அழுதால் அருள்வான் அருணாசலம் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை
ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் குருவே சரணம்

அருணை அழைப்பு

அன்னதானத்தையே உயிர் மூச்சாகக் கொண்டு வாழ்ந்த நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடமிருந்து அடியார்கள் பெற்ற ஆன்மீக அனுபவங்களை விவரித்துக் கொண்டே சென்றால் அதுவும் ஒரு அருணாசல புராணமாக விரியும் என்பது உண்மை.

அருணாசல திருக்கார்த்திகை உற்சவத்தின்போது திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் அடியார்களுக்கு அற்புதமான, சுவையான உணவு வகைகள் அளிக்கப்படும். அந்த அன்னதானத்தில் பொதிந்த சுவையானது இந்த பிரபஞ்சத்தில் எங்குமே காண முடியாது என்பது கோடிக் கணக்கான பக்தர்கள் உணர்ந்து தெளிந்த உண்மை. இந்த ஈடு இணையற்ற சுவைக்குக் காரணம் என்ன ?

நமது ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அடிக்கடி அடியார்களிடம் பேசும்போது, ”ராஜா, இப்படிச் செய், ராஜா, அங்கே போகாதே,” என்று மிகவும் மரியாதையுடன் அன்புடன் பரிந்து பேசுவார். இது வெறும் வார்த்தைகள் அல்ல. வாத்யார் அவர்களின் உள் மன ஆழத்திலிருந்து வந்த சொற்கள் அவை என்பதை அனைவரும் உணர்ந்திருந்ததால் பலரும் வாத்யார் அவர்களை தங்கள் இதய சிம்மாசனத்தில் ராஜாவாக, அகில உலக சக்ரவர்த்தியாக வைத்து போற்றினர்.
இவ்வாறு ஒரு அடியார் வாத்யார் அவர்கள் காலையில் எழுந்திருக்கும்போது நாதஸ்வரம், தவில், ஜேங்கொண்டம், சங்கு போன்ற மங்கள வாத்யங்களுடன் அவரை திருப்பள்ளி எழுச்சி செய்ய வேண்டும் என்று மனதார விரும்பினார். தன்னுடைய உள்ளத்தில் உள்ளதை அப்படியே வாத்யாரிடமும் தெரிவித்தார்.
வாத்யார் புன்னகையுடன், ”சார், உங்கள் எண்ணம் உயர்வானதே. அதை அங்கீகரிக்க வேண்யது அடியேனுடைய கடமை, நேரம் வரும்போது நிச்சயம் உங்கள் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கிறேன்,” என்று உறுதி அளித்தார். அந்த அடியாரும் அந்த நன்னாளுக்காகக் காத்திருந்தார்.
இது போல ஸ்ரீவாத்யார் அவர்களுக்கு ஒரு மாமன்னனுக்கு உரித்தான மரியாதையை கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று நினைத்தவர்கள் எண்ணற்றோர்.

ஒரு முறை அடியார் ஒருவர் வாத்யாருக்கு இத்தகைய ராஜோபசாரம் அளிக்க நினைத்து சில சிறுமிகளை அழைத்து அவர்கள் கையில் மலர் நிறைந்த தட்டுக்களைக் கொடுத்து வாத்யார் வரும் பாதையில் மலர்களை இட்டு அவரை இல்லத்திற்கு வரவழைக்க நினைத்தார்.
மாசில்லாக் குழந்தைகள் மாமன்னரை வரவேற்பது பொருத்தம்தானே ?
ஆனால் நடந்தது என்ன ? சிறுமிகள் வாத்யார் நடக்கும்போது அவர் காலடியில் மலர்களைத் தூவியதுதான் தாமதம், உடனே வாத்யார் அவர்கள் குனிந்து நிலத்தின் மேல் தூவப்பட்ட மலர்கள் அனைத்தையும் பொறுக்கி எடுத்து மீண்டும் அந்த குழந்தைகள் கையில் உள்ள தட்டுகளிலேயே வைத்து, ”செல்வங்களே, மணமுள்ள இந்த மலர்களை இறைவனுக்கு மட்டுமே அளிக்க வேண்டும். அடியேன் போன்ற கேவலமான மனிதர்களுக்கு அளிக்கக் கூடாது,” என்று கூறவே மலர் வரவேற்பு அத்துடன் நிறைவு பெற்றது.
மாமன்னருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பில் அடுத்த கட்டமாக ஸ்ரீவாத்யாரை ஒரு மர ஊஞ்சலில் அமர வைத்து திருபொன்னூசல் சேவை சாதிக்கலாம் என்று நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த ஊஞ்சல் அருகே வந்த வாத்யார் சட்டென்று தரையில் அமர்ந்து விட்டார். அனைவரும் வாத்யாரின் எதிர்பாராத இந்த செயலைக் கண்டு பதறிப் போய் விட்டனர்.
வாத்யாரின் செய்கை குறித்து விளக்கம் கேட்டபோது ஸ்ரீவாத்யார் அவர்கள், ”ஊஞ்சலில் அடியேன் அமர்வது பற்றி எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், அந்த ஊஞ்சலின் மேல் மலர்கள் தூவப்பட்டு இருப்பதால் அந்த புனிதமான மலர்கள் மேல் அமரும் யோக்யதை அடியேனுக்கு இல்லை, அதனால்தான் அடியேனுடைய தகுதிக்கு ஏற்ப தரையில் அமர்ந்து கொண்டேன்,” என்று மிகவும் பணிவுடன் பதில் அளித்தார்கள். ஸ்ரீவாத்யாரின் விருப்பம்போல் ஊஞ்சலில் இருந்த மலர்கள் அகற்றப்பட்டு அதன் மேல் வெறும் ஒரு வேட்டியை மட்டும் விரிக்க ஸ்ரீவாத்யார் அதன் மேல் அமர்ந்து கொண்டார்கள். அடியார்கள் ஒன்று சேர்ந்து மாணிக்க வாசகரின் திருப்பொன்னூசல் பதிகத்திலிருந்து, ”சீரார் பவளங்கால் முத்தம் கயிறாக .... ” என்று பாடி ஊஞ்சலை மெதுவாக அசைத்து சேவை சாதிக்க ஆரம்பித்தனர்.
அப்பதிகத்தின் ஒரு பாடல்தான் முடிந்திருக்கும். ஸ்ரீவாத்யார் வேகமாக கீழே குனிந்து அருகிலிருந்த ஒரு அடியாரின் காதில் கிசுகிசுத்தார். ”நைனா, பசிக்குதுய்யா. சீக்கிரம் சாப்பாடு போட மாட்டாயா ?”.
அவ்வளவுதான் ஊஞ்சல் சேவையை அப்படியே நிறுத்தி விட்டு அடியார்களுக்கு உணவு பரிமாறும் வேலையில் அனைவரும் துரிதமாக ஈடுபட ஆரம்பித்தனர்.
இங்கு ஒரு முக்கியமான ஆன்மீக செய்தி என்னவென்றால் அடியார்கள் அனைவரும் காலையிலிருந்து கடுமையான கோயில் உழவாரத் திருப்பணியில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே பலருக்கும் பசி வயிற்றைக் கிள்ளியது. சற்குரு நாதருக்கு ஊஞ்சல் சேவை என்பது கண்ணுக்குக் குளிர்ச்சியை அளித்தாலும் அப்போது அடியார்களின் தேவை பசித்த வயிற்றுக்கு உணவுதானே.
அடியார்களின் பசியை உள்ளுணர்வால் உணர்ந்த ஸ்ரீவாத்யார் அவர்கள் அதற்கு முதலிடம் கொடுத்து அனைவரையும் உடனே உணவருந்த ஏற்பாடு செய்தார்கள். ஆனால், அந்த அற்புத விஷயத்தையும் பணிவாக, சுவையாக வெளிப்படுத்துவதில் வாத்யாருக்கு நிகர் வாத்யார்தான்.
இந்த ராஜோபசாரத்தில் ஒரு கட்டமாக ஸ்ரீவாத்யார் அவர்களை மாணிக்க வாசகரின் திருப்பள்ளி எழுச்சியைப் பாடி சுப்ரபாதம் நிகழ்ச்சியை நிறைவேற்றலாம் என்று ஒரு முறை அடியார்களால் முடிவு செய்யப்பட்டு வாத்யார் அவர்கள் தங்கியிருந்த அறையின் முன்பு விடியற்காலையில் அடியார்கள் ஒன்று கூடி, ”போற்றி என் வாழ்முதலாகிய பொருளே .... ”, என்று திருப்பள்ளி எழுச்சியை இசைக்கத் தொடங்கினர்.

திருஉண்ணாமுலை அம்மன்
திருஅண்ணாமலையானுக்கு அரோஹரா

இதுவரை எத்தனையோ சிவத் தலங்களில் இந்த பாடல்களைப் பாடி இறைவனுக்கு திருப்பள்ளி எழுச்சி நிறைவேற்றி இருந்தாலும் இரத்தமும் சதையும் உள்ள பரம்பொருளுக்கு ஆன்மீக சக்கரவர்த்திக்கு முதன் முறையாக திருப்பள்ளி எழுச்சி பாடப்பட்டதால் அனைவரின் உள்ளமும் ஆனந்தத்தால் பூத்துக் குலுங்கியது.
திருப்பள்ளி எழுச்சி பதிகங்கள் அனைத்தும் பாடி முடிவதற்கு முன்பே ஸ்ரீவாத்யார் அவர்கள் படுக்கையிலிருந்து எழுந்து விட்டார்கள். இது அனைவருக்கும் ஒரு விதத்தில் வருத்தத்தை அளித்தது. காரணம் முதல் நாள் இரவில் பல ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டிருந்த ஸ்ரீவாத்யார் அவர்கள் இரவு நெடு நேரம் கழித்துத்தான் உறங்கச் சென்றார்கள்.
இவ்வாறு விடியற்காலையில் திருப்பள்ளி எழுச்சி பாடி அவரை உறக்கத்திலிருந்து மீட்டது சரியான காரியமாகப்படவில்லை. இதற்குக் காரணம் விடியற்காலையில் பாடப் படுவது திருப்பள்ளி எழுச்சி என்பதை அடியார்கள் தெரிந்து வைத்திருந்தார்களே தவிர திருப்பள்ளி எழுச்சி பாடினால் அந்தப் பதிகம் முடியும் முன் கண் விழித்து எழ வேண்டும் என்ற நியதி இருப்பது பற்றி எந்த அடியாரும் அறிந்திருக்கவில்லை.
எனவே தூங்குவது விழிப்பது பற்றி கூட சற்குரு தொட்டுக் காட்டினால்தான் புரியும் என்ற பேருண்மையும் அப்போது அனைவருக்கும் விளங்கியது.
இவ்வாறாக ஸ்ரீவாத்யார் அவர்களை மங்கள வாத்யங்களுடன் சுப்ரபாதம் நிறைவேற்ற அந்த அடியார் நினைத்தது முற்றிலும் பொருத்தம்தானே.
அன்று திருக்கார்த்திகை தீபத் திருநாள். காலை சுமார் பத்து மணி இருக்கும். வாத்யார் அந்த அடியாரை அழைத்தார். நாதஸ்வரம், தவில், கஞ்சிரா, சங்கு, ஜால்ரா, ஜேங்கொண்டம் என்ற அனைத்து விதமான மங்கள வாத்யங்களுடன் மெயின் ஹாலில் அடியார்களைக் காத்திருக்குமாறு கூறினார்.
அடியார்களுக்கு ஒன்றும் புரியவில்லை. யாருக்கு இந்த தெய்வீக வரவேற்பு ?
அப்போது யாரும் எதிர்பாராத வகையில் ஸ்ரீவாத்யார் மட்டும் அறிந்த, உணர்ந்திருந்த அண்ணாமலை தெய்வம் அங்கே எழுந்தருளியது. ஸ்ரீவாத்யார் சைகை காட்ட நாதஸ்வரம் கானம் எழுப்ப, தவில்கள் முழங்க, ஜேங்கொண்டங்கள் இன்னிசை எழுப்ப, ஜால்ராக்கள் அதிர அந்த மேன்மைமிகு சாம்ராஜ்ய சக்கரவர்த்தி, அகில உலகத்தையும் அடக்கி ஆளும் அண்ணல் அங்கே எழுந்தருளினார்.
யார் அந்த மேதகு சக்கரவர்த்தி ?
ஆம், அவர்தான் அந்த இருபது படி பிரிஞ்சி அன்ன தேக்சா.

அன்னதான சமையல்கூடத்திலிருந்து எட்டு அடியார்களால் மிகவும் மரியாதையாக ”அண்ணாமலையானுக்கு அரோஹரா” என்று விண்ணைப் பிளக்கும் கோஷங்களுடன் இறை மூர்த்திகளுக்கு உரித்தான ஒய்யார நடன பாவனையுடன் ஹாலுக்கு கொண்டு வரப்பட்ட அந்த பிரிஞ்சி அண்டா பிரசாதத்திற்குத்தான் இத்தகைய மகத்தான மங்கல வாத்யங்கள் முழங்கும் வரவேற்பு.
அனைவரும் பிரமிப்பில் தங்களை மறந்தனர். ஒரு அன்னதான அண்டாவை சாட்சாத் அண்ணாமலையாராக, உண்ணாமுலைத் தாயாக, பழநி ஆண்டவராக, ஏழுமலையானாக, இடியாப்ப சித்தனாக, அங்காளி ஆத்தாவாக ஒரு உள்ளம் நினைக்க முடியும் என்றால் அது ஆயிரத்து ஒன்றாவது குருமகா சன்னிதானம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை வெங்கடராம சுவாமிகளைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்ற நிச்சயமான, நிதர்சனமான உண்மையை அனைத்து அடியார்களும் உணர்ந்தார்கள், தங்கள் உடல் எங்கும் நிறைத்தார்கள்.
ஒரு அன்னதான அண்டாவிற்கு திருக்கோயிலில் எழுந்தருளும் இறை மூர்த்திக்கு நிகரான ஒரு மங்கள வரவேற்பை நமது வெங்கடராம சுவாமிகள் அளித்தார் என்றால் அந்த அன்னதான பிரசாதத்தை ஏற்கும் அந்த தெய்வீக அடியார்களை வாத்யார் எப்படி மதித்திருப்பார் என்பதை நாம் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா ?
அந்தப் பேருண்மையை நமக்கு உரைக்க வல்லவர் அண்ணாமலை ஈசனும் உண்ணாமுலைத் தாயும் மட்டுமே. வேறு எவரும் இதைப் புரிந்து கொள்ள முடியுமா ?
ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் பிரிஞ்சி அண்டாவிற்கு அளித்த வரவேற்பு, அன்னதான பிரசாதத்திற்கு அளித்த கௌரவம் அத்துடன் முடிந்து விட வில்லை. அது வளர்ந்து வளர்ந்து திருஅண்ணாமலையைப் போல மேலே மேலே விரிந்து எல்லையில்லாமல் பரந்து சென்று கொண்டே இருந்தது.
அன்று மாலையில் திருஅண்ணாமலையின் மேல் திருக்கார்த்திகை தீபம் ஏற்றிய பின் அதை சகல உபசாரங்களுடன் அடியார்கள் சகிதம் திரு வாத்யார் வழிபட்ட பின் திருக்கார்த்திகை தீப அன்னதான உற்சவம் தொடங்கியது.
கார்த்திகை தீப அன்னதானத்தில் கார்த்திகை சுடர் ஜோதியின் சக்திகளும் பதிந்திருக்கும் அல்லவா ? இதுவும் ஒரு ராஜ உபசாரம்தானே.
அடுத்து அன்னதான உற்சவம் நடந்து கொண்டிருக்கும்போதே ஒரு புறம் நாதஸ்வரம், தவில் போன்ற மங்கள வாத்யங்கள் ஒலிக்க மறுபுறம் ”அருணாசல சிவ, அருணாசல சிவ, அருணாசல சிவ” என்ற அருணை தாரக மந்திரத்தையும் ஒலித்துக் கொண்டிருந்தனர் நமது அடியார்கள்.
அருணாசலசிவ என்ற தெய்வீக மந்திரத்தை பல ராகங்களிலும் ஓதி அன்னதான வைபவத்திற்கு பெருமை சேர்த்த ஒரு மூத்த அடியார் அந்த அற்புத திருப்பணியை நினைவு கூறும் முறையில் மீண்டும் அந்த ”அருணாசல சிவ” வேத கீதத்தை அடியார்களின் நலனுக்காக இங்கு அளித்துள்ளார். சிவ தியானத்தை எளிதில் மேம்படுத்தும் அற்புத தியான கீதம்.
நன்முறையில் இந்த வேத கீத தியானத்தை பயன்படுத்தி திருஅண்ணமாலை ஈசனின் பேரருளுக்குப் பாத்திரமாக இறைவனை வேண்டுகிறோம்.

அருணை அழைப்பு பாகம் 1


அருணை அழைப்பு பாகம் 2


ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam