கொன்றை நிலவும் குளிர் நிழலும் எந்தை ஈசனே !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

சிவன் சொத்தம்மா! சீறிடும் ஜாக்கிரதை!

அந்தக் கோயில் பூஜையாளரும் பண்ணையாரின் மனைவியிடம், “வேண்டாம்மா, வேண்டாம்! அந்த நிலம் இந்த கோயிலுக்காக யாரோ புண்ணியவான் எழுதி வைச்ச நிலம்! அதை அபகரிக்கப் போய்த்தான் உன் புருஷன் உயிர் பறி போச்சுது! சிவன் சொத்து சும்மா விடாதும்மா! உன் புருஷன் செஞ்ச தப்பை நீயும் செய்யாதே!”

“அடடே, எனக்கு இதெல்லாம் அப்பத் தெரியாதே சாமீ! சரி, நடந்தது, நடந்து போச்சு! இப்ப நான் என்ன செய்யறது, சாமீ?”

அமிர்தானந்தா அன்னை
அருளும் அமிர்தவர்ஷினி சக்திகள் !

“உன் புருஷன் செஞ்ச தப்புக்குப் பரிகாரமா, அந்த நிலத்தோட கொஞ்சம் கூடவே வட்டியா கூடுதல் நிலத்தைச் சேர்த்து, இதே கோயில் பேருக்கே மாத்தி எழுதி வச்சுடு! இதுதான் உன் குலத்தைக் காப்பாத்தும்! இது ஒண்ணுதான் உன்னால இப்ப செய்ய முடிஞ்சது! இதுதான் பெரியவங்க சொல்ற சரியான பரிகார முடிவு!”

அந்தப் பெண்மணி மிகவும் கடவுளுக்குப் பயந்தவளாய், அவர் சொன்னபடியே, அந்த நிலத்தைக் கூடுதல் நிலத்தோடு, இரண்டே நாளில் கோயிலின் பேரில் உடனேயே எழுதி வைத்து விட்டாள். ஒரு மாதம் கழித்து, ஊரார் அனுமதியுடன் அவரும் அந்த நிலத்தில் கொஞ்சப் பகுதியை நல்ல விலைக்கு விற்று, கோயிலில் செய்ய வேண்டிய மராமத்து வேலைகளை எல்லாம் முறையாகக் கவனமாகச் செய்து, கோயிலை நன்றாகப் புதுப்பித்துக் கட்டினார். மேலும் சிறிது காலத்திற்கு கோயில் பூஜைகளை எல்லாம் தொடர்ந்து நன்றாக, ஒரு குறைவுமின்றிச் செய்தும் வந்த வேளையில்...

“போதுமென” ஓதினாரே!

ஒரு நாள் இரவில்...

கோவணாண்டிப் பெரியவர் கனவில் தோன்றி, “உன்னோட பூசாரிக் கோலம் உன் விதிப்படி இன்னும் ஒரு வாரத்துல முடியுதுடா கண்ணு! எல்லாத்தையும் நல்லபடியா ஒப்படைச்சுட்டு, தேசாந்த்ரியா ஆயிடுடா நைனா! வானம்தான் உனக்கு இனிமே வீடு!”

என்று ஆணையிடவே...

இதனையே தெய்வ வாக்காக சிரமேற்கொண்டு ஏற்று,

ஒரு நல்ல நாளில் மற்றொருவரிடம் கோயில் பொறுப்பை, ஊர் மக்கள் முன்னிலையில் ஒப்படைத்து விட்டு நடையைக் கட்டினார். ஊர் மக்களும் கதறிக் கதறி அழுது விடை கொடுத்தனர். நிறையப் பரிசுகள், தானியங்கள், உடைகளை அவருக்கென ஒரு மாட்டு வண்டி நிறைய அள்ளி வைத்துக் குவித்தனர். ஆனால் அவற்றை எல்லாம் சற்றும் திரும்பிப் பார்க்காமல், ஊர் மக்கள் அளித்துக் குவிந்து கிடந்த பரிசுப் பொருட்களை ஒரு சிறிதும் ஏறெடுத்தும் கூடப் பார்க்காமல், விறு விறுவென்று, இறைவனை, வேண்டியபடியே வடக்கு நோக்கி ந்டந்தார், நடந்தார், நடந்து கொண்டே இருந்தார்!

“முடிந்ததப்பா முடியாததும்!”

“இவ்வளவுதான் சாமீ இந்தப் பண்டாரத்தின் வாழ்க்கையில் நடந்தது! அப்புறம் என்ன, ஊர் ஊரா தேசாந்திரம் போனேன்! அப்படியே கொங்கு நாட்டுப் பக்கம் உள்ள கோயிலை எல்லாம் பாத்துகிட்டு வந்தேன். கடவுள் கருணையால உங்களை தரிசிக்கிற பாக்கியமும் கிடைச்சது, இதை விட அடியேனுக்கு வாழ்க்கையில வேறென்ன வேணும்! பிச்சைக்காரனைக் கோடீஸ்வரனா மாத்திட்டீங்களே குருவாயூரப்பனே!”

அந்தப் பிச்சைக்காரர் கண்களை மூடிக் கொண்டு நாத் தழுதழுக்கச் சொல்லி, முடித்தார்.

சிறுவனும் நெடுங்கதையைக் கேட்ட களைப்பில் மெதுவாகத் தன்னிலைக்கு வந்தான்.

“அடேயப்பா, நம்ம அங்காளி கோயில் பிச்சைக்காரன் பூர்வ ஜன்மத்தோட பலனா இவ்வளவு காரியம் செஞ்சுருக்காரே!” என அதிசயமாய் நினைத்தவாறே அவன் கோவணாண்டிப் பெரியவரைப் பார்த்தான்.

அவரோ அவனைச் சற்றும் கண்டு கொள்ளாமல், அந்தக் காவிக்காரரிடம் தலையை ஆட்டி, ஆட்டி எதை எதையோ நெடு நேரம் பேசிக் கொண்டிருந்தார்.

“சாமீ, கொஞ்சம் இருங்க வர்றேன்!” என்று காவிக்காரர் சற்று எழுந்து செல்லவே,

பெரியவரும், அவர் அந்தப்புறம் நகர்ந்தவுடன், “வாடா, கண்ணு, நம்ப இங்க வந்த கடமை முடிஞ்சுடுச்சு! இனிமே அந்தப் பேரூரான் பாடு! இந்தக் காவியார் பாடு! முடியாத கதை விடிந்து முடியட்டும்!” என்று சிரித்துக் கொண்டே கூறியவாறு சிறுவனை அழைத்துக் கொண்டு வெகு வேகமாக நடந்தார்.

“ஏனிந்த வேலை ஐயா!”

சிறுவனுக்கு வழக்கம்போல் ஆவலைக் கட்டுப்பட்டுத்த முடியவில்லை.,

“ஏன் வாத்தியாரே! நம்ப அங்காளம்மா கோயில் வாசல்ல இருந்த பிச்சைக்காரன் தெய்வீகத்துல இவ்ளோ பெரிய ஆளாயிட்டாரே!” என அதிசயம் தெரிக்கும் குரலில் சற்றே இழுத்தான்.

பெரியவர் வெகுவான சப்தத்துடன் சிரித்தார்.

“ஏண்டா, நான் அவனுக்கு விழுக்தி கொடுக்கறப்பெல்லாம் கேட்பியே, “ஏன் வாத்தியாரே! ஒருத்தனுக்கு மட்டும் திருப்பித் திருப்பிக் கொடுக்கறேன்னு? இப்பப் புரியுதா எதுக்குக் கொடுத்தேன்னு”

“சத்தியமா, “ஒண்ணுமே புரியலை உலகத்துல!” வாத்தியாரே!”

“விதியை மதியால் பார்த்தோம்!”

“நாங்க ஒருத்தரைப் பாக்கறப்ப, மத்தவங்க மாதிரி அவரோட உருவத்தை மட்டும் பாக்கறது கிடையாதுடா கண்ணு! ஆணோ, பெண்ணோ, சிறுவனோ, குமரனோ யாராயிருந்தாலும், அவங்கவங்க பூர்வ ஜன்ம விதிக் கணக்கை மட்டும்தான் முதலில் பார்ப்போம். அதைத் தெரிஞ்சுக்கிட்ட பிறகு, இறைவன் அவங்களுக்குன்னு என்ன விதிச்சுருக்கானோ, பாரபட்சமில்லாம அவங்களுக்கு அதை நிறைவேத்த நம்மால முடிஞ்சதைச் செய்ய வேண்டியதுதாண்டா நமக்கு பூலோகத்துல தந்துருக்கற மெயின் வேலையே!”

“இந்தப் பிச்சைக்காரன் மூலமா இத்தனை ஆயிரம் பேருக்கு நல்ல வழி காட்டப்படணும்னு இறைவன் விருப்பம்! அவனா இதை அடையறதுக்குக் கோடிப் பிறவிகளாகும்! அதை எப்படியாவது இந்தப் பிறவியிலேயே அவனுடைய பூர்வ ஜன்மப் புண்ய சக்தியினால நடத்தி வைக்க வேண்டி, நாம ஒரு கருவியா பயன்படறோம் அவ்வளவுதான்!”

“சித்தன் கையால ஒரு பருக்கை வாங்கிச் சாப்பிட்டாலே எத்தனையோ ஜென்மங்களைக் கடைத்தேறிடலாம்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க! இந்தப் பிச்சைக்காரன் அங்காளம்மா கோயில் வாசல்ல உட்கார்ந்து இருந்தப்ப “யாராவது நமக்கு ஏதாவது தர மாட்டாங்களா?”ன்னு பாத்துக்கிட்டே இருப்பான், அவ்ளோதான்! கொடுத்தால் சரி, கொடுக்காட்டினாலும் சரி! அதுக்கு மேல அவனுக்கு எந்த ஆசையும் கெடையாது!”

நல் வைராக்ய விதை பாரீர்!

“இப்படியாகப்பட்ட அவனோட நல்ல வைராக்ய மனசுலேயும் ஒரு நல்ல எண்ணத்தை உருவாக்கி, நாமும் பலருக்குப் பயன்படணும்படி வாழணும்கற வைராக்கிய விதையை இட்டு வச்சு, நல்ல மூலாதாரச் செடி வளரத்தான், அவனுக்கு தினமும் விமுக்திங்கற இனிப்பைக் கொடுத்து வளர்த்தோம்! பிச்சைக்காரனை பிச்சைக்காரனா வளர்க்கலை! அவனுக்குள்ளாற நல்ல புத்தியை வளர்த்தோம்., நாமளும் கடவுள் அருளால நல்லதை விதைக்கிறோம், எதுக்கு? அது நல்விருட்சமா வளர்ந்து வளர்ந்து என்னைக்காவது ஒரு நாள் நிறையப் பேருக்குப் பலனைத் தராதாங்கற நல்ல எண்ணத்துலதான்!”

“நம்ப வாத்தியாருக்கு ஒருத்தனோட மனசை மாத்தறுதுன்னா விமுக்தி கொடுத்தாத்தானா அது நடக்கும்? என்னே காது குத்துகிறார் இவர்!”

ஆம், சிறுவன்தான் வழக்கம் போல இவ்வாறு எண்ணினான்!

பிரபஞ்சத்தில் பெரியவர் அறியாத பேருலகு உண்டா என்ன? இதிலும் மனதைப் படிப்பது அவருக்குத்தான் கிள்ளுக் கீரை ஆயிற்றே!

“ஆமாண்டா ராஜா! ஸ்வீட்தான் கொடுக்கணும்னா அல்வா, ஜாங்கிரி, லட்டுன்னு எவ்வளவோ இருக்கு, ஆனா இதுல அவனுக்கு விமுக்தி ஸ்வீட்டை ஏன் கொடுத்தேன் தெரியுமா?”

விமலமான விமுக்தி முக்தி!

“விமுக்திங்கற பேருக்கே கோடிக் கோடி ஆழமான அர்த்தங்கள் இருக்குடா ராஜா! முக்தின்னா விடுதலைன்னு ஒரு அர்த்தம். இந்தப் பிறப்பு இறப்புங்கற சுழல்லேந்து விடுபடுவதைத்தான் முக்தின்னு பெரியவங்க வச்சுருக்காங்க! ஆத்ம முக்தி, பரலி முக்தி, கிரம முக்தி, ஜீவன் முக்தி, பரமானந்த முக்தின்னு பல வகைகள் உண்டு. இதுல ஒண்ணுதான் விதேக முக்தி. ராஜாவா இருந்துக்கிட்டு ஜனக மஹாராஜா அடைஞ்ச விதேக முக்தியை, ஒரு பிச்சைக்காரனால அடைய முடியாதா என்ன?”

சிறுவன் அதிசயித்தவாறு அவர் சொல்வதைக் கேட்டான்!

“விதேக முக்தின்னா என்ன அர்த்தம் தெரியுமா உனக்கு? இந்த உலகத்துலேந்து நேராகவே பர பிரம்மத்தைப் போய்ச் சேர்றதுக்குப் பேருதாண்டா விதேக முக்தி, அதைக் குறிக்கறதுதான் இந்த விமுக்திங்கற ஸ்வீட்!”

சிறுவன் ஆச்சரியத்தோடு பெரியவரையே பார்த்துக் கொண்டிருந்தான்.,

“அடேயப்பா, ஒரு விமுக்திக்கு இவ்வளவு அர்த்தமா?”

பெரியவர் தொடர்ந்தார்,

“இவனை ஒரு பிச்சைக்காரன்னு உலகம் முத்திரை கொடுத்துடுச்சு! நாங்களும் அவரோட ஆகாஷிக் ரெகார்டை எடுத்துப் பார்த்தோம்! இந்த ஆண்டிக் கோலத்துல பழவினை கழியற மார்கம் தெரிஞ்சுது., இந்தப் பிச்சைக்காரன் மனசுக்குள் “சமுதாய நலன்களுக்காக வாழ்றதுதான் சத்தியமான வாழ்க்கைன்னு” பதிய வச்சோம், விமுக்தி மூலமா! இதுக்காகத்தான் அவனுக்கு உன் கையினாலேயே தினமும் விமுக்திகளைக் கொடுக்க வைச்சேன்!”

சிறுவனுக்கு இன்னமும் சந்தேகம் தீர்ந்த பாடில்லை!

“தாமதமின்றிக் கோமள முக்தி”

“ஏன் வாத்தியாரே! நீ விமுக்தி கொடுத்தும் அவரு நற்கதியை அடையறதுக்கு ஏன் இவ்வளவு வருஷம் ஆச்சு!”

“அதுதாண்டா அடியேனே நேரே கொடுக்கலியே! நீ தானே இடையில் வாங்கிக் கொடுத்தே, அதனாலதான் தாமதம்!”

பெரியவர் இப்போது விண்ணதிரச் சிரித்திட, சிறுவன் தன் “வெடுக் வெடுக்” கேள்வியை எண்ணித் தலையைக் குனிந்து கொண்டான்!

“வாத்தியாரே, கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே! கேள்வியை கொஞ்சம் மாத்திக் கேக்கறேனே!”

“அப்படி வா வழிக்கு!”

“நீயே நேருல வந்து முக்திக்கு வழி காட்டுற அடையற அளவுக்கு இந்த ஆளு அப்படி என்னதான் பூர்வ ஜன்மத்துல செஞ்சுட்டாரு?”

பெரியவர் சிரித்தார்...

“அடப் போக்கிரிப் பயலே, நீ முக்தியைப் புரிஞ்சுகிட்டது அவ்வளவுதானா? நீ பிச்சைக்காரன்னு நெனைச்சவரு நாலைஞ்சு ஜென்மமா தெனமும் கோயில்ல கெடக்கற குப்பையைப் பொறுக்கிச் சுத்தம் செஞ்சு வந்தாரு அவ்வளவுதான்! கொஞ்சம் பழவினை தொக்கினதுனால கொஞ்ச நாள் பிச்சைக்காரன் வாசம்!”

“எல்லாரும் முக்தின்னா என்னன்னவோன்னு கற்பனை செஞ்சு வச்சுருக்காங்க! என்னைக்கு ஒருத்தன் தனக்காக இல்லாம, மத்தவங்களுக்காக வாழ ஆரம்பிச்சுட்டானோ, அதுவே முக்தியின் ஆரம்ப நிலை தாண்டா! எங்கே சுயநலம் மறைஞ்சு, பிறர் நலம் மட்டுமே கண்ணுக்குத் தெரியுதோ, அதை விட உயர்ந்த நிலை கலியுகத்துல வேறேதுவும் கிடையாதுடா இதைத் தானப்பா “தன்னை அறிந்தால் தன்னலம் மறையும்! தன்னலம் மறைந்தால் பெரும் பேரின்பம்!” என்று முக்தியைப் பத்தி ரொம்ப எளிமையா, ஆண்டவனைப் பத்தியதா சித்தர்கள் பாடி வச்சுருக்காங்க!”

சிறுவன் அவசர அவசரமாகக் குறுக்கிட்டான்.

“வாத்தியாரே, எனக்கும் நீ தெனமும் விமுக்தி கொடுத்தேன்னா, அந்த மாதிரி ரொம்ப ரொம்ப உயர்ந்த நிலை எல்லாம் தானே நல்லா சீக்கிரமா நல்லாவே தேடி வரும்தானே!”

“உனக்கு இப்ப மசாலா போட்ட பரோட்டா வேணுமா ? விமுக்தி ஸ்வீட் வேணுமா?”

“இதென்ன இது? விளையாட்டா விஷயத்தோடு வந்த கேள்வியா?” சிறுவன் சற்றே யோசித்தான்!

“எப்ப டக்குடக்குன்னு மனசுலேந்து பதில் வரலையோ, எப்ப நீ எதைச் சொல்லலாம்னு யோசிக்க ஆரம்பிச்சுட்டியோ, அதுதான் உன் நிலைமை! நீதான் எப்பப் பார்த்தாலும் பரோட்டா வாங்கிக் கொடு, கோலி சைஸ் முட்டாய் வாங்கிக் கொடு, அத வாங்கிக் கொடு, இத வாங்கிக் கொடுன்னு என்னைக் கேட்டுக்கிட்டே இருக்கியே! எதை வாங்கிக் கொடுத்தாலும் நல்லாத் தின்னுட்டுத் தூங்கறவனுக்கு எதுக்குடா முக்தி! முதல்ல உனக்கு பக்தி வளரணும்! உன்னைப் பத்தி எனக்குத் தெரியாதா என்ன?” என்று சொல்லியபடி சிறுவனைத் தலையில் தட்டித் தட்டிப் பலமாகச் சிரித்தார் பெரியவர்.

“எனக்கு (வி)முக்தியா? வேண்டவே வேண்டாம்!”

“இப்ப உன்னை மாதிரி நானும் கேள்வியை கொஞ்சம் மாத்திக் கேக்கட்டுமா?”

இவ்வாறு கேட்ட பெரியவரைச் சிறுவன் அவரை வெகு விநோதமாகப் பார்த்தான்!

“என்ன இது இவருடைய த்வனி இப்போது பெரிதும் மாறுகிறதே?”

“உனக்கு முக்தி நிலை தரும் விமுக்தி ஸ்வீட் வேணுமா? இல்லாட்டி வெறும் மசாலா பரோட்டா வாங்கித் தர்ற இந்த வாத்யார் கிழவன் வேணுமா?”

அவ்வளவுதான் சிறுவனுக்கு எல்லாம் புரிந்து விட்டது இப்போது! இந்த எளிமைதானே சித்தர்களின் மஹா பாணி!

“வாத்யாரே எனக்கு விமுக்தியும் வேண்டாம், முக்தியும் வேண்டாம்! நீ இருந்தாப் போதும்” என்று ஓவென்று அலறிக் கதறிக் கொண்டு அவருடைய கால்களில் தொப்பென்று விழுந்தான்!

சிறுவனை எழுப்பி அரவணைத்தார் பெரியவர்.

“உனக்கு எதுக்குடா இந்த வேண்டாத வேலையெல்லாம்! ஏண்டாப்பா மத்தவங்களுக்கு வழிகாட்ட நான் அவங்கவங்க கனவுல வர வேண்டியதா இருக்கு! உனக்குத்தான் முழுசா நேரேயே உன் முன்னாடியே எப்பவுமே இருக்கேனே, அப்புறம் எதுக்குடா விமுக்தி, முக்தி எல்லாம்., சரி, சரி ரொம்பப் பசிக்குது, பரோட்டா சாப்பிடலாம்!”

அவன் பதிலுக்குக் கூடக் காத்திராமல் வேகமாக நடந்தார் பெரியவர்.

சிறுவன் அவரைப் பார்த்துக் கொண்டே “இவர் புரியாத புதிராகவே காலத்தை ஓட்டுகின்றாரே!” என வியந்து என்ன செய்வதென்று தெரியாமல் வழக்கம் போல் திருதிருவென்று விழித்தவாறே அவர் பின்னால் ஓடினான்..!

ஸ்ரீகாயத்ரீ மாமந்திரம்

விஸ்வாமித்ர மாமுனியின் அருந்தவத்தால் நாம் பெற்றதே ஸ்ரீகாயத்ரீ மாமந்திரம்

ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பலாபலன்கள் யாவற்றையும் ஜாதி, மத, இன பேதமின்றியும், ஆண், பெண், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் என்ற பேதமின்றியும் அனைவரும் பெறுதல் வேண்டி, அனைத்து ஜீவன்களுக்காகவும், தம் தபோ பலத்தால் அறிந்து, தேர்ந்தெடுத்து முதன் முதலில் பூவுலகிற்கு அர்ப்பணித்தவரே ஸ்ரீகௌசிக மஹரிஷி எனப்படும் ஸ்ரீவிஸ்வாமித்திர மஹரிஷி ஆவார்.

பஞ்சாட்சர சக்திகள், ஓங்கார பீஜ சக்திகள், சாக்தப் பூர்வ சக்திகள் போன்ற அரிய பல சக்திகளையும் இரண்டே வரிகளில் அடக்கி அளிப்பதே ஸ்ரீகாயத்ரீ மந்திரமாகும். மாமுனிகளுக்கும், அனைத்துக் கோடித் தேவர்களுக்கும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை உபதேசிக்கும் தெய்வீக மாண்பினைத் தம் கடுமையான ஸ்ரீகாயத்ரீ மந்திரத் தபோ பலத்தால் ஸ்ரீவிஸ்வாமித்திர மகரிஷி பெற்ற இடங்களுள் பவனீ ஸ்ரீகாயத்ரீ லிங்க மண்டல அமுத நதிக் கரையும் ஒன்றாகும்.

ஸ்ரீகாயத்ரி லிங்கம் பவானி

இங்கு கௌசிகக் கூரம் என்ற சிறு பாறையே பல யுகங்களுக்கு முன் ஸ்ரீகாயத்ரீ மந்திரத் தவத்திற்காக அமைந்திருந்தது, மஹரிஷிகளால் கோடானு கோடி முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஜபிக்கப் பெற்ற கூரமிது! இன்றும் உண்டு.

ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகளை கௌசிக மாமுனி பெற அருளிய அமுதவேத சக்தித் தலம்!

மகாராஜாவாகத் துலங்கிய ஸ்ரீவிஸ்வாமித்திரர், அனைத்தையும் துறந்து மஹரிஷிக்குரிய தபோ பலன்களைப் பெற்று, ஸ்ரீகாயத்ரீ மஹா மந்திர வடிவை ஒலியை, மூலசக்தியைத் தம் கடும் தவத்தினால் கிரகித்ததைக் கண்டு, வசிஷ்ட மஹரிஷியே இவரை “பிரம்ம ரிஷி” எனப் போற்றினார் என நாமறிவோம்! இதற்கு, வேத மலைகளுக்கு நடுவில் பொலியும் பவானி நதித் தீரத் தவமும், அவருக்குப் பெரிதும் துணை புரிந்தது!

ஸ்ரீபிரம்ம மூர்த்தியும் பல சந்தியா காலங்களில் விஸ்வாமித்திர மகரிஷியிடம் இருந்தே ஸ்ரீகாயத்ரீ உபதேச மந்திரத்தைப் பெற்றார். எனவே பிரம்ம தேவரே பூவுலகிற்கு வந்து ஸ்ரீகாயத்ரீ மந்திர உபதேசம் பெற்ற புண்ணிய பூமியே கொங்கு நாடு ஆகும்.

திருஅண்ணாமலை ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பூர்வ தரிசனம்

திருஅண்ணாமலையில் “காளான் குடைப் பீடம்” என்ற ஒன்று, கிரிவலப் பாதையில் உண்ணாமுலை மண்டபத்தை அடுத்து வரும் ஸ்ரீகாயத்ரீ, ஸ்ரீசாவித்ரீ, ஸ்ரீசரஸ்வதீ ஆகிய மூன்று மலை முகடுகள் தென்படும் காயத்ரீ தரிசனப் பகுதி உண்டு. மிகவும் சக்தி வாய்ந்த தரிசனப் பகுதி. இதில் தாம் பன்னெடுங்காலம் ஸ்ரீபிரம்ம மூர்த்தி வலம் வந்து, “சூட்சும சுப்ரமுகி” என்ற புனிதமான மூன்று கோடிப் புனிதத் தீர்த்தங்கள் கூடிய நீரை, “சால கூரகம்” என்ற புனிதமான கமண்டலத்தில் இருந்து அர்க்யமாகப் பெற்று ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யம் அளித்தார். இப்பகுதியில் சிவ தர்பையாலான பஞ்சாட்சர ஜபப் பீடத்தைச் சார்த்தி, ஸ்ரீவிஸ்வாமித்திர மாமுனி தந்த பூஜை முறைப்படி, அருணாசலத்தில் ஸ்ரீகாயத்ரீ லிங்க தரிசனம் பெற்று, அடிஅண்ணாமலையில் சிவாலயத்தை நிறுவினார்.

அவிட்ட நட்சத்திர நாள் தோறும் ஸ்ரீவிஸ்வாமித்ர மஹரிஷி அருணாசலத்தில் ஆற்றிய ஸ்ரீகாயத்ரீ லிங்க பூஜா பலன்களாகவே, பவானியில் ஸ்ரீஅமிர்த காயத்ரீ லிங்க தரிசனத்தைப் பெற்றார். எனவே, ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்குப் பிற யுகங்களில் ஸ்ரீஅமிர்த காயத்ரீ லிங்கம் என்ற பெயரும் உண்டு.

நாளநாடிகளும் காயத்ரீ மந்திரம் ஓதுவதாக!

“வாயாலோதிப் பரமாச்ரய வராமிர்த லிங்கம்” என்பதாக, பவானி அமிர்த காயத்ரீ லிங்கமானது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை வாயால், மனதால், உள்ளத்தால், உதிரத்தால், நாளத்தால், நரம்பால், எலும்பால், ரோமத்தால், தோலால், ஓதப்படுகின்ற சர்வ அங்க லட்சண ஒலி பேழையகக் கருவறை ஆகும். ஆம், ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷி சற்றே யோகப் பூர்வமாகத் துயில் கொள்ளும் போது கூட, அவருடைய திருவாயானது ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதிக் கொண்டுதான் இருக்கும்.

இதனால் தான் (ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை) ஓயாதுரைத்த “ஓயா மடைவாயர்” என்ற பெயரும் விஸ்வாமித்ரருக்கு உண்டு. தூல லிங்கம், சூக்கும லிங்கம், காரண லிங்கம் ஆகிய மூன்று காயத்ரீ ஜோதி மண்டலங்கள், அமிர்த சக்திகளுடன் சேர்ந்து தோன்றியதுமே பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கமாம்!

காலை சூரிய உதயத்திற்கு முன்னும், மதியம், சரியான உச்சிப் பகல் பொழுதில், மாலையில் சூரியன் மறைந்த பின்னும், ஆகிய மூன்று வேளைகளில் இங்கு பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க வளாகத்தில் சந்தியா வந்தன பூஜைகளில் 24 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திர அர்க்யங்கள் அளித்து வழிபடுவதுடன், 24 தலைமுறைகளுக்கும் ஸ்ரீவிஷ்ணு தர்ப்பை, சிவ தர்ப்பை கொண்டு தர்ப்பணம் அளித்து வழிபடுவோர்க்கு குடும்பத்தில் சாந்த மனச் செழிப்பு, வரச் செழிப்பு உண்டாக்க 24 மகரிஷிகளால் தினமும் மந்திர ஜோதிப் பூர்வமாக பூஜிக்கப் பெறுகின்ற பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கம் பெருந்துணையாய் வந்து நிற்கும் என்று அனைவராலும் கண் கூடாக உணரப் பெறுவதாகும்.

பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க மஹிமை

கலியுக தற்போது 5105 ஆண்டுகளே கடந்துள்ளன. இன்னமும் சுமார் 4,95,000 ஆண்டுகள் கலியில் பாக்கி உள்ளன. ஆனால் நம் வாழ்க்கையின் கண் எதிரிலேயே தர்ம நெறிகள் எவ்வகையில் மிதிக்கப்படுகின்றன என்று பார்க்கும் போது, வருங்கால சந்ததிகள் எவ்வளவு மோசமான உலகத்தை பார்க்க இருக்கின்றார்கள் என்பதை எண்ணி மனம் திகிலடைகின்றது அல்லவா!

“நம் வாழ்வும், நம் பிள்ளைகள் வாழ்வும் மட்டும் நன்றாக முடிந்தால் போதும்” என்று எண்ணுவது அவலமான சுயநலம் ஆகும். சமுதாயத்தில் அனைத்துத் தர மக்களும் மன நிம்மதியோடு வாழ்ந்தால் தான், சமுதாயத்தில் ஒட்டு மொத்தமாக, சாந்தமும், நல்அமைதியும் உண்டாகும். இதற்காக யாது செய்திட வேண்டும்? வருங்கால சந்ததிகளுக்கு சாந்தமயமான வேதசக்திகளை நிரவிட இப்போதிருந்தே வழிவகை செய்திட வேண்டும். தமிழ் வேதத் துதிகளுக்குப் பரவெளியையும், மானுட உள்ளம், மனம், புத்தி, உடலையும் சுத்திகரிக்கும் அதியற்புதமான மாமறைச் சக்திகள் உண்டு.

சந்ததி விருத்தி என்பது ரத்தப் பூர்வமாக வருவது அல்லவா! எனவே, அனைத்து வேதங்களின் திரட்சியாக ஸ்ரீவிஸ்வாமித்ர மகரிஷி நமக்குப் பெற்றுத் தந்துள்ள ஸ்ரீகாயத்ரீ மாமந்திரத்தை ஒவ்வொரு பெற்றோரும், தினமும் குறைந்தது 25,000 முறை ஓதி வருவதோடு, தம் பிள்ளைகள் மற்றும் உற்றம், சுற்றம், நட்பு என யாவையும் ஜாதி, மத, இன குல பேதமின்றி தினமும் சத்சங்கமாக 10,000 முறை காயத்ரீ மந்திரத்தை ஓதச் செய்திடல் வேண்டும்.

இல்லறப் பெண்மணிகளும், நீராடும் போதும், சமைக்கும் போதும், கோலமிடும் போதும், ஓய்வெடுக்கும் போதும் எப்போதுமாக இந்த இரண்டு வரியிலான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஓதி வந்தால், பரவெளியில் ஸ்ரீகாயத்ரீ மந்திர சக்திகள் நிறைந்து, நிறைந்து உறைந்து, சமுதாயப் பரவெளியையே தூய்மைப்படுத்த உதவும் மகத்தான சமுதாய இறைப்பணி அல்லவா!

சிறு பிள்ளைகளையும் இளம் பிராயத்திலேயே இவ்வகையில் தெய்வீக ரீதியாகப் பழக்கி வந்திடில் அவர்களுடைய நல்ஒழுக்கம் இறுதிவரை நன்கு நிலை நின்று பிரகாசிக்கும். இவ்வாறு பரவெளியில் நிறைந்து வரும் ஸ்ரீகாயத்ரீ மந்திரத் திவலைகளை பூமியும், வானும், மழையும், நீரும், தாவரங்களும், பசு, எருமைகளும், பூக்களும், காய்கறிகளும், கனிகளும், தானியங்களும், சுவாசக் காற்றும் ஈர்த்து, ஈர்த்து யாங்கணும் நிரவிட உதவும்.

இவையாவும் ஒவ்வொருவருடைய உடலிலும் சுவாசக் காற்று, உணவு மூலமாகச் சேர்ந்து, ரத்தத்திலும், விந்துக்களிலும், கபாலச் செல்களிலும் காயத்ரீ மந்திரப் பரல் அணுக்களாக நிறைந்து, நிறைந்து வருங்காலச் சந்ததிகளுக்கும் உதிரச் சம்பந்தப் பாரம்பரியமாக, சமுதாயத்தின் அனைத்து தரப்பினர்களிடையேயும் காயத்ரீ மந்திர சக்தியை, வேத மாமறைச் சக்திகளாகப் பொழியச் செய்ய வேண்டிய அற்புதமான கடமையை ஒவ்வொருவரும் ஏன் ஆற்றுதல் கூடாது?

ஒவ்வொரு நாளிலும், தனிப்பட்ட முறையிலாவது ஒவ்வொருவரும் குறைந்தது 2500 முறையேனும் ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதாது உறங்கேன் என்ற சங்கல்பத்தை எடுத்திட்டால், “வருங்காலச் சந்ததிகள் எப்படி இருப்பார்களோ?” என்ற அச்சம் எழாது அல்லவா!

எனவே எத்தகைய பீதி, அச்சம், பயமென உடலை, உள்ளத்தைப் பலவீனப்படுத்தும் தீய சக்திகள் பலவற்றையும் போக்க வல்ல மாமருந்தாக ஸ்ரீகாயத்ரீ மந்திரம் இருக்கும் போது, வாழ்வில் ஏன், எதற்கு அஞ்சுதல் வேண்டும்?

எதிரிகளின் பகைமைத் தொல்லைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாது, எதிரிகளையும் திருந்தச் செய்திடும் வல்லமை ஸ்ரீகாயத்ரீ மந்திரத்திற்கு உண்டு. தினந்தோறும் ஸ்ரீகாயத்ரீ தேவி மண்டலத்திலிருந்து பூவுலகிற்கு 24 மகரிஷிகள் பக்த விஜயம் செய்து, விண்ணுலகின் எத்தனை எத்தனையோ மகரிஷிகள் ஓதிய ஸ்ரீகாயத்ரீ மந்திரப் பலாபலன்களை அன்னசக்தியாகப் பூவுலகிற்குக் கொணர்கின்றனர். உணவை அண்டியே வாழும் கலியுக மனித உடலுக்கு, உணவாகிய அன்னமே உயிர்ச் சக்திகளைத் தருவதால், தினமும் ஒவ்வொருவர் இல்லத்திலும், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பிடி அன்னமாவது ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதித் தானமாக அளிக்கப்பட்டு வந்திட்டால், நாட்டை வருத்தும் எத்தகைய வன்முறை, பயங்கரவாதம், பகைமை, தீய சக்திகளையும் எளிதில் வென்று விடலாம். இவ்வாறு காயத்ரீ மந்திர சக்திகள் அனைத்தையும் ஒருங்கே பெறவல்ல அற்புதத் தலமே, ஈரோடு அருகே உள்ள பவானி ஸ்ரீவேதவல்லி அம்பாள் சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயத்தில் மிகவும் அபூர்வமாக எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகாயத்ரீ லிங்கத் திருச்சன்னதி ஆகும். இங்கு ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தின் முன் அமர்ந்து ஸ்ரீகாயத்ரீ மந்திரம் ஓதி முறையாக சத்குருவின் அருளுடன் தியானித்தால், எத்தனையோ ஆண்டுகளாகத் தலைமுறைகளையும் தாண்டி, ஸ்ரீகாயத்ரீ மாமந்திரம் ஓதாமைக்குத் தக்கப் பிராயசித்த வழிகளைப் பெறலாம்!

எனவே, தினந்தோறும் இங்கு ஸ்ரீகாயத்ரீ லிங்கத்திற்கு முன் கூட்டுப் பிரார்த்தனையாக சத்சங்கப் பூர்வமாக பாரத நாடு முழுவதிலும் இருந்து ஒவ்வொரு மாநிலத்தின் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் பக்த கோடிகள் முறையாக வந்து, ஸ்ரீகாயத்ரீ மஹா மாமந்திரத்தை 10008 முறை ஓதி வந்தால், பண்டைய யுகங்கள் போல புனிதமான பாரதத் திருநாட்டைத் தெய்வீக வள நாடாகப் புத்துணர்ச்சி பெறச் செய்யலாம் அன்றோ! இந்த உலகச் சமுதாயவள இறைப் பணியில் இளைஞர்கள் தான் முன்வந்து பெரும் பங்கு ஆற்றிட வேண்டும்.

மகா சிவராத்திரி

சிவபெருமானே இட்சவாகு குல சுரேந்திர நாதேஸ்வரராய் அவதார தரிசனம் தரும் தாரண ஆண்டு மஹா சிவராத்திரி

ஒவ்வொரு மஹா சிவராத்திரியிலும், ஆதிசிவன் பலவிதமான தெய்வீக வடிவுகளை, ஒளி வகை ரூபங்களை, ஜோதிமயமான திவ்ய சொரூபங்களைப் பூண்டு அருள்கின்றார். தாரண ஆண்டின் மஹாசிவராத்திரியில் இவற்றில் பற்பல சிறப்பான சிவா அவதாரங்கள் உற்பவிக்கின்றன.

எனவே, இவ்வளவுதான், சிவ, விஷ்ணு அவதாரங்கள் என நாமறிந்த, நாமறியாத புராணங்களில் உள்ள தெய்வீகப் பாத்திரங்களை மட்டுமே வைத்து எண்ணாத்தீர்கள். ஸ்ரீசரபேஸ்வர வடிவுகளிலும் எண்ணற்றவை உள்ளன. இவற்றைப் பற்றிய விளக்கங்கள் இன்னமும் கலியுக மக்களுக்கு வந்து சேரவில்லை. வருங்காலத்தில் தக்க சத்குருமார்கள் மூலமாக இவை வெளிவரும்.

ஸ்ரீசரபேஸ்வரர் வடிவுகளிலும் இரு சிரசுகள், நரசிம்ஹரை மடியில் கிடத்துதல், காலடியில் ஹிரண்யன் கிடத்தல், சரபேஸ்வரரின் நின்ற நிலை, அமர்ந்த நிலை, கிடந்த நிலை, நரசிம்ஹர் சிவனை வணங்குதல் எனப் பல அவதார வடிவுகள் உண்டு. இவையாவும் தாரண ஆண்டுச் சிவராத்திரியில் மீண்டும் பக்தர்களின் தரிசனத்திற்காக ஜோதிப் பூர்வமாகப் பரிணமிக்கும் புண்ணிய பூமியே அருணாசலமாகும். ஏனெனில் சரபேஸ்வர மூர்த்தியின் அவதார லீலைகள் பல யுகங்கள் நிகழ்ந்தமையால் இடையில் எண்ணற்ற மஹா சிவராத்திரிகளும் பொலிந்து சித்தர்களும், மஹரிஷிகளும், எண்ணற்ற சரப அவதாரிகைகளைத் துய்த்தனர். எனவே சித்தர்களே அனைத்து அவதார விளக்கங்களிலும் வல்லவர்கள் ஆவர்.

சரபேஸ்வர மூர்த்தி நரசிம்ஹரின் உக்ரத்தைத் தணிக்கப் பல யுகங்கள் ஆயின எனில் இதற்கிடையே எத்தனை கோடி அவதார உருவங்கள் பதிந்தன என எவரால் வகைப்படுத்திட முடியும்? இதெல்லாம் கலியுகத்தில் மங்கி வரும் ஆறாம் பகுத்தறிவுடைய மனிதனுக்கும், தவறு எனத் தெரிந்தும் பல தீய வழக்கங்களுக்கு ஆளாகி, குறைந்த அறிவு நிலைகளுடன் மாக்களாய், மிருக குணத்துடன் வாழ்ந்து வரும் மனித குலத்திற்கும் எவ்வாறு உணர வைப்பது?

சத்குருவைச் சரணடைந்தால் அனைத்து வகை ஞானமும் ஊட்டப் பெறும் என்ற அருள்முறை துலங்குகின்றது. இதை உணர்த்த வல்லதும் அருணாசல மஹா சிவராத்திரி கிரிவலப் பாங்கே!

தீயவழக்கங்களுடன் இருப்பதும் தினமும் தீய சக்திகளுடன் வாழ்வது போலத்தான்! சரபேஸ்வர வழிபாடே தீய சக்திகளிடம் இருந்து மீட்டுக் காக்கும் மிக எளிய வழிபாடாகும். அருணாசல மாதசிவராத்திரி கிரிவலப் பலாபலன்களாக, சரபர் பூஜைப் பலன்களும் கிட்டுவதால், கிரிவலத்தைத் தொடர்ந்து ஆற்றி வர, கெட்ட வழக்கங்கள், தீய தொடர்புகள் தாமே விலகும்.

இதே போல ஸ்ரீலக்ஷ்மீ நரசிம்ஹர் வடிவிலும் எண்ணற்ற வடிவுகள் உண்டு. ஸ்ரீலக்ஷ்மீயும், ஸ்ரீநரசிம்ஹரும் பக்தர்களை நோக்குதல், இவ்விரு மூர்த்திகளும் ஒருவரை நோக்குதல் எனப் பல வடிவுகள் உண்டு.

பிரபஞ்சத்தின் தெய்வீகப் பெட்டகமாகத் துலங்கும் அருணாசலத்தில் மஹாசிவராத்திரி நாளில் எண்ணற்ற தெய்வ மூர்த்திகளும், சித்தர்கள், மஹரிஷிகள் சூழ ஜோதிப் பிரவாகமாகக் கிரிவலம் வருகின்றனர் எனில், இந்நாளில் கிரிவலம் வருதலால் இறை மூர்த்திகளோடும் ஜோதிப் பூர்வமாகக் கிரிவலம் வந்த பாக்யம் கிட்டும் அல்லவா! இதனை வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியமாக ஏற்றிடுங்கள்!

இது மட்டுமா, சகல வகைப் பித்ரு பீடங்களில் இருந்தும் பித்ரு மூர்த்திகளும், பித்ரு பத்னீயரும் தூல, சூக்கும வடிவுகளில் அருணாசலக் கிரிவலம் வருகின்றரெனில் இதுவும் விசேஷமான பாக்யம் அல்லவா!

மேலும் யோகசக்திகள் நிறைந்த திபெத்திய லாமா ஞானிகள் பலரும் மஹா சிவராத்திரி நாளில் யோகப்பூர்வமான சரீரத்தில் முதலில் திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து பிறகு திருக்கயிலாயத்தை நமஸ்காரப் பிரதட்சிணமாக கிரிவலம் வருகின்றனர். அவர்கள் இங்கு கயிலாய மலை கிரிவலப் பலாபலன்களைக் குறித்த தரிசனங்களில் பதித்துச் செல்வதால், இன்று பாக்யம் உள்ளோர்க்கு அன்னதானத்துடன் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவோர்க்கு, அவரவர் பக்தி நிலைக்கு ஏற்ப, கயிலாய தரிசனப் பலன்கள், கயிலாய கிரிவலப் பலன்கள், கயிலாய பூஜைப் பலாபலன்களும் கிட்டுகின்றன.

இவ்வாறாகப் பல்வேறு வகைகளில் தெய்வீக சக்திகளைக் கொழிக்கச் செய்து அருணாசலச் சுயம்பு மலையாக வீற்றிருக்கும் “அருவுருவாய் ஆன ஆண்டவனின் பேரழல் வடிவுதனை”, ஆறறிவுப் பகுத்தறிவுச் சிற்றறிவால் உணர முடியாததுதான்! எவ்வகையிலும் நிர்ணயிக்க இயலாததுமான பரம்பொருள் சிகரத்தை அருணாசல வடிவில் இறைவனே மனமுவந்து கலியுகத்தில் கிரிவலம் வரவல்ல சிறிய மலையாக அளித்திருப்பது கலியுகத்தின் பெரும் பேறே!

மாமுனிகளும், மஹரிஷிகளும் உரைப்பது போல, அவர்களின் ஞானத்திற்கும், மனிதப் பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட சதாசிவப் பரம்பொருளாய் இறைவன் துலங்குகின்ற அனுபூதிகளை, மகத்தான கிரிவலப் பாத யாத்திரைப் பலாபலன்களாக, பரிபூரணமான குருவருளுடன் உணர வைக்க வல்ல பூஜைகளே மாத சிவராத்திரிப் பூஜை, மாத சிவராத்திரி கிரிவல வழிபாடுகளாகும்.

ஆம் அருணாசல கிரிவலமும் ஓர் அற்புதப் பூஜையே!

மாதசிவராத்திரியை அடுத்து, மறுநாள் வரும் அமாவாசை அன்று, தம் சந்ததிகளிடமிருந்து தர்ப்பணார்க்யத்தைப் பெற பூமிக்கு வருகின்ற பல்வகைப் பித்ரு மூர்த்திகள், தம்முடைய சந்ததிகளின் நல்வாழ்விற்கான ஆசீர்வாத சக்திகளை அளிப்பதற்காக, அருணாசல கிரிவலம் மற்றும் திருச்சி மலைக்கோட்டை, அய்யர்மலை, திருக்கோளக்குடி, திடியன் மலை, திருப்பரங்குன்றம், நெடுங்குடி போன்ற புண்ணிய சக்தித் தலங்களில் கிரிவலமாகவும் வருவதால், இவ்வரிய சக்திகளைப் பித்ருகளிடமிருந்து நேரிடையாகப் பெற்றுத் தரும் மார்கமாகவும் மாத சிவராத்திரிப் பூஜை துலங்குகின்றது.

நடப்புத் தாரண ஆண்டில், மகா சிவராத்திரி நாளில் சிவபெருமான் இட்சவாகு அம்சத்தினராய் “சுரேந்திர நாதேஸ்வரர்” என்ற பெயரைத் தாங்கி திருவையாற்றில் சுவாமியே அர்ச்சகராய் வந்து தம்மைத் தாமே பூஜித்தருளிய ஆத்ம லிங்கப் பூஜைத் திருவிளையாடல் போல ஆத்மப் பராபர ஜோதி ஸ்வரூபராய் அருணாசல கிரிவலம் வருகின்றார். நாமறியா வகையில் உள்ள எண்ணற்ற சூரிய மூர்த்திகள் மென்மேலும் சூரியப் பிரகாசம் கொண்டு, தெய்வாவதார நிலைகளை அடைகின்ற உத்தமத் திருநாளும் இதுவேயாம்!

சிவபெருமான் புதுப் புது வடிவங்களைத் தாங்குவதாகவும், ஆயிரம் (சகஸ்ரநாமம்) மட்டும் அல்லாது பேராயிரப் பெருநாமங்களைத் தாங்கியும், பூண்டருளும் வண்ணமுமான திருநாளாகவும், மகாலிங்கச் சிறப்புகளைக் கொண்டதாகவும் வரும் தாரண ஆண்டின் மஹாசிவராத்திரி துலங்குகின்றது.

வாழ்வில் பெறுதற்கரிய பாக்கியமிது! மாதாந்திரப் பௌர்ணமி கிரிவலம் போல, மஹாசிவராத்திரி கிரிவலத்தையும் அருணாசலப் புனிதப் பூமியில் செழிக்கச் செய்வீர்களாக!

இயன்றோர், இந்நன்னாளில் அருணாசல கிரிவலம் மற்றும் பிற மலை, குன்றுத் தலங்களிலும் கிரிவலம் வந்திடுக! ஏனையோர் அவரவர் ஊர்ச் சிவாலயங்களில் வழிபட்டும், இரவு நேரம் முழுதும் இல்லத்தில் குடும்பத்தோடு பூஜித்திடுக! அருணாசல மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி கிரிவலமானது, பித்ருக்களுக்கும், மூதாதையர்கட்கும், முன்னோர்களுக்கும் அருள் கிட்டுமாறும், வருங்காலச் சந்ததிகளுக்கும் உதவும் வண்ணமுமாய் இருபுறமும் நல்வரங்களைப் பொழிவதாகும்.

வாழ்க்கையில் இதுகாறும் இரவு நேரப் பூஜைகளை முறையாக ஆற்றாமைக்கான பரிகார வழிகளையும் இதன் மூலம் பெறுவீர்களாக! முன்னும், பின்னுமாய் அத்தனை சந்ததிகளுக்கும் அருளவல்ல மகத்தான தாரண மஹா சிவராத்திரி!

சுரேந்த்ர நாதேஸ்வரர் எனும் சிவ அவதாரம் கலியுகத்தில் மக்கள் மனதில் எழும் மனபயம், பீதிகள், பகைவர்கள் ஏதாவது செய்து விடுவார்களோ என்ற அச்சம், பெண் பிள்ளைகளைப் பற்றிய கவலை கூடிய பயமான போக்குகள் போன்றவற்றைக் களைய வல்ல அருட்பொழிவாகும்.

இம்மூர்த்திக்கு ப்ரீதி தருவது இசையாகும்., எனவே, ஏழை வித்வான்களைக் கொண்டு அனைத்து விதமான இசைக் கருவிகளில், வாய்ப்பாட்டில் இறைப் பாடல்களை, குறிப்பாக சிவரஞ்சனி ராகத்தில் இசைத்தவாறே அருணாசல மஹா சிவராத்திரிக் கிரிவலம் வருதல் விசேஷமானதாகும்.

“ஓம் சுரேந்திர நாதேஸ்வராய நமஹ” என ஓதி, ஓதியே சிவராத்திரிப் பூஜையிற் செறிந்து, கிரிவல பூஜைகளை ஆற்றி, மறுநாள் அமாவாசைப் பூஜை ஆற்றுவதும் பரமானந்த அனுபூதியாக மலரும்.

நாம் பன்முறை உரைத்து வருவது போல, நமக்குக் கிட்டியுள்ள ராமாயண, மஹாபாரத பாகவத அனுபூதிகள், பாடல்கள் மிகவும் குறைவே! அனைத்தையும் முழுமையாகக் கொண்டிருப்பதே நவநாதச் சித்தர்களின் எழுதாக் கிளவியாய், குருவருளால், சத்குருவின் வாய்மொழிகளால் பெற வல்ல “இருடிகள் மஹாபாரதம், இருடிகள் ராமாயணம்” போன்றவையாகும். நவநாதச் சித்தர்களின் புராணங்களில் ஒளிர்விடும் நாமறியாப் பல்லாயிரம் தெய்வீகப் பாத்திரங்களும் தாரண ஆண்டு மஹா சிவராத்திரியில் அருணாசல சிவதரிசனத்திற்காக வருகின்றனர் எனில், இம்மஹா சிவராத்திரியின் பெருமையை, மகத்துவத்தை என்னென்று சொல்வது?

மேலும் சர்வேஸ்வரனும் ஸ்ரீசாகம்பரி தேவியின் துணையுடன் தாரண ஆண்டில்தாம் ஔஷதாதிபதி எனப்படும் சந்திர மூர்த்தியின் அமுத மண்டலத்தில் இருந்து அபூர்வமான மூலிகை நாதங்களை, மூலிகைக் கருக்களை அருணாசல தரிசனங்களில் பதிக்கின்றார். எனவே மருத்துவ ரீதியாகவும் மிகவும் சக்தி வாய்ந்த நோய் நிவாரணக் கிரண சக்திகளை அளிக்க வல்லதே அருணாசல மஹா சிவராத்திரிக் கிரிவலமாகும்.

மார்ச் 2005 பௌர்ணமி நாள் : 24.3. 2005 வியாழக் கிழமை நள்ளிரவு 1.53மணி முதல் 25.3. 2005 வெள்ளிக் கிழமை நள்ளிரவு 2.28 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படிப் பௌர்ணமித் திதி நேரம் அமைகின்றது. கிரிவல நாள் : 25.3. 2005 வெள்ளிக் கிழமை இரவு.

8.3.2005 செவ்வாய்க் கிழமை இரவு 8.32 மணி முதல் 9.3.2005 புதன் கிழமை மாலை 5.28 மணி வரை திருக்கணிதப் பஞ்சாங்கப்படி மாசிமாதச் சிவராத்திரித் திதி அமைகின்றது. மாத சிவராத்திரி கிரிவல நாள் : 8.3. 2005 செவ்வாய்க் கிழமை இரவு!

மைனா மருந்துச் சித்தர்

திருஅண்ணாமலை மாத சிவராத்திரி கிரிவலம்! பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி அருணாசல கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! மைனா மருந்துச் சித்தர் அருணாசல கிரிவலம் வரும் மாத சிவராத்திரி மஹிமை

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

இறைவனை அறிய உதவும் ஆறாம் நிலைப் பகுத்தறிவு!

கலியுக மனிதனின் சாதாரண அறிவிற்கு எட்டாத விஷயங்கள் கோடி கோடியாக உண்டு. இறைவன், மனித குல நலனுக்காக விசேஷமாக அளித்து உள்ள ஆறாம் நிலைப் பகுத்தறிவைக் கலியுக மனித சமுதாயம் முறையாக நன்கு பயன்படுத்திக் கொள்ளாமல் விரயம் செய்து வருகின்றது.

காம இச்சையுடன் மிருகங்கள் போல இரண்டரை, மூன்றரை நிலை அறிவுடனும், மது, போதை மருந்து, புகைபிடித்தல், முறையற்ற காமம் மற்றும் தகாத கேளிக்கைகளில் ஈடுபட்டு, மதிமயங்கி, ஒன்றரை நிலை அறிவுடனும்தான், பல நாடுகளிலும் மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எவ்விதமான கெட்ட வழக்கங்களுக்கும் ஆளாகாதோரும் சுயநலமாகத் தமக்குத் தாமே வாழ்கின்றனர். இதுவும் ஏற்புடையதன்று, “பிறருக்குப் பயன்படும் வகையில் வாழ்ந்தாயா?” என்பதே இறப்பிற்குப் பின் மேலுலகங்களில் கேட்கப்படும் முதல் கேள்வி! இதனை நடைமுறை வாழ்விலேயே ஆத்ம விசாரமாகக் கேட்டு, ஜீவன்களின் நலன்களுக்குப் பயன்படும் வகையில் வாழ்வதே உண்மையான வாழ்க்கை! இதைத்தான் சித்தர்கள், “தினமும் ஆலயத்தில் குப்பையைப் பொறுக்கிச் சுத்தம் செய்தாயா?” என்று எளிமையாகக் கேட்கின்றனர். ஆயிரமாயிரம் அர்த்தங்கள் பொதிந்த சித்தவேத வாக்கியம் இது! இத்தகைய உத்தம நிலைகளில் ஆன்மீகமாகப் பொலிந்து வாழ்வோர் கலியுகத்தில் மிகச் சிலரே!

எனவே மனிதன் தனக்குரிய ஆறறிவுகளுடன் முழுமையாக வாழாத நிலையில், கலியுக மனிதனுக்கு எட்டாத, அல்லது பயன்படுத்தப்படாத உயர் அறிவு நிலைதான் முதலில், சித்தர்களின் மூலமாக, அருணாசல கிரிவலப் பலாபலன்களாக ஆரம்ப நிலைகளில் தொட்டுக் காட்டப்படுகின்றது. ஏனெனில், ஆறாம் அறிவு நிலையை ஓரளவு எட்டினாலே போதும், இறைவழிதான் என்றுமே சாசுவதமானது என்பது புலப்படலாகும் அன்றோ!

ஆனால் மனிதனை விடப் பகுத்தறிவு அம்சங்கள் குறைந்த, ஐந்தாம் அறிவு நிலைக்குக் கீழும் உள்ள பிற ஜீவன்கள்யாவும், தத்தமக்குரிய ஒன்றரை, இரண்டரை, மூன்றே முக்கால் அறிவு நிலைகளில் இருந்த போதிலும், அந்தந்த அறிவு நிலைகளைப் பரிபூரணமாகப் பயன்படுத்தியே வாழ்கின்றன. மனித குலத்தினர் மட்டுமே தனக்குரிய ஆறாம் இறைப் பகுத்தறிவு நிலையில் இருந்து பெரிதும் கீழிறங்கி, வீணான மாயைகள் பலவற்றில் மதி மயங்கி, பெறுதற்கரிய மானுடப் பிறப்பின் தெய்வாம்சங்களைப் பயன்படுத்திக் கொள்ளாது, தமக்குரிய உயர் அறிவு நிலைகளை விரயம் செய்து வாழ்கின்றனர். இது, இறைவன் அளித்த பிரசாதத்தை இறைவனிடமே விட்டெறிவது போலாகும். இவ்வாறு செய்யலாகுமா ஐயா?

அடுத்தது காட்டும் அறிவு

ஆனால், பிற ஜீவன்களோ தத்தம் அறிவு நிலைகளில் பரிபூரணமாகப் பயன்படுத்தி வாழ்வதால், தமக்கு அடுத்ததான உயர் அறிவு நிலையை உணரும் வண்ணம் நன்கு விருத்தி ஆகின்றன. உதாரணமாக, பறவைகள் “ஆஹா, மானுடப் பிறவி என்னே அரிய பிறவி! மனிதப் பிறவி, பெறுதற்கரிய ஆறறவில் உய்யும் அற்புதப் பிறவி!” என நன்கு உணர்ந்து, தாம் தினமும் காணும் மனித குலத்திற்கு விசேஷமான மதிப்பை அளிக்கின்றன.

மேற்கண்ட வாக்கியங்களை மீண்டும் மீண்டும் படித்துப் பாருங்கள், ஒவ்வொரு முறையும் விதவிதமான உயரறிவுக் கோணங்களில் அரிய விளக்கங்கள் புலப்படலாகும். இதுவும் சித்தர்களின் கருணையே!

பொறுப்புணர்ச்சிக்கொரு கறுப்பு மைனா!

அறிவைப் பகுத்து அறியும் பாங்கினை உணர்த்த வல்ல ஜீவன்களுள் ஒன்றே மைனாப் பறவை ஆகும். மிக மிக வேகமாக, அதே சமயத்தில் துல்லியமான கவனத்துடனும் பொறுப்புடனும், தவறுகளே செய்யாத வகையில் வாழ்வனவே மைனாப் பறவைகளாகும். இந்நிலை தூய துறவறத்திலும் ஒரு சிலருக்கே நன்கு கூடி வரும். கலியுக மனிதனோ ஒரு சிறு பேப்பரையோ, பென்சிலையோ, பாத்திரத்தையோ, தம்ளரையோ எடுக்கையில் கூட, கவனம் தவறி, கீழே போட்டு விட்டு, நிறையப் பிழைகளைச் செய்கின்றான். ஆனால் ஒரு சிறு மைனாப் பறவையோ, இனிய நல்மொழி, சாந்தம், அதி நுண்ணிய கவனம், ஆழ்ந்த நினைவாற்றல், பொறுப்புணர்ச்சி ஆகிய பல மேதா குணங்களைக் கொண்டே, மாமுனிகள் போலச் செயல்படுகின்றன, இதனால் தான் பறவைகளிடையேயும் மைனாக்களுக்குத் தனி வகை மதிப்பு உண்டு.

“பேச்சழகில் ஈச்சனாரப்ப எந்துறையார் எழில் மேவும் மைனா!” என்பது மைனா குலத்திற்காக சித்தர்கள் அளிக்கும் குல வாழ்த்து ஆகும். அதாவது, ஈச்சனாரப்பன் அருளால் ஸ்வரம் பிசகாத, தெளிவான, அழகான சப்த நயத்தைக் கொண்டு திளைப்பவையே மைனாவின் வாய்மொழிகள் ஆகும். ஈச்சநாரம் என்பது நல்ல சாரீர வளம் உள்ள தொண்டையில் வரும் இனிய நாதம்! கோயம்புத்தூர் அருகே உள்ள ஈச்சநாரி விநாயகர், எத்தகைய மன வேறுபாடுகளுடனும் இருக்கும் கணவன், மனைவியையும் திருத்தி, கடமை உணர்ச்சி, பொறுப்புணர்ச்சியை அளிக்கும் அருளுடை மூர்த்தி!

ஏழ்மை நிலையில் இருக்கும் இசைக் கலைஞர்களை இங்கு வரவழைத்து, இறைப் பாடல்களைப் பாடவும், வாசிக்கவும் செய்வதால், பாதை தவறிச் செல்லும் பிள்ளைகள் திருந்திட வழி பிறக்கும். தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வர்.

மைனா வேதம் மலரட்டும்

மைனாவின் ஒரு குல வகைதான் தைத்ரீயக் குருவிகள் ஆகும். இவை வேத சக்திகளைக் கொண்டவை. தைத்ரீயக் குருவி வம்சத்தைச் சார்ந்த மைனாவின் குடும்பம் கூட்டுக் குடும்ப ஒற்றுமை வகையதாகும். எப்போதும் இணை பிரியாத தம்பதிகளே தைத்ரீய மைனா பட்சிகள், நித்ய சுமங்கலிகள் எனத் தைத்ரீய மைனாக்களுக்கு அருட்பெயருண்டு. இதனால்தான் மைனாவின் உடலில் உள்ள பல வண்ணத் துளிகள் யாவும் பூலோகத்தில் மனிதனால் உருவாக்கப்பட முடியாதவை. விண்ணில் நிரவும் வேத சக்திகளைப் பிரதிபலித்துப் பெற்றுத் தருபவை!

மைனாப் பறவைக்கு இயற்கையாகவே சூரிய ஒளியில், சந்திர ஒளியில், பெரு மழையில் நனைந்து, வானியல் மந்திரங்களை ஸ்பரிசித்து நிற்கும் இயற்கைக் குணங்கள் உண்டு. குரு ஆணையின் காரணமாக யாக்ஞ்யவல்கிய மகரிஷி தாம் குருவிடம் கற்ற வேதத்தை பதச் சுழியாக வாயால் கக்கிய போது, “இறைவா! இவ்வரிய வேத மந்திரங்களும், சக்திகளும் பூவுலகில் மறைந்து போய்விடக் கூடாதே! இப்பூவுலகம் மட்டுமல்லாது, இந்த பிரபஞ்சமே இவற்றை இழந்து விடக் கூடாதே!” என்று வேண்டி மைனா குலத்தைச் சேர்ந்த தைத்ரீயக் குருவிகள் யாக்ஞ்யவல்கிய மகரிஷி உமிழ்ந்த வேதபதச் சுழிகளைத் தாமே வாயால் உண்டு அவற்றை வெளி உரைத்து ஓதியமைதாம் இன்று தைத்திரிய மந்திர கோச வேத மந்திரங்களாகப் பூவுலகில் பிரகாசிக்கின்றன. எனவே மனிதன் அறியா வேத மந்திரங்களையும் ஓத வல்லனவே மைனாப் பறவைகள் ஆகும்.

குயிலுக்கு குரல் அழகு என்றாலும் மைனாவிற்கு வேதப் பரல் அழகு உண்டு. பிரிந்துள்ள குடும்பங்களை, தம்பதியினரை ஒன்று சேர்க்கும் சக்திகளை மைனா ஓதும் வேத மந்திர சக்திகள் கொண்டவையாகும். மைனா மொழி என்ற ஒன்றுண்டு.

வேதமொழிப் பறவையே தைத்ரீய மைனா

வேதம் என்பது மொழிச் சார்புடையது அல்ல! சக்தி வாய்ந்த சப்தங்களே வேத ஒலிகள்! “பைநாகப் பாம்பும் மைனா விளித்துச் சைனாபுதம் ஆகுக!” என்பது சித்தர் மொழி. அதாவது திருமால் வீற்றிருக்கும் பாம்புப் படுக்கைக்குப் பைநாகப் படுக்கை என்று பெயர். இதில் நான்கு வேதங்களும் தலையணைகளாக இருக்கும்! சைனாம்பிகை, சயனாம்பிகை என்ற பெயர்களில் அம்பிகைக்கு ஓர் அவதாரம் உண்டு. இதே பெயரில் அம்பிகை வல்லக்கோட்டை அருகே அருள்கின்றாள். மைனா பட்சிக் குலத்திற்கான தாய்ப் பீடம் இதுவே!

வண்ண வண்ணமாய் வான வேதங்கள்!

காதோரம், வடியோரம், வாயோரம் பல வண்ணம் பூத்திருக்கும் தைத்ரீய மைனாக்கள் மிகுந்த வேத சக்திகள் நிறைந்தவை. மைனாவின் உடலில் இருக்கும் வண்ணங்கள் சூரிய ஒளி, சந்திர ஒளி, சிந்தூர சக்திகள் நிறைந்தவை! பெரும் மழை போன்ற இயற்கை சாதனங்களில் சுக்ல, யஜுர் வேத சக்திகளைப் பிரதிபலித்து கிரகித்துக் கரைத்து பூமியின் நீரோட்டங்களில் மைனாக்கள் செலுத்துகின்றன.

கொய்னா என்று ஒரு மூலிகை மரம் உண்டு. “மைனா மொழிச் சொல்லும் கொய்னா மரம் தவிருமே!” என்ற ஆன்மமொழியின்படி, கொய்னா மூலிகைத் தாவரத்தால் தீரும் நோய்களை, தைத்ரீய மைனாப் பறவையின் மொழியொலியில் திரளும் ரோக நிவாரண வேத சக்திகளால் நிவர்த்தி செய்திட முடியும். உண்மையில், தற்போதைய கலியுகத்தில் செல்போன்களால் வானத்தில் மிதக்கும் நல்கிரணங்கள் பாதிக்கப்பட்டு தீய சப்த கிரணங்களே பெருகி வருவதால், மைனா பறவைகளே இத்தகைய “negative force bad vibrations” சப்தங்களை நிவர்த்திச் செய்கின்றன.

காற்றில் பரவும் பலவிதமான வைரஸ் கிருமிகளை மைனா பட்சி தன் தேக சக்திக் குரலால் தணித்தும், பஸ்மம் செய்தும் நோய்க் கிருமிகளின் ஆதிக்கத்தைத் தீர்த்து வைக்கின்றது.

மைனா பட்சியின் வாய்க் குரல் மொழியில் உருவாகும் வேத சப்த சக்திகளால் (a)erosense எனும் ஒரு வகை நோய்க் கிருமிகள் மடிவதால் மைனா மொழி கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது. இதனைப் பிற்காலத்தில் மருத்துவ விஞ்ஞானம் ஏற்கும் காலம் வரும்.

“மைனா மருந்துச் சித்தர்”

நம் வாய்க்கான அவய, தசை அசைவுகளுடன் மட்டுமே பேசுகின்றோம். மைனாக்கள் பேசும் போதோ அதன் சப்த ஜீவ நாடிகளும் பேசும். இவ்வாறு மைனா பட்சியின் மகத்துவங்களைப் பூவுலகிற்கு எடுத்துரைத்தவரே “மைனா மருந்துச் சித்தர்” ஆவார். இம்மாத சிவராத்திரியில் அதாவது தாரண வருட மாசி மாத சிவராத்திரியாம் மஹாசிவராத்திரி நாளில் அருணாசலத்தில் கிரிவலம் வருகின்றார்.

இவருக்குச் சைலேந்திரச் சித்தர் என்ற பெயரும் உண்டு. காரணம் “சைலம், சைன” பீஜாட்சர சப்த வகை யோக நிலைகளில் கரை கண்டவராதலாகும். இது மஹா சிவராத்திரியாகவும் மலர்வதாலும் ஸ்வர்ண விருட்சம் எனப்படும் பொன் மரத் தாவரங்களின் சிவப்பிரகாசம் உருவாவதாலும் இம்மாத சிவராத்திரியில் எண்ணற்ற மைனாப் பறவைகள் தூல, சூக்கும, காரிய, சத்புல வடிவுகளில் திருஅண்ணாமலையை கிரிவலம் வருகின்றன.

இம்மாத கிரிவலத்தை சூரிய லிங்கத்தில் தொடங்கி, எம லிங்கத்தில் நிறைவு செய்தலும், சத்சங்கப் பூர்வமாக மிகவும் பாதுகாப்புடன் ஆயிரம் ஊதுபத்திகளை அல்லது ஆயிரம் விளக்குகளை ஏற்றி கிரிவலம் வந்து வழிபடுதல் விசேஷமானது.

இம்மாத சிவராத்திரியில் மைனா வடிவில் எண்ணற்ற சித்தர்களும் வருகின்றனர். மைனா மூலமாய் மூலிகைகள், ஸ்வர்ண விருட்சங்கள், ஜோதி மரங்கள், ப்ரதீப மரங்கள், கற்பக விருட்சங்கள், காமதேனு, காமதேனு விருட்சங்கள், பூர்புவஸ்வஹ மூலப்பரகாச தீபங்கள், சுயம்பு ஜோதிப் பரல்கள், பரஞ்ஜோதிப் பரல்கள் பலவும் இந்த மஹா சிவராத்திரியில் பாக்யம் உள்ளோர்க்கு அற்புதத் தரிசனமாகக் கிட்டும்.

இத்தகைய தெய்வீக ரகசியங்கள் அனைத்தையும் சற்குரு மூலமாகப் பெறக் காரணமான மைனா மருந்துச் சித்தர் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு அருணாசல கிரிவலம் வந்து, மைனா மருந்து முறையில் எண்ணற்ற நோய்களைத் தீர்த்து மைனா மருத்துவ மாதவ தரிசனப் பகுதியில் சித்தி பெற்றார். இவ்விடத்தில் இன்றும் சிவராத்திரி தோறும் சத்சங்கமாக மைனாக்கள் ஒன்று கூடி மைனா மொழியில் வேதங்களை ஓதி நமஸ்கரிக்கின்றன.

வாழ்க்கையில் நல்ஒழுக்கம் பெறவும், அறிந்தோ, அறியாமலோ செய்த பெரும் வினைகளுக்கு தீர்வுப் பரிகார, நிவாரண வழிகள் பெறவும் உதவும் மாத சிவராத்திரி கிரிவலம், பிள்ளைகளுக்கு நல்ல நினைவாற்றலை அளிக்கவும் உதவும்.

பிரதோஷம் போல் மாத சிவராத்திரிப் பூஜையும் நன்கு பிரகாசித்து மலரட்டும்!

மாதாந்திரப் பௌர்ணமியின் அருணாசல கிரிவல மகிமை போல, ஒவ்வொரு அமாவாசைத் திதிக்கும் முந்தைய நாளில் வருகின்ற மாத சிவராத்திரி எனப்படும் தேய்பிறைச் சதுர்த்தசித் திதி தோறும் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருதலும் மகத்தான அனுகிரகங்களைப் பெற்றுத் தருகின்ற பாங்கினைப் பெற்றிருப்பதை நாம் பன்முறை வலியுறுத்தி எடுத்துரைத்து வருகின்றோம். கலியுகத்தில், மனித குலம் இரவு நேரப் பூஜைகளை முறையாக ஆற்றி வராமையால்தாம், உலகெங்கும் இரவு நேரக் குற்றப் பாவ வினைகள் சொல்லொணா வகையில் பெருத்து வருகின்றன.

“எங்கோ இரவு நேரப் பாவ வினைச் செயல்கள் நடந்தால் நமக்கென்ன வந்தது?” என எவரும் மெத்தனமாக இல்லாது, சமுதாயத்தைக் காத்திடவும், மது போதையில் மக்கள் மாக்களாய்ப் பகுத்தறிவை இழந்து, இரவை விரயமாகக் கடத்தும் அவல நிலை மாறிடவும்., இரவு நேரத்தில் உற்பவிக்கும் பூஜா சக்திகளை முறையாகப் பெற்றிடவும், மாத சிவராத்திரிப் பூஜையை அனைத்துச் சிவாலயங்களிலும் பிரதோஷ பூஜை போல் மீண்டும் பிரசித்தி பெறச் செய்யவும்,

இந்த தாரண வருட மஹா சிவராத்திரியில் அனைவரும் சங்கல்பம் செய்து, இனியேனும் தீவிர வைராக்யத்துடன் கடமை ஆற்றிட வேண்டும். மதுப் பழக்கத்திலிருந்து விடுபட, மாத சிவராத்திரியன்று ஆற்றும் அருணாசலத்தின் கிரிவலப் பலாபலன்கள் நன்கு துணைபுரியும்.

சுயம்பு லிங்க வழிபாடு

உருவத்தில் உருவிலாதான்!

உருவமற்ற பரம்பொருளை உணர்த்தவல்லதே (உருவ) வடிவுப் பூஜையே சுயம்பு லிங்க வழிபாடாகும். உண்மையில் சித்தர்கள் அரிதாக விளக்குவதற்கு ஏற்ப, பூமியின் வடிவு உருண்டையான கோளம் அல்ல, உலக்கை போன்று லிங்க வடிவுடையதே பூமியின் வடிவாகும். இதனை விஞ்ஞானமும் ஏற்கும் காலமும் வரும்.

பல பூமிகள், சூரியக் கோளங்கள் உண்டு என்று சித்தர்கள் குறித்திருப்பதை நாம் பல ஆண்டுகளாகவே எடுத்துரைத்து வருகின்றோம். ஆனால் தற்போதுதான் விஞ்ஞான ரீதியாக, மற்றொரு Solar System இருக்கின்றது என விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் பரிபூரணமான இறையருளால், காலத்தைக் கடந்து செல்ல வல்ல உண்மையான, சாசுவதமான மெய்ஞான விஞ்ஞானிகள் ஆவர்.

ஆண்டவன் தன் உருவமற்ற அருவத் தோன்றலுக்கு லிங்க வடிவைத் தேர்ந்தெடுத்ததேன்? “கண்டே அறிந்து நம்பும்” மனப்பான்மையை உடைய மனித குலத்திற்கு அருள்பாலிக்கும் பொருட்டே! ஆரம்ப யுகங்களில் மனிதன் முழுமையான பகுத்தறிவுடன் பொலிந்தமையாலும், சற்குரு பரிபாலனத்தைப் பரிபூரணமாக மனித சமுதாயமே முழுமையாக ஏற்று ஒரே மதத்துடன், சனாதன தர்ம மதத்தினராய் வாழ்ந்தமையாலும் பண்டைய யுகங்களில் உருவ வழிபாடு தோன்றிடவில்லை! ஆனால் காலப் போக்கில் மனிதன் ஆசாபாசங்களுக்கு அடிமைப்பட்டு, தீய வழக்கங்கள், பகைமை, விரோதம், குரோதத்திற்கு ஆட்பட்டமையால், சுயநலம், பேராசை, அகங்காரம், ஆணவம், பெருகி, மனித சமுதாயத்தில் பல பிரிவுகளும், மதங்களாய், ஜாதிகளாய்த் தோன்றின.

இறைவனின் அருவத்தை உரைக்கும் லிங்க வடிவ வழிபாட்டிலும் கோடிக்கணக்கான ரகசியங்கள் அடங்கி உள்ளன. இவற்றைத் தாம் தாரண வருட மஹா சிவராத்திரி தோறும் பூவுலகத்தில் உள்ள அனைத்துச் சுயம்பு லிங்கங்களையும் வழிபட பூமிக்கு வரும் காரண மஹரிஷி என்பார், முதலில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வந்து, லிங்க வடிவின் மஹாத்மியத்தைத் தம் தபோபலன்களில் பதித்து உணர்விக்கின்றார். பல கோடி வருடங்களாகத் தாரண வருடம் தோறும் லிங்காத்மிக விளக்கந்தனை தாரண மஹா சிவராத்திரித் திருப்பூஜையாக, ஸ்ரீகாரண மஹரிஷி அளித்து வருகின்றார்.

(நாக) ரத்தினப் பூப்பு

ஒவ்வொரு (மாசி மாத) மஹா சிவராத்திரி தோறும், சில வகைப் பூ நாகங்கள், ரத்தின நாகங்கள் சட்டைத் தோலை உரிக்கின்றன. ஓராயிரம் ஆண்டுகள், விஷத்தை ஒரு துளியும் கக்காமல் இதனை யோகப் பூர்வமாகச் சேர்க்கையில், இதுவே நாகரத்தினமாக மாறுகின்றது.  இதனைத் தாரண வருடந்தோறும் அய்யர்மலை, பேரையூர், நாகர்கோயில், திருநாகேஸ்வரம் போன்ற குறிப்பிட்ட சுயம்பு மூர்த்தி நாக சக்தித் தலங்களில் நாகங்கள் அர்ப்பணிக்கின்றன. கும்பகோணம் ஸ்ரீநாகேஸ்வரர் ஆலயம், திருப்பாம்புரம், திருநாகேஸ்வரம், நாகப்பட்டிணம் ஆகிய நான்கு தலங்களிலும், மஹா சிவராத்திரி நாளில் அனைத்து யாமங்களிலும் ஆதிசேஷன் தூல, சூக்கும வடிவுகளில் பூஜித்து நல்வரங்களை அருளும் பாங்கு, பல யுகங்களாய், இன்றுமாய் நடைபெற்று வருகின்றது.

நாக உபாசனையில் வல்லோர் இந்நாளில் இதற்கென நாக ஞானப் பூர்வமாக ஆதிசேஷ தரிசனம் பெறுவர். எனவே நாக மூர்த்தி உபாசனைக்கு உகந்த நாளும் தாரண வருட மஹா சிவராத்திரி தினமாகும்.

சிவநாத, சிவநாக, சிவஞான போதம்

மஹா சிவராத்திரி அன்று, உத்தமத் தெய்வீக நிலைகளில், “சிவஞான போத நிலைகள்” பாக்யமுள்ள பலருக்கும் நன்கு உணர்விக்கப் பெறும். சுயம்பு லிங்க மூர்த்தி அருளும் நாகஜோதி அருள்முறை வகைகளில் கலியுகத்திற்கென 64 நாகசக்தி வழிமுறைகள் உண்டு. தாரண வருட மஹா சிவராத்திரியில் உருவ வடிவு, செயல் வடிவு, நிறை வடிவு ஆகிய மூன்றும் சகலச் சுயம்பு மூர்த்தித் தலங்களிலும் மாற்றங்களை அடைகின்றன. முப்பத்து முக்கோடித் தேவர்கள், பூலோக ஆலயங்களில் தினந்தோறும், பகலிலும், இரவிலும், வந்து பூஜிக்கின்றனர் என நாமறிவோம் அல்லவா! இந்நேரங்களில்தாம் கோயில் நடை சார்த்தப் பெறும். இதற்கென நிர்ணயம் பெறும் தேவ பூஜை காலமும் தாரண மஹா சிவராத்திரி தோறும் மாற்றம் பெறும்.

அழல் வடிவ மாற்றம், செயலருள் மாற்றம், புலத்தருள் மாற்றம் என்ற வகையிலான பல்வகை மாற்றங்கள் மஹாசிவராத்திரியில் ஆறுகால பூஜைகளிலும் சுயம்பு மூர்த்தங்களில் நிகழும். பக்தியுடன் நன்கு உற்று, கவனிப்போர்க்குச் சுயம்பு லிங்கத்தின் நுண்ணிய அணு மாற்றங்கள் பலவும் புலப்படும்.

இந்நாளில் லிங்கங்கள் மட்டுமன்றி, அனைத்துச் சுயம்பு அருள் வடிவங்களும், பூவுலகெங்கும் மாறுதல் அடையும். இமய மலையில் ஆயிரக்கணக்கான சுயம்பு மலைகளே, சமயக் குரவர்களால் பாடப் பெற்றத் தேவாரப் பாடலை பெற்ற இந்திர நீலப் பருப்பதம் (நீல மலை) போன்று மாபெரும் சுயம்பு லிங்கங்களாக அமைந்துள்ளன. பிரபஞ்சத்தின் தெய்வீக மையமாகத் துலங்கும் திருஅண்ணாமலையும் சுயம்புவான அக்னிப் பிழம்புதானே! நொடித்தான் மலை எனப்படும் திருக்கயிலாயமும் தெற்கில் திருஅண்ணாமலை நோக்கிப் பார்த்து அமைந்திருக்கும் மாபெரும் சுயம்பு லிங்கம் தானே!

மாயைகளும் மாற்றங்களும் மாறாதான் மறை லீலைகளே! 

பல சதுர் யுகங்களுக்கு ஒரு முறை, சுயம்பு லிங்கங்களில், இதிலும் தாரண மஹா சிவராத்திரி காலத்தில்தான் பல அதீத மாற்றங்கள் ஏற்படும். இதற்கு முந்தையதாக, பூவுலகின் இயற்கை நிலைகளில் பல மாற்றங்கள் ஏற்படும். சாதாரணக் கண்களுக்கு இவை அனைத்தும் இயற்கைச் சீற்றங்களாகத் தோன்றிடினும், அனைத்தும் இறைப் பாங்கே, ஜீவன்களின் நன்மைக்கே என உணர்தல் வேண்டும். மஹாப் பிரளயத்தில் அனைத்து ஜீவன்களும் நீரில் மறைகின்றன அல்லவா, தெய்வீக நோக்கில் மஹா ப்ரளயத்தை இறைச் சாதனங்களில் “ஜீவ பிந்துக்கள் ஒன்றி பிறப்பிறப்பற்று ஐக்யமடைதல்” எனத் தெளிவுறுத்துவதாலும், இயற்கைச் சீற்றம் என நாம் கருதுபவைக்கு நிறைய ஆன்ம விளக்கங்கள் உண்டு என்றும் அறிக.

சுயம்புகளில் தெய்வீகப் போக்குவரத்துகள்!

எனவே இயற்கைச் சம்பவங்கள் தக்க காரணங்களுடன் தான் நிகழ்கின்றன. இவையாவும் இறை லீலைகளின் பாங்கே ஆகும். இத்தருணங்களில் பூமியின் கீழே வெகுவாக ஆழ்ந்துள்ள சுயம்பு மூர்த்தி வெளிப் போந்து தற்போதையச் சுயம்பு மூர்த்திகளும் உட்போவதும் உண்டு. சுயம்பு மூர்த்திகளில் புதுப் புதுத் தோற்றங்கள் ஏற்படுவதும் உண்டு. இவை அனைத்தும், பிரபஞ்சத்திற்கே ஆண்டவத் திருமையமான அருணாசலமாம் திருஅண்ணாமலையிலும் “நொடித்தான் மலை” எனப்படும் திருக்கயிலாயத்திலும், கிரிவலத் தவப் பலாபலன்களாக நன்கு புலப்படும்.

சுயம்புப் பிரபஞ்சப் பெட்டகமே திருஅண்ணாமலை

அருணாசலத்தில்தாம் அனைத்துச் சுயம்பு தோற்றங்களும், மாற்றங்களும் நிர்ணயம் ஆகின்றன. சுயம்பு லிங்கப் பாண வடிவுகளின், ஆவுடைகளின் புதுத்தோற்றங்கள் தாரண மஹாசிவராத்திரியில் தாம் ஆக்கம்(ப்) பெறும்.

ஒரு மஹாசிவராத்திரிக்கும் அடுத்த ஆண்டின் மஹாசிவராத்திரிக்கும் இடைப்பட்ட காலம் “சிவத்ருக்” காலமாகும். த்ருக் கணிதக் காலம் இவ்வாறு ஏற்படுவதே! திருக்கணிதம் என இது மாறியது! இதன் தாத்பர்யத்தையே ஆதிசங்கரர் “த்ருக் த்ருஷ்டி விவேகம்” எனும் அற்புத இறைச் செய்யுள்களாகப் பாடியுள்ளார். கண்ணாடி, இதன் முன் உள்ள பொருள், கண்ணாடியில் தோன்றும் பிம்பம் மூன்றையும் வைத்து விளக்கும் தாத்பர்யத் துதிகளான இவையாவும் சிவலிங்கத்தின் மூன்று பாகங்களையும் ஜோதிப் பூர்வமாகவும், அத்வைதப் பூர்வமாகவும், ஆத்மப் பூர்வமாகவும் விளக்குபவை. இவை வெளிப்படுவது லிங்கத் திருமேனியில் பெய்யும் சுடர் ரேகைப் பரல்களால்தாம்! இதனால் தான் சிவமூர்த்தி அபிஷேகப் பிரியர் ஆனார்.

சிவலிங்கம் எனில் மாறாத உருவம் எனப் பொருள் கொள்கின்றோம் அல்லவா! மாறாதெனில் அது எப்படி அருவ உருவமாகும்? உலகத்தில் பரபிரம்மமாம் இறைவனைத் தவிர அனைத்தும் மாறிக் கொண்டிருக்கும் மாயா விநோதங்களால் ஆனதே. அபிஷேகத்தின் போது, சிவலிங்க வடிவம் மாறிக் கொண்டே இருப்பது இதனையே குறிக்கின்றது. சிவலிங்கத்தின் மூன்று பாகங்களை பிரம்ம பாகம், விஷ்ணு பாகம், ருத்ர பாகம் என்று மூன்றாக உரைப்பர். சிவன் அபிஷேகப் பிரியர், விஷ்ணு அலங்காரப் பிரியர், பிரம்ம மூர்த்தி (தம் சிரசில் நான்கு வேதங்களையும் தாங்குவதால்) ஆகமப் பிரியர் ஆகின்றார்.

சிவாலங்கார சிவஞானம்

இம்மூன்றும் ஒன்றாகப் பரிமளிப்பதே சிவலிங்கம் ஆவதால், சிவலிங்கத்திற்கு அலங்காராதிபதி என்றும் பெயர். அலங்காரம் எனில் அனைத்தும் உள்ளட(ங்)க்கியது எனப் பொருளாகும். அவரவர் உள்ளப் பாங்கிற்கு ஏற்ப அலங்கார, அபிஷேக, ஆகமத் தோற்றங்களுடன் மஹா சிவராத்திரி அன்று 64 விதமான அபிஷேக ஆராதனைகளுடன் சிவமூர்த்தி உலகெங்கும் காட்சி தருகின்றார் அல்லவா!

தாரண வருடத்தில் வரும் மஹாசிவராத்திரியில் சுயம்புச் சிவலிங்கத்தை, 64 வகை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபடுதல் விசேஷமானது. சிவனே பரபிரம்மம்! எவராலும் ஊகிக்க முடியாத, உத்தமத் தெய்வ மூர்த்தி! சிவத் தொண்டே சிவனைக் காட்டும்! சிவ அவதார வடிவுகள் மஹா சிவராத்திரி தோறும் உற்பவிக்கின்றன. ஏற்கனவே எண்ணற்ற தெய்வ வடிவுகள் இருக்கையில் மென்மேலும் இது எவ்வாறு சாத்தியமாகும் என எண்ணிடலாம். நம் பூமி போல எண்ணற்ற பூமிகள், லோகங்கள் இருக்கின்றன என்பதை உணர்ந்தால் தான் கோடிக்கணக்கான சிவ அவதார மூர்த்தங்கள் பொலிவதும் புலனாகும்.

கலியுக மனிதன் இறைவனின் பேரருளாகப் பெற்றுள்ள ஆறறிவு அம்சங்களையும் முழுமையாகப் பயன்படுத்தினால்தான் மேற்கண்ட தெய்வீக ரகசியங்கள் பலவும் புலப்படுத்தப் பெறும். மேதாவி எனப் புகழப் பெறும் சிறந்த அறிவு நிலைக்கும் அப்பாற்பட்ட பல உத்தம தெய்வீக நிலைகளும் புலனாகும். ஆனால், பல தீய வழக்கங்களுக்கும் அடிமைப்பட்டு  விட்டதாலும், சக்தி வாய்ந்த பல இறைவழிபாடுகளைக் கை விட்டு விட்டமையாலும், கலியுக மனிதனின் வாழ்வோ, இரண்டரை, மூணே முக்கால் அறிவு நிலைகளோடு முடிந்து விடுகின்றது.

மாபெரும் விஞ்ஞானி, நோபல் பரிசு பெற்றோர், அறிவிற் சிறந்தோர் எனப்படும் மூத்த IAS, IPS  அதிகாரிகள், மிகச் சிறந்த ஆராய்ச்சியாளர் என்று அறிவியல் சிறந்தோரால் போற்றப்படுபவர்களும் இரண்டரை அறிவு நிலைகளுடன்தான் இருக்கின்றனர்.

எனவே, பகுத்தவிற்கும் அப்பாற்பட்ட, ஆறறிவு நிலைகளையும் தாண்டிய பக்தி நிலையில்தாம் பரம்பொருளைப் பக்தி அறிவுடன் மெய்த்துணரக் கூடும். இதனை உணர்வித்து, உணர வைக்கும் பாங்குகளை அளிப்பதே மஹா சிவராத்திரிப் பூஜையும், மஹா சிவராத்திரி அருணாசல கிரிவலமும் ஆகும்.

அன்புடை அழகு

அன்பைக் கொணரும் அன்புடைய ஏகாதசி விரதம்

மோகம் என்பது ஆசைகள் அளவற்றுப் பெருகி இருக்கின்ற மனதால் எப்போதும் வதையுறும் நிலையாகும். ஆசை அல்லது விருப்பமானது வெறி கொண்ட மோகமாக, அதாவது பேராசைப் பித்தாக விரியும் போதுதான் வாழ்க்கையில் விபரீதங்கள் ஏற்படுகின்றன.

வீட்டில் உள்ள நல்மரங்களின் இலைகள், பூக்கள் மனித மனதில் உள்ள கல்மிஷங்களைச் சிறிது, சிறிதாகத் தாமே வாங்கிச் சுத்திகரித்திட எப்போதும் தவமியற்றுகின்றன. எனவே, மரங்களும் மோகத்தை மாற்ற வல்ல இயற்கையான ஆன்மீக சாதன ஜீவன்களாகப் பிரகாசிக்கின்றன. இதற்காகவே தினசரி துளசிப் பூஜை, பூச்செடிகளை வளர்த்தலும் இல்லறத்தில் மிகவும் தேவையானதாகின்றது.

அளவோடு யாவுமாய் அய்யா!

ஆசை அல்லது விருப்பம் என்பது, தார்மீக ரீதியாக, முறையான அளவில், அவரவர் வாழ்க்கை வசதி நிலைகளுக்கு ஏற்பவே இருக்க வேண்டும். பல சமயங்களில் விரோதம், பகைமையை விட, மோ(ச)கமான பேராசை மிகவும் கொடுமையானதாக மாறிவிடும். ஆசை அளவுக்கு மீறிப் பெருகிடுகையில் எப்போதும் கெடுதல் பயக்கும் மோகமாகி முறையற்ற காம இச்சைகளாகவும் மாறி, மன நோய், உடல் நோய்களுக்கு வித்திடும். இவற்றைத் தணித்திடவே அருணாசல கிரிவலம், மௌன விரதம், உண்ணா விரதம் போன்றவை பஞ்சாங்கத்தில் மனித குலத்திற்கான நன்னெறிப் பண்டிகைகளாக வெகு காலமாய்க் குறித்து அளிக்கப்பட்டு வருகின்றன.

வேதனைகளைத் தணிக்கும் விருட்ச பூஜை

மரங்களுக்கு விபூதி, அரைத்த சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு அடிப் பிரதட்சிணமாக வலம் வருவதான விருட்ச பூஜைகளை ஏகாதசி, அமாவாசை மற்றும் புதன், திங்கட் கிழமைகளில் ஆற்றி வந்தால், மோகம் மற்றும் பேராசைகள் பெரிதும் தணியலாகும், மன வேதனைகளும் கரைக்கப் பெறும்.

ஆசைகள் பெருகினால் அவற்றை எப்படியேனும் அதர்ம முறையிலேனும் நிறைவேற்ற வேண்டும் என்ற பேராசையாக வெடிக்கும். ஆசைகளை அடக்க முயற்சித்தால் அவை எப்போதாவது வெடித்து மனவேதனைகள் பெருகி விபரீதமான நிகழ்ச்சிகள் ஏற்படும். தினசரித் தாளில் வரும் துக்ககரமான சம்பவங்கள் பலவும் பேராசையால், பகைமையால் வருவனவே.

எனவே, ஆசைகள் தாமாகவே தணிந்திட அவ்வப்போது ஆலயத்திலும், வீட்டிலும் பஞ்சாமிர்த அபிஷேகமும், தொன்னையில் வைத்துப் பஞ்சாமிர்த தானமும் அளித்தல் நன்று.

புனிதமான மரங்களுக்கான “விருட்ச பூஜையிலும்” பஞ்சாமிர்தப் பூஜையிலும், பஞ்சாமிர்த தானத்திலும் எழும் அமிர்த சக்திகள் மனதில் அமிர்த சக்திகளைச் சுரந்து, மோகத்தை இயற்கையாகவே தணிக்கவும், மோகத்தால் மனதாலும், உடலாலும் தவறுகள் செய்யாதிருக்கவும் உதவும். இதற்காகவே, மாதந்தோறும் தெய்வீக சக்தி நிறைந்த நாட்களைத் தீர்க தரிசனமாகக் கணித்து, பல்வகைப் பண்டிகைகளை நம் பெரியோர்கள் அளித்துள்ளனர்.

மோகமும், பேராசையும் உடல் நாளங்களைப் பாதிக்கும்!

எனவே, மோகமென்பது வாழ்வில் வீணாக, தகாத, வரம்புக்கு மீறிய ஆசைகளைத் தினமுமே பெருக்கிக் கொண்டிருப்பதாகும். உதாரணமாக, செல்லும் வழியில் ஒரு வீடு அல்லது “பிளாட்டைப்” பார்த்தால் உடனே மனம் சஞ்சலப்படுகின்றதா என அவரவரே தம்மை எடை போட்டுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அடைய முடியாதவை பற்றியே எண்ணி, எண்ணி கலியுக மனித மனமும், உள்ளமும் விகாரம் அடைவதோடு, தேகத்தில் உள்ள சுத்த ரத்த நாளங்களும், ரத்த அணுக்களும், நற்சந்ததிக்கான விந்து சக்திகளும், தலையில் இருக்கும் கபாலச் செல்களும் பெரிதும் பாதிப்படையும். இதனை விளக்குவதே “அகத்தின் அழகு முகத்தில்!” என்பதான ஆன்றோர் மொழி!

அழகு என்பது வெறும் லாவண்யமான வெளி அங்க அமைப்புகள் அல்ல! வெளியில் பார்க்கும் அழகு, உண்மையான அழகு ஆகாது என நன்கு அறிந்தாலும் மனம் இன்னமும் சஞ்சலத்துக்கு ஆளானால், மனநெறி வளம் போதாது எனப் பொருள். தமிழ் வேத மாமறைத் துதிகளை தினமும் காலையிலும், மாலையிலும் ஓதி வந்தால் மனவளம் நன்னெறிப்படும். ஏனெனில் இறைதரிசனம் பெற்றவர்கள் பரமானந்தத்தில் மனசுத்தியோடு ஓதிய மாமறை வாசகங்கள் துதிகள் அன்றோ இவை யாவும்!

பூக்கள் தரும் புனிதங்கள்

கைக் குழந்தைகளின் முகத்தில் பொலிவதும், தாவரங்களின் பூக்கள், இலை அமைப்புகள் போலானதுமான உண்மையான, மனதில் கல்மிஷமில்லாத, அன்பு அம்சங்களே நிரந்தரமான அழகாகும். இவைதாம் இறுதிவரை நிலைத்து நிற்கும். மனித உருவமோ மாறலாகும். ஆனால் தாவர, இலை, பூக்களின் எத்தனை தலைமுறைகள் ஆனாலும் அவற்றின் அமைப்புகள் மாறுவதில்லை! எனவே விருட்ச பூஜைகளில், பூக்களால் ஆகும் ஆராதனை, அர்ச்சனைகளில் நிரவும் அன்புதான் நிரந்தரமான, சாசுவதமான அன்புடை அழகைத் தரும்.

வாழ்வில் தூய அன்பு செறிய உதவுபவையே பூக்களால் ஆக்கப் பெறும் நல்பூஜைகள், ஆழ்ந்த தியானம், நல்ல பிராணாயாம யோகப் பயிற்சிகள் போன்றவையாம்! பூக்கள் தரும் புனிதங்கள் எண்ணற்றவை! இவற்றில் கரை கண்ட புஷ்பசந்த்ர யோகியே பாண்டிச்சேரி அன்னை ஆவார். அன்னையின் ஜீவசமாதியில், மணமுள்ள பூக்களை வைத்துத் தியானித்து, வணங்கி உங்கள் மனசக்தியை அடிக்கடி விருத்தி செய்து கொள்ளுங்கள்!

அழகு புனிதமாகட்டும்! புனிதம் அழகு பெறட்டும்!

பூர்வ ஜன்மங்களில் இறைவனை அலங்கரித்துப் பூஜித்த புண்ய சக்தியைப் பெற்றவர்கள்தாம், தற்போது வசீகர உருவத்துடன், மிகவும் அழகான அங்க அமைப்புகளுடன் அமைவர். எனவே, இவர்கள் நன்றிப் பூஜையாக, தினமும் பூத்தொடுத்து இறைவனுக்கு அளிப்பதை நித்தியக் கடமையாக ஆற்றி வரவேண்டும்.

இறைவன் அளித்துள்ள அழகு அம்சங்களை, ஆபாசமான, சினிமா, நாடகம், விளம்பரங்களில் கரைத்து அழித்தல் மிகவும் பாவகரமானது. பல்லாயிரக் கணக்கானோரின் மனதில் மாசுள்ள மன சஞ்சலங்களை ஏற்படுத்திய பெரும் பாவக் கறைகள் சேர்ந்து, மன ஆவி வகைப் பிறப்புகள் கிட்டுவதோடு, இது சந்ததிகளையும் மிகவும் பாதிக்கும் என்பதை உணர்ந்து, பூக்களின் புனிதங்களால் இனியேனும் சம்பந்தப்பட்டோர் கரையேற முயற்சிக்க வேண்டும்.

செயற்கையான வெளி அழகும் சாசுவதமற்றதாய், நிலையில்லாததாய், கர்மச் சுழலுக்கு ஆட்பட்டது ஆகும் அல்லவா! மேலும், கலியுகத்தில் பலரையும், எந்த வயதிலும் வாட்டுவதும், பெரும்பான்மையோரால் முதிய வயதிலும் தவிர்க்க முடியாததாக இருப்பதும் முறையற்ற காம எண்ணங்கள் மற்றும் காம இச்சைச் செயல்கள் ஆகும். இது, வெளி அழகால் மனமானது உந்தப்பட்டு ஏற்படுவதாகும்.

பெற்றோர்கள் திருந்தி வழிகாட்டுவார்களாக!

பிறன்மனை நோக்குதல், பிற பெண்களை தீய மன விகாரத்துடன் பார்த்தல் போன்ற அதர்மமான எண்ணங்கள், சிறு பிராயத்திலேயே, கலியுகத்தில் பல நாடுகளிலும், குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடம் நிறைய தோன்றிடப் பல காரணங்கள் உண்டு.

பெற்றோர்கள் நல்ல வழிகாட்டிகளாக, தினசரிப் பூஜைகள், ஆலய தரிசனங்கள், முறையான தர்ப்பண வழிபாடுகள், வருடந்தோறும் குல தெய்வ வழிபாடு, அவ்வப்போது எல்லை தெய்வ பூஜைகள், விரதங்கள் போன்றவற்றை ஆற்றி நல்வாழ்க்கையைப் பேணாதது,

தேவாரம், திருவாசகம், திருப்புகழ், அருட்பா, திவ்யப் பிரபந்தம், புராணங்கள் போன்றவை நிறைந்த நல்ஒழுக்கம் தரும் ஆரம்ப ஆன்மீகக் கல்வி முறை நாட்டில் கைவிடப்பட்டு வருவது, மறைத் துதிகளைத் தினமும் இல்லத்தில் ஒலிக்காதது,

மன அமைதிக்கு இல்லத்திலேயே வழிவகுக்கும் இன்னிசைக் கருவிகளை, வாய்ப்பாட்டைத் தினமும் இல்லத்தில் ஒலிக்கச் செய்யாதது,

தக்க வயதில் முறையான இல்லற வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாதது,

பெண்களும், ஆண்களும், குறிப்பாக இளையவர்கள், ஆடை அணியும் முறைகளில், பாதுகாப்பான பண்டைய முறைகளைக் கைவிட்டு, ஆபாசமான, இறுக்கமான முறையில், பிறருடைய மனம் சஞ்சலப்படும் வகையில் ஆடைகளைத் தரித்தல்,

டெலிவிஷன், பத்திரிகைகளில், மக்களை நன்னெறிப்படுத்தும் நிகழ்ச்சிகள், செய்திகளை அளிக்காது, ஆபாசத்திற்கு இடமளிப்பது, அவலமான நிகழ்ச்சிகளை அளிப்பது, ஆலயங்களின் அருகே கழிப்பிடங்களை அமைத்து, புனிதமான தீர்த்தங்களை, பிரதட்சிணப் பாதைகளை மாசுபடுத்துதல் போன்றவைதாம் முறையற்ற மன சஞ்சலங்களுக்கு, தீய நெறிகளுக்குக் காரணமாகின்றன.

இல்லறமே ஒரு ஆன்மீகப் பர்ணசாலையே!

இல்லறத்தை நல்லறம் என்று போற்றக் காரணமே, இல்லறத்தில் தாம் அனைத்து விதமான நல்லொழுக்கங்களும், இயற்கையாகவே, தார்மீக ரீதியாகப் பேணப் பெறுவதுடன், முறையற்ற காமம் மற்றும் ஏனைய தீயொழுக்கங்களும் அண்டாமல் காத்து ரட்சிக்கவும், இயற்கையான முறைகளிலும் நன்கு உதவுகின்றது.

எனவே, கலியுகத்தில் இல்லற தர்மத்தைப் பேணுதலே பெரிய தவமெனப் போற்றப்படுகின்றது. ஆண், பெண் என்ற வேறுபாடு மனித நிலையில்தாம்! எனவே அனைத்துலக மனித வாழ்க்கையின் முதல் லட்சியமே இறைவழியில் நன்கு நடப்பதேயாம். இதற்கு இல்லறமே முதற்படி! துறவு நிலையானது, மிகவும் கடுமையானதாய், கடினமானதாய், கரணம் தவறினால் வருவது பாவப் பிறவி என்பதாக, பல கோடி மக்களில் ஓரிருவருக்கே அதுவும் தூய சத்குரு மூலமே புனிதமான பிரம்மச்சர்யம் நன்கு ஏற்று வரும்.

கண்டு நன்கு காணல் இறைவனையே!

இறைவனின் உருவ வழிபாடு என்பது உருவமற்ற இறைவனை, இல்லறம் மூலமாக நன்முறையில் உள்ளத்தில் நிலை நிறுத்தி உணர வைக்க உதவ வல்லதாகும். இதற்கு நறுமணப் பூக்களின் பங்கும், பாங்கும் தெய்வீக மயமானது, மனித மனமானது, அனைத்துச் செயல்களிலும், “கண்ணாலே காண்பது, மருத்துவப் பூர்வமாக, விஞ்ஞானப் பூர்வமாக அறியும்” என்பதாக, “உருவங் கண்டே, கண்டறிதல்” என்ற சாட்சி வகை மனப்பான்மைக்குக் கலியுகத்தில் ஆட்பட்டுவிட்டதால், ஆழ்ந்து சிந்தித்தறியும் பகுத்தறிவு கூடிய திடமான, வைராக்யம் நிறைந்த மனோசக்தியே, கலியுக மனித குலத்திடம் மறைந்து வருகின்றது. நறுமணப் பூக்கள் பலவும் தம் மூலிகை நறுமணத்தால் பகுத்தறிவைத் தூண்டிப் பிரகாசிக்கச் செய்யும். பல கேடுகளையும் முளையிலேயே கிள்ளி எறியும்.

இறைவனே கனிந்து வந்தருளும் கலியுகப் பாங்கு!

ஆறாம் இறைப் பகுத்தறிவு மங்கி, தீய பழக்கங்களுடன் மிருகங்கள் போல் வாழ்கின்றோர் இப்புவியில் அதிகரித்து வருகின்றனர். எனவேதான், “தெய்வம் மனுஷ ரூபேணா!” என்பதாக, இறைவனே மானுட வடிவில் வந்து, கருணையுடன் தானே ஆட்கொண்டு கருணாமூர்த்தியாக, சத்குரு பரிபாலனம் மூலமாக, இறைமையை உணர்விக்கின்ற நிலை, இறைவனாலேயே கலியுகத்தில் அளிக்கப்பட்டு வருவது நம் பாக்யமே! ஆனால் இதனை எவ்வகையில் கலியுக மனித சமுதாயம் பயன்படுத்தி வருகின்றது?

நறுமணப் பூக்களாலான பூஜைகளும், சத்குருவின் மேன்மையைக் கபாலச் சிந்தனா சக்திகள் மூலம் உணர்த்த வல்லவை! எனவே, தினமும் பூக்களால் ஒரு வேளையாவது இல்லத்தில் நன்கு கை நிறைய பூஜிக்க வேண்டும். கை ரேகைகளில் பூக்களின் ஸ்பரிசங்கள் பட வேண்டும். கை ரேகைகள் கபால நீரோட்டங்களுடன் பிணைந்தவை!

உண்மையில், சத்குருவின் இறைமார்கமே அனைத்தையும் நெறிப்படுத்தித் தரவல்லதான கலியுகத்தின் அற்புதமான மாமருந்தாகும். இவ்வாறு பூக்களின் புனிதங்களை உணர வைத்தும் சத்குரு அருள்கின்றார். எனவேதாம் கலியுகச் சத்குருமார்களில் ஒருவரான பாண்டிச்சேரி அன்னையும் பூக்கள் தரும் புனிதங்களால் சத்குருவின் அருளைப் பொழிந்து பகுத்தறிவைப் பு(ன)லர வைக்கின்றார்.

இறைநெறியில் ஈர்க்கும் பூக்கள், ஜீவசமாதி தரிசனம், விரதங்கள்!

ஆனால் சத்குருவின் தெய்வீக மாண்பையும் கலியில் பலரும் முறையாக உணர்வதில்லையே! இதற்காக, ஜீவாலயங்களில், ஜீவசமாதிகளில் வழிபட்டு உணர்ந்தறிய முயற்சிப்பதும் இல்லையே! சத்குருவை மதித்துப் போற்றும் தெய்வீகப் பண்பாடும் மிக விரைவாக மறைந்து வருவதால், சத்குருமார்கள், தற்போது கலியுகத்தில் பெரும்பாலானோர் பூமியை விட்டுப் பிற லோகங்களுக்குச் செல்லலாகின்றனர். ஆழ்ந்த நம்பிக்கையுடன் துலங்குவோர்க்குச் சத்குருவின் அருட்பரிபாலனம் என்றென்றும், எங்கும் உண்டு.

இளைய சமுதாயத்தை நல்வழியில் நடத்த பெற்றோர்களும், ஆசிரியர்களுமே முதற் பொறுப்பு!

கலியுக மனிதன் தானாகத் தனக்கு வருவித்துக் கொண்டதாக, கலியுக மனித சமுதாயத்தை மிகவும் வருத்தும் முறையற்ற ஆசைகளை, மோகத்தைத் தணிக்கவே, வாரந்தோறும், பட்சந்தோறும் ஏகாதசி, சஷ்டி விரதம், திருவோண நட்சத்திர விரதம், சத்யநாராயணப் பூஜை விரதம், குருவார (வியாழன்) விரதம் போன்றவை அமைந்து வருகின்றன. இவற்றைப் பெற்றோர்களும், ஆசிரியர்களும் நன்கு கடைபிடித்து ஆற்றி வந்தால்தான், இதன் நற்பலன்கள் பிள்ளைகளுக்கு சந்ததி, சந்ததியாக நன்கு கூடி வரும். எந்த நாட்டவராக இருந்தாலும் சரி, “விரத முறைகள்” தாம் எளிமையான வழியில் நன்னெறிகளைத் தரும்.

ஒரே ஒரு முறை, சித்தர்கள் காட்டும் வழியில் முறையாக ஏகாதசி விரதம் இருந்தால் கூட, இதன் பலாபலன்களை உடனடியாக வாழ்வில் காணலாம் என்ற அளவிற்கு, எளிதில் வரங்களைக் கலியுகத்தில் அளிப்பவையே விரத வகைப் பண்டிகைகள் ஆகும்.

மேலும், மோகங்கள் எனப்படும் அளவுக்கு மீறிய ஆசைகளை, பேராசைகளைக் களைய வல்ல மன பூஜைகளை, மனோ விரதங்களை அளித்திடவும் ஸ்ரீமோகினி விஷ்ணு வழிபாடும் துணை புரிகின்றது. இதன் ஒரு பாங்கே ஸ்ரீஐயப்ப வழிபாடாகும்.

மனசுத்திக்கே சபரிமலையானின் மாவிரத தரிசனம்!

கடுமையான விரதத்தில் மனம், உள்ளம், உடல் இச்சைகளை அடக்கி, ஒடுக்கி உத்தம ஆன்மீக நிலையைத் தந்திடவே, மிகவும் கடுமையான விரதம் மூலம் தரிசிக்க வல்லதாக ஐயப்ப அவதாரமும் தோன்றியது. இதிலும் நாட்டிலல்லாது காட்டினுள் சென்று தரிசிப்பதாகவே மலர்ந்துள்ளது.

ஆனால், 48 நாட்கள் கூடிய ஒரு மண்டல விரதத்தோடுதான் சபரி மலைக்கு எவரும் செல்ல வேண்டும். இதில் எத்தகையோர்க்கும் எவ்வித விதிவிலக்கும் கிடையாது. “கடினமான விரதம் தேவையில்லை, மன சுத்தி இருந்தால் போதும்!” என்று பலரும் வாய் வார்த்தையோடு சொல்லிக் கொள்வதோடு சரி, ஏனெனில் உண்மையான மனசுத்தி இருந்தால், இவ்வாறு வெளியில் சொல்லத் தோன்றாது! மேலும் வாய் வார்த்தைகளை விட, பக்தி, அடக்கம், பணிவு நிறைந்த விரத அம்சங்களே தனி மகத்துவம் வாய்ந்தவை!

சபரிமலை யாத்திரைக்கு ஒரு மண்டல விரதம் நிச்சயமாகத் தேவை என்பது சித்தர்களின், சத்குருமார்களின், ஆன்றோர்களின் நியதி! ஆனால் தற்போதோ, மாதந்தோறும் ஒரு வாரம், பத்து நாள் எனக் குறுகிய கால அரைகுறை விரதத்தோடு (இதெல்லாம் முறையான விரதமாகாது) சென்றுவிட்டு, “நான் 108 முறை, 300 முறை சபரிமலை சென்றேன்! நான் எவ்வளவு முறை சென்றேன் எனக் கணக்குச் சொல்வது கிடையாது!” என்று பெருமை கொள்ளும் நிலையைக் காண்கின்றோம்.

ஒருவர் சபரி மலை விரதத்தை முறையாகக் கடைபிடித்தார் எனில், அதற்குப் பிறகு புகை பிடித்தல், மது அருந்துதல், புகையிலை போடுதல் போன்ற எந்தக் கெட்ட வழக்கமும் மீண்டும் தொற்றலாகாது! இதிலிருந்தே அவரவருடைய சபரி மலை விரதப் பாங்கை நன்கு தெரிந்து கொள்ளலாம்.

தரிசனத்திற்கும் கணக்கா!

எனவே ஆழ்ந்த நம்பிக்கையுடன் சபரிமலைக்குச் சென்று ஸ்ரீஐயப்பனை வழிபடுவோர் வாழ்வில் ஒரு போதும் “இத்தனை முறை சென்றேன்!” என்று வாய் திறந்து ஒரு முறை கூறுவதை விடுத்தும், “அழைப்பதும், அரவணைப்பதும் ஸ்ரீஐயப்பன் இஷ்டம்!” என்றும் பவ்யமாகவே உரைப்பர்.

மோகத்தைக் களைவதற்கான நல்மார்கங்களுள் ஒன்றாக அமைவதே, 48 நாட்கள் கூடிய ஒரு மண்டலமான முறையான நெறிகள் கூடிய ஸ்ரீஐயப்ப விரதமாகும். சற்றுக் கடுமையானதாக இருந்தாலும் சித்தர்கள் அளிக்கின்ற வழிமுறையிலான ஸ்ரீஐயப்ப விரத முறையில், வாழ்வில் ஒரு முறையாவது ஸ்ரீஐயப்ப விரதம் பூண்டு சபரிமலை யாத்திரையை மேற்கொள்வதானது பன்மடங்கு விசேஷமான பலன்களைத் தருவதாகும். இதுவே மோகினி அவதார மூலத் தத்துவங்களுள் ஒன்றாகும்.

குறிப்பாக மோகம், பேராசை, நிராசை, தகாத ஆசைகளை பஸ்மம் செய்து, நல்வழியை அருள்வதே சித்தர்கள் அருளும் “ஸ்ரீஐயப்ப விரத” வழிபாட்டு முறை!

இயற்கையான அன்பிற்கு உரியதே இனிய அழகு!

அழகு என்பதைக் கலியுகத்தில் தவறான முறையில், “ரசிப்பது” என்று அனர்த்தமாகப் பொருள் கொள்வது மிகுந்த வேதனையைத் தருகின்றது. பால் வடியும் குழந்தை முகம், பசுமையான வயல் போன்றவற்றின் தெய்வீக அழகே சௌந்தர்யமாகும். இதில் அழகு என்பது தெய்வீக சாந்நித்யத்தை, தெய்வீகம் பொலிவதை, ஆன்ம சக்திகள் நிறைந்திருப்பதைக் குறிக்கும். எனவே, அழகு என்பது சாசுவதமான சௌர்ந்தர்ய வகை யோகத்தைச் சார்ந்ததாகும்.  இவ்வாறு, அழகு என்பதும் ஒரு வகை யோக சக்தியே!

உடலின் ஒவ்வொரு அங்கமும் பலவிதமான யோக சக்திகளைப் பூண்டுள்ளது. இவைதாம் அக்னி சக்திகள், ஜல சக்திகள், வாயு சக்திகள், மருந்து சக்திகள் எனப் பல வகைகளில் பொலிகின்றன. இதனை முறைப்படுத்தி, ஆக்கப்படுத்த பயன்படுத்தும் வழிமுறைகளே தியானம், யோகம், பூஜை முறைகள் ஆகும்.

இவை அனைத்தையும் ஒன்றாகத் திரட்டித் தரவல்லதே அருணாசலமாகிய திருஅண்ணாமலை கிரிவலம் வருவதாகும். ஒரு முறை அண்ணாமலையைக் கிரிவலம் வந்திடில் ஹோமம், யாகம், வேள்வி இயற்றிய பலாபலன்கள், விளக்குப் பூஜைப் பலன்கள், ஆலய நடைப் பிரதட்சிணம், அடிப் பிரதட்சிணம், அங்கப் பிரதட்சிணப் பலாபலன்கள், பல்வகைத் தான தர்மப் பலன்கள் போன்ற பலவும் அவரவர் பக்தி, ஆழ்ந்த நம்பிக்கை, ஆன்ம நிலைக்கேற்ப உடலில், மனதில், உள்ளத்தில் யோகப் பூர்வமாகச் செறியும்.

ஏகாதசி விரதம்

எழிலார்ந்த ஏகாதசி விரதம்

அவரவர் உடல் நிலைக்கேற்ப ஏகாதசியன்று விரதம் பூண்டு, அருணாசலத்தை வலம் வருதலால் தேவையற்ற ஆசைகள், எண்ணங்கள் அகன்று மன சுத்தி அடைய வழி பிறக்கும்.

ஒரு துளி நீர் கூட அருந்தாது – நிர்ஜல – முழுமையான விரதம்

ஒரு வேளை அல்லது இருவேளை மட்டும் உண்ணல்

சிறிது இளநீர், மோர் அல்லது பால் மட்டும் அருந்தி விரதம்

துளசி அல்லது வில்வ தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம்

-என்றவாறாக அவரவர் உடல் இயல்புக்கு ஏற்ப ஏகாதசி விரதம் இருப்பதால், தன்னிடம் உள்ள தவறான எண்ண அலைகள் வெளிக் கிளம்ப மனம் சிறிது, சிறிதாகச் சுத்தி அடைய மனமே வழி தரும். கணவன் அல்லது மனைவியைத் திருத்திடவும் ஏகாதசி விரதம் நன்கு பலனளிக்கும்.

மேலும், ஏகாதசி அன்று உங்களுக்கு மிகவும் பிடித்தமான டிபன், இனிப்பு, எண்ணெய்ப் பதார்த்தங்களை நிறைய, ஆமாம், நிறையச் செய்து இல்லத்தில் பெருமாளுக்குப் படைத்து, (செய்ய இயலாதோர் தரமாகச் செய்யும் வெளி இடத்தில் வாங்கியும்) அவற்றில் ஒன்றையும் ஒரு துளியும் கூட ருசி பார்க்காது,

(காலில் செருப்புக் கூட அணிய இயலாது இருக்கும்) பரம ஏழைகளாகப் பார்த்து பாதணிகளை வாங்கித் தானமாக அளித்திடில், முறையற்ற மோகமய ஆசைகள் தணிய மிகவும் உதவும்.

பிடிவாதம், அந்தஸ்து, வறட்டுக் கௌரவம் காரணமாக மனவேறுபாடுள்ள தம்பதியினர், பெற்றோர்கள் – பிள்ளைகள் அன்பால் இணைய திருவோண நட்சத்திர நாள் மற்றும் ஏகாதசி விரதம் உதவும்.

வாஸ்து பூஜை

ஸ்ரீவாஸ்து பூஜை மஹிமை – வாஸ்து பூஜைக்குரித்தான திருச்சி ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம்!

ஸ்ரீவாஸ்து பூஜைக்குரிய சிறப்பான பூஜைத் தலமாக, வாஸ்து சக்திகள் நன்கு பரிணமிக்கும் தலங்களுள் ஒன்றாக விளங்குவதே, திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் கீழரண் (கிழக்கு பொலீவர்ட்) சாலையில் உள்ள ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் ஆகும். வாஸ்து பூஜைகள் மஹா உற்சவமாகப் பண்டைய காலத்தில் பொலிந்த, தற்போது பலரும் அறியாத அதியற்புதக் கோயில்!

திருக்கரத்தில் கரும்பைத் தாங்கியவாறு ஸ்ரீபுவனேஸ்வரியாக அம்பாள் அவதாரம் கொண்ட போது, இறைவன் பூலோக நாதராக தரிசனம் தந்து அம்பிகைக்கு அருளிய வாஸ்து பூமிகளுள் இதுவும் அடங்கும்.

ஸ்ரீகணேச மூர்த்தி
பூலோகநாதர் திருச்சி சிவாலயம்

எனவே, ஸ்ரீபுவனேஸ்வரியே தவமிருந்து, தோன்றி வழிபட்ட அதி அற்புதத் தலமாகவும் இச்சிவாலயம் விளங்குகின்றது. ஸ்ரீவாஸ்து புருஷ தேவ மூர்த்தியின் சக்திகள் நிலம், நீர், வான்சக்திகளாக அபரிமிதமாகப் பூரித்துப் பரிமளிக்கின்ற தலங்களுள் இதுவும் ஒன்று.

ஸ்ரீபூலோக நாதரின் அவதார மகத்துவம்

ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீபூலோகநாதர் எனவும் போற்றப்படுகின்ற இறையவதார மகத்துவம் பற்றிச் சித்த புருஷர்களின் கிரந்தங்கள், வாஸ்து மஹாத்மியத் தாத்பர்யங்களாகவும் மிகவும் சிறப்பாக விளக்குகின்றன..!

ஒரு கல்ப காலத்தில்...

அண்ட சராசரத்தின் அனைத்துக் கோடானு கோடி லோகங்களும் முழுமையாக மறைகின்ற மஹாப் பிரளய வைபவத்துக்குப் பின்னர், பிரபஞ்சத்தின் தோற்றந்தனை, எல்லையற்ற பரம்பொருளின் திவ்யமயப் பிரகாச ரூபத்தை மிகச் சிறிய மானுட தேகத்தில் எவ்வாறு பக்திப் பூர்வமாக உணர்தல் இயலும் என மானுட ரூபத்திலேயே தேவி அறிய விழைந்தாள்.

இதனை அறிந்த ஈஸ்வரனும், “இதனை மானுட ரூபத்தில் பெற வேண்டுமெனில் முதலில் இதற்குரிய வராஹ யோக மாயா தத்துவத் தோற்றம் கொண்டிட வேண்டும். இதன் மூலாதாரமாகிய புவனேஸ்வரி தேவியாக வடிவம் கொண்டு, திருமாலின் திவ்யப் பிரகாச அவதாரமான ஸ்ரீவராஹ மூர்த்தியிடம் உபதேசம் பெற்று அறிந்து வருவாயாக!” என்று அறிவுரை கூறினார்.

உமையவளும் சிவபெருமானின் வாக்குக்கேற்ப சிரமேற்கொண்டுத் திருமாலின் அற்புத அவதார வடிவமாகிய ஸ்ரீவராஹ மூர்த்தியை நோக்கிப் பன்னெடுங் காலம் தவமிருந்து, பல கோடி யுகங்கள் யோகம் பூண்டு, புவனயோக மாயா தத்துவார்த்தத்தை அர்ச்ச வடிவில் துய்த்தனள். இறைலீலையாக இவ்வாறு நிகழ்ந்தால் தாமே இவ்வடிவில் அன்னையை வணங்கி ஜீவன்களும் இவ்வகை ஞானத்தைப் பெறுவர். அனைத்தும் இறைவன் நமக்கென, ஜீவன்களின் நன்மைகளுக்காக, நல்வாழ்விற்காக நிகழும் திருவிளையாடல்தாமே!

அதுவரையிலும் ஸ்ரீவராஹ மூர்த்தியாகவே பாதாள லோகங்களுள் வீற்றிருந்த பெருமாளப்பர், இதே அவதாரிகை நிலையிலேயே இந்த யோக மாயா தத்துவத்தைப் பார்வதி தேவிக்கு, ஸ்ரீஜகன்னாத மூர்த்தியாகவும், ஸ்ரீஜனார்தன மூர்த்தியாகவும் அருளிச் செய்தார். இதே தருணத்தில் தான் ஸ்ரீவாஸ்து மூர்த்தியின் அவதார மூர்த்தமும் பரம்பொருளின் அருட்பூர்வமாகவும் ஏற்பட்டது, இவ்வாறு ஸ்ரீவாஸ்து மூர்த்தியே ஸ்ரீபூமிநாதரை, ஸ்ரீஜகன்னாத மூர்த்தியாகவும், ஸ்ரீஜனார்தன மூர்த்திகளைப் பூஜித்து எட்டுத் திக்குகளிலும் விஸ்வரூப தரிசனம் பெற்ற உற்சவ தினங்களே வருடத்தின் எட்டு வாஸ்து பூஜை நாட்களாயின.

ஸ்ரீபூலோகநாதர் திருச்சி

அம்பிகைக்கு மானுடப் பெண்ணாய்ப் பூஜிக்கையில்தான், மானுடர்களுக்கு வெறும் தத்துவ உபதேசம் மட்டும் உளமார்ந்த பக்தி நிறைவைத் தந்திடுமா என்று தோன்றியது! எனவே, திருமாலின் அறிவுரைப்படி, அம்பிகை, புவனயோக மாயா தத்துவத்திற்குரிய தாண்டவங்களை, நடராஜ நடனத் தத்துவங்களின் மூலமாக உணர்வதற்காக, எங்கெல்லாம் ஸ்ரீநடராஜப் பெருமானின் திருநடனப் புலசக்திகள் மிளிர்கின்றனவோ, அங்கெல்லாம் பசு வடிவிலும், மானுட வடிவிலும் உறைந்து, கோலோச்சிய கண்ணபிரான் காவலாய் அமைந்திட, ஆங்கே யோகமயத் தவத்தைத் தொடர்ந்தனள்.

ஆனால், நடராஜப் பெருமான் தம் ஓய்விலா, ஒப்பிலா நாட்டியத்தில், கண்ணிமைக்கும் நேரமேனும் ஓரிடத்தில் நிலை கொண்டா நிற்கின்றார்? வினாடிக்கு வினாடி அவர் கோடிக் கணக்கான லோகங்களில் எத்தனையோ கோடித் தாண்டவங்களை ஆடிக் கொண்டல்லவா திகழ்கின்றார்! இதற்குள் எத்தனையோ கோடிப் பிரளயங்கள் தோன்றி, மறைந்தும் விட்டன.

இதற்கிடையே.... ஒரு பிரளயத்தின் முடிவில்....

படைப்பைத் தொடங்குவதற்காக நடராஜப் பெருமான், கிராத மூர்த்தி அம்சங்கள் பொதிந்த பரம லோக சிருஷ்டித் தாண்டவத்தை நிகழ்த்துவதற்காக ஆயத்த யோக நடனம் பூண்டிருக்க...

தம் யோக பலத்தால் அப்போது ஆங்கே வந்திட்ட தேவியும், யோக மாயை வடிவம் கொண்டு இருந்தமையால், எந்த ஒரு தூல தேகத்தைக் கொண்டு சிருஷ்டித் தாண்டவக் கோல இறைவனைத் தரிசிப்பது என்று திகைத்து, நடராஜப் பெருமானின் திருப்பாதங்களைச் சரண் அடைந்தனள்.

அம்பிகை பெற்ற நடராஜ தரிசனம்

பல கோடி யுகங்களாக வராக யோக தேவ மூர்த்தி நிலைகளைப் பயின்றதன் காரணமாக, அம்பிகையிடம் எழுந்த புவன யோக ஸ்பரிசம் ஸ்ரீநடராஜப் பெருமானின் திருவடிகளில் செறிந்திட... ஆங்கே... அட்சய குண்டலினி சக்திகள் நிறைந்த பிந்து கமல நாட்டியத்தைத் தொடங்கினார் நடராஜப் பெம்மான்! இதிலிருந்து எத்தனை எத்தனையோ தாவரங்களும், நீரினங்களும், உயிர் வகைகளும், விலங்கினங்களும், புழு, பூச்சிகளும், வண்டினங்களும், இன்னும் ஏனைய உயிரினங்களும் தோன்றலாயின. இவை அனைத்தையும் தாங்குதற்கு ஒரு அண்டப் பொருள் தேவை அல்லவா? புவன சக்தியில் இருந்து திரட்டி பூகோளமாக, பூலோகமாக அளித்தார். இவ்வாறும் பூவுலகம் பிறந்த அனுபூதிகள் உண்டு.

பூகோள சிருஷ்டியின் மூலம் பிரபஞ்ச சிருஷ்டியின் தத்துவம் அனைத்தையும் கண்ணிமைக்கும் பொழுதில் ஞானப் பூர்வமாக உணர்ந்து கொண்ட அம்பிகையானவள், “சர்வேஸ்வரா! தங்களுடைய திருவருளால் அடியேனுடைய யோகமாய் புலத்துவம் உற்பவித்தமையால் இந்த பூலோகத்திற்கு அதிபதியாக, பூமிக்கு ஈஸ்வரியாக தங்களுடைய இந்த அவதாரத்திற்குரிய அனுபூதிகளை சகல கோடி ஜீவன்களுக்கும் உணர்விக்கும் வகையில் அடியேன் அருட்பணியாற்றத் தாங்கள்தான் ஆவன செய்து அருள் புரிய வேண்டும்” என்று வேண்டினாள். சிவபெருமானும் புவன யோக மாயா வடிவிலிருந்து ஆங்கே ஸ்ரீபுவனேஸ்வரியைத் தோற்றுவித்தார். இவ்வாறாகவே, சகல கோடி பூமிகளுக்கும் மாதாவாக ஸ்ரீபுவனேஸ்வரி தோன்றினாள்.

ஸ்ரீபூலோகநாதர் சிவாலயம் திருச்சி

புவன லோகத்தைப் படைத்து அதனை இரட்சிப்பதற்காகத் தனக்கு ஒரு புவன வடிவினையும் அருளிய ஸ்ரீநடராஜப் பெருமானை, அம்பிகை வீழ்ந்து வணங்கிடவே, வணங்கிய திருஒளியில் இருந்து சுயம்பிரகாசமாய் ஒரு லிங்க மூர்த்தி எழுந்தருளினார். அவர்தாம் ஸ்ரீபூலோகநாதர் ஆவார். இதன் பிறகே புவனேஸ்வரித் தாயானவள் பூலோக நாதரின் இடபாகம் பெறுதல் வேண்டி, ஆங்கே மீண்டும் புவன யோகம் பூண்டு, ஸ்ரீஜகதாம்பிகையாக இந்த பூலோக நாதர் ஆலயத்திலேயே தெய்வ நாயகியாக அமர்ந்தனள். இங்குதாம் ஸ்ரீபூலோக நாதராக ஆதிசிவன் அருள் பொழிகின்றார். புவன வடிவம் கொண்டு, புவன யோக சக்தி நிறைந்தவளாய், ஸ்ரீஜகதாம்பிகை இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கின்றாள். இத்திருத்தலத்தில் குருந்த மரம், வில்வ மரம், வன்னி மரம், அத்தி மரம், மகிழ மரம் ஆகிய ஐந்து தெய்வீக மரங்களும் தல விருட்சங்களாக அமைந்துள்ளன. இவற்றை மீண்டும் தெய்வீக ரீதியாகப் பூஜை புனஸ்காரங்களுடன் போஷித்திட ஆவன செய்வதும் மகத்தான ஸ்ரீவாஸ்து பூஜைகளில் ஒன்றாகும்.

ஸ்ரீஜகதாம்பிகை ஸ்ரீபூலோகநாதர்
சிவாலயம் திருச்சி

இப்புனிதமான ஐந்து விருட்சங்களையும் ஒரு சேர ஓரிடத்தில், அதுவும் சிவாலயத்தில் தரிசித்தல், என்பதே வாழ்க்கையில் பெறுதற்கரிய பாக்கியம் அன்றோ! சிவரட்சக சக்திகளும் நிறைந்ததாய், ஸ்ரீசாகம்பரி தேவியின் அருட்கடாட்சமும் சூக்குமமாய்ப் பொலியும் தலமும் இதுவே!

எனவே, புவன சக்திகள், நிறைந்த இச்சிவத் தலத்தில் வருடத்தில் எட்டு முறையே வருகின்ற வாஸ்து நாட்களை அஷ்டபரிபாலன உற்சவத் திருநாட்களாகச் சிறப்பாகக் கொண்டாடுதல் வேண்டும்.

வருடத்தின் எட்டு வாஸ்து தினங்களின்போது இத்திருத்தலத்தில் ஸ்ரீபூலோக நாதருக்கு உரித்தான குறித்த அபிஷேக ஆராதனைகளையும், தான தர்மங்களையும் முறையாக நிறைவேற்றி வந்தால், நிலம், வீடு, கடை, பாக்டரி, தொழிற்சாலைகளில் பொங்கிக் கிடக்கும் சகலவிதமான, அனைத்து விதமான நில, நீர், தோஷங்களுக்கும் நல்ல நிவர்த்திகள் கிட்டும்.

செவலூர் ஸ்ரீஆரணவல்லி சமேத ஸ்ரீபூமிநாதர் ஆலயம்

புதுக்கோட்டை – பொன்னமராவதி மார்கத்தில் குழிபிறை வழியாகச் செல்லும் மார்கத்தில் செவலூர் உள்ளது. ஒரு யுகத்தில் கோடானுகோடி தேவர்களால் மிகவும் போற்றிப் பாதுகாக்கப்பட்ட, பூஜிக்கப்பட்ட திருத்தலம். இன்றைக்கு பக்தர்களின் அசிரத்தையால் கவனிப்பாரற்றுக் கிடக்கின்றது என்பது வேதனைக்கு உரியதாகும்.

நம் கண்களுக்குத்தான் இடிபாடுகள் நிறைந்த ஆலயமாக இத்திருக்கோயில் தென்படுகின்றதே தவிர, தேவாதி தேவர்கள் சூட்சுமமாக இன்றைக்கும் தங்களுடைய ஆறு வேளை பிருத்விப் பூஜைகளைத் தவறாமல் இங்கு தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இவையெல்லாம் மனிதனின் பகுத்தறிவிற்கு அப்பாற்பட்ட தேவலோக விந்தைகளாகும்.

கோடி நீரோட்டங்கள் கூடிடும் செவலூர்த் தீர்த்தம்!

செவலூர் சிவாலயம் அருகே உள்ள மஹாபிருத்வித் தீர்த்தம் மகத்தான தீர்த்தம். பலரும் இதன் மகத்துவத்தை உணராமையால், தற்போது ஒரு சாதாரணக் குளம் போல்தான் புறக் கண்களுக்குத் தென்படுகின்றது. பூலோக நீரோட்டங்கள் பலவுமே இத்தீர்த்தத்தோடு பூமியடிச் சம்பந்தப்பட்டதாகும்.

கோடையில் வறண்டிருந்தாலும், நீர் குறைந்திருந்தாலும் கூட சூட்சுமமாக எப்போதும் நீர் வளம் நிறைந்திருக்கும் தீர்த்தம். சுவாமியோ ஸ்ரீபூமிநாதராக விளங்குவதால், உலகத்தில் உள்ள அனைத்து பூமி நீரோட்டங்களும் இந்த ஆலயத்தோடு, இத்தீர்த்தத்தோடு தொடர்பு கொண்டவையாகும்.

செவலூர் சிவத்தலத் திருக்குளத் தீர்த்தத்தை சித்தர்கள் பிருத்வி தீர்த்தம் என்றே அழைக்கின்றார்கள். மற்ற ஆலய தீர்த்தங்களில் எல்லாம் பூமியின் மேலே ஓடுகின்ற ஆயிரமாயிரம் புண்ணிய நதிகளுடைய தீர்த்தம் கலந்திருக்கும். ஆனால், செவலூர் தீர்த்தத்தின் மகிமை என்னவென்றால் பூமியின் அடியில் ஓடுகின்ற புண்ணிய நீரோட்டங்களின், ஆறுகளின் தீர்த்தங்களையெல்லாம் கொண்டதான மகத்தான தீர்த்தமாக விளங்குகின்றது.

ஸ்ரீநடராஜப் பெருமான்
செவலூர்

இன்றைக்குக் கலங்கலான, சாதாரண தீர்த்தம் போல் இது தோன்றினாலும், சூட்சுமத் தேவகுன வியாபகத்தில், மிகவும் அதியற்புத சக்தி நிறைந்த தீர்த்தமாக விளங்குவதை பரிபூரணமாக உணர்ந்திடலாம். கோடையில் வெளிப் பார்வைக்குத் தீர்த்தம் வறண்டிருப்பது போல் தோன்றிடினும் கண்களுக்குப் புலனாகா வகையில் கனிந்த பலாதிபலா தீர்த்தச் செறிவுகளைக் கொண்டதாகும்.

பித்ருக்கள், பித்ரு பத்னிகள் வழிபடும் தீர்த்தம்

பூகம்பத்தில் உயிர் துறந்தோர்க்கான தர்ப்பணங்களை நிகழ்த்துவதற்கான மிகச் சிறந்த தீர்த்தம் இது. பூகம்பம் ஏற்படுவதற்கு விஞ்ஞானப் பூர்வமாகச் சொல்லப்படுகின்ற காரணங்களுள் ஒன்று பூமியின் அடியில் உள்ள பாறைகளின் தொடர்ச்சியில் ஏற்படும் விரிவாகும். பூமியடி விரிசல்கள், பிளவுகள் ஏற்படா வண்ணம் காக்கும் வாஸ்துப் புண்ணிய பூமிகளுள் செவலூரும் ஒன்றாகும். செவலப் பதிகம் என்ற பூமியைக் காக்கும் துதிகள் தக்க சத்குரு மூலமாக வருங்காலத்தில் அருளப் பெறும்.

எந்த நாட்டிலும் பூகம்பத்தில் இறந்தோர்க்கான நற்கதி அளிப்பதற்கான மகத்தான தர்ப்பண சக்தியை இத்தலமும், இத்திருக்குளமும் கொண்டிருப்பதால் இங்கு செவ்வாயும், அமாவாசையும், கூடுகின்ற அபூர்வமான நாள் மற்றும் ஸ்ரீவாஸ்து பகவானுக்கு உரித்தான செவ்வாய்க் கிழமைகளிலும், வருடத்துக்கு எட்டு முறை வருகின்ற வாஸ்து நாட்களிலும், அமாவாசை திதிகளிலும், மூதாதையர்களுடைய திதி நாட்களிலும் இங்குத் தர்ப்பணம் அளிப்பது மிகச் சிறப்புடையது.

பெரும்பாலும், பூலோகத்திற்குத் தனித்து வரும் பித்ருக்கள், இங்குள்ள பிருத்வி தீர்த்தத்திற்காக முதல் முதலில் வழிபாட்டிற்கு வரும்போது, பித்ரு பத்னிகளுடன் சேர்ந்து வருகின்றனர். இங்குள்ள திருக்குள தீர்த்தத்தில், “நீர் இல்லையே, கலங்கி உள்ளதே!” என எண்ணிக் கவலைப்படாதீர்கள், நீங்கள் வரும் போதே குடத்திலாவது, பாத்திரத்திலாவது நீரைச் சுமந்து வந்து இங்குத் தர்ப்பணம் அளித்தலே இது மகத்தான பலன்களைத் தரும் எனில், இத்தலத்தில் ஸ்ரீபூமீஸ்வரரைப் பூஜிப்பதெனில் அதன் மகத்துவத்தை எடுத்துரைக்கலாகுமோ!

வன்னி மரம் ஸ்ரீபூலோகநாதர்
ஆலயம் திருச்சி

செவலூரில் பூமாதேவியின் பெரும் தவம்

வருங்காலத்தில் பஞ்சமா பாதகங்களை நிகழ்த்தி நிலத்தை அசுத்தப்படுத்துதல், பெரிய கட்டிடங்களையும், அடுக்கு மாடிக் குடியிருப்புகளையும் கட்ட வேண்டி பூமியைத் தோண்டிக் கொண்டே போதல் போன்று மனிதகுலம் பல இம்சைகளைச் செய்து பலத்த பழி பாவங்களுக்கு ஆளாகும். இதற்காகவே பூமியின் பிருத்வி சக்திகளை பலப்படுத்திடவே, கிருத யுகத்திலேயே பூமா தேவி கடும் தவம் மேற்கொண்டனள்.

ஆனால் சர்வேஸ்வரனோ, “பூமா தேவி! வருகின்ற யுகங்களில், குறிப்பாக கலியுகத்தில், ஜீவன்களின் கர்ம பாரத்தைச் சுமப்பதற்கு உன்னுடைய இந்த தவ சக்தி போதுமானதாகாது! உன்னுடைய பக்தர்கள்தாம் கூடுதல் பூஜைகளைச் செய்து தக்க தெய்வீக சக்தியைத் தாம் வாழும் பூமிக்குப் பெற்றளிக்க வேண்டும். இதற்காக நீ முதலில் வாமன ஸ்ரீநாராயண மூர்த்தியின் அருளைப் பெற்றிடுக!” என்றுரைத்து அருளினார்.

நல்ல பக்தர்களைப் பெறுவதுதானே இக்காலத்தில் மிக மிக சிரமமான காரியம்., எனவே, முதலில் இதற்காக அதாவது தக்க முறையில் பூமி பூஜைகளை ஆற்றிடத் தக்க முறையில் பக்தர்களைப் பெறுவதற்காக, ஸ்ரீபூமா தேவியே பூலோகம் எங்கும் உள்ள சுயம்பு மூர்த்திகளை வலம் வந்து தம்முடைய அடிப்பிரதட்சிண வலத்தைத் தொடர்ந்தனள். எங்கெல்லாம் பூமா தேவி மானுட ரூபத்திலேயே சென்று அடிப்பிரதட்சிணமாக வழிபட்டாளோ, அங்கு ஸ்ரீபூமிநாதர், ஸ்ரீபூமிநாதேஸ்வரர், ஸ்ரீபூலோக நாதர், ஸ்ரீசுந்தரேஸ்வரர், ஸ்ரீஐகந்நாதர், ஸ்ரீஜனார்த்தனர் போன்ற திருப்பெயர்களுடன் இறைவடிவுகள் தோன்றினர்.

இத்தலங்களில் பொறுமையின் சிகரமாக ஸ்ரீபூமாதேவியே அமர்ந்து பூஜித்தமையால், இவ்விடத்தில் பல அற்புதத் தெய்வீக நீரோட்டங்கள் வளம் கொண்டன. இவையே பல்வேறு தீர்த்தங்களாகவும் காலப்போக்கில் மாறின. இவ்வாறு பாரதமெங்கும் பூமாதேவி வழிபட்ட தலங்கள் நிறையவே உண்டு. பிற நாடுகளிலும் இத்தகைய ப்ருத்வி சக்திகள் நிறைந்த திருத்தலங்கள் சிலவும் உண்டு. இவற்றைத் தக்க சற்குரு மூலமாகத்தான் உணர்ந்திட வேண்டும். இவற்றுள் மஹாபிருத்வித் தலமாக அமைவதே புதுக்கோட்டை – பொன்னமராவதிக்கு இடையில் உள்ள செவலூர் திருத்தலம்.

இங்குதான் பூமித்தாய், தமக்குரிய பிருத்வி சக்திகளை வேத, ஞான, யோக, தியான, வழிபாட்டு மார்கமாகப் போஷிக்க வல்ல சிறந்த பக்தர்களையும் தன்னுடைய அருந்தவத்தால் அடைந்தனள். இவர்கள்தாம் வாஸ்து பூமண்டல மகான்களாகவும், மகரிஷிகளாகவும், தேவாதி தேவர்களாகவும் அண்ட சராசரங்களிலும் நிறைந்திருந்து இன்றும் இங்கு வந்து வாஸ்து சக்தி நாட்களில் சூட்சும வழிபாடுகளை மேற்கொள்கின்றனர்.

ஆலயச் சொத்துக்களில் சுகம் காண்பது கொடிய வினையே!

ஆண்டவனை ஏமாற்றுதல் என்பது அறிவின்மையால் வருவது! எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளை நாமறியும் வண்ணம் இறைவனே தன்னை சுயம்பு வடிவிற்குள் அடக்கியருளி உறையும் ஆலயச் சொத்துக்களையா ஏமாற்றி அபகரிப்பது? சந்ததிகளை வழி வழியாகப் பாதிக்கும் இத்தகைய கொடிய கர்ம வினைகளையா வெறுமனே ஏமாற்றுதல் வகையில் சேர்ப்பது? மிகக் கொடிய பாவமிது.

வில்வ மரம் ஸ்ரீபூலோகநாதர்
ஆலயம் திருச்சி

ஆனால் கடவுள் நேரடியாகத் தண்டிக்க மாட்டார் என எண்ணியே, இறைவனையே ஏமாற்றுவதாகக் கருதி, குறைந்த வாடகை, குறைந்த குத்தகைப் படி அளந்தும், ஒன்றுமே அளக்காமலும் இருந்து ஆலயச் சொத்துக்களை அதர்மமான முறையில் அனுபவிப்போர் கலியுலகில் நிறையவே உண்டு.

கோயில் நிலங்கள், வீடுகளை, ஆக்கிரமித்துக் கொண்டோ, மிகக் குறைந்த வாடகையைக் கொடுத்தோ ஆண்டவனருளும் ஆலயக் கணக்கை ஏமாற்றி வருபவர்கள் பரிகாரம் பெறுதல் மிக மிகக் கடினம். எனினும் தம் கொடிய வினைகளுக்காக உளமாற வருந்தி, வட்டியும், முதலுமாய் செலுத்தித் திருந்தி வாழ இதயப்பூர்வமாக விழைவோருக்கென ஓரளவு பிராயச் சித்தத்தைப் பெற வேண்டிய அற்புதமான பரிகாரத் தலங்களுள் செவலூரும் ஒன்றாகும்.

ஆனால் இதுவரையில் தான் தெய்வத்தை ஏமாற்றிய தொகைக்கு, கூடுதல் வட்டி சேர்த்து இத்திருக்கோயிலில் இறைப் பணிகளாகவும், தான தர்மங்களாகவும் தொடர்ந்து செய்து வந்தால் தான் இவற்றிற்குப் பிராயசித்தத்தைப் பெற முடியும்.

சூழ்நிலைச் சந்தர்ப்பங்களால் குறைந்த தொகையைச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும், எவ்வளவு உண்மையான வாடகை, விளைச்சலை ஆலயங்களுக்கு அளிக்க வேண்டுமோ, அந்த வித்தியாசத் தொகையை அந்தந்தக் கோயிலின் உண்டியலில் செலுத்தியோ அல்லது செவலூர் திருத்தலத்தில் ஆலயத் திருப்பணிகளை, தக்க தான தர்மங்களை நிகழ்த்தியோ தக்க பரிகாரங்களைப் பெறுதல் வேண்டும்.

வாஸ்து நாட்களிலும், செவ்வாய்க் கிழமைகளிலும் இங்கு வாஸ்து ஹோமம் நிகழ்த்தி, கிழங்கு வகை உணவுப் பண்டங்களைத் தானமாக அளித்து வருதலால், ஸ்திரமில்லாமல் இருக்கும் வீடு, கடை நிலச் சொத்துக்கள் நல்ல ஸ்திரமான சொத்துக்களாக மாறி நிலைக்க உதவும்.

எண் சக்திகள்

“எண்” சக்தியே ஏகாந்த சக்தி – எண்ணிற்கு வளம் தரும் எண்ணப்ப தேவதா மூர்த்திகள்!

எண்கள் மனித வாழ்க்கையோடு ஆன்மீகமாக மிகவும் பிணைப்புடையவை என நாம் நன்கறிவோம். படிக்காதவர் கூட பணத்தை எண்ணத் தெரிந்து கொண்டாக வேண்டும். கல்வி அறிவு இல்லாவிடினும் எண் அறிவு தேவையாகின்றது தானே!

கலியுக விஞ்ஞானத்தில், “முன்னேற்றம்” என்ற பெயரில், கம்ப்யூட்டர், மனித சமுதாய துறை வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் புகுந்துள்ளது அல்லவா! கம்ப்யூட்டர் கண்டுபிடிப்புகள் அனைத்தும் கணிதத்துடன் பின்னிப் பிணைந்தவை தாமே! எண் புழங்காத அலுவலகம் ஏதேனும் உலகில் உண்டா என்ன?

கடிகாரம், பிறந்த தேதி, பணக்கணக்கு, கிலோ, லிட்டர் அளவைகள், விலை, வண்டி நம்பர், Credit Card & ATM card என எண் பயன்படாத வாழ்க்கைத் துறையை நிலையை எண்ணிப் பார்க்கத்தான் முடியுமா? இவ்வாறு “எண் சாண் உடலுக்கு இரு கண்கள் முக்கியமானவை” போல, வாழ்க்கைக்கு எண்ணும் எழுத்தும் கண்களாகின்றன என்பதும் சத்தியமானதே என நாம் நாமறிவோம்.

மகிழ மரம் ஸ்ரீபூலோகநாதர்
ஆலயம் திருச்சி

எண் சக்திகளுக்குப் பண்டைய யுகங்களில் பாரதப் புனித பூமியில்தாம்,  வடிவம் கொடுத்து 1, 2, 3 என எண் வடிவங்களைத் தந்தார்கள். ஒவ்வொரு எண்ணுக்கும் தெய்வீக சக்திகளை அளிக்கும் தேவதா மூர்த்திகள் உண்டு. இதை ஒட்டியே நவகிரக மூர்த்தியின் பல அருளம்சங்கள் அமைந்துள்ளன. பலரும் எண்ணுவது போல எண் இலக்கணம் வெளிநாட்டிலிருந்து வந்தது அல்ல. பஞ்சாங்கத்தில் இல்லாத எண் இலக்கணம் உலகில் வேறு எதில் தான் இருக்கப் போகின்றது? பல்லாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது நம் பஞ்சாங்கக் கணித முறை, எனில் புனிதமான பாரத நாடு கணிதத்தின் தாய்ப் பீடம்! கணிதம், எண் சக்திகளை உணர்த்தும் ஒரு சாதனமே!

உலக மொழிகளின் பெற்றோர்

பூவுலகிலேயே மிகவும் பழமையான தமிழ் மொழி தென்னாடுடைய சிவ பெருமானுக்கு உரியதாக, அகத்திய மாமுனிக்குச் சிவனாரே இலக்கணம் ஓதுவித்து, தமிழையும், தேவ மொழியையும், உலகின் மொழிப் பெற்றோராகக் கொண்டதே புனித பாரதம்.

தண்டமிழே உலக மொழிகளுக்கும் அன்னை! தேவமொழியே அனைத்துலக மொழிகளுக்கும் தந்தை! தமிழில் உள்ள எண் சக்திகளைச் சித்தர்களே முழுமையாக உணர்த்த வல்லவர்கள்! எண் சக்தி என்பது அட்சர சக்தியாகிய எழுத்துச் சக்தியில் இருந்து தோன்றியதே! அட்சர சக்திகளின் பொருட்பாங்கே எண் ஆகும். எனவே வாழ்க்கையின் அருட்பாங்கே அட்சரம். அருள் நிறைப் பொருட்பாங்கே எண் ஆகும்.

எண்ணுக்கும் வடிவுகள் உண்டு!

பாரதப் புண்ணிய பூமியிலும் அறுபதுக்கும் மேற்பட்ட நடைமுறை மொழிகள் உண்டு. இவை தவிர எண்ணற்றவையும் உண்டு. இவற்றில் பெரும்பாலானவை தத்தம் மொழிக்குரிய எண் வடிவங்களையும் கொண்டுள்ளன. உதாரணமாக, ஹிந்தியில் 1, 2, 3 என்பதற்கான ஹிந்தி மொழியிலான எண் வடிவங்கள் உண்டு.

தமிழ்மொழிக்கு உரித்தான எண் வடிவ முறை – ௧ ௨ ௩ ௪ – என்ற வகையில் ஐம்தாண்டுகளுக்கு முன் வரை வழக்கில் இருந்து, தற்போது மறைந்து விட்டது. எண்ணின் ஆன்ம சக்திகளை உணர இது புதுப்பிக்கப்படுதலும் நன்றே! நாம் ஆங்கில முறை என எண்ணும் 1, 2, 3 வகை எண் வடிவுகளும் பாரத மொழி எண் அமைப்பின் திரிபுகளே. இங்கிருந்து பல்லாண்டுகளுக்கு முன் வெளிநாடுகளுக்குச் சென்ற எண் இலக்கணமே இறக்குமதிப் பொருளாக நமக்கே வந்துள்ளது! எண் வடிவு, எண் இலக்கணம், எண் சக்திகளைப் பற்றி இத்தொடரில் சித்தர்கள் அளிக்கின்ற அதியற்புதமான ஆன்மீக விளக்கங்களைக் காண்போமாக!

அத்தி மரம் ஸ்ரீபூலோகநாதர்
ஆலயம் திருச்சி

பூஜ்யமே முதலும், முடிவும்!

“0” எனும் பூஜ்யம்தான் எழுத்தையும், எண்ணையும் இணைப்பது ஆகும். இதனால்தான் GOD என்பதில் “0” பூஜ்யம் மையம் கொண்டது. அதாவது எங்கும் பரந்திருக்கும் பூஜ்யப் பொருளாகிய பரபிரம்மத்திலிருந்து தான் அனைத்தும் பிறந்தன என்பதே “0”ன் ஆதிமூல இலக்கணமாகும். எனவே பூஜ்யமே அனைத்தையும், குறிப்பாக அனைத்து எண்களையும், எழுத்தையும், எண்ணையும் இணைப்பதாகும். “0”லிருந்துதான் அனைத்தும் பிறந்தன.

பிறத்தல் என்றால் ஆன்மீகத்தில் “பிரிவு” என்ற பொருள் உண்டு. “பிறப்பில்” தானே தாயிலிருந்து சேய் பிரிகின்றது. இதே போல சிருஷ்டியில்தானே இறைப் பொருளில் ஐக்யமாகியவை, வெளிவந்து பிரிவு எனும் சிருஷ்டித் தோற்றமாகிய “ஜீவன்களின் பிறப்புகள்” ஏற்படுகின்றன.

பிழை பெருகி உள்ள தசாம்ச முறை!

இறப்பு என்பது இரு பிறவிகளுக்கு இடையே உள்ள இடைவெளி அல்லது இணைப்புப் புள்ளி என்று பெயர். இந்தப் புள்ளியைத் தான் தற்காலத்தில் தசாம்சம் (decimal features) என கணிதத்தில் பொருள்படுகின்றது. ஆனால் தசாம்ச முறைகள் கணிதத்தில் தவறான முறைகளில், எண்களின் சக்திகள் “அடங்கும்படி” அடக்கி வைக்கப்பட்டுள்ளது. இது சரியல்ல! வருங்காலத்தில் கணித தசாம்ச முறைகள் மாறுபட்டு, எண் சக்திகள் நன்கு “விடுபடும்படிப்” புதுக் கணக்கு முறை நடைமுறைக்கு வரும்.

பொதுவாக புள்ளி என்பது சந்ததி விருத்தியைக் குறிக்கும். இதை ஒட்டியே செட்டிநாட்டுப் பகுதிகளில் குடும்ப அம்சங்களைப் புள்ளி என்றே குறிக்கின்றார்கள். “புள்ளி மாறாக் கோயிலூர்” என்பதாக, “புள்ளிக் கணித சக்திகள்” நிறைந்த தலங்களுள் ஒன்றே காரைக்குடி அருகே உள்ள “கோயிலூர்” ஆகும்.

எனவே சந்ததிகளைத் தவிர, வேறு எதற்கும் புள்ளியைப் பயன்படுத்தக் கூடாது. வாக்கியத்தின் முடிவில் வரும் முற்றுப் புள்ளி வேறு. ஆதித் தமிழில் வாக்கிய முடிவில் இப்புள்ளி கிடையாது. இரு கோடுகளே இருந்தன. ஆலயத் தமிழ்க் கல்வெட்டுக்கள் இதனைப் புலப்படுத்தும். ஆனால் இந்த இரு கோட்டு வாக்கிய முடிவு முறையை தேவமொழி போன்ற பிற மொழிகள் தத்தெடுத்து உள்ளன.

மகான்கள் பூமியில் மனிதப் பிறப்பெடுத்து வந்திருப்பது தங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ள நிச்சயமாகக் கிடையாது. மனிதர்கள் மட்டும் அல்லாது அனைத்து ஜீவன்களின் வாழ்க்கையையும் கடைத்தேற்றவே. இந்த தியாக சீலம் நம் சற்குரு போன்ற ஒவ்வொரு மகானின் வாழ்க்கை நிகழ்ச்சிகளிலும் பிரதிபலிப்பதை நாம் கண்டு இரசிக்கலாம். திருஅண்ணாமலை கார்த்திகை தீப அன்னதான வைபவத்தின்போது நடைபெறும் அன்னதானத்திற்கான மளிகைப் பொருட்களை விவரிக்கும் அட்டவணையில் கூட இந்த புள்ளிகள் அமையாத அதிசயத்தை அடியார்கள் கண்டு பயன்பெறும் பொருட்டு இங்கு இணைத்துள்ளோம்.

⅛, ¼, ½, ¾ முறை மீண்டும் கணிதத்தில் மலர்வதாக!

தற்காலக் கணிதத்தில் தசமப்புள்ளி என்பதை, 3.25, 3.5, 3.75 என்று தவறாகப் புள்ளியல் முறைகளைப் புகுத்தி, மகத்தானதாகப் பொங்கி வரும் சக்திகளைத் தடுத்துத் தணித்துப் பெருந் தவறாகப் பயன்படுத்துகின்றார்கள். இந்த தசாம்சக் கணித முறை எளிமையானது போல் தோன்றினாலும், எவ்வாறு வாகனங்கள் கலியுக வாழ்வில் புகுந்து, “காலாற நடக்கும்” முறையைத் தவறாக மாற்றிப் பல ஆரோக்யக் கேடுகளைத் தந்துள்ளதோ, இதே போல கணிதத்தின் தசாம்ச முறையும் எண் சக்திகளைத் தடுத்துள்ளது. இதனை விடுவித்தாக வேண்டும். இல்லையெனில் எண் தேவதைகளின் சாபங்களுக்கு ஆளாக நேரிடும்.

இதற்கு என் செய்ய வேண்டும்? 0.25, 0.5 என்று பூஜ்ய சக்திகளைத் தவறாகப் பயன்படுத்தாது, எண்ணின் சக்திகள் பொங்கிப் பொலியுமாறு எண் பயன் அமைந்திட வேண்டும். இதற்காகவே நம்முடைய பண்டைய பாரதக் கணித முறையில், 1/16 வீசம், ⅛ அரைக்கால், ¼ கால், ½ அரை, ¾ முக்கால் என்றே எண்ணை வகுத்து, வடிவளித்து எண்ணின் வலிமையை அதிகமாக்கினார்கள். இம்முறையில் கணக்குகளைச் செய்தால் புத்தி வலுப்பெறும். நினைவாற்றலும் பெருகும், வாழ்வோடும் எண் சக்திகள் ஒட்டியும் வரும்.

வாய்ப்பாட்டில் வளரும் எண் சக்திகள்!

இதற்காகவே அக்காலத்தில் பிள்ளைகளை ஒன்று முதல் 19 எண் வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்யச் சொல்வார்கள். இது இறுதி வரை வாழ்க்கையில் எப்போதும், பல துறைகளிலும் உதவி வரும். தாய் மொழியில் கணித வடிவுகள் இருந்தால்தான் மொழியும், கணித எண் சக்திகளும், புத்தித் திறனும் வளர்ச்சி பெறும். இதற்காக மொழி வெறியோ, பிற மொழி மீது வெறுப்போ கொள்தல் கூடாது. அனைத்து உலக மொழிகளும் கலைவாணியின் அருட்பொலிவே! தமிழும், தேவமொழியுமே அனைத்துலக மொழிகளின் தாயும், தந்தையுமாம்!

ஒவ்வொரு மொழியிலும் உள்ள எண்ணும், எழுத்தும் தெய்வீக சக்திகளுடன் பொலிபவை. தெய்வீக சக்திகளால் வளர்ச்சி பெறுபவை. பிற ஜீவன்களுக்கும் ஆன்மீக ரீதியான வளர்ச்சிகளைப் பெற்றுத் தருபவை. ஆனால் தற்போதைய எண் கணித முறையில் தேவையற்ற வகையில் குழப்பமான “முன்னேற்றங்கள்” என்று சொல்லப்படுவதான தவறான விரிவுகளே இருக்கின்றன. கணித ஆராய்ச்சி என்பது எண் சக்திகளை மக்களுக்கு மென்மேலும் பெற்றுத் தருவதாகவே இருக்க வேண்டும்.

கணிதத்தில் எண் ஆராய்ச்சியின் விளைவுகள் பாமர மக்களுக்கும், சமுதாயத்திற்கும் பயன்படும் வகையில் இருக்க வேண்டும். ஆராய்ச்சியாளர்களுக்கும், உயர் கல்வியாளர்களுக்கும் மட்டுமே புரியும் கணித ஆராய்ச்சிகளால், அணு விஞ்ஞானம் போல், மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது. இதனால் எண் சக்திகளும் விரிவாகாது.

கணிதம் வாழ்வோடு கனியட்டும்!

தற்போதைய உலக சமுதாயத்தில் புகழ் பெற்றும், வாழ்வில் அனைத்துத் துறைகளிலும் புகுந்தும் வரும் கம்ப்யூட்டர் துறையும், 0, 1 என்ற எண்களுக்குள் அனைத்தையும் முடித்து விடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இது எண்களின் சக்திகளைப் பயன்படுத்தும் வகையைக் குறிப்பதாகும்.

மனம், உள்ளம், உடல் அவயங்களோடு எண் சக்திகள் பிணைதல் வேண்டும். ஆனால், கால்குலேட்டரில் உள்ளது போல, கண்ணால் பார்த்து கணக்குப் போடுவதாகத் தற்போதையக் கணித முறை அமைந்து இருப்பதும், எண்களின் சக்தியை மிகவும் தணித்தும் நம்மை விட்டு வெளி சாதனத்தை நம்புவதாக வாழ்க்கையில் இருந்து பிரிந்தும் விடுகின்றது.

ஆனால், முந்தைய காலத்தில், ஐந்து விரல்கள், விரல் கணுக்களுக்குள் எண்களை அன்புடன் செறிய வைத்து கூட்டல், கழித்தல், வகுத்தல் அனைத்தையும் கை விரல்களை மடித்தல், கணுக்களுக்குள்  எண்ணுதல் என்றவாறு கண்களை மூடியபடியே கூட கணக்குப் போடலாம் என்ற வகையில் அமைந்தது. இயற்கையான மரச் சாதனங்கள், மரப் பென்சில்களும் பயனாயின. இதனால் காணாமல் கூறும் நினைவுத் திறன் பெருகி, அஷ்டாவதானிகள், சதாவதானிகள் என்பதாக ஒரே சமயத்தில் எட்டு, பத்து காரியங்களைக் கனக்கச்சிதமாகச் செய்பவர்கள் நிறைய விருத்தியாகி, எண்ணின் சக்திகளைப் பரப்பினர். அஷ்டாவதானிகள், சதாவதானிகளே உண்மையான கணித ஆராய்ச்சியாளர்கள். இவர்களுக்கே கல்வித் துறைகளின் Ph.D பட்டம் சத்தியப் பூர்வமாக அளிக்கப் பெற வேண்டும்.

விரல் கணுக்குள் விருத்தியாகும் கணக்கு!

ஸ்ரீகாயத்ரீ மந்திர ஜப முறையிலும் விரல் கணுக்களுக்குள்ளேயே ஜபித்து, தியானித்து விரல்களுக்குக் கணித சக்திகளை உருவேற்றினர். கைவிரல் கணுக்கள் யாவும் கபாலத்துடன் தொடர்பு கொண்டவை ஆதலின் ஆதி காலக் கணித முறையே வாழ்க்கையை ஒட்டியதாகப் பயன் தந்தது.

எனவே, விரல் கணுக்களுக்கும் கணிதத்திற்கும் நிறையத் தொடர்புகள் உண்டு. மேலும் குச்சி, பலப்பம், கடுக்காய் போன்ற எண் சக்திகள் நிறைந்ததாயும் மை ஊற்றிய பேனா, பென்சில், சிலேட், குச்சி போன்ற இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தியமையாலும் இயற்கையோடு அமைந்த கணிதப்பாடம் எளிமையாகச் சிரமமின்றி அமைந்தது. சிலேட்டுக் கல் எனப்படும் இயற்கைக் கல்லில், அபூர்வமான குளிர்ச்சி ஏற்படும். இது கபாலத்தைக் குளிர வைத்து புத்தித் திறனை மேம்படுத்த வல்லது. பிள்ளைகள் சிலேட்டில் எழுதி, எழுதி கைகளைப் பயன்படுத்துகையில், சிலேட்டுக் கல்லின் இயற்கையான குளிர்ச்சியானது சிலேத்துமப் படலத்தின் வழியாக, மூளையை அடைந்து குளிமைப்படுத்தி களைப்பை அகற்றி, புத்துணர்ச்சி தரும்.

சிலேட்டுக் கணக்கு சிந்தனையை வளர்க்கும்

இவ்வாறு எண் என்பது வாழ்க்கையோடு மிகவும் ஒன்றியதாக இருக்க வேண்டும். வெறும் புத்தகங்கள், கால்குலேட்டர் வைத்துக் கணிதங்கள் ஏற்பட்டால், அது நீடித்து நிலைக்காது, மேலும் நம் பழங்காலத்துக் கணக்கு முறைகள் ஏர், உழவு, நீர்த் தொட்டி என்று வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவையாக இருந்தமையால் கணக்கு முறைகள் எளிதில் புத்தியில் படியும்.  தற்போதோ, XYZ க்குள் மருகி, மருகி கணித முறை அமைவதால், எண் சக்திகள் தணிக்கப்பட்டு மனித சமுதாய வாழ்க்கைக்குப் பயனே கிடையாது என ஆகி வருகின்றது. எனவே எண் சக்திகளை விருத்தி செய்யும்படி ஆரம்பக் கல்வி நிலையிலேயே கணிதப் பயிற்சிகள் அமைய வேண்டும்.

சுவாதி நட்சத்திர லிங்கம்

ஜனவரி 2005 இதழ் தொடர்ச்சி – சுவாதி நட்சத்திர லிங்க மகிமை!

கடந்த ஜனவரி 2005 – ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில், நல்ல கணவனைப் பெற்றிட சுவாதி நட்சத்திர லிங்க பூஜை வாழ்க்கையில் எவ்வாறு உதவுகின்றது என்பதற்கான சித்புருஷர்கள் அளிக்கின்ற விளக்கத்தின் தொடர்ச்சியை மீண்டும் காண்போமாக!

நல்ல கணவனுடன் அமைதியான குடும்ப வாழ்வைப் பெறுவதற்கு மட்டுமல்லாது, தனக்கு அமைந்திருக்கும் இல்லற வாழ்வில், கணவன் நற்குணங்களோடு திகழ்வதற்கு, ஒவ்வொரு இல்லறப் பெண்மணியும், திருமணத்திற்கு முன்பும், பின்னுமாக, சுவாதி நட்சத்திர லிங்க பூஜையை இடைவிடாது வாழ்வில் கடைபிடித்து வருதல் வேண்டும்.

சுவாதி நட்சத்திர நாளில், கணவனும் மனைவியும், குடும்ப சகிதமாக, சென்னை பூந்தமல்லி அருகே உள்ள சித்துக்காடு (திருமணம் என்ற பண்டையப் பெயரைத் தாங்கி இருக்கும் ஊர்) ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயம் மற்றும் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் வழிபடுவது குடும்பத்தில் நல்ல ஒற்றுமையைப் பேணும்.

இங்கு சிவாலயத்தில் தம்பதியர் இருவரும் அடிப்பிரதட்சிணம் செய்து, இங்கு அபூர்வமாக விமலசுத மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீயோக நந்தீஸ்வரருக்கு வஸ்திரம் சார்த்தி, அருகம்புல், நாகலிங்க புஷ்ப மாலைகள் சார்த்துதலால், பீதி மற்றும் மனோபயத்துடன் வாழ்வோர் வாழ்க்கையில் நல்ல ஸ்திரம் பெறுவர்.

இங்கு அருள்பாலிப்பது யோகபாவனச் சுயம்பு லிங்கம் ஆதலால், யோகப் பூர்வமாகக் குறைந்தது 32 முறை பிராணாயாமம் செய்து வழிபடுதலும், யோக சக்திகள் நிறைந்த நெல் பொரி, பசலைக் கீரை, தேன் கலந்த எலுமிச்சைச் சாறு, எலுமிச்சை அன்னம் ஆகியவற்றை தானமாக அளித்தல், இங்கு பிரதோஷ பூஜையில் பங்கேற்றல், ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில், முன்னரே அனுமதி பெற்று நெல்லி – துளசி விவாகப் பூஜைதனை நிகழ்த்துதல், பெருமாளுக்குத் திருமஞ்சனம், அபிஷேக ஆராதனைகள் நிகழ்த்தி வழிபாடு, ஆண்டாள் சன்னதியில் உள்ள கருடக்கொடிச் சித்தருக்கு வழிபாடுகள் நிகழ்த்துதல், இங்கு நெல்லி மரத்தில், தம்பதி சகிதம் வந்து கூடும் குடும்ப வாசிக் கிளிகளை தரிசித்தல், தேவமொழி மற்றும் தமிழ் வேத மறைகளை ஓதுதல் போன்றவற்றைச் சத்சங்கமாக இல்லறப் பெண்கள் இங்கு ஒன்று கூடி ஆற்றுவதால், இல்லறத்தில் நல் அமைதி ஏற்பட உதவும்.

பங்காளிகளிடையே உறவு முறைகளினால் ஏற்பட்டுள்ள பகைமை நீங்குவதற்கு சுவாதி நட்சத்திர லிங்கப் பூஜையை ஆற்றி வருதல் வேண்டும்.

சுவாதி நட்சத்திர நாளில், “சுக்ருதி சுவாசினீய சுவாதியம் போதி!” என்ற அற்புதமான மந்திரத்தை கணவனும் மனைவியும் சுவாதி நட்சத்திரம் நிறையும் நாள் முழுவதுமே ஓதி வந்தால், மனதிலும், குடும்பத்திலும் சாந்தம் நிரவி வந்து வாழ்வில் மன ஒற்றுமையோடு செழிப்பதை நன்கு காணலாம்.

ஸ்ரீநந்தீஸ்வரர் சித்துக்காடு

2005-ம் ஆண்டின் காலகட்டத்தின் முக்கால் காலத் தொகுதியில் இருந்து கேது கிரகச் சலனங்கள் பெரிதும் ஆக்கம் பெறுகின்றன. எனவே இதற்கான தூமகேது விநாயகத் துதிகளை ஓதுதல் மிகவும் விசேஷமானது. தூமகேது விநாயகரின் சக்கரப் பூர்வங்கள் ஸ்ரீஜெயசாந்தி விநாயக மந்திரக் கோட்பாடுகளில் ஐக்யம் பெற்றுள்ளன. கேதுவுக்குரித்தான எண்ணாகிய ஏழாமிடச் சம்பட சக்திகள் கேதுவின் சலனபூதக் காலமாக, மாசி – பங்குனிக்கான சிசிர ருதுக் காலத்தில் இருந்து சிறப்படைவதால், இதிலிருந்து சுவாதி நட்சத்திர நாளிலும், புதன் கிழமைகளிலும் ஸ்ரீதூமகேது விநாயக வழிபாடு விசேஷம் பெறுகின்றது.

மார்ச் மாதம் ஒன்றாம் தேதி சுவாதி நட்சத்திரம் அமைவதால், இன்றிலிருந்து சுவாதி நட்சத்திரம் தோறும் மட்டுமல்லாது, ஏழாம் தேதி, ஏழாம் கிழமை, கூட்டு எண் ஏழு என்று வரும். 16, 25 தேதிகள், சுவாதி நட்சத்திர நாள் போன்றவற்றில் தூமகேது விநாயக வழிபாடு மிகவும் சக்தி வாயந்ததாகும்.

சுவாதி நட்சத்திர நாளில், 7, 16, 25 என்று ஏழின் வகைகளில் உணவு வகைகளையும், அன்னதானமாக அளிப்பதால், அலுவலகத்தில் ஏற்பட்டிருக்கும் பகைமை களைய தூமகேது விநாயகர் அருள்புரிகின்றார். மேலும் சுவாதி நட்சத்திர நாளில் எல்லா நற்காரியங்களையும் கணவனும் மனைவியும் இணைந்தே செய்து வர, தம்பதியரிடையே நல்ல ஒற்றுமை வரும்.

பத்து அல்லது பத்துக் குழந்தைகளுக்கு மேல் பெற்ற தாய்மார்களுக்கு அல்லது மூன்று பரம்பரைகளுடன் தாத்தா முதல் பேரன், பேத்தி வரை பத்து பேர்கள் சேர்ந்து வாழும் கூட்டுக் குடும்பத்திற்குத் தேவையான உதவிகளைச் சுவாதி நட்சத்திர  நாளில் ஆற்றிடில், தம்பதிகளுடைய சுயநலம் இல்லாத நல்விருப்பம் விரைவில் நிறைவேற வழிபிறக்கும்.

அபிஜித் முகூர்த்தம்

பகல் உச்சிக் காலத்திற்கு அபிஜித் முகூர்த்தக் காலம் என்று பெயர் – அபிஜித் முகூர்த்த நேர மஹாத்மியம்!

ரேவதி – அஸ்வினி நட்சத்திரச் சங்கமக் காலம்

27வது நட்சத்திரமான ரேவதியும், முதல் நட்சத்திரமான அஸ்வினியும் சேரும் நாளில், குறித்த நாழிகை நேரத்தில் இவ்விரண்டின் முன்னும் பின்னுமாக, பல விசேஷமான காலசக்திகள் உற்பவிக்கின்றன. ரேவதியும் அஸ்வினியும் சேரும் யோகப் பகுதியை ஒட்டி அபிஜித் ஜகதாபியம், பருப்பதாயம், கும்பசாதனம் போன்ற பல சக்திகள் தோன்றுகின்றன. இந்நேரத்தில் அதாவது ரேவதி நட்சத்திரமும், அஸ்வினி நட்சத்திரமும் கூடும் நேரத்தில் ஸ்ரீஜகதாம்பிகை, ஸ்ரீஜகதீஸ்வரர், ஸ்ரீஜகந்நாதன் என்ற பெயருடன் அருளும் மூர்த்திகளை வழிபடுதல் மிகவும் விசேஷமானதாகும்.

ஸ்ரீஜகதீஸ்வரர் மணமேல்குடி

அம்பாள் உதய ஜகதாம்பிகையாக, ஜெகத் ரட்சகியாக, அருந்துணை இறைவியாக உற்பவித்து அருளும் அற்புதக் காலமும் இதில் வரும். வாஸ்து மூர்த்தி, ஸ்ரீஜகதீஸ்வரப் பெருமானுக்கு, இந்த இரு நட்சத்திரக் கூட்டோடு பௌர்ணமி கூடும் நாளில் அன்னாபிஷேகம் ஆற்றி ஆராதிக்கும் பூஜாபல நாளாகவும் அமைகின்றது.

அறந்தாங்கி – மணமேல்குடி ஜகதாபட்டினம் – மீமிசல் மார்கத்தில் உள்ள ஜகதாபட்டினத் தலமும் அம்பிகை அபிஜித் முகூர்த்த நேரத்தில் ஜகதாம்பிகையாக உற்பவித்தத் திருத்தலங்களுள் ஒன்றாகத் துலங்குகின்றது. திருமண தோஷங்களைக் களைய வல்ல கடற்கரை சக்தித் தலமே ஜகதாபட்டினம்.

அபிஜித் முகூர்த்த தரிசனக் கோயில்கள்!

யோகியர்கள், மாமுனிகள், சித்தர்கள், மகரிஷிகள், மதிய உச்சிப் பொழுதான பகல் 12 மணிக்கு அமைகின்ற – தோஷங்களற்ற – அபிஜித் முகூர்த்த நேரத்தில், தம் அரிய தபோ பலன்களால், பகல் நேரத்திலேயே, வானில் நட்சத்திரங்களைத் தரிசிக்கும் தவசக்திகளைப் பெற்ற தலங்களில் தரங்கம்பாடி, திருவிடைமருதூர், சென்னை – திருவொற்றியூர், தாராமங்கலம், மணமேல்குடி, ஜகதாபட்டினம், நட்சத்திரக் கோயில் போன்றவையும் விசேஷமானவை!

இத்தலங்களில் பகல் உச்சிப் பொழுதில் தரிசித்தல் – தோஷமற்ற அபிஜித் முகூர்த்த நேரமாவதால் – குடும்பத்தில் பலவிதமான தோஷங்களை நீக்க இந்த வழிபாடுகள் உதவும்.

ஆவுடையார் கோயில், புதுக்கோட்டை நகரின் பகுதியாகிய திருக்கோகர்ணம், சென்னை – பூந்தமல்லி ஸ்ரீவைத்யநாத சுவாமி ஆலயம் போன்ற சில ஆலங்களில் ரேவதி முதல் அஸ்வினி வரையிலான 27 நட்சத்திரங்களைத் தாரா பட்டம் எனும் படியாக, மேற்கற் பலகையில், வண்ணமாகவும் அல்லது 12 ராசிக் கட்டமாகவும் கோயிலின் உட்புற மண்டப உச்சி மேல் விதானத்தில் பதித்திருப்பார்கள். இவையாவும் அபிஜித் முகூர்த்த சக்திப் பூஜா பலன்களை அளிப்பனவாகும்.

அபிஜிதாகரணப் பூஜ்யச் சக்கரம்

இந்த நட்சத்திரக் கற்சாசனத்தில், ரேவதிக்கும், அஸ்வினிக்கும் இடையில் அபிஜிதாகரணம் எனும் நாற்சதுரப் பரலும் வெற்றிடமாய் பூஜ்ய சக்திகள் நிறைந்ததாய் அமைந்திருக்கும். இதுவே வானில் அபிஜித் நட்சத்திர இடத்தைக் குறிக்கும் தரிசனக் காரணி எனப்படுவதாகும். இதனை நினைத்து மனதில் கொணர்ந்து தியானிப்போர்க்கு “என்ன செய்தாலும் வசவு வாங்குகின்றோமே!” என்ற குறைபாடுகள் தீர நல்வழி பிறக்கும்.

அபிஜித் என்பதற்கு ஆத்மீகமான பல அர்த்தங்கள் உண்டு. நட்சத்திரப் பலகணியில் 27 என்பதோடு, 28ஆவதாக அபிஜிதவாளம் என்று அமைந்து வரும். இதனால்தான், பண்டைய நட்சத்திர அமைப்புகளில், 27 நட்சத்திரப் பரல்களை வைத்து, 28ஆவதை ரேவதிக்கும், அஸ்வினிக்கும் இடையில் அபிஜித் தாரா பாத்திரமாக வைப்பார்கள்.

எனவே தாரா பாத்திரம் எனப்படுவதான லிங்கத்தின் மேல் கங்கா பாத்திரம் வைத்துப் பாத்திரத் துவாரம் மூலமாகத் துளித் துளியாக லிங்கத்தின் மேல் படிவதான நீர்த் தாரைப் பூஜைக்கு மிகவும் ஏற்ற காலம் அபிஜித் முகூர்த்த நேரமும், அஸ்வினியும், ரேவதியும் கூடும் நேரமும் ஆகும். இன்னொரு நட்சத்திர வாக்கிய முறையில், திருவோண நட்சத்திரத்தின் ஒரு குறித்த கோண தாரா மண்டலைத்தையும் அபிஜித் தாரகை மண்டலமாக உரைப்போரும் உண்டு.

அபிஜித் பீஜாட்சர மாமந்திர வாக்யம்!

மேலும், அபிஜித் பீஜாட்சர வாக்கியமாக, எந்த வேதத்தின் 28வது வாக்கியத்தையும் அபிஜித் அனுவாகமாக அனுசரித்து ஓதுவோரும் உண்டு. இவ்வாறு அபிஜித் என்பதற்கு வானியல் வேதப் பூர்வமான சுதபுத விளக்கங்கள் நிறையவே உண்டு.

விதான ராசி மண்டலம்
திருஅதிகை

“அபிஜித ஆகமாந்துதீர
அபிஜிதாம்பர நட்சத்ராணாம்
நாததீய ஜோதீனாம்
நளகங்காதர பவதாரண சிவச்ய விஷ்ணு மேதினாம்
பவ தவளாம்சுத பரிபாலய சரணாகத பாஹிமாம்!”

-என்ற வகையிலான அபிஜித் சித்சக்தித் துதிகளை, தினமும் பகல் 12 மணிக்கு அபிஜித் முகூர்த்த நேரத்திலும், மேல் விதானத்தில் நட்சத்திர/ராசி மண்டலம் உள்ள ஆலயங்களிலும் பூஜித்து ஓதியும், 27 நட்சத்திர தேவ மூர்த்திகளும் அபிஜித் மண்டல சக்திக்குள் ஆவாஹனமாகும் பாவனையுடன் வழிபடுதலும் மிகவும் அரியதான அபிஜித் மூர்த்த நேரப் பூஜையாகும்.

உங்களுடைய மூதாதையர்களில், பல்லாயிரம் தலைமுறைகளுக்கு முன் வாழ்ந்தோர் எவரேனும் நட்சத்திர மண்டலத்தில் உத்தம நிலைகளை அடைந்திருப்பின், அவர்களுடைய நேரடி தரிசன, ஆசிகளைப் பெறும் பாக்யவழிகள் புலனாகும் நேரமும் அபிஜித் முகூர்த்த நேரமாகும்.

விடியற் காலையில் அமையும் பிரம்ம முகூர்த்த நேரம் போல, தோஷமற்றதான மிகவும் புனிதமான நேரமே அபிஜித் முகூர்த்த நேரமாகும். இவற்றை வாழ்வில் நன்கு பயனாகும் வழிமுறைகளை அறிந்து கடைபிடிக்க வேண்டும்.

தினமுமே மாலையும், இரவு காலமும் சந்திக்கும் சந்தியா வேளையில், கண்களை அகல விரித்து, விரிந்த, பரந்த கண்களால் எவ்வளவு நட்சத்திரத் தரிசனங்களைப் பெறுகின்றீர்களோ, அந்த அளவிற்குச் சிறப்பான நட்சத்திரத் தரிசனப் பலாபலன்களைப் பெற்றிடலாம்.

மன சஞ்சல நிவர்த்திக்கு ஸ்ரீஜகதாம்பிகை வழிபாடு!

ரேவதி நட்சத்திரத்தின் கடை நிலையில் அமையும் 12 நிமிடங்களும், அஸ்வினியின் முதல் நிலை 12 நிமிடங்களும் பிரகாசநீயக் காலமாகும். இதில் ரேவதியின் உத்தராங்கப் பிரகாசநீயம், அஸ்வினியின் பூர்வாங்கப் பிரகாசநீயம் இரண்டும் சேரும் நேரத்தில், ஸ்ரீஜகதாம்பிகையைப் பூஜிப்பதால் மனசஞ்சலங்கள் நிவர்த்தியாக உதவும். இதைச் செய்யலாமா, கூடாதா, இந்த வரன் ஒத்து வருமா வராதா, இந்தக் காரியத்தில் இறங்கலாமா, கூடாதா என்ற வகையிலான மனச்சலனங்கள் தணியவும், அகலவும் ஸ்ரீஜகதாம்பிகை வழிபாடு உதவும்.

இந்த நட்சத்திரச் சங்கமம் அபிஜித் முகூர்த்த நேரத்தில் அமைந்திடில் மஹா அபிஜிதாகர்ஷணப் புனித நேரம் எனப்படும். மகரிஷிகள் இந்த அபிஜிதாகர்ஷண நேரத்தில் தான், பகலிலேயே பல முக்கியமான தெய்வ மண்டல நட்சத்திரங்களைத் தரிசிக்கின்றனர். அருந்தவத்தால் மட்டுமே அடைய வல்ல தரிசனம் இது!

அபுதாபி எனப்படும் மத்தியக் கிழக்கு ஆசிய நாட்டு நிலப் பகுதியானது, மகரிஷிகளால் பகல் நேர நட்சத்திர தரிசனத்திற்கான சந்த்ராகம பீஜப் பிரகாசக் கதிர்களைக் கொண்ட நிலப் பகுதியாக உரைக்கப்பட்டுள்ளது.

கண்நோய்கள் தணிய கவின்மிகு அபிஜித் முகூர்த்த வழிபாடு

காடராக்ட் போன்ற கண் நோய்களால் அவதியுறுவோர், இந்த அபிஜிதாகர்ஷண நேரத்தில், அதிஅற்புதமான சாக்ஷுஷோபநிஷத் எனும் அபூர்வமான, அற்புதமான உபநிஷத் வேத மந்திரங்களை ஓதி ஜபித்தல் மிகவும் விசேஷமானது. இதன் தமிழ் வடிவமும் உண்டு.

பொதுவாக, தினமும் அபிஜித் முகூர்த்த நேரத்தில் இந்த உபநிஷத் மந்திரங்களை வாழ்நாள் முழுதும் ஓதி வந்தால் கண்களுக்கு நல்ல ரட்சா சக்திகள் கிட்டும்.

இந்த அரிய நேரத்தில் அகத்திக் கீரை, அத்திப் பழம், காரெட், வெண்ணெய் சம்பந்தமான உணவு வகைகளைத் தானமளித்தலும் கண் நோய்களின் கடுமையைத் தணிக்க உதவும்.

ஒரே நாளில் இவற்றைச் செய்வதால் கண் நோய்கள் தணிந்திடுமா என்று எண்ணாதீர்கள். கண் நோய்கள் ஏற்படுவதற்கான கர்ம வினைகள் பெரிதும் தணியத் துணை புரியும் நன்னேரம் இதுவே என்பதும், இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் காலவிதானத்தின் மகத்துவத்தையும், காலத்தின் தெய்வீக மகத்துவத்தையும் குறிக்கின்றது.

எதனையும் ஆக்கப் பூர்வமாகச் செய்து பார்த்தால்தானே ஆன்மீகத்தில் எதனையும் அனுபூதியாக, அனுபவப் பூர்வமாகவும் உணர்ந்திட முடியும். குறுக்குக் கேள்விகள் நம்பிக்கையைக் குறைக்கும். ஆழ்ந்த நம்பிக்கை பலாபலன்களை நன்கு விருத்தி செய்யும்.
நேத்திர சக்தி வழிபாடுகள்

கண்ணன், (நாட்டரசங்கோட்டை) கண்ணாத்தா, கண்ணாயிர மூர்த்தி, மீனாட்சி, விசாலாட்சி, காமாட்சி போன்ற கண் வகை நாம மூர்த்திகளை அபிஜித் முகூர்த்த நேரத்தில் வழிபடுவது மிகவும் சிறப்புடையதாகும். கண்நோய்த் துன்பங்களைத் தணிக்க உதவும்.

ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் சிவாலயம் சாத்தமங்கலம்

திருஅண்ணாமலை – போளூர் மார்க்கத்தில் அருகே நட்சத்திரக் கோயில் என்ற சிறப்பான சிவத்தலம் ஒன்று உண்டு. இங்கிருந்து விண்ணில் நட்சத்திரங்களைத் தரிசனம் பெறுவது மிகவும் விசேஷமானது. உலகில் “தாரகாதுள கைவல்ய சக்திகள்” நிறைந்த அபூர்வமான தலங்களில் இதுவும் ஒன்று. பூவுலகில் வேறு எந்த இடத்திலிருந்தும் பரிபூரணமாகப் பெற இயலாத சில அரிய நட்சத்திரத் தரிசனங்களை குறித்த ஹோரை நேரத்தில் இங்குதாம் பெற முடியும்.

சப்தமி திதி

சூரிய மூர்த்தியே வழிபடும் சப்தமித் திதித் திருநாள்!

ஒவ்வொரு சப்தமித் திதியிலும் சூரிய மூர்த்தி, தம்முடைய ஏழு கிரணங்களையும் சுத்திகரித்துக் கொள்கின்றார். காரணம் என்ன? உலக மக்களின் – நல்லது அல்லாததுமான – அனைத்துக் காரியங்களுக்கும் சூரிய சந்திர சாட்சியாகப் பிரதானமாக இருப்பதால், தம்மை நம்பி வழிபடுவோரின் கர்மக் கிரணங்கள் பலவற்றையும் சுத்திகரிப்பதாலும், சூரிய கிரணங்கள் சிலவும் சற்றே மாசடைகின்றன.

மகத்தான சூரிய சக்திகளை மாசடைதல் எனக் கூறுதலே தவறுதான். எனினும் சாதாரண அறிவிற்கு எளிமையாகப் புரிய வைக்கும் முறையில் சில புராண அனுபூதிகளை இவ்வகையில்தாம் விளக்கலாகிறது.

உலக ஜீவன்களுடைய தர்மமான, அதர்மமான, நல்லது, கெட்டதுமான அனைத்துக் காரியங்களுக்கும் சூரிய, சந்திர, அக்னி மூர்த்திகள் சாட்சியாக இருப்பதால், அவர்களுடைய கிரணங்களில் சற்றே மாசுப் படிவுகள் இவ்வகையில் கலியுலகில் நிறையவே ஏற்படுகின்றன. “யாருக்குத் தெரியப் போகின்றது?” என்று பலரும் ரகசியமாகப் பல தீவினைகளைச் செய்கின்றார்கள். அவர்கள் எங்கும் தப்ப முடியாது. இருக்கின்ற புண்ணிய வசத்தால் சிறிது காலம் தப்பித்தாலும், சித்திர குப்தர் சூரிய, சந்திர சாட்சியாக எழுதும் வினைக் கணக்கு என்றும் தப்பாது!

தேவ கிரணச் சுத்திகரிப்பும் உண்டு!

சூரியக் கிரணங்களைச் சுத்திகரிப்பதற்காகவே, சூரிய மூர்த்தியும், நித்திய அருணாசல கிரிவலம், லிங்கத்தை ஸ்பரிசிக்கும் பூஜைகள் (சூரிய பூஜைத் தலம்). சப்தமி வார விரதம் போன்றவற்றைக் கடைபிடித்து, விஸ்கர்ம தேவரின் அக்னி ஜோதிப் பட்டறையில் சப்தமித் திதியில் தம்முடைய கிரணங்களைச் சுத்திகரித்துக் கொள்கின்றார்.

மக்கள், புனித நதிகளில் நீராடிக் கரைக்கின்ற பாவ வினைகளின் விளைவுகளிலிருந்து தம்மைக் காத்துக் கொள்ள, புண்ணிய நதி தேவதா மூர்த்திகளே கும்பகோணம் மகாமகத் திருக்குள நீராடல், கும்பமேளா நீராடல், ஸ்ரீஜலகண்டேஸ்வரர் வழிபாடு போன்றவற்றைக் கடைபிடிப்பது போல, சூரிய மூர்த்தியும் கடைபிடிக்கின்ற விரதங்களுள் சப்தமித் திதி விரதங்களும் உண்டு.

சோழீஸ்வரத்தில் சூரிய பூஜை

அதாவது ராமாயணத்தில் பரபிரம்மமாம் ஸ்ரீராமரே பல விரதங்களைக் கடைபிடித்து வழிகாட்டியது போல், பூவுலகைப் பரிபாலிக்கவும், தம்மை வணங்கும் பக்தர்களைக் காக்கவும், ஜீவ நலத்திற்காகவும் தேவாதி தேவ மூர்த்திகளும் பல விரதங்களைக் கடைபிடிக்கின்றனர்.

புத்தி கூர்மை, கண் பார்வை வளம் தரும் சூரிய உபாசனை!

சப்தமி விரதம் பூண்கின்ற சூரிய மூர்த்தியை, அவருடைய விரத நிலையிலேயே தரிசித்து அனுகிரகங்களைப் பெற்றவர்களுள், துரியோதனனின் மனைவியான பானுவும், சப்தமி விரதம் பூண்டு சூரிய மூர்த்தியைப் பூசனை செய்து, மகத்தான பலன்களைக் குறிப்பாக, வருவதை அறியும் பாங்கினைப் பெற்றாள்.

ஆனால் இதனைச் சுயநலமாக, அதர்மம் புரிந்த துரியோதனனைக் காப்பதற்காகப் பயன்படுத்த முயற்சித்தமையால், வருவதை அறிந்து கொள்ளும் வரம் பெற்றும், தற்காத்துக் கொள்ளும் தவசக்தியைப் பெற முடியவில்லை! பிறகே மனம் திருந்தி, இதன் சக்திகளை நாட்டு மக்களின் நலன்களாகப் பயன்படுத்தலாகி, மிகச் சிறந்த கௌமார சக்தி உபாசகி ஆனாள். சூரியனுக்குரிய ஞாயிற்றுக் கிழமைக்கு பானு வாரம் என்ற பெயரும் உண்டு என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

கூர்மையான கண் பார்வை, பார்த்தவுடன் அறியும் ஞான சக்திகளை சூரிய மந்திர உபாசனை அளிக்கும்.

வாக்குக் குற்றங்களைக் களையும் வழிமுறை!

ஒவ்வொரு மனிதனுக்கும் பல்வகைப் பார்வைக் கிரணங்களும், சுவாசக் கிரணங்களும் உண்டு. தினமுமே பார்வை, கேட்கும் மற்றும் பார்க்கும் சக்திகள் மாறுபடும்.

பார்வை நாளங்கள் பலவும் சூரிய ஒளியால், நீரால், தைலத்தால், தீர்த்தத்தால், உத்தமர்களின் நேத்திர ஸ்பரிசத்தால் சுத்திகரிக்கப்படுகின்றன. எனவே மாதமொரு முறை ஞாயிறன்று சித்தர்கள், மஹான்களின் ஜீவசமாதி தரிசனத்தைப் பெற்றாக வேண்டும்.

ஜீவ சப்தமாகிய வார்த்தைகளின் விளைவுகளும் – நல்லதோ, அதர்மமானதோ அந்தந்த மனிதரையே சாரும். வாழ்வில் மனிதன் பல லட்சக் கணக்கான வார்த்தைகளை (அளக்காமல்) பேசுவதால், அவனுக்கு அட்சரக் கர்மங்களே பெரும் மலையாகிச் சேர்ந்து விடுகின்றன. மகன் மகள்களுடைய திருமண தோஷங்களுக்குப் பெற்றோர்களின் வாக்குத் தோஷமும் ஒரு முக்கியமான காரணமாகும். இதற்குப் பரிகாரம் காணவே, சப்தமித் திதி மற்றும் சனிக்கிழமை தோறும் பெண் பிள்ளைகளும், ஆண் பிள்ளைகளும், சப்த மாதர்களை ஏழு முறை வலம் வந்து, ஏழு விளக்குகளை ஏற்றி, சப்தமாதர்களைக் காக்கும் ஸ்ரீரட்சித லட்சண கணபதியையும் சேர்த்து வழிபட வேண்டும்.

சப்தமாதர்கள் நகர் திருத்தலம்

வாக்கை அவமதிப்பது மனித குலமே!

காக்கை, கிளி போன்ற பிற ஜீவன்கள் அனாவசியமாகப் பேசுவது கிடையாது. ஆனால் வறட்டு கௌரவம், கர்வம், அகங்காரம், ஆணவம், ego காரணமாக, தகாத, அனாவசியமான, வீணான வார்த்தைகளினால் பல அரிய சக்திகளைத் தினமும் மனித குலம் இழக்கின்றது.

நம்முடைய ஒவ்வொரு வார்த்தையிலும் இறைமை, பணிவு, நாணயம் பொதிந்திருக்குமாறு பேசுதல் வேண்டும். ஆனால் தினசரி சூரிய வழிபாடும், சப்தமாதர் வழிபாடும் மங்கி வருவதால், சத்தியம், நாணயம்தனைக் கடைபிடிப்பது கலியுகத்தில் மிகவும் கடினமானதாக மனிதன் ஆக்கிக் கொண்டு விட்டான்.

சப்தக் கருவிகளும் தூய்மை பெறட்டும்!

வீட்டிலும் ஆபீசிலும் உள்ள டெலிபோன் கருவியும் கூட மனித குல சப்தங்களின் தவறான கிரண சக்திக்கு தற்காலத்தில் ஆதாரமாகி விடுகின்றது. எனவே, உங்கள் டெலிபோன் கருவிக்குக் கூட, தினமும் துடைத்து, குறிப்பாக சப்தமித் திதியில் மஞ்சள், குங்குமம், சந்தனம் இட்டு வாக்கு சாதனக் கருவிகளைப் புனிதப்படுத்திக் கொள்ளுங்கள்.

வளர்பிறைச் சப்தமித் திருநாளில், ரேடியோ, டீவி போன்ற சப்தநாளக் கருவிகளிலும், வீட்டின் பொருட்களிலும், வாத்யக் கருவிகளிலும் நல்ல சப்தங்கள் எழுவதற்காக, படிவதற்காக எளிய பூஜைகளைக் கடைபிடிக்க வேண்டும். வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் நின்று,

சப்தாட்சர ரட்சகம், வாக்தேவி சரணம், சரணம், சரணம் பிரபத்யே

ஐயாறப்ப அகமே போற்றி
ஐயாறப்ப சுதமே போற்றி
ஐயாறப்ப பதமே போற்றி
ஐயாறப்ப புதமே போற்றி
ஐயாறப்ப நாத நாதா போற்றி போற்றி போற்றி!

-என்று நன்கு ஓதிடுக! இந்த ஐவகைப் போற்றிகளைத் தினமுமே அனைத்துத் திக்குகளிலும் பாடகர்கள், வாத்தியக் கலைஞர்கள் தினமுமே ஓதுதல் இல்லத்தில் சப்தக் கிரணங்களை வளப்படுத்தும்.

சூரிய வளையப் பிரகாசப் பூஜை

சில வீடுகளில், தோட்ட மரத்தடிகளில் கூரை வழியே சூரிய ஒளி வீட்டினுள் வட்டமாகப் பிரகாசிக்கும். வீட்டில் சூரிய ஒளி வட்ட வடிவமாகப் பதிகின்ற இடங்களில் சூரிய வளைய ஒளியைச் சுற்றிப் பச்சரிசி மாவால் கோலமிட்டு, வாழை இலை வைத்து கோதுமை மற்றும் ஆரஞ்சு வண்ண உணவுப் பண்டங்கள், கோதுமையை வைத்துப் பூஜித்துத் தானமளித்தலால் பெற்றோர்களை, உற்றாரை நம்பி, நம்பியே வாழ்கின்றவர்களுக்கு, மனத் தாங்கல்கள் இல்லாது வாழ்ந்திட நல்ல வழி பிறக்கும்.

வீட்டில் சூரிய வட்ட ஒளி வர இயலாத பிளாட் போன்றவற்றில் வசிப்பவர்கள், ஆலயத்திலோ தல விருட்சங்கள், இதர ஆலய மரங்களில் இலைகள் மூலமாகத் தரையில் நிரவும் இடங்களிலோ, நண்பர்கள், உறவினர்கள் இல்லத்திலோ, சூரிய ஒளி வட்டங்களைக் கோலமிட்டுப் பூஜித்திடுக!

பித்ருகாரகராகச் சூரியன் விளங்குவதால், தனித்துச் சன்னதி கொண்டருளும் சூரிய மூர்த்தியை ஞாயிறன்றும், சப்தமித் திதியிலும் அபிஷேக, ஆராதனைகளுடன் வழிபட்டிட, தந்தை வகைப் பித்ருக்களின் ஆசி கிட்ட வழி பிறக்கும்.

சரியாக, நன்முறையில் வாழாது, பிறருக்குத் தீங்கிழைத்தும், பல தீய வழக்கங்களுடனும் இறந்த தந்தை அல்லது தந்தை வழி முன்னோர்களின் சாயா சரீரம், மாய உடல், ஆவி ரூபத்திலிருந்து விடுபட்டு, ஓரளவு நற்பரிகாரங்களைப் பெற சப்தமித் திதி பூஜை நன்கு உதவும்.

வெளிநாட்டில் இருப்போர் சூரிய ஒளியைக் கண்ணாடி மூலம் இல்லத்தில் பிரதிபலிக்கச் செய்து இப்பிம்பத்தைப் பூஜிக்க வேண்டும். இது தற்காப்பு சக்திகளை அளிக்கும்.

அமுத தாரைகள்

தாவரங்களோடு மனதார, அன்புடன் பேசுங்கள்! பல மாமருந்துகளை இலைக் கிரணங்களாய், பூச்சுடர்களாய் அளித்து உங்கள் மனக் கவலைகளை, உடல் நோய்களை எளிதில் குணமாக்கி மனசாந்தியைத் தரும்.

தினமும் சிறிதளவேனும் அன்னதானம் செய்து வருதலும் ஓர் உத்தம அன்னயோகப் பூஜையாகும். உண்ணா நோன்பாகிய விரதங்களைக் கடைபிடித்தால்தான் “பசி” என்றால் என்ன என்பதை ஆன்மப் பூர்வமாக உணர்ந்து, பிறர் பசியை ஆற்றும் தர்மச் சிந்தனை பெருகி, அன்னதானம் மூலமும் மோகத்தை, பேராசனைகளை, நிராசைகளை, காமகார மனதைச் சுத்திகரித்திடலாம்.

அபிஜித் முகூர்த்தமும் அமிர்த
நேரமும் இணையும் பரிதிநியமம்

பூகம்பத்தில் இறந்தவர்களுக்கு நற்கதியையும், அவர்தம் சந்ததியினருக்கு நல்வழிகளையும், சேதங்கள் ஏற்பட்ட பூமிக்கு மீண்டும் நல்வளத்தையும் பெற்றுத் தருவதற்காக செவலூர் சிவாலயத்தில் சமுதாய இறைவழிபாடாக அமாவாசை தோறும் காருண்ய தர்ப்பண வழிபாடுகளை மேற்கொள்வதோடு, இதனையே சிறந்த மாதாந்திர, வாராந்திர சமுதாய பூஜையாக அமைத்து, உலகமே பயன் பெறும் வண்ணம் செய்வது மகத்தான உலகளாவிய இறைச் சமுதாயப் பணியே!

தற்காலத்தில் எழுத்துக்கள் அமைவது கல்விக்காக மட்டுமே எனத் தவறாக எண்ணுகின்றனர். ஆதி முதலில் மனிதன் தன் வாழ்க்கையில், எழுத்துக்களை முதன் முதலில், தெய்வீக ரீதியாகவே பயன்படுத்தத் தொடங்கினான். பிறகு வாழ்க்கை முறையில் மாற்றங்கள், வசதிகள், புதுக்கருவிகள் ஏற்பட, ஏற்பட எழுத்துச் சக்திகளின் பிரிவாக எண்களும் தோன்றி, கல்வி முறைக்காகவும் எண்ணும், எழுத்தும் ஆயின.

தொடரும் ஆனந்தம்...

அபிஜித் முகூர்த்தம் என்பது கால தோஷங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு புனிதமான முகூர்த்தம் என்பதை நாம் அறிவோம். ஆனால், இந்த முகூர்த்தத்தை கணிக்கும் முறையை குரு சிஷ்ய பாரம்பர்யம் மூலமாக அறிந்து கொள்வதே சிறப்பாகும். தற்காலத்தில் உத்தமமான குருவையே கண்டறிதல் என்பது பலருக்கும் இயலாத காரியமாக இருக்க அவர்கள் கூறும் அபிஜித் முகூர்த்தத்தை எப்படி கணக்கிடுவது? பொதுவாக, 12 வருட காலம் திருக்கோயில்களில் நிறைவேறும் உச்சி கால பூஜையைக் கண்டு இறை மூர்த்திகளை வணங்கி வந்தால் அபிஜித் முகூர்த்த நேரத்தை துல்லியமாக கணக்கிடும் முறையை அறிந்து கொள்ளலாம்.

காலையில் சூரிய உதயத்திற்கும் சூரிய அஸ்தமன நேரத்திற்கும் இடையே உள்ள பகல் நேரத்தில் பாதியாக அமைவதே அபிஜித் முகூர்த்தமாகும். உதாரணமாக, ஒரு நாள் ஓரிடத்தில் சூரிய உதயம் காலை 6.30 மணிக்கு சூரிய அஸ்தமனம் மாலை 7.00 மணி என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அவ்விடத்தில் அபிஜித் முகூர்த்தம் என்பது 6.30 - 19.00 = 12.30/2 = 6.15 + 6.30 = 12.45 என்பதாக அமையும். முகூர்த்தம் என்பது பொதுவாக 1.30 மணி நேரத்திற்கு அமையும் என்றாலும் எப்போதுமே முகூர்த்த நேரம் 1.30 நேரத்திற்கு நிரவி நிற்பது கிடையாது. கோதூளி முகூர்த்தம் என்பது பசுவின் குளம்படியிலிருந்து தெளிக்கும் மண் துகள் ஒருவரை அடையும் நேரம் என்று கணக்கிட்டால் கோதூளி முகூர்த்தத்தைப் பற்றி தெளிவாக கூற வல்லவர் யார்?

ரேவ சுதம் என்பது ரேவதியும் அசுவினியும் இணையும் 12+12=24 நிமிட நேரம் என்று கூறினாலும் இது ராகு கால நேரத்திலோ கூடா நாளிலோ அமைந்தால் அதை தோஷமற்ற முகூர்த்த நேரமாகக் கொள்ள முடியுமா? இது போன்ற பல குழப்பங்களைத் தீர்க்க வல்லவரே நம் சற்குரு ஆவார். அபிஜித் முகூர்த்தம் நிரவி நிற்கும் காலம் அமிர்த நேரத்தைப் போல் ஒரு நிமிடமா, 24 நிமிடமா இல்லை ஒன்றரை மணி நேரமா? இதையும் தெளிவாக உரைக்கவல்லவர் நம் சற்குரு ஒருவரே.

நம் சற்குருவோ இவ்வாறு அபிஜித் முகூர்த்த நேரத்தை அத்தி பூத்தாற்போல் ஒரு சில திருமணங்களுக்கு மட்டுமே மாங்கல்ய தாரண வைபத்திற்காக அளித்துள்ளார் என்பதே இந்நேரத்தைக் கணித்து செயலாற்றுதலில் உள்ள சிரமத்தைத் தெரிவிக்கும். அதனால் பூஜை, ஆலய வழிபாடு, தீர்த்த யாத்திரை போன்ற தெய்வீக நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அபிஜித் முகூர்த்த கணக்கை நாம் பயன்படுத்துவதே உசிதம் என்பதே நம் சற்குரு தெரிவிக்கும் முகூர்த்த இரகசியம்.

ஒவ்வொருவர் கடிகாரமும், அது எலக்ட்ரானிக் முறையில் இயங்கினாலும் கூட, ஒவ்வொரு நேரத்தைத் தெரிவிக்கும் என்பதால் ‘தன் நிழல் தன்னடியில் தங்கும் நேரமே’ சரியான அபிஜித் முகூர்த்த நேரக் கணிப்பாகும். அதனால் நம் முன்னோர்கள் அபிஜித் நேர முகூர்த்த நேரத்தை உச்சி வேளை ஆலய வழிபாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தும் உன்னத முறையைக் கைக்கொண்டார்கள். இதுவே நம் மூதாதையர்களின் அறிவுத் திறன்.

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam