![]() |
![]() |
![]() |
ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்
நம் சற்குரு இப்பூவுலகில் தோன்றியதற்கான காரணங்கள் எத்தனை எத்தனையோ, அவற்றை நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் பகுத்துணர முடியாது என்றாலும் நம் சற்குரு மனிதனாக ஆற்றிய அருஞ்செயல்கள் நம்மை பிரமிக்க வைப்பவையே. கோவணாண்டிப் பெரியவர் அருளிய வண்ணம் சென்னை மற்றும் இந்தியா முழுவதிலும் சுமார் அல்ல, சரியாக 3000 சொற்பொழிவுகளை ஆற்றி இறைப் பேரருளை மக்கள் சமுதாயம் உணர்ந்து பயன் பெற வழிவகை செய்தவரே நம் சற்குரு.
இந்த பிரம்மாண்டமான சமுத்திரத்தின் ஒரு துளியான சில சொற்பொழிவுகளையே நாம் இங்கு கேட்கும் பயன் பெறுகிறோம். இவற்றுள் முதன்மையாகத் திகழும் ‘அனைவர்க்கும் தாய் சிவனே’ என்ற சொற்பொழிவு நம் சற்குரு நிகழ்த்திய 1000வது சொற்பொழிவு என்பதே இதன் சிறப்புகளில் ஒன்றாகும்.
![]() திருஅண்ணாமலை தோன்றாநிலை |
சிவபெருமானின் உடுக்கை ஒலியில்தான் உலகங்கங்கள் தோன்றுகின்றன மறைகின்றன என்பது போல நம் சற்குரு ஆற்றிய இந்த சொற்பொழிவுகளில் எல்லாம் கோடிக் கணக்கான லோகங்கள் தோன்றின, நம் சற்குரு அருளால் செறிவூட்டப்பட்டன, மறைந்தன என்பதே இந்த சொற்பொழிவுகளில் மறைந்துள்ள மகாத்மியமாகும். இந்த சொற்பொழிவுகளில் இடம் பெறும் உடுக்கை ஒலியும் இதைக் குறிப்பதே. இந்த உடுக்கை ஒலியை உன்னிப்பாகக் கேட்டு அது கூறும் செய்திகளை உணர முடிந்தால் நாம் எதிர்காலத்தையே உணர்ந்தவர்கள் ஆவோம்.
முயற்சி திருவினையாக்கும்.
1980ம் ஆண்டிலிருந்துதான் நம் சற்குருவின் உரையாடல்களை அடியார்கள் ஒலி நாடாவில் பதிவு செய்ய ஆரம்பித்தனர். 1986ம் ஆண்டு, “நீங்கள் இப்போது பதிவு செய்வதைப் போல் அடியேன் பேசிய அனைத்தையும் நீங்கள் பதிவு செய்திருந்தால் அது இந்நேரம் ஒன்றரை லட்சம் கேசட்டுகளைத் தாண்டியிருக்கும்...”, என்றார் நம் சற்குரு. அப்படியானால் இறைவனைப் பற்றி, இறை லீலைகளைப் பற்றி நம் சற்குரு ஆற்றிய சொற்பொழிவுகளை கணக்கில் வரையறுக்க முடியுமா?
சரி, போனது போகட்டும் இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் இந்த ஆன்மீகப் பொக்கிஷங்களையாவது நன்முறையில் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ அண்ணாமலையானின் திருப்பாதங்களைப் பணிகின்றோம்.
சற்குரு ஸ்ரீவெங்கடராம சுவாமிகளின் அருள் முழக்கம் |