எதையும் எடுப்பது ராம பாணம் அன்று, கொடுப்பதே ராம பாணம் !!

ஓம் ஸ்ரீவல்லப கணபதி துணை ஓம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி துணை
ஓம் ஸ்ரீகுருவே சரணம்

துதிக்கையோன் படுக தரிசனம்

துதிக்கையோன் படுக தரிசனம்
பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழும் பெண்களுக்கு ரட்சை போல்  காக்கும் திருஅண்ணாமலை தரிசனம்
வயதானவர்களுக்காக வாழ்ந்தவர்களுக்கு வயதான காலத்தில்  வந்துதவும் தரிசனம்.
பரப்பிரம்ம ஈஸ்வரனே மலையாக எழுந்தருளியுள்ள  திருஅண்ணாமலையை எவ்விடத்து நோக்கினாலும் அது விதவிதமான  தரிசனமாக அமைந்து  இறைவனுடைய பல விதமான அருளை நமக்குப் பெற்றுத் தருகிறது.
உண்மையில் ஒவ்வொரு நொடிக்கும் கிரக சஞ்சார, கோள், நட்சத்திர  மண்டலங்களிள் அசைவுகளுக்கேற்ப மாறுகின்ற தரிசன பலன்கள்  நம்முடைய பலவித கர்ம வினைகளைத் தீர்ப்பதோடு காரிய  சித்திகளையும்  அளிக்கின்றன. இதற்குக் காரணம், பல கோடி  யுகங்களாகப் பல கோடி சித்தர்களும் மகரிஷிகளும்  திருஅண்ணாமலையை வலம் வந்து ஒவ்வொரு தரிசனப் பகுதியிலும்,  அதிஅற்புதமான தவங்களை மேற்கொண்டு தம்முடைய தபோ  சக்திகளை அவ்விடத்தில் பதித்துச் செல்கின்றனர்.
இவ்வாறாக சித்தர்களின், மகரிஷிகளின் பாதங்கள் படாத இடமே  கிரிவலத்தில் கிடையாது. எனவே தான் சித்புருஷர் திருஉலா வந்த  கிரிவலப்  பாதை, ஏன், தேவாதி தேவர்களும், தெய்வ மூர்த்திகளும்  இன்றைக்கும் வலம்  வருகின்ற தெய்வீகப் பாதையில் நம் உடல்  படுவதற்கு நாம் என்னே பாக்யம்  செய்திருக்க வேண்டும்!
உடல் வலியையோ, ஆடைகள் கசங்கி அழுக்காவதையோ  பொருட்படுத்தாமல் ஆத்மார்த்தமாக கிரிவலப் பாதையில் ஒரு சில  இடங்களிலேனும் குறைந்தது 30 அடியாவது அங்க பிரதட்சணம்  செய்தால்  ஞானிகளின் புனிதமான பாதங்கள் பட்ட நெகிழ்ச்சியை  உணரலாமன்றோ! இத்தகைய உத்தமர்கள் கிரிவலத்தின் அனைத்துப்  பகுதிகளிலும் பதித்துள்ள  தபோபலத்தின் சக்தியை ஒரு சிறிதேனும்  பெறுவதற்காகத் தான் நாம் வெறும் கால்களில் நடந்து கிரிவலம் வரவேண்டும் என்ற நியதி  விதிக்கப்பட்டுள்ளது. கால்களில் அணியும்  செருப்பு இத்தெய்வானுபவத்திற்குத்  தடையாகிடும் அல்லவா!
இவ்வகையில், திருஅண்ணாமலையில் உள்ள நம் ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா  அகஸ்தியர் ஆஸ்ரமத்தின் வாயிலில் இருந்து நமக்கு கிட்டுவது  சிவசக்தி  ஐக்ய ஸ்வரூப தரிசனமாகும். இத்தரிசனப் பகுதியிலிருந்து  சில அடிகள்  எடுத்து வைத்து திருஅண்ணாமலையை நோக்க அதுவே  துதிக்கையோன்  படுக தரிசனமாக அமைகின்றது. அதாவது  யானையின் துதிக்கைச் சுருளைப்  போல அமைந்து கணபதியின்  முகச்சாயலைக் கொண்டதாகும்.
இதனை தரிசிப்பதால் வரும் பலன்களோ அதி அற்புதமானவை
பல குடும்பங்களில் வயதான தாயை அண்டி வாழ்கின்ற இளம்  பெண்கள் பலவிதமான துன்பங்களுக்கு ஆளாகின்றனர். திருமணம்  புரிந்து கொண்டால் தன் தாயை, யார் கவனித்துக்  கொள்வார்கள்? அல்லது தாய் உள்ளவரை தன் திருமணத்தைத்  தள்ளி வைத்திடலாமா?  இந்த மனச்சஞ்சலங்களுக்கிடையே  வாழ்கின்ற பெண்கள் எவ்வித  முடிவும் எடுக்க இயலாமல்  மனக்குழப்பங்களடனேயே வாழ்கின்றனர்.  இவர்களுக்குத் தக்க  நிவாரணம் அளிப்பதே துதிக்கையோன் படுக  தரிசனமாகும்.
வயதான தாய்/தந்தையுடன் வாழ்கின்ற ஆண்கள், தான்  திருமணம்  செய்து கொண்டால், தன் தாயையோ,  தந்தையையோ நன்கு கவனித்துக் கொள்ள கூடிய மனைவி  அமைவாளா என்ற அச்சத்தினால்  பிரம்மசாரியாய்  வாழ்கின்றார்கள். இதனால் திருமண வயதையும் தாண்டி  வயோதிகத்தை எட்டி வாழ்பவர்கள் பலர் உண்டு.
தன் தாய் தந்தைக்காக தியாகம் செய்து திருமண வாழ்க்கை இன்றி  வாழ்ந்தவர்கள், வயதான காலத்தில் எவ்வித துன்பமும் இன்றி வாழ  இந்த துதிக்கையோன் படுக தரிசனம் உதவுகின்றது.

தமிழ்ப் புத்தாண்டு

பகுதான்ய தமிழ்ப் புத்தாண்டு
பகுதான்ய தமிழ் புத்தாண்டு தினத்தில் பாமரரும், ஏழை  எளியோரும்  கடைபிடிக்கக் கூடிய எளிய புத்தாண்டு வழிபாடு
14.4.1998 புத்தாண்டு தினத்தில் இல்லங்களிலும் கோயில்களிலும்  இதனை  அப்படியே படித்தல் போதுமானது! இதுவே சித்புருஷர்கள்  போற்றும்  பஞ்சாங்க படனம்!
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி அமைந்த வழிபாடு இது!
ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளின் நல்லுரையின்படி கடந்த ஈஸ்வர  ஆண்டிற்கான எளிமையான புத்தாண்டு பூஜையை, பாமரரும்  எளியோரும்,  சிறிதே கல்வியறிவுடையோரும் நன்கு அறியும்  வண்ணமாகவும்  கல்லாதோரும் கேட்டால் எளிதிற் புரிந்து  கொள்ளும் வகையுலிம் ஏப்ரல்  1997ல் ஸ்ரீஅகஸ்திய விஜயத்தில்  அளித்திருந்திருந்தோமல்லவா, இதற்குப்  பெரும் வரவேற்பு இருந்தமையின் இத்தமிழ்ப் புத்தாண்டிலும் புனிதமான  பகுதான்ய  வருடம் பிறக்கும் நாளன்று கடைபிடிக்க வேண்டிய புத்தாண்டுப்  பூஜை முறையை ஈண்டு அளிக்கின்றோம்!
வெகுதான்யம் என்பதைவிடப் பகுதான்யம் என்றழைப்பதே  சிறப்புடையது! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்தானே நம் பாரதப்  பண்பாடு!
நம் தண்டமிழ்ப் பெரியோர்கள் பகுத்துத் தந்துள்ள மூதுரை  வாக்கின்படி,  ஆதவன் (சூரியன்) மேஷ ராசியில் எழுந்தருளும் மிக  மிக புனிதமான நேரமே தமிழ்ப் புத்தாண்டாகின்றது.
திருக்கணித பஞ்சாங்க முறைப்படி 14.4.1998 விடியற்காலை 5.03  மணிக்கு  மேஷத்தில் சூரியப் பிரவேசம் நிகழ்கையில் பகுதான்ய  தேவமூர்த்தியும்  எழுந்தருள்கின்றார்.
இவ்வாண்டின் ராஜாவாக சனி பகவான் விளங்குவதால் செவ்வாய்  அன்று  புத்தாண்டு நாளாகவும் அமைவதால் சனி, செவ்வாய், ராகு  மூர்த்திகளை  முறையாக வணங்கி வருதலால்தான் இவ்வாண்டில்  நன்முறை கூடிய  சீரிய ஆட்சியும், ஒழுக்கமான, சாந்தமான  தெய்வீகமான சமுதாய அமைதியும் கை கூடும்.
பகுதான்யப் பிறப்பு: எல்லா ஜீவன்களுக்கும் உரிய ஜாதகப் பகுப்பு  போலவே ஒவ்வொரு ஆண்டின் தேவதா மூர்த்திக்கும் புத்தாண்டு  பிறக்கும்  நேரத்தைப் பொறுத்து ஜாதகக் கணித அமைப்பும் உண்டு.  இவ்வகையில்  பகுதான்ய ஆண்டு துவிதியை திதியன்று, விசாக  நட்சத்திரத்தில், சித்தி  யோக நிலையில் அமைகின்றது. அமிர்தாதி  யோகங்களில் பகுதான்ய  ஆண்டு மரண யோகத்தில் பிறக்கின்றது.
பகுதான்ய பஞ்சாங்க படன விளக்கம்
பஞ்சாங்க படனம் என்றால் என்ன?
நாள், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தையும்  பஞ்சாங்கம் குறிப்பதால் தினசரி பஞ்சாங்க வழிபாட்டினால் அந்தந்த  நாளுக்குரிய வாரதேவதை, திதிதேவதை, நட்சத்திர தேவதை, யோக  தேவதை, கரண தேவதை ஆகிய ஐந்து தேவதா மூர்த்திகளின்  அனுகிரகத்தைப் பெறுகின்றோம்.
எனக்கு பஞ்சாங்க விஷயமே தெரியாது என்று ஒதுங்குவோருக்கும்  புரியும் வகையில் நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம  சுவாமிகள் இவ்வரிய பஞ்சாங்க படனத்தை அளித்துள்ளார்கள்.  இதனை நன்கு கடைபிடித்து கால தேவ மூர்த்திகளின்  கருணையுடன் நல்வாழ்வு பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அவரவர் குல, குடும்ப மரபுப்படி அவரவர்க்குரிய பஞ்சாங்க  முறையை (வாக்கியம், சித்தாந்தம், திருக்கணிதம், சாந்திரமானம்  etc.) அனுசரித்திடுக! இவற்றைப் பற்றி அறியாதோர் ஸ்ரீஅகஸ்திய  விஜயத்தைப் பின்பற்றிடலாம்! அந்தப் பஞ்சாங்கத்தில் அப்படிப்  போட்டிருக்கிறதே என்று எண்ணிக் குழப்பமடைய  வேண்டாமெனக் கேட்டுக் கொள்கின்றோம்!
வாக்கியம், திருகணிதம் எனப் பலவித பஞ்சாங்கக் கணித  முறைகளிருப்பதால் நவநாயகர்களின் ஆதிபத்யம், பௌர்ணமி, அமாவாசைத் திதிகள் போன்றவற்றில் மாறுதல்கள் ஏற்பட  வாய்ப்புண்டு. கலியுக நடைமுறை வாழ்க்கைகேற்ப திருக்கணித  முறையே சிறப்புடையது என்பதால் ஜோதிடக்கலையில்  இறைபக்தியுடன் திளைக்கின்ற பெரியோர்களின் கருத்திற்கிணங்கவும் எல்லாவற்றிற்கும் மேலாக சற்குருவின்  அருளாலும் ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் திருக்கணித முறையையே  கடைபிடிக்கின்றோம்.
நவ நாயகர்கள்
யுகாதி மற்றும் தமிழ் ஆண்டுப் பிறப்பு அந்தந்த மாத கிரஹப்  பிரவேசங்கள் போன்றவற்றைப் பொறுத்து அந்தந்த ஆண்டிற்குரிய  நவநாயகர்கள் அமைகின்றனர். ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில்  திருக்கணித முறைப்படி சில விசேஷ நியதிகளின்படியும்  நவநாயகாதிபதிகள் வழிபாடு அளிக்கப்படுகின்றது. இதில் பஞ்சாங்க  கணித பேதங்களினால் ஏனைய பிற முறைகளில்  மாறுதல்களிருக்கும்!
தற்காலத்தில் சாதி, சமய வேறுபாடின்றி இறை பெரியோர்களை,  உத்தமர்களை மதித்துப் போற்றி வாழ்கின்ற தெய்வீகப் பன்பாடு  மறைந்து விட்டமையால்தான் சமுதாயத்தில் துன்பங்கள் மலிந்து  வருகின்றன. ஜோதிடம், வேதம், பூஜை, சாஸ்திரம் போன்றவற்றை  நன்கு அறிந்தோர் கூட சுயநலமின்றி, பேராசையின்றி,  செல்வஞ்சேர்க்கும் குறிக்கொளின்றித் தியாக உணர்வுடன் எவ்வித  சாதி வித்யாசமுமின்றிச் சமுதாய இறைப்பணி ஆற்றும் உத்தம   நிலையிலிருந்து பிறழ்ந்து தம்மிடமுள்ள வித்யா ஞானத்தை விற்று  வாழ வேண்டிய துர்நிலையைத்தான் இன்று காண்கின்றோம்!
தனக்காகவும் பணம் ஈட்டவும் ஜோதிடம் போன்ற தன் இறை  நுண்கலையைப் பயன்படுத்திடில் அது வீணான வாழ்க்கையே! தாம்  வறுமையில் உழன்றால் கூட, தன் தெய்வீக அறிவு சமுதாயத்தின்  அனைத்துப் பிரிவினருக்கும் சென்றடையும் வண்ணம் தியாக  சீலராய் மக்கள் சேவையை மகேசன் சேவையாய்ப் புரிகின்ற உத்தம  வாழ்க்கையை வாழ்ந்தால்தான் ஜோதிட, வேத, சாஸ்திர சக்திகள்  மனிதனுக்குப் பெறுதற்கரிய தீர்க தரிசனத்தைத் தரும்
பகுதான்ய வருடப் பூஜையை ஆரம்பிக்குமுன்னர் இவ்வருடப்  பிறப்பை பற்றிச் சற்றே அறிந்து கொள்ளுங்கள். திருக்கணித  முறைப்படி சூரிய கிரண மூர்த்தி மேஷராசியில் 13.4.1998 அன்று  பின்னிரவில் அதாவது 14.4.1998 அன்று சூரிய உதயத்திற்கு  முன்னரேயே விடியற்காலையில் 5.03 மணிக்கு பிரவேசிப்பதால்  பகுதான்ய தேவதாமூர்த்தி இந்நேரத்தில் எழுந்தருள்கின்றார். எனவே  14.4.1998 அன்று தீபாவளியை போல் விடியற்காலையிலேயே எழுந்து  5.03 மணிக்குப் பூஜையை தொடங்குதல் சிறப்புடையதாகும்.
மேலும் ஏனைய பகுதான்ய வருடப் பிறப்பு அம்சங்களையும் தெரிந்து கொண்டிடுக!

ஏன் இவ்வளவு விளக்கங்களை அளிக்கின்றோம் என்றால் எவ்வாறு  நம் குழந்தைக்குப் பெயர் சூட்டும் புண்ணியாவசன வைபவத்தில்  குழந்தையின் ஜனன விஷயங்களை ஹோம குண்டத்தின்  முன்னால் புனிதமான முறையில் படிக்கின்றோமோ, அதேபோல்,  தமிழ் புத்தாண்டன்று நம் இல்லத்தில் அடியெடுத்து வைக்கும்  பகுதான்ய தேவதாமுர்த்தி எழுந்தருள்கின்ற வைபவத்தன்று சகல  பஞ்சாங்க மற்றும் ஏனைய கால, யோகினி, விவாக சக்கர, திதி,  நேத்ர, ஜீவ மூர்த்தி, கிரஹமூர்த்திகளையும் கட்டியம் கூறி  பகுதான்ய மூர்த்தியை வழிபட்டு வரவேற்கின்றோம்.
நாமும் வருடத்தில் ஒரு நாளாவது அனைத்து  காலதேவமூர்த்திகளின் நாமங்களை உச்சரிப்பதால் நமக்கு  எத்தகைய அனுக்ரஹத்தைப் பெறுகிறோம் என்பதை வர்ணிக்க  இயலாது! பெறற்கரிய பாக்கியமிது!
இன்றைக்கும் குருவாயூர் போன்ற பழம் பெருங்கோயில்களில்  தினசரி பஞ்சாங்க படனம் அதாவது அன்றைய நாள், திதி  விளக்கங்கள் இறைச் சந்நதியில் காலையில் ஓதப் பெறும். இதைக்  கேட்கும் பாக்யத்தைப் பெறும் பக்தர்களுக்குக் காலபைரவரின் அருள்  கிட்டும்.
பஞ்சாங்கத்தைப் படிக்கத் தெரிந்தோர் ஒரு சிலரே! காலைக்  கஞ்சிக்கு வழிவகையின்றிக் கவலையுற்றிருக்கும் ஒரு ஏழை கூட  காதால் கேட்டால் புரிந்து கொள்ளும் வண்ணமும் சாதாரண நடுத்தர  வர்க்கத்தினரும் பஞ்சாங்க படனத்தின் தெய்வீக ரகசியங்களையும்  பலன்களையும் பெறும் பொருட்டும் ஸ்ரீஅகஸ்திய விஜயம் இதழில்  புத்தாண்டு விளக்கங்களையும், பஞ்சாங்க படன முறையையும்,  பூஜைகளையும் குருவருளால் மிகவும் எளிமைப்படுத்தித்  தந்துள்ளோம்!
எவ்வாறு ஈஸ்வர ஆண்டில் பல தெய்வாவதாரங்கள் சிறப்புடன்  எழுந்தருளினரோ, அதேபோல பகுதான்ய வருடத்திற்குரிய  சிறப்பம்சம்யாதெனில், தான்யவாச பூஜைக்கும், அன்னதான  வகைகளும், கலியுகத்தில் ஒற்றை காலில் நின்று வேதனையுறும்  தர்மதேவதையைப் ப்ரீதி செய்யும் வண்ணம் பகுத்துண்டு வாழ்கின்ற  தான தர்மப் பண்பாடு சிறக்கவும் நல்ல வாய்ப்புகள் உள்ளன!  பயன்படுத்திக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது!
புத்தாண்டன்று இயன்ற வரையில் இறைபக்தியிற் சிறந்து விளங்கும்  தக்க பெரியோர்களுடைய பஞ்சாங்க படன வைபவத்தில் கலந்து  கொள்க! கோயில்களில் நடைபெறும் சத்சங்க முறையிலான  பஞ்சாங்க படன பூஜையானது சாலச் சிறந்தது. கோயில்களில்  பஞ்சாங்க படனம் மாலையில் நிகழுமாயின் விடியற்காலையில்  தக்க உத்தமப் பெரியோர்களைக் கொண்டு இல்லத்திலேயே  பஞ்சாங்க படன முறையை மேற்கொண்டிடுக! மாலையில்  கோயிலுக்கும் சென்றிடலாம். ஏனையோர் ஸ்ரீ அகஸ்திய விஜயம்  இதழில் அளிக்கப்பட்டுள்ள இவ்வரிய பஞ்சாங்க படன  முறையையும் கடைப்பிடித்திடலாம்.

ஐந்து வித (பஞ்சாங்க) துதிகள்
திதியை போற்ற  - ஐஸ்வர்யம் கிட்டும்
வாரத்தை (நாளை)ப் போற்ற – தீர்கமான ஆயுளை பெறலாம்
நட்சத்திரத்தை போற்ற – கர்ம வினைகளும் பாவங்களும் அகலும்
யோகத்தை போற்ற – நோய்கள் தீரும்
கரணத்தை போற்ற – கார்ய சித்தி கூடும், எண்ணிய நற்காரியம்  நிறைவேறும்
வருடத்தின் பெயர் : பகுதான்யம்
நாள் : 14.4.1998 சித்திரை - 1
வருடப் பிறப்பு நேரம் : 13.4.1998 பின்னிரவு அதாவது 14.4.1998  விடியற்காலை 5.03 மணி (சென்னை அட்சராம்சத்திற்கேற்ப)
திதி – துவிதியை மூர்த்தி (கிருஷ்ணபட்சம் – தேய்பிறை)
நட்சத்திரம்: விசாக மூர்த்தி
யோகம் : சித்தி யோகம்
அமிர்தாதி யோகம் – மரணயோக தேவதா மூர்த்தி
கரணம் – கரம்
அயனம் – உத்தராயணம்
ருது- வஸந்த ருது
யோகினி தேவதையின் திசை – வடமேற்கு திசையோகினி
கிரஹ நிலைகள்
மேஷத்தில் – ஸ்ரீ சூரியபகவான்  & ஸ்ரீ செவ்வாய் பகவான்
சிம்மம் – ஸ்ரீ ராகு பகவான்
துலாம்- ஸ்ரீ சந்திர பகவான்
விருச்சிகம் – ஸ்ரீ புளூட்டோ பகவான்
மகரம் – ஸ்ரீ யுரேனஸ் பகவான், ஸ்ரீ நெப்டியூன் பகவான்
கும்பம் – ஸ்ரீ கேது பகவான், ஸ்ரீ குரு பகவான், ஸ்ரீ சுக்கிர பகவான்
மீனம் – ஸ்ரீ புதபகவான், ஸ்ரீ சனி பகவான்
பகுதான்ய வருடப் பிறப்பு – முதல் கட்ட பூஜை
ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளபடி 14.4.1998 செவ்வாயன்று  விடியற்காலை 5.03 மணிக்கு பகுதான்ய வருடம், பிறக்கின்றது  அல்லவா!
விழித்தெழுந்தவுடன் அவரவர் உள்ளங்கைகளை விரித்து பார்ப்பதே  சிறப்புடையது. நம் குரு மங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம  சுவாமிகள் நம் மூதாதையர்கள் வகுத்துத் தந்துள்ள இந்த கரதரிசன  முறையைக் கடைபிடிக்கும்படி பல வருடங்களாக வலியுறுத்தி  வருகின்றார்கள்!
உள்ளங்கையில் உள்ள ரேகைகளே நம் விதியின் வரைபடம்,  ஆயுளின் ஆகம நூல், வாழ்வின் விளக்க உரை, உயிரின் உரை  பொருள் ஆத்மாவின் ஜோதிக் குறிப்பு! தன்னைத் தானே   உணர்விக்கும் தன்மையைத் தருவதே கர தரிசனம்!
மும்மலர்க் கோட்ட வழிபாடு
பகுதான்ய வருடத்தில் மேலும் ஒரு சிறப்பான இரண்டாவது கர  தரிசன பூஜை சேர்கின்றது. தான்யம் என்றால் தானிய / உணவு  மணிகள் என்று மட்டும் பொருளல்ல. தாவரச் சத்துடைய பூ, பழம்  போன்ற அனைத்தும் தான்யங்களேயாகும்.
தாமரை, கொன்றை, சாமந்தி இம்மூன்றுமே பகுதான்யத்திற்குரிய  புனிதமான பூக்கள்! இல்லத்தில் உள்ள பெரிய பழுத்த (80/60  வயதுள்ளோர்) சுமங்கலியான பெண்மணி அனைவர்க்கும் முன்னரே  எழுந்து நீராடி புத்தாடை அல்லது தூய ஆடை உடுத்தித் தம்  உள்ளங்கைகளில் கொன்றை, தாமரை, சாமந்தியைத் தாங்கியவாறே,  ஏனையோர் விழித்து எழுகையில் அவர்கள் தூங்கி  எழுந்தவுடனேயே அவர்களின் கரங்களில் இம்மலர்களை இட்டு  பார்த்திடச் செய்திட வேண்டும். இது இரண்டாவது கர தரிசனம்.
கண்ணாடி மலர்க் காப்பு தரிசனம்
மூன்றாந் தரிசனமிது!
ஒரு தட்டு நிறைய கொன்றை, சாமந்தி, (முழுத்) தாமரை  மலர்களைப் பரப்பி அதனை ஒரு புதுக் கண்ணாடியின் முன்  வைத்திட வேண்டும். கண்ணாடியைப் பார்க்கையில் மலர்கள்  மட்டுமே நன்கு முழுதும் தெரியும்படி வரிசையாக அடுக்கி அலங்கரித்து வைத்திடுக! இக்கண்ணாடி வழிபாட்டின்  சிறப்பம்சங்களை ஸ்ரீ அகஸ்திய விஜயம் – ஏப்ரல் 1997 இதழில்  நன்கு விளக்கியுள்ளோம். அதாவது பகுதான்ய வருடப் பூஜையின்  முதல் கட்டமாக
முதலில் கர தரிசனம்
இரண்டாவதாக இல்லத்தின் பெரிய சுமங்கலியின்  கரங்களிலிருந்து பெற்ற மும்மலர்கோட்ட தரிசனம் (பூக்களின்  தரிசனம்)
இது சாத்யமில்லாவிடில் ஐந்து வயதுக்குட்பட்ட சிறுமியின்  உள்ளங்கைகளில் தாமரை, கொன்றை, சாமந்தி மலர்களை  வைத்தும் தரிசித்திடலாம்.
மூன்றாவதாக   கண்ணாடி மலர்க் காப்பு தரிசனம்
ஆகிய மூன்றும் விடியற்காலை பூஜைகளாகும். இதற்கு ஓரிரு  நிமிடங்கள் கூட ஆகாது. விழித்தெழிந்தவுடன் இம்மூன்றையும்  நிறைவேற்றிடலாம். இம்மூன்று கர தரிசனங்களுடன் அவரவர் குல  தெய்வம், இஷ்ட தெய்வம், மூதாதையர்கள், சற்குருவை நினைத்து  வணங்கிடுக.
இரண்டாம் கட்ட புத்தாண்டு பூஜை – பஞ்சாங்க படனம்
முதல் கட்டத்தின் மூன்று தரிசனங்களுக்குப் பிறகு பல் துலக்கி, நீராடி,  அவரவர் மரபுப்படி நெற்றிச் சின்னமணிந்து பூஜைக்கு அமர்ந்திடுக!  விநாயகர், குலதெய்வம், இஷ்டதெய்வம் பித்ருக்களைக் கை கூப்பித்  தொழுது, வீழ்ந்து வணங்கிடுக! இரு கைகளும் தலைக்குமேல் வரும்படி  ம்ருகீ முத்திரையில் சற்குருவிற்கு இருதய பூர்வமாக வணக்கம்  செலுத்தவும். சற்குருவை அடையாதோர் தாம் பெரிதும் போற்றுகின்ற  மஹானை, சித்தரை, ஞானியை, யோகியை சற்குருவாக எண்ணி வணங்கிடுக!
இனித் தொடர்வதே பஞ்சாங்க படனம்! அடுத்து வருகின்ற இதனை  இல்லங்களிலும் கோயில்களிலும் படித்திட இதுவே மிகச் சிறந்த  பஞ்சாங்க படனமாக அமைகின்றது.
புத்தாண்டு துவாதச நவகிரஹ சட்ட பூஜை
ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் உள்ள கிரஹ சஞ்சார  நிலைகளே விளக்குவதே துவாதச (பன்னிரெண்டு) நவகிரஹ சட்ட  பூஜை! பகுதான்ய வருடத்தில், ஒரு மரப் பலகையில்/தங்கம், வெள்ளி,  செப்பு தகட்டில் கோதுமை மாவினால் பகுதான்ய வருடத்திற்கான  நவகிரஹ சட்டத்தை வரைந்து கொள்ள வேண்டும். தங்க ஊசி/வெள்ளி  ஊசி/துளசிக் காம்பு கொண்டு தேனில் தோய்த்து சட்டத்தினுள்  கிரஹத்தின் பெயர்களைப் பொறித்து/எழுதி ஒன்பது நல்லெண்ணெய்  தீபங்களை நவகிரஹ சட்டத்தைச் சுற்றி ஏற்ற வேண்டும். தாமரைத்  தண்டுத் திரியே சிறப்புடையதாகும்.
பொன்னாலாகிய நாணயங்கள், பாத்திரம், தட்டு கொண்டு பூஜிப்பது  மிகவும் அற்புதமான பலன்களைத் தரும். எனவே பணக்காரர்கள்  இந்த துவாதச நவகிரஹ சட்டத்தைப் பொன் தட்டில் வரைந்து  கோயிலில் வைத்து ஏழை, நடுத்தர மக்களையும் அழைத்து  சத்சங்கப் பூஜையாக நிகழ்த்தினால் இதன் பலன்கள் யாவரையும்  சென்றடையுமல்லவா! அவரவர் வசதிக்கேற்ப அன்னம்,  ஆடைகள், நோட்டுப் புத்தகங்கள் போன்றவற்றை இந்த துவாதச  நவகிரஹ சக்கரச் சட்டத்திற்குப் படைத்து பூஜை முடிவில்  வறியோர்க்கு தானமாக அளித்திடில் இவ்வரிய பூஜையின் பலன்கள் ஏழை, நடுத்தரம், செல்வந்தர் என்ற பேதமின்றியும்  ஜாதி, சமய வேறுபாடின்றியும் அனைவருக்கும் சென்றடையும்  வண்ணம் மிகச் சிறந்த புத்தாண்டு வழிபாடாக ஆகின்றதல்லவா!
வசதியுள்ளோர் செப்பு அல்லது வெள்ளித் தகட்டில் இந்த துவாதச நவகிரஹச் சட்டத்தைப் பொறித்திடலாம்.  நடுத்தர மக்கள் வில்வம், சந்தன, மா, தேக்குப் பலகைகளில்  கோதுமை மாவினால் நவகிரஹச் சட்டத்தைக் கோலமாக இட்டு  வரைந்து இதனுள் துளஸிக் காம்பினால் அந்தந்தக் கட்டத்தில்  கிரஹத்தின் பெயர்களை எழுதிட வேண்டும். தேனால் எழுதுவது  கண்ணுக்குச் சரியாகத் தெரியவில்லையே என்று எண்ணாதீர்கள். தேன் கொண்டு, அதாவது அமிர்தத்தினால் கிரஹத்தின் பெயர்கள்  புனிதமான முறையில் எழுதப்பட வேண்டும் என்பதே  முக்கியமானதாகும்
மிகவும் வறுமையில் வாழ்வோர் என்ன செய்வது? இவர்களுக்கு  பலகையும் கோதுமை மாவும் துளஸியும் அகல் விளக்குகளும்  நல்லெண்ணையும் அளிக்க வேண்டியது வசதியுடையோரின்  கடமையாகும்
பொன்/வெள்ளி/செப்புத் தகட்டில் பொறித்தல், விசேஷமான  மரப்பலகைகளில் கோதுமை மாவினால் நவகிரஹச் சட்டம்  வரைந்து உட்கட்டங்களில் துளஸிக் காம்பினால் கிரஹத்தின்  பெயர்களை எழுதுதல் இதுவே முதல் ஏற்பாடு!
பிறகு நவகிரஹச் சட்டத்தின் எட்டு திக்குகளிலும் மேற்புறமும்  ஒன்பது அகல் விளக்குகளில் தாமரைத் தண்டுத் திரியிட்டு  நல்லெண்ணெய் தீபமேற்ற வேண்டும். பெரியோர்கள் குறிப்பாக  80/70/60 வயது கடந்த பழுத்த சுமங்கலியின் திருக்கரங்களால்  ஏற்றுவது சிறப்புடையது. இத்தகைய வாய்ப்பு உங்கள்  இல்லத்தில் கிட்டாவிடில், அக்கம்பக்கத்து வீடுகளில் உள்ள  இல்லறப் பெண்மணியைக் கொண்டு ஜாதி, சமய பேதமின்றி,  மங்களகரமான விளக்குகளை ஏற்றிடுக! இதன் பிறகு அவரவர்  குடும்ப வழக்கிற்கேற்ப பிள்ளையார், முருகன், அம்பிகை, சிவன்,  விஷ்ணு துதிகளை/அஷ்டோத்திர/ஸஹஸ்ரநாம/மந்திரங்களை  ஓதி அபிஷேக, ஆராதனை, அர்ச்சனை பிரசாதப் படைப்புடன்  பூஜையை நிறைவேற்றிடுக! அன்னதானத்துடத்தான் புத்தாண்டு  பூஜை பரிபூரணமடைகின்றது. அவரவர் வசதிகேற்ப குறைந்தது  (குருவிற்குரிய எண்ணான) 12, 21, 30.. என்றவாறாக உணவுப்  பொட்டலங்களை அளித்து தர்மதேவதைகளின் அனுகிரஹத்தைப்  பெற்றிடுவீர்களாக!

திருநாவலூரில் சூர்ய பூஜை

திருநாவலூரில் சூரிய பூஜை
(6.4.1998 முதல் 10.4.1998 வரை)
சிவலிங்கத்தைத் தம் சூரிய கிரணங்களால் தழுவி சூரிய பகவான்  நிகழ்த்தும் பூஜை
மனிதனாற் பெற முடியாத லிங்கத்தின் தெய்வீக சக்திகளை சூரிய  பகவான் பெற்றுத் தரும் அற்புதம்
லிங்கத்தின் மேல் சூரிய கிரணங்கள் பட்டு பிரதிபலித்து அவை நம்  உடலில் பட்டிட நாம் என்னே தவம் செய்திருக்க வேண்டும்!
இப்பூவுலகிற்கு மட்டுமல்லாது சர்வலோகங்களுக்கும் ஒளியை தரும்  சூரிய பகவானே பலகோடி யுகங்கள் தவமிருந்து தாமே தம்  கிரணங்களால் சிவலிங்கத்தை வழிபடும் பாக்யத்தைப்  பெற்றாரென்றால் அவர் முன் நாம் எம்மாத்திரம்? கலியுகத்தில் கூடத்  தம் பூஜையை நிறுத்தாது வருடத்தில் குறித்த தினங்களில் இன்றும்  பல கோயில்களில் அவர் செய்கின்ற சூரிய பூஜை நிகழ்கின்றதே!  இதனை எவ்வளவு பேர்கள் அறிவார்கள்?

திருநாவலூர்

கோடானு கோடி மைல்களைக் கடந்து ஓடோடி வந்து சூரிய பகவானே  சிவலிங்கத்தைப் பூஜிக்கின்றாரென்றால் இவ்வற்புதமான காட்சியை  நாம் கண்டு களிக்க வேண்டாமா? இத்தகைய தெய்வீக ரகசியங்கள்  தமிழ்நாட்டுக் கோயில்களில் நிறைந்து கிடக்கின்றன. முக்தியோ,  மோட்சமோ பெற வேறு எங்கும் போக வேண்டாம்! தமிழகத்து  ஆலயங்களை சற்குருவுடன் முறையாகச் சுற்றி வந்தாலே போதும்,  உத்தம இறைநிலைகளை எளிதில் அடைந்திடலாமே!
இவ்வகையில் திண்டிவனம் – உளுந்தூர் பேட்டை நெடுஞ்சாலையில்  கெடிலம் பஸ் – ஸ்டாப்பில் இருந்து இடப்புறம் செல்லும் கடலூர் –  பண்ருட்டி சாலையில் 2 கி.மீ. தொலைவில் உள்ளதே திருநாவலூர்  ஊரிலுள்ள தொன்மையான ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் சிவாலயம்! நாவலூர்  என்றும் திருநாமநல்லூர் என்றும் திருநாவலூர் என்றும்  அழைக்கப்படுகின்றது.
மிகவும் சக்தி வாய்ந்த இச்சிவத் தலத்தில் பங்குனி 23 முதல் 27 தேதி  வரை காலையில் சூரியோதய நேரத்தில் ஸ்ரீ பக்தஜனேஸ்வர  சிவலிங்கத்தின்பால் சூரிய கிரணங்கள் படிகின்றன. இது மட்டுமா,  சிவலிங்கத்தின் மேல் சூரிய கிரணங்கள் பட்ட சில நிமிடங்களிலேயே  அம்பிகையின் மீதும் சூரிய கிரணங்கள் படுவதாக இவ்வூர்ப்  பெரியோர்கள் உவப்புடன் கூறுகின்றனர். என்னே பாக்யம்! வாழ்நாளில்  காணுதற்கரிய அற்புதக் காட்சியல்லவா!
உற்ற நிலை தரும் பெற்றோர் சேவை
தண்டல மகரிஷி என்பார் தம் தாய் தந்தையர்க்குப் பெருஞ்சேவை  புரிந்து வந்தார். அவருடைய அன்னையர் இளமையிலேயே குறைவிலா  இறைபக்தியைக் கொண்டு தான தர்மங்களை மேற்கொண்டு மிகச்  சிறந்த தெய்வீக வாழ்க்கையாகத் தம் கணவருக்குப் பணிவிடை செய்து  வந்து தீர்க சுமங்கலியாய் நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்தார்.
இவ்வாறாக 100 வயதைக் கடந்த தம் பெற்றோர்களுக்கே தண்டல  மஹரிஷி அரும்பெரும் சரீர சேவை புரிந்து வந்தார். தள்ளாத  வயதிலும் தண்டல மஹரிஷியின் தாயார் தன் ஆருயிர்க்  கணவனுக்குத் தினசரி பாத பூஜை செய்து வருவதைக் கைவிடாது  தொடர்ந்தார். 85 ஆண்டுகளுக்கும் மேலாக தினசரி பாதபூஜை  செய்வதென்றால் என்னே பாக்யம்? இத்தகைய பழுத்த சுமங்கலியை, வேறு எந்த லோகங்களிலும் கிடைக்கப் பெறாத இவ்வரிய  பாக்கியத்தைத் தேடி இந்திராதி தேவாதி தேவர்களும் ஓடோடி வந்து  தண்டல மஹரிஷியின் தாய் தந்தையரை வணங்கி அவர்களுக்குப்  பாதபூஜை செய்வாராயினர்.
தண்டல மஹரிஷியும் ஐந்து வயதிலிருந்தே தம் பெற்றோர்களுக்குப்  பாதபூஜை செய்து பணிவிடையும் புரிந்து வந்தமையினால், 80  ஆண்டுகளுக்கும் மேலாகத் தினந்தோறும் பெற்றோர்களின் திருவடிப்  பூஜை நிகழ்த்தியமையின் தண்டல மஹரிஷியின் வதனமே  அபரிமிதமான தெய்வீக தேஜஸைப் பெற்று மிளிர்ந்தது. 85 வயதிலும்  தாய், தந்தையருக்குப் பணிவிடை புரிவதென்றால் எத்தகைய  பாக்யமது!
ஒரு நாள்… அன்று தண்டல மஹரிஷிக்குச் சோதனை போலும்!

ஸ்ரீமனோன்மணி அம்பிகை
திருநாவலூர்

இறைவன் ஞானியரையும், யோகியரையும் மஹரிஷிகளையும்  சோதனை செய்வதாலன்றோ அவர்கள் தெய்வீகத்தில் ஸ்புடம் போட்ட  பொன்னாய்ப் பிரகாசிக்கின்றார்கள்!
வழக்கம்போல் விடியற்காலையில் எழுந்த தண்டல மஹரிஷி  தந்தைக்குக் காலைக் கடன்கல் கழித்தல், சந்தி பூஜைகள்  போன்றவற்றை நிறைவேற்றிப் பணிவிடை செய்கையில்…
அன்று உடல் ஆரோக்கியமின்மையால் தண்டல மஹரிஷிக்கு  விரைவாகச் செயலாற்ற முடியவில்லை! உடல் தளர்ந்து சோர்ந்து  பன்முறை கீழே விழுந்தும் அவர் மன உறுதியைத் தளரவிடாது தாய்,  தந்தைக்குச் சேவைகள் ஆற்றலானார்.
மேலும் தண்டல மஹரிஷியின் தாத்தாவிற்கு (தந்தையின் தந்தை)  சிராத்தத் திதியும் அன்றே கூடிட சந்தி வழிபாடு, தர்ப்பணம், சிராத்தச்  சடங்குகள், ஹோமம் ஆகியவற்றிற்குத் தயாராக வேண்டுமே!
ஆனால் சோதனையாக… சூரிய உதய நேரம் இன்றும் சில நிமிடங்களில் வரவிருக்க…
இன்னமுமே பிரம்ம முகூர்த்த வாழிபாடுகள் முடியாத நிலையில்..
அவருடைய பெற்றோர்களும் பிரம்ம முகூர்த்த பூஜைகளை முடித்தாக  வேண்டும்..
இதற்குள் சூரியன் வந்து விட்டால்..
சூரியன் தோன்றிய பின் சந்தி பூஜையை செய்ய முடியாதே!
தண்டல மஹரிஷி சற்றே மனங்கலங்கினார். இதுவரையில்  இறைவனிடம் எதையும் கேட்டுப் பெறாதவர் இன்று சற்றே சிந்தித்தார்.
“இறைவா! என்ன சோதனையிது! எம் தந்தையார் 100 ஆண்டுகளுக்கு  மேலாக தினந்தோறும் விடாது செய்து வந்த சந்தி, பிரம்ம முகூர்த்த  வழிபாடுகள் இன்று தடைப்பட்டு விடும் போலிருக்கிறதே! அதற்கு நான்  காரணமாக இருந்தால் பெரும் பாவமன்றோ! அடியேனும் 85  ஆண்டுகளுக்கு மேலாகத் தினந்தோறும் ஆற்றி வருகின்ற பிரம்ம  முகூர்த்த, சந்தி வழிபாடுகள் இன்று தடையாகும் போலிருக்கிறதே! ஒரு வேளை சூரிய பகவான் சற்று தாமதித்து வந்தால், எவ்வளவு  நன்றாக இருக்கும்! ”என்று அவர் எண்ணினாரோ இல்லையோ..
அந்த எண்ணத்தினால் சுரியனின் சுழல் கதி தாமதப்பட்டது!  இத்தனைக்கும் தண்டல மஹரிஷி இறைவனிடம் எதையும் வேண்டவில்லை! சூரியன் சற்றே தாமதித்து வந்தால் நன்றாக  இருக்கும் என்ற எண்ணமே… அவர் 85 ஆண்டுகளுக்கு மேலாகத் தன்  பெற்றோர்களுக்குச் செய்து வந்த பாத பூஜையின் மஹிமையினால்.. இறையருள் கூடிட… அடுத்த க்ஷணத்தில்
சூரிய பகவானின் சுழல் கதி வேகம் குறைவலாயிற்று! சூரிய மூர்த்தி  ஆச்சரியமடைந்தவராய் எங்கு தன் சப்த ரதம் தடைப்பட்டதோ அங்கு உடனே கீழிறங்கி பூலோகத்திற்கு வர…
ஆங்கே.. ஒரு நாவல் மரத்தடியில்.. தண்டல மஹரிஷியின் பெற்றோர்கள், தண்டல மஹரிஷி மூவரின்  சந்தி வழிபாடுகள், பிரம்ம முகூர்த்த வழிபாடுகளை முடித்து சிவபூஜை  செய்வதை கண்டு ஆனந்தமடைந்தார்.
தாமும் புளகாங்கிதமடைந்தவராய் அவ்விடதிலேயே அம்மூவருக்கும்  பாத பூஜை செய்திட…
ஸ்ரீ பக்தஜனேஸ்வரராய் லிங்க மூர்த்தியாய் சிவபெருமான்  காட்சியளித்து அருள்பாலித்தார்!
சூரிய பகவானும் அவர்கட்குப் பாத பூஜை செய்து தம் ஒளிக்கரங்களால்  கிரணங்களைப் பெய்து சிவலிங்கத்தையும் அம்பிகையையும், ஒரு சேர பூஜிக்கும் பாக்கியத்தை அடைந்து, இதனால் சாயா ஸ்வர்ச்சலாம்பா  ஆகிய தம் பத்னி தேவிகளுடன் இணையும் ஆசியையும் பெற்றார். இது  நிகழ்ந்த தலமே திருநாவலூர்த் திருத்தலம்!
இத்திருத்தலத்தில் வரும் பங்குனி 23 முதல் 27 தேதி வரை  சிவலிங்கத்தின் மேல் சூரிய கிரணங்கள் பொழிகின்றன! இந்நாளில் ஸ்ரீ பக்தஜனேஸ்வர சிவலிங்க மூர்த்திக்குத் தேனபிஷேகமும், தேனில்  தோய்ந்த பலாப்பழங்களால் அபிஷேகமும் செய்து பிரசாதத்தை  ஏழைக் குழந்தைகளுக்கும் பெரியோர்க்கும் தானமாக அளித்திட..
பலவிதமான தடங்கல்களால் வியாபாரம் அலுவலகம், வாழ்வில்  முன்னேற்றம் பெற இயலாதோர், திருமணம் ஆகாதோர், வேலை  கிட்டாதோர் ஆகியோருடைய இடையூறுகள் தீர இறையருள்  கூடிவரும். கடும் முயற்சி, நேர்மை, உழைப்பு இருந்தும் வாழ்வில்  முன்னேற இயலாதோர்க்கு இது நல்ல வழிகளைக் காட்டும். இங்கு  பெரியோர்களுக்கும் பாத பூஜை செய்திடில் தண்டல மஹரிஷியே  ஏற்று அருளாசி வழங்கிடுவார். பெற்றோர்க்குப் பாத பூஜை செய்யாத  குற்றங்கள் நிவர்த்தி பெறும்.

அடிமை கண்ட ஆனந்தம்

பல ஆண்டுகளுக்கு முன், கலியுகத்தில் கூட இத்தகைய குருகுலம்  அமையுமா என்று பலரும் வியக்குமளவிற்குத் தம் சற்குருநாதராம்  ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகளிடம் நேரடியான  குருகுலவாசத்தைப் பெற்றவரே ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்!
குடில் அமைத்து, மரவுரி தரித்து, காவியுடுத்து, காஷாயம் பூண்டு,  கமண்டலந் தாங்கி, பிட்சை எடுத்து, கைவல்ய போதங்கொண்ட  குருகுலவாசமா அது? இல்லையில்லை! கலியுக நடைமுறை  வாழ்க்கைக்கேற்பக் கடும் வெயிலிலும், மழையிலும், கால்களில்  செருப்பின்றி, அரைடிராயர் அணிந்த சிறுவனாய், உடலை வருத்தி,  இறைப்பணிகளுக்காக உழைத்து, பாரதமெங்கும், முக்கியமானத்  திருத்தலங்களில் யாத்திரை வந்ததுடனன்றி, தாமே விறகு பொறுக்கி,  அடுப்பமைத்து, பாத்திரங்களைக் கழுவி, அடுப்பில் ஏற்றிச் சமைத்து  அன்னதானமிடும் தெய்வீகப் பக்குவத்தையும் குருவிடமிருந்து  நேரடியாகக் கற்றுணர்ந்த உன்னத குருகுலம்!
பல தீபப் பெருவிழாக்களில் திருஅண்ணாமலையில் கிரிவலப்  பாதையிலும், பல சத்திரங்களிலும் இறையடியார்களுடைய மலக்  கழிப்புகளைச் சுமந்து/சுத்தி செய்து பல இடங்களிலும் பக்தர்கள்  நடந்து/அமர்ந்து கூடும் வண்ணம் கிரிவலப் பாதையை நன்கு  சுத்தப்படுத்தும் அரிய இறைத் திருப்பணியை சிறுபிராயத்திலேயே  எவ்வித மனக் கசப்புமின்றிச் செய்ய வைத்த அரிய குரு குலம்!
கொல்லிமலை, பொதியமலை, இமயமலை, மானசரோவர் என  எத்தனையோ மலைப் பகுதிகளில் பயின்ற/யோக தியான நிலைகள்  அன்னதானம், கம்பளி தானம் செய்த இறையனுபூதிகள்  எத்தனையெத்தனை! புதர்களும், பாம்புகளும் மண்டிக் கிடந்த  நூற்றுக்கணக்கான பழைய கோயில்களில் செய்த உழவார  திருப்பணிகளில் கிட்டிய (குருகுலவாசம்) பேரின்பத்தை என் சொல்வது!
வாருங்கள்! அடிமை கண்ட ஆனந்தத்தில் அனைத்தையும் படித்து  கண்டு களித்து, அறிந்து, தெளிந்து, உய்த்து சற்குருவின் மகிமையை  உணர்ந்திடுவோம்!
முதல் நாள் அந்த வெள்ளைக்கார ஜட்ஜ் இதே சாரியட்டில்தான் வந்து இறங்கினார்.
“வேர் ஈஸ் த ஓல்ட் பைராகி ?” அதிகார தோரணையில் ஓங்கிய  குரலுடன் கீழிறங்கி வந்தார்!
அவர் தேடியது நம் கோவணாண்டிப் பெரியவரைத்தான்!
ஹைகோர்ட்டில் யாரோ ராயபுரம் அங்காளி கோயில் பெரியவரைப்  பற்றிச் சொல்லிட, பல மாதங்களாகத் தேடி வந்த ஒரு மஹானை,  சித்தனை அவர் இருக்குமிடந் தேடி செல்வதே பாரத பண்பாடென  நேரடியாகத் தேடி வந்து விட்டார் போலும்!
ஏதொ பெரிய ஜட்ஜாக இருந்து ரிடையராகித் தன் சொந்த நாட்டிற்குத்  திரும்பியும்… ஏதேதோ வாழ்க்கைப் பிரச்சனைகள்!
எங்கும் எதிலும் பரிஹாரம் கிடைக்கவில்லை! இந்தியாவில் பல  மாநிலங்களில் பெரிய ஜட்ஜாக இருந்தவர்… என்ன பிரயோஜனம்?
இரு கைகளும் செயலிழந்ததுதான் மிச்சம்! அந்தக் காலத்திலேயே  லட்ச லட்சமாய்ச் செலவழித்து, சைனா, எகிப்து, இந்தோனேஷியா, ஜப்பான், ஜெர்மனி எனப் பல நாடுகளின் வைத்ய முறைகளைக்  கடைபிடித்தும்… ஒன்றும் குணமடைந்த பாடில்லை!
எத்தனையோ நாடுகளில் வைத்தியம் பார்த்தும் சரியாகாது, ஒரு நாள்  தம்முடைய (பழைய) ஹைகோர்ட் நண்பர் ஒருவர் ராயபுரம்  அங்காளியம்மன் கோயில் மண்டப கோவணாண்டிச் சித்தரைப் பற்றி  கூறியது நினைவிற்கு வரவே… கப்பலேறி இங்கு ஓடோடி வந்து விட்டார்!
அப்போது கோயிலின் முன்மண்டபம் தற்போதைய சாலை வரை சற்று  விரிந்திருந்தது! குடுகுடுவென்று இறங்கி ஓடிவந்த ஜட்ஜ் மண்டபத்தில்  கோவணாண்டிப் பெரியவரைத் தேடிட அங்காளியைச் சுத்தாமல்  எவரும் தன்னை வந்து பார்ப்பதை விரும்பாத பெரியவர் தோன்றி, பல  மனித வடிவங்களில், “அவரா, அங்கே இருக்கார், இங்கே இருக்கார்...”,  என்று அலைக்கழித்துச் சுற்றிவரச் செய்திட.. அவரும் அங்காளியை  வணங்கியவாறே சுற்றிச் சுற்றி வந்து களைப்படைந்து முன் மண்டபத்  தூண் அருகே வந்தமர்ந்தார்.
கூட வந்த சேவகர்களோ ஒரு வழியாய் அங்குமிங்குமலைந்து  பாவாடைராயன் சந்நதி அருகே அமர்ந்து விட்டார்கள்!
நடுங்கிய கரங்களுடன் பதை பதைப்புடன் அசதியில் சாய்ந்த அவர்  சற்றே தலையைத் தூக்கிப் பார்த்திட.. எதிரே பெரியவர் அமர்ந்திருந்தார்!
அவருக்குத் தூக்கி வாரிப்போட்டது!
அவருக்கு என்ன தோன்றியதோ என்னவோ, ஜட்ஜ் சாஷ்டாங்கமாகப்  பெரியவர் காலில் விழுந்தார்!
பெரியவர் சற்று நகர்ந்து, “இத பாரு நயினா! இது அங்காளியோட இடம்!  இங்க அங்காளி ஆத்தாவைத்தான் கும்படணும்! அது மட்டுமில்ல,  வைத்யத்துக்குன்னு நீ சுத்தின தாய்லாந்து, ஜப்பான், சைனா, ஈஜிப்டு,  ஜெர்மனி, திபேத் எல்லா இடத்துலயும் இந்த அங்காளிதான் பரப்ரம்மம்  மாதிரி ஆட்சி செய்யறா..”, என்று சொல்லியவாறே திடீரென்று  ஆங்கிலத்தில் பேசலானார்!
ஜட்ஜ் கப்சிப் என்று ஆகிவிட்டார்!
ஏனென்றால் அவர் எங்கெங்கோ போய் வந்த வண்டவாளமெல்லாம்  இங்கு வெளியாகின்றதே!
மந்திரத்தில் கட்டுண்டவர்போல் பெரியவர் பேசியதைக் கேட்டுக்  கொண்டிருந்த ஜட்ஜ் பேரமைதியுடன் அமர்ந்திருந்தார். இப்படி  அமைதியுடன், சாந்தத்துடன் ஒரு கால் மணி நேரமாவது அவர்  வாழ்க்கையில் இது வரையில் உட்கார்ந்ததில்லை!
இங்கு பைசா செலவில்லாமல் அமைதி கிடைக்கிறதே! வியாதி  போகாவிட்டாலும் பரவாயில்லை, இந்தப் பெரியவருக்கு முன்னால்  உட்கார்ந்தால் மன நிம்மதி நம்மைத் தேடிவருகிறதே!
“போனாப் போவுது! நீ நாளைக்கு இதே டயத்துக்கு இதே மாதிரி வந்துடு…  சரியா! ” பெரியவர் நறுக்கென்று சொல்லி எழுந்து விட்டார்!
அந்த ஜட்ஜ்தான் இன்று வந்திருந்தார்!
அவருடைய இருகைகளும் நன்கு உறுதியாக இருப்பதாக  வெளிப்பார்வைக்குத் தோன்றினாலும் கிட்டத்தட்ட செயல்படாத  நிலையில் தான் அவை இருந்தன. இதற்கு காரணம் அவர் ஜோபியில்  இருந்த தங்கபேனா தான்! அந்த பேனாவைத் தான் சிறுவன், எதிரில்  இருந்த வாழையிலையில் வைக்க சொல்லி சைகை காட்டினான்.
அதை விட்டதும்தான் நோயும் அவரை விட்டு விட்டது! இதனால்  எத்தனை ஆண்டுகள் அவர் அவஸ்தைப் பட்டார் தெரியுமா? அவர்  பட்ட துன்பங்களைச் சொல்லி மாளாது!
ஜட்ஜ் தன்னுடைய தங்க பேனாவை வாழை இலையில் வைத்தவுடன்  நோய் தீர்ந்த குதூகலதுடனேயே அவரை உள்ளே சென்று  அங்காளபரமேஸ்வரியைத் தரிசித்து வலம் வருமாறு சிறுவன் சைகை  காட்டிடவே…
அவர் கோயிலின் உள்ளே சென்றதும்.. விடுவிடு என்று சிறுவன் இடத்தைக் காலி செய்து விட்டான்!
மறக்காமல் வாழையிலையில் அந்த தங்கப் பேனாவைச் சுருட்டிக்  கொண்டான், பெரியவரின் எச்சரிக்கைகள் நிறைந்த அறிவுரையின்படி!
ஒரு புறம் ஜட்ஜ் அங்காளியைச் சுற்றிவர… மறுபுறம் சிறுவன் ஜட்ஜின் கண்களில் படாமல் பெரியவரைத் தேடி  தேடிச் சுற்றி வந்தான்.
கோயிலில் பெரியவரைக் காணோம், என்ற முடிவிற்கு வந்த சிறுவன்  வெளியே வந்திட…
எதிரே பெரியவர் வேகவேகமாக நடந்து செல்வது போலிருந்தது! சிறுவன் கையில் வாழையிலைப் பொட்டலத்தைக் கெட்டியாகப்  பிடித்துக் கொண்டு விரைந்து….
ஓடினான், ஓடினான், கடற்கரை ஓரத்துக்கே ஓடிவந்து விட்டான்!
ஆம், கோவணாண்டிப் பெரியவர் சிறுவனுக்குப் போக்கு காட்டி  கொண்டே, மிக விரைவாக எட்டி எட்டி நடந்து அவனை கடற்கரைக்கே  இழுத்து வந்து விட்டார்!
திருஅண்ணாமலையில் பலமுறை, கிரிவலத்தில் அவருடைய  வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் திணறியது அவனுக்கு ஞாபகம்  வந்தது!
சிறுவன் அவரைத் துரத்தி கொண்டு ஓடினான்! ஏனென்றால் அவர்  மிகவும் விரைவாக நடப்பது போலிருக்க, அவரை நாலே எட்டில்  பாய்ந்து பிடித்து விடலாம் என்று எண்ணிய சிறுவன் விரைந்து ஓடிட,  இருவருக்குமிடையில் உள்ள இடைவெளி சற்றும் குறைவதாகவே  தெரியவில்லை! சிறுவனுக்கு ஒரே ஆச்சரியம்!
“இது ஏதோ கூத்துதான், காரண காரிய மில்லாமல் வாத்யார் இப்படி  ஓட மாட்டார்! ” என்று ஒரு வழியாக நல்ல முடிவிற்கு வந்தான் சிறுவன்!
வேகமாக முதலில் சென்ற பெரியவர் கடற்கரையில் அமர்ந்தார்.
“ஏண்டா, இது மெரீனா மாதிரி இல்ல போலிருக்கே!”
மேலும் கீழும் மூச்சிரைத்ததால் சிறுவனால் பேச முடியவில்லை!  ஆனால் பெரியவரோ அதனை கண்டு கொள்ளவில்லை! அவரோ  கடற்கரையைப் பார்த்தவாறு நின்று கொண்டிருந்தார்!
“இத பாருடா, பின்னாடி இருபது தப்படி நடந்து போய், வேகமா பௌலர்  (Bowler) மாதிரி ஓடி வந்து, நீ கையில வச்சுருக்கற தங்கப் பேனாவைக்  கடலுக்குள்ள தூர எறிஞ்சுடனும்! எவ்வளவு தூரத்துக்குத் தூக்கி எறிய  முடியுமோ அவ்வளவு தூரம் எறிஞ்சுடு!”
“இதற்குத்தான் தங்கப் பேனாவை இவ்வளவு பத்திரமாக கொண்டு  வந்தோமா!” என்ற நினைப்புடன் சிறுவனும் அவ்வாறே செய்தான். உண்மையிலேயே பெரிய கல்லை  விட்டு எறிந்தாற் போல் பேனாவும் கடலுக்குள் எங்கேயோ போய்  விழுந்தது! பெரியவர் சொன்னது போல் சிறுவனும் கடல் நீரில் நன்றாகக்  கைகளைக் கழுவிக் கொண்டான்!
“ உலகத்த விட்டு ஒரு பெரிய கர்மம் தொலைஞ்சுதுடா!”
அந்த தங்கப் பேனாவைப் பற்றியா பெரியவர் சொல்கிறார்!
“நீ என்னன்னு கேக்கறத்துக்கு முன்னாடியே, நானா அந்தப் பேனாவை  பத்தி சொல்லிடறேனே! எங்களுக்கு ஜாதி, மத வேறுபாடு கெடயாதுடா! சித்தனுக்கு உள்நாடு,  வெளிநாடுன்னு பேதமும் இல்லை! ஆண், பெண், ஆடு, மாடு, செடிங்கற  வித்யாசமும் கெடயாது! ஏன்னா புல், பூண்டுலேந்து… மனுஷங்க,  தேவருங்க வரைக்கும் எல்லாத்துக்கும் சித்தனால முக்தி தர முடியும். ஏன் அகஸ்திய சித்தரே ரொம்பவும் அடக்கத்தோட, ஸ்ரீராமருக்கே,  மந்திர உபதேசம் தந்திருக்காரே! எல்லாரோட மனசையும் உள்ளத்தையும் எக்ஸ்ரே பண்ர சக்தி  இருக்கறவங்களுக்கு எப்படி இந்த பேதமெல்லாம் இருக்கும்! நாங்க  நினைச்சா இந்த உலகத்துல மட்டுமில்லடா, இந்த பிரபஞ்சத்துல எந்த  இடத்துக்கும் போக முடியும்! ஏன், செவ்வாய் கிரஹத்துல பத்தாயிரம்,  இருபதாயிரம் டிகிடி உஷ்ணம்னு சொல்றாங்கலே, அடியேன் கடவுள்  அருளால் இதே கோவணாண்டியாட்டம் அங்கே போய் நிக்க முடியும்! ஆனா….!”
பெரியவர் சற்றே நிறுத்தினார்!
“என்ன இது! எனக்கு சித்தி முக்தியெல்லாம் ஒண்ணும் தெரியாதுடா!  ஏதோ ஏழைக்கு நம்மால முடிஞ்ச வரைக்கும் சோறு போடணும்,  கோயில்ல துப்புரவு செய்யணும், இந்த மாதிரி குரு சொல்லறதைச்  செஞ்சுகிட்டே வந்தா அவரா பாத்து மோட்சமோ, முக்தியோ ஏதாச்சும்  பாத்து கொடுப்பார்னு சொல்வாரே! எப்போதாவதுதான் தன்னை  சித்தன்னு சொல்லிப்பாரு…இவரு இப்ப இப்படிச் சொல்றது ரொம்ப  ஆச்சரியமாயிடுக்கே..!” என்று சிறுவன் நினைப்பதற்குள்….
“ஆனா… இத பாருடா… இதெல்லாம் சொல்லி காட்டறதுக்கோ, செஞ்சு  காட்டறதுக்கோ நாங்க இங்க பூலோகத்துக்கு வரலை! எங்க குரு  நெனைச்சாத்தான் அடியேன் இப்படியெல்லாம் செய்ய முடியும்! நானா  எதுவும் செய்ய முடியாது!”
“இப்ப தங்க பேனா பத்திச் சொல்ல வந்தேனா…. எங்கேயோ டாபிக்  மாறிடுச்சுல்ல!”
“ நம்ம வெள்ளைகார ஜட்ஜ் நல்ல குடும்பத்துல வந்தவர்தான். ஆனா,  அந்த ஜட்ஜ் இந்தப் பேனாவை வச்சுகிட்டு ஆயிரம் பேருக்கு மேல  தூக்கு தண்டனைத் தீர்ப்பு எழுதியிருக்காருடா!...”
பெரியவர் மௌனமானார்!
சிறுவன் திகைத்தான். “தூக்கு தண்டனை போட்ட பேனாவா! நல்ல  வேளை நம்ப தொடாம இருந்தோம்!”
“ஜட்ஜுன்னா அவரோட வேலை தீர்ப்பு எழுதறதுதான்னு தோணுதுல்ல!  மேலிடத்துத் தொந்தரவு, அரசியல் பிரச்னை, சந்தர்ப்ப  சாட்சியங்களினால், சத்யத்துக்கு விரோதமா, அந்த ஜட்ஜ் நெறய தூக்கு  தண்டனை எழுதிப்புட்டாரு! அதுக்குத்தாண்டா இந்த பதினஞ்சு வருஷ  வியாதி!”
“ஆனா மனுஷன் இப்ப நல்லாவே திருந்திட்டான்! அந்தத் தங்க  பேனாவை வச்சுகிட்டு அலைஞ்ச வரைக்கும் அவனுக்குப் பிரச்னைதான்! எப்ப அதை அங்காளி கிட்ட ஒப்படைச்சானோ அப்பவே  அவனுக்கு விடிவு காலம் வந்துடிச்சு! எத்தனை ரௌடியா, காமுகனா, ரொம்ப மட்டமான வாழ்க்கை  ஒருத்தன் வாழ்ந்தாக் கூட, உண்மையிலேயே மனம் திருந்தி அதுக்கான  தண்டனைகளை மனப் பக்குவத்தோட ஏத்துக்கிட்டு வாழ  ஆரம்பிச்சுட்டான்னா அவனுக்கு ஈஸியா நல்ல நிலை நிச்சயமாக  கிடைக்க ஆண்டவனே அனுக்ரஹம் பண்ணுவான்!”
“ஒண்ணு யோசிச்சியா….. கடைசி வரைக்கும் அந்த தங்கப் பேனாவை  நான் தொடவேயில்லை. உன்னையும் தொட விடவில்லை! ஏன்னா  தங்கத்து மேல ஆசை வந்துச்சுன்னா லேசுல போகாது! நீனா  சம்பாதிச்சு நகை போட்டுக்கோ! வேண்டாம்னு சொல்லலை! ஆனா  ஓசில, உனக்கு பாத்யதை இல்லாம தங்கத்தைத் தொடாதே!  மனசாட்சிக்கு விரோதமா தீர்ப்பெழுதின பேனா மனுஷனையே  உலுக்கி எடுத்துடும்!”
“பொய்ச் சாட்சியங்கள் அந்த மாதிரி நல்ல வலுவா இருந்து  மனசாட்சிக்கு விரோதமா தீர்ப்பு எழுத வேண்டிய கட்டாயம் வந்தா  என்ன செய்யறது!.... பேசாம ஜட்ஜ் வேலையையே விட்டுடணும்!
நான் ஏன் இவ்வளவு வேகமா ஓடி வந்தேன் தெரியுமா? அந்தத் தங்கப்  பேனாவுக்கு பூலோக வாழ்க்கை முடிஞ்சு போச்சு! அது சமுத்ர  தேவதை கிட்ட போய்ச் சேரவேண்டிய நேரம் வந்துடிச்சு!
எப்படி அசுரர்களை சம்ஹாரம் பண்ணி, அவங்களோட சதையும், ரத்தமும்  ஒரு பிட்டோ, ஒரு துளியோ பூமில பட்டாக் கூட அது உயிர்களை  பாதிக்கும்ன்னு, நரசிம்மர் மாதிரி பெரிய அவதார மூர்த்திங்க அதை  அப்படியே அவங்களொட தெய்வ உடம்புல ஏத்துக் கிட்டாங்களோ அதே  மாதிரி இந்தத் தங்க பேனா, கீழ பட்டா எங்கே அதோட கொடிய சக்தி  பூமில ஒட்டிக்கப் போகுதுன்னு நெனைச்சு அத வாழை இலைல வச்சு  எவ்வளவு சீக்கிரம் அதை Dispose செய்யணுமோ அப்படிச்  செய்யணும்கறதுக்காக வேகவேகமா ஒடோடி வந்தேன்!”
“அப்புறம் அங்கே நாம் கோயில்ல இருந்தா அந்த ஜட்ஜ் நம்பளை  நிச்சயமாத் தொரத்துவான்! இப்ப இருக்கற நிலைல நமக்கு லட்ச,  லட்சமாக் கூட அள்ளிக் கொடுப்பான்! சொத்தை கூட நமக்கு எழுதி  வைப்பான்! ஆனா அதெல்லாம் நமக்கு தேவையில்லை! நம்ம தலைல  அப்படி வாங்கணும்னு ஆண்டவன் எழுதவும் இல்லை! இன்னும்  கொஞ்ச நாளைக்கு நம்ப அந்த பக்கம் போக வேண்டாம்! ஏன்னா அந்த  ஜட்ஜ் நம்பளைத் தேடோ தேடுன்னு தேடி டயர்ட் ஆயி, கப்பல்ல  அவன் நாட்டுக்குக் கிளம்பிடுவான்! அதுக்கப்புறம் நாம அங்க  போகலாம்.”
இதுவரையில் உத்வேகமாக, உரத்த குரலில் பேசிய பெரியவர் திடீரென்று குரலைத் தணித்து கொண்டு, “நான் எங்கேடா போறது? ஏண்டா இந்த கோவணம் கட்டின பரதேசிக் கிழவனுக்கு அங்காளிய விட்டாப் போக்கிடமே கெடயாதுடா,” என்று கூறுகையில் அவர் கண்கள் பனித்தன!
பிரபஞ்சத்தையே ஆட்ட வல்ல சித்த புருஷர்கள் (ஆண்டவனின்) அடிமையாக இருப்பதில்தான் ஆனந்தத்தைக் காண்கின்றார்கள்! இதுவே(வோ) அடிமை கண்ட ஆனந்தம்!

அன்னதான இரகசியங்கள்

திருஅண்ணாமலை அன்னதான ரகசியங்கள்
அடியார்: குருவே! தங்களிடம் அன்னதானம் பற்றி இதுவரையில்  எத்தனையோ விளக்கங்களைக் கேட்டு அதற்கு தாங்கள் அற்புதமான  முறையில் பல விளக்கங்களை அளித்துள்ளீர்கள்! எனினும்,  தொட்டனைத் தூறும் மணற் கேணி போல தங்களுடைய பதில்களைப்  போலவே கேள்விகளும் எழுந்து கொண்டே இருக்கின்றன!  திருஅண்ணாமலையில் அன்னதானம் இடுகின்றதைப் பற்றிய தெய்வீக  ரகசியங்களைக் கேட்க கேட்க உள்ளத்தில் நெகிழ்ச்சி உண்டாகின்றதே,  இந்த தெய்வீக உணர்வை, அருள் தன்மையை எவ்வாறு தக்க வைத்து  கொள்வது?
சற்குரு: பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து கோடி அண்டங்களுக்கும்  கோடானு கோடி நட்சட்திரங்களுக்கும், கோளங்களுக்கும்  அருணாசலமாகிய திருஅண்ணாமலைதான் தெய்வீக மையமாகும்  (spiritual epic centre). எனவேதான் சர்வ லோகங்களிலுமுள்ள சித்புருஷர்களும், ஞானிகளும்,  யோகியரும், எப்போதும் திருஅண்ணாமலையைச் சுற்றி வருகின்றனர்.  சதா முக்தி நிலையில் திளைக்கும் ஸ்ரீவசிஷ்ட மாமுனி,  யாக்ஞவல்கியர், ரிஷ்ய சிருங்கர், பரத்வாஜர் போன்றோர் கூட இன்றும்  பல வித வடிவங்களில் திருஅண்ணாமலையை வலம் வந்து  வழிபடுகின்றனர். கிருதயுக, திரேதாயுக, துவாபர, கலி யுகங்களில் தவ வழிபாடு, யோக,  பரிஹார, பூஜை முறைகள் யுகத்திற்கு யுகம் மாறுபடுகின்றன.  மக்களின் வாழ்க்கை நிலை/நியதிகளுக்கேற்ப மஹான்களும்,  சித்புருஷர்களும் சற்குரு ரூபத்தில் அந்தந்த யுகத்திற்கேற்ப இந்த  மாற்றங்களை எடுத்துரைக்கின்றனர். ஆனால் தன் வசதிக்கேற்ப  மனிதன் இவற்றை மாற்றிக் கொள்வதில் அர்த்தமில்லை!
நம் திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் அன்னதானமிடுவதில்  ஆயிரமாயிரம் தெய்வீக தாத்பர்யங்கள் உள்ளன! இவற்றை அறிந்து  கடைபிடித்தாலே போதும், அன்னதான் நெகிழ்ச்சியை, இறைப்  பெருங்கருணையை உய்த்துணர்வதை நன்கு தக்க வைத்துக்  கொண்டிடலாம். கார்த்திகை தீப அன்னதானத்தின்போது திருவிழாவிற்கு வருகை தந்து  நாலைந்து நாட்களுக்குத் தங்க வசதியின்றி கோயிலே கதியென  இறைவனின் குடிலே கதியென உறுதிபட அண்ணாமலையை நாடி  வந்திருக்கும் அன்பிற்குரிய கிராமத்து ஜனங்களுக்கும் ஏழை,  எளியோர்க்கும், ஊனமுற்றோர், குருடர், செவிடர்கட்கும், அவர்கள்  இருக்குமிடம் தேடிச் சென்று நிறைந்த அளவில் நாம் அன்னதானம்  செய்வது ஒரு வகை!
தீபப் பெருவிழாவில் ஆஸ்ரம வாயிலிலேயே பன்னிரெண்டு தெய்வீகத்  திருப்படிகளில் இறையடியார்களை ஏற வைத்து கிரிவலம் வருகின்ற  அடியார்களின் புனிதமான பாதங்கள் அதில் படிய விரும்பியும்  அன்னமிடுதல் பிறிதொரு வகை! சுற்றிலுமுள்ள கிராமத்து ஏழை மக்கள் (வறுமை காரணமாக) தாம்  கண்டறியாத வெஜிடபிள் பிரியாணி, பால்கீர் போன்ற சத்தான  உணவினை அள்ளித் தருவதும் ஒருவகை! ஏன் அள்ளி அள்ளித் தருகின்றீர்கள், கீழே கொட்டி விடுகின்றார்கள்  என்று கூட இங்கே ஓரிருவர் கூறுவதுண்டு!
கடந்த நாற்பது வருடங்களுக்கும் மேலாக எல்லாம் வல்ல  அருணாசலேஸ்வரரின் கருணையால் எம் குருநாதர் அருள்வழி முறைகளின்படி நடத்தப்படுகின்ற  அன்னதானத்தில் இத்தகைய விஷயங்களைக் கருத்தில் கொள்ளாமலா  இருப்போம்! குரு ஒன்றைச் செய்கின்றாரென்றால் அதில் ஆயிரமாயிரம் தெய்வீக  ரகசியங்கள் தொக்கி நிற்கும்!
இத்தனை ஆண்டுகளில் குருவருளால் அன்னதானம் மட்டுமல்லாது  ஏனைய தான வகைகளில் உழன்று கிட்டியுள்ள அனுபவங்கள்  எத்தனையெத்தனை? இவ்வாறாக அறியாமையால் குறை கூற வந்து  பிறகு சற்குருவின் இறைமையைத் தானே உய்த்து உணர்ந்தவராய்  எங்கள் சத்சங்கத்தில் சேர்ந்தோர் எத்தனையெத்தனை!
நல்ல காரியம்தான் செய்கின்றீர்கள், ஆனால் அன்னதான இலைகளும்,  பிளாஸ்டிக் டம்பளர்களும் அப்படியே குப்பையாகக் குவிந்து  விடுகின்றனவே என்று ஒருவர் சொல்ல, “ ஏன் சார், இவ்வளவு ஆயிரம் பேருக்கு அவர்கள் மாதந்தோறும்  அன்னப் பிரசாதந் தருவது உங்களுக்குத் தெரியவில்லை! உங்கள்  கண்ணெதிரேயே பல புளிய மரங்களுக்கடியில் கியூ நீன்டு போகின்றது!  அதுவுமா தெரியவில்லை! ஏன் நீங்களே ஒரு ஐம்பது, நூறு  செலவழித்து இலைகளைப் போட வழிவகை செய்யக் கூடாது, குறை  சொல்வது ஈஸியான வேலை! ஏன் நாமே துடைப்பம், கூடை  அளித்தும் எடுத்துப் போட்டும் உதவி செய்யலாமே! ” என்று மற்றொரு  கிரிவல அடியாரே மறுமொழி சொல்ல எத்தனையெத்தனை அனுபவங்கள்!
“ஐயா! தங்களுடைய கர்மா குறையறதுக்குன்னு, பாவம்  கழியறதுக்குன்னு அன்னதானத்துக்கு சில பேர் நிதி தர்றாங்க! ஆனா  நீங்க அள்ளி அள்ளிப் போடறத, சிலபேர் கீழ கொட்டிடறாங்க, இது  தேவைதானா?” என்று ஒருவர் கேட்க, “நன்கொடைன்னா நல்லது கெட்டது அப்படின்னு எல்லாப் பணமுந்தான்  சேரும்! கெட்ட வழில வந்த பணம் இப்படிக் கீழபோய் அடுத்த நாள்ல  நாய், ஆடு, மாடு, தின்னு, பூமில பதிஞ்சு புழு, பூச்சி தின்னு மக்கி  பூமிக்கு நல் உரமாகி இப்படிக் கூட நெறய கர்மா தீரும்! ஏம்பா உன்  வாழ்க்கைல ஒருத்தனுக்காவது ஒரு நாளைக்காவது இலை நிறைய  சாப்பாடு போட்டது கிடையாது! அதை சுட்டிக் காட்டத்தான் இங்கே  நெறய கொடுக்கறாங்க இதப்பாத்தாவது மத்தவங்களுக்குக் கொடுக்கற  எண்னம் தானா வரணும்!”
அப்பப்பா! மற்றொரு அடியாரின் மறுமொழியும் அண்ணாமலையாரின்  ஆணையினால் தானே!
இவ்வாறாக கார்த்திகை தீபப் பெருவிழாவில் கடந்த பல வருடங்களாக  எத்தனையோ உரையாடல்களைக் கேட்டு வந்துள்ளோம்!
ஒன்றும் புதிதல்ல! சற்குரு அறியாததுமல்ல!
போற்றுவார் போற்றட்டும்! அறியாமையாலும், அறநெறியை  உணராமலும் ஏற்படும் எண்ணங்களையும், உரைமொழிகளையும்  உளமார போற்றுதல்களையும் அண்ணாமலையாருக்கு அர்ப்பணிக்கின்றோம்! தூற்றுவார் எவருமில்லை! அன்னதான மிடுவதும்  அவரே! ஆட்டு விப்பதும் அவரே! அன்னபிரசாதத்தைப் பெற  இறையடியார்களைக் கூட்டுவிப்பதும் அவரே!
பௌர்ணமியில் கூட்டம் வருமா?
சில வருடங்களுக்கு முன் ஓரளவே நம் ஆஸ்ரம கட்டிடம் எழும்பிய  நிலையில், மாதந்தோறும் பௌர்ணமி அன்னதானத்தைத் தொடங்கினால்  அன்ன பிரசாதத்தைப் பெற அடியார்கள் போதுமான அளவில்  வருவரோ, அல்லது கோயிலுக்குச் சென்று தான் அன்னம் அளிக்க  வேண்டுமா என்று நாங்களும் அறியாமையால்தான் முதலில்  எண்ணினோம்!
மாதாந்திரப் பௌர்ணமி அன்னதானத்தைத் தொடங்கச் சொன்ன  சற்குருவின் அருமையை, அதன் தெய்வீகப் பின்னனியை அன்று  யாமும் அறிந்தோமில்லை!
ஆனால் இன்றோ! ஒரு லட்சத்திற்கும் மேலான இறையடியார்கள்  இன்று மாதந்தோறும் திருஅண்ணாமலையாரைக் கிரிவலம்  வருகின்றானரெனில் என்னே அருணாசல மஹிமை!
இப்படித் தானே அண்ணாமலையார் நம் அகங்கார, ஆணவத்தை  அடக்கிப் பாடம் புகட்டுகின்றார். இதைத்தான் நம் சிவகுரு மங்கள  கந்தர்வா, ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்தசுவாமிகள் சூட்சும ரூபத்தில்  இன்றும் அருள் மொழியாய்க் கூறுகின்றார்!
“இது பாருடா வெங்கடராமா!  அன்னதானம்னா, நீ அதை முடிக்கும் போது உன் ஆஸ்ரம வாசல்ல  ஒருர்த்தர் கூட அன்னப்பிரசாதம் வாங்க நிக்கக் கூடாது! அது தான்  உண்மையான அன்னதானம்! அது வரை, வந்த எல்லாருக்கும் நீ  கொடுத்து இருக்கணும்! ஏதோ பெரிசா முப்பது வருஷமா அன்னதானம்  பண்ணினதா நெனச்சுக்காத! இதுவரைக்கும் நீ செஞ்சதுக்கு ஏதோ நாலு  சோத்துப் பருக்கை போட்டதாத்தான், மேல சத்ய லோகத்துல புண்யக்  கணக்கு எழுதுவாங்க!”
என்னே குருமொழிகள்! ஆணவத்தை மாய்க்கும் கான மொழிகள்! இறை  லீலையை உணர்த்தும் மறைமொழிகள்! எனவே அண்ணாமலையாரே நம்மை நற்காரியங்களைச் செய்ய  வைக்கின்றான் என்று எண்ணுவதே தெய்வீக உணர்வைத் தக்க  வைக்கும்! நான் செய்தேன், நாம் செய்தோம்- என்ற உணர்வே எழக்  கூடாது!
கிரிவலம் வந்தும்…
திருஅண்ணாமலையில் உங்களுக்காகக் காத்திருக்கும் தியாகச்  செம்மல்களே மஹான்களும் சித்தர்களும்! திருஅண்ணாமலையைப் பல முறை கிரிவலம் வந்து விட்டேனே,  என்னுடைய பிரச்னைகள் தீரவில்லையே! திருஅண்ணாமலை கிரிவலம் அனைத்தையும் தரவல்லது தானே,  ஆனால் பிரச்னைகள் வலுத்துக் கொண்டு பெருகி விட்டனவே!
ஆயிரமாயிரம் கோடி சித்தர்கள் உலவுகின்ற புனித பூமியான  திருஅண்ணாமலையை கிரிவலம் வருகையில் அதன் அற்புதமான,  பிரபஞ்சத்தின் தெய்வீகமையமான (Spiritual epicenter of the universe) அதன்  மஹிமையை ஓர் அணுத்துளியைக் கூட உணர முடியவில்லையே ஏன்?
---பல வாசகர்கள்
தங்களுடைய ஸ்ரீ அகஸ்திய விஜயத்தையும், திருஅண்ணாமலை  மஹிமை பற்றிய புத்தகத்தையும் படித்தும் ஆர்வம் ஏற்பட்டு, கிரிவலம்  சென்று வந்தேன், பிரச்னைகள் ஓரளவு தீர்வடைந்துள்ளன
துன்பங்கள் தீர்ந்தனவோ இல்லையோ நல்ல மன அமைதி கிடைத்தது
ஏதோ பரிஹார நிவர்த்தியாக கிரிவலத்தை ஆரம்பித்தேன்! இப்போது  இதனை ஒருமாத வழிபாடாக, விரதமாக ஏற்று கொண்டு விட்டேன்
பல விதமான, மனவோட்டங்களுடன் எங்களுக்கு மாதா மாதம்  ஆயிரக்கணகான கடிதங்கள் வந்து கொண்டிருக்க,  ஒவ்வொன்றையும் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் தனித்தனியே  பிரித்துப் படித்து, தனிப்பட்ட முறையிலான கடிதங்களைப் (too  personal) பகுத்து ஒதுக்கி ரகசியங்களைப் பாதுகாத்து சிலவற்றிற்குப்  பிரார்த்தனைகளைக் கூட்டி, பலவற்றிற்கு நேரடியாக பதிலளிக்கச்  செய்து…
இடையில் சந்தா பற்றிய புகார்கள்..
திருமணமாகாத தம் பெண் பிள்ளைகளைப் பற்றி இல்லறப் பெண்களின்  வேதனைக் குரல்கள்..
மது வசப்பட்ட குடும்பத்தலைவர்களின் ஆணவத்தால், அக்கிரமத்தால்  அவஸ்தைப் படும் பெண்மணிகள் – இவற்றிற்கிடையே
பல மாதம் கிரிவலம் வந்து என்ன பிரயோஜனம், துன்பங்கள் ஒன்றுக்குப்  பத்தாகி விட்டனவே! கிரிவலம் வந்த பின்தான் எனக்கு அந்த வியாதி  வந்தது! நாய்/பாம்பு கடித்து விட்டது, ஏதோ விபத்து ஏற்பட்டது!
என்ற வகையிலான சில கடிதங்களும் உண்டு! இவ்வளவே  இறைநம்பிக்கை! செய்யும் வரை சிவ பெருமான்! செய்யா விடில்  வசைபாடுவான்!
திருஅண்ணாமலை கிரிவலம் அனைத்தையும் தரவல்லது என்பது  வேதவாக்கு ஆகும். ஆனால் எல்லாவிதமான லஞ்சம், லாவண்யம், கொள்ளை, காம  துரோகங்கள் என அனைத்தையும் செய்து விட்டு எனக்கு உடனே  மன்னிப்பு வேண்டுமெனக் கேட்டால் அது எவ்விதத்தில் நியாயமாகும்? நான் திருந்தி விட்டேன் என்று உதட்டளவில் சொன்னால் அது  திருந்தியதாகுமா?
தன்னால் அவதியுற்ற நடுத் தெருவிற்கு வந்து நிற்கும், பாதிக்கப்பட்டுச்  சீரழிந்திருக்கும் குடும்பங்களுக்குத் தக்க நிவாரணங்கள் அளித்து  உளமாறத் திருந்தி வாழ்தல்தானே தர்மமாகும்!
இதை உணர வைப்பதுதான் கொடியவர்களுக்கு அண்ணாமலையார் தரும்  ஆரம்பப் பாடமான கிரிவலம்!
தீதும் நன்றும் பிறர் தர வாரா!
“ஐயா! நான் ஒன்றும் கொடியவனல்லன்! சாதாரண நடுத்தரக்  குடும்பத்தவன். எந்தத் தப்புத் தண்டாவிற்கும் போகாதவன். எனக்கு  வேலை கிடைக்கவில்லை/பெண்ணிற்குத் திருமணமாகவில்லை! என்னை  பாம்பு/நாய் கடித்து விட்டது! இவற்றிற்கெல்லாம் திருஅண்ணாமலை கிரிவலத்தில் நிவாரணம்  கிடைக்குமா?”
“நிச்சயமாக! ஆனால் நாம் எதிர்பார்த்த நேரத்தில், மனதில் நினைத்தபடி எதுவும் நடக்க  வேண்டும் என்று எண்ணலாமா!”
எவருக்கும் நான் மனதாரக் கூடத் துன்பம் கொடுத்ததில்லை! ஓர்  எறும்பை கூட மிதித்திட அஞ்சுவேன் என்று கூறுவோரும் உண்டு!
ஒன்றைச் சிந்தித்திடுக! உண்மையிலேயே நீங்கள் நல்லவராக வாழ்ந்திடினும் உங்களுக்குத்  துன்பங்கள் (வேலை கிடைக்காமை, வறுமை, திருமணம் ஆகாமை,  சந்ததியின்மை) வருவதற்குக் காரணம் உங்களுடைய பூர்வ ஜென்ம  வினைகள்தாமே! அக்கர்மங்கள் கரைந்தால் தானே தடங்கல்கள் நீங்கும்!  முன் ஜென்மக் கர்மவினைகளுக்கான துன்பங்களைத் தான் இப்போது  அனுபவித்துக் கொண்டிருகின்றீர்கள்! தவறுகளுக்குத் தண்டனைகளை  அனுபவிப்பது தானே நியாயமாகும்! பெரிய குற்றமானால் பெரிய  தண்டனை! எனவே உங்களுக்கு வந்துள்ள துன்பங்கள் உங்களுடைய  கர்ம வினைகளின் விளைவுகளான சிறு தண்டனைகளேயாகும்! பிறரால்  எதுவும் ஏற்படவில்லை! பொறாமை, துரோகம், பேராசை, ஆணவம், சொத்து ஆசை காரணமாக  ஒரு குடும்ப ஒற்றுமையைக் குலைத்தால் அதுவே உறவு பிரிவுகள்,  மனஸ்தாபங்கள், திருமணத் தடங்கல்களாக உங்களுக்குத் திரும்பி வருகின்றன! இன்னும் பல காரணங்களும் உண்டு. எடுத்து சொன்னால்  மனம் ஏற்றிடுமா!

எனவே நான் உண்டு என் வேலை உண்டு என்று நல்லபடியாகத் தானே  வாழ்கின்றோம் எனக்கு ஏன் இவ்வளவு பிரச்னைகள் வருகின்றன என்று  எண்ணாதீர்கள்! எப்படி, நல்லபடியாக வாழ்ந்தால் துன்பம் வரலாகுமா  என்று கேட்கின்றீர்களோ அதேபோல் பிறருக்கு அறிந்தோ அறியாமலோ  இழைத்த தீங்குகளுக்கு அவரவரும் பல துன்பங்களை அனுபவித்தாக  வேண்டும் என்ற தர்மத்தையும் ஒப்புக் கொள்கின்றீர்கள் அல்லவா!  அதைத்தானே நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கண்டு வருகின்றீர்கள்! இதுவரையிலும், இனிமேலும் நீங்கள் செய்த/செய்து வருகின்ற கிரிவலம்  ஏனைய வழிபாடுகளும் உங்கள் கர்ம வினைகளைத் தணிப்பதோடு  அத்தகைய கர்மவினைகளுடன் பிற வினைகளையும் கூடா வண்ணம்  உங்களை ரட்சைபோல் காக்கும் என்பதில் ஐயமில்லை!
இருப்பினும் ஐயனே! எத்தனை நாள் உன்னைச் சுற்றி சுற்றி வருவது?  உன்னருள் கூட என்னைத் தீண்டா வண்ணம் அந்த அளவிற்குக் கர்மச்  சூழ்நிலைகளில் சிக்கித் தவிக்கின்றேனே, அப்பனே விரைவில் அருள் தர  மட்டாயா? என்று மனதார அழுது வேண்டி கிரிவலம் வந்திடில்  நிச்சயமாக ஏதேனும் ஒரு சித்தரோ, மஹானோ உங்கள் கஷ்டங்களை  உங்களுடைய மூதாதையர் உதவியாலும் மேலும் தம் தபோபலத்தாலும்  நிவர்த்தி செய்து உங்களை விடுவிப்பார்கள்! இதுவே அண்ணாமலையில்  நிகழும் அற்புதம்!
ஏன் உங்களுடைய பித்ரு தேவர்கள் கூட உங்களுக்காக இறைவனிடம்  மன்றாடி எம் வம்சாவழிக்காரனின் துன்பங்களை நானே அனுபவித்து  விடுகின்றேன்! அவனுக்குக் கருணை காட்டுங்கள்! என்று மனதார  வேண்டி இறைவனிடம் மன்றாடுகின்றார்கள். ஆனால் நம்பிக்கையைக்  கைவிடாது தொடர்ந்து கிரிவலம் வந்தால்தானே பித்ருதேவர்களோ,  சித்புருஷர்களோ மஹான்களோ உங்களுக்காக் வாதாட முடியும்!
ஓரிரண்டு முறை கிரிவலம் வந்துவிட்டு என்னப்பா, ஒரு பலனும்  தெரியவிலையே, பிரச்னை அப்படியேதானிருக்கு! என்ற குறைப்பாட்டால்,  உங்களுடைய தீவினைகளுக்கு இறைவன் மேல் பழிபோட்டு  அங்கலாய்த்தால் உங்களுக்கே சரியான ஆணித்தரமான  நம்பிக்கையில்லாது ஏதோ ஒப்புக்கு கிரிவலம் வருகின்றீர்கள்  என்றல்லவோ பொருளாகிறது!
உங்கள் துன்பங்களைத் தம்முள் ஏற்பதற்காக உங்களுக்காகச் சித்தர்களும்,  மஹான்களும், பித்ரு தேவர்களும் திருஅண்ணாமலையில் காத்துக் கிடக்க  அப்போதுதான் நீங்கள் வெறுப்பில் (Frustration) திருஅண்ணாமலைக்கு  வராது நின்று விடுகிறீர்கள்! கர்ம வினைகள்தான் உங்களை இப்படி  இழுத்து தடுத்து நிறுத்துகின்றன! ஆனால் நம்பிக்கையோடோ, நம்பிகையின்றியோ, ஏதோ சுற்றுலா  போன்றோ எப்படி கிரிவலம் வந்தாலும் அண்ணாமலயாரின் பேரருளின்றி  எவரும் கிரிவலம் வர முடியாது இது சத்தியமான வேதவாக்கு!
நான் நல்லபடியான வாழ்க்கையைத்தான் வாழ்கின்றேன் பின் ஏன்  எனக்குத் துன்பங்கள் என்று நீங்கள் எண்ணுவீர்களானால் உங்களை விட  மிகவும் பவித்ரமான, புனிதமான வாழ்க்கையை மேற்கொண்டிருப்பவர்களை எப்படிப் போற்றி அழைப்பது?
உங்கள் மனதை நீங்களே தொட்டு சொல்லுங்கள், உங்களுக்குள் குரோத,  துரோக, முறையற்ற காம, விரோத பொறாமையான, அதர்மமான,  அநீதியான பண்பற்ற எண்ணம் ஒன்று கூட வந்தது கிடையாதா? நீங்கள்  பொய்யே பேசாது பவித்ரமான, சத்தியமான வாழ்க்கையைத் தான்  வாழ்கின்றீர்களா? புனிதமாக வாழ்வதுதானே நல்வாழ்க்கை!
நான் Best among the worst என்றோ எவரெவரோ எப்படியோ வாழ்க்கையில்  வாழ நான் பீடி, சிகரெட், புகையிலை, மது இல்லாமல் ஓரளவு நன்றாக  தானே வாழ்கிறேன் என்று எண்ணுவதிலும் என்ன பிரயோஜனம்?  இவையெல்லாம் உங்களுக்காக நீங்களே வாழ்கின்ற சுயநலமான  வாழ்க்கை அவ்வளவே! சுயநல வாழ்க்கை வீணான வாழ்க்கையே! இந்த உடலையும் மனதையும் வைத்துக் கொண்டு பிறருக்காக என்ன  உதவி/சேவை செய்தீர்கள்! ஒரு புளிய மரம் கூட சாலையில் தண்டமாக நிற்பது போல்  தோன்றினாலும் ஆயிரக்கணக்கான பறவைகைள், பூச்சிகள், கால்நடைகள்,  மனிதர்களுக்குத் தங்க/ஒதுங்க நிழல் தருகின்றதே. புளி தருகிறதே எந்தப்  பயனையும் எதிர் பாராமல்!
திருஅண்ணாமலையை கிரிவலம் வரும் போது ஒரு தோள் பை நிறைய  பழங்களையும், பிரெட், பிஸ்கெட், பன் என அள்ளிப் போட்டு கொண்டு  மனதாரப் பசுக்களுக்கும்/ஏழைகளுக்கும்/கிரிவல அடியார்களுக்கும்  அளித்திடுக! குறைந்தது ஒரு குடம் நீரை/மோரையாவது சுமந்து ஆங்காங்கே தானம்  செய்திடலாமே!
ஒன்றுமில்லையா, இரண்டு துடப்பங்களையாவது எடுத்து கொண்டு  கிரிவலப் பாதையில் உள்ள கல், முட்களை அகற்றி எமலிங்கம், சூர்ய  லிங்கம் பொன்ற சந்நிதிகளைச் சுத்தம் செய்திடலாமே!
நம்பிக்கைதான் எதையும் சாதிக்கும்! கிரிவலம் வந்தும் துன்பங்கள்  தீரவில்லை என்று எண்ணுவது நம்பிக்கை இல்லாமையைத் தான்  குறிக்கிறது! நம்பிக்கையில்லையென்றால் இறை அருள் எப்படி கைகூடும்? விபத்துகளில் அடிப்பட்டு இடுப்பிலும்/கால் கைகளிலும் பெரிய அறுவை  சிகிச்சை செய்து கொண்டவர்கள் கூட சற்றும் நம்பிக்கை தளராது  வைராக்ய மனப்பான்மையுடன் இன்றும் கிரிவலம் வருவதைத்  திருஅண்ணாமலையில் கண்கூடாகக் காணலாம், இவர்களைப் பார்த்தால்  போதும், ஓர் அங்குல நம்பிக்கையாவது உங்களுக்கு வளர்ந்திடாதா,  என்ன? இதற்காகவே மேலும் மேலும் கிரிவலம் வாருங்கள்! இப்படியாவது பிறரைப் பார்த்தாவது ஆழ்ந்த நம்பிக்கையை ஏற்படுத்திக்  கொள்ளுங்கள்! இதற்காகத்தான் மாத்ந்தோறும் ஒரு லட்சம் மக்களை  கிரிவலத்திற்காகத் தன்னிடம் ஈர்த்து கொள்கின்றார் திருஅண்ணாமலையார்!

பெண்களுக்கான பூசைகள்

பெண்களுக்கான இறைநெறி முறைகள்
(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகள் 7.4.1989 அன்று  சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ வெள்ளீஸ்வரர்  ஆலயத்தில் நிகழ்த்திட்ட  ஆன்மீக உரையின் சில தொகுப்பாக முத்துக் குவியல்கள்)
இல்லத்திலும், அலுவலகத்திலும் ஏற்படுகின்ற பெரும்பான்மையான  சண்டை சச்சரவுகள், பகைமையைத் தவிர்ப்பதற்கு சில எளிய ஆன்மீக  வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதுமானதாகும். எப்போதும் குங்குமம்/சாந்துப் பொட்டினைத் தரித்திருத்தலால் பல  விதமான தீய சக்திகளின் தாக்குதல்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
எவ்வாறு குங்குமம் தகுந்த ரட்சையாக விளங்குகிறது? இயன்றவரை இல்லத்திலேயே குங்குமத்தை தயார் செய்து கொள்ள  வேண்டும். மிகவும் சுத்தமாகத் தயாரிக்கப்பட்டது என்று தெரிந்தால் தான்  கடையில் வாங்கிடலாம். கண்ட நிறங்களில் குங்குமத்தை வாங்கிட வேண்டாம். ரசாயனக்  கலப்பின்றி, மஞ்சளும், எலுமிச்சை ரசமும் இயற்கையாகத் தரும் சிகப்பு  நிற வகைகளே தெய்வீக சக்தி நிறைந்தவையாம், குங்குமத்தைக்  குறைந்தது மூன்று தினங்களேனும் பூஜையில் அம்பிகையின் படத்தின்  முன் வைத்து, காலையிலும் மாலையிலும் விளக்கேற்றி ஸ்ரீ லலிதா  சஹஸ்ரநாமம். அபிராமி அந்தாதி, அங்காளி அந்தாதி, அம்பிகையின் 1008  போற்றித் துதிகளை ஓதி வணங்கிய பிறகே அந்த குங்குமத்தை இட்டுக்  கொள்ள தொடங்கிட வேண்டும்.

உய்யக்கொண்டான்மலை

இவ்வாறு அர்ச்சித்த குங்குமத்திற்குத் தனித்த, விசேஷமான தெய்வீக  சக்தி கூடுவதால் எப்போதும் இது ரட்சையாக விளங்குகிறது!
ஸ்ரீ லலிதாம்பிகை, ஸ்ரீலலிதா பரமேஸ்வரி என்ற பெயருடைய  அம்பிகைக்குக் குங்குமத்தை அர்ச்சித்து இக்குங்குமத்தை நெற்றியில்  இட்டு வருவது பெறுதற்கரிய பாக்யமாகும்! ஒரு சில கோயில்களில்  மட்டுமே அம்பிகை இந்நாமத்தைப் பூண்டிருப்பதால் இத்தலங்களில்  இவ்வரிய குங்கும பூஜையை செய்ய தவறாதீர்கள்! இத்தலங்களுக்கு  மூன்று மாதத்திற்கு ஒரு முறையேனும் சென்று நிறைய குங்குமத்தை  அர்ச்சித்துப் பிரசாதமாக எடுத்து வைத்துக் கொண்டிடலாமே!
மேலும் இரண்டு அம்பிகையர் எழுந்தருளியுள்ள ஆலயங்களில் (திருச்சி உய்யக்கொண்டான்மலை, திருப்பைஞ்ஞீலி) ஒரு அம்பிகைக்கு மஞ்சளை அரைத்து அபிஷேகமும்,  மற்றோர் அம்பிகைக்கு குங்குமத்தை வைத்து அபிஷேகமும் செய்து  இம்மஞ்சளையும், குங்குமத்தையும் இல்லத்தில் வைத்திருந்து தினமும்  பயன்படுத்தி வருவதனால் தீர்க சுமங்கலித்துவமும், கணவனுக்கு நல்ல  ஆரோக்கியமும், நற்பண்புகளும், நல்லொழுக்கமும், தீர்க ஆயுளும்  சிறப்பாக அமையும்
பெண்கள் தலைமுடியை வெறுமனே முடிந்திடாது ஒரு நாரினாலோ,  ரிப்பன் கொண்டோ முடிச்சிட வேண்டும். தலைவிரி கோலத்துடன்  கணவன் முன் நிற்றல் கூடாது. பெண்கள் எப்போதும் மூன்று இடங்களில் குங்குமத்தை இடவேண்டும்.  மாங்கல்யம், நெற்றி, முன்வகிடு மத்தியில், ஆகிய மூன்றிடங்களில்  குங்குமமிடுவதே தெய்வீகப் பண்புகளைப் பெற்று தரும். கணவனுக்கு  உணவிடுகையில் இவ்வாறு குங்குமமிட்டுப் பரிமாறினால்  தம்பதியரிடையே நல்ல ஒற்றுமையும் சாந்தமான உளப்பாங்கும் ஏற்படும். தற்காலத்தில் பெரும்பாலான பெண்கள், குறிப்பாகப் பணிபுரியும்  பெண்கள், நெற்றியில் ஒட்டுப் பொட்டு (Stickers) இடுதல், தங்கச் செயினில்  மாங்கல்யத் தாலியைக் கோர்த்தல் ஆகிய இருபெரும் பிழைகளைச்  செய்து வருகின்றனர். இதனால் நல்ல குங்குமத்தினால் கிட்டும் தெய்வீக  சக்திகளை இழப்பதோடு, ரட்சை போல் நம்மை காக்கக் கூடிய  மாங்கல்யத்தின் அபூர்வசக்திகளையும் பெற முடியாமல் போய்  விடுகின்றது.
நூலாலாகிய தாலிச் சரடிற்குத்தான் பஞ்சபூத சக்திகள் அதிகமாதலின்  தாலிச் சரடில்தான் மாங்கல்யத்தைக் கோர்த்து அணிய வேண்டுமே தவிர  ஒருபோதும் தங்கச் செயினில் மாங்கல்யத்தை கோர்த்து அணிய கூடாது. ஒட்டுப்பொட்டு (Stickers) அணிவதால் ஒரு பயனுமில்லை! இது மங்களச்  சின்னமும் ஆகாது! பயனற்ற ஒன்றை அணிந்து புனிதத்வத்தை ஏன்  அவமதிக்க அல்லது இழக்க வேண்டும். நன்கு அரைத்த சந்தனத்தையிட்டு  அதன்மேல் குங்குமத்தையிட்டால் நெற்றியில் புண் ஏற்படாது.
கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன் என்ற நம்  முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ள தார்மீக நெறிகளின்படி கட்டிய  கணவனைக் கண்கண்ட தெய்வமாக வழிபட்டு நல்வாழ்க்கை வாழ்ந்த நம்  முதியோர்களின் பண்பாட்டையே கடைபிடித்து உத்தம வாழ்க்கையை  மேற் கொண்டிடுக! மாதந்தோரும் வருகின்ற (தேய்பிறைச் சதுர்த்தசி) சிவராத்திரியிலும்  ஏகாதசித் திதியிலும் இயன்ற அளவு விரதமிருந்து பூஜைகளில்  ஈடுபடுங்கள். இவ்வரிய அற்புத சிவராத்ரி, ஏகாதசி வழிபாடுகள் சரி வர  கடைபிடிக்காமையினால் தாம் கலியுகத்தில் மஹான்களின் ஞானிகளின்  தரிசனம் அரிதாகி வருகின்றது! ஏதோ, நம் முன்னோர்களின் பூர்வ ஜென்ம புண்யவசத்தால், அவர்கள்  கடைபிடித்து வந்துள்ள ஏகாதசி, சிவராத்திரி வழிபாடுகளால் தான் நமக்கு  இன்றும் மாஹான்களின் தரிசனம் கிட்டுகின்றது என்பதை உணர்ந்திடுக! விரதங்கள் மன சஞ்சலங்களைத் தவிர்த்து மன சுத்தியை தரும்.
சுவாமிகளுடைய ஆஸ்ரம பீடத்தின் ஸ்வஸ்தி வாசகத்தில் திருக்கயிலாயப் பொதிய முனிப் பரம்பரை சற்குரு மஹா தேவா சரணம்!
திருவேங்கடத் துறை கும்பமுனிப் பரம்பரை சற்குரு நாராயணா சரணம்!  சரணம்! சரணம் என்று போற்றப்படுகின்ற பொதிய முனியாகவும் கும்ப  முனியாகவும் ஒளிர்கின்ற ஸ்ரீ அகஸ்திய மஹாபிரபு ஹரிஹர  பக்தரன்றோ! ஸ்ரீ ராமனுக்கு ஆதித்யஹிருதயம் மந்திரத்தை உபதேசித்தவர்! திருக்கயிலைத் திருமணக் காட்சியைப் பல இடங்களில் கண்டு  களித்தவர்! அனைத்து யுகங்களிலும் சிரஞ்சீவியாய் விளங்கும் சித்புருஷர்! அவர்தம் திருவடி நிழலே ஸ்ரீ வெங்கடராம சுவாமிகள்! இந்நிழல் தந்து  அருள்பாலித்தவரே ஸ்ரீலஸ்ரீ இடியாப்ப ஈச சித்த சுவாமிகள்!
சுற்றினால் கிட்டும் சுந்தரானந்தம்
(நம் குருமங்கள கந்தர்வா ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம சுவாமிகளுடன்  அன்னதானம், கோயில் உழவாரத் திருப்பணிகள், தல /  தீர்த்தயாத்திரைகள், அருணாசல கிரிவலம், பர்வதமலை கிரிவலம்,  திருச்சி மலைக்கோட்டை கிரிவலம், ரத்னகிரி (அய்யர்மலை) கிரிவலம்,  கும்பகோணம் மஹாமக அன்னதானம் (12 ஆண்டுகளுக்கு ஒரு  முறைவருவது), காஞ்சீபுரம் ஸ்ரீ அத்திவரதர் பூஜை (40 ஆண்டுகளுக்கு  ஒரு முறை – பெரும்பாலும் வாழ்நாளில் ஒரு முறை வருவது),  காசியாத்திரை, கொல்லி மலையில் ஆன்மீக யாத்திரை,  திருப்பதி, சோட்டாணிக்கரா தலயாத்திரை, சபரிமலை விரத யாத்திரை  எனப் பலவிதமான இறைத் திருப்பணிகளில் கடந்த பல ஆண்டுகளில்  சத்சங்க அடியார்களுக்குக் கிட்டிய ஆன்மீக அனுபூதிகளை இங்கு  அளிக்கின்றோம். அடிமையின் அடிமைகள் கண்ட ஆனந்தமன்றோ  இவையனைத்தும்!
கலியுகத்திலாவது, குருகுலவாசமாவது என்று மறுத்துரைப்போரும், நம்ப  மறுப்போரும் வியக்கத்தக்க அளவில் அமைந்திருப்பதே எங்களுடைய  சத்சங்க இறை பணிகள்! இல்லறமாம் நல்லறத்தில் இருந்து கொண்டே,  காணக்கிடைக்காத, கோடி ஜென்மம் எடுத்தாலும் தேடிக் கிடைக்காத  அரிய தெய்வீகத் திருப்பணிகள்!
அவற்றுள் ஒன்றே யாம் பெற்ற ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ ரெங்கநாதர் ஆலய  உழவாரத் திருப்பணி!

சில ஆண்டுகளுக்குமுன்..
அப்பர் சுவாமிகள் அருளிய வழியில் நானூறுக்கும் மேற்பட்ட  இறையடியார்கள் குடும்பம் குடும்பமாக, பெண்குலத்துடன், குழந்தை  குட்டிகளுடன் ஸ்ரீரங்கம் ஆலயம் முழுதும் நீறூற்றி, சோப்பிட்டுத்  தரையையும் தூண்களையும், உட்சுவர்களையும், பிரகாரங்களையும்,  கோபுரங்களையும், தலைக்கு மேல் மேற்புறச் சுவர்களையும் துடைப்பம்,  பிரஷ், தேங்காய் நார், துணிகள் கொண்டு சுத்திகரிக்கும் அற்புதமான  வாய்ப்பைப் பரம்பொருளாம் பரந்தாமனாம் ஸ்ரீரெங்கநாதரின்  திருவருளால் பெற்றோம், சற்குருநாதர் முன்னின்று வழிகாட்டிட!
நூற்றுக் கணக்கான புத்தம் புதுத் துடைப்பங்கள், உரித்த, பண்படுத்தப்பட்ட  தேங்காய் நார் மூட்டைகள், பிரஷ்கள், பக்கெட்டுகள், குடங்கள், 70 கிலோ  சோப்புத் தூள், 4 மின்சார மோட்டர் பம்ப் செட்டுகள், 500 அடி ஹோஸ்  பைப்புகள்..
அப்பப்பா! இறையருளால் கடந்த முப்பது ஆண்டுகளில் சுவாமிகள் மிகுந்த  சிரமங்களுக்கிடையில் உழவாரத் திருப்பணிகளுக்காகவே சேர்த்துத்  தந்துள்ள ஐஸ்வர்யங்கள் தான் இவை!
பெரும்பாலும் வாரந்தோறும் ஒவ்வொரு கோயிலில், சிறிய கோயிலாக   இருப்பின் ஒரே நாளில் இரண்டு, மூன்று கோயில்கள் என திருச்சி,   தஞ்சை, சென்னை, பாண்டிச்சேரி போன்ற இடங்களில் இச்சத்சங்க   வாராந்திர உழவார இறைத் திருப்பணிகள் கடந்த நாற்பதாண்டுகளுக்கும்  மேலாக சுவாமிகளே முன் நின்று துடைப்பந் தாங்கி, வசதியற்ற  கோயில்களில் கிணற்றில் நீரிறைத்து ஒட்டடை நீக்கி, நீர்குடம் சுமந்து  நாற்றமடிக்கும் கோமுக, நீர்த்தாரை/அபிஷேக நீர்த் தேக்கங்களைச்  சுத்திசெய்து…
இத்தனை வருடங்களில் எத்தனை வாரங்களாக எத்தனையோ ஆயிரம்  கோயில்களில் உழவாரத் திருப்பணிகளை மேற்கொண்டு தெய்வீகப்  பொலிவு கொண்டு மிளர்கின்ற உத்தம சற்குரு அன்றோ ஸ்ரீ வெங்கடராம  சுவாமிகள்!
அன்று ஸ்ரீரங்கம் ஆலயத்தில்.. நாராயணா, நாராயணா என்ற  எட்டெழுத்து மந்திரம் ஒலிக்க… ஆயிரம்மாயிரம் தேவாதி தேவ, தெய்வ முர்த்திகள் கடாட்சம் பொங்கும்,  அர்த்த மண்டபத் தூண்களைச் சுத்தம் செய்கின்ற பாக்யம், எத்தனை  கோடி ஜென்மம் எடுத்தாலும் கிடைக்காத பாக்யம் அன்றோ!
நீங்களனைவரும் நாராயணா நாராயணா என்று ஒலித்தவாறே  இறைத்திருப்பணி செய்த இனிமையான காட்சி என ஸ்ரீஜீயர்  சுவாமிகளே எழுத்திற் புகழ்ந்துரைத்த அதி அற்புத இறைத்திருப்பனி! அன்று ஸ்ரீ வெங்கடராம சுவாமிகளே முன்னின்று நடத்திட, கோயில்  சுத்தி செய்யும் திருப்பணியா நிகழ்ந்தது இல்லை இல்லை  பரம்பொருளாம் ஸ்ரீரங்கன் அளித்த தெய்வீக வாய்ப்பில் அடியார்களுடைய  கோடிக் கணக்கான ஜென்மங்களின் கர்ம வினைகளன்றோ கழுவ  பெற்றன, கடவுளின் கடைப் பார்வைக் கருணையினால் சற்குருவின்  பரிந்துரையினால்!
சுவாமிகள் இன்று பூலோகத்திற்கு சற்குருவாக விஜயம்  செய்துள்ளமையினால்தானே இந்த அதியற்புத பாக்யம் கிடைத்தது!
ஸ்ரீ சுதர்சன மூர்த்தி சன்னதி முதல் ஸ்ரீ துலுக்க நாச்சியார் சன்னதி வரை  அனைத்திடங்களிலும் குப்பை, தூசி, தும்பை, அழுக்கினை, எண்ணெய்ப்  பிசுக்கினை அகற்றும் பாக்யம் கிடைத்தது சற்குருவின் குரு  அருளாலன்றோ! கொயிலில் அழுக்கு நீங்கியதா இல்லையில்லை, ஸ்ரீமன் நாராயணன்  வசிக்கும் இடத்தில் புனிதம் தானே புரளும்! எத்தனை கோடானுகோடி  ஜென்மமெடுத்தாலும் அகலாத அடியார்களுடைய மன அழுக்கன்றோ  அன்று அகன்றது!
இவ்வாறாக, ஸ்ரீ வைகுண்ட லோகத்தின் ஒரு பகுதியான ஸ்ரீரங்கம்  ஆலயத்தில் உழவார இறைத் திருப்பணி சுவாமிகளின் பெருமுயற்சியால்  செவ்வனே நடந்தது!
இந்த ஆனந்தத்திற்கு ஈடான ஆனந்தம் ஈரேழுலகில் உண்டா, நீங்களே  சொல்லுங்கள்!
அன்று சிவராத்திரி… ஈஸ்வரனின் மலரடியில் 1990ம் ஆண்டு என்று  நினைக்கிறோம்!
நாங்கள் எங்கிருப்போம் என்று நீங்களே ஊகித்திடலாம்! சுவாமிகளுடந்தான்!
அதில் ஐயமில்லை! ஆனால் எங்கு, எப்படி?
… மதியம் 2 மணிக்கு…
சென்னை சென்ட்ரலில் அரக்கோணம் செல்லும் இரயிலேறினோம். எங்கு  செல்ல?
அதுதான் பரம ரகசியம்!
சற்குருவை அழகாக அவருக்கு எவ்விதச் சிரமுமின்றி வாடகைக்  காரிலாவது அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் அடியார்களுடன்  சேர்ந்து நடந்தோ, இரயிலிலோ, பஸ்ஸிலோ பிரயாணம் செய்வதில் தான்  சுவாமிகள் மகிழ்ச்சி கொள்வார்! கலகலவென்று பலவிதமான ஆன்மீக  விளக்கங்களைத் தந்தவாறே..நேரம் போவதே தெரியாது!
இதோ வந்துவிட்டதே மணவூர் சிவராத்திரிக்குரிய இடம்! இரயில்வே ஸ்டேஷன் அருகிலேயே மிகவும் பழமையான சிவத்தலம்!
வெளிச் சுற்று இடிபாடுகளின் ஊடே… உட்சென்றால், மின்விளக்கின்றி..  மாலை வேளையிலேயே கும்மிருட்டுதான்!
ஊரையே இருளிற் கவித்தாற்போல் நாங்கள், சுமார் 50 அடியார்கள்  கோயிலுக்குத் தூக்கிச் சென்ற லக்கேஜ் என்ன தெரியுமா?
பத்து டின் நல்லெண்ணெய், பண்டில் பண்டிலாய் விளக்கு திரி, 500க்கும்  மேலான அகல் விளக்குகள், நிறைய கற்பூரம், பூ, பழ அர்ச்சனை  சாமான்கள்! பஞ்சாமிர்தம் செய்வதற்கான பொருட்கள்! சிறிய டார்ச்!
And of Course, இரவு சாப்பாடு!
அதெப்படி சிவராத்திரியன்று விரதம் கிடையாதா?
சுவாமிகள் சற்குருவாய்ப் பரிமளித்து சில Exemption clauseஐ அவ்வப்போது  அளித்திடுவார்!
அவருடைய செய்கைகள் யாவும் காரண காரியங்களுடன்தான் மலரும்!
வயிறார உண்டா சிவராத்திரி பூஜை!
எப்படி? இல்லத்தில் இருந்து கொண்டே பூஜித்திடுகையில் எவ்விதமான  கடினமான உடல் உழைப்பு சம்பந்தப்பட்ட பணிகளும் அவ்வளவாக  இல்லாமையால் உண்ணா நோன்பு, நீர் மட்டும் அருந்துதல், கண்  விழித்தல் போன்ற கடுமையான நியதிகள் வலியுறுத்தப்படுக்கின்றன.  ஆனால் உடல் உழைப்பு கூடிய சேவையில் விரத முறை மாறுபடும்! சுவாமிகள், அடியார்களுடைய வயது, சரீர நிலை, ஆரோக்யம்,  மனோநிலை ஆகியவற்றைப் பொறுத்து அவரவருக்குரிய வழிபாட்டு  முறைகளை அளித்திடுவார். அன்றையதினம் நாங்கள் மஹா சிவராத்திரி பூஜைக்குச் சென்ற ஊரோ  சென்னையிலிருந்து சற்று தொலைவில் உள்ள (சென்னை- அரக்கோணம்  இரயில் தடம்) மணவூர் குக்கிராமமாகும்.
சிதிலமடைந்துள்ள சன்னதிகளைச் சற்றே இயன்ற அளவில் சீரமைத்து,  கூட்டி, பெருக்கி சுத்தஞ்செய்து, கல், முள் அகற்றி, கடும் நீர்ப்  பஞ்சத்திற்கிடையில் கிடைத்த நீரைக் கொண்டு முக்யப் பகுதிகளைக்  கழுவி சுத்தஞ்செய்து.. ஒட்டடை நீக்கி…. மின்சார வசதியில்லாத கோயிலாதலின் மிகவும் கவனமாகக் குண்டு,  குழி, முட்புதரை அறிந்து… ஆலயமெங்கும் நூற்றுக்கணக்கான அகல் விளக்குகளை ஏற்றி.. இதற்கு எத்தகைய கடுமையான உழைப்பு தேவைப்படும் என்பதை  சிந்தித்திடுக! இப்படிப் பணிபுரிந்தால் முதலில் சரீர அசதியும், பசியும்,  உடற்களைப்பும் தூக்கமும்தானே உண்டாகும்?
பசியோடு களைப்போடு என்ன செய்ய முடியும்? உண்ணாவிரதமா இருக்க  முடியும்? எனவே வயிறார உணவிட்டு, கடுமையான உழைப்புடன் கூடிய உழவார  பணியுடன் (மின்சார விளக்கில்லாத) கோயிலில் விளக்கேற்றும்  பெரும் பாக்யத்தையும் பெற்றுத் தந்த சற்குருவின் ஆணை தானே  இறையாணை!
கடும் விரதமிருந்து, நீர் கூட அருந்தாது களைப்புற்ற நிலையில் எந்த இறைப் பணியைத்தான் செய்ய முடியும்?
ஆனல் மற்றோராண்டு சிவராதிரியின்போது மின் விளக்குகளுடன் வசதியுள்ள கோயிலில் அபிஷேக ஆரதானைகளுடன் நீர் கூட அருந்தாது  விரத நெறியுடன் கூடய பூஜை முறையையும் நடத்தி காட்டினார்! இதுவும்  சற்குருவின் அருளாணையே!
மணவூர் சிவாலயத்தில் இரவு 7 மணி முதல் விடியற்காலை வரை  தொடர்ந்து அனைத்து அகல் விளக்குகளையும் ஊரே கண்டு தரிசித்து  வியக்கும் வண்ணம், ஜகஜ்ஜோதியாய் பிரகாசிக்கச் செய்து,  வடமொழி/தமிழ் மறைகளை ஓதியவாறே நாமசங்கீர்த்தனத்துடன்  மஹாசிவராத்திரியை கொண்டாடினோம்! சிவராத்திரி முழுதும் சிவனருகே செவ்வனே அமர்ந்து, சற்குரு அருள்வழி  காட்டிட, கலியுகத்தில் இவ்வாறு குருகுலவாச மஹாசிவராத்திரி  நிகழ்வதை எவரால்தான் நம்ப இயலும்! மஹாசிவராத்திரியன்று எல்லோரும் திருமயிலை கபாலி, குடந்தை ஆதி  கும்பேஸ்வரர், தஞ்சை பிரஹதீஸ்வரர், நெல்லையப்பர் போன்று பிரசித்தி  பெற்ற ஆலயங்களுக்கு வந்துவிட்டால்.. குக்கிராமங்களில் உள்ள சிவாலயங்களை யார் கவனிப்பது?
குறிப்பு: மணவூர் சிவாலயத்தில் போதுமான வருமானமின்றிப் பல  ஆண்டுகள் மின்சாரக் கட்டணம் செலுத்தப்படாமையால் மின் இணைப்பு  துண்டிக்கப்பட்டதாக அறிந்து வேதனயுற்று நம் ஆஸ்ரமம் சார்பில்  பழைய மின் கட்டண பாக்கித் தொகையைச் செலுத்தும் பாக்யத்தையும்  இந்த சிவராத்திரி மஹிமையால் பெற்றோம். இறைவன் எமக்கு  மனமுவந்து அளித்த சிவராத்திரிப் பரிசு! பாரத ரத்னாவென்ன, பரமவீர  சக்ரா என்ன, நோபல் பரிசென்ன இவற்றிற்கும் மேலான இந்திர,  தேவலோகங்களிலுள்ள தெய்வீகப் பரிசுகளைவிட உயர்ந்த  சிவத்தொண்டாக இப்பாக்யத்தைப் பெரும் பரிசாகப் பெற்றுத் தந்தவரே  எம் குருநாதர்.
சைவ, வைணவ வேறுபாடின்றி, ஏன் மத சமய வேறுபாடின்றியும்  எத்தனையோ இறைத் தலங்களில், கிறித்துவ, இஸ்லாமிய, சமண, புத்த  சமயப் பெரியோர்களின் ஜீவ/ ஜீவாலய சமாதிகளின் தரிசனங்களையும்  எங்களுக்கு சுவாமிகள் பெற்று தந்துள்ளார்கள்!
பாண்டிச்சேரி அருகே சின்னபாபு சமுத்திரத்தில் உள்ள ஸ்ரீ படேசாஹிப்  மஹானின் ஜீவ சமாதியானது எத்தகைய நோய்களையுந் தீர்க்கும்  தெய்வீக வைத்ய ஆலயமாக விளங்குகிறது! ஜீவாலயம் சிறியதே!  கீர்த்தியோ சால பெரிது! சிறுகுழந்தைகளுக்கு விழுகின்ற முளைப் பற்களை சென்னை காரமடை  எல்லையில் உள்ள ஞாயிறு சிவாலயப் பகுதியில் இடுவதோ அல்லது  விழுகின்ற பற்களை இச்சிவாலயத் திருமண்ணுடன் சேர்த்து மற்ற  இடங்களில் புதைப்பதோ வேண்டும். என ஞாயிறு ஆலயத்தில் மின்  இணைப்பு / மின்விளக்குகளைச் சீர்படுத்தும் திருப்பணியினை ஏற்ற  போது சுவாமிகள் இத்தகைய ஆன்மீக விளக்கங்களை அளித்தார்.
காட்ராக்ட், க்ளௌகோமா போன்ற கடுமையான கண் வியாதிகளுக்கு  நிவாரணமளிப்பவரே ஞாயிறு சிவலிங்க மூர்த்தியாவார். சூரியோதயம்,  சூரிய அஸ்தமன நேரங்களில் இம்மூர்த்திக்கு மல்லிகைப் பூக்களால்  நிறைத்து, அன்னாபிஷேகம் போல் லிங்கமேனி முழுதும் மல்லிகைக்  கவசமிட்டு தேனில் கலந்த அத்திப் பழங்களை நைவேத்யம் செய்து  ஏழைகளுக்கு அளித்து வந்தால் அற்புதமான முறையில் எத்தகைய கண்  வியாதிகளுக்கும் நிவாரணம் கிட்டும், ஆழ்ந்த நம்பிக்கையுடன் வழிபட்டு  வந்திடில் நம்பினோர் கைவிடப் படுவதில்லை!
இக்கோயிலில் உள்ள சூரிய பகவான் மிகவும் சக்தி வாய்ந்தவர்.  ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய ஹோரை நேரங்களில் (காலை – 6-7,  மதியம் 1-2, இரவு 8-9) சூரியனுக்குரிய செந்தாமரைப் புஷ்பங்களால்  மாலைகள் சூட்டி, முழுத் தாமரை மலர்களால் அர்ச்சித்து  இக்கிரஹத்திற்குரிய கோதுமையால் ஆன உணவினைப் படைத்து  தானமளித்து வந்திடில் சிறுவர், சிறுமியர்க்குர்ய கண் நோய்கள் நீங்கும். சென்னைக்கருகிலேயே உள்ள பலரும் அறியாத அற்புதமான ஞாயிறு  சிவன் கோயில் கண் கண்ட பண்டைய மூர்த்தி!
பாலாஜியின் பாதங்களில்
பல ஆண்டுகளுக்கு முன்… சுவாமிகளுடன் திருப்பதிக்கு தலயாத்திரை செய்யும் பாக்யம் கிட்டியது!
“நீங்களெல்லாம் பூர்வஜென்மங்கள்ல அடியேனோட எத்தனையோ  தடவை இங்கே வந்திருக்கீங்க! நாமெல்லாம் சேர்ந்து கட்டின மடங்கள்  இங்கே நிறைய இருக்கு! அதையெல்லாம் இறைவன் மாயையா  மறைச்சு இப்ப இந்த ஜென்மத்துல இங்க அனுப்பிட்டான்! இப்ப அந்த  மடங்கள்ல போய், இத்தனை ஜென்மத்துக்கு முன்னாடி நாங்க  கட்டினதுன்னு உரிமை கொண்டாட முடியுமா? உலகத்துல் எதுவுமே   சாஸ்வதம் கிடையாதுன்னு தெரிஞ்சுக்கங்க!”
கீழிருந்து நடந்து மேலே செல்லுகையில் நடுவில் சில இடங்களில்  பாதையைவிட்டுச் சற்று விலகி உட்சென்று சில அபூர்வமான நந்தவனம்,  தோட்டங்களின் ஊடே சென்று சில மஹான்களின் ஜீவ சமாதிகளைக்  காண்பித்து தரிசனம் செய்வித்தார்.
மேலே திருப்பதியில் ஸ்ரீவெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்யும்  முறையையும் போதித்தார். பாதாதி கேச தரிசனமே பாலாஜிக்குரியது! அதாவது முதலில் திருவேங்கடத்தானின் பாதங்களிலிருந்து தொடங்கி  சிறிது சிறிதாகக் கண்களை மேலே உயர்த்தி பகவானின் கேசம் வரை  தரிசிக்க வேண்டும்! இப்போது நிலவும் பெருங் கூட்டத்தினிடையே,  ஜரகண்டி க்யூ முறையில் இது சாத்யமாகுமா? ஏன் முடியாது, ஆழ்ந்த  நம்பிகையுடன் கடைபிடித்திடில்! சித்புருஷர்கள் அருள்கின்ற ஸ்ரீ பாலாஜி தரிசன முறையை தந்து  விட்டோம் குருவருளால்!
திருப்பதி யாத்திரையின் பரிபூரண பலன்களைத் தரவல்ல பாதாதி கேச  தரிசன முறையிது!

ஸ்ரீசரபேஸ்வரர் மகிமை

ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி மஹிமை
ஆதிமூலப் பரம்பொருட் தெய்வம் ஆதிசிவனே! அனைத்து உயிர்களும்  நலமுடன் வாழவும், பஞ்ச பூதங்களும் நிலை பெற்றுச் செயல்படவும்,  உலகம் அனைத்தும் ஒளி பெற்றுச் சாந்தமுடன் வாழவும் அருள்கின்றவர்  அவரே! சிவத்தின் ஓங்காரப் பெருவடிவே ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியாவார். வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அடைய வேண்டிய நிலையான புகழ்,  பெருமை, பலம் போன்றவற்றை அளிப்பவர் ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தி  ஆவார். பஞ்சபூதங்கட்கும், நவக்கிரகங்கட்கும், தேவாதி தேவி  தெய்வங்கட்கும், மந்திர, தந்திர, யந்திர, யோக, சித்து மூலங்கட்கும், ஆதி  மூலமானவர் ஸ்ரீ சரபேஸ்வரர் ஆவார். சித்திக்கும், புத்திக்கும் மூலமான  சிவனுள் பக்திக்கும் பலத்திற்கும் சீலமான பராசக்தியே சரபேஸ்வரராவார்.
துயரங்கள் அதிகமாகிடும் போதும், திறமையான செயல்களில் ஈடுபடும் போதும் பயனளிக்காமல் காலங்கள் வீணாகும் போதும், நேர்மைக்கும்,  உழைப்புக்கும் திறமைக்கும், தீர்க்கமான ஊதியம் கிட்டாத போதும்,  நல்லறிவுகள் இருந்தபோதும் ஒருவரையும் நம்பி வாழ இயலாத  நிலையில் மனோசக்தி குறையும் போதும், ஞாபக சக்தி குறையும்  போதும், தைரியம் இல்லாத போதும், தோல்வியைச் சந்திக்கத் துணிவு  இல்லாத போதும், வெற்றிப் பாதையில் திடமாக நடக்கவும் சரபேஸ்வர  வழிபாடு அனைவருக்கும் உதவுகின்றது.
இதோடு மட்டுமின்றி அன்பு நிறைந்த தாம்பத்ய வாழ்விற்கும், நல்ல  குழந்தைகள் நாட்டிற்கு வழங்கவும், நோயற்ற வாழ்வு வாழவும், பில்லி,  சூன்யம், ஏவல், கண்ணேறு, திருஷ்டி எதிரிகள் வைக்கும் தகடு, நகம்  மயிர் சட்டிகளும், செயிலிழந்து போகச் செய்வதும் ஸ்ரீ சரபேஸ்வர  மூர்த்தியின் அருட்சக்தியே. இந்த சரபேஸ்வர பூஜை முறையை இங்கு  விளக்குகின்றோம்.

ஸ்ரீ சரபேஸ்வர வழிபாடு
தினமும் மாலை சந்தி நேரத்தில் இந்த சரபேஸ்வர பூஜையைச் செய்தல்  நலமாகும். சரபேஸ்வரர் அவதார உதயம் எப்படியெனில் ஹிரண்யனை  ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி சம்ஹாரம் செய்த நேரமே சந்தி நேரம். அவன்  வயிற்றைப் பிளந்து மாலையாக்கி அணிந்து அவனது உதிரத்தையும்  ஸ்வாமியே கிரஹித்திட அவனுடைய கோபமும், அகந்தையும் ஸ்ரீ  நரசிம்மரின் திருமேனியை தீண்டிட மாபெரும் உக்கிரத்துடன் கட்டுக் கடங்கா நிலையடைந்தார் ஸ்ரீ நரசிம்மர்.
சகலகோடி லோகங்களும் இந்த உக்கிர சக்தியைத் தாங்கும்  வல்லமையைப் பெறவில்லை என்பதால் முனிவர்களும், தேவர்களும்,  சித்தர்களும், சிவனை வேண்டிட ஸ்ரீ சிவனும், பிரத்யங்கிரா, சூலினி  தேவிகளின் பூரண துணையுடன் மஹா உக்கிரமான ஸ்ரீ சரபேஸ்வர  உருவம் தாங்கி, நரசிம்ம மூர்த்தியின் உக்ர நிலையை சமநிலைக்கு  கொணர்ந்து அமைதிப்படுத்தினார்.
சரபேஸ்வர நிலை இரகசியம்
ஆகையால் ஸ்ரீ சரபேஸ்வரருக்கு சந்தி நேரம் மிகவும் சிறப்பானது. இராகு  கால சரபேஸ்வர வழிபாட்டின் மகிமையைப் பின்னர் காண்போம்.
சரபேஸ்வர வழிபாட்டு முறையில் ஞாயிறு, செவ்வாய், வியாழன் மிக  முக்கிய நாட்களாகும், இக்கிழமைகளில், ஞாயிறு மாலை, செவ்வாய்  இராகு காலம், வியாழன் இராகு காலம் சரபேஸ்வர பூஜைக்குச்  சிறப்பானது. இம்மூன்று நாட்களிலும் மாலை சந்தி நேரமான 5-6  மணிக்கும் இவரைப் பூரணமாக வழிபடுவதும் சிறப்புடையது! நீராடி  சுத்தமான ஆடையணிந்து, அவரவர் குடும்ப மரபுப்படி  திருநீறு/சந்தனம்/குங்குமம்/திருமண் இட்டு சரபேஸ்வரரை வழிபட  வேண்டும்.
பல இடங்களில், கம்பங்களில் அதாவது தூண்களில் ஸ்ரீ  சரபேஸ்வரமூர்த்தி பூரணமாய் ஆவாஹனமும் ஆவதற்கு உத்தம  சித்தர்கள் சந்தி நேரங்களில் தவமிருந்து அவர்கள் முதலில்  அத்தூண்களில் உறைந்து , சரபேஸ்வர லிங்க ஆவாஹனத்திற்கான சுத்தி சக்தியை அத்தூண்களுக்கு அளிக்கின்றனர்.
கம்பகரேஸ்வர லிங்க சக்தியை அக்கம்பங்களில் தம் தவநிலைகளின்  மூலம் சுத்திகரித்த பின்னரே ஸ்ரீ சரபேஸ்வரர் அத்தூண்களில்  ஆவாஹனமாகி மக்களுக்கு அருள் பாலிக்கின்றார். ஞாயிறு மாலை  நேரங்களில் அற்புத சக்தி வாய்ந்த சிகண்டி சித்தர்கள் அக்கம்பங்கள்  சக்தியும், சுத்தியும் பெறவும் அற்புதமான யோக நிலைகளை  மேற்கொள்கின்றனர். இச்சிகண்டி சித்தர்கள் பற்றிய விளக்கங்கள் நிறைய  உள்ளன. இவர்கள் எவ்வாறு திவ்யயோக சித்தியைப் பெற்று கம்ப சுத்தி  செய்கின்றார்கள்?

ஸ்ரீஐயப்ப விரத மகிமை

கடந்த இரண்டு இதழ்களாக பரிபூர்ணமான ஸ்ரீ ஐயப்ப விரத முறைகளை  விளக்கி வருகின்றோம். அதர்மமும், வன்முறையும், பாவச் செயல்களும்  பெருகி வருகின்ற கலியுகத்தில் ஸ்ரீ ஐயப்ப பக்தியானது சிறந்து  விளங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகின்றோம். எனினும் ஸ்ரீ விரத மகா   மூர்த்தியென தேவாதி தேவர்களாலும், தெய்வ மூர்த்திகளாலும்,  மகரிஷிகளாலும் போற்றப்படுகின்ற ஸ்ரீ ஐயப்ப பகவானுக்கு மிகவும்  உவப்பானது நல்ல விரத நெறிகளுடன் கூடிய வழிபாடே ஆகும்  என்பதாலும், கலியுகத்தின் கண்கண்ட மூர்தியான ஸ்ரீ ஐயப்ப விரதத்தில்  நடைமுறையில் காணப்படுகின்ற விரத பங்கங்களைக் களையும்  பொருட்டும் இவ்விளக்கங்களை எடுத்துரைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
மாலை அணியும் முறை:
துளசி மாலை, தாமரை மணிமாலை, ருத்ராட்ச மாலை போன்ற  மாலைகள் தாம் விரதத்திற்கு உரித்தானவை. புதிதாக விரதத்தை  மேற்கொள்வோர், அதாவது கன்னி ஐயப்பன்மார்களும், மற்ற  ஐயப்பன்மார்களும் புதிய மாலைகளைத்தான், அதுவும் புது மாலைகளை  அணிவதற்கு முன்னர் அவற்றிற்குச் செய்ய வேண்டிய வழிபாடுகளை  நிறைவேற்றிய பின்னரே அணிதல் வேண்டும். விரதம் முடிந்த பின்னர்  இம்மாலைகளை விரத பூர்ண (முடிவு) பூஜைக்குப் பின்னர் பத்திரமாக  ஒரு சந்தனப் பெட்டியிலோ அல்லது பூஜை அறையிலோ சுவாமி  படத்தின் மீது வைத்து தினமும் வழிபடுதல் வேண்டும்.
பின்னமான அதாவது நைந்து போன மாலையை அல்லது பங்கமான  மாலைகளை/ மணிகளை மாற்றிப் புதிதாக வைத்துக் கொள்ளலாம்.  முழுதும் பின்னமான மாலைகளைக் குறித்த சில விசேஷமான  நாட்களில் மட்டும் கடலிலோ அல்லது புனித நதிகளிலோ சேர்த்து விட  வேண்டும். குருவைக் கேட்டு விளக்கம் பெறுக!
துளசி, தாமரை மணி, ருத்ராட்ச மணிகளை உறுதியான கயிற்றில்  செப்பு/வெள்ளி/தங்கக் கம்பிகளிலோ சேர்த்து அணிந்திடலாம்.

பம்பை நதி

தாமரை மணி மாலை = 108 மணிகள்
துளசி மாலை – 51 மணிகள் அல்லது 54 மணிகள்
ருத்ராட்ச மாலை – 21 ருத்ராட்சங்கள்
இவ்வகையில் மணியின் எண்ணிகைகள் அமைய வேண்டும். இம்மூன்று  மாலைகளிலும் முத்திரை மணி என்ற பெரிய மணியும் கணக்கில்  அடங்கும்! அதாவது உதாரணமாக 21 ருத்ராட்சம் அடங்கிய ருத்ராட்ச  மாலையில் 20 ருதராட்சங்களும் ஒரு பெரிய முத்திரை ருத்ராட்சமும்  இருக்கும். இம்முத்திரை ருத்ராட்சமானது நடுவில் கீழ்ப்புறம்  தொங்குமாறு அமைக்கப்படும் இதை மேரு மணி என்றும் கூறுவர்.
இதேபோல் 51/54 துளசி மணிகள் உள்ள துளசி மாலையிலும், 108  மணிகள் உள்ள தாமரை மணி மாலையிலும், ஒன்று சிறப்பான முத்திரை  மணியாக அமையும்.
விரத நாளுக்கு ஒரு மாதம் முன்னரேயே மாலையை வாங்கி  அதற்குரித்தான பூஜையைத் தொடங்க வேண்டும். உதாரணமாக  கார்த்திகை மாதம் விரதம் அனுசரிக்க எண்ணுபவர்கள் ஐப்பசி மாத  ஆரம்பத்திலேயே மாலைகளை வாங்கிப் பூஜை செய்ய ஆரம்பித்து விட  வேண்டும்.
மாலைகளை சித்த யோகம் அல்லது அமிர்த யோகம் கூடிய சுப  தினத்தில் குரு ஹோரையில் வாங்குவது சிறந்தது. காலை அல்லது  மாலை சந்தி நேரங்களும் சிறப்புடையன. அதாவது பகவானுடைய  இருகண்களாக விளங்குகின்ற சூரியனும் சந்திரனும் சேர்ந்து வானில்  கண்களுக்குத் தெரிகின்ற போது குருஹோரையும் சேருமானால் அது  மிகவும் புனிதமான நேரமாக அமைகின்றது.
மணி என்றால் கண்மணி என்ற பொருளும் உண்டு. எனவே தான்  இறைவனின் கண்மணிகளான சூரியனும், சந்திரனும் வானில் தெரிகின்ற  நேரம், தெய்வ சாட்சியாக அமைகின்ற புனித நேரமாகச் சிறப்பைத்  தருகின்றது.
மேலும் வாரத்தின் ஏழு நாட்களும் குருட்டு நாட்கள், ஒரு கண் உள்ள  நாட்கள், இரு கண் உள்ள நாட்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன இவற்றுள்  புதன், வியாழன், வெள்ளி இவை இரு கண் உள்ள நாட்களாக  இருப்பதால் இவை தனிச் சிறப்பைப் பெறுகின்றன.
தாமரை மணி மாலை பூஜை:
108 தாமரை மணிகளை மேற்குறித்தவாறு நல்ல நாளில், நல்ல நேரத்தில்  வாங்கி ஒரு தாமரை இலையில் வைத்து, விரதம் ஏற்கும் நாள் வரை  தினந்தோறும் பூஜித்து வருதல் வேண்டும்.
கங்கை காவிரி போன்ற புனித தீர்த்தங்களினாலும் இவற்றை அபிஷேகம்  செய்து இம்மணி மாலைக்குப் புனிதம் கூட்டிட வேண்டும். சிவ  தோத்திரங்கள், சிவ சஹஸ்ரநாமம், சிவ அஷ்டோத்திரம், ஸ்ரீ  குருவாயூரப்பன், விஷ்ணு சகஸ்ரநாமம், விஷ்ணு அஷ்டோத்திரம்  போன்ற துதிகளாலும் அல்லது
ஓம் நமசிவாய
சிவாயநம்
சிவயசிவ
சிவ சிவ – என்றும்
ஹரி ஓம் நாராயணாய நம: என்றோ
ஓம் நமோ நாராயணாய,
ஸ்ரீ ராம் ஜெயராம் ஜெயஜெயராம்- என்ற இறை நாமங்களையோ ஓதி வர  வேண்டும்.
இம்மாலையைத் தினந்தோறும் பூஜிப்பதால் இதற்கு தெய்வ ஆவாஹன  சக்தி கூடுகின்றது. எனவே தினந்தோறும் இதற்கு தினசரி நைவேத்யம்  படைப்பதும் அற்புதமான பூஜையாக அமைகின்றது. இவ்வித பூஜைகளை முழுமையாக நிறைவேற்றிய பின்னர் தாமரை  மணி மாலையை ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தி ஸ்ரீ ஐயப்ப மூர்த்தி, ஸ்ரீ  மோகினி அவதார மூர்த்தியின் திருப்பாதங்களில் சமர்ப்பித்து விரத  மாலையாக அணிவது சிறப்பானதாகும்.

ஸ்ரீகருப்பசுவாமி ஆரியங்காவு

துளசி மணி மாலை பூஜை:
தாமரை மணி மாலையைப் போன்றே துளசி மணி மாலையையும்  குறித்த நல்ல நாளில், நல்ல நேரத்தில் வாங்கி வில்வம், சந்தனம், அத்தி,  மா, பலா, தேக்கு போன்ற மரப் பீடங்களில் வைத்து பூஜித்து வருதல்  வேண்டும். மரப் பீடத்திற்குப் பச்சரிசி மாக்கோலமிட்டு செங்காவியும் பூசித்  தாமரை மணி மாலைக்கு அளிக்கப்பட்டுள்ளது போல அபிஷேக  ஆராதனைகளைச் செய்து வருதல் வேண்டும்! தினந்தோறும்  நைவேத்யமும் உண்டு.
ருத்ரமணி மாலை பூஜை:
ருத்ராட்சங்களில் ஒரு முகம், இரு முகம் மூன்று முகம் என பல வித  முகங்களை உடைய ருத்ராட்சங்கள் உண்டு. ஏக முகம் எனப்படும் ஒருமுக ருத்ராட்சமானது மிகவும் சக்தி வாய்ந்ததாகும். பொதுவாக ஐந்து  முகம் கொண்ட பஞ்சமுக ருத்ராட்சங்களே அதிகமாகக் கிடைக்கின்றன. இயற்கையிலேயே துளையையுடைய ருத்ராட்சத்திற்குப் பல அபூர்வ  சக்திகள் உண்டு. ருத்ராட்சத்தை மட்டுமே வைத்து முறையாகப் பல  எளிய பூஜைகளைச் செய்து வந்தால் காம, குரோத, துரோக  எண்ணங்களை எளிதில் வென்று விடலாம். இறை பக்தியும் மேம்படும்!
வீர சைவ கோட்பாட்டில் ருத்ராட்சத்தையே சிவலிங்கமாக வழிபடுகின்ற  ஒரு நிலை உண்டு.
நல்ல ருத்ராட்ச மணிகளைப் பெரியவர்களுடைய திருக்கரங்களிலிருந்து  பெறுதல் சிறப்புடையதாகும். இதனை ஒரு செப்புத் தகட்டில் வைத்து  தினந்தோறும் பூஜித்து வருதல் வேண்டும். லிங்க மூர்த்திக்குச் சமமான  ருத்ராட்சத்தைத் தாங்குகின்ற ஆவுடையாக விளங்குகின்ற செப்புத்  தகட்டையும் தினந்தோறும் தூய்மை செய்து புனித நதி தீர்த்தங்களால்  அபிஷேகித்து வருதல் வேண்டும். ருத்ராட்ச மணிகளில் இருபுறமும் தங்கம் அல்லது வெள்ளிக் குப்பிகளால்  மூடி, செப்புக் கம்பியிலோ அல்லது உறுதியான கயிற்றில் கோர்த்திட  வேண்டும். ருத்ராட்ச மரமானது சில அபூர்வமான இமாலயக் காடுகளில்  மட்டுமே காணப்படுகின்றது. அதிலும் ஓரிரு தமிழ்நாடு வனங்களிலும் மட்டுமே விசேட விருட்சமாகவும் விளங்குகின்றது.
துளசி, தாமரை மணி மாலைகளைப் போலவே ருத்ராட்ச மாலைக்கும்  பூஜை செய்து ருத்ராட்ச மரத்தடியிலோ அல்லது ருத்ராட்ச மரம்  இருக்கும் இடங்களிலோ சமர்ப்பித்தோ அணிதல் சிறப்புடையதாகும்.
இத்தகைய அற்புதமான பூஜைகளைக் கடைபிடித்தால் விரத  மாலைக்கென்று ஒரு தனிச் சிறப்புடைய தெய்வீக சக்தி உண்டாகின்றது.  இத்தகைய பூஜா சக்திகள் நிறைந்த விரத மாலையை அணியும் போது  மனதிற்குப் புது ஆன்மீகப் பொலிவும் விவரிக்க முடியாத தெய்வீகமான  சாந்தமும் உள்ளத்தில் ததும்புவதை நன்கு உணர்ந்திடலாம்.
விரத உணவு முறைகள்:
விரதத்தின் போது இயன்ற வரை ஜீரக வெள்ளம் அல்லது துளசி,  வில்வம் கலந்த நீரையே அருந்திட வேண்டும். நரம்பிற்கும்  உள்ளத்திற்கும் தசை நார்களுக்கும், நாடி நரம்புகளுக்கும் உணர்ச்சிகளைக்  கிளறக் கூடிய ஊறுகாயை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஜீரக வெள்ளம் எனப்படும் கேரள முறையிலான சீரகம் ஊறிய நீரை  அருந்தி வருதலால் சுழுமுனை நாடியில் சுவாசம் கூடி, மன ஓட்டங்கள்  அடங்கி சாந்தம் ஏற்படும்.
சித்புருஷர்கள் ஒவ்வொரு நாளுக்கும் கிரக அழுத்த நிலைகளையும்,   ஹோரை சக்திகளையும், யோக அம்சங்களையும் கருத்தில கொண்டு  அந்தந்த நாளுக்குரிய விரத உணவு முறைகளை அமைத்துள்ளனர். இந்த  முறையில் விரத உணவு முறைகளை அமைத்தால்தான் விரத மகா  மூர்த்தியான ஸ்ரீ ஐயப்பன் அருளும் ஸ்ரீ பூரணமாகக் கூடும். இவ்விரத  உணவு முறைகள்தாம் மன அடக்கத்தையும் சரீர நல்ஒழுக்கத்தையும்  கூட்டி தெய்வ தரிசனத்திற்கான ஆன்மீக நிலைகளை எளிதில் பெற்றுத் தருகின்றன.
விரதத்தின் போது மனம் போன போக்கில் உணவு உண்டால் தேக, மன,  உள்ள உணர்ச்சிகள் சிதறி இருக்கின்ற பூஜா சக்திகளும் விரயமாகிவிடும்.  இதனால் விரத நிலையிலேயே பலவிதமான தவறுகளுக்கு ஆளாக  வேண்டியதாகி விரத பங்கம் ஏற்படுவதோடன்றி பல தெய்வக்  குற்றங்களுக்கும் மனிதன் ஆட்படுகின்றான். இதனால் சொல்லொனாத்  துயரங்களும், வேதனைகள் நிறைந்த துன்பங்களும், நோய்களும்  உண்டாகி குடும்பத்தையே பாதிக்கும். எனவே ஒழுக்கமான உணவுக்  கட்டுப்பாட்டை விரத நாட்களில் கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும்.
ஞாயிற்றுக் கிழமைக்கான விரத உணவு முறை:
விரத நாட்களில் ஏழு கிழமைகளிலும் க்ஷீர அமிர்தம் எனப்படும் கறந்த  பசும்பாலைக் காய்ச்சிடாமல் பச்சையாகவே காலையில் அருந்திட  வேண்டும். இதுவே காலை உணவு.
இத்தகைய உணவு முறையே காம எண்ணங்களையும் துர்  ஆசைகளையும் இயற்கையாகவே சீர் செய்து நெறிப்படுத்தி உள்ளத்தை  பக்தி நிலையில் நிலைநிறுத்துகின்றது.
சூரிய பகவானுக்குரித்தான நாளே ஞாயிறு. ஈசுவரனின் வலது கண்ணாக  இவர் விளங்குவதால் சூரிய சக்திகள் நிறைந்த பொன்னாங்கண்ணி  கீரையைப் பொடியாகச் செய்து இன்று அன்னத்தில் கலந்து மதிய  உணவாக ஏற்றிட வேண்டும். காரட் (Carrot) என்பது வெளிநாட்டிலிருந்து நம் நாட்டிற்கு வந்த காய்கறி  அல்ல. இதனை சித்த வைத்தியக் கூறுவகையில் செஞ்சி(ள) வந்தண்டு  வேர் என்று குறிக்கின்றார்கள். இதிலும் சூரிய அம்சங்கள் நிறைந்துள்ளன.  உண்மையில் சூரிய மண்டலத்தில் உள்ள தேவாதி தேவர்களும்,  ஜீவன்களும் கேரட்டைப் போன்ற இளஞ்சிவப்பு நிறத்தில் ஆடைகளை  அணிகின்றனர். மூன்று வகைக் குணங்களில் சத்துவ குணம் நிறைந்ததே  கேரட் ஆகும்.
மேலும் சூரிய பகவானுக்குப் ப்ரீதியானது தயிர் அபிஷேகமாகும். ஞாயிறு மதியம் பொன்னாங்கண்ணிப் பொடியுடன் கூடிய கேரட் கலந்த  அன்னம், தயிர் – இதுவே மதிய உணவு.
இரவில் கறந்த பசும் பாலுடன் சிறிது கேரட் கலந்து அருந்திடலாம்.  இதுவே ஞாயிற்றுக் கிழமைக்குரித்தான விரத உணவு முறையாகும்.
பொதுவாக ஸ்ரீ ஐயப்ப விரத நாட்களில் ஏற்கனவே குறிக்கப்பட்டுள்ளது  போல அந்தந்த கிரக நாட்களுக்குரிய மூலிகைகள், தாவரங்கள்,  தானியங்கள் போன்றவையே விரத உணவு முறைகளாக இவ்வகையில்  அளிக்கப்படுவதால் பக்தி நிலையில் நிலைத்து நிற்க இவை பெரிதும்  உதவும்.
திங்கட் கிழமைக்குரித்தான விரத உணவு முறை:
திங்கட்கிழமை அன்று காலையில் வழக்கம்போல் க்ஷீர அமிர்தம்  எனப்படும் கறந்த பசும் பாலை அருந்த வேண்டும்.
இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால், என்ன உணவு ஏற்க வேண்டும்  என்று குறிக்கப்பட்டுள்ளதே தவிர எவ்வளவு உணவு ஏற்க வேண்டும்  என்பதை அவரவர் உடல் வாகையும் வழக்கத்தையும்  ஆரோக்கியத்தையும் பொறுத்தே அமைத்துக் கொள்ளலாம். திங்கள்கிழமை சந்திரனுக்குரிய கிரகமாக விளங்குவதால் வெண்மை நிறம்  சந்திர ப்ரீதியைத் தருவதாலும் மதிய உணவாக அன்னத்துடன்  பிரண்டைப் பொடி, முட்டைக்கோஸ் போன்ற வென்மையும் பசுமையும்  கலந்த காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். முட்டைக் கோஸ்  என்பதும் நாம் நினைப்பது போல வெளிநாட்டிலிருந்து வந்தது அல்ல.  வென்பூவண்டமென சித்த வாடக சூத்திரங்களில் இதைப் பற்றி  அற்புதமாகக் கூறியுள்ளனர்.
இது பித்தத்தைத் தணிக்கக் கூடியது எளிதில் ஜீரணமாகக் கூடியது.  உண்மையில் வாழைப்பூ போன்று பூக்குணங்களைக் கொண்டதாகத் தான்  முட்டைக்கோஸ் கருதப்படுகின்றது. சந்திர ஒளியில் மலர்கின்ற  பூக்களுக்கு மனதைக் கட்டுப்படுத்தும் வல்லமை உண்டு. எனவேதான்  முட்டைக் கோஸ் போன்ற பூத்தாவரங்களை உணவில் சேர்ப்பது  திங்கட்கிழமை அன்று வலியுறுத்தப்படுகின்றது.
ஸ்ரீ ல ஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம் திருஅண்ணாமலை சேவை  செய்திகள்
25.1.1998 – சென்னை வானகரம் கிராமம் – ஏழைகளுக்கான இலவச  மருத்துவ முகா,ம்
10.2.1998 – திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் பௌர்ணமியில் அன்னதானம்
15.2.1998 – திருச்சி புங்கனூர் கிராமம் – ஏழைகட்கான இலவச மருத்துவ  முகாம்
25.2.1998 – திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் சிவராத்திரி அன்னதானம்.  சாம்பார் சாதமும் 25000 லட்டுகளும், ரவாலாடுகளும் அன்னதானமாக  அளிக்கப்பட்டன.
01.03.1998 – சென்னை துரைப்பாக்கத்தில் இலவச மருத்துவ முகாம்
25.2.1998 – சிவராத்திரி – திருச்சியில் அன்னதானம்
பிப்ரவரி 1998 – ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழில் ஸ்ரீலஸ்ரீ வெங்கடராம  சுவாமிகள் அளித்திருந்த வில்வதளபூஜை முறைப்படி ஸ்ரீ  அருணாசலேஸ்வரருக்குச் சமர்ப்பித்திட கிரிவலத்தில்  பல்லாயிரக் கணக்கானோர் வில்வதளங்களைத் தாங்கி  திருஅண்ணாமலையை கிரிவலம் வந்தது காணக் கண் கொள்ளாக்  காட்சியாக அமைந்து ஆனந்தமளித்தது. செழிக்கட்டும் சிவத் தொண்டு!
23.2.1998 மார்ச் 9ல் ஸ்ரீ அகஸ்திய விஜயத்தில் அளித்துள்ளபடி குருபாத  சேவைக்கு உரித்தான மகத்தான நாளாதலின் திருச்சியில் ஏழை  மக்களுக்குப் புதிய காலணிகளும் கேசரி இனிப்பும் தானமாக  அளிக்கப்பட்டன.

அமாவாசை விளக்கங்கள்

அமாவாசை என்றால் என்ன? – சில ஆன்மீக விளக்கங்கள்.
அமாவாசை அன்று பூமியிலும் மேல் உலகங்களிலும் நடப்பது என்ன?
அமாவாசைக்கும் பித்ருக்களுக்கும் என்ன சம்பந்தம்?
அமாவாசை நற்காரியத்திற்கு உகந்தது ஏன்?
அமாவாசை பற்றி நிறைய விஞ்ஞான விளக்கங்கள் உள்ளன. ஆன்மீக  ரீதியாகவும் இதனை நன்கு விளக்கிடலாம். எனினும் ஆன்மீக  விளக்கங்கள் ஒரு சிலவே விஞ்ஞானத்தோடு ஒத்து போகும்.
இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்பானது நாளைக்கு எந்நாட்டிலும்  எந்நேரத்திலும் காரண காரியத்தோடு நிராகரிக்கப்படலாம். எனவே  ஆன்மீக விளக்கமே ஆயிரங் காலத்துப் பயிராக காலகாலமாய்  நிலைத்து நின்று நம்மை வாழ்விப்பதாகும்.
அமாவாசைக்குரிய சித்புருஷர்களின் விளக்கங்கள் பலப்பல. சூரியனு சந்திரனும் சேர்கின்ற நாளே அமாவாசை  அல்லவா? பொதுவாக சூரியனுடைய அக்னியிலிருந்து ஒரு பகுதியைப்  பெற்றே சந்திரன் நமக்கு ஒளி தருகின்றார் என்பதை நாம் அறிவோம். சூரியனின் ஒளியையே நமக்குச் சந்திரன் அளித்தாலும் சந்திரனுடைய  ஒளிக் கிரணங்கள் மட்டும் குளுமையாக இருப்பது ஏன்?
பொதுவாக அனைத்து வகையான பூலோக உயிரினங்களும் தம்முடைய  உயிர்ச் சக்தியை சூரியனிடமிருந்தே பெறுகின்றன என்றாலும் கடும்  வெப்பத்தினால் அதனுடைய பலவிதமான ஜீவசக்திகளை நம்மால் பெற  இயலாமல் போகிறது. இதனையே சந்திரன் ஜீவன்களுக்கு உரித்தான  அளவில் மாற்றித் தருகின்றார். சந்திரனில் இவ்வியக்கம் நடைபெறும்  விசேஷமான தினமே அமாவாசை ஆகும்.
அமாவாசை அன்று சந்திரன் கண்ணுக்குத் தெரிவதில்லை. ஆனாலும்  அன்று அதனுடைய சூட்சும வடிவம் வானில் இருக்கத்தான் செய்கிறது.  ஒளி என்றால் நம் கண்களுக்குத் தெரிந்துதான் ஆகவேண்டும் என்பது  இல்லை. சூரியனைவிடப் பன்மடங்கு சக்தி வாய்ந்த நட்சத்திரங்கள்  பகலில் வானில் மிளிர்கின்றனவே. நம்மால் காண முடிகின்றதா? ஆனால்  பகலில் மின்னுகின்ற நட்சத்திரத்தைக் காண வல்ல மஹரிஷிகளும்,  பெரியோர்களும் இன்றும் நம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள்.  அதைச் சுட்டிக் காட்டினால் இன்றைய விஞ்ஞானம் பரிசோதனை என்ற  முறையில் அவர்கள் கண்களைப் பதம் பார்த்து விடும்!
சூரிய சந்திர கிரஹங்களுக்குரிய விசேஷமான அதி, பிரத்யதி  மூர்த்திகளுண்டு.
அதிதேவதா மூர்த்திகள் : சூரியனுக்கு – அக்னி, சந்திரனுக்கு – ஈஸ்வரன்
பிரத்யதி தேவதா மூர்த்திகள்: சூரியனுக்கு – ருத்ரன், சந்திரனுக்கு – கௌரீ
அமாவசையன்று சூர்ய, சந்திர மூர்த்திகள் சேர்கையில் இந்நான்கு தேவ,  தேவதா மூர்த்திகளின் சங்கமத்தால் கௌரீஸ்வர ருத்ராக்னி மண்டலம்  அங்கு ஏற்படுகின்றது. பித்ருக்கள் இங்குதான் ஒன்று கூடித் தங்களுக்குரிய பூஜைகளையும் வழிபாடுகளையும் மேற்கொள்கின்றனர். காரணம்,  பரவெளியில் எப்போது சூரியனும் சந்திரனும் சேர்கின்றதோ, அதே  நேரத்தில் இறைவனுடைய இரு கண்களாக அமைந்துள்ள ஆதிமூல  சூர்ய, சந்திர மூர்த்திகளின் நேத்ராம்சங்களும் ஒன்று கூடிட,  இறைவனுடைய புருவமத்தியில் அமாவாஸ்ய ஜீவனம் ஏற்படுகின்றது.  இது ஏற்படும் அமாவாசை காலம் புனிதமானதாகும், காரணம் இறைவனே  தன் இரு நேத்திரங்களை (கண்களை)யும் ஒடுக்கி யோகம் பயில்வதால்  அமாவசையில் தான் ஜீவ விருத்தி ஏற்படுகின்றது.
ஜீவவிருத்திக்குரிய தேவதா மூர்த்திகளே வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு  தேவர்கள் ஆவர். மனிதர்கள் அனைவருக்கும் ஜாதி, மத சமய  வேறுபாடின்றி தாய் வழியிலும் தந்தை வழியிலும் உள்ள மூன்று மூன்று  பித்ரு தேவர்களின் சத்சங்க பரிபாலனத்தால்தானே ஒவ்வொரு மனித  வாழ்க்கையும் அமைகின்றது!
இது மட்டுமல்ல, சூரிய, சந்திர கிரஹங்கள் தாம் சேர்கின்ற ராசி  மண்டலத்தில் ஒரு சில கிரஹங்களும் இருப்பதற்கு வாய்ப்புண்டு.  உதாரணமாக பகுதான்ய வருட சித்திரை மாத அம்மாவாசையின் போது  26.4.1998 (சித்திரை 13) ராசியில் செவ்வாய் பகவானும் கூடியிருப்பதைக்  காணலாம். ஜோதிட ரீதியாக செவ்வாய் பகவான் நிலபுல சொத்துக்களின்  அம்சங்களுக்க உரியவராதலின் சித்திரை மாத அமாவாசைத் தர்ப்பண  பூஜையில் செவ்வாய் வழிபாடும் முக்கியமானதாகிறது.
சரண த்ரிதம்ப அமாவாசை
பகுதான்ய வருட சித்திரை மாத அமாவாசைக்கு த்ரிதம்ப  அமாவாசையென்று பெயர். அமாவாசை என்றால் தர்ப்பணம் செய்வது  மட்டுமே என்ற எண்னம் நிலவுகிறது. அமாவாசைக்குரிய வழிபாடுகள்  நிறைய உண்டு! நிறைந்த நாளாதலின் இப்புனித நாளில் நற்காரியங்களை  நிறைவேற்றிடலாம் என்பது உண்மையே!
26.4.1998 அமாவாசையன்று கோயிலுக்குச் சென்று சூரிய பகவானுக்கு  ஆரஞ்சு நிற வஸ்திரங்களை அணிவித்து கோதுமை உணவைப் படைத்து  வழிபடுக! சந்திர பகவானுக்கு கறந்த பசும்பாலால் அபிஷேகம் செய்து  வெண்ணிற வஸ்திரம் அணிவித்து வணங்குதலால் பித்ரு தோஷ  நிவர்த்திக்கு நல்வழி கண்டிடலாம். நம் மூதாதையர்களை முறையாகப்  போற்றாமையினால் தானே பித்ரு தோஷங்கள் உண்டாகின்றன. இதனால்  ஏற்படும் துன்பங்களோ ஏராளம். எனவே அமாவாசையன்று ஸ்ரீ சூரிய,  சந்திர மூர்த்திகளுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்திடுக! எந்த  கிரஹங்களால் அமாவாசை ஏற்படுகின்றதோ அந்தநாளில் அவர்களை  வழிபடுவதுதானே முறை!
பொதுவாக அனைத்து சிவாலயங்களிலும் முன் மண்டபத்திற்கு  இருபுறங்களிலும் சூரிய சந்திர மூர்த்திகள் சிறப்பாகத் தனி மூர்த்திகளாக  அருள்பாலிக்கும் இவர்களே இறைவனின் இருகண்களாக விளங்குவதால்  அமாவாசையில் மேற்கண்ட பூஜைகளை நிறைவேற்ற வேண்டும்.
வரும் பகுதான்ய ஆண்டு சித்திரை மாத த்ரிதம்ப அமாவாசையன்று  பத்து முழுத் தாமரைப் பூக்களை முன் வைத்து அவற்றின் சாட்சியாக  மூதாதையர்களுக்குத் தர்ப்பணமளிக்க வேண்டும். பெண்களுக்கு  பெண்வழியிலான (மனைவியின் தாய்வழி) பித்ருக்களுக்கும் ஆண்  வழியிலான (கணவனின் தந்தை வழி) பித்ருக்களுக்கும் ப்ரீதி தரக் கூடிய  மிகச் சிறப்பான அமாவாசை! விபத்து, அகால மரணம், தற்கொலை  மற்றும் பிறருடைய பகைமை/துரோகம் காரணமாக மற்றும் பிறருடைய  பகைமை/துரோகம் காரணமாக உயிரிழந்தோர், நீரில் மூழ்குதல் போன்ற  வகையில் மேற்கண்ட மூதாதையோர் இறந்திருப்பின் அவர்கட்கு  இத்திரிதம்ப அமாவாசையன்று 10 முழுத் தாமரைப் பூக்களைக் கொண்டு  அதன் முன் தர்ப்பணம் அளிப்பதால் அற்புதமான் வகையில் பித்ரு சாந்தி  ஏற்படும். தர்ப்பணத்திற்குப் பின் தாமரைப் பூக்களைப் பசுவிற்கு  மாலையாக அணிவிக்க வேண்டும். இன்று மூதாதையர்கட்கு பிடித்தமான  பொருட்களைத் தானமாக அளித்திட வேண்டும். இன்று சூரிய, சந்திர  மூர்த்திகளுக்கும் முழுத் தாமரை மலர்களால் மாலைகளை அணிவித்து  வழிபடுதல் சிறப்புடையது.

இறப்புத் தீட்டு உண்டா ?

இறப்பு பிறப்புத் தீட்டுகள் என்றால் என்ன?
இல்லத்தில் மரணம் சம்பவித்தால் ஒரு வருடம் கோயிலுக்குப் போகக்  கூடாதா? சென்றால் விபரீதங்கள் ஏற்படுமா?
“எங்கள் வீட்டில் … இன்னார் இறந்து விட்டார். ஒரு வருடத்திற்கு எந்தப்  பண்டிகையும் கிடையாது, கோயிலுக்கும் செல்லக் கூடாது!” மிகவும்  சர்வ சாதாரணமாக அனைவரும் சொல்கின்ற பதில் இது!
ஏதோ நீத்தார் நினைவாக மிகவும் ஆழ்ந்த துயரத்தில் இருப்பது  போலவும், நீத்தார் சடங்குகளை நன்கு சிரத்தையுடன் தினந்தோறும்  நடத்துவது போலவும் அமாவாசை மற்றும் மாதாந்திர/பட்ச சடங்கு  வழிபாடுகளை அடக்கத்துடன் கைக்கொள்வது போலவும் மிகவும் ஆசார,  அனுஷ்டானத்துடன் பவித்ரமான, புனிதமான வாழ்க்கை மேற்கொள்வது  போலவும் இன்னாருடைய மரணம் காரணமாக ஒரு வருடம்  கோயிலுக்குச் செல்வது கிடையாது என்று அற்புதமான பதில்! என்னே அப்பட்டமான பொய்!
நம் முன்னோர்கள் வகுத்துத் தந்துள்ள நீத்தார் சடங்குகளை  உண்மையிலேயே நிறைவேற்றி வந்தால் எத்தனையோ கர்ம வினைகள்  எளிதில் கரையுமே! ஆனால் கலியுக மனிதனோ எதனையுமே  சிரத்தையாகச் செய்வது கிடையாது! ஆனால் கோயிலுக்குச்  செல்வதில்லை, பண்டிகை கிடையாது, விரதமும் இல்லை என்ற  எதையோ ஒன்றை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருக்கின்றான்,  தன் சுயநலத்தினாலும், சோம்பேறித் தனத்தினாலும், எது தனக்கு  வசதியாக இருக்கின்றதோ எதனால் செலவு மிச்சமோ, எதைச்  சொன்னால் உறவினர்களையும் நண்பர்களையும் அச்சத்தால் நம்ப  வைக்கலாமோ அதனால் தன்னையும் ஏமாற்றிக் கொள்கின்றான்! என்னே  பரிதாபம்!
ஏற்கனவே மூட்டை மூட்டையாய்க் கர்மவினைகளைச் சுமந்து வந்து  மனிதனாகப் பிறப்பெடுத்திருக்கின்றான், சஞ்சித கர்மா என்ற பெயரில்! அதாவது எத்தனையோ கோடி ஜென்மங்களில் சேர்ந்துள்ள கோடி  கோடியான கர்மவினைகள்! இதில் கோயிலுக்குச் செல்லாமை என்ற  அதர்மமான நிலை வேறு!
“அதெப்படி சார், கர்மவினை கோடி கோடியாகச் சேரும், நான் ஈ,  எறும்பிற்குக் கூடத் துன்பம் தராது என்பாட்டில் நல்ல வாழ்க்கை தானே  வாழ்கின்றேன்!”
எங்கே உங்கள் நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், உங்களுக்கு எந்த  விதமான தீய, முறையற்ற காம எண்ணங்கள் தோன்றியதே கிடையாதா?  உங்களுக்காக நீங்கள் வாழ்ந்தால் சமுதாயத்தை விட்டு ஒதுங்கிய  சுயநலவாதி ஆகின்றீகளே!
இறப்புத் தீட்டால் ஒரு வருடம் துக்கம் அனுஷ்டிக்கின்றோம்! அதனால்  கோயிலுக்கு செல்லக் கூடாது! மீறினால் தெய்வக் குற்றமாகிவிடும்  என்று சொல்கின்றீர்களே, அப்படி நீங்கள் உண்மையாகவே ஆழ்ந்த துக்கத்தில் ஒரு வருடம்  இருப்பீர்களானால் நீத்தார் நினைவோடு, சடங்குகளை முறையாகச்  செய்து வருவீர்களானால்… இப்படியா செய்து வருகிறீர்கள், உங்கள்  மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்.
1.   உங்களுடைய காபி, டீ, சிகரெட், பான், புகையிலை, சினிமா,  கேளிக்கை எதையாவது ஒரு வருடம் தள்ளி வைத்திருக்கிறீர்களா?
2.   உண்மையான மரணத் தீட்டு என்றால் ஒரு வருடத்திற்கு சவரம்  செய்து கொள்ளாது இருக்க வேண்டும். ஆனால் செவ்வாய்,  வெள்ளி, அமாவாசை, நட்சத்திரம் பாராது மழமழவென்று மழித்து  விடுகின்றீர்களே, இதனால் விபரீதங்கள் வராதா?
3.   எத்தீட்டிலும் மூன்று வேளை சந்தியா வந்தன வழிபாடு உண்டு.  இறப்புத் தீட்டிற்கும் இதற்கும் சம்பந்தமில்லை! இறப்பின் பத்து  நாள் சடங்குகளிலேயே மூன்று வேளை சந்தியா வந்தன  வழிபாட்டை மட்டும் விடாது தொடர்தல் வேண்டும் என்ற விதியும்  உண்டு! இதனை ஒழுங்காகச் செய்து வருகின்றீர்களா? பின் ஏன்  ஒரு வருஷ கோயில் பகிஷ்காரம் என்ற சாக்கு சொல்லி உங்களை  ஏமாற்றி கொள்கின்றீர்கள். மூன்று வேளை சந்தி பூஜையையே  விட்டுவிட்டீர்கள்! பின் ஏன் ஒரு வருட காலக்கெடு?
4.   நீத்தார் நினைவு என்றால் ஒரு வருடம் தினந்தோறும் அவருடைய  படம் வைத்தோ அவர் உபயோகித்த பொருளை வைத்தோ வழிபாடு  செய்திட வேண்டும். தினசரி தானமும் உண்டே! செய்கின்றீர்களா?
5.   நீத்தாரின் நினைவாக ஒரு வருடம் டீவி, சினிமா பத்திரிகை  பார்க்காமல், படிக்காமல் இருக்கின்றீர்களா?
6.   நீத்தாரின் நினைவிலிருப்பின் ஒருவருடம் எவ்விதத்  தீயொழுக்கமும் இருத்தல் கூடாது. மது. பீடி, சிகரெட்டையா  நிறுத்தி இருக்கின்றீர்கள்?
உண்மையில் நீத்தாரை ஒரு வருடம் முழுதுமேனும்  நினைப்பதற்குத்தான் முதல் வருடத் திவசம் வரை பல வகை  சடங்குகளைத் தந்துள்ளனர். அவற்றை எல்லாவற்றையும் செய்யாமல்  உதறிவிட்டு ஒரு வருடம் கோயில் பகிஷ்கரிப்பு மட்டும் கோலாகலமாக  நடக்கிறது! இத்தகைய ஆன்மீக சீரழிவிற்கு நாம் தான் வெட்கப்  படவேண்டும்!
7.   இறப்புச் சடங்குகளில் முதல் பத்து தினங்களிலும் தினமும் முக்கியமான நீத்தார் வழிபாடுகள் உண்டு. 11, 12 ,13 தினங்களிலும் சுத்திகரிப்புச் சடங்குகள் மற்றும் தான தர்மங்கள் உண்டு. இவற்றை  முறையாக, ஆத்மார்த்தமாகச் செய்தீர்களா?
8.   புனிதமான உடலுறவிற்குக் கூட சில கட்டுப்பாடுகள் உண்டு.  முறையற்ற காம எண்ணங்கள் ஒருபோதும் எழக் கூடாது.  இவற்றையெல்லாம் ஒரு வருடம் முழுமையாகக் கடைபிடிக்க  முடிகின்றதா?
எவையெல்லாம் முக்கியமான பூஜை விதிகளோ, ஒழுக்கக்  கட்டுப்பாட்டு முறைகளோ அதையெல்லாம் காற்றில் பறக்க விட்டு  விட்டீர்கள்! புனித்மான குடுமி அமைப்பையும், கடுக்கன்கள்  அணிதலையும் கைவிட்டதாகி விட்டது. ஜாதி பேதமின்றி நம்  மூதாதையர்கள் அனைவரும் குடுமி வைத்து, கடுக்கன்கள் அணிந்து  நம் மக்கள் சுமுகமாக எவ்வித வித்யாசமின்றி வாழ்ந்து கட்டுக்  கோப்பான சாந்தமான சமுதாய நிலவிய பவித்ரமான நாடு இது! சுயநலம், பேராசை, அந்தஸ்து, கௌரவம், பணிவின்மை, அகங்காரம்  காரணமாகவே, மனிதனுடைய குறைபாடுகளினால்தான் ஜாதிப்  பிரிவினைகள் தோன்றின! நாமெல்லாம் இறைவனின் குழந்தைகள்,  நமக்கு விலை மதிப்பில்லாத இம்மனிதப் பிறவியை அளித்த  இறைவனுக்கு நன்றி செலுத்தத்தான் ஆறுவேளை பூஜைகளும்,  பண்டிகைகளும் கோயில் வழிபாடுகளும் ஏற்பட்டன.
பெருமலைகளைப் போல் தீவினைக் கர்மங்களைச் சுமந்து வாழும் மனிதன் இறப்பைச் சாக்காகக் கொண்டு ஒரு வருடம் கோயிலுக்குச்  செல்தல் கூடாது என்ற அதர்மமான முடிவெடுத்தால் என்ன செய்ய  முடியும்? கோயிலுக்குச் செல்வதால் கரைகின்ற தீவினைகள் கூட  ஒரு வருடத்தில் அப்படியே தங்கி பல்கிப் பெருகி மனித உருவமே  தீவினைகளின் மொத்த உருவாக ஆகி விடுமே! என்னே கொடுமை!  அறியாமையால் விளைகின்ற விபரீதத்தைப் பார்த்தீர்களா? இறப்புத் தீட்டில் ஒரு வருடத்திற்குள் கோயிலுக்குச் சென்றால் சாமி  தண்டிப்பார், அது நடக்கும், இது நடக்கும் என்ற அச்சத்தினால்  விபரீதங்கள் ஏற்படும் என்று தயவு செய்து அபத்தமான முடிவிற்கு  வராதீர்கள்! நீத்தார் நினைவில் அப்படி ஒரு வருடம்தான் எதைப்  புனிதமாக சாதித்தீர்கள்? உங்களுடைய நடைமுறை வழக்கங்களில்  ஒரு மாறுதலும் இல்லையே! தினமும் மூன்று சந்தி பூஜைகளுண்டு! ஒரு வருடம் வெளியில் உண்ணக் கூடாது. பாயில் படுக்கலாகாது,  கேளிக்கைகள், சங்கமம் கூடாது, சவரம் கூடாது போன்ற நியதிகள்  என்னவாயின? பின் ஏன் இந்தப் பொய்யான வாழ்க்கை! இறப்புச்  சடங்குகளில் வேதமந்திரங்களும் ஓதப்பட்டுப் புனிதமான ஹோமமும்  நடத்தப்பட்டு ஏழைகளுக்கு தங்கதானம், பசுதானம், வஸ்திரதானம்  என்ற விதவிதமான தானங்கள் அளிக்கப் பட்டிருக்கையில் ஒரு  வருடம் கோயிலுக்குச் செல்லலாகாது என்ற நியதி இடைச்  செருகலே!
எனவே, இறப்பைச் சாக்காகக் கொண்டு ஒரு வருடம் கோயிலுக்குச் செல்லாமலிருந்து பொன்னான மனித  வாழ்க்கையை வீணடிக்காதீர்கள். தாராளமாக கோயிலுக்குச்  செல்லலாம். விரதங்களைத் தாராளமாகத் தொடரலாம், இதையே  இறந்தவரின் ஆத்மா எதிர்பார்க்கின்றது. இறந்தவரின் சூட்சும ஆன்ம உடலானது கோயில், புனித நதி,  தீர்த்தம் போன்ற இடங்களுக்குத்தான் விஜயம் செய்யும். எனவே  புனித யாத்திரைகளை மேற்கொள்வதில் எவ்வித தவறுமில்லை.
நீத்தார் நினைவு வழிபாடுகள் மிகவும் புனிதமானவை. நம்முடைய  வம்ச விருத்திக்கு வழிவகை செய்பவை. எனவே இருக்கின்ற  தினசரி வழிபாடுகளையே மறந்து விட்டு ஏனோதானோவென்று  இயந்திர கதியில் வாழ்கின்ற மனிதன், போதாக் குறைக்கு  ஆயிரத்தெட்டுத் தீயவழக்கங்களைக் குறிப்பாக  புகைபிடித்தலையோ, பொடி, பான் போடுதலையோ, காபி, டீயையோ  ஒரு நாள் கூடத் தவிர்க்க முடியாமல் அவற்றிற்கு அடிமையாக  வாழும் மனிதன், கேளிக்கைகள், முறையற்ற காமம் போன்ற  மாயைகளில் உழலும் மனிதன், நீத்தார் நினைவு வழிபாட்டையே  பரிபூர்ணமாகச் செய்வது கிடயாது! பின் ஒரு வருடம் கோயிலுக்குச்  செல்வது வேண்டாம் என்று எண்ணினால் எத்தகைய தன்னைத்  தானே ஏமாற்றிக் கொண்டு பிறரையும் ஏமாற்றும் அறிவற்ற  செயல்! பிறரையும் கோயிலுக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி  அச்சுறுத்தும் அறிவற்ற நிலை!
அக்கிரமங்கள் பெருத்து வரும் கலியுகத்தில், உண்மையான தெய்வ பக்தி  மங்கி வரும் நிலையில் நம்முடைய புண்ய சக்திகளும் குறைந்து  வருகின்ற நிலையில் தயவு செய்து இத்தகைய அதர்மமான முடிவைக்  கைவிட்டு விடுங்கள்! மூதாதையர்களின் கருணையால்தான் நாம் வாழ்கின்றோம்! அந்த  பித்ருக்கள் நாள்தோறும் வருகின்ற இடங்களே திருக்கோயில்கள்! பார்க்,  பீச், மைதானம் என தினந்தோறும் வாக்கிங் போவதற்கு மனம்  வருகின்றது, ஏன் கோயிலுக்கு போவதில்லை!
மார்கழிக் குளிரில் கூட நாயைப் பிடித்துக் கொண்டு அதன் பின்னால்  அது மலஜலங் கழித்திட விடியற்காலையில் ஓடுகின்றார்களே,  என்றேனும் மார்கழி மாத விடியற்காலை வழிபாட்டிற்குச்  சென்றிருக்கின்றார்களா? என்னே வெட்கக் கேடு! நீங்கள் தினந்தோறும்  கோயிலிக்குச் சென்று இறைவனை தரிசிப்பதையே பித்ருக்கள்  விரும்புகின்றார்கள். உங்களுடைய கர்ம நிவாரணப் பணியில் பெரிதும்  அக்கறை காட்டுபவர்கள் பித்ருக்களே! இறப்பிற்குப் பின் சூட்சும சரீரத்தில் பித்ரு நிலையைத் தேடிப் பயணம்  செய்யும் நம் மூதாதையர்களா ஒரு வருடத்திற்குக் கோயிலுக்கு  செல்லவேண்டாம் என்று சொல்வார்கள்? சற்றே பகுத்தறிவுடன் சிந்தித்துப்  பாருங்கள். நீங்கள் எத்தனையோ இறைப் பணிகளைச் செய்து  வழிபாடுகளை மேற்கொண்டு கூடுதலான பூஜைகளைச் செய்வதையே  மூதாதையர்கள் விரும்புவார்களேயன்றி கோயிலுக்குச் செல்லாதே என்று  தடுத்து நிறுத்துவார்களா? நன்கு ஆத்ம விசாரம் செய்து பாருங்கள்!
ஸ்ரீதசரத சக்கரவர்த்தியின் மூத்த புதல்வரான ஸ்ரீராமர் தம் தந்தையாரின்  ஆத்ம சாந்திக்குப் பின்னர் கானகத்தில் வசித்தாலும் கூட, நித்ய  வழிபாடுகளிலிருந்து சற்றும் பிறழாது அனைத்தையும் செவ்வனே  நடத்தினார் அன்றோ! மேலும் இந்த ஓராண்டு காலத்திற்குள் தான் ஸ்ரீ  ராமர் எத்தனையோ மஹரிஷிகளையும் ஞானிகளையும் தரிசித்து  அவர்களுடைய பூஜைகளில் கலந்து கொண்டு அனைவருக்கும் ஸ்ரீ ராமர்  ஒரு எடுத்துக்காட்டாய் விளங்குகின்றாரே! இனியேனும் உண்மையான  தெய்வீகத்தை உணர்ந்திடுக!
அரைகுறையான நியதிகளால், தவறான வழிகளை மேற்கொண்டு  பொன்னான காலத்தை விரயமாக்காதீர்கள்! எனவே குடும்பத்தில் உறவு  முறையில் மரணம் ஏற்பட்டிடினும் தாராளமாகக் கோயிலுக்குச்  செல்லலாம். விரதங்கள், பண்டிகைகளைக் கடைப்பிடிக்கலாம். இதில்  எவ்வித தெய்வக் குற்றமும் கிடையாது!

புதுவருட பஞ்சாங்க படனம்

புது வருட பஞ்சாங்க படனம் (அனைத்து இல்லங்களிலும் கோயில்களிலும் தமிழ்ப் புத்தாண்டன்று  படிக்கப்பட வேண்டியது)
ஓம் ஓம் ஓம்
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம்!
சதுர்புஜம் பிரசன்ன வதனம்  த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே!
(தெரிந்த விநாயகர் துதியை ஓதிடுக)
துவிதியை திதிக்குரிய தருண கணபதியே போற்றி போற்றி போற்றி!
12 முறை தோப்புக் கரணமிடுதல் விசேஷமானது.
வார துதி: ஸ்ரீ அங்காரகாய நம: ஸ்ரீ செவ்வாய் பகவானே போற்றி!
திதி துதி: ஸ்ரீ துவிதியை தேவ்யை நம: ஸ்ரீ துவிதியை துதி தேவதையே  போற்றி!
நட்சத்திர துதி: ஸ்ரீ விசாக நட்சத்திர தேவியே போற்றி
யோக துதி: ஸ்ரீ சித்தியோக தேவ்யை நம: (ஸ்ரீ சித்தியோக தேவதையே  போற்றி)
கரண துதி: ஸ்ரீ கர கரண தேவாய நம: (ஸ்ரீ கர கரண தேவதையே  போற்றி)
ஸ்ரீ அமிர்தாதி யோக துதி: ஸ்ரீ அமிர்தாதி யோக மரண யோக தேவதையே  போற்றி
மாத தேவதுதி: ஸ்ரீ சித்ரா தேவ்யை நம: (ஸ்ரீ சித்திரை தேவியே போற்றி)
வருட தேவதா துதி: ஸ்ரீ பகுதான்ய தேவ மூர்த்யை நம: (ஸ்ரீ பகுதான்ய  தேவ மூர்த்தியே போற்றி)
நவநாயக துதி: பகுதான்ய வருடத்தை ஆட்சி செய்யும் நவகிரஹ  நவநாயகர்களுக்கான துதி:
பகுதான்ய வருடத்தை ஆட்சி செய்யு நவகிரஹ நவநாயகர்களுக்கான  துதி:
ஸ்ரீ சனைச்சராய நம:
ஸ்ரீ அங்காரகாய நம:
ஸ்ரீ சந்த்ராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ புதாய நம:
ஸ்ரீ சூர்யாய நம:
ஸ்ரீ சுக்ராய நம:
ஸ்ரீ ராகவே நம:
ஸ்ரீ கேதவே நம:
ஸ் பகுதான்ய ஆண்டிற்கான ராஜாவாகிய ஸ்ரீ சனீஸ்வரனே போற்றி
மந்த்ரியாகிய ஸ்ரீ அங்காரகனே போற்றி
சேனாதிபதியாகிய ஸ்ரீ சந்திரனே போற்றி
அர்க்காதிபதியாகிய ஸ்ரீ சந்திரனே போற்றி
சஸ்யாதிபதியாகிய ஸ்ரீ குருவே போற்றி
ரசாதிபதியாகிய ஸ்ரீ சனீஸ்வரனே போற்றி
நீரஸாதிபதியாகிய ஸ்ரீ குருவே போற்றி
ஏனைய நவகிரஹமூர்த்திகளான
ஸ்ரீ சூரியனே போற்றி
ஸ்ரீ சுக்கிரனே போற்றி
ஸ்ரீ ராகுவே போற்றி
ஸ்ரீ கேதுவே போற்றி
ருது துதி: ஸ்ரீ வசந்த ருது தேவ்யை நம: ஸ்ரீ வசந்த ருது தேவதையே  போற்றி
அயனதுதி : ஸ்ரீ உத்தராயண தேவ்யை நம: ஸ்ரீ உத்தராயண தேவியே  போற்றி
லக்ன தேவதை: ஸ்ரீ மேஷ லக்ன தேவாய நம: ஸ்ரீ மேஷ லக்ன தேவா  போற்றி
யோகினி தேவதை துதி: ஸ்ரீ பத்ரப்ரியா தேவ்யை நம: வடமேற்கில்  அருள்புரியும் பத்ரப் பிரியா தேவியே போற்றி
ஹோரா தேவதை துதி: ஸ்ரீ சுக்ர ஹோராய நம : ஸ்ரீ சுக்ர ஓரை  தேவதையே போற்றி
இதர தேவதா துதிகள்:
ஸ்ரீ ராகுகால தேவதையே போற்றி
ஸ்ரீ எம கண்ட தேவதையே போற்றி
ஸ்ரீ குளிகை கால தேவதையே போற்றி
ஸ்ரீ அர்த்தப் பிரகரண கால தேவதையே போற்றி
ஸ்ரீ காலன் தேவதையே போற்றி
ஸ்ரீ கால பைரவாய நம: ஸ்ரீ காலபைரவரே போற்றி
அவரவர் குடும்ப மரபுப்படி குல தெய்வ இஷ்ட தெய்வத் துதிகளை  ஓதிடுக! எல்லை தெய்வத்தை நினைந்து வழிபடுக!
ஓம்

ஸ்ரீவசிஷ்டர் அருந்ததி
திட்டை சிவாலயம்

அருந்தவ மாமுனி வசிஷ்டரும் அவர்தம் பத்னி தேவியார் அருந்ததியும்
உத்தமியான அனுசூயாதேவி தம் கணவரான அத்திரி மஹரிஷிக்குத்  தினந்தோறும் பாதபூஜை செய்து அப்புனிதமான பாத நீரை ஒரு  கிண்ணத்தில் எடுத்து வைத்து மிகவும் பவித்ரமாகப் பூஜித்து  மும்மூர்த்திகளைக் குழந்தைகளாகப் பரிபாலிக்கும் பெறற்கரிய  பேற்றினைப் பெற்றனளன்றோ! அருந்ததி தேவியும் இவ்வாறே தம்  கணவராம் வசிஷ்டருக்குப் பணிவிடை செய்து அவர் தவத்திற் திளைத்து  இறைநெறியிற் பிரகாசித்திட உறுதுணையாக அன்றும் இன்றும் என்றும்  அருட்பணி புரிபவர். இன்றைக்கும் வானில் அருந்ததி நட்சத்திரமாய்  ஒளிர்விடும் தெய்வீக சக்தியைப் பெற்றவர். திருமணச் சடங்குகளில்  அம்மி மிதித்து அருந்ததி பார்க்கும் முறையும் உண்டு! இல்லறப்  பெண்கள், தினந்தோறும் வானில் அருந்ததி நட்சத்திரத்தைத் தரிசனம்  செய்து வந்தால் தீர்க சுமங்கலித்வமும் கணவனுக்கு நல்ஆரோக்யத்துடன் கூடிய ஆயுளும் கிட்டும்.
எத்தனையோ கஷ்டங்களுக்கு ஆட்பட்ட போதிலும் அருந்ததி, வசிஷ்டர்  பெருமானுக்கு ஆற்றிய பணிகள் எதிலும் குறை வைத்தது கிடையாது.  கணவனை எதிர்த்து, கடிந்தோ ஒரு வார்த்தையும் பேசியது இல்லை! எள்  எனறால் எண்ணெயாய் நிற்குமளவிற்குக் கணவனின் குறிப்பறிந்து  கடமையாற்றிய உத்தமி! பார்வதி, லக்ஷ்மி, சரஸ்வதி தேவியர் மூவருமே  அருந்ததியின் இறைபக்தியைச் சோதித்திடப் பலவித கஷ்டங்களை  மாயையாக அளித்த போதிலும் அருந்ததி அக்னியிற் பொலிந்த  ஸ்வர்ணமாய்ப் பிரகாசித்திட மூன்று தேவியரும் மனமகிழ்ந்து வானில்  விவாக ஜோதி நட்சத்திரமாய் ஒளி பொங்கும் சக்தியை அருந்ததிக்கு  அளித்தனர். இதற்குக் காரணம் யாது தெரியுமா?
அருந்ததி தேவியார் தமக்கு எத்தகைய நிலை வரினும் கணவனுக்குச்  சேவை புரிகின்ற தெய்வீக மனப்பான்மையைத் தாம் என்றும் எந்நேரமும்  பெற்றிருக்க வேண்டும் என்ற வரத்தை வேண்டி சுமங்கலிகளுக்குரிய   பஞ்சமி திதியிலும், பௌர்ணமி திதிகளிலும் அருணாசலத்தைப் பல கோடி  யுகங்கள் வழிபட்டிட பங்குனி உத்திர பௌர்ணமியன்று அருந்ததி  நட்சத்திரமாய் ஆகுதற்கு அக்னி லிங்கத்திடமிருந்து ஆசி பிறந்தது.  எனவே ஒவ்வொரு பங்குனிப் பௌர்ணமியிலும் தம்பதி சகிதம் வசிஷ்ட  மாமுனியும் அருந்ததி தேவியரும் திருஅருணாசலத்தை மனித  வடிவிலோ சூட்சும ரூபத்திலோ வலம் வருகின்றனர். எனவே  இத்திருநாளில் அருணாசலத்தை முறையாக குருவருளால் கிரிவலம்  வந்து விண்ணில் அருந்ததி நட்சத்திரத்தைத் தரிசிப்போருக்கு தீர்க  சுமங்கலித்வமும் தெய்வீக சாந்தமும் கிட்டிட வசிஷ்டர் அருந்ததி  தம்பதியினரே ஆசி வழங்குகின்றனர்.

சென்னை ஸ்ரீமாசிலாமணீஸ்வரர் ஆலயம்

சென்னை திருமுல்லைவாயில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் ஆலயம்
சென்னையில் அம்பத்தூர் ஆவடி அருகே திருமுல்லைவாயிலில் உள்ள  சிவாலயத்தில் ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் லிங்கத்திருமேனியின் மேல்  வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தன்று  இடப்படும் சந்தனக் காப்பு வருடம் முழுதும் லிங்கத் திருமேனியை  அலங்கரித்திருக்கும். மறுவருடம் சித்திரை மாத சதயத்தில் இக்காப்பு எடுக்கப்பட்டுப்  பிரசாதமாக வழங்கப்படும். மீண்டும் புதிதாகச் சந்தனக் காப்பு அன்றே  இடப்படுகின்றது.  ஒரு வருடம் முழுவதும் சுயம்புலிங்கத்தின்  திருமேனியில் தோயும் பாக்கியம் பெற்ற சந்தனமெனில் என்னே அதன்  மகிமை!
ஸ்ரீ மாசிலாமணிஸ்வர லிங்கமூர்த்தி மகிமை பற்றி ஸ்ரீ அகஸ்திய  விஜயம் மே 1996 இதழில் விரிவாக அளித்துள்ளோம். இவ்வாண்டு 22.4.1998 அன்று ஒப்புயர்வற்ற ஸ்ரீ மாசிலாமணீஸ்வரருக்குப்  புது சந்தனக் காப்பு இடும் வைபவம் நடைபெறும். இதில் சாதி, சமய  வேறுபாடின்றி யாவரும் பங்கு கொண்டு தாமே பக்தி பூர்வமாக அரைத்த  சந்தனத்தைச் சுவாமிக்கு அளித்திடலாம்.
சென்ற ஆண்டு ஸ்ரீ அகஸ்திய விஜயம் இதழ் மூலமாக இவ்வைபவத்தை  அறிந்து கொண்டு பலரும் மிகவும் சிரத்தையுடன் குடும்ப சகிதமாய்  சந்தனத்தை அரைத்து எங்கள் அலுவலகத்தில் சேர்ப்பித்தனர். இதனுடன்  திருஅண்ணாமலை ஸ்ரீலஸ்ரீ லோபாமாதா அகஸ்தியர் ஆசிரமத்தின்  அடியார்களும் அரைத்துத் தந்த சந்தனமும் சேர்க்கப்பட்டு, சித்தர்கள்  அருளிய சுயம்பு சந்தனக் களிம்பு சாற்று முறையில் பூஜைகளும்,  ஹோமமும் நிகழ்த்தப் பெற்று ஸ்ரீ மாசிலாமணிஸ்வரர் திருக்கோயிலில்  அளிக்கப்பட்டது. மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளிலிருந்தும் பெறற்கரிய இத்திருப்பணியில் தபால்  மூலமாகவும் , Courier Mail மூலமாகவும், நண்பர்கள் மூலமாகவும்  சந்தனத்தை அனுப்பி நன்முறையில் பலரும் இத்திருப்பணியில் பங்கு  பெற்றனர்.
இவ்வாண்டும் ஸ்ரீ அகஸ்திய விஜயம் வாசகர்களும், அவர்கள் மூலமாக  உற்றார், சுற்றம் மற்றும் ஏனையோரும் 22.4.1998 அன்று ஸ்ரீ மாசிலாமணீஸ்வரரின் சந்தனக் காப்பிற்காகச் சந்தனத்தை அரைத்து தந்து  இறையருள் பெற வேண்டுகின்றோம். இக்கோயிலிலும் நேரடியாக  அளித்திடலாம்.
ஸ்ரீ மாசிலாமணீஸ்வரர் திருமேனிச் சந்தனக் காப்பிற்கு நம் ஆஸ்ரமம்  சார்பில் சந்தனம் பெறும் இடங்கள்:
சென்னை:
ஸ்ரீ அகஸ்திய விஜயம்,
பிளாட் எண் – A-12 சாந்தி அபார்ட்மெண்ட்ஸ்,
4 அப்பு முதலி தெரு, மயிலாப்பூர்
சென்னை – 600 004.
ஸ்ரீரங்க பிரசாத்,
பிளாட் எண் -5, சக்தி ப்ளாட்ஸ்,
40, ராமேஸ்வரம் சாலை, தி.நகர்,
சென்னை – 17 (போன்: 4345165)
திருச்சி:
திரு S. ராதாகிருஷ்ணன்,
14 – A ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் தெரு
திருச்சி – 8 போன்: 702189, 491782
தஞ்சாவூர்:
திரு. S. பத்மநாபன்
திவ்யா பிளாட்ஸ்
B 24 முனிசிபல் காலனி
9வது குறுக்கு தெரு
தஞ்சாவூர் – 7
திருஅண்ணாமலை:
ஸ்ரீலஸ்ரீலோபாமாதா அகஸ்தியர் ஆஸ்ரமம்
காஞ்சிரோடு, ஆடையூர் P.O
திருஅண்ணாமலை – 606 604
(போன் : 23790)
சுவாமியின் திருமேனியில் ஒருவருட காலம் பரிணமிக்கவிருக்கின்ற  சந்தனத்தை பக்தியுடன் அரைப்பதற்கான எளிய விதிமுறைகளாவன:
கடையில் சந்தனப் பவுடரை வாங்கிக் கரைத்தல் கூடாது
குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள், சாதி, சமய, இன, குல, பேதம்  இன்றி ஆண், பெண், குழந்தைகள் அனைவரையும் ஈடுபடுத்திச்  சந்தனத்தை அரைப்பதே உத்தமமானது
நீராடி அல்லது கை, கால்களைச் சுத்தி செய்து கொண்டு குடும்ப  நெறிப்படி நெற்றிக்குத் திருமண், விபூதி, குங்குமமிட்டு இறை  நாமம்  ஜபித்தவாறே சந்தனத்தை அரைத்திடல் வேண்டும்.
இயன்றளவில் குறைந்த அளவு நீர் சேர்த்து கெட்டியாக  சந்தனத்தை அரைப்பது நல்லது.
கோயில் தீர்த்தம், கங்கை, காவிரி போன்ற புண்ணிய நதிகளின்  புனித நீரைச் சேர்த்து அரைத்தல் சந்தனத்தின் புனிதத் தன்மையை  மேம்படுத்தும்.
சந்தனம் அரைக்கையில் கூற வேண்டிய இறைத் துதிகள்: சந்தன கந்த தேவா அனுக்ரஹ யக்ஷ யக்ஷணி
தேவஸ்ய ஸேவார்த்தம் அனுக்ஞாம் தாதுமர்ஹஸி
சிவாய பவாய பவாத்மஜாய சந்தன விருக்ஷாத்மா நாத்புத  கந்தாய
சித்ரூப சிதானந்த சின்மயாய சந்தோஷ ரூபாய
புதபுத்ர ஸேவார்த்தம் நமோ நம:
அத்ரி, பிருகு, குத்ஸர், வசிஷ்டர், காஸ்யபர், ஆங்கீரசர்,  கௌதமர்,
மகரிஷிகளுக்கு நமஸ்காரம் 21.4.1998 அன்று இரவு ஏழு மணிக்குள் மேற்கூறிய முகவரிகளில்  பக்தர்கள் அரைத்த சந்தனத்தை அளிக்குமாறு கேட்டுக்  கொள்கின்றோம்.

அமிர்த தாரைகள்

பிரிந்தவர் கூடிட!
சிவனும், அம்பிகையும் எதிர் எதிரே எழுந்தருளி அருள்பாலிக்கும்  கோயிலில் தேன் அபிஷேகம் செய்து சாத்துகுடி, ஆரஞ்சு போன்ற  தோல் ஓடுள்ள பழங்களைத் தான தருமங்கள் செய்திடில்  விவாகரத்து நிலையில் உள்ள உறவுகளுக்கு நன்முறையில் தீர்வு  கிட்டும். மனைவி கணவனைப் பிரிந்திருந்தாலும், கணவன்  மனைவியைப் பிரிந்திருப்பினும் ஒன்று சேருவர். இக்கோயிலில்  மனைவியானவள் கால்களில் மெட்டி, மருதாணியிட்டும்,  கணவனானவன் நெற்றி உடலெங்கும் திருநீற்றுப் பட்டையணிந்தும்  அடிப்பிரதட்சிணம் செய்வது சிறப்புடையது.

ஸ்ரீமகாவிஷ்ணு திருப்பாற்றுரை

எதிரிகளை வெல்வோம்!
சென்னிமலை முருகனுக்கு செவ்வாய்க் கிழமைகளில் தயிர்  அபிஷேகம் செய்து சிகப்பு நிறக் காய்கறிகள் கலந்த அன்னதானம்  செய்தால் எதிரிகளால் ஏற்படும் துன்பம் விலகும்
ஸ்ரீ பாம்பன் சுவாமிகள் அருளிய பகைகடிதல் கவசத்தை ஓதி  வருதலால் மிகச் சிறந்த கவச சக்தியைப் பெற்று எதிரிகளிடமிருந்து  நம்மைக் காத்துக் கொள்ளலாம்
குடும்ப ஒற்றுமை விருத்தியாக!
மாதந்தோறும் சித்திரை நட்சத்திரத்தன்று சிவபெருமானுக்கு  மரிக்கொழுந்தால் அர்ச்சனை செய்து, மரிக்கொழுந்து மாலையும்  அணிவித்து, வழிபட்டு, சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் செய்து  ஏழைகளுக்குத் தானமாக தொடர்ந்து வழங்கி வந்தால் குடும்பத்தில்  சாந்தமான ஒற்றுமை நிலவும்.
கொழுந்துத் தழையால் குலம் தழைக்கும்! குருஅருளின்றி திருவருள் இல்லை
வெள்ளைக்கார ஜட்ஜ் போல நாம் அனைவருமே ஒவ்வொரு  விதத்தில் வாழ்க்கையில் கர்மங்களைச் சேர்த்த வண்ணமாய்  வாழ்ந்து முடிவிலே அவர் வருவாரா இல்லை இவர் வருவாரா,  நம் கர்மவினைகளை அழிக்க என்று ஏங்கி ஏமாந்து  எமன் கையிலே சிக்கி சின்னா பின்னமாகி விடுகின்றோம். அப்படி  ஆகாமல் சேர்கின்ற கர்மவினைகளை அவ்வப்போது அழித்து முன்  சேர்த்த வினைளையும் தக்க நேரங்களில் கழித்து பிறவிப் பயனை  அடைய வேண்டுமென்றால் குரு அருளுடன் கூடிய சத்சங்க  வாழ்கையையே அனைவரும் நாட வேண்டும். அதிலும் நம்  கர்மவினைகளில் பங்கெடுத்து, நம்முள் ஒருவராய் இருந்து நம்  வாழ்க்கையில் வழிகாட்டியாக நின்று தம் வாழ்க்கையையே  நமக்காக அளித்த குருமங்கள கந்தர்வா போன்ற மகான்களை  குருவாய்ப் பெற்றிட அனைவரும் இறைவனிடம் மன்றாடத்தான்  வேண்டும்!
ENTER --- சத்திய தேவதை!
ஒவ்வொரு ஜட்ஜும் தீர்ப்பு எழுதறதுக்குன்னு தனியா ஒரு பேனா  வச்சுகிட்டு அதுக்கு தெனமும் பூஜை பண்ணி பவித்ரமா  வச்சுகணும். இப்படிப் பண்ணிக்கிட்டு வந்தா சத்யத்துக்கு விரோதமா  தீர்ப்பு எழுதற சந்தர்ப்பமே வராது! நீதிபதிகளுக்கு அனுக்ரகம்  தரதுக்குன்னு சில கோயில்களெல்லாம் இருக்கு! அப்பப்ப இந்த  பேனாவை அந்தந்த சுவாமி சந்நிதியில் வச்சு பூஜை பண்ணிகிட்டு  வந்தா ஜட்ஜ் வேலைல சத்ய தேவதையே வந்து பின்னாடி  நின்னு நல்ல அனுக்ரஹம் பண்ணுவார்!
இறைவன் கேட்கிறான்!
மாதந்தோறும் பௌர்ணமியில் ஆஸ்ரமத்தில் அன்னபிரசாதம்  அளித்தால் அதைப் பெறுகின்ற அளவிற்கு அடியார்கள்  வருவார்களா என்று பல வருடங்களுக்கு முன் நினைத்தீர்களே,  இன்று மாதாமாதம் ஒரு லட்சம் பேருக்கு மேல் அவர்களை  அனுப்புகிறேன்! உங்களால் அவர்கள் அனைவருக்கும் பிரசாதம்  அளிக்க முடிகின்றதா என்று அண்ணாமலையாரே கேட்பது போல்  தோன்றுகின்றதல்லவா!
ஏகாதசியில் அன்னதானம்:
பழங்காலத்தில் பெரும்பான்மையான மக்கள் ஏகாதசி விரத  மஹிமை அறிந்து உணர்ந்து அனைவரும் ஏகாதசி திதிக்கான  உண்ணாவிரத நோன்பினை மேற்கொண்டிருந்தமையால்  விரதத்திற்கு பங்கம் ஏற்படும் வகையில் இருக்கலாகாது  என்பதற்காக ஏகாதசி அன்று அன்னதானத்தைத் தவிர்த்திடுவர்! ஆனால் கலியுகத்தில் ஏதோ ஒரு சிலரைத் தவிர ஏகாதசி விரத  முறையே மறைந்துவிட்டது, என்று சொல்லக்கூடிய நிலையில்  ஏகாதசியன்று அன்னதானம் கூடாது என்பது சற்றும் பொருந்தாது. வேண்டுமானால் முழுமையான உண்ணாவிரதம்  பூண்டிருப்பவருக்கு அன்று அன்னதானமளிப்பதைத் தவிர்த்திடலாம்.  ஆனால் இன்று ஒரு வேளை கஞ்சிக்கே அல்லல்படும் ஏழ்மை  நிலையில் பலரும் இருக்கையில், தினந்தோறும்  இயன்றபோதெல்லாம் அன்னதானம் செய்து வந்தால்தான் நாம்  செய்யத் தவறுகின்ற தினசரி பூஜைகளுக்கு பரிஹாரமாக அமைவதோடு நாம் இழந்துவரும் தினசரி பூஜா  பலன்களையும் ஓரளவு பெற்றிடலாம்
செஞ்சேரி முருகப் பெருமான் இடக்கரத்தில் சேவற்கொடிக்கு பதில் சேவலையே கொடியாகத் தம் திருக்கரத்தில்  தாங்கியுள்ளார். இம்முருகனுக்குப் பசும் பால் அபிஷேகம் செய்து  வெளியூர் வியாபாரத்திற்குச் சென்றிடில் நல்ல வருமானம்  கிட்டும். வியாபாரம் அபிவிருத்தி யாகும். இவ்வழிபாட்டு  தினங்களில் செவ்வாயுடன் கிருத்திகை, உத்திரம், விசாக  நட்சத்திரம் சேருமாயின் பலாபலன்கள் மிகும்.

உப்பிலியப்பன் கோயிலிலுள்ள அகோராத்திர புஷ்கரணி எனும் குளத்தில்  நீராடி கோயிலில் உப்பு சேராத நல்உணவு வகைகளை தானம் செய்து  இங்கு இரவிலும் நீராடி தூய மனதுடன் உறங்கச் சென்றால் நம்முடைய  கஷ்டங்களுக்கு ரிஷிகள் கனவில் தோன்றி வழிகாட்டுவர்.

சிவராத்திரியன்று (மின்சார) விளக்கில்லாத, வசதியற்ற பல  ஆலயங்களில் எண்ணெய் விளக்குகளை ஏற்றி வழிபடுவது தான் மிகவும்  விசேஷமானது – சற்குருவின் அருள்மொழி

அகோராத்ர தீர்த்தம்
ஒப்பிலியப்பன் கோவில்

இசைபட வாழ்வீர்!
கும்பகோணம் அருகில் தாராசுடம் ஸ்ரீ ஐராவதேஸ்வரர் சிவன் கோயில்  பலிபீடத்திற்கான ஏழுபடிகளில் அதி அற்புத ஸ்வரதேவதைகள்  பிரதிஷ்டை ஆகியுள்ளனர். இசை பயில்வோர் இங்கு அமர்ந்து,  வாய்ப்பாட்டோ, இசைக் கருவியோ, தோல் கருவியோ வாசித்தால் நல்ல  எதிர்காலம் அமையும்.
கண் வைத்தியர்களுக்கு கண் அறுவை சிகிச்சைக்கு உரிய நாள்!
ஏழு நாட்களுக்குரிய நேத்திரத் தன்மைகளில் சனியும், செவ்வாயும்  பார்வைத் தன்மையைப் பாதிக்கின்ற நாட்களாகும். ஞாயிறும், திங்களும் ஒரு பார்வைத் தன்மை உடையதாகும். புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்றும் பரிபூரணமான பார்வை  உடைய நாட்களாக இரு கண்நாட்களாக அமைந்துள்ளன. எனவே கண்   டாக்டர்களும் (Opthalmologists) காட்ராக்ட் போன்ற அறுவை சிகிச்சை செய்து  கொள்வோரும் இம்மூன்று முழுப் பார்வை நாட்களைத் தேர்ந்தெடுப்பதே  சிறப்புடையதாகும்.
இதேபோல் கண் பார்வை பரிசோதனகளில் (Shortsight, Longsight, etc)  கண்ணாடிகளைத் தேர்ந்தெடுப்பதற்கும் (Opticians) இம்மூன்று நாட்களே  சிறப்பானவை.
சிவாலயங்கள் சிலவற்றில் மூலஸ்தானத்திற்குப் பின்புறம் வருகின்ற  முதல் பிரகாரத்தில் பொதுவாக லிங்கோத்பவ மூர்த்தி இருக்கின்ற  இடத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு எழுந்தருளியிருப்பார். (உதாரணமாக சென்னை  மப்பேடு, திருச்சி பஞ்சவர்ணேஸ்வரர், திருப்பாற்றுரை) இம்மூர்த்தியின் திருவடிகளிலும்  ஸ்ரீ ஐயப்ப விரத மாலைகளை சமர்ப்பணம் செய்து அணிதல் சிறப்பைத்  தரும். மூன்று விதமான மாலைகளுக்கும் இத்திருவடி வழிபாடு  உரித்தானதாகும்.
வாழ்வில் புதிய திருப்பம்
பஞ்ச பிரம்ம ஸ்தலங்களில் காலையிலும் மாலையிலும் தினமும் 108  முறை வலம் வந்து யானை, பசுவிற்குப் புல்லும், வாழைப்பழமும்  அளித்துவர வாழ்வில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். 8 மண்டலங்கள்,  இவ்வாறு செய்வது சிறப்புடையது. (பஞ்ச பிரம்ம தலங்களுள்  திருப்புகலூர், திருவாரூர், மாகாளம் போன்றவையும் அடங்கும்)

திருவாரூர் சிவத்தலம்

வாஸ்துநாள்
நாம் பலமுறை வலியுறுத்தி வந்துள்ளபடி வாஸ்து பூஜை என்பது புதிய  அஸ்திவாரத்திற்கு உரித்தான பூஜை மட்டுமன்று, வாடகை வீடு,  வசிக்கும் வீடு, அலுவலகம், தொழிற்சாலை என பழைய, புதிய  கட்டிடங்கள்/நிலம் அனைத்திற்கும் வாஸ்து நாள் உரித்தானதாகும்.  இந்நாளில் நிலை/தலைவாசல் படிகளுக்குச் சந்தனம், மஞ்சள்,  குங்குமமிட்டு கோலமிட்டு வழிபட வேண்டும். கிழங்கு வகைகள் சேர்ந்த  அன்னதானம் சிறப்புடையது.
23.4.1998 சித்திரை – 10 வியாழன்
ஸ்ரீ வாஸ்து மூர்த்தியின் தந்த சுத்தி நேரம் – காலை 7.55 முதல் 8.13
நீராடல் – 8.13 முதல் 8.31
பூஜை  - 8.31 முதல் 8.49
போஜனம் – 8.49 முதல் 9.07
தாம்பூலம் – 9.0 முதல் 9.25
8.49   முதல் 9.25 வரை அஸ்திவார/அடிக்கல் மற்றும் ஏனைய பூஜைகளுக்கு மிகச் சிறந்த நேரமாகும். காலை 7.55 மணிக்கே ஸ்ரீ வாஸ்து துதியைப் பாராயணம் செய்யத் தொடங்கிட வேண்டும்.
ஓம் தத்புருஷாய வித்மஹே யோக மூர்த்யாய தீமஹி
தந்நோ வாஸ்து தேவ மூர்த்திப் பிரசோதயாத்

பிரபலாரிஷ்ட தினங்கள் – கூடாநாட்கள் – ஏப்ரல் 1998
குறித்த கிழமையும் நட்சத்திரமும் சேர்கின்ற நாட்களே பஞ்சாங்க  கணிதப்படி பிரபலாரிஷ்ட யோக நாட்களாக, கூடா நாட்களாக  அமைகின்றன. இக்கூடா நாட்களில் அனைத்து சுப காரியங்களையும்  தவிர்ப்பதோடன்றி, கடன் கொடுத்தல்/வாங்குதல், மளிகைச் சாமான்கள்  போன்ற அனைத்தையும் தவிர்த்து இந்நாட்களில் நாலாயிர திவ்ய  பிரபந்தம், விஷ்ணு சஹஸ்ரநாமம், திருமால் துதிகளை ஓதி வருதல்  வேண்டும். தற்காலத்தில் அறியாமையினால் திருமண சுப முகூர்த்த  நேரங்கள், கூடா நாட்களில் வைக்கப்படுகின்றன என்பது  வேதனைக்குரியதாகும்.
ஏப்ரல் 1998க்குரிய கூடா நாட்கள்
16.4.1998 (சித்திரை -3) வியாழன் – கேட்டை – நாள் முழுதும்
22.4.1998 (சித்திரை 9) புதன் – அவிட்டம் – காலை 7.30 வரை
25.4.1998 (சித்திரை 12) சனி – ரேவதி – காலை 10.00 வரை
26.4.1998 (சித்திரை 13) ஞாயிறு – பரணி – மாலை 6.50க்கு மேல் இரவு முழுதும்
மேற்கண்ட நாட்களில் அனைத்து சுபகாரியங்களையும் கண்டிப்பாகத்  தவிர்த்திட வேண்டும். கூடா நாட்களில் செய்யப்படும் செயல்களுக்குக்  காரியத் தடங்கல்கள் ஏற்படுவதோடு மனக் கஷ்டங்களும், குழப்பங்களும்  பல வகையான துன்பங்களும் தீய விளைவுகளாக ஏற்படும்.

கணபதி தரும் காரிய சித்தி
அம்மையப்பனுக்கு இடையில் கணபதி அமர்ந்து அருள்பாலிக்கும்  தலத்தில் சதுர்த்தசி, மூலம் / திதிகளில்/ நட்சத்திரங்களில் அபிஷேக  ஆராதனை செய்து எந்த நற்காரியம் செய்யினும் அது கார்ய சித்தியையும்  வெற்றியையும் தரும்.

பகுதான்யத்தில் தான்ய பூஜை
பகுதான்ய ஆண்டில் ஒவ்வொருவரும் 7 மூட்டை நெல் தானியத்தை  இல்லத்தில் வைத்திருந்து தினந்தோறும் அதற்குக் கற்பூர தீபம் காட்டிய  பிரசாதம் படைத்து ஓராண்டு வழுபட்டு வருதல் வேண்டும். அடுத்த   பிரம்மாதி வருடப் பிறப்பு சமயம் இந்நெல்லை அரிசியாக்கி நிறைந்த  அளவில் அன்னதானம் செய்திட இல்லத்தில் ஒரு போதும் உணவும்  பஞ்சம் வராது, நிலவிளைச்சல் குறையாது, அன்னக் குற்றங்கள்,  துவேஷங்கள் ஏற்படாது. இதுமிகச் சிறந்த சமுதாய பூஜை ஆவதனால்  இத்தான்ய பூஜையினால் செல்வம் பெருகும், வீடு, நில புலன்கள்  வியாபாரம் தர்மமான முறையில் விருத்தியாகும்.
நகரத்துப் பகுதியிலிருப்போர் மற்றும் நடுத்தர மக்கள், வாடகை  வீட்டிலிருப்போர் குறைந்தது 5/3 நெல் மூட்டைகளையேனும் வைத்து  பூஜித்திடுக! இத்தான்ய பூஜையின் பலன்கள் பகுதான்ய வருடத்தில்  மட்டும் பல்கிப்பெருகும்.

புது நற்காரியம் பொலிவு பெற!
16 கோயில்களில் இருந்து 16 சிவகாமி நடராஜர் மூர்த்திகள், மார்கழி  மாதம் திருவாதிரையில் ஆருத்ரா தரிசனம் அன்று, கும்பேஸ்வரரைப்  பிரதக்ஷிணம் செய்ய வருவர். கணவன், மனைவியோ புதுமண  தம்பதியரோ, இந்நாளில் உற்சவ மூர்த்திகளுடன் வலம் வந்திட,  புதுக் குடித்தனம் நன்கமையும், புது வீடு கிட்டும், நல்ல முறையில் புது  வியாபாரம் நடக்கும்.
பெறற்கரிய தரிசனமிது! வருடத்திற்கு ஒரு முறையே கிட்டும் பாக்யம்! சுவாமி பல்லக்குகளைத் தூக்கி வருபவர்களுக்கு தாக சாந்திக்கான பானம்,  அன்னதானம் செய்வது சிறப்புடையது!
சூரிய பூஜை நிகழ்கின்ற, அதாவது, சூரியக்கிரணங்கள் லிங்கமூர்த்தியின் மேல் படுகின்ற சில தலங்களும் நாட்களும்.
தேதி              ஆங்கிலத் தேதி                              தலங்கள்
பங்குனி 25,26--- ஏப்ரல் 8, 9 ---      பொன்னூர் (மாயூரம் அருகில்)
சித்திரை 1,2,3 --ஏப்ரல் 14,15,16 -- விருத்தாச்சலம் அருகில்  கூடலையாறறூர்
சித்திரை 5,6,7 --ஏப்ரல் 18,19, 20-- கும்பகோணம் அருகில் ஆடுதுறை
சித்திரை 11,12,13 – ஏப்ரல் 24,25,26 – கும்பகோணத்தில் நாகேசுவரர் சிவன்  கோயில்
(குறிப்பு: பஞ்சாங்க கணிதப்படி இந்நாட்கள் அளிக்கப்பட்டுள்ளன எனினும்  முன்னரேயே தீர அறிந்து இக்கோயில்களில் நடைபெறும் அரிய சூரிய  பூஜையை தரிசித்து திவ்யமான பலன்களைப் பெற வேண்டுகின்றோம்.)

வெள்ளலூரில் விசேஷமான கோயில்
கோயம்புத்தூர் அருகே வெள்ளலூரில் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர் ஆலயம்  உள்ளது. சித்திரை முதல் தேதியன்று (14.4.1998) இச்சிவலிங்க மூர்த்தியின்  மேல் சூரிய கிரணங்கள் படிகின்றன. லிங்க மூர்த்திக்குத் தேனபிஷேகம்  செய்து தேன் கலந்த பாலை எழைகட்குத் தானமாக அளித்துவர இழந்த  செல்வத்தை நியாயமான வழிகளில், (கோர்ட் மூலமாகவோ மத்யஸ்தம்  மூலமாகவோ, வியாபாரம் மூலமாகவோ ஏனைய தர்ம வழிகளில்  தார்மீக ரீதியாக) பெற்றிடலாம். தமிழ்நாட்டில் பல கோயில்களில்  இத்தகைய பூஜைகள் காலங் காலமாய்த் தொடர்ந்து வந்துள்ளன. கால,  பூகோள நிலைகளுக்கேற்பச் சில மாறுதல்கள் இருக்கக் கூடுமாதலின்  தக்க பெரியோர்களை நாடி இத்தகைய கோயில்களில் சூரிய பூஜை  சிறப்புடன் மீண்டுந் தொடர்ந்திட ஆவன செய்திடல் வேண்டும்.

நித்ய கர்ம நிவாரணம்

1.4.1998 – நாகரத்தினம், நாகலிங்கம் போன்ற “நாக” பெயருடையோரும் / பெயருடையோருக்கும் பால்தானம் செய்க / செய்திடுக! இன்று நாகப்புற்றுப் பூஜை விசேஷமானது!

2.4.1998 – நாலு குழந்தைகளைப் பெற்ற ஏழைகட்குப் பழங்கள் தானம் – குடும்ப சச்சரவுகள் தணியும்.

3.4.1998 – பெருமாள் கோயிலில் தாமே தொடுத்த துளஸி மாலையிட்டு வழிபாடு – நல்ல இடமாற்றம் கிட்டும்.

4.4.1998 – சுதர்சன பூஜை – உறவுகளில் / அலுவலகப் பகை தணியும்.

5.4.1998 – ராமர்கோயிலில் புளியோதரை தானம் – மன அமைதி கிட்டும்.

6.4.1998 – எமதர்மர் உள்ள கோயிலில் விளக்கேற்றி மூதாதையர் வழிபாடு/எள்சாதம் தானம். புதிய பதவிக்கு வழி வகுக்கும்.

7.4.1998 – ஏகாதசி விரதமிருத்தல் – வெளியூரிலுள்ள கணவன் / மனைவிக்கு நலம் பயக்கும்.

8.4.1998 – கிருஷ்ணன் கோயிலில் அரிசி உப்புமா அன்னதானம் – கடல் கடந்து சென்றுள்ள பிள்ளைகளுக்கு நன்மை கிட்டும்.

9.4.1998 – பிரதோஷ தரிசனம் பசும்பால் தானம் – நல்ல வருமான கிட்டும்.

10.4.1998 – முருகன் கோயிலில் தேன், தினைமாவு தானம் – வாழ்வில் திருப்பம் ஏற்படும்.

11.4.1998 – திருஅண்ணாமலை கிரிவலம் கொடிவகைக் காய்கறிகள் கலந்த அன்னதானம் – வேலையில் நல்ல மாற்றம் கிட்டும்.

12.4.1998 – மஹான்களின் ஜீவசமாதிகளில் பேரீச்சை தானம் – நல்ல உடல் ஆரோக்கியம் கிட்டும்.

13.4.1998 – விறகு வெட்டிகளுக்கு / ஏழைகளுக்குப் புதுக் காலணிகள் அளித்தல் – வருமானம் கூடும்.

14.4.1998 – முருகனை வணங்க மலைமேல் ஏறுவோர்க்கு நீர்மோர் / பானக தானம் செல்வம் பெருகும்.

15.4.1998 – இன்று மலையை கிரிவலம் வந்து மலை மீதுள்ள பிள்ளையாரை வணங்கிட குழந்தைகள் படிப்பில் கவனம் செலுத்துவர்.

16.4.1998 – குழந்தைகளுக்கு நல்ல, பயனுள்ள விளையாட்டுச் சாமான்கள் அளித்தல் – குழந்தைகளின் ஆரோக்யம் பெருகும்.

17.4.1998 – பசுவிற்கு புல் அளித்தல் – எதிர்பாராத ஆபத்துகள் விலகும்.

18.4.1998 – மயில்களுக்குத் தானியங்கள் அளித்தல் – குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

சிவகங்கை தீர்த்தம் லால்குடி

19.4.1998 – கிருஷ்ணன் கோயிலில் கடலைச் சுண்டல் தானம் – கணக்கு வழக்குகளிலுள்ள சிக்கல்கள் தீரும்.

20.4.1998 – வீட்டில் மின் விளக்கில்லாத ஏழைகட்கு ஹரிக்கேன் விளக்கு தானம் – பணக் கஷ்டம் தணியும்.

21.4.1998 – ஏழைச் சிறுவர்களுக்கு உணவு தட்டுகள் அளித்தல் – வியாபார அபிவிருத்தி

22.4.1998 – வயதான ஏழைகளை விதவிதமான உதவிகளால்/தானங்களால் மகிழ்வித்தல் – இல்லத்தில் நல்ல மன ஒற்றுமை கூடும்.

23.4.1998 – கூண்டுப் பறவைகளுக்கு விடுதலையளித்தல் – தம்பதியரிடையே உள்ள நெடுநாள் பிணக்கு தீரும்.

24.4.1998 – வசதியில்லாக் கோயில்களில் (சென்னை – போரூர் அருகே கெருகம்பாக்கம், பெரிய பணிச்சேரி, திருச்சி – வயலூர் அருகே ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில் Etc..) பிரதோஷ வழிபாடு/ புறப்பாடு பூஜைக்கு ஆவன செய்தல் – வாழ்க்கையில் மிகச் சிறந்த மாற்றம் ஏற்படும்.

25.4.1998 – சிவகங்கை, அகஸ்திய தீர்த்தம், சிவ தீர்த்தங்களில் நீராடி புத்தாடைகள் தானமளித்தல் – செல்வம் பெருகும்.

26.4.1998 – பெருமாள் கோயில் தீர்த்தத்தில் அமாவாசைத் தர்ப்பணம் – பிரண்டைத் துவையலுடன் அன்னதானம் – நாட்டில் பயிர் விளைச்சல் பெருகும். இது மிகச் சிறந்த சமுதாய பூஜை.

27.4.1998 – வண்டி ஓட்டுவோர் (Drivers) ஏழ்மை நிலையில் உள்ள சக ஓட்டுனர்களுக்கு உதவி செய்திட மனநிம்மதி கிட்டும்.

28.4.1998 – சென்னை திருவொற்றியூர் ஸ்ரீவடிவுடையம்மனுக்கு இளநீர், வெட்டிவேர் கலந்த பன்னீர் அபிஷேக ஆராதனைகள் – கணவனிடத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

29.4.1998 – சிவபெருமானே பிட்சையேற்ற அற்புத தினம் / அனைவரும் மூன்று வேளையும் அன்னதானம் செய்திடுக!

30.4.1998 – ஸ்ரீலாவண்ய கௌரீ விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்போர்க்கு – கணவனுக்கு முறையான உத்யோக உயர்வு கிட்டும் – மனம் குழப்பங்களுக்கு தீர்வு காணலாம்.


ஓம் ஸ்ரீ குருவே சரணம்

om namasivaya om namasivaya om namasivaya om namasivaya om namasivaya
om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi om sakthi
om sri guruve saranam om sri guruve saranam om sri guruve saranam