அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர்

பேரண்ட கங்கையெனப் பெரும் பிரவாகம் பூண்ட கலைவாணியின் நதிச் சீற்றத்தைத் தம் கொப்பறையில் ஏந்தியதால் ஸ்ரீபுக்கொளியூர் போடா சுவாமிகளின் ஜீவ சமாதியில் அபிஷேக ஆராதனைகள் , அன்னதானம், நீர்மோர் தானம் போன்ற பல்வேறு வகையான தானங்களைச் செய்திடில் நன்மழை பொழியும், மழை பெய்ய வரம் தரும் மகாசித்த புருஷர் இவர். மேலும் பல்வேறு காரணங்களால் திருமணங்கள் தடைபட்டுள்ளதெனில் இவருடைய ஜீவசமாதி தரிசனமும், பூஜைகளும், பல்வேறு வகையான தானங்களும் லக்ஷ்மிகரமான திருமண வாழ்க்கைக்கு வழி வகுக்கும். எனவே தடைப்பட்ட திருமணங்கள் நிவர்த்தி பெற, திருமணங்கள் நன்கு நடைபெற இவருடைய ஜீவசமாதி தரிசனம் இன்றியமையாததாகும்.
மயானத்தில் இவருடைய ஜீவசமாதி அமைந்துள்ளதால் பல ஐயங்கள் எழலாம். இன்றைக்குத் தமிழகத்தில் பெரும்பாலான சிவத்தலங்களில் சித்தர்களின் ஜீவ சமாதிக்கு மேல் தான் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அனைத்து உலக ஜீவன்களையும் உய்விக்க கூடிய திருஅண்ணாமலையில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரர் சிவலிங்கத்திற்கு அடியில் இடைக்காட்டுச் சித்தர் என்ற மஹா சித்த புருஷரின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. எனவே சித்தர்கள் ஜீவசமாதி கொள்ளும் இடத்தில்தான் கோடானுகோடி லிங்கங்கள் அரூவமாக எழுந்துள்ளன. மயானத்தை மங்கள பூமியாக மாற்றும் வல்லமை பெற்றவர்கள் சித்தர்கள். எனவே ஸ்ரீபுக்கொளியூர் போடா சுவாமிகளின் ஜீவசமாதி மயானத்திடை அமைந்திடினும் இங்கு மங்களகரமான திருமணங்கள் நடத்துவது விசேஷ பலன்களைத் தரும். இத்தகைய சித்த புருஷர்களின் ஜீவசமாதியில் நடைபெறும் அனைத்து வைபவங்களிலும் தேவர்கள், ரிஷிகள், மஹான்கள், யோகிகள் வந்து கலந்து கொண்டு மகிழ்ந்து வாழ்த்துகின்றனர். தங்கால் மௌனகுரு சுவாமிகளின் ஜீவ சமாதியில் இன்றைக்கும் பல திருமணங்கள் நடைபெறுகின்றன.
சிவபெருமானின் சித்தத்தில் என்றும் உறையும் ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர் பிறப்பு இறப்பு அற்றவர். இறை அவதாரங்களுக்கும் அப்பாற்பட்டவர். இவருடைய தெய்வீக நிலையை வார்த்தைகளால் வடித்திட இயலாது. இவரைப் பற்றிய ஏனைய ஆன்மீக ரகசியங்களைச் சித்த புருஷர்களே அறிவார்கள்.
சிவன் பாற்கடல் அமுதம் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விடத்தைத் தம் தொண்டையுள் செலுத்தி விழுங்க முயன்றார். உமை அவ்விடத்தை உட்செல்ல விடாது தம் திருக்கைகளால் இறைவனின் கழுத்தைப் பற்றினாள். அந்த க்ஷணநேர சிவசக்தி ஸ்பரிசத்தால் பல அற்புதங்கள் விளைந்தன. அந்த நேரத்தை சித்தர்கள் அமிர்த நேரம் என்று குறிப்பர். அத்தகைய அமிர்த மயமான புனித நேரத்தில் இறைவன் பல மகான்களை, சித்தர்களை, ஞானியர்களை உருவாக்கினான். அவர்களுள் ஒருவரே சிவப் புகழ் பெற்று என்றும் வாழும் ஏகாந்த ஜோதியாய் விளங்கும் இறை அற்புதங்களை நிகழ்த்த வல்ல ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர்.
ஒரு ரூபாயளவிற்கான குங்குமப் பொட்டு, மாங்கல்யச் சரடு, காதணிகள், மூக்குத்தி, கை வளையல்கள், கால் மெட்டிகள் ஆகிய இவைகளே ஒரு குடும்பப் பெண்ணைக் கவசம் போல் எப்போதும் காக்கின்றன.

ஸ்ரீமகா அவவதூது பாபா

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரியின் அருள் கடாட்சத்தாலும், கோடானு கோடி தேவதைகளின் அருந்தவத்தாலும், தேவர்கள், பித்ருக்கள், ஏனைய தெய்வாதியர் கருணையாலும், அனைத்திற்கும் மேலாக இறையைக் காட்ட வல்ல, காட்டி நிற்கின்ற எல்லாம் வல்ல சற்குருவின் திரண்ட குருவருளாலும் சென்ற மாதத்தில் இருந்து ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தரின் சரிதம் மேற்கொண்டு, இத்திருப் பூவுலகில் மட்டுமல்லாது,  அனைத்துக் கோடி அண்டங்களிலும் ஆன்மீகப் பெருஞ் ஜோதியாய் எல்லாம் வல்ல சதாசிவ பிரம்மத்தின் அடிமையாய் பராசக்தி அடிமைகளாய் உலவி வரும் சித்தர் பெருமான்கள் பற்றி இதுவரை எவரும் அறிந்திராத ஆன்மீக ரகசியங்களை உலகிற்கு உணர்த்துவதில் பெருமை கொள்கின்றோம்.
மறைபொருளாய் விளங்கும் இத்தகைய ஆன்மீக ரகசியங்களை் கலியுக மக்கள் இறை நெறியில் மேன்மையடையும் பொருட்டுத் தம் குருநாதரிடமிருந்து பெற்று நமக்கு அருள்கின்றவர் குருமங்கள கந்தர்வாவாகிய ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் ஆவார். இத்தகைய சித்த மஹா புருஷர்களின் ஆன்மீகத் தோற்ற விளக்கங்களை, ரகசியத் தாத்பர்யங்களை நாம் அறியும் முன்னர் மூன்று முக்கிய நிலைகளை மேற்கொள்ள வேண்டும்.
பரப்பிரம்மத்தின் சித்தத்தில் என்றும் ஏகாந்த ஜோதியாய் ஒளிரும் சித்த புருஷர்களின் சரிதத்தைப் பக்தி சிரத்தையுடன் கேட்க வேண்டும்.
அவர்களின் திவ்ய சரித்த்தைப் பரிபூரண நம்பிக்கையுடன் உய்த்துணர வேண்டும். அவர்களுடைய அவதார மஹிமைகளை உணர குருவருள் பூண்ட திருவருள் தேவை.
அனைத்துக் கோடி அண்டங்களுக்கும் எட்டாத சித்த புருஷர்களின் புனித வாழ்க்கையைச் சற்குருமார்கள் அருளும் போது அதனை மனிதனின் விஞ்ஞானப் பூர்வமான சிற்றறிவிற்கெட்டாத, பிரபஞ்சத்தினும் விஞ்சிய மெய்ஞ்ஞானப் பேரிலக்கியமே சித்தர்களின் பூர்வீக ரகசியமாகும். மீண்டும் மீண்டும் கடுகளவு அறிவு கொண்டு ஆராய்தல் வீணானது மட்டுமன்றி அவநம்பிக்கையையும் அறிவின்மையையும் பெருக்கும்.
சிவபெருமானால் உருவாக்கப்பட்ட விசேஷமான அமிர்த நேரத்தில், அப்பரம்பொருனாலேயே சிருஷ்டிக்கப்பட்ட சித்த புருஷர்களை நாடிச் சரணடைந்து வாழ்வது நம்முடைய கடமை. சாதாரண மனிதனுக்குப் பிறப்புக் கால நேரமும், கோத்ராதிபதிகளும் அமைந்திருப்பது போலவே சித்தர்களுக்கும், ஞானியருக்கும், யோகியருக்கும் அவரவர்க்கு உரித்தான கோத்ராதிபதிகள் உண்டு. இதையும் படைப்பு ரகசியமாகவே இறைவன் வகுத்துள்ளான். ஏனெனில் இதனை அறிந்து கொள்ள முற்படுகின்றபோது அதற்குப் பின்னணியாக, மனிதன் பரம்பரை ஆராய்ச்சியில் (Genetics) ஈடுபட்டு ஒரு முடிவுக்கும் வர இயலாது இருக்கின்ற இறைத் தன்மையையும் இழந்து விடுகிறான். இதை ஒட்டியே ரிஷிமூலம், நதிமூலம் அறியலாகாது என ஆன்றோர் வகுத்தனர். மனித விஞ்ஞானம் எங்கு முடிகின்றதோ அங்குதான், ஆன்மீக விஞ்ஞானம் தோன்றுகிறது. “WHERE SCIENCE ENDS THERE SPIRITUAL SCIENCE BEGINS”
என்றும் வாழும் ஏகாந்த ஜோதிகள் வரிசையில் முதலாவதாக ஸ்ரீபுக்கொளியூர் போடா சித்தர் பற்றி அறிந்தோம். இரண்டாவதாக ஸ்ரீமஹா அவதூது பாபா பற்றி அறியலாம். இமயமலைச் சாரலில் 16 வயது சிரஞ்சீவியாக எப்போதும் இளமையுடன் கண்ணைப் பறிக்கும் பொன்மய தேகத்தில் அவதூதராய், நிர்வாணமாய்ப் பலகோடி ஆண்டுகளாக, அற்புத தரிசனம் தந்து அருள்பவர் ஸ்ரீமஹா அவதூது பாபா.
இவர் விரும்பினால் தான் இவரைக் கனவிலும் தரிசனம் செய்ய இயலும் எனில் நேரிடையாகத் தரிசனம் செய்ய எவ்வுளவு பாக்கியம் செய்திருக்க வேண்டும் ! இவரைத் தரிசித்து அருள் பெற்ற மஹான்கள், யோகிகள் ஒரு சிலரே. ஸ்ரீயுக்தேஸ்வரகிரி, ஸ்ரீலாஹிரி மஹாஸாயா, போன்றோர் அவர்களுள் அடங்குவர். புட்டபர்த்தி ஸ்ரீசத்யசாயி பாபா இவருடன் அளவளாவியுள்ளார். காஞ்சி காமகோடி ஸ்ரீபரமாச்சார்யாள் தம்முடைய விஜய யாத்திரையின் போது இவரைச் சந்தித்ததை ஒரு சிலரே அறிவர்.
நம்முடைய சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தரும், ஸ்ரீமஹா அவதூது பாபாவும் இனம் புரியா மொழியில் ஆன்ந்தமாகச் சம்பாஷித்ததைக் காணும் பெரும்பேற்றைப் பெற்றவர் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார். பனி பொங்கும் சீதள நிலையில் தேக காந்தியுடன் அவதூதராய் எவராலும் எட்ட இயலா விண்ணை முட்டும் இமயமலைச் சிகரங்களில் அனாயாசமாக ஊடுருவிச் செல்லும் அற்புத சித்த புருஷர் ஸ்ரீ அவதூது பாபா. இவருடைய தரிசனமே கோடி கோடிப் பிறவிகளை நாசம் செய்யும் கயிலைக் காட்சியைத் தரவல்ல குருவருளைப் பெற்றுத் தரும்.
இறைவன் ஆதிசிவன், ஆலகால விடமுண்டு அதன் உஷ்ணம் தாங்காது தம் திருகண்டத்தை வருட  .....  அகிலாண்டேஸ்வரியாம் பார்வதி தேவி அச்சத்தால் ஆதிசிவனின் கண்டத்தைக் கவினுறப் பற்ற ......... சிவசக்தி ஸ்பரிசம் நிகழ்ந்த நேரமே இந்தப் பிரபஞ்சத்தின் மிகப் புனிதமான நேரம் என்பதைப் பிறிதோரிடத்தில் விளக்கியுள்ளோம். இந்தச் சிவசக்தி ஐக்ய மஹிமையால் ஓர் அற்புத ஜோதி உருவாயிற்று. கோடி கோடியாம் விண்மீன்களின் ஒளியை விஞ்சிய ஒப்புயர்வற்ற அந்த ஜோதி பிம்பமானது சிவசக்தி ஆக்ஞைப்படி பூலோகத்தில் பாரதப் புனித மண்ணில், பண்டரிபுரம் திருநகரத்தில் ஜோதித் தாமரையாய் மலர்ந்து பிரகாசித்தது. இந்த ஜோதித் தாமரையின் பொன்னிற இதழ்கள் ஊடே அபரஞ்சிதத் தங்க மேனியில் ஒரு குழ்ந்தை புன்னகை பூத்து மிளிர்ந்தது. இக்குழந்தை பிறந்தவுடனேயே நடக்கலாயிற்று, பேசலாயிற்று., அற்புத இறை நாமாவளிகளைத் துதித்து, ஆராதனைகளை நிகழ்த்தலாயிற்று.
பிரபஞ்சத்தின் உன்னதமான புனித காலத்தில் பிறந்த, ஜோதித் தாமரையில் பூத்து மிளிர்ந்த இத்தெய்வீக்க் குழந்தையே ஸ்ரீமஹா அவதூது பாபா. இந்த அற்புதமான, திருஅவதாரத்திற்கும் மேம்பட்ட, தெய்வீக செயல் நிகழ்ந்த காலம் பாண்டுரங்கன் எழுந்தருள்வதற்கும் முந்தைய காலம் எனில், ஸ்ரீமஹா அவதூது பாபாவின் பிறப்பு காலம் கடந்ததன்றோ..!
இறைவன் விடமுண்டு பல்லுயிர் ஓம்பிய புனித நேரத்தை மஹாப்ரளய, மஹா முக்த, மஹா ஜீவசக்த, மஹா வித்வேஸ்வர , மஹா விஸ்வேஸ்வர, மஹா சங்கல்ப, மஹா நிர்ணய, மஹா புனித, மஹா தீர்க்க, மஹா கடாக்ஷ, மஹா பல, மஹா தீர, மஹா ஜன, மஹா சுய நிர்வாண ரூப, மஹா சுய ஸம்பத் பூஜ்ய, பூஜ்ய சிவ, பூஜ்ய சிவ ஹர, பூஜ்ய சிவநம, பூஜ்ய நமசிவய, பூஜ்ய சிவாய நம, பூஜ்ய சிவசிவ என்ற முகூர்த்தக் காலங்களாகச் சித்தர்கள் பகுத்துள்ளனர். இவை போன்ற தெய்வீகத்வம் பரிபூரணமிக்கும் உன்னதமான புனித முகூர்த்தக் காலங்கள் எந்த லோகத்திலும் எப்போதும் இருந்தது கிடையாது. இனி அமையப் போவதும் இல்லை. சிவசித்தத்தில் திளைக்கும் , சிவ மஹா சித்தர்களே இதன் மகத்துவத்தை , ஆன்மீக ரகசியங்களை அறிவர்.

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா சிறுவனாக இருந்த போது தம் குருநாதர் கோவணாண்டிப் பெரியவருடன் (சிவகுரு மங்களகந்தர்வா) திருச்சிக்கு ராக்போர்ட் எகஸ்பிரஸில் பயணம் சென்றார். திருச்சிப் பயணத்திற்குக் காரணம் யாதெனக் கேட்டபோது அவரோ, “அங்கே ஒரு பையனைக் கரையேத்த வேண்டிய வேலை இருக்குடா ..., பெரியவங்க நமக்கு அந்த வேலையைக் கொடுத்திருக்காங்க .., நீ வந்து பாரு புரியும்” என்று பூடகமாகப் பதில் உரைத்தார்.
பெரியவர் எப்போதும் எதையும் விரிவாக்ச் சொல்வதில்லை.., நறுக்குத் தெறித்தாற் போல் நான்கே வார்த்தைகளில் முடித்து விடுவார். சிறுவனுக்கோ அதைத் தரம் பிரித்துப் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. அவர் எப்போதும் தாம் சொன்னதைத் திருப்பிச் சொன்னதுமில்லை . நாலே வார்த்தைகளில் சொல்லி விட்டு எப்படி இதைச் சிறுவன் நிறைவேற்றுகிறான் என்று கண்காணிப்பார். குருவிடம் பாடம் கற்பதென்றால் அது எளிமையல்லவே !
இருவரும் திருச்சியில் இறங்கி, திருவானைக்காக் கோவிலை அடைந்து அங்கிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தனர்.
பஸ்ஸிலிருந்து இறங்கியதும் சிறுவனைச் சற்று நிற்கச் விட்டுப் பெரியவர் ஒரு சந்துக்குள் சென்று திரும்பினார். ஆஹா! சென்னையில் கோவணத்துடன் கிளம்பிய அவர் சந்திற்குள் சென்று திரும்பிய போது அங்கமெங்கும் விபூதி தரித்துப் பஞ்சகச்சம், குடுமி சகிதமாகக் கையில் விசிறியுடன் கிழவேதியராகவே மாறி விட்டார்..
சிறுவன் கண்கள் விரிய அவரையே பார்த்துக் கொண்டு, “வாத்தியாரே! இது என்ன வேஷம்!” என்றான்.
பெரியவரோ, “பொருத்துப் பாருடா” என்றார் புன்முறுவலுடன்.
சிறுவன் தனக்கும் வேறு உடை கிட்டுமா எனத் தன் கிழிந்த டிராயரைக் காட்டிப் பெரியவரைப் பொருள் பொதிந்த பார்வை பார்த்தான். பெரியவர் கொஞ்சமும் அயராது, “இதுவே உனக்கு ஜாஸ்திடா.., பேசாமே என் பின்னால் வா” என்று சொல்லி விட்டார். சிறுவன் மறுபேச்சுப் பேசாது தொடர்ந்து சென்றான்..
இருவரும் அக்கிரகாரத்தில் நுழைந்து ஒரு வீட்டின் வாசலருகில் வந்து நின்றார்கள். பெரியவர் சிறுவனுடைய கையைப் பிடித்துக் கொண்டு படியேறி வீட்டிற்கு உள்ளே சென்றார்.
அப்போது தான் வீட்டினுள் இருந்து வெளி வந்த ஒருவரைப் பார்த்து, “ஏண்டா நாராயணா! என்னைத் தெரியறதாடா? மூணு வயசுல உன்னைப் பார்த்தது. உனக்கெப்படி அது ஞாபகம் இருக்கும்? நானும் வடக்கேயிருந்து இப்பத்தான் ஒரு மாசம் முன்னாடி இங்க வந்தேன் நீ சௌக்கியமா? உன் பார்யாள் (மனைவி) எப்படியிருக்காடா?”
வீட்டிலிருந்து வந்தவரோ ஒன்றும் புரியாது வியப்புடன் பிரமித்து நிற்பதைப் பார்த்த பெரியவர், ”நாராயணா! நான் தாண்டா அச்சுத வாத்தியார். இன்னும் என்னைத் தெரியலை? நான் உன் அப்பாவுக்கு ஒண்ணு விட்ட மாமாடா” என்று விளக்கிக் கொண்டே போனார்.
வீட்டுக்குரியர் இப்போது அடையாளம் தெரிந்து கொண்டு, “ஓஹோ! அச்சுத தாத்தாவா? ரொம்ப நாள் ஆயிடுத்தோனோ அதான் சட்டுனு புரியலை., வாங்கோ, வாங்கோ, உக்காருங்கோ. ஒடம்பு சௌக்கியமா இருக்கேளா?” என்று குசலம் விசாரிக்கத் தொடங்கி விட்டார். அந்த வீட்டிலிருந்தவர்கள்  Still Photo போல் அசைவற்று நின்று இவ்விருவர் பேச்சையும் மாறி மாறிக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இன்னும் பல சொந்தங்களைப் பற்றிப் பேசி கலகலப்பை உண்டாக்கிக் கொண்டிருந்த கோவணாண்டிப் பெரியவராகிய தன் குருவை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் சிறுவன்.. என்னமா பேசி நடிச்சிட்டு இருக்காரு”  என்று நினைத்துக் கொண்டான்.
நாராயணன் (வீட்டுக்குரியர்), “அது சரி தாத்தா! என்ன சமாசாரம்? இவ்வளோ தூரம்?” என்று கேட்டார்.
உடனே பெரியவர் உணர்ச்சியுடன் .., “எவ்வுளவு நாளானால் என்னடா? சொந்த பந்தம் விட்டுப் போயிடுமா? ஒங்களையெல்லாம் பார்த்துட்டு போகலாம்னு தான் வந்தேன்.. ஆமா தஞ்சாவூர்ல உன் ஒண்ணு விட்ட தம்பி சங்கர வாத்தியார் எப்படியிருக்கான்? என்று வினவினார்.
“தாத்தா! அவனும் போய்ட்டான். அவன் பார்யாளும் காலமாயிட்டா.. அவாளோட பிள்ளை கணேசன் இப்ப நம்மாத்துல தான் இருக்கான்.. கணேசா! இங்க ஓடி வா.. இவர் ஒனக்குத் தாத்தா முறை வேணும்டா ., நமஸ்காரம் பண்ணு” என்று நாராயணன் கூறினார்.
கணேசன் வேகமாக வந்து பெரியவர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க , அவனுகுச் சிறந்த ஆசிர்வாதம் கிடைத்தது.
“நாராயணா! நீ எனக்கொரு பெரிய உபகாரம் பண்ணனுமே” என்று ஆரம்பித்தார்.
“அதுக்கென்ன தாத்தா...! பேஷா செய்யறேன் சொல்லுங்கோ” என்றார் நாராயணன்.
ஒண்ணுமில்லேடா, எனக்கு வயசு கிட்டத்தட்ட எம்பத்தஞ்சு ஆயிடுத்து. என் காலத்துக்குள்ள நம்ம குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு வேத அத்யயனம் பண்ணி வெச்சு ஆளாக்கணும்னு ஒரு ஆவல்., ஆசை இருந்துண்டு இருக்கு. இந்தக் கணேசனைப் பார்த்தா என் பேரன் மாதிரியே இருக்கான். நீ கொஞ்சம் மனசு வெச்சு அவனை என்னோட அனுப்பி வெச்சா நான் ரொம்ப சந்தோஷப்படுவேன். மாட்டேனு மட்டும் சொல்லிடாதேடா” என்று பெரியவர் விண்ணப்பித்துக் கொண்டார்.
“அதுக்கென்ன தாத்தா? பேஷா அனுப்பறேனே. நம்ம கணேசனுக்கும் நம்ம குடும்பத்துக்கும் நீங்க  நல்லதைத் தானே செய்யப் போறேள்” என்று நாராயணன் மனம் உவந்து சம்மதித்தார்.
மன்ங்குளிர்ந்த பெரியவர் மறுநாள் கணேசனையும், சிறுவனையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார். அங்கு வேதம் பயில்விக்கும் ஒரு பெரிய மடத்தில் கணேசனைக் சேர்த்து விட்டு அவனுக்குத் தேவைப்படும் போது தாங்கள் வந்து உதவுவதாகச் சொல்லி விட்டு பெரியவர் சிறுவனுடன் அங்கிருந்து புறப்பட்டார்.
திருச்சியிலுள்ள பல கோயில்களைக் கண்டு தரிசித்து ஒரு வார காலம் சுற்றினர் அவ்விருவரும்..., இந்நிலையில் வேத பாடசாலையிலோ கணேசன் அனாதை என்று அறிந்த ஒரு Senior  மாணவன் அவனைப் பலவாறாக்க் கேலி செய்யத் தொடங்கினான். இதனால் கணேசன் மிக்க வருத்தமடைந்ததை தம் ஞானக் கண்ணால் உணர்ந்த பெரியவர் மீண்டும் வேத பாடசாலைக்குச் சிறுவனுடன் வந்தார்.
கணேசனைக் கேலி செய்த அந்த மாணவனைத் தனியே அழைத்துச் சென்றார் பெரியவர். “ஏண்டாப்பா.! அவனும் உன்னை மாதிரி ஒரு பையன்தானே. நீயும் உன்னோட அம்மா, அப்பாவை விட்டுப் பிரிஞ்சுதானே இங்கே படிக்க வந்திருக்க..  இந்த  க்ஷணம் அவா ரெண்டு பேரும் உயிரோட இருக்காளா? இல்லையான்னு உனக்குத் தெரியுமா? அப்படிப் பார்க்கும் போது இங்க எல்லாருமே இப்ப அனாதைதானே! பரவாயில்லை.. ஏதோ தப்பு செஞ்சுட்டே., நீ மறுபடியும் அவனைக் கேலி பண்ணிணா இன்னிக்குச் சாயந்திரம் நீ நடக்கும் போது கீழே  முட்டியைப் பேத்துப்பே. அப்ப நீ என்னை நெனச்சுக்கோ. அதோட எல்லாம் சரியாப் போயிடும். அதுக்கப்பறம் கணேசனை உன் தம்பி மாதிரி பார்த்துக்கோ. இல்லைன்னா கஷ்டப்படுவே” “  என்று கூறிவிட்டுச் சிறுவனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
கணேசனைக் மீண்டும் கேலி செய்த அந்த மாணவன் அன்று மாலையில் கீழே விழுந்து கால் முட்டியைப் பெயர்த்துக் கொண்டான். பின்பு அவனுக்கு ஞானோதயம் ஏற்பட்டு அக்கணம் முதல் கணேசனிடம் அன்பாக இருக்க ஆரம்பித்தான்.
கணேசனுடன் படிக்கும் மற்ற மாணவர்கள் இச்சம்பவத்திற்குப் பிறகு அவனோடு ஒட்டுதலாகப் பழகத் தொடங்கி விட்டனர் .. ஆனால் கணேசனுடைய குருவோ அவனைப் பலவாறு மட்டந்தட்டத் தொடங்கினார். கணேசனோ வாட்டம் அடைந்தான்..
இதையும் தம் ஞானத்தால் அறிந்த கோவணாண்டிப் பெரியவர் பாடசாலைக்குச் சிறுவனுடன் வந்தார். கணேசனுடைய குருவைத் தனிமையில் சந்தித்து நாராயண வாத்தியாரிடம் பேசிய சொந்தம் போல் பல உறவுமுறைகளைச் சொன்னார்.
பிரமிப்போடு கேட்டுக் கொண்டு இருந்த பாடசாலை குருவிடம் ,, “இப்ப புரியறதா! நானும் உங்க தாத்தாவும் ஒண்ணுவிட்ட அண்ணா தம்பினு (Cousins). அப்ப கணேசன் என்னோட பேரன்னா உனக்குப் பிள்ளை மாதிரினா ஆயிடறான். அவனை நீயே கலாட்டா பண்ணினா யாருப்பா அவனை அரவணைப்பா?” என்று உள்ளமுருகப் பெரியவர் பேசினார்.
“தாத்தா! இவ்வளவும் தெரியாமல் போயிடுத்தே.. இனிமே நம்ம கணேசனைப் பத்தி நீங்க கவலையே பட வேண்டாம்.. அவன் என் பிள்ளை. நீங்க தைரியமா போய்ட்டு வாங்கோ. அவனைக் கவனிச்சுக்க இனிமே நானாச்சு” “ என்று உணர்ச்சிப் பெருக்குடன் உறுதியளித்தார் பாடசாலை குரு..
இனி கணேசனுக்குப் பிரச்சனை எதுவும் இல்லையென்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பெரியவர் “நம்ம டூட்டி முடிஞ்துடா” என்றவாறு சிறுவனை அழைத்துக் கொண்டு சென்னை வந்து சேர்ந்தார்....
மூர்த்தி – தீர்த்தம் – தலம் சித்தர்கள் காட்டும் திருத்தல வழிபாட்டு முறை 
ஸ்ரீகுருவாயூரப்பன் ஸம்பூர்ண தரிசனம்
கலியுகத்தில் ஒரு வைகுண்ட மூர்த்தியைக் காண வேண்டுமா? குருவாயூர் செல்லுங்கள் என்கின்றனர் சித்தர்கள். அப்படி என்ன விசேஷம்? பூரண அவதார மூர்த்தியாகிய ஸ்ரீகிருஷ்ணனே, பூலோக மக்கள் உய்யும் பொருட்டு , வைகுண்டவாசியாகிய ஸ்ரீமந் நாராயணனிடமிருந்து பெற்று வந்த விக்கிரகமாகும் ஸ்ரீகுருவாயூரப்பன்.
‘அப்படிப்பட்ட வைகுண்ட மூர்த்தி உறையும் குருவாயூரில் காலடி வைக்க மக்களாகிய நமக்கு அருகதை உண்டோ? ஸ்ரீ குருவாயூரப்பனைத் தரிசிக்க முறை ஏதும் உண்டோ என்பதை அறிந்து கொள்ள விருப்பம் பூண்டவராக அகத்திய பெருமான் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை நாடி வருகின்றார்.
அகத்தியர் : “மாயாவதாரப் பிரபோ! மாதவா! உன்னைக் குருவாயூரில் தரிசித்துப் பெரும்பேறு பெற்றேன்! ஆனாலும் ஐயனே! மாயையில் சிக்கி வாழும் மனிதனுக்கு அதிலிருந்து விடுபட்டு உன்னை உணர, குருவாயூரில், ஏதேனும் வழி வைத்துள்ளனையோ? இதைத் தெரிந்து கொள்ளவே அடியேன் இங்கு வந்தேன்”
கிருஷ்ணன்  “முனி சிரேஷ்டரே! உமக்கு வந்தனம். அனைத்தையும் அறிந்து உணர்ந்தவர்கள் தாங்கள். தங்களுக்குத் தெரியாத்தா? இருப்பினும் அந்த இரகசியத்தைச் சொல்லுகின்றேன். மக்களுக்கு அறிவிப்பீர்களாக! குருவாயூரை முறையாகத் தரிசிப்பவர்களுக்கு வைகுண்டத்தில் நிச்சயம் இடமுண்டு. .. குருவாயூரில் என்னைக் காண வரும் பக்தன், முதலில் மம்மியூர் சென்று அங்கு சிவபெருமானைத் தரிசித்து என்னுடைய அருள் பூரணமாகக் கிட்ட வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
அகத்தியர் : “பிரபோ! முதலில் சிவனைத் தரிசிக்க வேண்டும் என்கிறீர்களே! அதன் காரணத்தை அடியேனும் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்!”
கிருஷ்ணன் : “ அடியேனுக்குக் குருவாயூரில் இடப் பிச்சை அளித்தவனே மம்மியூர் சிவபெருமான் என்பதைத் தாங்கள் அறிவீர்களே?” ஆம் முனிவரே.... மம்மியூர் மகேசனைத் தரிசித்த நிலையில், அந்தப் பக்தன் அடுத்ததாக “வைகுண்ட பாதசக்தி” அம்மனைத் தரிசிக்க வேண்டும். இன்னவள் குருவாயூர் ஆலயத்தின் பின்பக்கத்தில் வலப்புறமாக வீற்றிருப்பாள்....

ஒவ்வொரு கோயிலின் தலவிருட்சத்தின் பின்னணியில் ஆயிரம், ஆயிரம் தெய்வீக ரகசியங்கள் பொதிந்து கிடக்கின்றன. கோயில்களின் நடை சார்த்தப்படும் போது, மூலவரின் சக்தி தல விருட்சத்திற்கு வந்தமைகிறது. எனவே, கோயிலில் இறைவனைத் தரிசனம் செய்ய இயலவில்லை என்ற ஏக்கத்துடன் திரும்பால் அக்கோயிலின் தல விருட்சத்தையே மூலவராக எண்ணி வழிபடுவோர்க்கு, மூலவரின் அனுக்ரஹம் பூரணமாய்க் கிட்டும்.!

அகத்தியர் : அன்னவளைப் பற்றி அடியேன் தெரிந்து கொள்ளலாமா..!
கிருஷ்ணன் : ஸ்ரீவித்யா லோகத்திலிருந்து மகரிஷிகளால் பூலோகத்திற்கு கொண்டு வரப்பெற்ற மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் அவள் .. அன்னவள் தன்னிடம் வந்த அந்தப் பக்தனுக்கு வைகுண்டவாசிகளுக்கு உரித்தான பாதசக்தியைத் தந்து அருள் பாலிக்கின்றாள். இதன் பிறகு என் திருக்கோயிலுக்குள் காலடி எடுத்து வைக்க வேண்டும். இப்பொழுதுதான் பக்தன் என்னைத் தரிசிக்கும் பெரும் பேறு பெறுகிறான். இந்நிலையில் பக்தனாகிய அவன் என் அருளைத் தவிர எதையும் கேட்கமாட்டான்.
அகத்தியர் : அதாவது உன்னைத் தரிசிக்கும் போது லௌகீகமாக எதையுமே வேண்டக் கூடாது என்கிறாயா கிருஷ்ணா?
கிருஷ்ணன் : ஆம் முனிவரே! வைகுண்டத்தில் இடம் என்றால் எளிதானதா! பக்தியுடன் வலம் வந்து இவ்வாறு வணங்கிய நிலையில் பக்தன் என்னுடைய பிரகாரத்திலேயே மம்மியூரப்பனை நோக்கித் தொழுது நன்றி தெரிவிக்க வேண்டும்.!
அகத்தியர் : ஆஹா முகுந்தா இப்பொழுது அந்தப் பக்தனுக்கு வைகுண்டத்தில் இடம் உண்டா?
கிருஷ்ணன் : ஆம் உண்டு, ஆனால் இன்னும் ஒன்று பக்தனுக்கு உள்ளதே! அவன் “நெல்லு” காண்பானேயாகில் வைகுண்டத்தில் இடத்தைப் பற்றி யாம் யோசிப்போம்”
(இதைக் கூறிவிட்டு கிருஷ்ணன் மறைந்து விடுகிறான்)
அகத்தியர் பலவாறாக யோசித்துப் பார்த்தும் “நெல்லு” என்பதன் அர்த்தம் புரியாததால் விளக்கம் காண யோகத்தில் அமர்ந்து விடுகிறார். பல வருடங்கள் தவம் கொண்ட நிலையில் “நெல்லு” என்பதன் விளக்கத்தை உணர்கிறார்.
குருவாயூரிலிருந்து சிறிது தொலைவில் நெல்லுவாய்புரம் என்ற ஊர் ஒன்று உண்டு. அங்கு கிருஷ்ணன் அமிர்த தன்வந்திரியாக அமர்ந்துள்ளான். இதைத் தான் அவன் மறை பொருளாக “நெல்லு” என்று கூறிவிட்டான் என்பதை உணர்ந்தவராய் நெல்லுவாய்புரம் சென்று பெருமானைத் தொழுது நின்றார் .. எம் பெருமானும், “முனி  சிரேஷ்டரே! இங்குதான் குருவாயூரப்பன் தரிசனம் சம்பூரணமாகிறது” என்று அசரீரியாய் ஒலிக்க அகத்தியரும் அன்னவனுடைய பக்தியில் திளைத்து நிற்கிறார்.
பரசுராமர் ஷேத்திரமாகிய கேரளாவில் மற்றும் இரண்டு இடங்களில் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா வைகுண்டத்திலிருந்து கொணர்ந்த தமது விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்துள்ளார். அந்த இடங்கள் 1) அம்பலப்புழா 2) திருப்பணித்துரா .. ஆகியவைகளாகும்.
இந்த இரண்டு உத்தம தலங்களையும் முறையாகத் தரிசித்து அஷ்டாங்க யோக நமஸ்காரம் செய்பவர்களுக்குப் பல அஸ்வமேதயாகம் இயற்றிய பலன் கிட்டும் என்று சிவகுரு மங்கள கந்தர்வா அருள்கின்றார்.
கனிந்த கனி காஞ்சிமா முனி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஸ்ரீகுருவாயூரப்பனை இம்முறையில் தரிசித்து  வழிகாட்டியுள்ளார்.

அமிர்த நேரம்

மனிதனுடைய அறிவிற்கும், கல்விக்கும், நினைவுகளுக்கும் , எண்ணங்களுக்கும் அப்பாற்பட்ட பேரறிவுப் பெட்டகமாக இலங்கும் சித்த புருஷ்ர்களின் தோற்ற விளக்கங்கள்  என்றைக்கும் புதிராக இருப்பனவே. குருவருளால் இறையருள் கொண்டு அபரிமித பக்தி நிலையில்தான் அவற்றை உணர்ந்து  கொள்ள இயலும். அவை விஞ்ஞானத்தால் துய்த்து அறிய முடியாத மெய்ஞ்ஞானப் பேரிலக்கியங்களாகும்.
என்றும் சிவ சித்தத்தில் திளைக்கும் சித்தர்கள் எதையும் இறைமயமாகக் காணும் ஞானிகள், இவர்களைப் படைப்பதற்கான இனிய அமிர்த நேரத்தை நேரடியாகவே கணிப்பவர் சதாசிவப் பரப் பிரம்மமே. நாராயணன் என்றும் சிவபெருமான் என்றும் அனைத்து நாமங்களிலும் அழைக்கப்படும் ஓரே பரம்பொருளாம் பரமசிவன் ஆலகால விடமுண்ட நேரமே அதிஅற்புதமான அமிர்த நேரமாகும்
சாகா வரம் தரும் தெய்வீக அமிர்தத்தைப் பெற கோடானு கோடி தேவர்களும், கந்தர்வ தேவர்களும், அசுரர்களும் பட்ட துன்பங்களை எழுத்தில் வடிக்க இயலாது. பல கோடி தேவ ஆண்டுகள் தவமிருந்து அனைத்துத் தெய்வங்களிடமிருந்து அதியற்புத வரங்களைப் பெற்று எண்ணற்ற சித்த புருஷர்களின், ஞானியரின், யோகியரின் அருந்தவத்தை ஆசிர்வாதமாகப் பெற்றுத் தெய்வத் திருப்பிரசாதாமாய் அமிர்தம் திரண்டு வருமுன்னர்....

ஊமை, குருடர், ஊனமுற்றோர், தொழுநோயாளி போன்றோரைக் கண்டால் “முன்வினையின் பயனை இவர்கள் அனுபவிக்கின்றார்கள்” என்று எண்ணி அனுதாபப்படுவதை விட, அவர்களுக்கு உடனடியாகக் குறைந்த பட்சம் மனத்தளவிலாவது எவ்வாறு உதவலாம் என்று எண்ணிச் செயலபடுவதே பக்தி எனப்படும் அன்பின் தொடக்கம்.

கோடி கோடியாம் அண்டங்களாலும் தாங்க இயலாத உஷ்ணத்தையும், எடையையும், விஷத் தன்மையையும் பெற்று உருண்டோடி வந்த ஆலகால விடத்தை இறைவன் தம்பால் கொண்ட காட்சியை எடுத்துரைக்க யுகங்கள் போதாது.
இறைவன் விடத்தை கையிலேந்தி ..... கையை உயர்த்தி... வாயருகே கொண்டு சென்று ..... திருவாய்க்குள் செலுத்த, அது திருவாய்க்குள் திரண்டு ... தொண்டையில் ... மெல்லியதாக இறங்கி உள்ளே செல்ல ............ இத்திருக்காட்சியை விவரிக்கும் வல்லமை பெற்றவர்கள் சித்த புருஷர்களேயாவர்.
கையிலேந்திய விடத்தை விழுங்கிடுமுன் அகிலாண்ட கோடி நாயகியாம் பார்வதி அன்னை இறைப் பரம்பொருளின் கண்டத்தில் (தொண்டையில்) அதனைத் தாங்கி நிற்கச் செய்ய, இடைப்பட்ட திரு அசையல்கள் நிகழப் பலகோடி யுகங்கள் கடந்து நின்றதாம்.. இதனை மனித அறிவினால் பகுத்துரைக்க இயலுமா ?
தம் திருக்கண்டத்தில் ஊடுருவிய விடத்தை இறைவன் தம் வலத் திருக்கரத்தால் மெதுவாகத் தடவ, ஆதிபராசக்தியாம் உமையவள் தம் திருவிரல்களால் இறைவனுடைய திருக்கண்டத்தைப் பற்ற ...... இந்தச் சிவசக்தி ஸ்பரிசம் நிகழ்ந்த நேரமே பிரபஞ்சத்தின்  மிக உன்னத புனித அமிர்த நேரமாகும். பிரபஞ்சமே ஆடையென நிற்கும் இறைப் பரம்பொருள் விடமுண்ட அளவில் ஒவ்வோர் அணு அசைவிற்கும் பல கோடி  யுகங்கள் ஆனதில் வியப்பில்லையே?
ஆலகால விடத்தை இறைவன் கையில் ஏந்தியது முதல் உலகாளும் அன்னையாம் உமையம்மை சிவபெருமானின் அருள் கண்டத்தைப் பற்றி நின்றதுவரை அமைந்த நேரமே இப்பிரபஞ்சத்தின் அதி அற்புத நல்ல நேரமாகும். இதற்கு ஈடான நல்ல நேரம் எங்குமே  இருந்தது கிடையாது., அமையப் போவதும்  இல்லை. எத்தனைப் பிரபஞ்சங்கள்  உருவாயினும் கவினுற அமைந்த இந்த அமிர்த நேரமே எதிலும் சிறந்த ஈடு இணையற்ற அமிர்த நேரமாகும்..
இதை அமிர்த நேரம் என்று சித்தர்கள் ஏன் எடுத்துரைக்கின்றார்கள்? சிவபெருமான் ஆலகால விடம் உண்டது எதற்காக?

பணம் படுத்தும் பாடு

பணம் இருப்பினும் இல்லாவிட்டாலும் மனிதன் பலவிதத் துன்பங்களுக்கு ஆளாகின்றான், பணப் பிரச்சனை இல்லாத இடமே கிடையாது.. என்று சொல்லும் அளவிற்குத் தற்காலத்தில் அனைத்துக் குடும்பங்களிலும் பொருளாதாரப் பற்றாக்குறை விரவி நிற்கின்றது. இதனைப் ‘பணம் படுத்தும் பாடு’ என்று விளித்த சித்தர்கள் இதற்குரிய ஆன்மீகத் தீர்வினையும் அருளியுள்ளனர்.
நன்முறையில் பணம் சேர்ப்பதற்கும், சேர்த்த பணத்தை ஆன்மீக முறையில் செலவழிப்பதற்கும் “கனகத் தியானம்” என்ற முறையைச் சித்தர்கள் நமக்கு வழங்கியுள்ளனர். அந்த கனகத் தியான முறையை சற்குருவின் மேற்பார்வையில் முறையாகப் பயின்று தேர்ச்சி அடைபவர்களுக்கு முறையான வழிகளில் பணம் சேருவதற்கும் சேர்ந்த பணத்தை நன்முறையில் செலவழிப்பதற்கும் உரித்தான வழிமுறைகள் கிட்டுகின்றன..
கனகத் தியானம்
இந்தக் கனகத் தியானம் முறையில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு ஒருவன் பயின்று வருவானாயின் சில வருடங்களிலேயே அவன் லக்ஷ்மி கடாட்சத்தையும் பரிபூரணத் தத்துவத்தையும் உணர்ந்து நல்வாழ்வு  வாழலாம் லக்ஷ்மி கடாட்சம் என்பது செல்வம் குவிவது மட்டுமல்ல.. குவிந்த செல்வத்தை நிறைந்த மனதோடு தான தருமங்களாக்ச் செய்து, அன்புடன் அனைவரையும் வாழ வைப்பதாகும். குறைந்த வருவாய் உள்ள ஒருவன் நிறைந்த மனதுடன் தனக்கு வேண்டியதை இறைவன் அளித்துள்ளான் என்ற மனப் பக்குவத்துடன் வாழ்ந்தால் அவனும் லக்ஷ்மி கடாட்சத்தைப் பெற்றவனே ஆவான்.
கனகதாரா ஸ்தோத்திரத்தைத் துதித்துத் தங்க நாணயங்களை லக்ஷ்மி கடாட்சமாகப் பெற்ற ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதாள் தாம் பெற்ற செல்வத்தைத் தமக்காக வைத்துக் கொள்ளாது ஓர் ஏழையின் பசி தீர்க்க அளித்துத் தம் துறவற மேன்மையை உலகிற்கு உணர்த்தினார். இன்ன்றைக்கும் கனகதாரா ஸ்தோத்திரத்தை முறையாக துதிப்பவர்களுக்கு லக்ஷ்மி கடாட்சம் கிட்டுகின்றது . ஐஸ்வர்யம் தரும் அற்புத ஸ்லோகமே கனகதாரா ஸ்தோத்திரமாகும். ஆனால் அவ்வாறு கிட்டிய செல்வத்தை ஆதிசங்கர பகவத்பாதாள் போல் பிறருக்கு அளிக்கின்ற பேரறிவைப் பெற வேண்டும். அத்தகைய பெருந் தன்மையாளர்களுக்கே கனகதாரா ஸ்தோத்திரம் கனகத்தை வர்ஷிக்கும்.
கனகத் தியான முறை: அங்க சுத்தி செய்து கொண்டு அவரவர் குலதர்மத்திற்கு ஏற்ப , சிவ, வைணவச் சின்ன்ங்களைத் தரித்து, தன்னிடம் இருக்கும் பணத்தில் சில காசுகளையோ அல்லது கரன்சி நோட்டுக்களையோ ஒன்றிரண்டைக் கையிலேந்தி மௌனமாக அமர வேண்டும். விரித்த கைகளில் காசுகளையோ அல்லது பண நோட்டுகளையோ வைத்துக் கொண்டு காயத்ரி மந்திரத்தை சொல்லித் தியானிக்க வேண்டும். இந்த மந்திரம் அறியாதோர் “ஓம் நமசிவாய” , ஸ்ரீ லக்ஷ்ம்யை நம:  நாராயணாய நம: “ ஓம் நமோ நாராயணா” போன்ற தனக்குத் தெரிந்த இறை நாமங்களை உச்சரித்துத் தியானிக்கலாம்.
முதலில் ஐந்து நிமிடங்களுக்கு இந்தக் கனகத் தியானத்தைத் துவங்கிப் படிப்படியாகத் தியான நேரத்தை அதிகரித்து ஒருவன் முறையாகத் தியானம் செய்து  வருவானாயின் சில வருடங்களிலேயே பணத்தின்  தன்மையை அறியும் பேராற்றலைப் பெறுகின்றான். இத்தன்மையை இறையருளால் ஒருவன் பெறுகின்றபோது தனக்கு வந்த பணம் முறையாக வந்ததா? தனக்கு வர வேண்டிய தொகைதானா தனக்குரித்தான பணமா? என்று அதன் பூர்வீகத் தன்மைகளை உணர்வதோடு மட்டுமல்லாது, அப்பணத்தைச் செலவழிக்கின்ற முறைகளையும் அவன் அறிந்தவனாகின்றான்...

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam