குருவை உள்ளத்தில் பிடி !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

கார்த்திகை தீபம்

ஸ்ரீவிஜய சித்ராம்பா சமேத ஸ்ரீஜெய ப்ரதாப மூர்த்தீஸ்வர ஸ்வர்ணாகர்ஷண பைரவரே அருணாசல கிரிவலம் வரும் அதியற்புத ஸ்வர்ணஸ்ரீ பௌர்ணமி

ஸ்ரீபைரவ விஜய அருணாசல மகா கார்த்திகை தீபம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகின்ற கார்த்திகை மகா தீபத்துடன் த்ரிதினப் பௌர்ணமி கூடும் அற்புதத் திருநாள்!
மூன்று தினங்களுக்குப் பௌர்ணமி திதி நிரவும் அற்புதம் காணீர்!

பக்தியும், சத்யமும், தர்மமும் பரிபூரணமாகப் பிரகாசித்த கிருத யுகத்தில், மக்களோடு மக்களாய் மானுட அவதாரமாய், ஸ்ரீராமர் போல் உலா வந்த தெய்வ மூர்த்திகளே அருணாசலக் கிரிவலத்தை மேற்கொண்டு நல்வழி காட்டினர். கலியுகத்திலும் இது தொடர்ந்தாலும், மக்களுடைய பக்தி குறைந்து சற்குருவை மதிக்கும் பண்பாடு மங்கி விட்டமையால், மக்கள், ஞானப் பூர்வமாக அருணாசல மகிமையை அறியும் ஆத்ம சக்தியை இழந்தமையால், சற்குருமார்களே இத்தகைய தெய்வீக விஷயங்களை சூட்சுமமாக, விண்ணில் இருந்து கிரகித்து நமக்கு உணர்த்துகின்றனர்.

இவ்வகையில் சித்தர்கள் எடுத்துரைக்கின்ற அற்புத நல்வரமாக (கடந்த ஆண்டு தீபப் பெருவிழாவில் பிரம்ம மூர்த்திகள் அருணாசலத்தைக் கிரிவலம் வந்தது போல), நடப்புச் சித்திரபானு ஆண்டில், பைரவ விஜயமாக, அருணாசல கார்த்திகை மகா தீப உற்சவத்தில், அஷ்ட பைரவ மூர்த்திகளும் திருஅண்ணாமலையில், எட்டு நாட்களுக்குக் கிரிவலம் வருகின்றனர்.

ஸ்ரீவிஜய சித்ராம்பா சமேத ஸ்ரீஜெய ப்ரதாப மூர்த்தீஸ்வர பைரவர்

ஸ்ரீஅசிதாங்க பைரவர், ஸ்ரீசண்ட பைரவர் என அஷ்ட பைரவ மூர்த்தங்களிலும், சப்த ரிஷிகள் போல பைரவ மூர்த்த வகைகள் பல உண்டு. ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ மூர்த்திகளின் அவதார அம்சங்களும் பெயர்களும் யுகத்திற்கு, யுகமாகவும், வழிபாட்டு மறைகளை ஒட்டியும் மாறுகின்றன. நடப்புக் கலியுக சித்ரபானு ஆண்டின் கார்த்திகை மகா தீபத்தன்று ஈஸ்வரியாம் ஸ்ரீவிஜய சித்ராம்பாளுடன் அருணாசல கிரிவலம் வருகின்ற ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவ மூர்த்தியின் திருப்பெயரே ஸ்ரீஜெய ப்ரதாப மூர்த்தீஸ்வர பைரவர் ஆகும்.

பல விரத, பல பண்டிகைத் திருநாள்:-

சித்ரபானு ஆண்டின் கார்த்திகை மாதப் பௌர்ணமித் திதியானது மகா கார்த்திகை தீபத்தோடு கூடியதாய், பௌர்ணமி திதியும் 60 நாழிகையும் (24 மணி நேரமும்) நாள் முழுவதுமாகப் பிரகாசித்து, த்ரிதினமாக மூன்று தினங்களுக்கும் அபூர்வமாக நிரவிப் படர்ந்து விளங்குவது ஒரு தெய்வீக அற்புதமே! திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகை தீபம், பௌர்ணமி பூஜை, கிருத்திகை விரதம், அண்ணாமலைப் பௌர்ணமி கிரிவலம், பௌர்ணமி விரதம் இவை யாவும் ஒன்று சேர்ந்து வரும் அபூர்வமான நாளாக இத்திருநாள் அமைவது கலியுகத்தின் பெரும் பாக்கியமே!  எனவே தெய்வீக அருட் திரட்சி உடைய இத்திருநாளை மக்கள் சமுதாயம் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மூன்று நாள் பௌர்ணமி:- மற்றுமோர் பெருஞ்சிறப்பு அம்சமாய், ஸ்ரீவிஜய சித்ராம்பா சமேத ஸ்ரீஜெய ப்ரதாப மூர்த்தீஸ்வர ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண மூர்த்தியே பௌர்ணமி திதி முழுவதுமே தன்னுடைய பைரவ சக்திகளை அருணாசலத்தில் நிரவி அருள்பாலிக்கின்றார். சித்ரபானு ஆண்டில் த்ரிதினப் பௌர்ணமியாக மூன்று நாட்களுக்குப் பௌர்ணமி நிரவி வருவது எங்ஙனம்?

திருக்கணிதப் பஞ்சாங்க முறைப்படி த்ரிதினப் பௌர்ணமி, சந்திர பகவானுக்கு உரிய திங்கட்கிழமை இரவில் தோன்றி, அக்னி பூர்வக் கோளநாளான செவ்வாய் முழுவதும் நிறைந்து, ஸ்ரீஹயக்ரீவர், ஸ்ரீசரஸ்வதிக்குரிய புதன் கிழமையும் படர்ந்து, கிருத்திகை நட்சத்திரத்துடன் சேர்ந்து மிகச் சிறப்பான "ஸ்வர்ணஸ்ரீ பௌர்ணமி" எனப் பொலிந்து பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதான சிறப்பைப் பெறுகின்றது. ஆம், அருணாசலப் பரம்பொருள் ஜோதிப் பிழம்பைத் தரிசித்து மகாவிஷ்ணுவுடன் திருமகளும் இறைப் பரம்பொருளை வழிபடுகின்ற திருநாளன்றோ! கலைவாணி சமேத ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் இறைவனைப் பூஜிக்கின்ற பெருநாள்! இன்று சித்தயோகம் பரிபூர்ணமாகப் பௌர்ணமித் திதி முழுதுமே அமைந்திருப்பதும் தெய்வீக மெருகு கூடுகின்றது. அமிர்த யோக சக்திகள் நிறைந்த பௌர்ணமி கிரணங்களுக்குச் சித்த யோக சக்திகளை இந்நாளில் சித்தர்கள் சங்கல்ப சித்தமாய் விசேஷித்துப் பூஜிக்கின்றார்கள்!

மேலும் ஸ்ரீவிஜய சித்ராம்பா சமேத ஸ்ரீஜெய மூர்த்தீஸ்வர ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அருணாசலக் கிரிவலத்தில் நல்வரங்களாகப் பொழியும் தேவாகர்ஷணப் பலாபலன்களையும் திருஅண்ணாமலையின் கிரிவலத்தில் கிட்டும் மலை தரிசனங்களில் நல்வர இறைசக்திகளாகச் சித்தர்கள் பதிப்பதால், இந்நாளில் கிரிவலம் வருவோர்க்கு அபூர்வமான வரசக்திகளும்,  அனுகூலமான காரிய சித்திகளும் கிட்டுவதோடு, கஷ்ட நிவர்த்திக்கான அரிய பரிகாரங்களையும் பெறுதற்குக் கிரிவல மலை தரிசனங்களும் நன்முறையில் அருள்கின்றன.

அடிமை கண்ட ஆனந்தம்

(நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்)

பெரியவர் சிறுவனுக்கு உபதேசித்து, உணர்வித்து, ஞானபூஷணம் செய்வித்த பீஜாட்சர, யோக, ஸ்ரீவித்யாச் சக்கர மந்திரங்கள் நிறைய உண்டு!

சித்புருஷராம் கோவணாண்டிப் பெரியவரே சற்குருவாக வந்து உபதேசித்தமையாலும், கடும் வைராக்யத்துடன் சிறுவன் அவற்றிற்கு உரிய நியதி, நியம, நிஷ்டங்களை முழுமையாகக் கடைபிடித்தமையாலும், இவற்றின் நல்வரங்களாய்த் தாமாய் வர்ஷித்த எந்த சித்தியிலும் அவன் மனம் லயிக்காமையாலும், எதையும் குருவருள் மூலமாகவே அவன் பெற்றமையாலும், பல அரிய மந்திரங்களும் குருவருட்கடாட்சத்தால் சிறுவனிடம் ஞானஷ்யாமளம் கொண்டன! இவ்வாறு இத்தொடரில், குருகுல அனுபூதிகளைத் துய்க்கும் சிறுவனே இன்று குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமனாக நம்மிடையே திகழ்ந்து, குருகுல வாச அனுபூதிகளில் "பெரியவராய்ப்" பரிணமிக்கும் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளின் திரண்ட குருவருளை, கலியுக ஜீவன்களுக்குப் பெற்றுத் தரும் ஆன்மீக மூல வேராகப் பரிமளிக்கின்றார்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

எல்லாம் அவருக்கே!

பெரியவர் உபதேசித்த அரிய மந்திரங்களின் தாத்பர்யங்களைச் சிறுவன் ஞான சம்பூர்ணமாகக் கிரகித்திட, கிரகித்திட, அவனுள்....அவன் மனதினுள்...குறுகுறுவென்று ஏதோ ஒன்று முளைக்க ஆரம்பித்தது! என்னவாம் அது?

"நம் குருவான கோவணாண்டிப் பெரியவர், வெறும் கோவணாண்டியாகவே பல ஆண்டுகளாக அலைந்து, திரிந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றாரே! இவருக்காக நாம் தேவதா மூர்த்திகளிடம் வேண்டிப் பிரார்த்தனை செய்தால் என்ன? நமக்காக நாம் எதையும் கேட்கப் போவதில்லையே, நம்முடைய சற்குருவின் கஷ்டங்களைத் தணிக்கத்தானே கேட்கின்றோம்!" என்றபடியான ஆன்மச் சிந்தனையானது சிறுவனுடைய மனதில் ஆத்ம விசாரப் பரிதி கொண்டு நன்கு முளைவிட்டு, மரமாய்க் கிளைத்து வளர ஆரம்பித்து விட்டது! எப்போதும் அவனுடைய மனதைக் catch and cache செய்யும் பெரியவர் இந்த விஷயத்தில் மட்டும் எதையுமே கண்டு கொள்ளவில்லை!  இதுதானே சற்குரு லீலை!

சான்றோரை நாடியே......!

பெரியவரே சிறுவனைப் பல இடங்களுக்கும் அழைத்துச் சென்று சில குறித்த மகரிஷி, சித்புருஷர், யோகிகளிடமிருந்து அவர்கள் இன்னாரென்று உணர்விக்காது பல மந்திர உபதேசங்களை, யோக சாத(ன)கங்களை அறிந்து வருமாறு பணித்திட்டார்.

"தனக்கென ஒரு சற்குரு வந்த பிறகு இன்னொருவரிடம் மந்திர உபதேசத்திற்கு ஏன் போவானேன்?" என்று ஒரு முறை சிறுவன் சற்று தைரியமாகவே பெரியவரிடம் கேட்டிடவே,

"எனக்குத் தமிழ், தேவமொழி மந்திரங்கள் அவ்வளவாத் தெரியாதுடா! அந்தந்தத் துறைக்குன்னு சிலரை பிரம்மா விசேஷமாப் படைச்சிருக்கறப்போ, அவங்கவங்களை நாடிக் கத்துக்கறதுதான் குருகுலவாச தர்மம்!" என்றும் பெரியவர் மொழிந்திட்டார்!

தெரிந்தும் தெரியாதவர்!

ஆனால் காசியிலும், வித்யா பீடத்திலும், நேபாளத்திலும், பனாரஸ் பல்கலைக்கழகத்திலும், பல தேவ மொழி (சமஸ்க்ருத) விற்பன்னர்களிடம் சரளமாக அவர் தேவ மொழியில் உரையாடுவதைக் கண்டிட்ட சிறுவன், "ஏன் தான் தனக்கு ஒன்றும் தெரியாது" என்ற பல்லவியை இவர் அடிக்கடி வாசிக்கின்றாரோ தெரியவில்லையே!" என்று அங்கலாய்த்துக் கொள்வான்!

"நான் நாட்டுக் கட்டையப்பா! பள்ளிக் கூடம் போனதே கிடையாது! ஏதோ எங்க குரு பின்னாடியே சுத்திச் சுத்தியே காலத்தை ஓட்டிட்டேன்! நான் ஒரு கை நாட்டு, கையெழுத்து கூடப் போட தெரியாது!" - என்று பெரியவரும் சிரித்துக் கொண்டே சொல்வார்!

ஆனால் இரு வாரங்களுக்கு ஒரு முறை திங்கள் தோறும் மதராஸ் ஹார்பரில் வந்திறங்கும் வெளிநாட்டுக்காரர்களிடம் பிரெஞ்சு, லத்தீன், ஸ்பானிஷ் என அவரவர் மொழியில்- அவர்களே அசரும் வண்ணம் மணிக்கணக்கில் விலாவாரியாகப் பேசுவதை அவன்தான் பலமுறை கண்டு ஆச்சரியப்பட்டு, அதிர்ந்திருக்கின்றானே!

"எப்போதும் "ஒண்ணும் தெரியாது" பாட்டைப் பாடியே இவர் நம்மை ஓய்த்து விடுகின்றாரோ, என்ன காரணமோ தெரியவில்லையே!....எத்தனை நாள்தான் நாம் மட்டும் இவர் மகிமையை தெரிந்து கொண்டு சந்தோஷப்படுவது? ஊர், உலகத்திற்கு இவரைப் பற்றி எடுத்துச் சொல்ல வேண்டாமா? இதுக்காகவாவது நாம் சில தெய்வ மூர்த்திகளிடம் இவருக்காக நாம் விசேஷமாகப் பிரார்த்தனை செய்து கொண்டாலென்ன?"

(Spiritual) Master Plan!

சிறுவன் இதற்காகப் பெரிதாகத் தனக்குள் master plan ஒன்றைப் போட்டுக் கொண்டான்!  அதுவும் தன்னுடைய incomprehensible Spiritual Masterன் சுமையைக் குறைத்திடவே!

ஆனால் இப்போதெல்லாம் பெரியவர் தன்னுடைய divine systemத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டே வந்து விட்டாரே! சிறுவனுக்கு, தினசரியே பெரியவர் தந்த தரிசன நிலை மாறி, வாரா வாரம் தரிசனம் என்றாகி, பிறகு மாதம் ஒரு முறை என்றாகி....

இப்போதெல்லாம் பெரியவர் நினைத்த போதுதான் சிறுவனை வந்து பார்ப்பார்! அதுவும் ராயபுரம் அங்காளில் ஆலயம்தான் என்று மட்டும் இல்லாது அவர் சொல்கின்ற இடங்களில்தான் சற்குருவின் தரிசனம் என்றுமாகி விட்டது!

ஒரு நாள்.....

பெரியவர் சிறுவனை எங்கோ அழைத்துச் சென்றார்! அவ்வளவு அமைதியான, சாந்தமான பூஜையிடத்தைச் சிறுவன் பார்த்ததில்லை!

"இன்னிக்கு "ரிஷி பஞ்சமி" விசேஷ நாள்டா! எல்லா மகரிஷிகளும் கூட்டம் கூட்டமா பூமிக்கு வந்து பூஜை பண்ற நாள்! இந்த இடம் மந்திர பஞ்சமி சக்திகள் பூரிக்கிற இடம்! இதுவரைக்கும் அடியேன் உனக்கு உபதேசித்த மந்திரங்களை முறையா இன்னிக்கு இங்கே நீ ஓதி எல்லாத்தையும் சுவாமிக்கு அர்ப்பணம் பண்ணியாகனும்! அதுக்கு முன்னாடி இதுவரைக்கும் நீ கத்துக்கிட்ட மந்திராதிகளை, பலன்களை ஸ்ரீமந்திரபுரீஸ்வரருக்கே அர்ப்பணம் பண்றதா ஒரு பெரிய சங்கல்பம் பண்ணிக்கணும்!"

அனைத்தும் ஆண்டவனுக்கே!

சிறுவன் மூங்கில் கமண்டலத்தில் தீர்த்தத்தை எடுத்துக் கொண்டு சங்கல்பத்துக்குத் தயாரானான்! பெரியவர் சிறுவனை ஒரு பெரிய தர்பைப் பாயில் அமர வைத்து, "இதுவரைக்கும் ஒனக்கு உபதேசம் பண்ணின மந்திரங்கள் நெறையவே இருக்கு! அதையெல்லாம் அந்தந்த மந்திர தேவதைங்களுக்கு அர்ப்பணம் பண்ண வேண்டிய நல்ல நேரம் ரிஷி பஞ்சமியாய் இப்ப வந்துருக்கு! சற்குரு உபதேசிக்கின்ற மந்திரங்களை எல்லாம் ஜபம், புரஸ்சரணம், ஹோமம் செய்யச் செய்யத்தான் நெறைய சித்திகள், தரிசனங்கள் கிடைக்கும். ஆனா எல்லாப் பலன்களையும், சித்திகளையும் அந்தந்த தெய்வமூர்த்திக்கு இந்த ரிஷி பஞ்சமி விசேஷ நாள்ல அந்தந்த சுவாமிக்கு அர்ப்பணம் பண்ணிடனும்! இதுக்குத் தாண்டா நாம் இன்னிக்கு இங்கே வந்திருக்கோம்! மந்திரபுரீஸ்வர‌ராய் சுவாமி அவதாரம் பண்ணின நாள் இது! மனசார இன்னிக்கு மகாசங்கல்பம் பண்ணி எல்லாத்தையும் ஸ்ரீமந்திரபுரீஸ்வரருக்கே அர்ப்பணம் பண்ணிடு! நான் சொல்றதை நல்லா ஞாபகம் வச்சுக்கோ!" என்று சொல்லியவாறே....அதுவரையில் பின்னால் நின்று கொண்டிருந்த பெரியவர் திடீரென்று மறைந்து விட்டார்!

சிறுவன் திகைத்தான்! முன் பின் தெரியாத இடம்! மந்திரங்களை, மந்திர சக்திகளை, மந்திரப் பலாபலன்களை அர்ப்பணிக்கும் முறைகளைப் பெரியவர் முன்பே அவனுக்கு நன்கு விளக்கி இருந்தாலும், இந்தப் புனிதமான, பொன்னான சமயத்தில் அவரும் அருகில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

"சங்கல்பங்கள் எல்லாம் கலியுகத்தில் சங்கல்பங்கள் ஆவதில்லை!"

ஆம், இதுதான் பெரியவர் அடிக்கடி உதிர்க்கும் வேதமொழி!

"சங்கல்பங்கள் எல்லாம் கலியுகத்தில் உண்மையான சங்கல்பங்களாக ஆவதில்லை!"

"ஆமாண்டா, கலியுகத்துல இன்னிக்கு ஒரு மனுஷன், கடவுளே, எல்லாம் உனக்கு அர்ப்பணம்னு சொல்லி ரொம்ப சந்தோஷமா சங்கல்பம் பண்ணிடுவான்! ஆனா நாளைக்கே கஷ்டங்கள் வந்து தாங்க முடியலைன்னா "கடவுளே இதுக்கா நான் உன்னை கும்பிடறேன்? இவ்வளவு அர்ச்சனை, பூஜை, ஆராதனை பண்ணினேனே! அவ்வளவும் என்னாச்சுன்னு கடவுள்கிட்டேயே கேட்டுக் குறைப் பாட்டுப் பாடுவான்!" இதெல்லாம் அர்ப்பணம் ஆகுமா? இதனாலத்தான் கலியுகத்தில் சங்கல்பங்கள் எல்லாம் உண்மையிலேயே சங்கல்பங்கள் ஆவதில்லைன்னு நாங்க சொல்றோம்!"

பெரியவருடைய இந்த சித்த மகாவேத சூத்திர மொழி தற்போது சிறுவனுக்கு நினைவில் வந்து தங்கியது எனினும் பெரியவர் சொல்லிட்டவாறே கண்களை மூடி அமர்ந்து கொண்டு பெரியவர் உபதேசித்த, போதித்த அனைத்து மந்திரங்களையும் சிறுவன் பக்திப் பூர்வமாக சங்கல்பித்து ஓதினான். எத்தனை நேரம் அவ்வாறு அவன் தன்னை மறந்து அங்கே அமர்ந்து மந்திரங்களை ஜபித்து ஒவ்வொன்றாகச் சங்கல்ப அர்ப்பணம் செய்தானோ சிறுவனுக்கே தெரியவில்லை!

தான் சற்குரு மூலமாக அறிந்த ஒவ்வொரு மந்திரத்திற்கும் "யஜ்ஜோக்ரதோ தூரமுதைதி தைவம்" என்று தொடங்கும் சங்கல்ப சூக்த மந்திரங்களைச் சிறுவன் குருபக்தியுடன் ஓதி ஸ்ரீமந்திரபுரீஸ்வரரையும் வழிபட்டான். ஸ்ரீராமர் வழிபட்டுச் சில அரிய மந்திரங்களை நல்வரமாகப் பெற்ற சிவமூர்த்தியே ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் ஆவார்! பட்டுக்கோட்டை அருகே திருவுசாத்தானம் தலத்தில் ஸ்ரீமந்திரபுரீஸ்வரர் அருள்பாலிக்கின்றார்!

.....திடீரென்று ஏதோ தேவலோக, கந்தர்வ லோகக் குங்கிலியக் கற்பத்தில் நுழைந்தாற் போல் அசாத்யமான, அபூர்வமான, அற்புதமான நறுமணம் கமழ்ந்திடவே...சிறுவன் மெதுவாகக் கண்களைத் திறந்து பார்த்தான்!

ஆஹா! என்னே தெய்வ மூர்த்திகளின் தரிசனம்!

"என்ன இது!  தெய்வலோகத்துக்கே வந்து விட்டோமா!" சிறுவனால் நம்பவே முடியவில்லை! ஆம், பல தெய்வ மூர்த்திகளும், அம்பிகையரும், தேவதா தேவ மூர்த்திகளும் ஆங்கே எழுந்தருளக் கண்டு....சிறுவன் ஆனந்தப் பரவசமாகி, எழுந்து நின்று புனிதமான பக்தியுடன் சாஷ்டாங்கமாகத் தரையில் வீழ்ந்து வணங்கினான்!  கனவா, நனவா என்றே அவனுக்குப் புரியவில்லை! அவர்களிடம் இருந்து வர்ஷித்த அட்சதைகளும், நறுமணப் புஷ்பங்களும் தன் தேகத்தை ஸ்பரிசிப்பதை அவன் பரமானந்தத்துடன் உணர்ந்தான்!

தெய்வ மூர்த்திகளின் தரிசனத்தில் ஓத வேண்டிய பாதாதி கேசம், கேசாதி பாத மந்திரங்களை ஓதி பெரியவர் சொல்லிக் கொடுத்த முறையில் தெய்வ மூர்த்திகளை முதலில் பாதத்தில் தொடங்கி சிரசு வரை தரிசிக்க வேண்டும் என்பதால் சிறுவன் மிகுந்த குருபக்தியுடன், பணிவுடன் ஒவ்வொரு தெய்வ மூர்த்தியாய்த் தரிசித்திட்டான்!

ஆனால் எவ்வளவு நேரம் இது நிகழ்ந்ததோ அவனுக்கே தெரியாது! தகதகவென்று தேகமெங்கும் 72000 நாளங்களிலும் கோடி சூரியப் பேரொளியும், இனம் புரியாத பரிபூரணப் பேரானந்தமும் பரிணமிப்பதை உணர்ந்த சிறுவன் கண்களை மூடி இவ்வரிய தெய்வப் பிரகாசத்தைத் துய்த்துக் கொண்டிருந்தான்!

திடீரென்று கபாலத்தில் ஏதோ நெருடுவதை உணர்ந்து...சிறுவன் மெதுவாகக் கண்களைத் திறந்திட...ஆம்....பெரியவர் தான் பின்புறம் வந்து நின்று அவன் தலையில் தம் புனிதமான விரல்களை வைத்து...சகல அனுகிரங்களையும் பொழிந்து கொண்டிருக்க...

முன்புறமோ பல தெய்வ மூர்த்திகளின் தரிசனம் தொடர்ந்திட....

பின்புறமோ சற்குருவானவர் ரட்சகராய், ஜகத்குருவாய் நின்று குருவருள் மூலமாய்த் திருவருளைத் திரட்டி அளித்திட.....

இந்தப் பக்கம் சற்குரு, அந்தப் பக்கம் தேவாதி தேவ தெய்வ மூர்த்திகள்! பார்ப்பது கனவா, நனவா? சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை! தன்னைத் தானே நன்கு பார்த்துக் கொண்டான்!

கேளாது நின்றாயே, ஏனோ?

"என்னடா, ஏதேதோ கேட்கணும்னு நெனச்சியே, எல்லாத்தையும் அந்தந்த சுவாமிகிட்டேயே இப்பவே கேட்டுடு!"

ஆனால் சிறுவன் எதையும் கேட்கின்ற நிலையிலா இருந்தான்?  நிரந்தரமான, சாசுவதமான, சிரஞ்சீவித்வ இறைப் பேரின்பம் அவனைப் பரவசப்படுத்திக் கொண்டிருக்கும் போது....உலக நினைவுகளா அவனைத் தழுவும்? சுயம் பிரகாச ஜோதியாய் ஜ்வலிக்கும் இத்தெய்வீக அனுபூதியும் சற்குருவால் திரட்டி அளிக்கப்படுவதுதானே!

இப்போது பெரியவர் அவன் தலைச் சுழியை நன்கு அழித்திட...தெய்வ தரிசனங்களின் பேரொளி சிறிது சிறிதாக மறைந்திடவே....

சிறுவன் தன் நிலைக்கு வந்தான்!

....பெரியவர் அவனைப் பார்த்து சூசகமாய்ச் சிரித்தார்! சிறுவனுடைய கண்களை விளையாட்டாகப் பொத்தினார். அவ்வளவு தான் சிறுவனுக்கு எதையோ விட்டது போலாயிற்று! கண்களைத் திறந்து பார்த்தான் சிறுவன்! எதிரே பரந்திருந்த வெள்ளி நிற மண் தரையில் நெய்யை வார்த்தாற்போல் தேவ மூர்த்திகள் நின்ற தேவ தடங்கள் தெரிந்தன! அத்தனை தேவ தரிசனங்களும் என்னவாயின? அவர்கள் மெதுவாக மறையும் காட்சியும் மங்கலாகத் தெரிந்தது!  சிறுவன் பரவசம் பூண்டவனாய்த் திரும்பிப் பார்த்திட....இப்போது பெரியவரையும் காணோம்!

இது இவனுக்கு இப்படித்தான்!

ஒருவாறாக...இப்படித்தான் crucial டயத்தில் பெரியவர் காணாமற் போகின்ற திருவிளையாடல் அவனுக்கு மிகவும் பரிச்சயமானது தானே!

பெரியவர் வேண்டுமென்றே அவனுடைய கால் சட்டையை ஓட்டையாக்கி வைத்திருந்தமையால்...பையில் ஒரு நயா பைசா கூட இல்லாது....தன்னை ஒரு வழியாய்த் தேற்றிக் கொண்டு நடையோ நடையென நடந்து....பெரும் களைப்பில் தள்ளாடித் தள்ளாடி ராயபுரம் அங்காளி ஆலயத்தை வந்தடைந்தான் சிறுவன்!

"வாடா கண்ணா" என்று அன்பொழுக அழைத்த பெரியவர் "ஏண்டா, இவ்வளவு தெய்வங்களைப் பார்த்தியே! அவங்க கிட்ட எனக்குன்னு ஏதேதோ கேட்கணும்னு பிளான் போட்டு வச்சிருந்தியே! ஏன் ஒண்ணுமே கேக்கலையா, கேக்கறதுக்கு மறந்து போயிட்டியா என்ன?"

"அந்த சாட்சாத் பரம்பொருளே இந்தக் கோவணாண்டிப் பரதேசிக் கோலம் தான் அடியேனுக்கு ஏத்ததுன்னு முடிவு பண்ணினனுக்கு அப்புறம்....நீ எப்டிடா எனக்குன்னு ஏதேதோ கேட்டு அடியேனோட தலையெழுத்தை மாத்த முடியும்! இதுலேந்து ஒரு இறைநியதியைப் புரிஞ்சுக்கோ! இறைவனே மனசு வைச்சாத்தான் சித்தர்கள் ஒருத்தரோட தலைவிதியை மாத்துவாங்களே தவிர எவரோட கர்ம வினைகளையும் தாங்களே எடுத்து மாத்தறதே கிடையாது!"

சித்தர்களின் உபதேசமோ, உபநிஷத்தோ எவ்வளவு எளிமையானது! அதுவும் மகத்தான சித்தரே சற்குருவாய் வாய்த்து விட்டால்...அடிமை கண்ட ஆனந்த அனுபூதிகள் அருள் மாமழையாய் வர்ஷித்திடுமே!

சிவராத்திரி கிரிவலம்

பல நூற்றாண்டுகளுக்கு முன் திருஅண்ணாமலையில் மானுட ரூபத்தில் நடமாடி, மக்களோடு மக்களாய் வாழ்ந்து, மறைந்து, ஜீவாலயம், ஜீவ சமாதி பூண்டு என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகளாகப் பரிமளிக்கும் எண்ணற்ற சித்தர்களைக் காண இத்தொடரின் மூலம் அனைவரையும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னதான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்.

கார்த்திகை மாதத் தேய்பிறைப் பிரதமை திதி முதல் மார்கழி மாத வளர்பிறை சஷ்டி முடிய மொத்தம் 21 நாட்கள் சிறிது அரிசிப் பொறி, நீர் மட்டும் ஒரு வேளை ஏற்று, கடும் உண்ணாநோன்பிருந்து, தினமும் திருஅண்ணாமலையாரை கிரிவலம் வந்து வழிபடுவதே எத்தகைய துன்பங்களையும் நசித்து நம்மைக் காக்கின்ற அரிய விக்ன நாசன சஷ்டி விரத முறை ஆகும். பெண்ணாத்தூர் ஸ்ரீவில்வநாத சித்தர் இந்த விரதத்தைப் பல ஆண்டுகள் தீவிர வைராக்கியத்துடன், பக்தியுடன் கடைபிடித்து, ஸ்ரீசிந்தூர கணபதி, ஸ்ரீபால சந்திர கணபதி இருவரையும் இரட்டைப் பிள்ளையாராகத் தரிசிக்கும் பாக்யம் பெற்றார். தினமும் பெண்ணாத்தூரில் இருந்து கால்நடையாகத் திருஅண்ணாமலைக்கு ஏகி, கிரிவலம் வந்து அருணாசலத்தை வழிபட்ட உத்தமச் சித்புருஷர்!

கலியுகத்தில் பேராசை, முறையற்ற காமம், குரோதம், விரோதம், பகைமை, மதமாச்சர்யம் போன்ற ஆறு வகையான மனித குணங்களால் பெருகி வரும் விக்னமாகிய பலவகையான மனக் கொந்தளிப்புகளையும், துன்பங்களையும் களைந்திடத் தேவையான சந்துஷ்ட சஷ்டிக் கிரண வரங்களை அருணாசல மலை தரிசனங்களில் இருந்து திரட்டித் தருபவர்.

சந்திராஷ்டம தினங்களில் ஆண்டி முதல் அரசன் வரை மிகுந்த கவனம் கொள்தல் வேண்டும். தீர்கமான முடிவுகளை சற்குருவின் துணையோடு தான் எடுத்தல் வேண்டும்.

சந்திராஷ்டம தினங்களில், காலையில் விநாயகருக்குப் பசும்பால் அபிஷேகம் செய்து, தேன் கலந்த பாலை, நிவேதனமாக வைத்து, சந்திர சேகரன், சந்திரமௌளி, சசிதரன், சோமன், அமுதா, சந்திரகாந்த், சந்திரா போன்ற "சந்திரப் பெயர்" உடையவர்களுக்குத் தானமாய் அளித்து, பிறகு பால் மட்டும் பருகி விரதமிருந்து இந்த இரண்டே கால் தின சந்திராஷ்டம தினங்களில் விரதம் பூண வேண்டும்.

மதிய நேரத்தில் சிவன் கோயில்களில் அன்னதானம் செய்து, மாலையில் பாலுடன் தேன் கலந்து குங்குமப்பூ இட்டுப் பெண் குழந்தைகளுக்குத் தானமாக அளித்திடுக! இந்நாட்களில் ஸ்ரீசந்திர காயத்ரீ மந்திரத்தை 1008 முறைக்குக் குறையாமல் ஜபித்து வழிபட்டிடில், சந்திராஷ்டமத்தின் வேகம் துரிதமாகத் தணிந்து மனசஞ்சலங்களும் பெரிதும் குறையும். விரதத்தோடு அருணாசல கிரிவலம் வருதல் மிகவும் சிறப்பானதாகும். இந்த சந்திராஷ்டம விரதத்தைப் பெண்ணாத்தூர் ஸ்ரீவில்வநாத சித்தர் கடைபிடித்து விக்ன நாசன சஷ்டி விரதத்தையும் மிகச் சிறப்பாகப் பல ஆண்டுகள் அனுஷ்டித்த ஸ்ரீவில்வநாத சித்தருக்குத் திருஅண்ணாமலையில்,  சிவராத்திரி அன்று, ஸ்ரீசந்திர லிங்க சந்நிதியில், ஸ்ரீசிந்தூர கணபதியே மிகவும் அபூர்வமான சந்திராம்ருத ரசமணியை அளித்திட்டார்.

இந்த சந்த்ராம்ருத ரசமணியை நன்கு பூஜித்து இதன் பலன்களாகப் பலருடைய பிணிகளைத் தீர்த்தார். தீராத பிணிகளைத் தீர்த்த இந்த ரசமணியைச் சித்தர் பிரான் பெற்ற சிவராத்திரியே வில்வநாத சித்தர் சிவராத்திரி என்று பிரசித்தி பெற்றது. ஆனால் இந்த சிவராத்திரியின் மகத்துவம் காலப்போக்கில் மக்களால் மறக்கப்பட்டு விட்டது. திருஅண்ணாமலையில் மூஷிக முக லிங்க தரிசனத்திற்கு முன் ஸ்ரீவில்வநாத சித்தர் குருமூர்த்தம் கொண்டு ஜீவ சமாதி பூண்டார். இது நிகழ்ந்ததும் மாதச் சிவராத்திரி காலத்தில் தாம்!

அன்றிலிருந்து இன்றும், என்றுமாக சித்ரபானு வருடந்தோறும் கார்த்திகை மாதச் சிவராத்திரியானது பெண்ணாத்தூர் ஸ்ரீவில்வநாத சித்தர் சிவராத்திரி என்றே சித்தர்களால் அழைக்கப்படுகின்றது. தம் வாழ்நாளில் சந்திராஷ்டம தினங்களை அறியாது இதில் நற்காரியங்களைச் செய்து மனக்குழப்பங்களால் பல துன்பங்களுக்கு ஆளானவர்களும், சந்திராஷ்டமப் பூஜைகளை முறையாகச் செய்யாதவர்களும், சந்திராஷ்டம தின விளைவுகளின் கடுமையிலிருந்து விடுபட, கீழ்ப்பெண்ணாத்தூர் ஸ்ரீவில்வநாத சித்தரின் ஆசியை வேண்டி, இந்நாளில் நெற்றியில் சிந்தூரம் இட்டு, மூன்று வெள்ளைத் தாமரை மலர்களின் மேல் பாலச்சந்திர காணாபத்ய மஹா சக்கரத்தை வைத்துத் தாங்கியவாறு திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து எத்தகைய வல்வினைகளையும், இடுக்கண்களையும் தீர்க்கவல்ல இடுக்குப் பிள்ளையார் சந்நிதியில் தாமரை மலர்களை அர்ப்பணித்து நல்லருள் பெறுவீர்களாக!

நீர்வளக் குறைவால் வெள்ளைத் தாமரை மலர் கிட்டாவிடில் 1008 தும்பை மலர்களைக் கோர்த்து மாலையாக்கித் தாமரை அல்லது மந்தாரை இலையில் தாங்கி கிரிவலம் வந்து இடுக்குப் பிள்ளையார் சந்நிதியில் அர்ப்பணித்திடுக! மழைப் பொழிவு, நீர்வளம் மங்கிய நிலையில் வெள்ளைத் தாமரைக்கு எங்கு போவது? பக்தியுடன் முனைந்திடில் அனைத்தும் கனியும், வெள்ளைத் தாமரையுடன் அருணாசல கிரிவலம் வருதல் வருண பகவானுக்கும் ப்ரீதி தரும். ஸ்ரீசந்திரனின் அதிதேவதையாக அப்பு விளங்குவதால் நல்மழையைத் தருவிக்கும் அற்புதப் பூஜையுமாக இது மலர்கின்றது!

விஷ்ணுபதி

குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயத்தில் மகத்தான ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகால பூஜை

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலம்!

மதுரை சோழவந்தான் அருகே உள்ளதே விஷ்ணுபதித் தலமாகிய குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலயமாம். அற்புதமான குருபகவான் தலமும் கூட!

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலத்தில் அடிக்கடி வழிபட வேண்டிய மிகவும் முக்கியமான சித்திரை நட்சத்திர வழிபாட்டுத் திருத்தலம்!

புனிதமான கற்பு நெறியுடன் கணவன், மனைவி வாழ்ந்திட வாழ்க்கை முழுதும் பெருந்துணையாய் நிற்பதே குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லபப் பெருமாள் ஆலய விஷ்ணுபதி வழிபாடு! உலகில் கற்பு நெறி சிறக்க அனைவரும் பூஜித்தால் தான் சமுதாயத்தில் நல்லொழுக்கம் நிலவிடும். இதற்கான சமுதாய பூஜையே விஷ்ணுபதி பூஜையாகும்!

குருவித்துறை

தம்பதியரிடையே உள்ள மனக் கசப்பு, சந்தேகம், கருத்து வேறுபாடுகளைக் களைந்து சாந்தமான வாழ்க்கையைத் தர வல்லதே குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லப் பெருமாள் ஆலய விஷ்ணுபதி வழிபாடு!

அடுக்கடுக்காய்த் துன்பங்களை வாழ்வில் சந்தித்து வருவோர், தம் இன்னல்களுக்கான காரண, காரியங்களை அறிந்து தக்க தீர்வுகளைப் பெற உதவும் விஷ்ணுபதி வழிபாடு!

நடப்புச் சித்ரபானு ஆண்டின், கார்த்திகை மாத விஷ்ணுபதிப் புண்ய காலத் தலமாக மதுரை சோழவந்தான் அருகில் உள்ள குருவின் துறை எனப்படும் குருவித்துறைத் தலத்தைச் சித்தர்கள் அளிக்கின்றார்கள். ஸ்ரீசித்திர ரத வல்லப் பெருமாள் அருள்பாலிக்கும் அற்புதமான இத்தலத்தில், ஆலயத்தின் முன்பாக அருகில் ஸ்ரீசுதர்சனப் பெருமாள் வீற்றிருக்க, ஸ்ரீசித்திர ரத வல்லப் பெருமாளை நோக்கி வணங்கிய பாவனையில், ஸ்ரீகுருபகவான் தனிச் சந்நிதி கொண்டு காட்சி தருகின்றார். இத்தலத்திற்கு உரிய புராண அநுபூதிகளும் பல உண்டு. பல விஷ்ணுபதி இறை லீலைகளும் துலங்கிய மகத்தான தலம்!

அவரவருடைய கர்ம வினைக் கண்ணாடியே ஜாதகக் கட்டம்!

கிரகங்களிடையே மித்ரு, சத்ரு, சம கிரகப் பாகுபாடானது, ஜோதிட ரீதியாக, ஜீவன்களுடைய கர்ம வினை அம்சங்களைக் குறிப்பவையே தவிர, நவகிரகங்களுக்குள் எவ்விதப் பகைமையும் கிடையாது. கர்ம வினைகளின் ரீதியாக ஜாதகச் சக்கரம் தொகுக்கப்பட்டு அமைவதாலும், கலியுக ஜீவ வாழ்க்கையில், நவகிரக மூர்த்திகளே, மூல முதல் கர்ம பரிபாலன மூர்த்திகளாகத் திகழ்வதாலும், எந்தெந்தக் கர்ம வினைகள், எந்த கிரக மூர்த்தி வழிபாடுகளால் தீர்வு பெறும் என்பதை உணர்த்தும் காரணச் சக்கரமுமாக ஜாதகக் கட்ட இலக்கணம் ஆன்மீக ரீதியாக அமைகின்றது.

குருவித்துறை

தீதும் நன்றும் தேடிய பொருளே!

நல்லவை, தீயவை என்ற இரண்டும் நிறைந்ததே ஜீவ குணப்பாடுகள் ஆகும். நல்லவற்றை முறைப்படுத்துவது தேவ குரு சக்திகளாம். எனவே, ஆதி மனித குலம் சாத்வீக குணங்களுடன் பொலிந்தமையால் முதலில் தேவ குருசக்திகளை நாடி தேவகுருவை வழிபட்டனர். கர்மப் பெருக்கத்தில் தீவினை அழுத்தங்கள் மிகும் போது தேவ குணங்கள் மறைந்து, அசுர குணம் மனிதனிடம் பெருகுகின்றது. எனவே அசுர குணங்களை நெறிப்படுத்த சுக்ர சக்தி தேவையாயிற்று. தீயவற்றைச் சீராக்க உதவுவதே சுக்ர சக்திகளாகும்.  எனவே கலியுகத்தில் தேவகுரு சக்திகளும், சுக்ர சக்திகள் இரண்டுமே மனித குலத்திற்குத் தேவையானதாம்.

எனவே முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டியது எந்த கிரகத்திற்கும், எந்த கிரகமும் பகைமை கிடையாது என்பதே!

"விதித்தது விதித்தப்படி நடக்கின்றது!" இதுவே பூமியில் வாழ்க்கை நியதி

உண்மையில் கிரக சஞ்சாரங்கள் என்பது ஒவ்வொரு மனித உடலில் இயங்கும் ஜீவ சக்தி நீரோட்டத்தையே குறிக்கின்றது. பூர்வ ஜென்ம வினைகளால் ஒரு பிறவி அமைவதால் ஜீவசக்தி நீரோட்ட இயக்கமும் முன்னரேயே நிர்ணயிக்கப்பட்டதே! ஒருவனுக்கு எந்த வேலை, வீடு, குடும்பம், ஆரோக்யம், அறிவு போன்றவை அமைய வேண்டும் என்பதும் ஜீவ நீரோட்டத்தில் முன்னரேயே நிர்ணயிக்கப்படுவதுடன், "விதித்தது விதித்தபடி நடக்கின்றது" என்பதே ஒவ்வொருவருடைய ஜாதகச் சக்கரமும் புகட்டும் ஜீவ வாழ்க்கை இலக்கணமாகும்.

அனைத்து ஜீவ நீரோட்டங்களும் அடைய வேண்டிய குருவின் துறையே குருவித்துறை!

குருவித்துறை

ஒவ்வொரு ஜீவனும், அதனதனுள் மிளிரும் ஜீவ நீரோட்டத்தில் அடைய வேண்டிய துறையே குருவின் துறை ஆகும். குருவின் துறையை அடைந்தே இறைத் துறையை எவராலும் அடைய முடியும். இதை வைத்தே, பிறவிக் கடலை நீந்திக் கடக்க உதவும் தெப்பமாய் "சற்குருவை" உருவகப்படுத்தினர். அதாவது அனைத்து ஜீவன்களின் நீரோட்டங்களும் அடையும் குருவின் துறையே, குருவித்துறை எனும் திருத்தலமாக மதுரை சோழவந்தான் அருகே பிரகாசிக்கின்றது!

ஒரு யுகத்தில், (புதுச்சேரி-விழுப்புரம் மார்கத்தில் உள்ள) திருபுவனை ஸ்ரீவரதராஜப் பெருமாள் திருத்தலத்தில் சுக்ராச்சாரியாரும், குருவித்துறையில் பிரகஸ்பதியும் தவம் பூண்டு, தேவ, அசுரப் பாகுபாடின்றி அனைவரும் சாந்தமுடன் வாழ ஸ்ரீமன் நாராயண மூர்த்தியை வேண்டி எவரும் அறியா வண்ணம், இத்தலங்களில் மிகவும் எளிய வடிவில் தவமிருந்தனர். இந்த இரண்டு குரவேதிகத் தலங்களையும் இணைக்கும் அபூர்வ பூமித்ரய நீரோட்டமே பார்கஸ்பதி தீர்த்தமாகும். இதில் ஜனிப்பதே புனிதமான வைகை நதியாயிற்று!

கோடி கோடியாய் சற்குருமார்கள் சங்கமிக்கும் குருவின் துறை!

அனைத்துக் கோடி சற்குருமார்களுக்கும் மூல முதல்வர்கள் தாமே ஸ்ரீபிரகஸ்பதியும், ஸ்ரீசுக்ராச்சார்யாரும்! இரு பெரும் தேவ சற்குருமார்களின் கடும் தபோபலன்களைச் சுமந்த பார்கஸ்பதி நீரோட்டம் நிறைந்த நதித் துறையில் இருவருடைய தபோ சக்திகளையும் சங்கமிக்கச் செய்து சகஸ்ர குரவ ஜோதியாகப் பரிணமிக்கச் செய்வதாக ஒரு விஷ்ணுபதி இறை லீலையை இங்கு இயற்றினார் ஸ்ரீமன் நாராயண மூர்த்தி!

அன்றிலிருந்து இதுவே அனைத்து சற்குருமார்களும் கூடும் "குருவின் துறை" ஆயிற்று! அரும்பெரும் தேவ சற்குருமார்களின் கோடி சூர்யப்ரகாச ஞானகுரு தரிசனத்திற்காகப் பிரபஞ்சத்தின் அனைத்துக் கோடி சற்குருமார்களும் இத்துறையில் திரண்டு சங்கமம் ஆகினர்!

சித்திர ரதத்தாரின் விஷ்ணுபதி இறை லீலை!

சித்திர ரதம் என்றால் வடிவுச் சக்கரம் என்று பொருள். அனைத்துக் கோடிச் சித்தர்கள், மகரிஷிகள், ஞானியர்கள், யோகியர்கள், சற்குருமார்களிடம் திரண்ட பானு கிரணங்களை ஒளிக் கிரணங்களை ரதச் சக்கரங்களாக்கி, ஒரு புறம் சுக்ரவரச் சக்கரமும், மறுபுறம் பிரகஸ்புடச் சக்கரமும் பூண்டு சித்திர ரத வல்லப் பெருமாளாக அந்த யுகத்தில் சித்ரபானு ஆண்டில் விஷ்ணுபதிப் புண்யகால நேரத்தில் திருமால் திருக்காட்சி தந்து இத்தலத்தில் பிரகஸ்பதியை ஆட்கொண்டார். இதே போல் சுக்ராச்சாரியாருக்குப் பெருமாள் அருள் புரிந்த தலமே திருபுவனை ஆகும்.

குருவித்துறை

சுக்ராச்சாரியாரும் திருபுவனையில் பெருமாளை நோக்கி தவமிருந்து எதிர்வரும் யுகங்களில் நவகிரக மூர்த்திகளைப் பற்றி ஜீவன்கள் நன்முறையில் புரிந்து கொண்டு நவகிரக சக்திகளின் துணையுடன் நல்வாழ்வு பெற, காக்கும் கடவுளாம் திருமால்தான் துணைபுரிய வேண்டும் என்று வேண்டிட்டார்.

பகைமையைக் கழிக்கும் ஸ்ரீபார்கவஸ்பதிஸ்ரீ குருசக்தி!

எந்த தேவர்களும் அசுரர்களும் ஒருவருக்கு ஒருவர் பகையாக நின்றார்களோ, அவர்களுடைய சற்குருமார்களே அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக இவ்வாறு இரு இடங்களில் கடும் தவத்துடன் இறைவனை வேண்டுவது கண்டு அதிசயித்த தேவர்களும், அசுரர்களும் அந்த யுக காலத்தில் தங்களுடைய பகைமையை மறந்து, ஒன்றுபட்டு வாழ்வதற்கு உறுதி பூண்டார்கள்.

இவ்வாறாக சுக்ராச்சாரியாரும், பிரகஸ்பதியும், ஆழ்ந்த தவம் பூண்டு ஸ்ரீசுதர்சனப் பெருமாளின் தரிசனம் பெற்று ஸ்ரீபார்கவஸ்பதிஸ்ரீ எனும் அரிய குருவருட் சக்தியை ஒரு யுக விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் இத்தலத்தில் பெருமாளுடைய திவ்ய தரிசனப் பிரசாதமாகப் பெற்று நவகிரக மூர்த்திகள் நன்முறையில் கலியுகத்திற்கு அருள்பாலிக்கும் நல்வரத்தைப் பெற்றுத் தந்த அதியற்புதத் தலமாக விளங்குவதே குருவின் துறையாகும்.

குரு பார்க்கக் கோடி நன்மையே!

குருவின் துறை என்று சொல்லும் போதே பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துக் கோடி சற்குருமார்களும் சங்கமமாகின்ற துறையாக குருவின் துறை பிரகாசிப்பதால் இங்கு சுக்ராச்சாரியாருக்கும், குருவிற்கும் ஜாதக ரீதியாகக் கூட எவ்விதப் பகைமையும் கிடையாது. எனவே கிரகங்களுடைய பார்வை, திரிகோணம் போன்றவை எல்லாம் மனிதர்களுடைய கர்ம வினைகளின் அழுத்தத் தன்மைகளைக் குறிக்கின்றனவே தவிர கிரக மூர்த்திகள் ஒன்றுக்கு ஒன்று பகைமையாவது நிச்சயமாகக் கிடையாது என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.

சித்திர ரதச் சிறப்பு!

சுக்ராச்சாரியார் மற்றும் பிரகஸ்பதி தேவ சற்குருமார்களின் தவத்தை மெச்சிய திருமால் மூர்த்தி, ஸ்ரீசித்திர ரத வல்லப் பெருமாளாக அவர்களுக்குக் காட்சி தந்து, வருகின்ற யுகங்களிலே அனைத்து சற்குருமார்களும் இங்கே சங்கமமாகி தம்முடைய தபோபலன்களை இவ்விடத்தில் அர்ப்பணித்து அவரவருடைய குரு பாரம்பரியத்திற்கான குருகுலவாசத் திருத்தெளிவுகளைப் பெற்றுப் பிரபஞ்சத்தில் குருகுலத்தைத் தழைக்க செய்திட அருள்பாலித்த விஷ்ணுபதித் தலமிதுவே!

மூன்றின் குசா ஆறு
ஆறின் குசா மூன்று

இவ்வாறு ஸ்ரீமகாவிஷ்ணு சித்திர ரதம் எனும் அபூர்வமான கிரகச் சக்கர நட்சத்திர யந்திரங்கள் நிறைந்த ரதத்தில் பவனி வந்து குருபகவானுக்குக் காட்சி அளித்த நேரமே அந்த யுகத்தின் விஷ்ணுபதிப் புன்ய காலமாகும்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தோர்க்கான சிறப்பான வழிபாட்டுத் தலம்!

சித்திர ரதம் என்பது பல வண்ணங்களைக் கொண்டதாகும். பூலோகத்தில் நாம் காண்கின்ற ஏழு நிறங்கள் அல்லாது, சித்திரை நட்சத்திர மண்டலத்தில் மட்டுமே பிரகாசிக்கும் ஏழாயிரம் வண்ணங்களைக் கொண்டு, பார்க்குமிடம் எல்லாம் வண்ண மயமாக ஒளிர்வதே சித்திர ரதமாகும்.

எனவே சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுட்காலம் முழுதும் வழிபட வேண்டிய முக்கியமான தலமாகவும் குருவித்துறைப் பெருமாள் ஆலயம் விளங்குகின்றது! வண்ணமயமாய் விளங்குவதே சித்திரை நட்சத்திர மண்டலம்! எனவே சித்திரை நட்சத்திரத்தார் ஏழை ஓவியர்களைப் போஷிக்க வேண்டிய கடமைக்கு ஆட்பட்டு இருக்கின்றார்கள். இவர்கள் பல வண்ண நறுமணப் பூக்களைத் தினமும் தம் கரங்களால் கோர்த்து ஆலயங்களுக்கு அளிக்கும் தேவ கடமையை ஆற்றி வர வேண்டும்.

எந்த கிரகத்திற்கும் ஏழாம் இடத்துப் பார்வை உண்டு என்பது ஜோதிட இலக்கணமாகும். ஏழாயிரம் வண்ணங்களையும், ஏழாயிரம் கிரகச் சக்கரங்களையும் பதித்த சித்திர ரதத்தில் வல்லப‌ப் பெருமாளாகத் திருமால் காட்சி அளித்தமையால் அனைத்து நவகிரக மூர்த்திகளுடைய பார்வைகளும் இந்த வண்ணச் சக்கர ரதத்தில் பதிந்து நற்கிரணங்களாகப் பிரதிபலித்து விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் இங்கு வழிபடுவோரின் மேல் பட்டு அபரிமிதமான அனுகிரகக் கிரணங்களாக ஸ்பரிசிக்கின்றன!

விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் சித்திர ரத வண்ணக் காட்சிகள்!

விஷ்ணுபதிப் புண்ய காலம் நிகழும் காலத்தில் பக்தியுடன் இங்கு வழிபடுவோர்க்கு ஏழாயிரம் வண்ண கிரகச் சக்கரங்கள் கூடிய சித்திர ரதத்தில் ஸ்ரீமகாவிஷ்ணு தோன்றி ஸ்ரீகுருபகவானுக்கு காட்சியளித்தக் கோலத்தை பக்திப் பூர்வமாக வழிபடுவோர் குருவருளால் கண்டு ஆனந்தத்திடலாம். இதன் தேவ காட்சிகள், அபூர்வமான மின்னல்கள், வானவில் ரேகைகள், அரிய ஹோமாக்னி ஜுவாலைகளாகவும் தென்படும்.

சித்திரம் என்பதற்கு வண்ணம், ஓவியம், பல்வகைக் கட்டம், சக்கரம், குபேரச் செல்வம் என்று பலவிதமான அர்த்தங்கள் உண்டு. இந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் ஸ்ரீசித்திர ரதப் பெருமாளுக்கு ஏழு விதமான அபிஷேக ஆராதனைகள், ஏழு விதமான நறுமணப் பூக்களால் ஆன வண்ண மாலைகள், ஏழு நிற வஸ்திரங்களைச் சார்த்தி, வணங்கி ஸ்ரீகுருபகவானுக்கும் அபிஷேக ஆராதனைகளைச் செய்திட்டுப் பூஜிப்பதால் நவகிரக சக்திகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக வாழ்வில் விளங்கித் துணை புரியும். குருவித்துறை திருத்தலம் அளிக்கக் கூடிய அனுகிரகம் அனைத்தையும் ஒரே சொற்றொடரில், “மூன்றின் குசா ஆறு, ஆறின் குசா மூன்று,” என்றவாறு அமைத்து அருளி உள்ளதே சித்தர்களின் மேன்மையைப் பறைசாற்றுவதாக அமையும். இதை எளிமைப்படுத்திக் கூறுவதாக இருந்தால் ஒரு சிவப்பு வண்ண பெயிண்ட் டப்பாவில் இருந்து ஒரு வெள்ளை காகிதத்தில் யானை, குருவி, ஆறு, குளம், பிள்ளையார், முருகன் என்ற எத்தனையோ உருவங்களை வரையலாம், இதற்கு எல்லையே கிடையாது. மீண்டும் அந்த பெயிண்ட் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டி, டப்பாவில் கொட்டி கரைத்து மீண்டும் மரம், செடி, ஆகாய விமானம், கார் போன்ற பல சித்திரங்களை வரையலாம் அல்லவா ? இதுவே அத்வைதம் என்னும் தத்துவத்தின் சாரம். இதை உணர்த்துவதே சித்திர ரத வல்லப பெருமாளின் அனுகிரகங்களில் ஒன்று.

அவரவர் ஜாதகத்துடன் விஷ்ணுபதிப் புண்ய காலத்தில் வலம் வருவீர்!

மேலும் அவரவர் தம்முடைய ஜாதகத்துடன் இந்த விஷ்ணுபதிப் புண்ய காலத்திற்கான கோசார கிரகச் சக்கரத்தையும் தாங்கி ஒரு சந்தனப் பெட்டியிலோ அல்லது மஞ்சள் பையிலோ வைத்துப் பெருமாள் ஆலயத்தையும், குருபகவான் சந்நதியும் அடிப் பிரதட்சிணமாக 21 முறை வலம் வந்து வணங்கி வர, பலத்த கர்ம வினைகளினால் ஏற்படுகின்ற தோஷங்களும் தீர்வதற்கு அனைத்து கிரக மூர்த்திகளே முன் வந்து பரிகாரங்களைப் பெற்றிட அருள்பாலிப்பர். துர்மரணம், விபத்து, வேலை இழத்தல், பணக் கஷ்டம், எதிர்பாராத நஷ்டங்கள், துக்ககரமான சம்பவங்கள் ஏற்பட்டுக் கொண்டிருத்தல் என்றவாறாக அடுக்கடுக்காகத் துன்பங்களைக் கண்டு நடுங்கி வாழ்வோர் விஷ்ணுபதி நாளில் இங்கு வழிபட்டிட, தக்க நிவர்த்திகள் கிட்டிடும்.

எனவே குருவின் துறையான குருவித்துறையில் வரும் விஷ்ணுபதிப் புண்ய கால பூஜைகளைக் கடைபிடித்துப் பலவிதமான அரிய நல்வரங்களை, பலாபலன்களைப் பெறுமாறு பணிவன்புடன் வேண்டுகின்றோம்.

விஷ்ணுபதி பூஜா பலன்கள்!

கற்பு எனும் புனித நெறி ஆண், பெண் இருபாலாருக்கும் உண்டு. இப்புனிதமான கற்பினைப் போற்றிப் பாதுகாக்க வேண்டியது அனைத்து நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு மனிதனின் கடமையாகும். மனதால், உள்ளத்தால், உடலால், ஒருவனுக்கு ஒருத்தி, கணவனே கண் கண்ட தெய்வம் என்ற கற்பு இலக்கணங்களுடன் வாழ வேண்டிய கடமை மிகவும் முக்கியமான வாழ்க்கை நெறியாகும். ஆனால் பலரும் மனதால், உள்ளத்தால், உடலால் செய்த காமத் தீவினைகளுக்கும், தீங்குகளுக்கும் பலத்த பாவ வினைகள் சூழும் என்பதை உணர்வதில்லை! அனைத்துக் காம வினைகளுக்கும் நன்முறையில் பிராயச்சித்தம் தேடி இனியேனும் புனிதமான கற்பு நெறிகளைப் போற்றி வாழ்வதற்கு இந்த விஷ்ணுபதிப் புண்யகாலம் பெரிதும் துணைபுரியும்.

சற்குருவைப் பெற்றிட்டால் மட்டும் போதாது, சற்குருவைக் கண்டவர்கள் அவருடன் நிலைத்து நிற்பதற்கான அனைத்து நல்வழி முறைகளையும் முறையாகக் கடைபிடித்து வருதல் வேண்டும். சற்குருவைக் காண்பதை விட அவர் எடுத்துரைக்கின்ற நற்காரியங்களை ஆற்றுவது தான் சற்குருவிற்குப் ப்ரீதியானதும், சிஷ்ய பிணைப்பினை தெய்வீகமாக்குவதும் ஆகும். சற்குருவைப் பெற்றவர்களுக்கு, சற்குருவுடன் சாசுவதமாக நிலைத்து நின்று அவருடைய திருப்பாதக் கமலங்களில் சரணடைவதற்கான நல்வாய்ப்பினைப் பெற இந்த விஷ்ணுபதிப் புண்யகாலம் பெரிதும் உதவும்.

சற்குருவை இதுவரையில் காண இயலாதோர், தம் வாழ்நாளில் சற்குருவின் திருப்பாதக் கமலங்களில் சரணடைய வேண்டும் என்ற வைராக்யத்துடன் இங்கு வழிபடுதலால் குறித்த காலத்தில் வர வேண்டிய இடத்தில் சற்குருவே வந்து அரவணைத்திடுவார்.

கணவன், மனைவியிடையே தேவையற்ற சந்தேகங்கள், வீண் குழப்பங்கள் இருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்கு இங்கு தம்பதிகளே ஒருமித்துச் சேர்ந்து வந்து அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வருதல் வேண்டும்.

வலிப்பு சம்பந்தப்பட்ட வியாதியால் பல குழந்தைகள் இன்றைக்கும் அவதிப்பட்டுக் கொண்டு இருக்கின்றார்கள். இத்தகைய வலிப்பு வியாதியைப் போக்கக் கூடிய முக்கியமான வழிபாடாக விளங்குவது குருவிற்கு உரிய வியாழனன்று குரு ஹோரை நேரத்திலும், மற்றும் குரு நட்சத்திர நாட்களான புனர்பூசம், விசாகம், உத்திரட்டாதி நாட்களிலும் ஸ்ரீகுருபகவானுக்கு அபிஷேக, ஆராதனைகளைச் செய்து இயன்ற தான, தர்மங்களை குறிப்பாக பொன் அல்லது வெள்ளி மாங்கல்யம், சந்தனத் தைலம் போன்றவற்றை ஏழைகளுக்குத் தானமாக அளித்து வர வேண்டும்.

தம் பதவி, அந்தஸ்து, செல்வம், வலிமை காரணமாகப் பிறருக்குத் தீங்கிழைத்தோர் இங்கு மனதாரப் பிராயச்சித்தம் வேண்டி பெருமாளையும், குரு பகவானையும் வழிபட்டு பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரணங்கள் அளித்து வர, பாவ வினைகளின் வேகம் தணிந்திடும். கிரக தோஷங்களால் அவதியுறுவோர் தம் கர்ம வினைகளின் அழுத்தமே தம் இன்னல்களுக்குக் காரணம் என உணர்ந்து இங்கு விஷ்ணுபதி நேரத்தில் வழிபடுதல் வேண்டும்.

வடவன்பட்டி

பெயர்ச் சிறப்புத் தலத் தொடர்

சிவ சக்தி - இரட்டைப் பெயருடையோர்க்கான வடவன்பட்டி ஸ்ரீஉமாமகேஸ்வரர் ஆலயம்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் - மேலூர் பஸ் மார்கத்தில் உள்ள கீழவளைவு கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் வடவன்பட்டி ஸ்ரீஸ்வர்ணவல்லி (பொன்னாவிடைச் செல்வி) சமேத ஸ்ரீஉமாமகேஸ்வரர் சிவாலயம் உள்ளது.

உமாமகேஸ்வரன், உமாபதி, அர்த்தநாரீ, உமாசங்கர், ரமாமணி, சிவசங்கரி, மீனாட்சி சுந்தரம், சுந்தரவல்லி, பரமேஸ்வரி, கோடீஸ்வரி, காமேஸ்வரி, முத்துக்கருப்பன், சிவகாமி, வேதவல்லி, காந்திமதிநாதன், நெல்லையப்பன், மஹேஸ்வரி, கௌரீசங்கர் போன்ற சிவ, சக்தி, இருவகை அர்த்த நாரீஸ்வரப் பெயருடையோர்க்கான ஆயுட்கால வழிபாட்டுத் தலமாக விளங்குவதே வடவன்பட்டி ஸ்ரீஸ்வர்ணவல்லி சமேத ஸ்ரீஉமாமகேஸ்வரர் சிவாலயம்.

இத்தகைய சிவன், சக்தி இணைப்பு இரட்டைப் பெயருடையோர் மிகவும் அதிர்ஷ்டமான நாமசக்திகளைக் கொண்டவராவர். ஏனெனில் இவர்களை அழைப்போருக்கெல்லாம், சிவ, சக்தி நாமங்களை ஒருமித்து ஓதிய பலன்கள் கூடி வருகின்றன அல்லவா! மேலும் இவர்கள் தம் வாழ்நாள் முழுதும் தம் சிவசக்தி நாமத்தைப் பல்லாயிரம் முறை பல இடங்களிலும் தம் வாழ்நாளில் சொல்லி, எழுத வேண்டிய பாக்யம் கிட்டுவதால், சிவசக்தி சகஸ்ர நாமங்களை ஓதிய அளப்பரிய புண்ய சக்தியும் கூடுகின்றது. இதற்காகவே நம் முன்னோர்கள் தம் பிள்ளைகளுக்கு இறை நாமங்களையே இட்டனர். ஆனால் கலியுகத்திலோ நவீனம் மற்றும் அயல்நாட்டு மோகத்தில் மூழ்கி நல்ல கடவுள் நாமங்களையும் கூடச் சுருக்கி (மகாலிங்கம் - மாலி, விஸ்வநாதன்-விசு, கிருஷ்ணன்-க்ருஷ்) நாமதோஷங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

சிவ சக்தி நாமங்களைப் பூண்டோர் தம் ஆயுள் காலத்தில் வழிபட வேண்டிய ஆலயமாக சித்தர்கள் அருள்கின்ற வடவன்பட்டிச் சிவாலயமானது எண்ணற்ற புராண அனுபூதிகள், அற்புதங்களைக் கொண்ட மிகவும் பழமையான ஆலயம்! இறைவனுடைய பல அவதாரிகைகளில் இறைத் துணைவியாய் ஆகிட ஈஸ்வரியே. சர்வேஸ்வரனை வழிபட்டு எண்ணற்ற அவதார சக்திகளைப் பெற்ற அற்புதத் தலம்! தினந்தோறும் திருக்கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வரும் பாக்யம் பெற்ற ஸ்ரீஅகஸ்தியர், ஸ்ரீநாரதர் போன்ற மஹரிஷிகள் இன்றும் தினந்தோறும் சூட்சுமமாக வலம் வருகின்ற சிவத்தலம்!

இரட்டைப் பெயர்களிலும் மூன்று வகையுண்டு. சிவ விஷ்ணு நாமம் (சிவராமன்), விஷ்ணு‍-லக்ஷ்மீ நாமம் (லக்ஷ்மீபதி), ஈஸ்வர, ஈஸ்வரி (பரமேஸ்வரி) நாமம் சேர்ந்தது ஆகிய மூவகை! சிவ, சக்தி (ஈஸ்வரி) பெயருடையோர் அர்த்தநாரீஸ்வர தத்துவத்தில் லயித்து சிவ, சக்தி ஐக்ய ஸ்வரூப பூஜைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக, திருஅண்ணாமலையில் ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்திற்கு முன்பாக கிட்டும் மலை தரிசனமான சிவசக்தி ஐக்ய ஸ்வரூப தரிசனத்தை மாதம் ஒரு முறையேனும் பெற்று வர, தம்பதிகள் மிகவும் சாந்தமய ஒற்றுமையுடன் வாழ்வர். சுமங்கலித்வம் சிறக்கும்.

தாய், மகன், தந்தை, பெண் இவ்வாறு ஆண், பெண் வர்க்கத்தினரிடையே ஏற்பட்டுள்ள பலத்த பிரச்னைகள், உறவுப் பகைமை தீரவும் இத்தலத்தில் மேற்கண்ட இரட்டைப் பெயருடையோருடைய கரங்களால் நிலக்கடலை, முந்திரி, மொச்சை, முந்திரி போன்ற இரட்டை அம்சப் பொருட்களை தானமளித்து வர வேண்டும்.

"துவீதிய பட்சணம்" என்ற வகையான இனிப்பும், கசப்பும், இனிப்பும் காரமும், உப்பும் புளிப்புமாக இரட்டைச் சுவை, பல்சுவை கலந்த உணவுத் திரவியங்களையும் அடிக்கடி தானமளித்தல் வேண்டும். உதாரணமாக எலுமிச்சைப் பழ, ஆரஞ்சு, அன்னாசி ஜூஸ், கொய்யா மற்றும் நாவல் பழங்களில் சிறிது உப்பு, காரம் இடுதல், பானகம், இஞ்சி மொரப்பா, பாகற்காய் காரக்கறி, மாம்பழப் பச்சடி, மாம்பழப் பாயசம், வேப்பிலைப் பூ பாயசம் போன்ற இருசுவை பண்டங்களை தானமளித்தலால் தம்பதியரிடையே உள்ள எத்தகைய மனக் கசப்பான மலையளவு பிரச்னைகளும் மிகவும் எளிதில் தீரும்.

எலியும், பூனையும் போலுள்ள சகோதர பந்தமும், பெற்றோர்கள் பிள்ளைகளும், இங்கு இவ்வகைப் பண்டங்களைப் பிரசாதமாகப் படைத்துத் தானமளித்தலால் எவ்விதப் பகையும் நன்முறையில் தீர்ந்து நல்ல சௌஜன்ய சாந்தத்துடன் கூடிய நல்ல சுமுகமான உறவு உண்டாகும். பலவிதமான கடும் பிரச்னைகளால் சண்டையிட்டுப் பிரிந்து வாழும் தம்பதிகளிடையே கூட எதிர்பாராத வகையில் இவ்வாலய வழிபாட்டால் இனிய சுமூக உறவை மீண்டும் பெறுவர்.

அபூர்வமான இரட்டைக் காப்பு வழிபாடு!

இங்கு கடைபிடிக்கப் பட வேண்டிய மிகவும் முக்கியமான துவீத்ய அபிஷேக முறை என்னவெனில் ஸ்ரீஉமாமகேஸ்வரச் சிவலிங்கத்திற்கு ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய தினங்களில் லிங்கத்திற்கு வலப்புறம் வெண்ணெய்க் காப்பும், இடப்புறம், சந்தனக் காப்பும் செவ்வாய், புதன், சனிக் கிழமைகளில் லிங்கத்திற்கு வலப்புறம் சந்தனக் காப்பும், இடப்புறம் வெண்ணெய்க் காப்புமாக இரட்டைக் காப்புகள் இட்டு வழிபடுதலாகும். இதனால் அலுவலகம் செல்லும் கணவன், மனைவி இருவரிடையே உள்ள மனஸ்தாபங்கள் தீரும். குழந்தைகளைக் காப்பகத்தில் சேர்த்தல், படிப்பு, பதவி காரணமாகக் குடும்பத்தை விட்டுத் தனியாக பிரிந்திருத்தல் போன்ற பிரச்னைகள் நன்முறையில் தீரவும் இத்தகைய துவாதசக் காப்பு வழிபாடு பெரிதும் துணை புரியும். இவ்வாறாக ஆண், பெண் நாமங்கள் இணைந்த பெயருடையோர் இத்தலத்தைத் தம் ஆயுட்கால வழிபாட்டுத் தலமாகக் கொண்டு வழிபட்டுப் பலருக்கும் உணர்த்துதல் மகத்தான இறைப் பணியாகும்.

ஸ்ரீபைரவ விஜயம்

சித்ரபானு ஆண்டு திருஅண்ணாமலைத் திருக்கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் ஸ்ரீபைரவ விஜயம்

திருஅண்ணாமலையில், மலை உச்சியில் ஸ்ரீமகா விஷ்ணுவும், ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் தரிசித்த அருணாசல தீபம் என்றும், எப்போதும் பிரகாசித்துக் கொண்டுதான் இருக்கிறது, ஆனால் சாதாரண மனிதக் கண்களுக்குத் தெரியவில்லை!

சித்ரபானு ஆண்டின் அருணாசல தீபப் பெருவிழாவில், ஸ்ரீபைரவ விஜயமாக, அஷ்ட பைரவ மூர்த்திகளும் எட்டு நாட்களுக்குக் கிரிவலம் வருகின்றனர்.

கலியுகத்தில் பெருகி வரும் அணு ஆயுத விஷ சக்திகள், வெடி குண்டுகள், தீய சக்திகள், வன்முறைகள் இவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ள மனித குலத்திற்கு ஸ்ரீகால பைரவர் வழிபாடு மிகவும் முக்கியமானதாகும்.

இப்பூவுலகின் ஆன்மீக மையமான புனிதமான நம் பாரத நாட்டில், உலக மக்களின் நலத்தைப் பேணும் பிரதோஷ பூஜை, விஷ்ணுபதி வழிபாடு, ஸ்ரீகால பைரவர் பூஜை போன்ற சமுதாய இறைப் பொது வழிபாடுகளைக் கடைபிடிக்க வேண்டிய கடமை ஒவ்வொரு பாரதப் பிரஜைக்கும் உண்டு!

அருணாசல தீபம் என்றும் பிரகாசிப்பதே!

சித்ரபானு ஆண்டின் கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் மகா கார்த்திகைத் தீபமானது வரும் 19.11.2002 நாளில் அமைகின்றது. வருடா வருடம் கார்த்திகை மாதக் கார்த்திகை நட்சத்திரத்தன்று மட்டுமே திருஅண்ணாமலையில் திருக்கார்த்திகைத் தீபமாக ஜோதி ஏற்றப்படுகின்றது என்று எண்ணாதீர்கள்! என்றும், எப்போதும் ஒளிரும் ஏகாந்த அருணாசல தீபப் பிரகாசமானது கலியுக மாயையால், கர்ம வினைகளால் சாதாரண மனிதனின் கண்களுக்குத் தெரியவில்லையே தவிர, மான், மயில், பசு, பல லோகங்களுக்கும் தினமும் சென்று வரும் அண்டங் காக்கை போன்ற பல பறவைகளும், விலங்குகளும், வில்வம், துளசி, கொன்றை, தும்பை, அரசு, வேம்பு, ஆல், வன்னி போன்ற தாவரங்களும் சாசுவதமான அருணாசல ஜோதியைத் தினந்தோறும் திருஅண்ணாமலையில் எந்நேரமும் தரிசிக்கும் சக்தியைப் பெற்றுள்ளன என்பது சித்தர்கள் அளிக்கின்ற தெய்வீக வேத நற்செய்தியாகும்.

மேலும், கார்த்திகைத் தீபமானது மனித முயற்சியால், மலை உச்சியில் கொப்பறைத் தீபமாக ஏற்றப்படுவது போல் நமக்கு தோன்றுகின்றதே தவிர, உண்மையில் தேவாதி தேவ லோகங்கள், பித்ரு லோகங்கள், சித்தர்கள் மற்றும் மஹரிஷிகளின் லோகங்களில் அருணாசல ஜோதியானது உத்தம பக்தி கூடிய நிலையில் எப்போதும், எந்நேரமும் இறையருளால் தரிசிக்கும் வண்ணமே பொலிகின்றது!

நடப்புக் கலியுக மன்வந்திரத்தில் சித்ரபானு ஆண்டின் கார்த்திகைப் பெருவிழாவில், 19.11.2002 அன்று திருஅண்ணாமலையில் மானுடக் கண்களுக்குத் தரிசனம் தர இருக்கும் திருக்கார்த்திகை ஜோதியின் சாந்நித்ய சீருஷவடிகள் யாவும் பல்லாயிரம் தேவ ஆண்டுகளுக்கு முன்னரேயே தீர்க்க தரிசனமாக, தேவாதி தெய்வ தேவ மூர்த்திகளால், சித்தர்கள், மகரிஷிகள் மூலமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதே என்பதும் பலரும் அறியாத தெய்வீகத் தாத்பர்யமாகும். காலத்தைக் கடக்கும் காலாதீத யோகத்தில் திளைப்போர்க்கே இவ்வரிய உத்தம நிலைகள் கிட்டப் பெறும்.

காலாதீத ஞான அம்சமே ஆக்கப் பூர்வமான நுண்ணிய கம்ப்யூட்டர் அறிவு!

இத்தகைய அற்புதங்கள் நிறைந்த அருணாசல ஆன்மீக அனுபூதிகளைத் தற்காலத்தில் எந்தச் சற்குருவும் எவ்வகையில் எடுத்துச் சொன்னாலும், பலரும் முழுமையாக நம்புவதும் கிடையாது. சித்தர்கள் அளிக்கும் மெய்ங்ஞானமே நல்ல விஞ்ஞானத்திற்கு ஆதாரம் என்பதை மனித குலம் என்றேனும் உணர்ந்தாக வேண்டும். ஆனால் இறைவன் அளித்த நல்விஞ்ஞான ஞானத்தை, ஆக்கம் தர வேண்டிய வகையில் மனித குல, சமுதாய நலத்திற்காகப் பயன்படுத்தாது, அணு ஆயுதம், துப்பாக்கி, வெடிகுண்டு என அழிவிற்காகப் பயன்படுத்துவது மனித குலத்தின் மன்னிக்க முடியாத பெருங் குற்றம்தானே! இயற்கைச் சக்திகளை ஜீவ நலன்களுக்குப் பயன்படுத்தும் ஆன்மீக வழிமுறைகளைத் தக்க சற்குருவை நாடி அறியாததால்தான் விஞ்ஞானத்தை அழிவிற்குப் பயன்படுத்தும் தீய புத்தி தோன்றுகின்றது! காலம் சம்பந்தப்பட்டதே கம்ப்யூட்டர் அறிவு!

"நம்பினோர்க்கு நடராஜா!" என்று எக்கணமும் சிவ சித்தத்தில் உறையும் சித்தர்களுடைய வாக்கியம் போல, எதுவும் இறையருளாலேயே நிகழ்வதென உணர்ந்து ஆழ்ந்த தெய்வ நம்பிக்கைக் கொண்டவர்களுக்கே நற்சக்திகளுக்கு ஆக்கந் தருவதான, எப்போதும் நன்மை தருவதான, சாசுவதமான தெய்வீக விஞ்ஞான சக்திகள், தக்க சற்குரு மூலமாகவே ஊட்டி உணர்த்தப்படும்.

இன்றைக்கு நாம் computer brain, கம்ப்யூட்டர் சாதனைகள் என்று போற்றுவதை எல்லாம் ஒரு தூசியை விடச் சிறியதே என்று சொல்கின்ற அளவிற்கு, பிரபஞ்சத்தின் எத்தனையோ அண்டங்களில், எத்தனை கோடி யுக நிகழ்ச்சிகளையும், ஒவ்வொரு விநாடி சம்பவங்களையும் உடனடியாக எடுத்துரைக்க வல்லவர்களே கால பைரவ லோகத்தில் உறையும் பைரவ சித்தர்கள், பைரவ மகரிஷிகள் ஆவர்.

எதிர் வருகின்ற ஆண்டுகள் கம்ப்யூட்டர் யுகமாக முழுமையாக மாற இருப்பதால், பைரவ லோகத்தைச் சார்ந்த சித்தர்கள், மகரிஷிகள் தாம் இதற்குரிய காலாதீத ஞானம் கொண்டு நமக்கு பைரவ சக்தியைத் திருவருளாகப் பெற்றுத் தர இயலும்! அதாவது அடுத்து வரும் பல்லாயிரக்கணக்கான கலியாண்டுகளில், பூமியில் பைரவ லோகச் சித்தர்களின், மகரிஷிகளின் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

பைரவ மகரிஷிகளின் "காலங் கடக்கும் ஞானப் புனல்"!

ஒவ்வொரு நாளிலும் இந்த நேரத்தில் இந்த ஹோரையில், இன்ன மஹரிஷிகள், சித்தர்கள் அருணாசலத்தைக் கிரிவலமாக வருகின்றார்கள் என்பது எத்தனையோ யுகங்களுக்கு முன்னரேயே ஸ்ரீகால பைரவ லோகத்தில் நிர்ணயிக்கப்பட்டதாகும்.

பைரவ மஹரிஷி என்பார் எத்தனையோ கோடிச் சதுர் யுகங்களில் பிரபஞ்சத்தின் எண்ணற்ற லோகங்களில் நிகழும் நிகழ்ச்சிகளையும், சம்பவங்களையும், அனுபூதிகளையும் தன்னுடைய கபால நாள நாடிகளிலே பதிவு செய்து கொண்டுள்ளார் என்றால், பைரவ மஹரிஷியின் தெய்வீக ஞானத்தின் மகத்துவம்தான் தன்மையின் மகிமைதான் என்னே! இதைக் கொண்டுதான் ஜீவன்களின் கர்மவினைப் பரிபாலன ராஜ்யமே இயங்குகின்றது. இதையெல்லாம் கலியுக மனிதச் சிறுமூளை ஏற்காது! பக்தியுடன் இறை நம்பிக்கையைப் பரிபூரணமாகப் பூண்டவர்க்கே இது போன்ற ஞானத் தெளிவுரைகள் மேன்மேலும் புலப்பட வரும்.

பைரவ லோகத்தில் உற்பவிக்கும் அருணாசல அஷ்ட நந்திகள்!

திருஅண்ணாமலையின் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்ட நந்திகளுமே பைரவ லோகத்திலிருந்து உற்பவிக்கப் பட்டவையே! நந்தி அவதாரிகை அம்சங்களிலும் பலவிதமான நந்தி மூர்த்திகள் உண்டு.  நடப்புத் தமிழ் ஆண்டில், அருணாசலப் புனித பூமியில், பதசிவ நந்தியம், பைரவ நந்தியம், சரப நந்தியம், லிங்க நந்தியம், சண்டேஸ்வர நந்தியம், பால நந்தியம், கோ நந்தியம், மிருத்யுஞ்ஜய நந்தியம் என்றவாறாக, திருஅண்ணாமலை கிரிவலப் பாதையின் எட்டுத் திக்குகளிலும் உள்ள எட்டு நந்தி மூர்த்தங்களுக்கான அருட்பெயர்களை, நாமசரகங்களாகச் சித்தர்கள் அளிக்கின்றனர். ஒரே சமயத்தில் அனைத்துக் கோடி சிவலோகங்களிலும் உள்ள நந்தி மூர்த்திகள் இவற்றில் ஆவாஹனம் ஆவதும் உண்டு. அந்தந்த நாளின், நட்சத்திரம், கிழமை, யோக, கரண நிலைகளைப் பொறுத்து இந்த நந்தீஸ்வர அனுபூதிகள் அமையும்.

உதாரணமாக, பிரதோஷ நேரத்தில், திருஅண்ணாமலையின், அஷ்ட நந்தி மூர்த்தங்களிலும் குறைந்தது அஷ்டாஷ்ட அஷ்ட தச கோடி நந்தி மூர்த்திகள் ஆவாஹனம் ஆவதாக நந்திச் சித்தர்பிரான் அருள்கின்றார். அதாவது அறுபத்தி நான்காயிரம் கோடி நந்தி மூர்த்திகள், ஒவ்வொரு பிரதோஷ நேரத்திலும் அண்ணாமலையின் அஷ்ட நந்திகளிலும் ஆவாஹனம் ஆகி, கிரிவலம் வருவோர்க்கு அளப்பரிய அருளைப் பெற்றுத் தருகின்றன. இதனால்தான் பிரதோஷ நேரம் மட்டுமல்லாது நித்யப் பிரதோஷம் எனப்படும் தினமும் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி நேரக் காலத்தில் கிரிவலம் வந்து அஷ்ட நந்திகளுக்கும் அஷ்ட பைரவ ஊதுபர்த்தி தூபம் ஏற்றி வழிபட்டு அஷ்ட நந்திகளின் கொம்புகளுக்கு ஊடே அருணாசல மலை தரிசனத்தைப் பெறுதலால் மகத்தான மன நிம்மதி கிட்டிடும். வாழ்வில் செய்த தவறுகளுக்கு மனப் பூர்வமாக வருந்தி இனியேனும் நன்னிலை அடைவதற்கான அறவழிகளும் கிட்டும்.

ஸ்ரீபைரவ விஜயம்

பிரம்ம மூர்த்தியே மானுட வடிவம் பூண்டு கடந்த விஷு ஆண்டின் கார்த்திகைப் பெருவிழாவின் போது கிரிவலம் வந்தது போல, கால பைரவ மூர்த்தி அவதாரங்களே இந்த சித்ரபானு ஆண்டின் அருணாசல கார்த்திகைத் தீபப் பெருவிழாவின் எட்டுத் தினங்களிலும் அருணாசல கிரிவலத்தை மேற்கொள்கின்றார்கள். 12.11.2002 முதல் 19.11.2002 வரை எட்டு நாட்களுக்கும் அஷ்ட பைரவ மூர்த்திகளுமே, ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு பைரவ மூர்த்தியாகக் கிரிவலம் வந்து ஸ்ரீஅருணாசலப் பரம்பொருளுடன் சேர்ந்து நமக்கு அருள் புரிகின்றனர்.

எவ்வாறு சிவாவதாரமான பைரவ மூர்த்தியே அருணாசலத்தை வலம் வருவதாகின்றது? ஸ்ரீகால பைரவ மூர்த்தியே பூலோகத்திற்கு வந்து அருணாசல கிரிவலத்தை மேற்கொள்ளக் காரணம் என்ன?

ஜீவன்கள் மேல் கொண்ட பெரும் அளப்பரிய கருணையால்தான்! இன்று பூமியில் பெருகி விட்ட பல தீய சக்திகளை பைரவ சக்திகளால்தான் மாய்க்க இயலும் என்பதால்தான்! அருட்பெரும் காருண்யத்தால் பைரவ லோகச் சித்தர்களே, மஹரிஷிகளே ஸ்ரீகால பைரவ மூர்த்தியைப் பெரிதும் வேண்டி, பரவெளியில் மறைந்துள்ள பைரவ சக்திகளை மீண்டும் நன்முறையில் பூலோகத்தில் நிரவிட, ஸ்ரீகால பைரவ மூர்த்திகளையே பூலோகத்தில் அருணாசலத்தைத் தூல வடிவில் வலம் வருதல் வேண்டும் என்று வேண்டி மன்றாடிக் கேட்டு, இறைஞ்சி, இறைப் பேரருளை நமக்கெனத் திரட்டித் தரும் ஸ்ரீபைரவ விஜயமாக, எட்டு ஸ்ரீகாலபைரவ மூர்த்திகள் கிரிவலம் வருவதை நமக்குப் பெரும் பேறாகப் பெற்றுத் தந்துள்ளார்கள்.

பிரபஞ்ச ஞானம் பூண்ட வடமூல பைரவ மகரிஷி!

பைரவ லோகங்களில் உள்ள அனைத்து மஹரிஷிகளின் தலைமைப் பீடாதிபதியே வடமூல பைரவ மஹரிஷி ஆவார். இவர்தான் திருவாதிரை நட்சத்திரம் தோறும் அனைத்து பைரவத் தலங்களிலும், மானுட வடிவில் பைரவரைப் பூஜித்து, பைரவ சக்திகளைப் பூவுலகிற்கு அளிக்கின்றார்.

பிரபஞ்சத்தில் ஒவ்வொரு விநாடியிலும் நிகழ்கின்ற இயக்கங்களை ஞானப் பூர்வமாக உணரும் தெய்வீக வரம் பெற்ற வட மூல பைரவ மகரிஷியாலோ அல்லது ஏனைய பைரவ லோக மஹரிஷிகளாலோ பூலோகத்திற்குத் தேவையான பைரவ சக்திகளை அளித்திட இயலாதா என்ன? இதற்காக ஸ்ரீபைரவ மூர்த்திகளே பூமிக்கு வந்திடல் வேண்டுமா?

பைரவ பூஜையே பூமியில் மலைபோல் பெருகி உள்ள கால தோஷக் கர்ம வினைகளைத் தீர்க்கும்!

பூவுலகில் பைரவ சக்திகள் என்றும் மங்குவதில்லை, சிரஞ்சீவித் தன்மையுடன் தான் அவை எங்கும் யாங்கணும் துலங்கிப் பரிமளிக்கின்றன. ஆனால் பைரவ சக்திகளின் பலன்களை அடைந்திட வேண்டுமானால், பைரவ வழிபாடு தானே இதற்குத் துணை புரிய முடியும்! மஹரிஷிகளும், சித்தர்களும் மட்டுமே பைரவ வழிபாடுகளை மேற்கொண்டால், ஜீவன்கள் இதைப் பற்றிக் கவலைப் படாமலேயே இருந்தால் எவ்வாறுதான் ஜீவன்கள் தங்களுக்குத் தேவையான பைரவ சக்தியைப் பெற்றிட முடியும்?

ஒருவருக்குப் பசி என்றால் அவர்தானே உண்ண வேண்டும், இன்னொருவர் உண்பதால் பசி தீர்ந்து விடுமா? இது போலத்தான் எந்த ஜீவனுக்குப் பைரவ சக்தி தேவையோ, அவர்தான் பைரவ வழிபாட்டைக் கண்டிப்பாக மேற்கொண்டாக வேண்டும். இல்லையெனில் பைரவ சக்தியால் மட்டுமே தீரக் கூடிய கர்ம வினைகள், கால மிருத்யு தோஷங்கள், நோய்கள் போன்றவை நீங்கிடாது துன்பங்கள் தினசரித் துன்பங்களாய் மேன்மேலும் பெருகி விடும். இதுவே கலியுகத்தில் அனைத்து நாடுகளிலும், மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பிரச்னை ஆகும்.

பரவெளியில், ஆகாயத்தில், வானத்தில், நிலத்திலும், நீரில், நெருப்பில் இவ்வாறாக அனைத்து வகைகளிலுமே திரள்கின்ற பைரவ சக்திகளை ஜீவன்களுக்குப் பெற்று தருவதற்குத்தான் ஸ்ரீகால பைரவ மூர்த்தியே, தன்னுடைய பல அஷ்ட பைரவ மூர்த்தங்களில் மகா பைரவர், உக்ர பைரவர், சண்ட பைரவர், உன்மத்த பைரவர், காபால பைரவர், பீஷண பைரவர், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் என்ற எட்டு முக்கியமான அஷ்ட மூர்த்தங்களின் வடிவுகளைக் கொண்டு அருணாசல கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் கிரிவலத்தை மேற்கொண்டு அருள்பாலிக்கின்றார். கலியுகத்தின் காலதேவப் பரிபாலனத்திற்கென ஈஸ்வரனே, பைரவப் பெருந் தோற்றத்தில் உற்பவித்து நம்மைக் காக்கின்றார்.

முதல் நாள் கிரிவலம் ஸ்ரீஉக்ர பைரவ மூர்த்தி

இன்று அக்னி வடிவில் பைரவ சக்திகளை பூலோகத்திற்கு திரட்டித் தந்து அருளிட அருணாசலத்தைக் கிரிவலம் வருபவரே ஸ்ரீஉக்ர பைரவர் ஆவார்! உமையவளே பசு வடிவில் வந்ததுபோல் மானுடர், சிகப்பு நிறமான, பசு, எறும்பு, காளை போன்ற எந்த வடிவிலும் இன்று ஸ்ரீஉக்ர பைரவர் கிரிவலம் வந்திடலாம். சிகப்பு (வற) மிளகாய், சிகப்பு (கார்) அரிசி, மிளஞ்சோலை போன்ற அக்னி வகை மூலிகைகளைத் தாங்கியவாறும் ஸ்ரீஉக்ர பைரவ மூர்த்தி இன்று பல வடிவங்களில் கிரிவலம் வருவதுண்டு! இவருடைய வடிவும், அக்னிப் பிழம்பின் வடிவு போல மாறிக் கொண்டே இருக்கும். பைரவாக்னி சக்திகள் நிறைந்த ஸ்ரீஉக்ர பைரவ மூர்த்தி!

ஊதுபத்தித் தூபம், சாம்பிராணி, அகல் விளக்கு, அடுப்பு, கரிச் சட்டி போன்றவற்றில் எவ்வகையிலும் அக்னி சக்திகள் நிறைந்திருக்கும் ஆதலால் அக்னி சம்பந்தமான திரவியங்களைத் தாங்கியவாறு இன்று கிரிவலம் வருதலால் குரோதம், பகைமை, விரோதம், கோர்ட் வழக்குகள் போன்ற உறவு (வெப்பப்) பகைமைப் பிரச்னைகளைத் தீர்க்க உதவும் நன்னாள்!

மனிதனுக்கு அக்னி சக்தி என்பது மிகவும் இன்றியமையாததாகும். பிராணன் என்று சொல்லப்படுகின்ற சுத்த வாயு உடலுக்குள் சென்று, அக்னி சக்திகளை நிரவி, கர்ம வினைகளைக் கழித்து, கழிவுப் பொருள்களை பஸ்மம் செய்து மூச்சாக வெளி வருகின்றது. மேலும் நாம் சாப்பிடுகின்ற உணவுப் பொருட்கள் யாவுமே உடலுள் அக்னியில்தான் பஸ்மம் செய்யப்படுகின்றன. இவ்வாறாக நம் உடலுக்குத் தேவையான அக்னி சக்திகள் பல வகைகளாக நிறையவே உண்டு. இந்த அக்னி சக்திகளை முறையான விரதம், ஹோமம், பூஜைகள், ஆலய தரிசனங்கள் மூலமாக உடலில் ஆங்காங்கே குறிப்பிட்ட அக்னி கிரந்த நாளங்களில் சரியான முறையிலே சீராக்கிட வேண்டும்.

புகைபிடித்தல், பான், புகையிலை, சூது, ஆபாச சினிமா, முறையற்றத் தீயப் பழக்கங்களால் உடலில் தேவையற்ற வகையில் அக்னி சக்திகள் விரயமாக்கப்பட்டு, தேவையற்ற அதிஉஷ்ணமும் கூடி விடுமேயானால், இது கபாலம் மற்றும் மூளை நாளங்களைப் பாதித்து உடலின் பல பாகங்களிலும் அக்னி சக்தியையே மங்கச் செய்து விடுகின்றது.

ஸ்ரீசப்தலிங்கங்கள் திருகோகர்ணம்

காதுகளை ரட்சிக்கும் பேணும் அலம்புட நாடிகள்!

உடலில் உள்ள முக்கியமான நாடிகள் பன்னிரெண்டில், எந்த நாடியில் பஞ்ச பூத சக்தி குறைந்துள்ளதோ அந்த நாடி சம்பந்தமான உறுப்புகளில் நோய்கள் அல்லது குறைகள் உண்டாகும். உதாரணமாக அலம்புட நாடியில் பங்கம் ஏற்பட்டால் இவை காதுகள் சம்பந்தப்பட்டவை ஆதலால் காதுகளில் குறைகள் ஏற்படும். எனவே அலம்புட நாடிச் சக்திகள் நிறைந்த தலங்களில் (புதுக்கோட்டை அருகே திருக்கோகர்ணம், திருச்சி அருகே திருவாசி ஸ்ரீபேச்சியம்மன், பொன்னமராவதி அருகே நெற்குப்பை ஸ்ரீமருதீஸ்வரர் நந்தி) விசேஷமான அலம்புட யோக வகை வழிபாடுகள், அலம்புடப் பூஜை முறைகளைக் கடைபிடித்தால் காதுகளுக்கான கர்ண சக்திகள் விருத்தியாகும்.

ஸ்ரீஉக்ர பைரவர் கிரிவலம்!

பஞ்ச பூதத் தலங்களில் திருஅண்ணாமலை அக்னித் தலமாக விளங்குவதால் அஷ்டபைரவ கிரிவல சாங்கியத்தில் முதல் நாள் அக்னி லோகங்களில் வழிபடப்படுகின்ற, ஸ்ரீஉக்ர பைரவரே அருணாசல கிரிவலத்தை மேற்கொள்கின்றார். பத்தாயிரம் கிராம மக்களுடன், சிஷ்யர்களுடன், மாணிக்கவாசகப் பெருமான் தன்னுடைய சிஷ்யர்களுடன் அருணாசலத்தில் கிரிவலம் வந்திட்டாரன்றோ! தெய்வ மூர்த்திகளின் அருணாசல கிரிவலம் என்றால் முப்பத்து முக்கோடி தேவர்களும் குறித்த சித்தர்கள், மஹரிஷிகளுடன், பல்லாயிரக்கணக்கானோர் கூடிய ஒரு பெரும் கூட்டமாக மாபெரும் பிரம்மாதி பிரம்ம உற்சவம் போலாகும்! ஆனால் இவற்றை எல்லாம் காண்பதற்கான (உத்தம பக்தி நிலையில் தோன்றும்) தெய்வீக நேத்ர சக்தி இல்லாமையால் பைரவ மூர்த்தி அருணாசலத்திற்கு வருவதும் சற்குருவாய் உணர்த்தினாலன்றி எவராலும் அறியாததாகின்றது.

பைரவ உபாசகர்களுக்கான அதியற்புதத் திருநாள்!

தங்களுடைய வாழ்வில் அரிய பைரவ மந்திரங்களை நன்கு ஓதியவர்களும், பைரவ மூர்த்தி உபாசனையை மேற்கொண்டவர்களும், நாய்களின் மீது அபரிமிதமான அன்பு கொண்டு நாய்க் குலத்திற்குச் சேவை செய்பவர்களும், தங்களையும் அறியாமல் உலகின் எந்த நாட்டில், எந்த மூலையில் எங்கு இருந்தாலும் அஷ்ட பைரவ சக்தி நாட்களான இந்த எட்டுத் தினங்களில் ஏதேனும் ஒரு நாளாவது திருஅண்ணாமலைக்கு வந்து எவ்வகையிலாவது ஸ்ரீபைரவ மூர்த்தியைத் தரிசித்துச் செல்கின்றார்கள்.

எனவே பைரவ மந்திரங்களை உபதேசமாக ஏற்றுக் கொண்டு ஓதி வருவோர் இன்று கட்டாயமாக, கண்டிப்பாக திருஅண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்ள வேண்டும். பைரவ லோக சித்தர்கள், மஹரிஷிகள் இந்த எட்டு நாட்களிலும் எவ்வகையிலே பைரவப் பாங்காய்க் கிரிவலம் வருகின்றார்களோ, அதே வகையில் நாமும் இன்று கிரிவலத்தைக் கடைபிடித்தால் அபூர்வமான பலாபலன்களைக் கண்கூடாகக் கண்டிடலாம்.

ஸ்ரீஅக்னி பகவானும் பைரவரை வழிபடும் திருநாள்!

இன்றைய அருணாசல கிரிவலமானது அருணாசல ஆலய பைரவர் சந்நிதியில் தொடங்கி இங்கேயே நிறைவடைகின்றது. இன்று கால பைரவ மூர்த்தியே அக்னி லிங்கத்துடன் ஐக்கியமாகி, ஸ்ரீஉக்ர பைரவ மூர்த்தியாகக் குறித்த நேரம் வரை தோன்றி, அக்னி பகவானுக்கு நேரடியாக அருணை பூமியில் அருள்கின்ற அரிய திருநாள்! இவரை வணங்கியே இன்று அக்னி பகவானும் தன் கிரிவலத்தைத் தொடங்குகின்றார்.

அக்னி பகவானுக்கு உரித்தான செவ்வாய் ஹோரை நேரத்தில் கிரிவலத்தைத் தொடங்குதல் மிகவும் சிறப்பானது, அல்லது சூரிய உதய நேரத்தில் அக்னிக் கோளமான சூரிய கிரணங்களைத் தரிசித்தும் கிரிவலத்தைத் தொடங்கிடலாம்.

இறைவனை நாம் மனித வடிவில் பார்க்க முயற்சிப்பதால் தான் மனித குணங்கள் அனைத்தையும் இறைவனிடம் பொருத்திப் பார்க்கின்றோம். ஏனென்றால் ஸ்ரீகால பைரவ மூர்த்தியே கிரிவலம் வருகின்றார் என்றால் எத்தகைய பிரும்மாண்டமான அருணாசல சிகரமாக இது விளங்க வேண்டும் என்று சற்றே எண்ணிப் பாருங்கள். பிரபஞ்சத்திலும் விரிந்ததாக அன்றோ பைரவச் சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் அருணாசல மலை தென்படும். மனித மூளைக்குள் இந்தத் தாத்பர்யத்தைப் பொருத்த இயலாது என்பதால்தான் இறைவனே தன்னைச் சிறு மனித வடிவில் குறுக்கிக் கொண்டு மனித குணங்களுக்கு ஏற்பத் தன்னுடைய தெய்வத் தன்மைகளை மாற்றிக் கொண்டு, அருணாசல மலையாக, ஸ்ரீகால பைரவாகப் பல வடிவுகளில் வந்து அருள்பாலிக்கின்றார்.

எட்டுத் திக்கில் ஏற்றுவீர் விளக்கினை!

இன்று அருணாசல கிரிவலத்தில் குறைந்தது எட்டு இடங்களிலாவது, எட்டு அகல் விளக்குகளில், தேங்காய் எண்ணெய் இட்டுத் தீபம் ஏற்றுதல் வேண்டும். பெரிய அகல் விளக்குகளானால் ஒவ்வொன்றிலும் எட்டுத் திரிகள் வைத்து எட்டெட்டாக மொத்தம் 64 முகங்களை உடைய விளக்குகளை கிரிவலத்தில் எட்டு இடங்களில் ஏற்றுவதால் நல்ல மன சுத்தி கிடைக்கும்.

பலவிதமான மனக் குழப்பங்களால் வாடுவோர் ஸ்ரீஉக்ர பைரவ மூர்த்தி கிரிவலம் வருகின்ற இந்நாளில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவதால், எந்த முடிவை எடுப்பது என்று தவிக்கின்ற துறைகளில் நல்ல முடிவுகளை இறையருளால் பெறுவர்.

திருபுகலூர்

அக்னி சக்திகள் நிறைந்த நாள் ஆதலால் இன்று சமையல் பணிகளுக்குத் தேவையான விறகு, தீப்பெட்டி, ஊதுபத்தி, அடுப்பு வைப்பதற்கான கற்கள், ஸ்டவ் அடுப்பு போன்ற அக்னி சம்பந்தமான பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக அளித்தலால் பலவிதமான உறவுப் பகைமையால், அலுவலகப் பகைமையால் வேலை, சொத்துக்களை இழந்தோர் நன்னிலை பெறவும், பிறருடைய தூண்டுதல்களால் சந்தேகங்கள், பகைமைகள் ஏற்பட்டுப் பிரிந்துள்ள தம்பதியினர், உறவினர்கள், பார்ட்னர்கள் நன்முறையில் பிரச்னைகள் தீர்வாகி ஒன்று சேர்வதற்கும் இன்று ஸ்ரீஉக்ர பைரவர் கிரிவலம் வருகின்ற நாள் பெரிதும் துணை புரியும்.

பகைமையைக் களையும் ஸ்ரீஅக்னீஸ்வர வழிபாடுகள்!

இன்று ஸ்ரீஅக்னி பகவான் எழுந்தருளியுள்ள திருத்தலங்களில் (திருக்கழுக்குன்றம், திருப்புகலூர்) அக்னி பகவானுக்கு விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகிய மூன்றும் கலந்த எண்ணெய்க் காப்பு இட்டு வழிபட்டிட, பில்லி, சூன்யம், குரோத, விரோதங்களால் துன்புறுவோர் நலம் பெறுவர்.

இன்று ஸ்ரீஅக்னீஸ்வரராக சிவபெருமான் அருள்பாலிக்கின்ற தலங்களில் (வயலூர், திருக்காட்டுப்பள்ளி, கஞ்சனூர்) உள்ள பைரவ மூர்த்தி, ஸ்ரீஉக்ர பைரவ அம்சங்களைப் பூண்டு அருள்பாலிப்பதால் ஸ்ரீபைரவ சுவாமிக்கு விளக்கெண்ணெய்த் தைலம் சார்த்தி, நிறையப் புஷ்பங்களுடன், அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு வருதலால் சம்பந்திகளின் கொடுமையால் வாடும் பெண்களின் துயர்கள் தீர நல்வழிகள் பிறக்கும்.

ஸ்ரீகிருஷ்ணர் பசுவைப் பூஜித்த "கோ அஷ்டமி" நாள்!

12.11.2002 அன்று அக்னி பகவானுக்கு உரிய செவ்வாய்க் கிழமை, ஸ்ரீபைரவருக்கு உரிய அஷ்டமித் திதி, பசு பூஜைக்கான கோ அஷ்டமி நாள் (அருணாசலத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கோ பூஜை செய்த நாள்), அக்னி சம்பந்தப்பட்ட ஸ்ரீஉக்ர பைரவர் கிரிவலம் வருதல் ஆகிய பல சிறப்பான தெய்வீக அம்சங்களும் இந்நாளில் இணைந்து வருதல் மிக மிக விசேஷமானதாகும். இத்தகைய ரம்யமான இறைச் சூழ்நிலையில் அஷ்ட பைரவ சிவ கடாட்சம் நிரம்பிய முதல் அருணாசல பைரவ கிரிவலம் அமைவது மிகவும் தெய்வீகமானதாகும். இவ்வாறு தெய்வீக சக்திகள் நிறைந்த திருநாள் வருகையில் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஸ்ரீமுருகப் பெருமான் வயலூர்

பசுவிற்கு வெந்நீர் நீராட்டல் ஓர் அற்புத இறைத் திருப்பணி!

இன்று பசுக்களுக்கு வெந்நீரால் நீராட்டி மஞ்சள், குங்குமம் வைத்து வழிபடுதல் வேண்டும். இன்றைக்கு ஏன் வெந்நீரால் பசுக்களுக்கு நீராட்ட வேண்டும்? இந்த விசேஷமான கோ அஷ்டமிப் பண்டிகை நாளில் பல மலைத் தலக் குளிர்ப் பிரதேசங்களிலும் பசுக்களுக்கு, வெந்நீர் ஒத்தடம் கொடுத்து, நீராட்டி வழிபடுவார்கள். வருடத்திற்கு ஒரு நாளாவது வெந்நீரால் நீராட வேண்டும் என்று பசுக்கள் ஏங்கினால் இவ்வரிய இறைப் பணியை எவர் ஏற்றுச் செய்வது? சந்ததிகளின் (புகைபிடித்தல், அக்னியை மிதித்தல் போன்ற) அக்னி தோஷங்களால் பித்ருக்கள் பாதிக்கப்பட்டு, உத்தம நிலைகளை அடைய இயலாது மேலோகங்களில் தவித்திடுவர். இதனால் பல உத்தமப் பித்ரு நிலைகளும் கிட்டாதவாறு அவர்களுக்குத் தடைபட்டிடும். இதற்கு நிவர்த்தியாக அக்னி சம்பந்தமான பல பித்ருத் தர்ப்பண சக்திகளை எதிர்பார்த்து இருப்பர். இவை நிவர்த்தியாகிட இன்றைய கிரிவலமும், தர்ப்பணமும் உதவிடும்.

எனவே கோ அஷ்டமியாகிய இன்று பசு, கன்றுகளுக்கு வெந்நீரால் நீராட்டுதலும், நன்கு ஆகாரம் (புல், புண்ணாக்கு, வைக்கோல்) அளித்தலும் பசு, கன்றுடன் அருணாசலத்தைக் கிரிவலம் வருதலும், மிகச் சிறந்த இறைப் பணிகளாக அமைகின்றது. பித்ருக்களுக்குத் தேவையான மேற்கண்ட அஷ்டமி பைரவ தேவ புண்ய சக்திகளை இத்திருப்பணி அளிப்பதோடு உறவு, சொத்து, பதவி ஆகியவற்றில் உண்டான பகைமைத் துன்பங்களுக்கு நிவாரணம் கிடைத்திடும்.

இரண்டாம் நாள் கிரிவலம் ஸ்ரீகாபால பைரவர்

இன்று ஸ்ரீகாபால பைரவர் கிரிவலம் வரும் விசேஷமான நாளாகும். இன்றைய கிரிவலத்தை, பிரம்ம பத்னியான சரஸ்வதி தேவியே பிரம்ம தேவரைத் துதித்துத் துவங்குவதால், ஆலயத்தில் உள்ள பிரம்மத் தீர்த்தத்தில் சிரசில் நீரைத் துளித்துக் கொண்டு, ஸ்ரீபிரம்ம லிங்க சந்நிதியில் வழிபட்டு கிரிவலத்தைத் தொடங்கி பிரம்ம தீர்த்தத்திலேயே நிறைவு செய்தல் வேண்டும்.

கலைமகள் கிரிவல பூஜை ஆற்றும் நாள்!

ஆம், அருணாசல கிரிவலமும் ஒரு மகத்தான பூஜையே!

சித்தயோகமும், அமிர்த யோகமும் பரிபூரணத்திடும் நாளாகவும் இந்நாள் துலங்குவதால் வித்யா சக்திகள் பெருகிடவும், வித்யா செல்வங்கள் நிறைந்த கபால வர்த்தி வடிச்செல் சக்திகள் பூவுலகில் நன்கு விருத்தியாகிடவும் ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீகாபால பைரவரை வழிபட்டவாறே இன்று கிரிவலம் கொள்கின்றாள்.

ஸ்ரீஆதிநாதர் வயலூர்

ஸ்ரீஆதிநாயகி வயலூர்

பிரம்மனுடைய ஐந்தாவது சிரசை மறைத்து, அக்கபாலத்தைக் கையில் ஏந்தி பிட்சாடனராகப் பிரபஞ்சத்தை வலம் வந்த சிவபெருமான், தன்னுடைய பிரம்ம கபாலத்தைப் பூமியில் பதித்து அதன் மேல் தன் சிரசிலிருந்து கங்கா தீர்த்தத்தைப் பொழிந்த போது ஏற்பட்ட தீர்த்தங்களே இன்று பல இடங்களிலும் பரிமளிக்கும் பிரம்ம தீர்த்தமாகும். இந்த பிரம்ம தீர்த்தத்தில் தான் ஸ்ரீகாபால பைரவர், பிரபஞ்சக் கிருத்யங்களுக்குத் தேவையான காலாம்பரக் கபால சக்தியைப் பிரம்ம மூர்த்திக்குத் தந்து அருள்கின்றார்.

மேலும் பிரம்ம கபால சக்திகள் நிறைந்த இத்திருத்தலத்தில் தான் பிரம்ம மூர்த்தியே தன் பத்தினியாம் கலைவாணி தேவியுடன் ஸ்ரீகாபால பைரவரைப் போற்றி வணங்கி, அவரை கிரிவலம் வருதற்காக வேண்டிட்டு, அதன் பலாபலன்களை பிரம்ம தீர்த்தத்தில் கலந்தருளுமாறு பிரார்த்திக்கின்றார்.

ஸ்ரீபிரம்மாவின் அபூர்வ நான்காம் முக தரிசனம்!

திருஅண்ணாமலை போன்ற ஓரிரு அரிய திருத்தலங்களில்தாம் பிரம்மாவினுடைய நான்காவது சிரசும் நன்கு புலப்படும் வண்ணம் பிரம்ம கபால தரிசனம் நமக்குக் கிட்டுகின்றது. சிவநல்வரமாய் ஐந்தாம் சிரசின் ஞானசக்திகள் பதிந்த இடமாதலால் இந்த நான்காம் சிரசின் தரிசன பலன்களாக அபூர்வமான வித்யா சக்திகளும் கிட்டுகின்றன.

ஸ்ரீகபாலீஸ்வர தியானத்துடன் கவின்மிகு கிரிவலம்!

இன்று ஸ்ரீகபாலீஸ்வரச் சிவபெருமானை எண்ணித் துதித்து வணங்கி, "ஸ்ரீகபாலீஸ்வராய நம: ஸ்ரீகபாலீஸ்வரரே போற்றி" என்று ஸ்ரீகபாலீஸ்வரருக்கான தோத்திரத்தை ஓதியவாறே கிரிவலம் வருதலால் மூளை, கபாலம் சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான நிவாரண நல்வழிகள் கிட்டும். மேலும் மிக முக்கியமான அங்கமாகிய கபால மூளைப் பகுதியில் வாழ்வில் எத்தகையத் துன்பங்களும் ஏற்படாமல் இருப்பதற்கும் இன்றைய கிரிவல சக்திகள் பெரிதும் துணை புரியும்.

இன்று ஓடு சம்பந்தப்பட்ட பொருட்களால் (சங்கு, இளநீர், நுங்கு) அபிஷேக ஆராதனைகள் செய்வதும் இவற்றைப் பூஜைச் சாதனங்களாகப் பயன்படுத்தி நன்முறையில் கிரிவலம் வருதலும் மிகவும் முக்கியமானதாகும். உதாரணமாக, இன்றைக்கு சங்கில், மூங்கில் குவளையில் அல்லது சுரைக் குடுவையில் புண்ணிய நதி நீரைத் தாங்கிச் சென்று கிரிவலத்தில் ஆங்காங்கே உள்ள நந்தி மற்றும் தெய்வ மூர்த்திகளுக்கு அபிஷேகித்திட அளிப்பதும், அபிஷேக நீரைப் பிரசாதமாக அருந்துவதும் மன சுத்தியைத் தரும்.  பெண் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளைத் தீர்க்கும்.

இன்று கிரிவலத்தில் முந்திரி, அக்ரூட், மங்குஸ்தான் பழம், நிலக்கடலை, விளாம்பழம், வாதாங் கொட்டை, தேங்காய் போன்ற ஓடு சம்பந்தப்பட்ட பொருட்களை ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதால் கபால நோய்களுக்கு நல்ல நிவாரணம் கிட்டும்.

கல்வி அறிவு விருத்தியாகிட

மேலும் படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளின் கபாலத்தில், மூளையில் உள்ள வித்யா வர்த்திச் செல்கள் நன்கு பரிணாமமாகி அவர்கள் நன்கு படித்திடுவதற்கு இன்று நாகலிங்க புஷ்ப மலர்களை (கிரிவல வளாகத்தில் உள்ள)  சூரிய லிங்கத்தின் சிரசில் மலர்க் கிரீடமாக வைத்து வணங்குதல் வேண்டும். மலர்க் கிரீடத்தின் ஒவ்வொரு நாகலிங்கப் புஷ்பத்திற்கும் குறைந்தது மூன்று பேருக்கு அன்னதானம் அளித்திடல் வேண்டும்! நாகலிங்கப் புஷ்பத்தை வைத்துப் பூஜிக்கும் போதெல்லாம் கண்டிப்பாக அன்னதானமும் சேர்தலே பூஜா பலன்களைப் பரிபூரணாமாக்கும்.

இன்று ஸ்ரீசூர்ய பகவான் ஸ்ரீகாபால பைரவரை, நாகவேத சக்திகள் அபரிமிதமாக நிறைந்த நாகலிங்கப் புஷ்பத்தால் பூஜித்து வரவேற்று வழிபடுகின்ற திவ்யமான நாள்!  நாகசூரிய மண்டலத்தில் தோன்றியதே நாகலிங்கப் புஷ்பமாகும். ஒவ்வொரு நாகலிங்கப் புஷ்பத்திற்கும் குறைந்தது மூன்று பேருக்கு அன்னதானம் அளித்திட்டால்தான் தேவநாக லோகப் புஷ்பமான நாகலிங்கப் பூவை வைத்துப் பூஜிப்பதற்கான தேவ பாக்யம் கனிகின்றது. எனவே நாகலிங்கப் புஷ்பத்தை வைத்துப் பூஜிக்கும் போதெல்லாம் கண்டிப்பாக அன்னதானத்தையும் சேர்த்துச் செய்தலே நாகலிங்கப் புஷ்பத்தில் எழும் நாகபுஷ்ப வல்லி சக்தியையும் ஈர்த்துத் தந்து பூஜா பலன்களைப் பரிபூரணமாக்கும்.

இன்று கிரிவலத்தில் குறைந்தது எட்டு இடங்களிலாவது எலுமிச்சை ஓடு, (கனித் தோல்), விளாம்பழம் ஓடு, நுங்கு ஓடு, தேங்காய் தீபம், வில்வ ஓடு என்று ஓட்டு வகைகளில் இன்று வேப்பெண்ணெய் தீபம் ஏற்றி, தலைக்கான எண்ணெய்த் தைலங்களை ஏழைகளுக்குத் தானமளித்தல் விசேஷமானதாம். இதனால் அலுவலகத்திலோ, வியாபாரத்திலோ பிறருடைய பகைமையால் (அநாமதேயக் கடிதம், மிரட்டல் கடிதம், அடிப்பதாக மிரட்டுதல் போன்று) ஏற்படும் இன்னல்களுக்குத் தக்கத் தீர்வுகள் கிட்டும்.  அநாவசியமான பீதிகளும் மனதை விட்டு அகலும்.

தனக்கோ, தன் பிள்ளைகளுக்கோ படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. தன்னால் மேற்படிப்பைத் தொடர முடியவில்லையே என்று ஏங்குவோர் இன்று ஸ்ரீகாபால பைரவ மூர்த்தி கிரிவலம் வருகின்ற இந்நாளில், ஏழ்மை நிலையில் இருக்கின்ற நாதஸ்வர வித்வான்கள், மேளம், கடம், வயலின் போன்ற வாத்யக்காரர்கள், பாடகர்களை அழைத்துக் கொண்டு கிரிவலம் முழுதும் நல்ல இறைப் பாடல்களைப் பாடி, வாத்யங்களை இசைக்கச் செய்து கிரிவலம் வந்து அவர்களுக்குத் தேவையான நற்பணிகளைத் தாராளமாகச் செய்து கொடுத்து, நல்ல சன்மானமும் அளித்து அவர்கள் மனம் சந்தோஷமாகும் வண்ணம் உதவிட்டால் குழந்தைகள் நன்முறையிலே கல்வி அறிவைப் பெறுவார்கள்.

மூன்றாம் நாள் கிரிவலம் பீஷண பைரவ மூர்த்தி

இன்று ஸ்ரீபீஷண பைரவ மூர்த்தி கிரிவலம் வருகின்ற நன்னாளாகும். பீஷ்ம பஞ்சகம் என்பது ஐந்து நாள் பூஜையாயினும், ஏகாதசித் திதி இந்நாளில் மாலையில் தொடங்குவதால் இன்றே இந்த விரதத்தை ஆரம்பித்தல் சிறப்பானதாகும். பிரம்மச்சர்ய விரதத்தில் மேன்மை பெற வேண்டுவோர் ஐந்து நாள் பீஷ்ம பஞ்சக விரதம் மேற்கொண்டிட, இன்றே விரதம் ஆரம்பித்திட நல்ல தேஜசும், வாக் சித்தியும், நல்ல பரந்த அறிவும் நன்கு துரிதமாக விருத்தி ஆகும்.

முறையற்ற காமக் குற்றங்களுக்கு ஆட்பட்டுப் பெருவினைகளில் சிக்கியோர், தக்க பரிகாரங்களைப் பெற்றிட இந்நாளில் கிரிவலம் வருதலுடன் இந்த ஐந்து பீஷ்ம பஞ்சக நாட்களில் ஒரு வேளை அரிசிப் பொரியும், நீரும் மட்டும் உண்டு ஸ்ரீஆஞ்சநேய விரத வழிபாடுகளைக் கடைபிடிக்க வேண்டும்.

முறை தவறி வாழ்ந்து, வெளிச் சொல்ல இயலாக் காமக் குற்றங்களின் உறுத்தல் உணர்வுகளால் மன நிம்மதியின்றி வாழ்வோர் இன்று கிரிவலம் வந்து, உள்ளம் திருந்தி வாழச் சங்கல்பம் பூண்டு, இனியேனும் முறைபட வாழ்ந்திடச் சத்தியம் செய்து வேண்டிடில் தக்க பரிகாரங்கள் கிட்ட உதவும் நாள்!  ஆனால் தன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தக்க நிவாரணங்கள் அளித்தால்தாம் எத்தகைய பரிகாரங்களும் முழுமையாகப் பலனளிக்கும் என்பது தெளிவு!

பிரம்மச்சர்ய விரதம் என்றால் திருமணம் செய்து கொள்ளாது இருத்தல் என்று மட்டும் பொருள் அல்ல! இல்லற வாழ்வில் கணவனே கண் கண்ட தெய்வம் என்ற உத்தம இறைலட்சியத்துடனும், ஸ்ரீராமரைப் போன்று ஏகபத்தினி விரதராய் உத்தம நிலைகளுடன் வாழ்தலும் கல்யாண குண பிரம்மச்சர்யச் சாரமாகின்றது! காலற்ற நாள், உடலற்ற நாள், தலையற்ற நாள், குருட்டு நாள், பிரபலாரிஷ்ட நாள், இரவு நேர ராகுகாலம், இரவு நேர எமகண்டம் போன்றவற்றை நன்கு அறிந்து இவற்றில் சங்கமங் கொள்ளாது, பிரம்மச்சர்ய நியதிகளைப் பூண்டு, தம்பதிகள் இருபாலாரும் தக்க இல்லற தர்மத்துடன், புனிதமான கற்புடன் வாழ்தல் மானுட வாழ்க்கையின் அரிய அறவழி பிரம்மச்சர்ய தர்ம லட்சியமாகும்.

எத்தகைய தீய காம எண்ணங்களும், தீய சிந்தனைகளும் வராமல் இல்லறத்தில் நல்ல எண்ணங்களுடன் புனிதமாய் வாழ்தலும் பிரம்மச்சர்ய விரதங்களுள் ஒன்றாகும்.

இல்லறத்திலும் புனிதமான பிரம்மச்சர்ய இலக்கணம்!

ஸ்ரீஆஞ்சநேய மகாப் பிரபுவைத் தொழுது, நைஷ்டிக பிரம்மச்சர்யர்களாகத் துலங்கியவர்கள் பீஷ்மாச்சாரியார், விவேகானந்தர், ஸ்ரீகாஞ்சி பரமாச்சாரியார் போன்றோர் ஆவர். வாழ்நாள் முழுவதும் ஒரு சிறு காம ஆசை கூடத் தளிர் விடாது, எந்தப் புனிதமற்ற எண்ணமும் வராது, ஓரணு விந்துத் துளி கூட நஷ்டமாகாது பிரம்மச்சர்யத்துடன் வாழ்தல் என்பது மிக மிக அரிய உத்தம தேவ நிலையாகும். ஆனால் கலியுகத்தில் இதை முழுமையாகக் கடைபிடித்தல் கடினமே! கரணம் தவறினால் கொடுவினையாக, துறவற தர்மமும் மிக மிகக் கடினமே! இல்லற தர்மமே கலியுகத்தில் உத்தம இறைநிலைகளைத் தருவதாகும்.

முறையற்ற காமக் குற்றங்களுக்கு ஆட்பட்டோர், புனிதமான எண்ணங்களைப் பேண இயலாதோர், காம இச்சையில் மதியிழப்போர் இன்று பீஷண பைரவர் கிரிவலம் வருகின்ற நாளில் புனிதமான மன சுத்திகளைத் தரவல்ல நல்ல தெய்வீக இறைப் பணிகளைக் கடைபிடித்து வாழ வேண்டும் என்ற நல்வைராக்யத்தை மேற்கொள்ள வேண்டும்.

"இறைவா!  அடியேன் மனம், உள்ளம், உடல் புனிதமாவதற்குக் கலியுகத்தில், சமுதாய இறைப் பணிகளும், தான தர்மங்களும், வேத, ஹோம, பூஜைகளுமே தேவையான ம(இ)றைச் சக்திகளைத் தருகின்றமையால் அடியேனுக்கு எப்போதும் இத்தகைய தெய்வப் பணிகளைச் சார்ந்து நிற்கின்ற நல்ல ஆயுட்காலத்தைத் தந்திடு!" என்று ஸ்ரீபீஷண பைரவரை வேண்டி வணங்கித் துதித்துக் கிரிவலம் வருதல் வேண்டும்.

சத்தியப் பலகை தந்த சத்யவர மகரிஷி!

சத்யவர மஹரிஷி என்பார் பல கோடி யோகங்களாக "சத்தியப் பலகை" எனும் அரிய சந்தன மரத்தாலான நீலகண்டத்ரய வகை அணிகலனை, ருத்ராட்ச மாலைகளுடன் கழுத்தில் சேர்த்து அணிந்து பிரபஞ்சத்தில் வலம் வந்து கொண்டு இருக்கின்றார். இவர் பிறக்கும் போதே சத்தியப் பீடம் எனப்படும் உத்தம (சந்தனச்) சத்தியப் பலகையை நெஞ்சில் தேவ அணிகலனாக அணிந்து வந்தவர் ஆவார்.

இன்றைக்குப் பல ஆலயங்களிலும் வட்டப் பாறை, சத்தியப் பாறை, நீதிப் பாறை என்ற வகையிலே பல தலங்களில் (திருக்கோளக்குடி, திருவொற்றியூர், திருஆமாத்தூர்) "தர்மப் பஞ்சாயத்து" செய்யும் வண்ணம் பலவிதமான பழமையான அறப்பலகை, பாறையை மீட்டு, நீதிப் பலகைகளையும் ஏற்படுத்தி, சத்திய சக்திகள் பூவுலகில் பெருக வழி வகுத்து வருபவரே சத்யவர மஹரிஷி!

சத்யவர மஹரிஷியும், அரிச்சந்திர மகாபிரபுவும் இன்று பீஷண பைரவ மஹரிஷியிடனும் சேர்ந்து கிரிவலம் வருகின்றார்கள். பிறருடைய பொய் சாட்சியத்தால், புரட்டான செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்று கிரிவலம் வந்து வேண்டிட, பொய்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல தீர்வுகள் கிட்டும்.

ஸ்ரீபாதாள லிங்கேஸ்வரர்
திருஅண்ணாமலை

சற்குருவின் திருப்பாதங்களில் சரணடையும் வழி இதோ!

குரு வார வியாழனாகிய இன்று பீஷண பைரவ கிரிவலத்தை ஞான சக்திகள் தழைக்கும் ஸ்ரீபாதாள லிங்க சந்நிதியில் தொடங்கி தெற்குக் கோபுரம் வழியே கிரிவலத்தைத் தொடர்தல் வேண்டும். தக்க சற்குருவை அடைய வேண்டும் என்ற சத்ய வாக்கை அடைவதற்கு, பாதாள லிங்க மூர்த்தியிடம் பிரார்த்தனை செய்து கொண்டு, "இறைவா! அடியேனுக்கு சற்குருவைப் பெற்றுத் தா! சற்குருவைப் பெறுவதுடன் அவரையே எப்போதும் சரணடைந்து வாழ்வதற்கான தக்க வாழ்க்கை நெறிகளையும், தெய்வீக வைராக்கியத்தையும் தந்திடு!" என்றும் வரம் வேண்டுதல் வேண்டும்.

ஏனென்றால் சற்குருவை, தனக்குத் தேவையான லௌகீகமான வசதிகளையே வரங்களைத் தரும் "வரமரமாகக்" கலியுகத்தில் ஆக்கி விட்டமையால் சத்யமான, சாசுவதமான வரங்களைத் தர வல்லவரே சற்குரு என்பதை மக்கள் முற்றிலும் மறந்து விடுகின்றார்கள். எனவே குருவைக் காண்பதுடன், சற்குருவைப் பெற்றாலும் அவரிடம் சரணடைந்து நிலைத்திருத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு இந்நாளின் சக்தி வாய்ந்த பீஷண பைரவ விஜய கிரிவலம் துணை புரியும்.

கிரிவலப் பாதையில் இன்று குறைந்தது எட்டு இடங்களில் எலுமிச்சை ஓடு தீபங்களாக 64 தேங்காய் எண்ணெய் தீபங்களை ஏற்றி வணங்கிடுதலால் தினந்தோறும் பலவிதமான பிரச்னைகளால் வாடி மன நிம்மதியின்றி இருப்போர்க்குத் தக்க மனசாந்தி கிட்டும்.

கிரிவலப் பாதையில் உள்ள ஆலமரம், அரச மரம், வேப்ப மரம், இலுப்ப மரம் போன்ற மூலிகா விருட்சங்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம் பூசி வலம் வந்து வழிபடுதல் வேண்டும். இதனால் தம் பெண் பிள்ளைகளைப் பற்றிய கவலைகளுடன் வாழ்வோர்க்கு மனோ பயங்கள் தணிந்து நல்ல மனோதைர்யம் உண்டாகும்.

ஆசிரியர்களுக்கான அற்புதமான கிரிவல நாள்!

ஆசிரியப் பணியில் இருப்போரும், ஓய்வு பெற்றோரும் இன்று அவசியமாக கிரிவலம் வந்திட வேண்டும். இதனால் தன்னுடைய புனிதமான வித்யாவர்த்தித் துறையில் அவர்கள் நன்கு பிரகாசிக்க முடியும். ஆசிரியப் பணியில் ஏழை மாணவர்களுக்கு இலவசமாகப் பயிற்றுவித்தல், நல்லற இறைவழி முறைகளை உணர்த்துதல் என்றவாறாக தினந்தோறும் புனிதமான தெய்வீக ரீதியாக பலவிதமான வித்யாவர்த்தி ஆசிரியப் பணிகளை ஆற்றி வந்தால், தினமுமே ஒரு ஆலயக் கும்பாபிஷேகப் புண்ணியத்தை ஆசிரியத் துறையில் திரட்டிடலாம். மகாபாரதம், இராமாயணம் போன்ற நன்னெறிகளை மாணவர்களுக்கு ஊட்டுவித்து அவர்கள் நற்பண்பாடுகளுடன் பிரகாசிப்பதற்கு ஆசிரியர்கள் பெருந்துணை புரிய வேண்டும். விஞ்ஞானம், கணிதம் எந்தப் பாடமாக இருந்தாலும் சரி இவை அனைத்துமே ஆன்மீகத்தை ஒட்டியதே ஆகும். எதிலும் ஆன்மீகச் சிந்தனைகளை ஊட்டி விட முடியும்.

ஆனால் மிகவும் புனிதமான ஆசிரியப் பணித் துறையிலும் பலவிதமான தவறுகளைப் புரிவோரும் உண்டு. எந்த அளவிற்கு இத்துறையில் புண்ய சக்தி அபரிமிதமாகப் பெருகுகின்றதோ, அதே சமயத்தில் தவறுகள் செய்தாலோ அதை விடப் பன்மடங்காகப் பாவ வினைகளும் அதிகரித்துப் பெருகி இருக்கின்ற புண்ய, பூஜா சக்திகளையும் உடனடியாகக் கரைத்து விடும் என்பதையும் உணர்ந்திடுக.

டியூஷன் என்ற பெயரில் அளவுக்கு அதிகமாக தொகையைப் பெற்று மாணவர்களையும், அவர்களுடைய பெற்றோர்களையும் வதைத்துத் துன்புறுத்துதல் கூடாது. இத்தகைய குற்றங்களுக்கு ஓரளவேனும் பிராயச்சித்தம் பெறவே இன்று ஸ்ரீபீஷண பைரவர் கிரிவலம் வருகின்ற நாளில், முறையாகக் கிரிவலம் வருவதுடன் ஏழைகளுக்கு இலவசக் கல்வி வசதிகளைச் செய்து வந்திட்டால் தக்கப் பரிகார வழிகள் கிட்டிடும்.

நான்காம் நாள் கிரிவலம் ஸ்ரீமகா பைரவர்

உத்திரட்டாதி த்ரிதினத் திருநாள்!

இன்று ஸ்ரீமகா பைரவர் கிரிவலம் வருகின்ற நாளாகும். உத்திரட்டாதி நட்சத்திரம் பரிபூர்ணமாகத் துலங்குகின்ற நாள்!  ஸ்ரீமகாபைரவர் உற்பவித்த தினமே அரிய உத்திரட்டாதி நட்சத்திரத் திருநாள்! வெள்ளிக் கிழமை, ஏகாதசியுடன், விஷ்ணுபதிப் புண்ய காலமும் பூரித்துப் பூக்கின்ற புனித நாளாகவும் இது பூரிக்கின்றது.

மூன்று நாட்களுக்கு அபூர்வமாக நிரவும் உத்திரட்டாதி நட்சத்திரம்!

உத்திரட்டாதி நட்சத்திரமானது த்ரிதினமாக மூன்று நாட்கள் தொடர்ந்து வருவது மிகவும் விசேஷமானதாகும். 14.11.2002 வியாழக் கிழமை நள்ளிரவுக்குப் பின் அதாவது 15.11.2002 வெள்ளிக்கிழமை விடியற்காலை 5.31 முதல் 16.11.2002 சனிக் கிழமை காலை 8.30 வரை உத்திரட்டாதி நட்சத்திரம் வியாழன், வெள்ளி, சனி ஆகிய மூன்று நாட்களுக்கு தொடர்ந்து நிரவி வருதல் தான் உத்திரட்டாதி த்ரிதினம் எனப்படும்.

உத்திரட்டாதி நட்சத்திரம் பீஷ்மருக்கு மிகவும் ப்ரீதியான நட்சத்திரமாகும். பிரம்மச்சர்யப் புனிதத்தைத் தருவது! எனவே உத்திரட்டாதி நட்சத்திர நாளில் தம்பதிகள் இருவருமே, சில அரிய பிரம்மச்சர்ய நியதிகளை, பூஜை முறைகளைக் கடைபிடித்து வந்திடில் எவ்வித மனக்கசப்புமின்றி திருமண வாழ்க்கை அதியற்புதமாக அமையும். இன்று கணவன், மனைவி இருவரும் சேர்ந்து கிரிவலம் வருதல் மிகவும் சிறப்புடையதாம். மனைவி கணவனுக்கு இடப்புறமாக நடந்து வர வேண்டும்.

வெள்ளிக்கிழமைக்கு உகந்த கத்தரிப் பூ நிறம் அல்லது நீல நிறமான உடைகளை அணிந்து கிரிவலம் வருதல் சிறப்புடையது. குடும்ப சகிதம் அனைவருமே கத்தரிப் பூ, நீல நிற ஆடைகளை அணிந்து கிரிவலம் வருதல் கிரிவலப் பலன்களை மேலும் சிறப்புறச் செய்யும்.

பெரிய சாதனைகளை, பெரும் பதவிகளை அடைந்திட

ஸ்ரீமகாபைரவர் என்றால் அனைத்திலும் உத்தம மகா நிலைகளைத் தர வல்லவர் என்பதாகும். பல தேவாதி தேவர்களும் யோகம், தாரணை, உச்சாடனம் போன்ற கால யோகத் துறைகளில் உன்னதம் பெற்றிட ஸ்ரீமகாபைரவ உபாசனையையே மேற்கொள்கின்றனர்.

நீதிபதி, I.A.S., I.P.S., G.M, Chairman, M.D போன்ற பெரிய பதவிகளை அடைவதற்காக அரும்பாடுபட்டு இராப் பகலாக உழைப்போர் நிறையவே உண்டு. கடவுள் வழிபாட்டைக் கூட ஒதுக்கி வைத்து விட்டுக் கடுமையாக உழைத்துப் பெரிய பெரிய பதவிகளை அடைவதே லட்சியமாகக் கொண்டிருப்போரும் உண்டு. இவ்வாறு தங்கள் துறைகளில் பெரிய பதவிகளை அடைந்திட விரும்புவோர் இன்று கிரிவலம் வந்திட்டு குறைந்தது 16 இடங்களில் அன்னதானம் செய்திடல் வேண்டும்.

கிரிவலப் பாதையில் பேருந்து நிலையம் அடையும் முன்னர் வலப்புற உட்சாலையில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் ஆலயத்தில் இன்று அம்மனுக்குப் பச்சை வண்ண ஆடைகளைச் சார்த்தி வழிபட்டிட, அடிக்கடி நோய்வாய்ப்படும் குழந்தைகள் நலம் பெறுவர். காலதோஷங்கள் பெற்றோருக்கு மிகுதியாக இருந்தால் அதுவே குழந்தைகளுக்கு இழுப்பு நோய், மூச்சு நோய்களாக வந்து வெகுவாகப் பாதிக்கும். எனவே பச்சையம்மன், மாரியம்மன், காளியம்மன், முத்து மாரியம்மன் போன்ற அம்மன் ஆலயங்களில் மாதம் ஒரு முறையேனும் வெள்ளிக் கிழமை அன்று வழிபட்டிடில் காலதோஷ விளைவுகள் தணியும்.

ஸ்ரீமகா பைரவர் மாளய பட்சத்தின் அஷ்டமித் திதியில் உற்பவித்த அதியற்புத மூர்த்தி!  பொதுவாக ஐந்து அடி உயரத்திற்கு மேலான பைரவ மூர்த்திகள், ஸ்ரீமகாபைரவ மூர்த்தியாக அருள்பாலிக்கின்றனர். புஷ்பங்களில் மகாபுஷ்பமான தாமரைப் பூக்களைத் தாங்கிப் பெண்கள் இன்று கிரிவலம் வந்து, மலர்களை இல்லத்திற்குப் பிரசாதமாக எடுத்துச் சென்று மூன்று நாட்கள் வைத்திருந்து வணங்கிட, கால சர்ப்ப தோஷ விளைவுகள் தணியும். தாமரைகள் காய்ந்தவுடன் நிர்மால்யப் புஷ்பமாக ஆறு, கிணறு, கடலில் சேர்த்திடல் வேண்டும்.

ஐந்தாம் நாள் கிரிவலம் ஸ்ரீஉன்மத்த பைரவர்

ஸ்ரீஉன்மத்த பைரவ மூர்த்தி கிரிவலம் வருகின்ற அற்புதத் திருநாள்! உள்ளம், மனம், உடல் ஒன்றிய தனித்த சாந்தமய நிலையை உன்மத்த தேவ நிலை என்று கூறுவர். அதாவது கேவலமான மனித எண்ணங்களுடன் இல்லாது, எப்போதும், எந்நேரமும் அற்புத தெய்வீக நிலைகளில் துலங்கி, உலகத்தைச் சார்ந்தும் சாராதும் இருக்கின்ற உத்தம நிலையிற் பொலிவதே உன்மத்த தேவ நிலையாகும்.

இன்று ஸ்ரீவிஷ்ணுபதி புண்ய கால பூஜைக்காலம் ஆதலின் இன்றைய கிரிவலப் பலன்களாக நிர்விகல்ப யோகம், தாரண யோகம் போன்ற மிகச் சிறந்த உத்தம யோக நிலைகளுக்கான பாக்யங்களைத் தரக் கூடிய மிகவும் விசேஷமான புண்ய நாளாகும்.

ஸ்ரீஉன்மத்த பைரவரே அருணாசல கிரிவலம் வருகின்ற ஸ்ரீவிஷ்ணுபதி புண்யகாலத் திருநாள் என்றால் இந்த விஷ்ணுபதி புண்ய காலத்தின் சிறப்பு சொல்லவும் பெரிதன்றோ! உன்மத்த நிலை ஞான வகைகளில் ஒன்றாதலின் பிரம்ம ஞான சக்திகளை அளித்திட ஸ்ரீபிரம்மாவும், வித்யா ஞானத்தை அளிக்கும் கலைவாணியும் ஸ்ரீஉன்மத்த பைரவ மூர்த்தியுடன் இணைந்து அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற உத்தமத் திருநாள்!

விஷ்ணுபதி புண்யகால பலன்கள் கூடிய அருணாசல கிரிவலம்!

இந்நாளில் விஷ்ணுபதி நேரத்தில் கிரிவலத்தோடு பூஜையைக் கொண்டாடுவது பெறுதற்கரிய பாக்கியமாகும். இன்று 6.13 மணி சூரிய உதயத்தில் இருந்து தமிழ்ப் பஞ்சாங்க முறைப்படி சனிக்கிழமைக் காலம் தொடங்குகிறது. இன்று ஸ்ரீமகா விஷ்ணு ஸ்ரீதுளசி தேவியை மணம் புரிந்த திருநாளாகும். ஆகையால் ஸ்ரீபூத நாராயணப் பெருமாளைத் தொழுது கிரிவலத்தைத் தொடங்கி இங்கேயே கிரிவலத்தை நிறைவு செய்திட வேண்டும்.

இறைப் பகுத்தறிவு செயலாகட்டும்!

பலரும் தற்காலத்தில் அறியாமையாலும், அகங்காரத்தாலும் விஷ்ணு துவேஷம், சிவ துவேஷம் கொண்டு, சிவமூர்த்தியை, விஷ்ணு மூர்த்தியை வணங்குவது கிடையாது என்ற நிலையில் சொல்லி வாழ்வது மிகுந்த வேதனை தருவதாகும். வாழ்வில் இவ்வாறு துவேஷத்துடன் நடந்து கொண்டமைக்குப் பிராயச்சித்தம் பெறுவதற்காக இந்த உத்தம விஷ்ணுபதிப் புண்யகாலத்தில் தாம் செய்த தவறுகளுக்கு ஆத்மார்த்தமாக இன்று மன்னிப்புக் கோரி தக்கப் பிராயச்சித்தங்களைப் பெற வேண்டும்.

வினையெங்கே போகிறது? விதியைத் தேடி!

தன் ஆயுள் காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் சரிவரப் பயன்படுத்தாது, விரயம் செய்து காலம் சம்பந்தப்பட்ட பலவிதமான தோஷங்களைத் தானாகவே மனிதன் ஏற்படுத்திக் கொள்வதால்தான் பலவிதமான துன்பங்கள் கால சம்பந்தமாகவே ஏற்படுகின்றன. ஏற்கனவே பலவிதமான தீய கர்ம வினைகள், விஷக் கர்ம வினைகள், சத்ருக் கர்ம வினைகள், (அதர்ம) சாட்சிக் கர்ம வினைகள் என்று பலவிதமான கர்ம வினைகளின் விளைவாகப் பிறப்புகளை பெற்றுள்ள மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் தான் சேர்த்த கர்மவினைகளைக் களைவதற்கான நல்வழி முறைகளைக் கடைபிடிப்பதிலேயே ஆயுள்காலம் செலவாகி விடுகின்றது.

கால தோஷங்கள் நீங்கிட....

காலம் என்பது உணர்தலாகிய ஞானமே! எனவே காலத்தை இறைபொக்கிஷமாக வைத்து ரட்சிக்காவிடில் கால தோஷங்கள் ஏற்படும். எனவே காலம் சம்பந்தப்பட்ட தோஷங்களால் இனியேனும் மனிதன் பாதிக்கப்படாமல் இருக்க காலதோஷ நிவர்த்திப் பரிகார நாளாக பைரவ மஹரிஷிகள் ஸ்ரீஉன்மத்த பைரவர் கிரிவலம் வரும் இந்நாளைக் குறிக்கின்றார்கள்.

மனிதன் தன்னுடைய வாழ்நாளிலே ராகுகாலம், எமகண்டம், கரிநாள், மரண யோகம், பிரபலாரிஷ்ட யோகம் எனப்படும் கூடா நாள், குருட்டு நாட்கள், தலையற்ற நாட்கள், காலற்ற நாட்கள் போன்ற நாட்களின் தன்மைகளை உணர்ந்திடாமல் நினைத்த நாளில் திருமணம் செய்வது, கிரகப் பிரவேசம் போன்ற நற்காரியங்களை நடத்திக் கொள்வது என்று மனம் போன போக்கில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். இவற்றால் விளையும் கால தோஷங்களைக் களையும் நல்வழிகளைப் பெற இன்றைய கிரிவலப் பலன்கள் உதவுகின்றன.

ராகு கால, எம கண்ட தோஷங்கள் நீங்கிட.....

சனிக்கிழமையும், கரிநாளும் சேர்ந்து வருவதால் கருப்பு நிற ஆடைகள், நாவல் பழம், திராட்சை (கருப்பு) கருவேப்பிலை சாதம்,  போன்ற சனீஸ்வரருக்கு ப்ரீதியான பொருட்களை தானமாக அளித்தல் சிறப்பானது. நல்ல நேரம் பாராது அவசர கோலத்தில் செய்த பல காரியங்களுடைய தீய வினைகளை மனிதன் இன்னமும் தினந்தோறும் அனுபவித்துக் கொண்டுள்ளான். இவற்றிற்கெல்லாம் ஓரளவுக்குப் பிராயச்சித்தம் பெறுவதற்காகத்தான் காலதோஷ நிவர்த்திப் பரிகார நாளாக இன்றைய கிரிவல நாளை பைரவ லோகச் சித்தர்களும், மகரிஷிகளும் இத்திருநாளை அறிவிக்கின்றார்கள்.

ஸ்ரீசண்ட பைரவ மூர்த்தி

ஸ்ரீசண்ட பைரவ மூர்த்தி அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற திருநாளிது. சண்டி ஹோமம் என்பது அதியற்புதத் தபோபலன்களைத் தருவதாம். எத்தனையோ ஆண்டுகளாகக் குடும்பத்தைப் பீடித்திருக்கும் தோஷங்களை, சாபங்களை நிவர்த்தி செய்து சமுதாயத்தையே காத்து ரட்சிக்க வல்லதே சண்டி ஹோமம் ஆகும். சண்டி ஹோமத்தில் துர்க்கா சக்திகளும், பைரவ சக்திகளும் இணைந்து அருள்பாலிக்கின்றன.

அனைத்தையும் பிரபஞ்சத்தில் படைத்ததே பிரம்மச் சித்தம்தானே! தர்மமும், அதர்மமும், சத்யமும், அசத்யமும் யுக நியதிகளுக்கு ஏற்ப மாறுபடும். பசிக்காக மானைக் கொன்று தின்னும் புலியானது, பசி ஆறியவுடன், அதன் வழியில் எத்தனை மான்கள் தென்பட்டாலும், மிருக சாஸ்திர ரீதியாக, அவற்றைத் தார்மீகமாக அமைதியாக வாழ விட்டுவிடும். ஆனால் மனிதன் ஒருவன் தான் தன் தேவைக்கும் மேலும் சேர்த்துக் கொண்டே சென்று பேராசை பிடித்த அரக்க வினைகளில் இருந்து மீள முடியாதபடி அதர்மத்திற்குப் பலியாகி விடுகின்றான்.

ஒருவருக்கு நன்மையாக இருப்பது மற்றொருவருக்கு வேறு வகையில் அமைந்து விடுகின்றது. உதாரணமாக, ரத்தக் கொழுப்பு உள்ளவருக்கு எண்ணெய், இனிப்புகள் அதிகமாகக் கூடாது என்ற உணவுக் கட்டுப்பாடு இருக்க, குழந்தைகள் அதிக அளவில் இனிப்புகளை உண்டால்தானே உடல் சக்தி அபிவிருத்தி ஆகும் என்றும் ஆரோக்ய நியதி ஆகின்றது அல்லவா! எனவே சண்டத் தத்துவத்தின் அம்சங்களில் ஒன்றே, நல்லதும், தீயதும் அவரவர் கர்ம வினைகளின் படி, வினை அழுத்தத் தொகையால் வருவதே என்பதையும் அவற்றை நிவர்த்திப்பதற்கான இறைவழி முறைகளையும் உணர்விப்பதாகும்!

சண்டன் என்பது வசைமொழியாக நடைமொழியில் வந்து விட்டதால் இதைப் பற்றிய தவறான அபிப்பிராயம் வழக்கில் ஏற்பட்டு விட்டது. மாயையும், சொத்து, சுகம் நாடும் அஞ்ஞானமும் விலகி, ஞானம் பெற வேண்டிய நிலையையே சண்டாளம் என்பது குறிக்கின்றது. மேலும் சண்ட கதி என்பது அவரவர் கழிக்க வேண்டிய கர்ம வினைகளின் வடிவையும், சண்ட ரூபம் என்பது கழிவுபட வேண்டிய கர்ம வினைகளைக் கழிக்கவல்ல கால ஸ்வரூபத்தையும் குறிப்பதாம். எனவே சண்டாளம், சண்டம் என்பதற்கு எத்தனையோ தார்மீகமான அர்த்தங்கள் உண்டு.

பிரதோஷ நாளாகிய இன்றே, ஒரு யுகத்தில் சித்ரபானு ஆண்டில் ஸ்ரீஆதிசங்கரருக்கு, சண்டாள ரூபத்தில் இறைவன் காட்சி தந்தான். சோமாசிமாற நாயனார் போன்ற பல நாயன்மார்களுக்கும் இந்த அரிய, அற்புதமான சண்டாள ரூப தரிசனம் கிட்டியது உண்டு. உக்ர வடிவு என நாம் கொள்ளும் தேவ வடிவுகள் யாவும் கொடூரத்தை மாய்க்க ஏற்பட்ட தெய்வ சக்திகளே ஆகும்.

எந்த ஒரு நல்வரத்தையும் தெய்வ மூர்த்தியிடம் இருந்தே பெற்று, அதே நல்வரத்தால் அந்த தெய்வ மூர்த்திக்கு பாதகம் விளைவிக்க அந்த அசுர சக்தி முயற்சிக்கும் போது, அந்த தெய்வ சக்தியே முன் வந்து இறை லீலைகளை நிகழ்த்தி, அரக்க சக்திகளை அழித்துத் தர்மத்தை நிலைநாட்டுகின்றது. எனவே வன்முறைகள், வெடிகுண்டு பயங்கரங்கள் போன்ற தீய சக்திகள் பெருத்து வரும் நடப்புக் கலியுலகில் தீவினைகள் பஸ்மம் ஆவதற்கும், நல்லொழுக்கத்தை, நற்பண்புகளை உலகில் பரப்புவதற்கும் தேவையான நற்சக்திக் கிரணங்களை (positive forces) அளிப்பதற்கு, சண்ட பைரவ மூர்த்தி வலம் வருகின்ற இந்நாளின் சண்டி ஹோம பலாபல கிரிவல சக்திகள் பெரிதும் துணை புரிகின்றன.

பைரவர் வர்ஷித்த சின்மய துர்க்காவதார சக்தி!

கிரிவலப் பாதையில், பஸ் நிலையத்தை அடுத்து வரும் அறுபத்து மூவர் மடம் அருகே உள்ள ஸ்ரீதுர்க்கை ஆலயத்திலிருந்து இன்றைய கிரிவலத்தைத் தொடங்கி, ஸ்ரீதுர்க்கை ஆலயத்திலேயே நிறைவு செய்தல் வேண்டும். இங்கு தான் ஸ்ரீதுர்க்கா தேவி தனக்குரிய துர்க்காவதார நல்வரங்களை, ஸ்ரீசண்ட பைரவ மூர்த்தியிடம் இருந்து அருள்வரமாகப் பெற்றிட்டாள். காளி ரூபம் என்றாலே அசுரர்களை, அரக்கர்களை வதம் செய்வதற்காகத்தான் என்று அறியாமையால் பல தேவர்கள் எண்ணி ஸ்ரீதுர்க்கையைத் துதித்தபோது அன்னை துர்க்கா தேவி வருத்தமுற்று, தன்னுடைய அவதார லீலைகளில் மாற்றம் தருமாறு ஸ்ரீசண்ட கால பைரவரை வேண்டினள். சுவாமியும், துர்க்காவதாரத்தில் சின்மய சக்திகளைப் பதித்திட்டு, ஸ்ரீதுர்க்கை பூஜையைக் கலியுகத்தில் சாந்தகுண தெய்வ வழிபாடாகும் நல்வரத்தை அளித்திட்டார். எனவே பூவுலகிற்கான சின்மய துர்க்கா சக்தியைப் பெற்ற பிறகுதான் இராகு கால ஸ்ரீதுர்க்கை பூஜை, சண்டி ஹோமம், நவதுர்க்கை பூஜை, நவராத்திரி துர்க்கை பூஜை போன்ற துர்க்கை வழிபாடுகள் இப்பூவுலகிற்கு அளிக்கப்பட்டன.

அதுவரையில் உக்ர வடிவு கொண்ட ஸ்ரீதுர்க்கா தேவி சாதாரண மக்களும், பாமர ஜனங்களும் வழிபடக் கூடிய சின்மய துர்க்கை சக்திகளுக்கான நல்வரம் பெற்ற இடமே திருஅண்ணாமலை துர்க்கை ஆலயம் ஆதலின் இங்குள்ள தீர்த்தம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.  இத்தீர்த்தத்தில் நீர் இருந்தால் தலையில் தெளித்துக் கொண்டும் அல்லது நீரை எடுத்துச் சென்று இங்கு வழிபட்டுச் சிரசில் தெளித்துக் கொண்டும் கிரிவலத்தைத் தொடங்குதல் வேண்டும்.

தீய பழக்கங்கள் அகன்றிட....!

கணவன்மார்கள் பலவிதமான தீய ஒழுக்கங்களுக்கு அடிமைப்பட்டு இதே நிலைகள் பிள்ளைகளுக்கும் தொற்றி விடுமோ என்று அஞ்சி வாழ்கின்ற இல்லறப் பெண்கள் உண்டு. கணவனுடைய தீய பழக்கங்கள் மறைந்து, நற்பண்புகளுடன் திகழ்வதற்குப் பிரதோஷ நேர கிரிவல வழிபாடு மிகவும் சிறப்புடையதாகும். பிரதோஷம் தோறும் முறையாக, குரு காட்டிய வழியில் மிகுந்த பக்தியுடன் அருணாசல கிரிவலமாக வந்திட, பல்லாயிரம் ஆலயங்களில் பிரதோஷ வழிபாடு செய்த பலாபலன்களைப் பெற்றிடலாம்.

பூமிகள் பல உண்டு. ஒவ்வொரு பூமியையும் ஆள்கின்ற மனு மூர்த்திகளும் நிறைய உண்டு. இந்நன்னாளில் காலவிதான லோகத்தில் உறையும் அந்தந்த யுகத்தில் பூமியை ஆளும் அனைத்து மனு மூர்த்திகளும், சண்ட பைரவருடன் சேர்ந்து அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்றனர். அந்தந்த பூமிக்கு உரிய திதி தேவதைகள் யாவரும் இன்று கிரிவலம் வருகின்ற நாளாகவும் இது துலங்குகின்றது. திதி தேவதா மூர்த்திகள் யாவரும் அருணாசல கிரிவலம் வருகின்ற இத்திருநாளை திதி நித்யாப் பிரதோஷ பூஜையென எனச் சித்தர்கள் விளிக்கின்றனர்.

அண்ணாமலையின் பிரதோஷ கிரிவல சக்திகள்!

திதி நித்யாப் பிரதோஷ தத்துவம் யாதெனில் எத்தனையோ பூமிகள் பரவெளியில் துலங்குவதால் ஏதாவது ஒரு பூமியிலேனும் எப்போதும் பிரதோஷ நேரம் அமைந்து கொண்டே இருக்கும் அல்லவா! அருணாசலத்தில் இருந்தே பிரதோஷ பூஜா விதானக் கிரணங்கள் அனைத்து லோகங்களுக்கும் பரிமளிப்பதால், திதி நித்யாப் பிரதோஷ நாளான இன்று அருணாசலத்தைக் கிரிவலம் வருவோர்க்கு, மிகவும் அபூர்வமான சண்டிப் பிரதோஷ ஹோம பூஜா பலன்கள் மகா திவ்யப் பிரசாதமாகக் கிட்டுகின்றன. எனவே இன்றைக்கு, நிறையப் பிரதோஷ தூபங்களை ஏற்றியவாறு எத்தனை முறை கிரிவலம் வர முடியுமோ அத்தனை முறை கிரிவலம் வருதல் சிறப்புடையது. இதற்காக, பட்டினியுடன் உடலை வாட்டிக் கொண்டு கிரிவலம் வருதல் வேண்டும் என்று எண்ணிடல் வேண்டாம். மகா காருண்ய மூர்த்தியே ஸ்ரீஅருணாசலேஸ்வரர்! எனவே நன்கு உண்டு, நீரருந்தி, மெதுவாக நடந்து வெய்யில், மழை பாராது நன்முறையில் பக்தியுடன், குருவருளால் பக்தியுடன் கிரிவலம் வந்திட்டால் பிரதோஷ நேரத்தில் சண்டி ஹோமப் பலாபலன்களின் சில அம்சங்களைப் பெற்றிடலாம். உண்ணா விரதத்துடன் அருணாசல கிரிவலம் வருவதும் இதற்குரிய விசேஷமான பலன்களையும் அளித்திடும்.

இன்றைய பிரதோஷ கிரிவலப் பலன்களை பைரவ சக்தியுடன் ஸ்ரீசண்ட பைரவரே நேரில் தூல, சூக்கும, காரண, காரிய வடிவுகளில் தோன்றி அவரவர் கர்ம வினைகளுக்கு ஏற்ப கிரிவலப் பயன்களை அருள்கின்றார். அனைத்து மனு தேவதா மூர்த்திகளின் ஆசீர்வாதங்களும் பரிபூரணமாகக் கிட்டும் நாளிது!

பூலோக மக்கள் யாவருமே கிருதயுகம், திரேதாயுகம், துவாபர யுகம், கலியுகங்களில் ஒவ்வொரு மனுவின் காலத்தில் பிறந்து, வசித்து வந்திருப்பதால் அனைத்து மனு மூர்த்திகளையும் மக்கள் பல யுகங்களிலும் வழிபட்டே வந்துள்ளனர். அனைத்து பூமியிலும் நாம் வாழ்ந்துள்ளோம் என்ற எண்ணம் ஆத்ம விசாரமாக உங்களிடம் முதலில் உருவாகட்டும். எத்தனை பூமிகள் இருந்தாலும் நாம் வாழ்கின்ற இந்த பூமியில் இருக்கின்ற அருணாசலத் திருமலைதான் அனைத்து பூமிகளிலும் தோன்றுகின்றது என்பதே நம் பூவுலகின் விசேஷப் புனிதத் தன்மையைக் குறிக்கின்றது. அருணாசலப் புனித பூமியில் மனுதேவ மூர்த்திகளின் தேவ ஆசிக் கிரணங்கள் வர்ஷிக்கின்ற விசேஷமான நாளிதுவே!

இதுவரையில் பல நூற்றுக்கணக்கான பிரதோஷ பூஜைகளைத் தவற விட்டவர்கள் ஓரளவேனும் பிரதோஷ பூஜா பலன்களைத் திரட்டுவதற்கும் இனியேனும் எந்தப் பிரதோஷ பூஜையையும் தவற விடலாகாது என்ற எண்ணம் ஆயுட்கால நல்வைராக்கியமாகி உருவாகுதற்கும் இன்றைய "த்ரிகுணப் பிரதோஷ" கிரிவலம் துணை புரியும்.

அருணாசலத்தின் "த்ரிகுணப் பிரதோஷம்"!

ஆம், இன்றைய பிரதோஷத்தைத் "த்ரிகுணப் பிரதோஷம்" என்றும் சித்தர்கள் குறிக்கின்றார்கள். காரணம், ஸ்ரீசண்ட பைரவர் அளிக்கும் த்ரிகுண கால கிரிவல வழிபாடு ரஜோகுணம், தமோகுணம், சாத்வீக குணம் என்ற மூன்றையுமே அவரவர்களுடைய கர்ம வினைகளுக்கு ஏற்பச் சீர்ப்படுத்தி உத்தம நிலைகளைப் பெற்றுத் தருவதற்குத் துணை புரிவதாகும். ஸ்ரீசண்ட பைரவ லோகத்தில் இருந்தே சமபாவன சத்குண க்ஷேத்ரபாலகர், சமபாவன ரஜோகுண க்ஷேத்ரபாலகர், சமபாவன தமோகுண க்ஷேத்ரபாலகர் ஆகிய மூன்று பைரவ அம்சங்கள் தோன்றினர்.

ஒவ்வொரு மனிதக் கூறும் மேற்கூறிய மூன்று குணங்களின் தொகுப்பே ஆகும். தமோ குணம் கொண்டவன் சோம்பேறியாகவும், தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டும் கிடப்பான். ரஜோ குணம் கொண்டவன் முரட்டுத் தனம், கோபம் கொண்டு, முரடனாக, வீரம் கொண்டவனாக, ஆனால் அதே சமயத்தில் ஒரு சிறிது சாந்த குணவானாகவும் இருப்பான். சாத்வீகத் தன்மை கொண்டவன் எப்போதும் நல்ல குணங்களுடன், காருண்யமாய்ப் பிரகாசிப்பான். ஆனால் இம்மூன்றும் சேர்ந்து தான் எந்த மனிதப் பிறவியும் அமைகின்றது!

எவருமே நூற்றுக்கு நூறு சதவிகிதம் சாத்வீகமாகவோ, ரஜோ குணத்துடனோ, தமோ குணத்துடனோ இருப்பதில்லை! எனவே அவரவருடைய உடல் ஆரோக்யம், மனநிலை, உள்ளத்தின் நிலைக்கு ஏற்ப இவற்றைச் சீர்படுத்தித் தருவதுதான், ஸ்ரீசண்ட பைரவர் கிரிவலம் வரும் த்ரிகுணப் பிரதோஷ பூஜா பலன்கள் ஆகும்.

ஸ்ரீருரு பைரவர் கிரிவலம்

திருஅண்ணாமலையின், கார்த்திகை தீபத்திற்கு முந்தியதான பரணி தீபப் பெருவிழா தினமாகிய இன்று ஸ்ரீசனீஸ்வர மூர்த்தியின் அனுகிரகத்தைத் தரும் கரிநாளும் சேர்கின்றது. ஸ்ரீருரு பைரவ லோகத்தில் ஸ்ரீருரு பைரவரால் உற்பவிக்கப் பட்டவரே ஸ்ரீசனீஸ்வரர் ஆவார். எனவே ஸ்ரீசனீஸ்வர அனுகிரக சக்தி திரளும் நாட்களே கரி நாட்களாகும். கார்த்திகை தீபத்தன்று காலையில் ஆலயப் பரணி தீபம் மானுட ரீதியாக அமைந்தாலும், பரணி நட்சத்திரம் தொடங்கும் போதே தேவ பூர்வமாக பரணி தீப சக்திகள் பொங்கி அனுகிரக சக்திகளை வர்ஷிக்கலாகின்றன.

வைகுண்டச் சதுர்த்தசித் திருநாளும் இந்நாளில் சேருவது நம் பாக்கியமே! ஆலகால விடமுண்டு, திருநடனம் ஆடிய களைப்பால் இளைத்திட்ட சிவபெருமானை, ஸ்ரீமகாவிஷ்ணு, வைகுண்டத்தின் சீதளமான வெட்டி வேர் மூலிகா வனத்திற்கு அழைத்து வந்து விசேஷமான அஷ்டவடி சீதள சக்தி நிறைந்த எட்டு விதமான நாகங்களால் அரியணை இட்டு, சிவபெருமானுக்கு நெற்றித் திருமண் இட்டு, குளிரச் செய்து, பாற்கடலில் பள்ளி கொள்ள வைத்து, சதுர்த்தசி பூஜையாக, நான்கு திக்குகளிலும் அனைத்து தேவ மூர்த்திகளும் இறைவனை வழிபட்ட நாளே வைகுண்டச் சதுர்த்தசி தினமாகும்.

சனீஸ்வரரின் மூன்று நாள் கிரிவலம்!

ஸ்ரீசனீஸ்வர பகவான் மூன்று நாட்கள் தொடர்ந்து மானுட வடிவில் கிரிவலம் வருகின்ற தினங்களில், மூன்றாவது தினமாக அமைந்து, அஷ்டமச் சனீஸ்வர சாதக சக்திகள் பொங்கி அருளிடும் அதியற்புத தினமிது. 16.11.2002ல் தங்கு சனி தசையில் உள்ளோர்க்கும் 17.11.2002ல் மங்கு சனி தசை உள்ளோருக்கும், 18.11.2002ல் பொங்கு சனி தசை உள்ளோர்க்கும் விசேஷமாக இங்கு கிரிவலம் வருகின்ற ஸ்ரீசனீஸ்வரரே அருள்கின்ற திருநாள்! இந்த மூன்று நாட்களிலும் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவோர்க்கு உள்ள சனி தசை, சனி புக்தி, சனி அந்தரக் காலங்களில், அவரவர் தம் கர்மவினைகளால் ஏற்படுகின்ற பலவிதமான தோஷங்களும், துன்பங்களும் நீங்கிட இம்மூன்று நாள் கிரிவல பலாபலன்கள் பெரிதும் துணை புரியும். நமக்குத்தான் சனி தசை இல்லையே என்று எண்ணி ஒதுங்கிடாதீர்கள்! கடந்த அல்லது வரும் சனி தசைகளில் முறையாகப் பூஜைகளைச் செய்யாவிடில் சனி தசையில் கழிய வேண்டிய கர்மங்களில் தேக்கநிலைகள் ஏற்படும் அல்லவா!

இன்று கிரிவல வளாகத்தில் குறைந்தது எட்டு இடங்களில் பரணி நட்சத்திரத் துதியை ஓதி, நல்லெண்ணெய் தீபமாக, எட்டு இடங்களில் ஒவ்வொன்றிலும் பத்து தீபங்களாக மொத்தம் 80 தீபங்கள் ஏற்றி வழிபடுதல் வேண்டும். ஸ்ரீசனீஸ்வர மூர்த்தி தன்னுடைய த்ரிகால சந்தியா வந்தனத்தை இன்று அருணாசலத்தில் ஸ்ரீகாயத்ரீ தரிசனப் பகுதியில் நிறைவு செய்து கிரிவலத்தை நிறைவு செய்கின்ற நாளாதலால் இங்கு மந்த வேக கச்சை தூபம், எள் தீபம் ஏற்றுவது விசேஷமானதாகும்.

பழமையான இறைமை மலர்ந்திட...!

இன்றைக்குப் பரணி தீப நாள் என்பதால் பரணி நட்சத்திரங்கள் பரவெளியில் எந்த விதத்தில் அமைந்துள்ளனவோ, அதே பரணி லோக வடிவத்திலே, தீபங்களை ஏற்றுதல் விசேஷமானதாம். கலியுகத்தில் ஆரோக்கியக் குறைவும், மன வளக் குறைவும் நிறைய ஏற்பட்டு வருகின்றன. அதாவது, நம் மூதாதையர்கள் கொண்டிருந்த உடல் திறனையோ, வைராக்கியமான மனத் திறனையோ கலியுக மக்கள் பெற்றிருக்கவில்லை! நவீன விஞ்ஞானமயப் பழக்க வழக்கங்கள், ரசாயனக் கலவை நிறைந்த உணவு வகைகள், அயல்நாட்டு மோகங்கள், மது, புகை, புகையிலை போன்றவை மனிதனுடைய இயற்கைச் சூழ்நிலைகளை மாற்றி, செயற்கையான பல வாழ்வு முறைகளை உருவாக்கி, நல்ல உடல் நலம், மன வளங்களைப் பெரிதும் இழக்கச் செய்து விட்டன.

சுகபோக வாழ்க்கைக்கு மனித குலம் அடிமைப்பட்டு விட்டதால் கடுமையான உபாசனை, பூஜை, வழிபாட்டு முறைகள் மறக்கப்பட்டு கடினமாக உழைக்கும் மனோநிலையும் இல்லாமற் போயிற்று! எனவே எதுவாக இருந்தாலும், கஷ்டப்பட்டு அடைதல் வேண்டும் என்ற மனப் பக்குவம் குறைந்து, பிறரை ஏமாற்றி, வாங்கும் ஊதியத்திற்கு ஏற்ப உழைக்காது, குறுக்கு வழியில் பொருளீட்டும் அவல எண்ணங்கள் கலியுகத்தில் நிறைய உருவாகி விட்டன!

இறைதரிசனம் உழைப்பில் கிட்டுவதே!

ஒரு நாளைக்கு ஐந்து காலங்களிலும் ஆலய தரிசனத்திற்குச் செல்கின்ற நிலை போய், ஐந்து வேளைகளிலும் டிவி பார்த்து கொண்டு காலத்தைக் கழிக்கின்ற சுகபோக வாழ்வு முறை கேவலமான முறையில் வந்து சேர்ந்து விட்டது. வாரத்திற்கு ஒரு முறை கோயிலுக்குப் போனால் போதும் என்ற எண்ணமும் வந்து விட்டது. ஆலயத்திற்குச் சென்றாலும், கால் கடுக்க நன்கு அடிப் பிரதட்சிணம் வந்து, உடல் கடுக்க நின்று, இறைவனை வழிபட வேண்டும் என்ற நல்லெண்ணமும் போய் ஏதோ மேலெழுந்த வாரியாகத் தரையைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு வந்து விடுகின்றார்கள். விழுந்து நமஸ்கரித்தால், தோப்புக் கரணம் இட்டால் கூட அவமானம் என்றும், நம்மால் செய்ய முடியாது, இடுப்பு வலிக்கும், கை வலிக்கும் என்ற சுகபோக மனப்பான்மையும் ஆலய தரிசனத்திற்குள்ளேயே வந்து விட்டது.

எனவே, இறைவனை வழிபடும்போது கூட எந்த ஒரு சிறு வலியும் வரக் கூடாது என்ற எண்ணம் மனதில் ஆழப் பதிந்து விட்டதால் பக்தியும் உடல், மனம், உள்ளத்தை விட்டு நெடுந்தூரம், பல தலைமுறைகள் தாண்டி, நிறைய விலகிச் செல்ல ஆரம்பித்து விட்டது. ஆனால் கஷ்டம், நோய், பதவி, வியாபாரத்தில் துன்பங்கள் என்று வந்து விட்டால் கோயில் என்ன, குளம் என்ன என்று மாறி, மாறி சுற்றிச் சுற்றி வருகின்றவர்களே அதிகம்! அதிலும் கஷ்டம் சற்றே நிவர்த்தியானவுடன் மீண்டும் கடவுளை மறந்து விடுவார்கள். இந்நிலைகளையே சித்தர்கள் "பிரசண்டத் தீது" என்ற வகையான எதிர்வினைகளாகக் (negative forces) குறிக்கின்றார்கள். இப்பிரசண்டத் தீதுகளை அகற்றி, இறைவன் அருளால்தான் ஒவ்வொரு விநாடியும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் என்ற எண்ணம் நிலைத்திருக்க, இந்த பரணி தீப கிரிவலம் பெரிதும் துணைபுரிகின்றது.

நாமந் தரித்து நல்லதோர் கிரிவலம்!

வைகுண்டச் சதுர்த்தசி தினம் என்பதால் இன்றைக்கு நெற்றியில் நாமம் தரித்து கிரிவலம் வருதல் மிகவும் விசேஷமானதாகும். நாமம் என்றால் மூன்று நாமக் கோடுகள் இட வேண்டும். பலரும் தினமும் நடுக்கோடு மட்டுமே இடுகின்றனர். இது தவறானது. நடு நாமக்கோடு மட்டும் இட்டு ஸ்ரீலக்ஷ்மீ தேவியைப் பிரித்திட்டால், குடும்பமும் பிரியும் அவல நிலைகளுடன் வாழ்வில் சொல்லொணா வேதனைகளே ஏற்படும்.

தம் வாழ்வில் எப்போதும் சோதனைகளையே கண்டு வாடி வருவோர், ஸ்ரீருரு பைரவ சக்தியால் நல்ல தீர்வுகளைப் பெற உதவும் அருணாசல கிரிவல நாள் இதுவேயாம்! இதே போல, நல்ல வசதிகள் இருந்தும் குழந்தை இல்லாமை, தம்பதிகளிடையே கருத்து வேற்றுமை, சொத்துத் தகராறுகள், பிள்ளை, பெண்ணை விட்டுப் பிரிந்திருத்தல், பிள்ளைகள் கடும் நோயால் பீடிக்கப்படுதல் போன்றவை காரணமாக சோகமயமாக வாழ்வோர் நல்ல நிவாரணங்களைப் பெற, ஸ்ரீருரு பைரவ சக்திகளை அடைய உதவும் கிரிவல நாள்!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகின்ற - கார்த்திகை மகா தீபத்துடன் த்ரிதினப் பௌர்ணமி கூடும் அற்புதத் திருநாள்!

ஸ்ரீவிஜய சித்ராம்பா சமேத ஸ்ரீஜெய ப்ரதாப மூர்த்தீஸ்வர ஸ்வர்ணாகர்ஷண பைரவரே திருஅண்ணாமலையைக் கிரிவலம் வரும் ஸ்வர்ணஸ்ரீ பௌர்ணமித் திருநாள்!

ஸ்ரீபைரவ விஜய அருணாசல மகா கார்த்திகை தீபம்

சந்திர பகவான் அருளும் சோமசிவ பாஸ்கரப் பிரகாசம்!

சித்ரபானு ஆண்டில் கார்த்திகை மகாதீபமானது மூன்று நாட்களுக்கு நிரவுகின்ற த்ரிதினப் பௌர்ணமி, அக்னி சம்பந்தமான பரணி, கார்த்திகை நட்சத்திரங்கள், அக்னிக் கோளமான செவ்வாயுடன் பரிபூரணமாகச் சேர்ந்து பௌர்ணமியன்று வருவதும் மிகவும் விசேஷமானதாகும். சந்திர பகவான் மகா கார்த்திகையுடன் கூடும் த்ரிதினப் பௌர்ணமி அன்று, தன் விசேஷமான ஆதிமூல ஷோடச சிவகங்காதரக் கிரணப் பதினாறு கலைகளுடன் பரிபூரணமாகப் பிரகாசிப்பதால் மூன்று நாள் சந்திர மண்டலத்தில் நிரவும் இந்த அக்னி ஜோதிப் பிரகாசமே "சோமேஸ்வர பாஸ்கரப் பிரகாசம்" ஆகும்!

இது வரையில் நெருப்பில் ஹோமம் செய்து வந்தவர்கள் எல்லாம் முதன் முதலாக இன்று ஜடயோக‌ச் சூத்திர வகையிலேயே புனித நீரில் ஜலபர்யாதி சோம காயத்ரீ தியானம், சந்திர ஒளியைப் பிரதிபலிக்கும் கண்ணாடியில் மேல் ஆஹூதி இடுவதான சந்த்ர ஸ்படிக யாகத்தையும் ஆற்றும் முறையைத் தக்க குரு மூலமாக அறிந்து கடைபிடிக்கும் பாக்யத்தைப் பெறுகின்றார்கள். சந்திரனுடைய ஒளியானது நீர் மற்றும் ஆடியாகிய கண்ணாடி ஆகிய இரண்டு விதங்களில் பிரதிபலித்துப் பூமியையும், மனிதனையும், ஜீவன்களையும் அடைவதால் நீர், கண்ணாடி சாதனங்கள் மூலமாகச் சந்திரனை இன்று வழிபடுவது பூர்ண சந்திர கிரண சக்திகளை கிரகித்து அதியற்புத மனசாந்தத்தை அளித்திடும்.

ஜலப்பரி சோம தியானம்

18.11.2002 திங்கட்கிழமை நள்ளிரவுக்குப் பின், அதாவது செவ்வாய்க்கிழமை விடியற்காலை 4.58 மணிக்குப் பௌர்ணமி திதி தொடங்குவதால், சரியாக இந்நேரத்தில் விசேஷமான சந்திர தியான, ஹோம, யாக வழிபாட்டைத் தொடங்கிட வேண்டும். ஒரு நுனி வாழை இலை மேல் வசதி உள்ளோர் தங்கம், வெள்ளிக் கலசத்திலோ ஏனையோர் ஜலப்பரி சோமக் கலசம் எனப்படும் வெண்கலம், தாமிரம் போன்ற புனிதமான கலசத்தில் (எவர்சில்வரைத் தவிர்க்கவும்) கங்கை, காவிரி போன்ற புனிதத் தீர்த்தங்களை நிரப்பி, துளசி, வில்வம், பச்சைக் கற்பூரம், ஜாதிக்காய், ஏலக்காய் இட்டு மேல் மாடி வெட்ட வெளியிலோ அல்லது பூஜை அறையிலோ ஸ்ரீரோகிணிச் சந்திர சக்கரத்தின் முன் பூஜிப்பதற்காக வைத்திடுதல் வேண்டும்.

பாத்திரத்தில் உள்ள நீரினுள் நீண்ட நுனி தர்ப்பைகளை வைத்து அதன் மறு முனையை வலக்கை குரு மற்றும் சுக்கிர விரல்களால் (ஆள்காட்டி விரல் + கட்டை விரல்) பிடித்தவாறு,

"ஓம் தத்புருஷாய வித்மஹே சோமேஸ்வர பாஸ்கரப் ப்ரகாசாய தீமஹி
தந்நோ சந்த்ர பூஷணப் ப்ரசோதயாத்"

என்றபடியான ஸ்ரீபூர்ணிம சந்திர காயத்ரீ மந்திரத்தைப் பலரும் சத்சங்கமாக ஒன்று கூடி ஓதிட வேண்டும். இதனை அகண்ட கால (கால இடைவெளி இல்லாத கூட்டுக் கால) ஜபமாக, ஸ்ரீபூர்ணிம சந்திர காயத்ரீ மந்திரத்தைப் பௌர்ணமித் திதி ஆரம்பம் முதல் நிறைவு வரை முழுவதுமாகச் சத்சங்கமாக ஓதுதல் மிகவும் விசேஷமானதாகும். இதன் அருகிலேயே சந்திர பகவானுக்கு உரிய சோமதேவ யாகமும், சந்திர கிரகப் ப்ரீதி ஹோமமும் நடைபெறுமேயானால் இது பூஜா பலன்களை அபரிமிதமாய் விருத்தி செய்யும்.

சந்திரனுடைய ஆதிமூலப் பதினாறு கலைகளுக்குமான பதினாறு காயத்ரீ மந்திரங்கள் உண்டு. ஸ்ரீஅகஸ்தியர் பெருமானும் இதற்கென விசேஷமாக ஓதியுள்ளத் தமிழ்ப் பாசுரங்களைக் கேட்டறிந்து துதித்து வழிபடுக! பௌர்ணமித் திதி நேரத்தைக் கணக்கில் கொண்டு, சந்திர பகவானின் ஒவ்வொரு கலைக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தையும் குறைந்தது ஒன்றரை மணி நேரம் ஓதி வர வேண்டும். பதினாறு கலைகளுக்கான ஸ்ரீகாயத்ரீ மந்திரங்களை அறியாதோர் நட்சத்திர வாக்கியங்களுடன் மேற்கண்ட ஸ்ரீபூர்ணிம சந்திர காயத்ரீ மந்திரத்தையும் சேர்த்து ஓதிடுக! (நம் ஆஸ்ரம வெளியீடான "ஜெயந்தி தரும் ஜெயம்" என்ற நூலில் காண்க! அருகில் ரோகிணி சந்திர சக்கரம் வைத்து வழிபடுதல் விசேஷமானது)

சந்த்ர ஸ்படிக யாகம்!

ஒரு பெரிய புதுக் கண்ணாடியை நன்கு சுத்தம் செய்து மஞ்சள், சந்தனம், குங்குமம் இட்டு, சந்திர பிம்பம் தெரியும் வகையில் ஜலப்பரி சோமக் கலசத்தின் அருகில், தாமரை இலைகளின் மேல் வைத்து, ஒவ்வொரு காயத்ரீ மந்திரத்திற்கும் அர்ச்சனாஹூதியாக நறுமணப் புஷ்பங்களை, தான்யங்களை, மூலிகை தளங்களை ஜலப்பரி சோமக் கலசம் மற்றும் கண்ணாடியின் மேல் இட்டிட வேண்டும்.

இவ்வாறாக பௌர்ணமி திதி நிரவுகின்ற மூன்று நாட்கள் முழுவதுமே மூன்று, ஐந்து பேர்களாக ஒன்று சேர்ந்து பௌர்ணமி ஜலப்பரி சோம யாகத்தையும், சந்திர ஸ்படிக யாகத்தையும் பௌர்ணமி திதி முடிகின்ற நேரமான 20.11.2002 புதன்கிழமை இரவு 7.03 மணிக்கு நிறைவு செய்திட வேண்டும். பிறகு அனைவரும் பத்து முறை வலம் வந்து கண்ணாடியில் சந்திர பிம்ப தரிசனத்தைப் பெற்று நமஸ்காரம் செய்திடல் வேண்டும். கலசத் தீர்த்தத்தை பிரசாதமாக அருந்தி இல்லமெங்கும் மாவிலையால் தெளித்திடுக!

கால தோஷங்களை அருணாசல கிரிவல சக்திகளால் பஸ்மம் செய்வீர்!

கலியுகத்தில் பொதுவாக வன்முறைகள், தீய சக்திகள் பெருகக் காரணமே கலிகாலக் கால தோஷங்கள் நிறைந்து வருவதேயாகும். இறைவன் அளித்துள்ள ஆயுட்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் வெட்டிப் பொழுதாகப் போக்குதல், காலாட்டிக் கொண்டு தேவையற்ற விஷயங்களை டிவியில் பார்த்துக் கொண்டு கழித்தல், சீட்டு, மது கேளிக்கைகள், சூது, பொய்மை, வாது போன்றவற்றில் நேரத்தைக் கடத்துதல், ஒன்றுமே செய்யாது சும்மா இருத்தல் இவ்வாறாக மனித சமுதாயம் இறைவன் கொடுத்துள்ள புனிதமான காலத்தை விரயமாக்கிக் கொண்டு மாமலை போல் கால தோஷங்களைப் பெருக்கிக் கொண்டு விட்டது! இதனை என்று, எவ்வாறுதான் கழிப்பது? இதற்காகவே ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் கிரிவலம் வரும் திரிதினப் பௌர்ணமி வழிபாடுகள் அமைகின்றன!

இறைவன் அளித்துள்ள ஒவ்வொரு விநாடியையும் தெய்வீகமாகப் பயன்படுத்துபவர்கள்தான் மஹான்கள், சித்தர்கள் ஆகின்றார்கள். அந்த அளவிற்கு காலச் செல்வத்தை ஒருவன் நன்முறையில் இறைவழிகளில் செலுத்துகின்றானோ அந்த அளவிற்கு அவனுக்கு தெய்வீக அனுக்ரஹம் நிறையவே எப்போதும் ஐஸ்வர்யம் போல் குவிந்து கொண்டே இருக்கும். தெய்வீகத்தில் உத்தம நிலைகளை அடைவதே ஒருவருடைய வாழ்க்கை லட்சியமாக இருக்க வேண்டும். தக்க சற்குருவோடு இவற்றை ஆற்றும் போதுதான் நடுவில் எவ்வித அகங்கார, ஆணவ, கன்ம, மாயைத் தடங்கல்கள் இல்லாமல் சீரான இறைப் பாதையில் நடக்கச் சித்தமாகும்! சற்குருவின் மேற்பார்வையின் கீழ் இவை அமையும் போது அவர் அகங்கார ஆணவத் தளை(ழ)களைக் களைந்து இறைப் பாதையைச் செம்மையாக்கி அருட்பணி புரிகின்றார்.

இனியேனும் கால தோஷங்கள் நம்மைப் பற்றாமல் இருப்பதற்கும் ஒவ்வொரு விநாடியும் இறைநெறியில் துய்த்துத் தூய தெய்வீக நல்வாழ்வு அமைவதற்கும் இந்தத் த்ரிதின பௌர்ணமி பூஜையை திருஅண்ணாமலையில் மேற்கொண்டு பலாபலன்களை மேலும் பெருக்கிக் கொள்வீர்களாக!

பிற தினங்களின் அருணாசல கிரிவல சக்திகளை விருத்தி செய்யும் திரிதினப் பௌர்ணமி கிரிவலம்!

இன்றைக்குப் பௌர்ணமி திதி முழுவதுமே நிரவி இருப்பதால் இன்று முழுவதுமே கிரிவலம் வருதலே மிகச் சிறந்த பௌர்ணமி விரதமாகவும், பௌர்ணமி பூஜையாகவும், கிரிவல வழிபாடாகவும் விளங்குகின்றது. நன்கு வயிறார உண்டு எவ்வளவு முறை வேண்டுமானாலும் இன்று கிரிவலம் வந்து அளப்பற்றப் புண்ய சக்திகளை நன்கு விருத்தி செய்து கொள்வீர்களாக!

அருணாசல கார்த்திகை தீபத்தன்று தேவாதி தேவ மூர்த்திகள், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர்கள், ஞானிகள், மஹரிஷிகள், பித்ரு தேவ மூர்த்திகள் அனைவரும் கிரிவலம் வருவதான இறைத் தூதுவர்களின் சிவத்துறையாக அருணாசலப் புனித பூமி பரிமளிக்கின்றது!  ஏற்கனவே மாதப் பௌர்ணமி, சிவராத்திரியில் கிரிவலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த திரிதின அருணாசலப் பௌர்ணமி கிரிவலத்தினைக் கடைப்பிடிப்பதால் இது வரையிலும் வந்த பௌர்ணமி கிரிவலங்களுக்கும் கூடுதலான பலாபலன்கள், பைரவ சக்திகளுடன் பிணைந்ததாகக் கிட்டுகின்றன! இந்தச் சிவாற்புதம் அருணாசலப் புனித பூமியில் மட்டுமே தெய்வ சங்கல்பமாக நிகழவல்லதாம். இது மட்டுமா, எதிர்காலத்தில் எந்தெந்தப் பௌர்ணமி தினத்தில் கிரிவலம் வர இருக்கின்றீர்களோ அவற்றுக்கான கூடுதல் சக்திகளையும் இன்றைய பௌர்ணமி கிரிவலம் தந்திடும் என்ற அற்புத தேவ மகத்துவத்தையும் உணர்ந்திடுங்கள்.

பௌர்ணமி நாள்: 19.11.2002 செவ்வாய்க்கிழமை விடியற்காலை 4.58 மணி முதல் 20.11.2002 புதன்கிழமை காலை 7.58 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி பௌர்ணமி திதி அமைகிறது.

பௌர்ணமி கிரிவல நாள்: 19.11.2002 செவ்வாய்க் கிழமை இரவு.

3.11.2002 ஞாயிறு காலை 9.24 மணி முதல் 4.11.2002 திங்கள் விடியற்காலை 5.43 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி நவம்பர் மாத சிவராத்திரித் திதி நேரம் அமைகின்றது.

நவம்பர் 2002 மாத சிவராத்திரி கிரிவல நாள்: 3.11.2002 ஞாயிறு இரவு.

விஷ்ணுபதி புண்ய காலம்

15.11.2002 நள்ளிரவு 1.30 மணி முதல் 16.11.2002 காலை 10.30 மணி வரை விஷ்ணுபதிப் புண்ய காலம் அமைகின்றது. இப்புண்ய காலத்தில் ஆற்றப்படும் அபிஷேக ஆராதனைகள், ஹோமம், தர்ப்பண வழிபாடுகளுக்குப் பன்மடங்கு பலன்கள் உண்டு.

அமுத தாரைகள்

மஹா யந்திரம் தாங்கி சிவராத்திரி கிரிவலம் வருவீர்!

ஸ்ரீசந்திர பகவான் தம்முடைய கர்வத்தினால் ஏற்பட்ட சாபங்களின் துன்பங்கள் ஜீவன்களுக்குச் சந்திராஷ்டம விளைவுகளாக அமைந்து அவர்களை பாதிக்கக் கூடாது என்பதற்காக ஸ்ரீபாலசந்திர கணபதியை வேண்டி, பாலச்சந்திர காணாபத்ய மஹா யந்திரத்தை பூஜித்து இதனைத் தாங்கியவாறே திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்திட்டார். எனவே சந்திராஷ்டம விளைவுகளால் அவதிப்படாமல் இருக்க இந்த யத்திரத்தை பனை ஓலை, தாமிரத் தகடு, மரப்பலகை அல்லது மஞ்சள் நிறத் தாளில் வரைந்து வெண்தாமரை மலர்கள் மேல் வைத்து ஸ்ரீபூர்ணிம சந்திர காயத்ரீ மந்திரத்தை ஓதியவாறு கார்த்திகை மாத சிவராத்திரி நாளில் கிரிவலம் வருதல் வேண்டும்.

ஸ்ரீபூர்ணிம சந்திர காயத்ரீ மந்திரம்

“ஓம் தத்புருஷாய வித்மஹே சோமேஸ்வர பாஸ்கரப் ப்ரகாசாய தீமஹி
தந்நோ சந்த்ர பூஷணப் ப்ரசோதயாத்"

அனைத்துப் பெருமாள் தலங்களிலும் ஸ்ரீவிஷ்ணுபதி பூஜை ஆகுதல் வேண்டும்! இதுவே எம் விருப்பம், ஹரி ஹரி ஹரி ஓம்!

கடந்த பல ஆண்டுகளாக, மக்கள் சமுதாயத்தால் மறைக்கப்பட்டு விட்ட விஷ்ணுபதி, அசூன்ய சயன விரதம் போன்ற பல பண்டிகைகளையும், திருவிழாக்களையும், விரத நெறிமுறைகளையும் தம் சற்குருவாம் ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச ஸ்வாமிகளின் குருவருளால் கலியுகத்தில் மீண்டும் எடுத்துரைத்து வரும் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் விஷ்ணுபதி புண்ய காலத்தினை அனைத்து வைணவத் தலங்களிலும், சிறப்புடன் கொண்டாடுவதற்காக அரும் பாடுபட்டு வருகின்றார்கள்.

மூன்று மாதத்திற்கு ஒரு முறை, தமிழ் மாதப் பிறப்பு அன்று அமைகின்ற விஷ்ணுபதி புண்யக் காலத்தினை அனைத்து வைணவத் தலங்களிலும் கொண்டாடிட, வைணவப் பெரியோர்கள், பக்த கோடிகள் முன் நின்று உழைத்திட வேண்டும்.

குருவித்துறை ஸ்ரீசித்திர ரத வல்லப் பெருமாள்!

வல்லபம் என்றால் நிரந்தரமானது, சாசுவதமானது என்றும் பொருளுண்டு. சித்திரம் என்றால் வடிவம் என்றும் பொருளுண்டுதானே! பரம்பொருளின் சித்திர வடிவமே சற்குரு ஆகின்றார். கடவுளின் திருவடிகளைக் காட்டுகின்ற சித்திரமே சற்குரு! குருவின் திருவடிதாம் சாசுவதமானது என்பதை ஸ்ரீமகாவிஷ்ணுவே இத்தலத்தில் உலகிற்கு உணர்த்திய புனிதமான நேரமே ஒரு யுகத்தின் சித்ரபானு ஆண்டின் விஷ்ணுபதிப் புண்ய காலமாகும். வைணவத் துறையில் "ஆச்சார்யர்" எனச் சற்குருவைப் பெரிதும் மதித்துப் போற்றும் நற்பண்பு இன்றும் உண்டு!

பெறுதற்கரிய மனிதப் பிறவியை அடைந்து கடவுள் நினைவின்றிக் காரியங்களைச் செய்தல், சூது, வாது, தீமை, முறையற்ற காமம், பொய்மை, கேளிக்கைகள், சோம்பித் திரிதல் போன்ற காலத்தை வெறுமனே கழிக்கும் தோஷங்களால் தான் திருமணத் தடங்கல்கள், காரியத் தடங்கல்கள், கால தாமத நஷ்டங்கள் ஏற்படுகின்றன. இவை தீரவே ஆலயத்தில், இல்லத்தில் தினசரி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டிட வேண்டும்!

தண்ணீர், எரிபொருள், உணவு வகைகள், மின்சாரம் போன்ற காலயோக அம்சங்கள் நிறைந்த அத்யாவசியமான பொருட்களின் பற்றாக்குறை, தரக் குறைவுகள், அல்லது விலைவாசி உயர்விற்குக் காரணமே கலியுகத்தில் பல துறைகளிலும் அதர்ம சக்தி பெருக்கெடுத்திருப்பதும், இதனால் கஷ்டப்படும் நலிந்தோரின் சாபத்திற்கு ஆளாவதும் ஆகும். இத்தகைய அதர்மங்களை வெறும் சமுதாய விதிகள், சட்டத் திட்டங்கள் மூலமாகக் களைதல் இயலாது. ஆன்மீக ரீதியாக இவற்றை முழுமையாகத் தீர்த்து, ஜீவன்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உதவுபவையே கால பைரவ பூஜைகளாகும். தினசரி வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்களைக் களைந்திட ஸ்ரீகால பைரவரை தினமும் வழிபட்டு வருதல் வேண்டும்.

பைரவ லோகத்தில் தோன்றும் ஆன்ம மின்சக்தி

காலத்திற்கும் கம்ப்யூட்டருக்கும் நெருங்கிய பிணைப்பு உண்டு. தற்போதைய கம்ப்யூட்டர் துறையில் உள்ள Computer chip, USB, C, C++, Ram, Mother Board போன்ற அனைத்துமே ஸ்ரீகால பைரவ லோகத்திலுள்ள காலாதீதச் செல்களின் பிரதிபலிப்பே ஆகும். Satellites, communication towers போன்ற விண்வெளிச் சாதனங்கள் அனைத்திற்குமான ஆன்மீக மின்சக்திகள் யாவுமே பைரவ லோகத்தின் சாரமின்னல் கணத்திலிருந்து தான் பெறப்படுகின்றன. ஆனால் மனிதனோ தன்னுடைய விஞ்ஞான மூளையால் விண்வெளியில் பலவற்றைச் சாதித்துக் கொண்டிருப்பதாக, இன்னமும் அறியாமையால் எண்ணிக் கொண்டு இருக்கின்றான். இறையருளின்றி எதுவும், எந்த சக்தியும் பூமியில் இயங்காது! நம் பூஜையைப் போன்ற பிற பூமி லோகங்களில் உள்ள பல சாதனங்களே மீண்டும் மீண்டும் சுழற்சியாக நம் பூலோகத்தில் புதுமைக் கண்டுபிடிப்புகளாகத் தோன்றுகின்றன என்பதே உண்மை! எதுவும் புதிதாகத் தோன்றுவதில்லை!

அருணாசல புராணம் ஓதும்
நந்தீஸ்வரர் திருஅண்ணாமலை

கிரி பகுள லோகத்தில் உதிக்கும் அருணாசலப் புராணம்!

ஸ்ரீகால பைரவருடைய சிவலோகத்தில் "கிரி பகுளம்" என்ற விசேஷமான லோகம் ஒன்று உண்டு. இந்த லோகத்தில் தான் அருணாசல கிரிவலத்தைப் பற்றிய பலவிதமான அனுபூதிகள் பைரவ லோகச் சித்தர்களால், மஹரிஷிகளால் பலருக்கும் உணர்த்தப்படுகின்றன. எந்நாளில், எந்தக் கிழமையில், எந்த நட்சத்திரத்தில், எந்த ஹோரையில் எவ்விதமாக அருணாசலத்தைக் கிரிவலம் வந்தால், எத்தகைய பலாபலன்கள் கிட்டும் என்பதை நந்தி மூர்த்தி யுக யுகமாக எடுத்துரைத்து வர, ஸ்ரீஅகஸ்தியர் பிரான் இன்றைக்கும், என்றைக்குமாக அவற்றை எழுத்தில் வடித்து வருகின்றார். இதைக் குறிக்கும் வகையில் தான் இன்றைக்கும் அருணாசல கிரிவலப் பாதையில் ஸ்ரீஎம லிங்கத்தை அடுத்துள்ள உயரமான பாறையில் நந்தி பகவான் அருணாசல மலையை நோக்கி வணங்கி அருணாசல புராணத்தை உரைக்கின்ற தாத்பர்யமும் பொறிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஅகஸ்திய பெருமான் கிரிவலத்தின் போது இப்பாறையில் அமர்ந்து பலவிதமான அரிய யோக தவங்களைப் பூண்டு அவற்றின் பலாபலன்களை அந்தந்த அருணாசல மலை தரிசனங்கள், அஷ்ட நந்தி பூஜா பலன்களின் மூலமாக கிரிவலம் வருவோர்க்கு நிரவித் தருகின்றார். இவையே பூண்டி மகான், ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்தர் போன்ற சித்த சற்குருமார்களால் கிரகிக்கப்பட்டு உலக ஜீவன்களுக்கு அருளப்படுகின்றது. இதுவே பைரவ லோகத்தில் கிரி பகுளம் என்ற சித்தர்களின் இறைவளப் பாசறையில் நிகழ்கின்ற அற்புதமாகும்.

திருஅண்ணாமலையில் தீபப் பெருவிழாவில் சுவாமி கிரிவலம் வரும் நாளில் சக்கர வண்டி அல்லாது பல்லக்கில் இறைவனைச் சுமக்கும் நடைமுறையைக் கொணர்ந்து தெய்வ மூர்த்திகளுடன் கிரிவலம் வரும் பாக்கியத்தைப் பெறுவீர்களாக!

கார்த்திகைத் தீபப் பெருவிழாவில் தீபத்திற்கு பின் திருஅண்ணாமலையில் ஓர் உற்சவ நாளில், இரவில் சிவபெருமானே உற்சவ மூர்த்தியாய்க் கிரிவலம் வருகின்ற வைபவம் நடைபெறுகிறது!  ஆனால் பக்தர்களின் அசிரத்தையால், பல்லக்கில் இறைவனைச் சுமக்கின்ற நன்னிலை மாறி, நான்கு சக்கர வண்டியில் சுவாமியை ஈர்த்து வருவதாகி விட்டதென்பது வேதனைக்கு உரியதாகும். அக்காலத்தில் சுவாமியைப் பல்லக்கில் சுமந்து ஈஸ்வரனுடன் கிரிவலம் வரும் பெரும் பேற்றைப் பலரும் அடைந்தனர். பக்தர்கள் இவ்வருடக் கார்த்திகைப் பெருவிழாவிலாவது சுவாமியை, அம்பிகையைப் பல்லக்கில் சுமந்து, இறை மூர்த்திகளோடு அருணாசலத்தைக் கிரிவலம் வருகின்ற அற்புதமான நடைமுறையை மீண்டும் நடைமுறையில் கடைபிடித்திட ஆவன செய்தல் வேண்டும். எனவே எல்லாம் வல்ல தெய்வ மூர்த்திகளே இவ்வாறு அருணாசலத்தைக் கிரிவலம் வந்து அருணாசல மலையே இப்பிரபஞ்சத்தில் இறைப் பரம்பொருளின் தூல வடிவென உணர்த்துகின்றனர்.

மொத்தத்தில் பிரபஞ்சத்தின் அனைத்து பூமிகளிலும், லோகங்களிலும், "நடந்தவையே நடப்பாக நடந்து வருகின்றன" என்பது சித்தர்கள் பூலோக வாழ்க்கையைப் பற்றி உணர்விக்கின்ற ஒரே வரியிலான சித்த வேதமந்திர வாக்கியமாகும். எனவே தற்போதைய விஞ்ஞானம் எதையும் புதிதாக உருவாக்கி விடவில்லை. ஏற்கனவே பல பூமிகளிலும் இருந்தவை, இருப்பவைதாம் மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன! அவற்றையே மீண்டும் புதியதாக உருவாக்குகின்றார்கள். எனவே உலகில் எதுவுமே புதிது அல்ல! இருப்பது இருந்து கொண்டு தான் இருக்கின்றது. வடிவங்கள் மாறுகின்றன, அவ்வளவே! மாயையால் தான் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

உலகில் உள்ள ஒவ்வொரு பொருளுக்கும், ஜீவனுக்கும் காலத்திற்கும் தொடர்பு உண்டு. சாலையில் ஓரத்தில் கிடக்கின்ற கல், மண்ணுக்கும், காலத்திற்கும் கூடத் தொடர்பு உண்டு. ஏனென்றால் பிறவிகள், தோற்றங்கள் காலத்தை ஒட்டியே நிர்ணயிக்கப்படுகின்றன அல்லவா! ஆனால் காலத்தை அளக்கின்ற அளவு முறைகளே ஒவ்வொன்றுக்கும் மாறுபடும். மணி, விநாடி, செகண்ட், கடி, நிறம், வண்ணம், எடை போன்ற பல தன்மைகளைக் கொண்டு காலத்திற்கும், ஒவ்வொரு பொருளின் பிறவிப் படலுக்கும் உள்ள தொடர்புகளை சித்தர்கள் நிர்ணயிக்கின்றார்கள். உதாரணமாக, விபத்துகள், துருப்பிடித்தல், அழுகுதல், காய்தல், வற்றுதல் போன்றவை கால மிருத்யு தோஷங்களின் விளைவுகளைக் குறிப்பதாகும்.

கலியுகத்தில்தான் அனைத்திற்கும் ஆயுள் அம்சமாக, காலத் தொடர்புடன், கால அம்சமே மிகவும் பிரக்ருதி பெற்றுள்ளமையால் கலியுகத்தில் கால பைரவ வழிபாடு மிக மிக முக்கியமானதாகும். நம் ஆயுட் காலத்தின் ஒவ்வொரு விநாடியையும் முறையாக, தெய்வீக ரீதியாகப் பயன்படுத்தாவிடில் கால தோஷங்கள், காலசர்ப்ப தோஷங்கள், காலன் கரி (யமன்) தோஷங்கள் போன்றவை ஏற்படும்.

72000 நாடிகள் நிறைந்த மானுடச் சரீரம்

மனித உடலில் முக்கியமான நாடிகள் மொத்தம் 72000 உள்ளன. இவற்றில் 61000 நாடிகள் இந்த்ர வடிவகை நாடிகள்!  11,000 நாடிகள் காலயோக நாடிகள் ஆகும். அதாவது 11,000 நாடிகளானவை கால்கள் குறிக்கின்ற கால அம்சங்களை நோக்கியும், 61,000 நாடிகள் காலயோக அம்சங்களைக் குறிக்கும் சிரசை நோக்கியும் அமைந்திருக்கும்.

இவற்றுள் இடகலை, பிங்களை, சுழுமுனை, காந்தார நாடி, அத்திய நாடி, சிங்குவா நாடி, புருஷ நாடி, அலம்புட நாடி, சங்கணி நாடி, குரவ நாடி, சின்மய நாடி, சகஸ்ர நாடி என்ற பன்னிரெண்டும் கலியுகத்திற்கு மிக மிக முக்கியமானவையாம். இந்தப் பன்னிரெண்டிலும், சின்மய நாடியும், சகஸ்ர நாடியும் சற்குருவின் கீழ் வருவோர்க்குத் தான் புலனாகும். இந்த நாடிகள் அனைத்திலும் பஞ்ச பூத சக்திகள் முறையாக நிரவி இருக்க வேண்டும்.

பைரவர் சந்நிதியில், அஷ்ட பைரவ தூபம், பஞ்சாட்சர ஊதுபத்தி தூபம் ஏற்றிக் கைகளில் தாங்கியவாறு, கிரிவலம் வருதலால் பல அரிய யோகாக்னி சித்திகளைப் பெற்றிடலாம்.

கபால நோய்களுக்குத் தீர்வு தரும் பைரவ கிரிவல நாள்!

இன்றைக்கும் பலரும் தலையில் அடிபட்டு, சொல்லொணாத் துன்பங்களுக்கும், நோய்களுக்கும் ஆளாகின்றனர். ஆங்கில மருத்துவத் துறையிலோ கபால அறுவை சிகிச்சை என்றாலே பலவிதமான கூடுதல் பிரச்னைகளைத் தந்து விடுகின்றது என்று பலரும் அஞ்சுகின்றனர். பொதுவாக, கபாலம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கான காரணங்களுள் ஒன்றாகப் பூர்வ ஜென்மத்தில் பிறருடைய நல்வாழ்வைப் பாதித்த கர்ம வினைகளின் தொகுப்பும் ஆகும். கபால நோய்கள் ஏற்பட வேறு பல காரணங்களும் உண்டு. எனவே முதலில் பூர்வ ஜென்ம கர்ம வினைகளுக்குப் பரிகாரம் வேண்டி அவற்றை நிவர்த்தி செய்தால்தான் தற்போதைய கபால நோய்கள் தீரும் என்பதை ஆன்மப் பூர்வமாக உணர்தல் வேண்டும்.

எனவே தலையில் அடிபட்டுப் பலவிதமான நோய்களால் வாடுவோரின் நலனுக்காக இயன்றால் அவர்களும், அல்லது அவர்கள் சார்பாக மனைவி, கணவன், பிள்ளை, பெற்றோர்கள், சகோதர, சகோதரிகள் ஸ்ரீகாபால பைரவர் கிரிவலம் வரும் இந்நாளில் கிரிவலம் வந்து ஆத்மார்த்தமாக, பக்திப் பூர்வமாக ஸ்ரீகாபால பைரவரை வழிபட வேண்டும். இதன்பிறகு தினந்தோறும் சூரிய ஹோரை நேரத்தில் வலப்புற ஆவுடை உடைய ஸ்ரீகபாலீஸ்வரரை வழிபட்டு வருதலால் சிதிலமடைந்த கபாலச் செல்கள் நன்கு ஆக்கம் பெறும். மேலும் சிரசு வர்தனா சக்திகளை அளிக்க வல்ல திங்கள் கிழமை தோறும் அரண்மனைப்பட்டி கொன்றையடி விநாயகருக்கு சதுர்த்தி, சதுர்த்தசி திதிகளில் தேங்காய்க் காவடி நேர்த்தி வைத்து தலையில் தேங்காய்க் காவடி சுமந்து ஆலயத்தை வலம் வந்து சிதறு காய்களாக அர்ப்பணித்து வர வேண்டும். இவ்வாறாகக் கபாலவடி பூஜைகளைத் தேவ கடமைகளாக இடைவிடாது குருவருளால் முறையாக மேற்கொண்டு வர, கபாலம் சம்பந்தப்பட்ட எத்தகைய நோய்களுக்கும், துன்பங்களுக்கும் நிச்சயமாக, நல்ல தீர்வுகளை இறையருளால் பெற்றிடலாம்.

நவமியில் இறைவளம் தரும் இசைவள கிரிவலம்!

ஒவ்வொரு நவமி திதியிலும் குடும்பத்துடன், குழந்தைகளுடன், நலிந்த, ஏழ்மையான வித்வான்கள், வாத்தியக்காரர்கள், இன்னிசைப் பாடகர்களையும் அழைத்து வந்து அவர்களை இசைக் கருவிகளை வாசிக்கச் செய்து, இறைப் பாடல்களைப் பாட வைத்து, தானும் இயன்ற வரையில், அறிந்த அளவில் பாடி கிரிவலம் வருவதால் பெருகும் வாணீஸ்வர சக்தியால் மிக எளிமையான இறைவழி முறைகளில் குழந்தைகளுக்கு நல்ல கல்வி அறிவைத் தந்திட முடியும். இவையெல்லாம் பழங்காலத்தில் நிரவிய அற்புதமான கிரிவல முறைகளாகும்.

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம‌ன் அவர்கள் தம்முடைய சற்குருநாதராம் சிவகுரு மங்களகந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த சுவாமிகளின் கருணையுடன் விஷ்ணுபதி, பௌர்ணமி மற்றும் மாத சிவராத்திரி கிரிவலம் போன்ற பண்டைய காலப் பண்டிகைகள், சக்தி வாய்ந்த பழங்கால அருணாசல கிரிவல முறைகளுக்குப் புத்துணர்ச்சி தந்து இவற்றை மீண்டும் நடைமுறை வழக்கிற்குக் கொணர்தற்காக அரும்பாடுபட்டு வருவது கலியுகத்தின் மக்கள் சமுதாயத்திற்குப் பெரும் பாக்கியமேயாம்!

நட்சத்திரக் குரவ தீபம்!

ஸ்ரீமகா பைரவர் கிரிவலம் இந்நன்னாளில் கிரிவலத்தின் எட்டுத் திக்குகளில் நட்சத்திரம் போல ஐந்து கோணங்களில் ஐந்து எலுமிச்சைப் பழம் ஓடுகளையும், நடுவில் ஆயுத எழுத்து (ஃ) போல மூன்று எலுமிச்சை ஓடுகளை வைத்துத் தேங்காய் எண்ணெய் தாமரை தண்டுத் திரியால் தீபம் ஏற்றி இந்த நட்சத்திரக் குரவ தீபத்தை எட்டு முறை சுற்றி வந்து வணங்கி கிரிவலத்தைத் தொடர்ந்திடுக! ஆயுத எழுத்தின் சக்தி பெருகும் நாளிது! இன்று மூன்று கற்களை ஃ போல் வைத்து உணவு சமைத்து அன்னதானம் செய்திடுதலால் திருமணம் நன்கு நிறைவேற நல்வழிகள் பிறக்கும். முச்சந்தியில் வீடு, கடை கொண்டிருப்போர் இன்று திருஷ்டி தோஷ நிவாரண கண்டி தீபம், சங்கு, படிகாரம் போன்றவை கூடிய கறுப்புக் கயிறு ஆகியவற்றைத் தாங்கி அருணாசல கிரிவலம் வந்து இல்லத்தில், கடையில் தீபமேற்றி வழிபட்டு, கறுப்புக் கயிறை வெளியில் மாட்டிட வேண்டும். அஷ்டமி தோறும் அருணாசல கிரிவலம் வந்து இவ்வாறு செய்தலால் கால திருஷ்டி தோஷங்கள் தீரும்.

குரு ப்ரீதி தூபம், தட்சிணா மூர்த்தி தூபம், பஞ்சாட்சர தூபம் போன்ற தூபங்களைப் பாதாள லிங்க சன்னதியில் ஏற்றிக் கையில் தாங்கியவாறு இன்று அண்ணாமலையைக் கிரிவலம் வருதல் வேண்டும்.

ஆயுர்தேவிக்குப் ப்ரீதியான உத்திரட்டாதி த்ரிதினம்!

குழந்தை பாக்யம் வேண்டுவோர்க்கு உத்திரட்டாதி நாள் பூஜையும், உத்திரட்டாதி நட்சத்திர நாளில் அருணாசல கிரிவலமும் மிகவும் முக்கியமானதாகும். ஸ்ரீஆயுர் தேவிக்கு மிகவும் ப்ரீதியான நாளே உத்திரட்டாதி நட்சத்திர நாளாம்! வெள்ளிக் கிழமை கூடிய உத்திரட்டாதி திரிதினத்தில் தாம் ஸ்ரீஆயுர்தேவி உற்பவித்தாள்! உத்திரட்டாதி நட்சத்திரம் மிக மிக அபூர்வமான அமையும் இந்த மூன்று நாட்களிலும் தம்பதி சகிதம் கிரிவலம் வந்து ஸ்ரீஆயுர்தேவியை ஒரு மண்டல காலம் (48 நாட்கள்) பிரம்மச்சர்ய விரதத்துடன் இல்லத்தில் தினமும் கோ பூஜையுடன் வழிபட்டிட, சந்தான பாக்யத்திற்கு அருளும் சந்தான உதக கும்பப் பித்ருக்கள் விசேஷமாகத் தவம் புரிவர். அவரவர் பூர்வ ஜன்மக் கர்மச் சக்கரத்தின்படியே ஆண், பெண் சந்ததிகள் அமைகின்றனர் என்பதும் ஆண், பெண் இருவகைச் சந்ததியினரும் ஒரு குடும்பத்தில் இருப்பதே சிறப்புடையது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பௌர்ணமி தூபம், பிரதோஷ தூபம், அஷ்ட பைரவ தூபம், பஞ்சாட்சர தூபம், ஜெய துர்க்கா தூபம் ஆகியவற்றை ஏற்றி கிரிவலம் முழுவதும் அக்னி சக்தி இருக்குமாறு தாங்கிக் கிரிவலம் வருதலால் அக்னி சம்பந்தப்பட்ட பல தோஷங்களை, சாபங்களை நிவர்த்தி செய்திடலாம்.

நித்ய கர்ம நிவாரணி

1.11.2002 - R என்ற முதல் எழுத்துப் பெயருடையோர் இன்று பசு மாட்டுக் கொட்டிலில் கோமாதா தூபம் ஏற்றி வலம் வந்து அகத்தீக் கீரை உணவளித்து வணங்கிடில் பேச்சுத் துணைக்குக் கூட ஆள் இல்லாமல் தனித்து இருப்போர் கலகலப்பாகப் பேசும் குடும்பத்துடன் சேர வழியுண்டு.

2.11.2002 - எமலிங்கம் உள்ள கோயிலில் தீபம் ஏற்றி மந்தாரை இலை நிறைய அன்னதானம் செய்து பிரதோஷ தூபம் ஏற்றிடில் வைத்தியச் செலவுகள் தணியும்.

3.11.2002 - எட்டுச் சிவன் கோயில்களில் திதி எண்ணெய்த் தீபம், ஹஸ்த நட்சத்திர தூபம் ஏற்றி, கௌபீன தாரியாய் (கோவணம் தரித்து) இருக்கும் பெரியோர்க்குக் குறைந்தது மூன்று வேளைக்கான அன்னதானம் செய்திடில் தொடர்ந்து வரும் கடன் தொல்லைகள் நீங்கும்.

4.11.2002 - கைத்தறி நெசவாளர்களுக்கு உணவிட்டு அஷ்ட லக்ஷ்மி தூபம் ஏற்றி, வில்வ விருட்சத்தை 51 முறைக்கு குறையாமல் வலம் வந்திடில் ஆணித் தொழிற்சாலையில் வேலை செய்வோர் நலம் பெறுவர்.

5.11.2002 - இன்று முருகன் கோவில்களில் விசாக நட்சத்திர தூபம் ஏற்றி பழங்களுடன் அன்னதானம் செய்திடில் செய்தித் துறையில் இருப்போர்க்கு ஏற்படும் ஆபத்து குறையும்.

6.11.2002 - இன்று சந்திர தரிசனம் செய்து ஸ்ரீசந்திர மௌளீஸ்வரர் சுவாமிக்கு அனுஷ நட்சத்திர தூபம் ஏற்றிப் பூஜித்து வாழை இலையில் அன்னதானம் செய்திடில் ரயில்வே துறையில் இருப்போர் நலம் பெறுவர்.

7.11.2002 - இன்று அம்மன் கோயிலில் கேட்டை நட்சத்திர தூபம் ஏற்றி அலோசன கௌரீ விரதம் இருந்து நிறை காய்கறிகள் கூடிய உணவுடன் அன்னதானம் செய்திடில் உடல் நலம் பெறுவர்.

8..11.2002 - இன்று நாகாபரணம் (பாம்பணிந்த) வினாயகருக்கு (சென்னை - திரிசூலம் போன்ற சிவாலயங்கள்) ஷோடச கணபதி தூபம் ஏற்றி நாகம்மா, நாகலக்ஷ்மி, நாகராஜன், நாகப்பா போன்ற பெயருடையோருக்கு நாவற் பழத்துடன் அன்னதானம், ஆடை தானம் செய்திடில் கோர்ட்டு விவகாரங்கள் சுமுகமாய் முடியும்.

9.11.2002 - இன்று முதல் சஷ்டி விரதம் துவங்கி ஆறு நாட்கள் ஒரு வேளை மட்டும் உணவு ஏற்று நல்விரதமிருந்து முருகன் கோயிலில் கிருத்திகைத் தூபம் ஏற்றி ஆறு வகையான உணவு வகைகளுடன் அன்னதானம் செய்திடில் கர்பம் தாங்கிய பெண்கள் நலம் பெறுவர்.

10.11.2002 - சுவாமிநாதன், சண்முகம், சரவணன் போன்ற பெயருடையோர் இன்று ஆறு சிவன் கோயில்களில் அன்னதானம் செய்திடில் தடைபட்ட பணம் நன்முறையில் வந்து சேரும்.

11.11.2002 - கண் வைத்தியர், கண்ணாடித் தொழில் செய்வோர் இன்று ஸ்ரீதிரிபுரசுந்தரி அம்பிகை அருளும் கோயில்களில் அத்திப் பழத்துடன் அன்னதானம் செய்திடில் தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பர்.

12.11.2002 - கோயில் பசுக்களுக்கு வயிறு நிரம்புமாறு நல் உணவு அளித்து பசு மடத்தில் கோமாதா தூபம் ஏற்றி வழிபட்டிடில் தொலை தூர வியாபாரிகள் நல்ல மாற்றம் காண்பர்.

13.11.2002 - எட்டுப் பெருமாள் கோயில்களில் ஸ்ரீமன் நாராயண தூபம் ஏற்றி பானகத்துடன் (வெல்லம், நீர், சுக்கு, ஏலக்காய் கூடியது) அன்னதானம் செய்திடில் பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

14.11.2002 - பத்துச் சிவன் கோயில்களில் பஞ்சாட்சர தூபம் ஏற்றி ஏழைகள் வயிறு நிறையுமாறு அன்னதானம் செய்திடில் தவறைச் சுட்டிக் காட்டித் திருந்தச் செய்யும் நல்லோர்க்கு வரும் ஆபத்துகள் விலகும்.

15.11.2002 - இன்று ஆசிரியர்கள் மாணவர்களின் குறையைக் கேட்டு உதவி செய்ய வேண்டிய நாள்! ஸர்வ ப்ரபோதினி ஏகாதசி விரதம் இருந்து ஆயுள் விருத்தி பெறலாம்.

16.11.2002 - இன்று ஸ்ரீமன் நாராயண தூபம் ஏற்றி, துளசி பூஜை செய்திடில் மனத் தெளிவு பிறக்கும்.

17.11.2002 - இன்று பிரதோஷ தூபம் ஏற்றி முழு நுனி வாழை இலையில் அன்னதானம் செய்திடில் வக்கீல்கள் நலம் பெறுவர்.

18.11.2002 - இன்று கிரிவலம் வந்து பலாப் பழத்துடன் அன்னதானம் செய்திடில் பெண்களுக்கு வரும் துன்பம் விலகும்.

19.11.2002 - இன்று மலைக் கோயில்களில் தீபம் ஏற்ற உதவி செய்து அன்னதானம் செய்திடில் ஆண்டு பூராவும் நலம் பெறலாம்.

20.11.2002 - 2, 11, 20 வீட்டு எண்களை உடையவர் பௌர்ணமி தூபம் ஏற்றி, கிரிவலம் வந்து வெண்ணெய், நெய்யுடன் அன்னதானம் செய்திடில் வியாபார விருத்தி அடைவர்.

பாணலிங்கம் திருமங்கலம்

21.11.2002 - நல்ல வருமானத்தில் இருக்கும் சகோதரிகள் குறைந்த வருமானம் உடைய சகோதர்களுக்கு உதவி செய்திடில் குடும்பப் பிரச்னைகள் தீரும் நாள் இது.

22.11.2002 - அஷ்ட லக்ஷ்மி தேவிகள் அருளும் கோயில்களில் அஷ்ட லக்ஷ்மி தூபம் ஏற்றி எட்டு விதமான பழங்களுடன் அன்னதானம் செய்திடில் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர்களுக்கு வரும் இடமாற்றம் நலமாய் முடியும்.

23.11.2002 - இன்று வாஸ்து சாந்தி நாளாவதால் எங்கும் பைரவ சன்னதிகளில் பைரவ தூபம் ஏற்றிக் கிழங்கு வகை உணவுடன் அன்னதானம் செய்திட வீடு, நிலம், புது வாடகை வீடு, வாங்க விற்க நலம் தரும்.

24.11.2002 - 15, 24, 33 வீட்டு எண்களை உடையவர்கள் பெரிய பாண லிங்கங்கள் உள்ள கோயில்களில் முருங்கை, புடலை போன்ற நீள் வகைக் காய்கறி உணவு வகைகளுடன் அன்னதானம் செய்து ஸ்ரீஸ்வர்ண பைரவ பூஜை செய்திடில் வீட்டிற்குள்ளேயே இருந்து துன்பம் தருபவரின் இரகசியம் வெளிப்படும்.

25.11.2002 - அம்மன் கோயிலில் பூ ஆடை சாற்றி முட்டைக் கோஸ், வாழைப் பூ போன்ற பூவகைக் காய்கறி வகை கலந்த உணவு வகைகளை அன்னதானம் செய்திடில் தொலைந்து போனவர் பற்றிய செய்திகள் வரும்.

26.11.2002 - முருகன் கோயில்களில் விசாக நட்சத்திர தூபம் ஏற்றி முற்றிய பெரிய வகைத் தேங்காய்களுடன் அன்னதானம் செய்திடில் வயதான பெண்ணை மணந்து மன நிம்மதி குறைந்து இருப்பவர் குடும்பத்தில் ஏற்படும் சண்டைகள், சமாதானம் அடையும் நாளிது.

27.11.2002 - சங்கீதப் பிரியர்கள் ஏழை வித்வான்களுக்குப் பொருளுதவி செய்து ஊக்குவித்திடில் பெண் குழந்தைகளுக்கு நல்ல வரன் அமையும்.

28.11.2002 - 8, 16, 24, 32, 40 எண்ணிக்கையில் ஸ்ரீஅஷ்ட பைரவ தூபம் ஏற்றி, பைரவ பூஜையுடன் மிளகு கலந்த உணவு வகைகளை அன்னதானம் செய்திடில், வேலையிலும், வியாபாரத்திலும், உறவிலும் உள்ள துரோகிகள் தரும் துன்பங்களின் வேகம் குறையும்.

29.11.2002 - பெருமாள் கோயிலில் ஸ்ரீஹயக்கிரீவர் தூபம் ஏற்றி மொச்சை, தட்டைப் பயிறு போன்ற தான்ய வகை உணவு வகைகளுடன் அன்னதானம் செய்திடில் படிப்பில் தீர்க்கமான முடிவுகள் கிடைக்கும்.

30.11.2002 - 26 பெருமாள் கோயில்களில் ஸ்ரீசுதர்சன தூபம் ஏற்றி பலாப் பழம், எலுமிச்சை, தேங்காய் போன்ற ஓடு வகை உணவுப் பொருட்களுடன் அன்னதானம் செய்து சுமங்கலி பூஜை செய்திடில் கிராம தேவதைகளின் ஆசியைப் பெறலாம்.

கல்வியின் குறிக்கோள் கடவுளைக் காண்பதே !

ஓம் குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam