அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீபிரகலாத வரத நரசிம்ஹர்

ஸ்ரீ நரசிம்ம அவதாரங்களிலேயே பல வகைகள் உண்டு. ஏதோ ஸ்ரீநரசிம்ம அவதாரத்தில் பிரகலாதனை இரட்சிக்க வேண்டி இரண்யனை வதம் செய்த காலமே ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் அவதார வைபவம் என்று மட்டுமே எண்ணுகின்றோம் அல்லவா! இரண்யனை சம்ஹாரம் செய்வதற்கு முன்னரேயே ஸ்ரீநரசிம்ம மூர்த்தியின் திருத்தோற்றம் ஏற்பட்டு விட்டது. அதன் பிறகு கோடானுகோடி ஆண்டுகள் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் அவதார லீலைகள் எத்தனையோ நிகழ்ந்துள்ளன. ஆனால் இவற்றுள் முக்கியமாக நாம் அறிந்தது ஒன்றாகவே ஸ்ரீ பிரகலாத சரித்திரம் அமைந்திருக்கின்றது.

ஸ்ரீ நரசிம்ம அவதார விளக்கங்களைப் பற்றி சித்புருஷர்களின் தாத்பர்யங்களை நாம் பன் முறை விளக்கி வந்துள்ளோம். இரண்யனுடைய உடலிலிருந்து ஒரு சிறு அணுத்துகள் கூட பூமியிலோ அல்லது வேறு எந்த லோகத்திலும் விழா வண்ணம் சர்வலோகமும் பாதிக்கப் படாமலிருக்க அனைத்தையும் தம் உடலில் ஏற்ற நரசிம்ம மூர்த்தி தம் உக்கிரத்தைப் பன் மடங்காக்கி அந்த அற்புதமான உக்கிர கோலத்தோடு பல லோகங்களுக்கும் திருவலம் செய்தார். இதன் பின்னணியில் ஆயிரம் ஆயிரம் தெய்வீக இரகசியங்கள் உண்டு.
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் திருப்பாதங்கள் பட்டமையால்தான் பலகோடி லோகங்களிலும் ஆங்காங்கே அண்டி, அப்படிக் கிடந்த பல தீய சக்திகள் பஸ்மமாயின. குறிப்பாக அசுர சக்திகள் பொங்கி வழிந்த மண்டலங்களில் ஸ்ரீ நரசிம்மர் தம்முடைய சஞ்சாரத்தை மேற்கொண்டமையால்தான் ஆங்காங்கே திரண்டு கிடந்த அசுர சக்திகள் தலை தூக்கா வண்ணம் அவையெல்லாம் ஒடுக்கப்பட்டன!

எனவே பிரஹலாத வரலாற்றில் இரண்யனை சம்ஹாரம் செய்வதற்காக மட்டும் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி அவதாரம் எடுத்திடவில்லை. அசுர சக்திகள் திரண்டு பிரபஞ்சத்தில் கொப்பளித்த பொழுதுதான் அனைத்தும் நானே என்பதை உலகிற்கு உணர்த்தி இரண்யனின் தேகாணுக்களைத் தன்னுடலில் ஏற்று எங்கே அதனுடைய ஒரு சிறு அணுத்துகளானது பூமியிலோ அல்லது வேறு எந்த லோகத்திலோ பட்டால் அது கிளைத்து வளர்ந்து மீண்டும் இரண்யனைப் போலான அசுர சக்திகள் தலை தூக்கி விடும் என்பதற்காகத் தான் அனைத்தையுமே தம் உடலில் ஏற்று அவற்றை சூட்சுமமாய் பஸ்மம் செய்திட தம் உக்கிரத்தைப் பெருக்கிக் கொண்டார்.

எந்த அசுர சக்திகளைத் தன் உடலில் ஏற்றாரோ அவற்றின் உஷ்ணத்தின் விளைவாக உக்கிரமும் பெருகும் அல்லவா! இறைவன் கூட அசுர சக்தியால் பாதிக்கப் படுவாரா என்ன? ஸ்ரீ நரசிம்ம மூர்த்திக்கு இக்கொடிய அசுர சக்திகள் ஒரு பொருட்டு அல்லவே! இருப்பினும் இறைத் திருவிளையாடலாக தம்முடைய உக்கிரத்தை எல்லாம் பல லோகங்களிலும் தம் அருட்பார்வையால் அனுகிரஹ சக்தியாக செலுத்திக் கொண்டே சென்ற பொழுது அவர் சென்ற இடமெல்லாம்ஸ்ரீ மகாலட்சுமி தேவியானவள் அவருக்கு நிழல் தந்தவாறே பின் தொடர்ந்ததை நாம் அறிவோம். இதனால் தான் ஸ்ரீ மகாலட்சுமி தேவியினுடைய திருநிழலில் ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் உக்கிரம் சற்றுத் தணிந்தது மட்டும் அல்லாது எவ்வாறு நெருப்பில் காய்ச்சி, சிவந்த, பழுத்த, உயர்ந்த வெப்ப நிலையில் உள்ள ஒரு இரும்புத் துண்டில் சற்று நீரை ஊற்றினால் அதில் வாயுப் பரிமாணமும், திட, திரவ பரிமாற்றமும் ஏற்படுகின்றனவோ அதே போன்று ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் உக்கிரத்தோடு ஸ்ரீ மகாலட்சுமி சாந்தமான லட்சுமாங்கித ஸ்ரீசக்திகளும் ஐக்கியமாகிடவே அவர் சென்ற இடங்களெங்கும் கனி வளங்களும், புதுப் புது உலோகப் படிமங்களும், மண் வளங்களும், நவீன பாறை வடிவங்களும் உலோகக் கனிமக் கூறுகளும் இன்னும் எத்தனை எத்தனையோ கோடிப் பொருட்களும், பலகோடி லோக ஜீவன்களுக்குப் பயன்படும் வகையில் உருவாயின. இவை எல்லாம் ஸ்ரீ நரசிம்ம சுவாமியின் அவதாரத்திற்கு பின்னணியில் உள்ள தெய்வீக இரகசியங்களாகும்.

இத்தகைய உக்கிரம் நிறைந்த நரசிம்மப் பெருமானை எவ்வாறு பிரகலாதன் தனியொரு சிறுவனாக எவ்வித அச்சமுமின்றி தரிசிக்கின்ற தெய்வீக புண்ணிய சக்தியைப் பெற்றிருந்தான். பிரகலாதன் கர்ப்பத்தில் இருந்தபோதுதான் ஹிரண்யனானவன், தேவர்களை அழிப்பதற்காகக் கடும் தவத்தைச் செய்வதற்காகச் சென்று விட்டான். ஹிரண்யன் நாட்டில் இல்லாமையால் தேவாதி தேவர்கள் அனைவரும், பல அசுரர்களையும் சிறைபிடித்துச் சென்று விட்டனர்!

புனிதமான வாஸ்து நேரத்தில் எமகண்ட, இராகு கால நேரங்கள் குறுக்கிட்டால் வாஸ்து பூஜையை எப்படி நடத்த முடியும் என்று பலரும் கேட்டிருக்கின்றார்கள். மிக மிகப் புனிதமான வாஸ்து நேரத்தில் வாஸ்து தேவ மூர்த்தியின் சக்தி பரிபூர்ணமாக விரவியிருப்பதால் ஏனையவற்றின் ஆதிக்கம், சக்தி தணிக்கப்படுகின்றன. மேலும் கால தேவதைகள் அனைத்தும் ஸ்ரீ வாஸ்து தேவ மூர்த்தியின் யோக சக்திக்குள் அடக்கமாதலின் ஸ்ரீ வாஸ்து ஹோம பூஜையே இதற்கு தக்க நிவர்த்தியை தந்து விடுகிறது. இவ்வாறு ஸ்ரீ வாஸ்து நேரத்துடன் எம கண்டம், ஸ்ரீ ராகு காலம், அர்த்த பிரகண நேரங்கள் கூடினும் பரிஹாரமாக கால தேவதா ப்ரீதியாக, மேலும் பல வாஸ்து விசேஷ பலன்களைப் பெறவும் ஸ்ரீவாஸ்து பூஜையிலும் ஸ்ரீ வாஸ்து ஹோமத்திலும் அருகம்புல்லும்,சீந்தக் கொடியும ்சேர்ந்த அர்ச்சனை ஆஹுதியிடுதலால் தெய்வீகத் தன்மையைப் பரிபூர்ணமடையச் செய்கின்றன.ஹோமங்களில் அருகம்புல், சீந்தக் கொடி ஆஹுதியானது பலவிதமான கால தோஷங்களை நிவர்த்தி செய்கின்றது.

கர சரண பூரண அட்சய வடவிருட்சம் எனப்படும் தெய்வீக ஆலமரம்

பிரளய காலத்திலிருந்து இருந்து வருகின்ற அதிஅற்புத அட்சய வட விருட்சமான தல விருட்சம்ஆலமரம்! நம் பித்ருக்களுக்கும் முந்தைய ஆதிமூல விருட்சம். பித்ருக்களே போற்றி வழிபடும் ஊர்த்துவ மூல விருட்சம். நம்முடைய மூதாதையர்களான கோடானுகோடி கோத்ராதிபதிகளும், பிரவர ரிஷிகளும், வசு ருத்ர ஆதித்யர்களும் வழிபடுகின்ற விருட்சம்!

திரிவேணி சங்கமம் (அலாகாபாத்), வாரணாசி (காசி), கயை ஆகிய மூன்று இடங்களிலுமுள்ள புனிதமான மூன்று ஆலமரங் களும் (அட்சய விருட்சங்கள்) ப்ரளயாத்திரி விருட்சத்தின் மூன்று பகுதிகளாகும். அதாவது ப்ரளய காலத்தில் முதலில் தோன்றிய ஆலமரத்தின் மூன்று பகுதிகளே இவையாகும். ஆதி முதற் பிரளயத்திலிருந்து இருந்து வருவதும், பிரளய பட்சத்தில் ஆலிலைக் கிருஷ்ணனாகத் தவழ்கின்ற பாக்யத்தைப் பெற்ற அரிய ஆலை இலைகளை உடையதும் ஆகிய அட்சய வட விருட்சங்கள் மூன்றும் வேர், நடு, நுனிப் பகுதிகளாக மூன்று தலங்களிலும் சதுர் யுகங்களிலும் அருள்புரிகின்றன.

1. திரிவேணி சங்கமமாகிய அலாகாபாத்தில் (பிரயாகை) (கங்கை, யமுனை, சரஸ்வதி மூன்று நதிகளும் சங்கமிப்பதும்) வேணி மாதவனாக பெருமாள் அருள்கின்றார். பிரமன் யாகம் செய்த தலமாகிய இந்த பிரயாகையில் தான் அட்சய வட விருட்சத்தின் மூல வேர்ப் பகுதி திரிவேணி சங்கம நதிக்கரையில் காணப்படும். கோட்டையினுள் உள்ளது!

2. அட்சய வட விருட்சத்தின் மத்யப் பகுதி வாரணாசியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயமருகே உளது.

3. அட்சய வட விருட்சத்தின் தலைப் பகுதி (நுனி) கயாவில் (பீகார்) உள்ளது.

அமாவாசை, மகாளய பட்சம், சிராத்த (திவச) திதி, நித்ய தர்ப்பண நாட்களில் இம்மூன்று அட்சய வட விருட்சங்களின் படத்தை வைத்துத் தர்ப்பணமளித்தலால் விசேஷமான அனுக்ரஹங்களைப் பெற்றிடலாம். தினந்தோறும் தாமே சந்தனம் அரைத்து ஜவ்வாது கலந்து இப்படத்திற்கு இட்டு வருதலால் பலவிதமான பித்ரு தோஷங்களுக்கு நிவர்த்தி கிட்டும்.

கர சரண பூரண அட்சய வட விருட்சம் தர்ப்பயாமி என்று ஓதி தேவாதி தேவ மூர்த்திகளுக்கும் தர்ப்பண அர்க்யம் அளிப்பது போல் இந்த விருட்சத்திற்கும் தர்ப்பண அர்க்யம் அளிப்பது பெரும் பாக்யமாகும்.

இறையருளானது புனித நீராடல், தரிசனம், பிரதட்சிணம், விரதம், பலவிதமான அபிஷேக ஆராதனைகள், தான, தர்மங்கள் விளக்கு பூஜை, ஹோமம் போன்ற பலவித இறைப் பணி/ பூஜை முறைகளால் நமக்குக் கிட்டுகின்றது. ஒவ்வொன்றும் விதவிதமான பலன்களைத் தந்து நம்முடைய பலவிதமான கர்மவினைகளைத் தீர்க்கின்றதல்லவா! இவற்றுள் தரிசனத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் நிர்மால்ய தரிசனம் (காலை முதல் தரிசனம்), சந்தன/ தைல/மஞ்சள் காப்பு தரிசனங்கள், நடன கோலங்கள், இதிலும் பலவிதங்கள் உண்டு. இதனால் தான் நம் பாரதத்திலுள்ள இலட்சக் கணக்கான ஆலயங்களில் எண்ணற்ற கோலங்களில் இறைவன் நமக்கு அருள் பாலிக்கின்றான். கோடிக் கணக்கான பிறவிகளில் குவிந்துள்ள கோடானுகோடி கர்மங்களுக்குப் பிராயசித்தம் தர வல்ல அதியற்புத இறை தரிசனங்களிவை!

ஸ்ரீ அஷ்ட வக்ர மஹரிஷியும், ஸ்ரீ ரோமச மஹரிஷியும் திருஅண்ணாமலை அருகே திருக்கோயிலூரில் வலது காலைத் தூக்கி நடனமாடி அருள்பாலிக்கும் ஸ்ரீ திருவிக்ரம சுவாமி தமக்கென இறைவன் காட்டிய அதியற்புத நடனங்களைக் கண்டு ஆனந்தித்ததோடு நிற்காது, உள்ளம் உருகி, அன்பு பெருகிட, பக்தி பொங்கிட இறைவனின் கால் நோகா வண்ணம் கால் மாற்றிட வேண்டிடவே சீர்காழியில் இடது காலை உயர்த்தி நடனமாடினாரல்லவா ஸ்ரீ திருவிக்ரம சுவாமி!

திருக்கோயிலூர் தரிசனப் பலன்கள் வேறு, சீர்காழி ஸ்ரீ தாடாள மஹா பிரபுவாகிய பெருமாளின் தரிசன பலன்கள் வேறு! இவ்வாறாகத்தான் எத்தனையோ சித்புருஷர்களும், மஹரிஷிகளும் யோகியரும் பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அற்புதமான தரிசனங்களையும், நாட்டிய, நடன தரிசனங்களைப் பெற்றுத் தந்திருக்கின்றார்கள் என்பதை நாம் மறந்திடலாகாது!
ஒரே நாளில், தக்க விரதங்களுடன் அமிர்த யோக நேரத்தில் ஸ்ரீ திருவிக்ரம சுவாமியின் வலக்கால், இடக்கால் நடனக்கோலங்களை தரிசிக்கும் தம்பதியருடைய வாழ்வில் மன ஒற்றுமை நன்கு பரிணமித்து வாழ்க்கை இனிதாக அமையும். இத்தகைய எளிய தரிசன பலன்களை எல்லாம் நமக்குப் பெற்றுத் தந்த மஹரிஷிகளுக்கும் எப்படி நாம் நன்றி செலுத்தப் போகின்றோம்?

மனவழிப் பயணயங்கள்

சென்ற இதழில் உள்ள இத்தகைய விளக்கங்களெல்லாம் நமக்கு எதற்கு என்று தோன்றுகிறதா? ஆனால், astral பயணம் என்று ஒன்று உண்டு, அதன் மூலம் பல உத்தம தெய்வீக நிலையை அடைய முடியும், ஆனால் அதன் மூலம் பெறுகின்ற சித்திகளின் பால் மனதைச் செலுத்தாது, நன் முறையில் ஒரு குருவின் மேற்பார்வையில் astral பயணத்தை மேற்கொண்டால் தான், அது பயனுள்ளதாக தெய்வீகத்தை உணரும் வண்ணம் அமையும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளவே இவ்விளக்கங்கள்!

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
திருப்பூந்துருத்தி

astral பயணம் பற்றி இவ்வளவு விஷயங்களைப் படித்திருக்கின்றோமே. இனி இதற்குரிய பூஜைகளையாவது நாம் ஓரளவு செய்து வரலாமே, இதில் ஒன்றும் தவறில்லையே. அது தானாக எப்போதாவது கனிந்து எங்களுக்கு வரட்டுமே என்று எண்ணுவோரும் உண்டல்லவா!

சில ஆலயங்களில், அபூர்வமாக வீணையேந்திய கோலத்தில் தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கின்றார். தஞ்சை அருகே திருப்பூந்துருத்தி, திருச்சி அருகே லால்குடி போன்ற அபூர்வமான தலங்களில் வீணையேந்திய நிலையில் தரிசனம் தருகின்ற ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியை, வியாழன் தோறும் மஞ்சள் அரளி சாற்றி வழிபட்டு வந்தால், astral பயணம் பற்றிய, மனோரீதியான இறைப் பயண நிலைகளைப்பற்றிய ஞானத்தைப் பெறலாம்.

மெளனியாய், சத் சித் ஆனந்தத்தைப் போதிக்கின்ற ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தியே ஜீவன்களின் மேம்பாட்டிற்காக அருள்கின்ற ஞான உபதேசத்தைக் காது கொடுத்து கேட்டால் தானே, அதன் பலன்களை அனுபவிக்கமுடியும். எனவே, எங்கெல்லாம் வீணையேந்திய தக்ஷிணாமூர்த்தி அருள் பாலிக்கின்றாரோ, அவருக்கு வியாழன் தோறும், மஞ்சள் அரளி சாற்றி வழிபட்டு வருவீர்களேயானால், உத்தமமான பல தியான நிலைகள் கூடும். இதனால் சத்குருவின் கனிந்த அருள் பார்வையும் விரைவில் கிட்டும். பிறகு, astral பயணம் என்ன எத்தகைய தெய்வீகப் பயணத்தையும் எளிதில் மேற்கொண்டு விடலாமே! மஞ்சள் அரளிக்கு ஆஸ்டரல் பயண சக்தியைப் பெற்றுத் தரும் வல்லமை உண் டு! அரளியானது மனிதர்களின்றி ஆண்டவன் மட்டுமே அணிகின்ற அற்புத மலர்களில் ஒன்றன்றோ !

Astral பயண ஆன்மீக ரகசியங்களை உணர்ந்து கொண்டால், பல பூர்வ ஜென்ம கர்ம வினைகளை, உறக்க நிலையிலேயே. ஆழ்ந்த உறக்க நிலையிலேயே, யோகத் தத்துவ ரீதியாக, மிக எளிதில் நீக்கிவிடலாம். ஆனால். இதற்கு உரிய, தகுந்த இறை ஆணைகளைப் பெற, உத்தம், தியாக சீலராய் வாழ்ந்தாக வேண்டும். அதாவது, தனக்கென்று வாழாது. பிறர்க்கென்று வாழ்கின்ற பெருநிலையை அடைந்திட வேண்டும். தற்போது, Class room முறையில் armchair elevation என்கின்ற பாணியில் கற்றுத் தரப்படுகின்ற தியானங்களில் கிட்டுகின்ற astral பயணங்கள் யாவையுமே தக்க வழிகாட்டி இல்லையெனில் உடல் ஆரோக்கிய நிலையையும், மனோ நிலையையும் பாதித்து பல கொடிய வியாதிகளும் மனோ வியாதிகளும் தான் உண்டாகும்.

ஆன்மீக வினா விடை

அடியார் : சற்குரு தேவா ! இந்த உலகத்தில் நடைபெறுகின்ற அனைத்து நற்காரியங்களும், தீய காரியங்களும் இறைவனின் ஆணைக்கு உட்பட்டதுதான் என்றால் கொள்ளை, வன்முறை போன்றவற்றில் ஈடுபடுகின்றவர்களும் இறை ஆணையாகத்தான் செயல்படுகின்றார்களா?
சற்குரு : (சிரித்துக் கொண்டே) இது பல காலமாகவும், பலராலும் எழுப்பப்பட்டு வருகின்ற கேள்விதான்! ஆனால் இதற்கான பதில்களை எத்தனையோ மகான்களும், சித்த புருஷர்களும் அளித்தாலும் மனிதனுடைய மனம் உண்மையானதாக அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை. ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் அடுத்த மனிதன் செய்கின்ற தவறுக்காக உடனடியாக இறைவனால் அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கின்றான். ஆனால் அதே குற்றத்தைத் தான் மனதாலோ, உடலாலோ செய்தால் தானும் அவ்வாறே தண்டிக்கப்பட வேண்டிய நியதிக்கு உட்பட்டவர்கள் என்பதை மறந்து விடுகின்றார்கள். உத்தமமான விளக்கத்தின்படி ஒருவன் உடலால் காமாந்தகச் செயல்களைச் செய்தாலும் சரி, மனதாலோ, எண்ணத்தாலோ அதே காமாந்தகச் செயல்களைச் செய்தாலும் சரி இரண்டும் ஒன்றாகவே தண்டிக்கப்பட வேண்டியதாகக் கருதப்படுகின்றன. எனவே எண்ணக் குற்றங்களும், பொருள் குற்றங்களும், இல்லாத மனிதர்கள் உலகில் மிகவும் சொற்பமே!

மனிதப் பிறவியை இறைவன் ஏன் அளித்திருக்கின்றான் ? 60, 70 வருடங்களாக வாழ்க்கை நடத்துகின்ற ஒரு மனிதன் தன் தீய செயல்களுக்காக தன் வாழ்க்கையின் எந்தப் பகுதியிலும், எந்த வயதிலும் நிச்சயமாக மனம் வருந்தி இறைவனிடம் மன்னிப்புப் பெற்று மிகச் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்கான வாய்ப்பை எப்போதும் இறைவன் அளித்துக் கொண்டுதான் இருக்கின்றான். அதற்காகத்தான் ஒவ்வொரு மனிதனுடைய ஆயுளும் 60, 70, 80 ஆண்டுகள் என விரிகின்றது. மனிதனுக்கு ஆண்டவன் உடலை மட்டும் அளிக்காது அறிவையும் அளித்திருக்கின்றான் அல்லவா, அந்த அறிவைக் கொண்டுதான் இது நல்லது. இது தீயது என்று ஆய்ந்து பகுத்தறிவாடு செயல்பட வேண்டும்.

பகுத்தறிவானது வளர்ந்து, விரிந்து, சுயநலத் தன்மையை இழந்து பலகோடி ஜீவன்கள் வாழ்கின்ற இவ்வுலகில் நம் நல் வாழ்விற்காக மட்டும் நாம் வாழாது பிறருடைய வாழ்க்கையிலும் முன்னேற்றம் ஏற்படும் வகையில் நம்மை நாமே அர்ப்பணித்துக் கொண்டு வாழ்ந்தாக வேண்டும். இந்த நியதியை உணர்த்துவதுதான் வாழ்க்கை.
இத்தகைய வாழ்க்கை முறையில் கர்மவினைப் பூர்வமாக தனது செயல்களினால் பல தவறுகள் ஏற்படுவது சகஜமே. பேராசை, அறிவின்மை, அறியாமை, குரோதம், பகைமை, பொறாமை போன்ற தீய குணங்களையே மனிதன் ஏற்பதால்தான் பல விதமான பெரும் குற்றங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய தீய சக்திகளைக் களையும் இடமாகத்தான் ஆலயங்களும், புனித நதிகளும், தீர்த்தங்களும், மகான்களுடைய, சித்தர்களுடைய ஜீவசமாதிகளும் அமைந்துள்ளன. எனவே நாள் தோறும் இவ்வித புனிதமான இடங்களுக்குச் சென்று ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய தீய வினைகளைச் சிறிதளவேதாயினும் சிறிது சிறிதாகக் கரைத்து வர வேண்டும். இல்லாவிடில் இத்தீவினைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பெரிய இராட்சஸ உருவம் எடுத்து சமுதாயத்திலேயே ஒரு பெரிய குற்றவாளியாக அவன் மாறிவிடுவான். எண்ணற்றதாக ஜன்மங்களும் பெருத்து விடும்.

எனவே ஒவ்வொரு மனிதனும் அவனுடைய பூர்வ ஜென்ம வினைகளுக்கு ஏற்பவும் தற்போதைய பிறவியில் நடந்த செயல்களுக்கு ஏற்பவும் (அதாவது) பிராரப்தா கர்மாவிற்கு உரியவாறு அவனவனுக்குரிய தண்டனையோ, பரிசோ நிச்சயமாகக் கிட்டும். ஆனால் நாம் நினைக்கும் போதெல்லாம் பிறருக்கு இது நடக்க வேண்டும். அது நடக்க வேண்டும் என்று எண்ணுவது அறிவின்மையாகும்.

அடியார் : பொதுமக்களின் சொத்தைக் கையாடியும், லஞ்சம் கொள்ளை, ஏமாற்று, கலப்படம் மூலமாகவும் லட்சம் லட்சமாகப் பலரும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றார்கள். அதர்மமான முறையில் சேருகின்ற பணம் அல்லவா? இதை இறைவன் ஏன் கண்டு கொள்வதில்லை?

சற்குரு : சுற்றி வளைத்து மீண்டும் அதே கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். இன்றைய பொழுதிற்கு அநீதியான முறையில் ஒருவர் லட்சம் லட்சமாகவோ, கோடி கோடியாகவோ சம்பாதிப்பதாகத்தான் தோன்றும். அதன் மூலம் ஏற்படும் சௌகரியங்களையும் அவர் அனுபவிப்பது போலத்தான் கண்ணுக்குத் தோன்றும். ஆனால் எவருமே இறைவனுடைய தீர்ப்புகளிலிருந்து நிச்சயமாகத் தப்ப முடியாது.

அநீதியான முறையில் ஒருவர் ஒரு ரூபாய் சம்பாதித்தால் கூட அது அவருடைய குடும்பத்தையும், எதிர்கால சந்ததியையும் நிச்சயமாக பாதிக்கும். அதில் சந்தேகமே வேண்டாம். இவ்வாறு அதர்மமான முறையில் லட்சம் லட்சமாக சம்பாதிப்பவர்கள் கூட அதில் ஒரு பகுதியையேனும் திருப்பதி, திருத்தணி போன்ற ஆலய உண்டியலில் செலுத்தி விடுகின்றார்கள். காரணம் தன்னுடைய தவறுகள் தன்னுடைய மனசாட்சியினை உறுத்தி இதிலேனும் ஏதாயினும் நல்ல காரியம் செய்ய வேண்டும் என்ற உந்துதலினால்தான்.

ஆனால் எந்தப் பணம் தனக்கு முறையாகச் சேரவில்லையோ அதனால் செய்ய வேண்டிய நற்காரிய விளைவுகள் அவருக்குப் போய் சேராது. உதாரணமாக, பொது மக்கள் பணத்தைக் கையாடியும், லஞ்சம் பெற்றும் சம்பாதிக்கின்றவர்கள் அதன் ஒரு பகுதியை உண்டியலில் செலுத்தினாலும் கூட, யார் அவருக்கு லஞ்சமாக அத்தகைய பணத்தைக் கொடுத்தார்களோ அவர்களுக்குத் தான் அந்தப் புண்ணிய சக்தி போய்ச் சேருமே தவிர அவ்வாறு அதர்மமான முறையில் சம்பாதித்தவர்க்கு ஒரு பைசா புண்ணியம் கூடப் போய்ச் சேராது.

நியாயமாக தன் உழைப்புக்கு ஏற்றவாறு எவ்வளவு பணம் சம்பாதித்தாரோ. அதுதான் இவருக்காகத் தங்குமே தவிர முறையற்ற வழியில் வந்த பணத்தால் செய்யப்படும் நற்காரிய விளைவுகள் அனைத்தும் அந்தந்தப் பணத்தை அளித்தவருக்குத் தான் போய்ச் சேரும் என்பதை நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை - சேவை செய்திகள்.

5.9.1998 சனிக்கிழமை - திருஅண்ணாணமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமி அன்னதானம்.
20.9.1998 மாளய அமாவாசை - திருவள்ளூரில் 500 கிலோ அளவில் மகத்தான அன்னதானம் - ஸ்ரீ வீரராகவப் பெருமாளின் அருட் பெருங்கருணையால் நடைபெற்றது. திருச்சி அன்பில் அருகே ஸ்ரீ காயத்ரீ நதிக்கரையில் மாளய பட்ச அன்னதானம்.
5.10.1998 ஆஸ்ரமத்தில் பௌர்ணமி அன்னதானம்
21.9.1998 முதல் 1.10.1998 வரை நவராத்திரி தினங்களுக்குரிய தான தருமங்களாக ஜாதி பேதமின்றி 1000 ஏழை சுமங்கலிகட்கு, குங்குமம், மஞ்சள், சீப்பு, புஷ்பம், வளையல் போன்ற மங்களப் பொருட்கள் நிறைந்த பாக்கெட்டுகள் அளிக்கப்பட்டன. சதாபிஷேகத்தைக் கொண்டாடிய தம் பதிகளான பெரியோர்க்குப் பாத பூஜைகளும் நடைபெற்றன.
27.9.1998 சென்னை – கோலடி - இலவச மருத்துவ முகாம்
20.9.1998 திருச்சி – திருவளர்சோலை - இலவச மருத்துவ முகாம்

புண்ணியப் பொழிவே மழை

மழைகளிலும், மழைத் துளிகளிலும்பல வகைகள் உண்டு! மழை ஒரு சிறந்த சகுனங்காட்டி! மழையில் நனைந்தவாறு ஸ்ரீ காயத்ரீ மந்திரம் ஓதியவாறே கிரிவலம் வருவதற்கு மகத்தான பலன்களுண்டு! புனிதமான மழை நீரில் நம் கர்மவினைகள் பலவும் கரைகின்றன! காரணம் புண்ய, சக்தியின் திரட்சியே மழைக்கான நற்காரணங்களுள் ஒன்றாம்.
வெயிலுடன் மழை சேர்வதும் மழையுடன்வெயில் சேர்வதும் தனித் தன்மையுடைய காலப் பரிமாணங்களாக விளங்குகின்றன! வெயிலுடன் மழை சேர்கையில் ஸ்ரீலஷ்மி நரசிம்மத் துதிகளை ஓதிடில் எத்தகைய பகைவர்களின், துரோகிகளின், விரோதிகளின் சதிகளையும் வென்றிடலாம்.

மழை பெய்வது என்றால் கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும், நீர் ஆவியாகி, மேகத்தில் நிறைந்து பூமியில் மழையாக வந்து சேர்வதாக விஞ்ஞானம் பறை சாற்றினாலும் மழை பற்றிய ஆன்மீக விளக்கங்கள் பல உண்டு. ஆயினும் இதையெல்லாம் விஞ்ஞானத்திற்கு அடிமைப்பட்ட நம் மனம் சத்ய வாக்கான மெய்ஞானத்தை ஏற்குமா?

இன்றைக்கும் திருஅண்ணாமலையில் ஏற்படுகின்ற பல மழைப் பொழிவுகளெல்லாம், பல தேவாதி தேவர்களும், யோகியரும், மஹரிஷிகளும் திருஅண்ணாமலையாருக்கு நிகழ்த்துகின்ற அபிஷேகமாகத் தான் விளங்குகின்றன. இஃதோடு இடி மின்னலுடன், மழை பொழிகின்றபோது, அந்த மின்னல் வெளிச்சத்தில் திருஅண்ணாமலையினைப் பார்க்கும் பாக்கியம் பெற்றோர்க்கு, கேதார்நாத் நீலகண்ட பர்வதம், திருக்கயிலாயம், அநேக தங்காபதம், பத்ரிநாத், இந்திர நீலபர்வதம் போன்ற பலவித இமயமலை தரிசனங்கள் உண்மையாகவே தென்படுவதை இன்றும் கண்கூடாகக் காணலாம்.

அனைத்து இறை மலைகளின் தொகுப்பாகப் பிரபஞ்சத்திற்கே மூலாதாரமாக விளங்குவதே திருஅண்ணாமலை என இது நிரூபிக்கின்றது. உலகில் உள்ள அனைத்து மூலிகைகளின் அடிப்படை மூலதாரத் தோற்றமே, இறைவனின் இறைத் திருமேனியான திருஅண்ணாமலைதான்! வருண பகவான் மழையை ஏற்படுத்தும் பொழுது வருண லோகத்திலுள்ள, வருண தேவதைகளே பறவைகளைப் போல் பறந்து இவற்றை உலகின் பல பாகங்களிலும் சிதறித் தெளிக்கின்றன,

மழைகளிலும் பல பிரிவுகள் உண்டு. வருண கோமுக மழை, வருணதாரை மழை, வருணாம் பர மழை என்று ஒவ்வொரு மழையைப் பொறுத்து அதற்குரிய காரண காரிய சாஸ்திரங்களையும் சொல்வதுண்டு. பூமியின் மேல் நடக்கின்ற அனைத்து அக்கிரமச் செயல்களையும் மிகவும் பொறுமையுடனும், பலவித வேதனைகளையும் தாங்கும் பூமாதேவியை வல்வினைச் செயல்கள் பெருகுகின்றபோது வாடுகின்ற ஸ்ரீபூமாதேவியைச் சாந்தப்படுத்துவற்காக பூசுர மழைப் பொழிவு ஏற்படுவதுண்டு. இப்பூசுர மழைப்பொழிவின் இறைத்தன்மை என்னவெனில் ஒவ்வொரு கோடி மழைத் துளிகட்கும் ஒரு துளி அமுதத்துளி கீழே இறங்குகின்றது. இவ்வமுதத் துளி எங்கு விழுகின்றதோ அவ்விடத்தில் அந்த ஆண்டு சுபிட்சம் நிறைவதுண்டு! காரியங்கள் தாமாகவே அங்கு நன்கு நடைபெறும். ஆனால் மிகவும் தெய்வீக சக்தி மிக்கதாக இம்மழைத்துளி விளங்குவதால் இதனை பூலோகத்தில் பூசுர பாறையில் தான் முதன் முதலாகச் செலுத்துகின்றார்கள். இந்த பூசுர பாறைகளில் பட்டுத் தெளிக்கின்ற அமிர்த்த துளிகளுமுண்டு அல்லது மஹரிஷிகளோ, சித்புருஷர்களோ இதனைத் தீர்த்தம் போல் தாங்குவதுமுண்டு.

அமுத புஷ்ப மூலிகை ஒரு கோடி மழைத் துளிகளில் ஒன்றாக விளங்குகின்ற இவ்வமுதத் துளியானது பூசுரப் பாறையில் கிரஹிக்கப்படும்போது அந்நேரத்தில் அமுத புஷ்ப மூலிகை என்ற தெய்வீக மூலிகை தோன்றுகின்றது. பெரும்பாலும் மழைப் பொழிவின் போது இது அமிர்த நேரத்தில் மட்டுமே உருவாகும் மூலிகையாகும். எனவேதான் அக்காலப் பெரியோர்கள் மழைப் பொழிவு ஏற்பட்டவுடன் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து எந்த நேரத்தில், யோகத்தில், எந்த நட்சத்திரத்தில் மழை பொழிகிறது என்பதை கவனித்து அவ்வாண்டின் ஏனைய மழைப் பொழிவையும் பலாபலன்களையும் சகுனங்களையும் நன்கு கணித்துக் கொள்வார்கள். ஜோதிட சாஸ்திரத்தில் மழைப் பொழிவு பற்றிய விளக்கங்கள் நிறைய காணப்படுகின்றன மரக்கால் மழை நாழி என்ற சித்த கிரந்தப் பகுதியில் இவற்றைப் பற்றிய முக்கிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

பூசுர பாறையின் அருகே தவம் புரிகின்ற ஸ்ரீ கண்ட சிவ சித்தர்கள், ஸ்ரீ காகபுஜண்டரின் அதி அற்புத சிஷ்யர்கள்  தவத்தினூடே மழைப் பொழிவு ஏற்பட்டு மேற்கண்ட முறையில் அமுத புஷ்ப மூலிகைகள் பிறக்குங்கால், அதற்குரிய பிராண ப்ரதிஷ்டை பூஜைகளைச் செய்து, குறித்த நேரம், காலம், நட்சத்திரத்தில் அவற்றைக் கைகளில் தாங்கி, திருக்கயிலாயம், திருஅண்ணாமலையான தெய்வீக மலைகளை வலம் வருகின்றனர்.

ஹிரண்யனின் மனைவியானவள், ஹிரண்யன் எவ்விடத்தில் தவம் பூண்டுள்ளான் என்று அவனைத் தேடி பல இடங்கட்கும் செல்கையில் நாரதருடைய ஆசியால் ஸ்ரீ அகஸ்திய மஹா பிரபுவின் பெருங் கருணையால், திருஅண்ணாமலைத் திருத்தலத்திற்கு வந்து இங்கும் கிரிவலம் செய்கின்ற பாக்யம் பெற்றனர். இதுவும் இறைத் திருவிளையாடல்தானே!

அவள் வலம் வருகையில் தான் அமுத புஷ்ப மழையானது அவ்விடத்தில் தான் அதிர்ஷ்ட வசமாகப் பொழியத் துவங்கியது. ஏனென்றால் ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியைத் தரிசிக்கவிருக்கின்ற பிரகலாதனின் கர்ப்பத்தைத் தாங்கி வருகின்ற பாக்கியத்தைப் பெற்றவளல்லவா? ஸ்ரீ பிரஹலாதனுக்காகவே வருணபகவான் ஆசி கூறுவது போல அண்ணாமலையை கிரிவலம் வருகையில், மழைக்காக அன்னவளையும் அறியாமல் அவள் பூசுர பாறையின் அருகில் ஒதுங்கும் தெய்வீக பாக்கியம் பெற்றிட, அவ்விடத்தில்தான் ஸ்ரீகண்ட சிவ சித்தர்களின் பெருந் தவக் குழாம் யோகத்தில் அமர்ந்திருந்தது.

நல்ல பெரும் மழை! அப்பொழுது ஏற்பட்ட பேரொளியில் அமுதத் துளியானது பெருகி வந்திட, அத்துளியே ஸ்ரீகண்ட சிவசித்தர்கள் தவம் செய்து வந்த இடத்தில் பூசுர பாறையின் மீது பட்டு அதன் சிறு அணுத்துகள்களாக மழைத் துளியானது ஹிரண்யனுடைய மனைவியின் கர்ப்பப்பையிலும் சென்றடைந்தது. அது மட்டுமா? அப்பொழுதே அப்பேரொளியைக் கருவிலிருந்தே காணும் பேறு பெற்றான் பிரஹலாதன்.

அமுத மழைத்துளி பொழிந்தவுடன் பூசுர பாறையின் தெய்வீக சக்தியால், அவ்விடத்தில் அமுத புஷ்ப மூலிகை தோன்றியது! இதனையே தங்களுடைய தவத்திற்குரிய வரமாகப் பெற்ற ஸ்ரீகண்ட சிவ சித்தர்கள் அதற்குரிய ப்ராண ப்ரதிஷ்டை பூஜைகளுடன் நிறைவு செய்து தம் திருக்கரங்களில் ஏந்தி வருகையில், எதிரே சுமங்கலிப் பெண்ணாக வந்திருந்த பிரகலாதனின் தாயைக் கண்டு இது நல்ல சகுனம் என்று மனமகிழ்ந்தனர். அக்காலத்தில் பிரசவத்தின் போது, கால் கட்டை விரலில் ஒரு மூலிகையைக் கட்டி விடுவார்கள். இம்மூலிகையின் மகிமையால் சுகப் பிரசவமுண்டாகும். இம் மூலிகை தற்பொழுதும் கூட பல மலைப் பகுதிகளில் காணப் படுகின்றது. இதன் மகத்துவத்தை எவரும் உணர்வதுதான் கிடையாது.

தவ மாமுனிகளை விழுந்து வணங்கியவளை ஆசீர்வதிக்கும் பொருட்டு அமுத புஷ்ப மூலிகைக் கொடியினை அவளுக்கு ஆசியாக அளித்திட, அவள் அதை தன்னையுமறியாது எடுத்துத் தன் இடுப்பில் அணிந்து கொண்டாள் இதன் ஸ்பர்சத்தைப் பெற்ற பிரகலாதன் எல்லையற்ற பரமானந்தம் கொண்டான். கருவிலே திருவுடையானாக அருணாசலத்தை மட்டுமின்றி பல மலைகளையும், திருத்தலங்களையும் தரிசித்த பிரஹலாத சரித்திரம் நாம் அறிந்ததே அல்லவா?

கோடிக் கணக்கான சூரியனின் சக்தியைத் தன்னுள் கொண்டுள்ள பூசுர பாறையில் விளைந்த இம்மூலிகையின் மகத்துவத்தால் தான் உக்ர சக்தி நிறைந்த ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியின் ஒளிப் பிரவாகத்தைக் காணும் அபூர்வ நேத்ர சக்தியையும் பெற்றான் பிரகலாதன்! அஞ்சாது அயராது நிற்கின்ற தெய்வீகத் தன்மையையும் பெற்றான்.
இன்றும் பகுதான்ய ஆண்டில் சரத் ருதுக் கால பூசுர பாறையில் இருந்து அமுத புஷ்ப மூலிகையின் சக்தி திருஅருணாசலத்தில் ஒளிர்கின்றது. பாக்கியம் பெற்றோர்க்கு இவ்வொளிப் பிரவாகமானது மின்னல் ரூபத்திலோ, அல்லது நட்சத்திர ரூபத்திலோ, அல்லது ஏதேனும் ஒரு ஒளி ரூபத்திலோ கிட்டும். ஐப்பசி, மற்றும் கார்த்திகை மாதத்தில் (பகுதான்ய வருடத்தில்) கிரிவலம் வருவோர்க்கு அமுத புஷ்ப மூலிகைகளின் தேஜோ மய ஒளி ரூபத்தைக் காணும் பாக்கியமும் கிட்டிடலாம். இம்மூலிகையின் ஸ்பரிசமோ, வாசனையோ, அல்லது இதனுடைய வாயுப் பரிமாணக் கதிர்களோ மனித தேகத்தை அடையுமாயின் மன அமைதியும், மன ஒருமுகப் பாட்டையும் தரவல்லதாகும். எத்தகைய கோபாவேசத்தையும் அடக்கும் தன்மை வாய்ந்ததாகும்.

இம்மூலிகையைத் தன் தாய் இடையில் தாங்கியதால் தான் இதன் ஸ்பர்சத்தினால், பிரகலாத மூர்த்திக்கு ஸ்ரீ நரசிம்மரின் உக்ர சக்தியை தாங்கும் சக்தியும், அவரால் அரவணைக்கப்பட்டு மடியில் அமர்த்தப்பட்ட போதும் கூட அந்த உக்ர சக்தியே சாந்த பாவனையில் பிரஹலாதனை அரவணைத்தது. தேவர்கள் கூட ஸ்ரீ உக்கிர நரசிம்மரின் தரிசனத்தைக் காண அஞ்சியபோது, பாலகனாம் ஸ்ரீ பிரகலாத மூர்த்தி, கருவிலே திருவுடையானாக ஐப்பசி மாத பகுதான்ய வருட கிரிவலத்தாலும், பூசுர ரசமணி பாறைகளின் மூலிகை பந்தன சக்தியாலும், ஸ்ரீ காகபுஜண்ட மஹரிஷியின், அற்புத சீடர்களின் அருந்தவத்தாலும், ஸ்ரீ காகபுஜண்டரின் குருவருளாலும் பிரகலாதன் ஸ்ரீ உக்கிர நரசிம்ம மூர்த்தியைக் கண்டு பயங் கொள்ளாது பக்தியுடன் தரிசித்து நின்றான்.

ஸ்ரீநரசிம்ம மூர்த்தியே பிரஹலாதனைத் தூக்கி எடுத்துத் தன் மடியில் அமர்த்திட இக்காட்சியைக் கண்ட ஸ்ரீ தேவியும், பூதேவியும், தேவர்களும், முனிவர்களும். ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சாந்தம் பெற்று விட்டார் என்று அறிந்து நேரே வந்து மகிழ்ந்து வணங்கினர்!

எனவே, பூசுர ரசமணிப் பாறைகளில் விளைகின்ற அமுத புஷ்ப மூலிகை தோன்றும் விசேஷ நாளே பகுதான்ய வருட ஐப்பசி மாத பௌர்ணமியாகும். இம்மூலிகைகளின் மீது படுகின்ற காற்றை சுவாசிக்கும் தெய்வீக சந்தர்ப்பம் கிட்டும் நாள் ! ஸ்ரீ காக புஜண்ட மஹரிஷியும், அவர் தம் சீடர்களும் சூட்சுமமாக வலம் வருகின்ற நாளாதலின், அவர்களின் ஆசியும் கிட்டுகின்ற மகத்தான நாளாகும். எனவே இத்திருநாளில், அமுத புஷ்ப மூலிகைகளின் சக்தியும் ஸ்ரீ காகபுஜண்ட மற்றும் அவரது சீடர்களான ஸ்ரீகண்ட சிவ சித்தர்களின் அருளாசியையும் பெற்று ஸ்ரீபிரகலாத வரத நரசிம்மரின் அருளையும் துய்த்து உய்யுமாறு பிரார்த்திக்கின்றோம்.

காயத்ரீ தேவி

ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ தேவி வழிபாடு

கடந்த 5.9.1998 சனிக் கிழமையானது ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் சேர்ந்த திருநாளாதலின் சித்தர்களின் சாங்கியப்படி ஆவணி அவிட்ட நாளாக, பூணூல் அணியும் விசேஷ தினமாகக் கொண்டாடப்பட்டது. நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் ஜாதி, இன பேதமின்றி விருப்பம் உடையோர்க்கு இத்திருநாளில் புனிதமான பூணூலும் அணிவிக்கப்பட்டு உத்தம மந்திரமாகிய ஸ்ரீ காயத்ரீ மந்திரமும், நல்ல உச்சரிப்போடு, பொருளுரையும் தந்து பலருக்கும் அருளப்பட்டது. ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் தெய்வீக சக்தியானது அனைத்து ஜீவன்களையும் சென்றடைய வேண்டும் என்ற உயர்ந்த நோக்குடன் இத் திருநாளில் நம் ஆஸ்ரமத்தில், பொது ஜனங்களுக்காக விசேஷமான ஹோம குண்டங்களும் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளால் நிர்மாணிக்கப்பட்டு வந்திருந்த அனைவருக்கும் ஹோமத்தில் ஆஹதி அளிக்கின்ற நல்வாய்ப்பு தந்தது மட்டுமின்றி அவர்களையும் நல்மந்திரங்களை ஓதச் செய்து ஹோமத்தில் நன்முறையில் பங்கேற்கும் படியான தெய்வத் திருவாய்ப்பும் அளிக்கப்பட்டது.

ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ வழிபாடு என்பது தற்போது மிகவும் அருகி வருகின்றது. ஸ்ரீ காயத்ரீ, சாவித்ரீ, சரஸ்வதி ஆகிய மூன்று பரப்பிரம்ம சக்தி அம்ச மூர்த்திகளின் ஒருங்கிணைந்த தெய்வ மூர்த்தி வழிபாடே ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ வழிபாடாகும். கலியுகத்திற்கென பிரத்யேகமாக மஹரிஷிகளாலும், சித்புருஷர்களாலும், யோகியர்களாலும் அருளப்பட்ட மிகச் சிறந்த தெய்வ பூஜையே ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ தேவி தரிசனம்!

கிருத யுகத்தில் நன்கு விருத்தி பெற்றிருந்த வேத வழிபாடானது காலப்போக்கில், யுகாந்திரங்களிலும் மங்கி, மறைந்து கலியுகத்தில் மிகவும் கரைந்து விட்ட துர்பாக்ய நிலையை நாம் காண்கின்றோம். அனைவர்க்கும் உரித்தான வேத வழிபாடு இன்று ஒதுங்கிக் கிடக்கின்றது! இதனை தீர்க தரிசனமாக உணர்ந்த ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷியே கலியுகத்தில் வேத மந்திர பாராயணங்கள் மறைந்து விடும் என்பதை உணர்ந்து அதற்கு ஈடான தமிழ் மறைகள் மற்றும் பிற மொழி மறைகள், இறைவனால் பல மகான்கள் மூலமாகப் படைக்கப் பெற்றாலும், அவற்றைப் பாராயணம் செய்கின்ற நல்வழி முறையும் குறைந்து விடும் என்பதால் தான் வேதங்களின் சாரமாக ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை, பிரபஞ்சத்திலிருந்து கிரஹித்து நமக்கு அளித்து உள்ளார். 24 அட்சரங்களைக் (எழுத்துக்களை) கொண்ட ஸ்ரீ காயத்ரீ மந்திரமானது நான்கு வேத மந்திரங்களின் சாரமாகும் என்பதை நாம் நன்கு அறிவோம். ஆனால் என்னே பரிதாபம்! திருக்குறளைப் போல இரண்டே வரிகளை உடைய ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் மகிமையைக் கூட இன்றும் பலர் அறியாதிருக்கின்றனர், அல்லது இதன் மகத்துவமும் மறைந்து அல்லது மறைக்கப்பட்டு/மறந்துவிட்டது!

ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை அறிந்தவர்களோ அதனை முறையாக வழிபடுவதும் உணர்த்துவதும் கிடையாது, பாராயணம் பண்ணுவதும் ஜபம் செய்வதும் ஏதோ கடனே என்றுதான் நடக்கின்றது! இந்நிலையில் ஸ்ரீ காயத்ரீ மந்திரமானது உலக மக்கள் அனவைருக்கும் சென்றடையும் வண்ணம் நாம் நல்லதோர் இறைப் பணியைச் செய்திடல் வேண்டும். ஏனென்றால் மூலை முடுக்கெல்லாம் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் மகிமையைப் பரப்பினால்தான் லட்சத்தில் ஒரு சிலரேனும் அதன் மகிமையை உணர்ந்து முறையாக பூஜை செய்யத் துவங்குவார்கள். இதனால் அதனுடைய பலாபலன்கள் சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடையும் என்பது திண்ணம். பிரபஞ்சத்தின் கோடானு கோடி லோகங்களுக்கும், நட்சத்திரங்களுக்கும் கூட நல்ல தெய்வீக சக்தியை அளிக்க வல்ல ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை நாம் அனைவரும் ஜெபித்து, தியானித்து வழிபடத் தொடங்கினால் உலகமே ஒழுக்கமுடைய மாபெரும் தெய்வீக சக்தி நிறைந்த சமுதாயமாக விளங்கிடும் அல்லவா! இதற்காக ஏற்படுத்தப்பட்டதே ஸ்ரீ சமஷ்டி காயத்ரி தேவி வழிபாடு ஆகும்.

இச்சா, கிரியா, ஞான சக்திகள் மூன்றும் ஒன்று சேர்ந்து ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ தேவியாகப் பிரணவ ரூபம் கொண்டன. பலரும் ஒன்று சேர்ந்து சமஷ்டி வழிபாடாக, சத்சங்க வழிபாடாக, கூட்டு வழிபாடாக நிகழ்த்துவதே ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ தேவி வழிபாடாகும். தனிப்பட்ட ஒருவர் தனக்கென சுயநலத்தோடு செய்வதல்ல! இதனை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் தான் கடந்த 5, 6, 7 செப்டம்பர் 1998 தேதிகளில் நம் ஆஸ்ரமத்தில் ஸ்ரீ சமஷ்டி தேவி காயத்ரீ வழிபாடானது சத்சங்க வழிபாடாக ஜாதி, மத, இன பேதமின்றி, பல இறையடியார்களைக் கொண்டு, அமைதியான முறையில் நிகழ்த்தப்பட்டது.

இம் மூன்று தினங்களிலும் 24 எழுத்துக்களைக் கொண்ட ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தின் ஆன்ம ஒளியும் இறை சக்தியும் விண்வெளியில் பரவ வேண்டும் என்பதற்காக 24 விதமான, மிகவும் சக்தி வாய்ந்த ஹோம குண்டங்களை நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் சித்தர்களுக்கே உரித்தான விசேஷமான முறையில் நிர்மாணித்துத் தந்தார்கள்.

மணற் பரப்பில் நட்சத்திர வடிவு, திரிகோண வடிவு, பிரபஞ்சச் சக்கர வடிவு ஆகிய விதவிதமான கோணங்களில் மணல் சக்கர யந்திர பீடங்கள் அமைக்கப்பட்டு அதன் மேல் மிகவும் சக்தி வாய்ந்த பீஜாட்சரங்களும், மாத்ருகா அட்சரங்களும், ஸ்ரீ வித்யா சக்கரங்களும், நவகோணங்களும், ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகளின் திருக்கரங்களினால் வரையப் பெற்று, அதன் மேல் பிரமிக்கத் தக்க வகையில் இதுவரையில் எவரும் கண்டிடாத முறையில் கலியுகக் கண்களுக்குப் புதுமையான, ஆனால் பல கோடி யுகங்களுக்கு முன்னால் நம் முன்னோர்களால் கடைபிடிக்கப் பெற்ற பழமையான ஹோம குண்டங்கள் புதுப் பொலிவு பெற்றாற் போல் அமைக்கப் பெற்றன.

இந்த அரிய ஹோம குண்டம் அமைப்புகளெல்லாம் ஸ்ரீ காயத்ரீ மந்திரத்திற்கு உரித்தான 24 மந்திர தேவதா மூர்த்திகளின் உறைவிட லோகங்களின் அமைப்பை ஒத்து விளங்கின. ஹோம குண்டங்களை நிர்மாணிக்கும் பொழுதே ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகள், அவற்றின் தாத்பர்யங்களையும், மகிமைகளையும், சக்திகளையும் கூடியிருந்தோர்க்கு நன்கு விளக்கினார். கலியுகத்தில் எவரேனும் ஹோம குண்ட விளக்கங்களை இவ்வளவு எளிமையாக எவ்வித வித்யாசமும் பாராது சமநோக்குடன் பலருக்கும் புரியும்படி எடுத்துரைப்பது என்பது கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கின்றது அல்லவா! இதுவே குருகுல வாச மஹிமை!

5.9.1998 அன்று திருச்சி, மதுரை, கோயமுத்தூர், தஞ்சை, சென்னை, சேலம் போன்ற பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த இறையடியார்களுக்கு, எவ்வித வேறுபாடும் இன்றி, பிரம்ம முகூர்த்த நேரத்தில் (காலை 3.30 முதல் 5.00 மணி வரை) முறையான மந்திரங்களுடன் புனிதமான பூணூல் அணிவிக்கப்பட்டது.

பிரம்ம முகூர்த்தம் என்பது மிகவும் புனிதமுடையதே! இத்தகைய விசேஷமான பிரம்ம முகூர்த்த நேரம் என்று பெயர் வரக் காரணம் யாது எனில் எந்த ஸ்ரீ பிரம்ம மூர்த்திக்கு அவர் பெற்ற சாபத்தால் கோயில் இல்லை என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோமோ அந்த ஸ்ரீ பிரம்ம மூர்த்தியானவர் தான் லட்சோப லட்சம் சிவாலயங்களிலும் கோஷ்ட மூர்த்தியாக எழுந்தருளி அருள்பாலிக்கின்றாரே! ஸ்ரீ பிரம்ம மூர்த்தியே தினந்தோறும் இந்நேரத்தில் பூலோகத்தில் தான் உள்ள அனைத்து ஆலயங்களிலும் இறை வழிபாட்டைச் சூட்சுமமாக மேற்கொண்டு பூலோகம், தேவ லோகம், பிரம்ம லோகம், ருத்ர லோகம் என்று மட்டும் அல்லாது அனைத்து லோகங்களிலும் உள்ள ஜீவன்களின் நல்வாழ்விற்காக இதனை அர்ப்பணிக்கின்றார்.

எனவே இந்த பிரம்ம முகூர்த்த நேரமானது மிக மிகப் புனிதமானதாக இன்றைக்கும் விளங்குகின்றது. தேவர்களுக்கு 6 மாத காலம் பகல் பொழுதாகவும் (உத்தராயணம்) 6 மாத காலம் இரவுப் பொழுதாகவும் (தட்சிணாயனம்) விளங்குவதாலும் மார்கழி மாதம் அவர்களுக்கு பிரம்ம முகூர்த்த நேரமாக அமைவதாலும் தான் இன்றைக்கும் மார்கழி மாதம், தேவர்களுக்கான பிரம்ம முகூர்த்த நேரமாக தெய்வாம்சச் சிறப்பியல்புகளுடன் விளங்குகின்றது. இதுவே மார்கழி மாதத்தின் தாத்பர்யம்! எனவேதான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் மார்கழியாக இன்றும் மலர்கின்றார்.

ஆனால் கலியுகத்தில் பிரம்ம முகூர்த்தப் பொழுதில் நிகழ்வதென்ன? கிட்டத்தட்ட 99.9999 சதவிகித மக்கள் உறங்கும் நிலையில் தான் இந்த அரிய பிரம்ம முகூர்த்த நேரத்தைக் கழிக்கின்றார்கள். என்னே பரிதாபம்! பெறுதற்கரிய மானிடப் பிறவியை எடுத்து, அதிலும் இறையருளால் தினமும் கிட்டுகின்ற இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தை இவ்வாறு நாம் தினந்தோறும் தூங்கியே இழந்தால் நம்முடைய துர்பாக்ய நிலைகளுக்கு இன்ப துன்பங்களுக்கு, கர்மவினைகளுக்கு. நாமே தானே பொறுப்பேற்க வேண்டும்! பிறகு இறைவனிடம், “அது வேண்டினேனே, இது வேண்டினேனே, அதைச் செய்தேனே, இதைச் செய்தேனே, நமக்கு ஒன்றும் நல்லது நடக்கவில்லையே,” என்று புலம்புவதால் என்ன பலன்? எதனை எந்த நேரத்தில் செய்ய வேண்டுமோ அதனை அப்போது செய்தால்தானே அதற்குரிய சக்திகளும், பலா பலன்களும் வந்து சேரும்!

பிரம்ம முகூர்த்தத்தில் செய்கின்ற பூஜைகளுக்கு மகத்தான பலன்கள் உண்டு. அதிலும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபட வேண்டிய பர்வதமலை போன்ற சில முக்கியமான திருத்தலங்களும் உண்டு. இவ்விடங்கள் எல்லாம் இன்றைக்கும் இந்நேரத்தில் கோடானு கோடி சித்புருஷர்களும், மகரிஷிகளும், யோகியர்களும்,மகான்களும் வந்து பூஜித்துச் செல்கின்ற அரும்பெரும் ஸ்தலங்கள் ! இத்தகைய இறையடியார்களோடு, மஹரிஷிகளோடு ஸ்ரீ பிரம்மாவோடு நாமும் சேர்ந்து பூஜை செய்கிறோம் என்றால் நாம் எத்தகைய பாக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும்! இதை விடுத்து இந்நேரத்தில் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தால் என்ன பிரயோஜனம்? நம் பொன்னான வாழ்க்கையை இப்படித்தான் வீணடிக்க வேண்டுமா? இது மட்டும் அல்லாது நம் சந்ததியினருக்கும், பிரம்ம முகூர்த்தம் பற்றிய அறிவே இல்லாது போய் விடும் போலிருக்கின்றதே.

பிரம்ம முகூர்த்த நேரமாகிய விடியற்காலையில் குளிர்ந்த நீரில் நீராடும் பொழுதுதான் நம்முடைய சிரசில் உள்ள சில கபால நரம்புகளும், நாடிகளும் ஆக்கம் பெற்று இதனால் சில அபூர்வமான அமிர்த பீஜ சுரப்பிகளில் அமிர்தம் சுரக்கின்றது. இது 72,000 நாடி, நரம்புகள் வழியாக நம் தேகமெங்கும் பரிபூரணமாகச் சுழல்கின்ற நேரமே பிரம்ம முகூர்த்த நேரமாகும். எவ்வாறு பகலும், இரவும் சேருகின்ற மாலை சந்தியா காலமானது மிகவும் புனிதம் பெறுகின்றதோ அதே போலத்தான் இரவும், பகலும் சேருகின்ற பிரம்ம முகூர்த்த நேரமானது மிக மிகப் புனிதமாக அமைகின்றது. எனவே பூணூலை மாற்ற விரும்புகின்றவர்களும், அங்கப் பிரதட்சிணம் செய்ய வேண்டியவர்களும், கிரிவல யாத்திரையை மேற்கொள்ள விரும்புகின்றவர்களும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இவற்றைக் கடைபிடிப்பார்களேயானால் இதனுடைய பலாபலன்கள் அபரிமிதமாகப் பல்கிப் பெருகும்.

ஆனால் தற்போதைய கலியுகத்தின் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் விடியற்காலையில் இவற்றைக் கடைபிடிக்க இயலுமா என்று கேட்கத் தோன்றுகின்றது அல்லவா! இதற்காகத்தான் சத்சங்கமாக ஒன்று சேர்ந்து இதனைப் பலரும் கடைபிடிப்பார்களேயானால் பூஜா பலன்கள் அதிகமாவதோடு மனதிற்கும், உடலுக்கும் ஒரு கூட்டுத் தெய்வீகப் பாதுகாப்பு உணர்ச்சி ஏற்படுகின்றது அல்லவா! எனவேதான் சத்சங்க பூஜையின் மகிமையானது கலியுகத்தின் பலவிதமான சுற்றுப்புறச் சுழலுக்கும் ஏற்றவாறு நன்மை பயக்கக் கூடியதாக விளங்குகின்றது.

பூணூலை அணிந்து கொண்டு சில அசூயையான செயல்களில் ஈடுபட வேண்டியது உள்ளதே என்று பலரும் விளக்கம் வேண்டி எழுதிக் கேட்டுள்ளார்கள். பூணூலை அணிவதன் அவசியமே நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும், ஒவ்வொரு வினாடியிலும் நாம் இறை நினைவோடு வாழ வேண்டும்என்பதை வலியுறுத்துவதற்காகத் தான்! பூணூலை அணிந்து கொண்டால் அசூயையான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்ற எண்ணம் உதிக்கின்றது அல்லவா! அசூயையான செயல்கள் என்றால் உடலில் உள்ள அசுத்தங்களைக் கழிக்கின்ற நேரமும், உத்தமமான ஜீவ விருத்திக்கான முறையான, தார்மீக ரீதியான, நுகர் இன்பத்தைத் தொடர்தல் போன்றவையும் ஆகும்.
எவ்வாறு நம் பெரியோர்கள் எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரும் பூணூல் அணிகின்ற ஒரு தத்துவத்தைத் தந்திருக்கின்றார்களோ, அவர்கள் இத்தகைய தேகத்திற்குரித்தான அசூயைக் காரியங்களைப் பற்றிய விளக்கங்களைத் தராமலா, அறியாமலா இருப்பார்கள்? அதற்குரிய விடைகளையும் தந்திருக்கின்றார்கள் அன்றோ! ஆனால் இவற்றிற்கான விளக்கங்களை தக்க பெரியோர்களிடமிருந்து இதுவரையில் நாம் பெறவில்லை என்பதைத்தானே இது சுட்டிக் காட்டுகின்றது. உடல் ஆரோக்கியத்திற்காகவும், சந்ததி விருத்திக்காகவும் அசூயையான காரியங்களில் ஈடுபடும் பொழுது பூணூலைக் கழற்றி வைப்பது கிடையாது!
எவ்வாறு மாங்கல்யமானது ஓரு பெண்ணிற்கு தேகத்தோடு இணைந்த ஒரு தெய்வீகச் சின்னமாகி விட்டதோ அதே போலத்தான் பூணூலும்! ஒரு முறை அணிந்தால் அதனை ஒரு போதும் கழற்றுதல் கூடாது. எவ்வாறு இல்லறப் பெண்மணிகளுக்கு மெட்டியும், வளையல்களும், தோடுகளும், மூக்குத்திகளும், மாங்கல்யமும், மங்கலச் சின்னங்களாக உடலோடு ஐக்கியமாகிவிட்ட தெய்வீகச் சின்னங்களாகிப் பிரகாசிக்கின்றனவோ அதே போலத்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் நெற்றியில் இறைச் சின்னமும், பூணூலும், காதில் கடுக்கன்களும், அரைஞாண் கயிறும் எப்போதும் உடலில் இருந்தால்தான் அது அவனுக்கு இரட்சையாக எப்போதும் அமைந்து பலவித துன்பங்களில் இருந்தும் அவனைக் காப்பாற்றுகின்றது.

கலியுகத்திற்கு ஏற்றாற் போல் சிலவிதமான பூஜா முறைகள் துரதிருஷ்டமாக மனிதனின் சௌகரியத்திற்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டு விடுகின்றன. அக்காலத்தில் சிறுநீர், மல ஜலம் கழித்தல் ஆகியவற்றின் போது பூணூலை வலது காதில் சுற்றிக் கொண்டு செல்வார்கள். ஆனால் சட்டை அணிகின்ற முறை கலியுகத்தில் நாகரீகமாக மட்டும் அல்லாது ஒரு இன்றியமையாத மனிதச் சட்டமாகவே அமைந்துவிட்ட பொழுது இது எவ்வாறு, குறிப்பாக அலுவலகத்தில் அல்லது வெளியில் இது சாத்தியமாகும்? இதற்காகவே சில பரிஹார முறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பூணூலை அணிந்து கொண்டு ஒருவன் அறிந்தோ, அறியாமலோ செய்கின்ற தவறுகளுக்கு, அசூயையான காரியங்களுக்குப் பிராயச்சித்தமாக அமைவதே ஸ்ரீசமஷ்டி காயத்ரீ தேவி வழிபாட்டின் சில பரிஹார முறைகள் ஆகும்.

ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை ஓதும் பொழுது. பலவிதமான உச்சரிப்புப் பிழைகள் ஏற்படுவதுண்டு. அனைவருமே இதனை சரியாக உச்சரிப்பார்கள் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. நன்கு சிரத்தையுடன், பக்தியுடன் உச்சரிப்பவர்களுக்கு நிச்சயமாகப் பலன்கள் நன்கு கை கூடுகின்றன என்பது உண்மையே. ஆனால் ஒரு சாதாரண பாமரனுக்கு ஸ்ரீ காயத்ரீ மந்திரத்தை முழுமையாக அறிவது என்றால் சற்று கடினம் தானே!

“இறைவன் என்ன ஒரு மந்திரத்தின் உச்சாடனத்தையா வற்புறுத்துகின்றான் ? அவன் உண்மையான பக்தியைத் தானே எதிர்பார்க்கின்றான்'', என்று எண்ணத் தோன்றுகின்றது அல்லவா! ஆனால் யாருக்கு உண்மையான பக்தி இருக்கின்றது? அன்பு, மனித நேயம் எனப்படும் தார்மீகமான பக்தியை மனிதன் பெறுவதற்காகத் தானே மந்திரங்களும், யந்திரங்களும், ஹோமங்களும், அர்ச்சனைகளும், வழிபாடுகளும், ஆராதனைகளும் உற்சவங்களும், ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாகப் பங்கு கொண்டு லயித்துத் தன்னை உணரும் பொழுதுதான் அவனுக்குப் பக்தி ஏற்படுகின்றதே தவிர, தனக்கு பக்தி இருக்கின்றது, அதனால் மந்திரத்தை எப்படி உச்சரித்தால் என்ன என்று எண்ணுதல் கூடாது. இது அகங்காரத்தையே உருவாக்கும்!

ஆனால் படிக்காத பாமரன் ஒருவன் மிகவும் பிரயத்னப்பட்டு ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தின் மகிமையைத் தன்னளவில் அறிந்து அதனை அவன் தனக்குத் தெரிந்த முறையில் உச்சரிக்கின்ற பொழுது இறைவனே முன் வந்து அவனுடைய பிழைகளை ஏற்று அவற்றை மலர்களாக, கனிகளாக, அர்ச்சனைகளாக ஏற்று அருள் பாலிக்கின்றான் என்பது உண்மையே. இது எப்போது நிகழ்கின்றது என்றால் ஒரு சற்குரு ஆனவர் அவனை அரவணைத்து, அருள் மொழி புகட்டி, இறைத் திருப்பணிகளைச் செய்ய வைத்து இறைவனுடைய மகிமைகளை உணர்ந்தும் பொழுது அவன் சொல்கின்ற சொற்கள் எல்லாம் இறைவனே வேத மந்திரங்களாக மகிழ்வுடன் ஏற்கின்றான். இவையெல்லாம் சற்குருவின் அருளாணைக்கு உட்பட்டதாகும். சாதி, மத, இன, குல, ஆண், பெண், விலங்கு, தாவரங்கள், புல், பூண்டு, புழு என அனைத்தையும் கடந்த அருட் பார்வையே சற்குருவின் தெய்வீக பரிபாலனம்!

ஸ்ரீ காயத்ரீ யோகம் ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ தேவியின் வழிபாட்டின் பொழுது 5.9.1998 அன்று பூணூலணிந்த பிறகு சூரிய நமஸ்கார யோகப் பயிற்சிகளைப் போன்ற 24 விதமான ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ யோகா அப்பியாசங்களை, யோக முத்திரைகளை, ஆசனப் பயிற்சிகளை, நம் குரு மங்களகந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளே முன்னின்று செய்து காண்பித்து இறையடியார்களுக்குப் பயிற்சி தந்தார்கள். பிராணாயாமம், சுகாசனம், பத்மாசனம், மயூராசனம், குக்குடாசனம் போன்ற பலவிதமான ஆசன முறைகளை அடிப்படையாகக் கொண்டு பிராணாயாம, தியான, யோக, ஜப பயிற்சி முறைகளை அடியார்கள் செய்து மகிழ்வுற்றார்கள் . ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகள் ஒவ்வொரு யோகப் பயிற்சிக்கும் உரித்தான லௌகீகமான பலன்களை மட்டும் அல்லாது அவற்றின் ஆன்மீகப் பலன்களையும், தெய்வீக சக்திகளையும் நன்கு எடுத்துரைத்தார்கள்.

இவையனைத்தும் உடல் வலி, முதுகு வலி, தசை வலி, ஆஸ்துமா, கபம், சிறுநீரகக் கோளாறுகள், சுவாசக் கோளாறுகள், கபால நோய்கள், இருதய நோய்கள் மற்றும் பலவிதமான நோய்களை நிவர்த்தி செய்கின்ற யோகப் பயிற்சிகளாக மட்டும் அல்லாது, மனத் தெளிவு, கூரிய பார்வை, நிமிர்ந்த நடை, சுவாச பந்தம், பிராணாயாமம், பலவிதமான பூத வாசி கலைகள் போன்ற யோகாதீத பலன்களையும் நல்குவதாகும். காரணம், ஸ்ரீலஸ்ரீ சுவாமிகளே தக்க மந்திரங்களைஓதியவாறே யோக நிலைகளையும் கூட்டு வித்தமைதான்! இதுவே கலியுக குருகுலவாச மஹிமை!

இந்த 24 விதமான யோக அப்பியாசங்களில் பலவிதமான முத்திரைகள், நடன யோக முறைகளோடு, பல அபூர்வமான ஆசனப் பயிற்சிகளும் கலந்திருந்தன. இவற்றின் முடிவில், தேக சுத்தியும், புதிய இரத்த ஓட்ட உணர்ச்சியும், நரம்பு நாளங்கள் சுத்திகரிக்கப் படுகின்ற உணர்வையும், சுழுமுனை சுவாச பந்தன நடைமுறைகளையும் நேரிடையாகவே உணர்ந்து அடியார்கள் மகிழ்வடைந்தனர்.

6.9.1998 அன்று மீண்டும் 24 விதமான ஸ்ரீ சமஷ்டிகாயத்ரீ அட்சர ஹோம வழிபாடுகள் தொடர்ந்தன. வலம்புரிக்காய், இடம்புரிக்காய், விலாமிச்ச வேர், வில்வம், பித்திகை, சந்தனம், வேலிக்கொடி, ஆத்தி, மாதுளை, அளரி, புனுகு, வேம்பு, பட்டிகை, அழிஞ்சில், வேங்கை, அதிமதுரம், ஆமணக்கு, வலதுளை, ஏலம், தாளி, காஞ்சி, அகத்தி எருக்கு, வன்னி, மிளகு, கூந்தற் பனை, மகிழ் போன்ற பலவிதமான மூலிகைப் பொருட்களும், ஆஹுதிகளாக அளிக்கப்பட்டு கலியுகத்தின் காணுதற்கரிய ஹோம வழிபாடாக இது அமைந்தது.

பல அரிய மந்திரங்களை ஸ்ரீ-ல-ஸ்ரீ சுவாமிகளே அருளிட ஜாதி, மத, இன பேதமின்றி அனைவரும் அவற்றை ஓதி, தக்க ஸ்வரங்களையும் கடைபிடித்து, ஆஹதிகளை இட்டு ஹோம வழிபாடுகளை நிறைவு செய்தனர்.

மூன்றாம் நாளன்று (7.9.1998) சமஷ்டி ஆத்ம நமஸ்கார வழிபாடு நடைபெற்றது. ஷோடச காயத்ரீ யோகாப்யாசங்களாக 16 விதமான நமஸ்கார யோகாசனங்கள் ஸ்ரீ ஸமஷ்டி காயத்ரீ தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்டன. அதாவது, இந்த ஸமஷ்டி ஷோடசோபசார வணக்கத் துதிகளில் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியோர்கள் வரை அனைவரும் ஹோம வழிபாடுகளை முடித்து எதிர் எதிரே நின்று சமஷ்டி வழிபாடாக அவரவருக்குரிய மந்திரங்களை ஓதி, எதிர் எதிராக ஒருவரை ஒருவர் ஆத்ம நமஸ்காரம் செய்து கொண்டனர்.

ஆத்ம நமஸ்காரம் என்பது வயது வேறுபாடு இன்றி ஆத்மத்தை உணர்ந்து செய்கின்ற வழிபாடாகும். இம்முறையில் சிறுவனோ, பெரியவரோ, இடைப்பட்ட வயதினரோ எவ்வித வயது பேதமும் பாராது அவரவர் செய்த ஹோம, ஜப, தவ, யோக, தந்திர, யந்திர வழிபாடுகளின் பலன்கள் யாவும் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்ற (சமஷ்டியான) உயர்ந்த நோக்கில் ஒருவரை ஒருவர் ஆத்ம பிரதட்சிணம் செய்து வழிபட்டு வணங்கியது காணக் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. இதனால் ஜாதி, மத, இன, குல வித்தியாசங்கள் மறைந்து சிறியவர், பெரியவர் என்ற உணர்வுகளையும் மறைந்து ஆத்மத்தை ஆத்மமே வணங்குவதாக, சமஷ்டி வழிபாடாக மூன்று நாள் ஸ்ரீ சமஷ்டி காயத்ரீ தேவதா வழிபாடு நிறைவு பெற்றது!

மூன்று தினங்களிலும் இல்லறப் பெண்களுக்கான தனிப்பட்ட விசேஷமான ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு, பெண்களும், குழந்தைகளும் வேத மந்திரங்களை ஓதி மகிழ்வுற்றனர்.

சர்வேஸ்வரனுக்கு உரிய ஐந்து. முகங்களான சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் ஆகியவற்றைப் பேணி மேற்கு, வடக்கு, தெற்கு, கிழக்கு, ஊர்த்துவ முக திசைகளில் ஹோம குண்டங்கள் அமைக்கப் பெற்றன. ஊர்த்துவ முக லிங்கங்களாக வானத்தை நோக்கியவாறு ஐந்து மிருத்திகா பாண லிங்கங்கள் கூடிய விசேஷமான பஞ்ச பூத ஹோம குண்டங்களில் இருபத்தி நான்கு மூலைகளிலும் தனி ஹோம குண்டங்களாக இணைக்கப்பட்டு சமஷ்டி ஹோம குண்டங்களாக அவை மலர்ந்தன. ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் நடத்துகின்ற இத்தகைய ஹோமங்களில், பசு நெய், பசு விறட்டி, மூலிகைப் பொருட்கள், அரசு, ஆல், வேம்பு போன்ற ஹோமத்திற்குரிய சமித்துகள், பழங்கள், பொரி, அவல், நவதானியங்கள் போன்ற விசேஷமான தெய்வீகப் பொருட்களே ஆஹதிகளாக அளிக்கப்படுகின்றன. எனவேதான் இத்தகைய ஹோமப் புகை மூலிகா/தெய்வீக/ஆத்ம சக்தி நிறைந்ததாகப் பரவெளியில் பரவி அனைவர்க்கும் பலனளிக்கின்றது.

இப்போது பல இடங்களிலும் தவறான முறையில் காணப்படுவதைப் போல சவுக்கு புளி போன்ற விறகுகளை, சத்சங்க ஹோமங்களில் ஒருபோதும் வைப்பதில்லை. உங்கள் இல்லங்களிலோ, கோயில்களிலோ நடக்கின்ற ஹோமங்களில் விறகுகளை ஹோமத்திற்குள் வைக்கின்ற தவறான பழக்கத்திற்கு தயவு செய்து முற்றுப் புள்ளி வைத்திடுங்கள். அரசு, ஆல், வேம்பு போன்ற சமித்திற்குரிய மரக் குச்சிகளே ஹோமங்களில் பயன் படுத்தப் படவேண்டும் என்று வற்புறுத்துங்கள். ஹோம குண்டங்களில் எத்தகைய தவறுகளும் நிகழ்தல் ஆகாது.தவறுகள் ஏற்படின் அது ஹோமத்தை நடத்துபவரையே பாதிக்கும்.

ஹோமம் என்பது அனைவராலும் எளிய முறையில் அவரவர் இல்லத்திலேயே கடைபிடிக்கக் கூடிய எளிய வழிபாடு ஆகும். குழந்தைகள், சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரை குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தாமே ஒரு எளிய ஹோம குண்டத்தை அமைத்து வாரம் அல்லது மாதம் ஒரு முறையேனும் ஹோம வழிபாட்டை மேற்கொண்டால் தான் இல்லம் சுபிட்சமாக இருக்கும். ஹோமத்தை நடத்துவதற்குக் கடும் நியதிகள் எதுவும் கிடையாது. முதலில் பலரும் ஒன்று சேர்ந்து சத்சங்க வழிபாடாக பொது இடத்தில் எளிமையான சிறிய ஹோம வழிபாட்டை நடத்துவதற்குப் பழகிக் கொள்ளுங்கள்.

எளிய ஹோம வழிபாட்டிற்கான முறைகளை எங்கள் ஆஸ்ரமத்தின் மூலம் நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். ஆலயங்களிலும், மண்டபங்களிலும், பூஜை அறைகளிலும் பலரும் சத்சங்க வழிபாடாக மிகவும் எளிய ஹோம வழிபாட்டை மேற் கொண்டு, மாபெரும் சமுதாய இறைப் பணியாக ஹோமங்களை நடத்தி சமுதாயத்திற்கு சுபிட்சத்தைப் பெற்றுத் தருமாறு மிகவும் அன்புடன் வேண்டுகின்றோம்.

ஹோமங்கள் நடத்துவதற்குரிய விசேஷமான புனித ஆலயங்களும், பல ஸ்தலங்களும் உண்டு. காஞ்சிபுரத்தில் தான் ஸ்ரீ பிரம்ம தேவர் பிரபஞ்சத்திற்கே உரித்தான மாபெரும் வேள்விகளைச் செய்து இத்திருத்தலத்திற்குப் புனிதத்தைப் பெற்றுத் தந்தார். எனவே காஞ்சீபுரத்தில் ஒரு நாள் முழுதும், 24 மணி நேரமும் தொடர்ந்து யாகம் / ஹோமம் செய்வது மிகவும் சிறப்புடைய தாகும். நம்மைப் படைத்த ஸ்ரீ பிரம்ம தேவரே வேள்வி செய்த தலம் ஆதலின் காஞ்சீபுரத்தில் நடத்தப்படுகின்ற முறையான ஹோமத்திற்கு ஸ்ரீ பிரம்ம மூர்த்தியின் அருளாசி எப்போதும் உண்டு. நம் ஆஸ்ரமத்தின் சார்பில், கடந்த ஆண்டு, 24 மணி நேரமும் தொடர்ந்த அகண்ட ஹோம வழிபாடு சமுதாய நலனுக்காகப் பலரும் பங்கு பெரும் வகையில் காஞ்சீபுரத்தில் நடத்தப் பெற்றது.

ஓமாம்புலியூர்

தஞ்சை பூந்தோட்டத்திற்கு அருகிலுள்ள திருஅம்பர் மாகாளம், சிதம்பரம் அருகே ஓமாம்புலியூர், தஞ்சை அருகே உள்ள திருஅரதைப்பெரும்பாழி (ஹரித்துவாரமங்கலம்), திருப்பத்தூர் அருகே உள்ள பிரான் மலை, இராமேஸ்வரம், வேதங்கள் வழிபட்ட திருக்கழுக்குன்றம், வேதாரண்யம், பவானி, கும்பகோணம் அருகே உள்ள கொட்டையூர் (ஸ்ரீ கோடீஸ்வரர்), திருச்சி அருகே திருப்பைஞ்ஞலி, ஸ்ரீ வாஞ்சியம் போன்ற ஸ்தலங்களில் ஹோம வழிபாடு செய்வது அரும்பெரும் பலன்களைத் தந்தருளும் சிறப்புடையது. இத்தகைய இடங்களில், தக்க அனுமதி பெற்று, பலரும் ஒன்று சேர்ந்த சத்சங்க வழிபாடாக, ஹோம வழிபாட்டை மேற்கொண்டிடுக! பட்சப் பிரதோஷம் போல் மாதமொரு முறை சத்சங்க ஹோம வழிபாடு அவசியமானதே!

தேவ கடன் எனப்படும் நம்முடைய பிறவிப் பெருங் கடனைத் தீர்ப்பதற்கு உரிய சிறப்பான வழிபாடாக ஹோமம் அமைகின்றது என்பதை மறவாதீர்கள். ஹோமத்திற்கு உரிய அக்னியை ஏற்றுகையில் தீக்குச்சியை வைத்து நேரேஅக்னியை ஏற்றாமல் பசு நெய் தோய்த்த நூல் அல்லது தாமரைத் தண்டுத் திரியில் முதலில் அக்னியை ஏற்றி அதன் மூலம் ஹோமத்திற்கு அக்னியை அளிப்பதே புனிதமானதாம். தற்காலத்தில் தீக்குச்சியை வைத்துக் கொண்டு ஹோமத்தில் சமித்தை நேரே பற்ற வைத்து விடுகின்றார்கள். இது தவறானதாகும்.

ஹோமம் முடிந்த பிறகு ஹோமத்தில் உள்ள பஸ்மத்தை (சாம்பலை) வஸ்திர காயம் (துணியில் வடிப்பது) செய்து வடிகட்டி விபூதியான பஸ்மம் போக, மீந்துள்ள ஹோமப் பொருட்களை பிரதமை, சதுர்த்தி, கார்த்திகை நாட்களில் புனித நதியிலோ, கடலிலோ கரைத்து விடுதல் வேண்டும். ஹோமத்தில் இடப்பட்ட காசுகளைப் பிரசாதமாக வீட்டில் வைத்துப் பூஜித்தால் இலட்சுமி கடாட்சம் பெருகும். இவ்வாறாக 100, 200 ஹோமங்களில் இடப்பட்ட நாணயங்களை இறைப் பிரசாதமாக வைத்து, பல நூறு ஆண் டுகளாக, தலைமுறை தலைமுறையாய் பூஜிப்போரும் உண்டு.

ஹோம குண்டங்களில் வைக்கப் பட்ட செங்கற்களை வைத்துக் கொண்டு வீடு கட்டுதல் மிகவும் விசேஷமானதாகும். நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் உபயோகப்படுத்தப்பட்ட கற்கள் பலவும் நூற்றுக் கணக்கான ஹோம குண்டங்களில் இருந்து பெறப்பட்டவையே ஆகும். ஹோம குண்டக் கற்களுக்குத் தனி மகத்துவம் உண்டு.
எத்தனையோ கோடி தேவதைகள் ஆவாஹனம் ஆகின்ற ஹோம் குண்டங்களில் உறையும் கற்கள் என்றால் எத்தகைய மகத்துவம் பெற்றதாக அவை இருக்கும் என்பதைச் சற்றே சிந்தித்துப் பாருங்கள். குறிப்பாக, கட்டிடங்கள் கட்டும் பொழுது நிருதி திக்கு எனப்படும் தென் மேற்குத் திக்கில் ஹோமகுண்ட கற்களை வைத்து தொடங்குதல் மிகவும் சிறப்புடையதாகும். இதே போன்று, ஹோம குண்டத்திற்கான மணலும் கட்டிடத்திற்குப் பயன்படுமானால், கட்டிடத்திற்கும், அதில் வசிப்போருக்கும், அது சுபிட்சத்தைப் பெற்றுத் தரும்.

ஹோமம் – சில குறிப்புகள்

உடல் சுத்தியுடன் உள்ள அனைவரும் எளிய முறையில் இல்லத்திலேயே எளிய ஹோமத்தைச் செய்திடலாம். மாதமொருமுறையேனும் அனைத்து இல்லங்களிலும் ஹோம வழிபாடு நடைபெற்றால் சமுதாயத்தில் தீவினை சக்திகள் அழிந்து நல்ஒழுக்ககமும் சாந்தமும் அமைதியும் நிலவும்.
இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவதுமிகச் சிறந்த சமுதாய தர்மமாகும். எவ்வாறு ஸ்ரீ ஐயப்ப விரதத்தில் உள்ள சில பங்கங்களைச் சுட்டிக் காட்டி வருகின்றோமோ அதே போல தற்காலத்தில் ஹோம வழிபாட்டில் நிலவுகின்ற சில குறைபாடுகளையும் அவற்றைக் களையும் பொருட்டு அவற்றையும் எடுத்துரைக்கக் கடமைப் பட்டுள்ளோம். ஏனென்றால், காலப் போக்கில் ஒவ்வொரு இறை வழிபாட்டிலும் மனிதனுடைய சௌகரியங்களுக்கு ஏற்ப பலவிதமான புது நியதிகள் புகுத்தப்பட்டு விடுகின்றன. இவற்றைக் களைவது என்பது மிகவும் கஷ்டமாகி விடுகின்றது. இதனால் தான் தற்காலத்தில் எந்த வழிபாட்டிலும்/ பூஜையிலும்/ஹோமத்திலும் பரிபூரணமான, முழுமையான பலன்களைப் பெற முடியாமற் போகிறது! எனவே ஆரம்பத்திலேயே இவற்றைச் சுட்டிக் காண்பித்தோமேயானால் அன்பர்கள் அவற்றைத் திருத்திக் கொள்வதற்கு ஏதுவாக இருக்கும் அல்லவா!

1. ஹோம குண்டத்திற்கான மணல் பெரும்பாலும் புனித நதிப் படுகையிலிருந்தே பெறப்படுவது சிறப்புடையது ஆகும், அல்லது இதற்குரிய நல்வாய்ப்பு கிட்டாவிடில், கிடைக்கின்ற மணலை நன்கு சுத்தப்படுத்தி கங்கை. காவிரி போன்ற புனித நீரைத் தெளித்து “ஸ்ரீ பூமாதேவ்யை நம: ஓம் பூமா தேவியே போற்றி” என்று 108 முறையேனும் துதித்து மிருத்திகா பூஜை செய்த பிறகே அதனை ஹோம குண்டத்தின் அடித் தளமாகப் பயன்படுத்துதல் வேண்டும்.

2. ஹோம குண்டத்தில் பிள்ளையார் சுழியோ அல்லது யந்திரங்களோ, சக்கரங்களோ வரைகையில் சூரிய விரலான வலது மோதிர விரலைக் கொண்டே அவற்றை வரைதல் வேண்டும்.
மணலில் நிருதி திக்கில் (தென்மேற்கு) ஒரு சூலமோ அல்லது சங்கு, சக்கரமோ வரைந்து இருப்பது சிறப்புடையது ஆகும். ஹோம குண்டத்திற்குப் பயன் படும் செங்கற்கள் உடைபடாது பின்னமில்லாது சுத்தமாக, புதிதாக ஒரு முறை ஹோமத்திற்குப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களை மீண்டும் பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.ஒவ்வொரு ஹோம செங்கலுக்கும் சந்தனம், விபூதி, குங்குமம், மஞ்சள் பூசிடுக!

3. ஹோம வழிபாடு என்பது அக்னி வழிபாடு ஆகையினால் ஹோமத்தை நடத்துகின்றவர் (ஹோம கர்த்தா) அக்னி திக்கான தென் கிழக்குத் திசையில் அமருவது தான் உத்தமமானது. ஹோமத்தில் பங்கு கொள்கின்ற அனைவரும், தரையில் அமராது, பலகையின் மீதோ, துணியிலோ, தர்ப்பைப் பாயின் மீதோ தான் அமர வேண்டும். இல்லையெனில் இதில் ஹோமத்தின் பலன்களாகக் கிடைக்கின்ற ஆன்மீகக் கதிர்கள் உடலில் சேராது பூமியில் இறங்கி விடும்.

4. ஹோமத்திற்காக சுத்தமான பசு நெய்தான் ஆஹதி அளிக்கப்பட வேண்டும். உலோகப் பாத்திரங்களைத் தவிர்த்து மரக் கிண்ணம், மரப் பாத்திரம் அல்லது வசதியிருப்பின் வெள்ளி, தங்கக் கிண்ணங்களையே வைத்திடுக! தென்னை, பனை ஓலையினால் ஆன தொன்னை ஓலைப் பாத்திரமும் சிறப்பானதே!

5. ஹோமத்தில் ஆஹுதியாக இடும் பொழுது மரக்கரண்டியை அல்லது மாவிலையை மட்டும் பயன்படுத்துதல் வேண்டும். எவர்ஸில்வர் ஸ்பூன் அல்லது வேறு உலோகத்தினால் ஆன ஸ்பூனிலோ பசு நெய்யை எடுத்து நேரடியாக அக்னியில் ஊற்றுவது சாபங்களையே பெற்றுத் தரும்.

6. ஹோம மரக் கரண்டியும் குறித்த சில மரங்களினால் செய்யப்படுவதே நன்மை பயக்கும். மா, பலா, தேக்கு, சந்தனம், வேங்கை போன்ற மரங்கள் ஏற்புடையவை. புளி, சவுக்கு போன்ற விறகு மர ஹோமக் கரண்டிகளைக்கண்டிப்பாக உபயோகிக்கக் கூடாது.

7. ஹோமத்தில் இடப்படும் ஆஹுதிகள் அரசு, ஆல், வேம்பு போன்ற மூலிகை மரப் பொருட்களாக இருக்க வேண்டுமே தவிர விறகுகளையோ சிராத் தூள்களையோ ஒருபோதும் பயன்படுத்துதல் கூடாது. இதுவே தற்போதைய ஆலய ஹோமங்களிலும், பெரும்பாலான இல்லற ஹோமங்களிலும் கடைபிடிக்கப்படுகின்ற தவறான வழக்கம் ஆகும். தயவு செய்து இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவும். ஹோம குண்டம் அடுப்பு அல்ல, எல்லாவற்றையும் உள்ளே தள்ளுவதற்கு!

8. ஆண்கள், உடல் சுத்தியுடன் பெண்கள் இருவருமே ஆஹுதிகள் அளித்திடலாம். ஆஹுதி அளிக்கும் பொழுது தர்ப்பையிலான மோதிரத்தை (பவித்திரம்) அணிதல் விசேஷமானதாகும். மிகவும் சக்தி வாய்ந்ததெய்வீக அக்னிக் கதிர்களை நேரடியாக நம் சரீரத்தில் பெற முடியாதாதலின், தர்பையே இதனை நமக்குப் பெற்று தருகிறது.

9. ஆஹுதி அளிக்கப்படும் பொழுது “சுவாஹா” என்று சொல்லப்படும் பொழுது அளிக்கப்படும் ஆஹுதிகளை மட்டும்தான் “சுவாஹா” எனப்படும் தேவமூர்த்தி பெற்று அந்தந்த தேவதா மூர்த்திகளுக்கு அளிக்கின்றாள்.

10. ஹோமம் நடக்கும் பொழுது தேவையில்லாமல் அக்னியைக் கிண்டுவதோ, அனாவசியமாக விசிறி, காற்றை எழுப்புவதோ கூடாது. ஏனென்றால் அக்னியை ஆசனமாகக் கொண்டு பல கோடி தேவதைகள் தேவதா மூர்த்திகள் ஹோம குண்டத்தினுள் உறைகின்றனர். பசு நெய் தவிர வேறு எண்ணெயை, ஒரு போதும் அக்னி எழுப்புதற்காகப் பயன் படுத்துதல் கூடாது.

12. ஹோமப் புகை, மிகுந்த தெய்வீக சக்தி உடையதாகையால் இயன்றவரையில் ஹோமப் புகையை சுவாசிக்கப் பழகிக் கொள்ள வேண்டும். ஒரு முறை உங்கள் இல்லத்தில் எழுப்பப் படுகின்ற ஹோமப் புகையினால் ஒரு மாதத்தில் உங்கள் வீட்டில் சேருகின்ற தீவினைச் சுழல் களை எளிதில் கழித்து விடலாம் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆண்டாண்டு காலமாக மனதிலும் நெஞ்சிலும் உள்ள தீயவினைப்படிவுகளை ஹோமப் புகை ஒன்றுதான் நீர் வடிவில் அவற்றை வெளியேற்றுகின்றது.

13. ஒரு ஹோம வழிபாடானது பல்லாயிரக் கணக்கான அர்ச்சனை, ஆராதனைகளின் பலன்களைத் தரவல்லது ஆகும். எனவே இது மிகச் சிறந்த சமுதாயப் பணியாகப் பரிமளிக்கின்றது. வியாபார/ வருமான நோக்கு இல்லாமல் பொது மக்களின் நன்மைக்காக இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவதே தெய்வீகமானது!

14. தனிப்பட்ட முறையில் ஹோமம் செய்வதை விடப் பலரும் சேர்ந்து சத்சங்கமாக, கூட்டு வழிபாடாக ஹோம வழிபாட்டை மேற்கொள்தலே உத்தமமானது.

15. ஹோமம் என்றால் அக்னி ரூபத்தில் தெய்வ மூர்த்தியை வழிபடுதல் என்று பொருள் ஆகும். ஹோமத்தில் இடப்படுகின்ற ஆஹுதிகளின் சக்தியை “சுவாஹா” தேவதை பெற்றுத் தந்து அந்தந்த லோகத்தில் உள்ள தெய்வ மூர்த்திகளிடம் சமர்ப்பிக்கின்றன. ஸ்ரீ அக்னி மூர்த்தியின் பத்னி தேவியே ஸ்ரீ சுவாஹா தேவி ஆவாள்.

16. ஹோம வழிபாட்டில் ஸ்ரீ அக்னி மூர்த்தியானவர் தானே ஒரு அக்னி ஆலயத்தை ஏற்படுத்தி அதில் நம்மை வழிபடுவதற்கு வழிவகை செய்கின்றார். எனவே ஹோம வழிபாடு என்பது அக்னியால் ஆன ஆலயத்தில் நாம் வழிபாட்டைச் செய்வது ஆகும்.

17. நம்முடைய வாழ்க்கையில் ஒரு பெரும் பங்கு வகிப்பது அக்னியாகும். சமையல், நிலவொளி, வீட்டிற்கு அலுவலகத்திற்கு வெளிச்சம், தொழிற்சாலை போன்ற பல இடங்களிலும் அக்னி நமக்குப் பெருமளவில் உதவி செய்கின்றது. ஆனால் இதற்காக என்றைக்கேனும் அக்னி பகவானுக்கு நன்றி செலுத்திப் பிரார்த்தனை செய்துள்ளோமா ? வீட்டில் தீபம் ஏற்றுவது கூட ஒரு வகை அக்னி வழிபாடே ஆகும். எனவே நம்முடைய வாழ்க்கைக்குப் பெரிதும் உதவி வருகின்ற ஸ்ரீ அக்னி பகவானை வழிபடுவதற்காக நாம் மாதந்தோறும் ஒரு சிறிய அளவிலான எளிய ஹோமத்தையேனும் செய்து வருதல் வேண்டும்.

18. தஞ்சைப் பகுதிகளில் அக்னி பூஜைக்கு செப்பாலான மிகவும் சிறிய அளவிலான ஹோம குண்டங்கள் கிடைக்கின்றன. இதனை வீட்டில் வாங்கி வைத்துக் கொள்வார்களேயானால் மிகச் சிறிய அளவிளான தினந்தோறும் உங்கள் குழந்தைகள் மூலம் ஹோமத்தை செய்து அவர்களுக்கு நல்ல இறை பக்தியை அடித்தளமாக ஏற்படுத்தித் தரலாம் அல்லவா! இதனைத்தான் அக்காலத்தில் சமிதா தானம், அக்னி சந்தானம், ஒளபாசனம் போன்ற அக்னி வழிபாடாக நம் பெரியோர்கள் போற்றி வந்தனர்.

19. ஹோம வழிபாட்டை நாம் சரிவரக் கடைபிடிப்பது இல்லை. சோம்பேறித்தனம், பக்தியின்மை, நேரமின்மை என்ற சாக்கு காரணமாக ஹோம வழிபாட்டை அறவே ஒதுக்கிவிட்டோம். மேலும் ஹோமத்தை நடத்தித் தருகின்றவர்களும் மிகவும் அதிகமான தொகையைக் கேட்பதால் பெரும்பலானோர் ஹோம வழிபாட்டையே மறந்து ஒதுக்கி விட்டார்கள். ஹோம வழிபாட்டிற்கு எத்தகைய கட்டணத்தையும் வசூலிக்கக் கூடாது. ஹோமம் நடத்த கட்டணம் பெறுதல் என்றால் வேதத்தையே விற்பது போல் ஆகும். அக்னி தெய்வ மூர்த்தியை வழிபடுவதற்குப் பேரம் பேசலாமா? ஆனால் ஹோம வழிபாட்டை இலவசமாக நடத்தித் தருகின்ற உத்தமர் களுக்குத் தாமே மனம் உவந்து சன்மானம் அளிப்பதில் தவறு கிடையாது. இந்தத் தொகையைத் தந்தால் தான் ஹோமத்தை நடத்தித் தரமுடியும் என்று விதிப்பது அக்னியையே விலை பேசுவது போலாகி பெரும் சாபங்களைப் பெற்றுத் தரும்.

20. பிறருக்கு இலவசமாக ஹோமத்தை நடத்தித் தருவது என்பது மிகப் பெரிய தர்மம் ஆகும். இத்தகைய பாக்கியத்தைப் பெற்றோர் ஒரு சிலரே. இவ்வாறு இதனை இலவசமாக நடத்தித் தருவோருக்கும் பலவிதமான அற்புதமான பலன்கள் காத்துக் கிடக்கின்றன. எனவே பெறுதற்கரிய இந்த மானுடப் பிறவியில் ஹோம வழிபாட்டை நன்கு அறிந்தவர்கள் இயன்ற வரையில் ஏழை எளியோருக்கும் இந்த ஹோம வழிபாட்டின் பலன்கள் சென்றடையும் வண்ணம் அவர்களுக்கென இலவசமாகவே ஹோமத்தை நடத்த வேண்டுகின்றோம். இலவசமாக ஹோம பூஜையை நடத்தித் தருவது கலியுகத்தின் மிகப் பெரிய தர்மமாக அமைந்திருக்கின்றது என்பதை மறந்து விடாதீர்கள்.

21. நம்முடைய கலியுக உணவு முறையில் மூலிகைப் பொருட்கள் இடம் பெறுவதே கிடையாது. பலவிதமான நாட்டு மருந்து பொருட்களும், மூலிகைப் பொருட்களும் உடலில் சேர்ந்தால் தான் நமது உடல் திடகாத்திரமாகவும், ஆயுள் விருத்தியுடனும் விளங்கும். ஹோம குண்டத்தில் பலவிதமான மூலிகைப் பொருட்களும், தெய்வீக சக்தி நிறைந்த பலவிதமான திரவியங்களும் சேர்க்கப் படுகின்ற பொழுது அவற்றின் சாரமானது வாயு வடிவத்தில் நம் உடலைச் சேருகின்றது. தலை முதல் பாதம் வரை அனைத்து தேகங்களுக்கும் 72,000 நாடி நரம்புகளுக்கும் இத்தகைய தெய்வீக மூலிகா பொருட்களின் வாயு பந்தன சக்தியானது ஹோமப்புகை மூலம் சேருவதால் இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தருவதோடு, மனதிற்குத் தெளிவையும், உற்சாகத்தையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது.

சரபேஸ்வர போற்றிகள்

ஸ்ரீ சாராபேஸ்வரரின் 108 போற்றிகள்

கடந்த பல இதழ்களாக, பரம்பொருளாம் சிவபெருமானின் அவதாரமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியின் அவதார மகிமை பற்றி சித்புருஷர்கள் அருளிய வகையில் அளித்து வருகின்றோம் அல்லவா! கலியுகத்திற்கே உரித்தான வன்முறை, தீய செயல்கள், பகைமை, கொடுமை போன்றவை அதிகரித்து வருவதால், இவற்றுக்கிடையேதான் எதிரிகளின் பகைமையை எதிர்த்து எதிர் நீச்சல் போட்டவாறுதான் நம் வாழ்க்கை நடைபெற்று வருகின்றது.

கலியுகத்தில் ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடானது மக்களுக்குப் பெரும் பிரச்னையாக இருக்கின்ற பகைமையை எதிர்த்து நின்று, வென்று, அதனை அழித்து, பகைவர்களையும் திருத்தி, நல்வாழ்க்கை வாழ்வதற்கான நல்லறத்தை அருள்வதே ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடு ஆகும்.

ஆகஸ்டு இதழில் ஸ்ரீ சரபேஸ்வரரின் 108 போற்றிகளில் 52 போற்றிகளை அளித்திருந்தோம். ஏனையவற்றை இங்கு தொடர்கின்றோம்.

தாமே அரைத்த மஞ்சள், சந்தன உருண்டைகளாலும் நல்ல தூய்மையான வெண்ணை உருண்டைகளாலும் இப்போற்றிகளை ஓதி சரபேஸ்வரரை அர்ச்சித்து வழிபடலாம். பிரதோஷ நேர வழிபாடும் தினசரி பிரதோஷ நேரமான மாலை 4-30 to 6 வரையிலான நித்திய பிரதோஷ நேரத்தில் ஸ்ரீசரபேஸ்வரரை வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

ஸ்ரீ சரபேஸ்வர 108 போற்றி

53.ஓம் ஐம் திண்ணிய நெஞ்சம் தருவாய்போற்றி
54.ஓம் ஐம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
55.ஓம் ஐம் தீயவர் தொல்லை தீர்ப்பாய்போற்றி
56.ஓம் ஐம் திருவருள் தருவாய் சரபேஸ்வரா போற்றி
57.ஓம் ஐம் வழித்துணையாய் வருவாய் போற்றி
58. ஓம் ஐம் வலம் சுழித்து எட்டு திசையும் காப்பாய் போற்றி
59. ஓம் ஐம் நஞ்சை புஞ்சை நலமுடன் காப்பாய் போற்றி
60. ஓம் ஐம் நம்பி என்னை வருவோர்க்கு அருள்வாய் போற்றி
61. ஓம் ஐம் நமசிவாய திருவே போற்றி
62.ஓம் ஐம் சிவ சூரியா போற்றி
63.ஓம் ஐம் சிவச் சுடரே போற்றி
64.ஓம் ஐம் அட்சர காரணனே போற்றி
65.ஓம் ஐம் ஆதி சிவனே போற்றி
66.ஓம் ஐம் கால பைரவரே போற்றி
67.ஓம் ஐம் திகம்பரா போற்றி
68.ஓம் ஐம் ஆனந்தா போற்றி
69.ஓம் ஐம் கால காலனே போற்றி
70.ஓம் ஐம் காற்றெனக் கடுகி உதவும் தேவா போற்றி
71. ஓம் ஐம் கர்பப் பையைக் காப்பவனே போற்றி
72. ஓம் ஐம் காத்து கருப்புகளை அழிப்பவனே போற்றி
73. ஓம் ஐம் ஓம் எரி ஓம்பலின் அவிசை ஏற்பவனே போற்றி
74. ஓம் ஐம் கல்லாலின் கீழ் அமர்ந்த தேவா போற்றி
75. ஓம் ஐம் வல்லார்கள் நால்வரும ்தோத்தரித்த தேவா பேற்றி
76. ஓம் ஐம் எல்லாமாய் அல்லதுமாய் இருந்த சரபா போற்றி
77. ஓம் ஐம் முக்திக்கு வித்தாகும் மூல குருவே போற்றி
78.ஓம் ஐம் தெவிட்டாத சின்மயச் சுடரே போற்றி
79. ஓம் ஐம் விரும்பி நல்விளக்கு தீபத்தில் வருபவனே போற்றி
80. ஓம் ஐம் அமரர் படையுடைத் தலைவா போற்றி
81. ஓம் ஐம் நீலக் கையில் மான் தூக்கி நின்றோனே போற்றி
82. ஓம் ஐம் சிவந்த மழுவும் தூக்கிச் சிறந்தோனே போற்றி
83. ஓம் ஐம் எங்கிருந்து அழைத்தாலும் வருவோனே போற்றி
84. ஓம் ஐம் சூலினித் தாயின் சுகத்தோனே போற்றி
85 ஓம் ஐம் ப்ரத்யங்கிரா தேவியின் பரப்ரும்மமே போற்றி
86.ஓம் ஐம் செம்பொன் அம்பலத்திலே ஆடும் அரசே போற்றி
87.ஓம் ஐம் நகமே ஆயுதமாய்க் கொண்ட நமசிவாயமே போற்றி
88.ஓம் ஐம் பெருமாளுக்கும் நான்முகனுக்கும் நலம் தரும் தெய்வமே போற்றி
89. ஓம் ஐம் உள்ளுவார் உள்ளத்தில் உறைவாய் போற்றி
90. ஓம் ஐம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி
91. ஓம் ஐம் திருவுக்கும் திருவான சிவனே போற்றி
92. ஓம் ஐம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி
93. ஓம் ஐம் வேதமெலாம் தொழும் தெய்வமே போற்றி
94. ஓம் ஐம் வாழி வாழி சாலுவேசா வாழி போற்றி
95. ஓம் ஐம் நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
96. ஓம் ஐம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
97. ஓம் ஐம் பிரத்தியங்கிரா ப்ராணநாதா போற்றி
98. ஓம் ஐம் சூலினியின் சூட்சும தேவா போற்றி
99. ஓம் ஐம் கவஷ ஜலூஷா குருதேவா போற்றி
100. ஓம் ஐம் இதூஷா மாதா புத்ர சேவித தேவா போற்றி
101. ஓம் ஐம் மூவர்க்கும் முந்திய முதல்வா போற்றி
102. ஓம் ஐம் முக்தர்கள் ஜீவ ஒளியே போற்றி
103. ஓம் ஐம் முழுதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
104. ஓம் ஐம் அடியார்க்கு அருளும் அடியாராய் இருக்கும் ஈசனே போற்றி
105. ஓம் ஐம் அங்கமெல்லாம் அருட்ஜோதி அருள் கூட்டும் சுயஞ்ஜோதியே போற்றி
106. ஓம் ஐம் வெள்ளிக்கு மரணமிலா வழி தந்த விடிவு ஜோதியே (வெள்ளி = சுக்கிர கிரஹம்) போற்றி
107. ஓம் ஐம் குருவுக்கு உரு தந்த உயர் ஜோதியே போற்றி
108. ஓம் ஐம் பூரண சரபேசா போற்றி போற்றி ||

ஸ்ரீஐயப்ப விரத மகிமை

தற்போதைய ஸ்ரீ ஐயப்ப விரதத்தில் காணுகின்ற பெரும் பிழைகளையும், குறைபாடுகளையும் நாம் கடந்த பல இதழ்களில் சுட்டிக் காட்டி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகளையும் அளித்து வருகின்றோம். பிரபஞ்சத்தின் பிரதான விரத நாயக தெய்வ மூர்த்தியாக விளங்குகின்ற ஸ்ரீ ஐயப்ப சுவாமியை, நன்முறையில் விரதங்களைக் கடைபிடித்து வழிபடுவதால் தான் நாம் பரிபூரணமான பலன்களை அடைய முடியும். அரைகுறையான விரதத்தினால் என்ன பயன்?

இறைப் பரம்பொருள் ஒன்றே! சர்வேஸ்வரனே நம்முடைய பலவிதமான அபிலாட்சைகளைத் தீர்ப்பதற்காகவும், துன்பங்களைத் துடைப்பதற்காகவும், பலவிதமான வரங்களை அருள்வதற்காகவும், முருகனாகவும், பிள்ளையாராகவும், உக்கிரப் பிரத்யங்கிரா காளியாகவும், பத்ர காளியாகவும், தத்தாத்ரேயராகவும், ஸ்ரீ அம்ருத மிருத்யுஞ்ஜயராகவும், ஸ்ரீ ஐயப்ப சுவாமியாகவும் பல்வேறு தெய்வ அம்சங்களுடன் அவதரித்துள்ளார். எனவே எந்த தெய்வ மூர்த்திக்கு எத்தகைய வழிபாடுகள் விசேஷமானவையோ அவற்றைக் கடைபிடித்தால்தான் அவ்வழிபாடு பரிபூரணமடையும் என்பதை நாம் நன்றாக அறிந்து கொள்ள வேண்டும்.

ஸ்ரீ ஐயப்ப சுவாமியின் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா என்று பலரும் கேட்டுள்ளார்கள். நிச்சயமாக, தாராளமாக ஸ்ரீ ஐயப்பனின் எந்தப் படத்தையும் இல்லத்தில் வைத்து வழிபடலாம். ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி, ஸ்ரீ ஐயப்ப சுவாமி, ஸ்ரீ ஆஞ்சநேயர் போன்ற தெய்வ மூர்த்திகளின் படங்களை வீட்டில் வைத்து வழிபடுவது பற்றிப் பலவிதமான சந்தேகங்கள் எழுந்துள்ளன. இதில் எவ்வித சந்தேகமும் எழுவதற்கு இடமே இல்லை! அனைவரும் இம்மூர்த்திகளின் படங்களை வீட்டில் வைத்து நன்றாக, தாராளமாக வழிபடலாம்.

கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகே ஐயாவாடி கிராமத்தில் ஸ்ரீ உக்கிரப் பிரத்யங்கிராவின் ஆலயம் உள்ளது! ஸ்ரீ சரபேஸ்வரரை மணம் புரிந்த காளிதேவி! அனைத்து நல்வரங்களையும் தரவல்லவள்! ஐந்து வெவ்வேறு விதமான இலைகளை உடைய அற்புத விருட்சம் இங்குள்ளது. இந்த விருட்சத்திற்கு வெள்ளிக்கிழமை அமிர்த யோகத்தில் மஞ்சள் பூசி தாலிச் சரடு சார்த்தி வழிபட்டு வந்தால் நல்ல கணவன் வாய்த்திடுவான்

ஸ்ரீ ஐயப்ப சுவாமியும் விதவிதமான தோற்றங்களில் காட்சி தந்து நம்மை ஆட்கொள்கின்றார் அல்லவா! புலியில் அமர்ந்த ஸ்ரீ ஐயப்பன், யோக பட்டையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ள ஸ்ரீஐயப்பன், பூர்ண புஷ்கலையுடன் காட்சி அளிக்கின்ற ஸ்ரீ ஐயப்பன், யோகப் பட்டம் கூடிய தவத்திலேயே விதவிதமான கோலங்களுடன் உள்ள ஐயப்பன் என்று இவ்வாறாக ஐயப்பனுடைய திருக்கோலங்களே ஆனந்தம் அளிக்கும் வகையில் பல உள்ளன.

புலி மேல் அமர்ந்திருக்கும் ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வருவதால், நோய் நிவர்த்தியும், ஆயுள் விருத்தியும் கிட்டும். பலவிதமான ரோகங்களினால் பல வருடங்களாக அவதிப்படுவோர் நிறைய உண்டு. சர்வ ரோக நிவாரணியாக விளங்குகின்ற புலிப்பாலை எடுத்து வந்த ஸ்ரீ ஐயப்ப சாஸ்தாவின் புலியாசன உருவத்தைச் செவ்வாய் தோறும் மிகவும் சிரத்தையுடன் வழிபடுவதால் பலவிதமான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

செவ்வாய் தோறும் குறிப்பாக செவ்வாய் ஹோரை நேரத்தில் (காலை 6-7 பகல் 1-2, இரவு 8-9) புலியை வாகனமாகக் கொண்ட ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டுச் சந்தனம் அரைத்து இட்டு இச்சந்தனத்தையே பிரசாதமாக தினந்தோறும் சிறிது உண்டு வந்தால் கடும் நோய்களுக்கும் நோய் நிவாரணம் கிட்டும்.

யோக பட்டையுடன் அதாவது குத்திட்டு உட்கார்ந்து யோக நிலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பனை யோக பட்டம் தாங்கிய ஐயப்பன் என்று குறிப்பிடுவர். வறுமையில் இருந்து விடிவு பெற்று நல்ல செல்வத்தை அடையவும், இழந்த சொத்தை, செல்வத்தைப் பெறவும் கல்வியில் நன்கு விருத்தி அடையவும், நியாயமான, தார்மீகமான புகழைப் பெறவும் யோக பட்டையுடன் கூடிய ஐயப்பனின் வழிபாடு மிகவும் உதவுகின்றது.

புதனன்று சுக்ர ஹோரையிலும் வியாழனில் குரு ஹோரையிலும், யோக மூர்த்தி ஐயப்பனை வழிபட்டு புதன் அன்று பச்சை நிற ஆடைகளையும், வியாழனன்று மஞ்சள் நிற உணவு வகைகளையும் படைத்துத் தானமாக அளித்து வந்தால் நியாயமான செல்வத்தையும், முறையான கல்வியையும், பெற வேண்டிய நற்புகழையும் நிச்சயமாகப் பெறுவர்..

பூரண, புஷ்கலையுடன் காட்சி அளிக்கின்ற ஐயப்பனின் ஸ்வரூபம் மிகவும் விசேஷமானதாகும். திருமணத் தடங்கல்கள் தீர்வதற்கும், பில்லி, சூன்யம் போன்ற தீவினை மந்திரங்களின் துர் சக்திகளைப் போக்குவதற்கும் இம்மூர்த்தியின் வழிபாடு பெரிதும் உதவும். பூர்ண புஷ்கலை தேவியர்களுடன் சேர்ந்து காட்சி அளிக்கின்ற ஸ்ரீ ஐயப்பனுக்கு மிகவும் ப்ரீதியானது நாகலிங்க புஷ்பமாகும். புதன், வெள்ளிக் கிழமைகளில் பூரண புஷ்கலா சமேத ஸ்ரீ ஐயப்ப சுவாமியை வழிபட்டு வருதலால் கணவன், மனைவியரிடையே புனிதமான அன்பு பெருகும்.

திங்கள் - மலர் வழிபாடு

ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு உரித்தான விசேஷமான புஷ்ப வழிபாடுகளும் உண்டு. திங்கள் அன்று நாகலிங்க புஷ்பத்தால் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை அர்ச்சித்து வழிபட்டால் ஆழ்ந்த தெய்வ நம்பிக்கையும், பக்தி நிலையும் சிறப்புடன் மேம்படும். இன்று சுவாமிக்கு நாகலிங்க புஷ்பம் சார்த்தி அங்கப் பிரதட்சிணம் செய்தால் இல்லத்தில் உள்ள பிரச்னைகள் தீரும். குறிப்பாக கணவர், மனைவியரிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் அகன்று சுமுகமான இல்லற வாழ்க்கை அமையும்.

இதனால் பல வருடங்களாக நீடித்து வந்துள்ள உறவுப் பகையானது தீர்ந்து, பிரிந்த உறவினர்கள் சந்தோஷமாக மீண்டும் ஒன்று கூடி பழைய உறவுகள் நன்முறையில் தொடரும். அமாவாசை, பௌர்ணமியுடன் கூடுகின்ற திங்கள் அன்று மகிழம்பூ மாலை சார்த்தி ஸ்ரீ ஐயப்பனை வழிபட்டு வருவதால் பல விதமான குழப்பங்களுக்கும் முடிவு ஏற்பட்டு மன சாந்தி கிட்டும்.

வியாபாரிகளும், பெரிய பதவியில் உள்ளவர்களும், நிரந்தரமில்லாத உத்யோகத்தில் இருப்பவர்களும் தினந் தோறும், நித்ய கண்டம் பூர்ண ஆயுசு என்பது போல பலவிதமான பிரச்னைகளுக்கு இடையே தான் இரவில் உறங்கச் செல்கின்றனர். மீண்டும் தூங்கி எழுந்தாலோ அதே பிரச்னைகள் தொடர்கின்றன. இத்தகையோர் திங்கள் கிழமையுடன் பெளர்ணமி அல்லது அமாவாசை, மாத சிவராத்திரி கூடும் நாளில் மகிழம் பூவால் ஸ்ரீ ஐயப்ப சுவாமியை மேற்கண்டவாறு அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மன சாந்திக்கு வழி பிறக்கும்.

செவ்வாய் - மலர் வழிபாடு

செவ்வாய்க் கிழமை அன்று சிகப்பு அரளியுடன் வெள்ளை அரளியும் சேர்த்து ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு அலங்காரம் செய்து பூஜிக்க வேண்டும், இன்று சந்திர ஹோரை நேரத்தில், காலை மல்லிகைப் பூவினால் கிரீடம் செய்து சுவாமிக்கு அணிவித்து பூஜித்தலும் சிறப்புடையது. இதனால் வெளிநாடுகளில் உள்ள உறவினர்கள் மற்றும்சொந்தப் பிள்ளை, மாப்பிள்ளை, பெண்களும் நலமுடன் வாழ்வர். மேலும் வியாபாரம் மற்றும் அலுவலகத்தில் பகைவர்களால் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும் இப்புஷ்ப வழிபாடு நல்ல நிவர்த்தியைத் தருகின்றது.

அடிக்கடி பிரயாணங்களை மேற்கொள்வோர் பல விதமான இடையூறுகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இரயில், விமானம், மற்றும் கார் பிரயாணங்களில்தான் எத்தனை எத்தனை இன்னல்கள்! தொடர்ந்து ஹோட்டல் உணவை உண்டால் ஆரோக்கியம் எவ்வகையில் பாதிக்கப்படும் என்பதையும் நாம் நன்கு அறிவோம். இத்தகைய உத்யோகஸ்தர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் பவள மல்லிப் பூக்களால் மாலை தொடுத்து ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்குச் சார்த்தி வர பணியில் நல்ல மாற்றங்கள் கிட்டும். ஆழ்ந்த நம்பிக்கையுடன் இந்த பூஜையைக் கடை பிடிப்போர்க்கு இத்தகைய பிரயாண இன்னல்களிலிருந்து விடுதலை ஏற்பட்டு நல்ல நிரந்தரமான வேலை கிடைப்பதற்கும் பிராப்தம் அமையும்.

புதன் - மலர் வழிபாடு

புதன் கிழமை அன்று மரிக்கொழுந்து, மஞ்சள் நிற ரோஜா புஷ்பம் சேர்த்து சுவாமியை வழிபட வேண்டும். இதனால் பணம் சம்பந்தமான பலவித கர்மவினைகள் தீர்கின்றன. முறையற்ற பண வருவாயினால் ஏற்படுகின்ற தீவினைகள் ஏராளம் ஏராளம்! இது மட்டும் அல்லாது பணம் சம்பந்தமான பிரச்னைகளுக்கும் இது நல்ல தீர்வை அளிக்கின்றது. வியாபாரிகளும், தொழில் அதிபர்களும் பல சமயங்களில் பண நெருக்கடியினால் விதவிதமான இடர்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இவர்கள் புதன் கிழமை தோறும் சுக்ர ஹோரையும் சித்த யோகமும் சேர்ந்துள்ள நேரத்தில் மேற்கண்ட புஷ்ப அர்ச்சனையைச் செய்து வர நிதி நிலைமை சீரடையும்.

புகை பிடிப்போரும், புகை பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த இயலாதோரும், மது அருந்துவோர்களும், புகையிலை போடுவோரும் ஸ்ரீ ஐயப்ப விரதத்தை ஏற்பது கூடாது.

“விரத நாட்களில் மட்டும் இவற்றைத் தவிர்ப்போம், அதன் பின்பு மீண்டும் தொடர்வோம்”, என்பது ஸ்ரீ ஐயப்ப சுவாமியைப் பழிக்கின்ற காரியமாகும். “ஏதோ வருடம் முழுதும் புகை பிடித்துக் கொண்டு இருந்தோமே, ஒரு மண்டலம் புகை பிடிக்காமல் இருக்கின்றோமே, அதுவே பெரிய மாற்றம் அல்லவா!” என்று அவர்கள் தங்களைத் தானே தேற்றிக் கொள்ளலாம். ஆனால் விரதம் முடிந்த பின்னர் புகை பிடித்தலைத் தொடருவதானால் என்ன பயன்? ஒரு சிகரெட்டைப் பிடிப்பதனால் ஏற்படுகின்ற கொடிய வினைகளைப் பற்றி சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். கிட்டத்தட்ட 50 பேர்களுடைய இருதயத்தைச் சுட்டுப் பொசுக்குவது மட்டும் அல்லாமல் ஆயிரக்கணக்கான ஜீவன்களுக்கு விஷக் காற்றைச் செலுத்துகின்றீர்கள்!

சபரிமலைக்குச் சென்று வந்தவுடன் செய்கின்ற காரியமா இது ? என்னே கேவலமான வாழ்க்கை ? 45 நாட்கள் நீங்கள் வேண்டுமானால் புகை பிடித்தலை விட்டதற்காக ஆனந்தப்படலாம். ஆனால் அதனை மீண்டும் தொடருகின்ற பொழுது ஆயிரக்கணக்கான, ஏன் இலட்சக் கணக்கான ஜீவன்களுக்கு கொடிய விஷத்தை அல்லவா அளித்துக் கொண்டிருக்கின்றீர்கள். கொஞ்சம், கொஞ்சமாக ஜீவன்களின் உயிரைப் பறித்து வருகின்றீர்களே! இது நியாயமா? தர்மமாகுமா? விஷக் காற்றைப் பரப்புவதற்கா பெறுதற்கரிய மானுடப் பிறப்பை எடுத்தீர்கள்? பகுத்தறிவுடன் சற்று சிந்தித்துப் பாருங்கள்.

இத்தகைய கெட்ட பழக்கத்தை உடையவர்கள் விரதத்தை ஏற்பார்களேயானால் ஏனைய ஐயப்ப அடியார்கள் அவர்களை இடித்துரைத்துத் திருத்த வேண்டும். புகை, மது, புகையிலை, போதை மருந்து போன்ற தீய வழக்கங்களை முழுவதுமாக விட்டவர்களே ஸ்ரீ ஐயப்ப விரதத்தை ஏற்றிடலாம். “ஐயப்பா ! இந்த விரதத்தோடு புகைபிடிக்கும் பழக்கத்திற்கும், மது அருந்துவதற்கும், புகையிலை போடுவதற்கும் நான் முற்றுப்புள்ளி வைக்கின்றேன்”, என்று மனதார வேண்டி, அவ்விரதத்தோடு இக்கெடுதல்களுக்கு ஒரு முடிவு வைத்தால் தான் ஸ்ரீ ஐயப்பனே மகிழ்ந்து அருளாசி தந்திடுவார்! இவை மீண்டும் தொடர்ந்தால் தெய்வக் குற்றமாகிவிடும்! ஸ்ரீ ஐயப்ப சுவாமியை சாதாரணமாக எடை போடாதீர்கள். விரத நெறிகளை நம் இஷ்டத்திற்கு வளைக்கக் கூடாது!

அடிமை கண்ட ஆனந்தம்

இளம் பள்ளிச் சிறுவனாய் இருக்கும் போதே ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளால் அரவணைக்கப் பெற்று, பாரதத்தின் பல பகுதிகளுக்கும் கடினமான கால் நடைப் பயணம், நூற்றுக் கணக்கான ஆலயங்களில் உழவாரத் திருப்பணிகள், எண்ணற்ற சித்புருஷர்களின்/மஹரிஷிகளின் யோகியரின் தரிசனங்கள், திருஅண்ணாமலை, பர்வதமலை, திருச்சி மலைக்கோட்டை, அய்யர்மலை (சிவாய மலை), பழனி, திருக்கழுக்குன்றம் போன்ற மலைகளின் கிரிவல ரகசியங்கள், பலவித தெய்வ மூர்த்திகளின் அரிய வழிபாட்டு முறைகள், ஹோமம், சக்கர, எந்திர, பூஜா நுணுக்கங்கள் தாத்பர்யங்கள் போன்றவை மட்டுமல்லாது, எத்தனையோ ஆன்மீக நியதிகளையும், தெய்வீக வழிமுறைகளையும் பெற்று, கற்று /ஊட்டியுணர்த்தப் பெற்றவராய் இன்றைக்கும் உபந்நியாசங்களாக நேரடியாகவும், ஸ்ரீ அகஸ்திய விஜயம் மூலமாகவும் பல்லாயிரக் கணக்கானோருக்கு அருள்வழி காட்டுகின்ற பெருமானாரே ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்

சுவாமிகளுடைய குருகுல வாச அனுபூதிகளே இத்தொடரில் அடிமை கண்ட ஆனந்தமாய் மலர்கின்றது.
....சிறுவன் திகைத்து நின்று விட்டான்.

பெரியவருடைய எத்தனையோ அற்புதங்களைக் கண்டு களித்திருக்கின்ற சிறுவன், எதனையுமே அவர் கண்டு கொள்ளாது அனைத்தும் இயற்கையாய்த் தோற்றமளிக்கும் வண்ணம் காஷுவலாக (Casual) பணிந்து கிடக்கின்ற அடக்கமான அவருடைய கோலம் தான் அவனுக்கு “மாபெரும்” அற்புதமாகத் தோன்றும்!

பிரபஞ்சத்தினுள் எங்கும் செல்ல வல்ல சித்புருஷரே, சாதாரண கிழவராய்த் திரியும் இப்பெருங் கிழவர்! இதனை அவன் என்றுமே உணராதவாறு அவரே பல தடைகளைப் போட்டு வந்தார்!

“சித்தி கெடக்கறது ரொம்ப ஈஸிடா! சட்டுனு கெடைக்கற சித்திங்க நெறய இருக்கு! ஆனா, சித்திங்கள் யூஸ் பண்ணினா அகங்காரம், ஆணவம் தாண்டா வரும்! அதனால சித்தி பக்கமே எட்டிப் பாக்கக் கூடாது! நடக்கப் போறதெல்லாம் தெரிஞ்சும் தெரியாதவனாட்டம் இருக்கறது ஒரு பெரிய வேலை/வேதனைதாண்டா! உனக்கு எத்தனையோ சித்திங்களைப் பத்திச் சொல்லியிருக்கேனே ஆனா, உயிருக்கே ஆபத்து வந்தால் கூட ஒரு சின்ன சித்தியைக் கூடச் செஞ்சு பாக்கக் கூடாதுடா!”

பெரியவருடைய எச்சரிக்கைகளைச் சிறுவன் நினைவு கூர்ந்தான்!

ஒரு நாள் பெரியவருடைய லீலையைப் புரிந்து கொள்ளாது தவித்த சம்பவமது! சைக்கிளில் அலட்சியமாக விரைந்து சென்ற ஒருவன் சிறுவனை மோதிக் கீழே தள்ளி விட்டுச் செல்ல...
என்ன ஆனாலும் சிறுவன்தானே!

கோபத்திலும் வெறுப்பிலும் அவனைத்  தண்டிக்கும் பொருட்டு சிறுவன் ஒரு பிரயோக மந்திரத்தை உச்சரிக்க எண்ணிட, ஆனால் எங்கிருந்தோ அங்கு திடீரென்று தோன்றிய பெரியவர் சிறுவனை மடக்கி விட்டார்! “நைனா, இதுதானே வேண்டாங்கறது, இந்தா! கை நீட்டி அங்காளி ஆத்தா மேல சத்யம் பண்ணு! இனிமே எந்த நேரத்துலயும் எந்த மந்திரத்தையும் பிரயோகம் பண்ணமாட்டேன்னு !”
அன்றைக்குச் சிறுவன் செய்த சத்தியம் தான் அன்றும் இன்றும் என்றும் “சிரஞ்ஜீவித சத்ய நெறியாய்” இன்றைய நம் குருமங்கள் கந்தர்வா ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளிடம் ஐக்யமாகிப் பரிமளிக்கின்றது!

“ஒருபோதும் சித்தியை வீணாகப் பயன்படுத்திடாதே! ஒருவருடைய கர்ம வினைகளை முற்றிலுமாக அழிக்க முடியாது. வேண்டுமானால் இன்னொருவர் ஏற்றுக் கொள்ளலாம்! ஆனால் அதற்கு நிறைய தபஸ் செய்தாக வேண்டும்! பாத்திரமறிந்து பிச்சை போடு! உயர்ந்த இறைநிலைகளில் கூட சித்திகள் மாயையாக விளங்கி... அத்தகைய இறைப் பெருநிலைகளில் கூட சோதனைகள் தொடரும்!” பெரியவரின் எச்சரிக்கையிது!

அசைபோடும் நினைவுகளிலிருந்து சிறுவன் மீண்டும் நடப்புலகிற்கு (அதாவது அந்த பாலைவனத்திற்கு) வந்தான்.

ஒரு யோகியுடன்… அந்த மனிதருக்கு பாஷை புரியாது என்று எண்ணியமையால் சிறுவன் ஜாடை மாடையாய் அவருடன் ஏதோ பேசினான். ஆனால் அவரோ சிறுவனுக்கு பதில் சைகைகள் காட்டினாலும் அவர் நேருக்கு நேராக அவனைப் பார்ப்பதைத் தவிர்ப்பதைச் சிறுவன் புரிந்து கொள்வதற்கு நெடு நேரமாயிற்று!

ஏனென்றால் ஒரு புறம் காய்கறிகளை அரிந்து அடுப்பையும் கவனித்தவாறே. அவர் விதவிதமான யோக ஆசனங்களைப் போடுவதைக் கண்ட சிறுவன் தானும் முதலில் பொழுது போக்காகவே (சமையல் முடியும் வரை என்ற எண்ணத்தில்தான்!) அந்த யோகாசனங்களை அவரைப் பார்த்தவாறே செய்திட... அவரோ மிகவும் கடினமான ஆசன முறைகளையும் சைகைகளால் திருத்திச் சரி செய்தார்!

சிறுவனுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது!

“என்ன இது, நம்ப வாத்யார் எவ்வளவோ யோகாசனம், பிராணாயாமம் சொல்லிக் கொடுத்துருக்காரே, இதெல்லாம் அதுல வரலியே! இதையெல்லாம் அவரு மறச்சுட்டாரா....... இல்லை , அவருக்கே ...” சிறுவனுக்கு அதற்குமேல் நினைக்கவே பயமாக இருந்தது!

.....ஆமாம், “அவருக்கே (இதெல்லாம் வாத்யாருக்கே) தெரியாதா?”என்றுதானே அவனுக்கு நினைக்கத் தோன்றியது!...

“சீச்சீ, என்ன கேவலமான நெனப்பு இது! அவருக்காவது இதெல்லாம் தெரியாமலிருப்பதாவது!”.

... குறைந்தது முப்பது யோகாசனப் பயிற்சிகளையாவது விளையாட்டாய்ச் சிறுவன் செய்து முடித்திருப்பான்! அத்தனையும் புதுசோ புதுசு! பெரியவர் கற்றுத் தராதது!

அப்போதுதான் சிறுவன் ஒன்றைக் கவனித்தான் அந்த மண் தரையில் (ஆமாம், சாணியில் மெழுகிய பசுமை நிற மண் தரையது!) ஏதோ இலை, தழைகள் சிதறிக் கிடக்க அவற்றின் மேல் தான் இதுவரை அமர்ந்து கொண்டுதான் அனைத்து யோகாசனப் பயிற்சிகளும்!

(மூலிகைப்) புகையில் பூத்த புர சரண யோகம்!

ஆனால் ஒரு புறம் வயிற்றுப் பசிவாட்டியெடுக்க....... வகை வகையான யோகாசனங்களைச் செய்யச் செய்ய உடலில் ஒரு விதமான உஷ்ணம் ஏறுவதையும் சிறுவன் உணர்ந்தான்.

பத்மாசனம் போன்ற சங்கிலிக் கால் மாற்று ஆசனங்களால் முதுகின் கீழ்ப் பகுதியில், மூலாதாரச் சூடு கிளம்புவதை அவனால் நன்கு உணர முடிந்தது! (இவையெல்லாம் பெரியவர் பின்னால் அளித்த விளக்கங்களாம்!)

போதாக் குறைக்கு... விறகு அடுப்பை மூட்டிச் சமைத்துக் கொண்டிருந்த அந்த யோகி (!) (யோகி என்றே அழைப்போமே, இதிலேன் அந்த மனிதர், அந்த மனிதர் என்று கூறி “குறை” வைப்பானேன்!

... ஆமாம் அந்த யோகி போதாக்குறைக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை விறகை மாற்றிக் கொண்டேயிருந்தார்! முழுசாக எந்த விறகையும் எரிய விடவில்லை ! நன்றாக எரிந்து கொண்டிருந்தால் வேண்டுமென்றே அதனை வெளியில் இழுத்து விட்டு இன்னொரு பச்சை விறகை உள்ளே விட்டு நன்றாகப் புகைய விடுவார்!

... இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால், ”புகைச்சல் கிளம்புகின்றதே, கண் எரிச்சல் வருகின்றதே, கண்களைத் துடைப்போம்”, என்று சிறுவன் எண்ணும் போதுதான் அவர் வேகவேகமாக அவனருகில் வந்து அவனுடைய கைகளைப் பின்னால் பல முத்திரைகளுடன் LOCK IN POSITION (கரச் சக்கர மகுடம்) சங்கிலிப் பின்னலாக வைத்து விட்டால் கைகளை அவர் சொல்லாமல் எடுத்திட முடியுமா?

பின் எப்படிக் கண்களைத் துடைப்பது? வேண்டுமென்றே புகையில் வாட விடுகின்றாரோ?

“ஏதோ வந்தோம், சாப்பிட்டோம் சென்றோம்”, என்று எண்ணி வந்த சிறுவனுக்கு...அந்த யோகியோ ஏதேதோ போக்கு காட்டி, சமையலையே வேண்டுமென்று “இழு இழு” என்று “இழுத்து” நேரத்தைப் போக்குவது போலிருந்தது!

விறகுப் புகை எரிச்சலில்“வெந்ததாக” எண்ணிய சிறுவன் சற்றே எரிச்சலுற்றாலும், அதில் அந்தப் புகையில் ஏதோ “சூட்சும தெய்வீக சக்தி” இருப்பதை உணராமலில்லை !

.... இது மட்டுமா, அந்த யோகியோ ஒரு (பசுஞ்) சாண விரட்டியின் மீது சிறிது தணலைப் பரப்பி அவ்வப்போது சாம்பிராணி தூபம் எழுப்பி அதில் ஏதேதோ தூள் பொடியைச் சேர்த்துக் கொள்வதுமாயிருந்தார்!

சிறுவனுக்கு இதையெல்லாம் பார்க்கப் பார்க்க ரொம்ப ஆச்சரியமாக இருந்தது!

“ஏதேது. இதெல்லாம் நம்ப வாத்யாருக்கு ரொம்பப் புடிச்ச விஷயமாச்சே! இந்த தெய்வீக விஷயங்களையெல்லாம் பார்த்தால் நம்ப வாத்யாருக்குத் தம்பியாக இருப்பார் போலிருக்கிறதே!” என்று சிறுவன் தானே எண்ணி, தானே நகைத்துக் கொள்ள, “களுக்” என்ற எதிர்ச் சிரிப்பு உடனே காற்றில் மிதந்திடவே சிறுவன் தலையைத் தூக்கிப் பார்த்தான்! ஆனால் அவனால் தலையையே தூக்க முடியவில்லையே ஏன் அப்படி ?

ஆமாம், முறையாக பத்மாசனமிட்டுப் பின்புறம் நடு முதுகிற்கு மேல் இரு கைகளையும் நன்றாகக் கட்டிக் கொண்டு பாருங்களேன்! இதற்கு “கடகக் கட்டு” என்று பெயர். கடகம் என்றால் நண்டு! நண்டுப் பிடி போல் கை, உடல், முதுகு தசைகளைச் சேர்த்து இறுகக் கட்டினாற் போல்...!

இக்கடகக் கட்டிலிருந்து தலையைத் தூக்குவது என்றால் கூட “நண்டு போல” அங்குமிங்குமாக உடலைப் பக்கவாட்டில் அசைத்தால்தான் தலையையே தூக்க முடியும்! இந்நிலையில் “இவரென்ன, நம்ப வாத்யாருக்குத் (பெரியவருக்கு) தம்பியாக இருப்பார் போலிருக்கிறதே!”  என்று சிறுவன் எண்ணித் தனக்குள்ளேயே சிரித்தமைக்கு எதிர்ச் சிரிப்பை உதிர்த்தது யார் என்று சிறுவன் யோசித்துத் தலையை நிமிர்த்திப் பார்க்க யத்தனித்ததற்குத்தான் இத்தனை விளக்கங்கள். அவ்வப்போது ஏதோ டம்ளரில் ஏதோ ஒரு கஷாயத்தை வேறு கொடுத்து குடிக்கச் செய்து விட்டார். பழுப்பு நிறக் கஷாயம்! ஊர்ப்பட்ட கசப்பு வேறு!

எதிரே அந்த யோகிதான் நறுக்கென்று சிரித்து விட்டு.. ஏதும் அறியாதவர் போல் அடுப்பிற்குள் கையை விட்டுச் சுட்டுக் கொண்டாற் போல... கையை வெடுக்கென எடுத்திட சிறுவன் ஒன்றை நன்றாகப் புரிந்துகொண்டான், “நிச்சயமாக, நம்ப வாத்யாரைப் போல இவரும் நம்முடைய நினைப்பை எல்லாம் ‘receive’ செய்கிறார். நாம் ரொம்ப உஷாரா இருக்கணும்!”

“ஏதோ சமைக்கிறாரே, நம்ப ஊர்ச் சோறு, சாம்பார், பொரியல் வாசனை வருதுன்னு நெனச்சு உள்ள நுழைஞ்சோம்! இவர் என்னடான்னா, யோகாசனம், சாம்பிராணி தூபம், புகைன்னு போட்டு நம்பளை பெண்டு எடுக்கறாரே!”

சிறு பையன்தானே! விளையாட்டுத் தனமாய்த்தான் முதலில் எண்ணினான். ஆனால் பிற்பாடுதான் இவையனைத்தும் அபூர்வமான மூலிகைகள், மூலிகைக் குச்சிகளின் புகை, புனிதமான வேர்களின் கஷாயம் (பாலைவனப் பகுதிகளில் மட்டும் கிடைக்கும் வேர்கள் தாகம் இல்லாமல் மாதக் கணக்கில் விரதமிருக்கும் ஆன்ம சக்தியைத் தரவல்ல வேர்கள்!), பாலைவன மரப் பிசினில் வரும் அபூர்வமான குங்கிலியம் சேர்ந்த தூபப் புகை என பல ஆன்மீக ரகஸ்யார்த்தங்கள் என்பது தெரிய வந்தன.

ஏதோ இலை, தழையென நினைத்து சிறுவன் அமர்ந்திருந்தானே, அவையனைத்தும் அங்கோல் (அழுஞ்சில்) மர மூலிகை இலைகள் ! பில்லி, சூன்ய, திருஷ்டி, கண்ணேறுகளைப் போக்கி, உடலுக்கு யோகாசன சக்தியைத் தரவல்லதாகும்!

 ........ அப்பப்பா எத்தனை இறை விளக்கங்கள்... ஒரு சாப்பாட்டை முடிப்பதற்குள் சிறுவனுக்கு அவனையுமறியாமல் அந்தப் பாலைவனத்தில் கிட்டிய அனுகிரஹங்கள் எத்தனை யெத்தனை!
இவ்வாறாகத்தான் ஒரு சற்குருவின் வசம் நம்மை ஒப்படைக்கும்போது அவர் மிகவும் சர்வ சாதாரண முறையில் பல தெய்வீகப் பாடங்களை போதித்து, ஊட்டி, உணர்த்துகின்றார். ஆனால் ஆழ்ந்த நம்பிக்கையுடன் அவரிடம் சரணடைய வேண்டுமே!

விஷ்ணுபதி புண்ணிய காலம்

ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய நேர சிறப்பம்சங்கள்

பிரதோஷம் போன்று மிகப் புனிதமான நேரம் ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம்! ஸ்ரீ விஷ்ணுபதி நேரத்தில் செய்யப்படும் அபிஷேக ஆராதனைகள், தான தர்மங்கள், ஹோமம், தீப வழிபாடுகளின் பலா பலன்கள் பல்கிப் பெருகுகின்றன.

ஒரு தமிழ் வருட காலத்தில், மூன்று மாதங்களுக்கு ஒரு முறையாக பெரும்பாலும் மாதப் பிறப்பை ஒட்டி வருகின்ற மகா புண்ணிய தினமே விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று மிகச் சிறப்புடன் போற்றிக் கொண்டாடப்படுகின்றது! பல கோடி யுகங்களாகக் கடைபிடிக்கப்பட்டுத் தற்போது மறைந்துள்ள இதற்குப் புத்துணர்ச்சி தந்திட, கடந்த சில வருடங்களாகவே நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஸ்ரீ விஷ்ணுபதியின் மகிமைகளை, ஆன்மீகச் சொற்பொழிவுகள் மூலமாகவும், ஸ்ரீ அகஸ்திய விஜயம் மாத இதழ் மற்றும் பல ஆன்மீக நூல்கள் மூலமாகவும் ஸ்ரீ விஷ்ணுபதியின் புண்ணிய கால மகிமையைப் பற்றி அரும் பெரும் விளக்கங்களைத் தந்தருள்வதோடு அதனை வைணவ ஸ்தலங்கள் அனைத்திலும் கொண்டாட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி வருகின்றார்கள்.

எவ்வாறு பிரதோஷ உற்சவமானது இன்று நாடெங்கும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றதோ அதே போல ஸ்ரீ விஷ்ணுபதி புண்ணிய காலத்தின் மகத்துவத்தையும் மக்கள் உணர்ந்து பக்த கோடிகள் அனைவரும் இதனையும் நன்கு சிறப்புடன் கொண்டாடி அனைத்து சுபிட்சங்களையும் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் அரும்பாடுபட்டு வருகின்றார்கள். நம் ஆஸ்ரமத்தின் சார்பில் ஒவ்வொரு விஷ்ணுபதி புண்ணியகாலத்திலும் தமிழகத்திலுள்ள பல வைணவத் திருத்தலங்களிலும் ஸ்ரீ விஷ்ணுபதி பூஜை கலியுக மக்களின் நல்வாழ்விற்காக நன்முறையில் அபிஷேக ஆராதனைகளுடனும், தான தர்மங்களுடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இவ்வகையில் கடந்த விஷ்ணுபதி புண்ணிய காலமானது வாணியம்பாடியிலுள்ள ஸ்ரீ அழகு சுந்தரப் பெருமாள் கோயிலில் ஊர் மக்களின் பேராதரவுடனும், ஆலய நிர்வாகிகளின் அற்புதமான ஒத்துழைப்புடனும், இறைச் சேவகர்களின் அன்பார்ந்த ஈடுபாட்டுடனும் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் ஒவ்வொரு வைணவத் தலத்திலும் விஷ்ணுபதி புண்ணிய காலத்தன்று அபிஷேக ஆராதனைகளுடனும், தான தர்மங்களுடனும் இவ்வற்புதமான உற்சவம் மகத்தான முறையில் கொண்டாடப்பட்டு அதன் பலன்கள் ஜாதி, மத, இன, குல பேதமின்றி அனைவரையும் சென்றடைய வேண்டி நாம் பிரார்த்திக்கின்றோம். இதற்கு வைணவ பக்தர்களின் பேராதரவையும், பக்தகோடிகளின் உளமார்ந்த நற்சேவையையும் பெரிதும் வேண்டி இறைப் பரம்பொருளாம் சர்வேஸ்வரனாம் ஸ்ரீமன் நாராயணப் பெருமாளின் பாதார விந்தங்களில் சரணடைகின்றோம்.

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தான் கடந்த கோடானு கோடி யுகங்களில் எத்தனை எத்தனை இறை லீலைகள், புராண வைபவங்கள், தெய்வத் திருவிளையாடல்கள் நிகழ்ந்து நமக்குப் பேரானந்தத்தைத் தந்துள்ளன. எத்தனையோ கோடி மகான்களும், யோகியர்களும், சித்புருஷர்களும் பல உத்தம இறைநிலைகளை அடைந்த அற்புதமான புண்ணிய காலம் இது! கலியுகத்தில், பெறுதற்கரிய மிக விசேஷமான, உத்தமமான தெய்வீக சக்தி பரிமளிக்கும் நேரங்களுள் ஒன்றாக விஷ்ணுபதி புண்ணிய காலம் மிகச் சிறப்பான இடத்தைப் பெறுகின்றது.

அபிஜித் முகூர்த்த நேரம் எனப்படும் உச்சிக் காலம், பிரம்ம முகூர்த்தமாகிய விடியற் காலை, சூரிய, சந்திர கிரஹண நேரங்கள், சித்த யோகத்திலும் அமிர்த யோகத்திலும், சித்புருஷர்கள் பகுத்துத் தருகின்ற பெறுதற்கரிய அமிர்த நேரம், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருகின்ற மகாமகம் புண்ணிய காலம் போன்று ஸ்ரீ விஷ்ணுபதியின் சில புனிதமான மணித் துளிகளில் நாம் கடைபிடிக்கின்ற பூஜைகள், ஹோம், யாக வழிபாடுகள், பித்ரு தர்ப்பணங்கள், தான தர்மங்கள், விளக்கு பூஜை, அபிஷேக ஆராதனைகள், புனித நீராடல் போன்ற அனைத்திற்குமே பல கோடி மடங்குப் பலன்கள் உண்டு.

நாள்தோறும் தீய கர்ம வினைகளையே சேர்த்து வருகின்ற மனிதனுக்கு இத்தகைய அபூர்வமான புண்ணிய நேரங்களில் செய்யப்படுகின்ற பூஜைகளின் மூலமாகத்தான் அவனுடைய கோடானு கோடி கர்ம வினைகளுக்குப் பிராயச்சித்தத்தைத் தர முடியும். இனியேனும், இதனை அறிந்த பிறகாவது இத்தகைய புண்ணிய காலத்தினை வீணாகக் கழித்திடாமல் நன்முறையில் பயன்படுத்திக் கொள்ள மனித சமுதாயம் பெரும் முயற்சி செய்தல் வேண்டும். பெரியோர்களும், பக்த கோடிகளும் இப்புண்ணிய நேரங்களை நன்கு குறித்துக் கொண்டு, மறவாமல், இந்நாட்களில் சத்சங்க கூட்டு பூஜையாக அனைத்து ஆலயங்களிலும் சிறப்பான வழிபாடுகளுடன் ஏழைகளுக்கு உரிய தான தர்மங்களையும் செய்து, நன்முறையில் இப்புண்ணிய நேரத்திற்குரிய சிறப்பியல்புகளை, வாழ்க்கையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!

விஷ்ணுபதி புண்ணிய காலத்தில்தான் முனிவர்களுக்கும் அரும்பெரும் சித்திகள் கை கூடுகின்றன. பெறுதற்கரிய இவ்வரிய நேரத்தில்தான் எத்தனையோ விதமான நல்வரங்கள் தாமாகவே தபஸ்விகளுக்குக் கனிகின்றன.

பொதுவாக அனைத்து மகான்களும், யோகியர்களுமே மானிட உடலைத் தாங்குவதில்தான் பேரானந்தம் கொள்கின்றனர். காரணம், தெய்வீகப் பரமானந்த நிலையை உய்த்து உணருவதற்கு மானுட சரீரம் தான் மிகவும் ஏற்றது என்பது இறை நியதியாகும். தட்டுத் தடங்கல் இல்லாமல், குறைவு இல்லாமல் நிறைவான பரமானந்தத்தை எப்போதும் தருகின்றதாக இருக்கின்ற ஒரே செயல் இறை பக்தி ஒன்றே ஆகும். செல்வம், வீரம், கல்வி என எத்தகைய ஐஸ்வர்யங்கள் கிட்டினாலும் அவை தரும் ஆனந்தம் எப்போதும் நிலைத்து நிற்பதில்லை. வயது, மனோ நிலைகள், உடல் ஆரோக்கியம் போன்றவற்றைப் பொறுத்து இன்ப, துன்பங்கள் இந்த பூத உடலில் மாறிக் கொண்டே இருக்கின்றன. ஆனால் இந்த மனித உடலில் எப்போதுமே சந்தோஷத்தை அளிக்கக் கூடியது இறைவனைப் பற்றிய சிந்தனை ஒன்றேதான் ஆகும். அதிலும் கிடைத்தற்கரிய இறைப் பணிகளை இந்த சரீரத்தைக் கொண்டு குரு காட்டும் வழியில் ஆற்றினால் அதனால் கிட்டுகின்ற பேரானந்தத்திற்கு ஈடு இணை ஏதுவும் கிடையாது.

எனவேதான் உத்தமப் பெரு நிலைகள் அடைந்த மகரிஷிகள் கூட மானுட சரீரத்தைத் தேர்ந்தெடுக்க ஓடோடி வருகின்றனர், இறை ஆணையால், பல ஜீவன்களுக்கும் நல்வழி காட்டிட! ஆனால், அரிய மானுடப் பிறவியைப் பெற்ற நாமோ.......?!

ஸ்ரீரோமச முனிவர் திருக்காட்டுப்பள்ளி

ரோமச மஹரிஷி என்பார் இறை பக்தியில் எப்போதும் திளைத்து அன்றும் இன்றும் என்றும் பிரபஞ்சத்தின் பல லோகங்களுக்கும் இறை அருளைப் பரப்பி வருபவர் ஆவார். ரோமச மகரிஷியைப் பற்றி கேள்விப் படவில்லையே என்று கூட நமக்குத் தோன்றும். ஆனால் இன்றைக்கும் திருஅண்ணாமலை, திருவிடைமருதூர், திருப்பதி, மதுரை, இராமேஸ்வரம், சிதம்பரம் கேதார்நாத், பத்ரிநாத், ஹரித்துவார் போன்ற பல புண்ணியத் தலங்களிலும், புனித நதிக் கரைகளிலும் ரோமச மகரிஷி, அஷ்ட வக்ர மகரிஷி போன்ற மஹரிஷிகள் இன்றும் உலவிக் கொண்டுதான் இருக்கின்றனர். இவர்களுடைய திவ்ய தரிசனம் பலருக்கும் கிடைக்கத்தான் செய்கின்றது.

ரோமச மகரிஷி ஆனவர் ஸ்ரீபிரம்மாவிற்கே நல்லுபதேசந் தந்த மாபெரும் மகரிஷி ஆவார். ஆதிகாலத்தில் தன் ஐந்து தலைகளைக் கண்டு பெருமிதம் அடைந்து பிரபஞ்சத்திற்கே தன்னுடைய படைப்புத் தொழில்தான் முக்கியமானது என்று ஸ்ரீபிரம்ம மூர்த்தியே கர்வம் கொண்ட பொழுது, “உன்னுடைய படைப்புத் தொழிலானது என்னுடைய ஒரு ரோமத்தின் தவத்திற்குக் கூட ஈடாகாது,” என்று சொல்லி தன்னுடைய ஒரு ரோமத்தை உதிர்த்து ஸ்ரீ பிரம்மாவிற்கே அருளுரை தந்தவர் ஆவார்.

ஏனென்றால் ரோமச மகரிஷியின் சிரசிலும், ஜடாமுடியிலும், தாடியிலும் உள்ள ஒவ்வொரு முடியும் சாதாரண முடியன்று! எத்தனையோ கோடி பிரம்மாந்திர, யுகாந்திர தவத்தில் விளைந்த தெய்வீக சொத்துகள் இவை! எப்போது ரோமச மகரிஷியின் முடியானது பூலோகத்தில் விழுமோ, அதனைத் தாங்கிப் பிரசாதமாகப் பெற்று, வைத்துப் போற்றி வழிபடுவதற்காக என்று எத்தனையோ கோடி மகரிஷிகள் காத்துக் கிடக்கின்றனர்!

எவ்வாறு ஸ்ரீமன் நராயண மூர்த்தியின் திருமேனியிலிருந்து எள் தானியங்கள் விளைந்து புனிதம் பெற்றனவோ அதே போல பல கோடி யுக தவக் கோலக் கிரணங்களே ரோமச மகரிஷியின் ஒவ்வொரு முடியுமாக மாறி, பொன் போலப் பிரகாசித்து எப்போதும் வேத சக்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன.

அஷ்டவக்ர மகரிஷியோ, தான் கர்ப்பத்தில் இருந்தபொழுதே அனைத்து விதமான வேத மந்திரங்களையும் கற்றுத் தெளிந்தவர். கர்ப்ப வாசத்திலே வேத ஞானம் பெறுவது எளிதல்லவே! எத்தனையோ கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் கூட வேதங்களின் ஒரு பகுதியை கூடக் கற்றுணர முடியாத நிலையில் கர்ப்ப வாசத்திலேயே வேதங்களின், அனைத்து வேத மந்திரங்களின் ஒளிப் பிரவாகத்தை உண்டு, சுவாசித்து, ஒளிர்ந்து பிரகாசித்தவர் என்றால் அஷ்டவக்ர மகரிஷியின் மகத்துவத்தை என்னவென்று எடுத்துச் சொல்வது!

ஒரு முறை ரோமச மகரிஷியும், அஷ்ட வக்ர மகரிஷியும் பூலோகத்தில் பல திருத்தலங்களுக்கும் யாத்திரை மேற்கொண்டு ஆங்காங்கே பலவிதமான யாக வழிபாடுகளைச் செய்து அவற்றை எல்லாம் பூலோக ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணித்த வண்ணம், பரிபூரண பக்தியில் திளைத்தவாறே நல்யாத்திரைகளை மேற்கொண்டு வந்தார்கள்! அவர்கள் தொண்டை மண்டலப் பகுதியை அடைந்த பொழுது அவ்விரு மகரிஷிகளுக்கும் ஒரு ஆசை பிறந்தது. மகரிஷிகளுக்கும் ஆசை உண்டா என்ன? ஆமாம், நிச்சயமாக உண்டு! ஆனால் அவர்களுடைய ஆசைகள் எல்லாம் தெய்வீகமான பேராசைகள் ஆகும். எவ்வாறு துர்வாசருடைய கோபமானது ஜீவன்களுடைய நல்வாழ்விற்காக மலர்கின்றதோ அதே போல மகரிஷிகளின் ஆசைகள் எல்லாம் இறைச் சிந்தனைகளிலிருந்து பிறப்பெடுப்பதால் அவற்றால் கிட்டுகின்ற பலன்களோ எத்தனையோ கோடி லோகங்களுக்கும் சென்றடைகின்றன. அப்படி என்னதான் ரோமச மகரிஷியும், அஷ்ட வக்ரரும் ஆசைப் படும்படி நடந்து விட்டது?

... இதோ இருவருமே தொண்ட மண்டலத்தை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்க...எதிரே ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் திரு அவதாரமான உலகளந்தப் பெருமாளின் ஆலய கோபுர தரிசனம் அவர்களை ஈர்த்து இழுக்கின்றது. பக்திப் பரவசத்தில் மிதந்தவர்களாய் இருவரும் ஓடோடி வருகின்றனர்! ஆலயத்திலே, பேரானந்தப் பெருமானாம் திருவிக்கிரம மூர்த்தியைக் கண்ணாரக் கண்டு வலம் வந்து வணங்கினர்.

பக்தியின் உன்னத நிலையிலே பக்தர்களுக்கு என்ன தோன்றும் என்றால், “தனக்காக இறைவன் ஆடிப் பாடி ஓடி, உடலை வளைத்துத் தனக்குப் பரமானந்தத்தைத் தருகின்றானே. இந்த இறைவனுக்கு உடல் வலி ஏற்படாதா? தலைவலி ஏற்படாதா? கேவலம், சாதாரண மனிதனாகிய எனக்கு இவ்வளவு தூரம் பணிந்து பக்தியை ஊட்டுகின்றானே அந்த இறைவனுக்கு உடல் சிரமத்தை நாம் தரக் கூடாது அல்லவா! எனவே இறைவன் உண்டு களைப்பாறி உறங்கி ஓய்வு பெற வேண்டும்,” என்ற சீரிய சிந்தனையில் லயித்து இறைவனைத் தன்னுடன் ஒன்றாக பாவிக்கின்ற உத்தம இறை நிலையைப் பெறுகின்றார்கள்.

இத்தகைய பக்திப் பரவசம் நிறைந்த மனோபாவமானது ஸ்ரீமீரா, இராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், துக்காராம், இராமதாஸர், வடலூர் வள்ளலார் இராமலிங்க சுவாமிகள், அருணகிரிநாதர் போன்ற மகான்களுக்கும், யோகியர்களுக்கும், சித்புருஷர்களுக்கும் நிறைந்து விளங்கியது. ஆனால் மக்கள் தான் அவர்களை நன்கு உணர்ந்து அவர்களுடைய திருப்பாதங்களில் சரணடையத் தவறிவிட்டார்கள். எனவேதான் “கடை விரித்தேன், வாருவாரில்லை” என்று மனம் வருந்தி கலியுக மக்களின் மஹான்களை/பெரியோர்களை மதியாத அலட்சிய மனோபாவம் கண்டு மஹான்கள், தத்தம் லோகங்களுக்கு மீண்டு விடுகின்றனர். கோடிப் பேர்களில் ஏதேனும் ஒரு சிலரே அங்குமிங்குமாக, மஹான்களின் /சற்குரு மார்களின் இறைத் தன்மையை உணர்ந்து சரணாகதி மூலம் இறைவனை உய்த்து உணர்கின்றனர்.

ரோமச மகரிஷியும், அஷ்ட வக்ரரும் பாடிப் பணிந்து வலம் வந்து வணங்கி திருவிக்ரமனை மனதாரத் தொழ, தொழ, எங்கு திரும்பினாலும் அவர்கள் விரும்பிய திக்கெல்லாம் அவர்களுக்குக் காட்சி கொடுத்து, திருநடனம் ஆடி அவர்களை மகிழ்வித்தார் உலகளந்த பெருமாள்!

மனித சரீரத்திலே இவ்வாறு இறைவனை உண்மையான உள்ளத்துடன், அன்பு நேயத்துடன் வணங்கும் பொழுது அந்த இறைவனுக்குத் “தன்னைப் போலவே எதையெல்லாம் செய்யலாம்! எதையெல்லாம் ஊட்டி விடலாம் ! எதையெல்லாம் அளித்திடலாம்”, என்ற எண்ணமே தோன்றும். அதோடு மட்டும் அல்லாமல் உணர்ச்சி, உள்நெகிழ்ச்சி, உளமார்ந்த சேவைகள் அனைத்தையும் இறைவன் பால் கொடுக்கவும், சமர்ப்பிக்கவுமே உள்ளம் துடிக்குமே! இந்த நிலைக்கு அடிமைப்பட்டவர்கள் தான் மகான்களும்,யோகியர்களும் ஆவார். இறைவனோ அந்த அடியார்களின் உண்மை பக்தியில் தன்னையும் மறந்து அவர்கள் சொன்னபடி எல்லாம் தானும் நடந்து இறைத் திருவிளையாடல்களைப் புரிகின்றான்.

காணும் இடம் எங்குமே திருவிக்ரமனின் தாண்டவ நடனத்தைக் கண்டு பரமானந்தத்தை அடைந்த ரோமச மகரிஷியும், அஷ்ட வக்ரரும். திருவிக்ர மூர்த்தியின் வலது காலை தூக்கி நின்றபடி, ஆடிய காட்சியைக் கண்டு ஆனந்தமுற்றிடினும் அவர்களால் ஒன்றைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை! ஏன், எதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை ? என்ன ஆசையோ அது?

“கோடானு கோடி யுகங்களாய் வலது காலைத் தூக்கி நிற்கின்றாரே பெருமாள், அவருக்குக் கால் வலித்திடாதா, நமக்கு ஒரு முறை அடிப் பிரதட்சிணம் செய்தாலே முட்டி வலிக்கின்றதே பாத விரல்கள் எல்லாம் கல்லாய், முள்ளாய் வலிக்கின்றதே, இறைவனுக்குக் கால் வலிக்காதா?” என்று கதறி அழுது வருகி இருவருமே வேண்ட ஆரம்பித்தனர்.

பெருமாளே! உந்தன் பாதம் நோகுமே!

எம்பெருமானாகிய ஸ்ரீமன் நாராயண மூர்த்தியும் புன்முறுவல் பூத்து அவர்களுடைய சீரிய அன்பைப் புரிந்து கொண்டு காட்சியளித்து, “உங்களுக்கு என்னதான் வேண்டும் சொல்லுங்கள் ? ஏன் இவ்வளவு சோகமாய் இருக்கின்றீர்கள்? சோகத்திற்கும், வருத்தத்திற்கும், கவலைகளுக்கும் அப்பாற்பட்ட பரமானந்தத்தைத்தானே இந்நாட்டியக் கோலத்தில் நான் அளித்துக் கொண்டிருக்கின்றேன். இதன் நடுவில் இதையும் மீறி உங்களுடைய சோகம் எங்கு என்னையும் அறியாமல் உங்களிடம் உட்புகுந்து விட்டதே”, என்று அறியாதவராய் வினவுகின்றார், தனது லீலா வினோதங்களைத் தொடர்ந்தபடியே! இறைவனின் லீலைக்குத் தான் எல்லையேது?

இரு மகரிஷிகளும் திகைத்து நின்று, “எம்பெருமானே! தாங்கள் இவ்வாறு வலது காலைத் தூக்கி நின்று கோடானுகோடி யுகங்கள் நடனமாடுவதும் மட்டும் அல்லாமல் எங்களுடைய அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்டு எங்களுக்காக எந்த திசையில் நோக்கினாலும் நடனமாடி எங்களுக்கும் பரோபகாரமாக உணவு தந்து, தூக்கி விட்டு, நடக்கச் செய்து கை தாங்கி அரவணைக்கின்றீர்களே! உங்களுக்கு காலைத் தூக்கி நின்ற நிலையில் எவ்வளவு நேரம் தான் நிற்க முடியும்? எங்களுக்காகக் காலை சற்று மாற்றி, நடனக் கோலத்தை மாற்றக் கூடாதா? இதனால் உங்களுக்கு வலது காலின் பாரம் குறையுமே!” என்று அன்பொழுக பிரார்த்தித்திடவே,

பாருங்கள்! மகரிஷிகள் எத்தகைய உயர்நிலையில் இருந்தாலும் இறைவனை ஒரு சாதாரண மனிதனாகவே எண்ணி அவரையும் தன்னுள். ஒன்றாகவே பாவித்து, அவருள் ஒன்றாகவே தங்களையும் பாவித்து உரையாடுகின்றார்கள் என்றால் என்னே அவர்களது உத்தமப் பெருநிலை! உண்மையான பக்தனுக்காக இறைவன் எதைத்தான் செய்ய மாட்டான்? எதைத்தான் செய்யாமலும் இருப்பான்? சொல்லுங்கள்!

திருவிக்கிரம மூர்த்தி நகைத்தார். “உங்களைப் போன்ற பக்தர்களுக்காகத் தானே நான் இங்கு இருக்கின்றேன்! உங்கள் ஆசையை நிறைவேற்றுகின்றேன்! அதை விட எனக்கு என்ன வேலை? பேசாமல் வைகுண்டத்தில் பரமானந்தமாக நான் யோக சயனம் கொண்டிருக்கலாமே! ஆனால் உங்களைப் போன்ற பக்தர்களுடைய புனிதமான பக்தியைத் தேடித் தானே பூலோகத்திற்கு ஓடோடி வந்து காலைத் தூக்கி நிற்கின்றேன்!” என்று அருட்பாங்குடன் உணர்த்தி அவர்களுடைய மனித சுபாவத்திற்கு ஏற்பவே நடித்து “மகரிஷிகளே! உங்களுடைய ஆவலை நான் நிச்சயமாகப் பூர்த்தி செய்கின்றேன். வலது காலை ஆடி நிற்கின்ற இந்த திருவிக்கிரமன், தாடாளனாக இடது காலை தூக்கி ஆடுகின்ற நடனக் கோலத்தை உங்களுக்கு சீர்காழி விண்ணகரத்தில் காட்சியளிக்கின்றேன். அங்கு என்னுடைய இந்த கோலத்தைக் கண்டு மகிழ்வீர்களாக!” என்று சொன்னதோடு மட்டும் அல்லாமல் அவர்களை அரவணைத்துச் சென்று திருக்காழிச் சீராம விண்ணகரம் எனப்படும் சீர்காழித் தலத்திலே இடது காலை தூக்கிய நடன கோலத்தில் தரிசனம் தந்தான்.

இந்த இடது காலைத் தூக்கிய விஸ்வரூப தரிசனத்தோடுதான் தாடாளனாக திருவிக்கிராமப் பெருமாள் இன்று சீர்காழித் திருத்தலத்திலே காட்சியளிக்கின்றார். ஸ்ரீ ரோமச மகரிஷிக்கும், அஷ்ட வக்ரருக்கும் கிட்டிய பாக்கியத்தினால் தான் இன்று கால் மாறி நடனம் ஆடுகின்ற வைகுண்டப் பெருமாளின் காட்சியைக் கண்டு அங்கு நாம் ஆனந்தம் பெறுகின்றோம். பரம்பொருளின் கால் மாறி ஆடிய காட்சியைப் பெற்றதால் மகரிஷிகளுக்கு எத்தகைய பலன்கள் கிட்டின? அவர்களுக்கு ஏதப்பா பலாபலன்கள் ? தங்களுடைய உடல், பொருள், ஆவி, சரீர அங்கங்கள் அனைத்தையுமே இறைவனுக்காக அர்ப்பணித்தவர்களுக்கென தனிப்பட்ட முறையில் பலா பலன்கள் உண்டா என்ன?

பலாபலன்களுக்கு அப்பாற்பட்ட நித்ய பிரமானந்த நிலையைப் பெற்றவர்கள் அல்லவா! எனவே அவர்கள் பெற்ற பலாபலன்கள் எல்லாம் நம்மைப் போன்ற ஜீவன்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டமையால் நாம் எப்பொழுதெல்லாம், சீர்காழியில் இடது காலைத் தூக்கி நடனம் ஆடுகின்ற திருவிக்கிரமனாகிய தாடாள மூர்த்தியை முறையாகத் தரிசித்து, அபிஷேக, ஆராதனை, தான, தர்ம வழிபாடுகளை மேற்கொள்ளுகின்றோமோ அந்த பலாபலன்கள் எல்லாம் ரோமச மகரிஷி, அஷ்ட வக்ர மகரிஷிகளின் ஆசிகளுடன் நமக்கு வந்து சேர்கின்றன!

ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் போன்ற ஒவ்வொரு துதிக்கும் பலஸ்ருதி என்று ஒன்றைத் துதியின் கடைசிப் பகுதியில் இணைத்து வைத்திருப்பார்கள். அந்தந்தத் துதிகளை ஓதினால் என்ன பலாபலன்கள் கிட்டும் என்று விவரிக்கின்ற பாடலே பலஸ்ருதி ஆகும். இதுபோல, இடது காலைத் தூக்கி நின்றாடும் திருவிக்கிரமனைத் தரிசித்த அஷ்டவக்ரரும், ரோமச மகரிஷியும், “இறைவா! பரம்பொருளே! திருவிக்கிரமா! வாமனா! ஸ்ரீதரா! உலகளந்த பெருமாளே! இந்த விஸ்வரூப தரிசனப் பலன்களை நாங்கள் அனைத்து ஜீவன்களின் நல்வாழ்விற்காக அர்ப்பணிக்க விரும்புகின்றோம். இதன் பலாபலன்களையும் எங்களுக்கு எடுத்து ரைத்து அருள்வாயாக”, என்று வினயத்துடன் வேண்டி நின்றனர்.

மகரிஷிகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருவிக்கிரம சுவாமி புஷ்கலா வர்த்தக விமானத்தின் அடியிலே தாடாளனாக அருள் பாலித்த சீர்காழித் திருத்தலத்தில் இதன் மகிமையைப் பற்றி மகரிஷிகளுக்கு உணர்த்தியதோடு மட்டும் அல்லாமல் பல்வேறு யுகங்களிலும் மக்களுக்கு ஏற்படவிருக்கின்ற பலவிதமான துன்பங்களையும் நிவர்த்திக்கும் வண்ணம் தக்க இறைப்பணி ஆற்றுமாறு அவர்களுக்கு அருளாணையிட்டார்.

இவ்வாறாக ஸ்ரீ திருவிக்கிரம சுவாமி கால் மாறி நின்று இடது கால் தூக்கி நடனக் கோலம் காட்டி அருளிய நேரமே அந்த யுகத்தின் விஷ்ணுபதி புண்ணிய காலமாகும். இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் தான் எத்தனையோ இறை புராணங்களும், மகாத்மியங்களும் இறை லீலைகளும் நிகழ்ந்துள்ளன. எனவே வருகின்ற விஷ்ணுபதி புண்யகால உற்சவத்தை சீர்காழி ஸ்ரீ திருவிக்ரம் பெருமாளாம் தாடாளமூர்த்தி ஆலயத்தில் கொண்டாடுவது மிகவும் சிறப்புடையதாகும்.

விஷ்ணுபதியில் எத்தனை எத்தனை அற்புத பலா பலன்கள். விஷ்ணுபதியில் பிரமன்அடைந்த பரிபூரணத்வம்

ஸ்ரீ விஷ்ணுபதி புண்ய கால பூஜா பலன்களால் எத்தனையோ பாவங்களுக்கும், தீவினைகளுக்கும் தக்க பிராயசித்த நல்வழிகள்கிட்டுகின்றன. கலியுகத்தில் பூஜை, ஹோமம், தியான, விளக்கு வழிபாடுகள் குறைந்து விட்டமையால் பிரதோஷ, ஸ்ரீ விஷ்ணுபதி போன்ற புனிதமான, தெய்வீக நேரங்களே மனிதர்களின் தெய்வீகக் குறைபாடுகளை நிறைவு செய்ய உதவுகின்றன.

வாமன அவதாரத்தின் அரும்பெரும் இரகசியங்களை நாம் முழுவதுமாக அறியோம்! மகாபலி சக்கரவர்த்தியிடமிருந்து மூன்றடி நிலம் தானம் பெற்று அவனுடைய அக்கிரமச் செயல்களுக்கான பாடத்தை ஸ்ரீமகாவிஷ்ணு புகட்டியதாகவே நாம் அறிகின்றோமே தவிர, இதன் பின்னணியில் உள்ள தெய்வீக இரகசியங்களை சித்புருஷர்களின் கிரந்தங்கள் தாம் நன்கு விளக்குகின்றன.

ஆதி மூல பிரம்ம மூர்த்திக்கு ஐந்து தலைகள் இருந்தன அல்லவா! தம்முடைய படைப்புத் தொழிலில் ஏற்பட்ட கர்வம் காரணமாக, கர்வ நிவர்த்தியாக இறைத் திருவிளையாடலாகவே தம்முடைய ஐந்தாவது சிரத்தை சிவன் பால் இழந்த ஸ்ரீ பிரம்ம மூர்த்தி ஆனவர், கோடானுகோடி யுகங்கள் தவம் புரிந்து தன்னுடைய ஐந்து சிரசுகளிலும் விரவி இருந்த பரிபூரணமான தெய்வீகத் தன்மையனைத்தையும் (இப்போது) சதுர் முகனாக நான்கு சிரசினுள் (அப்பரி பூரணத் தத்துவத்தைப்) பெற வேண்டினார். அவருடைய பெருந்தவத்தில் மனம் மகிழ்ந்து, “பிரம்மேஸ்வரா! கூடிய விரைவிலேயே ஸ்ரீமன் நாராயண மூர்த்தியின் திருப்பாதங்களைத் தொட்டு பூஜிக்கின்ற பாக்கியம் உனக்குக் கிட்டுகின்ற பொழுது உன்னுடைய நான்கு சிரங்களையும் தாழ்த்தி அவர் பாதத்தின்பால் வைத்து வணங்குகையில் அத்தகைய பரிபூரணத்துவம் அடைவாயாக!” என்று சிவபெருமான் வரம் தந்து அருள்பாலித்தார்.

ஸ்ரீ வாமன மூர்த்தியாக விண்ணுக்கும், மண்ணுக்கும் விஸ்வரூபம் கொண்ட ஸ்ரீதிருவிக்கிரம சுவாமியின் பாதமானது பிரம்ம லோகத்தையும் தாண்டிச் சென்ற பொழுது ஸ்ரீ பிரம்ம மூர்த்திக்கு அவருடைய திருப்பாதத்தை ஸ்பர்சித்து, அபிஷேகம் செய்கின்ற பாக்கியம் கிட்டியதோடு அன்றி பரம்பொருளாம் ஆதி சிவனின் வாக்கிற்கு ஏற்ப தன்னுடைய சதுர்முகங்களையும் ஸ்ரீதிருவிக்ரம் சுவாமியின் பாதத்தில் வைத்து வணங்கிய பொழுதுதான் பஞ்சமுக பிரம்ம தத்துவமானது சதுர் முகத் தத்துவத்தில் ஐக்கியமாகி பிரம்ம மூர்த்திக்கே பரிபூரண அவதாரத் தன்மையைத் தந்தருளியது. இவ்வற்புதமான லீலையைச் சித்புருஷர்களின் கிரந்தங்கள் தாம் மகத்தான முறையில் எடுத்துரைக்கின்றன!

இது நிகழ்ந்த காலமே அந்த யுகத்தின் பகுதான்ய ஆண்டின் சரத் ருதுக் கால பரிவர்த்தக விஷ்ணுபதி புண்ணிய காலமாகும்.

தேவலோகங்களிலும் வாஸ்து சாஸ்திரமே!

மகாபலி சக்கரவர்த்தி, தன்னுடைய அசுரத் தன்மையால் பலகோடி லோகங்களிலும் புகுந்து அங்கு வசித்து வந்த கோடானு கோடி, முப்பத்து முக்கோடி தேவர்களின் தேவ இல்லங்களை எல்லாம் அழித்து சின்னாபின்னமாக்கி அவர்கள் இருக்க இடம் இன்றி ஆங்காங்கே, எங்கெங்கோ திரிகின்ற நிலையை உருவாக்கி விட்டான். இதற்குக் காரணம் என்ன தெரியுமா? தற்போது வாஸ்து சாஸ்திர விதிகள் என்று சொல்கின்றோமே, இந்த தெய்வீகக் கட்டுமான நியதிகளானவை பூலோகத்திற்கு மட்டும் அல்லாது சகல கோடி லோகங்களுக்கும் பொருத்தமானவையாகும். பூலோகத்தில் நிகழுகின்ற ஹோமங்களில் எல்லாம் இலட்சக் கணக்கான தேவதா மூர்த்திகள், தேவதைகள் ஆவாஹனமாகி நமக்கு அருள் பாலிக்கின்றனர் அல்லவா, அவர்களுக்கு ஒவ்வொரு லோகத்திலும் விதவிதமான தேவ, தெய்வ லோக உறைவிடங்கள், மஹா மண்டபங்கள், மற்றும் ஸ்ரீ நகரங்கள் உண்டு. அவை எல்லாம் வாஸ்து இலட்சணத்தின்படியே அமைக்கப்பட்டவை ஆகும்.

தற்போது பூலோகத்தில் அவரவர் வசதிக்கேற்ப வாஸ்து சாஸ்திர இலக்கணங்களை மீறி, தவறான முறையில் கட்டுமானங்கள் நிகழ்கின்றனவே! இதே போலத்தான் அகங்காரமும், ஆணவமும் காரணமாக தன்னிலை இழந்து சித்தி, மற்றும் தம்முடைய மகத்தான புண்ய சக்தியின் நிலையால் கர்வம், செருக்கு, புகழ், கீர்த்தி போன்ற மாயைகளின் காரணமாகவும் பல தேவாதி தேவர்களும் தங்களுடைய உறைவிடங்களான தேவ இல்லங்களை வாஸ்து இலக்கணத்திற்குப் புறம்பாக நிர்மாணித்து விட்டனர். எனவேதான் இறைத் திருவிளையாடலாகவே மஹாபலிச் சக்கர வர்த்திக்கு ஓர் அசுரத் தன்மை ஏற்பட்டு இவை அனைத்தும் அழிந்தன.

மஹரிஷிகளின் அருளுரையால் இதனைப் பின்னர் நன்குணர்ந்த தேவாதி தேவர்கள், எல்லாம் வல்ல திருவிக்கிரம சுவாமியை வேண்டி அவருடைய திருப்பாதமானது தங்களுடைய கோடானுகோடி லோகங்களுக்கு எல்லாம் நீண்டு விஸ்வ ரூபமாக வளர்ந்து நின்று தங்களுக்கு திவ்ய தரிசனத்தைத் தருவதோடு மட்டும் அல்லாமல் வாஸ்து புருஷ இலக்கணங்களுக்கு மாறாக அமைந்த தம்முடைய தேவ இல்லங்களுக்குப் பரிகாரமாகவும், பிராயச்சித்தமாகவும் ஸ்ரீதிருவிக்கிரம சுவாமியின் திருப்பாதங்கள் தங்களுடைய லோகங்களில் பட வேண்டும் என்று வேண்டிப் பிரார்த்தித்திடவே, இதற்காகவும் திருவிக்கிரம சுவாமியின் விஸ்வரூப தரிசனம் அமைந்தது! இவ்வாறாக நாமறியாத வாமன ரூப அவதார தெய்வீக லீலைகள் எத்தனை எத்தனையோ!

இன்றைக்கும் பூலோகத்தின் பல இடங்களிலும் வாஸ்து இலக்கண விதிகளின்படி, தலைவாசல், தலை, உடல், வயிறு போன்ற முறையான கட்டட அங்க நியதிகளும் அடித்தளமும் இல்லாமல் நிறைய அடுக்கு மாடிக் கட்டிடங்கள், தொழிற்சாலைகள், வீடுகளும், கட்டப்படுகின்றன. வாஸ்து சாஸ்திரத்தின்படி தெய்வீக ரீதியாக முறையான அஸ்திவார அமைப்புகள் இல்லாமையால் ஏற்படும் துன்பங்கள் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி முறையோடு அமையாத வீதிகளும், எதிர் எதிராக அமைகின்ற வீட்டு வாசல்களினால் ஏற்படுகின்ற கண்ணேறு துன்பங்கள், ஒரு வாசலை ஒட்டி பக்கத்து வீட்டு வாசல் இருப்பதால் (Flat System) ஏற்படுகின்ற இல்லற தோஷங்கள், வீட்டு வாசல் முன்னே அமைகின்ற கழிவு நீர்த் தொட்டிகள், சாக்கடைகள்/கழிவு நீர்த் தாரைகளால் எற்படுகின்ற பலவிதமான தோஷங்கள், சாபங்கள் தாம் நம்மைப் பாடாய்ப் படுத்துகின்றன.

இவ்வாறாக இல்லற, அலுவலக வாழ்க்கையின் பல்வேறு காரியங்களுக்கும் ஒத்து வராத முறையில் கட்டப்படுகின்ற அறைகளுக்குப் பிராயச்சித்தம் தருவதாகவும் அமைவதே வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய கால பூஜைகளாகும் (16.11.1998). ஒவ்வொரு வீட்டிற்கும், கட்டிடத்திற்கும் வாஸ்து சாஸ்திரத்தின்படி, வாசல், நாசி, தலை உடம்பு, பாதம் என பல பகுதிகள் உண்டு .

ஸ்ரீ வாஸ்து தேவரின் யோக சயன நிலைகளுக்கேற்ப எந்ததெந்த அறைகள் எந்தெந்த திசைகளில் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கான வாஸ்து சட்டங்களும் உண்டு. இவற்றிற்கெல்லாம் பலவிதமான அற்புதமான காரண காரிய விளக்கங்கள் நம் பெரியோர்களால் தரப்பட்டுள்ளன. பூமியின் மணற் பாங்கு, சுழற்சி வேகம், தட்ப வெப்ப நிலை, நீரோட்டம், தாவரப் பரிமாணம், காற்று வீசும் திக்குகள், சூரியனின் அயனப் பாதை, மரங்களின் வேரோட்டங்கள், அங்குள்ள ஊர்வன வகையான ஜீவன்களின் நடமாட்டம் போன்றவற்றைப் பொறுத்து வாஸ்து சாஸ்திரம் பல அமைப்புகளை விதித்துள்ளது. இதன்படி வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் அமைந்தால் தான் அவை நம்முடைய வாழ்க்கையை நன்முறையில் சீராக அமைத்துத் தரும். இல்லாவிடில் பலவிதமான தோஷங்களின் விளைவாய் ஏதேனும் ஒன்று மாற்றி ஒன்றாகத் துன்பங்கள் வந்து கொண்டுதான் இருக்கும். இவை நோய்களாகவும் கடன் துன்பங்களாகவும், பணக் கஷ்டங்களாகவும், நஷ்டங்களாகவும் விபத்துகளாகவும் விரிந்து நம் மனதையும் குடும்ப ஒற்றுமையையும் குலைத்து விடும்.

மேற்கண்ட வாஸ்து தோஷங்களுக்கான நிவர்த்தியைத் தருவதுமாக பகுதான்ய வருட தட்சிணாயணத்தில் சரத் ருது காலத்தில் அமைகின்ற விஷ்ணுபதி புண்ணிய கால பூஜைகள் அமைகின்றன என்பது நம்முடைய பாக்யமே. இது பல வாஸ்து நேரங்களைப் போல் பன்மடங்கு புனிதமானது! எனவே பலவிதமான இல்ல தோஷங்களினாலும் வாஸ்து புருஷ இலக்கணங்களின்படி வீடு, வாசல், கட்டிட, தொழிற்சாலைகளை அமைக்காததாலும் ஏற்படுகின்ற எத்தனையோ விதமான துன்பங்களுக்கு நிவர்த்தியாக இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் (16.11.1998) காழிச் சீராம விண்ணகரம் என்று அழைக்கப் படுகின்ற சீர்காழித் தலத்தில் அருள் பாலிக்கின்ற ஸ்ரீ தாடாளப் பிரபுவான ஸ்ரீ திருவிக்கிரம சுவாமிக்குத் தைலக்காப்பும் அவர் திருக்கால்களுக்கு சந்தனக் காப்பும் இட்டு, பூமிக்கு அடியில் விளைகின்ற கிழங்குப் பொருட்களால் ஆன உணவைப் படைத்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்திடுக!

அவரவர் இல்லங்களில் ஆபீஸில்/பாக்டரியில் அனைத்து நிலை வாசல் படிகளுக்கும் மஞ்சள், சந்தனம், குங்குமம், நீர்க்கோலம் இட்டுத் துதிக்க வேண்டும். இன்று பல தீர்த்த கண்டிகளைக் கொண்டு குறிப்பாக 21 தீர்த்த கண்டிகளைக் கொண்டு இவ்வாலயத்தில் தக்க அனுமதியுடன் தீப பூஜை செய்வது மிகவும் சிறப்புடையதாகும். இது பல விதமான இல்லற தோஷங்களை நீக்கும் தன்மை உடையதாகும்.

இந்த விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் நம்முடைய பித்ருக்களுக்குத் தர்ப்பண பூஜையும், பித்ரு ஹோமமும், பித்ரு சாந்தி ஹோமமும், அன்னதானமும் செய்தல் மிகவும் சிறப்புடையதாகும். மேலும் பலரும் ஒன்று கூடி சத்சங்க பூஜையாக இன்று பலவிதமான அபிஷேக ஆராதனைகளுடனும் பலரும் கண்டு களித்து ஆனந்தம் அடையும் வண்ணம்/தைல/சந்தனக் காப்புடன் பெருமாளின் திவ்ய தரிசனத்தை அனைவருக்கும் பெற்றுத் தருதல் மிகவும் சிறப்புடையதாகும்.

வாஸ்து இலக்கணங்களின்படி படுக்கையறை, குளியல் அறை, சமையல் அறை, கழிப்பறை போன்ற அனைத்துமே குறிப்பிட்ட திக்குகளில் தான் அமைந்திட வேண்டும். ஆனால் நடப்புக் காலத்தில் அவரவர் வசதிக்கு ஏற்பவும், நில அமைப்புகளை ஒட்டியும், சட்ட திட்டங்களுக்கு ஏற்பவும் அவரவர்களுக்குத் தோன்றியது போல் எதை எதையோ எந்தெந்தத் திக்குகளிலோ அமைத்து விடுகின்றனர். இவை கட்டிட அமைப்பை நிச்சயமாக பாதிப்பது மட்டும் அல்லாமல் அங்கு குடியிருப்போருக்கும் பலவிதமான துன்பங்களைத் தருகின்றன. குறித்த காரியங்களுக்கு ஒவ்வாத அறைகளின் அமைப்புகளால் நிச்சயமாகப் பல வில்லங்கங்கள், உடல் நோய்கள், கோர்ட் வழக்குகள் ஏற்படத்தான் செய்யும்.

இவற்றிற்கெல்லாம் பிராயச்சித்தமாகத் தான் வாஸ்து பூஜை என்ற ஒன்றைப் பெரியோர்கள் விதித்துள்ளனர். நாம் பன்முறை வலியுறுத்தி வருவது போல வாஸ்து நேரம் என்பது அஸ்திவாரம் போடுவதற்கு உரித்தான பூஜை மட்டும் அல்ல! சித்திரை 10, வைகாசி 21, ஆடி 11, ஆவணி 6, ஐப்பசி 11, கார்த்திகை 8, தை 12, மாசி 23 என வருடத்திற்குச் சில தினங்களாக மட்டுமே அமைகின்ற இந்த வாஸ்து விசேஷ தினங்களில் ஒவ்வொரு இல்லத்திலும் நிலை வாசல்/படிகளுக்கு உரித்த பூஜைகளைச் செய்து வருதல் வேண்டும்.

இதைப் பற்றிய பல அற்புதமான விளக்கங்களை நாம் முந்தைய இதழ்களில் அளித்து வந்துள்ளோம். மேலும், வருகின்ற விஷ்ணுபதி புண்ணிய காலமானது வாஸ்து நியதிகளின்படி அமையாத கட்டிடங்களுக்குரிய பிராயச்சித்தத்தைப் பெற்று தருவதற்கான பல விசேஷமான பூஜை முறைகளையும் கொண்டுள்ளது. இன்று (16.11.1998), ஸ்ரீ திருவிக்ரம் சுவாமி ஸ்ரீஉலகளந்த பெருமான் எழுந்தருளி உள்ள ஸ்தலங்களில் சில விசேஷமான பூஜைகளைக் கடைபிடித்து அவருடைய திருஅருளை வேண்டிப் பிரார்த்தித்திட வேண்டும். வாஸ்து தோஷங்களால் ஏற்படும் வீடு கட்ட இயலாமை, பாதியிலேயே கட்டிடம் நிற்றல், கோர்ட் தாவாக்கள், கட்டிடச் சேதங்கள் போன்றவற்றிற்குப் பிராயச்சித்தமாகத்தான் இன்று பூமியின் அடியில் விளைகின்ற கிழங்கு, வேர் வகைகளைக் கொண்டு உணவைச் சமைத்துப் படைத்து ஏழைகளுக்குத் தானமாக அளிப்பதும் வெட்டி வேரை ஆஹுதியாக அளிக்கின்ற ஹோமமும் சிறந்த பிராயச்சித் தங்களைப் பெற்றுத் தரும் வழிமுறைகளாம்.

ஸ்ரீ தாடாள மூர்த்தி அருள்பாலிக்கின்ற சீர்காழியில் உள்ள சக்கரத் தீர்த்தம் மகா விசேஷமானதாகும். இன்று இங்கு இத்திருக்குளத்தில் நீராடி ஸ்ரீ திருவிக்ரம சுவாமியாகிய ஸ்ரீ தாடாள மூர்த்தியை வணங்கி ஏழை சுமங்கலிகளுக்குரிய மங்களப் பொருட்களைத் தானமாக அளித்தலால் சம்பந்திகளுக்கு இடையே உள்ள பிணக்குகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும்.

மேலும் கணவன் பேச்சைக் கேட்காத பெண்களால் ஏற்படுகின்ற துன்பங்களுக்கும், மனைவியின் நல்வார்த்தைகளைக் கேட்காது பல காரியங்களைச் செய்து பல துன்பங்களுக்கு ஆளான கணவன்மார்களும் நல்ல முறையில் திருந்தி, குடும்பத்தில் சாந்தம் நிலவுவதற்கு இந்த திரயோதசி திதி கூடும் விஷ்ணுபதி புண்ணிய கால பூஜைகள் பெரிதும் உதவுகின்றன. இதற்குக் காரணம், பொதுவாக திரயோதசி திதி பூஜையானது குடும்பத்திலே நல்ல ஒற்றுமை நிலவுவதற்கான ஸ்ரீ மகாலட்சுமியின் திருஅருளைப் பெற்றுத் தருவதாகும். பல புராண வைபவங்களிலும் ஸ்ரீமஹா விஷ்ணுவை விட்டுப் பிரிய நேரிட்ட ஸ்ரீ மஹாலஷ்மி, திரயோதசி திதி பூஜைகளைக் கடைபிடித்து ஈஸ்வர சக்தியில் ஐக்யமடைந்தனள்.

புனித காவேரியில் முடவன் முழுக்கு உற்சவம். மன ஊனங்களைப் போக்கும் தெய்வீக மாமருந்து!

துலா மாதம் எனப்படும் ஐப்பசி மாதம் முழுவதும் காவேரி நதியில் நீராடுதலான பாக்கியம் அனைவருக்கும் கிட்டாது. காவேரிக் கரையிலேயே வாழ்கின்றவர்கள் கூட இதன் மகிமையை உணராது அவர்களின் விதி வசத்தின் காரணமாக ஐப்பசி மாதத்தின் அனைத்து நாட்களிலுமே காவேரி ஸ்நானத்தைச் செய்கின்ற பாக்கியத்தைத் தவற விட்டு விடுகின்றனர். இதற்குக் காரணம் அருகில் இருந்தால் எதனுடைய அருமையும் தெரியாது என்பதால்தான்!

முடவன் முழுக்கு என்று குறிப்பிடப் படுகின்ற கார்த்திகை மாதத்தின் முதல் நாளானது (16.11.1998) காவேரி நதி நீராடலுக்கு மிகவும் புனிதமான நாளாகும். துலா மாதத்தில் ஒரு நாளேனும் காவேரி நதியில் நீராட வேண்டும் என்று பக்தி சிரத்தையுடன் ஊர்ந்து, ஊர்ந்து, உடல் தேய நகர்ந்து வந்த ஒரு முடவர், மாயவரத் திருத்தலத்தில் துலா ஸ்நானத்திற்காக காவேரி நதியை அடைந்த பொழுது ஐப்பசி மாதம் முடிந்து கார்த்திகை முதல் தேதி தொடங்கி விட்டது. இதனால் மிகவும் வேதனையுற்ற அவர் இறைவனை மனதார வேண்டிப் பிரார்த்தனை செய்திட, இறைவனே அந்த ஏழையின்பால் இரக்கம் கொண்டு முடவன் முழக்கு என்ற திருநாளை கார்த்திகை முதல் மாதத்தின் விசேஷ தினமாக அளித்து, “இன்று ஸ்ரீ காவேரியில் நீராடினால் ஐப்பசி மாதத்தின் துலா ஸ்நானத்தின் பலன்களை எல்லாம் நீ பெற்றிடுவாய்”, என்று வரம் அளித்து, ஏனையோருக்கும் அருள்பாலித்தார். எனவேதான் இப்புனித தினத்திற்கு முடவன் முழுக்கு நாள் என்ற பெயர் வந்தது.

இறைவன் அருளால் பலருக்கு அங்க அவயங்கள் எல்லாம் நன்முறையில் அமைந்திட்டாலும் மன ஊனங்களோடு எத்தனை பேர்கள் வாழ்கின்றார்கள் ? மனிதனுள், அவன் மனதினுள், எத்தகைய ஆசாபாசங்களும், லஞ்ச லாவண்ய, காமந்தக, பொறாமையான, அழுக்கான எண்ணங்களும், தீவினைசக்திகளும், தீய எண்ணங்களும், குரோத, குரூர, அசத்திய, பாவகரமான எண்ணங்களும், நினைவுகளும்தானே சூழ்ந்து அப்பிக் கிடக்கின்றன. இந்த மன ஊனங்களை எல்லாம் எவ்வாறு அகற்றுவது?

இதற்குத்தான் முடவன் முழக்கு என்ற திருநாளை இறைவன் நமக்கு அளித்தான். ஊனம் உற்ற ஒரு ஏழைக்கு, ஒரே ஒரு காவேரி முழுக்கின் மூலம் முக்தி அளித்து முடவன் முழுக்கு என்று பெயரிட்டாலும் மன ஊனம் உடையவர்களுக்கும் நற்கதி அளிக்க வேண்டும் அல்லவா, அதற்கும் வழிவகைகள் உண்டே ! எனவே மனதிலிருந்து ஊனமான, கீழ்த்தரமான எண்ணங்களை அகற்றி முடவன் முழுக்காகிய கார்த்திகை முதல் நாள் (16.11.1998) திங்கட்கிழமை அன்று நாம் செய்ய வேண்டியது என்ன?

ஸ்ரீ சனீஸ்வரன் என்று பெயர் வருவதற்குக் காரணமே ஊர்ந்து மெதுவாகச் செல்பவன் என்று பெயர் கொண்டமையால் தான் அவருடைய சகோதரனான எம பகவான் தம்முடைய தண்டத்தால் ஸ்ரீசனீஸ்வரரை அடித்திடவே அவர் ஊனம் உற்றவர் ஆனார். இறைத் திருவிளையாடலால், ஸ்ரீ சனீஸ்வரனுக்கு ஏற்பட்ட அகந்தையை அழிப்பதற்காக இந்த லீலை நடைபெற்றது. அகந்தை, கர்வம், ஆணவம் போன்ற தீயசக்திகள் தண்டிக்கப் பட வேண்டிய மன ஊனங்கள் என்பதை போதிக்கும் நெறியாக இத்திருவிளையாடல் ஏற்பட்டதே தவிர தெய்வ மூர்த்திகளுக்கு இடையே எவ்வித பேதமும் கிடையாது. ஸ்ரீ சனீஸ்வரனோ,ஸ்ரீசிவபெருமானோ, ஸ்ரீ மகாவிஷ்ணுவோ, ஸ்ரீ பிரம்ம மூர்த்தியோ, ஸ்ரீ ஆதிபராசக்தியோ, ஸ்ரீஅகிலாண்டேஸ்வரியோ, ஸ்ரீபிள்ளையாரப்பனோ அனைவரும் ஒன்றே! சனைச்சரன் என்றால் மெதுவாக ஊர்ந்து செல்பவன் என்று பொருள். எனவே நமது மன ஊனங்களை அகற்றுவதற்கு ஸ்ரீ சனீஸ்வர பகவான் தான் பெரிதும் அருள்புரிகின்றார். காரணம் பொங்கு சனி, மங்கு சனி, தங்கு சனி என்ற மூன்று சனீஸ்வர ஆட்சிக் காலத் தில் தான் நம்முடைய, ஒவ்வொரு ஜீவனின் ஆயுளும் அமைகின்றது.

மேற்கண்ட முடவன் முழுக்கு வைபவத்தில் அந்த முடவரானவர் ஊர்ந்து, நகர்ந்து ஊர் ஊராய்க் கடந்து வருகையில் ஐப்பசி மாதத்தின் அனைத்து நாட்களிலும் தினமும், தான் உணவு உண்ணுவதற்கு முன்னர் ஒரு பிடி எள் சாதத்தை எடுத்துக் காக்கைக்கு உணவு அளித்து வந்தார். இந்த புண்ணிய சக்தியால்தான் இறைவனே அவருக்கு நேரில் வந்து தரிசனம் தந்து முடவன் முழுக்கு என்ற அரிய திருநாளையும் ஏற்படுத்தி காவேரி ஸ்நானத்தின் மூலம் அவருக்கு முக்தி நிலையைத் தந்தருளினார்.

எனவே முடவன் முழுக்கு நாளான கார்த்திகை முதல் தினம் அன்று ஸ்ரீ சனீஸ்வர பகவானுக்கு ப்ரீதியான எள் அன்னம் படைத்து மெதுவாக ஊர்ந்தபடி அடிப் பிரதட்சிணம் செய்து, பூஜித்து காக்கைக்கு எள் அன்னம் அளித்துப் பிறகுப் பிரசாதமாக எள் சாதத்தை ஏழைகளுக்கும் தானமாக அளித்து வந்தால் மன ஊனங்களாகிய தீய சக்திகளும், கெட்ட எண்ணங்களும் நிச்சயமாக அகலும். இதுவே உண்மையான “முடவன் முழக்கு” விசேஷ தினத்தின் தாத்பர்யம் ஆகும். தீயவற்றிற்கு முழுக்குப் போடுதலே இதன் லட்சியம் !

இன்றைய முடவன் முழக்கு விசேஷ தினத்தில் (16.11.1998) தன்னுடைய பத்னியுடன் ஸ்ரீ சனீஸ்வர பகவான் எழுந்த ருளிய திருத்தலங்களில் எள் எண்ணெயாகிய நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எள் சாதம் படைத்து, அடிப் பிரதட்சிணம் செய்து கருவேப்பிலைப் பொடி சாத அன்னதானம் செய்திடில் தகாத, எதிர் வார்த்தைகளால் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மன ஊனங்கள் நிவர்த்தியாகி தகராறுகள் தீர்ந்து, மன ஒற்றுமை ஏற்பட்டு குடும்பத்தில் சாந்தி நிலவுவதற்கு இந்த முடவன் முழுக்குத் திருநாளின் விசேஷ பூஜைகள் பெரிதும் உதவுகின்றன.

இன்று காவிரி நீர் கொண்டு தீர்த்த கண்டியை நிரப்பி விளக்கு பூஜை செய்தல் சிறப்புடையது. தோஷங்கள், கண்திருஷ்டி தீர விளக்கு பூஜைக்குப் பிறகு மாவிலையால் தீர்த்தத்தை இல்லம் முழுதும் தெளித்திட வேண்டும். இத்தகைய பூஜைகளையும் தான தர்மங்களையும் தம் பத்னியாகிய ஸ்ரீ ஜேஷ்டையுடன் ஸ்ரீ சனீஸ்வர பகவான் எழுந்தருளியுள்ள ஸ்தலங்களில் கொண்டாடுவது மிகவும் உத்தமான பலன்களைத் தரும். இன்று ஊனமுற்றோருக்குத் தகுந்த உதவிகளைச் செய்திடுக!

நவம்பர் 1998 - விசேஷ தினங்கள்

3.11.1998 பெளர்ணமி
3.11.1998 மதியம் 2.45 முதல் 4.11.1998 புதன் கிழமை காலை 10.48 வரைபெளர்ணமி திதி அமைகின்றது.
3.11.1998 இரவு கிரிவல நாள்
5.11.1998 அவமாகம் மூன்று திதிகளை உடைய நாள்
16.11.1998 முடவன் முழுக்கு - ஸ்ரீ விஷ்ணுபதி புண்யகாலம்
1.12.1998 திருஅண்ணாமலை பரணி தீபம்
2.12.1998 ஸ்ரீ அண்ணாமலையார் கார்த்திகை தீபம்.

அமுதபுஷ்ப மூலிகை

ஐப்பசி பௌர்ணமியில் தோன்றும் அமுத புஷ்ப மூலிகை

பெளர்ணமி தோறும் தோன்றும் மூலிகைகள் மிகவும் அபூர்வமானவை. பெளர்ணமி கிரணங்களை பிரதிபலிக்கும் பூசுர பாறைகள்!
பல கோடி சூர்யப் பிரகாசம் கொண்டவை! பூசுர பாறையில் சேர்கின்ற, ஒரு கோடி வருண பூசுர மழைத் துளிகளில் ஒரு அமிர்த மழைத் துளியில் விளைவதே அமுத புஷ்ப மூலிகை!
பஹுதான்ய வருட ஐப்பசிப் பௌர்ணமியில் அன்னாபிஷேகப் பெளர்ணமியில் தோன்றுவதே அமுதபுஷ்ப மூலிகை!

வயிற்றில் வளருகின்ற பிள்ளை மாபெரும் அசுரனாக, தந்தையை மிஞ்சியவனாகப் பிறப்பெடுத்து விட்டால் பிரபஞ்சத்திற்கே அது பெருந்தீங்காக அமைந்துவிடும் என்று இந்திரன் (தவறாக) எண்ணி ஹிரண்யனின் மனைவியைச் சிறைப் பிடித்துச் செல்கின்றபோது, ஸ்ரீ நாரதர், ஸ்ரீ அகஸ்தியர், ஸ்ரீ பரத்வாஜர், ஸ்ரீ அஷ்டவக்ரர், ஸ்ரீ வசிஷ்டர் போன்ற மஹரிஷிகள் இந்திரனைத் தடுத்து, “இந்திரா நீ எதையும் தவறாக எடைபோடாதே! இப்பெண்மணியானவள் ஸ்ரீ நாரத பெருமானின் ஆஸ்ரம பர்ணசாலையில் பத்திரமாக இருந்து, ஹிரண்யன் தவத்திலிருந்து மீண்டும் வரும் வரை பாதுகாப்புடன் தங்குவதற்கு நீதான் தக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டுமெனச் சொல்லியதோடு மட்டுமன்றி, அனைத்து மஹரிஷிகளும், ஹிரண்யனின் மனைவிக்கு பலவித அறிவுரைகளையும் தெய்வீக விளக்கங்களையும் தந்து சென்றனர்.

ஸ்ரீ அகஸ்திய மாமுனி ஹிரண்யனின் மனைவிக்குப் பலவித வேத சாஸ்திரங்களையும் போதித்து சந்திர தரிசனம், கிரிவல வழிபாடுகள், மூலிகா பந்தன பூஜைகள், அற்புதமான ஹோம வழிபாடுகள் என்றவாறாக எத்தனையோ அதி அற்புத பூஜை முறைகளைத் தந்தருளியதோடு மட்டுமின்றி, வேதத்தின் சாரமாகப் பலவிதமான மந்திரங்களையம் போதித்தார். ஸ்ரீ அகஸ்திய மஹா பிரபு தீர்க்கதரிசியல்லவா? அவள் கருவில் வளர்கின்ற பிரஹலாதனே ஸ்ரீ நரசிம்ம சுவாமியை தரிசனம் செய்யும் தகுதி பெற்றவன் என்பதை தீர்க்க தரிசனத்தால் உணர்ந்து, ஹிரண்யனின் மனைவிக்கு உபதேசம் செய்வதுபோல கர்ப்பா வித்யாப்யாசமாக, அவள் வயிற்றில் வளரும் கருவிற்கு போதித்தார். இவ்வாறாக, கருவிலே திருவுடையானாக, ஸ்ரீ ஆஞ்சநேயரைப் போல் பெருந் தெய்வீக சக்தி பெற்றவனாக வளர்ந்த அச்சிறுவனே பிரகலாதன்.

மேலும் ஸ்ரீ அகஸ்திய மாமுனி ஹிரண்யனின் மனைவியிடம், “இறையருளால் சுயம் பிரகாசமான கருவை நீ தாங்கிக் கொண்டுள்ளாய் அந்த அருள் ஞான ஜோதியானது உலகிற்கே உக்கிர ஜோதியாக, அற்புத ஒளியைத் தாங்கி வருகின்ற ஸ்ரீ நரசிம்மமூர்த்தியையே தரிசிக்கின்ற அனுக்கிரகத்தைப் பெறும்! ஆனால் அந்த அனுகிரஹத்தை பிரஹலாதன் பெறவேண்டுமென்றால் அதற்குரித்தான பல மூலிகா பந்தனக் கட்டுகளை அவனுடைய திசுக்களில் இப்பொழுதே ஐக்கியமடையச் செய்தல் வேண்டும். அற்குரித்தான திவ்ய பூசுர, சுக, ஸ்வயம்ஜோதி விருட்சங்களும், கற்பகத் தருக்களும், கனக குளிகை மூலிகைகளும், விளையுமிடங்கள்  பிரபஞ்சத்தில் ஒரு சில இடங்களே! அருணாசலம், இமயம், திருக்கயிலாயம், நைமிசாரண்யம் போன்ற இடங்கள் தாம் இத்தகைய அதி அற்புத மூலிகை இரகசியங்களைக் கொண்டுள்ளன. ”

இத்தகைய மூலிகா, பந்தன இரகசியங்களில் கரை கண்டவர்கள்தாம் உக்ர ஜோதி கண்ட சித்தர், திரிகண்ட சத்யஜோதி சித்தர், யோக ராம கண்ட சித்தர், சுத்த வித்யா சதுர்கண்ட சித்தர், யோகி நாராயண கண்ட சித்தர், பிரயோக விபூதி கண்ட சித்தர், ஐயாஸ்ரீகண்ட சித்தர், வாலீ நீலகண்ட சித்தர், நிறை சோமகண்ட சித்தர், ஆவிஈசானசம்புசித்தர், விருட்ச ஹிருதய சிவசித்தர், ஜோதி பிரம்ம சம்புசித்தர், மாலாதி வைராக்ய சிவசித்தர், தேவஞான சம்பு சித்தர், திரிலோசன கண்ட சிவசித்தர், வருண சிவசித்தர், ஈஸ்வர சிவசித்தர், அகோர சிவசித்தர் போன்ற உத்தம சித்புருஷர்கள் எல்லோரும் ஒளிப்ரகாச மூலிகா பந்தனங்களில் சிறப்பிடம் பெற்றவர்கள்.

இவர்களுக்கெல்லாம் ஒளிப்ரகாச சித்தியை அளித்தவர் ஸ்ரீகாகபுஜண்ட மஹரிஷியவார். பகுதான்ய வருடத்தில் ஸ்ரீகாகபுஜண்டரின் சிஷ்யர்கள் பல கோடி லோகங்களிலிருந்தும் அருணாசலம், நைமிசாரண்யம், திருக்கைலாயம் போன்ற இடங்களில் திரண்டு கூடி ஸ்ரீ கண்ட பூஜையை நடத்துகின்றார்கள். இவ்வித ஒளிப்பிரகாச சித்தர்களில் பலர் ஸ்ரீகண்ட சிவமாமுனிகள் என்றும் பெயரைத் தாங்கி நிற்கின்றார்கள்.

ரசமணி லிங்கங்களின் மஹிமைகளுள் மிகவும் முக்கியமானது யாதெனில், ரசமணி லிங்கத்திலிருந்து வெளிவருகின்ற ஒளிக் கதிர்கள், பல கோடி சூரியன்களின் பிரகாசத்திற்கு ஒப்பானதாகும். ஒரு சாதாரண சூரியனின் பகல் வெளிச்சத்தையே நம் கண்களால் பார்க்க முடியவில்லையென்றால், பல கோடி சூரியப் பிரகாசத்தை நிகர்த்த ரசமணி லிங்கங்களின் ஒளிப்பிரவாகத்தை என்னென்று சொல்வது! இவ்வொளிக்கதிர்களைப் பார்ப்பதற்கு பூசுர சக்தியைப் பெறுதல் வேண்டும்.

பூசுர பாறைகள் நிறைந்துள்ள இடங்கள் பிரபஞ்சத்தில் ஒரு சிலவே. அவற்றுள் மிக முக்கியமானது திருஅண்ணாமலைத் திருத்தலம் ஆகும். ஏனென்றால் நாம் இன்று கல் ரூபமாகப் பார்க்கும் திருஅண்ணாமலை நம் மாயையால்தான் நமக்குக் கல்லாகத் தோன்றுகிறதே தவிர, இறைவனின் திருமேனியாக விளங்குகின்ற, ஸ்ரீ சர்வேஸ்வரனின் உடலாக விளங்குகின்ற திருஅண்ணாமலையின் ஒவ்வொரு துகளும், சுயம்பு லிங்கமாகும். சுயம்பு லிங்கங்களின் மொத்த ஸ்வய உரு ஸ்வயம்புலிங்கமே திருஅண்ணாமலை என்றால் கூட அது மிகாது.

மேலும் பல சுயம் பிரகாச ஸ்வயம்பு லிங்கங்களின் தொகுப்பைத்தான் தமக்குப் புரியும் வகையில் பூசுர பாறை என்றும், சகஸ்ர பாறை என்றும் பல பாறைகளாக நமக்கு சித்புருஷர்கள் விளக்குகின்றனர். இந்த பூசுர திருவளர் பாறையின் மகிமை யாதென்றால், மேற்கண்ட ஸ்ரீ காகபுஜண்ட சித்புருஷரின் சிஷ்யர்களான, ஸ்ரீகண்ட சிவ பகுதியைச் சேர்ந்த சித்புருஷர்கள் பூசுர பாறையின் அருகில் அமர்ந்துதான் கோடிக்கணக்கான ஆண்டுகள் தவம் புரிகின்றார்கள். பூசுர பாறைகளிலிருந்து வெளிவருகின்ற வெப்பமோ, ஒளியோ பலகோடி சூரியன்களுக்கும், மேம்பட்டது என்று நாம் ஏற்கனவே கூறியுள்ளோமல்லவா? இவற்றின் அருகில் அமர்ந்து தவம் புரிவது என்றால், அதன் மகத்துவத்தை நீங்களே புரிந்துகொள்ளலாம்.

அமிர்த தாரை

அண்ணன்மார்களின் கடமை!

மூத்த அண்ணன் செய்ய வேண்டிய கடமைகள் பல இருந்தாலும், அவற்றுள் முக்கியமாக, தங்கைகளின் திருமணத்திற்காக அவர்கள் முழு முயற்சிகள் செய்தல் வேண்டும். எவ்வளவு உண்மையான, கடினமான முயற்சி செய்தாலும் தங்கைகளுக்குத் திருமணம் ஆகவில்லை என்றால், தங்கைகளின் வாழ்வில் கடுமையான கர்ம வினைகள் சூழ்ந்துள்ளமையைத் தெரிந்து கொள்ளலாம். ஆகவே அண்ணன்மார்கள் மனதில் கவலை கொள்ளாமல் காங்கேயம் அருகே உள்ள “சிவன் மலைக்குத்” தங்கைகளை அழைத்துச் சென்று சிவதரிசனம் பண்ண வைத்து, திங்கள் தோறும் நேர்த்தி வைத்து வெண்பொங்கல் படைத்து ஏழைகளுக்கு அன்னதானமாக அளித்துவர திருமணப் பொறுப்புகள் நிறைவேறுவதற்கான வழி கிட்டும்.

உறவினர் உதவி கனிந்திட...

உற்றார், உறவினர் பலர் இருந்தாலும் அவசர உதவியென்று சென்றிடில் அவர்கள் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்து குறை பேசி மனம் நோகும்படி துன்பமடையச் செய்வார்கள். “ஊர் பூராய் உறவு, உதவுவதற்கு ஆளில்லை”, என்பது போல உறவினர்கள் இருந்தும் உதவ இல்லையென்றால், சொத்து விஷயங்களில் நாம் பல தீய கர்ம வினைகளைச் செய்திருக்கிறோம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு உறவினர்களிடமிருந்து உதவியோ, பொருளோ, பணமோ வர வேண்டியிருந்தும் அவசரத் தேவைக்கு உதவி பெற முடியாதவர்க்ள பழனி அருகே வட்ட மலை முருகனை வேண்டி வில்வப் பழ அபிஷேகம் செய்து, சிகப்பு நிற ஆடைகளை தானமாக அளித்து வர, தெய்வ சக்தியினால் உறவு முறை மூலம் உதவி கை கூடும்!

மூத்த சகோதரியின் தியாகத்தை மறவாதீர்!

தேனிமலை

குடும்பத்தின் மூத்த பெண்ணாக இருப்பின் நிறைய பொறுப்புகள் வந்து சேரும். கடுமையாக உழைத்துத் தன் தங்கை, தம்பிகள் முன்னுக்கு வருவதற்காக தன்னையே தியாகம் செய்து கொண்ட மூத்த சகோதரியின் மன விருப்பம் போல்தான் இளையவர்கள் நடக்க வேண்டும். இல்லையெனில் மூத்த சகோதரியின் மன வேதனைக்கு அவர்கள் ஆளாக நேரிடும். இதனால் தம்பி தங்கைகளின் வாழ்க்கையில் பல சாபங்கள் பிரச்னைகளாக வந்து சேரும். மூத்த சகோதரிக்கு நன்றி செலுத்த மறந்தோரும் மூத்த சகோதரியின் சாபத்தாலும் மன வேதனையாலும் துன்புறுவோரும் புதுக்கோட்டை அருகே தேனிமலை ஆலயத்தில் புனித நீராடி ஸ்ரீதேனுகந்த நாதரை வழிபட்டு தயிர் சாதம் படைத்து தானமளித்திட மூத்த சகோதரியின் சாபமும், மன வேதனையின் கொடூரமும் தீர்ந்து, குடும்பத்தில் சுகம் காண்பர். மூத்த சகோதரி இறந்திருப்பின் அவ்வான்மாவிற்கு சாந்தமும் கிட்டும்.

அத்வைத தத்துவம் புகட்டும் அங்கோல மரம்

தன்னுள் உறையும் ஆத்மத்தை ஜோதி ரூபமாகக் காண சில ஒளிசக்தி நிறைந்த மூலிகைகளின் தரிசனங்களையும் பெற்றாக வேண்டும். இத்தகைய தெய்வப் பிரகாச சக்தியுடைய மூலிகை மரங்களுள் ஒன்றே அங்கோல மரம் என்னும் அழிஞ்சில் மரம். இவ்வற்புதமான அழிஞ்சில் மர விதையானது கனியிலிருந்து உதிர்ந்து பூமியில் விழுந்து நகர்ந்து மீண்டும் மரத்தின் மேலேறி ஐக்கியமாகி விடும்! கண்ணுக்குத் தெரியாது நிகழும் சூட்சும தெய்வீக லீலைகளிவை! கோடானுகோடி தேவர்களும் ஓடோடி வந்து தரிசிக்கின்ற திவ்யமான மரம் இது! இந்த விருட்சத்திற்குப் புத்தாடைகளைச் சாற்றி ஏழைகளுக்குத் தானமாக அளித்துவர கடுமையான தோல் வியாதிகளுக்குத் தக்க நிவாரணம் கிட்டும். பரணி, கார்த்திகை, பிரதோஷம், அமாவாசை, பௌர்ணமி, ஷஷ்டி, செவ்வாய் தினங்களில் அழிஞ்சில் மரத்திற்கு தாமே அரைத்த மஞ்சள், சந்தனம், குங்குமமிட்டு, வஸ்திரம் சார்த்தி சுற்றிலும் தீபங்களை ஏற்றி வழிபட்டு வந்திட, வீட்டில் தீபம் ஏற்ற நல்ல மருமகளும் வாய்த்திடுவாள்! சென்னை பொன்னேரி அருகே சின்ன காவணம் ஸ்ரீ அஷ்டோத்தர ஈஸ்வர சிவாலயத்தில் அழிஞ்சில் தல விருட்சமாக உள்ளது. தேவ மரம் ஆதலின் ஒருபோதும் இதன் இலை, காய்களைப் பறித்தல் கூடாது!

ஊதாரித்தனம் நீங்கிட..

எவ்வளவு சம்பாதித்துக் கொடுத்தாலும் அதைச் சிக்கனமாகச் செலவு செய்வது குடும்பத் தலைவியின் கடமையாகும். சிக்கனத்தைக் கடைப் பிடிக்காமல் ஊதாரியாகப் பெண்கள் இருந்திடில், அந்த குடும்பத்தின் நிலை ஓட்டைப் பானைக் கதையாகி விடும். ஒருபுறத்தில் குடும்பத்தின் தலைவி, கட்டுக்கடங்காமல் செலவு செய்வதும், ஆண்கள் உழைத்து உழைத்துப் பொருள் தேடித் தருவதும் உண்டு. இவ்வாறு இருக்கின்ற குடும்பங்கள் ஒழுங்கு பெறுவதற்கும், சில நேரங்களில் ஆண்கள் கடுமையாக ஊதாரியாய்ச் செலவு செய்வதும் பெண்கள் உழைத்துக் குடும்பத்தைக் காப்பாற்றும் நிலையிலும் உள்ளது. இந்த அவல நிலை ஏற்படாமல் இருக்கவும் இருக்கின்ற வாழ்நிலையில் மனதிருப்தியுடன் வாழவும் கணவன்/மனைவியின் ஊதாரித்தனம் தணியவும் வேதாரண்யம் குழகர் கோயில் இறைவனை வேண்டி வெள்ளிக்கிழமை துவாதசி நாட்களில் புட்டு தானம் செய்துவர ஊதாரித்தனமான செலவுகள் குறைந்து குடும்பத்தில் அமைதி நிலவும்.

நிரந்தர வேலை/வியாபாரம் அமைந்திட.....

தற்காலத்தில் எவ்வளவு உழைத்தாலும் பணம் வரவில்லை, என்ன வியாபாரம் செய்தாலும் விருத்திக்கு வரவில்லை என்று ஏங்கி, பலவிதமான தொழில்களையும் வியாபாரங்களையும் மாற்றி மாற்றிக் கடன்பட்டு அலைகின்றவர்கள் நிறைய உண்டு. இதற்குப் பூர்வ ஜென்ம காரணங்கள் பலவும் உண்டு. ஒவ்வொரு காரணத்தையும் எடுத்து அலசி ஆராய்ந்தால் காலம் போய் விடும். ஆகவே இவ்வாறு கஷ்டப் படுகின்றவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையுடன் செவ்வாய், துவாதசி, ஷஷ்டி, கிருத்திகை, விசாகம் நாட்களில் திருநெல்வேலி  “குறுக்குத் துறை” முருகனை வேண்டி இடை விடாது வலம் வந்து வணங்கிடில் நிரந்தர வேலை/நல்ல வியாபாரம் அமையும்.

விட்ட பணத்தை நியாயமாகப் பெற!

கொடுக்கல், வாங்கல், Chit fund, finance, தொழிலில் ஈடுபடுகின்றவர்கள் அகலக் கால் வைத்து  விடக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பண வட்டத்திற்குள்ளேயே தீர யோசித்து முடிவெடுத்துச் செயல்படுதல்  வேண்டும். அவ்வாறு மிகுந்த கவனத்தோடு அகலக் கால் விரிக்காமல் நிதானமாக செயல்பட்டும்  வரவேண்டிய பணங்கள் வராது தாமதம் அடைந்திடில், அல்லது முழுமையாக வராவிடிலோ அவற்றை  முறையாகப் பெறுவதற்கு சில பரிஹார வழிகளுண்டு! நமக்கு நியாயமாகக் கிட்டவேண்டிய பணத்தை  தார்மீகமான முறையில் பெற்றிட கரூர் அருகே வெண்ணெய் மலையில் அருள்பாலிக்கும் முருகனுக்கு  இருவாட்சி / அரளி மலர்களால் அலங்கரித்து செவ்வாய், ஆயில்ய நட்சத்திர நாட்களில் தேங்காய் எண்ணெய்  விளக்கேற்றி, ஏழைகளுக்கு வெண்ணெய் தானம் செய்து வர பண வரவு சீர் பெறும்.

அகங்காரமே வெற்றிக்கு எதிரி!

எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி பெறுதல் அவ்வளவு எளிதாக அமைந்து விடாது! ஓரிரு காரியங்களில் வெற்றி பெற்ற உடனேயே ஒரு விதமான அகங்காரம் மனதினுள் புகுந்துவிடும். இந்த அகங்காரத்தால் நம் திறமையையே நாமே போற்ற ஆரம்பித்து விடுகிறோம். அவ்வாறு அகங்கார, ஆணவத்தில் மிதக்கையில் தோல்வியுற்றவரைப் பார்த்து இளக்காரமாகப் பேச முற்படுவோம். இதனால், சுவாச நிலையில் உள்ள வாசி/சுவாச பூதங்கள் பேதமடைந்து நம் எதிர்கால வெற்றிப் பாதையைத் தடுத்துவிடும். அவ்வாறு வாழ்க்கையில் சில வெற்றிகளைக் கண்டு பல தோல்விகளைச் சந்தித்தவரும் உண்டு. பதவி, செல்வம், புகழ் போன்றவற்றால் அகங்காரங் கொண்டு தவறிழைத்தோரும் திருந்தி வாழ “வில்லுடையான் பட்டி” இறைவனை வேண்டி ஐந்து வகைப் பழங்களை கூடிய பஞ்சாமிர்த அபிஷேகம் செய்துவர தோல்வியைத் தழுவாத அகந்தையற்ற வாழ்வைப் பெறலாம். (வில்லுடையான் பட்டி நெய்வேலிக்கு அருகில் உள்ளது.) அகந்தையால் பிறர் வாழ்வை பாதித்தமைக்கு இத்திருத்தலத்தில் நவமி, புனர்பூசம், ஹஸ்த நட்சத்திர/திதி நாளில், வழிபட்டிடில் தக்க பிராயசித்தம் கிட்டும்.

நித்ய கர்ம நிவாரணம்

1.11.1998 – சிறுவர்களுக்கு எண்ணெய் தானம் – எண்ணெய் வியாபாரிகளுக்கு நல்ல செய்தி வரும்.

2.11.1998 – கோவிந்தன், முருகன், முராரி, வரதன் போன்ற திருமால் நாமம் உள்ளவர்களுக்கு செவ்வாய் கிரஹத்திற்குரிய துவரம் பருப்பு தானம் – தொழிலில் / அலுவலகக் காரியங்களில் நல்ல தைரியம் தரும்.

3.11.1998 – கோயில்களுக்கு இரும்பு பீரோ தானம் – உளுந்து போன்ற கறுப்பு நிற தான்ய வியாபாரிகள் தொழிலில் முறையான நல்ல வருமானம் பெறுவர்.

4.11.1998 – ஏழைக் குழந்தைகளுக்கு, தங்க கடுக்கன், தோடு அளித்திடில் – கடன் சுமை தணியும்.

5.11.1998 – ஏழை சவரத் தொழிலாளர்களுக்கு இலவசமாக சவரப் பெட்டி , ரேசர் (Razer) போன்றவை தானம் – வியாபார விருத்தி.

6.11.1998 – ஏழ்மையான கூலித் தொழிலாளர்களுக்கு புதிய வஸ்திரமும் தலைப் பாகைத் துண்டும் தானம் – வியாபாரக் கடன் நிவர்த்தி.

7.11.1998 – வீட்டில் கடைக் குட்டியான குழந்தையின் கையால் பாலமுருகன் கோயிலில் அல்லது முத்துக் குமாரசாமி கோயிலில் அன்னதானம் செய்வதால் வாகன வியாபாரிகள் நலம் பெறுவர்.

8.11.1998 – இல்லத்தின் மூத்த சுமங்கலி மூலம் சிவன் கோயிலில் பச்சரிசி அன்னதானம் – அரிசி வியாபாரிகள் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

9.11.1998 – கல் உடைக்கும் பெண் தொழிலாளிகளுக்கு உணவு, ஆடை தானம் – வெல்ல வியாபாரிகளுக்கு முன்னேற்றம்.

10.11.1998 – தோட்டத் தொழிலாளர்களுக்கு உணவு, ஆடைதானம் – Builders தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பர்.

11.11.1998 –Abortion கேஸ் தவிர மற்ற மருத்துவப் பணிகளில் அன்பான, நல்பணியாற்றும் செவிலியர் / மருத்துவச்சியர்களுக்கு ஆடை, உணவு தானம் – காத்து கறுப்புகள் நீங்கும்.

12.11.1998 – செக்கு கூலித் தொழிலாளர்களுக்கு வாழைத் தண்டு உணவு தானம் – வயிறு சம்பந்தமான கோளாறுகள் தீரும்.

13.11.1998 – 75 வயது கடந்த ஏழ்மையான சித்த வைத்தியருக்கு பாதபூஜை ஆடை, அன்னதானம் – இறையருளால் ஆபரேஷன் செய்யத் தேவையின்றி - நோய்கள் விலகும்.

14.11.1998 – உழவு/பாரம் சுமக்கும் காளை மாட்டிற்கு, தன் ஒரு வயதிற்கு ஒரு படி என்ற கணக்கில் அவரவர் வயதிற்கு ஏற்ற வண்ணம் கோதுமைத் தவிடு தானம் – மனைவிக்கு மகிழ்ச்சியான செய்தி வரும்.

15.11.1998 – ஊதுபத்தி செய்கின்ற ஏழைத் தொழிலாளிகளுக்கு ஆடை, உணவு தானம், சைனஸ், பீனிஸம், ஆஸ்மா நோய் குணமாக வழி பிறக்கும்.

16.11.1998 – பிரசவத்திற்கு இலவசமாக வாகன உதவி செய்தவருக்கு ( குறைந்தது 21 ஏழைகளுக்கு இலவசமாக பிரசவத்திற்கு வாகனம் ஓட்டியவர்களுக்கு) வேண்டிய தானமளித்தல் – Tourist Cab Service வியாபாரத்தில் முன்னேற்றம்.

17.11.1998 – இலவசமாக கோயிலுக்கு கோபுரம் கட்டித் தந்த உத்தம ஸ்தபதிக்கு / தொழிலாளர்கட்கு தான தர்மங்கள் அளித்து கௌரவித்தல் – AC, Fridge, கம்பெனி உரிமையாளர்கள் வியாபாரம் விருத்தி.

18.11.1998 – இலவச வைத்யம் பார்க்கும் நடுத்தர/ஏழை மருத்துவர்களுக்கு உதவுதல் – Medical Representative / Sales Officers தங்கள் Target களை எளிதில் அடைந்து விடுவர்.

19.11.1998 – ஏழைப் பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக செருப்பு தானம்., காலணி வியாபாரிகளுக்கும் தொழில் விருத்தி.

20.11.1998 – கோயில்களுக்கு பிரதோஷ மூர்த்தி வலம் வர ஏற்பாடு செய்தல் – கடல் வாணிபத்தில் நல்ல முன்னேற்றம்

21.11.1998 – கோயில்களில் முள், புல், புதர்களை சுத்தப்படுத்துதல் – பொய் சொல்லி நண்பனை ஏமாற்றிய பாவம் ஓரளவு தீரும்.

22.11.1998 – மர பாரந் தூக்கும் யானைகளுக்கு வயிறார உணவு அளித்திடில் – பெரிய வாகன வியாபாரிகள் நல்ல வருமானம் பெறுவர்.

23.11.1998 – நடுத்தர நிலையிலுள்ள சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லாக் கடன் உதவி அளித்திடில் கூட்டாளிகளில் கருத்து ஒருமித்த நிலை நிலவும்.

24.11.1998 – மிகவும் ஏழ்மை நிலையிலுள்ளவர்கட்கு இலவசமாக வீடு கட்ட உதவி செய்திடில் வெளி நாட்டிலிருந்து நற்செய்தி வரும்.

25.11.1998 – ஏழை விவசாயிகளுக்கு ஏருடன் இரட்டைக் காளை அளித்திட / வாங்கப் பண உதவி அளித்தல் – பிள்ளைகளுக்கு நல்ல படிப்பு வரும்.

26.11.1998 – சாலைப் பணித் தொழிலாளர்களுக்கு உணவு, ஆடைதானம், கண்ணேறு தோஷங்கள் தீரும்.

27.11.1998 – சயன நிலையில் உள்ள பெருமாளுக்கு வஸ்திரம் சார்த்துதல் – மனக் குழப்பத்திற்கு விடை  கிடைக்கும்.

28.11.1998 – வெள்ளைக் குதிரைக்கு வயிறார கொள்ளுதானம் – தீய கனவுகளின் பலன் குறையும்.

29.11.1998 – வீட்டில் உள்ள நல்ல நிலையிலுள்ள பழைய ஆடைகளை தானம் செய்திடில் – சரிவரத் தூக்கம் வராதவர் நன்றாக உறங்குவர்.

30.11.1998 – தாமே அரைத்த சந்தனத்தை அமர்ந்த நிலையில் உள்ள பெருமாளுக்கு மார்பில் சார்த்திடில் குழந்தைகளின் பயம் போகும்.

 

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam