செய்வோம்!" என்று எண்ணி விடாப்பிடியாகப் பெரியவர் தந்த மந்திரங்களை ஜபித்தான்.

"சரிடா கண்ணு!..... ரொம்ப டயர்டா இருந்தா அப்படியே தூண்ல கொஞ்சம் சாஞ்சுக்கடா!"

"அன்னதானக் கைங்கர்யத்தில் திரள்ற புண்யத்தால எவ்வளவோ இந்த உலகத்துல சாதிக்கலாம்டா! அதுவும் திருஅண்ணாமலையில அன்னதான சேவைன்னா, அதுக்குன்னு விசேஷமான சக்தி உண்டாச்சே!  ஆனா எல்லாருக்குமா இந்த பாக்யம் கிடைக்கும்? யுகம் யுகமாக குருவோட சேர்ந்து அன்னதானம் செஞ்சு வர்றவங்களுக்குத்தான் அருணாசல புனித பூமியில் அன்னதானம் செய்யற பாக்யம் தொடர்ச்சியா கிடைக்கும்!"

பெரியவர் சொன்னதையெல்லாம் தன் உள்ளத்தினுள் சொல்லிப் பார்த்துக் கொண்டான் சிறுவன். இப்படி நினைத்து நினைத்து எண்ணிப் பார்த்து அப்படியே தூங்கிப் போய்விட்ட சிறுவனைத்தான் பெரியவர் இப்போது எழுப்பி விட்டார்.

மும்முலம் நீக்கும் ஆன்ம வழி!

சிறுவனை பக்கவாட்டுச் சந்து ஓரத்தில் அழைத்துச் சென்ற பெரியவர் அவனிடம் ஒரு பழைய தகர டப்பா, தகர வாரு கரண்டி, சுண்ணாம்பு டின் எல்லாவற்றையும் கொடுத்துப் பெரியவர் தானும் ஒரு செட்டை எடுத்துக் கொண்டு சத்திரத்தின் கொல்லைப் புறம் இருந்த கழிவறைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே......அந்த காலத்துக் கக்கூஸ்! தீபக் கூட்டத்தில்....நாற்றமோ நாற்றம்!  அக்காலத்தில் டிரெயினேஜ் சிஸ்டம் கிடையாது!  மலத்தை வெளியே எடுத்துச் சுத்திகரிக்கும் பணியாகவே நடந்தது!

"அன்னதான சேவை செய்யறவங்களுக்கான கழிவறையில கொஞ்சம் கூட அருவறுப்பு இல்லாம மலத்தை எடுத்துச் சுத்திகரிக்கிறது ஒரு பெரிய திருப்பணிடா ராஜா!  காசி, ஹரித்வார், அலாகாபாத், நாசிக்குல எல்லாம் இன்னிக்கும் லட்சக்கணக்கான மக்கள் வர்ற கும்பமேளா மாதிரி திருவிழாக்கள்னாலே ஆங்காங்கே கிடக்கற மலத்தை அப்புறப்படுத்திச் சுத்திகரிக்கறது ஒரு பெரிய புண்ணிய காரியம்கறதுனாலேயே கொஞ்சம் கூட அருவறுப்புப் படாம எவ்வளவு பேர் ஆர்வமாக இந்தக் கக்கூஸ் க்ளீன் பண்ற சேவைக்கு முன் வருவாங்க தெரியுமா? அவ்வளவு மகத்தான தெய்வீக சேவையப்பா இது!"

"அநாதைப் பிணங்களை எரிக்கறத்துக்கு உதவி செய்யறது, அடியார்கள் சாப்பிட்ட எச்சல் இலைகளைப் பொறுக்கி எடுக்கறது, இறையடியார்களோட துணிமணிகளைத் துவைச்சுத் தர்றது, மலத்தை எடுத்து இடத்தைச் சுத்திகரிக்கிறது, இதெல்லாம் மகா மகா புண்ய காரியம்! இதுல அருவறுப்போ, தாழ்வு உணர்ச்சியோ இல்லாம வேலை செய்யறதுதாண்டா ரொம்ப ரொம்பக் கஷ்டம், ரொம்ப ரொம்ப விசேஷமும் கூட!"

குடலைக் குமட்டும் நாற்றத்திலும் பெரியவர் அநாயசமாக....ஒரு துளியும் அருவறுப்புக் கொள்ளாது, மலர்ந்த முகத்துடன் கழிவறை மலத்தைத் தகர டப்பாவில் திரட்டி முனிசிபாலிட்டி நிர்ணயித்த இடத்திற்கு மலத்தைச் சுமந்து சென்று கொட்டி விட்டு வந்தார்.

சிறுவனும் அவரைப் போலவே எவ்வித அருவறுப்பும் கொள்ளாது புனிதமான திருப்பணியாக, கார்த்திகை தீபம் முடியும் வரை அந்தச் சத்திரத்தில் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கு மலத்தைத் துப்புறவு செய்யும் திருப்பணியை மிகவும் மகிழ்ச்சிகரமாக ஆற்றினான். துப்புறவுப் பணியாளர்கள் இதற்கென வந்தபோது பெரியவர் அவர்களுக்கு நல் உணவும், நல்ல உடைகளையும் அளித்து ஓய்வெடுத்து அமரச் செய்திட்டுப் பெரியவரும், சிறுவனுமே இப்பணியைச் செய்தார்கள்.

முதல் நாள் மட்டும் பெரியவர் துணை இருக்க, ஏனைய நாட்களில் சிறுவனே தன்னந்தனியனாய்க் கழிவறை அருகிலேயே அமர்ந்து நாள் முழுதும் பணி புரிந்தான். அவனுடைய  சுறுசுறுப்பு, ஆர்வம், ஈடுபாடு கண்டு அனைவரும் வியந்தனர். ஐந்து நாட்கள் தொடர்ந்து இரவு கூட உறங்காது கழிப்பறைத் துப்புறவுப் பணியைச் செவ்வனே செய்து முடித்தான் சிறுவன்.

கார்த்திகை தீப அன்னதானம் முடிந்தபின் பெரியவர் சிறுவனிடம், "இது தாண்டா அன்னதானத்துக்கான மூல முதல் திருப்பணி! இறையடியார், குருகிட்ட என்னிக்குமே அடிமையா, பணிவா வாழணும்கறதுக்கு முதல் பாடம்! ஏன்னா குருவே தன்னை அங்காளியோட அடிமையாகத் தானே எண்ணிக்கிட்டு இருக்காரு!  பலரும் வெறுக்குற கக்கூஸ் துப்புறவு வேலைன்னாலும் இதுல ஒருத்தன் நல்லா டிரெயின் ஆயிட்டா வாழ்க்கையில எந்த மாதிரித் துன்பங்களையும் தாங்கக் கூடிய சகிப்புத் தன்மை தானாவே வந்துடும்! எப்பவுமே வாழ்க்கையில வராத. அடக்கம், பணிவு, பொறுமை எல்லாமே தானே வந்துடும். இறை அடியார்களோட மலத்தைச் சுமந்து சுத்தம் செய்யறது, அவர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை எடுத்துச் சுத்தம் செய்யறது, அடியார்களோட உடைகளைத் துவைத்து தர்றது இதெல்லாம் பெரிய கைங்கர்யம்டா! தன்னோட அடியார்கள் சந்தோஷம் தானே கடவுளோட சந்தோஷமே!"

மலம் வாரும் பணியில் தூய மனதுடன் ஈடுபட்டதால் அதன் பிறகு சிறுவனுக்கு அன்னதானப் பணிகள் வேறு கிட்டவில்லையே என்ற எண்ணம் தோன்றவில்லை! காரணம் இவ்வரிய திருப்பணி மும்மலங்களையும் நீக்கவல்லதாயிற்றே! மன சுத்தி தானாவே வந்துவிடுமே!

அக்னியில் கிட்டிய மனசுத்தி!

அன்னதானக் கைங்கர்யம் முடிந்த கையோடு பெரியவர் ஊர் திரும்பும் முன், "ஏண்டா நாங்க எல்லாம் சத்திரத்துக்கு உள்ளாற மணக்க மணக்க சாம்பார் சாதமும், தக்காளி ரசமும் சாப்பிட்டோமோ உனக்கு இந்த அசிங்கத்தில வேலை செய்யறோம்னு எண்ணமே வரலையா?" என்று காரமாகவே கேட்டிடவே,

சிறுவன் அவரை தீர்கமாக கண்களுக்குள் நோக்கினான்.

"என்னடா இது இந்த வேலையை நமக்குத் தந்திட்டானே, வேற நல்ல வேலை தரலையேன்னு நினைச்சுப் பார்த்தியா?"

சிறுவனால் தாள இயலவில்லை! அவன் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது.

கண்ணீர் மிகவும் உப்புக் கரித்தது.

அப்போது பெரியவர், "எப்ப கண்ணீர் கரும்பாய் இனிக்குதோ அப்பத்தான் மனசு சுத்தமாகி ஜென்ம சாபல்யம் கிடைக்கும்னு அர்த்தம்" என்று சொன்னதுடன்,

"என்ன இது அஞ்சு, ஆறு நாளேச்சே இந்த வேலையைத்தான் நாம் நிரந்தரமாப் பண்ணனும்னு யோசிச்சியா?" என்றும் கேட்டுக் கண்ணீரைப் பெருக்கிச் சூடாக்கினார்.

சிறுவன் பதிலொன்றும் சொல்லவில்லை!

"கடவுளே! என்ன சோதனை இது? நம் மனதில் எழுந்திடாக் கேள்விகளை எல்லாம் எழுந்ததாகச் சொல்கின்றாறே! அருணாசலா என்ன சோதனை இது?"

பெரியவர் விறைப்பாக முகத்தை வைத்துக் கொண்டார்!

"என்னப்பா பதில் ஒண்ணையும் காணோமே?"

சிறுவனால் பேச முடியவில்லை விக்கித்து அழுதான்!

"சரி..சரி...அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே, என்னோட நான் சொல்ற‌ இடத்துக்கு வந்து சேரு?"

ஏதோ ஒரு உத்வேகத்தில் ஒன்றுமே பேசாது அவரோடு கண்மூடித்தனமாக வெகு வேகமாக நடந்தான் சிறுவன். விழுப்புரமா.... விழுப்புரம் என்று தான் ஞாபகம்....அதுவரை பஸ்ஸில் சென்று பிறகு ரயில்வே ஸ்டேஷனை அடைந்தனர்.

...பெரியவர் டிக்கட் வாங்கினாரா, வாங்கவில்லையா...எதைப் பற்றியும் கவலைப்படாது...வருத்தமோ அலை அலையாக வந்து முட்டிடவே....ரயில் சீட்டில் தலையைச் சாய்த்துப் படுத்து விட்டான்.

எங்கு இறங்கினானோ, என்ன செய்தானோ தெரியாது...கண்ணை விழித்துப் பார்த்தால்!

டக்கு, டகு, டக்கு, டகு....என்று டிரெயின் பாம்பன் பாலத்தைக் கடந்து கொண்டிருந்தது! ஆனால் சிறு பிள்ளையாய் எட்டிப் பார்த்து...டிரெயின் பாலங் கடக்கும் ஆனந்தத்தை அடையும் நிலையிலா சிறுவன் இருந்தான்? பெரியவரிடம் பேசியே 12 மணி நேரம் ஆகி விட்டதே!

என்றும் குருவின் திருவடியில்

திடீரென்று பெரியவர் அவன் தலையை கோதிடவே...சுரீரென்று சிறுவனுக்கு ஷாக் அடித்தது போல் இருந்தது! தலைக் கபாலத்திற்குள் சூடாக ஏதோ இறங்குவது போல் இருந்தது!

"கோபமோ, துக்கமோ, அழுகையோ நாம் தப்புச் செய்தோமோ, செய்யவில்லையோ, சற்குருவிடம் இதைச் சாக்காக வைத்துக் கொண்டு ஒதுங்கினால்....யாருக்கு நஷ்டம்? நமக்குத் தானே இழப்பு!  சற்குரு எது செஞ்சாலும் அது நல்லதுக்குத்தான்! ஓஹோ இதைப் புரிய வைக்கவே...இதனை வாத்யார் அரங்கேற்றம் செய்தாரோ?"

இவ்வாறு சிந்தித்துமே சிறுவனுக்கு சிரிப்பு வந்து விட்டது!  ராமர் மிதித்த புண்ணிய பூமியின் ம்ஹிமையால்தான் இந்த ராமானுபவமோ?

"ஏண்டா சிரிக்கறே? என்னைப் பார்த்தா சிரிக்கற மாதிரியா இருக்கு?"

பெரியவர் வழக்கம் போல் கலகலப்பானார்! உணர வேண்டியதை உணர வைத்த பின் தெய்வீகத்தின் அடுத்த நிலைக்கு இட்டுச் செல்வது தானே பெரியவர்களுடைய வேலை!

கிடுகிடுவென்று பெரியவர் சிறுவனை ராமேஸ்வரத்தின் அக்னி தீர்த்தத்திற்கு அழைத்து சென்றார்.

நல்ல மழை...கொட்டோ கொட்டென்று கொட்டிட....கடற்கரையில் காற்றடித்ததால் பலரும் ஒதுங்கிட....அக்னித் தீர்த்தம் நிர்ச்சலனமாக இருந்தது.

அக்னி தீர்த்தம் ராமேஸ்வரம்

வானில் ஒளிர்ந்த வசு ருத்ராதித்யர்கள்!

கொட்டும் மழையில் முழங்காலளவு அக்னித் தீர்த்த நீரில் இறங்கிய பெரியவர், "வருண பகவானே! கொஞ்சம் ஒதுங்கிக் கோயேன்! பித்ருலோகம் தெரிய மாட்டேங்குதே! மறைக்குதே!" என்று விண்ணைப் பார்த்து வேண்டி நின்றின்றார்! ஏன் எதற்கு? யாருக்குத் தெரியும்? சித்தன் போக்கு சிவன் போக்கல்லவா!

பெரியவர் விண்ணைப் பார்த்து ஏதேதோ மந்திரங்களை ஓதிட,

என்ன ஆச்சரியம் பளிச்சென்று மேகம் சற்றே விலகியது! மழையும் டக்கென்று நின்றது. பரமானந்தத்துடன் சூரியன் வெளி வந்திட,

".....தர்ப்பயாமி..." ஆம், பெரியவர் சிறுவனுக்குத் தர்ப்பணப் பூஜைகளை விளக்கித் தர்ப்பணம் செய்ய வைத்தார்.

"ஏண்டாப்பா கொஞ்சம் மேலே பாரேன்!"

சிறுவன் மேலே பார்த்தான்! தெற்குப் புறம் விண்ணில்...தேவாதி தேவர்களின் காட்சி தெரிந்தது.

"இவங்கதாண்டா வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திங்க! பக்கத்துல இருக்கறவரு க்ஷீராஸ் பித்ரு மூர்த்தி!  திருஅண்ணாமலையில அன்னதானக் கைங்கர்யத்துல அடியார்களோட மலத்தை சுத்திகரிச்சுத் துப்புறவு பண்ணி மன அழுக்கை நீக்கிட்டு இங்கே வந்தா.... ராமேஸ்வரத்துல அக்னித் தீர்த்தத்துல ஸ்புடம் போட்ட மாதிரி மனம் சுத்தமாகும்! அதுக்காகவே இன்னிக்கி இவங்க தரிசனம் கிடைக்க வழிவகை கெடைச்சுருக்கு! இவங்கதான் ஆணவம், கண்வம், மாயைன்னு மும்மலம் நீங்கறதுக்கு வழி காட்டுவாங்க!”

"ஆனா அருணாசலத்தில் ரொம்ப பக்தியோட சேவை செஞ்சாத்தான் ராமேஸ்வரத்துல இந்த அனுகிரகம் கிடைக்கும்...." பெரியவர் ஏதேதோ சொல்லிக் கொண்டே  போனார். ஆனால் அதெல்லாம் சிறுவனின் காதுகளில் விழவில்லை. ஏனென்றால் அவன் தான் கடலுக்குள்ளேயே பெரியவரின் திருப்பாதங்களில் வீழ்ந்து விட்டானே!

கடல் நீருக்குள் அவர் பாதங்களை பிடித்தவாறு இருந்த சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்! கடல் தண்ணீர் கண்களை அரிக்கவில்லை, எரிச்சலாக இல்லை! வாயில் பட்ட நீரும் உப்புக் கரிக்கவில்லை!

அனைத்தும் இனித்தன!  அதிசயத்திற்கு ஆட்பட்டு இதனைப் பெரியவரிடம் சொல்வதற்கு எழுந்த சிறுவன் பெரியவர் இன்னமும் சிலையாக நின்று தெற்கு நோக்கி வணங்குவதைக் கண்டு திகைத்தான்!

விண்ணில் வசு, ருத்ர, ஆதித்ய தேவ மூர்த்திகளின் காட்சி இன்னமும் தெரிந்தது! பரவசத்தில் அவன் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்க....இப்போது கண்ணீர் நன்கு இனித்தது.

சிறுவன் திடுக்கிட்டுப் போனான். கடல் நீர் போலவே கண்ணீரும் இனித்தது.

சுவை, ஒளி, ஊறு, ஓசை நாற்றத்தைக் கடந்த பெரியவர் நாற்றத்தில் கிடைக்க வைத்த அருட்பரிசு அல்லவா இது.

காணும் பொங்கல்

மகான்களை, யோகியர்களை, ஞானிகளை, சித்தர்களைக் காணும் பொங்கலே காணும் பொங்கல் பண்டிகையாம்! எனவே காணும் பொங்கல் நாளாகிய இன்று மதுரை குழந்தையானந்த சுவாமிகள், சின்னபாபு சமுத்திரம் ஸ்ரீபடேசாகிப் சித்தர், மதுரை ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள், தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்தர், காஞ்சீபுரம் போடா சித்தர், சிங்கம்புணரி ஸ்ரீவாத்யார் அய்யா சித்தர் போன்ற மகான்களின், சித்தர்களின் ஜீவாலயம், ஜீவ சமாதி, குரு மூர்த்தங்களில் வழிபட்டு ஏழைகளும் இனிப்புக் "காணும்" வகையில் இனிப்பு உணவுகளைத் தானமாக அளித்திடுக!

இந்நன்னாளில், ஜீவ சமாதிகளில் முழுத் தாமரை மலர்களை வைத்து, கைகளை உயரே கூப்பி வணங்கி, நுனிக் கால்களால் நடந்து 12 முறை பிரதட்சிணம் வந்து வழிபடுதல் விசேஷமானதாம். ஏனெனில் காணும் பொங்கல் நாளில் அந்தந்த மகான்கள், சித்தர்கள் பூலோகத்தில் உற்பவிக்கும் சங்கராந்தி சக்தியைத் துய்க்க ஜீவித வடிவம் கொண்டு வருகின்றனர்.

ஸ்ரீநடனகோபாலநாயகி சுவாமிகள் ஜீவாலயம் மதுரை

இன்று பார்வையற்றோரும் புரிந்து கொள்ளும் வண்ணம் ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளையோ, ஸ்ரீஅகஸ்திய விஜயம் போன்ற ஆன்மீக இதழ்களில் வரும் சற்குருமார்களின் அருள்மொழிகளையோ, தமிழ் மறைப் பண்களையோ படித்து, ஓதிக் காண்பித்து அவர்களையும் ஆனந்தமடையச் செய்திடுங்கள். பார்வையற்றோரும், தெய்வீக நெறிகளை மனக் கண்களால் உணரும் காணும் பொங்கலாக இது அமைய வேண்டும்.

இன்று ஸ்படிகம், ருத்ராட்சம், சாளகிராமம் போன்றவற்றாலான இறை வடிவுகளைப் பார்வையற்றோரிடம் அளித்து ஸ்பரிசிக்கச் செய்து அவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி, இயன்றால் தினமும் பூஜிக்க வழிவகை செய்திடுங்கள். இதனால் திக்குத் தெரியாது, தீய வழக்கங்களுக்கு ஆண் பிள்ளைகள், கணவன் ஆளாகியிருந்தால் ஆரம்ப நிலையிலேயே காப்பற்றப்படுவர்.

ஸ்ரீபெருமானந்த சுவாமிகள் ஜீவாலயம் தேனிமலை

பொதுவாக நாம் கண்டு களித்துப் பெற்ற நல் இன்பத்தைப் பிறரும் காணச் செய்ய வேண்டிய தர்மப் பண்டிகை நாளிது! காணும் பொங்கலாகிய இன்று ஸ்ரீதிருக்கண்மாலீஸ்வரர் (சித்தலவாய்), ஸ்ரீகண்ணாயிர மூர்த்தி (திருக்காறவாயில்), ஸ்ரீகண்ணாத்தாள் (நாட்டரசன் கோட்டை) போன்ற "கண் வகை" நாமம் கொண்டு இறை மூர்த்திகள் அருள்பாலிக்கும் தலங்களில் நல்ல கறுப்புக் கண்களை உடைய முற்றிய தேங்காய்களுக்கு மஞ்சள் பூசி சமையலுக்கான பாத்திரங்களுடன் ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்திட "எந்த முடிவை எடுப்பது" என்று பல விஷயங்களில் திகைத்துக் குழம்புவோர்க்கு, மன சஞ்சலங்கள் நீங்கி நல்ல முடிவு தெளிவாகும்.

இன்று பெண்கள் கண்களுக்கு மையிட்டு, இல்லறப் பெண்களுக்கு கண் மையைத் தானமாக அளித்திட வேண்டும். ஆடவரும், பெண்டிரும் இன்றிரவு சாக்ஷுஷோபநிஷத், அப்பர் சுவாமிகளின் அங்கமாலைத் துதி, இராப் பத்துப் பதிகங்கள், ராத்திரி ஸுக்தம் போன்ற துதிகளை ஓதி கண்களின் மேல் தூய விளக்கெண்ணெய் தடவி, தியானித்த நிலையில் உறங்கிட, மகான்கள், சித்தர்களின், நற்பெரியோர்களின் சூக்கும தரிசனம் கிட்டும். இதனால் பெண் பிள்ளைகளின் மற்றும் குடும்பத்தின் எதிர்கால வாழ்வு பற்றிய அச்சங்கள் தணியும்.

இன்று சுதை ரூபத்தில் இருக்கும் கிராமத்து தேவதா மூர்த்திகளுக்கு காவி, சுண்ணாம்பு பூசி, வண்ணங்கள் சார்த்தி வழிபடுதலால் குடும்பத்தில் பெற்றோர், பிள்ளைகள், மனைவி, அக்கா, தங்கையரிடையே உள்ள மன வேறுபாடுகள் மறையும், பொதுவாக கருத்து வேறுபாடுகள் பெரிதாகிப் பெரிய பிளவாக ஆவதைத் தடுத்திட, சுதை மூர்த்திகளுக்கு காவி, சுண்ணாம்பு பூசி, வண்ணங்கள் சார்த்தி வழிபடுதல் மன வேறுபாடுகளை நிவாரணம் செய்வதற்கான துரிதமான பலன்களைத் தருவதாகும்.

புத்தாண்டு

தைல சக்திகள் மிகுந்ததே 2003ம் ஆண்டு
சூரியக் கபாலமே சுபானு மண்டலம்
சுபானு ஆண்டில் வர்ஷிக்கும் தைலவாரி சக்தி கிரணங்கள்!

ஹஸ்தாவரண சக்திக் கிரணப் பொழிவு

அட்டைப் படத்தில் நாம் காணும் ஈஸ்வரன் தம் உள்ளங்கை ரேகைக் கிரணவாரியாக அருள்பொழியும் கோலமானது இப்பூவுலகில் சுபிட்சத்தைப் பெருக்கவல்ல ஹஸ்தாவரண சக்திக் கிரணங்களைக் குறிப்பதாகும். கலியுகத்திற்கு உரித்தான சற்குரு மூலம் பெறுவதான சிவ அனுகிரகமிது! நம் கபாலத்தில் இறை வளத்தைப் பெருக்க வேண்டிய ஹஸ்த பாவன யோக நிலையையும் இது குறிக்கின்றது.

சூரிய பகவானின் திருக்கபாலத்திற்கே சுபானுக் கபாலம் என்று பெயர். 2003ம் ஆண்டும், வரும் சுபானுத் தமிழ் ஆண்டும் கபாலத்திற்குத் தேவையான காஞ்சனாதி சக்திகளைப் பெற்றுத் தரும் பானு கிரணங்களுடன் பரிணமிக்கின்றன. இவ்வகை வழிமுறைகளில் ஒன்றே தலைக்கு தேய்க்கும் தைலமாகும்.

ராகு பகவானின் சக்திகள் கூடிய 2003 ஆண்டில், தைல சக்திகள் கிரண வடிநாளங்களாய் விரிந்து, நிறைந்து அருள்பாலிக்கின்றன. ஆனால் தைலங்களில் கூடியுள்ள மூலிகா தேவ சக்தியை அடையும் முறையை நாம் நன்கு அறிந்தால் தானே அவற்றைக் கிரகித்துப் பெற முடியும்!

நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற மூலாதார எண்ணெய் வகைகளுடன் மருதாணி, கரிசலாங்கண்ணி, நெல்லி, செம்பருத்தி போன்ற மூலிகைகளையும் சப்ஜா விதை, வெட்டி வேர் போன்ற பல இயற்கைத் திரவியங்களையும் சேர்த்து உருவாக்கப்படுவதே தைலமாகும். இத்தகைய இயற்கைத் தைலங்களைத் தயாரிப்பதால் ரசாயன விளைவுகளால் மாசுபட்டுள்ள பரவெளியும் நன்கு சுத்திகரிக்கப்படும். எனவே இத்தைலங்களை அவ்வப்போது வாங்கி நம் பண்டைய தைலத் தயாரிப்புத் துறையைப் போஷிப்பதும் நம் கடமையாகும்.

உற்பத்தி வளம் பெருக்கும் தான தர்ம சக்திகள்!

தலைக்கு எண்ணெய் தடவக் கூட வசதி இல்லாத ஏழைகளுக்கு இவ்வாண்டில் மிகுந்த அளவில் எண்ணெய்த் தைலத்தைத் தானமாக அளித்து வர, வீட்டுத் துன்பங்களுக்கு நல்ல நிவர்த்தியும், நாட்டிற்கு சுபிட்சமும் கிட்டும். நீர் வளம், நில வளம் குறைந்து வரும் நிலையில் உற்பத்தியைக் கூடுதலாக்கி தனதான்ய, திரவிய விருத்தியைப் பெறுவதை விட, இறையருளால், தான தர்ம சக்திகளால் சுபிட்சத்தை ஆன்மீக ரீதியாக எளிதில் கொணரலாம் என்பதையே இது குறிக்கின்றது.

தலைத் தைலத்தில் உற்பவிக்கும் தைலாதி ஸ்கந்த பலாக்னி!

இனியாவது ஒவ்வொருவரும் முறையாக தினமும் காலையில் தலைக்கு மூலிகைத் தைலம் தேய்க்கும் நல்ஆரோக்ய வழியைக் கடைப்பிடிப்போமாக! உள்ளங்கையில் நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், மருதாணித் தைலம், செம்பருத்தித் தைலம் போன்றவற்றுடன் ஏதேனும் ஒன்றையோ பலவற்றையோ கலந்து இடது உள்ளங்கையில் வைத்திடுக!

முதலில் இரு கண்களையும் நன்கு மலர வைத்துத் தைல தரிசனம் செய்திட்டு, "ஸ்ரீதைல நாயகியே போற்றி" என்று 12 முறை ஓதி, வலது கையின் உள்ளங்கையை இடது உள்ளங்கை மேல் வைத்துத் தைலத்துடன் நன்கு ஒற்றித் தேய்த்திடுக!

பிறகு "ஸ்ரீகபாலீஸ்வரா போற்றி" என்று 12 முறை ஓதி முதலில் வலது உள்ளங்கையை உச்சந் தலையில் வைத்துச் சூடு பறக்கத் தேய்க்க வேண்டும். பிறகு "ஸ்ரீபிட்சாடனா போற்றி" எனது இடது உள்ளங்கையை உச்சந்தலையில் சூடு பறக்கத் தேய்க்க வேண்டும் இவ்வாறு உள்ளங்கை ரேகைகளில், தைல ஸ்பரிசத்தில் எழும் அக்னிச் சூட்டிற்கு தைலாதி ஸ்கந்த பலாக்னி என்று பெயர்.

வைதீஸ்வரன் கோயில் மூலாதாரப் பொருளில் எழும் அக்னி வகை இதுவே! இத்தலத்தில் அம்பிகை கையில் தைலக் கலசத்துடன் காட்சி தருவதால் அருந்தவத் தைலத் தலமாகவும் புள்ளிருக்கும் வேளூர் (வைதீஸ்வரன் கோயில்) பிரகாசிக்கின்றது. இங்கு பரிமளிக்கும் தைலப் பிரசாதம், சித்தாமிர்தத் தீர்த்தம் எத்தகைய நோய்களையும் பஸ்மமாக்கும் அரிய தன்வந்த்ரீ சக்தி கொண்டதாம்.

கூப்பிய கரத்துள் கிளைக்கும் இடையூற்றுக் குழிக் கீற்றுகள்!

இவ்வாறு மேற்கண்ட வகையில் தினமும் பானு கிரணங்கள் உதிக்கும் சூரியோதய நேரத்தில் மந்திரங்களை ஓதித் தலையில் தைலத்தைத் தேய்ப்பதால் எழும் ஸ்கந்த பலாக்னியானது கபாலக் கூட்டினுள் அக்னிப் பிரவேசமாய் உள்ளிறங்கி 72000 நாளங்களிலும் பாய்ந்து வலது, இடது, உள்ளங்கை நடுவே ஊற்றுக் குழியாய் நிறைந்திருக்கும்.

ஆலயத்தில் சுவாமியைக் கை கூப்பித் தொழுகையில் இந்த ஊற்றுக் குழியில் நிறைந்திருக்கும் தைலாமிர்தக் கபாலவடி சக்திகள் மூலவரின், அம்பிகையின், மூர்த்திகளின் அருட்கிரணங்களை ஈர்த்து உடலுக்குள் இந்தத் தைலாக்னி சக்தி நிரவும். இந்தத் தைலாக்னி யோகத்தை உணர்த்துவதே இவ்விதழின் அட்டைப் பட விளக்கமாகும்.

சிவகரச் சின்மயாலயங்கள்!

சிவபெருமான் தம் கரங்களை உயர்த்தி, புராண ரீதியாக ஆசியளிக்கின்ற திருவிடைமருதூர், கரவீரம், கச்சினம், (கைச்சினம்), ஹஸ்தினாபுரம் போன்ற தலங்களில், ஹஸ்த நட்சத்திர நாளில் சந்தனம் அரைத்து சுவாமிக்கு இட்டு அல்லது ஆலய சந்தனத்தைப் பிரசாதமாகப் பெற்று, சந்தனத்தைக் குழைத்து இரு உள்ளங்கைகளுக்குள் பரப்பி அடக்கி, கரங்களை ஒரு சேரக் கூப்பிய நிலையில் குறைந்தது மூன்று மணி நேரம் அமர்ந்து, நின்று வணங்குவோர்க்கு நன்கு காரிய சித்திகள் கனியும்.

திருவிடைமருதூர்

வானில் ஒளிர்ந்த வசு ருத்ராதித்யர்கள்!

எப்போது சிவபெருமான் மகத்தான ஆசிகளை அளிக்கின்றார்? ஒருவர் சற்குருவை ஆழ்ந்த நம்பிக்கையுடன் சரணடையும் போது ஈஸ்வரன் பரிபூர்ணமாக ஆசீர்வதிக்கின்றார். இறைப் பெருங்கருணையால்தானே சற்குருவின் வாசமும் கிட்டுகின்றது. சற்குருவைப் பெற்ற பிறகு இறைவன் மேன்மேலும் ஆசி வழங்குவதன் பொருள் என்ன?

முக்தி நிலையை அடைந்த சற்குருமார்களே இறைவனின் ஆணையால் மனித வடிவு கொண்டு சமுதாயத்தில் வலம் வந்து இறையருளை நமக்கு ஊட்டி உணர்த்துகின்றனர். எப்போதும் முக்தி நிலையில் திளைக்கும் அப்பர் பெருமானுக்கே இறைவன் தம் திருப்பாதங்களை அவர்தம் சிரசில் வைத்து திருவடி தீட்சையாய் ஆசி வழங்கினார் எனில் ஈஸ்வரனின் ஆசிக் கலையிலும் பல வகைகள் உண்டென்பதை இது உணர்த்துகின்றதன்றோ!

இறைதரிசனம் கிட்டுவதானது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். சமயக் குறவர்கள் நால்வர்க்கும், நாயன்மார்களுக்கும், ஆழ்வார்களுக்கும் விதவிதமான தரிசனங்களைத் தானே இறைவன் அளித்திட்டான்!  எனவே இறைவனின் ஆசிகளை உள்ளங்கை ரேகைக் கிரணவாரியாகப் பெற உதவுவதே காலாஷ்டமி தின பைரவ வழிபாடாகும்.

பகையைத் தீர்க்கும் சங்கராந்தி தேவதா வழிபாடு

திருவையாறு

சங்கராந்தி தேவதா வழிபாடு என்ற முக்கியமான வழிபாட்டைக் கலியுகம் மறந்து விட்டது. அந்தந்த ஆண்டில் மக்களுடைய தேங்கிய கர்ம வினைகளில் எழும் தீய சக்திகளை மாய்க்க வல்லதே மகர சங்கராந்தி தேவதா வழிபாடு ஆகும். ஈசனின் திருக்கர ஆசிகளைப் பெற்றுத் தர வல்ல வழிபாடுகளில் சங்கராந்தி தேவதா வழிபாடும் ஒன்றாகும்.

நடப்புச் சித்ரபானு ஆண்டிற்கு உரிய ஸ்ரீகோரா சங்கராந்தி மூர்த்தியை இனியேனும் முறையாக வழிபட்டிடுக! பகைவர்கள், தீயவர்கள், விரோதிகள், நம்பிக்கைத் துரோகிகள் வசம் எப்போதும் சிக்குண்டு வாழ்வோர் சங்கராந்தி பூஜா பலன்களால் நல்ல தீர்வுகளைப் பெறுவர். அற்ப காரணங்களுக்காகச் சண்டையிட்டு மனஸ்தாபங்களுடன் வாழும் தம்பதிகளும், பிரிந்த குடும்பத்தினரும் சங்கராந்தி தேவதா வழிபாட்டுப் பலன்களாக ஒற்றுமையுடன் வாழ்வர்.

கோழையறுக்கும் ஐயாற்றுப் பேழை!

2003ம் ஆண்டில் வாயில், தொண்டையில் கோழை சிக்கி மரணத்தைத் தழுவோர் நிறைய இருப்பர். சற்குருவை நிந்தித்தவர்களும், பொய் சொல்லிப் பிறரை ஏமாற்றியவர்களும், நல்ல வாக்சக்தியை இறையருளால் பெற்றும், நாத்திகராய் அரை குறை நம்பிக்கை கொண்டவராய் இறைவனைப் பழித்தோரும் இவ்வகை மரணத்தைப் பெறுவர். மிகவும் நல்லவராக வாழ்ந்திட்டாலும் இறையருளாலேயே ஒவ்வொரு நொடியும் வாழ்வதால் எப்போதும் இறை நாமத்தை ஜபிக்காததும் ஒரு குற்றம் தானே!

எனவே கடுமையான நோய்க்கு ஆளானோர் இவ்வாண்டில் அடிக்கடி அல்லது மூன்று முறையேனும் திருவையாறு ஐயாறப்பனை ஆராதித்து வருதல் வேண்டும்.

ஐயாறா ஐயாறா என அரனை அரற்றி அறிவீர்!

ஐயாறப்பா! ஐயாறப்பா! ஐயாறப்பா!
ஐயாறப்பா! ஐயாறப்பா! ஐயாறப்பா!

என அறுமுறை அறுகோடி வரையோதிட அரைக் கோழையும் மறைந்து திடச்சித்தம் ஆகுமே!

ஸ்ரீகருமுத்து பைரவர்

தீவினைகளை, தீயோரை மாய்க்கும் ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவர்

செய்நன்றி கொன்றவர்களும், நம்பிக்கைத் துரோகிகளும் ஆட்டம் போடும் ஆண்டே 2003ம் ஆண்டு! நம்பிக்கையுடன் ஒருவரிடம் அளிக்கப்படும் ரகசியங்களை, செய்திகளை, அறிக்கைகளை மாசு படப் பரப்பி ஆன்மீகத்திற்கும், சமுதாய சாந்தத்திற்கும் கேடு விளைப்போர் இவ்வாண்டில் பெருகுவர்! இதற்குரிய பயங்கரமான தண்டனைகளை அவர்கள் அனுபவிக்க வேண்டும். எனினும் இத்தீயவர்களிடம் இருந்து மக்கள் முதலில் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் அல்லவா!  இதற்கு உரித்தான தெய்வ சக்திகளை அளிக்கின்ற அரிய பைரவ மூர்த்தியே ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவர் ஆவார்.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

நல்லவர்களைக் காக்கின்ற அதியற்புத பைரவ மூர்த்தி! அரிதான த்ரயம்பக ருத்ர பைரவ சக்திகளைக் கொண்ட ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவ மூர்த்தி அருள்பாலிக்கின்ற தலங்கள் கலியுகத்தில் ஓரிரண்டே எனினும் அஷ்டமித் திதி தோறும் ஆலயங்களில் அந்தந்த பைரவ மூர்த்திக்கு ஜவ்வாது, கஸ்தூரி, கரிசலாங்கண்ணித் தைலம், புனுகு, கோரோசனை, அத்தர், குங்குமப்பூ, பசு நெய் ஆகிய எட்டும் கலந்த அஷ்டகாரோண்யக் காப்பு இட்டு வழிபட்டு வர அந்தந்த பைரவ மூர்த்தங்களில் ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவ சக்திகள் கூடிடும். இதுவே நம்பிக்கை துரோகிகளிடம் இருந்து நம்மைக் காக்கவல்லதாகும்.

"கருமுத்து பைரவா! காப்பாற்று!"

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் ஆ.தெக்கூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீதிருமேனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீஅகோர வீரபத்ர பைரவரின் ஆதிமூல நாமமே ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவர் ஆகும். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! நம்பிக்கை துரோகிகளிடம் இருந்து நல்லவர்களைக் காக்கும் அதியற்புத மூர்த்தி!

"கருமுத்து பைரவா!  இந்த நம்பிக்கை துரோகியிடம் இருந்து, பகைவனிடம் இருந்து எம்மைக் காத்தருள்!" என்று வேண்டி அஷ்டகாரோண்யக் காப்பு இட்டு வழிபட்டு எட்டு வகைக் காய்கறிகள் கலந்த உணவை இங்கு அன்னதானமாக அளித்து வரப் பகைமையை, துரோகத்தை மாய்த்து நல்லோரைக் காத்திடும் அதியற்புத பைரவ மூர்த்தி!

அஸ்தி கரைத்தல்

சடலத்தை எரித்த பின் எஞ்சும் அஸ்தியைப் பல புண்ணிய நதி, கடல் தீர்த்தங்களில் சேர்த்தலால் பல கர்ம வினைகள் கழிகின்றன! புண்ய சக்தியும் சேர்கின்றது!

அஸ்தி என்றால் இறந்தவருடைய உடலை தகனம் செய்த பின் எஞ்சும் எலும்புகளுடைய தகன எச்சங்கள் ஆகும். பிரேதத்தை எரியூட்டுகின்ற தகனக் கிரியைக்கு மறுநாள் உத்தரக் கிரியை வழிபாட்டின் ஒரு பகுதியாக, இறந்தவருடைய உடல் தகனத்தில் எஞ்சிய எலும்பு எச்சக் கரைசல்களைப் பொறுக்கி எடுத்து, பாலில் கரைத்து, தக்க வழிபாடுகள் செய்து கடல், புண்ய நதி தீர்த்தங்கள், மலை நீர் வீழ்ச்சிகளில் அஸ்தியைக் கரைப்பர். இதற்கு சஞ்சயனம் என்று பெயர். இதற்காகவே அக்காலத்தில் அஸ்தியை ஒரு துணி முடிச்சில் முடிந்து வைத்து காசி, அலகாபாத் போன்ற பித்ரு முக்தித் தலங்களுக்கு தல யாத்திரை செல்கின்ற வாய்ப்பு கிடைக்கும் போது, அஸ்தியை ஒரு மண் கலசத்தில் எடுத்துச் சென்று ஆங்கே புண்ணிய நதி தீரங்களில் கரைத்து, இறந்தவருக்கான உத்தம நிலைகள் கிடைக்குமாறு பிரார்த்தனை செய்து வழிபடுவர்.

ஸ்ரீஆட்கொண்ட நாயகர்
திருவையாறு

அக்காலத்தில் பிள்ளை குட்டி, பேரன்மார்களும், உண்மையான பாசம் கொண்ட உறவினர்களும் நிறைய இருந்தமையால் சஞ்சயனம் செய்த நாளன்றே புண்ணியத் தலங்களில் அஸ்தியைக் கரைக்கும் வைபவத்தை நிகழ்த்திட ஒரு உறவினர் குழுவே புறப்பட்டு விடும். இதை ஒரு மகத்தான சமுதாய சேவையாக அக்காலத்தில் நன்கு ஆற்றி வந்தனர்.

தற்போதும் கூட உண்மையான பித்ரு வழிபாடுகளை மேற்கொள்பவர்கள், காசி, கயா, இராமேஸ்வரம் போன்ற பல இடங்களுக்கும் செல்ல இயலாத ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு உதவுவதற்காகவே ஆங்காங்கே அஸ்தியைச் சேகரித்து குறித்த சில வழிபாடுகளுடன் பல புண்ய நதி, கடற்கரை தீர்த்தங்களிலும் கரைப்பதாகிய ஓர் அற்புதமான ஓர் சேவையை இலவசப் பெருந் தொண்டாகச் செய்து வருகின்றனர். இது மகத்தான புண்ணிய காரியமும் ஆகும்.

பல மயான இடங்களிலும் அஸ்தியைப் பாதுகாப்பு பெட்டகத்தில் வைப்பதற்கான வசதிகள் இருந்தாலும் இது ஏற்புடையதன்று. பலருடைய அஸ்திகளும் மாறிடவோ, மண், தூசு கலந்து மாசு பட்டிடவோ, கலப்படம் ஆகிடவோ நிறைய வாய்ப்புண்டு. எனவே இனியேனும் தியாகமய சேவை மனப்பான்மை உடைய சத்சங்கங்கள் இதற்கென ஒரு சேவை மையத்தை உருவாக்கி, பல முக்தித் தலங்களில் ஜாதி, மத, இன பேதமின்றி பலருடைய அஸ்தியையும் நன்முறையில் கரைக்கின்ற அரிய சமுதாய சேவையாக எடுத்துச் செய்து சிறப்பான புண்ணிய பலாபலன்களை ஈட்டிக் கொள்வார்களாக!

தகனத்திற்குப் பின் ஒரு மண்டல காலத்திற்குள் (48 நாட்கள்) இராமேஸ்வரம், பூவாளூர், நெடுங்குடி, காசி, கயா, பவானி, கோடிக்கரை போன்ற நதி, கடற்கரைத் தீர்த்தங்களிலும் அஸ்தியைக் கரைத்திடுதல் சிறப்பானதாம். இதற்காக 48 நாட்களுக்கு மேல் அஸ்தியை வைத்திருக்கக் கூடாது என்பதில்லை. இயன்ற வரையில் சீக்கிரமாக அஸ்தியை விஸர்ஜனம் செய்தல் இறந்தவருடைய பததேகத்திற்கு நன்மை பயப்பதாகும். சென்னை, இராமேஸ்வரம் போன்ற கடற்கரைத் தலங்களில் வசிப்பவர்கள் அன்றே அஸ்தியைக் கரைத்து விடலாம். இது நன்மை தருவதே!  முதலில் அருகில் உள்ள தலங்களில் கூடிய விரைவில் அஸ்தியைக் கரைத்து விட்டு, தொலைவில் உள்ள ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம் போன்ற இடங்களுக்குச் செல்வதற்காக இங்கு நாம் குறித்துள்ள முறையில் அஸ்தியைத் தனியாக பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.

இறந்தவருடைய ஆவியானது மூன்று பட்சங்களுக்கு உள்ளாக பல விண்வெளி லோகங்களைச் சந்திக்க வேண்டிய நியதிகள் உண்டு. எனவே மூன்று பட்ச காலத்திற்குள் (3 x 15 = 45 நாட்கள்) இந்த அஸ்தி கரைக்கப் பெறுமானால், இதனால் கூடும் புண்ய சக்தி அந்த ஆவிக்கு கிட்டுவதால் அதனுடைய அடுத்த உத்தம நிலைகளுக்கு இது பெரிதும் உதவிடும்.

அஸ்தியைப் பேணும் முறை

மிகவும் பழமையான சுரைக் குடுவையில் அஸ்தியை வைத்திருப்பது சிறப்புடையதாகும். பித்ருக்களுக்கு எப்பொழுதும் ப்ரீதியான வஸ்து சுரைக்காய் அல்லவா! வெற்றிலை, கண்டங்கத்திரியை வெயிலில் உலர வைத்து அஸ்தி முடிச்சுடன் சேர்த்து வைத்து அத்திப் பெட்டி, சுரைக்குடுவை, சந்தனப் பேழை, மஞ்சள் துணியில் அஸ்தியை முடிந்தும் வீட்டில் வைத்திடலாம். இதில் எந்த விதமான தவறும், தோஷமும் கிடையாது என்பதனை மீண்டும் வலியுறுத்திக் கூறுகின்றோம். நேற்று வரை அப்பா, அம்மா என்று போற்றி விட்டு இன்று உயிர் பிரிந்தவுடன் அஸ்தியை வீட்டில் வைத்திடலாகாது என்று கூறுவது உண்மையான அன்புப் பரிமாற்றம் ஆகுமா?

அஸ்தியை வீட்டில் வைப்பது "தீர்த்த விதானபட" வழிபாட்டின் ஓர் அங்கமாகும். ஆதலால் இதில் எவ்வித தோஷமும் ஏற்படாது. அக்காலத்தில் அஸ்தியை உடனடியாகவே பல தலங்களுக்கும் எடுத்துச் சென்று கரைத்திட்டமையால் இதுவே காலப்போக்கில் வீட்டிற்கு அஸ்தியை எடுத்து வரக் கூடாது என்ற தவறான செய்தியாக மாறி விட்டது. மேலும் அதே நாளிலேயே அஸ்தியை முழுவதுமாகக் கரைக்க வேண்டும் என்ற தவறான நியதியும் ஏற்பட்டு விட்டது. காசி, கயை போன்ற இடங்களுக்கு எப்போதாவதுதான் செல்ல இயலுவதால் இதற்கான அஸ்தியின் ஒரு பகுதியைத் தனியாக மேற்கண்ட முறையில் எடுத்து வைப்பதில் தவறில்லை.

வீட்டிலோ, மரத்திலோ உள்ள அஸ்தி முடிச்சிற்குத் தினந்தோறும் சந்தனம் அரைத்து இட்டு வழிபடவும். குறிப்பாக, எந்தத் திதியில் ஒருவர் இறந்தாரோ, மாதந்தோறும் அத்திதியிலும் அமாவாசையன்றும் கண்டிப்பாக அஸ்திக்குச் சந்தனம் வைத்து வழிபடுவது பித்ரு சாந்திக்கு உதவிடும்.

எரியூட்டு தரும் எச்ச வினைப் பாடம்

சஞ்சயனம் எனப்படும் மயானத்தில் எலும்பை பொறுக்கிப் பாலில் சேர்க்கும் கிரியையில் எந்த அளவிற்கு உடலின் எலும்பு பஸ்மமாகி உள்ளது என்பதை வைத்து ஒருவரின் கர்ம வினைகளை நிர்ணயிக்கும் சாஸ்திரங்களும் உண்டு. பொதுவாக எலும்பு நன்றாக பஸ்மமாகி இருப்பதுவே சிறப்பானதாம். உடலில் எந்தப் பகுதி சரியாக பஸ்மம் ஆகவில்லையோ அந்த அங்கம் மூலமாக நிறைய தீய கர்ம வினைகள் செய்யப்பட்டு அதிக அளவில் கர்ம வினை பாக்கிகள் சேர்ந்துள்ளன என்று அர்த்தமாகும்.

உதாரணமாக, முட்டிக் கால் எலும்பு சரியாக பஸ்மமாகவில்லை என்றால் அவர் கோயில் தரிசனம், முட்டிக்கால் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம்  போன்றவற்றை முறையாக நிறைவேற்றிடாது பாக்கியாக வைத்துள்ளார் என்றும், பலருக்கும் முறையாகக் காரியங்களை முடித்துத் தராது கால் கடுக்க நடக்க வைத்துக் கர்ம வினைகளைச் சேர்த்துக் கொண்டுள்ளார் என்றும் அறிதல் வேண்டும். இதற்கென இன்னும் பல விளக்கங்களும் உண்டு. தக்க பெரியோர்களை நாடி அறியவும்.

பொதுவாக மூட்டுக் கால் எலும்பு சரியாக பஸ்மம் ஆகாதோர்க்காக, அடுத்து வருகின்ற ஒரு பட்சத்திற்குள் இறப்புச் சடங்குகளில் (உத்தரக் கிரியை) ஊனமுற்றோருக்குத் தேவையான மூன்று சக்கர வண்டிகள், செயற்கைக் கால்கள் (ஜெய்ப்பூர் லெக்ஸ்) போன்றவற்றைத் தானமாக அளித்திட வேண்டும். மேலும் முருங்கைக் காய், புடலங்காய், பிரண்டை, காரட் வகைக் காய்கறி, உருளைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்ற கிழங்கு வகை உணவுகளையும் தானமாக அளித்து வந்தால் தான் மேற்கண்ட பல கர்ம வினைகளுக்கான பிராயச்சித்தங்கள் காட்டப் பெறும்.

கும்பகோணம் சக்கரப்படித்துறை

குடந்தை சக்கரப் படித்துறை ஓர் அற்புத உத்தமக் கிரியை பூமி!

கும்பகோணத்தில் உள்ள சக்கரப் படித்துறைக்கு அஸ்தியை எடுத்துச் சென்று தாமரை இதழ்களின் ஊடே அஸ்தியை வைத்துக் கரைத்து, அன்னதானம் அளித்து வருதலால் பலவிதமான கர்ம வினைகளிலிருந்து சந்ததியினர் தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம். குறிப்பாக, இறந்தவர் முறையற்ற செயல்களால் பலருடைய வாழ்வை நாசமாக்கியிருந்தால் அத்துன்பங்கள் பாதிக்காதிருக்க, கும்பகோணத்தில் உள்ள சக்கரப்படித்துறையில் தாமரை இலைகள், தாமரைப் பூக்களின் நடுவில் அஸ்தியைக் கரைத்து முறையான பித்ரு பூஜைகளைக் கடைபிடித்து பெருமளவில் தொடர்ந்து அன்னதானம் செய்து வருதல் வேண்டும். அஸ்தியைக் கரைத்த பிறகு குறைந்தது 24 ஏழைச் சுமங்கலிகளுக்குச் சுப மங்களப் பொருட்களைத் தானமாக அளித்தல் வேண்டும். இதனை இறந்தவருடைய ஒவ்வொரு வளர்பிறை மற்றும் தேய்பிறைத் திதிகளில் செய்திடல் வேண்டும்.

இராமேஸ்வரம் அக்னி தீர்த்தம்

இராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தத்தில் அஸ்தியைக் கரைத்திடும் போது நிறைய கற்பூரத்துடன் மிளகை வைத்து அஸ்தியைக் கரைத்தல் வேண்டும். பொதுவாக இறந்தவர் பெரிய பதவி அல்லது அதிகார தோரணைகளுடன் அகங்காரமாகப் படாடோபத்துடன் பிறருக்கு இம்சை தரும் வகையில் வாழ்ந்திருந்தாலும், பலருடைய மனமும் துன்புறும் வகையிலும் பேசி அல்லது ஏசி இருந்தாலோ இத்தகைய துன்பங்கள் சந்ததியினரைப் பாதிக்காமல் இருக்க இராமேஸ்வரத்தில் அக்னித் தீர்த்தத்தில் (கோயிலுக்கு எதிரே உள்ள கடற்கரைத் தீர்த்தம்) மேற்கண்ட அஸ்தி விஸர்ஜனத்துடன் பித்ருக்களை வழிபடுதல் வேண்டும்.

அஸ்தி கரைக்கும் நாளில் சீதாப் பழம், மிளகு ரசம், அல்லது மிளகுப் பொடி கூடிய உணவு, நுங்கு, இளநீர் பழவகைகள் போன்றவற்றை தானமாக அளித்து வருதல் வேண்டும்.

கோடியக்கரை

கோடிக்கரை தீர்க்கும் கோடி வினைகள்

வேதாரண்யம் அருகே கோடிக்கரைக் கடற்கரைத் தீர்த்தத்தில் அஸ்தியைக் கரைத்திடும் போது மஞ்சள் துணியுடன் வெள்ளை, சிவப்பு, பச்சை, நீலம் போன்ற ஒன்பது வண்ணத் துணிகளையும் சேர்த்து தண்ணீரில் இட்டு அஸ்தியைக் கரைத்திடல் வேண்டும். இன்று பலவகை வண்ணத் துணிமணிகளை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலானது இறந்தவர் செய்த முறையற்ற காமத் தீவினைகளினால் வரும் தீமைகள் சந்ததியினரைத் தாக்காமல் பாதுகாக்கும்.

கருச்சிதைவு, கருக்கலைவு, பிற குடும்பங்களின் நிம்மதியைக் கலைத்தல், குரோதம் கொண்டு பிறருடைய பணிகளுக்கும், வியாபாரத்திற்கும் துன்பம் விளைவித்தல் போன்ற  பலவிதமான கர்ம வினைகள் சந்ததிகளைப் பாதிக்காமலிருப்பதற்கான பரிகார வழிகளைப் பெற கோடிக்கரையில் அஸ்தி கரைத்து, பித்ரு வழிபாடு செய்து, அன்னதானம் அளித்தல் பெரிதும் உதவுவதாகும்.

காசியில் கரையும் கடலளவுக் கர்ம வினைகள்!

காசியில் 64 கங்கை கட்டங்களிலும் அஸ்தியை முறையாகக் கரைத்தலால் எண்ணற்ற கர்ம வினைகள் கழிகின்ற பாக்யத்தைப் பெறலாம். இதனால் தான் காசியில் அஸ்தி கரைத்தல் மிகவும் விசேஷமாக போற்றப்படுகின்றது. காசியில் 64 கட்டங்களிலும் அஸ்தியைக் கரைக்கும் போது 64 விதமான திரவியங்களைச் சேர்த்துக் கரைத்திடல் வேண்டும். எள், நவதானியங்கள், துளசி, வில்வம், மல்லிகை, தாமரை, அன்னம், கற்பூரம், மிளகு, நல்லெண்ணெய்த் தைலம், தங்கம், வெள்ளி, வைரம், முத்து, பவளம், பாதரசம், செப்பு, வலம்புரி, இடம்புரி போன்ற 64 விதமான பொருட்களை 64 கட்டங்களிலும் அஸ்தியுடன் சேர்த்துக் கரைத்திடல் வேண்டும். இவற்றிற்கெல்லாம் விசேஷமான மந்திரங்களுண்டு. தக்க சற்குருவை நாடிக் கேட்டுப் பெற்றுக் கடைபிடித்துப் பயன் பெறவும், இப்பகுதிகளில் பணத்தைப் பிடுங்கி ஏமாற்றுவது நிகழ்வதால் மிகவும் கவனத்துடன் செயல்படவும்.

வியாச காசி எனப்படும் கங்கைக்கு அடுத்த கரையில் உள்ள மிகவும் புனிதமான இடத்தில் வேதத்தின் அம்சமான முந்திரியுடன் சேர்ந்து அஸ்தியைக் கரைத்தல் விசேஷமானதாகும். இங்கு முந்திரியை இனிப்புகளுடன், உணவுடன் கலந்து தானமாக அளித்தலால் இறந்தவர் பொய், பித்தலாட்டம் செய்து ஏமாற்றியமையால் வந்த கர்ம வினைகள் சந்ததியைத் தாக்காதவாறு தற்காத்துக் கொள்ளலாம்.

ஸ்ரீஹஜ்ரத் மொஹமத் அலி ஷா ஜீவாலயம்
அலாகாபாத் இரயில் நிலையம்

பிரயாக் (அலகாபாத்) திரிவேணி சங்கமம்

பிரயாக் எனப்படும் அலகாபாத்தின் திரிவேணி சங்கமத்தில் அஸ்தியைக் கரைத்தலால் மிகவும் விசேஷமான பலன்கள் ஏற்படுகின்றன. திரிசடை (வேணி = சடைப் பின்னல்) என்பதான கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று முக்கியமான நதிகள் சங்கமம் ஆகுமிடமான திரிவேணி சங்கமத்தில் மூன்று தலை முறைகளிலும் ஒன்று சேர்ந்து பெருகி விட்ட பலவிதமான கர்மவினைகள் தீர்வதற்கான முறையான பரிகாரங்களைப் பெறுவதற்காகத் தர்ப்பண வழிபாட்டு முறைகள் நிறைய உண்டு. இங்கு நதிக்கரையில் உள்ள ஆலமரம் (அட்சய வட விருட்சம்) மிகவும் விசேஷமானதாகும். அஸ்திக் கலசத்துடன் இந்த அட்சய வட விருட்ச ஆலமரத்தை 108 முறை வலம் வந்து திரிவேணி சங்கமத்தில், இராமேசுவரம் அருகே தனுஷ்கோடியில் எடுக்கப்பட்ட மண், இராமேசுவரம் அக்னி தீர்த்தம் இரண்டையும் அஸ்தியுடன் சேர்த்துக் கரைத்தலால் மூன்று தலைமுறைகளில் சேர்ந்துவிட்ட பல கோடிக் கர்ம வினைகளுக்கான பிராயச்சித்தத்தைப் பெறும் மார்கமும் புலனாகும். இந்த அஸ்தி கரைத்தலின் போது குறைந்தது 300 பேருக்காவது அன்னதானம் செய்திடல் வேண்டும்.

அலகாபாத் இரயில் நிலையத்தில் எழுந்தருளி உள்ள ஸ்ரீஹஜ்ரத் மொஹமத் அலி ஷா (ஸ்ரீலைன் பாபா என்பது இவருடைய பிரசித்தமான நாமம்) அவர்களின் ஜீவ சமாதியை திரிவேணி சங்கம நீராடலுக்குப் பின் தரிசனம் செய்து இயன்ற தான தர்மங்களை இயற்றுவதால் அகால மரணம் அடைந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய உறுதுணையாக அமையும்.

ஸ்ரீராம்பரதேசி ஜீவாலயம் வில்லியனூர்

ஒருவர் வயிறு நிறையும் அளவிற்கு ஐந்து இட்லிகள் கூடிய பொட்டலம் கட்டி 300 பாக்கெட்டுகளை அளித்தலும் கூட சிறந்த அன்னதானமாக ஆகின்றது. அன்னதானத்தில் தாம், தான் கடைபிடிக்க மறந்த பலவிதமான பூஜைகள், கர்ம பூஜைகளுக்கான பரிகாரங்கள் அளிக்கப்படுவதுடன், செய்யாமல் விட்ட பூஜைகளுக்கென முந்தைய தலைமுறைகளில் இருந்து ஓரளவு பூஜா பலன்களையும் மீட்டுத் தருகிறது என்பதையும் உணர்ந்து கொள்ளுங்கள்.

கயை பித்ருக்களின் ஆன்ம பூமி!

கயையில் அஸ்தியைக் கரைத்தல் மிக மிக விசேஷமானதாகும். கயாசுர மகரிஷியின் திருமேனியில் திகழ்கின்ற தலமாதலால் இங்கு அஸ்தி கரைத்து வழிபடுதல் அனைத்துக் கோடி பித்ருக்களுக்கும், பித்ரு தேவதா மூர்த்திகளுக்கும் ஆசிகளைக் கொடுக்கவல்லதாகும்.

வாழை இலையில் தீபம் ஏற்றி கயாவில் உள்ள விசேஷமான பல்குனி நதியில் மிதக்க விட்டு அந்த இலையில் அஸ்தியை வைத்தல் வேண்டும். பொதுவாக முழங்கால் அளவே இங்கு நதி நீர் ஓடுதலால் பாக்யம் உள்ளவர்க்கே இவ்வகையான பரிகாரம் முழுமையாக கிடைக்கும். தினமும் 33 கோடி பித்ருக்கள் வந்து வழிபடுகின்ற தலமாதலால், இங்கு பித்ருக்களுடைய ஆசீர்வாதங்களை எளிதில் பெற்றிடலாம், ஆழ்ந்த நம்பிக்கையுடன் குருவருளுடன் பித்ருக் காரியங்களைக் கடைபிடித்தால்!

கயையில் அஸ்தியைக் கரைக்கும் போது செய்ய வேண்டிய முக்கிய தானமே கம்பளிப் போர்வை தானமாகும். ஒருவர் நன்கு உடல் முழுவதும் போர்த்துகின்ற வகையில் போர்வை நன்கு பெரிதாக இருத்தல் வேண்டும். இங்கு குறைந்தது 300 கம்பளிப் போர்வைகளைத் தானமாக அளித்திட, 33 கோடி பித்ருக்களின் ஆசிகளை பெற்றுத் தரக் கூடிய நல்வழிகள் பெரும் பாக்யமாகக் கிட்டும்.

ஸ்ரீகசவனம்பட்டி சித்தர் ஜீவாலயம்

துவாரகா ஸ்ரீகிருஷ்ணப் பிரகாச பூமி!

துவாரகா (குஜராத்) கடல் தீர்த்தத்தில் இங்கு அஸ்தியுடன் கருந்துளசி, துளசி மணி மாலை, நீல நிற வஸ்திரங்களுடன் சேர்த்து தாமிரம் அல்லது மரப் பாத்திரத்தில் வைத்து அஸ்தியைக் கடலில் கரைத்திடல் வேண்டும். தன்னுடைய குழந்தைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து பிறழ்ந்தமையால் ஏற்பட்ட கர்ம வினைகளைக் கழிக்க இது உதவும். சுயநலத்தால், குடும்பத்தார்க்குச் செய்ய வேண்டிய செயல்களைச் சரிவரச் செய்யாது கடனாளியாகி மாறித் துயருற்று இறந்தோர் பெருக்கிய கர்ம வினைகள் சந்ததிகளைப் பாதிக்காத வண்ணம் காத்திட இந்த "தாரா அஸ்திக் கரைசல்" வழிபாடு உதவுகின்றது. இங்கு நெய்யில் தயாரிக்கப்பட்ட தோசை, வெண்ணெய் பூசிய பிரட் மற்றும் வெண்ணெய் அடை, நெய் வகை உணவு வகைகளைத் தானமாக அளித்தலால் குறித்த பல துன்பங்களால் அவதியுறும் இறந்தோருடைய ஆவிக்குத் தக்க சாந்தி கிட்டும்.

கேடுகளை மாய்க்கும் கேதார்நாத் தர்ப்பண பூமி!

கேதார்நாத்தில் மந்தாக்னி ஆற்றில் அஸ்தியைக் கரைத்தல் வாழ்க்கையில் கிடைத்தற்கரிய பாக்யமாகும். இங்கு ஒரே வஸ்திரத்துடன் மந்தாக்னி ஆற்றில் மிகவும் கவனத்துடன் இறங்கி, எருமைப் பாலில் அஸ்தியைக் கரைத்து, ஆற்றில் கரைத்தலால் இதுவரையில் காணக் கிடைக்காத பல அபூர்வமான புண்ய சக்திகள் இறந்தவர்க்கும், சந்ததியினருக்கும் கிட்டும். குறிப்பாக, காணாமல் போய் தற்போது உயிருடன் இருக்கின்றார்களா, இல்லையா என்பது தெரியாமல் அவர்களுக்குத் தர்ப்பணம் இடுதல் வேண்டுமா, வேண்டாமா என்று புரியாமல் திகைப்போர்க்கு உண்மை நிலவரம் தெரிய வரும்.

மேலும் குரோதம், விரோதம், பகைமையுடன் இறந்து போன பெற்றோர்கள், சகோதர, சகோதரிகளுக்கு முறையாகத் தர்ப்பணம் செய்யா விட்டால் அதுவும் சந்ததியை பாதிக்கும் அல்லவா. எனவே கேதார்நாத்தில் இடப்படும் தர்ப்பணம் அதீத பித்ருப் புண்ய சக்தியைப் பெற்றுக் குடும்பத்தைக் காக்கும். எஞ்சி உள்ள தலைமுறையினராவது ஒன்று கூடி நன்கு வாழும் பாக்யம் பெறுவர்.

ருத்ரப்ரயாகை!

கேதார்நாத் செல்லும் வழியில் உள்ள ருத்ரப் பிரயாகையில் அஸ்தி கரைப்பது என்பது இலட்சத்தில் ஒருவருக்கு மட்டுமே கிட்டுகின்ற பாக்யமாகும். ஏனெனில் யாத்திரை செல்கின்ற படபடப்பில் பலரும் இவ்வரிய தலத்தை விட்டு விடுகின்றனர். இங்கு அஸ்தியைக் கரைக்கும் போது ஓரிரவு நீரில் ருத்ராட்சத்தை வைத்திருந்து மறுநாள் அந்நீரில் பச்சைக் கற்பூரம் சேர்த்து இதில் அஸ்தியைக் கூட்டி ருத்ரப் பிரயாகை ஆற்றில் கரைத்தல் வேண்டும். சுரைக்காய், புடலங்காய் வகை உணவினை குடை, பாதணிகள், கைத்தடிகளுடன் தானமளிக்க வேண்டும்.

இத்தகைய விசேஷமான தர்ப்பணச் செய்திகளை அறிந்து பலருக்கும் எடுத்துரைத்து இனியேனும் உங்கள் குடும்பத்தில் அஸ்தியைத் தக்க முறையில் பாதுகாத்து வைத்திருந்து, பல தலங்களிலும் அஸ்திக் கரைசல் வழிபாடுகளை மேற்கொண்டு தக்க பிராயச்சித்தங்களையும், பரிகாரங்களையும் பெற்றிடுக!

பெயர் சிறப்புத் தலம்

1. இராமனதீஸ்வரம் (திருக்கண்ணபுரம்)
2. திருநின்றவூர் ஸ்ரீராமர் ஆலயம்

ராமன், ரகுராமன், கல்யாணராமன், வேதராமன், பலராமன், ராமகிருஷ்ணன், ராம், ராமானுஜம், ராமநாதன், ராமச்சந்திரன், கோதண்டராமன், ஸ்ரீராம், ஜானகிராமன், ரகு, ரகுவரன், ரகுநாதன், ஜெயராமன், சீதாராமன் போன்ற "ராமன்" வகைப் பெயரை உடையவர்களுக்கான ஆலயம்.

(அவரவர் பெயருக்குரிய மூல பீஜ அட்சர சக்திகளுக்கு ஏற்ப, சித்தர்களின் ஞானபத்ர கிரந்த தேவ வாக்கியங்களின் படியான பெயர்ச் சிறப்புத் தலங்களை இத்தொடரில் அளித்து வருகின்றோம். கும்பகோணம் நன்னிலம் திருப்புகலூர் அருகே, பிரசித்தி பெற்ற திருச்செங்காட்டாங்குடி அருகில் திருக்கண்ணபுரம் எனப்படும் ராமனதீஸ்வரம் உள்ளது. பலரும் அறியாத சுதை ரூபத்திலான ஸ்ரீராமர் மூலவராகும் ஆலயம், சென்னை அருகே திருநின்றவூர் பெருமாள் ஆலயத்திற்குப் பின்புறம் ஏரிக்கரை அருகே உள்ளது)

ஸ்ரீதிருக்கண்ணபுரம்

ராமன், ராமா, ராம் என ராம் வகைப் பெயர்களில் ஜ்வலிக்கின்ற "ராம" நாம சக்தி அளப்பரியது! நாவால் ஒலித்தாலே உடல், உள்ளம், மனம், பரவெளிக்குப் புனித சக்திகளைப் பாய்ச்சும் இறை வல்லமை கொண்டதே ராமநாமப் பெயர்களாகும்.

ராமன் வகைப் பெயர்களை உடையோர் ஒரு யுகத்தில் ராமராஜ்யக் கோசலை வாசிகளாக வாழ்ந்திருப்பதையே குறிக்கின்றது. "ராம" நாம வகைப் பெயருடையோர் நவமித் திதியிலும், புனர்பூச நட்சத்திர நாளிலும், புதன், சனிக்கிழமைகளிலும் கண்டிப்பாக ஸ்ரீராமரைத் தரிசித்தாக வேண்டும்.

ஸ்ரீராம நவமித் திருநாளில் மட்டுமல்லாது மாதந்தோறும் புனர்பூச நட்சத்திர நாளிலும், பட்சந்தோறும் நவமித் திதியிலும் இவர்கள் பரிபூரணமாக விரதமிருந்து பானகம் படைத்து ஏழைகளுக்குத் தானமளித்தலால் ராம நாம சக்திகள் திரளும். இதனால் தீர்க தரிசனமும் கிட்டும்.

ராமன் வகைப் பெயருடையோர்க்கு உரித்தான தலங்களில் இரண்டை இங்கு அளிக்கின்றோம். கும்பகோணம் நன்னிலம் அருகே உள்ள திருக்கண்ணபுரம் எனப்படும்  ஸ்ரீராமனதீஸ்வர சிவலிங்கத்தை நவமியிலும் புனர்பூசத் திருநாளிலும் ஸ்ரீராமர் அபிஷேகித்து லிங்கத் திருமேனியில் ஜோதி தரிசனம் பெற்றார். மிகவும் சக்தி வாய்ந்த ராமர் தீர்த்தம் உள்ள தலம். ஸ்ரீராமரே கட்டியணைத்துப் பூஜித்த பெரிய லிங்கத் திருமேனி!

இரண்டாவதான திருநின்றவூர் தலமானது சென்னை அரக்கோணம் இடையே உள்ளது. இங்கு ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் மற்றும் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயங்கள் உள்ளன! ஆனால் பலரும் அறியா வகையில் சுதை ரூபத்திலான ஸ்ரீகோதண்டராமர் அருள்பாலிக்கும் ஆலயம் அருகிலேயே ஏரிக் கரையில் உள்ளது. சுதை ரூப மூர்த்தி என்றாலே ஆதி காலத்ததாக தெய்வ சக்தி திரண்டெழுமன்றோ!

மேற்கண்ட இரண்டு தலங்களிலும் ராமநாம சங்கீர்த்தனம் மிளிரும்படி நாம சங்கீர்த்தனம், கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்தல் மகத்தான ராம நாம ஜப சக்தியை அளிக்கக் கூடியதாம். புனிதமான கற்புத் தன்மையை அளிக்கக் கூடிய பொன் மாங்கல்யம், மஞ்சள், வளையல்கள், மெட்டிகள் குங்குமம் போன்றவற்றைச் சிறிய அளவிலாவது தங்கள் வசதிக்கு ஏற்ப வாரந்தோறும் இங்கு ஏழைகளுக்குத் தானமளிப்பதால் உலகில் நல் ஒழுக்க சக்திகள் பெருகி, சமுதாயத்தில் சாந்தம் நிலவும்.

ராமனதீச்சரம் திருக்கண்ணபுரம்

பிரபஞ்சமெங்கும் ராமநாம தாரக மந்திரமே எளிமையான மந்திரமாக விண்வெளியில் பரவி இருக்கின்றது. இதனை கிரகித்து பூலோக வாழ்விற்குப் பயன்படும் வண்ணம் ராமன் வகைப் பெயருடையோர் ராமநாம பூஜைகளை நிகழ்த்தி வருதலால் உலகெங்கும் இறை அமைதியைப் பரப்பிட ஒரு சிறு இறைக் கருவியாய்ச் செயலாற்ற முடியும்.

இவ்வாலயங்களில் ராமன் வகைப் பெயருடையோர் அடிக்கடி வழிபடுவதுடன் புதன், சனி, நவமி மற்றும் புனர்பூச நட்சத்திர நாட்களில் ஹோம வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகளையும் கடைபிடித்திட வேண்டும்.

சங்கராந்தி

சங்கராந்தி தேவதைகளின் மகிமை
சுவாமி மலையே (சங்கராந்தி) மாதப் பிறப்பு பூஜைத் தலமாம்

சங்கராந்தி என்பதற்குப் பலவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு மாதமும் சூரிய பகவான் ஒவ்வொரு ராசியிலும் தோன்றுகின்ற விசேஷமான மாதப் பிறப்புத் தினத்திற்கு சங்கராந்தி என்று பெயர். இவ்வாறு சித்திரை முதல் பங்குனி ஈறாக 12 மாதப் பிறப்பிலும் சூரிய பகவான் அந்தந்த ராசியில் நுழைகின்ற நாளே மாத சங்கராந்தி தினமாகின்றது. எந்தக் கிழமையில் எந்த ராசியில் சூரியன் உதிக்கின்றாரோ அதைப் பொறுத்து அந்த சங்கராந்தியின் பெயர் அமைகின்றது. இவ்வாறு தமிழ் வருடத்திற்கு 12 சங்கராந்திகள் உண்டு! அற்புதமான மகர ராசியில் சூரியன் உதிக்கும் மாதமே தை மாதமாகும். தற்கால வழக்கத்தில் தை மாதத்திற்கான மகர சங்கராந்தி தேவதைகளின் பெயர்கள் மட்டுமே அந்தந்தக் கிழமைக்கு ஏற்றாற்போல் மாறுவதாக அமைத்து இருக்கின்றார்கள்.

சித்ரபானு ஆண்டிற்கு உரிய மகர சங்கராந்தி மூர்த்தியே ஸ்ரீகோரா மூர்த்தி ஆவார்.

சுவாமிமலை ஸ்ரீவரதராஜர் ஆலயம்

சங்கராந்தி மூல மூர்த்தி ஸ்ரீராஜகோபால சுவாமி!

புராண காலந்தொட்டு, சங்கராந்தி பூஜைக்கான மகத்தான தலங்களுள் ஒன்றாக விளங்குவதே சுவாமி மலை ஸ்ரீவரதராஜர் ஆலயமாம்! ஆனால் காலப்போக்கில் மனித சமுதாயம் இவ்வாலயத்தின் சிறப்பினை மறந்து விட்டது. அனைத்து சங்கராந்தி தேவதைகளையும் ஆதிகாலம் முதல் தோற்றுவித்துக் காத்து ரட்சிப்பவரே இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீராஜகோபாலப் பெருமாள் மூர்த்தி ஆவார். எனவே ஒவ்வொரு மாதப் பிறப்பாகிய பிரதி மாத சங்கராந்தியை (மாதப் பிறப்பை) சுவாமிமலையில் ஸ்ரீவரதராஜர் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள், தர்ப்பணம், பித்ரு ஹோமம், பித்ரு சாந்தி ஹோமங்களுடன் கொண்டாடுதல் சிறப்புடையதாகும்.

கலியுகத்தில் சங்கராந்திப் பூஜா பலன்கள் பலவிதமான கர்ம வினைகளைப் போக்கும் சக்திகளைக் கொண்டிருப்பதால் இவற்றின் பலாபலன்களை யாவரும் பெற்றிட மகத்தான சமுதாய பூஜையாக சுவாமிமலை ஸ்ரீவரதராஜர் ஆலயத்தில் இதனைக் கொண்டாடிட வேண்டும்.

கலியுலகில் பல ஆலயங்களிலும் சங்கராந்தி (மாதப்பிறப்பு), கிரிவலம், கும்ப பூஜை, சிவபாத பூஜை, அர்த்த ஜாம கால பைரவ பூஜை போன்றவை முறையாக நடைபெறுவதில்லை. இவற்றில் பக்தர்கள் பங்கு கொண்டு, எடுத்து நடத்திட்டால் சமுதாயத்தில் குற்றங்களும், குறைகளும் தாமாகவே மறையும். இவை முறையாக நடைபெறாவிடில் கால தோஷங்கள் ஏற்பட்டுக் காரியத் தடங்கல்கள், விபத்துகள், கடன் துன்பங்கள், காலதாமத நஷ்டங்கள், வன்முறைகள், திருட்டுக் கொள்ளைக் குற்றங்கள் ஏற்படுகின்றன. இவற்றை மாத சங்கராந்தி பூஜைகளால் அறவே களைந்திடலாம். மாத சங்கராந்தி பூஜைக்கு மாதப் பிறப்பு பூஜைக்குரிய அடி பிரதட்சிண, தர்ப்பணத் தலமாக சுவாமிமலை ஸ்ரீவரதராஜர் ஆலயம் திகழ்கின்றது.

ஸ்ரீவரதராஜப் பெருமாள் சுவாமிமலை

வட பாரதப் பகுதியில் ஒவ்வொரு மாதப் பிறப்பன்றும் மாத சங்கராந்தியாக காசி, கயா, அலகாபாத், திருவேணி சங்கமம் போன்ற முக்கியமான பித்ரு முக்தித் தலங்களில் நீராடுதலும், தர்ப்பணம் அளித்தலும் விசேஷமாக நடைபெறுகின்றது.

இது தவிர மாத சங்கராந்தி தோறும் திருச்சி லால்குடி அருகே உள்ள பூவாளூர் (தென்னிந்திய கயா), ராமேஸ்வரம், நெடுங்குடி, திருவிடைமருதூர், கோயில்பத்து போன்ற தலங்களுக்கும் சென்று ஆங்காங்கே தர்ப்பணம் அளித்தல் மிகவும் சிறப்புடையதாகும்.

சங்கராந்தி தேவதைகள் தரும் நல்வரங்கள்

ஒவ்வொரு தமிழ் ஆண்டிற்கும் உரிய சங்கராந்தி தேவதைகள் உண்டு. சங்கராந்தி தேவதை தை மாதத்தில் இப்பூவுலகை வலம் வருவதாக நாம் பஞ்சாங்கத்தில் கண்டாலும் அந்தந்த யுகத்திற்கு, நிலப்பகுதிக்கு ஏற்ப அமைகின்ற வருடப் பிறப்பின் முதல் நாளிலேயே சங்கராந்தி தேவதைகள் உற்பவிக்கின்றார்கள். அவர்கள் ஒவ்வொரு மாதப் பிறப்பிலும் சங்கராந்தி சக்திகள் நிறைந்த திருத்தலங்கள், ஆறுகள், மலைத் தலங்களில் ஈஸ்வரனைப் பூஜித்து ஹரிசங்கர்ஷண சக்திகளை நமக்கு அளிக்கின்றார்கள்.

மழைப் பொழிவு, நிலவளம் நன்முறையில் அமைதல், நட்சத்திர மற்றும் கிரஹண சக்திகள் பூலோகத்தைச் சீராக அடைதல், தேவையான அளவில் வெப்பம், குளுமை, பனி ஏற்படுதல் இவ்வாறாக நம்முடைய தினசரி வாழ்விற்குத் தேவையான அனைத்து விதமான இயற்கைச் சூழ்நிலைகளையும் சங்கராந்தி தேவதைகள் தாம் உருவாக்கித் தருகின்றார்கள்.

ஆனால் சங்கராந்தி தேவதா மூர்த்தி வழிபாடு, விளக்கங்கள் மற்றும் உருவத்தைப் பற்றி இன்று நாம் பஞ்சாங்கங்களில் மட்டுமே காண முடிகின்றது. சித்ரபானு ஆண்டு விஷ்ணுபதிப் புண்ய காலத்திலிருந்து சங்கராந்தி தேவதை வழிபாடுகளைப் பற்றி ஸ்ரீபாலேந்திர மஹரிஷி என்பார் சூக்கும வடிவில் எடுத்துரைக்கின்றார். மத்துவரசித் தலமாக விளங்குகின்ற சுவாமிமலை ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயத்தையே சங்கராந்தி தேவதைகளுக்கு உரித்தான ஆலயமாக ஸ்ரீபாலேந்திர மஹரிஷியே உரைக்கின்றார்.

ஸ்ரீவரதராஜப் பெருமாள் ஆலயம்
சுவாமிமலை

ஸ்ரீகோரா மூர்த்தியின் திரு உருவ வழிபாடு!

எனவே வசதியுள்ளோர் பஞ்சாங்கத்தில் உள்ளபடி சங்கராந்தி தேவதையின் உருவத்தை வண்ண ஓவியமாக ஆலயத்தில் வைத்து அந்தந்த ஆண்டுக்கு உரித்தான சங்கராந்தி மூர்த்தியை வழிபடுவதற்கு இங்கு தெய்வீக நற்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இங்குள்ள ஸ்ரீராஜகோபால மூர்த்திதான் பிரபஞ்சத்தின் அனைத்து சங்கராந்தி தேவதைகளுடைய அதிபதி ஆவார். இவருடைய பரிபாலனத்தில் தான் 60 தமிழ் ஆண்டுகளின் சங்கராந்தி மூர்த்திகள் உற்பவிக்கப்படுகின்றனர். இவர்கள் வராஹி அம்பிகையிடமிருந்து தக்க உபதேசங்களைப் பெற்று, பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அருள்பாலிக்கின்றார்கள். எனவே சித்ரபானு ஆண்டிற்கு உரித்தான சங்கராந்தி மூர்த்தியான ஸ்ரீகோரா மூர்த்தியின் உருவத்தை நன்கு அறிந்து அதை வண்ண ஓவியத்திலோ, திரைச்சீலையிலோ, சுதையாகவோ, சிற்பமாகவோ, சிலை வடிவாக அமைத்து ஸ்ரீராஜகோபால சுவாமியின் அனுகிரஹத்துடன் பலரும் வழிபட ஆவன செய்து வருதல் வேண்டும். வண்ண ஓவியமே சங்கராந்தி தேவதா மூர்த்திக்குப் ப்ரீதியானதாகும்.

சுவாமிமலை சங்கராந்தி தேவதா மூர்த்தி உற்பவிப்புத் தலம்

சங்கராந்தி தேவ மூர்த்திகள் உற்பவிக்கின்ற முக்கியமான தலங்களுள் ஒன்றாக சித்புருஷர்கள் சுவாமிமலை ஸ்ரீமத்துவரதப் பெருமாளின் ஆலயப் புனித பூமியைச் சித்தர்கள் நிர்ணயித்து இதன் தாத்பர்யங்களை விளக்குகின்றார்கள். இங்குள்ள ஸ்ரீராஜகோபால மூர்த்தி மிகவும் பழைமையான மூர்த்தி! மிகவும் சக்தி வாந்தவர்! பித்ருக்களே ஓடோடி வந்து வழிபடுகின்ற தெய்வமாதலின் அமாவாசை, சங்கராந்தி நாட்களில் பூஜிக்கப்பட வேண்டிய மூர்த்தி! கடன் தொல்லைகளால் அவதியுறுவோர் செவ்வாய், சனி, சங்கராந்தி (மாதப் பிறப்பு), அமாவாசை நாட்களில் பூஜித்து ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமம், ஆழ்வார் பாசுரங்களைப் பாடி நிவாரணம் பெற வேண்டிய தலம்!

ஒவ்வொரு சங்கராந்தி தேவர்க்கும் உரித்தான நாமம் (பெயர்), வர்ணம், வஸ்திரம், ஆபரணம், சந்தன வகை, ஸ்நான வகை, புஷ்பம், பாத்திரம், நைவேத்ய வகை, ஆயுதம், வாகனம், குடை, பலாதி அம்சங்கள், சாமரம், வாத்தியம், கலை வகை, தூப வகை, முக அம்சங்கள், நடன கதி, சித்தி, திசை, பட்ச நேரம், திதி நேரம், நட்சத்திர நேரம், யோக நேரம், கிழமை, காலம், லக்னம் போன்ற பல அம்சங்கள் உண்டு. இந்த அம்சங்களைக் கொண்டு அந்தந்த ஆண்டிற்கான மகர சங்கராந்திப் பலன்களை பஞ்சாங்கப் படனத்தில் சேர்த்து வாசிப்பார்கள். சித்திரை மாதத்தில் வருடப் பிறப்பு ஏற்படுகின்றதே, ஆனால் மகர சங்கராந்தி தேவதை என்பது மகர மாதமாகிய தை மாதப் பிறப்போடு சேர்ந்ததாக 10 மாதங்களுக்குப் பிறகு வருட இறுதியில் வருவதாக அல்லவா பஞ்சாங்கப்படி இருக்கின்றது என்று கேட்கத் தோன்றும்.

ஸ்ரீவராகி அம்மன் சுவாமிமலை

ஆம்! மகர சங்கராந்தி தேவ மூர்த்தி உற்பவிப்பது தமிழ் வருடப் பிறப்பின் போது என்றாலும், பூலோகத்தில் மகர சங்கராந்தி தேவ மூர்த்தி தூல, சூக்கும, காரண, காரீய வடிவில் காட்சி தருகின்ற பரிபூர்ணமான நாளாக மகர சங்கராந்தி தினம் (தை மாதப் பிறப்பு) விளங்குகின்றது.

எனவே கால பைரவ மூர்த்தியின் கர்ண லோகங்களிலிருந்து உற்பவிக்கின்ற அந்தந்த ஆண்டிற்கான மகர சங்கராந்தி தேவ மூர்த்தி, வருடப் பிறப்பின் போது உற்பவித்தாலும் பல யோக, தியான கட்டங்களில் லயித்து, பரிபூரணமித்து பூலோக ஜீவன்களுக்குக் காட்சி தருவது மகர சங்கராந்தியின் போதுதான் ஆகும்.

சித்திரை முதல் பங்குனி வரை பன்னிரெண்டு மாத சங்கராந்திகள் இருக்கும்போது மகர சங்கராந்தியாக தை மாதப் பிறப்பு சங்கராந்தி மட்டும் பிரசித்தம் பெறுவது ஏன்?

சங்கராந்தி பைரவ லோக தேவ கால அம்சமே!

சங்கராந்தி என்பது பைரவ லோகக் காலக்கிரமங்களுள் ஒன்றாகும். எவ்வாறு பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை மாதம் தலைமை வகிக்கின்றதோ, எவ்வாறு ஏழு கிழமைகளில் சூரிய பகவான் ஞாயிற்றுக் கிழமைக்கு உரியவராகத் தலைமை பீடத்தைக் கொள்கின்றாரோ இதே போல கால சங்க்ரமணங்களில் மகர சங்கராந்தி மூர்த்தியே சங்கராந்தி மூர்த்திகளுக்கு அதிபதியாக விளங்குகின்றார். மேலும் அக்காலத்தில் வருடப் பிறப்பு என்பது தை மாதத்தில் தான் இருந்தது. திருஅண்ணாமலைப் பகுதிகளில் இன்றைக்கும் கார்த்திகை மாதம் முதல் தேதியைத்தான் வருடப் பிறப்பாக வைக்கின்ற வழக்கம் நிலவுகின்றது. எனவே சங்கராந்தி தேவ மூர்த்திகளுக்கு அதிபதியாக விளங்குகின்ற மகர சங்கராந்தி மூர்த்தி தூல காரண வடிவில் தோன்றும் தை மாதப் பிறப்பை சுவாமி மலையில் நடப்பு சித்ரபானு ஆண்டில் ஸ்ரீகோரா சங்கராந்தி மூர்த்தி வழிபாடாக, தக்க வண்ணப் படம் வைத்து பூஜித்து சகல சௌபாக்யங்களையும் பெறுவோமாக!

இனியேனும் மாத சங்கராந்தி தேவதா வழிபாட்டினை முறையாக மலரச் செய்து மனித சமுதாயத்தில் புரையோடிக் கிடக்கும் கேடுகளுக்குத் தக்க தீர்வுகளைப் பெறுவோமாக.

ஸ்ரீகோரா மூர்த்திக்கு புன்னை மரப் பாதம் வைத்து சிங்க வாகனம் அமைத்திடுக! அருகில் ஏதேனும் ஒரு ஸ்படிகம் வைத்து மரப் பாதத்தினை அகில் கலந்த தூய நீரால் அபிஷேகித்து, வெண்ணெய்க் காப்பிட்டு, கஸ்தூரி கலந்த சாம்பிராணி தூபம் இட்டு வழிபடவும், பிரசாதமாக சிகப்பு நிறப் பண்டங்களை, திரவியங்களைப் படைத்திடவும்.

பூரம் நட்சத்திர தலம்

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம்

புதுக்கோட்டை திருவரங்குளம் ஸ்ரீஹரி தீர்த்தேஸ்வரர் சிவாலயம்

இந்த நட்சத்திர ஆலயத் தொடரில் சித்தர்களின் ஞான பத்ர தேவ வாக்கியங்களில் உள்ளபடி, அந்தந்த நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் வாழ்நாளில் வழிபட வேண்டிய ஆலயங்கள் பற்றி சித்தர்கள் அருள்கின்ற அபூர்வமான, அற்புதமான விளக்கங்களை அளிக்கின்றோம்.

இதுவரையில் அசுவினி, பரணி, கார்த்திகை, ரோஹிணி, திருவாதிரை, ஆயில்யம், அனுஷம், உத்திரம், சித்திரை, ரேவதி, அவிட்டம் ஆகிய நட்சத்திர ஆலய விளக்கங்கள் வெளி வந்துள்ளன.

திருவரங்குளம்

பூரம் தீர்த்தம் என்பது அக்னி லோகத்தில் உள்ள ஒரு புனிதத் தீர்த்தமாகும். பூராக்னியில் தவம் பூண்டு சிவதரிசனங்கள் அனைத்தையும் பெறும் பாக்யம் ஆடிப்பூர அம்மனுக்கு ஆடி மாதப் பூர நட்சத்திர லோகத்தில் முக்கியமான ஏழு தீர்த்தங்கள் உண்டு. சிவ தீர்த்தம், ஞான பிரம்ம தீர்த்தம், ஸ்கந்த தீர்த்தம், ஸ்ரீதீர்த்தம், குரு தீர்த்தம் ஆகிய ஏழு முக்கியமான தீர்த்தப் படாகங்கள் உண்டு. இவை ஏழும் ஒரே சமயத்தில் கண்களுக்குப் புலனாவதில்லை. ஒன்றில் முறையாக நீராடினால் தான் அடுத்த தீர்த்தம் புலப்படும். இவ்வகையில் முதல் ஐந்து தீர்த்தங்களில் பூர நட்சத்திர நாளில் நீராடுவோர்க்குத்தான் குரு தீர்த்தப் பாதை தென்படும். குருவருளுடன் இதன் வழியே நீரஜ தள யோகம் பயின்று செல்வோர்க்கே குருதீர்த்த தரிசனம் கிட்டும். எனவே தீர்த்த சம்பந்தம் உடையவர்கள் ஆதலால் பூர நட்சத்திரத்தினர் அடிக்கடி புனிதத் தலத் தீர்த்த நீராடல்களை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வரிய ஏழு தீர்த்தங்களையும் தரிசிக்கும் வல்லமை பெற்றவர்களே பூர நட்சத்திரத்தில் பிறக்கின்றனர். இறையருளால் இத்தகைய ஏழு தீர்த்தங்களையும் கொண்ட திருக்கோயிலாக விளங்கும் புதுக்கோட்டை அருகே உள்ள திருவரங்குளம் ஸ்ரீஹரிதீர்த்தேஸ்வரர் ஆலயமே பூர நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுட்காலத்தில் வழிபட வேண்டிய தலமாக சித்தர்கள் போற்றுகின்றனர்.

பூரம் நட்சத்திரத்தவர்கள் தம் பிறந்த நாள், பிறந்த நட்சத்திர நாள், மாதாந்திர நட்சத்திர நாள் ஆடிப்பூரம், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களிலும், வாழ்க்கையில் அடிக்கடியும் வழிபட வேண்டிய சிறப்பான தலமிது.

காய்கறிகளும் நாமும்

தேவ சக்திகளைத் தரும் காய்கறிகள்

ஏதோ கடைக்குச் சென்றோம், கிடைத்த காய்கறிகளை வாங்கினோம், திரும்பி வந்தோம், சமைத்தோம், உண்டோம் என்று எத்தனை நாள்தான் ஜீவித தேவ ரகசியம் புரியாமல் இயந்திர கதியாக வாழ்ந்து கொண்டிருப்பது? ஸ்ரீசாகம்பரி தேவியே பிரபஞ்ச இயக்கத்திற்காகத் தாவரங்களைப் படைத்திட்டாள். அம்பிகை படைத்திட்ட லட்சக்கணக்கான தாவரங்களில் மனிதன் காய்கறிகள், கீரைகள், கனிகளாக உண்பது மிக மிகச் சொற்ப சதவிகிதம் தான்!

மனித சமுதாயத்திற்குக் காய்கறிகள் உணவாக அமைய வேண்டும் என்பதற்கு மட்டும்தானா இறைவன் காய்கறிகள், கனிகளைப் படைத்தான்? சற்றே ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்! மனித வாழ்வில் காய்கறிகளின் முக்கியமான பங்கு யாதெனில் தேவ சக்தி தரும் சாதனமாக மனித தேகத்தின் 72000 நாடிகளையும் பூம்ய சக்தியில் திளைக்க வைத்து லௌகீகத்தையும் ஆன்மீக நெறியில் முறைப்படுத்துவதாகும்.

மனிதன் இருவிதமான வாழ்க்கை நிலைகளைக் கொண்டு வாழ்கின்றான். ஒன்று தெய்வீக வாழ்க்கை, மற்றொன்று லௌகீக (சுகபோக) வாழ்க்கை. நம் முன்னோர்கள் தம் வாழ்க்கையை முழுவதுமாகவே தெய்வீகமாக்க முயற்சித்து வாழ்ந்து சிறந்தனர். தற்காலத்திலோ தெய்வீகத்தை விட்டு வெகு தூரம் விலகிப் போகின்ற போக, அவல வாழ்க்கையே தலைதூக்கி நிற்கின்றது.

வேண்டாமை வேண்டாமே!

தின்ற காய்கறிகளையே தினமும் தின்று கொண்டிருக்காமல் இது பிடிக்காது, இது கசக்கும், இது ஒத்துக் கொள்ளாது, இது விலை அதிகம் என்றில்லாது அனைத்து வகைக் காய்கறிகளையும், கனிகளையும் உண்ணப் பழகிக் கொண்டால் தான் நம் வாழ்நாளில் காய்கறிகள் மூலமாகக் கிட்டும். அனைத்து வகை தேவ சக்திகளையும் நாம் பெற்றிட முடியும். உதாரணமாக, சுரைக்காய், பேரிக்காய், சீதாப்பழம், தட்டப்பயிறு, மங்குஸ்தான் பழம், கரிசலாங்கண்ணிக் கீரை போன்றவற்றைப் பலரும் பல மாதங்களாகத் தொட்டதே கிடையாது! பலருக்கும் இவற்றை உண்டு பல வருடங்கள் கூட ஆகியிருக்கும்! இதனால் இவற்றின் மூலம் கிட்ட வேண்டிய தேவ சக்திகள் ஆயுள் முழுவதுமோ, பல ஆண்டுகளுக்கோ கிட்டாமலேயே போய் விடும். இதனால் இவை தரும் சாகம்பர்ய தேவ சக்திகளால் கழிய வேண்டிய கர்ம வினைகளும் தீராது அப்படியே தங்கி நோய்கள், கடன்கள், சந்ததித் துன்பங்களாக மாறி விடும்.

ஸ்ரீபோடா சுவாமிகள் ஜீவாலயம்
காஞ்சிபுரம்

விரதத்தில் விளையும் காய்கறிகளின் தேவ சக்திகள்

எனவே நாம் அனைத்துக் காய்கறிகளுக்கும் உரிய தாவர தேவதைகளின் அனுகிரகத்தைப் பெற வேண்டித்தான் யுகாதியில் வேப்பம் பூப்பச்சடி, பொங்கலில் கரும்பு, தீபாவளியன்று கிழங்கு உணவுகள், மார்கழியில் திருவாதிரைக் களி, அமாவாசையில் புடலங்காய் என்றவாறாக, அந்தந்த அயன, ருதுக் காலத்தில் உடலுக்குத் தேவையான சக்திகளைத் தரவல்ல காய்கறிகளை, கனிகளை விரதங்கள், பண்டிகைகள் மூலமாக நம் பெரியோர்கள் விதித்துத் தந்துள்ளனர். ஆனால் கேதார கௌரீ, மங்கள கௌரீ போன்ற விரதங்கள், பண்டிகைகளையும் நாம் கை விட்டமையால் இதன் பலாபலன்களும் கிட்டாது மனித சமுதாயமே துன்பக் கடலில் மூழ்கிக் கிடக்கின்றது.

மன மாசு நீக்கும் மாசிக்காய் அறிவீரோ?

நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் ஓர் அற்புதமான மூலிகை வித்தான மாசிக்காய், வயிற்றுப் புண், வாய்ப் புண்களை ஆற்றுவதுடன் வயிற்றுக் கோளாறுகள் வராமலேயே தடுக்கும் சக்தியைக் கொண்டதாம். மன அழுக்கை நீக்கி, மன சுத்தி, மன சாந்தியையும் தர வல்லது. மாசிக்காயைச் சிறிது அரைத்துப் பசும் பாலில் கலந்து தினமும் பருகி வந்தால் முறையற்ற காம எண்ணங்களை பஸ்மம் செய்து விடலாம். ஆனால் வாழ்க்கையில் நீங்கள் எத்தனை முறை மாசிக்காயை இதுவரை உண்டிருப்பீர்கள்? சீதாப்பழம் என்ற அரிய பழத்தை நீங்கள் உண்டு எத்தனை ஆண்டுகள் ஆயின? மரவள்ளிக் கிழங்கைத் தொட்டுப் பார்த்து எத்தனை மாதங்கள் ஆகிவிட்டன? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! எனவே இவற்றால் கிட்டவேண்டிய தேவ சக்திகளை நீங்களும், உங்கள் தலைமுறையும் பெற முடியாமலேயே போகின்றதல்லவா!

சாகம்பரி பூஜையது சமுதாய பூஜையே!

சமுதாயத்தில் தேவையற்ற விருப்பு, வெறுப்புகளால் இத்தகைய அவல நிலைகள் ஏற்படும் என்று எண்ணியே நவராத்திரிப் பூஜை காலத்தில் ஒரு நாள் சாகம்பரி பூஜை என வைத்து அன்று அனைத்துக் காய்கறிகள் கனிகளையும் நாரில் கட்டித் தொங்க விட்டு உறியடி உற்சவம் போல் கொண்டாடுவார்கள். பிறகு அவற்றைச் சமைத்து அன்னதானம் அளிப்பர். இத்தகைய சமுதாய பூஜையால் அனைத்து மக்களுக்கும் தேவையான அனைத்துக் காய்கறிகள், கனிகளின் தேவ சக்தியும் ஸ்ரீசாகம்பரி பூஜா பலன்கள் மற்றும் அன்னதானப் பலன்களாக வந்து சேரும்.

ஆனால் தற்போது அபூர்வமான ஸ்ரீசாகம்பரி தேவி பற்றித் தெரியாமல் போய், நாட்டில் உணவுப் பஞ்சமும், நதி நீர்வளம், மழைவளம் குறைதலும் ஏற்படுகின்றன.

அன்னதானம் அனைத்தையும் நல்கும்

நோய், வறண்ட பூமி, வசதியின்மை, அலர்ஜி போன்றவை காரணமாக சில காய்கறிகளை உங்களால் உண்ண முடியாமல் போனால் கவலைபடாதீர்கள்! அக்காய்கறிகள் கலந்த உணவை நீங்கள் அன்னதானமாக அளித்தால் அவற்றின் மூலம் வர வேண்டிய தேவ சாகம்பர்ய சக்திகளை அன்னதானப் பலன்களாக ஓரளவு நீங்கள் பெற்றிடலாம்.

அளவுக்கு மிஞ்சிப் பணம் படைத்த பெருஞ் செல்வந்தர் ஒருவர் அதி சர்க்கரை (டயாபடீஸ்) நோயினால் அரிசி, சர்க்கரை, இனிப்புகளை உண்ண இயலாது தவித்திட்டார். பெரிய பெரிய வைத்தியர்கள் முயன்றும் நோயின் கடுமையைத் தணிக்க இயலவில்லை. அவர் நம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளை நாடியபோது,

"உன் செல்வத்தைக் கரைத்துத் தினமும் பத்து வீசை ஸ்வீட்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வா! உன் ஆயுட்காலம் முழுவதும் நீ இவ்வாறு செய்து வா! பிறகு பார்க்கலாம்!" என்றார். அச்செல்வந்தரும் இவ்வாறே முறையாகச் செய்திட்டார். ஒரு வருடத் தீபாவளியன்று காசி ஸ்ரீஅன்னபூரணி ஆலயத்தில் பெரிய பெரிய லட்டுகளினால் தேர் அமைத்துப் பல்லாயிரக் கணக்கானோருக்கு லட்டுகளைத் தானமாக அளித்திட்டார். என்ன ஆச்சரியம், சர்க்கரை நோயின் கடுமை தணிந்து அவர் 93 ஆண்டுகள் வாழ்ந்து சாந்தமாக மரணத்தைத் தழுவினார்.

எனவே காய்கறிகள் கலந்த அன்னதானம், பெரும் பாவங்களை, கர்ம வினைகளை, பெரு நோய்களையும் போக்கக் கூடிய தேவ சக்திகளைக் கொண்டவையேயாம்.

எறிதல் வேண்டாம்

உண்ணும் போது பலருக்கும் கருவேப்பிலை, கொத்துமல்லியை எடுத்து எறிகின்ற தவறான பழக்கம் நிலவுகின்றது. கண் பார்வைக்கு தீர்க்க சக்தியைத் தரவல்லதே கருவேப்பிலை! சனி பகவானுக்கு மிகவும் ப்ரீதியானது, கரிநாள் தோஷங்களுக்குப் பரிகாரம் தரவல்லது. இதனை எறிந்தால் மேற்கண்ட அனுகிரக சக்திகளையும் உதாசீனப்படுத்துவதாக ஆகின்றதல்லவா!

பலத்த கடன்களில் வாடுவோர் பலரும் அதிகமாக உண்டிடாத ஈச்சம் பழம், பனம் பழம், வெள்ளரிப் பழம் ஆகிய மூன்றையும் ஒரு மந்தாரை இலையில் வைத்து, "வாசி தீரவே காசு நல்குவீர்" என்ற சம்பந்தரின் தேவாரப் பாடலை ஓதி ஏழைகளுக்குத் தானமாக அளித்தால் தங்கிய கடன் பிணிகளும் தணியும்.

இவ்வாறாக காய்கறிகள், கனிகளின் மகிமை சொல்லவும் பெரிதே! எனவே இனியேனும் எல்லா வகைக் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொண்டு அனைத்துத் தாவர தேவதைகளின் அருளையும் பெற்றிடுவீர்களாக!

ஒழுகமங்கலம் ஸ்ரீஅகோரவீரபத்திரர்

கலியுகத்தின் பைரவ வழிபாட்டின் முக்கியத்துவத்தைப் பலரும் சரியாக உணர்ந்திடவில்லை. அந்தந்த யுகத்தின் மக்கள் சமுதாய வினை சஞ்சார நிலைகளுக்கு ஏற்ப வழிபாட்டு முறைகளும் மாறிக் கொண்டே வரும்.

கலியுகத்திலோ தற்போது மக்கள் வன்முறை, மது, புகை, முறையற்ற காமச் செயல்கள் போன்ற பலவிதமான தீய செயல்களுக்கு ஆட்பட்டு இருப்பதால் பைரவர் சக்திகள்தாம் (சீரழிந்து வரும்) மானுட சமுதாயத்தைக் காப்பாற்ற வல்லதாம். ஆனால் வெறுமனே படிப்பதல்லாது பைரவ வழிபாட்டைக் கடைபிடித்தால்தானே பலாபலன்களைப் பெற முடியும்.

ஸ்ரீகணேச மூர்த்தி ஒழுகமங்கலம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து பொன்னமராவதி செல்லும் வழியில் ஆ.தெக்கூர் அருகே ஒழுகமங்கலம் கிராமத்தின் ஸ்ரீதிருமேனீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீஅகோர வீரபத்ர பைரவரே ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவர் ஆவார். இவரே ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவ பீட சக்தியைக் கலிகாலத்திற்கு அனுகிரகிக்கும் அவதாரிகையைக் கொண்டுள்ளார். அஷ்டமித் திதி மற்றும் தினமும் குளிகை நேரத்தில் வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி, எவ்வாறு ராகு கால ஸ்ரீதுர்க்கை வழிபாடும், ராகு கால ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடும் பிரசித்தி பெற்றுள்ளனவோ இதேபோல குளிகைக் கால வழிபாட்டு மூர்த்தியாக பைரவ மூர்த்தி வருங்காலத்தில் பிரகாசிக்கவிருக்கின்றார். ராகு காலம் போல ஞாயிறு முதல் சனிக்கிழமை வரை அந்தந்த தினத்திற்கு உரிய குளிகை நேரமும் கீழக்கண்ட வகையில் அமைகின்றது.

சனிக்கிழமை = 6‍ - 7 1/2 காலை
வெள்ளிக்கிழமை = 7 1/2 - 9 காலை
வியாழக்க்ழமை = 9 - 10 1/2 காலை
புதன்கிழமை = 10 1/2 - 12 காலை
செவ்வாய்க்கிழமை = 12 - 1 1/2 பகல்
திங்கட்கிழமை = 1 1/2 - 3 பகல்
ஞாயிற்றுக்கிழமை = 3 - 4 1/2 மாலை

அஷ்டமித் திதியில் அந்தந்தக் கிழமைக்கு உரிய குளிகை நேரத்தில் பைரவரைப் பூஜிப்பதால் பூஜா பலன்கள் பல்கிப் பெருகுகின்றன. வரும் கலியுக ஆண்டுகளில் குளிகை நேர பைரவ பூஜை பிரசித்தி பெறும் என்பது சித்தர்கள் விதித்துள்ளதாகும்.

சனிக்கிழமை குளிகை நேரத்தில் பைரவ மூர்த்தியின் திருமேனிக்கு வலப்புறம் வெண்ணெய்க் காப்பும், இடப்புறம் சந்தனக் காப்பும் இட்டும் வழிபடுதலால் எத்தகைய பகைமையும் களைந்திடலாம்.

கடுமையான வியாபார நெருக்கடி, நஷ்டங்களில் வாடுவோர் செவ்வாய்க்கிழமை குளிகை நேரத்தில் பைரவருக்கு வெண்ணெய்க் காப்பு இட்டு இதன் மேல் தாமரை மலர் இதழ்களைப் பதித்து வழிபட்டு வர, வியாபாரக் கஷ்டங்கள் தீரும். தினமும் இவ்வாறு வழிபடுதல் சிறப்பானதாகும்.

அளவுக்கு மீறிய கடன் பிரச்னைகளால் வாடுவோர் வெள்ளிக்கிழமை குளிகை நேரத்தில் பைரவருக்குச் சர்க்கரைப் பொங்கலால் அன்னக் காப்பு இட்டு வழிபட்டு சர்க்கரைப் பொங்கலை அன்னதானம் செய்து வர வேண்டும்.

ஒழுகமங்கலம் ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவ வழிபாட்டினைச் சிறப்புறக் கடைபிடித்து, பல யுகங்களாக மறைந்து விட்ட குளிகைக் கால பைரவ வழிபாட்டை பக்தர்கள் மீண்டும் பிரசித்தி பெறச் செய்திட வேண்டும்.

கடன் தொல்லைகள்

கலியுகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் வியாபார நெருக்கடிகள், கடன் தொல்லைகள் என்றே பேசப்பட்டு வருகின்றன. எல்லோரும் கடன் தொல்லை என்று வருந்தினால் சமுதாயத்தில் லட்சுமி கடாட்சம் குறைவுபட்டுள்ளது என்று தானே பொருள்!

கதற வைக்கும் கதருணக் கடன்கள்

லட்சுமி கடாட்சம் என்றால் செல்வம் பெருகுதல் மட்டுமே என்றே பலரும் பொருள் கொள்கின்றனர். மேலும் பல நற்குணங்களும் லட்சுமி கடாட்சமாகும். கடன் தொல்லைகள் நீங்க வேண்டும் என எண்ணுவோர் முதலில் தனக்கு எவ்வாறு கடன்கள் ஏற்பட்டன என தீரச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தன்னுடைய தகுதி, வசதிக்கு மீறிய தேவையற்ற ஆசைகளால், அதிக லாப எதிர்பார்ப்புகளால் ஏற்பட்ட கடன் என்றால் இதற்குக் கதருணம் என்று பெயர். கதருண வினைகளால் ஏற்பட்ட இத்தகைய கடன்களைத் தீர்த்தல் சற்றுக் கடினமே!

பூர்வ ஜன்மங்களில் தனக்கு உரிமையில்லாத பிறருடைய சொத்தை, பொருட்களை, செல்வத்தை ஏக போகமாக அனுபவிப்பதால் ஏற்படும் வினைகளே மேற்கண்ட கதருண வகைக் கடன்கள் ஆகின்றன. தான் யாருக்குக் கடன் கொடுக்க வேண்டுமோ அவருடன் பூர்வ ஜன்ம குண பந்தத்தால், அவருடைய பொருட்களைப் பூர்வ ஜன்மத்தில் அதர்மமாக அனுபவிப்பதால் இதுவே தற்போது கடன் தொல்லையாக ஆகி இருக்கிறது என உணர வேண்டும். இத்தகைய கடன் தொல்லைகள் தீர வேண்டும் என்றால் முதலில் கதருண வினைகளை தீர்த்தாக வேண்டும்.

மேலும் கடன்கள் ஏற்படுவதற்கான ஆன்மீகக் காரணங்களும் நிறைய உண்டு. பொதுவாக, தோலுடன் சம்பந்தப்பட்டதே கதருண வினைகள் ஆகும். எனவே தோலுடன் நாம் உண்ணும் கத்தரிக்காய், வெண்டை, ஆப்பிள் போன்ற காய்கறி உணவு வகைகள், கனிகளை இரட்டைப் பிள்ளையாருக்கு (இரண்டு பிள்ளையார் மூர்த்திகள் சேர்ந்திருப்பது) செவ்வாயன்று செவ்வாய் ஹோரை நேரம், புதன் ராகு கால நேரம், தேய்பிறைச் சதுர்த்தி, சதுர்த்தசி தினங்களில் படைத்துத் தானமாக அளித்து வர வேண்டும். தினமும் குளிகை நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்குப் புனுகு சார்த்தி வழிபட்டு வர வேண்டும்.

பதற வைக்கும் கருண ருணக் கடன்கள்

எதிர்பாராத இயற்கைக் காரணங்கல், சேதம், வரி உயர்வு, விபத்து, மூலப் பொருள் குறைவு, மார்க்கெட் சரிவு, சப்ளையர்களுடைய தவறுகள், சரக்கு விற்காமை போன்றவற்றால் வியாபார நஷ்டங்கள், சொத்துச் சேதம் ஏற்பட்டிருந்தால் இதற்கு கரணருணம் என்று பெயர். பொதுவாக பூர்வ ஜன்மப் பிறவிகளில் தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட செல்வத்தை பொருளை, நில புலன்களை அஜாக்கிரதையாக, முறையாகப் பராமரிக்காமல் விட்டிருந்தால் இவ்வகையில் கடன்கள் வந்து சேரும். இவற்றிற்கு நிவாரணம் தேட வேண்டும் எனில் முதலில் கரண ருண வினைகளின் விளைவுகளைத் தீர்க்க வேண்டும். இதற்கு உரிய பரிகாரமாக, சந்திர பகவான் ரோகிணி அல்லது கார்த்திகை தேவியுடன் உள்ள ஆலயங்களில் (மதுரை) ஸ்ரீபைரவருக்கு செவ்வாய், சனிக்கிழமைகளில் வெண்ணெய்க் காப்பிட்டு, மாதுள முத்துக்களைப் பதித்து வெண்ணெய் அடை படைத்து வழிபட்டுத் தானமளித்து வர வேண்டும்.

ஸ்ரீருணஹரேஸ்வரர் ஆச்சாள்புரம்

சிதற வைக்கும் கரிவால ருணக் கடன்கள்

மது, புகை, சூது, குதிரைப் பந்தயம், சீட்டு, முறையற்ற காம கேளிக்கைகள், ஆடம்பரச் செலவுகளால் கடன்கள் ஏற்பட்டிருந்தால் இவற்றைத் தீர்ப்பது மிக மிகக் கடினமே. காரணம், பூர்வ ஜன்மங்களில் பிறருடைய பொருட்களை, செல்வத்தை, கோயில் சொத்தைச் சூறையாடி இருந்தால் இவ்வகையில் பெரும் கடன் சுமைகள் சேரும். இத்தகைய கடன்களுக்கு கரிவால ருணம் என்று பெயர். இதற்குப் பரிகாரங்களைப் பெற, தினமும் அண்டங் காக்கைக்கு காலை, மதியம், மாலை மூன்று வேளைகளிலும் அன்னமிட்டு வருவதுடன், அமிர்தயோகம் கூடும் செவ்வாய், சனி தோறும் திருஅண்ணாமலை, ஐயர் மலை, தேனி மலை போன்ற தலங்களில் தொடர்ந்து கிரிவலம் வந்திடுதல் வேண்டும்.

தினமும் மாலை நித்தியப் பிரதோஷ நேரத்தில் ஸ்ரீகால பைரவருக்கு புனுகு, ஜவ்வாது கலந்த விளக்கெண்ணெய்த் தைலக் காப்பு இட்டு வழிபட்டு வர வேண்டும். பொதுவாக மனம் திருந்தி வாழ்ந்தால் தான் இத்தகைய கரிவால ருணங்கள் தீரும்.

பொதுவாகவே பெருமளவு கடன் தொல்லைகளால் வாடுவோர் தினந்தோறும் திருஞான சம்பந்தப் பெருமானின் "வாசி தீரவே காசு நல்குவீர்!" என்ற பதிகத்தையும் இடர்களையும் பதிகப் பாடல்களையும் ஓதி வருதல் வேண்டும்.

முக்கடன் தீர்க்கில் எக்கடன் சேரும்?

எனவே கடன் தொல்லைகளில் இருந்து நிவாரணம் பெற வேண்டும் என்றால் முதலில் பித்ரு கடன், தேவ கடன், ரிஷி கடன் ஆகிய மூன்று முக்கியமான மூலாதாரக் கடன்களைத் தீர்க்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

பித்ரு கடன் என்பது நம் மூதாதையர்களுக்கான தர்ப்பண, திவச, படையல் வழிபாடுகளை மேற்கொள்வது. இதன் மகிமையைத் தற்போது தான் பலரும் உணரத் தொடங்கி உள்ளனர். தர்ப்பணம் என்றால் மாய மந்திரம் என்று இதுவரை எண்ணியோர் இப்போதுதான் சந்ததிகள் தழைப்பதே மூதாதையர்களான பித்ருக்களின் ஆசியால்தான் என உணரத் தொடங்கி உள்ளனர். எனவே மூதாதையர்களுக்கான பூஜைகளில் குறை வைத்தால் பித்ரு கடன் பாக்கி பெருகி லௌகீகக் கடன்களாக வந்து வாட்டும். இதனையே நீத்தார் (பித்ருக்கள்) கடன் என்பர் நம் பெரியோர்கள்.

ஸ்ரீதிரிதலை கருமுத்து பைரவர்
ஒழுகமங்கலம்

தேவ கடன் என்பது முறையாக ஆலய, பூஜை, ஹோம, தீப வழிபாடுகளைக் கடைபிடிப்பதாகும். தனிப்பட்ட முறையில் இவற்றைச் செய்ய இயலாவிடில் சத்சங்கமாகப் பலரும் ஒன்று கூடி ஆற்றிடலாம். வசதி இல்லாதோர்க்காக ஆலயங்களில் நடைபெறும் பொது இறைச் சமுதாய வழிபாடுகளிலும் பங்கேற்றிடலாம்.

ரிஷி கடன் என்பது வழிவழியாய் வந்த அவரவர் கோத்ராதிபதி மகரிஷிகளை வணங்குதலாகும். ரிஷி கடன்களைத் தீர்க்கும் வழிமுறையாக ஆலய தரிசனம், மகான்களின் ஜீவாலய, ஜீவ சமாதி தரிசனங்கள் விதிக்கப்படுகின்றன. இது பித்ரு கடனிலிருந்து வித்யாசமானதாகும். உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் ஒரு ரிஷி வழித் தோன்றலே! இதனையே பிரவர வழி என்றும் கோத்ர (குல) வழி என்றும் கூறுகின்றோம்.

ஏனிந்த சீரழிவு ஐயா மனித குலத்தில்?

மகரிஷி வழி வந்த மனித குலமா இன்று இவ்வாறு சீரழிவு அடைந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றும். மனித வாழ்வின் பிறப்பு, வளர்ப்பு முறை இந்த மாயைதனை நன்கு விளக்கும். ஒவ்வொரு மனிதனும் கள்ளங் கபடமற்றுப் புனிதமான குழந்தையாகவே பிறக்கின்றான். கைக்குழந்தைப் பருவத்தில் புனிதமான மனதைக் கொண்டு விளங்கும் மனிதன் காலப் போக்கில் கர்ம வினைச் சுழலில் சிக்கிப் பகுத்தறிவை இழந்து மனிதத் தன்மையில் இருந்து விலகி வயதான பின் மீண்டும் குழந்தைத் தன்மையைப் பெறுகின்றான்.

ருண பாக்கி தீர்ந்தால்தான் கடன் பாக்கி தீரும்

எனவே கடன் தொல்லைகள் என்று கூறுவதை விட, வி(மி)ஞ்சிருக்கும் பித்ரு கடன், தேவ கடன், ரிஷி கடன் பாக்கிகளே கடன் வகைத் துன்பங்களாகின்றன. அப்படியானால் நல்ல பண வசதி படைத்தோர் இம்மூன்று வகைக் கடன்களை அடையாதவர்களா? கடன் என்றால் பணத்தால் வரும் கடன் என்று மட்டும் எண்ணுவதால் தான் இத்தகைய குழப்பங்கள் ஏற்படுகின்றன. அங்க அவயங்கள், பணம், பொருள், சொத்து, நிலபுலம், ஆரோக்யம், நட்பு, உறவு முறை, குடும்ப வாழ்க்கை போன்று வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் மேற்கண்ட மூன்று கடன் அம்சங்களும் பெரும் பங்கு ஆற்றுகின்றன. செல்வந்தர்கட்கு வருகின்ற பலவிதத் துன்பங்களும் ருணக் கடன்களே ஆகும்.

உண்மையில் பூர்வ ஜன்மங்களில் தம் பொருளை ஏழைகளுக்குத் தாராளமாக ஈந்தவர்களே தற்போது அதன் புண்ய சக்தியால் பண வசதி உடையவர்களாகி உள்ளனர் என்பதை உணர்ந்தால் புண்யமே செல்வமாகும் மாயா லட்சணம் புரிய வரும்.

மிகுந்த அளவில் பணப் பொருள் இருந்தால் அனைத்து வகைக் கர்ம வினைகளும் தீர்ந்திடுமா என்ன? பணம் என்பது ஒரு வகை மாயையே! பணத்தாளை ஒரு காகிதமாக உணரும் உத்தமநிலை வரும் வரை பணத்தின் மாயா விநோதங்கள் தொக்கியே நிற்கும்! கழிபட வேண்டிய மேற்கண்ட ருண வினைகளும் பாக்கியாக நிற்கும் வரை பணம் சம்பந்தப்பட்ட காரியங்கள் லௌகீகமாக வாழ்விற்குத் தேவையானதாகவே தோன்றும்.

எனவே பணம், ருணம், ருணத்திற்கான குணம் ஆகியவை தன்னுள் பல ஆத்ம தத்துவங்களைக் கொண்டுள்ளன என்று உணர்ந்திடுக!

பைரவ வழிபாடு

கடந்த பல இதழ்களாக சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்களில் உரைக்கப்பட்டுள்ளபடி, தற்காலக் கலியுகத்திற்கு மிகவும் அத்யாவசியமானதாக விளங்குகின்ற பைரவ வழிபாடு பற்றி இறைத் திருவருளால் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளித்து வருகின்றோம்.

உலகத்தின் தெய்வீக மையமே திருஅண்ணாமலை!

கலியுகத்தில் தற்போது தீயொழுக்கமும், பணம் மேலான பேராசையுமே, குறிப்பாக, முறையற்ற காமத் தீயச் செயல்களே, விஷக் கிருமி, வைரஸ் போல வெகு வேகமாகப் பரவி வருகின்றன. காம இச்சை, பணத்திற்காக எந்த கொடுமையையும் இழைக்கும் தீயவர்கள் பெருகி வருகின்றனர்.

பெரும்பாலான மேல் நாடுகளில் இளைய சமுதாயம் முறையற்ற காமத் தீயில் சிக்கி, பின்னப்பட்டுப் பாழாகி வருவதை நாம் இப்போது கண்கூடாகக் காண்கின்றோம். இந்நிலையில் உலக நாடுகளின் ஆன்மீக மையமாகத் துலங்குகின்ற புனிதமான பாரத நாட்டில் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடிக்கப்படும் பைரவ வழிபாட்டில் திரளும் தெய்வீக, ஆன்ம சக்திகள் தாம் உலகெங்கும் நிரவி, இறையாக்கம் கொண்டு, தீய சக்திகளை முற்றிலுமாக வெல்ல உதவுவதாகும்.

ஆனால் ஸ்ரீகால பைரவ வழிபாட்டினை முறையாகக் கடைபிடித்தால்தானே, பைரவ சக்திகளை நடைமுறையில் பெற முடியும். வெறுமனே படித்தால் மட்டும் போதுமா?

மேலும், வேறெந்த நாட்டிலும் காண இயலாத வகையில், லட்சக்கணக்கான சுயம்பு மூர்த்திகள், ஆலயங்கள் நிறைந்து பரிமளிப்பதே நம் பாரத நாடு!  ஆத்மப் பூர்வமாக, இப்பூவுலகின் ஆன்மீகத் தெய்வத் தலைமை மையமாகத் துலங்கும் பாரதத்தில் பிறக்கும் பாக்யம் பெற்றமையால், பாரதப் பிரஜை ஒவ்வொருவருக்கும் உலக ஜீவன்களின் நலன்களுக்காக ஆலய வழிபாடுகள், பண்டிகைகள், விரதங்கள், ஹோமங்கள், பூஜைகள், பிரார்த்தனைகளை நிறைவேற்ற வேண்டிய பிறவிப் பெருங்கடமை நிறைய உண்டு.

ஸ்ரீகாலபைரவர்
ஸ்ரீபோஜீஸ்வரர் ஆலயம் சமயபுரம்

காலங் கடந்த நிலை தரும் பைரவ பூஜை!

ஆனால் கலியுக மனிதனுக்கு, தனக்குத் துன்பங்கள் மிகும்போதுதான் தீவிர இறைவழிபாடு என்று எண்ணும் பாங்கும் பெருகி வருவது நல்லதல்லவே! உள்ளம், மனம், உடல் மூன்றும் சம்பந்தப்பட்டது தானே கலியுக வாழ்க்கை! இம்மூன்றும் கூடிய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் காலத்தைத் தழுவியதாகத் தானே உள்ளது!  வீடோ, வாசலோ, உணவோ, உடையோ அனைத்துமே காலப் பரிமாணத்திற்கு ஆட்பட்டது தானே! காலங் கடந்த அநாதியான இறைவனைத் தவிர, இந்த பூமியில் கால சம்பந்தமில்லாப் பொருள் ஏதேனும் உண்டா என்ன? வாழ்க்கையின் அம்சங்களும், விளைவுகளுமான இன்ப, துன்பங்கள், நோய்கள் போன்ற யாவும் காலத்தை ஒட்டியவை தாமே!

எனவே காலத்தைக் கடக்கும் பரிபக்குவத்தை அடைகின்ற நிலையில்தான் இன்ப, துன்பங்களைக் கடந்த நிலையைப் பெற முடியும். இதுவே கலியில் துன்பங்களைத் துடைப்பதற்கான நிரந்தரமான வழிமுறை என முதலில் உணர்க!

இது முதலில் தத்வார்த்தமாகத் தோன்றினாலும் இதுவே உலகில் ஒவ்வொரு மனிதனின் பிறவி இலட்சியங்களுள் ஒன்றாகும்! இந்த ஆத்மத் தத்துவ லட்சியத்தை வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த உதவுவதே ஸ்ரீகாலபைரவர் வழிபாடு ஆகும்!

ஒவ்வொரு நொடியிலும் வாழ்வது இறைச் சித்தமே!

எனவே துன்பம் வந்த பின் இறைத் துணையை நாடுவதை விட, நாம் ஒவ்வொரு விநாடிக் காலமும் வாழ்வது இறைப் பெருங்கருணையால் தாம், நம் வாழ்வின் இறைலட்சியமே காலம் காலமாக அநாதி நாதராக, காலங் கடந்தவராக விளங்கும் இறைவனுடைய சிந்தனையுடன் எப்போதும் துலங்கிடவே என்று தெளிதல் வேண்டும்.

முதலில் பைரவ தரிசனம், பைரவ பூஜை மூலம் காலச் சிந்தனையாக இறைமையை ஊட்டி, பிறகு காலச் சிந்தனையை நிரந்தரமான, உடல், மனம், உள்ளத்தோடு உறைந்த கடவுள் சிந்தனையாக மாற்ற உதவுவதும் ஸ்ரீகால பைரவர் வழிபாடாகும்.

காலச் சிந்தனை என்றால் கடிகாரத்தை அடிக்கடி பார்த்துக் கொள்வதல்ல!  இந்த நொடி வரை உயிர் தரிக்கின்றோமா, கண்கள் நன்கு தெரிகின்றனவா, காதுகள் கேட்கின்றனவா, நம் குடும்பத்தினரை, அலுவலகத்தை, இருப்பிடத்தைச் சுயநினைவோடு அறிந்து சுய அறிவோடு இந்நொடி வரை வாழ்கின்றோமோ இவை போன்ற அனைத்துமே நிகழ்வது இறைவனுடைய கருணையால்தாம் என்று ஆயுளை, நாம் பெற்றுள்ள மனிதப் பிறவியை, கடவுளின் காலப் பரிசாக ஒவ்வொரு நொடியிலும் உணர்வதே காலச் சிந்தனையாகும். திடீரென்று ஆபீஸ், வீடு, இருக்குமிடம் மறந்து சுயநினைவே ஆடிப் போய்விட்டாலோ, ஒழுங்காக வீடு வந்து சேராது, எங்கேயோ மனம் பேதலித்துத் தறி கெட்டு நின்றால் என்னாவது?

எனவே தான் ஒவ்வொரு விநாடியும் சுயநினைவோடு வாழ்வது என்பது இறைப் பெருங்கருணையே என்று உளப் பூர்வமாக, மனப் பூர்வமாக, உடற் பூர்வமாக உணர்தல் வேண்டும். இதற்கு வழி வகுப்பதும் ஸ்ரீகாலபைரவ வழிபாடாம்!

காலமும் படைக்கப்பட்டதால்தான் நாம் வாழ்கின்றோம்!

காலன் என்றால் யம பகவானைக் குறிக்கும்! ஆனால் வழக்கில் உயிரைப் பறிப்பவர் காலன் எனத் தவறாகப் பொருள் வந்து விட்டது! மரணத்திலும் உயிர் பிரிந்து  வேறு சரீரமாக உயிர் தொடர்கின்றதல்லவா!  எனவே காலத்தை உணர, வரி வடிவமான உடல் இலக்கணத்தைத் தந்து அருள்பவர்களே பிரம்ம, காலன் இறை வடிவுகளாகும். இத்தெய்வ சக்திகளுக்கு மூலாதாரமே ஸ்ரீகாலபைரவ மூர்த்தி ஆவார்.

காலனாகிய எம பகவானைத் தரிசிக்கும் சக்தியைப் பெற்றதே நாய்கள் ஆகும். எனவே காக்கைகளுக்குத் தினமும் அன்னம் இடுவது போல, பைரவ வாகன அம்சமான நாய்களுக்கு தினமும் உணவிட்டு வந்தால் "தூங்கி எழுந்தால் பிரச்னைகள்தாமே முன் நிற்கின்றன, ஏண்டாப்பா தூங்கி எழுந்தோம்" என்று சலித்துக் கொள்ளும் நிலை வராது தற்காத்துக் கொள்ளலாம். மேலும் வயதாகி, கடுமையான நோய்களால் அவதியுறுவோர் தினமும் நாய்களுக்கு உணவிடும் நற்காரியத்தைச் செய்து வர நோய்க் கொடுமை தணிந்து, மரண பயம் நீங்கிடும். வாழ்வில் சலிப்புத் தட்டுவதும் மறையும்.

எனவே துன்பம் வரும் போது, பரிகார வழிபாடுகளைத் தேடி ஓடாது, இறைமை என்பது எப்போதும் நம்முள் உறைய வேண்டியது என்று உணர்ந்திட, தினமும் காலையும், மாலையும் ஸ்ரீபைரவரைத் தரிசித்து வர வேண்டும். எந்தத் துன்பத்திற்குமான மூல காரணங்களை உணர்வித்து அவற்றை ஒட்டு மொத்தமாகக் களைய உதவி இறை பக்தியை நிரந்தரப்படுத்துவதே ஸ்ரீகாலபைரவ வழிபாடாகும்.

திருவல்லம் பாம்பாணையான் சித்தர்

சில நூற்றாண்டுகளுக்கு முன், திருவல்லம் பகுதியில் தோன்றி, திருஅண்ணாமலைப் புனித பகுதியில் உலா வந்த சித்தர் பெருமானே திருவல்லம் பாம்பணையான் சித்தராவார். அக்காலத்தில் திருஅண்ணாமலை நல்ல வனப் பகுதியாக இருந்தது. மலையைச் சுற்றிப் பல வகைக் காடுகள் இருந்தன. ஆலயப் பகுதி தவிர மலையடிவாரத்தைச் சுற்றி மனித சஞ்சாரம் அவ்வளவாக இல்லை. காரணம், புனிதத் துறவிகளின் தவத்திற்கு இடையூறாக இருத்தலாகாது என மக்களே குறித்த விசேஷ தினங்கள் தவிர ஏனைய தினங்களில் மலையைச் சுற்றித் தங்கள் நடமாட்டத்தைத் தவிர்த்தனர். மேலும் அக்காலத்தில் வன விலங்குகள் மற்றும் அதிக அளவிலான நாக சஞ்சாரங்களும் மலையடிவாரத்தில் மக்கள் நடமாட்டத்தைக் குறைத்தன!

குறித்த தினங்களில் மட்டுமே தாரை, தப்பட்டையுடன் கூட்டம், கூட்டமாக மக்கள் கிரிவலம் வந்தனர். மலையை இட்டுத் தள்ளித்தான் நகர, கிராம வாசமிருந்தது. எங்கு நோக்கினும் மரங்கள், செடி கொடிகளே! நீர்த் துறையான் காடு, வாசுகிக் காடு, கார்க்கோடகக் காடு என்று அந்தந்த நாக வகைகள் நெளிந்து, புரண்ட பகுதியை வைத்து அருணாசலத்தைச் சுற்றி உள்ள காடுகளின் பெயர்கள் விளங்கின.

கிரிவலப் பாதையும் 25 மைல்களுக்கு நன்கு மேற்பட்டுப் பெரிதாக இருந்தது. வாசுகி லோக, கார்க்கோடக லோக நாகங்களும் கூட்டமாக கிரிவலம் வந்தன! கார்க்கோடக வகைக் குட்டி நாகத்தின் நீளமே சுமார் 100 அடி இருக்கும்! மனிதப் பாதை, கால் நடைகளுக்கான பாதை நாகப் பாதை என மலையைச் சுற்றிப் பல பாதைகள் இருந்தன. அந்தந்தப் பாதையில் அந்தந்த உயிரினங்கள் பிற ஜீவன்களுக்கு இம்சை இன்றிக் கிரிவலம் வந்து கொண்டிருக்கும். சபரி மலைப் பெருவழி போல அருணாசல கிரிவலமும் காடுகளிடையே அமைந்த மிகக் கடினமானதாக இருந்த காலமது. நாகங்கள் கிரிவலம் வர வேண்டிய காலமென தெய்வீகப் பூர்வமாக சமுதாயத்திற்குப் பெரியவர்களால் உணர்த்தப்பட்டதால் குறித்த நாட்களில் மட்டுமே, ஆலயச் சுவடி தரும் நாளில் மானுட கிரிவலம் நடந்தது. எனவே அக்காலத்தில் வாழ்வில் ஒரு முறை அருணாசலத்தைக் கிரிவலம் வருதலே பெரும் பாக்யமாகக் கருதப்பட்ட காலம்!

ஸ்ரீதிருமேனிநாதர் ஒழுகமங்கலம்

திருவல்லம் பாம்பணையான் சித்தர் எப்போது திருவல்லத்திலிருந்து பாத யாத்திரையாக அருணாசலத்திற்கு வந்து திரும்புகின்றார் என்பது பலரும் அறியாத தேவ ரகசியமாகவே இருந்தது. ஆனால் மாத சிவராத்திரி தோறும் பற்பல வடிவுகளில் கிரிவலம் வந்த சித்தர்பிரான், சித்ரபானு ஆண்டின் மார்கழி மாதப் பௌர்ணமி நாளில் மட்டும் தன் சுயமானுட வடிவில் கிரிவலம் வந்திடுவார். சித்தர்பிரான் ஜீவ சமாதி பூண்டு விட்டாலும் சித்ரபானு ஆண்டின் மார்கழி மாதப் பௌர்ணமி நாளில் அருணாசல கிரிவலப் பகுதியில் ஒரு கட்டமாவது குறிப்பாக நாகலிங்க தரிசனப் பகுதியில் மானுட வடிவில் கிரிவலம் வருவது இன்றும் நிகழ்கின்றது. பாக்யம் உள்ளோருக்கு அவருடைய தரிசனம் கிட்டும்.

திருவல்லம் பாம்பணையான் சித்தர் நந்தி மேற்பார்வை முகலிங்க தரிசனம் என்ற ஓர் அற்புதத் தரிசனப் பகுதியிலிருந்து அருணாசல மலையை நெடுநேரம் பூஜித்துத் தன் கிரிவலத்தைத் தொடருவார். இங்கிருந்து அவர் அர்ச்சிக்கும் நாகலிங்கப் புஷ்பங்கள் மலையிற் சென்று படிகின்ற தெய்வீக அற்புதத்தைப் பலரும் கண்டு தரிசித்துள்ளனர். நாகலிங்கப் புஷ்ப பூஜை முறையை உலகிற்கு எடுத்துரைத்தவரே திருவல்லம் பாம்பணையான் சித்தர் ஆவார்.

எத்தகைய பாம்பு கடிக்கும் வைத்யம் புரிந்த அற்புதச் சித்தர். அக்காலத்தில் கிரிவலம் வருகையில் எவரேனும் பாம்பு கடித்து இறந்திட்டால் வாழை இலையில் உடலைச் சுருட்டி வைத்து விடுவார்கள். பாம்பணையான் சித்தர் கிரிவலம் வருகையில் குறித்த பாம்பை அழைத்து விடத்தை விலக்கச் செய்திடுவார். இறந்தவரின் நாசியுள் தம் மூச்சைச் செலுத்தி உயிர்விப்பதும் உண்டு. ஆனால் இறந்து எழுந்தவர் தாம் மரணத்திலிருந்து மீண்டோம் என்ற உணர்வில்லாது தம் கிரிவலத்தைத் தொடர்ந்திடுவார்.

இவர் எப்போதும் தம் கையில் ஒரு சுரைக் குடுவையைத் தாங்கி வருவார். இவரை கண்டதுமே பலவகை நாகங்கள் துள்ளிக் குதித்து ஓடி வர, அவற்றை அன்புடன் அரவணைத்துச் சுரைக் குடுவையில் இட்டிடுவார். பிறகு இந்த நாகங்களைப் பல தலங்களிலும் பிரித்து வெளியில் விட்டிடுவார்.

நாகமென்றால் கொடியது, விஷமுள்ளது, மனித குலத்திற்கு விரோதி என்ற எண்ணங்களை உடைத்து பூமி வாழ் ஜீவன்களுக்கு நாகங்களால் விளையும் பயன்களைச் சித்தர்பிரான் எடுத்துரைத்தார். பாம்பு கலித் தியானம் என்ற யோக வகையில் மூச்சை, பாம்பு போல் உள்ளடக்கும் யோக வித்தையைத் தக்க யோகிகளுக்குப் புகட்டிய யோகிச் சித்தர் பாம்பணையான் சித்தராவார். பொல்லாத நாகங்கள் பலவற்றையும் சுயம்பு லிங்க பூமிகளில் இட்டு அவற்றின் உஷ்ணத்தைத் தணித்தார்.

வல்லம் சிவத்தலம்

மண்கட்டிப் பாறையான் எனுமிடத்தில் பாம்பணையான் சித்தர் காட்சி தருவார். 100 அடி உயரமுள்ள பாம்பு குடை விரித்திட அதில் அமர்ந்து யோகவகைத் தியானம் புரிவார். பூலோகத்தின் நாகங்களின் பிறப்பு ரகசியத்தை உணர்த்த வந்த உத்தம நாகலோகச் சித்தர்பிரான். "பாம்பிற்கோ பல்லில் விஷம், கலியுகத் தீய மனிதனுக்கும், குருவிற்குத் துரோகம் இழைப்பவனுக்கும் உடலெல்லாம் விஷம்! எனவே அடியேனுக்கு இறை ஆணை இப்புவியில் தொடரும் வரை, விதி மாற்றும் நாகரத்ன வம்சோதரக் கலைச் சூத்திர சக்தியால், பாம்பு தீண்டியோருக்கு இறையருளால் உயிர் மீட்பேன்!" எனச் சங்கல்பம் பூண்டு அவர் ஜீவ சமாதி பூணும் வரை பாம்பு தீண்டியவர் உலகின் எப்பகுதியில் இருந்தாலும் பரகாயப் பிரவேசக் கலையால் அங்கு சென்று காத்திடுவார்.

அருணாசல கிரிவலத்தில் அக்காலத்தில் கிரிவலத்தில் எவரையேனும் குறித்த வகைப் பாம்பு தீண்டிடும் விதி இருப்பின், பாம்பு தீண்டி இருந்தால் திருவல்லம் பாம்பணையான் சித்தர் அவ்விடத்தில் பிரசன்னமாகி அப்பாம்பைத் தன்னைத் தீண்டுமாறு செய்து அம்மனிதரின் பல கர்ம வினைகளைத் தம்முள் ஏற்றுத் துன்பங்களை அனுபவிப்பார். ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அவ்வப்போது பல தாவரங்களின், விலங்குகளின் படைப்புக்குரிய காரணங்களை விளக்கி வருகையில் பாம்புகள் உலகில் தோன்றுவதற்கான காரணங்களையும் எடுத்துரைத்து வந்துள்ளோம். பாம்புகள் உலகிற்கு ஆற்றும் ஆன்மீகச் சேவைகளை உலகிற்கு உணர்த்தி பாம்புகள் என்றாலே மனித குலத்திற்கு எதிரி என்ற அபவாதத்தைப் போக்கியவரே திருவல்லம் பாம்பணையான் சித்தர் ஆவார்.

தலவிருட்சம் புன்னைமரம்
ஒழுகமங்கலம்

இன்றைக்கும் விஷம் தீண்டாப் புண்ணிய தலங்கள் பூமியில் உண்டு. இத்தலங்களில் நாகசத்திய சக்தி நிலவுவதால் இன்றைக்கும் இத்தலங்களில் எவரும் பாம்பு தீண்டியோ அல்லது விஷக் கடியாலோ எவரும் இறப்பதில்லை! இப்புவியில் இத்தகைய "விடம் தீண்டா பூமி வாசம்" உருவாகிடத் தவம் பூண்ட உத்தம நாகலோகச் சித்தர்களுள் ஒருவரே திருவல்லம் பாம்பணையான் சித்தர்! இன்றைக்கும் பாம்புகடி நேரத்தில் "பாம்பணையான் சித்தா, சாம்பல் கதி தீர்!" என ஆழ்ந்த நம்பிக்கையுடன் வேண்டிட, நாகவிடத்திலிருந்து எவரையும் காக்கும் அற்புதச் சித்தர்!

திருவல்லம் பாம்பணையான் சித்தர் தூல, சூக்கும, துரீய, காரண வடிவுகளில் மாத சிவராத்திரியில் கிரிவலம் வரும் நாளாக அமைவதே வரும் மார்கழி மாத சிவராத்திரி நாளாகும்.

இன்று நாகலிங்கப் புஷ்பம் மற்றும் பழங்கள், மங்களப் பொருட்களை சுரைக் குடுவையில் தாங்கி திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து புஷ்பங்களை இரட்டைப் பிள்ளையார் சந்நிதியில் அர்ப்பணித்திட வேண்டும். ஏனென்றால் நாகலோகத்தில் இரட்டைப் பிள்ளையாரே மூல முதல் கணபதி ஆவார். இன்று பாம்பன் சுவாமிகளின் "பகை கடிதல்" பதிகங்களை ஓதி கிரிவலம் வருதல் விசேஷமானதாகும். புதுப் பதவிகளில் சேர்ந்திருப்போர் போட்டி, பொறாமை, பகைமை வராது தற்காத்துக் கொள்ள உதவும் மாத சிவராத்திரி கிரிவலமிது! உறவுப் பகை, வியாபாரப் பகை, கூட்டு வியாபாரப் பகை, சொத்துப் பகையால் ஏமாற்றப் பட்டவர்களும், பகைவர்களின் துன்புறுத்தல்களால் வாடுவோரும் நல்ல தீர்வுகளைப் பெறுவர்.

"அடுத்து என்ன செய்வானோ?" என்று பகைவனைப் பற்றி,  கூட இருந்தே உறவாடிக் கெடுப்பவனைப் பற்றி எண்ணி அஞ்சி வாழ்வோர் தம் கவலைகள் தீர திருவல்லம் பாம்பணையான் சித்தர் சிவராத்திரியில் இருந்து மாதம் தோறும் சிவராத்திரியில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து பகைக் காப்பு சக்திகளை சித்தி செய்து கொள்ள வேண்டும்.

சுரைக்குடுவை மகாத்மியம்

ஸ்ரீஅகஸ்தியர் அருளியபடி லோக மாதாவாம் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் திவ்ய தரிசனம் வேண்டி தேவாதி தேவ மூர்த்திகளும் பெரிய பெரிய ருத்ர, சிவ மற்றும் பல கோடி பூத கணங்களும் சனி மற்றும் திரிதியை திதி தோறும் சுரைக் குடுவையில் விளக்கு வைத்து விளக்கெண்ணெய் தீபம் ஏற்றி திருஅண்ணாமலையில் அருணாசலத்தை மிகவும் பக்தியுடன் பல யுகங்கள் கிரிவலம் வந்து பரமானந்தம் அடைந்தார்களாம். இதனால் மனம் மகிழ்ந்த அம்பிகை அருணாசலத்தின் லலித ஷ்யாமள மலை தரிசனப் பகுதியில் கையில் ஒரு பெரிய திவ்யப்ரகாசமான சுரைக் குடுவையுடன் காட்சி தந்தாள்.

ஆனால் அங்கு அதற்கு முன்னரேயே பல கோடி ரிஷிகளும் கைகளைக் குவித்துக் கொண்டு காத்துக் கொண்டிருந்தனர். பிரசித்தி பெற்ற சப்த ரிஷிகள், பெரிய தபஸ்விகள், மஹாமுனி ச்ரேஷ்டர்கள் அனைவரும் காத்துக் கிடக்க....எதற்கு?  எவருக்கேனும் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி தாங்கிய அந்த சுரைக் குடுவை அரும்பெரும் பாக்கியமாகக் கிட்டிடாதா என்று ஏங்கி!

அப்பொழுது திடீர் என்று அம்பிகையின் கைகளிலிருந்து ஒரு சுரைக் குடுவை மறைந்தது! எங்கு போயிற்று?  திரும்பிப் பார்த்தால் சித்தர்களுக்கு, மகரிஷிகளுக்கு மூல முதல்வரான, மகா ச்ரேஷ்டர்களுக்கெல்லாம் பிரபுவான ஸ்ரீலஸ்ரீஅகஸ்திய மஹாப்ரபுவின் கரங்களில் அக்குடுவை பறந்து சென்று அமர்ந்தது.

உடனே ஸ்ரீஅகஸ்தியர் பிரான் சுரைக் குடுவையில் புஷ்பம், தானியங்கள், பொன், வஸ்திரங்கள் போன்ற மங்களப் பொருட்களை நிரப்பி அருணாசலத்தைக் கிரிவலம் வரலானார். அப்போது அவருக்கு முன் ஒரு சிறிய உருவம் கிரிவலம் சென்று கொண்டிருந்தது. யாரும் அந்த அளவிற்கு குனிந்து பார்க்க முடியாத அளவிற்கு மிகச் சிறிய உருவம்! அவர்தாம் ஸ்ரீவிட்டிலானந்த மஹாமுனி! அகஸ்திய மஹரிஷியோ அவரை சாஷ்டாங்கமாக வணங்கி அச்சுரைக் குடுவையை அவருக்கு அளித்தார். கட்டை விரல் அளவேயான அம்மகான் சூரிய லோக வேதமாமகரிஷி ஆவார்.

கட்டை விரல் பருமனான அவரால் அந்த சுரைக் குடுவையைக் கையால் தாங்கிப் பிடிக்க முடியவில்லை! ஆனால் மிகவும் சக்தி வாய்ந்த சூரிய மண்டலத்தில் சூரியத் தேரில் வேதமோதும் பாக்யம் பெற்ற வாலகில்ய மகரிஷிகளின் பீடாதிபதியான ஸ்ரீவிட்டிலானந்த மஹாமுனியால் இயலாதது ஏதும் உண்டா? ஆனால் வேத நாடகமாடுவது போல் சரி என்று சொல்லிச் சுரைக் குடுவையைத் தன் தலையில் வைத்துக் கொண்டு கிரிவலம் செல்லலானார். எவராலும் அவரை தொடர்ந்து செல்ல முடியவில்லை! அந்த அளவு வேகத்தில் அவர் நகர்ந்தார். சூரிய பகவானுடைய வேகத்திற்கு ஈடாகப் பறந்து வேதமோதும் சக்தி கொண்டவராயிற்றே!

எவராலும் அவரைப் பிடிக்க முடியவில்லை, சுரைக் குடுவையைத் தொடக் கூட முடியவில்லை. அப்பொழுது சுரைக் குடுவையின் மகத்துவத்தை, இந்த பொக்கிஷத்தின் மகிமையை உலகிற்கு உணர்த்த ஈஸன் சித்தம் கொண்டான். உடனே நந்தீஸ்வர மூர்த்தியுடன் ஈஸ்வரனே பூலோகத்திற்கு வந்து ஒரு சாதாரண மானுட வேடத்தில் மகரிஷியின் முன் சென்று அச்சுரைக் குடுவையை நமஸ்கரித்தார். குடுவை சட்டென்று நின்றது.

ஆ.......என்ன இது?  அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினார். ஆஹா!  நாமும் நமஸ்காரம் செய்திருந்தால் சுரைக் குடுவையின் ஜோதி தரிசனம் புலப்பட்டிருக்குமே! இந்த யோசனை தோன்றாது போய்விட்டதே. நாமும் நமஸ்காரம் செய்திருந்தால் குடுவை நின்றிருக்குமே!

ஸ்ரீவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம்

ஸ்ரீவேதஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்

அப்போது நந்தீஸ்வரமூர்த்தி முன் வந்து அம்மகரிஷியின் பெருமையை உணர்த்தினார். சூரிய லோகத்தில் தினமும் சூரியனோடு விரைந்து சென்று சென்று பிரபஞ்சமே தாங்க முடியாத அளவில் அவருடைய தேகாக்னி பெருகி விட்டது!  ஈஸ்வரனே தம் கட்டை விரலால் இவருக்குத் திருநீறு இட்டு சுரை வரை அரையாயிரு! என்று அருளி கிரிவலத்தைத் துவக்கி வைத்து யாமே இதை முடித்து வைப்போம் என்றும் அருளினார். மகரிஷியும் பல கோடி யுகங்கள் அருணாசலத்தைக் கிரிவலம் வந்து தேகாக்னியும் தணிந்து, உடல் தேய்ந்து தேய்ந்து கட்டை விரல் அளவாகி விட்டார்.

எதற்காக இப்படி ஒரு விடாப் பிடியான கிரிவலம்? அதுவும் தன் உயரமே தேய்ந்து குறையும் அளவிற்கு என்று நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டாமா? அவர் அருணாசலப் பெருமானிடம் தமக்கு இதுவரை யாருக்குமே கிடைக்காத ஒரு அரிய பொருள் கிடைத்திட வேண்டும் என்று வேண்டிக் கிரிவலம் வரலானார். இதனால் ஸ்ரீலலிதா பரமேஸ்வரியே தாங்கிய அபூர்வமான சுரைக்குடுவை நமக்கும் தரிசனத்திற்குக் கிட்டியது. இந்தச் சுரைக் குடுவையை எவரெல்லாம் வைத்து பூஜித்து, மங்களப் பொருட்களை நிரப்பி தானமாக அளிக்கின்றார்களோ அவர்களுக்கு இது நிலையான செல்வச் செழிப்பைத் தரும் என்று அம்மகரிஷியே வாக்களித்து சிவபெருமானுக்குத் திருவடி பூஜையுடன் கிரிவலத்தை நிறைவு செய்தார். இவ்வாறு பூலோகத்தில் சுரைக் குடுவைக் கிரிவலம் பிறந்தது! கைகளிலோ, தலையிலோ, மங்களப் பொருட்கள் நிறைந்த சுரைக் குடுவையைத் தாங்கி திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர செல்வச் செழிப்பு விருத்தி ஆகும்.

பௌர்ணமி திதி

பௌர்ணமி நாள்: 17.1.2003 வெள்ளிக் கிழமை மாலை 4.58 மணி முதல் 18.1.2003 சனிக்கிழமை மாலை 4.17 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

கிரிவல நாள்: 17.1.2003 வெள்ளிக்கிழமை இரவு.

மாத சிவராத்திரி

1.1.2003 புதன்கிழமை விடியற்காலை 5.42 மணி முதல் 2.1.2003 வியாழக்கிழமை விடியற்காலை 3.38 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மார்கழி மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.

ஜனவரி 2003ல் இரண்டு சிவராத்திரிகள் அமைகின்றன.
முதல் சிவராத்திரி கிரிவல நாள்: 1.1.2003 புதன் இரவு.

30.1.2003 வியாழக்கிழமை மாலை 5.32 மணி முதல் 31.1.2003 வெள்ளிக் கிழமை மாலை 4.43 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தை மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.

ஜனவரி 2003ல் இரண்டாவது சிவராத்திரி கிரிவல நாள்: 30.1.2003 வியாழன் இரவு.

அமுத தாரைகள்

மந்த புத்தி அகன்றிட....

சிறு பிராயத்தியிலிருந்தே புத்திசாலியாக இல்லாது புத்தி மந்தமாகவே, முதல் வகுப்பிலிருந்து கல்வியில் சுமாராக படித்து வந்தால் என்ன செய்வது? இதற்குத்தான் சிவபெருமான் நம்மையெல்லாம் சிருஷ்டித்த ஸ்ரீபிரம்மாவிற்கே ஞானமளிக்கும் பிரம்ம ஞான மூர்த்தியாக குறித்த சில இடங்களில் அவதாரம் கொண்டுள்ளார். மேலும் அம்பிகையும் ஞானாம்பிகையாக (முழையூர்) வடிவு கொண்ட சிவத்தலங்களும் உண்டு. இத்தலங்கள் எல்லாம் புத்தி மந்தமான‌ பிள்ளைகளின் அவல புத்தியைப் போக்கி இறைஞானம் கூடிய அருட்செல்வத்தை வாரி வழங்குகின்றன.

ஸ்ரீபரசுநாதர் முழையூர்

கும்பகோணம் பட்டீஸ்வரம் அருகே முழையூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் பலரும் அறியா வண்ணம் கொறுக்கை என்னும் கிராமத்தில் ஓர் அற்புதச் சிவாலயம் பல முக்கிய ஆன்மீகப் பொக்கிஷங்களைத் தன்னுள் கொண்டு உள்ளே அடக்கமாக அமைந்திருக்கின்றது. ஒரு யுகத்தில் முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும், பிரம்ம தேவருக்கும் கூட பிரம்ம ஞானம் புகட்டிய சர்வேஸ்வரன் இங்கு ஸ்ரீபிரம்ம (ஞான) புரீஸ்வரராக இன்றும் அமைதியாக, அடக்கமாக, எளிமையாக, பணிவாக இவ்வுலகே அறியா வண்ணம் அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். அருள்ஞானத்தை கொழித்துக் கொண்டிருக்கின்றார். அள்ளிச் செல்வார் யார்? இங்கு பிரதோஷ பூஜையை ஆற்றிட புத்திசாலித்தனமும் கல்வி அறிவும் பெருகும்.

குரு துரோகத்திற்குப் பிராயச்சித்தம், பரிகாரம் கிட்டவே கிட்டாது!

வரும் சுபானு ஆண்டானது நம்பிக்கைத் துரோகம் இழைத்தவர்கள் மனம் திருந்தி வாழ வேண்டிய ஆண்டாக அமைகின்றது. சுபானு ஆண்டிற்குள் மனம் வருந்தி, அழுது, புரண்டு தான் செய்த நம்பிக்கை துரோகத்திற்கு இவர்கள் பிராயச்சித்தம் நாடியாக வேண்டும். இதிலும் சற்குருவிற்கு நம்பிக்கை துரோகம் இழைத்தவர்களுக்கு சர்வேஸ்வரனிடம் கூட மன்னிப்புக் கிட்டாது. அதிலும் திருஅண்ணாமலையில் தான் இதற்கான குருவருள் கிட்டும். குருவே மனம் ஒன்றி வேண்டி இறைவனிடம் பிரார்த்தித்தால் தான் குரு துரோக விளைவுகளில் இருந்து ஒருவர் ஓரளவேனும் மீள முடியும். இல்லையெனில் எத்தனை கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் குரு துரோகி என்ற நிலையில் இருந்து வெளி வரவே முடியாது. ஜன்மம், ஜன்மமாக உடலற்ற, தலையற்ற, கால்களற்ற ஆவிகளாக அலைய வேண்டியதுதான்!

ஒரு சற்குருவிற்கு இழைத்த துரோகத்திற்கான பரிகாரங்களை இறைவனிடமோ, வேறு சற்குருவிடமோ, மகானிடமோ, வேறு ஏதேனும் ஜீவ சமாதியிலோ  நிச்சயமாகப் பெறவே முடியாது. எந்த சற்குருவிற்குத் துரோகம் இழைத்தார்களோ ஏதேனும் ஒரு பிறவியில் அவரே தானே மனங்கனிந்து மன்னிக்க விரும்பி நாடினால் தான் பரிகாரம் கிட்டும். அவரே முன் வந்து அருளினால் தான் பரிகார வழிகள் தென்படும். இல்லையெனில் ஆவியாய், பிசாசுகளாய் அலையும் ஈனப் பிறப்புகளே எ(மி)ஞ்சும்.

தற்காலத்தில், அஸ்தியை வீட்டிற்கு எடுத்து வரக் கூடாது என்று தவறான கருத்து நிலவுகின்றது. அஸ்தியைத் தாராளமாக வீட்டிற்கு எடுத்து வரலாம். இதில் எவ்வித தோஷமும், சாபமும், குறைபாடும் கிடையாது. பொதுவாக நம் மூதாதையர்களின் நெறிப்படி அரசு, ஆல், வேம்பு, மற்றும் பால் விருட்சங்களின் கிளைகளில் ஒரு மஞ்சள் துணியில் எஞ்சிய அஸ்தியை முடிந்து வைப்பார்கள். இவ்வாறு புனிதமான விருட்சங்களில் அஸ்தியைக் கட்டி வைக்கின்ற வழக்க முறை நிலவியதன் மூலமேனும் அஸ்தியைப் புனிதத் தலங்களில் கரைக்க வேண்டியதின் மகத்துவத்தை இனியேனும் புரிந்து கொள்ளுங்கள். ஆனால் வீட்டிற்கு வெளியில் இவ்வாறு மரத்தில் அஸ்தியைக் கட்டி வைப்பதால், வீட்டிற்குள் எடுத்து வரக் கூடாது என்ற ஒரு தவறான எண்ணமும் கூடவே வந்து விட்டது. எனவே அவரவர் குடும்பத்தில், அஸ்தியை ஒரு சுத்தமான மரப் பெட்டியிலோ, மஞ்சள் துணியிலோ வெற்றிலைச் சருகுகளுடன் உள்ளே வைத்து மஞ்சள் துணியால் மடிந்து பத்திரமாக இல்லத்தில் வைத்திடலாம். குறித்த சில மரங்களிலும் கட்டி வைத்திடலாம். இதில் எவ்விதத் தவறும் கிடையாது. பிறகு தக்க நதிகளில் கரைத்திடலாம்.

கொறுக்கை சிவாலயம்

உடல் தகனத்தின் கபாலப் பகுதி சரியாக பஸ்மம் ஆகவில்லை என்றால் இறந்தவர், பலரையும் பலத்த மன வேதனைகளுக்கு ஆளாக்கியுள்ளார் என்பது பொருள். இதற்கான பிராயச்சித்த முறைகளை முறையாகச் சந்ததியினர் மேற்கொள்ள வேண்டும். கபாலம் சரியாக பஸ்மம் ஆகாதோர்க்காக நிறைய சிதறுகாய்களை விநாயகருக்காக உடைத்தலுடன், தேங்காய் வகை உணவுகள், நெல்லிக்காய், பலாக்கொட்டை, பலாப்பழம், மாம்பழம் போன்ற கொட்டை வகை உணவுகளையும் தானமாக அளித்து வருதல் வேண்டும். மேலும் முத்து மற்றும் ரத்தினக் கற்கள் கூடிய தோடு மற்றும் நகைகளை ஏழைப் பெண்களுக்குத் தானமாக அளித்து வர, கபாலம் சம்பந்தப்பட்ட தீராத கர்ம வினைகளுக்குப் பிராயச்சித்தம் கிட்டும்.

சங்கராந்தி மூர்த்தி ஸ்ரீராஜகோபால ஸ்வாமி

ஸ்ரீராஜகோபால மூர்த்தி எனச் சில யுகங்களில் பெயர் கொள்ளும் இம்மூர்த்தியே பல யுகங்களிலும் ஸ்ரீபரிமள ரங்கராஜராகவும், ஸ்ரீபத்ரிநாத மூர்த்தியாகவும் அருள்பாலித்துள்ளார். எனவே மாதப் பிறப்பினை இங்கு சங்கராந்திப் பண்டிகையாகக் கொண்டாடி அந்தந்த மாதத்திற்கு உரிய சங்கராந்தி தேவதா மூர்த்தியைப் பூஜித்து இவ்வாலயத்தில் வழிபடுவது சிறப்புடையதாகும். அனைத்து மாத சங்கராந்தி மூர்த்திகளும் மாதந்தோறும் இங்கு ஸ்ரீமத்துவரதராஜரை தரிசித்தே உற்பவிக்கின்றனர். மேலும் ஸ்ரீசூரிய பகவானும் ஒவ்வொரு ராசியிலும் உதிக்கும் முன் இங்கு ஸ்ரீமத்துவரதராஜரையும், ஸ்ரீராஜகோபால சுவாமியையும் பூஜித்தே தம் ராசிப் பிரவேசத்தைத் துவக்குகின்றார்.

ஷண்ணாவதி தர்ப்பணம்

அமாவாசை தோறும் மட்டும் தர்ப்பணம் அளித்தல் வேண்டும் என்று எண்ணாதீர்கள். மாத அமாவாசையோடு ஒவ்வொரு மாதப் பிறப்பும், விஷ்ணுபதி, ஷடசீதி போன்ற முக்கியமான தினங்களிலும், கிரஹண நாட்களிலும் கண்டிப்பாகத் தர்ப்பணம் அளிக்க வேண்டும். இவற்றோடு ஒவ்வொரு மாதமும் இறந்தவர்களுடைய திதி வருகின்ற நாட்களிலும் தர்ப்பணம் அளித்தாக வேண்டும். இவ்வாறாக ஒருவர் ஒரு வருடத்தில் 96 நாட்களில் நன்முறையில் தர்ப்பணம் அளித்தால் தான் பித்ருக்கள் நன்முறையில் இறைவளம் பெற்றும் நமக்கு ஆசிகளைப் பெற்றுத் தருவார்கள். இதுவே ஷண்ணாவதி தர்ப்பண பூஜையாகும்.

பேயாழ்வார்

பேயாழ்வார் உத்தம இறை ஞானிகளுள் ஒருவர். வைணவத் தத்துவம் மூலமாக இறைவனை தரிசித்த பெரும் ஆழ்வார்ஞானி "பே" ஆழ்வார் என்பதே பேயாழ்வார் ஆயிற்று. அதாவது பே என்பது மிகவும் அரிய ஹரிபூஷண வேத பீஜாட்சரங்களுள் ஒன்று. ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் பேரின்பப் பிரகாச சக்தியில் உதிக்கும், ஒலிக்கும் பீஜாட்சரம் இதுவே!

மயூர சக்திகள் நிறைந்த இடங்களில் "பே" வகை ஹரிபூஷண பீஜாட்சர சக்திகள் மயூர நிறைந்திருக்கும். எனவே தான் "பே" என்ற பீஜாட்சர அம்சமாகப் "பே ஆழ்வார்" திருமயிலையாகிய மயிலாப்பூரில் அவதரித்தார். பலரும் பேய் + ஆழ்வார் எனப் பிரிக்கின்றனர்,  இது தவறு. பே + ஆழ்வார்  எனப் பிரித்துப் பொருள் கொள்வதே ஆன்மீக ரீதியாகச் சரியானது.

பேசும் பொற்பதச் சித்திரமாய்ப் பெருமாளைத் தரிசிக்க வேண்டும் என சகல பீஜாட்சர மூர்த்திகளும் பரந்தாமனை வேண்டிய போது பூலோகத்திற்குத் தேவையான வைணவ அம்சப் பரம்பொருள் சக்திகளை அளிக்க நான்கு ஆதிமூல பீஜாட்சர சக்திகளைத் தாங்கி ஹரிபூம்ய வாசத்துடன் ஞானவாசம் கொண்ட ஆழ்வராதியர் தோன்றுவர். இவர்கள் சதுர்வேதப் பீஜாட்சர சக்திகளை வைணவப் பாசறையில் பொருத்தி ஜீவன்களைக் கடைத்தேற்றும் என்று பரம்பொருளே ஓதிய அருளுரையின்படி நம்மாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகிய மூல ஆழ்வாராதியர் நால்வர் தோன்றிப் பொலிந்தனர். இவர்களில் பேயாழ்வார்பிரான் தோன்றிய அற்புத ஞானக்கிணறு சென்னை மயிலாப்பூரில் அருண்டேல் வீதியின் அருகே உள்ளது.

பூலோக மக்கள் யாவரும் தம்முடைய வாழ்வில் கண்டிப்பாகத் தரிசிக்க வேண்டிய பேயாழ்வாரின் அவதாரத் தலம் இதுவே! புதன், திருவோணம், புனர்பூசம், ரோஹிணி, சனிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.  எப்போதும் சோகச் சூழ்நிலைகளில் வாழ்வோர் இங்கு அடிக்கடி தரிசித்துப் பேயாழ்வாரின் பாசுரங்களை ஓதி வழிபட்டு ஏழைகளுக்கு பேயன் வாழைப்பழம், வாழைப்பூ உணவு, திப்பிலி ரச அன்னம்தனை தானமாக அளித்து வர வாழ்வில் சோகங்களைக் களையும் அருமறை ஞானியாம் பேயாழ்வார் பெருங்கருணை கிட்டும். குறிப்பாக இள வயதிலேயே தாய், தந்தை, குழந்தைகளை இழந்தோர் இங்கு தரிசித்துப் பேயாழ்வாரின் பாசுரங்களை ஓதிவர வாழ்வில் சோக அலைகள் மறைந்து தெய்வீக வாழ்வில் உத்வேகம் கிட்டும்!

திருஅண்ணாமலை திருஅண்ணாமலையார் திருக்கோயிலின் மேற்கு கோபுரம் பே கோபுரம் என்றே அழைக்கப்படுகிறது. இது சம்பந்தமான ஒரு சுவையான தகவலை இங்கு அடியார்களுக்கு அளிக்கிறோம். ஒரு முறை நம் சற்குரு தமிழ்நாட்டின் பல திருத்தலங்களிலும் கார்த்திகை தீப ஜோதியை ஏற்றும் முகமாக அடியார்களை பல திருத்தலங்களையும் பார்வையிட்டு வருமாறு கேட்டுக் கொண்டார்கள். அவ்வாறு பல திருத்தலங்களைப் பார்த்து அடியார்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தபோது நம் சற்குருவே நேரில் அந்த இடங்களுக்கு எல்லாம் சென்று தீபம் ஏற்ற அந்த திருத்தலங்கள் உகந்தவையா என்பதை தாமே நேரில் பார்த்து உறுதி செய்து கொண்டார். அவ்வாறு சென்னிமலை திருத்தலத்திற்குச் சென்றபோது அந்தக் கோயிலில் விளங்கிய ஸ்ரீபிண்ணாக்கு ஈசரின் ஜீவ சமாதியை தரிசித்த பின்னர் அத்தலத்தில் எழுந்தருளிய ஈசனை தரிசிக்கச் சென்றபோது நம் சற்குருவின் தெய்வீகப் பொலிவு அங்குள்ள கோயில் குருக்களை ஈர்த்ததாலோ என்னவோ அவர் நம் சற்குருவின் விலாசம், தொழில் போன்ற விவரங்களைத் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வம் காட்டினார். நம் சற்குருவும் சற்றும் சளைக்காது, “சுவாமி, நீங்கள் நினைப்பது போல் அடியேன் சிவாச்சாரியாராகத்தான் திருஅண்ணாமலையார் கோயிலில் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். அங்கேதான் அடியேனுடைய இல்லமும் பே கோபுரத் தெருவில் அமைந்துள்ளது. அடியேனுடைய பெயர் சுப்ரமண்ய சிவாச்சாரியார் என்று விசாரித்தால் உங்களுக்கு தேவையான விபரங்களைக் கோயிலில் தருவார்கள்,” என்று தெரிவித்தார்கள். சென்னிமலை, பிண்ணாக்கு, பே கோபுரம் என்ற மூன்று பெயர்களையும் நீங்கள் ஆத்ம விசாரம் செய்து பார்த்தாலே போதும் பேயாழ்வரின் அவதாரத்திற்கும் நம் சற்குருவின் பூலோக வாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பு தெள்ளத் தெளிவாக மலரும்.

பே என்றால் இல்லை என்ற ஒரு பொருளும் உண்டு. பலரும் தற்காலத்தில் வேலை கிடைக்கவில்லை, பெண் கிடைக்கவில்லை, உழைப்பிற்குத் தகுந்த ஊதியம் கிடைக்கவில்லை, தன்னுடைய அன்பை யாருக்கும் மதிக்கத் தெரியவில்லை என்ற “இல்லை” பாட்டையே பல இடத்திலும் கேட்டுக் கொண்டு இருக்கின்றனர். இவ்வாறு தாங்கள் நியாயமாக விரும்பிய எதுவும் கிடைக்காமல் மனம் நொந்து இருப்பவர்களும், பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களும், திறமைகள் பல இருந்தாலும் மக்களால் மதிக்கப்படாதவர்களும் இந்த பே கோபரம் என்ற திருஅண்ணாமலை மேற்கு கோபுரத்திலிருந்து கிரிவலத்தை ஆரம்பித்து தெற்கு கோபுரம் வழியாக வந்து கிரிவலத்தை வழக்கம்போல் ஸ்ரீபூதநாராயண சன்னதியின் நிறைவு செய்தலால் இவ்வாறு இல்லை என்ற அவமதிப்பையும், நிராகரிப்பையும் அவர்கள் பெறமாட்டார்கள் என்பதே நம் சற்குருவின் அனுகிரக சக்தியாகும்.

கலியுகத்தில் பல கடுமையான நாக தோஷங்கள் நிலவுகின்றன. மனிதனுடைய உடலில் நாக அம்சமே நாக்கு ஆகும். எனவே நாக்கால் செய்யும் குற்றங்களும் நாக தோஷங்களை உருவாக்குகின்றன.

நல்லோரைத் தேவை இன்றி நாக்கால் திட்டிய தோஷம், குருவைப் பழித்த தோஷம் இவையும் நாக தோஷங்களின் பால் அடங்கும். கணவனோ, மனைவியோ ஒருவருக்கு ஒருவர் திட்டிப் பகைமை பூண்டாலும் நாக தோஷங்கள் உருவாகும்.

பலவிதமான நாக தோஷங்கள் நீங்கிட வரும் மாத சிவராத்திரியில் மஞ்சள், குங்குமம், பழங்கள் மற்றும் மங்களப் பொருட்கள் நிறைந்த சுரைக் குடுவையுடன் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதல் வேண்டும்.

ஸ்ரீகாமாட்சி அம்மன் ஒழுகமங்கலம்
சோற்றைப் போடு சித்தனாவாய் !

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam