இறைவன் உறையும் இடமே இதயம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருகுலவாச அனுபூதிகள்

“சித்தர்கள்னா இந்த உலகத்துல எங்க வேணும்னாலும் போவாங்க, வருவாங்க, ஏன் சூரிய லோகம், சந்திர லோகம்னு கோடி கோடியான நட்சத்திர மண்டலத்துல எங்க வேணும்னாலும்  போய்ட்டு வர்றதுக்கு அவங்களுக்கு divine rights உண்டுடா!”

அப்போதுதான் புத்தம் புதிய foreign காரை ஒட்டிவிட்டு வந்திறங்கிய பெரியவர், கார்ச் சாவியை விட்டெறிந்து விட்டு முற்றும் துறந்த கோவணாண்டி மாமுனியாய் ராயபுரச் சாலையில் நடந்த அவருடைய கோலத்தை என்னவென்று வர்ணிப்பது!

ஆதிமுதல்வனே கணபதியே !

“யாருடைய கார் அது? நமக்குத் தெரிந்த வரையில் அவர் தினமும் காரை ஓட்டிப் பழகவில்லையே? இப்போது கார் சாவியை விட்டெறிந்து விட்டாரே, யாராச்சும் அந்தக் காரை எடுத்துக் கொண்டுவிட்டால்! ....”  ஏதேதோ எண்ணங்களில் புரண்ட சிறுவனுக்கு அந்தக் கார் அங்கிருக்கிறதா .. பார்க்க வேண்டும் என்ற ஆவல் உந்திடவே சற்றே அவன் தலையைத் திருப்ப எத்தனித்திடவே, பெரியவர் அவன் காதைத் திருகி, “உனக்கு எதுக்குடா அந்த வேலையெல்லாம், அந்தக் காரு அங்க இருந்தா என்ன, போனா என்ன! குருன்னு ஒருத்தர் வந்துட்டா அவர் போற வழில ஒட்டிக்கறதுதாண்டா சிஷ்யனுக்கு லட்சணம்!” என்று சித்தோபதேசம் செய்த பெரியவர்தான் மேற்கண்ட Siddha’s Eternal Sojourn பற்றி விளக்கினார்.

“இன்னிக்கும் அகஸ்தியர் கூட்டத்துச் சித்தருங்க எல்லா நாட்டுலயும் இருக்காங்கடா! பாண்ட், டை, கோட் மாட்டிக்கிட்டு அந்தந்த நாட்டுக்காரங்க மாதிரியே இருப்பாங்கடா! ஏன்னா சித்தர்னா ஏதோ தமிழ் நாட்டுக்காரங்க, தமிழ்தான் பேசுவாங்க, வேஷ்டி கட்டிக்கிட்டு இருப்பாங்கன்னு மட்டும்தான் நெறயப் பேர் நெனக்கறாங்க! அகஸ்தியரோட சிஷ்யரு போகரு, சீனாவுல ரொம்ப வருஷம் இருந்து அவங்கள மாதிரியே சப்ப மூக்கும் பூனை கண்ணுமா வாழ்ந்து நல்ல வழி காட்டினார்டா! அதனால இன்னிக்கு அகஸ்தியரு வழில வர்றவங்க பாண்ட், சட்டை மாட்டிக்கிட்டு அமெரிக்காவுலயும், மெக்ஸிகோவுலயும் இன்னிக்கும் நெறயப் பேருக்கு, அவங்கள நம்பறவங்களுக்கு (சித்தர்கள்) நல்வழி காட்டிக் கிட்டுத்தான் இருக்காங்க! இப்ப புரியுதா! எங்களுக்கு இந்த உலகமே ஒரே ரோடுதாண்டா.. நான் எப்படி imported carஐ ஒட்டினேன்னு! உனக்கென்னடா, அதப் பத்திக் கவலை! இந்தக் கிழவன் நமக்குத் தான் சொந்தம், ஏதோ ராயபுரம் கோயில்ல அப்பப்ப உக்காந்துகிட்டு இருப்பான்னு மட்டும் நெனக்காதே! நாங்களும் அப்பப்ப சூட்சுமமா வெவ்வெற நாட்டுக்கு அந்தந்த சூழ்நிலைக்குத் தகுந்த மாதிரி வேஷம் போட்டு, டிரெஸ் மாட்டிக்கிட்டு எங்க குரு சொல்ற நற்காரியத்தை அங்கங்க நடத்தி ஆகணும்டா!”

இப்படிச் சொல்லிச் சொல்லித்தான் சித்தர்களின் தெய்வீக சாம்ராஜ்யம் என்பது இந்தப் பிரபஞ்சத்திற்கே உரித்தானது என்பதை உணரத் தொடங்கினான் சிறுவன். இதுவரையில் தனக்கு மட்டுமே தெரிந்தவராக இருக்கும் கோவணாண்டிப் பெரியவரோ, அண்டமெங்கும் பவனி வரும் உத்தம சித்த மஹாப் பிரபுவாகப் பரிமளிப்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக உணரத் தொடங்கினான். இந்த உணர்வு கொஞ்சம் கொஞ்சமாக வந்த பிறகு திடீரென்று ஒரு நாள்... இரவு ஒருமணிக்கு அவனை வரவைத்துத் தூக்கக் கலக்கத்திலேயே விமானத்தில் ஏற்றி சிங்கப்பூர் வழியாக எங்கோ அழைத்துச் சென்றார். அஷ்டமா சித்துகளும் கைவரப் பெற்ற பெரியவருக்கு விமானப் பயணம் ஒரு பொருட்டா என்ன? அடுத்த செகண்டில் எந்த நாட்டிற்கும், எந்த லோகத்திற்கும் வேண்டுமானாலும் செல்கின்ற தெய்வீக சக்தியைக் கொண்டவர் என்பதை ஒருபோதும் சிறுவனுக்கு உணர்த்தாது தான் ஒன்றுமறியாத இறைச் சிறுகருவியே என்று சொல்லியே  ஒரு அற்புத குருகுல  வாசத்தை நடத்தித் தன்னை மறைத்துக் கொண்டு விட்டார் பெரியவர்! பெரியவருடன் சிறுவன் சென்ற விமானப் பயணங்கள் யாவையும் ஒரு கனவைப் போலவே அமைத்துத் தந்து விட்டார்.

எகிப்தில் பிரமிடுகள், இந்தோனேஷியாவில் காணக் கிடைக்கும் திரேதா யுக ராமாயணச் சின்னங்கள். சிலா ரூபங்கள், இறைப் பசுமை தவழும் ஆஸ்திரேலியாவின் “Ozone Enriched” புனித பூமி. இன்றைக்கும் எவராலும் அணுக முடியாத இமய மலையின் “Godly  Green Ozone Zones”  (முக்கியமாக கேதார்நாத் ஆலயத்தின் பின்புறம் செல்லும் கடினமான பனிப்பாறைப் பகுதி) ..... அப்பப்பா.... இந்தியாவில் மட்டுமல்லாமல் சித்தர்கள் வாசம் மிகுந்திருக்கின்ற உலக நாட்டுப் பகுதிகள்தான், எத்தனை எத்தனை! இந்த பூமியில் சித்தர்கள் இல்லாத நாடே கிடையாது! ஆல்ப்ஸ் மலைப் பகுதியில், பறக்கும் தட்டுகளில் (UFO) FLYING SAUCER, செவ்வாய் லோகத்திலிருந்து வந்திறங்கிய அபூர்வ மனித உருவங்கள் போன்று குருவருள் காட்டிய அற்புத உலகக் காட்சிகளைச் சிறுவன் பலமுறை கண்டு அதிசயித்திருக்கின்றான். சிங்கப்பூரில் தொடங்கிய விமானப் பயணம் நள்ளிரவில் அமெரிக்காவில் எங்கோ முடிந்திட, இன்றைய அப்பலேச்சியன் Valleyக்குச் சென்று அங்கு அன்று சிறுவன் தான் வாழ்ந்த பகுதிகளைக் கண்டான்.

“ஒரு காலத்துல பெரிய சற்குருவா நீ இறைவழி காட்டி shine பண்ணின இடம்டா இது!” எத்தனையோ கோடி வருஷத்துக்குப் பிறகு அமெரிக்காவில் அப்பலேச்சியன் பகுதியில் காலடி எடுத்து வைத்ததுமே அவனுக்கு ஏதோ அறிமுகமான இடம்போல் அது தோன்றிடவே... இந்நிலையில் பெரியவர் அவன் தலையில் கையை வைத்தவுடன் அந்த ஞான ஒளியில் பழைய “Tribal Costume ல்” அவனுடைய உருவத்தை அவனே பார்த்துக் கொண்டதும் சிரிப்பு வந்து விட்டது!

“ஏண்டா இவ்வளவு ஷோக்கா அப்ப இருந்தியே, இப்ப ஏண்டா காஞ்சு போய்ட்ட....!” பெரியவரின் சிரிப்பு அப்பலேச்சியன் பள்ளத்தாக்கையே நிறைத்தது. கோடிக்கணக்கான வருடங்களுக்கு முன் நிகழ்ந்த வாழ்க்கைச் சம்பவங்களை அநாயசமாக ஒருவர் விவரிக்கின்றார் என்றால் எத்தகைய அருட்பெரும் மஹாசித்தரிடமே தான் அடைக்கலம் அடைந்து இருக்கின்றோம் என்று தெளியும் பகுத்தறிவை அப்போது சிறுவன் பெறவில்லையா! இல்லையில்லை, பெரியவர்தாம் அதை உணரும் பக்குவத்தை அவனுக்கு வேண்டுமென்றே தரவில்லை! ஏனென்றால் தாம் குருகுலவாசம் கொண்டுள்ளது உத்தம சித்புருஷரிடம் என்பதை சிறுவன் உய்த்துணர்ந்து விட்டால்.... பிறகு சிறுவன் அவரை விட்டு ஒரு நொடிகூடப் பிரிய மாட்டானே! பின் அவனுடைய மனித உடலுக்கு உரித்தான கருமங்களை எப்படி அவனால் நிறைவேற்ற முடியும்?

சற்குருவாய் அவன் லட்சக்கணக்கானோர்க்கு நல்வழி காட்டியாக வேண்டுமே! உலகத்தின் எப்பகுதியில் எந்த நாட்டிலும் எப்படி வேண்டுமானலும் எந்த ரூபத்திலும் எந்த கோலத்திலும் தோன்றி அகஸ்தியர் இறைவழி காட்டுவார் என்ற வேத உண்மையை, சத்திய வாக்கைச் சிறுவனின் கபாலத்தில் மூளைச் செறிவில், ஆழ்ந்த உள்ளத்தில் உரு ஏற்றிய பின்னர்தான் பெரியவர் சிறுவனுக்குத் தான் பெற்ற ஸ்ரீஅகஸ்தியருடைய தரிசன அனுபூதிகளை கொஞ்சம் கொஞ்சமாக உணர்த்தலானார்! சென்னை வியாசர்பாடியில் உள்ள ஸ்ரீரவீஸ்வரர் ஆலயத்தில் வியாச பௌர்ணமித் திதிகளில் பஞ்ச கச்சம் சகிதம் வழிபட்ட ஸ்ரீவியாச மாமுனிவரின் சூட்சும ஜோதி வடிவ தரிசனத்தைத் தொலைவிலிருந்தே சிறுவனுக்குக் காட்டியிருக்கின்றார் பெரியவர்! மேலும் கொல்லிமலைப் பகுதியில் விறகு வெட்டியாய் ஸ்ரீஅகஸ்திய மஹரிஷி சிறுவனுக்குக் காட்சி தந்ததை மறக்க முடியுமா! பொதிய மலையில் தாம் ஸ்ரீஅகஸ்திய மாமுனியை தரிசித்த அதியற்புத அனுபூதியைப் பற்றித் தொடரலானார் பெரியவர்!

“பொதிய மலைல... அகஸ்தியரோட பர்ண சாலைடா அது...... ஏதோ பெரிசா இருக்கும்!..... எத்தனையோ ரிஷிங்க வந்து போற இடமாச்சே.... நல்லா பெரிய கட்டடமா இருக்கும்னு நெனச்சேண்டா.. தென்னங்கீத்து வேஞ்ச சின்ன பர்ணசாலைடா அது.... யார் யாரோ வந்து போனாங்க, தமிழ்லேயும், வடமொழி, தேவமொழில யார் யாரோ ஏதோதோ பேசறாங்க.... நானோ பட்டிக்காட்டான்! தமிழே தடவும் எனக்கு! ஒண்ணுமே புரியலை.. என்னோட வந்தாங்களே அந்த தேவலோகத்து தேவருங்க அவங்களும் எங்கேயோ மறஞ்சு போய்ட்டாங்க! நானோ கோமணம் கட்டிகிட்டு சிவசிவா, ராமாராமான்னு சொல்லிக்கிட்டு, கீழ, தரைல, உக்கார்ந்துகிட்டிருந்தேன்! திடீர்னு லட்சுமிகரமா ஒரு அம்மா வந்தாங்க.... அவங்கதான் நம்ம லோபாமாதா அம்மா! ஏதோ ஒருவாட்டி ரெண்டுவாட்டி அவங்களைப் பாத்திருக்கேண்டா! அவங்களும் என்ன நல்லா புரிஞ்சுக்கிட்டாங்க! ஏதோ பேரச் சொல்லி கூப்புட்டாங்க...! என்ற பெரியவர் வேண்டுமென்றே இங்கு சற்றே நிறுத்தினார்!

“அவங்க உனக்கு என்ன பேரு சொன்னாங்க வாத்யாரே?” முந்தினான் சிறுவன் முந்திரிக் கொட்டையாய்! சுபாவம் எப்படி மாறும்?

“இதபாருடா! உனக்கு அந்த தேவலோக ரகசியம் தெரியணும்னா அந்த தேவலோகத்துலதான் போய்த்தான் கேட்டுக்கணும்! ஏன்னா அங்க நீ போனாலே வேற மாதிரி spiritual bodyய கொடுத்துடுவாங்க! இதயெல்லாம் நீயே தானா நல்லா புரிஞ்சுக்கணும்! எத்தனையோ கோடி யுகத்துக்கு முன்னாடி அமெரிக்கால அப்பலேச்சியன் Areaல தெய்வீகத்தைப் பரப்பிக் கிட்டுக் கொடிகட்டிப் பறந்தாய்ங்கற தெய்வீக ரகசியத்தை அந்த ஏரியாவுக்குப் போகும்போது சொன்னாத்தானே உனக்குப் புரியும்! லோபாமாதா அம்மா என்னை உள்ள கூட்டிக்கிட்டுப் போனாங்களா. ஸைடுல ஒரு தென்ன மரக்கீத்துனால ஒரு சின்னக் கதவு! லேசாத் தள்ளினாலே கீழே விழுந்திடும்.. அம்மா உள்ள போனாங்க! அங்க பாத்தா.....! அப்பப்பா.... என்ன ஜோதி பிரகாசமா...... நம்ப சித்தர்களோட ஆதி மூல பீடாதிபதி அகஸ்தியரு ஜகஜ் ஜோதியா பத்மாசனத்துல உக்காந்திருக்காரு!”

“ஓம்! உக்காருங்க சாமீ!” அகஸ்தியரே அடியேனை சாமீன்னு கூப்புட்டு ஒக்கார வெச்சதுமே எனக்கு உடம்பு நடுங்கிடுச்சு! தெனமும் கைசாலத்துல சிவபெருமானை தரிசனம் பண்றவரு, தெனமும் வைகுண்டத்துல பெருமாள் பூஜை பண்றவரு, நெனச்சா சூர்யலோகம், சந்திர லோகம்னு எங்கேயும் போகற சக்தி உள்ளவரு, அங்க தர்ப்ப பாய்ல ரொம்ப சிம்பிளா உக்காந்துருக்கார்னா எனக்கு ரொம்ப வெக்கமாப் போச்சு... ஒரு கோவணத்தைக் கட்டிக்கிட்டு நான் பாட்டுக்கு உலகமெல்லாம் சுத்தறேனே, பொதியமலைல அகஸ்தியரோட பர்ணசாலைக்கே ஒரு ஆண்டியாட்டம் வந்துட்டமேன்னு எனக்கு உள்ளூர பயம்தான்...!”

“இதபாரு சாமி ... அகஸ்தியரு என்னை இப்படிச் சொல்லி கூப்புட்டதுமே ஏதோ முக்யமா சொல்ல வரார்னு alert ஆய்ட்டேன் ...ரொம்ப முக்கியமான வேலைய உனக்குக் கொடுக்கறோம் நம்ப மேற்கு பூமில (Western Countries) கர்ம பரிபாலனத்துக்குன்னு ஒரு சித்தரை அனுப்பிச்சோம்! ஆனா கலியுகத்துல ஒரு மஹானோ, சித்தரோ படறபாடு உனக்கு நல்லாத் தெரியும்! அடியேனே நேர அந்த பூமிக்குப் போயி அந்த சித்தரைத் காப்பாத்திக் கூட்டிகிட்டு வர்றதா இருக்கோம்.. அந்த அளவுக்கு அங்க ரொம்ப கஷ்டப்படறாரு! என்ன பண்றதுப்பா, கலியுகத்துல ஜீவன்களைக் கடையேத்தறதுக்குன்னு கடவுளே மகான்களை அனுப்புறாரு“

“ஆனா கலியுக சமுதாயத்துல ஒரு மகான் படறபாடு கொஞ்சமா, நஞ்சமா! அடியேனே நேர அந்த இடத்துக்குப் போறதா இருக்கோம்... ஆனா.... அந்தந்த இடத்துக்குத் தகுந்த மாதிரிதானே ரூபத்தை மாத்திக்கணும்! இந்த மாதிரி ஜடாமுடி வச்சுகிட்டு பஞ்சகச்சம் போட்டு கட்டிக்கிட்டா போக முடியும்! அடியேனோட ஒரு சித்தர் கூட்டமே வருது! .. அடியேனுக்கும் அவங்களுக்கும் அந்த நாட்டு பாணில ஆடை தெச்சுத் தரணும்! அந்த வேலைதான் உனக்குத் தர்றதா இருக்கோம் செஞ்சு தருவியா ராஜா!”

“எனக்கு பொல பொலன்னு... ஆனந்தக் கண்ணீர் கொட்டிடுச்சுடா அப்பா! என்ன பெரும் பாக்யம் நம்ப அகஸ்தியர் பெருமானுக்கு வஸ்திரம் பண்ணித் தரதுன்னா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் கெடைக்குமாடா? நம்ப அஸ்தீக சித்தரு இப்படித்தாண்டா நாகர் கோயில் பக்கத்துல ஒரு பெரிய பாம்பு புத்துக்கிட்ட நம்ப அகஸ்தியர் தரிசனத்தைக் காட்டிக் கொடுத்தார்டா, அப்ப அகஸ்தியரு எப்படியிருந்தார் தெரியுமா? ஒரு அழுக்கு சட்டைய போட்டுக்கிட்டு ஏதோ வழிப் போக்கனாட்டம் வந்துட்டுப் போய்ட்டாருடா! எனக்கு அவர்தான் அகஸ்தியர்னு தெரியாமப் போச்சுடா! அப்புறந்தான் தெரிஞ்சது இந்த மாதிரி சித்தர்களும் மஹான்களும் ரொம்ப சர்வ சாதாரணமா ஏதாச்சும் வேஷம் போட்டுக்கிட்டு வந்துட்டுப் போய்டுவாங்கன்னு! அஸ்தீக சித்தர்தான் அகஸ்தியருக்கு அந்த ஆடைகளைப் பண்ணிக் கொடுத்தாருன்னு தெரிஞ்சது! அவங்க பாட்டுக்கு அவங்க காரியத்தை முடிச்சுக்கிட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்கன்னு....”, பெரியவர் சொல்லிக் கொண்டே வரும்போது அவர் கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. சிறுவனே தன்னை மறந்து கதறி அழுது விட்டான். ஏன் அழுதானென்று அவனுக்கே தெரியாது.. பெரியவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் ததும்பிட அவர் அகஸ்திய தரிசன அனுபூதிகயை விளக்க...... விளக்க..... பிரபஞ்சமே ஸ்தம்பித்து நின்று பெரியவருடைய பேருரையைக் கேட்டு நிற்கின்றதோ! 

“ ஆமா .. திடீர்னு எனக்கு ஒரு நெனப்பு வந்துடுச்சுடா.. நமக்குத்தான் காஜா கூட புடிக்கத் தெரியாதே நம்மளாவது அகஸ்தியருக்கு சட்டை, பாண்ட் தெக்கறதாவது!”  பெரியவரே சொல்லிச் சிரித்துவிட்டார்.. என்னே பெரும் பொய்! தெருக் கோடியிலிருக்கும் இம்பாலா காரைக் கிளப்பி சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து சிங்கப் பெருமாள் கோயில் வரைக்கும் அநாயசமாக ஓட்டியவருக்குத் தையல் கலையும் கை வந்த கலையாகத்தானே இருக்கும்.. ஆய கலை அறுபத்து நான்கினையும் கையிலே வைத்திருப்பவருக்கு “பொய்(சொல்லும்)க் கலையும் கைவந்ததுதானே! சிறுவனும் எண்ணிச் சிரித்துக் கொண்டான்!

“என் வார்த்தை எதுவும் பொய்க்கலை தானேடா!” பெரியவரும் கல கலவென்று சிரித்தார். இத்தகைய ஆனந்தமான அனுபூதிகளை நீங்கள் குருகுலவாசத்தில்தானே பெறமுடியும்.. ஆமாம்., தேடுங்கள்.. உங்கள் சற்குருவை! அடையுங்கள் அவர்தம் திருவடிகளை! 

ஸ்ரீவாஞ்சியம்

தென்காசி தரிசனத் தொடர் - ஸ்ரீவாஞ்சியம்

வெற்றிக்கு வடிவழகு தரும் தென்காசி தேவா போற்றி! போற்றி!!

வாரணாசியாகிய காசித் திருத்தலமானது பித்ருக்களின் ஆசியைப் பரிபூரணமாகப் பெற்றுத் தருகின்ற தலமாக உள்ளது. ஆனால் சித்புருஷர்கள் அருள்கின்ற வழிமுறைகளில் தென்காசி ஸ்ரீகாசி விஸ்வவநாதரை தரிசனம் செய்தால் காசிக்கு நிகரான பலன்களைப் பெற்றிடலாம். இத்தொடரில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம்முடைய சற்குருவாம் சிவ குருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளுடைய அருள்மொழிகளாக தென்காசி தரிசன மஹிமையை எடுத்துரைத்து வருகின்றார்கள். வெற்றிக்கு வடிவழகு தருதல் என்றால் என்ன? நற்காரியங்கள் சுபமங்களமாக முடிவது மட்டுமின்றி அதற்குரிய பரிபூர்ண பலனையும் தந்து, ஐஸ்வர்யத்தையும், ஆனந்தத்தையும் பெற்றுத் தருவதாகும். வாழ்வின் முடிவில் ஒருவருக்கு இறைவன் அளித்த ஒரு பணியினை ஓரளவு சிறப்பாகச் செய்து முடித்தாரென சித்ரகுப்த தேவர் தேவ கணக்கில் எழுதிட வேண்டுமல்லவா? ஆனால் தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாதரை முறையாகத் தரிசித்தால்தான் தமக்கு இறைவன் இட்ட பணிக்கு வடிவழகு கூட்டி வெற்றி பெற்றதாக பிரம்ம கணக்கு எழுதப்படும். அந்த அளவிற்கு வாழ்வில் வெற்றியின் சிறப்பம்சங்களை நமக்குப் பெற்றுத் தருபவரே தென்காசி ஸ்ரீகாசி விஸ்வநாத மூர்த்தியாவார்! மேலும் வெற்றிக்கு வடிவழகு தருதல் என்பது, தாம் எடுத்த நற்காரியங்களில் தவறான முறைகளைக் கையாண்டிருந்தாலும், அதற்கும் சில பிராயச்சித்தங்களைப் பெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கும், தக்க நிவாரணம் தந்து காரியத்தைச் சீர்திருத்தி அமைத்தலும் தான் என்பதை இனியேனும் உணருங்கள். இதுவரையில் எடுத்த காரியங்களில் தோல்வியுற்றிருந்தாலும், அதனையும் சமசீர் நிலையாக நின்று, ஏற்று இறைவன் தமக்கு நியதியாக விதித்துள்ள தோல்விகளையும் மனதார ஏற்று, தம்மால் இழைக்கப்பட்ட அநீதி, அதர்மங்களுக்குத் தக்க ப்ராயச்சித்தம் பெற்றால் தான், மற்ற நற்காரியங்களில் அவர் வெற்றிக்கு வடிவழகு கூட்ட இயலும், இதற்குரிய பிராயச்சித்த முறைகளைத் தருவதே தென்காசி ஸ்ரீகாசிவிஸ்வநாத மூர்த்தி தரிசன முறையாம்.

தென்காசி தரிசனத்தைப் பரிபூரணம் அடையச் செய்வதற்காக இத்தொடரில் ஸ்ரீவாஞ்சியம் பற்றி அறிவோமா! ஆயுள் விருத்தியைத் தந்து நற்காரியத்தைச் சிறப்பாக முடித்துத் தர தீர்த்த சக்தி நிறையத் தேவை, இதைப் பெற்றுத் தருவதே ஸ்ரீவாஞ்சிய சிவலிங்க மூர்த்தி தரிசனமாகும். தீர்த்தங்கள் நிறைந்த தலம்., கும்பகோணம் அருகில் குடவாசலில் இருந்து நன்னிலம் செல்லும் வழியில் ஸ்ரீவாஞ்சியம் எனப்படும் திருவாஞ்சியத் திருத்தலம் அமைந்துள்ளது. வெற்றிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது யமவாதனை எனப்படும் மரண பயமும் ஒன்றாம். தன்னால் இக்காரியம் நடைபெறுமா? தனக்குப் பிறகு இதை நிறைவேற்றூவார் எவர் உள்ளார் என அஞ்சி பலருக்கும் ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது. இதனால் மனநலமும், உடல் வளமும் பேரிழப்புக்கு உள்ளாகின்றன. இதற்கு தீர்வு தரவே இத்தலத்தில் சிவபெருமான் ஸ்ரீவாஞ்சி நாதேஸ்வரராகவும், வாஞ்சி லிங்கேஸ்வரராகவும், அம்பிகை மங்கள நாயகியாகவும் அமைந்து அருள்புரிகின்றனர். ஸ்ரீவாஞ்சியக் கோயிலின் தீர்த்தங்களின் தரிசனமே உள்ளத்திற்கு நல்ல அமைதியூட்டி வெற்றிக்கும் வழி வகுக்கின்றது. குறித்த காலத்தில் ஒரு நற்காரியத்தை முடித்து, வெற்றி பெற்றால்தான் அதன் பலாபலன்களை நாம் பரிபூரணமாகப் பெற இயலும். காலதாமதம் ஏற்பட்டால் காரியசித்தி கைகூடாது!

பைரவருக்குரித்தான அஷ்டமி திதிகளில் இவ்வாலயத்தில் யோக பைரவருக்கு வெண்ணெய்க் காப்பிட்டு, ஸ்ரீவாஞ்சிநாத ஈசனையும் 108 முறை வலம் வந்து வணங்கி வெண்ணெய் நிறைந்த உணவுப் பொருட்களை தானமளித்தல் (நெய்சாதம், அடை etc..) குறித்த காலத்திற்குள் எந்த நற்காரியத்தையும் நடத்தித் தருவதற்கு திருமண சுபகாரியம் நடைபெறவும் ஸ்ரீவாஞ்சிய தீர்த்த நீராடல் அருள்புரிகிறது. குறிப்பாக காண்ட்ராக்டர்கள், Flat Promoters போன்றோர்களுக்குக் காலமானது மிகவும் அத்யாவசியமான ஒன்று. அவர்களுக்கு இங்குள்ள யோக பைரவ மூர்த்தியின் வழிபாடும் தரிசனமும் வெற்றிக்கு வடிவழகு கூட்டுவதாக அமைக்கின்றது. கமலமுனி எனும் அருட்பெரும் சித்தர் மஹிமை பற்றி வாசகர்களுக்கு முன்னரே உணர்த்தியுள்ளோம். நற்காரியம் முடியும்வரை நம்முடன் கூட நின்று சிறு இன்னல்களையும் களைந்து நமக்கு அருள்பாலிக்கும் கமல மாமுனிச் சித்தரின் அருள் நிறைந்துள்ள இத்தலத்தில் தென்காசி தரிசன முறையின் 12ம் திருத்தலமாக ஸ்ரீவாஞ்சி நாதரை வணங்கி, இவ்வாறாக 12 சிவத் தல தரிசனங்களுக்குப் பிறகு தென்காசி சென்று காசிவிஸ்வநாதரை வணங்குதலே வெற்றிக்கு வடிவழகு கூட்டி தென்காசி தரிசன முழு பலன்களையும் அளிக்கும் 12 சிவத்தலங்களையும் முறைப்படி வழிபட்டு, தென்காசி தேவனை வழிபட்டு குருவருளால், திருவருள் பெற்று வாழ்வில் அனைத்து நற்காரியங்களிலும் அடியார்கள் வெற்றி பெற்றிட வேண்டுகின்றோம்! அனைத்துப் பலன்களும் குருவின் திருவடிகளுக்கே!

வாக்கு சித்தி

வாக்குசித்தி எவ்வாறு உண்டாகிறது? வாக்கு சித்தி என்றால் என்ன? நீங்கள் சொல்வதைக் கேட்டு அதன்படி பலரும் நடப்பதுதானா? உடல் வலிமை, பேச்சுத் திறமை, பதவி, அதிகாரம், அந்தஸ்து காரணமாக நீங்கள் சொல்வதைப் பலர் கேட்கின்றார்கள் என்றால் அதனை வாக்சித்தி என்று சொல்லிவிட முடியுமா?

பலவிதமான துயரங்களால் வாடுவோர் மனத்தெளிவு  பெறுவதற்காக உங்களிடம் வரும்போது நீங்கள் அவர்களுக்கு ஆறுதலாக நல்வார்த்தைகளைச் சொல்வதுடன் தெய்வீகமாக அவர்களுடன் உரையாடி நல்வழி காட்டுவதைத்தான் வாக்சித்தி என்று குறிப்பிடுகின்றார்கள். உங்கள் வாக்கில் இறைமை தவழ நீங்கள் ஆற்றும் இறைப்பணிதான் வாக் சித்தியாக கொஞ்சம் கொஞ்சமாக மலர்கின்றது.,

தற்காலத்தில் ஜோதிடர்கள் பெருகிவருகின்றார்கள். தெய்வீகமான ஜோதிடக்கலை தெய்வீக ரீதியாக வளர்வதுதான் சிறப்புடையது! எக்கட்டணமும் பெறாது இதனை ஒரு சீரிய தெய்வப் பணியாகக் கருதி இலவசமாக தீர்க்க தரிசன அருள்வாக்கினை நம் பெரியோர்கள் அளித்து வந்தார்கள்! அதனால்தான் அவர்கள் சொன்னால் எதுவும் நடக்கும், வாக்கு பொய்க்காது! காலப் போக்கில் கட்டண விகிதாச்சாரப் பணியாக வியாபாரமாக, வயிற்றுப் பிழைப்பாக ஜோதிடக் கலை ஆகிவிட்டது என்பது மிகவும் வருத்தத்திற்குரியதாகும். வாக்சித்தி உள்ளவர்கள்தான் ஜோதிடக் கலையில் சிறந்து விளங்கமுடியும். இதற்கு ஜோதிடர்கள் வாக்வாசினி தேவதையைக் கட்டாயம் உபாசித்தாக வேண்டும்., மன ஆறுதலைத் தரும் ஜோதிடக் கலை மகத்தான இறைப்பணியே! ஆனால் வேத அறிவையும் ஜோதிட அறிவையும் ஒரு போதும் விற்றல் கூடாது. ஜோதிடம் என்பது கலைவாணியின் 64 கலைகளுள் ஒன்று! ஜோதிடர்கள் கலைவாணியை தினந்தோறும் 6 வேளைகளிலும் உபாசித்து லலாடங்க கஷாயம் என்று சொல்லப்படுகின்ற ஆலம்பட்டைக் கஷாயத்தினால் வாயை நன்கு கொப்பளித்து வாக்கு சுத்தி, தந்த சுத்தி, நாள சுத்தியை ஜோதிடர்கள் பெற்றாக வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு ஜோதிடர் பேசுகின்ற வார்த்தைகளில் அனைத்தும் சத்தியம் நிறைந்திருப்பதுடன் தெய்வீகம் சம்பந்தப்பட்டதாகவும் இருக்க வேண்டும். அரசியல், கேளிக்கை, அரட்டை, வீண்பேச்சு போன்றவற்றில் இழக்கின்ற வார்த்தைகள் யாவுமே வாக்சுத்தியைக் குறைத்துவிடும். அதாவது ஒரு கால்மணி நேரம் ஒருவர் குறிப்பாக ஒரு ஜோதிடர் பேசினால் கூட அது தெய்வீகம் சம்பந்தப்பட்டதாகவோ இறை மொழியாகவோ தான் இருக்க வேண்டுமே தவிர அநாவசியமாக எந்த ஒரு வார்த்தையும் வெளிவரக்கூடாது. இதற்குத் தான் லலாடங்க கஷாயம் என்று சொல்லப்படுகின்ற ஆலம்பட்டைக் கஷாயமானது வாக்சுத்தியை மேம்படுத்துகின்றது, வாரம் ஒரு முறை முழுமையான மௌன விரதம் பூண்டால்தான் உள்ளிறைத் தூய்மை கிட்டும், Internal Divine Transmissionக்காகவே இறைவன் வாயைப் படைத்தான்.

இறைவன் உண்பதற்கு மட்டும்தானா வாயைப் படைத்தான். பேசுவதற்காகவும் தானே! எனவே ஜோதிடர்களுக்கு மட்டுமல்லாது பேசுதல் என்பது நம்முடைய வாழ்க்கையின் முக்கியமான பணிகளில் ஒன்றாக விளங்குகின்றது. மனதினுள் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒலித்தவாறே நீங்கள் அனைத்துப் பணிகளிலும் ஈடுபடுகின்ற திறமையைப் பெற்று விட்டீர்களேயானால் உங்களுக்கு வாக்சுத்தி தானாகவே வந்துவிடும். இதுமட்டுமல்லாது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிக்கொண்டே கணக்குகளைப் போடுவது, அலுவலகப் பணிகளைத் தொடருவது, புத்தகம் படிப்பது போன்றவற்றைத் தொடர மனயோகத் தனித்திறமை வேண்டும். இதற்காக கார், வண்டி ஓட்டும் போது, உள்ளூர ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதினேன் என்று சொல்லி கவனக் குறைவாக இருந்துவிடாதீர்கள். சிறுவயதிலேயே ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உள்ளூர ஓதுகின்ற பழக்கத்தை நீங்கள் கைக்கொண்டால்தான் நீங்கள் எந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தாலும் ஸ்ரீகாயத்ரீ மந்திர ஓடை உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும்.

ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அடிக்கடி நாம் எழுதி வருகின்ற சித்புருஷர்களுடைய ஒன்பது சரீரக் கோட்பாட்டின்படி உங்களுடைய ஒரு சரீரமானது ஏதோ ஒரு பணியாற்றிக் கொண்டிருக்க, உங்களால் இறையோகமாகப் பயிற்றுவிக்கப்பட்ட மற்றொரு சரீரமானது உள்ளூர ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒலித்துக் கொண்டிருக்கும். எனவே உத்தம இறைநிலைகளை அடைய வேண்டும் என்றால் உங்களுடைய ஒன்பது சரீரங்களுமே இறைவழியின்பால் நிலைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு மனிதனோ தன்னைச் சுற்றி உள்ள ஒன்பது சரீரங்கள் என்பதில் ஆழ்ந்த நம்பிக்கையை உணர்வதற்கே எத்தனையோ கோடிப் பிறவிகள் தேவைப்படுகின்றனவே. அதிலும் இந்த மனிதப் பிறவியில் இதை உணரவே 40 வயதாகி விடும் என்றால் மீதி நடுத்தர, முதிய வயதில் உடலும் உள்ளமுமா ஒத்துழைக்கும். இதற்காகத்தான் ஒரு மனிதன் ஒரு சற்குருவைப் பெற்று விட்டானேயானால் எத்தனையோ ஆயிரம் பிறவிகளில் அவன் வேண்டிய இறைலீலைகளை, இறைப்பணிகளை இறையருளால் குரு அருளால் குறித்த சில வருடங்களிலேயே பெற்றுவிடுகின்றானே. அப்படியானால் சற்குருவின் மஹிமைதான் என்னே! இதுமட்டுமல்லாமல் எத்தனையோ ஆயிரம் பிறவிகளில் கழிக்கப்பட வேண்டிய கர்மவினைகளை சற்குருவின் குருவருளால் அவன் ஒருசில வருடங்களிலேயே கழித்து விடுகின்றானே. இதற்குக்காரணமும் சற்குருவின் குருவருட்கடாட்சம் தானே!

ஜீவாலய (ஜீவ சமாதி) தெய்வீக சக்திகள்
எனவே வாக்சுத்தியைப் பெறவேண்டுமென்றால் குருவின் அருளைப் பரிபூரணமாகப் பெறுதல் வேண்டும். நமக்குரித்தான “குரு யார்” என்று தெரியவில்லையே? இதுதான் பலருக்கும் உள்ளத்தில் எழுகின்ற வினாவாகும். நாமும் பன் முறை பதிலளித்ததும் ஆகும்! உங்களுக்கு உரித்தான சற்குருவை நீங்கள் அறிந்து கொள்ளும் வரையில் உங்களைக் கவர்ந்துள்ள மஹானையோ, யோகியையோ, சித்தரையோ அவருடைய ஜீவசமாதிக்குச் சென்று வழிபட்டு உங்களுடைய ஆன்ம சக்தியைப் பெருக்கிக் கொள்ளுங்கள். காஞ்சீபுரம் ஸ்ரீபரமாச்சார்யாள், ஸ்ரீபட்டினத்தார் சுவாமிகள், ஸ்ரீபாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், ஸ்ரீவள்ளலார் சுவாமிகள், காஞ்சீபுரம் ஸ்ரீபோடா சித்தர் ஸ்வாமிகள் (சிவசாமி ஸ்வாமிகள்) ஸ்ரீபாம்பன் ஸ்வாமிகள், சென்னை வியாசர்பாடி ஸ்ரீகரப்பாத்திர சித்தர் போன்ற அரும்பெரும் சித்தர்களின் ஜீவசமாதிகளில் கதறி அழுது வேண்டி பிரார்த்தனை செய்து, “இறைவா! எங்களுக்கு உரித்தான சற்குருவை அளித்துக் கரையேற்று”, என்று வேண்டுங்கள். உங்களுடைய பிறந்த தினம் திருமண நாட்களிலும் கூட மஹான்களுடைய ஜீவாலயங்களில் உங்களுடைய வழிபாடுகளையும் தான தருமங்களையும் மேற்கொண்டிடுக!

ஏனென்றால் கலியுகத்தில் கண்ணாரக் கண்டால் தான் எதையும் நம்புகின்ற பழக்கம் மனிதனுக்கு ஏற்பட்டுவிட்டது. விஞ்ஞானத்தின் பெருங்குறைபாடுகளுள் இதுவும் ஒன்றாகும். என்னதான் ஆழ்ந்த இறை நம்பிக்கை கொண்டிருந்தாலும் ஒவ்வொரு மனிதனும் தான்தோன்றித்தனமாக வாழ்க்கை நடத்துவதால்தான் இறைவனே தன் தூதுவர்களை மகான்களாகவும், சித்புருஷர்களாகவும், யோகியர்களாகவும் மனித ரூபத்தில் அனுப்பி அவர்களையும் நம்மிடையே சாதாரண மனிதர்களைப் போல வாழச் செய்து அவர்களுடைய தெய்வீக சக்தியைக் கண்ணால் காண செய்கின்றார்கள். நம்மைப் போல் மானிட தேகம் பூண்டு வாழ்ந்திட்டாலும் இறைவனால் அனுப்பட்டவர்களாதலின் மகான்களுடைய, சித்தர்களுடைய ஒவ்வொரு சொல்லுமே தெய்வீகம் ததும்பியதாக விளங்குகின்றது. காஞ்சீபுரத்தில் சமீப காலம் வரை இருந்து மறைந்துள்ள ஸ்ரீபோடா சித்தர் சுவாமிகள் (சிவசாமி சுவாமிகள்) அனைவரையும் “போடா , போடா” என்று சொல்லும் போது அனைவரையும் அவர் கெட்ட மொழி கூறித் துரத்துவது போன்று தான் தோன்றும், ஆனால் தீய கர்மவினைகளை, “போடா” என்று சொல்லி தீவினைகளைத் துரத்தி அடிக்கின்ற அற்புத தெய்வீகத் தன்மையை, பிரபஞ்சத்தையே ஆட்டிப் படைக்கின்ற வல்லமையை அவர் பெற்றிருந்தார் என்பதை அவரிடம் கூட இருந்த பெரியவர்களுக்கும், அவரை தரிசித்தவர்களுக்கும் தெரியும், “போடா” என அவர் ஓதும் பீஜாட்சரத்தால் போகும் பிணி என்றால் வாடாமலர் சித்தர் அவர் தாமே!

எனவே சித்தர்களுடைய ஜீவாலய தரிசனமும் உள்ளூர ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒலித்தலும் உங்களுக்குச் சிறந்த முறையிலான வாக்சக்தியைப் பெற்றுத் தரும். ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தைத் துதிக்க இயலாதோர் என்ன செய்வது? சிவய சிவ சிவ சிவ நமசிவாய என்ற எளிய மந்திரத்தையோ அல்லது ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம் என்ற ராம மந்திரத்தையோ உங்களுக்கு எளிமையாக உரித்தான பாங்கில் ஓதி வாருங்கள்! கலியுகத்தின் எளிமையான, கண்கண்ட, துரிதமாகப் பலனளிக்கும், மாமந்திரத் துதிகளிவை! பல சித்தர்களால் மஹரிஷிகளால் ஓதி மெருகேற்றப்பட்ட துதிகளிவை!

கண்சிமிட்டு கால உணர்வைத் தருமே!

நீங்கள் ஒரு முறை கண்ணைச் சிமிட்டும் போது ஒருவினாடிக்கும் கீழான சிறிய கால அளவைக் கடந்து விடுகின்றீர்கள் அல்லவா! ஆனால் கண் சிமிட்டுவது என்பது தானாக நடப்பதால் காலக் கழிவினை நாம் உணராதவர்களாக இருக்கின்றோம்! நீங்கள் கண் இமைப்பதை எப்போதாயினும் ஒரு சில முறை நீங்கள் உணர்வீர்கள் தானே! இது ஒரு நாளில் திடீரென்று பலருக்கும் எப்போதாவது நிகழ்கின்ற திடீர்க் காலச் சிந்தனையாகும். இறைவனே இந்த மாதிரி ஆத்ம சிந்தனையை உருவாக்கிவிட்டு உங்களுக்குக் காலத்தின் மகிமையைப் புகட்டுகின்றான். ஆனால் அதைச் சிக்கென்று பிடித்துச் சீர்மை பெறவேண்டும். எனவே நிச்சயமாக ஒவ்வொருவருக்கும் தினந்தோறும் கண் இமைக்கின்ற சிந்தனை வந்துதான் செல்கின்றது. ஆனால் நாம் இதனைப் புரிந்து கொள்ளவில்லை அவ்வாறு வந்து செல்கின்ற ஒரு சில விநாடி நேரத்திலாவது நம் கண் இமைப்பதற்கான காரணத்தை ஆத்ம விசாரம் செய்து பாருங்கள். அது எப்படி எந்த ஒரு Motor Mechanism இல்லாமல் கண்மட்டும் இமைத்துக் கொண்டு இருக்கிறது? ஆக்கப்படுத்தப்பட்டதாக எப்படி இமை தானாக, இயக்கமின்றி இமைக்கின்றது! உள்ளே உயிர் இருக்கும் வரைக்கும் இந்த கண் சிமிட்டுதல் நடைபெறுகின்றதல்லவா? எனவே உள்ளே உள்ள ஆத்மாவிற்கும் உங்களுடைய கண் இமைப்பிற்கும் நிறையத் தொடர்பு உண்டு. நீங்கள் பார்க்கின்ற காட்சிகள் எல்லாம் நல்ல காட்சிகளாக இருந்தால் கண் இமைப்பதும் காலத்தின் பால் செல்வதும் உள்ளூர நல் உணர்வாகத் தோன்றும், ஆனால் கண் இமைப்பதை உணராமல் அதுதானாக நடைபெறுகிறது என்று நீங்கள் நினைப்பதற்குக் காரணமே உங்கள் ஆத்மாவை நீங்கள் உணரவில்லை என்றே பொருள்.

மேலும் நன்கு தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் ஒருநாள் முழுவதும் நீங்கள் கண் இமைப்பதைப் பற்றி நினைக்கவில்லையென்றால் அந்நாளை நீங்கள் தெய்வீகத்தில் சரியாகக் கழிக்கவில்லை. ஒரு நாள் வீணாக ஓடிவிட்டது என்று பொருள். அல்லது கண் இமைப்பதைப் பற்றிய சிந்தனை ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் வந்தால் இறைவன் உங்கள் ஆத்மாவைப் பற்றி ஆத்மவிசாரம் செய்து கொள்வதற்கும் பொன்னினும் இனிய காலத்தை நன்முறையில் செலவழிப்பதற்கும் உண்டான ஆத்ம சிந்தனையை அந்த ஒரு வினாடி நேரமாக ஈஸ்வரன் தூண்டி விடுகின்றான் என்பது பொருள். இறைவனே சற்குருவாக நிறைய உபதேசங்களைச் செய்கின்றான். எனவேதான் கற்பூர ஜோதியைக் கண் இமைகளில் ஒற்றிக் கொள்கின்றோம்., கண் இமைப்பதற்கான சகுன இலக்கணங்களும் உண்டு. உங்கள் இருதயத்தில் ஏற்படுகின்ற லப் டப் என்ற பீஜாட்சர ஒலிகளுக்கும் உங்கள் கண் இமை மூடி எழுகின்ற போது நம் காதுக்கு புலப்படாமல் ஏற்படுகின்ற மெல்லிய சப்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதைத்தான் சித்தர்கள்

இமை கொட்டும் இருதயக் கொட்டு
உமைச் சிவ நாமக் கூட்டு

என்று சித்தர்கள் பரிபாஷையில் சொல்லி இருக்கின்றார்கள். ஒரு கண் சிமிட்டும் நேரத்திற்கே இவ்வளவு ஆன்ம விளக்கங்கள் என்றால் ஆன்மீகத்தில் நீங்கள் இன்னமும் எவ்வளவு தூரம் பயணம் செய்தாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள், பெருவிழி இமையவள் என்று சித்தர் பரிபாஷையில் போற்றப்படுகின்ற ஸ்ரீகோலவிழியம்மனை (சென்னை மயிலாப்பூர்) அம்மனின் மந்திர ஜோதி நாட்களான ஞாயிறு, திங்களில் சூரிய சந்திர ஹோரை நேரங்களில் அம்மனின் விழிகளுக்கு இயற்கை மை காப்பிட்டு ஏழைகளுக்கு (சுத்தமான) கண் மை, வளையல்கள், மஞ்சள் போன்ற மங்களப் பொருட்களைத் தானமாக அளித்து வந்தால் இரவில் (night duty) கண் விழித்துப் பணியாற்றுபவர்கள் சந்திக்க வேண்டிய ஆபத்துகள் நிறைந்த இரவுப் பயணம், இரவு நேர இயந்திர வேலைகளின் துயரங்கள், கெட்ட கனவுகள் தீரும். இரவு பயங்களும் அகலும். வாரம் ஒரு முறையேனும் ஸ்ரீகோலவிழியம்மனை வழிபட்டு முறையற்ற காம உணர்வுகள், பொறாமை, பண ஆசையால் இருண்டிருக்கும் மன இருட்டையும் இரவு நேரப் பணி பயணங்களில் ஏற்படும் ஆபத்துக்களையும் போக்கிக் கொள்ளுங்கள்.

சீதளா சப்தமி

மிகவும் அற்புதமான சுபமுகூர்த்த திதிகளுள் ஒன்றாக விளங்குவது சப்தமி திதியாகும். வைவஸ்வத சப்தமி, பரிபாலய சப்தமி என புண்ய பூஜா பலன் தரும் சப்தமி திதி வகைகள் நிறைய உண்டு. இவற்றுள் ஒன்றுதான் சீதளா சப்தமி பூஜையாகும். சீதளம் என்றால் குளிர்ச்சி என்று பொருள். அம்பிகையும், சீதளா தேவி (குளிர்ந்த நாயகி) என்ற நாமம் கொண்டு மிகவும் அபூர்வமாக ஒரு சில இடங்களிலே தான் அருள்பாலிக்கின்றாள். இந்த பிரபஞ்சத்தில், அதிலும் நாம் வாழும் இந்தப் பூவுலகில் தோன்றியிருக்கும் ஒவ்வொரு சுயம்பு மூர்த்தியும், அம்பிகையும், கோடானுகோடி காரணங்களுக்காகப் பல பெயர்களில் அவதாரம் பூண்டு நமக்காகவே எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர் என்பதுதான் நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய உருவ வழிபாட்டின் தெய்வீக ரகசியமாகும்.

ஈஸ்வரன், ருத்ர தாண்டவம் ஆடியபோது பிரபஞ்சத்தின் பல கோடி அண்டங்களிலும் தகிக்கும் உஷ்ணம் பெருக்கெடுத்தது. பிரபஞ்சத்தின் பலகோடி லோகங்களிலும் அவ்வப்போது தோன்றுகின்ற அசுர சக்திகளை அழிப்பதற்காக இறைவன் பூணுகின்ற கோலங்களுள் ஒன்றுதான் ருத்ர தாண்டவம் ஆகும். அசுர சக்திகளைத் தனித்தனியே அழிப்பதைவிட ருத்ர தாண்டவத்தில் எழுகின்ற அக்னியால் அசுர சக்திகள் யாவும் தாமாகவே பஸ்பம் ஆகிவிடுகின்றன. இவ்வாறு இறைவன் ருத்ர தாண்டவக் கோலம் பூணும்போது சர்வேஸ்வரனைச் சாந்தம் அடையச் செய்திட அதற்குரிய தெய்வத் துணையாய், அம்பிகையானவள் கடுமையான குளிரையும், மழையையும், பனியையும், திரண்டு வரும் வெள்ளத்தையும் பொருட்படுத்தாது அவற்றையெல்லாம் தம் உடலில் தாங்கிப் பிரபஞ்சத்தின் பல இடங்களிலும் பூஜை கொண்டு கடும்தவத்தில் ஆழ்ந்தாள். இவ்வாறு பல கோடி யுகங்கள் அம்பிகை தவம் புரிந்து தம் திருமேனியில் இறையருளால் அபூர்வமான “மித்ர சீதளத் தன்மையை உருவாக்கிக் கொண்டு இறைவனுடைய தரிசனத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாள். பொதுவாக யோகமோ, கடும் தவமோ அவற்றில் ஆன்மப் பூர்வ பக்தி பெருக்கெடுத்திடில் அங்கே உஷ்ணம் தானே தோன்றும்! அதிலும் ஈஸ்வரியின் யோகத் தவமெனில் சொல்லவும் வேண்டுமோ?

ஆனால் தேவியானவள் ருத்ராக்னியைத் தணித்திடவே சீதளத் தன்மையை ஏற்படுத்தக்கூடிய மந்திரங்களை ஓதியவாறு கடும்யோக தவத்தை மேற்கொண்டதனால் பிரபஞ்சம் முழுதிலுமே மிகவும் அதிசயமாக, அபூர்வமாகக் குளுமையான சீதோஷ்ண நிலை ஏற்பட்டது. இதனால் சூரிய ஒளியின் அம்சங்கள் கூட மாறிவிட்டன! சர்வேஸ்வரனுடைய ருத்ர தாண்டவ நடனத்தில் ஏற்பட்ட உஷ்ணமானது இறைவியின் கடுந்தவத்தில் விளைந்த சீதளத் தன்மையுடன் கூடி இன்றைக்கு நீங்கள் இவ்வுலகத்தில் காணுகின்ற ஆரோக்யமான, குளுமை (விண்வெளியில் ozone நற்கதிர்கள்) நிறைந்த மலைத் தலங்களும், மலைப் பகுதிகளும், சுனைகளும், வற்றாத ஜீவ நதிகளும், ஆலயங்களும், தோன்றின. இவ்வகையில்தாம் கௌரிகுண்ட், கேதார்நாத், பத்ரிநாத் போன்றவை நமக்குக் கிட்டின. இவ்வாறாக இறைவனின் ருத்ர தாண்டவ நடனத்தின் அக்னியைத் தணித்து இறைவி சீதளநாயகியாகத் தோன்றிய சிவத் திருத்தலங்கள் இன்றைக்கும் பூமியில் சில இருக்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் சென்னை அருகேயுள்ள திருமழிசையில் உள்ள ஒத்தாண்டேஸ்வரர் சிவாலயம் ஆகும். இங்கு அம்பிகை குளிர்ந்த நாயகியாய் சீதள நாயகியாய் அருள்பாலிக்கின்றாள். இத்தலத்திற்கு மேலும் இரு திருமால் ஆலயங்களும் சிறப்பூட்டுகின்றன.

சீதள நாயகி என்றாலே தன்னுள் குளிர்ச்சியைக் கொண்டு இருப்பவள் என்று பொருள் கொண்டு இருப்பதுடன், அக்னி சக்தியைத் தணிக்கின்ற தெய்வீக சக்தியையும் கொண்டவள் என்பதும் புலனாகின்றதன்றோ! இறைவனுடைய ஒவ்வொரு தாண்டவ நடனத்திலும் விதவிதமான அக்னி சக்திகள் உருவாகின்றன. உண்மையில் நன்மை, நற்பொருள், நல்லவை என்பதாக அனைத்து விதமான தார்மீகப் பொருட்கள் யாவுமே அக்னிலிருந்துதான் உருவாகின்றன என்பது உங்களுக்குத் தெரியாத தெய்வீக ரகசியமாகும். தீயவை பஸ்மமாவதும் அக்னியில்தான்! அக்னி என்றால் நமக்கு உஷ்ண மயமானது என்றுதானே அர்த்தம் கொண்டு இருக்கிறோம். ஆனால், அக்னியினுடைய குணப்பாடுகளோ நம்முடைய அறிவுக்கும் எட்டாததாக விளங்குகின்றது. அக்னியிலிருந்து எதை வேண்டுமானாலும் சிருஷ்டி செய்யலாம் பஸ்மமும் செய்துவிடலாம். இதற்குரித்தான அக்னிபுராந்தக யோக முறைகள் நிறைய உண்டு. இத்துறையில் தலைசிறந்தவர்தான் அக்னிபுராந்தக மஹரிஷி ஆவார்.

எங்கெல்லாம் ஈசனுடைய ருத்ர தாண்டவம் நடைபெறுகின்றதோ, அங்கெல்லாம் ஸ்ரீஅக்னிபுராந்தக மஹரிஷி தோன்றி அந்தத் தாண்டவ கிருத்தியங்களிலுள்ள அக்னி சக்தியைப் பற்றி நன்கு உய்த்து உணர்ந்து அறிந்து கொண்டார். வேத மந்திரங்களிலிருந்து எழுகின்ற அக்னி, ஹோம குண்டங்களிலிருந்து எழுகின்ற அக்னி, சூரிய மண்டலங்களிலிருந்து தோன்றுகின்ற பாஸ்கர அக்னி, சந்திர மண்டலத்திலிருந்து எழுகின்ற குளுமையான சந்திராக்னி, செவ்வாய் லோகத்திலிருந்து கிளம்புகின்ற அதிஉஷ்ண சக்தி நிறைந்த குஜாக்னி, அன்னம் சமைப்பதற்கான உலையில் இருந்து உதிக்கின்ற அன்ன கோசாக்னி, மனிதன் மற்றும் ஜீவன்களின் தேகத்தின் உள்ளிருந்து உணவு ஜீரணம் ஆகும்போது ஏற்படுகின்ற ஜடாக்னி இவ்வாறாக அக்னியில் எத்தனையோ வகைகள் உண்டு சீதள நாயகியாக அம்பிகை தோன்றுகின்றதபோது அத்தனை கோடி அக்னியின் வகைகளையும் அம்பாள் தன்னுள் ஏற்றுக் கடும் தவம் புரிகின்றாள். இத்தகைய அக்னி வகைகளையும் நம்முடைய பூலோக தினசரி வாழ்வில் நாம் சந்தித்துத்தான் வாழ்கின்றோம். ஆனால் இவற்றின் மகிமையை ஒரு துளியும் உணராது மாயவாழ்வுதானே வாழ்கின்றோம்! காரணம் தக்க சற்குரு இல்லாததுதான்! ஓரிடத்தில் ஒரு ஐந்து நிமிட நேரம் உட்கார்ந்திருந்தால் அந்த இடத்தில் சற்றே சூடு ஏற்படுகின்றதல்லவா. இதற்கும் சில வகையான அக்னி விளக்கங்கள் உண்டு. தாய்க் கோழியின் உடல் சூட்டில் பொரிவதுதானே முட்டை! எனவேதான் நம் பெரியோர்கள் எவ்விடத்தில் அமர்ந்தாலும், நின்றாலும் ஆங்காங்கே எழும் அக்னியை வகைப்படுத்தச் சிலவகை மந்திரங்களை ஜெபித்துக் கொண்டு இருப்பார்கள், ஏனென்றால் தாங்கள் ஓரிடத்தில் நின்றோ, அமர்ந்தோ இருப்பதால் அவ்விடத்தில் ஏற்படுகின்ற சூட்டிற்குத் தாமே தக்க பரிகாரத்தைத் தரும் வகையிலே அந்த மந்திரங்கள் அல்லது யோகாசனங்கள் உதவின, இதற்காகத் தான் நன்றாக நிமிர்ந்து நின்ற நிலையில் ஒரு காலை மற்றொரு காலின் முழங்காலில் வைத்து துர்கா யோகத்தைப் பயில்பவர்கள் இன்றும் உண்டு. இவ்வாறாக காலை மாற்றி மாற்றி மற்ற முழங்காலில் ஒட்(ட)டி வைத்து நிற்கின்ற யோக சக்திக்கு எந்தவிதமான உஷ்ணங்களையும் தாங்குகின்ற அதிஅற்புத சக்தி உண்டு. எனவே தான் அக்னிக் காவடியை எடுப்பவர்கள் அக்காலத்தில் மண்டல விரதத்தின் போது இந்த துர்கா அக்னி யோகத்தைப் பயில்வார்கள்.

நீங்கள் கூட தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது நன்றாக நிமிர்ந்து நின்று வலது கால் பாதத்தை இடது முழங்கால் மேல் வைத்து ஒற்றைக்காலில் நின்று துர்கா யோகம் பழகி வாருங்கள். வலது பாதத்தை இடது முழங்காலின் மேல் மாற்றி மாற்றி நின்று யோகம் பயின்று வருவீர்களேயானால் எத்தகைய உஷ்ணத்தையும் தூங்கின்ற சக்தி உங்களுக்கு தேகத்தில் மனதில் நிறைந்துவிடும். இதற்கு நாரைப் பரியோகம் என்று பெயர். இந்த யோக சக்தியால் எத்தகைய துன்பங்கள் வந்தாலும் அவற்றைத் தாங்குவதற்கான மனோசக்தி கிட்டுவதோடு மட்டுமல்லாமல் பிறருடைய துன்பங்களையும் களைவதற்கானப் பரிகார சக்தியையும் ஆன்மப் பூர்வமாக நீங்கள் பெறுகின்றீர்கள். எத்தகைய துன்பங்களையும் தாங்கிடும் மனோசக்தியை இது பெற்றுத் தரும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

வயலூர், ஆடுதுறைக்கருகே கஞ்சனூர் போன்ற சிவத்தலங்களில் இறைவன் அக்னீஸ்வரராக நாமம் பூண்டு அருள்பாலிக்கின்றார். இத்தலங்களில் எல்லாம் சீதள நாயகியாக அம்பிகை அருட்தவம் பூண்டு இறைவனுடைய அக்னிசக்தியின் சாத்வீக பலாபலன்களை நமக்கு எடுத்துத் தந்து அருள்பாலிக்கின்றாள். இன்றைக்கு அக்னி தீர்த்தங்கள் உள்ள தலங்கள் யாவுமே சீதள நாயகி தேவியாக அம்பாள் அக்னியோக சக்தி பயின்ற தலங்கள் ஆகும்.

கர்பப்பையின் நீரஜாக்னி!
சீதள நாயகியை எவ்வாறு வழிபடல் வேண்டும்? சீதள நாயகியின் வழிபாட்டால் நமக்குக் கிடைக்கின்ற பலன்கள் யாவை? எந்தப் பூஜையை மேற்கொண்டால் எந்தப் பலன்கள் கிடைக்கும்? எவ்விதமான பலன்களைப் பெற எவ்விதமான வழிபாட்டினைச் செய்திடல் வேண்டும் என்றவாறாகத்தானே கலியுக மக்களுடைய effects oriented பக்தி அமைந்து இருக்கின்றது. இவற்றையெல்லாம் தாண்டிய நிலையில் தான் எதுவாகினும், எதுவரினும், நம்முடைய விதியாக ஏற்போம் என்ற உத்தம நிலையைப் பெற்றிடலாம். இதற்கு அடுத்ததாக நன்மையோ தீமையோ, இன்பமோ, துன்பமோ எதுவுமே இறைவனே நமக்கு அளிப்பது என்ற உத்தம நிலையும் உண்டு. அதற்குமேல் இறைவனே நம்மைச் சிறு கருவியாய்க் கொண்டு அனைத்துக் காரியங்களையும் நடத்துகின்றான் என்பதும் அடுத்த உத்தம நிலை, இவ்வாறாக, தெய்வீக நிலைகளில் எத்தனையோ உத்தம நிலைகள் உண்டு. தக்க சற்குருவைப் பெற்றால்தான் நாம் எந்த நிலையில் இருக்கின்றோம், எந்த நிலைக்கு நாம் சென்றுகொண்டு இருக்கின்றோம், எந்த உத்தம நிலைகளை நாம் அடைந்தாக வேண்டும் என்ற பலவிதமான பிறப்பு ரகசியங்களையெல்லாம் நாம் அறிந்திட முடியும்.

நாம் அனைவரும் அக்னியில் பிறந்தவர்களே! அக்னியில் தான் நம் தேகம் பரிமாணம் அடைகின்றது. கல்லறையோ, சுடுகாடோ, புதையலோ, சூட்டில்தான் தேக விதேகமும்! முன்னறி தெய்வமாக விளங்குகின்ற நம்முடைய அன்னையின் வயிற்றில் கர்ப்பப்பையில் நாம் வாசம் கொண்டபோது அங்கு கர்ப்பப்பையினுள் நிறைந்திருக்கின்ற நீரஜாக்னி என்பது நாம் உய்த்து வந்ததேயாகும். உத்தம தெய்வ லோகங்களில் தான் இந்த நீரஜாக்னியை நீங்கள் பெற்றிட முடியும். பூலோகத்தில் இன்று நாம் காண்கின்ற அக்னியாகிய தீக்குச் சில குறித்த சிவப்பு வகை நிறங்கள்தான் உண்டு. மஞ்சள், சிவப்பு, ஆரஞ்சு போன்ற பலகலவை நிறங்களுடன் பூலோகத்தில் அக்னி காணப்படுகிறது. ஆனால் தேவலோகங்களிலோ பச்சை, நீலம் போன்றவற்றிலும் பல அதிசய நிறங்களில் கூட அக்னி உண்டாகிறது என்பது தெய்வீக ரகசியமாகும். நாமறியாத இன்னமும் பல தேவ நிறங்களும் உண்டு. இவற்றில் நீரஜாக்னி என்பது சற்றே பூர்வ பங்கஜ காவி நிறத்தைக் கொண்டதாகும். தேவலோகங்களில் தான் இந்த நீரஜாக்னியைத் தரிசித்திட முடியும். பத்துவிதமான வாயுக்களை உருவாக்கித் தருவது தான் இந்த நீரஜாக்னியின் தன்மையாகும். தசவாயு தேவதைகள் உறைகின்ற அதியற்புத லோகமே நீரஜாக்னி அக்னி லோகமாம். இதேபோன்று தசாக்னி தேவமூர்த்திகள் என்பார் இன்றைக்கும் திருஅண்ணாமலையை நித்ய கிரிவலம் வருகின்ற அக்னி மூர்த்திகள் ஆவர். பஞ்ச பூதத் தலங்களில் அக்னித் தலமான திருஅண்ணாமலையில் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அருகிலுள்ள அபய மண்டபத்திலிருந்து நீங்கள் திருஅண்ணாமலையை தரிசித்தால் பத்துவிதமான முகடுகளை நீங்கள் தரிசித்திடலாம், இதற்கே தசமுக தரிசனம் என்று பெயர்.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

மரணபயம் மாய்ந்திட!
மக நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து இந்த தசமுக தரிசனத்தை கண்டு பத்துமுறை பூமியில் வீழ்ந்து வணங்கி ஸ்ரீஎமபகவானுக்கு உரித்தான மந்திரங்களை ஓதித் துதித்து வருவோர்க்கு எவ்வித மரண பயமும் ஏற்படாது. “இறந்துவிட்டால் நம் குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள், நாம் ஒன்றையும் சேர்த்து வைக்கவில்லையே, நம்முடைய பிள்ளைகளும், பெண்களும் எவ்வாறு கஷ்டப்படப் போகின்றார்களோ”. என்று வருந்தி வருந்தி தினசரி வாழ்க்கையை ஓட்டுவோர் பலர் உண்டு. இதுவும் மரண பயத்தின் ஒரு வகையே. இவர்கள் மகம் நட்சத்திர நாட்களில் திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து ஸ்ரீஎமலிங்க தரிசனம் பெற்று ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அருகில் இருந்து திருஅண்ணாமலையின் பத்து முகடுகளையும் தசமுக தரிசனமாகக் கண்டு ஸ்ரீதசரதர் ஓதிய ஸ்ரீசனீஸ்வரர் துதி எமபகவானுக்கு உரித்தான எம அந்தாதி மற்றும் எமபகவானுக்குரித்தான ஏனைய துதிகளையும் முறையாக ஓதி பித்ரு ஆசிர்வாத சக்தி நிறைந்த பிரண்டை கலந்த உணவினை (துவையல்) செய்து ஏழைகளுக்கு அன்னமாக அளித்து வந்தால் மரணபயம் அண்டாது. மேலும் மனப் புலம்பலும் அடங்கும். இறப்பின் ரகசியமும் சிறிது சிறிதாகப் புலப்படத் தோன்றும்.

குறிப்பாக மாரடைப்பு, புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு இருதய நோய்களாலும் அவதியுறுவோரும் மக நட்சத்திர நாட்களில் தசமுக தரிசனம் பெற்று வழிபட்டு வருவார்களேயானால் சாந்தமயமான வாழ்க்கையைப் பெறுவார்கள். இந்நோயாளிகளினால் இவற்றைக் கடைப்பிடிக்க இயலாவிடில் தக்க சற்குருவை நாடிடில், பிறர் மூலமாகச் செய்ய வேண்டிய பரிகார, பிராயச்சித்த இறைவழி முறைகள் கிட்டிடும். பிரண்டை மூலிகையானது பித்ருக்களுக்குப் ப்ரீதி தருவதாகும்.. நம் வயிற்றில் மட்டும் பன்னிரெண்டுக்கும் மேலான அக்னி வகைகள் உள்ளன, பிராணன், வியானன், அபானன், உதானன், சமானன் போன்ற ஐந்து வகையான அக்னி வகைகள்தாம் மிகவும் முக்கியமாக நாமறிந்ததாக விளங்குகின்றன. இவற்றின் அக்னி சக்தியை சஞ்சீவ மருத்துவ தத்துவத்தின்படி நம் கபால நாளங்களுக்கு அனுப்புவதே பிரண்டை மூலிகையாகும். இது சிராத்த திதிகளில் தான் தன் பரிபூரண மூலிகைக் குணப்பாடுகளை வெளிப்படுத்து. உணவானது ஜீவசக்தியாக மாறி அக்னியின் மூலமாக நமக்கு தேக சக்தியைப் பெறுவதற்கு பத்துவிதமான முக்கிய அக்னி சக்திகள் பெரிதும் உதவுகின்றன. இவை நம் உடலில் எப்போதும் இருந்தாக வேண்டும். கர்ப்பத்தில் சேருகின்ற இந்த பத்துவகை வாயுக்களும் நம் உடலை விட்டு உயிர் நீங்கும் போதும் தேகக் கூட்டையும் விட்டுப் பிரிந்தாக வேண்டும். இதுவே சாந்தமயமான மரணம் ஆகும். இதற்காகத்தான் அக்னியில் நம் உடலானது எரிக்கப்படுகின்றது. எனவே உயிர் உடலை விட்டுப் பிரிந்தவுடன் அந்த உடலுக்கு அக்னியால் ஆன தகனமே  சிறப்புடையதாகும். புதைத்தலிலும், மின்சார தகனத்திலும் நிறைய குறைபாடுகள் உண்டு!

அக்னிபகவான் பெற்ற தோஷ நிவர்த்தி
அக்னிக்கு கூட சில தோஷங்கள் உண்டு. கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கின்றதல்லவா! ஸ்ரீஅக்னிமூர்த்தியே, “இறைவா! அனைத்துவிதமான பொருட்களையும் அடியேன் என்னுடைய தீ அம்சத்தில் ஏற்று பஸ்மம் செய்ய வேண்டி இருப்பதால் நல்லது கெட்டது என ஜீவனின் குணப்பாடுகள் யாவும் என்னை வந்து சேருகின்றனவே, எவ்வாறு நதியில் நீராடுதலால் கரைந்திடும் ஜீவன்களின் பாவங்களை எல்லாம் தம்முள் ஏற்று நதி தேவதைகளும் தமக்குப் பிராயச்சித்தத்தைப் பெற்றுள்ளனவோ அதேபோல அடியேனுக்கும் தக்க பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தருமாறு வேண்டுகின்றேன்”, என்று இறைவனை வேண்டி நல்வரம் கேட்டுத் தவம் இருந்தார் ஸ்ரீஅக்னி மூர்த்தி.!

அப்போது இறைவனும், “பூவுலகில் யாம் அக்னீஸ்வரனாக சுயம்பு மூல லிங்க மூர்த்தியாய்ச் சில தலங்களில் உற்பவிக்கின்றோம். அங்கெல்லாம் அக்னிக் கோளமான செவ்வாய்க்கு உரித்தான மங்கள வாரம் (செவ்வாய்க்கிழமை) தோறும் மானிட ரூபத்தில் நீ வந்து பூஜித்து உன்னிடம் வந்து பஸ்மமாகின்ற நல்லது கெட்டது அனைத்திற்கும் பிராயச்சித்தத்தைப் பெற்றிடுவாயாக. இப்பூவுலகில் கணவனையே தெய்வமாகப் போற்றுகின்ற பத்தினிமார்களுடைய பதிவிரதா பூஜா சக்தியின் ஒரு பங்கு உன்னை அடைந்து தீயவையெல்லாம் பஸ்மமாவதால் உனக்கு ஏற்படுகின்ற தோஷங்களுக்கு தக்க நிவர்த்தியையும் பெற்றுத் தரும். எனவே பத்தினிப் பெண்களையும் நீ காத்து ரட்சிக்க வேண்டும். இது மட்டுமல்லாது திரேதா யுகத்தில் சீதாதேவி அக்னியில் தீக்குளித்ததானது உன்னைப் பவித்திரமாக்கியது போல் ஏனைய யுகங்களில் மகான்கள், சித்தர்கள , யோகியர்கள் மானிட உருவைத் தாங்கி பல தெய்வீகக் காரியங்களையெல்லாம் நிறைவேற்றி ஜீவசமாதி பூணுவர். அப்போது அவர்களுடைய தேவமயமான பூவுடல் அக்னியில் ஐக்கியமாகும் போது அதில் தோன்றுகின்ற “பூர ஜோதி” உனக்கு நல்ல பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தரும், அதுமட்டுமல்லாது எந்தத் தலங்களில் எல்லாம் அக்னி தீர்த்தங்கள் உள்ளனவோ, அங்கு மானிடர்கள் அமாவாசை, மற்றும் கிரஹண காலங்களில் அளிக்கின்ற தர்ப்பண சக்தியின் ஒரு பங்கும் உன்னை வந்தடையும். ஸ்வதா தேவி மூலம் அந்த தர்ப்பண சக்தியானது உனக்கு நல்ல பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தரும்’ என்று கூறி அருள்பாலித்தார். எனவேதான் நாம் ‘ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி‘ என்று ஓதித் தர்ப்பணமிடுகின்றோம். இதனைக் கேட்ட ஸ்ரீஅக்னி மூர்த்தி மிகவும் சந்தோஷமடைந்து மேலும் பல அரிய தேவ விஷயங்களையும் நல்வரங்களாகப் பெற்று இன்றைக்கும் ஈஸ்வரன் ஸ்ரீஅக்னீஸ்வரராக அருள்பாலிக்கின்ற தலங்களில் செவ்வாய்க் கிழமை தோறும் மானிட ரூபத்தில் சூட்சுமமாக வந்து பூஜித்துச் செல்கின்றார். செவ்வாய்த் தலங்களான ஸ்ரீவைத்தீஸ்வரன் கோயில், திருவாடானை மற்றும் திருக்கழுக்குன்றம் போன்றவையும் நம்முடலில் மனதில் உள்ள காமாந்திரத் தீவினைகளை, தீயொழுக்கக் காம வினைகளை பஸ்மமாக்குகின்ற அக்னித் தலங்களாகும். வேதாக்னி சக்தி நிறைந்த திருக்கழுக்குன்ற பௌர்ணமி கிரிவலம் மனதைச் சுத்தமாக்கும். இங்கும் பௌர்ணமியில் கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானதாகும்.

வயிற்றுப் பிணி தீர்க்கும் சீதளா தேவி!

மேலும் சீதளா தேவியாக அம்பிகை அருள்பாலிக்கின்ற தலங்களில் எல்லாம் கார்த்திகை, உத்திரம், சித்திரை நட்சத்திர நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும், ஹோம வேள்விகள் நடத்தி அக்னி சக்தி நிறைந்த மாம்பழம், பப்பாளி போன்ற கனிகளையும், பித்ரு சக்தி நிறைந்த எள் மற்றும் கோதுமையால் ஆன உணவினையும் படைத்துத் தானமாக அளித்தலால் வயிறு சம்பந்தப்பட்ட எத்தகைய பிணிகளுக்கும் தக்கத் தீர்வு கிட்டும், ஸ்ரீஅக்னிபுராந்தக மஹரிஷி என்பவர் கலியுகத்தில் பலவிதமான ரசாயன உரங்களால் உண்டாக்குகின்ற உணவினை ஏற்பதால் மக்களுக்குச் சூடு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் என்பதைத் தீர்க்க தரிசனமாக உணர்ந்து ஸ்ரீஅக்னீஸ்வரராக இறைவன் அருள்பாலிக்கும் இடங்களிலும், சீதளா தேவியாக அம்பிகை அருள்பாலிக்கின்ற தலங்களிலும் இறைவனை வேண்டித் தக்க நிவாரணத் தருகின்றார்.

அக்னி பகவானுக்குரித்தான நாட்களான செவ்வாய்க்கிழமை, கார்த்திகை, உத்திரம் நட்சத்திர நாட்களில் அம்பிகைக்கும், ஈஸ்வரனுக்கும் அரைத்த சந்தனக் காப்பிட்டு மிளகு சாதம், மிளகு வடை, மிளகு அப்பளம் போன்ற மிளகு சம்பந்தப்பட்ட உணவு வகைகளைப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வந்தால் எத்தனைதான் செல்வம், படிப்பு, வசதிகள் இருந்தாலும் பிறருடைய பொறாமை தீயினால் ஏசுதல், மிரட்டுதலாலும் அவதியுறுவோரும் ஸ்ரீஅக்னீஸ்வரர் எழுந்தருளியுள்ள தலங்களில் பூஜைகளையும் தான தர்மங்களையும் முறையாக நடத்தி வந்தால் பிறருடைய பொறாமைத் தீக்குழம்பிலிருந்து நன்முறையில் விடுபட்டு சாந்தமான வாழ்வைப் பெறுவர். குளிர்சாதன சம்பந்தமான தொழில்களில் உள்ளோர் (ஏர்கண்டிஷனர், ரெப்ரிஜிரேட்டர், ஐஸ்கிரீம் etc.) ஸ்ரீசீதளா தேவி எழுந்தருளியுள்ள தலங்களில் இயன்றபோதெல்லாம் இளநீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு ஏழைகளுக்கு, நுங்கு, இளநீர், பழரசம், நீர்மோர் தானமாக அளித்து வந்திடில் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.

மேலும் நிலம் இருந்தும், ஓட்டு வீடு இருந்தும் பணவசதி இல்லாமை, மற்றும் சூழ்நிலைச் சந்தர்ப்பங்கள் சரியாக அமையாததினால் நன்முறையிலே வீட்டைக் கட்டி முன்னேற்றம் செய்வதற்கு இயலாது இருப்போர் ஸ்ரீசீதளா தேவிக்கு நன்கு அரைத்த சந்தனக் காப்பிட்டு பூமிகாரகரான குஜனுக்கு உரித்தான செவ்வாய்க் கிழமை தோறும் வழிபட்டு வந்தால் நன்முறையில் வீட்டைக் கட்டி முடித்திட நல்வழி பிறக்கும், வீடு, பூமி சம்பந்தப்பட்ட சொத்துக்களைத் தரவல்ல அம்சங்களை உடைய செவ்வாய் பகவான் தம் உஷ்ணத்தைத் தணித்துக்கொள்ள ஸ்ரீசீதளா தேவியையே வழிபடுகின்றார்.

வயிற்று நோய்க்கு நிவாரணம்
சென்னை அருகே திருமழிசையில் குளிர்ந்த நாயகியாக ஸ்ரீசீதளா தேவி அருள்பாலிக்கின்றாள். காணுதற்கு அரிய அம்பிகை! பூலோகத்தின் ஒரு சில இடங்களில் தான் இந்த நாமத்தைப் பூண்டு அம்பிகை அருள்பாலிப்பதால், மூலம் (Piles), வயிற்றுக் கட்டிகள், குடல் கட்டிகள் போன்ற உஷ்ண சம்பந்தமான நோய்களால் அவதியுறுவோர் ஸ்ரீசீதளா தேவிக்கு மேலே குறிப்பிட்ட வகையிலே பூஜைகள் நிகழ்த்தி, தான தர்மங்கள் செய்து வந்தால் தங்களுடைய நோய்களுக்கு வெகுவிரைவில் நிவாரணம் பெறுவர். இத்தகைய ஆலயங்களில் தக்க அனுமதியுடன் ஹோம பூஜைகளைச் செய்து அதில் பல ஏழை, எளியோரும் பங்கு பெறச்செய்து அனைவரும் ஆஹுதி அளிக்கும் வகையிலே சிறந்த இறைச்சமுதாய பூஜையை நல்லதொரு திருப்பணியாக மேற்கொண்டால் நல்ல பலன்களைக் கண்கூடாகக் காணலாம்.

தாம்பூல தரிசனச் சிறப்பு!
ஸ்ரீசீதளா தேவிக்குப் ப்ரீதியானது தாம்பூலத் திருப்பணியாம். ஒரு தட்டு நிறைய வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், நன்கு தொடுக்கப்பட்ட பூக்கள் போன்ற மங்கலப் பொருட்களை வைத்து ஸ்ரீசீதளா தேவிக்குப் படைத்து அதை அப்படியே ஜாதி, இன பேதமின்றி ஏழைச் சுமங்கலிக்குத் தானமாக அளித்தால் ஸ்ரீசீதளா தேவி மிகவும் ப்ரீதி அடைகிறாள். ஏனென்றால் தாம்பூல தரிசனமாக என்றாலே மங்களகரமாக, கண்ணிற்குக் குளிர்ச்சியாகத் தென்பட்டு உடலுக்கு ஒரு தெய்வீக சீதளத் தன்மையைத் தருகின்றது. இதனால்தான் பூஜை அறையிலே எப்போதும் தாம்பூலத் தட்டு நிறைந்திருக்கும்படி வெற்றிலை, பாக்கு, மஞ்சள் போன்ற சுபமங்களப் பொருட்களை வைத்திருத்தல் வேண்டும். போகும்போதும், வரும் போதும் இந்தத் தாம்பூலத் தட்டு நம் கண்ணில் படும்போதெல்லாம் நற்சகுண கிரணங்கள் வீட்டிலும், நம் தேசத்திலும் நிரவி நமக்கு சாந்தத்தைத் தருகின்றன.

நாம் காண்கின்ற காட்சிகள் எல்லாம் நல்லவையாக இருக்கப் பிரார்த்திக்க வேண்டும். ஏழைகள் பிச்சை எடுத்தல் போன்ற வருத்தமான காட்சிகள் தென்பட்டாலும் அவரவர் கர்ம வினைப்படியே எல்லாம் நடக்கிறது என்று தெளிந்து அவருடைய நல்வாழ்விற்காக பிரார்த்தனையும் கூடவே இயன்ற தானமும் செய்யுங்கள். பசியால் ஒரு ஏழை வாடும்போது இவன் மூன்று வேளையும் நன்கு உண்ண வேண்டும் என்று பிரார்த்தனை செய்வதை விட பிரார்த்தனையுடன் அவனுக்கு ஒரு வேளைக்குரித்தான உணவினை (மூன்று இட்லிகளையேனும்) வாங்கித் தருதல்தான் நடைமுறைப் பிரார்த்தனையாக அமையும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். பூஜாபலன்களை விட தானதர்மங்களுக்கு, அபரிமிதமான பலன்களைத் தரும் அற்புத தெய்வீக சக்தி உண்டு.

ஸ்ரீசீதளா சப்தமி விரதம்
ஏழு நாட்களிலுமே அக்னிமேல் தவம் இருந்து ஸ்ரீசீதளா தேவி இறைவனுடைய தரிசனம் பெற்று ஏழாம் நாள் இறைவனே அம்பிகையினுடைய ஸ்ரீசீதளா அவதாரப் படலத்தைத் தொடங்கி வைத்தார். எனவே சீதளா சப்தமி விரதத்தை முதல் திதியான பிரதமையன்று காலையில் பால், மதியம் மோர், இரவில் பழம் உண்டு தொடங்குதல் வேண்டும். இரண்டாம் நாளான துவிதியை திதியில் மூன்று வேளையும் பால் அருந்தியும், மூன்றாம் திதியான திரிதியை அன்று மூன்று வேளையும் மோர் மட்டும் அருந்தியும், நான்காம் திதியான சதுர்த்தியன்று மூன்று வேளை பழங்கள் உண்டும், ஐந்தாம் திதியான பஞ்சமியன்று ஒரு வேளை மட்டும் பால் உண்டும். ஆறாம் திதியான சஷ்டியன்று ஒரு வேளை மட்டும் மோர் உண்டும், ஏழாம் நாளான சீதளா சப்தமியன்று ஒரு வேளை பழம் மட்டும் உண்டும் சப்தமி திதியன்று விரதத்தை நிறைவு செய்திட வேண்டும்.

15.8.2000 முதல் 21.8.2000 வரை – ஸ்ரீசீதளாதேவியை மேற்கண்ட முறையில் பூஜித்து, தரிசித்து, சந்தனக் காப்பிட்டு அபிஷேக ஆராதனைகள் செய்து தானதர்மங்களுடன் நிறைவு செய்தால் சீதளா சப்தமி விரதத்தின் பலன்களாக உஷ்ண சம்பந்தமான நோய்களின் கொடுமையிலிருந்து நிவாரணம் பெறலாம்.

1. பாய்லர், சமையலறை, ஹோட்டல் கிளப் kitchen போன்ற உஷ்ண சம்பந்தமான பணியில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நன்முறையில் வேலை மாறுதலும், பதவி உயர்வும் வாழ்வில் முன்னேற்றமும் கிட்டும்.

2. குளிர்சாதனக் கருவிகள், ஏர்கண்டிஷனர்கள், ஐஸ்கிரீம் சம்பந்தமான குளிர் சாதனத் தொழிலில் ஈடுபட்டு இருப்போர், அல்லது பணிபுரிவோர் நன்முறையில் தொழிலில் முன்னேற்றம் கண்டிடுவர்.

3. தன்னுடைய வீடோ, கடையோ பலவிதமான நெருக்கடிகளுக்கு ஆளாகி வியாபாரம் மந்தமாகி வியாபாரம் தடைபட்டு இருக்குமானால் இத்தடங்கல்கள் எல்லாம் நன்முறையில் நீங்கி வியாபாரம் நன்கு தொடர்வதற்கும், வீட்டில் சாந்தமான வாழ்வு ஏற்படவும், இந்த சீதளா தேவி பூஜை பெரிதும் உதவும், உதாரணமாக சாலை அபிவிருத்தி, பக்கத்தில் புதுக் கட்டிடங்கள் எழுதல், கட்டிட சட்டதிட்டங்கள் போன்ற பல காரணங்களினால் வியாபாரமோ, இல்லமோ, கட்டிடமோ பாதிக்கப்பட்டு இருப்பின், ஸ்ரீசீதளா சப்தமி விரதத்தைப் பரிபூர்ணமாக கைக்கொண்டால் அனைத்துத் தடங்கல்களும் நன்முறையில் நிவர்த்தி பெறும்.

தீவினை வேண்டாம்

தீவினைகளைச் சம்பாதிக்க வேண்டாம்!  லஞ்சம் பெறுதல் சந்ததியைப் பாதிக்கும்!

நமக்கு அமைந்துள்ள வாழ்வில் நாம் பலவிதமான முறைகளில் தீவினைக் கர்மங்களைச் சேர்த்துக் கொள்கின்றோம். ஒரு விதத்தில் பூஜை, கோயில் தரிசனங்கள், தீர்த்த நீராடுதல்கள் நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் தீவினைக் கர்மங்களைச் சேர்த்துக் கொண்டிருந்தால், வாழ்வில் ஆன்மீக முன்னேற்றம் எவ்வாறு உண்டாகும்? கலியுகத்தில் தீவினைக் கர்மங்கள் குவிந்து கிடக்கும் இடமாக விளங்குவது, மது, தீயமங்கையர், சூது மற்றும் லஞ்ச லாவண்யங்கள் பெருத்துக் கிடக்கின்ற இடங்களாகும்.

எங்கு சென்றாலும் லஞ்சத் தொகையை அளித்தால்தான் சட்ட திட்டக் காரியங்கள் நடைபெறும் என்ற நிலை கலியுகத்தில் ஏற்பட்டுவிட்டது அல்லவா! இது மிகவும் வேதனைக்குரியதாகும். லஞ்சம் பெறுதல் என்றாலே கொடுமையான பாவங்களைச் சேர்த்துக் கொள்தல், கடுமையான தீவினைகளை வாழ்வில் கூட்டிக் கொள்ளுதல் என்பது பொருளாகும் இது மன நிம்மதியைக் கெடுப்பதோடு சந்ததியினருடைய வாழ்க்கையையும் பாதிக்கும்.

அதர்ம முறையிலும், ஏமாற்றியும் மற்றும் லஞ்சமாகவும் பெறப்பட்ட பணத்தால் வாழ்க்கை வசதிகளைப் பலரும் பெருக்கிக் கொண்டது போல் மேலெழுந்த வாரியாகத் தோன்றினாலும் இதனுடைய விளைவுகளோ கொடுமையானதாகும். என்ன செய்வது? “கலியுகத்தில் லஞ்சம் என்பது ஒரு சர்வ சாதாரணமாகி விட்டதே, பலருடன் சேர்ந்து நானும் லஞ்சம் பெறுவதற்குச் சூழ்நிலைகளால் அதில் பங்கு பெற்று பாவத்திற்கு ஆளாகிவிட்டேனே”, என்று சிலர் சொல்லக்கூடும். அவ்வாறு சந்தர்ப்ப சூழ்நிலைகளினால் ஒருவரிடம் லஞ்சமாகப் பணமோ பொருளோ திணிக்கப்பட்டால் அதனை உடனடியாகத் தான தர்மத்திற்குச் செலவிடுவது தான் ஓரளவுக்கு பிராயச்சித்தத்தைப் பெற்றுத் தரும்.

தீவினைகளை அறிவீர்! புத்தி தெளிந்திடுவீர் மனம் திருந்திடுவீர்!

1. எவ்வளவுதான் நல்லவராக வாழ்ந்தாலும் தினந்தோறும் ஒவ்வொருவரும் தம் வாழ்வில் சேர்த்துக் கொள்கின்ற தீவினைகள்தாம் எத்தனை? எத்தனை?

2. சித்புருஷர்கள் அருள்கின்ற வழிமுறைகளே கலியுகத்தில் பல தீவினைகளிலிருந்து நம்மைக் காக்கும். நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்கின்ற தீவினைகளைப் பற்றி உணர்ந்து கொண்டால்தானே அவற்றிற்கு உரித்தான பிராயச்சித்த முறைகளை நாம் பெற்றிட முடியும். ஆத்மவிசாரமின்றி மனம் திருந்தாது!

3. தினந்தோறும் சிறுகச் சிறுகச் சேர்கின்ற தீவினைகள்தாம் பாவமலைத் தொடர்களாக மாறி நம்முடைய ஆயுளின் முடிவில் நம் கண்முன் தோன்றி பிரம்மாண்டமான ரூபத்தில் நிற்கின்றன. “இத்தகைய அரிய மானிடப் பிறவியில் தான் தேவையில்லா வல்வினைகளைச் சேர்த்துக் கொண்டு விட்டோமே” என்ற உணர்வானது மரண அறிகுறிகளின் ஆரம்பத்தில்தான் புரியவரும். அப்போது அதனை உணர்ந்து என்ன பிரயோஜனம் ? பரிகாரத்தை நிறைவேற்ற வேண்டிய மனிதக் கூடு அப்போது மறைந்து விடுமே!

எத்ற்காக மனிதப் பிறவி எடுத்தோம்? இறைவன் நமக்கு இந்த அரிய மானிடப் பிறவியை நற்பரிசாக அளித்திருக்கின்றானே! இதை வைத்துக் கொண்டு நாம் என்ன செய்தோம் என்று ஒவ்வொருவரும் அன்றைய நாளின் முடிவில் தம்மைப் பற்றித் தாமே ஆத்ம்விசாரம் செய்து கொள்ள வேண்டும். இரவு உறக்கத்திற்கு முன்னால் இவ்வகையில் நம்மை நாமே சுய ஆன்ம சோதனை செய்து, இன்றைக்கு எந்தக் காரியங்களை எல்லாம் செய்தோம், அவற்றில் நல்லவை எவை, வல்வினைகளைச் சேர்த்துத் தருகின்ற பொய், லஞ்சம், புரட்டு, குரோதம் விரோதம் பகைமை, முறையற்ற காமச் செயல்கள் எத்தனை என்று உணர்ந்து கொண்டால் தானே நல்ல மனத்தெளிவு ஏற்பட்டு மனம் திருந்தி ஒழுக்கமான பக்தி நிறைந்த வாழ்க்கையை நாம் பெற முடியும்!

ஏதோ உழைத்தோம், உண்டோம், அலைந்தோம், திரிந்தோம், வந்து படுத்தோம், உறங்கினோம்.. என்று எத்தனை வருடங்கள்தாம் இயந்திர கதியில், பொய்மையில் பொன்னான காலத்தைக் இழந்துவிட்டோம். இந்த உலகில் அனைத்து நாடுகளிலுமே பல மனிதர்கள் mechanical life என்பதான பெரும் பணம் சம்பாதிக்கும் இயந்திர கதியான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் என்ன? தக்க சற்குருவைப் பலரும் பெறாததேயாகும். சற்குரு இல்லாமையால் தான் அரிய மானிடப் பிறவியின் தெய்வீகத் தன்மைகளை எவரும் புரிந்து கொள்ளவில்லை. உலக அனுபவங்களை மட்டும் வைத்துக் கொண்டு பணம், சம்பாதிப்பது மட்டும்தான் முக்கிய இலட்சியம் என்று கொண்டு வாழ்க்கையை ஓட்டுவதினால் தான் பெறுதற்கரிய இந்த மனிதப் பிறவியின் தெய்வீக குணப்பாடுகளை எவராலும் புரிந்து கொள்ள முடியவில்லை!

வருடத்திற்கு ஒருவருக்கா முக்தி?

கோடானு கோடி மக்கள் நிறைந்து இருக்கின்ற இந்த உலகத்திலே சித்தர்கள் சுட்டிக் காட்டுகின்றபடி ஒரு வருடத்தில் மொத்தம் 12 பேர்கள் தான் உத்தம முக்தி அடைவதற்குரிய யோக்கியதாம்சங்களைப் பெறுகிறார்கள். இவற்றில் எட்டு பேர் இந்தியர்கள், இந்த 12 பேர்களும் முக்தி நிலைக்குத் தயாராக ஆனாலும் மேலுலகத்தில் உள்ள பல கோடானு கோடி லோகங்களை அவர்கள் கடக்கின்ற போது அங்கேயும் இறைவன் அகங்கார ஆணவ மாயைச் சோதனைகளை ஏற்படுத்துவதால் அங்கும் “நாம் இத்தகைய முக்தி நிலைகளை அடைவதற்கான தகுதியை பெற்றுவிட்டோம்” என்ற அகங்காரமோ ஆணவமோ ஏற்படுவதால் இந்த பன்னிரண்டிலே ஏழு பேர்கள் உத்தம நிலையை அடைய முடியாமல் திரும்ப மீண்டும் பூலோகத்தில் பிறவிகளை எடுக்க வேண்டியதாகி விடுகிறது..

ஐவரில் மூவர்தாம் பிரம்மலோகம் வரை செல்ல முடிகிறது, சக்தி லோகங்களில் வைக்கப்படுகின்ற ஆன்ம சோதனைகளில் இருவர் தோல்வியுற்று, தாம் பூலோகத்தில் பெற்ற சித்திகளில் அகங்கார, ஆணவ கர்வ மிகுதியோடு மனிதப் பிறவியைப் பெற்றுத் திரும்பி விடுகிறார்கள், எஞ்சுவது ஒருவர் மட்டும்தான். அந்த ஒருவரும் முக்தி நிலை அடைகின்றாரா? இந்த தெய்வீக இரகசியத்தைத் தக்க சற்குருவிடம் கேட்டுப் பெற்றிடுங்கள்.!

கழிக்க வேண்டிய கர்மவினை மலை !

ஏன் இதனை இங்கு சுட்டிக் காட்டுகின்றோம் என்றால் நாம் தற்போது கடைபிடிக்கின்ற பூஜைகளோ, விரதங்களோ, கோயில் தரிசனங்களோ நிச்சயமாகப் போதவே போதாது. நாம் இந்த மனிதப் பிறவியிலே நம் முதுகிலே சுமந்திருக்கின்ற ஏராளமான வல்வினைகளைக் கழிப்பதற்கே நிறைய புண்ணிய சக்தி தேவைப்படுகின்றது.. இதன் பிறகு நாம் பிராரப்த கர்மா என்று சொல்லப்படுகின்ற இந்தப் பிறவியிலே கழிக்க வேண்டிய தீவினைகளைப் போக்குவதற்கும் நிறைய புண்ணிய சக்தி தேவைப்படுகின்றது. இதோடு மட்டுமல்லாமல் இப்பிறவியிலே நாம் தினந்தோறும் சேர்த்துக் கொண்டு இருக்கின்ற தீவினைகளுக்கும் பிராயச்சித்தம் தேடியாக வேண்டும் அல்லவா? இதுமட்டுமல்லாது நம்முடைய பழ தீவினைகளிலே இப்பிறவியிலே நாம் அனுபவிக்க வேண்டியது போக எஞ்சியிருக்கின்ற மாமலைகள் போல் இருக்கின்ற பழந்தீவினைகளைக் குறைத்தாக வேண்டுமே! இதை எல்லாம் நீங்கள் ஆத்மவிசாரம் செய்து பார்த்தால்தான் எவ்வளவு மிகமிகக் குறைந்த புண்ணிய சக்தியுடன் ஏதோ இந்த வாழ்க்கையை ஒ(ஓ)ட்டிக் கொண்டு இருக்கின்றோம் என்பது தெரியவரும்.

இதற்காகத்தான், தக்க சற்குருவை நீங்கள் பெறுவீர்களேயானால் அவர் உங்களுடைய பழந்தீவினைகளைக் கழிக்கின்ற வழிமுறைகளை வகுத்துத் தருவதோடு மட்டுமில்லாமல் நடப்பு பிராரப்த கர்மமாக இந்தப் பிறவியில் கழிக்க வேண்டிய கர்மவினைப் பகுப்பு முறைகளையும் வகுத்துத் தருகின்றார் மேலும் எந்தவிதமான தீவினைகளும் சேராதிருப்பதற்கான பலவிதமான வழிபாட்டு முறைகளையும் தந்து கூடவே இருந்து தெய்வத் துணையாக எங்கும் எப்போதும் என்றும் எப்பிறவியிலும் நம்மைத் தொடர்ந்து வருகின்றார்.

இறப்பிறப்பில்லா முக்தி பெற்ற சற்குரு பிறப்பெடுப்பது ஏன்?

சற்குரு என்பவர் யார்? என்றும் எப்போதும் எங்கும் நமக்குத் தக்க துணையாக இருந்து நமக்கு நல்வழி காட்டுபவர். எப்பிறவியிலும் நமக்குத் துணையாக இருப்பவர். பிறவித்தளையை அறுக்கின்ற இறை வழிமுறைகளைக் காட்டுபவர்! சற்குரு ஒருவருக்கு அமைந்திருக்கிறார் என்றால் பின் எவ்வாறு பிறவிகள் தொடரும்? பிறகு எப்பிறப்பிலும் எவ்வாறு அவர் நம்மைத் துணையாகக் காக்க முடியும்? முக்திநிலை என்றால் பிறவி இல்லாது இறைமையுடன் ஐக்கியம் ஆவது என்பது முக்தி நிலைக்கான ஒருவித விளக்கமாகும். இறைவனுடன் ஐக்கியம் ஆகுதல்தான் மோட்சநிலை என்றால் சற்குரு ஏன் ஒரு மனிதப் பிறவியை எடுத்து நம்மைப் போல் பலவித துன்பங்களுக்கு எல்லாம் ஆளாகி நமக்கு வழிகாட்ட வேண்டும்?

இங்குதான் மோட்ச, முக்தி நிலைகளுக்கான அடுத்த உத்தம நிலையான விளக்கத்தை நாம் பெறுகிறோம். அதாவது முக்தி அடைதல் என்றால் “தான் மட்டும்” மோட்சம் அடைவது முக்தி ஆகாது.. தான் பெற்ற முக்தி நிலையைப் பிறருக்கும் எடுத்துரைத்து பலரும் அம்முக்தி நிலையைப் பெறுவதற்கான அறவழி முறைகளையும் எடுத்துரைப்பதுதான் சற்குருவின் அருட்பரிபாலனமாகும். எனவேதான் சற்குருவானவர் தம்முடைய அரும்பெரும் சிஷ்யர்களுடன் பலகோடிப் பிறவிகளை இறையாணையாக எடுத்துயெடுத்து அனைத்து ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக யுகம் யுகமாக அரும்பாடுபடுகின்றார்.!

எனவே, நம் பிறவிகள் எல்லாம் நம்முடைய கர்மங்களின் விளைவுகளே ஆகும், ஆனால் சற்குருவோ இறைவனுடைய அருட்பிரசாதமாக ஒவ்வொரு பிறவியையும் அவனருளாலே எடுத்து வந்து நம்மை ஆட்கொள்கின்றார். இப்போதாவது புரிகின்றதா சற்குருவின் தெய்வீக குணப்பாடுகள்? இதற்காகத்தான் அன்னதானம், ஆடை தானம், ஸ்வர்ண (பொன்) தானம், வித்யா தானம் என்று பலவிதமான தான தர்மங்களை ஏற்படுத்திப் பிறருடைய நல்வாழ்விற்காக நாம் வாழ வேண்டும் என்பதையே முக்தி நிலைக்கான முதற்பொருள் என்பதை தான தர்ம விளக்கங்களாக நம் பெரியோர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

கலியுகத்தின் பெரும் பாவங்கள்

கலியுகத்தில் மிகப்பெரும் பாவச் சுமைகளாக விளங்குவது முறையற்ற காமச் செயல்களும், பிறரை ஏமாற்றுதலும், லஞ்ச லாவண்ய அதர்மக் காரியங்களும் ஆகும். பிறருடைய மனதை நோகடித்து லஞ்சமாகப் பெறுகின்ற பணத்தால் வருகின்ற துன்பங்கள் சொல்லி மாளாது. லஞ்சப் பணமானது சந்ததியையே பாதிக்கும். தம்முடைய வருமானம் போதாது என்பதற்காக மிகப் பெரும் பாவச் சுமையான லஞ்சத்தைப் பெற்று வசதிகளை நாடினால் அந்த வசதிகளா நிலைத்து நிற்கும்? அதனால் பெறுகின்ற சுகபோகங்களா நம்மை மகிழ்விக்கும்? நமக்கு வருகின்ற ஒவ்வொரு பைசாவும் நல்வழியில் வந்தால்தான் அது ஐஸ்வரிய கடாட்சமாகப் பெருகும். லஞ்ச லாவண்யங்களால் பெறுகின்ற பணமானது அதர்மமாக, ஏமாற்று வழியில் பொருளானது, சுகபோக வசதிகளை அளிப்பது போல் தோன்றினாலும் அதற்கெல்லாம் ஒட்டு மொத்தமாக என்றேனும் தண்டனைகளை இறையாட்சியில் பெற்றுத்தான் தீர வேண்டும்.

எனவே லஞ்சம் என்பது பிறருடைய மனதை நோகடித்துப் பெறுகின்ற அதர்மமான பணமே! அப்பணத்தில் ஏக்கங்களும் துயரப் படிமங்களும் தான் நிறைந்து இருக்கும். அந்தப் பணத்தால் பெறுகின்ற வசதிகள் எவ்வாறு நல்ல சுகத்தைத் தர முடியும்? அப்படியானால் லஞ்ச லாவண்யத்தில் திளைப்பவர்கள் பிறர் சொத்தை ஏமாற்றிப் பறித்தவர்கள் நன்கு வசதியாக வாழ்வதுடன் ஏன் தண்டனைக்கு உள்ளாகாமல் தப்பிக்கின்றார்கள்? 

எவ்வளவுதான் தீயவராக இருந்தாலும் சிறு தானதர்மம் கூட அளப்பரிய புண்ணிய சக்தியைத் தந்துவிடும். எத்தகைய திருட்டுத் தொழிலில் ஈடுபட்டிருந்தாலும் ஒரு திருடன் கூட, கோயில் தரிசனங்கள், தீர்த்த நீராடல்கள், பிரார்த்தனைகள், சிறுஅளவிலான தான தர்மங்களையேனும் கைக்கொள்கின்றான் அல்லவா? இதில் சேருகின்ற ஒரு சிறிது புண்ணிய சக்தியே அவனைப் பல துன்பங்களில் இருந்து காப்பாற்றி விடுகிறது. அப்படியானால் புண்ணிய சக்தி தீயவர்களைக் காத்து தீவினையைப் பெருக்குமா? நிச்சயமாக இல்லை.

எவ்வாறு நம்முடைய ஒவ்வொரு அங்க அசைவிற்கும் கண் துடிப்பிற்கும் ஆயிரமாயிரம் பிரம்மலோக இரகசியங்கள் உள்ளனவோ அதேபோல ஒருவன் திருடனாக மாறுவதற்கும் திருட்டுச் செயல்கள் புரிவதற்கும் ஆயிரம் ஆயிரம் பிறவிக் காரணங்கள் உண்டு. இதற்காக அவனுடைய திருட்டுத் தொழிலை நியாயப்படுத்த முடியாது. திருடனாக, தீயவனாக ஒவ்வொரு நிமிடமும் அவன் வாழ்வதால் அவனுடைய புண்ணிய சக்திகளும் வெகுவிரைவில் கரைந்துவிடுகின்றன. அவன் தீ வினைகளையே, பெரும் பெரும் பாவங்களாகவே மேலும் பெருக்கிக் கொள்கின்றான்.

வேண்டாம் அன்பளிப்பு!
எதற்கு இத்தகைய விளக்கங்கள் என்றால் லஞ்சம் என்பது கிட்டத்தட்ட பிறருடைய பொருளை அபகரிப்பது, திருடுதல், சொத்துக்களை ஏமாற்றிப் பறித்தல் போலானதாகும். இறைவன் தனக்கு என்று அளித்துள்ள பணியில் உள்ள கடமைகளை நிறைவேற்றுவதற்கு சம்பளம் என்ற ஒரு தார்மீக வருவாயைத் தருகின்றபோது தன்னுடைய கடமையை நிறைவேற்றுவதற்கே லஞ்சமாகக் கூடுதல் பணத்தை பெறுதல் என்றால் அது திருடுவதற்குச் சமமானது தானே! லஞ்சம் பெறுதல் என்பது திருட்டுத் தொழிலில் கிட்டுகின்ற பாவ வினைகளையே கூட்டித் தருவதாகும். இதனால் வருகின்ற வசதிகளோ பொருட்களோ நிலையானதல்ல! குடும்பத்தையும் சந்தியினரையும் பாதிக்கும். இது தரும் சுகங்கள் முறையான வகையில் பெறப்பட்ட சுகபோகங்கள் அல்ல! அதர்மமான முறையில் பிறருடைய வயிற்றில் அடித்துப் பெறுகின்ற லஞ்சத்தினால் வருகின்ற பொருட்கள் சொத்துகள் யாவுமே துன்ப வினைகளைத் தாங்கி வருபவைதாம்.. இவற்றைப் போக்கவே முடியாது.. பிராயசித்தமும் கிடையாது!

இதேபோன்று யார் அன்பளிப்புகளைக் கொடுத்தாலும் உடனே வாங்கி விடாதீர்கள். உதாரணமாக வங்கியில் பணிபுரிகின்றீர்கள் என்றால் பொங்கல், தீபாவளி என்ற பண்டிகைகளின் போது வாடிக்கையாளர்கள் ஸ்வீட் பாக்கெட்டுகளையும், காலண்டர்களையும், டைரிகளையும் அளிப்பதுண்டு. இதை கஸ்டமர்ஸ் மகிழ்ச்சியுடன் தானே அளிக்கின்றார்கள் என்று ஒருபோதும் எண்ணாதீர்கள். ஏனென்றால் தினந்தோறும் இவர்கள் முகத்தில் முழிக்க வேண்டியிருக்கிறதே என்று எண்ணித்தான் உங்களுக்கு அன்பளிப்புகள் அளிக்கப்படுகின்றன. வியாபாரம் பெருகுவதற்காகவும் பலரும் எத்தனையோ அன்பளிப்புகளை அளிப்பதுண்டு. எவராயினும் சரி எக்காரணம் கொண்டும் பிறரிடம் இருந்து அன்பளிப்புகளைப் பெறுதல் கூடாது. அப்படிப் பெறவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உடனேயே அந்த அன்பளிப்புகளை யாருக்கேனும் தானமாக அளித்துவிடுங்கள். வீட்டிற்கு எடுத்து வருவதைக் கூடத் தவிர்த்து விடுங்கள். இதெல்லாம் தீவினைக் கர்மங்களின் சூழல்களில் சிக்காமல் வாழ வேண்டிய வாழ்க்கை நடைமுறைகளாகும்.

உங்களுக்கென்று தனிப்பேனா, பென்சில் வைத்துக் கொள்ளுங்கள். அலுவலகச் சொத்தான பேனா, பென்சில் என ஒரு குண்டூசியைக் கூட உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள். ஏனென்றால் சிறுசிறு குண்டூசிகளாகச் சேருகின்ற தீவினைகள் தாம் மாமலையாக மாறி உங்களுக்குப் பெரும் தீவினைக் கூட்டாகப் பெருக்கி விடும். இருபத்தைந்து முப்பது வருடங்களாக இவ்வாறு அலுவலகத்தில் சேருகின்ற சிறுசிறு தீவினைக் கர்மங்கள்தாம் எத்தனை எத்தனை! இனியேனும் விழித்துக் கொண்டு உங்களுடைய அலுவலக மற்றும் வாழ்க்கை முறைகளில் எத்தகைய தீவினைகளுக்கும் இடம் கொடுக்காதீர்கள். இவ்வாறு வாழ்வதுதான் நல்லவராக வாழ்கின்ற வாழ்க்கையாகும்.

TELE SINS GALORE!
“நான் நல்லவன், பிறருக்கு எவ்விதத் தீங்கும் செய்ய மாட்டேன்”, என்று சொல்லிக்கொண்டு அலுவலகப் பொருட்களை எல்லாம் இஷ்டத்துக்கு தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு பயன்படுத்திக்கொண்டு இருந்தால் நல்லவராக வாழ்கிறார் என்று எப்படி ஒரு முடிவுக்கு வரமுடியும்? அலுவலக டெலிபோனை பயன்படுத்துவது கூட அதர்மமானதுதானே! இப்படியாக உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அலுவலகத் தொலைபேசியை பயன்படுத்திக் கொண்டு குறைந்தது இருபதாயிரம் டெலிபோன் கால்களுக்கு மேல் வாழ்வில் பயன்படுத்துகின்றீர்கள் அல்லவா! இதனுடைய பணக்கணக்கைப் போட்டுப் பாருங்கள். கிட்டத்தட்ட 50,000 ரூபாய்க்கு மேல் நீங்கள் அலுவலக போனை உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு இலவசமாகப் பயன்படுத்திக் கொண்டு இருக்கிறீர்கள் என்றால் இதுவும் லஞ்சமாகத்தானே ஆகிறது? இதற்கு ஆன்மீக முறையில் வட்டியும் முதலுமாக கணக்கிட்டுப் பாருங்கள்.

எனவே அலுவலகத்தில் இருந்து நீங்கள் ஓய்வு பெறும்போது எவ்விதக் கெட்ட பெயரும் இல்லாமல் (Blemishless Service) நல்ல முறையில் ஓய்வு பெற்றேன் என்று மகிழும்போது உங்களுடைய மனச்சாட்சியைத் தொட்டுப் பார்த்து ஆத்ம விசாரம் செய்து கொள்ளுங்கள். ரூபாய் 50,000/-க்கும் மேற்பட்ட இலவச டெலிபோன் கால்களைச் செய்து ஓய்வு பெறுவீர்களேயானால் இந்த அதர்ம நெறிக்கு என்னதான் பிராயசித்தம்? எப்படித்தான் பரிகாரத்தைத் தேடுவீர்கள்? இப்போதைய நடைமுறை அலுவலக வாழ்க்கை முறையில் இதையெல்லாம் தவிர்க்க முடியாதே, இதற்கான பிராயச்சித்த முறைகள்தான் என்னே என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றுகிறது அல்லவா, இதற்கு எப்படி பரிகாரம் தேடுவது?

அலுவலகப் பணியில் பிராயசித்தம்
உங்களுக்கு தினந்தோறும் 8 மணி நேரம் பணிபுரிய வேண்டும் என்றால், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணிகளோடு பிறருடைய பணிகளியும் தினந்தோறும் சேர்த்து மனப்பூர்வமாகச் செய்து வாருங்கள். ‘என்னுடைய சீட்டை மட்டும்தான் நான் பார்ப்பேன், அடுத்தவருடைய வேலையைத் தொட மாட்டேன்’ என்று அடம்பிடிக்காது நேரம் கிடைக்கும் போதெல்லாம் அனைத்துத் துறைகளில் இருக்கும் பணிகளைத் தானே முன் வந்து செய்து கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் தீவினைக் கர்மங்களை ஓய்வு பெறும் முன்னரேயே குறைத்துக் கொள்ளுங்கள்.

அதற்காக “அலுவலகத்திற்கு ஓடாக உழைக்கிறேன்“ என்று சொல்லி காலை 6 மணியிலிருந்து இரவு 9 மணிவரை பணி புரிந்தால் என்ன பிரயோஜனம்? பலரும் “Work is worship” என்று சொல்லி அலுவலகப் பணிகளிலேயே மூழ்கிவிடுகிறார்கள், ஆனால் பிரமோஷன் என்று வருகின்ற போது அது கிடைக்காத அடுத்த நிமிடமே ஒதுக்கப்பட்டுவிட்டால் அந்த மனோநிலையே மாறி, “என்ன செய்து என்ன பிரயோஜனம்? ஒரு சிறு பிரமோஷன், அலவன்ஸ் கூடத் தரவில்லையே,” என்று பிளிரி கடனே என்று உடனேயே அலட்சியமாக வேலை செய்யத் தொடங்கிவிடுவார்கள்.

எனவே ஆனந்தமாக அலுவலகத்தில் சீட்டையும் தேய்க்க வேண்டாம், ஓவராக உழைத்து ஓடாகிடவும் வேண்டாம், நீங்கள் பெறுகின்ற சம்பளத்திற்கு நன்முறையில் முழு மனதுடன் அலுவலகத்தில் பணிபுரிந்து வாருங்கள். தினந்தோறும், குறைந்தபட்சம் செவ்வாய், வெள்ளிக் கிழமையாவது அலுவலகத்தில் ஓய்வு நேரங்களில் சிறு பூஜைகள், நாம சங்கீர்த்தனம், ஹோமம் போன்றவற்றிற்கு அலுவலகங்களில் ஏற்பாடு செய்து தெய்வ காரியங்களுக்கு வித்திடுங்கள். வாரந்தோறும் ஜாதி மத பேதமின்றி சிறு அளவிலாவது அன்னதானம் ஏழை மாணவர்களுக்குப் புத்தகம், பேனா, பென்சில் போன்றவற்றை அளித்தல், வஸ்திர தானம் போன்ற நற்காரியங்களை நடத்தி அலுவலக வாழ்க்கையில் பலரையும் இதில் பங்கு பெறச் செய்திடுங்கள். இவ்வகையில் நீங்கள் செய்து வருவீர்களேயானால் முப்பது, நாற்பது வருடங்களுக்குப் பிறகு நீங்கள் ஓய்வு பெறும்போது சிறுகச் சிறுக செய்த தான தர்மங்கள் நன்கு பெருகி அலுவலக கர்ம பாக்கிகளை விட பூஜாபலன்கள் பெருகி தர்மச் சக்கரமாய் நின்று உங்களைக் காத்திடும். எனவே அலுவலக வாழ்க்கையை நல்லபடியான சத்சங்க வாழ்க்கையாக மாற்றி இறைக் காரியங்களை நிறைவேற்றுவது உங்களுடைய கைகளில்தான் இருக்கிறது.

வியாபாரிகளின் கர்ம வினைகள் தீர!
வியாபாரத்தில் உள்ளவர்கள் என் செய்வது? லாபம் என்பதுதான் உங்களுடைய வருமானம் என்று ஆகின்றபடியால் நியாயமான முறைகளிலே லாபத்தை வைத்துக்கொண்டு உங்களுடைய பொருட்களைச் சுத்தமாக அளித்திடுங்கள். மளிகை வியாபாரம் என்றால் தூசு, தும்பை இல்லாமல் நல்ல முறையில் பொருட்கள் இருந்தாக வேண்டும். உங்களுடைய அலுவலகங்களிலும், தொழிற்சாலைகளிலும், பேக்டரிகளிலும் வாரந்தோறும் தொழிலாளர்களையும் அலுவலகர்களையும் வைத்துக் கொண்டு கூட்டு நாமசங்கீர்த்தனம், ஹோம பூஜைகளை அடிக்கடி நடத்தி வியாபார சூழ்நிலையில் தெய்வீகத்தை நிரவிடுங்கள். தொழிலாளர்களையும், அலுவலகர்களையும் கொண்டு அவர்கள் கரங்களாலேயே நிறைய தான தர்மம் செய்து வாருங்கள், அப்படிச் செய்வீர்களேயானால் உங்கள் வியாபாரப் பொருட்களில் இறைநிதிச் சாரம் கூடி பொருட்கள் எங்கெங்கெல்லாம் செல்கின்றனவோ அவ்விடங்களிலெல்லாம் இறைநற் கதிர்களைப் பெருக்கிடும். (Multiplication of positive energy)

கட்டிடத் தொழிலின் கர்மந் தீர

கட்டிடத் தொழில் என்றால் நீங்கள் பயன்படுத்துகின்ற மண், செங்கல், ஜல்லி, சிமெண்ட் அனைத்திலுமே இறைநெறி புகுந்து இருக்க வேண்டும். எனவே ஆயிரக்கணக்கான செங்கல்களை, கற்களை அடுக்கிவைத்து அவற்றின் முன் நிறைய ஹோம குண்டங்களை அமைத்து ஒரு மணி நேரமேனும் ஹோம பூஜைகளை செய்தால் அதில் இருந்து எழுகின்ற ஹோமப் புகையானது, செங்கல், ஜல்லி, அனைத்திலும் படிந்து நல்ல இறைநெறிச் சாரத்தை உருவாக்கும். மேலும் ஹோம குண்டங்களுக்குப் பயன்படுத்தியுள்ள செங்கல்களையே உங்கள் கட்டிடங்களுக்குப் பயன்படுத்துவீர்களேயானால் அங்கு ஏற்படுகின்ற வாஸ்து சக்தி நிலைத்து நின்று எத்தனையோ குடும்பங்களுக்கு நற்கதிர்களைப் பெருக்கிச் சாந்தமயமான வாழ்வினையும் நல்குமன்றோ.

உங்களுடைய தொழில் பணி எதுவென்று அறிவிப்பீர்களேயானால் தொழிலில் நீங்கள் எப்படி இறை காரியங்களில் ஈடுபட முடியும் என்பதை குருவருளால் எடுத்துச் சொல்லித் தரக் காத்திருக்கின்றோம். இதுவும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழின் அற்புதமான இறைப் பணிகளில் ஒன்றாகும். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் எத்தனையோ துறைகளில் இருப்போர்க்கு அதனதற்கான ஆன்மீக வழிமுறைகளை வழிகாட்டியாய் எடுத்துத் தருகின்றார்கள். இதனைக் கடைபிடித்து வழி நடந்து வருவோர் ஏராளம்! ஏராளம்! எனவே உங்களுடைய ஒவ்வொரு நேரத்திலும் இறைப்பாங்கு மிளிர்வதற்கான இறை வழிமுறைகளைத் தக்க சற்குருவிடம் நீங்கள்தான் கேட்டு வாழ்க்கையின் தெய்வீகப் பாங்கை கைக்கொள்ள வேண்டும். இவற்றை உங்களுக்கு ஊட்டி உணர்த்துபவரே சற்குரு ஆவார்.

திதி தேவதை வழிபாடு

1. நாள், கிழமை, தேதி, நட்சத்திரம், யோகம், கரணம் எனவுள்ள காலப் பாகுபாடுகள் எல்லாம் நம்முடைய வாழ்க்கையின் பல அம்சங்களை ஒட்டியவையாகும். ஒவ்வொன்றும் நம் உடல் உறுப்புகளோடு தொடர்பு கொண்டவைதாம்.

2. கோபம், சாந்தம், சிரிப்பு, துக்கம் என பலவிதமான வாழ்க்கை அம்சங்கள் நம் தினசரி வாழ்வில் நிறைந்து இருப்பதால் ஒவ்வொன்றிற்கும், நட்சத்திரம், திதி எனும் காலப் பாகுபாட்டிற்கும் நிறைய ஆன்மீகத் தொடர்புகள் உண்டு. இவ்வகையில் தான் சுபநாட்கள் அமைகின்றன.

3. ஒரு மனிதன் தன் வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக விஷயங்கள் கோடானு கோடியாகும். நம்மால், தெரிந்து கொள்ள முடியாததை நமக்கு உணர்விப்பவரே சற்குரு, தன்னுடைய குடும்ப வாழ்க்கைதனைத் தெய்வீகத்திற்கு அப்பாற்பட்டதாகக் கருதாமல் இந்த மனித உடலைத் தெப்பமாகக் கொண்டு சம்சாரக் கடலைத் தாண்டி இறைவனுடைய திருவடிகளை அடைதல்தான் ஒவ்வொரு மனிதனுடைய இலட்சியமாகும். இதற்காக திதி தேவதா வழிபாடு நம் வாழ்வின் ஆயுளோடு தொடர்புடையதாகும்.

எந்த நாட்டில் எந்த மதத்தில் இருந்தாலும் ஆணோ, பெண்ணோ, மீனோ, பசுவோ, எருமையோ, மனிதனோ, தவளையோ எந்த ஜீவனுக்கும் உள்ள ஒரே குறிக்கோள் இறைவனை அடைதல் என்பதே! இத்தகைய சநாதன தர்மம் இந்தப் பிரபஞ்சத்திற்கே உரித்தானதாகும். எனவேதான் இந்த உலகத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் ஒருமித்த தார்மீகக் கொள்கையாக சனாதன தர்மத்தை நம் பெரியோர்கள் விதித்துத் தந்துள்ளனர். திதி தேவதைகள் வழிபாடு என்று புதிதாக ஒன்றைக் குறிப்பிடுவது ஏன்? உண்மையில் இது புதிதல்ல, பெரியோர்களால் கடைபிடிக்கப்பட்டு நம்மால் மறந்து விட்டதொன்றாகும். முருகன், பிள்ளையார், சரஸ்வதி, ஐயப்பன், விஷ்ணு, சிவபெருமான் என்று பல தெய்வ வழிபாடிருக்கையில் புதிதாக திதி தேவதா வழிபாடு எனும்போது மனம் குழப்பமடையாதா? ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பது வாக்காக இருக்கும்போது ஏன் பல தெய்வ மூர்த்திகள்?

ஒன்றே இறைவன் என்ற இறை ஒருமைப்பாடானது மனிதனுடைய மனதால் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகும். ஏதோ இறைவன் என்றால் காலையிலும் மாலையிலும் வழிபட வேண்டிய பொருள் மட்டும் என்றே இறைவனை மனிதன் ஒதுக்கிவைத்து விட்டமையால்தான் தன் வாழ்க்கையை நடத்துவதற்கே காலத்தை விரயம் செய்து விடுகின்றான். காலத்தை உணராது இயந்திரமயமாக வாழ்கின்றான். எனவே விதவிதமான துன்பங்கள் அவனுடைய கர்ம வினைகளாக அவனைச் சூழ்கின்றபோது துன்பங்களின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் எந்த வழிபாட்டை மேற்கொண்டால், எந்தக் கடவுளை வணங்கினால் துயரங்கள் தீரும் என்று அவனது மனம் கணக்குப் போடுகிறது. இதற்காக இறைவனே தன்னைப் பல வடிவங்களில் ஆக்கிக் கொண்டு ஒவ்வொரு மனிதனையும் கடைத்தேற்றுவதற்காகப் பல ரூபங்களை அள்ளித் தந்திருக்கின்றான். துன்பங்களைத் துடைப்பவன் இறைவன் என்றுதான் இறைமையின் ஆரம்பப் பாடம் தொடங்கும். ஆனால் அதன் பிறகு எத்தகைய இன்ப துன்பங்களுக்கும் தம்முடைய கர்ம வினைகளே காரணம் என்று ஒரு மனிதன் புரிந்து கொள்ளும்போதுதான் இறைவழிபாடு என்பது இறைப் பரிசாக வந்துள்ள இந்த மனித உடலைக் கொண்டு பிறருடைய நல்வாழ்விற்காக பாடுபடவே என்று அடுத்த ஆரம்பப் பாடத்திற்கு அவன் தயாராகின்றான், இதற்குள் அவன் மனித வாழ்வின் பாதி ஆயுளை முடித்து விடுகிறான்.  ஆனால் தக்க ஒரு சற்குருவைப் பெறுவானேயானால் எந்த மனிதனுக்கும் இளவயதிலேயே இத்தகைய ஆரம்பப் பாடங்கள் மிக எளிதிலேயே புகட்டப்படுவதால் அவன் ஆயுள் காலத்திற்குள் எத்தனையோ உத்தம நிலைகளை எளிதில் அடைந்திடலாம். இதற்கெல்லாம் உதவுவதே காலத்தின் மகிமையை உணர்த்துவதே திதிதேவதா வழிபாடாகும்.

இன்றைய சமுதாயத்தில் உலகமெங்கும் துன்பங்கள் தொடர்ந்து கொண்டிருப்பது ஏன்? இவற்றிலிருந்து மீள என்ன வழி? திதி தேவதா வழிபாட்டிற்கும் மனித வாழ்விற்கும் என்ன சம்பந்தம்? ஏன் சம்பந்தம் இல்லை? விஞ்ஞான சம்பந்தமாக திதியைப் பற்றி விளக்கும்போது சூரிய, சந்திர கிரகங்களுக்கு இடையே உள்ள தூரத்தையே நாம் திதி என அலகிட்டு அளவிடுகின்றோம். ஆனால், சூரிய, சந்திர கிரகங்களின்றி நம்முடைய மனித வாழ்வு கிடையாது என்பதை நாம் நன்குகறிவோம். சூரியனே இல்லாத ஒரு நாளைப் பற்றி நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்! நம்மால் அவ்வாறு இருக்க முடியுமா? சூரியனே தெரியாத ஓரிரு இடங்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றன. அங்கு ஜீவித சக்தி மிகவும் குறைவு,

மனித வாழ்வு என்பது சூரிய, சந்திர ஒளியை ஒட்டி அமைந்து இருப்பதேயாகும். தலை முதல் கால் வரை சூரிய ஒளி நம் உடலை ஊடுருவிச் சென்று எத்தனையோ மாற்றங்களைத் தினந்தோறும் நம் உடலின் திசுக்களில் ஏற்படுத்துகின்றது. ஆனால் இவற்றையெல்லாம் நாம் உணர்கின்றோமா? வீட்டிற்குள்ளோ அலுவலகத்திற்குள்ளோ பகல் நேரத்தில் இருந்தால் கூட சுவரையும் கட்டிடங்களையும் ஊடுருவியே சூரிய ஒளியானது நம்முள் பல மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றது என்பது உண்மைதானே! அறையே வெளிச்சமாக இருக்கிறதே என்றால் என்ன பொருள்? சூரியனின் வெளிச்சம் யாங்கனும் பரவியிருக்கிறது என்பது தானே! அப்படியானால் சூரிய வெளிச்சம் அந்த அறையை ஆக்ரமிப்பது போல நம் உடலையும் ஊடுருவித்தானே செல்கிறது!

எனவே விஞ்ஞானப் பூர்வமாகவும் கூட திதி என்பது சூரிய சந்திர கிரகங்களுக்கிடையே உள்ள தூரத்தைக் குறிப்பிடுவதால் சூரிய ஒளி சந்திர ஒளி மாற்றங்கள்தான் திதி தத்துவமாக, திதி தேவதா வழிபாடாக நம்முடைய வாழ்க்கைக்குப் பல ஜீவித சக்திகளைத் தினமும் தந்து பெரிதும் உதவுகின்றது. பஞ்சாங்கத்தைப் பார்த்தீர்களேயானால் பிரதமை முதல் அமாவாசை பௌர்ணமி வரை 15 திதிகளுக்கான ஆரம்ப முடிவு நேரங்கள் அளிக்கப்பட்டிருக்கும். மிகவும் கடினமான இந்த ஜோதிடக் கணக்கு முறைகளை நாம் இன்றும் பழமை வாய்ந்த இந்திய முறைப்படி கண்டுதான் வருகின்றோம். ஆனால் அவற்றின் மகிமையை உணராது ஏதோ பஞ்சாங்கம் என்ற ஒன்று இருக்கின்றது. அதைப் பற்றி அறிந்த ஒருசிலர் எதையோ கூறுகின்றார்கள், என்றுதானே திதி, நட்சத்திர, கிழமை, தேதி, யோக, கரண விளக்கங்களை நம் வாழ்க்கையில் ஒதுக்கிவிட்டு வந்துள்ளோம். திருமணம், சீமந்தம், ஷஷ்டியப்த பூர்த்தி என்ற முக்கிய விசேஷமான நாட்கள் வரும்போது மட்டும் பஞ்சாங்கத்தைப் பார்த்து பலருடைய உதவியுடன் சுபமுகூர்த்த நேரங்களைக் குறித்துவிட்டுப் பிறகு அதனையே மறந்து விடுகின்றோம். எந்த எந்தக் காரியங்களை எந்த நேரத்தில் செய்ய வேண்டும் என்பதை மனித அறிவிற்கு எட்டும் லௌகீக முறையில் கொடுப்பதே திதி, நட்சத்திரம், கரணம் போன்ற காலத்தின் பாகுபாடுகளாகும்.

நல்ல நேரம் அரிதே!
நற்காரியங்களைச் செய்வதற்குக் கூட நல்ல நேரம் பார்த்திடுதல் வேண்டும். அப்படியானால் எந்த நேரமும் நற்காரியங்களைச் செய்துகொண்டிருக்க முடியாதா? இது என்ன தர்மத்திற்கு முரண்பாடாக இருக்கின்றதே என்று கேட்கத் தோன்றும். திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிராக வாழ்வில் ஒருமுறை வருவதுதானே? அதற்குரித்தான தாலிகட்டும் சுபநிகழ்ச்சியை எந்நாளிலும் 24 மணி நேரத்திலும் வைத்திடுதல் முடியுமா?

எனவே இறைவனை வழிபடுவதற்கு எந்தக் காலப் பகுப்பும் தேவையில்லை. ஆனால் இறையருளால் நற்காரியங்களை நடத்துவதற்குத் தக்க நேரத்தைத் தேர்ந்துதெடுத்தல் வேண்டும். அதுவரையிலும் அந்த நல்ல நேரம் கிட்டும் வரையிலும் நற்காரியங்களை நடத்தித் தருவதற்கான நல்வரங்களைப் பெறுவதற்கான பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும், ஹோம பூஜைகளையும் நாம் மேற்கொண்டாக வேண்டும். அக்காலத்தில் திருமணம் என்றால் குறைந்தது 7 தினங்களுக்காவது நடக்கும். சமீப காலங்கள் வரை 3 நாட்கள் வரை திருமணம் நிகழ்ந்ததுண்டு. இன்றும் பல இடங்களில் நடப்பதுமுண்டு. ஏனிப்படி? மாங்கல்ய தாரணம் என்பது 2, 3 நிமிடங்களுக்கு மட்டுமே அமைகின்ற மிகவும் மங்களகரமான சுபநிகழ்ச்சியாகும். ஆனால் இந்த நான்கு நிமிட சுபகாரியத்துக்காக, எத்தனை தடங்கல்களை ஒரு குடும்பம் எதிர்நோக்க வேண்டியுள்ளது? இத்தகைய இன்னல்களில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காகவும்தான் இந்த 3 நாட்களிலும் பலவிதமான ஹோம வழிபாடுகள், அக்னி பூஜைகள், மந்திர வழிபாடுகள், வடமொழி தமிழ் மறை ஓதுதல் போன்ற எத்தனையோ இறை வழிபாட்டு முறைகளை மூன்று நாள், ஏழு நாள் திருமணச் சடங்குகளாக பெரியோர்கள் நமக்கு அளித்துள்ளனர். எனவே ஒரு மாங்கல்ய தாரண சுபமுகூர்த்த நேரம் என்றால் அதில் நாள் தேவதை, கிழமை தேவதை, திதி தேவதை, யோக தேவதை, கரண தேவதை, ஜீவ தேவதை என்று பலவிதமான கால தேவதைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து அந்த சுபமங்கள காரியத்தை நடத்தித் தருகின்றன. இந்த தேவதைகள் அனைத்துமே அந்த மாங்கல்ய தாரண நேரத்தின் போது பிரசன்னமாகி நம்மை ஆசிர்வாதம் செய்வதற்காகத்தான் நாம் பலவிதமான ஹோம, தீர்த்த, பூஜா வழிபாடுகளை திருமணங்களில் க்டைபிடிக்கின்றோம்.

பௌர்ணமி திதி தேவதா வழிபாடு 

இவற்றுள் முதலில் நாம் பௌர்ணமி திதி தேவதா வழிபாட்டைக் காண்போம். இன்றைக்கும் திருஅண்ணாமலையை இலட்சக் கணக்கான மக்கள் மாதந்தோறும் பௌர்ணமி திதி அன்று ஏன் கிரிவலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்? இதற்கு முதற் காரணம் பௌர்ணமி திதியின் ஜோதி பூரண மகத்துவம் ஆகும். பௌர்ணமி திதி என்பது வாழ்க்கையில் பெறுதற்கரிய மிகவும் முக்கியமான திதி நேரமாகும். சூரியனுடைய அனைத்து விதமான யோக பூர்வ சக்திகளையும் பாஸ்கர அக்னி சக்திகளையும் நம்மால் பெற முடியவில்லை. மிகவும் உஷ்ணமான பாஸ்கர வீரியக் கதிர்களை சூரிய பகவான் பாய்ச்சிடுவதால் அவற்றைப் “பிரபஞ்ச வாழ்விற்கான”  தேவையான முறையின்படி தொகுத்துத் தருவதுதான் சந்திர கிரகத்தின் மிகவும் முக்கியமான இறைப் பெரும் பணியாகும். எனவே பூலோக வாழ்விற்கேற்ற பாஸ்கர சக்திகளும் சந்திர பகவானுடைய அமிர்த சக்திகளும் நிறைந்திருக்குக்கின்ற  திதியாக விளங்குவதுதான் பௌர்ணமி திதியாகும்.

நாம் உலகில் ஜீவிப்பதற்கு மிகவும் முக்கியமானது அக்னியாகிய நெருப்பு தானே! தீ இல்லை என்றால் நமக்கு உணவு எப்படி உண்டாகும்? மேலும் ஐஸ் போன்ற குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் நாம் எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்க முடியுமா ? நம் உடலுக்கு என்று குறிப்பிட்ட வெப்பம் தேவை என்றுதானே விஞ்ஞானமும் பகர்கின்றது. இவ்வாறாக  நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விநாடியிலும் அக்னியானது நம் உடலுடன் பெரும் தொடர்பு கொண்டிருக்கின்றது. இந்த அக்னி ஜீவ சக்தியைத் தருபவர்தான் பாஸ்கரப் பெருமானாகிய ஸ்ரீசூரியபகவான் ஆவார்.

நம்முடைய வாழ்க்கையின் ஜீவனத்திற்குத் தேவையான அக்னி சக்தியை சூரியனிடமிருந்து பெற்றுத் தருவதற்குத் திதி தேவதா மூர்த்திகள் பெரிதும் உதவுகின்றனர். பிரதமை முதல் அமாவாசை, பௌர்ணமி திதி வரை 16 தேவதா மூர்த்திகளுமே நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அக்னி ஜீவித சக்தியை சூரிய, சந்திர நட்சத்திர கோள மண்டலத்திலிருந்து நமக்குத் தருகிறார்கள் என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

“உடலின் சூட்டுச் சந்தன சுரம்”
உடல் வெப்பச் சமநிலை வழிமுறை

முறையற்ற காம உணர்ச்சிகளும், கெட்ட காரியங்களிலும் மனித மனம் ஈடுபடுவதற்கும் காரணம் எவரும் உடலில் உள்ள உஷ்ண சக்தியை சரியாக முறைப்படுத்தாததே ஆகும். ஒவ்வொரு முறையும் தகாத வழியில் விந்து கழியும்போதும்  முறையற்ற காம எண்ணங்கள், காமச் சுழல்கள் ஏற்படும்போதும் பிறருக்குத் தீங்கு ஏற்படுத்தும் போதும் உடலில் உள்ள அக்னி சக்தியனது பலவித முரண்பாடுகளுக்கு உள்ளாகி தேகத்தைப் பாதிக்கின்றது. இதற்காகத்தான் அக்காலத்தில் இளவயதிலேயே பலவிதமான யோகாசன்ங்களைப் பயிற்றுவித்து உடலின் வெப்பத்தை முறைப்படுத்தும் நல்வழி முறைகளை நம் பெரியோர்கள் நமக்குத் தந்துள்ளனர். ஆனால் இவற்றை நாம் இன்று கடைப்பிடிக்கின்றோமா? இல்லையே! இதனால்தான் தேக ஆரோக்கியம், மன ஆரோக்கியம் கெட்டலைந்து கலியுகத்தில் முறையற்ற தீய ஒழுக்கச் செயல்கள் மிகுந்துவிட்டன. இன்றைக்குப் பெரும்பான்மையோர் முறையான யோக, பிராணாயாம பயிற்சிகளை மேற்கொள்ளாமையினாலும், உடல் அக்னி ஜீவித சக்தியை முறைப்படுத்துவதற்கான பிராணாயாம வழிமுறைகளைப் பலரும் அறியாமலிருப்பதினாலும் மனித குலமே துன்பத்தில் உழல்கின்றது.

எந்த யோகாசன்ங்களையும் பிராணாயாமப் பயிற்சிகளையும் இந்த கலியுகம் மறந்துவிட்டதோ அதற்கு ஓரளவு ஈடு செய்வதற்காகத்தான் அதிஅற்புத திதி தேவதா வழிபாடுகளை சித்புருஷர்கள் அருளியுள்ளார்கள். ஏனென்றால் இவைதாம் பலவிதமான யோக, யந்திர, தந்திர சக்திகளை உடலுக்கு தந்து உடலின் அக்னி ஜீவித சக்தியை சீரமைத்துத் தருகின்றது. ஆலயங்கள் எல்லாம் அக்னியின் சக்தியை சீரமைத்துத் தருகின்ற இறைத் தொழிற் சாலைகளாக விளங்குகின்றன என்பது யாரும் அறியாத தெய்வீக இரகசியமாகும்.

பிரதமை திதி முதல் பௌர்ணமி திதி வரை ஒவ்வொரு திதியிலும் எந்த ஆலயத்தில் எந்த மலைத் தலங்களில் வழிபாடுகள் நடத்த வேண்டும் என்பதையெல்லாம் நம் சித்புருஷர்கள் விதித்துத் தந்துள்ளனர். அந்தந்தத் திதியில் அந்தந்த ஆலயத்தில் வழிபட்டு வருவோமேயானால், அக்னி ஜீவித சக்தியானது நம் உடலில் மேன்மை அடைகின்றது. இதனால் யோக சக்தி பெருகி முறையற்ற காம உணர்ச்சிகளும், தீய ஒழுக்கங்களும், தீய சக்திகளும், துர் எண்ணங்களும் நம் மன்ம், உள்ளம், உடலில் இருந்து அகன்று நல்லொழுக்கத்தையும் நல்ல பக்தியையும் பெற்றுத் தருகின்றன.. உதாரணமாக, பௌர்ணமி திதியில் திருஅண்ணாமலை, மலைக்கோட்டை, திருச்சி குளித்தலை அருகே அய்யர் மலை திருக்கழுக்குன்றம், பழனி போன்ற மலைத்தலங்களில் கிரிவலம் செய்து வருவோர்க்கு பாஸ்கர சந்தி அக்னி சக்திகள் உடலில் சேர்ந்து காரிய சித்திக்கான நல்வரங்களைப் பெற்றுத் தருவதுடன் உடலுடைய ஜீவித சக்தியையும் முறைப்படுத்தித் தருகின்றது.

உங்களுடைய உள்ளமும் உடலும் பலவிதமான முறையற்ற எண்ணங்களால் பாதிக்கப்பட்டு இருந்தால் அதனால் சீரழிந்து கிடக்கின்ற உடலின் ஆரோக்கியத்தை நன்முறைப்படுத்தி, அக்னி சக்தியை மேம்படுத்தித் தருவதும் திருஅண்ணாமலை கிரிவலப் பலன்களில் பௌர்ணமி திதி தேவதா வழிபாடாக அமைகின்ற ஒன்றாகும். உங்களையும் அறியாமல் திதி தேவதா வழிபாட்டில் திருஅண்ணாமலை கிரிவலமும் ஒன்றாக அமைகிறது என்பதை இனியேனும் தெரிந்து கொள்ளுங்கள். இதைப்போன்று ஸ்ரீஅக்னீஸ்வரராக இறைவன் அருள்பாலிக்கின்ற ஸ்தலங்கள் எல்லாம் நமது உடலின் அக்னி சக்தியைச் சீரமைத்துத் தந்து நல்ல மன ஓட்டத்தையும் மன வளத்தையும் பெற்றுத் தருகின்றன. இத்தலங்களில் சூரிய பகவானுக்கு உரித்தான திதிகளில் பூஜை செய்து வந்தால் கண் நோய்கள் நிவர்த்தியாகும். எனவே ஒருமுறை திருஅண்ணாமலை கிரிவலம் வருதல் என்பது Spiritual Servicing of Human System ஆகும். எவ்வாறு ஒரு ஸ்கூட்டரையோ, காரையோ ஜெனரல் சர்வீஸ் செய்து அதனை சுத்தப்படுத்துகின்றோமோ அதேபோல நமது உடலுக்கும் மன சரீரத்திற்கும் ஆன்ம சுத்தியை நல்ல முறையில் சீரமைத்துத் தந்து உடலில் அக்னி ஜீவித சக்திகளையும் நன்முறையில் மேம்படுத்தித் தருவதும் திருஅண்ணாமலை கிரிவலப் பலன்களில் ஒன்றாகும்.

கருங்குளம் விஷ்ணுபதி

கருங்குளம் ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலம்

விக்ரம ஆண்டு ஆவணி மாத விஷ்ணுபதி புண்யகாலத்தைக் கருங்குளம் ஸ்ரீவெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் கொண்டாடுவீர்! அருள்வளம் கூட்டும் கருங்குளத் திருமால்! விக்ரமஆண்டு ஆவணி மாதப்பிறப்பன்று அமையும், ஸ்ரீவிஷ்ணுபதியை திருநெல்வேலியிருந்து திருச்செந்தூர் செல்கின்ற வழியில் செய்துங்கநல்லூர் அருகில் உள்ள கருங்குளம் ஸ்ரீவெங்கடாசலப் பெருமாள் (ஸ்ரீநிவாசப்பெருமாள்) ஆலயத்தில் கொண்டாடுதல் மிகவும் விசேஷமானதாகும். இருதய நோயால் அவதியுறுவோர் இந்த விஷ்ணுபதி புண்யகாலத்தில் கருங்குளம் ஸ்ரீவெங்கடாசலபதி ஆலயத்தில வழிபட்டு அபிஷேக ஆராதனைகளுடனும், தாமிரபரணி ஆற்றங்கரையில் தர்ப்பண பூஜைகளுடனும் கொண்டாடி, தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, தயிர்சாதம், எலுமிச்சை சாதம் ஆகிய ஐந்து வகை அன்னங்களை சுவாமிக்குப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளித்து வருவதால் இருதய நோய்களுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். ஏனென்றால் இவ்வைந்து வகை அன்னம் தரும் பஞ்சபூத சக்திகளால் தான் இருதயம் இயக்கப்படுகின்றது!

ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர்
கருங்குளம்

சந்தனம், ஜவ்வாது, திருநீறு, புஷ்பங்கள் போன்றவை இயற்கையிலேயே மணம் வாய்ந்தவையாக இருக்கக் காரணம் , இவையாவுமே தேவலோகங்களிலிருந்து நல்வித்தாய் நாம் பெற்றதேயாம். பூண்டி ஆற்று சித்த சுவாமிகள் இருக்கும் இடத்தைவிட்டு அகலாது மல ஜலக் கழிப்பைத் தாண்டிய மாமுனியாய், மாபெரும் சித்தராய் சமீபகாலம் வரை அருள்மணம் கூட்டி அருள்பாலித்து அன்றும் இன்றும் என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் பரிமளித்து அருட்ஜோதியாய் பரிணமித்துக் கொண்டிருக்கின்றார் அல்லவா!

இவ்வாறாக சித்புருஷர்களின் நடமாட்டம் நிறைந்த திருத்தலங்களுள் ஒன்றே கருங்குளம் வகுளகிரி மலையாம்! மும்மலம் கடந்த மாமுனிகளும், மஹரிஷிகளும், சித்தர்களும் எப்போதும் நிறைந்திருந்து போற்றுகின்ற அதிஅற்புதத்தலம்! ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் இன்றும் நித்திய பூஜை செய்கின்ற சக்தி வாய்ந்த தலம்! இயற்கை மணம் நிறைந்த திருத்தலம்! முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து பூஜை செய்கின்ற தேவ சக்தித் தலம்! பூலோகத்திற்குச் சந்தன வழிபாட்டைக் கொண்டுவந்த சப்தரிஷிகளும் பூஜித்த திருத்தலமாகிய சப்தகிரிகள் (ஏழுமலைகள்) நிறைந்த திருப்பதியிலிருந்து திருமால் மூர்த்தியே ஜோதியாய் ஆர்பவித்து இங்கு கருங்குளம் வகுள கிரியில் இரு சந்தனக் கட்டைகளாய் அர்ச்சம் கொண்டு ஸ்ரீவெங்கடாஜலபதியாய் உற்பவித்து நமக்கு என்றென்றும் அருள்பாலிக்கின்றார். அதிஅற்புத தெய்வீக இரகசிய தீர்த்தங்கள் நிறைந்த திருப்பதியில் உள்ள புஷ்கரிணியானது. கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் சங்கமித்துப் பலவிதமான நோய்களை நீக்குகின்ற சர்வரோக நிவாரணியாகவும் குறிப்பாக இருதய சம்பந்தப்பட்ட நோய்களுக்கான நிவாரணியாகவும் அமைந்திருக்கின்றது. சந்தனக் கட்டைகளில் பெருமாளே “தத்விச்வ ஜோதியாய்“ வீற்றிருந்து ஆர்பவித்து அருள்பாலிக்கின்ற அதி அற்புதத் தலம்!

இந்த விஷ்ணுபதியின் மஹிமை என்னவென்றால் குறைந்தது 20 பெருமாள் ஆலயங்களுக்கேனும் தாமே அரைத்த சந்தனத்தை 20 நாட்களுக்குத் தொடர்ந்து அளித்து அதற்குப் பின் கருங்குளம் ஆலயத்தில் விஷ்ணுபதி புண்ய காலத்தைக் கொண்டாடினால் கண்கூடாக அற்புதமான பலன்களைக் காணலாம். நாடிச் சந்தனம் என்று அழைக்கப்படும் ராப்பத்துச் சந்தனத்தை அரைத்து 20 பெருமாள் மூர்த்திக்கேனும் அர்ப்பணித்தல் வேண்டும். இறைப் பரம்பொருளே ஸ்ரீவெங்கடாஜலபதியாய் ஆர்பவித்த சந்தன ஜோதியைக் காண்பதற்குப் பெரும் பாக்யம் வேண்டும். இன்றைக்கும் திருப்பதியில் நாடிச் சந்தனம் என்கிற திருமுறைச் சந்தன பூஜை முறை உண்டு. பெருமாளுக்குச் சார்த்தும் (நாடிச் சந்தனம்) மார்புச் சந்தனமானது பெறுதற்கரிய வைகுண்டப் பிரசாதமாக இன்றும் திகழ்கின்றதல்லவா! எனவே இந்த நாடிச் சந்தனப் பலாபலன்களைப் பெற இயலாதோர்க்கும் பெற்றுத் தருகின்ற வகையிலே கருங்குளம் வகுளகிரி மலை வெங்கடாஜலபதித் திருக்கோயில் அமைந்துள்ளது.

ஸ்ரீசித்தி விநாயகர்
கருங்குளம்

மருத்துவத்துறையில் இருதய நோய் நிபுணர்கள் (Cardiologist) தம்முடைய துறையில் சிறந்து விளங்குவதற்கு, இவர்கள் வகுளகிரித் திருத்தலம் (கருங்குளம்) வந்து இயன்றபோதெல்லாம் தரிசனம் செய்து அபிஷேக ஆராதனைகளுடன் அன்னதானம் செய்து வருதல் வேண்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இவ்வாறு செய்து வருவதால் உலகம் முழுதும் கீர்த்தி பெறும் வகையிலே சிறப்புறுவர்! ஆனால், தான் பெருமாள் அருளால் பெற்ற கீர்த்திக்கு நன்றிக் கடனாக, ஏழைகளுக்கு வாரந்தோறும் குறிப்பாக செவ்வாய் மற்றும் அசுவினி நட்சத்திர நாட்களில் இலவச மருத்துவ உதவிகளைச் செய்து வருதல் வேண்டும். மருத்துவத் துறையில் இறைவன் தம்மை வைத்திருப்பது இறைப்பணிக்காகவே, வெறும் செல்வம் தேடுவதற்கு மட்டும் அல்ல என்பதை மருத்துவர்கள் உணர வேண்டும்.

வாசனைக்கோர் (ஸ்ரீ நி) வாசன்!
வாசனைத் திரவியங்களில் வியாபாரம் செய்வோரும் தங்களுக்கு உரித்தான தெய்வமாகக் கொண்டாடவேண்டியது வகுளகிரி ஸ்ரீவெங்கடாஜல (ஸ்ரீநிவாச)ப் பெருமாள் மூர்த்தி ஆவார். ஏனென்றால் சந்தனம்தானே நறுமணத்திற்கான மூலாதாரம்! தாமே உருவான சந்தன அர்ச்சாவதார ரூபம் என்றால், தேவாதி சுயஞ்ஜோதியான இம்மூர்த்தியின் மகிமையை என்னவென்று சொல்வது! எனவே இந்த உலகத்தில் நறுமண வாசனைத் திரவியங்களில் ஈடுபட்டுள்ள அனைவருமே இத்திருத்தலத்திற்கு வந்து தரிசித்துச் சென்றால்தான் அவர்கள் தம் வாழ்வில் தேவகடனைத் தீர்த்திட முடியும். தம் துறையில் சிறப்பும் வளமும், ஐஸ்வர்யமும் பெற்றிடலாம்.

இன்று திருமணம், நாளை விவாகரத்து என்கின்ற அவல நிலையில் குடும்ப வாழ்வின் தர்ம நெறியானது மேற்கத்திய நாடுகளில் சிதைந்து வருகின்றதைக் காண்கின்றீர்கள் அல்லவா, இத்தீவினைகளுக்கு நாமும் நம் சந்ததியினரும் ஆட்படாமல் நன்முறையிலே பாரத தேசத்திற்கு உரித்தான பண்புடைய ஏகபத்தினி விரதத்தவராய்ச் சாந்தமான திருமண வாழ்வைப் பெற்றிட திருமண தினத்தன்று (Wedding Days) ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீவெங்கடாசலப் பெருமாளை இங்கு தரிசித்து மாங்கல்யச் சரடு, (இயன்றால் பொன் மாங்கல்யம்), தாம்பூலம், ரவிக்கை, மஞ்சள் போன்ற மங்கலப் பொருட்களை ஏழைச் சுமங்கலிகளுக்குத் தானமாக அளித்து வந்தால் மணமான நல்திருமண வாழ்வு அமைந்திடும்! Wedding Day என்று எங்கெங்கோ பீச்சிலும், ஹோட்டல்களிலும் ஆயிரமாயிரமாய்ச் செலவழிப்பதைவிட வகுளகிரி ஸ்ரீவெங்கடாசலபதிப் பெருமாளைத் தாயாருடன் சேர்த்து தரிசனம் செய்திட வாழ்வில் நறுமணம் பொங்கிடும் அன்றோ!

நாகதோஷம் தீர்க்கும் நாராயணா!

மிருத்யு சம்பந்தப்பட்ட நாகதோஷங்களை நிவர்த்தி செய்யக்கூடிய தலங்கள் ஒன்றிரண்டுதான் உள்ளன. அதிலும் குடகு நாகங்கள் என்கின்ற சிலவகை நாகங்கள்தாம், பலவிதமான கொடிய நாகதோஷங்களைத் தீர்க்க வல்லவையாகும்! ஆம், எவ்வாறு நாகத்தின் பல்லிலிருந்து எடுக்கப் படுகின்ற விஷமானது பாம்புகடிக்கு மருந்தாக அமைகின்றதோ, அதேபோல சிலவகையான நாகதோஷங்களுக்குச் சிலவகை நாகதேவதைகளின் ஆசிகள்தாம் தக்கப் பரிகாரங்களைத் தர முடியும். ஸ்ரீகருடமூர்த்தியே இங்கு வகுளமலையாக, பெருமாளின் வாகனமாக வீற்றிருப்பதால் ஈஸ்வரனின் திருக்கழுத்தை அலங்கரிக்கின்ற பலவிதமான குடகு நாகதேவ மூர்த்திகளே இங்கு வந்து தரிசிப்போர்க்கு சூட்சும ஜோதியாய் நாக தோஷங்களை நிவர்த்தி செய்கின்றார்கள். நாக தேவதைகளே முன்வந்து நாகதோஷங்களைத் தீர்க்கின்ற ஒரு சில அபூர்வத் தலங்களில் கருங்குளம் வகுளகிரியும் ஒன்றாகும். ஏனென்றால், இப்புனித பூமிக்கு அத்தகைய தெய்வீக சக்தி நிறைய உண்டு. Inferiority Complex  என்று சொல்லப்படுகின்ற தாழ்வு மனப்பான்மை இன்று உலகில் பலருக்கும் இருந்து வருகின்றது. குட்டையாக இருத்தல், ஆங்கிலம் பேசவராது இருத்தல், அதிகப் படிப்பு இல்லாமை, விகார ரூபத்துடன் இருத்தல், தலை வழுக்கை, மனைவியை விடக் குள்ளமாக இருத்தல் இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் பலவிதமான தாழ்வு மனப்பான்மைக் குறைபாடுகளால் தம்மைத் தாமே தாழ்த்திக் கொள்கின்றான்! தம்முடைய உடல் அமைப்பு யாவுமே பூர்வ ஜென்மக் கர்மவினைகளால் ஏற்படுவது என்று தெளிந்தால்தான் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடமுடியும். இல்லையென்றால் உள்ளிருந்து ஒழிக்கும் நோயாக இந்த Inferiority Complex என்ற தாழ்வு மனப்பான்மை நோயானது மனம், உள்ளத்தில் பெருகி கர்மவினைகளையும் பெருக்கி விடும் மேலும் உடலையும் பாதிக்கும்.

கருங்குளம்

எனவே தாழ்வு மனப்பான்மையால் தினசரி தன்னையே நொந்து கொள்வோரும் கருங்குளம் வகுளகிரி ஸ்ரீவெங்கடாஜலப் பெருமாளைத் தரிசித்து மாதந்தோறும் குறிப்பாகத் தன்னுடைய பிறந்த நட்சத்திர நாட்களிலும், சந்திர பகவானுக்குரித்தான திங்கட்கிழமையிலும் பித்ருக்களுக்கு ப்ரீதியான புடலங்காயைச் சமைத்து (புடலங்காய்க் கறி, கூட்டு, பொறியல்) அன்னத்துடன் சேர்த்துப் படைத்துத் தானமாக அளித்து வந்தால், தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபடுவர். பித்ருக்களுடைய நாயகனாக சூரியநாராயணப் பெருமாள் விளங்குவதால் புடலங்காயை வட்டமாக பல குடும்பங்களிலும், சிரார்த்தங்களிலும், திவசங்களிலும், பித்ரு காரியங்களிலும் சமைக்கப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்! புடலங்காயை உணவாக அன்னத்துடன் சமைத்துப் படைத்தல் Inferiority Complex என்கிற தாழ்வு மனப்பான்மையை அறவே நீக்குகின்றது. நாகலோகத்திலிருந்து பெறப்பட்ட தாவரங்களுள் புடலங்காயும் ஒன்றாகும். விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் புடலங்காயைச் சமைத்து அன்னதானமாக அளித்தலானது பித்ருக்களின் ஆசியை அபரிமிதமாகப் பெற்றுத் தருவதுடன் பலவகையான நாகதோஷங்களையும் நீக்கும். இவ்வாறாக வருகின்ற விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் வகுளமலையான கருங்குளம் ஸ்ரீவெங்கடாசலபதி ஆலயத்தில் கொண்டாடி எல்லோருக்கும் விஷ்ணுபதி புண்ய காலத்தின் பெருமைகளை அறிவித்து பிரதோஷம், மாதப் பிறப்பு, கிரஹண நாட்கள் போன்று பன்மடங்குப் பலாபலன்களை அருளவல்ல விசேஷ தினங்களுள் இதுவும் ஒன்றாகும் என்பதைப் பாமரர்க்கும் அறியாதவர்க்கும் உணர்வித்து, ஜாதி மத இனகுல பேதமின்றி கருங்குளத்தில் கொண்டாடி, சகலவிதமான தோஷங்களுக்கும் நிவர்த்தியைப் பெற்று சர்வேஸ்வரனாம் ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் அருட்கடாட்சம் பெற்று உத்தம நிலைகளை அடைய வேண்டுகின்றோம்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி கருங்குளம்

பிரதோஷம், சந்திர கிரஹணம், சூரிய கிரஹணம், மஹோதயம் போன்ற விஷ்ணுபதி காலமும் மிகச் சிறப்பான புனிதமான நேரங்களுள் ஒன்றாகும். விஷ்ணுபதி புண்யகாலத்தில் செய்யப்படுகின்ற பூஜைகள், ஹோமங்கள், தர்ப்பணங்கள், வழிபாடுகள், தீர்த்த நீராடுதல், தான தர்மங்கள் அனைத்திற்கும் அளப்பரிய பலன்கள் உண்டு. அமாவாசை, மாதப்பிறப்பு போன்ற நாட்களில் முறையான தர்ப்பணங்களைச் செய்யாதவர்கள். தாங்கள் இதுவரையில் தவறவிட்ட தர்ப்பணங்களுக்கெல்லாம் ஓரளவு பிராயசித்தமாக விஷ்ணுபதி புண்ய உரியகாலத்திலாவது நம் மூதாதையர்களுக்கு தர்ப்பண பூஜைகளைச் செய்து தக்க பரிகாரத்தைத் தேடிக் கொள்ள வேண்டும்.. பிரம்ம முகூர்த்த காலம் என்று சொல்லப்படுகின்ற விடியற்காலைக்கு முந்தைய புனிதகால பூஜைகளாய் நாம் கலியுகத்தில் அறவே மறந்துவிட்டோம். பகல் பொழுதில் செய்யப்படுகின்ற பூஜைகளை விட பிரம்ம முகூர்த்த காலத்தில் விடியற்காலை 3.00 மணி முதல் 5 மணி வரை) செய்யப்படுகின்ற பூஜைகளுக்கு மகத்தான பலன்கள் உண்டு. அதிலும் விஷ்ணுபதி புண்யகாலத்தில் பிரம்ம முகூர்த்த பூஜைகளுக்குக் கோடானுகோடி பலன்கள் உண்டு. இறைவன் பலவிதமான அவதாரங்களை எடுத்த புனிதக்காலமும், இறைலீலைகள் நிகழ்ந்த அற்புத நேரமும்தான் பிரதோஷ காலமாகவும், விஷ்ணுபதி புண்ய காலமாகவும் மலர்ந்து, நமக்கு பன்மடங்குப் பலன்களை அள்ளித்தருகின்றன. ஆம் இவற்றையெல்லாம் உணர வைக்க ஒரு சற்குரு நிச்சயமாகத் தேவை., நீங்கள் மட்டும் விஷ்ணுபதி மகிமையின் அருமையை உணர்ந்தால் மட்டும் போதாது., இதைப்பற்றி ஒன்றுமே அறியாத பாமர மக்களுக்கும், ஏழை எளியோர்க்கும், ஜாதி, இன, குல வேறுபாடின்றி விஷ்ணுபதி காலத்தின் மகிமையை எடுத்துரைத்து அனைவரையும் இன்று பெருமாள் ஆலயங்களில் ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால பூஜையில் பங்குகொள்வதற்கான அனைத்து இறைப்பணிகளையும், உதவிகளையும் செய்வீர்களேயானால் இதுவும் விஷ்ணுபதி புண்யகாலத்தின் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். இதற்குப் புண்ய சக்தி மிகவும் அதிகம். தமிழ்நாட்டுப் பகுதியில் அமாவாசையும், பிரதமை திதியையும் சுபமுகூர்த்த நாளாகக் கருவது கிடையாது. ஆனால் ஆந்திராவில் சுபமங்கள நாளாக இவற்றை கொண்டாடுகின்றார்கள். எனவே அந்தந்தப் புனித பூமியின் தாத்பர்யங்களுக்கு ஏற்ப இறைவனே பல புனிதகால இறை நியதிகளை மகான்கள், யோகியர்கள், சித்புருஷர்கள் மூலமாக வகுத்துத் தருகின்றான்.

ஸ்ரீதேயுலிங்க மூர்த்தி கருங்குளம்

ஸ்ரீஆகாயலிங்க மூர்த்தி கருங்குளம்

ச்ராவண மாதம் என்றால் ஆவணி மாதம் தானே. மனிதர்களைப் போல தேவர்களும் நூதன பூணூலைத் தரிக்கின்ற மாதமாக ஆவணி மாதம் விளங்குகின்றது. ஜாதி, மதம், இன வேறுபாடு இன்றி யாவருக்கும் பூணூல் ஆகிய இறைக்கவசம் உரித்தானது தானே! ச்ராவண பகுளம் என்று சொல்லப்படுகின்ற ஆவணி மாதத்தின் பிரதமை திதியானது மகத்தான பெருமைகளைக் கொண்டதாகும். வர்ஷ ருது மலர்கின்ற காலமாதலின் வருண லோகம், பாஸ்கர லோகம், சந்திர லோகம் போன்ற பலவிதமான லோகங்களிலும் உள்ள அக்னி, சீதள தேவதைகள், மழையைப் பெய்விக்கின்ற ஜலதேவதைகளும், முனிதேவதைகளும், டிண்டிபம் என்ற வாத்யத்தை வாசிக்கின்ற தேவதா மூர்த்திகளும், பூலோகத்தில் பிரசன்னமாகின்ற திதியே ச்ராவண பகுள (பிரதமை) திதியாகும். இதனுடன் விக்ரம வருஷத்தின் தட்சிணாயனப் புண்யகாலத்தின் வர்ஷ ருதுக் காலத்தின் ஆவணிமாதத்தின் விஷ்ணுபதி புண்ய காலம் சேர்கின்றது என்றால் இதனுடைய மகிமை தான் என்னே! ஜலவர்ஷம் என்றால் நீர்ப் பொழிவு தானே!  இதைல் போல் சந்தன வர்ஷம் என்றால் சந்தனப் பொழிவு, ஆம் சந்தன மழை பொழிந்தது! இது பலகோடி யுகங்களுக்கு முன் நிகழ்ந்தது ஆகும். கோடானுகோடி அரக்கர்கள் தோன்றி இந்த பிரபஞ்சத்தின் பல லோகங்களை மாசுபடுத்திய போது அந்த வல் அசுர சக்திகளை அழிப்பதற்காகத் தேவாதி தேவ மூர்த்திகளும் பாடுபட்டார்கள் அல்லவா! எத்தனையோ கோடி அரக்கர்கள் போரில் மாய்ந்தாலும், பூமியில் சிந்திய அவர்களுடைய குருதியிலிருந்து கோடிக்கணக்கான நோய்க் கிருமிகள் தோன்றி பூமியே அக்னி ப்ரவாகம் ஆகிவிட்டது. வருண பகவானோ எத்தனையோ யுகங்களுக்கு மழையைப் பெய்வித்தும், பூமியினுடைய நிலச் சூடு தணிந்த பாடில்லை! அப்பொழுதெல்லாம் சந்திரபகவான் மாதம் முழுவதும் கோடி பிரகாசராய் நித்திய பௌர்ணமித் திதி நாயகராய் விளங்கியமையால் பௌர்ணமியின் குளுமையான கிரணங்களால் கூட பூமியின் உஷ்ணத்தைத் தணிக்க இயலவில்லை. என் செய்வது! அனைத்து தேவாதி தேவர்களும், மஹரிஷிகளும், தேவமூர்த்திகளும் ஸ்ரீவைகுண்டத்தில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியை நாடி “பூலோகத்தின் உஷ்ணம் தேவலோகம் வரை பரவி எங்களையும் வதைக்கின்றதே. தாங்கள் தான் இதற்குத் தீர்வையும் நல்லதொரு வழியையும் காட்ட வேண்டும்”, என்று வேண்டினார்கள்.

சங்கு பூஜை கருங்குளம்

ஆமாம். பிரபஞ்சத்தில் தோன்றிய அந்த பூமியின் பேரண்ட அக்னியை எவ்வாறு தணிப்பது? பிரம்மமூர்த்தி இதைப் பற்றிக் கவலைப்படத் தொடங்கினார். ஏனென்றால் அவரால் சிருஷ்டி பெற்ற ஜீவன்கள் யாவும் பூலோகத்தில் நிலை பெற்று நிற்க வேண்டுமே! என் செய்வது? இதற்காகவே அம்பிகையும் பிரபஞ்சம் எங்கும், குறிப்பாக பூலோகத்திற்கும் கோடானு கோடி மகான்களையும், சித்புருஷர்களையும், யோகியர்களையும் அனுப்பி வைத்தனள். ஏனென்றால் எந்நேரமும் இறைச் சிந்தனையில் லயித்து யோகத்தில் நிலைத்திருக்கும் அடியார்க்கு அடியாரான மஹரிஷிகளின் திருவடிகள் பூமியில் படிவதென்றால் பூமாதேவிக்கும் குளிர்ச்சியும் சாந்தமும் உண்டாகும்தானே! சந்தனத்திற்கும் குளிர்ச்சியைத் தரும் தன்மை உண்டல்லவா! அது மட்டுமல்லாது பலவிதமான ஜோதிக் கிரணங்களைத் தன்னுள் ஈர்த்து, கிரஹித்து நெற்றியில் இடும் போது கபால நாளங்களுக்கு அக்கிரணங்களைச் செலுத்துகின்ற அற்புத சக்தியும் உண்டு,!

ஆனால் சந்தனம் எவ்வாறு பிறந்தது? பூமிக்கு எங்கிருந்து வந்தது?

தேவலோக வஸ்துக்களில் ஒன்று தான் சந்தனமாகும். இறைவனுடைய திருமேனியில் இருந்து திரண்ட பிரசாதமானது., ஸ்ரீமன்நாராயண மூர்த்தி தன்னுடைய இடது, வலது நேத்ரங்களை ஒருமித்து தீர்க்கயோகம் பூண்டு தன்னுடைய அனந்த சயனத்திலிருந்து நோக்கிட்ட போது பெருமாளின் வலது கண்ணுறை சூர்ய பகவானிடமிருந்து திரண்ட நேத்ராக்னியும், இடது கண்ணில் உறைகின்ற சந்திர பகவானுடைய சீதளக் கிரணங்களும், திருமாலுடைய திருநேத்ரங்களிலிருந்து தோன்றி இரண்டு ஜோதிப் பட்டைகள் ஆயின. திருமகளான ஸ்ரீலெக்ஷ்மி ஸ்ரீமன்நாராயணப் பெருமாளாய் அடிக்கடி பிரிந்திட வேண்டிய இறை லீலைகள் ஏற்பட்ட போது தாம் என்றும் நிரந்தரமாக எம்பெருமானுடைய திருமார்பில் நிலைபெற்று விளங்கிட வேண்டும் என்பதற்காகத் திருமகள் கடும்தவம் புரிந்தனள். இத்தகைய அரும்பெரும் பாக்கியத்தை அடைந்திடத் திருமகள் மேற்கொண்ட அற்புதமான பூஜைகளில் ஒன்றுதான் இறைவனுக்கு சந்தனம் அரைத்துத்  தன் திருக்கரங்களால் இறைவனுக்குச் சார்த்தி வழிபட்டதாகும்.

ஸ்ரீவாயுலிங்க மூர்த்தி கருங்குளம்

ஸ்ரீமன் நாராயணனிடமிருந்து இரு நேத்திர ஜோதிப் பட்டைகளாக எழுந்த இரு சந்தனக் கட்டைகளையும், பெருமாளே ஸ்ரீலெக்ஷ்மி தேவியிடம் அளித்திட அதனை பக்தியுடன் வாங்கி சப்தரிஷிகளின் உபதேசத்தோடு சந்தன பூஜையை நிகழ்த்துகின்ற வழிமுறைகளை மேற்கொண்டாள் திருமகள் தேவி. இதனால்தான் இன்றைக்கும் ஸ்ரீலெக்ஷ்மியே மார்பில் உறைகின்ற ஸ்ரீவெங்கடேசப் பெருமாளுக்குத் திருப்பதியில் மார்பில் திருச்சந்தனம் சார்த்தப்படுகின்றது. இறைவனுடைய திருமார்பில் தானே திருமகளும் உறைகின்றாள். திருப்பதி ஸ்ரீவெங்கடாஜலப் பெருமாளின் திருமார்பில் ஸ்ரீலெக்ஷ்மி தேவி உறைந்த திருக்கோலத்தோடு திருமாலிடமிருந்து எழுந்த இரு ஜோதிகள்தாம் ஸ்ரீஜோதியாகப் பரிணமித்து வானிற்சென்று ஒரு உன்னத திருத்தலத்தை அடைந்தது. ஸ்ரீவெங்கடேச லீலையாக வைகுண்டத்தின் ஒரு பகுதியாக பூலோகத்தில் ஏழுமலைகளும் திருப்பதியாகத் தோன்றின அல்லவா! வைகுண்டத்தில் ஒரு பகுதியாக இன்றைக்கும் திருப்பதி விளங்குவதால் தான் காலணி இல்லாது ஏழு மலைகளையுடைய திருப்பதிக்குப் பாத யாத்திரை சென்று வருவது தான் சிறப்புடையதாகும்.

திருப்பதியில் எத்தனையோ தீர்த்தங்கள் உண்டு. ஆனால் இன்றைக்கு அங்கு நம் கண்ணுக்குப் புலப்படுவது பத்து தீர்த்தங்கள் மட்டுமே. ஆனால் நம் கண்களுக்குத் தெரியாமல் சூட்சும்மாக இருப்பவை 108 தீர்த்தங்களுக்கும் மேலானவையாகும். இவற்றையெல்லாம் தக்க சற்குரு மூலமாக அறிந்து கொண்டால் தான் தீர்த்த நீராடுதல்களின் பல தெய்வீக ரகசியங்களை நீங்களும் உணர்ந்து கொண்டு, பலருக்கும் எடுத்துரைத்து அரிதான தெய்வீக பலாபலன்களைப் பெற்றிடலாம். திருமகளைப் போலவே ஸ்ரீகருட மூர்த்தியும் தாமும் அடிக்கடி ஸ்ரீமன்நாராயணப் பெருமாளை விட்டுப்பிரிய நேரிட்டமையால் தான் என்றென்றும் பெருமாளைத் தாங்குகின்ற வாகனமாக நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காக அவரும் திருமாலை வேண்டிப் பல யோக தவங்களை மேற்கொண்டார். அவருடைய தவமும் கனிகின்ற நிலையும் ஒன்று கூடிடவே பெருமாளும் தன்னுடைய சந்தன ஸ்ரீஜோதிகளைத் தாங்கி எம்மைத் தாங்கும் வாகனமாக என்றென்றும் நிலைத்திருப்பாயாக என்ற இறை ஆணை கிட்டியமையால் கருட பகவானுக்கு அந்த சந்தன ஸ்ரீஜோதியின் தரிசனம் தென்பட்டது. அவரும் அந்த ஜோதியை வழிபட்டவாறே ஜோதியைத் தொடர்ந்து வந்தார்.

ஸ்ரீஅப்புலிங்க மூர்த்தி கருங்குளம்

ஆனால் அந்த இரு சந்தன ஸ்ரீஜோதிகளையும் தாங்கி நிறுத்தி அதற்குரித்தான ஆவாஹன பூஜைகளாய்ச் செய்து அதை பூலோகத்தில் ஆவிர்பவிக்கும்படி செய்கின்ற மகாசக்தி எவருக்குண்டு? அதற்கும் ஸ்ரீமன்நாராயணப் பெருமாளே வழிவகுத்தார். தம்முடைய சங்கு, சக்கர தேவ மூர்த்திகளை அழைத்து “சந்தன ஸ்ரீஜோதிகளை முறைப்படி பூஜித்து செந்தமிழ்த் திருநாட்டில் எம் அவதாரத்தை உற்பவிப்பீர்களாக” என்று அருளாணை இட்டிடவே அவர்களும் தென்தமிழ் நாட்டிற்கு வந்தெய்தினர். இவ்வாறாக கருடமூர்த்தியும், சங்கு, சக்ரத்தாழ்வார்களும் ஒருமித்து நின்று கூடி திருமலையிலிருந்து எழுந்து வந்த சந்தன ஸ்ரீஜோதிகளை தரிசித்து அவை ஆவிர்பவிக்கும்படி விளங்கிய தலமே திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கருங்குளம் வகுளகிரி மலையாகும். மலை சிறிதாயினும் கீர்த்தியிற் சிறந்த தெய்வத் திருமலை இது. கருடபகவான் மலையாக வீற்றிருக்க ஸ்ரீசங்கு, ஸ்ரீசக்கரத்தாழ்வார்கள் விண்ணிலேயே நின்று பூஜித்து அவற்றை முறையாக ஆவாஹனம் செய்து இன்றைக்கு ஸ்ரீநிவாசப்பெருமாளாக நிறைந்திருக்கச் செய்திருக்கின்ற திருத்தலமே கருங்குளம் ஸ்ரீநிவாசப்பெருமாள் ஆலயமாகும்.

இங்கு திருமலையாகிய திருப்பதியிலிருந்து எழுந்த இரு சந்தன ஸ்ரீஜோதிகளே பெருமாளாக அவதரித்து இங்கு வழிபடப் பெறுகின்றார்கள். சங்கு சக்கரத்தாழ்வார்கள் வழிபட்ட அதிஅற்புதத் திருத்தலம் இது. அவர்களே திருப்பதியிலிருந்து எழுந்த இரு சந்தன ஸ்ரீஜோதிகளாய் இங்கு சுயம்பு ஜோதியாய் ஆவிர்பவிக்கும்படி செய்தவர்கள்! பல கோடி யுகங்களுக்கு முன் இவ்விடத்தில் சுயம்பெருமாளாய்த் திருமலையிலிருந்து எழுந்த சந்தன ஸ்ரீஜோதிகளாய், ஸ்ரீநிவாசப் பெருமாளாய் அவதரித்த அற்புதமான புண்யகால நேரமே ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய காலமாகும். இது நிகழ்ந்த விசேஷ தினமே அந்த யுகத்தின் விக்ரம ஆண்டின் ச்ராவண மாதத்தின் விஷ்ணுபதி புண்யகாலமாகும்.  இந்த அதிஅற்புதமான விஷ்ணுபதி புண்ய காலத்தில் தான் இங்கு சுயம்பு ஜோதியாக ஸ்ரீநிவாசப் பெருமாள் அவதாரம் கொண்டார். மிகவும் சக்தி வாய்ந்த மூர்த்தி! கலியுகத்தின் கண்கண்ட தெய்வ மூர்த்திகளுள் கருங்குளம் ஸ்ரீநிவாசப் பெருமாளும் சிறப்புற்று விளங்குகின்றார். இந்த சந்தன ஸ்ரீஜோதி பட்டைகளுக்கு அழகாக அலங்காரம் செய்து பெருமாளே நேரே வந்து நிற்பது போல் தோன்றுகின்ற காட்சி முப்பத்து முக்கோடி தேவர்களும் போற்றுகின்ற அற்புதக் காட்சியாகும். ஸ்ரீகருடாழ்வாரே கருங்குளத் திருமலையாய் நின்று என்றென்றும் பெருமாளைத் தாங்குகின்ற பாக்கியத்தைப் பெற்றுள்ளார். பெருமாளும் லெட்சுமியும் நிறைந்த அவதாரக் கோலத்திலிருந்து திருப்பதியிலிருந்து எழுந்த ஸ்ரீசந்தன ஸ்ரீஜோதிகளே செஞ்ஜோதிப் பெருமாளாய் இன்றைக்கும் நமக்கு அருள்பாலிக்கின்ற அற்புதத் திருமூர்த்தி.

ஸ்ரீபிருத்வி லிங்க மூர்த்தி கருங்குளம்

திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் செய்துங்கநல்லூர் பகுதியில் உள்ளதே கருங்குளம் கிராமமாகும். தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள அதி அற்புதத் திருக்கோயில், கருங்குளக் குன்றிற்குத் தான் வகுளகிரி குன்று என்று பெயர். கருடபகவானே வகுளகிரியாக உருவெடுத்து, ஸ்ரீநிவாசனைத் தாங்கி நிற்கின்றார்.  இதன் உச்சியில் தான் ஸ்ரீநிவாசப் பெருமாள், ஸ்ரீதேவி பூதேவியுடன் சந்தன ஸ்ரீஜோதியாய் ஒளிமயமாக வந்து திருக்கோயில் கொண்டுள்ளார். மலை அடிவாரத்தில் ஸ்ரீகுலசேகர நாயகி சமேத ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர் சிவன் கோயில் உள்ளது. சந்தன ஸ்ரீஜோதியை முதன் முதலாக தரிசித்த அம்பிகையே ஸ்ரீசந்தன அம்பிகையாக இவ்வூரில் அருள்பாலிக்கின்றாள். மேலும் ஸ்ரீசந்தன ஜோதி தரிசனத்தால் பிரபஞ்சத்தில் நிலவிய பூமி அக்னியானது தணிந்த போது அந்த அக்னியைத் தன்னுள் தாங்கிய அம்பிகையே ஸ்ரீஅங்காளபரமேஸ்வரியாக இங்கு அருள்பாலிக்கின்றாள், இவ்வூருக்கு மார்த்தாண்டம் கருங்குளம் என்ற பெயரும் உண்டு..

திருப்பதி திருத்தலத்திலுள்ள திருக்குளமானது (புஷ்கரணி) பொங்கித் தாமிரபரணியில் சங்கமித்து இந்த தீர்த்த நீராடலின் மகத்துவத்தைப் பன்மடங்கு ஆக்குக்கின்றது. குறிப்பாக ச்ராவண மாதமாகிய ஆவணி மாதத்தின் திருவோண நட்சத்திரத்தில் இங்கு தாமிரபணியில் நீராடி ஸ்வாமிக்கு பால் பாயாசம் படைத்து ஏழைக் குழந்தைகளுக்கு தானமாக அளித்து வருவோர் சந்ததி விருத்திக்கான அனுகிரகத்தைப் பெறுவார்கள்! பாஸ்கர பூஜை நிகழ்கின்ற அதி அற்புதத்தலம் இது. அதாவது, ஸ்ரீசூரிய பகவானே ஸ்ரீநிவாசப் பெருமாளின் மீது தன்னுடைய கிரணங்களை பெய்து பூஜிக்கின்ற சக்தி வாய்ந்த தலம். பூவாத, காயாத, உறங்காத புளிய மரம் பொலியும் சக்தி வாய்ந்த தலம். ஸ்ரீபெருமாளே இரு சந்தன விருட்சக் கால்களாகப் பொலிந்து உருவில்லா அருவப் பெருமாளாக அருள்புரிகின்ற சிறப்பான தலம்.

ஸ்ரீஅகஸ்தியர் பெருமான் இங்கு ஸ்ரீநிவாசப் பெருமாளை தரிசித்து இத்தலத்தின் மகிமையைப் பல புராணங்களாகப் பாடி மகிழ்ந்துள்ளார், ஸ்ரீலெக்ஷ்மி வாசத்தைத் தரக்கூடிய அதிஅற்புதத் தலம். ஸ்ரீகுலசேகர நாயகி சமேத ஸ்ரீமார்த்தாண்ட சிவபெருமானை தரிசித்து விட்டு ஸ்ரீமகாவிஷ்ணுவை தரிசிக்க வேண்டும் என்று பல மஹரிஷிகளும் தெளிவு படுத்தியுள்ளனர்.

ஸ்ரீரத்ன கர்ப்ப கணபதி

 கணபதி, விநாயகர், பிள்ளையார் என்று பிள்ளையாரப்பனே பலவித நாமங்களைத் தாங்கி நமக்கு அருள்பாலிக்கின்றார் அல்லவா! கணபதி மூர்த்திக்கும் விநாயக மூர்த்திக்கும் அருள்பாலிக்கின்ற தன்மைகளில் எத்தனையோ சிறப்பியல்புகளுண்டு! இவற்றையெல்லாம் நாம் சித்புருஷர்களின் ஞானபத்ர கிரந்தங்களிலிருந்து பெற்று நமக்கு அளிக்க வல்லவர்களும் சித்த சற்குருமார்களே.! நம்முடைய வழிபாட்டில் எத்தனையோ மூர்த்திகள் இருக்க ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை தற்போது நாம் வழிபடவேண்டிய அவசியமும் சிறப்பம்சமும் யாதோ? கலியுகத்தின் தற்போதைய கால, வர்தமான நிலைகளுக்கேற்ப ஸ்ரீரத்ன கர்ப விநாயகர் வழிபாடு சிறப்புற்று விளங்குவதாக சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்கள் அருள்கின்றன., பல கோடி அசுர சக்திகள் உலகில் நிறைந்து கோடானு கோடி லோகங்களிலும் தீய சக்திகளுக்கு வித்திட்ட போது இறைவன் பல அவதாரங்களை மேற்கொண்டு அவற்றை வென்று ஜீவன்களைக் காத்து வருகின்றான் அல்லவா!

நாகஜோதிகள் கருங்குளம்

உள்ளத்தில் ஒளியும் அசுரர்கள்!
கலியுகத்திலும் அசுரர்களும் அரக்கர்களும் இருக்கின்றார்களா? நிச்சயமாக! எப்படி? லஞ்ச லாவண்ய தீய சக்திகளாகவும் முறையற்ற தீய ஒழுக்கங்களாகவும், அதர்மம், பொய், ஏமாற்றுதல், பித்தலாட்டம், பிறர் சொத்தை அபகரித்தல், சூது, வாது, காம இச்சைகள் போன்ற பலவிதமான தீயசக்திகளாகவும் ஒவ்வொருவருடைய உள் மனதிலும் அசுரர்களுடைய தீயசக்திகள் நிறைந்திருக்கத்தான் செய்கின்றன. இதை இல்லை என்று எவரும் மறுக்க இயலாது. முறையற்ற காம எண்ணம் சற்றே உள்ளத்தில் எழுமானால் கூட நிச்சயமாகத் தெரிந்து கொள்ளலாம் அங்கு அசுர சக்தி குடிகொண்டுள்ளது என்று. ஒரு பக்கம் இறைவனை நம்புகின்றோம் என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், மறுபுறத்தில் தீய செயல்களும், தீய ஒழுக்கங்களும் பொய்மையும் தொடர்ந்து கொண்டிருந்தால் இறைநம்பிக்கை உங்களிடம் பரிபூர்ணமாகத்தான் இருக்கின்றதா என்பதை நீங்களே ஆத்மவிசாரம் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.!

ஸ்ரீரத்ன கர்ப கணபதி மூர்த்தியின் விசேஷ அம்சங்கள் என்னவெனில் இவரே தீய சக்திகளை பஸ்பம் செய்து அனைத்தையும் தன்னுள் ஏற்று அவற்றை முறைப்படுத்தி நல்ல இறை ஆக்க சக்தியாக மாற்றித் தருகின்ற சகஸ்ர ரத்ன சக்தியைப் பெற்றவராவார், எதற்காக நவரத்னங்கள் இவ்வுலகில் தோன்றியுள்ளன? எத்தனையோ வகைப்பட்ட தோஷங்களையும், தீய சக்திகளையும் தன்னுள் ஈர்த்து பஸ்பம் செய்து அவற்றை நற்சக்திகளாக மாற்றித் தருவது தான் நவரத்தினங்களுடைய தெய்வீக இயல்புகளாகும்.

முந்தைய யுகங்களின் அசுர சக்திகள் பூமியில் ஆங்காங்கே கிளைத்துக் கொண்டிருந்த போது இவற்றின் வயப்பட்ட இந்த மனித சமுதாயம் தான் இப்போதும் அதனுடைய விட்ட குறை தொட்ட குறையாக இக்கலியுகத்தில் எத்தனையோ தீய ஒழுக்கங்களிலும் மிதந்து கொண்டிருக்கின்றது. தீயொழுக்கங்களுக்கு நாமோ நம்முடைய சந்ததியினரோ அடிமையாகி விடக்கூடாதல்லவா! இவற்றிலிருந்து நம்மைக் காத்து நல்வழிப்படுத்த உதவுவதுதான் ஸ்ரீரத்ன கர்ப கணபதி வழிபாடாகும். தீய சக்திகள் பெருக்கெடுத்து ஓடியபோது இதனைக் கண்டு அஞ்சிய அம்பிகை சர்வேஸ்வரனை வேண்டி, “இறைவா! இதுவும் உன்னுடைய திருவிளையாடல் தானா? எங்கு பார்த்தாலும் வன்முறைகளும், முறையற்ற காமச் செயல்களும், தீயொழுக்கங்களும், தீச்செயல்களும் பெருக்கெடுத்து விட்டனவே! ஒருபுறம் ‘இறைபக்தி பெருகிக் கொண்டிருக்க மறுபுறம் தீய ஒழுக்கங்களும், தீய சக்திகளும், அசுரர்களால் வல்லமை பெற்றுக் கொண்டிருக்கின்றனவே! இதற்குத் தாங்கள் தாங்கள் தான் தக்க பரிகாரம் சொல்ல வேண்டும்!’ என்று வேண்டிட ,

ஸ்ரீஅதிகார நந்தி மூர்த்தி
கருங்குளம்

சர்வேஸ்வரனோ ‘ஈஸ்வரி! அனைத்தையும் தன்னுள் ஏற்று பஸ்பமாக்குவது எளிமையானது தான். ஆனால் யார் இதனைச் செய்திட முடியும்! கலியுகத்தில் பூர்வ ஜென்ம வினைகள் காரணமாக தீயவற்றின் வசப்பட்டவர்களை மீட்டு தீயசக்திகளை அழிப்பது மட்டுமல்லாமல் அவற்றை நல்ல சக்திகளாக மாற்றுகின்ற வல்லமை உன்னுடைய தலைத் திருமகனுக்கே (கணபதி) உண்டு. ஏனென்றால் தும்பிக்கை ஆழ்வானாக, அனைத்தையும் வளைத்துத் தன்னுள் ஏற்று இறைமை கூடிய நற்கதிர்களாக மாற்றுகின்ற ஆற்றலை கணபதியே பெற்று இருக்கின்றான். அவனை நாடி விளக்கங்கள் பெறுவாயாக!” என்று தாயையே மகனிடம் அருட்பாடம் பெறுமாறு அனுப்பி வைத்தார் சர்வேஸ்வரன்!

அவதார அக்னி சக்திகள் அடைந்தனவே கணபதியே!

அசுர சக்திகளை அழிக்கத்தான் எத்தனையெத்தனை அவதாரங்களெல்லாம் எழுந்தன! ஸ்ரீநரசிம்ம அவதாரம், ஸ்ரீசரபேஸ்வர அவதாரம், ஸ்ரீருத்ர அவதாரம் என்று இறைவன் பலவித உக்ர தாண்டவங்களை எல்லாம் நிகழ்த்திய போது அப்போது எழுந்த விதவிதமான அக்னி சக்திகள் எல்லாம் திரண்டு பெருகிட அவற்றையெல்லாம் தன்னுடைய துதிக்கையிலே தேக்கி வைத்தவர்தான் விநாயகப் பெருமானாவார்! எவ்வாறாக!! ரத்னச் சிவப்பான அக்னியை “கர்பம்” போல் தாங்கிய ரத்ன கர்ப கணபதியாக அவதாரம் பூண்டு ஸ்ரீநரசிம்மருடைய உக்ர தாண்டவ அக்னி கோலத்தைத் தணித்த போது சர்வேஸ்வரன் தன்னுள் ஏற்ற ருத்ராக்னியை மீட்டு கிரஹித்தவரும் கணபதிப் பெருமாளே! இதே போன்று ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா எத்தனையோ அசுரர்களை வதம் செய்தபோது அந்த அசுரர்களிடமிருந்து திரண்ட தீய சக்திகள், குருதிப் புனல் அனைத்தையும் தன்னுள் தாங்கியவரும் தும்பிக்கை ஆழ்வாரான பிள்ளையார்ப் பெருமானே ஆவார்! ஒருபுறம் தேவாதி தேவ மூர்த்திகளுடைய நேத்ராக்னியையும், மறுபுறம் தீய சக்திகளிலிருந்து எழுந்த அக்னிப் பிழம்பின் கோளங்களையும் தன்னுள் துதிக்கையில் தேக்கி வைத்து அதனை ஜீரணோத்தாரணம் செய்து அதே துதிக்கை வழியாக இன்றைக்கும் சகஸ்ர நாம இறை நற்கதிர்களை வாரி வழங்கிக் கொண்டிருப்பவரும் கணபதியே ஆவார். இவரே கலியுகத்தில் ஸ்ரீரத்ன கர்ப கணபதியாக விளங்குகின்றார்.

ஆம்! கர்பம் என்றால் தாங்கித் தரித்தல் என்று பொருள்! ஒரு புறம் கோடானுகோடி அரக்கர்களின் தீய சக்திகளிலிருந்து எழுந்த அக்னிக் கோளங்களாய்த் தாங்கியும் மறுபுறம்  தேவாதி தேவ தெய்வ மூர்த்திகளிடமிருந்து எழுந்த ருத்ராக்னிக்  கோளங்களையும் தன்னுள் தாங்கியும் தீய சக்திகளையும் பஸ்பம் செய்து, எவ்வாறு ஒவ்வாரு நெருப்பில் உமிழும் நெல் உமிச் சாம்பலிலிருந்து நல்ல பற்பொடி உருவாகுகின்றதோ அதுபோல, தீயசக்திகளிடம் உள்ள தீயசக்திகளை அழித்து அவற்றில் நிறைந்துள்ள ஆக்க சக்திகளாய் நல்வழிப்படுத்தித் தருபவர் தான் ஸ்ரீரத்ன கர்ப கணபதியாவார்.

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி
கருங்குளம்

இவ்வாறாக உங்கள் உள்ளத்தில் பாசமாகப் படிந்து ஆழ்ந்து, பாறையாகிக் கிடக்கின்ற அனைத்து விதமான தீய எண்ணங்களையும், தீயொழுக்கத் தீவினை சக்திகளையும் பஸ்பமாக்கி உங்களிடம் மிளிர்ந்து கொண்டுள்ள ஆன்ம தேகசக்தியை, மனோசக்தியை நல்வழிப்படுத்தி உங்களை உத்தம ஜீவனாக்க அருள்புரிபவர்தான் ஸ்ரீரத்ன கர்ப விநாயகர் ஆவார். எங்கு இவர் அருள்பாலிக்கின்றார்? தேடிக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்! ஏனென்றால் தெய்வீகம் என்பது எளிதல்ல. எத்தனையோ எளிய இறைவழிபாட்டு முறைகளை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் சற்குருவின் அருள்மொழிகளாக எடுத்துரைத்தாலும் எவ்வளவு பேர் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அனைத்தையும் கடைபிடிக்கின்றார்கள். அவரவர்கள் தமக்குரித்தான துன்பங்கள் தீர்வதற்கான பிராயசித்த பரிகார முறைகள் கிடைக்கின்றனவா என்று அலசிவிட்டு ஏதோ படித்தோம் முடித்தோம் என்று தங்கள் வாழ்க்கையைத் தொடர்கின்றார்கள் வழக்கம் போல! ஓர் இறை உத்வேகம் எழுந்தால் தானே தெய்வீகத்தில் எதையும் குருவருளால் சாதிக்க முடியும்!

குருவாய் மொழியாகக் கிட்டுகின்ற ஐஸ்வர்யம் பயன்படுத்தப்படாமல் வீணாவதா? இதைத்தான் ஸ்ரீவள்ளலார் சுவாமிகள் “(தெய்வீகக்) கடைவிரித்தேன், வாருவாரில்லை!” என்று செப்பினார்கள்! நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு கண் இமைத் துடிப்பும் இறையருளால்தான் நிகழ்ந்து வருகின்றது என்பதை உணர்ந்தால் தான் இறை நம்பிக்கை பரிபூர்ணம் அடையும். எனவே நமக்கு இருக்கின்ற இறை நம்பிக்கை எல்லாம் நாளுக்கு நாள், மணிக்கு மணி, நிமிடத்திற்கு நிமிடம், விநாடிக்கு விநாடி ஆழ்ந்து வேரூன்றினால் தான் சற்குருவினுடைய அருமை புரியும், அந்த உத்தம நிலையையும் அவரே தான் அளிக்கின்றார், அதன் பிறகுதான் முக்தி, மோட்சம் எல்லாம்!

சௌர நவ சக்தியைப் பெறுவோம்!

ஸ்ரீரத்ன கர்ப மூர்த்தியானவர் முதலில் தேவலோகங்களில் தான் பலகோடி யுகங்களாக அருள்பாலித்துக் கொண்டிருந்தார். பூலோகத்தில் கலியுக மக்கள், பலவிதமான தீய ஒழுக்கங்களுக்கும் தீவினைகளுக்கும் ஆட்பட்டு, அடிபட்டுத் தங்கள் தேக ஆரோக்கியத்தையும் மனோ சக்திகளையும் இழந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த மகா பத்மவாசினிகள் எனப்படும் அஷ்ட சக்தி தேவிகள் தாம் ஸ்ரீரத்ன கர்ப விநாயகருடைய பெருமையை நமக்கு எடுத்துணர்த்தி பூலோகத்தில் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை எழுந்தருளுமாறு செய்துள்ளார்கள். அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றிக் கடனாய்க் கடமைப்பட்டுள்ளோம். அஷ்ட சக்தி தேவிகளான இவர்கள் எட்டுத் திக்குகளிலும் நின்றும் நம்மை காத்து இரட்சிக்கின்ற தேவதா மூர்த்திகள் ஆவார். எல்லாம் வல்ல ஈஸ்வரனே தவம் பூணுகின்ற போது இறைவனைச் சுற்றி அஷ்ட திக்குகளிலும் நின்று தவங்காத்து இறைவனுடைய யோக, தவ சக்திகளை எல்லாம் அத்தனை கோடி லோகங்களிலும் உள்ள ஜீவன்களுக்குச் சென்று அடையுமாறு நிறைவு செய்கின்ற சக்தியைப் பெற்றவர்கள். கலியுகத்தில் தான், நமக்கு விடிந்து எழுவது முதல் உறங்குவது வரை எட்டு திக்குகளிடமிருந்து எத்தகைய இன்னல்கள் எங்கிருந்து வரும் என்று புரியாமல்தானே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே மகாபத்மவாசினிகளான அஷ்டசக்தி தேவிகளைப் பற்றி முதலில் தெரிந்து கொண்டு அவர்கள் நமக்கு அளித்துள்ள ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை வழிபடுகின்ற பூஜை முறைகளை நாம் அறிவோமாக!

தீப்தா தேவி, சூட்சுமையை தேவி, ரூஜாவை தேவி, பத்ரையை தேவி, விபூத்யை தேவி, விமலாயை தேவி, அமோகாயை தேவி, வித்யுதாயை தேவி என்ற அஷ்ட சக்தி தேவிகளும் ஒன்று கூடி ஸ்ரீரத்ன கர்ப விநாயகரைத் துதித்து வணங்கிய போது இந்த எட்டு தேவிகளிடம் இருந்து தோன்றிய ஜோதியை ஒன்பதாவது ஜோதி தேவியாக்கி சர்வதோமுகி என்ற தேவி நாமத்தையும் சூட்டி ஸ்ரீரத்ன கர்ப விநாயகர் ஆசிர்வதித்தார், இவர்களே சௌர நவசக்தி தேவிகளாக இன்றைக்கும் அனைத்துக் கோடி லோகங்களிலும் வலம் வந்து நவரத்னங்களை உருவாக்குகின்ற சக்திகளாய்ப் பெற்றுள்ளார்கள்.!

கருங்குளம்

பொற்கொல்லர்களுக்கான வழிபாடு!

நவரத்தின சக்திக்கான சௌர நவ தேவியரை பொற்கொல்லர்களும், நகை வியாபாரிகளும், தங்கம், வெள்ளி, நவரத்தினங்கள் வியாபாரம் செய்வோரும், இவற்றை அணிவோரும் வழிபட்டு ஸ்ரீரத்ன கர்ப விநாயகருடைய அருட்கடாட்சத்தைப் பெறுதல் வேண்டும். இவர்கள் எப்போதும் சூரிய பத்ம வியூகத்தில் திளைப்பவர்கள் ஆவார்கள். ஏனென்றால் ஸ்ரீரத்ன கர்ப விநாயகராலேயே ஆசீர்வதிக்கப்பட்ட தேவிகள் ஆதலின் இவர்ளுடைய ஜோதிமயமான தேகத்திலிருந்து எழுகின்ற பாஸ்கர ரத்ன அக்னியின் ஒளியை, அக்னிப் பிரவாகத்தைத் தாங்கக் கூடிய சக்தி சூர்ய பத்ம வியூகத்திற்கு மட்டுமே உண்டு. இந்த சூரிய பத்ம வியூகத்தின் நடுவில் இவர்கள் வீற்றிருப்பதால் தான் இந்த சௌர நவ ரத்ன நவ ஜோதியானது நன் முறையிலே யோக, மந்திர, தந்திர வழிமுறைகளில் நற்சுழற்சி பெற்று சௌர நவசக்தியாக ஸ்ரீரத்ன கர்ப வழிபாட்டின் மூலம் நமக்கு அருள்பாலிக்கும்.

சௌர நவசக்தித் துதி
ஒரு வைரக் கல்லைக் கட்டுவது என்றால் அதனை உராய்த்து, சீர்படுத்திப் பட்டை தீட்டினால் தானே அதனுடைய பலாபலன்களைப் பெற முடியும். எனவே சௌர நவசக்தி தேவிகள் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரிடமிருந்து பெறுகின்ற சௌர நவ ரத்ன ஒளியானது பட்டைத் தீட்டப்படாத மூலதேவ நவரத்ன ஒளியாக விளங்குவதால் இந்த பத்ம வியூக சக்கரத்திற்குத்தான் அதனை நவரத்ன பலாபலன்களாக நமக்கு மாற்றி அமைக்கின்ற சக்தி உண்ட.! நகை வியாபாரிகளும் நவரத்னக் கல் பதித்து ஆபரணங்களையும், மோதிரங்களையும் அணிவோரும் தினந்தோறும்

ஸ்ரீதீப்தா தேவ்யை நம:
ஸ்ரீசூட்சுமையை தேவ்யை நம:
ஸ்ரீரூஜாவை தேவ்யை நம:
ஸ்ரீபத்ரையை தேவ்யை நம:
ஸ்ரீவிமலாயை தேவ்யை நம:
ஸ்ரீஅமோகாயை தேவ்யை நம:
ஸ்ரீவித்யுதாயை தேவ்யை நம:
ஸ்ரீசர்வதோமுகி தேவ்யை நம:
ஸ்ரீசௌர நவசக்தி வாச ஸ்ரீரத்ன கர்ப விநாயகாய நம:

என்ற அற்புதமான ரத்னஸ்ரீ மந்திரங்களை ஓதி நவரத்ன ஆபரணத்தையோ, மோதிரத்தையோ துளசி அல்லது வில்வம், நீரால் அபிஷேகித்துப் பிறகு அணிதல் வேண்டும். நவரத்தினத்திற்கு தினசரி அபிஷேகம் விசேஷமானதாகும். ஸ்ரீரத்ன கர்ப விநாயகருடைய அருட்கடாட்சத்தால், மனதில், உள்ளத்தில், தேகத்திலுள்ள தீய ஒழுக்கங்கள் படிப்படியாகக் குறைந்து நவரத்ன பலாபலன்களை நாம் பெற இயலும்.

ஸ்ரீமார்த்தாண்டேஸ்வரர் ஸ்ரீவெங்கடாஜலபதி திருத்தலங்கள் கருங்குளம்

ஸ்ரீரத்ன கர்ப கணபதி பூஜா பலன்கள்

ஸ்ரீரத்ன கர்ப விநாயகர் வழிபாட்டை நமக்குத் தந்தருளிய ஸ்ரீமகாபத்ம வாசினி தேவதைகளை நாம் தினந்தோறும் நன்றியுடன் துதித்திட வேண்டும். தங்கம், வெள்ளி, நவரத்னம் வியாபாரம் செய்வோரும், பொற்கொல்லர்களும் ஸ்ரீரத்ன கர்ப்ப விநாயகரைத் தினந்தோறும் வழிபடுதல் வேண்டும். இந்த வழிபாட்டை நமக்குத் தந்தருளிய மகாபத்ம வாசினி தேவதா மூர்த்திகளின் பெயரைச் சொல்லி துளசி அல்லது வில்வ தீர்த்தத்தால் குறிப்பாக ஞாயிற்றுக் கிழமை தோறும் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை அர்ச்சித்து, அபிஷேகித்து வழிபடுதல் வேண்டும்.

ஸ்ரீரத்ன கர்ப விநாயகருடைய விசேஷமான தெய்வீக அம்சம் என்னவென்றால் இவரை எந்த திக்கும் நோக்கி வைத்தும் வழிபடலாம். ஏனென்றால் பொதுவாக தெற்கு சில மூர்த்திகளை வழிபடுவதில்லை! எட்டு திக்குகளுக்கும், உரிய விநாயகரை அஷ்ட சக்தி தேவிகளே வழிபட்டமையால் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை எந்தத் திக்கில் வைத்து பூஜித்தாலும் அந்தந்த திக்கிற்குரிய பலாபலன்கள் பல்கிப் பெருகுகின்றன. ஸ்ரீரத்ன கர்ப விநாயகரைக் கிழக்கு திக்கில் மேற்கு நோக்கி அமர்த்தி இருத்தி “ஸ்ரீதீப்தா தேவ்ய நவபூஷண ரத்ன கர்ப கணதியே நம:“ என்று 108 முறை ஓதித் தாமரை மலர்களால் அர்ச்சித்து சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து தானமும் அளித்திட வேண்டும். பலவிதமான திருமண தோஷங்களால் மட்டுமின்றி அழகின்மை, பண வசதியின்மை, வேலையின்மைக் குறைபாடுகளால் திருமணத் தடங்கல்கள் ஏற்பட்டு வாடுகின்ற கன்னிப்பெண்களுக்கு இந்த வழிபாட்டால் வாழ்வில் திருமணம் பாக்கியமும் நல்வழியும் கிட்டும். மேலும் திருமணமான தம்பதிகள் கூட பணக் கஷ்டத்தில் மிதந்து திணறுவதுண்டு. இவ்வாறு பணச் சிக்கலில் உழல்கின்ற தம்பதியினருக்குத் துன்பங்களைத் துடைக்கும் கடவுளாக ஸ்ரீரத்ன கர்ப விநாயகர் அருள்பாலிக்கின்றார்.

பெற்றோர்கள், மாமியார், மாமனார், கணவன் மனைவியருக்கிடையே உள்ள பிணக்குகளால் பல குடும்பங்களிலும் கொந்தளிப்புச் சூழ்நிலை இருந்து கொண்டே இருக்கும். எவருக்கும் மன நிம்மதியும் இருக்காது. இத்தகைய குடும்பங்களில் உள்ள குடும்பச் சிக்கல்கள் தீர்வதற்கு ஸ்ரீரத்ன கர்ப விநாயகரைத் தென்கிழக்கு திசையில் வடமேற்கு நோக்கி இருத்தி  “ஸ்ரீசூட்சுமையை தேவ்ய ஈஸ்வர சகாய ஸ்ரீரத்ன கர்ப விநாயகாய நம:” என்று ஓதி செம்பருத்திப் பூவால் 108 முறை அர்ச்சனை செய்து கொழுக்கட்டை படைத்து தானமும் செய்ய வேண்டும். செவ்வாய் மற்றும் சனிக்கிழமை இதற்குச் சிறப்புடைய நாட்களாகும்.

திடீர் மரணங்களால் உயில் மற்றும் சொத்து வழக்குகளால் அவதிப்படுகின்ற குடும்பங்கள் நிறைய உண்டு. ஒரு குடும்பத்திற்குத் தூணாக நின்றவருக்குத் திடீரென மரணம் வந்துவிட்டால் குடும்பமே நிர்கதிக்கு ஆளாகி படிப்பு, வியாபாரம், திருமணம், விவசாயம் போன்ற அனைத்துமே ஸ்தம்பித்துவிடும். இத்தகைய தடங்கல்கள் நீங்கிட ஸ்ரீரத்ன கர்ப விநாயகரைத் தெற்கு திசையில் வடக்கு நோக்கி அமர்த்தி ஸ்ரீரூஜாவை தேவ்ய புண்ய ரத்ன கர்ப விக்னேஸ்வராய நம:“ என்று ஓதி மல்லிகைப் பூவால் அர்ச்சித்து 108 முறை பூஜித்து பாலால் ஆன உணவுப் பொருட்களை (பால் பேணி, பால் பாயாசம், திரட்டுப் பால்) நைவேத்யம் செய்து தானமாக அளித்து வருதல் வேண்டும். மகம் நட்சத்திர நாட்களும், செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் ராகு காலத்திலும் ஸ்ரீரத்ன கர்ப விநாயகருக்கு செய்கின்ற இத்தகைய பூஜைகளும் துரிதமான, அபரிமிதமான பலன்களை அளிக்கும்.

தொண்டை, வயிறு, குடல் போன்ற பகுதிகளில் பலவிதமான வலி மற்றும் சூடு நோய்களால் அவதிப்படுவோர் இத்தகைய நோய்களிலிருந்து விடுபட ஸ்ரீரத்ன கர்ப விநாயகரைத் தென் மேற்கு திசையில் வடகிழக்கு நோக்கி அமர்த்தி “ஸ்ரீபத்ரையை தேவ்ய சக்தி ரூப ஸ்ரீரத்ன கர்ப கணாதிபாய நம:“ என்று ஓதி சம்பங்கிப் பூக்களால் 108 முறை அர்ச்சித்து சூர்ய பகவானுக்குரித்தான அக்னி சக்தி கூடிய கோதுமையால் ஆன உணவுப் பண்டங்களை நைவேத்யம் செய்து தானமாக அளித்து வந்தால் மேற்கூறிய நோய்களிலிருந்து தக்க நிவாரணம் கிட்டும்.. ஆழ்ந்த நம்பிக்கையுடன் செவ்வாய் அல்லது சனிக்கிழமைகளில் செவ்வாய் ஹோரை நேரத்திலும், சனி ஹோரை நேரத்திலும் செய்து வருதல் வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த பூஜை இது.

அறிவீர் ராமபாண புஷ்ப மகிமை!

ராம பாண புஷ்பம் என்ற ஓர் அற்புதமான புஷ்பம் உண்டு. மிகச் சிறியதாயினும் நிறைய கீர்த்தி வாய்ந்த புஷ்பமாக இது விளங்குகின்றது. ஸ்ரீராமரின் திருக்கரங்களில் மிளிரும் ராம பாணம் என்பது எவருக்கும் தீங்கு இழைக்காது. தீயவர்களை நல்வழிப்படுத்தக் கூடிய அதி அற்புத தெய்வீக பாணம் இது. ராமபாண புஷ்பத்தின் மகிமையை இன்றைக்குப் பலரும் அறிந்தாரில்லை. நீரிழிவு நோய், தோல் சம்பந்தமான வியாதிகளால் வருந்துவோர் நிவாரணமும், தண்ணீர் இல்லாமல் தடைபட்டுள்ள பலவிதமான தொழில்களும் தண்ணீர் வசதி பெற்று விருத்தியடைவதற்கும், கர்பப் பை சம்பந்தமான நோய்களால் வாடுவோரும் தக்க நிவாரணத்தைப் பெறவும், ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை மேற்கு திசையில் கிழக்கு நோக்கி அமர்த்தி “ஸ்ரீவிபூத்யை தேவ்ய ஜோதி ஸ்வரூப ரத்னகர்ப விக்னேஸ்வராய நம:“ என்று 108 முறை ஓதி ராமபாண மலர்களால் அர்ச்சித்து தேங்காய் வகை சம்பந்தமான உணவுகளை (தேங்காய் சாதம், தேங்காய் பர்பி) போன்றவற்றை நைவேத்யம் செய்து தானமாக அளித்து வந்திடுக. இப்பூஜையால் நீர் சம்பந்தப்பட்ட நிலம், தொழில் மற்றும் பல வாழ்க்கைப் பிரச்சனைகளுக்கும் தக்க தீர்வு கிட்டும். மேலும் கணவனுடைய முறையற்ற காமத் தொடர்புகளால் அல்லல்படுகின்ற குடும்பப் பெண்கள் கணவனை நல்வழியில் கொண்டு வந்திட இந்த வழிபாடு பெரிதும் உதவும். குடும்பப் பெண்கள் பவித்திரமாகச் செய்ய வேண்டிய மிக அற்புதமானப் பூஜை இது. உங்களுடைய பிள்ளைகள் நல்ல ஒழுக்கத்தில் திளைத்து நன்முறையில் திருமண வாழ்வைப் பெறுவதற்கு இவ்வழிபாடு உதவுகின்றது. அற்புத காப்பு பூஜை இது.

பண உதவி, குடும்ப அமைதிக்கு

வரவேண்டிய பணம் சமயத்தில் வராமையால் தடைபட்டுள்ள கட்டிடங்கள், திருமணங்கள், வியாபார முன்னேற்றங்கள் என்று பல துன்பங்கள் உண்டு. மேலும் வங்கியிலிருந்தோ அல்லது மற்ற இடங்களிலிருந்தோ வரவேண்டிய கடன், பணம் சமயத்திற்கு வராவிட்டால் வியாபார நஷ்டம் தானே ஏற்படும். தக்க பணம் இன்மையால் எத்தனையோ திட்டங்களும் அப்படியே முடங்கிக் கிடக்கும். பொதுவாக, குழந்தை குட்டிகள் நிறைந்து, செல்வமும் இருந்து, ஆரோக்கியத்தில் திளைத்திருந்தாலும் சந்தோஷம் இல்லாமல் இருக்கும் குடும்பங்கள் நிறைய உண்டு. நடுத்தர வாழ்க்கை நடத்துபவர்களுக்குக் கூட இறைவன் எவ்விதக் குறையும் வைக்கா விட்டாலும் அவர்களும் சந்தோஷத்தைக் காண்பதே கிடையாது.

எனவே, வாழ்வில் சாந்தமும், மன அமைதியும், பக்தியும் திளைக்கவும் வர வேண்டிய நிதி வசதியைப் பெற்றிடவும் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை வடக்கு திசையில் தெற்கு நோக்கி வைத்து அமர்த்தி “ஸ்ரீஅமோகாயை தேவ்ய சாந்த ஸ்வரூப ஸ்ரீரத்ன கர்ப விநாயக தேவாய நம:“ என்று ஓதி 108 முறை முல்லைப் பூக்களால் அர்ச்சனை செய்து வெள்ளைச் சர்க்கரைப் பொங்கல் தானம் செய்து வருதல் வேண்டும். வாரத்தில் ஏழு நாட்களிலும் இந்த பூஜையினைச் செய்திடலாம். குறிப்பாக குரு ஹோரை, சுக்கிர ஹோரை, வளர்பிறைச் சந்திர ஹோரை, புத ஹோரை நேரங்கள் சிறப்புடையதாகும். இப்பூஜைக்குப் பின் ஐந்து வயதிற்கு உட்பட்ட ஏழைக் குழந்தைகளுக்கு சர்க்கரைப் பொங்கலை அளித்து அன்னதானம் செய்தால் குடும்பத்தில் அமைதி நிலவும், பண உதவி கிட்டும்.

நிலையான வாழ்வு பெற
பல இடங்களிலும் வேலை செய்து எங்கெங்கோ பணிபுரிந்து நிலையாக ஓர் இடத்தில் நிலையாக அமையாத குடும்பங்கள் பல உண்டு. அலுவலக வேலையாகப் பாரதம் எங்கும் சுற்றிவிட்டு ஓய்வு பெறும் போது தங்குவதற்கு ஒரு வீடு கூட இல்லாமல், நிலபுலன்கள் இல்லாமல் அவதியுறுவோரும் உண்டு. கையில் பணம் வைத்திருந்தாலும் எந்த இடத்தில் நிலைத்து வாழ்வது என்று திகைப்பவர்களும் உண்டு. வீடு வாங்கினாலும் எங்கும் தங்க முடியாமல் சூழ்நிலைகள் அமைந்து விடும் இதற்கெல்லாம் காரணம் தக்க தான, தர்ம புண்ய சக்தி இல்லாததாகும்.

குடும்பத்துடன் ஓர் இடத்தில் நன்முறையில் settle ஆவதற்கு ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை வடகிழக்கு திசையில் தென்மேற்கு நோக்கி வைத்து “ஸ்ரீவித்யுதாயை தேவ்ய ஜோதி ஸ்வரூப ஸ்ரீரத்ன கர்ப கஜானனாய நம:” என்று ஓதி எருக்கம் பூக்களால் 108 முறை அர்ச்சித்து, சப்பாத்தி மற்றும் பூரி வகையான உணவுகளைப் படைத்து தானம் செய்திடல் வேண்டும். அடுத்ததாக குடும்பத்தை எங்கோ வைத்துத் தான் எங்கோ பணிபுரிந்து சம்பாதிக்க வேண்டிய நிலையில் உள்ளோர், தங்கள் குடும்பத்துடன் முறையாக இணைந்து வாழ்ந்திடவும் இந்தப் பூஜை பெரிதும் உதவும்.

சௌர நவதேவி ஸ்ரீசர்வதோமுகி பூஜை

அரிசி மாக்கோலத்தால் ஒரு சதுரத்தை வரைந்து அதன் உள் குறுக்காக மற்றோரு சதுரத்தை வரைவீர்களேயானால் உங்களுக்கு எட்டு திக்குகள் கிடைக்கும். இதன் நடுவில் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை உங்கள் ஊரிலிருந்து திருஅண்ணாமலை இருக்கின்ற திசை நோக்கி வைத்து “ஸ்ரீசர்வதோமுகி தேவ்ய சாக்த ரூப ரத்ன கர்ப்ப கணாதிபாய நம:“ என்று ஓதி ரோஜா மலர்களால் 108 முறை அர்ச்சனை செய்து பால் பாயாசம் படைத்து நைவேத்யம் செய்து வந்தால் பலவிதமான மனக்குழப்பங்களால் அல்லல் உறுவோர் தக்க தெளிவினை பெறுவார்கள்.

பண்பட்ட பாரதத் தாய் : குழந்தைகளைப் பள்ளியில் படிக்க வைப்பது, பெண்களைக் கல்லூரிக்கு அனுப்புதல், படிப்பு முடிந்த பெண்களுக்கு நன்முறையில் திருமணம் செய்வித்தல், பையன்களுக்கு நல்லவேலை கிட்டுதல், கணவனுக்கு நல்ல ஆரோக்யம் வேண்டுதல் – இவ்வாறாக எத்தனையோ பிரச்சனைகளுக்கு, குழப்பங்களுக்கு நடுவில் வாழ்கின்றவள் தான் ஒரு பாரதத் தாய் ஆவாள். இதற்கு எத்தகைய பணிவு, அடக்கம், பொறுமை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். பூமா தேவியின் சகாயம் கிட்டினால் தான் ஒரு பாரதத் தாய் நன்முறையில் தம் குடும்ப பாரத்தைச் சுமந்து நடத்திச் செல்ல முடியும். எத்தனையோ துன்பங்களுக்கு இடையிலும் தன் கடமைகளைச் செவ்வனே நடத்திச் செல்பவள் தான் ஒரு பாரதக் குடும்பத்தாய் ஆவாள். எனவே, நன்முறையில் தன் குடும்ப வாழ்க்கை நிகழ்ந்து பக்தியுடன் திளைத்து இறைவனுடைய திருவடிகளை அடைவதற்கு நல்ல சற்குருவைப் பெற்றுத் தருவதற்காக இந்த சௌர நவசக்தி தேவி வழிபாடு நன்முறையில் அருள்பாலிக்கும்.

இவ்வாறாக சௌர நவசக்தி என்ற பெயரைத் தாங்கி தீப்தா, சூட்சுமையை, ரூஜாயை, பத்ரையை, விபூத்யை, விமலாயை, அமோகாயை, வித்யுதாயை, சர்வதோமுகி ஆகிய ஒன்பது தேவியரும் ஸ்ரீரத்ன கர்ப விநாயகரை எப்போதும் துதித்து சௌர நவசக்தி தேவிகள் என்ற நாமத்தையும் தாங்கி நமக்கு அனைத்து விதமான அருள்வளங்களையும் அள்ளித் தரக் காத்திருக்கின்றார்கள். இத்தகைய அற்புதமான வழிபாட்டைத்  தம்முடைய சற்குருவாம் ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்த ஈச ஸ்வாமிகளிடமிருந்து குருவாய் மொழிகளாக நமக்குப் பெற்றுத் தந்த நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுக்கு குருகாணிக்கையாக இந்த பூஜா பலன்களை அர்ப்பணிப்போமாக! இவற்றை அவரும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகின்ற அடியார்களின் பிரார்த்தனா பலன்களாக ஆக்கி மக்கள் சேவை புரிந்திடுவார் குரு அருளால்!

காரியத் தடங்கல்கள்

காரியத் தடங்கல்கள் வருவது ஏனோ?

எத்தகைய காரியத் தடங்கல்களையும் சித்தி விநாயகரானவர் போக்கி நமக்கு அருள்பாலிக்கின்றார் அல்லவா? எவ்வாறு? இதனை அறிவதற்கு முன்னால் காரியத் தடங்கல்கள் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா!“ என்று நம் பெரியோர்கள் மொழிந்தது போல் நம்முடைய நற்காரியங்களில் ஏற்படுகின்ற தடங்கல்களுக்கு நம் கர்மவினைகள் தாம் முதல் காரணமாகின்றன. ஏதோ குறுக்கே பிறர் புகுந்து நம் காரியங்களைத் தடை செய்வது போலவும் பிறரால் அந்தக் காரியம் தடைபட்டு விட்டது என்றும் கருதிப் பிறரை நாம் ஏசிக் கொண்டிருக்கின்றோம். அல்லது “நேரம் சரியில்லை”, என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விடுகின்றோம்.

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல நம்முடைய முன் ஜென்மங்களில், நாம் பிறருக்கு ஏற்படுத்திய தடங்கல்கள் தாம் இப்பிறவியில் காரியத் தடங்கல்களாகப் பல வழிகளில் வந்து குறுக்கிடுகின்றன. ஒவ்வொரு செயலும் காரண காரியங்களுடன் கர்ம பரிபாலன இயக்கமாக நடைபெறுகின்றது என்பதை நீங்கள் ஆத்ம விசாரம் செய்து ஆத்மார்த்தமாகத் தெளிவு பெறுதல் வேண்டும். எனவே இத்தகைய காரியத் தடங்கல்களை நீக்குவதற்குப் பிராயச்சித்தம் அல்லது பரிகாரத்தைத் தேடுகின்றபோது ஒன்றை உணருங்கள். “நாம் எவருக்கெல்லாம் காரியத் தடங்கல்களை ஏற்படுத்தினோமோ அவற்றுக்குரித்தான விளைவுகளையே நாமும் நம் வாழ்வில் தடங்கல்களாகச் சந்திக்கின்றோம் என்பதை உணருங்கள். இந்த எதிர்வினையின் விளைவுகளைச் சமாளிப்பதற்குத் தேவையான புண்ய சக்தியைத் தான் பலவித பிரார்த்தனைகளாகவும் பரிகாரங்களாகவும் நமக்குப் பெரியோர்கள் அருளியுள்ளனர்!

உத்திரமேரூர்

திருமண தோஷ பரிகாரச் செயல்பாடு!
உதாரணமாக முன் ஜென்மத்திலும் இந்தப் பிறவியிலும் பிறருடைய செல்வத்தின் மேல் கொண்ட பொறாமை காரணமாக மற்றொருவர் வீட்டில் நடைபெற வேண்டிய திருமணத்திற்கு நாம் இடையூறு விளைவித்தோமேயானால் அதுவே இப்பிறவியில் நம்முடைய குடும்பத்தில் திருமணத் தடங்கல்களாக வாய்க்கின்றன என்று தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு எத்தகைய பரிகாரத்தைச் செய்தால் தக்க நிவாரணத்தைப் பெறமுடியும்? முன் ஜென்மத்தில் எந்த குடும்பத்திற்கான திருமணத்திற்குத் தடங்கல்களை ஏற்படுத்தினோமோ அதே குடும்பத்திற்கு நிவாரணம் தந்து பரிகாரம் கண்டால் தான் இப்பிறவியில் நமக்கு ஏற்பட்டுள்ள திருமண தோஷ பரிகாரத்தைப் பெறமுடியும்.. ஆனால் முன் ஜென்மத்தையும் இப்பிறவியையும் எவ்வாறு இணைக்க முடியும்? அந்தந்தக் குடும்பங்களில்  எத்தனையோ சந்ததி மாற்றங்கள் ஏற்பட்டிருக்குமே! என் செய்வது? இங்கு தான் சற்குருவின் தெய்வீக ஆற்றல் உதவுகின்றது.

இதற்காகத்தான் திருமண தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற விசேஷமான தலங்களை சென்னை அருகே திருவிடந்தை, கும்பகோணம் அருகே திருமணஞ்சேரி, அரச மரமும் வேப்ப மரமும் இணைந்து இருக்கின்ற தலங்கள் (கோயம்பேடு), செங்கல்பட்டு அருகே உத்திரமேரூர் ஸ்ரீவைகுண்டப் பெருமாள் ஆலயம் போன்ற திருமண தோஷங்களை நிவர்த்தி செய்கின்ற சக்தி நிறைந்த தலங்களாக இறைவன் நமக்கு அருளியுள்ளான். எனவே திருமணஞ்சேரிக்கோ அல்லது திருவிடந்தைக்கோ சென்று திருமண தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான பரிகார முறைகளை தான, தர்மங்களாகவோ அபிஷேக, ஆராதனைகளாகவோ செய்கின்ற போது, முன் ஜென்மத்தில் எந்தக் குடும்பத்திற்கு நாம் தீவினைகளை விளைவித்தோமோ அதே சமயத்தில் அவர்களும் அங்கு வந்து சேருகின்றார்கள். அவர்கள் ஆலயப் பணியாளர்களாகவோ குருக்களாகவோ, யாத்ரீகர்களாகவோ, பிச்சைக்காரர்களாகவோ, நாம் இடுகின்ற உணவை உண்கின்ற பசு காக்கைளாகவோ, நாய்களாகவோ அங்கு வந்து சேர்வார்கள். இதுதான் இறைவனுடைய திருவிளையாடல்! எனவே இப்பிறவியில் அவர்களுக்கு ஏதேனும் குறை இருக்குமேயானால் நீங்கள் இடுகின்ற அன்னதானம், அன்பு உரையாடல், நீங்கள் செய்கின்ற அபிஷேக, தரிசன, ஆராதனை பலன்களாக மாறி அவர்களுக்கு முன்ஜென்மத்தில் நம்மால் செய்யப்பட்ட திருமணத் தடங்கல்களால் ஏற்பட்ட தோஷங்கள் நிவர்த்தி செய்யப்படுகின்றன.

அப்படியானால் இத்தகைய தலங்களுக்கு ஒருமுறை சென்று வந்தால் கூட திருமண தோஷங்கள் நிவர்த்தியாகாமல் மேலும் தடங்கல்கள் வந்து கொண்டிருப்பது ஏன்? எத்தனை குடும்பங்களுடைய திருமணங்களுக்கு நாம் இடையூறுகளை விளைவித்தோமோ அவையெல்லாம் தீரும் வரை நம் குடும்பத்தில் திருமண தோஷங்கள் வந்துகொண்டுதான் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதனால்தான் சில குடும்பங்களில் 35/40 வயது ஆனாலும் கூட பலருக்கும் திருமணம் தட்டிக் கொண்டே செல்லும், அப்போதே தெரிந்து கொள்ளலாம் திருமண தோஷம் மிகக் கடுமையாக இருக்கின்றன என்று! இப்படிச் சொல்லிக் கொண்டேயிருந்தால் இதற்குரித்தான தடங்கல்களை எப்படித்தான் நீக்குவது? தக்க சற்குருவை நாடினால் அவரே திருமண தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான பலவிதமான அருள்வழிகளைக் காட்டிடுவார்.

சற்குரு – The Divine Hyper Link

ஒரு சற்குருவானவர் எவ்வாறு திருமண தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு அருட்பெரும் வழிமுறைகளைக் காட்டுகின்றார்? எந்தெந்த ஜென்மங்களிலோ ஏற்பட்ட கர்மவினைகளை எல்லாம் Divine links மூலம் ஒன்று சேர்த்து எந்தத் திருத்தலத்தில் இவற்றிற்கு ஒட்டு மொத்தமாகச் சில பரிகார முறைகளைப் பெற முடியும் என்ற  வகையிலான ஆன்மீக ரகசியங்களை சற்குருவே அறிந்திடுவார். உதாரணமாக நம்முடைய பூர்வ ஜென்மங்களில் சுமார் 40 குடும்பங்களில் திருமணத்திற்கு இடையூறுகளைப் பலவிதமான முறைகளில் விளைவித்திருந்தால் அதில் பத்தையோ அல்லது இருபதையோ ஒன்றாக்கி குறிப்பிட்ட சில தலங்களில் குறிப்பிட்ட தான தர்மங்களை ப்ரத்யேக முறை மூலமாக அவற்றை எளிய முறையில் அவர் நிவர்த்தி செய்து விடுகின்றார். சில இடங்களில் தான தர்மப் பலன்கள் பன்மடங்காகிப் பல தோஷங்களை ஒன்றாக நிவர்த்தி செய்து விடுமல்லவா. இத்தகைய divine calculationஐ நன்கு அறிந்த கர்மயோகி சற்குருவே! ஆனால் அவர் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாது சாதாரண மனிதர் போல் இலைமறை கனியாக நம்மிடையே வாழ்ந்து நமக்கு நல்வழி காட்டிக் கொண்டுதான் இருக்கின்றார்.

திருவிடந்தை மற்றும் திருமணஞ்சேரியில் சுவாமிக்குச் சாற்றப்படுகின்ற மாலைகள் அருட்பிரசாதமாக இல்லத்திற்கு எடுத்து வரப்படுகின்றதல்லவா! இவற்றிலிருந்து எப்போதும் பரிணமித்துக் கொண்டிருக்கின்ற விவாக சுபமுகூர்த்த கிரணங்கள் இல்லத்தில் எப்போதும் நிறைந்து கொண்டு அவ்வப்போது நமது மனதிலும் உள்ளத்திலும் தேகத்திலும் பல ஆன்ம சக்திகளை உருவாக்கித் திருமண தோஷங்களுக்கு நிவர்த்தியைப் பெற்றுத் தருகின்றது.

ஏழைச் சுமங்கலிகளுக்கு மாங்கல்ய தானம், பல ஏழைகளின் திருமணத்திற்கு உதவி செய்தல் போன்றவற்றை ஆலயங்களில் நிறைவேற்றும் போது அவற்றிற்குத் திருமண தோஷங்களை நீக்கும் புண்ணிய சக்திகள் நிறைந்திருப்பதால், நம்மால் இழைக்கப்பட்ட பல பெரும் இன்னல்களுக்கும் தக்கப் பிராயச்சித்தத்தை இவை துரிதமாகப் பெற்றுத் தருகின்றன. ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்தப் பிரார்த்தனைகளை நிறைவேற்றியாக வேண்டும் ஆழ்ந்த நம்பிக்கையே அரிய நல்வரம் தரும்!

மதுரை ஸ்ரீமீனாட்சி திருமணம்!

ஒவ்வொரு சித்திரை உத்திர நட்சத்திரத்தன்றும் மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்தில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகின்றது எதற்காக? பலவிதமான திருமண தோஷங்கள் காரணமாக சகோதரிகள், பெண்களுக்குத் திருமணம் ஆகவில்லையென்றால், சித்திரை உத்திர நட்சத்திரத்தன்று மதுரையில் குறைந்தது 108 ஏழைச் சுமங்கலிகளுக்காவது தங்கத்தைப் பெற இயலாத வெறும் மாங்கல்ய சரட்டை மட்டுமே கழுத்தில் அணிந்து கொண்டிருக்கின்ற (ஜாதி, மத இன்பேதமின்றி) ஏழைச் சுமங்கலிகளுக்கு குறைந்தது 108 பொன் மாங்கல்யங்களை தானமாக அளித்தால் மிகவும் துரிதமான நிலையில் திருமண தோஷங்கள் நிவர்த்தி பெற்று விடும்.

ஏனென்றால் இன்றைக்கும் முப்பத்து முக்கோடி தேவர்களும், தேவதைகளும் வந்து பிரசன்னமாகின்ற இறைத் திருமண உற்சவமாக மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடைபெறுவதால் அங்கு குழுமியிருக்கின்ற தேவாதி தேவ மூர்த்திகளின் ஆசியால் திருமண தோஷங்கள் நிவர்த்தி பெற்றுவிடுகின்றன. ஒரு பொன் மாங்கல்யத்தின் விலை 2000 ஆயிற்றே., 108 மாங்கல்யம் என்றால் நம்மால் என்ன செய்ய முடியும் என்று யோசிக்காதீர்கள். நண்பர்கள், உற்றம் சுற்றம் அனைவரையும் ஒன்று சேருங்கள். 2 லட்சம் ரூபாய் ஆனாலும் பரவாயில்லை, 108 திருமாங்கல்யங்களை அல்லது குறைந்த பட்சம் 1008 மாங்கல்ய சரடுகளையாவது முறைப்படி நன்முறையில் பூஜித்து சித்திரை உத்திர நட்சத்திரத் திருவிழாவில் ஏழைகளுக்கு அளித்துத் தான் பாருங்களேன். செய்தால்தானே தெரியும், இறைத் திருப்பணிகளின் புண்யத்தின் மஹிமை! இறைத் திருச்சேவையின் மகிமை!

இவ்வாறாக பிராயச்சித்தங்கள் மற்றும் பரிகாரங்களுக்காக பெரிய தொகை தேவைப்படும் போது அதற்கு நம் மனம் ஒப்பாது, ஆனால் இதுவே ரத்த பரிசோதனை, Scanning, X ray என்று ஆயிரக்கணக்கில் மருத்துவத் துறையில் செலவிடும்போது அதற்கு நம் மனம் துணிந்து விடும். ஏனென்றால் மரணபயம்  வந்து விடுகின்றதே! LTC, LFCல் விமானப் பயணம் நம் மனம் ஒப்பும், பொன் மாங்கல்ய தானம் என்றால் கையும், பையும் மணிபர்ஸும் சுருங்கி விடும். இதுதான் கலியுக மனிதனின் உள்ளக் கோலம், இயன்ற செலவில், பெரும் பாவங்களுக்கெல்லாம் பிராயச்சித்தம் பெறவேண்டும் என்றால் Spritual discount அளிப்பதற்கு தெய்வீகத்தில் Divine Business ஆ நடத்தப்படுகின்றது?

எனவே இனியேனும் உண்மையை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள். தான தருமங்களுக்கு தயவு செய்து அஞ்சாதீர்கள். ஸ்ரீஅகஸ்திய விஜயம் என்றாலே தான தரும விஷயங்கள் galore என்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். தான தருமம் என்றால் செலவு பட்ஜட் அல்ல! உங்களுடைய தோஷங்களை நீக்கிப் புண்ணிய சக்தியை வரவாக்குகின்ற அற்புதத் திருப்பணிகளே தான தர்மங்கள்!

ஸ்ரீபட்டு விநாயகர் செங்கல்பட்டு

செங்கல்பட்டில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் சமயபுரம் மாரியம்மன், தஞ்சை மாரியம்மன் போன்ற காயசித்தி தரும் மூர்த்திகளுடைய அருட்பரிபாலனம் எவ்வாறு நடைபெறுகின்றது தெரியுமா? பித்ரு தேவர்கள், மகரிஷிகள், சித்தர்கள் மூலமாகத்தான். செங்கல்பட்டில் உள்ள சித்தி விநாயகர் மிகவும் சக்தி வாய்ந்தவர், துரித கதியில் காரிய சித்தியைப் பெற்றுத் தரக் கூடியவர். இதற்குக் காரணம் என்னவென்றால் எப்போதும் சித்தர்கள் சூட்சுமமாக வலம் வந்து கொண்டிருக்கின்ற செங்கல்பட்டு ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில் நீங்கள் வழிபடச் செல்கின்ற போது ஆங்கே சூட்சும ரூபத்தில் வழிபாடு செய்கின்ற சித்தர்களும் மகான்களும் உங்களுடைய இன்னல்களைத் தாங்களே எடுத்துக்கொண்டு அவற்றைக் கழித்து விடுகின்றார்கள்! இதுவும் ஒரு தியாகமயமான திருப்பணியே! இதற்காகவே பூலோகத்தில் பல மஹான்கள் பிறப்பெடுப்பதுண்டு! பிறருடைய கஷ்டங்களைத் தீர்ப்பது ஓர் அரிய மானுட திருசேவையாகும். பிறருக்கு உதவுவது என்பது ஒரு மகத்தான சுயநலமற்ற இறைத் திருச்சேவையாகும். பித்ருக்களின் அருளாசியாலும், மஹான்கள், யோகிகளுடைய செயல்களாலும் அவர்கள் அளிக்கின்ற புண்ணிய சக்தியைக் கொண்டு இத்தகைய காரிய சித்தி விநாயக மூர்த்திகள் உங்களுடைய காரியங்களுக்கு காரிய சக்தியைத் தந்து விடுகின்றார்கள்!

உங்களுடைய குழந்தைகளின் சேவை!

அடுத்தபடியாக பித்ரு தேவர்களும் நீங்கள் அளிக்கின்ற தர்ப்பண சக்தியைக் கொண்டு உங்களுடைய பலவிதமான இன்னல்களைத் தாங்களே ஏற்றுக் கொள்வதும் உண்டு. அதற்காக அவர்களும் பல துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும். பித்ருக்கள் எவ்வாறு துன்பங்களை அனுபவிக்கின்றார்கள் என்றால் இது ஒரு சற்று கடினமான தெய்வீக தாத்பர்யம் ஆகும். ஐந்து வயதுக்குட்பட்ட வரை குழந்தைகள் தெய்வீகம் நிறைந்ததாக இருக்கின்றன அல்லவா! பிறந்த குழந்தைக்கு தெய்வீக சக்திகள் அதிகம். வயதாக, வயதாக அதனுடைய தெய்வீக நிறைவு குறைந்து கொண்டே வந்து கர்மவினைகளின் கிருத்தியங்கள், தாண்டவமாடத் தொடங்குகின்றன. எனவேதான் குழந்தையும் தெய்வமும் ஒன்று என்றார்கள் நம் பெரியோர்கள். சில சமயங்களில் உங்கள் வீட்டுக் குழந்தைகள் திடீரென்று கீழே விழுந்து கையில் காலில் அடிபட்டுக்கொண்டு, ஒரு வாரமாக, பத்து நாட்களாக அவதியுறுவதைக் காண்பீர்கள் ஒன்றுமே அறியாத குழந்தை ஏன் கீழே விழுந்து அடிபட வேண்டும் என்றால் தாய் தந்தையர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களை எல்லாம் அக்குழந்தையானது தெய்வீகத் தன்மையால் தன்னுள் ஏற்று அந்தக் கர்மங்களை அனுபவிக்கின்றது.

அந்தக் கர்மங்களைத் தான் அனுபவிக்க வேண்டும் என்றால் அந்தக் குழந்தை ஏன் அழவேண்டும்? அடிபட்ட குழந்தை அழாவிட்டால் நீங்கள் பயந்து அந்தக் குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது என்று மேலும், மேலும் பீதி அடைந்து விடுவீர்கள் அல்லவா! எனவே விதியை அறிந்தும் அறியாதது போல் தெய்வீகக் குழந்தை செயல்படுகின்றது. எனவே தெய்வீகம் நிறைந்த குழந்தையானது 5 வயதுக்கு உட்பட்ட வரையில், சிலசமயம் 8-9 வயது வரைகூட தன்னுடைய பெற்றோர்களின் கர்மவினைகள் பலவற்றைத் தம்முள் தாங்கி தாமே அத்துன்பங்களை அனுபவித்து விடுகின்றன. இவ்வாறாகப் பித்ருக்கள் பலருடைய துன்பங்களை, அந்தக் குழந்தைகளிடம் ஆன்மச் சக்தியை ஆவாஹனம் செய்து அவர்களும் குழந்தைகளின் தேகத்தில் கூடி அத்துன்பத்தை அனுபவிக்கின்றார்கள். பல சமயங்களில் பெற்றோர்கள் “இந்தக் குழந்தை ஏன் இப்படி அவஸ்தைப்படுகிறது. இதை நாமே அனுபவித்திருக்கக் கூடாதா”, என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். உதாரணமாக ஒரு குழந்தை கீழே விழுந்து கையில் fracture ஆகிக் கட்டுப்போட்டிருக்கும் போது, “இறைவா! ஒன்றும் அறியாத இச்சிறுகுழந்தைக்கு ஏன் இத்துன்பத்தை அளித்தாய்? இதை நாங்களே ஏற்றுக் கொண்டிருக்கலாமே!” என்று பல பெரியோர்கள் கதறி அழுவதைக் கேட்டிருப்பீர்கள். இதற்கெல்லாம் காரணம் என்னவென்றால் பெற்றோர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களைக் குழந்தையானது எளிமையாக்கித் தானே அனுபவித்துப் பெற்றோர்களைக் காப்பாற்றுகின்றது என்பதே ஆகும். சிலசமயங்களில் பித்ருக்களே குழந்தைகளின் உடலில் ஆவாஹனம் ஆகித் துன்பங்களை ஏற்பதுண்டு.!

தாவரமும் தன் சேவை தந்திடுமே!

சில சமயங்களில் நம் வீட்டில் உள்ள தாவரங்களும் விலங்குகளும் கூட நம்முடைய துன்பங்களை ஏற்று அனுபவிப்பது உண்டு நாம் அறியாத வகையில்! உதாரணமாக திடீரென்று நம் வீட்டில் கூட சில செடிகளோ மரங்களோ காய்ந்து விழுவதைப் பார்த்திருப்பீர்கள்! இந்த சிறு காற்றுக்கா மரம் விழுந்து விட்டது என்று நீங்கள் கூட யோசிப்பதும் உண்டு. தமக்குரித்தான சொந்தக்காரர்கள் அனுபவிக்க வேண்டிய துன்பங்களையெல்லாம் மரமோ, தாவரமோ விலங்குகளோ அனுபவித்து நம்மைப் பலவிதமான இடர்களிலிருந்து காப்பாற்றுகின்றன என்பது நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தெய்வீக விஷயமாகும் இவ்வாறாக ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் அவனைச் சுற்றியுள்ளவர்களுடன் பின்னிப் பிணைந்திருக்கிறது என்பதை இனியேனும் நன்கு உணர்வீர்களாக!

நாம் அறியாத ஜீவன்கள் உண்டு இவ்வையகத்திலே!

இந்த பிரபஞ்சத்திலேயே எத்தனையோ கோடி லோகங்கள் உண்டு. நாம் வாழ்கின்ற பூலோகம் ஒன்றே ஒன்றுதான் என்று எண்ணாதீர்கள். விண்ணில் கோடானுகோடி நட்சத்திரங்கள் தெரிவதைப் போல இந்தப் பிரபஞ்சத்திலே எத்தனையோ கோடி பூலோகங்கள் உண்டு. இத்தகைய லோகங்கள் அனைத்திற்கும் சென்று வரக்கூடிய இறை சக்தியைப் பெற்றுள்ளவர்கள்தாம் மஹரிஷிகளும், மகான்களும், யோகியர்களும், சித்புருஷர்களும் ஆவார்கள்! நாம் வாழ்கின்ற இப்பூவுலகிலே மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள், புழு, பூச்சிகள் என்று பலவிதமான பூமிவாழ் ஜீவன்களை நாம்  காண்கின்றோம் அல்லவா! நாம் அறியாத பல பூமிகளில் எத்தனையோ வடிவங்களில் எத்தனையோ ஜீவன்கள் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. பரவெளியிலே, காற்று மண்டலத்திலே நம் கண்ணுத் தெரியாமல் எத்தனை சூட்சுமமான நுண்ணிய ஜீவன்கள் வாழ்கின்றன. காற்றிலே இருக்கின்ற ஒரு சிறு நுண்ணிய கிருமிக்குக் கூட அதனுடைய பிறப்பிற்குரிய காரண காரியங்கள் உண்டு என்றால் நாம் எந்த அளவிற்கு பரந்த அறிவைப் பெற்றால் இறைவனைப் பற்றி, இறைவனுடைய சாம்ராஜ்யத்தைப் பற்றி, சிருஷ்டியைப் பற்றி, பிறப்பு இறப்பு பற்றி எத்தனையோ கோடி ரகசியங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டும். ஆனால் நமக்கு இதற்கு எல்லாம் இந்த வாழ்நாள் போதுமா? இவற்றை அறியத்தான் வேண்டுமா. இயந்திர கதியாக ஓர் மானிட வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போகக் கூடாதா,

இவ்வாறாக வாழ்ந்து நீங்கள் எதைத்தான் சாதிக்கப் போகின்றீர்கள்? கலியுகத்தில் கூட நம்மிடையே லட்சக்கணக்கான மகான்களையும், சித்புருஷர்களையும், யோகியர்களையும் இறைவன் அனுப்பியுள்ளான்., எதற்கு? நம்மைக் கடைதேற்றுவதற்காக, அவர்களை நாடிச் சரணடைந்து நல்வரம் மற்றும் நற்பலன்களைப் பெறுவது நம் கையில் தானே இருக்கின்றது.
இறை நம்பிக்கை இருக்கும் போது இடையில் சற்குரு என்ற ஒரு ஆன்மீகப் பதவி ஏனோ? இதனை ஆன்மீகப் பதவி என்று சொல்வது தவறாகும். ஏனென்றால், சற்குருமார்கள் யாவருமே இறை ஆணையால் இப்பிரபஞ்சத்தில் இறைத் தூதுவர்களாக அனுப்பப்பட்டவர்கள் ஆவார்கள்.

முக்தி, மோட்ச நிலைகளை அடைந்தவர்களாகிய சற்குருமார்களையே இறைவன் தன்னுடைய (Divine Messengers) இறைத் தூதுவர்களாக பூலோகத்திற்கு அனுப்பி சாதாரண மனிதர்களையும் கடைத்தேற்றுவதற்காக, நல்வழி காட்டுவதற்காக அனுப்புகின்றான். ஆனால் நாமே கடவுள் நம்பிக்கை உண்டு என்று சொல்லிக் கொண்டு எதையும் முழுமையாகச் செய்வது கிடையாது. வெறும் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டு, சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு குடும்பத்தைப் பராமரிப்பது மட்டும்தான் வாழ்க்கை என்று எண்ணி வாழ்வோரே அதிகம்!

விலங்கினங்களுடைய வாழ்க்கையுடன் நம் மனித வாழ்க்கையையும் சற்று ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு சாதாரண மண்புழு கூட தன்னுடைய தெய்வீக முன்னேற்றத்திற்காக அரும் பாடுபடுகின்றது என்று சொன்னால் நம்புவீர்களா? மண்புழுக்களுக்கும், எறும்புகளுக்கும் கூட சற்குரு உண்டு. மனிதனைத் தவிர அனைத்து ஜீவன்களுமே தங்களுக்கு உரித்தான சற்குருவை நாடித்தான் செல்கின்றன. ஆனால் மனிதன் மட்டும்தான் பகுத்தறிவு என்று ஒன்றை வைத்துக்கொண்டு கீழ்த்தரமான நிலைக்குச் சென்று கொண்டுடிருக்கின்றான்!

செவ்வாய் உலக குஜபூபதி மக்கள்!

பறக்கும் தட்டுகள் பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். UFO எனப்படும் Unidentified Flying Objects என்று விஞ்ஞான உலகில் குறிப்பிடப்படுகின்ற இவற்றில் தாம் பல லோகங்களிலிருந்து பூலோகத்திற்கும் இங்கிருந்து அங்குமாக பல புது ஜீவன்கள் வந்து சென்று கொண்டிருக்கின்றார்கள்.,\ தினந்தோறும் செவ்வாய் கிரஹத்திலிருந்து பூமிக்கு வந்து இறங்குகின்ற செவ்வாய் மனிதர்கள் ஏராளம் ஏராளம்! செவ்வாய் கிரக மனிதர்கள் என்று நமக்கு புரியும்படியாக சொல்கின்றோமே தவிர அவர்களுக்கு “குஜபூபதிகள்“ என்று பெயர். இவர்கள் அக்னி யோக சக்தி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்களிலும் தீயவழிகளில் தங்கள் சக்தியைப் போக்கடிப்பவர்களும் உண்டு. Negative Forces என்று சொல்லப்படுகின்ற எதிர்வினையாளர்கள் அனைத்து லோகங்களிலும் உண்டு. இவர்களைத்தான் அரக்கர்கள், அசுரர்கள், இராட்சசர்கள் என்று நம்முடைய புராணங்களில் படிக்கின்றோம் இரணியன் போன்ற அசுரர்களும் பல லோகங்களில் உண்டு.

இந்தப் பிரபஞ்சத்திலுள்ள அனைத்து கோடானு கோடி கோளங்களிலும், நட்சத்திர மண்டலங்களிலும், பூலோகங்களிலும், எதிர் வினையாளர்களும் நிறைந்திருப்பதால் நல்லவர்களைக் காப்பதற்காகவே அனைத்து உலகங்களிலும் இறைவன் தம்முடைய தூதுவர்களாக மகான்களையும், சித்புருஷர்களையும், யோகியர்களையும் அனுப்புகின்றான். ஏன் உங்கள் ஊரிலேயே இலைமறை கனியாக வாழ்கின்ற சற்குருமார்கள் உண்டு. ஒருபள்ளி ஆசிரியராக, ஒரு ஏழைத் தொழிலாளியாக, விறகுவெட்டியாக, காய்கறி விற்பவராக, ஒரு IPS அதிகாரியாக, ஒரு மேலதிகாரியாக ஒரு சற்குரு எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் நம்மிடையே வாழ்ந்திடலாம்.

பிரதமை திதி மூர்த்தி வழிபாடு

ஒவ்வொரு திதி தேவதா மூர்த்தியும் சில முக்கியத் தலங்களில் தவ, யோக மார்கமான பூஜைகளை மேற்கொண்டு பெறுதற்கரிய திதி தேவதா சக்திகளைப் பெறுகின்றார்கள். இன்றைக்கும் இத்திதிதேவதா மூர்த்திகள் அவற்றிற்குரித்தான குறிப்பிட்ட தலங்களில் அந்தந்தத் திதியில், மானுட ரூபத்திலோ, அல்லது சூட்சும ரூபங்களிலோ வந்து இன்றும் பூஜைகளை நடத்தித்தான் வருகின்றார்கள். திதி தேவதா மூர்த்திகள் அரும்பெரும் இறை அவதார நிலையைப் பெற்றிருந்த போதும் இறைபூஜைகளை மேற்கொள்வது ஏனோ?

தேவமூர்த்திகளுக்கும் பூஜை உண்டே!

சிருஷ்டி கர்த்தாவான ஸ்ரீபிரம்ம மூர்த்தி சிவ, விஷ்ணு அம்பிகையரை தினமும் பூஜிக்கின்றார் என்றால் மானுடர்களாகிய நாம் எம்மாத்திரம்? எனவே, அனைத்து தேவதா மூர்த்திகளும் முறையான வழிபாடுகளை மேற்கொண்டு அவற்றின் பலாபலன்களை சகல ஜீவன்களின் நல்வாழ்விற்காகவே அர்ப்பணிக்கின்றார்கள், எங்கெல்லாம் திதிதேவதா மூர்த்திகள் வழிபடுகின்றனரோ அங்கெல்லாம் சென்று அவர்கள் அருள்கின்ற அருட்பிரசாதத்தைப் பெற்றால்தானே நாம் காலதேவதைகளின் பரிபூரண நல்வரங்களைப் பெற இயலும்?

எவ்வாறு சில இடங்களில் நெல் கொழித்து விளைகின்றதோ, எவ்வாறு சில மலைத் தலங்களில் , ஏலக்காய் மணங்கமழ விளைந்து கொழிக்கின்றதோ அதேபோல்தான், பிரம்மா, விஷ்ணு, சிவ, ஸ்கந்த விநாயக சக்திகள் தனித்தனியேயும் சேர்ந்தும் அபரிமிதமாக அருள் பொழியும் அற்புதத் திருத்தலங்கள் நிறைய உண்டு. இத்தகைய தெய்வீக ரகசியங்களைத் தக்க சற்குரு மூலமாக அறிந்து நற்பலன்களையும் அரிய வரங்களையும் பெறுவீர்களாக! உதாரணமாக பிரதமை திதி தேவதா மூர்த்தி பூஜிக்கும் விசேஷத் தலமாக விளங்குவது காஞ்சீபுரம் ஸ்ரீகாமாட்சி ஆலயத்தில் உள்ள சிவதீர்த்தம் வளாகமாகும். காமம் எனில் ஆசை என்று பொருள். ஒரு குடும்ப வாழ்க்கையை நடத்தும் போது, முறையான விருப்பங்கள் இருந்திடலாம். ஆனால், முறையற்ற காமமாகிய ஆசைகள் தாம் பேராசைகளாக விரிந்து மனதை அலைக்கழித்து, குடும்ப வாழ்க்கையைத் துன்பமயமாக்கிவிடும்.

பிரதமை மூர்த்தி பூஜிக்கும் ஸ்ரீகாமாட்சி

காஞ்சீபுரம் காமாட்சி ஆலயத்திலுள்ள சிவதீர்த்தமானது அனைத்து விதமான நிராசைகளையும், பேராசைகளையும் தீவினைகளையும், மாய்த்து நல்லொழுக்கத்தையும், பக்தி நிலையையும் பெற்றுத் தருவதாகும். இதற்காகத்தான் பிரதமை திதி தேவதா மூர்த்தி ஒவ்வொரு பிரதமை திதியிலும் இத்தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீகாமாட்சி அம்மனை வழிபட்டு அதன் பலாபலன்களை நமக்கு அருட்பிரவாகமாகப் பொழிகின்றார். ஒவ்வொரு திதி தேவதா மூர்த்தியும் நமக்கு அருள்பாலிக்கும் விசேஷமான வழிமுறைகளும் உண்டு. உதாரணமாக பிரதமை திதி தேவதா மூர்த்தியானவர் ஒவ்வொரு அன்னையின் திருத்தலத்திலுள்ள சிவதீர்த்தத்தில் நீராடி வழிபடுவதால் இன்று இங்கு தக்க அனுமதியுடன் நீராடியோ அல்லது தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டோ ஸ்ரீகாமாட்சி அம்மனை வலம் வந்து பால்பாயாசத்தை ஏழை எளியோருக்குத் தானமளித்து வருவோர்க்கு பாயச பிரசாத கல்ப நாளதேவ மூர்த்தியாக இருந்து கொண்டு பிரதமை தேவதாமூர்த்தி நமக்கு அபரிமிதமான புண்ய சக்திகளைப் பொழிகின்றார். குறிப்பாக புரட்டாசி மாதம் சாரதா நவராத்திரியில் வரும் முதல் திதியான பிரதமை திதியன்று பிரதமை திதி தேவதா மூர்த்தியானவர் மனித ரூபத்தில் காஞ்சீபுரத்தை வலம் வந்து, அனைத்து தேவதா மூர்த்திகளையும் தொழுது, எங்கெல்லாம் பாயசம் பிரசாதமாக அளிக்கப்படுகின்றதோ, அங்கெல்லாம் தானே அறதேவதைகளுடன் பிரசன்னமாகி, பிரம்ம சக்திகளைத் திரட்டி அருள்புரிகின்றார். பலவித அவசரக் காரணங்களால், முறையான தேதி, நாள், கிழமை பார்த்து திருமண முகூர்த்தத்தை நடத்த இயலாமற் போவதுண்டு, இதேபோன்று தொழிற்சாலை  திறத்தல், சீமந்தம் போன்ற சுபகாரியங்களுக்கும் நற்செயல்களுக்கும் நாள், கிழமை பார்க்க முடியாமல் பலவித அசந்தர்ப்பங்கள் ஏற்படுவதுண்டு. மேலும், பரீட்சைகள், அரசுத் துறைத் தேர்வுகள், Interview போன்றவை நாள், கிழமை பார்க்கப்படாது ஏதேனும் ஒரு நாளில் அமைந்து விடுவதால் அந்த நாளானது அதில் பங்கு பெறுவோர்க்கு உரித்தானதாக இல்லாமல் சூன்ய திதி உடையதாகவும், கூடாநாளாகவும், இராகு கால, எமகண்ட நேரத்தை ஒட்டியும் அமைந்திருக்கும்.

இத்தகைய தவிர்க்க முடியாத சூழ்நிலைக் காரணங்களால் அவற்றில் பங்கு பெறவேண்டிய அவற்றைச் செய்ய வேண்டிய கட்டாயம் பலருக்கும் ஏற்படுவதுண்டு. ஏதேனும், அறுவை சிகிச்சையோ, அல்லது மருத்துவ சிகிச்சையோ, எமகண்ட நேரத்திலோ, அல்லது இராகு கால நேரத்திலோ, சூன்ய திதி நாளிலோ அமைந்துவிடலாம். கல்லூரி/ பள்ளித் தேர்வுகளும் சூன்ய திதி, அல்லது கூடா நாள் போன்ற நாட்களிலும் நிகழக் கூடும். இரயில் பிரயாணமோ, விமானப் பயணமோ, எமகண்ட மற்றும், இராகு கால நேரத்திலும் கரிநாளிலும் அமைந்துவிடும். இவற்றையெல்லாம் எவ்வாறு தவிர்க்க இயலும்? தவிர்க்க முடியாமல் போய்விட்டது என்பதற்காகக் காலநிலைக் கோளாறுகளுக்கான தடங்கல்கள் வராமல் போவது கிடையாது. அதற்குரித்தானவற்றை அவரவர் அனுபவித்தே ஆகவேண்டும். எனவே, இத்தகைய சந்தர்ப்ப சூழ்நிலைகளால் நாள், கிழமை, பார்க்க முடியாமல் பல நற்காரியங்களைத் துவங்க நேரிட்டால், அதில்வரும் இன்னல்களை அறிவது எப்படி? இதற்குப் பிராயச்சித்தமே கிடையாதா?

காலக் கோளாறுகளைத் தீர்க்கும் பிரதமை தேவமூர்த்தி!

திதி, நாள், கிழமை பாராது, காலதேவதா மஹிமையை உணராது சமுதாயச் சட்டதிட்டங்கள் அமைந்து விடுமாதலால் இவற்றிலிருந்து மக்களைக் காத்து அவர்கள் இழந்த பல புண்ணிய சக்திகளை மீட்டு அருளவே பிரதமைத் திதி தேவதா மூர்த்தியானவர் பிரதமைத் திதிதோறும், பல முக்கிய தலங்களில் குறிப்பாக காஞ்சீபுரம் காமாட்சி திருக்கோயில் சிவதீர்த்தத்தில் நீராடியும், கால பைரவ பூஜைகளை மேற்கொண்டும் அதன் அருட்பலன்களையும் பெற்று சகல ஜீவன்களுக்கும் அளிக்கின்றார். இந்நல்வரத்தின் பலாபலன்களை நாம் நன்முறையில் பெற பிரதமை நாளில் காஞ்சீபுரம் திருத்தலத்தில், பால்பாயசம் படைத்து பிரதமை திதி தேவதா மூர்த்தியை வணங்கி பாயசத்தை ஏழைகளுக்கு தானமளித்தலால், பலவித சந்தர்ப்ப சூழ்நிலைகளால், நாள், கிழமை, திதி, நல்ல நேரம், சுபமுகூர்த்தம், பார்க்காமல் நடைபெற்ற நற்காரியங்களில் ஏற்படுகின்ற தீவினைகளுக்குத் தக்க பிராயச்சித்தம் பெறலாம். ஆனால் குருவருளும் இதற்குக் கூடிட வேண்டும்.

ஸ்ரீகரியமாலீஸ்வரர் கரூர்

உதாரணமாக, நல்ல நேரங்களில் சுப முகூர்த்தங்கள் பார்க்கப்படாமையால் பலத்த திருமண தோஷங்கள் ஏற்படும். கரிநாளிலும் சில பிரயாணங்கள் ஏற்படுவதுண்டு. கரிநாட்களில் பிராயணமோ, சுப, வைபவங்களோ அமைந்துவிட்டால், அதற்குரித்தான பிராயச்சித்தமாக, கருவூரில் ஸ்ரீகரியமாலீஸ்வரர் என்ற நாமத்துடன் அருள்பாலிக்கின்ற சிவலிங்கப் பெருமானை வழிபடும் முறையைப் பற்றிக் கடந்த இதழில் அளித்திருந்தோமல்லவா! அலுவலகப் பணி காரணமாகப் பல இடங்களிலும் மாநிலங்களிலும் பலரும் அலையவேண்டியதுண்டு. Medical Reps போன்றவர்கள் ஊருக்கு ஊர் மாறிச் சென்று நிலையான வாழ்வைப் பெற இயலாதோரும் உண்டு. இதனால் குடும்பங்கள் பிரிந்து, சிலசமயங்களில் double establishment ஆக இரு செலவுகள் கூடி வாழ்க்கையில் நிதி நிலைமையை ஆட்டிவிடும்., இவ்வாறு நிலையற்ற பணிகளில் இருந்து வாடுவோர் ஏதாவது ஒரு நிலையிலாவது தன்னிலை பெறவேண்டும் அல்லவா? இதற்கும் அருள்புரிபவரே பிரதமை தேவதா மூர்த்தியாவார்.

அரக்கர்களின் அட்டகாசத்தால் பலவித தேவ நிலைகளையும், தேவ லோகங்களையும் இழந்து அல்லலுற்ற முப்பத்து முக்கோடி தேவர்களும், ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் அருளுரையால், அமர்ந்த நிலையில் அம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலங்கட்குச் சென்று பிரதமை திதி தேவதா மூர்த்தியைத் தலைமையாகக் கொண்டு பல அற்புத யாகங்களை நடத்தித் தாங்கள் இழந்த தேவநிலைகளைப் பெற்றனர். எனவே நிலையற்ற பணிகளில் இருந்து பல இடங்களிலும் மாறி,மாறி வாழ்வோர் பிரதமை திதி தோறும், அமர்ந்த நிலையில் அம்பிகை அருள்பாலிக்கும் தலங்களில் (காஞ்சிபுரம், திருவாரூர், சமயபுரம்)  வழிபட்டுக் கிழங்கு வகை உணவுகளை தானமாக அளித்துவந்தால் வாழ்வில் நிலை பெறுவர்... இவ்வாறாக ஒவ்வொரு திதி தேவதா மூர்த்தியும் இன்றைக்கும் வழிபட்டுவரும் அற்புதத் திருத்தலங்கள் நிறைய உண்டு. தக்க சற்குருவை நாடி அறிந்து கடைபிடித்து அதன் பலாபலன்களை அடைவீர்களாக!

அமுத தாரைகள்

1. எந்த வார்த்தையுமோ ஆங்கிலமோ, தமிழோ, தெலுங்கோ, எம்மொழி ஆனாலும் சரி அது இனிமையும், சாந்தமும், இறைமையும்  நளினமும் நிறைந்ததாக அமையட்டும். சாதாரணமாக கம்ப்யூட்டர் துறையில் Modem என்று ஒன்றைக் குறிப்பிடுகின்றார்கள்.. இதன் ஒலியும், உச்சரிப்பும், வார்த்தையும் எதிர்மறை நிழல்களையே காட்டுகின்றன. இதனையே Turner என்றோ Developer என்றோ குறித்திருந்தால் இனிமையாய் அமைந்திருக்கும் IT துறைக்கு நல்லதும் கூட!

2.  புடலங்காயின் பித்ரு ஆசிர்வாத சக்தி – பித்ருசக்திகள் நிறைந்தது புடலங்காய் ஆகும். இதனை வளையம் வளையமாக நறுக்கிச் சமைக்கின்றபோது வட்டச் சுழல் கறியாக இது பல அருட்பலன்களைத் தந்தருள்கின்றது.. ஏனென்றால் வட்டமான பொருட்களுக்கு தெய்வீக நற்கிரணங்களை ஈர்க்கின்ற தெய்வீக சக்தி உண்டு. மேலும், வட்டத்தில் தான் மங்களம் நிறைந்திருக்கும்.. வளையல், பொட்டு, பூர்ண சந்திரன், சூரியன் போன்ற மங்களப் பொருட்கள் வட்டவடிமைக் கொண்டிருப்பதால் விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் புடலங்காயை வட்ட வில்லைகளாக நற்றுக்கிச் சமைத்து பெருமாளுக்குப் படைத்துத் தானமாக அளித்திடில் மூதாதையர்களுடைய ஆசிகள் திரண்டு வரும்.

ஆகஸ்ட் 2000 பௌர்ணமி :- 14.8.2000 திங்கட்கிழமை காலை 8.39மணி முதல் 15.8.2000 செவ்வாய் காலை 10.43 மணி வரை பௌர்ணமி திதி அமைகின்றது.. பௌர்ணமி கிரிவல நாள் : 14.8.2000 திங்கட்கிழமை இரவு.

நித்திய கர்ம நிவாரணம்

அந்தந்த நாளில் வலுவான ஆட்சியைப் பெற்றிருக்கும் தீர்க்கமான பார்வையை உடைய திதி, நட்சத்திரம், யோகம், கரணம், லக்னம், கிரகங்களின் தன்மைக்கேற்ப அந்நாளுக்குரிய விசேஷ பூஜை/ வழிபாடு முறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடித்தால், குருவருளால் ஒவ்வொரு நாளையும் தீய கர்மவினைகளின் கழிப்போடு மேலும் எவ்விதமான புதிய தீவினைகளும் சேரா வண்ணந் தடுத்து சாந்தமான நித்ய வாழ்வைப் பெற்றிடலாம்.

1.8.2000 – சங்கு சக்கர தாரியாக இருக்கின்ற முருகனுக்குத் தேன் அபிஷேகம் செய்து தேன் குழல், முறுக்கு தானம் – சூழ்நிலை சந்தர்ப்பங்களால் நீண்ட நாள் வேலைக்குப் போகாத கணவன்மார்கள் வேலை தேடிச் செல்வார்கள்.

2.8.2000 – சயனக் கோலத்தில் இருக்கும் அம்பாளின் பாதத்திற்குப் புஷ்பம் சூட்டி 10 பேருக்காவது அன்னதானம் செய்திடில் அன்பும் அழகும் கூடிய மனைவி இருக்க முறையற்ற காம உணர்வுகளுடன் பிறரை நாடும் கணவன் மனம் திருந்துவான் ... (சயனக் கோலம் – படுத்த நிலை)

3.8.2000 – நீல நிற, பச்சை நிற (பூனைக்) கண்களை (Brown) உடைய பெண்கள் வாழ்க்கையில் தவறு செய்யக் கூடிய நாள் – கவனமாய் இருத்தல் வேண்டும்.

4.8.2000 – கர்ப்பம் தாங்கியுள்ள பெண்மணிகளை இன்று கவனமாய் பார்த்துக் கொள்ள வேண்டும். வீணான பிரச்சினைகளில் அவர்கள் குழப்பமடையக் கூடிய நாள்.

5.8.2000 – குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதெற்கென்றே சில பச்சோந்திக் கூட்டங்கள் குடும்பத்திற்குள்ளேயே இருக்கும். இவர்களை இனம் கண்டு வீட்டை விட்டு வெளியேற்றும் நாள் இது.!

6.8.2000 – இன்று கையெழுத்துப் போடுவதில் கவனம் தேவை. நன்றாய் ஆலோசித்துக் கையெழுத்து இடவும்.

7.8.2000 – சுருக்கெழுத்தாளர்கள் (Stenographers) இன்று கடிதங்களை எழுதுவதிலோ விளக்குவதிலோ அதிக கவனம் தேவை. சிறுவார்த்தை மாற்றங்களால் துன்பம் அடைவர்.

8.8.2000  - உண்மையான அன்புடன் காதல் பூண்டு இருப்பவர்கள் இன்று எந்தக் காரணத்தைக் கொண்டும் சந்திக்க வேண்டாம். இவர்கள் சந்திப்பு சோதனையில் முடியும்.

ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தென்கடம்பை

9.8.2000 – மதிமயக்கம் ஏற்படுகின்ற நாளாதலின் வயதான பெண்கள் இளைஞர்களைக் காதலிக்க முற்படும் நாளிது. இளைஞர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

10.8.2000 – எண்ணெய்ச் செக்கு ஆட்டுவோர்களுக்கு அன்னதானம் செய்திட குடும்பத்தில் குழப்பங்கள் தீரும்.

11.8.2000 – நன்றாகப் படிக்கின்ற மாணக்கர்களுக்குப் படிப்பிற்கு உரித்தான சகாயங்களை அளித்தலால் ஞாபக மறதியால் வருகின்ற துன்பங்கள் விலகும்.

12.8.2000 – கல் உடைக்கும் தொழிலாளர்களுக்கு இன்று உணவு, உடை தானம் – உத்யோகத்தில் எதிர்பாராத விதத்தில் பல பழிகளைச் சுமத்தி நம் தலைமீது கல்லைத் தூக்கிப் போடுபவர்களிடமிருந்து தப்பிக்கலாம்.

13.8.2000 – கருமான் பட்டறை (இரும்பு உருக்கும்)யில் உலை ஊதுபவர்களுக்கு வேலை செய்பவர்களுக்கு உணவு, உடை தானம் – அவசரத் தேவைகளுக்குக் கடன் உதவி பெறுவர்.

14.8.2000 – சிகை அலங்காரம் செய்கின்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு ஹேர் கட்டிங், கத்திரிக் கோல், ஹேர் கட்டிங் மெஷின் வாங்கித் தானம் அளித்திடில் வருமானம் இல்லாமல் காய்ந்து போன குடும்பம் சிறிது சிறிதாக வருமானம் பெறும்.

15.8.2000 – குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்குவோர் குழந்தை பாக்யம் அருளக் கூடிய ஆலயங்களில் உள்ள மரங்களில் தொட்டிலைக் கட்டிக் குழந்தை பிறந்த பின் நன்றிக் கடன் செலுத்த மறந்தவர்கள் நன்றிக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய நாளிது, இதனை விட்டால் இத்தகைய சிறப்பான நாள் வாழ்வில் இதற்காக மீண்டும் வராது.

 16.8.2000 – அவரவர் ராசிச் சக்கர மோதிரங்களை இன்று முதல் அணிய வேண்டிய நாளிது. இதனால் தொழிலில் நல்லதொரு திருப்பம் ஏற்படும்.

17.8.2000 – பேக்கரி (Bakery) கடையில் வேலை செய்யும் ஏழைச் சிறுவர்களுக்கு உணவிட்டு ஆடைதானம் செய்திடில் தொழிலில் செய்த சிறு தவறுகள் பெரிதாகாமல் அடங்கும்..!

18.8.2000 – சாம்பிராணி தூபம் போடுகின்ற ஏழைகளுக்கு உணவு ஆடை தானம் செய்திடில் வியாபாரத்தில் நல்ல மாற்றங்களைக் காணலாம்.

19.8.2000 – மேற்கு பார்த்து அருள்புரியும் சனீஸ்வர மூர்த்திக்கு (உதாரணம் சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம், தென்கடம்பை) கருவேப்பிலை சாதம் படைத்து ஏழைகளுக்கு தானமாய் அளித்திடில் கருப்பண்ணன், கந்தசாமி, கருப்புசாமி, கரும்பண்ணன் போன்ற பெயர் உடையவர்கள் தொழிலில் முன்னேற்றம் காண்பர்.

20.8.2000 – செருப்புத் தைக்கும் கூலியாட்களுக்கு உணவு, ஆடை தானம், ஊசி நூல் தானம் செய்திடில் கணவன் வீட்டிற்குச் சென்று தாய் தந்தையைக் காண முடியாமல் தவிக்கும் பெண்களுக்கு தாய் தந்தையைக் காணும் பாக்கியம் உடனே கிட்டும்.

21.8.2000 – கலப்பை, ஏர், நுகத்தடி செய்யும் தச்சுத் தொளிலாளர்களிடம் கலப்பை ஆர்டர் கொடுத்துச் செய்து அதை ஏழை விவசாயிகளுக்குத் தானமாக அளித்திடில் விவசாயத்தில் நல்ல மகசூல் பெருகும்.

22.8.2000 – ஆட்டோ மொபைல் (ஸ்பேர் பார்ட்ஸ்) உதிரி பாகங்கள் விற்கின்றவர்கள் தங்கள் ஸ்டாக் (Stock) கணக்குகளைச் சரிபார்க்க வேண்டிய சுப நாளிது. நஷ்டங்களைத் தவிர்த்திடலாம்.

23.8.2000 – மின்சார உற்பத்தித் துறையில் இருக்கின்றவர்கள் இன்று பெரிய Projectகளை அமுல்படுத்த வேண்டாம். சிறிது தள்ளி வைத்துச் செய்திடில் எதிர்பாராது வரும் பிரச்னைகளைச் சமாளிக்கலாம்.

24.8.2000 – இன்று கால்நடைகளுக்கு இலவச மருத்துவம் செய்திடில் தொழிலாளர்களுடைய அன்பினைப் பெறலாம். முதலாளிகளே தெரிந்து கொள்ளுங்கள்

25.8.2000 – கேஸ் (Gas) கடையில் வேலை செய்கின்றவர்கள் Gas Refill பணி செய்கின்றவர்கள், சமையல் கேஸ் கம்பெனிகளில் இருப்போர் இன்று கவனமாக இருத்தல் நலம். வீணான பழி தலையில் விழும் நாளிது.

26.8.2000 – வயதானவர்கள் தடுக்கி விழும் சந்தர்ப்பம் உள்ள நாளிது – கவனம் தேவை.

27.8.2000 – நெய் வியாபாரிகளுக்கு இன்று சோதனையான நாள்- ஜாக்கிரதையாக இருக்கவும்.

28.8.2000 – ஆயில்ய நட்சத்திரப் பெண் குழந்தைகளுக்குத் தாய் தந்தையரின் அரவணைப்பு அன்பு அதிகமாக தேவைப்படும் நாளிது.

29.8.2000 – எருமைகளுக்கு வயிறார உணவிட வேண்டிய நாளிது. இதனால் நோய் பயத்திலிருந்து விடுதலை பெறலாம்.

30.8.2000 – இன்று பொன்னாங்கண்ணி செம்பருத்தி, சந்தனாதித் தைலங்களை ஏழ்மையால் தலை காய்ந்திருக்கும் ஏழைகளுக்குத் தானமாய் அளித்திடில் மனைவி வழி குடும்பத்தால் உதவி பெறுவர்.

31.8.2000 – வீடு இல்லாமல் தெருவே வீடாக இருக்கின்றவர்களுக்கு இலவசமாக குடிசை அமைத்துக் கொடுத்தல் – நில புலன்களில் வருகின்ற நஷ்டங்கள் தீரும்.

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam