அன்பால் ஒருங்கிணைவோம் அகத்தியரின் வழி நடப்போம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

ஸ்ரீஅகஸ்திய விஜயம் – ஸ்ரீ-ல-ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் சபை
அகமர்ஷணம் – 1 ஜனவரி 1993 ஆங்கீரஸ வருடம் (தை-மாசி) அகமர்ஷண அடி - 1
திருக்கயிலாயப் பொதியமுனிப் பரம்பரை 1001வது மஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீ-ல-ஸ்ரீ வெங்கடராம ஸ்வாமிகளின் (குருமங்கள கந்தர்வாவின்) வழிகாட்டி வளர்ஒளி! எமது குருநாதர் குருமங்கள கந்தர்வாவின் குருபாரம்பரிய அருள் மொழிகளைத் தாங்கி வரும் ஏடாக மலரும் “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” முதல் இதழினை அவரருளாலே அவர்தாள் வணங்கிச் சமர்ப்பிக்கின்றோம்.
“அன்னதானப் பிரபு ஸ்ரீஇடியாப்ப சித்த ஸ்வாமிக்கு நமஸ்காரம்”

குரு பாரம்பரிய
ஸ்வஸ்தி துதி

ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸ்ரீதேவி பக்தாய ஸ்ரீவெங்கடராம சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ ஸர்ப்ப இரட்சக ஸ்ரீஅஸ்தீக சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ காளஹஸ்தீஸ்வர ஸ்ரீசதாதப சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
ஓம் ஸ்ரீஸர்வஸ்ரீ சாக்தப் பரப்ரம்ஹ மஹரிஷி மஹேஸாய
கௌஸ்துப புருஷாய ஸ்ரீஇடியாப்ப சித்த ஈசமஹராஜ் கீ ஜெய்!
சுபமஸ்து

ஸ்ரீ அகத்தியர் திருஅவதாரம்

ஸ்ரீஅகத்தியர் பெருமானின் அற்புதத் திருஅவதார சரிதமானது திவ்ய நாம சங்கீர்த்தனம் போல உள்ளத்தைத் தொடும் ஓர் அரிய காவியமாகும். இறைவனின் சிருஷ்டி காலம் கணிக்க இயலாதது, கோடி கோடியாய் யுகங்கள் தோன்றித் தோன்றி மறைய கோடிக்கணக்கான அகத்திய சற்குருமார்களும் தோன்றி நிறைந்தனர். பரம்பொருளாம் ஆதிசிவனின் திருக்கயிலாயத்தில் என்றும் வாழும் சிவனின் அம்சமாம் ஆதிமூல ஸ்ரீஅகத்தியர் சரிதமே ஈண்டு வருவதாம். சித்தர் குல பிரம்ம ரிஷியாம் ஸ்ரீஅகத்தியர் என்றும் சதாசிவனின் சித்தத்தில் திளைப்பவர் . பரம்பொருள் போல நித்யத்வம் உடையவர்.

நயவேன் பிறர் பொருளை நள்ளேன் கீழாரோடு
உயவேன் உயர்ந்தவரோடு அல்லால்
வியவேன் திருமாலை அல்லாது தெய்வமென்று ஏத்தேன்
வருமாறென் நம்மேல் வினை.

ஆண்டவனின் உலக சிருஷ்டியில் மீன்கள் , பறவைகள் , கடல் தாவரங்களின் படைப்பிற்கு அடுத்து வரவேண்டுவன ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள். அவைகளைப் படைக்கும் முன் அவற்றிற்கு வேண்டிய உணவைப் படைக்க வேண்டுமல்லவா? அதற்காகத் தாவரங்களைப் படைக்க ஆதிசிவன் திருவுளம் கொண்டார். அப்போது அங்கே ஓர் அற்புதமான தேவி தோன்றினாள்.

ஸ்ரீஅகத்திய பெருமான்
சக்தி முற்றம்

தன்னை வணங்கி நின்ற தேவியை “ஆஷா சுவாஸினி” என்றழைத்த பரமசிவன் “தாவரங்களைப் பூவுலகில் படைப்பாய்” என அவளுக்கு ஆணையிட்டான். பரம் பொருளைப் பணிந்து பணியைத் தொடங்கினாள் தேவி. கோடிகோடியாம் விலங்கினங்கட்கும் ஏன் மனிதர்கட்கும் கூடத் தாவரங்கள் தானே ஜீவசக்தி தரும் உணவாகின்றன! எனவே முதல் தாவரத்தை ஓர் அற்புதமான தெய்வீகப் படைப்பாக்கத் திருவுளம் கொண்டாள் ஆஷாசுவாஸினி தேவி! இறைவனது திருவுளமும் அதுதானே!

அனைத்து லோகங்களிலும் மஹரிஷிகள் மற்றும் தேவர்கள், கந்தர்வர்களிடையே மலர்ந்த நல்லெண்ணங்களைத் திரட்டினாள் தேவி. பளிங்கெனப் பரிசுத்தத்திற்கு இலக்கணமாகத் திகழும் மஹரிஷிகள், தேவர்கள், கந்தர்வர்கள் என்றும் இறைத்தவம் புரியும் இறையடியார்கள் ஆகியோரின் நல்லெண்ணங்களில் புனிதமான ஒரு நல்லெண்ணத்தைத் தேவி வடித்து எடுத்தனள் என்றால் அந்தப் புனிதமான எண்ணத்தின் மகத்துவத்தை என்னென்று சொல்வது!

ஆஷா சுவாஸினி தேவி ஹரியையும் சிவனையும் தொழுது “ஹரிஹரா! சிவ-விஷ்ணு ரூபர்களே! தங்களிருவருடைய ஒப்பிலா இறைசக்தியை, அடியேன் பகுத்து வடித்துள்ள இந்த நல்லெண்ணத்தின் மூலக்கருவாய் அமைத்து, அரியும் சிவனு சேர்ந்த அரிசி யாய் மாற அருள்பாலிப்பீர்களாக” என்று பிரார்த்திக்க ஹரிஹர ரூபனும் அவ்வாறே அருளினர் . அரியும் சிவனும் சேர்ந்ததே அரிசி! தேவி அரிசியை இயற்கை மாற்றங்களினின்றும் காக்க அடுத்ததோர் பரிசுத்தமான நல்லெண்ணத்தை அதற்கு உறையாக அமைக்க உமி மூடிய அரிசியே “நெல்” தாவரமாயிற்று. கோடிக்கணக்கான ஜீவன்களின் மூல உணவாக இன்றைய உலகில் நெல் சார்ந்த அரிசி, தவிடு வைக்கோல் போன்றவையே இலங்குகின்றன.

ஆஷா சுவாஸினியின் அற்புதமான சிருஷ்டிப் பணி மேலும் தொடர்கிறது ஹரிஹரனின் தெய்வீக அம்சத்தால் புனித எண்ணத்துடன் உருப் பெற்ற நெல் (அரிசி) மணியைப் பன்மடங்காக்கி ஏனைய நிலத் தாவரங்களையும் சிருஷ்டிக்க வேண்டுமே! எனவே தேவி “யார் ஒருவர் சிரசு முதல் பாதம் வரை நல்லெண்ணங்களை உடையவரோ அவர் இந்த நெல் மணியைத் தன் கையில் தாங்கிப் பிரார்த்தித்தால் இந்த நெல்மணி விருத்தியாகும். அத்தகையவர் முன் வாருங்கள்” என்றாள். இந்த அழைப்பின் உட்பொருளை உணர்ந்து பலர் மௌனமாயினர். இறைவனின் லீலையன்றோ! தகுதி பெற்றிருந்தும் பலர் முன்வராததால் தேவி யோசித்தாள். சிவனை வணங்கி “சிரசு முதல் பாதம் வரை புனிதமே பூத்துக் குலுங்கும் என் மகன் அகத்தியனை அழைக்கிறேன்! அவனால் இந்த நற்காரியம் செவ்வனே முடியும்” என்றாள். எம்பெருமானும் அனுமதியளிக்க ,
அகத்தினுள் இருந்து அழகாய் ஆர்பவித்து
எழுந்து நின்ற எண்ணிலா ஈசருக்கும் பட்டம் சூட்டி
எண்ணத்தில் கலந்து எண்ணத்தைச் சுத்தமாக்கி
அத்தனை சுத்தமும் அற்புதமாய்த் தேர்ந்தெடுத்த
என்மகனே அகத்தியா வா!

என்று தேவி அழைக்க மண்ணுக்கும் விண்ணுக்கும் விரிந்த மாபெரும் விஸ்வரூபியாய் ஸ்ரீஅகத்தியர் தேஜோமயமாய், ஒளிப் பிழம்பாய் கோடி கோடியாம் ஆதவர்களின் அருட்பிரகாசத்துடன் ஆங்கே எழுந்தருளினார் .

ஸ்ரீகாஞ்சி கனிந்தகனி

ஸ்ரீஅகத்தியரின் திருக்கரத்தில் அவர் அன்னை ஆஷா சுவாஸினி தேவி அற்புத நெல்மணியை வைத்திட, அது சங்கர நாராயண மணியாய் ஒளி வீசியது. ஸ்ரீ அகத்தியரின் தெய்வீக கரத்தில் தவழ்ந்த அந்த நெல் மணி இமைக்கும் நேரத்தில் பல்கிப் பெருகி, கோடி கோடி நெல் மணிகளாய் விண்ணிற்கும் மண்ணிற்குமிடையே பல கோடி இமயமலைகளை நிகர்த்தாற் போல் குவிந்தது.
பரம்பொருளாம் சதாசிவன் நகைத்தனன். “பார்த்தீர்களா அற்புதத்தை ! இந்த அகத்தியன் என்னிடமிருந்து உதித்தவனே! அவன் என் பூர்ணாம்ச அவதார மூர்த்தியே! என் பாகத்திலிருந்து பிரிந்த சித்தர் குல நாயகனாய் உங்களுக்கு யான் அளிக்கும் பரிசு இந்த அகத்தியனே! நானே அவன்!” என்று அருளினார்.

உச்சி வெயில் சூரியனை மேகம் மூடுது
நம் உள்ளமெனும் சூரியனை கோபம் மூடுது
காற்று வந்தால் மறுபடியும் மேகம் ஓடுது
பேசி நீயும் கலந்து விட்டால் நேசம் ஓங்குது

நெல் மணிகளை மலைகளெனக் குவித்த ஸ்ரீஅகத்தியரின் திருக்கரங்கள் கோடிக்கணக்கான தாவரங்களின் வித்துக்களையும் உற்பவிக்க, உலகத்தின் முதல் தாவர சஞ்சாரம் ஆங்கே தொடங்கலாயிற்று! மூலிகைத் தாவரங்களின் மூலக்கரு ஸ்ரீஅகத்தியரே! எனவேதான் இன்றைக்கும் எந்த மூலிகையும் ஸ்ரீஅகத்தியரைக் கண்டால் நமஸ்கரித்துத் தன் இனம், பெயர், பொருள், பயன் சொல்லித் தலைவணங்கும்! எனவே “ஓம் அகஸ்தியாய நம” என்று வணங்கி எத்தாவரத்தையும் பயன்படுத்திடில் அதன் பூரண சக்தியை நாம் பெறலாம். இஃது சுபிட்சத்தையளிக்கும்.

மங்கள கந்தர்வ குருமண்டல லோகம்
ஆம், இந்த அற்புதமான குரு மண்டல லோகமே நம் குருநாதர் திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை 1001வது குருமஹா சந்நிதானம் சக்தி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அடிமை ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள், அவரது சற்குருநாதர் ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப சித்த மஹாபுருஷர் இருவர் தம் தாய் குருமண்டல லோகமாகும். கோடிக்கணக்கான குருமண்டலங்களில் , என்றும் சிவ சித்தத்தில் உறையும் உன்னதமான சித்த புருஷர்களின் தலையாய இந்த மங்களகந்தர்வ குருமண்டல லோகத்தில் உறைபவர்களில் முதன்மையானவர் சிவகுருமங்கள கந்தர்வா ஸ்ரீ-ல-ஸ்ரீ இடியாப்ப சித்தர். எனவே நமது “ஸ்ரீஅகஸ்திய விஜயம்” இதழ்களில் நம் குருநாதர் “மங்கள கந்தர்வா” என்றும் அவர் குருநாதர் “சிவகுரு மங்களகந்தர்வா” என்றுமே குறிப்பிட்டு வணங்கப் பெறுவர். பெரியோரது தாய் குருமண்டலத்திற்குரிய இந்த இனிய நாமங்களில் அவர்களை விளித்து ஆனந்திப்போமாக!
என்றும் நித்ய சத்யமாய் இலங்கும் பேறு பெற்ற மங்களகந்தர்வ குருமண்டல லோகத்தின் பிரஜைகளான சற்குருமார்கள் பிறப்பு, இறப்பு அற்ற சித்தர்களாவர். கோடிக்கணக்கான யுகங்களில் கோடிக்கணக்கான லோகங்களில் சற்குருமார்களாக வலம் வந்து கோடி கோடியான ஜீவராசிகளின் ஆன்மீக மேம்பாட்டிற்காக அற்புத இறைப்பணி ஆற்றி வருபவர்கள் மங்கள கந்தர்வ சற்குருமார்கள்.

கைலாயம், வைகுண்டம் மற்றும் சர்வ லோகங்களிலும் மகர சங்கராந்தி, கும்பமேளா, மஹாசிவராத்திரி, ஆருத்ரா பூஜைகள், வைகுண்ட ஏகாதசி போன்ற இறைவழிபாடுகளையும் நாமாவளி, அஷ்டோத்திரம், சகஸ்ரநாமம் போன்ற துதி முறைகளையும், சகல தேவாலங்களிலும் நித்ய வழிபாடுகளையும் நிர்ணயிப்பவர்கள் மங்கள கந்தர்வர்களே! இவர்களே புது உலகங்களையும், அண்டங்களையும் ஏனைய சிருஷ்டிகளையும் வடிவமைத்துக் (prototypes) கொடுக்க, பரமசிவன் தம் தீட்சண்யத்தாலும் திருநடனத்தினாலும் அவற்றைச் சிருஷ்டிப் பொருட்களாக ஆத்மசக்தியளித்து அங்கீகரிக்கின்றார்.

இந்த வைவஸ்வத மன்வந்தரத்தின் தற்போதைய கலியுக கால நிர்ணயத்தில் நம் குரு மங்கள கந்தர்வாவும் சிவகுரு மங்களகந்தர்வாவும் சக்தி ஆதிக்கத்தில் சாக்தப் பரப்ரம்ஹங்களாக அவதரித்து அருள்பாலிக்கின்றனர். சக்தி வழிபாட்டின் உன்னத நிலையில் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமையாக தேவி வழிபாட்டினைப் பரப்பி வருகின்றனர். இகபர சுகங்கள் தந்து இறைவனைக் காட்ட வல்ல எளிய வழிபாட்டு முறை சக்தி வழிபாடே என வலியுறுத்தி அதிஅற்புதத் தெய்வீகப் பணி ஆற்றிக் கலியுக மக்கள் கடைத்தேற அவதரித்துள்ள நம் குருமங்கள கந்தர்வா, சிவகுரு மங்களகந்தர்வா இருவரையும் போற்றிப் பணிந்து அவர்கள்தம் திருநெறியில் வழிநடப்போமாக!

ஸ்ரீ இடியாப்ப சித்தர் – காரணப் பெயர் விளக்கம்

சித்தர்களின் சித்தம் என்றும், எங்கனும் சிவத்தின்பால் திளைப்பதால் அவர்கள் சிவன் போல் நித்யத்வம் உடையவர்கள். முதலும் முடிவும் இல்லாதவர்கள். பிறப்பு இறப்புக்கு அப்பாற்பட்டவர்கள். பரம்பொருளாம் சிவனொடு ஐக்யமாகி உறைந்து நிற்பவர்கள். இவ்வகையில் சிவகுரு மங்கள கந்தர்வா ஸ்ரீ இடியாப்ப சித்தர், எவ்வாறு இடியாப்பம் என்ற உணவு வகைக்கு முதலோ முடிவோ காண இயலாதோ, அதேபோல முதலும் முடிவும் காண இயலாதவர் என்ற சித்தர்களின் தத்துவத்தை உணர்த்தும் பொருட்டு இத்தகைய காரணப் பெயர் பூண்டார்.

அகமர்ஷண மகரிஷி

ஒரு முறை சிவபெருமானும் அம்பிகை பார்வதியும் வியட்டிப் பிரணவம், சமட்டிப் பிரணவம் என்ற இருவிதப் பிரணவங்களை சங்கல்பிக்கவே அவையிரண்டும் வேகமாகச் சுழன்று பல கோடி அண்டங்களையும் வலம் வந்தன. இவற்றின் சுழற்சியையும் வேதகத்தையும் தேவாதி தேவர்களாலும், மஹரிஷிகளாலும் கட்டுப்படுத்த இயலவில்லை. அனைவரும் பிரணவ நாதனாகிய ஸ்ரீ வினாயகப் பெருமானிடம் “சுவாமி! தங்களது அம்மையப்பரால் சங்கல்பிக்கப்பட்ட இவ்விரு பிரணவங்களின் சுழற்சியைக் கண்டு திகைத்து நிற்கிறோம்! இதன் சிருஷ்டியின் காரணமும் எமக்குப் புரியவில்லை. தாங்கள் தான் கருணை புரிய வேண்டும்” , என்று வேண்டினர்.

மப்பேடு

பழுதுபட்ட உடல் என்று பாரில் உன்னைப் பழித்திடாது
அழுது உன்னை வேண்டி நின்றேன் அன்பால் என்னை ஆட்கொண்டு
தொழுது உன்னை வேண்டிக் கண்டேன் தூயா என்னைத் தொட்டுக் காப்பாய்
ஓம் தத் புருஷாய வித்மஹே சதுர்முக தேவாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

ஸ்ரீவிநாயகப் பெருமான் கோடிக் கணக்கான அண்டங்களையும் தமது திருவயிற்றில் வைத்துப் பரிபாலனம் செய்பவர். எனவேதான் அவர் பெருவயிறுடையவரானார். அவர் தமது திருக்கரத்தால் பெருவயிற்றைத் தடவவே அவர் நாபியிலிருந்து வெளிப்பட்ட அகமர்ஷண மஹரிஷி அதிவேகமாகச் சுழன்று கொண்டிருந்த வியட்டி, சமட்டிப் பிரணவங்களின் ஓங்கார உருவகங்களின் இடை அமர்ந்து தமது தபோவலிமையால் அவற்றை “உ” என்ற பிள்ளையார் சுழியாக மாற்றிப் புதிய உருவை சிருஷ்டித்தார். இதன் பிறகுதான் இறைவனால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்துப் பொருட்களின் ஜீவன்களின் இயக்கங்களே தொடங்கின. இவ்வாறு இயக்கங்களுக்கு மூலகாரணமாக இருந்து இயக்குபவர் அகமர்ஷண மஹரிஷியே. எனவே ஸ்ரீவிநாயகப் பெருமானே தனது பெருவயிற்றில் வைத்துப் பரிபாலிக்கும் பிரபஞ்சத்தில் அகமர்ஷண மஹரிஷி மூலம் “உ” என்னும் பிள்ளையார் சுழியை, அம்மையப்பருடைய பிரணவ நேத்ர தரிசனங்களிலிருந்து உருவாக்கி, இந்த சிருஷ்டி இயக்கத்தைத் துவக்கினார்.

எனவே நாம் எந்தக் காரியத்தையும் தொடங்குமுன் “உ” என்ற பிள்ளையார் சுழியிடுவதோடல்லாது சிருஷ்டி இயக்கத்திற்குத் தனது அற்புத தபோ பலனையளித்த அகமர்ஷண மஹரிஷியையும் துதிக்க வேண்டும். இயல், இசை, நாடகம், கல்வி, தொழில், நிலம், புலம், வாகனம் என்ற எந்தக் காரியத்தையும், செயலையும் தொடங்குமுன் அகமர்ஷண மஹரிஷியைத் தொழ வேண்டும்.
நூல், திரைப்படம், ஓவியம், விளையாட்டு, கலை போன்ற எந்தக் காரியத்தைத் தொடங்குவதற்கு முன்னும் அகமர்ஷண மஹரிஷியை வணங்கித் தொடங்கினால் அவரையளித்த ஸ்ரீவிநாயகப் பெருமானே மனமகிழ்ந்து அனைத்து பூஜைகளையும் ஏற்றுப் பன்மடங்கு பலன்களை அருள்கின்றான்.
எனவே அகமர்ஷண மஹரிஷியை தியானித்து வணங்கி, ஸ்ரீ விநாயகப் பெருமானை ஆனந்தமடையச் செய்து “ஸ்ரீ அகஸ்திய விஜயம்” தொடங்குகிறது.

அன்னதான குறிப்புகள்

(அ) கங்கை போன்ற புனித நிதிகளின் நீரில் உணவைச் சமைத்தால் அது மேலும் புனிதமாகிறது. கங்கை நீரைக் கொதிக்க வைக்கும் போது கங்கை உற்பத்தி ஸ்தலமான கோமுக் புனிதஸ்தலத்தில் அபூர்வமாகக் காணப்படும் வெந்நீர் ஊற்றிலிருந்து வரும் நீரின் தெய்வீகத் தன்மையை அது பெறுகிறது. இது கங்கை நீரை விடப் பன்மடங்கு புனிதமானதாகும். எனவே புனிதமான கங்கை நீரில் சமைத்த பிரசாதத்தை ஏழைகளுக்கு அளிப்பது மிகவும் விசேஷமானதல்லவா! அல்லது பிரசாதத்தில் சிறிது கங்கை நீரையேனும் சேர்க்கலாம்!

(ஆ) சில கோயில்களின் மூலவர்கள் குறிப்பிட்ட வியாதிகள் குணமாவதற்கென விசேஷ அனுக்ரஹம் புரிகின்றனர். அந்தந்தக் கோயிலில் அர்ச்சனை செய்த விபூதி, துளசி, வில்வ தளங்கள், குங்குமம், திருக்குள நீர், அர்ச்சனை செய்த தேங்காய் போன்றவற்றை அன்னதான உணவுடன் சேர்த்து அளித்தால் எழைகட்கும் திருவருள் பெற்றுத் தந்த ஆத்ம திருப்தியைப் பெறலாம்.

ஸ்ரீவிருட்சக் கொடி சித்தர்
சித்துக்காடு பெருமாள் தலம்

1. நரம்பு வியாதிகள் - திருமுல்லைவாயில் ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் பிரசாதம்.

2. தோல் நோய்கள், பால் நோய்கள், தொழுநோய் - சென்னையிலுள்ள கோவூர் சுந்தரேஸ்வரர் கோவிலில் அர்ச்சனை செய்யப்பட்ட வில்வம் விசேஷமானது. இந்த வில்வத்தை அன்னதான உணவுடன் சேர்க்கலாம். பதினாறு தளங்களுக்கு மேல் காணப்படும் இந்த வில்வமர இலை அற்புதமானது. ஆனால் சிவனுக்கு அர்ச்சனை செய்யப் பெற்ற வில்வதளப் பிரசாதங்களையே பயன்படுத்த வேண்டும்,

3. கழுத்து நோய்கள் - குன்றத்தூர் திரு நாகேஸ்வரர் பிரசாதம்.
4. இருதய நோய்கள் - திருநின்றவூர் ஹிருதயாலீஸ்வரர் பிரசாதம்.

5. அனைத்து நோய்கள் குறிப்பாக அறுவை சிகிச்சைகள் - படேஸாஹிப் சமாதி (சின்னபாபு சமுத்திரம், பாண்டிச்சேரி) பிரசாதம்.

6. கண் நோய்கள் (குருடர்கள்) – சென்னை அருகே ஞாயிறு சிவன் கோயில், மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் ஆலயம், சென்னை அருகே சித்துக்காடு பெருமாள் ஆலயம் பிரசாதம், இங்குள்ள விருட்சக் கொடி சித்தர் தரிசனம்.

7. பல் நோய்கள் – மகோன்னத்த சித்தர் திருமழிசை ஜெகன்னாதப் பெருமாள் ஆலயம்.
8. எலும்பு நோய்கள் – சுதாதலீஸ்வர சித்தர் – மப்பேடு சிங்கீஸ்வரர் சிவாலயம் (சென்னை அருகில்)

(இ) ஓம்காரம் தன்வந்தரி காயத்ரீ, அஸ்வினி தேவர்கள் காயத்ரீ, திருநீற்றுப் பதிகம், கோளறு பதிகம் போன்றவை ஜபித்துப் பாராயணம் செய்து, தொழு நோயாளிகட்கும், ஊனமுற்றோர்கட்கும் ஏனைய நோயாளிகட்கும் அன்னதானப் பிரசாதமளித்தல் அற்புதமான பலன்களைத் தரும். இவை தவிர திருப்பதி, சபரிமலை போன்ற திருத்தலக் கோயில்களின் பிரசாதத்தையும் அன்னதான உணவில் சேர்த்தல் நினைத்துப் பார்க்க இயலாத தெய்வத் திருவருளைப் பெற்றுத்தரும்.

கிருஷ்ணரின் ராச லீலை

கிருஷ்ணாவதாரத்தில் ஸ்ரீகிருஷ்ணன் இராசலீலையை நடத்தியது ஏன்?
ஸ்ரீ கிருஷ்ணன் கோபிகா ஸ்திரீகளுடன் நீரிலும் நிலத்திலும் ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்ததே இராசலீலையாகும். சாதாரண மனிதனின் கண்களுக்கு அவர்கள் அழகுவதனம் நிறைந்த ஸ்திரீகளாய் அமைந்தனர். திரேதா யுகத்தில் இராமபிரான் வனவாசம் ஏகியபோது, பல ரிஷிகள், “இராமன் தன் ஆஸ்ரமம் வருவானா, அந்தத் தெய்வாதாரத்திற்கு உடல்சேவை செய்யமாட்டோமா, அவன் திருமேனியை, திருவடியைத் தொட்டுத் தழுவும் பாக்கியம் கிட்டாதா?” என்று ஏங்கினர் . கடுந்தவத்தை மேற்கொண்டதால் அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தை விட்டு வெளிவர முடியாத நிலை. ஸ்ரீராமனால் அனைத்து ரிஷிகளின் அபிலாசைகளையும் பூர்த்தி செய்ய அனைவரின் ஆஸ்ரமங்களுக்குச் செல்ல முடியுமா? அகஸ்தியர், பரத்வாஜர், சபரி போன்ற சில ரிஷிகளையே ஸ்ரீராமன் சந்திக்க முடிந்தது. அதற்குள் கிஷ்கிந்தா காண்டம், சுந்தர காண்டம், யுத்த காண்டம் என்று பல சம்பங்கள் இடைப்பட , ஸ்ரீராமனால் மற்ற நூற்றுக்கணக்கான ரிஷிகளைச் சந்திக்க இயலவில்லை.

ஸ்ரீகிருஷ்ணர் ராசலீலை
திருவதிகை

யுத்த காண்டத்தில், இலக்குவன், போரில் மூர்ச்சையுற மனந்தளர்ந்து நின்ற ஸ்ரீராமன், ஸ்ரீஅகஸ்தியரின் தரிசனம் பெற, அவர் ஸ்ரீராமனுக்கு ஆதித்ய ஹிருதயம் ஸ்லோகத்தை உபதேசித்து அருளினார். பின்னர், “ஸ்ரீராமா! என்னுடன் வந்திருக்கும் முனிவர்களையும் மஹரிஷிகளையும் வணங்குவாயாக! நீ வனவாசம் பூண்ட போது பல ரிஷிகள் நின் மானுட திவ்ய ரூபத்தைத் தரிசனம் செய்யத் துடித்தனர் அதற்குச் சந்தர்ப்பம் கிட்டாமற் போகவே அவர்களுள் தாங்கள் ஏற்ற தவநிலைகள் முடிந்தவர்களை உன் தரிசனத்திற்காக இங்கு அழைத்து வந்துள்ளேன். உன் திருவுடலை ஆலிங்கனம் செய்து உனக்கு உடலால் சேவை செய்ய இவர்கள் உளமார விரும்புகின்றனர். அவர்களின் ஆவலைப் பூர்த்தி செய்வாயாக!” என்றார். ஸ்ரீராமனும் அவ்வாறே இசைய, “ஸ்ரீராமா! இன்னும் நூற்றுக்கணக்கான மஹரிஷிகள் வனங்களில் உன் மானுட ரூப தேகத்தைத் தரிசிக்க ஆவலாய் உள்ளனர். இவர்கள் இன்னும் தண்டகாரண்யத்தில் கடுந்தவத்தில் இருப்பதால் வனத்தை விட்டு வெளிவர இயலவில்லை. உன் வனவாசத்தில் அவர்களுக்குத் தரிசனந் தருவாய் என வழிமேல் விழி வைத்துக் காத்து நின்று ஏமாற்றமடைந்து விட்டனர். அவர்களுடைய அபிலாசைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறாய்! உன் இராமாவதாரத்திற்குள் இது சாத்யமா?” என்று அகஸ்தியர் வினவினார்.

காலையில் பல் துலக்கும் போது சனிவிரல் (நடுவிரல்) கொண்டு தேய்ப்பது மிக சிறந்தது. பிரஷ் உபயோகிக்க நேரிடினும் ஒரு முறையேனும் சனிவிரல் கொண்டு பல் துலக்குதல் நல்லது. பல் துலக்கும் போது தந்ததேவதையைத் துதிக்க வேண்டும். பிரஷின் நார்ப் பகுதி (fibres) திலக வடிவில் இருப்பதே சாலச் சிறந்தது. இத்தகைய திலக வடிவு நார் பிரஷினைப் பற்றி பல ஆண்டுகட்கு முன்னரே சிவகுரு மங்களகந்தர்வா சிறப்பாக வர்ணித்துள்ளார். இத்தகைய திலக வடிவம், தந்ததேவதைக்குப் ப்ரீதி தரும், நமது ஆயுள் வளரும்.

திகைத்து நின்ற ஸ்ரீராமன், “முனிசிரேஷ்டரே! நூற்றுக்கணக்கான, ரிஷிகளின் புனிதமான உள்ளம் ஏங்க நான் காரணமாகிவிட்டேனா! இனி அவர்களைச் சந்திப்பது சாத்தியமல்லவே! தாங்கள் தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும்!” என்று வேண்டினான். அப்போது அகஸ்தியர், “ஸ்ரீராமா! நீ சாட்சாத் நாராயணனின் திருஅவதாரம் என்பதை அவர்கள் அறிவார்கள். உனது அடுத்த அவதாரத்தில் துவாபர யுகத்தில் நீ கிருஷ்ணனாக அவதரிக்கும் போது இராமவதாரத்தில் உன்னைக் கண்டு சேவை செய்ய ஏங்கிய மஹரிஷிகள், உன் கிருஷ்ணாவதாரத்தில் கோபிகா ஸ்திரீகளாகப் பிறந்து உன்னுடன் தவழ்ந்து விளையாடி அற்புதமான பக்திப் பரவச நிலையை அடைவார்கள். இது அவதார இரகசியமாகும்” என்று அருளினார்.
இவ்வாறு இராசலீலையில் ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடியது இராமாவதார மஹரிஷிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவேயாகும். இராமாவதார பூர்வ ஜென்ம வாசனைகளுடன், பூர்ணாவதார மூர்த்தியான ஸ்ரீகிருஷ்ணனை ஸ்பரிசிக்க கோபிகா ஸ்திரீகளான மஹரிஷிகள் இரு அவதார மூர்த்திகளின் தெய்வாம்சங்களால் பக்திப் பெருக்கின் உன்னத நிலையை அடையும் பேறு பெற்றனர்.

அடிமை கண்ட ஆனந்தம்

சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர்.... ஸ்ரீகாஞ்சி காமகோடி பீட பரமாச்சார்யாளும், சித்தர்களால் “கனிந்த கனி” என்றழைக்கப்படுபவருமான ஸ்ரீசந்திரசேகரேந்திர சுவாமிகள். இராயபுரத்தில் சுழல் மெத்தை காமாட்சி அம்மன் கோவிலில் முகாமிட்டிருந்த சமயம்....
இராயபுரம் ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் எப்போதும் கோவணாண்டியாக அமர்ந்திருக்கும் 80 வயது மதிக்கத்தக்க பெரியவர் ஒருவர், ஏழு வயதுள்ள அரைடிராயர் அணிந்திருந்த சிறுவனையழைத்து, “பெரியவாளைப் பார்த்து ஏதேனும் வாங்கிண்டு வா, உடனே போ!” என்று விரட்டினார். அவர் பெரியவாள் என்று குறிப்பிட்டது. பரமாச்சார்யாளைத்தான்.....
சிறுவன் திகைத்து நின்றான். அழுக்கடைந்த கிழிந்த அரைநிஜார், ஓட்டையான பைகள், சொல்வதைச் செய்யாவிடில் இந்தக் கோவணாண்டிப் பெரியவர் தருகின்ற தண்டனையோ, நினைத்தாலே பயமாக இருக்கிறது.

சக்கரத்தாழ்வார் ஆசி பெறும் துதி...
வார்த்தையால் சொல்லி வலம் வந்தேன்
வழுவிப் பின்னால் போகாது
பார்த்துப் பார்த்துப் பூரித்து
பாசத்தால் தினமும் பரிதவித்து
சேர்த்து வைத்த பொருளெல்லாம்
சக்கரத்தாழ்வார் பெறுவாரே

சிறுவன் தயங்கியவாறே வெளிவந்து, கனிந்த கனி தங்கியிருந்த வீட்டையடைந்தான். எக்கச்சக்கமான கூட்டம், இச்சிறுவனை மதிப்பார் எவருமில்லை. சிறுவனோ வீட்டின் பின்புறம் சென்று சுவரேறிக் குதித்து உள்ளே ஒரு நோட்டம் விட... அங்கே கனிந்த கனி தனக்கே உரித்தான சாந்த முகத்துடன் சிலருடன் அளவளாவிக் கொண்டிருந்தார்! சிறுவனுக்கோ ஒரே உதறல். “யாரிவர்? இவரிடம் ஏன் ஏதேனும் வாங்க வேண்டும்? அவர் இவரிடம் ஏதேனும் வாங்கி வா என்றால் இவரிடம் ஏதோ விஷயமிருக்க வேண்டும். எப்படி வாங்குவது”, என்று எண்ணியவாறே சிறுவன் அங்கிருந்த கிணற்றடியை நோக்கி ஊர்ந்து, அங்கிருந்த துளசிச் செடியின் பின் சற்று மறைவாக நின்றான்.

யார் யாரோ வந்து கனிந்த கனியைப் பார்த்து நமஸ்கரித்து அளவளாவிச் செல்ல... நேரம் கடந்து கொண்டிருந்தது. சிறுவனுக்கோ.. “திக் திக்” என்று மனம் அடித்துக்கொள்ள.... பயந்தவாறே செடி மறைவில் நின்றான்.
கனிந்த கனி திடீரென்று எழுந்தார்... தலையில் துளசி மாலையும், வில்வமும், ருத்ராட்ச மாலையும் கிரீடமாக ஜ்வலிக்க அவர் மெதுவாக சிறுவன் ஒளிந்திருந்த கிணற்றடியோரம் வந்தார். மற்றவர்களோ கனிந்தகனி ஏதோ அனுஷ்டானத்திற்குச் செல்கிறார் என்று ஒதுங்கிவிட்டனர். கனிந்த கனி துளசிச் செடி அருகே வந்தார். சிறுவன் மெதுவாக எட்டிப் பார்த்து சற்று சிரித்தான். கை கூப்பி வணங்கினான். இதுவே அச்சிறுவன் அறிந்த “ஷோடசோபசார பூஜை”.
கனிந்த கனி அச்சிறுவனின் தோளைப் பற்றித் தன் சிரசிலிருந்தும் கழுத்திலிருந்தும் துளசி இலைகளை எடுத்து, “இந்தா, எடுத்துண்டு போ... அவாள்ளாம் பார்க்கறத்துக்குள்ள கெளம்பிடு.. கனிந்த கனியின் அருளுரைகளிவை. கனிந்தகனியிடமிருந்து துளஸி தளம் பெற்றவுடன் சிறுவன் சிட்டாகப் பறந்தான், மற்றவர்கள் எல்லாம் என்ன நடந்தது என்று யூகிப்பதற்குள் சிறுவன் சுவரேறிக் குதித்து ஓடி விட்டான்.
அரை நிஜாரில் இரண்டுமே ஓட்டையான பைகள். கனிந்த கனி தந்த ஏழெட்டு துளஸி தளங்களைக் கெட்டியாகப் பிடித்தவாறே தனது கோவணாண்டிப் பெரியவரைப் பார்க்க ஓடினான். “வா ராஜா! வா பெரியவாள் ஏதேச்சும் கொடுத்தாரா?” என்று ஒன்றுமறியாதவர் போல் கேட்க, “இது கேட்டு வாங்கறதுக்குள்ள என்ன கஷ்டப்பட்டேன் தெரியுமா...” என்று சிறுவன் பதிலுரைக்க “ஓஹோ! ஐயா கேட்டு வாங்கினீர்களா?” என்று நமுட்டுச் சிரிப்பு சிரித்தார் பெரியவர்.
சிறுவன் மழுப்பினான், “இல்ல.. இல்ல.. அவரே கொடுத்தார். இவரிடம் பொய் சொல்லித் தப்பிக்கமுடியாதே! பிரபஞ்சத்தின் சத்ய ஜோதியாயிற்றே இவர்.”

டூத் பிரஷை பிடிக்கும் முறை

என் சொல் உன் மந்திரம்
என் பணி நின் முத்திரை
என் கதி நின் வலம்
என் துயில் நின் சேவை
எல்லாம் உனதென
எண்ணம் கொண்டேத்த
அமைந்த நின் பூஜையே !

சிறுவன் “அவர்” தந்த துளஸி இலைகளை இவரிடம் கொடுக்க அதனை, “இவர்“ ஒவ்வொன்றாகத் தன் வாயில் போட்டுக் கொண்டு “ஆஹா! தேவாமிர்தமாயிருக்கு ஒவ்வொரு இலையும்,” ஆனந்தமாக இவர் துளஸியை விருந்தென சுவைத்துத் தின்ன... சிறுவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். “சாதாரணமாக இவர் வெளியில் யார் எது கொடுத்தாலும் வாங்கி சாப்பிட்டுப் பார்த்ததில்லை. ஆனால் இந்த துளஸி இலைகளை இவ்வுளவு ஆனந்தமாகச் சாப்பிடுகிறாரே! ஏதோ விஷயம் இருக்கிறது. எப்படியும் கடைசி துளஸியிலையையாவது நமக்குக் கொடுப்பாரே! அப்போது பார்க்கலாம் அந்த தேவாமிர்த ருசியை..,” சிறுவன் கணக்குப் போட்டான். பெரியர் கடைசி துளஸி தளத்தை எடுத்து.. சிறுவனைப் பார்த்தார்.... சிறுவன் வாயெல்லாம் பல்லாக..... வாய் திறந்து நின்றான்.
அந்த துளசி இலையையும் தன் வாய்க்குள் போட்டுக்கொண்டு எழுந்து விட்டார். சிறுவன் திகைத்து நின்றான்.. பெரியவர், “உனக்கு அவரிடமிருந்து இதைக் கொண்டு வர வேண்டிய பாக்கி.. அது தீர்ந்தது... அதைச் சாப்பிட வேண்டியது என் பாக்கி... அதுவும் தீர்ந்தது... இதில் உனக்கு பேராசை எதற்கு...” பெரியவர் கலகலவென்று சிரித்தார்.
சிறுவன் ஓவென்று கதறி அழுதான்...!
பெரியவர் சிரித்தவாறே., “இங்கே வா!” என்று அழைத்து அச்சிறுவனின் வாயைத் திறந்து, தான் மென்ற துளசி இலைகளின் எச்சிலைத் திரட்டி அச்சிறுவனின் வாயில் உமிழ்ந்தார். உடனே பரமானந்தத்தின் எல்லையை அடைந்தான் அச்சிறுவன்.
“ஆம் இதுவல்லவோ தேவாமிர்தம்,” சிறுவன் உணர்ந்தான், ஒன்றுக்கு இரண்டாக இரு சற்குருமார்களின் அருள் பிரசாதத்தை தேவாமிர்தமாக உண்ட சிறுவனே, அந்த ஆனந்தம் கண்ட அடிமையே ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அடிமை, நமது குருநாதர் குருமங்கள கந்தர்வா, அந்தக் கோவணாண்டிப் பெரியவர்தான் சிவகுரு மங்களகந்தர்வா இடியாப்ப சித்தர்.

ஓம்ஸ்ரீகுருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam