அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சதாபிஷேகம்

அக்காலத்தில் 80 வயது நிறைந்து சதாபிஷேகம் கொண்டாடும் தம்பதிகளை ஆயிரம் பிறைகள்  கண்டோர் என்று போற்றி வணங்கி ஆசி பெறுதல் உண்டு. உண்மையில் மூன்றாம் பிறை தரிசனத்தை ஆயுள் முழுதும் ஒரு வைராக்கியமாகக் கொண்டு தொடர்ந்து பலர் தரிசிப்பதுண்டு.
இவ்வகையில் ஆயிரம் மூன்றாம் பிறைகளை முறையாக இடைவிடாது தரிசித்த உத்தம சங்கர ஞானியே “கனிந்த கனி” என்று சித்த புருஷர்களால் போற்றப்படும் பரமாச்சார்யார் ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். இன்றும் ஜீவசமாதியில் அருளை வாரி வழங்கும் ஞான புருஷர் , காஞ்சியில் இவருடைய ஜீவசமாதியைத் தரிசனம் செய்வதற்கான ஆன்மீக வழிமுறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரரேசுவரர் ஆலய வாயிலில் சில ஆண்டுகள் முன்புவரை அமர்ந்து அன்றும் இன்றும் என்றும் அருள் மழை பொழியும் “ஸ்ரீபோடா சித்தரின்” மகத்துவங்களை ஒரு சிலரே அறிவர். ஸ்ரீபரமாச்சார்யாள். ஸ்ரீபோடாசித்தர் இருவரையும் தரிசிக்கும் பாக்யம் பெற்றோர் ஒரு சிலரே.

கடுமையான மூலவியாதியால் அவதியுறுவோர் தஞ்சை பிரஹதீஸ்வரர் ஆலயப் பெரிய நந்தீஸ்வரருக்கு எண்ணெய்க் காப்பிட்டு நந்திமண்டபத்தைச் சுத்தம் செய்யும் உழவாரத் திருப்பணியைப் பலருடன் சேர்ந்து செய்துவர அற்புதமான முறையில் குணமேற்படும்.

ஆயிரம் மூன்றாம் பிறைகளுக்கு மேல் சந்திர தரிசனம் பெற்ற ஸ்ரீபரமாச்சார்யாள், பல யுகங்கள் வாழ்ந்து பல கோடிக்கணக்கான மூன்றாம் பிறை கண்ட ஸ்ரீபோடாசித்தர் சுவாமிகள் இவர்களுடைய திருமேனிகளைச் சுமந்த காஞ்சியின் பெருமையை எழுத்தில் வடிக்கவா இயலும்?
ஸ்ரீபோடா சுவாமிகளின் ஜீவசமாதி காஞ்சிபுரத்திலேயே அமைந்துள்ளது. ஆயிரம் பிறை கண்ட ஞானிகள், சித்தபுருஷர்கள், யோகிகளின் தரிசனம், அல்லது அவர்தம் ஜீவசமாதி தரிசனம் மிகவும் விசேஷமானதாகும்.
ஸ்ரீபோடா சுவாமிகள், ஸ்ரீபரமாச்சார்யாள், இருவரின் ஜீவ சமாதிகளின் ஆன்மீக இரகசியங்களையும் ஜீவசமாதி தரிசன முறைகளையும் தக்க சற்குருவை நாடி அறிந்து அனைவரும் பயன் பெறுதல் வேண்டும்.
மூன்றாம் பிறை தரிசனம் பெற்ற ஒரு முகூர்த்த நேரத்திற்குள் ஸ்ரீபரமாச்சார்யாளின் ஜீவசமாதியை அடிபிரதட்சிணம் செய்து அபிஷேக, ஆராதனைகளுடன் வணங்கி வழிபடுவது உத்தமப் பலனளிக்கும் இத்தகைய தரிசனம் மனக்குழப்பங்களைத் தீர்க்க வல்லதாகும்.
இதே போன்று மூன்றாம் பிறை சந்திர தரிசனம் பெற்ற ஒரு நாழிகைக்குள் காஞ்சியிலுள்ள ஸ்ரீபோடா சித்த சுவாமிகளின் லிங்க சொரூப தரிசனம் கண்டு பசுநெய் விளக்கேற்றி வழிபடுவதால், திருமணத் தடங்கல்கள் நீங்கும், விவாகரத்து நிலையிலுள்ள தாம்பத்ய உறவு கூட சுமூகமாக ஒன்று கூடும். இவையெல்லாம் நிகழ்வது ஆயிரம் பிறை கண்ட அற்புத மஹான்களின் அருட்கருணையாலன்றோ ! இவ்வாறாகச் சித்த புருஷர்கள் அருளியபடி மூன்றாம் பிறை தரிசனத்தை முறையோடு செய்தால்  தெய்வானுக்ரஹத்தை நிரம்பப் பெற்று ஆனந்த வாழ்வெய்தலாம்.

மூன்றாம் பிறை சந்திர தரிசனம்

மூன்றாம் பிறைச் சந்திரன் மிகவும் விசேஷம் வாய்ந்ததாகும். சிவபெருமான் தன் சிரசில் மூன்றாம் பிறைச் சந்திரனையே சூடி “சந்திரமௌளீஸ்வரனாக” அருள்பாலிக்கின்றார். வானத்தில் சில நொடிகளே காட்சி தரும் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனமே மிகவும் அபூர்வமான தெய்வ தரிசனமாகும். இந்தச் சந்திர தரிசனம் கிட்டும் போதெல்லாம் “ஸ்ரீ சந்திரமௌளீஸ்வராய நம: ஸ்ரீசந்திர மௌளீஸ்வரா போற்றி” என்று இடைவிடாது துதித்து  வந்தால் மனம் சாந்தமடைவதோடு அறிவு ஒளிபெற்றுத் தெளிந்த மனோ நிலையைப் பெறலாம். இதனால் எக்காலத்திலும், எந்நிலையிலும் மனவியாதிகள், மனோபீஷடங்கள் கோமா போன்ற அறிவு மயக்க நிலைகள் உண்டாகாது.
மூன்றாம் பிறை தரிசனம் பற்றி ஸ்ரீஅகஸ்தியர்
“பிறை மூன்று பார்ப்பது பெருங்கடினம் பாரேன்
புரையோடிய பாவச்செயலிலிருந்து
திரையிட்டுக் கவனமாய்ப் பார்த்திடுவோர்க்கு

திருச்சி அருகே குணசேகரம் (குணசீலம்) சிவாலயத்தில் அடிப் பிரதட்சிணம் செய்து வெண்ணிற ஆடைகளை ஏழைகளுக்கு அளித்து வர எவ்வகைத் தோல் வியாதிகளுக்கும் இது நிவாரணமளிக்கும்.

முறையான பிறைமூன்று கிட்டிடும் பாரேன்” என்று பாடுகிறார்.
பெரும்பாலானோர் மூன்றாம் பிறையென எண்ணி நான்காம் பிறையைத் தரிசிப்பர். மூன்றாம் பிறையன்று, சந்திரபகவான் தாம் ஈசனின் சிரசில் சென்றமர்ந்த வைபவத்தைக் கொண்டாடி மகிழ்கின்றார். பிரதோஷம், விஷ்ணுபதி போன்ற புனித நேரங்களைப் போல் மூன்றாம் பிறை தரிசன நேரம் மிகவும் புனித நேரமாகும் .உண்மையில் இதுவே சிவபெருமானின் சிரசில் கங்காதேவியின் அருகில் சந்திரன் அமர்ந்திருக்க சந்திரமௌளீஸ்வர தரிசனமாகும்.
எனவே மூன்றாம் பிறையன்று நாம் காண்பது வெறும் சந்திர தரிசனமன்று. ஈஸ்வரனின் சிரசு அம்சத்தின் ஒரு தலையாய பகுதியையே நாம் தரிசிக்கின்றோம். காணக்கிட்டாத தரிசனம் இது! இதில் சாட்சாத் பரமேஸ்வரனின் சிரசின் பகுதியையே நாம் காணும் பாக்கியம் பெறுகின்றோம். இச் சந்திர தரிசனத்தின் முழுப் பலன்களைப் பெறும் முறையாக சித்த புருஷர்கள் அருள்வதாவது :
மூன்றாம்பிறை தரிசன முறை : பொதுவாக அமாவாசைத் திதியிலிருந்து மூன்றாம் நாள் அமைவதே மூன்றாம் பிறை தரிசனம்.
பித்ருபூஜை :- அமாவாசையன்று முறையானத் தர்ப்பணங்கள், பித்ருசாந்தி ஹோமம், அன்னதானம் போன்றவற்றை நிறைவேற்ற வேண்டும். அமாவாசையன்று 12 ஸ்வயம்பு லிங்கங்களைத் தரிசனம் செய்து பில்வாஷ்டகம் துதித்தல், வில்வதள அர்ச்சனை போன்ற சிவ பூஜைகளை முறையாக்ச் செய்தல் வேண்டும். சென்னை, திருச்சி, மதுரை போன்ற நகர்ப்புற பகுதிகளில் 12 ஸ்வயம்பு லிங்க தரிசனம் எளிமையாக அமைந்துவிடும். ஆனால் கிராமப்புற மக்கள் என்ன செய்வது? இவர்கள் ஸ்ரீகாசிவிசுவநாதர், காலபைரவர், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி போன்ற 12 சிவாம்ச மூர்த்திகளையேனும் தரிசிக்க வேண்டும். தரிசனம் செய்யும் இடங்களில் தங்களால் இயன்றளவு தானதருமம் செய்தல் உத்தமமானது .
உபவாசம் :- அமாவாசையன்று பித்ருபூஜை, 12 சுயம்புலிங்க தரிசனம் இவற்றிற்குப் பிறகு மாலை முதல் உபவாசத்தைத் துவங்க வேண்டும். இவ்வுபவாசம் மூன்றாம் பிறை சந்திர தரிசனம் வரை நீடிக்கும். நீர் மட்டுமே அருந்தக் கூடிய உன்னதமான உபவாசம்.
நாம ஜபம் :- அமாவசைக்கு மறுநாள் மாலை 3 மணிக்கு மேல் மேற்கில் அமர்ந்து, ஸ்ரீசந்திரமௌளீஸ்வராய நம: ஸ்ரீசந்திரசூடாய நம:
என்று துதித்தவாறே/பாடியவாறே சிவத்தியானத்தில் அமர வேண்டும். கூட்டு நாம சங்கீர்த்தனமும் மிகவும் சிறந்ததாகும். இரவு சுமார் 7மணி வரை தியானம்/பஜனை செய்தல் வேண்டும்.
மூன்றாம் பிறை தரிசன நேரம்
பஞ்சாங்கத்தில் பொதுவாக்ச் சந்திர உதயநேரம் என்று குறிப்பிட்டிருந்தால் கூட மூன்றாம் பிறை தரிசனம் ஜோதிட, மானுட கணிதத்திற்கும் அப்பாற்பட்டது ஆகும் இத்தரிசனம் அளப்பரிய அனுக்ரஹங்களைத் தரவல்லது என்பதால் மூன்றாம் பிறை தரிசனம் சூட்சும ரகசியமாகவே அமைக்கப்பட்டுள்ளது. அமாவாசைத் திதி பிறக்கும் நேரத்தைச் சரியாகக் கணக்கிட்டால் மூன்றாம் பிறை தரிசனம் இரண்டாம் நாளே தோன்ற வாய்ப்புண்டு. மிகவும் அபூர்வமாக அமாவாசையன்றோ அதற்கு அடுத்த நாளோ மின்னல் கீற்றுப்போல் சந்திர தரிசனம் தோன்றி மறைவதுண்டு. மேற்கண்ட பூஜைமுறைகளுடன் ஆன்மீக சாதனை அமைந்திடில் அவர்கட்கு நிச்சயமாக மூன்றாம் பிறை தரிசனம் தெய்வானுக்ரஹத்தால் கிட்டும். எனவே மூன்றாம்பிறை தரிசனம் பெற அமாவாசைக்கு மறுநாளே மாலையில் நாம ஜப தியானத்தில் ஈடுபட வேண்டும். இவ்வாறு இரண்டாம் நாளன்றும், பிறை தரிசனம் கிட்டாவிடில் நவக்ரஹத்தையோ அல்லது சந்திரபகவான் தனித்து எழுந்தருளியிருக்கும் சந்நிதியில் அம்மூர்த்தியையோ வலம் வந்து ஏழைகட்குச் சர்க்கரை கலந்த பால் தானம் அளிக்க வேண்டும்.
மூன்றாம் நாளன்று மாலையில் மீண்டும் மேற்கு நோக்கி அமர்ந்து சந்திர மௌளீஸ்வர நாம ஜபத்தைத் துவங்க வேண்டும். சந்திர தரிசனம் கிட்டும்வரை இதனைத் தொடரவேண்டும் சிலசமயங்களில் மானுடக் கண்களுக்குத் தோன்றாமல் இருக்குமே தவிர பலவித ஜீவன்களுக்கு நிலா நிச்சயமாகக் காட்சி அளிக்கின்றது. இதன் தாத்பர்யம் என்னவெனில் அவனருளாலே அவன் தாள் பணிதல் போல, எவ்வித தரிசனத்தையும் இறைவன் அருளால் தான் கிட்டும்/பெறலாம் என்பதைப் பரிபூரணமாக உணர்வதே!
இது கிட்டவில்லையே, அதைப் பெற்வில்லையே என ஏங்காது “இறை அருளால் முயற்சி செய்தோம், அத்துடன் நம் பணி முடிந்தது. முடிவு இறைவன் விருப்பமே”. என்ற தெளிந்த அறிவைப் பெறுதலே சந்திர தரிசனத்தின் முக்கிய அம்சமாகும். இவ்விதத் தெளிந்த மதிநுட்ப அறிவே மதிகாரகனாகிய ஸ்ரீசந்திரபகவான் அருளும் அற்புத ஆன்மீக சக்தியாகும்.

ஜேஷ்டா தேவி

அடியார் : குருதேவா! ஸ்ரீதேவிக்கு மூத்தவளென்று அழைக்கப்படும் மூதேவியன்றோ ஜேஷ்டாதேவி! தரித்திரம், சோம்பல், தூக்கத்தை அளிப்பவளெனக் கருதப்படுகின்றதே!
சற்குரு : அறியாமை காரணமாக அத்தகைய கருத்து நிலவுகின்றது. பாற்கடலில், ஸ்ரீலக்ஷ்மி தேவிக்கு முன் தோன்றியவள் என்பதால் ஸ்ரீஜேஷ்டா தேவியை திருமகளுக்கு மூத்தவள் என்று கூறுகிறோம். உண்மையில் தூக்கம், சோர்வு, அசதி இவையனைத்தும் ஒவ்வொரு மனிதனுக்கும் குறித்த அளவில் தேவையானவையாம். சோர்வு ஏற்பட்டால் தான் ஒருவன் ஓய்வெடுத்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுச் செயலாற்ற முடியும். தூக்கமிருந்தால் தான் ஒருவன் ஆரோக்யமாக வாழ முடியும்.
எனவே ஒவ்வொரு ஜீவனும் ஸ்ரீஜேஷ்டா தேவியை தின்ந்தோறும் வழிபட்டேயாக வேண்டும் இது ஓர் ஆன்மீக இரகசியமாக இதுவரை இருந்து வந்துள்ளது. இன்று நீ விளக்கம் கேட்டமையால் எம் சற்குருவின் குருவருளால் இதனை அளிக்கின்றோம். கேளுங்கள் தரப்படும். இவ்விளக்கத்தை அனைவருக்கும் அறிவித்து எல்லோரும் இதனால் பயனடையச் செய்வது உன்னைப் போன்ற இறையடியார்களின் கடமையாகும். சுய நலமின்றி எல்லோரும் இன்புற்றிருக்கும்படி வாழ்வதே சத்சங்கத்தின் முதல்  குறிக்கோளாகும்.

வாழ்க்கையில் ஏதேனும் ஒரு காரியத்திற்காக் (வீடு வாங்குதல், திருமணம், வேலை வாய்ப்பு, தீர்த்த யாத்திரை) பல முறைகள் முயற்சித்தும் பலன் கை கூடாமல் இருந்திருக்கலாம். இத்தகையோர் சென்னை பல்லாவரம் அருகிலிருக்கும் திருநீர் மலையில் பெருமாளை தரிசித்து பானகம் ( நீர் + வெல்லம் + ஏலக்காய்) ஏழைகளுக்கு வழங்கிவர எத்தகைய முறையான காரியமும் நிறைவு பெறும்.

அடியார்: ஸ்ரீஜேஷ்டா தேவி வழிபாடா! இதன் மஹிமை யாதோ குருதேவா? ஸ்ரீஜேஷ்டா தேவிக்கு சிலா ரூபம் உண்டா?
சற்குரு: கும்பகோணம் ஸ்ரீஆதி கும்பேஸ்வரர் கோயில், பவானி ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம், காசிசேஷத்திரம் போன்ற இடங்களில் ஸ்ரீஜேஷ்டாதேவிக்குச் சிலாரூபங்கள் அமைந்துள்ளன. கலியுகத்தில் ஏழ்மை, வறுமை, தரித்திரம், பணக்கஷ்டம் ஆகியற்றால் பல குடும்பங்கள் கஷ்டப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை செல்வக் குறைபாட்டைக் குறிக்கின்றது. தரித்திரம் நீங்கிட ஸ்ரீஜேஷ்டா தேவியின் வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.
அடியார்: தரித்திரம் நீங்கிட ஸ்ரீலக்ஷ்மி தேவி பூஜையன்றோ விதிக்கப்பட்டுள்ளது குருதேவா?
சற்குரு: (புன்முறுவலுடன்) உண்மையே! முறைவான ஸ்ரீலக்ஷ்மி பூஜையில் ஸ்ரீஜேஷ்டா தேவியின் துதியும் அடங்கியுள்ளது என்பதைப் பலர் அறியார். செல்வம் வந்தால் போதுமா?அது விரயம் ஆகாமல் தங்கி, நின்று, வளர்ந்து செழிக்க வேண்டாமா? லாட்டரியில் இலட்சம் பெற்று ஓட்டாண்டி ஆனவர்கள் உண்டு. செல்வச் செழிப்பில் மிதந்து நடுரோட்டிற்கு வந்தவர்களும் உண்டு.
தரித்திரம் நீங்கினால்தான் செல்வம் நிலைத்து நிற்கும், ஐஸ்வர்யமாகப் பெருகும். இதற்கு ஸ்ரீஜேஷ்டா தேவியின் அருள் நிரம்ப வேண்டும்!
அடியார் : “தனாகர்ஷ்ண” மூலிகை, மற்றும் யந்திரத்தைப் பூஜிப்பதின் மூலம் செல்வம் பெருகும் அன்றோ குருதேவா?
சற்குரு : முற்றிலும் உண்மையே! ஆனால் இந்த மூலிகையைப் பெறுவதற்குச் சில விதிமுறைகள் உண்டு. இன்ன திதி, நட்சத்திரம் , ஹோரையில் அதனைப் பறித்து அம்மூலிகைக்குரித்தான தேவதையை முறையோடு பூஜித்து அம்மூலிகையப் பயன்படுத்தினால் தான் முழுப் பலன்களையும் பெறலாம் என்ற நியதியும் உண்டு.
இதே போல் இந்த மூலிகை, யந்திரத்தை எவ்விதக் கட்டணமும் வசூலிக்காமல் பரந்த சேவை மனப்பான்மையுடன் அளித்தால் தான் அவற்றில் ஸ்ரீலக்ஷ்மியின் ஆவாஹன சக்தி பல்கிப் பெருகும் .மேலும் தனாகர்ஷண யந்திரத்தில் தேவிக்குரிய பீஜாட்சரங்கள், கோணங்கள் நன்கு அமைக்கப் பெற்றிருக்க வேண்டும்.
இத்தகைய கடுமையான நியதிகளைக் கொண்டது தனாகர்ஷண தத்துவம். எனவே குருவருளுடன் இதனை, முறையாகக் கடைப்பிடித்து எவ்வித சுயநல, பொருள் சேர்க்கும் எண்ணமின்றிப் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும்.
ஸ்ரீஜேஷ்டா தேவி சித்த புருஷர்களின் விளக்கங்கள்
பாற்கடலில்.................. மேரு மலையை மத்தாகக் கொண்டு, வாசுகி நாகம் கயிறாகிட, ஸ்ரீமஹா விஷ்ணு மத்தைத் தாங்குவதற்காக கூர்ம அவதாரம் பூண்டிட......எத்தனையோ கோடி திரவியங்கள், மூர்த்தங்கள், தேவதா மூர்த்திகள் தோன்றினர், ஆனால் நாம் அறிந்ததோ ஜராவதம், உச்சிரவஸ், ஜேஷ்டா தேவி, திருமகள், கற்பக விருட்சம், கௌஸ்துபம் போன்றவையே!. ஆனால் சித்த புருஷர்களோ எண்ணிறந்த விளக்கங்களை அளிக்கின்றனர். பாற்கடலில் விஷம் திரண்டதல்லவா, அது ஆலகால விஷம் என்று தானே எண்ணுகிறோம்! ஆலகால விஷம் திரளுமுன்......
.... இதேபோல் பாற்கடலில்............ “அமிர்தத்தை நாமே பெற வேண்டும். உண்டால் இறப்பின்றி வாழ்ந்து எதிரிகளை வெல்லலாம்” என்று நினைத்தவாறே அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தனர். இதுவும் ஒருவகையில் சுயநலமான எண்ணந்தானே! “அமிர்தம் பெற்றால் அதை இறைவனுக்குச் சமர்ப்பிப்போம்! இறைவனின் ஆணைப்படி அமிர்த விநியோகம் நடைபெறட்டும்”- என்று எண்ணியிருந்தால் அது ஓர் உத்தமமான எண்ணமாக அமைந்திருக்கும் அல்லவா! என் செய்வது! அதனதன் விதிப்படித் தானே எதுவும் நடக்கும். “அமிர்தத்தை நாமும் உண்டு மகிழலாம்!” என்ற கோடானு கோடி தேவ, அசுரர்களின் (மாசுபடிந்த) சுயநல எண்ணமே பாற்கடலில் ஒருவகை விஷமாகத் திரண்டது! புனிதமான பாற்கடலில் சுயநல நினைவுகள் படரலாமா? அவையே “மனோபாஷான விஷமாகத் திரிந்து பொங்கியது!
இது மட்டுமா!  “நாம்   அமிர்தம்          உண்டு அசுரர்களை அழிப்போம்” என்ற எண்ணமே “விஷமான” எண்ணமாயிற்றே! இத்தகைய விஷ எண்ணங்களும் புனிதமான பாற்கடலில் சேரலாகுமா? இவை பிறிதொரு “துர் பாஷாண” விஷமாகத் திரண்டது! நாகங்களின் தலைமைப் பீடமான வாசுகிக்கு உதவும் பொருட்டு கோடானு கோடி நாகங்கள் வாசுகியின் திருமேனியில் “இறுகிய பிடிகளாய்” ஒன்றின.
 தேவர்களும் அசுரர்களும் “வாசுகியாம்” கயிறை முறுக்கிப் பிடித்து இழுத்துக் கடைந்திட.... வாசுகியும் அனைத்து நாகங்களும் தம் விஷத்தைத் கக்கிட..... அவ்விஷமும் பாற்கடலில் திரண்டதே! இம்மட்டோ! அமிர்தத்தைப் பெறுகின்ற சுயநல “வெறியில்” தேவர்களும் தங்கள் நித்ய பூஜைகள், அனுஷ்டானங்களை மறந்தனர். இதன் சாபங்களும் தோஷங்களும் விஷமாக மாறின. இவ்வாறாக ஆலகால விஷத்திற்கு முன் பலவிதமான விஷங்கள் ஒன்று திரண்டன.
இவ்விஷ சக்தி என்னவாயிற்று?
ஆலகால விஷத்தினைக் கண்டு அஞ்சி ஓடிய தேவர்களும் அசுரர்களும் இவ்விஷசக்தியால் பாதிக்கப்பவில்லையா? அல்லது இதனை எவ்வாறு சமாளித்தார்கள்?

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

வைகுண்டத்தில் ............. ஸ்ரீ நாராயணீ, ஸ்ரீபெருமாளிடம் விண்ணப்பம் செய்து கொண்டிருந்தார். என்ன பிரார்த்தனையோ அது? “பாற்கடலில் அமிர்தம் பெறும் வைபவத்தில் தேவதா மூர்த்திகளெல்லாம் கூடப் பங்கேற்கின்றார்கள், பிரம்மா, ஆதிசேஷன், தங்களின் அம்சமான கூர்மமூர்த்தி, மேரு மூர்த்தி.... இவ்வாறாக ஒவ்வொருவருக்கு ஒரு பங்கு......” என்று விவரித்த ஸ்ரீ நாராயணீ, “எனக்கு ஒரு பங்கும் கிடையாதா?” என்று கேட்டிட,
ஸ்ரீ நாராயண மூர்த்தி, புன்னகை செய்தவாறே, “உனக்கில்லாததா, ஸ்ரீபார்வதிக்கு மேல் ஒரு பங்கை நீ பெற்றிடுவாய்!” என்று அருள்பாலித்தார். ........ ஆலகால விஷத்திற்கு முன் திரண்ட விஷத்திற்கு காம்யவிஷம் என்று பெயர். உண்மையில் இதனைத் தாங்க இயலாது தேவர்களும் , அசுரர்களும் பரிதவித்திருப்பர். ஆனால் நிகழ்ந்தது என்ன? ஸ்ரீ நாராயணீ தனக்கென ஒரு சீரிய பணியைக் கேட்டுப் பெருமாளிடம் பிரார்த்தித்திருந்தார் அல்லவா? அந்த  வேளை வந்து விட்டது போலும்! ஆம் ஒரு தெய்வ அவதாரத்திற்கான “அமிர்த நேரம்” வந்து விட்டது! தேவியின் அம்சங்களைப் பூண்டு உருவான ஸ்ரீஜேஷ்டா தேவி பாற்கடலில் அவதாரம் பெற்றாள்! மேலே குறித்தவாறு பாற்கடலில் முதலில் திரண்ட வெவ்வேறு விஷங்களைத் தன்னுள் தாங்கி “ஸ்ரீஜேஷ்டா தேவி” அவதார தரிசனம் தந்தாள்! ஆம், ஸ்ரீஜேஷ்டா தேவி தன்னுடைய அவதாரம் பெற்ற முதலே தன் அவதார லீலைகளை தொடங்கிவிட்டாள். அவள்தம் மஹிமைகளைப் பரப்ப எல்லாம் வல்ல இறைவன் திருவளம் பூண்டான் போலும்! அனைத்து விதமான விஷ திரவியங்களையும், அதன் ஜ்வாலைகளையும், கோபாக்னிகளையும் தன்னுள் தாங்கி ஸ்ரீஜேஷ்டா  தேவி நீல நிறத்தில் பரிணமித்தாள்! ஆலகால விஷம் உருவாவதற்கு முன் நிகழ்ந்த திருவிளையாடல் இது! ஆனால் தேவர்களோ அசுரர்களோ தங்களை விஷப் பிரளயத்தினின்றும் காப்பதற்காகப் பரம்பொருளின் அற்புதப் படைப்பே ஸ்ரீஜேஷ்டாதேவி என்று உணர்ந்தாரில்லை.

உணர்ந்திருந்தால் ஸ்ரீஜேஷ்டாதேவியையே அவர்கள் சரணடைந்திருப்பர். ஆலகாலப் பிரளயத்தில்! அவர்களுக்கு ஸ்ரீஜேஷ்டா தேவியின் அவதாரப் பெருமைகளும் மஹிமைகளும் புரியவில்லை. அந்த அளவிற்கு “அமிர்தத்தைப் பெற்று உண்டு சிரஞ்சீவித்வம் பெற வேண்டும்” என்ற வெறியான “மாயை” “கண்ணை” மறைத்து விட்டது அல்லவா! ஸ்ரீஜேஷ்டா தேவி பாற்கடலில் அவதாரம் பெற்று எழுந்தவுடன் அதுவரையில் விஷ ஜ்வாலைகளினால் கொந்தளித்த பாற்கடல் திடீரென்று சீதள நிலை பெற்றது! இதை உணர்ந்தாவது அவர்கள் அறிந்திருக்கலாமன்றோ! ஸ்ரீஜேஷ்டா தேவியின் அவதார மஹிமையை முதன் முதலில் அறிந்து ஞானம் பெற்றவர்கள் ஸ்ரீசந்திரபகவானும், ஸ்ரீஅக்னிபகவானும் ஆவர்! எங்ஙனம்?
சந்திர பகவான், அக்னியின் வழிபாடு
மத்திற்குத் தறியாக அமைந்த சந்திர பகவானாலேயே பாற்கடலில் திரண்ட விஷவஸ்துக்களின் அக்னியைத் தாங்க இயலவில்லை எனினும் தன் பூரண கிரணங்களை அள்ளி வழங்கியவாறு இருந்தார். ஆனால் ஸ்ரீஜேஷ்டா தேவி பாற்கடலிலிருந்து எழுந்தபோது சீதள குணம் பூண்ட தன் கிரணங்கள் மேலும் குளுமை பெறுவது கண்டு வியப்படைந்து ஆனந்தித்து ஸ்ரீஜேஷ்டாதேவியைத் தொழுது போற்றித் துதுத்தார்.  ஸ்ரீஅக்னி பகவானோ விஷ் ஜ்வாலைகளின் வெப்பம், தம் சக்தியையும் விஞ்சுவது கண்டு திகைத்தார். ஆனால் ஸ்ரீஜேஷ்டாதேவி பாற்கடலில் தோன்றியவுடன் அவ்வுஷ்ண சக்தி மறைந்தது கண்டு அதிசயித்து ஸ்ரீஜேஷ்டாதேவியின் மஹிமையினை உணர்ந்து வணங்கிப் போற்றினார்!

விவாகரத்து மறுமணம்

அடியார் : குருதேவா! சென்ற இதழில் கைம்பெண், மனைவியை இழந்தோர் மறுமணம் புரிந்து கொள்வதில் தவறில்லை என்று விளக்கம் கூறப்பட்டுள்ளது, இதனால் ஏகபத்னி விரதம், கணவனே கண்கண்ட தெய்வம், ஒருவனுக்கு ஒருத்தி என்ற சமயப் பண்பாடுகளுக்கு இந்நிலை முரணாகாதா ?
குரு: ஏகபத்னி விரதம் மிகவும் புனிதனமான கடமை, ஒரு சுமங்கலிப் பெண்ணுக்கு அவளுடைய கணவனைத் தவிர கண்கண்ட தெய்வம் வேறு எதுவுமில்லை. உத்தமமான புருஷனுக்குச் சேவை செய்தலே இறை தரிசனத்தைப் பெறும் எளிய வழியாம். கணவனை இழந்த பின் ஒரு பெண்ணால் எத்தகைய மன விகாரங்களுமில்லாது கணவனின் நாமஸ்மரணத்தையே தியானித்து வாழ முடியுமெனில் இதுவே மிகச் சிறந்த இறைத் தொண்டு! இது போன்றே மனைவியை இழந்த கணவனும் எவ்வித மனக்கிலேசமும் இல்லாது ஏகபத்னி விரதனாக உத்தமமான ஒழுக்கத்துடன் வாழ்க்கையை நடத்த இயலுமெனில் இதை விடச் சிறந்த உத்தம தெய்வீக வாழ்க்கை எதுவுமில்லை. ஆனால் வாழ்க்கையின் முறையான காம உணர்ச்சிகள், ஆசைகள், விருப்பங்கள் இவற்றைக் கருத்தில் கொண்டால் ஏகபத்னி விரதக் கோட்பாடுகளை முற்றிலும் கடைப்பிடிக்க இயலுமா? குழந்தைகளை வளர்த்து ஆளாக்கித் திருமணஞ் செய்து வைத்தல் என்பது சுலபமான காரியமா? மேலும் ஜாதக ரீதியாக மறுமண பாக்யங்களும் அமைவதற்கு மீண்டும் பூர்வ ஜென்மத் தொடர்பாகச் சிறுமறுமணங்கள் நிகழக் கூடும். எனவே நாம் மறுமணமாகக் குறிப்பிடுவது ஒரு கணவனோ, மனைவியோ வாழ்ந்திருக்க மற்றொருவரை மணப்பதை அல்ல. கணவனோ மனைவியோ இறந்திட முறையாக மற்றொரு துணை அமைவதே மறுமணம் ஆகும். தனக்குப் பிராப்தம் இதுவே என்ற விதியை ஏற்று வாழ்வது மிகச் சிறந்தது என நன்கு அறிவுறுத்தியுள்ளோம். ஆனால் எத்தகைய விகல்பங்களுக்கும் மனதில் இடந்தரலாகாது! மனைவியை இழந்த ஒருவர் உண்மையான தியாக மனப்பான்மையுடன் ஓர் இளம் விதவைக்கொ, ஏழைப் பெண்ணிற்கோ, ஊனமுற்ற ஒரு பெண்ணிற்கோ நல்வாழ்வளிக்க மறுமணம் செய்து கொண்டால் அது மகத்தான தெய்வீகப் பணி அல்லவா?

பத்திரங்கள், ஒப்பந்தங்கள், தினசரி அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டர், கடன் பத்திரங்கள், காண்ட் ராக்டுகள் போன்றவற்றில் கையெழுத்திடும் போது கிழக்கு நோக்கியவாறு தான் நின்றோ, அமர்ந்தோ கையெழுத்திட வேண்டும். சுவாசம் சீராக ஓடும் நிலையில்தான் எவ்வித மனக் குழப்பமும், கிலேசமும் ஏற்படாது. இதற்கு வேஷ்டி, சட்டை, அணிந்து கிழக்கு நோக்கி அமர்ந்த நிலையில் கையெழுத்திடுவதே மிகச் சிறந்ததாகும். பாண்ட் அணிந்தால் சுவாச நிலை அடிக்கடி மாறி மனக் கொந்தளிப்பு உண்டாகும்.

திருமணம் கோயிலில்தான்....... அவ்வாறு தியாக மனப்பான்மையுடன் மறுமணம் புரிகின்றவர்கள் இறைச் சந்நிதிகளில் தாலிகட்டுவதே உத்தமமானது. இந்தப் புனித வைபவத்தால், பலவிதமான தோஷங்களும் பாவங்களும் நிவர்த்தியாகின்றன. இறைவனின் திருப்பார்வையில் நிகழ்கின்ற சுபகாரியங்களிலும் தான, தருமங்களிலும் பலவிதமான கர்ம வினைகள் தீர்க்கப்படுகின்றன. மறுமணம் புரிந்தவர்கள் ஆணோ பெண்ணோ நிறைந்த இறைச் சிந்தனையுடன் புனிதமான நல்லொழுக்கம் மிகுந்த, தார்மீக நெறியுடன் பரஸ்பர அன்புடனும் ஒருமித்து வாழ்வதற்கு தெய்வத் தலங்களில் நிகழும் திருமணங்கள் பெரும் கருணை புரியும். மேலும் மறுமணம் புரிந்தவர்கள் நிறைய தான, தர்ம கார்யங்களில் ஈடுபட வேண்டும். கணவன், மனைவி இருவரும் பல திருத்தலங்களுக்குக் குறிப்பாகப் பல பாடல் பெற்ற சிவ, வைஷ்ணவத் தலங்களுக்கும் சென்று தரிசித்து ஆங்காங்கே இயன்ற நற்காரியங்களைச் செய்து வந்திட மறுமண வாழ்வில் ஒரு (ஆன்மீகப்) “பிடிப்பு” ஏற்பட்டுச் சாந்தமான வாழ்வமையும்.
அடியார்: “விவாகரத்து பற்றிச் சித்த புருஷர்கள் அருள்வதென்ன , குருவே!”
சற்குரு : இது பற்றிப் பல விளக்கங்கள் ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் காணப்படுகின்றன. எம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஸ்வாமிகள் இது பற்றிய அரிய ஆன்மீக இரகசியங்களை அருளியுள்ளார். எத்தனையோ குடும்பங்களில் பல ஆண்டுகளாகப் பேச்சு வார்த்தையில்லாது இருந்து கடுமையான குரோதம், பகைமை பூண்ட பல ஏழைக் குடும்பங்களை அவர் ஒன்று சேர்த்து வைத்த பல ஆனந்தமான காட்சிகளைக் காணும் பாக்யத்தை அடியேன் பெற்றுள்ளேன். நெஞ்சை நெகிழ வைக்கும் வாழ்க்கை அனுபவங்கள் அவை!
பொதுவாக “விவாக ரத்து” என்ற சொற்றொடரையே சித்தர்கள் அனுமதிப்பதில்லை. எத்தகைய சச்சரவுகள் இருப்பினும் இயன்றவரை ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்க்கை நடத்த வேண்டும். அதுவும் முடியவில்லையா. அவரவர் பிரிந்தே வாழலாம், இதில் எவ்விதத் தவறும் இல்லை. “தனக்குப் பிராப்தம் இவ்வுளவு தான்” என்ற எண்ணத்தைப் பிரிந்தவர்கள் பெறுவார்களேயானால் சட்ட ரீதியான விவாக ரத்து அளவிற்குச் செல்லவே தேவையில்லை. வாழ்க்கைப் பிரச்னைகள் முற்றும்போது முன் விரோதம், கௌரவ பேதங்கள், பகைமையாக மாறும் போதுதான் சட்டத்தை நாட வேண்டிய துர்பாக்யம் ஏற்படுகின்றது.
அடியார் : “குருதேவா! சட்டத்தை நாடாமல் வேறு வழிகள்....”
சற்குரு :  “ஏன் இல்லை? தக்க சற்குரு யார், எங்கே எப்படி அவரை ஏற்பது” என்ற வினாக்கள் எப்போதும் எழுந்து கொண்டேதான் இருக்கும்!
சற்குருவும் இறைவனும்..............

தீராத தலைப் பொடுகு , பேன்  இவற்றால் அவதியுறுவோர் ஏராளம், நமக்குத் துன்பங்களோ, பிரச்சனைகளோ எவையும் தாமாக வருவதில்லை. நாம் பிறருக்கு அளித்த இன்னல்களே பலவித அரிப்புகளாக, நோய்களாக நம்மைத் தாக்குகின்றன. “அப்பப்பா. .. எவ்வுளவு தெந்தரவு தர்றாம்ப்பா... .தலைமயிரைப் பிச்சுக்கலாம் போல இருக்கு..” இது சாதாரணமான நமக்குக் கேட்டுப் பழக்கமான சொற்கள். இந்த அளவிற்கு இப்போதோ ஏதோ ஒரு ஜன்மத்திலோ நாம் பிறருக்குத் தீங்கிழைத்தால்  தலை பொடுகாகவும் பேன் சிரங்குகளாகவும் அவை நமக்கு வரும். இது நம்குழந்தைகளையும் அவதிக்குள்ளாக்கிப் பெற்றோர்களைக் கலங்க வைக்கும்.

இறைவனின் ஸ்தூலரூபமே, நடமாடும் வடிவமே சற்குரு. மனித ரூபத்தில் அவரை ஏற்றபின் அவருடைய சில காரியங்களை வைத்து மனம் பலவிதங்களில் அவரை எடை போடும். இதுவே கலியுக மனிதனுக்கு ஏற்படும் மனக்குழப்பமாகும்! ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர் ஸ்ரீபலராமருடைய பல காரியங்களை கண்டு தெய்வாவதார மூர்த்திகளையே தவறாகக் கணித்தவர்கள் பலர் உண்டு. தெய்வ பக்தி நிறைந்த அந்த துவாபர, திரோதாயுகங்களில் கூட! ஸ்ரீகிருஷ்ணன் தன்னை “பரமாத்மா” என்று அறிவித்தும் கௌரவர்களால் அதை ஏற்க முடிந்ததா? ஏன் பரப்ரம்மமாம் ஸ்ரீராமரையே எதிர்த்தான் ராவணன்? அப்படியானால், சாதாரண கலியுக மனிதனால் சற்குருவை இறைவனின் ரூபமாக எளிதில் ஏற்க முடியுமா? இன்றைக்கு சற்குருவை ஏற்றுப் பின்னால் அவரை “முன்னை மாதிரி இல்லை, இவருக்குத் தெய்வீக சக்தி குறைந்து விட்டது” என்று தூற்றித் தூக்கியெறிகின்ற காலம் இது!
எனவேதான் எந்த சற்குருவும் தன்னை “சற்குரு” என்று அற்விக்காது “ஓர் ஆன்மீக வழிகாட்டி” என்றே கூறிக் கொள்வார். வழிகாட்டியாயின், ஏற்றுக் கொள்வதோ, இல்லையோ அவரவர் விருப்பமன்றோ!
உண்மையில் சற்குருவே இறைவனின் ரூபம்! நல்லதோ கெட்டதோ, துன்பமோ, இன்பமோ கஷ்டமோ நஷ்டமோ சற்குரு என்று ஒருவரை நம்பிவிட்டால் இறுதிவரை விட்டுவிடலாகாது. விட்டுவிட்டால் சற்குருவிற்கு எவ்வித இழப்பும் கிடையாது! அந்த அடியாருக்குத்தான் நஷ்டம், மீண்டும் அத்தகைய சற்குருவைப் பெற அவர் கோடானுகோடி பிறவிகள் எடுத்து வாழ்க்கைத் துன்பங்களை அனுபவித்துத்தான் ஆக வேண்டும்
இதற்கு ஒரே ஒரு எளிய தீர்வு! எவரை நம்பினாயோ அவரையே இறுதிவரை நம்பு! சற்குருவிற்கே எத்தகைய துன்பங்கள் ஏற்படினும் எத்தகைய மனப்போராட்டங்கள் ஏற்பட்டாலும் அவரையே நம்பு! உண்மையில் உன்னுடைய மனப் போராட்டங்களின், மனக் கிலேசங்களின், அவ நம்பிக்கைகளின் பிரதிபலிப்பே சற்குருவின் துன்பங்களாக மாறுகின்றன!
சுவாமி விவேகானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சஸரிடம் வந்த போது வேலையின்றி, ஒருவேளை சாப்பாட்டிற்கு வழியின்றி வறுமையில் துடித்தார். ஸ்ரீபரமஹம்ஸர் ஜீவசமாதி கொண்டபோது கூட பத்துத் தலைமை சிஷ்யர்களின் குழு வறுமை நிலையில் தான் வாடியது. எனினும் அவர்கள் தங்கள் சற்குருமேல் கொண்ட நம்பிக்கையைத் தளர்த்தவில்லை. குருவருளால் பின்னர் நல் மடத்தை உருவாக்கினர்.
எனவே ஆழ்ந்த அசைக்க முடியாத நம்பிகைதான் சற்குருவை இறைவனாகக் காட்டும்! எப்போதெல்லாம் தன் வழிகாட்டியின் மேல் அவநம்பிக்கை ஏற்படுகின்றதோ அப்போதெல்லாம், “தன் நம்பிக்கையின் நிலை, தரம் உறுதி” மேம்படவில்லை என உணர்ந்து தெளிவு பெற்றுத் தீவிர பூஜை, தியானம் , கோயில் தரிசனம், தானதர்மங்கள் இவற்றால் தன் குருபக்தியைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
சுருங்கச் சொல்லிடின் , சற்குருவின் மேல் அவநம்பிக்கை ஏற்படில்
1, தன் புண்ய சக்தி குறைந்துவிட்டது என்பதை உணர்ந்து
2. பூஜை, தியான, இறைத் திருப்பணி, தான ,தர்ம நற்காரியங்களும் குறைந்து விட்டன  என்பதையும் உணர்ந்து புண்ய ஆற்றலைப் பெருக்கும் நற்காரியங்களில் உடனே ஈடுபட வேண்டும்.

ஒவ்வொரு ஜீவனின் வாழ்க்கையும் ஓர் ஆன்மீகப் பயணமே! இறைதரிசனத்தைப் பெறவேண்டி ஒரு பயணம்! இதில் முதலில் “கல்லிலும், சுதையிலும், விக்ரஹத்திலும்” இறைவனை நம்பி வணங்கிட, அந்த நம்பிக்கையே ஸ்தூல ரூபத்தில் “சற்குருவை” இறைவனின் ரூபத்தில் காண வைக்கின்றது. இது இரண்டாம் நிலை. அந்த சற்குருவே சூட்சும ரூபத்தில் இறை தரிசனத்தைக் காட்டுகின்றார். தன்னை முழுதும் நம்பிச் சரண் அடைந்தோர்க்கு! இது மூன்றாம் நிலை.
நம்பிய அடியார்க்கு அவரே சற்குரு! ஏனையோர்க்கு அவர் “சாதாரண மனிதனாகவே” தென்படுவார். இது காண்பவரின் பிழையே!

பித்ரு தர்ப்பணம்

அடியார்: அமாவாசை, மாதப் பிறப்பு போன்ற விசேஷ தினங்களில் தந்தை வர்கத்தில் ஆறு, தாய் வர்கத்தில் ஆறு... ஆக பன்னிரெண்டு பேர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கப்படுகின்றது. இதன் காரணம் யாதோ?
சற்குரு : முற்காலத்தில் ஒரு தலைமுறைக்கு அதாவது தந்தை வர்கத்தில் 12, தாய் வர்கத்தில் 12, ஆக 24 பேர்களுக்குத் தர்ப்பணம் அளிக்கப்பட்டது. அதாவது ஒரு தலைமுறை என்பது 24 பேர்கள் ஆதலின் ஒரு தலைமுறை முழுவதிற்கும் தர்ப்பணம் உண்டு. இன்றைக்கு சிலர் விசேஷமான இந்த  “பரிபூர்ண சம்ப்ரதாய” முறையில் 24 பேர்களுக்கும் தர்ப்பணம் அளிக்கின்றனர். இதற்காகவே இராமேஸ்வரம், கும்பகோணம், சக்கரப் படித்துறை, திருவிடைமருதூர், திருவள்ளூர் (சென்னை), வாரணாசி, கயை போன்ற புண்யத் தலங்களில் 24 படிக்கட்டுகள் கொண்ட தீர்த்தக் கரைகள் கட்டப்பட்டன. ஒவ்வொரு படியிலும் ஒவ்வொருவருக்கு தர்ப்பணம்!
12 இராசி .. ஆயுள் பரிமாணம்
ஆனால் காலப்போக்கில் கலியுக மனிதனின் சராசரி ஆயுள் குறைந்து விட்டதாலும், 24 தலைமுறைப் பெயர்களை நினைவில் கொள்ளுமளவிற்கு இல்லாது மனித ஆற்றல்/ஞாபக சக்தி மங்கி வருவதாலும், மாதாந்திர அமாவாசைத் தர்ப்பண பூஜை முறையே மறைந்து வருவதாலும் 24 என்பது பன்னிரெண்டு ஆகிவிட்டது.
மேலும் மனிதனுடைய ஆயுள், வாழ்க்கை , வம்சாவளி, ஞானம் இவற்றைப் பன்னிரெண்டு இராசிகளுக்குள் வகுத்து விட்டமையால் வலஓட்டு, இடஓட்டு இராசிகளாய், ஆறாறாகத் தந்தை/தாய் வர்கங்களில் ஆறு ஆண்கள், ஆறு பெண்களுக்குத் தர்ப்பணம் அளிக்கப்படுகின்றது.

சக்கரப் படித்துறை
கும்பகோணம்

அடியார் : இந்த விசேஷ தினங்களில் மட்டும் பித்ரு தர்ப்பணம் அளிப்பதன் தாத்பர்யம் என்ன குருதேவா?
சற்குரு : (சிரித்துக் கொண்டே) நீ அறியாமையினால் கேட்பதால் கேள்வியே தவறு! உண்மையில் தர்ப்பணம் என்பது நித்யமே செய்ய வேண்டியது. மக்களின் அசிரத்தையால் அமாவாசைக்கு அமாவாசை தர்ப்பணம் என்ற நிலை வந்து விட்டது.
சந்தியா வந்தனம், பிரம்மயக்ஞம் போன்ற நித்ய வழிபாடுகளை மனிதன் அறவே மறந்து விட்டான். இவையெல்லாம் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் செய்ய வேண்டிய நித்ய பூஜைகள். இந்த நித்ய வழிபாடுகளில் யமவந்தனம், யமதர்ப்பணம், மற்றும் சில தர்ப்பண மந்திரங்கள் உள்ளன. எளிமையான யாவராலும் சொல்லக் கூடிய மந்திரங்கள்!
இவற்றைச் செய்யாமல் விட்டமையால்தான் மாதப் பிறப்பு மற்றும் அமாவாசை தினங்களில் தர்ப்பணங்கள் விதிக்கப்பட்டுள்ளன. அதுவும் மேலே குறித்த விசேஷமான இறைத் தலங்கள் மற்றும் காவேரி, கங்கை போன்ற புண்ணிய நதி தீரங்களில் தர்ப்பணப் பூஜைகளைத் தான, தர்மங்களுடன் குறிப்பாக (சிறிய அளவிலேனுமான) அன்ன தானத்துடன் செய்திட அவை ஓரளவு பரிஹாரங்களாக மாறிப் பித்ரு சாபங்களினின்றும் நம்மைக் காக்கின்றன.
ஒளி மயமான சூட்சும தேகத்தையுடைய பித்ருக்கள் மாதப் பிறப்பு, கிரஹண நேரங்கள், அமாவாசை, மூதாதையர் இறந்த தேதி போன்ற நாட்களில்தான் பூலோகத்திற்கு வர அனுமதிக்கப்படுகின்றனர்.
ஆனால் புனிதமான ஒளிமயமான சூட்சும தேகம் உடைய அவர்கள் எங்கு தங்குவது? புண்ய சக்தி, தெய்வ சக்தி மிகுந்த இடங்களில் தான் அத்தகைய ஒளிமயமான தேகங்களால் தங்க இயலும்! அத்தகைய இடங்கள் தாம் கோயில் தலங்கள், அரசு, ஆல், வேம்பு போன்ற புனித விருட்சங்கள், சமுத்திரம், நதி தீரங்கள் போன்றவையாம் . எனவே தான் இத்தகைய இடங்களில் தர்ப்பணமிடுதல் அவர்களுடைய ஆசிகளை உடனடியாக அபரிமிதமாகப் பெற்றுத் தரும்.
அடியார் : வீடுகளில் தர்ப்பணமிட்டால் ..... குருதேவா?
சற்குரு: இயன்றவரை புனிதமான தலங்களில் தர்ப்பணப் பூஜையை நிகழ்த்துவது தான் உத்தமம். இல்லங்களில் பொதுவாகப் பித்ருக்கள் தங்குவதில்லை. காரணம் அவர்களுடைய ஜோதிஸ்வரூப தேகம் தங்குமளவிற்குப் புண்ய சக்தியை வம்சாவழியினர் பெற்றிருக்க வேண்டும். அல்லது அத்தகைய சூழ்நிலைகளை அமாவாசை போன்ற தினங்களிலேனும் உருவாக்க வேண்டும். இது கருதியே அமாவாசை நாட்களில்

  1. வீடுகளைக் கழுவிக் கோலமிட்டுப் புனிதப்படுத்துதல்
  2. பெரியோர்கள் உபயோகித்த கைத்தடி, கண்ணாடி போன்றவற்றிற்கு மஞ்சள், குங்குமம் இடுதல்.
  3. பெரியோர்களுடைய படங்களைத் துடைத்து மஞ்சள், சந்தனம், குங்குமமிடுதல்
  4. பெரியோர்களுக்கு விருப்பமான உணவுப் பண்டங்களைச் சமைத்து இறைவனுக்கு நைவேத்யமிட்டுப் பிரசாதமாக உண்டு ஏழைகளுக்கு தானமாக அளித்தல்
  5. வீடு முழுவதும் அடர்த்தியான சாம்பிராணி நறுமணப் புகை இடுதல்
  6. காலையில் நீராடித் திருநீறு/நாமம்/சந்தனம் தரித்து காபி, நீர் கூட அருந்தாமல் தர்ப்பணம் அளித்தல்
  7. அன்றைய தினம் வாசலில் வரும் யானை/பசுவிற்கு , ஏழைக்கு ஏதேனும் உணவளித்தல் போன்ற நற்செயல்களைப் புரிந்திடப் பித்ருக்கள் இவற்றால் ஆனந்தமடைகின்றனர்.

இத்தகைய நற்காரியங்கள் தாம் பித்ருக்கள் தங்குவதற்கான தெய்வீக சூழ்நிலைகளை அமைத்துத் தரும். முதியோர்களின் படங்கள், சிலைகளிலும், அவர்கள் பிரியமாகப் பயன்படுத்திய பொருட்கள் ஆகியவற்றிலும்  தாம்பூலம், மஞ்சள், (அறுபது வயதிற்கு மேற்பட்ட) தம்பதிகளால் பொறுக்கித் தேர்ந்தெடுக்கபட்ட முழு அரிசி மணிகளாலான) அட்சதைகள், சந்தனம், துளஸி, எள், தர்ப்பை போன்ற புனித வஸ்துக்களிலும் பித்ருக்கள் ஆவாஹனமாகின்றனர்.
அமாவாசையன்று அன்னதானம் விசேஷமானதாகும். பித்ருக்கள் நம்மைச் சோதனை செய்வதற்காக ஊனமுற்றோர்,  நோயாளி, பிச்சைக்காரகள் போன்று எந்த ரூபத்திலும் வந்து அன்னத்தைப் பெற்று நம்மை ஆசிர்வதிக்கலாம். அன்னதானம் என்றால் நிறையச் சமைத்து வடிப்பது என்பதானால் நம்மால் இயலுமா என்று எண்ணலாம். சிறிய உணவுப் பொட்டலங்களை (3 இட்லி, தயிர்சாதம், பழங்கள், பிரட் etc..).போன்றவற்றை வழங்குவது கூட அன்னதானமே! எனவே அமாவாசையன்று எப்போதும் கையில் பிரட், பழம் என்று எதையேனும் வைத்திருந்து அன்று  முழுவதும் “எவர், எங்கு கேட்டாலும் எதையேனும் வழங்கும்” நற்காரியத்தை ஒரு தீவிர வைராக்கியமாக மேற்கொள்ள வேண்டும்.

இயன்ற வரை ஏழைகளுக்குக் காசாக அளித்தலைத் தவிர்த்துப் பழம், பிஸ்கட், பிரட், போன்ற உணவு வகை தானங்களையே அளிக்க வேண்டும். காசை அளித்தால் அதனைக் கொண்டு நிறைவேற்றும் காரியங்களின் கர்மவினைகள் (புகைபிடித்தல், மது அருந்துதல் ) நல்லதோ, கெட்டதோ, அதைத் தானமளித்தவரையும் சேரும்.

யுவ வருடம்  புத்தாண்டுச் செய்தி   நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அருளியது :-
யுவ வருடத்தில் பேரின்பமான இறைப்பணி, தான தர்மங்களைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். முறையற்ற ஆசைகள், நிராசைகள், தீய வழக்கங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க் வேண்டும்!. தீய வழியில் பெறும் இன்பமும் சிற்றின்பமே! மது, புகை, புகையிலை போன்ற சிற்றின்பங்களுக்கு அடிமையானோர் உடனடியாக அவற்றிலிருந்து மீள முடியாது! ஆனால் அவற்றைத் தணிக்கும் ஆன்மீக வழிகளைக் கைக்கொள்ள வேண்டும்.
புகை பிடிக்கும் வழக்கமுள்ளோர் பரிஹாரமாகக் கோயில்களிலும் மஹான்கள்/சித்த புருஷர்களுடைய ஜீவசமாதிகளிலும், குறிப்பாக சென்னை அருகே திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயத்திலும் அடிக்கடி சாம்பிராணி தூபம் இட்டு வந்தால் தானாகவே புகைப்பிடிப்பது. மதுப் பழக்கம் தணிந்து மறையும்.
ஸ்ரீராமர் சந்நிதிகளில் “பானகம்” எனப்படும் இனிய நீரை (ஏலக்காய் + நீர்+மிளகு+வெல்லப்பாகு) ஏழைகளுக்கு தானமாக அளித்து வர மதுவின் மேல் கொண்ட மோகம் தணியும். புகையிலைப் பழக்கம் உள்ளவர்கள், கோயில்களில் செவ்வாய், வெள்ளியன்று ஏழைச் சுமங்கலிப் பெண்களுக்குத் தேங்காய், தாம்பூலம், கண்ணாடி வளையல் போன்ற மங்கலப் பொருட்களை அளித்து வரப் புகையிலைப் பழக்கம் மறையும்.கணவனுடைய நல்வாழ்விற்காக மனைவி தன் கணவன், குழந்தைகளுடன் சேர்ந்து இவற்றைச் செய்து வர இறையருளால் நற்பலன்கள் கைகூடும். ஒரு வீடு, ஊர்தி என ஏனையோர், தங்கள் ஆசைகளை யுவ ஆண்டில் வரையறுத்துக் கொள்ள வேண்டும். இவ்வருடத்தில் தங்களுக்கு மிகவும் விருப்பமான பொருளில் (உ.ம். காபி, ஸ்வீட், மாம்பழம்) நாட்டத்தைக் குறைத்து, முடிந்தால் அதைத் தவிர்ப்பது சிறந்த ஆன்மீகப் பயிற்சியென நம் குருமங்கள கந்தர்வா அருள்கின்றார். இளைய தலைமுறையினரிடம் இறைபக்தியை ஊட்டுவித்தால்தான் வருங்காலத்தில் ஒழுக்கம் மிகுந்து வன்முறையற்ற சாந்தமான, அவரவர் மதப் பண்பாடுகளுடன் அனைவரும் ஒருமித்து வாழ்கின்ற சாந்தமய சமுதாயம் அமையும். இறைவனை அடையும் வெவ்வேறு நல்வழிகளே மதங்களாம். Only Means Are Different. எனவே யுவவருடத்தில் தினமும் ஒருவரிடமாவது திருஅண்ணாமலை, அன்னதானம், பிரதோஷ மகிமை, கோயில் தரிசனம், மஹான்களின் பெருமை, தியானம் என்றவாறாக ஏதேனும் ஒரு நற்காரியத்தைப் பற்றிப் பேச வேண்டும்.

புத்தாண்டு செய்தி
  1. கணவன், மனைவியர் பரஸ்பரம் நிதமும் அனைத்தையும் பரிமாறிக் கொள்ள வேண்டும்.
  2. கணவன், மனைவியர் நெடு நாள் பிரிந்திருக்கலாகாது, (வியாபாரம், அலுவல் எக்காரணமாயினும் சரி)
  3. திருமணத் தடங்கலுக்கான காரணங்களைப் பெற்றோர்கள் ஆராய்ந்து “விட்டுக் கொடுக்கும்” மனப்பான்மையைப் பெற்றுத் திருமணங்களை விரைவில் நடத்தி முடிக்க வேண்டும். இல்லையேல் தடங்கல்கள் ஸ்திரமாகிவிடும்.
  4. இவ்வருடத்தில் “பிரிவதற்கான” வாய்ப்புகள் அதிகமாதலின் பிரிந்து வாழும் கணவன், மனைவி ஒன்று சேரப் பெருமுயற்சி எடுத்து நல்வழி காண வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் பிரிவால் துன்பங்கள் பெருகும்.
  5. காதல் திருமணங்களில் சற்று நிதானித்தல் நலம். அவசரகோல முடிவுகள் மீள முடியாப் பெருந்துன்பங்களைத் தரும்.
  6. விருப்பங்கள்ம் ஆசைகள், இவற்றைத் தணித்தல் வேண்டும்.
  7. உறவினர்கள், நண்பர்கள், பெரியோர்கள் அடிக்கடிக் கோயிலில் கூடுவது நலம் பயக்கும்.
அடிமை கண்ட ஆனந்தம்

கோவணாண்டிப் பெரியவருடன் பல சமயங்களில் சென்னையிலிருந்து நடந்தே திருஅண்ணாமலைக்குச் சிறுவன் சென்றிருக்கின்றான், நடுவில் தொழுப்பேடு ஸ்ரீமுருகன் ஆலயம், மதுராந்தகம் அருகே ஒரு புராதன மண்டபம் (இன்றைக்கும் மஹரிஷி, சித்தர்கள் நடமாடும் இடம்) அற்புத சக்தி வாய்ந்த பட்டுப் பிள்ளையார் .... இவ்வாறாகப் பல புனித இடங்களில் தங்கிப் பல அற்புத காட்சிகளையும் யோகியர், ஞானியரின் தரிசனங்களையும் காட்டியருளினார் பெரியவர்.  “இதுக்குத்தான் பரமாச்சார்யார் ஸ்வாமி எங்கு போனாலும் நடந்தே போறாரு .... சுத்தினால் கிட்டும் சுந்தரானந்தம் ! அவர் பின்னாடி சுத்தினவங்களுக்கு இந்த மாதிரி பல யோகிங்க, சித்தருங்க தரிசனம் நெறயக் கிடைக்கும்! அதுக்கெல்லாம் குருபின்னாடி சுத்தற பாக்யம் வேணும்” சிறுவனை அரவணைத்தவாறே பெரியவர் பல விளக்கங்களைப் பொழிந்து கொண்டே நடந்தார்.

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

வெயில், மழை, கல், பாறை எனப் பாராது சிறுவனை எங்கு சென்றாலும் நடத்தியே கூட்டிச் செல்வார். ஆனால் வயிறு புடைக்கச் சாப்பிடச் சொல்வார். சாப்பிடப் பணம் வேண்டுமே! கோவணத்தின் பின்புறப் புரியிலிருந்து சுருட்டை சுருட்டையாய்ப் பணம்! பழைய ரூபாய்த் தாளை எடுப்பார். சிறுவன் அதிசயத்துடன் பார்ப்பான்!
எங்கிருந்து வந்ததது ?
.................. ஒரு முறை, இந்த எண்ணம் வந்தவுடன்..........
அப்போது இருவரும் செஞ்சியருகே சென்று கொண்டிருந்தார்கள். நல்ல பசி சிறுவனுக்கு ... வழியெல்லாம் வயலில் நிலக்கடலைப் பயிர்! நல்ல மண் வாசனையுடன் வெள்ளை வெள்ளையாய் நிலக்கடலைகள் பயிரடியில்  துருத்தி வெளிவந்தன,
“இறங்கிப் பறித்து ஒன்றிரண்டை வாயில் போடலாமென்றால்..... ஏண்டா அந்தக் கர்ம பாக்கி...” என்று பெரியவர் அதட்டுவாரே!
வழியில் மரத்தடியில் அமர்ந்த பெரியவர் சற்று அயர்ந்து உறங்கினார். பசியால் சிறுவனுக்குத் தூக்கம் வரவில்லை. “ஆங் .................. இவருக்குக் கோவணத்திலிருந்து தானே காசு வருது...” சிறுவன் மெதுவாகப் பின்புறக் கோவணத்தை லேசாகப் பிரித்தான்.
ஒன்றையுங் காணோம்!
பெரியவர் சற்று லாவகமாகப் புரண்டு படுத்திட, சிறுவன் அவருடைய இடுப்புக் கயிறில் சுற்றியிருந்த கோவணத்தின் அடி  நுனியைப் புரட்டி பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. “ஆனால் அவர் எடுக்கும் போது சுருள் சருளாய்ப் பணம் வருமே! ஆனால் முழுசா ஒரு பத்து ரூபாய் நோட்டைப் பார்த்ததில்லை!”
பெரியவர் வேண்டுமென்றே அந்தப் பக்கம் புரண்டார். சற்குரு தன்னை சிஷ்யனின் பரிபூரண சோதனைக்கு ஆட்படுத்த விரும்பினார் போலும்! சிறுவன் இதைப் புரிந்து கொள்ளவில்லை!
பெரியவர் வேண்டுமேன்றே இப்படியும் அப்படியுமாகப் புரண்டு படுக்கச் சிறுவன் நன்றாகச் சோதனை செய்து முடித்து விட்டான். “ஊஹும், கோவணத்தில் ஒன்றுமில்லை” எல்லாம் முடிந்தவுடன் பெரியவர் கண்களைத் துடைத்தவாறே எழுந்தார்.
“நல்லா டெஸ்ட் பண்ணிட்டியா ராஜா, இந்தக் கிழவங்கிட்ட ஏதுடா காசு, பணம்! அட்டா, நல்லாத் தூங்கிட்டேன் போலிருக்கே” ரொம்பப் பசியால துடிச்சுட்டியா ராஜா? “ பெரியவர் வாஞ்சையுடன் தலையைக் கோதினார். சிறுவன் வெட்கித் தலை குனிந்தான்.
திடீரென்று , “அடடே இதோ பாருடா” .. என்று வயல் வரப்பினூடே இருந்த ஒரு பச்சைச் செடியைக் காட்டினார்.
“இதுதாண்டா ............... மூலிகை இதன் அடியில் அருகம்புல்லைச் சுத்திட்டு இந்த  மூலிகைக்கான தேவதை, அதுக்கான பீஜாட்சரம் சொல்லி இந்தச் செடியோட மூணே மூணு இலையை வாயில் போட்டு மென்று தின்னாப் போதும். ஒரு வாரத்துக்குப் பசிக்காது! கையிலோ காசில்லை. கோவணத்திலும் பணமில்லை, அதுதான் நீ நல்லாத் தேடிப் பார்த்துட்டியே!” சிறுவன் அதிசயத்துடன் பார்த்து நின்றான்!
பெரியவர் சிறுவனை இழுத்துக் கொண்டு அந்தச் செடி அருகில் சென்றார்.  “அப்பனே ஸ்ரீஅகஸ்திய சற்குருதேவா” என்று வேண்டியவாறே ஏதோ மந்திரங்களைச் சொல்லி அருகிலிருந்த அருகம்புல்லைப் பறித்து அச்செடியின் அடிப் பகுதியில் கட்டிக் கிழக்கு நோக்கி நின்று எதையெதையோ சொல்லி அச்செடியிலிருந்து மூன்று இலைகளை உருவி “இது அங்காளிக்கு., இது சிவனுக்கு இது சிவகுருநாதனுக்கு” என்ற மூன்றையும் சிறுவன் வாயில் திணித்திட..
ஒரே கசப்பு. சிறுவனுக்குக் குமட்டிக் கொண்டு வந்தது! பெரியவர் அதைக் கண்டு கொள்ளவில்லை! “இதோ பாருடா இது அட்சய பாத்திர மூலிகை, இது ........... மூலிகை , இது அருகம்புல் ., இது ........... மூலிகை ..... இந்த அஞ்சு மூலிகையையும் ஒண்ணுக்கொண்ணு பக்கத்துலதான் இருக்கும். அமிர்த யோகத்துல சுக்ல பட்சச் சந்திர ஹோரைலதான் கண்ணுக்குத் தென்படும். இதைப் பார்த்த அன்னிக்கு சித்தன், மஹரிஷி தரிசனம் கிடைக்கும்.” அந்த மூலிகையின் கசப்போ கசப்பில் பெரியவர் மேலும் என்ன சொன்னார் என்பதைப் புரிந்து கொள்ளும் நிலையில் சிறுவன் இல்லை. அல்லது மூலிகை இரகசியங்களை அறிந்தது போதும் என்று பெரியவர் முடிவு கட்டிவிட்டாரா?
“கசந்த வாய்க்குத் தண்ணீர் குடிக்கலாமா, வாத்யாரே?”
“ஊஹும், மூணு மணி நேரம் பத்தியம் இருக்கணும்.”
தொங்கிய தலையுடன் சிறுவன் பெரியவர் பின்னால் நடந்தான்.
“என்ன இவர் செய்யப் போறார்னு தெரியாம எதுவுமே ரகசியமாவே இருக்கு! ஆனா எப்படியோ நல்லபடியா முடிஞ்சுடுது” இந்த முடிவுக்குத்தான் அச்சிறுவனால் வர முடிந்தது!
மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்த பெரியவர் திடீரென்று இடதுபக்கம் மண் ரோட்டில் திரும்பினார். கொதிக்கும் மணல்! தார் ரோடிலாவது இரண்டு புறமும் மரங்கள்!
பசி, கசப்பு, மண்ரோடு, சூடு, முள்... சிறுவன் விழி பிதுங்கியது!
“காரண காரியமில்லாமல் வாத்யார் எதையும் செய்ய மாட்டார்” – இந்த ஒரு நம்பிக்கை மட்டும் சிறுவனிடம் குடி கொண்டிருந்தது!
“எதுவரைக்கும் போகணும், வாத்யாரே!” ... சிறுவன் பொறுமையை இழந்து கேட்டான்...அந்தக் கொதிக்கும் வெயிலிலும் என்.ஸி.ஸி கேடட் போல் பெரியவர் விறுவிறுவென்று நடந்தது சிறுவனுக்கு அதிசயமாக இருந்தது! பழக்கமான காட்சிதான் என்றாலும் சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் பொட்டை வெயிலில் தமாஷாக அதே சமயத்தில் சீரியஸாகப் பல தெய்வீகக் கதைகளையும் இரகசியங்களையும் சிறிது கூடக் களைப்படையாது சொல்லிக் கொண்டே வருகிறாரே! என்ன சக்தி இவருக்கு!
“அதோ அந்த மலை வரைக்கும்தான் ராஜா நடக்கணும்!” பெரியவர் சொன்னதும் வயிற்றில் சற்றுப் பால் வார்த்தது மாதிரி இருந்தது சிறுவனுக்கு!
ஆனால் அந்த மலையோ அந்தமான் தூரம் இருக்குமோ! ஏனென்றால் சிறுவன் நடநட என்று நடந்து அலுத்து விட்டான்.. “கண்ணு, இளநீ சாப்பிடலாமா” – பெரியவர் கேட்டதும் தான் சிறுவன் தன்னிலைக்கு வந்தான்,
“ஆமாம், தன் பசி என்னவாயிற்று? வயிறு புடைக்கச் சாப்பிட்டாற்போல் ஒரு திருப்தி! அப்போதுதான் அறுசுவை உண்டி! போதாக் குறைக்குப் பாயசம் சாப்பிட்ட்து போல் ஓர் உணர்வு! இளநீர் சாப்பிடுவதற்குச் சான்ஸே இல்லை! எப்படி வயிறு ரொம்பிற்று?”

சிறுவன் விக்கித்து நின்று விட்டான். என்ன மாயம் இது! ஏப்பம், ஏப்பமாக வந்தது! கசப்பு மறைந்து போய், ஏப்பத்தினூடே நல்ல சாப்பாட்டு வாசனை! வயிறு புல்!
“ஆமாம், இளநீ சாப்பிடணும்னு சொல்றாரே! பக்கத்துல கடையும் இல்லை, தென்னை மரமும் இல்லை, ஆனால் சாப்பாட்டோடு இளநீர் குடித்தார்போல் திருப்தி” – சிறுவன் எண்ணித் திகைத்து நின்றான். “எங்கேயாவது பசிக்குச்  சாப்பிடாமல் வயிறு ரொம்புமா ? என்ன அதிசயம் இது!”
பெரியவர் திரும்பினார். “என்னடா நின்னுட்டே, தாகத்துக்கு எளநீ வேணுமானு கேட்டேனே” – பெரியவர் குறும்பாகச் சிரித்தார்!
சிறுவனுக்குச் பெரியவரின் திருவிளையாடல் புரிந்துவிட்ட்து. ஒரு மூலிகையின் மகிமையைப் புரிந்து கொள்ள இவ்வுளவு பசி, கசப்பு, சூடு அனுபவங்கள் தேவைதானே? எதையுமே டக்கென்று எடுத்துக் கொடுத்து விட்டால் அதன் பெருமை புரியாமல் போய்விடுமே! “வாத்யார் வாத்யார் தான்!”
“ஆமாம், பசி நீக்கும் மூலிகைச் சாற்றினை அளிப்பானேன். இந்த மலைக்கு வருவதேன் இதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது” – சிறுவன் வழக்கம் போல் ஏதோ (தப்புக்) கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான்! அதற்குள் மலையடிவாரம் வந்துவிட்டது .
செஞ்சி வழியே, பெரியவருடன் பலமுறை கால் நடையாகவும், பஸ்ஸிலும் சிறுவன் சென்றிருக்கிறான். செஞ்சியில் பலவிதமான மலைகளைப் பார்த்து வியந்திருக்கின்றான். அன்றும் இன்றும் என்றும் வி நோதமான மலைக் குன்றுகள் அவை!
உருண்டை, உருண்டையாய் இலட்சக்கணகானச் சிறு பாறைகள் யாரோ குவித்து வைத்தாற்போல் தோன்றும் மலைக்குன்றுகள். அவைகளைப் பற்றிப் பெரியவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தான். அதற்குச் சமயம் இப்போது வந்து விட்டது.
“எதை எப்படித் தெரிஞ்சுக்கணும்னு ஒரு கணக்கு இருக்கு. அந்தக் காலம், நேரம், நக்ஷத்திரம் கூடி வரும்போது நாங்களே அதைச் சொல்லிடுவோம் கேக்கணும்னு அவசியம் கூடக் கிடையாது” – வழக்கம்போல் பெரியவர் எங்கோ பார்த்தவாறு சொல்லிக்கொண்டே சிறுவனின் மனவோட்டத்தைக் கலைத்தார்!
அங்கே ஒரு சிறிய பாறையைச் சுட்டிக் காட்டி, “இதில்தாண்டா, ராஜாதேசிங்கு திருஅண்ணாமலையைப் பார்த்து தியானம் செய்வான். அந்தப் பெரிய பாறைமேல் தான் அவனோட பஞ்சகல்யாணி குதிரையும் மேல் ஏறி நின்னு திருஅண்ணாமலையைப் பாத்துக் கனைச்சிக்கிட்டே இருக்கும். இதோட ரகசியம் நெறயப் பேருக்குத் தெரியாது” என்று சொல்லியவாறே அங்கிருந்த சிறுபாறை ஒன்றைச் சற்று நகர்த்தி. சிறுவனைச் சைகை காட்டி அழைத்தார்!
சிறுவன் அவர் கைகாட்டிய பக்கம் பாறையினுள் குனிந்து பார்த்தான்!
ஜடாமுடி தரித்த யோகிகள், ரிஷிகள். சித்தர்கள் தியான நிலைகளில் அமர்ந்திருந்தனர். ஒவ்வொருவர் சிரசின் மேல் தோன்றிய அற்புத ஜோதி அவர்கள் உருவத்தைத் தெள்ளெனக் காட்டியது. அனைவரும் திருஅண்ணாமலை திசையை நோக்கித் தியானத்தில் இருந்தனர்.
சிறுவன் வியப்புடன் பெரியவரைப் பார்த்தான். அவன் கண்களால் எதையும் நம்ப முடியவில்லை! பெரியவர் மீண்டும் சைகை செய்தவாறே பாறையின் அடியில் மற்றொரு இடத்தைக் காண்பித்தார். சிறுவன் குனிந்து அவ்விடத்தைப் பார்த்தான்.
அங்கே.... சுமார் 15 அடி நீளமுள்ள இரண்டுபுலிகள் இங்கும அங்குமாய் உலவிக் கொண்டிருந்தன! சிறுவன் “வில்” என்று கத்திக் கொண்டே பெரியவர் மேல் தாவி அவரைக் கெட்டியாக்க் கட்டிப் பிடித்துக் கொண்டான். பெரியவர் கலகலவென்று சிரித்துக் கொண்டே சிறுவனைக் கீழே இறக்கி விட்டார்.
“செஞ்சி மலைகள்ள தாண்டா நெறய தெய்வீக ரகசியங்கள் இருக்கு! இதுக்கே இப்படி பயப்படறியே. ஒரு வாரத்துக்கு இந்த மலைலதான் என் உடம்பை மறைச்சு வச்சுட்டு நான் வேற லோகத்துக்குப் போகப் போறேன். அதுவரைக்கும் அந்தப் புலிகள் மாதிரி நீதான் என் உடம்பைக் காவல் காக்கணும் புரியுதா?”
சிறுவன் வெலவெலத்து நின்றா! “இந்த மாதிரி வேலையை இதுவரைக்கும் வாத்யார் கொடுத்ததில்லையே! இந்த ஒருவாரக் காவலுக்குத்தான் மூணுமூலிகை இலையைத் தின்றோமா? பசியில்லாத ஒருவாரம் இதுக்குத்தானா..?” சிறுவன் ஏதேதோ எண்ணங்களில் உழன்றான். அச்சத்தில் உளற ஆரம்பித்தான்.. 
“வேண்டாம், விட்டுடு வாத்யாரே!!!”

ஸ்ரீராம நவமி பகலிகை பூஜை

ஸ்ரீ நந்தீஸ்வர மூர்த்தி ஸ்ரீ அகஸ்தியரிடம் : “சித்புருஷரே! தாங்கள் ஸ்ரீராமனுக்கே “ஸ்ரீஆதித்ய ஹிருதயம்” என்னும் அற்புதமான மந்திரத்தை உபதேசிக்கும் தெய்வீகப் பேறு பெற்றீர்கள். எனவே தங்கள் திருவாயால் ஸ்ரீராமனின் தோற்றத்தை  வர்ணித்துக் கேட்க ஆவலாயுள்ளேன்!”
ஸ்ரீஅகஸ்திய மஹாபிரபு: “சிவசிவ! ஸ்ரீ ராமனை வர்ணிக்க எந்தத் தகுதியும் எனக்கில்லையே! தாங்களோ யுகம்யுகமாக பிரபஞ்சமெங்கும் ஒலிக்கும் தாரகமந்திர சப்த பீஜங்களைத் தாங்கி நின்று சகல ஜீவராசிகளுக்கும் அருள்பாலிக்கின்றீர்கள். ராம நாமத்தின் அழகே ஸ்ரீராமனின் அழகு! இரண்டும் ஒன்றே!”
அந்த யுகத்தின் பவ ஆண்டுக் காலமுடிவு அது .... யுவ வருஷம் பூத்திடச் சில நாட்களே உள்ளன. ஸ்ரீ நந்திசேகர மூர்த்தியின் திருச்சந்நிதியில் அமர்ந்த ஸ்ரீஅகஸ்தியர் “எம்பெருமான் சிவபெருமான் திருவருளால் இந்த பவ ஆண்டிற்குரித்தான ஸ்ரீராம நவமியைக் கொண்டாடும் முறையை உலகிற்கு உணர்த்துகிறோம்” என கூறுவாராயினர்.
இதுவே இந்த பவவருட ஸ்ரீராம நவமியைக் கொண்டாடும் முறையென சித்தபுருஷர்கள் அருள்கின்றனர்.
9.4.1995 முதல் ஸ்ரீராம நவமி  உற்சவத்தைத் துவங்கி சில விசேஷ பூஜை முறைகளுடன் அடுத்த வருடத்தில் 28.3.1996ல் வரும் ஸ்ரீராம நவமி வரை கொண்டாட வேண்டும். இந்த ஒருவருட காலத்தில் ஆண், பெண் இருபாலருக்கும் உரித்தான புனர்பூச நட்சத்திரம், நவமி திதிகளில் செய்ய வேண்டிய எளிய வழி முறைகள் உண்டு. இதற்கு நட்சத்திரப் பகலிகை, திதிப் பகலிகை என்று பெயர். பவ, யுவ வருட இரண்டு ஸ்ரீராம நவமி தினங்கட்கு இடைப்பட்டுள்ளன புனர்பூச ந்ட்சத்திர, நவமி திதிகளை, வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டுவகைகளாகப் பிரித்துக் கொள்ள வேண்டும்..
விசேஷப் பகலிகை நாட்கள்

நட்சத்திரம், திதி

வளர்பிறைப் பகலிகை
நாட்கள்

தேய்பிறைப் பகலிகை
நாட்கள்

புனர்பூசம்
(நட்சத்திரப்
பகலிகை

2.5.1995
29.6.1995
16.10.1995
2.2.1995
1.3.1996
28.3.1996

 5.5.1995
26.7.1995
23.8.1995
19.9.1995
13.11.1995
10.12.1995
6.1.1996

திதிப் பகலிகை
(நவமி)

9.4.1995
9.5.1995
7.6.1995
7.7.1995
5.8.1995
3.9.1995
2.10.1995
1.11.1995
30.11.1995
30.12.1995
28.1.1996
27.2.1996
28.3.1996

 23.4.1995
22.5.1995
21.6.1995
20.7.1995
19.8.1995
18.9.1995
18.10.1995
16.11.1995
16.12.1995
16.12.1995
15.1.1996
13.2.1996
13.3.1996
12.4.1996

 நட்சத்திரப் பகலிகை : பவ  வருட ஸ்ரீராம நவமி முதல் யுவ வருட ஸ்ரீராம நவமிவரை மாதந்தோறும் அமையும் புனர்பூச நட்சத்திர தினத்திற்கு “நட்சத்திரப் பகலிகை” என்று பெயர்.
இதே போல் இடையில் வரும் நவமி திதி தினங்களுக்கு திதிப் பகலிகை என்று பெயர். அடியார்களுக்கு சுலபமாக இருக்கும் பொருட்டு நட்சத்திரப் பகலிகை, திதிப்பகலிகை , தினங்களை அட்டவணை இட்டுக் கொடுத்துள்ளோம்.
நட்சத்திரப் பகலிகை பூஜை : பவ,யுவ வருட இரு ஸ்ரீராம நவமிகளுக்கு இடையில் உள்ள ஒவ்வொரு மாத புனர்பூச நட்சத்திரமாகிய “ நட்சத்திரப் பகலிகை” நாளன்று இல்லத்திலோ கோயிலிலோ ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒன்று கூடிக் குறைந்தது மூன்று மணி நேரமாவது “ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்” என்ற மந்திரத்தைத் துதிக்க வேண்டும். ஸ்ரீராம மூர்த்தி திருஉருவத்திற்கோ, படத்திற்கோ சிறுசிறு சந்தனப் பொட்டுக்களை இட்டு அலங்கரித்து அனைவரும் ஏகஸ்மரணத் துதியில் அதாவது “ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்” என்று ஓதி ஒன்றாகக் கூட்டு நாம ஜபம் செய்தல் வேண்டும். காலையிலோ மாலையிலோ எந்நேரமும் இந்த அகண்ட நாம ஜபத்தைச் செய்திடலாம். ஜபநேரம் போக ஏனைய நேரத்தில் அந்நாள் முழுதும் இராம நாம ஸ்மரணையில் ஈடுபட வேண்டும், சந்தனப் பொட்டுகளைக் கிண்ணத்தில் சேகரிக்க வேண்டும்.
 நைவேத்யம் : உத்தராயண நட்சத்திரப் பகலிகை எனில் ஏழைகளுக்குப் பானக தானமும் தட்சிணாயன நட்சத்திரப் பகலிகை எனில் பாயச தானமும் அளித்துப் பூஜையை நிறைவு செய்திடல் வேண்டும்.
திதிப் பகலிகை பூஜை

எப்போதுமே ஓர் உணவைத் தயாரிக்கும் போது அதைச் செய்கின்றவர்களின் எண்ணங்கள் அவ்வுணவில் கலக்கின்றன. இதேபோல் எந்தக் காரியத்தைச் செய்தாலும் செய்கின்றவர்களின் எண்ணங்கள் அவ்வுணவில் கலக்கின்றன. எனவேதான் இறை நாமத்தை, ஸ்தோத்திரத்தைத் துதித்தவாறே சமைக்க வேண்டும் என்ற நன்னெறியை நம் பெரியோர்கள் வகுத்துள்ளனர். இதே போல் எந்தக் காரியத்தைச் செய்தாலும் இயன்றவரை நல்லெண்ணங்களுடன் கடமையாற்ற வேண்டும். பிறர் மீது த்வேஷம், வன்மை, பொறாமை கொண்டு தூற்றுதல், தன் கஷ்டங்களை எண்ணுதல், இதனால் என்ன ஆகுமோ, அதனால் என்ன நேருமோ என்று மனத்தைக் குழப்பிக் கொள்ளுதல், காரியத்திற்குச் சம்பந்தமில்லா எண்ணங்களில் உழல்தல்.... இவ்வகையில் எக்காரியத்தைச் செய்தாலும் அதன் எண்ண விளைவுகள் கார்ய பலன்களில் பிரதிபலிக்கும்.

பவ, யுவ வருட இரு ஸ்ரீராம நவமிகளுக்கு இடையில் அமைகின்ற ஒவ்வொரு நவமி திதிக்கும், “திதிப் பகலிகை” என்று பெயர். நட்சத்திரப் பகலிகை போன்றல்லாது இந்த திதிப் பகலிகையில் பெண்கள் மட்டும் பங்கேற்க வேண்டும்.
நவமி திதியாம் திதிப் பகலிகையில் பெண்கள் காலையிலோ மாலையிலோ ஒன்று கூடி ஸ்ரீராமருக்குச் சந்தனப் பொருட்டுகள் இட்டு அலங்கரித்துக் குறைந்தது மூன்று மணி நேரமாவது “ஸ்ரீராம் ஜெயராம் ஜெயஜெய ராம்” என்ற ஏகநாம ஸ்மரணத்தைத் துதிக்க/ஜபிக்க வேண்டும் .பூஜைக்குப் பின் நைவேத்யம் & தானம் – உத்தராயணம் – புட்டு, தட்சிணாயனம் – முந்திரி, திராட்சை
மாத பூஜைகள்............. இவ்வாறாக ஓராண்டுக் காலத்தில் ஒவ்வொரு மாதமும் புனர்பூச நட்சத்திரப் பகலிகை பூஜை, இரண்டு நவமித் திதிப் பகலிகைப் பூஜைகள் பொதுவாக அமையும். கிண்ணத்தில் சேகரிக்கப்பட்ட சந்தனப் பொட்டுக்களை ஒவ்வொரு பூஜையிலும் வைக்க வேண்டும். அடுத்தடுத்த பூஜைகளை அடியார்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய இல்லங்களில் முறை வைத்து நடத்திடப் பூஜையின் பலன்கள் பலரையும் சென்றடையும். கோயிலில் நிகழ்த்தினாலோ அதன் பலன் கள் ஆயிரக் கணக்கானோரைச் சென்றடையும். இதுவன்றோ மக்கள் சேவை!

பூரண நிறைவு பூஜை 28.3.1996 அன்று பூஜையை நிறைவு செய்து சந்தனப் பொட்டுகளைப் பலருக்கும் பிரசாதமாக விநியோகிக்க வேண்டும். இதற்கு “கௌசல்யாத்ம்ஜ சந்தனப் பிரசாதம்” என்று பெயர். ஸ்ரீவந்தன மஹரிஷி என்பவருடைய ராம நாம ஸ்மரணத்தின் பலனாகவே தேவி கௌசல்யா சுகப்பிரசவம் பெற்று ஸ்ரீராமனை ஈன்றெடுத்தாள். ஸ்ரீராமன் அவதார வைபவம் நிகழும் முன்னரே முதன்முதலாக பூலோகத்தில் “ஸ்ரீராம நாம” தாரக மந்திரத்தைக் கோடிக்கணக்கான முறை ஜபித்தவர் “ஸ்ரீ வந்தன மஹரிஷியே!”
எனவே மேற்கண்ட முறையில் “பகலிகை” பூஜையினை முறையாக நிகழ்த்திட “பகலிகைச் சித்தர்” என்றழைக்கப்படும் ஸ்ரீவந்தன மஹரிஷி ஒவ்வொரு பகலிகைப் பூஜையிலும் ஏதேனும் ஓர் உருவில் பிரசன்னமாகித் தன் ஆசிகளைச் சந்தனப் பொட்டுகளில் ஆகர்ஷணமடையச் செய்கின்றார்.
எனவே இந்த “கௌஸல்யாத்மஜ” சந்தனப்  பிரசாதத்தைப் பெறுவோர்க்கு அவர்கள் குடும்பங்களில்

  1. சுகப் பிரசவம் ஏற்படும்.
  2. குறைப் பிரசவம், கரு கலைதல், சிசு நழுவுதல் போன்ற அகால சிசு மரித்தல் இல்லாது கர்ப்பம் நன்கு முழுமை பெறும்.
  3. கர்ப்பிணிப் பெண்கள் இந்த பகலிகைப் பூஜையில் பங்கு கொண்டால் உத்தம குழந்தை பிறக்கும். நல்ல வாழ்வைப் பெறுவர்.
  4. சந்ததி வாழையடி வாழையெனத் தழைக்கும். குடும்பத்தில் பகைமை தணியும்.

பவ வருட ஸ்ரீராம நவமி பூஜை
அது சரி, பவ வருட ஸ்ரீராம நவமி பூஜையை எவ்வாறு கொண்டாட வேண்டுமென சித்த புருஷர்கள் அருள்கின்றனர்.?
ஸ்ரீவந்தன மஹரிஷி
அதோ ஸ்ரீவந்தன மஹரிஷி அயோத்தி ராஜ மண்டப வாயிலில் தர்பாசனத்தில் அமர்ந்து இராம நாம தாரகத்தை ஜபித்துக் கொண்டிருக்கிறார்.  ஸ்ரீஇராமர் அவதரிப்பதற்கு முன்னரே அவர்தம் அவதார இரகசியங்களை அறிந்தோர் ஒரு சிலரே. ஸ்ரீவந்தன மஹரிஷியோ திரேதாயுகத் தொடக்கத்திலேயே இருந்து ராம நாம ஜபத்தில் பல்லாயிரம் ஆண்டுகளாக ஈடுபட்டிருப்பதாகப் பல மஹரிஷிகள் அறிவித்தனர். யுகம் யுகமாகத் தொடர்ந்த தாரக மந்திர ஜபமோ! பஞ்சவடி, கல்லால மரம், அருணாசல கிரிவலம் (திருஅண்ணாமலை), கங்கை, காவேரி நதி தீரங்கள், இமயமலை, மேரு மலை, சேதுக்கரை போன்ற பல இடங்களில் ஸ்ரீராமர் அவதரிப்பதற்கு முன்னரே ஸ்ரீராம மந்திரத்தை ஜபித்து வந்தவர் அவர்.
தசரத சக்கரவர்த்தி புத்ரகாமேஷ்டி யாகம் நிகழ்த்தினாரன்றோ! அந்த யாகத்திற்கு வருகை தந்து அங்கு தொடர்ந்த இராம நாம ஜபத்தை தசரதரின் மனைவியர்கள் கருவுற்ற போதும் தொடர்ந்து நடத்தி இராஜ மண்டபத்தில் யோகத்தில் அமர்ந்தார்.
வசிஷ்டர் இட்ட சாபம்
கௌசல்யா தேவி பன்னிரெண்டு மாதங்கள் கருவைச் சுமந்தாள். இதோ இராஜ மண்டபத்தைத் தாண்டிப் பிரசவ அறைக்குள் கௌசல்யா  தேவி செல்ல வேண்டும். அச்சமயத்தில் ஆடவர் எதிர்ப்படக் கூடாது என்பது அக்கால நியதி. எனவே அனைவரும் ஸ்ரீவந்தன மஹரிஷியைச் சற்றுத் தள்ளிச் செல்லுமாறும் ராம் நாமத்தை அவர் உரக்க ஒலிப்பதால் இடுப்பு வலிகண்ட தேவி கௌசல்யாவிற்கு அது இடையூறென்பதால் வேறிடத்திற்குச் செல்லுமாறும் பலரும் ஏன் தசரதப் பேரரசரே வந்து வேண்டி நிற்க...!
யோக நிலையில் ராம நாமத்தில் திளைத்த ஸ்ரீவந்தன மஹரிஷி சற்றும் அசரவில்லை..
நேரமோ கடந்து கொண்டிருந்தது. தசரதர்  பதைபதத்தார். கஷ்டப்பட்டு புத்ர காமேஷ்டி யாகம் புரிந்தது புத்ர பாக்யம் பெறுவதற்கன்றோ!
“இறைவா ! இது என்ன சோதனை?” குலகுரு வசிஷ்டர் வந்து சேர்ந்தார். அவர் பணிந்து கேட்டும் ஸ்ரீவந்தன மஹரிஷி யோக நிலையிலிருந்து மீள்வதாகத் தெரியவிலை!
வசிஷ்டர் சினம் கொண்டார்.
“கிளியாக மாறிச் சந்தன மரத்தில் அமர்ந்து தாரக மந்திரத்தை ஜபிப்பாயாக!”
சாபமா அது! சந்தனப் பேழையில் அளித்த பரிசல்லவா!

பாலகிரண பூசந்திப் பௌர்ணமி

வருடத்தின் முதல் மாதமான சித்திரையில் இரண்டு பௌர்ணமிகள் அமைவது மிகவும் அபூர்வமானதாகும். வரும் யுவ வருட சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி திதிகள் அமைந்து மிக விசேஷமானதாகக் கொண்டாடப்படுகிறது. முதல் பௌர்ணமிக்கு பாலகிரண பூசந்தி பௌர்ணமி என்றும் இரண்டாவது பௌர்ணமியான சித்திரா பௌர்ணமி பால்ய விவேக கல்யாண பௌர்ணமி என்று யுவ வருடத்திற்குரிய பௌர்ணமிகளின் விசேஷ நாமங்களாக சித்தபுருஷர்கள் அருள்கின்றனர். இவ்விரண்டையும் பொதுவாக சந்திர தீர்த்தப் பிரஸாத பௌர்ணமி என்றழைப்பர்.
குழந்தைகள் ஜாதக ரீதியாக ஏற்படும் பாலாரிஷ்ட தோஷங்களால் பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கும் பல துன்பங்கள் விளைகின்றன. இதற்குப் பரிகாரமாகா மந்திரங்கள், பீஜாட்சரங்கள் எழுதப்பட்ட ஓலைச் சுவடுகளை குழந்தைகளுக்கான தூளிகளில் (தொட்டில்களில்) கட்டித் தொங்க விடும் பழக்கம் இன்றும் நிலவுகிறது. இத்தகைய பாலாரிஷ்ட தோஷங்களுக்கு மிகச் சிறந்த பரிஹாரமாக இந்த பாலகிரண பூசந்தி பௌர்ணமி அமைகின்றது. இந்நாளில் பாலாரிஷ்ட தோஷம் உள்ளோர் ஸ்ரீமுஷ்ணம் பெருமாள் கோயிலில் இயன்ற அபிஷேக ஆராதனைகளுடனும் தானதர்மங்களுடனும் இப்பௌர்ணமியைக் கொண்டாடுவது சிறப்பானது.  இன்று கிழங்கு வகைகளால் ஆன உணவினை இங்கு அன்னதானமாக இடுவது விசேஷமானதாகும்.
சிசு தர்ப்பணம்

வெளியில் புறப்படுகையில் கால் இடறுதல், விளக்கு அணைதல போன்ற அபசகுனங்கள் ஏற்பட்டால் துளசிச் செடியை தரிசனம் செய்து வலம் வந்து சென்றால் சகுன தோஷங்கள் நிவர்த்தியாகும். அப்போது எதிர்ப்படும் ஏழைக்கு இயன்ற தானத்தை அளிக்க வேண்டும்.

பல பெற்றோர்கள் பச்சிளம் குழந்தைகளை இழந்து துன்புறுகின்றார். குழந்தைப் பருவ மரணம் என்பது மனதை வருத்தக் கூடியதாகும். சிசுக்களுக்குரித்தான தர்ப்பண நியதியும் இல்லாமையால் இழந்த தங்கள் சிசுக்களை குறித்துப் பெற்றோர்கள் கவலை அடைகின்றனர்.
கர்ப்பத்திலிருந்தே இயற்கையாகவே கருக்கலைந்து சிசு நழுவி சிசுக்களை இழந்து வருந்துவோர் உண்டு. மனதில் ஒரு வடுவாகவே இருந்து மனக் கவலையைப் பெருக்கும்.
மேற்கண்ட துன்பங்களுக்கு ஆன்மீக ரீதியான மாமருந்தாக பாலகிரண பூசந்தி பௌர்ணமி பெருந்துணை புரிகின்றது.
மறுமணம் புரிந்தோர், இரண்டாம் தார வாழ்க்கை இவற்றால் சிசுவைதைத்தல் மாற்றாஅன் குழந்தைகளை அவமதித்தல். சிறு குழந்தைகளைக் காரணமின்றி வசை பாடி தன் குழந்தைகளையே  மனம் நோகப் பேசுதல், அடித்து துன்புறுத்துதல் போன்ற வல்வினைகளுக்கும் சிறந்த பரிகாரமாய் இருப்பது பாலகிரண பூசந்தி பௌர்ணமியாகும்.
பாலகிரண பூசந்தி பௌர்ணமி வழிபாடு
இப்பௌர்ணமியைக் கொண்டாடும் முறையாக சித்தபுருஷர்கள் அருளியதாவது :-

  1. இப்பௌர்ணமியை ஸ்ரீமுஷ்ணம் ஸ்ரீவராகப் பெருமாள், கோயிலில் கொண்டாடுவது மிகச் சிறப்புடையதாகும். மல்லி, சம்பங்கி, வெள்ளைத் தாமரை, பிச்சிப் பூ, முல்லை போன்ற வெள்ளை நிற மலர்களைக் கொண்டு பெருமாள், தாயார் மூர்த்திகளை அலங்கரித்து காய்ச்சிய பசும்பாலை நைவேத்தியம் செய்து பால் தானம் அளிக்க வேண்டும்.
  2. ஸ்ரீமுஷ்ணம் செல்ல இயலாதோர் தங்கள் ஊரிலுள்ள பெருமாள் ஆலயத்தில் மேற்கண்ட முறையில் வழிபாட்டுடன் பால் தானம் அளித்தல் வேண்டும்.
  3. காய்ச்சிய பாலை  நைவேத்தியம் செய்வதற்கு முன் அதில் சந்திரனின் பூரண கிரணங்கள் விழுமாறு செய்தல் வேண்டும்.
  4. மதுரை அரசரடியில் உள்ள ஸ்ரீகுழந்தையானந்தா ஜீவ சமாதியிலும் இப் பௌர்ணமியைக் கொண்டாடுவது விசேஷமானதாக சித்த புருஷர்கள் அருள்கின்றார்கள்.
  5. இப்பௌர்ணமியன்று , சீர்காழி சிவாலயத் திருக்குளத்தில் பௌர்ணமி  நிலவொளியில் நீராடி சம்பந்தருடைய தேவாரப் பாடல்களை ஓதி நிலவொளி தோய்ந்து காய்ச்சிய பசுபாலை இறைவனுக்கு அர்ப்பணித்து அதனைத் தானமாகக் குழந்தைகளுக்கு அளித்தல் சிறப்புடையதாகும்.
  6. திருஅண்ணாமலை, பழநி, வள்ளிமலை, திருச்சி மலைக் கோட்டை, குளித்தலை அருகே உள்ள ஐயர்மலை, குன்றக்குடி போன்ற மலைத் தலங்களில் நிலவொளியில் கிரிவலம் வந்து கிரிவலப் பாதையில் ஏழைக் குழந்தைகளுக்குப் பால் தானமளித்தலால் பாலாரிஷ்ட தோஷங்கள் நிவர்த்தியாகும். குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவது தணியும்.
கத்ரி பூஜை

கத்ரி – சித்த புருஷர்களின் விளக்கம் – யுவ வருட கத்திரி காலமானது 4.5.1995 முதல் 28.5.1995 வரை விரவியுள்ளது. கோடைகாலத்தில் அமையும் கத்ரி காலமானது பல ஆன்மீக இரகசியங்கள் பொதிந்துள்ளதாகும். பொதுவாக வெப்ப நோய்கள் பொங்கும் காலமிது. இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவே கத்ரி காலம் என்ற ஒன்றைப் பெரியோர்கள் நிர்ணயித்துள்ளனர்.
வசந்த, சாரதா நவராத்திரிகள்
மனிதன் சிறந்த ஆரோக்கியத்தைப் பெற்றிருந்தால் தான் அவன் தன்னை சீரிய மனநிலையில் வைத்திருக்க முடியும். உடல் பாதிக்கபட்டால் மனநிலையும் மாறுபடும். இதற்காகவே ஆசனம், யோகம், தியானம் போன்றவை நித்ய கர்மாக்களாக தினசரி சந்தியா வந்தனம், பிரம்மயக்ஞம், அக்னி சந்தானம், ஒளபாஸனம், வைச்வதேவம் போன்றவைகளாக விதிக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாகச் செய்யாவிடில் ஆரோக்யம் குலையும். இதனால் சீரிய மனநிலையும் பாதிக்கப்பட்டு தீய வழிகளை மனம் நாடுகின்றது.

கடுமையான வெப்பம், குளிர் காரணமாகவும் உடல் நிலை பாதிக்கப்படுவதுண்டு. மனிதனுடைய முயற்சிக்கு அப்பாற்பட்ட இத்தகைய கால நிலை மாறுதல்களினால் ஏற்படும் சுகாதாரக் கேடுகளை கூடுதல் வழிபாடுகள் மூலமாகத்தான் தீர்க்க முடியும். இதற்காகவே வெப்ப காலத்தில் (வசந்தருதிவில்) வசந்த நவராத்திரி, குளிர்காலத்தில் (சரத்ருது) சாரதா நவராத்திரி பூஜைகளும் கொண்டாடப்படுகின்றன.
அம்மையே வெம்மையைத் தணிக்கும் ஆற்றல் உள்ளவள். அம்மையை மறந்த உடலுக்கு அவ்வம்மையே அம்மை நோயாக வந்து நோயை அனுபவிப்பதன் மூலம் கர்ம நோயைத் தீர்க்க அருள்பாலிக்கின்றாள்.

நிறையக் கடன் பிரச்னைகளால் அவதியுறுவோர் சென்னை – திருத்தணி சாலையிலுள்ள திருநின்றவூர் ஸ்ரீபக்தவத்சலப் பெருமாள் ஆலயத்தில் அங்கப் பிரதட்சிணம் செய்து ஏழைகளுக்கு இயன்ற அளவு அன்னதானம் அளித்துவரக் கடன் தொல்லைகள் இறையருளால் நிச்சயமாகக் குறையும்

பஞ்சாங்கத்தில் கத்ரி ஆரம்பம், முடிவு என்று போடப்பட்டிருக்கும் . வசந்த நவராத்திரி சாரதா நவராத்திரிகளைப் போல் கத்ரி காலமும் குறிப்பிட்ட வெப்ப, குளிர் நிலைகளில் இருந்து நம்மைக் காப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட பூஜைக்காலமாகும். நவராத்ரியின் ஆதிபராசக்தி வழிபாட்டினால் பெரிய கர்ம வினைகள் தீர்க்கப்படுகின்றன. இதேபோல் கத்ரிகால வழிபாட்டு முறைகளினால் பல்வேறு கர்மவினைகளை எளிதில் கழித்து விடலாம்.
திரிபுரண்டமாகிய பூணூலை ஜாதி மத பேதமின்றி அனைவரும் அணிய வேண்டும். நாம் ஓதுகின்ற இறை மந்த்ரங்களின், இறைத்துதிகளின் தெய்வீக சக்தியையும் கோயில் தரிசனம், தீர்த்த ஸ்நானம், மஹான்களின் அருட்கடாட்சம் போன்ற இறை சக்திகளையும் பரிபூர்ணமாக முழுமையாகப் பெறும் அளவுக்கு நம் தேகநிலை அமையவில்லை. நித்ய வழிபாடுகளை முறையாகச் செய்தால் அத்தகைய தேகப் பாங்கைப் பெறலாம். இந்நிலையில் பூணூல் கவசமாக நின்று நல்சக்தியைத் தாங்கி நம் உடலுக்கு அவ்வப்போது அளிக்கின்றது.
ஆனால் பூணூலைப் பலர் முறையாக அணிந்து அதற்கு உரித்தான காயத்ரி போன்ற மந்திரங்களை சரிவர ஜபிக்காதவர்களுக்கு கத்ரி கால பூஜை முறைகள் சிறந்த பரிகாரமாக அமைகின்றன.

  1. பிறர் பூணூல் அணிவதை இழித்துப் பேசியவர்கள் தங்கள் அறியாமைக்கு வருந்தி கத்ரி காலத்திலாவது பூணூல் அணிந்து முறையாக காயத்ரி மந்த்ரம் ஜபித்து அதற்குப் பிராயசித்தம் காண வேண்டும்.
  2. ஒவ்வொரு இல்லத்திலும் காலை, மதியம், மாலை ஆகிய மூன்று வேளைகளிலும் திரிகால விளக்கேற்றி இறைவனை வழிபடவேண்டும் ஆனால் காலப்போக்கில் மாலையில் மட்டுமே தீபம் ஏற்றும் பழக்கம் நடைமுறைக்கு வந்துவிட்டது. மூன்று வேளை தீபம் ஏற்றாமைக்கான பரிகார முறையாக கத்ரி வழிபாடு அறிவுறுத்தப்படுகின்றது,

கிரஸ்தோதய சந்திர கிரஹணம்
15.4.1995 சனிக்கிழமை பௌர்ணமியன்று மாலை 5 மணி 11 நிமிடம் முதல் மாலை 6 மணி 25 நிமிடம் வரை சந்திர கிரஹணம் அமைகிறது.
பிரதோஷம், விஷ்ணுபதி போன்ற புனித நேரங்களைப் போல் கிரஹண நேரங்களில் செய்யப்படும் பூஜைகள், துதிகள், ஜபம், தியானம், ஹோமம் யாகம் தானதர்மங்கள் போன்றவற்றிற்குப் பன்மடங்கு பலன்கள் இறையருளால் வர்ஷிக்கப்படுகின்றன.
இந்தக் கிரஹண நேரத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம், சிராத்தம் செய்வதால் பல வருடங்களில் பித்ரு காரியங்களை விட்ட குறைகளுக்கானப் பரிகாரத்தை தான தருமங்ளோடு முறையோடு செய்தால் பரிஹார நிவர்த்தியை எளிதில் பெறலாம். இந்நேரத்தில் செய்யப்படும் ராம நாம சங்கீர்த்தனத்தின் அற்புதப் பலன்களால் நம்முடைய மூதாதையர்கட்கு அது பெறும் புண்ணிய சக்தியாக மாறி அவர்களை உயர்ந்த நிலைகட்கு இட்டுச்செல்லும். நம்மைப் பல துன்பங்களிலிருந்து குறிப்பாகப் பித்ரு சாபங்களிலிருந்து நம்மையும் நம் குழந்தைகளையும் காக்கும்.
ஸ்ரீராம நவமி பவ வருட ஸ்ரீராம நவமியை ஸ்ரீவந்தன மஹரிஷி  ஜீவசமாதி கொண்டிருக்கும் (சென்னை பல்லாவரம் அருகிலுள்ள) திருநீர் மலையில் உள்ள ஸ்ரீராமர் சந்நிதியில் கொண்டாடுவது ஸ்ரீராமனின் திருவருளைப் பன்மடங்காய்ப் பெற்றுத் தரும். இங்கு ஸ்ரீராம நவமியை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடி கர்ப்பிணிகளுக்கு ஸ்ரீராம நாமம் ஜபிக்கப் பெற்ற உணவு, உடை, மருந்து, டானிக்குகள், படுக்கை போன்ற தேவையான பொருட்களை தானமாக அளித்திட பவவருட ஸ்ரீராம நவமியின் பரிபூரண பலன்களைப் பெற்றிடலாம்.

குழந்தை வளர

குழந்தைகளைப் பேணும் முறை :- குழந்தைகள் நல்லொழுக்கத்துடன் இறை பக்தியுடன் வளர வேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோருடைய பேரவா. இறை நம்பிக்கையைப் பெருக்கினால் தான் நல்லொழுக்கம் தானே வரும். தீய பழக்கவழக்கங்கள் ஏற்படாது.
ஜீவ நாத பாதயோகம் :- தினசரி கோயிலுக்குச் செல்லுதல் உத்தமமானது. இயலாவிடில் வாரத்திற்கு ஓரிரு முறையேனும் குழந்தைகளுடன் ஆலயத்தை அடிப் பிரதட்சிணம் செய்தல் வேண்டும். அவர்கள் கையில் பிரட், பழங்களைக் கொடுத்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளிக்க வேண்டும். தான தர்மங்களுடன் கூடிய இறை தரிசனம் சிறந்த அடிப்படையுள்ள ஆன்மீகப் பாடமாக அமையும்.
ஓம் நமசிவாய, ஓம் நமோ நாராயணாய, முருகா போற்றி, ஐயப்பா சரணம், ஓம்சக்தி போன்ற இறை நாமங்களை ஓதியவாறு குழந்தைகளுடன் பெற்றோர்களும் சேர்ந்து அடிப்பிரதட்சிணம் செய்தால் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இறை நாமத்தை எண்ணி, நினைந்து துதிக்கும் பயிற்சியாக அடிபிரதட்சிணம் அமைவதால் இது மிகச் சிறந்த யோகப் பயிற்சியாக குழந்தைகள், சிறுவர், சிறுமியர்க்கு அமைகின்றது.
இதற்கு ஜீவ நாத பாத யோகம் என்று பெயர். அவர்கள் நன்கு கற்று, வளர்ந்து, ஆளாகிப் பெரியோர்களாகினும் இந்த ஜீவ நாத பாத யோகத்தின் மஹிமையால் எத்தகைய தீவினைகளுக்கும் அடிமையாகாமல் நல்ல சாந்தமான , நல்லொழுக்கம் மிளிரும் வாழ்வைப் பெறுவர்.
அந்த அடிப்பிரதட்சிண முறையில் இன்னும் பலயோக முறைகள் உண்டு. தக்க சற்குருவை நாடினால் அவ்வரிய ஆன்மீக இரகசியங்களை அறிந்து பயன் பெறலாம். உதாரணமாக சனிப் பிரதோஷ நேரத்தில் சென்னை கோயம்பேடு ஸ்ரீகுறுங்காளீஸவரர் ஆலயத்தில் கைகளை உயரத் தூக்கி வணங்கிய நிலையில் அடிப்பிரதட்சிணம் செய்திட பள்ளிக்குச் செல்ல அடம்பிடிக்கும் குழந்தைகள் பயம் தெளிந்து நன்முறையில் பள்ளிக்குச் செல்வர். பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இத்தகைய அடிப்பிரதட்சிண முறைகளை மேற்கொண்டால் எத்தனையோ கர்ம வினைகளுக்குப் பிராயசித்தம் தேடிப் பல குடும்பப் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வுகளைக் காணலாம்.
பிரதோஷ நேரம், புத ஹோரை, குருஹோரை, அமிர்த யோகம் போன்றவை கூடும் பல சுப நேரங்களில் அடிபிரதட்சிணம் செய்வதால் பல உத்தமமான பலன்களைச் சுலபமாகப் பெறலாம். காலில் பாதங்கள், விரல்கள், உட்பாதங்கள், பாத விளிம்புகளில் மருதாணியிட்டு அச்சிவப்புடன் அடிப்பிரதட்சிணம் செய்வதால் கோயிலுக்கு அரூவமாக வரும் சித்த புருஷர்கள், யோகிகள், மஹான்களின் அனுக்ரஹத்தைப் பெறலாம்.
மருதாணி தலை சிறந்த மூலிகையாதலின் அதற்குச் சில விசேஷமான ஆன்மீக குணங்கள் உண்டு. சூன்யப் பார்வை தோஷங்கள், கண்ணேறுக் கோளாறுகளை நீக்கும் ஆன்மீக சக்தி உடையது. மூளை, தோல், உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து ஆலயத்தின் மந்திர, வேத சக்திகளைப் பெற்று தேகத்தினுள் செலுத்தும் ஆன்மீக சக்தி வாய்ந்ததே மருதாணி.
எனவே மருதாணியிட்ட கால்களுடன் அடிப்பிரதட்சிணம் செய்வது தெய்வீக அறிவு வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்...

 

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam