ஜீவ பேதம் களையாமல் ஆத்ம போதம் ஏற்படாது !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடமிருந்து பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

அந்த வான் தேவதை வந்து சென்ற காட்சி சிறுவனின் மனதில் அப்படியே பதிந்து இருந்தது!

வெள்ளியங்கரிப் பயணத்தின் ஆரம்பக் கட்டத்தில், சிறுவன் பூண்டி விநாயகரையும், வெள்ளியங்கிரி அப்பனையும், மனோன்மணி அம்மையையும் வணங்கிய பின்.. வெட்ட வெளியில் பெரியவருடன் சற்றே அமர்ந்திருக்கையில் நிகழ்ந்த உரையாடல் அவனுக்கு நினைவுக்கு வந்தது.

அந்த உரையாடல் நடந்த போது கிட்டாத விளக்கங்கள், இப்போது ஒவ்வொன்றாகப் புரிய வருவதாக அவன் நன்றாகவே உணரத் தொடங்கினான்!

மண்டுவுக்கும் (சிவத்)தொண்டு தந்தானே ஐயா?

“ஒன்றும் புரியாத என்னை மாதிரி முட்டாளுக்கே, வெள்ளியங்கிரி மண்ணில் ஏதேதோ புரிய ஆரம்பித்து விட்டது என்றால், மண்டுவையும் (சிவத்) தொண்டுக்கு உரிமை ஆக்குவது வெள்ளியங்கிரியான் மஹிமை தானே!”.

அப்படி என்ன, அந்த விசேஷமான தெய்வீகமான உரையாடலில் பதிந்திருக்கிறது? சற்று எட்டித்தான் பார்ப்போமே!

கோபியரின் உள்ளங்களை
கொள்ளை கொண்டவா !

உள்ளுள் ஒளியாய் உள்ளேயே ….

“ஏன் வாத்யாரே! கோயம்புத்தூர்லேந்து இருபது, இருபத்தஞ்சு மைல் நடந்து வந்துட்டோமே, மெட்ராஸ்லேந்து இதை அப்படி விழுந்து, விழுந்து தேடிக்கிட்டு வர்ற மாதிரி, அப்படி என்ன விசேஷமா வெள்ளிமலையில கொட்டிக் கிடக்குது? நமக்கு இருக்கற ஒரு திருஅண்ணாமலை போதாதா? அதுல இல்லாதது வேற என்னதான், எங்கதான் இருக்கு வாத்யாரே?”

வழக்கம் போல், அறியாமையால் சிறுவன் கேட்டான்.

ஏதோ பட்டிமன்றத்துக்கு பத்து நிமிஷம் வாய்ப்பைக் கொடுத்து அதற்குள் அவன் முடித்தாக வேண்டும் என்பது போலான அவசரத்தில் வெகு வேகமாகக் கொட்டித் தீர்த்தான்! அவனதிர்ஷ்டம், பெரியவர் அப்போதும் சற்றும் கோபக் காற்றைத் தழுவவில்லை!

“ஏழுமலை சேர்ந்ததுதானேடா திருப்பதி! திருப்பதி மலை உண்மையாகவே வைகுண்டத்திலேந்து வந்த மலைதான்! இங்கே வெள்ளியங்கிரியிலேயும் ஏழு மலை இருக்குடா கண்ணு! ஆனா இது எங்கேந்து வந்ததுன்னு நாங்க சொன்னா வெறுமனே தலையை ஆட்டிக் கேக்கறதை விட, குருவோட இங்கே வந்து குருகுலவாச அனுபூதியாத் தெரிஞ்சுக் கிட்டா உலகத்துல எல்லாமே தானாகவே எல்லாம் தெரியவரும்கற ஒரு வெள்ளியங்கிரிச் சட்டம் இருக்குடா கண்ணு!”

தப்புக் கணக்கு! தப்பாத கணக்கு!

“இதுல அருணாசலத்தை எப்படி வைக்கறாங்க வாத்யாரே!”

“நீ இந்த மாதிரிக் கேக்கறதுக்குக் காரணம் என்ன? இது பெரிதா, அது உயர்ந்ததான்னு உலகப் பொருள்ளுக்கு வைக்கற கணக்கை கலியுக மனுஷன் தெய்வத்துக்கும் வச்சுப் பார்க்கறான்! இது தப்பு! உத்தம தெய்வீகத்துல எதுவுமே தப்பாகாது”

“பெருமாள் பக்தர்கள் கண்டிப்பா திருப்பதி போயாகனும்கறது மாதிரி, உலகத்து ஜனங்கள் எல்லாரும் ஏதாச்சும் ஒரு பிறவியிலயாவது கண்டிப்பா திருஅண்ணாமலைக்குப் போயாகனும்! அருணாசலத்துல செய்ய வேண்டிய தான தர்மங்களை ஒருத்தர் செஞ்சு முடிச்ச பிறகு, அவரு பார்க்க வேண்டிய முக்கியமான தரிசனம் ஒண்ணு இருக்குடா ராஜா! அதுதான் வெள்ளியங்கிரி நவகோடி சித்தர் தரிசனம்! இதுவும் அண்ணாமலையார் கருணையினாலத் தாண்டா கிடைக்கும்!”

“ஏன் இந்த தரிசனம் அண்ணாமலையில கிடையாதா வாத்யாரே?”

“இந்த மாதிரி அவசரக் குடுக்கைக்கு அண்ணாமலையில இந்த தரிசனம் கிடைக்காது!”

சிறுவன் வாயை மூடிக் கொண்டான்!

“அண்ணாமலையில எதுதான் இல்லைடா கண்ணு! ஆனா எல்லாத்தையும் அண்ணாமலையில பார்க்கணும்னா சிவனோட ஐக்யம் ஆகணும்டா ராஜா!”

“இதெல்லாம் ஏன் சொல்றேன்னா, தெய்வீகத்துல உத்தம நிலைன்னா, இதுதான் முக்தி, இதுதான் மோட்சம்னு finalஆ நினைக்கக் கூடாது! தெய்வீகத்துல உத்தம நிலைகள்னா மேல், மேல போய்க்கிட்டே இருக்குமங்கறதைக் காட்டறதுதான் வெள்ளியங்கிரி மலை மஹிமை!”

வெள்ளியங்கிரியில் நவகோடிச் சித்தர்களின் உத்தம தரிசனம்! இதற்கு மேலான உத்தம நிலையும் உண்டு!

“நவகோடிச் சித்தர்களைத் தரிசனம் பண்ணனும்னா, இந்த வெள்ளியங்கிரிக்கு வந்தாகணும்! இதனாலத்தான் வெள்ளியங்கிரியை கோடி ரகசிய மலைன்னு சொல்லுவாங்க! இதோட கோடானு கோடி ரகசியங்களைத் தெரிஞ்சவங்கள்ல ஒருத்தர்தான் புரவிக்காடு கோடிச் சித்தர்! உத்தம யோகி! இங்க நாம பார்க்கப் போற தெய்வீக ரகசியங்கள் எல்லாம் எந்த விஞ்ஞானக் கருவினாலேயும் கண்டுபிடிக்க முடியாது! நோபல் பிரைஸ் வாங்கின விஞ்ஞானிக்கே இங்க நடக்கற ஒரு சிறு சம்பவம் கூட விஞ்ஞான விதிகளுக்கு முரணா நடக்கறது எல்லாமே ஆச்சரியமா இருக்கும்!”

“அப்ப ஒரு நோபல் பிரைஸ் விஞ்ஞானியை இங்க கூட்டிக் கிட்டு வந்து காண்பிச்சு, இதைப் பத்தி எழுதி உலகம் புல்லா நம்ப தமிழ் நாட்டுத் தெய்வீகத்தைப் பரப்பிடலாமே!”

“ஏண்டா இங்க வர்றதுக்கே கோடிப் புண்யம் செஞ்சுருக்கணுமே! நோபல் பிரைஸ் என்னடா நோபல் பிரைஸ்! தெய்வீகத்துல இதைச் சுண்டைக்காய்னு கூடச் சொல்றது கிடையாது!”

சிறுவனுக்குச் சிரிப்புப் பிய்த்துக் கொண்டு வந்தது! பெரியவரோ மிகவும் சீரியஸ் ஆனார்!

“அப்படி நோபல் பிரைஸ் வாங்கின விஞ்ஞானி இங்கே வர்ரான்னு வச்சுக்கோ! அவனோட அபார மூளையினால, இங்க வெள்ளியங்கிரியில் இருக்கற மெய்ஞான விஞ்ஞானம்தான் உண்மைன்னு தெரிஞ்சுக்கிட்டு, தன்னோட விஞ்ஞானத் துறைக்கே, முழுக்கப் போட்டுட்டு இங்கேயே கோமணத்தைக் கட்டிக் கிட்டுத் தியானத்துல பெர்மனன்டா உக்கார்ந்துடுவானே!”

ஸ்ரீபரசுராமர் முழையூர்

சிறுவன், “ஆமாம், ஆமாம்!” என்று படுவேகமாகத் தலையை ஆட்டினான்!

“அதனால, நல்லா தெய்வீகத்துல ஊறின உத்தமர்கள்தான் இங்கே வந்து தெய்வீகத்தை உணர வைக்க முடியும்! மத்தவங்க கண்ணுக்கு இது வெறும் கல் மலைதான்!”

தெய்வமும் கல்லே!

அப்போது பேச்சு வாக்கில் யதேச்சையாகக் சிறுவன் கீழே கிடந்த ஒரு கல்லை எடுத்துப் பார்த்தான்! கும்பகோணம் அருகே உள்ள முழையூர் ஸ்ரீபரசுராம லிங்க மூர்த்தி போல, நீண்ட பலப்பம் போல் இருந்தது!

“பல சதுர் யுகமா இந்த மலை இங்கே இருக்குடா ராஜா! இதோட வயசை எல்லாம் கால்குலேடர்ல கூடக் கணக்குப் போட்டுச் சொல்ல முடியாது! நீ கையில் வச்சுருக்குற ஒரு சின்னக் கல்லு கூட, முழையூர்ச் சுயம்பு லிங்கத்துக்கும் முந்தைய காலம்னா.. என்ன சொல்வே இந்த மலையைப் பத்தி!”

சிறுவன் பயத்தில், பயமல்ல... தெய்வீக அழுத்தத்தில் ... அந்தக் கல்லை டக்கென்று கீழே போட்டு விட்டு,

“தான் கல்லை எடுத்தது, முழையூரைப் பற்றி எண்ணியது.. எல்லாம் இவருக்கு எப்படித் தெரியும்?” சிறுவன் எண்ணி, எண்ணி அதிசயித்தான்!

பெரியவர் சிரித்தார்!

“கல் அப்படீன்னா தமிழ்ல கற்றுத் தெளிதல்னு சொல்வாங்க!! அதுதான் தெய்வமும் கோயில்ல கல்லா நிக்குது! ஆமாம் தெய்வமும் ஒரு கல்தான்! சாக்கிய நாயனார்தான் இதைச் சொன்னவரு!”

பரிசு என்றால் இறைவனே அளிப்பதே!

சிறுவன் அவரைத்தான் நோபல் பரிசு என்ன, மெய்ஞானத்தில் எந்தப் பரிசுக்கும் உரியவர் என உணர்ந்தான்! ஆனால் இதையும் பெரியவர் விட்டு வைக்கவில்லை!

“தெய்வீகத்துல எல்லாமே கடமைதான்! பரிசே கிடையாதுடா! அது கடவுளா பார்த்துக் கொடுக்கறதுதான்” என்று சொல்லிப் பெரியவர் அவனைத் தட்டிக் கொடுத்தார்.

“இந்த மலையில ஏறணும்னா முன் ஜென்மத்துல காமதேனுவை உபாசனை பண்ணி இருக்கணும்! அடுத்ததா அகத்தியர், ஆதிசேஷன், நவநாத சித்தர்கள் மாதிரி பெரிய பெரிய சித்தர்களோட வழித் தோன்றலா இருக்கணும். இதோட பட்டி முனி, கோமுனி, ஏகபாத சித்தர் இவங்களுக்குச் சேவை செஞ்சவங்களா இருக்கணும். இவங்க ஆசீர்வாதம் இருந்தாத் தான் வெள்ளியங்கிரி மலை மேல் ஏறி, சிவனோட அனுகிரகத்தை முழுசா வாங்க முடியும். இவங்களை எல்லாம் நல்லா மனசார நெனைச்சுக்கோ! இந்த மலையேறித் திரும்பி வர்ற வரைக்கும் நீ பாக்கற எக்கச்சக்கமான அற்புதமான அதிசயங்கள்ல ஏதோ கொஞ்சத்தை மட்டும் புஸ்தகத்துல எழுதிப் போடு! இதுக்குன்னு எதிர்காலத்துல உனக்கு நாங்க சந்தர்ப்பம் கொடுப்போம். அப்ப கொஞ்சம் மட்டும் எழுது, அதையே நிறையப் பேரால ஜீரணிக்க முடியாது!”

சிறுவன் நடப்பு உலகிற்கு மீண்டான்.

அந்த வான் தேவதை வந்து சென்ற காட்சி சிறுவனின் மனதில் அப்படியே பதிந்து இருந்தது!

கண்டதே தேவ காட்சி!

அந்தக் குடிசையை நோக்கிப் பெரியவர் மெதுவாக நடந்தார். அருகில் செல்லச் செல்ல...

“மனோன்மணித் தாயே! வெள்ளியங்கிரி அப்பா!” என்று சப்தம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.

பெரியவர் இப்போது மீண்டும் சிறுவனைப் பிடித்து இழுத்து ஒரு ஓரமாக ஒதுங்கினார்.

“இந்த பாருடா! இனிமே நீ இங்க நான் பார்க்கச் சொல்றதை மட்டுந்தான் நீ பார்க்கணும். மத்த சமயங்கள்ல கண்ணை நல்லா இருக்கி மூடிக்கணும்! புரியுதா? வேற எதையுமே சும்மாச் சும்மா நீ கண்ணைத் திறந்து பாக்கக் கூடாது!”

பெரியவரின் அதட்டலான ஆன்மீகக் கட்டளை இது! “மீறினால்” என்ன விளைவுகள் எனச் சிறுவன் அறியாததா என்ன?

ஆங்கே... அந்தக் குடிசையின் வாசலில் ... வாசல் மர உத்திரத்தில் இருந்து.... திடீரென இரண்டு நாகங்கள் ஒன்றை ஒன்று படமெடுத்து ஆட ஆரம்பித்தன!

சிறுவனுக்கு வெலவெலத்து விட்டது!

மஞ்சளும் கருப்பும் கலந்த நிற நாகங்கள் அவை! மிகவும் அழகாக நடனமாடின! யாரோ கூட இருந்து “நட்டுவாங்கம்” போட்டு, கனகச்சிதமாக அவை தாளம் பிசகாது நாட்டியம் ஆடுவது போலிருந்தது!

நீத்தாரப்பப் பெருவிழா

மாளய பட்ச நீத்தாரப்பப் பெருவிழா!

பித்ரு கோலங்களின் பிரம்மோற்சவ பூஜையே பூலோகத்தின் மாளய பட்சம் அதாவது நீத்தாரப்ப படையல் பூஜை! நீத்தாரப்பர்கள் (பித்ருக்கள்) இளைய தலைமுறைக்கு அருளாசிகளை வழங்கக் காத்துக் கிடக்கின்றனர்!

இளைஞர்களே! ஜடமாயிராது ஆன்மீக ஆக்கத்துடன் புறப்படுங்கள், சமுதாய இறைப்பணிகளை மாளயபட்சத்தில் நிறைவேற்றிடவே!

நீத்தாரப்பர்களின் தேவ முக்தி இலக்கணம்

இறந்தவர்கள் அனைவருமே பித்ருக்கள் ஆவதில்லை! ஆத்ம சாந்தி அடைவதெனில் பித்ரு நிலையை அடைவதேயாகும்! உயிர் நீத்த பின், ஆவியாய் அலையாது, மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்காது, பிறப்பு, இறப்பு நிலையற்ற தர்பசுதப்ரகாச ஒளிச் சக்தி நிறைந்த, பிரகாசமான உத்தம தெய்வீக சரீரம் கூடிய நிலைகளை அடைவதே பித்ரு தேவ நிலையாகும்!

எனவே, நம் முன்னோர்களில் இவ்வகையான ஒளிச் சரீரத்துடன் உத்தமமான தேவாதி தேவ தெய்வீக நிலைகளை அடைந்தவர்களே, பித்ருக்கள் அதாவது நீத்தாரப்பர் எனப் போற்றப்படுகின்றனர்! இதிலும் பித்ரு பத்னிகள், பித்ரு கணங்கள், பித்ரு தேவர்கள், பித்ரு மூர்த்திகள், வசு, ருத்ர, ஆதித்யர்கள் எனப் பல உத்தம பித்ரு நிலைகளும் உண்டு.

ஒவ்வொரு தமிழ் வருடப் புரட்டாசி மாத அமாவாசைக்கு முந்தைய ஒரு பட்ச (15) நாட்கள், மாளய பட்சம் என்பதாகும். இதுவே நீத்தார் நெடும் பூஜையாக பூலோகத்திலும் பித்ருக்களின் தலைமைப் பூஜை மண்டலத்தில் ஸ்ரீசூரியநாராயண மூர்த்திக்கான பிரம்மோற்சவமாகவும் ஆகின்றது.

ஒரு வருடத்தில் ஆற்ற வேண்டிய மூதாதையர்க்கான பித்ரு பூஜைகளை முறையாகச் செய்யாதோர், இந்த 15 நாட்களிலுமாவது தினசரித் தர்ப்பணம், தீர்த்த நீராடல், படையல், அன்னதானம் செய்து, பித்ருக்களின் ஆசியுடன் குடும்பத் துன்பங்களுக்கு நல்ல நிவர்த்தி காண வேண்டும்.

நற்பணிகளை ஆற்ற வைப்பதும் நீத்தாரப்பர் பூஜையே!

தர்ப்பணம், திவசம் என்றால் குடும்பப் பெரியவர்கள், குடும்பத் தலைவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது என எண்ணாதீர்கள். இளைஞர்கள் ஆற்ற வேண்டிய தெய்வீகப் பங்கும் மாளயபட்சத்தில், அமாவாசைத் திதியில், பௌர்ணமியில் நிறையவே உண்டு. வயதானவர்கள், ஊனமுற்றவர்கள், செயற்பாடுகளை இழந்த நோயாளிகள் போன்றோரும் பாமரரும் தர்ப்பண பூஜைகளை நன்கு ஆற்றிடத் தேவையான தர்பை, எள் போன்றவற்றை வாங்கித் தருதல், அவர்களை ஆறு, குளம், தர்ப்பணப் பூஜை நடக்கும் இடத்திற்கு அழைத்துச் செல்தல், அன்னதானம் செய்திடப் பல வகைகளில் உதவுதல், திருவள்ளூர், ராமேஸ்வரம் போன்ற கூட்டம் நிறைந்த இடங்களில் மாளய அமாவாசை நாளில், பலருக்கும் ஆத்மார்த்தமாக உதவுதல் போன்ற நீத்தாரப்ப (பித்ரு) சக்திப் பணிகள் யாவும் இளைஞர்கள் தம் வாழ்க்கையில் நல்ல வேலையுடன் சிறப்பான திருமண வாழ்வையும் பெற உதவும்! பித்ருக்களின் நல்ஆசிகளையும் பரிபூரணமாகப் பெறவும் உதவும்.

விண்ணுலகில் பித்ரு மண்டலங்களில், மாளயபட்சமானது மகத்தான பிரம்மோற்சவமாக, பித்ருக்களின் நாயகரான ஸ்ரீசூரிய நாராயண மஹாவிஷ்ணுவிற்கு அபிஷேக ஆராதனைகளுடன் நிகழ்த்தப் பெறுகின்றன. இந்நாட்களில் ஸ்ரீமன்நாராயண மூர்த்தியே பித்ரு லோகங்களில் நேரில் பிரசன்னமாகி, அனைத்து விதமான அபிஷேக, ஆராதனைகளையும் ஏற்று, பித்ருக்களின் வம்சாவளிகளைக் காத்திட, குறிப்பாகக் கலியுக இளைஞர்களுக்கு நல்வரங்களை அளிக்கின்றார்.

அக்கோலத்து அவ்வுருவே ஆமாகுகவே!

“எக்கோலத் தெவ்வுருவே
எத்தவங்கள் செய்வார்க்கும்
அக்கோலத் தவ்வுருவே ஆம்!

-என்பது அம்மையின் தேவ வாக்கு! அவரவர் விரும்பும் வடிவில் ஆண்டவன் தரிசனம்!

பூவுலகில் தெய்வ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர் போன்றோர், மானுட வடிவில் வந்து ஆலயங்களில் பூஜிக்கின்றார்கள் என்று அறியும்போது நம் மனம் எவ்வளவு சந்தோஷப்படுகின்றது! இதே போல, எறும்புகள் குலத்திற்கும் அருளும் வகையில் சர்வேஸ்வரன் தேவாதி, தேவ, தெய்வ மூர்த்திகளை, சித்தர்களை, மாமுனிகளை எறும்பு வடிவில் அனுப்பி வைத்து, எறும்புகள் குலத்திற்கும் பரமானந்தத்தை அளிக்கின்றார்! என்னே இறைவனின் பெருங்கருணை!

இதே போல, பித்ருக்கள் லோகத்திற்கு ஸ்ரீமஹாவிஷ்ணு வருகின்ற போது, ஆறறிவிற்கும் அப்பாற்பட்ட ஞானப் பிரகாச அறிவைப் பூண்டு விளங்கும் பித்ருக்களின் வடிவில், அவர்களுக்கென விசேஷமாகத் தோற்றமளிக்கையில் நீத்தாரப்பர்கள் (பித்ருக்கள்) அவர்கள் பரமானந்தம் கொள்கின்றனர். சில தருணங்களில், திருமால், பித்ருக்களுக்கென விசேஷமான விஸ்வரூப தரிசனமும் தருவதும் உண்டு.

சத்சங்கக் கூட்டுப் பூஜையே சாசுவதமான பலன்களைத் தரும்!

ஜனவரி 2004 மாதத்தைய ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில், 2004 ஆண்டிற்கான கர்ம பரிபாலன நியதியாக, இவ்வாண்டில் கூட்டு மரணங்கள் (Group Karmic events) நிகழ இருப்பதைக் குறித்துள்ளோம். இதுவரையில் இந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள தீ விபத்து, வாகன விபத்து, பூகம்பம் போன்றவற்றில் நிகழ்ந்துள்ள கூட்டு மரணங்களில், கொத்துக் கொத்தாக உலகெங்கும் மொத்தமாகக் கூட்டாக இறந்தவர்களுடைய சாயைச் சரீரங்கள் நன்னிலை பெறுவதற்கும், அவர்களுடைய ஆத்ம சாந்திக்கும், வரும் தாரண ஆண்டில் மாளய பட்சத்தில் தினந்தோறும், அக்னிப் பூர்வமாக, தீர்த்தப் பூர்வமாக, கனிகளின் சாட்சிப் பூர்வமாக, பல வகைகளில் 15 தினங்களிலும் கூட்டுத் தர்ப்பணம், கூட்டுப் பூஜைகளை சாதி, மத, குல வேறுபாடின்றிப் பலருடன் சத்சங்கமாகச் சேர்ந்து நிகழ்த்தியாக வேண்டும்.

குறிப்பாக ஸ்ரீரங்கம், கும்பகோணம் போன்ற தலங்களில் சமீபத்தில் நிகழ்ந்த கூட்டுக் கர்ம மரணங்களுக்குப் பரிகாரப் பூர்வமாக, ஆன்மீக ரீதியாக சாதி, மத, இன பேதமின்றி நாம் ஆற்ற வேண்டிய இறைமயத் தியாகமயச் சேவையும் பூஜையும் யாதோ?

ஹரிஹரசுத ஜீவபல பூஜை

இந்த மாளயபட்சத்தின் 15 நாட்களிலும், ஒரு மரப் பலகையில் நடுவில் சிவலிங்கம் அல்லது திருஅண்ணாமலை, வலப்புறமாகப் பெருமாளுக்குரிய சங்கு, இடப்புறமாகச் சக்கரம் வரைந்து அல்லது கோலமிடுதல் வேண்டும். பலகையின் வலப்புறத்தில் சூரியக் கோலம், இடப்புறம் சந்திரக் கோலமிட்டு, சூரிய, சந்திர சாட்சியாகத் தர்ப்பணம் அளித்தலானது கூட்டாக மரணம் அடைந்தோர், ஆத்ம சாந்தத்திற்கான நல்வழிகளை அடைய உதவும்.

இளைஞர்கள் கனிந்த உள்ளத்துடன் மேற்கண்ட வகையிலான சாதி, மத பேதமின்றிப் பலரும் ஒன்று சேர்ந்து கூட்டாக அளிக்கின்ற காருண்யத் தர்ப்பண பூஜைக்குத் துணை புரிதலும் அருளார்ந்த சமுதாய நற்கடமையாகும்.

கூட்டுக் கர்ம வினைகள்

பல ஜீவன்களும் கூட்டாகத் துன்புறுதல், கூட்டாக மடிதல் என்பதான இத்தகையக் கூட்டுக் கர்ம வினைகள், பொதுவாக ஏனைய ஜீவன்களுக்கு உள்ள நியதி. ஆனால், கலியுகத்தில் சுயநலம், பேராசை, லஞ்சம், நாணயமின்மை, அசத்யம், ஆலயச் சொத்துக்களை அதர்மமாக அனுபவித்தல்/கைப்பற்றுதல், ஆலய நிலங்களில் இறைவனுக்குக் காணிக்கை அளிக்காது ஏமாற்றுதல், பிறரை ஏமாற்றி வாழ்தல், முறையற்ற காமத் தீவினைகள் போன்றவை பெருகி வருகின்றன. இதனால் பக்தி, நேர்மை, உண்மை, நாணயம், புனிதம் போன்ற தெய்வீகச் செல்வங்கள் பலவும் சமுதாயத்தில் மங்கி வருகின்றன.

மேலும் சுயநலமான அக்கிரமச் செயல்களால் வன்முறை, திருடு, கொள்ளை, உயிரைப் பறித்தல் போன்றவை விஞ்சி அதர்மச் சூழ்நிலையே பெருத்து வருகின்றது. இதனால்தான் பிற ஜீவன்களுக்கு உரிய கூட்டுக் கர்ம வினை விளைவுகள், மனித சமுதாயத்தையும் தொற்றிக் கொண்டு பல ஜீவன்கள் கூட்டாக பலியாகும் நிலை உள்ளது என்பது மிகவும் வேதனைக்குரியதே.

அக்னியை முறையாக வழிபடாத, மதியாத தோஷங்கள்!

மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான சூரியன், சந்திரன், அடுப்பு, சுவாசத்தில் உள்ள புனிதமான அக்னி சக்தி போன்ற நெருப்பு, ஒளி வகையிலானவை மிகவும் பவித்ரமாகப் போற்றித் துதித்துப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆனால், பீடி, சிகரெட், சுருட்டு போன்ற லாகிரி வஸ்துக்களில் புனிதமான அக்னியை எச்சில்படுத்தி, பிராண வாயுவும் உணவும் மட்டுமே செல்ல வேண்டிய சுவாசக் குழாய், உணவுக் குழாயில் நச்சுப் புகையைச் செலுத்துவதாலும், கை குவித்துப் போற்றி வணங்க வேண்டிய அக்னியை எச்சில் படுத்தி அலட்சியமாகப் புகையாக ஊதுவதாலும், பீடி, சிகரெட்டைக் காலால் மிதித்து அக்னி பகவானைக் கேவலப் படுத்துவதாலும் அக்னி சாபங்களே கலியுக மனித சமுதாயத்தை, குறிப்பாக இளைய சமுதாயத்தைப் பற்றிக் கொண்டு, அக்னி தோஷங்களாகி சமுதாய விளைவுகளாகக் கூட்டு மரணங்களுக்குக் காரணமாகவும் ஆகின்றது.

இளைஞர்கள் இத்தீவினைகளின் வலையில் சிக்காது தற்காத்துக் கொள்ள, மாளயபட்ச அறப் பணிகள் நன்கு உதவும். மனித சமுதாயம் உலகெங்கும் ஆற்றும் அக்னிக் குற்றங்களைக் களையவே, இவற்றை ஓரளவேனும் நிவர்த்தி செய்திடவே, இவ்வாண்டில் மாளய பட்சத்தில் கூட்டு அக்னிகள் அடங்கிய வழிபாடுகள், கூட்டுத் திரவியங்களின் சாட்சியாகத் தர்ப்பணம், திவசம் மற்றும் அக்னி வகைப் பூஜைகளை ஆற்றிட வேண்டும். இந்த ஆண்டிற்கும் மட்டுமல்லாமல் தம்முடைய வருங்காலச் சந்ததியினரும், தீய வழக்கங்களுக்கு ஆளாகாமல் தற்காத்துக் கொள்ளவும், மேற்கண்ட அக்னி வகைத் தோஷங்களைச் சேர்த்துக் கொள்ளாமல் இருக்கவும், தாரண ஆண்டின மாளய பட்ச பூஜைகள் உதவுகின்றன.

28.9.2004 மாலை 6.40க்குப் பௌர்ணமித் திதி நிறைவுற்று, மாளய பட்சப் பிரதமைத் திதி துவங்குகின்றது. பொதுவாக, காலையில் தர்ப்பணப் பூஜைகளை ஆற்றுவதே உத்தமமானது.

பௌர்ணமித் திதியானது மாலை 6.39 மணிக்கு முடிவடைந்து மாளய பட்சம் எனப்படும் மூதாதையர் முக்கூட்டு உற்சவம் 6.40 மணிக்குத் தொடங்குகின்றது. இது பூலோக மணிக் கணக்காக இருந்தாலும் பித்ரு மண்டலத்தின் பிரம்மோற்சவ ஆராதனை தொடக்கக் காலத்தையும் குறிப்பதாகும். மாலை சந்தியா வேளைக்குப் பிறகு மாளய பட்சம் தொடங்குவதாக இருந்தாலும், பொதுவாக மாலை நேரத்தில் தர்ப்பணம் அளிப்பது கிடையாது. மேலும் மாளயபட்சம் என்பது நாள், கிழமையை விட, திதியை அனுசரித்து வருவதாகும்.

எனினும் இன்றே பிரதமைத் திதித் தொடக்கத்திலேயே பித்ரு மண்டலங்களில் பிரம்மோற்சவ கொடிக் கம்ப ஆராதனை நிகழ்வதால், இல்லத்தில் மரப்படி, அல்லது வெண்கலப் படியில் இரண்டு கோலாட்டக் குச்சிகளை ஊன்றி, கொடிக் கம்பமாக பாவனை செய்து, படிக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு கோலாட்டக் குச்சிகளை நடுவில் சொருகி மாத்ரு மண்டல, பித்ரு மண்டல, கொடிக் கம்ப ஸ்தூபிகளாகப் பாவனை செய்து, படியின் இருபுறமும் சுத்தமான நல்லெண்ணையில் விளக்கு தீபம் ஏற்றி

“மாளய பிரம்மோற்சவ மதுசூதன மங்களா
மங்களம் மந்திரம் மங்களம் மாதவ மங்களம்
வாதூல மங்களம் வர வர மங்களம்!”

என்று 108 முறை ஓதி குறைந்தது 12 முதல் 24 முறையாவது சாஷ்டாங்கமாக வீழ்ந்து வணங்கிட வேண்டும்.

இளைஞர்கள் மேற்கண்ட மாளய பட்சத் துவக்க நேரத்தில் இருந்து தொடங்கி குறைந்தது 12 ஆலயங்களில் கொடிக்கம்ப ஆலய தரிசனத்தைப் பெறுதல் வேண்டும்.

ஆலய கொடிக் கம்பத்தின் உச்சியில் “விஸ்வ நந்தீஸ்வரர்” அமர்ந்திருப்பார். பலரும் இதனைக் கவனித்திருக்க மாட்டார்கள். ஆலயத்தின் ஒரு ஓரத்தில் நின்றோ அமர்ந்தோ கொடிக்கம்ப விஸ்வ நந்தீஸ்வரரைத் தியானித்து வணங்குதல் வேண்டும். இன்று ஒவ்வொரு மூர்த்தியின் மண்டலத்திலும் அந்தந்த தெய்வ மூர்த்தியின் மண்டலத்திலும் அந்தந்த தெய்வ மூர்த்தியின் விஸ்வரூப தரிசனம் கிட்டும். ஆதலால் இன்று நின்று, இருந்து, கிடந்து, நடந்த ஆகிய நான்கு நிலைப் பெருமாள் மூர்த்திகளின் தரிசனத்தைப் பெறுதல் இளைஞர்களுக்கு நல்ல மனோதிடத்தைத் தந்திடும்.

ஆதிசங்கரர், விவேகானந்தர், திருஞானசம்பந்தர், ஸ்ரீமகா அவதூது பாபா போன்ற இளம் பூரணச் சித்தர்கள், மகான்கள், யோகியர்களின் சரிதைகளை இன்று இளைஞர்கள் படித்துத் தங்களுக்குள் கலந்து உரையாடுதல் நல்ல சாந்த கிரணங்களைப் பரப்பிட உதவும் சேவையாகும்.

28.9.2004ல் தொடங்கும் மாளயபட்ச முதல் திதி பூராக்னி தேவதைகளுக்கு உரித்தானதாகும். அதாவது, இன்று பூவுலகில் எங்கு ஹோமம், அக்னி பூஜை, ஊதுவத்தி, சாம்பிராணி தூபம், விளக்கு ஜோதி என எந்த அக்னி பூர்வத்திலும் பூராக்னி தேவதைகள் தாம் முதல் அக்னியைத் தோன்றுவிக்கின்றனர்.

29.9.2004

இன்று ஆலயத்திலோ, அல்லது வீட்டிலோ, குறைந்தது 21 செங்கற்களை வைத்து (ஆலயமாயின் 72 செங்கற்கள்) ஹோம குண்டத்தை, “பூ” என்ற தமிழ் எழுத்தின் வடிவில் அமைத்து வைத்திட வேண்டும். இதன் இருபுறமும் மேடையில் இரண்டு புதுப் பானைகளை வைத்து, வெட்டி வேர் சேர்ந்த நன்னீர் வைத்து மூடி, இரு பானைகளின் முன் அமர்ந்தும் இதன் முன் அமர்ந்து 1008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபித்த பின்னர் இதில் ஹோம பூஜை ஆற்றிட வேண்டும்.

ஹோமம் நடக்கும் போதே அக்னி, ஜலதேவதா மூர்த்தி சாட்சியாகத் தர்ப்பணம் அளித்திட வேண்டும். ஆலயத் தீர்த்தம், குளம், சுனை முன் அமர்ந்தும் தர்ப்பணம் அளித்திடலாம். இளைஞர்கள் இன்று பசு, கன்றுகளுக்கு நீராட்டி, மஞ்சள் குங்குமம் வைத்து வலம் வந்திட, நாட்டின் இளைய சமுதாயம் தறிகெட்டு அலைந்திடாது, நல்புத்தியுடன் வாழ்ந்திட, ச்ராவணப் பித்ரு மண்டல மூர்த்திகள் அருள்கின்றனர்.

எருக்கு, பலா சமித்துகள் மிகவும் முக்கியமானவை, ஹோம குண்ட சாட்சியாக, ஹோம குண்டத்தின் முன் தர்ப்பணம் அளிப்பதுடன், ஹோமத்தில் முழு அச்சு வெல்லங்களையும் ஆஹூதியாக அளித்திட வேண்டும். இதனால் தீ விபத்தில் இறந்தோர்க்குத் தக்க தாக சாந்தியாகவும் அமையும்.

ஆலய சுத்தியே மனசுத்தியைத் தரும்!

இளைஞர்கள் திருவள்ளூர், ராமேஸ்வரம், பவானி போன்ற பித்ரு முக்தித் தர்ப்பணத் தலங்களில் இடுப்பில் வேட்டி, மேல் துண்டு மட்டும் அணிந்து, ஆலயத்தில் கீழே கிடக்கும் தேங்காய் மட்டை, வாழைப்பழத் தோல் போன்றவற்றை எடுத்துச் சுத்திகரித்தலால் மனம் நன்கு தூய்மை பெறும். பீடி, சிகரெட், மது போன்றவற்றில் மனம் நாட்டம் அடையாது, இத்தகைய சேவைகளை ஆற்றுவோர்க்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு மனப் புனிதம் கிட்டும் நல்வழி முறைகளை வாமன கணப் பித்ருக்கள் அளித்து உதவுகின்றனர்.

ஏழ்மை நிலையில் உள்ள ஊனமுற்றோர்க்கு இன்று வேண்டிய உதவிகளை ஆற்றிடுக! எவருக்கும் பணமாக அளிக்காதீர்கள்! ஊனமுற்றோரையும், வறுமையால் ஊரைச் சுற்றி, ஆலயத்தைச் சுற்றி, சுற்றி வருபவர்களையும் அமர வைத்துத் தர்ப்பணம் அளிக்க உதவிடுக! இதற்காக நீர், செம்பு, தர்பை, பவித்ரம், எள் அனைத்தையும் அளித்தும், தர்ப்பணம் பற்றி எதுவுமே அறியாதோரையும் தர்ப்பணம் ஆற்றிடச் செய்தலும் மகத்தான சமுதாய அறப்பணியாகும். இளைஞர்கள் நல்ல மன அமைதியைப் பெற இது உதவும்.

30.9.2004

இன்று காலையில் இருந்து சூரிய, சந்திர சாட்சியாகத் தர்ப்பணம், இன்றைய ஹோமத்தில் குறைந்தது 72 ஆஹூதிகளை அக்னியில் அளித்து, 72 தெய்வங்களின் பெயர்களை ஓதி ஹோம பூஜை ஆற்றிடுக!

தந்தை வகையினருக்குத் தர்ப்பணம்

இன்று 21 இளநீர்களைச் சீவி வைத்து இளநீர் தேவதைகளை சாட்சியாகக் கொண்டு தந்தை வகையினருக்குத் தர்ப்பணம், மாளய பட்சத்தின் இத்திதி சன்னியாசிகளுக்கும் உத்தம பிரம்மசாரிகளுக்கும், இளைஞர்களுக்கும் நன்னெறி அமைவதற்கு மிகவும் பயன்படுவதாகும். பொதுவாக அனைத்துப் பழங்களையும் “முதிர்ந்த துறவிகள்” என்று குறிப்பிடுவார்கள்.

தாய் வகையினருக்குத் தர்ப்பணம்

இன்று 21 வகைப் பழங்களை ஆலயத்திலோ, இல்லத்திலோ, ஆற்றங்கரையிலோ, தீர்த்தக் கரையிலோ வட்டமாக அடுக்கி வைத்து இவற்றின் நடுவில் அமர்ந்து கொண்டு

“பழப்பாரப்பா! பழப்பாரப்பா
பழுத்த பூதன மூத்தாரப்பா!
விழுத்த சாதன வரதாரப்பா!
வழுத்தும் வரநிலை தருவாயப்பா!”

-என்று ஓதித் தர்ப்பணம் அளித்திடல் வேண்டும். பழங்களை, பழுத்த சுமங்கலிகளாக பாவனை செய்து, அவற்றிற்கு (சிலவற்றிற்கேனும்) இயன்றால் தங்க மாங்கல்யம் அல்லது வெள்ளி மாங்கல்யம் அல்லது மாங்கல்யச் சரடு அணிவித்து, புடவை, ரவிக்கைத் துணி சார்த்தி, மஞ்சள், குங்குமம் வைத்து, வெற்றிலை, பாக்கு, பழம் வைத்துப் படைத்து, தன்னைத் தானே ஆத்மப் பிரதட்சிணமும் செய்து கொண்டு பழங்களையும் சுற்றி வந்து வணங்கி, பழங்களின் சாட்சியாய்த் தர்ப்பணம் அளித்த பின் இளைஞர்கள் பல ஆலயங்களுக்கும் நெடுந்தூரம், நடந்து சென்று ஏழ்மை, உடல் இயலாமை, முதுமை, நோய், ஊனம், குருடு போன்ற காரணங்களால் எழுந்து வர இயலாது இருக்கும் ஏழைகளுக்கு அளித்துச் சேவை ஆற்றிட வேண்டும்.

இதனால் முதியோர்களின் ஆசி, உடலால் இயலாதவர்களின் மனதால் ஆசி, மூத்தாரப்பர்களாகிய ஆதித்ய மூதாதையர்களின் ஆசியும் நன்கு கனிந்து, இளைஞர்களுக்கு வேண்டுகின்ற கல்வி அறிவும், வேண்டுகின்ற நல்ல பணியும் கிட்டிட நல்வாய்ப்புகளும் கூடி வரும்.

மொத்தத்தில் பழங்களின் சாட்சியாகத் தர்ப்பணம் செய்யும் போதும், நற்காரியங்களை ஆற்றும் போதும் பழங்கள் தோன்றிய தூய மரங்கள் அவை எங்கிருந்தாலும் பெற்ற தாய் போல இருந்த இடத்தில் இருந்தே அனைத்து இலைகள், கிளைகள், தண்டுகள், வேர்கள் மூலமாக ஆசிகளை அளிப்பார்கள்.

குறிப்பாக துறவியர்கள், சன்னியாசிகள், இல்லறத்தைத் துறந்தவர்கள், இந்தக் கனி தர்மத்தை இன்று கட்டாயமாக கடைபிடித்தாக வேண்டும்.

சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர்

பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதிமூலப் பீடமூர்த்தியாம் ஸ்ரீபைரவேஸ்வர லிங்கம் அருளும் மிகவும் அபூர்வமான தலம்! பைரவ தோஷங்களுக்கு அவ்வளவு எளிதில் பரிகாரம் பெற இயலாது. ஆனால் குருவருளால் அனைத்து விதமான பைரவ தோஷங்களுக்கும் நிவர்த்திகளைப் பெற்றுத் தரவல்ல அதியற்புதத் தலம்!

வாழ்வில் , தொழிலில் எந்த முன்னேற்றமும் இல்லாது இருப்பது பலத்த பைரவ தோஷங்களால் தாம்.

சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயம், கும்பகோணத்தில் இருந்து 12 கி.மீ தொலைவில் உள்ள சோழபுரம் ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் அருகில், பலரும் அறியாத வகையில், மேற்கண்ட பைரவர் ஆலயம், பலத்த இடிபாடுகளின் ஊடே பதிந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து (பஸ் எண் 34, எண் 44) அணைக்கரை, திருப்பனந்தாள், பந்தணைநல்லூர் செல்லும் பஸ்கள் யாவும் செல்வது சோழபுரம் வழியாகும். சென்னை, விழுப்புரத்தில் இருந்து வரும் பஸ்கள் சோழபுரம் வழியாகக் கும்பகோணத்தை அடையும்.

ஸ்ரீசிவபூரணி அம்பாள்
சோழபுரம்

சோழபுரம் ஸ்ரீசிவபூரணி சமேத கைலாசநாதர் சிவாலயம் அருகே மிகவும் சிதிலமடைந்த நிலையில் ஸ்ரீபைரவேஸ்வரர் ஆலயம் உள்ளது. பல ஆண்டுகளாக பூஜையே இல்லாமல் போய் விட்டமையால் பலருக்கும் இதைப் பற்றித் தெரியவில்லை! பழங்காலத்து “பைரவர்” கோயில் என்று சொன்னால்தான் ஒரு சிலருக்குத் தெரிகின்றது.

முற்காலத்தில் மிகப் பெரிய ஆலய வளாகத்துடன் பொலிந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் சிவாலயம், தற்போது இடிபாடுகளுடன், மூலத்தானத்திற்குக் கதவு கூட இல்லாது, பூஜைகள் இல்லாது இருப்பது வேதனைக்குரியது, இந்த இதழின் பின்பக்க அட்டைப் படத்தைப் பார்த்தாலே தெரியும், எவருக்குமே கண்கள் கலங்குமளவிற்கு மிகவும் ஜீரணமாகிச் சிதிலமடைந்து உள்ள ஆலயம் இது!

இதை விட மிகவும் தூளாகிக் கிடந்த (கும்பகோணம் – கஞ்சனூர் இடையே துகில் – திரைலோகி அருகில் உள்ள) கீழ்சூரியமூலை கிராம ஸ்ரீசூர்யகோடீஸ்வரர் ஆலயம் கடந்த ஆண்டில் கும்பாபிஷேக நிலை கொண்டது அரிய இறைப் பெருங்கருணையால் தாம்!

சோழபுரத்தின் பழமையான இந்த “பைரவர்” ஆலயமும் நன்கு சீர் பெற்று, குடமுழுக்கு உற்சவம் கண்டு, பண்டைய யுகங்களில் விளங்கியது போல, இப்பூவுலகின் மகத்தான பைரவ ஆலயமாக மீண்டும் பிரகாசித்து விளங்கிட, இனியேனும் பக்த கோடிகள் நன்கு கடுமையாக உழைத்து அரும்பாடுபட வேண்டும்.

பைரவ தோஷங்களைக் களையும் பைரவபுரம்!

ஒரு யுகத்தில் ஐந்து பெரிய ஆலயங்களுடன் துலங்கிய சோழபுரம், பைரவேஸ்வரம், பைரவபுரம் போன்ற “பைரவப்” பெயர்களையும் பெற்றிருந்தது.

பொதுவாக, பைரவ தோஷங்களை அகற்றுவது மிக மிகக் கடினமே! உடலெங்கும் கருப்பு நிறம் மட்டுமே கொண்டு வேறு எந்த நிறத்தையும் கொண்டிடாத நாய்களுக்கு “கருத்தபைரீ” என்ற பெயருண்டு. இவ்வகை நாய்கள் மிகவும் அபூர்வமானவை! இதன் தரிசனமும் நல்ல சகுணங்களைக் கொண்டதாகும். இதற்கு உணவிட்டு வருதலால் பலவிதமான பைரவ தோஷங்களையும் எளிதில் போக்கிடலாம்.

கலியுக மனித சமுதாயம் உலகெங்கும் பலத்த பைரவ சாபங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. தனி மனிதனுக்கு பைரவ சாபம் ஏற்படுவது போல, மனித சமுதாயத்திற்கும் பலத்த பைரவ சாபங்கள் ஏற்பட்டால் சமுதாயத்தில் பல தீவினைகள், வன்முறைகள், விபத்துகள், நஷ்டங்கள் ஏற்படும்.

ஸ்ரீபைரவேஸ்வரர் சோழபுரம்

கலியுக பைரவ தோஷக் காரணங்கள்