கண்ணின் மணியான கண்மணி நீதான், கண்ணா !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

கண்டேன் கீதையை!

அக்காவியுடை தரித்தவரை சிறுவனுக்கு எங்கோ கண்டதாக ஞாபகம் துருவியது. ஆனால் யாரென்று அறிய முடியாது நினைவுத் திறன் சிறுவனுக்கு மங்கி விட்டதே!

அவரைப் பற்றிப் பெரியவரைக் கேட்கலாம் என்றால், அவரோ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தார், அல்லது தூங்குவதாக வழக்கம் போல் நடித்தாரா, அதுவும் தெரியவில்லையே!

காவியாரும் சிறுவனையே வெகு நேரம் உற்றுப் பார்த்தபடியே இருந்தார். சிறுவனுக்கோ இப்போது வெடவெடத்த பயமும் கூடவே சேர்ந்து வந்து விட்டது யாரிவர்? நம்மையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றாரே!

சற்குருவின் நிழல்
கும்பகோணம் திருத்தலத்தில் இசைத்த கீதம்!

சட்டென்று அந்தக் காவியார் எழுந்து அவனை நோக்கி வந்தார். இதைக் கண்டு கழுத்து வரை தன்னை ஆக்கிரமித்த பயத்தில், சிறுவன் எழுந்து கூட ஓடி விடலாமா என்று கூட நினைத்து விட்டான்.

“சேச்சே என்னே கேவலமான நினைப்பு இது?” என எண்ணித் தன்னை நன்கு உதறிக் கொண்டான் சிறுவன்!

அதற்குள் அந்தக் காவியார் விரைவாக எழுந்து வந்து, கல்லில் படுத்திருந்த பெரியவரின் கால்களைப் பற்றியவாறு தடாலென்று “ஓவென்று” ஆனந்தக் கண்ணீர் வடித்து அழுதார்!

“சாமீ! என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க!” ஆம், உண்மையாகவே புளங்காங்கிதமடைந்த புனல் நீரேயது!

சிறுவன் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தான்! பெரியவர் அப்போதுதான் நல்ல தூக்கத்தில் இருந்து விழிப்பவர் போல எழுந்தார். சிறுவனை நோக்கி “யாருடா கண்ணு இவரு?” என்று கேட்டபடி அந்தக் காவியாரைப் பார்த்து,

“புண்ணியவானே, உங்களை மாதிரித் துறவிங்க கால்ல நாங்கதான் விழுந்து ஆசி வாங்கணும். என்னை மாதிரிக் கேவலமான ஆசாமியோட கால்ல எல்லாம் காவி கட்டின நீங்களெல்லாம் விழலாமா? என்ன அபச்சாரம் இது?” என்றார்.

விமுக்தியில் விமல முக்தியாம்!

அந்தக் காவியாரும் பணிவன்புடன் எழுந்து நின்று இருவரையும் மாறி மாறிப் பார்த்தார்.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க சாமி! விமுக்தி கொடுத்து அடியேனுக்கு, பகவத் கீதையாட்டம் அப்பப்ப அறிவுரை சொல்லி இந்த அழுகின உடம்புக்கு முக்தி கொடுத்த தெய்வம் நீங்க!”

சிறுவனுக்குப் பளீரென்று ஞாபகம் வந்தது! ஆம், ராயபுரம் அங்காளி கோயிலில் பெரியவரிடம் “விமுக்தி” ஸ்வீட்டுகள் வாங்கிய அதே குண்டு முகம்தான்!

“சாமி என்னைத் தெரியலையா? அங்காளி கோயில் வாசல்ல இருந்த பிச்சைக்காரன்தான் சாமீ நானு! நீங்க கூட இந்தப் பையன் மூலமா தெனமுமே விமுக்தி ஸ்வீட் வாங்கிக் கொடுப்பீங்களே!”

சிறுவன் அர்த்த புஷ்டியுடன் சிரித்தான்!

“ஆமா வாத்தியாரே நம்ப அங்காளி கோயில் வாசல்ல உக்காந்துருப்பாரே, நீ விமுக்தி கொடுத்து, கொடுத்து வளர்ந்தவரு! அதே ஆளுதான்! இப்ப சாமியாராயிட்டாரு!”

சிறுவனுக்கு எப்போதோ “பெறாமல் விட்ட விமுக்திக்” குறையானது, இன்று அவனுடைய வாய் வார்த்தைகளில் சூடாகக் கொப்புளித்து மிதந்து வந்தது!

அவனே மிகவும் எதிர்பாராத வகையில் பெரியவர் அவனைப் பார்த்து முறைத்தார்!

“ஏண்டா உனக்கு ரொம்பத் தெரியுமோ? பெரியவங்க பேசறப்ப என்னடா குறுக்க, குறுக்கப் பேசற கெட்ட பழக்கம்? வாயை மூடுடா, அதிகப் பிரசங்கி!”

எதிர்பாராத கணை இது! வெலவெலத்துப் போய்ச் சிறுவன் கப்சிப்பென்று வாயை மூடிக் கொண்டான். சப்த நாடிகளும் அவனிடம் ஒடுங்கின!

பெரியவர் அந்தக் காவியாரைப் பார்த்து “அது சரிப்பா, நீ அங்கேருந்து இங்க எப்படி வந்தே? இது என்ன புதுக் கோலம்? அப்ப நீ கைலியைத்தானே உடம்புல சுத்திக்கினு கெடந்தே!” என்று பரிவன்புடன் வினவினார்.

“அது ஒரு பெரிய கதை சாமீ!” என ஆரம்பித்தார் அந்தக் காவியுடை தரித்தவர்!

சிறுவனும் நன்றாக உட்கார்ந்தபடி, தன் காதுகளைத் தீட்டிக் கொண்டு கதை கேட்கத் தயாரானான்.

போதுமப்பா, போதும்!

பெரியவர் கையில் இருந்து ஒரு மாத காலம் தொடர்ந்து விமுக்தி சாப்பிட்ட அந்தப் பிச்சைக்காரர், திடீரென்று பல நாட்கள் அங்காளி ஆலயத்தில் பெரியவரைக் காணாமையால் மிகவும் ஏங்கித் திகைத்தார்.

ஒரு நாள் கனவில்...

பெரியவர் தோன்றி, “இதோட போதுமடா கண்ணு பிச்சை எடுத்தது! உன்னோட பிச்சைக்காரக் கோல பாக்கி இன்னியோட தீர்ந்திடுச்சு! இனிமேயாச்சும் நிறைய கோயில், குளம்னு பக்தியோட சுத்த ஆரம்பிக்கணும் தெரிஞ்சுதா! இனிமே ஒரு பைசா கூட பிச்சை எடுக்கக் கூடாது! யாராவது கூப்பிட்டுச் சோறு கொடுத்தா, ஒரு நாளைக்கு ஒரு வேளை அதுவும் அரை வயித்துக்குச் சாப்பிடு! நிறைய தண்ணீர், துளசி, வில்வம் சேர்த்துக்கோ! கடவுளாப் பார்த்து ஒரு நாளைக்கு உன்னைப் பூசாரியாக்குவான்!” என ஆணையிட்டார்.

அங்காளி கோயிலை விட்டு, அன்றே அவர் கிளம்பி தேசாந்திரியாகப் பல கிராமங்களுக்குச் சென்றா. பல்வேறு கோயில்களைத் தரிசித்தபடி, ஒவ்வொரு கிராமம் கிராமமாகச் சென்ற அவர், ஒரு கிராமத்தில் உள்ள கோயிலில் உள்ள இறைவனை வணங்கித் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்த போது, அதன் வழியே வந்த அந்த கிராமத்து நாட்டாண்மைக்காரர் அவருடைய பாடல்களைக் கேட்க நேர்ந்தது.

அவருக்கு இவர் மேல் அவரையும் அறியாமல் ஏனோ ஒரு அபிமானமும் தோன்றி விட்டது.

நாட்டாண்மைக்காரர் இவரை அணுகி, “சாமீ! நீங்க ஒண்ணும் சாதாரண பிச்சைக்காரன் மாதிரித் தோணலை! உத்தம சித்தரோட, ஆசீர்வாதம் வாங்கினவரு மாதிரி இருக்கு! உங்க பாட்டு என் மனசை உருக்கிடுச்சு! இந்த கோயிலுக்கு ரொம்ப நாளாப் பூசாரி இல்லாம, சரியா பூஜைகளைச் செய்ய முடியாம, நாங்க ரொம்பக் கஷ்டப்பட்டுக் கிட்டு இருக்கோம்., நீங்கதான் இந்தக் கோயிலுக்கு முறையா பூஜைகளைச் செஞ்சு வைக்கணும்!” என்றார்.

“தானோ மாஜி பிச்சைக்காரன்! தனக்கா இந்தத் தெய்வீக அழைப்பு!”

அவருக்கோ ஒரே ஆச்சரியமான திகைப்பு! என்ன சொல்வதென்றே தெரியவில்லை! சுவாமி விஷயம் ஆனதால் பொய் சொல்லவும் விரும்பவில்லை!

“நெஜமாவே நான் பிச்சைக்காரனுதாங்க! என்னைப் போய்ப் பூசாரியாட்டம் பூஜை பண்ணச் சொல்றீங்களே!”

“ரொம்ப அடக்கமா அப்படிச் சொல்லிக்கிறீங்க! அதென்னமோ உங்களைப் பார்த்தா தெய்வ கடாட்சம் உள்ளவராத் தோணுது, நீங்கதான் இந்தக் கோயில்ல தங்கி, இந்த கிராம மக்களுக்கு வழிபாட்டு முறைகளைச் செய்ய வச்சு நல்லா வழி காட்டணும்” என்றார் நாட்டாண்மைக்காரர்.

அப்போது சிறிது, சிறிதாக அங்கே வந்து சேர்ந்த கிராமத்து மக்களும் அதை ஆமோதித்தனர். பிச்சைக்காரர் எவ்வளவோ மறுத்துப் பார்த்தும், மக்கள் அவரை விடுவதாக இல்லை, கள்ளம் கபடமற்ற அந்த கிராமத்துக்காரர்களின் அன்பு அவர் மனதைத் தொட்டது.

“சரி, உங்கள் விருப்பப்படியே நான் இந்தக் கோயில்ல கொஞ்ச காலம் பூசாரியா இருக்கேன்! எனக்கு எந்த வசதியும், வேண்டாம்! சம்பளமும் வேண்டாம், இருக்கறது போதும்! ஒரு வேளைதான் சாப்பாடு!”

“ஆனால் ஒரு விஷயத்தில் நான் சொல்வதை நீங்கள் கேட்டாகணும், நான் யார் வீட்டிலும் வந்து சாப்பிட மாட்டேன், யாராவது ஒருவர் எனக்கு தினமும் ஒருவேளைச் சாப்பாடு மட்டும் கொஞ்சமாக கொண்டு வந்து போட்டால் போதும். பகல் பதினொரு மணிக்கு சாப்பாடு வரவிலைன்னா என்றால் அடியேன் அன்று முழுதும் பட்டினிதான். ஒரு ஆள் ஒரு நாளைக்குத்தான் சாப்பாடு தரணும், அடுத்த நாளைக்கு மற்றொருவர்தான் சாப்பாடு வைக்க வேண்டும் இதற்குச் சம்மதம் என்றால்தான் நான் இங்கு இருப்பேன்”

ஊர் மக்களும் அவருடைய எளிய நிபந்தனைக்குச் சம்மதித்தனர். அவரும் அந்தக் கோயிலிலேயே தங்கி, அபிஷேக ஆராதனைகளை, ஆத்மார்த்தமாகச் செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமல்ல, யார் அந்தக் கோயிலுக்கு வந்தாலும், கோயிலின் சிறப்பைப் பற்றியும், அங்கு எழுந்தருளி அருள்பாலிக்கும் இறைவனின் பெருமைகளைப் பற்றியும் சொல்லத் தவறுவதில்லை.

அதே சமயம், ஒரு நாளைக்கு ஒருவரிடம் மட்டுமே அரை வயிறு உணவேற்பது என்ற வைராக்கியத்தையும் விட்டுக் கொடுக்காமல் கடைபிடித்து வந்தார். நாட்கள் செல்லச் செல்ல இறைஅருளால் அவருக்கு நல்ல வாக்கு சித்தி ஏற்பட்டது. அவர் சொன்ன விஷயங்கள் பலிக்க ஆரம்பித்தன.

மக்களும் தங்கள் பிரச்னைகள் தீர நல்ல வழி பிறந்தது என்ற நம்பிக்கையோடு அவர் சொன்ன வழிபாட்டு முறைகளை நிறைவேற்றி, வாழ்வில் நல்வழி முறைகளை நிறைவேற்றி, வாழ்வில் நல்வழி கண்டனர். அந்த ஊர் மட்டுமல்ல, பக்கத்து கிராமங்களிலும் அவர் புகழ் பரவியது.

ஒருநாள் நாட்டாண்மைக்காரரே கோயிலுக்கு வந்தார். பண்டாரம் மிகவும் பணிவோடு எழுந்து நின்று அவரை வணங்கி வரவேற்றார்.

“சாமி, நல்லாருக்கீங்களா?” – வந்தவர் கேட்டார்.

“ஏதோ உங்க ஆசீர்வாதத்துல இருக்கேன், ஐயா”

“பெரிய வார்த்தையெல்லாம் வேண்டாம், சாமி! நான் ரொம்ப சாதாரணமானவன்.”

“ஐயா, நீங்க எப்படி இந்தப் பூசாரியைத் தேடி...”

“அதனாலென்ன, சாமி, நானும் மனுஷன்தான! எனக்கும் மத்தவங்களைப் போல பிரச்னைகள் உண்டுதானே, இல்லையா! அதுனாலத்தான் உங்களைப் பாத்து ஒரு நல்ல வழி கேட்டுட்டுப் போலாம்னு வந்தேன்”

“ஐயா, உங்களுக்கென்ன அப்படிப் பிரச்னை, நீங்க சொன்னா செய்யறதுக்குத்தான் ஆயிரம் பேரு காத்துக் கிட்டு இருக்காங்களே”

நாட்டாண்மைக்காரர் சற்றுத் தயங்கினார். சுற்றும்முற்றும் பார்த்தபடி தன் குரலைத் தாழ்த்திக் கொண்டார். “அது ஒண்ணுமில்ல சாமி, உங்கக் கிட்ட சொல்லறுதுக்கென்ன! ஊருக்கு வடக்கால கொஞ்சம் நிலம் சும்மாக் கிடக்குது. யாருமே வெள்ளாமை பண்றதில்லை., தரிசாக் கிடக்கற அத உங்க பேருல, கோயில் பூசாரி பேருல பட்டா போட்டு எடுத்து விவசாயம் பண்ணலாமேன்னுதான்...” எனச் சொல்லி இழுத்தார்.

பூசாரிக்கு ஓரளவு விஷயம் புரிந்தது. ஊருக்கு வடக்குப் பக்கம் வாய்க்கால் நன்கு ஓடுகின்றது. முற்காலத்தில் தர்மவான்கள் பலர் கோயிலுக்கு எழுதி வைத்ததாகச் சொல்லப்படுகின்ற, எப்போதுமே முப்போகம் தருகின்ற நிலங்கள் உள்ள பகுதி அது!

“நாட்டாண்மை கோயிலுக்குச் சொந்தமான நிலத்தை கைப்பற்றத் திட்டம் போட்டு விட்டு, அதற்கு சாமியிடமே உத்தரவு வாங்க வந்திருக்கின்றார்!”

பூசாரியான அவர், கண்களை மூடித் தான் தினமும் தொண்டு செய்யும் தெய்வத்தை நினைத்துத் தியானித்தார். பின்னர் கண்களைத் திறந்து நாட்டாண்மைக்காரரைப் பார்த்து பேசத் தொடங்கினார்.

“வேண்டாம் மகனே வேண்டாம்! நீ செய்யப்போவது அதர்மமான காரியம். யாருக்கும் சொந்தமில்லை என்று சொன்னாயே, அது உண்மையிலேயே கோயிலுக்குச் சொந்தமான நிலம். இது உனக்கே தெரியும்! கோயில் சொத்தை உன் பெயரில் பட்டா போட நினைப்பது உன் குலத்தையே நாசம் பண்ணிடும். அதை உடனே மறந்து விடு!”

நாட்டாண்மைகாரர் அத்தகைய பதிலை எதிர்பார்க்கவில்லை தான்!

“தான் பார்த்து வேலைக்கு வைத்த பண்டாரம்தானே, நிச்சயம் தனக்குப் பிடித்த பதிலைத்தான் தருவார்! அல்லது நல்ல பதிலைக் கேட்டு “வாங்கி” விடலாம்” என்று நினைத்திருந்தார்.

எனினும் திகைப்போடு “என்ன சாமீ, எனக்குச் சாதகமாய்ச் சொல்லுவீங்கன்னு நினைச்சேன்! உங்க பேரில் இல்லாட்டி என் பேரிலேயே பட்டா...” என இழுத்து முனகினார்.

பூசாரிக்கு நாட்டாண்மை அப்போதுதான் தன்னை “விலை பேச” வந்தது தெரிய வந்தது. எனவே அவர் சற்றும் அசையவில்லை.

“வேண்டாம் அய்யா! இது சரியில்லை! சிவ சொத்து குலத்தை நாசமாக்கும்! நீ நினைத்த காரியத்தை இத்துடன் விட்டுவிடுவது நல்லது. மீறி, முயற்சி செய்தால், என்றைக்கு உன் பெயரில் பட்டா போடுகின்றாயோ, அன்றே இந்த உலகை விட்டுக் கிளம்பி விடுவாய்!” என எச்சரித்தார்.

நாட்டாண்மைக்காரர் பதிலே பேசவில்லை!

“வந்த காரியம் நிறைவேறவில்லையே!” என்ற ஆத்திரத்தோடு திரும்பிக் கூடப் பார்க்காமல் வெகு வேகமாக நடந்து சென்றார். பூசாரியோ நாட்டாண்மையின் கோபத்தைச் சற்றும் கண்டு கொள்ளவேயில்லை., வேறு எவரிடமும் சொல்லவுமில்லை! தன் இறைப் பணிகளைத் தொடர்ந்தார்!

பல நாட்களாக நாட்டாண்மை மீண்டும் கோயிலுக்கு வரவேயில்லை. சிறிது நாட்களில்தான் அவரைப் பற்றிய செய்திதான் வந்து சேர்ந்தது.

ஏதோ நிலத்தைத் தன் பெயருக்கு ரிஜிஸ்டர் பண்ணியதாகவும், ரிஜிஸ்ட்ரார் அலுவலகத்திலேயே நெஞ்சு வலி வந்து, அன்று இரவே வைத்தியர் வந்து பார்ப்பதற்கு முன்பே உயிர் பிரிந்து விட்டதாகவும், ஊரில் சொன்னார்கள்.

சிறிது நாட்கள் கழித்து நாட்டாண்மைக்காரரின் மனைவி கோயிலுக்கு வந்தாள்.

பூசாரியிடம், “சாமீ, என் வீட்டுக்காரரு ஊருக்கு வடக்கால உள்ள நிலத்தைத் தன் பேர்ல பட்டா போட்ட அன்னைக்கே நெஞ்சு வலி வந்து இறந்துட்டாருங்க, அந்த நிலத்தை என் பேர்ல மாத்திக்கலாம்னு இருக்கேங்க!” என்றாள்.

பூசாரிக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை, “ஏம்மா, நாட்டாண்மை ஐயா அந்த நிலத்தைப் பத்தி முழு விவரமும் உங்க கிட்ட சொன்னாரா, இல்லையா?”

“ஏதோ நிலம் சும்மா கிடக்குது, நாம எடுத்து விவசாயம் பண்ணலாம்னு சொன்னாருங்க அவ்ளோதான்”

“வேண்டாம் அம்மா, வேண்டாம்! இந்தக் கோயிலுக்காக யாரோ புண்ணியவான் எழுதி வைச்ச நிலம் அது! அதை அபகரிக்கப் போய்த்தான் அவரு உயிரை விட்டாரு! உன் புருஷன் செய்த தப்பை நீயும் செய்யாதே! நான்தான் அப்படிச் செஞ்சா ஆபத்துன்னு அப்பவே சொன்னேனே!”

வந்த பெண்மணி திடுக்கிட்டாள்!

தேவபந்தலம்

விஷ்ணுபதிப் புண்யகாலம் – ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் ஆலயம் (விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே தேவபந்தலம் உள்ளது. திருஅண்ணாமலையில் இருந்தும் செல்லலாம்.)

விஷ்ணுபதித் திருநாள் – 13.2.2005 – ஞாயிறு

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா காலணிகளின்றித் தம் புனிதமான பொற்பாதங்களால் நடந்து வந்து புனிதத்தை நிறைத்திருக்கும் புண்ணிய பூமி! சித்தர்களே பெருமாளின் சாட்டையாய் உறையும் ஆலயம்! எத்தகைய கடுமையான கெட்ட வழக்கங்களையும், அங்கப் பிரதட்சிண சக்தியால் தீர்க்க உதவும் புனிதத் தலம்! வாழ்வில் பெருந்தவறுகளைச் செய்தவர்கள் தக்க பரிகார வழிகளைப் பெற உதவும் வைணவத் தலம்!

நடப்பு விஷ்ணுபதிப் புண்யகாலத் தலமாகச் சித்தர்கள் அருள்வது கள்ளக்குறிச்சி அருகே உள்ள தேவபந்தலம் திருத்தலமாகும்.

தேவபந்தலம்

விஷ்ணுபதிப் பூஜைக்கான கால நிர்ணயம்

பொதுவாக, விஷ்ணுபதிப் புண்ய காலமானது தமிழ் மாதப் பிறப்பை ஒட்டியதாக அமையும் அல்லவா! ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்தி சுவாமியை வழிபட்டு, சூரிய மூர்த்தி அந்தந்த ராசியில் பிரவேசம் செய்வதை வைத்து, விஷ்ணுபதிப் புண்ய காலத்தை அமைத்துத் தருகின்றார்கள். எனவே, விஷ்ணுபதியைக் கொண்டாடும் நாளை உத்தேசிப்பதில் திருக்கணித, வாக்கிய பஞ்சாங்கங்களில் சில நேர பேதங்கள் ஏற்படுவதும் உண்டு.

மாதப் பிறப்பு நேரத்தை, சூரியனின் ராசிப் பிரவேசத்தை வைத்துத் துல்லியமாகக் கணக்கிட்டு வாஸ்து பூஜை நேரத்தைக் கணிப்பது போல, சூரியப் பிரவேச நேரத்திலிருந்து குறித்த நாழிகையில், விஷ்ணுபதி பூஜை முறையைக் கொண்டாடும் பண்டைய நேர முறையும் உண்டு. முற்காலத்தில் விஷ்ணுபதிப் புண்ய கால நேரத்தில், வைணவ ஆலயங்கள் யாவும், வைகுண்ட ஏகாதசி உற்சவம் போல், 60 நாழிகையுமே மக்கள் தரிசனத்திற்காகத் திறந்து வைக்கப்பட்டு இருக்கும்.

வைணவ ஆலயங்களில் ஸ்ரீவிஷ்ணுபதிப் பூஜையினை அதிகாரப் பூர்வமான உற்சவாதிகளில் ஒன்றாகப் பண்டையக் காலம் போல் மீண்டும் கொணர்ந்து வழிபடுவது நாட்டிற்கும், சமுதாயத்திற்கும், உலக நாடுகளுக்கும் நன்மைகள் பயப்பதாகும்.

பெருமாள் ஆலயப் பூஜை முறைகளில் ஸ்ரீவிஷ்ணுபதிப் புண்யகால பூஜையும் அங்கீகாரமுடையதாக ஏற்கப்பட்டுப் பொது மக்களிடையே பிரதோஷ பூஜை போல, முழு கவனமும், விழிப்புண்டர்வும் உண்டாகும் வரையில், “பரஹரிப் பரமாத்யம்” என்ற பூஜைக் கால நிர்ணய வகையில், மாதப் பிறப்பிற்கு முதல் நாள் இரவு 1.30 மணி முதல் மறுநாள் மாதப் பிறப்பன்று காலை 10.30மணி வரையிலான பூஜை நேரத்தை விஷ்ணுபதி பூஜைக் காலமாக ஏற்று நடத்துதல் சிறப்புடையது.

கடந்த பல வருடங்களாக ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால மகிமையைப் பற்றி, நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், தம் சற்குருநாதராம் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் அனுகிரகத்தால், எண்ணற்ற உபந்யாசங்கள், ஆன்மீகப் பேருரைகள், தெய்வீக நூல்கள், இறையடியார்களுடன் நேரடிக் கலந்துரையாடல்கள் மற்றும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் மாத இதழ் மூலமாகவும், இதன் தாத்பர்யங்களையும், மகத்துவங்களையும் தெய்வீக மகிமைகளையும் பலாபலன்களையும் சாதி, மத, இன, குல பேதமின்றி யாவரும் பெற்று உய்யும் வண்ணம் அளித்து வருகின்றார்கள்.

வைணவப் பீடாதிபதிகளும், வைணவச் சான்றோர்களும், பெருமாள் பக்தர்களும், பக்த கோடிகளும் அனைத்து வைணவத் தலங்களிலும் விஷ்ணுபதிப் புண்யகால பூஜையை, வைகுண்ட ஏகாதசி போன்று, பண்டைய யுகங்களில் திகழ்ந்தது போல மீண்டும் பிரசித்தி பெறச் செய்யுமாறு, தாழ்மையுடனும் பணிவன்புடனும் கேட்டுக் கொள்கின்றோம்.

வரும் 13.2.2005 தினமானது தாரண வருட தை-மாசி மாத விஷ்ணுபதி நாளாக அமைகின்றது. 12.2.2005 அன்று மாலையே சூரிய மூர்த்தியின் கும்ப ராசிப் பிரவேசம் நிகழ்வதால், மாதப் பிறப்பு இதிலேயே தொடங்கி விடுகின்றது. தமிழ்ப் பஞ்சாங்க முறையில், எந்தக் கிழமையுமே சூரிய உதய நேரத்தில் இருந்து தொடங்குகின்றதாக, பல யுகங்களாக நியதித்து வருகின்றது. ஆனால், நடப்புக் கலியுகத்தில், உலகக் கணக்கு நேரமாக (GMT), நள்ளிரவு 12 மணிக்கு அடுத்த நாள் துவங்குவதாக, தினசரி நேரக் கணக்கு இருப்பதும், இதில் சில குழப்பங்களை ஏற்படுத்தும், எனவே இதில் மிகவும் கவனமாக இருக்கவும்.

புனித்ததிலும் புனிதமானதே தேவபந்தலம்

பந்தலம் என்பது – ஜீவன்கள் உத்தமமாக வசிக்கின்ற அளவில் புனிதம் நிறைந்தது – என்று பொருள். முப்பத்து முக்கோடி தேவர்களும் பெற்றுள்ள தேவ நிலையானது அதிஉத்தம, நிலைகளாகும். பசி, உறக்கம், கண்ணிமைக்காமை, பாதங்கள் தரையில் படாமை – போன்றவற்றுடன் ஆனவையே தேவர்களுடைய ஒளிப் பிரகாசச் சரீர நிலை.

மாசி மாத விஷ்ணுபதித் தலமாகிய தேவபந்தலம் மாமுனிகளும் பன்னெடுங்காலம் பர்ண சாலைகள் அமைத்து வழிபட்ட திவ்யமான புண்ணிய பூமியாகும். அமிர்தம் உண்டமையால், மென்மேலும் சாகா வரம் பெற்ற புண்ணிய சரீர தேகத்தை உடையவர்களே தேவர்கள், தேவபந்தலம் என்றால் பூலோகத்தினரும், விண்ணுலகத்தினரும் யாவருமே உறைந்திட, சாசுவதமான ஒளிப் பிரகாசமான வசிப்புத் தன்மையை அளிப்பதாகும். பூவுலகிற்கு அவ்வப்போது விண்ணுலகங்களில் இருந்து, தவம், யோகம், பூஜை, புனித நீராடல், தெய்வ தரிசனம், ஆலய தரிசனம், வழிபாட்டிற்காக பூமிக்கு வருகின்ற சித்தர்கள், ஞானிகள், யோகியர், மகரிஷிகள், மும்மூட்சுக்கள், பித்ரு தேவர்கள், தேவர்கள், சத்குருமார்கள் தங்களுடைய அக்னி சக்தி நிறைந்த, தேஜோமயமான சரீரங்களுடன் தங்க மிக மிகப் புனிதமான தலங்கள் பலவும் பூவுலகில் உண்டு. இவற்றுள் ஒன்றாகத் தேவபந்தலமும் துலங்குவது நமக்குக் கலியுலகில் பெரும் பாக்யமே!

ஆயுதந் தாங்காது அதர்மத்தை வெல்லும் நெறி!

மஹாபாரதத்தில், பஞ்ச பாண்டவர்களும் கௌரவர்களுக்கு அளித்த வாக்குறுதியின் படி, யாவரும் அறியா வண்ணம் மறைந்து வாழ்ந்த தலங்களுள் இதுவும் ஒன்றாகும். முந்தைய யுகங்களில் ஸ்ரீவரதராஜராகப் பரிணமித்த திருமாலப்பர், துவாபர யுகத்திற்குப் பிறகு தற்போது ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் எனும் நாமத்துடன், கையில் சாட்டையைத் தாங்கி அருள்கின்ற திவ்ய கோலத்தைப் பூண்டருள்கின்றார்.

மகாபாரதத்தில் குருக்ஷேத்ரப் போர் அனுபூதியில், “ஆயுதம் ஏந்திப் போரிடேன்!” என்ற வாக்குறுதி அளித்து, பர்த்தனாம் அர்ஜூனனுக்குத் தேரோட்டும் சாரதியாக வந்த பார்த்தசாரதியாம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா இங்கு தன் கையில் சாட்டையைத் தாங்கி இருப்பது ஏனோ?

இதனை அறிய தேவபந்தலத்தில் நிகழ்ந்த எண்ணற்ற விஷ்ணுபதி லீலைகளுள், புராண அனுபூதிகளுள் ஒரு சிலவற்றை அறிய, மஹாபாரதக் காலத்திற்குச் செல்வோமா!

...........”அதர்மவாதிகளை வென்று பாடம் புகட்டிட, தர்ம நெறிகளை மீறிச் செயல்பட வேண்டுமா?” என்ற வினா மகாபாரதத்தில் பாண்டவர்களின் மனதில் அவ்வப்போது ஒலித்து, பிரதிபலித்து எழுந்து கொண்டே வந்தது.

“பொய்மையும் வாய்த்த விடத்தே, புரை தீர்ந்த நன்மை பயக்குங் கால்” – என்ற திருக்குறளின்படி, பிறருக்கு நன்மைகளைப் பயக்கும் வகையில், எவருக்கும் ஓரணுத் துன்பம் கூட விளையாத வகையில் பேசப்படுவதானது பொய்த்த விடத்தாகாது. ஆனால் இந்த சத்தியப் பூர்வமான, விளக்கத்தைக் கலியுகத்தில் தவறாகப் புரிந்து கொண்டு, பொய்மையோடு, பொய்மையால், பொய்மையால், பொய்மையாக விளையாடிப் பெரும்பாவத்தை விளைவித்துக் கொள்பவர்களே அதிகமாகும்.

திருமால் கைச் சாட்டை திருச்சாட்டச் சக்தியாம்!

ஆயுதங்களில் சாட்டைக்குத் தனி மகத்துவம் உண்டு. சாட்டையில் உள்ள குச்சியின் நுனியில், கயிறு, நரம்பு, தாவர இழை முறுக்கு, மூலிகைப் பசைகள், வஜ்ரம் போன்ற பலவும் கலந்திருக்கும். அர்ஜூனனுக்குத் தேரோட்டும் சாரதியாக வந்த ஸ்ரீகிருஷ்ணர், குதிரைகளை அடக்கி ஒடுக்கி ஓட்டுவதற்காகச் சாட்டையைச் சுமந்தார் என்று கருத்தாகுமா?

ஏனெனில், எந்த ஒரு தெய்வ மூர்த்தியிடமும் உள்ள அம்சங்கள் யாவுமே – கிரீடம், கைக் கங்கணங்கள், ஆயுதங்கள், சிலம்புகள், கடுக்கன்கள் – போன்ற அனைத்துமே மகாதேவத் தவ நிலைகளை அடைந்த சித்தர்களும், மகரிஷிகளும், யோகிகளுமே ஆவர். இதே போன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைத் தாங்குகின்ற குதிரைகள், தேர் யாவையுமே பல சித்தர்களின் மகரிஷிகளின், ஆழ்வாராதியரின் அம்சங்களே!

எனவே பரமாத்மாவே ஓட்டுகின்ற தேருக்கு, அதியற்புத மகரிஷிகளே குதிரைகளாக அமையும் போது, அவர்களைக் கண்ணபிரான் சாட்டை கொண்டா அடக்குவார்? சற்றே சிந்தித்துப் பாருங்கள்! பரபிரம்மத்தின் முன் அடங்கி ஒடுங்கியமையால்தானே அவர்கள் மகரிஷிகளாகப் பிரகாசிக்கின்றனர். எனவே பக்தியால், அன்பால், அருளால் ஸ்ரீகிருஷ்ணனைப் பணிந்தவர்களை அடக்கிட பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஏன் சாட்டையைத் தாங்கிட வேண்டும்? இதற்கான விளக்கங்கள் யாவும் சித்தர்களிடமும் சித்தர்களுடைய இருடிகள் மகாபாரதத்திலும் தாம் காணக் கிடைக்கின்றன.

ஒடுக்கத்தூர்ச் சித்தரிடம் இதற்கான விளக்கங்களைப் பலரும் சூக்குமமாகப் பெற்றுள்ளனர். புலன்களை அடக்கி ஏதோ ஒரு மூலையில் இருந்து கொண்டு புவிப் புலத்தை அடக்கிய உத்தமச் சித்தரிவரே!

நெரியாத தவநெறிகள்!
மகரிஷிகளில் துர்வாசர், ச்யவனர், ஆபஸ்தம்பர் போன்றோர் குருகுலவாச நியதிகளில் மிகவும்  கண்டிப்பானவர்கள். இதே போன்று சித்தர்களில் தீவிரமான கட்டுப்பாட்டு நியதிகளை கொண்டிருக்கும் சித்தர்களும் உண்டு. இவர்கள் ஒரு சிறு பிழையைக் கூடப் பொறுப்பது கிடையாது. அந்த அளவிற்குப் பவித்ரமான, உத்தமமான தெய்வீக நிலைகளில் தாம் அவர்கள் தவம் புரிகின்றனர்.
இவ்வாறு தவத்திலும், யோகத்திலும், ஞானத்திலும், கர்ம மார்கத்திலும், பக்தி யோகத்திலும், ஞானப் பூர்வத்திலும் ஓர் அணு அளவுப் பிழையைக் கூடக் காண விரும்பாத உத்தம ஒளிப் பிரகாசச் சித்தர்கள், மகரிஷிகள் தவம் புரிந்து உறையும் தவசுத மங்கள மண்டலங்கள் பரவெளியில் சில உண்டு. உதாரணமாக பூஜைக்காகக் குடத்தில் நீர் எடுத்து வந்தால், இறைவனின் திருமேனியை அபிஷேகிக்க வல்ல காரணத்திற்காக என்பதால் குடத்தில் இருந்து ஒரு சிறு துளி நீர் சிந்துவதைக் கூட இவர்கள் ஏற்க மாட்டார்கள்.
இதே போன்று 63 நாயன்மார்களில் பலரும் கண்டிப்பான இறைநியதிகளைக் கடைபிடித்து வந்துள்ளனர். இறைவனுக்காக வைத்திருந்த பூக்களைச் சற்றே முகர்ந்து பார்த்தமைக்காக கடுமையாக தண்டித்தல் முதல், மிக மிகக் கடுமையான பூஜை நியதிகளுடன் துலங்கிய உத்தம, நாயன்மார்களும், ஆழ்வார்களும் உண்டு. இவர்களுடைய தவம் பூரிக்கின்ற மண்டலத்திற்கு “திருச்சாட்டிய ஸ்புட பூம்யம்” என்று பெயர்.
இவர்கள் தாம் மகாபாரதத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் சாட்டையாக வடிவெடுத்தவர்கள் ஆவர். ஒரே ஒரு சித்தரே கூட சில கல்ப காலங்களில் ஸ்ரீகிருஷ்ணனின் கரங்களில் சாட்டையாகத் துலங்கியதும் உண்டு.

இறைவனின் திருக்கரத் திருச்சாட்டையாய் வந்துதிப்போர் ஐம்புலன்களையும் அடங்கிய, அடக்கிய உத்தமர்கள் ஐம்புலன்களுக்கு அப்பாற்பட்ட துரீயப் புலன்களையும் வென்றவர்கள். உடல், மனம், உள்ளத்தில் புனிதம், தூய்மை, பக்தி, அனைத்தையும் ஸ்புடம் போட்டது போலத் தாங்கிப் பரிசுத்தத்தைத் தாங்கியவர்களே ஸ்ரீகிருஷ்ணரின் சங்கு, சக்கரம் போலச் சாட்டையும் ஆகின்றனர்.

எனவே, கௌரவர்கள் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடம், “ஸ்ரீகிருஷ்ணா! நீ ஆயுதம் ஏந்திப் போரிடேன்! – என்று சங்கல்பம் செய்தாயே, இப்போது ஏன் ஆயுதம் தாங்கி உள்ளாய்?” என்று கேட்ட போது, ஸ்ரீகிருஷ்ணர் சாட்டையை சற்றே சொடுக்கிடவே அதில் இருந்து வேதாகம பீஜாட்சர ரீங்காரங்கள் ஒலித்து, அண்ட சராசரத்தையும் அதிர வைத்தன.

ஆம், சாட்டையாய், வாட்டமாய் வந்தமர்ந்த எண்ணற்ற சித்தர்கள், மகரிஷிகள் பல கோடி யுகங்களாக ஓதிவரும் அனைத்து வேத மந்திர ஒலிகளும் பார்த்தசாரதியின் பவித்ரமான சாட்டையில் பரந்து நிறைந்தன.

கௌரவர்களிடம் அளித்த வாக்குறுதிக்கேற்ப பஞ்ச பாண்டவர்களும் இங்கு மறைந்து, வாழ்ந்து, பெருமாளுடைய திருமறைகளை ஓதி சிறந்த தலம்.

பாதணி அணியாது நடந்து வந்த பரமாத்மத் திருவடித் தலம்!

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே பாதணிகள் அணியாது, வெறுங் காலால் நடந்து வந்து தம் புண்ணியப் பாதங்களைப் பதித்த நல்பூமியே தேவபந்தலம் ஆகும்.

ஏன், ஸ்ரீகிருஷ்ணன் தம் பொற்பாதங்களில் பொற்காலணிகளை அணிந்து இங்கு நடந்திடவில்லை தெரியுமா? மிகவும் புனிதமான அன்னதேவ சக்திகள் நிறைந்த அட்சய பாத்திரமே நடந்து வந்த தலம் என்பதாலும் தான், காரைக்கால் அம்மையார் தம் கால் படலாகாது என சில தலங்களில் தலையாலேயே நடந்து வந்தது போல்,

தேவாரக் குரவர்களான அப்பர் சுவாமிகளும், சம்பந்தப் பெருமானும், சுந்தர மூர்த்தி நாயனாரும் திருஅண்ணாமலை, பர்வத மலை, சீர்காழி, சிவபுரி போன்ற சிவத்தலங்களில், காலால் நடக்க அஞ்சி, சற்று தூரத்திலேயே நின்று தரிசித்தது போல, அட்சய பாத்திரமே நடந்து வந்த பொற்றலமாதலின் ஸ்ரீகிருஷ்ணர் தம் பொற்பாதங்களால் நடந்து வந்த பெரும் பேறுடையதே தேவபந்தலம் ஆகும்.

அன்னமாம் பொய்கை போல் அன்னம் திரளும் “அட்சயப் பாத்திரம்”

“அட்சயப் பாத்திரம்” என்ற ஒன்று பராசக்தி அன்னபூரணி லோகத்தில் உண்டு. இதில் அனைத்து வகை அன்னங்களும் எப்போதும் பூரித்திருக்கும், எத்தனை பேர் வந்தாலும் அவர்களுக்குப் பரிபூரணமாக அட்சய பாத்திரத்தில் இருந்து அன்னம் இட்டிடலாம். எடுக்க எடுக்கக் குறையாத அன்ன வளம் உடையது.

ஆனால் அன்னபூரணி லோகத்தில் இருந்து வரும் இந்த அட்சயப் பாத்திரத்தை, உடல், உள்ளம், மனம், மூன்றையும் பவித்ரமாக, பரிசுத்தமாக, புனிதமாக வைத்து இருப்பவர்களால் தாம் வைத்துப் பூஜித்துப் பயன்படுத்திட இயலும்.

மேலும் இதனைப் பெறுபவர்களும், சுயநலமாக அன்றி, தெய்வீக ரீதியாகப் பயன்படுத்துதல் வேண்டும். இதற்கு ஆற்ற வேண்டிய கஜ பூஜை, கோ பூஜை போன்ற பலவகைப் பூஜைகளுக்கு அன்னமாஸ்ரயப் பூஜைகள் என்று பெயர். இரவில் உத்தராங்க அன்னமாஸ்ய பூஜையை நடத்தும் வரை, இதில் எவ்வகை அன்னமும் வந்து கொண்டே இருக்கும். ஸ்ரீஅட்சயபுரீஸ்வரரின் அனுகிரகத்தால் தோன்றுகின்ற இந்த அட்சயப் பாத்திரத்தை, ஸ்ரீகிருஷ்ணர் திரௌபதிக்கு அளித்த திவ்யத் தலமும் இதுவேயாம்!

10000 சிஷ்யர்களுக்கும் மேலான துர்வாச மாமுனியின் சீடர் குழாத்திற்கு அன்னமளிக்க வசதியற்று இருந்த பாண்டவர்களுக்கு உதவுவதற்காகத் கண்ணபிரான் இதனை திரௌபதிக்கு அளிக்க எண்ணிய போது, மேற்கண்ட புண்ணிய உலகச் சித்தர்களும், மகரிஷிகளுமே இதனைத் தாங்கி வந்து, இத்தலத்தில் வைத்திட, அது தானே நடந்து வந்து, ஸ்ரீகிருஷ்ணரிடம் வந்து சேர்ந்த திருத்தலமே தேவபந்தலம் வான்பூமியாகும்.

ஆம், இவ்விடத்தில்தான் திரௌபதி தேவி, ஸ்ரீகிருஷ்ணரிடமிருந்து அட்சயப் பாத்திரத்தைப் பெற்றாள்.

அட்சய, அட்சய, அட்சயபுரீஸ்வரப் பூஜைகள்!

அட்சயப் பாத்திரம் என்றால் சொன்ன உடனேயே வந்திடுமா? அல்லது வந்தால் மட்டும் போதுமா? அட்சயப் பாத்திரத்தை அன்னபூரணி லோகத்தில் இருந்து பவித்ரமான முறையில் தாங்கி வர வேண்டுமல்லவா! மேலும், அதில் வரும் அன்னத்தை ஏற்று நல்வகைப் படுத்திட, பக்திப் பூர்வமாக, அன்னமாஸ்ரய பூஜைகளையும் ஆற்றிட வேண்டுமல்லவா!

அட்சய பாத்திரத்தில் நிறைந்து நிரவும் நிர்மல நல்வர சக்திகள்!

அட்சயப் பாத்திரம் என்பது அட்சயபுரீஸ்வரர், அன்னபூரணி தேவி, சாகம்பரி தேவி, அமிர்த தேவதா மூர்த்திகள் போன்ற பல தெய்வ மூர்த்திகளும் உறைகின்ற தேவகுவளை வடிவு ஆதலின், குவளை மலர்களால் இதனை தினந்தோறும் பூஜிக்கின்ற மந்திரவழிப் பூஜை முறைகளையும் உபதேசிக்க வல்ல மகரிஷிகளும் வந்து இருந்தாக வேண்டுமே!

இவையனைத்தையும் ஆற்ற வல்லவர்களே திருச்சாட்டியத் துறைத் துரீய மண்டலத்தைச் சேர்ந்த சித்தர்களும், மகரிஷிகளும் ஆவர். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குழுமுகின்ற பூமியே தேவபந்தலம் என்றால், அது எத்தகைய பவித்ரமான புண்ய பூமி! ஆகையால்தான் இந்தப் புண்ய பூமியில், தான் காலணிகள் அணியலாகாது என்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவே, தன் பொற் பாதங்களால் நடந்து வந்த திருத்தலமும் ஆகும்.

சற்குணம், நற்குணம் தரும் திருச்சாட்டைத் தலம்!

சாத்வீக குணம், ரஜோகுணம், தாமச குணம் ஆகிய மூன்றும் நிறைந்தவர்களே மனித குலத்தினர், இதில் சாத்வீக குணங்களே நிரமபப் பெற்றவர்கள் உத்தமர்கள் ஆகின்றனர். சாத்வீகத்துடன் வீரம், தைரியம், தேவையான அக்னி வகை குணங்களை உடையவர்களே ரஜோ குணத்தினர். அளவுக்கு மீறிய உறக்கம், உழைப்பின்மை, சோம்பேறித்தனம், தீய வழிச் செல்லல் தாமஸ குணமாகும். மிகவும் நல்ல மனிதர்களும் உறங்கும்போது சற்று தாமஸ குணத்தைப் பெறுகின்றார்கள்.

எனவே, மனித உடலில் புனிதமாக ஆத்ம சக்திகள் உறைந்திட இம்மூன்றும் குறித்த அளவில், தேவையே! இவற்றை முறைப்படுத்தித் தரும் சற்குணத் தலங்களில் ஒன்றே தேவபந்தலம் ஆகும். கோபக்காரர்களும் சாந்தமடையும் புண்ணிய பூமி இதுவே!

ஒவ்வொரு மனிதனும், தனக்குரிய ஒன்பது சரீரங்களில் மேற்கண்ட மூன்று குணங்களின் பல்வேறு விகிதாச்சாரங்களுடன் தான் வாழ்கின்றான். இவற்றை முறைப்படுத்துவதற்காகவே, சித்தர்களும், மஹரிஷிகளும் இங்கு ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளிடம் சாட்டை வடிவில் உறைகின்றனர்.

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் புனிதப் பாதங்கள் படிந்த திவ்யத் தலமாதலின், இங்கு புதன், சனிக்கிழமை தோறும், அங்கப் பிரதட்சிண வழிபாடுகளை, அரவணைப் பாயசம் மற்றும் எள் கலந்த வடை, புளியோதரையுடன் அன்னதானமாக ஆற்றிவர, எத்தகைய தீய வழக்கமும் நாளடைவில் முழுமையாக அகல உதவும் அற்புதத் தலம்.

பெருந்த தவறுகளைச் செய்தவர்கள் தக்க பரிகார வழிகளைப் பெறவும் உதவும் தலம்.

இவ்வாறு பவித்திரத்தின், புனிதத்தின், பரிசுத்தத்தின் உத்தம நிலைகளை, உச்ச நிலைகளை அடைந்த சித்தர்களும், மகரிஷிகளும் குழுமியிருக்க, ஸ்ரீகிருஷ்ணபிரான் திரௌபதிக்கு அட்சய பாத்திரத்தை அளித்தத் திருநாளே ஒரு யுகத்தின் விஷ்ணுபதிப் புண்ணிய நாளாகும்.

மேலும் பூலோக பாரத்தைத் தணிப்பதற்காகவும், தர்மத்தை நிலை நாட்டவும், அசுர சக்திகளை அடக்கியும், தர்ம சக்திகளை விருத்தி செய்யவும் இவ்வாறு பல காரணங்களுக்காகவும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் அமைந்தது., ஸ்ரீகிருஷ்ணர் துவாபர யுக முடிவில் வந்தருளிய நிலைவாசகத் தலங்களுள் தேவபந்தலமும் ஒன்றாகும்.

கிருஷ்ணாவதாரம் முடிவில்லாத தலைப்பே!

மகாபாரதம் முடிந்த பின் ஸ்ரீகிருஷ்ணர் பூவுலகை விட்டுப் புறப்பட்டு விடுவார் என்ற செய்தி எல்லோருக்கும் தெரிய வந்த போது அனைவரும் கவலையுற்றனர். எல்லோராலும் ஒரு விஷ்ணுவின் அவதாரம் முடிவு பெறுகிறது என்ற நிலையை ஏற்க இயலவில்லை. ஆனால் கிருஷ்ணாவதாரம் என்றும் சாசுவதமானது என்பதைப் பலரும் அறியவில்லை!

ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தின் ஒரு பங்கே மகாபாரத அனுபூதிகள் ஆகும். மகாபாரத முடிவையே கிருஷ்ணாவதார முடிவாகக் கொள்வதால்தான் கிருஷ்ணாவதாரம் முடிவுற்றது என்ற அறியாமையிலான எண்ணம் ஏற்படுகின்றது. அன்றும், இன்றும், என்றும், எங்குமாய் கிருஷ்ண பக்தர்களுக்காக ஓடோடி வந்து அனுகிரகம் செய்கின்ற கண்ணபிரானின் அவதாரத்தையா முடிவுற்றது என்று கூறுவது?

கலியுகத்திலும் குருக்ஷேத்திரப் போர்!

உண்மையில் குருக்ஷேத்ரப் போர் என்பது தர்ம சக்திகளுக்கும், அதர்ம சக்திகளுக்கும் இடையே ஏற்பட்ட போர்தான்! இது எந்த யுகத்திலும் நிகழ்வதே! திரேதா யுகத்திலும், ராவணனுடைய அதர்மத்தைத் தகர்த்திடவே ராமாவதார அனுபூதிகள் பலவும் ஏற்பட்டன!

கலியுகத்திலும், வன்முறை, பயங்கரவாதம், பொய்மை, கொலை, கொள்ளை, திருட்டு, காமக் குற்றங்கள் என்றவாறாக அதர்ம சக்திகள் பெருகிதான் வருகின்றன. இதற்காக மனந்தளராது அவரவர் தத்தம் கடமையாகத் தினசரி பூஜைகளை, இறை தரிசனங்களையே ஆற்றி வர வேண்டும். இதுவே தர்ம சக்தியாகத் திரண்டு, அதர்ம சக்திகளை எதிர்த்து அறப்பணிகளை ஆற்றும்.

எனவே கலியுகத்திலும் நிகழும் குருக்ஷேத்திரப் போரில் தர்மத்தைக் காக்கவும், தேவபந்தலம் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் சாட்டை தாங்கி அருள்கின்றார் என்பதே உண்மை!

சாட்டையாய்ச் சத்தியச் சித்தர்கள்

ஸ்ரீகிருஷ்ணனின் அருளோடு அதர்மத்தை வென்றிட, கலியுகத்திலும் நல்லவர்கள் பலரும் இருக்கத்தான் செய்கின்றார்கள். எனவே, அதர்மத்தை வென்று தர்ம சக்திகளை நிலை நாட்டிட, பாண்டவர்கள், வருகின்ற கலியுகத்திலும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவைத் தர்மத்தைக் காக்கும் சாட்டையுடன் கூடிய பார்த்தசாரதியாகவே தோன்றிட வேண்டும் என்று வேண்டியமையாலும், திருச்சாட்பர்ய லோகத்தில் உள்ள மிகமிகப் புனிதமான சித்தர்களையும், மகரிஷிகளையும் அவதார மூர்த்தியின் கையில் உள்ள சாட்டையில் – சாட்டை என்பதை விட – ஸ்ரீகிருஷ்ணனின் தெய்வீக ஸ்பரிசப் புடங்களாகக் கலியுக மக்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காகவும், ஒரு யுகத்தின் விஷ்ணுபதி புண்ய காலத்தில் ஸ்ரீபார்த்தசாரதியாக இங்கு தோன்றி இன்றும் என்றுமாய் அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

தெய்வ மூர்த்திகளின் நாமங்கள் பல யுகங்களிலும் மாறுவது உண்டு. அந்தந்த மஹரிஷிகள் தம் அனுபூதிகளைக் கொண்டு பெருமாளே அருட்பெயரை அளித்து அருள்கின்றார். பிற யுகங்களில் ஸ்ரீமன்வரதராஜப் பெருமாளாக அருளிய மூர்த்தியே ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளாகத் தற்போது அருள்கின்றார்.

ரிஷிவந்தியம்

மூன்று கோடி மஹரிஷிகள் தவம் பூண்டு தங்கிய திருத்தலம்

இத்தலத்தின் அருகில் உள்ள ரிஷிவந்தியம் சிவத்தலத்தில் பூஜித்திட, மூன்று கோடி மகரிஷிகள், பூவுலகிற்கு வந்தபோது, இவர்கள் அனைவரும் தங்குவதற்கான புனிதப் பிரகாசத் தவ பூமியாகத் துலங்கியது தேவபந்தலம் ஆகும். ஆம், ஓரிரு மகரிஷிகளையே ஒன்று சேரக் கூடித் தரிசிப்பது மிகவும் அபூர்வமானதாக இருக்கையில் மூன்று கோடி மகரிஷிகளும் ஒரு சேர உறைந்து தவம் பூண்ட திருத்தலங்களுள் தேவபந்தலமும் ஒன்றாகும். இது நிகழ்ந்ததும் ஒரு யுக விஷ்ணுபதிப் புண்ய காலத்தில்தாம்.

பல துவாபர யுகங்கள் வந்து சென்றுள்ளன. மற்றொரு கல்பத்தில், ரௌதம் எனப்படும் ஒருவித அக்னியால் பூமி பாதிக்கப்பெற்ற போது, ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள்தான் ஸ்ரீவரதராஜர் என்ற நாமம் பூண்டவராய் குருக்ஷேத்ரத்தில் பலவிதமான ரௌத்ராக்னிகளைக் கண்ட அனுபூதியால், தம் மூன்றாம் நேத்ர சக்தியால் தணித்து அருள் புரிந்தும் விஷ்ணுபதிப் புண்ய கால அனுபூதிகளைத் தன்னிடத்தே கொண்டதே தேவபந்தலம் ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாள் ஆலயமாகும்.

விஷ்ணுபதிப் பூஜை முறைகள், பலன்கள்

விஷ்ணுபதி நாளில் இங்கு விஷ்ணு தர்பையைக் கொண்டு மூன்று கூர்ச்சங்களை வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்களுக்கு வைத்து “அட்சயப் பாத்ரம்” என்பதாக மண் குவளையில் நீர் வைத்து இத்தீர்த்தத்தால் தர்ப்பணம் அளிப்பது மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

ரிஷபாயன கோமுகம் ரிஷிவந்தியம்

ஸ்ரீமகாவிஷ்ணு ரிஷிவந்தியம்

முன்னோர்கள் பலரும் தீய பழக்க வழக்கங்களுடன் பெரும் பாவ வினைகளைச் சேர்த்து இறந்திருந்தால், அவர்களுடைய பாவத் தீவினைகள் சந்ததிகளைப் பற்றாமல் காக்கவும் அவர்களுக்கும் நரக லோக வாழ்வு துன்பங்களைத் தணித்து, அவர்களுடைய சாயைச் சரீரங்கள் சீர் பெறவும் இத்தலத் தர்ப்பணப் பூஜைகள் உதவும்.

பெரும்பாவம் செய்தவர்கள், பிறரிடம் தெரிவிக்க இயலாது சொல்லொணாத் தீவினைகள் புரிந்தோர், இவற்றின் விளைவுகள் தம் குடும்பத்தைப் பற்றாதிருக்க இங்கு அமாவாசை தோறும் தர்ப்பணம் அளித்தல் விசேஷமானது.

உறவுப் பகைமை, தொழில் விரோதிகள், அலுவலகத்தில் பகைமை இவற்றால் வாடுவோர் இங்கு புதன், சனி, திருவோணம், ஏகாதசி நாட்களில், பெருமாளை வழிபட்டு, மரவள்ளிக் கிழங்கு, மாகாளிக் கிழங்கு, கரும்பு, நன்னாரி, புளியோதரை, திண்டு தோசை போன்ற வகை உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்துவர, பகைமை முறிந்து சாந்தம் பெருகிட உதவும்.

உறவினர்கள் மற்றும் பணம், அதிகாரம், அந்தஸ்தால் பலம் பெற்றவர்களுக்குப் பயந்து வாழ வேண்டிய நிலையில் உள்ளோர் இங்கு பெருமாளை அமிர்தயோகம் கூடிய புதன், சனிக் கிழமைகளில் நிறைய தீபங்களை ஏற்றி வழிபட்டு வர, பீதிகள் அகலப் பெற்று சாந்தமான குடும்ப வாழ்க்கையைப் பெற உதவும்.

அதிக வருவாயின்மை, கடுமையான நோய்கள், தாமதமான துன்பங்கள், நடுத்தர வயதைத் தாண்டியிருந்தல், பிள்ளைகள் சரியாக படிப்பறிவு பெறாது வேலையின்றி இருத்தல், தொழிலில் நஷ்டங்கள் போன்றவற்றால் ஸ்திரமில்லாத வாழ்க்கையை கண்டு வேதனையுடன் வாழும் பெண்கள் இங்கு ஸ்ரீபார்த்தசாரதிப் பெருமாளுக்கு தங்கள் வசிதிக்கேற்ப நேர்த்தி வைத்து வழிபட்டு வருவதால் வாழ்வில் ஸ்திரத் தன்மை பெறுவர்.

வண்டுருட்டிச் சித்தர்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! வண்டுருட்டிச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை!

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாதா வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

நீங்கள் திருஅண்ணாமலையை ஒரு முறையேனும் கிரிவலம் வந்து, அருணாசல மலையைத் தரிசித்துள்ளீர்களா? அப்படியானால், நீங்கள் கடவுளை நேரிலேயே கண்டு தரிசித்தவர்களே! அருணாசல மலையை ஒரு முறை தரிசித்தலே பெரும் பாக்கியமெனில், அண்ணாமலையை ஒரு முறை கிரிவலம் வருதலெனில், என்னே பேரருள் நிறைந்த அரும்பெரும் பாக்யமிது! எனவே நீங்கள் இனிமேல் “கடவுளை இறையருளாலேயே நேரிலேயே கண்டு தரிசித்தேன்!” என அறுதி இட்டுக் கூறிடலாம், ஐயா!

பூர்வ ஜன்மத்தில் பெற்ற நீங்கள் பெற்று வந்துள்ள குருவருளின் திரண்ட கருணையே தற்போது நீங்கள் பெறும் அருணாசல தரிசனமும், கிரிவலமும் ஆகும்! எனவே திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும் ஒவ்வொருவரும் பூர்வ ஜன்மங்களில் சற்குருவைக் கண்டவர்களே! ஆனால், சத்குரு காட்டிய வழிமுறைகளை முறையாகக் கடைபிடிக்காது, ஆசாபாசங்களில், மாயைகளில் சிக்கி, குருவருட் பாதையில் இருந்து சற்றே விலகித் தன் போக்கில் வாழ்ந்ததால் வந்ததே பிறவித் தளையென உணர்க! அருணாசல கிரிவலப் பாதையே மீண்டும் சற்குருவின் சத்சங்க மார்கத்தை அளிக்கும் அருள்வழியெனவும் உணர்ந்து செயல்படுக!

திருஅண்ணாமலை கிரிவலத்தில், குபேர லிங்கத்தை அடுத்து வரும் இடுக்குப் பிள்ளையார் அருகே நாம் பெறும் தரிசனங்களுள் ஒன்றே குருவைக் காட்டும் “சீக்ஷா மார்க” தரிசனமாகும். தற்போது இது பெரிதும் மறைவுபட்டுள்ளது.

கயிலையும் அருணையுள்ளே!

கயிலாய மலை தரிசனங்கள் அனைத்தும் திருஅண்ணாமலையிற் பதிந்துள்ளன! இறைப்பரம் பொருளின் திவ்யமான வடிவான திருஅண்ணாமலையானது, இந்த உலகத்தின் ஆன்மீக மையம் மட்டுமல்லாது, கோடானு கோடி அண்ட சராசரங்கள், நட்சத்திரங்கள், கோள்கள் அடங்கிய பிரபஞ்சத்திற்கே தெய்வீக மையமாகவும் துலங்குகின்றது!

இதனால்தான், கோடானு கோடி சித்தர்களும், தினமும் எந்நேரமுமே வந்து பூஜித்து வணங்கி, கிரிவலம் வந்து, இறையுலா வருவதாக – சித்தர்களின் இறைப் பாசறையாகவும் – அருணாசலப் புனித பூமி துலங்குகின்றது. அனைத்து உயிரினங்களுக்கும் சற்குருமார்களைப் படைத்து அளிக்கும் ஸ்ரீதட்சிணா மூர்த்தி, மானுட ரூபத்தில், கல்லால மரத்தின் கீழ் அருளும் தென்முகக் கடவுட் தலமாகவும் திருஅண்ணாமலை விளங்குகின்றது என அறிக! இக்கல்லால மரத்தின் ஒரு இலையைச் சற்றே தரிசிக்கும் பாக்யம் பெற்றவரே ஸ்ரீரமண மகரிஷி ஆவார். மானுட தேகத்திலேயே முக்தி, மோட்ச நிலைகளைத் துய்த்து, அருணாசல மஹிமைகளை உலகிற்கு எடுத்துக் காட்டும் அருளாடியாய்ப் பொலிந்த ஸ்ரீரமண மஹரிஷிக்கே கல்லால மரத்தின் ஒரே ஒரு இலைத் தரிசனமே கிட்டியதெனில், பிரபஞ்சத்திற்கே ஞானத் திருநிழலைப் பாரிக்கும் அந்த மகத்தான தெய்வ கடாட்ச ஆலமரத்தின் ஞானப் பிரவாகத்தை என்னென்பது?

சித்தர்களோடு அருணாசலத்தில் கிரிவலம் வர வேண்டுமா?

அருணாசலமாம் திருஅண்ணாமலையில் தான், இன்றும், என்றும் எப்போதுமாய்ச் சித்தர்கள், தூல, சூக்கும காரண வடிவங்களில் மட்டுமல்லாது ஆறறிவுப் பகுத்தறிவுக்கும் புலப்படாத வடிவிலும் உங்களோடு கிரிவலம் வந்து கொண்டிருப்பதால், நீங்கள் எப்போது கிரிவலம் வந்தாலும், ஏதேனும் ஒரு சித்தரையோ, மகரிஷியையோ, யோகியையோ, ஞானியையோ தரிசித்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள். தனித்தோ, மக்கள் கூட்டத்துடனோ கிரிவலம் வருவதாக மட்டும் ஒரு போதும் எண்ணாதீர்கள்! அருணாசலத்தைக் கிரிவலம் வரும் போதெல்லாம், சித்தர்களுடன் தான் எவருமே அருணாசல கிரிவலம் வந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதையும் மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்.

இவ்வாறு அருணாசல வலத்தால் பக்தர்களை ஈர்த்த அற்புதமான சித்தர்களுள் ஒருவரே, கட்டை விரல் அளவே உள்ள சித்தர்குல வகையிலான – அணில் அப்புக் குட்டிச் சித்தர், ஆந்தை வணங்கியார், பஞ்சு மிட்டாய்ச் சித்தர் போன்று வண்டுருட்டிச் சித்தரும் ஆவார். பல நூறு ஆண்டுகளுக்கு முன், மாத சிவராத்திரியில் எண்ணற்ற வகையில் வண்டுகள் நடந்தும், பறந்தும், சுற்றி வர, இவர் வண்டுகளோடு சேர்ந்து கிரிவலம் வருவார்.

ஆளுயர வண்டு முதல் ஒரு சிறு கடுகளவு வண்டு வரை, சகலவிதமான வர்ணங்களிலும், வடிவுகளிலும் அவை வண்டுருட்டிச் சித்தரைச் சுற்றிச் சுற்றி வந்தவாறே சித்தர்பிரானுடன் கிரிவலம்  வந்து கொண்டிருக்கும்., கோவணம் மற்றும் பல ஆடைகளைத் தரித்தும், தலைப்பாகை அணிந்தும் பல வடிவுகளில் கிரிவலம் வந்த வண்டுருட்டிச் சித்தரின் உடலெங்கும் வண்டுகள் சுழன்று திரியும்.

நம் வாழ்க்கையிலேயே நூற்றுக்கணக்கான வண்டுகளை, தோட்டத்தில், வனத்தில், செடி கொடிகளில், மரத்தில், பூக்களில், அரிசியில், தானியங்களில் எங்கெங்கோ காண்கின்றோம் அல்லவா! நம் கண்களுக்குத் தென்படாத வகையில் பூமி அடியிலும், ஆயிரக்கணக்கான வண்டுகள் மண்ணைத் தோண்டுகையில், கிணற்றுக்குள், கடலடியில் தென்படுகின்றன அல்லவா!

இவ்வாறு மனித குலமே அறியாத வகையில், பூமிக்கு அடியில், நிலத்தில் இருந்து 500 அடிகளுக்கு மேல், நீருக்கு அடியில், கிணற்றுக்குள், மனிதனால் உள்ளே செல்ல முடியாத காடுகளுக்குள், மலைப் பாறைக்குள், கடலுக்குள், வானத்தில் எத்தனையோ கிரகங்களுக்குள் எத்தனை எத்தனை வண்டுகள் இருக்கும், நம்மால் சிந்தித்துத் தான் பார்க்க முடியுமா?

இவற்றை எல்லாம் படைத்த பிரம்ம மூர்த்தியின் அவதாரத்தை என்னென்று சொல்வது? பிரம்ம மூர்த்தியையே தோற்றுவித்த பரம்பொருளை எவ்வகையில்தான் உணர்வது, அறிந்து தெளிவது?

வண்டுகள் விண்டு கண்ட வண்டார்குழலி

ஆலயங்கள் எல்லாவற்றுக்கும் மூலத்தானமாக விளங்கும் திருஅண்ணாமலையின் மகிமையை என்னென்று உரைப்பது? வண்டுகளுக்குச் சத்குருவாய் மலர்ந்து கடவுளின் வடிவில்லா வடிவை, ஏனைய ஜீவன்களுக்கும் சேர்த்து வண்டுகள் மூலமாகவே உணர்த்தியவரே வண்டுருட்டிச் சித்தர்.

பூமியின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் வந்த மானுடர்கள், வண்டினங்களின் துன்பங்களை இறைவனருளால் நிவர்த்தி செய்து, வண்டார்குழலி சமேத நாதராகிய சர்வேஸ்வரப் பெம்மானின் திருவருளை உணர்த்திட வந்த உத்தம சற்குருச் சித்தரே வண்டுருட்டிச் சித்தராவார். வண்டுகள் உறையும் பூக்கள் தவசக்திகள் நிறைந்தவை! ஸ்ரீசாகம்பரி தேவி வண்டுகள் புழங்கிட என விசேஷமான தாவரங்களைப் படைக்கத் தவம் புரிந்த இடமே இன்றும் அருணாசல வண்டார்குழலித் தரிசனப் பகுதியாகும். மூலிகை வாசனைகள் நிறைந்த பகுதி இது!

வண்டுருட்டிச் சித்தர் அருணாசலத்தைக் கிரிவலம் வருகையில், தம் இரு கரங்களையும் வானத்தை நோக்கித் திறந்து வைத்தவாறு இருப்பார். இதில் வந்தமரும் வண்டுகளை, அவற்றிற்குத் துன்பமின்றி, அரவணைத்து, லேசாக உருட்டி உருட்டி, வண்டிச் சதகம், வண்டு புகழ் அந்தாதி, வண்டுதம கீதமுறை, வண்டுருட்டிப் பதிகம், வண்டாயிரம் பாமாலை, வண்டுசுதப் புராணம், வண்டுகொடு அனுபூதிகள் – என்றவாறாகப் பல்லாயிரம் இறைத் துதிகளை ஓதியவாறே, உள்ளங்கையில் தாயக் கட்டைகளை உருட்டுவது போல் வண்டுகளை உருட்டி உருட்டி கிரிவலம் வந்தமையால் வண்டுருட்டிச் சித்தரானார்.

வண்டுகள் ஓதும் வண்டாரப் பதிகம்

வண்டுகள், தேனீக்கள், குளவிகள் “ஸ்வய்ங்” என்று ரீங்காரம் இடுகின்றனவே, இவை யாவும் வண்டுருட்டிச் சித்தர் ஓதிய துதிகளின் பீஜாட்சர ரீங்கார வேத கீதங்களே!

தற்போதும் கூட சில வகை வண்டுகளைச் சற்றே தொட்டாலும் அவை பந்து போல் சுருட்டிக் கொண்டு அமைதியாகச் சற்று நேரம் நத்தை போள் கிடப்பதைப் பார்த்திருப்பீர்கள். இதற்கு “வண்டம்பலத் தியானம்” என்று பெயர். பொன் வண்டு எனப்படும் ஒரு வகை வண்டைச் (பேரீச்சம்பழ அளவு) சற்றே தொட்டாலும் கல் பாறையைப் போல இறுகிக் கொண்டு அதே இடத்தில் வெகு நேரம் இருந்து விடும்.

விஞ்ஞானத்தில், தற்காப்பிற்காக வண்டுகள் இறந்தாற் போல காட்டிக் கொண்டு, பிற உயிரினங்களுடன் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு இவ்வாறு செய்வதாகக் கூறுவார்கள். ஆனால் இது மிகமிகச் சாதாரணமான விளக்கம். ஏனெனில் வண்டுகள் எப்போதும் இப்படி நடந்து கொள்வதில்லையே! எனவே, இதற்கென நிறைய உள்ள ஆன்மீக விளக்கங்களே உண்மைகளை உணர்த்த வல்லவை.

ஞானவாபிகளே வண்டுகள்

ஆணி மாண்டவ்ய மகரிஷி, தாம் செய்யாத குற்றத்திற்காக கழுவேற்றப் படுகையில் தமக்கு இவ்வாறு நேர்ந்தமைக்கான காரணமாக, கள்ளம் கபடம் அறியாத சிறு வயதில் ஒரு வண்டினை இம்சை செய்தமைக்காக வந்ததென அறிந்து, தெளிந்து, தனக்கு ஞானம் தந்த அந்த வண்டிற்குத் தம் தபோ பலத்தால் முக்தி நிலைகளையும் அளித்திட்டார்.

எனவே வண்டுகளும் மனிதர்களுக்குப் பல்வகையில் ஞானம் தருபவையே! வண்டுகளும் தியானம் புரிகின்றன.

“உண்டும் பண்டு விளங்கும் வண்டுபுரத் தியானம்!” என்பது வண்டுருட்டிச் சித்தரின், வண்டு சிருஷ்டித் தத்துவப் பாடலாகும். தெய்வீக அர்த்தங்கள் செறிந்தவை! அதாவது எந்த நிலையிலும் தியானம் செய்ய வல்லனவே வண்டுகளாகும். வண்டுகள் மனிதனைப் போல் அமர்ந்த நிலையில் மட்டுமன்றி, நடந்து, ஓடி, பறந்து, கிடந்து ஆகிய நான்கு வகை நிலைகளிலும் தியானம் செய்யவல்லவை! மனிதனுக்கு இந்த ஆற்றல்கள் கிடையாது. இருந்தாலும் மனித குலம் நன்கு பயன்படுத்திக் கொள்வதில்லை அல்லது சுயநலமாகப் பயன்படுத்திக் கொண்டு தீய விளைவுகளுக்கு ஆளாகும்.

ஆறறிவு உடைய மனிதனுக்குத்தானே தியானப் பயிற்சி, தியான சித்தி சித்திக்கும், வண்டுக்கு தியானம் பற்றி என்ன தெரியும் என்று நீங்கள் எண்ணிடலாம். வண்டுருட்டிச் சித்தர் வண்டுகள் மூலமாக வண்டுக் குலத்தின் படைப்பு, பிறப்பு ரகசியங்களை மட்டுமல்லாது, வண்டுகளின் தியான சக்திகளின் மூலம் மனித குலத்திற்குக் கிட்டும் பல ஆன்மீக சாதனங்களையும், அறவழி முறைகளையும் உணர்த்தியுள்ளார்.

வண்டு சாஸ்திரம்

மேலும், “வண்டு சகுனபூதப் பாடம்” என்ற சகுன சாத்திரமும் உண்டு. எத்தகைய சகுனங்களை உணர்விக்கின்றன என்பதையும் வண்டுருட்டிச் சித்தரே உணர்த்தினார். மலேஷியா, கேரளம் மற்றும் அந்தமான் பகுதிகளில் “வண்டு சகுன சாஸ்திரம்” என்று ஒன்று உண்டு. அஷ்ட திக்குச் சக்கரக் கோலத்தை வரைந்து, ஒரு மண்டல காலம் பக்தியுடன் பூஜித்து, இதன் நடுவில் சூரிய சக்கரத்தில் துருவ வண்டு (மஞ்சள் நிறம்) வைத்து, அது நடந்து செல்லும் மார்க்கத்தை வைத்து, சகுன சாஸ்திர விளக்கங்களை உணர்த்தும் அறவழிமுறை இது!

பிருங்கிச் சித்தர்கள்

பிருங்காதனர், பிருங்கபூஷணர், பிருங்கஸ்சாலர் என்று பல வடிவங்களில் மகரிஷியாகவும், யோகியாகவும் பல குரு பர்ணசாலைகளில் ஒரே சமயத்தில் பல வடிவுகளில் தோன்றக் கூடியவரே வண்டுருட்டி சித்தர். பிருங்கி மகரிஷி, பிருங்கிச் சித்தரிடம் குருகுல வாசம் பூண்டவர். பிருங்கிச் சித்தர்கள் எனும் தொன்மையான – உலகங்கள் சிருஷ்டிப்பதற்கு முன்னரேயே தோன்றிய – ஆதிமூலச் சித்தர் குழாம் ஒன்று உண்டு., இவர்கள் அகஸ்தியரிடம், மாசில்லா தீபத் தலத்தில் நேரடி குருகுலவாசத்தைப் பெற்றவர்கள்.

மாசில்லா தீபத் தலமெனில், எப்போதுமே விளக்குத் தீபம் பிரகாசித்துக் கொண்டு இருக்கின்ற தலமாகும். இதுதான் பிருங்கி விளக்காகும். இங்குதாம் பிருங்கிச் சித்தர்கள் குழுமி அருள்வர். மாசிலாத் தலங்களில், விளக்குகளில் தீபம் அல்லது மடைப் பள்ளியில் அக்னி ஒளிர்ந்து கொண்டே இருக்கும். இதனை போஷித்துப் பூஜிப்பவர்கள்தான் அக்னி ஹோத்திரிகள் ஆகின்றனர். சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயமும் பிருங்கிச் சித்தர்கள் தொன்மையாகத் தூல வடிவுகளில் வழிபடும் ஆலயம். பலரும் அறியாத பிருங்கிச் சித்தர்களை இவ்வாலயத் தூண்களில் விமானத்தில் தரிசித்திடலாம்.

ஸ்ரீசாமுண்டேஸ்வரி திருஅண்ணாமலை

திருஅண்ணாமலையில் வண்டுகள் தவம் பூணும் “தீபப் படுகை குகை”

இத்தகைய அக்னியை அல்லது விளக்கை மாசில்லா மணி விளக்கு என்பார்கள். இந்த மாசில்லா மணி விளக்கை வலம் வந்து, இடைவிடாது வலம் வருகையில், அக்னியில், நெருப்பில் சிக்காது, அக்னியின் வெப்பத்தில் காய்ந்திடாது, கிரிவலம் போல, அக்னிவலம்தனை ஒரு கோடி முறை பஞ்சாட்சரமும், அஷ்டாட்சரமும் ஓதி வலம் வருகின்ற வண்டுகள் திருஅண்ணாமலையில் “தீபப் படுகை குகை” எனும் குகையில் பல்லாண்டுகளாக இன்றும், என்றுமாய் சஞ்சாரம் செய்கின்றன.

குறிப்பிட்ட மாத சிவராத்திரியில் வண்டுருட்டிச் சித்தர், அருணாசலத்தில் தீபப் படுகைக் குகைக்குச் சென்று அவற்றிற்கு ஞான மார்கம் அளிக்கின்றார். கல்லால மர தரிசனப் பகுதியில் இது உள்ளது. இவைதான் பகவான் ரமண மஹரிஷியின் தவத் திருமேனியைத் சீண்டி ஞானமார்க உபதேசம் பெற்றன. வெளியுலகப் பார்வைக்கோ இவ்வனுபூதி தேனீக்கள், வண்டுகள் கொட்டுவதாகத் தோன்றும். இத்தகைய அரிய விளக்கங்களை அருள வல்லவர்களே அருணாசலப் புனித பூமிச் சித்தர்கள் ஆவர்.

திருஅண்ணாமலை ஆலயத்தில் சாமுண்டேஸ்வரி சன்னதிக்கு வலப்புறப் பகுதியில், வருடத்தில் சில நாட்கள், நூற்றுக்கணக்கான வண்டுகள் மொய்த்துச் சுற்றி சுற்றி வரும். இது தற்போதும் எப்போதாவது நிகழ்ந்து வருகின்ற அனுபூதி ஆகும். இந்நாளில் இந்த அனுபூதி நிகழும் நாள் வண்டுருட்டிச் சித்தர் கிரிவலம் வருவதைக் குறிப்பதாகும்.

வண்டு வடிவில் வரவளச் சித்தர்கள்!

வெள்ளியங்கிரி மலை, சிவன் மலை, கொல்லி மலைகளில் உள்ள பல்லாயிரம் ஆண்டு வயதுள்ள தேனீக்களும் இத்தகைய “திருஅண்ணாமலை தீபப் படுகை குகை” வண்டுகளே, இவ்வண்டுகள் பலவும் மஹரிஷிகளாக, சித்தர்களாக ஆகின்றனர். வண்டு வடிவச் சித்தர்களும் மஹரிஷிகளும் உண்டு.

திருச்சிற்றேமம் போன்ற தலச் சிவாலயங்களில் கருவறையில் அபூர்வமாக இருக்கும் தேனடைத் தேனீக்களும், சித்தர்களும், மஹரிஷிகளும் ஆவர். “திருஅண்ணாமலை தீபப் படுகை குகைத்” தேனீக்களும் மாமுனிகளின் உத்தம நிலைகளை அடைவனவே., திருப்பத்தூர் – பொன்னமராவதி – சிங்கம்புணரி அருகே உள்ள திருக்கோளக்குடி தேனடைத் தீர்த்தப் பாறைத் தேனீக்களில் பலவும் “திருஅண்ணாமலை தீபப் படுகை குகைத்” தேனீக்களாகும்.

வண்டுகளால் நெடுந்தூரம் பறக்க இயலாது என்று பலரும் எண்ணுவார்கள். ஆனால் வண்டுகளிடையே “கட்டளைப் பதீபாதம்” என்பதாக தற்போதைய relay race போல, சில வகைத் தேனீக்கள், வண்டுகள் குறிப்பிட்ட தூரம் பறந்து, ஒரு வான்வெளி அல்லது பூமி மண்டலத்தில் இருந்து வரும் நற்செய்திகளை, அடுத்த மண்டலத்தில் உள்ள மண்டலங்களில் இருந்து வரும் வண்டுகளுக்குத் தெரிவித்து மறைந்து விடும்.

தவத்திற்கு உதவும் வண்டுகளின் தபோ பலன்!

காடுகளில் அல்லது மலைகளில் தவம் புரியச் செல்பவர்கள், இத்தகைய வண்டுப் பரிவதனம் மூலமாக, எந்த எந்த இடத்தில் நல்ல தேவதைகள், தீய தேவதைகள் வாசம் செய்கின்றன என்று அறிந்து தவம் பூணுவார்கள்.

சிலவகை மரங்களின் வேர்கள் அற்புதமான தெய்வீக சக்திகளைக் கொண்டிருக்கும். இவற்றை வேர் வண்டுகள் தாம் மேலே கொணர்ந்து பூமிக்குக் கொண்டு வரும்.

“வண்டு, கண்டு, விண்ட மனிதன் வானத்துத் தெய்வமாகலாம்!” – எனும் சித்தர்களின் பரிபாஷை மனிதனும் தெய்வமாகலாம் என்பதற்கு வேர்த்தவப் புல வண்டுகள் உணர்த்தும் பாடமாகும். காடை வண்டு, கடு வண்டு, துரு வண்டு, கருவால வண்டு, மஞ்சப் புழி வண்டு போன்றவை தபோ பல சக்திகள் நிறைந்தவை. பல மண்டலங்களுக்கும், கடலடியிலும் செல்லவல்லவை! உலகிற்கே ஆன்ம ரகசியமாக விளங்கும் பெர்மூடா முக்களத்தில் (Bermuda Triangle) இத்தகைய தவப்புல வண்டுகள் உள்ளன.

சிவன் மலையில்
வண்டுகளின் ரீங்கார கீதம்!

பிரம்ம மூர்த்தியின் உதரவிதானப் பூசத் தவத்தில் சிருஷ்டிக்கப்படும் வண்டுகள்!

சில வகை வண்டுகளை சிருஷ்டிப்பதற்காக, பிரம்ம மூர்த்தி வன்னி, கொன்றை மரத் தலங்களில் சங்குச் சிப்பிக்குள்ளும், விளாம்பழத்துள்ளும் உறைந்து பல கோடி யுகங்கள் தவம்புரிகின்றார். இதற்கு உதரவிதானப் பூசத் தவம் என்ற பெயர். மாம்பழத்துக்குள் வளரும் வந்தமரும் வண்டு, மூடி வைத்த பாத்திரத்தில் உள்ள அரிசியில் எங்கிருந்தோ வந்து உறையும் வண்டு – இவற்றின் பிறப்பு ரகசியத்தை விஞ்ஞானத்தால் விளக்க முடியவில்லையே! உதரவிதானப் பூசத் தவத்தில் உதித்தவையே இவ்வகை வண்டுகள்.

மனிதனுடைய கற்பனைக்கும் எட்டாத வகையில், அதீத தபோ பல சக்திகளைக் கொண்ட வண்டுகள், பல சக்திகளைக் கொண்ட வண்டுகள், பல அரிய மூலிகைகள் நிறைந்த கொல்லி மலை, இமயமலை மற்றும் அமேசான் காடுகளில் இன்றும் காணப்படுகின்றன.

தவயோகத்தில் பிரகாசிக்கும் பெரும்பாலான வண்டுகள் மாத சிவராத்திரி, அமாவாசை, பௌர்ணமித் திதிகளில் ஜீவ சமாதிகளை, ஜீவாலயங்களை வலம் வருகின்றன. இத்தகைய வண்டுகள் யாவும் இந்தத் தை மாத சிவராத்திரியில் அருணாசலத்தில் கிரிவலம் வரும் வண்டுருட்டிச் சித்தரைத் தரிசித்திட, நன்கு கூட்டத்தோடு பறந்து வரும்.

தேன் சொரியும் தீர்த்தம்
திருக்கோளக்குடி

வண்டுறையும் உள்ளங்கையில் கொண்டு வரும் கோமள சக்தி சாதனங்கள்!

“நினைத்தாலே முக்தி தரவல்ல திருஅண்ணாமலையில்”, தம்முடைய பிரச்னைகளை நினைத்துக் கொண்டே கிரிவலம் வருவோரே அதிகமாகும். இந்த மாத சிவராத்திரியில் சாளக்ராமம் சிறு சிறு (உள்ளங்கையில் மூடுமளவு உள்ள) தெய்வ மூர்த்திகள், ருத்ராட்சம், ஸ்படிகம், ஸ்படிக ராசி சக்கரம், சிறிய சுதர்சனச் சங்கு, சிறிய வலம்புரிச் சங்கு இவற்றைக் கையில் ஒரு மஞ்சள் துணி முடிச்சில் வைத்துச் – (கீழே விழாத வண்ணம் மிகவும் கவனமாக) – சுமந்து, மலையை நோக்கி அவ்வப்போது தரிசித்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை, துதியை ஓதி கிரிவலம் வருதல் வேண்டும்.

தேவானாம் பத்ரா ஸுமதிர் ரிஜூயதாம்
தேவானாம் ராதிரபி நோ நிவர்த்ததாம்
தேவானாம் ஸக்யமுப ஸேதிமா வயம்
தேவா ந ஆயு: ப்ரதிரந்து ஜீவஸே

தமிழ் மந்திரம்!

கந்த நாதனம் கணவேத மாவரம்
சந்தமுத சாந்தி சகபூர சாதனம்
வந்த துணைமால் வரசுத சுந்தரம்
பந்த ஜீவனம் பரமுதலாகுக!

இன்றைய மாத சிவராத்திரி கிரிவலத்தில், ஆலயத்தில் வண்டுகளின் தரிசனம் மிகவும் விசேஷமானது.

மாதசிவராத்திரி கிரிவலப் பலாபலன்கள்

இன்றைய கிரிவலத்தின் பலாபலன்களாக, முதுமை, குறைந்த படிப்பு, அனுபவம் இல்லாமை, குள்ளமாக இருத்தல், உடல் மெலிந்து சக்தியற்று இருத்தல், பெருங்கடன் மற்றும் பல காரணங்களால் பிறரிடம் அடிமைப்பட்டோர், தலைகுனிந்தோர், பெரிய குற்றங்களை செய்து தண்டனை அல்லது அவதூறுக்கு உள்ளாகி இருப்போர், ஒரு பிழையும் செய்யாது வீண் பழிகளுக்கு ஆளாகி இருப்போர், இவற்றுடன் வாழ வேண்டிய நிலையில் இருப்போர் அடிமைத் தளையில் இருந்து மீளவும், தாழ்வு மனப்பான்மை அகன்று மன உறுதியோடு வாழவும், சமுதாயத்தில் நல்வாழ்வு பெற பிராயச்சித்த அறநல்வழிகளை அடையவும் இது உதவும்.

ஒரே பெண் அல்லது ஒரு மகளை நம்பி வாழ்கின்றவர்களுக்கு தக்க உறுதுணை கிடைக்கவும் இம்மாதக் கிரிவலப் பலாபலன்கள் துணை புரியும்.

பிடிவாதம், திமிர், அகங்காரம், ஆணவம் இவற்றில் கரை புரண்டு மிதந்து, பிறரை வதைப்போர் மனம் கனிந்து, தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் பெருமளவில் உதவி புரிந்து, திருந்தி வாழ இம்மாத சிவராத்திரி கிரிவல சக்திகள் துணை நிற்கும். ஆனால் தன்னால் துயரம் அடைந்தவர்களுக்குத் தக்க நிவாரணங்களை அளித்தால்தான் இக்கொடிய பாவங்களில் இருந்து மீள முடியும்.

இதுவரை பிறரை, பிற ஜீவன்களை ஜீவ இம்சை செய்தவர்களும், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, பிராணிகளைக் கொல்லும் பணிகளைச் செய்யும் நிலையில் இருப்போரும் தக்க அறவழிகளைப் பெறவும் இம்மாத சிவராத்திரி கிரிவலம் உதவும்.

வாஸ்து பூஜை மகிமை

ஒவ்வொரு தமிழ் வருடத்திலும் வருகின்ற ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கான சிறப்பான எட்டு விசேஷமான வாஸ்து நாட்களில் – ஒவ்வொரு நாளிலும், மொத்தம் 90 நிமிடங்களுக்கு ஸ்ரீவாஸ்து தரிசன பூஜைக் காலம் அமையும் என நாமறிவோம் தானே! எட்டுத் திக்குகளையும் நோக்கி வீடு, வாசல் அமைவதால் வாஸ்துவிற்கு எட்டு நாட்களாகின்றன. இந்த எட்டு நாட்களிலும் எட்டுத் திசைகளுக்கான திசாதேவதா மூர்த்திகளின் அருளை ஸ்ரீவாஸ்து பூஜை மூலமாகப் பெறுகின்றோம்.

பூவுலகில், ஸ்ரீவாஸ்து வழிபாட்டிற்காக,

1. (தர்மத்தை ரட்சிக்கும்) தந்த தாவனம்,
2. (புனித) நீராடல்,
3. (பரபிரம்ம) பூஜை,
4. (அன்னசக்தி வளப்) பிரசாதம் ஏற்றல்
5. (சுபமங்களத்) தாம்பூலம் தரித்தல்

ஆகிய ஐந்து நிலைகள் வாஸ்து பூஜைக் காலமாக அளிக்கப்பட்டுள்ளன. இதன்படி, ஒரு வருடத்தில் 12 மணி நேரமே வாஸ்து பூஜைக்கென மனித சமுதாயத்திற்கு அமைகின்றதெனில் என்னே இதன் மஹிமை! ஒவ்வொரு பூஜைக் காலமும் 18 நிமிடங்களுக்கு அமைகின்றது.

ஒன்பதில் ஒளிர்கின்ற ஒப்பற்ற நேரம்

பூமி கட்டிட, வாகன பாக்யங்களுக்கு அனுகிரகங்களைத் தருபவராகிய செவ்வாய் மூர்த்திக்கு உரிய எண் ஒன்பது என அறிவோம் அல்லவா!

வாஸ்து நாளில் அமையும் இத்தகைய வாஸ்துபதி பஞ்சகுண யோகாந்திர நிலைகள் அடங்கிய 90 நிமிடப் பூஜை நேரமானது, எண் ஒன்பதின் அம்சங்களைக் கொண்டு சிறக்கின்றது. (18, 90) வானியல் நட்சத்திர மண்டலங்களில், 27 வகை வாஸ்து கால யோகாந்திர நிலைகளும், பித்ரு லோகங்களில் 18 விதமான வாஸ்து கால நிலைகளும், தேவலோகங்களில் 63 வாஸ்து கால நிலைகளும் – ஒன்பதின் அம்சங்களாக உள்ளன என்பதும் மேலும் குறிப்பிடதக்கனவாம்.

இவ்வாறாக – (90, 27, 18, 63) – என்றபடி, ஒன்பது என்ற எண்ணின் வாஸ்து சக்திகளைப் பரிபூரணமாகக் கொண்டதாகும். எண் எட்டின் இணைப்பு சக்திகளும் இதில் நன்கு விசேஷமாகப் பரிமளிக்கின்றன.

ஸ்ரீவாஸ்து பகவான் யோக நித்திரையில் இருந்து மீண்டெழுந்து விஸ்வ பூர்ண தரிசனத்துடன் பல்வகை தெய்வானுபூதிகளை வார்த்தளித்து, மீண்டும் யோக நித்திரையில் ஆழும் கால நேரம் வரை, நாம் செய்ய வேண்டிய பூலோகப் பூஜை முறைகளில் ஒரு வகையினை, தக்க சித்த சத்குரு வாய்மொழியாக இங்கு அளிக்கின்றோம்.

ஸ்ரீவாஸ்து பகவானின் ஐமுக யோகாந்திர நிலைகளில் ஆற்ற வேண்டிய பூஜைகள்!

ஸ்ரீவாஸ்து மூர்த்தி பூவுலகிற்கென அருளும் ஐமுக யோகமார்க நிலைகள் உண்டு. மனித குலம் புரிந்து கொள்ளும் வண்ணம் கீழ்க்கண்ட வகையில் அவை எளிய வார்த்தைகளால் புலனாகின்றன!

1. பல்சுத்தி – 18 நிமிடங்கள்
2. நீராடுதல் – 18 நிமிடங்கள்
3. பூஜை – 18 நிமிடங்கள்
4. பிரசாதம் ஏற்றல் – 18 நிமிடங்கள்
5. தாம்பூலம் தரித்தல் – 18 நிமிடங்கள்

நடைவழக்கில், வாஸ்து பூஜையின் – நான்காம், ஐந்தாம் பூஜைக் காலங்களை மட்டும் அதாவது வாஸ்து மூர்த்தி பிரசாதம் ஏற்கும் மற்றும் தாம்பூலம் தரிக்கும் 18+18=36 நிமிடக் காலத்தில் மட்டும் சுப மங்கள அம்சங்களாகக் கொண்டு இதில் வீடு கட்டுதல், அஸ்திவாரம், கிரக ஆரம்பப் பூஜைகளை ஆற்றினாலும், 90 நிமிடமும், வாஸ்து காலம் முழு நேரத்திலும் ஸ்ரீவாஸ்து துதிகளை ஓதி வருதலையும், ஏனைய வாஸ்து பூஜைகளுக்கான பூர்வாங்க நிலைக் காரியங்களையும் ஆற்றுவது பரிபூரண பலன்களைத் தருவதாகும்.

முதல் கால பூஜை தந்ததாவன யோககுண நிலை

இந்த முதல் கால 18 நிமிட வாஸ்து பூஜை நேரத்தில், நிலம், வீடு வாசல்களை நன்கு பசுஞ்சாணியால் மெழுகிச் சுத்தப்படுத்துதல், கோலமிடுதல், தோரணம் கட்டுதல், ஸ்ரீவாஸ்து ஹோமத்திற்கு ஆயத்தம் செய்தல், பூர்வாங்கப் பிள்ளையார் பூஜைகளை ஆற்றுதல் விசேஷமானவை. தக்க பழக்கம் உள்ளவர்களைக் கொண்டு பசு, காளை, யானைகளுக்குப் பற்சுத்தி செய்வது மிகவும் விசேஷமானதாகும்.

இரண்டாம் கால பூஜை – புனித நீராடல்!

இந்த இரண்டாம் கால 18 நிமிட வாஸ்து யோகக் காலத்தில், கங்கை, காவிரி, பஞ்சகவ்யம் (பசுஞ்சாணி, பசுவின் கோமேயம், பசும்பால், பசுந்தயிர், பசு நெய் ஆகியவை சேர்ந்தது) போன்ற புனிதத் தீர்த்தங்களைக் கொண்டு வீடு, வாசல், தோட்டம், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தெளித்தல், மஞ்சள், சந்தன வாசனைத் திரவியங்களைப் புனித நதி நீரில், தீர்த்தத்தில் கரைத்தல், கும்ப, ஹோம பூஜைக்குத் தயாராகுதல் போன்ற பணிகளை ஆற்றுதல் வேண்டும். ஓடுகள், மேல்தளங்கள், வரப்புகள், வீட்டின் அறைகள் அனைத்திலும் புனித நீரைத் தெளிக்க வேண்டும்.

மூன்றாம் கால பூஜை – பூஜவர சுதக் காலம்

வாஸ்து நாளில், ஸ்ரீவாஸ்து மூர்த்திக்கு மட்டுமல்லாது ஸ்ரீபூமீஸ்வரர், ஸ்ரீபூவராகவர், ஸ்ரீபூலோகநாதர், ஸ்ரீபூமிநாதர் போன்ற பூமி சம்பந்தமான மூர்த்திகளும் பூஜைகள் நிகழ்த்திடலாம். இந்த மூன்றாம் கால 18 நிமிட வாஸ்து யோகக் காலத்தில், ஸ்ரீவாஸ்து மூர்த்தி படத்திற்கு அல்லது லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகள், வெட்டிவேர் தைலக் காப்பு, சிவப்பு நிற வஸ்திரம் சார்த்துதல், அர்ச்சித்துப் பூஜை செய்தல், ஸ்ரீவாஸ்து காயத்ரீ போற்றித் துதிகளை (36 துதிகளை) மூன்று முறை ஓதி சந்தன, வெண்ணெய் உருண்டைகளால் அர்ச்சனை போன்றவற்றை ஆற்றுதல் வேண்டும்.

நான்காம் கால பூஜை பிரசாதம் ஏற்கும் நேரம்

இந்த நான்காம் வாஸ்துப் பூஜை கால 18 நிமிட நேரப் பூஜையானது பிரசாத ஆற்றல் பூஜையாகும். பூமிக்கு அடியில் விளைகின்ற காய்கறிகள், கிழங்கு வகை உணவு படைத்தலின் (உருளைக் கிழங்கு, காரட் பீட்ரூட், வெங்காயம் போன்றவை) பிரசாதப் படையல் நேரமாக இது விளங்குகின்றது.
ஐந்தாம் கால பூஜை தாம்பூலம் தரிக்கும் நேரம்

ஐந்தாம் கால வாஸ்து பூஜை நேரத்தில், 108 தாம்பூலங்களை (நாணயம், வெற்றிலை, பாக்கு, கண்ணாடி, பழம் ஆகியவை) வைத்து சுவாமிக்குப் படைத்தல், இதன் பிறகு, ஸ்ரீவாஸ்து பூஜையின் நிறைவாக, கிழங்கு வகை உணவுப் பொருட்களைப் படைத்து, அன்னதானமாக அளிக்க வேண்டும். நூற்று எட்டுத் தாம்பூலங்களையும், ஏழைகளுக்குத் தானமாக அளித்திட வேண்டும்.

இந்த நான்காம், ஐந்தாம் கால நேரங்களில் கிரஹப் பிரவேசம் அல்லது பூமி பூஜைகளை ஆற்றுதல் சிறப்புடையதாகும். ஏனைய மூன்று காலங்களிலும், வாஸ்து நேரத் துவக்கத்தில் இருந்தே பூஜைக்கான ஆதாரப் பணிகளை ஆற்றியும், பூ சூக்தம், ஸ்ரீவாஸ்து போற்றித் துதிகள், ஸ்ரீவாஸ்து காயத்ரீ துதிகளை ஓதியும் வருதலால் வீட்டில், பூமியில், கடைகளில் பூம்யவர சக்திகளை நன்கு விருத்தி செய்து கொள்ளலாம்!

ஸ்ரீவாஸ்து மூர்த்தி யோக நித்திரை விடும் நாட்கள்

ஒரு தமிழ் வருடத்தில் வரும் எட்டு வாஸ்து நாட்களாவன:-

சித்திரை -10, வைகாசி – 21, ஆடி -11, ஆவணி -6, ஐப்பசி -11, கார்த்திகை -8, தை -12, மாசி- 23 எனப் பஞ்சாங்கம் மூலம் அறிந்திருப்பீர்கள்.

சில பஞ்சாங்க நியதிகளின்படி, சில தமிழ் மாதங்களில் 32 தேதிகளைச் கொள்வதால், மாசி -22ந் தேதியை வாஸ்து நாளாக ஏற்கும் முறையும் நிலவுகிறது. சில நியதிகளில் பங்குனி 22ந் தேதியையும் வாஸ்து பூஜை நாளாக ஏற்பதுண்டு. இதற்கு அந்தர பவன சுத்தி நாள் என்று பெயர். இவ்வாறு இந்நாட்களில் வாஸ்து சக்திகள் அமைய பல தெய்வீகக் காரணங்கள் உண்டு.

இத்தகைய வாஸ்து யோகப் புனிதமான நாட்களில், ஆலயத்தில் சமுதாயப் பூஜையாகவோ, சத்சங்கமாகப் பலரும் ஒன்று சேர்ந்தோ, அல்லது குடும்ப சகிதமாகவோ, எளிய முறையிலோ வாஸ்து பூஜைகளை ஆற்றிடலாம். இந்நாட்களில் ஸ்ரீவாஸ்து மூர்த்தி தன்னுடைய யோக நித்திரையிலிருந்து மீண்டு பூவுலா வந்து உலக ஜீவன்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தியானவர் யோக நித்திரையிலிருந்து மீண்டு எழுந்து, விஸ்வரூப தரிசனம் தருகின்ற தெய்வ அனுபூதி தோன்றக் காரணமே, பூலோக மக்களுக்கு யோக சயனத்தின் தபோ பலன்களை நில,புல ஐஸ்வர்ய நல்வரங்களாகவும், வாஸ்து சக்திகளாகவும் அளித்திடவுமேயாம்.

உத்தமத் தெய்வீக நிலைகளில் பிரகாசித்துத் துலங்குவோர்க்கு, உபாசனா வாஸ்து பூஜைகளின் பாக்யமாக, வாஸ்து முக்தி, வாஸ்து மோட்ச வகை நிலைகளும் கிட்டுகின்றன.

புனிதமான வாஸ்து சக்தி பரிணமிக்கும் ஐந்து விதமான நேரங்கள்

முதலில் ஸ்ரீவாஸ்து மூர்த்தியானவர் தன் யோக நித்திரையிலிருந்து விழித்தெழும் காலத் தாத்பர்ய விசேஷ அம்சங்களை நன்கு அறிந்து கொள்தல் வேண்டும். மேற்கண்ட எட்டுத் தினங்களிலும், அந்தந்த ஸ்ரீவாஸ்து நேரத்திலிருந்து 90 நிமிடங்களுக்கு அவர் பூவுலகில் தரிசன அவதாரிகை சகிதம் அருள்பாலிக்க எழுந்தருளிடுவார்.

ஸ்ரீவாஸ்து பகவானின் தரிசன அனுபூதி லீலைகள் ஐந்து முக்கியமான நற்காரியங்களாகப் பிரிக்கப்பட்டு, மானுட சமுதாயத்திற்குப் புரியும் வண்ணம் தந்த சுத்தி (பல் துலக்குதல்), நீராடுதல், பூஜை, உணவு ஏற்றல், தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து தேவ அனுபூதிகளும் நிகழலாகின்றன.

பொதுவாக, சூரிய உதய நேரத்திலிருந்துதான் வாஸ்து பூஜை நேரங்கள் கணிக்கப்படுகின்றன. சில பஞ்சாங்கங்களில் கணித முறை மாறுபாடுகளால் நேர பேதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. எனவே, பொதுப்படையான திருக்கணித முறையிலான வாஸ்து நேரத்தை மட்டுமே இங்கு அளிக்கின்றோம். (ஒரு நாழிகை = 24நிமிடங்கள்) தக்க பெரியோர்களை நாடி விளக்கங்களைப் பெறவும்.

1. சித்திரை மாதம் 10ம் தேதி – சூரிய உதயத்திலிருந்து 5 நாழிகைக்கு மேல் 90 நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

2. வைகாசி மாதம் – 21ம் தேதி – சூரிய உதயத்திலிருந்து 16 நாழிகைக்கு மேல் 6 மணி 24 நிமிடத்திற்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

3. ஆடி மாதம் 11ம் தேதி சூரிய உதயத்திலிருந்து 2 நாழிகைகளுக்கு (48 நிமிட நேரத்திற்கு) மேல் 90 நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

4. ஆவணி மாதம் 6ம் தேதி சூரிய உதயத்திலிருந்து 21நாழிகைகள் – 8 மணி 24 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

5. ஐப்பசி மாதம் 11ம் தேதி சூரிய உதயத்திலிருந்து 2நாழிகைகளுக்கு (48 நிமிட நேரத்திற்கு) மேல் 90நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

6. கார்த்திகை மாதம் 8ம் தேதி சூரிய உதயத்திலிருந்து – 10 நாழிகைகளுக்கு – 4 மணி நேரத்திற்கு மேல் 90 நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

7. தை மாதம் 12ம் தேதி சூரிய உதயத்திலிருந்து – 8 நாழிகைகளுக்கு – 3மணி 12நிமிட நேரத்திற்கு மேல் 90நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

8. மாசி மாதம் 23ம் தேதி சூரிய உதயத்திலிருந்து 8 நாழிகைகளுக்கு – 3 மணி 12 நிமிட நேரத்திற்கு மேல் 90 நிமிடங்களுக்கு வாஸ்து பூஜைக் காலமாகும்.

மேற்கண்ட எட்டு நாட்களிலும் அந்தந்த நாளுக்காகக் குறிக்கப்பட்டுள்ள சூரிய உதயத்தில் இருந்து, குறித்த நேரத்திற்கு மேலாக, 90 நிமிடங்களுக்கு ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தி பல் துலக்குதல், புனித நீராடல், பூஜை, உணவு ஏற்றல், தாம்பூலம் தரித்தல் ஆகிய ஐந்து புனிதயோக அனுபூதிகளை ஆற்றுகின்றார்.

பஞ்சதேவ வாஸ்து நேரங்கள்

வாஸ்து பூஜையை வாஸ்துவின் ஆரம்ப நேரத்திலிருந்து துவங்குவதே சிறப்பானதாகும். அதாவது, வாஸ்து பகவான் யோக நித்திரை விடுவதில் இருந்து மீண்டும் யோக சயனம் ஏற்கும் வரை, மந்திரப் பாராயணம் அவருடைய திருச்செவிகளில் இனிமையாகக் கூடும் வண்ணம் பூ சூக்தம், வாஸ்து போற்றித் துதிகள், “ஓம் நமோ வாஸ்து தேவாய நம:” போன்றவற்றை ஓதி வருதல் வேண்டும்.

வாஸ்து மூர்த்தியின் போஜன, தாம்பூல நேரங்கள் மிகவும் புனிதமானவை. மனைக்கால் நடுதல், அஸ்திவார வேலை ஆரம்பித்தல், கிரகப் பிரவேசம், புது வீட்டில் காலடி வைத்தல் போன்றவற்றிற்கு மிகவும் ஏற்றது. ஆனால், தற்காலத்தில் வாஸ்து பகவான் பிரசாதம் ஏற்கும் நேரமும், தாம்பூலம் தரிக்கும் நேரமும் ஆகிய 36 நிமிடங்களைத் தவிர மற்ற நேரத்தில் எவரும் ஒன்றுமே செய்வது கிடையாது. இது தவறானதாகும். ஏனைய நேரங்களில் மந்திரம் ஓதுதல் ஹோம பூஜைகளைத் தொடர்தல் வேண்டும்.

வாஸ்து மூர்த்தி யோக நித்திரையிலிருந்து எழுந்து, மீண்டும் யோக நித்திரையில் ஆழும் வரை உள்ள ஐந்துவிதமான நேரங்களில் செய்ய வேண்டிய – அவரவருடைய ராசி, நட்சத்திர நிலைக்கேற்ற தனிப்பட்ட பூஜை முறைகளும் உண்டு.

ஐந்து வாஸ்து பூஜா நிலைகளும் பஞ்ச பூரணக் காரணத் தத்துவங்களை – அதாவது நாம் பிறப்பு எடுத்ததன் காரண சக்திகளை உரைக்க வல்லவை. உதாரணமாக, தந்தாவனம் (பல் சுத்தி), தாம்பூலம் தரிக்கும் நேரமெனில், நாம் சாதாரணமாக, நினைப்பது போல பல் துலக்குதல், நீராடுதல், பூஜை செய்தல், உணவு ஏற்றல், வெற்றிலை பாக்கு போடுதல் – இவையெல்லாம் அனைவரும் அன்றாடம் செய்வது தானே என்று சாதாரணமாக எண்ணி விடாதீர்கள். ஸ்ரீவாஸ்துபுருஷ மூர்த்திக்கு உரித்தான ஐந்துவிதமான யோகக் கோலங்கள் பிரபஞ்சப் பிருத்வி அம்சங்களுடன் ஐக்யங் கொண்டுள்ளன.

ஆத்மம் உறையும் வீடாகிய உடலுக்கும் வாஸ்து சாஸ்திரம் உண்டு!

ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் இவ்வித தெய்வீக யோக அனுபூதிகளுக்கு ஆயிரமாயிரம் அர்த்தங்கள் உண்டு. இதன் பின்னணியில் கோடானுகோடி தெய்வீக இரகசியங்களும் உண்டு. இவற்றை நன்கு அறிந்து கொண்டால்தான் நம் ஆத்மம் குடியிருக்கும் வீடாகிய உடலுக்கான வாஸ்து சாஸ்திர நியதிகளை அறிய முடியும். உடல், மனம் உள்ள வாஸ்து நியதிகள் நன்கு அமைந்தால்தான் முக்தி நிலை கை கூடும். இதுவே ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் அவதார மகிமையை நன்கு உணர்தலாகும்.

முதலாவதாக, ஸ்ரீவாஸ்து புருஷ தேவ மூர்த்தியின் தந்ததாவன (பல் சுத்தி) நேரத்தில் யோகமாதவ நித்திரை பாவன விழித்தல் என்றால், தேவயோக நித்திரையில் இருந்து மீண்டும், ஜீவன்களின் நல்வாழ்விற்காக யோக சக்திகளை நித்திரையில் இருந்து மீண்டு, ஜீவன்களின் நல்வாழ்விற்காக யோக சக்திகளை நல்வரமாக அளித்தல் என்பது பொருளாகும். ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் யோகப் பூர்வ தந்ததாவனம், அதாவது பல் துலக்குதல் என்றால், 32 பற்களும் 32 விதமான அறங்களை, அறதேவதைகளின் வடிவைக் குறிப்பதால், இத்தகைய நல்அறங்களை ஆற்றத் தேவையான ஜீவ சக்திகளை அளித்து. தான, தர்ம சக்திகளை அண்ட சராசரங்களிலும் பேணுதல் என்று பொருள்.

இரண்டாவதாக, ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் யோக மார்க நீராடுதல் பாவன நிலையெனில் அனைத்துத் தீர்த்தங்களிலும் – குளமோ, நதியோ, நீர்நிலையோ, கடலோ, கிணறோ எதுவாயினும் சரி – ஸ்ரீவாஸ்து சக்திகள் நீரில் நிரவுகின்ற புனிதமான நேரமாகும்.

மூன்றாவதாக, ஸ்ரீவாஸ்து தேவ மூர்த்தியின் பூஜை நேரம் என்றால், உலக நலனுக்காக ஆத்ம ஆக்ஞையாக, ஆத்மப் பூஜையை நிரவிக் கொள்கின்ற புனிதமான நேரமாகும். அதாவது, கோடானு கோடி தேவதா மூர்த்திகளும், தேவாதி தெய்வங்களும் இறைவனை வழிபடுகின்ற புனிதமான நேரம் இதுவேயாம்.

நான்காவதாக, ஸ்ரீவாஸ்து மூர்த்தி பிரசாதம் ஏற்றலெனில் மனித வாழ்விற்கு மூலாதாரமான உடல், மனம், உள்ளம் மூன்றிற்கும் ஆன்ம உணவாகிய ஆத்ம சக்தியைத் தந்தருள்வதாகும்.

ஐந்தாவதாக, ஸ்ரீவாஸ்து மூர்த்தி தாம்பூல யோகந்தரித்துப் பூரித்தல் எனில், தாம்பூலம் என்பது மங்கள சக்திகள் நிறைந்ததும், சுமங்கலித்வ சுபமங்கள சக்திகளை விருத்தியாகச் செய்வதும், உண்ட உணவு செரிப்பதற்கான சிறந்த இயற்கை மருத்துவமும் அல்லவா!

இதைப் போல, ஜீவன்களின் கர்மவினைகள் ஜீரணிக்கப்பட்டு (நன்கு அனுபவிக்கப்பட்டு) அதற்குரிய விளைவுகள் ஏற்கப்பட்டு, கர்ம வினைகள் சீராக பரிபாலனம் செய்யப்படுதல் என்பதே இந்த ஐந்தாம் வாஸ்து யோக நிலையின் பொருளாகும்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் அவதார மஹிமை

நாம் ஒவ்வொரு விநாடியும் வீடு, அலுவலகம் போன்று வாஸ்து பிருத்வி சாதனங்களில் தானே உறைந்து வாழ்கின்றோம்! எனவே நாம் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் அனுகிரகமின்றி கண்ணிமைக்கும் நேரங் கூட வாழ இயலாது, ஆகையால் நம்மில், நம்முள், நம்முடன் எப்போதும் உறைந்தருளும் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் திவ்யமான ரூபத்தை வீட்டில், கடைகளில், ஆலயங்களில் அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் தாராளமாக வைத்து வழிபடலாம்.

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை, ஸ்ரீஆயுர்தேவி மகிமை போல ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் மகிமை எல்லை அற்றது, சாசுவதமானது, பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோடி லோகங்களுக்கும், வாஸ்து நியதிகள் உரித்தானவை.

ஸ்ரீவாஸ்து புருஷ தேவ லட்சணங்களைக் குறிக்கையில், இம்மூர்த்தியானவர் சயனிக்கின்ற கோலத்தில் கிழக்கு, தெற்கு, மேற்கு, வடக்கு திசைகளில் சிரசை வைத்துச் சயனம் கொள்வார் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கும். சயனம் என்றால், ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் உறக்கம் கொள்கின்றார் என்று சாதாரணப் பொருள் அல்ல, எவ்வாறு ஸ்ரீரங்கநாதர் யோக நித்திரையைப் பூண்டு இருக்கின்றாரோ, இதே போல, ஹரிஹர அம்சத்தைக் கொண்டுள்ள ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியானவர் வரதாரண யோக நித்திரை கொள்கின்றார். ஸ்ரீவாஸ்து பகவான் யோக நித்திரையிலிருந்து மீண்டு அருள்விழி திறக்கும் காலத்தையே ஸ்ரீவாஸ்து நேரமாகக் கொள்கின்றோம். வாஸ்து நாட்களில் ஐந்து விதமான நிலைகளைப் பூவுலகிற்கென அளிக்கின்றார்கள்.

ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் தந்த தாவனம்

இதேபோல, ஸ்ரீவாஸ்து புருஷ மூர்த்தியின் தந்த தாவனம் அதாவது பல் துலக்குதல் நேரம் என்றால் என்ன? ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் பல் துலக்குதல் நேரம் என்பதை விட, பற்றொளிப் பூஜை நேரம் என்பதே சிறப்பானதாகும். மானுடராய்ப் பிறந்தவர்கள் அனைவரும் தம் வாழ்நாளில் செய்ய வேண்டிய தெய்வீக நற்காரியங்களை 32 அறங்களைப் பகுத்துத் தந்துள்ளனர் நம் பெரியோர்கள். ஒவ்வொருவருக்கும் 32 பற்கள் இருக்க வேண்டும் அல்லவா! ஒவ்வொரு பல்லுக்குமான அங்க தேவதைகள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு தர்மத்தைக் குறிக்கின்றது. ஒருவருக்கு 32 பற்களும் விழாமல் இறுதி வரை கெட்டியாக இருக்குமானால் அவர் 32 விதமான தர்ம தேவதைகளின் ஆசீர்வாதத்தைப் பெற்றிருக்கின்றார் என்று பொருள். ஒவ்வொரு பல்லும் ஒவ்வொரு தர்மலோக தேவதையைக் குறிப்பதால், ஒவ்வொருவரும், தம்முடைய வாழ்க்கையில் 32 விதமான அறங்களை, தமக்கு ஏற்ற வகையில் சிறு அளவிலாவது செய்தாக வேண்டும். மனிதன் ஜீவிப்பதற்கு மிகவும் முக்கியமானவையாக 32 விதமான நாடி நரம்புகள் குறிப்பிடப்படுகின்றன. இவை பற்களோடு மிகவும் ஆன்ம ரீதியாகத் தொடர்புடையவை!

வாஸ்து நாளின் 5 நிலைகளில், முதலாவதான தந்த தாவனம் எனப்படும் பூஜை நேரத்தில், ஸ்ரீவாஸ்து பகவான் தன்னுடைய பற்களைச் சுத்தம் செய்கின்றார் என்று மட்டும் பொருள் கொள்ளாதீர்கள். ஸ்ரீவாஸ்து மூர்த்தியானவர், யோக நித்திரையில் இருந்து மீண்டு, பல் துலக்குதலைச் செய்வதன் பொருள் என்னவென்றால், உலக ஜீவன்களுடைய முக்கியமான 32வித நாடி தர்ம நரம்புகளுக்கும் தன் ஜீவ சக்தியை ஊட்டுவிக்கின்றார் என்பதே உண்மைப் பொருளாகும். ஏனெனில், 32 விதமான அறங்களும் உலகில் எங்கேனும் நிகழ்ந்து கொண்டிருந்தால் தான் இந்த பூமியானது, மனித சமுதாயமானது தெய்வீக அமைதி நிறைந்ததாக விளங்கும். இதற்கான அருளாசிகளை ஸ்ரீவாஸ்து மூர்த்தி வழங்கும் நன்னாளே வருடத்தின் எட்டுவிதமான வாஸ்து நாட்களாகும்.

ஆனால், கலியுகத்தில் பலவிதமான தான, தர்மங்கள் மனித சமுதாயத்தால் மறக்கப்பட்ட நிலையில், 32 விதமான அறங்களைச் செய்வோரும் குறைந்துவிட்ட கலியுகக் கால கட்டத்தில், ஸ்ரீவாஸ்து மூர்த்தியானவர் உலக மக்களுக்கு மிகவும் அத்யாவசியமான 32 விதமான தான ,தர்ம சக்திகளை ஜீவன்களுக்கு நன்கு ஆக்கப் பூர்வமாக ஊட்டுவிக்கின்றார். எனவேதான், வாஸ்து தினங்களில் செய்யப்படுகின்ற பூஜைகளால் தான, தர்ம சக்திகள் மீண்டும் பூவுலகில் நன்கு நிலை நிறுத்தப்படுகின்றன.

ஸ்ரீவாஸ்து ஹோமம்

90 நிமிடங்களுக்கு அமையும் வாஸ்து நேரம் முழுவதும், 18 நிமிடங்கள் கூடிய மேற்கண்ட 5 நிலைகளில் எந்தெந்த விதமான பூஜைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்ற நியதிகளும் நிறைய உண்டு. உதாரணமாக, ஸ்ரீவாஸ்து மூர்த்தி பற்றொளிப் பூஜை நேரத்தில் நாம் தாந்த்ரீக தந்த பூச வகையில் ஸ்ரீவாஸ்து ஹோமத்தை நிகழ்த்திட வேண்டும். இதில் முக்கியமானதாக விளங்குவது, இந்த ஹோம குண்டத்தை 32 கற்களை வைத்து அமைப்பதாகும். 32 கற்களுக்கு உரித்தான 32 வகையான மூலிகை சமித்துக்களும் உண்டு. இவற்றைத் தக்க சத்குருவை நாடி அறிந்து, ஸ்ரீவாஸ்து ஹோமத்தை நல்ல முறையில் நடத்திட வேண்டும்.

தை அமாவாசை மகத்துவம்

கடந்த 2005 ஜனவரி 14ம் தேதி தை மாதப் பிறப்புடன் உத்தராயணப் புண்ய காலம் தொடங்கி உள்ளது அல்லவா! பொதுவாக, உபநயனம் எனப்படும் பூணூல் அணிவித்தல், கிரகப் பிரவேசம், போன்ற பலவகைச் சுப காரியங்களை உத்தராயணத்தில் நிகழ்த்துவதே சிறப்புடையது. வளரும் ஆண் பிள்ளைகளுக்காக ஆவதால், பூணூல் அணிவித்தலைக் கண்டிப்பாகத் தை முதல் ஆனி வரையிலான உத்தராயணக் காலத்தில் மட்டுமே நிகழ்த்துதல் வேண்டும்.

திருமணமும் உத்தராயணத்தில் நிகழ்வதால் கூடுதலாகப் பல சிறப்பம்சங்கள் நல்லாசிகளாக வந்து சேர்கின்றன. எனினும், திருமணம் என்பது மனித ஆயுளின், வாழ்க்கையில் ஒரே ஒரு முறை அமைவதான மிக மிக மங்களகரமான, மகத்தான புனிதமான தேவகாரியம் என்பதால், அந்தந்த திருமண முகூர்த்த நாளின் சுப அம்சங்களைப் பொறுத்து, குறித்த சில விசேஷமான வழிபாடுகளுடன் திருமணத்தை வருடம் முழுதும் வரும் வளர்பிறைச் சுபமுகூர்த்த நாட்களில் (தேய்பிறையில் அல்ல) நிகழ்த்திடலாம் என்ற முகூர்த்த விதமான நியதிகளும் உண்டு. திருமணம், சீமந்தம், வளைகாப்பு போன்றவற்றை வருடம் முழுதும் நல்ல வளர்பிறை நாளில் சிறப்பாக நடத்திடலாம்.

தை அமாவாசை, ஆடி அமாவாசை, தை வெள்ளி, ஆடி வெள்ளி, உத்தராயணம், தட்சிணாயனம் என்றவாறாக உத்தராயணப் பிறப்பு தொடங்கும் தை மாதத்திலும், தட்சிணாயனப் பிறப்பு துவங்கும் ஆடி மாதத்திலும் பல மங்களகரமான பண்டிகைகள் அமைகின்றன அல்லவா! “நல்ல தொடக்கமே, நற்பணி வரமாம்” என்பதை உணர்த்துவதே இது!

உத்தராயணத்தில் சுபமங்கள காரியங்களை நடத்துவதே சிறப்புடையது என்பதற்காக, தட்சிணாயனப் புண்ய காலமான ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறுமாத காலத்தைத் தாழ்வாகக் கருதக் கூடாது. இரண்டுமே மஹாகால பைரவ பிரம்ம மூர்த்தியால் சிருஷ்டிக்கப் பெற்றவை தாமே! சுபமங்களமான காரியங்களுக்கும், பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும் பல ஷண்ணாவதித் தர்ப்பண நாட்கள் பலவும் முழுதும் நிறைந்த புனிதமான மாதமே தை மாதமாகும்.

இறை வழிபாட்டிற்கென மட்டும் அமைந்த கரிநாள்

தை மாத முதல் மூன்று தேதிகளும் கரிநாட்களாகும். கரிநாள் எனும் போது சுபகாரியத்திற்கு ஏற்றது அல்ல என்பது பொதுவான கருத்தும் நிலவுகிறதே –

“தை பிறந்தால் வழி பிறக்கும்” என்பதாக, தை மாதத்தில் தை வெள்ளி, தைப் பூசம் போன்ற சுபமங்கள நாட்களும் பொலிந்து வருகின்றனவே –

ஆனால் பொங்கலோடு உத்தராயணமாகப் பிறக்கின்ற, தை மாதத்தின் முதல் மூன்று நாட்களுமே கரிநாட்களாகக் குறிக்கப்படுகின்றனவே, சுபமங்கள அயன காலத்தைத் தொடங்கி வைக்கும் தை மாதத்தின் முதல் மூன்று தேதிகளிலும், கரிநாட்களாக வந்தமைவதால் இவற்றில் எந்த சுப காரியங்களையும் நிகழ்த்த முடியவில்லையே? என இதில் பலருக்கும் சந்தேகம் எழுவதுண்டு.

கரிநாளை நிர்ணயித்துத் தந்த உத்தமக் காலபைரவ லோக மகரிஷிகள் இதனை அறியாது இருப்பார்களா என்ன?

நலம்பட வினை செய்!

கர்மவினை அழுத்தங்கள் கலியுகத்தில் பலத்து இருப்பதால், நல்ல நாட்களில் , நல்ல நேரத்தில் நிரவும் சுப சக்திகள் தாம் மக்களைப் பெரிதும் காப்பாற்றுவதாக உள்ளன. எனவே, நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் என்ற ஆன்மீக வகைக் கால நியதியைக் கலியுக மக்கள் சமுதாயத்தில், லௌகீக ரீதியாக ஏற்றுச் செயல்பட்டாக வேண்டும்.

உத்தம ஆன்மீக நிலையில் நல்லது அல்லது கெட்டது என எதையும் பகுப்பதில்லை. ஆனால் கலியுக சமுதாயத்தில் உத்தமர்களை மதிக்கும் தெய்வீகப் பண்பாடு அருகி வருகின்றதே! விருப்பு, வெறுப்புடன், லௌகீகமாக, எண்ணற்ற ஆசாபாசங்களுடன், பேராசைகளுடன் வாழ்க்கையாகிய காலச் சக்கரத்தில் கலிகால மக்கள் உழல்கின்றனரே! எனவே, கால யந்திரச் சக்கரத்தில் இருந்து நல்ல சக்திகளைப் பெற்று, மக்கள் நல்ல நேரம், நல்ல காலத்தைக் கணித்துக் காலத்தை அனுசரித்தே தம் காரியங்களை நடத்த வேண்டும். நேரத்தை ஒட்டியே கலியுக வாழ்க்கை பின்னிப் பிணைந்து இருப்பதால், நல்ல கால நிர்ணயமே துன்பங்களைத் தகர்க்கவும், இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் பெருந் துணைபுரியும்.

காலமும் அடங்குமே காலபைரவப் பொருளில்!

கரிநாளோ, மரண யோகமோ, பிரபலாரிஷ்ட (கூடா) நாளோ, ராகு காலமோ, எமகண்டமோ – எதுவாயினும் ஆலயங்களில், இறைவனுக்கு மட்டும் அந்தந்த கட்டளைப் பூஜைக் கால நேரத்தில் ஆற்ற வேண்டிய பூஜைகளும், உற்சவாதிகளும் தங்கு தடையின்றி நடைபெறுகின்றன அல்லவா! இதன் உட்பொருள் என்ன? காலத்தைக் கடந்ததே பரம்பொருள் சக்தி! பக்தியுடன் துலங்கும், எப்போதும் அன்புடன் பதியும் உத்தம தெய்வீக நிலைகளில்தாம் நல்லது, நல்லது அல்லாதது என்ற பேதம் மறையும். இவற்றை கனிந்த அருளாகப் பொழியும் உத்தம சத்குருமார்களைக் கலியுகத்தில் வணங்கிப் பேணுதல் வேண்டும்.

பிள்ளையார் சதுர்த்தியோ, தைப் பொங்கலோ, வாஸ்து நாளோ, வரலக்ஷ்மி விரதமோ –எந்த சுப மங்கள சக்திப் பண்டிகையும் மரண யோகத்தில் வந்து அமைந்தாலும், இப்பண்டிகைகள், காலபேதமின்றிக் கொண்டாடப்பட்டுத் தானே வருகின்றன. இதற்குக் காரணம் என்ன? இறைவனை அடைய வல்ல இறைபக்தியை ஊட்டுகின்ற பண்டிகைகளாக ஆவதால், இவையும் காலத்தைக் கடந்த அதீத சக்திகளை வழிபாடுகள் மூலமாக அளிக்கவல்ல அற்புதப் பண்டிகை நாட்களாகின்றன.

எனவே வருடத்தின் சில நாட்களில் கொழிக்கும் அற்புத சக்திகளை ஆக்கப்படுத்தி, ஆகர்ஷணமாக்கிப் பெற்றிட இந்நாட்களில் முழுமையாக இறை வழிபாடுகளே நிகழ்தல் வேண்டும் என்பதற்காகவே, ஏனைய வைபவங்கள் இன்றி, இறை வைபவங்கள் மட்டுமே நிகழப் பெற்று, பக்தி நிலையை உய்த்துணரவே கரிநாள் வகைக் காலநியதி வந்தமைந்தது. இதற்கு இன்னமும் பல காரணங்களும் உண்டு. தக்க சத்குருவை நாடி அறியவும்.

தை அமாவாசையில் தழைக்கும் பித்ருக்களின் பேராற்றல்!

காலம் பற்றிய எத்தகைய வினாக்களுக்கும், சந்தேகங்களுக்கும் நன்முறையில் விடையளித்து விளக்கங்களைத் தரவல்ல சற்குருவை அடைய உதவுவதே காலமற்ற காலசக்திகளைக் கொண்ட அமாவாசை மற்றும் கரிநாட்களாகும். இதிலும் தை அமாவாசைத் திதியன்று, வசு, ருத்ர, ஆதித்ய அனைத்துக் கோடிப் பித்ரு மூர்த்திகளும், பித்ரு தேவதைகளும் பித்ரு பத்னீயரும், தை அமாவாசைத் திதியிலும், ஆடி அமாவாசைத் திதியிலும் பூலோகத்தில் ஒன்று திரண்டு வந்து அளப்பரிய அனுகிரகங்களைத் தருகின்றார்கள்.

இதனால்தான் அமாவாசையானது தோஷமற்ற நாளாக போற்றப் பெற்று, இதில் பல நற்காரியங்களையும் நடத்துகின்றார்கள். மேலும் இதில் திதி சூன்யமும் வராது.

உத்தராயண நாளில், சூரியப் பாதையில் சில யோகப் பிரகாச மார்கபாவனக் கிரண மாற்றங்கள் எழுகின்றன. சூரிய, சந்திர கோளங்கள் சேர்வதே அமாவாசை ஆவதால், ஒவ்வொரு உத்தராயணத்தில் தோன்றும் அபூர்வமான யோகாக்னி சக்திகளுடன், தை அமாவாசை அன்று சூரிய மூர்த்தியானவர், புக்தி வலுவான பல பாஸ்கராக்னி சக்திகளை, சோமாக்னி சக்திகளாக சந்திர மூர்த்திக்கு அளிக்கின்றார். எனவே தை அமாவாசை சூரிய, சந்திர கோளப் பூர்வ இணைப்பு மட்டுமன்றி, யோகப் பிரகாச சக்திகளின் சங்கமும், பிணைப்பும் ஆகும்.

அனைவரும் மஹரிஷி வழி வந்தவர்களே!

உலக மக்கள் ஒவ்வொருவரும் மஹரிஷி வழித் தோன்றல்களே! இதனையே ஒவ்வொருவருள்ளும் ஆத்மம் ஒளிர்கின்றது என்று உரைக்கின்றோம். காலப் போக்கில் வினை மாயையில் சிக்கி மஹரிஷிகளிடமிருந்து அவர்கள் தந்த நல்மார்கங்களில் இருந்தும் விலகி பல பிறவிகளிலும் மக்கள் வெகு தூரம் சென்று விட்டார்கள். எனவே ஒவ்வொருவரின் வாழ்வும் “விட்டதைப் (மஹரிஷிகளைப்) பிடிக்கவேதான்!”

தாவர ஜங்கமங்கள், பிராணிகளுக்கும் பித்ருக்கள் உண்டு. கல், மண், மலை போன்று ஜடப் பொருள்களாக இருப்பதாகத் தோன்றுவனவற்றிற்கும் குறித்த வகை பித்ரு ஜீவன சக்திகளும் உண்டு. எனவே, அனைத்து வகை ஜீவன்களுக்குமான அயன மார்கப் புலங்களை நன்கு ஆற்றிட, தை அமாவாசையிலும், ஆடி அமாவாசையிலும் பூலோகம் முழுதும் பித்ருக்கள் வந்து குழுமி நிறைந்திருப்பார்கள்.

பூவாளூர்

திருச்சி – லால்குடி அருகே உள்ள பூவாளுரில் ஒரு யுகத்தின் தை அமாவாசைத் திருநாளில் தாம், பல்குனி ருத்ரச் சித்தர் பல்லாயிரக்கணக்கான பித்ரு மூர்த்திகளுடன் “முக்கூடற் சங்கமப் பூஜைகளை” ஆற்றினார். இச்சித்தர்பிரான் அனைத்து கிராம மக்களுடன், அன்பில் அருகே முந்தைய யுகங்களில் பொலிந்த தட்சிணப் பிரயாகைச் சங்கமத்தில், ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதி (கொள்ளிடம்) நதிகள் சங்கமமாகும் இடத்தில் தர்ப்பண, படையல், சிரார்த்த, திவச பூஜைகளை நிகழ்த்தியதுடன், அன்றும், இன்றும், என்றுமாய் சூக்கும ரீதியாகவும் இங்கு கடைபிடித்து மக்களுக்கு நலம் பயக்கின்றார்.

முக்கூடல் பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க சன்னதியில் சங்கமமாகும் வசு, ருத்ர ஆதித்ய மூவகைப் பித்ருக்கள்!

மேலும், பவானித் திருத்தலத்திலும் வசு, ருத்ர, ஆதித்ய பித்ருக்களே தை மற்றும் ஆடி அமாவாசைத் திதி நாட்களில் நேரில் பிரசன்னமாகி ஆதித்ய ஹ்ருதயம் ை ஓதி, ஸ்ரீகாயத்ரீ லிங்க சன்னதியில் தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில்  பூஜிக்கின்றனர்.

இங்கு பவானியில் தை அமாவாசைத் திருநாளில், ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தின் அருகிலான அமுத ஆற்றுப் படுகையில், குறைந்தது 24 முறையேனும் ஸ்ரீகாயத்ரீ தேவிக்கு அர்க்யம் அளித்துப் பூஜித்தல் விசேஷமானது.

காலதோஷ நிவர்த்தி

காலதோஷ நிவர்த்திக்கான சுபமங்கள அருணாசல தரிசனம்

சுபமுகூர்த்த லட்சண இலக்கணங்கள்!
திருஅண்ணாமலையில் கிரிவலம் வரும்போது கோடிக்கணக்கான மலை தரிசனங்கள் தென்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் விதவிதமான வகைகளில் எண்ணற்ற பலாபலன்கள் உண்டு. எண்ணற்ற வழிமுறைகளில் முக்தி, மோட்ச நிலைகளைப் பெற்றுத் தருகின்ற வகையிலும் பலவிதமான தரிசனங்களும் உள்ளன. இதே போன்று, உலக மக்கள் செய்கின்ற அனைத்து விதமான பாவங்களுக்கும் பரிகாரங்களைத் தரவல்ல பாபவிநாச தரிசனங்களும் நிறைய உள்ளன.

ஒவ்வொரு அருணாசல தரிசனமும் ஏதாவது பலன்களை, நல்வரங்களை, பரிகாரங்களை அளித்துக் கொண்டுதான் இருக்க வேண்டுமா? ஆன்மீக ரீதியான பலன்கள், முக்தி, மோட்ச நிலைகளைத் தரவல்ல தரிசனங்களும் உண்டு!

ஆனால் உங்கள் உள்ளத்தைத் தொட்டுச் சொல்லுங்கள், மாதாமாதம் நான்கு லட்சம் பேர்களுக்கு மேல் கிரிவலம் வருகின்ற அருணாசலப் புனித பூமியில், “முக்தி, மோட்ச நிலைகள் வேண்டும்!” என பக்திப் பூர்வமாக அருணாசலப் பெருமானிடம் கேட்போர் எத்தனை பேர்?

கடன் பிரச்னைகள், திருமணமாகாமை, தம்பதியர் இடையே ஒற்றுமை இன்மை, பிள்ளைகள், கணவன் சரியில்லாமை, வேலை கிட்டாமை, நோய்த் துன்பங்கள், சந்ததி இல்லாமை, வீடு வாசல் இல்லாமை, வியாபார நஷ்டங்கள் என, துன்பங்களையே காவடியாய்ச் சுமந்து வருபவர்கள் தானே அதிகம்! இத்தகைய அடிப்படைத் துன்பங்கள் தீர்ந்தால் தானே முக்தியைப் பற்றி எண்ணலாகும் எனப் பலரும் எண்ணுவர். துன்பங்கள் பிறரால் வருவதல்ல, தன் வினைகளின் விளைவுகளே இவையாவும் என மனதார உணர்வதையே நல்வரமாக முதலில் பெற வைத்து, தக்க பரிகாரங்களை அளித்துத் துன்பங்களைத் தீர்க்கும் அருள்மருந்தே அருமருந்தாகும் தலமாகவும் பூரிக்கின்றது.

எல்லாப் புனித நதிகளும், புனிதத் தலங்களும் அண்ணாமலையிலேயே!

நம்மால் எண்ணிப் பார்க்க இயலாத வகையிலும் எண்ணற்ற காரண காரியங்களைக் கொண்ட தரிசன வகைகளும் அண்ணாமலையில் உண்டு. சிறுவயதிலேயே அண்ணாமலைக்கு தவக்கோலத்தில் வந்தமர்ந்த பகவான் ஸ்ரீரமண மகரிஷி அருணாசலத்தை விட்டு ஓர் அங்குலம் கூட நகராது இருந்த இடத்தில் இருந்து திருஅண்ணாமலை, கங்கை, காசி, கேதார்நாத், பத்ரிநாத், ராமேஸ்வரம், பூரி, துவாரகா போன்று எண்ணற்ற புனிதத் தலங்களின் சுயம்பு மூர்த்திகளை, புனித தீர்த்தங்களை இருங்கிருந்தே தரிசித்திட்டார் என்றால், சர்வேஸ்வரனின் வியாபக வடிவான திருஅண்ணாமலையின் ஒவ்வொரு கல்லும் ஒவ்வொரு மண் துகளும் சுயம்புலிங்க மூர்த்திகள் தாமே!

எனவே நீங்கள் எந்த திசையில் இருந்து அருணாசலத்தைப் பார்த்தாலும், கோடிக்கணக்கான சுயம்பு மூர்த்திகளை, தரிசிக்கின்ற பலாபலன்களைப் பெறுவதால்தான், அருணாசல கிரிவலத்தின் மகிமை மகத்தானதாக, சொல், பொருளுக்கு அப்பாற்பட்ட தெய்வீகப் பொக்கிஷமாக விளங்குகின்றது.

மங்களம் பதிந்த பாதையில் மகத்தான கிரிவலம்

எனவே சுபமங்கள சக்திகள் பரிபூரணமாகப் பரிணமித்து, பரிபூரணித்துப் பரிமளிக்கும் தரிசனத் தலமும் திருஅண்ணாமலையே! அருணாசல சுபமங்கள தரிசனப் பலாபலன்களை அருளவல்லவரே அருணாசலேஸ்வரர் ஆலயக் கிழக்கு ராஜகோபுரத்தின் உள்படிமேல் நிலைத்தூண் மேல் அருளும் ஸ்ரீலட்சண விநாயகர் (தற்போது செல்வ விநாயகர்) ஆவார். இவரே சுப காலங்களுக்கு சுப லட்சணங்களைப் பதித்து அருள்பவர். இங்கு கண்களை மூடியவாறு பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் இட்டு, கண்களைத் திறந்து, ஸ்ரீலட்சண விநாயகரைத் தரிசித்த உடனேயே கோயிலுக்குப் பின்புறம் தோன்றும் அருணாசல மலையை தரிசிப்பது சுபலட்சண தரிசனமாகும்.

இந்த ஒரே இடத்தில் இருந்தே நூற்றுக்கணக்கான தரிசனங்கள் கிட்டுகின்றன. இவ்வகையில்தான் அருணாசலத்தில் கோடி, கோடி தரிசனங்கள் புலர்கின்றன என்றாலும், பலராலும் நம்ப இயலாது. நம்பினோர்க்குத்தானே நடராஜ தரிசனங்கள் வாய்க்கும்.

ஸ்ரீலட்சண விநாயகர் அருளும் சுபமங்கள அருணாசல தரிசனம்

உதாரணமாக, இந்த இடத்தில் நூறு பேர் சத்சங்கமாக நின்று, ஸ்ரீலட்சண விநாயகரை வணங்கி, இங்கிருந்து தென்படும் அண்ணாமலைப் பகுதியைத் தரிசிக்கச் செய்தால் அனைவரும் ஒரே சமயத்தில் அண்ணாமலையின் ஒரே இடத்தையா தரிசிக்கின்றார்கள்? மலையின் இடப்புற அமைப்பு, வடதிசைக் கோணம், உச்சிப் பகுதி, உச்சிக்கு முன்னே வரும் சரிவுப் பகுதி, உள் கோபுரத்தை ஒட்டிய மலைப் பகுதி என்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் இருந்து தம்முடைய பூர்வ ஜன்ம புண்ணிய சக்திகளுக்கு ஏற்பவே மலையை விதவிதமாக தரிசிப்பார்கள்.

ஒரு சதுர அடி இடத்தில் இருந்தே ஒரு நூறு மலை தரிசனங்களுக்கு மேல் கிட்டுகின்ற உண்மையை இப்போது இந்த உதாரணத்தால் உணர்கின்றீர்கள் அல்லவா! இப்படிச் சாதாரணமாக மனித கணக்கு போட்டால், அண்ணாமலையைச் சுற்றி ஆயிரமாயிரம், லட்சோப லட்சம், கோடானு கோடி தரிசனங்கள் கணக்கிற்கு வருகின்றன அல்லவா!

முகூர்த்த நேர தோஷங்கள் தீர உதவும் தரிசனப் பலன்கள்!

ஸ்ரீலட்சண விநாயகர் அருளும் படி அருகில் இருந்து ஏறுமுகமாய் உள்ள மலையின் மலைப் பாங்கில் கிட்டும் ஏறுமுக தரிசனத்தின் நடுப்பகுதியில் சற்றுத் தூக்கலாக ஒரு மலைப் பகுதி தென்படும்! இதனைத் தரிசிப்பதே சுபலட்சண தரிசனம் ஆகும். குடும்பத்தில் சுபகாரியங்களை நல்ல சுபநேரத்தில் நிகழ்த்தாமை, நல்ல நேரம் பாராது சகட்டு மேனிக்கு, செக்குகளிலும் பலவற்றிலும் கையெழுத்துப் போடுதல் – இவ்வாறாகச் சிறுக சிறுக வாழ்வில் தினந்தோறும் பலவகையான கால தோஷங்கள் ஏற்படுகின்றன. இதனை படிப்படியாகத் திருத்திப் பண்படச் செய்தலே திருஅண்ணாமலையில் நாம் பெறும் சுபமங்கள தரிசனமாகும்.

திருமணப் பத்திரிக்கையுடன் அமிர்த யோக நேரத்தில் கிரிவலம் வாருங்கள்

திருமணத்திற்கான பத்திரிகைகளை ஒரு மஞ்சள் பையில் மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, புஷ்பம், நாணயம், மாங்கல்யச் சரடு, தேங்காயுடன் வைத்து, ஸ்ரீலட்சண விநாயகரின் திருவடிகளில் சமர்ப்பித்து, இங்கிருந்து கிட்டும் மலையின் சுபமங்கள தரிசனத்தைக் கண்டு அமிர்த யோக நேரத்தில் கிரிவலம் வந்து, ஸ்ரீபூதநாராயணப் பெருமாள் சன்னதியில் நிறைவு செய்தலால், அறிந்தோ, அறியாமலோ திருமணத்துக்குக் குறித்துள்ள நேரத்தில் அமைந்துள்ள காலதோஷ விளைவுகள் தணிய உதவும்.

தற்போது சுபமுகூர்த்த நாளைக் கணிப்போர் சுபயோக, சுபகரணம், சுபலக்னம், சுப ஹோரை போன்றவற்றைச் சரியாகக் கணிக்காது பலவற்றை விட்டு விடுகின்றார்கள். ராகு காலம், எம கண்டம் போலச் சுபமுகூர்த்த நேரத்திற்கு தவிர்க்கப்பட வேண்டிய அர்த்தப் பிரகணன், பிரபலாரிஷ்ட யோகம், ஹோரைகள், காலன் போன்ற காலங்களையும் சரியாகக் கணக்கில் எடுத்துக் கொள்வது கிடையாது. இவை எல்லாம் தம்பதிகளையும் திருமண வாழ்வையும் குடும்பங்களையும் பாதிக்கும். இவற்றிற்குத் தக்க பரிகாரம் பெறவே, திருமணப் பத்திரிகையோடு அருணாசல கிரிவலம் வருதல் விசேஷமானது.

மாளாபுரம்

மாளாபுரம் மும்மூர்த்தி விநாயக மூர்த்திகள் கும்பகோணம் – பாபநாசம் – உத்தமதானபுரம் அருகில் மாளாபுரம் உள்ளது!

பொதுவாக, மும்மூர்த்திகள் என்றால் பிரம்மா, விஷ்ணு, சிவ மூர்த்திகளைத்தான் குறிப்பதாக நாம் கருதுகின்றோம். சர்வேஸ்வரனாகிய பரபிரம்மத்திடமிருந்து தோன்றிய மஹாபிரம்மா, மஹாவிஷ்ணு, மஹாசிவ மூர்த்திகள் மூவரும் இணைந்து பூஜித்தே மூன்று கணேச மூர்த்திகள் சேர்ந்தருளும் மும்மூர்த்தி கணபதி மூர்த்தமாகும். கலியுக மக்களுக்கான பெரும் பாக்கியமாக, மாளாபுரத்தில் இம்மூர்த்தி கணபதிகள் – மூன்று விநாயக மூர்த்திகளாக ஒன்று சேர்ந்து அருள்கின்றனர்.

கலியுக மக்களுக்குத் தினசரியே பல்வகைப் பிரச்னைகள் – பணம், தொழில், நோய் – எனப் பல துறைகளிலும் ஏற்படுவதால், இவற்றின் வன்மையை முதலில் தணித்தும், கர்ம பரிபாலன ரீதியாகத் தீர்ப்பதற்கான அனைத்து விதமான நல்வரங்களையும் விசேஷமாக அருளிடவே, கும்பகோணம் – பாபநாசம் அருகே (தமிழ்த் தாத்தா உ.வே. சாமிநாத அய்யர் அவர்களுடைய சொந்த ஊரான) உத்தமதானபுரம் அருகில் மாளாபுரம் ஸ்ரீகாசி விஸ்வநாதர் ஆலயத்தில், மும்மூர்த்தி கணபதி மூர்த்திகள் அருள்கின்ற மஹிமையை, நாம் ஏற்கனவே முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் விளக்கியுள்ளோம்.

மும்மூர்த்தி விநாயக மூர்த்திகள் உத்தமதானபுரம் மாளாபுரம் அருகே

நலந்தரும் எட்டு சதுர்த்தி, சதுர்த்தசி பூஜைகள்

வளர்பிறைச் சதுர்த்தி, தேய்பிறைச் சதுர்த்தி (சங்கடஹரச் சதுர்த்தி) வளர்பிறைச் சதுர்த்தசி, தேய்பிறைச் சதுர்த்தசி போன்ற காணாபத்ய சக்தி நாட்களில் மிக முக்கியமாக வழிபட வேண்டிய உத்தமதானபுரம் மூன்று கணபதி மூர்த்தங்களின் விசேஷ அனுகிரகத் தாத்பர்யம் யாதெனில், மஹாபிரம்மா, மஹாவிஷ்ணு, மஹாசிவன் ஆகிய மும்மூர்த்திகளும், தம் வலது கண், இடது கண், மூன்றாம் கண்ணாகிய நெற்றிக்கண ஆகிய முக்கண்களாலும் தரிசித்து வழிபடப் பெற்ற கணபதி மும்மூர்த்திகள் ஆவர்.

நெற்றிச் சின்னம் நல்லதோர் இறைக்காப்பாம்

கலியுகத்தில் விபூதி, குங்குமம் போன்று நெற்றிக்கு இறைச் சின்னத்தை இடுவதையும் பெரும் பூஜையாகவே விண்ணுலகில் ஆனந்தமாக ஏற்கின்றார்கள். காரணம், உங்கள் நெற்றியில் உள்ள இறைச் சின்னத்தை, ஒரு நாளில் நூற்றுக்கணக்கானவர்கள் பார்ப்பதும் ஓர் அற்புத இறைவடிவ தரிசனமாகிப் பலருக்கும், புண்ய சக்திகளைப் பெற்றுத் தருவதற்கு நீங்கள் பாத்திரமாகின்றீர்கள் அல்லவா! எனவே பிறருக்கு தெய்வ சாதன தரிசனத்திற்கு நல்வழி வகுத்ததான அருட்பரிசும், எளிய முறையில் நெற்றிச் சின்னம் இடுதலுக்காகக் கலியுகத்தில் கிட்டுகின்றது எனில் என்னே இறைவனின் கனிந்த கருணை!

எனவே, ஆண்களோ, பெண்களோ, குழந்தைகளோ, பிள்ளைகளோ, நெற்றியில் இறைச் சின்னத்துடன் துலங்கினால்தான் எப்போதும் காப்பு சக்திகள் துணை வந்து நிற்கும். மாங்கல்யம், பூணூல் போல, எப்போதும் மனித உடலில் ஆன்மீக ரீதியான பாதுகாப்பு சக்தியாக நெற்றிச் சின்னம் துலங்குகின்றது.

ஆக்ஞாதள பூஜையே நெற்றிக்கு நீறிடல்

நெற்றிக்கு இறைச் சின்னம் இடுவதால் நெற்றியில் சூக்குமமாகப் பொலியும் மூன்றாம் கண்களை மறைத்தலாக ஆகிவிடாது., விளக்கின் தீபத்திற்கு திரி, எண்ணைய் இட்டு தீபத்தை வளர்த்து விருத்தி செய்வது போல, மனிதனுக்குள்ள மூன்றாம் நேத்திர சக்தியை, “ஆக்ஞாதள யோக மார்கமாகப்” பரிபாலித்து விருத்தி செய்ய உதவுவது உத்தமதானபுரம் மும்மூர்த்தி கணபதி மூர்த்திகள் வழிபாடாகும்.

பிற மதங்கள் பலவற்றில் நெற்றிச் சின்ன முறை இல்லையே எனச் சிலர் எண்ணலாம். அனைத்து மதங்களிலும் பல வகைகளில் இறைச் சின்னங்கள் நிறைந்துதான் உள்ளன. மேலும், இப்பூவுலகில் ஒவ்வொரு நாட்டிலும் மஹரிஷிகள், சித்தர்கள் சத்குருமார்களாக நிறைந்து உள்ளமையால், அந்தந்த நாட்டின் தற்போதை சூழ்நிலைகளுக்கு ஏற்ப நல்லோர்கள் மூலம் இவர்கள் நல்லருள் புரிந்து வருகின்றனர்.

கர்ம வினைகளால் கழன்ற தேசங்கள்!

மண்ணாசைக்கு மனிதன் அடிமையானதால், சனாதன தர்ம ஏக பூமியானது, காலப்போக்கில் பல நாடுகளாகப் பிரிந்தது, ஊசி முனை நிலம் கூடத் தர மறுக்கும் பேராசை, பொன்னாசை, பொருளாசையால் மனித சமுதாயத்தில் ஆஸ்தியை வைத்தளக்கும் சமுதாயப் பிரிவுத் தட்டுகள் விளைந்தன.

சுயநலம், தெய்வ சக்திகளைத் தனக்கே பயன்படுத்துதல், பெண்ணாசை, முறையற்ற காமத்தால் இனப் பிரிவுகள் தோன்றின. செல்வம், அதிகார ஆணவம் மற்றும் அனைவருக்கும் அருள்பயக்கும் வேத சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தியமையால் ஜாதிப் பிரிவுகள் தோன்றின.

மூவருள் முகிழ்க்கும் மும்மூர்த்தங்கள்!

எனவே, மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை ஆகிய மூன்று பேராசைகளால்தாம் இன்றைய மனித குலம் சீரழிந்து கொண்டு இருக்கின்றது. இவற்றை, வெல்ல, நல்ஒழுக்கம், தர்மம், பக்தி இவை மூன்றாலுமே இயலும். இவை மூன்றையும் ஒருங்கே தரவல்ல குருவருளைப் பெற உதவுவதும் மும்மூர்த்தி கணபதி வழிபாடாகும்.

தானத்திலே உத்தம தானமாக விளங்குவது கன்னிகா தானம் எனப்படும் புனிதமான திருமண வைபவமாகும். தாம் பெற்றெடுத்து, கஷ்டப்பட்டு, பல்லாண்டுகள் வளர்த்து, ஆளாக்கிய உயிரினும் மேலான அன்பான புதல்வியை, நன்மகனுக்கு நல்ல வாழ்க்கைத் துணையாக, ஒரே நாளில் அர்ப்பணிக்கின்ற புனிதமான திருமண வைபவத்தை, மகத்தான இல்லறத் தர்மங்களுள் ஒன்றாக, கன்னிகாதானம் என்று புனிதம் துலங்க நம் முன்னோர்கள் வைத்தனர்.

தான மாவுலகத் தலம்

மாப்பிள்ளை அழைப்பு, மந்திரங்கள் ஓதுதல், ஹோமாக்னி வழிபாடு, காசி யாத்திரை, சப்தபதிச் சடங்குகள், உற்றார், உறவினர், சுற்றம், ஏழைகளுக்கு அறுசுவை உணவுடன் அன்னதானம், மஞ்சள், புடவை, ரவிக்கை வைத்து அளித்தலாகிய வஸ்திர தானம், மாங்கல்ய தானம், வேதம் ஓதும் மறையோர்களுக்கு நல்உதவி என்றவாறாக அனைத்து வகை தான, தர்மங்களும் ஒருங்கே, நிறைந்து வருகின்ற திருமண வைபவமே உத்தமமான தானமாகிய கன்னிகாதானம் மிகச் சிறப்புடன் பண்டைய யுகங்களில் துலங்கிய தலமே உத்தமதானபுரம் ஆகும்.

கல்யாணங்கள் நிகழ்ந்து, நிகழ்ந்து மாளாத – அதாவது திருமண வைபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருந்த தலமாக – புனிதமான புரமாக, நகரமாகத் துலங்கியதாலும் மாளாபுரமும் ஆயிற்று, வேறு பல பெயர்க் காரணங்களும் ஆன்மீக ரீதியாக இதற்கு உண்டு.

தானப்பர்கள் தகையும் தலம்

தம் வாழ்வில், ஓராயிரம் வசதியற்ற, ஏழைக் குடும்பங்களில் திருமணங்களை நன்முறையில் நடத்தி வைத்து நல்உதவி புரிந்த உத்தமர்கள், ஓராயிரம் திருமண வைபவங்களைச் சாத்திரப் பூர்வமாக நன்கு நடத்தித் தந்த மாமறையோர்கள், ஓராயிரமென்ன அனைத்துச் சுப முகூர்த்த நாளிலும் ஓராயிரம் பேருக்கு அன்னமிட்ட உத்தமர்கள், ஓராயிரம் சங்கடஹர சதுர்த்தி பூஜைகளைக் கடைபிடித்தோர் – போன்ற ஓராயிரத்தம்சத் தலைமுறையினர் உறைந்து சிறந்த அற்புதத் தலமே உத்தமதானபுரம் ஆகும்.

இவ்வாறு அனைத்து வகைத் தானங்கள் செய்து மாளாத திருத்தலமாகவும், தர்ம தேவதைகள் பசுக்களாய் வந்துலாவி, தெய்வீக மயமாகப் பண்டைய யுகங்களில் பொலிந்த திருத்தலம் இதுவே ஆகும்.

சதுராவ்ருத்தித் தர்ப்பணப் பூஜை

விநாயகருக்கு அளிக்கக் கூடிய சதுராவ்ருத்தித் தர்ப்பணப் பூஜை முறை என்ற ஒன்று உண்டு. பண்டைய காலத்தில் இப்பூஜை சிறந்து விளங்கிய காணாபத்யப் பூஜைத் தலங்களுள் மாளாபுரமும் ஒன்றாகும்.

தர்ப்பணம் என்றால் மனதார பக்தியுடன் அளித்து, அர்ப்பணித்துத் “திருப்தி அளித்தல்” என்று பொருளாகும். எனவே, தர்ப்பணம் என்றால் பித்ருக்களாகிய நம் மூதாதையர்களுக்கு எள்ளும் நீரும் வார்த்தல் என்று மட்டுமே பொருள் கொள்ளாதீர்கள்.

உண்மையில் ஜாதி, குல பேதமின்றி யாவரும் ஆற்ற வேண்டிய சந்தியா வந்தனப் பூஜைகளில், எம தர்ப்பணமும், சகல தெய்வ மூர்த்திகளுக்கும் அர்க்யம் அளிக்கும் சகல தேவதா தர்ப்பண வழிபாடுகளும் உண்டு.

“ஆதித்யம் தர்ப்பயாமி, சனைச்சரம் தர்ப்பயாமி, என்பதாக நவகிரக மூர்த்திகளுக்கும், “கேசவம் தர்ப்பயாமி, மாதவம் தர்ப்பயாமி” என்பதாகப் பல்வகை தெய்வ மூர்த்திகளுக்கும், “தர்ப்பயாமி, தர்ப்பயாமி” என்று மன நெகிழ்வுடன் ஓதித் தர்ப்பண அர்க்யம் அளிக்கப்படும்.

அதாவது இரு கைகளிலும் அழகாக நீரை ஏந்தி, குதிகாலை உயர்த்தி, நிமிர்ந்து நின்று பக்திப் பெருக்குடன் பூமியில் நீரை வார்த்தலே அர்க்யப் பூஜை என்று நாம் நன்கு அறிவோம்.

மூலமும் மூலாதாரப் பீஜமும்!

இதே போன்று சதுராவ்ருத்தித் தர்ப்பண முறையிலும், விநாயக மூர்த்திக்குரிய மூல மந்திரத்தை முதலில் முழுமையாகவும், பிறகு ஒவ்வொரு அட்சரமாகவும் (எழுத்தாகவும்) உச்சரித்து, ஒவ்வொன்றுக்கும் நான்கு முறை அர்க்ய முறையில் விநாயகருக்குத் தர்ப்பணம் அளிக்கின்ற மிகவும் சக்தி வாய்ந்த– பாமரர்களும் கடைபிடிக்கக் கூடிய மிக எளிமையான பூஜை இது!

இதில் விநாயக பீஜங்களை ஒவ்வொன்றாக மூல மந்திரத்துடன் ஓதி நந்நான்கு முறை அர்க்யம் அளிப்பதே சதுராவ்ருத்தித் தர்ப்பணமாகும். 4, 44, 444, 4444 என்ற எண்ணிக்கையில் விநாயகருக்கு அளிப்பது சிறப்புடையதாகும்.

மாளாபுரத்தில் திரிமூர்த்திகளுமே விநாயகரைப் பூஜித்தமையால், இங்கு மூன்று விநாயக மூர்த்திகளுக்கும் ஆற்றும் பூஜா பலன்கள் பன்மடங்காய்ப் பல்கிப் பெருகின்றன.

இந்த சதுராவ்ருத்தித் தர்ப்பண பூஜையைத் தக்க உத்தமப் பெரியோர்களின் துணையுடன், சத்சங்க பூஜையாகப் பலரும் ஒன்று சேர்ந்து மாளாபுரத்தில் ஆற்றுவது குடும்பத்திற்கு மிகவும் நன்மைகளைத் தருவதாகும்.

தலைமுறைகளைத் தாங்குந் தலம்

இதனால் நான்கு தலைமுறைகளுக்கு முந்தையதாக இருக்கின்ற மூதாதையர்களில் பலத்த கர்ம வினைகள் காரணமாக சரீர பந்தக் கட்டிலேயே உழல்கின்றவர்கள் நன்னிலை பெறவும் உதவும்.

நாம் தார்மீகமாக நல்ஒழுக்கத்துடன் வாழ்ந்தால்தான், நம் சந்ததிகள் நன்கு தழைக்கும். இதே போல, மூதாதையர்கள் வானியல் பேருலகங்களில் நன்னிலையில் துலங்கினால்தான் நடப்புத் தலைமுறையினர் நலம் பெறுவர். முன்னோர்கள் வேறு லோகங்களிலோ, பூமியிலோ ஏதேனும் பிறப்பெடுத்திருந்தால் அப்பிறப்புத் தளைகளில் பிணைந்திருக்கும் கர்மக் களைக் கட்டுக்கள் களையப் பெற்று, நன்கு முன்னேறி நற்கதி பெறவும் தர்ப்பண சக்திகள் அவர்களைச் சென்றடையும்.

எனவே, தலைமுறை தலைமுறையாக வந்து குவிகின்ற வினைத் தளைகள், பாவச் சுமைகள், அதர்மக் காரிய அழுத்தங்கள், யாக்கைக் கறைகள் போன்ற பலவற்றைத் தீர்ப்பதுடன், மூதாதையர்களின் பூஜா பலன்களின் ஆத்மச் சத்துக்களையும் கிரகித்து, நாம் நன்மைகளைப் பெற உதவுவதே மாளாபுரம் மும்மூர்த்தி கணபதி வழிபாடு ஆகும்.

பலாபலன்கள் பழுக்கும் தலம்

பெரும் கடன் சுமைகள், சந்ததிகள் பாதிக்கப்படுதல், கடுமையான நோய், மரண பயம், லட்சக் கணக்கில் வியாபார நஷ்டங்கள், கணவன், மனைவி, பிள்ளைகள், தீய வழக்கங்களுக்கு ஆட்படுதல், பிறரால் ஏமாற்றப்படுதல் போன்ற கலியுகக் கடுந் துன்பங்களுக்குக் காரணங்களில் சிலவும், பித்ருக்களை முறையாக வழிபடாமையும், தலைமுறை தலைமுறையாக வந்தமையும் தலைமுறைக் குற்றங்களும், வம்சாவளிப் பாவச் சுமைகளும் ஆகும்.

மேலும், நம் முன்னோர்களின் ஒரே ஒருவர் கூடத் தீய வழியில் ஆட்பட்டுப் பாவச் சுமைகளைச் சேர்த்து விட்டால், நன்கு வாழ்ந்து செழித்த மூதாதையர்களின் புண்ணிய காரியங்களின் நல்வரங்களும், பலாபலன்களும் நம்மை அடையாமல் அடைபட்டுப் போகும். இந்தே ஒரே ஒரு அடைப்பை நீக்கி விட்டால் குடும்பத்திற்கு வளம் கொழிக்க நிறைய பாக்கியங்கள் நன்முறையில் ஏற்படும். இதற்கும் உதவுவதும் மாளாபுரம் மும்மூர்த்தி விநாயக வழிபாடு ஆகும்.

இவ்வளவு பெருமையும், மகத்துவமும் வாய்ந்த மும்மூர்த்தி விநாயகருக்கு, வளர்பிறை, தேய்பிறை – இரண்டு சதுர்த்தித் திதிகளையுமே விசேஷமான பண்டிகைகளாகக் கொண்டாடுவது, சமுதாயத்திற்கு ஏற்படும் பேரிழப்புகளிலிருந்தும் மக்களைக் காப்பாற்றும் சமுதாயப் பூஜைகளும் ஆகும்.

மஞ்சள் வண்ணப் பட்டு, நீலநிறப் பட்டு, பச்சை நிறப் பட்டு ஆகிய மூன்று வண்ணப் பட்டாடைகளையும் மும்மூர்த்தி விநாயகர்களுக்கு இதே வகையில் வரிசையாகச் சார்த்தி, விநாயக மூர்த்திகளின் சிரசுக்கு மும்மூர்த்திகளும் வழிபட்டமையால் இயற்கையாக லிங்கமும், நாக வடிவும் அமைந்திருக்கும் நாகலிங்கப் புஷ்ப நறுமலர்க் கிரீடம் சார்த்தி வழிபடுதல் நற்பலன்களை வர்ஷிப்பதாகும்.

ஏனிந்தக் கோலமோ?

ஆனால் கலியுகக் குடும்பப் பெண்களின் பெரும்பாலான துன்பங்களுக்குக் காரணமே, நாம் பன்முறை எடுத்துரைத்து வருவது போல,

நெற்றியில் குங்குமம் இடாது பிளாஸ்டிக் ஒட்டுப் பொட்டு இடுவது (இது சாபமாவதோடு கணவனுக்கும், குடும்பத்திற்கும் துயரங்களைத் தரும்!)

முன் நெற்றித் தலைமுடி, புருவ முடிகளைக் கத்தரித்து அழகுபடுத்துவதாக எண்ணிக் கொள்தல்!

புனிதத்தின் சின்னமான  மஞ்சளைப் பூசாது இருத்தல் போன்றவை ஆகும். பரத நாட்டியம், கர்நாடக சங்கீதம், ஆசிரியத் துறை போன்ற புனிதமான துறைகளில் இருப்போரும் இவ்வாறு தவறான வழக்கங்களுக்கு ஆளாவது மிகவும் வேதனைக்குரியதாகும்.

ஸ்ரீஅகத்தீசன் பெருங்குடி

வம்சத்தைக் காக்கும் வலம்புரிச் சங்கு தானம்

தந்தை வகைப் பித்ருக்கள் மூலமாக ஆசி பெற்றுத் தொழில் விருத்தியடைய, இங்கு வலம்புரி சங்கு அபிஷேகப் பலாபலன்கள் நன்கு உதவும். வலம்புரிச் சங்கிற்கு வெள்ளிப் பூண் இட்டு இத்தலத்திலும் ஏனைய விநாயகர் தலங்களிலும் சதுர்த்தி, சதுர்த்தசித் தினங்களில் அபிஷேகச் சங்காக, சங்கு மாலையாகத் தானமாக அளிப்பதால் மிகவும் போராட்டத்துடன் இருக்கின்ற பிரச்னைகளில், சாந்தமான முறையில் தீர்ப்புகள், பிற தீர்வுகள் கிட்டிட உதவும்.

வளர்பிறைத் திங்கள், வளர்பிறை ரோகிணி, பூஜை நாட்களில் வெண்பட்டு சார்த்துதல், வெள்ளை நிற உணவு படைத்துத் தானமளித்தல் விசேஷமானது. இதனால் எத்தகைய துன்பச் சூழ்நிலைகளிலும் மனத் தெளிவு ஏற்பட உதவும்.

கர்மவினைகள்

துன்பங்களைக் களைதலும் கர்ம வினைகளும் !

கிருத யுகம், திரேதாயுகம், துவாபர யுகம், ஆகிய மூன்றிலும் வாழ்ந்தவர்கள் பலரும் இன்றும் கலியுகத்தில் வாழ்கின்றனர். நீங்கள் கூட இதில் ஒருவராக இருக்கக் கூடும். பிறப்பு, இறப்பு ரகசியங்கள் மனிதனுடைய பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட தெய்வீக ரகசியங்களாகும். இதுதான் பிறப்பு, இறப்பிற்கு காரணம் என்று அறுதியிட்டுக் கூற முடியாதபடி, ஒவ்வொரு பிறப்பிற்கும், தோற்றத்திற்கும், மறைவிற்கும் கோடானு கோடிக் காரணங்கள் உண்டு.

ஒரு சிறு கொசுக் கடிக்குக் கூட நிறையக் காரணங்கள் உண்டு. இவற்றை விளக்கப் புகுந்தால் மனித மனம் ஏற்காது. மனித அறிவாலும் புரிந்து கொள்ளவும் முடியாது. காரணம், மது, கேளிக்கைகள், முறையற்ற காமம், புகை பிடித்தல் போன்ற தீய வழக்கங்களுக்கு கலியுகம் அடிமைப்பட்டு விட்டதுதான். மேலும், சுகபோக வாழ்வில் பலத்த நாட்டம், உழைப்பின்மை, இறைமைக்காகப் பாடுபடும் மனோவைராக்யம் இல்லாமை, ஆழ்ந்த இறை நம்பிக்கையின்மை, விளக்கங்களை அளிக்கின்ற உத்தமர்களை நம்பாமை போன்ற பலவும் சேர்ந்து, ஆறாம் பகுத்தறிவு நிலையே, கலியுகத்தில் பலருக்கும் சரியாக வேலை செய்யாது மூளை மழுங்கியதாக மறைந்துள்ளது.

காரணமே காரணமாம்!

ஒரு கொசு கடித்தலிலும் கூட, குறித்த மனிதன், கொசு, கடிபட்ட நேரம், இடம், கொசு கடித்த பின் ஏற்பட்ட உணர்வுகள், கொசுக்கடியில் உடலில் ஏற்படும் அசைவுகள், மாற்றங்கள் மன எண்ண அலைகளில் ஏற்படும் மாறுதல்கள் என்று ஆன்மீகக் காரணங்களின் ரீதியுடன் முனைந்தால், ஆயிரமாயிரம் காரணங்கள் புலப்படலாகும். எத்தகைய மன ஓட்டங்களையும் ஒரு சிறு கொசுக் கடிவலியும், எரிச்சலும், திசை திருப்புகின்றது எனில், என்னே அந்த கொசுக்கடி சம்பவத்தின் அழுத்தமான வினை ஆற்றல் எனச் சிந்தித்திடுக! இவற்றில் பலவற்றையும் எல்லாம் உலகில் மிகவும் இயல்பாக நிகழ்வதுதானே என்று எண்ணுவதால்தான், இயந்திர கதியில் சிந்தனையின்றி வாழ்ந்து தெய்வீகத்தில் முன்னேற முடியாமல் போகிறது! துன்பங்களும், நோய்களும் வந்து மொய்க்கும் போதோ, முதுமையிலோ தெய்வீகத்திற்காக ஏங்கி என்ன பயன்?

ஆனால், உலகில் நிகழும் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு என்ற உண்மையினை உரைத்தால், விஞ்ஞானத்திற்கு அடிமையான கலியுக மனதால் முழுமையாக ஏற்க இயலாது என்பதால்தான், எல்லாமே பூர்வ ஜன்ம வினைப் பூர்வமாக நிகழ்வதாகவே, ஒட்டு மொத்தமாகப் பொதுவாகக் குறிப்பிடுகின்றோம். ஆனால் என்றுதான் சத்தியமான, சாசுவதமான உண்மை நிலையை மனமறிந்து ஏற்பது?

காரணமறிந்து தீர்வு காண்!

வந்த வினைக்கு, நோய்க்கு, துன்பத்திற்கான காரணமறிந்தால்தான் தீர்வுகள் முழுமையாகப் பலனளிக்கும். இல்லையெனில் அல்லோபதி மருந்துகள் போல, அவ்வப்போது ஏதோ சிறிது குணம் காட்டிப் பின்னர் பலத்த பக்க விளைகளுடன் திரும்பி வந்து விடும்! ஆனால் சாதாரணமானவர்கள் கூட ஒவ்வொன்றுக்குமான காரணங்களை எப்படித்தான் அறிவது? சற்குரு மூலமாக சரியான பதிலை அறிந்தாலும், அனைவருக்குமா சத்குரு புலப்படுகிறார் என்ற அடுத்த கேள்வி எழும்!

ஒவ்வொரு சம்பவத்துக்கான காரணங்களை, அதில் தான் சம்பந்தப்பட்ட கர்ம வினையளவை அறியவே, நம்முடைய இறைவழிபாட்டு மந்திரங்களிலும், தமிழ் மற்றும் தேவமொழி மறை மாமந்திரங்களிலும் தக்க பீஜ காரண சக்திகள் பதிக்கப் பெற்று உரைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஓதும் போது, ஒவ்வொருவருக்கும் உள்ள ஒன்பது சரீரங்களில் அவை ஓதப் பெறும். இவற்றில் எந்த சரீரத்துக்குக் காரண அம்சங்கள் நன்கு புலப்படுமோ, அதற்கு உள்சரீர ரீதியாக, அந்தந்தக் காரணங்கள் உரைக்கப்படுவதால், கர்ம வினைக் கழிவுகள் நிகழத் தொடங்கி, துன்பமும் படிப் படியாகத் தீர்கின்றது. அதாவது, துன்பத்திற்குக் காரணமான கர்ம வினைகள் கழிந்தால்தான் துன்பமும், நோயும் முழுமையாகத் தீரும் என்பதை நன்கு உணர வேண்டும். கடன் சுமைகள், நெடிய நோய், பகைமை போன்றவை தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தால் அதற்கான கர்ம வினைகள் இன்னமும் கழிவுபடவில்லை எனப் பொருளாகும்.

மாமந்திரங்களே நம்மைக் காக்கும் கலியுக சக்திகளாம்

இறைமா மந்திரங்களில் பதிந்துள்ள பீஜாட்சர சக்திகள் அவரவருடைய உடல், மன நிலைகளுக்கு ஏற்பப் பலாபலன்களை அளிக்க வல்ல சாசுவதமான பரிபாலன சக்திகளைக் கொண்டுள்ளன. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகங்களில் அந்தந்த குடும்பப் பாரம்பரியத்திற்கான சற்குருவை அந்தந்த குடும்பத்தினர் பரிபூரணமாக நம்பியமையாலும், மக்களிடையே எளிமையாக சமுதாயத்தில் உலா வந்த மாமுனிகளை, மகரிஷிகளை, யோகியரை, ஞானியரை மக்கள் மதித்தமையாலும் அந்தந்த சற்குருவே அனைத்திற்குமான காரணங்களை அவரவர் மனப் பக்குவப்படி அளித்து வாழ்நாள் முழுதும் வழிகாட்டி வந்தனர்.

ஆனால் கலியுகத்திலோ உத்தமர்களை மதிக்கும் மாண்பும், பண்பும் கரைந்து, மறைந்து வருகின்றது. இது சமுதாயத்தையே பாதிக்கும். இதனால் கலியுக சமுதாய வாழ்வு பலத்த சோதனைகளுக்கு ஆகி வருகின்றது.

காப்பு மந்திரமே காயத்ரீ மந்திரமாம்

இதற்காகத்தான் கலியுகத்தில் மிகவும் விசேஷமானதாக ஸ்ரீகாயத்ரீ மந்திர பூஜை, ஸ்ரீகாயத்ரீ மந்திர தியானம், ஜபம் போன்றவை மிகவும் விசேஷமானதாக ஜாதி, மத, குல பேதமின்றி அனைத்து நாட்டு மக்களுக்கும் உரித்தானதாக, தினசரி வழிபாடாக விளங்குகின்றது.  ஆனால் இந்த இரண்டு வரி காயத்ரீ மந்திரத்தையே ஒரு நாளில் 100 முறை கூட ஓதாது கலியுக மனிதன் அசமந்தமாக இருந்தால் என் செய்வது?

இதனால்தான் சித்தர்களும், மகரிஷிகளும், ஞானியரும், யோகியரும் உத்தம சற்குருமார்களும் ஓதிப் பூஜித்த ஸ்ரீகாயத்ரீ சித்சக்தியே, லிங்க வடிவில் புனைந்து வந்து, பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீகாயத்ரீ லிங்கமாக, நம் வழிபாட்டிற்காகக் கலியுகத்தில், ஒளிர் விட்டுப் பிரகாசிப்பது பெரும் பாக்கியமே! இதனை உத்தம சத்குரு அளிக்கும் அறவழியில் முறையாக வழிபட்டு வந்தால் ஸ்ரீகாயத்ரீ மந்திரமோதிய பலாபலன்களை யாவரும் அடைந்திடலாம்.

ஸ்ரீகாயத்ரீ லிங்கம்

பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க மகத்துவம் – அட்டைப்பட விளக்கம்!

ஓம் பூர் புவஸ்வஹ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி
தியோ யோந: ப்ரசோதயாத் – ஸ்ரீகாயத்ரீ மாமந்திரம்

ஈரோடு அருகே பவானியில் ஸ்ரீபவானி அம்பாள் சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது.

ஸ்ரீகாயத்ரி லிங்கம் பவானி

பகைமையிலிருந்து குடும்பத்தைக் காக்கும் பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கம், பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, நல்ஒழுக்கத்தைத் தரவல்ல பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கம்!

பராசரர் பெற்ற அமிர்த காயத்ரீ லிங்கத் தரிசனம்

பராசர முனிவர் ஒரு, யுகத்தில் தாம் இருந்த இடத்தை விட்டுச் சற்றும் அகலாது, 33 கோடி முறை பக்திப் பூர்வமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்து, அமிர்தத்தால் ஆன ஸ்ரீகாயத்ரீ லிங்கத் தரிசனம் பெற்ற இறையனுபூதியும் நிகழ்ந்த திருத்தலம்.

மஹரிஷிகள் முக்தி நிலைகளை அடைந்தவர்கள் எனினும், பல பூமிகளில் உலா வந்து ஜீவன்கள் கஷ்டப்படுகின்ற இடங்களில், மேற்கண்ட வகையில் சில அரிய பூஜைகளை ஆற்றி, இதன் பலாபலன்களை தமக்கெனக் கொள்ளாது, பிற ஜீவ நலன்களுக்காக அந்தந்தத் தலங்களில் அர்ப்பணித்துச் செல்கின்றனர்.

பராசர மஹரிஷி பெற்ற அதே அமிர்த சக்திகளுடன், பவானி திருத்தலத்தில் இன்றும் ஸ்ரீகாயத்ரீ லிங்கம் நமக்கென அருள்கின்றது.

ஸ்ரீபவானி தேவி அருளிய அமுதா நதி அமிர்த சக்திகள்

மற்றும் பல புராண அனுபூதிகளின்படி, பாற்கடல் அமுதப் பிரசாதம் கூடிய அருள்நிறை அமுதக்குடம் இங்கு நீரில் அழுந்தி, கலந்து, அம்பிகை ஸ்ரீபவானியின் அருளால் அனைவரும் பெறும்படி அமுத நதியில் நிரவப் பெற்றது. இவ்வகையான அமிர்த நீரோட்டப் பிரவாகமானது, அமுத நதியாக காவேரி, பவானி நதிகளுடன் கலக்கும் முக்கூடல் பிரயாகையாக, அன்றும், இன்றும், என்றுமாய்ச் சூக்குமமாகத் துலங்கும் பவானி நதிக்கரையில்தான் ஸ்ரீகாயத்ரீ லிங்கம் அமைந்துள்ளது.

அறிவீரோ அமிர்த காயத்ரீ லிங்க மந்திர சக்திகளை!

அமர்நாத்தில் பனிக்கட்டியாய் உறைந்து நீர்மய லிங்கமாக, பனிக்கட்டி லிங்கமாக ஆகித் தரிசனம் தந்து அருள்வது போல, இங்கு அமிர்த காயத்ரீ லிங்கமாய், அமிர்த ஜோதிப் பிரகாசத்துடன் சுயம்புவாய்த் தோன்றி, பராசர மகரிஷிக்குக் காட்சி தந்தருளியது. பராசர மஹரிஷி தான் பெற்ற சூக்குமமான அமிர்த காயத்ரீ லிங்க சக்திகளை, இங்கு பவானியில் மூன்று நதிச் சங்கம வளாகத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தை வழிபடுவோர் அடையும் வண்ணம் பராசர மஹரிஷியே சங்கல்பித்தும் பூஜை பலன்களை, ஸ்ரீகாயத்ரீ அர்க்யம், ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதுதல், ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜபம், ஸ்ரீகாயத்ரீ ஹோமம், ஸ்ரீகாயத்ரீ மந்திரத் தியானப் பலாபலன்களாக அமைத்துத் தந்துள்ளார்.

ஸ்ரீபவானி அம்மன் பவானி

இவற்றை இங்கு நிகழ்த்துவதானது பல தலைமுறைகளாக, பன்னெடுங் காலமாக ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை முறையாக ஓதாத குறைகளை முறையாக நிவர்த்தி செய்ய வல்ல வழிமுறைகளை அளிக்கவல்லதாம்.

பல்வகைகளிலும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தி நிலவும் அருட்தலம்

இவ்வாறு அமிர்த சக்திகளை வேத, மந்த்ர, யந்த்ர, தந்த்ர, ஜப, தியான பலாபன்களை, அமிர்த வர்ஷிணியாக அருள்வதே பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கமாகும். மிகவும் அபூர்வமான அமுத நதி நீரோட்டத் தலம் என்பதாலும், பாற்கடலமுதம் புழங்கி நிரவிய அருட் தலமானதாலும், பராசரருக்கு அமிர்த காயத்ரீ லிங்கத் தரிசனம் கிட்டிய தலமாதலாலும், இங்கு அனைவரும், குறிப்பாக சங்கீத வித்வான்கள், அனைவருமே அமிர்த யோக நேரத்தில் அமிர்தவர்ஷிணி ராகத்தில் இறைப் பாடல்களை இங்கு இசைத்து வருதல் நல்ல குரல் வளத்தைத் தருவதாகும். அனைவரும் அமிர்த வர்ஷிணி ராகத்தில் இறைப் பாடல்களை இங்கு இசைத்து வருதல் நல்ல குரல் வளத்தைத் தருவதாகும். அனைவரும் அமிர்த வர்ஷிணி ராகப் பாடல்களைப் பாடிட, ஓதிட, இசைக் கருவிகளில் இசைத்திட குரல் வளக் காப்பு கிட்டுவதுடன் அமிர்தமயமான இனிமையும் இசையில் மிளிரும்.

இங்கு பவானியில் அனைவரும் ஜாதி, மத பேதமின்றி ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைப் பக்திப் பூர்வமாகப் பல ஆண்டுகள் ஓதிட, ஓதிட, தொண்டைக்குள் சகஸ்ராரத்தில் இருந்து, அமிர்த பிந்துத் துளிகள் ஊறிச் சுரந்து, தீர்க தரிசனத்திற்கும் பக்திப் பூர்வமான ஆயுள் பாவனைத்திற்கும் நன்கு அருளும். இத்தகைய அற்புதமான அமிர்த காயத்ரீ மந்திர யோக சக்திகளை சமைத்துத் தருகின்ற லிங்கமே பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கமாகும்.

வேதப் பிழைகளுக்கு விமலமான நிவர்த்தித் தலம்

ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் அரும்பெரும் மஹாபராசக்தி சக்திகளை உணர்ந்தோர், இதனை உலக ஜீவன்களின் நலன்களுக்காகப் பல யுகங்களில் அர்ப்பணித்து வந்தாலும், எந்த வேத மந்திரங்களால் இறைவனை அறிய வேண்டுமோ, அதனை மாயா வசத்தால், மாயையால் அறியாது, ஈஸ்வர மூர்த்தியின் மேலேயே சிலவிதமான வேத மந்திரங்களைக் காட்டு விலங்குகளாக்கிப் பிரயோகித்தமையால் கடும் சாபம் ஏற்பட்டது.

பலகோடி யுகங்களுக்கு முன் நிகழ்ந்த இத்தகைய பெருங் குற்றங்கள் தீர ஓரளவேனும் பரிகார வழிமுறைகளைப் பெற இங்கு, பக்த கோடிகளும் தேவமொழி, தமிழ் மாமறை விற்பன்னர்களும், மறையோரும், ஸ்ரீஅமிர்த காயத்ரீ ஹோம பூஜைகளை, அன்னதானம் உட்பட 32 விதமான தர்மங்களைத் தக்க சற்குருவின் அருளாணையுடன் ஆற்றி வரவேண்டும்.

பிப்ரவரி 2005 பௌர்ணமி நாள் : 23.2.2005 புதன்கிழமை காலை 8.38 மணி முதல் 24.2.2005 வியாழக்கிழமை காலை 10.24 மணிவரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. கிரிவல நாள்: 23.2.2005 புதன் கிழமை இரவு.

விஷ்ணுபதி நாள் : 13.2.2005 ஞாயிறு 12.2.2005 சனிக்கிழமை (தை மாதம் 30ந் தேதி) மாலை 6.43 மணிக்கு சூரிய மூர்த்தி கும்ப ராசியில் பிரவேசிக்க, மாசி மாதம் தொடங்குகின்றது. நடப்பு விஷ்ணுபதிப் புண்யகால பூஜையை, 12.2.2005 சனிக்கிழமை நள்ளிரவு 1.30 மணி முதல் 13.2.2005 மாசி மாதம் முதல் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.30 மணி வரை நடத்துதல் சிறப்புடையது.

7.2.2005 திங்கட்கிழமை காலை 11.21 மணி முதல் 8.2.2005 செவ்வாய்க் கிழமை காலை 7.38மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி தை மாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாதசிவராத்திரி கிரிவல நாள்: 7.2.2005 திங்கட்கிழமை இரவு

அமுத தாரைகள்

அனைவர்க்கும் முக்தி தர வல்ல ஆச்சாள்புரம்

சிதம்பரம் அருகில் உள்ள ஆச்சாள்புரம் எனும் உத்தமச் சிவத்தலமானது, சிறு, சிறு ஜீவன்களுக்கும், யாவர்க்கும் அந்தந்த பூலோக சரீரத்திலேயே முக்தியளிக்கும் பவித்திரத் தலமாக என்றென்றும் துலங்குகின்றது. பன்றிக்கும் முக்தியளித்த பரபிரம்மச் சிவத்தலம் பூவுலகில், மனித உடலிலேயே முக்தியைப் பெறவல்ல உத்தமத் தலங்களுள் ஆச்சாள்புரமும் ஒன்றாகும்.

ஆச்சாள்புரம்

பூத தன வசி வண்டு, பெருவால வண்டு, கர்ணக் காப்பு வண்டு, அஜபாமாக வண்டு போன்றவை யோக சக்திகள் நிறைந்த மனிதனுக்கு குகைகளில், அடர்ந்த காடுகளில் தவத்தை நாடிச் செல்வோர்க்கு நல்வழி காட்டுபவையாகும். சமாதி நிலை கொள்வதில் வண்டுகளுக்கு நிகரனவை ஆமைகள் மட்டுமே. ஓர் ஆமைக்காவது நற்சமாதி நிலையை அடையப் பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் சில அபூர்வமான “பூராதி” வகை வண்டுகள் ஒரு சில நிமிடங்களிலேயே சமாதி நிலையை அடைய வல்லவையாம். இவை Bermuda Triangle பகுதியிலும் உறைகின்றன.

மனித நெற்றியில் “ஆக்ஞாசாளரப் பாதம்”

இறை மூர்த்திகளுக்கு மட்டுமல்லாது, மனிதர்களுக்கும் மூன்றாம் நேத்திரம் உண்டு என்பது பலரும் அறியாத தெய்வீக ரகசியப் பொருளாம். இதுவும் அனைத்து மனிதர்களுடைய நெற்றியிலும் “ஆக்ஞாசாளரப் பாதமாகத்” துலங்கின்றது.

மிகவும் சக்தி வாய்ந்த இந்த மூன்றாம் நேத்திரத்தை, மிகவும் அரிதான அற்புதத் தவத்தில் விளையும் யோகஞான மார்கத்தில் தான் மானுடர்கள் தரிசிக்க இயலும். இந்த மூன்றாம் நேத்திரத்திற்கு உரிய மிகவும் எளிமையான வழிபாடாகத்தான், நெற்றிக்குத் திருமண், விபூதி, சந்தனம், மஞ்சள், குங்குமம், சிந்தூரம், சாந்துப் பொட்டு இடுதலும் உத்தமமான “நேத்ரதள பாவன பூஜையாக” அமைகின்றது.

புது வீடு, சொந்த வீடு என்று மட்டுமல்லாது குத்தகை நிலம், வாடகை வீடு, வாடகைக் கடையைக் கொண்டவர்களும், எட்டு வாஸ்து நாட்களிலும், ஸ்ரீவாஸ்து பூஜைகளைக் கடைபிடித்து வந்தால்தான், இல்லத்தில், அலுவலகத்தில், தொழிற்சாலைகளில் உள்ள பூமிக் குற்றங்கள் தணிந்து நன்மைகள் ஏற்படும்.

முன்னோர்களுக்கும் அருளவல்ல முக்கூடல் பூஜைகள்!

முன்னோர்கள் அனைவருமே உத்தம தெய்வீக நிலைகள் கூடிய முத்திரை நீத்தர்களாக, பித்ருக்களாக ஆவதில்லை. பலத்த கர்ம வினைகளில் தத்தளிப்போர், கர்ம வினைகள் பலவும் கரைந்து வருபவர்கள், கர்மங்களைப் பெருமளவில் கழித்து நல்ல ஆன்ம நிலையைப் பெற வல்லவர்கள், கர்மவினை என்றால் என்னவென்றே அறியாத பாமரர்கள், ஓரறிவு முதல் ஐந்தறிவுடன் இருப்பவர்கள், ஆறறிவுடன் மனிதனாகப் பிறந்தும் பாவ வினைகளின் வலுத்த தீய சக்திகளால் ஓரறிவு, ஈரறிவு போன்று குறைந்த அறிவு நிலைகளுடன் வாழ்வோர் என அனைத்து வகை ஜீவன்களுக்கும் உரிய பித்ருக்களின் சங்கமமாகவும் தை அமாவாசை பிரகாசிக்கின்றது.

ஞாயிறு, அஸ்வினி நட்சத்திர நாட்களில் வலம்புரிச் சங்கால் உத்தமதானபுரம் மும்மூர்த்தி விநாயகருக்குப் பசும்பால் இதிலும் காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்து, புடலங்காய், பீர்க்கங்காய், முருங்கைக்காய், போன்ற நீள்வகைக் காய்கறி வகைகளை தானமாக அளித்தலால், குடும்பத்தில் கணவன் உறவு முறை வகைகளினால் ஏற்படும் பகைமை, ஆண்கள் தலையிடுதலால் ஏற்படும் பிரச்னைகள், மாமனார், மைத்துனர் வகைத் துன்பங்கள் தீர வழி பிறக்கும்.

திங்கள் மற்றும் ரோகிணி நாட்களில் வலம்புரிச் சங்கால் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுதலால் பணப் பிரச்னை, கௌரவப் பிரச்னை, கோர்ட் பிரச்னைகளால் குடும்ப கௌரவம் பங்கமுற்று இருப்போர்களுடைய மனம் தெளிந்து, உறவில் சுமுகம் ஏற்பட உதவும்.

அருணாசல தரிசனத்தின் தெய்வீக அனுகிரக விளைவாகத் துலங்குவது குறிப்பிட்ட சில தரிசனங்கள் எப்போதும் சுபமங்கள சக்திகளைச் சுமந்து கொண்டிருப்பதாகும். இத்தகைய தரிசனப் பகுதிகளில் மங்கள மகரிஷி, சுப மங்களர், மாங்கல்ய மகரிஷி, சுபகீர்த்தி மகரிஷி போன்றோர் பல்லாண்டுகளாய் தவம் புரிந்து தம் தவப்பலன்களை இத்தகைய அரிய சுப மங்கள தரிசனங்களிலும் பூஜைக்குரிய சங்குகளிலும் பதித்து வைத்துள்ளனர். உளப்பூர்வமாக அருணாசலத்தில் அந்தந்த தரிசனத்தைக் காண்கையில் இதன் பலாபலன்கள் தாமாகவே வர்ஷிக்கலாகின்றன.

மங்களவாரம் எனப்படும் செவ்வாய்க் கிழமையன்று, செவ்வாய் ஹோரை நேரத்தில், ஸ்ரீலட்சண விநாயகரைத் தரிசித்து, மலைப் பகுதியில் சுபமங்கள தரிசனத்தைக் கண்டு, ஏழைச் சுமங்கலிகளுக்குத் தேவையான மாங்கல்யச் சரடுகள், மெட்டிகள், நல்ல குங்குமம் போன்ற சுபமங்களப் பொருட்களைக் குடும்பத்துப் பெண்கள் மூலமாகத் தானம் செய்து வந்தால் சுப நேரம் பாராது செய்த காரியங்களில் இதுவரையில் விளைந்துள்ள தீமைகளும், இப்போதுள்ள காரியத் தடங்கல்களும் நிவர்த்தியாக உதவும்.

ஸ்ரீவெண்ணீற்று உமையம்மை ஆச்சாள்புரம்

ஸ்ரீவேதஆஞ்சநேயர் ஆச்சாள்புரம்

ஓருலகும் ஒரு நாடே! அது சிவனாரின் தென்னாடே!

“தென்னாடுடைய சிவனே போற்றி!” என்பது பண்டைய பாரதத்தைக் குறித்து, இதில் தமிழ் நாட்டில் அரிதிப் பெரும்பான்மையாக நிறையும் சுயம்புச் சிவலிங்க மூர்த்திகள் உறைவதைக் குறிப்பதாகும். மேலும் அனைத்துலக மக்களும் ஆதிகால பாரத சனாதன தர்ம நாட்டுப் பிரஜைகளே என்ற இறைப் பேருண்மையை உணர்ந்தால், பல அரிய தெய்வீக மூல விளக்கங்கள் புலப்பட்டு மனம் நன்கு சாந்தம் பெறும். இவ்வகை மனசாந்தியே சாசுவதமாக உறைந்து, பிரகாசித்து, பன்னெடுங்காலமாக உலக நாடுகளையும், மனித சமுதாயத்தையும் தொற்றி வரும் பிரிவினைகள், பயங்கரவாதம், எல்லைப் பிரச்னைகள், ஜாதி, மதப் பிரச்னைகள் பகைமை போன்ற பல பிரச்னைகளையும் தீர்த்தும் தருவதாகும்.

புனிதமான நம் பாரத நாடே, பூவுலகின் தெய்வீக மையமாக, ஆதிகாலத்தில் பொலிந்து, ஜாதி, மத, குல பேதமின்றி, பண்டைய யுகங்களில் நாடு பேதமின்றி ஒரே சாம்ராஜ்யப் பூமித் தலமாகப் பொலிந்தமையால், அனைத்து நாட்டு மக்களும் சனாதன பூமியைச் சார்ந்தவர்களே!

மூன்றின் வகையாய் முத்தாரப் படைப்புகள்

மூன்று கணேச மூர்த்திகள் துலங்குகின்ற உத்தமதானபுரம் திருச்சன்னதியில், மூன்று வகை இனிப்புகள், மூன்று வகை அன்ன வகைகள், மூன்று வகையிலான, பொறியல் போன்ற வெஞ்சனத்துடன் காய்கறிப் பண்டங்களை, வாழை இலை, மந்தார இலை, தாமரை இலைகளில் படைத்து, அன்னதானம் செய்தலால் பெண்களுடைய வெளியில் சொல்ல முடியாத வகையிலான உள்ளக் குமுறல்களுக்குத் தீர்வுகள் வந்தமையும்.

அமிர்த வகைப் பூஜைகள் பலவும் நிகழ்ந்த தலமாதலின் பவானியில் அமிர்த லிங்கம் எனும் மற்றொரு சக்தி வாய்ந்த லிங்கமும், சிரச்சுழிப் பாண வகையுடன், பக்த கோடிகள் மடியில் வைத்து வலம் வருவதாகவும், பவானி சிவாலயத்தில் விசேஷத் தன்மையுடன் அமைந்துள்ளது. கர்பப்பை கோளாறுகள் மற்றும் பல வருடங்களாகத் தர்ப்பணங்கள் அளிக்காமையால் ஏற்படும் பித்ரு சாபங்கள் காரணமாக, பிள்ளைப் பேறின்றி, ஆண், பெண் சந்ததியின்றி வாடும் குடும்பத்தினர் இங்கு அமிர்தலிங்கத்தை வழிபடுவது விசேஷமானதாகும்.

தொடரும் ஆனந்தம்...

தர்ப்பணம் என்றால் அவரவர் வசதி, நம்பிக்கையைப் பொறுத்து நமது முன்னோர்களை வழிபட்டு அவர்களை மனம் குளிரச் செய்தல் என்பது பொருளாகும். இந்த வருடம் அமிர்த சக்திகள் திரளும் வாய்ப்பு அதிகமாக உள்ளதால் சித்தர்கள் அமிர்த பிந்து தர்ப்பணம் என்ற ஒரு சக்தி வாய்ந்த வழிபாட்டை மக்களுக்கு அளிக்கிறார்கள். தற்போது செல்போன்களின் பயன்பாடு பெருகி வருவதால் பெரியோர்கள் மட்டும் அல்லாது சிறுவர்களும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். டெலிபதி என்று தொலைவில் நடக்கக் கூடிய நிகழ்ச்சிகளையும், எதிர்காலத்தில் தோன்றப் போகும் பிரச்னைகளையும் முன்கூட்டியே அறியும் வல்லமை உள்ள பெண் குலமும் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகிறது. சதுர் மண்டல நரம்பு, விகிர்ப்பத் தரண நரம்பு, சூர்ய மண்டல நரம்பு, சுகபந்து மண்டல நரம்பு என்ற நான்கு முக்கிய நரம்பு மண்டலங்கள் செல் போன்கள் ஆதிக்கத்தாலும், செல் போன்களை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த செல்போன் கம்பங்களிலிருந்து வெளியாகும் கதிர்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

அமிர்தானந்தா அன்னை
அருளும் அமிர்தவர்ஷினி சக்திகள் !

இதற்கு ஓரளவு நிவாரணம் அளிக்கக் கூடியதே நம் சற்குருவால் அளிக்கப்படும் அமிர்த பிந்து வழிபாடாகும். ஏற்கனவே நம் சற்குரு அருளிய பிந்து தர்ப்பணம் வழிபாடுதான் இது. இதன்படி காலையில் வெறும் வயிற்றில் தேனில் ஊறிய மூன்று இஞ்சித் துண்டுகளை மெதுவாக மென்று விழுங்கி நம் மூதாதையர்களை நினைவு கூர்தலாகும். அமிர்த சக்திகள் திரளும் வருடமாகவும் இது இருப்பதால் அமிர்தானந்தா அன்னை அருளிய அமிர்தவர்ஷினி ராகத்தில் அமைந்த முத்தான மூன்று கீதங்களை இங்கு அளித்துள்ளோம். காலையில் தேனில் ஊறிய இஞ்சித் துண்டுகளை மெதுவாக தின்று விழுங்கிய பின் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து இந்த அமிர்த கீதங்களை கேட்டு இரசிப்பதால் நமது மூதாதையர்களின் ஆசிகள் பெருகி, அன்னை அளிக்கும் அமிர்த வர்ஷினி சக்திகள் நம் உடலிலும் உள்ளத்திலும் நிறைந்து பல தீர்க்க முடியாத வியாதிகள் தீர்வதற்கு இந்த அமிர்த சக்திகள் துணைபுரியும். உலகத்திற்கே அன்னையாகத் திகழும் மாதா அமிர்தானந்தா தனக்கென ஒரு செல் போன் கூட இல்லாது திகழ்வதே நமக்கு வழிகாட்டியாக அமைவதில் குருமார்கள் எத்துணை சிரத்தையை மேற்கொள்கிறார்கள் என்பது தெரிய வரும்.

ஆரம்பத்தில் இந்த கீதங்களை கேட்கும் பக்தர்கள் சிறிது சிறிதாக இந்தப் பாடல்களைப் பாடும் பயிற்சியைப் பெற்று பாடி வந்தால்தான் முழுமையான அமிர்த சக்திகளை உடலிலும் மனதிலும் நிறைக்க முடியும். பாட முடியாவிட்டாலும் இந்த டியூன்களை ஆரம்பத்தில் கேட்டு ஹம் செய்து வருவதும் ஒரு சிறந்த வழிபாடே. எந்த அளவிற்கு இந்த அமிர்த சக்திகள் நிறைந்த கீதங்களை நாம் உரக்கப்பாடுகிறோமோ அந்த அளவிற்கு நம்மைச் சுற்றிலும் அமிர்த சக்திகள் நிறைவதால் நம் குடும்பத்திலும் அதைத் தொடர்ந்து சமுதாயத்திலும் நோய் நிவாரண சக்திகள் நிரவுவதால் இது அற்புத சமுதாய சேவையாக அமையும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam