முக்காலமும் உணர வல்லவர் சற்குரு ஒருவரே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மறதியால் விளையும் சங்கடங்கள்

ஒரு யுகம் முடிந்து அடுத்த யுகம் தொடங்குகின்ற இடைவெளியில் தெய்வாதி தேவமூர்த்திகள் பலவிதமான வழிபாடுகளை மேற்கொள்கின்றார்கள். இதில் கிருத யுகம் முடிந்து திரேதா யுகம் தொடங்குவதற்கு முன்னால் தெய்வாதி மூர்த்திகளும் தேவர்களும் விஷ்ணு த்ரிராத்ரி விரதத்தைக் கைக்கொள்கின்றார்கள். மூன்று இரவுகளுக்கு இந்த விரதம் தொடரும்.
சூரிய மூர்த்தி ஸ்ரீவைகுண்டத்தில் சூரிய நாராயண மூர்த்தியாகத் துலங்கும் பெருமாளை மாத சிவராத்திரி போன்று இரவுக் காலப் பூஜையாகத் தோத்தரிப்பதே தசமி திதியாகும். தசபுஜங்களை உடைய கோலத்தை அருள்கின்ற மூர்த்திகளுள் சூரிய பாந்தவ மூர்த்தியும் ஒருவராவார். தசமி திதிக்குரிய சிறப்பு என்னவெனில் விருத்தியைத் தர வல்ல ஏகாதசி திதிக்கான பூர்வாங்க சக்திகளை அளிப்பதே ஆகும்.

சூரிய தீர்த்தம் பரிதிநியமம்

பெருமாளுடைய தசாவதார அம்சங்களையும் தசமியும் ஞாயிறும் சேரும் நாளன்று அனைத்துக் கோளங்களிலும் அண்டங்களிலும் சூரிய மூர்த்தி தசாவதார பூஜைகளை நிகழ்த்துகின்றார். தினந்தோறும் காலையிலும் மாலையிலும் சூரிய உதய நேரத்திலும் மறைவு நேரத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் சூரியக் கோளம் தோன்றும்போதே தரிசித்திட வேண்டும். இவ்வாறு ஆரஞ்சு வண்ண சூரியனைத் தரிசிக்கின்ற பூஜையை மகா தனுராதித்ய பூஜை என்றும் சத்ய வர மகரிஷிகள் உரைக்கின்றனர்.
சூரிய கோளத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் கண்களின் நேத்திர தவ சக்தியை விருத்தி செய்யம் பசுமையான கோளக் கிரணங்கள் நிறைந்துள்ளன. தசமி திதி அன்று இந்த ஆரஞ்சுக் கோளத்தில் பத்து விதமான உத்தானங்கள் பிறப்பெடுக்கும். உத்தானம் என்பது ஆரஞ்சு வண்ண சூரியக் கோளத்தில் உள்ள பாமரராலும் புரிந்து அறிந்து கொள்ளும் அளவில் ஏற்படும் மூல அறிவு ஆகும். அதாவது தினந்தோறும் ஆரஞ்சுக் கோளச் சூரியனைக் குதிகாலை உயர்த்தி நின்று தரிசிப்போர்க்கு பாத தனுராயணம் எனப்படும் அம்பு வடிவில் உள்ள சத்திய பீஜங்கள் பாதத்திலிருந்து மேல் நோக்கிச் செல்லும். இதனை யோகப் பூர்வமாகக் கடைபிடித்தவரே ஸ்ரீபாஸ்கரராயர் ஆவார்.
ஸ்ரீலலிதா பரமேஸ்வரியின் பரம பக்தர். ஸ்ரீவித்யா சக்கரத்தில் உள்ள 43 கோடி தேவதா மூர்த்திகளின் பெயர்களைத் தொடர்ந்து உரைக்க வல்லவர். இவர் எப்போதும் தன் கையில் தாங்கி இருக்கும். தண்டத்தில தச குந்தரங்கள் இருக்கும். ஒவ்வொன்றிலிருந்தும் ஒவ்வொரு வண்ணத்தில் ஒளிக் கிரண வீச்சு தென்படும். தனுராயன நாட்களில் இதன் பிரகாசத்தை அனைவரும் கண்டிடலாம்.
இவ்வாறாக இன்றைய தசமி கூடும் ஞாயிறானது விஷ்ணு த்ரி ராத்ரி விரத நாளில் தோன்றுகின்ற ஸ்ரீகிருஷ்ண பிரகாச சக்திகளின் மகிமையை உணர்த்துவதாகும். இந்நாளில் சௌர சக்திகள் எனப்படும் சூரிய சக்திகள் நிறைந்த சென்னை அருகே ஞாயிறு, பட்டுக் கோட்டை அருகே பரிதிநியமம், சென்னை திருவள்ளூர், கரூர் அருகே வாங்கல் ரவீஸ்வரர் போன்ற சௌர சக்தித் தலங்களில் பசு நெய்க் காப்பிட்டு வழிபடுதல் விசேஷமானது. மறதியால் ஏற்பட்ட சில சங்கடங்களில் இருந்து காக்க உதவும்.

முதுமைக் காலம் சுமை அல்ல

அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் வீற்றிருக்கும்போது, விண்வெளி மண்டலத்தில், லட்சுமி காந்தக் கதிர்கள் தோன்றுகின்றன. சந்திர மூர்த்தி, அனுஷத்தில் இருக்கும்போது அதாவது அனுஷ நட்சத்திர நாளில், வேதலட்சுமி கேந்த்ரக் கதிர்கள் எழுகின்றன.
அனுஷ நட்சத்திரத்தில் சூரிய பகவான் உலா வரும் நாளில், அதாவது அனுஷத்தில் சூரிய மூர்த்தி நிலை கொள்கையில், பாஸ்கர சக்திகள் நிறைந்த இடங்களில், சூரியக் கதிர்கள் மூல மூர்த்தியின் மேல் படுகின்ற தலங்களில், காந்த சக்திகள் நிறைந்த நாகலிங்கப் புஷ்பத்தால் சுவாமியை அர்ச்சித்து, வில்வ தளத்தால் மஹாலட்சுமியைத் தோத்தரித்துத் தாமரை இலைகளில் சர்க்கரைப் பொங்கல் தானம் அளிப்பது இல்லத்தில் பல காலமாக இருந்து வரும் கடன் கஷ்டங்களால் உருவாகி உள்ள எழும் சோக நிலை மாறிட உதவும்.
சந்திரன் அனுஷத்தில் உறையும் அதாவது அனுஷ நட்சத்திர நாளில், சந்திர மூர்த்தியை வில்வமும் தாமரையும் கலந்த புஷ்பங்களால் அர்ச்சிப்பதும், அனுஷத்தில் சூரியன் இருக்கும்போது சூரிய மூர்த்தியை நாகலிங்கப் புஷ்பமும் துளசியும் கலந்த புஷ்பங்களால் அர்ச்சிப்பதும் பல விதமான வறுமைத் துன்பங்களைப் போக்க உதவுவதாகும்.

சங்கநிதி திருவெள்ளறை

பதுமநிதி திருவெள்ளறை

பீஷ்மாச்சாரியார் தினமும் ஐந்துவிதமான விரதங்களைப் பூண்டு தம்முடைய அப்பழுக்கற்ற பிரம்மச்சரியத்தின் பலாபலனாய் சாட்சாத் குபேர மூர்த்தியிடம் இருந்து அதியற்புத வேதநிதிகளைப் பெற்ற தினமே அனுஷ நட்சத்திர தினமாகும்.
சங்க நிதி, பதும நிதி, வேத நிதி, கான நிதி, சொர்ண நிதி, மூல நிதி என்றவாறாக நவ நிதிப் புஷ்பங்கள் உண்டு. இதில் வேத நிதிப் புஷ்பங்கள் அதியற்புத நறுமணப் புஷ்பம், நறுமண தளம் பொன்னாலாகிப் பூத்திருப்பதாகும். பீஷ்மாச்சாரியார் வேத நிதிப் புஷ்பங்களால் தினமும் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை அர்ச்சித்து வந்தமையால்தான், விந்து சக்திகள் வேதப் பிரகாசச் சக்திகளாய் மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரத்தை அடையும் மார்கத்தில் வேத நிதியாய்ப் பெற்றிருந்தார்.
கரணம், காரணம், தரணம் தாரணம், உதரணம், உதாரணம் போன்ற நம்பூதி எனப்படும் பல்வகை வேதக் கடை ஒலிச் சக்திகள் உண்டு. அதாவது ஒரு வேத மந்திர அநுவாகத்தில் இறுதி வாக்கியமானது நம்பூதி சக்திகளைக் கொண்டிருந்தால் அதற்கு உத்தரண வேத மந்திரம் என்று பெயர். இத்தகைய மந்திரங்கள் சூரிய பகவான் அனுஷ நட்சத்திர நாளில் நிரவும் நாளில் பரவெளியில் வலுப் பெறுகின்றன. திருநின்றவூர் /திருநின்றியூர்த் தலப் பாசுரங்கள் /பதிகங்கள் இத்தகைய சக்திகளைப் பூண்டிருப்பதால் தேடிக் கண்டுபிடித்துப் பாராயணம் செய்யவும். இருதயத்திற்கும், செல்வ பீஜங்களுக்கும் வலுவூட்டக் கூடியது.
பீஷ்மர் தாம் பூண்டிருந்த ஏழு வகையான பஞ்சக விரத சக்திகளில் இரண்டின் பலாபலன்களைத் தம் தாயாராம் கங்கா தேவிக்கே அளித்திட்டார். ஏனைய ஐந்தும் ஸ்ரீகிருஷ்ணனிடம் வேத நிதிப் புஷ்பங்களுடன் சேர்த்து அளித்திட்டார்.
பீஷ்ம பஞ்சகம் என்பதான பீஷ்மர் கடைபிடித்த இறைபக்தி, சத்தியம், தர்மம், நேர்மை, பிரம்மச்சர்யம் போன்ற ஐந்தையும் கலியுக ஜீவன்களாகிய நாம் என்றுதான் பெறுவது? நிதி என்பதற்குச் செல்வ விருத்தி என்ற பொருள் கொண்டாலும், சங்க நிதி, பதும நிதி, வேத நிதி போன்றவை வருகின்ற செல்வத்தை நல்முறையில் விருத்தி செய்யவும், நல்வழிகளில் செலவழிக்கவும் நன்கு நிலைபெற்றிடச் செய்யவும் உதவுகின்ற துணை நிதிவளங்கள் ஆகும்.

சாக்கோட்டை திருத்தலம்

பாண்டவர்களும், கௌரவர்களும், திருஅண்ணாமலையைப் பன்முறை கிரிவலம் வந்துள்ளனர். இவ்வகையில் பீஷ்மாச்சாரியார் அருணாசலத்தை கிரிவலம் வந்திட்ட அனுபூதிகள் யாவும் இருடிகள் மகாபாரதத்தில் காணக் கிடைக்கின்றன. நாம் பெற்றுள்ள ராமாயண, மகாபாரத காண்டங்கள் முழுமையான ராமாயண, மகாபாரதத்தின் ஒரு சில பகுதிகளே ஆகும். இருடிகள் பாரதம், இருடிகள் ராமாயணம் இவைதாம் முழுமையான பாரதம், மற்றும் ராமாயண காவிய சம்பவங்களைப் பரிபூரணமாக அளிக்கின்றன.
பீஷ்மர் பல்லாயிரம் ஆண்டுகள் வாழ்ந்து பல தலைமுறைகளைக் காணத் துணை புரிந்ததே அவருடைய அப்பழுக்கற்ற பிரம்மச்சரிய விரதமாகும். இத்தகைய மகா புனிதமான பிரம்மச்சரிய சக்திகளை அவர் பெற உதவியதே திருஅண்ணாமலையின் பிரம்மச்சரிய லிங்க தரிசனமாம். முதன் முதலாக பிரம்ம மூர்த்தியும் நான்கு சிரசுகளின் தரிசனங்களையும் நான்கு திசைகளையம் பீஷ்மர் பெற்ற இடத்தில்தாம் தற்போது ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தில் பிரம்ம லிங்கம் அமைந்துள்ளது. இப்பூவுலகில் பிரம்ம மூர்த்தியின் நான்கு முக தரிசனங்களையும் பெறக் கூடிய மிக மிக அபூர்வமான ஸ்ரீபிரம்ம சன்னதியில் இதுவும் ஒன்றாகும்.
தமக்கு முதுமை நெருங்குவதால் நினைவாற்றல் மங்கி முதுமைக்கு உரிய ஞாபக மறதி ஏற்படுவதிலிருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ள ஸ்ரீபீஷ்மாச்சாரியார் சர்வ உத்தா(ர)ண ஏகாதசி விரதம் பூண்டு, வேத நிதிப் புஷ்பங்களைச் சுமந்து அருணாசல கிரிவலம் வந்து, திருஅண்ணாமலையில் குறித்த இடத்தில் பிரம்மச்சரிய லிங்க தரிசனம் பெற்று அபாரமான நினைவாற்றலைக் கொண்டார். இதனால்தான், தாம் அம்புப் படுக்கையில் இருந்தபோது, ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவின் விஸ்வரூப தரிசனம் பெறுகையில், திருமாலுக்குரிய ஆயிரம் துதிகளை விஷ்ணு சகஸ்ரநாமமாக ஓதி மகிழ்ந்தார். இந்த ஆற்றலை அவர் பெற்ற இடமே அருணாசலத்தில் பிரம்மச்சரிய லிங்க தரிசனமாகும்.
வயதான பின் தான் தனித்து வாழ வேண்டுமோ. மனைவியை இழந்திட்டால் என் செய்வது, தன் பிள்ளைகள் தன்னை நன்றாக வைத்திருப்பார்களா, தமக்கு ஆண் சந்ததி இல்லாத நிலையில் தன் பெண்ணை அனுசரித்து தன் முதுமைக்கால வாழ்க்கையை ஓட்ட வேண்டுமா என்றெல்லாம் மனம் குழம்பி இருப்போர் பீஷ்ம பஞ்சக நாட்களில் வழிபாட்டை முறையாக மேற்கொண்டிட, சிறப்பான பலன்களை வாழ்வில் பெற்றிடலாம்.

துளசி விவாகம்

“கல்யாணம் பண்ணிப் பார், வீட்டைக் கட்டிப் பார்!” என்ற முதுமொழிக்கு அர்த்தமுள்ள அனுபூதிகள் பல உண்டு. கன்னிகாதானம் என்பதாக, பெற்றோர்கள் தம் மகளுக்கு நன்முறையில் திருமண வாழ்க்கையை அமைத்துத் தரும்போது, 1008 வகையான தான, தர்ம புண்ணிய சக்திகளைத் தங்கள் சந்ததிகளுக்கும், முன்னோர்களுக்கும் ஈண்டு அளிக்கின்றார்கள் என்பது இதனுடைய சத்தியமான அர்த்தங்களுள் ஒன்றாகும்.

நன்முறையில் ஒரு வீட்டைத் தன் குடும்பத்திற்கென நன்கு கட்டி அளிக்கும்போது, தம் சந்ததிகள் தழைப்பதற்கான நல்ல உறைவிடத்தை அமைத்துத் தருகின்ற அறசக்தி ஆங்கே கூடுகின்றது. மேலும், நல்ல வீட்டை வாங்கி / கட்டித் தருவதன் மூலம், இந்த பூலோகத்திற்கு நிறைய பூஜைகளும் ஹோமங்களும் நிகழ்வதற்கான ஒரு சத்சங்க ரீதியான குடும்ப ஆலயத்தை அமைத்துத் தருகின்ற பெரும் பேறும் கிட்டுகின்றது. இந்த இரண்டு அர்த்தங்களும் இந்த முதுமொழியில் பதிந்துள்ளன என்பதை இனியேனும் உணர்ந்திடுக.
திருமணம் ஆகி நல்ல வீட்டைக் கட்டிய பின் அல்லது இருக்கின்ற வீட்டிலாவது, சிறு அளவிலாவது வாராந்திர ஹோம வழிபாடு, வாரந்தோறும் நாம சங்கீர்த்தனம் எனப்படும் கூட்டு இறைவழிபாடு, இரு வாரங்களுக்கு ஒரு முறையான அதாவது பட்சத்திற்கு ஒரு முறை 12, 21, 108 வகையில் தீபங்களை ஏற்றித் தீப வழிபாடு, மாதம் ஒரு முறை பௌர்ணமி அல்லது குறித்த திதிகளில் சிறிய அளவிலாவது அன்னதானம், வெள்ளிக் கிழமை தோறும் வீடு முழுவதும் கோலம் போடுதல், ஸ்ரீநிவாசக் கல்யாணம், ஸ்ரீசீதாராமக் கல்யாணம், ஸ்ரீராதாகிருஷ்ணக் கல்யாணம் போன்ற தெய்வத் திருமண உற்சவத்தை வீட்டில் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது நிகழ்த்தி வருதலால் இல்லம் நன்கு சுபிட்சம் பெறும்.
இதனால் உங்கள் வீட்டிற்கு வருபவர்களுக்கு ஒரு தெய்வீகக் கலை, தெய்வீகக் களையாக, ஆன்மீக நறுமணத்துடன் தானே சுரந்து நிரவுவதை நன்கு உணர்வார்கள்.

திருநின்றியூர் மாயவரம் அருகே

இவ்வகையான வைபவ பூஜைகளுள் ஒன்றே துளசிக் கல்யாண பூஜையாகும். ஸ்ரீமன் நாராயண மூர்த்தி, துளசி தேவியை மணந்து, பூவுலகிற்கு மங்கள சக்திகளைக் கொழித்துத் தருகின்ற திருநாள்.
ஒவ்வொரு இல்லத்திலும் துளசிச் செடியை நன்கு போஷித்து வளர்க்க வேண்டும். மருத்துவம், சுகாதாரம், யோகம், தியானம், பூஜை, அக்னி சக்தி, சூரிய சந்திர ஒளி ஈர்ப்பு சக்தி போன்று பல விதங்களில் துளசிச் செடி நமக்கு உதவுகின்றது. யோக சக்திகளை இல்லத்தில் செழிக்கச் செய்யும். தியான சக்திகளை நன்கு கொழிக்கச் செய்யும். உடல் ஆரோக்யத்திற்கான ஆரோக்யக் கதிர்களைப் பரிமளிக்கச் செய்யும். துளசிச் செடியில் எழும் நறுமணமும், காரம் கலந்த சுவை மணமும் இல்லத்திலும் இதனைச் சுற்றிய பரவெளியிலும் இருக்கின்ற பலவிதமான துர்வாசனைகளை துர்எண்ணங்களை நசித்து, புனிதமான, ஆரோக்கியமான கிரணங்களை நிரவுவதாகும்.
மேலும், பண தோஷம், திருஷ்டி தோஷம், கண் திருஷ்டி தோஷம், பொறாமை போன்ற பல்வகைகளில் வருகின்ற தோஷங்களைத் துளசிச் செடி நிவர்த்தி செய்து நம்மைக் காக்கின்றது.

துளசித் திருமண உற்சவ நாளன்று, வீட்டிலோ, ஆலயத்திலோ துளசி மாடம் / துளசிச் செடியைச் சுற்றி ஈரத் துணியால் மெழுகி நன்கு கோலம் இட்டிடுக! விளக்கு மாற்றால் பெருக்கக் கூடாது. துளசிச் செடிக்கு மலர்கள், வஸ்திரங்கள் சார்த்தி, அருகில் ஸ்ரீமஹா விஷ்ணு / பசு, கன்றுகளை அருகில் கொண்டும், புல்லாங்குழல் இல்லாதும் இருக்கும் ஸ்ரீகிருஷ்ணனின் படம் வைத்துத் துளசித் திருமண வைபவச் சடங்குகளை ஆற்றிட வேண்டும்.
தக்க பெரியோர்களை நாடி, துளசிக் கல்யாண முறைகளை ஆற்றிச் சிறப்பாக நடத்திடவும். பூவுலகக் கல்யாண வைபவம் போல், திருப்பதியில் ஸ்ரீனிவாசப் பெருமாள் திருமண உற்சவம் போலச் சிறப்பாக நடத்திட வேண்டும்.

சென்னை-பூந்தமல்லி அருகே சித்துக்காடு (திருமணம் கிராமம்) ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் நெல்லி விருட்சத்திற்கும் (ஸ்ரீமஹாவிஷ்ணு அம்சம்), துளசிச் செடிக்கும் திருமண வைபவம் நிகழ்த்தி வைத்தலால் இல்லத்தில் கணவன் - மனைவி இடையே மன ஒற்றுமை இறையருளால் நன்கு விருத்தி அடைவதைக் காணலாம். திருமணத் தடங்களை நீக்க வல்ல அற்புதத் தலம்.

தலைமுறை இடைவெளி அகல வேண்டும்

வல்லாள மகாராஜாவிற்காக, மாசி மகந்தோறும், திருஅண்ணாமலையில் ஸ்ரீஅருணாசலேஸ்வரச் சிவமூர்த்தியே தர்ப்பணம் அளிக்கின்ற வைபவத்தைப் பலரும் அறியார். ஆம், பேரரசனின் அன்பையும் பக்தியையும் மெச்சி, இறைவனே தன் அடியாராம் அரசருக்கு இன்றும் என்றுமாய்த் தர்ப்பணம் அளித்து வருகின்றார் எனில் என்னே பெரும் பாக்யமிது!
வல்லாள மகாராஜா சித்த வைத்தியத் துறையில் நன்கு பயிற்சி பெற்றவர். குறிப்பாக தெய்வச் சிலைகளை மூலிகைக் காப்புகள் மூலம் பராமரிப்பதில் சிறந்தவர் ஆவார். அஷ்ட பந்தன மருந்து எனப்படும் எட்டு வகை இயற்கை திரவியங்கள் கலந்த கலவையை ஆலயங்களில் தெய்வ மூர்த்திகளைப் பிரதிஷ்டை செய்யும்போது சிலையின் அடியில் பீடத்திற்கு இடையில் பந்தனமாக வைப்பார்கள்.

ஸ்ரீவரதராஜ பெருமாள் திருநெடுங்களம்

திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்தின் சிறப்பு என்னவென்றால், ஸ்ரீஅருணாசல லிங்க மூர்த்தியின் அடிப் பீடத்தில் அஷ்ட பந்தன மருந்திற்குப் பதிலாக தங்கத்தாலான சுவர்ண பந்தனம் சார்த்தப்பட்டுள்ளது.
வ்யதீபாத யோகம் கூடிய மாசி மக நாளில்தாம் ஸ்ரீஅருணாசல மூர்த்தியே வல்லாள மகாராஜாவிற்கு தர்ப்பணம் அளிக்கத் தொடங்கினார். எனவே, இன்றிலிருந்தாவது இனி, நீங்கள் ஒவ்வொரு முறையும், அமாவாசை மற்றும் பிற நாட்களில் தர்ப்பணம் அளிக்கும் போதெல்லாம், வல்லாள மகாராஜாவிற்கும் மூன்று முறை சேர்த்துத் தர்ப்பணம் அளியுங்கள். இதனால் இறைவன் அளிக்கின்ற தர்ப்பணத்தோடு உங்கள் தர்ப்பணப் பூஜையும் சேர்வதால் இந்தத் தர்ப்பணத்தின் கிரண வீச்சானது எண்ணற்ற தலைமுறைகளையும் சென்றடைவதாகும் .
வ்யதீபாத யோகத்தில் அமையும் பிரதோஷத்திற்குத் திலமால்யப் பிரதோஷம் என்று பெயர். வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மூர்த்திகளின் நாயகராக ஸ்ரீமன் சூரிய நாராயண மூர்த்தி துலங்குவதால், இந்நாளில் பெருமாள் மூர்த்தி அருளும் சிவாலயங்களில் பிரதோஷ பூஜையைக் கொண்டாடுவதால் தர்ப்பணப் பூஜையில் உள்ள தலைமுறை இடைவெளிகள் அகல உதவும்.
தலைமுறை இடைவெளி என்றால் என்ன? தம் முன்னோர்கள் தான, தர்மங்கள், கல்வி, கேள்வி, இசை, நாட்டியம் போன்று பல துறைகளில் பிரகாசித்திட, இந்நாள் சந்ததிகளோ எதிலும் சிறப்படையாது சாதாரணமாக வாழ்வதே தலைமுறை இடைவெளியாகும்,
இது பித்ரு பூஜைகள் முறையாக நிகழ்த்தப் பெறாமையைக் குறிக்கின்றன. இந்த இடைவெளி குறைந்தால்தான் முன்னோர்கள் மேலுலகில் மேன்மை நிலைகளை அடைவதோடு, பன்னெடுங்காலமாக விட்டுப் போன தர்ப்பணப் பூஜை பலன்களும் திரண்டு வரவும் இது துணை புரியும்.
திருநெடுங்களம் சிவாலயத்தில் ஸ்ரீவரதராஜ பெருமாள், திருஅண்ணாமலை சிவாலயத்தில் ஸ்ரீவேணுகோபால் பெருமாள், சாக்கோட்டை ஸ்ரீஉமையவள் ஆலயத்தில் ஸ்ரீவீரராகவப் பெருமாள் போன்றவை பெருமாள் சன்னதிகளோடு விளங்கும் சிவாலயங்கள் ஆகும். இத்தகைய ஆலயங்களில் பிரதோஷ பூஜைகளை நிகழ்த்துவதால் தலைமுறை இடைவெளி அகல்வதற்கான வழிமுறைகள் கிட்டும்.

ஜோதி ஜோதி அருணாசல ஜோதி

ஒவ்வொரு வருட அருணாசல கார்த்திகைத் தீபத்திலும் எண்ணற்ற வகையான ஈஸ்வர ஜோதிக் கிரணங்கள் தோன்றுகின்றன. ஆதிமுதல் காண இயலா அண்ணாமலையில்தான், அடி முதல் காண இயலா மஹாபிரபுவாம் சர்வேஸ்வரன், நம் மானுட அறிவு மற்றும் அறிவுக்குப் புலனாகும் வகையில், அருணாசல தீபமாக ஆண்டு தோறும் கார்த்திகைத் திருநாளில் காட்சி தருகின்றார்.
இதுவரை, கோடானுகோடி யுகங்களில் தோன்றிய அருணாசல ஜோதிகள் யாவும் கிரிவலப் பாதையில்தாம் பரவி நிறைந்துள்ளன. கிருத யுகம் முதல் கலியுகம் வரை பல்வேறு பிறவிகளைப் பெற்று வாழ்ந்தோர், இங்கு திருஅண்ணாமலையில் அருணாசல மலையைக் கிரிவலம் வருகையில் - மாணிக்க வாசகப் பெம்மான் உரைப்பது போல் - தங்கள் பூர்வ ஜென்ம வினைகளின் செயற்கழிவிற்கான எளிய வழிமுறைகளைப் பெறுகின்றனர்.
ஜோதிகள், அக்னிகள், நெருப்பு, அனல், தீ இவற்றில் தீப ஜோதி, விளக்கு, அடுப்பு எனப் பல்வகைகள் உண்டு. அருணாசல ஜோதியின் ஒவ்வொரு ஜோதிக் கற்றையும் விதவிதமான பலன்களைத் தாங்கி வருவதாகும். ஒவ்வொரு அருணாசல தீபக் கதிரிலுமே கோடானு கோடி வகையில் அதியற்புதமான பலன்கள் பொதிந்து இருக்கின்றன. எனினும், பூலோக மக்கள், தங்களுடைய ஆசைகளையும், விருப்பங்களையும் பூர்த்தி செய்வதற்காகப் பெரும்பாலும் சுயநலமான பிரார்த்தனைகளையே அருணாசல தீபத்திடம் வைப்பதால், தீப ஜோதி அனுக்கிரக தேவதைகளும் உத்தமமான பலன்களை அள்ளித் தரும் நிலையில் இருந்து சற்று இறங்கி வந்து, பாமர மக்களின் எளிய, நியாயமான சாதாரண விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் பலாபலன்களை அளிப்பவர்களுமாக ஆகின்றனர்.

அருணாசல தீப வகைகளில், இதன்படி, ஒரு வகையாக “ஷோடச அனுக்ரஹ ஜோதி” என்ற பதினாறு விதமான பலன்களைத் தருகின்ற தீப ஜோதி அமைகின்றது. பரவெளித் திசைகள் எட்டு, உள்மனத் திசைகள் எட்டாக, பதினாறு திசைகளில் இருந்தும் மனிதனுக்கு வரும் துன்பங்களைத் தீர்க்க உதவுபவையே ஷோடச அனுக்ரஹ ஜோதியாம்.
மேலும் முப்பத்திரண்டு விதமான அறங்களின் பலாபலன்களைத் தர வல்ல ஜோதியும் உண்டு. ஒவ்வொரு ஆண்டிற்கான சிறப்புடைத் தான தர்ம வகைகளும் உண்டு. திருஅண்ணாமலையில் ஸ்ரீஉண்ணாமுலை அம்மனும், காஞ்சிபுரத்தில் ஸ்ரீகாமாட்சி தேவியும், முப்பத்திரண்டு விதமான அறங்களை, சாதாரணமான மானிடப் பெண் வடிவில் வந்து நிறைவேற்றி, கலியுகப் பெண்மணிகள் எப்படி வாழ வேண்டும் என்பதற்கு நல்வழிகாட்டித் தந்து அருள்கின்றனர்.
ஒவ்வொரு தானமும், தர்மமும், ஒவ்வொரு விதமான ஜோதி வகைகளைத் தோற்றுவித்துத் தரும். அருணாசலப் புண்ணிய பூமியில், சிறிய அளவில் அன்னதானம் நிகழ்த்தினால் கூட, அங்கு அன்ன தாரண ஜோதி எழுந்து, ஜீவ சுத்தி, வான சுத்தி, பரவெளி சுத்தி, மன சுத்தி, உடல் சுத்தி போன்ற முப்பத்திரண்டு வகையான சுத்திகளை, உடல், மனம், உள்ளத்திற்கு அளிக்கக் கூடியதாகத் திகழ்கின்றது.
அஷ்டோத்திர மாலா ஜோதி என்கின்ற கார்த்திகை தீப ஜோதியில், 108 வகையான அனுக்கிரக ஜோதிகள் உண்டு. சாதாரண பாமரர் முதல் நாட்டுத் தலைவர்கள் வரை அனைவருக்கும் அருள வல்ல ஜோதி இதுவேயாம். “மக்கள் செய்வது மன்னன் தலையில்” என்பதாக, குடிமக்கள் ஆற்றுகின்ற செயல்களின் தன்மைகள், நாட்டுத் தலைவர்களையும் பலவகைகளில் பாதிக்கும் ஆதலின் இந்த ‘அஷ்டோத்திர மாலா ஜோதி” மூலம் தக்க நிவர்த்திகளைப் பெற்றிட, குடும்பத் தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் ஆண்டு தோறும் குறைந்தது ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து அருணாசல ஜோதி தரிசனம் பெற்றிடல் வேண்டும்.
ஜோதியில் இருந்து தோன்றுவதே ஜோதிடக் கலை! எனவே, அனைத்து ஜோதிடர்களும் அருணாசல தீபத்தன்று கட்டாயமாக ஜோதி தரிசனம் பெற்றாக வேண்டும்.
பூவுலகின் அனைத்துத் துறையினரும் - விவசாயிகள், தொழிலாளர்கள், முதலாளிகள், பாமரர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டுத் தலைவர்கள் - போன்று அனைவருக்கும் தேவையான அனைத்து வகை தரிசனப் பலாபலன்களையும் அருள வல்லதே அருணாசல தீபமாகும்.

சங்கபதும நிதிகள் திருவெள்ளறை

சாயா சாலேஷு அருணாசல ஜோதி
வென்றவர் தோற்கவும், தோற்றவர் வெல்லவும், கற்றவர் ஏற்கவும், கல்லாதவர் உணரவும் - இவ்வாறாக ஒவ்வொருவருக்கும் தேவையான நல்வர அனுக்ரஹ சக்திகளைத் தருவதே சாயா சாலேஷு அருணாசல ஜோதியாகும்.
ஆம், தோல்வி என்பதும் வாழ்வில் அடைய வேண்டிய ஒன்றே! ஒருவர் வென்று, மற்றொருவர் ஜெயித்தல் உலக நியதி. ஆனால் ஆன்ம ஜோதிப் பாடத்தில், தீவினைகள் தோற்று, உள்ளம் சீர்மை பெறுதல் மிகவும் முக்கியமானதாகும். தோல்வியில் மானுடம் சீர் பெறுதல் நிகழுமாயின் சீர்திருத்தப் பாடமாக அது ஏற்புடையதுதானே! எனவே, அருணாசல தீப தரிசனப் பலாபலன்கள், ஒவ்வொருவருடைய வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் உறைந்து உணர்விப்பதாகும்.
அருணாசல தீபம் நன்கு சுடர் விட, ஒவ்வொருவரும் தன் குடும்பத்தின் சார்பில் குறைந்தது பட்சம் ஒரு மீட்டர் திரியையாவது அருணாசல தீப ஜோதி ஏற்றிட அளித்திட வேண்டும்.
அடுத்த ஒரு மீட்டர் திரியை, அறியாமையாலும், திரியைக் கூட வாங்கித் தராத நிலையில் உள்ள பாமரர்கள் சார்பாகவும் அளித்திட வேண்டும்.
மூன்றாவது மீட்டர் துணியை தாவரங்கள், பிராணிகள் போன்ற இதர ஜீவன்களின் நலன்களுக்காக அளித்திட வேண்டும். இதுவும் அருணாசல சேவையின் ஒரு பாங்கேயாம். அவரவர் வசதிக்கேற்ப இவ்வகையில், மூன்று பங்கு தைலம், திரி, பசு நெய் போன்றவற்றை அளித்து, அருணாசல தீபத்தைப் பன்னாட்கள் காட்சி அளிக்கச் செய்திடுக!
உண்மையில், அருணாசல ஜோதியை ஆற்றுவிக்கும் தீபத்தின் ஒரு சிறிய திரி இழையில் தோன்றும் அருணாசல தீப ஜோதிக் கிரணங்களும் யாங்கணும் பரவி, விரவி, பல்கிப் பெருகி சந்ததி சந்ததியாய் நல்வரங்களை வர்ஷிக்க வல்லதெனில் என்னே இதன் மஹிமை!
எனவே, இனியேனும் ஆண்டுதோறும் பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக, ஆண்டு தோறும் குறித்த நற்காரியங்களை ஆற்றிட, தக்க இறைச் சங்கல்பங்களை எடுத்துக் கொண்டு நற்செயல்களை ஆற்றி வருவதுடன்,

ஸ்ரீபிரம்மலிங்கம் சன்னதி
திருஅண்ணாமலை

வருடம் தோறும், அருணாசல தீப ஜோதிக்காகத் தைலம், எண்ணெய், கற்பூரம், திரி, பசு நெய் ஆகிய ஐந்தையும் அவரவர் வசதிக்கேற்ற அளவில் தானம் அளித்தலால், ஒரு சிறிய இழையில் எழும் தீப ஜோதிக் கிரண அருளமுதமானது, தத்தம் சந்ததிகளுக்கும், மூதாதையர்களுக்கும் எண்ணற்ற பலாபலன்களைக் கொழித்துச் செழித்துத் தருவதாகும்.
எனவே இவ்வாறாக, அருணாசலத் தீப ஜோதி தோன்றும் அற்புதத் திருநாளில், அவரவர் மன எண்ணங்களின் பதிவு மேற்கண்ட தீபப் பொருட்களில் பதிந்து, எண்ணங்களை, ஏக்கங்களை, ஆசைகளை முறைப்படுத்தி,
கிரக, கோசார, கோள தசமஹா பலாபலன்களை நன்முறையில் நிலை நிறுத்தி ஜீவன்களுக்கு உதவிட, அருணாசல தீபம் துணை புரிய வேண்டி ஜோதிப் பிரகாச வள்ளலாம் சிவபெருமானை வேண்டித் துதித்திடுவோமாக!
அருணாசல தீபம் நாம் பூகோளப் பூர்வமாக எண்ணுவது போல, அருணையைச் சுற்றி 40 கிலோ மீட்டர் தொலைவிற்கு மட்டும் தெரிவதல்ல. குறித்த கோணத்தில் இருந்து அனைத்து நாடுகளிலும், அண்ட சராசரக் கோளங்களிலும், நட்சத்திரங்களிலும் காண வல்லதே அருணாசல தீப ஜோதி.
எனவே, இந்த அருணாசல தீப ஜோதி தோன்றும் நாளில், இயன்ற தான தர்மங்களைச் செய்து, தான தர்மத்தில் சாசுவதமாகப் பொலியும் ஜோதிப் பிரகாசத்தை நிரவி, நல் எண்ண சக்திகளை விருத்தி செய்து, உண்மையாகவே தியானம் பயில்வோருக்கு, சத்குருவே எங்கிருந்தும் இறையருளால் அருணாசல ஜோதிக் கிரணங்கள் மூலமாக ஆசி ஜோதிகளை அருள்கின்றார்.
எந்த நாடு இத்தகைய அனுகிரக நல்வழி முறைகளை நன்கு பயன்படுத்திக் கொள்கின்றதோ அந்நாடு நன்னிலை பெறும்.
வருங்காலத்தில் அருணாசல தீபப் பெருவிழாவில் பல நாடுகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, ஜோதி விருத்திக்காகத் தங்கள் உதவிகளை நல்கி, பன்னாட்டுக் கொடிகளும் தீபப் பெருவிழாவில் பறக்கும் படியாக உலகப் பெருவிழாவாக அருணாசல கார்த்திகை தீபப் பெருவிழா அகில உலக ஜோதிப் பெருநாளாகத் துலங்க உள்ளது.

மக்குப் பிள்ளைகள் கல்வியில் சிறக்க ...

“நான் திருஅண்ணாமலை சென்று வந்தேன்! கார்த்திகை தீப ஜோதியைக் கண்டேன், நான் கார்த்திகை தீப ஜோதியைக் கண்டேன்” - என்றவாறாகத் தன்னுடைய சுய பிரதாபத்தையே எத்தனை நாள் சொல்லிக் கொண்டு இருக்கப் போகின்றீர்கள்?
“நான் கார்த்திகை தீப ஜோதி தரிசனம் கண்டது மட்டும் அல்லாமல் நாலைந்து ஏழைகளுக்கும் திருஅண்ணாமலை சென்று வரப் பயணச் செலவும், உணவுச் செலவும் ஏற்று இறையருளால் நல்வழிவகைச் செய்தேன். பல குடும்பத்தாரும், ஷோடசத் தைலமான 16 வகைத் தைலங்களைக் கொண்டு கார்த்திகைத் தீப நாளில் இல்லத்தில், ஆலயத்தில் விளக்குகளை ஏற்றுவதற்கு ஈசனருளால் உதவிகளைச் செய்தேன்!” என்று கூறுமளவு பிற ஜீவன்களுக்கான அறப் பணியோடு என்றுதான் உங்கள் கார்த்திகைத் தீப தரிசனம் மிளிரப் போகின்றது? நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்!.
விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்ம மூர்த்தி தோன்றியமையால், ஸ்ரீமகா விஷ்ணு என்று சொல்லும்போது அதில் பிரம்மாவும் பொதிந்து அருள்கின்றார். நமக்குக் கார்த்திகை மாத கார்த்திகைத் திருநாளில் இறைவன் அண்ணாமலையில் பெருஞ்ஜோதியாகத் தோன்றிடக் காரணமென்ன?
பிரம்மாவும் ஸ்ரீமகா விஷ்ணுவும் இறைவனுடைய அடிமுடியைக் காண இயலாது வியந்து நின்ற போது, இறைவனே தன்னை ஜோதி ரூபமாகக் காட்டி அருளியதால்தானே ஆண்டுதோறும் கார்த்திகை தீப ஜோதியைக் காணும் வைபவம் நமக்குக் கிட்டி உள்ளது.
அடிமுடி காணா இறைவனை, விண்ணுக்கும் மண்ணுக்கும் அடங்காத அழல் பெருஞ் ஜோதியாய் விஷ்ணுவும் பிரம்மாவும் தரிசித்தபோது, “நாங்கள் பெற்ற இந்தப் பேரின்பத்தை, பிரபஞ்சத்தில் அனைத்து ஜீவன்களும் உய்த்திட வேண்டும்!” என்று வேண்டினார்கள்.

ஸ்ரீவராக மூர்த்தி பெருமாள் மலை

சர்வேஸ்வரனும் மனம் உவந்து, ஜீவன்கள் எளிமையாகத் தரிசித்திட, ஆண்டு தோறும் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத் திருநாளில். கார்த்திகைத் தீபமாகத் தோன்றுவதற்கு வாக்குறுதி அளித்து அன்று முதல் இன்றும் என்றுமாய் கார்த்திகைப் பெருஞ் ஜோதியாய்த் தோன்றிட வாக்களித்து அருள்பாலித்து வருகின்றார்.
எனவே, ஸ்ரீமகாவிஷ்ணுவிற்கு நன்றி செலுத்தும் முகத்தான் கார்த்திகைத் தீபத்திற்கு மறுநாள் விஷ்ணு தீபமாக அமைகின்றது. இதன் மகத்துவங்களை நாளடைவில் மக்கள் சமுதாயம் மறந்து விட்டது. காக்கும் கடவுளே விஷ்ணு மூர்த்தி! விஷ்ணு தீபம் என்றால், காக்கும் கடவுளாய்க் கனிந்த ஜோதி தரிசனப் பலன்களை ஈஸ்வர ஜோதி தரிசனப் பலன்களாக அளிப்பவர் ஆகின்றார்.  
வராஹ மூர்த்தியாய் இறைவனைக் காண பூமியில் புகுந்த பெருமாளப்பர், ஈஸ்வர தரிசனம் பெற்று தம் வராஹ அவதாரத்திலிருந்து மகா விஷ்ணுவாய் அருஞ் சுடர் ஆன தினமே விஷ்ணு தீபத் திருநாளாகும். கார்த்திக பகுளத் திருநாளில்தாம் வராஹ மூர்த்தி மகா விஷ்ணுவிடம் ஐக்கியமானார். வராஹ மூர்த்தி இறை தரிசனம் பெற்ற பிறகு பூமியிலிருந்து வெளிப் போந்து வருவதற்காக ஈஸ்வர மூர்த்தியை வேண்டி, வராஹ மூர்த்தியாய் வெளி வந்த தலங்களுள் ஒன்றே (கும்பகோணம் அருகில் உள்ள) பயரி சிவத் தலமாகும்.
விஷ்ணு தீபத் திருநாளில் கீழ்க் கண்ட மந்திரத்தை ஓதி வலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும்.
பயரிச் சிவப்புல பண்டுலதாமே
அயத் திருமாலும் ஓதிய சோதி
துயச் சுடராக்கல் தூலத் திருவே
அயனே அருமால் அறிந்தென ஈசா!
ஸ்ரீமஹாவிஷ்ணுவும், பிரம்மாவும் தரிசித்த ஈஸ்வர ஜோதிப் பொருளே நம் கண்களுக்கு அருணாசல தீபமாய் விஷ்ணு தீப நாளில் மலர்கின்றது.
இந்நாளில் அருணாசல கிரிவலம் வர இயலாதோர் பெருமாள் எழுந்தருளி இருக்கும் சிவாலயங்களில், கைகளில் தாமரை இலை மேல் அகல் விளக்குத் தீபங்களை வைத்துக் கொண்டு, 32 முறை ஆலயப் பிரதட்சிணம் வருதல் சிறப்புடையதாம்.
“தன் பிள்ளைகள் மக்காக இருக்கின்றார்களே, சகோதர, சகோதரிகளின் பிள்ளைகளைப் போல் கல்வியில் சிறக்கவில்லையே!” என ஏங்கும் பெற்றோர்களின் மனச் சுமைகள் தணிய இந்த விஷ் ணு தீபப் பிரதட்சிணப் பலாபலன்கள் உதவும். தொடர்ந்து செய்து வருதல் நலம் பயக்கும்.

தாங்க முடியாத வேதனைகளைத் தீர்க்கும் விரதம்

சாதுர் மாஸ்ய விரதம் என்பது சந்யாசிகளால் மட்டுமல்லாது, அனைத்து தேவாதி தெய்வ மூர்த்திகளாலும் கடைபிடிக்கப் படுவதும் ஆகும். சாதுர் மாஸ்ய விரதம் ஒரே இடத்தில் சுமார் ஒரு மண்டல காலத்திற்கேனும் தங்கி, பூஜித்து வழிபடுதல் வேண்டும். பெருந் துறவிகள் இதனை நான்கு மாத காலம் அல்லது நான்கு பட்ச விரதமாகக் கைக்கொள்வார்கள். ஸ்ரீராமரும் வனவாசத்தின்போது இதனைப் பரிபூரணமாகக் கடைபிடித்திட்டார்.

ஸ்ரீகோடி சூர்ய பிரகாசர்
பயரி

துவிதியைத் திதி என்பது எமதர்ம ராஜா வழிபாட்டிற்கு உகந்த விசேஷமான திதி என நாம் அறிவோம். ஸ்ரீராமர், அடர்ந்த காட்டில் ஒரே இடத்தில் தங்கி சாதுர் மாஸ்ய விரதம் பூண்டு முடிந்த பின்னர், அடுத்து வந்த துவிதி யைத் திதியில் எமதர்ம மூர்த்தி, ஸ்ரீராமரைத் தரிசித்துப் பல நல்வரங்களைப் பெற்றார். அப்போது ஸ்ரீராமர் சயனித்துக் கொண்டிருந்த நிலையில்தான் எமமூர்த்திக்கு முதலில் தரிசனம் கிட்டியது. பால் வடியும் முகத்துடன், பராக்ரம தேஜஸுடன் தரையில் மூலிகை இலைகளின் மேல் சயனித்திருந்த ஸ்ரீராமரைக் கண்டு எமதர்ம மூர்த்தி சற்றே திகைத்திட்டார். அரண்மனையில் வாசம் பூண்டு, தங்கக் கட்டிலில் சயனிக்க வேண்டிய தெய்வ மூர்த்திக்குத் தெய்வ மூர்த்தியும், மஹாராஜாவிற்கு மகாராஜாவுமான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, இவ்வாறு அடர்ந்த காட்டில், இருளின் ஊடே, கட்டாந் தரையில் படுத்திருப்பது கண்டு எம மூர்த்தியின் மனம் வேதனையுற்றது.

ஸ்ரீஎமதர்மராஜா திருகோடிகா

விழித்தெழுந்த ஸ்ரீராமரிடம் எமதர்ம மூர்த்தி தம்முடைய ஆழ்ந்த வேதனைகளைத் தெரிவித்துக் கொண்டபோது ஸ்ரீராமரும் அவரைத் தேற்றி அனைத்தும் ஈஸ்வரன் சங்கல்பத்தால் நடப்பதே, எனவே, இவ்வாறு தளர்ச்சியுறாது, தர்மநெறியில் மேன்மேலும் எம தர்மராஜா சிறக்க வேண்டும் என உபதேசித்தார் ஸ்ரீராமர். மலை நெல்லிக் கனி உள்ளிட்ட நான்கு விதமான கனிகளை எமதர்ம மூர்த்திக்கு அளித்து அவற்றில் மிருத்யுஞ்ஜய சக்திகளை நிறைத்து, இவற்றின் மூலம் ஜீவன்களுடைய எம பயத்தைப் போக்குவதற்கான சக்திகளை இந்த நான்கு கனிகளிலும் நிறைத்து ஜீவன்களுக்கு அளிக்குமாறு வேண்டிட்டார்.
இவ்வாறு சாதுர்மாஸ்ய விரதத்தை அடுத்து வரும் துவிதியைத் திதியானது, எமபயம், மிருத்யு தோஷங்களைப் போக்குவதாகவும், எமதர்ம ராஜ வழிபாட்டிற்கும் மிகவும் விசேஷமானதாகும்.  துவிதியைத் திதியில், நான்கு தட்டுகளில் நான்கு வகைக் கனிகளை வைத்து மிருத்யுஞ்ஜய சூக்த மந்திரங்களை ஓதி வழிபடுதல் மிகவும் விசேஷமானது.
த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்
உர்வாருகமிவ பந்தனான்
ம்ருத்யோர் முக்ஷீய மாம்ருதாத்
என்பது மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீருத்ர மிருத்யுஞ்ஜய மந்திரமாகும்.
ஔவையார் அருளிய சீதக் களப எனத் துவங்கும் ஸ்ரீவிநாயகர் அகவலும், அதியற்புதமான மிருத்யு தோஷங்களை ஜெயிக்க வல்ல ம்ருத்யுஞ்ஜய சக்திகளைப் பூண்டு விளங்குவதால், இந்நாளில் குறைந்தது 10008 முறை ஸ்ரீருத்ர மிருத்யுஞ்ஜய மந்திரம் அல்லது 108 முறை விநாயகர் அகவல் ஓதி, நான்கு தட்டுகளிலும் உள்ள நால்வகைக் கனிகளால் மிருத்யுஞ்ஜய லிங்கம், விநாயகர், எம மூர்த்தியை நினைத்து அர்ச்சித்து வழிபடுவதால் எங்கே இறந்து விடுவோமோ என்று அடிக்கடித் தொக்கி வரும் மரண பயமும் அகலவும், துர்கனவுகள் நீங்கிடவும் துணை புரியும். ஸ்ரீஆயுர் தேவி படத்தில் எம மூர்த்தி காருண்ய தர்மராஜ மூர்த்தியாகக் காட்சி தருகின்றார்.
கலியுக வாழ்வில், தமக்கு வந்துள்ள பலத்தத் துன்பங்களைத் தாங்க இயலாதவர்களுக்கும், பிறரால் அதர்மமான முறையில் கேவலம், துன்பத்திற்கும் ஆளானோருக்கும் சில சமயங்களில் தற்கொலை எண்ணம் ஏற்படுவது உண்டு. கருச் சிதைவு, கொலை போன்ற கொடூரமான பாவ வினையே தற்கொலையும் ஆகும்.

துவிதியைத் திதி தோறும் எமமூர்த்தி, தர்ம ராஜா என்ற பெயர்களில் அருளும் கால மூர்த்திக்கு நெல்லிக்கனி உள்ளிட்ட நான்கு வகைக் கனிகளைப் படைத்து, நான்கு வகைக் கனிகளால் அர்ச்சித்து வழிபடுதல் எம மூர்த்திக்கு மிக்க ப்ரீதியைத் தரும். மேற்கண்ட துர்எண்ணங்கள் மீண்டும் வாராது காத்து ரட்சிக்கும்.
எருமைக்கு அகத்திக் கீரை, புண்ணாக்கு போன்றவற்றை அளித்து, எருமை மாடுகளை வளர்ப்போர்க்கு தேவையான உதவிகளைச் செய்வதால் மரண பயம் மற்றும் மரணம் சம்பந்தமான நினைவுகள் மற்றும் நடுக்கம் தீர உதவி செய்யும்.

கோர்ட் வழக்குகளுக்கு முற்றுப் புள்ளி

வேத நிதி, வித்யா நிதி, தான நிதி, தர்ம நியதி என பலவிதமான நிதி நாட்கள் உண்டு. இவை அனைத்தும் தோன்றுவதும், சங்கமிப்பதும் அருணாசல ஜோதி நிதியில்தாம்! செல்வத்துள் செல்வமாக விளங்கும் செவிச் செல்வம் வித்யா நிதியால் விருத்தி ஆகும்
கல்விச் செல்வம், அறிவுச் செல்வம், நல்ல நினைவாற்றல் போன்றவை வித்யா நிதியின் அம்சங்கள் ஆகும். வேத நிதி, வித்யா நிதி, பாத நிதி, பவள நிதி என்று பல்வகை நிதிச் செல்வங்கள் உண்டு.  

ஹிருத்தாபநாசினி தீர்த்தமும்
விஜயகோடி விமானமும்
திருவள்ளூர்

பலருக்கும் திருமண நாள் நன்கு கணித்து சுப தினத்தில் குறிக்கப் பெறாமல், அவசரம் அவசரமாக ஏனோ தானே என்று ஏதோ ஒரு நாளில் நடைபெற்றமையால், பல கால சந்தி தோஷங்களுக்குக் குடும்பம் ஆட்பட்டு திருமண வாழ்க்கையே கசக்கும் அளவிற்கு எக்கச்சக்கமான துன்பங்கள் வந்து நிரம்பி விடுகின்றன. இதே போல வாழ்க்கையில் கிரகப்பிரவேசம், புதுத் தொழில் தொடங்குதல், பிள்ளைகளைப் பள்ளியில் சேர்த்தல் போன்ற பலவற்றில் நல்ல நேரம் பார்த்துச் செய்யாமலும் அப்படிப் பார்த்தாலும் நடைமுறைப் படுத்த முடியாமலும் ஆகிவிடுகின்றது.
இவற்றுக்கான கால சந்தி தோஷப் பரிகார நாளாக அமைவதே திருதியைத் தினமானது பரிபூரணமாக ஒரு நாளில் நன்கு முழுதுமாக நிரவி அமைவதாகும். இதே போல வாழ்க்கையில் எந்த மதம், எந்த மனிதர்கள், உற்றம், சுற்றம், திரவியங்கள், காய்கறி, உணவு எதன் மேலும் துவேஷம் அல்லது பகைமை கொள்ளக் கூடாது. எனக்குக் கோவைக்காய் பிடிக்காது என்று வாழ்நாள் முழுவதும் கோவைக்காயை ஒதுக்கித் தள்ளக் கூடாது. இவ்வாறு செய்தால் கோவைக்காய் மூலிகையில் உள்ள ஆன்ம சக்திகள் மூலமாகக் கரைய வேண்டிய கர்ம வினைகள் இப்பிறவியில் அப்படியே தங்கி விடும்.
மேலும், பகைமை, பொறாமை, கோபம், குரோதம், விரோதம் போன்ற தீய சக்திகளை நிவர்த்தி செய்ய வல்ல பல மூலிகா சக்திகள் கோவைக் காயில் இருப்பதாலும், ஆண், பெண் இடையே முறையற்ற காம உணர்ச்சிகளை, அன்புப் பரிமாணத்தை நிரவ வல்ல நேச மூலிகா சக்திகளும் ஒருவருக்குக் கிட்டாமல் போய்விட்டால் இவை சம்பந்தப்பட்ட பிணக்குகள், பந்தங்கள் அப்படியே தங்கி விடும். இவற்றுக்கான பரிகாரங்களைத் தர வல்லதே திருஆதிரை நட்சத்திரம் நாள் முழுதும் 24 மணி நேரமும் நிரந்து பரவி வருகின்ற திருநாளாகும்.
இவ்வாறு திருவாதிரை, திரிதியை திதி சங்கம நாட்களில் முழு நெல்லை ஒரு பாத்திரத்தில், சாக்கில் எடுத்துச் சென்று தானிய அரையந்திரத்தில் அரிசியாக்கி, அதில் அன்னம் வடித்து, உரிக்காமல், உடைக்காமல், நறுக்காமல் முழுமையாகப் பயன்படுகின்ற கிஸ்மிஸ் திராட்சை, எள், களாக்காய், திராட்சை போன்ற திரவியங்கள், கனிகள், காய்கறிகளைக் கொண்டு சமைத்த உணவை அன்னதானமாக அளித்தலால் நெடுங்காலப் பகைமை தீர்வதற்கும், பல காலமாக நீடித்து வரும் பங்காளிச் சண்டைகள் ஓய்வதற்கும், பல வருடங்களாகப் பஞ்சாயத்து, கோர்ட் வழக்கு என முடிவு பெறாது இருக்கும் சொத்து தாவாக்களும் நன்முறையில் தீர்வு பெற உதவும்..
இவ்வாறாக நாள் முழுதும் திரிதியை, திருஆதிரை நிரவி வரும் தினமானது அற்புத சக்திகளைக் கொண்டதாகும்.

கர்ப்பப்பை கட்டிகள் கரைய ...

ஆதி கணபதிக்கு உரித்தான எண்ணாகிய ஒன்பது, செவ்வாய் கிரகத்திற்கும் உரித்தானதாகின்றது. ஒரு மாமுனிவருக்கு கர்ம வினைகளின் விளைவாக வர இருந்த தொழு நோயை, அவருக்கு இவ்வாறு விதிக்கப்பட்ட நியதியிலிருந்து மீறி, நவகிரக மூர்த்திகள் அந்நோயைத் தீர்த்துத் தந்தமையால் அந்தக் கர்ம வினைகளை நவகிரக மூர்த்திகளே ஏற்க வேண்டியதாயிற்று. இதனால், நவகோள்களில் ஒன்றாக, மிகவும் உஷ்ணமாக இருக்கின்ற செவ்வாய் கிரகத்தில் மேற்கண்ட சாபத்தின் விளைவுகளால் அதி உஷ்ணம் பெருகி, செவ்வாய்க் கோளம் முழுவதுமே அக்னிக் குழம்பாய்ப் பெருகி ஓட ஆரம்பித்தது. இந்த அபரிமிதமான உஷ்ணத்தால் வேதனையுற்ற செவ்வாய் மூர்த்தி, “கோள்தீர்த்த விநாயகர்” (என்று பின்னால் காரணப் பெயர் சூடிய) கணபதி மூர்த்தியைச் சரணடைந்து அவருக்கு அருகம்புல்லால் ஆன கிரீடமும், பாதரட்சையும் சார்த்தி வழிபட்டார்.

கோள் தீர்த்த விநாயகரும், நவகிரக மூர்த்திகள் ஒவ்வொருவருக்கும் விசேஷமாக அருளிட்டார். செவ்வாய் மூர்த்திக்கு, இறைப் பிரசாதமாக, கிரீடத்திலிருந்து ஒரு சிவ தர்பைப் புல்லையும், அருகம் புல்லால் ஆன பாதரட்சைகளிலிருந்து ஒரு விஷ்ணு தர்பையையும் எடுத்துச் செவ்வாய் மூர்த்திக்கு அளித்திட, அவரும் இவ்விரண்டு தர்பைகளையும் தம் செவ்வாய்க் கோளத்தின் மேல் சார்த்திட, செவ்வாய்க் கிரகத்தின் உஷ்ணம் நன்கு தணிந்து நலம் பெற்றது. மேலும் இவைதாம் இன்றும் பல பூமிக் கோளங்களிலும் அட்ச ரேகைகளாகவும் தீர்க்க ரேகைகளாகவும் பரிமளிக்கின்றன என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
இந்த அற்புதங்கள் நிகழ்ந்து செவ்வாய் மூர்த்தியின் சங்கடங்கள் தீர்ந்த தினமே தேய்பிறையில் அமையும் செவ்வாய்க் கிழமையில் சேரும் சதுர்த்தித் திதி திருநாளாகும். எத்தகைய சங்கடங்களையும் தீர்க்க வல்ல இந்நாளில், சூரியனார் கோயிலில் உள்ள கோள் தீர்த்த விநாயகருக்கு அருகம்புல் சார்த்தி வழிபடுதலால் உஷ்ணம் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.
கர்பப் பையில் கட்டிகள், கர்ப்பம் நழுவுதல் போன்ற உஷ்ண நோய்களுக்கு செவ்வாய்க் கிழமை அன்று கோள் தீர்த்த விநாயகரின் வழிபாடு நல்ல நிவாரணங்களைத் தரும். அங்காரக சக்திகள் நிறைந்த வைத்தீஸ்வரன் கோயில், சென்னை பூந்தமல்லி ஸ்ரீவைத்தியநாத சுவாமி ஆலயம், ஸ்ரீவில்லிபுத்துர் ஸ்ரீவைத்தியநாத சுவாமி ஆலயம், சூரியனார் கோயில், தேனிமலை, முருகனுடைய மலைத் தலங்களில் உள்ள செவ்வாய் மூர்த்தியையும், பிள்ளையாரப்பனையும் வழிபடுதல் மிகவும் விசேஷமானது.

புண்ணியம் புண்ணியமாய் மிளிர ...

செல்வம் என்றால் நிறைய பணம், நகை, சொத்துக்களை மட்டும் பெற்றிருப்பது என்று பொருளல்ல. ஒரு மாதக் குடும்ப வாழ்க்கை நன்கு நடப்பதற்கான வருமானத்தைப் பெறுவதும் கூட நல்ல செல்வமே ஆகும். ஏனென்றால் பணம் நிறைய இருந்து, நியாயமான வழியில் பணத்தைப் பெறாவிடில், கருப்புப் பணம், வருமான வரி, கொள்ளை மற்றும் திருட்டுப் பயம் என ஒவ்வொரு நிமிடமும் ஏற்படும் திகில், பயம், மன உளைச்சல்களை அனைவரும் அறிவர்.
பணம்தான் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் பிரதானமாகக் கலியுகத்தில் எண்ணப்படுகின்றது. இது சரிதானா? நிச்சயமாக இந்தக் கருத்தும் தவறானதே! கலியுகத்தில் எந்த நாட்டைச் சார்ந்தவரானாலும், எந்த மதத்தைச் சார்ந்தவாரானாலும் சரி, ஒவ்வொருவருடைய வருமானமும் அவருடைய புண்ணிய சக்தியைப் பொறுத்தே அமைகின்றது.
ஒரு செயலைச் செய்யும் போது அது நல்லதா, நல்லது அல்லாததா என்பதைப் பொறுத்து, புண்ணியம் அல்லது பாவம், அந்தந்தக் காரியத்திலும், காரிய விளைவிலும் சேர்கின்றது. இந்த இரண்டுமே சேராமல் ஒரு காரியம் - அதாவது பாவம், புண்ணியம் சேராது தெய்வீகக் கடமையாக மிகவும் சிரத்தையுடன் செய்வதாக ஒரு காரியம் அமைவது மிகவும் அற்புதமான, அபூர்வமான மிச்ர கர்மாவாகும். இது சற்குருவால் மட்டுமே அல்லது அவர் ஆணையாக ஆற்றப்படும் காரியங்களில் மட்டுமே பொலியும்.

காணுதற்கரிய ஸ்ரீநடுவட்ட விநாயகர்
திருமலை முருகன் தலம்

புண்ணியம் வெறும் புண்ணியமாக இருந்தால் எவ்வகையில் வேண்டுமானாலும், நல்ல வழியிலும்,தீய வழியிலுமாக அப்புண்ணியம் எவ்வழியிலும் பயன்படுதலும், கரைதலும் கூடும். அதெப்படி தீய வழியிலுமா புண்ணியம் கரையும் என்று கேட்கத் தோன்றுகின்றதல்லவா. ஒரு மனிதன் ஒரு தவறைச் செய்து விட்டு, அதற்குரிய தண்டனையைப் பெறாமல் தப்பித்தால் அவனிடமுள்ள புண்ணிய வசத்தால் அவன், அப்போதைக்குத் தப்பித்தான் என்பதே பொருளாகும். இதற்காக, தீயவனைக் காப்பாற்றப் புண்யம் பயன்படுகின்றது என்பது பொருளல்ல. எவ்வாறு ஒருவரிடம் உள்ள பணம் நல்வழியிலும், தீயவழியிலும் செலவழியலாகுமோ இதே போன்றதே புண்ணியம் கரையும் வழியுமாகும்.
எனவே, புண்ணியம் என்பது நற்புண்ணிய சக்தியாக மாற்றப் பெற்று நன்முறையில் பயன்படுத்தும் வகையில் அமைதலால்தான் அது விரயமாகாது காக்கப்படும். சற்குருவின் அருட்பார்வையில், நல்ல இறைப் பணிகளைச் சத்சங்கப் பூர்வமாக ஆற்றிப் பெறுகின்ற புண்ணியமே நன்கு நிலைத்து நீடித்து நின்று அருளும். இதுவே, எவ்வகையிலும் விரையமாகிக் கரையாது நற்பலன்களைத் தரும். சந்ததி சந்ததியாக விருத்தியாகியும் தழைத்தும் நிற்கும்.
புண்ணியமானது புண்ணிய சக்தியாக, புண்ய நல்வரமாக, புண்ய பலன்களாகப் பல்வகைகளில் மலர்ந்து அற்புதப் பலாபலன்களை அருள்கின்றது. புண்ணிய சக்தியின் ஜீவதர்ம சக்தியின் ஒரு பங்குதான் மானுடர்களுக்கு வாழ்க்கையை நடத்துவதற்கான வருமானமாக, சம்பளமாக ஆக்கப் பெறுகின்றது.
“இட்டது கிட்டும்” என்பது ஆன்ம மொழி. அதாவது பூர்வ ஜென்மங்களில், தான தர்மமாக அளித்து வநத புண்ய சக்தியில் இருந்துதான் இப்பிறவியில் தேவையான வருமானமாக வரும் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பாடமாகும்.

ஸ்ரீஞானாம்பிகை குடவாசல்

வியாழக் கிழமை, பஞ்சமி திதி இவை கூடி வரும் தினங்கள் “பாந்தவ பல” புண்ணிய சக்திகளின் தன்மையை அறிவிப்பதாகவும் அமைந்துள்ளது அதாவது, புண்ணியம், புண்ணிய சக்தி, புண்ணிய பலாபலன்கள், புண்ணிய காரியங்கள் என்பதாகப் புண்ணியத்தைப் பற்றி மிகச் சிறந்த முறையில் ஆத்ம விசாரம் செய்வதற்கான விசேஷமான தினங்களாகும்.
ஸ்ரீசாகம்பரி தேவி ஆதி முதலாக, முதன் முதலில் துளசி, வில்வம் போன்ற மிக முக்கியமான விருட்சங்களைப் படைக்கும்போது, இவற்றின் புண்யத் திரட்சிகளைக் கொண்டு புண்ணிய விருட்சம் என்ற ஓர் அற்புத விருட்சம் ஒன்றைப் படைப்பதற்கு நல்ல நேரத்தைக் குறித்தாள், உத்திரட்டாதி நட்சத்திரத்தின் இறுதி தாரக நாழிகைக் காலத்தின் குறித்த விநாடிக் காலமானது, பஞ்சமி - சஷ்டி சங்கமத்தில் சேர்ந்து மிகச் சிறந்த கடிகாமிர்த நேரமாக அமைகின்றது. இந்த அற்புத அமிர்த கால ரகசியத்தை காலபைரவரிடமிருந்து அறிந்து தேவி ஆனநந்தம் கொண்டாள்.
மிகச் சிறந்த சுப நட்சத்திரங்களுள் உத்திரட்டாதியும் ஒன்றாகும். பஞ்சமி, சித்த யோகம் இவற்றில் சுப மங்கள சக்திகள் பெருகுகின்றன. உத்திரட்டாதியின் நிறை நாழிக் கடை விநாடி நேரத்தில்தான், பஞ்சமி - சஷ்டி சங்கமத்தில், ஒரு யுகத்தில் சாகம்பரி தேவி புண்ணிய விருட்சம் என்னும் அரிய விருட்சத்தைப் படைத்திட்டாள்.
தன் வாழ்நாளின் ஒவ்வொரு விநாடியிலும் நல்பக்தி, நல்பூஜை, நல்ல எண்ணம், நற்காரியம், நற்பணி, நற்செய்தி என்றவாறாக நல்லதையே எண்ணி, நல்லதையே செய்து வாழ்கின்ற ஓர் உத்தமர், தன்னுடைய ஒவ்வொரு நல்ல எண்ணத்திற்கும், ஒவ்வொரு காரியத்திற்கும், கோடி கோடி மடங்காய்ப் புண்ணிய சக்திகள் விருத்தியாகி, உத்தம மகரிஷியாய், இறைத் தவத்தால் ஆகிடும்போது அவர் தன் புண்ணிய சக்திகளை எல்லாம் இறைவனுடைய திருவடிகளில் தாரை வார்த்து அர்ப்பணித்தாக வேண்டும். இவை யாவுமே புண்ய விருட்சத்தின் ஒரே ஒரு இலையாகத் தோன்றுகின்றன.
இவ்வாறு கோடானு கோடி யுகத் தபோ பலன்களால் ஆகிய புண்ணிய விருட்சத்தை ஸ்ரீசாகம்பரி தேவி உற்பவித்து உலகில் சில புண்ணிய விருட்சங்களையே தோற்றுவித்து உள்ளாள்.  
இந்த புண்ணிய விருட்ச மரத்தின் ஒவ்வொரு இலையும் ஸ்ரீகோடீஸ்வரர், ஸ்ரீருத்திர கோடீஸ்வரர், ஸ்ரீகோடி விநாயகர், ஸ்ரீகோடி முருகன் போன்ற இறை மூர்த்திகளின் கருணை கடாட்சத்தால், ஸ்ரீசாகம்பரி தேவியால் தோற்றுவிக்கப் பட்டவையாகும்.

இவ்வாறு புண்ணிய விருட்சம் தோற்றுவிக்கப்பட்ட கடிகாமிர்த நேரத்தில் புண்ணிய விருட்சத்தைத் தரிசிப்பவர்களுக்கும், ஸ்ரீகோடீஸ்வர மூர்த்தி என்ற நாமத்தைப் பூண்டுள்ள இறை மூர்த்திகளின் சகஸ்ர நாமத்தை ஓதி, அர்ச்சித்து அபிஷேக, ஆராதனை செய்வோர்க்கும் புண்ணியத்தின் பரப்ரகாச சக்தி உட்புலனாக உணர்விக்கப் பெறும், புண்ணியம் விரயமாகாது காத்திட வழிகளும் கிட்டும்.
எனவே, ஒவ்வொருவரும் தாம் பெறுகின்ற மாதாந்தர சம்பளம், வருமானம் அனைத்துமே புண்ணியத்தின் பலாபலன்கள் என்பதை உணர்ந்திடல் வேண்டும். சம்பளம் போதவில்லை, தாம் உழைப்பற்கும் கூடுதலாகவே சம்பளம் பெறுதல் வேண்டும், உழைப்பதற்கு ஏற்ற ஊதியம் பெறவில்லை என்று எண்ணுதல் கூடாது. சம்பளத்தில் ஒவ்வொரு பைசாவும் புண்ணியத்தின் திரட்சியே என்று உணர்ந்தால்தான் ஒவ்வொரு பைசாவிலும் நிறைந்திருக்கும் லட்சுமி கடாட்சத்தின் தன்மை புலப்படும். இட்டது கிட்டும் என்ற ஆன்ம மொழியை உணர்விக்கும் புண்ணியத் திருநாள் இதுவே.

வியாழக் கிழமைகளில் புண்ய விருட்சத்தைத் தரிசிதல் பெறுதற்கரிய பாக்கியமாகும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பட்டமங்கலத்தில் புண்ய விருட்சத்தின் ஒரு வகையாகக் கற்பக விருட்சமும், திருப்பத்தூர் -சிவகங்கை இடையே நயினார்பட்டியில் புண்ய விருட்சமும் தலமரமாக அருள்கின்றன. அனுஷம், சுவாதி நட்சத்திரங்களில் அடிப் பிரதட்சிணமாய் இவற்றை வலம் வந்து வணங்கிப் பால் பாயச தானம் அளிப்பது ஒழுக்கமுள்ள சந்ததிகளைப் பெற்றிட உதவும்.

ஞானமூர்த்தியிடம் ஞானம் பெறுங்கள்

சந்திரன் சூரியனிடம் சேரும்போது மட்டும்தான் அமாவாசை என்று எண்ணுகின்றோம். சந்திர கிரஹம் ஒவ்வொரு கிரகத்துடனும் சேரும்போது அந்தந்தக் கிரகச் சார்புடைய சர்வ கிரஹாமாஸ்யங்கள் ஏற்படுகின்றன.  
ராகு, கேது மூர்த்திகள் தாம் எந்த ராசியில் இருக்கின்றார்களோ அந்த ராசியில் இருக்கும் அல்லது விஜயம் செய்யும் கிரகங்களின் சக்திகளை ஈர்த்து, கிரகித்து உறைவர். உதாரணமாக, சந்திரன் கேது உறையும் ராசியை அடையும்போது கேது, ஞான மூர்த்தியாய் விளங்குவதாலும், ஞானம் என்பது மதி, புத்தி, அறிவு ஆகிய மூன்றையும் சார்ந்திருப்பதாலும் கேது, சந்திர சங்கமம் பல அரிய சக்திகளை பூவுலக விண்வெளியில் ஏற்படுத்துகின்றது.

ஸ்ரீசந்திரசேகர பெருமான்
திருமீயச்சூர்

கிரகங்களுக்குள் நட்பு, பகைமை என்பது ஜீவன்களுடைய கர்ம வினைகளின் தன்மைகளை உணர்த்துவதற்கான விளக்கங்களே தவிர, கிரக மூர்த்திகளுக்குள் நட்பு, பகைமை என்று பொருள் கொள்ளக் கூடாது. இவை எல்லாம் வெறும் தத்வார்த்த ஜோதிடப் பாடங்கள் என்றும் எண்ணாதீர்கள்.
இத்தகைய சந்திர கிரஹமாஸ்யங்கள் ஏற்படும் நேரத்தில் வேயுறு தோளி பங்கன் என்று துவங்கும் தேவாரப் பாடலை ஓதுதல் சிறப்புடையது. இதன் சில பதிகங்கள் இத்தகைய ராகு, சந்திர கிரகமாஸ்யக் கடிக நேரத்தில் உருவானதாகும். இதனை ஒரு நாழிகை, குறைந்தது 24 நிமிடங்களுக்கு ஓதி, ஸ்ரீலலிதாம்பிகையை வழிபடுதல் விசேஷமானதாகும்.
மேலும் அகஸ்தியர் இயற்றிய “மாதா ஜெய ஓம்” துதியை நாள் முழுவதும் ஓதுதலால் நல்ல மன நிம்மதி கிட்ட வழி பிறக்கும். ஸ்ரீலலிதா தேவி வாக் தேவி ரூபிணியாய் அகஸ்தியருக்கு ஸ்ரீலலிதா சகஸ்ரநாம மந்திர சக்திகள் பலவற்றை உணர்வித்ததால் கும்பகோணம் - பூந்தோட்டம் - கோயில்பத்து அருகே உள்ள திருமீயச்சூர் ஸ்ரீலலிதா பரமேஸ்வரி ஆலயத்தில் வழிபடுதலால், பெண் பிள்ளைகள் நல்ல மனோ தைரியத்துடன் வாழ்ந்திட தக்க ரட்சா சக்திகள் கிட்டும்.

மீயச்சூர் சிவாலயம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள திருக்கோளக்குடியில் ஸ்ரீநாகநாதரை வழிபடுதலும் பிதா தோஷங்கள் அகல உதவும். அதாவது தந்தையை மனம் கடிந்து பேசுதல், வயதான காலத்தில் தந்தைக்கு ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றாது இருத்தல் போன்றவை பிதா தோஷங்களாகும்.
சித்த வைத்தியம், ஆயுர்வேதம் போன்ற இயற்கை வைத்திய முறைகளே உடலைச் செம்மைப் படுத்துபவை. ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறக்கும்போது ஆங்கில வைத்திய முறை ரசாயன மருந்துகளால் அவருடைய உடல் நாளங்கள் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும். இவற்றால் உடல் சிதைவடைவதால் சில அங்க தோஷங்களும் ஏற்படும். இதற்குப் பரிகாரமாக ருத்ர மூர்த்தி உள்ள ஆலயங்களில் தரிசிக்க வேண்டும்.
அடிக்கடி ஆடு, மாடுகளுக்கும் மூலிகைச் சம்பந்தமான செடி, இலைகளை அளித்து வருவதன் மூலம் குரல் வளத்தை மேம்படுத்திடலாம்.
ராகு கேது சந்திர கிரகமாஸ்ய நாட்களில் நாக தேவதா மூர்த்திகளை வணங்கி ராகு சந்திர மூர்த்திகளின் அனுகிரகத்தைப் பெறலாம். ராகு ஞான மூர்த்தியாக சிலவித ஞான சக்திகளைப் பொழியும் போது மதிகாரகராகிய சந்திரன் அவற்றை அவரவர் கிரகிக்கும் வண்ணம் புத்தியை மேம்படுத்தித் தருகின்றார். இதனை நல்வரமாகப் பெறுவதற்கு திருமகளாம் லட்சுமி தேவியின் ஐசிங் எனப்படும் ஐஸ்வர்ய சித்சிங்கார வாகன வடிவைப் பூண்டிருக்கும் ஆலயங்களில் வழிபட வேண்டும்.

ஸ்ரீநாகதேவதா மூர்த்தி
திருக்கோளக்குடி

ஐசிங் வடிவைக் கொண்டிருக்கும் மாங்கனிகளை மன நோய்களால் பாதிக்கப்பட்டோருக்குத் தானமாக அளித்து வாயிலார் நாயனார், பூசலார் நாயனார் ஆகிய மனக் கோயில் வழிபாட்டு ஞானிகளுடைய திருஉருவம் நிறைந்துள்ள ஆலயங்களில் (சென்னை ஸ்ரீகபாலீஸ்வரர் ஆலயம், திருநின்றவூர் ஸ்ரீஹிருதயாலீஸ்வரர் ஆலயம்) மாங்கனிகளைப் படைத்துத் தானமளித்துப் பூஜிப்பதால், வெளியில் சொல்ல முடியாத தாங்கொணா மனக் கவலைகளுடன் வாழ்பவர்களுக்கு மனத் துன்பங்கள் தணிய நல்வழி பிறக்கும்.
சனிக் கிழமைகளில் ஞான சேகரன், ஞானாம்பிகை, ஞானி, ஞானப் பழம் போன்ற ஞானி, ஞானம் சம்பந்தப்பட்ட பெயர்களை உடையவர்களுக்குத் தான, தர்மங்களை ஆற்றுதல் ஞான நாம சக்திகளைப் பெற்றுத் தர முடியும். அதாவது ஒவ்வொருவரும் தினந்தோறும் இறைவனின் நாமத்தை ஓதி பூக்களால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். இதனை கடைபிடிக்காதோர்க்கு ஞான நாம சக்திகள் கிட்டாது மங்கிவிடும். இதனை நிவர்த்தி செய்யவும் இத்தகைய வழிபாடு உதவும்.

நடை தவறியவர்கள் கவனிக்க

தினந்தோறும் காலையில் சூரிய உதயத்திலிருந்து அந்தந்த நாளின் ஹோரை நேரத்தோடு தொடங்கி, சூரியன், சுக்கிரன், புதன், சந்திரன், சனி, குரு, செவ்வாய் ஆகிய ஏழு ஹோரைகளும், அந்தந்த கிழமைகளில் காலையில் சூரிய உதய நேரத்தில் தொடங்கி வரிசையாக வரும்.
இவ்வகையில் தினந்தோறும் அந்தந்த ஹோரையில் அந்தந்த கிரக மூர்த்தி, கால ஆக்கச் சக்திகளைப் பூண்டிருப்பார். இவ்வாறாகத் தினந்தோறும் வருகின்ற ஒவ்வொரு சூரிய ஹோரைக்கும், ஒரே நாளில் மூன்று அல்லது மூன்றுக்கு மேற்பட்ட ஒரு மணி நேரக் கால அளவில் வரும் சூரிய ஹோரைக்கும் ஞாயிற்றுக் கிழமை அன்று வருகின்ற (காலை 6-7, மதியம் 1-2, இரவு 8-9, மறுநாள் விடியற் காலை 3-4) நான்கு வகை சூரிய ஹோரைகளுக்கும் விதவிதமான பலன்கள் உண்டு. ஞாயிற்றுக் கிழமை பாஸ்கர ஆக்க சக்தி நாளாக இருப்பதால், ஞாயிறன்று முகச் சவரமோ, தலை முடி வெட்டுதலோ செய்தல் கூடாது.  
மேலும், ஞாயிறு தோறும் காலையும் மாலையும் சூரிய நமஸ்கார மந்திரங்களை ஓதி வழிபடுதலும், மற்றும் காரட், அத்திப் பழம், அகத்திக் கீரை, முருங்கைக் கீரை போன்ற நேத்திர சக்திகள் நிறைந்த உணவுப் பொருட்களை மட்டுமே உண்டும், அன்னதானமாகவும் அளித்தலும் கண் பார்வையை விருத்தி செய்ய உதவும்.

ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் வாங்கல்

ஸ்ரீரவீஸ்வரர் ஆலயம் ஆமூர்

ஞாயிறன்று ஸ்ரீரவீஸ்வரர் (கரூர் அருகே வாங்கல், ஆமூர்), பாஸ்கரேஸ்வரர், ஆதித்யர், சூரிய நாராயணர் கோவில், சூரிய மூர்த்தி, (திருச்சி அருகே) சூரியூர் போன்ற சூரிய நாமங்களை உடைய தலங்களில் / ஆலயங்களில், பிள்ளைகளுடன் சேர்ந்து வழிபடுதல் பிள்ளைகளுக்கு நல்ல கண் பார்வை சக்திகளைப் பெற்றுத் தரும்.
தெய்வ மூர்த்திகளுக்கு வலக் கண் சூரியனாகவும், இடக் கண் சந்திரனாகவும் அமைந்திருப்பது போல, மனிதர்களுக்கும் வலக் கண் சூரிய சக்திகளையும் இடக் கண் சந்திர சக்திகளையும் பெற்றுள்ளன. சமன பாவனம் என்ற ஒரு சூரிய நமஸ்கார முறை உண்டு. தலையில் நீர்க் குடம் சுமத்தல், இரு கைகளால் கிணற்று நீர் இறைத்தல், இரு கால்களால் சமனாக மிதிக்கும் இயற்கையான சைக்கிள் பிரயாணம், கரகாட்டம், வலது மற்றும் இடது காலை மாற்றி மாற்றி வைத்து ஆடும் பாண்டி ஆட்டம் போன்ற சமன இயக்கங்கள் கபாலத்தில், உடலில் வலது இடது பகுதிகளை இயக்கும் செல்களை, சமபாவன யோக முறையில் சக்தி அளிக்க உதவுவதாகும்.
ஆனால், தற்காலத்தில் சமன பாவன யோகப் பயிற்களை ஆற்றுவோர் மிகவும் அரிதாகி வருகின்றார்கள். இந்தச் சமன பாவன யோகத்தின் ஓரங்கமே வலது, இடது கரங்களில் இரண்டாலுமே ஸ்ரீராமஜெயம் எழுதிப் பழகுதல் ஆகும். வலக் கைப் பழக்கம் உள்ளவர்கள் எழுதுவதற்கு வலக் கையை மட்டுமே பயன்படுத்துகின்றார்கள். இடது கையாலும் அவ்வப்போது ஸ்ரீராமஜயம் எழுதிப் பழகுதல் சமன பாவன யோக சக்தியைத் தருவதாகும். சூரிய குலத்தவராக ஸ்ரீராமன் பொலிவதால், இரு கைகளாலும் ஸ்ரீராமஜெயம் எழுதி வருதல் கண் சக்திகளை நன்கு விருத்தி செய்வதோடு, இதனால் பல நரம்பு வியாதிகளை, குறிப்பாக இருதய, பாரிச வாயு நோய்களை வராமலேயே தடுத்து விடலாம்.

ஐசிங் சக்கரம்
திருப்பராய்த்துறை

சூரிய மூர்த்தி, மருத்துவ சக்திகள் நிறைந்த ஆயில்ய நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் நாட்களில் சூரிய கிரணங்கள் மகத்தான நோய் நிவாரண சக்திகளைப் பெற்றிருக்கும். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து வகைச் சூரியக் கோளங்களுக்கும் ஒளிப் பிரகாசத்தைத் தர வல்ல சூரிய மூர்த்தியே கும்பகோணம் கஞ்சனூர் செல்லும் மார்கத்தில் துகிலி அருகே உள்ள கீழ் சூரிய மூலை ஸ்ரீசூரிய கோடீஸ்வரர் ஆலயமும், ஸ்ரீகோடி சூரியப் பிரகாசர் அருளும் பயரி திருத்தலமும் ஆகும்.
கும்பகோணம் அருகே உள்ள சிதிலமடைந்துள்ள பயரி ஆலயத்தில் அருளும் ஸ்ரீகோடி சூர்யப் பிரகாச மூர்த்தி பூவுலக ஜீவன்கள் அனைத்திற்கும் கண்பார்வை சக்தி வளம் நல்கும் மூர்த்தி
கீழ் சூரிய மூலை, பயரி - இவ்விரண்டு திருத்தலங்களிலும் ஞாயிற்றுக் கிழமைகளில் தேன் கலந்த அத்திப் பழத்தால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து, ஏழைகளுக்குக் குறைந்தது 108 தேனில் ஊறிய அத்திப் பழங்களைத் தானமாக அளித்தலால், கடுமையான கண் நோய்களால் வாடுவோர்க்கு நல்ல நிவர்த்தி கிட்டும். கண்கள் பாதிக்கப்பட்டுள்ள கால்நடைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றிற்கு மருத்துவ உதவிகள் ஆற்றிட, அறவழி தவறிச் சென்ற பிள்ளைகள், கணவன் திருந்திட நல்ல வழிகள் கிட்டும். புத்தியைச் சூரிய சக்திகளால் சீர் திருத்தும் தலங்களே கீழ் சூரிய மூலை, பயரி ஆகும்.

அனைவருக்கும் சாந்தி சாந்தி

அதிதி என்பதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. அதிதி உபசாரம் எனில் முன் பின் அறியாத (யாத்ரீகர்களுக்கு) உணவிடுதல் ஆகும். இது பித்ருக்களின் ஆசிகளைப் பெற்றுத் தரும். ஒரு நாளில், பாதி நாளில் ஒரு திதி முடிந்து, மறு திதி தொடங்குவதாக, இரு திதிகள் ஓரளவுச் சமநேரத்திற்கு வரின் அது அதிதி நாளாகின்றது. மேலும் அதிதி பூஜை எனில் வேண்டுதல் வேண்டாமை எனச் சம நிலை மனதுடன் பூஜித்தல் என்ற பொருளும் உண்டு.

ஸ்ரீகோடி சூரியப் பிரகாசர்
பயரி

இத்தகைய அதிதி நாட்களில் பித்ரு லோகங்களில் இருந்து வரும் பித்ருக்கள் இடையில் சில வான்லோகங்களில் தங்குகின்றனர். இதற்காகவே, இத்தகைய அதிதி நாட்களில் வாணியம்பாடி ஸ்ரீஅதிதீஸ்வரர் ஆலயத்திலும் பூவாளூர், ராமேஸ்வரம் போன்ற பித்ரு முக்தித் தலங்களிலும் அன்னதானம் ஆற்றுவதால், அருகில் மனைவி, மகன், மகள் இல்லாது அநாதியாக இறந்தோரின் சாயா சரீர ஆவிக்கு நன்னிலைகள் கிட்டும். மேலும் பித்ரு மண்டலங்களில் தங்குவோர்க்கும் தாகசாந்தி கிட்டுவதால் அவர்களும் நன்கு வாழ்த்துவர்.
பலரும் பிறந்த நாளை, பிறந்த தேதி அன்று கொண்டாடுவதோடு நிறுத்தி விடுகின்றார்கள். பிறந்த நாள் எனும்போது ஒரு விதமான சந்தோஷம் உருவாவதற்குக் காரணமே, ஆன்மீக ரீதியாக, இப்பூவுலகில் பெறுதற்கரிய மானுடப் பிறவியைப் பெற்றதில் கிட்டும் பேரின்பத்தின் அணுத் துளித் திவலையே ஆகும். ஆனால், தற்காலத்தில், உலகெங்கும் பிறந்த நாள் என்றால் கேக் வெட்டி, சாக்லேட் கொடுத்தலோடு முடிந்து விடுகின்றது. அடுத்த வீடுகள், அறிந்தோர், அலுவலகத்தார் என்று நன்கு அறிந்த உற்றம், சுற்றத்தாருக்கு, கேக், சாக்லேட்களைத் தின்று, தின்று அலுத்துப் போனவர்களுக்கே மீண்டும், மீண்டும் கேக், சாக்லேட் அளித்தலால் யாது பயன்? ஏழைக் குழந்தைகளுக்கு அளித்தாலாவது அவர்கள் ஆனந்தமடைந்து நன்கு வாழ்த்துவரே! பிறந்த நாள், பிறந்த நாள் என்று சொல்லி அறிந்தவர்களுக்கும், வசதி உள்ளவர்களுக்கும் இனிப்புகளை அளிப்பதால் எவ்விதமான சந்தோஷத்தைத்தான் பரிமாறிக் கொள்ள முடியும்?

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
ஆதிகுடி லால்குடி

பிறந்த நாள் என்பது இறைவனை நோக்கி ஓர் அடி எடுத்து வைக்கும் நன்னாள் என்பதே சரியான விளக்கமாகும். உலகில் அனைத்து ஜீவன்களின் வாழ்க்கையே இறைவனை நோக்கிய பாதைதானே! பிறந்த நாளானது வருடத்தின் குறித்த மாதத் தேதியில், எண் கணிதப் பூர்வமாக அமைந்திட்டாலும், பிறந்த நட்சத்திர நாளும் மகத்தான மேன்மை பொருந்தியதே! பிறந்த நாள், பிறந்த நட்சத்திர நாளுக்காகக் காத்திராமல், மாதந்தோறும், அவரவர் நட்சத்திர நாளில் அவரவர் நட்சத்திரத்திற்கு உரிய தலங்களில் வழிபடுதலால் சாந்தமான மன நிலை பெற உதவும்.
தமக்குப் பிறந்த நாள் எது என்பதையே அறியவே அறியாத ஏழைப் பாமர மக்களுக்கு, நம் பிறந்த நாளில் அவர்களுக்கு கேக், சாக்ளெட், பஜ்ஜி, வடை, சட்னி, சாம்பார் என்று மனக் களிப்போடு அளிக்கும்போது, அவர்கள் பெறுகின்ற மகிழ்ச்சிதான், நம்மை வாழ்விக்கும் தான, தர்ம நல்வரமாக நமக்குத் திரும்பி வரும். இதுவே “இட்டது கிட்டுவதாகும்”.

27 நட்சத்திர தேவிகளும் சப்த
கன்னிகளும் திருப்பத்தூர்

பிறந்த நாள் போல, இறந்த நாளின் திதியே திவச நாளாக அனுசரிக்கப்படுகின்றது. இறந்தவர்களுடைய வருடாந்திரத் திதி நாளில் அனுசரித்துத் திவசம், தர்ப்பணம், படையல் அளித்தாக வேண்டும். வருடத்திற்கு ஒரு முறை மட்டும் அந்தத் திதியில் திவசம் என்றில்லாது, மாதா மாதமுமே அந்தந்தத் திதியில் இறந்தவரின் சாயா சரீர மேன்மைக்காக,
* ஒரு பெரிய வாழை இலை நிறைய நிறைய உணவுப் பண்டங்களை வைத்து, பித்ருக்களின் நாயகராகிய ஸ்ரீமகாவிஷ்ணுவின் இலை என்று போற்றி அர்ப்பணித்து வணங்கியும்,
* மேலும் இரண்டு முழு நீள வாழை இலைகளில் தந்தை வகை, தாய் வகைப் பித்ருக்களுக்காகத் தனித் தனியே இரண்டு முழு நீள இலைகளில் நிறைய அன்னம், உணவுப் பண்டங்களை வைத்தும்,
* இம்மூன்று இலைகளையும் வலம் வந்து, முன்பின் அறியாத ஏழைகளை அமர வைத்து உண்ண வைத்தல் அல்லது இது தற்காலத்தில் பாதுகாப்பற்றது எனக் கருதினால், மூன்று இலைகளில் உள்ள உணவினை மூன்று பெரிய உணவுப் பொட்டலங்களாக்கி, குடிக்க நீர் பாட்டிலுடன் பரம ஏழைகளுக்கு அளித்தலும், கலியுக அதிதித் திவச அம்சமாகி, எதிர்பாராத விதத்தில் அரிதிப் பெரும்பான்மையான புண்ணியத்தை நல்கி மந்திரத் திவச பூஜை சக்திகளையும் பெற்றுத் தரும்.

ஸ்ரீசூரியகோடீஸ்வர மூர்த்தி
கீழசூரியமூலை

பிறந்த நாளை விட, பிறந்த நட்சத்திரத்திற்கும் அதிமேன்மை உண்டு. வருடந்தோறும் வருகின்ற குறித்த மாத நட்சத்திர நாளில் மட்டும், பிறந்த நாள் விழா என்று அலாதியாகக் கொண்டிடாது, அவரவர் பிறந்த நட்சத்திர நாளிலும், அந்தந்த நட்சத்திர ஆலயங்களில் வழிபடுதல் அல்லது, திருவொற்றியூர், திருவிடைமருதூர் போன்ற தலங்களில் உள்ள நட்சத்திர லிங்கங்களை வழிபடுதல் வேண்டும்.
ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரம (திருஅண்ணாமலை) வெளியீடான “ஸ்ரீஆயுர்தேவி மகிமை” என்னும் நூலில் வெளியிட்டுள்ள வகையில், மாதாந்திர நட்சத்திர தான, தர்ம வழிபாடுகளையும், நாக தேவ மூர்த்திகளின் வழிபாடுகளையும் மேற் கொள்தல் சிறப்பானதாகும்.

ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

பொதுவாக, பித்ருக்களையும், உண்மையான அதிதிகளையும் அறிவிக்கும் தெய்வீக சக்திகளைக் கொண்டவையே காக்கைகள், பசுக்கள். அதிதி நாட்களில் இவற்றிற்கு வயிராற உணவளித்து, நீரும் வைத்துப் போஷித்தலால் பறவைகளின் பித்ருக்களின் ஆசி பரிமளிக்கும்.
திருச்சி - லால்குடி - அன்பில் அருகே உள்ள ஆதிகுடி ஸ்ரீபிரேமாம்பிகை சமேத ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆலயம் அருகே உள்ள வாய்க்காலுக்கு ஆதிகாலத்தில் கமலகாசித் தீர்த்தம் என்று பெயர். அஸ்திச் சாம்பல் தாமரைப் பூக்களாகப் பூத்த அற்புதமான, (பலரும் அறியாத) தர்ப்பணத் தீர்த்தத் தலம்! காசியை விட வாசித்வம் பெரிதான அதிதீஸ்வர அதிதி மேன்மைத் தலங்களுள் இதுவும் ஒன்றாகும். அமாவாசை, இறந்தவர்களின் மாதாந்திரத் திதி மற்றும் பஞ்சாங்கத்தில் அதிதி என்று போட்டிருக்கின்ற நாட்களில், இங்கு (நீர் இல்லாவிடினும், நீர் கொணர்ந்து) தாமரைப் புஷ்பஙகளின் மேல் தர்பைச் சட்டம் வைத்துத் தர்ப்பணம் அளித்திட, மயானத்தில் சரீரம் சரியாக அக்னியில் வேகாது தகனம் அமைந்தோர் நற்சாந்தி பெற உதவும்.
அற்புதமான அமாவாசைத் தர்ப்பணத் தலங்களுள் ஆதிகுடியும் ஒன்று. காசியை விட வாசித்வ மஹிமை பொருந்திய பித்ரு மோட்சத் தலம்!

ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...


om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam