அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஆலய கும்பாபிஷேகங்கள்

பல ஆண்டுகளுக்கு முன் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் தம்முடைய குருநாதருடன் சேர்ந்து பலவிதமான (சித்புருஷர்களின்) காப்பு முறைகளை மேற்கொண்டு பல பெரிய கோயில் மூர்த்தங்களின் கல்விக்ரகத் திருமேனிகளைத் தூய்மைப்படுத்தித் தருகின்ற பெரும் பேற்றைப் பெற்றார். மூன்றாண்டுகளுக்கு முன், தஞ்சை ஸ்ரீபிரஹதீஸ்வரர் ஆலயத்தில் பெரிய ஸ்ரீநந்தீஸ்வரருக்கு மேற்கண்ட காப்புகளைக் கொண்டு ஐந்து தினங்களுக்குப் பரிபூர்ணக் காப்பிட்டுத் தூய்மை செய்யும், மிகவும் அரிதான, தெய்வீக வாய்ப்பு நம் ஆஸ்ரமத்திற்குக் கிட்டியதுடன், இறுதியில் மிளகுக் காப்பிட்டவுடன் தஞ்சாவூரில் பெருமழை பெய்த இறைலீலையை இன்றும் எண்ணி ஆனந்திக்கின்றோம். அம்மட்டோ! முதியவர் ஒருவர் திருப்பணி செய்யப்பட்ட தஞ்சை ஸ்ரீநந்தீஸ்வரரின் பளபளப்பான பச்சைத் திருமேனியைக் கண்டு மகிழ்ந்து, “நாற்பதாண்டுகளுக்கு முன் இதே நிறத்தில் ஸ்ரீநந்தீஸ்வரரைப் பார்த்தேன்” என்று கூறியதும் பசுமையாய் நம் நினைவிலுள்ளது.
ஸ்ரீநந்தீஸ்வரரைத் தூய்மைப்படுத்திய எங்களுடைய புனித இறைத்திருப்பணியில் நாம் எவ்வித இரசாயனப் பொருட்களையோ, கூர்மையான கருவிகளையோ நாங்கள் பயன்படுத்தவில்லை. ஆகமரீதியான, சித்புருஷர்கள் உவந்து அளித்துள்ள, தைலக்காப்புகள், நாட்டு மருந்துப் பொருட்கள், மூலிகா பந்தனங்கள் மற்றும் இயற்கைப் பொருட்களே முழுவதுமாகப் பல காப்புகளில் சேர்க்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
லால்குடி திருத்தலம்

எளிய கக்ஷக் களிம்புக் காப்பு முறை
1. இதனை மிக எளிதான பூஜை முறைகளுடன் அனைத்துத் தெய்வ சிலாரூபங்களுக்கும், தூய சுயம்புத் திருமேனிகளுக்கும் சார்த்தித் தூய்மைப் படுத்திடலாம்.
2. மூன்றுநாட்கள் தொடர்ந்து, இரவில், அர்த்தஜாம பூஜைக்குப் பிறகு இதனைச் சாற்றிடலாம்.
3. எவ்வித ரசாயனக் கலப்படமுமின்றி, இயற்கையான நாட்டுப் பொருட்களால் வடிக்கப்படும் இக்காப்பு, இறை சாந்நித்யத்தையும் பல்கிப் பெருக்கிடும் தன்மை உடையதாகும்.
முதற்பூஜை
1. முதலில் விநாயகரையும், ஏனைய ஆலய மூர்த்திகளையும், “ஸ்வாமி! ... இந்த..... மூர்த்திக்குக் காப்பு இடுகிறோம். இதற்கு அனுமதியளிக்க வேண்டுகின்றோம். என் ஈசனே!” என்று வேண்டிப் பிரார்த்திக்க வேண்டும்.
2. நல்ல பச்சரிசி மாவைப் புளிக்காத நல்ல தயிரில் நன்றாக நைசாக, கெட்டியாகப் பிசைந்து கொண்டு முதல் நாள் இரவில் லிங்கத் திருமேனி மேல் ஆவுடைக்கும் பாணத்திற்கும் நன்றாகக் காப்பிட வேண்டும். ஏனைய மூர்த்திகளுக்கும் இவ்வாறே செய்திடலாம்.
3. அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு காப்புகளை இட்டுக் காலையில் களைதல் சிறப்புடையது,
4. மறுநாள் காலையில் மென்மையான பஞ்சு போன்ற தேங்காய் நாரினால் தயிர் மாவுக் காப்பினைக் கொஞ்சம் கொஞ்சமாக நீர் விட்டு மெதுவாக மென்மையாகத் தேய்த்து எடுத்திடல் வேண்டும். கைகளில் நகங்களோ அழுக்கோ இருத்தல் கூடாது. தஞ்சாவூர், திருச்சி பகுதிகளில் இத்தகைய மென்மையான மிருதுவான பஞ்சு போன்ற நல்ல தேங்காய் நார்கள் கிடைக்கின்றன. தேங்காயை உரித்ததும் கிடைக்கின்ற தேங்காய் நார் கூட சற்றுக் கடினமானதே. எனவே தயவு செய்து கடினமான நாரினை, ஒருபோதும் தெய்வமூர்த்திகளைத் தூய்மைப் படுத்தப்பயன்படுத்தாதீர்கள்.
5. நன்றாக உலர்ந்த எலுமிச்சம் பழத்தோலை மண் கசடுகளை அகற்றி நன்றாகப் பொடி செய்து கொள்ள வேண்டும். பொடி செய்து கொள் தானியத்தையும் தூள் செய்து இரண்டையும் கலந்து கெட்டியான பசையாக்கி இரண்டாம் நாள் இரவு சிலாரூபத்திற்குக் காப்பிட வேண்டும். காப்பிடுதல் என்றால் எவ்வித இடைவெளியும் இன்றி சிலை/லிங்கத்தின் மேல் ஒன்று அல்லது இரண்டு அங்குல கனத்திற்கு இப்பசைக் காப்பினை முழுவதுமாகத் தடவிப் பூசுதலாகும்.
6. மறுநாள் காலை முன் கூறியது போலவே பூப்போன்ற மிருதுவான தேங்காய்ப் பஞ்சு நாரினால் மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாக நீர்விட்டு கொள் பசைக் காப்பினைக் களைதல் வேண்டும்.
7. பசைக் காப்பினைக் களை கையில், (சிறிது சிறிதாக) நீர்விட்டு, தூய்மையான கைவிரல்களால், மென்மையான தேங்காய்ப் பஞ்சுநாரைக் கொண்டு எடுத்தல் வேண்டும். கைவிரல்களால் கீறலாகாது. வேறு கூர்மையான ஆயுதங்களையும் ஒருபோதும் பயன்படுத்தலாகாது! வேண்டுமாயின் பஞ்சு போன்ற மென்மையான புதுத் துணியினால் சிலாரூபத்தில் ஒற்றியெடுக்கலாம். இறைவனே ஒளிப் பிழம்பாக உறையுமிடம்! எத்தனையோ சித்புருஷர்களும், ஞானியரும், யோகியரும், ஸ்பரிசித்து வழிபட்ட மூர்த்தங்கள்! எத்தனையோ இறை லீலைகளுக்கும், புராணங்களுக்கும் வித்திட்ட சிலா மூர்த்திகள்! இறையருள் சுரக்கும் இத்திருமேனிகளைத் தொட்டுத் தூய்மைப்படுத்துவதெனில் எத்தகைய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்! இது வெறும் விளையாட்டு அல்லவே! எனவே தான் பன்முறை மீண்டும் மீண்டும் தூய்மைப் படுத்தும் முறைகளையும், கவனக் குறிப்புகளையும் கோடிட்டுக் காட்டுகின்றோம்.

ஸ்ரீமார்கண்டேயர் வழிபட்ட
சிவலிங்கம் திருநீலக்குடி

8. மூன்றாம் நாள் இரவில் பச்சைக் கற்பூரக் காப்பு சார்த்தப்பட வேண்டும். பச்சைக் கற்பூரத்தைச் சற்றே நீர்விட்டுக் கெட்டியாக அரைத்து, தெய்வ மூர்த்திக்குக் காப்பாக மூன்றாம் நாள் இடுதல் வேண்டும். மறுநாள் காலை முந்தைய இரண்டு தினங்களையும் போலவே மென்மையான தேங்காய்ப் பஞ்சு நாரினால் கொஞ்சம் கொஞ்சமாக நீர்விட்டு, காப்பினைக் களைதல் வேண்டும். நெடுங்காலமாகத் தூய்மை செய்யப்படாதிருக்கும் மூர்த்திகளுக்கு மேற்கண்ட கக்ஷ களிம்பு முறையை இரண்டு மூன்று முறை தொடர்ந்து கடைபிடிக்கலாம்.
9. ஈசனுக்குத் தொடர்ந்து அபிஷேக ஆராதனைகள் நிகழ்கின்ற கோயில்களில் தொடர்ந்து மூன்று தினக்காப்புகளை, ஒவ்வொரு காப்பையும் 12 மணி நேரம் வைத்திருந்து ஒன்றிரண்டு நாட்களில் முடித்துவிடலாம்.
10. கக்ஷக் களிம்புக் காப்பு இட்டு முடிந்தவுடன் இளநீர் அபிஷேகம் செய்தல் சிறப்புடையது.
எவர் கண்ணும் படாத தீர்த்தத்திற்கு மிகுந்த தெய்வீக சக்தி உண்டு. உதாரணமாக , திருப்பதி செல்லும் வழியில் ஊத்துக்காடு நகரி சாலையில் ராமகிரி என்னும் தலத்தில் உள்ள சிவாலயத்தில் மலைப்பகுதியிலிருந்து எங்கிருந்தோ வருகின்ற சுனைநீர் சிவாலயக் கோயில் குளத்தில் நந்தியின் வாய்வழியே கொட்டுகின்ற அற்புதக் காட்சியை இன்றும் கண்டு களித்திடலாம். எவர் கண்ணும் படாத இத்தீர்த்தத்திற்கு அபூர்வமான சக்திகள் உண்டு. இக்கோயில் உண்டியலில் காணிக்கை செலுத்தி இந்நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்து பெறும் கோமுக நீரைத் தினந்தோறும் தொடர்ந்து அருந்தி வந்திடில் மனோ வியாதிகள், பிரமைகள், காத்துக் கறுப்பு சேஷ்டைகள் தீர்வடையும். இவ்வாறாகக் கக்ஷகளிம்புக் காப்பு இட்டவுடன் செய்கின்ற முதல் இளநீர் அபிஷேகத்திற்கும் அதிக தெய்வீக சக்திகள் உண்டு. இளநீரும் எவர் கண்ணும் படாத தீர்த்தம் தானே! எனவே தான் இளநீர் அபிஷேகம் செய்கையில் அதன் துவாரத்தில் விரல்களை வைத்து விரல்கள் வழியே எவரும் காணா வண்ணம் தெய்வ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வது மிகவும் சக்தி வாய்ந்ததாக சித்புருஷர்கள் எடுத்துரைத்துள்ளனர். இந்த முதல் அபிஷேக நீர் மகத்தான சக்தி வாய்ந்தது! சகல ரோக நிவரணி இது..!
11. இவ்வகையில் ஏனைய காப்பு முறைகளையும் தக்க சற்குருவை நாடி கடைபிடித்திட வேண்டுகிறோம். கோயில் திருப்பணிகளில் தயவு செய்து Sand Blasting  முறையைக் கைவிடுமாறு கை தொழுது கேட்டுக் கொள்கின்றோம்.

சகஸ்ரலிங்க மகிமை

ஆயிரம் லிங்கங்கள் சேர்ந்ததே ஓர் சகஸ்ரலிங்கம்
மகநீலாம்பரி விரதம்
1. ஒவ்வொரு மாதமும் மக நட்சத்திரந்தோறும் சகஸ்ரலிங்கத்தைப் பூஜித்து வருவதற்கு மக நீலாம்பரி விரத பூஜை என்று பெயர்.
2. ஆண், பெண் இருபாலாரும் வெளிர் நீலநிறத்தில் உடையணிந்து, திருவாதிரை நட்சத்திர பூஜை போலவே மக நட்சத்திர காலம் முழுவதும் விரதம் இருக்க வேண்டும்.
3. இன்று மார்க்கண்டேய மகரிஷி பூஜித்த தலங்களில் (108 தலங்கள்) சகஸ்ரலிங்க பூஜை அல்லது மார்க்கண்டேய மகரிஷி தரிசனம் மிகவும் விசேஷமானதாகும். உதாரணம் திருநீலக்குடி
4. அபிஷேக ஆராதனைகளில் நல்லெண்ணெய் அபிஷேகமும் எள்சாத நைவேத்யமும் சிறப்புடையது.
5. தாமே அரைத்த மஞ்சள், நீரால் அபிஷேகம் செய்தல் மேன்மை தரும்.
6. ம்ருத்யுஞ்ஜய அஷ்டோத்திரம், சிவ சகஸ்ரநாமம், சிவபுராணம் ஓதி, சங்குப் பூ கொண்டு அர்ச்சித்தல் அபரிமிதமான பலன்களைத் தரும்.
7. மக நீலாம்பரி விரதத்தை வில்வமும், துளசியும் கலந்த நீரை உண்டு முடித்திட வேண்டும்.
8.மக நீலாம்பரி விரதத்தால் நோய்களிலிருந்து நிவாரணம் கிட்டும், எம பயம் அகலும், அரசாங்க உயர்பதவிகள் தேடி வரும், இல்லத்திலோ, அலுவலகத்திலோ உள்ள தீர்க்க முடியாத பிரச்னைகள் எளிதில் தீர்வு பெறும்.

ஸ்ரீமார்கண்டேயர் வழிபட்ட
திருச்சேறை திருத்தலம்

9. இன்று எருமை மாட்டிற்கு நிறைய அகத்திக் கீரைத் தழைகளை அளிப்பது ஆயுள் விருத்தியைத் தரும், எமனுக்கு உரியது மக நட்சத்திரம்.,
10. இவ்விரத பூஜை பலனாகக் கணவருக்குத் தீர்க்க ஆரோக்கியமும், நீண்ட ஆயுளும் கிட்டும்.
11. நீலாம்பரி ராகத்தில் இறைப் பாடல்க்ளைப் பாடிட, மனதிற்குச் சாந்தமும், அமைதியும் கிட்டும். இனம் புரியாத பயமும், பீதியும் அகலும்.
சிவராத்திரியில் சகஸ்ரலிங்க பூஜை
1. மாதந்தோறும் அமாவாசைக்கு முன் வருகின்ற சதுர்த்தசி திதிக்கு மாத சிவராத்திரி என்று பெயர். மாசி மாதத்தில் வரும் மாத சிவராத்திரியே மஹாசிவராத்திரி.
2. மாத சிவராத்திரி அன்று சகஸ்ரலிங்கம் உள்ள மலைக் கோயில்களில் கிரிப்பிரதட்சிணமோ (திருஅண்ணாமலை, திருச்சி மலைக்கோட்டை, திருச்செங்கோடு etc…)  ஏனைய இடங்களில் சகஸ்ரலிங்கம் உள்ள கோயில்களில் முடிந்தவரை அடிப்பிரதட்சிணமோ செய்வது சிறந்தது.
3. சரீர பிரயாசை இருப்பதால் புனிதமிக்க மாத சிவராத்திரியில் உண்ணாநோன்பு வலியுறுத்தப்படுவது இல்லை. கிரிவலமோ அல்லது கோயில் அடிப்பிரதட்சிணமோ மேற்கொள்ளாதவர்கள் இன்று உண்ணா நோன்பை ஏற்கலாம்.
4. சிவராத்திரியன்று சதுர்த்தசி திதி துவங்குவது முதல், முடியும் வரை உண்ணா நோன்போ, தொடர்ந்து இயன்ற வரை கிரிவலம், அடிப் பிரதட்சிணமோ செய்திட வேண்டும்.
5. சிவராத்திரியில் இரவு நேரத்தில் சகஸ்ரலிங்க பூஜை அதிஅற்புதப் பலன்களைத் தரும்., சிவராத்திரியன்று நீல நிற ஆடை அணிவதும் விசேஷமானதாகும்.
6. சிவராத்திரியில் அனனத்து விதமான அபிஷேகங்களும் செய்து வழிபடுதல் வேண்டும். பசும் பாலினைக் கறந்த பத்து நிமிடங்களுக்குள், அதன் இயற்கையான இளஞ்சூடு இருக்கும்போதே இறைநினைவுடன் ஈசனுக்கு அபிஷேகம் செய்வது பல்லாயிரம் மடங்குப் பலன்களை எளிதில் பெற்றுத் தரும்.

சகஸ்ரலிங்கம்
நகர் திருத்தலம்

7. கொன்றைப் பூ, அடுக்கு மல்லி (மணமுள்ளது), மனோரஞ்சிதம் ஆகிய மலர்களால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்திடல் வேண்டும்.
8. சிவராத்திரியில் செய்யப்படும் பூஜைகளுக்கும், புனித தான தருமங்களுக்கும் பன்மடங்கு பலன்கள் உண்டென்பது நாம் அறிந்ததே. குறிப்பாகச் சர்க்கரை கலந்த விளாம்பழ இனிப்பு, ஏலம், முந்திரி நிறைந்த வெண்பொங்கல் தானம் சிறப்பானதாகும்.
9. சிவராத்திரியின் நிறைவில் வெட்டிவேர், வில்வம் கலந்த நீரை இறைப் பிரசாதமாக உண்டு விரதத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
10. சித்த பிரமை நீங்குவதற்கும், மன நிலைக் கோளாறுகள் தீர்வு பெறுவதற்கும், புத்தி சுவாதீனமின்மை குணமடைவதற்கும் மாத சிவராத்திரி தோறும் சகஸ்ரலிங்க வழிபாட்டினையும், கிரிவலத்தையும் மேற்கொள்ள வேண்டும்.
11. புகைபிடித்தல், போதைப் பொருளகளை அருந்துதல், குதிரை ரேஸ், குடிப்பழக்கம் போன்ற தீய ஒழுக்கங்கள் அடியோடு நீங்க, மாத சிவராத்திரி தோறும் சகஸ்ரலிங்க வழிபாட்டையும் மற்றும் கிரிவலம், அடிப்பிரதட்சிணங்களையும் நாம் மேற்கொண்டு வர, படிப்படியாக நல்வழி கிட்டும். திருச்சி லால்குடி அருகே நகர் ஆலயத்தில் அனைவரும் வலம் வரும் வண்ணம் தனிச் சிறப்புடன் சகஸ்ரலிங்கம் தனிச் சந்நதியுடன் பொலிகின்றது.
பாஸ்கர பூஜை – லிங்கத்தின் மேல் படியும் சூரிய கிரணங்கள் பெரும் இடர்களைக்களையும் திருநெடுங்களநாதர்
செய்யும் நற்பூஜைகளுக்கு, தான தர்மங்களுக்குக் கைமேல் பலன்களை அளிக்கும் கலியுகத்தின் பிரத்யட்ச மூர்த்திகளுள் திருச்சி – துவாக்குடி அருகே உள்ள திருநெடுங்களத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீநித்ய சுந்தரேஸ்வரராகிய நெடுங்கள நாதரும் ஒருவராவார். கலியுகத்தின் கண்கண்ட தெய்வமே திருநெடுங்களநாதர்! மிகமிகச் சிறிய, ஒரு சாண் உயரத்திற்கும் குறைந்த சுயம்புத் திருமேனி! பிரபஞ்சத்திற்கே அருள் வழி காட்டும் அற்புத மூர்த்தி! ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற பெரும் சிவத்தலம்! ஸ்தல புராணத்தின் படியும், வான சாஸ்திர நியதிகளின் படியும் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாத முதல் வாரம் முழுதும் இத்திருத்தலத்தில், சூரிய உதய நேரத்தில் லிங்கத்தின் மேல் சூரிய கிரணங்கள் படுகின்றன. அதாவது சூரிய பகவானே இந்நாட்களில் லிங்கத்தைத் தம் கிரணங்களால் ஸ்பரிசித்து, தொட்டு, லிங்கத் திருமேனியைப் பூஜிக்கின்றார் எனில் என்னே இச்சிவலிங்கத்தின் மஹிமை!

ஆடியில் சூரிய பாதை மாற்றம் – சூரியனின் அயன கதிகளில் தட்சிணாயனப் பாதை (ஆடிமுதல் மார்கழி வரை ஆறுமாதங்கள்) ஆடியில் துவங்குகின்றது. உத்தராயணகால (தை- ஆனி – 6 மாதங்கள்) மரணம் குறித்த தெய்வீக நியதிகளுக்குட்பட்டு தெய்வீகப் பாதையில் ஆன்மாவை இட்டுச் செல்லும் என்பது உண்மையே எனினும்.....
1, உத்தராயணக் காலத்தில் உயிர் பிரிகின்ற ஜீவன்கள் அனைத்தும் மோட்ச நிலையைப் பெறுகின்றனவா என்பதும்
2. தட்சிணாயனத்தில் உயிர் பிரிகின்ற ஜீவன்கள் அனைத்தும் முக்தி நிலையை அடைவதில்லையா
- என்பதும் அந்தந்த ஆன்மாவின் பரிபக்குவ நிலையைப் பொறுத்தும், புனித சற்குருவின் குருகடாட்சத்தை ஒட்டியும் அமையும். எனவே உத்தராயண மரணம் உத்தமமானது, தட்சிணாயன மரணம் தாழ்ந்ததென அறியாமையினாலான முடிவிற்கு வந்து விடாதீர்கள். மஹான்கள், யோகியர், சித்புருஷர்களுக்கு இந்நியதிகள் பொருந்தா! தட்சிணாயனப் புண்ய காலத்தில் தம் தேகத்தைச் சட்டையெனக் கழற்றி ஜீவசமாதி பூண்ட ஸ்ரீபரமாச்சார்யாள் ஸ்வாமிகள் அன்றும் இன்றும் என்றும் சிவபரஞ்ஜோதியாய்ப் பரிணமித்துப் பூலோக ஜீவன்களுக்கு மட்டுமின்றி எண்ணற்ற லோகங்களில் வாழும் அனைவர்க்கும் அருள்பாலித்து வருகின்றார் அன்றோ! கர்மவினைகளின் பாங்கு ஒவ்வொரு அயனகாலத்திலும் மாறுபடுகின்றது.

ஸ்ரீவரதராஜ பெருமாள்
திருநெடுங்களம்

உத்தராயணத்தில் செய்யப்படுகின்ற ஒரு கர்மவினையின் விளைவுகள், அதே கர்மவினைக்கான தட்சிணாயன விளைவுகளிலிருந்து பெரிதும் மாறுபடும். உதாரணமாக ஒவ்வொரு அயனகால தான தர்மத்தின் புண்ய சக்தியும் மாறுபடும். தினந்தோறும் ஒவ்வொரு விநாடியும் கோடிக்கணக்கான ஜீவன்களுடைய நல்ல தீய காரியங்களுக்கெல்லாம் சாட்சியாக சூரியபகவான் விளங்குகின்றார். ஜீவன்களின் பாவ, தீய செயல்களுக்கும் சாட்சி பூதமாய் நின்றமைக்குரிய பிராயச்சித்தமாக, கழுவாயாக இறைவனை நோக்கித் தவமிருந்து, நற்தவமிருந்து, நற்தவப்பயனாய் இறைவனின் சுயம்புத் திருமேனிகளைக் குறித்த நாட்களில் ஸ்பரிசித்து, தழுவிப் பூஜை செய்யும் பாக்யத்தைப் பெற்றார் சூரியபகவான்.
இதுமட்டுமல்லாது உத்தராயணப் பாதையிலிருந்து தட்சிணாயனப் பாதைக்கு மாறுவதற்கு அதிக சக்தியும், தீர்க்க கிரண ஆற்றலும், ஜீவசக்தி அளிப்பதற்கான நூதன புனர்ஜோதித் தன்மையும் பெருமளவில் வேண்டி இருப்பதால், ஒளி தரும் சூரிய பகவானே உத்தராயணத்தின் இறுதியில் சுயம்புத் திருமேனிகளைப் பூஜித்துப் பெரும் பாக்யங்களைப் பெறுகின்றார். கோடிக்கணக்கான லோகங்களில் கோடிக்கணக்கான ஜீவன்களுக்கு நிதமும் ஜீவித சக்தியளிக்கும் தெய்வமூர்த்தியான சூரிய பகவானே திருநெடுங்களத்தில் ஆடிமாதம் முதல் தேதி தொடங்கி ஒரு வார காலத்திற்கு மேல் பூஜிக்கின்ற ஆனந்தமயமான காட்சியை நீங்களும் தரிசித்து, அவருடன் சேர்ந்து திருநெடுங்கள நாதரை வழிபட்டுப் பல அற்புதமான பலன்களைப் பெறுவீர்களாக!
திருநெடுங்களத்தில் சூரிய பூஜை பலன்கள்
ஆடி மாதம் முதல் தேதி முதல் திருநெடுங்கள நாதரை ஸ்ரீசூரிய பகவான் பூஜை செய்கின்ற பொழுது அதாவது நெடுங்களநாதரின் சுயம்பு லிங்கத் திருமேனியில் சூரிய உதய நேரத்தில் சூரிய கிரணங்கள் படிகின்ற பொழுது நாமும் செய்ய வேண்டிய குறித்த சில வழிபாட்டு முறைகள் உண்டு. இப்புனித நேரத்தில் லிங்கத்திற்குப் பொன்னாங்கண்ணித் தைலக் காப்பிட்டு.
a). கறந்த பாலின் இளஞ்சூடு ஆறுவதற்கு முன்னரேயே அதாவது பாலைக் கறந்தவுடன் அதனைக் கொண்டு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்தல்...
b.) தேன் அபிஷேகம்
C). இக்கோயிலில் காலம் காலமாக இருந்து வருகின்ற அழகிய கல் உரல் ஒன்றுண்டு. பல ஞானியரும், யோகியரும், மஞ்சள் அரைத்த உரல்! சதாபிஷேகம் செய்து கொண்ட (80 வயது நிறைந்த) தம்பதியினரும், பெண்களும் ஒன்று கூடி இப்புனித உரலில் தூய மஞ்சளை இட்டு இடித்து, அந்த மஞ்சள் தூளில் நீர் கலந்து நெடுங்களநாதருக்கு அபிஷேகம் செய்து வந்தனர். எனவே நாமும் இத்திருநாளில் அவ்வுரலில் சுத்தமான மஞ்சளை இடித்து (வயது முதிர்ந்த தம்பதிகள், பழுத்த சுமங்கலிப் பெண்கள் மூலம்) ஈசனாம் திருநெடுங்களநாதருக்கு மஞ்சள் நீரால் அபிஷேகம் செய்தல் சிறப்பானதாகும்.
d). இத்தல விருட்சம் வில்வமாக அமைந்துள்ளதால் வில்வக் கனிகளால் (ஓடு, கொட்டை நீக்கிய சதைப்பகுதியால்) அபிஷேகம் செய்தல்..
e.) மாதுளங்கனி முத்துக்களால் லிங்கத் திருமேனி முழுவதும் மறைந்து லிங்கத்தை மூடும் அளவிற்கு அபிஷேகம் செய்தல் – இது மிகவும் விசேஷமிக்கவொரு அபிஷேக முறையாகும். அளப்பரிய பலன்களை அளிக்க வல்லது. குறிப்பாக இதனால் வாராத நெடுநாளைய கடன்கள் எளிதில் வசூலாகும். தரித்திர நிலை நீங்கி லட்சுமியின் அருள்கடாட்சம் பெரும்.
f).  தாமே அரைத்த சந்தனத்தால் சுவாமிக்குக் காப்பு இடுதல், அபிஷேகம் செய்தல்
G) அவரவர் வசதிக்கு ஏற்ப இளநீர், பஞ்சாமிர்தம் போன்ற இதர பல அபிஷேகங்களைச் செய்தலும் சிறப்புடையதே.

ஸ்ரீரெங்க பஞ்சமி அன்று
நகர் திருத்தலத்தில் ஒலித்த
பாஞ்சசன்ய சங்கு நாதம்!

சூரிய பூஜா பலன்கள்
கலியுகத்தில் பலன்களை ஒட்டித் தானே நாம் வழிபாடுகளை மேற்கொள்கின்றோம். தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் மிகப் புனிதமான நாளில் ஸ்ரீசூரிய பகவானோடு சேர்ந்து ஸ்ரீநெடுங்களநாதரைப் பூஜிக்கும் பெரும் பாக்கியம் கிட்டுகின்ற தென்றால் அதன் பலாபலன்களைப் பல புராணங்களாகத் தானே வர்ணிக்க இயலும்! இருப்பினும் தற்போதைய நடைமுறை வாழ்க்கையை ஒட்டிய பலன்களை மட்டும் குறிப்பிடுகின்றோம்.
1. உத்தராயண புண்ணிய காலம் தொடங்குகின்ற தை மாதம், தட்சிணாயனம் தொடங்குகின்ற ஆடி மாதம், வசந்த நவராத்திரி, புரட்டாசி மாத சாரதா நவராத்திரி போன்ற மகத்துவம் வாய்ந்த நாட்களில் அம்பிகையே ஈஸ்வரனைப் பூஜிப்பதால் இந்த விசேஷ தினங்களில் செய்யப்படும் பூஜைகளுக்கு அபரிமிதமான பலன்கள் உண்டு. காரணம் நாமும் அம்பிகையின் புனித பூஜையில் பங்கேற்கின்றோம் அல்லவா!
ஏனைய தலங்களில் அம்பிகை இறைவனை அடைவதற்காகப் பல கடும் தவங்கள் மேற்கொண்டிட இத்தலத்திலோ திருநெடுங்கநாதரே ஈஸ்வரியின் கரங்களைத் தாமே பற்றி அருள்பாலித்தமையால் ஆடிமாதத்தில் ஒப்பிலா நாயகி சுயம்பு லிங்கத்தைத் தினந்தோறும் வழிபடுகின்றாள். எனவே அம்பிகையின் பூஜையோடு ஆதித்யனாம் ஸ்ரீசூரிய பகவானின் வழிபாடும் கூடிட, இவற்றோடு நம்முடைய மானுட பூஜையும் சேர்கின்றதென்றால் என்னே அதன் மஹிமை! நம் பாக்கியம்!
2. காமக் குற்றங்களினால் மனசஞ்சலம் அடைந்து பலவிதமான குற்ற உணர்வுகளுடன் வாழ்கின்றோரும், சிற்றின்பத்திற்காகப் பிறன்மனை நாடி பாவங்களைச் சுமந்திருப்போரும், ஆடி மாதத்தில் இச்சிவத்தலத்தில் கோயில் தூண்கள், தரைப்பகுதி, பிரகாரம் ஆகியவற்றைக் கோயில் குளத்து நீரால் கழுவி சுத்தம் செய்யும் அரிய இறைத் திருப்பணிகளை மேற்கொண்டிட, தக்க பரிகாரங்கள் கிட்டும்.
3. தாயை இழந்தோரும், தாயின் அரவணைப்பின்றி வாழ்ந்தோரும் பலர் உண்டு. இளம் பிராயத்திலேயே தாயை இழந்து அந்நினைவிலேயே வாழ்வோரும், தந்தை செய்த துரோகங்களால் நரகவேதனைகளுக்கு ஆட்பட்ட தாயுடன் துன்பங்களைப் பகிர்ந்து வாழ்ந்தோரும்., பெற்ற தாயை தெய்வமெனத் துதித்து வழிபடுவோரும் உண்டு. பித்ரு ப்ரீதி என்பது போல மாத்ரு ப்ரீதிக்காக, அதவாவது  உத்தம தெய்வீக நிலையில் பித்ரு லோகத்தில் வாழும் தாயின் அருட்கடாட்சத்தைப் பெறவும், அவருடைய ஆன்மா மேன்மேலும் புனிதமான தெய்வீக நிலைகளை அடையவும், தாயின் நினைவோடு இத்திருத்தலத்தில் சாதி, மத, பேதமின்றி செய்யப்படுகின்ற சுமங்கலிகளுக்குரிய தானதர்மங்களும், அன்னதானமும், அளப்பரிய பலன்களைத் தருகின்றன. இதற்குக் காரணம் என்ன தெரியுமா?
காசிக்கு நிகரான இரு விமானங்கள் உள்ள தலம் :
வாரணாசியாம் காசி திருத்தலத்தில் உள்ளது போலவே, இத்திருக்கோயிலில் மட்டுமே அர்த்த மண்டபம், மூலஸ்தானத்தின் மேல் இரு விமான கோபுரங்கள் உள்ளன. இது காணக் கிடைக்காத தரிசனமாகும். பித்ருலோகத்தில் ஆண், பெண் என்ற வேறுபாடுகள் கிடையாதெனினும் தர்ப்பண பூஜைகளில் ஆண்வர்க்கம், பெண்வர்க்கம் என நமக்குப் புரியும் வகையில் ஆத்ம தர்ப்பண பூஜைகளைச் செய்கின்றோம் அல்லவா?
இவ்விரண்டு விமானங்களிலும் எப்போதும் பித்ரு தேவர்கள் வந்து உறைகின்றனர். குறிப்பாக அமாவாசை, மாளயபட்சம், மாதப்பிறப்பு போன்ற விசேஷமான நாட்களில் சகல கோடி அண்டங்களிலும் உள்ள கோடிக்கணக்கான பித்ரு தேவர்கள் இவ்விரு விமானங்களிலும் கூடுவதால் ஆடி முதல் தேதியாம் தட்சிணாயன மாதப் பிறப்பன்று இத்தலத்தில் செய்யப்படுகின்ற புனிதமான பித்ரு தர்ப்பணங்களுக்குப் பன்மடங்கு பலன் உண்டு. இவ்விருவிமானங்களில் இருந்து பித்ரு தேவர்களே நேரடியாகத் தர்ப்பணங்களை ஏற்பதால் ஆடி மாத, தைமாதப் பிறப்பு தர்ப்பணங்களுக்கு அதிக மகத்துவம் உண்டு. தாயைத் தெய்வமாக மதிப்போர்க்கு அவ்வம்மையே இவ்விமானங்களில் ஆவாஹனமாகி நேரில் சூட்சுமமாக ஆசியை வழங்கின்றாள். எனவே இங்கு எண்பது வயது நிறைந்த தம்பதியருக்குப் பாதபூஜை செய்து, அவர்களுக்குத் தேவையான பல உதவிகளையும், தானதர்மங்களையும் செய்வது தாயின் பரிபூரண ஆசியைப் பெற்றுத் தரும்.

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருநெடுங்களம்

4. உறவினர்களின், நண்பர்களின் துரோகத்தால் சொத்துகளை இழந்து பலர் மிகவும் அவதியுறுகின்றனர். வீடுகளையும், வயல்களையும் பிறரிடம் இழந்து இன்றும் பலர் அவதியுறுகின்றனர். பெருந் தொகையைக் கடனளித்து வசூலாகாமல் நஷ்டப்படுவோரும் உண்டு. இவர்கள் ஆடிமாத சூரியபூஜையில் திருஞானசம்பந்தருடைய ‘இடர்களையும் பதிகம்’ என்ற பகுதியின் பதினோரு பாடல்களையும் ஆத்மார்த்தமாக ஓதி நீர்மோர் தானம், அன்னதானம் , வஸ்திர தானம் என ஏழை எளியோர்க்கு அளித்திடல் வேண்டும்.. இவர்கள் தினந்தோறும் ஈசனாம் திருநெடுங்களநாதரின் சன்னதியில் திருஞானசம்பந்தர் அருளிய இடர்களையும் பதிகத்தினை வெட்கம் பாராது, உரத்த குரலில் முழுமையாக ஒதி, மனம் விட்டுக் கதறி அழுது வேண்டினால் நியாயமாக வந்து சேர வேண்டிய சொத்து, கடன் பாக்கி போன்றவை வந்து சேரும்.. ஆனால் அவ்வாறு திரும்பி வரும் தொகையில் ஒரு கணிசமான பகுதியைத் திருநெடுங்களநாதர் திருக்கோயிற்பணிகளுக்குச் செலவிடத் தயாராக இருக்க வேண்டும்.
இத்திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள தட்சிணாமூர்த்தி மிக விசேஷமானவர். இடது காலை மடித்து யோகாசனத்தில் அமர்ந்து, கால்களிடையே யோகப்பட்டை தாங்கி வஜ்ர ஸ்தம்ப யோகநிலையில் அருள்பாலிக்கின்றார். இவர் யோக தான நிலைகளில் உன்னத சிறப்புப் பெற விரும்புவோர்க்கு அருள்பாலிக்க வல்லவர். இங்குள்ள நவக்கிரகங்களில் எட்டு கிரக மூர்த்திகளும் மேற்கு நோக்கி, ஸ்ரீசாயா ஸ்வர்சலாம்பா தேவியுடன் எழுந்தருளியிருக்கும் சூரிய பகவானை நோக்கியவாறு அமைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். சூரிய கிரகத்தை நோக்கி ஏனைய கிரகங்கள் அமைந்துள்ளதன் காரணம்?
லிங்கத் திருமேனியைத் தழுவி பூஜை செய்து சூரிய பகவான் பெறுகின்ற மகத்தான தெய்வீக சக்தியை தாங்களும் பெற்று, தங்களை வணங்கும் ஜீவன்களுக்கும் அளித்திடவே இவ்வரிய ஆத்ம பிரதிஷ்டை அமைந்துள்ளது. ஸ்ரீவரதராஜ பெருமாள், பூதேவி ஸ்ரீதேவியுடன் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது இத்திருத்தலத்தின் மகிமையைக் கூட்டுகின்றது. தேவியர் இருவருமே அமர்ந்த கோலத்தில் இருப்பதன் தாத்பர்யம் என்னவெனில் தாம்பத்ய உறவில் உள்ள விரிசல்கள் நீங்கி கணவன், மனைவி ஒற்றுமையுடன் வாழ, இத்தலத்தில்  திருமணமாகியுள்ள ஏழை தம்பதிகளுக்கு (ஏழ்மை காரணமாக மஞ்சள் தாலிச்சரடை மட்டும் அணிந்துள்ளோருக்கு) பொன்னாலான மாங்கல்யத்தைத் தானமாக அளித்து அதனைப் புது தாலிச் சரடில் கோர்த்து அணியச் செய்யும் மங்களகரமான வைபவத்தை ஸ்ரீவரதராஜ பெருமாள் சந்நிதியில் நிகழ்த்திடில் பிரிந்த கணவன் மனைவியர் ஒன்று சேருவர், மேலும் பழைமை காரணமாகக் கல், மண் விரவிக் கிடக்கும் ஸ்ரீவரதராஜ பெருமாள் திருச்சந்நிதியைச் சீரமைத்துத் தந்திடில் குடும்ப ஒற்றுமையும், சந்ததியும் நன்கு தழைத்திட நல்வரங்களை பெருமாள் அளித்து மகிழ்ந்திடுவார்.. இத்திருக்கோயிலில் உறைகின்ற அனைத்துத் தெய்வ மூர்த்திகளுமே கலியுகத்தின் பிரத்யட்ச தெய்வ மூர்த்திகள் ஆவர்.!
திருநெடுங்களம் :- திருச்சி – தஞ்சாவூர் சாலையில் துவாக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மேல மாங்காவனம், சுரக்குடிப்பட்டி செல்லும் பேருந்துகள் மூலமாகவும் செல்லலாம். துவாக்குடி பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி திருநெடுங்களம் செல்ல பஸ் வசதி உண்டு... ஆடிமாத சூரிய பூஜைக்கு முன்னதாகவே கோயிலில் பூஜைக்கு உரிய ஏற்பாடுகளைச் செய்தல் நலம்.

ஸ்ரீபஞ்சவர்ணேஸ்வரர்
திருநல்லூர்

ஆடியில் அருணை கிரிவலம் தேடித் தரும் நல்வரங்கள்
திருஅண்ணாமலையில் ஸ்ரீசூரியபகவான் மலையின் குறுக்கே செல்லாது சுற்றிச் செல்கின்ற அற்புதத்தைப் பலரும் நன்கு அறிவர். எத்தனையோ தெய்வ மூர்த்திகள் அருணாசலத்தைத் தொழுது கிரிவலம் வந்து ஜீவன்களுக்கு அருள்பாலிப்பதற்கென்றே அரிய பல நல்வரங்களைச் சர்வேஸ்வரனாம் அண்ணாமலையாரிடம் பெற்று மகிழ்ந்துள்ளனர். தட்சிணாயனம் எனப்படும் ஆடி முதல் மார்கழி வரையிலான ஆறுமாத அயன காலத்தின் போது, ஆடியில் தான் சூரியன் தன்னுடைய பாதையை மாற்றிக் கொள்கின்றார். தினமும் சூரியன் அருணாசலத்தைச் சுற்றுகின்ற பாதையைக் கவனித்து வருபவர்கள் இங்கு சூர்யனின் தட்சிணாயனப் பாதை மாற்றத்தை நன்கு உணரலாம். தட்சிணாயனப் பாதை மாற்றத்திற்கு முன் சூரிய பகவான் பூலோகத் திருத்தலங்களில் இதற்கான விசேஷமான தெய்வீக சக்தியைப் பெற்று வருகிறார். மேலும் சூரியனுடைய கிரணங்களைப் பூலோக ஜீவன்கள் நேரிடையாகப் பெற்று உய்க்கும் அளவிற்கான ஆன்மீக சக்தியையோ, தேக பலத்தையோ பெற்றிருக்கவில்லை. எனவே தான் இடையேயுள்ள வாயு மண்டலங்களும், நட்சத்திர மண்டலங்களும், மரம் செடி கொடிகளிலிருந்து எழும் சாகம்பர கதிர்களும் சூரிய கிரணங்களின் தன்மையை நமக்கு ஏற்றாற்போல் மாற்றித் தருகின்றன. அரசு, ஆல், வேம்பு, வாழை, வில்வம், மின் இலை (ஒரு வகை மூலிகை மரம்) போன்ற விருட்சங்கள் சூரிய கிரணங்களின் அபரிமிதமான ஒளிச் சக்தியை ஜீவாதாரத்திற்கு ஏற்றாற்போல் மாற்றும் தன்மையைப் பெற்றுள்ளன.

திருஅண்ணாமலை மகாத்மியம்

மலையில் நிகழும் விந்தைகள்
கடந்த ஐந்து வருடங்களாக திருஅண்ணாமலையின் மஹிமையைப் பற்றி சித்புருஷர்கள் அருளியுள்ளவற்றுள் ஓர் அணுவிற்குள் அணுவாக, இறையருளால் நம் “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ்வழி எடுத்தியம்பி வந்துள்ளோம். தேவாதி தேவர்களின், தெய்வ மூர்த்திகளின் புனித அருட்பரவலாக, அருணாசல கிரிவல மஹிமை அமைந்துள்ளது. தட்சிணாயனம் துவங்கும் ஆடிமாதம் முதல் திருஅண்ணாமலையில் புதுவிதமான மூலிகை ஒளிகிரணங்களைக் கக்கும் இரத்தினப் பாறைகளும், அண்ட சராசரப் பகுதியைத் தன்னுள் அடக்கியிருக்கும் அண்ணாமலையின் மேல் பல லோகப் பாறைகளின், தெய்வீக நீரோடைகளின் நீர்க் கசிவுகளும் உண்டாகின்றன., மேலும் திருமீயச்சூர், திருநெடுங்களம் போன்ற திருத்தலங்களில் லிங்கத் திருமேனியைத் தழுவி நன்கு பூஜித்து விசேஷமான அக்னி சக்தியைத் தன் சூரிய மண்டலத்திற்குள் கொணரும் சூரிய பகவான் அவற்றைப் பூலோகம் மட்டுமின்றி, ஏனைய லோகங்களின் தட்பவெப்ப நிலைகளுக்கேற்றவாறு தன் கிரணங்களின் சக்தியையும், வெப்பத்தையும் மாற்றுவதற்கான இறைசக்தியைப் பெறுவது அக்னித் தலமான திருஅண்ணாமலையில்தான். கடந்த பல ‘ஸ்ரீஅகஸ்திய விஜயம்’ இதழ்களில் விளக்கியுள்ளபடி மின்னல், நட்சத்திரம், தீப்பொறி, மின்மினிப் பூச்சி, விறகு அக்னி, ரசாயனவாயு அக்னி (gas), மின்சார ஒளி, தீபப்பிரகாசம் பல்வேறு லோகங்களிலுமுள்ள பல விதமான அக்னி, ஒளி வகைகளுக்கும் மூலாதாரமாக இருப்பது அக்னி க்ஷேத்திரமான திருஅண்ணாமலையே!
பிரளயங்களிலும் நீர்ப் பிரளயம், ஒலிப்பிரளயம், அக்னிப் பிரளயம் என பலவிதமான பிரளயங்கள் உண்டு. இவ்வாறான அக்னிப் பிரளய யோக சக்தியில் உன்னதம் பெற்ற மஹான்களில் ஸ்ரீகுருநமசிவாயரும் ஒருவராவர். அருணை தந்த அற்புத சித்புருஷரான குருநமசிவாயர், தம் குருவருளாலும், திருவருளாலும் புரிந்த அக்னி லீலைகள் எத்தனையெத்தனை? தைமாதம் முதல் பங்குனி வரை பல லிங்கத் திருமேனிகளை ஸ்பரிசித்து, பூஜித்துப் பலவிதமான அபூர்வமான அக்னிசக்திகளைப் பெற்றுத் தன் சூர்ய மண்டலத்தில் ஏற்று, அக்னித் தலமான திருஅண்ணாமலையில் உள்ள தெய்வீக விருட்சங்களின் மஹிமையால் அவ்வக்னிப் பிரக்ருதி சக்திகளை அந்தந்த லோகத்திற்கேற்றவாறு கிரணங்களின் தன்மையையும் மாற்றி அளிக்கின்றார் ஸ்ரீசூரிய பகவான்.

ஸ்ரீபிரளயம் காத்த விநாயகர்
திருபுறம்பியம்

திருஅண்ணாமலையில் ஆடி முதல் தட்சிணாயனப் பிரவாக மூலிகைகள் உருவாகின்றன. சேலம் அருகே பச்சைமலையில் ‘பிரம்மதண்டு’ என்ற தெய்வீக சக்தி மிகுந்த வண்டினங்கள் உண்டு! சிவப்பு நிறத் தலையுடன் கறுஞ்சிவப்பு நிற உடலையும் கொண்டது! புறா, கருடன் போல் அடிக்கடி பிரம்மலோகம் சென்று வரும் ஆற்றல் உடையது. ஸ்ரீபிரம்ம தேவரின் திருக்காதுகளில் எப்போதும் வேதங்கள் ரீங்காரமிடும் வண்டினமிது! பிருங்கி முனிவர் இந்தப் ‘பிரம்ம தண்டு’ வண்டு வடிவில்தான் சிவபெருமானை மட்டும் வலம் வந்தார். சிருஷ்டியின் போது “கிராதமூர்த்தியாய்” அவதாரம் பெறும் சர்வேஸ்வரன் ஸ்ரீமஹாலக்ஷ்மி, காமதேனுப் பசு, பிரம்ம தண்டு வண்டு, கனக புஷ்பராகக்கல், வாழை, தேன், ஐம்பொன் போன்ற பல பொருட்களையும், தெய்வமூர்த்திகளையும் கொண்டுதான் சிருஷ்டியைத் தொடங்குகின்றார். பிரம்ம லோகத்தில் பல வண்ணக் கற்களும் பாறைகளுமுண்டு.
ஸ்ரீபிரம்மா தாவரங்களைச் சிருஷ்டிக்கையில் பச்சை நிறப் பாறைகளில் ‘விருட்ச பூர்வ யோகத்தில்’ அமர்ந்து சர்வேஸ்வரனைப் பிரார்த்தனை செய்வார். அவற்றில் ஒன்றை பிரம்ம தண்டு வண்டினங்கள் பிரம்ம லோகத்தில் இருந்து பெயர்த்தெடுத்துப் பூலோகத்திற்குக் கொண்டு வந்து அதில் வசிக்கலாயின! காரணம் என்ன? வண்டினங்கள் தேனைச் சார்ந்து வாழ்பவை! தாவரங்களின்றித் தேன் ஏது? பூலோகத்தில் அடிக்கடிப் பஞ்சமும், வறட்சியும் ஏற்பட்டு தாவரங்கள் காய்ந்தமையால் வண்டினங்களின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்தது. வண்டினங்களுக்கு அதிபதியே பிரம்ம தண்டு வண்டாதலின் வண்டினங்கள் ஒன்று கூடி தாம் சேகரித்த தேனினால் ஒரு விநாயகரை வடித்து வழிபட்டிட அவரே வண்டினங்களுக்குப் பிரம்ம லோகத்திலிருந்து “பச்சைக் கற்பாறை” ஒன்றைப் பெயர்த்து எடுத்து வருவதற்கான ஆற்றலை அளித்திட்டார். இவ்வாறு பூலோகத்திற்கு வந்ததே பச்சை மலையாகும். பூலோகத்தில் பச்சைமலை நிலைக்கும் வரை இங்கு தாவரங்கள் விருத்தியடையும். இவ்வண்டினங்களின் மேன்மைக்காகவே பிருங்கி முனிவர் கும்பகோணம் அருகிலுள்ள திருநல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் சிவத்தலத்தில் ஓயாது உறங்காது உண்ணாது பலகோடி யுகங்கள் ஸ்வயம்பு மேனியைச் சுற்றியவாறே அருந்தவம் புரிந்தார். இன்றும் இத்திருத்தல மூலஸ்தான சிவலிங்கத்தில் வண்டு துளையிட்டாற்போல் துவாரங்கள் உள்ளதைக் காணலாம். இவ்வாறு பிரம்ம தண்டு வண்டுகள் தேனிற் குழைத்த விநாயகரே கும்பகோணம் அருகில் திருப்புறம்பியம் சிவாலயத்தில் உள்ள ‘பிரளயம் காத்த விநாயகர்’ ஆவார்.  

ஸ்ரீபிருங்கி முனிவர்

வண்டின் தொண்டு
பிரம்ம தண்டு வண்டுகள் வேதங்களையே ரீங்காரமிடுவதால் விநாயகர் மிக மகிழ்ந்து அவற்றிற்குப் பல அரிய தெய்வீக சக்திகளை அளித்தார். இவ்வண்டுகள் ஆடி முதல் மார்கழி வரையிலுள்ள தட்சிணாயனப் புண்ய காலத்தில் மட்டுமே பூலோகத்தில் ஜீவிக்கும். அடுத்த ஆறுமாத காலத்தில் (உத்தராயணம்) பிரம்ம லோகத்திற்குச் சென்றுவிடும். பிரம்ம தண்டு வண்டுகள் தாங்கள் ஜீவிக்கின்ற நாட்களில் ஸ்ரீபிரம்மா பிரதிஷ்டை செய்த, பூஜித்த தலங்களில் பல அரிய இறைப் பணிகளை ஆற்றுகின்றன. திருஅண்ணாமலையில் ‘அணி அண்ணாமலை’ எனப்படுகின்ற அடிஅண்ணாமலை திருக்கோயில் ஸ்ரீபிரம்ம தேவரால் கட்டப்பட்டது அன்றோ! தட்சிணாயனப் புண்ய காலத்தில் ஸ்ரீபிரம்மா இங்கு சுயம்பு லிங்க மூர்த்திக்குப் பிரதிஷ்டா பூஜைகள் நிகழ்த்துகையில், அவரை ஸ்ரீஅருணாசலேஸ்வரரே காட்சியளித்து ஆட்கொண்டார். இப்பகுதியில் “சிறுத்தை நகப்பாறை” என்ற அதிஅற்புத சக்தி வாய்ந்த பாறை ஒன்றுண்டு! பலகோடி மின்னல்களைக் கூட்டி வைத்தாற்போல் ஒளிவிடும் பாறை! சற்றே பச்சை நிறமுடையது! ஆடி மாதம் இங்கு வருகின்ற பிரம்ம தண்டு வண்டுகள், பச்சை மலையிலிருந்து, “மஹா ஜீவ கற்ப விருட்ச மூலிகை” என்றும் ஓர் அரிய மூலிகையின் வித்தினை எடுத்து வருகின்றன. கடுகைப் போன்ற சிறிய அளவிலுள்ள அவ்விதையினை எடுத்து வரும் வண்டுகள், புனிதமிக்க திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அடிஅண்ணாமலை திருக்கோயிலில் திருஅண்ணாமலையாரை வணங்கி ஆடிமாதப் பௌர்ணமிக்கு முன் “சிறுத்தை நகப்பாறையில்” உள்ள குழியில் கற்ப விருட்ச விதையினை இடுகின்றன. ஆடி முதல்தேதி தட்சிணாயனப் பாதையில் ஸ்ரீசூரிய பகவான் செல்கையில் பூமியின் நீரோட்டத் திசைகளும் மாறுபடுகின்றன. திருஅண்ணாமலையிலும் மலைமேல் குறிப்பாக “நந்திதரிசனப்“ பகுதியில் (அடிஅண்ணாமலை கோயிலிலிருந்து கிட்டுவது) நீரோட்ட மாறுபாடுகளினால் பாறைகளில் நீர்க்கசிவு ஏற்படுகிறது. “சிறுத்தை நகப் பாறையில்” ‘மிருகண்டு தீர்த்தக்’ கசிவு ஏற்பட்டு அதன் மேலுள்ள குழியான ‘ப்ரகாச துவாரக்’ குழி அமிர்த நீரால் நிரம்பி அதில் பிரம்ம தண்ட வண்டுகளிட்ட “ஜீவ கற்ப வித்து” முளைக்கத் தொடங்குகிறது. ஆடிப் பௌர்ணமியில் மூன்று இலைகளுடன் வெளிர் பச்சைத் தண்டுடன் வளர்கின்றது. ஈரேழு உலகங்களிலும் காணக் கிட்டாத தெய்வீக விருட்சம்! இது வெளிவிடுகின்ற கிரணங்களை உண்டு ஜீவிக்கின்ற ஜீவ அணுக்கள் கோடி கோடியாகும்.! எவ்வாறு மானுடர்கள் துளஸியைப் பூஜிக்கின்றார்களோ அதே போல் தேவாதி தேவர்களும், 27 நட்சத்திர தேவியரும் இந்த மஹா ஜீவ கற்ப விருட்சத்திற்குப் பூஜை செய்கின்றனர். சர்வ லோகங்களிலும் உள்ள புண்ய தீர்த்தங்களையும், புஷ்பங்களையும் கொணர்ந்து விசேஷ பூஜைகளைச் செய்து ஆனந்திக்கின்றனர்.
ஈஸ்வர வருட்த்தின் சிறப்பம்சங்கள் பற்றிய பல விளக்கங்களை கடந்த சில இதழ்களில் அளித்துள்ளோம். தெய்வீகத்தில் நாம் முன்னேறுவதற்கான வாய்ப்புகளைத் தானே தருவது ஈஸ்வர ஆண்டின் சிறப்பம்சமல்லவா! இந்த ஈஸ்வர ஆண்டில், தட்சிணாயனம் தொடங்கும் ஆடி மாதத்தில், குறிப்பாக “மஹா ஜீவ கற்ப விருட்சம்” முகிழ்த்தெழுகின்ற ஆடிப் பௌர்ணமி அன்று (20.7.1997) திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்திடில் மஹா ஜீவ கற்ப விருட்சத்தின்,
1. ஒளிக்கிரணங்களின் சக்தி நம்மை அடைவதால் பிரம்ம நிலை எனப்படும் உத்தம நிலைகளைக் குரு மூலம் அடைகின்ற நல்வாய்ப்புகள் கிட்டும். ஆனால் வருகின்ற இறைப்பணி  வாய்ப்புகளை நழுவ விட்டு விடலாகாது. பிரம்ம நிலை என்பது ஆண், பெண் தாவர, மிருகம் என்ற பேதமின்றி அனைத்தையும் ஒன்றாகப் பார்க்கின்ற உயர்ந்த நிலை!
2. இதன் சுகந்த தெய்வீக மணம் நம் நாசியை அடைவதால் மனக் களங்கங்கள் அகல்கின்றன. இரத்த சுத்தி ஏற்படுகின்றது. ஆங்கில மருந்துகளையே உட்கொண்டு இரசாயனக் கூடமாகவே மாறிவிட்ட நம் உடலுக்கு இயற்கை சக்தியை, ஆன்மீக அம்சங்களுடன்  கூட்டி அளிப்பவையே கிரிவலத்தில் நாம் பெறும் மூலிகைக் காற்றும், தீர்த்த நல்ரேகைகளும், மலைமீதுள்ள அற்புதமான தெய்வீகக் கற்களின் ஆகர்ஷ்ண சக்தியுமாகும். இது மட்டுமா?
மஹா ஜீவ கற்ப விருட்சத்தைப் பூஜிக்கின்ற தேவாதி தேவர்களின், நட்சத்திர தேவியரின் பூஜா சக்தியும் அவர்கள் கொணர்கின்ற சர்வலோக தீர்த்தங்கள், தேவலோக புஷ்பங்களின் சக்தியும் நமக்கு அளிக்கின்ற இறைசக்தியின் உன்னத மஹிமையோ சொல், பொருளுக்கு அப்பாற்பட்டதாகும். இது வெறும் வர்ணனையன்று! ஆழ்ந்த நம்பிக்கையுடன், உத்தம பக்தியுடன், ஆடிப் பௌர்ணமியில் கிரிவலம் வருவோர்க்குக் கிட்டுகின்ற தெய்வீக அற்புதங்களிவை. லௌகீகப் பிரார்த்தனைகளுடன், அதாவது நம் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான முறையான வாழ்க்கை வசதிகளை, பலாபலன்களை வேண்டி ஆடிப்பௌர்ணமியில் அண்ணாமலையைக் கிரிவலம் வருவோர் தேடிப் பெறுகின்ற நல்வரங்கள் யாதோ?

ஸ்ரீஆக்ஞா கணபதி
பட்டீஸ்வரம்

1. அனைத்துத் துறைகளைச் சார்ந்த பொறுப்பான உயர்பதவியிலிருப்போர் (எக்ஸிக்யூடிவ்ஸ், IAS, IPS, IFS, MDS, GMS, etc…) நன்னிலை பெறவும்.
2. இல்லறப் பெண்கள் மன அமைதி பெற்று, குடும்ப வாழ்க்கைதனை நடத்தவும்.
3. இளைஞர்கள்/கன்னிப் பெண்கள், எவ்விதத் தீய பழக்கங்களுக்கும் ஆளாகாது நல்ல உத்யோகங்களைப் பெற்று நன்முறையில் திருமண வாழ்க்கையைப் பெறவும்.
4. சாதாரண குடும்பத்தினரும், ஏழ்மை நிலையில் இருப்போரும் எவ்வித புதிய துன்பங்களுக்கும் ஆளாகாமல், மனப் போரட்டங்களின்றி குடும்ப வாழ்க்கையைச் சுமுகமாக நடத்திச் செல்லவும், ஆடிப்பௌர்ணமியில் கிட்டுகின்ற மஹா ஜீவகற்ப விருட்சத்தின் தெய்வீக சூட்சுமக் கதிர்கள் பெரிதும் உதவுகின்றன, நற்றுணை புரிகின்றன.
சிகண்டி யோகியரின் தட்சிணாயன பூஜை
சிகண்டிபல யோகிகள் என்னும் உத்தம யோகிகள் இமயமலையின் குபேர திக்கிலிருந்து (வடமேற்கு திசை) பிரபஞ்சத்தின் பல லோகங்களிலும் சஞ்சரிக்கும் வல்லமை பெற்றோராவர். இவர்கட்குக் கால வர்த்தமான யோகிகள் என்ற பெயரும் உண்டு. அதாவது அந்தந்த பட்சம் (15 நாட்கள்), மாதம், மண்டலம் (48 நாட்கள்), ருது (60 நாட்கள்), அயனம் (180 நாட்கள்) – காலத்திற்கு உரிய புனிதமான இடங்களைத் தேர்ந்தெடுத்து அங்கு அற்புதமான யோக வழிபாடுகளை மேற்கொண்டு அந்தப் பலன்களை, அந்தந்த தலத்திற்குத் தரிசனம் செய்ய வருவோர்க்கு அர்ப்பணித்துத் தாரை வார்க்கின்றனர். ஆன்மீகத்தில் இது மிகச் சிறந்த தியாகச் செயலாகும். சிகண்டிபல யோகிகள் இமயமலையில் சக்தி வாய்ந்த மூலிகைகளின் ஊடே சுவாச பந்தனம் செய்து அரிய உத்தம யோக நிலைகளில் கரை கண்டவராவர். ஆனால் மூலிகை சக்தி நிறைந்த இமயமலையில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் புரிந்தும் தட்சிணாயன புண்ணிய காலத்தின் போது பிரபஞ்சத்திலேயே மஹா ஜீவ கல்ப விருட்ச மூலிகை கிட்டுகின்ற ஒரே ஸ்தலமான திருஅண்ணாமலைக்குத் தான் ஆடிமாதப் பௌர்ணமி தினத்தில் வந்து சேர்கின்றனர். ஜீவகல்ப மூலிகையின் மகத்தான சக்தியானது ஆடிமாதப் பௌர்ணமி திதி முழுவதும் பரவெளியில் வியாபித்து இருப்பதால், அன்றைய தினம் திருஅண்ணாமலையினைக் கிரிவலம் வரும் அனைவரும் அதன் பலனைப் பெற்று அனுபவித்திடலாம். அதிஅற்புதமான சக்தி வாய்ந்த அம் மூலிகையின் மருத்துவ மற்றும் ஆன்மீகப் பயன்களை அனைவரும் பெற்றுப் பயனடையும் பொருட்டு, சிகண்டி பல யோகிகளே அவற்றை ஏற்று வாயு மண்டலத்தில் செலுத்தி, எங்கும் பரவச் செய்யும் அற்புத இறைப்பணியை ஆற்றுகின்றனர். 27 நட்சத்திர தேவியருக்கும் அதிபதியாக பஞ்சமுக நட்சத்திர தேவ மூர்த்திகள் உள்ளனர்.

ஸ்ரீபசுபதீஸ்வரர்
ஆவூர் கும்பகோணம்

சந்திர பூஷன், சிந்த்ய ரூபன், பவித்ர மூர்த்தி, சுகதேவ மூர்த்தி, பஞ்சவான்யர் என்ற ஐந்து வித பஞ்சமுக நட்சத்திர தேவ மூர்த்திகளே ஸ்ரீஅகஸ்திய கிரந்தங்களில் நிலவன், ரீங்காணன், பலவிந்தன், சுகபுருஷன், பஞ்சவானன் என்று அழைக்கப்பெறுகின்றனர். பொதுவாக இவர்கள் பழங்கால ஆலயங்களின் ராஜ கோபுரத்தில் வீற்றிருப்பர். இவர்களுடைய நட்சத்திர மண்டலங்கள் சாதாரண லோகங்களுக்கு எட்டாத நிலையில் அமைந்து இருக்கும். தட்சிணாயன காலங்களில் மட்டும் வெளிப்படும் இந்நட்சத்திர தேவமூர்த்திகள் அக்னி ஸ்தலங்களில் மட்டுமே தங்கியிருந்து தங்கள் தேவ பூஜைகளை நிறைவேற்றுவர். இவர்கள் ஆடிப் பௌர்ணமியில் மஹா ஜீவ கல்ப விருட்சத்திற்கு, துளசிச் செடிக்கான பூஜை போன்று விசேஷ பூஜைகளை நிகழ்த்திச் செல்கின்றனர். தேஜோமயமான திருமேனிகளைப் பூண்ட இவர்கள் தரிசனமே காணுதற்கரியதாகும். சிருஷ்டியின் போது ஸ்ரீகிராத மூர்த்தி தம் வலதுகண் (சூரியன்), இடதுகண் (சந்திரன்), நெற்றிக்கண் (சாத்வீக திருஷ்டி) ஆகிய மூன்றையும் சேர்த்து திரிநேத்ரதாரியாகப் பார்வையைச் செலுத்துகையில் இவ்வைந்து தேவ மூர்த்திகளும் தோன்றுகின்றனர். ஈஸ்வர ஆண்டின் ஆடிப் பௌர்ணமியில் இவர்கள் அக்னி ஸ்தலமான அருணாசலத்தில் கல்ப விருட்சத்திற்குப் பூஜைகள் நிகழ்த்திச் செல்வது நம் பெரும் பாக்கியமே! தாவரங்கள், மனிதர்கள், விலங்குகள் உள்ளிட்ட அனைத்து ஜீவன்களுமே இவ்வைந்து பஞ்சமகா நட்சத்திர மூர்த்திகளின் பரிபாலனத்துக்கு உட்படுவதால், இவர்களுடைய தேஜோ மயமான ஒளிக்கிரணங்களின் சக்தியானது, நம் உடலைத் தழுவும் பொருட்டேனும் ஆடிப் பௌர்ணமியன்று திருஅண்ணாமலையினைக் கிரிவலம் வருதல் வேண்டும். அறுபது ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கிட்டும் அரிய பாக்கியமன்றோ!
அடியார்:- சற்குருதேவா! ஆடிப் பௌர்ணமியன்று அனைவராலும் திருஅண்ணாமலையினைக் கிரிவலம் வருதல் இயலுமா? தார்மீகக் காரணங்களால் வர இயலாதோர்க்கு நல்வழி காட்ட வேண்டுகின்றோம்.
சற்குரு : கலியுகத்தில் எதற்கெடுத்தாலும் மாற்றுவழி (substitute) கேட்பதே வழக்கமாகி விட்டது. அருணாசல கிரிவலத்திற்கு ஈடு இணையாயிருப்பது அருணாசல கிரிவலமே. நொடிக்கு நொடி கிரிவலப் பலன்கள் இங்கு மாறிக்கொண்டே இருக்கும். எனினும், முறையான காரணங்களால் ஆடிப் பௌர்ணமியன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வர இயலாதோர் பன்னெடுங்காலமாக வழக்கில் உள்ள பஞ்சதட்சிணாயன யாத்திரா ஸ்தலங்களான
1. திருநல்லூர்
2. திருவலஞ்சுழி
3. திருச்சத்தி முற்றம்
4. பட்டீஸ்வரம்
5, ஆவூர் (பசுபதீஸ்வரம்)
ஆகிய (கும்பகோணம் அருகே உள்ள) ஐந்து திருத்தலங்களையும் தட்சிணாயனப் புண்ணிய காலம் தொடங்கும் ஆடி முதல் தேதியன்றோ அல்லது ஆடிப் பௌர்ணமி தினத்தன்றோ ஒரே நாளில் தரிசித்து இவ்வைந்து இடங்களிலும்,
1. தர்ப்பண பூஜைகள், பித்ரு ஹோமம்
2. அன்னதானம்
3. தல விருட்சங்களுக்கான பூஜை
4. பெரியோர்களுக்கான பாத பூஜை
5. ஏழை, எளியோர்க்கு ஸ்வர்ண (பொன்) தானம்
ஆகியவற்றை அவரவர் வசதிக்குத் தகுந்தவாறு செய்ய வேண்டும். இவ்வாறு சொல்வதால் இதுவே அருணாசல கிரிவலத்துக்கு ஈடானது எனப் பொருள் கொள்ளலாகாது. தட்சிணாயனப் பூஜை முறைகளில் இதுவும் ஒன்றாகும்.

தட்சிணாயனம்

தட்சிணாயன புண்ணிய காலம்

ஸ்ரீகபர்தீஸ்வரர்
திருவலஞ்சுழி

ஜாதி, மத பேதமின்றி அனைவருமே தட்சிணாயனப் புண்ணிய கால பூஜைதனை செய்து அரிய பலாபலன்களைப் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் மிகவும் எளிய வழிபாட்டு முறைகள் அளிக்கப்படுகின்றன. வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ செய்த தவறுகளுக்கு எளிய பிராயச்சித்த முறைகளை “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” மூலம் அளித்து வருகின்றோம். பரிகாரமெனில் ஒரு முறை மட்டுமே. பரிகாரத்துக்குப் பின்னும் மீண்டும் தவறுகள் செய்தால் சாபங்களும், வேதனைகளும், பாவங்களுமே பல்கிப் பெருகும். “தர்ப்பணம், புண்ணிய காலம், தட்சிணாயனம் போன்ற வார்த்தைகள் எல்லாம் நமக்குப் புதியவை. இதற்கும் நமக்கும் சமபந்தமில்லை. தெரியாதவற்றைச் செய்து ஏன் குழப்பமடைய வேண்டும்?” என்று தயவு செய்து எண்ணி விடாதீர்கள்! ஸ்ரீகாயத்ரீ மந்திரம், தர்ப்பண மந்திரம் போன்ற அனைத்தும் அனைவருக்கும் உரித்தானவையே. சாதாரணமாக நாம் கருதுகின்ற தாவரத்திற்கு, புழுக்களுக்கும் கூட இவை உண்டு. ஏன், நம் மூதாதையர் கூட தாவரமாகவோ, விலங்காகவோ பிறப்பெடுத்திருக்கலாமே! நம் புராணங்களை நோக்கிடில் புனுகுப் பூனை, கழுகு, சிலந்தி, நண்டு, மான், யானை, முயல் , வண்டு, எறும்பு போன்ற பல ஜீவன்களும் இறைவனை வழிபட்டு மிக எளிதில் முக்தி அடைந்துள்ளனவே! எனவே எப்பிறவியும் இழிந்ததென்று எண்ண வேண்டாம். மனிதர்களிடையேயும் வேற்றுமை காணுதல் கூடாது.
பெற்றோர்களின் குற்றம்
மிருகங்களை விடவும், தாவர ஜீவன்களை விடவும் மனிதர்களாகிய நாம் தான் பேராசை, கோபம், காமம், சுயநலம் காரணமாக எண்ணற்ற பாவச் செயல்களைப் புரிந்து வருகின்றோம். நாம் அறிந்து செய்கின்ற தீவினைகள் எத்தனை, எத்தனை! புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற பாவச் செயல்கள் மிகவும் சாதாரணமாகி விட்டன. இவற்றிற்கெல்லாம் என்று பரிகாரம் தேடுவது! ஐந்து மாதக் குழந்தையைத் தோளில் தூக்கி கொண்டு, மிகவும் சர்வசாதாரணமாகப் புகை பிடிக்கின்ற அறிவிலிகள் எத்தனைபேர் உண்டு! தீயொழுக்கம் கூடிய தந்தையோ, தன் மகளோ, மகனோ நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று மிகவும் எதிர்பார்க்கின்றார். இது எவ்வகையில் நியாயமாகும்?

பட்டீஸ்வரம்

மக்களை நல்வழிப்படுத்தவே இறைவனால் விசேஷமான பண்டிகை தினங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இந்நாட்களில் தெய்வீக சக்தி மிகுந்திருப்பதால், இந்நாட்களில் செய்யப்படும் தான தருமங்களுக்கும், வழிபாடுகளுக்கும் பலாபலன்கள் பல்கிப் பெருகுவதால் இக்கூடுதல் புண்ணிய சக்தி மூலம் நம் பாவங்களுக்குப் பிராயச்சித்தம் கண்டிடலாம். இவ்வகையில் அமைகின்ற தட்சிணாயனப் புண்ணிய காலமானது ஆடிமாதம் முதல் தேதி அன்று அமைகின்றது. ஆறுமாதத்திற்கு ஒரு முறை மட்டுமே வருகின்ற மிகப்புனிதமான தினமாகும். சூரியனின்றி நம் தினசரி வாழ்க்கை ஜீவித களை அடைவதில்லை. சூரிய சந்திரர்களே நம்முடைய தேக, மனோ நிலைகளுக்கும் வாழ்க்கை முறைகளுக்கும் காரணமாகின்றனர். இரவிலும் பகலிலும் நமது அனைத்து காரியங்களுக்கும் சூரிய சந்திரர்களே சாட்சியாய் அமைந்து நிற்கின்றனர். ஒரு மனிதனின் ஒரு வருடத்திய வாழ்க்கையினை நன்கு ஆராய்ந்து நோக்கிடில் முதல் ஆறுமாத கால வாழ்வினைப் போல் பிற்பகுதி ஆறுமாத கால வாழ்க்கை அமைவதில்லை. உத்தராயணம், தட்சிணாயனம் என்று மாறுவதைப் போல் நம் வாழ்வில் காரண காரிய விளைவுகள் ஒரு வருடத்தில் மாறி மாறி அமைகின்றன. உத்தராயணப் புண்ணிய காலத்தின் போது சூரியனின் பாதை மாறுவதால் பூமியில் நீரோட்டங்களும், தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் சுவாச முறைகளும், விண்வெளி வாயுப் பரிமாணங்களும் மாற்றம் அடைகின்றன. இவ்வாறு ஏற்படும் அனைத்து மாற்றங்களின் ஊடே நம் கர்மவினைப் பாங்கினைச் செயல்படத்  தேவையான புண்ணிய சக்தியினைப் பெறவே ஒவ்வொரு மனிதனும் தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் பல்வேறு பூஜை மற்றும் வழிபாட்டு முறைகளைச் செய்தாக வேண்டியுள்ளது. இவ்வகையில் தட்சிணாயனப் புண்ணிய காலத்தில் செய்ய வேண்டிய பூஜைகளில் தர்ப்பண பூஜைகளை மட்டுமே நாம் வலியுறுத்தி வந்துள்ளோம். இதற்கு அடுத்த கட்டமாக மேலும் தட்சிணாயனப் புண்யகாலத்திற்கான சில வழிபாடுகளைக் கலியுக மக்களின் நலன் கருதி அளிக்கின்றோம்.
தட்சிணாயனப் படி பூஜை :-  சில கோயில்களில் மூலவரைத் தரிசிப்பதற்காக தட்சிணாயன காலத்தில் ஒரு வழியும், உத்தராயண காலத்தில் மற்றொரு வழியும் அமைத்துள்ளனர். உதாரணமாக கும்பகோணம் ஸ்ரீசாரங்கபாணிப் பெருமாள் ஸ்ரீசக்கரபாணி ஆலயத்திலும் இரு விசேஷமான வழிகள் உள்ளன. மூலவரத் தரிசிப்பதற்கு ஆடி-மார்கழி மாதங்களில் தட்சிணாயனப் பெருவழி மூலமாகவும், தை-ஆனி மாதங்களில் உத்தராயனப் பெருவழி மூலமாகவும் செல்லுதல் வேண்டும். ருது தேவதைகளும், அயன தேவதைகளும் உறையும் தெய்வீகத் திருப்படிகளிவை. ஆடி முதல் தேதி, தை முதல் தேதிகளில் அந்தந்த அயனப் பெருவழிகள் திறக்கப்படும்.
வைகுண்டத்தில் உறைகின்ற நித்யசூரிகள் இப்படிகளில் காத்துக் கிடந்து பெருமாளைத் தரிசிப்பதால் ஆடி முதல் தேதியன்று தட்சிணாயனப் பெருவழிப் படிகளை நன்றாக நீர்விட்டுக் கழுவி, கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளின் நீரைத் தெளித்து, படிகளுக்குத் தாமே அரைத்த மஞ்சள், குங்குமம், செம்பட்டைக் காவியிட்டு, பச்சரிமாக் கோலமிட்டும், பசு நெய் தீபமேற்றி ஒவ்வொரு படியையும் தொட்டுக் கண்களில் ஒற்றி தலை படிகளில் படுமாறு வணங்கிச் செல்லுதல் வேண்டும்.
‘ஓம் நமோ நாராயணாய நம’ என்ற எட்டெழுத்து மந்திரத்தை ஓதியும், அகஸ்தியர் பெருமான் ஸ்ரீராமனுக்கு உபதேசித்த ஸ்ரீஆதித்ய ஹிருதய மந்திரம், சூரிய நமஸ்கார மந்திரங்கள், ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமம், ஸ்ரீசூர்ய அஷ்டோத்திர, ஸஹஸ்ர நாமத் துதிகளை ஓதியும் தட்சிணாயனப் பெருவழிப் படிகளில் ஏறுதல் வேண்டும். படிகளில் பெருமளவு பசுநெய் (தாமரைத் தண்டுத்திரி சிறப்புடையது) அகல் விளக்கு/ குத்து விளக்குகளை ஏற்றி “எங்கு நோக்கினும் எழிலார்ந்த ஜோதியாய்” விளங்குமாறு ஜோதி தரிசனத்துடன் பக்தர்கள் தெய்வீகச் சூழ்நிலையில் படியேறுமாறு செய்தல் சிறப்புடையது. சூரிய உதயநேரப் படிக்கட்டு வழிபாடு உத்தமமான பலன்களைத் தரும். ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர், ஸ்ரீஆதிசங்கரர் போன்ற மஹான்களின் திருப்பாதங்கள் பட்ட திருப்படிகள் அன்றோ! அவர்களின் பாத தூசியேனும் நம்மேல் பட்டால் நம் பாவங்கள் எளிதில் கரைந்திடுமே! என்றும் புனித ஜோதியாய் இலங்கும் அவர்களுடைய திருப்பாதங்கள் படிந்த படிகளில் தான் நாம் இன்று ஜோதி பூஜை செய்து மகிழ்கின்றோம்! எனவே தட்சிணாயனப் புண்ணிய காலம் தொடங்கும் ஆடி முதல் தேதியன்று,

ஸ்ரீசிவக்கொழுந்தீசர்
சத்திமுற்றம் கும்பகோணம்

1. தட்சிணாயன, உத்தராயன திருவழிப் பாதைகள், தனித்தனியாக உள்ள கோயில்களில் மேற்கண்ட முறையில் படி தீப பூஜை செய்திட வேண்டும்.
2. ஸ்ரீசூரிய பகவானின் தனிச் சந்நிதி கொண்டுள்ள கோயில்களிலும், அச்சந்நிதியைச் சுத்தம் செய்து தருகின்ற உழவாரத் தெய்வத் திருப்பணியை மேற்கொள்ளுதல் மிகவும் சிறப்புடையதாகும். முதல் நாளே சந்நிதியைச் சுத்தம் செய்து தந்து ஆடி முதல் தேதியன்று சந்நிதியில் படி தீய பூஜையும் மேற்கண்ட முறையில் செய்திட வேண்டும்.
3. பல திருத்தலங்களில் சூரியனை நோக்கி ஏனைய நவக்கிரகங்கள் அமைந்திருக்கும். (உதாரணமாக திருநெடுங்களம், உடையார்கோவில்) இத்தலங்களில் நவக்கிரக சந்நிதியில் எண்ணெய்ப் பிசுக்கெடுத்து நன்கு சுத்தம் செய்து பசு நெய் தீபம் ஏற்றிட வேண்டும். குறைந்தது 21 முறை நவக்கிரகத்தை அடிப்பிரதட்சிணம் செய்து வலம் வருதல் வேண்டும்.
4. ஆடுதுறை சூரியனார் கோயில் முழுவதும் பச்சரிசி மாக்கோலமிட்டு பசு நெய் தீபங்களை ஏற்றுதல் சூரிய மண்டல தேவதைகளைப் ப்ரீதி செய்வதாக அமையும். தோல் நோய்கள் குணமாவதற்கு இத்தலத்தில் தட்சிணாயன பூஜை மேற்கொண்டிட வேண்டும்.
5. சூரிய தசை, சூரிய புக்தி உள்ளோருக்குத் தட்சிணாயன பூஜை முறைகள் நல்ல பலன்களைத் தரும். சூரிய பகவான் பித்ருகாரகன் ஆதலின் உடல் நலம் குன்றிய தந்தைக்காக தட்சிணாயன வழிபாடுகளை மேற்கொண்டிட தந்தை உடல் நலம் பெறுவார்.
6. தந்தை வழியில் பெற்ற சொத்துகளைப் பாபகரமான செயல்களில் ஈடுபட்டு விரயம் செய்தோர் இதற்குப் பரிகாரமாக இன்று சூரியன் தனிச்சந்நிதி கொண்டுள்ள கோயில்களில் உடல் தேய, கடினமான திருப்பணிகளைச் செய்து கோயில் தூண்களை நீர் விட்டுக் கழுவுதல், கோமுகத்தைச் சுத்தம் செய்தல், கோயில் தலங்களைப் பெருக்கி நீரால் கழுவிச் சுத்தம் செய்தல் போன்ற நற்காரியங்களைப் பலருடன் சேர்ந்து செய்து பெற்ற தந்தைக்குச் செய்த தவறுக்குப் பரிகாரம் பெற்றிடுக.
7. ஜாதகமோ, மனப் பொருத்தமோ, பெரியோர்களின் ஆசியோ இல்லாது நடைபெறும் திருமணங்களில் இல்லற வாழ்க்கையில் தம்பதியரிடையே மனக் கொந்தளிப்புகள் ஏற்படும். இவர்கள் இத்திருநாளில் ஸ்ரீசூரியபகவான் சாயா, ஸ்வர்சலாம்பாள் என்ற இருதேவியருடன் சேர்ந்து எழுந்தருளியுள்ள சந்நிதிகளைச் சுத்தம் செய்து தருதல் வேண்டும். பெரும்பாலும் நவக்கிரக சந்நிதிகளில் தான் எண்ணெய்ப் பிசுக்கும், கசடும் அதிகம் சேர்ந்திருக்கும். நம் புறக்கண்களுக்கு இவை அழுக்கு போலத் தோன்றினாலும் உண்மையில் இவை துர் எண்ணங்கள், தீய எண்ணங்களின் படிமானம் ஆகும். எந்த அளவிற்கு இவற்றை நன்முறையில் அகற்றி சுத்தம் செய்கிறோமோ அந்த அளவிற்கு நம் உடலிலும் மனத்திலும் உள்ள அழுக்கான எண்ணங்களும், தீய படிவுகளும் அகன்றிடும். இனியேனும் “ஏதோ விளக்கேற்றினோம், நவக்கிரகத்தைச் சுற்றி வந்தோம்” என்று எண்ணித் திரும்பிடாது இயன்ற வரையில் தக்க அனுமதியுடன் நவக்கிரக சந்நிதியைச் சுத்தம் செய்யும் புனிதமான இறைத் திருப்பணியில் ஈடுபடுவோமாக! இதுவே உண்மையான நவக்கிரக வழிபாடாகும். இவ்வாறாக உடல் தேய செய்யும் உத்தம வழிபாட்டையே இறைவன் ஏற்றுக் கொள்கிறான்.

ஆலயத் திருப்பணிகள்

ஆலயத் திருப்பணிகளில் கடைபிடிக்க வேண்டிய அறவழி முறைகள்
பல ஆலயங்களிலும் நன்முறையில் திருப்பணிகள் நடைபெற்று வருவது கண்டு உள்ளம் பூரிக்கின்றோம். சித்தர்களுடைய கிரந்தங்களில் ஆலய சீரமைப்பு முறைகள், திருப்பணிக்கான முறையான நியதிகள், கும்பாபிஷேக விதிகள் ஆகியனபற்றி நன்கு வரையறுக்கப்பட்டுள்ளன. ஆகம, வைதீக நெறிகளைப் பரிபூரணமாக அறிந்தோரும், சிறந்த நல்ஒழுக்கம், சுயநலமில்லாத தியாக மனப்பான்மை, அன்பொழுகும் பக்தி, நித்ய கர்மா, பூஜை முறைகளை முற்றிலுமாகக் கடைபிடித்தல் – போன்றவை கூடிய தெய்வீக உத்தமர்கள் அருகி வருவதாலும், இதனை தீர்க்க தரிசனமாக உணர்ந்து, பல யுகங்களுக்கு முன்னரேயே, கலியுக காலவர்த்தமான நிலைகளுக்கேற்ப சித்புருஷர்கள் பல எளிய ஆலயத்திருப்பணி வழிமுறைகளை நல்கியுள்ளனர்.
1. பல ஆலயங்களிலிருந்தும் தெய்வமூர்த்திகளின் சிலா ரூபங்களைச் (கல், பஞ்சலோக, சுதை மூர்த்திகள்) சுத்தம் செய்யும் வழிமுறைகள்.
2. நாட்பட்ட , எண்ணெய் தைலப் படிவுகள் கூடிய தெய்வ சிலா ரூபங்களைச் சுத்திகரிக்கும் முறைகள்
3. பின்னமான விரிசல் ஏற்பட்ட பிளவுள்ள சிலா ரூபங்களை, அவற்றின் ஆவாஹன சக்தி/தெய்வீக அம்சங்கள் மாசுபடாது சீரமைக்கும் புனித வழிமுறைகள்
4. சுயம்பு மூர்த்திகளைப் புனிதப்படுத்த வேண்டிய அற்புதமான காப்பு முறைகள் போன்றவற்றிற்கான நல்விளக்கங்களைக் கேட்டுத் தபாலில் எங்களுக்குப் பல கடிதங்கள் வந்தவாறிருக்கின்றன. நேரிலும் பல அர்ச்சகர்கள், பண்டார சந்நதிகள், பண்டாக்கள், பட்டாச்சாரியார்கள், சிவாச்சாரியார்கள், கோயிலதிகாரிகள், தர்மகர்த்தாக்கள், அறங்காவலர்களும், பல ஊர்ப் பெரியோர்களும் வந்து ஸ்ரீஅகஸ்தியர் ஆஸ்ரமத்திலிருந்து ஆலயத் திருப்பணி முறைகளுக்கான சித்புருஷர்களின் அரிய விளக்கங்களைப் பெற்றுச் செல்கின்றனர். நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளே முன்னின்று பல தெய்வ சிலாரூபங்களுக்குப் பல விதமான மாவு, தான்ய, திரவிய, மூலிகா, பச்சிலை, நாட்டு மருந்துப் பொருள் காப்புகளை இட்டுக் கை, கால் நகங்கள் படாது, உளி, திருப்புளி போன்ற எவ்விதமான கூர்மையான ஆயுதங்களையும் பயன்படுத்தாது, மெல்லிய, இளகிய நார், வஸ்திரம் கொண்டு மட்டும் கற்சிலையில் உள்ள எண்ணெய்ப் பிசுக்கு மற்றும் கசடுகளை எடுக்கும் அற்புதத் திருப்பணிகளைப் பல இறையடியார்களைக் கொண்டு நிறைவேற்றி வருகின்றார்கள். எனவே இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு சிறப்படைவோம்.

நவகிரக மூர்த்திகள்
உடையார்கோவில்

ஆலயத் திருப்பணிகளில் செய்யக் கூடாதவை
1. எந்த தெய்வ சிலாரூபத்திற்கும் (கல், உருவம்) வாஷிங்சோடா, பிளீச்சிங் பவுடர், துணிக்கான சோப் பவுடர் போன்ற எந்த ஒரு இரசாயனப் பொருளையும் பயன்படுத்தலாகாது. தற்போது பெரும்பான்மையான கோயில் கும்பாபிஷேகத் திருப்பணியில் குறிப்பாக நந்தி, ஆவுடை லிங்கங்களின் மேல் ஏறி வாஷிங் சோடாக் கரைசல் போன்ற எரி ரசாயனப் பொருட்களைக் கரைத்துத் தடவி உளி, திருப்புளி, குச்சி, ஆணி, கத்தியல், தகரம் போன்ற கூரிய ஆயுதங்களினால் புனிதமான தெய்வத் திருமேனிகளைச் சுரண்டி கசடுகளை எடுத்தலைக் காண்கின்றோம். இது மிகவும் பாபகரமான செயலாகும். பாலாலயம் செய்கையில் தெய்வச் சிலையின் அனைத்துச் சக்திகளும் கடஸ்தானம் என்னும் கும்பத்திற்குள் மாற்றப்படுவதால் அத்தெய்வச் சிலையின் தெய்வீக சக்தி முற்றிலும் இழக்கப்பட்டதாகப் பொருள் கொள்வது மிகவும் தவறானதாகும். இத்தகைய சாபங்கள் நிறைந்த செயல்களால் தான் கொடிய ரண சிகிச்சைகள், கர்ப்பம் நழுவுதல் , சந்ததிகள் பாதிக்கப்படுதல், எதிர்பாராத விபத்துக்கள் போன்றவை ஏற்படுகின்றன. எனவே தயவு செய்து ஆலயத் திருப்பணிகளில் நந்தி, துர்கை, லிங்கம் போன்ற எந்தத் தெய்வச் சிலைக்கும், பாலாலயம் செய்யப்பட்டிருந்தாலும் கூட பிளீச்சிங் பவுடர் (Bleaching Powder) அல்லது கூரிய தகடுகளையோ ஒரு போதும் பயன்படுத்தாதீர்கள் என்று பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
2. தெய்வச் சிலைகளின் மீதுள்ள எண்ணெய்க் கசடுகளை நீக்குவதற்கான சித்தர்கள் அருளியுள்ள பலவித காப்பு முறைகளைத் தக்க சற்குருமார்களிடமிருந்தும், உத்தமர்களிடமிருந்தும், மகான்களிடமிருந்தும் பெற்று கடைபிடித்து பரிபூரணமான தெய்வீக முறையில் ஆலயத்திருப்பணிகளை செய்திடல் வேண்டும்.
3. தெய்வச் சிலைகளிலோ, லிங்கத்திலோ, ஆவுடையிலோ, பீடத்திலோ வெடிப்பு/ பிளவு/விரிசல் ஏற்பட்டிருப்பின் எக்காரணம் கொண்டும் அதில் காரீயம், வெள்ளீயம் போன்றவற்றைக் காய்ச்சி ஊற்றி நிரப்புதல் கூடாது. இதனால் விளைகின்ற துன்பங்களும் வேதனைகளும் சொல்லில் அடங்கா. இதற்கு மாற்றாக விசேஷ களிம்பு பந்தன அடைப்பு முறைகள் பல உண்டு. பாதரசத்தைக் கட்டுவது போல இப்பந்தனக் கட்டின் விளக்க முறைகளைத் தக்க சற்குருவிடம் நாடிப் பெறுதல் வேண்டும். இதனை நன்கு அறிந்த உத்தமர்கள். இன்றும் உள்ளார்ந்த நம்பிக்கையுடன் அவர்களை நாடித் தக்க விளக்கங்களைப் பெறுதல் வேண்டும்.
4. ஆலயத் திருப்பணிகளின் போது தெய்வச் சிலை திருமேனிகளின் மேல் சிமெண்ட், பெயின்ட், தார் எதுவும் படுதல் கூடாது. இது கற்சிலையின் தெய்வீகத் தன்மையைப் பாதிப்பதோடு பல சாபங்களையும் பெற்றுத் தரும்.
5. திருப்பணிகளின் போது தெய்வச் சிலைகளை உத்தம பக்தியோடு கையாளுதல் வேண்டும். அதாவது தவறுதலாக இடித்தலோ, பாதங்கள் படுதலோ கூட தவிர்க்கப்படுதல் வேண்டும்.
6. பாலாலயம் செய்யப்பட்டிருப்பினும் கூட தெய்வச் சிலைகளுக்கு என்று விசேஷமான தெய்வ சக்தி நிறைந்திருப்பதால் பாலாலயம் செய்யப்பட்ட தெய்வத் திருமேனியை எப்படி வேண்டுமானாலும் கையாளலாம் என்ற எண்ணத்தைக் கைவிட்டு விடுங்கள். உண்மையில் பாலாலயம் செய்யப்பட்ட மூர்த்திகளுக்கு நைவேத்திய பூஜை தொடரப்பட வேண்டும் என்பது நியதி. எனவே பாலாலயம் செய்யப்பட்ட மூர்த்தியை பிரஷால் தேய்ப்பதோ, தகரத்தால் கீறுவதோ நரக வேதனைகளையே பெற்றுத் தரும்.
இத்தகைய தவறுகள் நிகழாவண்ணம் அரசாங்கமும், ஆலய நிர்வாத்திலுள்ளோரும், தர்ம கர்த்தாக்களும், பூஜை செய்வோரும் கவனமாகத் திருப்பணிகளை நிறைவேற்ற ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். ஏனெனில் தவறுகளின் தீய விளைவுகள் திருப்பணியைப் பொறுப்பேற்று நிகழ்த்துபவர்களையே பெருமளவில் பாதிக்கும். தெய்வத் திருப்பணி என்பது கிடைத்தற்கரிய ஒரு பெரும் பேறாக அமைந்துள்ளதால் அத்திருப்பணியில் எச்சிறு தவறும் நேர்ந்து, அதனால் எவருக்கும் துன்பங்கள் ஏற்படா வண்ணம் தடுக்கும் முயற்சியாகவே பல விஷயங்களை வெளிப்படையாக எடுத்துரைக்க வேண்டிய ஒரு நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
ஆலயத் திருப்பணியை உண்மையான இறைச் சேவையென நிறைவேற்றும் உயரிய மனம் பெற்ற ஆன்மீக அடியார்கள் ஸ்ரீஅகஸ்தியர் விஜயம் ஆஸ்ரமத்திலிருந்து தேவையான விளக்கங்களைப் பெற்று பயனடையுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

அடிமை கண்ட ஆனந்தம்

குருமங்கள கந்தர்வா என அழைக்கப்படும் எங்கள் குருநாதர் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகள் தம் சற்குருநாதராகிய ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப ஈச சித்த ஸ்வாமிகளிடம் பெற்ற பாலபருவ குருகுலவாச அனுபவங்களை இத்தொடரில் அளிக்கின்றோம். சென்னை ராயபுரம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் வாசம் கொண்டிருந்த, கோவணாண்டிப் பெரியவராய், குப்பங்களிலும், பட்டி தொட்டிகளிலும் வாழ்ந்த ஏழை எளியோருக்குக் கோவணாண்டிப் பெருஞ்சித்தராய் அருள்பாலித்த ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப ஈச சுவாமிகள், அன்றைய எட்டு வயது சிறுவனாக இருக்கும் போதே வெங்கடராமரை ஆட்கொண்டு உழவாரத் திருப்பணிகள், சித்புருஷர்களுடைய கோயில் ஆகம விதிகள், தான தருமங்கள், ஜீவன்களின் கர்ம பரிபாலனங்கள், பல திருக்கோயில்களின் ஆன்மீக ரகஸ்யங்கள் போன்றவற்றில் குருகுலவாசம் அளித்து இன்றைக்கு ஸ்ரீலஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளாய் நம்மிடையே இறைப்பணி ஆற்ற அருள்புரிந்தார்கள்.
ஸ்ரீலஸ்ரீஇடியாப்ப சுவாமிகள் பல ஆண்டுகளில் போதித்த தெய்வீக ரகஸ்யங்களும், இல்வாழ்க்கையின் நெறிமுறைகளும், கர்ம வினைகளைக் கரைக்கும் கவின் வழிமுறைகளும் தான் ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராமன் ஸ்வாமிகளின் அருள்மொழிகளாக ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில் அளிக்கப்படுகின்றன..
கயிலை (மானசரோவர்), இமய மலை, பொதிய மலை, கொல்லி மலை, சதுரகிரி மலை, செஞ்சி மலை, எகிப்திய பிரமிடுகள், வெள்ளியங்கிரி மலை, மருத மலை, பர்வத மலை, பச்சை மலை... போன்ற (என்றைக்கும்) சித்புருஷர்கள் உலவுகின்ற தெய்வத்திரு மலைகளிலும், நர்மதை, யமுனை, கங்கா, காவிரி, தாமிரபரணி, கிருஷ்ணா, கோதாவரி, சரஸ்வதி, பாகீரதி போன்ற புண்ய நதி தீரங்களிலும், தனுஷ்கோடி, பத்ரிநாத், மணலி (இமாலயா), காமாக்யா (அஸ்ஸாம்) , மதுரா, சோட்டாநிகரா, சீரடி, பூரி  போன்ற எண்ணற்ற திருத்தலங்களுக்குச் சென்று அவற்றின் தெய்வீக ரகஸ்யங்களைத் தம் முதன்மைச் சிஷ்யனாம் ஸ்ரீவெங்கடராமனுக்குப் போதித்தார்கள். அவற்றின் பயன்கள் யாவரையும் சென்றடையும் வண்ணமே ஸ்ரீஅகஸ்திய விஜயம் ஆன்மீக இதழாக மலர்ந்துள்ளது. இவ்வரிய இறைப்பணி தெய்வத் தமிழகத்தில் பவனி வர ஆதரவு தருமாறு அனைவரையும் மிகத் தாழ்மையுடனும் பணிவன்புடனும் இறைஞ்சுகின்றோம்.

ஸ்ரீவீணாதட்சிணாமூர்த்தி
திருப்பாற்றுரை திருத்தலம்

வேதகிரியில் குருகுலம்.... இதோ, திருக்கழுக்குன்ற மலைக் கோயிலில்... நான்கு வேதங்களின் அதிபதியாக தேனினும் இனிய தெய்வத் தமிழ்மறைகளின் தலைவராக, அனைத்து மத வேதங்களின் ஒளித்திரட்சியாய் வேத கிரீஸ்வரராய் அருள்பாலிக்கும் இறைவனின் ஆட்சியில்...... பல ஆண்டுகளுக்கு முன்...
இத்திருத்தலத்தில் அச்சிறுவனும், கோவணாண்டிப் பெரியவரும் மலைக்கோயிலின் கீழ்த் திருப்படியில் அமர்ந்திருந்தனர்....  சென்னையிலிருந்து திருக்கச்சூர் ஆலயம் (சிங்கப்பெருமாள் கோயில் அருகே), திருஇடைச்சுரம் மரகத லிங்கம் (செங்கல்பட்டு அருகில்) வழியே கடும் வெயிலில் நடத்தியே சிறுவனைத் திருக்கழுக்குன்றத்துக்குக் கூட்டி வந்தார் பெரியவர்.
ஏதோ சிறுவனை வருத்துவது போலில்லை?
நிச்சயமாக இல்லை.. ஸ்ரீபரமாச்சார்யாள், ஸ்ரீசேஷாத்ரி சுவாமிகள், ஸ்ரீவள்ளலார் போன்ற மஹான்கள் பாத யாத்திரையையே உவந்து ஏற்றனர். காரணம் என்னவெனில் செல்லும் வழியெங்கும் ஏழை எளியோர் மட்டுமின்றி, தாவரங்கள், விலங்குகள் போன்று அனைத்து ஜீவன்களிடமும் உரையாடி, அவர்களுடைய/ அவைகளுடைய துன்பங்களுக்கு நிவாரணம் தந்து ஐப, யோக, தவ சக்திகளை ஏற்று வழியெங்கும் அனைத்துக் கோயில்களிலும், எவ்வித சுயநலமும் இன்றிப் பிறருடைய நல்வாழ்விற்காக வழிபாடுகளையும் மேற்கொண்டனர். செல்லும் வழியெங்கும் பெரியவர் சிறுவனுக்குப் பலவிதமான பிராணாயாம, யோக, சுவாச முறைகளைக் கற்றுத் தருவார். அரசு, ஆல், வேம்பு போன்ற புனிதமான மரங்களின் கீழ் பலவிதமான ஆசனங்களில் அமர்ந்து பிறருடைய மன ஓட்டங்களை அறியும் டெலிபதி முறையையும் போதித்தார். எவ்விதமான தவறான முறைகளிலும் இவ்வற்புதமான ஆற்றலை ப்ரயோகித்திட கூடாது என்ற சத்தியத்துடன்.
செங்கல்பட்டு அருகில் உள்ள பல வளமான குன்றுகளிலும், திருஇடைச்சுரம் செல்கின்ற பாதையில் உள்ள குன்றுகளிலுமுள்ள பல அரிய மூலிகைகளை அதற்குரிய மந்திரங்களை ஜபித்து தேவதைகளைப் ப்ரீதி செய்து மூலிகைகளைப் பறிக்கின்ற நல்வழியைக் காட்டியருளினார். கேட்ராக்ட் எனப்படும் கண் நோயை குணப்படுத்தும் மூலிகைகளே இப்பகுதிகளில் அதிகம். ஆனால் வியாபார நோக்கமின்றி செல்வம் சேர்க்கும் எண்ணம் சிறிது கூட இல்லாது கண் நோய்களால் அவதிப்படுகின்ற ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்கின்றவர்களுக்கு இவ்வித மூலிகை ரகஸ்யங்கள் சித்புருஷர்களால் தாமாகவே அளிக்கப்பெறும். ஆனால் இத்தகைய தெய்வ பண்புகளுடைய மருத்துவர்கள் எத்தனை பேர் நம்மிடையே இருக்கின்றார்கள்?
..........மலையின் கீழ்ப்படியில் அமர்ந்திருந்த பெரியவர் சிறுவனுக்குத் திருக்கழுக்குன்றத்தின் மலை ரகஸ்யங்களை எடுத்துரைத்தார். குஷ்ட நோயைத் தீர்க்கும் அபூர்வ மூலிகைகள் இன்றும் இம்மலையில் உள்ளன. இம்மலைக் காற்று சுவாசமே பல கொடிய நோய்களை அகற்றும்.
இவ்வாறாக, பெரியவர் சிறுவனுக்குத் திருக்கழுக்குன்ற மலையின் மகிமை பற்றிக் கூறி வருகையில், கை கால்  விரல்கள் சிதைந்திருந்த குஷ்ட நோயாளி ஒருவன் பெரியவரிடம் வந்து, “உன்னைப் பார்த்தா பெரிய மகானாட்டம் தெரியுது. எனக்கு இந்த வியாதி கழியறாப்ல எதாச்சும் பண்ணுவியா?” என்று கேட்டார். “ஏம்பா! என்னப் பாத்தா உனக்குக் கேலியா தோணுதா? நானோ ஒரு கோவணாண்டி, எங்கிட்ட என்னப்பா இருக்கு?”
“நீ இந்தப் பையன்கிட்ட பேசறதையெல்லாம் நான் கேட்டுக்கிட்டிருந்தேனே., எனக்கு மட்டும் இந்த வியாதி குணமாச்சுன்னா உனக்காக நான் என்ன வேண்டுமானாலும் பண்ணத் தயாராயிருக்கேன்”
“நிச்சயமா நீ செய்வாய?”

செங்கோலுடன் ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருவைகாவூர் திருத்தலம்

“இந்த மலையில் இருக்கின்ற சுவாமி சத்தியமா சொல்றேன். நீ சொல்வதையெல்லாம் நான் நிச்சயம் பண்ணுவேன்”
திடீர் என்று பெரியவர் வானை நோக்கி யோசித்தவாறு இருந்தார்.. சிறுவனுக்கோ முதலில் ஒன்றும் புரியவில்லை.. பெரியவரை நெடுநேரமாக வானைப் பார்த்திருந்த கோலத்தில் காண்பது இதுவே அவனுக்கு முதல் தடவை! சற்று நேரம் கழித்துப் பெரியவர் கண்களைத் திறந்து அந்நோயாளியிட பேசத் தொடங்கினார். “மலைமேல ஏறி அந்த நந்திச்சரிவு பக்கம் போனா ஒரு சித்தர் இருப்பார்.. அவர் என்ன சொன்னாலும் நீ செஞ்சுடு உன்னோட வியாதியே ஓடிப் போயிடும். உன்னால அது முடியுமா?”
“எத்தனை வருஷமா இந்த வியாதியினால் கஷ்டப்பட்டு தினமும் இந்தப் படிக்கட்டில் ஏறி இறங்கி கஷ்டப்படறேன், இந்த வியாதி போனா மஹானுங்க கண்ணுபட்டால் போதுமே, எல்லாம் சரியாயிடுமே.!”
“சிவசிவ! அப்படிச் சொல்லாதேடா ராஜா! நீ இந்தப் படியில் தினமும் ஏறி இறங்குவதால் தான் ஆண்டவன் உனக்கு படியளப்பான். நான் சொல்லற ஆளு பெரிய சித்புருஷன், முடிந்தால் அவரைக் கெட்டியா பிடிச்சுகிறது உன் சாமர்த்தியம். ஆனால் அவர் சொல்லறதெல்லாம் நீ கேட்பியா?”
“அப்படி என்ன சொல்லிடப் போறாரு, அவருக்குத் துணி துவைச்சு, மலம் கழுவி வேணும்னா அந்த மலத்தைக் கூட சாப்பிட ரெடியா இருக்கேன். சித்தருங்க வேர்வை கூட அமிர்தம்., மலம் கூட காயகல்பம் என்று எங்க பாட்டி சொல்லுவாங்க”
“அப்படியா! நீ அந்த சித்தருக்கு பெரிசா ஒண்ணும் பண்ண வேண்டாம். அவருடைய மலத்தைக் கொஞ்சம் தின்றாலே போது அதுவே சர்வ ரோக நிவர்த்தியாகும்.”
சிறுவன் விழித்தான்... “இவர் யாரோடும் நாலு வார்த்தை கூட பேசமாட்டாரே இப்படி விலாவாரியா சொல்றதுக்கு என்ன காரணமோ தெரியவில்லையே”– சிறுவன் எண்ணி வியந்து நின்றான். “பெரியவரே! உன்னை முழுக்க நம்பி மலைமேல் ஏறுகிறேன், கை. கால் சரிவரலேன்னா என்ன செய்றது?”.
“இறை நம்பிக்கை ஒன்றுதான் உலகில் உண்மையானது. செய்யறதை முழு நம்பிக்கையோட செஞ்சா காரிய சித்தி உடனே கிடைக்கும். மேல இருக்கின்ற சித்தனை நம்பு. எல்லாம் நல்லபடியா நடக்கும். அப்ப நான் போய்ட்டு வர்றேன்.” கோவணாண்டிப் பெரியவர், அவனுடைய பதிலுக்குக் காத்திராமல் சிறுவனுடன் கீழே வந்துவிட்டார். பெரியவருடைய கைவிரல்களைப் பிடித்துக் கொண்டே கூட ஓடி வந்த சிறுவன்., “என்ன வாத்யாரே! ஏதேதோ சொல்லிட்டு வந்திட்டியே., இப்ப என்ன செய்யப் போறே?”
திடீரென்று ஓரத்தில் ஒதுங்கிய பெரியவர் மீண்டும் திரும்பிப் பார்த்து அந்நோயாளி மேலே செல்கின்றானா என்று எட்டி எட்டிப் பார்த்தார். பாவம் அவனோ, விரல்கள் பயனற்ற நிலையில் ஊர்ந்து ஊர்ந்து படிகளின் மேலே சென்று கொண்டிருந்தான். என்னே நம்பிக்கை! சிறுவன் பெரியவரின் காதுகளில் கிசுகிசுத்தான்.., “ஏன் வாத்யாரே! அந்த மனுசனை இப்படி பாடாப்படுத்தறயே! எனக்கே பார்க்கறதுக்குக் கஷ்டமா இருக்கு. அதுக்கும் மேல இந்தாளு மேல ஸ்பெஷலா அக்கறை காண்பிக்கிற மாதிரி இருக்கே. எனக்கு ஒண்ணுமே புரியலை”, என்றான். பெரியவர் சிரித்தார்..
“ஏண்டா! இதெல்லாம் உனக்கு புரிஞ்சிருச்சினா நீயே சித்தனாயிடுவே! ஆனா நான் பண்ற காரியம் ஒன்னொன்னுக்கும் ஆயிரமாயிரம் காரணம் இருக்குன்னு உனக்கு நல்லாத் தெரியுமில்ல.. இந்த மனுஷன் ரொம்ப வருஷமா தினமும் படியேறி இறங்கி வந்துக்கிட்டிருக்கான். என்ன நோக்கம் தெரியுமா? தனக்கு இந்த குஷ்ட வியாதி தீரணும். இதுக்குத்தான் தினமும் காலைத் தேய்ச்சு, கையைத் தேச்சு, குதத்தைத் தேய்ச்சு மனுஷன் ஓடாய்த் தேயறான்! அதுக்கு Reward வேண்டாமா? தெய்வீகத்தில் நம்பிக்கைன்னு ஒன்னு வெச்சுட்டா பரிபூரணமான பலனை ஆண்டவனே யார் மூலமாவது கொடுத்துடறான். அதுக்குத்தான் இடையில மஹானுங்க, சித்தனுங்க இருக்காங்க. தெய்வத்துக்கும் மனுஷனுக்கும் நடுவுல மீடியமா இருக்கறவங்க மஹானுங்க. ஆனால் இன்னிக்கு இந்த நோயாளியோட நம்பிகைக்காகப் பைனல் டெஸ்டு வைக்கிறோம். என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்”.
சிறிது நேரங்கழித்துச் சிறுவனை இழுத்துக் கொண்டு பரபரவென்று படிகளில் ஏறி, நடுவில் திணறிய நிலையில், படியில் ஊர்ந்து கொண்டிருந்த நோயாளியையும் நொடிப் பொழுதில் தாண்டிச் சென்றார். மேலே கோயிலுக்கு எதிரில் உள்ள மலைச்சரிவில் ஒரு புதருக்கருகே நிழலில்  நின்றார். நெடுநேரம் அங்கு நின்று கொண்டிருந்த சமயத்திலும் திருக்கழுக்குன்ற பட்சிகள், திருக்கழுக்குன்ற கிரிவல மஹிமை, சங்கு தீர்த்தம், ஸ்ரீருத்ரகோடீஸ்வரனின் மஹிமை (அருகில் உள்ள சிவத்தலம் – இங்கு எந்த வழிபாட்டிற்குரிய பலன்கள் கோடியாய்ப் பெருகும். ஆனால் நல்லதோ தீயதோ அனைத்து எண்ணங்களும் கோடியாய் பெருகி விடுவதால் அனைத்தையும் இறைவனிடமே அர்ப்பணித்தல் நலம்) போன்ற அரிய விளக்கங்களைத் தந்தருளினார்... சற்று நேரத்தில்.. மலைச் சரிவில்..... கீழே சற்று தொலைவில் ஓர் அழுக்கடைந்த உருவம் தென்பட்டது. பரட்டைத் தலையுடன்.... கந்தல் துணிகளுடன், காண சகிக்காத ரூபத்தில்...... ஒரு கிழவர் அமர்ந்து எதையோ, தோண்டிக் கொண்டிருந்தார். அவர்தான் மலப்புழு சித்தர்..... துர்நாற்றங்களிடையே வாழ்ந்து சுகமான நறுமணத்தோடு அமர்ந்திருப்பார் அவர். உண்பதோ மலத்தில் உள்ள புழுக்களைத் தாம்! சதுரகிரிமலை, திருக்கழுக்குன்றம், மருதமலை, திருஅண்ணாமலை போன்ற இடங்களில் அவருடைய சஞ்சாரங்கள் அதிகமாக இருக்கும். அவர் மலப்புழுவை உண்பது போல் தோன்றிடினும் மலத்தில் உள்ள ஆயிரக்கணக்கான புழுக்களுக்கு முக்தி அளிக்கின்ற மாபெரும் சித்தர் ஆவார்.

ஆத்ம விசார வினா விடை

ஆத்ம விசார வினா விடை (சென்ற இதழ் தொடர்ச்சி..)
வினா : இறை நம்பிக்கையில் ஏற்படும் சஞ்சல புத்தியை எவ்வாறு நிவர்த்தி செய்வது?
விடை:  சென்ற இதழில் இறை நம்பிக்கை குறைந்து வருவது போல் தோன்றுவதற்கான காரணங்களை அறிகையில் மன சஞ்சலங்களை நிவர்த்தி செய்யும் முறையாக படையல் என்னும் வழிபாட்டு முறையை பற்றி விளக்கத் தொடங்கிருந்தோம்.. “ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் பெரும்பாலும் தான தருமங்களே பரிஹாரங்களாக அளிக்கப்படுகின்றன. இவற்றுக்கு நிறைய செலவாகுமே எங்களால் கடைபிடிக்க முடியவில்லை.” என்ற எண்ணங்களுடன் சில கடிதங்கள் வந்துள்ளன.
தர்மம் தளரலாகுமா?

ஸ்ரீமார்கண்டேயர்
திருநீலக்குடி திருத்தலம்

கோயில் தரிசனம் நித்யபூஜைகள் குல தெய்வ பூஜை ஸ்ரீகாயத்ரீ ஜபம் வடமொழி தமிழ் மொழி வேதமுறை ஓதுதல் போன்றவை மறைந்து வருகின்ற இந்நாளில் குடும்பத்தவர்கள் எதைத்தான் ஒழுங்காகச் செய்கின்றார்கள் தினமும் நல்லெண்ணெய்/ தேங்காயெண்ணெய்/ பசுநெய்/பச்சரிசி மாவினால் கோலம் போடுதல் போன்ற மிக எளிதான வழிபாடு முறைகள் கூட அசிரத்தையினால் குறைந்து கடலெண்ணெய் போன்ற தகாத எண்ணெய்களால் விளக்கேற்றி மொக்கு மாவு எனப்படும் கல்பொடியினால் கோலம் போட்டுப் பாவங்களைச் சேர்கின்ற அதர்மப் பண்பாடு தானே ஓங்கியுள்ளது.
ஒரு சிறு பச்சரிசி மாவு கோலமிட்டிடில் நூற்றுக்கணக்கான எறும்புகளும் காக்கைகளும் அதை உண்ணும் ஆனந்த காட்சியைக் காண கன் கோடி வேண்டுமே. சந்தனத்தை நாமே அரைத்து நெற்றிக்கு இட்டு அதன் மேல் நன்முறையில் தயாரிக்கப்பட்ட குங்குமத்தை இடுகின்ற தமிழ்பண்பாடு மறைந்து போய்விட்டது. மாறாக சேலை வண்ணத்திற்கு ஏற்ப, ப்ளாஸ்டிக் ஒட்டுப்பொட்டு (stickers) இடுகின்ற அறியாமையினாலான வழக்கம் தானே நிலவிவருகிறது. இதனால் மன சஞ்சலங்கள் ஏற்படுவதோடு கணவனின் ஆயுள், ஆரோக்கியத்திற்கு பங்கம் ஏற்படுமல்லவா?
சித்தர்களுடைய ‘திசைப்படையல்’ முறையில் சில எளிய வழிபாடு முறைகள் அளிக்கப்பட்டுள்ளன. இவை மன சஞ்சலங்களை அகற்றி மிகுந்த தெளிவை அளிக்கின்றன. எத்தனையோ திசைகளிலிருந்து துன்பங்கள் வருகின்றன. அவற்றை எதிர்கொள்ளும் பக்குவத்தை ‘திசைப் படையல்’ முறைகள் அளிக்கின்றன.
எட்டா பூமி எட்டில் அடங்கும்
இப்பூமியை எட்டுவிதமான நாகங்கள் தாங்கி நிற்கின்றன. பூலோகமெனில் வெறும் பூமி மட்டுமல்லாது இதற்குரித்தான உபலோகங்களும் அடங்கும். மேலும் பூமியின் மேல்விதானத்தை எட்டு திக்குகளிலும் அஷ்டதிக்குபாலகர்கள் சுமக்கின்றனர். இவை தவிர பூமிக்கு தேவையான வாயு, அக்னி , நீர் மண்டலங்களை எட்டு திக்குகளிலும் அஷ்டதிக்குக் கஜங்கள் எனப்படும் யானைகள் சுமந்து நிற்கின்றனர். திசைப்படையல் பூஜையானது இவர்களுக்கென ஏற்பட்டதாகும்.
திசைகளுக்கும் மன சஞ்சலங்களுக்கும் தொடர்புண்டு. ஒரு நாளின் மன ஓட்டங்கள் மறுநாள் மாறிவிடுகின்றன. இது கருதியே தினமும் ஆலய பிரதட்சிணம் என்ற எளிய சிறந்த வழிபாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆலயத்தில் தான் அஷ்டதிக்பாலகர்களும், கஜங்களும், நாகங்களும் உறைவதால் தான் தினமும் ஆலயத்தை வலம் வருவது மிகச் சிறந்த ஆலய வழிபாடோடு ஆசிர்வாதத்தையும் பெற்றுத் தரும்.
எண் திசை பூஜை
ஞாயிறு : ஞாயிற்றுக்கிழமையன்று காலையில் (6 – 7a.m) சூரிய ஒளியை தரிசித்து வணங்கி, தாமரை மலர்களைத் தூவி ஒன்பது முறை சூரியனை வீழ்ந்து வணங்கிட வேண்டும்.
திங்கள் : மாலையில் சந்திர உதய நேரத்தை அறிவது நலம். அறியாதோர் வானில் சந்திர தரிசனம் கண்டு வடமேற்கு திசை நோக்கி 2/11/20 முறை வீழ்ந்து வணங்கி சங்கினால் கங்கை காவிரி தீர்த்தத்தையோ பாலையோ அர்க்யம் விடுதல் வேண்டும். அர்க்யம் என்பது இருகால்களை உயரத்தூக்கி கால் நுனிகளில் நின்று சந்திரனை நோக்கி அபிஷேகிப்பது போல் நீரைக் கீழே விடுதலாகும். சந்திர தரிசனம் தெரியாவிடில் கோயிலில் சந்திர பகவானை கண்டு வணங்கிட வேண்டும் அல்லது பிறை சூடிய சிவபெருமானின் தரிசனமும் சிறப்புடையதாகும். நாலாம் பிறை தரிசனத்தை தவிர்த்து அன்று ஆலயத்தில் சந்திர பகவானை வணங்கிடுக.
செவ்வாய் : காலை (6-7) அல்லது மதியம் (1-2) தெற்கு திசை நோக்கி ஒன்பது முறை குதிகாலில் மண்டியிட்டு வணங்கி பச்சரிசி மாவு கோலமிட்டு அதன் மேல் தானியத்தைப் பரப்பி  (ஒரு ஆழக்கு) அதில் ஸ்ரீமுருகப்பெருமானின் ஏதேனும் நாமத்தை கைவிரலால் எழுதி ஒன்பது முறை வணங்கிட வேண்டும்.
புதன் : வடக்கு திக்கிற்கான பூஜையிது! பச்சை நிற ஆடையணிந்து பெருமாளுக்குரிய துதிகளை ஓதி வடக்கு நோக்கி வணங்கிடுக.. காலை (6-7) மணி உகந்த நேரம். பச்சை நிற துளசி, மரிக்கொழுந்து பூஜைக்கேற்றது. ஐந்து முறை வடக்கு நோக்கி வணங்கிட வேண்டும்.
வியாழன் :- மோதிரம் தோடு போன்ற பொன் நகையை மஞ்சள் துணியில் சுற்றி வைத்து ஆகாயத்தை நோக்கி காலையிலோ மாலையிலோ ஐந்து நிமிடங்களும் நம்மைப் படைத்த பிரம்மாவைத் தொழுதிடுக. மஞ்சள் துணியை கையில் ஏந்தியவாறு ஆகாயத்தை நோக்கியவாறு தன்னையே மூன்று முறை வலம் வருக. மஞ்சள் துணியை அடுத்த பூஜைக்கு எடுத்து வைத்துக் கொள்ளலாம். தானம் அளிப்பது சிறப்புடையது. நகையை மீண்டும் அணிந்திடுக.
வெள்ளி: வெள்ளைத் தாமரையைக் கொண்டு கருடனாம் ஸ்ரீஆதிசேஷனை வழிபட்டுத் தென்கிழக்கு திக்கு நோக்கி ஆறுமுறை தம்பதியுடன் வணங்கிடுக. கருட தரிசனம் மிகவும் சிறப்புடையது அல்லது கருடாழ்வாரையேனும் தரிசித்திடுக.

ஸ்ரீதனுசு சுப்ரமண்யர் திருவையாறு

சனி : வன்னியிலை நீலோற்பல புஷ்பம் கொண்டு மேற்கு நோக்கி நம்முடைய பித்ருக்களை (தந்தை, தாய், தாத்தா, பாட்டி) மேற்கு நோக்கி தொழுதிடுக. பித்ருக்கள் தெற்கு திசையில் வசித்திடுனும் அவர்கள் சனிக்கிழமையன்று சனீஸ்வர மண்டலத்தில் கூடுகின்றன. காலையில் காக்கைக்கு அன்னமிட்டு மாலையில் மேற்கண்ட பூஜையை செய்து மேற்கு திசை நோக்கி எட்டு முறை வணங்கிட வேண்டும்.
சந்தனக் கல் கட்டையை சேர்த்து வைத்து அல்லது இரண்டு குத்துவிளக்கு அல்லது மூன்று அகல்விளக்கு வைத்து இவற்றுக்கு பூஜை செய்திட வேண்டும். பெருமாளைத் தோத்திரம் செய்து வணங்கிட வேண்டும். இவ்வாறு செய்வது அஷ்டதிக்பாலகர்களின், நாகங்களின், கஜங்களின் ஆசியைப் பெற்றுத்தரும். இது தவிர காலையில் எழுந்தவுடன் காலைக் கடன்களை முடித்து கைகால் சுத்தஞ்செய்து மா, தேக்கு, பலா, மரப்பலகையின் மேல் நின்று எட்டுமுறை தன்னைத் தானே (ஆத்ம) பிரதட்சிணம் செய்தல் மிகச் சிறந்த அஷ்டதிக்கு பூஜையாகும். ஏனைய திசை பூஜைகளும் உண்டு.
அக்னிபுராந்தகரின் அதிசயமான தியாகம்
பிரகலாதன் ஆதி சங்கரரின் ஆத்யந்த சிஷ்யரான ஸ்ரீபத்மபாதர், ஸ்ரீமஹாலக்ஷ்மி போன்று ஸ்ரீநரசிம்ஹரின் பரிபூரண தரிசனத்தைப் பெற்றவரே ஸ்ரீஅக்னி புராந்தகராவார். பல நவக்கிரஹ மண்டலங்களுக்கும் சென்று ஸ்ரீநவக்கிரஹ மூர்த்திகளையே நேரில் பூஜிக்கும் பாக்யங்களைப் பெற்றவர். ஒரு முறை தேவாதி தேவர்களெல்லாம் ஒன்று கூடி ஸ்ரீமந்நாராயண மூர்த்தியிடம், “சுவாமி! நாங்கள் தெய்வீகக் காரியங்களில் ஈடுபடுகின்ற போதெல்லாம் பலவித இடையுறுகள் ஏற்படுகின்றனவே, இதற்கான காரணங்களை அறிய வேண்டுகிறோம். தேவர்களாகிய நாங்கள் சுயநலத்தால் பல காரியங்களைச் செய்திடுகையில் மிகுந்த துன்பங்கள் ஏற்பட்டன! சுயநலத்தின் பால் பட்டதால் அவற்றை ஏற்று அனுபவித்தோம். ஆனால் தாங்களும் சிவபெருமானும் இடு்கின்ற ஆணைகளைச் சிரமேற்கொண்டு எவ்வித சுயநலமும் இன்றி இறைச் சேவைகளில் பங்கேற்கையில் கூட இன்னல் கூடி வருகின்றனவே. இவற்றால் வேதனையுற்ற நாங்கள் தங்களுடைய  அனுக்ரஹத்தை வேண்டுகின்றோம்.” பெருமால் மூர்த்தியோ அவர்களை அக்னிபுராந்தக மகரிஷியிடம் சென்று தக்க விளக்கங்களை பெறுமாறு ஆணையிட்டார். மஹரிஷிகளின் பெருமையை, திறமையை இறைவன் இவ்வாறே உணர்த்துகின்றான். அனைவரும் அக்னிபுராந்த மகரிஷியை சென்றடைந்தனர். “அருட்பெரும்தகையீர்! தாங்கள் எதிர்வருகின்ற கலியுக மக்கள் துன்பங்களை தீர்க தரிசனமாக உணர்ந்து அவற்றிற்கான பிராயச்சித்தங்களை அருந்தவத்தால் பெற்று அளித்து வருகின்றீர்கள்..
தேவலோகத்தை சார்ந்த எங்களுக்கு மஹரிஷிகளும் இறை மூர்த்திகளும் தரிசனங்கள் கைகூடினும் எங்களுடைய இறை சேவைக்குக் கூட தடங்கல்கள் வருகின்றன. ஆனால் கலியுகத்தில் தெய்வீக நெறிகள் கடைபிடிக்கப்படாது மறக்கப்படும் நிலையில் இருக்கின்ற நல்லவர்கள் தெய்வீக கைங்கர்யங்களுக்கும் இடைஞ்சல்கள் ஏற்படுமாயின் அவர்கள் மனம் வெதும்பி நிற்பார்களே. தாங்கள் கூட வற்கட பஞ்சத்தை நிவர்த்திக்கும் வண்ணம் தாங்களே பசி தீர்க்கும் களாச் செடியாய் பிறப்பெடுத்திட அதில் எத்தகைய இன்னல்களைச் சந்தித்தீர்கள் என்பதை நானிலம் நன்கறியுமே, எனவே தக்க நல்வழியை காட்டி அருள்வீர்களாக”. தேவர்கள் கேட்டதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கின்றது. தற்காலத்தில் அன்னதானம், கோயில் உழவாரத் திருப்பணி என நற்காரியங்களில் ஈடுபடுகையில் எத்தகைய இடையுறுகள் ஏற்படுகின்றன, என்பதை சற்றே சிந்தித்துப்பாருங்கள்..!
ஏன், தற்போது நல்லோர்கள் கூட “நாம் என்ன தான் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் துன்பங்கள் தானே தொடர்கின்றது. தீயவர்களோ செல்வத்தில் மிகுந்து சகல சுகங்களையும் அனுபவிக்கின்றார்கள்” என்று ஏங்கி வருத்தத்துடன் கூறுவதை கேட்டுத்தானே வருகின்றோம். துன்பங்களுக்கிடையிலும் நல்லவனாகவே வாழ்வது தான் இறைவன் அளிக்கும் சோதனை சற்றே தடம் புரண்டிடில் நல்லோராக வாழ்ந்த காலத்தின் புனிதமே அழிந்துவிடும். எத்தகையோரும் பலவிதமான சுகங்கள் அனுபவிக்கின்றார் எனில் அது அவர்களுடைய முந்தைய புண்ய சக்தியின் பலனால் தான். அச்சுகபோகங்கள் தவறான முறையில் வந்திடுமாயின் அதற்கான பாபச்சுமையை அவர்கள் நிச்சயம் அனுபவித்தாக வேண்டும்.

நல்லோர்களுக்கு துயரங்கள் அடுக்கடுக்காக வருவது போல் தோன்றுவதற்கு காரணம் அவர்கள் முந்தைய தீவினைகள் வெகுவேகமாக கழிவது தான். தீய வினைகள் களைவதைத்தானே எந்த ஒரு சற்குருவும் மகரிஷியும் விரும்புவார். இதுதானே ஆனந்தத்தை அளிக்கும். எனவே நீங்கள் நல்லவற்றையே செய்து வருவதாக மனசாட்சிக்கு விரோதமின்றி உணர்ந்தால் இந்நிலையிலும் துயரங்கள் ஏற்பட்டிடில் அவை நிச்சயம் உங்கள் தீவினைகழிப்புகளே ஆகும். எனவே மிகவும் பரமானந்தத்துடன் அனைத்து இடையுறுகளையும் உவப்புடன் ஏற்று சுழல்களிலிருந்து மீண்டு விடுங்கள். இந்நிலையில் மகரிஷிகளும் யோகியரும் உங்களைச் சூழ்ந்து எப்போதும் அரவணைப்பர்.
அக்னிபுராந்தகர் தேவர்களின் வேண்டுதல்களுக்கு ஏற்ப கலியுக நல்லோர்களுக்காக ஓர் எளிய வழிமுறையை தம் தபோ பலத்தால் பெற்றுத் தந்தார்..
“தேவர்களே! தாங்கள் அனைவரும் தங்களுடைய இன்னல்களை தீர்க்கும் வழிமுறைகளை அறிவதைவிட வரும் கலியுகத்தில் தங்களைப்போல நல்லோர்கள் அடையவிருக்கின்ற இன்னல்களைத் தீர்க்கும் பூஜைகளில் ஈடுபடுவீர்களாக. உங்களைப் போல் கஷ்டப்படவிருக்கின்ற ஜீவன்களின் பெருந்துயர்களைக் களைவதற்கான இறைச் சேவையில் உங்களை அர்ப்பணித்துக் கொள்வீர்களேயானால் உங்களுடைய துன்பங்கள் தாமே விலகுமே என்று கூறி தம்முடைய அக்னியில் உருவான தபோ  சக்திகளையெல்லாம் ஓர் ஒளிப் பிழம்பாக மாற்றி அவர்கள் முன் வைத்தார். அந்த ஒளிக்கோலமானது பெரிதாகிக் கொண்டே வந்து சந்திரனை விடப் பெரிதாய் ஆகி, பூமியை விட பன்மடங்கு பெருகி, சூரிய கோலத்தை விட பெரிதாய் விளங்கியது. தேவர்கள் அதிசயத்துடன் பார்த்து நின்றனர், “என்னே இவர் தபோ சக்தி! இதற்காக இவர் எத்தனை எத்தனை யுகங்கள் தவத்தில் ஆழ்ந்திருந்தாறோ..” என்று தேவர்கள் எண்ணி வியக்கும் முன்னரே.. அக்னிபுராந்தகர் குறுக்கிட்டு “தேவர்களே! என்னுடைய தவத்தை புகழ்தல் வேண்டாம் அடியேன் ஸ்ரீநரசிம்ஹ பெருமானின் திருவருளால் மிகச் சிறிய தவத்தை மேற்கொண்டு அதில் பெற்ற தபோ சக்தியை ஈஸ்வரனுக்கே அர்ப்பணித்து விட்டமையால் அதனை இறைவனே பன்மடங்காக்கிக் கொண்டான். எனவே ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம் என்று அர்ப்பணிக்கப்படுகின்ற எவ்வித யோக, தியான பூஜா பலன்கள் யாவும் கோடி கோடியாய்ப் பெருகும் என்பதை உணர்வீர்களாக”, என்று அறிவுறுத்தினார். இதன் பிறகு ஸ்ரீஅக்னி புராந்தகர், “இறையருளால் இந்த அக்னி சக்தியாவும் தினந்தோறும் சூரிய சந்திர மூர்த்திகளாலும், அக்னி மூர்த்தியாலும் பூலோகம் எங்குமுள்ள சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்களில் சேர்க்கப்பெறும். நீங்கள் அனைவரும் நாள்தோறும் உங்களுடைய பூஜா பலன்களையும் சேர்ப்பீர்களாக. இதில் நீராடும் பாக்யம் பெறும் நல்லோர்கள் நற்காரியங்களும் எவ்வித இன்னல்களையும் தாங்கும் தெய்வீக சக்தியைப் பெறுவர். எனவே அனைவரும் பல திருக்கோயில்களில் உள்ள சூரிய சந்திர அக்னி தீர்த்தங்களில் அடிக்கடி நீராடி தக்க தெய்வ பலத்தைப் பெற்று நற்காரியங்களில் வருகின்ற இடையுறுகளைத் தாங்கி நின்று தம் இறைப்பணிகளைத் தொடர்வார்களாக. தமிழ்நாட்டில் பல கோயில்களில் சூரிய சந்திர அக்னி தீர்த்தங்கள் உள்ளன. இத்தீர்த்தங்களில் தேவர்கள் தினந்தோறும் நீராடி தேவ சக்தியை கூட்டுகின்றனர். மேலும் நிதமும் சூரிய சந்திர அக்னி மூர்த்திகள் ஸ்ரீஅக்னி புராந்தகரின் அற்புதமான அக்னி தவ சக்தியைச் சேர்த்திடுவதால் நற்காரியங்களில் ஏற்படும் இன்னல்களை அக்னிபுராந்த மகரிஷியின் சங்கல்பத்தின்படி இன்னல்களைக் களையும் மகத்தான தெய்வீக சக்திகளை அவை பெற்றுள்ளன.
“தியாகத்தினால் மட்டுமே அடையமுடியும் தியாகேசனை”.
அன்பர்களின் உதவிக்காக சூரிய சந்திர அக்னி தீர்த்தங்கள் உள்ள தலங்களை அளித்துள்ளோம். ஏனையவற்றை சற்றே முயற்சி செய்து அறியுமாறு மிக பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

திருத்தலங்கள்

 தீர்த்தங்களின் அமைவிடம் மற்றும் பெயர்கள்

1. திருவிற்கோலம் (கூவம்)

 சென்னை – திருவள்ளூர் கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகேயுள்ளது அக்னி தீர்த்தம்.

2. திருவக்கரை

பாண்டிச்சேரியருகே – சந்திர சூரிய தீர்த்தம்

3. விருத்தாசலம்

அக்னி தீர்த்தம்

4. திருத்தலூர்

பண்ருட்டியருகே – சூரிய தீர்த்தம்.

5. திருக்கலிக்காமூர்

அன்னப்பன்பேட்டை, சீர்காழி அருகில் சந்திர தீர்த்தம்.

6. திருவெண்காடு

சூரிய, சந்திர, அக்னி தீர்த்தங்கள்.

7. திருநல்லூர் பெருமணம்

சூரிய சந்திர அக்னி தீர்த்தங்கள்

8. சீர்காழி

சந்திர தீர்த்தம்

9. வயலூர் திருச்சி

அக்னி தீர்த்தம்

10. கானாட்டுமுள்ளூர்

புலியூர் அருகே சூரிய தீர்த்தம்.

11. பந்தணை நல்லூர்

(பந்தநல்லூர் மயிலாடுதுறை அருகே) சூரிய தீர்த்தம்.

12. கஞ்சனூர்

(திருவாவடுதுறை அருகே) அக்னி தீர்த்தம்.

13. திருவையாறு

சூரிய தீர்த்தம்.

14. அன்பில்

சந்திர தீர்த்தம்

15. மேலைத் திருக்காட்டுப்பள்ளி

(திருவையாறு அருகில்) அக்னி தீர்த்தம்.

16. திருப்பூந்துருத்தி

(தஞ்சை அருகில்) சூர்ய தீர்த்தம்.

17. திருநாகேஸ்வரம்

சூர்ய தீர்த்தம்.

18. செம்பனூர் கோயில்

(மாயூரம் அருகே) சூர்ய தீர்த்தம்.

19. திருத்தெளிச்சேரி

(காரைக்கால்) சூர்ய தீர்த்தம்.

20. கோட்டாறு(கோட்டாரம்)

 (திருநெற்றாறு அருகே) சூர்ய தீர்த்தம்.

21. திருமீயச்சூர்

சூர்ய தீர்த்தம்.

22. திலதைப்பதி

(செதலபதி, மதிமுற்றம் மாயூரம் பூந்தோட்டம் அருகே) சந்திர தீர்த்தம்.

23. வன்னியூர்.

(அன்னியூர், அன்னூர் திருவீழிமிழலை அருகே) அக்னி தீர்த்தம்.

24. திருப்புகலூர்

(நாகப்பட்டிணம் அருகே) அக்னி தீர்த்தம்.

25. திருச்செங்காட்டங்குடி

சூரிய, சந்திர, அக்னி தீர்த்தம்.

26. திருச்சாத்தமங்கை

(சீயாத்தமங்கை நாகப்பட்டிணம் அருகே) சூரிய சந்திர தீர்த்தம்.

27.  திருவிளமர்

(திருவாரூர்) அக்னி தீர்த்தம்.

28. பரிதிநியமம்

(தஞ்சை அருகே) சூரிய, சந்திர தீர்த்தம்.

29. வெண்ணி

(கோயில் வெண்ணி) சூரிய, சந்திர தீர்த்தம்.

30. பேரெயில்

(ஓகைப்பேறையூர் திருவாரூர் அருகே) அக்னி தீர்த்தம்.

31. திருநெல்லிக்கா

சூரிய தீர்த்தம்.

32. திருநாட்டியத்தாங்குடி

(திருவாரூர் அருகே) சூரிய தீர்த்தம்.

33. திருவாய்மூர்

(நாகப்பட்டிணம் அருகே) சூரிய தீர்த்தம்.

34. கோடிக்கரை

(வேதாரண்யம் அருகே) அக்னி தீர்த்தம்.

35. திருப்புனவாசல்

(ஆவுடையார் கோயில் அருகே) சூரிய, சந்திர அக்னி தீர்த்தங்கள்.

36. திருவாடானை

(காரைக்குடி அருகில்) சூரிய தீர்த்தம்.

37. ஆவுடையார் கோவில்

அக்னி தீர்த்தம்.

கர்மவினை தீர்வு

கர்மவினைகள் தீர்வதற்கான எளிய ஆன்மீக வழிமுறைகள்..
சென்ற இதழ் தொடர்ச்சி....  கடந்த சில இதழ்களில் இத்தொடரில் நம் நடைமுறை வாழ்க்கையில் நாம் கடைபிடிக்க வேண்டிய, எளிய கர்மவினைகளைத் தீர்க்கும் வழிமுறைகளை ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகள் அளித்து வருகின்றார்கள்..
1. “அய்யோ” என்ற ஒரு வார்த்தையை ஒருபோதும் பயன்படுத்தாதீர்கள்.. சிவசிவ, நாராயணா, முருகா, பிள்ளையாரப்பா, பகவதியே, ஐயப்பா என்று இறை நாமங்களைச் சொல்லிப் பழகுங்கள்! பஸ்ஸிலோ, கடையிலோ “சில்லற இருக்கா” என்று அவர்கள் கேட்டிட “ஐய்யோ இல்லையே” என்று கூறாது “சிவசிவ இல்லையே” என்று பவ்யமாகக் கூறிடுங்கள்.. அதன் இனிமையையும், நயத்தையும் கண்டு அனைவரும் இனிமையுடன் பழகிடுவர்.. “அய்யோ“ என்பது எமனின் பத்னியின் பெயர். எம நினைவுடனிருப்பதும் சிறப்புடையதே. ஆனால் நம் உள்ளமோ, குடும்பத்தவர்களோ இதனை ஏற்குமா ஏற்பார்களோ! மரணத்தைக் கண்டு அஞ்சுகின்ற மகா வல்லவர்கள் தாமே நாம்!.
2. தேங்காய்ப் பூ மிகச் சிறந்த சகுனம்! உடைத்த தேங்காயில் தேங்காய்ப் பூ, பூரித்திருக்குமாயின் நன்மையைக் குறிப்பதுவே அது!.
3. வெளியில் முக்யமான காரியமாகச் செல்கையில் “பைலையோ/பேனாவையோ/ செருப்பையோ மறந்து விட்டேன்” என்று அதற்காகத் திரும்பி வராதீர்கள். இடையுறுகளைக் காட்டுவது இச்சகுனம். இச்சமயங்களில் எடுத்த காரியத்தை தாமதிப்பதே மேல்.
4. வீட்டில் தடாபுடாவென்று பாத்திரங்கள் உருள்வதான சத்தமும் ஏதோ தீயதின் அறிகுறியே! தும்மல் வருவது கெட்ட சகுனம் என்று அதனை வெறுப்பதை விட இறைவனால், நமக்கு வருகின்ற தடங்கல்களை இயற்கையாகவே காட்டுவதற்கான சம்பவங்கள் என்று ஏற்று உணர்ந்து தெளிதல் வேண்டும்.
5. தோலாலான செருப்பை அணிந்திடாதீர்கள். பசு, ஆடு, மாடு என மிருகங்களை வதைத்து உருவாகும் தோலில் மிருகங்களின் வேதனைகளே பதிந்திருக்குமாதலின் அவையும் நம் வாழ்வில் அழிக்க இயலாத் தீவினைகளாக நம்மைச் சேரும் . இக்கருத்தினைப் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் வலியுறுத்தி வந்துள்ளோம். இதுவரை தோல் காலணிகளை அணிந்து ஏற்ற கர்மவினைகள் தீர சூரிய தீர்த்தம் உள்ள கோயில்களில் நீராடி மூலவரை ஒன்பது முறையேனும் அடிக்கடி அடிப்பிரதட்சிணம் வருதல் வேண்டும்.
6. மாதந்தோறும் உங்களுடைய பிறந்த நட்சத்திரத்தன்று கோயிலில் ஸ்ரீசந்திர பகவானுக்கு எண்ணெய்க் காப்பிட்டு எளிய வழிபாட்டினை மேற்கொண்டால் மன சஞ்சலங்கள், சபலங்கள் எளிதில் நிவர்த்தியாகும். காரணம் தினந்தோறும் ஸ்ரீசந்திரனின் சிலாரூபத்தில் அந்தந்த தினத்திற்குரிய நட்சத்திர தேவி ஆவாஹனமாகின்றாள்.. மே 1997 மாத இதழில் ஸ்ரீஅகஸ்தியர் அருளியுள்ள அந்தந்த நட்சத்திரத்திற்குரிய இலைகள்/தளங்களை அறிந்து கொண்டு மாதந்தோறும் உங்களுடைய குடும்பத்தினருடைய நட்சத்திர நாட்களில் அந்தந்த இலை/தளங்களால் பூஜித்து வர தீர்க ஆயுளும் நல் ஆரோக்யமும் மனத் தெளிவும் உண்டாகும்.

ஆயிரம் பிறை காணுதல்

என்பது வயது நிறைவு பெற்றவர்களை ஆயிரம் பிறை கண்ட அபூர்வ உத்தமர் என நாம் புகழ்ந்து பாராட்டி அவர்களிடம் ஆசி பெறுகின்றோம் அல்லவா! இதன் பொருள் என்ன? “பிறை காணுதல்” என்றால்.... அமாவாசை திதியிலிருந்து மூன்றாம் நாள் வானில் கிட்டுகின்ற ‘மூன்றாம் பிறை சந்திரனை தரிசித்தல்‘ என்பது பொருளாகும். ஏனெனில் தட்சனுடைய சாபத்தால் தம்முடைய பதினாறு கலைகளையும் இழந்த சந்திர பகவான் தாம் இழந்த கலைகளை மீண்டும் பெற்றிட இறைவனை நோக்கிக் கடும் தவமிருந்தார். பலகோடி யுகங்கள் தவத்திற்குப் பின் சந்திர பகவானுக்கு இறைவனின் தரிசனம் கிட்டியது. ஆனால் அவரோ தம் தவத்தை மேலும் தொடர்ந்தார்.
சந்திர பகவானுடைய 27 நட்சத்திர மனைவியர்களோ அவருடைய நிலை குறித்தும். கடுந்தவத்தினால் உருகி வரும் அவருடைய தேக நிலை குறித்தும் மிகவும் வருத்தமுற்றனர். அவர்கள் ஒன்று திரண்டு தம் தந்தையான தட்சனை கடிந்து கொண்டு சாபத்தைத் திரும்பப் பெறும்படி வற்புறுத்தினர். தட்சனோ, “நான் அறியாமையினாலும் கடுஞ்சினத்தினாலும் சந்திரனுக்கு அநீதியான முறையில் சாபங்களை அளித்துவிட்டமையால், என்னுடைய தபோபலனும், புண்ணிய சக்தியும் கரைந்து விட்டன. எனவே அச்சாபத்தைத் திரும்பப்பெறும் அளவிற்கான தவவலிமை எனக்கில்லாமல் போய்விட்டது!” என வருத்தமுற்றுக் கூறிடவே, 27 நட்சத்திர தேவியரும் சூரியமண்டலத்தில் அமர்ந்து கடும் வெப்பத்தினூடே அரிய தவத்தை மேற்கொண்டனர்...
பெண்களுக்கு ஆண்களைவிட ஏழு மடங்கு மனோசக்தியும் ஆற்றலும் உண்டு. எனவே அவர்களின் அரிய யோக தவம் மேம்பட்டு அவர்களுக்கு இறை தரிசனமும் எளிதில் கைகூடியது. சந்திர பகவானுக்கு பதினாறு கலைகளையும் பெற்றுத் தர வேண்டும் என்ற சங்கல்பத்துடன் தவத்தைத் தொடங்கிய 27 நட்சத்திர தேவியரும் அவர்களுடைய அப்பழுக்கற்ற பூஜை முறைகளினாலும் ஏகாந்தமான மனோலயத்தாலும்  அத்தகைய உத்தம இறை நிலையிலேயே லயிக்க விரும்பி இறைவன் காட்சி அளித்து “வேண்டிய வரத்தை பெறுவீராக!” என்று அருளிய போதும் “ இத்தகைய புனிதமான தெய்வீக நிலையிலேயே இருந்திட விரும்புகின்றோம்!” என்ற வரத்தைப் பெற்றனர். இறைவனும் மகிழ்ந்து அவ்வாறே அருளிட 27 நட்சத்திர தேவியரும் உத்தம தவத்தின் ஒளிக்குடமாய் மாறி ஆங்கே 27 நட்சத்திர ஜோதிப் பிழம்புகள் தோன்றின.. இப்புனிதமான நேரத்தில் தான் சந்திர பகவானுடைய தவமும் கனிந்தது. ஆங்கே இறைவன் மீண்டும் காட்சியளித்து, “பூர்ணசந்திரா! உன்னுடைய தவம் மட்டுமன்றி உன்னுடைய 27 பத்தினிகளின் சிறப்பான தவத்தால் யாம் ஆனந்தமடைகின்றோம். ஆனால் உன்னுடைய மனைவியர்களுடைய தற்போதைய தெய்வீக நிலையினை நீ அறிவாயா? அளப்பரிய தவத்தால் அவர்கள் பெறுதற்கரிய தெய்வீக நிலையைப் பெற்று தற்போது நட்சத்திர ஜோதி லிங்கங்களாகப் பிரகாசிக்கின்றனர். பதினாறு கலைகளையும் இழந்து வலுவற்றிருக்கும் உன் தேகத்திற்கு புது சக்தியைப் பெற்றிட குறித்த சில தலங்களில் எம் லிங்கத்திருமேனியை உன் கிரணங்களால் தழுவி பூஜிப்பாயாக. எம்முடைய ஆலயங்களிலும் எம்முடைய சிவலிங்க ரூபத்திற்கு எதிரிலேயே சந்நிதி கொண்டு என்னிடமிருந்து தேஜோமயமான பூரண கதிர்களை ஆகர்ஷித்து கிரகித்து, உன்னுடைய ஆதி அவதார சக்தியை மீண்டும் பெறுவாயாக!” என்று அருள்பாலித்தார்...
சிவபேறு பெற்ற 27 நட்சத்திர தேவியர்..
கலியுகத்தில் சிவபேறு அடைதல் எனில் மரணத்திற்குப் பின் உள்ள நிலை என எண்ணுகின்றனர். ஸ்ரீவள்ளலார், ஸ்ரீபாடகச்சேரி சுவாமிகள், ஸ்ரீபரமாச்சாரியாள், ஸ்ரீபூண்டி மகான், ஸ்ரீகசவனம்பட்டி சுவாமிகள் போன்றோர் சிவப்பேறு நிலை அடைந்த பின்னும் மக்களோடு மக்களாய் வாழ்ந்து அருள்பாலித்தனர். 27 நட்சத்திர தேவியரும் தம்முடைய அருட்பெரும் தவத்தால் பெறற்கரிய சிவப்பேறு நிலையைப் பெற்றனர். சிவபெருமானும் அவர்களுடைய ஜோதிமயமான ஈஸ்வர கடாட்சப் பெருக்கை லிங்கங்களாக்கி 27 நட்சத்திர லிங்கங்களாக ஆக்கினார். இவையே இன்றும் சில கோயில்களில் அபூர்வ நட்சத்திர லிங்கங்களாக காட்சியளிக்கின்றன. ஒவ்வொருவரும் வருடத்திற்கு ஒரு முறை பிறந்த நட்சத்திரத்தன்று (ஜன்ம நட்சத்திர நாள்) அவரவர்க்குரிய நட்சத்திர லிங்கத்தை அபிஷேக ஆராதனைகளுடன் வழிபட்டு தான தர்மங்களுடன் கொண்டாடுவதே மிகச்சிறப்பான பிறந்தநாள் கொண்டாடும் முறையாகும். வெளி மாநிலம், அயல்நாடுகளில் உறைவோர் தம் வாழ்நாளில் குறைந்தது மூன்று முறையேனும் இந்த நட்சத்திர லிங்க வழிபாட்டைக் கடைபிடித்தல் வேண்டும். மதுரை ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் சந்திர பகவான் ரோகினி, கார்த்திகை நட்சத்திர தேவியருடன் காட்சி தருகின்றார். இதேபோல் பல தலங்களில் பல நட்சத்திர தேவியர்களும் எழுந்தருளியுள்ளனர். சென்னை – திருவொற்றியூரில் 27 நட்சத்திரங்களுக்கும் 27 வித லிங்கங்களுண்டு.
பிறந்தநாளில் ஆசி பெற
இவ்வாறாக 27 நட்சத்திர தேவியரின் பூஜா சக்தியின் திரண்ட அருட்கடாட்சமும் ஈஸ்வரனின் ஒளிக்கிரண, ஸ்தூல, சூட்சும தெய்வம்சமும் கூடி சென்னை திருவொற்றியூரில் ஸ்ரீபடம்பக்கநாதர் ஆலயத்தில் 27நட்சத்திர லிங்கங்களாக அமைந்துள்ளன. இத்திருக்கோயிலில் ஒவ்வொரு நட்சத்திர பெயருடன் 27 நட்சத்திர லிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. ஏற்கனவே எடுத்திரைத்துள்ளபடி ஒவ்வொருவரும் ஆண்டுதோறும் அவரவர்களுடைய பிறந்தநாள் அன்று (ஜன்ம நட்சத்திரத்துடன் கூடிய) இத்திருக்கோயிலில் அருள்பாலிக்கும் அந்தந்த நட்சத்திர லிங்கத்திற்கு அபிஷேக ஆராதனைகளையும், தனக்குப் பிடித்தமான இனிப்பு, உணவு வகைகளையும், ஏனைய இயன்ற பொருட்களையும், தான தர்மமாக ஏழைகளுக்கு அளிப்பதே பிறந்த நாளை மிகச் சீரிய முறையில் கொண்டாடும் முறையாகும். தயவு செய்து மெழுகுவர்த்திகளை ஏற்றி ஊதி அனைத்து பிறந்த நாளைக் கொண்டாடாதீர்கள். மங்களகரமான நாளில் அசுப காரியமாக, எரியும் தீபத்தை அணைத்திடலாமா? சற்றே பகுத்தறிவுடன் சிந்தியுங்கள்... இவ்வினிய நாளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி அணைப்பதை விட அழகான தீபங்களையோ மெழுகுவர்த்திகளையோ ஏற்றி ஆனந்தமடையுங்கள்.

ஸ்ரீவெள்ளை வாரணப் பிள்ளையார் திருவலஞ்சுழி

பூஜை அறையில் உள்ள விளக்கினை ஊதி அனைத்திடில் பல தோஷங்கள் ஏற்படுகின்றன. மெழுகுவர்த்தி தீபமும்  ஒரு வகை ஜோதியே., இதை ஊதி அணைத்து விசேஷமான நாளில் சாபங்களைத் தேடிக் கொள்ளாதீர்கள்.. 27 நட்சத்திர தேவியரும் பூஜித்த லிங்கங்கள் அவர்களுடைய தபோபலனுடனும் பூஜா சக்தியுடனும் லிங்கங்களாக மாறினார்கள் அல்லவா! இதைக் கண்டு சந்திர பகவான் ஆனந்தம் பெற்றிடினும் தன்னுடைய தேவியர்களை ஸ்தூல ரூபத்தில் காண முடியாது வருத்த முற்றிடவே ஈஸ்வரன் 27 நட்சத்திர தேவியருக்கும் அவர்களுடைய தவத்திற்கு முந்தைய சரீரங்களை அளித்தனன். பின்னர் சந்திர பகவான் தன் தேவியருடன் மீண்டும் தவம் புரிந்து சிவபெருமானுடைய சிரசில் மூன்றாம் பிறையாக அமரும் பெரும் பேற்றைப் பெற்றார். 16 கலைகளையும் இழந்திருந்த சந்திரன் மாதத்தில் ஒரு பட்சம் (15 நாட்கள் சுக்ல பட்சம் வளர்பிறை) கலைகள் வளர்வதாகவும் அடுத்த பட்சம் (கிருஷ்ணபட்சம் – தேய் பிறை) கலைகள் தேய்வதாகவும் மாறுபட்ட வரத்தையும் பெற்றான்.
அமாவாசையிலிருந்து மூன்றாம் நாள் வருகின்ற வானத்தில் தெள்ளிய கீற்று போன்ற மூன்றாம் பிறை தரிசனம் மிகவும் தெய்வீக சக்தி வாய்ந்தது. இறைவனே தம் திருக்கரங்களால் எடுத்துச் சூடிய சந்திர மலரே மூன்றாம் பிறையாம். இறைவனைக் காணத் துடிக்கின்றோமே, சாட்சாத் சர்வேஸ்வரனே திருஅண்ணாமலையில் மலைத் திருமேனியைப் பூண்டு காட்சி அளித்திடினும் நாம் அதை உணர்ந்திடவில்லையே! அதே போல் உள்ளத்துக்குள்ளும் பிரபஞ்சத்திற்குள்ளும் வெளியிலுமாக வியாபித்திருக்கும் இறைவனும் சிரசு தரிசனத்தினால் ஒரு துளியே சந்திர பிறையான மூன்றாம் பிறையாகக் காட்சியளிக்கிறது.
பிறை காண முயல்வீர் பெரும் பயன் பெறுவீர்.
மாதத்திற்கு ஒரு மூன்றாம் பிறையாக 80 வருடங்களுக்கு கிட்டத்தட்ட 1000 பிறைகளை ஒருவர் கண்டு வாழ்க்கையின் குறிக்கோள் நிறைவடைவதாகக் கொண்டு அவருடைய சதாபிஷேகமாகிய எண்பதாண்டு நிறைவில் ‘ஆயிரம் பிறை கண்டார்’ என்று போற்றி மகிழ்ந்து கொண்டாடுகின்றோம். இறைப் பெருங்கருணையினால் ஒருவர் நூறாண்டு ஆயுளை எட்டுவாராகிலும் அவர் நிச்சயமாக ஆயிரம் மூன்றாம் பிறைகளுக்கு மேல் கண்டு தரிசித்து உய்வடைந்திருக்க வேண்டும். ஆனால் தற்போதைய கலியுக நவீன வாழ்க்கையில் மாதம் ஒரு முறை மூன்றாம் பிறையை எவரும் தொடர்ந்து முறையாக தரிசிப்பதில்லை. தீர்க்கமான நல்ல கண் பார்வையையும் பொறுமை, பணிவு, அடக்கம் ஆகிய உயர்ந்த குணங்களையும், நோய் நொடியற்ற திடகாத்திரமான ஆரோக்கியத்தையும் தரவல்லது, மூன்றாம் பிறை தரிசனமாகும்.
உண்மையில் மூன்றாம் பிறை தரிசனமே இறைதரிசனமாக அமைகின்றது. காரணம் ஈஸ்வரனின் சிரசில் ஒளிரும் சந்திர தரிசனமே மூன்றாம் பிறை தரிசனமாகும். இவ்வாறாக ஆயிரம் மூன்றாம் பிறைகளுக்கு மேல் தரிசனம் பெற்று நடமாடும் தெய்வமாய் அன்றும் இன்றும் என்றும் இலங்குபவரே ஸ்ரீபரமாச்சாரியாள் சுவாமிகள் ஆவார். மூன்றாம் பிறையின் புனிதத்துவத்தை பரிபூரணமாக அறிந்த மகான் அவராவார். அவருடன் சேர்ந்து பிறை தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் ஒரு சிலரே. வானத்தில் அமவாசையிலிருந்து மூன்றாம் நாள் தோன்றுகின்ற மூன்றாம் பிறை குறைந்த கால அளவிற்கே வானில் தென்படும். இதுபற்றிய அரிய விளக்கங்களை எம்முடைய முந்தைய ஸ்ரீஅகஸ்திய விஜய இதழில் அளித்துள்ளோம். ஆனால் வழக்கில் மூன்றாம் பிறை என்று எண்ணிக் கொண்டு நான்காம் பிறையையே தரிசனம் செய்கின்றனர். நான்காம் பிறை தரிசனம் தீமையின் அறிகுறி என்பது உண்மையே.. எனவே இனியேனும் அமாவாசையிலிருந்தே, சுதாரிப்பாகக் குடும்பத்துடன் வீட்டு மாடிக்கோ வெட்ட வெளிக்கோ அல்லது பெரிய கோயில்களுக்கோ சென்று மூன்றாம் பிறையைத் தரிசித்து பெறற்கரிய இறையருளைப் பெற வேண்டுகிறோம்.
பொதுவாக பரம்பொருளின் ஓர் அணுத்துளியாம் திவ்ய தரிசனத்தைப் பெறவே கோடானு கோடி ஆண்டுகள் விதவிதமாகத் தவங்களைப் புரிந்து யோகங்களைப் பயின்று பூஜைகளையும், ஏனையவற்றையும் கடைபிடித்தாக வேண்டும். ஆனால் மிகமிக எளிதான இறைவனின் திருசிரசு தரிசனத்தின் ஓர் அணுத்துளியாக மூன்றாம் சந்திர பிறை தரிசனம் கிட்டுகின்றதென்றால் நாம் என்னே பாக்கியம் செய்திருக்க வேண்டும். இதன் மஹிமையை வலியுறுத்துவதற்காகவே இன்று பல கோணங்களில் அதே பிறை தரிசன விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் பிறை தரிசனத்தின் பலன்கள் எண்ணற்றவை. குடும்பத்தில் பாசம், பற்று, ஓரளவிற்கு நிலைபெற்றால் தான் வாழ்க்கை சுமூகமாக இருக்கும். கணவன் தெய்வீகத்தில் பல கைங்கர்யங்களில் ஈடுபட்டு சில உத்தம நிலைகளைப் பெற்றிட, மனைவியோ மிகச் சாதாரண மனுஷியாக வாழ்வதால் குடும்பத்தில் சச்சரவுகளே உண்டாகும். இல்லறத்தின் மகத்துவமே கணவன், மனைவி, குழந்தைகள், பெற்றோர், உற்றார் சுற்றத்துடன் அனைவரும் தெய்வீக நற்காரியத்தில் முழு மனதுடன் ஈடுபட்டு ஒட்டு மொத்தமாக தெய்வப் பெருநிலையை அடைதல் வேண்டும். மூன்றாம் பிறை தரிசனத்தைக் குடும்பத்துடன் தரிசித்திடில் மனதிற்கு அதிபதியான சந்திர பகவானும் தெய்வீக ஒளிக் கதிர்களின் ஆற்றலால் குடும்பத்தில் பரஸ்பர ஒற்றுமையும் மனச்சாந்தியும் ஏற்பட அருள்புரிவார்.

கடுக்கன் மகிமை

கடந்த பல ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழ்களில் கடுக்கன் அணிவதால் கிட்டும் தெய்வீகப் பலன்களைப் பற்றி விவரித்து வந்துள்ளோம். ஸ்ரீராமருடைய புத்திரர்களில் ஒருவரான ஸ்ரீகுசன், ஸ்ரீஹனுமரிடம் ஒப்பற்ற பல தெய்வ பூஜைகளின் மஹாத்மியத்தைக் கேட்டு பெற்றதுடன் அவற்றை நன்கு கடைபிடிக்கவும் செய்தார். அப்போது ஸ்ரீஹனுமார், இஷ்ட தெய்வ பூஜையின் மஹிமையை விளக்கிட குசனோ தனக்குரிய இஷ்ட தெய்வத்தைக் காட்டியருளுமாறு கேட்டுக் கொண்டார். ஸ்ரீஹனுமாரும் “ஸ்ரீகுச தேவா! தங்களுடைய குடும்பத்தார் ஸ்ரீரெங்கநாதரை வழிபட்டு வருகின்றனர். அவரே தங்களுக்குரிய இஷ்ட தெய்வத்தையும் தந்தருள்வார்” என்றார்.. ஸ்ரீகுசனும் ஸ்ரீரெங்கநாதரைப் பிரார்த்தித்திட...
நெடுங்காலத் தவத்திற்குப் பின் ஸ்ரீமந் நாராயணனே ஹிருதயோத்பவராகக் காட்சியளித்ததோடு, ஸ்ரீஹிருதயோத்பவர் அர்ச்சாவதார மூர்த்தியின் சிலா ரூபத்தைத் தந்தருளினார்.. குசனுக்குக் “கனகமாலிகை” என்ற ஒரு பெண் இருந்தாள். ஆனால் பல ஆண்டுகளாக எண்ணற்ற சுயம்வரங்கள்  நடத்தியும் அவளுக்குத் திருமணப் பிராப்தி கிட்டவில்லை. காரணம் என்னவெனில் கனகமாலிகை வைத்த ஒரு நிபந்தனையே! அது என்னவோ?

திருச்செங்கட்டாங்குடி

குசன் பெற்ற ஹிருதயோத்பவரின் சிலா ரூபமூர்த்தியை மிக்க பக்தியுடன் கனகமாலிகை பூஜித்து வந்தாள். ஆனால் அச்சிலாரூபம் அனைவரின் கண்களுக்கும் தென்படாது. கனகமாலிகை, எந்த ஒரு புருஷனின் கண்களுக்கு அச்சிலாரூபத்தை தரிசனம் செய்யும் சக்தி இருக்கின்றதோ அவனையே தன் மணவாளனாக ஏற்பதாகக் கூறினாள். இந்நிலை கண்டு குசன் மிகவும் கவலையுற்றார்.... உண்மையிலேயே பக்தி நிறைந்த பல தேசத்து அரசர்களும் ராஜகுமாரர்களும் பல விதவேள்விகளும் யாகங்களும் விசேஷ பூஜைகளும் நிகழ்த்திய பின்னரும் அவர்களுடைய கண்கள் அச்சிலாரூபத்தைத் தரிசிக்கும் சக்தி பெறவில்லை. ‘எந்த ஒரு அரிய வழிபாட்டை நிகழ்த்தினால் இந்த விசேஷ சிலா ரூபத்தின் தரிசனம் பெறலாம்’ என்ற ரகசியத்தை குசனாலேயே அறிய முடியவில்லை. இறுதியில்....
யதுசேகரன் என்ற உத்தம வைணவ ராஜா, சிவ வைணவ பேதமின்றி பல  திருத்தலங்களுக்குச் சென்று இறைவனின் திருக்கல்யாணக் கோலத்தை தரிசனம் செய்தவாறு வந்துகொண்டிருந்தார்.. இவ்வாறாக ஸ்ரீநாராயணபுரம் எனும் ஓர் அற்புதத் திருத்தலத்திற்கு வந்து, தான் மன்னனாயிருப்பினும் எந்த ஒரு ராஜ மகுடங்களும் இல்லாது பஞ்சகச்ச முறையில் சாதாரண உடை உடுத்தி, காதுகளில் கனக புஷ்பராகக் கடுக்கன்களுடன் இறைவனின் கல்யாண கோல்த்தைத் தரிசனம் செய்து, இறைவனுடைய ஆணைப்படி ஹிருதயோத்பவரைத் தரிசனம் செய்யும் ஆவல் கொண்டு கனகமாலிகையின் சுயம்வர மண்டபத்திற்கு வந்தார். அங்கு எவருக்கும் காணக் கிடைக்காத ஹிருதயோத்பவரின் அற்புத தரிசனத்தைப் பெறும் பாக்கியமாகப் பெற்றார். இதனைக் கண்ட அனைவரும் வியந்தனர்.., “காணுதற்கரிய இவ்வற்புத தரிசனத்தைப் பெறும் பாக்கியத்தை தாங்கள் எவ்வாறு பெற்றீர்! எங்களுக்கும் அந்த ரகசியத்தைத் தயைகூர்ந்து அருள்வீர்களாக” – என அங்கு குழுமியிருந்தவர்கள் வேண்டினர்... “பெறுதற்கரிய விசேஷ தரிசனத்தை யான் பெறுவதற்குக் காரணம், அடியேன் அணிந்துள்ள அற்புத சக்திகொண்ட கனகபுஷ்பராகக் கல் பொருத்தப்பட்ட கடுக்கனேயாகும். எம் குருவாகிய நாரதர் ஸ்ரீஹிருதயோத்பவரின் தரிசனம் அடியேன் பெறவேண்டும் என திருஉளம் பூண்டு கடுக்கன்களின் ரகசியத்தை எனக்கு அருளினார். அதன்படி குறித்த நாளில், நட்சத்திர வேளையில், ஹோரை நேரத்தில் இக்கனக புஷ்பராகக் கடுக்கன்களை அணிந்து ஸ்ரீநாராயணபுரத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கல்யாணக் கோலத்தில் எம்பெருமானை தரிசித்ததன் பலனாய் ஸ்ரீஹிருதயோத்பவரைக் கண்டு மகிழும் பெரும் பேறு பெற்றேன்” என்றார்...

இதைக்க் கேட்ட குசன் மனம் நெகிழ்ந்து தன்னுடைய மகளான கனகமாலிகையை ஏற்கும்படி வேண்டினார். இதனைக்கேட்ட யதுசேகரன் அடியேன் இங்கு வந்த காரணம் குரு ஆணையின் படி ஹிருதயோத்பவரை தரிசிப்பதற்காகத்தானேயன்றி, சுயம்வரத்தில் பங்குபெறுவதற்காக அல்ல”, என்று கூறினார். உடனே அங்கு அற்புத ஜோதியாய் காட்சியளித்து, அனைவருக்கும் தரிசனம் தந்த ஸ்ரீஹிருதயோத்பவ மூர்த்தி “யதுசேகரா அனைத்தும் எம் திருவிளையாடலே. நீ கனகமாலிகையை உன் மனைவியாய் ஏற்று உன் திருத்தொண்டுகளை சிறப்புடன் தொடர்ந்து செய்வாயாக, மேலும் நீ என பரமபக்தனாகிய நாரதமுனிவரிடம் கற்ற கடுக்கன் ரகஸ்யங்களையும் பெருமைகளையும் மக்களுக்கு அறிவித்து அவரவர் உய்விற்கு நீ ஒரு கருவியாக அமைவாயாக, பாமர மக்களும் எளிமையான வழியில் அறிய தெய்வீக சக்திகளைப் பெறும் நற்பிரச்சாரம் தன்னை ஆற்றி வருவாயாக!” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
யதுசேகரன் – கனகவல்லி இருவரும் தம்பதி சகிதம் அய்யர்மலை ஸ்ரீஇரத்தினகிரீஸ்வரர், திருஇடைச்சுரம், ஸ்ரீமரகதலிங்கேஸ்வரர், தில்லை ஸ்படிக லிங்கம், திருஈங்கோய் மலை ஈஸ்வரன் (மரகத லிங்கம்) போன்ற ஸ்ரீஇரத்ன ஈஸ்வரர்களை தரிசித்து சென்றவிடமெங்கும் யாவரும் கடுக்கன் அணிந்து கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை வலியுறுத்தி பிரச்சாரம் செய்தனர்.. இப்புராண நிகழ்ச்சி கடுக்கனின் தெய்வீக அருட்சக்திக்கு ஓர் சான்றாக அமைகிறது. ஆகவே நாமும் கடுக்கன் அணிந்து இடுக்கண்களை நீக்கி இறையருட்தரிசனங்களைப் பெற்று நம் பிறவிப் பயனை அடைவோமாக.!

அமுத தாரைகள்

1. நான்கு வேதங்களும் வழிபட்ட தலங்கள் :- வேதாரண்யம், திருவேதிகுடி, திருக்கழுக்குன்றம், தேரழுந்தூர் etc…. நான்கு வேதங்களும் நான்கு கிளைகளாக அமைந்துள்ள மாமரமே... காஞ்சீபுரம் ஸ்ரீஏகாம்பரேசுவரர் கோயில் தலவிருட்சமாகும். இத்தலங்களில் வடமொழி/தமிழ் மறைகளை ஓதி வியாழன் அன்று குருஹோரை நேரத்தில்.. (காலை 6-7, மதிய 1-2, இரவு 8-9மணி ) 70/80 வயது நிறைந்த தம்பதியருக்குப் பாத பூஜை செய்து வழிபட, தாய் தந்தையரை அநாதையாக விட்ட பாவங்களுக்கும் பெற்றோரை சரிவர நடத்தாத பாவங்களுக்கும் ஓரளவு பிராயச்சித்தம் கிடைக்கும்.
திருக்கழுக்குன்றம்.: இங்கு மலைக்கோயிலின் ஆரம்பப் படிக்கட்டுகளில் ரிக்வேதத்தையும் நடுப்படிகளில் யஜுர் வேதத்தையும், இறுதிப் படிக்கட்டுகளில் சாமவேதத்தையும் ஓதி, கழுகு அல்லது கருட தரிசனம் பெற்றபின் மலையில் உள்ள நந்தீஸ்வரரின் காதுகளில் சாம வேதத்தை ஓதிட, வேதம் ஓதிய பலன் யாவருக்கும் கிட்டும். எளிய நான்கு வேத மந்திரங்களை அளித்துள்ளோம்.. யாவரும் ஜாதி, இன பேதமின்றி இவற்றை ஓதிடலாம்.
எளிமையான வேத மந்திரங்கள் – யாவரும் ஓதலாம்
ஹரி:ஓம்|| அக்நிமீளே புரோஹிதம் யஜ்ஞஸ்ய தேவம்ருத் விஜம்: ஹோ தாரம் ரத்ன தாதமம்|| ஹரி ஓம்||
ஹரி: ஓம்|| இஷேத்வா ஊர்ஜேத்வாவாயவஸ்த உபாய வஸ்த தேவோவ: ஸவிதா ப்ரார்பயது ச்ரேஷ்டதமா யகர்மணோ ஹரி: ஓம்||
ஹரி: ஓம்|| அக்ன ஆயாஹிவீத யேக்ருணாந: ஹவ்யதாதயே: நிஹோதா ஸத்ஸி
பர்ஹிஷி|| ஹரி: ஓம்||
ஹரி: ஓம்|| ஸந்நோதேவீ: அபீஷ்டயே ஆபோபவந்து பீதயே:
சம்யோரபிஸ்ரவந்துந: ஹரி: ஓம்.

திருப்பூந்துருத்தி

2. நந்தி மூலஸ்தானத்தை நோக்கி இல்லாது விலகி உள்ள தலங்கள். திருப்புன்கூர், பட்டீஸ்வரம், ஏனனூர், திருப்பூந்துருத்தி, இத்தலங்களில் விளக்கெண்ணெய் தீபமேற்றி வேர்க்கடலைதனை சிறுவர்களுக்கு தானமாக அளித்துவர மனவேதனைகள் தீரும். பொதுவாக நந்திக்கு முழு வேர்க்கடலை மாலையை அணிவிப்பது சிறப்பான வழிபாடாகும். இதனால் தீய கனவுகள் ஏற்படாது..
3.  திருநாகேஸ்வரத்தில் (கும்பகோணம்) அம்பிகை சுதை ரூபத்தில் எழுந்தருளியுள்ளார்கள். இவ்வம்பிகையின் சந்நதியில் சாம்பிராணி தூபமிட்டுத் தாமரை இலையில் சித்ரான்னத்தில் புளியோதரை, எலுமிச்சை ஏதேனுமொன்றை நைவேத்யமாகப் படைத்து தானமளித்திட, கணவன்மார்களின் தீயொழுக்கங்களைத் தணித்திடலாம்.
4. நின்றார்... தந்தார்...! தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் உள்ள தலங்கள் திருபாற்றுரை, இலால்குடி, திருவைகாவூர் இம்மூர்த்திகளுக்கு மனோரஞ்சித மலர்களைத் தன் கைகளாலேயே கோர்த்து மாலையாக்கி அணிவித்து வெள்ளைக் கொண்டைக் கடலைச் சுண்டல் தானம் செய்து வந்திடில் பள்ளியில்/ கல்லூரியில் எளிதில் இடம் கிட்டும்.
5. திருவலஞ்சுழியில் (கும்பகோணம் அருகே கடல் நுரையினாலான விநாயகர் உள்ள கோயில்) கணபதி வல்லபை அநாதி லக்ஷ்மி ஆகிய இரண்டு தேவியருடன் அருள்பாலிக்கின்றார்.. இவருக்குச் சர்க்கரை கலந்த வெண்ணெயை நைவேத்யம் செய்து குழந்தைகளுக்கு தானமளித்திட, இறைவனே அந்தந்த குழந்தை/ பிள்ளைக்குரிய பாடத்தைத் (subject) தேர்ந்தெடுக்குமாறு செய்திடுவார்..
6. மூலவரும் அம்பிகையும் எதிரெதிரே உள்ள தலம். திருஅமாத்தூர் ஆகும். எங்கெல்லாம் இறைவனுக்கு எதிரில் இறைவியின் சந்நதி அமைந்துள்ளதோ (ஒருவரையொருவர் பார்த்திருக்கும்படி) அப்பகுதிகளில் மனைவியின் பெயரில் நில, புலன்களை, வீடுகளை வாங்குதல் வேண்டும். இதனால் நிலம் சொத்துகள் நன்கு அபிவிருத்தியடையும்.
7. திருஅண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் ஆலயத்திலுள்ள ஸ்ரீஆநிறை கொண்ட விநாயகருக்கு (21 எண்ணிக்கையில்)  21 வெள்ளைக் கொண்டைக் கடலை கோர்த்த மாலைகளை 21 சரமாக்கி சாற்றி வழிபட்டு அதனை தானமாக அளித்து பெண்/பிள்ளை பார்க்கச் சென்றிட நல்வழி/நல்ல திருப்பம் கிட்டும்., (ஊசியால் கோர்த்து நூலால் கொண்டைக் கடலையினை மாலையாக்கிடலாம்.)
நித்ய கர்ம நிவாரண சாந்தி
நம்முடைய தினசரி வாழ்க்கை அமைதியாகக் கழிய வேண்டுமானால் அந்நாளில் நாம் எதிர்கொள்ள வேண்டிய கர்மவினைகளுக்குத் தகுந்த புண்ணிய சக்தியை நாம் பெற்றிருக்க வேண்டும். இதற்காகவே நம் மூதாதையர்கள் பிரம்ம முகூர்த்த (காலை மூன்று மணி முதல் ஐந்து மணி வரை) நேரத்தில் தியானம், காலை சூரிய நமஸ்காரம், ஏனைய வழிபாடுகள், அதிதி போஜனம் எனப்படும் அன்னதானம், வடமொழி, தமிழ் மறை வேதபாராயணம், ஆலய தரிசனம், புண்ணிய நதியில் நீராடுதல், மகான்களின் தரிசனம் போன்ற பலவிதமான வழிபாடுகளைக் கைக்கொண்டனர். இவை யாவும் இன்று மறைந்து போய்விட்டமையால் தான் நம்முடைய தேக சக்தியும், புண்ணிய சக்தியும் நலிந்து நம்முடைய கர்ம வினைகளை நாமே தெரிந்து, அறிந்து ஏற்கும் மனப்பக்குவமும் இல்லாது துன்பச் சுழல்களில் சிக்கி மன அமைதியின்றி வாழ்கிறோம். இதையறிந்தே சித்புருஷர்கள் அந்தந்த நாளுக்குரிய கிரக நட்சத்திர சஞ்சாரங்களைக் கொண்டு எதிர்வரும் கர்ம வினைகளை முன்னரே அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான தினசரி வழிபாடு, தான தர்மங்களை அறியும் வழிமுறைகளைத் தந்துள்ளனர். இவ்வகையில் அமைந்துள்ளவையே ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் ஒவ்வொரு பக்கத்திலும் ஒளிரும் நித்ய கர்ம நிவாரண சாந்தி முறையாகும். இதை யாவரும் கடைபிடித்து நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

தேதி

நித்ய கர்ம நிவாரண சாந்தி முறை

கிடைக்கும் நலன்கள்...

1.7.1997

மாங்காய் இஞ்சி கூடிய உணவு தானம்

குழந்தைகளுக்கு ஏற்படும் சிறு விபத்துக்கள் தவிர்க்கப்படும்.

2.7.1997

பால் மட்டும் அருந்தி உபவாசம்

அருகில் இருப்போரின் உதவி கிட்டும்.

3.7.1997

தக்காளி போன்ற சிவப்பு நிற பழ சாதம் தானம்

மன சாந்தி கிட்டும்.

4.7.1997

சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை

வாகன ஆபத்துக்கள் விலகும்.

5.7.1997

கோதுமை உணவு (அல்வா, உப்புமா) தானம்

டிரைவர்களுக்கு முன்னேற்றம் கிட்டும்.

6.7.1997

ராமநாமம் எழுதிய காகித மாலையை அனுமாருக்கு அணிவித்தல்..

தொடர்ந்து செய்ய குழந்தைகள் கல்வியில் சிறப்படைவர்.

7.7.1997

ஈசனுக்கு கரும்புச்சாறு அபிஷேகம், தானம்.

பெற்றோர் நம்மை கடிந்து கொள்வதால் ஏற்படும் சாபம் தீரும்.

8.7.1997

கணபதிக்கு கொழுக்கட்டை நைவேத்யம், தானம்

உடலில் கட்டிகளிலிருந்து நிவாரணம்.

9.7.1997

கருமாணிக்கப் பெருமாள் என்ற தெய்வமூர்த்திக்கு நாவல் பழ நைவேத்யம் தானம்.

எதிர்பாராத நல்ல செய்திகள்..

10.7.1997

கல் உடைக்கின்ற ஏழைகளுக்கு அன்னதானம்.

மேலதிகாரிகளின் தொல்லை தணியும்.

11.7.1997

பாசன தொழிலாளர்களுக்கு அன்னதானம்

அதிகாரிகளின் வேலைபளு குறையும்.

12.7.1997

கூண்டில் அடைபட்டுள்ள பறவைகளை வாங்கி, வெட்ட வெளியில் விட்டுவிடுதல்

மன வேதனைகள் தணியும்.

13.7.1997

மலைவாழ் ஏழைகளுக்கு மங்களப் பொருட்களைத் தானம் அளித்தல்..

அனுகூலமான செய்திகள் வரும்.

14.7.1997

கயிறு திரிக்கின்ற ஏழைகளுக்கு அன்னதானம்.

அலுவலக சகாக்களால் வரும் துன்பங்கள் குறையும்.

15.7.1997

கல்லூரி, பள்ளித் தலைவர்கள் ஏழை மாணவர்களுக்கு உதவி செய்திட

துணை ஆசிரி்யர்களால் வரும் ரகசிய திட்ட துன்பங்கள் விலகும்.

16.7.1997

கணவனால் அதர்மமாக நிராகரிக்கப்பட்ட பெண்களுக்கு உதவிகளைச் செய்தல்..

மனசாந்தியும், அசுவினி தேவர்களின் ஆசியும் கிட்டும்.

17.7.1997

கர்ப்பத்தில் குழந்தை இறந்தவர்கள் காத்யாயினி விரதம் இருந்து கர்ப்பிணிகளுக்கு உதவி செய்திட..

கர்ப்ப தோஷங்கள் நீங்கும்.

18.7.1997

இன்று மனைவியர் கோபம் கொள்ளலாகாது எலுமிச்சை பானம் தானம் செய்திட....

கோப உணர்ச்சிகள் தணியும். இன்று பெண்கள் கோபம் கொண்டிடில் பெருந்துன்பங்கள் ஏற்படும்.

19.7.1997

ஏழைகளுக்குத் தலைவலி நீங்க நாட்டு வைத்திய, ஆயுர்வேத (tiger balm) தைலங்கள். அளித்திட...,

குழந்தைகளால் வந்த மனக் கஷ்டங்கள் தீரும்.

20.7.1997

நீர் கலக்காத பாலைக் குழந்தைகளுக்குத் தானம் அளித்தல்...

அலுவலக இடமாற்றத் தொல்லைகள் நீங்கும்.

21.7.1997

தானியங்கள் மாவு, சர்க்கரை கலந்த உணவை கோயில் பிரகாரங்களில் எறும்புகளுக்கு இடுதல்..

பணக் கஷ்டங்கள் தீரும்.

22.7.1997

பால்கோவா தானம்

உயர் அதிகாரிகள் அன்பு கிட்டும்.

23.7.1997

அமர்ந்த நிலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயரை தரிசித்திட...

அலுவலகப் பிரச்னைகள் தீரும்.

24.7.1997

ஏழைத் துப்புரவுத் தொழிலாளர்களுக்குரிய உதவி

கவனமின்மையால் ஏற்படும் தவறுகள் குறையும்.

25.7.1997

சாலைத் துறையில் பணிபுரிவோர் இன்ற்லிருந்து மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

விநாயகருக்கு சிதறுகாய் உடைத்திடுக

26.7.1997

நிதி புழங்கும் இடங்களில்/வங்கியில் பணி புரிவோருக்கு சிறு தவறுகளால் பெரும் துன்பங்கள் ஏற்படும்..

கவனம் தேவை.

27.7.1997

வாகன வியாபாரிகளுடைய தொழிலில் பிரச்சனைகள் ஏற்படலாம்.

கவனம் தேவை.

28.7.1997

பிளாஸ்டிக் சம்பந்தப்பட்ட தொழிலில் பணிபுரிவோர்/வியாபாரிகளுக்கு

சிறுசிறு தடங்கல்கள் ஏற்படும்.

29.7.1997

புத்தக வியாபாரிகள், ஏழைகளுக்குப் பேனா, பென்சில், புத்தகங்களை அளித்திட

வியாபாரம் விருத்தியாகும்.

30.7.1997

ஸ்டேஷனரி பொருட்கள் சம்பந்தப்பட்டோர் இன்று முதல்

இரண்டு மாதகாலத்திற்கு கவனமாக இருத்தல் வேண்டும்.

31.7.1997

ஊதுபத்தி வாசனை திரவியங்கள், இரசாயன பொருட்கள், மருந்துக் கடையினர் அன்னதானம் செய்திடுக.,

கணக்கு வழக்கில் ஏற்படும் சிக்கல்கள் தீரும்.

கூடா நாட்கள்
17.7.1997 – வியாழன் – நாள் முழுவதும்
18.7.1997- வெள்ளி – இரவு 11.06க்கு மேல்      
26.7.1997 – சனி – காலை 6.30 மணி வரை
விசேஷ தினங்கள்
11.7.1997 – ஆனித் திருமஞ்சனம்
16.7.1997 – தட்சிணாயன புண்ய காலம் – பித்ரு தர்ப்பண நாள்
19.7.1997 – பௌர்ணமி – காலை 11.45 முதல் மறுநாள் காலை 8.50வரை.. பௌர்ணமி திதி., பௌர்ணமி கிரிவலம். இன்று இரவே.
20.7.1997 – வாஸ்துநாள் அனைவரும் வீட்டு வாசற்படிக்குத் தாமே அரைத்த மஞ்சள் சந்தனம், குங்குமம், இட்டு பச்சரிசி மாக்கோலமிட்டு வழிபட வேண்டும்.. (மஞ்சள் பெயிண்ட் அடித்தல் கூடாது)
3.8.1997 – ஆடிப் பெருக்கு.
நன்றி பெருக்கில்...
ஏப்ரல்1997 ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில் வெளியிட்டிருந்த பணிவான வேண்டுகோளுக்கேற்பம் சென்னை – திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வர ஆலயத்தில் சித்திரை சதய நட்சத்திரத்தன்று (2.5.1997) சந்தனம் சார்த்தும் அரிய திருப்பணிக்கு நேரிலும், தபாலிலும் (Courier) தபால் மூலமாகவும் பலரும் சந்தனத்தை அரைத்து அளித்துள்ளனர். ஸ்ரீமாசிலாமணீஸ்வரருக்கு வருடந்தோறும் சித்திரை சதய நாளில் இடப்படும் சந்தனம் வருடம் முழுதும் இறைத்திருமேனியில் உறைந்து அடுத்த சித்திரை சதயத்தில் தான் களையப்படுவதால் இச்சந்தனப் பிரசாதத்திற்கு மகத்தான தெய்வீக சக்திகளுண்டு. இயன்ற வரையில் சந்தனமளித்தோர்க்குப் பிரசாதத்தை அனுப்பியுள்ளோம். பல ஆண்டுகளுக்கு முன், நம் மூதாதையர்களின் காலத்தில் நிலவி வந்த சரீரப் பணியாக தாமே சந்தனத்தை அரைத்து இறைவனின் திருமேனியில் சார்த்துகின்ற அரியசக்தி வாய்ந்த பழங்கால இறைத்திருப்பணிகளுக்குப் புத்துணர்ச்சி கொடுத்து நமக்குப் பெறற்கரிய இறையருளைப் பெற்றுத் தந்த நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளுக்கு நாம் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம்.
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் – திருஅண்ணாமலை ஆஸ்ரம சேவைச் செய்திகள்..
கடந்த பல வருடங்களாக அப்பர் சுவாமிகள் காட்டிய வழிமுறையில் ஆழ்வார்கள் கூட்டிய இறைநெறியில், உழவார இறைத்திருப்பணிகளை குருமங்கள கந்தர்வா என்றழைக்கப்படும் எம் சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீவெங்கடராம சுவாமிகளே முன்னின்று நடத்தி வைத்துப் பல இறையனுபூதிகளை நடைமுறையிலேயே உணரவைத்து வருகின்றார்கள்.. 70 குடும்பங்களுடன் பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை 150 பேர்களுக்குமேல் உழவாரப் பணியானது கலியுக அதிசயமாய்ப் பலருக்கும் தோன்றும் வகையில் இறைச் சேவையாக 4.5.1997 முதல் 10.5.1997 வரை காஞ்சிமாநகரில் புனிதப் பொலிவுடன் நடைபெற்றது. இதன் பலாபலன்கள் யாவையும் சற்குருவின் திருவடிகளில் மனதாரச் சமர்ப்பிக்கின்றோம்.. 150 நபர்களுக்கு மேல் மூன்று வேளைகளிலும் வயிறார உணவளித்து, இருக்க இடமளித்து,, ஒருவார உழவாரத் திருப்பணிகள் நடைபெற்றதெனில் என்னே பொருட்செலவு! சற்றே சிந்தியுங்கள்! அத்திகிரிவரதரின், அன்னை காமாட்சியின், குமரக்கோட்டக் கந்தவேளின் பெருங்கருணையில் அனைத்தும் திருவருட் கருணையாகக் கூடியதன்றோ! நன்னெறியில் ஈட்டிய பொருளைச் செலவழித்திடில் இறைவன் பன்மடங்காய்க் கூட்டித் தருவான் அன்றோ!
உழவார ஏனைய இறைத்திருப்பணிகள் (காஞ்சீபுரம்)
4.5.1997 – ஸ்ரீகச்சபேஸ்வரர் ஆலயம்
5.5.1997 – ஸ்ரீகச்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
6.5.1997 – ஸ்ரீவரதராஜர் ஆலயம்
7.5.1997 – ஸ்ரீகாமாட்சியம்மன் ஆலயம் – குமரகோட்டம்
8.5.1997 –திருக்குழுக்குன்றம் மலைக்கோயில் தாழக்கோயில்
9.5.1997 – பெருநகர் ஸ்ரீபிரம்மபுரீஸ்வரர் ஆலயம்
10.5.1997 – உத்திரமேரூர் ஆலயம் காஞ்சி ஸ்ரீஉலகளந்த பெருமாள் ஆலயம் , ஸ்ரீவிளக்கொளிப் பெருமாள் ஆலயம்.
16.5.1997 – குளித்தலை ஸ்ரீகடம்பர் ஆலயம்
18.5.1997 – திருச்சி – அதவத்தூர்  - ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்.
20.5.1997 – திருஅண்ணாமலை – ஆஸ்ரமத்தில் பௌர்ணமி பூஜை – அன்னதானம் – வைகாசி விசாகம் கூடியமையால் விசேஷமாகத் தாமரை இலையில் அன்னதானம்.
25.5.1997 – சென்னை – பெரும்பாக்கம்/இந்திரா நகர்  - ஏழைகளுக்கான இலவச மருத்துவ முகாம்.

ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam