புலன்களை அடக்கும் பூஜ்ய சக்திகள் !

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

அடிமை கண்ட ஆனந்தம்

நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் தம் சற்குருநாதராம் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த ஈச சுவாமிகளிடம் பெற்ற குருகுலவாச அனுபூதிகள்!

“ஒரு தடவை என்னமோ, ஏதோ தெரியாம ஒரு சின்னத் தப்பு பண்ணிட்டேண்டா! நம்ப சிவபெருமான் தன்னோட பாதணியால எட்டி ஒரு உதை விட்டாரு பாரு!” – பெரியவருடைய இந்த அழுத்தமான வாக்கியங்கள் மீண்டும், மீண்டும் சிறுவனுக்குள் ரீங்காரமிட்டன.

திருவெண்டயமும், பலத்த சதங்கைகளும், சலங்கைகளும் நிறைந்த இறைத் திருப்பாதங்களை, சித்தர்கள் எவ்வளவு பணிவுடன், மிகவும் எளிமையாக இறைவனின் திருவடி தீட்சையைப் பாமரருக்கும் புரியும்படியாக விளக்க வல்லவர்கள்! சிறுவன் அதிசயித்து, ஆனந்தித்துப் பரவசப்பட்டான்.

“சிவன் பாதங்கள்ல எப்பவுமே திருவெண்டயம்தான் இருக்கும்னு நீங்க அடிக்கடி சொல்வீங்களே வாத்யாரே!”

ஸ்ரீபைரவ மூர்த்தி
மேலப்பரங்கிரி

“அது கைலாயத்துலடா! கடவுள் பூலோகத்துக்கு வர்றப்ப, நம்மள மாதிரியே, நம்ப ஜனங்க மாதிரியே ஆடைகள், நடை, உடை, பாவனைகள் இருக்கும்! ஆதிசங்கர பகவத்பாதாள் முன்னாடி ஆதிசிவனே பரதேசிக் கோலத்துல வந்தாரே! ஆதிசங்கரர்னாலேயே அடையாளம் கண்டு பிடிக்க முடியலியே! நாமெல்லாம் எந்த மூலைக்குடா?”

இத்தகைய குருகுலவாச அனுபூதி நினைவுகள் அவனிடம் முகிழ்த்துக் கொண்டே இருக்கும்.

சிறுவன் மூதாட்டியின் அருகில் வேகமாக நடந்து வந்து சேர்ந்தான். கண்ணுக்கு எட்டிய வரை பெரியவரைக் காணோம்!

செய்த செயல்கள் யாவும் உனதே!

ஆடிய பாதத்திற்கு!

... நல்ல வயதான மூதாட்டி, தலையில் நன்கு நீளமான விறகுக் கட்டைகள் நிறைந்த சுமையைத் தாங்கியவாறே வேர்த்து விறுவிறுத்துப் போய், மெல்ல நடந்து கொண்டிருந்தாள். சிறுவனுடைய களைத்துப் போய்த் தள்ளாடிய நடை வேகத்துக்குச் சரியாக இருந்தது. மெல்லப் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தான்.

“என்ன பாட்டி, எங்கேந்து வர்ற?”

“இன்னா தம்பி, நெல்லித் தோப்புலேந்து வர்றேம்பா” சிறுவனுக்கு எந்தத் தோப்பும் தெரியாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் பெரியவரும், கிரிவலமும், அவர் அவ்வப்போது வாங்கித் தரும் தின்பண்டங்களும் தாம்! இருந்தாலும் ஏதாவது பேச வேண்டுமே!

“ஓஹோ, நெல்லித் தோப்புலேந்தா இவ்ளோ கட்டையத் தூக்கிகிட்டு வர்ற? அடேயப்பா, எவ்ளோ தொலைவு, ரொம்ப சிரமமாயிருக்குமே!” என்றான்.

“ஆமா ராஜா! கஷ்டந்தான்! என்ன செய்யறது, வயித்துப் பிழைப்பாச்சே” என்ற கிழவியிடம்,

சிறுவன் “அப்பப்ப கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கோ பாட்டி! கால் வலிக்கப் போவுது!” என்றான்.

“ஆமா தம்பி! ரொம்பத்தான் காலும் வலிக்குது, யாராவது காலைச் சித்த பிடிச்சு விட்டாக்கூடப் பரவாயில்லைனு தோணுது!”

இதைக் கேட்டதும் சிறுவனுக்கு உள்ளே ஏதோ ப்ளாஷ் அடித்ததுபோல் இருந்தது. ஏற்கனவே பெரியவர் சொன்னது அப்படியே மனதில் ஓடியது. உடனே பெரியவரிடம் கேட்கலாம், சொல்லலாம் என்றால் அவர்தான் அவ்வப்போது மறைந்தும் மறையாதவராய் ஆகிவிடுகிறாரே!

சிறுவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, பாட்டிக்குக் கால் அமுக்கி விட உட்கார்ந்தால், பெரியவரைப் பிடிக்க முடியாது. ஆனால் ஏற்கனவே பெரியவர் குறிப்பாக வேறு சொல்லி விட்டார். செய்யாமல் போனால் “ஏண்டா, நான்தான் படிச்சுப் படிச்சுச் சொன்னேனுல்ல! ஏண்டா சந்தர்ப்பத்தை மிஸ் பண்ணிட்டு வந்து நிக்கறே”, என்று நிச்சயமாகத் திட்டுவார், என்ன செய்வதென்று ஒரே குழப்பம்!

“என்னடா தம்பி ரொம்ப யோசிக்கறே! உன்னால முடியலைன்னா பரவாயில்லை!” என்ற பாட்டியின் நோட்டீஸ் அவன் எண்ண ஓட்டத்தைத் தடுத்தது.

ஸ்ரீநந்தி மூர்த்தி
மேலப்பரங்கிரி

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி! தலையில சுமையோட நிக்கறயே, எப்படி காலை பிடிச்சு விடறதுன்னு யோசிச்சேன், அவ்வளவுதான்!” என்று சமாளித்தான் சிறுவன்!

இவ்வாறு சொன்னதுதான் தாமதம் கிழவி சுற்றுமுற்றும் பார்த்து, சற்று தூரத்தில் உள்ள சுமை தாங்கிக் கல்லை நோக்கி வேகவேகமாகச் செல்ல சிறுவனும் பின் தொடர்ந்தான். (அக்காலத்தில் சுமைதாங்கிக் கற்களை கிரிவல நடைபாதை எங்கும் வைப்பதையே ஒரு தர்ம நற்காரியமாகச் செய்து வந்தனர். யாத்ரீகர்கள் தங்கள் சுமையை இறக்கி வைக்கும் வகையில் உயரமான ஒரு கல்லும், அதற்கு முன்னால் அவர்கள் உட்கார்ந்து இளைப்பாற வசதியாக மற்றொரு கல்லும் அமைத்துக் கொடுப்பதுண்டு.)

சுமைதாங்கிக் கல்லில் தன் விறகுச் சுமையை இறக்கி வைத்துவிட்டு, முன்னால் உள்ள கல்லில் ஒரே தாவலில் ஏறி உட்கார்ந்து கொண்ட பாட்டி, கால்களை ஜாலியாகச் சிறுபிள்ளைகளைப் போல் முன்னும் பின்னும் ஆட்டிய வண்ணம், “வா தம்பி, வந்து நல்லா உக்கார்ந்துக்கோ!” என்றாள்.

சிறுவன் யோசித்தான்.

“சரி, வர்றது வரட்டும், முதல்ல பாட்டிக்கு இதமா கால் பிடித்து விடுவோம். வாத்யார் எப்படியும் கிரிவலப் பாதைய விட்டுட்டு எங்கயும் போக மாட்டார், அப்புறம் வேகமாக ஓடியாவது வாத்யாரைப் பிடிச்சுக்கலாம்” என்று தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக் கொண்டு கீழே உட்கார்ந்து கிழவியின் காலைப் பிடித்து விட ஆரம்பித்தான்.

ஆனால்...

(திருப்)பாதத்தில் பரவசமா?

பாட்டியின் கால்களைத் தொட்டவுடன்...

... ஷாக் அடித்தவன் போல் பின்னால் எகிறி விழுந்தான்! ஆனால் ஷாக் அல்ல, அது ஆனந்தப் பரவச நிலை அது! அதன் பிறகு, சிறுவனுக்கு என்ன நேர்ந்தது என்றே தெரியவில்லை!

“ஏதோ பாட்டி சொன்னதற்காக, பத்து நிமிஷம் கால் பிடித்து விடலாம்” என்று நினைத்தவன், மூன்று மணி நேரத்துக்கு மேல் அங்கு அமர்ந்திட...

மேலப்பரங்கிரி

பாட்டியோ சற்றும் அசராமல் ஹாய்யாக காலைக் காட்டிக் கொண்டே இருந்ததால் நேரம் போனதே தெரியவில்லை. சிறுவனுக்கு சுய நினைவு வந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது நன்றாக இருட்டத் தொடங்கி விட்டது. இருட்டு என்றாலே சிறுவனுக்கு பயம்தானே! அதிலும் கோவணாண்டிப் பெரியவரைத் தேடிப் பிடிக்க வேண்டுமே! பெரியவரின் நினைப்பு வந்தது தான் தாமதம், சிறுவன் அந்த இடத்தை விட்டு சிட்டாகப் பறந்தான். அந்தப் பாட்டி என்ன ஆனாள் என்று திரும்பிப் பார்க்கக் கூட இல்லை. இருட்டு பயம் வந்து விட்டதே!

கிரிவலப் பாதையில் பெரியவரைக் காணவேயில்லை! சிறுவனுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.

தேடிய பாதம்!

“ஒருவேளை தன்னை விட்டு விட்டு மெட்ராஸ் திரும்பிப் போய்விட்டாரா? கையில் காசே இல்லயே!” – இவ்வாறு ஏதேதோ எண்ணங்களுடன், இரண்டாவது முறையாக, கிரிவலம் வந்து பாதையெங்கும் நன்றாகத் தேடிப் பார்த்தான். கிரிவலம் முடிந்ததே தவிர பெரியவரைக் கண்டுபிடித்த பாடில்லை. சிறுவன் மனம் குழம்பிப் போனான்.

“ஏதாவது சன்னதியிலோ, மண்டபத்திலோ போய்ப் படுத்து விட்டாரோ” என்ற எண்ணம் வந்ததும், மீண்டும் திருஅண்ணாமலையை மூன்றாவது முறையாக கிரிவலம் வர ஆரம்பித்தான். காலில் முட்கள் குத்திய வலி தாங்க முடியவில்லை! பெரிய கற்கள் ஊடேயும், கிரிவலம் வந்ததால், காலில் கொப்பளங்கள் வேறு!

அக்காலத்தில் திருஅண்ணாமலையில் கிரிவலம் வருவதற்கு இப்போது உள்ளது போல் தார் சாலை வசதிகள், விளக்குகள் கிடையாது. வழியெங்கும் சுமார் பத்தடி அகலம் உள்ள மண் பாதைதான். வழியெங்கும் கற்களும், முட்செடிகளும் நிறைந்த பாதை! ஒரே இருட்டு, இதில்தான் தட்டித் தடவி நடக்க வேண்டும். எங்காவது, அபூர்வமாக ஒரு அரிக்கேன் விளக்கு தென்படும், அவ்வளவுதான்!

சிறுவன் தனக்கு கோவணாண்டிப் பெரியவர் சொல்லிக் கொடுத்த எல்லா மந்திரங்களையும் விடாமல் சொல்லியவாறே, ஒருவாறு தைரியத்தை வரவழைத்தபடி, ஆலயத்திலும், வழியெங்கும் ஒவ்வொரு சன்னதியாக நுழைந்து பார்த்துக் கொண்டே, காலை நொண்டியபடியே வலம் வந்தான்.

ஸ்ரீகணேச மூர்த்தி
மேலப்பரங்கிரி

இந்திர மண்டபம், மணக்குள விநாயகர் கோயில், ஆறுமுக சுவாமி ஆலயம், எம லிங்கம், துர்வாசர் சன்னதி என ஒரு இடம் விடாமல் புகுந்து புகுந்து பார்த்தபடி வந்த சிறுவன், உண்ணாமுலை மண்டபம் அருகே வந்தபோதுதான்,

“என்னடா ராஜா எங்கடா போயிட்டே?” என்று அவனுக்கு மிகவும் பரிச்சயமான குரல் ஈர்த்தது.

மேவிய பாதம்!

வந்ததே வேகம் சிறுவனுக்கு!

“வாத்யாரே!” என்று கூவிக் கொண்டே சப்தம் வந்த திக்கை நோக்கி மண்டபத்துக்குள் மிகவும் வேகமாக ஓடினான். அங்கே, பெரியவர் ஏகாந்தமாகப் படுத்தபடி சிரித்துக் கொண்டிருந்தார். அருகில் சிறு அரிக்கேன் விளக்கு வேறு!

அவரைப் பார்த்தவுடன் சிறுவனுக்கு அத்தனைக் களைப்பும், கோபமும் பறந்து விட்டன. தான் “கால் அமுக்கிய” புராணத்தை விஸ்தாரமாக எடுத்துரைத்தான்! பெரியவரும் நன்றாக ரசித்துக் கேட்டார். அனைத்தையும் சொல்லி முடித்ததும்தான் சிறுவனுக்கு உலக நினைப்பே வந்தது. வழக்கம் போல் பசியும் சேர்ந்து கொண்டது.

“நல்ல அதிர்ஷடக்காரன்டா நீ, பெரிய சித்புருஷருக்குக் கால் பிடிக்கும் பாக்கியம் இந்தப் பிறவியில கிடைச்சதே பெரிசுடா!” என்று கூறிய பெரியவர். மூதாட்டி வடிவில் வந்த சித்தர் யார் என்பதையும், அந்தப் பரவச நிலையின் யோக மகத்துவத்தையும் நன்கு விளக்கினார். ஆனால் சிறுவனா கேட்கும் நிலையில் இருந்தான். ஆனால் என்னே சித்தர்கள் மகிமை! உத்தம முக்தி நிலைகளைக் கூட ஒரு சுண்டைக்காயாக ஆக்கி, “தராமல் தரும்” தெய்வத் தகைமை பூண்டவர்கள் ஆயிற்றே!

பசியால் சிறுவனின் முகபாவம் மாறுவதைப் பார்த்த பெரியவரும், “சரிடா, பசிக்க ஆரம்பிச்சுடுச்சா, என்ன செய்யறது? ஞானப் பசியைத் தீர்த்தாலும் இது உடம்பு ஆச்சே! ரெண்டு பேரும் ஒண்ணா கிரிவலத்தை முடிச்சுருந்தா இந்நேரம் எங்கயாவது சுடச் சுட பரோட்டா சாப்பிட்டு விட்டு வந்திருக்கலாம்.” என்று அவனுக்கு மிகவும் பிடித்த உணவை ஞாபகப் படுத்தி பசியை இன்னமும் கிளப்பி விட்டார். சிறுவன் ரொம்பவே டல்லாகி விட்டான். ஒரு தடவை போதாதென்று மூன்று தடவை தொடர்ந்து கிரிவலம் வந்த களைப்பு! கால் கொப்பளங்களோடு முட்கள் குத்திய வலியும் சேர்ந்து கொண்டது.

பெரியவரோ இதையெல்லாம் கண்டு கொள்வதாகவே தெரியவில்லை.

உள்ளத்தில் பசித்திரு!

“இந்த அத்துவானக் காட்டுல பசிக்குச் சாப்பிட எங்கடா போறது? பக்கத்துல கண்ணுக்கெட்டின தொலைவுல கடை எதுவுமே கிடையாது. பேசாமப் படு, காலையில பாத்துக்கலாம்.” என்றார். சிறுவனோ ‘திடீரென்று மனம் மாறி ஏதாவது ஏற்பாடு செய்ய மாட்டாரா” என்ற நப்பாசையோடு அவர் முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தவாறே இருந்தான். கொஞ்ச நேரம் கழித்து பெரியவரே மௌனத்தை சாந்தப்படுத்தி,

:இப்படித்தாண்டா, குகை நமசிவாயர் ஒரு தடவை ரொம்ப பசியா இருக்கறப்போ உண்ணாமுலை அம்மனை நினைச்சு வேண்டினாரு. அம்மாவே நேரில வந்து நல்லா ருசியா சர்க்கரைப் பொங்கலைத் தந்துட்டுப் போனாடா! அடடா, சர்க்கரைப் பொங்கல்னா அதுதாண்டா சர்க்கரைப் பொங்கல்!” என்று அதன் சுவையை நன்கு சிறுவன் நாக்கில் எச்சில் ஊறும் வரை விவரித்து விட்டு,

“நமக்கெல்லாம் அந்த அளவுக்கு பக்தி கிடையாதுடா! இருந்தாலும் கொஞ்சம் ட்ரை பண்ணிப் பாரு! அம்மா கருணை வச்சான்னா எது வேணாலும் நடக்கும்!” என்றார்.

சிறுவன் எரிச்சலின் எரிமலை நிலையை அடைந்தான்! கோபம் கோபமாக வந்தது அவனுக்கு! பெரியவர் பாட ஆரம்பித்தார்! மண்டபத்தில் அவர் குரல் நன்கு எதிரொலித்தது!

பசித்த பாட்டு அது!

சிறுவன் “பசித்” திருந்தான்!

--- ஆனந்தம் தொடரும்..!

ஸ்ரீமல்லிகார்ஜுன லிங்கம்

பூஜ்ய சக்தி (0) நிறைந்த பேரையூர் – மேலப்பரங்கிரி (மதுரை – கல்லுப்பட்டி அருகே கல்லுப்பட்டியிலிருந்து 7 கி.மீ தொலைவில் மேலப்பரங்கிரி மலை உள்ளது. பூஜை இல்லாத பூஜ்ய சக்தித் தலம். விசாரித்துச் செல்லவும்!)

1.1.2004ல் அமையும் எண் சக்திகளில் பூஜ்யவாரி சங்கமத்தைக் கொண்டு அர்ஜூன சக்திகள் நிறைந்த தலங்களில் 2004ம் ஆண்டில் வழிபடுதல் மிகவும் சிறப்புடையதாகும். பாண்டவ அர்ஜுனன் எண் சக்திகளில் வல்லமை கொண்டவன். ஒவ்வொரு நாணிலும், எவ்வளவு அம்புகள் எய்திடில் இலக்கு வெற்றி பெறும் என்ற அம்புக் கூட்டு இலக்கணத்தில் வல்லவன். எண் கணிதத்தில் சரஸ்வதி கடாட்சம் பெற்றவனாகிய சகாதேவனிடம் பல எண் ரகசியங்களைக் கற்றவன்.

ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்
மேலப்பரங்கிரி

இத்தகைய அபரிமிதமான எண் சக்திகளை அவன் பெற்றதற்குக் காரணமே பரங்கம் என்னும் எண் வித்தையில் சிறப்புற்ற தலங்களில் வழிபட்டதுதான். பரங்க எண் சக்திகள் திகழும் சில தலங்களுள் மதுரை கல்லுப்பட்டி அருகே பேரையூர் – மேலப்பரங்கிரி மலையில் உள்ள மல்லிகார்ஜுன லிங்கமும் ஒன்றாகும். பலரும் அறியாத மிகவும் சக்தி வாய்ந்த தலம். ஏறுதற்கு மிகவும் சிரமமான மலை! ஏறி வழிபட்டாலோ ஏற்றமிகு எண் சக்திகளைத் தரும் அற்புத லிங்கம், தற்போது மலையில் முறையான பூஜையின்றி இருக்கின்றது. ஸ்ரீகிருஷ்ணன் அருளியபடி சகாதேவன் மிகவும் விருப்பத்துடன் ஜோதிடம், எண் கணிதம், வானசாஸ்திரத்தில் அற்புத ஆற்றல்களைப் பெற வழிபட்ட லிங்க மூர்த்தி, அர்ஜுனனுக்கு தனுர் வேத எண் சக்திகளைத் தந்த தலம்.

பூஜ்யம் (Cypher) எண்ணின் பரிபூரண சக்தி கொழிக்கும் தலமே பேரையூர் – மேலப்பரங்கிரி, பரங்கம் என்பது விசேஷமான ஒரு வகை பூஜ்யத்தைக் குறிக்கும் பூஜ்ய வடிவில் ஒரு யுகத்தில் திகழ்ந்த மலை! எண்களில் பூஜ்யம் இங்குதான் பிறந்தது. பூஜ்யஸ்ரீ என்று போற்றப்படுபவர்கள் இங்கு கட்டாயமாக வழிபடுதல் வேண்டும். ஜோதிடர்களும், எண் கணித வல்லுனர்களும், கணிதத்தில் மேன்மை பெற்றோரும் கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம்! இத்தலத்தைச் சிறப்பிக்க வைப்போர் எண் சக்திகளால் வாழ்வில் ஏற்றம் பெறுவர்.

இரண்டு பூஜ்யங்கள் சேர்ந்து வருவது தரிஸ்சம் எனப்படும். ஆண்டு 2004ல் இரண்டு கிரக சக்திகளுக்கு இடையே (இங்கு சந்திரன், ராகு) தரிஸ்சம் வரும் போது, அவரவர் ஜாதகக் கட்டத்தில் சந்திர, ராகு கிரகங்களுக்கு இடையே உள்ள ரத, சித்ர பாவங்களில் பல மாறுதல்கள் ஏற்படும். இவற்றை பூஜ்ய சக்திகள் கொண்டு நல்வழிப் படுத்துவதே பேரையூர் – மேலப்பரங்கிரி லிங்க முர்த்தி! நான்கு எண்ணைக் குறிக்கும் ராகு சக்திகள் இரண்டைக் குறிக்கும் சந்திர மூர்த்திக்குரிய குசா சக்திகளுடன் பொலிவதால் 2004 வருடம் இத்தகைய மேம்பட்ட குசா சக்திகளுடன் பொலிய அருள்புரியும் இறைமூர்த்தியும் ஸ்ரீமல்லிகார்ஜூன ஈசன் ஆவார்.

சமராதித்ய கிரணங்களை வர்ஷிக்கும்
ஸ்ரீமல்லிகார்ஜூனேஸ்வரர்
மேலப்பரங்கிரி

குரு பகவான் ஆட்சி பெறும் பங்குனி மாதத்தில் செவ்வாய்க் கிழமையும் கிருத்திகை நட்சத்திரத்துடன் அமிர்தயோகம், சித்தயோகம் கூடும் சுபதினத்தில் சூரிய பகவான் தன்னுடைய பொற் கிரணங்களால் ஸ்ரீமல்லிகார்ஜுன லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் இயற்றும் இனிய வைபவத்தை இளநீர் அபிஷேகத்தால் நிறைவு செய்து நம் அடியார்கள் நிறைவேற்றிய திருப்பணியை இங்குள்ள படத்தில் அடியார்கள் கண்டு இரசிக்கலாம். இத்தகைய அபிஷேக ஆராதனைகள் சொந்தமாக வீடு, நிலம் அமைவதற்கும்,சொத்துத் தகராறுகள் சுமுகமாக தீர்வடையவும் உறுதுணையாக அமையும். நெடுநாள் வரவேண்டிய கடன்கள் வசூலாகவும் இத்தகைய திருப்பணிகள் உதவும்.

நாம் நினைப்பது போல் மனிதர்கள் மேல் ‘விழும்’ சூரிய கிரணங்களும் லிங்க மூர்த்திகளைத் ‘தழுவும்’ சூரிய கிரணங்களும் ஒன்றே ஆனவை அல்ல. உதாரணமாக, மேலப்பரங்கிரி ஈசனை ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதத்தில் தழுவும் சூரிய கிரணங்கள் விமலாதித்ய கிரணங்கள் எனப்படும். இந்த சூரிய கிரணங்களால் அபிஷேகிக்கப்படும் இறைவன் பக்தர்களுக்கு சமராதித்ய சூரிய சக்திகள் என்ற அபூர்வ சக்திகளை அனுகிரகமாக வர்ஷிக்கின்றார். மேலும் மேலப்பரங்கிரி திருத்தலத்தில் மட்டும் பொலியும் சில நட்சத்திர சக்திகள் உண்டு. இவற்றில் முக்கியமான சர்வதூலம், உதயத்பானு, விக்ரீடிதம் என்ற மூன்று நட்சத்திரங்களின் கிரணங்கள் இறைவன் பாஸ்கர பூஜையை ஏற்கும்போது அதில் ஐக்யமாவதால் இந்த நட்சத்திர கிரண சக்திகளும் மேற்கண்ட பாஸ்கர பூஜை பிரசாதமாக ஸ்ரீமல்லிகார்ஜுன மூர்த்தியால் அளிக்கப்படுகின்றன என்பதே நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் தெய்வீக விந்தையாகும்.

சமர் என்றால் போர் என்று பொருள். முள்ளம்பன்றிகளின் மேல் உள்ள முட்களும் சமர் என்று அழைக்கப்படும். இந்த முட்களின் விசேஷத் தன்மை என்னவென்றால் இவை மனிதர்களின், விலங்குகளின் உடலில் தைத்து விட்டால் இவற்றை எளிதில் பிடுங்கி விட முடியாது. அறுவை சிகிச்சை மூலம்தான் இவற்றை வெளியேற்ற முடியும். இதுவே சமராதித்ய சூரிய கிரணங்களின் தன்மை. சமராதித்ய கிரணங்களின் சக்தியை ஒருவர் பெற்று விட்டால் அவரிடம் உள்ள தீய குணங்கள் முழுவதும் மறையும் வரை அந்த கிரண சக்திகள் அவர் உடலை விட்டு அகலாது. இதுவே ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர் அருளும் அனுகிரகத்தின் அபூர்வ சக்தியாகும்.

சுயம்பு லிங்க மூர்த்திகளைப் போல நம் சற்குரு போன்ற உத்தம மகான்களும் தங்கள் மேல் நிலைகொள்ளும் சூரிய கிரண சக்திகளை இந்த பிரபஞ்சத்திற்கு அர்ப்பணித்து அற்புத சேவை ஆற்றுவது உண்டு. திருக்கோஷ்டியூர் திருத்தலத்தில் ஸ்ரீராமானுஜர் எட்டெழுத்து மந்திர கீதத்தை ஓதி பக்தர்களுக்கு அருள்புரிந்ததைப் போல் நம் சற்குருவும் இத்தலத்திற்கு எழுந்தருளியபோது இத்தலத்தில் அமைந்துள்ள சர்வக்ஷேம விமானத்தில் தோன்றிய சக்திகளை சூரிய கிரணங்களுடன் இணைத்து அந்த சக்திகளை எல்லாம் இத்திருத்தலத்தை வலம் வரும்போது தன் திருக்கரங்களில் ஏந்திய பெருமாள் பிரசாதமாக அளித்த விந்தையை உடனிருந்து அனுபவித்தோர் இன்றும் பரமானந்தத்துடன் நினைவு கூர்வர்.

ஹோமம்

ஹோமத்தில் இடும் பசுநெய், ஆல், புரசு போன்ற பல்வகை சமித்துகள், கனிகள், நவதானியங்கள், மிளகு, மாசிக்காய், ஜாதிக்காய் போன்ற இயற்கைத் திரவியங்கள், உலர்ந்த பழங்கள், துளசி, வில்வம், வன்னி போன்று சமூலப் பலசரக்கின் ஒவ்வொன்றிலும் திரளும் அக்னி சக்திகளும், நல்வரப் பலன்களும் அளப்பரியன!

இவ்வாறாக சமூலம் என்பது பொதுவாக, பல பூஜைகளில் பயன்படுகின்ற இயற்கை திரவியங்களின், மூலிகைகளின் பந்தனம் ஆகும். பல மூலிகா திரவியங்களைப் பல்வகை ஹோம ஆகம சூத்திரப்படி, பல திரவியங்களுடன் பிணைத்துப் பதனப்படுத்தி, பஸ்மம் செய்து, வஸ்திரகாய முறையில் சுத்திகரித்து, சூரிய, சந்திர ஒளிக் கிரணங்களைப் படியச் செய்து, குறித்த பசுநெய், தேன், பசும்பால், வெண்ணெய் போன்ற மூலப் பொருளுடன் கலந்து ஹோமத்தின் மகத்தான சக்தி வாய்ந்த ஆஹுதியாக ஆக்கப்படுவதே ஹோம சமூலம் ஆகும்.

இறைசக்திகளை ஈர்த்துத் தரும் ஹோம சமூலம்

மேலப்பரங்கிரி

ஹோம சமூலங்களின் மூலம் இயற்கை திரவியங்களின், மூலிகைகளின் அருள்வள சக்தியை அக்னி மூலமாக எளிதில் பெற ஏதுவாகின்றது. மிகவும் பழமையான இந்த ஹோம பூஜைக் கலாச்சார முறை, போஷிப்பாரின்றி, அறிவாரின்றி மறைந்து வருவதால், கலியுகத்திற்கு, ஹோம சமூலங்களினால் கிட்ட வேண்டிய தெய்வீக சக்திகளை, நாம் பெரிதும் இழந்து வருகின்றோம்.

ஸ்ரீவாஸ்து ஹோமம், ஸ்ரீகணபதி ஹோமம், ஸ்ரீலக்ஷ்மி ஹோமம், ஸ்ரீசுதர்சன ஹோமம் என்ற வகையில் – அந்தந்தத் தெய்வ, தேவதா ப்ரீதிக்கு ஏற்ற வகையில் சமூலங்களை அறிந்து, ஹோமத்தில் ஆஹூதியாக அளித்தலால், ஹோம பூஜை பலன்கள் மிக எளிதில் பன்மடங்காய்ப் பெருகிடும்.

இத்தகைய ஹோம சமூலத் தெய்வீக ரகசியங்களைத் தக்க சற்குரு மூலமாக அறிவதாகவே சித்தர்களும், மகரிஷிகளும் நியதிகளை வகுத்து உள்ளனர். சரியான முறையில் நற்பலன்களை அடையவே, தக்க சற்குரு மூலமாகவே ஹோம சமூலப் பதன முறைகளை அறிதலும் ஆன்மீக நியதியாக உள்ளது. தியாகமய உணர்வுடன், ஜாதி, மத, குல பேதமின்றி, சமுதாய இறைப் பணிகளுக்காகத் தம்மை அர்ப்பணிப்பவர்களுக்கே இத்தகைய ஹோம சமூல வழிபாட்டு முறைகளையும், தக்க தருணத்தில் சற்குருவும் அளிக்கின்றார்.

சமூல மூலிகா பந்தன இயக்கிகள்

குருந்துளை, நிலம்புரண்டி, கரிசால் போன்ற அபூர்வமான சமூல மூலிகா திரவியங்கள், மூலிகைகள் நிறைய உண்டு. இவை, இயற்கையான கச்சாப் பொருட்களை, சமுதாயத்திற்குப் பயன்படும் வகையில் ஆக்கப் பொருளாக மாற்றப் பெரிதும் உதவுகின்றன. நிலத்தடியில் உள்ள கனிமங்கள், கச்சா எண்ணெய் வகைகள், பட்டை தீட்டப் பெறா மூல நவரத்னக் கற்களைச் சமுதாயத்திற்கு நன்முறையில் பயன்படும் வகையில், உலோகங்களாக, எரிவாயு, எரி எண்ணெய்களாக, ரத்தினம் போன்றவையாக மாற்றுவதற்குக் கோடிக் கணக்காகத் தொகையைச் செலவழித்து நவீனத் தொழிற்சாலைகளை உலகெங்கும் அமைத்துள்ளனர். ஆனால் மூலக் கச்சாப் பொருளை, மேற்கண்ட மூலிகா சமூல இயக்கிகள் மூலமாக எளிதில் மாற்றம் செய்யும் ஆன்மீக விஞ்ஞான முறைகளும் நிறைய உண்டு.

மேலப்பரங்கிரி

வாகன எரிபொருளை மூலிகை மூலமாகப் பெறும் அரிய மார்கங்களும் தக்க அக்னி முகாந்த்ர யோகியரை, யோக மூலிகா மெய்ஞானிகளை நாடியே அறியற்பாலனவாகும். ஆனால், ஆன்மீக ரீதியாக இவ்வாறு பெறுபவற்றை வியாபாரமாக விற்றலாகாது. பேராசையால் செல்வம் சேர்க்கவும், ஆயுதப் போர் முறைகளுக்கும் ஒரு போதும் தவறாகப் பயன்படுத்திடக் கூடாது, சமுதாயத்தின் ஆன்ம பாவனத்திற்கு மட்டுமே பயன்படுத்திட வேண்டும் போன்ற இறை நியதிகளைக் கடைபிடித்தால்தான், சமூல மூலிகா பந்தன இயக்கிகள் முறையாகச் செயல்படும். இல்லையெனில் இவை தம் ஆன்ம குணங்களைத் தாமாகவே முழுவதுமாக மறைத்துக் கொண்டுவிடும்.

வாஸ்து ஹோம சமூலம்

பூமி மீட்டான் சமூலம் என்ற ஒரு வகைச் சமூலத்தை ஸ்ரீவாஸ்து ஹோமத்தில் இட்டு, குறித்த நாள், நட்சத்திர, ஹோரையில் ஹோம பூஜையை ஆற்றிட, குறித்த பல வாஸ்துகுண முறிவு தோஷங்களை நிவர்த்தி செய்வதுடன், வீடு, நில புலன்களும் நன்முறையில் அமையவும் உதவும். உண்மையில் தோஷங்கள் இல்லாத புனிதமான நிலமே வாஸ்து குணநிலம் ஆகும். இதனைக் காண்பது அரிது.

பூமி அடியில் எலும்புகள் இருத்தல், நிலத்தில் இருக்கும் பாம்புப் புற்றுகளை இடித்தல், மரங்களை வெட்டிச் சாய்த்தல், ஆலய நிலத்தை ஆக்ரமித்தல், மயானப் பகுதியில் வீடு கட்டுதல், பயிர் நிலத்தை வீடாக்குதல் போன்றவற்றால் நல்ல புனிதமான வாஸ்து குணங்கள் பாதிக்கப்பட்டு, வாஸ்துகுண முறிவு தோஷங்கள் ஆகின்றன. இவை அங்கு குடியிருப்பவர்களைப் பெரிதும் பாதிக்கும்.

தோஷ நீக்கிகளே சமூலங்கள்

இவ்வாறு நிலங்கள், கட்டிடங்களில் உள்ள தோஷங்களால் தாம், கோர்ட் வழக்குகள், உரிமைத் தகராறுகள், அடுத்தவருடன் பகைமை, நஷடங்கள், கட்டிடம் உடைதல் போன்றவை ஏற்படுகின்றன. பூமி சம்பந்தமான இத்தகைய தோஷங்களை நீக்குகின்ற விசேஷமான சமூலங்களும் உண்டு. இச்சமூலங்களை ஹோமத்தில் இடுவதால் எழும் புனிதமான அக்னிப் புகையானது, இல்லம், அலுவலகம், தொழிற்சாலை, பரவெளியைச் சுத்திகரித்துப் புனிதப்படுத்த வல்லதாகும்.

தற்கால ஹோமங்களில் பலவிதமான வேத மந்திரங்களும் முறையாக ஓதப்படுவதில்லை, இம்மந்திர ஓதல் குறைபாடுகளால் மந்திரக் குற்றங்கள் ஏற்பட்டு, ஹோம பூஜை பலன்களையும் குறைத்துவிடும். அனைத்து மூலிகைகளிலும் இயற்கையாகவே வேத சக்திகள் பொலிவதால், சமூலங்களை ஹோம ஆஹுதியாக அக்னியில் இடும்போது, மந்திர ஒலிப்புப் பிழைகளுக்கும் நிவர்த்திகள் கிட்டுகின்றன.

ஸ்ரீகணேசமூர்த்தி
அடிவாரம் மேலப்பரங்கிரி

நல்ல அக்னியில் ஹோமம் தொடங்கட்டும்!

ஹோமத்தைத் தொடங்குவதற்கான அக்னியும், விளக்கு தீபம், அரணிக் கட்டை, பஞ்சு போன்றவற்றிலிருந்து பெற வேண்டும். ஆனால், தற்காலத்திலோ, ரசாயன நெருப்புக் குச்சி, பீடி பற்றவைக்கப்பட்ட தீப்பெட்டி போன்ற அக்னிக் குற்றங்களுடன் ஆன நெருப்பே நெருப்புக் குச்சியில் இருந்து கிட்டுகின்றது. இதனால் ஹோம பூஜா பலன்களும் குறைவதுடன், அக்னி தோஷங்களும் ஏற்பட்டு விடுகின்றன.

ரசாயன நெருப்புக் குச்சியில் இருந்து பெறும் நெருப்பில் உள்ள தோஷங்களை நீக்கி, இயற்கை மயமாக்கவே, முதலில் பசுநெய் தோய்ந்த தாமரைத் தண்டுத் திரி தீபமாக ஏற்றி, இதிலிருந்து ஹோமத்தைத் தொடங்குவதுடன், குறித்த ஹோம சமூலத்தையும் பசு நெய்யில், தாமரைத் தண்டுத் திரியில் தோய்த்தும், அக்னியில் இட்டும், மேற்கண்ட வகையில் தீப்பெட்டியின் நெருப்புக் குச்சி வகையில் வரும் அக்னி தோஷங்களை கணிசமான அளவு நிவர்த்தி செய்திடலாம்.

ருத்ர பூமியாகிய காஞ்சிபுரத்தில் ஒரு நாள் முழுதும் 60 நாழிகையும் (24 மணி நேரம்) தொடர்ந்து அகண்டகாரமாக, பல்வகைச் சமூல ஆஹூதிகளுடன் முறையாக ஹோம வழிபாடு நடத்துவது, பிரம்ம யாக பலன்களைத் தருவதோடு, ஆயிரம் மடங்கு ஹோம பலாபலன்களையும் அருளிடும். அக்னி லிங்கத் தலமாகிய திருஅண்ணாமலையில் பக்திப் பூர்வமாக, நன்முறையில், பொது ஜனநல சங்கல்பத்துடன் குறித்த அமிர்த நேரத்தில் முறையான மந்திரங்களுடன் ஹோமம் நடத்துவது, அதிஅற்புதமான, பிரபஞ்சத்தில் வேறு எங்கும் கிட்டாததாக குருவின் கடாட்சத்தைப் பரிபூரணமாகப் பெற்றுத் தரும், உலக சுபிட்சத்திற்கும் வழி வகுக்கும்.

மயானச் சடங்குகளில், மயானத்திலேயே, சடலத்தின் தலைப் பகுதி அருகில், பசுஞ்சாண விறாட்டியையே ஹோம குண்டப் பீடமாக வைத்து, கண்டங் கத்திரி, நெருஞ்சி, புரசு போன்றவற்றால் ஆன சமூலங்களை ஆஹூதியாக அளிக்கும் முறையும் உண்டு. இவையெல்லாம் மயான தோஷங்களை நீக்கும். மயானத்தையும் சுத்திகரிக்கும்.

லட்சுமி கடாட்சத்தைத் தரவல்ல தனாகர்ஷண யாகத்தில், சதுர்கரத்தான் சமூலம், ஜாலநீர் சங்கு சமூலம் போன்றவை செல்வ கடாட்ச சக்திகளைப் பெற்றுத் தருபவையாம்.! இத்தகைய ஹோம சமூலங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் “யாக பூஜைகளில்” இருந்துள்ளன.

இவற்றை மீண்டும் நடைமுறைக்குக் கொணர்ந்து, ஹோம சமூல வழிபாட்டிற்குப் புத்துணர்ச்சி அளித்து வருகின்ற நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்கள் பலவிதமான சமூல வகைகளை, சித்தர்களுடைய ஞானபத்ர கிரந்தங்களில் உள்ளவாறு நமக்கு அளித்துள்ளார். பெற்றுப் பயனடைய வேண்டியது மனித சமுதாயக் கடமையாகும்.

ஆதிகுடி ஸ்ரீவிமல லிங்கம்

ஊனமுற்றோர் வழிபட வேண்டிய ஸ்ரீவிமல லிங்க மூர்த்தி! மனோதைரியம் அளித்து வாழ்வில் பிடிப்பு தரும் ஸ்ரீவிமல லிங்கம்! சனீஸ்வர சக்திகள் நிறைந்த தலமே ஆதிகுடி!

ஆதிகுடி ஸ்ரீபிரேமாம்பிகை சமேத ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆலயத்தில் அருளும் ஸ்ரீவிமல லிங்கம் (திருச்சி – லால்குடி – ஆதிகுடி – அன்பில் மார்கத்தில் லால்குடியில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் ஆதிகுடி உள்ளது. ஒருவேளை பூஜைத் தலம். நன்கு விசாரித்துச் செல்லவும்.)

ஸ்ரீவிமல லிங்கம் ஆதிகுடி

அங்க ஊனம் பற்றிய தாழ்வு மனப்பான்மை கூடிய எண்ணங்கள் மன ஊனத்தைத் தந்து விடக்கூடாது. பிறவியிலேயோ அல்லது விபத்து, நோய்களாலோ, ஊனமுற்றோர் விதிப்பூர்வமாகவே, தம் முன் ஜன்மக் கர்மங்களின் விளைவுகள் காரணமாகவே, ஊனம் ஏற்பட்டது என்று முதலில் உணர்ந்து, மனம் தெளிதல் வேண்டும். இதற்காகப் பிறரை நோகுதல் கூடாது.

தம்மிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு சரணடைவோரை உய்வித்திடவே, சற்குருமார்கள் உலகெங்கும் நிறைந்திருப்பதால், ஊனமுற்றோர், மன உறுதியுடன் வாழ்ந்து, சற்குருவை அடைந்து நற்கதி பெற, இறைவனை மனங்கனிந்து வழிபட்டு வருதல் வேண்டும். அரசாங்கமும், மனித சமுதாயமும், ஊனமுற்றோர்க்குத் தேவையான உதவிகளை, அரிய சமுதாய இறைப் பணிகளாக ஆற்றி வருதல் வேண்டும். ஊனமுற்றோரைக் கேவலமாகவோ, தாழ்வாகவோ கருதக் கூடாது.

அடைய வேண்டியதையே அடைய முடியும்!

இறைவன், இப்பூவுலகில், எண்ணற்ற சுயம்பு லிங்க மூர்த்தி வடிவங்களில், பல அரிய இறைசக்திகளையும் நல்வரங்களையும் பதித்துள்ளான். ஆன்மீகப் பலன்கள் கோரியும், தன நடைமுறை வாழ்விற்கான வசதிகளைப் பெறவும், லௌகீகமாகவும் அவரவர் வழிபடும் பாங்கிற்கு ஏற்ப கடவுள் வழிபாடு, ஆலய பூஜைகள் உதவுகின்றன. எனவே எதனையும் நல்விதமாக வேண்டி, கடவுளை வழிபடலாம். ஆனால் கர்மவினைப் பூர்வமாக எது வேண்டுமோ, அதுவே கிட்டும், நடக்கும் என்று மனப் பூர்வமாக உணர்ந்து ஏற்றல் வேண்டும். இம்மனோ நிலையைப் பெறுதல் கடினமே! ஆனால் அடைய வேண்டிய “உத்தம நிலையை” அறிந்தால்தானே, நாம் “உண்மையை“ விட்டு எவ்வளவு விலகி இருக்கின்றோம் என்பது தெரியலாகும். இந்த அற்புதமான மனத் தெளிவை அடைவதற்கான அனுகிரகத்தைத் தரவல்லவரே சனீஸ்வர மூர்த்தி!

புத்தகங்கள் மூலம் அடைகின்ற மனத்தெளிவு, மன அமைதி நிலைத்து நிற்காது, பூஜா பலன்கள், ஆலய வழிபாட்டுப் பலன்கள், தெய்வ சன்னதிகளில் கிட்டும் அனுகிரகங்கள் மூலமாக அடைகின்ற ஆன்மீக ஞானத் தெளிவே நிரந்தரமானது.

சனீஸ்வரர் காருண்யத்துடன் அருளும் தலம்

ஆயுள்காரகரான சனீஸ்வர மூர்த்தியே, ஜீவன்களின் அங்க அம்சங்களை அங்காரக மூர்த்தியுடன் இணைந்து பேணும் அருள்வர மூர்த்தி! சனீஸ்வரர், ஜீவன்களிடம் மிக மிகக் கருணையுடன் சூக்குமமாக அருளும் தலங்களுள் ஆதிகுடியும் ஒன்று. சனைச்சரர், ஈஸ்வரப் பட்டம் பெறுதற்கு முன், எம மூர்த்தியிடம், சில தவ பாவன முறைகளில் ஏற்பட்ட சில பிழைகளுக்குத் தண்டனையாக, மானுட வடிவில் வந்து, எம மூர்த்தியின் தண்டத்தால் கால் ஊனம் ஆனார்.

பொருள் ஆனந்தம்
இடையே புலன் ஆனந்தம் !

எத்தகைய கர்ம வினைகளைச் செய்தால், அதன் விளைவுகளாக உடல் ஊனம் ஏற்படும் என்பதை உலகிற்கு உணர்த்திடவே, சனி மூர்த்தி சில பிழைகளைச் செய்வது போல் நமக்குத் தோன்றிட, அற தேவராம் எம மூர்த்தி அதற்குத் தண்டனை அளிப்பதாகவும் இப்புராணப் படலம் அமைந்துள்ளது. எனவே, ஊனமுற்றோர் சற்றும் மனத்தளர்ச்சி அடையாது, இறைவனிடம் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டு செயலாற்ற வேண்டும். மக்கள் சமுதாயமும் ஊனமுற்றோரின் நல்வாழ்விற்காக அனைத்து உதவிகளையும் ஆற்றிட வேண்டும்.

ஸ்ரீஎம மூர்த்தி வழிபாடு

நவகிரகங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற சனீஸ்வரரும், அறதேவதைகளின் தலைமைப் பீடமுமான எம மூர்த்தியும் ஜீவ வாழ்வு மேன்மைக்கு நல்வரங்களை அளிக்கின்றனர். சனீஸ்வரர் துன்பங்களையே தருபவர் என்றும், எம மூர்த்தி மரணத்தை மட்டுமே தருபவர் எனவும் தயவு செய்து தவறாக எண்ணாதீர்கள்! அறதேவராக, எமபகவான் அருளும் தலங்களில் (ஸ்ரீவாஞ்சியம், நாகப்பட்டினம்) சதய நட்சத்திர நாளில் வழிபட்டு வந்தால், மரண பயம் அண்டாது, நோய்கள், விபத்து போன்றவற்றால் வரும் மிருத்யு தோஷங்களும் அண்டாமல் காக்கும்.

ஸ்ரீஎமபகவான்
நாகப்பட்டினம் சிவாலயம்

மக்களுடைய குறைகளைத் தீர்க்க, தெய்வ மூர்த்திகளும், சித்தர்களும், மகரிஷிகளும், பலவடிவங்களில், பூலோகம் வருகையில், ஜீவன்களின் கர்மவினை பளுவைத் தம்முள் சுமந்து, அவரவர் நம்பிக்கையைப் பொறுத்து ஜீவன்களின் இன்னல்களைத் தீர்க்கின்றனர்.

ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆதிகுடி

சனீஸ்வரர் வழிபட்ட ஆதிகுடித் தலம்

சனி மூர்த்தி, மானுட வடிவில் ஊனமுற்ற நிலையிலேயே, பல ஆலயங்களில் வழிபட்டு, தீர்த்த நீராடல்களை மேற்கொண்டு, புனிதமான ஆதிகுடி சிவத்தலத்தை அடைந்தார். சனைச்சரன் என்றால் மெதுவாக ஊர்ந்து செல்பவர் என்று பொருள்.

இங்கு பல யுகங்கள் தவம் புரிந்து ஆயுள்காரக அம்சங்களை, நல்வரங்களாக, விமல சக்திகளாகப் பெற்றபோது, இறையருளால், சனைச்சரரின் மானுட வடிவிற்கான ஊனம் ஆதிகுடியில் நீங்கியது, தம் கால் ஊனம் நீங்க வேண்டி, சனைச்சரர் இங்கு தவ சங்கல்பம் புரியாவிடினும், வேண்டாமையில் வேண்டிய நிலைகளைத் தரவல்ல ஸ்ரீவிமல லிங்க மூர்த்தியின் மகிமையைப் பூவுலகிற்கு உணர்த்திடவே, சனீஸ்வரர் சூக்கும வடிவில் லிங்கத்தைப் பூஜித்து ஊனம் அகலும் இறைலீலையும் இங்கு, ஆதிகுடியில் நிகழ்ந்தது.

கை, கால் ஊனம் மட்டுமல்லாது, கண் பார்வைக் குறைவு, காது கேளாக் குறை போன்ற அனைத்து அங்க ஊனங்களுக்கான கர்ம வினைகளையும் அவரவர் கர்ம பரிபாலனத்திற்கு ஏற்ப நிவர்த்தி செய்ய வல்ல தலமாக ஸ்ரீவிமல லிங்க மூர்த்தி அருளும் ஆதிகுடி ஸ்ரீஅங்குரேஸ்வரர் ஆலயம் திகழ்கின்றது. ஆனால் தமக்குள்ள குறைகள், பூர்வ ஜன்ம வினைகளால் வந்தவையே என மனப்பூர்வமாக உணர்ந்து,

“வேண்டுதல் வேண்டாமை தரும்
விமலனே போற்றி!
வேண்டாமை வேண்டுகின்றேன்
விமலா நின்பாதம் போற்றி!
வேண்டியதை வெளிச்சமாக்கும்
வெள்ளிய விமலா போற்றி!
வேண்டினேன் வேண்டாமையாலே
விமலத்தின் விமலா போற்றி,
போற்றி, போற்றி!

என ஆழ்ந்த நம்பிக்கை செறிந்த பக்தியுடன் ஓதி, வழிபட்டு வரவேண்டும். இங்கு சனீஸ்வரர் எப்போதும் விமல லிங்கத் திருமேனியை வழிபடுவதால், இத்தலத்தில் விமல லிங்க வழிபாடே சனீஸ்வர வழிபாடாகவும் ஆகின்றது.

ஸ்ரீமல்லிகார்ஜுனேஸ்வரர்
மேலபரங்கிரி சிவாலயம்

வெங்கலப் பானையில் பொங்கல் படைப்பீர்!

ஸ்ரீபிரேமாம்பிகை ஆதிகுடி

இங்கு விமல லிங்கத்தை வழிபடும் காப்பு முறைகளும் உண்டு. செவ்வாய், சனிக் கிழமைகளில் விமல லிங்கத்திற்கு தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், இலுப்பை எண்ணெய் போன்ற எட்டு வகை மூலிகைத் தைலக்காப்பு இட்டு, புனிதத் தீர்த்தங்களால் அபிஷேகித்துப் பூஜிக்க வேண்டும்.

வெங்கலப் பானையில் பால் பொங்கல் படைத்து, கிழக்கு அல்லது வடக்கில் பால் பொங்கும் அற்புத சுப சகுனக் காட்சியைக் கண்டு ஆனந்தித்து பொங்கலை சுடச் சுட, முழு நீள வாழை இலையில் வைத்து அன்னதானமாக அளித்து, வெங்கலப் பானையையும் முழு மனதோடு தானமாக அளித்து வருதலால், ஊனம் பற்றிய பழிச் சொற்கள், வீண் பழிகளால் வாடுவோர் மனத் திண்மையும், தக்க தீர்வுகளையும், உடல் சக்தியையும் அவரவர் கர்ம பரிபாலன நியதிப்படி பெறுவர்.

தம் முன்னோர்கள் அல்லது நடப்பு சந்ததியினர் ஊனம் அடைந்திருத்தல், விபத்தால் அங்க வலிமை இழத்தல், நரம்பு நோய், Parkinson disease, heart attack, ஒரு பக்க மூளை பாதிப்பால் மறுபுற அங்கச் செயல்பாடுகள் குறைதல் அல்லது பாதிக்கப்படுதல், பக்கவாதம் போன்றவற்றால் வாடுவோர் இங்கு ஸ்ரீவிமல லிங்கத்திற்கு, லிங்கத்தின் வலப்புறம் நன்கு திரண்ட வெண்ணெய்க் காப்பும், இடப்புறம் வெண்ணெய்க் காப்பின் மேல் நிறைய மாதுளை முத்துக்களைப் பதித்தும், ஆழ்ந்த பக்தியுடன் துவிகுண விமல மூர்த்தியாக வழிபட்டு, மேற்கண்ட வகையில் வெங்கலப் பானைப் பொங்கல், அன்னதானத்துடன் கடைபிடித்து வருதலால் நன்கு குணம் அடைவர்.

சகல சனி மூர்த்திகளும் வழிபட்ட ஆதிகுடி!

அனைத்து சனி மூர்த்திகளுக்கும் மூலவரே ஆதிமூல சனீஸ்வரர், நவகிரகாதிபதி சனி மூர்த்தி வேறு, எம மூர்த்தியால் தண்டனை பெற்றவர் வேறு, நளனைப் பீடித்த சனி மூர்த்தி வேறு! இவ்வாறு சனி மூர்த்திகள் பலர் உண்டு. நவகிரக சனி மூர்த்திகளிலும் தசா மூர்த்தி, அந்தர மூர்த்தி, புக்தி மூர்த்தி என்று பலருண்டு. அனைத்து மூர்த்திகளுக்கும் மூல சனி மூர்த்தியே சனீஸ்வரர் என்ற ஈஸ்வரப் பட்டத்தைப் பெற்றார். அனைத்து சனி மூர்த்திகளும் ஒன்று திரண்டு வந்து சூக்கும வடிவுகளில் வழிபட்ட மூர்த்தியே ஆதிகுடி விமல லிங்க மூர்த்தி!

வேத சக்திகள்

பாமரருக்கும் பரியும் வேதசக்திகள்

சாசுவதமாய், அன்பே உருவாய்த் திகழ்கின்ற இறைப் பரம்பொருள், பலவிதங்களில், ஜீவன்கள் எளிமையாக பக்திப் பூர்வமாகத் தன்னை உணரும் வண்ணம் வேதமாக, ஒளியாக, சுயம்பு  வடிவங்களாக, ஆலயத் தலமரமாக ஆகினார்.

காலப் போக்கில், ஜீவன்களின் சுயநலம், பேராசை, பகைமை காரணமாக, கர்மவினைச் சுமை மிகுதியால், தாமாக இறைவனை அறியும் மனிதப் பகுத்தறிவும் மங்கியது. இதனால், இறைத் தூதுவர்களாக உறையும் சித்தர்கள், மகான்கள், ஞானிகள், உயிர்களின் மேல் பரிவு கொண்டனர். உன்னத பக்தியுடனேயே அறிய வல்ல இறைசக்தியை, அனைவருமே திகட்டாத பேரின்பமாகத் துய்க்கும் வண்ணம், எளிய பல அற்புதமான வழிமுறைகளை, சற்குருமார்கள் மூலம் உலகிற்கு அளித்துள்ளனர். இதனால் எங்கும் நிறைந்து ஒளிரும் பரம்பொருளை, தக்க சற்குருவாகிய வழிகாட்டி மூலமே அறிந்து, உணர்ந்து உய்ப்பது மானுடர்களுக்கு மிகவும் எளிதாகின்றது.

கொன்றை மரம்
திருப்பத்தூர் சிவாலயம்

தோற்றமும், முடிவும் இல்லாத இறை சாம்ராஜ்யத்தில், கடவுள் அம்சங்களின் வெளிப்பாடாகிய வேதம், இறைவடிவை ஒலிப் பூர்வமாக உணர்விப்பதாகும்! இறைப் பொருள் போன்றே வேதமும் நிரந்தரமானது, அழிவற்ற ஆத்ம சக்தி கொண்டது. ஆனால், இறைவனை, சப்த வடிவில் உணர்விக்கின்ற வேதத் துதிகளை, முறையாக ஓதினால்தாமே கடவுளை அறியும் ஞானம் கிட்டும். நல்ல வேத மந்திரங்களைப் பெற்றும், இகபர சுகங்களிலேயே மனித அறிவு சுழன்றமையாலும், வேதத்தில் கிட்டிய அரிய சக்திகளைச் சுயநலத்தால் தவறாகப் பயன்படுத்தும் போக்கும் பெருகியமையால், வேதங்களும் தாமாகவே மறையலாயின. பிரபஞ்சத்தை உள்ளடக்கி இருக்கும் கடவுள் விக்ரஹத்தை வெறும் கல் எனப் பார்க்கும் அளவிற்கு மனிதப் பகுத்தறிவானது பக்தியின்றித் தாழ்ந்தமையால், இறைவனைக் காட்ட வல்ல வேதமாமறைகளும் திருக்கழுக்குன்றம் போல் கல்மலைகள் ஆயினவே!

கலியுகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள நாமறிந்த வேதங்கள் நான்கே! ஆனால் இறைவனிடமிருந்தே, யுகங்கள் தோறும் தோன்றி நிறைந்த பற்பல வேதங்களும், வேத சக்திகளும், வேதப் பரிமாணங்களும் எண்ணிலடங்கா, வேதத்தை ஓதி, ஓதி அடைய வேண்டிய இறைப் பேரின்பத்தை மனிதப் பகுத்தறிவு இழந்தமையால், திருஅண்ணாமலை மலை தரிசனங்கள், திருக்கழுக்குன்றம், பவானி மலைகள், இமாலய மலைச் சிகரங்கள், தல விருட்சங்கள், அரண்மனைப்பட்டி கொன்றை மரம், திருப்பத்தூர் ஸ்ரீதளிநாதர் ஆலயக் கொன்றை மரம் போன்றவை வேத வடிவுகள் ஆயின. எனவேதாம் வேதசாரம் பொங்கும் இவற்றை பக்தியுடன் கிரிவலம் வந்து, வழிபட்டு வர, நான்கு வேத சக்திகளையும், நான்கிற்கும் அப்பாற்பட்ட, நானிலத்தில் அடங்கா வேத சக்திகளையும் அடையும் நல்வழிகளைப் பெற்றிடலாமே!

பாமரர்களும் வேத சக்திகளைப் பெறும் வண்ணம், வேத சக்திகளும் இவ்வாறு பல இடங்களில், பலவிதங்களில், இறையருளால் நிரவி உள்ளன. சிவபெருமானே கல்லால மரத்தின் கீழ் அமர்ந்து, சிவயோகத்தில் திளைக்கும் திருஅண்ணாமலையாகவும், தூய்மையே வடிவான திருக்கயிலாயப் பனிமலையாகவும், கருணை மழை பொழியும் வேத மலையான திருக்கழுக்குன்றமாகவும், சித்தர்கள் வாசம் புரியும் சதுரகிரி மலையாகவும், காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலய மாமரமாகவும் வேத சக்திகள், பிரபஞ்சம் முழுதும் பாமரரும் அடையும் வண்ணம் நிரவி உள்ளன.

இத்தகைய வேதங் கொழிக்கும் தலங்களில் வலம் வந்தும், வழிபட்டும் வருதலால் மிகவும் அரிதான வேதசக்திகளைப் பாமரர்களும் எளிதில் பெற்றிடலாம்.

சித்துக்காடு

பூந்தமல்லியில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் பட்டாபிராம் செல்லும் மாற்று வழியில் சித்துக்காடு உள்ளது. ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயம் மற்றும் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயம் உள்ள சித்துக்காடு தலத்திற்கு, திருமழிசை சிவாலயக் குளத்தை ஒட்டிய சாலை வழியாகவும், கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் செல்லலாம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலத்தில் வழிபட வேண்டிய மிகவும் சிறப்பான இரு சிவ, விஷ்ணு ஆலயங்கள்!

தியான, யோக சக்திகளைத் தரும் சிவாலயம்! மன வேதனைகளைப் போக்கும் சித்துக்காடு சிவாலயம்! திருமண தோஷங்களை நிவர்த்தி செய்யும் திருமால் ஆலயம்!

சித்துக்காடு ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் நெல்லி விருட்சத்திற்கும் (தல விருட்சம்), துளசி விருட்சத்திற்கும் திருமண உற்சவம் நிகழ்த்திட, திருமண தோஷங்கள் தீரும், திருமண வாழ்வில் மன வேற்றுமைகள் மறைந்து சாந்தம் மலரும்.

சர்வேஸ்வரனின் நெற்றிக் கண், அண்ணாமலை தீபம், ஆலய விளக்கு ஜோதி, தூண்டா விளக்கு ஜோதி, நட்சத்திரம், சூரியன், சந்திரன் போன்ற பல்வகை ஜோதி வகைகளோடு விளக்கு தீபம், மின்னல், சாம்பிராணி தூபம், அடுப்பு நெருப்பு என அக்னியிலும் பல வகைகள் உண்டு.

யோகங்களை முறையாகப் பயில்கையில், யோகப் பூர்வமாகப் பரவெளியிலும், அண்டத்திலும், உடலிலும் யோகாக்னி ஏற்படும். இத்தகைய யோகாக்னி அற்புத நாடி வளங்களையும், ஆரோக்ய குணங்களையும், மனயோக சக்திகளையும், நல்வரங்களையும் தருவதாகும்.

27 நட்சத்திரங்களுமே பல அரிய யோகாக்னி ஜோதிகளைக் கொண்டு பிரகாசிக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரித்தான யோகாசனங்களை அவரவர் பயில்தலால், தக்க யோக சக்திகளை எளிதில் அடைந்திடலாம். எனவே அவரவருக்கு உரிய யோகாசன முறைகளைத் தக்க சற்குரு மூலம் அறிந்து, கடைபிடித்துப் பலன் பெறுதல் வேண்டும். இதற்கு சித்துக்காடு சிவாலய வழிபாடு உதவுகின்றது.

ஸ்ரீமுருகப் பெருமான்
மேலபரங்கிரி சிவாலயம்

ஜடாமுடிச் சித்தர் (படுக்கை ஜடைச் சித்தர்)

“சுவாதியம்போதி, நெல்லியம் பதியாம் புவாதி புவனாதி, பூசுர ஜோதியாம்” – என்று சித்துக்காடு தல யோக ஜோதிப் பிரபாவத்தைப் பற்றி ஸ்ரீஅகஸ்தியர் பிரான் உரைக்கின்றார். அதாவது நெல்லியில் பதிந்தொளிரும் நாராயண தீபஜோதி, நெல்லி இலைகள் மூலமாகவும், சுவாதி நட்சத்திரம் வழியாகவும், சகல பூமி, புவனங்களுக்கும் பரவி, நிரவி அருள்பாலிக்க வல்ல தலங்களுள் சித்துக்காடு தலமும் ஒன்றாம். இங்கு சிவாலயத்தில் ஸ்ரீபிரசன்ன குந்தளாம்பிகை அம்பாள் சன்னதியை வலம் வருகையில் ஸ்ரீதுர்க்கைக்கு முன் அம்பாள் சன்னதி பிரதட்சிண வழித் தூண் ஒன்றில் ஜடாபீடச் சித்தர் (படுக்கை ஜடைச் சித்தர்) என்னும் உத்தம சித்தரின் திரு உருவைக் காணலாம்.

தாந்த்ரீக யோகத்தில் சிறந்து விளங்கும் இவர், தம் ஜடையை விரித்து அதில் யோக சயனம் கொண்டு அந்நிலையிலேயே பல லோகங்களுக்கும் பறந்து சென்று, கோடானு கோடி ஜீவன்களுக்கு அன்றும் இன்றுமாய் அருள் புரிந்து வருபவர். இவ்வாறு, எண்ணற்ற ஆலயங்களில், எத்தனையோ கோடிச் சித்தர்கள் குரு மூர்த்தம் பூண்டு அன்றும், என்றுமாய் அருட்பணிகளைப் புரிகின்றனர்.

“காலால் எழுப்பிக் கருத்தறிவிக்கும்” யோகபூஷணர்!

ஆண்டு தோறும், ஒரு நெல்லிக் கனியை மட்டும் புசித்து, அருந்தவம் பூண்டு, பிரபஞ்சமெங்கும் அன்றும் இன்றுமாய் ஜீவன்களுக்கு அருட்பணி புரிபவரே படுக்கை ஜடைச் சித்தர் ஆவார். இரண்டு பாதங்களின் கட்டை விரல்களை மட்டும் தரையில் பதித்தவாறே, தாந்த்ரீக யோக நடையில் மிகவும் விரைவாக நடக்கவும் வல்லவர். இதனால் பரவெளி யோக சக்திகள் உடலில் நிறைந்து, கால் கட்டை விரல்கள் மூலமாகப் பூமியில் நிரவி, இங்கு, சிவாலயத்தை வலம் வருவோர் உடல் நாளங்களிலும் பாதரேகைகள் மூலமாக நிரவும். இச்சித்தர்பிரான் பெரும்பாலும் நெல்லி மரத்தடியில் மட்டுமே தங்குவார்.

ஸ்ரீநந்தி மூர்த்தி
சித்துக்காடு சிவாலயம்

சிவ, விஷ்ணு ஐக்ய ஸ்வரூப சக்திகள் பொலியும் சுவாதி நட்சத்திரம்!

சுவாதி எனும் புனிதச் சொல்லில் சிவ, விஷ்ணு ஐக்ய ஸ்வரூப சக்திகள் நிறைந்துள்ளன!

“சிவய சிவ , சிவ சிவ, நமசிவாய, சிவாய நம” – என்பது அதிமஹா ருத்ர பஞ்சாட்சர மந்திரமாகும். வகாரம் நிறைந்த சிவாட்சர வாக்கியங்களுள், சுவாதி என்ற புனிதச் சொல்லும் ஒன்றாம். ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உரிய சுந்தரராஜ, வாசுதேவ, திரிவிக்ரம பீஜாட்சர சக்திகள் நிறைந்தது இந்த சுவாதி சொல்லே ஆகும். நட்சத்திர நாளில், சிவ, விஷ்ணு மூர்த்திகள் அருளும் சித்துக்காடு தலத்தில் வழிபடுதல் மிகவும் விசேஷமானதாம்.

தாந்த்ரீய பாவன யோக சக்திகள் நிறைந்த யோக நட்சத்திரமே சுவாதி நட்சத்திர மண்டலமாகும். Telepathy எனப்படும் மனோமய வான் பயணத்தில், ஆரம்பப் பயிற்சியாக, சுவாதி நட்சத்திர மண்டலத்திற்கே சற்குருமார்கள் தம் சிஷ்யர்களை அழைத்துச் செல்வர். சுவாதி நட்சத்திர நாளில், பூவுலகில் யோக சக்திகள் மிகுந்திருக்கும். சிரசாசனம், குக்குடாசனம், Telepathy, புஜங்காசனம் போன்ற யோக நிலைகளுக்குச் சுவாதி நட்சத்திர தினம் மிகவும் ஏற்றதாகும்.

சித்துக்காட்டில் மிளிரும் யோக ஜோதியும் அம்லாமிர்தமும்!

இவ்வாறாக, தேவாதி தேவர்களும் அரிய யோக சக்திகளைப் பெற நாடும் யோகஜோதி சக்திகள் நிறைந்த தலமே சித்துக்காடு சிவாலயமாம்! அம்லாமிர்தம் எனும் அரிய பலாதிபல சக்திகள், பல லோகங்களிலும் சுரக்கும் நன்னாளே சுவாதி நட்சத்திரத் திருநாளாம். அம்லா என்பது நெல்லிக்காய் என நாமறிவோம். நெல்லிக்காயைப் பற்களால் கடித்து உண்கையில், துவர்ப்பிற்குப் பின் விசேஷமான, திகட்டாத, அமிர்தமயத் தித்திப்புச் சுவை நாக்கில் ஊறி எழுவதை நாம் நன்கு அறிவோம் தானே! இதுவே அம்லாமிர்த சக்தியாகும்.

துவாதசித் திதியில், பாற்கடலில் அமிர்தத்தில் பல யுகங்கள் ஊறிய நெல்லிச் சிலாவின் மீது அமர்ந்து தோன்றிய ஸ்ரீமகாலக்ஷ்மியைத் திருமால் ஏற்று, மோகினிப் பெருமாளாக, திருமகளுக்கு அமிர்தப் பிரசாதம் பாலித்தமையால், நெல்லிக்கு அமிர்த சக்தி கிட்டிய திருநாளும் துவாதசித் திதியாகும். இவ்வாறு நெல்லி மரம் ஸ்ரீவிஷ்ணுவின் அம்சங்களைக் கொண்டதாகச் சர்வ லோகங்களிலும் பொலிகின்றது.

“சிவசக்தி ஐக்யம்”
மேலப்பரங்கிரி

நெல்லியில் நிலைக்கும் அம்லாமிர்த சக்தி

நெல்லியினுள் பொதிந்திருக்கும் இத்தகைய அம்லாமிர்த சக்திகளைப் பெற்றிடவும், நீர் மூலம் பூவுலகிற்கு லக்ஷ்மீ கடாட்சத்தைப் பெறவும், வீட்டில், தோட்டத்துக் கிணற்றில், நெல்லிக் கட்டையை மிதக்க விடும் பண்டைய கால ஜலச் செல்வ விருத்தி முறை தற்போதும் வழக்கத்தில் உண்டு.

ஏகாதசித் திதியில் விரதமிருப்போர் 60 நாழிகை  விரதப் பட்டினியால் வயிற்றில் உண்டாகும் அமிலச் சுரப்பைச் சமன்படுத்திட, மறுநாள், துவாதசி நாளில் நெல்லிக்காய்ப் பச்சடியை (நெல்லி முள்ளிப் பச்சடி – நெல்லி வற்றலால் ஆவது) முதலில் உண்ணும் சிறப்பான சத்தான, ஆன்மீகச் செறிவு நிறைந்த நல்ல உணவுப் பழக்கம் ஒன்று இன்றும் உண்டு.

பாற்கடலில் பூரித்த அமிர்த சக்தியை, ஸ்ரீவிஷ்ணு நாமங்களில் உள்ள நாமாமிர்தத்துடன் இணைத்து, ஸ்ரீநிலாத் துண்டப் பெருமாள் மூர்த்தி, அரைப் பிறை ஆரங்கள் உடைய (பிறை வடிவப் பட்டைகள் கொண்ட) அதியற்புத சக்திகள் நிறைந்த நெல்லிக் கனியை, சந்திர மூர்த்திக்குப் பிரசாதமாக அளித்து, அவருக்குப் பிறைக் கலைகள் வளரத் துணை புரிந்தார். இப்பெருமாள் மூர்த்தியே காஞ்சிபுரம் ஸ்ரீஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளி உள்ளார். ஏவல் வினைகளால் மதிமயக்கம் ஆனோர், துன்பங்களின் அழுத்தச் சுமையால் மனவேதனைகளுடன் இருப்போர், சந்திர தசை, சந்திர புக்தியில் உள்ளோர் யாவரும், மனநோய்கள் தீரவும், மனத் தெளிவிற்காகவும், மன அமைதிக்காகவும் வழிபட வேண்டிய மூர்த்தியே ஸ்ரீநிலாத் துண்டப் பெருமாள்!

குபேர மூர்த்தி வழிபட்ட தலமே சித்துக்காடு!

லக்ஷ்மி கடாட்சம் நிறைந்த சித்துக்காடு தலத்தில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாளை வழிபட்டார் குபேர மூர்த்தி! பதினாறு ஆரப் பட்டைகளை உடைய நெல்லிக் கனிகளைத் தோற்றுவிக்கும், அமிர்த நெல்லி விருட்சத்தை ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் குபேரனுக்கு அளித்திட்டார்.

துவாதசி, சுவாதி, அனுஷம், வெள்ளி நட்சத்திர நாட்களில், சுக்ர ஹோரையில், குபேர மூர்த்தி நெல்லியை மஹாவிஷ்ணுவாகவும், துளசியை இறைத் துணைவியாகவும் பாவனம் கொண்டு பூஜித்தார்.

இதற்காக, குபேர மூர்த்தி, குந்தளாம்பிகை சமேத ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் ஆலயத்தில் வலது காலில், வலது கட்டை விரலில் மட்டும் நின்று, பல்லாயிரம் ஆண்டுகள் சுபசரண கரண யோகம் தவமிருந்து, நாகலிங்கப் புஷ்பங்களால் சுவாமியைப் பூஜித்தார். பிறகு நெல்லிக் கனிச் சாறால் அபிஷேகித்து, இங்குள்ள ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் பெருமாளைச் சேவித்து இங்கு கருடக் கொடிச் சித்தர், பீஜாவாப மகரிஷி, புனர்வசு மகரிஷிகளின் முன்னிலையில் நெல்லி விருட்சம், துளசிக்குத் திருமண உற்சவத்தை நிகழ்த்தினார்.

ஸ்ரீசனீஸ்வர பகவான்
மேலபரங்கிரி சிவாலயம்

நெல்லிக்கும், துளசிக்கும் திருக்கல்யாண உற்சவங்களை, இங்கு, சித்துக்காட்டில் பெருமாள் தலத்தில் நிகழ்த்திய குபேர மூர்த்தி, தாமிழந்த சங்கநிதி, பத்ம நிதி போன்ற பதினாறு செல்வங்களையும் மீண்டும் பெற்றிட்டார். இதற்காக அவர் வழிபட்ட தலங்கள் பற்பல!

குபேர மூர்த்தி நமக்குப் பெற்றுத் தந்துள்ள வரங்களுள் ஒன்றாக, இங்கு தயிர் அன்னம், புளியோதரை படைத்து, ஏழைகளுக்கு நெல்லிக் காய் ஊறுகாயுடன் தானமளித்து வருதலால் கடன் சுமை தணிந்து, பணக் கஷ்டங்கள் தீர வழி பிறக்கும்.

அனைத்துச் செல்வ சக்திகளையும் பூண்ட நெல்லி மரத்தைத் தலவிருட்சமாகக் கொண்ட பெருமாள் ஆலயம் துலங்கும் நெல்லியம்பதியாகிய சித்துக்காட்டில், குபேரனிடம் சகல ஐஸ்வர்யங்களும் சாசுவதமாக நிலைத்து நிற்பதற்கான கடவுட்புலன் கிட்டியதுடன், குபேர மூர்த்தியும் அரிய பல தெய்வ சக்திகளையும் அடைந்து ஜீவன்களுக்குக் குபேர கடாட்சம் அளிக்கும் அருள் வரசக்திகளையும் பெற்று, இங்கு பக்தியுடன் வழிபடுவோரும் செல்வம் அடையத் துணை புரிகின்றார்.

திருமண தோஷ நிவர்த்தித் தலம்

பலவிதமான தோஷங்களால் திருமணம் தடைபட்டு வாடுவோர், இங்கு, முதலில் சிவாலயத்தில் ஸ்ரீபிரசன்ன குந்தளாம்பிகைக்கு நிறைய வளையல்கள் சார்த்தியும், ஸ்ரீதாந்த்ரீஸ்வரருக்கு நெல்லிச் சாறு, பழச்சாறு அபிஷேகமும் ஆற்றி, ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்திலும் வழிபட்டு, பெருமாள் ஆலயத்தில் உள்ள நெல்லித் தல விருட்சத்திற்குக் கல்யாண உற்சவத்தையும் நிகழ்த்திப் பூஜித்து வர வேண்டும்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தோர் தம் ஆயுள் காலத்தில் அடிக்கடி வழிபட வேண்டியவையே சித்துக்காடுத் தலத்தின் சிவ, வைஷ்ணவ ஆலயங்களாம். சைவ, வைணவ ஒற்றுமைக்கான உன்னதத் தலம், இவ்விரண்டு ஆலயங்களையும், சுவாதி நட்சத்திர நாள், திங்கள், துவாதசி நாட்களில் தரிசிப்பதானது, அனைவருக்கும் – வாழ்வில் நிலைத்து நின்று அருளும் – மிகவும் அற்புதமான பலன்களைத் தருவதாகும்.

சுப முகூர்த்த நன்னாட்களில், இங்கு, ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில், நெல்லி – துளசி திருமண உற்சவம் நடத்தி வழிபட்டு வந்திட, பல தடங்கல்களால், திருமண ப்ராப்தி பாதிக்கப்பட்டுள்ள குடும்பத்தில் கல்யாண பாக்யமும் கைகூடி வரும். பலத்த வேற்றுமைகளால், சச்சரவுகளால் வாடியுள்ள தம்பதியரின் குடும்ப ஒற்றுமைக்கு நல்வழி காட்டும் அற்புதத் தலம்.

சுவாதி நட்சத்திர தினத்தில் பதிந்துள்ள தசாவதார தரிசனப் பலன்களைத் தரும் ஸ்வர்ண தசஹரி சக்திகளைப் பெற இக்கூட்டு ஆலய வழிபாடு பெரிதும் உதவும்.

ஸ்ரீசூரியனும் சந்திரனும்
மேலப்பரங்கிரி சிவாலயம்

கிளி வார்க்கும் நல்சக்திகள்

நெல்லி விருட்சத்தில் பல கிளிகளை ஒன்றாகக் காண்பது மிகச் சிறந்த சுபகால சகுனமாகும். இக்காட்சியே பல காலசந்தி தோஷங்களைப் போக்கக் கூடியது. ஸ்ரீசுகபிரம்ம மகரிஷிக்கான சித்திரபத யுகக் காலத்தைச் சேர்ந்த பல பாரம்பரிய யுகச் சந்ததிக் கிளிகளும், சித்துக்காடுத் தலத்தின் இவ்விரு ஆலயங்களிலும் தினமும் வழிபடுகின்ற காட்சியை இன்றும் காணலாம். வேதம் ஓதும் சுகபிரம்ம மகரிஷிக் கால சந்ததிக் கிளிகளே இவை!

சென்னை வடபழனி ஸ்ரீவேங்கீஸ்வரர் சிவாலயத்தில், ஸ்ரீசனீஸ்வரர் சன்னதி அருகே செவ்வாய் மேட்டில் பூமியில் ஒளிப் பூர்வமாக மறைந்த கீரபாணேஸ்வர சித்தர், கிளி வடிவில் தினமும் சித்துக்காடு ஆலயங்களில் வழிபடுகின்றார். இங்கு சித்துக்காட்டில் சிவாலயத்தில் ஸ்ரீபிரசன்ன ஸ்ரீகுந்தளாம்பிகை இறைச் சன்னதியில் கீரவாணி ராகத்தில் பாடல்களைப் பாடி வர, இசைத் துறையில் மங்காப் புகழ் பெற அன்னை அருள்கின்றாள்.

பொதுவாக ஸ்ரீபடேசாஹிப், ஸ்ரீராகவேந்திரர் போன்ற மகான்கள், யோகியரைப் போல், பூமியடியில் ஜோதியாய்ப் புகுந்து மறைந்த கீரவாணர், கீரபாணச் சித்தர் போன்றோர் அடிக்கடி வந்து வழிபடும் தலமிது.

இங்கு, சிவாலயத்தில் பிரதோஷ பூஜைகளை நிகழ்த்துவது சந்ததிகளை நன்கு தழைக்க உதவும். சித்தர்களுடைய ஞான பத்ர கிரந்தங்களில் இத்தகைய அபூர்வமான ஆலயங்களைப் பற்றிய விளக்கங்கள், தக்க சற்குருப் பூர்வமாக அறிய வேண்டியதாக அமைந்துள்ளன. அறிந்து கடைபிடித்துப் பலருக்கும் உணர்விக்கும் சமுதாய இறைப் பொதுப் பணியைத் திறம்பட ஆற்றி வாழ்வதே உண்மையாக வாழும் இறைவழியாம்!

குந்தள ஜோதி

குந்தள ஜோதிப் பிரகாச சுவாதி நட்சத்திரத் தலம் – சித்துக்காடு ஸ்ரீதாந்த்ரீஸ்வரர் சிவாலயம்! சுவாதி நட்சத்திர நாளில் விளக்கு பூஜை ஆற்றி, நன்முறையில் குடும்பம் தழைக்கவும், காரிய சித்திக்கும் மகத்தான பலன்களைத் தரவல்ல தலம்! வருடம் முழுதும், தினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடாமைக்குப் பிராயச்சித்தமாக, சுவாதி நாளில் கூட்டு விளக்குப் பூஜை ஆற்ற வேண்டிய திவ்யமான தலம்!

நட்சத்திரங்கள் ஒவ்வொன்றும், ஒவ்வொருவருக்கும், பலவிதமான முறைகளில், வாழ்க்கைத் துறைகள் பலவற்றிலும் துணை புரிகின்றன. அனைத்து நட்சத்திர தினங்களிலுமே ஒருவருடைய வாழ்க்கைக் காலமும் தினமும் கடந்து செல்கின்றது அல்லவா! எனவே புனிதமான அனைத்து நட்சத்திரங்களின் நல்வரங்களையும் யாவரும் பெற்றாக வேண்டும்.

ஸ்ரீமுருகப்பெருமான்
மேலபரங்கிரி

காலத்தை உணர்ந்து வாழ்!

ஆனால் உண்மையில், கலியுக மனிதன், தான் தினமும், ஒவ்வொரு நிமிடமும், 27 + 4 = 31 வகை யோக நேர வகைகள், 11 கரணங்கள், 7 வார நாட்கள், 30, 31, 32 எண் சக்தி நாட்கள், 16 திதிகள் போன்ற பல கால கட்டங்களைக் கடந்து செல்கின்றோம் என்ற கால உணர்வு இல்லாமலேயே, ஏனோதானோ என்ற வகையில் வாழ்கின்றான். ஒவ்வொரு நிமிடத்தையும், இறைவன் தந்த அருட்பரிசாக உணர்ந்து வாழ்வதில்லை. இதற்குக் காரணம் மனிதப் பிறவியின் தெய்வீக அருமை தெரியாது இருப்பதுதான்!

இறைவன் நமக்குப் பிரசாதமாக அளித்துள்ள பெறுதற்கரிய மனித வாழ்வுக் காலத்தின் மகிமை அறியாது, வீணாக்கி அலட்சியப்படுத்துவதால், தீர்ப்பதற்கு மிகவும் கடினமான காலசந்தி தோஷமும் சேர்கின்றது.

இதற்கெல்லாம் விடிவே கிடையாதா! நிச்சயமாக உண்டு! ஆனால் தக்க சற்குரு மூலம் நிவர்த்திகளைத் தந்தாலும், ஆழ்ந்த நம்பிக்கையுடன் கடைபிடிப்பார் யார் உளர்?

“ஆமாம், உலகெங்கும் இவற்றை அறியாதோர் கோடிக்கணக்கில் இருக்கின்றார்களே, அவர்களுக்கு அப்படி என்னதான் நேர்ந்து விட்ட்து?” என்ற குறுக்குத்தனக் கேள்வியுடன் அலட்சிய மனப்பான்மையும் சேர்ந்தால், காலத்தைப் பழித்த குற்றமும் வந்து சேருமே! கால நிந்தனைக் குற்றங்களை அகற்றவும், கால சக்திகளை அறியவும் மோகனூர், தேனிமலை, சித்துக்காடு போன்ற தலங்கள் சிறந்து விளங்குகின்றன.

பித்ருக்களின் தீப வழிபாட்டுத் தலம்

அவரவர் வாழ்வு நெறிகளை மேம்படுத்துவதில், குறித்த பங்கு பித்ருக்களுக்கும் உண்டு என்பதால், தம் சந்த்தியினர் கலியுகத்தில் காலத்தை வீணடித்து வாழ்வதால், “தக்க பாத்திரம் அறிந்து பிச்சை இடாத தோஷமும்” பித்ருக்களுக்குச் சேர்கின்றது. எனவே பித்ருக்களும், சுவாதி நட்சத்திர நாளில் தூல, சூக்கும வடிவுகளில் இங்கு, சித்துக்காடு புனிதத் தலத்தில் தீப வழிபாடு செய்து, பிராயச்சித்தம் அடைகின்றனர் எனில் என்னே சித்துக்காடு யோக ஜோதிப் பிரகாச மகிமை!

கால உணர்வுகளை, சக்தியை, மகிமையை உணர்த்த வல்ல பண்புகளைக் கொண்டதாய், சுவாதி நட்சத்திரம் துலங்குவது நமக்குப் பெரும் பாக்யமே! எனவே தான் சுவாதி நட்சத்திரத்தில், ஸ்ரீகாலபைரவர் வழிபாடானது, ஸ்ரீகாலபைரவருக்கு உரிய தேய்பிறை அஷ்டமி பூஜா சக்திகளில் பலவற்றையும் திரட்டி அளிக்க வல்லதாகும்.

குந்தள ஜோதித் தலம், தாந்த்ரீய சிவஜோதித் தலமும் கூட!

குறிப்பாக, ருத்ராட்சம், மணிகள், காசிக் கயிறு போன்ற தக்க தெய்வீக சாதனங்களின் தெய்வீக சக்திகளை கிரகித்து ஈர்ப்பதற்கும், பரப்புவதற்கும், நிறைவு செய்வதற்குமான தேவதீப சக்திகளை சுவாதி நட்சத்திரம் கொண்டுள்ளது. சுவாதி நட்சத்திர சக்திகள் பரிணமிக்கும் ஒரு சில யோக ஜோதித் தலங்களுள் ஒன்றே சித்துக்காடு புனித பூமியாம்!

சிலவகை யோக சக்திகள் சப்த வடிவிலும், ஒளி வடிவிலும் எழும், இவ்விரண்டையும் சங்கமிக்கச் செய்யவல்லதே குந்தள யோகம். அதாவது சப்தப் பூர்வமாகவும், ஜோதிப் பிரகாசப் பூர்வமாகவும் ஜ்வலிப்பதே குந்தள ஜோதி! குந்தள சக்திக்கு மூலாதாரமாக அமைந்து, குந்தள ஜோதியை சுவாதி நட்சத்திர நாளில் ஆகர்ஷணம் செய்து தந்து அருள்வதே தாந்த்ரீய சிவஜோதி ஆகும். இவ்வரிய குந்தள ஜோதி, இதன் மூலமான தாந்த்ரீய சிவஜோதி – இரண்டும் பூரிக்கும் தலமே சித்துக்காடு சிவாலயம்.

அம்பிகையே ஆக்கித் தரும் குந்தள ஜோதி!

தாந்த்ரீய சிவஜோதி ஒலியை ஒளியாகவும், ஒளியை ஒலியாகவும் ஆக்க வல்ல யோக சக்தியாகும். இதன் மூலங்கள் மனிதப் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை ஆதலின், அம்பிகையே, குந்தளாம்பிகையாக அவதரித்து, சர்வேஸ்வரனிடம் முறையாகப் பயின்று, இதன் பலாபலன்களைப் பூவுலகிற்குச் சித்தர்கள் மூலம் நல்குகின்ற தலமே சித்துக்காடு!

தாம் பரம்பொருளிடம் பெற்ற குந்தள யோக சக்தியை முதலில் அம்பிகை, ஸ்ரீநந்தி மூர்த்திக்கு உபதேசித்து, பிறகு சித்தர்களுக்கும், மகரிஷிகளுக்கும் உணர்வித்து, பிரபஞ்ச ஜீவன்களுக்கும் குந்தள சுவாதி எனும் அற்புத சுவாதி நாளில் அளித்துப் பிரசன்னமான கோலமே பிரசன்ன குந்தளாம்பிகை அவதாரிகை ஆகும்!

எனவே, இவ்வாறாக, பூசுர ஜோதி, புவன ஜோதி போன்ற 15 வகை யோக ஜோதிகளைக் கொண்டதே சுவாதி நட்சத்திரம் ஆகும். இவை யாவும் கலியுகம் தழைக்கத் தேவையான யோக ஜோதி அம்சங்களே! இவற்றை அடைய வல்ல தலமே சித்துக்காடு!

யோக ஜோதி பொங்கும் தலமே சித்துக்காடு!

விஞ்ஞானத்தால் புக முடியாத ஆன்மத் துறையே காலம் ஆகும். கால நிகழ்ச்சிகளில் விஞ்ஞானம் சற்றும் தீண்ட முடியாத வளாகமே கால பூமி! ஆனால் மெய்ஞான விஞ்ஞானத்தில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் மூன்றிலும், குருவருளுடன் சுயநலமில்லாத் தியாக நெறிகளுடன் சஞ்சரிக்க முடியும். காலத்தின் தெய்வீக மகிமையை உணர வைக்க வல்லவைகளுள் யோக ஜோதி சக்தியும் ஒன்றாம். அதாவது, விளக்கு ஜோதியில் இருந்து, சில தலங்களில் மட்டும் பல அபூர்வமான யோக ஜோதி சக்திகள் எழுகின்றன. இவை கிளைக்கும் யோக ஜோதித் தலங்களுள் ஒன்றே ஸ்ரீபிரசன்ன குந்தளாம்பிகை சமேத ஸ்ரீதாந்த்ரீஸ்வர சிவமூர்த்தி அருளும் சித்துக்காடு சிவாலயம் ஆகும்!

இத்தலத்தில் சுவாதி நட்சத்திர நாளில் ஏற்றப்படும் ஒரு சிறு அகல் விளக்குத் தீபம் கூட, பிரபஞ்ச அளவில், குந்தள ஜோதி சக்திகளை நிரவ வல்ல தீபப் பிரகாசத்தை அளிப்பதாம்.

சங்கல்ப தரிசனம்

திருஅண்ணாமலை கிரிவல மகாத்மியம்!

ஒரு தரிசனத்தில் ஓராயிரம் தரிசனப் பரிசங்கள்!

அருணாசல கிரிவலத்தில் மலையைத் தரிசிக்கையில், சட்டென மேலே பார்க்கும் போது, தரிசனத்தை நோக்கிக் கண்கள் குவிகின்ற பாங்கைச் சற்றே சிந்தனை செய்திடுக! அருகில் உள்ள, எட்ட உள்ள, பல முகடுகளைப் பார்த்தவாறு தாமே, தம் முன்னே விமரிசையாகத் தெரியும் தரிசனத்தில், உங்கள் கண்கள் லயிக்கின்றன! அதாவது பல கூட்டுத் தரிசனங்களின் மொத்தமாகவே ஒவ்வொரு தரிசனத்திலும் ஒருவருடைய பார்வை உறையும்!  இருகண் நோக்கும் ஒருமித்து ஆங்கே குவியும்!

ஒவ்வொருவருக்கும் இவ்வகைப் பல்குண மலை முகடு தரிசன முறை அவரவருக்குரிய புண்யப் பூர்வமாக நிகழ்வதே! ஒருவருக்குக் கிட்டும் மலை தரிசனம் இன்னொருவருக்கு அதே போல அமையாது! இதுவும் முடிவிலா அருணாசல இறையற்புதங்களுள் ஒன்றாம்! கோடிக்கணக்கான அருணாசல மலை (முகடு) தரிசனங்கள் காணத் தெவிட்டாதவை! கண்களுக்குள் அடங்காதவை! மனம், உள்ளம், அறிவு, ஞானத்திற்கு அப்பாற்பட்டவையாய் உள்ளுள் உறைபவை!

கலியுகத்திலும் அனைத்து நாடுகளிலும் சற்குருமார்கள் உண்டு!

கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம் மட்டுமன்றி, கலியுகத்திலும் உலகெங்கும் அனைத்து நாடுகளிலும், சற்குருமார்கள் இன்றும் உலவி, உறைந்திருந்து நல்மக்கள் உய்வு பெற அருள்வழி காட்டி வருகின்ற தன்மையை, நாம் பன்முறை ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில், நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராமன் அவர்களுடைய குருவாய் மொழி உரைகளாக ஊட்டி, உணர்த்தி, வலியுறுத்தி வந்துள்ளோம். இறைத் தூதுவர்களாகப் பொலியும், சித்தர்கள், மகரிஷிகள், யோகியர், ஞானியர், சற்குருமார்கள் உற்பவிக்கப் பெறும் குருமண்டலங்கள் யாவும் அருணாசலமாம் திருஅண்ணாமலையில் தாம் இறைவனால் உற்பவிக்கப் பெறுகின்றன.

ஒவ்வொரு சற்குருவும், தமக்கு இறைவன் அளித்துள்ள நியதிகளின்படி, அந்தந்த காலவர்தமான முறைகளுக்கு ஏற்ப, ஆங்காங்கே, உலகின் பல பகுதிகளிலும் பல வடிவுகளிலும் உறைந்து, வாழ்ந்து, சத்சங்கமாகப் பல இறையடியார்களை ஒன்று கூட்டி, பல்வேறு இறைநெறி முறைகளை, வழிகாட்டி வருகின்றார்கள்.

அஞ்சுதல் ஏனோ, அருணாசலம் இருக்கையில்!

எனவே, “என்னப்பா இது, கலியுகத்தில் இவ்வளவு அக்கிரமங்கள், வன்முறைகள், அதர்மச் செயல்கள் இப்போதே பெருகி விட்டனவே! இன்னும் ஏறத்தாழ 4,50,000 ஆண்டுகள் சொச்சத்தைக் கலியுகத்தில் கழித்தாக வேண்டுமே! எதிர்காலத்தில் நாம் பிறவிகள் எடுத்தால், இதை விட மோசமான நிகழ்ச்சிகள் நடக்கும் கலியுக பூமியைத் தானே நாம் காண வேண்டியதிருக்கும்!” என்றெல்லாம் எண்ணி அஞ்சிக் கோழையாகி விடாதீர்கள்!

ஆழ்ந்த இறைநம்பிக்கையுடன், “நம்மை கடைத்தேற்றுவதற்காக சற்குரு இருக்கின்றார், அவரை நாடுவதே நம்முடைய பிறவி லட்சியம்!” என்று தெளிவுடன் உணர்ந்து, அவர் கைகாட்டியாக நின்று எடுத்தளிக்கும் சத்சங்க நற்காரியங்களைத் திறம்பட ஆற்றி, உறுதியுடன் வாழ்ந்து வருவோர்க்கு எவ்வித அச்சமும் வந்திடாது! சற்குரு துணை புரிவார் யாங்கணுமே, எவ்வுலகிலுமே!

பலரும் அருணாசல கிரிவலம் மற்றும் தெய்வ வழிபாடுகளை, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாது, இறை லட்சியக் கடமைகளாக ஆற்றி வருவதாக, வாயாரச் சொல்வதுண்டு. இதுவும் நல்எண்ணமே! ஆனால் எண்ணங்கள், அதே வகை எண்ணங்களாகவே மனிதனிடம் உறைவதில்லையே! நாளுக்கு நாள், நிமிடத்திற்கு நிமிடம் அவை மாறுமே! இறைச் சரணாகதித் தத்துவம் சிறக்கும் வகையில், அனைத்தையும் இறைவனிடம் அர்ப்பணிக்கும் வகையில் அருணாசல கிரிவல வழிபாடுகளை, பூஜைகளைக் கலியுகத்தில் நிகழ்த்துவது மிகமிகக் கடினமானதாகும்.

ஏனெனில், வாழ்வில் எப்போதாவது துன்பங்கள், நோய்கள் ஏற்படுகையில், “இறைவா! இத்தனை முறை கிரிவலம் வந்தேனே, இவ்வளவு பூஜைகள் செய்தேனே, எனக்கா இச்சோதனை!” என்று நீங்கள் வாய்விட்டுச் சொல்லாவிட்டாலும், மனத்தளவில் ஒரு சிறிதே எண்ணி இருந்தால் கூட, அது சரணாகதித் தன்மையை, பாங்கை, அம்சங்களைத் தணித்து விடும்!

எல்லாம் உன்னாலப்பா, எங்கும் நிறை அருணாசலப்பா!

எனவே, ஆசாபாசங்களுக்கு ஆட்பட்ட சாதாரண மனிதனாய், எவ்வளவோ பிரார்த்தனைகளுடன் அருணாசலத்தைக் கிரிவலம் வந்தாலும், கிரிவல நிறைவிலாவது “இறைவா! நின் திருஅருளால் கிரிவலத்தை, இந்த உடலால் ஓரளவு நிறைவு செய்ய முடிந்தது. அடியேன் மிகமிகச் சாதாரண மனிதனாக இருப்பதால், வருங்காலத்தில் அறிந்தோ, அறியாமலோ எவ்வித பங்கமான எண்ணமும் வாராது காத்தருள்க! நின்னருளால், நின்னை கிரிவலம் வந்தது, அடியேனுடைய பிறவிக் கடமையாக ஏற்க வேண்டுகிறேன்!” என்று, மனதார வேண்டிடுங்கள்! இத்தகைய “சங்கல்ப சாதகம்” நிறைவேற வேண்டிய இடமே, கிரிவலத்தில், இடுக்குப் பிள்ளையாரை அடுத்த “சங்கல்ப தரிசனப் பகுதியாக” அமைந்துள்ளது! எண்ணங்களை முறைப்படுத்தும் ஏற்றமிகு அருணாசல தரிசனம் இது!

நவநாத சித்தர்கள்

ஸ்ரீபாணகித்ர நவநாத சித்தர்

பௌர்ணமி கிரிவலத்தைப் போன்று மாத சிவராத்திரி கிரிவலமும் சிறப்புடையதே! அபரிமிதமான நல்வரங்களைப் பொழிவதே! தை மாத சிவராத்திரி நாள் – 20.1.2004 நவநாத சித்தர்கள் மகிமை – 8

காலத்தைக் கடந்த திருஅண்ணாமலையில், நாமறியாத வகையில், மானுட சரீரத்தில் வாழ்ந்து சர்வ லோகங்களுக்கும் அருட்பணி ஆற்றிய சித்புருஷர்கள் ஏராளம், ஏராளம்! இவ்வரிய தொடர் மூலம், பல அற்புதமான திருஅண்ணாமலை வாழ் சித்தர்களை நீங்கள் அறிந்திட, உங்களைப் பல நூற்றாண்டுக்கு முன்னான, சித்தர்களின் இறைப் பாசறையான அருணாசலப் புனித பூமிக்கு இட்டுச் செல்கின்றோம்!

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
லால்குடி

“வங்” எனும் மனோபாவத்தால், வலது நாசி ஓட்டத்தை “அங்” என்று (பிராணப் பிரணவ சக்தி) ஆழத்தில் ஆழ்த்தி, அழுத்தியே (சுவாச யோகப் பூர்வ) பிரணவ நாளத்தில் ஓங்கார சிங்காரம் செய்தவரே பாணகித்ர சித்தராவார். ‘கித்ரம்’ என்றால் மெருகு கூட்டிய நிரந்தர அழகுடையது என்ற பொருளும், யோகப் பூர்வமாகச் சேர்ந்து வருகின்றது.

வங்கங்குண யோகம்

பாணகித்ர சித்தர், வங்கங்குண யோகத்தில் (வங்+அங் பீஜ யோக சக்திகள் இணைவது) சிறந்தவர். அதாவது யோகத்தின் பலன்களாக, அபூர்வமான பீஜ சக்திகளைப் பெற்றுத் தருகின்ற வங்கங்குண யோகத்தைப் பிரபஞ்சத்தில் போதித்து, உபதேசிப்பவர்.

பதவி, செல்வம், வலிமை, இளமை, கௌரவம், அந்தஸ்து காரணமாக “யாவும் நம்மால் ஆவதே!” என்ற அகங்கார நினைப்பால், கலியுகத்தில் பலருக்கும் ஆணவம் (ego) பெருகுவதால், இவர்கள் பல தவறுகள், பெரும் குற்றங்களைச் செய்து விடுகின்றனர். இத்தகையோரின் கித்தா(ய்)ப்பும் அடங்கும் வண்ணம் செய்து, பாணகித்ரர், வங்கங்குண யோக சக்தியால் அவர்களைத் திருத்தி, அருணாசல பக்தி மார்கத்தில் செலுத்துகின்றார்.

பதவி, செல்வம் போன்றவை காரணமாக, மனமறிந்தும், அறியாமையாலும், சூழ்நிலையாலும் பிறரைத் துன்புறுத்தி, அதர்மமாய் வாழ்ந்தோர், தம் பெரும் பிழைகளை, கொடிய பாவங்களை உணர்ந்து, திருந்தி, தம்மால் வதையுற்றோருக்கு நிவாரணம் தந்து, சீரடைந்து வாழ, நல்வழி காட்டுகின்றார்.

இவ்வாறு ஆணவத்தை அழித்து, வங்கங்குண யோகப் பூர்வமாக அருள்வழி காட்டுகின்ற உத்தமச் சித்தர்களில் ஒருவரே பாணகித்ர சித்தர்.

எங்கு ஆணவம் அழ்கின்றதோ, அங்குதான் அருமையான அருணாசலமானது, வெறும் கல் மலையாக அல்லாது, மானுடக் கண்களுக்கு யோகப் பெருமையுடன் துலங்குவதாகும்.

ஸ்ரீவீணா தட்சிணாமூர்த்தி
திருப்பாற்றுரை

குட்டிக் கரணமும் ஒரு வகை யோகமே!

புகழாலும், பதவியாலும், பண பலத்தாலும், ஆள் பலத்தாலும் ஆணவம் பூண்டு ஆடுவோரைத் திருத்துவதற்காக, அருணாசல கிரிவலத்தில், பாணகித்ர சித்தர் குட்டிக் கரண யோகம் புரிந்தவாறு, வங்கங்குண யோக சக்திகளை நிரவியவாறு, கிரிவலம் வருவார். அவருடைய யோகக் கோலத்தைக் காண்போர் மனமுருகித் திருந்துவர்.

இவ்வாறு பற்றற்றுப் பற்பல அறப்பணிகளை ஆற்றிய உத்தம பாணகித்ரச் சித்தர், வருகின்ற தை மாதச் சிவராத்திரியில் ஆங்காங்கே கரணப் பிரதட்சிண முறையில் கிரிவலம் வருவது கலியுகத்திற்குப் பெரும் பாக்யமே! சித்தர்களின் இத்தகைய யோகக் கரணம், ஆற்றுதற்கு அரிய வாலை யோகத்தின்பால் அடங்குவதால், ஒவ்வொரு கரணத்திலும் விண்ணளாவ வங்கங்குண யோக சக்திகள் எழுந்து, தீவினைகளை அறவே அகற்றுவதாகும். இதற்கான ஆரம்ப யோகப் பாடமே கரணமாகிய குட்டிக் கரண யோகமாகும்.

குட்டிக் கரண யோகத்தைப் பழக்கம் இன்றி முயற்சித்தல் கூடாது. இன்றைய மாத சிவராத்திரி அருணாசல கிரிவலத்தில், ஆங்காங்கே கிரிவலத்தில் குட்டிக் கரண யோகப் பாங்கின் சக்திகளை ஓரளவு கொண்ட, முழுமையான தோப்புக் கரணத்தையாவது முழுமையாக இட்டு வருதல் வேண்டும். குழந்தைகளை, பிள்ளைகளை, பால பருவத்தில் இருந்தே மிகவும் கவனமாக, குட்டிக் கரணத்தை நல்ல யோகப் பூர்வமான உடற் பயிற்சியாகக் கற்றுத் தாருங்கள்.

ஸ்ரீசண்டிகேஸ்வரி லால்குடி

ருத்ராட்ச மணி, தாமரை மணி, சங்கு மணி போன்றவை எளிமையான சில வங்கங்குண யோக சக்திகளைக் கிரிவலப் பலாபலன்களாகப் பெற்று அளிக்கின்றன. மிக மிகக் கடினமான பைரவி பூஜையில் வங்கங்குண யோக சக்திகள் பெரும் மகத்துவம் பெறுகின்றன. நவநாத சித்தர்களுள் பாணகித்ரச் சித்தர் யோக துறைக்கெனப் பொலியும் சிவபெருமானின் யோக மார்த்தாண்ட அவதாரிகை நிலையில் தோன்றியவராவர்.

குருமூர்த்தி அருளும் வங்கங்குண யோக சக்திகள்!

முழங்கால் பட்டம் கட்டிய ஐயப்ப மூர்த்தியைப் போல், யோகப் பட்ட தட்சிண மூர்த்தி, வங்கங்குண யோகத்தில் ஞானத்தில் பிரகாசித்து, வங்கங்குண யோக சக்திகளை அருள்கின்ற குருமூர்த்தி ஆவார். பொதுவாக, மிகவும் அபூர்வமாகக் காணப்படும் நின்ற கோலத்தில் உள்ள தட்சிணா மூர்த்தியும் வங்கங்குண யோக ஞானசக்திகளை அருள்பவர் ஆவார்.

இசைத் துறையில் காம்போதி ராகம் வங்கங்குண யோக சக்தியைப் பெற்றுள்ளது. வீணை ஏந்திய தட்சிணா மூர்த்தி இத்தகைய வங்கங்குண யோக சக்திகளை மீட்டி நிரவி அருள்கின்றார். வீணை ஏந்திய தட்சிணாமூர்த்தி அருளும் தலங்களில் (தஞ்சாவூர் அருகே திருப்பூந்துருத்தி, லால்குடி, திருப்பாற்றுரை) வியாழன் மற்றும் நவமித் திதிகளில் காம்போதி ராகத்தில் இசைத்தும் அல்லது ஏழைக் இசைக் கலைஞர்களைக் கொண்டும் இசைத்து வர, தன் மேல் கணவன் அல்லது பெற்றோர்கள் உரிய அன்பு கொள்ளவில்லை என்று மிகவும் வேதனையுடன் வாழ்வோர்க்கு மனசாந்திக்கான நற்காரியங்கள் நிகழும். அன்பான இணைப்புகளும் ஏற்பட்டு, குடும்ப ஒற்றுமையும் விருத்தி ஆகும்.

வாழ்வில் பிறரிடம் சொல்ல இயலாத வகையில் சம்பவங்களைச் சந்தித்தோர், பாவச் செயல்களைப் புரிந்தோர் கடைத்தேற, பிராயச்சித்தப் பரிகாரங்களை அறிய உதவும் மாத சிவராத்திரி அருணாசல கிரிவலம் இதுவேயாம்.

அன்பு

அடியார் : அன்பு, பக்தி என்பது என்ன குருதேவா?

சற்குரு: அன்பு என்பது அனைவரிடமும், அனைத்திடமும் இறைவனின் படைப்பென குறைவில்லா, மாசில்லா, விருப்பு, வெறுப்பில்லா நேயம் கொள்வதாகும். சூரியோதய நேரத்தில், ஆலயத்தில் நர்தன விநாயகர் முன் நின்று, கண்களை மூடி, குதிகால்களில் நின்று தியானித்தால், ஆடும் அவயங்கள் ஆடாது அடங்கி நிற்கும் நிலையில், கண்களுக்குள் அன்பு பொன்மயச் சுடராகத் தெரியும்.

பக்தி என்பது புனிதமான “அன்பின்” மிக உயர்ந்த, உத்தம நிலையே! அன்பு முதிர்ந்து முக்திக்கும் போது பக்தியாக மலர்கின்றது. மனிதநேயமும், ஜீவநேயமும் அன்புத் தன்மையைச் சார்ந்தவையே! அமிர்த யோக நேரத்தில், ஸ்ரீசண்டிகேஸ்வரி சன்னதியில் விளக்கேற்றி, அம்பிகை முன் குனிந்து, பணிந்து கூப்பிய கரங்களுடன் தீப ஜோதியை நோக்கிட, உலகை மறந்த நிலையில், பக்தி ஊறுவதை நன்கு உணர்ந்திடலாம்.

ஸ்ரீநர்த்தன விநாயகர்
லால்குடி

இறைமையைப் பரிபூரணமாக உணர, அன்பே சிறந்த சாதனமாகும். மாசற்ற, புனிதமான அன்பினை, பக்தி, இறைப் பெருங்கருணை என மானுட சரீரத்தில் உய்த்து நமக்கு உணர்வித்தவர்களே இறைத் தூதுவர்களான சித்தர்களும், மகரிஷிகளும், நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஆவர்.

அடியார்: அன்பை, கலியுக வாழ்வின் இன்ப, துன்பங்களுக்கு இடையே அடைதல் கூடுமா?

சற்குரு: இன்ப, துன்பங்கள் உடலுக்குத் தாம்! இவற்றிற்கு ஊடே, உள்ளம், மனம், அறிவு, புத்தி, உடலால் நன்கு செறிவது அன்பு. அன்பில் பரிபூரணிக்கும் தெய்வீக குணங்களும், இவற்றை மனித வாழ்க்கையில் பெறும் வழிமுறைகளும் சித்தர்களால் மிகவும் பவித்ரமாக விளக்கப்படுகின்றன.

மணமுள்ள பூக்கள் தரும் புனிதங்கள் அன்பின் திவலைகளே! பூக்களைத் தொடுக்கையில், தம்மைப் பிறருக்காக அர்ப்பணிக்கும் தியாகமயப் பூக்களின் தெய்வீக சக்திகளால், அன்புச் சுடர்கள் விரல் கணுக்கள், ரேகைகள் மூலமாக உடல் நாளங்களை, அடைகின்றன. துன்பங்களால் வாடுவோர், தினமும் பூக்களைத் தொடுத்து ஆலயங்களில் அளித்து வந்தால் துன்பங்களுக்கான காரணங்களும், பரிகாரங்களும் புஷ்ப தேவதைகளால் உணர்த்தப் பெறுவர்.

ஆலயங்கள் தாம் அன்பு மலரும் தோட்டங்கள்! மாமறைகள், திவ்யமான ஒலி சக்திகள் மூலமாகவும், புனிதமான தீபம் ஒளிப் பூர்வமாகவும் அன்பை நிரவுகின்றன. ஆலயங்களில் நந்தவனத்தைப் பேண உதவுவது மிகச் சிறந்த சமுதாயப் பணி. இதனால் சமுதாயத்தில் சாந்தக் கதிர்கள் நிரவி, பகைமை, வன்முறைகள் அகலும்.

இவ்வாறாக தியானம், யோகம், மூலிகாசாரம், சமுதாய இறைப் பணிகள் போன்ற பல அற்புத வெளித்துறை இறைச் சாதனங்கள் மூலமாக, தெய்வீக ரீதியாக, உடலினுள் உறையும் ஆத்ம சக்தியை, அன்பு மூலமாக மிகவும் எளிதில் அடைய முடியும்.

எந்தக் குழந்தையும் தெய்வக் குழந்தையே!

அடியார்: அன்பு பூரணிக்கும் மனிதர்களைத் தற்போது காண முடியுமா?

சற்குரு: இப்புவியில், எந்நாட்டிலும், எந்த மனிதனும் பரிபூரண அன்புச் செல்வத்தை உடைய குழந்தையாகவே பிறக்கின்றான். காலப் போக்கில், கர்ம வினைச் சாரப்பட்டும், பூர்வ ஜன்மக் கர்ம விளைவுகளாலும், குழந்தைப் பருவம், பிள்ளைப் பருவம், இளமைப் பருவம், நடுவயது, முதுமை என்ப் பல பருவங்களில், மனிதன் தன்னுடைய புனிதமான அன்புத் தன்மைகளை இழந்து, கர்மவினை வசப்பட்டவனாக வாழ்க்கையில் உழல்கின்றான்.

வாழ்வின் இறுதியில்தாம், மனிதன், தான் இதுவரையில் நீடித்து நிற்காத பாசம், பரிவு, உறவை அன்பெனத் தவறாகக் கருதியதை உணர்கின்றான். அன்பென அவன் கண்ட பல உறவுகள், வாழ்க்கைப் பிணைப்புகள் யாவும் மாயையாய், காலப் போக்கில் நீர்க் குமிழிகளாய் மறையும்போதுதான், மனிதன் எந்தவிதமான புனிதமான அன்புச் சாரமாய்ப் பிறந்தானோ, அத்தூய அன்பிற்காக ஏங்கலாகின்றான்.

நம்மிடம் கூடப் படித்தவர்கள், உறவினர்கள், வேலை செய்பவர்களிடம் தோன்றும் உறவுப் பரிவையும், நட்புணர்வையும் அன்பு என நாம் தவறாக அர்த்தம் செய்து கொள்கின்றோம். கடமை, பொறுப்புடன் ஆற்ற வேண்டிய பணிகள் இவை! உண்மையான அன்பு, பாசம், நட்பு, பரிவு, இரக்கத்திற்கு அப்பாற்பட்டதாகும். எனவே இவ்வாறுதாம், தற்காலத்தில் அன்பு என்றாலே வெறும் நட்பு, பாசம், பரிவு என்றே வாழ்க்கையில் பெரும் பகுதியை எண்ணிக் கழித்து விடுகின்றனர். ஆனால் இதற்குள் தான் பெற்ற அற்புதமான மனிதப் பிறவி முடிந்து, அன்பைத் தேடும் அடுத்த பிறவி தொடரலாகிறது. நீர்க் குமிழிகள் போலும் பிறவிகள்!

அடியார்: தற்காலத்தில் சுயநலம் பெருத்து, பரிபூரணப் புனிதம் நிறைந்த பக்தி மறைந்து வரும் நிலையில், அன்பைக் கலியுக நடைமுறை வாழ்க்கையில் எவ்வாறு அறிவது? இதற்குக் கடவுள் வழி வகை தந்துள்ளாரா?

சிசுவைப் போல் அன்பைப் பொழிவீர் அய்யா!

சற்குரு: நிச்சயமாக, அன்பை பக்தியாக, இறைவனின் கருணையாக உணர, பகவானே வழி வகுத்துள்ளார். கைக் குழந்தை பரிசுத்தமான அன்பின் வடிவே!

ஒரு கைக் குழந்தையைக் கண்டால் உங்கள் மனம் மென்மையாகி விடுகின்றது அல்லவா? காரணம் என்ன? சூது, வாது, பொய்மை, பகைமை, விரோதம், கள்ளம், கபடம் அறியாத கைக்குழந்தையை ஒருவர் காண்கையில் நிகழ்வது என்ன?

கைக்குழந்தை, தெய்வ குணங்களுடன், பாவனைகளுடன், முக்காலமும் உணர்ந்ததாக, தன்னைக் காண்பவர்களிடம் புனிதமான அன்பைப் பொழிகின்றது. தொழுநோயாளி, சந்நியாசி, ஆண், பெண், நாய், மரம், ஜாதி, மதம், இனம், குலம் என எப்பாகுபாடும் கொள்ளாது, கைக்குழந்தை யாவரிடமும், யாதிடமும் பரிபூரண அன்பைச் செலுத்துகின்றது.

 இத்தனை பரிசுத்தமான அன்பு நிறைந்ததாகக் கைக்குழந்தையைக் காண்கையில், அது பரப்பும் அன்புச் சுடரே, உங்களிடம் மறைந்துள்ள அன்பைச் சுரந்து, ஆத்மா உறையும் உங்கள் உள்ளத்தை மென்மை ஆக்குகின்றது. இவ்வசீகர மென்மை வெறும் பாசத்தால், பரிவால், தற்காலிக சந்தோஷத்தால் வருவது அல்ல!

உங்களிடம் அன்புக் குணங்கள் மறைந்து விட்டமையால், அன்புக் கதிர்களை வீசும் குழந்தையின்பால் பதிலுக்கு அன்புக் கதிர்களை அளிக்க இயலாது நீங்கள் திணறுகின்றீர்கள். எனவே குழந்தைக்கு நீங்கள் அளிக்கும் உணர்வுகள் வெறும் பரிவு, பாசக் கதிர்களாகவே உங்களால் செலுத்தப்படுகின்றன.

இறைச் சன்னதியில் பரிணமிக்கும் பரிபூரண அன்பு!

அடியார்: பூமியில் பரிசுத்தமான அன்பு பரிணமிக்கும் இடங்கள் யாவை குருதேவா?

சற்குரு: ஆலயங்கள், தான, தர்மங்கள் சிறக்கும் ஆஸ்ரமங்கள், பிற ஜீவன்களுக்குச் சேவைகள் ஆற்றும் தியாகமயமான அறச்சாலைகள் யாவும் அன்பை நிரவும் இறைவளாகங்கள் ஆகும்!

உதாரணமாக, ராமேஸ்வரம் ஸ்ரீராமநாதர், சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர், ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயங்களில், கடவுளை வணங்குகையில், உங்களிடம் அன்பு பரிணமிக்கின்றது. இத்தகைய சுயம்பு மூர்த்தித் தலங்களில் மூலவர் முன் உங்களுக்குள் ஏற்படும் விசேஷமான மரியாதை, பயபக்தி, பணிவு, அடக்கம், ஈர்ப்பு, மௌனம் யாவும் தூய அன்பை வார்க்கும் குணங்களே! காரணம், பல கோடி யுகங்களுக்கு, முன் பரிசுத்தமான அன்பின் வடிவமான ஸ்ரீராமர் மற்றும் மாசற்ற அன்பைத் துய்த்த எண்ணற்ற சித்தர்களால், மகரிஷிகளால் வழிபடப்பட்ட ஸ்ரீராமநாத சிவலிங்கம் (ஸ்ரீராமர் பிரதிஷ்டை செய்தது), ஸ்ரீகபாலீஸ்வரர் (இங்கு ஸ்ரீராமர் தேர் தந்து முதல் ரதோத்ஸ்வ விழா நடத்தினார்), ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் (ஸ்ரீராமர் குலத்தின் வழிபாட்டு தெய்வம்) மூர்த்திகளின் முன் நிற்கையில், காலம் கடந்த இத்தகைய ஸ்வரூபங்களின் முன் கை கூப்பிப் பணிந்து தரிசிக்கையில், இச்சுயம்பு மூர்த்திகளிடம் எழுகின்ற அன்புக் கதிர்கள், உங்களை அடைந்து அன்பு நாளங்களை ஆக்கப்படுத்துகின்றன.

அன்பு பிறக்க, மலர, வளம் பெற உதவுவதும் ஆலய தரிசனமே!

நம் துன்பங்களைத் தீர்க்க இறை அருள் வேண்டிய (சுயநலச்) சிந்தனையுடன் சுவாமி முன் நிற்கும் போதும் கூட, உண்மையில் பரிகாரங்கள் மூலமாகவும் அன்புப் பரிமாற்றம் ஏற்படுகின்றது. கோடிக்கணக்கான மகரிஷிகளும், சித்தர்களும் பிரபஞ்சத்தில் உள்ள உயிர்களின் நலன்களுக்காக, இறையருள் வேண்டி வழிபட்ட, இன்றும் வழிபடுகின்ற சந்நதிகளில் உண்மையான அன்புப் பரிணமிப்பு நிலவுவதில் ஆச்சரியம் என்னவோ? ஏனென்றால் நாமோ நம் பிரச்னைகளை ஓதி இறைவன் முன் நிற்க, அப்பெம்மான்களோ ஜீவன்களின் நல்வாழ்விற்காகப் பிரார்த்தித்த தியாகமயப் புனித இறைதோட்டங்கள் தாமே ஆலயங்கள்! இங்குதாம் அன்பு, பக்தியாக மலர்கின்றது.

தியாகத்தில் அன்பு செழிக்கும்!

அடியார்: இறை பூஜை மட்டுமன்றி வேறு எவ்வகையில் அன்பை எளிதில் பெறலாம், குருதேவா?

சற்குரு: இறைமை இல்லாததே உலகில் இல்லையே! பிற ஜீவன்களின் நல்வாழ்விற்காக ஆகும் தியாகமயமான சமுதாய இறைப் பணிகள் யாவும் அன்புக் கதிர்களை நிரவுபவையே!

அடியார்: நம் தினசரி வாழ்வில், குடும்பத்தில், அலுவலகத்தில், புறச் சமுதாயத்தில் புனிதமான அன்பினை எப்படிக் கொணர்ந்து அறிவது குருதேவா?

மூன்றில் முகிழ்க்கும் அன்பு!

அன்பும் பக்தியும் – முதலில் நம் ஆயுட்காலம் முழுவதுமாக நிலவி, நிரவ வேண்டிய – மிகவும் முக்கியமான தெய்வாம்சம் என முதலில் உணர்தல் வேண்டும்.

மனித வாழ்வின் உறக்க நிலை, கனவு நிலை, விழிப்பு நிலை மூன்றிலுமே அன்பு படர்ந்தால்தான் இது சாத்தியமாகும். இம்மூன்றும் அடங்கியதே மனித ஆயுள் காலம்! வாழ்வை நிர்ணயிக்கும் சுவாசத்தில் முதலில் அன்பைக் கொணர்ந்தால்தான் அது உடல் முழுதும் நிரவும்! அதாவது, ஆயுளை ஆக்கும் கால நாடிகள் மூலமாகவும் அன்பைப் பெருக்கும் பூஜை முறைகளை அறிந்து கடைபிடித்தல் வேண்டும்! இதற்கு நிறைய இறைவழி முறைகள் உண்டு.

ரேகைகளில் கொழிக்கும் அன்புச் சுடர்கள்

உதாரணமாக, பாதரேகைகளிலும், கை ரேகைகளிலும் இறைவன் அன்பைச் சுரக்கும் அரிய ரேகைகள், சங்கு வடிவங்கள், நட்சத்திரக் குறிகள், க்ரந்தி (முடிச்சு) வடிவங்களை அளித்துள்ளான்.

எனவேதான் இரு கைகளையும் கூப்பி வணங்கும் போது, ஒரு வகைப் புனிதமான சாந்தமும், தெய்வீகமான மதிப்பும் உருவாகின்றன. எனவே, கைகளைத் தொங்க விட்டவாறு அல்லாது, ஆலயத்தில் அல்லது கிரிவலத்தில் கைகளைக் கூப்பி வணங்கியவாறும், முத்திரைகளை இட்டவாறும், கைகளைக் கட்டியவாறும் வலம் வரும் முறையே சிறப்பானது.

இறைவனைக் கைகூப்பி வணங்குகையில், கை ரேகைகளில் எழும் அஷ்ட கோண சக்திகள், ரேகா சக்திகள் இறைவனிடம் பரிணமிக்கும் அருட்கிரணங்களைக் கிரகித்து ஈர்க்கின்றன! மற்றும் கற்பூர ஆரத்தி, நெய் விளக்குத் தீபத்தைக் கைகளை ஒற்றித் தரிசிக்கையில், ரேகைகளில் படிந்துள்ள இறையன்புக் கிரணங்கள் சகல நாடிகளுக்கும் செலுத்தப்படுகின்றன. ஆலயங்களை வலம் வருகையில் இறையன்புக் கிரணங்கள், பாத ரேகைகள் மூலமாக உடலின் நாளங்களை அடைகின்றன.

விபூதி, குங்குமப் பிரசாதத்தைக் கைகளில் வாங்குகையில், உடனடியாக கைரேகைகள், இறையன்பை ஈர்த்துக் கொள்கின்றன. எனவே உடலில் பரிபூரணமான, புனிதமான அன்பை நிரவுவதில், கை, கால் ரேகைகளும், கங்கண ரேகைகளும் பெரும் பணி ஆற்றுகின்றன.

அன்புள்ள சந்தன மரமே!

சந்தன மரத்திற்கு அன்பை நிரவும் மகத்தான சக்திகள் உண்டு. சந்தனக் கட்டையை அரைக்கையில், கை ரேகைகள் அனைத்தும் அதில் பதிவதால், அன்பு விருட்சமாகிய சந்தனத்தில் பதிந்துள்ள அன்புக் கிரணங்கள் உடல் நாள, நாடிகளை அடைகின்றன. எனவே தினமும் சந்தனம் அரைத்து ஆலயத்திற்குத் தருவதும் அன்பை, பக்தியைப் பெருக்கச் செய்யும் சிறந்த முறைகளுள் ஒன்றாகும்.

நாம் சாதாரண மர ஜடப் பொருளாகக் கருதும் சந்தனம், அன்பை விருத்தி செய்யும் மகத்தான கிரண சக்திகளைப் பெற்றுள்ளது. சந்தனக் கட்டையிலும் நிறைய ரேகைகள் உண்டு. இவை முடிவிலா சாந்தமய அன்புக் கிரணங்களைப் பரப்பிக் கொண்டே இருக்கின்றன.

நம் கை ரேகைகளை நன்கு பதித்துச் சந்தனத்தை அரைக்கும் போது, பல தெய்வீக சக்திகள் ஆங்கே தோன்றுகின்றன. நாம் நறுமணம் என உணரும் சந்தன நறுமண வாசனையானது, பரவெளியில் நற்கதிர்களைப் (positive divine rays) பரப்பும் மகத்தான ஆன்மீக சாதனமாகும். ஆங்காங்கே, பரவெளியில் உள்ள தீய சக்திகள், தீய எண்ணங்களைப் பஸ்மம் செய்து, சந்தன சாந்திமய சக்திகளைப் பரப்பும் அதியற்புத ஆன்ம சாதனமே சந்தனமாகும்.

சமுதாயத்தைச் சுத்திகரிக்கும் சந்தனக் காப்பு!

தினமும் இல்லத்தில் சந்தனம் அரைத்து சுவாமிக்கு இட்டு வழிபட்டு வருவதால் தூய அன்புப் பரிணாமம் இல்லத்தில் ஏற்படும், குடும்ப அமைதி பெருகும். பரவெளியைச் சுத்தமாக்க உதவும். நல்ல குங்குமமாக இல்லாவிடில் நெற்றியில் புண் ஆகுமோ என்று அஞ்சுகின்ற பெண்கள், பிளாஸ்டிக் ஸ்டிக்கர் பொட்டு வைத்து சுமங்கலித்துவத்திற்கு இழுக்கைத் தேடிக் கொண்டு, கணவனின் நல்ஆரோக்யத்திற்கும் ஊறு விளைவிக்கின்றனர். முதலில் அரைத்த சந்தனத்தால் நெற்றியில் வட்டப் பொட்டு இட்டு இதன் மேல் நல்ல குங்குமத்தை இடுதலும் நல்லது.

ஆலயத்தில் ஒரு முறை தெய்வ மூர்த்திக்குச் சந்தனக் காப்பு இட்டால், பல மைல்கள் சுற்றளவுப் பரவெளியைச் சுத்திகரிக்கும் அற்புத சக்தியைக் கொண்டதோடு, இதன் பலாபலன்கள் பல தலைமுறைகளையும் சென்றடைந்து நம் மூதாதையர்களின் மேன்மைக்கும் உதவும். எனவே உலகெங்கும் நற்சக்திகளைப் பரப்புவதும் சந்தனத்தில் திளைக்கும் அன்பின் ஆத்ம சக்தியாகும்.

இல்லத்தில் அமைதி நிலவிட, சந்தனம் அரைக்கும் போது லால்குடி ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் மூர்த்தியை வேண்டி அரைத்திட, சந்தன நறுமணத்தோடு சாந்தக் கிரணங்கள் இல்லத்தில் நிரவி, சண்டை சச்சரவுத் தன்மைகளைத் தணிக்கும்.

ஸ்ரீபவானி அம்மன்

ஆதிசங்கரர் நேரில் வந்து வழிபட்ட அற்புதத் தலங்களுள் ஒன்று! கேட்காமலேயே குறைகளை நிவர்த்தி செய்கின்ற அன்னை பவானி! பவானி என்ற பெயருடைய யாவரும் வழிபட வேண்டிய தலம்!

ஸ்ரீபவானி அம்மன் மகிமை (அட்டைப் பட விளக்கம்) ஈரோடு அருகில் பவானி குமாரமங்கலம் இரட்டை நகரங்களில், பவானியில் ஸ்ரீபவானி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரர் ஆலயம் உள்ளது!

திரிவேணீ சங்கமத் தலம்!

ஈரோடு அருகே உள்ள பவானித் திருத்தலம், பிரயாக் (அலாகாபாத்) திரிவேணீ சங்கமம் போல, மூன்று முத்திரை மாமுனிகளை உடைய த்ரயார்ஷேய கோத்ராதிபதிகள், தத்தம் மூன்று பிரவர மகரிஷிகளோடு, தினமும் காலை, மதியம், மாலை சந்தியா வேளைகளில் வழிபடும் தலம்! பவானி, காவிரி, அமுத நதி (சரஸ்வதி) ஆகிய மூன்று நதிகளின் சங்கம முக்கூடல் துறையில் பகுளசோபிதப் பித்ருக்கள் பூஜிக்கும் ஆற்றுறைத் தலமே பவானியாம்!

பண்டைய யுகங்களில் “நுணா” எனப் பிரசித்தி பெற்ற பவானியில்தாம், அருந்தமிழின் “ண, ன” அட்சரங்களை ஸ்ரீஅகஸ்தியர்பிரான் ஈஸ்வரனிடம் இருந்து உபதேசமாகப் பெற்றார்.

“பேசும் எழுத்தினையும்
பேசா எழுத்தினையும்
கூசாமல் காட்டக் கொடி!”

என்று உமாபதி சிவாச்சாரியார் கொடிக் கவிப் பாடலில் ஓதியது போல, அறிந்தோ, அறியாமலோ, வாயாலும், உள் மனதினுள்ளும் பேசிய தகாத வார்த்தைகளை, மனக் கண்ணாடியில் காட்டி, அவற்றுக்குப் பரிகாரம் தரவல்ல அற்புதத் தலம். வாக்குக் குற்றங்களை அகற்றும் வல்லமை ஓங்காரம் ரீங்காரமிடும் சங்குகளுக்கு உண்டு! பண்டைய யுகங்களில் இம்முக்கூடலில் மிகவும் அற்புதமான நுணாவித வலம்புரி ஆற்றுச் சங்குகள் முகிழ்த்த இடமாதலின், இங்கு சங்காபிஷேகம் செய்து வழிபட்டு வர, வாக்சக்திகள் நன்கு விருத்தி ஆகும் தலம்!

ஸ்ரீகாயத்ரீ லிங்கம்
பவானி முக்கூடல்

வாக்குக் குற்றங்கள் அகல!

பேசிய சொல்லுக்கு எப்போதும் பேசிய வார்த்தைகளே எஜமானனாகி ஊழ் வினையாய் உறுத்து வந்து ஊட்டும், பேசாத சொல்லுக்கு அவரவரே எஜமானன், ஆனால் மனதினுள் பேசுவதும், எண்ணுவதும் கூட, ஆன்மீக ரீதியாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தற்போதைய கலியுலகில் வெளிப் பார்வைக்கு உடலளவில் நல்லவராகவும், மனத்தளவில் அசுரராகவும் வாழ்வோர் கோடிக் கோடியாம், குற்றமுள்ள மனவாக்கிற்கும் பரிகாரம் தருபவளே ஸ்ரீபவானி தேவி!

முக்தி தரும் முக்கூடல் தலங்கள்

பாரதத் திருநாட்டில், மிகவும் அபூர்வமாக மூன்று நதிகள் சங்கமமாகும் ஒரு சில திரிவேணீ சங்கமங்கள் உள்ளன. பிரயாக்  (அலாகாபாத்), திருச்சி லால்குடி அருகே அன்பில், குஜராத்தில் பிரபாசப் பட்டினம், பவானி போன்றவற்றில் அமிர்த யோக நேரத்தில் நீராடும் பாக்யம் பெற்றோர்க்குச் சந்ததிகள் நன்கு தழைக்கும், திரிவேணீ சங்கமங்கள் யாவற்றிலும், கண்களுக்குப் புலப்படா மறைநதியாக, அந்தர்யாமியாக சரஸ்வதி நதி துலங்குவதால், இவற்றில் பக்தியுடன், சித்த யோக நேரத்தில் நீராடும் பாக்யத்தைப் பெறுவோர்க்கு சித்தர்களின் நேரடி தரிசனமும் வாழ்வில் கிட்டும்.

பித்ருக்களும் வழிபடும் தலம்

பவானி மிகவும் சிறப்பான அமாவாசைத் தர்ப்பணத் தலமாகவும், பித்ருக்களுக்கும் மோட்ச நிலைகளை அளிக்கும், மகத்தான பித்ரு முக்தித் தலமாகவும் துலங்குகின்றது! பூமியில் “பூவர்தன காயத்ரீ மண்டலப் பித்ருக்கள்” வந்து புனித நீராடுகின்ற பூவுலகிலேயே ஒரே ஒரு பித்ருகாரண்யத் தலம்! பவானி என்று ஒரு முறை அழைத்தாலே போதும் ஆங்கே பன்மறை வேத சக்திகள், சங்கீத இனிமையுடன் பொழிவதை நன்கு உணரலாம்.

தேய்வைத் துடைத்து மனோவளத்தைத் தரும் ஸ்ரீபவானி!

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்பது அநாதியான வேதப் பிரமாண வாக்கே! ஆனால் பக்தி, தர்மம், சத்தியம், நேர்மை, நாணயம் போன்ற தெய்வப் பண்புகளை, மனித சமுதாயம் இழக்கத் தொடங்கியமையால்தான் பலவிதமான கர்ம வினைகள், பாவத் தன்மைகளை மனித குலமானது, கால யுகப் போக்கில் தனக்குத் தானே சம்பாதித்துக் கொண்டுவிட்டது. எந்த எந்த இறைப் பண்பாட்டில் ஒன்றி, ஆரம்ப யுகத்தில் தெய்வீகமான வாழ்கையை மனித சமுதாயம் பெற்றதோ, அதனை, தனது தீவினைகளாலேயே இழக்கத் தொடங்கி, இறைமைக்கும், மனித நேயத்திற்கும் இடையே இடைவெளி, பெருவெளியாகி வருகின்றது. காலப் போக்கில், மனிதர்கள் ஆக்கும் தீவினைகளின் விளைவுகளே பசி, பஞ்சம், பட்டினி, மன வேதனைகள், துர்மரணம், நோய்கள், நஷ்டங்கள், வெள்ளம், சூறாவளி போன்றவைகளாக வந்து சேர்ந்துள்ளன. இதற்குக் காரணம் ஆழ்ந்த இறை நம்பிக்கை மங்குவதேயாம்.

ஸ்ரீபவானி நாம கோடி அர்ச்சனை!

எனினும் கலியுகத்தில் இறைவனின் பெயரைச் சொல்வதே பெரும் நாம பூஜையாவதும், இத்தகைய நாமாவளிகள் மேற்கண்ட பல துர்வினைகளைத் தீர்ப்பதாக அமைந்திருப்பதும் நமக்குப் பெரும் அதிர்ஷ்டமே! அம்பாள் பெயரிலேயே ஊர் அமைவதால் “பவானி, பவானி” என நாள் முழுதும் கோடி எண்ணிக்கைக்கும் மேலாகப் பலரும் தன்னையும் அறியாது, உலகெங்கும் எழுதி, ஓதி, உரைத்து வருவதால் தினமுமே கோடி அர்ச்சனை பாவனத்துடன் பரவெளிப் பிரகாசம் உடைய தலம்!

கடவுளை நம்புவது மட்டும் போதாது, கடவுள் நம்பிக்கையானது, “நாம் ஒவ்வொரு விநாடியும் வாழ்வது இறைப் பெருங்கருணையால் தான்!” என்ற வேதவாக்காக உள்ளத்தில் ஆழ நிலை பெற்றால்தான் உள்ளம், மனம், உடலால் தவறிழைப்பது தணிந்து, உள்ளம் சுத்தமாகி, ஆத்ம தரிசன வழிகள் புலப்படும். இதற்கு திரிவேணீ சங்கமமான, பவானியின் முக்கூடல் நீராடல் துணை புரியும்

பவானி முக்கூடல்

காணக் கிடைக்கா ஸ்ரீகாயத்ரீ லிங்கம்

உள்ளம், மனம், உடலை ஒருமிக்க வைக்க உதவும் மிகவும் அபூர்வமான ஸ்ரீகாயத்ரீ லிங்கம் இங்கு பவானியில் ஆலயத்தின், பின்புறம், முக்கூடல் துறை மேல் தோன்றி அருள்வதும் இதற்கு முக்கிய காரணமாகின்றது. பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கம் உலகில் காணுதற்கரிய லிங்கம்!

10008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் பக்தியுடன் ஓதி இமாலயத்தில் மணாலி அருகே உள்ள ஸ்ரீகாயத்ரீ லிங்க வழிபாடு, 1008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் முறையாக ஓதி, பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க வழிபாடு இந்த இரண்டையும் தம் வாழ்வில் பெறுவோர்க்கு, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை நேரிடையாகவே உபதேசிக்க, தக்க சற்குருவே நேரில் வந்து அருள்வார்.

கிருதயுகம் வரையில், மக்கள் இறைவனுடன் ஒன்றிப் பூஜித்தமையால், அந்த யுகக் காலங்களில் ஆலயங்கள் எழப் பெறவில்லை. ஆங்காங்கே காடுகளில், வயல் வெளிகளில், சுயம்பு மூர்த்திகள் எழுந்தருளி இருப்பர். மனித சமுதாயம் சற்குருமார்களைப் பெரிதும் மதித்து, நடந்தமையால், பண்டைய யுகங்களில் மகரிஷிகள், சித்தர்கள் மக்களோடு மக்களாக உலவி, நேரிடையாகவே நல்வழிகளைப் போதித்தனர்.

தீமைகளை அகற்றும் ஸ்ரீகாயத்ரீ லிங்கம்!

காலப்போக்கில் பெரியோர்களிடம் இருந்து பெற்ற பூஜை முறைகளில் கிட்டிய சக்திகளைத் தம் சுய நலத்திற்காக பயன்படுத்தும் அசுர குணப் போக்கு மனித சமுதாயத்தில் பெருகிட, மனித சமுதாயத்தில் இவ்வாறாக சுயநலம், பேராசை, பகைமை, அகங்காரம், தீவினைகள், தீய வழக்கங்கள் நிறைந்த அசுர குணங்கள் பெருகின. அரக்கர்கள், அசுரர்களும் மலிந்தனர். மனதினுள் புகுந்திருக்கும் அசுர தீய குணங்களை மாய்க்க வல்லதே பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்கம். இங்கு ஜாதி, இன பேதமின்றி ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தைப் பிரார்த்தித்துப் பூணூல் அணிந்து கொள்வது மிகவும் விசேஷமானதாகும்.

கடவுள் பெருங்கருணையைக் கனிவாய் உணர வைக்கும் ஸ்ரீபவானி தேவி!

ஆரம்ப யுகங்களில், இறைவனிடம் தியானம், நித்ய அனுஷ்டானங்கள், யோகப் பூர்வமாக உள்ளம் ஒன்றிய வழிபாடு கொண்ட மனித சமுதாயம், தாமே விளைவித்துக் கொண்ட தீவினைகளால் தனக்கு விளைந்த துன்பங்களைப் போக்குவதற்காக, தெய்வ வழிபாடுகளை மேற்கொண்டு, பல வடிவங்களில் தெய்வ மூர்த்திகளை ஆராதித்து வழிபட்டனர். எனவே ஒருவனே தேவன் என்ற அடிப்படையான மூலாதார வேத சத்தியமானது, மனிதனின் நிலையற்ற மனத்தன்மையால் ஒன்று பலவாகி, பலவும் விரிந்ததாகி, அதியற்புதக் கடவுள் உருவ வழிபாடாக, ஆலய வழிபாடாக, மனித சமுதாயத்தைச் சீர் திருத்திப் பேணிட மலர்ந்துள்ளது.

உலகெங்கும் ஆயிரக் கணக்கான ஆலயங்களில் எந்த ஆலயத்தில் வழிபட்டாலும் “கடவுளையே துதிக்கின்றோம்” என்ற எண்ணமே மேலோங்குவதால் கடவுள் ஒருவரே, அவரைப் பிரபஞ்சமாகவும், பிரபஞ்சத்தின் உள்ளும் வெளியாகவும் விரிந்து நிறைந்து, நிரவி உள்ளார் என்ற வேதவாக்கு உளப்பூர்வமாக உணரப்படுகின்ற உத்தமத் தலங்களுள் பவானியும் ஒன்றாகும். ஊழ்வினை வசத்தால் கடவுள் நம்பிக்கையில் சரிந்தவர்கள் இனியேனும் மனந்திருந்தி வாழ பவானி தேவியிடம் நெக்குருகி வழிபட்டு வர வேண்டும். ஏனெனில் அனைத்தையும் மன்னித்தருளும் அருள் வரம் பெற்ற அன்னை! காணுதற்கரிய கனிந்த குண நல்வர தேவி!

தேக்க நிலைகளை அகற்றும் திருத்தலம்!

யுகக் காலங்களில், மனித மனமும் வாழ்க்கை நிலைகளும் மாறுவதால், இறைப் பரம்பொருளைப் பூஜிக்கும் வழிமுறைகளிலும் தேக்கம் ஏற்பட்டு விடுகின்றது. உறுதியான வைராக்யம், வலிமையான உடல், நல்ல பக்தி நிறைந்த உள்ளம் மங்குவதால் திருக்கயிலாய யாத்திரை மற்றும் அரிய விரத, பூஜைகளை மனித சமுதாயம் ஒதுக்கி வருகின்றது. இதனால் கலியுகத்தில், மக்கள், எத்தனையோ விரத, பூஜா, தீர்த்தவாரி, ஆலய தரிசன, அருணாசல மலை தரிசனப் பலாபலன்களை இழந்து வருகின்றனர்.

எனவே மக்களுடைய தளர்ச்சிக்கு மாமருந்தளித்து, உள்ளத்தைப் பக்குவப்படுத்தி, ஜீவன்களுக்கு இறைப் பரம்பொருளின் தனிப் பெருங்கருணையை அறிய வைக்கும் முகத்தான், பவானி திருத்தலத்தில்தாம் உற்பவித்த சக்திப் பரம்பொருளே ஸ்ரீபவானி தேவி. ஆம், அவரவர் கர்ம வினைப் படிவுகள், மனோ நிலைகளுக்கு ஏற்ப, கடவுளின் அருட்பெருங் கருணையை உணர்விப்பதற்காக, பரம்பொருளே சக்தி வடிவில் தோன்றிய கருணை வடிவ மூர்த்தியே ஸ்ரீபவானி அம்பாள்!

புத்தாண்டு 2004

2004 ஆண்டு நாற்காலில் எண்சக்திப் பூர்வமாக நிறைவதால், பாதரேகை சக்திகள் பரிணமிக்கும் ஆண்டு! எனவே 2004ல் நிறைய ... நிறைய... நிறைய... நிறைய.. நிறையவே... நடந்திடுங்களேன்!

2004ம் ஆண்டு பற்றி, நாம் சித்தர்களின் “ஜீவன்களின் கர்ம பரிபாலன கிரந்த பாட முறைகளின்” பாங்கை ஒட்டி, முக்கியமான சில அம்சங்களை மட்டும் இங்கு விளக்குகின்றோம். இவற்றை ஜோதிடப் பூர்வமாக அறியும் முறைகளும் உண்டு.

“2004 என்பது ஆங்கில வருட முறை ஆயிற்றே, இது ஆன்மீக வழிப்படி எவ்வாறு முக்கியத்வம் பெறும்?” என்று எண்ணத் தோன்றும், இதனை ஆங்கிலத் தேதி முறை என்பதே தவறு. காரணம், அனைத்து எண்களும், எண் கணிதத் துறைகளும் ஸ்ரீசரஸ்வதி மற்றும் புதன் கிரக மூர்த்திகளின் வித்யைகளே! பூஜ்யம், ஒன்று முதல் ஒன்பது வரை, எண்கள் அனைத்துமே, கிரகப் பிணைப்புகள் கொண்டதாக பாரதத்தில் தோன்றி, உலகின் பிற பகுதிகளுக்கு நிரவியவையே! எனவே உலகப் பொதுத் தேதி முறையிலும் பாரத ஆன்மத் தத்துவம் நன்கு பதிந்துள்ளது. எட்டுத் திக்குகளில் இருந்தும் வரும் சாரங்கள், ஒளி, ஒலிப் பொருள்களைச் சார்ந்தும் பூமியும் அனைத்து ஜீவன்களின் வாழ்வு முறைகளும், காரியங்களும் இயங்குவதால், 1.1.2004 என்ற எட்டு ஸ்தானத் தேதி முறையும் ஆன்மப் பூர்வமானதாகும்.

கலியுக நடைமுறை வாழ்வில், மனித சமுதாயத்தில், தேதி முறைகள், சாலை விதிகள், பல்துறைச் சட்டங்கள் போன்றவற்றில், சமுதாயத்துக்கு நலம் தரும் நல்ல விதிமுறைகள் ஏற்கப்பட வேண்டும். அதே சமயம், அனைத்தும் தக்க காரணங்களுடன் தான் நடக்கின்றன என்ற சிருஷ்டி இலக்கண நியதியையும் முதலில், நன்கு உள்ளத்தில் நிலை நிறுத்திக் கொள்ளுங்கள்! எனவே, உலகில் நடப்பன யாவும் இறையாணையால் நிகழ்வதுதாம்!

ஸ்ரீவரதராஜப் பெருமாள்
திருநெடுங்களம்

ஆண்டு 2004ல், சிறு சொல் கூட பெரும் பகைமையாக மாறுவதான, தேவையில்லாத பகைமை, பல இடங்களிலும் தோன்றும். செம்பருத்திப் புஷ்பத்திற்குப் பகைமையைத் தணிக்கும் ஆன்ம சக்திகள் நிறைய உண்டு. எனவே, 2004ம் ஆண்டில், அமர்ந்த கோலத்தில் உள்ள பெருமாள் மூர்த்திகளை (திருநெடுங்களம், திருபுவனை, காஞ்சிபுரம் ஸ்ரீபாண்டவதூதப் பெருமாள்), மூன்று வண்ணங்களில் உள்ள செம்பருத்திப் பூக்களால் பூஜித்து, பறங்கி, பூசனி போன்ற “பீடதம்பன” (தரையில் அழுந்தி அமர்ந்திருப்பது) காய்கறிகளால் ஆன உணவு வகைகளைத் தானமாக அளித்து வர, உறவு, அலுவலகம், வியாபாரக் கூட்டுகளில் எழும் பகைமை, விரோத, குரோத மனப்பான்மைகள் தணிந்து, சுமுக நிலை கிட்டும்.

ஆறறிவுப் பகுத்தறிவுடன், இறைமையோடு பிரகாசிக்க வேண்டிய மனித சமுதாயம், முறையற்ற பேராசைகள், அதர்மச் செயல்கள், காமச் செயல்களால், மிருகம் போலும் வாழத் தலைப்பட்டு, பொய், அதர்மம், அசத்தியத்தாலும் பகுத்தறிவை இழந்து, இரண்டறிவு, மூன்றரை அறிவு என்றபடியாக வாழ்வதால், விலங்குகளுக்கு உரிய பல கூட்டுக் கர்ம விதிகளும் (Group karmic effects) கலியுகத்தில் மனித சமுதாயத்திற்கும் தாமாகவே வந்து சேர்ந்து விடுகின்றன. 2004ல் பெருகுகின்ற, இத்தன்மை மனித சமுதாயத்திற்கு நல்லதல்ல!

இதனால்தான் வன்முறைகள், போர், பூகம்பம், சூறாவளி மற்றும் பல இயற்கைச் சேதங்கள், மக்களைக் கூட்டம் கூட்டமாகத் துன்பங்களுக்கு ஆளாக்குகின்றன. இவற்றைத் தவிர்க்க, 2004ம் ஆண்டில், வெட்ட வெளியில் உறையும் தெய்வ மூர்த்திகளுக்கு (உப்பூர் விநாயகர், நாமக்கல் ஆஞ்சநேயர், திருமானூர் பெருமாள், கொன்றையடி விநாயகர்) நிறைய அபிஷேகங்களும், வெண்ணெய்க் காப்பும் நிகழ்த்தி வழிபட வேண்டும்.

இந்தக் கூட்டுக் கர்மா விதியானது (Group karmic effects) 1.1.2004  தேதியில் எண்கணிதத்தின் “பாதவிதான” நியதிப்பட்டு 1+1+2+0+0+4 = 8 என்ற கூட்டு எண்ணின் சுதபாவன முறையிலும், எண் நான்கின், கடைசி ஸ்தான ராகு மூர்த்தியின் பாவனம் மற்றும் ஆகர்ஷ்ணத்தாலும், 2004ல் பலத்த மிருத்யு தோஷங்களும், மனித சமுதாயத்தில் பெருகுவதால், விபத்து மூலமாக, மரணத் தறுவாய்கள் இவ்வாண்டில் அதிகமாகும்.

கூட்டு மரண (group karmic effects) விபத்துக்குப் பரிகாரமாக, சாலையோர எல்லைத் தெய்வ மூர்த்திகளை வழிபடுதல் விருத்தியாக வேண்டும். செங்கல்பட்டு சித்தி விநாயகர், சாக்கோட்டை உய்யவந்தாள் அம்மன், திருமயம் கோட்டை பைரவர், சென்னை தாம்பரம் இரணியம்மன் வழிபாடுகள் மிகவும் சக்தி வாய்ந்தவை!

2004ல் பாதரேகை சக்திகள் நன்கு விருத்தி ஆவதால், கிரிவலம், பாதயாத்திரை போன்றவை நன்கு ஆக்கம் பெற வேண்டும். அனைவரும் நிறைய, (இறைக் காரியங்களுக்காக) நடந்து, நடந்து, பாதரேகை சக்திகளை நன்கு ஆக்கமுறச் செய்ய வேண்டும். நடக்கும் போது, கீழ்க்கண்ட எளிய மந்திரத்தை ஓதுதலால், பாத ரேகைகள் மூலமாக நற்கதிர்கள் 72000 உடல் நாளங்களை நன்கு அடையும்.

ஸ்ரீபட்டு விநாயகர்
செங்கல்பட்டு

சர்வம் பஞ்சாத்மகம் வித்யாத்
பஞ்சப்ரம்மாத்ம தத்வத:
பஞ்ச ப்ரம்மாத்மிகீம் வித்யாம்
யோ (அ)தீதே பக்தி பாவித:

தமிழ் மந்திரம்

ஞானம் அறிதல்
பிரம்மம் அறிதல்
ஆத்மம் அறிதல்
அனைத்தும் அறிதலாம்

மேலும் சித்தர்களும், மகரிஷிகளும் நடந்தே எங்கும் செல்வதால், அவர்களுடைய திருப்பாத சக்திகளையும் நம் பாதயாத்திரைகள், கிரிவலம், ஆலயப் பிரதட்சிணங்கள் மூலமாகப் பெற்றிடலாம். இதனால் சனீஸ்வரர், அங்கார மூர்த்திகளின் பெருங்கருணை கூட்டாகச் சித்திப்பதால், கூட்டு மரண தோஷங்கள் (group karmic effects) கணிசமான அளவில் தணியும்.

2004ல் இரவுப் பயணத்தை இயன்ற மட்டும் அறவே தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத சமயங்களில், ஸ்ரீசப்த மாதாக்களுக்கு வஸ்திரம் சார்த்திப் பூஜித்தும், ஸ்ரீகால பைரவருக்கு முழு முந்திரி மாலை சார்த்தியும், ஸ்ரீநடன விநாயகருக்குப் பட்டு வஸ்திரம் சார்த்தி வழிபட்டும், பிரயாணம் கொள்ளலாம். இரவு நேர ராகு கால நேரங்களை அறிந்து, இந்நேரத்தில் பயணிக்காது, எங்கேனும் தங்கி, இடைவிடாது பிரார்த்தனை செய்து, பிறகு பிரயாணத்தைத் தொடரவும், தொடர்ச்சியான இரயில், பஸ் பிரயாணமானால், முடிந்தவரை பயணத்தில் உறங்காது, ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை அனைத்துப் பிரயாணிகளின் நலன்களுக்காக, மிகச் சிறந்த இறைச் சமுதாய சேவையாக ஓதி வருக!

பாம்பன் சுவாமிகளின் மிகவும் சக்தி வாய்ந்த வேல் மாறல் பதிகத்தை ஓதிவருதல் பிரயாணத்தில் தக்க காப்பு சக்திகளைத் தரும். இங்கு தரப்பட்டுள்ள வேல்மாறல் சக்கரத்தை, driving license போல் எப்போதும் பையில் வைத்துக் கொண்டுப் பிரயாணம் செய்வதும் காப்பு சக்திகளை அளிக்கும்.

2004ல், பட்சிகளுக்குத் தகுந்த உணவளிக்காமை, பட்சிகளைக் கொல்தல், இம்சித்தல் அதிகமாக நடக்கும். இதனால் தொண்டை (throat diseases) பற்றிய நோய்கள் மனித சமுதாயத்திற்கு நிறைய வரும். இதற்குப் பரிகாரமாக, ஜாதி, மத, குல பேதமின்றி, 80 வயது நிறைந்த பழுத்த தம்பதிகளைப் பலாப் பலகையில் அமர வைத்துப் பாத பூஜைகள் நிகழ்த்தி, நிறையப் பழங்களை தானமாக அளித்து, ஆசி பெற வேண்டும். கூண்டில் அடைபட்ட பட்சிகளை, இயன்றால் விலைக்கே வாங்கி, தோட்டங்களில், வயல் வெளிகளில், காடுகளில் சுதந்திரமாகப் பறக்க விட வேண்டும்.

குருவின் மகிமையைப் பரப்ப, குருமங்கள கந்தர்வ குருமண்டல யோக லோக மகரிஷிகள் பலரும், இவ்வாண்டில் அருணாசல கிரிவலம் வருவதால், குருபாத பூஜைகளை அனைவரும் ஆற்றிட வேண்டும். தனக்கு குரு இல்லையே என்று ஏங்குவோர், ராமாயணத்தில் பரதன் ஆற்றியது போல், அல்லது தலையில் மரப் பாதுகைகளைச் சுமந்து,

“ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே 
சகஸ்ர நாம தத்துல்யம் ராம நாம வராணனே!

குருசிவ, குருஹரி, குருபிரம்மா
குரவே சாட்சாத் பரப்பிரம்மம்!”

என்ற துதியை ஓதியவாறு திருஅண்ணாமலையிலோ, அவரவர் ஊர் அருகில் உள்ள இறைக்குன்றுத் தலங்களிலோ,  வியாழன், அமாவாசை, பௌர்ணமிகளில் கிரிவலம் வந்திட வேண்டும்.

திருவாடானை

ஸ்படிக குருபாதத்தையும் மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, வலம் வந்திடலாம். பிறகு, இல்லத்தில் குருபாத ஸ்படிகத்தை, குருபாதுகா ரட்சைகளை வைத்து – தன்னால் காண இயலாது எங்கோ உறைகின்ற – சற்குருவின் திருப்பாதங்களாக பாவனை செய்து, தினமும் சந்தனம், மஞ்சள், குங்குமம் இட்டு, குருபாத பூஜையாக வழிபட வேண்டும்.

நல்ல குங்குமம் பல இடங்களிலும் கிடைக்காததாலும் நெற்றி புண்ணாகுமே என்ற பயத்தாலும் பல பெண்கள் நெற்றிக்குக் குங்குமம் இடுவதையே விட்டு விட்டனர். பாபகரமான ஒட்டுப் பொட்டாகிய ஸ்டிக்கரை நெற்றியில் ஒட்டிக் கொண்டு கணவனுக்கு நோய், தோஷங்கள், சாபங்கள், சாபங்களைப் பெற்றுத் தருகின்ற நிலை துரதிருஷ்டவசமாக அதிகரித்து வருகின்றது. குங்கும சக்திகளைப் பெண்ணினம் அலட்சியம் செய்யும் மனப்பான்மை கடந்த பல ஆண்டுகளாகவே பெருகி வந்துள்ளமையால், இதன் கடும் விளைவுகளாக, இளம் மற்றும் நடுத்தர வயதுப் பெண்கள், கணவனுக்குப் பெரும் நோய்கள் வந்து அல்லலுற்று, குடும்பமே வாடுகின்ற துர்பாக்ய நிலைகள் 2004ல் சற்று மிகுதியாகும்.

இதுவரை, இதனை அறியாது போலிக் குங்குமமாக, ஸ்டிக்கர் பொட்டு இட்டுச் சுமங்கலித்துவத்திற்கு ஊறு விளைவித்துக் கொண்டமைக்குப் பிராயசித்தமாக, தினமும் நல்ல குங்குமத்தை ஆலய அர்ச்சனைக்கும், ஏழை இல்லறப் பெண்களுக்கும் அளித்து வர வேண்டும்.

ஸ்ரீகுங்கும சௌந்தரி அம்மன்
பூவாளூர்

புத்தாண்டு அன்றும், இவ்வாண்டின் சுபநாட்களிலும் தொடர்ந்தும், பூவாளூர் குங்கும சௌந்தரி, உமையாள்புரம் குங்கும சுந்தரி, காவேரிப்பாக்கம் குங்கும வல்லி போன்ற குங்கும மங்களம் தரும் அம்பிகையர்க்கு, சிரசு முதல் பாதம் வரை, குங்குமக் காப்பு இட்டு வழிபட்டு வருதலால், கணவனுக்கு ஏற்படும் மிருத்யு தோஷத்தில் இருந்து மீள நல்வழி கிட்டும்.

மனித சமுதாயத்தை வதம் செய்வது அகந்தை எனப்படும் ego ஆகும். பதவி, சொத்து, பலம் கொண்டோர் அகந்தை (ego) காரணமாகப் பல தவறுகளைச் செய்து இவை பறிபோன பின் வாடுவர். இந்த ego பிரச்னைகள் உலகெங்கும் உள்ளன. இதன் எதிரொலியாகவும், 2004ம் ஆண்டில் பதவி இழப்பும், பதவிப் பறிப்பும் பல அலுவலகங்களிலும், அரசியல், அரசுத் துறை, தனியார் துறைகளில் நிறைய வரும். இச்சாபம் பற்றாதிருக்க, இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, திருவையாறு ஸ்ரீஆட்கொண்டீஸ்வரர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரணியூர் கிராமத்தில் ஸ்ரீஆட்கொண்டீஸ்வரர் சுவாமியை (நரசிங்கேஸ்வரர்) வழிபடுதல் வேண்டும்.

நான்கு சக்கர வாகன வியாபாரத் துறை, விற்பனையிலும், வாகன மாற்ற விலை முறையிலும் (exchange offers) ஏமாற்று முறைகளினால், பலத்த நஷ்டம் ஏற்படும். இதிலிருந்து தற்காத்துக் கொள்ள, நந்தியை வாகனமாகக் கொண்ட அம்பிகை சன்னதிகளில், செவ்வாய் ஹோரை நேரத்தில் வழிபட்டு வர வேண்டும்.

2004ல் இரு சக்கர வாகன விபத்துகள் நிறைய ஏற்படும் ஆதலின், தினமும் வண்டியை எடுக்கும் போதும், வைக்கும் போதும், வாகனத்தை நன்றாக வணங்கி,

“வேல், வேல், வெற்றிவேல்! சுற்றி வந்து, எம்மைக் காக்கும் சுப்ரமண்ய வேல்!”

என்று 18 முறை ஓதித் துதித்தல் வேண்டும். வாகன பூஜை என்றால் வருடத்திற்கு ஒரு முறையே ஆயுத பூஜை என்றில்லாது, வாகன நல கிரக மூர்த்திகளுக்கு உரிய செவ்வாய், சனிக்கிழமைகள் தோறும் வாகனத்திற்குச் சந்தனம், புஷ்பம் சார்த்தியும், மாதம் ஒருமுறை ஆலயத்திற்கு எடுத்துச் சென்று புது வண்டியைப் போல நன்கு பூஜித்தும், ஸ்ரீகால பைரவருக்கு புனுகு, அத்தர், ஜவ்வாது கலந்த பொட்டை இட்டு, பிரசாதமாகப் பெற்று வாகனத்திற்கும் இட்டும் வழிபட வேண்டும். ஆத்மம் குடியிருக்கும் தேகத்தைச் சுமக்கும் வாகனமல்லவா!

கஜதோஷங்கள் நாட்டின் செல்வத்தை, சுபிட்சத்தைப் பெரிதும் பாதிப்பதாகும். தற்போது, கலியுகத்தில் கஜதோஷங்கள் உலகெங்கும் மிகவும் பெருகி இருப்பதால், 2004 ஆண்டிலாவது இவற்றுக்குப் பரிகாரம் தேடிட வேண்டும். ஆலயங்களில் யானைகளுக்கான கஜ பூஜைகளை அடிக்கடி மேற்கொண்டு, யானைகளின் ஆசிகளைப் பெறுதல் நாட்டில் பல்துறை சுபிட்சத்தைப் பேணும். தந்தத்திற்காக யானைகளை வதைத்தல், யானைகளைப் பிச்சை எடுக்க வைத்தல், மின்வேலி இட்டு யானைகளைத் துன்பப்படுத்துதல், யானைகளுக்கு வயிறார உணவு அளிக்காமை, பசுக்களுக்கு ஊசி போட்டுப் பால் கறத்தல், மான், புலிகளை, ஆசனத் தோலுக்காக வதைத்துக் கொல்லுதல் போன்றவற்றால், மிருக சாபங்கள் பெருகி, பல வேதனைகளும், துன்பங்களும் மனித சமுதாயத்திற்குத்தான் ஏற்படும்.

ஸ்ரீஆஞ்சநேயர் கஞ்சனூர்

கஜமால்ய சக்திகளுடன் 2004ம் ஆண்டு வருவதால், யானைகள் தம்முடன் ஜீவன்கள் பேச வேண்டும் என ஏங்கும் ஆண்டாகவும் துலங்குகின்றது. ஒவ்வொருவரும் யானையுடன் தினமும் மனத்தோடு மனம் பேசுதல் வேண்டும். உலக ஜீவன்களிடம் யானைகள் நன்கு உரையாட அபிலாட்சை கொள்ளும் ஆண்டு இது.

2004ல் காமத் தீயொழுக்கம் மிகவும் பெருகும். இதைத் தடுத்திட, இல்லறப் பெண்கள், உலகின், நாட்டின் க்ஷேமத்திற்காக, நல்ல துளசி மாலைகளைத் தாமே தொடுத்து, ஆஞ்சநேயருக்கும், சுதர்சன மூர்த்திக்கும், மாலை சந்தியா வேளைகளில் சார்த்தி வழிபட்டு வருதல் வேண்டும். நாட்டின் நற்சமுதாய ஒழுக்க நலன்களுக்கு இது மகத்தான சேவையாகும். குறிப்பாக, வாலில் மணி கட்டிய தோற்றத்துடன் இருக்கும் ஆஞ்சநேயர் ஆலயங்களில் 12, 21, 102 என்ற எண்ணிக்கையில் வெண்கல மணிகளை அளித்து, துளசி மாலைகளைச் சார்த்தி வழிபட்டிட, நல்ஒழுக்கம் ஏற்பட ஆஞ்சநேய சுவாமி அருள்வார்.

பல அலுவலகங்களிலும் சம்பளம் சரியாகத் தராமல் போகின்ற நிலைகள் ஏற்படும். இதனால் பணக் கஷ்டங்கள் பெருகி, கடன் சுமையும் அதிகமாகும். இதற்குப் பரிகாரம் பெற தஞ்சாவூர் ஸ்ரீதஞ்சபுரீஸ்வரர் ஆலயத்தில் வெள்ளி, அனுஷ நட்சத்திர நாட்களில் குபேர பூஜைகளையும், நிலக்கோட்டை அருகே மல்லனம்பட்டி ஸ்ரீகலியுக சிதம்பரேஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ பூஜைகளையும் ஆற்றி வழிபட வேண்டும்.

சூரிய பூஜைகளை மனித சமுதாயம் மறந்து வருவதால், கண் சம்பந்தமான நோய்கள் பெருகும். சூரிய கிரணங்கள் லிங்கத்தின் மேல் படுகின்ற ஆலயங்களில், சூரிய பூஜை தினங்களில் சூரிய கிரணங்கள் படும் லிங்கத்திற்கு, பசு நெய்க் காப்பிட்டு சூரிய ஒளி லிங்கத்தின் மேல்படும் தினங்களில் தொடர்ந்து காலையில் வழிபடுதலால் சந்ததி நன்கு தழைக்க நல்வழிகள் கிட்டும்.

ஸ்ரீசுதர்சனர்
கூவத்தூர் பெருமாள் ஆலயம்

கம்ப்யூட்டர் துறையில் இருப்போர் லிங்கத்தின் மேல் பிரதிபலிக்கும் சூரிய கிரணங்களை, லிங்கத்தின் மேல் சூரிய ஒளிபடும் குறித்த நாட்களில் தரிசித்து வர வேண்டும். இத்துறையில் நன்கு படித்தும் வேலை கிட்டாதோர், இத்தகைய சூரிய பூஜை நாட்களில் வழிபட்டு வர, தம் துறையில் நல்ல மேன்மைகளைப் பெறுவர்.

தற்போது மக்கள் நீர் தேவதைகளை முறையாக வழிபடாமையால், நீரைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவதால், நீரை வீணாக்குவதால், நீரை விற்பதால், நீர்க் குற்றங்களாக, ஜலம் சம்பந்தமான தோஷங்கள், வியாதிகள் பெருகி சமுதாயத்தில் தொற்று நோய்களும், சமுதாயத் துன்பங்களும் ஏற்படும். இதற்குப் பரிகாரமாக, நீர் மோர் தானம், பாயாசம், பழச்சாறு போன்றவற்றை பிரதோஷ நேரத்தில் பல ஆலயங்களில் அளிப்பதுடன், திருவாடானை அல்லது ஆவுடையார் கோயில் அருகே உள்ள தீர்த்தாண்டதானம் ஆலயத்தில் தர்ப்பணம் அளித்து, ஏழைகளுக்குப் புதுப் படுக்கை வகைகளை தானமாக அளித்து வரவேண்டும். ஸ்ரீராமர் தர்ப்பணம் அளித்த திருத்தலம்!

2004ல் ஆங்கில மருத்துவத் துறை மருந்துகள் பலவும் விபரீதமான பக்க விளைவுகளை (side effects) ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம். மருத்துவ உலகில், மருத்துவத் துறையே பல மருந்துகளைத் தீமை பயக்கும் என ஒதுக்கும் நிலைகள் ஏற்படும். ஆகவே, அனைத்துத் துறை மருத்துவர்களும் பட்டுக்கோட்டை , பேராவூரணி அருகே உள்ள மருங்கப்பள்ளம் ஸ்ரீஔஷதீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) ஆலயத்தில் அடிக்கடி வழிபட்டு வர வேண்டும். மருந்துகள் நிறைய உண்டும் குணமாகாதோரும், பல மருந்துகளை தினமும் உண்ண வேண்டிய நிலையில் இருப்போரும், இங்கு மருங்கப்பள்ளம் ஆலயத்தில் செவ்வாய், பிரதமை, சஷ்டி, அஸ்வினி, ஆயில்யம் போன்ற மருத்துவ குண நாட்களில் வழிபட்டு வருதல் வேண்டும்.

குபேர வரங்கள்

குபேர வரங்கள் தரும் மல்லனம்பட்டி ஸ்ரீகலியுகச் சிதம்பரேஸ்வரர் கோயில்

செல்வத்துடன் நன்கு வாழ்ந்திட்டு, இன்று சாதாரணக் குடும்பத்தவராகப் பலவிதமான துன்பங்களுடன் வாழ்வோர் நிறைய உண்டு. வியாபார நஷ்டங்கள், உறவினர்களால், நண்பர்களால், வியாபாரக் கூட்டாளிகளால் ஏமாற்றப்படுதல், கோர்ட் வழக்குகள் காரணமாகவும், தீய சகவாசங்களாலும் பெரும் சொத்துக்களை இழந்து அவதியுறுவோரும் உண்டு. இவர்கள் நியாயமான முறையில், தங்களுக்குத் தார்மீக ரீதியாக வர வேண்டிய சொத்துப் பங்கினைப் பெற சங்க நிதி, பதும நிதி சக்திகள் நிறைந்த தலங்களில் வழிபட்டு வருதல் வேண்டும். மதுரை அல்லது திண்டுக்கல் சென்று அங்கிருந்து நிலக்கோட்டை – வத்தலகுண்டு சாலையில் உள்ள மல்லனம்பட்டி ஸ்ரீகலியுகச் சிதம்பரேஸ்வரர் ஆலயம், குபேர வள சக்திகள் நிறைந்த தலமாகும். பன்முறை, பல்வேறு காரணங்களால் தன்னுடைய நிதிகள் யாவற்றையும் இழந்த குபேர மூர்த்தி சங்க நிதி, பதும நிதி தேவதா மூர்த்திகளுடன், ஸ்வர்ண சபாபதி பூஜைகளை ஆற்றி, தாமிழந்த நிதி சம்பத்துகளை, மீண்டும் இழக்காத வகையில் நல்வரங்களுடன் நிரந்தரமாகப் பெற வேண்டி பூஜித்த தலங்களுள் இதுவும் ஒன்று.

ஸ்ரீதர்மசம்வர்த்தினி அம்பாள்
திருவையாறு

ஸ்ரீஅதிதிட ரங்க சரபேஸ்வர மூர்த்தி
திருவையாறு

இங்கு பிரதோஷம், அனுஷம், வெள்ளி, துவாதசி ஆகியே குபேர கடாட்ச நாட்களில், நெல்லிச் சாறுடன், பல்வகைக் கனிச் சாறுகள், தேன் கலந்து அபிஷேகித்து, முழு முந்திரி கலந்த சர்க்கரைப் பொங்கலை முழு வாழை இலையில் வைத்துத் தானமாக அளித்து வழிபடுதலால், செல்வம் நன்கு விருத்தியாகும். பணக் கஷ்டங்கள் தணியும். பணக்காரர்கள் அனைவரும் தம் செல்வம் நிலைத்திட, கண்டிப்பாக வழிபட வேண்டிய தலம். இன்சால்வென்சி கொடுக்கும் அளவிற்குக் கடன் சுமைகளில் தத்தளிப்போர் இடைவிடாது வேண்டி வழிபட நல்வழி அடைய வல்ல தலம். குபேர மூர்த்தி இன்றும் சூக்கும வடிவில் வழிபடும் தலம்.

சங்கநிதி, பதுமநிதி மூர்த்திகளே துவார பாலகர்களாகத் துலங்கும் ஸ்ரீசிவகாமி அம்பாள் சமேத ஸ்ரீகலியுகச் சிதம்பரேஸ்வரர் ஆலயம் உள்ள மல்லனம்பட்டி கிராமத்திற்கு, வடக்கே 4 கி.மீ தொலைவில் கிருஷ்ணாபுரத்திற்கும், லக்ஷ்மீபுரத்திற்கும் இடையில் உள்ள பழமையான தலம். செம்பட்டியிலிருந்து வத்தலகுண்டு செல்லும் சாலை வழியாகவும் இதனை அடைந்திடலாம்.

குரு துரோகச் செயல்களுக்குப் பரிகாரம் கிடையாது!

குரு அளித்த அறிவுச் செல்வத்தை தவறாகப் பயன்படுத்துதல், தெய்வத்தைக் காட்ட வல்ல குருவை நிந்தித்தல், குரு அளித்த திரவியங்கள், குருவின் உடைமைகளை அபகரித்தல் – போன்ற குரு துரோகச் செயல்கள் யாவும் சித்தர்களாலும், மகரிஷிகளாலும் கூடப் பொறுக்க முடியாத பலத்த குற்றங்கள் ஆகும். குரு துரோகிகளுக்கு ஏற்படக் கூடிய அதிபயங்கர விளைவுகளைப் பற்றி சித்தர்களுடைய பரிபாஷைப் பாடல் ஒன்றை இங்கு அளிக்கின்றோம். சற்குருவிற்கு இழைக்கும் துரோகச் செயல்களின் அதிபயங்கர விளைவுகளை இதில் மறைபொருளாய்க் குறிப்பால் உணர்த்துகின்றனர்.

தங்கம் மலராகி தணியாச் செந்தழலாம்
அங்கம் தவிடு பொடியாகி – அடிக்
கும்பம் புரையோடி, குற்றுயிராகி
வம்பு வளர்த்த குருதுரோகி
பல பிறவியில் பலன் பாரேன்!

ஸ்ரீஆட்கொண்ட நாயகர்
திருவையாறு

உங்களுக்குள் கருப்புண்ணு!
உதவாத மருப்புண்ணு!
எங்கெல்லாம் நா உருண்டதோ
உழமிகையால் கருக் கலைந்து
உழற்றுடையார் உள்புகுந்து அழற்றுவான்!

பொங்குதப்பா கரிப் பானை
பொரித்து உருகுதப்பா விந்து பானை
எங்கு குரு ஸ்வர்ணத்தை சுத்தமாய்
சுண்டி இழுத்து தூவாதீதத்தால்
பங்கு பங்காய் வாய் வெறுத்து
பல பிறவியால் குத்தி
தங்காத தலைமுறையைத்
தாண்டிடாப் பாவியே!

அமுத தாரைகள்

திருமகளின் பரிபூரண சக்திகளைக் கொண்ட யானை மிகவும் லட்சுமிகரமானது. மகாலட்சுமி கடாட்சம் பொருந்திய யானையையா நாலணா, எட்டணா என்று பிச்சை எடுக்கச் செய்வது? என்னே கொடுமை இது? இது மனித சமுதாயத்தையும், நாட்டையும் பாதிக்கும் அதர்மச் செயலாகும். யானையைப் பிச்சை எடுக்கச் செய்யக் காரணமானவர்கள் பல நாசங்களை அடைவர். கஜசாபம் மிகவும் பொல்லாதது. தலைமுறை, தலைமுறையாய்த் தொடரும். இவர்கள் இனியேனும் மனம் திருந்தி கபிஸ்தலம், திருநெல்வேலி, திருப்புடைமருதூர் அருகே அத்தாழநல்லூர் போன்ற கஜசக்தித் தலங்களில் பெருமாளை வழிபட்டு, கால்நடைகளை மேய்க்கின்ற ஏழைச் சிறுவர், சிறுமியருக்கு உணவு, உடை, நகை, குடை, காலணிகள் ஆகிய ஐந்தையும் நிறைந்த அளவில் அளித்து வரவேண்டும்.

கபிஸ்தலம் பெருமாள் ஆலயம்

ஆலயங்களில் இறைவனுக்கு ஆறு வேளைகளிலும் புதுப் பூணூல் சார்த்தி வழிபடுவது மகத்தான சமுதாய வழிபாடு ஆகும். ஆனால் பூணூல் நிறைய கைவசம் இல்லாமையால், தற்போது ஓரிரண்டு ஆலயங்களிலேயே, சுவாமிக்கு ஆறு வேளைகளிலும் பூணூல் சார்த்துகின்றனர். ஆலயங்களுக்குப் பூணூல்களை தானமாக வழங்குவதால், பித்ருக்களின் மலர்ந்த ஆசி தினந்தோறும் கிட்டும். ருணக் கடன்கள் தீரவும் வழி பிறக்கும். இதனால் தேவ கடன், பித்ரு கடன்கள் பணக் கடன் சுமை தீரவும் எளிய முறையில் பரிகார வழிகள் கிட்டும்.

அனைவருக்கும் உரித்தான ஸ்ரீகாயத்ரீ மந்திரத்தை ஒவ்வொருவரும் தினமும் குறைந்தது 1008 முறையாவது ஓதி வருதல் வேண்டும். இந்த மந்திரம் ஓதா தினசரி பாக்கிக் குறைக்கு ஓரளவு பரிகாரம் பெற, தினமும் ஆறு வேளையும் தெய்வ மூர்த்திகளுக்குப் பூணூல் சார்த்திப் பூஜித்திட உதவும் வகையில், ஆலயங்களுக்குப் பூணூல்களை நிறையத் தானமாக அளிக்க வேண்டும். இதனால் நெசவுத் தொழிலுக்கும், குடிசைத் தொழிலுக்கும் ஆதரவு கிட்டுகின்றது. இவ்வாறாகவே ஆலய விழாக்கள், தேரோட்டம், பூச்சொரியல், நவராத்திரி (பொம்மைகள்) போன்றவற்றைக் கிராமத் தொழில்களுக்கு வளம் தருவதாகவும் இறைவனே பெருங்கருணையுடன் அளித்துள்ளமையால், “நமக்கு இவை தேவை இல்லையே!” என எண்ணாது, அவ்வப்போது அகல், கூடை, பானை, பொம்மைகளை வாங்கி கைத் தொழிலில் உள்ள ஏழை மக்களுக்கு ஜீவன பரிபாலன உதவி தந்திடுங்கள்.

தற்போது மாங்கல்யத்தைப் பொன் சங்கிலியில் கோர்த்து அணியும் தவறான பழக்கத்தைப் பலரும் கொண்டுள்ளனர். மாங்கல்யம் இயற்கையான பருத்தி இழைகளால் ஆன நூல் சரடில்தான் இருக்க வேண்டும். தங்கச் சங்கிலியில் மாங்கல்யத்தைப் பொறுத்துவது பலத்த மாங்கல்ய தோஷங்களைத் தந்து, கணவனைத் தீரா நோய்களுக்கு ஆட்படுத்தி விடும். பூணூல் மற்றும் மாங்கல்யத்தில் உள்ள பருத்தி இழைப் பிரிகளும், மந்திரப் பூர்வமாக சாந்தக் கதிர்களை எப்போதும் பரப்புவதால், ஜாதி, மத, குல பேதமின்றி இவற்றை எப்போதும் தரிக்கும் தெய்வீகப் பாங்கே நம் பாரத ஆன்மீகக் கலாச்சாரத்தின் தூணாகும். மாங்கல்யச் சரடு, மந்திர தேவ சக்திகளை ஈர்க்கும் தன்மையால், பகைமை மற்றும் தீய சக்திகளை மாய்த்து, இல்லறப் பெண்களை ரட்சையாய்க் காத்து, குடும்பத்திலும், சமுதாயத்திலும் அன்பு நிரவுவதற்கான சாந்த நிலைகளை அளிக்கின்றன. இதற்காகவே பெண்கள் எப்போதும் நெற்றிக்குத் திலகமிட்டு, சிறு சிறு இறைத் துதிகளை, மந்திரங்களை மனனம் செய்து துதித்தவாறே சமைத்தல், துணி துவைத்தல், பெருக்குதல் போன்ற பல காரியங்களின் ஊடேயும் ஓதிவருவதும் எப்போதும் மனதால் இறைப் பணி ஆற்றுவதற்குச் சமமானதாகும். ஆலயங்களுக்கு நிறையப் பூணூல்களைத் தானமாக அளிப்பதும், ஏழைகளுக்கான மாங்கல்ய தானமும், அன்புக் கதிர்களை சமுதாயத்தில் விருத்தி செய்து சமுதாய ஒற்றுமைக்கு பலத்த அஸ்திவாரத்தை ஆக்கித் தரும்.

மாதவிலக்கு தீட்டு, பிரசவ உதிர தோஷம், பிணப் பூ தோஷம், பிணத் தீட்டு போன்ற தோஷங்களை நிவர்த்திக்க உதவுவதும் ஹோம சமூல அக்னிப் புகையே ஆகும். தினசரி நாம் செல்லும் வாகனங்கள் திருஷ்டி மிளகாய், திருஷ்டிப் பூசனிக்காய், பிணப் பூக்கள் போன்றவற்றை மிதித்துச் செல்கையில் சொல்லொணாத் தோஷங்கள் உண்டாகின்றன. இவை ஹோம சமூல அக்னி சக்தியால்தாம் விரைவில் தீர்வு பெறும். அடிக்கடி ஹோம பூஜை செய்ய இயலாதோர், ஹோமம் நிகழும் இடங்களில், சமித்துகள், பசு நெய், ஹோம திரவியங்களை வாங்கி அளிக்கலாம். நாட்டு மருந்துக் கடைகளில் ஹோம திரவியங்கள், மூலிகை வாடகங்கள் நிறையக் கிடைக்கும்.

ஸ்ரீகருடக் கொடி சித்தர்
சித்துக்காடு

சித்துக்காடு பூமியே அரிய யோக சக்திகளைக் கொண்டதாகும். இங்கு பிரதோஷ நாட்களில், நந்தி மூர்த்தியிடம் தொடங்கி, அங்கப் பிரதட்சிணம் செய்து, நந்தி மூர்த்தியிடம் முடித்து அபரிமிதமான யோக சக்திகளையும், காரிய சித்திக்கான நல்வரங்களையும் பெற்றிடலாம். அங்கப் பிரதட்சிண யோக சக்திகள் நிறைந்த தலங்களில் சித்துக்காடும் ஒன்றாகும். குறிப்பாக குடும்ப ஒற்றுமைக்கு இங்கு அங்கப் பிரதட்சிண நேர்த்தி சிறப்புடையதாகும்.

டாக்டர்கள் வழிபட வேண்டிய கருடக் கொடி சித்தர்

கருட லோகத்தைச் சார்ந்த கருடக் கொடி சித்தர், கருடக் கொடியைத் தாங்கி, சித்த மூலிகைகளையும் இறக்கைகள் போல் தம் உடலில் செருகிப் பறந்து, பல லோகங்களுக்கும் சென்று மூலிகா சக்திகளை அளித்து வருபவர். இவருடைய மூலிகா பந்தன இறக்கையின் நிழல்படும் இடங்களில் பல மூலிகைகள் செழித்து வளரும். இராமாயண காலத்தில், ஸ்ரீராமர் உலவிய இடங்களில் எல்லாம், சித்த மூலிகைப் பந்தலால் அவருக்கு மூலிகை நிழல் தந்து காத்த காலங் கடந்த சித்தர். எத்தகைய வியாதிகளுக்கும் நிவாரணத்தைத் தரவல்ல தாந்த்ரீக யோகபாவன மூலிகைக் கடாட்ச சித்தர்.

சித்துக்காடு பெருமாள் ஆலயத்தில், ஆண்டாள் சன்னதி மண்டபத் தூணில் உறைபவரே கருடக் கொடி சித்தர். இவர் சித்துக்காட்டில் பல்லாயிரம் ஆண்டுகள் கருட பகவானை ஆராதித்து அதியற்புத மருத்துவ சக்திகளைப் பெற்றார். இதனால்தாம் அனைத்து மருத்துவர்களும், தங்கள் மருத்துவ குண சக்திகளை விருத்தி செய்து கொள்ள, ஸ்ரீகருட காயத்ரீ மந்திரத்தை இடைவிடாது ஜபித்து வரவேண்டும் என்ற நியதி உள்ளது. இத்தலத்தில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள் ஆலயத்தில் ஸ்ரீசுந்தரராஜப் பெருமாள், ஸ்ரீகருட மூர்த்தியை வழிபட்டு, கருடக் கொடி சித்தரையும் வணங்கி, வர நல்ல மருத்துவ சக்திகளைப் பெறுவர். சுவாதி நட்சத்திர நாளில் மருத்துவர்கள் இங்கு வழிபடுவதால் விசேஷமான மருத்துவ குணசக்திகளை அடைகின்றனர். இங்குள்ள நெல்லி மரம் லக்ஷ்மி கடாட்சம் நிறைந்தது. சுவாதி தினத்தில் வலம் வந்து வணங்கிட, திருமகளின் திருவருளைப் பெற்றுத் தருவதாம்..!

ஸ்ரீதட்சிணாமூர்த்தி
திருநாவலூர்

அன்பின் வடிவாய் இறைவன் அனுப்பிய இறைத் தூதுவர்கள், சற்குருமார்களாய் தற்போது உலகெங்கும் உள்ளனர். நற்பெரியோர்களை மதிக்கும் பண்பாடு கலியுகத்தில் அகன்று வருவதால், நல்லோர்கள் நாடி அடைவதாகவே இத்தகைய சற்குருமார்களின் வாசம் பூமியில், பல நாடுகளிலும் அமைந்துள்ளது. கலியுக சற்குருமார்களின் வாசம் பூமியில், பல நாடுகளிலும் அமைந்துள்ளது. கலியுக மனிதச் சமுதாயம் அன்பின் மகிமையை, மனித நேய மகிமையை உணராது, சீர் திருந்த மறுத்தால், எதிர்காலத்தில் சற்குருமார்கள் பூமியை விட்டு அகன்று தத்தம் லோகங்களுக்குச் சென்று விடுவார்கள். சுயம்பு மூர்த்திகளும் தாமாகவே பூமியில் ஆழ்ந்து விடுவர். எனவே வரும் சந்ததியினரை மிகவும் அவலமான சமுதாயத்தைக் காண வைக்காது, இப்பிறவியிலேயே ஏனோ தானோவென்றும் வாழாது, நல்லனவற்றையே செய்து, பிறரையும் நல்லதையே செய்ய வைக்கக் கடுமையாகப் பாடுபட்டு வாழ வேண்டும்.

கல்வியில், கல்வி சம்பந்தமான media & communicative education, மற்றும் இசைத் துறையில் மேன்மை பெற விழைவோர், இதற்குப் பெரிதும் துணை புரிவதான இன்றைய அருணாசல மாத சிவராத்திரி கிரிவலம் முடிந்தவுடன், வீணை ஏந்திய தட்சிணா மூர்த்தி அல்லது நின்ற கோல தட்சிணா மூர்த்தி (திருநாவலூர், திருவரங்குளம்) அருளும் தலங்களில் வழிபட வேண்டும்.

ஆயிரமாயிரம் கவலைகள், வாழ்க்கைச் சூழ்நிலைகள், அலுவலகப் பிரச்னைகள், இல்லற பந்தங்களில் இடையிலும், ஒரு விநாடி காலமாவது இவற்றை மறந்து, நீங்கள் மூலவர் முன் நிற்கின்ற இறைவளாகங்களில் தாம் அன்பு சுரந்து பொலிகின்றது. இதனை அன்புப் பாத்திரத்தில், கனிந்த அருளாக நிறைப் பெற்று வாருங்கள். ஒவ்வொரு முறையும் ஆலய தரிசனத்தில், நீங்கள் பிரார்த்திப்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம், உங்களிடம் அன்பை மறைக்கும் பகைமை, தீவினைகள், விரோதம், குரோதம், முறையற்ற காம உணர்வுகள் போன்றவை பஸ்மம் ஆகி, உங்களுடைய உள்ளம் தூய அன்புப் பாத்திரமாகத் துலக்கி வைக்கப்படுகின்றது. ஆனால் ஆலயத்தை விட்டு வெளி வந்ததும் மீண்டும் ஆசாபாசங்களுக்கு ஆளாகிட, உள்ளப் பாத்திரம் அழுக்காகி விடுகின்றதே!

மூலிகைகளில் அன்பின் சாரம் நன்கு மிளிர்வதால், அன்பைப் பூக்க வைக்கும் ஆன்ம நெறிகளைப் போஷிப்பதிலும் மூலிகைகளின் பங்கு மகத்தானதே! உதாரணமாக, துளசிச் செடி அன்பை முறிக்கும் பகை உணர்வுகளை நீக்கி, பவித்ரமான அன்புக் கிரணங்களைத் தோற்றுவிக்கின்றது. புனிதமான அன்பை, உடல் நாளங்களில், நாடிகளில் பிராண கோசத் திவலைகளாக ஊட்டும் தன்மை நறுமணமுள்ள பூக்கள், துளசி, வில்வம், அருகம்புல் தளங்களுக்கு உண்டு. எனவே அர்ச்சனை என்பது சமுதாய இறைப் பணியாக அன்பைப் பரவெளியில் ஒலிப் பூர்வமாக நிரவுவதே!

அன்பு என்பது அமைதியாக, சாந்தமாக இருப்பது மட்டுமல்ல, இவற்றை எல்லாம் கடந்ததாக, காலத்தையும் கடந்ததாகவும் இருக்கின்றது. ஈஸ்வரன், பெருமாள், பிள்ளையார், முருக மூர்த்திகளிடம் காலம் கடந்த அன்பை மனித சமுதாயம் கண்டு வந்துள்ளதே! குழந்தையிடம் பரிபூரண அன்பு நிலவுவதால்தான் குழந்தையும் தெய்வமாகிறது. குழந்தைகளைக் காண, காண அன்புப் பரிணமிப்பு சமுதாயத்தில் விருத்தி ஆகும். எனவே நல்ல குடும்ப வாழ்க்கை அன்பைக் காட்டி, இல்லறமாகிய நல்லறமும் அன்பைப் பராமரிக்க உதவும் அற்புத சாதனமாகின்றது. இதனால் தாம் நம் பெரியோர்கள் நிறைய பேரக் குழந்தைகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து, பலருக்கும் பயன்படும் வகையில் வாழ்ந்து, அன்பைப் பேணிச் சமுதாயத்திற்கும் சாந்தம் அளித்தனர்.

சுவாசம் போல் நம் வாழ்வில் சற்றும் தேயாது சடலம் வீழும் வரை நிலைத்து இருப்பவை கை மற்றும் கால் ரேகைகளாகும். ஒருவர் இறந்த பின், மாங்கல்யம், பூணூல் இவற்றையும் சடலத்தில் இருந்து பிரிப்பது கிடையாது. இவ்வாறு உடலோடு உறைபவைக்கு “சத்தியப் பாத்திரங்கள்” என்று பெயர். எனவே இத்தகைய “சத்திய பாத்திரங்களும்” அன்பை விருத்தி செய்வதில் பெரும் பங்கு ஆற்றுகின்றன. ஆலயங்களில் இறைவனுக்கு ஆறு வேளைகளிலும் புதுப் பூணூல் சார்த்தி வழிபட வேண்டும். பூணூலில் உள்ள பருத்தி இழைப் பிரிகளும், புனிதமான மாங்கல்யமும், மந்திரப் பூர்வமாக சாந்தக் கதிர்களைப் பரப்புவதால், தீய சக்திகள் மாய்ந்து, அன்பு நிரவுவதற்கான சாந்த நிலையை அளிக்கின்றன. இதற்காக ஆலயங்களுக்கு நிறைப் பூணூல்களைத் தானமாக அளிப்பதும், ஏழைகளுக்கான மாங்கல்ய தானமும் அன்புக் கதிர்களை சமுதாயத்தில் விருத்தி செய்யும்.

கோயிலில் அந்தந்த சன்னதி முன் வணங்குவது, பிறகு கைகளைத் தொங்க விடுவது அல்லது கைகளைக் கட்டிக் கொண்டு வருவது என்று நடைமுறைப் பழக்கம் ஆகி விட்டது. தற்போது, சங்கோஜம் மற்றும் வெட்கம் காரணமாகப் பலரும் சந்நதியின் முன் கை கூப்பி வணங்கி விட்டு, பிறகு கைகளை நீட்டி வீசியவாறு நடப்பதால் ஆலயத்தில் பெறுகின்ற அருட்கிரணங்கள் சிதறுகின்றன.

தினமும் ஆலயத்திற்கு ஒரு பையை எடுத்துச் சென்று கீழே கிடக்கும் குப்பைகள், பிளாஸ்டிக் கவர்கள், தேங்காய் மட்டை, உதிரிப் பூக்கள், வாழைப் பழத்தோல் போன்றவற்றைப் பொறுக்கி எடுத்து சுத்திகரித்து வந்தால் மனமும் படிப்படியாகச் சுத்தமாகும். தேவையில்லாத சங்கோஜம் தணியும், பணிவு கை கூடும்.

இல்லத்தில் காண வேண்டிய நித்திய விளக்கு ஜோதி

அனைவரும் தினமும் தம் இல்லத்தில், விளக்கேற்றி வழிபட்டாக வேண்டும். மாதவிலக்கு, நோய்த் துன்பங்கள், வெளியூர் செல்லல் காரணமாக இதில் தடங்கல் ஏற்பட்டால், அந்த அளவிற்கு, இல்லத்தில் இருட்டுத் துன்பங்கள், மயக்க நோய்களாகவும், கண் நோய்களாகவும், திருடர்களால் நஷ்டம், இருட்டு விபத்துக்களாகவும் வந்து சேரும். பாக்டரி, தொழிற்சாலைகளிலும் தினமும் விளக்கேற்றி வழிபட வேண்டும். 365 நாட்களில், விளக்கு ஏற்றாது விடுபட்டுப் போன நாட்களுக்கு, ஓரளவு பிராயச்சித்தம் பெற, சுத்தமான பசு நெய் இட்டு, 365 தாமரைத் தண்டுத் திரிகள் (நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்) ஒன்று சேர்ந்த அகல், அல்லது குத்து விளக்கை மையமாக வைத்து, குந்தள ஜோதி பரிமளிக்கும் சித்துக்காடு சிவாலயத்தில், சுவாதி மற்றும் பிரதோஷ நாட்களில், பல பெண்களும் ஒன்று சேர்ந்து, ஏழைகளுக்கும் நல்வாய்ப்பு தந்து, கூட்டு விளக்கு வழிபாடு ஆற்றி வழிபடுதல் வேண்டும்.

பெற்றோர்கள், பெரியோர்களின் ஆசியின்றித் திருமணம் புரிந்து, பிறகு பெரியோர்களை மதியாத சாபத்தால் துன்பப்படுகின்றவர்கள், தம் வாழ்வில் மனம் திருந்தி, பெரியோர்களிடம் தக்க முறையில் மன்னிப்பைப் பெற்று, பெரியோர்களின் ஆசியுடன் வாழத் துணைபுரியும் அற்புதத் தலமாக சித்துக்காடு விளங்குகின்றது. இங்கு பிரதோஷ பூஜையை நிகழ்த்தி, பால் பாயசத்தைத் தானமாக அளித்து வருவோர்க்குப் பெற்றோர்களின், பெரியோர்களின் நல்லாசிகள் கிட்டும்.

பெரியோரை ஏசிய பாவ வினைகள், சந்ததியைப் பற்றாதிருக்கப் பரிகாரங்கள் பெறவும், அப்பெரியோர்களையே மீண்டும் நாடிப் பிராயச்சித்தம் பெறவும், பவானித் தலத்தில் கொடிக் கம்பத்தின் கீழ், சுபமான குருஹோரை நேரத்தில், 108 முறை வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

ஸ்ரீவேதநாயகி அம்மன்
பவானி

அமிர்த யோக நேரத்தை ஸ்ரீகாலபைரவர் சிருஷ்டித்த தலமே பவானி! இதனால்தாம் பவானித் திருத்தலமானது, வேத ஸ்வரூப மலைகளின் ஊடே நடுவே பொலிந்து, அமிர்தத்தைப் பராசர மகரிஷி தாங்கி இங்கு தவம் பூண்டதாக, எப்போதும் பரவெளியில் உள்ள ஜலப்ரவாகத்தில் வேதாமிர்தக் கிரணங்கள் நிறைவதாகப் பரிமளிக்கும் அதியற்புத சிவத்தலம்! அமிர்த நேரம், சித்த யோக நேரம் பாராது சுப காரியங்களை, நற்காரியங்களைச் செய்து துன்பங்களுக்கு ஆட்பட்டோர், இங்கு பவானி சமேத ஸ்ரீசங்கமேஸ்வரருக்கு வலம்புரிச் சங்கில், அமிர்த யோக நேரத்தில் அமிர்தாபிஷேகம் (தேன்) செய்து பரிகாரம் நாட வேண்டிய தலம்.

பவானி ஸ்ரீகாயத்ரீ லிங்க சன்னிதியில் பூணூல் அணிந்து, தியானித்து, தினமும் 1008 முறை ஸ்ரீகாயத்ரீ மந்திரம் முறையாக ஓதி, வழிபட்டு வந்தால், புகை பிடித்தல், மது அருந்துதல், காமத்  தீயொழுக்கங்கள் தாமாகவே அகன்றுவிடும். தீய வழிச் செல்லும் பிள்ளைகள் திருந்தி நல்வழி பெற, பெற்றோர்கள் இங்கு நவமி, அமாவாசை, அவிட்டம், புதன் கிழமைகளில் ஸ்ரீகாயத்ரீ லிங்கத்தை, தம் பிள்ளைகளுடன் 108 முறை அடிப் பிரதட்சிணம் செய்து, பிள்ளைகளை ஆசிர்வதிக்கும் ஜெயக்ஷீராஸ் பித்ருக்களுக்கு சாந்தி அளிக்கும் புடலங்காய் உணவு வகைகளை ஏழைக் குழந்தைகளுக்குத் தானமாக அளித்து வரவேண்டும்.

“நல்லதே நினை! நல்லதே செய்!” என்பதே கடவுளின் ஆணை! நல்லன அல்லாதனவற்றை மனிதர்கள் செய்யும் போது, அதன் விளைவுகளைத் தனி மனிதனும், அவனைச் சார்ந்த சமுதாயமும் ஏற்க வேண்டியதாகின்றது. இதுவே கூட்டுக் கர்ம நெறி விதியாக (group karmic effects),  வறுமை, நோய் போன்ற சமுதாயத் துன்பங்களாகவும் மாறுகின்றன. பொதுவாக, இக்கூட்டுக் கர்ம நெறி விதி என்பது ஐந்தறிவு வரை உள்ள விலங்கினங்களுக்குப் பொருந்தும். உதாரணமாக, எறும்புகள், வண்டுகள் கூட்டம், கூட்டமாகச் செல்லும் போது மிதிபட்டோ, தண்ணீர் ஊற்றுதலாலோ அவை கூட்டமாக அழியலாம். இது கூட்டுக் கர்ம விளைவால் ஏற்படுவது. ஒற்றுமைச் சமுதாயம், எறும்புகளுக்கு என நிர்ணயிக்கப்பட்ட கர்ம பரிபாலனம் ஆதலின், எறும்பு வர்கத்திற்கு கூட்டுக் கர்ம முறை நன்கு ஏற்று வரும்.

தொடரும் ஆனந்தம் ...

பொதுவாக வெளியில் எங்கு சென்றாலும் இரவு சாயும் முன் வீட்டிற்கு வந்து விட வேண்டும் என்பது நம் சற்குருவின் வழிகாட்டுதல். இரவில்தான் எதிர்மறை சக்திகளின் பிரபாவம் அதிகமாக இருப்பதால் நம் முன்னோர்கள் இரவில் எங்கும் வெளியே செல்வது கிடையது. தற்போதைய நவீன உலகில் பெரும்பாலான பணிகள் இரவிலேயே தொடர்ந்து இரவு நேரத்திலேயே நீடிப்பதால் மனிதனுடைய உடலும் உள்ளமும் பாழாகின்றது.

ஒரு முறை நம் சற்குரு காளையார்கோவில் திருத்தலத்திற்கு சொற்பொழிவிற்காகச் சென்றிருந்தார். அந்த சொற்பொழிவை ஏற்பாடு செய்திருந்தவர்கள் நம் சற்குரு அன்றிரவு தங்குவதற்கான எந்த ஏற்பாட்டையும் செய்யாதிருந்ததால் நம் சற்குரு இரவே தன் சொந்த ஊரான சென்னைக்கு திரும்பி வர வேண்டி வந்தது. கையில் அன்னதானத்திற்கான நன்கொடை பணம் கொஞ்சம் இருந்ததால் வெளியில் எங்கும் பாதுகாப்பாக தங்க முடியாத சூழ்நிலை. இந்நிலையில் ஒரு பஸ்சை பிடித்து, உட்கார இடம் கிடைக்காததால் அந்த பஸ்சில் நின்று கொண்டே பயணம் செய்து கொண்டிருந்தார் நம் சற்குரு.

சகஸ்ரலிங்கம் காளையார்கோவில்

ஓட்டுநரின் அருகில் அவர் நின்று கொண்டிருக்கும்போது ஓட்டுநரின் எதிரில் இருந்த ஒரு பயணி நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். உறங்கி, உறங்கி அருகில் இருந்த பயணிகள் மேலும் விழுந்து கொண்டிருந்தான். இதைக் கண்ட ஓட்டுநர் மிகவும் கோபமடைந்து அந்த பயணியை எழுப்பி விட்டு அருகில் நின்று கொண்டிருந்த நம் சற்குருவை அழைத்து அந்த இடத்தில் அமரச் சொன்னார். நம் சற்குருவும் அமைதியாக அந்த இடத்தில் அமர்ந்து கொண்டே விடிய விடிய இறை நாமங்களைக் கூறியவாறே பயணம் செய்தார் என்பதைக் கூறவும் வேண்டுமோ ? காளை என்பது எப்போதும் விழிப்புடன் இருக்கும் மாடு அல்லவா ? அந்த திருத்தலத்தில் சொற்பொழிவிற்காக சென்ற நம் சற்குரு தன்னுடைய விழிப்பு நிலையால் எத்தனை உயிர்களைக் காத்தார் என்பதை அந்த காளையார்கோயில் ஈசனே அறிவார்.

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அன்னதான பணிகள் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் சமயத்திலும் சரி, அன்னதான ஏற்பாடுகள் முடிந்து பிரசாதம் விநியோகிக்கப்படும் நேரமாக இருந்தாலும் சரி, எப்போதும் துடிப்புடன் திகழ்ந்து அந்த அன்னதான பிரசாதம் அனைத்தும் கிரிவல அடியார்களுக்கு அளிக்கப்படும் வரை ஆஸ்ரமத்தைச் சுற்றி சுற்றி வந்து பார்த்து ஏதாவது ஒரு மூலையில் பிரசாதம் தங்கி வீணாகி விடாமல் இருக்கிறதா என்பதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார். பல அடியார்களின் சேமிப்பில், சிரமப்பட்டு உழைத்த பணத்தில் நிறைவேற்றும் நற்காரியமாக அந்த அன்னதானத் திருப்பணி இருந்ததால் அதில் விளையும் பிரசாதம் மனித சோம்பேறித்தனத்தால் சற்றும் வீணாகி விடக் கூடாது என்பதில் அவர் கவனம் முழுமையாக இருந்தது. தன்னிடம் எதிர்ப்படும் அடியார்கள் யாராவது, “வாத்யார் உறங்கச் செல்லலாமே ... நாங்கள் பார்த்துக் கொள்கிறோமே ...”, என்று கூறினால், “எங்கே சார் அடியேன் உறங்குவது, இப்ப விட்டால் போதும் அடியேன் இங்கேயே படுத்து பன்னிரெண்டு மணி நேரம் தூங்கும் அளவிற்கு உடல் அசதியாகத்தான் இருக்கிறது. ஆனால், தலைக்கு மேல் இருக்கும் அன்னதான பொறுப்பை நினைத்தால் தூக்கம் எப்படி வரும் ?” என்று அவர்களை திருப்பிக் கேட்பார்.

இதுவே சற்குருவின் மகத்தான பாடம், பொறுப்பு இருந்தால் தூக்கம் வராது.

சித்திரசபை திருக்குற்றாலம்

ஓம் ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam