அவனும் அவளும் சேர்ந்து வந்தது அங்காளி அருளாலே !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்)

உலகின் எந்தப் பகுதியில் எந்த நாட்டில் மனிதனோ, மானோ, எந்த ஜீவனாக இருந்தாலும் சரி, மண்ணோ, மலையோ எந்த ஜடப் பொருளாக இருந்தாலும் சரி அனைவருடைய லட்சியமும் வாழ்க்கையில் சற்குருவைத் தேடுவதே! ஆம் அசையும் பொருள், அசையாப் பொருள், அசையாப் பொருள் அனைத்திற்கும் ஜீவ சக்தியையும், ஜீவ மோட்சத்தையும் தருபவர் சற்குருவே என்பதை இனியேனும் ஆத்ம விசாரம் செய்து உணருங்கள். உங்கள் மூளையில் கோடிக்கணக்கான பரிதிகள் (செல்கள்) பயன்படுத்தப்படாமல் உள்ளன. இத்தகைய சற்குரு அனுபூதிகளில் திரள்கின்ற ஆன்மச் சுடர்கள்தாம் அவற்றை நடைமுறைப் பயனுக்கு (divine activation) ஆக்கப்படுத்தும்.

தாயும் தந்தையுமான
தயாபரனே !

பெரியவரிடம் சிறுவன் பெற்ற குருகுலவாசம் மிகவும் கடினமாகத்தான் இருந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த divine bond ஐத் துய்த்து துய்த்துத் தேவானந்தத்தை ஆன்ம அனுபூதியாய் உணர்ந்தமையால் சிறுவனுக்குப் பெரியவரிடம் தோன்றிய அபரிமிதமான குருபக்தியானது மேலும் கனியக் கனிய.. இவர் தாம் தம்மைக் கரையேற்ற வந்த சற்குரு என்று உணர்ந்தவுடனேயே.... சற்குருவான பெரியவர் தன்னை மறைத்துக் கொள்ளலானார்! “பாரு பாரு நல்லாப் பாரு“ என்று மொழிந்து தன் குரு மங்கள லோகத்தை நோக்கிப் புனிதப் பயணம் கொண்ட பெரியவர், தினந்தோறும் சிறுவனுக்குத் தான் அளித்த நித்ய தரிசனத்தைத் தணித்துக் கொண்டு, “ராஜா! அடுத்த வெள்ளிக் கிழமைல அங்காளி ஆத்தா கோயிலுக்கு வந்துடு“  என்பதாகவும் அதுவும் மேலும் கனிந்து “ராஜா! திருஅண்ணாமலைல பிரம்மலிங்கத்துல வந்து பாரு“ என்பதாகவுமாகிக் கொஞ்சம் கொஞ்சமாக அவர் தன்னை மறைத்துக் கொண்டு திடீரென்று ஒரு நாள், “கண்ணு பூலோகத்துல அடியேன் வந்த இறைப் பணி முடிஞ்சுடிச்சு! இனிமே physicalலா நேர இங்கவர்றது ரொம்பக் கஷ்டம்டா ராஜா! ஏன்னா குருமங்கள லோலத்துலே என்னோட shell body இருக்குற இடத்துக்கு நான் போயாகணும்! அத விட்டுட்டு வந்து ரொம்ப யுகம் ஆயிடுச்சே! உன்னை ஆஸ்ட்ரல்ல அங்கேயே கூட்டிக்கிட்டுப் போய் அந்த லோகமெல்லாம் நல்லா சுத்திக் காமிச்சுருக்கேனே! குருமங்கள லோகம்னா துருவ நட்சத்திரம் தாண்டி 33000 கோடி மைல் தாண்டிப் போயாகணும், உன்ன தெனமும் வந்து பாக்கணும்னா அவ்வளவு தூரம் வந்து போக முடியுமாடா, நல்லா யோசிச்சுப் பாரு! இனிமே அப்பப்ப என் குரல் மட்டும் கேட்கும். அதான் உனக்குத் தெய்வீகத்துல நெறயக் கத்துக் கொடுத்திருக்கேனே! அத வச்சு குருவோட இறைப்பணியை நெறைவேத்திக் கொடு! ...“

முதலில் இனிமேல் பெரியவர் நேரில் காட்சி தரமாட்டார் என்ற எண்ணம் வந்ததும் அங்காளி கோயிலில் அழுது புரண்டு அங்கப் பிரதட்சிணமே செய்துவிட்டான் சிறுவன். ஆனால் பெரியவர் மசிந்த பாடில்லை. ஆனால் திடீரென்று ஒரு நாள் காட்சி கொடுத்தார்! தொலை தூர வடிவம்தான்! ஆனால் Crystal Clear ஆன ஜோதி வடிவம்! சிறுவனுக்கு ஒரே ஆனந்தம்! நெடுநாள் கழித்து அவரைப் பார்த்ததால் அல்ல, நேரே அவரைக் கோவணாண்டியாய்ப் பார்த்ததை விட ஜோதி பிம்பமாக அவரைப் பார்க்க, பார்க்க மேலும் பார்த்துக் கொண்டேயிருக்கலாம் போலிருந்தது அவ்வளவு திவ்யானந்தமயமான காட்சி! “ ராஜா கண்ணால புடிக்காதே, மனசுல புடி! போட்டோல புடிக்காதே, உள்ளத்துல புடி! இதுதான் என்னிக்கும் நெலச்சு நிற்கும்!“ இவையெல்லாம் பெரியவரின் சாசுவதமான குருவாய் அருள் மொழிகள்!

பிறகு இப்படியான பிம்ப வடிவம் தோன்றுவதும் நின்று விட்டது.. முன்னேயாவது கூப்பிடும் போது வந்தார்.. பிறகு பத்துப் பதினைந்து முறை கூப்பிட்டால் ஒரு முறைதான் வருவார்... பிறகு தான் தோன்றியாய்த் தானே நினைத்தால் தோன்றுவார்.. ஆனால் ஒவ்வொரு முறையும் அதே கோவணாண்டி உருவம் என்றாலும் layer, layer ஆக, அவன் இதுவரை பூலோகத்தில் காணாத வண்ணங்களில் அவரைக் காணக் காண.... பூலோகக் கோவணாண்டி உருவத்தை விட, எப்போதோ கிடைக்கும் இந்த ஜோதி பிம்ப வடிவத்தில் இனம் புரியாத தெய்வீக சக்தி உற்பவித்துத் தன் தேகத்தில் ஊறுவதை உணரலானான்! உண்மையில் இந்த ஜோதி பிம்ப வடிவில் சூட்சுமமாக எத்தனையோ கோடி உபதேசங்களையும் கோடிக்கணக்கான நட்சத்திர ஜோதி தரிசனங்களையும் சற்குருவின் அருட்பரிசாய் உணர்த்திச் சென்றார் என்பதைச் சிறுவன் பிற்பாடே உணர்ந்தான்.. அதன் பிறகு தான் ஜோதி பிம்பக் காட்சியும் வருவது மறைந்து குரல் மட்டும் கேட்கத் தொடங்கியது. பூலோகத்தில் நெருங்கிப் பழகிய போது கிட்டிய குரலை விட, இந்த வான்வழிக் குரல் பிசிறின்றி Crystal Clear ஆக Fine tune செய்தது போல் இருந்தது. பூலோக குருகுலவாசத்தில் நேரடியாக அவர் விளக்கிய போது ஆயிரத்தெட்டுக் குறுக்குக் கேள்விகள் கேட்டால்தான் அவனுக்கு எதுவும் புரியும். ஆனால் இந்த வான்வெளிக் குரல் மொழியில் ஒரிரு வார்த்தை கேட்டாலும் ஓராயிரம் ஆன்ம விளக்கங்கள் கிட்டின.. பெரியவர் இவ்வாறே பேசலாகாதா என்று எண்ணினான் சிறுவன்... குருகுல வாசம் பரிபூரணமான பின் சிறுவனே முற்றிய குருவருட்கனியாய் திருவருட் திரட்சியாய் சற்குருவின் சிஷ்ய பாதமாக அவரே (பெரியவரே) ஆண்டு வந்து ஆக்கி வைத்த பின்னர் இன்று குருமங்கள கந்தர்வாவாக ஆக்கம் பெற்று சற்குருவின் அருள்வழிப் பாதையில் குருமந்திர சக்தியால் அன்றும் இன்றும் என்றும் இயக்கப்படுகின்றான்.

“ஏன் வாத்யாரே, அந்தச் சொம்பு விஷயம்... என்று சிறுவன் இழுத்திடவே.. ”

“ஆமாண்டா, நீ என்ன கேட்கப் போற? அந்தச் சொம்பு குபேர லோகத்துக்குப் போய் divine receipt கூட வந்திடிச்சு, நீ இன்னும் அத விட்டபாடில்லை! என்ன கேப்ப, அந்தச் சொம்ப நேரே பூமில குழி தோண்டிப் புதைக்க வேண்டியது தானே! ஏன் கீழ் குழியத் தோண்டி மரத்து மேல ஏறி.... அங்கேந்து நான் தொப்புனு கீழே போட்டு.. நீ அதப் புடிச்சு குழிக்குள்ளாற ஏறக்கி.... ஏன் மூக்கு, காதைச் சுத்தி நாக்கைத் தொடணும்... அதானே...! சிறுவன் தலையைக் குனிந்து கொண்டான் as wanted… ! இதுதான் அவனுக்கு சர்வ சகஜமாயிற்றே....!

“விஷயம் இதாண்டா., அதத் தெரிஞ்சுக்கத் தான் உன் IQ மனசு அலையுது! தேவ ரகசியம் தெரியணும்னா அதுக்குச் சில யோக்யதாம்சம் வேணும்டா! வெறுமனே சற்குரு கீழே காலாட்டிக்கிட்டு உட்காந்துட்டா எல்லாம் by default வந்து சேருமா என்ன? (கண்ணைச் சிமிட்டுகிறார்)  ..... குபேர லோகத்துச் சொம்புன்னா அது குபேர பகவான் பூஜை பண்ணினது... அது எப்படி இருக்கும்! அந்த சூர்யப் பிரகாசத்தப் பாக்கறதுக்கே ஆயிரம் கோடி கண் வேணுமேடா! தேவலோகத்துச் அபரஞ்சிதத் தங்கத்துல பண்ணினதாச்சே! வைர மணி, பவள மாலை, கெம்புச் சக்கரம்னு... எல்லாம் போட்டுத் தாண்டா இருக்கும்... ஆனால் 1000 பவுன் அபரஞ்சிதத் தங்கச் சொம்பா பூமிக்கு வந்தா அதன் கதி என்னாகும்? சிவ சொத்தானாக் கூட இங்க தூள் தூளாப் பிச்சிப் பங்கு போட்டுடுவாங்கடா...!“

“ஏன் மகாலட்சுமி கடாட்சம் கெடச்ச சிலர் கையில் அது கெடச்சு, கடைசியாக் குபேர லோகத்துக்கு அனுப்புற டயம் வந்த போது சித்தர்கள் அத குபேர லோகம் அனுப்பறதுக்கு நம்பளை ஒரு சிறு கருவியா வச்சுக்கிட்டாங்க .. கலியுகத்துல ஒரு பிட்டுத் தங்கம்னாலே தங்கமான மனசு உள்ளவங்களுக்குக் கூட உள்ளம் மாறிடும்டா..... அதனாலதான் அந்த அபரஞ்சிதத் தங்கச் சொம்பு பூலோகத்துக்கு வந்த ஒடனேயே சித்தர்கள் அதோட shape யே மாத்தி ஓட்டை ஒடைசல் சொம்பா ஆக்கிட்டாங்க“.
“ஆனா அதோட குபேர சக்திய, லட்சுமி கடாட்சத்தை அப்படியே அதுலவுட்டுட்டாங்க.. நீ அந்தச் சொம்பை வச்சிருந்தப்போ எவனெல்லாம்... அறிஞ்சோ, அறியாமலோ அதைத் தொட்டுக் காசு போட்டானோ, அஞ்சு காசு, பத்து காசு போட்டவன் கூட இந்த ஜென்மத்துலயோ, அடுத்த ஜென்மத்துலயோ, பெரிய பணக்காரனா ஆகப் போறான்... அப்பத் தெரிஞ்சுக்க மகா லட்சுமி லோகத்துல இருக்கிற ஐஸ்வர்ய சித்தர்கள் எல்லாம் உன்னைச் சிறு கருவியா வச்சு, அபரஞ்சிதத் தங்கச் சொம்பை, ஓட்டை உடைசல் சொம்பு மாதிரி மாய உருவம் காட்டிக் கொறஞ்சது 100 பேரையாவது கோடீஸ்வரனா ஆக்கியிருக்காங்கன்னா, இந்தச் சொம்பு பின்னாடி எவ்வளவு தெய்வ லீலைகள் இருக்கு? இதயெல்லாம் தெரிஞ்சுக்கறத்துக்கு ஒரு சற்குரு வேணும்னு நீ புரிஞ்சுக்க... மத்தவங்களுக்கும் எடுத்துச் சொல்லு.., ஆனா அந்த ஓட்டை உடைசல் சொம்பை அப்படியேவா குபேர லோகத்துக்கு அனுப்ப முடியும்.. அதை reverse பண்ணி ஒரிஜினல் அபரஞ்சிதத் தங்கச் சொம்பா மாத்தி வைர வைடூரிய ஆபரணம் மாட்டி.. அதை வந்தபடியே அனுப்பியாகணுமேடா! அந்த தேவகலை யாருக்குத் தெரியும்? தெரிஞ்சவங்களும் வெளில காட்டிக்கறது கெடயாது (சிரிக்கிறார்). அபரஞ்சிதத் தங்கம்னா அதத் தாங்கறவங்க உடல் பூமில படக்கூடாது... உடம்புல பத்தாயிரம் சூரிய கிரகங்களோட உஷ்ணம் இருக்கணும்! கால், கைல தேவ ரேகை ஓடணும்... இதையெல்லாம் எல்லாருக்கும் முன்னாடி பூமில தரை மேலயா பண்ண முடியும்? இந்த divine converter தான் நெல்லி மரம்..! ”

பெரியவர் ஆனந்தத்துடன் விவரித்திட....“ சிறுவன் சிலையாய்ச் சமைந்தான், அப்பப்பா... இத்தகைய அளப்பரிய தெய்வீக ஆற்றலைப் பெற்றவரையா நாம் அண்டியிருக்கிறோம்! சிறுவன் புளகாங்கிதமடைந்து பரமானந்தத்தில் திளைத்தான்!

 “ஏண்டா ஓராழாக்குப் பொட்டுக் கடலை வாங்கிக்கிட்டு வர்றியா, கையில் வச்சுக்கிட்டு கொறிச்சுக் கிட்டு இருக்கலாம்!” பெரியவர் கையை மலர வைத்து நீட்டினார். சிறுவன் பெரியவரின் கையையும் முகத்தையும் மாறி மாறிப் பார்த்தான். ஓட்டைப் பித்தளைச் சொம்பையே ஆயிரம் பவுன் அபரஞ்சிதத் தங்கச் சொம்பா மாத்தின தெய்வீக சக்தி நிறைந்த கைக்குப் பொட்டுக் கடலை கொறிப்பது ஒரு பெரிய விஷயமா? எத்தகைய உத்தம தெய்வீக நிலையிலிருந்து தனக்காக (சிறுவனுக்காக) டக்கென்று கீழிறங்கி சாதாரண மனுஷனாய் மாறி நம்மை மாயையில் ஆழ்த்துகின்றார்!. இப்போது சிறுவன் கல கலவென்று சிரிக்க ஆரம்பித்து விட்டான். ஓஹோ, விஷயம் உனக்குக் கூட அவ்வளவு சீக்கிரம் புரிஞ்சுடிச்சா... பெரியவரும் சிரித்தார்...

சித்தரின் சிரிப்பில் சிவமயத்தைச் சுவைத்தான் சிறுவன்!

பெரியவருடைய சித்தோபநிஷத் விளக்கங்களைக் கண்டு சிறுவன் அசந்திருக்கின்றான்.. ஒரு முறை..... திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில்.... பஞ்சமுக லிங்கப் பகுதியில் ஓரிடத்தில் அமர்ந்த பெரியவர் கிடுகிடுவென்று கல் அடுக்கி அடுப்பு வைத்துப் பானை வைத்துச் சோறு பொங்கலானார்.... இம்முறை சிறுவனே அனைத்துப் பொருட்களையும் வாங்கி வந்தான்.. ஒரே ஒரு பானை சாதம், சின்ன வாணலியில் சாம்பார், அதில் ஐந்து வகைக் காய்கறிகள்! சாம்பார் சாதம் ஆனதும் மடமடவென்று அருகிலிருந்த காய்ந்த ஆலம் இலைகளை சுத்தம் செய்ய கிரிவல அடியார்களுக்கு அன்னதானமும் தொடங்கியது! அக்காலத்துக் கொட்டாங்குச்சிக் கரண்டியில்தான் சிறுவன் இரண்டிரண்டு கரண்டி வைத்து முன்னூறு பேருக்கு மேல் அளித்துக் கை கால் ஓய்ந்து விட்டான். அவனுக்கு நல்ல பசி வேறு! ஒரு பானைச் சோறு எப்படி முன்னூறு பேருக்கு வந்தது.. என்பது அவனுக்கே அதிசயமாக இருந்தது....

“ஏன் வாத்யாரே! ஒரே பானைல உன்னால ஆயிரம் பேருக்கு வர மாதிரி சோறு வடிக்கலாம்தானே! அப்டீன்னா எதுக்கு இந்த அடுப்ப மூட்டி புகையில கண் செவந்து..... ஏனிந்த வேடிக்கை , மாயை எல்லாம்?“

நெடு நாள் தே(ஏ)க்கம் போலிருக்கிறது, சிறுவன் நன்றாகக் கேட்டே விட்டான்!
“ஷ்.....ஷ்..... ஷ்..... எந்த விதமான சித்தியும் பண்ணக் கூடாதுடா! எந்த சித்தியும் அடியேனுக்குத் தெரியவும் தெரியாது.. ஆனா Physical body ன்னு வந்துட்டா, மனுஷ உடம்புன்னு எடுத்துட்டா மகானா இருந்தாலும் சரி சித்தனா இருந்தாலும் சரி அந்த ஒடம்புக்கு உரித்தான வினையை அனுபவிச்சுத்தான் ஆகணும்... ஒருத்தரோட ஒடம்புல எந்த இடத்துல எந்த கொசு கடிக்கணும், எந்த எறும்பு எங்க மேல ஏறணும்னு கூட பிரம்ம விதி கணக்கு இருக்குடா! இப்ப உனக்கு பசிக்குதே, என்ன செய்யலாம்? தெரிஞ்ச சித்திகள வச்சு உன் பசியை அடக்கறதா? இல்லாட்டி இருக்கற சித்திகள வச்சு நாலு இட்லி வர வெக்கிறதா இல்லாட்டி மானசீகமா நீ அஞ்சு பரோட்டா சாப்பிட்ட மாதிரி நெனச்சு பசி ஆத்திடலாமா? எது bestனு நீயே சொல்லு..”

சிறுவன் வயிற்றுப் பசியால் கதறிவிட்டான். “சித்தியும் வேண்டாம், முக்தியும் வேண்டாம்.. ஆறு இட்லி வாங்கிக் குடு வாத்யாரே., போதும்! மாயமும் வேண்டாம்,. மந்திரமும் வேண்டாம்..!“ 

“அப்படிவா வழிக்கு.. இதாண்டா... பூமில உண்மையாகவே கர்மாவை அனுபவிக்கற வழி”, என்று சொல்லிப் பெரியவர் சிரித்தார்! அப்போது கிரிவலப் பாதையில் ஐந்து பேர்கள் வந்திடவே..... கிழிசல் ஆடைகள்... எண்ணெயில்லாப் பரட்டைத் தலை.... சாப்பிட்டே பத்து நாள் ஆகியிருக்கும் போலிருக்கிறது... இரண்டு குருடர்கள். இரண்டு தொழு நோயாளிகள், ஒரு வயதான ஊமைக் கிழவர்!

சிறுவன் வேக வேகமாக இலைகளைப் பிரித்து அவர்களிடம் கொடுத்து கொட்டாங்குச்சிக் கரண்டியை எடுத்து உதறிட இலைகளில் ஓரிரு பருக்கைகள் உதிர்ந்தன.. இலைகளை வாங்கிய அவர்களுகு முழுக் கரண்டிச் சோறு போட முனைந்திட்டு அவன்... குனிந்த போது பெரியவர் அவன் கையைப் பிடித்துத் தடுத்தார்...

“போதும்டா!“   சிறுவன் அதிர்ந்தான்!

இன்னமும் சோறே போட ஆரம்பிக்கவில்லையே அதற்குள் கையைப் பிடித்துப் போதும் என்று சொல்லி விட்டாரே! அவர்களும் சற்று நேரம் நின்று பார்த்து விட்டு முறைத்து விட்டு முணுமுணுத்துக் கொண்டு சென்றது போலிருந்தது! ஆனால் சிறுவன்தான் குனிந்த தலை நிமிராமல் இருந்ததால் அவர்களைச் சரியாகப் பார்க்கவில்லை... தன் வாழ்வில் முதன் முதலாகப் பெரியவர் இவ்வாறு செய்ததைக் கண்டு அவனுக்கு வியப்பும், கோபமும். ஆச்சரியமும், திகிலும்,, ஏமாற்றமும் சேர்ந்து வந்தன... இது மட்டுமா?

“வாடா வந்து உக்காரு! சாப்பிடு!”

ஆம்! பெரியவர் தான் கூப்பிடுகிறார்... சிறுவனுக்குத் திக்கென்றது, அவர்களுக்குப் போடாமல் நாம் உண்பதா? சித்தன் போக்கு சிவன் போக்குத்தானே! சிறுவன் தயங்கித் தயங்கி நிற்பதைப் பார்த்துப் பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்து... “ஒண்ணு தெரிஞ்சுக்கோடா, வந்தவங்க தாண்டா. உனக்கு அன்னதானம் பண்ணிட்டுப் போயிட்டாங்க..”

சிறுவன் விழித்தான்!
“அவங்க இதைச் சாப்பிட்டிருந்தாங்கன்னா உனக்கு இருந்திருக்குமா? உனக்கு விட்டுக் கொடுத்திட்டு அவங்க போயிட்டாங்க”, சிறுவன் convince ஆனது போல் தெரியவில்லை., ஏன் இப்படிப் புரட்டிப் பேசுகிறார்?

“கொஞ்சம் பானைல குனிஞ்சு பாருடா! ”

சிறுவன் பானையில் குனிந்து பார்த்திட....

கரன்சி நோட்டின் security thread போல சோற்றில் வெங்கடராமன் என்ற பெயர் ஜிகினா போல் ஒளி விட்டது.. பெரியவர் சிரித்தார்... இதுல உன்னோட பெயர் எழுதியிருக்கிறப்போ இது உன் வயித்துல போகணும்னு எழுதியிருக்கறப்போ அவங்க எப்படிடா இதைச் சாப்பிடுவாங்க? இறுதியில் முத்தாய்ப்பாய்ப் பெரியவர் ஒன்றைச் சொன்னார்... “எல்லாத்தையும் விட ஒண்ணு முக்கியமாத் தெரிஞ்சுக்கடா, ரிஷிகளுக்கு, சித்தர்களுக்கு ஒண்ணு ரெண்டு பருக்கையே போதும்! அதான் அவங்களுக்குக் கெடச்சுடிச்சே”..
ஏதோ பளிச்சென்று மூளையில் பொறி தட்டிடக் கண்களில் ஒளி பொங்கிட தலை நிமிர்ந்து சிறுவன் பெரியவரைப் பார்த்திட .... அவரோ தொலைவில் சென்று கொண்டிருந்த ஐவரை நோக்கி சாஷ்டாங்கமாய்த் தரையில் வீழ்ந்து நமஸ்கரித்துக் கொண்டிருந்தார்! “இன்னிக்கி ரிஷி பஞ்சமி திதி! அதனாலத்தான் அஞ்சு காய்கறி போட்ட அன்னதானம் போட்டோம்.. வந்தவங்கதான் பஞ்சார்ஷேய மகரிஷிங்க.. அஞ்சு பேரும் சேர்ந்துதான் வருவாங்க! ஏதோ உன்னோட அதிர்ஷ்டம்! அவங்க தரிசனம் கெடச்சது! ஹூம்.. நீதான் கல்யாணப் பொண்ணாட்டம் குனிஞ்ச தலையே நிமிரலையே! அவங்களை நீ சரியா தரிசனம் பண்ணல!”

பெருங் கோபத்துடன் ..“வாத்யாரே நீ அப்பவே சொல்றதுதானே....” என சிறுவன் கத்திக் கொண்டே திகைத்து நின்றிட.... பெரியவர் அதிவேகமாய் நடக்கலானார்... சித்தர்களைப் புரிந்து கொள்ள முயன்றால்..... எங்கே முயல்வது? ஞானத்திற்கும் அப்பாற்பட்ட ஞானிகளாயிற்றே!

திருக்கார்த்திகை

விக்ரம ஆண்டு திருக்கார்த்திகை தீபவிசேஷ அம்சங்கள்

சித்தர்களின் ஞான பத்ர கிரந்தங்களில் வரும் யுகங்களில் நிகழவிருக்கின்ற உலக அம்சங்கள் அனைத்தும் பற்றிய விளக்கங்கள் தத்ரூபமாகக் காணப்படுகின்றன. ஆனால் இந்த எதிர்காலப் பிரபஞ்ச காரியங்களெல்லாம் தக்க சற்குரு மூலமாகவே உணரப்படவேண்டும் என்பதும் ஞானபத்ர நியதிகளாகும். திருஅண்ணாமலை திருத்தலத்தின் மகிமையைப் பற்றி தேவாதி தெய்வ மூர்த்திகளெல்லாம் எப்போதும் உணர்வித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்! ஞானம் பெற்ற மனிதனுடைய ஞானத்திற்கும் அப்பாற்பட்டதே திருஅண்ணாமலை மகிமை எனில் அருணாசல மகிமையை என்னவென்பது?

இன்று நாம் பூமியில் காண்கின்ற திருஅண்ணாமலையை பிரம்ம லோகம், ஸ்கந்த லோகம், பைரவ லோகம், சிவலோகம், வைணவ லோகம் என அனைத்து லோகங்களிலும் பரிபூரணமாகக் காணலாம். நம்முடைய மனிதப் பார்வைக்கு மட்டுமே திருஅண்ணாமலை இத்தனை அடி உயரமாகவும் இதன் உச்சியில் தீபம் ஏற்றப்படுவதாகவும் தோன்றுகிறது. ஆனால், இப்பிரபஞ்சத்திற்கேயான பிரம்மாண்ட அக்னி மய சுயம்பு லிங்கமாக திருஅண்ணாமலை விளங்குவதால், கோடானுகோடி விண் அண்டங்களிலும், நட்சத்திர லோகங்களிலும் திருஅண்ணாமலையைத் தரிசித்திடலாம். ஆனால் அங்கு காணப்படுகின்ற அருணாசலத்தின் வடிவமே தனித்தன்மை கொண்டதாக விளங்கும்.

ஞான பத்ரம், Siddhas’ divine manual!
என்னதான் இருந்தாலும் பூலோகத்தில் தான் சிவபெருமானே அருணாசல மலைத் திருமேனியாக அமர்ந்தமையால் இதன் சூட்சும வடிவ பிம்பமே அனைத்துக் கோடி லோகங்களிலும் தோன்றுவதால், இப்புனித பூமியில், குறிப்பாக நம் பாரதத் திருநாட்டில், அதிலும் சுயம்பு லிங்கங்கள் நிறைந்த தமிழ்த் திருநாட்டில் இறைப்பூர்வமாக நிலைத்து நிற்கும் திருஅண்ணாமலையை இம்மானுட உடலில் தரிசிப்பதும், கிரிவலம் வருதலும் பெறுதற்கரிய பாக்கியமாகும். இதற்காகத்தான் அனைத்துக் கோடி தேவாதி தேவமூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும் பித்ரு தேவர்களும் ஏதேனும் ஒரு ரூபத்தில், அதிலும் பெறுதற்கரிய மனித ரூபத்தில் பூலோகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வருவதையே பெரும் பேறாகக் கொள்கின்றனர்.

தெய்வங்களின் அருணை கிரிவலம்!
இவ்வகையில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா, ஸ்ரீஆஞ்சநேய மூர்த்தி, ஸ்ரீபிள்ளையாரப்பன் முதல் ஸ்ரீஆயுர்தேவி, ஸ்ரீபைரவ மூர்த்தி என அனைத்து தெய்வமூர்த்திகளுமே, சித்தர்கள் வடிவிலும் மானுட ரூபத்திலும் இன்றைக்கும் திருஅண்ணாமலையை கிரிவலம்வரத்தான் செய்கின்றனர். இவ்வகையில் ஒவ்வொரு ஆண்டின் திருக்கார்த்திகை தீபமானது பல தெய்வ மூர்த்திகளின் விசேஷ வழிபாட்டு நாளாகத் திகழ்கிறது. இது பற்றிய ஞான விளக்கங்கள் யாவும் மானுட உலகிற்கே ஆச்சரியமான, அதிஅற்புதமான தெய்வீக விளக்கங்களும் சித்தர்களின் ஞானப் பத்ரங்களில் காணக் கிடைக்கின்றன.

விக்ரம – ஆண்டு கார்த்திகை தீப முப்பூரத் தொகுதி கிரிவல முறைகள்

இவ்வாண்டு கார்த்திகை தீப உற்சவ கிரிவல முறைகளாக – மூன்று தொகுதிகளாக – முப்பூரத் தொகுதி கிரிவல முறைகளென விளிக்கப்படுவதாக சித்தர்களின் ஞான பத்ர வேத வாக்கியங்கள் பகர்கின்றன.

நாள்

கிரிவல நாமம்

கிரிவலச் சிறப்பு கூட்டும் அற்புத சித்தர் பெருமான்

1.12.2000-
3.12.2000

இடர்களையும் கருங்குருவி கிரிவல முறை

ஸ்ரீஸ்வர்ண பைரவரே, பொன் முத்திரையர் சித்தராக கிரிவலத் திருவருள் புரிகின்ற புண்யகாலம்

4.12.2000-
6.12.2000

புஷ்பாங்க்ருத கிரிவல முறை

ஸ்ரீபெத்த நாராயண சித்தர் கிரிவலம் வந்து அருளாசி தரும் புண்ய காலம்.

7.12.2000-
9.12.2000

வடஆரண்ய ஸ்ரீகிருஷ்ணார்ப்பண கிரிவல முறை

“எங்கு நீ மஹானு பாவுலு என்று போற்றப்படுகிறாயோ அங்கு இறைவாசம் கொண்டு சீரிய இறைப்பணி ஆற்று” என்று கிருஷ்ணனே திருவாய் மலர்ந்தருளும் பாக்கியம் பெற்ற சந்தனு பீலி கிருஷ்ண மஹானு பாவுலு சித்தர் கிரிவலம் கொண்டு அருள் கூட்டும் புண்ய காலம்.

அருணை கிரிவலம் வந்த அற்புத சித்தர்கள்

1. ஸ்ரீஸ்வர்ண பைரவர் – பொன் முத்திரையர்  - மானுட ரூபத்தில் மகாபைரவர்!

ஆதி சிவனின் அதியற்புத மூர்த்திகளே எட்டு விதமான பைரவ மூர்த்திகளின் ரூபமாகும். எதிர்வரும் யுகங்களில் குறிப்பாகக் கலியுகத்தில் துன்பங்கள் பெருக உள்ளன. மனித சமுதாயம் பலவிதமான தீய ஒழுக்கங்களுக்கு ஆட்பட்டுத் தர்மம் குலைந்து விடும் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்த பல தெய்வ மூர்த்திகளே தாமே மானுட வடிவு கொண்டு திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து தம்முடைய தெய்வ அருட்தன்மையை பூலோகமெங்கும், பிரபஞ்சமெங்கும், விசேஷமாகத் திருஅண்ணாமலைத் திருத்தலத்தில் மலை தரிசனப் பலன்களாக ஆங்காங்கே நிரவியுள்ளனர்.

திருஅண்ணாமலையின் ஒவ்வொரு தரிசனப் பகுதியிலும் எத்தனையோ கோடி தேவாதி தேவ மூர்த்திகளின் , மஹரிஷிகளின், சித்தர்களின் கிரிவலப் பலன்கள் பொதிந்து கிடக்கின்றன! எனவேதான் திருஅண்ணாமலையின் ஒவ்வொரு அங்குல தரிசனமும் இன்றைக்கும் பல விசேஷமான பலன்களைத் தந்து கொண்டுள்ளன. இப்பலன்கள் யாவும் தற்போதைய கலியுகத்திலும் எதிர்வரும் காலத்திலும் ஜீவன்களுக்கு ஏற்பட உள்ள எத்தகைய துன்பங்களையும் களைவதற்கான தெய்வ தரிசன மாமருந்துகளாம், எனவேதான் திருஅண்ணாமலையை எந்நாளிலும், எந்நேரமும் கிரிவலம் வந்து எந்தத் திசையில், எந்தக் கோணத்தில் எந்த அங்குல தரிசனத்தைப் பெற்றாலும் அந்தந்த அங்குல தரிசனத்தின் தெய்வீகப் பலனை கிரிவல தேவதா மூர்த்திகள் நமக்கு அளித்து அருள்பாலிக்கின்றனர்.
தெய்வம் மானுட ரூபம் கொள்வதேன்?
இவ்வகையில் அஷ்ட பைரவர்களுமே மானுட வடிவில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து தம் சிவத்திருவருளை மலை தரிசனப் பகுதிகளில் பதித்திட விழைந்தனர். சிவாவதாரமான பைரவ மூர்த்தி இருந்த இடத்திலிருந்தே தாமாக அனுக்கிரகம் செய்ய இயலுமே! ஏன் மானுட ரூபத்தில் கிரிவலம் வந்து தாமே ஈசனை வலம் வருதல் போன்ற இறை அனுபூதியைத் தரித்திட வேண்டும்? இதுவும் ஒரு இறைமறை நாடகமன்றோ? எந்த சித்புருஷரும், மகானும், தேவ மூர்த்தியும் மானுட வடிவம் பெற்று விட்டால், அவ்வடிவிற்குரித்தான கர்மவினைகளை அனுபவித்தே ஆகவேண்டும். இதனால் தான் ஸ்ரீபூண்டி ஆற்று மகான், ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியார், ஸ்ரீவிட்டோபா ஸ்வாமிகள் போன்ற சித்புருஷர்களும் மகான்களும் எவ்வளவோ துன்பங்களுக்கு ஆளானார்கள். ஏன், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவும் மானுட வடிவில் கண்ட துன்பங்கள் எத்தனை எத்தனை? தேவாதி தெய்வ மூர்த்திகளே மானுட ரூபம்கொண்டு திருஅண்ணாமலையை கிரிவலம் வரக் காரணம், இப்பிரபஞ்சத்திற்கு மானுடப் பிறவியின் மஹிமையை எடுத்துரைப்பதற்கும் மானுட வடிவில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் என்பது பெறுதற்கரிய பாக்கியம் என்பதை உணர்த்துதற்குமாம்!
ஒவ்வொரு பைரவ மூர்த்தியும் அறுபது தமிழ் ஆண்டுகள் தவம் பூண்டு தம் கிரிவலத்திற்கான குறிப்பிட்ட ஒரு தமிழ் ஆண்டை உற்பவித்துக் கார்த்திகை தீபப் பெருவிழாவில் குறித்த தினங்களிலும் மானுட ரூபத்தில் கிரிவலம் வந்து தன் கிரிவலப் பலன்களையெல்லாம் அருணாசலப் பெருமானின் திவ்யத் திருமேனியில் பதித்துள்ளனர். இவ்வகையில் நடப்பு விக்ரம ஆண்டிற்கு உரித்தான ஸ்ரீஸ்வர்ண பைரவ மூர்த்தியே 60 தமிழ் ஆண்டுகள் கடும் விரதம் இருந்து கார்த்திகை தீப ஆண்டு உற்சவத்தில் முதல் மூன்று தினங்களிலுமே மானுட ரூபத்தில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற சிவாம்சமாவார்!
பொன் முத்திரையராய் ஸ்ரீஸ்வர்ண பைரவர்!
ஸ்வர்ண பைரவ மூர்த்தியே வரும் விக்ரம கார்த்திகை தீப பிரம்மோற்சவத்தில் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் தோன்றி கிரிவலம் வருகிறார். ஆதிசிவனின் பரிபூரண அம்சமான ஸ்வர்ண பைரவர் ஒரு யுகத்தில் தம் முதல் மானுட கிரிவலத்தின் போது விக்ரம ஆண்டையே தேர்ந்தெடுத்தார். சித்தர் பரிபாஷையில் பொன் முத்திரையர் என்ற திருநாமம் பூண்டு 60 ஆண்டுகள் கடும் விரதமிருந்து அந்த யுகத்தின் விக்ரம ஆண்டின் கார்த்திகை உற்சவத்தின் 10 நாட்களிலும் பொன் முத்திரையராக மானுட வடிவில் கிரிவலம் வந்து, தம் பலன்களையெல்லாம் திருஅருணாசல மலைத் திருமேனியில் பதித்துள்ளார். அந்த யுகத்தில் ஸ்ரீஸ்வர்ண பைரவர், பொன்முத்திரையர் பெருமானாக வந்த பொழுது கருங்குருவிகள் கூட்டங் கூட்டமாகக் கிரிவலம் வந்தன. அக்காலத்தில் பறவைகளை இம்சிக்கும் வழக்கம் சமுதாயத்தில் நிலவவில்லை. ஜீவகாருண்யமே ததும்பியிருந்தமையால் ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்வில் தம்மை அண்டி வாழ்கின்ற காகம், குருவி, கிளி, பசு, காளை, நாய், பூனை, அணில் போன்ற ஜீவன்களுக்கு உணவளித்து இறைப்பெரும் பணியை ஆற்றி வந்தனர். காலப்போக்கில் சுயநலம், முறையற்ற காமம் முதலியன தலையெடுக்கவே மனிதனின் வாழ்க்கை முறையால் உலக சமுதாயம் பாழ்படத் துவங்கியது. இன்றைக்கும் திரைப்படம், தொலைக்காட்சி, இன்டர்நெட் போன்றவை மூலமாகத் தீய காட்சிகள் தாமே சமுதாய இறைநல்ஒழுக்கத்தைப் பாழ்படுத்தி வருகின்றன.

இறை கிரிவல நியதி அறிவீரே!
பொன்முத்திரையர் சித்தராக, ஸ்ரீஸ்வர்ண பைரவர் வலம் வந்த விக்ரம ஆண்டில் அப்பொழுது கூட்டங் கூட்டமாக வலம் வந்தன கருங்குருவிகள்! அவை ஸ்வர்ண பைரவரை வணங்கிப் போற்றித் துதித்தன! கருங்குருவிகளின் மகிமை என்னவெனில் கிரிவலத் துவக்கத்தின் போது அவை சிறகடிக்கத் துவங்கினால் கிரிவலம் முடியும் வரை அவை பறந்து கொண்டே இருக்கும். ஏதேனும் ஒரு  தரிசனத்தைப் பெற வேண்டுமெனில் அங்கு வானிலேயே சிறகடித்து நிலைத்து நின்று வணங்கிய பின்னரே அடுத்துப் பறக்கத் துவங்கும். ஆங்காங்கே சுமை தாங்கிகளிலோ, மரங்களிலோ, கோபுரங்களிலோ இடையில் அவை இளைப்பாறுவதும் கிடையாது. இவ்வாறாக ஒவ்வொரு இனத்திற்கும் உரித்தான கிரிவல நியதிகள் உண்டு. புழுக்களுக்கு, ஆமைகளுக்கு, நத்தைகளுக்கு, பறவைகளுக்கு என சித்புருஷர்கள்  கிரிவல நியதி முறைகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மனிதனைத் தவிர அனைத்து ஜீவன்களுமே தமக்குரித்தான கிரிவல நியதியை யுகயுகமாக இன்றுவரை என்றுமே சரியாகக் கடைபித்து வருகின்றனர். ஆனால் சுகபோகங்களில் தன்னுடைய பகுத்தறிவை இழந்து வரும் மனிதன் மட்டுமே தனக்கேற்றவாறு காலணி, சட்டை அணிந்தும், வளவளவென்று வாய் மூடாது தேவையற்றன பேசிய வண்ணமும் கிரிவலத்தின் புனிதத்தை அவமதித்து வருகின்றான். இனியேனும், மனித சமுதாயம் திருந்தி அருணாசல கிரிவல முறைகளை அறிந்து தக்க இறை நியதிகளுடன் கிரிவலம் வருவார்களாக!

கருங்குருவிகளின் சத்சங்கம் :
அந்த யுகத்தில் கிரிவலம் வந்த கருங்குருவிகள் கூட்டங் கூட்டமாக சத்சங்கமாக ஒரே பிரார்த்தனையுடன் கிரிவலம் வந்தன. அதுஎன்னவோ? தம் கிரிவலத்திற்கு எவ்வித இடையூறும் வரக் கூடாது, தாம் குடும்பாய் கிரிவலம் வருதலால் இப்பத்து நாட்களிலும் பெரிய வலிய பறவைகளால் எவ்விதத்திலும் இன்னல்கள் வரக் கூடாது. தம்முடைய கிரிவலப் பிரார்த்தனைகள் யாவும் குறிப்பிட்ட சில துன்பங்களால் அவதியுறுகின்ற மனிதர்களுக்கு நிவாரண சக்தியாய்ச் சென்றடைய வேண்டும், இவையே அக்கருங்குருவிகளின் பிரார்த்தனையாகும். இதை மனித சமுதாயம் உணருமா? இன்றைக்கு கலியில் எத்தகைய லெளகீகமான பிரார்த்தனைகளுடன் மனிதர்கள் கிரிவலம் வந்திட, அவ்வளவாகப் பகுத்தறிவு பெறாத கருங்குருவிகள் எத்தகைய தியாகமயமான பிராத்தனையைக் கைக்கொண்டு கிரிவலம் வந்தன? இனியேனும் மனித குலம் திருந்தி வாழ முயலட்டும்! ஒவ்வொரு ஜீவ வகைக்கும் உரித்தான கிரிவல நியதிகளும் உண்டு. பறவைகளுக்கு  புழுக்களுக்கும் கூட சித்புருஷர்கள் கிரிவல முறைகள்/ நியதிகளை அளித்துள்ளனர். எந்த மனித குலத்தைச் சீர்திருத்த மௌனம் பூண்டு பொன் முத்திரையர் சித்தர் கிரிவலம் வந்தாரோ அவரே மனம் உருகி கருங்குருவிகளின் தியாகமான கிரிவல வேண்டுகோளை முன்னிட்டுத் தம் மௌனத்தை மறைத்து அக்குருவிகளுக்கும் பல ஆசிகளை வழங்கினார். மேலும் கருங்குருவிகளுக்கென விசேஷமான கிரிவல முறையைத் தந்து இத்தகைய கிரிவலத்திற்கு இடர்களையும் “கருங்குருவி வலம்” எனப் பெயரிட்டதோடு அக்குருவிகளின் தியாகதைப் போற்றும் வண்ணமும், அவை ஆனந்தம் அடைவதற்காகவும் தம் மானுட உடலையும் களைந்து கருங்குருவி உருக்கொண்டு சிறிது நேரம் அவைகளுடன் பறந்து நல்வரமளித்தார்! கருங்குருவிகள் கிரிவலம் வந்த பின் அவை எந்த இடத்தில் அமர்கின்றனவோ, அவ்விடத்தில் தம் கிரிவலப் பலன்களை நிரவிடும்! பொன் முத்திரைய சித்தர் அளித்த சிவ ஆணைப்படி, அவருடைய சித்த ரூப ஆசிகளின் படி கருங்குருவிகள் தம்முடைய கிரிவலப் பலன்களை, குறித்த சில தரிசனப் பகுதிகளில் பதித்துச் சென்றுள்ளனர்.

இத்தகைய கிரிவல தெய்வீக ரகசியங்களே சித்புருஷர்களின் ஞானபத்ர விளக்கங்களில் காணக் கிடக்கின்றன. இவைதாம் நம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் குருவாய் மொழிகளாக, அவர்தம் சிஷ்ய பாதத் தொண்டராம் நம் குருமங்கள கந்தர்வா சக்தி ஸ்ரீஅங்காளபரமேஸ்வரி அடிமை ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளாக ஞானார்த்த தொகுப்பாக இங்கு நமக்குக் கிட்டியுள்ளன.

கருங்குருவிகள் பெற்ற அற்புத சித்தி!
கருங்குருவிகளின் கிரிவலப் பலன்களாக அவை கூடு விட்டுக் கூடு பாயும் தெய்வீக சக்தியைப் பெற்றன. கூடு விட்டு கூடு பாய்வதென்பது வெறும் வித்தையல்ல. இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்துக் கோடி நட்சத்திர மண்டலங்களுக்கும், கோடானு கோடி அண்டங்களுக்கும் கண் இமைப்புப் பொழுதில் சென்று நற்காரியங்களை நிகழ்த்தி வருதலே கருங்குருவிகள் பெற்ற கூடு விட்டுக் கூடு பாயும் தெய்வீக சக்தியாகும். ஆனால் இன்றைய மனிதன் இந்த தேவசக்தியில் ஒரு சிறிதைப் பெற்று விட்டாலே போதும் விஞ்ஞானப் பூர்வமாக அதைத்  தோண்டிக் கிளறி, தேவையற்ற ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு இவற்றைத் தவறாகப் பயன்படுத்திப் பெரும் சாபத்தைத் தேடிக் கொள்வான். கடல் நடை, தூர நடை, பிருத்வி நீரோட்ட நடை என்ற பலவிதமான கூடு விட்டுக் கூடு பாயும் வேத வித்தைகள் உண்டு. கடலுக்கு அடியிலுள்ள எத்துணையோ அண்டங்கள், மனிதனால் நடந்து மட்டுமே அடையக் கூடிய இடங்கள், நீருக்குள் புகுந்து சென்று அடைய வேண்டிய இடங்கள், யோக நிலையில் காண வேண்டிய இடங்கள் எனப் பல சூட்சும இடங்களுக்குச் சென்று வருதலே கூடு விட்டுக் கூடு பாயும் தெய்வ சித்தியாகும். ஆனால் நடைமுறையில் இது தவறாகக் கொள்ளப்படுகிறது. எனவேதான் சித்புருஷர்கள் இதனை ஆழ்நிலைக்கோளப் பயணம் என்று விளிக்கிறார்கள். உறக்க நிலை, கனவு நிலை தாண்டி, இவை இரண்டுமற்ற, கனவற்ற நிலையையும் தாண்டிய ஆழ்நிலையில் விண்வெளி லோகங்களுக்கெல்லாம் செல்லக்கூடிய இறைப்பெரு வரமே கூடுவிட்டுக் கூடு பாயும் சித்தியான ஆழ்நிலைக் கோளப் பயணமாகும். இதனை இடர்களையும் கருங்குருவி கிரிவலப் பயனாக, அருணாசல கிரிவலப் பலன்களாக மட்டுமே குருமூலமாக பெற முடியும்.

இடர்களையும் கருங்குருவி கிரிவல முறை!
இடர்களையும் கருங்குருவி கிரிவல தரிசனத்தைத் தொடங்க வேண்டிய இடம் திருஅண்ணாமலை அருணாசல சிவாலயத்தில் உள்ள பைரவர் சந்நதி ஆகும். பிரம்ம தீர்த்தம் அருகே உள்ள அஷ்ட பைரவர் சந்நிதி மண்டபத்தில் ஒவியங்களாகப் பல பைரவ மூர்த்திகளின் தரிசனத்தை கண்டிடலாம். இங்கு தொடங்குகின்ற கிரிவலமானது ஆனைத் திறை விநாயகர் தரிசனம், ஸ்ரீபிரம்ம லிங்க தரிசனத் தோடு பசுமடத்தில் பசுக்களின் தரிசனமும் மிக முக்கியமானதாகும். அதாவது பிரம்ம லிங்கத்தை அடுத்து வலப் பகுதியில் முன்பு கோசாலையாகிய பசுமடன் அமைந்து இருந்தது.. நூற்றுக்கணக்கான பசுக்கள் இங்கு விருத்தியாகிக் கொண்டு இருந்தன. முன் அனுமதியுடன் இது பற்றித் தற்போது விசாரித்தல் சிறப்புடையது. ஆனால் இடர்களையும் கருங்குருவி கிரிவல வரிசையில் ஸ்ரீபிரம்மலிங்க தரிசனத்தை அடுத்துப் பசுமடத்தில் பசுக்களின் தரிசனம் விதிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் சித்தர்கள் மற்றும் தேவாதி தேவர்கள், கோடானு கோடி தேவாதி தேவ தெய்வ மூர்த்திகள் உறைகின்ற சுபச்சின்னமாக பசுக்களும் குறிக்கப்படுகின்றன. இதன் பிறகு தெற்கு கோடி வாசல் வழியாக கிரிவலம் வழக்கம் போல் தொடர்கின்றது.

ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள் ஆஸ்ரமத்திற்கு முன்பாக ஸ்ரீஅக்னிலிங்கம் செல்கின்ற பாதைக்கு அருகில் இருப்பதுதான் ஒரு காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்கிய இந்திர தீர்த்தமாகும். ஸ்ரீஇந்திர லிங்கம் வேறு, ஸ்ரீஇந்திர தீர்த்தம் என்பது வேறு. ஸ்ரீ இந்திர லிங்கம் என்பது கிழக்கு கோபுரத்திற்கு எதிரே தேரடி அருகே இருப்பதாகும். ஆனால், மிகவும் பிரம்மாண்டமாக ஒரு காலத்தில் பிரசித்தி பெற்று விளங்கிய இந்திர தீர்த்தம் தற்போது அசுத்தமடைந்து வருவது மனதுக்கு வேதனைத் தருவதாகும்.  திருஅண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள தீர்த்தங்களை எல்லாம் தக்க அனுமதியுடன் நன்முறையில் சீரமைத்துத் தருவது வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியம் என்பதை வசதி உள்ளோரும், செல்வந்தர்களும், திருஅண்ணாமலை வாசிகளும் உணர்ந்து இதனைத் தம் வாழ்வின் அரும்பெரும் திருப்பணியாக ஆற்றிட வேண்டுகின்றோம்.

கொடுமுடி லிங்கமுக தரிசனம்!
இந்திர தீர்த்தத்தை நோக்கி ஒரு காலத்தில் பட்சி ராஜ மண்டபம், பசு பூஷண மண்டபம், அஸ்வத பால மண்டபம், கர்த்தப மண்டபம் எனப் பலவித மண்டபங்கள் தீர்த்தக் கரையில் நிறைந்து இருந்தன! பலவிதமான ஜீவன்களுக்கு இங்கு ஜீவ விருத்தி அளிக்கப்பட்டது. இந்திர தீர்த்தம் அருகே எத்தனையோ பழமையான அரச மரங்களும் ஆல மரங்களும் அக்காலத்தில் வளமோங்கி நின்றன. தற்போது இருக்கின்ற ஓரிரண்டு பழமையான மரங்களில்தான் இங்கு நாம் குறிப்பிடுகின்ற கருங்குருவிகளின் தரிசனம் காணக் கிடைக்கும். பாக்யம் உள்ளோர்க்கு பொன் முத்திரையராக வருகின்ற பைரவ மூர்த்தியின் அருள் நிறைந்த கருங்குருவிகளின் தரிசனமும் நிச்சயமாக இங்கு கிடைக்கும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வருவோர்க்கு இத்தகைய காட்சிகளை அருணாசலப் பெருமானே பெற்றுத் தருகின்றார். இம்மூன்று நாட்களில்தான் ஸ்வர்ண பைரவர் பொன்முத்திரைய சித்தராக மானிட ரூபத்திலும் குறித்த சில ஹோரைகளில் கருங்குருவி வடிவத்திலும் காட்சி தந்து அருள்பாலிக்கின்றார். குறித்த ஹோரை நேரத்தில் இந்திர தீர்த்தம் அருகே நாம் காண்கின்ற தரிசனமே கொடுமுடி லிங்கமுக தரிசனம்! இங்குள்ள பழமையான அரச மரத்திலோ, ஆல மரத்திலோ வேறு விருட்சங்களிலோ வாயில் வேர் தாங்கிய கோலத்தில் கருங்குருவி தரிசனம் தேவதரிசனமாகக் கிட்டும் குருவருள் கூடியோர்க்கு!

இந்த அருமருந்து மூலிகை வேரானது தேவ லோக மூலிகையாகும். திருஅண்ணாமலையில் குறித்த தரிசனப் பகுதியில் மட்டுமே கிடைக்கும்! வாயில் வேர் தாங்கிய கருங்குருவி தரிசனம் கிட்டுவோர்க்கு, அவர்களுடைய பலவிதமான அபிலாசைகளையும் கிரிவல பலன்கள் நன்முறையில் பூர்த்தி செய்துதரும்! இந்த மூன்று நாட்களிலும் இம்முறையில் கிரிவலம் வருகின்ற போது நாம் இங்கு ஞானபத்ரக் குறிப்பில் இருந்து காட்டப்படும் இடங்களில் கருங்குருவியின் தரிசனம் கிட்டுகின்றதா என்று நன்கு கவனித்துப் பார்க்கவும். இந்த கிரிவல முறையில் குறித்த சில தரிசனங்களை மட்டும்தான் நாம் விவரிக்கின்றோம். ஏனையவை தேவ ரகசியமாகவே குருமூலம் உண்ர்வதாகவே விளங்கும் எனினும் ஒவ்வொரு அங்குல நடைக்கும் நீங்கள் அண்ணாமலை உச்சியை தரிசித்துக் கொண்டே வருவீர்களேயானால் உங்களையும் அறியாமலேயே சூட்சுமமாகப் பல கோடிக்கணக்கான தரிசனங்களையும், தரிசன பலன்களையும் பெறுகின்றீர்கள் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் மிக முக்கியமான விக்ரம ஆண்டிற்கு உரித்தான கார்த்திகை தீப உற்சவத்தில் இடர்களையும் கருங்குருவி கிரிவல முறையைத் தவற விட்டிடாதீர்கள்! கிரிவலப் பாதை எங்கும் ஆங்காங்கே கருங்கருவி தரிசனம் கண்டிட உங்களுடைய கிரிவல பலன்கள் உங்களுடைய தரணி பந்து பித்ருக்களின் ஆசியால் மகத்தான தெய்வீக சக்திகளைக் கொண்டு விளங்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

மயூர தீர்த்தம்!
ஆழ்ந்த இறை நம்பிக்கையும் குருவருளும் பெருகப் பெருக இவற்றை எல்லாம் நீங்கள் கண்கூடாக உணர்ந்து அறிந்திடலாம். இந்திர தீர்த்தத்தை அடுத்து கிரிவலத்தில் ஸ்ரீரமணாஸ்ரமத்தையடுத்து வலப்புறம் வருவது மயூர தீர்த்தம் ஆகும். இதற்கும் எத்தனையோ பெயர்கள் உண்டும். இவ்விடத்திலும் பழமையான அரசு, ஆல் சமித்து விருட்சங்களில் கருங்குருவி, மயில் தரிசனத்துடனும் கூடிய அண்ணாமலை தரிசனத்திற்கு மயூர சப்த லிங்க முக தரிசனம் என்று பெயர். நீங்கள் இங்கிருந்து இந்த தரிசனத்தைப் பெறுகின்ற போது மயில் கூவும் சப்தம் கேட்குமாயின் இதுவே விசேஷமான தரிசனப் பலன்களைத் தருகின்றது!

நல்லவேலை கிட்டிட!
பொதுவாக நல்ல வேலை வாய்ப்புகளைச் சரியாகப் பெறாதோர், அகங்காரம், ஆணவம், காரணமாக வேலையை விட்டுப் பிறகு ஏன் பதவியை விட்டோம் என்று கஷ்டப்படுவோர், வேலையை இழந்து தவிப்போர், அலுவலக இடர்களினால் மன அமைதியின்றி இருப்போர் போன்றோருடைய துன்பங்களும், மன வருத்தங்களும், ஏக்கங்களும் தீர்வதற்கு மயூர சப்த லிங்க முக தரிசனப் பலன்கள் உதவுகின்றன . பொதுவாக வாழ்வில் நல்ல பணியில், தொழிலில் அமர்ந்து நன்னிலையைப் பெறுவதற்கு இந்த தரிசனம் இத்திருநாளில் உதவுகின்றது., தரிசனத்தின் போது, மயில் கூவுதல் முக்கியமானது! அடுத்து வருவது சிங்க முக தீர்த்தம் ஆகும். பித்ரு தர்ப்பணத்திற்கு உரித்தான தீர்த்தம் இது.!

பால சூரிய ராஜ தரிசனம்
சுதையிலான சிங்க வடிவத்தைக் கொண்டு இத்தீர்த்தத்தை நீங்கள் அறிந்திடலாம். இதற்கு எதிரில் ஸ்ரீதண்டாயுதபாணி ஆலய மண்டபமும் உண்டு. நீங்கள் இங்கிருந்து பெறுகின்ற தரிசனத்திற்கு பால சூரிய ராஜ தரிசனம் என்று பெயர். நீங்கள் தரிசனம் பெறுகின்ற நேரத்தில் ஸ்ரீதண்டாயுபாணி ஆலய மண்டபத்தின் மேல் கருங்குருவி அமரும் தரிசனம் கிட்டி அது பசும்புல் மாணிக்க வேர் என்ற அரிய வேரைத் தன்னுடைய அலகில் தாங்கிக் கொண்டு இருந்தாலோ அல்லது கருங்குருவி குரல் கொடுத்தாலோ இவை உத்தம கிரிவல தரிசனப் பலன்களாக அமைகின்றன.

சிசேரியப் பிறப்பிற்கோர் பிராயசித்தம்!
பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாதோர்க்கு நன்மை தரக் கூடிய தரிசனம் இது. செவிலித்தாய்கள் (Nurses), முக்கியமாக பாலவாடி ஆயாக்கள், குழந்தைக் காப்பகங்களில் பணிபுரிவோர், பெண் நல மருத்துவர்கள் (Gynaecologist) போன்றோர்க்கு நன்மை பயக்கக் கூடிய தரிசனம், சிசேரியன் முறையில் பிறந்தோரும், இம்முறையில் குழ்ந்தையைப் பெற்றோரும் இந்நாளில் பால சூரிய ராஜ தரிசனத்தைப் பெறுதல் மிகவும் விசேஷமானதாகும். பொதுவாக யோனி முறை பிறப்புதான் சிறப்புடையது. ஆனால் தற்காலத்தில் சிசேரியன் என்ற முறையில் வயிற்றைக் கிழித்து ரண வேதனைகளின் ஊடே வெளி வருகின்ற குழந்தைகள் ஆளான பின்னரும், இத்தகைய தாய்மார்களும் சில பரிகார முறைகளை மேற்கொள்தல் சிறப்புடையதாகும். அவற்றில் ஒன்றுதான் இந்த சிங்க முக தரிசனமாக திருஅண்ணாமலைப் பெருமானைத் தரிசித்து பச்சை மிளகாய், மாதுளை, பரங்கி, பூசணி போன்ற கீற்று உணவு வகைகளை தானமாக அளிப்பது தக்க பிராயச்சித்தமாக அமைகின்றது. இதனால் அவர்களுடைய சந்ததிகளில் இயற்கை முறையிலான குழந்தைப் பிறப்பும், நல்ல சந்ததி விருத்தியும் சிறப்புடன் விளங்குவதற்கு நற்பலன்கள் கைகூடும். அடுத்து வருவது பிருத்வி நந்தி தரிசனம் ஆகும். பிருத்வி நந்திக்கு பின்புறத்தில் அற்புதமான தீர்த்தம் ஒன்று உண்டு. இதனைத் தற்போது பலரும் தரிசிக்காமல் வந்து விடுகின்றார்கள். இனியேனும் இத்தீர்த்தத்தின் மகிமையை அறிந்து கொள்ளுங்கள். பிருத்வி நந்தியில் இருந்து கிட்டும் அண்ணாமலை தரிசனமானது சற்றே மர இலைகளால் மறைந்து காணப் பெறும், எல்லா சமயங்களிலும் இங்கிருந்து ஒரே மாதிரியான தரிசனம் கிட்டுவதில்லை. கோடை, குளிர், இளவேனிற் காலம் போன்று இதனுடைய தரிசனம் மறைந்து மாறிக் கொண்டே இருக்கும்.

மறைந்த மாமறை தரிசனங்கள் !
இன்றைக்குச் சுமார் 50/100 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டிய பல அற்புதத் திருஅண்ணாமலை தரிசனங்கள் எல்லாம் இன்றைக்கு உயரமான கட்டிடங்கள், மரங்கள், சாலை மாற்றங்கள் காரணமாக இறைநியதியாகவும் மாயையாகவும் மறைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை நீங்கள் உணர்ந்தாக வேண்டும். ஒரே ஒரு முறை கிரிவலம் வந்து குறித்த சில தரிசனங்களை பெற்றால் எளிதில் கைமேல் பலன்களை தரக்கூடிய பல தரிசனங்கள் இன்று மறைக்கப்பட்டுவிட்டன. அதில் ஒன்றுதான் பிருத்வி நந்தியில் இருந்து நாம் பெறுகின்ற தரிசனமாகும். இப்பகுதியில் மரங்கள், திருஅண்ணாமலை தரிசனத்தை மறைப்பது போல் தோன்றினாலும் இந்த தரிசனங்கள் கலியுகத்திற்கு ஏற்புடையது அல்ல என்று இலை மறை தரிசனமாகவே இவை இன்றும் விளங்குகின்றன. ஆனால் குரு மூலமாக இவற்றைத் தரிசனம் பெறுவோர்க்குப் பளிச்சென்று மலை தரிசனம் தெரிய வரும்! இதுவே குருவின் அருட்கடாட்சமாகும்.

பிருத்வி லிங்க தீர்த்தமானது மிகவும் விசேஷமானதாகும். நீங்கள் இன்று, இங்கு கிரிவலம் வரும்போது பிருத்வி நந்தி மண்டபத்திலோ அல்லது பிருத்வி நந்தி தீர்த்தக் கரையிலோ கருங்குருவியின் தரிசனம் கண்டால் அது மிகவும் பெறுதற்கரிய பாக்யமாகும். தன் அலகில் ஒரு வேரைத் தாங்கிக் காட்சி தருதலும் கருங்குருவி ஒலி எழுப்புவதும் கிரிவலத்தில் கொண்டுள்ள ஆழ்ந்த நம்பிக்கையைக் காட்டுகின்றன! பிருத்வி நந்தியிலிருந்து திருஅண்ணாமலையைத் தரிசிப்பதற்கு பரப்புக் கொத்து முகலிங்க தரிசனம் என்று பெயர். இலைகள் சற்றே காற்றில் விலகும் பொழுதுதான் இங்கிருந்து நீங்கள் திருஅண்ணாமலையைத் தரிசிக்க இயலும், மறைமுக தரிசனங்களுள் இதுவும் ஒன்று!

செல்வாக்கு, புகழ் பெற.... உலகப் புகழ் அடைந்திட.. 
உங்களுடைய பித்ருக்களின் ஆசிர்வாதத்தால் இங்கு பிருத்வி நந்தி மண்டபத்தில் கருங்குருவியானது தன் வாயில் பஞ்ச ஒளி ஜோதி விருட்ச வேரைத் தாங்கியிருக்கின்ற அற்புதக் காட்சியைக் காணலாம். இத்தரிசனம் பெறுவோர்க்கு வாழ்வில் பெயர், புகழ் நிறைந்து விடும். மிகச் சிறந்த பிரபலமான தொழிலதிபராகலாம். இன்றைக்கும் உலகில் முக்கியமான பெரும் புள்ளிகளில் ஒருவராக பெயர், புகழ் செல்வாக்குடன் மிளிர இந்த பஞ்ச ஒளி ஜோதி விருட்ச வேர் தாங்கிய கருங்குருவி தரிசனம் பெரிதும் உதவும். இன்றைக்கு உலகிலுள்ள பெரிய பெரிய தொழில் அதிபர்களும், கம்ப்யூட்டர் துறையில் உலகிற்கே முன்னோடியாக விளங்கியிருப்போரும், ஒரு காலத்தில், ஒரு பிறவியில் இங்கு இப்பஞ்ச ஒளி ஜோதி விருட்ச வேர் தாங்கிய கருங்குருவியின் தரிசனம் பெற்றவர்களே என்பதில் ஐயமில்லை.!

இடர்களைக் களையும் கருங்குருவி கிரிவல பலன்கள்!  மேலும் எத்தகைய இடர்களைய்ம் களைவதற்கான கிரிவல பலன்களை இந்த இடர்களையும் கருங்குருவி கிரிவலம் தருவதாக சித்புருஷர்களின் ஞானபத்ர வேத வாக்கியங்கள் அளிக்கின்றன!  ஏனைய கிரிவல இரகசியங்களைத் தக்க சற்குரு மூலம் அறியவும். இதன் பிறகு தொடரும் கிரிவலமானது மேலும் அற்புத மலை தரிசனங்களையும், நந்தி தரிசனங்களையும் கொண்டு ஸ்ரீஉண்ணாமுலை தரிசனம் வழியாக இறுதியில் ஸ்ரீபூதநாராயணர் சந்நிதியிலிருந்து பெறும் தரிசனத்திற்கு (திரு) மால்வதன வலியதாய தரிசனம் என்று பெயர்.

கருங்குருவிக் கூட்ட தரிசனம்!
அபூர்வமாக, இந்த கிரிவலத்தில் கருங்குருவிக் கூட்ட தரிசனம் கூட கிடைக்கக் கூடும். ஒன்றை மனதில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த கிரிவலத்தில் எத்தனைக்கெத்தனைக் கருங்குருவியைக் கூட்டாகவோ, தனியாகவோ, பலவாகவோ தரிசிக்கின்றீர்களோ, அவை குரலெழுப்பி மகிழ்கின்றனவோ, அல்லது அவை தம் அலகில் வேரைச் சுமந்து காட்சி தருகின்றனவோ அந்த அளவிற்கு நீங்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் பித்ருக்களின் மகத்தான ஆசியுடன் கூடிய கிரிவலமாக இது மலர்கின்றது என்பதை உணர்ந்திடுக! இவையாவும் உத்தம தெய்வீகப் பலன்களாகப் பரிமளிக்கும் என்றும் அறிந்து தெளிந்திடுக!

எனவேதான் இவையனைத்தும் குருமுகமாக அறியப்படுவதாக வைக்கப்பட்டுள்ளன. எனவே வரும் விக்ரம ஆண்டு கார்த்திகை தீப உற்சவத்தின் முதல் மூன்று நாட்களிலும் ஸ்ரீஸ்வர்ண பைரவ மூர்த்தியே பொன்முத்திரையர் சித்தராக வந்து கருங்குருவிகளுடன் கூடியதாக அமைகின்ற பைரவ பகவானின் தெய்வீகக் கிரிவல முறைகளை அறிந்திடுவீர்களாக! பைரவ பகவானே தம் தெய்வத் திருவருட் பஞ்ச பூத தேவ சக்தி அம்சங்களை எதிர்காலத்தில் எத்துணையோ கோடி ஆண்டுகள் சிரஞ்சீவியாக விரவியிருக்குமாறு அண்ணாமலை தரிசனங்களில் பதித்துள்ளார்!

வெளிநாட்டு வாழ்க்கை சிறந்திட ...
தற்காலத்தில் வெளியூர், வெளிமாநிலம் மற்றும் அண்டை நாடுகளில் பணிபுரிவோர் நலமுடன் வாழவும், அங்குள்ள துன்பங்களுக்கு நன்முறையில் தீர்வு பெறவும் வரும் விக்ரம ஆண்டு கார்த்திகை தீப உற்சவ இடர்களையும் கருங்குருவி கிரிவல முறை பெரிதும் உதவுகிறது. இத்தகைய கிரிவலத்தை மேற்கொள்வதற்காகக் கார்த்திகை தீப உற்சவ மூன்று நாட்களில் மானுடவடிவில் கிரிவலம் புரியும் ஸ்ரீஸ்வர்ண பைரவ மூர்த்தியாம்சமாம் பொன் முத்திரியரையாக கிரிவலம் வந்து தீபத் திருநாளில் அஷ்டபைரவ ஆலய மூலவரில் மீண்டும் பரிமளிக்கிறார்.

அருணை கிரிவலம் வந்த அற்புத சித்தர்கள்! 
2. ஸ்ரீபெத்த நாராயண சித்தர்!

ஸ்ரீஅகஸ்திய விஜய ஆன்மீக இதழின் தலையாய இறைப்பணிகளில் ஒன்றாக நம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருளாணைகளுள் ஒன்றே திருஅண்ணாமலையிலும் இந்த பிரபஞ்சத்திலும் கடந்த பல கோடி யுகங்களில் நிறைந்திருந்த தற்போதைய கலியுகம் அறியாத பல சித்புருஷர்களைப் பற்றிய இறைலீலா அனுபூதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதாகும். இவ்வகையில், பெத்த நாராயண சித்தர், பெருமானந்த சித்த  சுவாமிகள், பொன் முத்திரையர் போன்ற நாம் அறிந்திராத காலப் போக்கில் இம்மனித சமுதாயம் மறந்து விட்ட பல அற்புத சித்புருஷர்களைப் பற்றிய தெய்வீக விளக்கங்களை எடுத்தளித்து வருவதும் நம் ஆஸ்ரம இறைத் திருப்பணிகளில் ஒன்றாகும். இவ்வகையில் பெத்த நாராயண சித்தர் என்பார் திருஅண்ணாமலையில் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்து எத்தனையோ கோடி ஜீவன்களுக்கும் தேவாதி தேவர்களுக்கும் உய்வளித்த சித்புருஷர் ஆவார். நம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள் இவரைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் பெத்த நாராயணனுடுடா என்று கண்களிலே நீர் பனிக்க மகா ஆனந்தத்துடன் உணர்ச்சிப் பூர்வமாகக் குறிப்பிடுவார்.

நெற்றி நிறையப் பெரிய பட்டையான திருமண் நாமம் சார்த்தி, வயிற்றிலும், தோள் பட்டையிலும் அரை அடி உயரத்திற்குப் பெருந் திருமண்ணை இட்டு வருகின்ற உத்தம சித்புருஷர் ஆவார். ஏதோ சித்புருஷர்கள் என்றால் சிவனடியார்கள் என்று மட்டுமே எண்ணாதீர்கள்! உலகின் அனைத்து சமயங்களிலும் சித்புருஷர்கள் உண்டு! வைணவப் பாரம்பரியத்திலும் எத்தனையோ சித்புருஷர்கள் உண்டு. ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகள் வைணவத்துறைச் சித்தர் பெரும் பிரானன்றோ! மதுரை அழகர் கோயிலில் ஸ்ரீநடன கோபால நாயகி சுவாமியின் ஜீவாலயத்தை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து குறிப்பாக திருமண சுபமுகூர்த்த நட்சத்திர தினங்களான அனுஷம், மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம் போன்ற நாட்களில் சுமங்கலிகளுக்கு உரித்தான ஒன்பது நவராத்திரி மாங்கல்யப் பொருட்களை பெரிய கண்ணாடி, சீப்பு, தாவணி, ரவிக்கை, குங்குமம், வளையல், கண் மை, மஞ்சள், மருதாணி, போன்றவற்றைத் தானமாக அளித்து வந்தால் ஸ்ரீநடனகோபால நாயகி சுவாமிகளின் ஆசியால் திருமணம் நன்முறையில் கைகூடும்.

கிரிவலத்தில் புஷ்ப அர்ச்சனையாம்!
பல நூறாண்டுகள் வாழ்ந்த பெத்த நாராயண சித்தரின் அற்புதக் கிரிவல முறை என்னவெனில், இவர் எப்போதும் தோள்பட்டைகள், வயிறு, இடுப்பு அனைத்திலும் பூக்குடலைகளைத் தாங்கியிருப்பார். ஒவ்வொரு அங்குல கிரிவல அடி நடைக்கும் ஒரு பூவை அர்ச்சனையாக மலையை நோக்கி இடுவார். இவ்வாறு கிரிவலப் பாதை முழுதும், அவர் அர்ச்சித்த பூக்களில் சில விண்ணிலேயே தங்கிவிடும், ஒரு சில மட்டுமே கண்ணுக்குப் புலப்படும், சில மலர்கள் மலையில் பதிந்து விடும். பலவும் விண்ணில் மறைந்து விடும்! இச்சித்தர்பிரான் விதவிதமான பூக்களை அர்ச்சித்தவாறே திருஅண்ணாமலையை கிரிவலம் வந்திடுவார். எந்த நேரத்தில்  எவ்விடத்தில் இவருடைய புஷ்பார்ச்சனை கிரிவலம் நடந்து கொண்டுள்ளது என்பது எவரும் அறியாத இறை ரகசியம்.

பெத்த நாராயண சித்தர் அர்ச்சித்த பூக்களை எவரும் அள்ளி எடுத்துச் செல்ல இயலாது, ஏனெனில் அவை எடுக்க முடியாமல் மறைந்துவிடும், அல்லது எடுத்துச் செல்லும் போது வழியில் மறைந்து விடும். ஒரு வாரத்திற்கு வாடாதிருக்கும் இம்மலர்களை இச்சித்தர் பெருமான் எங்கிருந்து கொண்ர்கின்றார் என்பது எவரும் அறியாத தேவ ரகசியமாகவே விளங்கிற்று. ஆனால் திருஅண்ணாமலைப் பகுதியிலிருந்து பெறுதற்கரிய பல மலர்களை அவர் பெற்றிருப்பதைப் பலரும் கண்டிருக்கின்றனர். எப்போதும் கிரிவலம் வந்து கொண்டிருந்த இவர் எங்கு எப்போது ஒய்வு எடுக்கிறார் எங்கு தங்குகிறார் என்பதும் தேவ ரகசியமாகவே விளங்கிற்று. ஒரு சமயம் இந்திர தீர்த்தப் பகுதியில் பலரால் காணப்படுபவர் திடீரென்று வேறு பகுதியில் இருப்பார்! அவர் ஓய்வெடுத்து எவரும் கண்டதில்லை! சுமை தாங்கிகளில் கூட அவர் சாய்வதோ, உறங்குவதோ கிடையாது! பெத்தண்ணா எனப் பலரும் அன்புடன் அழைக்கும் வண்ணம் மிகவும் கருணையுடன் பலருடைய துன்பங்களுக்கும் செவி சாய்த்து அற்புதப் பரிகார முறைகளையும் அளித்து வந்தார். அக்கால கிரிவல முறை வேறு விதமாக இருந்தது. தற்போதைய பெங்களூர் சாலையையும் சற்றே சுற்றி வளைத்திருந்தது!

சிவன் ஈர்த்த சிவனடிப் பொடி!
அற்புதச் சிவனடியார் குடும்பத்திலிருந்த ஓர் ஆச்சி அம்மைக்கு வாழ்வில் மலையளவுத் துன்பங்கள் ஏற்பட்டன! ஆச்சியும் திருஅண்ணாமலையாரை வேண்டிக் கடும் விரதமிருந்தார்! திருஅண்ணாமலை சென்று கிரிவலம் செய்யும் அளவிற்கு அக்காலத்தில் வசதிகள் இல்லாமையாலும், மேலும் குடும்பச் சூழலும் மிகவும் வருத்திடவே ஆச்சியார் திருஅண்ணாமலையாரிடம் மனம் உருகி வேண்டிட, அவருக்கு அசரீரி வாக்கு கிட்டிற்று! “பெத்த நாராயண சித்தரின் புஷ்பத்தைக் கண்டு வா!” என்ற அசரீரி சிவ வாக்காகக் கிட்டிடவே, எதிர்வரும் துன்பத்தையெல்லாம் மன வைராக்கியத்துடன் தாங்கியவாறு ஆச்சியும் திருஅண்ணாமலைத் திருத்தல யாத்திரையை மேற்கொண்டனள்!

மறை(ற)ந்த மறை வாக்கு!
பஸ்ஸில்லாக் காலமது! பல நாட்கள் நடந்து, நடந்து மெய் சோரத் திருஅண்ணாமலையை அடைந்த ஆச்சிக்கு, பெத்த நாராயண சித்தரின் தரிசனம் உடன் கிட்டியது! ஆனால் அவரோ ஏதும் அறியாதவர் போல் பூக்குடலையினின்றும் புஷ்பத்தை எடுத்து அண்ணாமலையாரை அர்ச்சித்தவாறு கிரிவலத்தைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார்! ஆச்சியும் சித்தர் பெருமானைத் தொடர்ந்து சென்றார். அவரைக் கண்ட ஆனந்தத்திலும் திருஅண்ணாமலையாரைத் தரிசித்த பரமானந்தத்திலும் ஆச்சிக்கு அசரீரி வாக்கின் உண்மைப் பொருள் மறந்தே போயிற்று! அதனைச் சற்றே மறந்தவளாய், பெத்த நாராயண சித்தர் அர்ச்சித்த பூக்கள் எல்லாவற்றையும் தொகுத்து ஒரு தனிப் பூக்குடலையில் எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தாள்., ஆனால், என்னே ஆச்சரியம்! சித்தர் அர்ச்சித்த புஷ்பம் ஒவ்வொன்றும் விண்ணில் பறந்து சென்றதே தவிர கீழே விழுந்தது போல் ஆச்சிக்குத் தோன்றவில்லை.

சிவஞானம் பூத்தது!
பெத்த நாராயண சித்தர் ஒவ்வொரு கிரிவலத்தையும் பூதநாராயணப் பெருமாள் திருச்சந்நிதியில்தான் முடித்து வைப்பார். கிரிவலப் பாதையெங்கும் நெடுந்தூரம் சித்தரைத் தொடர்ந்த ஆச்சி பூத நாராயணர் சந்நிதியில்தான் புஷ்பமானது பரவெளியில் செல்வது போல் சென்று பூமியில் விழுந்தது கண்டு பரவசமுற்று ஞானோதயம் பெற்றுச் சிந்தித்தனள்! “ஆமாம், நாம் முதலில் என்ன நினைத்தோம்? பெத்த நாராயண சித்தரின் குடலைப் பூக்கள் அனைத்தையும் அள்ளி வந்து விடுவோம் என்றுதானே! நம் பேராசைக்குத் தண்டனையாகவே, மாயையாக இதுவரை ஒரு புஷ்பத்தையும் நம்மால் தொடக் கூட முடியாமல் அனைத்தும் இறைமாமந்திரமாய் மறைந்து விட்டன! இறைவா! என்ன சோதனை இது? இந்த ஒரு புஷ்பத்தையாவது தொடக் கூடிய பாக்கியத்தை அருள்வாயாக!”

அந்த ஒரு புஷ்பம் மட்டுமே அவ்வம்மையின் கண்ணில் தென்பட்டு அதை எடுத்து வைத்துக் கொள்ளும் பாக்கியமும் கிட்டியது.. ஆனால் அதைக் கையில் எடுத்தவுடன் எத்தகைய புனித ஒளி நிறைந்த தேவ புஷ்பம் என உணர்ந்து ஆச்சியும் அப்புஷ்பத்தைக் கொண்டு என்ன செய்வதென்று தெரியாது திகைத்து நின்றனள்.

ஆமாம், தமக்கு இடப்பட்ட ஆண்டவன் கட்டளை என்ன? பெத்தநாராயண சித்தரின் அர்ச்சனைப் புஷ்பம் கண்டு வா! என்பதுதானே! கொண்டு வா என்பதில்லையே! அனைத்துப் பூக்களையும் திரட்டி வைத்துக் கொள்ள வேண்டுமென்ற பேராசை கொண்டமையால்தான் ஒரு புஷ்பத்தையும் கூட எடுக்க முடியாமல் போயிற்று. தற்போது இப்புஷ்பம் கிட்டியுள்ளதே! இதனை என் செய்வது என மனமார ஆச்சியும் வேண்டிட பூத நாராயண பெருமாளும், “அம்மையே! எம் அடியார் பெத்தண்ணாவிடம் இதனை அளித்திடுவாயாக!” என அருளாணையிட ஆச்சியாரும் பெத்த நாராயண சித்தரைத் தேடி கிரிவலப் பாதையெங்கும் அலைந்தார். அதுவரையில் 48 மணி நேரத்திற்கும் மேலாகச் சித்தரைத் தொடர்ந்து சென்ற ஆச்சிக்கு, இறைவனின் இந்தப் புது இறையாணை கிட்டியவுடன் பெத்த நாராயண சித்தரின் இருப்பிடமே தெரியாமல் போயிற்று. ஒரு வழியாகத் தற்போதைய உண்ணாமுலை மண்டபத்தின் பின்பகுதியில் உள்ள உண்ணாமுலைத் தீர்த்தக் கரையில் பெத்த நாராயண சித்தரை ஆச்சியார் கண்டு மகிழ்வுற்றார். ஆனால் இதற்குள் ஒரு மண்டல காலம் ஓடி விட்டது! எனவேதான் அடியார்க்கு அடியாராக இருப்பதற்கே இறைவன் ஆனந்தம் கொண்டான் போலும்..!

தீர்த்தமாடிய புஷ்பம்!
எத்துணை முறை இதன் வழியே சென்றும் நம் கண்ணுக்கு இவர் புலப்படவில்லேயே! எல்லாம் இறைவன் சித்தம் என ஆச்சி எண்ணியவுடன் தான், “ஆச்சி அம்மையே வாரும்! அண்ணாமலையார் சொன்ன வாக்கியமும் கேட்டோம். அடியேனை விடத் தாங்கள் தாம் அருணாசலப் பெரும்பாக்கியம் பெற்று விட்டீர்கள்... ஏனெனில் பெத்தண்ணாவின் புஷ்பம் எனில் வாடாமல் ஒரு வாரம் தங்குமே எனச் சொல்ல அடியேன் கேட்டுள்ளேன். ஆனால் தாங்கள் ஒரு மண்டலக் காலம் கையில் இந்த ஒரு புஷ்பத்தைத் தாங்கியும் சற்றும் வாடாது நிற்கின்றது எனில் தங்களின் புனிதத் தவமேன்மை பற்றி என் சொல்வது”, எனக் கூறி பெத்த நாராயண சித்தரே ஆச்சியாரை வீழ்ந்து வணங்கிட ஆச்சியாரும் வெலவெலத்துச் சிலை போல் மௌனியானார்!

இதுவும் இறைத் திருவிளையாடலே எனத் தெளிந்து ஆச்சியார் தம் தள்ளாத வயதிலும் பெத்த நாராயண சித்தருடைய இறைத் திருப் பணிக்குத் தம் வாழ்வை அர்ப்பணித்து அவர்தம் மஹிமையை உலகிற்கு உணர்த்தும் வகையில் பணியாற்றலானார்.

கண்ணுக்குத் தெரியா கடவுட் தீர்த்தம் :
பெத்த நாராயண சித்தரின் அருள் மொழி கேட்டு ஆனந்தித்த ஆச்சியம்மை அப்புஷ்பத்தை சித்தரிடமே அளித்திட அவரும், “யாம் இப்புஷ்பத்தை விக்ரம ஆண்டின் திருக்கார்த்திகைத் திருவிழாவின் போது உண்ணாமுலைத் தீர்த்தத்தில் விட்டு விடுவோம். யாரெல்லாம் விக்ரம ஆண்டின் கார்த்திகை தீப கிரிவலத்தின்போது இந்த தீர்த்தத்தை தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு இந்த தேவ புஷ்பத்தின் தேவ சக்தி அருணாசலப் பெருமானின் திருவருளால் வந்தடைவதாக!” என்று ஆசி வழங்கினார்!

இந்த தேவ புஷ்பத்தின் புனித அருட் தன்மை யாவும் கிரிவலப் பாதையில் சுற்றியிருக்கும் 360 தீர்த்தங்களில் நிரவிடும்! ஆனால் தற்போது 10/15 தீர்த்தங்கள் மட்டுமே கண்களுக்குப் புலப்படுகின்றன. அவையும் பெரும்பாலும் கோடையில் வறண்டது போல் காட்சியளிக்கும்! உண்மையிலேயே அருணாசல ஈசன் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு வருவோர்க்குக் காய்ந்து கிடக்கின்ற தீர்த்தங்களில் நீர் ததும்பி வழிவது போல் நன்கு புலப்படும். அறியாதோரும் தெரியாதோரும் நீர் நிறைந்திருப்பதாக மானசீகமாக எண்ணி வணங்குதலே சிறப்பானதாகும். நம் புறக்கண்களுக்குப் புலனாகாத அருட்தீர்த்தம், அருட்கண்களுக்குக் குருவருளால் நிச்சயம் புலப்படும். இவ்வாறாக பெத்த நாராயண சித்தரின் அருள்வழி முறையால் கார்த்திகை தீப உற்சவத்தின் போது கொடியேற்றத்தின் இரண்டாவது தொகுதியான 3 நாட்களிலும் பூதநாராயணர் சந்நிதியில் கிரிவலம் துவங்கி, வன்னி மரப் பிள்ளையார் சந்நிதியில் (வெளிப் பிரகாரத்தில் ஸ்ரீகல்யாண சுந்தரர் சிவ சந்நிதி எதிரில்) சிவன், அம்பிகை, பெருமாள் போன்ற அனைத்து மூர்த்திகளையும் ஒருசேர வணங்கி கிரிவலத்தைத் தெற்கு வாயில் வழியாகத் துவங்கி காண்கின்ற அனைத்துத் தீர்த்தங்களிலும் நின்று வணங்கி மலையைத் தரிசித்து கிரிவலம் வருதல் வேண்டும்.

கிரிவலத்தில் விருட்ச பூஜை!
கிரிவலத்தில் எங்கெல்லாம் பூச்செடிகள் தென்படுகின்றனவோ அவற்றை வணங்குதல் வேண்டும்! (பூவைப் பறித்தல் கூடாது! சிவன் சொத்து!) தாமே தொடுத்த பூச்சரங்களை வழியிலுள்ள நந்தி, லிங்க மூர்த்திகளுக்கும், பூஜைக்குரிய அரசு, ஆல், வேம்பு, புரசு, புன்னை போன்ற சமித்து விருட்சங்களுக்கும் சார்த்தி, புஷ்ப அர்ச்சனை செய்வித்து, “ஓம் ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி!” என ஓதி வணங்கி “ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம்!” என்று ஆங்காங்கே கூறிப் புஷ்பமிட்டு வலம் வருவோர்க்கு பல அற்புதப் பலன்கள் பொழிந்திடக் காத்துக் கிடக்கின்றன.

பகைமை தீர்ந்திட!
மனைவி வகை உறவுப் பகைமையால் குடும்பத்தில் அமைதியிழப்போர் பலர் உண்டு. அடிக்கடி சண்டை, சச்சரவு ஏற்பட்டு, பகைமை ஏற்படுவது பல குடும்பங்களில் சகஜமாக உள்ளது. இத்தகைய உறவுப் பகை தீர்ந்து, இல்லத்தில் அமைதி ஏற்பட இக்கிரிவல பலன்கள் உதவுகின்றன.

பூவை விற்காதீர்கள்!
மேலும் நாள்தோறும் நாம் பூக்களை வைத்து அர்ச்சனை செய்து இல்லத்தில் பூஜித்தாக வேண்டும். ஆனால் பூ அர்ச்சனை என்பது பல இல்லங்களில் இல்லாமல் போய்விட்டது. மேலும் உண்மையில் புஷ்பங்களை விற்கவே கூடாது. பலரும் பூஜை செய்திட அவற்றைத் தானமாகவே அளித்திட வேண்டும். ஆனால் தற்போது எங்குமே பூஜைக்குரிய தேங்காய், பழம் விற்றுப் பல குடும்பங்கள் ஜீவிதம் நடத்துகின்றன. இதற்குரிய பரிகாரத்தைத் தக்க சற்குருவை நாடி அறிந்து செய்திடல் வேண்டும். அக்காலத்தில் இறைவனின் பூஜைக்காகத் தோட்டத்திலுள்ள பூக்களை ஜனங்களுக்காகத் திறந்து விட்ட புனிதர்கள் வாழ்ந்த நாடிது! இன்றும் தோட்டத்தில் புஷ்பச் செடிகளை வைத்திருப்போர் அவற்றைப் பூஜைக்காகத் தானமளித்தல் மிகவும் விசேடமானதாகும். ஆனால் பூவை தானமாகப் பெற்றுக் கொண்டு சுயநல எண்ணத்துடன் தாம் சூடுவதும்/ விற்பதும் சரியல்ல! பூக்களை இறைவனுக்குப் படைத்தபின் அதனைப் பிரசாதமாகச் சூடுதலே சிறப்பானதாகும்!

தாமதத் திருமணக் குறைகள் நீங்கிட!
தக்க வயதில் திருமணம் நடைபெறாமல் வயது முதிர்ந்து திருமணம் கொண்டோர் பலரும் மன நிம்மதியின்றி வாழ்கின்றார்கள். எத்தனையோ சொல்ல முடியாத பிரச்சனைகள் இவர்கள் வாழ்வில் நிரம்பியிருக்கும். இத்தகையோர் திருக்கார்த்திகை தீப உற்சவத்தில் குறித்த நாட்களில் புஷ்பாங்க்ருத கிரிவல முறையில் மூன்று நாட்களும் வந்திட மானுட ரூபத்திலும் வேறு வடிவிலும் இந்நாட்களில் இங்கு கிரிவலம் வருகின்ற நாராயண சித்தரின் அருளாசி பெற்று வாழ்வில் நிம்மதி பெறுவார்கள்..

பெண்களின் துயரங்கள் நீங்கிட...!
தன் கணவனிடம், பிறந்த வீட்டினரிடமும், புகுந்த வீட்டாரிடமும் கூடச் சொல்ல முடியாதவாறு பல பெண்களுக்கும் தம் குடும்பத்தில் எத்தனையோ துன்பங்களுண்டு! இதனால் ஏற்படுகின்ற மன உளைச்சல்களும் ஏராளம்! ஏராளம்! இவற்றை யாரிடம் கூறிப் பரிகாரம் தேட முடியும்? வெளியில் சொன்னாலேயே ஆபத்தாகி விடுமே! இவர்கள் இந்த மூன்று நாட்களும் கிரிவலம் வந்து கிரிவலப் பாதையிலுள்ள நந்தியெம்பெருமான்களின் திருக்காதுகளில் தம் இல்லறத் துன்பங்களை எடுத்துரைத்து பெத்தநாராயண சித்தரின் ஆசியால் தக்க தீர்வுகளைப் பெற்றிடலாம்! கிரிவலப் பாதையில் ஆங்காங்கே உள்ள சமித்து மரங்களைப் (அரசு, ஆல், வேம்பு) பூக்களிட்டு வணங்க வேண்டும்.! குறிப்பாக சூர்ய லிங்கத்தை அடுத்துள்ள புனிதமான இலுப்பை மரங்களுக்கு (செப்டம்பர் 2000 இதழ் பார்க்கவும்) சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வர எத்துணையோ துன்பங்களுக்கு எளிதில் தீர்வு கிட்டும். இப்புனித மரங்களின் புகைப்படங்களைச் செப்டம்பர் இதழில் பிரசுரித்துள்ளோம். இவற்றைச் சுற்றி வந்து பலவித மலர் சூட்டி அர்ச்சனை செய்தலால் குடும்பத்தில் நிம்மதி பெற்றிடலாம்!

அருணை கிரிவலம் வந்த அற்புத சித்தர்கள்!
3. ஸ்ரீசந்தனு பீலி கிருஷ்ண மகானுபாவுலு சித்தர்

என்ன இது? தெலுங்குப் பெயராக , பெரிய பெயராக இருக்கிறது என்று யோசிக்கின்றீர்களா? மகாபாரத காலத்திற்கு முந்தைய காலத்தில் திகழ்ந்த சித்புருஷர் இவர்! ஆமாம்! உங்களால் நம்ப இயலாது! ஏனென்றால், அருணகிரிநாத சித்தருக்கு முற்பட்ட எத்தனையோ ஆயிரம் சித்தர்களை நாம் மறந்து போய் விட்டோமே! நம் கலியுகத்திற்கு முந்தைய துவாபர யுகத்திலும் அதற்கு முந்தைய ஸ்ரீராமர் வாழ்ந்த திரேதா யுகத்திலும் இதற்கு முந்தைய ஸ்ரீஆயுர் தேவி, பரசுராமர், ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீசங்கர்ஷ்ண மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகளும், மகரிஷிகளும், சித்தர்களும் மக்களோடு மக்களாய் உலவி வந்த திரேதா யுகத்திலும் திருஅண்ணாமலையில் வாழ்ந்து சிறந்த சித்புருஷர்களைப் பற்றி முழுவதுமாகவே இந்தச் சமுதாயம் மறந்து விட்டதே! என்ன செய்வது?

எனவேதான் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தின் தலையாய இறைப்பணி என்னவென்றால் இப்பூவுலகு மறந்த சித்புருஷர்களையும் அவர்களுடைய இறை அனுபூதிகளையும் நினைவுபடுத்தி அவர்களுடைய ஜீவாலயங்களையோ அல்லது அவர்கள் வழிபட்ட இடங்களையோ குறித்துக் காட்டி கலியுக ஜீவன்களுடைய இன்னல்களைத் தீர்ப்பதற்கு இவர்களுடைய ஆசிகளைப் பெற்றுத் தரும் நல்வழி முறையேயாம்!

இவ்வகையில் கோடானு கோடி ஆண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் இறைவாசம் கொண்ட ஸ்ரீசந்தனு பீலி கிருஷ்ண மகானுபாவரைப் பற்றி இங்கு காண்போம். வடக்கு முக சித்தர் என்ற பெயரையும் பெற்ற இவர் எப்போதும் வடக்கு நோக்கித் தான் தன் காரியங்களைச் செய்வார்.  அவருடைய தல யாத்திரையும் எப்போதும்  வடக்கு நோக்கிய இருந்தமையால் இப்பூவுலகையே அவர் எத்தனையோ முறை வலம் வந்து விட்டார். அக்காலத்தில் சனாதன தர்ம நாடாக இப்பூவுலகில் எவ்வித நாட்டுப் பிரிவினைகளுமின்றி சமஜீவ சௌக்கியம் நிறைந்த புனித பூமியாக இருந்தது. திருஅண்ணாமலையும் அடர்த்தியான வனங்கள் நிறைந்ததாகவும் எத்தனையோ ரிஷிகளின் பர்ண சாலைகள் கொண்டதாகவும் இருந்தது. இப்போது போல் அக்காலத்தில் திருஅண்ணாமலை அடிவாரத்தில் ஜனவாசம் கிடையாது. திருக்கோயிலூரிலிருந்துதான் கிராம வாசமும், நகர வாசமும் தொடங்கின.

வடக்கு முகச் சித்தர் கூட திருஅண்ணாமலைக்கு வந்த பின்னர்தான் நிதமும் கிரிவலம் வந்து தன் அஷ்ட (எட்டு) திக்கு சஞ்சாரத்தையும் ஏற்றுக் கொண்டார். தினந்தோறும் திருக்கோவிலூரில் பிட்சாமிர்தம் ஏற்று மீண்டும் திருஅண்ணாமலை ஏகித் தம் கிரிவலத்தைத் தொடர்வார்.

வடக்கு திசையின் தெய்வீகத் தன்மைகள்!
இவருடைய நெற்றிப் பட்டையில் விதவிதமான சமித்து விருட்சங்களின் வேர்ப்பட்டைகள் நெற்றிப் பட்டையாகக் கட்டப்பட்டிருக்கும். குறித்த சில சமித்து மரங்களின் வடக்கு முகமாக உள்ள வேர் மூலத்திலிருந்து கடையப்படுகின்ற வடக்கு வேர் லிங்கம், வடக்கு வேர் பிள்ளையார், மற்றும் வடக்கு வேர் வடிவ மூர்த்திகளை வழிபட்டால்  அதியற்புதத் தெய்வீக நல்வரங்களைப் பெற்றிடலாம். இந்த வடக்கு வேர் இரகசியங்களை அறிந்தவரே சந்தனு பீலி கிருஷ்ண மகானுபாவர் சித்தராவார். இவர் சிறு பிராயத்திலிருந்தே கிருஷ்ண பரமாத்மாவின் அற்புத தரிசனங்களைப் பெற்றவர்.

எத்தனையோ தெய்வ மூர்த்திகள் இன்றைக்கும் திருஅண்ணாமலையை தேவ முறையில் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். துவாபர யுகத்தில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா நித்திய சிவ பூஜா முறைகளைக் கைக்கொண்டு அருணாசல புனித பூமியையும் வலம் வந்துள்ளனர். பஞ்ச பாண்டவர்களும் பன்முறை வலம் வந்த புனித பூமியே திருஅண்ணாமலையாம். இச்சித்தர் பிரான் கிரிவலம் வரும் பொழுது தானாக உதிர்ந்து, கீழே கிடக்கின்ற அரசு, ஆல், வேம்பு, புரசு, புன்னை போன்ற சமித்துக் குச்சிகளையெல்லாம் பொறுக்கி எடுத்து வந்து சுத்திகரித்து ஆங்காங்கே உள்ள பர்ண சாலைகளில் வடக்கு நோக்கி அமர்ந்து ஹோமம் செய்திடுவார். மரங்களில் உள்ள வடக்கு திசைக் கனியே ஹோமப் பிரசாதம் ஆகும். இவர்தம் சிறுவயதிலிருந்தே வடக்கு நோக்கிப் பாய்கின்ற புனித நதிகள் (உத்தர வாகினி), வடக்குப் புற ஊற்று உள்ள கிணறு, நீர்ச் சுனைகளில்தாம் நீராடுவார். அன்னம் சமைத்தல், பூஜைக்கான திக்கு, தியானம், தல யாத்திரை அனைத்துமே வடக்கு நோக்கித்தான் இருக்கும். வடக்கு வேர் மூங்கில் குப்பியில் தான் நீர் அருந்துவார். உடலில் இருக்கின்ற சந்தனமும் வடக்கு வேர் சந்தன கட்டையில் இழைத்தது ஆகும். இவர் சிறப்புற பூஜித்த தலங்கள்தாம் வட ஆரண்யம், வடகாசி, வடபழனி, வடமதுரை என்றெல்லாம் புகழ் பெற்றன. வடக்குப் புறம் கோமுகம் உள்ள ஆலயங்களில், வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் மூல மூர்த்தி உள்ள ஆலயங்கள் (உ.ம் சென்னை கோயம்பேடு) போன்றவற்றில் உள்ள தூண்களில் இவருடைய வடிவங்களையோ சூட்சும ஜீவாலய ரூபங்களையோ கண்டு தரிசித்திடலாம். திருஅண்ணாமலையில் உத்தராயணப் புண்ய காலத்தின்போது சூரிய பகவானுடன், யாக்ஞ்யவல்கிய மகரிஷியுடன் சேர்ந்து வடக்குமுக வேத பூஜை செய்யும் பாக்கியங்களைப் பெற்றவர்!

வடக்கு மூலிகை மருத்துவம்!
தம்மை நாடிவரும் பக்தர்களுடைய துயர்களைத் தீர்ப்பதற்காக இவர் எளிய வடக்குமுக பூஜை முறைகளை அளித்திட்டார். எத்தனையோ வியாதிகளுக்கு மூலிகைகளின் வடக்கு வேராலான கஷாயம், பஸ்மம், நெய் வாடகம், கிருதம் போன்றவற்றை அளித்து மக்களுடைய கடுமையான நோய்களுக்கு நல்ல நிவாரணம் அளித்தார். இவரை நாடி வந்த மன்னர்களிடம் வடக்கு கோபுரம், வடபுற சந்நிதிகளை ஸ்தாபித்து அவற்றை பூஜை செய்யும் விசேஷ முறைகளையும் எடுத்துரைத்தார்.

நாயன்மார்கள், மகரிஷிகள், சந்நியாசிகள் போன்றோர் சிதம்பரம், மதுரை போன்ற தலங்களில் வடக்கு முக சித்தர் (சந்தனு பீலி கிருஷ்ண மகானுபாவர் சித்தர்) இலக்கண உத்தர சேவா முறைகளை அறிந்து வடக்கு கோபுரம் வழியாகச் சென்று வழிபட்டு ஆனந்தம் அடைந்தனர். இவ்வாறாக இவர் தினந்தோறும் கிரிவலம் வருகின்ற போது இவரை நாடி வந்த மக்களும் ஏனைய ஜீவன்களும் ஏராளம், ஏராளம்.. இவர் வாழ்ந்த  யுகத்தில் அடர்ந்த வனங்களூடே அருணாசல கிரிவலப் பாதை அமைந்தமையால் தீர்த்தங்களில் அப்போது சிங்கங்கள் நீர் அருந்தும் காட்சி சர்வ சகஜமாக இருந்தது. தர்ம நெறி பிறழாத சிங்கங்கள் இவை! இவ்வகையில்தான் சிங்கமுக வடிவங்களும், சிங்க முக தீர்த்தங்களும் அண்ணாமலையில் ஏற்பட்டன. திருஅண்ணாமலையில் கிரிவலப் பாதையில் குறித்த சில தரிசனப் பகுதிகளில் வடக்கு முகமாகத் தர்ப்பைப் பாயில் அமர்ந்து ஹோம, இறைவழிபாடு, தியான, யோக முறைகளைக் கடைப்பிடிப்பதால் அபரிமிதமான பலன்களைப் பெற்றிடலாம். இவ்வாறாக கிரிவல அடியார்களுக்கு வடக்குமுக பூஜா தாத்பர்யங்களை உணர்த்தியவரே இச்சித்புருஷராவார். எனவேதான் திருஅண்ணாமலை வடக்குப் பகுதியில் வடமூல ஆரண்யேச்வரராக சிவபெருமான் இவருக்குக் காட்சி தந்தார்.

இவருக்கு ஸ்ரீகிருஷ்ண தரிசனமே எங்கும் பிரதானமாகக் கிட்டியமையால் வட மதுராவிலிருந்து வந்த கோகுலத்துப் பசுக்களை ஆநிறை திரை வினாயக சந்நிதி முன் வைத்து கோபூஜை செய்து வழிபட்டு அளப்பரிய தெய்வீக சக்தியைப் பெற்றார். இப்பிள்ளையார் இன்றைக்கும் அண்ணாமலை சிவாலயத்தில் பிரம்ம தீர்த்தக்கரையில் அருள்பாலிக்கின்றார்.

வறுமை நீங்கிட .... :
மிகுந்த வறுமை, பணக் கஷ்டத்தால், வாடுவோர், நண்பர்களிடமிருந்து தக்க உதவியைப் பெற்றிடவும், வியாபாரம், அலுவலகம், குடும்பத்தில் உள்ள பகைவர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்வதற்கும் தாம் எவ்விதக் குற்றமும் செய்யாதிருந்து பிறர் சுமத்திய பழியால் துன்பப்படுவோர்க்கும் இவற்றிலிருந்து மீண்டு நன்னிலை பெறவும் திருக்கார்த்திகை தீப மூன்றாம் தொகுதி நாட்களில் இம்மூன்று நாட்களிலும் கிரிவலம் வருதல் வேண்டும். கிரிவலத்தின் போது கருநீல நிறமுள்ள பண்டங்களை தானமாக அளித்தல் கிரிவலப் பலன்களை மேம்படுத்தும் (உ.ம் கருநீல உடைகள், நீலக் கத்தரிக்காய் சமைத்த உணவு, நாவல் பழம்) இவ்வாறாகத் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து கிரிவல அடியார்கள் பெறுவதற்காக ஆங்காங்கே உள்ள மலை தரிசனங்களில் தம் தவப் பலன்களைப் பதித்துச் சென்றுள்ள சித்தர்கள் கோடானு கோடியாம்! எத்தனையோ மகான்களுக்குத் தரிசனம்  தந்த ஸ்ரீகிருஷ்ணனே இச்சித்தர்பிரானுக்கு திருஅண்ணாமலையில் ஸ்ரீவேணுகோபால கிருஷ்ணனாகக் காட்சி தந்து அருள்பாலித்தார்.

மயிற் பீலிகை தந்த மாயவன்!
தற்போது உண்ணாமுலை அம்பிகை மண்டபம் இருக்கும் இடத்திலிருந்து சற்று தூரத்தில் நான்கு முகங்களுடன் கூடிய மலைத் தரிசனமாக சதுர்முக வேதமுக லிங்க தரிசனத்தைப் பெற்றிடலாம். இங்குதான் அத்திருநாளில் வடமுக பூஜை செய்து ஹோம வேள்விகளை முடித்து இறைவனுக்கு நைவேத்யம் படைத்து அதனை பிரசாதமாக ஏற்க இங்கு வடக்கு முகமாக சந்தனு சித்தர் அமர்ந்த போது வடதிசையிலிருந்து ஒருவர் வந்திடவே பிறருக்குப் பிரசாதம் தந்து தான் உண்ணும் தகைமை கொண்ட சித்தர் அவருக்குப் பிரசாதம் அளித்திட்டார். ஆனால் அவரோ, “நீர் உண்டு எஞ்சியதை யாம் உண்போம்”, என்று குறிப்பிடவே இதைக் கேட்டு அஞ்சினார் சித்தர். “அதிதி ஆத்மாவே! தாங்கள் இவ்வாறு சொல்லலாகுமோ! எச்சிலைப் பிரசாதமாக எவரும் அளிப்பாரோ?”

“குனிந்து  உண்டு பாரும்! குவலயம் தெரியும்”, என்று ஏதோ பரிபாஷையில் வந்தவர் பிடிவாதமாகச் சொல்லிடவே நாளுங் கிழமையுமாய் அதிதியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பதற்காக இவரும் பெருந்தயக்கத்துடன் மனம் ஒப்பினார்! அவருடைய அன்பு மொழிகளில் தன்னை இழந்தாரோ அல்லது ஈர்க்கப்பட்டாரோ தெரியவில்லை சித்தர் பிரான் குனிந்து வடக்கு நோக்கிய வாழை இலையில் பிரசாதம் உண்ண எண்ணிடவே.... வாழையிலையில் தொப்பென்று ஒரு பொருள் விழுந்தது! அதுதான்... மயிற் பீலிகை!!!

ஆம் பூர்ணப் பிரகாச ஜோதிப் பிரவாகம் கொண்ட மயிற் பீலிகை!!!
ஹே! சந்தனு பீலி கிருஷ்ண மகானுபாவுலு!

ஆம்! சாட்சாத் கிருஷ்ண பரமாத்மாவே இவ்வாறு அழைத்து தம் கிரீடத்திலிருந்த மயிற் பீலிகையையே பிரசாதமாக இட்டு சந்தனு சித்தரை சந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவராக ஆக்கினார். இறைப் பரம்பொருளாம் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் திருக்கரங்களால் பெற்ற மயிற் பீலிப் பட்டம் அன்றோ!

பீலிகை சாமரம் தந்த கர்ம நிவாரணம்!
இச்சித்தர் பெருமான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவிடமிருந்து பெற்ற அதியற்புத மயிற் பீலிகையை என் செய்தார்? இப்பீலிகையை ஒரு முறை இவர் வடக்கு திசையில் சற்றே வீசினாலே போதும், எவருடைய தீவினைக் கர்மவினைகளும் பறந்து விடும்! இத்தன்மையில் இன்றைக்கும் பல இடங்களில் மயிற்பீலிகை வீசி அல்லது உடல் மேல் தடவி ஆசி அளிக்கின்ற இறைப் பாங்கினைக் கொணர்ந்தவரே இச்சித்தர் பிரானாகிய ஸ்ரீசந்தனு பீலி கிருஷ்ண மகானு பாவர் சித்தர்.

புற்றுநோய், குடல் அலர்ஜி நோய், இருதய நோய், மூலம், புரையோடிய ரணம் போன்றவற்றைத் தம் மயிற்பீலிகையால் உடலில் லேசாக தேவ காற்று படும்படி சற்றே வீசிக் குணப்படுத்திய சித்தரே வடக்கு முக சித்தர் ஆவார். எனவே தீராத நோய் உள்ளோர் வடக்கு முக வேரினால் செய்யப்பட்ட வேல், சிவலிங்கம், நந்தி, ஸ்ரீபாதங்கள் போன்று தெய்வ மூர்த்தி வடிவங்களை ஒரு மரப்பலகையில் / சந்தனப் பேழையில் தாங்கி இம்மூன்று நாட்களும் கிரிவலம் வந்து இல்லத்தில் இம்மூர்த்திகளைப் பூஜித்தால் நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். தம் பூவுடலைப் பூமிக்கு அர்ப்பணிக்கும் முன் இச்சித்தர்பிரான். அருணாசல வடக்குப் பாங்கில் ஓரிடத்தில் கடுவன் குழிப் பாறை என்ற இயற்கைக் குழியில் மயிற் பீலிகை இட்டு அதியற்புத தேவ சங்குகளாலும், ஒரு கண் தேங்காய்களாலும் தேவலோக சாம்பிராணி மற்றும் அஷ்ட கந்த திரவியங்களையும் இட்டு நிரப்பித் தன்னுடைய அனைத்து தியான யோகா பூஜா பலன்களையும் இதில் யோக மயிற்பீலிகைச்  சக்கரமாகப் பதித்துவிட்டார்.

ஸ்ரீகிருஷ்ண மயிற் பீலிக் காற்று!
இந்த தேவ குழியில் பட்டு வருகின்ற சக்கரவாகக் காற்றானது இம்மூன்று நாட்களிலும் கிரிவலம் வருவோரின் உடலில் தோய்ந்து பல தெய்வீக சக்திகளைக் கூட்டுவித்து நோய் நிவாரணத்தையும், தீவினைகளுக்கான கர்ம நிவர்த்தியினையும் பெற்றுத் தரும். இம்மூன்று நாட்களிலும் கிரிவலப் பாதையில் மயிலின் தரிசனம் விசேஷமானதாகும். இந்நாட்களில் மயில் உண்ணக் கூடிய தானிய வகைகளை எடுத்துச் சென்று அவைகளுக்கு அன்னதானம் இடுங்கள்.

மயிற்பீலி விசேஷமானது என்பதற்காக வதைத்துக் கொல்லப்பட்ட மயில்களின் பீலிகளை ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். இவை சாபத்தையே பெற்றுத் தரும். மயிலைக் கொல்வது பசுவதை போன்று கொடிய பாவமாகும்.இதையொட்டியே திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலும், ஆலயத்திலும் ஸ்ரீகிருஷ்ணன் எழுந்தருளியுள்ளார். எனவே அந்த யுகத்தில் விக்ரம ஆண்டில் சந்தனு சித்தர் கிருஷ்ண பரமாத்மாவிடம் மயிற்பீலி பட்டம் பெற்ற இத்திருநாளில் திருஅண்ணாமலையை விசேஷமான முறையில் கிரிவலம் வருகின்றார்... இத்திரு நாட்களை முன்னிட்டுக் கார்த்திகை உற்சவ நாட்களில் இச்சித்தர் பெருமான் மானுட வடிவில் கலியுக ஜீவன்களின் நல் வாழ்விற்காக கிரிவலம் வருகின்ற உத்தம நாட்களாகும்.

பொதுவாக குழந்தை பாக்கியம் இல்லாதோர், பிள்ளைகள், பெண்கள் இருந்தும் சரியாக கவனிக்கப்படாமல் வருந்துகின்ற பெற்றோர்கள், அனாதை, முதியோர் இல்லங்களில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளோர், தம்முடைய கடைசி காலத்தில் எவர் காப்பாற்றுவார் என்று கவலையுறுகின்றோர் இம்மூன்று தினங்களில் திருஅண்ணாமலை கிரிவலம் வந்து உண்ணாமுலையாள் மண்டபம் அருகே நான்கு முகம் கொண்ட சதுர்வேத லிங்க முக தரிசனம் கண்டும், முடிந்தால் இங்கு ஹோம வழிபாட்டினையும் வேத சக்திகள் நிறைந்த முந்திரிப் பருப்பு, அதிரசம், பாதாம் பருப்பு, செவ்வாழைப் பழம், நெல்லிக்கனி போன்றவற்றை தானமாக அளித்திடலும் வேண்டும்.. நம் ஆஸ்ரமத்தின் அருகே அபய மண்டபக் கோணத்தில் வட ஆரண்ய ஸ்ரீகிருஷ்ண லிங்கமுக தரிசனத்தைப் பெறுதலும் நற்பலன்களை அளிக்கும். இம்மூன்று நாட்களிலும் ஆலயத்தில் வடக்கு கோபுரத்தில் நுழைந்து ஸ்ரீகிருஷ்ணன் சந்நிதியில் வடக்கு நோக்கி சங்கல்பம் செய்து கொண்டு கிரிவலத்தை தொடங்கி பூத நாராயணன் சந்நிதியில் நிறைவு செய்தல் வேண்டும்!

அன்னதான பிரமோற்சவம்

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரம கார்த்திகை தீப அன்னதான பிரமோற்சவம்

நம் பாரத நாட்டிற்கும், இந்த உலகத்திற்கும் மட்டுமல்லாது இந்தப் பிரபஞ்சத்திற்கும் அனைத்து சூரிய, சந்திர கோள்களுக்கும், சகல அண்ட சராசரங்களுக்கும், கோடி கோடி நட்சத்திரங்களுக்கும் ஒளி சக்தியை வழங்குகின்ற பஞ்சபூத அக்னி ஸ்தலமே திருஅண்ணாமலையாகும். எனவேதான் இங்கு அன்னதானம் புரிந்திடில் ஆயிரம் மடங்கு பலன்களைப் பெற்றிடலாம் என்ற இறைநியதி மிளிர்கின்றது. இந்த தான தர்ம நியதிகள் தேவாதி தேவர்களுக்கும் கூட உரித்தானதாகும். பல்வேறு சித்தர்களும் தங்களுடைய தெய்வீகத் தலைமையகமாகக் கொண்டிருப்பதும், சித்தர்களின் இறைப் பாசறையாக விளங்குவதும் திருஅண்ணாமலைத் திருத்தலமே. எப்போதும் எந்நேரமும் கோடிக்கணக்கான சித்தர்களும், மகரிஷிகளும், யோகியரும், முமூட்சுக்களும், பிரஜாதிபதி தேவர்களும், தரணி பந்து பித்ரு மூர்த்திகளும் கிரிவலம் வந்து கொண்டேயிருக்கின்ற தலமும் இதுவேயாம்! திருஅண்ணாமலையில் அன்னம் பாலித்தல் என்பது வாழ்க்கையில் பெறுதற்கரிய இறை அனுபூதியாகும். இயன்றால் நீங்களே இங்கு வந்து அன்னதானம் செய்திடுங்கள். இயலாவிடில் இதனை வேத சத்தியமாய் நடத்துவோர்க்கு உறுதுணையாக நின்றிடுங்கள்! திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவே நம் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் பிரதான பிரம்மோற்சவமாம்! திருஅண்ணாமலையில் இன்றைக்கு ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமமாக மிளிர்கின்ற இறைத் திருப்பணிக்கு அன்னச் சாலையில் தாம் நம் சிவ குருமங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருட் கடாட்சத்துடன் சக்தி  ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள், இறையருளால் மாதந்தோறும் பௌர்ணமித் திதியில் இறையடியார்களுக்கு அன்னப் பிரசாதம் அளித்து வருகின்றார்கள். அன்னப் பிரசாதம் பெறும் லடசக்கணக்கான கிரிவல இறையடியார்களின் திருவடிகளைத் தாங்கிப் பொலியும் ஆஸ்ரமத்தின் பன்னிரண்டு பித்ருப் படிக்கட்டுக்களைத் தொட்டு வணங்குதலே வாழ்க்கையின் பெரும் பாக்கியம் என்று உளம் பூரித்துத் திருவிளக்கேற்றி இங்கு வணங்குகின்றோர் இன்றும் பலருண்டு.

திருஅண்ணாமலையிலே ஆயிரம் அடியார்களுக்கு அன்னம்பாலித்திடில் ஆயிரத்தொன்றாவதாக ஒரு சித்தர் பெருமான் வந்து அன்னம் பெற்று ஆசியளித்துச் செல்கின்றார் என்றால் மனிதக் கணித வாய்ப்பாடின்படி எத்தனை ஆயிரம் சித்தர்களுடைய தெய்வத் திருவடிகள் பட்ட திருப்படிகளாக நம் ஆஸ்ரமப் படிக்கட்டுகள் விளங்குகின்றன என உணர்ந்திடுக!

நம் அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அன்னதான உற்சவத்தின் விசேஷமான அம்சங்கள் என்னவென்றால் இங்கு குருவருள் ஆணையின்படி அனைத்து இறைப்பணிகளுமே பாத்திரங்கள் கழுவுதல், தோட்டத் துப்புரவுப் பணிகள், ஆஸ்ரமத்தை சுத்தம் செய்தல், கழிவறைத் தூய்மை போன்ற அனைத்து இறைப்பணிகளுமே ஆஸ்ரம அடியார்களால் ஆற்றப்படுகின்றன.. கூலி கொடுத்துப் பணியாக்கம் இன்றி உளமார்ந்த ஆத்மார்த்த சேவையே நம் ஆஸ்ரம பாவனமாம். பட்டம் பெற்ற என்ஜினீயர்கள், மருத்துவர்கள், தொழில் நிபுணர்கள், வங்கி உத்தியோகஸ்தர்கள் உள்பட அனைத்துத் துறையினருமே குருவருள் ஆணையாக ஜாதி, மத, இன, குல பேதமின்றி இறைப்பணி புரிகின்றனர் என்றால் கலியுகத்தின் நடைமுறை குருகுலவாச இறை அனுபூதிகள் நிறைந்ததல்லவா நம் ஆஸ்ரம அன்னம்பாலிப்பு பிரம்மோற்சவம்!

அன்னதானமும் கர்மவினைப் பரிகாரமும்!

நம் வீட்டில் முந்திரிப் பருப்பு, கிஸ்முஸ் திராட்சை இட்டு எவ்வாறு நறுமணத்துடன் நல்ல சத்தான ருசியான, உணவைச் சமைத்து உண்கின்றோமோ அதே போல அனைத்து கிரிவல அடியார்களுக்கும், ஏழை மக்களுக்கும் உன்னத நல்லிறைமண உணவுப் பிரசாதம் சென்றடைய வேண்டும் என்ற ஆன்மப் பெருநிலை கூடிய சித்தர்கள் பகர்கின்ற ஆஸ்ரம அன்னதான இலக்கணத்தில் பெருகும் அன்னதானப் புண்ணிய சக்தியில் பரிகாரம் பெறுகின்ற அடியார்களின் கர்ம வினைகள்தாம் எத்தனை! எத்தனை! ஏழைகளுக்கும், கிரிவல அடியார்களுக்கும் மட்டுமா அன்னம் பாலிப்பு நிகழ்த்தப் பெறுகின்றது! இல்லையில்லை, பூர்வ ஜென்ம புண்யவசத்தால் நம்முடைய மூதாதையர்களுக்கும் வெவ்வேறு பிறவி வடிவங்களில் கிரிவல அடியாராக வரும் நாம் அறிந்தரா உறவினர்களுக்கும் நண்பர்களுக்குமாக  நமக்கு நாமே உணவைப் பரிமாறிக் கொள்கின்றோம். இதுவும் அன்னதான சித்தமா இலக்கணச் சந்தங்களில் ஒன்றாம். எவர் வழங்க வேண்டும்., எவர் பெற வேண்டும் என்பதெல்லாம் அருணாசலப் பெருமான் விதித்துள்ள தான, தர்ம நியதிகளின்படிதான் அன்னம் பாலிப்பு நிகழ்ச்சி நிரல்களாகத் திருஅண்ணாமலையில் நடக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்..

சித்தர்கள் வரிசையில் (இறைப்) பித்தராய் அடியார்கள்!
படித்தவர்களும், பாமரர்களும், பெரும் தொழிலதிபர்களும், அனைத்து வர்கத்தினருமே இறைப் பண்பாடு மிளிர வரிசை, வரிசையாக வந்து நம்முடைய ஆஸ்ரமத்தில் அன்னம் பெறுகின்ற இறைத் திருக்காட்சியின் மூலம் நாம் உணர்வது என்னவென்றால் அன்னம் பெறுபவர்களுடைய மனிதப் பெருமேனியில் கிரிவலத் திருவருள் மேன்மையால் அவரவருடைய தரணி பந்துக்களாகிய பித்ரு தேவதைகளும் பித்ரு மூர்த்திகளும் ஆவாஹனமாகி கர்மவினைப் பிராயச்சித்தப் பரிமாற்றமும், கர்ம வினைகளுக்குத் தீர்வுகளையும் அளித்து ஸ்தூலமாயும், சூட்சுமமாயும், சித்புருஷர்களே வரிசக் கிரமத்தில் வந்து அன்னம் பெறுகின்ற வைபவத்தில் நீங்களும் பங்கு கொள்கின்றீர்கள் என்றால் இது அருணாசலப் பெருமானின் இறை லீலைதானே! யார் அறிவார் உங்கள் முன்னும் பின்னும் கிரிவலத்தில் வருவதும் அன்னம் பெறும் வரிசையில் நிற்பதும் உத்தம மூதாதையராம் தரணி பந்துக்களே. சித்புருஷரேயன்றி வேறு எவரும் இலர் என்று?

இறை, மறை நிரவி இலையிலே அன்னம்!
 அன்னதான வைபவத்தில் சித்புருஷர்கள் ஆயிரத்தொன்றாவது மகாஞானியாக வந்து ஏன் பூவுலகில் அன்னத்தைப் பெறுதல் வேண்டும்? ஆயிரம் பேருக்கு அன்னம்பாலித்தல் என்பது வெறும் விளையாட்டன்று. நம் ஆஸ்ரமத்தில் பக்தி சிரத்தையுடன், பரந்த நோக்குடன் ஒருபுறம் ஹோம, யாக, வேள்வி வழிபாடுகள் இன்னொருபுறம் நாம சங்கீர்த்தனம், வடமொழி, தமிழ் மொழி வேத பாராயண மறை ஓதுதல் பிறிதொருபுறம் அருணாசல சிவ, அரங்கநாத வழிபாடுகள் இன்னொருபுறம் சற்குருவின் ஞான மண்டலம், மற்றொருபுறம் இறையடியார்களின் நாம சங்கீர்த்தனம் ‘அண்ணாமலையானுக்கு அரோகரா’ என்ற இறை பீஜாட்சர மாமறை ஒலி இவற்றின் ஊடே தயாராகின்ற அன்னமென்றால் ஆஸ்ரம அன்னப் பிரசாதத்தில்தான் குடியேறுகின்ற தெய்வீக சக்திகள்தாம் என்னே!

அதுவும் குருவருள் ஆணையின்படி தன்னுடைய குருவாய் மொழிகளுக்கேற்பத் திருஅருணாசலத்தில் சற்குருவின் முன்னிலையில் நடைபெறுகின்ற அன்னதானம் என்றால் கலியுகத்தில் காணுதற்கரியது, பெறுதற்கரியது தானே! அன்னம்பாலிக்கும்போது மட்டுமல்லாது அன்னப்பிரசாதம் அளிக்கும்போதும் அற்புதக் கீர்த்தனைகளுடன், இறை நாமத்துடனும், அன்னத்தில் தெய்வீக இறை சக்தியை, ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியை, ஸ்ரீராம நாம சித் சக்தியை, சிவ நாம, அருணாசலச் சுடர் ஜோதியாகப் பரிமாணம் செய்து ஊட்டுவிக்கின்ற உணவென்றால் அதன் மகிமைதான் என்னே! அனைத்தையும் அருணாசலப் பெருமானின் பொன்னடிகளில் அர்ப்பணிக்கின்றோம் குருவருளால்!

மந்திரத் துதி நிறை மந்தார இலை உணவு!
மேலும் அன்னம் சமைப்பது முதல் அன்னம் பரிமாறுவது வரை அனைத்து இறைப்பணிகளும் திருஅண்ணாமலையாரின் நேரடிப் பார்வையில், இறைத் திருநோக்கில் நடைபெறுவதால் ஆஸ்ரமத்தில் அன்னதான உணவில் திரளும் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்தியும், வடமொழி, தமிழ் தேவார, திவ்ய பிரபந்த இறைத் துளிகளின் பீஜாட்சர சக்திகளும், குருவாய் மொழிகளின் குவலயச் சிவ சக்திகளும் ஒன்றாகப் பரிணமிக்கின்றன. அன்னம் பெறுவோருடைய கர்ம வினைகளுக்குத் தக்கப் பரிகாரம் தந்து நல்வரங்களைக் கூட்டி அவர்களுடைய நல்ல அபிலாசைகளைப் பூர்த்தி செய்து கிரிவலப் பிரார்த்தனைகளையும் மேம்படுத்தி அவரவருடைய இல்லத்தார்க்கும் எதிர் வரும் சந்ததியர்க்கும் நல்ல இறை சக்திப் பரிமாணத்தை பெற்றுத் தருவதுதானே பித்ருக்களின் கடமை! இறைவிருட்சங்களான வாழை, மந்தார இலையில் உண்ணும் உணவிற்கு ஆயுள் சக்தியை வளர்க்கும் ஜோதி சக்தி உண்டு! அண்ணாமலையின் சாட்சியாக அவரெதிரில் நடைபெறும் அற்புத தானமன்றோ! இத்தகைய அன்னதான அருட்பணிகளைப் புரிந்திட தங்களுடைய பெருந்துணையையும் வேண்டுகின்றோம். எம் ஆஸ்ரமத்தினுடைய விக்ரம ஆண்டின் அன்னதான பிரம்மோற்சவத் திருவிழாவானது அன்னதான நாட்களாக 7.12.2000 முதல் 10.12.2000 வரை நடக்கவுள்ளது இறைவன் கருணையால்! சித்த வேத மாகுரு குரு பாராம்பரிய இலக்கணப்படி மகத்தான அளவில் யோகியர், மகா சித்தர்கள், மஹரிஷிகளின் அருளாசியுடன் நம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் குருவருள் கடாட்சத்துடன் அவர்தம் சிஷ்யத் தோன்றலாம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய நேரடிப் பார்வையிலும் அன்னம் பாலிப்பு பிரமோற்சவமாக, அன்னதான திருவிழாவாக நடைபெற உள்ளது.. ஆஸ்ரமத்தின் திருவாயிலில் மட்டுமல்லாது நெடுந்தூரம் வந்து அன்னம் பெற இயலாத ஏழைகளுக்கும், பாமரர்களுக்கும், ஊனமுற்றோர், குருடர்களுக்கும், கிராமப் புற மக்களுக்கும் இயன்ற அளவில் திருஅண்ணாமலை கோவில் வளாகப் பகுதிகளிலும், கிரிவலப் பாதையெங்கும் அன்னம்பாலிக்க இறையருளால் ஏற்பாடு செய்துள்ளோம்.. ஆஸ்ரமத்தின் அன்னதானம் மற்றும் பல்வேறு சமுதாய இறைப் பணிகளுக்கான தங்களுடைய பொருளுதவியை மணி ஆர்டர் (MO) , DD/Cheque மூலமாக Sri-La-Sri lobhamatha Agasthiar Sabha Charitable Trust, Chennai என்ற பெயரில் திருஅண்ணாமலை ஆஸ்ரம முகவரிக்கோ அல்லது சென்னை ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயா முகவரிக்கோ அனுப்பிட வேண்டுகின்றோம்.

ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் ,
கிரிவலச் சாலை, ஆடையூர்,
திருஅண்ணாமலை – 606 604

ஸ்ரீஅகஸ்திய விஜய கேந்த்ராலயா
நெ7. சாகாஸ் காம்ப்ளெக்ஸ், P.O Box No. 6303
4, ஸ்ரீகபாலீஸ்வரர் தெற்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை – 4

Donation to the Trust enjoy Tax concessions U/s, 80G OF INDIAN INCOME TAX ACT  vide DIT(E) No.2(467)/93-94 dated 9.10.2000

ஸ்ரீசூர்ய கோடீஸ்வரர்

கண் ஒளிக்கு நல்வரம் தரும் கீழ் சூரிய மூலை ஸ்ரீசூர்ய கோடீஸ்வரர்

சென்ற இதழில் கும்பகோணம் சூரியனார்கோவில் அருகே (கஞ்சனூர் திரைலோக்கி கிராமங்களை அடுத்து) கீழ்ச் சூரிய மூலை கிராமத்தில் கோயில் இடிபாடுகளுக்கிடையில் மூலத்தானத்தில் தனித்தே  வீற்றிருந்து அருள் பாலிக்கும் ஸ்ரீசூரிய கோடீஸ்வர லிங்க மூர்த்தியின் மஹிமையைப் பற்றிச் சித்புருஷர்கள் அருளியவாறு நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் நம் சற்குரு சித்த மஹாப்பிரபுவாம் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளின் குருவருள் மொழியாக சித்புருஷர்களுடைய ஞான பத்ரங்களிலிருந்து தொகுத்தெடுத்த விளக்கங்களை அளித்துள்ளோம் அல்லவா! ஒரு ஆலயத்திற்கு எத்தனையோ வகையான அனுபூதிகள் தலப் புராணங்கள் உண்டு. கோடானு கோடி சதுர்யுகங்களில் அந்தந்த ஆலயங்களில் நிகழ்ந்துள்ள இறைலீலைகள் தாம் எத்தனை எத்தனை கோடி? இவையெல்லாம் தூண், மேற்சுவர், சிலா, சித்த ரூபங்களாக, ஓவியங்களாக, வடிவங்களாக, சிற்பங்களாக ஆலயங்களில் வடிக்கப் பெற்றுள்ளன...
பார்வைக் குறைகள் நீங்கிட....
1. மங்கலான கண் பார்வை உடையவர்கள், ஒருகண் பார்வை, மாறு கண் பார்வை (squint eyedness) cataract, போன்றவற்றால் பாதிக்கப்பட்டுக் குறைந்த பார்வை உடையோர், கண்ணாடி அணிந்திருப்போர், ஆபரேஷனால் கண் பார்வை குறைந்துவாடுவோர் எவ்வகையிலேனும் மாதம் ஒரு முறையாவது இத்தலத்திற்கு வந்து சிவபெருமானைச் சரணடைந்து இயன்ற இறைப் பணிகளை ஆற்றித் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தால் அவர்கள் நிச்சயமாக நல்வழி காட்டப் பெறுவர். தமக்கு வாய்த்துள்ளது பூர்வ ஜென்ம கர்மவினைப்பாடுகளின் தொகுப்பே எனறு உணர்ந்து தெளிவோர்க்குத் தக்க பிராயச்சித்தங்களையும் தந்து அருள்பவரே கீழ்சூரிய மூலை சூரிய கோடீஸ்வர மூர்த்தியாவார்.

ஸ்ரீசூர்யகோடீஸ்வர மூர்த்தி
கீழ்சூரியமூலை

2. பார்வைக் குறைவு உள்ளவர்கள் வசதி உள்ளவர்களாக இருப்பின் கீழ்ச் சூரிய மூலை கிராமத்தையே தங்கள் உறைவிடமாகத் தேர்ந்தெடுத்து ஸ்ரீசூரிய கோடீஸ்வர மூர்த்தியைத் தினந்தோறும் வழிபட்டால் நிச்சயமாக அவர்களுக்கு உத்தமத் தெய்வீக நிலை கிட்டிடும்.. இதற்குத் தகுந்த இறைப் பணிகளையும், இறைச் சேவைகளையும் அவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆற்றி வருதல் வேண்டும்.

3. கண் விழி அடிபடுதல், கண்களுக்கு விபத்து, திடீரென்று பார்வை மங்குதல் போன்ற பல கண் பார்வை குறைபாடுகளினால் அவதிப்படுவோர் கீழ்ச்சூரிய மூலை ஸ்ரீசூரியகோடீஸ்வர லிங்க மூர்த்திக்கு நேர்த்தி வைத்துத் தக்க வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து குறித்த நாட்களில் மேற்கொண்டு வந்திடில் இறையருளால் நல்ல மனச் சாந்தியும், கண் பார்வையும் அமைந்திடும்.

4. சூரிய ஒளி சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி, தொழில் (solar power, solar energy, solar industries) போன்ற பணிகளில் இருப்போர் இச்சூரிய கோடீஸ்வர லிங்க மூர்த்திக்கு உரித்தான இறைப் பணிகளையும், தான தர்மங்களையும் இங்கு தொடர்ந்து செய்து வருதல் வேண்டும். ஏனென்றால் பூலோக சூரிய உஷ்ணம் என்பது, கீழ் சூரிய மூலை ஸ்ரீசூரிய கோடீஸ்வரரின் அருட்பாங்கிற்கு உரித்தானதுதானே! மேலும் பூர்வ ஜென்மங்களில் இம்மூர்த்தியை உபாசனை, செய்தோர் தாம் அறிந்தோ, அறியாமலோ இப்பிறவியில் solar energy, solar heat  சம்பந்தப்பட்ட தொழிலில் தற்போது ஈடுபடுகின்றனர்.

பிரதோஷ பூஜைக்கு ஏங்கிய ஸ்ரீபார்த்திப சூரிய மூர்த்தி!

கீழ் சூரிய மூலை என்பது பிரபஞ்சத்திலே உள்ள கோடானு கோடி கிரக மூர்த்திகளில் அனைத்திற்கும் ஆதி மூல முதல்வரான ஆதித்ய மூல சூரிய பகவானுடைய இருப்புச் சக்கரத்தைக் குறிக்கின்றது! அதாவது சூரிய பகவான் பூவுலகத்திற்கு தினமும் சூரிய கிரணத்தை அளிக்கத் தொடங்குகின்ற அருள்திரு பூமியே கீழ் சூரிய மூலை கிராமச் சிவாலயமாகும்.. தினந்தோறும் சூரிய ஒளிக் கிரணங்கள் இச்சிவலிங்கத்தின் திருமேனியில் படர்ந்து பாஸ்கர பூஜை நிகழும் அற்புதத்தைக் காண்போர் இன்றும் உண்டு. சந்தியா நேரமான காலையும், மாலை அந்திப் பொழுதும் மிகமிகப் புனிதமான நேரங்களாகும். மனிதனுக்கு நாளுக்கு 24 மணி என்ற காலத்தை இறைவன் அளித்துள்ள போதிலும், அதில் பலவிதமான ஆன்மீக ரீதியான காலக் குறியீடுகளையும் அளித்துள்ளான். இந்தக் காலச் சுடர்க் குறியீடுகள்தாம் கால இலக்கணப் பகுப்பு விதிகளாக, அதிய்ற்புத ஜோதிடக் கலையாக, பஞ்சாங்கக் கணித மாமறையாக நமக்குக் கிடைத்துள்ளன. பகலும் இரவும் சேர்கின்ற மாலை சந்தியா நேரமானது தேவ பூஜை காலமாதலின் தேவாதி தேவ மூர்த்திகளின் அனுகிரஹத்தைப் பொழிந்து தருகின்ற நேரமாக அமைகின்றது. இரணிய வதத்தின் போது ஸ்ரீநரசிம்ம மூர்த்தி அந்தி மாலை நேரத்தைத் தானே அரக்க சக்தியை அழித்துப் புண்ய சக்தியையும் நல்வர சக்திகளையும் பெருக்குகின்ற அருட்பெரும் நேரமாக வகுத்துக் கொண்டார்.  

அனைத்துக் கோடி லோகங்களில் உள்ளோரும் பிரதோஷ வழிபாட்டில் பங்குபெற்ற போது சூரிய பகவானுக்கு மட்டும் ஒரு ஏக்கம் ஏற்பட்டது. பிரதோஷ நேரம் என்பது தினசரி மாலைப் பொழுது நேரம் தானே! சூரியன் மறையும் நேரமாதலின் எவ்வாறு சூரிய பகவான் அதில் பங்கேற்க முடியும்? எனவே தாம் தம்பணியில் எப்போதும் ஓய்வின்றி இருப்பதால் பிரதோஷ பூஜையில் பங்கேற்க முடியாமல் போய்விடுமே என்று சூரிய மூர்த்தி வருத்தமடைந்தார்.. இதை யாரிடத்தில் எடுத்துச் சொல்ல முடியும்?

ஸ்ரீசூரிய பகவானிடமிருந்தே வேதங்களைப் பயின்றவர்தாம் யாக்ஞவல்கிய மஹரிஷியாவார். தம் வருத்தத்தை சூரிய பகவான் அவரிடம் எடுத்துரைத்த போது யாக்ஞவல்கிய மாமுனி “பகவானே! தாங்கள் கவலைப் படாதீர்கள் இதற்குரித்தான இறைத் தீர்வை சர்வேசன் தானே முன்வந்து அளித்திடுவான்’ என்று ஆறுதல் மொழிகளைத் தந்தார். பிறகு யாக்ஞ்வல்கியரே தாம் தினந்தோறும் வழிபடுகின்ற ஆலயங்களுள் ஒன்றான கீழ்ச் சூரிய மூலையில் ஸ்ரீ சூரிய கோடிப் பிரகாசரிடம், தமக்கு வேதம் கற்றுத் தந்து வேத குருவாய் மலர்ந்த சூரிய பகவானுடைய கவலையை எடுத்துரைத்துத் தக்க தீர்வையும் தந்தருளுமாறு வேண்டிக் கொண்டார். ஸ்ரீசூரிய பகவானிடமிருந்து தாம் கற்றுக் கொண்ட வேதங்களுக்கெல்லாம் ஞானகுரு தட்சிணையாக தம்முடைய வேதாக்னி யோகப் பாஸ்கரச் சக்கர வடிவில் அவற்றின் பலன்களையெல்லாம் பொறித்து ஸ்ரீசூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளில் அர்ப்பணித்தார்.

இலுப்பை எண்ணெயின் ஆத்ம சக்தி!
ஸ்ரீயாக்ஞவல்கியருடைய வேத மந்திர சக்திகளெல்லாம் ஸ்ரீசூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளிலே ஓர் அற்புத விருட்சமாய் மலர்ந்தன. அதுதான் இலுப்பை மரமாகும். இவ்வாறு ஸ்ரீயாக்ஞவல்கிய மஹரிஷி ஸ்ரீசூர்ய கோடீஸ்வரருடைய திருவடிகளில் அர்ப்பணம் செய்த மஹா வேத மந்திர சக்திக்கு மதூ மாமந்திர சக்தி என்று பெயர். ‘மதூ’ என்றால் இலுப்பை என்று பொருள். இலுப்பை மரத்திலிருந்து கனிந்து, உருவான இலுப்பைக் கொட்டையிலிருந்து எடுக்கப்பட்ட இலுப்பை எண்ணெயால் தினமும் கோடி தீபங்களை ஏற்றி விளக்கு பூஜை செய்து அதன் மகிமையால் இங்கு ஒரு இலுப்பை வனத்தையே உருவாக்கினார் ஸ்ரீயாக்ஞவல்கியர்!

பண்டைய யுக காலங்களில் இலுப்பை மரமே இச்சிவாலயத்தின் தல விருட்சமாக இருந்தது. ஸ்ரீயாக்ஞவல்கியர் போன்ற ஒரு மாமுனி கோடானு கோடி தீபங்களை ஏற்றி நித்திய விளக்கு வழிபாடுகளைச் செய்கின்றார் என்றால் இத்தலத்தின் மகிமைதான் என்னே! பெறுதற்கரிய மதூவரணி ஜோதியை தம் தவ வலிமையால் உருவாக்கி இன்றைக்கு கலியுகத்திலே பிரபலமாய் உள்ள (விளக்கு) தீப வழிபாட்டிற்கு முன்னோடியாக விளங்கியவர் யாக்ஞவல்கிய முனிவர்தாம். இலுப்பை எண்ணெய்க்கு உறையும் சக்தியும் உண்டு. அதே போல இலுப்பை ஜோதிக்கு மற்ற ஜோதிகளைக் காட்டிலும் அதிக உஷ்ணத்தை வெளிக் காட்டும் தன்மையும் உண்டு. எனவே இலுப்பை எண்ணெயில் தனித்தே தீபம் ஏற்றாது தேங்காய் எண்ணெய் போன்ற எண்ணெயுடன் தீபமேற்றுவதே சிறப்பானதாகும்.. தினந்தோறும் மாலை சந்தியா வேளையில் ஸ்ரீயாக்ஞவல்கிய மாமுனி கோடானு கோடி அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி வழிபட்டுச் சென்றிடுவார்! அக்காலமானது நித்ய பிரதோஷ வழிபாடு செழித்த தெய்வீக யுகமாகும்... அதாவது நித்ய பிரதோஷ வழிபாட்டில் தினந்தோறும் மாலைச் சந்தியா வேளையில் நிகழ்கின்ற பிரதோஷ வழிபாட்டின் போது திரள்கின்ற தெய்வீக சக்தியாவும் ஸ்ரீயாக்ஞவல்கிய முனிவர் ஏற்றிய இலுப்பை எண்ணெய் ஜோதியில் உறைந்து பொதிந்திருக்கும். மறுநாள் காலையில் சூரிய உதயத்தின் போது ஸ்ரீசூரிய மூர்த்தி இந்த இலுப்பை எண்ணெய் தீபங்களைத் தரிசித்து பிரதோஷ பூஜையின் பலன்களையெல்லாம் கிரகித்துக் கொண்டு தேவானந்தம் கொண்டார். இவ்வாறாக இலுப்பை எண்ணெயால் இங்கு சுவாமிக்கு தைலக் காப்பிடுதலும், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய் போன்ற ஐந்து வகையான எண்ணெய் கலந்த பஞ்ச வர்ண எண்ணெய் தீபத்தை ஏற்றி பிரதோஷ வழிபாடு கொண்டாடுதலும் மிகவும் சிறப்புடையதாகும். இவ்வாறு முறையாக ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு இங்கு பிரதோஷ வழிபாட்டைச் செய்து வருவோர்க்கும், நித்ய பிரதோஷ நேரமான, தினசரி பிரதோஷ நேரமாக விளங்குகின்ற மாலை 4.30 முதல் 6.00 வரையிலான நேரத்தில் இலுப்பை எண்ணெய் கூடிய அகல் விளக்கு ஜோதிகளை ஏற்றி வழிபடுவோர்க்கும் கண் சம்பந்தமான பலவிதமான நோய்களுக்கு நிவர்த்தி கிட்டும். பிருத்வி சக்தி நிறைந்த அகலுடன் இலுப்பெண்ணெய் சேர்வது மிகவும் விசேஷமானதாகும்.

தற்காலத்திலே Solar energy  என்ற வகையிலே சூரிய ஒளியைக் கொண்டு பல வகையான தொழிற்சாலைகள் இயங்குகின்றன.. இத்தொழிலில் ஈடுபட்டிருப்போர் கீழ்ச் சூரிய மூலை ஸ்ரீசூர்ய கோடீஸ்வரருக்குத் தக்க ஆலய இறைப் பணிகளைச் செய்து வருதலும், இங்கு பிரதோஷ வழிபாட்டிற்கான திருப்பணிகளை ஏற்றலும் பிரதோஷ நேரத்தில் மக்கள் ஆலயத்தை வலம் வரும் வகையில் ஆலயத்தைச் சுற்றித் தூய்மை செய்து தருதலும் மிக மிகச் சிறப்பான இறைப்பணியாக அமைவதோடு இப்புண்ய சக்தியால் சூரிய ஒளி சம்பந்தப்பட்ட, Solar energy போன்ற தொழில்களும் மிகச் சிறப்புடையதாக நடைபெறும். பாரதத்தில் மட்டுமல்லாமல் இப்பூவுலகில் எங்கு solar energy சம்பந்தப்பட்ட தொழிற்சாலை இருந்தாலும் அதனுடைய நல்வளத்திற்கு இறையருள் கூட்டுபவரே ஸ்ரீசூர்ய கோடீஸ்வர மூர்த்தியாவார். சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களிலிருந்து ஸ்ரீசூர்ய கோடீஸ்வரரின் மஹிமையைப் பற்றிய சில துளிகளை இங்கு அளித்துள்ளோம்.. அடியார்களும், பக்தர்களும் இனியேனும் ஸ்ரீசூர்ய கோடீஸ்வரருடைய மஹிமையை உணர்ந்து பிற்காலத்தில் அவர்தம் மகிமை அகில உலகமெங்கும் பரந்து விரிந்திட ஆவன செய்யுமாறு மிகவும் பணிவன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மழையில் கிரிவலம்

அடாத மழை பெய்தும் விடாத திருஅண்ணாமலை கிரிவலம்!

கடந்த பௌர்ணமி தின இரவில் கடும் மழை பெய்த போதிலும் அண்ணாமலையில் கிரிவலத்தில் இறையடியார்கள் சற்றும் அசராது நான்கு லட்சத்திற்கும் மேலாகச் சாரைசாரையாக கிரிவலம் வந்ததும் திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அக்ஸ்தியர் ஆஸ்ரமத்தில் அடை மழையையும் பொருட்படுத்தாது கிரிவல அடியார்கள் வரிசையாக நின்று அடக்கத்துடனும், பணிவுடனும், அன்னம் பெற்ற காட்சியும் அருணாசல இறைத்திருவிளையாடல்களில் ஒன்றாம். கொட்டும் மழையிலும், அருள் வீரர்களாய், நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட அடியார்கள் கிரிவல யாத்திரையைத் தடையின்றித் தொடர்ந்தது காணுதற்கரிய இறை லீலையாகும்.  திருஅண்ணாமலையில் பெய்கின்ற மழைக்கு விசேஷமான தெய்வீகக் குணப்பாடுகள் உண்டு. அதிலும் இங்கு பெய்யும் பெரும் மழை என்றால் அதற்குப் பல உத்தம நிலை ஆன்மப் பொருட் காரணங்கள் உண்டு. ஏனென்றால் மகத்தான சித்தர்களும், மகரிஷிகளும் கூட்டம் கூட்டமாகத் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்ற போது, வருண பகவான் மழை பெய்து, அவர்களை வரவேற்றுப் பரமானந்தம் கொள்கின்றார். அண்ணாமலையில் மழைப் பொழிவுதான் தேவ நிலை வரவேற்பா?

மனித அறிவிற்கு எட்டிய வரை மழைப் பொழிவு எனில் வான் மழை பொழிதல் மட்டும்தான் என்றே அர்த்தமாகிறது. ஆனால் இதற்கான ஆன்மீக அதீத விளக்கங்களோ வேறாகும். சித்தர்களுடைய, மகரிஷிகளுடைய திருமேனியில் பட்டு பூமியில் கரைகின்ற மழைத் துளிக்கு அவர்களுடைய ஜோதிமய, யோகப் பூரண தவச்சுடர்களைத் தாங்கி, பூமியில் கரைத்து மழையில் நனைந்து வருகின்ற அனைத்து அடியார்களுக்கும், அருணாசல திவ்யப் பிரசாதமாக மனம், உள்ளத்தில் ஊறி அனுபவிக்கச் செய்வது என்பது அருணாசல மழைப் பொழிவு பற்றிய ஞான பத்ர தெய்வீக விளக்கங்களாகும். கடந்த விக்ரம ஆண்டு புரட்டாசி மாதப் பௌர்ணமி தினத்தின் போது இரவு 9.00 மணிக்குத் தொடங்கிய நம் ஆஸ்ரம அன்னதானமானது, மறு நாள் விடியற்காலை 5.30 வரை தொடர்ந்தது. இடையில் பெய்த கன மழையையும் பொருட்படுத்தாது, கிரிவல அடியார்கள் அழகாக, அமைதியாக வரிசையில் நின்று அன்னம் பெற்ற காட்சி உலகத்தின் ஆன்மீக அதிசயங்களில் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. இந்த இறை லீலையை ஆக்கிய அண்ணாமலையாரின் திருவடிகளில் வீழ்ந்து வணங்குகிறோம். ஏனென்றால் கடந்த பல வருடங்களாக லட்சக்கணக்கான, கிரிவல அடியார்களுடைய திருவடிகளைத் தாங்கிய ஆஸ்ரமப் பித்ருப் படிக்கட்டுகள் ஆதலாலும், ஆயிரம் பேருக்கு அன்னம் பாலித்தால் ஆயிரத்தொன்றாவதாக ஒரு சித்தர் வந்து நேரடியாக அன்னம் பெறுவர் என்ற இறைக் கோட்பாட்டின்படியும் பல்லாயிரக்கணக்கான சித்புருஷர்கள் படியேறி வந்து அன்னம் பெற்ற தெய்வீக சிறப்பம்சங்கள் நிறைந்த படிக்கட்டுக்களாகவும் விளங்குவதால், ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமப் படிக்கட்டுகளைத் தொட்டு வணங்குவதையே பெரும் பாக்யமாய்க் கருதுகின்ற கிரிவல அடியார்கள் பல்லாயிரக்கணக்கானோர் உண்டு. இந்த இறை லீலையைச் சமைத்த அருணாசல சிவபெருமானின் பெருந்திருவடிகளைத் துதிக்கின்றோம்.

அன்னம் பெறுவோர் யார்? அவர் தம் உடலில் நிறைவோர் யார்?

அன்னப் பிரசாதம் பெறுகின்றோர், வெறும் கிரிவல அடியார்கள் மட்டுமல்லர். கிரிவலம் வருகின்ற அடியார்களுடைய ஆன்ம நேய சரீரப் பரிமாணங்களில் அவரவருடைய பித்ருக்கள் ஆவாகனமாகி அவர்களும் கிரிவல அடியார்களுடம் படியேறி வந்து இந்த அற்புதப் படிக்கட்டுகளில் இறைப் புண்ய சக்தியையும், பரிகார, பிராயசித்த அருள்வழிகளையும், இறை ஆசிகளையும் தந்தருள்கின்றனர். கிரிவல பலா பலன்களாக அன்னம் பெறுவோரின் கர்மவினைகள் பல கழிந்து, நல்வரங்களும் முகிழ்த்து உத்தம நிலைகளைத் தருவதாக அமைவதே திருஅண்ணாமலையில் அன்னம் பாலிப்பதன் அற்புதத் தெய்வீக தாத்பர்யமாகும். அதுவும் அடைமழையில் சொட்டச் சொட்ட நனைந்து கிரிவல அடியார்கள் வரிசையில் நின்ற காட்சி தெய்வீகம் ததும்புவதான கண்கொள்ளாக் காட்சியாகும்.

பித்ருக்களுக்கு நீர் என்றால் மிகவும் ப்ரீதியானதாகும். அதனால் தான் நீர் மூலமாகத் தர்ப்பணம் அளிக்கின்றோம். ஏனென்றால் பித்ரு லோகங்களில் கல்பித ஜீவநீர் எப்போதும் சுரந்து நிறைந்து இருக்கும். ஆயிரக்கணக்கான மகரிஷிகளும், சித்தர்களும் அண்ணாமலைக்குத் தேவ யாத்திரையில் வந்தமையால் என்னவோ வருண பகவானும் அன்று அடைமழையாய்ப் பொழிந்து தள்ளி விட்டார். ஏனென்றால் சித்தர்களும், மகரிஷிகளும், யோகியர்களும், முமூட்சுக்களும் கூட்டம் கூட்டமாக வந்தால் வருண பகவானுக்கு சந்தோஷம் பெருக்கெடுத்து பரமானந்தத்துடன் அடைப் பெரு மழையையே பூரண கும்பமாக பாவித்து அன்று விஜயம் செய்த எண்ணற்ற ரிஷிகளையும் சித்தர்களையும் வரவேற்கும் முகமாகத்தான் திருஅண்ணாமலைக்குள் பிரவேசித்து விட்டார்.

கன மழையின் போது திருஅண்ணாமலையின் பல அரிய தெய்வீக சக்திகள் கரைந்து கிரிவல அடியார்களையும் கோடானு கோடி ஜீவன்களையும் அடைகின்ற தெய்வீக லீலையின் மகிமையைக் கோடானு கோடிப் புராணங்களாய் எடுத்துரைக்கலாம். அந்த அளவிற்குச் சாதாரண நாளில் பெற இயலாத தெய்வத் திருஅண்ணாமலையின் பல ஜலதீப சக்திகளை அடைமழையில் நாம் எளிதாகப் பெற்று விடலாம்.
அருணை மலையில் அருள் மழை!

நீரோடு நீராய்க் கலந்து அருணை மலையிலிருந்து ஓடி வருகின்ற மலைத் திருவருள் சுடர் சக்திகள் எவ்வாறு கிரிவலப் பாதையில் விரைவாக கிரிவல அடியார்களை அடையும் என்று எண்ணாதீர்கள். பூமிக்கடியில் ஒரு மணிக்கு ஆயிரம் மைல்கள் வேகத்திற்கு மேலாகப் பாய்ந்து செல்கின்ற நீரோட்டச் சக்திகள் நிறைய இங்கு உண்டு. எனவே அடை மழையிலே கரைந்து வருகின்ற ஜலதீப சக்திகளை பூமியின் கீழுள்ள, திருஅண்ணாமலையின் புனித பூமியிலுள்ள வராகக் கோட்ட நதி நீரோட்டங்கள் மிக வேகமாக கிரிவலப் பாதையின் முழுதும் நிறைத்து கிரிவல அடியார்களின் திருப்பாதங்கள் மூலமாக அவர்கள் மனம், உடல், உள்ளத்திற்கு இறை சக்தியைக் கூட்டுகின்றது. இது மட்டுமா, அடைமழையின் போதுதான் திருஅண்ணாமலையாரின் திருப்பார்வையிலிருந்தும் எழுகின்ற வாயு பந்தன மூலிகா சக்தியானது மழையில், காற்றில் கரைந்து, கலந்து கிரிவலம் வருவோருடைய உடலுக்கும், உள்ளத்திற்கும் தெய்வீக ஆரோக்கியத்தைத் தருகின்றது. இந்த அதியற்புத ஹிரண்ய ஜல சோபித சக்தியை வேறு எந்நாளிலும் பெற முடியாது. அன்று அந்த மழையில் நனைந்தவர்கள் எல்லோரும் சளி பிடித்ததே, காய்ச்சல் வந்து விட்டதே என்று சற்றும் மனம் தளராதீர்கள். சளி, காய்ச்சல் என்பதெல்லாம் உங்களுடைய உடலைப் புனிதப் படுத்துவதற்காக உடலில் ஏற்படுகின்ற இயற்கைத் தத்துவங்களாகும். நோய் நீங்கிய பின் உங்கள் உடலில் ஒரு புத்துணர்ச்சி ஊறுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள். இதற்குக் காரணம் நோய் என்ற வகையில் தான்தோன்றியாய் ஒருவிதமான நோய்க் கழிப்பு வகையான உஷ்ணம் தோன்றி உடலில் உள்ள பல தீவினைத் கர்மங்களைக் கழித்துப் புத்துணர்ச்சியைத் தருகின்றது. நோய் வருதற்கு வேறு பல காரணங்களும் உண்டு என்றும் உணர்க!

அருணையில் பெய்த கேதார(நாத்) சக்தி மழை! குறிப்பிட்ட சீதள மற்றும் உஷ்ண நிலையில் தான் சிலவிதமான் தெய்வீக சக்திகளைப் பெற முடியும். இதற்காகத்தான் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற குளிர் நிறைந்த பகுதிகளில் இறைவன் வீற்றிருந்தும் மதுரை, பழனி, திருப்பரங்குன்றம் போன்ற காந்த மய உஷ்ண பூமியில் மிஸ்ர பாவனமாக உறைந்தும் உஷ்ணமும் சீதளமும் கலந்து நிறைந்து இராமேஸ்வரம், தனுஷ்கோடி போன்ற இடங்களிலும் குடிகொண்டும் இறைவன் பலவிதமான தட்பவெட்ப நிலைகளில் தன்னுடைய தெய்வீக லீலைகளைப் புரிந்து கொண்டிருக்கின்றான். இவையனைத்தையும் ஒன்றாகப் பெறுகின்ற திருத்தலம் தான் திருஅண்ணாமலையாகும்.

திருஅண்ணாமலையில் அடைமழையில் நீங்கள் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற இமாலய இறைத்தலங்களின் யாத்ரா புண்ய சக்தியைப் பெறுகின்றீர்கள். கடந்த பௌர்ணமி அன்று அடை மழையில் நனைந்து கிரிவலம் வந்தோர், அன்னம் பெற்றவர்கள் கேதார்நாத், பத்ரிநாத், திருக்கயிலாயம், மானசரோவர், கங்கோத்ரி போன்ற உறைபனி படரும் பல்லாயிரக் கணக்கான இறைத்தலங்களில் திரள்கின்ற புண்ணிய சக்தியை மிக எளிதில் பெற்றுவிட்டார்கள் என்றுதான் சித்தர்களின் ஞானபத்ர விளக்கம் தெளிவு படுத்துகின்றது! என்னே உங்கள் பாக்யம்! இந்த அடைமழையையும் தாங்கி அழகாகக் கயூவில் நின்று அன்னம் பெருகின்றார்களே என்ற பரமானந்தத்தால் ஆஸ்ரம அன்னதானமும் இரண்டு மடங்காக்கப்பட்டது. அடைமழையில் நனைந்து கடும் குளிரில் வருகின்ற அடியார்களுக்குச் சூடாக அன்னம் பரிமாற வேண்டும் என்பதற்காக விடியற்காலை 4 மணி வரை ஆஸ்ரம அடுப்பில் உணவு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். இவற்றையெல்லாம் பெருமைக்காகச் சொல்லவில்லை.. இந்த அன்னம்பாலிப்பு சிறப்பாக நடைபெறுவதற்குக் காரணம் இந்நாளில் கிரிவலம் வந்த மற்றும் அன்னம் பெற்ற அடியார்களைச் சார்ந்த பித்ரு மூர்த்திகள் எல்லோரும் ஒன்று சேர்ந்து ஆஸ்ரம அடியார்களுக்குப் புத்துணர்ச்சியையும், தெம்பையும், இறைச் சக்தியையும் அளித்து அன்னம் பாலிக்கச் செய்தார்கள் என்ற உண்மையைப் பறைசாற்றுவதற்காகத்தான் இதை எடுத்துரைகின்றோம். பித்ருக்களுடைய அருட்பெரும் துணையால் தான் எந்த அன்னம்பாலிப்பும் நிகழும் என்பதை நிரூபிப்பதற்காகத்தான் கடந்த பௌர்ணமி தினத்தின் அடைமழையில் ஸ்வீகரித்த அன்னதான மகிமையை இங்கு நாம் குறிப்பிடுகின்றோம். அன்னத்தை ஏற்போர் இல்லையெனில் அன்னதானம் எவ்வாறு சிறப்பு பெறும்! எனவே அன்னம் பாலிக்கச் செய்து அன்னப் பிரசாதத்தைப் பெற இறை அடியார்களை அனுப்பிக் கடும் மழையிலும் பித்ரு ஆவாஹன சக்தியுடன் அவர்களை நிலை நிற்கச் செய்து அன்னம் பெறச் செய்தது அண்ணாமலையாரின் திருவருளே!! இதை உணர்தலும் அண்ணாமலை கிரிவலத்தின் சிறப்பம்சமாகும்.

தேனிமலை மகிமை

தேனிமலை – சித்தர்களின் இறைப் பாசறை!
(காரையூர் வழியிலான புதுக்கோட்டை – பொன்னமராவதி மார்கத்தில் தேனி மலை உள்ளது.)

செவ்வாய் பகவானின் அருட்சக்தி மிகவும் பரிணமித்து விளங்குகின்ற ஆலயங்கள் பல உண்டு. செவ்வாய் கிரகத்தினுடைய பிரதான அதிதேவதா மூர்த்தியாக விளங்குபவர்தானே ஸ்ரீசுப்பிரமணியனாகிய ஸ்ரீஆறுமுகப் பெருமான்! எனவேதான் செவ்வாய் தோஷமுள்ளோர், ஸ்ரீமுருகப் பெருமான் மூல இறைவனாக உள்ள இறைத்தலங்களில் கிரிவலத்தை மேற்கொண்டால், செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடங்கல்கள், வியாபாரத் தடங்கல்கள் ஏற்பட்டிருப்போருக்குத் தக்க நிவாரணம் கிட்டும். தேனி மலையானது அங்காரக பௌம்ய சக்தி நிறைந்த புனிதமான தலங்களுள் ஒன்றாகும். இதனால்தான் தேனி மலைப் பாறைகள் பவளச் செவ்வண்ண நிறத்தில் காட்சி அளிக்கின்றன. மேலும் மலைகள் ஓர் இடத்தில் மு(கி)ளைப்பதற்கும் நிறையக் காரணங்கள் உண்டு. தானாகச் சுயம்புவாகத் தோன்றிய மலைகள், கருடன் மற்றும் ஆஞ்சநேய மூர்த்திகள் பல மலைகளைச் சுமந்து சென்ற போது பூமியில் கீழிறங்கிய புண்ணிய மலைகள், சித்தர்களும், மஹரிஷிகளும் தவம் பூண்டபோது மலை இறைப் பெருமேனியாய் மாறிய தலங்கள் இவ்வாறாக ஒவ்வொரு மலைத் தலத்திலும் ஏற்படுகின்ற சிறு பாறைகளுக்கும், குன்றுகளுக்கும், சிறு மலைகளுக்கும் தெய்வீக ரீதியான காரணங்கள் பல உண்டு.

தேனி மலையின் முக்கியமான இறையம்சம் என்னவென்றால் இங்குள்ள சுயம்புப் பாறைகளானவை, இறை பெரு தேவ மூர்த்திகள் இறங்கி அருள் பாலிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சிறப்புடையது என்பதே! சித்புருஷர்களும், தவயோகிகளும் தம் தவ யோகத்தால் நீண்ட நெடும் பாறைகளாய், மலைகளாய் மாறிய மலைகள் நிறைய உண்டு. இவ்வாறாக நல்லிறைக் கூட்டு மலைகள் நிறைந்ததே தேனிமலையாகும். குறிப்பாக இயற்கை சுனை தீர்த்தம் உள்ள மலை! பாறைக் கசிவு நீர் பெருகி நிற்கும் அற்புத மலை, தியான நீரோட்ட சஞ்சாரங்கள் நிறைந்த மலை, அங்காரக சக்தி நிறைந்த கொத்துமலை! ஆம் அங்காரக பூமியாகிய செவ்வாய் பூமியில் இக்கசிவு நீரோட்டங்கள் நிறைய உண்டு. செம்பாறைக் கோளப் பகுதியான செவ்வாய் கிரஹத்தில் பாறை நீரோட்டங்கள் மிகுதியாகையின் ஆங்காங்கே நிறைந்திருக்கும் பாறைகளிலிருந்து நிறைய நீர்க் கசிவுகள் ஏற்படுகின்றன. இதே அங்காரக சக்தி குண்ப்பாடுகளை நீங்கள் தேனி மலையில் பாறைக் கசிவு நீராகக் கண்டிடலாம். சித்புருஷர்கள் தினந்தோறும் கிரிவலத்துடன் வந்து வழிபட்டுச் செல்கின்ற மிகவும் சக்தி வாய்ந்த தலமே தேனி மலை! ஸ்கந்த சக்தி மிகவும் பெருக்கெடுத்து இறையருளாகப் பரிமளிக்கின்ற தலம்! மிகவும் சாந்தமான தெய்வீக அமைதியும், இறைமணமும் கமழ்கின்ற தலம்! இதை ஒரு முறை சுற்றி கிரிவலம் வந்திடில் உங்கள் உடலில் ஒரு வியத்தகு புத்துணர்ச்சியும், மனத் தெம்பும், மன வைராக்கியமும் உருவாவதை நீங்களே கண்டிடலாம். இதற்கான மூல சக்தியைத் தருவது இத்தேனி மலையில் நிரவியிருக்கும் சிறு பாறைப் படிமங்களில் நிறைந்திருக்கும் மகத்தான ஸ்கந்த வியாப்த சக்தியாகும். எத்தனையோ கோடி சித்தர்கள் அமர்ந்து தியானம் புரிந்திட, இப்பாறைகளின் நல்வரத் தன்மையும் பொங்கித் ததும்புகின்றன.

தேனிமலை கிரிவலம் பேணும் உடல்நலம்!
தேனி மலையின் இறையம்சங்களைப் புரிந்து கொள்கின்ற அளவிற்கு நாம் தெய்வீகப் பெருநிலை அடையவில்லையாதலின், திருஅண்ணாமலை போல் இதுவும் சாதாரணக் கல்லாகவே நம் கண்களுக்குத் தோன்றும், ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் கிரிவலம் வந்திட, வந்திடத்தான் இதனுடைய மஹிமை புரியவரும். எனவே செவ்வாய்க்கிழமை, செவ்வாய் ஹோரை நேரத்திலும் ராகு கால, பௌர்ணமி காலங்களிலும் தேனி மலையைக் கிரிவலம் வந்து துர்காக்னி சக்தியைப் பெருக்கிக் கொண்டு, செவ்வாய் பகவானுக்குரித்தான பூமி சம்பந்தப்பட்ட நிலம், புல தொழிற்சாலை பிரச்சினைகளுக்கு தக்கத் தீர்வுகளைப் பெற்றிடுக!

ராகு, கேது பகவானுடைய அனுக்கிரகமும் இருந்தால் தான் வாழ்க்கை செம்மையாக அமையும். எனவே ராகுகாலம் எனப்படுவது ராகு பகவானின் வழிபாட்டுக்குரித்தான சிறப்பான நேரம் என்பதைப் புரிந்து கொண்டால்தான் எந்த நேரமும் கெடுதலைப் பயப்பது அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும். இதேபோல மரண யோக நேரத்தில் மரண பயத்தைத் தீர்க்கக் கூடிய துதிகளை ஓதி வருதல் வேண்டும். ஏனென்றால் மரணபயம் தானே பலருக்கும் மனதில் நிறைந்திருக்கின்றது. தவிர்க்க முடியாத மரணத்தை தமக்குரித்தான வினைப் பயன் முடிவு என்று எற்றுக்கொண்டு சாந்த மயமாக இறைநினைவோடு மரணத்தைத் தழுவுகின்ற பக்குவத்தை ஒவ்வொரு ஜீவனும் பெற்றாக வேண்டும்.

மனிதனைத் தவிர அனைத்து ஜீவன்களுமே தம்முடைய முடிவை முன்னரே அறிந்து கொண்டு தம் வாழ்க்கைப் பாதையை செம்மையாக அமைத்துக் கொள்ளுகின்றன. ஆனால் மனிதன் மட்டுமே மரணத்தை ஒத்திப் போட முயல்கின்றான் அல்லது மரணத்தைக் கண்டு அஞ்சுகின்றான். தன் வாழ்நாள் முடிவதற்கு முன் தன்னுடைய தேகத்தால் பிற ஜீவன்களுக்கு எத்தகைய நற்காரியங்களை ஆற்ற முடியும் என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் தியாகமயக் காரியங்களைச் செய்தாக வேண்டும். நமக்காக, நம் உடலுக்காக, நம் குடும்பத்திற்காக வாழ்வதற்கு  மட்டும்தான் மனித வாழ்வு என்று சுயநலமாக ஒரு போது எண்ணாதீர்கள். அத்தகைய சுயநல எண்ணத்தை நம் உடலை விட்டு விரட்டுவதற்காகத் தான் இறைத் தல மலைக் கிரிவலங்கள் நம் பெரியோர்களால் அளிக்கப்பட்டுள்ளன.

தேனிமலை கிரிவலப் பாதையில் நிறைந்துள்ள இறை கிரணங்கள்தாம் நம் உடலிலுள்ள 72000 நாடிகளிலும் தோய்ந்து உறைந்து நம் உடல் உள்ளத்தைத் தூய்மைப் படுத்துகின்றன. இதோடு இப்பாறைகளில் கூடுகின்ற தியானமும், ஹோம வழிபாடும் சேர்கின்ற போது, அந்த நற்கிரணங்கள் நம் உடலில் உள்ள ஒன்பது உடல்களிலும் பூர்ணப் பரிமாணம் கொண்டு, முற்றிய இறைப் பக்தியாய், இறைக் கனியாய் மலர்கின்றது. இனியேனும் தேனிமலை கிரிவலம் உங்களுடைய மாத பூஜைகளில் ஒன்றாக இருக்கட்டும்.

தெய்வீக வாழ்வு

தெய்வீகமாக வாழ்வது எப்படி? நன்றிப் பெருக்காக நல்லதொரு வழிபாடு!

1. எதற்காக இறை வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்? பெறற்கரிய இந்த மனித உடலைத் தந்த இறைவனுக்கு நாம் எவ்வாறு நன்றி செலுத்த முடியும். இறைவழிபாட்டின் மூலமாகத் தானே?

2. நமக்கு அரிய மனித உடலைத் தந்ததற்காக இறைவன் நன்றி வழிபாட்டினையா  எதிர்பார்க்கின்றான்? நிச்சயமாக இல்லை! கர்ம வினைகளைத் தீர்ப்பதற்கு நமக்கு மனித உடலைத் தந்ததற்காக நம் நன்றிப் பெருக்காக நாமாகவே ஏற்படுத்திக் கொண்டதுதான் இறை வழிபாடு!

4. இறைவழிபாட்டை, நம் பூஜைகளை இறைவன் ஏற்கின்றானா? நிச்சயமாக ஏற்கின்றான். எவ்வாறு? மனித உடல் ஆற்றும் இறைப்பணிகளில் கர்ம வினைகளைக் கரைத்துப் பெரும் நல்வரங்களை அள்ளித் தந்து இந்த உடலைத் தந்தது இறைவனே என்று தன்னைத் தானே உணர்த்திக் கொள்கிறான் சர்வேஸ்வரன்!

ஒவ்வொரு அங்கப் பிராயச்சித்தத்திற்கும் ஒரு கோயில்!! ஒன்றைச் செய்து பாருங்களேன்! ஒரு பத்து நிமிடங்கள் உங்களுடைய கண்களை மூடிக் கொண்டு காரியங்களைச் செய்து பாருங்கள்! எத்தகைய தடுமாற்றத்தை நீங்கள் உடலாலும், மனதாலும், உள்ளத்தாலும் உணர்கின்றீர்கள்? ஒரு வினாடி கண்பார்வை சற்று மறைக்கப் பட்டாலும் எத்தகைய தடுமாற்றத்தால் உங்கள் உள்ளம், உடல் திணறுகின்றது? அப்படியானால் 24 மணி நேரமும் கண் பார்வையைத் தந்த இறைவனுக்கு எவ்விதத்தில் நாம் நன்றி செலுத்த வேண்டும்? தீர்க்கமான கண் பார்வையைத் தந்தருள்கின்ற சில இறை மூர்த்திகள் இப்பூவுலகில் உண்டு. தக்க குருவை நாடி அறிந்திடுக! (உதாரணமாக : கீழ் சூரிய மூலை, ஞாயிறு, தலை ஞாயிறு)

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
கீழ்சூரியமூலை

சற்று நேரம் உங்கள் மூக்கைக் கைகளால் நன்றாக அழுத்திக் கொண்டு சுவாசமில்லாமல் இருந்து பாருங்கள் திக்கித் திணறிக்கொண்டு கைகளை விடுவித்து மூச்சு எவ்வாறு பீறிட்டுக் கொண்டு வருகின்றது? சுவாசமில்லாமல் நம்மால் வாழ முடியாது என்று தெரிந்தாலும் அதனை உணர்வதற்கு நாம் இந்தச் சோதனையை செய்தாக வேண்டியதாக இருக்கின்றது. எனவே இந்த மூச்சு சுவாசத்தைத் தந்தமைக்காக இறைவனை மூச்சு சுவாச சக்திகள் நிறைந்த இறைத் தலங்களுக்குச் சென்று வழிபட்டாக வேண்டும்.. (சென்னை சித்துக்காடு, வேதாரண்யம், காஞ்சீபுரம் பெருநகர்).

இரண்டு கைகளும் கால்களும் நன்றாக இருப்பதால் தானே நீங்கள் எல்லாக் காரியங்களையும் செய்கின்றீர்கள் . ஒரு கையை நன்றாகக் கட்டிக் கொண்டு சற்று உலா வந்து பாருங்கள். உங்களுடைய பெரும்பான்மையான காரியங்களை நீங்கள் செய்ய முடியாமல் திணறுவதை நீங்க்ளே உணரலாம். அப்படியானால் 24 மணி நேரமும் நல்ல கை, கால் இயக்கங்களைத் தந்த இறைவனுக்கு எப்படி நன்றி செலுத்தப் போகின்றீர்கள்? இவ்வாறு கைகளுக்கு, கால்களுக்கு உரித்தான சக்திகளைத் தருகின்ற இறைத் தலங்கள் நிறைய இருக்கின்றன. (கோயம்பேடு, கரவீரம், திருப்பனந்தாள்). அங்கு சென்று நன்றிப் பெருக்காக சில வழிபாடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.. உங்களுக்காக மட்டுமா? மனைவி, குழந்தைகள், பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள், பேரன், பேத்திகளுக்காகவும்தான்!

திருப்பனந்தாள் திருத்தலம்

இவ்வாறாக நம் உடலில் 72000 நாடிகளும் நன்முறையில் இயங்குவதற்கு உரித்தான இறைத்தலங்களை அறிந்து, உணர்ந்து, நம் வாழ்நாளில் அங்கு சென்று வழிபட்டாக வேண்டும். ஆனால் இது வாழ்நாளில் சாத்தியமானதா? எனவேதான் நம்மை அறியாமலே நாமே பல இறைத் தலங்களுக்கும் சென்று தீர்த்த நீராடல், அபிஷேக ஆராதனைகளைக் குறித்த பல விசேஷமான நாட்களில், நேரங்களில் நாம் மேற்கொள்கின்றோம்.
உடற்புனிதம், ஆலயப் புனிதம்! ஒரே ஆலயத்திலேயே பல அங்கங்களுக்குரித்தான நன்றிப் பெருக்கு வழிபாடுகளை ஏற்கக் கூடிய மூர்த்திகள் நிறைய உண்டு. இதற்காகத் தான் ஒரே ஆலயத்தில் பிரம்மா, பைரவர், ஜேஷ்டாதேவி என எத்தனையோ மூர்த்திகளை எழுந்தருளச் செய்து நம் உடலே ஒரு இறை ஆலயம் என்பதை உணர்விக்கும் விதமாகத்தான் ஆலயத்தின் பல அங்கங்களும் அமைந்துள்ளன. மூலத்தான இறைவன் தான் நம் இதயத்தில் உள்ள ஆத்மா! சூரிய, சந்திர, துவார பாலகர்கள் தாம் நம்முடைய கண்கள். இவ்வாறாக நீங்களே இறை ஆத்ம விசாரம் செய்து பார்த்தீர்களேயானால், உங்கள் உடல் ஆலயமும், சுயம்பு மூர்த்திகள் எழுந்தருளியுள்ள ஆலயமும் ஒன்றுதான் என்பதை உணர்வீர்கள். ஆனால் உங்கள் தேக ஆலயத்தை இறைவன் குடிகொள்ளும் வண்ணம் புனிதமாக வைத்து இருக்கின்றீர்களா?

பெருநகர் திருத்தலம்

நம் உடலிலே இறைவன் உறைகின்றான் என்பதை உணர முடியாமல் இருப்பதால்தான் வெளியில் சென்று ஒரு ஆலயத்தில் இறைவன் எவ்வாறு உறைகின்றான் என்பதைக் கண்களால் கண்டு, உணர்ந்து, தெளிந்து பிறகு அதனை உள்முகமாக, தியானமாகத் திருப்பி ஊனுடம்பு ஓர் ஆலயம் என்ற திருமூலரின் வாக்கியத்தை உணர்கின்றோம். இதை உணர்விக்கின்ற ஆன்மீக உட்கண்கள் தாம் குருவின் கடாட்சமாகும். குருவினுடைய கடைக்கண் பார்வையை நாம் பெருகின்றபோதுதான் உள் ஆலயமும் வெளி ஆலயமும் ஒன்றே என்று நாம் உணர்கின்றோம். குருவின் கடைப்பார்வைக் கருணையைப் பெற்றுத் தரும் ஆலயங்களும் உண்டு. (ஆவுடையார் கோயில், திருஅண்ணாமலை)

இவ்வாறாக ஒவ்வொரு நாளும், உங்களுடைய ஒவ்வொரு அங்கத்தையும் பற்றியும் ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். இது சுயநலத்தன்மையின்பால் பட்டதல்ல.. எவ்வகையில் நமக்கு இறைவன் அளித்துள்ள அங்கங்களை நாம் நன்முறையில், இறைவழியில் பயன்படுத்துகின்றோமா? தகாத முறையில் தீயொழுக்கங்களில் உடல் சக்தியை விரயமாக்கி விட்டோமே என்று வருந்தி, தண்டனை வேண்டி, திருந்துவதற்காக விரதம் கொண்டு சிந்தியுங்கள்! எவ்வாறாக உடல் அங்கங்களைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளோம் என்பதையெல்லாம் நீங்கள் உணர்ந்து அந்தந்த ஆலயத்தில் குருமூலமாகப் பிராயச்சித்தம் பெற்றால்தான் கர்மத்தளைகளிடமிருந்து விடுபட்டு பக்திமிகு முக்திப் பெருநிலையை அடைய முடியும்.

உறுப்பு தேவதைகளின் வேதனைகள்! தெரிந்தே ஒரு மனிதன் தன் அங்கங்களால் செய்கின்ற தவறுகள் எத்தனை, எத்தனை! இதற்குக் காரணம் என்ன? ஆபாசக் காட்சிகளைக் காண்பது தவறு என்றாலும் கூட, டீவியிலும், திரைப்படங்களிலும், இன்டர்நெட்டிலும் காமத்திற்காக ஏங்கிப் பொன்னான நேரத்தை விரையமாக்கிக் கொண்டிருக்கின்றானே மனிதன். அப்படியானால் அந்தந்த அவய தேவதைகள் எவ்வளவு வேதனைப்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தனிப்பட்ட மனித பிம்பம் கிடையாது. உங்களுடைய ஒவ்வொரு அவயத்திலும் ஆயிரக்கணக்கான அங்க தேவதைகள் குடிகொண்டுள்ளார்கள். முறையற்ற தீயொழுக்கங்களில், முறையற்ற எண்ணங்களில், முறையற்ற காம உணர்ச்சிகளில் உங்கள் உடல், உள்ளம், மனதைச் செலுத்துவீர்களேயானால், அந்தந்த அவய தேவதைகள் அவ்வப்போதே வெளிச் செல்கின்றன. அப்போது அந்தந்த அவயங்களில் நோய்கள் உண்டாகின்றன. எனவே நோய்கள் வருவதற்கு முதன்மைக் காரணம் அந்தந்த அவயத்தில் உள்ள தேவதைகள் அடிக்கடி வெளிச்செல்வதுதான்!

தாய், தந்தை வினை தாங்கும் சேய்! அப்படியானால், எந்தவிதமான ஆசாபாச உணர்ச்சிகளும் இல்லாத சிறு குழந்தைக்கு எப்படி நோய்கள் உண்டாகின்றன என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். தாயும் தந்தையும் செய்கின்ற ஒரு சில கர்மங்களை தெய்வக் குழந்தை தானே தன்னுடலில் ஏற்பதால்தான் அந்தக் குழந்தைக்கு நோய் ஏற்படுகின்றது. ஒன்றும் அறியாத பச்சிளங்குழந்தைக்கு ஏன், எவ்வாறு நோய், கஷ்டங்கள் ஏற்படுகின்றது என்று கேட்பதை விடப் பெற்றோர்களின் கர்ம வினைகளை ஏற்று அனுபவிப்பதால்தான் ஒரு குழந்தைக்கு வியாதிகள் ஏற்படுகின்றது என்பதை இனியேனும் உணர்ந்து கொள்ளுங்கள்! எனவே குழந்தைப் பருவம் என்பது பல தெய்வீக ரகசியங்கள் நிறைந்த பருவமாகும்!

முழுமையாக தெய்வீக சக்தியுடன் பிறக்கும் குழந்தை பிறந்தது முதல் கிட்டத்தட்ட 12 வயது வரை அதனுள் உள்ள தெய்வீகம் படிப்படியாகக் குறைந்து கொண்டே வரும். இது உலகெங்கும் ஜாதி, மத, இன, குல பேதமின்றி நடைபெறுகின்ற ஆத்ம வாழ்க்கை நிகழ்ச்சியே ஆகும். எனவே நம்முடைய வாழ்க்கைக் காலத்திற்குள் தவறுகளுக்கும், பாவங்களுக்கும் தக்க பிராயச்சித்ததைப் பெற வேண்டுமானால், குறிப்பிட்ட அந்தந்தத் தலங்களுக்குச் சென்று தக்க வழிபாட்டு முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் நம் உடலில் 72000 நாடிகள் இலங்கும் போது, 72000 ஆலயங்களுக்குச் செல்வது எனில், இது நம் வாழ்நாளில் சாத்தியமாகக் கூடிய பரிகாரமா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். ஏன் ஒரே கோயிலிலேயே 72000 நாடிகளுக்குரித்தான பரிகாரங்கலைத் தரக் கூடிய தேவாதி தேவ மூர்த்திகள் நிறைந்துள்ளனரே! இதை ஏன் உய்த்து உணர முடியவில்லை? இதை உணர்விப்பவர்தான் சத்குரு!

ஒரு ஆலயத்தில் எத்தனையோ தூண்களில், பிரகாரங்களில் கர்பகிரகச் சுற்றுச் சுவர்களில் நர்த்தன வினாயகர், சண்டிகேஸ்வரர், சப்த மாதாக்கள் என்று எத்தனையோ மூர்த்திகள் எழுந்தருளியிருக்கின்றார்கள். இவர்களுடைய மஹிமையை நாம் உணராததினால்தான், ஏதோ சென்றோம், வந்தோம் என்று கடனாக வாழ்க்கை ஓடுகிறது. எனவே, இனியேனும் ஆலயத்தில் எந்த மூர்த்தியையும் விட்டுவிடாது, கை கூப்பி வணங்கி துதித்திடுங்கள். எதையுமே இறைவன் நமக்கு அளித்துள்ள பகுத்தறிவின் மூலமாகத் தெளிந்து உணர்ந்து செய்வது சிறப்புடையது என்பதால், ஒவ்வொரு தெய்வ மூர்த்தியைப் பற்றியும் அறிந்து கொள்ள முற்படுங்கள். உதாரணமாக, ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு துவாரபாலகரையும் சிரசிலிருந்து பாதம் வரை நன்கு உற்று நோக்கி, கவனித்து வழிபட்டுப் பாருங்கள். ஏனென்றால் துவாரபாலகர்களின் தரிசனம் உங்கள் உடலிலுள்ள 72000 நாடிகளில் ஏதேனும் பலவற்றுக்கான கர்ம வினைகளை, பாவங்களை, குறைகளை பஸ்பம் செய்து விடுமன்றோ! ஒவ்வொரு ஆலயத்தில் உள்ள ஒவ்வொரு தூணும், சிற்பமும், சிலையும், இறைவடிவும் உங்களுடைய உள்ளம், மனம், உடலைத் தூய்மை செய்து முக்தி தரும் தெய்வீக சக்தி கொண்டவை என்பதை உணர்ந்திடுக!

தலைவாசல்/நிலைப்படி வாசலுக்கு தினந்தோறும்  அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு ஸ்ரீபூமாதேவியையும், ஸ்ரீவாஸ்து மூர்த்தியையும் வழிபட்டு வருதல் மிகவும் எளிமையான நித்திய வாஸ்து பூஜை வழிபாடுகளில் ஒன்றாகும். வாசல்படி மரப்படியாக இருந்தால்தான் சந்தியா கால தேவதைகள் இல்லத்திற்கு விஜயம் செய்து ஆசி வழங்குவர்.

கார்த்திகை தீப மகிமை

திருஅண்ணாமலை கார்த்திகை தீப மகிமை

திருஅண்ணாமலைப் பகுதியைச் சார்ந்த மக்களுக்கு கார்த்திகை நட்சத்திரமே வருடப் பிறப்பாக அமைகின்றது. பல யுகங்களுக்கு முன் கார்த்திகை மாதமே சித்திரை மாதம் போல் வருடப் பிறப்பாக இருந்து வந்திருக்கின்றது. இன்றும் தேவலோகத்தில் கார்த்திகை தீபத் திருநாளே தேவ வருடத்தின் முதல் நாளாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகை தீபத்தில் விதவிதமான ஜோதிக் கிரணங்களை அக்னி தேவதைகளும் தேவாதி தேவர்களும் சேர்க்கின்றார்கள் அல்லவா!! அவற்றில் பூலோகத்தில் காண இயலாத பலவகை அக்னி வகைகளும் உண்டு. சிலவகை பூமானந்த தேவர்கள் பூமியில் கிட்டும் திரவியங்களைக் கொண்டும் தேவ தீபத்தை ஏற்றுவதும் உண்டு. குறிப்பாக ஆரண்ய பூம்ய தேவர்கள் என்று சொல்லப்படுகின்ற தேவமூர்த்திகள் பூலோகத்திற்கு மானுட ரூபத்தில் வந்து இங்கு மனித முயற்சியால் கிட்டுகின்ற தீபத்தைச் சேர்ந்தது தேவ தீபத்தை உண்டாக்குகின்றனர். இதில் ஒன்றுதான் அரணி என்று சொல்லப்படுகின்ற அரசமரக் கட்டைகளைத் தேய்த்து ஏற்படுகின்ற உஷ்ணத்தில் கிட்டுகின்ற ஜோதியைக் கொண்டு ஏற்றும் தீபமாகும். இதற்கு விருட்ச பாலாக்னி ஜோதி என்று பெயர். இதனைப் புனிதமாகக் கடைபிடிக்கின்ற ஹோம பூஷணங்கள் இன்றும் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பலர் உண்டு. இரண்டு கற்களை உராய்ந்து ஏற்படுகின்ற பூதாக்னியைக் கொண்டு தீபத்தையும் ஏற்றுவதுண்டு. இதுவும் தேவ தீபவகையைச் சார்ந்ததாகும். பரவெளியிலிருந்து உராய்ந்து வருகின்ற இவற்றிற்குப் புனிதத் தன்மை நிறைய உண்டு.

நாம் சாதாரணமாகக் காண்கின்ற நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பெண்ணெய் இவைகளில் ஒருவிதமான உஷ்ணம் ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இதற்கு பல்வராக்னி அக்னி என்று பெயர். எனவே, நாம் காண்கின்ற எண்ணெய் வகைகள் யாவும், பலவித இயற்கை உஷ்ண சக்திகளைத் தம்முள் கொண்டிருப்பவையாகும். பசுவின் மடியினின்று பால் கறக்கும் பொழுது காம்புகளை ஈர்த்துப் பாலைச் சொரியும் போது கைரவில்களில் ஏற்படும் விசேஷமான உஷ்ணத்திற்கு கங்கண ரேகா உஷ்ணம் என்று பெயர். மேலும் புதிதாகக் கறக்கப்பட்ட பால் இளஞ்சூடாக இருப்பதைக் கண்டிருப்பீர்கள். இந்த இளஞ்சூட்டுப் பாலிலுள்ள உஷ்ணத்திற்கு, தேனுராஜித உஷ்ணம் என்று பெயர். இது மகத்தான காரியசித்திகளையும் தரவல்லதாகும். இதனால்தான் கறந்த பாலை அதன் இளஞ்சூடு ஆறும் முன்னரேயே பால் கறந்த 3 நிமிடங்களுக்குள் அதனைச் சுயம்பு மூர்த்திக்கு அபிஷேகம் செய்வதால் நற்காரிய சித்திகள் எளிதில் கைகூடும். இறைச் சக்திகள் கிட்டும். மேலும், ஒரு பானையில் சேர்க்கப்படுகின்ற ஒரே பசு மாட்டின் நெய்யிலிருந்து ஏற்படும் உஷ்ணமானது ஒரு டன் விறகிலிருந்து ஏற்படும் உஷ்ணத்திற்குச் சமமானது என சித்புருஷர்கள் விளக்குகின்றார்கள். அந்த அளவிற்குப் பசுநெய்க்கு கோமங்கள ஜோதித்துவ பூரண சக்தி உண்டு.

ஒரு மாட்டுப் பால் தரும் உத்தம தெய்வ நிலை!

திருஅண்ணாமலை இந்திர தீர்த்தம்

உண்மையில் மிக எளிய முறையில் மனிதர்கள் உத்தம தேவநிலையைப் பெற வேண்டுமென்றால் ஒரே பசுவிலிருந்து பெறப்பட்டப் பாலைக் கொண்டு கடையப்படும் பசும் நெய்யால் முறையாகத் திருஅண்ணாமலையில் தினமும் ஆலயத்திலோ, கிரிவலப் பாதையிலோ தீபம் ஏற்றி வந்தால் மிகமிக எளிதில் உத்தம தேவ நிலைகளைப் பெற்றிடலாம். ஒரு பசுவை வளர்த்து அதன் பாலைத் தயிராக்கி நெய் கடைந்து ஒரு பானையில் திரட்டி வைத்து 15 நாட்களோ, அன்றி மாதம் ஒருமுறையோ  நெய்யைத் தாங்கி, ஸ்ரீஅருணாசல திருநாமம் ஓதி அண்ணாமலையில் கிரிவலம் வந்து ஆலயத்தில் மற்றும் கிரிவலப் பாதையில் விளக்கேற்றி வைத்தலும், கார்த்திகை மஹாதீப ஜோதியின் போது இந்த நெய்யை மஹாதீபத்திற்கு அளித்தலும், ஒருவருக்குப் பெறுதற்கரிய தேவநிலையை எளிதில் பெற்றுத் தரும். ஆனால் ஒரே பசுமாட்டுப் பால், தயிராக, நெய்யாக இருப்பது விசேடமாகும். அப்பசுவிற்கு பால் மறத்துவிட்டால் அதுவரையில் அப்பசுவிடமிருந்து கிட்டிய நெய் கொண்டு திருஅண்ணாமலையில் தீபம் ஏற்றிட வேண்டும். ஒரு பசுவின் சந்ததிப் பசுக்களின் பாலும் சிறப்புடையதே! இதனால் குழந்தையில்லா ஏக்கம் தீர்ந்து குலம் தழைக்கும். மாற்றுப் பசு வைத்திருந்தால், அதன் பாலைத் தனியாக நெய்த் திரட்டி தீபம் ஏற்ற வேண்டும். ஆலயத்தில் மட்டுமில்லாது இப்பசுநெய் கொண்டு கிரிவலத்தின் எந்தப் பகுதியிலும் எவ்வளவு விளக்குகள் வேண்டுமானாலும் ஏற்றலாம்..காரணம் திருஅண்ணாமலை கிரிவலப் பாதையிலுள்ள ஒவ்வொரு கல்லும் சுயம்பு லிங்கமாகும். உங்களுக்கு அவை கற்களாகத் தெரிகின்றனவே தவிர, நடக்கும் வழியெங்கும், மேலும் ,கீழும், பக்கவாட்டிலும், இங்கும், அங்குமாக, சூட்சுமமாக வானிலும் நிறைந்திருக்கின்ற லிங்கங்களே கோடானு கோடியாகும்.
அருணையில் தேவ ஜோதி!

மனிதர்கள் ஏற்றும் தீபத்தில் தேவர்கள் ஏன் தங்கள் ஜோதியை இணைக்கின்றார்கள்? அவர்கள் சபரிமலை தீபம் போன்ற தனிப்பட்ட தீப ஒளியை காண்பிக்கலாகாதா எனும் கேள்விகள்  எழலாம். உண்மையில் சபரிமலை மகர ஜோதி போல் கலியுகத்தில் திருஅண்ணாமலையில் எப்போதும் தீபஜோதி ஒளிர்ந்து கொண்டு தான் இருந்தது. தினந்தோறும் லட்சக்கணக்கான தேவர்கள் கிரிவலம் வந்து கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் காலப்போக்கில் மனித சமுதாயத்தில் முறையற்ற  காமம், மது, பொய்மை, சூது போன்று தீவினைச் சக்திகள் சேர்ந்து தீய கர்மத்தின் வினைகள் அதிகரித்ததால், மனித சமுதாயத்தின் புனிதத் தன்மை மாசுபடத் துவங்கியது. மேலும் காலப்போக்கில் இந்த ஜோதி எப்படி வந்தது என்ற அவநம்பிக்கை நிறைந்த, தேவையற்ற, குறுக்குத்தனமான கேள்வியும் மனித அறிவில் தோன்றியது. இது தெய்வீகமாக சுயம்புவாகத் தோன்றிய ஜோதி என்று ஏற்க மறந்த மனிதன் தீவினை வசப்பட்டுத் தானாக சுயஞ்ஜோதி எவ்வாறு எழும் என்று கேள்வி கேட்கத் துவங்கினான். ஒருபுறம் இறையுணர்வு இருந்தாலும், மறுபுறம் இறைப் பகுத்தறிவில்லா விஞ்ஞானம் அவனைக் கலக்கத் துவங்கிவிட்டது. இதனால் இறைசக்தியே தன் சுயஞ்ஜோதியைக் கொஞ்சம் கொஞ்சமாக மறைத்துக் கொண்டு தன் திருமேனியையும் கல்லாக ஆக்கிக் கொண்டு எதையும் தானாகப் பகுத்தறிந்து தெளிவும் வண்ணமாகவே இன்று சுயம்புலிங்கங்களாக, மூர்த்திகளாக இறைவன் உலகெங்கும் வியாபித்துள்ளான்.

உலகின் மிக பிரம்மாண்டமான சுயஞ்ஜோதி லிங்க ரூபமே திருஅண்ணாமலை ஆகும். பல கோடி யுகங்களுக்கு முன், தானாக ஒளிர்ந்து பின் மறைந்து சூட்சுமமாக இயங்கும் திருக்கார்த்திகை தீப ஜோதிதனை சித்புருஷர்கள் தாம் மனித சமுதாய கலியுக நியதிக்கேற்ப, கார்த்திகைதோறும் தானாக எழும் சுயஞ்ஜோதி வடிவாக ஒளிர்வித்தார்கள். ஆனால அந்த பண்டைய யுகங்களிலெல்லாம் சிவத் திருமேனியாக திருஅண்ணாமலை விளங்குவதால் எவரும் மேல் ஏறுவது  கிடையாது. மிகவும் தவ வலிமை மிக்க யோகியர் மட்டுமே தம் தவப் பலனால் கால்படாது தேவ நடையில் மேல் ஏறி தீப ஜோதிதனை ஏற்றித் தந்தார்கள். இந்த யோக இறை நிலையையும் கலியுக மனிதன் இழந்து வருதலால் மேலும், சித்புருஷர்கள், யோகியர், மஹான்கள் உலகில் பலவடிவில் நிறைந்திருந்தாலும் அவர்களை மதிக்கும் பண்பாட்டை மனித சமுதாயம் இழந்து விட்டதால், மனித முயற்சியாக திருக்கார்த்திகை தீபம் தோன்றட்டும் என்று தற்போதைய கலியுக நியதியாக சித்புருஷர்கள் அமைத்துத் தந்துள்ளார்கள். எனவே தேவதீபம் என்பது திருஅண்ணாமலையில் இன்றைக்கும் நித்திய ஜோதியாக ஒளிர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனை யோகத் தவத்தினால் தான் உணர்ந்து ஞானக் கண்ணால்தான் காண இயலும். பல சம்யங்களில் இப்போதும் ஜோதி தரிசனம் இங்கு கிடைப்பதைப் பலரும் தரிசித்துள்ளனர். எனவே, கார்த்திகை தீபம் என்பது எப்போதும் ஒளிரும் அருணாசல சுயஞ்ஜோதியின் பிரதிபலிப்பே!

குடும்ப ஒற்றுமை

குடும்பம் ஒன்று கூடிட....  நந்திக் கலம்பகப் பிரதோஷ பூஜை மஹிமை!
திரைலோக்கிச் சிவலிங்க அருள்வளப் பெருமை! குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்து வாழ முடியவில்லையே என்று பலரும் ஏங்குகின்றார்கள் சொத்து, வழக்கு, பாகப் பிரிவினை விவகாரம், திருமணப் பிரச்சனைகள், மருமகன், மருமகளுடைய அதிகாரம், ஆணவம் மற்றும் பல காரணங்களால் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ முடியாமல் தவிக்கின்றன! சாதாரணமாக அமைதியாக இருக்கின்ற குடும்பங்களில் கூட பதவி மாற்றம், பிள்ளைகளுடைய கல்வி போன்றவற்றால் பல ஆண்டுகளாகக் குடும்பங்கள் ஒன்று சேர்ந்து இருக்க முடிவதில்லை . இதற்கெல்லாம் விடிவோ, முடிவோ கிடையாதா? நிச்சயமாக உண்டு.

திரைலோகி திருத்தலம்

குடும்பங்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு நந்திக் கலம்பகப் பிரதோஷம் என்று ஒரு பிரதோஷ விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். இதனைக் கொண்டாட வேண்டிய திருத்தலங்கள் ஒரு சில உண்டு. இவற்றுள் முக்கியமானதுதான் கும்பகோணம் சூரியனார் கோயிலருகே திரைலோக்கியில் உள்ள சிவாலயம் ஆகும். இங்கு அபூர்வமான இறை தரிசனமாக ஒரு கல்லின் மீது சிவ பார்வதி திருக்கோலத்தைக் கண்டிடலாம். கல் நந்தியின் மீது அமர்ந்த நிலையிலான சிவபார்வதிக் கோலம் காணுதற்கரிய காட்சியாகும். சிவன் மீது மலர் பாணம் எய்து மறைந்த தன்னுடைய தேவ பர்த்தாவின் (மன்மதனின்) தரிசனத்தைக் கண்டு, தம்பதி சகிதம் சிவ பார்வதி தரிசனத்தைப் பெற வேண்டும் என்பதற்காக ரதி தேவி தவம் புரிந்து இவ்வருட் காட்சியைப் பெற்றத் திருத்தலமே த்ரைலோக்கி திருத்தலம்! குடும்ப ஒற்றுமைக்காகத் தெய்வ சக்தியைப் பொழிகின்ற அரும்பெரும் சிவத் தலம். பிரதோஷ நாளன்று வில்வ தீர்த்தத்தை மட்டும் அருந்தி விரதம் இருந்து திரைலோக்கி சிவாலயத்தில் நந்தி மேல் அமர்ந்திருக்கும் சிவ பார்வதி தரிசனம் செய்து இங்கு பிரதோஷம் கொண்டாடி, இயன்றால் பல அடியார்கள் துணையுடன் பிரதோஷ நாயகரை இவ்வாலயத்தில் பிரதோஷ வலம் வரச் செய்து மிகச் சிறப்பாக பிரதோஷத்தை இத்தலத்தில் கொண்டாடி வருதல் வேண்டும்.

இங்கு பிரதோஷ நேரத்தின் போது கொத்து கொத்தாக உள்ள தாவர உணவு வகைகளைச் சமைத்து அன்னதானமாக அளிப்பதால் குடும்பங்கள் ஒன்று கூடும். குடும்ப ஒற்றுமையும் பெருகும். பிரிந்த குடும்பங்களும் ஒன்று சேரும். உதாரணமாக அவரைக்காய், புளியோதரை, கருவேப்பிலை, புதினா, கீரை வகைகள், திராட்சை, வாழைப்பழம் போன்ற கொத்துக் காய்களைச் சமைத்து, இவ்வகை கனிகளை / உணவுகளைப் பிரதோஷ நாளன்று ஈசனுக்கு படைத்து பிரதோஷம் கொண்டாடி இங்கு அன்னதானமாக அளித்து வந்தால் பிரிவுற்ற குடும்பங்கள் நிச்சயம் ஒன்று சேரும். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து பிரதோஷத்தைக் கடைபிடித்து  வருதல் வேண்டும். எந்த பிரதோஷத்தையும் விட்டுவிடாதீர்கள். திரைலோக்கி சுந்தரச் சிவபெருமான் உங்களுடைய குடும்பத்தை ஒன்று சேர்ப்பார். கவலை வேண்டாம். நந்திக் கலம்பகப் பிரதோஷத்தின் போது நீங்கள் ஓத வேண்டிய விசேஷமான மந்திரங்கள் சில உண்டு. அன்னதானத்தின் போது அரிசியில் நீங்கள் எழுத வேண்டிய அகாராதி, க்ஷகாராதி என்பதான ‘அ’‘வில் தொடங்கி ‘க்ஷ‘வில் முடிகின்ற துதிகள், மந்திரங்கள், போற்றித் துதிகள் உண்டு. அத்தகைய அகரம் முதல் தொடங்கி க்ஷவில் முடியும் துதிகளை ஓதுதல் சிறப்பானது. அறியாதோர் நீங்கள் சமைக்கின்ற அரிசியில் ‘அ’ முதல் ‘ ஃ’ வரை உயிர் எழுத்துக்களையும் ‘க‘ முதல் ‘ன்’ வரை அனைத்து மெய் எழுத்துக்களையும் (ஷ, க்ஷ வையும் சேர்த்து) அனைத்து எழுத்துக்களையும் அரிசியின் மேல் எழுதி அந்த அரிசியை அன்னதானத்திற்குப் பயன்படுத்துங்கள்.

காய்கறிகள் ஒவ்வொன்றிலும், ‘ஸ்ரீசாகம்பரி தேவியே போற்றி‘ ‘ஸ்ரீசாகம்பர்யை நம:‘ என்று வலது கை மோதிர விரலால் கங்கை / காவிரி போன்ற புண்ய நதி தீர்த்தத்தைத் தொட்டு தொட்டு எழுதுங்கள். பழங்களில் ‘ஓம் கம் கணபதியே போற்றி!’‘ ‘ஓம் கம் கணபதயே நம:’‘ என்று எழுதுங்கள்.  நீங்கள் பயன்படுத்துகின்ற நீரில் ‘ஓம் ஸ்ரீஜல காயத்ரீ தேவியே போற்றி!!’‘ ‘ஓம் ஸ்ரீஜல காயத்ர்யை நம:‘ என்று எழுதுங்கள். இவ்வாறு பிறை சூரியன் போன்ற கொத்துக் கொத்தாகக் காய்க்கும் உணவை நீங்கள் அன்னதானமாக பிரதோஷ நேரத்தில் த்ரைலோக்கித் திருத்தலத்தில் படைத்து வந்தால் உங்கள் குடும்பம் நிச்சயம் ஒன்று சேரும். மாமனார், மாமியார், மைத்துனர், மைத்துனிகளின் கொடுமைகளால் வாடும் பெண்களுக்கு, பிள்ளைகளுக்கு நல்வாழ்வு கிட்டிட த்ரைலோக்கி பிரதோஷ பூஜை அருட்துணை புரியும்.

திருஅண்ணாமலை திருக்கார்த்திகை மஹா தீபஜோதி மஹிமை – சித்தர்கள் அருளிய ஞானபத்ர வாக்கியப்படி)

1. திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை மஹா தீப ஜோதி,  மனித முயற்சியாகத் தோன்றினாலும், எவ்வாறு கோயில் தீர்த்தங்களில், குறித்த நாட்களில், குறித்த நேரங்களில் சித்தர்கள் தேவாதி தேவ மூலிகைகளின் சாராம்சத்தைக் கரைத்து அவற்றின் தெய்வீக மருத்துவ குணத்தை மேம்படுத்துகின்றார்களோ, இதே போல திருஅண்ணாமலையில் ஏற்றப்படும் திருக்கார்த்திகை தீபத்தில்தான், முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தேவ மூர்த்திகளும், தங்களுடைய தேவ ஜோதியின் தெய்வாம்சங்களைக் கூட்டுகின்றார்கள்.

2. திருஅண்ணாமலை கார்த்திகை தீப ஜோதியில் தான் ஸ்ரீமுருகப்பெருமான், ஸ்ரீபிள்ளையாரப்பன், ஸ்ரீ அம்பிகை, ஸ்ரீபெருமாள் மூர்த்தியென அனைத்துக் கோடி தேவ தெய்வாதி அவதார மூர்த்திகளும், தங்களுடைய தெய்வ லோக ஜோதிகளை ஏற்றிப் பிரபஞ்சத்திற்கான தெய்வீக நற்கிரணங்களைப் பரப்புகின்றார்கள்.

3. இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அக்னி வகைகளுக்கும், நட்சத்திரக் கோளங்களுக்கும்  இன்னோரன்ன அக்னி வடிவங்களுக்கும் அக்னி மூலங்களுக்கும் தேவையான ஒளி உஷ்ண சக்திகள் மூலமாகத் திரட்டி அளிப்பது திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியே!

திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீபப் பெருவிழாவில் கார்த்திகை நட்சத்திரத் திருநாளில், இன்றைக்கு மனித முயற்சியாக கார்த்திகை தீப ஜோதியானது விசேஷக் கொப்பறையில் ஏற்றப்படுகின்றது போல் தோன்றுகின்றதுதானே! ஆனால் இந்த கார்த்திகை தீப ஜோதியில்தான், முப்பத்து முக்கோடி தேவர்களும், அனைத்து தேவாதி தேவ மூர்த்திகளும், அனைத்து தெய்வ அவதாரங்களும், தேவ ஜோதியின் அம்சங்களைக் கூட்டுகின்றார்கள் என்பது பலரும் அறியாத தெய்வீக இரகசியமாகும். திருஅண்ணாமலை கார்த்திகை ஜோதி தீப மஹிமை பற்றி சித்தர்களுடைய ஞான பத்ரத்தில் மிகவும் சிறப்பாக விளக்கியுள்ளார்கள். இன்றைக்கும், ஸ்ரீநந்தி தேவரே, திருஅண்ணாமலையின் மஹிமையை எடுத்துரைக்க அதனை ஸ்ரீஅகஸ்திய பெருமான் கோடானு கோடி யுகங்களாக, பல ஞான பத்ர கிரந்தங்களாக வடித்து வருகின்றாரன்றோ! அவைதாம் இன்று நம் சிவ குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளின் அருட்கடாட்சத்தினால், அவர்தம் சிஷ்யத் தோன்றலாகிய சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழிகளாக, சற்குருமார்கள் மூலமாக அளிக்கப்படுகின்றன.. சித்தர்கள்தான் அந்தந்த யுக நியதிகளுக்கு ஏற்றவாறு பூஜை வழிகளையும், இறைவழிபாடுகளையும், பிராயச்சித்த பரிகார முறைகளையும் அளித்து வருகின்றார்கள்.

கலியுக நியதிக்கேற்ப கடவுள் காட்டும் ஜோதி தரிசனம்!

ஸ்ரீராமர் அவதாரம் கொண்ட திரேதாயுகத்தில் நிலவிய சமுதாய வழிபாட்டு முறைகளோ, சமுதாய நீதி முறைகளோ, கலியுகத்திற்கு ஏற்புடையதாகுமா? நிச்சயமாக இல்லை. இன்றைக்கும் சித்புருஷர்களால் திருஅண்ணாமலையில், திருக்கார்த்திகையன்று தாமாகவே எழும் சுயம்ஜோதியைச் சமுதாய வழிபாட்டிற்கென்று எழுப்பித் தர முடியும். எவ்வாறு சபரி மலையில் சுயம்ஜோதியாக மகர ஜோதி ஏற்படுகின்றதோ, அதேபோல திருஅண்ணாமலையில் சுயம்ஜோதிப் பிரகாசத்தை மாமுனிகளால், சித்தர்களால் கொணர முடியும். ஆனால் கலியுக விஞ்ஞானம் இதை ஏற்குமா? சபரி மலையில் வான்வழியில் மகரஜோதி ஏற்படுவதால், அதன் அருகில் ஓர் அங்குலம் கூட நவீன விஞ்ஞான கண்டுபிடிப்புகள் செல்ல முடியாததால், இதனை விட்டு விட்டார்கள்.

அப்படி என்ன மகத்தான தெய்வீக சிறப்பம்சம் திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதியில் பொதிந்து கிடக்கின்றது? திருஅண்ணாமலையில் சுயம் ஜோதி ஏற்படுமாயின், அதைக் கூறு கூறாக்கி, ஆராய்ச்சி செய்து, பெரும் தெய்வீக சாபத்திற்கு உட்படத்தானே கலியுக விஞ்ஞானம் அடிகோலிடும். எனவே கலியுக நடைமுறை நியதிகளுக்கேற்ப இன்றைக்கு மனித முயற்சியாக அமைந்துள்ளதான/ ஏற்றப்படுவதான கார்த்திகை மகா தீப ஜோதியில்தான் முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவாதி தேவமூர்த்திகளும், தம்முடைய தேவ லோக ஜோதியின் அம்சங்களைக் கூட்டுகிறார்கள். எவ்வாறு இன்றைக்கு பசுநெய், விளக்கெண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், நல்ல எண்ணெய் போன்றவற்றைச் சுமந்து சென்று, மலை உச்சியில் தீபத்தை ஏற்றுகின்றோமோ, அதே போல தேவாதி தேவர்களும் அவர்களுக்குரிய தேவ லோகக் கணக்கில் ஒரு மண்டல விரதமிருந்து நம் கண்களுக்குத் தெரியாத சூட்சும ஜோதியைக் கொணர்ந்து அவர்களும் இதில் பங்கு கொள்கின்றார்கள் என்பதே கார்த்திகை சிறப்பம்சமாகும்.

இவையெல்லாம் நம் ஆறறிவிற்கும் எட்டாத தெய்வீக அனுபூதிகளாகும். சற்குருவின் குரு அருளால் மட்டுமே உய்த்து உணரப் பெற வேண்டிய தெய்வீக பொக்கிஷங்களாகும். நம் குறுகிய மனித அறிவால் ஆராய்ந்து, ஆராய்ந்து பக்க விளைவுகள் (side effects) கொண்ட விஞ்ஞானத்தைக் கொண்டு தெய்வீகத்தை ஆராயமுற்பட்டால் அதைவிடச் சமுதாயப் பெருங்கேடு வேறு எதுவும் கிடையாது..!

அறவோரின் அறப்போர்!  திருஅண்ணாமலை தீப ஜோதி என்பது உலக ஜீவன்களின் நல்வாழ்விற்காக சிவ ஜோதிக் கருணைக் கடாட்சத்தை பொழிவது மட்டுமல்லாமல், இன்றைக்குக் கலியுகத்தில் நிரவியிருக்கின்ற தீவினை சக்திகளை அழிப்பதற்குத் தேவையான மனோதிடம், வைராக்கியம், பூஜா பலன்கள், நல்ல ஆரோக்கியம், மனத் துணிவு போன்ற பல நல்ல இறைக் குணப்பாடுகளையும் அனைத்து ஜீவன்களுக்கும் தந்தருள்கின்றது. பீடி பிடித்தல், மது அருந்துதல் போன்ற எவ்வித கெட்ட பழக்கங்கள் எதற்கும் ஆளாகாமல் நல்லார் ஒருவர் நல்வாழ்வு வாழ்கின்றான் என்றால், அவன் ஒவ்வொரு வினாடியும் தன்னுடைய தெய்வீக புண்ய சக்தியால் தீவினை சக்திகளை எதிர்த்துப் போரிட்டுக் கொண்டிருக்கின்றான் என்பதே பொருளாகும். இதற்குத் தேவையான ரட்சை ஆற்றலை புண்ய சக்திகளைத் தருவதே திருஅண்ணாமலை கிரிவலம் ஆகும். இக்கார்த்திகை மகா தீபத்தன்று ஏற்றப்படுகின்ற ஜோதியிலிருந்து பொங்கி வழிகின்ற அருணாசல நல்வர இறைக் கிரணங்கள் யாவும் மலை முழுதும் நிரவிக் கிடந்து ஒவ்வொரு பௌர்ணமியின்போதும் சந்திரனின் ஒளிக் கிரண பிரதிபலிப்பாக வெளிவந்து நமக்குப் பலவிதங்களில் துணை புரிகின்றன. அதோடு மட்டுமல்லாமல் ஒவ்வொரு வினாடி நேரத்திலும், இம்மலையிலிருந்து பொழிகின்ற ஜோதிக் கிரண நல்வர சக்திகளானவை ஏராளம்! ஏராளம்! இதற்காகத்தான் திருஅண்ணாமலையை எந்நாளிலும், எந்நேரத்திலும, எந்தப் பொழுதிலும் கிரிவலம் வந்திடலாம் என்று நம் பெரியோர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

யாருக்கு எந்நேரத்தில் கிரிவலம் வரவேண்டும் என்று பிராப்தம் இருக்கின்றதோ, அவ்வாறே அது நடைபெறும். கிரிவலத்தில் நம்மோடு கூடயாரும் வரவில்லையே, ஏதோ ஓரிருவர்தான் சென்று கொண்டிருக்கின்றார்கள்.. என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். லட்சக்கணக்கான மகரிஷிகளும், தேவர்களும் எப்போதும் எந்நேரத்திலும் சூட்சும வடிவத்தில் நமக்குப் புலனாகாத வகையில் எறும்புகள், கோழிகள், பறவைகள், விலங்குகள், ஏன் மனிதர்கள் உருவத்தில் கூட கிரிவலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களோடு நாம் கிரிவலம் வருகின்றோம் என்ற தெய்வீகப் பெருமிதம் உங்கள் உள்ளத்தில் எழவேண்டும். ஆகையால் எந்தகிரிவலமும் பித்ருக்களின் ஆசியினால்தான் நடக்கிறது என்பதை அடக்கத்துடனும் பணிவுடனும் ஏற்றுக் கொள்ள வேண்டும்

அரிய தேவ தீப விளக்கம் அறிவீர்! திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்தில் தேவ ஜோதியை ஏற்றுவதற்காகவே கடுமையான விரதத்தை மேற்கொள்கின்ற மகரிஷிகளும், தேவர்களும், சித்புருஷர்களும் உண்டு. திருஅண்ணாமலை கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பிறகு பல நாட்களில் பல நேரங்களில் மேகங்கள் ஜோதியை மறைப்பது போலான காட்சியை நீங்கள் கண்டிருப்பீர்கள் அப்போதெல்லாம் தேவர்களும், சித்புருஷர்களும் பல வடிவங்களில், மனித ரூபத்திலும் தேவ ஜோதியைத் தாங்கிக் கொணர்ந்து வந்து தங்களுடைய தேவ தேவத்துவத்தையும் அதில் ஏற்றுகின்றார்கள்.!

ஆனால் மகரிஷிகளுக்கும், தேவர்களுக்கும் சித்புருஷர்களுக்கும் என்றே தனித்த பசுநெய் வகை உண்டு. தனித் திரி வகைகள், தேவலோக திரவியங்கள், தனிக் கற்பூர வகைகள் உண்டு. ஆம் இவை எல்லாம் நம் மனித அறிவால் எண்ணிப் பார்க்க முடியாதது ஆகும். அண்ணாமலை தீபத்தில் சாம்பிராணி ஜோதியைக் கூட ஏற்றக் கூடிய அஷ்டகந்த சித்புருஷர்களும்  உண்டு.. இவர்கள் தேவ லோகங்களில் கிட்டுகின்ற தேவ சாம்பிராணி, புனுகு, கஸ்தூரி, குங்குமப் பூ, பச்சைக் கற்பூரம், அகில், கோரோசனை, சந்தனம் போன்ற எட்டு (அஷ்ட கந்தம்) விதமான திரவியங்கள் கலந்த ஜோதியை ஏற்றிச் செல்கின்றார்கள்.. இதைத் தவிர புஷ்பகந்த சித்தர்கள் என்று ஒரு வகை உண்டு. இவர்கள் குறைந்தது 1008 வகையான தேவ புஷ்பங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற மூலிகா நறுமணத்தைச் (சென்ட்) கலந்த திரவிய தேவ ஜோதியை வந்து ஏற்றிச் செல்கின்றார்கள்.. விளக்கு ஏற்றுவதற்கு முக்கியமான எண்ணெய் வகைகள், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், வேப்ப எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவையாகும். இதைத்தவிர விளக்கேற்றுவதற்கான தேவ எண்ணெய் வகைகளும் உண்டு. கடலை எண்ணெய் கொண்டு ஒருபோதும் விளக்கு ஏற்றக் கூடாது. ஆயிரக்கணக்கான பசுவகைகளும் தேவ லோகங்களில் உண்டு. பூலோகத்தில் நாம் காண்பது தேவலோகப் பல்லாயிரக்கணக்கான பசு வகைகளில் ஒன்றே. இவ்வாறாக திருஅண்ணாமலை திருக்கார்த்திகை தீப ஜோதி மஹிமை மனித அறிவிற்கு எட்டாத மகத்தான இறை லீலையாகும்.

ஸ்ரீபெருமானந்த சித்தர்

தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள்

சித்தர் பெருமான்கள் பல வடிவங்களில் தோன்றி பூலோக ஜீவன்களுக்கு மட்டுமன்றி பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி லோகங்களிலும் உள்ள ஜீவன்களின் நல்வாழ்விற்காகத் தம்மைத் தியாகம் செய்து அருளாசி வழங்குகின்றனர். சாதாரண மனிதராக மக்களோடு மக்களாகச் சமுதாயத்தில் உறைந்து தம் சித்திகளை, இறையருள் தன்மையைச் சற்றும் வெளிக்காட்டாது. ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு உணரும்படி செய்து இறைப் பணி ஆற்றுகின்றோர் பிருத்வி சீல சித்தர்கள் ஆவார்கள்.. ஸ்ரீபூண்டி மஹான் போன்றோர் சிரஞ்சீவி ஜோதி சீல தத்துவத்தில் பிரகாசிக்கின்ற சித்தர்கள்! காஞ்சீபுரம் போடா சித்த சுவாமிகள் (சிவசாமி யோகி சித்தர்) போன்றோர் யுகம் யுகமாய் ஒளிர்கின்ற ஏகாந்த ஜோதி சித்தர்களின் வகையினராவார்.. இவ்வகையில் தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்தர்பிரான் சுவாமிகள் ஔஷத ருத்ர பூஷணத்தில் தலை சிறந்த சித்தர்கள் சங்கம வகையைச் சார்ந்த சித்தர் பெருமான்! அதாவது ஸ்ரீதன்வந்த்ரீ சித்தர் பெருமானின் குருகுல சக்கரவாக சீலராய் அன்றும், இன்றும், என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் ஒளிர்பவர் ருத்ர பூஷண சித்தர்கள் என்றால் பெறுதற்கரிய தேவாக்னியைத் தங்களுடைய பிராணாயாம யோக சக்தியால் தேவ சித்த லோகங்களிலிருந்து கிரகிக்கும் தேவ சித்தி பெற்றவர்கள் ஆவர். தேனிமலையின் அதி அற்புத தேவ பாறைகளில் ஆங்காங்கே குறித்த ஹோரை நேரங்களில் தியானங்களில் அமர்ந்து பெறுதற்கு அரிய தேவாக்னி சக்தியையும் தேனிமலை முருகப் பெருமானுடைய ஸ்கந்தாக்னி (ஆறு நட்சத்திர ஜோதி சக்திகள்) மற்றும் ருத்ர சித்தாக்னி சக்தியையும் தம்முடைய 72000 நாடிகளிலும் ஆறுமுக பெருமானின் திருவருளால் நிரவி தேனிமலை தேவமயப் பாறைகளின் ஆழ்உள்நீரோட்டத்தில் கலந்து இத்தகைய தெய்வீக சக்திகள் எப்போதும் தேவமயப் பாறைகளிலிருந்து (திருஅண்ணாமலைபோல்) ஒளிரும்படி இறைப்பணி ஆற்றுபவரே தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த சுவாமிகள்!

தேனிமலை மேல்மட்டத்தில் உள்ள பாறை தீர்த்தங்களிலும் இந்த ஸ்கந்த சீலசக்திகள் நிறைந்து ஜல தீபச்சுடராய் எப்போதும் பரவெளியில் நிரவுகின்றன. கால்களில் பாதணிகள் இல்லாது மலையில் ஏறிச்செல்கையில் பாறைகளில் படர்ந்திருக்கும் ஆழ்உள் தேவ நீரோட்டச் சக்தியானது பக்தர்களுடைய கால்ரேகைகள் மூலமாக தேகத்தில் கூடுகின்றன. எவ்வாறு பூமியின் அடியில் உள்ள கனிமங்கள் நிலக்கரி, நில எண்ணெய் தாதுக்களை ரிபைனரீஸ் போன்றவை மூலமாக ஜீவன்களுக்குப் பயன்படும்படி செய்கின்றோமோ, அதேபோல பூமியின் உள்ளும், மேலும், பரவெளியிலும், எங்கும், எதிலும், நிறைந்திருக்கின்ற இறைப்பெரும் ஜோதியை 1. தீர்த்தங்கள் (நீர்) 2. பாறைகள் (நிலம்) 3. வில்வம், அரசு, ஆல் போன்ற விருட்சங்கள் உ(ரா)றையும் (காற்று) 4. சூரிய சந்திர நட்சத்திர ஜோதிப் பரிமாணம் (நெருப்பு) 5. ஆகாயம் (உச்சிப் பாறை விளக்குக் காம்புகள்) ஆகிய பஞ்சபூத வடிப் பொருட்கள் மூலமாக நமக்கு பெற்றுத் தருவதற்காகவே சித்தர்கள், மகான்கள் நம்முடன் சமுதாயத்தில் உறைகின்றார்கள்.. தேனிமலை ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகள் போன்ற சித்புருஷர்கள் பிறப்பு இறப்பு இல்லா ஏகாந்த ஜோதிகள், மானுட உடலில் இறையாணையால், குருவருளால் அவர்கள் குடி கொண்டாலும் அவர்கள் என்றும் உறங்குவது கிடையாது, ஓய்வு கொள்வதும் கிடையாது. அவர்கள் உறங்குவது போல் வெளிப்படையாகத் தோன்றினாலும், தம் பூத உடலைக் கிடத்தி விட்டு தேவ உடலில் எத்தனையோ தேவ லோகங்களுக்குச் சென்று எத்தனையோ கோடி ஜீவன்களுக்கு நன்மை செய்கின்றார்கள். ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகள், பதினெண் சித்தர்களில் ஸ்ரீதந்வந்த்ரீ சித்தருக்குரித்தான ஔஷத மாதவ லோகத்தில் ஸ்கந்த ஜோதியாய்ப் பிரகாசித்து எத்தனையோ சித்தர் பெருமான்களுக்கு குருகுலவாசம் பெற்றுத் தந்தவர் ஆதலின், அவருடைய (மானுட) உறக்க நிலைகளில் அவர்தம் சூட்சும தரணி ஜீவ ஜோதி ஸ்கந்த லோகத்தில் பெருந்தவம் பூண்டிருக்கும். இத்தகைய நித்ய தேவ தியான நிலைகளைப் பூண்டு இப்பூவுலகில் ஸ்கந்த சக்திகள் நிறைந்து விளங்குகின்ற புனிதமான இறைத்தலங்களுள் ஒன்றான தேனிமலையின் தேவச் சந்திரப் பாறைகளில் தவம் செய்து யோகம் கூட்டி ஆசனங்கள் உய்த்துத் தாம் பெற்ற தேவாதி நல்வர சக்திகளைப் பாறைகளின் நுண் நீரோட்ட சக்திகளுக்கு மாற்றுவிக்கின்றனர். இவைதாம் மலையைச் சுற்றி கிரிவலம் வரும் அடியார்களுக்கும், மலைமேல் ஏறி வழிபடும் பக்தர்களுக்கும் 72000 நாடி நரம்புகளில் சேர்ந்துள்ள துன்பங்களைத் தீர்த்து நல்வழி காட்டுகின்றது. மாதக் கார்த்திகை, விசாகம், பரணி, அஸ்வினி போன்ற அக்னி பகவானுக்கு உரித்தான நாட்கள், பௌர்ணமித் திதி, செவ்வாய்க் கிழமை, தினந்தோறும் அமைகின்ற செவ்வாய் ஹோரை நேரங்கள் தேனிமலையில் கிரிவலம் வருவதற்கான மிகவும் விசேஷமான நாட்களாகும். 

குறிப்பு: அந்தந்த தினத்தின் சூரிய உதய நேரத்தையொட்டி ஹோரை நேரம் துவங்கும். உதாரணமாக 5.12.2000 அன்று சூரிய உதய நேரம் 6.24 a.m எனில் அன்றைய செவ்வாய் ஹோரை நேரமானது 6.24-7.24 am , 1.24.-2.24 pm.., 8.24-9.24 pm என்று அமையும்.

மேலும் இங்கு தினந்தோறும் கிரிவலம் வந்திடலாம். பொதுவாக, பலவிதமான நோய்களிலிருந்து நிவர்த்தி பெறுவதற்காக கிரிவலம் வர விரும்புவோர்கள் தங்கள் நோய்களுக்கான மருந்துகளைக் கையில் தாங்கிக் கொண்டு, அட்டவணைப்படி செவ்வாய் ஹோரை நேரத்திலும் மற்றும் மருந்துகளை உட்கொள்ள வேண்டிய விசேஷமான நாட்களான ஆயில்யம், திருவாதிரை, மூலம், கேட்டை நாட்களில் தேனிமலையைக் கிரிவலம் வந்து முருகனுக்கும் நட்சத்திர தேவதைகளுக்கும் ப்ரீதியான நட்சத்திர வடிவ பூக்களைக் கொண்ட காய்கறி உணவு வகைகளைக் கொண்டு படைத்து (கத்தரி, பூசணி, பறங்கி) அன்னதானமாக அளித்து வர தோல், நரம்பு, குடல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் கிட்டும். நன்றி வழிபாடாக இறுதியில் தேனிமலை அடிவாரத்தில் ஜீவாலயம் கொண்டிருக்கும் ஸ்ரீபெருமானந்த சித்த ஸ்வாமிகளை அடிப்பிரதட்சிணமாக வலம் வந்து வணங்குவதால் யோக சக்திகள் நிறைந்து நல்ல ஆரோக்யம் பெறுவர் !

நத்தையின் சிறப்பு

நத்தையின் தெய்வீகச் சிறப்பியல்புகள்!

இறைவனுடைய படைப்புகளில் கல், மண், பாம்பு, பூரான், மான், செடி போன்ற அனைத்து உயிருள்ள/ஜடமான பொருட்களின் படைப்பிற்கும் எத்தனையோ காரண காரியங்கள் உண்டு... இந்த படைப்பின் ரகசியங்களைப் பற்றி ஒருவன் தினந்தோறும் ஆத்ம விசாரமாகச் செய்து வந்தால்தான் அவனுக்கு தீர்க்க தரிசனமும், அதியற்புத சித்திகளும், பிறப்பு, இறப்பு ரகசியங்களும் அறியப் புலப்படும்! மந்திர, தந்திர, பூஜைகளைக் கடைபிடித்துப் பெரும் சித்திகள் கிட்டிடின் அவற்றை முறையாகப் பயன்படுத்தாவிடில் இருக்கின்ற புண்ய சக்தியும் இழக்கப்பட்டு விடும். அல்லது அவை தம் மீதே பாய்ந்துவிடும். தாமாகக் கனியும் சித்திகளும் உண்டு! இதிலும் மிக கவனமாக இருத்தல் வேண்டும். இத்தகைய சித்திகளில் மனம் உழன்று, மாயைகளில் சிக்காமல், சிறந்த தெய்வீகத்தில் செழித்திட ஒரே நல்வழி உண்டு!

ஒருவர் சற்குருவின் அரவணைப்பில் வருகின்ற போது குருவே வாழ்க்கைக்கும், சமுதாய இறைப் பணிகளுக்கும் தேவையான சித்திகளை மட்டும் சூட்சுமமாக அடியார்களுக்கு அளித்து  அறவழியில் இட்டுச் செல்கின்றார்! நத்தைக்கும் இத்தகைய ஆன்ம விளக்கங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கத் தோன்றுகின்றதா? பகுத்தறிவு கொண்டிருப்பதாகக் கருதப்படும் மனிதனை விட, புழு, பூச்சி, வண்டு போன்றவற்றிற்கு எத்தனையோ தெய்வீகக் குணங்கள் ததும்பிக் கிடக்கின்றன.. ஆனால் நல்லது, கெட்டதை இறைப்பூர்வமாகப் பகுத்தறிய வேண்டிய பாங்கினை இறையருளால் பெற்றுள்ள மனிதனோ மது, புகை பிடித்தல், ஒன்றுக்கும் பயனில்லா கேளிக்கைகள், முறையற்ற காமம் போன்ற தீயவற்றிலேயே நாட்டம் கொண்டு தன் பகுத்தறிவை விரயப்படுத்துகின்றான்.. நத்தை போன்ற பல அதிசய தெய்வீகக் குணங்கள் நிரம்பிய ஜீவன்களை ஒருவன் பார்க்கும் போது அவனுக்கு சில மனக்கட்டுப்பாடுகள் தாமாகவே ஏற்படுகின்றன. நத்தை பஸ்பம் என்ற அற்புத மருத்துவ சக்தி நிறைந்த இயற்கை மருந்துகள் உண்டு. இதற்காக நத்தைகளை வதைத்தோ, நத்தைக் கூடுகளை உடைத்தோ ஜீவ இம்சை செய்யக் கூடாது.

இதற்காகத்தான் நத்தை பஸ்பம், ஆமை ஓடு போன்றவற்றால் மருந்துகளைச் செய்யும் போது அதற்குரித்தான மந்திரங்கள், பூஜைகள், ஹோமங்களைக் கொண்டு முன்னரேயே பரிகாரங்களை வேண்டி, சங்கல்ப வழிபாடுகளை மேற்கொண்டு அக்குறிப்பிட்ட ஜந்துக்களுக்கு நன்னிலை வேண்டியும் மருந்துகளின் நிவாரண சக்திகளையும் மேம்படுத்துவார்கள். தாமாகக் கரையில் ஒதுங்கிய (உயிர் நீத்த) ஜீவன்களின் ஓடுகள் (நத்தை, ஆமை), செதில்கள், நகங்கள்(புலி), கொம்புகள் (மான்), தோல்கள் (புலி) போன்றவற்றைத் தெய்வீகப் பூர்வமாகவும், மருத்துவப் பூர்வமாகவும், யோகப் பூர்வமாகவும் பயன்படுத்த வேண்டிய வழிமுறைகளை அறிந்த பெரியோர் இன்றும் உண்டு. ஆனால் உயிர் வதை கூடவே கூடாது.. நத்தை பிரச்னம் என்ற ஜோதிடப் பூர்வ சகுன சாஸ்திரம் உண்டு. ஒன்பது வாழை/தாமரை இலைகளை வரிசையாக வைத்துத் திருமணம், வீடுவாசல் பாக்கியங்கள் போன்றவற்றிற்கான ஒன்பது வீடுகள்/ பாவ(ன)ங்கள் ஆகியவற்றை  அறிகின்ற சகுன சாஸ்திரம் தற்போது மறைந்து தோன்றியுள்ளது.. நத்தையின் இரு உணர்வுக் கொம்புகள் மிகவும் சக்தி வாய்ந்த Celestial Antennae என்பது பலரும் அறியாத ஆன்மீக ரகசியாகும்..

நுண் ஒலி உணரும் நத்தை!
மனிதனுடைய காதுகளுக்கு எட்டாத பல நுண்ணிய ஒலி அலைகளை நுணரும் சக்தியைப் பெற்றதே நத்தை ஆகும். அதாவது முப்பத்து முக்கோடி தேவர்களும், தரணி பந்துக்கள், பித்ரு தேவர்கள், பித்ரு மூர்த்திகள், பித்ரு தேவதைகளுடைய அரிய சுசரித தேவ மொழி உரையாடல்களை உணரும் தேவ சக்திகளைக் கொண்டவைகளே நத்தைகளாம். அக்காலத்தில் குருகுலவாசத்தில் எந்த ஒரு ஹோமத்தை நிகழ்த்துவதற்கு முன்னாலும் ஒவ்வொரு மகரிஷியும் பலவிதமான ஜீவ ஒளி தரிசனங்களைப் பெற்றாக வேண்டும். இதற்காகத்தான் தம் சிஷ்யர்களை சமித்துகளைப் பொறுக்குவதற்காகக் கானகத்திற்கு அனுப்பி மண் புழு தரிசணம், நத்தை தரிசனம், பசுக் கூட்ட தரிசனம் (குறைந்தது 300 பசுக்களை ஒன்று சேரப் பார்ப்பது), மயில் தரிசனம், பொன் மான் தரிசனம், யானை தரிசனம் போன்ற பலவற்றை அடையுமாறு நிர்ணயித்திருந்தார்கள். நத்தை ஏறிய சமித்து, நத்தை ஊர்ந்து வரும் இலைகள், நத்தை நகர்ந்து வரும் புல் போன்றவற்றிற்கு மகத்தான தேவ சக்திகள் உண்டு. உதாரணமாக நத்தை ஊர்ந்த நாரத்தை இலையைக் காலை இளவெயிலில் காய வைத்து பாஸ்கர ஹோமத்தில் ஆகுதியாக இட்டு அதன் ஹோமப் புகையை நுகர்ந்து வந்தால் கடுமையான ஆஸ்த்மா நோய்க்கு அற்புதமான நிவாரணம் கிட்டும். நத்தையானது ஜலசங்கம பிராண சக்தி என்ற ஹட யோக வகையிலான யோக சக்திகளையும் பூடக பிராண சித்தி என்ற வகையான சுவாச சக்திகளையும் கொண்டவையாகும்.
ஒரு நத்தையானது வெய்யில், மழை, பகல், இரவு பாராது தன்னுடைய யோகக் கூட்டினுள் உறைகின்றது என்றால் அதனுடைய யோக சக்திகளை என்னென்று சொல்வது ? மனிதனின் பகுத்தறிவிற்கு எட்டாத, ஆனால் குறித்ததோர் யோக நிலையில் மட்டுமே பெற வேண்டிய யோக ஞானமிது! மேலும் நத்தையானது தன்னுடைய மேனியில் அரிய பில சூர்ண திரவ சக்தியையும் கொண்டுள்ளது. அதாவது இதனுடைய உடலில் எப்போதும் ஒரு திரவம் சுரந்து கொண்டிருக்கும். இது தானாக இயற்கையாகச் சுரக்கின்ற கலநிணநீர் வகையைச் சார்ந்ததாகும்.

மங்களம் தரும் நத்தை தரிசனம்!
எவ்வாறு புதுக்கோட்டை பொன்னமராவதி பூலாங்குறிச்சி அருகிலுள்ள காஞ்சாற்று மலை முருகன் ஆலயத்தில் ‘பொழுதுபடாத் தீர்த்தமாக’  சூரிய சந்திர ஒளி படாத் தீர்த்தமாக அதியற்புத மருத்துவ சக்திகள் நிறைந்த ஒரு தீர்த்தம் விளங்குகின்றதோ, இதே போல மிகச் சிறந்த சல ஜல திரவ சக்தி நிறைந்ததே நத்தையாகும். காஞ்சாற்று மலையில் காணக் கிடைக்கும் நத்தைகளின் தரிசனம் மிகவும் மங்களகரமானதும், அபூர்வமானதும், அற்புத சக்தி வாய்ந்ததுமாகும். ஆனால் இவற்றை இயற்கையாகக் காண்பதோடு சரி, அவைகட்கு எவ்வித இம்சையும் தரலாகாது! எனவேதான் நத்தை ஊர்வதும், சூரிய சந்திர ஒளியில் அதன் உடல் திரவ பிரதிபலிப்பைக் காண்பதும் மிகச் சிறந்த சகுனங்களில் ஒன்றாக விளங்குகின்றது. எந்த திசையில் எந்தப் புல், இலை, கட்டையில் நத்தை ஊர்கின்றது என்பதைக் கொண்டு உரைக்கின்ற பழமையான சகுன சாத்திரங்கள் உண்டு. தவளை, பாம்பு, கோழி போன்றவை கூடத் தீனி தேடும் போது நத்தை என்றால் சற்று நிதானித்துத்தான் செயல்படும்.

பித்ரு மந்திர ஒலி கேட்கும் நத்தை!
பொதுவாக அமாவாசை போன்ற பித்ருக்களுக்கு உரித்தான திதி நாட்களில் நத்தை தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். ஏனென்றால் பித்ரு தேவர்கள் ஓதுகின்ற தேவ வாக்கியங்களை, தேவ மந்திரங்களை கேட்கின்ற சக்தி நத்தைகளுக்கே உண்டு. எனவே பித்ரு மந்திரங்களைக் கேட்டு உய்த்து உணர்கின்ற நத்தைகளின் திருமேனிகளின் பித்ரு தேவ மந்திர சக்தி நிறைந்திருக்கும் அல்லவா!

நீரிலேயே வாழும் மீன்களின் உடலில் கூட நீர் ஒட்டுவதில்லை பித்ரு மூர்த்திகளுக்குப் பிரியமானது ஜல சக்தியே! நம் மூதாதையர்களுக்குரித்தான பித்ரு லோகங்களில் ஜலப்ரவாகம் நிறைய உண்டு ஆதலின் பிரபஞ்சத்தின் எந்தக் கோடியில் நம் பித்ரு தேவர்கள் இருந்தாலும் அவர்களுடைய பித்ரு தேவ மந்திரங்களைக் கேட்கின்ற ஜல மந்த்ராகர்ஷண சக்தியை நத்தைகள் பெற்றுள்ளன. எனவேதான் அமாவாசையன்று நத்தைகளைக் காண்பதால் அவைகளுடைய உடலில் ஊறிடும் திரவ சக்தியில் பித்ரு தேவ மந்திர சக்தி பதிந்திருக்கும்.

ஒரு பித்ரு மூர்த்தியானவர் தம்முடைய சந்ததியினரிடம் தேவ லோக ஆணைகளை அளித்திட முடியாமல் தவிக்கின்ற போது  நத்தைகள் தாம் webmail server போலச் செயல்படுகின்றன. அதாவது பித்ருக்கள் அளிக்கின்ற தேவ செய்திகளை நத்தைகள் தம் உணர்வுக் கொம்புகளினால் கிரகிப்பதால் நத்தையின் தரிசனமானது பலவிதமான மன உளைச்சல்களினால் துன்பப்படுவோருக்கு நல் அமைதியைத் தரும். ஆனால் இவற்றையெல்லாம் அறிந்து கொண்டு விட்டு நத்தையைப் பிடித்து வந்து உங்கள் வீட்டிலும், தோட்டத்திலும் வைத்து readymade darshan ஆக்கிக் கொள்ளாதீர்கள்!

இயற்கையாக ஆங்காங்கே இருக்கின்ற நத்தைகளை அங்கங்கேயே பார்த்து பிரார்த்தனை செய்துவிட்டு வந்து விடுங்கள்.. அவற்றைத் தூக்கி வந்து, அசைத்து அவற்றின் தேவயோக நிலைகளுக்கு ஊறு விளைவித்திடாதீர்கள். அவையவை இருக்குமிடம் இருந்தால்தான் இறையமைதி பெருகும். பிராணாயாமம், ஆசனம், யோகம் போன்றவற்றை மனித குலம் மறந்து வருகின்ற போது சித்தர்களும் மகரிஷிகளும் தம்முடைய யோக சக்திகளையெல்லாம் இவற்றைத் தாங்க வல்ல நத்தைகள், ஆமைகள் போன்றவற்றிற்கு அளித்து அவை மூலம் உலகப் பரவெளியில் அற்புத யோக சக்திகளை நிரவி வருகின்றார்கள்.

பஞ்ச பாண்டவர் பாறை ரகசியம்!
எனவே நத்தை, ஆமை போன்றவையெல்லாம் யோக பிம்ப ஜீவ வடிவங்கள் ஆகும் என்று இனியேனும் உணர்ந்திடுக. பல மலைத் தலங்களில் பஞ்சபாண்டவர் படுக்கைப் பாறைகள் உண்டு. ஐவர் படுப்பது போலான வடிவில் இருக்கும். நத்தைகள் மலைப் பாறைகளிலும், மலைத் தாவரங்களிலும் மீது அமர்ந்து, ஊர்ந்து யோகம் பயின்று பரவெளிக்கும், பாறைகளுக்கும் ஆத்ம சக்தியை ஊட்டுகின்றன... ஐம்புலன்களில் ஸ்திர யோகம், மௌனம் தீர்க்கப் பாறை, சுவாச அடக்கம், ஒலிநாள தியானம் (மந்திர ஒலி கேட்டல்) போன்ற ஐம்புல அடக்க யோகங்களுக்காகப் பஞ்ச பாண்டவர்கள் சில மலைப் பாறைகளைத் தேர்ந்தெடுத்தனர்... மலைத் தேனிகள் கூடு கட்டுமிடம், நத்தைகள் ஊறும் பாறை, நீரோட்டக் கொடி உள்ள பாறை மலை வளர் மாகாளிச் செடிப் பாறை போன்ற ஆன்ம சக்திகள் நிறைந்த பாறைகளில் பஞ்ச பாண்டவர்கள் படுத்து சயன யோகம் பூண்டு தம்முடைய யோக நிலைகளை விருத்தி செய்து கொண்டார்கள். நத்தைகள் ஊறும் போது ஒரு வெண்மையான திரவம் படியும். இது மகத்தான மருத்துவ குணங்களையும், யோக, தேவ சகதிகளையும் கொண்டதாகும். இவற்றைத் திரட்டி முறைப்படி யோகம் பயின்று வந்தால் நத்தைக்கு எவ்வாறு மனிதனுக்குத் தெரியாத பலகோடி சூட்சுமக் காட்சிகள் தென்படுகின்றனவோ, அவற்றைக் குறித்த யோக சயனம் கொண்டு யோகப் பூர்வமாக எவரும் பெற்றிடலாம்.. இவையெல்லாம் யோக குருமூலமாக உய்த்து உணர வேண்டிய யோகப் பாடங்களாகும்.

அமுத தாரைகள்

ஆதரவு அற்றோருக்கு அபயம் தரும் பௌர்ணமி விரதம்
கணவனையோ, மனைவியையோ, பெற்றோர்களையோ, சகோதர, சகோதரிகளையோ, தனக்கு ஆதரவாக இருந்தவர்களையோ திடீரென்று இழந்து அல்லபடுகின்ற குடும்பங்கள் நிறைய உண்டு. சமுதாயத்தில் தக்கப் பாதுகாப்பு இன்றியும், உணவு, உடை, வீடு ஆகியவற்றுக்கான சம்பாத்தியமும் கூட இல்லாது வறுமையில் வாடுவோரும் உண்டு. ஏதோ, ஓரளவு வசதி இருப்பினும், தக்க துணையின்றி ஒன்றுமறியாப் பிள்ளை, பெண்களுடன் எப்படி குடும்பத்தை நடத்துவது என்று அஞ்சியே, துணிவின்றி வாழ்வோரும் உண்டு அல்லவா? திக்கற்றோர்க்குத் தெய்வம் தானே துணை!

கும்பகோணம் அருகே உள்ள கோனேரிராஜபுரத்தில் உள்ள ஸ்ரீபூமிச்வரர் சிவாலத்தில், ஓர் அற்புதமான திருக்குளம் உண்டு. மாதப் பௌர்ணமியில் குறிப்பாக வைகாசி மாதம், விசாகத்துடன் சேரும் பௌர்ணமித் திதியில், இத்திருக்குளத்தில் நீராடித் தங்களால் இயன்ற அளவு எலுமிச்சை அன்னம் படைத்து தானமாக அளித்து வந்தால், திக்கற்ற நிலையில் இருந்து மீண்டு, ஸ்ரீபூமாதேவியின் திருவருளாலும், ஸ்ரீபூமிஸ்வர சிவபெருமானின் அருட்கடாட்சத்தாலும், நன்னிலை பெறுவர். தன்னைப்போல் பொறுமையுடனும், ஆழ்ந்த நம்பிக்கையுடனும் வழிபடுவோர்க்கு ஸ்ரீபூமாதேவியே சிவசக்தி மகிமையால் அருளைப் பெற்றுத் தருகின்ற அற்புதத் திருத்தலமிதுவே. கதியற்றோர்க்கு நற்கதி காட்டும் இத்திருக்குளத்தின் மகிமையை அறிந்த பிறகேனும், தெய்வமே துணையென்ற (பூமித்) தாய் சொல் மந்திரத்தை உணர்ந்து நற்பலன் பெறுவீர்களாக!

நித்யகர்ம நிவாரணம்

1.12.2000 – இன்று அம்மனுக்கு மஞ்சள் மற்றும் நீல நிறச் சிற்றாடை அணிவித்து நெய்யால் செய்த முந்திரிப் பருப்பு இட்ட, வெண்பொங்கல் தானம், பெண்களுக்குப் பேன் தொல்லையால் வருகின்ற துன்பங்கள் தீரும். குடும்பச் சண்டைகளும் பணப் பிரச்சனைகளும் தீர வழியுண்டு.

2.12.2000 – சுயம்பு சனீஸ்வர மூர்த்தியின் பத்னிக்கு (ஜேஷ்டை தேவி) வெள்ளை நிறச் சிற்றாடை சிவப்பு, நீலம், மஞ்சள் நிறமுள்ள பார்டர் வைத்து சார்த்துதல் தேங்காய் சட்னியுடன் இட்லி தானம் – நண்பன் மனைவியால் தடைபட்ட பணம் வந்து சேரும்.

3.12.2000 – நரம்புக் கருவிகள் வாசிக்கின்றவர்கள் இன்று ஏழு சுமங்கலிகளுக்குத் தேங்காய், மஞ்சள், பூ, பழம்,  வெற்றிலை பாக்கு (நீர்த்த சுண்ணாம்புடன்) வைத்து நமஸ்கரித்து உணவு அளித்து திருப்தி செய்திட சந்தேகப்பட்ட நண்பர்கள் திருந்தி சமாதான உடன்பாடு செய்வார்கள்.
4.12.2000 – முறையற்ற வகையில் பிற மாதருடன் மறைமுகமாக வாழ்க்கை கொண்டிருப்போர் இன்று அந்த வீட்டுப் பக்கம் போதல் கூடாது.. பல ஆபத்துகள் காத்திருக்கின்றன.. முடிந்தால் மறந்து விடுவது நல்லது.

5.12.2000 – இன்று பஸ்ஸில் பிரயாணம் செய்கின்றவர்கள் தங்கள் பணத்தை இழப்பதற்கான சந்தர்ப்பங்கள் உண்டு. கவனம் தேவை

6.12.2000 – தவறுதலாக இன்று சிந்துகின்ற வார்த்தையால் நல்ல நண்பர் கோபித்துக் கொண்டு பிரியும் நாள் இது. ஆகவே இன்று முழுவதும் மௌனமாய் இருப்பது நல்லது.

7.12.2000 – அரசியலில் இருக்கும் பெண்களுக்கு இன்று ஆபத்து அதிகம்.. முழு நாளிலும் பூஜையில் இருக்க வேண்டும்.

8.12.2000 – இன்று ராகு காலத்தில் அம்மனுக்குச் சிற்றாடை அணிவித்து கெட்டித் தோசை (பெருமாள் கோயில் தோசை போல) தானம் செய்திடில் வெட்டிப் போன நல்ல உறவினர் ஒட்டி வருவர்.

9.12.2000 – நில புலன்கள், தோப்புத்துரவு வைத்து வாழ்க்கையை நடத்துகின்றவர்கள் “க” என்ற நாமத்தில் துவங்கும் சிவன் கோயிலில் அன்னதானம் செய்திடில் ஆஸ்பத்திரி செலவுகளைத் தவிர்க்கலாம்.

10.12.2000 – கருப்பு நிறம் மற்றும் நெற்றியில் வெள்ளை நாமம் இருக்கின்ற பசுவிற்கு புல் கட்டு, அகத்திக் கீரை, வயிறு நிறைய அளித்திடில் கம்ப்யூட்டர் சம்பந்தமான வியாபாரிகள் நலம் பெறுவர்.

11.12.2000 – பால்கோவா, திரட்டிப் பால், வெணணெயால் செய்யப்பட்ட உணவுப் பண்டங்கள், பால் சம்மந்தப்பட்ட உணவுப் பண்டங்கள் இன்று தானம் செய்திடில் மனைவியின் மாறா அன்பைப் பெறுவர். மனைவி மூலம் ஆதாயம் வர வாய்ப்பு உண்டு.

12.12.2000 – இன்று ஒன்பது துர்கைகளுக்குச் சிற்றாடை அணிவித்து தக்காளி சாதம் அன்னதானம் செய்திடில் மேலதிகாரிகளால் வதைக்கப்பட்ட வேலையை விட்டு விடலாமா என்கின்ற நிலைக்கு ஆளான நல்லவர்கள் வேலைகளில் அமைதியான மாற்றம் காண்பர்.

13.12.2000 – ஸ்டீல் பீரோ பர்னிச்சர் செய்கின்றவர்கள் தங்களுடைய அந்தரங்க இரகசியங்களை இன்று நல்லோர்களிடத்தில் பரிமாறிக் கொள்வது நல்லது.
14.12.2000 – ஆமைக் குஞ்சுகளுக்கு ஆபத்து வராமல் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுவது ஆஸ்துமா சம்பந்தமான நோய்களிலிருந்து விடிவு பெற வழி பிறக்கும்.

15.12.2000 – இன்று ஐந்து அம்மன் கோயில்களில் அம்மனுக்கு சிற்றாடை சார்த்தி சர்க்கரைப் பொங்கல் தானம்.. வீட்டில் காத்து, கறுப்பு நாடாது, ஐந்து நிறங்களில் சித்தாடைகளைச் சார்த்திடலாம்.

16.12.2000 – வேக வைத்த வேர்க்கடலையுடன் பால் தானம் இன்று செய்திடில் பக்கத்து வீட்டுக்காரால் வருகின்ற துன்பம் தீரும்.

17.12.2000 – இன்று ராகு காலத்தில் சிவலிங்கத்திற்குத் தூய வெள்ளாடை அணிவித்து பால்பேணி தர்மம் செய்திடில் நாசூக்காக வீட்டில் புகுந்த பெண்ணால் வருகின்ற துன்பம் தீரும்.

18.12.2000 – செவத்த பெண் பிள்ளைக்கு கருத்த மாப்பிள்ளையும், கருத்த பெண்பிள்ளைக்கு செவத்த மாப்பிள்ளையும் பல குடும்பங்களில் அமைந்து விடுவதுண்டு.. இவ்வாறு அமைவதால் தாழ்வு மனப்பான்மை ஏற்படுவதுண்டு. இந்த நிலை அடைந்தவர்கள் பாகம்பிரியாள் என்ற அம்மன் (திருச்செங்கோடு மற்றும் தேவகோட்டை அருகில்) இருக்கின்ற சன்னிதியில் தான தர்மங்கள் செய்து அம்பிகையை வேண்டிடில் தாழ்வு மனப்பான்மை நீங்கி குடும்பத்தில் அமைதி நிலவும்.

19.12.2000 – பச்சையம்மனுக்கு புதிய சிற்றாடை சார்த்தி பச்சை நிற பிஸ்தா கேக் தானம் – டீ இலைத் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு ஊதியத்தில் மாற்றம் ஏற்படும்.

20.12.2000 – இரண்டு மூன்று திருமணங்களைச் செய்து கொண்டும் வாழ்வில் திருப்தி அடையாத நங்கையர் இன்றிலிருந்து இறை மார்கத்தில் சென்று விடுதல் நலம் பயக்கும். மீறிச் செயல்பட்டால் பலவித கடுமையான சோதனைகளைச் சந்திக்க வேண்டி வரும்.

21.12.2000 – பெரியப்பா மகள், சித்தப்பா மகளை மணப்பது முறையற்ற மணமாகும்.. இவ்வாறு செய்தவர்கள் அரசமரம் வேப்ப மரத்திற்கு திருமணம் செய்து சித்தர் சமாதிகளைப் புதுப்பித்திடில் பிராயசித்த வழி பிறக்கும்.

22.12.2000 – இன்று ஸ்படிக லிங்க பூஜை செய்து, ஸ்படிக லிங்க தியானம், ஸ்படிக மாலை உபாசனையும் செய்யத் தொடங்கி தொடர்ந்து 12 ஆண்டுகள் இவ்வாறு செய்து வந்திடில் வாழ்வில் நல்ல மாற்றங்களைப் பார்க்கலாம்.
23.12.2000 – வக்கீல்கள், நீதிபதிகள் இன்று தங்களுடைய மனைவி மக்களுடன் நாள் முழுவதும், அன்புப் பரிமாறலுக்காகச் செலவிட வேண்டிய நாளிது. வேறு எந்த விவகாரத்திலும் தலையிட வேண்டாம்.

24.12.2000 – இதுவரை வினாயகர் பூஜை செய்யாதவர்கள் இன்றிலிருந்து தொடங்கி தினமும் காலை, மாலை இரண்டு மணி நேரம் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் செய்திடில் வாழ்வில் பல முன்னேற்றங்களைக் காணலாம்.

25.12.2000 – இன்றிலிருந்து வலம்புரிச் சங்கு பூஜை துவங்கி தொடர்ந்து மூன்று ஆண்டுகள் செய்திடில் வீட்டில் இருக்கும் தரித்திரம் ஏழை வீட்டில் இருக்கும் தரித்திரமும் பணக்கார வீட்டில் இருக்கும் தரித்திரமும் தீர வழியுண்டு.

26.12.2000 – கோயில்களுக்கு சுவாமிக்கு தூபம் போட சாம்பிராணி தானம் இன்று செய்திடில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் மனக் கவலைகள் தீரும்.

27.12.2000 – பெருமாள் கோயில்களுக்கு துளசி தீர்த்தம் நிரப்பி சுவாமி முன்னால் வலம்புரிச் சங்கு வைத்து சேவார்த்திகளுக்கு அளிக்க வசதி செய்து பெருமாள் கோயிலுக்கு வலம்புரிச் சங்கு தானம் – தடைபட்ட டெண்டர்கள் திரும்பி கிடைக்க வழியுண்டு.

28.12.2000 – சுவாமி அமர்ந்து ஊஞ்சல் சேவை செய்வதற்கு கோயில்களில் ஊஞ்சல் தானம் செய்திடில் வெளிநாட்டுப் பெண் மருமகளாய் அமைவாள்.

29.12.2000 – சந்தனக் கட்டையில் அமர்ந்த பிள்ளையார் உருவம் செதுக்கி பூஜை துவங்கி ஆறு ஆண்டுகள் முறையாகக் காலையிலும் மாலையிலும் இரண்டு மணி நேரமாவது விநாயகர் பூஜை செய்திடில் முடக்கப்பட்டிருந்த வருமானம் வழி திறந்து உன்னை வந்து சேரும்.

30.12.2000 – வாழ்க்கையில் ஒரே ஒரு முறை (பிறந்த போது மட்டும்) அழுது 30 ஆண்டுகள் சிரித்து வாழ்ந்தவரைச் சந்தித்து அவருக்கு ஆவன செய்து ஆசி பெற்றிடில் சித்தர்களைச் சந்திக்கும் பாக்கியம் கிட்டும்.

31.12.2000 – தங்கமணி, செல்வமணி, குண்டுமணி, சுப்பிரமணி, மணி போன்ற பெயர்களை உடையவர்களுக்கு வயிறார உணவும் வஸ்திரமும் தானம் அளித்திடில் மணியான சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் கிடைக்கும். அதைப் பயன்படுத்துவது உங்கள் விருப்பம்.. நல்லதே செய்க. நல்லதே நடக்கும்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam