இறைவனின் உன்னதமான படைப்பே மனம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

மனம் அடங்கும் வழி

எப்போதும் இன்பத்தில் திளைக்க வேண்டியதுதான் மனிதனின் இயல்பு. காரணம் மனிதனைப் படைத்த இறைவன் ஆனந்த ரூபத்தில்தான் நிலைத்திருக்கிறான். ஆனால், இறை தரிசனம் பெற்றவர்களைத் தவிர பெரும்பாலான மனிதர்கள் துன்பத்தில்தான் உழல்கின்றார்கள். ஒரு நாளில் 24 மணி நேரத்தில் சில நிமிடங்கள் அல்லது விநாடிகளைத் தவிர்த்து எப்போதும் துன்பமும், துயரமும்தான் மனிதனைப் பீடிக்கின்றது.

மரணத்தை வெல்லும் வழி
கூறும் திருப்பைஞ்ஞீலி

இதற்குக் காரணம் என்ன?

நடைமுறைக் காரணங்களாக பணக் கஷ்டம், வியாதிகள், மற்றவர்களின் விரோதப் போக்கு என்று பல்வேறு காரணங்களைச் சுட்டிக் காட்டினாலும் இவை அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது மனிதனின் மனமே. பல நாட்கள் பட்டினியாகக் கிடந்து சிரித்த முகத்துடன் இருப்பவர்களையும் நினைத்ததை எல்லாம் வயிற்றுக்குள் தள்ளினாலும் வாடிய முகத்துடன் இருப்பவர்களையும் நாம் எத்தனையோ முறை சந்தித்திருக்கிறோம்.

மனதை ஆளத் தெரிந்தவர்களே எந்தவித துன்பத்தையும் எதிர் கொள்ளும் சக்தி பெற்றவர்கள். ஆனால், மனதை ஆள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உலகையே ஆளும் சக்கரவர்த்திகள் கூட மனதை ஆளத் தெரியாமல் தவிப்பது உண்டு.

கிட்டத்தட்ட உலகம் அனைத்தையும் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் கொண்டு வந்து மாவீரன் என்று அக்காலத்தில் பெயர் பெற்ற அலெக்சாண்டர் இந்தியாவிற்கு படை எடுத்து வந்தார். வட இந்திய எல்லையில் புருஷோத்தமன் என்ற மன்னருடன் போரிட்டார். அந்த சமயத்தில் அவருடைய பூர்வ ஜன்ம புண்ணிய வசத்தால் ஹங் உங் சிங் என்ற குரு பாரம்பரியத்தில் தோன்றிய ஒரு சித்தர் பெருமானின் தரிசனம் கிட்டியது. ஹங் உங் சிங் சித்தர்கள் கட்டை விரல் அளவே உயரம் உடையவர்கள், மிகவும் தொன்மை வாய்ந்த தெய்வீக பாரம்பரியம் உடையவர்கள்.

எம்பெருமானின் எல்லையில்லாக் காலக் கிரமத்தில் நவநாத சித்தர்களின் அடுத்த கால நிலையை வகிப்பவர்கள். அப்பெருமானின் தரிசனம் கிட்டியவுடன் மாமன்னன் அலெக்சாண்டரின் கம்பீர உருவமும் செயலற்று போனது, ஐம்புலன்களும் தங்கள் பொறியில் அடங்கின. தன் வாழ்நாளில் இதுவரை உணராத ஒரு அமைதியை உணர்ந்தார் அலெக்சாண்டர்.

சித்தர் பெருமான், “மாமன்னனே, நீ உலகையே வென்று விட்டாய். ஆனால் உன்னுடைய மனதை ஆள உனக்குத் தெரியவில்லையே. மனதை ஆளத் தெரியாத நீ உலகை ஆண்டு என்ன பயன்?” என்று புன்முறுவலுடன் கேட்டார். மன்னன் தலை குனிந்தான். சித்தர் பெருமானின் கூற்றில் இருந்த மறுக்க முடியாத உண்மை அவனை உலுக்கியது. தான் இதுவரை வென்ற அனைத்து நாடுகளும், தேசங்களும் தன்னுடைய இறுதிக் காலத்தில் தனக்கு உதவாது என்பதை தெளிவாக உணர்ந்தான். வாழ்வின் நிலையாமை அவன் கண் முன் பளிச்சிட்டது.

நெடுஞ்சாண் கிடையாக சித்தர் பெருமானின் திருப்பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். “சுவாமி, இவ்வளவு நாள் போர்க் களத்திலேயே என்னுடைய வாழ்நாள் வீணாகக் கழிந்து விட்டதே. இனி மீதமுள்ள காலத்திலாவது என்னுடைய கடமை என்னவென்று தாங்கள் தெரிவித்தால் அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்,” என்று தெரிவித்தான்.

சித்தர்கள் கால, தேச எல்லையைக் கடந்தவர்கள். இருந்தாலும் மக்களின் குறையைக் களைவதில் தாயினும் மிக்க அன்பைப் பொழிவதால் அலெக்சாண்டரிடம் அவனுக்குப் பரிச்சயமான கிரேக்க மொழியிலேயே உரையாடைலைத் தொடர்ந்தார் சித்தர் பெம்மான்.

“உலகமே உன்னுடைய ஆட்சிக்கு உட்பட்டிருந்தாலும் உன்னுடைய இறுதி முடிவு உன் கையில் இல்லை. குளிர் ஜுரத்தால் நீ மரணத்தைத் தழுவ வேண்டும் என்பது விதி. யாராலும் போரில் வெற்றி கொள்ள முடியாத உன்னை காய்ச்சல் வெற்றி கொள்ளும்,” என்று மன்னனின் இறுதிக் காலத்தை கண் முன் கொண்டு வந்தார் பெருமான்.

இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னன் பெரிதும் அதிர்ச்சியுற்றான். என்னதான் அஞ்சா நெஞ்சம் பெற்ற வீரனாக இருந்தாலும் மரணம் என்ற சொல் மன்னனையும் நிலை தடுமாறச் செய்தது. ஒருவாறு நிலை தெளிந்து அடுத்து செய்ய வேண்டிய காரியத்திற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டான்.

சித்தர் பெருமான் தொடர்ந்து, “வருந்தாதே மன்னா, மனிதனாகப் பிறந்தால் இறப்பு நிச்சயம் என்பது நீ அறிந்ததுதான். ஆனால், யாருக்கும் கிட்டாத ஒரு பெரிய சேவையை நிறைவேற்றும் பாக்கியம் உனக்குக் கிடைத்துள்ளது. இறை நியதியாக ஒரு மனிதன் இறக்கும் நேரமும், இடமும், விதமும் இரகசியமாகவே வைக்கப்படும். உன்னுடைய விஷய,த்தில் நீ எப்படி, எப்போது இறப்பாய் என்ற விவரம் உனக்குத் தெரிவிக்கப்பட்டு விட்டது. இது நீயாகவே பூர்வ ஜன்மத்தில் கேட்டுப் பெற்றுக் கொண்ட வரம்தான். அதன்படி உன்னுடைய இறப்பு ஆயிரக் கணக்கான வருடங்களுக்கு கோடிக் கணக்கான மக்களுக்கு நிலையாமையை உணர்த்தும் ஒரு அற்புத பாடமாக அமையும்,” என்றார்.

இந்தப் பாடத்தை எப்படி நிறைவேற்றுவது என்ற முறையையும் சித்தர் பெருமானே திருவாய் மலர்ந்து அருளினார். அதாவது, மன்னன் அலெக்ஸாண்டர் இறந்தவுடன் அவனுடைய இரு திறந்த கைகளையும் சவப் பெட்டிக்கு வெளியே வைத்து மயானத்திற்கு உடலை எடுத்துச் செல்ல வேண்டும். உலகையே வெற்றி கொண்ட மாமன்னன் அலெக்சாண்டர் விதியை வெற்றி கொள்ள முடியவில்லை, பூமி முழுவதிற்கும் அதிபதியான மன்னன் செல்லும்போது ஒரு ஊசி முனை பூமியைக் கூடத் தன்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை, என்ற அரிய உண்மையை அனைவரும் உணர மன்னனின் மௌன மொழி அற்புத பாடம் புகட்டும் என்பதே சித்தர் பெருமானின் அறிவுரை,

இவ்வாறு மனதை வெற்றி கொள்ளும் முறையை பூரணமாக உணர்ந்தவர்களே சித்தர்கள் ஆவார்கள். சித்தர்களின் பொன்னுரையை ஏற்று வாழ்வில் கடைபிடிப்பதன் மூலமே மதயானை போன்ற மனதை ஓரளவாவது அடக்கி ஆள முடியும். சித்தர்கள் அளித்த அமுத மொழிகளில் ஒரு சில துளிகளை மட்டும் இந்நூலில் ஆராய்வோம்.

ஏ மனமே அஞ்சாதே
எல்லாம் ஈசன் செயல்

மிகவும் எளிமையாகத்தான் இருக்கிறது இந்தப் பொன்மொழி. இதை முழுமையாக நடைமுறைப்படுத்தி விட்டாலோ அதுவே நம்முடைய அனைத்துப் பிரச்னைக்கும் ஒரு தீர்வாக அமைந்து விடும். மேலோட்டமாக எளிமையாகத் தோன்றினாலும் இதை நம்முடைய வாழ்வில் செயல்படுத்தும்போதுதான் அதன் மகத்துவத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.

உதாரணமாக, சென்னை, மும்பை போன்ற நகரங்களில் வசிக்கும் மக்கள் குறைந்தது எட்டு மணி நேரம் நிம்மதியாக உறங்க வேண்டும். மற்ற இடங்களில் வசிக்கும் மக்கள் ஆறு மணி முதல் எட்டு மணி நேரம் உறங்கினால்தான் உடலுக்கும் மனதிற்கும் தேவையான அமைதியும் ஆரோக்கியமும் கிட்டும் என்பது சித்தர்களின் கொள்கை.

நகரங்களில் வசிக்கும் மக்கள் பரபரப்பான சூழ்நிலையில் வசிப்பதாலும் அவர்களைச் சுற்றி பலதரப்பட்ட எண்ண அலைகள் சூழ்ந்திருப்பதாலும் அவர்களுக்கு எட்டு மணி நேர ஓய்வு தேவைப்படுகிறது. சித்தர்களைப் பொறுத்த மட்டில் இரவு பகல் என்ற நேரப் பாகுபாடு கிடையாது. மகான்களும் யோகிகளும் கால பேதத்தைக் கடந்தவர்கள். அதனால் யோகிகளுக்கு உறக்கம் தேவையில்லை. காலத்தைக் கடந்த நிலையில் இருப்பதால்தான் மகான்களால் பகலிலும் நட்சத்திரங்களைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

பகல் நேரத்தில் ஒரு மனிதன் சேர்க்கும் கர்மத்தின் தொகுப்பே அவனுடைய இரவு நேரமாக அமைகிறது. எனவே நாம் வழக்கமாக கணக்கிடும் மாலை 6 முதல் காலை 6 மணி வரை நிரவியுள்ள 12 மணி நேர இரவு நேரம் என்பது மனிதனுக்கு மனிதன் மாறுபடும். கேட்பதற்கு விந்தையாகவும் குழப்பமாகவும் தோன்றும் இந்தக் கால வரையறையைப் புரிந்து கொண்டால்தான் தியானம் என்றால் என்ன என்பதை மனிதன் ஓரளவாவது புரிந்து கொள்ள முடியும்.

எந்த அளவிற்கு ஒரு மனிதன் தன்னுடைய பகல் நேர செயல்களில் கர்மத்தைக் குறைத்துக் கொள்கிறானோ அந்த அளவிற்கு அவனுக்கு இரவு நேர கால அளவு குறைகிறது, அந்த அளவிற்கு அவன் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமும் குறைந்து போகிறது.

உதாரணமாக ஒரு மனிதன் சாலையில் நடந்து செல்வதாக வைத்துக் கொள்வோம். அப்போது எதிரே வாகனத்தில் வரும் ஒருவர் அவரை இடித்து வேதனை ஏற்படுத்தி விட்டால் அதனால் அடிபட்டவர் பெரும்பாலும் அவரைத் திட்டலாம் அல்லது பதிலுக்கு அடிக்க முற்படலாம். தன்னுடைய மனதை அடக்கத் தெரிந்தவர்கள் இது சகஜமாக நடக்கக் கூடியதுதானே என்று நினைத்து மனதிற்குள் திட்டி விட்டு சென்று விடலாம். அடிபட்டவரின் தீவிரமான எண்ணத்தைப் பொறுத்து அவருக்கு இவ்விஷயத்தில் கர்ம பாக்கி ஏற்படும்.

அதே சமயம் ஒரு மகானை யாராவது ஒருவர் இடித்து விட்டால் நிச்சயமாக அவர் மனதிற்குள் கூட யாரையும் திட்ட நினைக்க மாட்டார். எல்லாம் இறைவன் செயல். நம்முடைய பூர்வ ஜன்ம பாக்கியால்தான் எதிரே வந்தவர் நம்மீது வண்டியை மோதி விட்டார் என்று நினைத்து அமைதியாகச் சென்று விடுவார். அவ்வாறு மகான்கள் அமைதியாக இருந்து விடுவதால்தான் அவர்களுக்கு எந்தவித கர்ம பாக்கியும் ஏற்படுவதில்லை, கர்ம பாக்கி சேராததால் அவர்களுக்கு இரவு நேரமும் தோன்றுவதில்லை. இதுவே இரவு நேரத்தின் காலக் கோட்பாடு. அமைதியாக சிந்தித்து ஆத்ம விசாரம் செய்து பார்த்தால்தான் இரவு நேரக் கோட்பாட்டின் இரகசியம் புரியவரும்.

இரவு நேரக் கோட்பாடு தெளிவாகப் புரிந்தால்தான் தூக்கத்தில் என்ன நடக்கிறது என்ற புரியாத புதிரும் தெளிவாகும்.

உண்மையில் தூக்கம் என்பது மனதின் ஒரு மாற்றமே. மனம் அடங்கினால் தூங்க வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை. புத்தரை ஒரு அடியார், “சுவாமி, நீங்கள் கடவுளை அடைந்ததால் என்ன லாபம் பெற்றீர்கள்?’ என்று கேட்டபோது அவர் சிரித்துக் கொண்டே சொன்னாராம், “ஐயா, ஒரு லாபமும் பெறவில்லை. கடவுள் தரிசனத்திற்கு முன் நான் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தேன். கடவுளைப் பார்த்தபின் என்னுடைய தூக்கம் போய் விட்டது. அவ்வளவுதான். ”

எனவே தூக்கம் என்ற மன விகாரத்தைக் களைய வேண்டுமானால் சித்தர்கள் அருளிய ‘ஏ மனமே அஞ்சாதே எல்லாம் ஈசன் செயல் !’ என்ற மந்திரத்தை ஆழ்ந்து சிந்தித்து அதை நம்முடைய வாழ்வில் செயல்படுத்தத் தொடங்கினால் போதும். அதுவே நம்முடைய அன்றாட பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கும் ஓர் அருமருந்தாகவும் மாறி விடும் என்பது உண்மை.

மனம் அடங்கினால் மட்டும் போதுமா அதற்கு மேல் நான், எனது என்ற அகங்கார எண்ணங்களும் எவ்வளவோ ஆன்மீகத் தடைகளை ஏற்படுத்தி விடும் அல்லவா? இவ்வாறு எல்லாவிதமான ஆன்மீகத் தடைகளையும் நீக்கும் மந்திரம்தான் அனைத்தும் ஈசன் செயல் என்ற தாரக மந்திரம். இதை நடைமுறையில் செயல்படுத்திக் காட்டியவர்கள் நம்முடைய குரு மங்கள கந்தவர்வா அவர்கள்.

கொடுப்பதும் ஒரு தவமே

அன்னதானத்தை தன்னுடைய உயிர் மூச்சாகக் கொண்டிருந்த நமது குருநாதர் திருஅண்ணாமலையில் துர்கை அம்மன் கோயில் அருகே உள்ள அங்கப்பிரதட்சண அண்ணாமலையார் ஜீவாலயத்தில் தங்கி பல வருடங்கள் கார்த்திகை தீப உற்சவ அன்னதான கைங்கர்யத்தை நூற்றுக் கணக்கான அடியார்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்றி வந்தார்கள். 1980 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை நிகழ்ந்த அன்னதானத்தில் பல்வேறு ஆன்மீகப் பாடங்களை அடியார்கள் பொக்கிஷங்களாகப் பெற்றார்கள்.

அக்காலத்தில் அன்னதான வளாகத்தில் நவீன கழிவறைகள் கிடையாது. ஆண்களும் பெண்களும் திறந்த வெளிக் கழிவறைகளைத்தான் பயன்படுத்தி வந்தார்கள். அக்கழிவறைகளைச் சுத்தம் செய்ய மாரியப்பன் என்ற ஒரு துப்புரவு தொழிலாளி இருந்தார். நூற்றுக் கணக்கான அடியார்கள் பயன்படுத்தும் கழிவறைகளை அவர் ஒருவரே சுத்தம் செய்து விடுவார். அனைவரும் அவரை மாரி, மாரி என்றுதான் அழைப்பார்கள். நமது குருநாதர் மேல் மிகவும் மரியாதை கொண்டவர்.

ஸ்ரீஅங்கப்பிரதட்சிண அண்ணாமலை சுவாமிகள்
ஜீவாலயம் திருஅண்ணாமலை

ஒரு வருடம் நடந்த அன்னதான வைபவத்தின்போது அடியார் ஒருவர் நமது குருநாதருக்கு விலை உயர்ந்த பட்டு வேஷ்டியையும், அங்க வஸ்திரத்தையும் அன்புக் காணிக்கையாக அளித்தார். நமது குருநாதர் பட்டு வஸ்திரங்களைப் பயன்படுத்துவதில்லை. ஆயிரக் கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொன்று ஒரு பட்டுத் துணி தயாரிக்கப்படுவதால் பட்டுத் துணி எவருக்கும் ஏற்புடையது அல்ல. ஆனால், ஒரு அடியாரின் அன்பு காணிக்கை என்பதால் குருநாதர் அந்தப் பட்டு வஸ்திரங்களை ஏற்றுக் கொண்டார்.

பத்து நாட்கள் அன்னதான வைபவம் நிறைவு அடைந்த பின் தன்னுடைய வழக்கமான காணிக்கை பரிசுப் பொருட்களுடன் அந்தப் பட்டு வேஷ்டியையும் அங்கவஸ்திரத்தையும் மாரியிடம் அளித்து விட்டார். மாரி அடைந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. சந்தோஷத்தால் திக்கு முக்காடிப் போனார். வாழ்நாள் முழுவதும் சம்பாதித்தாலும் தன்னால் வாங்க முடியாத அற்புத வஸ்திரத்தை நமது வாத்தியார் அந்தத் தொழிலாளிக்கு அளித்தவுடன் அவர் எல்லையில்லா ஆனந்தம் அடைந்ததில் வியப்பில்லைதான்.

அடுத்த வருட அன்னதான வைபவத்திற்காக நமது குருநாதர் நவீன வசதிகள் அமைந்த கல்யாண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அதில் அன்னதான கைங்கர்யத்தை மேற்கொண்டு விட்டார். அதனால் மாரியின் சேவைக்கு அவசியம் ஏற்படாமல் போய் விட்டது. இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் தீப உற்சவத்தின் போது நமது குருநாதரை மாரி தரிசனம் செய்து விட்டுப் போவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

நமது குருநாதர் கொடுத்த பட்டு வஸ்திரத்தைப் பற்றி ஒவ்வொரு வருடமும் நினைவு கூர்ந்து மறக்காமல் நன்றி சொல்லி விட்டு செல்வார். நமது குருநாதர் அளித்த வஸ்திரத்தை ஒரு பழைய ட்ரங்க் பெட்டியில் போட்டு பூட்டி அதன் சாவியை தன்னுடைய தலைமாட்டில் வைத்து இரவு உறங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் மாரி.

இது ஒவ்வொரு நாளும் நடக்கும் நிகழ்ச்சி. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் முதல் வேலையாக தலை மாட்டி,ல் இருக்கும் சாவியை எடுத்து ட்ரங்க் பெட்டியைத் திறந்து நமது குருநாதர் கொடுத்த பட்டு வேஷ்டியையும் அங்க வஸ்திரத்தையும் நன்றாக விரித்து கண் குளிரப் பார்த்து விட்டு மீண்டும் பெட்டிக்குள் வைத்துப் பூட்டி விட்டு சாவியைத் தன்னுடைய சட்டைப் பையில் போட்டுக் கொண்டு விடுவார் மாரி.

இவ்வாறு தொடர்ந்து பத்து வருடங்களுக்கு மேல் தினமும் பட்டு வஸ்திர தரிசனம் செய்து கொண்டிருந்தார் மாரி. மாரிக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் இருந்தாள். அவர்களும் ஆரம்பத்தில் அவ்வப்போது மாரியிடம் வீணாக எதற்கு பெட்டியில் பட்டு வஸ்திரத்தை வைக்க வேண்டும், அதை எடுத்து உடுத்திக் கொள்ளலாமே என்று கேட்பார்கள். ஆனால், மாரியோ, இது சாதாரண வேட்டி இல்லடா, அந்தப் பெரியவர் நான் கனவிலும் நினைக்க முடியாத ரெரம்ப ஒசத்தியான பட்டு வேட்டியைக் கொடுத்திருக்கிறார். நானோ கக்கூஸ் அள்ளுகிறவன். என்னையும் ஒரு பொருட்டா மதித்து எனக்கு கௌரவம் கொடுத்திருக்கிறார் என்றார் அது அவருடைய பெருந்தன்மை. அதைப் பார்க்கும் தகுதி மட்டும்தான் எனக்கு உண்டு. அதைப் போட்டுக்குற தகுதி கொஞ்சம் கூட இல்லை. அந்த தகுதி என்றைக்கு வருகிறதோ அன்றைக்கு நான் போட்டுக் கொள்கிறேன். அதுவரைக்கும் என்னை வற்புறுத்த வேண்டாம். அப்படி ஒரு வேளை நான் இறந்து விட்டால் இந்த வேட்டியையும் அங்கவஸ்திரத்தையும் என்னோட பிணத்தின் மீது போட்டு சுடுகாட்டிற்கு எடுத்துக் கொண்டு செல்லுங்கள். அது போதும், என்னுடைய ஆத்மா சாந்தி அடையும், என்று திட்டவட்டமாகச் சொல்லி விடுவார்.

இவ்வாறு தொடர்ந்தது மாரியின் வஸ்திர வழிபாடு.

இறுதியில் 1998ம் ஆண்டு கார்த்திகை தீபத் திருநாள் அன்று மாரி கடைசி முறையாக நமது குருநாதர் அளித்த பட்டு வஸ்திரங்களைத் தரிசனம் செய்தார். மாரியின் குடும்பத்தார் அவருக்கு குருநாதர் அளித்த பட்டு வஸ்திரங்களைப் போர்த்தி அண்ணாருடைய இறுதி ஊர்வலத்தை தெய்வீகமாக நிறைவேற்றினர். புனிதரால் புனிதம் பெற்ற புனிதர் திருஅண்ணாமலையாரின் புனிதப் பாதங்களை அடைந்தார்.

மறுநாள் இந்நிகழ்ச்சியை அடியார்களிடம் விவரித்தார் நமது குருநாதர். அப்போது ஒரு அடியார், “ குருநாதர் ஒரு பொருளுக்குத் தகுதி உடையவரை எப்படித் தேர்ந்தெடுக்கிறீர்கள்?” என்று கேட்டார். அப்போது குருநாதர், “ஒரு காரியத்தை நீங்கள்தான் செய்கிறீர்கள் என்று நினைக்கும்போதுதான் உங்கள் மனம் குறுக்கிட்டு பலவித குழப்பங்களை ஏற்படுத்தும். எப்போது ஒரு காரியத்தை நான் செய்யவில்லை, இறைவன்தான் செய்கிறான் என்ற எண்ணம் பூரணமாக உங்களுக்குள் தோன்றுகிறதோ, அப்போது உங்களுக்கு எந்த விதமான குழப்பமும் ஏற்படாது. நீங்கள் செய்ய வேண்டிய செயல் எதுவாக இருந்தாலும் அதை இறைவன் சிறப்பாக நிறைவேற்றி விடுவான். நான் என்ற எண்ணம் இல்லாதபோது ஒரு மனிதன் கொடுக்கும் பொருள் இறைப் பிரசாதமாக மாறி விடுகிறது. அப்போதுதான் அது ஒரு மனிதன் கற்பனை செய்து பார்க்க முடியாத அற்புதங்களை நிகழ்த்துகிறது. இதற்கு மாரியின் வாழ்க்கை வரலாறு ஒரு சான்றாகும்,” என்று விளக்கினார்.

கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார்

பஸ்சில் ஒருவர் பயணம் செல்லும்போது அதை ஓட்டும் டிரைவர் வாகனம்  ஓட்டுவதற்கான தகுதி உடையவர் என்று நம்பினால்தான் பயணம் இனிதாக அமையும். ஓட்டுநருக்குத் தகுதி இருக்கிறதா இல்லையா என்று ஆராயத் தொடங்கினால் பயணம் எப்படி இருக்கும்? இவ்வாறு வாழ்க்கையில் சில விஷயங்களை நம்பித்தான் நாம் செயல்பட வேண்டியுள்ளது.

எடுத்ததெற்கெல்லாம் அவநம்பிக்கை ஏற்பட்டால் அதனால் வாழ்க்கை நரகமாக மாறி விடும். அதே சமயம் அனைவரையும் நம்பி விட முடியுமா? பக்கத்து வீட்டுக்காரர்கள் அனைவரும் நல்லவர்களே என்று நம்பி வீட்டைப் பூட்டாமல் வெளியே சென்று விட்டால் நமது நிலை என்னவாகும்?

எனவே, ஒரு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் யாரை நம்புவது எதை நம்பாமல் இருப்பது? இத்தகைய குழப்பங்கள் அனைவரின் வாழ்விலும் நிச்சயம் உருவெருக்கும். இந்நிலையில் பெரியோர்கள் கூறுவது என்ன?

சம்சாரம் என்னும் கடலைக் கடக்க வேண்டுமானால் அதற்கு நம்பிக்கை என்ற படகு நிச்சயம் தேவை. படகாகத் தோன்றி நம்மைக் கரை சேர்க்கும் வழிகாட்டியே சற்குரு ஆவார். அனைவரும் தங்கள் வாழ்வில் சற்குருவை அவசியம் பெற்றாக வேண்டும். அவ்வாறு சற்குருவைப் பெற்றவர்கள் அவர் கூறும் வார்த்தைகளில் முழு நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக் கரை சேர்க்கும் மாமந்திரம், தந்திரம் எல்லாம். எவர் ஒருவர் தன்னுடைய குருநாதரை நம்பி அவர் காட்டும் வழியில் கண்ணை மூடிக் கொண்டு செல்கிறாரோ அவர் வாழ்க்கை வீண் வாழ்க்கை ஆகாமல் அவர் உலக சரித்திரத்தில் என்றும் நிலை பெறுவார், என்பதையே கண் மூடி வந்தவர் மண் மூடிப் போகார் என்ற சித்தர்கள் பேருரை விளக்குகின்றது.
 
குரு நம்பிக்கையை விளக்கும் ஒரு நிகழ்ச்சி.

சுமார் 50 வருடங்களுக்கு முன் ஒரு நாள் சிறுவனான நமது குருநாதரும் கோவணாண்டிப் பெரியவரான இடியாப்ப சித்த ஈச பிரானும் திருக்கழுக்குன்றத்திற்கு சென்னையிலிருந்து பாத யாத்திரையாகச் சென்று கொண்டிருந்தனர். வழியெங்கும் கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்கு மகான்களின் அற்புத லீலைகளைப் பற்றியும் மகிமைகளைப் பற்றியும் விளக்கிக் கொண்டிருந்தார். அதனால் நேரம் போவதே தெரியாமல் பெரியவருடன் சிறுவன் குஷியாக நடந்து வந்து கொண்டிருந்தான்.

சிறுவன் வழக்கம்போல் கேள்விக் கணைகளைத் தொடுக்க பெரியவரும் அயராது அவைகளுக்கு மிகவும் சுவாரஸ்யமான பதில்களைக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

“ஏன் வாத்யாரே, நம்பிக்கை இருந்தால் எதையும் சாதிச்சடலாம் என்று சொல்கிறார்களே. மத்தவங்க மேல் நம்பிக்கை வர்றது கஷ்டமா இருக்கலாம். ஆனா, குரு மேல் கூடவா நம்பிக்கை அவ்வளவு ஈசியா வராது,” என்று ஒரு பெரிய கேள்வியைக் கேட்டு விட்ட பாணியில் பெரியவரின் முகத்தை அண்ணாந்து பார்த்தான்.

பெரியவர் சிறுவனின் கண்களை ஊடுருவிப் பார்த்து ஒரு குறும்புப் புன்னகையை உதிர்த்தார்.

“ஆமா, ஆமா, குரு மேல் ஈசியா நம்பிக்கை வந்து விடுமே ”, என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

“உனக்கே என் மேல் நம்பிக்கை இல்லை. நீ குரு நம்பிக்கையைப் பற்றி பேச வந்து விட்டாயா?” என்பது போல் இருந்தது அவர் பார்வையும், அவர் குரலில் கலந்திருந்த ஏளனமும்,

சிறுவனுக்கு சுருக்கென்று உள் மனதில் ஏதோ தைப்பது போல் தோன்றியது. காரணம், சிறுவனுக்கும் ஆரம்பத்தில் பெரியவர் வாங்கித் தரும் கோலிக் குண்டு மிட்டாய், பரோட்டா, சாக்லேட், பஞ்சு மிட்டாய் போன்ற தின்பண்டங்களுக்காக அவர் பின்னால் சுற்றித் திரிந்தாலும் அவர் மேல் நம்பிக்கை என்னவோ வராமலே இருந்தது.

சிறுவனுடைய நம்பிக்கையை வலுப்படுத்துவதற்காக பெரியவரும் எவ்வளவோ இடங்களுக்கு அவனை அழைத்துச் சென்று பல மகான்களின் ஆசீர்வாதங்களையும் அவனுக்கு வாங்கித் தந்திருக்கிறார். அவற்றில் ஒன்றிரண்டு சம்பவங்கள் அவன் கண் முன் பளிச்சிட்டன.

ஒரு முறை சிறுவனை திண்டுக்கல் அருகே உள்ள ஒரு கிராமத்திற்கு அழைத்துச் சென்றார். சரியான ரோடு வசதி கூட இல்லாத ஒரு குக்கிராமம் அது. கோவணத்தை மட்டும் அணிந்து கொண்டு அங்கு ஒரு பெரியவர் வன்னி மரத்தடியில் அமர்ந்திருந்தார். அவரைச் சுற்றி பத்துப் பதினைந்து பேர் மேல் சட்டை இல்லாமல் அமர்ந்திருந்தனர். அவர்களைப் பார்த்தால் விவசாயிகள் போல் தோன்றியது.

ஸ்ரீகள்ளியடி சித்தர் ஜீவாலயம்
புதுப்பட்டி திண்டுக்கல்

சிறுவனையும் கோவணாண்டிப் பெரியவரையும் பார்த்த அவர் சட்டென்று எழுந்து பெரியவருக்கு வணக்கம் தெரிவித்தார். கோவணாண்டிப் பெரியவரும் “ஓம் நைனா,” என்று பதிலுக்கு வணக்கம் தெரிவித்து விட்டு அவருடன் உரையாடத் தொடங்கினார். ஆனால், இருவரும் என்ன பாஷையில் பேசினார்கள் என்று சிறுவனுக்குத் தெரியவில்லை. இதற்கு முன் பெரியவரின் இத்தகைய உரையாடல்களை ஒன்றிரண்டு முறை கேட்டிருக்கிறான். பெரியவர் அங்காளியிடம் பேசும் போது இத்தகைய வார்த்தைகளைக் கேட்டிருக்கிறான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறுவன் உஷாரானான். அங்காளியிடம் பேசுவது போல் இந்தக் கோவணாண்டி அந்தக் கோவணாண்டியிடம் பேசுகிறார் என்றால் அதுவும் பெரிய கோவணாண்டிபோல் தோன்றுகிறது. நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவர்கள் பேச்சில் நிச்சயம் ஏதாவது முக்கியமான விஷயங்கள் இருக்கும் என்று காதைத் தீட்டிக் கொண்டு அவர்களின் பேச்சைக் கூர்ந்து கவனிக்கலானான். சிறுவனைப் போலவே அருகில் இருந்தவர்களுக்கு அந்த இரண்டு கோவணாண்டிகள் பேசுவது என்னவென்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு இருவரையும் விநோதமாகப் பார்த்து தங்களுக்குள் ஏதோ பேசிக் கொள்ள ஆரம்பித்தனர்.

சற்று நேரம் கழித்து நமது கோவணாண்டிப் பெரியவர் சிறுவனை பார்த்து சைகை செய்தார். அதைப் புரிந்து கொண்ட சிறுவன் தடாலென அந்த கிராமத்துக் கோவணாண்டியின் காலில் விழுந்தான். அவரும் சிறுவனை வாரி அணைத்து அவன் தலையில் தனது இடது கையை சில நிமிடங்கள் வைத்திருந்து எடுத்து விட்டார். அதன் காரணத்தை பின்னால் பெரியவர் அவனுக்குத் தெரிவித்தார்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. பெரியவரும் சிறுவனும் அங்கேயே மர நிழலில் அமர்ந்தனர். வந்திருந்தவர்கள் தங்கள் உரையாடலைத் தொடர்ந்தனர்.

அதில் ஒருவன் கிராமத்துக் கோவணாண்டியிடம், “சுவாமி, நான் தங்களிடம் பத்து வருடமாக வந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எனக்குச் சொல்லும் எல்லா தெய்வீக காரியங்களையும் தட்டாமல் செய்து வருகிறேன். ஆனால், என்னுடைய மனைவியோ எனக்கு எதிர்ப்பதமாக இருக்கிறாள். அவளுக்கு கொஞ்சம் கூட சுவாமி பக்தியே இல்லை. உங்களைப் பார்ப்பதற்காக வரும்படி எவ்வளவோ முறை சொல்லி விட்டேன். அவள் என்னுடைய பேச்சை கொஞ்சம் கூட சட்டை செய்ய மாட்டேன் என்கிறாள். நீங்கள்தான் எப்படியாவது சொல்லி அவளை பக்தி மார்க்க்த்தில் ஈடுபடுத்த வேண்டும். நீங்கள் ஏதாவது வசிய மந்திரம் சொல்லித் தந்தால் அவளை வசியம் செய்து இங்கு கூட்டி வந்து அவளையும் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி விடுவேன். நீங்கள்தான் எப்படியாவது என்னுடைய மனைவிக்கு நல்வழி காட்ட வேண்டும்”, என்று கூறினார்.

இருகரங்களையும் கூப்பிய வண்ணம் அவர் பேசிய விதம் அவர் பெரியவரிடம் எந்த அளவிற்கு மரியாதை வைத்திருந்தார் என்பதை உணர்த்தியது. சிறுவன் அவரிடன் பக்தியைக் கண்டு மனம் உருகிப் போனான். அந்த விவசாயி பெரியவர் என்ன சொல்வாரோ என்று அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால், அவரோ அந்த விவசாயி சொல்வதை காதில் போட்டுக் கொள்ளாததுபோல் எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.

நேரமோ கழிந்து கொண்டிருந்தது. கூப்பிய கரங்களை தாழ்த்தாமல் அந்த விவசாயியும் பெரியவரைப் பார்த்துக் கொண்டே இருந்தான். பெரியவரோ வாய் திறப்பதாகத் தெரியவில்லை. இறுதியில் விவசாயி பொறுமை இழந்து, “சுவாமி, நான் போய் வருகிறேன். அடுத்த மாதம் வருகிறேன்,” என்று சொல்லி விட்டு பெரியவரிடம் இருந்து விடை பெற்றான்.

அவன் சென்ற பின் மற்றோர் விவசாயி பெரியவரிடம், “ஏன், சுவாமி, அவன் இவ்வளவு பக்தியுடன் தன்னுடைய மனைவிக்காக உங்களிடம் கேட்கிறான். நீங்கள் ஏதாவது ஒரு மந்திரம் அவனுக்கு சொல்லி அனுப்பி இருக்கலாமே,” என்று கேட்டான்.

பெரியவர், “போடா, அடி மண்டு. அவன் பெண்டாட்டிக்கு பக்தி வருவதற்கு மந்திரம் கேட்க வில்லை. அந்த மந்திரத்தை வைத்து அடுத்தவன் பெண்டாட்டியை எப்படி வசியம் செய்யலாம் என்பதற்காக என்னிடம் கேட்கிறான். அதற்காக பத்து வருடமாக தன் மனைவியைக் காரணம் காட்டி என்னிடம் அலைந்து கொண்டிருக்கிறான்,” என்றார்.

சிறுவனுக்கு தூக்கிவாரிப் போட்டது. “ஆஹா, அவனுடைய வெளித் தோற்றத்தை வைத்து அவன் பெரிய பக்திமான் என்று நினைத்து விட்டோமே. வெளித் தோற்றத்தை வைத்து யாரையும் எடை போட்டால் ஏமாந்து போய் விடுவோம் என்பதற்காகத்தான் வாத்தியார் இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கு கூட்டி வந்திருக்கிறார் போலிருக்கிறது,” என்று மனதிற்குள் கோவணாண்டிப் பெரியவருக்கு அர்ச்சனை செய்ய ஆரம்பித்தான்.

பெரியவர் வந்த வேலை முடிந்த திருப்தியில் அங்கிருந்து புறப்பட்டார். திரும்பி வரும்போதுதான் அந்தக் கிராமத்துக் கோவணாண்டிதான் கள்ளிப்பால் சித்தர் என்ற தெய்வீக ரகசியத்தைப் பெரியவர் வெளியிட்டார். கலியில் காமக் குற்றங்கள் பெருகும் என்பதால் இத்தகைய காமக் குற்றங்களைக் களையும் வழிமுறைகளை உபதேசிப்பதற்காக இறைவன் அனுப்பிய தூதுவர்களில் கள்ளிப்பால் சித்தரும் ஒருவர் என்று பெரியவர் கூறினார்.

சிறுவன், “ வாத்யாரே, ஒருவர் எந்த அளவிற்கு தெய்வீகத்தில் முன்னேறுகிறாரோ அந்த அளவிற்கு காம எண்ணங்களும் அதிகமாகும் என்று சொல்கிறார்களே, அது உண்மையா? ” என்று கேட்டான்.

பெரியவர், “இறைவனால் படைக்கப்பட்ட எல்லா உயிர்களுக்கும் தன்னுடைய சந்ததியை விருத்தி செய்து கொள்ள வேண்டும் என்ற தர்மம் இருக்கிறது. இதுவே எல்லா தர்மத்திற்கும் முதன்மையானது. சந்ததி விருத்தி என்ற தர்மம் தழைப்பதற்காகவே காமத்தை இறைவன் மனிதனின் மனதில் புகுத்தியுள்ளார். எனவே காமம் என்பதும் இறைவனின் பிரசாதமே. இறைவனை நோக்கி தவத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் தங்கள் சாதனையை எந்த அளவிற்கு தீவிரமாக்குகிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுடைய மனம் இறைவனிடம், நல்ல எண்ணங்களில், செயல்களில் குவிய ஆரம்பிக்கிறது. ”

“மனம் குவிந்தால் விந்து சுரக்கும். அதனால் காம எண்ணங்கள் மேலோங்கி நிற்பது இயற்கையே. அழுக்கான ஒரு கண்ணாடியைத் துடைத்து சுத்தம் செய்யும்போது அதில் காட்டும் உருவங்கள் தெளிவடைவது போல நல்ல எண்ணங்களை வளர்க்க வளர்க்க மனம் தெளிவடைகிறது. அதனால் அதில் பிரதிபலிக்கும் எண்ணங்கள் தெளிவடையும்போது எண்ணங்களில் ஒன்றான காம எண்ணமும் தெளிவடைகிறது. இதுவே உண்மை. ”

“மேலும், குண்டலினி யோகம் பயிலும்போது ஜீவ சக்தியானது மூலாதாரத்தை அடுத்து ஸ்வதிஸ்தான சக்கரத்தில் நிலை கொள்ளும்போது கட்டுக்கடங்காத காம எண்ணங்கள் பெருகும். கண்ணில் படும் பெண்களை எல்லாம் அடைய வேண்டும் என்று விபரீத ஆசை கட்டுக்கடங்காமல் கரை புரண்டு நிற்கும். இக்காரணம் பற்றியே தக்க சற்குருவின் துணை இன்றி குண்டலினி யோகத்தை யாரும் பயிலக் கூடாது என்ற விதிமுறை உள்ளது.”

பெரியவர் அளித்த இந்த அமுத மொழிகளின் மகத்துவத்தை சிறுவன் சில வருடங்கள் கழித்து உணர்ந்தான். சிறுவன் குண்டலினி யோகம் பயிலத் தொடங்கிய சில மாதங்களில் இத்தகைய வரம்பு கடந்த காம எண்ணங்கள் சிறுவனையும் பீடிக்கத் தொடங்கின. அப்போது பெரியவர் கள்ளிப்பால் சித்தரிடம் பெற்றுத் தந்த சக்தி அனுகிரகம்தான் அவனைக் காத்து தெய்வீகத்தில் முன்னேற உறுதுணை புரிந்தது.

கள்ளிப்பால் சித்தர் தன்னுடைய இடது கையை சிறுவனின் தலை மேல் வைத்து ஆசி வழங்கினார் அல்லவா? இவ்வாறு மகான்களின் இடது உள்ளங்கை ஸ்பரிசம் காமக் குற்றங்களைக் களையும் என்ற இரகசியத்தை அப்போதுதான் சிறுவன் உணர்ந்தான். இத்தையை அபூர்வ ஆசீர்வாத சக்திகளை பல வருடங்களுக்கு முன்னே பெரியவர் சிறுவனுக்குப் பெற்றுத் தந்தார் என்றால் தன்னுடைய சீடனின் ஆன்மீக முன்னேற்றத்தில் அவருக்கு எவ்வளவு ஆர்வம் இருந்திருக்கும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள்.

காஞ்சிப் பெரியவரும் இத்தகைய இடது கை ஆசீர்வாத சக்திகளை அவ்வப்போது அளிப்பது உண்டு. இதை சக்தி தரிசனம் என்று சித்தர்கள் அழைக்கிறார்கள். இத்தகைய சக்தி தரிசன உருவப் படங்களை இல்லங்களில் வைத்து வணங்குவதால் தேவையில்லாத, வரம்பு கடந்த காமக் குற்றங்களிலிருந்து விடுபடலாம்.

கள்ளிப்பால் சித்தரை தரிசனம் செய்த பின் பெரியவரும் சிறுவனும் திண்டுக்கல் அருகே உள்ள கசவனம்பட்டி என்னும் கிராமத்தை அடைந்தனர். இதன் இடையே சின்னாளப்பட்டி, தாடிக்கொம்பு உள்ளிட்ட பல திருத்தலங்களையும் தரிசனம் செய்தனர். கசவனம்பட்டியில் ஒரு அவதூது சித்தர் வாழ்ந்து வந்தார். அக்னி லோகத்திலிருந்து அவதாரம் கொண்ட அப்பெருந்தகை கசவனம்பட்டி சித்தர் என்றும் மௌன சுவாமிகள் என்றும் அக்கால மக்களால் அழைக்கப்பட்டார்.

பெரியவரும் சிறுவனும் அச்சித்தரைக் காணச் சென்றபோது அவரருகில் நிறைய பக்தர்கள் குழுமியிருந்தனர். பெரும்பாலும் அக்கம்பக்கம் கிராமத்திலிருந்து வந்து சித்தரின் தரிசனத்திற்காகக் காத்திருந்த வெள்ளை உள்ளம் கொண்ட அடியார்களாய்த் தோற்றமளித்தனர்.

ஆனால், கோவணாண்டிப் பெரியவரோ கசவனம்பட்டி சித்தரை நேருக்கு நேர் பார்க்கவில்லை. அவரும் இவர்களைக் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. “ஏன் ஒருவரை ஒருவர் கண்டு கொள்ளவில்லை?” என்று மூளையைக் கசக்கி யோசித்துப் பார்த்தான் வழக்கம்போல் யோசிக்க யோசிக்க குழப்பமே மிஞ்சியதால் பேசாமல் வெறுமனே பெரியவருடன் சேர்ந்து அருகில் உள்ள ஒரு மர நிழலில் அமர்ந்து கொண்டு அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான்.

மௌனத்தில் விளைந்த மாமறை

மௌன சித்தரிடம் பல பக்தர்கள் வந்து தங்கள் குறைகளைக் கூறி முறையிட்டனர். பெரும்பாலும் எந்தவித உணர்ச்சியையும் வெளிக் காட்டாமல் அமைதியாக எங்கோ பார்த்துக் கொண்டு அவர் அமர்ந்திருந்தார். கையில் ஒரு குச்சியை வைத்துக் கொண்டு தரையில் ஏதேதோ “கிறுக்கி” கொண்டிருந்தார். பின்னர்தான் சிறுவனுக்கு அந்த கிறுக்கல் ரகசியத்தைப் பெரியவர் வெளியிட்டார்.

ஒவ்வொருவருக்கும் பிறந்த ஜாதகம் இருப்பது போல தெய்வீக ஜாதகம் ஒன்று உண்டு. இதுதான் ஒரு உயிரின் ஆதி ஜாதகம். இதை சித்தர்கள் மட்டுமே படிக்க முடியும். ஒரு மனிதனின் தற்போதைய பிறவி இரகசியத்தைப் பற்றிய விஷயங்களை அந்த தெய்வீக ஜாதகத்திலிருந்து சித்தர்கள் கிரகித்து அதைத் தேவைப்படுகிறவர்களுக்கு தெரிவிக்க முடியும். மௌன சித்தர் இம்முறையில் தன்னிடம் வரும் அடியார்களின் பிறவி ரகசியங்களை இவ்வாறு அவருடைய வம்சா வழியில் உள்ள பித்ரு தேவதைகளுக்குத் தெரிவிக்கிறார். அதற்காக அவரால் பயன்படுத்தப்படுவது ஆத்ம சுத்தி விருட்சம் என்ற மூலிகை மரத்தின் வேராகும்.

ஸ்ரீகசவனம்பட்டி சித்தர் ஜீவாலயம்
கசவனம்பட்டி

கசவனம்பட்டியை அடுத்த பழனி மலையில் மட்டுமே இந்த அபூர்வமான ஆத்ம சுத்தி விருட்சம் காணக் கிடைக்கிறது. திறந்த மேனியுடன்தான் இந்த ஆத்ம சுத்தி விருட்ச சக்திகளை கிரகிக்க முடியும் என்பதால்தான் முருகப் பெருமானும் பாலகனாய்த் திறந்த மேனியுடன் கோவணாண்டியாய் இம்மலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிவதற்காக ஞானப் பழத்திற்காக கோபித்துக் கொண்டதாக ஒரு அற்புத லீலையையும் புரிந்தார். இன்றும் கசவனம்பட்டியிலிருந்து பழனி மலைக்கு பாத யாத்திரையாகச் சென்று திறந்த மேனியாய்க் கிரிவலம் வந்து அருள் பெறும் பக்தர்கள் ஏராளம்.

பழனி மலை மட்டும் அல்லாது மற்ற திருத்தலங்களிலும் அனைத்து கிரிவல வழிபாடுகளையும் திறந்த மேனியுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற கோட்பாடு இக்காரணத்தை ஒட்டி எழுந்ததே ஆகும்.  

தற்கால மொழியில் சொல்ல வேண்டுமானால் மௌன சித்தர் பயன்படுத்திய வேர் ஒரு எலக்ட்ரானிக் டிஜிட்டல் ஸ்டைலஸ் ஆகும். இவ்வாறு தரையில் எழுதப்பட்ட அந்த விஷயங்களை மூதாதையர்கள் கிரகித்து தன்னுடைய பரம்பரையில் தோன்றியவர்களுக்கு வரும் பிரச்னைகளுக்கு உரிய தீர்வை அளிக்கிறார்கள். அதனால் மௌனகுருவை தரிசனம் செய்தவர்கள் எத்தகைய கொடிய நோயால் வருந்தினாலும், எத்தகைய துன்பங்களை அனுபவித்தாலும் அவர்கள் இல்லம் திரும்பும்முன் அந்த பிரச்னைகள் விலகி விடும் அற்புதத்தை கண்ணாரக் கண்டு பெரு மகிழ்வு அடைந்தனர்.  

சிறுவன் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஒரு 40 வயது மதிக்கத் தக்க ஒருவன் ஓடி வந்து சித்தரின் பாதங்களில் விழுந்தான் “சாமி, எப்படியாவது நீங்கதான் இந்த பாவியைக் காப்பத்தனும்,” என்று கதறி அழுதான்.

அவன் உடம்பெல்லாம் ஒரே புண். பல புண்களிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அவனைச் சுற்றிலும் ஒரே துர்நாற்றம் வீசியது. சித்தரின் பக்கத்திலிருந்த பலரும் துர்நாற்றத்தைத் தாங்க முடியாமல் மெதுவாக எழுந்து தள்ளி நின்று கொண்டனர். சிலர் தங்கள் மூக்கை மூடிக் கொண்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டனர். அவ்வளவு கொடுமையானதாக இருந்தது அவன் நிலை.

சித்தர் அப்போது எழுந்த ஆரவாரம் எதையும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. வந்தவனோ தேம்பித் தேம்பி அழுதான். “ தப்புதான், நான் செய்த எல்லாமே தப்புதான். ஆனாலும், இப்போது என்னால் எதையும் தாங்கிக் கொள்ள முடியவில்லை,” என்று கதறிக் கதறி அழுதான்.

அப்போது யாரும் சற்றும் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ வந்த ஒரு மலைப் பாம்பு மிக வேகமாக வந்து அவனைச் சுற்றிக் கொண்டது. சுற்றிக் கொண்டதோடு மட்டுமல்லாமல் வேகமாக அவன் உடலை நெறிக்க ஆரம்பித்தது. அக்கம்பக்கத்திலிருந்த அனைவரும் சித்தரை விட்டு ஓடிப் போய்விட்டனர். யாரும் உதவிக்கு வர முன் வரவில்லை. பாம்பிடம் அகப்பட்டுக் கொண்டவனோ“சாமி, சாமி, அம்மா, அம்மா,” என்று கூவ ஆரம்பித்தான். சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. பெரியவர்களே பயந்து ஓடி ஒளியும்போது சிறுவன் என்ன செய்வான்.

எப்படியாவது நம்முடைய வாத்யார் அவனைக் காப்பாற்றி விடுவார், அவரிடம் சொல்வோம் என்று நினைத்து கோவணாண்டிப் பெரியவர் இருந்த இடத்தைப் பார்த்தான். ஆனால், என்ன ஆச்சரியம், அவர் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. எப்போது எங்கு சென்றார் என்று தெரியவில்லை.   சிறுவன் பயந்து அலறி விட்டான். இவ்வளவு நேரம் அவன் அருகிலேயே இருந்த பெரியவர் எங்கு போனார் என்று தெரியவில்லை.

ஒருபுறம் திக்குத் தெரியாத இடத்தில் இருக்கும் பயம். மறு பக்கம் இவ்வளவு பெரிய மலைப் பாம்பு ஒரு வேளை அந்த ஆளை விட்டு நம் பக்கம் திரும்பி விட்டால் நம்மை யார் காப்பாற்றுவார் என்ற பயம் வேறு. பெரியவர் இருந்தால் எவ்வளவு பெரிய பாம்பாக இருந்தாலும் பயப்படாமல் இருக்கலாம். சிறுவன் குழம்பித் தவித்தான்.

அப்போது மௌன சித்தர் யாரிடமோ எதோ சைகை காட்டுவது போல் தோன்றியது. அவர் பார்த்த திசையில் பெரியவர் ஒரு கொட்டாங்குச்சியை ஏந்திய வண்ணம் நின்று கொண்டிருந்தார். பெரியவரைக் கண்டவுடன்தான் சிறுவனுக்குப் போன உயிர் திரும்பி வந்தது போல் தோன்றியது.

அருகில் ஒரு சிறு ஓடை ஓடிக் கொண்டிருந்தது. அதிலிருந்து ஒரு கொட்டாங்குச்சி ஓட்டில் சிறிது நீரை எடுத்து வந்திருந்தார் பெரியவர். எப்போது தன்னை விட்டு அவ்வளவு தூரம் போனர். எப்படி தண்ணீர் எடுத்தார் என்ற விவரம் சிறுவனுக்கு சற்றும் புரியவில்லை. இதற்குள் பாம்பிடம் அகப்பட்டவனின் அலறல் உச்ச ஸ்தாயியை அடைந்து சட்டென நின்று விட்டது.

திடீரென மௌன சித்தரைச் சுற்றி இருந்த அனைவரும் மௌனமாக சிலையாய் ஆகி விட்டனர். காரணம் மலைப் பாம்பிடம் அகப்பட்டவன் இறுதி மூச்சை விட்டு விட்டான் என்று அனைவரும் ஒரு மனதாக எண்ணியதே அங்கு நிலவிய மௌனத்திற்குக் காரணம். சிறுவனும், நம்முடைய வாத்யார் பக்கத்திலிருந்தும் இவனைக் காப்பாற்ற முடியவில்லையே என்று நினைத்துக் கொண்டு மனதிற்குள் வேகமாக ”த்ரயம்பகம் யஜாமஹே….” என்ற மந்திரத்தை ஓத ஆரம்பித்தான். எவராவது இறந்து விட்டால் அவர்கள் ஆத்ம சாந்தி அடைவதற்காக சொல்ல வேண்டிய மந்திரம் அது.

சில நிமிடங்கள் கழிந்தன. கோவணாண்டிப் பெரியவர் கையில் உள்ள தீர்த்தத்தை மலைப் பாம்பின் மேல் தெளித்தார். அடுத்த கணம் சரேலென மலைப் பாம்பு எதிர் பக்கத்தில் தன் உடம்பைச் சுழற்றிக் கொண்டு அம்மனிதனை விட்டு விட்டது. வேகமாகத் திரும்பி ஊர்ந்து எங்கோ சென்று மறைந்து விட்டது. பாம்பிடம் அகப்பட்டவனின் கதி என்னவாயிற்று என்பது போல் அனைவரும் அவனைப் பார்த்தான்.

ஆனால், அங்கு ஒரு பெரிய ஆச்சரியம் அனைவருக்கும் காத்திருந்தது. அவன் ஏதோ தூக்கத்திலிருந்து எழுவது போல் எழுந்து உட்கார்ந்தான். அவன் உடம்பில் காயங்கள் இருந்த சுவடே தெரியவில்லை. அவனுடைய உடம்பிலிருந்து ஒரு தெய்வீக ஒளி வீசியது. சந்தனத்தின் நறுமணம் கமழ்ந்தது. சிறுவனுக்குத் தன் கண்களையே நம்ப முடியவில்லை.

அனைவரும், “மௌனகுரு வாழ்க, அரோஹரா, அரோஹரா,” என்று கோசமிட்டனர். சிறுவனும் அவர்களுடன் சேர்ந்து அரோஹரா கோசமிட்டு முருகப் பெருமானுக்கும் அந்த சித்தர் பெருமானுக்கும் நன்றி செலுத்தினான்.

அதன் பின்னர் பெரியவர் சிறுவனிடம், “இவர்தாண்டா கசவனம்பட்டி சித்தர். அக்னி லோகத்திலிருந்து வந்தவர். புகை பிடித்தல், பொய் சொல்லுதல், பிறர் மனைவிகளை நேசித்தல் போன்ற அக்னிக் குற்றங்களுக்குப் பிராயசித்தம் தரக் கூடிய ஒரே மகான்,” என்று அவரைப் பற்றிய ரகசியங்களை விவரித்தார். அதைக் கேட்டவுடன் சிறுவன் மனதில் ஒரே குறுகுறுப்பு. “நம்ம பெரியவரே இவ்வளவு சர்டிபிகேட் தருகிறார் என்றால் இவர் பெரிய மகானாகத்தானே இருப்பார். இவரிடம் இருந்தால் சீக்கிரம் நிறைய விஷயங்களைத்தான் தெரிந்து கொள்ளலாமே?” என்று சிறுபிள்ளைத்தனமான எண்ணம் தோன்றியது.

அதை வாய் விட்டுப் பெரியவரிடம் கேட்டும் விட்டான். “வாத்யாரே, நீ கோபித்துக் கொள்ளாவிட்டால் உன்னிடம் ஒரு விஷயம் கேட்கட்டுமா?” என்று தயங்கித் தயங்கிக் கேட்டான்.

பெரியவரும் ஒன்றும் அறியாதவர் போல, “ என்னடா ராஜா, என்ன வேணும்? பஞ்சு மிட்டாய் வாங்கித் தரட்டுமா?” என்று தூரத்தில் நின்று ஒரு பஞ்சு மிட்டாய்க்காரனைப் பார்த்துக் கேட்டார்.

சிறுவன் தலையை ஆட்டி விட்டு, “இல்லை வாத்யாரே, இவரைப் பார்த்தால் ஒரு பெரிய மகான் போலத் தெரிகிறது. இங்கேயே இருந்தால் நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் என்று தோன்றுகிறது. நான் இவரிடமே தங்கி விடட்டுமா?” என்று பெரியவரின் கையைப் பிடித்துக் கொண்டு கேட்டான்.

பெரியவர் பெரியதாகச் சிரித்து விட்டு, “பூ…. இதுதானா விஷயம். உண்மையிலேயே இவர் என்னைவிட ஒரு பெரிய மகான்டா. ரொம்பப் பெரிய சித்தரு. நீ இவருக்கிட்ட இருந்தா வாஸ்தவமாகவே நெறய தெரிஞ்சுக்கலாம்,” என்று சொல்லி சிறுவனின் கையை உதறி விட்டு விட்டு வேகமாக அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்.

சிறுவன் அதிர்ந்து போனான். “நாம் பெரியவருக்குப் பிடிக்காத வார்த்தைகளைச் சொல்லி விட்டோமா?” என்று யோசித்தான். யோசித்துப் பார்த்ததில் ஒரு விஷயம் அவனுக்குத் தெரிய வந்தது. பெரியவர் எப்போதுமே சிறுவனின் ஆன்மீக முன்னேற்றத்தில் மிகவும் அக்கறை கொண்டிருந்தார். இப்போது சிறுவனும் தன்னுடைய ஆன்மீக முன்னேற்றத்திற்காகத்தானே கசவனம்பட்டி சித்தரிடம் சரண் அடையலாம், என்று நினைத்திருக்கிறான். அதனால் அவன் வீணாகக் கவலைக் கொள்ள வேண்டாம், என்று நினைத்து பெரியவர் சென்ற திசையை நோக்கி அவர் திரும்பிப் போவதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

மனதினுள் அவர் தன்னைத் திரும்பிப் பார்ப்பார் என்ற சபலம் வேறு தோன்றியது. கண் கொட்டாமல் அவர் வேகமாக நடந்து போவதை பார்த்துக் கொண்டிருந்தான். அவர் உருவம் முற்றிலும் மறைந்த பின் ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு கசவனம்பட்டி சித்தரை நோக்கிச் சென்றான். இப்போது பெரும்பாலான பக்தர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். ஒரு சிலரே அவரருகில் நின்று, அமர்ந்து கொண்டிருந்தனர்.

சிறுவன் மெதுவாக அவர் அருகில் சென்று இரு கைகளையும் குவித்து, ஓம் என்று கூறி வணங்கினான். வழக்கம்போல் மௌன சித்தர் அவன் இருப்பதையே கவனிக்காததுபோல் எங்கோ பார்த்த வண்ணம் இருந்தார். மறுமுறையும் சிறுவன், “ஓம், சுவாமி,” என்று வணங்கினான். மீண்டும் அமைதி.

சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்றும் புரியாமல் அவர் பாதத்தில் அமர்ந்து கொண்டான். சில நிமிடங்கள் கழிந்தன. மூன்றாம் முறையாக அமர்ந்தவாறே “ஓம்” என்று அழைத்து அவரை வணங்கினான். ஆனால், சித்தரிடம் எந்த சலனமும் தோன்றவில்லை.

சிறுவன் செய்வதறியாது அவர் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். நிமிடங்கள் கழிந்து, இரண்டு மணி நேரமும் கழிந்தது. வந்த பக்தர்கள் ஒவ்வொருவராக அங்கிருந்து செல்ல ஆரம்பித்தனர். இறுதியில் மௌன சித்தரிடம் சிறுவன் மட்டுமே இருந்தான்.

மாலை நேரம் கடந்து இருள் சூழ ஆரம்பித்தது. சிறுவனுடைய நிலை பரிதாபமாகப் போய் விட்டது. “எதற்குமே இந்த சித்தர் பதிலளிக்காமல் இருக்கிறாரே? நம்முடைய வாத்யாராக இருந்தால் இந்நேரம் எவ்வளவு கேள்விகள் கேட்டிருப்போம்.அவரும் அசராமல் நம்முடைய அசட்டுத்தனமான கேள்விகளுக்கெல்லாம் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருப்பாரே?” என்று பெரியவரை நினைத்து ஏங்க ஆரம்பித்தான்.

சில நிமிடங்கள் கழித்து மௌன சித்தர் சிறுவனைப் பார்த்தார். அவர் பார்வையில் இருந்த தீட்சண்யத்தை சிறுவனால் தாங்க முடியவில்லை. இருந்தாலும் மௌனமாக அவர் கண்களிலிருந்து வந்த பிரகாசமான ஒளியைத்  தொடர்ந்து தரிசனம் செய்தான். இந்த ஒளிப் பரிமாற்றத்திற்குப் பின் மௌனசித்தர் சில சைகைகளைக் காட்டினார்.

முதலில் சிறுவனுக்கு அவர் சைகைகளின் அர்த்தம் புரியவில்லை. சிறிது நேர ஆழ்ந்த யோசனைக்குப் பின்னரே அந்த மகானின் சைகை ரகசியம் புரிந்தது. அவர் சிறுவனுக்குத் தெளிவு படுத்திய விஷயம் இதுதான்.

கோவணாண்டிப் பெரியவர்தான் சிறுவனுக்கு ஏற்ற சற்குரு. அவரைத் தொடர்ந்து சென்று அவர் சொல்படி கேட்டால்தான் அவனுக்கு ஆன்மீக முன்னேற்றம் ஏற்படும். சிறுவனைக் கடைதேற்றுவதற்காக எம்பெருமான் கோவணாண்டி வடிவத்தில் பூலோகத்தில் எழுந்தருளியிருக்கிறார். கிடைத்த இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் இருப்பதில்தான் சிறுவனின் புத்திசாலித்தனம். இருக்கிறது.

இந்தப் பேருண்மையை உணர்ந்து கொண்டவுடன் சிறுவன் மௌனகுருவின் காலடிகளில் வீழ்ந்து வணங்கினான். அடுத்த விநாடி சாவி கொடுத்த பொம்மை போல் சடாரென அவர் திருவடிகளிலிருந்து எழுந்து பெரியவரைத் தேடிக் கொண்டு அவர் சென்ற திசையில் ஓட ஆரம்பித்தான்.

அதிர்ஷ்டவசமாக அவன் பெரியவரைத் தேடுவது எளிமையான காரியமாக அமைந்தது. கசவனம்பட்டி கிராமம் திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து உள்ளடங்கி இருந்ததால் கிராமத்திலிருந்து புறப்பட்டு நெடுஞ்சாலையை அடைவதென்றால் பல மணி நேரம் நடந்து செல்ல வேண்டியிருக்கும். எனவே அந்த சாலையில் வேகமாக ஓடினால் பெரியவரை நிச்சயம் பிடித்து விடலாம் என்ற மனக் கணக்கில் சிறுவன் தன்னை மறந்து இருட்டில் ஒற்றையடிப் பாதை வழியாக ஓடிக் கொண்டிருந்தான்.

அக்காலத்தில் கசவனம்பட்டி கிராமத்திற்கு தற்போது உள்ளது போல் தார் ரோடு கிடையாது. வெறும் மண் ரோடுதான். அதில் இரட்டை மாட்டு வண்டிகள் அடிக்கடி போனதால் அங்கங்கே மேடு பள்ளங்கள் நிறைந்திருந்தன. சிறுவனுக்கு இருட்டில் மேடுபள்ளங்கள் தெரியாததால் அடிக்கடி தடுமாறி விழுந்து கைகால்களில் சிராய்ப்புகள் ஏற்பட்டன. இருந்தாலும் எப்படியாவது பெரியவர் பழனி நெடுஞ்சாலையை அடையுமுன் அவரைப் பிடித்து விட வேண்டும் என்ற முயற்சியில் சிறுவன் தொடர்ந்து வேகமாக ஓட ஆரம்பித்தான்.

சிறுவனுக்கு அந்த ஆபத்துக் காலத்திலும் உதவி செய்வது போல் தூரத்தில் ஒரு இரட்டை மாட்டு வண்டியின் விளக்கொளி தெரிந்தது. மாடுகளின் கழுத்தில் உள்ள ஜல் ஜல் மணி ஓசை அவ்வளவு தூரத்திலும் தெளிவாகக் கேட்டதால் சிறுவனுக்கு அது ஒரு புதுத் தெம்பை அளித்தது. இருட்டில் வேறு எதையும் கவனிக்காமல் அந்த இரட்டை மாட்டு வண்டியின் லாந்தர் விளக்கொளியையும் மாடுகளின் மணி ஓசையையும் கேட்டுக் கொண்டே வேகமாக பெரிவரைப் பற்றி நினைவு அலைகளில் மூழ்கியவாறே ஒரு வழியாக கிட்டத்தட்ட பிரிவுச் சாலை அருகே வந்து விட்டான்.

பிரிவுச் சாலையை வந்தடைந்ததும் ஒரு சடன் ப்ரேக் போட்டு நின்றான். அந்த கும்மிருட்டில் ஒரு சிலர் தீ மூட்டி குளிர் காய்ந்து கொண்டிருந்தனர். அவர்கள் அருகே யாரோ ஒருவர் சுவாரஸ்யமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார். குளிர் காய்ந்து கொண்டிருந்தவர்கள் மகுடிக்குக் கட்டுப்பட்ட பாம்புபோல அவரை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டு அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

சிறுவன் கண்களைக் கசக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தான்.

அங்கு மகுடி ஊதியது வேறு யாரும் அல்ல. கோவணாண்டிப் பெரியவர்தான் அங்குள்ள கிராமத்து மக்களிடம் பேசிக் கொண்டிருந்தார். ஆச்சரியம், கோபம், வருத்தம், அசதி என பல்வேறு உடல் மன உபாதைகள் சிறுவனை ஒரு சேரத் தாக்க சிறுவன் மிகவும் தளர்ந்து போனான். படபடக்கும் இதயத்தையும், புயல் வேகத்தில் வந்த சுவாசக் காற்றையும் மெல்ல மெல்ல சீர்படுத்திக் கொண்டான்.

ஸ்ரீதொழுப்பேடு சித்தர் ஜீவாலயம்
தொழுப்பேடு

சில நிமிடங்கள் கழித்து மெதுவாக பெரியவரின் பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவர் காதில் மட்டும் கேட்கும் அளவிற்கு தாழ்ந்த குரலில், “என்னை மன்னித்து விடு, வாத்யாரே ”, என்று பணிவுடன் கூறினான். பெரியவர் வழக்கம் போல் ஒரு பொருள் பொதிந்த பார்வையை அவன் பக்கம் வீசி விட்டு தன்னுடைய கோவணத்திலிருந்து புட்பால் சைஸில் ஒரு பஞ்சு மிட்டாயை எடுத்து சிறுவனிடம் கொடுத்தார்.

“உன்னை மாதிரி சோத்து மூட்டை சுப்பராயுடுவுக்கு என்னை மாதிரி ஆள்தான்டா லாயக்கு, ” என்று சொல்வது போல் அவருடைய செய்கை இருந்ததாக சிறுவனுக்குத் தோன்றியது.
உங்களுக்கு என்ன தோன்றுகிறது ?

இவ்வாறு கசவனம்பட்டி சித்தர், கள்ளிப்பால் சித்தர், பாடகச்சேரி ராமலிங்க சுவாமிகள், பூண்டி மகான், தொழுப்பேடு சித்தர் என பல சித்தர் பெருமக்களிடம் சிறுவனை கோவணாண்டிப் பெரியவர் அழைத்துச் சென்றார். இவ்வாறு ஒவ்வொரு மகானைக் காணும்போதும் சிறுவனுக்கு அவர்களிடம் இருந்து விடலாமே என்ற எண்ணம் தோன்றும். சிறுவனின் எண்ணப்படியே கோவணாண்டிப் பெரியவரும் அவர்களிடமே சிறுவனை விட்டு விட்டு வந்து விடுவார்.

ஆனால், பின்னர்தான் சிறுவனுக்குத் தெரிய வந்தது. தனக்கு உகந்த உத்தம குரு கோவணாண்டிப் பெரியவர் ஒருவரே. வேறு யாரும் தன்னை கரையேற்ற முடியாது, என்ற உண்மையை தெளிவாக உணர்வதற்கு சிறுவனுக்கு ஒன்பது வருடங்கள் தேவைப்பட்டன.

எல்லையில்லா குரு கருணை

எனவே குருவின் மேல் நம்பிக்கை என்பது அவ்வளவு எளிதில் வரக் கூடியது அல்ல. பல ஜன்மங்கள் தொடர்ந்து உடலும், மனமும், உள்ளமும் குருவின் சேவையில் தேய்ந்தால்தான் குருவின் மேல் ஓரளவாவது நம்பிக்கை துளிர்க்கும். அந்த நம்பிக்கையுடன் கண் மூடித் தனமாக குருவைத் தொடர்ந்தால் அவர் மண் மூடிப் போகாத நித்திய வாழ்வை அளிப்பார்.

குருவின் கருணைக்கு எல்லையே கிடையாது. இதை தெளிவாக்குகிறது 1980 ஆண்டு நடந்த ஒரு நிகழ்ச்சி.

அப்போது நமது குருநாதர் வெங்கடராம சுவாமிகள் சென்னை புறநகர்ப் பகுதி ஒன்றில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஒவ்வொரு வருடமும் திருக்கார்த்திகை தீபத்தின்போது பத்து நாளைக்கு தொடர்ந்து அன்னதான கைங்கர்யத்தை திருஅண்ணாமலையில் அடியார்கள் பலருடன் சேர்ந்து நிகழ்த்தி வந்தார்கள். தனியார் நிறுவனம் ஒன்றில் பணி புரிந்த நம் குருநாதர் அவர்கள் தன்னிடம் இருந்த சிறுஅளவு சேமிப்புத் தொகையைக் கொண்டுதான் ஆயிரக் கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வந்தார்கள். அதனால் ஒவ்வொரு கார்த்திகை தீபத்தின்போதும் அடியார்கள் தங்களால் இயன்ற சிறு காணிக்கையை அளித்ததுடன் தங்களுக்கு அறிமுகம் ஆனவர்களிடம் ஏதாவது கடன் வாங்கி நமது குருநாதரிடம் அளிப்பார்கள். அவ்வாறு குறைந்த வட்டிக்கு கிடைக்கும் தொகையையும் வைத்துதான் அன்னதான கைங்கர்யத்தை நிகழ்த்தி வந்தார்கள்.

கார்த்திகை தீப உற்சவத்திற்குப் பின் ஒவ்வொரு மாதமும் கொஞ்சம் கொஞ்சமாக தான் கடன் வாங்கிய பணத்தை வட்டியுடன் சேர்த்துத் திருப்பித் தந்து விடுவார். இது பல வருடங்களாக நடந்த விஷயம். குருநாதருடன் நெருங்கிப் பழகிய ஒரு சில அடியார்களுக்கு மட்டும்தான் இந்த ரகசியம் தெரியும். ஒரு முறை ஒரு அடியார் அவ்வருட தீப செலவுக்காக ஐயாயிரம் ரூபாய் ஒருவரிடம் வாங்கி வாத்தியாரிடம் தந்திருந்தார். தீப உற்சவம் முடிந்து சில மாதங்கள் கழிந்தன.

ஒரு நாள் இரவு எட்டு மணி இருக்கும். நமது குருநாதர் வழக்கம் போல் தான் வழக்கமாக பூஜை செய்யும் சிவலிங்கத்திற்கு தன்னுடைய வீட்டிலேயே அபிஷேக ஆராதனைகள் செய்து கொண்டிருந்தார். திடீரென அவர் அபிஷேகம் செய்து கொண்டிருந்த சிவலிங்கம் கண்ணிலிருந்து மறைந்து விட்டது. குருநாதர் யோசித்தார். இவ்வாறு ஒருவர் பூஜை செய்யும்போது சிவலிங்கம் கண்ணிலிருந்து மறைந்தால் யாரோ ஒருவருடைய உயிருக்கு ஆபத்து நேர இருக்கிறது என்பது தெய்வீக ரகசியம்.

இந்த உண்மையை உணர்ந்த நம் குருநாதர் யாருடைய உயிருக்கு ஆபத்து என்று தீவிரமாக யோசிக்கத் தொடங்கினார். அவருக்கு சில காட்சிகள் தென்பட்டன. அதை வைத்து ஒரு முடிவுக்கு வந்தவராய் பூஜையை அத்துடன் நிறைவு செய்து விட்டு சுவாமியிடம் உத்தரவு பெற்றுக் கொண்டு, மேல் சட்டையை வேகமாக அணிந்து கொண்டு வீட்டைப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்பட்டார்.

அந்நாட்களில் குருநாதரிடம் இரண்டு சக்கர வாகனமோ, சைக்கிளோ கூட கிடையாது. எங்கு சென்றாலும் நடந்தேதான் செல்வது வழக்கம். அவருடைய நடையோ சாதாரண மனிதனின் ஓட்டத்திற்கு இணையான வேகத்துடன் இருக்கும்.

வழக்கத்தை விட வேகமாக நடந்து வந்து சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு வீட்டின் முன் நின்றார். இரண்டு மணி நேரத்தில் தன்னுடைய வீட்டிலிருந்து அங்கு வந்து விட்டார் என்றால் அவருடைய நடை வேகத்தை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஜன சஞ்சாரமில்லாத அமைதியான ஒரு சாலையில் அந்த வீடு அமைந்திருந்தது. இரவு மணி பத்தாகி விட்டதால் எங்கும் நிசப்தம். தூரத்தில் ஒரு நாய் குரைக்கும் சப்தம் கேட்டது.

மனிதனின் இறுதிக் காலத்தை உணரும் வல்லமை பெற்றவைகள் நாய்கள். தூரத்தில் கேட்ட நாயின் குரலை வைத்து தான் சரியான இடத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டார். பின்னர் அமைதியாக வீட்டு வாசலை நெருங்கிச் சென்று அது திறந்திருக்கிறதா என்று பார்த்தார். வாசல் கதவு இரும்பாலானது. அது உள் பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. பக்கத்தில் அழைப்பு மணி ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தார். ஒன்றையும் காணவில்லை.

வீட்டிற்குள் யாராவது தென்படுகிறார்களா, அவர்களை அழைக்கலாம் என்று பார்த்தார் ஆனால், வீட்டில் எங்கும் விளக்கு வெளிச்சம் தெரியவில்லை. உண்மையில் அதை வீடு என்று சொல்ல முடியாது. கிட்டத்தட்ட பத்துப் பதினைந்து அறைகள், மூன்று மாடிகள் கொண்ட ஒரு பெரிய பங்களா. எந்த அறையிலிருந்தும் விளக்கு வெளிச்சத்தைக் காண முடியவில்லை. மூன்றாவது மாடியில் ஒரே ஒரு அறையில் மட்டும் விளக்கு வெளிச்சம் தெரிந்தது.

குருநாதர் சற்று நேரம் யோசித்தார். சுற்றும் முற்றும் பார்த்து விட்டு காம்பவுண்ட் சுவர் மேல் ஏறி மறுபக்கம் வீட்டிற்குள் குதித்தார். யாராவது சப்தம் எழுப்புகிறார்களா என்று காத்திருந்து பார்த்தார். வீட்டிற்குள் ஏதாவது நாய் குரைக்கிறதா என்று கவனித்தார். எந்த விதமான சந்தடியும் எழவில்லை என்பதை உறுதி செய்து கொண்டபின் அங்கிருந்து முன்னேறி வீட்டு முன்வாயிலை அடைந்தார், அங்கிருந்து அழைப்பு மணியை இயக்கினார். வீட்டிற்குள் மணி அடிக்கும் சப்தம் தெளிவாகக் கேட்டது.

சற்று நேரம் பொறுத்துப் பார்த்தார். ஆனால், யாரும் வெளியே வரவில்லை. உள்ளிருந்தும் குரல் எழுப்பவில்லை. மீண்டும் அழைப்பு மணியை அழுத்தினார். திரும்பவும் நிசப்தம். மூன்றாம் முறையாக அழைப்பு மணியோசை எழுப்பினார். அதற்கும் அமைதிதான் பதிலாக வந்தது.

சிறிது நேர சிந்தனைக்குப் பின் குருநாதர் அங்கிருந்து வெளி வந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தார். அறை ஏதும் திறந்திருக்கிறதா என்று பார்த்தார். எல்லா அறைகளும் உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு அறையையும் கவனித்துக் கொண்டே வந்தார். அப்போது மாடிக்கு தண்ணீர் சப்ளை செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு இரும்பு பைப்பின் மேல் அவர் பார்வை பட்டது. உடனே ஒரு முடிவுக்கு வந்தவராய் காலிலிருந்து செருப்பைக் கழற்றிப் போட்டு விட்டு விடுவிடுவென அந்த பைப் வழியாக மேலே ஏற ஆரம்பித்தார்.

முன்பே பழக்கப்பட்டவர் போல பைப் வழியாக ஏறி மூன்றாவது மாடியை அடைந்தார். திறந்திருந்த மாடி ஜன்னல் வழியாக உள்ளே பார்த்தார். அறை உள்பக்கமாக தாளிடப்பட்டு இருந்தது. அறையில் யாரும் இல்லை. எழுபது வயது மதிக்கத் தக்க ஒரு பெரியவர் மட்டும் சோபா ஒன்றில் குருநாதருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் முன்னே உள்ள டீப்பாயில் ஒரு பிளேட்டில் சில மாத்திரைகள் இருந்தன,  அவருடைய இடது கையில் ஒரு கண்ணாடி டம்ளரில் முக்கால் பாகத்திற்கு நீர் இருந்தது, வலது கையில் பிரித்த ஒரு மாத்திரையை எடுத்து அதை வாயில் போடத் தயாரான நிலையில் இருந்தார்.

நொடிப் பொழுதில் இந்தச் சூழ்நிலை அனைத்தையும் கவனித்த நம் குருநாதர் உடனே ஜன்னல் வழியாக அறைக்குள் குதித்து பெரியவரின் பின் புறமாகச் சென்று அவருடைய வலது கையைப் பிடித்துக் கொண்டு, “தயவு செய்து அதைச் செய்யாதீர்கள்,” என்று பெரியவர் மாத்திரையை வாயில் போடாமல் தடுத்து நிறுத்தினார். அந்தப் பெரியவருக்கு ஒன்றும் புரியவில்லை.

அறை உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. எப்படி நம் குருநாதர் அந்த அறைக்குள் வந்தார் என்று அவருக்குப் புரியவில்லை.

உடனே, “நீ யாரப்பா, எங்கிருந்து வருகிறாய், எதைச் செய்ய வேண்டாம் என்று சொல்கிறாய்?” என்று கேட்டார்.

குருநாதர் பெரியவரைப் பார்த்தார். அவர் நெற்றியில் பதிந்திருந்த கவலை ரேகைகளைக் கூர்ந்து கவனித்தார். “நீங்கள் இப்போது தற்கொலை செய்து கொள்ளப் போகிறீர்கள். அதைத்தான் செய்ய வேண்டாம் என்று கூறுகிறேன்,” என்று பதிலளித்தார் குருநாதர்.

“ நீ யார், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று உனக்கு எப்படித் தெரியும்?” என்று வினவினார் பெரியவர்.

“ அடியேன் கடவுளின் தூதுவன். உங்களைக் காப்பாற்ற கடவுள் அடியேனை இங்கு அனுப்பி உள்ளார். தயவு செய்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தைக் கை விட்டு விடுங்கள்,” என்று கெஞ்சும் பாவனையில் தொடர்ந்தார்.

 “நீ கடவுளின் தூதுவன் என்று எப்படி ஒத்துக் கொள்வது? ”

“ நள்ளிரவு நேரம். வீட்டில் உங்களைத் தவிர யாரும் இல்லை. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது உங்கள் அருகில் ஒருவர் இருந்தால்கூட அவருக்குத் தெரியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் 20, 30 மைல் தூரத்தில் இருந்து அடியேன் உங்களைக் கவனித்து நீங்கள் தற்கொலை செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று அறிந்து பூட்டிய வீட்டிற்குள் நீங்கள் அறியாமல் நுழைந்து உங்களைக் காப்பாற்ற வந்திருக்கிறேன் என்றால் இதிலிருந்தே அடியேன் கடவுளின் தூதுவன் என்பது விளங்கவில்லையா? ”

குருநாதரின் வார்த்தைகளில் இருந்து உண்மையும் உறுதிப்பாடும் பெரியவரைக் கவர்ந்தன. குருநாதரை மௌனமாக உற்று நோக்கினார். மெதுவாக தன்னுடைய கைகளில் இருந்த மாத்திரையையும், தண்ணீரையும் டீப்பாயின் மேல் வைத்து சோபாவில் சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

அதன் பின் குருநாதர் தான் யார் என்பதையும் தான் நிறைவேற்றும் தெய்வீகக் காரியங்களைப் பற்றியும் அந்தப் பெரியவரிடம் சற்று நேரம் விவரித்தார். அதனால் சிறிது சிறிதாக குருநாதரின் வார்த்தைகள் மேல் நம்பிக்கை வேரூரன்றத் தொடங்கியது.

அதற்குப் பின் பெரியவர் தன்னுடைய செயலுக்கான காரணத்தை விவரிக்கத் தொடங்கினார்.

“ நான் என்னுடைய அப்பா காலத்திலிருந்து ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். சென்னையில் உள்ள பிரபலமான கடை (பெயர் இங்கு குறிப்பிடப்படவில்லை) எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தது. மிகவும் கௌரவமாக வாழ்ந்து வருகிறோம். ஏழு ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் வங்கியில் மூன்று லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அவருக்காக நான் ஜாமீன் கைபெழுத்து போட வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது. விதிவசமாக மூன்று வருடங்களுக்கு முன் என்னுடைய நண்பர் விபத்து ஒன்றில் காலமாகி விட்டார். அதனால், அவருடைய வியாபாரம் நலிந்து போய் வங்கிக் கடனைத் திருப்பித் தர முடியாமல் போய்விட்டது. ”

“கடனுக்கு ஜாமீன்போட்ட நான் பதில் சொல்லும்படி ஆகிவிட்டது. இன்று என்னுடைய சொத்து ஏலத்திற்கு வந்து விட்டது. நாளைக் காலையில் கோர்ட்டு திறக்கும்போது ஐந்து லட்ச ரூபாய் கோர்ட்டில் கட்டி விட்டால் இந்த இக்கட்டான சூழ்நிலையிலிருந்து மீண்டு விடலாம். நானும் எனக்குத் தெரிந்த உறவினர்கள், நண்பர்கள் அனைவரிடமும் கேட்டு விட்டேன். என்னுடைய துரதிர்ஷடமோ என்னவோ யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை, ”

“என் மானமே பறி போகும் இந்நிலையில் உயிரை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியவில்லை. ஒரு வாரம் கழிந்தால் போதும் ஐந்து லட்சம் என்ன ஐம்பது லட்சத்தைக் கூட புரட்டி விடுவேன். நாளைக் காலையே பணம் வேண்டும் என்பதால்தான் நான் இந்த அவசர முடிவை நாடி வேண்டி இருக்கிறது. ”

குருநாதர், “ வெறும் ஐந்து லட்ச ரூபாய் பணத்திற்காக பெறுதற்கரிய உயிரை யாராவது மாய்த்துக் கொள்வார்களா? நீங்கள் ஒன்றும் பயப்பட வேண்டாம். தைரியமாக நாளை கோர்ட்டுக்கு செல்லுங்கள், அடியேனும் அங்கு வருகிறேன். நீதிபதி உங்களை விசாரிக்கும்போது ஒரு மாத காலம் அவகாசம் கேளுங்கள், மற்றதை கடவுள் பார்த்துக் கொள்வார், ” என்றார்.

அந்தப் பெரியவருக்கு ஒரு புறம் மட்டிலா மகிழ்ச்சி, மறுபுறம் இது நடக்குமா என்ற ஐயப்பாடு. குருநாதர் தொடர்ந்தார், “ சுவாமி, நீங்கள் கடவுளை நம்பி இந்தக் காரியத்தைச் செயல்படுத்துங்கள், அடியேனுடைய குருநாதர் உங்களைக் கை விடமாட்டார், ” என்று தைரியம் வழங்கவே அந்தப் பெரியவரும் நம்முடைய குருநாதரின் வார்த்தைகளை நம்பி மறுநாள் கோர்ட்டில் அவ்விதமே கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிக்கு அந்தப் பணக்காரரின் செல்வாக்கைப் பற்றி நன்றாகத் தெரியும். அவரும் பெரியவர் எதிர்பார்த்ததற்கு மேல் கடனைத் திருப்பிக் கொடுக்க மூன்று மாத கால அவகாசத்தை வழங்கி வழக்கை ஒத்தி வைத்தார்.

பின்னர் நடந்த அதிசயங்களை உங்களுக்கு விவரிக்க வேண்டுமா என்ன?

ஆனால், உங்களுக்குச் சொல்ல வேண்டிய அதிசயம் என்னவென்றால் அந்தப் பணக்காரப் பெரியவர் யார் என்பதுதான். அவர் வேறு யாருமல்ல. அந்த வருட கார்த்திகை தீப உற்சவ அன்னதான வைபவத்திற்காக ஒரு அடியாரிடம் ஐயாயிரம் ரூபாய் கடன் கொடுத்த தனவான்தான் அவர் !!

ஒரு நல்ல காரியத்திற்காக ஏதோ சிறிதளவு கடன் கொடுத்த ஒருவரின் உயிரையே குருநாதர் காப்பாற்றுகிறார் என்றால் நல்ல காரியத்தில் அவருடன் தோள் கொடுக்கும் அடியார்களுக்கு என்னவெல்லாம் அவர் அருள்வார் என்பதை சற்றே எண்ணிப் பாருங்கள்.

                ஓம் குருவே சரணம்

தொடரும் நிவாரணம் ...

 

 

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam