சூரியனையும் நிறுத்தி விடுவாள் ஒரு சுமங்கலி !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

சுமங்கலித்துவ மகிமை

அகல்யா, திரௌபதி, சீதா, தாரா, மண்டோதரி என்ற இந்த ஐந்து சுமங்கலிகளை தினந்தோறும் நினைத்து வணங்குவதால் எத்தகைய கொடிய பாபங்களும் நீங்கும் என்பது பெரியோர்கள் வாக்கு.

எந்தச் செயலைச் செய்தாலும் அதில் தவறு நேர்ந்தால் அதனால் வரும் பாவச் சுமையை ஏற்று அனுபவித்துத்தான் தீர வேண்டும் என்பது விதி. ஆனால், இவ்விதியை விதித்த இறைவன் மட்டுமே ஒருவரை அவர் செய்த பாவத்திலிருந்து விடுவிக்க முடியும். இந்த பஞ்ச மகா பத்தினிகளை நினைப்பதன் மூலமே ஒரு மனிதன் தன் பாவங்களிலிருந்து விடுபடமுடியும் என்றால் அவர்கள் இறைவனுக்கு நிகரான ஒரு நிலையை அடைந்தார்கள் என்பதுதானே இதிலிருந்து நாம் அறியும் உண்மை.
அந்த உண்மையை மேலும் சற்று ஆராய்வோம்.

உலகம் உய்யும் வழி

தாவரங்களும், விலங்குகளும், பறவைகளும், மனிதர்களும் வாழும் நமது பூமி நிலைத்திருக்கக் காரணம் என்ன? பஞ்ச பூதங்களால் ஆனதே நாம் காணும் இந்த உலகம். பஞ்ச பூதங்களால் உண்டாக்கப்பட்ட உயிர்கள் நிலைத்திருக்க வேண்டுமானால் பஞ்ச பூதங்களின் வெளிப்பாடான மழை, வெயில், காற்று, அக்னி இவை முறையோடு செயல்பட வேண்டும். அளவான மழையும், வெயிலும், காற்றும், வளமான பூமியும் இருந்தால்தான் மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள்களும், உடுக்க உடையும், வசிக்க இடமும் கிட்டும். பஞ்ச பூத விகிதத்தில் ஏதாவது ஒன்று அளவில் குறைந்தாலோ, அதிகமானாலோ அதனால் பூமியில் வாழும் உயிர்களின் வாழ்வு நிச்சயம் பாதிக்கப்படும்.

உதாரணமாக, சூரிய ஒளி இல்லை என்றால் உலகம் என்ன ஆகும்? தினமும் சூரியன் உதிப்பது என்பது நாம் நினைப்பது போல் சாதாரண விஷயம் அல்ல. நாம் தினமும் தூங்கி எழுந்தவுடன் நாம் காணும் முதல் அதிசயம் இந்த சூரியோதயம்தான்.

ஒரு முறை அதிசயச் செயல்களை (miracles) மகான்கள் எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்று நமது குருமங்கள கந்தர்வாவிடம் கேட்டபோது அதற்கு அவர்கள்,

நீங்கள் தினந்தோறும் அதிசயச் செயல்களைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுற்றுலும், ஏன் உங்களிடமே நீங்கள் அதிசயத்தைத்தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால், அந்த விஷயங்கள் எந்த அளவுக்கு அதிசயமானவை என்று நீங்கள் புரிந்து கொள்ளாததால்தான் அதிசயங்களைப் பற்றி அறியத் துடிக்கிறீர்கள்.

எது அதிசயம் ?

இரவில் தூங்கி எழும் மனிதன் காலையில் விழித்தெழுவது அதிசயமே. தூக்கத்தைப் பற்றி யாரும் புரிந்து கொண்டது கிடையாது. தூக்கத்தைப் பற்றி புரிந்து கொண்டால்தான் உங்களைப் பற்றி நீங்கள் முழுமையாக புரிந்து கொள்ள முடியும். உங்களைப் பற்றி புரிந்து கொண்டால்தான் இறைவனைப் பற்றி புரிந்து கொள்ள முடியும். நீங்கள் படுத்தவுடன் தூங்கி விட்டால் அது உங்களுக்கு அதிசயமாகத் தோன்றாமல் இருக்கலாம். ஆனால், வியாதியாலோ, மனக் கஷ்டத்தாலோ தூக்கமே வராமல் தூக்க மாத்திரையைப் போட்டுக் கொண்டு தூங்குபவர்களைக் கேட்டுப் பாருங்கள். உங்கள் தூக்கம் அவர்களுக்கு ஒரு அதிசயமே.

இவ்வாறு உலகில் உள்ள அதிசயங்களுள் அற்புதமான அதிசயம் சூரிய உதயமே. மந்தேஹர் என்று பெயர் கொண்ட 30 கோடி கொடிய அரக்கர்கள் வான் வெளியில் உலவுகிறார்கள். இவர்களுடைய பணி எப்படியாவது சூரியனை உதிக்கச் செய்யாமல் தடுத்து விடுவதுதான். ஆனால், இவர்களுடைய எண்ணம் நிறைவேறாமல் அதை தடுத்தி நிறுத்துவதற்காக கோடானு கோடி ரிஷிகளும், தேவர்களும், நல்ல எண்ணம் கொண்ட பக்தர்களும், அடியார்களும் தினமும் இறைவனை வேண்டி பூஜை செய்கின்றனர். இவர்களுடைய பூஜை பலனே மந்தேஹ அரக்கர்களின் கொடிய பிடியில் சூரியன் சிக்காதவாறு காத்து சூரிய பகவானை தினமும் உதிக்கச் செய்கின்றது.

சூரியனும் பணிந்த பதுமை
தொண்டை நாட்டில் நிடத நாடு என்ற நாடு உள்ளது. இதன் தலை நகரம் ஆதிந்தபுரம் ஆகும். அந்நாட்டை ஆண்ட ஸ்ரீநளச்சக்கரவர்த்திக்கும், சேது நாட்டு இளவரசி தமயந்திக்கும் பிறந்தவள் ஸ்ரீநளாயினி தேவி. நளாயினியின் பூர்வீக பெயர் இந்திர சேனை என்பதாகும்.

பதிவிரதையான நளாயினி ஒரு முறை தன்னுடைய கணவரான மௌத்கல்ய முனிவரை ஒரு கூடையில் வைத்து சுமந்து கொண்டு அடர்ந்த காட்டு வழியே சென்று கொண்டிருந்தாள். முனிவருடைய கால்கள் கூடைக்கு வெளியே தொங்கிக் கொண்டிருந்தன. அப்போது காட்டில் தலை கீழாகத் தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த ஒரு ரிஷியின் தலைமேல் மௌத்கல்ய முனிவரின் கால்கள் இடித்து விட்டன. அதனால் கோபமடைந்த அந்த ரிஷி மறுநாள் சூரிய உதயமாகும்போது தன்ளை இடித்த மௌத்கல முனிவரின் தலை சுக்கு நூறாக சிதறி இறந்து விடட்டும் என்று சாபமிட்டார்.

ரிஷியின் சாபத்தைக் கேட்ட நளாயினி அம்முனிவரை வணங்கி தன்னுடைய அஜாக்கிரதையால்தான் இத்தகைய தவறு நேர்ந்து விட்டது என்றும் அதனால் தன்னுடைய கணவரை எக்காரணம் கொண்டும் சபித்து விட வேண்டாம் என்று மனறாடி கேட்டுக் கொண்டாள்.

நளாயினியின் பெருமை

நளாயினி எவ்வளவுதான் மன்றாடினாலும் அந்த முனிவர் அவள் வார்த்தைகளை சிறிதும் ஏற்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தால் தன் கணவரைக் காப்பாற்றும் ஒரே வழி சூரியனை மறுநாள் காலையில் உதயம் ஆகாமல் நிறுத்தி விடுவதுதான் என்று முடிவுக்கு வந்து, கணவனைத் தவிர வேறு யாரையும் மனதினாலும் தீண்டாத பதிவிரதை நான் என்பது உண்மையானால் நாளை சூரியன் உதிக்காமல் போகட்டும், என்று வானத்தை நோக்கி முழங்கி விட்டு, தன் கணவனைச் சுமந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பி விட்டாள் நளாயினி.

பெண்களின் மாதவிடாய் நோய்கள் அகல
ஸ்ரீபொற்றாளம் பூவாய் சித்தர் தவமியற்றும்
பெட்டவாய்த்தலை திருத்தலம்

வீடு சென்றவுடன் தன் கணவனின் இடிபட்ட காலுக்கு மருந்து தடவி, உணவு கொடுத்து அனைத்து பணிவிடைகளையும் செவ்வனே முடித்து விட்டு உறங்கச் சென்று விட்டாள்.  

ஆனால், நளாயினியின் எதிர் சாபத்தைக் கேட்ட முனிவர் திடுக்கிட்டார். தன்னையே எதிர்த்து சூரியனைச் சபிக்கும் இந்தப் பெண் யார் என்று தன்னுடைய ஞான திருஷ்டியில் பார்த்தார். அவள்தான் நளாயினி என்பதையும், அவள் ஒரு உத்தம பத்தினி என்பதையும் உணர்ந்து கொண்டார். என்ன செய்வதென்று தெரியாமல் குழம்பிப் போனார் மகரிஷி. பிரம்மாவை நிந்தனை செய்தால் பெருமாளிடம் விமோசனம் பெறலாம். பெருமாளை நிந்தித்தால் சிவனிடம் பிராய சித்தம் பெறலாம். சிவனையே நிந்தித்து விட்டால் கூட அதை கருணைக் கடலான சற்குரு அதை மன்னித்து விடுவார். ஆனால், உத்தம பதிவிரதா தேவியின் சாபத்திற்கு யாராலும் பதில் சொல்ல முடியாது.  

நிச்சயமாக தன்னுடைய சாபம் பலிக்காது என்பதை உணர்ந்த முனிவர் அதற்கு எப்படிப் பரிகாரம் பெறுவது என்று யோசிக்கத் தொடங்கினார். ஏனென்றால் ஒருவருடைய சாபம் பலிக்காத நிலை ஏற்படுமானால் அந்தச் சாபத்தைக் கொடுத்தவர்தான் அதற்குப் பதில் சொல்ல வேண்டும் என்பது இறை நியதி.

ராமரிடம் தன்னுடைய வில்லைக் கொடுத்த பரசுராமர் அதை நாணேற்ற முடியுமா என்று சவால் விடுத்தார் அல்லவா? அவருடைய சவாலை ஏற்று பரசுராமரின் தனுசில் நாணேற்றிய ராமர் அதற்கேற்ற இலக்கைக் கேட்டபோது பரசுராமர் தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தன்னுடைய தபோ பலம் அனைத்தையும் ராமருடைய பாணத்திற்கு இலக்காக வைத்தார் அல்லவா? அதே விதத்தில் இப்போது முனிவரின் சாபம் பலனளிக்காத நிலை ஏற்பட்டபோது அது அந்த முனிவரைத்தான் தாக்கும். அவர் தலை வெடித்துச் சிதறும் சம்பவத்தை அவரே சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. இந்த இக்கட்டான ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள பிரம்ம லோகம் விரைந்தார் ரிஷி.

பூமியில் நடந்த விஷயங்களை எல்லாம் இந்திரன் மூலம் அறிந்த பிரம்மா எப்படியாவது அந்த ரிஷியிடமிருந்து தப்பித்துக் கொண்டால் போதும் என்று எண்ணி சரஸ்வதியிடம், தாயே, ஒரு ரிஷி பத்தினி சாபத்திற்கு பிராய சித்தம் கேட்டு என்னிடம் வர நினைக்கிறான். பத்தினி சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பிராய சித்தம் தர இயலாதே. எனவே, ஏதாவது சாக்குப் போக்கு சொல்லி அவனை அனுப்பி விடு, என்று சொல்லி விட்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

சரஸ்வதி தேவியும் அவ்வாறே அந்த ரிஷி வந்தவுடன் அவருக்கு பாத பூஜைகள் செய்து கௌரவித்து, பிரம்ம மூர்த்தி ஒரு புதிய லோகத்தை சிருஷ்டி செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு தியானத்தில் இருப்பதால் மூன்று நாட்களுக்கு யாரையும் காண இயலாது என்று கூறி விட்டாள். இல்லாவிட்டால் பத்தினி சாபத்துடன் அம்முனிவரின் சாபத்திற்கும் ஆளாக வேண்டி வருமே.

ரிஷி வேறு வழியில்லாமல் விஷ்ணுவின் வைகுண்டம் சென்றார். இதற்குள் ஒரு ஜாமம் கழிந்து விட்டது. மகரிஷியின் வரவை அறிந்த பெருமாள் பத்தினி சாபத்திலிருந்து அந்த ரிஷியைக் காப்பாற்ற முடியாது என்பதால் நாம் இப்போதைக்கு இந்த ரிஷியின் சாபத்திலிருந்து மீள வேண்டுமானால் நீலகண்டனைச் சரணடைவோம் என்று முடிவு கட்டி கருட வாகனத்தில் ஏறி விரைந்து திருக்கயிலையில் சரண் புகுந்தார்.

விஷ்ணு பகவான் கைலாயம் சென்ற செய்தியை அறிந்த ரிஷி, சரி, இதுவும் நன்மைக்கே. நாமும் கைலாயம் சென்றால் சிவன், விஷ்ணு இருவரில் ஒருவரையாவது பார்த்து சாப விமோசனம் பெற்று விடலாம் என்று நம்பிக்கையை நெஞ்சில் வளர்த்துக் கொண்டு கைலாயம் சென்றார்.

கைலாயத்தில் அந்த ரிஷிக்கு அமோக வரவேற்பு. அதிகார நந்தி அந்த ரிஷியை எதிர் கொண்டழைத்து அவரை உயர்ந்த ஒரு ஆசனத்தில் அமர்த்தி அற்புதமாக பாத பூஜைகளை நிறைவேற்றத் தொடங்கினார். அதிதி பூஜை நியதியாக பூஜை நிறைவேறும் வரை அதிதியாக வந்தவர் எந்த வேண்டுகோளையும் முன் வைக்க முடியாது அல்லவா? எனவே, நந்தீஸ்வரரின் பூஜை நிறைவேறியவுடன்தான் தான் வந்த காரியத்தைக் கூறி தான் சிவபெருமானைத் தரிசனம் செய்யும் நோக்கத்தைக் கூற முடியும்.

ஆனால், ரிஷியின் வரவை முன்னரே அறிந்த சிவபெருமான் எப்படியாவது அவரை மூன்றாம் ஜாமம் வரை கைலாய வாசலிலேயே நிறுத்தி வைக்கும்படிக் கட்டளை இட்டிருந்தார்.

ஸ்ரீ மத்யார்ஜுனேஸ்வரர் சிவாலயம்
பெட்டவாய்த்தலை

ஏனென்றால், மூன்றாம் ஜாமம் முடிந்து நாலாம் ஜாமம் ஆரம்பித்து விட்டால் சிவ பெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டு விடுவார். திருக்கைலாய நியதிகளின்படி சிவபெருமான் ஆத்ம பூஜையில் ஈடுபட்டிருக்கும்போது தரிசனத்திற்காக யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. எனவே, ஆத்ம பூஜை நேரம் வரும் வரை புதிது புதிதான தோத்திரங்களைக் கூறி அதிகார நந்தியானவர் ரிஷியை பூஜிக்கவே அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நேரமோ கடந்து கொண்டிருந்தது. ஒரு வழியாக அதிகார நந்தி ரிஷிக்கு பாத பூஜைகளை நிறைவேற்றி அர்க்ய பூஜையும் நிறைவேறியபோது சிவபெருமான் ஆத்ம பூஜையை ஆரம்பித்து விட்டார். அதிகார நந்தி நிம்மதியாக மூச்சு விட்டு, அந்த ரிஷியை சிவ தரிசனத்திற்காக ஒன்றும் அறியாதவர் போல் அனுப்பி வைத்தார். ஆனால், அந்த ரிஷி சிவ மூல மண்டபத்தை அடைந்தபோது அங்கு திரையிடப்பட்டு சூரிய உதயத்தில்தான் எம்பெருமானின் தரிசனம் கிட்டும் என்ற அதிர்ச்சியான செய்தி அவருக்குக் காத்திருந்தது.

செய்வதறியாது திகைத்தார் அந்த ரிஷி. ஈசனே கை விட்டு விட்டால் இனி யாரை அவர் சரணடைய முடியும்? எவ்வளவோ மூளையைக் கசக்கிக் கொண்டு யோசித்தாலும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீளும் வழி ஏதும் தெரியவில்லை. வேறு வழியின்றி பூலோகம் திரும்பினார், நளாயினி தேவியிடம் சரணடைவது ஒன்றுதான் இதற்கு வழி எனத் தெளிந்து அவள் இல்லம் நோக்கி சென்றார். அங்கே அவருக்கு ஓர் அதிசயக் காட்சி காத்திருந்தது. மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும், இந்திரனும், யம மூர்த்தியும், இவ்வாறு அனைத்து தெய்வ தேவதா மூர்த்திகளும் அவர்கள் பத்தினிகளும் நளாயினியின் இல்லத்தில் குழுமி இருந்ததைக் கண்டு அந்த ரிஷிக்கு ஓரே ஆச்சரியம்.

நளாயினியின் சாபத்தால் சூரியன் எழாமல் ஈரேழு உலகங்களும் ஸ்தம்பித்து போனதால் சூரிய பகவானை மீட்பதற்காக அனைத்து தெய்வங்களும் அங்கே குழுமியுள்ளனர் என்பதை அறிந்து கொண்டார். தான் அலையாய் அலைந்து தேடிப் பார்க்க முடியாத மும்மூர்த்திகள் அந்த ஓலைக் குடிசையில் ஒன்றாய் எழுந்தருளியிருந்ததைக் கண்டு மகரிஷி பேருவகை எய்தினார். அதே சமயம் ஒரு பதிவிரதா தேவியின் சாபத்திற்கு மும்மூர்த்திகளாலும் பதில் சொல்ல முடியாது என்ற உண்மையையும் அவர் உணர்ந்து கொண்டார்.

மும்மூர்த்திகளின் வேண்டுதலுக்கு இணங்கி நளாயினி தேவி தன்னுடைய சாபத்தை திருப்பி வாங்கிக் கொண்டு சூரிய மூர்த்தியை மீண்டும் பூமியில் பவனி வரச் செய்தாள். அதனால் மகரிஷியின் தலையும் தப்பித்தது.

இவ்வாறு பதிவிரதா தேவி நளாயினியின் மகிமை அனைத்து லோகங்களுக்கும் பரவியது.

ஒரு பதிவிரதா தேவியின் புனிதத் தன்மையை உலகுக்கு உணர்த்த மும்மூர்த்திகளைச் சரணடைந்த அந்த மகரிஷி யார்? அந்த மகிரிஷிதான் மாண்டவ்ய மகரிஷி. மேற்கூறிய புராண வைபவத்தில் இன்னும் சில அற்புத தெய்வீக இரகசியங்களும் உண்டு. அவை சித்த கிரந்தங்களில் மட்டுமே காணப்படுகின்றன.

நளாயினி தேவி தன் கணவன் உயிர் பிரிந்து விடக் கூடாது என்பதற்காக சூரியனே எழாதவாறு சபித்தாள் அல்லவா? ஒரு மனைவி தன் சுயநலத்திற்காக அனைத்து உலகங்களுக்கும் ஒளி கொடுக்கக் கூடிய சூரியனை நிறுத்தி வைப்பது தவறு என்று மனித மனம் நினைக்கலாம். இதற்குப் பின்னால் உள்ள தெய்வீகத் தத்துவம் என்ன?

ஒவ்வொருவருக்கும் ஒரு தர்மம் உண்டு. இறைவனின் தர்மம் கருணை. விலங்குகளின் தர்மம் சந்ததி விருத்தி. அதுபோல் ஒரு மனைவியின் தர்மம் கணவனைக் காப்பது. இதைத்தான் பத்தினி தர்மம், சுமங்கலி தர்மம், பதிவிரதா தர்மம் என்று கூறுகிறார்கள்.

தன் தர்மத்திலிருந்து ஒருவர் தவறினால் அது இறை நிந்தனை ஆகும், ஏனென்றால் தர்மத்தை வகுத்தது இறைவன், தர்மத்தில் காவலன் இறைவன், தர்மமே இறைவனே, இறைவனே தர்மம்.

ஆணி மாண்டவ்யர்

எனவே, பத்தினி என்ற தன் சுய தர்மத்தில் நளாயினி நிலைத்து நின்றதால்தான் மும்மூர்த்திகளும் அவளுக்குத் தரிசனம் கொடுத்து அவள் மகிமையை அனைத்து லோகங்களுக்கும் பரப்பினர். அதுமட்டும் அல்லாமல் நளாயினி தேவியின் கணவரான மௌத்கல்ய முனிவரும் இருபத்தியோரு ஜென்மங்களாக எந்தப் பெண்ணையும் தீண்டாத உத்தமர். இத்தகைய தம்பதியர் உலக இயக்கத்தையே, சிருஷ்டி தத்துவத்தையே மாற்ற வல்லவர்கள் என்பது நளாயினி சரிதத்தின் மூலம் புலனாகின்றது.

இரண்டாவதாக, இல்லற வாசிகளின் தர்மம் என்ன? இல்லாதவர்களுக்கு தன்னிடம் இருப்பதைக் கொடுப்பது இல்லற வாசிகளின் தர்மம். சன்னியாச தர்மம் பிறரிடம் யாசகம் பெற்று அதனால் கிடைக்கும் உணவைக் கொண்டு உயிர் வாழ்வது. இல்லறத்தில் வாழ்பவர்கள்தான் இவ்வாறு இறைவனுக்காக தவம் இயற்றுபவர்களுக்கு தங்களால் இயன்றதைக் கொடுத்து அவர்களுடைய தவம் நிறைவேற உதவி செய்ய வேண்டும்.

இவ்வாறு காட்டில் பல யுகங்களாக தலை கீழாகத் தொங்கிக் கொண்டு தவம் செய்து கொண்டிருந்த மாண்டவ்ய மகரிஷி எந்த பிரார்த்தனையை முன் வைத்து தவம் இயற்றிக் கொண்டிருந்தார். அவருக்கு வேண்டியது என்ன? ரிஷிகளுக்கு எதுவுமே வேண்டியது இல்லைதான். மற்றவர்களின் நன்மைக்காகவும், உலக ஜீவன்களின் மேன்மைக்காகவும் அவர்கள் தவம் இயற்றுகின்றனர். எப்போதும் நல்ல சக்தி இருக்கும்போது அதைத் தடுக்க கூடவே ஒரு எதிர் சக்தியும் இருக்கும் அல்லவா? எனவே, மாண்டவ்ய மகரிஷியின் தவம் நிறைவேறாமல் அதைத் தடுக்க பல அசுர சக்திகளும் ஆதிக்கம் கொண்டு அவரைச் சுற்றி வந்தன. அந்த தீய சக்திகள எவராலும் களைய முடியவில்லை.

30 கோடி அசுரர்களை எதிர்த்து நிற்கக் கூடிய தெய்வீக சக்தி படைத்த ஒருவரே மாண்டவ்ய மகரிஷியை எதிர் கொள்ளும் அசுர சக்திகளை அழித்து அவருடைய தவத்தை நிறைவு அடையச் செய்ய முடியும். இத்தகைய ஒப்பற்ற தெய்வீக சக்தியை உடைய பதிவிரதா தேவியே நளாயினி தேவி ஆவாள். தன்னிடம் இத்தகைய உள்ள இத்தகைய தெய்வீக சக்திகளை தன் கணவன் மூலமாக மாண்டவ்ய மகரிஷிக்கு அளித்த நிகழ்ச்சிதான் அவரை உதைப்பதாக அந்தத் தம்பதியர் நடத்திய தெய்வீக நாடகம்.

ஸ்ரீதட்சிணா மூர்த்தி
பெட்டவாய்த்தலை திருத்தலம்

ஒவ்வொரு நாளும் சூரிய பகவான் 30 கோடி மந்தேஹ அரக்கர்களின் அசுர சக்திகளிலிருந்து விடுபட்டால்தான் அவருடைய பூலோக பவனி நிறைவேறும். அத்தகைய சூரிய மூர்த்தியை எழவிடாமல் செய்ய வேண்டுமென்றால் 30 கோடி அசுர சக்திகளை எதிர் கொள்ளும் தெய்வீக சக்தி உடைய ஒருவரால்தானே நிறைவேறும். இவ்வாறு நளாயினி தேவியிடம் இருந்த அற்புத தெய்வீக சக்தி எத்தகையது என்பதை உணர்த்தவே மும்மூர்த்திகள் இத்தகைய ஒரு வைபவத்தை உருவாக்கினர்.

மேலும், மாண்டவ்ய மகரிஷியை எதிர் கொண்ட அசுர சக்திகள் விலகியதால் அவருடைய தவமும் பூரணம் அடைந்தது. அதனால், அவருக்குக் கிடைத்த பரிசு என்ன? பல கோடி ரிஷிகளில் ஒருவருக்கே கிடைக்கும் ஆயுர் தேவியின் கர பீடம்தான் மாண்டவ்ய மகிரிஷியின் தவத்திற்குக் கிடைத்த பரிசு. ஆம், இந்த அற்புத வைபவத்தின்போதுதான் ஆயுர்தேவி மாண்டவ்ய மகரிஷியை தன்னுடைய இரண்டாவது சக்தி கரத்தில் ஏற்றுக் கொண்டாள். ஆயுர்தேவியின் இரண்டாவது கரம் பதிவிரதா சக்தி தத்துவ பீடமாக அமைவதால் ஈடு இணையற்ற ஒரு தெய்வீக பதிவிரதையின் முன்னிலையில் இந்த வைபவம் நிறைவேற வேண்டும் என்று ஆயுர்தேவி திருவுள்ளம் கொண்டதால் மும்மூர்த்திகள், முப்பத்து முக்கோடி தேவர்கள், எம மூர்த்தி இவர்கள் குழுமி இருக்கும் அற்புத கோலாகலச் சூழ்நிலையில் நளாயினி சமேத மௌத்கல்ய மகரிஷி தம்பதிகளின் எழிலான குடிசையில் மாண்டவ்யருக்கு “ ஆணி “ மாண்டவ்யர் என்ற பட்டத்தையும் ஆயுர்தேவியே அளித்தாள்.

ஒவ்வொரு லோகத்திலும் உள்ள தங்கத்திற்கு ஒவ்வொரு பெயர் உண்டு. தேவ லோகத்தில் உள்ள தங்கம் அபராஞ்சித தங்கம் எனப்படும். வைகுண்டத்தில் உள்ள தங்கம் நாரதீயம் எனப்படும். இவ்வாறு கைலாயத்தில் சுவாமி ஆனந்த திருநடனம் புரியும் பொன்னம்பலத்தில் வேயப்பட்டுள்ள தங்கமே ஆணி என்பதாகும். இதைத்தான் வள்ளலார் சுவாமிகள், ஆணி பொன்னம்பலத்தே அற்புத காட்சி, என்று வர்ணிக்கிறார். இவ்வாறு ரிஷிகளில் ஆணித் தங்கம்போல் உயர்ந்தவர் என்ற பொருளில் ஆணி மாண்டவ்யர் என அன்புடன் ஆயுர்தேவி அழைப்பதற்கு காரணம் மாண்டவ்ய மகரிஷியின் தபோ பலன் மட்டும் அல்லாது ஒரு உத்தம பதிவிரதையின் ஆசீர்வாதமும் அதனுடன் சேர்ந்ததுதான்.

ஈடுஇணையில்லாத் தர்மம்

இத்தகைய உயர்ந்த நிலையை நளாயினி தேவி அடைந்ததற்குக் காரணம் என்ன? தர்மத்தை நிலை நாட்டுவதே ஒரு உத்தமியின் கடமை என உணர்ந்து போற்றியதும் இல்லற தர்மத்தை முறையாகக் கடைபிடித்ததும் ஆகும். எவன் ஒருவன் தர்மத்தைக் காப்பாற்றுகிறானோ, அவனை தர்மம் காப்பாற்றும் என்கிறது வேதம். உலகில் தர்மத்தை விட உயர்ந்தது எதுவும் இல்லை.

துறவறம் என்பது இனி துறப்பதற்கு ஒன்றும் இல்லை என அனைத்து சுகங்களையும் துறந்து இறை சிந்தனை என்றே ஒரே சுகத்தில் மட்டுமே நிலைத்திருப்பதாகும்.  இல்லறம் என்பது இல்லை என கூறாது அனைத்தையும் பிறருக்கு வாரி வழங்கும் உத்தம நிலையாகும். இவ்விரு நிலைகளின் வெளிப்பாட்டையே நாம் நளாயினி தேவியின் சரிதத்தில் காண்கிறோம்.

இல்லையெனாது பிறருக்கு வாரி வழங்கும் ஈகைத் தன்மை நளாயினி தேவியின் அடுத்த பிறவியிலும் தொடர்ந்தது. பஞ்ப பாண்டவர்களின் பத்தினியான துரோபதையாக அவள் அவதாரம் எடுத்த போது அவளுடைய தர்மத்தை நிலை நாட்டும் கடமை உணர்வும், ஈகைக் குணமும் தொடர்ந்து வந்தது.

துரியோதனனின் அரச சபையில் கௌரவர்களால் மானபங்கம் ஏற்பட்டபோது துரோபதைக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் தட்டிக் கேட்க, எதிர்த்து வாதாட எவருமே முன் வரவில்லை. தகுதி உடையவர்களான பீஷ்மர், திருதராஷ்டிரன் முதலானவர்கள் கூட இவ்விஷயத்தில் மௌனமாக இருந்து விட்டனர். ஆயிரக் கணக்கான பிரமுகர்கள் கூடி இருந்த துரியோதனன் சபையில் தர்மத்தை நிலை நாட்ட அன்று குரல் கொடுத்த ஒரே உத்தமி துரோபதைதான் என்பதை நீங்கள் உணர்வீர்கள். அந்தச் சூழ்நிலையிலும் துரோபதை தன்னுடைய சுயநலத்திற்காகக் குரல் கொடுக்க வில்லை. தர்மத்தை நிலை நாட்டவே குரல் கொடுத்தாள்.

சூதாட்டத்தில் துரோபதையை பணயப் பொருளாக வைத்து ஆடுவதற்கு யுதிஷ்டிரனுக்கு எந்த உரிமையும் கிடையாது. ஒரு பொருளுக்கு ஒருவன் உரிமை கொண்டாடுவதாக இருந்தால் அவன் வேறு, அந்தப் பொருள் வேறு என்பது அடிப்படை உண்மை. ஆனால், மானுட தர்மத்தின்படி திருமணம் என்ற தெய்வீக பந்தத்தில் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து விட்டால் அதன் பின்னர் அந்தப் பெண்ணிற்கு கணவனை விட்டு தனித்து இருத்தல் என்ற ஒரு நிலையே கிடையாது. அவ்வாறிருக்க கணவனுக்குச் சொந்தமான தனிப்பட்ட ஒரு பொருளாக எப்படி துரோபதையை வைத்து சூதாட முடியும் என்பதே அவள் வாதம்.

அந்தத் தாம்பத்திய தர்மத்தை நிலை நாட்டவே துரியோதனன் சபையில் துரோபதை அனைவரையும் எதிர்த்து வாதிட்டாள். அவள் வாதம் உண்மை என மற்றவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் இறைவன் ஒருவன்தான் தர்மத்திற்குத் துணையாக இருக்கக் கூடியவன் என்பதை உணர்த்த பூர்ண இறை அவதாரமான கிருஷ்ண பகவான் துரியோதனனின் அரச மண்டபத்தில் எழுந்தருளி என்றும் நிலையாய் இருக்க வேண்டிய தர்மத்தை நிலை நாட்டினான்.

அது மட்டுமல்ல கிருஷ்ண பரமாத்மா ஒரு லீலை நிகழ்த்துகிறார் என்றால் அதில் ஆயிரமாயிரம் அர்த்தங்களும், தெய்வீக இரகசியங்களும் இருக்கும். கிருஷ்ணன் ஒரு முறை கோபியர்கள் நதியில் குளித்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் ஆடைகளை அபகரித்துக் கொண்டு ஒரு லீலை புரிந்தான் அல்லவா? அதே கிருஷ்ணன்தான் இங்கு துரோபதைக்கு ஆடையைக் கொடுத்து லீலைகள் புரிந்தான். எனவே கண்ணன் எதைக் கொடுத்தாலும் அதில் ஆயிரம் அர்த்தம், அவன் எதை எடுத்தாலும் அதில் ஆயிரம் அர்த்தம் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்வதே ஆன்மீக வாழ்வின் அரிச்சுவடி பாடமாகும்.

ஆம், கண்ணன் துரோபதைக்கு ஆடையைக் கொடுத்தது அவளுடைய ஈகைக் குணத்தை உலகறியச் செய்வதற்கே ஆகும். மகாபாரதத்தில் கர்ணன்தான் அனைவரையும் விட சிறந்த கொடையாளி என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் கர்ணனை விடவும் உயர்ந்த கொடைத் தன்மை உடையவளே துரோபதை என்பதே உண்மை. மகாபாரத நிகழ்ச்சிகளை ஊன்றிக் கவனித்தால் இந்த உண்மை விளங்கும்.

துரோபதை இரண்டு முறை கிருஷ்ணனுக்கு வஸ்திரம் வழங்கியிருக்கிறாள் அல்லவா?

உண்மையான கிருஷ்ண பக்தி

ஒரு முறை கிருஷ்ணனுடைய சக்ராயுதம் பகவானின் வலது குரு விரலில் சுழலும்போது காயம்பட்டு அவர் விரலிலிருந்து ரத்தம் வழிந்தது. உடனே துரோபதை தன்னுடைய ஆடையைக் கிழித்து காயத்தைத் துடைத்து விரலுக்குக் கட்டுப் போட்டு இரத்தப் போக்கை தடுத்து நிறுத்தினாள் அல்லவா? இதில் பலரும் அறியாத தெய்வீக இரகசியம் என்னவென்றால் நமது குருமங்கள கந்தர்வா ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்தான் ஸ்ரீகிருஷ்ணரின் வலது கரத்தை சுதர்சன சக்கரமாக அலங்கரித்தவர் என்பதே.

இப்போது யோசித்துப் பாருங்கள் இந்தக் கலியுகத்தில் பத்துக் கோடி அருணாசல அடியார்களுக்கு இறைப் பிரசாதத்தை வாரி வழங்கிய மகா உத்தமர் கிருஷ்ண பகவானின் விரலில் காயத்தை ஏற்படுத்துவாரா? இனி வரப் போகும் அபலைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்கும் வழி தேடி வெங்கடராம சுவாமிகள் சுதர்சன சக்கரமாக வெளியிட்ட கருணை மூச்சே இரத்தத் துளிகளாக கிருஷ்ண பகவானின் விரல்களிலிருந்து வழிந்தோடியது.

அந்த இரத்தத் துளிகளை துரோபதை துடைத்து கிருஷ்ண பகவானுக்கு சேவை செய்வதன் மூலம் கோடிக் கணக்கான அபலைப் பெண்களுக்கு தர்மத்தை நிலை நாட்ட முன்னோடியாக விளங்கும் துரோபதை தேவிக்கு கிருஷ்ணன் ஆடை வழங்க ஒரு சந்தர்ப்பத்தை வெங்கடராம சுவாமிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உருவாக்கித் தந்தார் என்பதே சித்த கிரந்தங்கள் கூறும் ரகசியம் ஆகும்.

அடுத்து கிருஷ்ண பகவான் துரோபதைக்கு அட்சய பாத்திரத்தை வழங்கினார் அல்லவா? இதிலிருந்து அந்த யுகத்தில் அட்சய பாத்திரத்தை பெறும் தகுதி துரோபதை ஒருத்திக்கு மட்டும்தான் இருந்தது என்பது இதன் மூலம் புலனாகின்றது அல்லவா? கர்ணனை விடவும் துரோபதை தானத்தில் தலை சிறந்து விளங்கினாள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.

ஒருமுறை கிருஷ்ணன் பாண்டவர்களுடன் நதியில் நீராடிக் கொண்டிருந்தபோது அனைவரும் நதியை விட்டு வெளியேறி விட்டனர். ஆனால், கிருஷ்ணர் மட்டும் நீரிலிருந்து வெளியே வராமல் இருந்தார். அனைவரும் கிருஷ்ணர் ஏதோ விளையாட்டாக நீரிலேயே இருக்கிறார் என்றுதான் நினைத்தனர். ஆனால், துரோபதை மட்டும்தான் கிருஷ்ணனுடைய உள்ளாடை ஆற்று நீரில் அடித்துக் கொண்டு சென்று விட்டது என்பதை சூட்சுமமாக உணர்ந்து தன்னுடைய ஆடையில் ஒரு பகுதியைக் கிழித்து மறைமுகமாக கிருஷ்ணனுக்கு அளித்தாள்.

எனவே தானம் கொடுப்பது என்பது கர்ணனுக்கும் துரோபதைக்கும் அவர்கள் உயிரோடு கலந்த உத்தம நிலையாக இருந்தாலும், ஒரு அவதாரத்தின் உள்ளத்தை ஊடுருவிச் சென்று அந்த அவதாரத்திற்கு தேவையான தருணத்தில் தேவையான பொருளைத் தருவது என்பது அனைவருக்கும் சாத்தியமா? இந்த உத்தம நிலையை அடைந்த கன்னியே துரோபதை என்பது மகாபாரதம் நமக்கு புகட்டும் பாடமாகும்.

அகலிகையின் அருந் தொண்டு

மனித வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாகத் திகழும் ராமாயண காவியத்தில் மறைந்துள்ள பொக்கிஷங்கள் ஏராளம். கடலில் மேலோட்டமாக நீந்துவதை விட ஆழ மூழ்கினால்தான் முத்து கிடைக்கும். அது போல ராமாயணத்தை ஊன்றிப் படித்து ஆத்ம விசாரம் செய்து வந்தால்தான் அதில் பொதிந்துள்ள தெய்வீக இரகசியங்களை அறிந்து பயன்பெற முடியும்.

கல்லாய்க் கிடந்த கௌதம முனிவரின் பத்தினியான அகலிகை மேல் ராமரின் திருப்பாதம் பட்டு அவள் சாப விமோசனம் பெற்றது அனைவரும் அறிந்ததே. ஆனால், இப்புனிதமான வைபவத்தில் பொதிந்துள்ள தெய்வீக தத்துவங்களைப் பற்றி சித்த கிரந்தங்கள் உரைப்பதென்ன?

விச்ரவருக்கும் கைகேசிக்கும் பிறந்த குழந்தையே ராவணன். விச்ரவரின் தந்தை சப்தரிஷிகளில் ஒருவரான புலஸ்தியர். கைகேசி அரக்கர் குலத்தைச் சேர்ந்த மங்கை. எனவே ராவணனின் பூர்வீகம் ஒரு பகுதி அந்தண குலமாகவும், மறு பகுதி அரக்க குலமாகவும் அமைந்தது. இத்தகைய சக்தி வாய்ந்த ராவணனை சம்ஹாரம் செய்வதற்காகவே மகாவிஷ்ணுவின் அவதாரமாக ராமர் தோன்றினார். சாதாரண ஒரு மனிதன் ஒரு ரிஷிக்கும், ஒரு அரக்க வழித் தோன்றலுக்கும் இணையான புண்ணிய சக்தியை கைக்கொண்டு விளங்குவது என்பது சாத்தியம் இல்லை அல்லவா? அதனால் ராமபிரான் தான் மேற்கொண்ட தெய்வீகப் பணியைச் செவ்வனே நிறைவேற்றும் பொருட்டு பல ரிஷிகளும் முனிவர்களும் அவருக்குத் தம்முடைய தபோ பலனை ஈந்து ராமாவதார நோக்கம் இனிது நிறைவேற அருந் தொண்டாற்றினர். அவர்களுள் ஒருவரே பரசுராமர் ஆவார்.

மனதிற்குப் பிடித்த வாழ்க்கைத் துணை அமைய
அருளும் மூர்த்தி, அழகிய மணவாளம், திருச்சி

ராமர் மிதிலையில் சிவதனுசை நாணேற்றி சுயம்வரத்தில் வெற்றி கொண்டு அயோத்திக்கு திரும்பி வரும்போது பரசுராமர் அவரை எதிர்த்து தன்னுடைய தனுசை வளைத்து ராம பராக்கிரமத்தை நிரூபணம் செய்யுமாறு வேண்டினார். ராமரும் அவருடைய சவாலை ஏற்று பரசு ராமருடைய தனுசில் நாணேற்றி அதற்கு இலக்கைக் கேட்டார். அப்போது பரசுராமர் தன்னுடைய தபோ பலம் அனைத்தையும் அதற்கு இலக்காக வைத்து அச்செய்கையின் மூலம் ராம பிரானுக்குத் தன்னுடைய தபோ பலன் அனைத்தையும் அர்ப்பணித்தார். ராமபிரான் ராவணனுடைய அந்தண பூர்வீக புண்ணிய சக்திக்கு நிகரான தபோ பலனைப் பெறுவதற்காக பரசுராமர் நடத்திய ஒரு நாடகமே இந்த பரசுராம தனுசு படலமாகும்.

அது போல ராமருடைய அரக்க குல பூர்வீக புண்ணியத்திற்கு நிகரான தபோ பல சக்தியை அர்ப்பணிப்பதற்காக அகலிகை கௌதமர் தம்பதியரின் தெய்வீக நாடகமே அகலிகை சாப விமோசன படலமாகும். இதன் பின்னணியின் மற்றொரு தெய்வீக தாத்பர்யமும் உண்டு. அகலிகை தன்னுடைய கணவரான கௌதமரையே முழு முதற் கடவுளாக எண்ணி தியானித்து தன்னுடைய கடமைகளை நிறைவேற்றி வந்தாள். இருப்பினும் கண்ணிமைக்கும் நேரம் கூட தன்னுடைய கணவரின் பணிவிடையைத் தவிர வேறு எந்த எண்ணமும் பணியும் குறுக்கிடாது தன்னுடைய சேவையை அற்புதமாக நிறைவேற்ற மாட்டோமா என்ற ஏக்கம் அகலிகை மனதில் வெகு காலமாக இருந்து வந்தது.

இதை அறிந்த கௌதமர் அகலிகையைக் கல்லாய்ப் போகும்படிச் சபித்தார். இதனால் அகலிகையின் எண்ணம் பூர்ணமாக நிறைவேறியது. கல்லாய்க் கிடந்த அகலிகைக்கு நடத்தல், உண்ணுதல், உறங்குதல் போன்ற எந்தவிதமான செயலும் இல்லாது ஒவ்வொரு விநாடியும் கௌதமரின் தியானத்திலேயே கழிக்கலாம் அல்லவா? இவ்வாறு கௌதமரின் தியானத்திலேயே அகலிகை கரைந்து போனாள், அகலிகை என்ற உணர்வு முற்றிலுமாக மறைந்து கௌதமர் என்ற உணர்வு மட்டுமே எஞ்சி இருந்த உத்தம நிலையை அடைந்த மாதரசியே அகலிகை ஆவாள். எனவே, ராமரின் திருப்பாதங்கள் கல்லாய்க் கிடந்த அகலிகை மேல் பட்ட போது தன்னுடைய தபோ பலன் அனைத்தையும் அத்தருணத்தில் ராமபிரானுக்கு அர்ப்பணித்து விஷ்ணு லோகத்திலும், கௌதமரின் உள்ளத்திலும், சுமங்கலிகள் வரலாற்றிலும் ஒரு நீங்கா இடத்தைப் பெற்றாள் அகலிகை.

இந்திரன் அகலிகை மேல் மையல் கொண்டதால் அது அசுர குணமான காமத்தைக் குறிக்கிறது. அவ்வாறு காமத்தால் விளைந்த தவறுக்கு பிராயசித்தமாக அகலிகை சாப விமோசனம் ராம பிரானால் அளிக்கப்படுவதால் அவருக்கு நன்றிக் கடனாக அர்ப்பணிக்கப்படும் புண்ணிய சக்தி ராவணனுடைய அசுர குல பூர்வீக புண்ணியத்தை எதிர் கொள்ள அவருக்கு யுத்தத்தில் உதவியது. சுமங்கலிகளில் மூத்தவளாக வைத்து பாராட்டப்படும் அகலிகை கனவிலும் மற்றோர் ஆடவனை நினைத்திருக்க முடியுமா என்று ஆழ்ந்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் கௌதமர் அகலிகை தம்பதியரின் ஈடு இணையில்லா தெய்வீகத் திருப்பணியைப் பற்றி ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு பல சுமங்கலிகள் தங்களுடைய கணவர்மார்களை பூஜிப்பதன் மூலம் அவதார மூர்த்திகளுக்குத் தேவையான தெய்வீக புண்ணிய சக்தியை அளிக்கும் அற்புத பணியை நிறைவேற்றி வந்தார்கள் என்பது புலனாகின்றது அல்லவா? அது மட்டுமல்லாமல் பஞ்ச பூதங்களையும் தூய்மைப்படுத்தி இப்பூவுலகை நிலை நிறுத்துகின்றனர்.

சீதா தேவி ராமபிரானுக்கு பத்தினியாக அவதாரம் கொண்டு உத்தம பத்தினி தர்மத்தை உலகில் நிலை நாட்டியது மட்டுமல்லாமல் பஞ்ச பூதங்களையும் சுத்திகரித்து, தூய்மைப்படுத்தி இந்த நிலவுலகம் நிலை பெற அருந் தொண்டாற்றினாள் என்பதும் உண்மையே.

பஞ்ச பூதங்களின் காவலனாக, நாயகனாக விளங்குபவர் பெருமாள் அல்லவா? அதனால் பெருமாளின் அவதாரமான ராம அவதாரத்தில் நிலமகளான சீதையாகத் தோன்றி இறுதியில் பூமியில் ஐக்கியமானாள் சீதாப் பிராட்டி. இதனால் பிருத்வி பூதம், பூ தத்துவம் தூய்மை அடைந்தது.

ராமருடன் வனவாசம் மேற்கொண்டபோது புனித பாரதத்தில் உள்ள எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடி அந்நதிகளை எல்லாம் புனிதப்படுத்தினாள். அந்நதிகளில் யுக யுகமாக தேங்கிக் கிடந்த பாவச் சுமைகளை எல்லாம் தான் ஏற்று புண்ணிய நதிகள் அனைத்தையும் புனித நதிகளாக சீரமைத்தாள் சீதா தேவி. இராவணனை சம்ஹாரம் செய்து ராமர் பட்டாபிஷேகம் நிறைவேறிய பின் ராம பிரானுடன் ராம ராஜ்யத்திலுள்ள அனைத்து நாடுகளுக்கும் பயணம் செய்தாள் சீதை. ஆஸ்திரேலியா, சீனா, எகிப்து, ஆப்ரிகா, தாய்லாந்து என அனைத்து நாடுகளிலும் ராம சாம்ராஜ்யம் விரிந்து பரந்திருந்தது.

நைல், மிசௌரி மிசிசிபி, அமேசான், மஞ்சள் நதி, டான்யூப் போன்ற நூற்றுக் கணக்கான நதிகளிலும், நீர்வீழ்ச்சிகளிலும், வெந்நீர் ஊற்றுகளிலும், சமுத்திரங்களிலும் ராமபிரானும் சீதா பிராட்டியும் நீராடி இராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக சிறப்பான பூஜைகளை நிறைவேற்றினர். உண்மையில் உலகெங்கும் நிலவிய தீர்த்தங்களில் நிறைந்திருந்த தோஷங்களைக் களையவே இவ்வாறு சீதா பிராட்டி தீர்த்த பூஜைகளை நிறைவேற்றி வந்தாள்.

இலங்கையில் அசோக வனத்தில் சீதா தேவி சிறைவாசம் வைக்கப்பட்டிருந்ததால் அவளுடைய பதிவிரதா தன்மையை உலகத்தவர் அறியும் பொருட்டு ராமர் சீதையை அக்னி குண்டத்தில் பிரவேசிக்கும்படி கூறினார் அல்லவா? அவ்வாறு சீதை அக்னித் தீயில் எழுந்தருளியதால் அக்னியில் உள்ள அனைத்து குற்றங்களும் நீக்கப்பட்டு அக்னி பகவான் புனிதமடைந்தார்.

ஹோமத்தில் பசு நெய் மட்டுமே ஆஹூதியாக அளிக்கப்பட வேண்டும். இல்லா விட்டால் அதனால் தோஷம் ஏற்படும். எந்த வித நற்பலனும் விளையாது. மேலும், புகை பிடித்தல், போதை பொருட்கள், மது பானங்களைத் தயாரிக்க அக்னியைப் பயன்படுத்துதல், தகாத வார்த்தைகள், கடுமையான வார்த்தைகள் பேசுதல் முதலிய காரணங்களால் உலகெங்கும் அக்னியில் ஏற்படும் தோஷங்களைக் களையவே சீதா தேவி அன்று ராம பிரான் மூட்டிய வேள்வித் தீயில் எழுந்தருளி அக்னியில் திரண்டிருந்த மாசை நீக்கி உலகத்திலுள்ள உயிர்களுக்கெல்லாம் அதன் மூலம் உன்னத சேவை புரிந்தாள்.

ஹோமம், வேள்வி, யாகம் போன்ற அக்னி வழிபாடுகளுக்கு தலைமை ரிஷியாகப் போற்றப்படுபவரே ஆங்கிரச மகரிஷி. அவர் ஒரு முறை உலக நன்மைக்காக வேள்வி ஒன்றை நிகழ்த்தி பூர்ண ஆஹூதி அளிக்கும் போது அதைப் பெற்றுக் கொண்ட அக்னி பகவானின் முகம் வாட்டத்துடன் இருப்பதைக் கண்டார். அதைக் கண்ட மகரிஷி மனம் உருகி அக்னி பகவானின் வாட்டத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

அதற்கு அக்னி பகவான், உத்தம ரிஷி புங்கவரே, தாங்கள் அன்புடன் அளிக்கும் ஆஹூதியை ஏற்பதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், இனி வரும் யுகங்களில் அக்னி காரியங்களில் சிரத்தை குறைந்து இல்லறத்தார்கள் தாங்கள் முறையாகப் பேண வேண்டிய அக்னி வழிபாடுகளை மறந்து விடுவார்கள். அதனால் உலகெங்கும் வறுமையும், பிணியும், நோய்களும் தாண்டவமாடும். அதை நினைத்துத்தான் நான் வருத்தத்துடன் இருக்கிறேன், என்று கூறினார்.

ஆங்கிரசர், நீங்கள் சொல்வது உண்மையே. யுக தர்ம நியதியால் வரும் யுகங்களில் அக்னி வழிபாடுகள் சிறிது சிறிதாக மறையும் என்பது உண்மையே. இருப்பினும் மகரிஷிகளாகிய நாங்கள் எங்களால் முடிந்த பிராயசித்தத்தை மேற்கொண்டு அக்னி வழிபாட்டை புனரமைக்க முயற்சி செய்வோம். நீங்கள் இது குறித்து வருந்த வேண்டாம், என்று கூறி அக்னி பகவானுக்கு விடை கொடுத்து அனுப்பினார்.

இல்லற வாசிகள் மூன்று விதமான அக்னியைப் பேண வேண்டும், அதாவது, கார்ஹபத்யம், தக்ஷிணாக்னியம், ஆஹ்வனீயம் என்ற மூன்று விதமான அக்னியை ஒவ்வொரு இல்லற வாசியும் கட்டாயம் வளர்த்தாக வேண்டும். மூதாதையர்களிடம் இருந்து பெறப்படும் கார்ஹபத்ய அக்னியை வளர்த்து வழிபடுவதால் வரும் சந்ததிகள் ஒழுக்கத்துடனும், நல்ல குண நலன்களுடனும் திகழ்வர். தக்ஷிணாக்னிய அக்னியை வளர்த்து வழிபடுவதால் நீண்ட ஆயுளும், நல்ல உடல், மன ஆரோக்கியமும் கிட்டும். ஆஹ்வனீய அக்னியை வழிபடுவதால் சுற்றுப்புற சூழ்நிலை சுகாதாரமாக அமைவதுடன் இயற்கை சீற்றங்கள் தணியும், தொற்று நோய்கள், எதிரிடை சக்திகள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

இத்தகைய மூன்று வித அக்னி வழிபாடுகள் குறைந்து போனால் சமுதாயம் எவ்வளவு துன்பமடையும் என்பதை உணர்ந்த ஆங்கிரஸ மகரிஷி பஞ்ச பூதங்களின் நாயகரான பெருமாளை வைகுண்டத்தில் தரிசனம் செய்து இனி வரும் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து உலகைக் காக்கும் வழிமுறையை தெரிவிக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

மகா விஷ்ணுவும் ஆங்கிரச மகரிஷியின் அன்பு வேண்டுகோளை ஏற்று, பெருந்தகையே, வெகு விரைவில் இராவண வதத்திற்கான ராம அவதாரம் தோன்ற இருக்கிறது. அதில் ஒரு அங்கமாக நிலமகள் சீதாபிராட்டியாகத் தோன்றி அக்னிப் பிரவேசம் செய்ய இருக்கிறாள். அப்போது உலகில் உள்ள மூவகை அக்னித் தீயும் புனரமைக்கப்படும், அவ்வாறு முத்தீ புனரமைக்கும்போது சீதா தேவி பிரவேசிக்கும் அக்னி குண்டத்தில் ஆவாஹனம் ஆகும் அடித்தீ முனித் தீயாகவும், நடுத்தீ பத்தினித் தீயாகவும், சுடர்த்தீ (நுனித்தீ) அறம் வழுவா மன்னனின் தர்மத் தீயாகவும் உருக் கொண்டு அதன் மூலம் முத்தீ சீர்பெறும், என்று திருவாய் மலர்ந்து அருளினார்.

அக்னி குண்ட அதிசயம்

எனவே, சீதா தேவி பிரவேசம் செய்தது ஒரு சாதாரண அக்னி குண்டம் அல்ல. தேவர்களாலும், ரிஷிகளாலும் அமைக்கப்பட்ட அதி மகா யக்ஞ வேள்வி குண்டம் என்பதே சித்தர்கள் கூறும் உண்மையாகும். மூன்று அடுக்குகளாய் அமைந்த இந்த வேள்விக் குண்டத்தில் அடித்தளமாக இந்திரன், அக்னி பகவான் உள்ளிட்ட முப்பத்து முக்கோடி தேவர்களின் யாக, வேள்வி தபோ சக்திகள் ஆவாஹணம் ஆயின. அதை முன்னின்று காத்தவர் ஆங்கிரஸ மகரிஷி. தொடர்ந்து மூன்று யுகங்கள் பிரம்மசர்யம் காத்த உத்தமர் ஒருவரே அதி மகா வேள்விக் குண்டத்தின் அடித் தளத்தை உருவாக்க முடியும் என்ற இறை நியதிக்கேற்ப ஆங்கிரஸ மகரிஷி இனி வரும் உலக ஜீவன்கள் அனைவரும் நற்கதி அடையும் பொருட்டு மூன்று யுகங்கள் தொடர்ந்து பிரம்மசர்யம் விரதம் ஏற்று அதன் மூலம் தன்னுடைய புண்ணிய சக்தியையும், கோடிக் கணக்கான ரிஷிகள், யோகிகள், ஞானிகளின் தபோ சக்தியையும் வேள்விக் குண்டத்தில் தாரை வார்த்துக் கொடுத்தார்.

வேள்வியின் நடு அடுக்கில் சீதா பிராட்டியின் கற்புக் கனல் என்னும் பதிவிரதா அக்னி ஆவாஹணம் ஆனது. இதில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் இல்லற தர்மத்தில் இருந்து கொண்டே 12 வருடங்களுக்குக் குறையாமல் கணவனும் மனைவியும் துறவறம் என்னும் விரதத்தை முழுமையாக நிறைவேற்றிய பதிவிரதா தேவியே இந்த சுமங்கலித்தீயை ஆவாஹணம் செய்ய முடியும் என்பது முத்தீ வேள்வி நியதி. சீதையும் ராமரும் திருமணம் நிறைவேறி 14 ஆண்டு காலம் கழிந்திருந்தாலும் துறவற நிலையையே உறுதியாகக் கடைபிடித்து வந்ததால் பத்தினித் தீயை வளர்க்கும் உத்தம தகுதியை சீதைப் பெற்றிருந்தாள்.

அக்னிக் குண்டத்தின் நுனி அடுக்கு என்னும் பூரண அடுக்காக அமைந்ததே ராம பிரானின் தர்ம பரிபாலன தீச்சுடர் ஆகும். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்று தர்ம சாம்ராஜயத்தை ராம பிரான் நிறுவியதால் அவர் தர்மச் சுடரை அக்னி குண்டத்தில் நிரவும் தகுதி உடையவர் ஆனார்.

கற்பனைக்கும் எட்டாத சிறப்பு வாய்ந்த இந்த தீக்குண்டத்தை உயிரூட்ட எழுந்த அக்னி எங்கிருந்து பெறப்பட்டது. நிச்சயமாக அது திருஅண்ணாமலை புனித ஜோதியைத் தவிர வேறு எங்கிருந்தும் அடைய முடியாது அல்லவா? இன்று பூவுலகில் கோடிக் கணக்கான பக்தர்களும் அருள் வழி காட்டும் ஐயப்ப மகர ஜோதி புறப்படும் சங்கர நாராயண தரிசனப் பகுதியிலிருந்துதான் வேள்விக் குண்டத்திற்கு மூட்டப்பட்ட அனல் பிழம்பு பெறப்பட்டது. 

இத்தகைய பெருமை வாய்ந்த வேள்விக் குண்டத்தில் சீதாப் பிராட்டி பிரவேசித்ததால் உலகத்திலுள்ள எல்லா அக்னி சக்திகளும் தூய்மை அடைந்து சீர் பெற்றன. இதுவரை மறைபொருளாக இருந்த சீதா தேவியின் அக்னி பிரவேச வைபவம் உலகறிய வழிகாட்டிய திரு வெங்கடராம சுவாமிகளுக்கு நாம் எவ்வகையிலேனும் நன்றிக் கடனைச் செலுத்த முடியுமா? அற்புதமான இந்த சீதா தேவி மகாத்மியத்தை அனைவரும் படித்து, மற்றவர்களுக்கும் எடுத்துரைத்து, இதன் உட்பொருளை ஆழச் சிந்தித்து நற்பயன் அடைந்தால் அதுவே நமது சற்குரு நாதருக்கு நாம் அளிக்கும் நன்றிக் காணிக்கையாகும்.  

அக்னியில் விளையும் தோஷங்களைக் களைய ஆங்கிரச மகரிஷியும், சீதா தேவியும், ராமச்சந்திர மூர்த்தியும் தங்கள் தபோ பல சக்திகளை வழங்கியதால் ஒவ்வொரு ஹோமம், வேள்வி, யாகத்திலும் சீதா தேவி சமேத ராமச்சந்திர மூர்த்திக்கும், ஆங்கிரஸ மகரிஷிக்கும் அவசியம் ஆஹூதி அளித்தே ஆக வேண்டும். எவ்வாறு சிவனுக்கு ஆஹூதி அளிக்காத ஹோமங்கள் பயனற்றுப் போகுமோ அதே வகையில் இந்த மூன்று வரப் பிரசாதிகளுக்கு ஆஹூதிகள் அளிக்காவிட்டால் எந்த வேள்விகளும் பூரணம் அடைவதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ராம பிரானுடன் உலகெங்கும் தீர்த்த யாத்திரைகள் மேற்கொண்டு ஆகாய மார்கமாக புஷ்ப விமானத்தில் சீதை பயணம் செய்த போது தொடர்ந்து ராம லீலைகளையே தன் மனதில் எண்ணி அதிலேயே இலயித்திருந்தாள். அதனால் ராம நாமம் பரவெளி எங்கும் பரவி அண்டத்தில் உள்ள காற்று மண்டலம் அனைத்தும் புனிதமானது. புராண ரீதியாக முதன் முதலில் சீதை ராம பிரானை மிதிலையில் தான் தரிசனம் செய்தாள். அண்ணலும் நோக்க அவளும் நோக்க, விளைந்த தெய்வீக பிணைப்பானது மிதிலையில் தோற்றம் கொண்டாலும் சீதை பூமியில் அவதரித்த நாள் முதலாகவே ராம நாமத்தை ஓதி வந்தாள் என்பதே உண்மை. சீதை தான் நினைவு தெரிந்த நாள் முதலாக ஓதி வந்த ராம நாமத்தின் பஞ்சபூத தோற்றமான திவ்ய சரீரத்தை ராம உருவில் கண்டதே மிதிலாபுரி நிகழ்ச்சியாகும்.

இவ்வாறு பிருத்வி, அக்னி, அப்பு, வாயு என நான்கு பூதங்களையும் தன்னுடைய தபோ சக்தியால் சீதா தேவி தூய்மைப்படுத்தியதால் இப்பூதங்கள் நிலை கொண்ட ஆகாய தத்துவமும் இயற்கையாகவே தூய்மை அடைந்தது. எனவே பதிவிரதா தேவியரின் திவ்ய சரிதம் அருணாசல மகிமையைப் போல என்றும் வளர்ந்து கொண்டே இருப்பது, எல்லை இல்லாதது.

எனவேதான், அகஸ்தியரும் ஒரு சுமங்கலி பூமியில் நடந்தால் பூமியடி நீர்மட்டம் ஒரு அடி மேலே உயருகிறது என்று சுமங்கலிகளை சிறப்பித்துக் கூறியிருக்கிறார்.

ஒரு சுமங்கலியே இயற்கை வளத்தை மேம்படுத்தி சமுதாயத்தை மேன்மையுறச் செய்ய முடியும் என்றால் ஒவ்வொரு சுமங்கலியும் ஒரு கோடி சுமங்கலியை உருவாக்கினால் நமது புனித பூமி எத்தகைய சிறப்புடையதாய் மலரும் என்று சற்றே சிந்தித்துப் பாருங்கள்.
ஒரு சுமங்கலி எப்படி ஒரு கோடி சுமங்கலிகளை உருவாக்க முடியும்?

கனவிலும் நினைவிலும் தனது கணவனையே தியானித்து இருத்தலே சுமங்கலியின் இலட்சணங்களில் ஒன்று என்று பெரியோர்கள் சுமங்கலித்துவத்தை விளக்குகின்றனர். அவ்வாறு தனது கணவனையே எண்ணி வாழும் சுமங்கலிப் பெண் விடும் மூச்சு எல்லாமே சுமங்கலித்துவத்தை உருவாக்கும் மூச்சுதானே.

பொதுவாக, மனிதனுக்கு எண்ணங்கள் எங்கிருந்து வருகின்றன என்று ஆராய்ந்து பார்த்தால் சுவாசம் மூலமே பெரும்பாலான எண்ணங்களை அவன் பெறுகின்றான். ஒரு பெண் தன் கணவனை நினைத்து வெளி விடும் ஒவ்வொரு சுவாசத்திலும் சுமங்கலித்துவ சக்திகளே பெருகி இருப்பதால் அந்த சுவாசக் காற்றை உள்ளிழுக்கும் ஆண், பெண் அனைவருக்கும் சுமங்கலித்துவ எண்ணங்களே அவர்கள் உள்ளத்தில் நிலை பெற்று வளம்பெறுகின்றன.

இவ்வாறு சாதாரணமாக ஒரு நிமிடத்திற்கு 20 முறை ஒருவர் சுவாசிப்பதாகக் கணக்கிட்டால் ஒரு வருடத்தில் ஒரு கோடி முறை சுவாசிக்கும்போது, ஒரு சுமங்கலி ஒவ்வொரு வருடமும் ஒரு கோடி சுமங்கலி சக்திகள் பெருகிய சுவாசக் காற்றை பரவெளியில் நிரவச் செய்து கோடிக் கணக்கான சுமங்கலிகளை பூலோகத்தில் உருவாக்கி விடலாம் அல்லவா?

சித்தர்கள் அளித்துள்ள மிக மிக எளிமையான இந்த பூஜையை சுமங்கலிகள் தொடர்ந்து நிறைவேற்றி வந்தால் உலகெங்கிலும் காணப்படும் வன்முறைகளும், இயற்கைச் சீற்றங்களும், ஒழுக்கச் சீர்கேடுகளும் பெருமளவில் குறையும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.

சுய நாம ஜெபம் என்னும் பூஜை முறையில் ஒவ்வொருவரும் தங்கள் பெயரையே திரும்ப திரும்ப கூறுவதால் அது அற்புத வழிபாடாக மலர்கின்றது அல்லவா? இவ்வாறு சுய நாம பூஜை செய்யும் சுமங்கலிப் பெண்கள் தங்கள் பெயரை ஜபிப்பதற்குப் பதிலாக தங்கள் கணவன்மார்களின் பெயர்களை மனதிற்குள் அமைதியாக ஓதி வந்தால் அதுவும் ஒரு அற்புத பூஜையாக அமைந்து சிறப்பான பலன்களைத் தருகிறது.

சிலருக்கு தங்கள் கணவன்மார்களின் பெயரைச் சொல்வது முறையா என்ற சந்தேகம் வரலாம். அதனால்தான் சுயநாம ஜபம் என்ற வழிபாட்டை மேற்கொள்ளும்போது வாய் விட்டுச் சத்தமாக சொல்லாமல் மனதிற்குள் கணவன் பெயரை அமைதியாக சொல்ல வேண்டும் என்று பெரியோர்கள் விதித்திருக்கிறார்கள்.

சுவாச பூஜையும், தம்பதி நாம ஜபமும் மனதிற்குள் நிறைவேற்ற வேண்டிய பூஜைகள். இதை மற்றவர்கள் அறிய முடியாது அல்லவா? மற்றவர்களும் பார்த்து அதன் மூலம் பயனடையும் வகையிலும் பலவித பூஜை முறைகளை பெரியோர்கள் அருளியுள்ளனர். அவற்றுள் முதன்மையாகத் திகழ்வதே அன்னதானம் ஆகும்.

அகலிகை, திரௌபதி, சீதா தேவி போன்றோர் பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் நமது புனித பாரதத்தில் தோன்றி பதிவிரதையின் இலக்கணங்களுக்கு எடுத்துக் காட்டாக தங்கள் வாழ்க்கையையே அர்ப்பணித்தனர். தற்போதைய உலகில் அத்தகைய சுமங்கலி தெய்வங்கள் எவராவது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா என்று நீங்கள் கேட்கலாம் அல்லவா?

முக்தி அளித்த சுக்குக் காப்பி

சில நூறு வருடங்களுக்கு முன் திருஅண்ணாமலை திருக்கோயிலின் தெற்கு வாசல் அருகே கற்பக விநாயகர் கோயில் அருகே ஒரு சுமங்கலி வாழ்ந்து வந்தாள். திரு அண்ணாமலையாரிடமும் அவருடைய அடியார்களிடமும் எல்லையில்லா அன்பு பூண்டவள். அவளுடைய முப்பதாவது வயதில் அவள் கணவர் இறைவனடி சேர்ந்தார். அவர் உயிரோடு இருந்த காலம் முழுவதும் சிறிதும் அவர் மனம் கோணாமல் அற்புத பணிவிடைகளைச் செய்து வந்தவள் அவர் இறைவனடி சேர்ந்த பின் திருஅண்ணாமலையை கிரிவலம் அடியார்களுக்கு சுக்கு காபி அளிப்பதை ஒரு இறை வழிபாடாக ஏற்று மிகவும் அன்புடன் நிறைவேற்றி வந்தாள்.

பெரும்பாலும் மார்கழி மாதம் குளிர் அதிகமாக இருப்பதால் அம்மாதம் முழுவதுமே அவள் குடிசையில் அடியார்கள் கூட்டம் நிரம்பி வழியும். திருஅண்ணாமலையை கிரிவலம் வந்த அடியார்கள் அந்தச் சுமங்கலி அளித்த சுக்கு காபியை ஸ்ரீஉண்ணாமுலைத் தாயின் தெய்வீகப் பிரசாதமாகவே ஏற்று பெரு மகிழ்வடைந்தனர். சுக்கு, பனைவெல்லம் அத்துடன் இந்திர தீர்த்தத்திலிருந்து பெறப்பட்ட பிரசாத தீர்த்தம் என மூன்று அமிர்தங்களின் கூட்டாக அந்த காபி அமைந்ததால் தெய்வாமிர்தச் சுவையுடன் பலருடைய தீராத பல நோய்களைத் தீர்க்கும் அருமருந்தாகவும் அது அமைந்தது.

ஸ்ரீகாமாட்சி அம்மன் திருக்கோயில்
திருஅண்ணாமலை

பல நூறு மைல்களுக்கு அந்தப் பெண்மணியின் சுக்கு காபி மகத்துவம் பரவியது. அதனால் நாளுக்கு நாள் சுக்கு காபி பிரசாதம் பெறும் பக்தர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்தது. தன்னிடம் இருந்த சிறு சேமிப்புத் தொகையைக் கொண்டு சுமார் 60 வருட காலத்திற்கு சுக்கு காபி தானம் அளித்து வந்தாள் அந்தச் சுமங்கலி.

அவள் காலத்தில் மாணிக்க வாசகப் பெருமான் ஒவ்வொரு மார்கழி மாதப் பிறப்பன்றும் குறைந்தது ஒரு லட்சம் சிவனடியார்களுடன் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து திருவாசகப் பாடல்களை ஓதி திருஅண்ணாமலையாரை வழிபட்டு வந்தார். அவ்வாறு அவர்கள் கிரிவலம் வரும்போது அவர்கள் அனைவருக்குமே சுக்கு காபி தானம் அளித்து மணிவாசகப் பெருமானின் அன்புக்கும் பாத்திரமானாள் அந்தச் சுமங்கலித் தாய்.

இவ்வாறு 60 ஆண்டுகள் அற்புத சேவை செய்த அந்த மூதாட்டி தன்னுடைய 90வது வயதில் திருஅண்ணாமலை ஜோதியில் கலந்தாள். காமாட்சி என்னும் திருநாமம் கொண்ட அந்தச் சுமங்கலித் தாய்க்கு திருக்கோயிலை எழுப்பி பக்தர்கள் தங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்தச் சுமங்கலி தேவதையே ஸ்ரீகாமாட்சி அம்மன் என்னும் திருநாமம் தாங்கி தெற்கு வாசலில் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் அருகே இன்றும் அருள்பாலிக்கும் தேவதை ஆவாள்.

சுக்குக் காபி என்று சாதாரணமாக நாம் நினைக்கும் ஒரு தானம் சுமங்கலியால் நிறைவேற்றப்படும்போது எத்தகைய ஆன்மீக ஆற்றல் உடையதாக மாறுகிறது என்பதை இதன் மூலம் நீங்கள் அறிய முடிகிறது அல்லவா?

அன்னதானத்தின் அற்புத மகிமையை உலகிற்கு எடுத்துக் காட்டிய நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் தாயார் முத்து மீனாட்சி அவர்கள் சுமங்கலித்துவத்தின் மகிமையை நமது காலத்தில் சிறப்பித்த உத்தமி ஆவார். அன்னதானத்தையே தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த பத்தினி தெய்வம்.

ஒருமுறை காந்திஜி அவர்கள் சுமார் 1000 விடுதலைப் போராட்ட வீரர்களுடன் சென்னைக்கு வருகை தந்தார். அப்போது முத்து மீனாட்சி ஒன்பது வயதே நிரம்பிய சிறுமி. இருந்தபோதிலும் யாருடைய துணையும் இன்றி அத்தனை பேருக்கும் மணம் கமழும், சுவைமிக்க அமுது படைத்து காந்தியடிகளின் மனமார்ந்த பாராட்டைப் பெற்றார்கள். அது முதற்கொண்டு திருஅண்ணாலையில் ஒவ்வொரு கார்த்திகை தீப உற்சவத்தின்போதும் பத்து நாட்களுக்குக் குறையாமல் கிரிவலம் வரும் அடியார்களுக்கும் திருக்கோயில் உற்சவங்களில் பங்கேற்கும் அடியார்களுக்கும் இறைப் பிரசாதத்தை வழங்கி அருந் தொண்டாற்றினார்கள்.

இராமாயண யுகத்தில் ராமரும் சீதையும் வனவாசம் மேற்கொண்டு சபரி மலையில் எழுந்தருளியபோது ராமருக்கும் சீதைக்கும் அற்புத விருந்து படைத்த சபரி என்னும் மூதாட்டியே நமது கலியுகத்தில் திரு வெங்கடராம சுவாமிகளின் தாயாராகப் பிறவி எடுத்து வந்தார் என்பது சித்தர்கள் கூறும் பிறவி இரகசியமாகும். ராமச்சந்திர லோகத்தில் நித்திய ஜோதியாய் அலங்கரிக்கும் சபரித் தாய் தன்னுடைய ஒவ்வொரு பூலோக வாசத்திலும் ராம நாமத்தையும் அன்னதான மகத்துவத்தையும் மக்களுக்குப் பரப்புவதையே உயிர் மூச்சாகக் கொண்டு உலவி வருகிறார்கள்.

சுமங்கலி ஜோதி

முக்காலமும் உணர்ந்த முத்து மீனாட்சி அவர்கள் திரு வெங்கடராமன் அவர்களின் குருமங்கள கந்தர்வ பிறவி இரகசியத்தை முழுமையாக உணர்ந்திருந்த போதிலும் அதைச் சற்றும் வெளிக் காட்டாது, இலை மறை காயாக ஒரு சாதாரண சுமங்கலிப் பெண்ணின் கோலத்தில் இப்பூலோகத்தில் நடமாடி திரு வெங்கடராம சுவாமிகளுக்கு அன்னதான முறையை போதித்து வந்தார்கள். இருந்த இடத்தை விட்டு சற்றும் நகராமல் ஒரு மர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் நூறு அடி தூரத்தில் அன்னதான பதார்த்தங்கள் கொதிக்கும் பல அண்டாக்களில் எந்த அண்டாவில் சாதம் வெந்து விட்டது, எந்த அண்டாவில் உள்ள ரசம் கொதிக்கும் நிலை அடைந்து விட்டது, எந்த அண்டாவில் உள்ள சாம்பாரில் உப்புச் சுவை குறைவாக உள்ளது என்ற விவரங்களைத் துல்லியமாக அறிந்து சொல்லக் கூடிய அற்புத அன்னதான ஞானியே முத்து மீனாட்சி அவர்கள் என்று நமது குருநாதர் அவருடைய அன்னதான கைங்கர்யங்களை அடிக்கடி நினைவு கூர்வது வழக்கம்.

அவ்வாறு பல அற்புதங்களை எல்லாம் நிறைவேற்றிய பின் தனது தாயார் ஸ்ரீராமச் சந்திர லோகத்திற்கு மீண்டும் எழுந்தருளும் காலம் வந்து விட்டது என்பதை உணர்ந்த திரு வெங்கடராம சுவாமிகள் அப்போது தன்னுடன் இருந்து அன்னதான கைங்கர்யத்தில் பங்கேற்ற அடியார்கள் அனைவரையும் திருமதி முத்து மீனாட்சி அவர்களின் திருப்பாதங்களில் சரணடையச் செய்து ஸ்ரீமுத்து மீனாட்சி உருவத்தில் தோன்றிய சபரித் தெய்வத்தின் ராமாமிர்த ஆசீர்வாத சக்திகளை பெற்றுத் தந்தார்கள். அத்தகைய அன்னதான அமிர்த சக்திகளைப் பெற்றவர்களே இன்றும் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் அன்னதான கைங்கர்யங்களை மேற்கொண்டு ஒவ்வொரு பௌர்ணமியிலும் கிரிவலம் வரும் இறை அடியார்களுக்கும், திருக் கார்த்திகை தீப உற்சவத்தில் பங்கு கொள்ளும் பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கி திரு உண்ணாமுலை சமேத அருணாசலேஸ்வரரின் திருவருளுடன் ஸ்ரீசீதா தேவி சமேத ராமச் சந்திர மூர்த்தியின் அனுகிரகத்தையும் சபரித் தாயின் மூலமாகவும், திரு வெங்கடராம சுவாமிகளின் திருவருட் கடாட்சம் மூலமாகவும் பெற்றுத் தருகிறார்கள் என்பதே நீங்கள் ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய தெய்வீக அனுபூதியாகும்.

ஒரு சுமங்கலி தன் கணவனை நினைத்து விடும் மூச்சுக் காற்றே மற்றோர் சுமங்கலியை உருவாக்கும் வல்லமையை உடையது என்றால் ஒரு சுமங்கலி ஈன்றெடுக்கும் ஒரு மழலைச் செல்வம் எத்தகைய வலிமை உடையதாக இருக்கும். அத்தகைய ஒரு வலிமை உடைய தெய்வீகக் குழந்தையை நாம் கண்டு கொள்ள உறுதுணையாக இருப்பதே ராம காவியம்.

சீதையை மீட்பதற்காக ராமர் ராவணன் மீது போர் தொடுத்தார் அல்லவா? அப்போது இலங்கையில் லட்சக் கணக்கான வானரப் படைகள் அந்நாட்டு எல்லையில் தங்கி பல நாட்கள் போரிட்டனர். ஒவ்வொரு நாள் போரிலும் விதவிதமான அசுர சக்திகளை வானரப் படைகள் மீது அவைகளை நாசம் செய்வதற்காக இராவணன் பெரிதும் முயற்சி செய்து வந்தான். அவனுடைய அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்தன.

இவ்வாறு தொடர்ந்து போர் கடுமையாக நடந்து கொண்டிருந்தபோது ஏழாம் நாள் போர் முடிந்து வானரப் படைகள் தங்கள் பாசறைக்குத் திரும்பி விட்டன. சிறிது நேரத்திற்குப் பின் வானரங்களிலிருந்து வரும் வழக்கமான குதூகல ஆரவார ஒலி சிறிது சிறிதாக குறைந்து கொண்டே வந்து சில நிமிடங்களில் அவர்களிடமிருந்து எந்த ஒலியும் எழவில்லை. எங்கும் ஒருவித நிசப்தமே நிலவியது. விநோதமான இந்தப் புதிரை விடுவிப்பதற்காக ராமபிரான் ஆஞ்சநேயரை அழைத்து அதற்கான காரணத்தை அறிந்து வருமாறு பணித்தார்.

ராம பிரானின் உத்தரவை ஏற்று ஆஞ்சநேயர் வானரப் படைகள் தங்கியிருந்த முகாம்களில் நுழைந்து திடீரென எந்த சப்தம் எழாமல் போனதற்குக் காரணம் என கண்டறிய முயன்றார். அங்கு அவர் கண்ட காட்சி திடுக்கிடும் படியாக இருந்தது. வானரப் படைகள் எல்லாம் சிறிதும் மூச்சு பேச்சின்றி கற்சிலைகள் போல் தரையில் மயங்கிக் கிடந்தன. அவர்கள் உடலில் அளவுக்கு அதிகமான சூடு தென்பட்டது. இதைத் தவிர வேறு எந்தவிதமான உடல் மாற்றத்தையும் அவரால் உணர முடியவில்லை. வானரங்கள் தங்கியிருந்த எல்லா முகாம்களிலும் கிட்டத்தட்ட இதே மாதிரியான சூழ்நிலைகளே தென்பட்டன.

விரைந்து வந்து ராமபிரானிடமும், அவரைச் சுற்றியிருந்த லட்சுமணன், ஜாம்பவான், சுக்ரீவன் போன்ற பெரியோர்கள் முன்னிலையில் தான் கண்ட காட்சிகளை சுருக்கமாக கூறினார். அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். யாருக்கும் என்ன நடந்ததென்று யூகிக்க முடியவில்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். இறுதியில் எந்த இக்கட்டான சூழ்நிலையைம் சமாளிக்கும் ஆற்றல் உடையவர் ராமர் ஒருவரே எனத் தெளிந்து அவர் சொல்லப் போகும் வார்த்தைகளுக்காகக் காத்திருந்தனர். ராமர் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்தார். திடீரென லட்சக் கணக்கான வானரப் படைகள் செயலற்றுப் போகும் நிலை ஏற்படுகிறது என்றால் இது நிச்சயம் ஏதோ ஒரு மாய சக்தியின் வேலையாகத்தான் இருக்கும். ஆனால், அதை எப்படித் தெரிந்து கொள்வது என்று யோசித்து விபீஷணனுக்கு இது சம்பந்தமாக ஏதாவது கருத்து இருக்கிறதா? என்று வினவினார்.

விபீஷணர் சற்று நேரம் தீர்க்கமாக யோசித்த பின்னர் ஆஞ்சநேயரை அழைத்துக் கொண்டு வானரப் படைகள் தங்கியிருந்த கூடாரங்களை நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவருக்கு ஒரு விஷயம் பளிச்சென ஞாபகத்திற்கு வந்தது. அது என்னவென்றால், ராவணனுடைய ராஜ்யத்தில் வீர்ய சூர்ணிகன் என்ற ஒரு அசுரன் இருந்தான். நைஷ்டிக பிரம்மச்சாரி. ரிஷிகள், மகான்கள்தான் பிரம்மச்சரிய விரதத்தை ஏற்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. யார் வேண்டுமானாலும் அந்த விரதத்தை ஏற்கலாம்.

ஆனால், வீர்ய சூர்ணிகனின் விரதம் வித்தியாசமானது. அது தன்னுடைய ராஜாவான ராவணனுக்கு போரில் உறுதுணையாக இருப்பதற்காக மேற்கொண்ட விரதமாகும். தன்னுடைய வீர்ய சக்தியை ஒரு துளி கூட வீணாக்காது காத்து வந்த அந்த அசுரன் ராவணன் ஆணையிடும்போது தன்னுடைய வீர்ய சக்தியில் ஒரு துளியை பரவெளியில் வெளிவிடுவான். அது ஒரு நாழிகையில் 3,000,000,000,000 நோய் உண்டாக்கும் நுண்ணுயிர்களை உருவாக்கும். தற்போது நாம் அறிந்த வைரஸ் என்று கிருமியை விட பல்லாயிரம் மடங்கு சக்தி வாய்ந்தவை அந்த ஜீவிகள். ஒவ்வொரு நாழிகை கழிந்த பின்னும் இந்த நுண்ணுயிர்கள் இரண்டு இரண்டு மடங்காக விருத்தி அடையும். மனித மனத்தால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத எண்ணிக்கையுள்ள அந்தக் கிருமிகளை யார் ஒருவர் சுவாசிக்கிறாரோ அவர் 21 நாட்களுக்கு செயலிழந்து விடுவார்.  

நினைவிழந்து கிடந்த வானரங்களைப் பார்த்த விபீஷணர் நிச்சயம் இது வீர்ய சூர்ணிகனின் திட்டம்தான் என்பதை நொடியில் உணர்ந்து கொண்டார். இச்செய்தியை உடனே ராமபிரானிடம் தெரிவித்தார். ஆனால், இந்தக் கிருமிகள் பரவுவதை எப்படித் தடுப்பது, அவ்வாறு கிருமிகளால் பாதிக்கப்பட்டவர்களை எப்படி சகஜ நிலைக்கு மீட்பது என்ற இரகசியம் விபீஷணர் அறிந்திருக்கவில்லை.

இது குறித்து அனைவருடனும் ராமர் அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். அப்போது ஜாம்பவான் முன் வந்து ராமரிடம், தசரத குமாரா, முள்ளை முள்ளால்தான் எடுக்க முடியும். இவ்வாறு பிரம்மச்சர்ய சக்தியை தவறாகப் பிரயோகம் செய்து நாசம் விளைவிக்கும் அசுர சக்திகளை மற்றோர் பிரம்மசர்ய விரதம் பூண்ட உத்தமர்களே நிர்மூலம் செய்ய முடியும். இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆஞ்சநேயன் ஒருவன்தான் நமது வானரப் படைகளைக் காக்க முடியும். அவன் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பது மட்டும் அல்லாது பதிவிரதை அஞ்சனாவின் புத்திரனும் கூட.

ஒரு பதிவிரதையின் கற்புக் கனலிலிருந்து தோன்றியவன் எந்த ம்ருத்யு தோஷங்களையும் களையக் கூடியவன் என்ற இறை நியதிக்கேற்ப தாங்கள் ஆஞ்சநேயரை இதற்கு உரித்தான மருந்தை பெற்றுத்தரும்படி ஆணையிடுங்கள் என்று ராமரைக் கேட்டுக் கொண்டார்.

கடும்பாடு சித்தர் ஏற்ற கடும் தவம்

ராம பிரானும் ஜாம்பவானின் கருத்தை ஏற்றுக் கொண்டார். ஆஞ்சநேய மூர்த்திதான் இந்தக் கொடிய நோயிலிருந்து வானரப் படைகளை காலம் தாமதிக்காமல் விரைந்து காப்பாற்ற வேண்டும், என்று கேட்டுக் கொண்டார். ராமபிரானின் கட்டளையைக் கேட்ட ஆஞ்சநேயர் பேருவகை எய்தினார். தன்னால் ராமபிரானுக்கு ஒரு சேவை செய்ய முடியும் என்றால் அதைவிட சிறந்த பாக்கியம் உலகில் வேறு எது இருக்க முடியும் என்று நினைத்ததே அவருடைய சந்தோஷத்திற்குக் காரணம்.

உடனே ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெயராம் என்று முழக்கமிட்டுக் கொண்டே கண்களை மூடித் தியானித்தார். அவருடைய மனக் கண்ணில் அவருடைய தாய் அஞ்சனா தேவியின் அன்பு முகம் தோன்றியது. குழந்தாய், ஸ்ரீராமர் விரும்பும் சஞ்சீவி மருந்து திருஅண்ணாமலையில்தான் உள்ளது. நீ உடனே வான மார்கமாக அங்கு செல்வாயாக, என்று கூறி மறைந்தாள். ஆஞ்சநேயர் ராம பிரான் உள்ளிட்ட அனைவரிடமும் உத்தரவு பெற்றுக் கொண்டு பொழுது புலரும் முன் வானரப் படையை உயிர்ப்பிக்கும் சஞ்சீவி மருந்துடன் திரும்பி வருவதாக உறுதியுடன் கூறி விட்டு வானை நோக்கிப் பறக்க ஆரம்பித்தார்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் கீழ்பெண்ணாத்தூர் திருஅண்ணாமலை

சில நொடிகளில் திருஅண்ணாமலையை அடைந்து குதூகல நந்தியின் உத்தரவைப் பெற்றுக் கொண்டு கிரிவலம் வர ஆரம்பித்தார். ஏக முக தரிசனத்தை அடுத்து வரும் ஷண்முக தரிசனம் எதிரே ஆஞ்சநேயர் வரும்போது கடும்பாடு சித்தரின் அற்புத தரிசனம் அவருக்குக் கிட்டியது. இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து நோய்க் கிருமிகளையும் தனது சுவாசம் மூலம் உள்ளிழுத்து அக்கிருமிகளை தனது யோக சக்தியால் பஸ்மம் செய்து உலக ஜீவன்களை நோய் நொடிகளிலிருந்து காத்து வரும் அற்புத சித்தர் பிரானே கடும்பாடு சித்தர் ஆவார். திருஅண்ணாமலை அருகே கீழ்பெண்ணாத்தூர் என்னும் கிராமத்தில் ஜீவ சமாதி கொண்டுஅருள்பாலித்து வருபவர்.

ஆஞ்சநேய மூர்த்தி மேற்கொண்டிருந்த அற்புத தேவ கைங்கர்யத்தை உணர்ந்த கடும்பாடு சித்தர் எத்தகைய நோய்க் கிருமிகளையும் சுவாசக் காற்று மூலம் உள்ளிழுத்து வாயுத் தம்பனம் செய்யும் யோகக் கலையை ஆஞ்சநேய மூர்த்திக்குக் கற்றுக் கொடுத்தார். நான்கு சதுர் யுகங்களில் கற்றுத் தெளிய வேண்டிய வாயுத் தம்பன யோகக் கலையை ஒரே நாழிகையில் கற்றுத் தேர்ச்சி அடைந்த ஆஞ்சநேய மூர்த்தியின் அற்புதத் திறனைக் கண்டு வியந்து பாராட்டினார் கடும்பாடு சித்தர். ஒரு பதிவிரதையின் மைந்தனாக ஆஞ்சநேய மூர்த்தி அவதாரம் கொண்டதே இத்தகைய அற்புத ஆற்றலை அவர் பெறுதவற்கு உறுதுணையாக அமைந்தது என்று அஞ்சனா தேவியின் பெருமையை உலகிற்கு பறைசாற்றினார் கடும்பாடு சித்தர் பிரான்.

ஸ்ரீவாமதேவ பத்மபாதம்
கீழ்பெண்ணாத்தூர்

ஸ்ரீவலஞ்சுழி அமிர்தத்வம்
கீழ்பெண்ணாத்தூர்

கடும்பாடு சித்தர் பிரானின் நல்லாசியுடன் கிரிவலத்தை இனிதே நிறைவு செய்து, குதூகல நந்தீஸ்வரருக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்து விட்டு வான மார்கமாக மீண்டும் இலங்கை வந்தடைந்தார் ஆஞ்சநேய மூர்த்தி. அவருடைய அற்புத சேவையால் மகிழ்ந்த ராமபிரான் அவரை மீண்டும் மீண்டும் கட்டித் தழுவி அன்பு மழை பொழிந்தார்.

கடும்பாடு சித்தரிடம் பயின்ற யோக வித்தை மூலம் வானரங்களைத் தாக்கிய நோய் நுண்ணுயிர்களை அனைத்தையும் தன்னுள் ஈர்த்து வானரப் படைகளுக்கு புத்துயிர் அளித்தார் ஆஞ்சநேய மகா பிரபு. ஆனால், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் வீர்ய சூர்ணிகன் வெளியிட்ட கொடிய நுண்ணுயிர்களை ஈர்த்து அவைகளை பஸ்மம் செய்ய முடியாது. அந்த நுண்ணுயிர்கள் அளிக்கும் வேதனைகளை ஒட்டு மொத்தமாக 21 நாட்களுக்கு அனுபவித்துதான் தீர வேண்டும். எனவே, கடுமையான போர் நடுவிலும் ஆஞ்சநேயர் அவ்வளவு வேதனைகளை தன்னுள் ஏற்று அனுபவித்தார். அதனால்தான் ராம பக்திக்கு எடுத்துக் காட்டாய், ராம பக்தர்கள் தலைமை தாசனாய் ஹனுமாரை சுட்டிக் காட்டுகின்றனர். எனவே பக்தன் என்பவன் தியாகத்தின் மூலமே தன்னுடைய பக்தியை வெளிக்காட்டுவான். அதுவே உன்னத பக்தி.

சுமங்கலியின் கடமை தன்னாள் முடிந்த அளவு சுமங்கலிகளை உருவாக்குவது என்றால் மற்றவர்களின் கடமை என்ன? சுமங்கலி தெய்வங்களை மதித்து, போற்றி, வணங்கி வாழ்வதே மற்றவர்களின் கடமை. இதைத்தான் அனைத்து தேவதா மூர்த்திகளும், ரிஷிகளும், மகான்களும், யோகிகளும், ஞானிகளும் கடைபிடித்து வந்தனர். நாமும் அவர்கள் வழி நடப்போம்.

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam